சிறுவர் கதைக் களஞ்சியம் - 4
சுட்டி கதைகள்
Back
சிறுவர் கதைக் களஞ்சியம் - 4
கா. அப்பாத்துரையார்
மூலநூற்குறிப்பு
நுற்பெயர் : சிறுவர் கதைக் களஞ்சியம் - 4 (அப்பாத்துரையம் - 35)
ஆசிரியர் : கா.அப்பாதுரையார்
தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதல்பதிப்பு : 2017
பக்கம் : 16+304 = 320
விலை : 400/-
பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654
மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in
தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312
கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500
நூலாக்கம் : கோ. சித்திரா
அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.
நுழைவுரை
தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.
தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.
தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.
தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.
அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.
இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.
தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்
கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை
யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்
திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,
திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.
இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.
நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”
- பாவேந்தர்
கோ. இளவழகன்
தொகுப்புரை
மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.
“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.
சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.
- தனித்தமிழ் இயக்கத் தோற்றம்
- நீதிக் கட்சி தொடக்கம்
- நாட்டு விடுதலை உணர்ச்சி
- தமிழின உரிமை எழுச்சி
- பகுத்தறிவு விழிப்புணர்ச்சி
- இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்
- புதிய கல்வி முறைப் பயிற்சி
- புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்
இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.
“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!
அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!
பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,
- உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.
- தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.
- தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.
- தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.
- திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.
- நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.
இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.
பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.
உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.
1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு
2. வரலாறு
3. ஆய்வுகள்
4. மொழிபெயர்ப்பு
5. இளையோர் கதைகள்
6. பொது நிலை
பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.
இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்
உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.
கல்பனா சேக்கிழார்
நூலாசிரியர் விவரம்
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
இயற்பெயர் : நல்ல சிவம்
பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989
பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி
பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)
உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்
மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு
வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா
தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி
பள்ளிக் கல்வி : நாகர்கோவில்
கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி விசாரத்’, எல்.டி.
கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)
நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)
இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.
பணி :
- 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.
- 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.
- பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.
- 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி
- 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.
- 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்
அறிஞர் தொடர்பு:
- தொடக்கத்தில் காந்திய சிந்தனை.
- 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு
விருதுகள்:
- மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,
- 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் சான்றோர் பட்டம்’, தமிழன்பர்’ பட்டம்.
- 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி’.
- 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.
- மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய பேரவைச் செம்மல்’ விருது.
- 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.
- 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.
- இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.
பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:
- அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.
- பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.
பதிப்பாளர் விவரம்
கோ. இளவழகன்
பிறந்த நாள் : 3.7.1948
பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு
இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்
ஆற்றியுள்ள பொதுப்பணிகள்
1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.
பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.
உரத்தநாட்டில் தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.
பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.
தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,
19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.
பொதுநிலை
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.
தொகுப்பாசிரியர் விவரம்
முனைவர் கல்பனா சேக்கிழார்
பிறந்த நாள் : 5.6.1972
பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்
இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
ஆற்றியுள்ள கல்விப்பணிகள்
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.
- திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.
- புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.
- பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.
- பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.
- 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
- மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.
- இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.
நூலாக்கத்திற்கு உதவியோர்
தொகுப்பாசிரியர்:
- முனைவர் கல்பனா சேக்கிழார்
கணினி செய்தோர்:
- திருமதி கோ. சித்திரா
- திரு ஆனந்தன்
- திருமதி செல்வி
- திருமதி வ. மலர்
- திருமதி சு. கீதா
- திருமிகு ஜா. செயசீலி
நூல் வடிவமைப்பு:
- திருமதி கோ. சித்திரா
மேலட்டை வடிவமைப்பு:
- செல்வன் பா. அரி (ஹரிஷ்)
திருத்தத்திற்கு உதவியோர்:
- பெரும்புலவர் பனசை அருணா,
- திரு. க. கருப்பையா,
- புலவர் மு. இராசவேலு
- திரு. நாக. சொக்கலிங்கம்
- செல்வி பு. கலைச்செல்வி
- முனைவர் அரு. அபிராமி
- முனைவர் அ. கோகிலா
- முனைவர் மா. வசந்தகுமாரி
- முனைவர் ஜா. கிரிசா
- திருமதி சுபா இராணி
- திரு. இளங்கோவன்
நூலாக்கத்திற்கு உதவியோர்:
- திரு இரா. பரமேசுவரன்,
- திரு தனசேகரன்,
- திரு கு. மருது
- திரு வி. மதிமாறன்
அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:
- வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.
சிறுவர் கதைக் களஞ்சியம் -4
முதற் பதிப்பு - 1945
இந்நூல் 2002 இல் வெற்றியரசி பதிப்பகம், சென்னை - 88 வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.
பொன்மாலை
பாய்மாநாடு எல்லாவகை வளமும் உடையது. திருமார்பன் என்ற அரசன் அதை ஆண்டுவந்தான். அவனுக்குச் செந்தாமரை, கயற்கண்ணி என்ற இரண்டு அரசிகள் இருந்தார்கள். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. மன்னன் இதுபற்றி மிகவும் கவலை கொண்டிருந்தான்.
குழந்தை இல்லாக்குறை கயற்கண்ணிக்கு மிகவும் உறுத்திற்று. ஆனால், செந்தாமரை அதற்காக மிகுதி கவலைப்பட வில்லை. அவள் ஏழை மக்களின் பிள்ளைகளையெல்லாம் தன் பிள்ளைகளாகப் பேணி உதவினாள். அருளாளரான ஒரு பெரியார் அவள் உயர்குணம் கண்டு அகமகிழ்ந்தார். அவர் ஆளுக்கு ஒரு அருமருந்தை அளித்தார். “கடவுள் சிந்தனையுடன் இதை அருந்துங்கள். உங்களுக்கு ஒரு சீரிய புதல்வன் பிறப்பான்” என்று கூறிச் சென்றார். அவ்வாறே செந்தாமரை ஆண்மகவு ஒன்றை ஈன்றாள்.
குழந்தைக்குக் கடம்பன் என்று பெயர் சூட்டப்பட்டது. தாய் தந்தையர் ஆர்வம் தாண்டி, அவன் நாளொரு மேனியாக வளர்ந்தான். தாய் மடியிலிருந்து தந்தை தோளுக்கு அவன் தாவுவான். தந்தை தோளிலிருந்து தாய் உளங்குளிர அவன் மழலையாடுவான். ஏழைக் குழந்தைகளுடன் அவன் ஊடாடுவது காண எல்லாரும் மகிழ்ந்தனர். மன்னர் மரபு தழைப்பது கண்டு குடிமக்கள் அவனைக் கொண்டாடினார்கள்.
அருளாளரான பெரியார் ஒருநாள் அரண்மனைக்கு வந்தார். சிறுவன் அறிவார்ந்த பேச்சில் அவர் ஈடுபட்டுக் களித்தார். ஆனால், அவனை உற்றுநோக்கிய பின் அவர் முகத்தில் சிறிது வாட்டம் கண்டது. செந்தாமரை இதைக் கவனித்தாள். கவலையுடன் அவள் பெரியாரிடம் பேசினாள். “அருள் சான்ற பெருந்தகையீர்! தங்கள் கவலைக்குரிய காரணம் யாது? அதை நான் அறியலாமா?” என்று வினவினாள்.
பெரியார் சற்றுச் சிந்தித்தார். “நீங்கள் கூரிய அறிவுடையவர்கள். உங்களிடம் சொல்வதனால் கேடு இல்லை. நன்மைகூட ஏற்படலாம். இவன் உங்கள் குடிக்குப் பெருமை தருவான். பெரும் புகழ் அடைவான். இதில் ஐயமில்லை. ஆனால், இளமையில் இவனுக்கு எதிரிகள் இருப்பார்கள். அவர்கள் வஞ்சத்தால், இன்னல்கள் ஏற்படும். நீங்கள்தான் அவனுக்கு வேண்டிய பாதுகாப்புச் செய்ய வேண்டும்” என்றார்.
“தாங்கள் எதிர்கால உணர்வுடையவர்கள். தங்கள் சொற்கள் எனக்கு மகிழ்வையும் ஊட்டுகின்றன. கவலையையும் தருகின்றன. ஆனால், நீங்களே கவலை அகற்றும் வழிகளையும் கூறவேண்டும். அவனை இடரிலிருந்து காக்க என்னாலான எல்லாவற்றையும் செய்ய விரும்புகிறேன். நான் என்னென்ன வகையில் முயற்சி செய்ய வேண்டும்? இதைத் தெரிந்துரைக்க வேண்டுகிறேன்” என்று அரசி மன்றாடினாள்.
பெரியார் கடம்பன் உயிர்நிலைமாயம் அறிந்து கூறினார். “அம்மணி, தங்கள் புதவல்வன் பிறந்த அதே கணத்திலே, ஒரு நீல மீனும் பிறந்திருக்கிறது. அது தங்கள் மாளிகையின் தோட்டத்திலுள்ள தெப்பக்குளத்திலேயே வாழ்கிறது. அதன் வயிற்றில் ஒரு பொன்மாலை வளர்கிறது. அதுவே உங்கள் புதல்வனின் உயிர். இந்த மாயத்தை யாரிடமும் கூறாதேயுங்கள். அதே சமயம் அந்த மீனை உயிர்போல் பேணுங்கள். அது பாதுகாப்பாக இருக்கும்வரை, புதல்வனை இடர் அணுகாது” என்று உரைத்தார்.
அரசி செந்தாமரைக்கு ஆறுதல் ஏற்பட்டது. அவள் குளிக்குமுன் குளத்தில் நின்று பூசை செய்தாள். நீரில் கரைத்த இனிய உணவை நீல மீன் உண்டு வளம்பெற்றது. குளத்திற்கு அவள் நாற்புறமும் காவல் வைத்தாள். ஆனால், மாயத்தின் மருமம் அவளைத் தவிர யாருக்கும் தெரியாது.
ஒரே ஒரு பேர்வழி மாயத்தை அரைகுறையாகக் கேட்க நேர்ந்தது. அதுவே அரசி கயற்கண்ணி. பெரியார் பேச்சின் நடுப்பகுதியிலேயே அவள் பக்கத்து அறைக்கு வந்தாள். அவள் பேச்சின் முற்பகுதியை அவள் செவிக் கொள்ளவில்லை. ஆனால், பிற்பகுதியை அவள் கேட்டாள். “அதுவே உங்கள் புதல்வன் உயிர். இந்த மாயத்தை யாரிடமும் கூறாதேயுங்கள். அதே சமயம் அதனை உயிர்போல் பேணுங்கள். அது பாதுகாப்பாய் இருக்கும்வரை, புதல்வனை இடர் அணுகாது”. இந்த வாசகங்கள் மட்டும் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தன.
கடம்பன் பிறந்தது முதல், செந்தாமரையின் புகழே வளர்ந்தது. மன்னன் கருத்து முழுவதும் கடம்பனிடமும், செந்தாமரையிடமுமே உலவிற்று. கயற்கண்ணி அரசியாகவே இருந்தாள். ஆனால், அரசன் அவ்வப்போதுதான் அவளைக் கவனிக்க முடிந்தது. மக்கள் பாராட்டு முன்னிலும் மிகுதியாக, செந்தாமரை பக்கமே சென்றது. இதனால் அவள் உள்ளத்தில் பொறாமை தோன்றி வளர்ந்தது. கடம்பன் அவள்மீதும் அன்பாகவே இருந்தான். ஆனால், அவன் மீது அவளுக்கு மெல்ல மனக்கசப்பு உண்டாயிற்று. எல்லாரும் தன்னைப் புறக்கணிப்பதற்கு அவனே காரணம் என்று அவள் எண்ணினாள்.
கடம்பன் அவளிடம் அவ்வளவு அன்பு காட்டாவிட்டால், அவள் மனக்கசப்பும் பொறாமையும் வளர்ந்திருக்க மாட்டா. அவன் அன்பின் ஆர்வத் துடிடிப்பே அவளை உறுத்திற்று; அவற்றை வளர்த்தது. தற்செயலான நிகழ்ச்சிகளால் உண்டான பொறாமை மெல்ல மெல்லத் திட்டமாக விளைந்தது. அந்நிகழ்ச்சிகளே அதற்குச் செயல்வடிவான உருவமும் கொடுத்தன.
கடம்பன் பொற்பந்து ஆடினான். பந்து அடிக்கடி சிற்றன்னையின் மாளிகைக்குள் சென்று விழுந்தது. அதை எடுக்க அவன் அங்கே அடிக்கடி ஓடிச் சென்றான். அவன் பட்டம் பறக்கவிட்டான். பட்டம் அறுந்து அந்த மாடியிலேயே அடிக்கடி இறங்கிற்று. அவன் அதைக் கேட்டுப் பெறச் சிற்றன்னை மாடியில் தடதடவென்று ஏறினான். அவன் ஒரு மணிப்புறாவைப் பறக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதுண்டு. மணிப்புறா பெரும்பாலும் கயற் கண்ணியின் மெல்லாடைகளுக்குள்ளேயே சென்று சரணடையும். அதை மன்றாடிப் பெற அவன் மீண்டும் மீண்டும் அவளிடம் சென்றான்.
நாடி வந்த பொருளை ஒன்றிரண்டு தடவை அவள் பேசாது கொடுத்தாள். பின்பு, “இப்படி ஓயாது வந்து வந்து கேளாதே. எனக்கு இதா வேலை?” என்று தடை கூறினாள். ஆனால், இளைஞன் கெஞ்சிப் பசப்பி அதைப் பெற்றுப் போனான்.
பந்தோ, பட்டமோ, மணிப்புறாவோ பின்னும் பின்னும் சிற்றன்னையிடம் சிக்கின. அவள் உள்ளத்தில் இப்போது புதிய திட்டம் உருவாயிற்று. இந்த இளைஞன் மூலமே அவன் உயிர்நிலையின் மாயத்தை உணர வேண்டும் என்று அவள் கருதினாள். அடுத்த தடவை அவள் அவனிடம் மணிப் புறாவைத் தராமல் வாதாடினாள்.
“இதை நான் உனக்குத் தரவேண்டுமானால், நீ ஒரு செய்தியை எனக்கு ஒளியாமல் கூறவேண்டும். இல்லாவிட்டால் தர முடியாது” என்றாள் அவள்.
“என்ன வேண்டும்? கேளுங்கள் சொல்கிறேன்” என்றான் கடம்பன்.
அவள், அவன் தோள்மீது கையிட்ட வண்ணம் கேட்டாள். “உன் உயிர்நிலை எதில் இருக்கிறது? இதை எனக்குச் சொல்வாயா?” என்றாள்.
“இது என்ன புதுமாதிரிக் கேள்வி, அம்மா! என் உயிர்நிலை வேறு எங்கே இருக்கும்? என் உடலில் இருக்கும்!” என்றான் அவன். அவன் கபடமற்ற பேச்சில் வாய்மை தொனித்தது. ஆனால், அறியாமையும் நன்கு வெளிப்பட்டது.
“நான் இதைக் கேட்கவில்லை. ஒரு பெரியார் உன் அன்னையிடம் கூறியிருக்கிறார். உன் உயிர் நிலை ஏதோ ஒரு பொருளில் இருக்கிறதாம். உனக்கும் தெரியாவிட்டால், உன் அன்னையிடம் கேட்டுச் சொல்லு. ஆனால், நான் கேட்டதாகத் தெரியப்படாது. அப்போதுதான் புறாவைத் தருவேன்” என்று கூறினாள்.
கடம்பன் அப்படியே செய்வதாக வாக்களித்தான். மணிப்புறா அவன் மணிக்கை ஏறிற்று. அந்தக் கணமே அவன் பிஞ்சு உள்ளம் அந்த வாக்குறுதியையும் மறந்து விட்டது.
ஆனால், அடுத்த நாளே, கயற்கண்ணிக்கு மீண்டும் வாய்ப்பு ஏற்பட்டது. அவள் மாயத்தை அறிய மெல்ல மணிப்புறாவைக் கொடுக்க மாட்டேன் என்றாள்.
அவன் மறுநாளே மறவாமல் கேட்டறிவதாக உறுதி கூறினான். இத்தடவை அவன் மறக்கவில்லை. அவன் உள்ளத்திலும் அதை அறியும் ஆர்வம் பிறந்திருந்தது. அவன் அன்று உணவை வெறுத்தான். அன்னை கனிவுடன் அவன் கவலையை அகற்ற முயன்றாள். அச்சமயம் அவன் தன் கேள்வியைக் கேட்டான்.
“இது எல்லாம் உனக்கு ஏன்? யார் கேட்கத் தூண்டினார்கள்? இதை அறிய முற்படாதே. உனக்கு அது நல்லதல்ல” என்றெல்லாம் அன்னை வாதிட்டுப் பார்த்தாள்.
ஆனால், பிள்ளையின் பிடிவாதம், பெற்றவள் அறிவை மயக்கிற்று. அவள் நீலமீனின் செய்தியைக் கூறி விட்டாள். கயற்கண்ணிக்கு அவள் விரும்பிய கண்ணி அகப்பட்டது.
இப்போது அவள் திட்டம் செயலுருவம் பெறத் தொடங்கிற்று. அவள் செயல்முறைத் திட்டம்பற்றி ஆழ்ந்து சிந்தித்தாள். அவனை ஒழித்து மாற்றாளின் கொட்டம் அடக்கத் துடித்தாள். அவள் மூளை இத்தீய வழியில் சுறுசுறுப்பாக வேலை செய்தது.
அவள் மெல்லிய சுள்ளிகளையும் வரிச்சல் கீற்றுக்களையும் சேகரம் செய்தாள். படுக்கையடியில் அவற்றை இட்டாள். படுக்கையில் கிடந்து புரண்டாள். புரளுந்தோறும் சுள்ளிகள் நெறுநெறு என்று உராய்ந்தன. எலும்பு முறித்துக் கொள்ளும் அரவம் கேட்டது.
உள்ளூர எலும்பு முறிவால் வாதைப்படுவதாக அவள் நடித்தாள். வேண்டுமென்றே உணவு உட்கொள்ளாமல் உடலை நலிய வைத்தாள். அவள் நோய் பற்றிய செய்தி எங்கும் பரந்தது. மன்னன் கவலையுடன் அவளை வந்து கண்டான். புரளும் போது ஏற்பட்ட அரவம் அவனைத் திடுக்கிட வைத்தது. தன் அரசி உயிரைக் காக்க அவன் விரைந்தான். அரண்மனை மருத்துவரை அவன் வரவழைத்தான்.
மருத்துவர் எப்போதும் அரசிக்கு உடந்தையான கையாளாயிருந்தார். மாயத்தைக் கூறாமலே, அவள் அவருக்குத் தக்க அறிவுரை தந்திருந்தாள். அவர் அவள் நாடி பார்த்தார். உடலை சோதித்தார். பின்பு அவள் கூறி வைத்தபடியே மருந்துத் தயாரிப்பதற்கான திட்டம் கூறலானார்.
“அரசே, இது முற்றிய நோய். இதற்கு இச்சமயம் ஒரே ஒரு மருந்துதான் உண்டு. அதுவும் கிடைத்தற்கரியது. நீல மீனை அவள் தானே சமைத்து உண்ண வேண்டும். ஆனால், நல்லகாலமாக, அரசி செந் தாமரையின் குளத்தில் ஒரு நீல மீன் இருக்கிறது. அரண்மனை ஆளை விட்டு அதை இந்தக் கணமே தருவியுங்கள். இல்லையானால் அரசி உயிர் இனி ஒருநாள் தங்குவதுகூட அரிது” என்று மருத்துவர் முடிவு கூறினார்.
மன்னன் உடன் தானே மீனைத் தருவித்தான். அரசன் நேர் கட்டளைக்குமுன் அரசி செந்தாமரையின் காவல்கட்டுத் தளர்ந்தது. இச்செய்தியைச் செந்தாமரை அறியவும் இல்லை. நீலமீன் கயற்கண்ணி கைக்கு வந்தது. அன்றிரவே அவள் அதை அரிந்தாள். அதனுள் அழகே உருவான ஒரு பொன் மணிமாலை இருந்தது. அதை அவள் ஆர்வத் துடிப்புடன் எடுத்தாள். கழுத்தில் அணிந்து கொண்டாள்.
மீன் பிடிபட்ட அந்தக் கணமே கடம்பன் உடல் வெப்புக் கண்டது. அவன் அங்கங்கள் துடித்தன. அன்னை செந்தாமரை செய்தி இன்னதென்றறியாது திகைத்தாள். மன்னனும் அது கேட்டு ஓடோடி வந்து கண்கலங்கினான்.
கயற்கண்ணி, மீனை அரிந்த அந்த கணமே இளவரசன் கோவெனக் கதறினான். பொன் மாலையை அரசி கையில் எடுத்தவுடன் அவன் உணர்விழந்தான். அதை அவள் தன் கழுத்திலிட்டதே அவன் ஆவி உடலைவிட்டுப் பிரிந்தது.
ஆனால், உடல் விறைக்கவில்லை. பச்சைக் குழந்தை உடல்போலக் குழைந்தது.
அரசிசெந்தாமரை தன் புதல்வன் உயிருக்காகத் துடிதுடித்துச் சுருண் டாள். அவள் முகம் அன்று முதல் நகையிழந்தது. நாட்டு மக்கள் கண்ணீர் வடித்துக் கலங்கினர். மன்னனோ, தன் குலக்கொழுந்தின் உடலை விட்டுப்பிரிய மனமில்லாமல், ஒருநாள் பகலும் இரவும் கழித்தான். அவனும் ஊணுடைகளை வெறுத்தான்.
இளவரசன் உடல் அசையவில்லையே தவிர, உடற்களை சிறிதும் நீங்கவில்லை. அதை அடக்கம் செய்வதை மன்னன் விரும்பவில்லை. அவன் இன்பமாகப் பொழுது போக்கிய வேனில் மாளிகையிலேயே அதைக் கண் வளர்த்தினான். ஒவ்வொரு நாளும் அதற்கு நறுமலரிட்டு, பனிநீர்த் தூவி, அதைப் பேணக் கட்டளையிட்டான்.
இந்தப் பொறுப்பை இளவரசன் நண்பனான அமைச்சன் புதல்வன் மாடலன் ஏற்றுக் கொண்டான். பகலெல்லாம் உடலைப் பேணி அவன் நண்பனை நினைந்து உருகினான். இரவிலேயே தன் இல்லம் சென்று ஓய்வு எடுத்துக் கொண்டான்.
இளவரசன் உடல்நிலை கெடக்கெட, அரசி கயற் கண்ணியின் நோய் மறைவுற்றது. அவன் மாண்டபின் அவள் முன்னிலும் மகிழ்ச்சியுடைய வளானாள். மன்னன் இதைக் கவனித்தான். ஆனால், இது, தன் கருத்து அவள்பால் சென்றதன் பலன் என்று மட்டுமே அவன் கருதினான். இதில் ஓரளவு உண்மை இருந்தது. ஏனென்றால், அரசன் இப்போது அவள் மாளிகையைப் புறக்கணிக்கவில்லை. மகன் மறைவால் செந்தாமரைதான் அரண்மனை வாழ்வில் பங்கு கொள்ள மறுத்தாள். அவள் தன் மாளிகை யிலேயே அடைபட்டுக் கிடந்தாள்.
அவள் வழக்கமாகக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வ துண்டு. இப்போது அவள் செல்லும் ஒரே கோயில் மகன் வேனில் மாளிகையாயிருந்தது. அமைச்சர் புதல்வன் மாடலன் இட்ட மலர்களின் மேல், அவளும் நறுமலர்களை இட்டுப் பூசித்தாள். அத்துடன் புதல்வன் விரும்பும் உணவு, உடை முதலிய எல்லாப் பொருள்களையும் அவள் அவ்வப்போது நேரிலும் ஆள் மூலமும் அனுப்பி வைத்தாள். அவள் வாழ்வின் ஒரே ஆர்வச் செயலாக இது அமைந்தது.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பது இயல்பு. அரசி கயற்கண்ணி பொன்மாலையைப் பகலில் மட்டுமே கழுத்திலணிந் தாள். இரவில் அதை அணிய அவளால் முடியவில்லை அத்துடன் மன்னர் கண்ணில் அது படுவதையும் அவள் விரும்பவில்லை. “அது ஏது?” என்ற கேள்வி எழுந்தால், படிப்படியாகச் செய்திகள் வெளிவர ஏதுவாய் விடும் என்றும் அவள் அஞ்சினாள்.
அரசி கழுத்தில் மாலை கிடந்ததனாலேயே இளவரசன் உயிர் பிரிந்திருந்தது. ஆனால், அவள் அதைக் கழற்றி வைத்த போது, உயிர் மீண்டும் உடலில் வந்து பொருந்திற்று. இளவரசன் இரவு முழுவதும் இதனால் உயிர்பெற்று உலவினான். முதலில் அவன் தன் நிலையை உணர முடியவில்லை. ஆனால், மலர்கள் இதை விளக்கின. அவன் உடலின் பாதுகாப்பில் தந்தையின் ஆர்வம் புலப்பட்டது. மலர்களிலும் உணவு உடையிலும் நண்பனின் உயிர்த் துடிப்பும், அன்னை ஆராத்துயரார்வமும் வெளிப்பட்டன.
சற்று உலவியபின் இளவரசனுக்குப் பசியும் நீர் வேட்கையும் உண் டாயின. அன்னை அனுப்பி வைத்திருந்த உணவு, குடிநீர் வகைகளை அவன் உண்டான். பழைய ஆடை களைந்து புத்தாடை உடுத்துக் கொண்டான். ஆனால், பொழுது விடிவதற்குள் அவன் இராவாழ்வு முடிந்துவிட்டது. அரசி கயற்கண்ணி மாலையை எடுத்து அணிந்தாள். அவன் உடல் முன்போல் உணர்வற்றுப் பேச்சுமூச்சற்று, உயிர்ப் பிணமாய்க் கிடந்தது.
மாடலன் காலையில் வந்து மலர் தூவ வந்தான். உடலிலிருந்த மலர்கள் சிதறுண்டு கிடந்தன. ஆடைகள் மாற்றப்பட்டிருந்தன. உயிர் நீங்கி வாரக் கணக்காகியும், உடல் சிறிதும் வாடவில்லை. அத்துடன் அதில் புதுத் தளதளப்பும் காணப்பட்டது. அவன் ஒன்றுந் தோன்றாமல் விழித்தான்.
இரண்டு மூன்று நாட்கள் இதே நிலை நீடித்தது. “யாராவது வந்து உடைமாற்றி யிருக்கலாமா?” என்று அவன் நினைத்தான். தற்செயலாக அன்று முன்னிரவிலே அவன் வந்து பார்த்தான்.
உடல் வளர்த்தியிருந்த இடத்தில் அதைக் காணவில்லை; அவன் துணுக்குற்றான்; யாரோ இயங்கும் அரவம் கேட்டது; அவன் தோட்டத்தின் பக்கம் கண்களைத் திருப்பினான். அங்கே இளவரசன் உடலே உலவிக் கொண்டிருந்தது; அது பேயுருவோ என்று முதலில் கலங்கினான். ஆனால், உண்மையை அவன் விரைவில் உணர்ந்து கொண்டான். பின்னின்று அவன் இளவரசன் தோள்களில் கைவைத்தான்.
இளவரசன் திரும்பி பார்த்தான். நண்பர்கள் மீண்டும் பழகினர்.
இளவரசன் தன் நிலையைக் கூறினான். உணர்ச்சிகளைக் கொட்டினான். அவன் பேச்சிலிருந்து இளவரசன் உயிரின் மாயம்; அதை உணர அரசி செய்த முயற்சி; அவள் சதி யாவும் விளங்கின.
உயிர் மணிமாலையைப் பகலில் அரசி அணிந்ததால் உடலைவிட்டு உயிர் பிரிகிறது. இரவில் அதை அவள் அணியாதிருப்பதாலேயே இளவரசன் உயிர் மீண்டும் வந்து பொருந்துகிறது. இத்தனையும் இருவருக்கும் விளங்கின.
உயிர்மாலை அரசியிடம் இருக்கும்வரை கடம்பன் பகலில் உயிர்ப் பிணமாகவே கிடக்க வேண்டும். இரவில் மட்டுமே வாழ முடியும். உயிர் மாலையை மீண்டும் பெற முடியுமா என்று இருவரும் கலந்து பேசினர். ஒருவழியும் தெரியவில்லை. ஆனால் அதுமுதல் மாடலன் அடிக்கடி இரவிலும் வந்து, கடம்பனது தனிமையில் பங்கு கொண்டான்.
பாய்மா நாட்டிலிருந்து பல காத வழிக்கு அப்பால் இடவை என்று மற்றொரு நாடு இருந்தது. அதன் மன்னன் மருணீக்கியைப் பகையரசர் சூழ்ந்து போரில் மடிவித்தார்கள். அவன் இன்னுயிர்த் துணைவி எழினி தன் புதல்வி வாணகையுடன் நாடு நாடாக, காடு காடாக அலைந்து திரிந்து வந்தான். ஒருநாள் மாலை அவர்கள் வேனில் மாடத் தருகேயுள்ள செய்வனத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.
நடந்தலைந்த அலுப்பால் இருவருமே மிகவும் களைத்துப் போயிருந்தனர். பசியும் விடாயும் இருவரையும் பீடித்தன. ஆனால், நங்கை வாணகையின் நிலை கவலைக் கிடமாக இருந்தது. பஞ்சு படப்பொறாத அவள், நீர் விடாயால் நிலை கலங்கினாள். தாய் அவளை ஒரு சிலையடியில் இருத்தி விட்டு வனத்தில் நுழைந்தாள்.
நெடுநேரம் திரிந்தபின், எழினி ஓர் ஊற்றையும் சில கனி மரங்களையும் கண்டாள். கனிகளில் சிலவற்றை அவள் பறித்தாள். ஓர் இலையைத் தொன்னையாகச் செய்து அதில் நீர் மொண்டு கொண்டாள். தன் பசி விடாய்களைக்கூடப் பொருட்படுத்தாமல், அவள் புதல்வியைக் காண விரைந்தாள். ஆனால், விட்ட இடத்தில் அவள் புதல்வியைக் காணவில்லை. எங்கும் பரபரப்புடன் தேடினாள். எதோ காலில் தடுக்கி அவள் விழுந்தாள். விழுந்தவள் எழுந்திருக்கவேயில்லை. அவள் உயிர் பிரிந்தது.
எல்லாத் துன்பங்களிலிருந்தும் அவள் உடல் விடுதலை பெற்றது.
செல்வி வாணகை உண்மையில் வேறெங்கும் செல்ல வில்லை. வேனில் மாளிகையின் உள்ளேயே சென்றிருந்தாள். அங்கே யாராவது இருந்தால், தண்ணீரும் சிறிது உணவும் பெறலாமே என்ற ஆவல்தான் அவளைத் தூண்டிற்று. தோட்டத்தில் யாரையும் காணவில்லை. மாடத்தின் வாயில் பொருந்தச் சார்த்தியிருந்தது. ஆயினும் கையைத் தட்டினவுடன் அது தானாகவே பூட்டிக் கொண்டது. அதைத் திறக்கும் வகை அவளுக்குத் தென்படவில்லை.
இருந்த போதிலும் பசியும் விடாயும் அவளை மேலும் உள்ளே செல்லத் தூண்டின. உள்ளேயும் யாரையும் காணவில்லை. உயிரோவியம் போன்ற ஓர் உடல்தான் கட்டிலில் கிடந்தது. அதுவே கடம்பன் உடல். அதனருகே இனிய குடிநீர் வகைகளும், உண்டி வகைகளும் இருந்தன. அவள் வேறொன்றும் நினைக்க நேரமில்லை, குடிநீரில் சிறிது குடித்தாள். உணவில் சிறிது அருந்தினாள். மயங்கிச் சோர்ந்து சாய்ந்தாள்.
அவள் விழிக்குமுன் இரவாயிற்று. இளவரசன் விழித்துக்கொண் டான். அருகே ஓர் எழிலோவியம் சாய்ந்து கிடப்பது கண்டான். அதன் அழகு அவன் கண்ணைப் பறித்தது. அதையே அவன் பார்த்தவண்ணம் நின்றான்.
வாணகை விழித்தபோது, அவள் தன்முன் கடம்பனைக் கண்டு திகைத்தாள்.
முதலச்சம் தீர்ந்தபின் வாணகை தன் நிலைமையை விளக்கினாள். உணவு நீர் வகைகளை எடுத்து உண்டதற்காக மன்னிப்புக் கோரினாள். கடம்பன் அவளை மேலும் உண்ணும்படி வற்புறுத்தினான். ஆனால், தாயின் நினைவு அவளுக்கு எழுந்தது. அவனிடம் இணக்கம் பெற்று, விரைவில் வருவதாகக் கூறி, சிறிது உணவுடனும் நீருடனும் சென்றாள்.
தாய் கிடந்த நிலைகண்டு அவள் கதறினாள்; துடித்தாள்; தன் தனிமையை எண்ணி உருகினாள். பின் தாயுடலைச் சுமந்த வண்ணம் அவள் தோட்டத்திற்குள் நுழைந்தாள்.
கடம்பன் உள்ளம் அவள் துயர்கண்டு தன் துயர் மறந்தது. எழினி உடலை வாணகை மலர்ப் படுக்கையில் அடக்கம் செய்தாள். கடம்பன் அவளுக்குத் தன்னாலியன்ற எல்லா ஆறுதலும் கூறினான். தன் தனிமை விலக்கவந்த தெய்வ அணங்காக அவளைக் கடம்பன் நேசித்தான்; துணையற்ற தன் வாழ்வின் ஒரே துணையாக வாணகை அவனுடன் இணைந்தாள்.
மாடலன் அடுத்த தடவை வேனில் மாளிகைக்கு வந்த போது, இளவரசன் தன் தனி வாழ்வு ஒரு சிறு குடும்ப வாழ்வாகத் தளிர்ப்பதுகண்டு களிப்படைந்தான். இளங் காதலர்களை அவன் ஊக்கினான். தமிழ் மரபுப்படி அவனே அவர்களைக் காந்தர்வ மணத்தால் இணைத்தான். அவர்களுக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் அவனே தருவித்தான். கல்லறை என்று உலகத்தார் கருதிய வேனில் மாளிகை, அவர்களுக்கு ஒரு காதலுலகமாயிற்று.
மாதங்கள், ஆண்டுகள் இவ்வாறாகச் சென்றன. வாணகை ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் ஈன்றாள். வேனில் மாளிகையில் பிறந்ததால், கடம்பன் அவர்களுக்கு வேனில் என்றும், தென்றல் என்றும் பெயர்களிட்டான். வேனிலுக்குப் பன்னிரண்டு ஆண்டும், தென்றலுக்கு ஏழாண்டும் ஆயின.
கணவன் உயிர்மாயத்துக்குரிய மாலையைக் கைப்பற்றுவது எப்படி என்ற சிந்தனையிலேயே வாணகை நாள் கழித்தாள். அவளுக்குத் திடீரென ஓர் எண்ணம் தோன்றிற்று. அவள் அதைக் கணவனிடம் கூறினாள். அவனும் மாடலனும் அதை ஆர்வத்துடன் வரவேற்றார்கள். அதன்படி அவள் தன் புதல்வன் வேனிலுடன் வேனில் மாளிகையை விட்டுப் புறப்பட்டாள்.
வாணகை பெண்டிருக்கு ஒப்பனை செய்யும் கலை நங்கையாகத் தன்னை உருமாற்றிக் கொண்டாள். கலைநங்கையின் சிறுவனாகவே வேனிலும் சென்றான். முதலில் அவர்கள் அரசி செந்தாமரையிடம் சென்றனர். அரண்மனை ஒப்பனைத் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்படி அவள் அரசியை வேண்டினாள்.
மகன் இறந்தபின் தான் ஒப்பனை செய்து கொள்வ தில்லையென்று அரசி மறுத்தாள். அவள் தாயன்பு வாணகையின் நெஞ்சை உருக்கிற்று. அதே சமயம் சிறுவன் வேனிலைச் செந்தாமரை தன் கண்ணைவிட்டு அகல விடவில்லை. அவள் தன் பெயரனே என்பது அவளுக்குத் தெரியாது. ஆனாலும் அவன் கடம்பனையே உரித்து வைத்ததுபோல் இருந்ததனால், அவன்மீது அவளுக்கு எல்லையிலாப் பாசம் ஏற்பட்டது. ஆகவே, அவள் வாணகையிடம் கனிவுடன் பேசினாள்.
“நங்கையே, எனக்கு உன் ஊழியம் தேவைப்படா விட்டாலும், அரசி கயற்கண்ணிக்கு அது கட்டாயம் தேவைப்படும். அங்கே உனக்கு வேலை கிடைக்கும். ஆனால், போகும்போதும் வரும்போதும், என்னை அடிக்கடி வந்து பார்த்துப்போ. என் கண்களுக்கு இந்தச் சிறுவனைக் காட்டி விருந்தளித்துப் போ” என்றாள்.
வாணகைக்கு, அரசி கயற்கண்ணி வேலை கொடுத்தாள். அங்கேயே பகலெல்லாம் சென்று அவள் வேலை செய்தாள். அவள் கழுத்தில் கிடந்த தன் கணவன் உயிர்மாலையையும் அவள் குறிப்பாகப் பார்த்துக் கொண்டாள். சிறுவன், வேனில் போகும்போதும் வரும்போதும், அரசி செந்தாமரையிடம் சென்று விளையாடி வந்தான்.
தன் திட்டத்துக்கேற்ப, வாணகை ஒருநாள் வேனிலுக்குப் பாடம் கற்பித்தாள். அதன்படி நடக்கும்படி அவனைப் பழக்கினாள். அவனுடன், அரசி கயற்கண்ணி மாளிகைக்குச் சென்றாள்.
அன்று வழக்கமீறி அவள் அரசிக்குத் தொண்டூழியம் செய்தாள். அன்று அரசி தன் அழகைக் கண்ணாடியில் கண்டு மலைத்துப் போனாள். அவள் உள்ளம் களிப்பில் மிதந்திருந்தது. ஆனால், அச்சமயம் வேனில், அவளிடம் வந்து, கண் கசக்கி அழுதான். வாணகை அவனை இழுத்தும், அவன் வர மறுத்தான்.
கயற்கண்ணி அவனை அருகே அழைத்து, “என்ன வேண்டும், குழந்தாய்!” என்று கேட்டாள். அவன் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே உயிர்மாலையைச் சுட்டிக் காட்டினான்.
“அந்தப் பொன்மாலை எனக்குவேண்டும்” என்று கூறிப் பின்னும் கரைந்தான். “அதையெல்லாம் கேட்கப் படாது” என்று வாணகை, திட்டப்படி அவனைக் கண்டிக்க முனைந்தாள். கயற்கண்ணி அன்றிருந்த களிப்பு நிலையில் அதை மறுக்க எண்ணவில்லை. அவன் கழுத்திலிட்டாள்.
அதனை அணிந்துக்கொண்டு, வேனில் கண்ணாடியில் முகம் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான். அதனுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தான். வாணகையும் அரசியும் எவ்வளவு கேட்டும் அதை அவன் திரும்பத் தர மறுத்து அடம் பிடித்தான். வாணகை அடித்த போதும் அவன் அழுதானே தவிர, பொன்மாலையை விடவில்லை.
“சரி, வாணகை! அவன் இன்று போட்டுக் கொள்ளட்டும்!” என்று அரசி கூறினாள். “அவன் தூங்கட்டும், நான் அதை எடுத்து வைத்து, மறுநாள் கொண்டு வந்து விடுகிறேன்” என்று வாணகை அரசியிடம் சாடையாகக் கூறினாள். “கடம்பன் இறந்து நெடுநாளாயிற்று. இனி, இது, ஓரிரவு இல்லாதால் குடீமுழுகிப் போகாது” என்று அரசி கயற்கண்ணி தனக்குள் கூறி கொண்டாள்.
** உயிர்மாலை, இங்ஙனம் வேனில் மாளிகை அடைந்தது.**
கடம்பனும் மாடலனும் இப்போது விரைந்து திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டனர். அரசனுக்கும் அரசி செந்தாமரைக்கும் அமைச்சர்களுக்கும் மாடலன் தனித்தனியே கடிதம் அனுப்பினான்.
“இளவரசன் கடம்பன் இறக்கவில்லை. கடவுளருளால் யாரும் எதிர்பாராத வகையில் பிழைத்திருக்கிறான். அரசு மரபு தழைக்க இரு குழந்தைகளும் அவனுக்கு இருக்கிறார்கள். சில காரணங்களால் இதுவரை அவன் வெளிவராமல் மறைந்திருக்க நேர்ந்தது. நாளையே அவன் அரண்மனைக்குத் தந்தையையும், தாயையும் காண வருகிறான். நேரில் மற்ற செய்திகள் யாவும் அரசர் முன்னிலையிலேயே விளக்கப்படும்” என்று அவன் எல்லாருக்கும் முடங்கல் வரைந்தான்.
அரசி கயற்கண்ணிக்கு மட்டும் முடங்கல் செல்லவில்லை. எல்லா முடங்கல்களும் இரவுநெடுநேரம் கழித்தே அனுப்பப் பட்டன. ஆகவே, அவளுக்குத் தகவல் எதுவும் எட்டவுமில்லை.
இரவோடிரவாக, உலாச் செல்லுவதற்கான ஏற்பாடுகளில் மாடலன் விரைந்தான். அரசி செந்தாமரை விடியற்காலமே வேனில் மாளிகைக்கு ஆர்வத்துடன் வந்தாள். விவரங்களைப் பின்னால் விளக்குவதாகக் கூறி, மாடலன், கடம்பனையும், மனைவி மக்களையும் அரசி செந்தாமரைக்கு அறிமுகம் செய்துவைத்தான். வேனிலைக் கண்டதே அவளுக்குப் பாதி உண்மை விளங்கி விட்டது.
மாடலன் முன்னால் ஒரு சிவிகையில் சென்றான். ஆனை மேல் அம்பாரி வைத்து, அரசி செந்தாமரையும், இளவரசன் கடம்பனும், அவன் மனைவி மக்களும் சென்றனர். செய்தி இன்னதென்றறியாமலே மக்கள் ஆரவாரம் செய்தனர்.
கடிதத்தை மன்னன் காலையிலேயே பார்க்க முடிந்தது. அவன் விரைந்து ஆடையுடுத்துக் கொண்டு புறப்பட்டான். அரண்மனை வாயிலிலேயே அவர்களைக் கண்டு தன் கொலுவிருக்கைக்கு அழைத்துச் சென்றான். அவன் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. ஆனால், வியப்பாலும், மலைப்பாலும் அவன் இரண்டக நிலைப்பட்டிருந்தான்.
அரசி கயற்கண்ணி, உயிர்மாலையின் செய்தியை ஒரு பொருளாக எண்ணியிருக்கவில்லை. பரபரப்பின் இயல்பையும் ஒரு சிறிதும் உணர வில்லை. அந்நிலையிலேயே அரண்மனையில் ஏற்பட்ட பரபரப்பைக் காண விரைந்து வந்தாள்.
மாடலன், வந்திருந்தவர்களுக்கு உயிர்மாலையின் செய்தியை ஒரு கதையாகக் கூறினான். கதையாகவே அனைவரும் கேட்டிருந்தனர். ஆனால், இறுதியில், “இதுதான் கடம்பன் கதை. அவன் உயிர்மாலை அரசி கயற்கண்ணிடமிருந்து இன்றுதான் கிடைத்தது. அவன் இதோ உயிருடன் உங்கள் முன் நிற்கிறான்” என்றான்.
மன்னன் ஓடி, மகனைக் கட்டிக் கொண்டான்.
அரசி செந்தாமரை, மற்றொருபுறம் வந்து நின்று அவனை ஆர்வத்துடன் அணைத்துக் கொண்டாள்.
அரசி கயற்கண்ணி இப்போது உண்மை உணர்ந்தாள். தனக்கு இடர் வந்ததென்று கண்டு, ஓட முனைந்தாள். ஆனால் , அமைச்சர் கண்சாடை காட்டினார்; காவலர் அவளைத் தடுத்து நிறுத்தினர்.
மாடலன் பின்னும் பேசினான்:
“அரசே, கடம்பன் உங்களைத் தனியாகக் காணவரவில்லை. அவன் அருகில், அவன் துணைவி வாணகை, தங்கள் வாழ்த்துரைக்குக் காத்திருக்கிறாள். அருகே உங்கள் குலக்கொழுந்துகள் வேனிலும், தென்றலும் உங்கள் அணைப்புக்குக் காத்திருக்கின்றார்கள்” என்றான்.
அரசனும் அரசி செந்தாமரையும் கரையற்ற இன்பக் கடலில் திளைத்தனர். அவர்கள் மகிழ்ச்சியிடையே அவர்கள் அரசி கயற்கண்ணியைக் கடுமையாகத் தண்டிக்கக்கூட விரும்பவில்லை. போதிய வாய்ப்பு வளங்களுடனே அவள் ஓர் எல்லைப்புற மாளிகையில் அடைக்கப்பட்டாள்.
நீலமீன் மீண்டும் உயி பெற முடியவில்லை. ஆனால், நீலமீன் போல ஒருபெட்டி செய்யப்பட்டது. அதில் உயிர்மாலை பூட்டி வைக்கப்பட்டது. உயிர்மாலையும் பெட்டியும் குளத்தடியில் வைத்துப் பேணப்பட்டன. குளம் மறுபடியும் அரசியாரின் கடிகாவலுக்குரியதாயிற்று. நாட்டு மக்களின் பேராட்களாக ஏழு பெருமக்கள் மானியம் பெற்று அதைக் காத்தனர்.
கடம்பன் பாய்மா நாட்டின் ஆட்சியைப் பெற்றான். அவன் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ந்தனர். வாணகையின் தந்தை நாட்டையும் அவன் மீண்டும் கைப்பற்றினான். அதன் குடிமக்கள் தலைவனுக்கே தென்றலை மணஞ்செய்வித்து, அவளை இடவை அரசியாக்கினான்.
இருநாடுகளும் புது வாழ்வு பெற்றுத் தழைத்தன.
பச்சைக்கிளி
நெய்வேலி என்ற நாட்டில் காயாம்பூ என்ற ஓர் அரசன் இருந்தான். அவன் ஒருவர் பின் ஒருவராக ஆறு மனைவியரை மணந்து கொண்டான். ஆறு பேரும் ஒப்பற்ற அழகிகளே. ஆனால்,அவர்கள் குணங் கெட்டவர்களாக இருந்தாள். அவர்கள் ஓருவருக்காவது குழந்தையும் கிடையாது. ஆனால், மன்னன் கனிந்த உள்ளமுடையவன். ஈ எறும்பைக்கூட அவன் துன்புறுத்த மாட்டான்.
நெய்வேலியை அடுத்த காட்டில், ஒரு வேடன் வாழ்ந்து வந்தான். பறவைகளை அவன் கொல்வதில்லை. உயிருடன் வலையிட்டுப் பிடிப்பான். அவற்றை விற்று அவன் வயிறு வளர்த்தான்.
ஒரு சமயம், தொடர்ந்து சில நாட்கள் அவன் வலையில் பறவைகள் அகப்படாமற் போயின. அவர்கள் வீட்டின் அடுப்பைக் கோழி கிளறத் தொடங்கிற்று. வேடன் மனைவி அவனை இடித்துரைத்தாள். “இன்று உன்னோடு நானும் வருகிறேன். ஏனென்றால், வீட்டில் சமைப்பதற்கு ஒன்றும் இல்லை. இன்றைக்கு முதலில் எந்தப் பறவை அகப்பட்டாலும், அதை விற்க முடியாது. அதையே உணவாகச் சமைத்து உண்ண வேண்டும்” என்றாள்.
வேறு வழியில்லாமல், வேடன் இணங்கினான். இருவரும் விடியற் காலமே காட்டுக்குப் புறப்பட்டார்கள்.
முற்பகலிலேயே அன்று அவர்கள் கையில் ஒரு பச்சைக்கிளி சிக்கிற்று. அது மற்ற கிளிகளைவிடச் சிறிதாகத்தான் இருந்தது. ஆனால், அது அழகாய் இருந்தது. “எவ்வளவு அழகான பறவை. ஆயினும் இது மிக மிகச் சிறிது. ஒருவர் வயிற்றுக்குக் கூடப் பற்றாது” என்றாள் மனைவி.
அவர்கள் வியக்கத்தக் வண்ணம், கிளி உடனே தமிழ் மொழியிலே பேசிற்று.
“அம்மணி, என்னைக் கொல்ல வேண்டாம். இப்போதே அரசனிடம் கொண்டு கொடு. நல்ல விலை தருவார்” என்றது.
“என்ன விலை தருவார்?” என்று வேடன் மனைவி கேட்டாள். இதற்கு அது, மறுமொழி கூறிவிடும் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை. அவள் உள்ளத்திலுள்ள எண்ணம் தான் சொல்லாக வந்தது. ஆனால், கிளியின் மறுமொழி இருவரையும் பின்னும் தூக்கிவாரிப்போட்டது.
“என் விலையை நானே கூறிக் கொள்கிறேன்” என்று அது இறுமாந்து கூறிற்று.
அந்தப் பச்சைக்கிளியை அன்றே வேடன், மன்னன் காயாம்பூவிடம் கொண்டு சென்றான்.
காயாம்பு அச்சமயம் புறாக்களுக்குத் தீனியிட்டுக் கொண்டிருந்தான். கிளியை அவன் ஏறிட்டுப் பார்த்தான். அதன் அழகில் அவன் சொக்கினான். “கிளி என்ன விலை?”
“பறவையே அதைச் சொல்லும்” என்றான் வேடன்.
“என்ன பறவை பேசுமா? ஓகோ, அது கிளிப்பிள்ளை தானே; நீங்கள் சொல்லி வைத்ததை அது சொல்லக்கூடும்! சரி, அதுவே சொல்லட்டும்!” என்றான்.
“அப்படிச் சொல்லாதீர்கள் அரசே! எனக்கு யாரும் எதுவும் சொல்லித்தர வேண்டியதில்லை. என் விலைக்கு ஏற்ப நாளை நடக்க வேண்டியது நானே! அந்த விலையின் மதிப்பும் எனக்குத்தான் தெரியும். ஆகவே, தயங்காமல் என் விலையாகப் பதினாயிரம் பொன் கொடுக்கக் கோருகிறேன்” என்றது கிளி.
“பதினாயிரம் பொன்னா? ஒரு கிளிக்கு இவ்வளவு பொன் யார் கொடுப்பார்கள்?”
“ஏதோ ஒரு கிளியல்ல நான்; அரசே! என் பெயர் கோக்கிளி. நான் உங்களுக்குப் புதுவாழ்வு அளிக்க வந்துள்ள புத்தேள். இதை நீங்கள் விரைவில் அறிய இருக்கிறீர்கள். ஆகவே, தயங்காமல் அந்த விலையை இந்த வேடனுக்குக் கொடுங்கள்” என்றது.
அரசன் உள்ளம் கிளியிடம் அப்போதே தாவிற்று. அவன் பத்தாயிரம் பொன்னை உடனே வேடனுக்குத் தர ஆணையிட்டான்.
வேடன் வறுமை ஒழிந்தது. வேடன் மனைவியின் உள்ளமும் வீடும் குளிர்ந்தன.
கிளியுடன் பேசுவதே அன்றுமுதல் மன்னன் பொழுது போக்காயிற்று. எந்தக் கேள்விக்கும் அது நகைச்சுவையுடன், நயமான, அதேசமயம் அறிவார்ந்த விடை அளித்தது. அரசியரிடமும் அது சில சமயம் பேசிற்று; ஆனால், அவர்களுக்கு அதன் பேச்சுப் பிடிக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் பேச்சுகளைவிட, மன்னன் கோக்கிளியின் பேச்சையே மதிக்கத் தொடங்கினான்.
கிளியை ஒழித்து அரசன் வாழ்வில் முழு இடம் பெற அவர்கள் சமயம் பார்த்திருந்தார்கள்.
ஒருநாள் அரசன் வேட்டைக்குச் சென்றான். வேட்டை முடிந்து திரும்ப இரண்டு நாட்கள் இருந்தன. ஆகவே, போகும் போது, கிளியைப் பாதுகாத்து வரும்படி மனைவியரிடம் கூறிவிட்டுச் சென்றான்.
மனைவியரிடம் ஒரே ஒரு நற்பண்பு இருந்தது! அவர்கள் ஒற்றுமையுடன் இருந்தார்கள். “கிளி பேசும் கிளி. அறிவும் சூழ்ச்சித் திறமும் உடைய கிளி. ஆகவே, நல்ல திட்டமிட்டுத்தான் அதை ஒழிக்கவேண்டும்” என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.
கடைசி இளவரசி திட்டம் கூறினாள். “எல்லாரும் ஒருங்கே கிளியிடம் செல்வோம். ‘எங்களில் யார் முதல்தர அழகி? யார் கடைசித்தர அழகி?’ என்று கேட்போம். அதன் அறிவு இங்கே பயன்படாது. யாராவது ஒருத்தியைக் கடைசித் தர அழகி ஆக்கத்தான் வேண்டும். யாரைக் கடைசி அழகி என்ற கூறுகிறதோ அவள் அதன் கழுத்தை முறித்துவிட வேண்டும்” என்றாள் அவள்.
“சரியான கருத்துரை! அரசர்கூட இதைக் குற்றம் கூற முடியாது. அப்படியே செய்வோம்” என்று மற்ற அரசியர் அமைந்துரைத்தார்கள்.
அறுவரும் கிளியைச் சூழ்ந்தார்கள். “கிளிகளுக்குள் அறிவிற் சிறந்த கிளியே! எங்களுக்கிடையேயுள்ள ஒரு வாய்ப் பூசலை நீ தீர்க்க வேண்டும். உன் அறிவு தீர்ப்பளிக்கட்டும். எங்களுக்குள் யார் முதன்மை அழகி? யார் கடைசி அழகி? சொல்” என்றனர்.
கிளி அவர்களை நன்றாக அறிந்திருந்தது. அவர்கள் திட்டத்தையும் நன்றாக உணர்ந்து கொண்டது. சிந்திப்பது போல அது சுற்றுமுற்றும் பார்த்தது. அறை முற்றிலும் வெளியே செல்லும் வழி இல்லாமலிருந்தது. ஆனால், காற்று நுழையும் புழைவாய் ஒன்று இருந்தது. இதை அது குறித்துக் கொண்டது. பின் அது வாய் திறந்து பேசத் தொடங்கிற்று.
“அன்னைமாரே! உங்கள் கேள்வி மிகமிகக் கடுமையானது. ஆயினும், நான் ஒவ்வொருவரையும் நன்றாகப் பார்த்தால், விடை கூற முடியும். கூட்டிற்குள்ளிருந்து அப்படிப் பார்க்க முடியாது. திறந்துவிட்டதும், சுற்றி வந்து பார்த்துக் கூறுகிறேன்” என்றது.
அவர்கள் தயங்காமல் திறந்து விட்டனர். கழுத்தை முறிக்கும்போது அது ஓடினாலும், அறைக்குள்ளிருந்ததால், தப்ப முடியாது என்று அவர்கள் எண்ணினார்கள். கோக்கிளி அவர்களைச் சுற்றிச் சிறிது வட்டமிட்டது. அடுத்த கணம், அது விட்டத்தில் ஏறி அமர்ந்தது. அங்கிருந்தபடியே பேசிற்று. “நீங்கள் அழகிகளேயல்ல; கடல் கடந்து கடார நாட்டில் இருக்கிறாள் ஓர் அழகி, அவள் கால் தூசிக்கு நீங்கள் ஈடல்ல” என்று அது கூறிற்று.
அறுவரும் அதை எட்டிப் பிடிக்கப் பறந்தனர். ஆனால், கிளி பேசிக் கொண்டே, புழைவாய் வழியே வெளியே பறந்து ஓடிற்று. பக்கத்திலிருந்த ஒரு விறகு வெட்டியின் வீட்டில் அது தஞ்சம் புகுந்தது.
மன்னன் திரும்பிவந்ததும், கிளியைக் காணாமல் மறுகினான். அரசியர் அவனுக்கு உண்மையானதகவல் தெரிவிக்க வில்லை. “தீனியிடக் கதவு திறந்தவுடன் அது பறந்தோடிற்று. ஆகவே, அது நன்றிகெட்ட கிளி. அதற்குக் காட்டிய அருமையெல்லாம் வீண் அருமை” என்று அவர்கள் குற்றச் சாட்டுக் கூறினர்.
அவர்கள் சொற்களை அரசன் செவியில் வாங்கிக் கொள்ளவில்லை. கோக்கிளியைக் கொண்டு வந்து தருபவர்களுக்குப் பத்தாயிரம் பொன் மீண்டும் தருவதாக அவன் பறை சாற்றினான்.
விறகுவெட்டி கோக்கிளியைக் கொண்டுவந்து கொடுத்தான். இரண்டாவது தடவையாக, கோக்கிளியின் மூலம் ஓர் ஏழையின் குடியில் வறுமை அகன்றது.
அரசன் அதை ஆர்வத்துடன் வரவேற்று மகிழ்ந்தான். “என்னை விட்டு ஏன் ஓடினாய் கோக்கு?” என்று அவன் அன்புடன் கேட்டான்.
அரசியரைக் காட்டிக் கொடுக்கக் கிளிவிரும்பவில்லை. அதே சமயம் அவன் அன்புள்ளத்தின் புண்ணையும் அது அகற்ற விரும்பிற்று.
"பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்"
என்ற வள்ளுவர் நீதியிலே அக்கிளி வளர்ந்திருந்தது.
ஆகவே, அது உண்மையைச் சமயத்துக்கேற்ற முறையில் பக்குவமாகக் கூறிற்று.
"அரசே, உங்கள் அரசியர் என்னிடம் கொஞ்சிப் பேசினார்கள். ‘எங்களைவிட அழகுடைய பெண்களைப் பார்த்திருக்கிறாயா?’ என்று கேட்டார்கள். என்னால் மெய் பேசாமல் இருக்க முடியவில்லை. ‘பார்த்திருக் கிறேன்’ என்றேன். அவர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. நான் அஞ்சி ஓடி விட்டேன்.
"நான் ஒரு கிளிதான். எனக்கு வீரம் அவ்வளவு இல்லாமல் இருக்கலாம். அதற்காக வருந்தாதீர்கள். எனக்கு நன்றியில்லாமல் போகவில்லை. நீங்கள் எனக்காக முன்பே பதினாயிரம் கொடுத்திருந்தீர்கள். இப்போது இன்னும் பதினாயிரம் கொடுக்கும்படி செய்துவிட்டேன். இதை நான் மறந்துவிட மாட்டேன்.
“கூடிய விரைவில் தங்கள் கடனைப் பன்மடங்கு திருப்பித் தராது இருக்கமாட்டேன்” என்றது கிளி.
அரசன் முகத்தில் புன்னகை தோன்றிற்று.
"என் அருமைக் கிளியே! உன் அறிவுக்கு உன் பெருந்தன்மையே இணை. உன் பெருந்தன்மைக்கு உன் அறிவே இணை. அரசியரைக் காட்டிக் கொடுக்காமல் பேசி விட்டாய். ஆனால், நீ நன்றி கெட்டவன் என்று அவர்கள் கூறியதை எப்படியோ அறிந்து அதற்கு மறுப்பும் கூறிவிட்டாய்.
“போகட்டும். என் கடனைத் தீர்க்க நீ நிரம்பக் காத்திருக்க வேண்டாம். இப்போதே தீர்க்கலாம். அரசியரைவிட அழகான பெண்ணைப் பார்த்திருக்கிறேன், என்றாயே! எங்கே? யார்?…”
அரசன் முடிப்பதற்குள் கிளி இடைமறித்தது!
“போதும் அரசே! எங்கே? யார்? இந்தக் கேள்விகள் எங்கெங்கெல்லாமோ சென்றுவிடக் கூடும். அதெல்லாம் பெண்களுக்காகச் சொன்னது; உங்களுக்காக அல்ல;” என்று கிளி நயம்படப் பேசிற்று.
மன்னன் நெஞ்சம் கிளியின் நேர்மையை ஒத்துக் கொண்டது. ஆயினும், அவன் முகம் சிறிது சுண்டிற்று. கிளி இதைக் கவனித்தும் கவனியாததுபோல இருந்தது.
கிளியின் பெருந்தன்மையை அரசியர் அறியவில்லை. அறிந்தாலும் அதை அவர்கள் உணரத்தக்கவர்களாய் இல்லை. கிளி அகப்பட்டதனால் வந்த கோபத்தில், அவர்கள் அரசன் மீதே சீறினார்கள். “கிளி இருக்கு மட்டும் நாங்கள் உங்கள் அரண்மனையருகில் இருக்க மாட்டோம். நகரிலேயே தங்க மாட்டோம்” என்று கூறி வெளியேறினார்கள்.
மன்னன் மனம் இடிவுற்றது. கிளியை விட்டுப் பிரிய அவன் மனம் ஒப்பவில்லை. ஆனால், அரசியர் பிரிவுக்காகவும் அவன் வருந்தினான். அவன் சோர்வு கண்டு கிளி இரக்கம் கொண்டது.
“மன்னனே! என் நன்றியை இப்போது உங்களுக்கு காட்டத் தடை இல்லை. அரசிமாரே அந்தத் தடையை அகற்றி விட்டார்கள். மேலும் உங்கள் குடிக்கு ஒரு குலக் கொழுந்து இல்லை. அது அரசியருக்கும் ஒரு குறைதான். அவர்கள் என்னை மதித்தாலும் மதிக்காவிட்டாலும், நான் அந்தக் குறையை அகற்ற எண்ணுகிறேன்” என்றது கிளி.
“நீ என்ன சொல்கிறாய், கோக்கு?” என்று மன்னன் கேட்டான்.
"எங்கே யார்? என்று நீங்கள் நேற்றுக் கேட்டீர்களல்லவா? இன்று அந்தக் கேள்விகளுக்கும், அதன் மேல் நீங்கள் கேட்க இருந்த கேள்விகளுக்கும் விளக்கம் தருகிறேன்.
“கடல் கடந்து கடாரம் என்றொரு நாடு இருக்கிறது. அதன் உட்புறத்தில் தனியரசியாக ஓர் ஒப்பற்ற அழகி இருக்கிறாள். அவள் பெயர்”இலஞ்சி". உலகத்தின் அரசிகள் எல்லாரையும் விட அவள் அழகுடையவள். ஆனால், அவள் அழகை யாரும் பார்த்ததில்லை. எவரும் செல்ல முடியாத நாட்டின் நடுவில் அவள் தனித்து வாழ்கிறாள். நான் கிளி ஆதலால், அவளைப் பார்க்க முடிந்தது.
“அவளை நான் உங்களுக்குக் காட்டவும் முடியும். நீங்கள் விரும்பி னால் அவளை உங்களுக்கே உரியவளாக்கவும் முடியும்.”
கிளி பேசி நிறுத்திற்று. மன்னன் அதை ஆவலுடன் நோக்கினான். “நான் என்ன செய்ய வேண்டும், செய்கிறேன்! ஆனால், நீ கிளியாயிற்றே, உன்னால் என்ன செய்ய முடியும்?” என்றான்.
"அதை நீங்களே பார்க்க இருக்கிறீர்கள்.
“முதலில் பயணத்துக்கேற்ற ஒரு குதிரைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். உங்கள் கொட்டிலில் ஒட்டி மெலிந்த ஒரு கிழடு தட்டிய குதிரை நிற்கிறது. அது உண்மையில் குதிரை உணவை வெறுத்த விலங்கேயாகும். ஆறு மாதம் அதற்கு பொற்கடலையும் தேம்பாகும் கொடுக்க வேண்டும். அதன் பின் அது நம் பயணத்துக் குரியதாகும்” என்றது.
அரசன் அவ்வாறே செய்தான். அதன்பின் அக்கிழக் குதிரை எட்டிலக்கணக் கூறுகளும் நிறைந்த கட்டிளங் குதிரையாயிற்று. கோக்கிளி பயணத்துக்கு மற்ற ஏற்பாடுகளையும் சொல்லிற்று.
"அரசே! பொற்கடலையில் இன்னும் ஒரு படி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் புறப்படலாம். ஆனால், பயணத்தின்போது நீங்கள் கவனத்தில் வைக்க வேண்டிய இன்னொரு செய்தி உண்டு. அதையும் கூறிவிடுகிறேன்.
“இது தெய்வீகக் குதிரை. போகும் பயணத்தில், கடலில் இறங்கும் சமயம், இதை ஒரு தடவை மட்டும் சாட்டையால் அடிக்கலாம். மறுதடவை அடித்தால் குதிரையின் தெய்வீக ஆற்றல் போய்விடும். அது பழையபடி கிழக் குதிரையாய் விடும். நம் பயணமும் கெடும். இவ் வகையில் நீங்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்” என்றது.
அரசன் அவ்வாறே புறப்பட்டான். கிளியும் அவனுடன் சென்றது. நில எல்லை கடந்ததும், மன்னன் சாட்டையால் ஒரு தடவை தட்டினான். குதிரை அம்புபோல் கடலுக்குள் பாய்ந்து சென்றது. ஒன்றிரண்டு நாழிகைக்குள் அது மீண்டும் மறுகரை சேர்ந்தது. “இதுவே கடார நாடு” என்று கிளி அதைச் சுட்டிக் காட்டிற்று.
அடர்ந்த காடுகளை அடுத்தபோது, குதிரையின் கால்கள் நிலத்தில் பாவவில்லை. சிறகில்லாமலே அது தாவிப் பறந்து சென்றது. பின்னும் சிறிது நேரத்தில் அது காட்டு நடுவிலுள்ள ஓர் அகல்வெளியில் போய் நின்றது.
அப்போது நள்ளிரவு. அவர்கள் இருந்த இடத்திலிருந்து ஒரு கூப்பிடு தொலைவில் ஓர் அரண்மனை இருந்தது. கிளி அரசனுக்கு அதைச் சுட்டிக்காட்டிற்று. “இதுதான் அரசி இலஞ்சியின் மாளிகை. இப்போது குதிரையை மறைவில் கட்டிவிட்டு நாம் மரத்திலேறி இருப்போம்” என்றது.
புதர் மறைவில் குதிரை கட்டப்பட்டது. அரசனும், கிளியும் மரக் கிளைகளில் மறைந்திருந்தனர்.
பொழுது விடியப் போகும் சமயம் கிளி மீண்டும் பேசிற்று. “அரசே, பொற்கடலையில் இரண்டு குத்துக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்: வாயிற்படியில் ஒரு குத்தைச் சிதற விடுங்கள். பின் பத்தடிக்கு ஒன்றாக, வாயிற் படியிலிருந்து மரத்தடிவரை கடலைகளைப் போட்டுக் கொண்டே வாருங்கள். மரத்தடிக்கு வந்தபின் மரத்திலேறி முன்போல் மறைந்திருங்கள்” என்றது.
பொற்கடலைகளை அவ்வாறே தூவியபின் அரசன் மீண்டும் மரத்தில் வந்திருந்தான்.
மாளிகையின் வாயிற்கதவு திறந்தது. பணிநங்கை வந்து முற்றம் பெருக்கத் தொடங்கினாள். அவள் அழகைக் கண்டே அரசன் வியப்பெய்தினான். ‘பணிமகள் அழகு இதுவானால், தலைவி எவ்வாறிருப்பாள்?’ என்று அவன் மேலும் மலைப்படைந்தான்.
பணிநங்கை, சிதறிய பொற்கடலைகளைக் கவனித்தாள். ஆர்வத்துடன் அவற்றைப் பொறுக்கி எடுத்தாள். அவற்றை ஓடோடிச்சென்று தன் தலைவியிடம் காட்டினாள்.
இளவரசி இலஞ்சி கடலைகளைக் கையிலேந்திப் பார்த்துக் கொண்டே வந்தாள். சிதறிக் கிடந்த இடங்களைக் கூர்ந்து நோக்கினாள். பின்னும் பல கடலைகள் அடுத்தடுத்துத் தென்பட்டன. அவற்றை எடுத்துக் கொண்டே முன்னேறினாள். சிறிது தொலை வந்தபின், அவள் கால்கள் முன்னேறாது தயங்கி நின்றன.
ஆயினும் பொற்கடலைகள் அவள் கண்களைப் பறித்தன. அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். யாரையும் காணவில்லை. ஆகவே, துணிந்து மரத்தடிவரை வந்து கடலைகளைப் பொறுக்கினாள்.
கிளி, இப்போது அரசன் காதில் பேசிற்று: "அரசே! இவள்தான் இலஞ்சி இளவரசி. இப்போது விழிப்பாயிருங்கள். அரசி மரத்தடியில் கடலையைப் பொறுக்கக் குனிந்ததும், ஓசைபடாமல் இறங்கிப் பின்னால் செல்லுங்கள்; அவளைத் தூக்கிக் குதிரை மீது வைத்துப் பறந்து செல்லுங்கள். நானும் உடன் வந்து விடுவேன்.
“குதிரையைக் கடல் வந்தவுடன் மட்டும் ஒரு தடவை தட்டுங்கள். மீட்டும் மறந்து அடித்து விடாதீர்கள்” என்றது.
ஒன்றிரண்டு கணத்தில் இவையாவும் நடைபெற்றன. அரசியுடனும் கிளியுடனும் மன்னன் குதிரைமீது வானில் பறந்து சென்றான்.
கடலடி வந்ததும் மன்னன் குதிரையைத் தட்டினான். அது கடல் கிழித்துப் பாய்ந்தது.
நடுக்கடலில் இலஞ்சிக்குத் தலை சுற்றிற்று. அவள் தலை அரசன் தோள்மீது குழைந்தது. அச்சமயம் கிளியின் எச்சரிக்கையை அரசன் சற்று மறந்தான். குதிரையை விரைவு படுத்தும் நோக்கத்துடன் மீட்டும் தட்டிவிட்டான். அந்தோ! அந்த மாயக்குதிரை மீட்டும் கிழக் குதிரையாயிற்று. கடல் இருந்த இடத்தில் திடுமென ஒரு திட்டு எழுந்தது. அதன்மீது குதிரையும், அரசனும் இளவரசியும் துணையற்றவராய் விடப்பட்டனர்.
“என்ன செய்து விட்டீர்கள், அரசே? எல்லா முயற்சியையும் வீணாக்கிவிட்டீர்களே! இப்புதிய திட்டில் சிக்கி விட்டோமே, என்ன செய்வது?” என்று கிளி புலம்பிற்று.
மன்னன் தன் பிழை எண்ணி வருந்தினான்.
இலஞ்சி முதன்முதலாக இப்போதுதான் வாய் திறந்தாள். மன்னன் வீரத்தோற்றம் அவள் உள்ளத்தைக் கவர்ந்திருந்தது. அவன் துயரம் அவள் உள்ளத்தைக் கனிவித்தது. “அரசே, நடந்து விட்டதை எண்ணி வருந்த வேண்டாம்; தெய்வம் எப்படியும் வழிவிடும். அதுவரை உங்களுக்கு என்ன நேர்வதாயிருந்தாலும், நான் உங்களுடன் துன்பத்தை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்வேன்; உங்களுக்கு என்னாலான எல்லா உதவியும் செய்வேன்; இந்தக் கணமுதல் நீங்களே என் வாழ்க்கைத் துணைவர்” என்றாள்.
அரசியின் அன்புச் சொற்களும், கிளியின் துணையும் அரசனை ஆற்றியிருந்தது. ஆனால், தீவினையின் சதி அவனை அத்துடன் விடவில்லை. மேலும் தீங்குகள் தொடர்ந்தன.
அவர்கள் தங்கிய திட்டு அந்தமான் தீவை அடுத்திருந்தது. அந்தமானின் ஒரு பகுதியை “அரங்காடி” என்ற அரசன் ஆண்டான். அவன் படகில் திமிங்கில வேட்டையாடி அத்திடலில் இறங்கினான். இலஞ்சியின் அழகு அவன் கண்களைப் பறித்தது. அவளை அவன் கைப்பற்ற முயன்றான். மன்னன் காயாம்பூ மன்னன் அரங்காடியை எதிர்த்து மல்லாடத் தொடங்கினான். ஆனால், அரங்காடியுடனிருந்த துணைவர், காயாம்பூ மன்னனைக் கட்டிப் போட்டுவிட்டு, இலஞ்சியை இழுத்துக் கொண்டு அரங்காடியுடன் சென்றனர். பின் தொடர முனைந்த கிளி மீதும் அவர்கள் கல்லெறிந்து சிறகொடித்தனர்.
இளவரசி இலஞ்சி கதறி அழுது பார்த்தாள்; கெஞ்சிப் பார்த்தாள்; அரங்காடியின் மனம் இளகவில்லை. பின் காலத்துக்கிசைய நடிப்பதே சரி என்று அமைந்தாள். ஆயினும் தான் இடமாற்றத்தால் நோயுற்றதாக அவள் பாவனை செய்தாள். அது தீரஆறுமாதம் ஒதுங்கி நோன்பாற்றுதல் பயன்தரும் என்று கூறினாள். இனி, தன் அரசியாகவே அரசன் அவளை ஆக்க எண்ணியிருந்தான். ஆகவே, ஒரு தனிமாடம் கட்டித்தந்து அதில் நோன்பாற்றும்படி செய்தான். அவளுக்கு வேண்டிய யாவும் அரசி என்ற முறையில் தரும்படி சேடியருக்கும், ஏவலருக்கும் பணித்தான்.
அரசி இலஞ்சி பொரிகடலையும், பொற்கடலையும் கலந்து கிளிகளுக்கெல்லாம் அளிக்கப் பணித்தாள். கிளிகள் மொய்த்தன. பொரி கடலைகளைக் கொறித்து விட்டுப் பொற்கடலையை விட்டுச் சென்றன.
அரசி இலஞ்சியின் சூழ்ச்சி பேரளவில் பயன்பட்டது. ஏனென்றால், கிளியின் அறிவுரை கேட்டு, அரசன் பின்னும் ஆறுமாதம் குதிரைக்குப் பொற்கடலை அருத்தினான். அதற்குமுன்பே கிளியின் இறக்கைகளும் குணப்பட்டன. கிளி அரசியைத் தேடி அலைந்தது.
அது சென்ற இடங்களிலெல்லாம், கிளிகள் அதனுடன் பேசின. பொற்கடலையுடன் கடலை நாள்தோறும் தூவப் பட்டதைப் பற்றிக் கூறின. கிளி உடனே இலஞ்சியின் தடம் அறிந்து அங்கே சென்றது. இளவரசி போதிய பொற்கடலைகளை ஒரு கிழியில் கொட்டி அதனுடன் அனுப்பினாள். குதிரை விரைந்து வலிமையுற்று வளர்ந்தது. ஆறுமாத அளவில், தெய்வக் குதிரையுடன் அரசன் காயாம்பூ அந்தமான் தீவில் இறங்கினான். கிளி முன்பே பறந்து சென்று அரசி இலஞ்சிக்குச் செய்தி கூறியிருந்தது. ஆறு மாதத்தின் கடைசி நாள் இரவு அது. அவள் தோழியரை அனுப்பிவிட்டு, நிலா முற்றத்தில் தன்னந் தனியே உலவிக் கொண்டிருந்தாள்.
மன்னன் அவளைத் தன் குதிரை மீது ஏற்றிக் கொண்டு, கடலடி சேர்ந்தான். ஒரே தடவை குதிரையைத் தட்டினான். அது அலைகள்மீது தாவிச்சென்றது.
மன்னன் கிளியோடு, இளவரசி இலஞ்சியை மணந்து இனிது வாழ்ந்தான். அவள் அழகைப் பற்றிக் கேள்வியுற்று, மற்ற அரசியரும் பார்க்க வந்தனர். கிளி கூறிய உண்மை கண்டபின், அவர்கள் கோபம் ஆறினர். அத்துடன் இலஞ்சி ஆறு பெண்களும் ஒரு ஆணும் பெற்றெடுத்தாள். ஆறு பெண்களையும் ஆறு அரசியரிடமே வளரவிட்டாள். ஆண் மகவை அவளே வளர்த்தாள்.
காயாம்பூ, அந்தமான் அரசன் அரங்காடிமீது படையெடுத்து, அவன் அறியாச் செயலுக்கு அவனைத் தண்டித்தான். அரங்காடி மன்னிப்புக் கோரியபின், காயாம்பூ அவன் நாட்டை, அவனுக்கே கொடுத்துத் திறைபெற்று மீண்டான்.
இலஞ்சியின் இளமதலை இலங்கொளி, தாய் மரபுக்கும் தந்தை மரபுக்கும் புதுப்புகழ் தந்தான்.
மாணிக்க மங்கை
வேள்மாரி என்ற மன்னனுக்கு நான்கு மனைவிமார் இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு புதல்வரும் இருந்தனர். புதல்வர்களுக்கு அவன் முறையே, வெள்வேல், ஒள்வேல், வடிவேல், மணிவேல் என்று பெயரிட்டிருந்தான். அவர்கள் ஒருவருக்கொருவர் ஏறத்தாழ ஒரு வயது ஏற்றத் தாழ்வு உடையவராயிருந்தார்கள்.
மணிவேலின் தாய் சேதாம்பல் என்பவள். அரசனுக்கு அவளே எல்லாரினும் இளைய அரசியாயிருந்தாள். மன்னன் அவளிடம் உயிரை வைத்திருந்தான். அவள் மணிவேலிடமே உயிரை வைத்திருந்தாள். ஆனால், மணிவேல் எவருக்கும் அடங்காத துடுக்குத்தனம் உடையவனாய் இருந்தான். அவனால் அரசி சேதாம்பலுக்கு ஏற்பட்ட துன்பம் பெரிது. ஆனால் பிள்ளைப் பாசம் அவளுக்கு ஒப்பற்ற பொறுமை தந்திருந்தது. எனினும், மன்னனால் இதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவன் மணிவேலை நகருக்கு வெளியே ஒரு மாளிகைக்கு அனுப்பி வைத்தான். அரசி அவன் பிரிவைப் பொறாமல், தானும் அவனுடன் போய் அந்த மாளிகையில் வாழ்ந்தாள்.
மற்ற அரசியருக்கும் பிள்ளைகளுக்கும் அவர்கள்மீது முன்பே பொறாமை மிகுதியாயிருந்தது. இந்தத் தறுவாயை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்கள்மீது அவதூறுகளைச் சுமத்தினார்கள். மன்னன் அவர்களை நிலையாக வெறுத்தொதுக்கும்படி செய்தார்கள்.
குறும்பு, துணிச்சல், துடுக்குத்தனம் ஆகியவற்றின் உருவமாகவே மணிவேல் வளர்ந்தான். கணவன் துணைகூட இல்லாமல், சேதாம்பல் அத்தனையையும் பொறாத வண்ணம் பொறுத்து வந்தாள். ஆனால், அப்போதும் அவள் தாய்ப்பாசம் கூடிற்றேயன்றிக் குறையவில்லை. ஒவ்வொரு குறும்பின்போதும் அவள் அவனை மெல்ல கண்டிப்பாள். ஆனால், ஒவ்வொரு குறும்பின் முடிவிலும் அவள் அவனை முன்னிலும் மிகுதியான ஆர்வத்துடன் அணைத்துக் கொள்வாள்.
அவள் உண்ணும் உணவு, அவன் உண்ணும் உணவாகவேயிருந்தது. அவள் விரும்பும் பொருள்கள் யாவும் அவன் விரும்பும் பொருள்களாகவே இருந்தன. அவள் பொறுமைகூட, அவன் குறும்பின் உருவிலேயே கரந்து உலவிற்று.
மெல்லியல்புடையவர்கள் பெண்கள். அம்மெல்லியலார் களுக்குள்ளும் மெல்லியல்புடையவள் சேதாம்பல். ஆனால், தென்றல் வயிற்றில் விளைந்த புயல்போல மணிவேல் விளங்கினான். புயலில் வேகம் கண்டு தென்றல் நடுங்கிற்று. ஆயினும், பாசத்தால் புயலுடன் தென்றல் கட்டுண்டு அலைந்தது. அவன் காடுமேடெல்லாம் சுற்றினான். அவனுக்கு ஏதேனும் இன்னல் நேர்ந்து விடுமோ என்ற கவலையால், அவளும் வேறு வழியில்லாமல் அவனுடன் அலைந்தாள்.
ஒருநாள் சோழிக்கற்கள் நிறைந்த கடற்கரையருகே மணிவேல் சுற்றினான்; சோழிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தான். சேதாம்பல் சற்றுத் தொலைவில் இருந்து அவனைக் கவனித்த வண்ணம் இருந்தாள். அங்கே ஆளற்ற ஒரு படகு கிடந்தது. மணிவேல் அதைத் தாயினிடம் சுட்டிக் காட்டினான். “அம்மா, அதைக் கடலுக்கு இழுத்துவா. இருவரும் அதில் சிறிது பயணம் செல்வோம்” என்றான்.
“ஆளில்லாப் படகை எடுத்துச் செல்லலாமா மணி? உடையவர்கள் வந்தால் அவதிப்படுவார்கள். நமக்கும் அதனால் தொல்லையே வரும். மேலும், படகைக் கடலில் ஓச்சி, நம்மைப் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வருவது யார்?” என்று அவள் வாதிட்டாள்.
“நான் இருக்கிறேன், அம்மா! உங்களுக்கு ஏன் அந்தக் கவலை? உங்களுக்கு அச்சமாயிருந்தால் நான் போய்வருகிறேன். நீங்கள் இங்கேயே இருங்கள்” என்றான் அவன்.
பாவம்! அச்சம் இன்னது என்பதை அவன் என்றுமே அறிந்ததே இல்லை. அத்துடன் அன்னை அஞ்சியது தனக்காக அல்ல; அவனுக்காகவே என்பதையும் அவன் உணரவில்லை. அவள் பேசாது படகை அவனிடம் தள்ளினாள். அவன் ஏறு முன்பே அவளும் ஏறினாள். இறப்பதானால் மகனுடனே இறக்கவேண்டும்; அல்லது மகனுக்காகவாவது இறக்க வேண்டும் என்று அவள் துணிந்திருந்தாள்.
அந்தப் படகுக்குத் தண்டிருந்தது. ஆனால், தண்டு உகைக்கத் தேவையில்லை. தண்டில்லாமலே அது கடல் கிழித்துச் சென்றது. அதற்குப் பாயும் இல்லை; பாயின் தேவையுமில்லை; ஏனென்றால், அது காற்றை எதிர்த்தும், காற்றுக்குக் குறுக்காகவும் சென்றது. அது ஒரு மாயப் படகு. கடல் நடுவிலுள்ள ஏதோ ஒரு மின்காந்தம் போன்ற ஆற்றல் அதைக் கடல் நடுவுக்கே இழுத்தது.
அவள் நடுங்கினாள்; அவன் கைகொட்டிக் கும்மாளம் அடித்தான்.
நடுக்கடல் கடலாக இல்லை. அது நடுவே புழையுடைய ஒரு குவிகுழல்போல இருந்தது. கடல் நீர் நாற்புறமிருந்தும் ஒரே பெருஞ்சுழியாய் அந்தக் குவிகுழல் வடிவில் சுழித்து உள்சென்றது. படகும் ‘விர் விர்’ என்ற அந்தச் சுழியில் சுழன்றது. வட்ட வட்டமாக, மேலிருந்து கீழாகச் சுழன்று வந்தது.
சுழியில் அவர்களுக்கு எதிர்திசையில் குருதிச் சிவப்பான குமிழிகள் மிதந்து வந்தன. அவை மேல்நோக்கிச் சுழன்று வந்த வண்ணம் இருந்தன. மணிவேல் குனிந்து அவற்றை எடுத்துப் பார்த்தான். அவை நெல்லிக்காயினும் பெரிதான வண்ண மாணிக்கங்களாயிருந்தன. ஒவ்வொன்றாக அவன் அம் மாணிக்கங்களில் ஒன்பது எடுத்தான். ஆனால், சேதாம்பல் ‘அவற்றில் என்ன மாயம் இருக்குமோ?’ என்று அஞ்சினாள். “அவற்றை எடுக்காதே கண்மணி. அவற்றால் ஏதேனும் இடர் ஏற்படக்கூடும். போட்டுவிடு” என்றாள்.
வாழ்க்கையிலேயே முதல் தடவையாக, அவன் தாய் சொல்லுக்கு அன்று ஓரளவு மதிப்புக் கொடுத்தான். மாணிக்கங்களில் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டான். மற்றவற்றைச் சுழியிலேயே மிதக்கவிட்டான்.
மாணிக்கங்களை எடுத்தபோது, படகு சுழியில் விரைந்து சென்றது. ஒரு மாணிக்கத்தை மிதக்க விட்ட உடனே படகு நின்றது. பின் அஃது எதிர்த் திசையில் மாணிக்கங்களைப் பின்பற்றிச் சுழன்றது. மாணிக்கங்களை மிதக்கவிடுந்தோறும் எதிர் சுழற்சி வேகம் மிகுந்தது. சுழியினுள் படகு வந்தபடியே சுழிக்கு வெளி வந்து, முன்போல் கடல் கிழித்து மீண்டது. அவர்களை மறுபடியும் கரை கொண்டு சேர்த்தது.
அவர்கள் இறங்கிய கரை, கடலில் அவர்கள் ஏறிய கரையன்று; அது புது நாடாயிருந்தது; அன்னையுடன் மணிவேல் அதைச் சுற்றிப் பார்த்தான். நாடு இருவருக்குமே பிடித்திருந்தது. தலைநகரில் அரண்மனையின் பின்புறமுள்ள ஒரு குடிசையை அவர்கள் குடிக்கூலிக்கு அமர்த்திக் கொண்டனர். அதிலேயே மணிவேல் அமர்ந்திருந்தான். அவன் நாடோடி ஆர்வம் இனித் தணிந்து விடும் என்று சேதாம்பல் அமைந்து மகிழ்ந்தாள்.
மணிவேலுக்கு இப்போது வயது இருபதாயிற்று. ஆனாலும் அவன் விளையாட்டுப் போக்கு முற்றிலும் மாறவில்லை. அதற்கேற்ப, அந்த நாட்டு இளைஞர்களும் விளையாட்டார்வம் உடையவர்களாகவே இருந்தனர். சிறியவர்களும் பெரியவர்களும் விளையாட்டில் வேற்றுமையில்லாமல் கலந்து கொண்டிருந் தார்கள். செல்வர் வீட்டுப் பிள்ளைகளுடன் ஏழை வீட்டுப் பிள்ளைகளும் ஒன்றுபட்டு விளையாடினார்கள். மணிவேல் எல்லாருடனும் மட்டைப் பந்து, எறிபந்து, குழிப்பந்து, கோலி ஆகிய ஆட்டங்களை ஆடினான். எல்லாவற்றிலும் அவனே வெற்றி வீரனாக விளங்கினான். ஆனால், கோலியாட்ட வெற்றி ஒன்றே எல் லாரையும் அதிரடிக்க வைத்தது. ஏனென்றால், அதில் அவன் திறம் மட்டுமன்றி, அவன் கோலியின் திறமும் இருந்தது. அவன் கடலிலிருந்து கொண்டுவந்த மாணிக்கத்தையே கோலியாக வைத்தாடினான். சுண்டிவரும் மாணிக்கத்தின்
முன் கோலிகள் யாவுமே தூள் தூளாக நொறுங்கின.
அந்நாட்டு மன்னன் இளநாகன் என்பவன். அவன் மகள் மருவேலி கன்னிமாடம் சார்ந்திருந்தாள். மாடத்தின் உப்பரிகை யிலிருந்து அவள் மாணிக்கக் கோலியையும், விளையாட்டையும் கண்கொட்டாது பார்த்துக் கொணடிருந்தாள். நெல்லிக்காயளவு பருமனுடைய அவ்வளவு அழகான மாணிக்கத்தை அவள் அதற்குமுன் எங்கும் பார்த்ததில்லை. அம்மாதிரி மாணிக்கம் தனக்கு வேண்டுமென்று அவள் தந்தையிடம் சென்று அடம் பிடித்தாள்.
“மாணிக்கம் எங்காவது நெல்லிக்காயளவு பெரியதா யிருக்குமா, மருது? உலகில் இல்லாததைக் கேட்டால், எங்கிருந்து பெற்றுத் தருவது?” என்று தந்தை அங்கலாய்த்துக் கொண்டார்.
மகளுக்குக் கோபம் வந்தது. “நீங்கள் பெரிய அரசரல்லவா? உங்களுக்கு ஒன்றும் அகப்படாதுதான். நான் உலகில் இல்லாததைக் கேட்கவில்லை. ஓர் ஏழை இளைஞனிடம் அத்தகைய மாணிக்கத்தைக் கண்டேன். அவன் அதைத் துச்சமாகக் கருதிக், கோலியாக வைத்துப் பிள்ளைகளுடன் ஆடுகிறான். உங்களுக்கு அஃது உலகில் அகப்படாத புதையலாக இருக்கிறது” என்றாள்.
அவள் தாய் வாழ்வரசிக்குக்கூட இப்போது உள்வெப்பம் பொத்துக் கொண்டு வந்தது. “உங்கள் அப்பாவுக்குத் தெரிந்த அளவு, அவனுக்கு மனைவி மக்கள் அருமை தெரியாது போலிருக்கிறது. ஒருவேளை அவன் மணமாகாத இளைஞனா யிருக்கலாம். அப்படியானால் அப்பா அதை வாங்கித் தரலாம்” என்றாள்.
இளநாகன் இந்த வசையால், கவண்கல்லெறிபட்ட இளநாகம்போல் குன்றினான். அவன் உடனே ஆட்களை அனுப்பி மணிவேலைக் கூட்டி வரச் செய்தான். அவனிடம் உள்ள மாணிக்கக் கோலியைக் கண்டான். அவனும் வியப்படைந்தான். “இந்த மாணிக்கத்தை என்மகள் விரும்புகிறாள்; இதை விலைக்குக் கொடுப்பாயா? என்ன விலைக்குக் கொடுப்பாய்?” என்று கேட்டான்.
“அப்படியா? உங்களுக்கு வேண்டுமானால் ஏதேனும் ஒரு விலை கொடுத்து எடுத்துக் கொள்ளுங்கள். நான்வேறு கோலி பார்த்துக் கொள்கிறேன்” என்றான்.
அவன் அசட்டையாக அதுபற்றிப் பேசியது கேட்டு மன்னன் வெட்கினான். அவனுக்கு ஆயிரம் பொன் கொடுக்கும்படி கட்டளையிட்டான்.
“அம்மா! நீங்கள் கடலிலே எடுக்க வேண்டாம் என்று சொன்ன மாணிக்கத்தை ஓர் அரசிளஞ்செல்வி விரும்பி யிருக்கிறாள், அதற்கான பணம் இதோ பாருங்கள்” என்று கூறி மணிவேல் தன் தாயிடம் ஆயிரம் பொன்னையும் கொடுத்தான்.
அவர்களது அன்றைய நிலையில், அந்த ஆயிரம் பொன் சேதாம்பலுக்கு ஒரு சிறு செல்வமாகத் தென்பட்டது. அவள் மகிழ்ச்சி தெரிவித்தாள்.
மருதவேலி மாணிக்கத்தை முதலில் தலையில் அணிந்தாள். பின் கழுத்தில் அணிந்தாள். இறுதியில் அதைக் காதில் அணியும் எண்ணம் அவளுக்கு எழுந்தது. ஆனால், இரண்டு மாணிக்கங்கள் இதற்குத் தேவைப்பட்டன. அவள் மறுபடியும் தந்தையிடம் ஓடினாள். “அப்பா, இதற்கு இணையாக இன்னொன்றும் வாங்கிக் கொடுங்கள் அப்பா, இரண்டையும் நான் இரண்டு காதுகளிலும் அணிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றாள்.
“புதல்வி பெண்ணாய்ப் பிறக்காமல், ஆணாய்ப் பிறந்திருக்கக் கூடாதா?” என்று இளநாகன் உள்ளுக்குள் எண்ணிக் கொண்டான். ஆனால், இதை அவன் வெளியிட்டுக் கூறவில்லை. மணிவேலை மீண்டும் வரவழைத்தான்.
“அன்புள்ள இளைஞனே! நீ முன் கொடுத்தது போன்ற மாணிக்கம் வேறு இருக்கிறதா? என் புதல்விக்கு இன்னொன்று தேவைப்படுகிறது” என்று மன்னன் கேட்டான்.
இளைஞன் முன்போலவே எளிய மேளாப்புடன் பேசினான்: “அரசே, என்னிடம் இருந்தது ஒன்றுதான்; அதைக் கொடுத்துவிட்டேன். ஆனால், தங்களுக்கு வேண்டுமானால், சிறிது முயற்சியின் மூலம் எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டுவர முடியும்; அவை நடுக்கடலில் ஏராளமாகக் கிடக்கின்றன” என்றான்.
“இளைஞன் ஏதோ ஏழை இளைஞனல்லன்; தெய்வீக இளைஞனாய் இருக்க வேண்டும்” என்று மன்னன் எண்ணினான். அவன் குரலில் காரியம் நிறைவேற்றத்துக்குரிய மதிப்பினும் மிகுதியான கனிவு காணப்பட்டது.
“இளைஞனே, எனக்குக் கட்டாயமாக அவை வேண்டும். அவற்றுக்காக என்ன விலை கேட்டாலும் கொடுப்பேன். அவற்றைப் போய்ப் பெற்றுத் தரும்படி வேண்டுகிறேன்” என்றான்.
இளைஞன் மீண்டும் தாயிடம் ஓடிச் சென்றான். மன்னனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதிபற்றிக் கூறினான். விடை கோரினான். சேதாம்பல் ஆனமட்டும் அவனைத் தடுக்க முயன்றாள். பின் வழக்கம்போல அவனுடன் செல்ல விரும்பினாள். ஆனால், மணிவேல் இப்போது தனியாகவே போக விரும்பினான்.
அவனுக்குத் தன் பேராற்றலின் பெருமித உணர்வு இப்போதுதான் முதன்முதலாக ஏற்பட்டது. சிறுபிள்ளைத் தனமும், துடுக்குத்தனமும் மறைந்தன. வீரத் துணிச்சல் மட்டும் தொடர்ந்தது. அவன் துணிவும் தன்முனைப்பும் உடைய இளைஞன் ஆனான்.
“அம்மா! நான் என்ன சிறுபிள்ளையா? உங்களை நான் பாதுகாக்க வேண்டும். என்னை நீங்கள் பாதுகாக்க வேண்டிய தில்லை. மேலும் நான் வரத் தாமதமானால், மன்னனிடம் செய்தி கூற நீங்கள் இருந்தால்தானே நல்லது?” என்றான்.
அவன் கூறுவதிலும் உண்மை இருந்தது என்று அவள் நினைத்தாள். அவள் அன்பு குறையவில்லை. ஆனால், பொறுப்பு பெரிதாயிற்று. அவள், அவனுக்குக் கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தாள்.
இத் தடவையும் படகு அம்புபோல் பாய்ந்து சென்றது. நடுக்கடலின் சுழியில் அவன் பம்பரமாகச் சுழன்றான். மாணிக்கங்களை அவன் மடி கொண்டமட்டும் எடுத்துக் கட்டினான். ஆனால், முன்போல படகு எதிர் திசையில் மீளவில்லை. சுழியின் நடுப்பள்ளம் வரை பம்பரம் போல் விரைந்து சுற்றிற்று.
சுழியின் அடியில் ஒரு புழைவழி இருந்தது. அதன் வழியாகப் படகு சரேலென நழுவி இறங்கிற்று. சிறிது நேரத்தில் புழை மீட்டும் திடுமென விரிவுற்றது. மேலுள்ள பள்ளத்தைப் போலக் கீழும் அது ஒரு பொள்ளலான விரிகுழாயாய் இருந்தது. அதன் அடியில் கடலுக்குள், ஒரு சிறு கடல் போல ஓர் ஏரி கிடந்தது. படகு விரிகுழாயின் அருகில் சுழன்று சுழன்று ஏரியில் இறங்கிற்று.
ஏரியின் நடுவே அவன் கண்ட காட்சி வேறு எவரையும் மலைப்படைய வைத்திருக்கும். ஆனால், அவன் வியப்புடன் நோக்கினான். பரமசிவனையே போன்ற ஒரு நீலநிற முக்கண் அரக்கன் நீரில் அமர்ந்து அறிதுயிலில் இருந்தான். அவன் சடைமுடிகள் பத்துத் திசையிலும் அலைஅலையாக எல்லையற்றுப் பரந்தன. அவையே கடலில் அலைகளாயின என்று அவன் நினைத்தான்.
சடைகளின்மீது ஒரு வெண்பனிப்பீடம் தொங்கிற்று. அதன் மீது நிலாவைப் பழிக்கும் வெண்பளிங்கு மேனியுடைய ஒரு பெண்ணுடல் கிடந்தது. அதன் நாடி நரம்புகள் நீலக்கொடிகளும், செங்கொடிகளும் மிடைந்தவை போல உள்மேனியில் தெரிந்தன. ஆனால், அவன் கண்ணைக் கவர்ந்த காட்சி உடலன்று; உடலிலிருந்து தலை துண்டிக்கப்பட்டுக் கிடந்தது.
வெட்டுவாய் அழகிய செந்நிறமாய், அச்சமும் கவர்ச்சியும் ஒருங்கே உடையதாய் இருந்தது. அதிலிருந்து வண்ணச் சிவப்பான குருதி மேல் நோக்கி வடிந்தது. உயரே செல்லச் செல்ல, அதுவே துளித்துளியாக விரைந்து சென்றது. சுழியில் மிதந்துவந்த மாணிக்கங்கள் அவையே என்று மணிவேல் கண்டான்.
மணிவேல் படகை அரக்கன் உருவுக்கு அருகே செலுத்தினான். அசைவற்ற ஏரியின் மரகத நீர்ப் பரப்பில் அது எளிதாக நழுவிச் சென்றது. வெண் பனிப்பீடத்தின் அருகிலிருந்து ஒரு சடைக்கூறு நீர் மட்டம் வரை தொங்கிற்று.
மணிவேல் படகை நீர்ப்பரப்பிலேயே விட்டு விட்டு, அதில் தொத்தி ஏறினான். பனிப்பீடத்தில் நின்று மங்கையின் எழிலார் வடிவத்தையே நோக்கிக் கொண்டிருந்தான். துண்டுபட்டாலும் அது உயிர்த்துடிப்புடையதாகவே இருந்தது. மார்பகம் அலையற்ற கடல் எழுந்தெழுந்து அமிழ்வது போல, வீங்கி வீங்கி எழுந்தது. அவன் அதை கண் இமையாமல் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
அம்மங்கையின் தலைமாட்டில் ஒரு வெள்ளிக் கழி கிடந்தது; கால் மாட்டில் ஒரு தங்கக் கழி கிடந்தது; வெள்ளிக் கழியால் அவன் அவள் உடலெங்கும் தட்டினான். ஒன்றும் நிகழவில்லை. பின்தங்கக் கழியால் அதே போலத் தட்டினான். அது காலில் பட்டதும், தலை உடலுடன் ஒட்டிற்று. மங்கை நெளிந்தாள்; மணிவேலை உருக்கமான பார்வையுடன் பரக்க நோக்கினாள்.
“அழகு மிக்க இளைஞனே! இங்கே எப்படி வந்தாய்? இங்கே நிற்காதே. பரமசிவனுக்குத் தப்பினாலும் தப்பலாம். இந்த நீர் அரக்கனுக்குத் தப்ப முடியாது. ஓடிப்போ” என்றாள்.
“அழகுப் பிழம்பே! உன்னை மறந்து நீ என் வகையில் கவலை கொள்ள வேண்டாம். நான் இறக்க அஞ்சவில்லை. பிழைத்தோடுவதானால் உன்னுடன் ஓடுவேன். இங்கிருந்து சாவதைவிட, உன்னுடன் ஓடமுயன்று சாவதில் கேடில்லை. புறப்படு” என்றான்.
அவன் துணிச்சல் அவளுக்குச் சிறிது தெம்பளித்தது. அவன் அவள் கரங்களைப் பற்றினான். அவளுக்கும் துணிச்சல் எழுந்தது. அவளைக் கொடிபோல் தன்னுடன் இணைத்த வண்ணம் அவன் மீண்டும் சடை முடியைப் பற்றி இறங்கினான். படகைச் சுழியோரத்துக்குச் செலுத்தினான்.
படகு மீண்டும் சுழலின் வழிப்பட்டது. ஆனால், இத்தடவை அது எதிர் திசையில் மேல் நோக்கிச் சுழன்றது. புழைவழியில் அது மேலெழுந்தது. மேற்சுழலில் மீண்டும் சுழன்று எழுந்தது. இத்தடவை, மணிவேல் மாணிக்கக் குமிழிகளைக் காணவில்லை. அவன் தன் அருகிலுள்ள மங்கையைத் திரும்பிப் பார்த்தான். அவள் கழுத்தில் இன்னும் ஒரு செவ்வரை இருந்தது. அது மெல்ல மெல்ல மறைந்து வந்தது.
“மங்கையே, உன் பெயரென்ன? விவரமென்ன?” என்று கேட்டான்.
“என்னை ஆளவந்த அழகரே! என் தலைவெட்டுண்டு எத்தனை ஊழிகள் ஆயினவோ அறியேன். என் தாய் விண்மங்கை; என் தந்தை மண்செல்வன்; இருவரையும் விட்டு என்னைப் பிரித்தான் நீர் அரக்கன்; அவனை நான் மணந்துகொள்ள இணங்கவில்லை; அவன் உடலைக் கிழித்து அதனுள் ஒளிந்தேன்; ஆனால், அவன் அறிதுயில் உருக்கொண்டு என் உடலைப் பிளந்தான்; நூறாயிரம் ஆண்டுக்கு ஒரு தடவை தங்கக் கழியால் என்னை இணைப்பான்.”மணம் செய்ய விருப்பமா?" என்பான். மாட்டேன் என்றவுடன். வெள்ளிக்கழியால் மீண்டும் உடல் வேறு தலைவேறு ஆக்குவான். இது என் கதை."
“முன் நான் ஒன்றுபட்டுத் தொண்ணூற்றொன்ப தாயிரத்துத் தொண்ணூற்றொன்பது ஆண்டுகள் ஆய்விட்டன. நீங்கள் வர ஓர் ஆண்டு பிந்தியிருந்தால், நீங்கள் இறந்திருக்க வேண்டும். நான்….”
மணிவேல் அவளைப் பேசவிடவில்லை. “மாணிக்க மங்கையே! இனி அந்த உலகம் போய் விட்டது. அதோ பார் மேலே, உன் தாய்! இதோ பார், அருகே கீழே, உன் தந்தை! அவர்கள் சான்றாக, இனி நீ என் இணையறா எழில் துணைவி. உனக்கு இனிக் கவலை கிடையாது” என்றான்.
மாணிக்க மங்கையுடன் அவன் தன் அன்னையிடம் சென்றான். மாணிக்கங்களில் ஒன்பதை இளவரசிக்கு அனுப்பினான்.
இளவரசி உள்ளம் மாணிக்கத்தைத் தாண்டி மணிவேலை அணுகிற்று. மன்னன் அவனையும் அன்னையையும் விருந்திற் கழைத்து, இளவரசியை ஏற்று நாடாள வேண்டினான். மாணிக்க மங்கையின் கருத்தறிந்த பின், அரசன் இளநாகன் விருப்பத்தை மணிவேல் ஏற்றான்.
மாணிக்க மங்கையின் கதை கேட்ட மருதவேலி அவளைக் கண்டு அஞ்சுவதா அல்லது அணைப்பதா என்று தயங்கினாள். ஆனால், மாணிக்க மங்கையே அவளை அணைத்துக் கொண்டாள். “அதெல்லாம் நானும் அவரும் ஒருங்கே கண்ட கனவு. நீ இரண்டையும் நனவாக்கினாய்?” என்று அவள் கூறிப்பேச்சை மாற்றினாள்.
மாணிக்கங்களில் சிலவற்றுடன் அவன் அன்னையைத் தந்தையிடம் அனுப்பினான். பின் அவனும் மாணிக்க மங்கையுடன் சென்று, தந்தை கண்குளிரத் தமையன்மாருடன் அளவளாவினான்.
நீர் அரக்கன் என்ன ஆனான் என்பதுபற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. ஆனால், அவனே பவளப் பாறையின் உருவில் கடலெங்கும் படர்ந்து மாணிக்க மங்கையைத் தேடி வருவதாகக் கடல் அலைகள் மாணிக்க மங்கைக்கு எச்சரிக்கை தந்தன.
தேனிலந்தை
ஆனைமலையை அடுத்த உம்பற் காட்டில் செங்கோடன் என்று ஒரு குறவர் நாட்டு மன்னன் இருந்தான். அவன் மாயத்தில் வல்ல ஒரு வாயாடி மரபுப் பெண்ணை மணந்து கொண்டான். இந்த உறவை அவன் நாட்டு மக்கள் விரும்பவில்லை. ஆகவே, அவன் தன் உறவினன் ஒருவனுக்கு முடி சூட்டிவிட்டு, நாடு துறந்து, அயல்நாட்டில் சென்று காலங்கழித்தான்.
செங்கோடன் மனைவி இலஞ்சி, அழகிற் சிறந்த ஒரு பெண் மகவை ஈன்றாள். குழந்தை பிறந்த சில நாட்களிலேயே செங்கோடன் இயற்கை எய்தினான். இலஞ்,சி வாழ்வில் தனித்து, வறுமையினால் அல்லல்பட்டாள். ஆனால், குழந்தையை அரும்பாடுபட்டு வளர்த்தாள். அது தேனிலந்தைப் பழத்திலேயே ஆரா நாட்டம் கொண்டிருந்ததனால், அதை எல்லாரும் தேனிலந்தை என்றே அழைத்தனர்.
இலஞ்சி இருந்த குடிசையின் அருகே ஒரு பூங்கா இருந்தது. அது மாந்தை என்ற சீமாட்டிக்கு உரியது. அவள் மாயத்தாலேயே பெருஞ்செல்வம் ஈட்டியவள். அவளும் தேனிலந்தைப் பழத்தில் அவா உடையவள். எனவே, அவளது பூங்காவெங்கும் தேனிலந்தைக் கனி பழுத்துக் குலுங்கிற்று.
இலஞ்சி தன் செல்வமகளுக்காக அடிக்கடி அந்தப் பூங்காவில் சென்று பழம் பறிப்பது வழக்கம். இது சீமாட்டி மாந்தைக்குப் பிடிப்பதில்லை. ஆயினும், இலஞ்சியும் தன்னைப் போல மாயம் வல்லவள் என்பது அவளுக்குத் தெரியும். அத்துடன் இலஞ்சி தனக்கெனச் செல்வம் திரட்ட மாயத்தைப் பயன்படுத்த வில்லை. ஆதலால், அவள் மாயத்துக்கு ஆற்றல் மிகுதியா யிருந்தது. மாந்தை தன் செல்வத்தைப் பெருக்க மாயத்தைப் பயன் படுத்தியிருந்ததால், அது இலஞ்சியின் முன் செயலாற்ற முடியவில்லை.
தேனிலந்தை மங்கைப் பருவம் அடைந்த போது, அவள் ஈடும் எடுப்புமற்ற எழிலரசியாக விளங்கினாள்.
அந்த நாட்டின் அரசன் கண்டீரன் என்பவன். அவனுக்கு மல்லன், மாறன், மருதன் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். மூவரும் கிட்டத்தட்ட அடுத்தடுத்த வயதுடையவர்கள். மூவருமே தற்செயலாகத் தேனிலந்தையைக் கண்டு, அவளை மணம் செய்து கொள்ள விரும்பிக் கடும் போட்டி இட்டனர்.
சிலகாலம் அப்போட்டியினால், ஊரே கலகலத்து விட்டது. தேனி லந்தையை ஏற்கெனவே வெறுத்திருந்த சீமாட்டி மாந்தை, இப்போட்டி கண்டு இன்னும் பொருமினாள். ஆயினும், இலஞ்சியின் மாயத்தை எதிர்க்க அஞ்சி, அவள் தன் சீற்றத்தை அடக்கிக் கொண்டாள்.
திடுமென ஒருநாள் இலஞ்சி படுக்கையில் வீழ்ந்தாள். இரண்டொரு நாட்களுக்குள் அவள் நோய்ப்பட்டு உயிர் நீத்தாள். மாந்தை இந் நிகழ்ச்சியைப் பயன்படுத்தி, தேனிலந்தை மீது பழி வாங்க முனைந்தாள்.
இலஞ்சியிடமிருந்து தேனிலந்தையும் மாயம் கற்றிருந்தாள். ஆனால், தேரா இளங்கன்னியாகிய அவள் மாயத்துக்கு, மாந்தை அஞ்சவில்லை.
அரசிளஞ்செல்வர்களின் போட்டி பூசல்களைக் கண்டு தேனிலந்தை ஒருநாள் மகிழ்ந்திருந்தாள். அச்சமயம் பார்த்து மாந்தை தன் மாயத்தால் அவள் வீட்டை ஒரு குட்டையாக்கி, அவளை ஒரு பச்சைத் தவளை யாக்கினாள்.
மாயங்களை எதிர்க்கும் திறமுடையது காதல் திறம். தவளை யுருவிலே இருந்த தேனிலந்தைக்கு இது தெரியும். ஆகவே, தன்னை நாடி ஒரு காதலன் வரும் வரை, அவள் மாந்தையின் மாயத்துக்குள் கட்டுப்பட்டு இருந்தாள்.
அவள் தவளையானதை அரசிளஞ்செல்வர்களால் அறிய முடியவில்லை. திடுமென அவள் மறைந்ததால், அவர்கள் மலைத்து நின்றனர். போட்டிக்குக் காரணமான காதலி மறைந்தபின், அவர்கள் போட்டியை நிறுத்தித் தம் அரண்மனை திரும்பினர்.
மன்னன் கண்டீரன் இப்போது நோய்வாய்ப்பட்டான். அவன் உடல் ஏற்கெனவே முதுமையால் தளர்வுற்றிருந்தது. நோய் முதுமையின் நலிவைப் பெருக்கிற்று. இந்நிலையில் அவன் தன் ஆட்சிப் பொறுப்பைத் தன் புதல்வர்களுள் ஒருவரிடம் ஒப்படைக்க விரும்பினான். ஆயினும், எந்தப் புதல்வனைத் தேர்ந்தெடுப்பது என்று அவனால் எளிதில் முடிவு செய்யக் கூடவில்லை.
எல்லாரிடமும் அவன் சரிநிகர் அன்பு கொண்டிருந்தான். திறமையில் மிக்கவனைத் தேர்ந்து கண்டு, அவனிடம் குடிமக்கள் நலனை ஒப்படைக்க எண்ணினான்.
இந்நோக்கத்துடன் அவன் புதல்வர்களை அழைத்தான். “குழந்தைகளே, நான் உங்களுக்கு மூன்று தேர்வுகள் நடத்தப் போகிறேன். அவற்றில் வெற்றி பெறுகிறவனுக்கே நாட்டை அளிப்பேன்” என்று கூறினான்.
இதைக்கேட்ட புதல்வர் மூவரும் ‘சரி’ என ஒப்பினர்; தேர்வுகளைக் கூறும்படி வேண்டினர்.
மன்னன் கண்டீரன், “இன்னும் மூன்று மாதங்களுக்குள் நீங்கள் ஒவ்வொருவரும் நூறு முழம் நீள அகலமுள்ள மென்துகில் ஒன்று கொண்டுவரவேண்டும். அஃது, என் சிறு விரலின் கணையாழிக்குள் நுழையுமளவு நுண்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும்; இதுதான் என் முதல் தேர்வு” என்றான்.
மூத்தவர்கள் இருவரும் எடுபிடி ஆட்களுடனும், வண்டி குதிரை களுடனும், மூட்டை முடிச்சுகளுடனும் புறப்பட்டனர். ஆனால், இளையவனான மருதன் தன்னந் தனியனாகவும், கால்நடையாகவுமே பயணத்தைத் தொடங்கினான்.
மூத்தவர் இருவரும் செல்லும் திசையிலெல்லாம் கண்ட கண்ட மென்துகில்கள் அனைத்தையும் வாங்கினர். அவற்றின் பளுவால் வண்டியின் அச்சுகள் வளைந்தன. குதிரைகளின் முதுகுகள் நெளிந்தன. ஆயினும், அவர்கள் மேன்மேலும் துகில்வகைகளை வாங்கிக் கொண்டே சென்றனர்.
இவர்களுக்கு நேர்மாறாக இளையவனான மருதன் எதுவும் வாங்காமல் நடந்தான்.
அவர்கள் செல்லும்வழி, ஓரிடத்தில் மூன்று சுவராகப் பிரிந்தது. ஒரு வழியில் மாடமாளிகைகள், கூட கோபுரங்கள் இருபுறமும் இருந்தன. தலைமூத்தவனான மல்லன் அதன் வழியே சென்றான்.
மற்றொரு வழி, தண்ணிழல் வாய்ந்த கனிமலர்க்காவி னூடாகச் சென்றது. இரண்டாவது இளைஞன் மாறன் அவ்வழிச் சென்றான்.
மூன்றாவது வழி கரடுமுரடாகவும் அங்கங்கே சேறு சறுக்கல் நிறைந்ததாகவும் காணப்பட்டது. சந்தடியில்லாத அந்த ஒதுக்குப்புற வழியையே மருதன் தெரிந்தெடுத்துக் கொண்டான்.
தந்தை கூறிய மென்துகில் தனக்குக் கிட்டக்கூடும் என்று மருதனுக்கு நம்பிக்கையில்லை. ஓரளவு அவன் மனமும் அதை நாடவில்லை என்னலாம். ஏனெனில், தேனிலந்தை திடீரென்று மறைந்தவுடன், அவன் தன் அண்ணன் மாரைப் போல அவளை முற்றிலும் மறந்துவிடவில்லை. ‘அவள் எங்கே போயிருப்பாள்? என்ன ஆயிருப்பாள்?’ என்று அவன் மனம் எப்போதும் சிந்தனையிட்டுக் கொண்டே இருந்தது.
தந்தையின் தேர்வை அவன் தன் கவலையைச் சிதறடிப்பதற்கான ஒரு வாய்ப்பாகக் கொண்டான். ஒதுக்குப் புறமான வழியை அவன் தேர்ந்தெடுத்ததன் காரணம் அதுவே. தன் பயணத்தில் ஒன்று அவளைக் காண, அல்லது அவளைப் பற்றிக் கேள்விப்பட வழி ஏற்படலாம். அல்லது அவளைப் பற்றித் தனியேயிருந்து சிந்தித்து, மன வேதனைக்கு ஒரு போக்குக் காணலாம் என்று அவன் நினைத்தான்.
கரடுமுரடான வழியில் செல்லும்போது அவன் உள்ளத்தில் தேனிலந் தைக்காகத் தானும் தன் அண்ணன்மாரும் போரிட்ட காட்சி நினைவுக்கு வந்தது. தேனிலந்தையின் உருவம் மட்டுமன்றி, அதன் சூழலும் மனக் கண்முன் நிழலாடிற்று.
மருதன் கால்கள் அவனையறியாமல் எங்கெங்கோ அவனை இழுத்துச் சென்றன. ஆனால், ஒன்றிரண்டு நாட்கள் இவ்வாறு சென்றபின், அவன் கண்ட சூழல் அவனைத் திடுக்கிடச் செய்தது. தேனிலந்தைக்காகச் சண்டை நிகழ்ந்த இடத்தையே அவன் கண்முன் கண்டான்.
அது தன் உள்ளத்தின் கனவுக்காட்சியானால், அதில் தேனிலந்தையின் வடிவம் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். தேனிலந்தையில்லாமல் சூழல் மட்டும் கனவில் வருவது இயல்பன்று. ஆகவே, அது நனவுக்காட்சிதான் என்று அவன் துணிந்தான்.
அவன் ஒரு கல்லின்மேல் சாய்ந்து உட்கார்ந்தபடியே தனக்குள்ளாகப் பேசிக் கொண்டான். “தேனிலந்தையே! நீ திடீரென்று எங்கே மறைந்து விட்டாய்? எனக்கு என் தந்தையின் அரசு வேண்டாம்; நீ கிடைத்தால் போதும். தந்தை கேட்டபடி நூறுமுழ அகல நீளமுள்ள மென்துகிலைத் தேடித்தான் நான் புறப்பட்டேன். ஆனால், என் உள்ளம் அதை நாடவில்லை, உன்னைத்தான் நாடுகிறது” என்றான்.
“கிடைக்காத தேனிலந்தைக்காகக் கிடைக்கக் கூடிய அரசை ஏன் விடுகிறான்?” என்று எங்கிருந்தோ அருகில் ஒரு குரல் எழுந்தது. ‘பேசியது யார்?’ என்று காணாமல் மருதன் சுற்றிச் சுற்றிப் பார்த்தான்.
குரல் மீட்டும் பேசிற்று. அது மற்ற தவளைகளைவிடச் சற்றுப் பெரிதான ஒரு பச்சைத் தவளை. உண்மையில், அது தவளையாக மாற்றப்பட்ட - தேனிலந்தையே. ஆனால், இது மருதனுக்குத் தெரியாது.
“இளவரசே! தேனிலந்தை இப்போது உயிருடனிருந்தால், உம் காதல் உறுதிகண்டு, மகிழ்வாள். ஆனால் அவள் இல்லை. எனினும், நீர் அரசு பெற நான் உதவக் கூடும்” என்றது தவளை.
தவளை பேசுவது கண்டு அவன் வியந்தான். அத்துடன் அதன் குரல் தவளையின் குரல்போல அருவருப்பாக இல்லை. ஆயினும், ஒரு தவளை தனக்கு உதவக்கூடும் என்பதை அவன் நம்பவில்லை.
“நீ புதுமை வாய்ந்த ஒரு தவளைதான். ஆனால், எனக்கு நீ எப்படி உதவ முடியும்? இறந்துவிட்ட என் காதலியை நீ கொண்டுவர முடியுமா? அல்லது என் தந்தைகேட்டபடி. கணையாழிக்குள் நுழையத்தக்க நுண்மையான நூறு முழம் உள்ள மென்துகிலைத்தான் தர முடியுமா?” என்று அவன் வெறுப்புடன் கூறினான்.
“இளவரசே, என்னால் எது முடியும், எது முடியாது என்பது பற்றி உமக்கு ஏன் கவலை? உம் அண்ணன்மார் இப்போது இங்கிருந்தால், என் சொல்படி நடந்து, அரசைப் பெற்று விடுவார்கள்” என்றது தவளை.
“நான் என்ன செய்ய வேண்டும்” என்று மருதன் கேட்டான்.
“சற்றுப் பொறுத்திருங்கள்” என்று கூறித் தவளை குட்டைக்குள் மூழ்கிற்று.
அது பாசி பிடித்த ஒரு சிறு மூட்டையை அவனிடம் தந்தது. “இதைக் கொண்டு போய், உம் தந்தையிடம் கொடுங்கள்” என்று கூறி மறைந்தது.
அந்த மூட்டையுடன் மருதன் புறப்பட்டான். ஆனால், அவன் உடனடியாக அவன் தந்தையிடம் போகவில்லை. தேர்வுக்குக் குறித்த மூன்று மாதங்களும் கழியும்வரை அவன் பின்னும் அலைந்தான். தேனிலந்தைபற்றி வேறு எங்காவது ஏதாவது செய்தி தெரிய வரலாம் என்று அவன் கருதினான்.
மூன்று மாதங்கள் கடந்தன. வேறு எந்தச் செய்தியும் மருதனுக்குக் கிட்டவில்லை. அவன் தந்தையிடம் வந்தான்.
அவன் அண்ணன்மார்கள் அவனுக்கு முன்பே வந்திருந்தார்கள். அவர்கள் கொண்டு வந்திருந்த சரக்கு மூட்டைகள் அரண்மனையைச் சூழ எங்கும் நிறைந்திருந்தன.
குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அரசன் தன் பிள்ளைகள் கொண்டுவந்த சரக்குகள் அத்தனையையும் பார்வையிட்டான். வகைவகையான மென் துகில்கள் இருந்தன.
அவை அவன் கண்களைப் பறித்தன. அவற்றில் பல அன்னத்தின் இறகைவிட மெல்லியவையாயிருந்தன. ஆனால், எதுவும் அரசன் சுண்டுவிரல் கணையாழிக்குள் செல்லத் தக்கவையாய் இல்லை; ஆனால், அவையாவும் அவன் கைக் கடகத்துக்குள் செல்லத்தக்க அளவிலேயே இருந்தன.
மருதன் எதுவும் கொண்டு வராதது கண்டு, அண்ணன்மார் ஏளனம் செய்திருந்தனர். மற்றக் குடிமக்களோ, அவன் அமைதியும்,வேண்டா வெறுப்பும் கண்டு வியப்படைந்தனர்.
அரசன் மூன்றாவது மகனை அழைத்தான். “மருதா! நீ ஒன்றுமே கொண்டு வரவில்லையா?” என்று கேட்டான்.
மருதன் பாசிபடிந்த மூட்டையை நீட்டினான்.
அரசனுக்குக்கூட வெறுப்பு ஏற்பட்டது. அதைக் கையில் தொடாமல் தன் கைப்பிரம்பாலேயே தட்டி வீச எண்ணினான். ஆனால், அரசனுக்குரிய கடமையுணர்ச்சி அவனைத் தட்டி எழுப்பிற்று. அவன் ஒரு பணியாளை அழைத்து அதை அவிழ்க்கும்படி கூறினான்.
முடிச்சு பூசணிக்காய் அளவே இருந்தது. ஆனால், அவிழ்க்க அவிழ்க்க அது சிறிதாகிக் கொண்டே வந்தது. வரவர, மூட்டையின் தோற்றம் உயர்ந்து கொண்டே போயிற்று.
மாங்காயளவுக்கு வந்தவுடன், அது பட்டாலும் பொன் நூலாலும் பின்னப்பட்டதாயிருந்தது. நெல்லிக்காய் அளவு சிறுத்த உருவில் அதில் ஒரு முத்துச் சிமிழ் இருந்தது.
அதனுள் இருந்த மென்துகில் நிலவைப் பழித்த மென்மையும், வானவில்லைப் பழித்த மென்னிறங்களும் உடையதாக இருந்தது. அது விரிக்க விரிக்க அகன்று நூறு முழு அளவாயிருந்தது. ஆனால், மடிக்க மடிக்கச் சுருங்கி அரசன் கணையாழிக்குள் எளிதில் அடங்கிற்று.
ஏளனம் செய்த அண்ணன்மார்கள் ஏளனத்துக்கு ஆளாயினர். மன்னன் மருதனை ஆர அணைத்துக் கொண்டான். “பெறுதற்குரிய இச்செல்வத் துகிலை எங்கே பெற்றாய்?” என்று அரசன் அதன் நலம் பாராட்டினான்.
அரசன் தன் இரண்டாவது தேர்வைத் தொடங்கினான். இப்போதும் அவன் மூன்று மாதங்கள் தவணை தந்தான். ஆனால், இத்தடவை கோரிய பொருள் முன்னிலும் அருமையானதாக இருந்தது.
“ஒரு விளாங்காய்க்குள் அடங்கத்தக்க அழகிய சிறு நாய் ஒன்றைக் கொண்டுவரவேண்டும்” என்று அவன் பணித்தான்.
முன்போலவே மூத்தவர் இருவரும் ஆரவாரத்துடன் சென்றனர். மருதன் தனியாகச் சென்றான். வரும்போது ஒவ்வொருவரும் வகை வகையான சிறு நாய்களை ஏராளமாகக் கொண்டுவந்தனர்.
ஆனால், மருதன் இப்போது முன்னிலும் சிறிது நம்பிக்கையுடன் தவளையிடம் பேசினான். அது குட்டைக்குள் சென்று தேங்காயளவு பருமனுள்ள ஈயப்பேழை ஒன்றைத் தந்தது.
“பேழையை மெல்ல உடைக்க வேண்டும். அடுத்தடுத்து இருக்கும் மென்பேழைகளை இன்னும் மென்மையாக உடைக்க வேண்டும். கடைசிப் பேழையின் மீது ஊதினாலே போதும்; அது திறந்து கொள்ளும்” என்று தவளை கூறிற்று.
மூத்தவர் இருவர் கொண்டுவந்த பலவகை நாய்களின் அழகு அரசனையே கவர்ந்தது. தன் கட்டுப்பாட்டை அவர்களுக்காகக் கூடிய மட்டும் தளர்த்த எண்ணினான். ஆகவே, தன்னாலான வரை பெரிய விளங்காய் ஒன்றையே அவன் தருவித்திருந்தான். அதன் தோடுகள் இரண்டாகப் பிளந்து சிமிழாக்கப்பட்டிருந்தன.
அரசன் எவ்வளவு முயன்றும் நாய்களின் தலைகள்கூட விளங்காய்க் குள் நுழையவில்லை.
அண்ணன்மார் இத்தடவை மருதனை ஏளனம் செய்யவில்லை. பொறாமையுடனும், வெறுப்புடனும் நோக்கியிருந்தனர். ஆனால், விளங்காயில் அடங்கத்தக்க நாயை அவர்கள் கொண்டுவர முடியவில்லை யானாலும், தந்தை தங்கள் மீது மகிழ்வு கொண்டுள்ளார் என்பதை அவர்கள் அறிந்தார்கள்.
‘மருதன் இத்தடவை தோற்றுவிடத்தான் போகிறான்’ என்று அண்ணன்மார் இருவரும் ஆவலுடன் எதிர் பார்த்தனர்.
அரசனும் மிகுதி நம்பிக்கையற்ற தொனியில் மருதனை நோக்கினான். “எங்கே, உன் நாயைக் காட்டு, பார்க்கலாம்?” என்றான்.
மருதன் தன் சட்டைப் பையிலிருந்த ஈயப் பேழையை எடுத்து மெல்ல உடைத்தான். உள்ளே ஒரு செம்புப் பேழையும், அதனுள்ளே வெள்ளிப் பேழையும், பொன் பேழையும் இருந்தன. இவை கடந்து முத்துப்போலப் பளபளப்பான வாதுமையளவான சிமிழ் இருந்தது. அவன் அதை ஊதினான்.
யாவரும் வியக்கும் வண்ணம் சிமிழின் தோடு பறந்தது. ஒரு பெரிய வண்டு என்ற கருதத்தக்க அளவில், ஒரு சின்னஞ்சிறு நாய், யாவரும் கேட்கத்தக்க சில்லிட்ட குரலில் குரைத்துக் கொண்டு நின்றது.
அரசன் விளங்காயைத் திறந்தான். அது தானாகவே அதற்குள் குதித்து, உடலை அதற்குள் அடக்கி முடக்கிப்படுத்துக் கொண்டது.
மருதன் ஓர் இளவரசனல்ல; ஒரு மாயாவியே என்று மன்னன் மருண்டான். ஆனால், அந்தச் செல்வச் சிறு நாயிடம் அவன் உள்ளம் அவனையும் அறியாமல் சென்றது.
ஆயினும், மூன்றாம் தேர்வு மூத்த புதல்வர்களுக்கு உதவியாய் இருக்க வேண்டும் என்பதில் மன்னன் மிகவும் அக்கரை காட்டினான்.
“குழந்தைகளே! இதுவரை நான் கேட்ட பொருள்கள் கிடைத்தற் கரியவை. அத்தகைய பொருள்களை இனித் தேட வேண்டியதில்லை. மூவரும் அவரவர்க்குரிய ஓர் இளவரசியைத் தேடிக் கொண்டு வாருங்கள். யார் கொண்டுவரும் இளவரசி அழகில் சிறந்தவளாக இருக்கிறளோ, அவனுக்குத் தான் ஆட்சியைத் தருவேன்” என்றான் அரசன்.
மூத்தவர் இருவரும் மகிழ்ந்தனர். ‘செல்வ ஆரவாரத்தில் பழகிய தாங்களே இத்தடவை வெல்ல முடியும்’ என்ற இறுமாப்புடன் அவர்கள் சென்றனர்.
மருதன் இத்தடவை முன்னிலும் கிளர்ச்சியற்றவனாகவே சென்றான். ஏனெனில், அவன்எந்த இளவரசியையும் கொண்டுவர விரும்பவில்லை. தேனிலந்தையைத் தவிர வேறு எவரையும் எண்ணவே அவன் மனம் இடம் தரவில்லை.
அவன் சோர்வுகண்டு தவளை வியப்படைந்தது. “என்ன செய்தி? இளவரசே!” என்று கேட்டது.
அவன் செய்தியை எடுத்துரைத்தான். “இத் தடவை உன்னால் உதவவும் முடியாது. உதவினாலும் நான் ஏற்கப் போவதில்லை. ஏனெனில் தேனிலந்தையைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் நான் கண்ணால்கூடப் பார்க்க விரும்பவில்லை” என்று அவன் பிதற்றினான்.
தவளையின் கண்களில் ஒளி வீசின. அதன் உடலில் மின் ஆற்றல் பாய்ந்தது. அவன் காதல் உறுதி, மாந்தைச் சீமாட்டியின் மாயத்தை எதிர்த்தழிக்க அதற்குத் துணிவு தந்தது.
“நீ எந்த இளவரசியையும் தேட வேண்டியதில்லை. குறித்த நாள் வரும்வரை தேனிலந்தையையே எண்ணிக் கொண்டிரு. அந்தநாள் வந்ததும் தந்தையிடம் போ. ஆனால், போகும்போது நீ திரும்பிப் பார்க்கவும் கூடாது. பார்த்தால், உன் கண்முன் காண்பதைக் கண்டு சிரித்துவிடவும் கூடாது. மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறிச் சென்றது.
மருதனுக்குத் தவளை கூறியது ஒன்றும் புரியவில்லை. ஆனால், “தேனிலந்தையை நினைத்துக் கொண்டிரு” என்பதை மட்டும் அவன் மறக்கவில்லை. அது இனிய கட்டளையாக இருந்தது. ஆயினும் அவன் நினைப்பின் ஆற்றல் மாந்தையின் மாயத்தைக் கட்டோடு மாய்த்தது என்பது அவனக்குத் தெரியாது.
குறித்த காலம் வந்ததும், மருதன் புறப்பட்டான். அவன் பின்னே சருகுகள் மீதும் சரல்கள் மீதும் எலிகள் ஓடுவது போன்ற அரவம் கேட்டது. அவன் தவளையின் கட்டளையை மீறித் திரும்பிப் பார்த்தான். வேறு யாரையும் சிரிக்க வைக்கத் தக்க காட்சியை அவன்கண்டான்.
குச்சிகளால் தேர் போன்ற ஒரு சகடம் செய்யப்பட்டிருந்தது. அதன் மீதீருந்த ஒரு புல்கட்டின் மீது பச்சைத் தவளை வீறுடன் ஒய்யாரமாக வீற்றிருந்தது. தேரை இழுக்கும் குதிரைகள் நான்கு வெள்ளெலிகளா யிருந்தன.
ஒரு பெரிய தேரை வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தது. பச்சைத் தவளைக்கு இருபுறமும் இரண்டு கெண்டை மீன்கள் நின்றன. நீர்ப் பாசியாலான கவரிகளை அவை வாயில் கௌவி, பச்சைத் தவளைக்கு வீசின. பின்புறம் ஓர் ஆமை நின்று ஒரு பெரிய காளானால் குடை பிடித்தது.
மருதனுக்கு உள்ளூரக் கிளர்ச்சியில்லை. ஆகையால் இக்காட்சி கண்டும் இவன் சிரிக்கவில்லை. சிறிது அருவருப்புடன் மீண்டும் நடந்தான். காட்சி சற்றே அவன் கண்முன் மறைந்தது. ஆனால், சிறிது தொலை செல்லுமுன், முன்கேட்ட அரவம் மீட்டும் அவன் காதுகளில் விழுந்தது. அவன் இப்போது திரும்பிப் பார்க்கவில்லை.
அவன் திரும்பிப் பார்த்ததனால், மாந்தையின் மாயம் சிறிது வலுப்பெற்றிருந்தது. ஆனால், அச்சமயம் மாந்தை தன் இறுதிப் படுக்கையிலிருந்தாள். அவள் சாகும் நேரத்தில் மீண்டும் மாயத்தால் தன் பழிகளைப் பெருக்க எண்ணவில்லை. தன் மாயக்கோலையே அவள் முறித்தெறிந்தாள்.
மருதன் சிரிக்காததனால், மீந்திருந்த சிறிது மாயமும் மறைந்தது.
தவளை - தன் அவல உரு நீங்கித் தேனிலந்தையானாள்.
வெள்ளெலிகள் வெண்குதிரைகள் ஆயின.
கெண்டைமீன்கள் - அழகிய பாங்கிப் பெண்களாயின. பாசிக்கவரி பசுமணிக் கவரியாயிற்று.
தேர் - பொன்தேராயிற்று.
ஆனால், இத்தனையையும் மருதன் காணவில்லை. அவன் திரும்பிப் பாராமலே சென்றான்.
அவனுக்குமுன் அவன் அண்ணன்மார் இருவரும் ஒப்பற்ற அழகுடைய இரண்டு அரசிளஞ் செல்வியருடன் சென்றிருந்தனர். அரசன் மூன்றாம் புதல்வனுக்காகவே காத்திருந்தான்.
மருதனின் பின், பொற்றேரில் தேனிலந்தை வருவது கண்ட அனை வரும் வியப்புடன் ஆரவாரித்தனர்.
மருதன் திரும்பி நோக்கினான். அவனால், தண் கண்களை நம்ப முடியவில்லை. ஆனால், அப்படியே அவன் உள்ளம் இன்ப அலைகளில் மிகுந்தது.
உண்மையிலேயே தான் தேனிலந்தையை அடைந்து விட்டதாக அறிந்ததே, அவன் இன்பம் எல்லையற்றதாயிற்று.
இளவரசியர் இருவரும் எவ்வளவோ அழகு வாய்ந்தவர்களாகத்தாம் இருந்தனர். ஆனால், தேனிலந்தையின் தெய்வீக வடிவத்தின் முன் அவர்கள் ஒளி குன்றினர்.
அரசன் மூன்று புதல்வர்களுக்கும் அரசியல் முறையிலேயே திரு மணங்கள் நடத்தினான். மூத்தவர் இருவரும் தாம்தாம் கொண்டுவந்த இளவரசியரை மணந்து கொண்டனர்.
மருதன் தேனிலந்தையை மணந்தான். மன்னன் அவனையே அரசனாக்கினான். தேனிலந்தை அவன் உரிமை அரசியானாள்.
நீர் நங்கை
வைகா நாட்டில் வைவேல் என்று ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் அமைச்சன் பெயர் அறிவுக்கடல். மன்னனுக்குப் பதினெட்டு ஆண்டுகள் நிரம்பிய புதல்வன் இருந்தான். அவன் பெயர் மானவேல். அமைச்சன் அறிவுக் கடலின் மகன் வான்மதி. அவனுக்கு இரண்டாண்டுகளே இளையவனாயிருந்தான். இளவயது முதலே மானவேலும், வான்மதியும் ஒளியும் நிழலும்போல இணைபிரியாத தோழர்களாக வாழ்ந்தார்கள்.
மானவேலின் வீரத்துணிச்சல் கண்டு எல்லாரும் அவனைப் பாராட்டினார்கள். ஆனால், அந்தப் பாராட்டில் சிறிது கவலையும் கலந்திருந்தது. வான்மதியின் அமைதியும் நுண்ணறிவும் இந்தக் கவலை தீர்க்கத்தக்க நன்மருந்தாய் அமைந்திருந்தன. “வான்மதி உடனிருக்கும்வரை, மானவேல் பற்றிய அச்சம் நமக்குத் தேவையில்லை” என்று மன்னன் அடிக்கடி அமைச்சனிடம் கூறுவான். மைந்தனை மன்னன் பாராட்டுவதுகேட்டு அமைச்சன் முகம் மகிழ்ச்சிக் கடலில் குளித்தெழும்.
மானவேல் அடிக்கடி தன் நாட்டெல்லை கடந்து, காடு மேடுகளில் வேட்டையாடி வந்தான். அமைச்சன் மகன் வான்மதியும் அவனுடனே சென்றான். ஒருநாள் அவர்கள் ஆனைக் காட்டில் நெடுந்தொலை சென்று விட்டனர்.
திடுமென இருள் காட்டைக் கவ்விற்று. எந்த இடத்தில் இருக்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. தங்குமிடம் தேடி எத்திசை செல்வது என்றும் அவர்களால் துணிய முடியவில்லை.
அந்தக் காட்டுக்குள்ளேயே ஒரு பாழடைந்த தெப்பக்குளம் இருந்தது. அதைச் சுற்றி நெடுந்தொலை மரஞ் செடி கொடிகள் எதுவும் இல்லை. ஆனால், குளத்தருகில் மட்டும் மிகப் பெரிய மரம் ஒன்று நின்றது. அதில் ஏறியிருந்து, இரவைக் கழிக்க அவர்கள் முனைந்தார்கள்.
குதிரைகளை அவர்கள் அடிமரத்திலே கட்டினார்கள். மரத்தின் பெருங் கிளைகளினிடையே வாய்ப்பான இடம்தேடி உட்கார்ந்தார்கள். உறக்கம் வராமலிருப்பதற்காக அவர்கள் ஒருவர் முதுகில் ஒருவர் புதிர் போடுவதும், அதை முதுகிலேயே விடுவிப்பதுமாய் இருந்தனர். அத்துடன் கண்ணயர்ந்தாலும் விழாதபடி ஒருவரை ஒருவர் மேல் துண்டுகளால் மரத்துடன் இறுக்கிக் கட்டினார்கள்.
நள்ளிரவில் இருவர் கைகளுமே சோர்வுற்றன. கண்ணிமைகள் தம்மையறியாமல் மெல்ல மூடின. அச்சமயம் கடலில் அலை எழுவதுபோன்ற ஒரு பேரரவம் உண்டாயிற்று. இருவரும் அதனால் விழித்துக் கொண்டார்கள். குளத்தின் நீர் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
இருட்டில் அதன் நுரைகளின் குமுறல் அச்சம் தருவதா யிருந்தது. மானவேலும் வான்மதியும் அத்திசையிலேயே கருத்துச் செலுத்தியிருந்தனர். இருட்டில் இருட் பிழம்புபோல ஒரு கரிய உருவம் நீர் நடுவில் குளப்பரப்பைத் துளைத்தது. அது குளக்கரையை நோக்கி நீண்டு கொண்டே இருந்தது. குளங்கடந்தும் அது வளர்ந்தது.
உருவில் பாதி, கரை மீது வந்தவுடனே திடுமென ஒரு செவ்வொளி தோன்றிற்று. நீரும், கரையும், அவற்றிலுள்ள பொருள்களும் பட்டப் பகலில் தெரிவதுபோலத் தெரிந்தன. அதேசமயம் உருவின் கோரவடிவமும் நன்றாகப் புலனாயிற்று. அது இரண்டு மூன்று முழம் குறுக்களவும் நூறு முழத்துக்குமேல் நீளமுமுள்ள ஒரு செந்நிறப் பாம்பாயிருந்தது. அதன் அலகில் இருந்த ஒரு செம்மணியே அத்தனை பேரொளிக்கும் காரணமாக இலங்கிற்று. செந்நாகம் அதை மரத்தினருகே நிலத்திலிட்டது. அதைச் சுற்றி வட்டமிட்டது.
இளவரசனுக்கும், இள அமைச்சனுக்கும் மெய்ம்மயிர் எல்லாம் சிலிர்த்தன. என்ன நடக்குமோ என்று அவர்கள் உள்ளூர நடுங்கினர். அவர்கள் அஞ்சியது தவறன்று. தூங்கிக் கொண்டிருந்த குதிரைகள் செந்நாகத்தின் கண்களில் தென்பட்டன. உறங்கிய குதிரைகள் உறங்கிய வண்ணமே இருந்தன. செந்நாகம் அவற்றை இரு நொடிகளில் விழுங்கி விட்டது. குதிரைகளின் எலும்புகள் நொறுங்கும் அரவம் மட்டும்தான் நண்பர்களுக்குச் செவியிற்பட்டது.
செந்நாகம் மரத்தின் மேலிருக்கும் தம்மையும் கவனித்து விடுமோ என்று அவர்கள் அஞ்சினார்கள். ஆகவே, அவர்கள் மூச்சுவிடக்கூடத் துணியவில்லை. செந்நாகமும் பசியின் முதல் அலை தீர்ந்ததுபோல, மெல்ல மெல்ல மரத்துக்கப்பால் நகர்ந்தது. இப்போதும் அது செம்மணி மீது ஒரு கண்ணாகவே சுற்றிச் சுற்றி வட்டமிட்டது. ஒவ்வொரு சுற்றிலும் வட்டம் பெரிதாயிற்று. பாம்பு நெடுந்தொலைவு சென்றது.
இரண்டு நாழிகை நேரம் ஆயிற்று. பாம்பு கண்ணுக் கெட்டாது மறைந்துவிட்டது. ஆனால், செம்மணியின் ஒளி மட்டும் எங்கும் பட்டப் பகலாக்கியிருந்தது.
“ஆகா, எத்தகைய ஒளிமணி மாணிக்கம். அதிலும் நாக மாணிக்கம்! அகலுலகச் செல்வத்தைவிட அரிய செல்வம் நம்முன் கிடக்கிறது!” என்று வான்மதி வாய்விட்டுக் கூறினான்.
அவன் வாய்க்குள்ளாகத் தனக்குத்தானேதான் இதை வெளி யிட்டான். ஆனால், அவன் வாய் மூடுமுன், மானவேல் தன் கட்டுகளை அவிழ்த்துவிட்டான். பரபரவென்று மரத்திலிருந்து இறங்கினான். பாம்பின் பார்வையில் படாதவாறு மரத்துடன் மரமாகக் கீழ்நோக்கி இழைந்தான். நிலத்துடன் நிலமாக மரத்தடியில் தவழ்ந்து சென்றான். இறந்த குதிரைகளின் இலத்தியைத் திரட்டிக் கொண்டு, இம்மெனுமுன் அவன் மேலே ஏறினான்.
வான்மதி இளவரசன் திடீர்ச் செயல்கண்டு திகைத்தான். ஆனால், அவனைத் தடுப்பது வீணாகும் என்பது அவன் அனுபவம். அவன் போக்கில் விட்டு அவனைக் காப்பதிலேயே அவன் முனைந்தான். இளவரசன் போக்கையே அவன் விழித்த கண் மூடாமல் பார்த்திருந்தான். அவன் செயலின் குறிப்பையும் அவன் அறிந்து கொண்டான்.
மானவேல், செம்மணி மாணிக்கம் கிடந்த திசையிலுள்ள ஒரு கிளையில் ஊர்ந்தான். மாணிக்கத்துக்கு நேர் மேலே சென்றதும், இலத்தியை அதற்கு நேராகப் போட்டான்.
ஒரு கணத்தில் ஒளி மறைந்தது. இருள் சூழ்ந்தது. இளவரசன் தான் பற்றிய கிளையில் ஊர்ந்து சரேலென்று தன் இடம் வந்தான். வான்மதி அவனை எதிர்நோக்கியிருந்து, அவனை உடனே கிளையுடன் சேர்த்துப் பரபரவென்று கட்டினான்.
இதற்குள், மீண்டும் பேரரவம் கேட்டது. இத் தடவை அது செம்பாம்பின் சீறிய வரவு குறித்தது. அது மரத்தை விரைந்து விரைந்து சுற்றிற்று. ஆனால், செம்மணி கிடந்த இடத்தருகே கூட அது செல்லவில்லை. அதைச் சுற்றி நாற்புறமும் வந்துவந்து மீண்டது.
மானவேல் எதிர்பார்த்தபடி, இலத்தியின் வாடை செந்நாகத்துக்கு ஒரு பெருந்தடையாயிற்று. அது செம்மணியை மீண்டும் பெறமுடியாமலே தலையை மண்ணில் அறைந்தறைந்து உயிர் விட்டது.
காலை வரை நண்பர் இருவரும் மரத்திலேயே இருந்தனர். பொழுது புலர்ந்தவுடன் சிவந்த நாகத்தின் உடல் மரத்தடியில் அசையாது கிடப்பது கண்டனர். அதன் தலை சிதறி நீலக் குருதி எங்கும் படிந்திருந்தது.
அவர்கள் மெல்ல இறங்கி வந்தார்கள்; முதலில் நாகத்தின் உடலை அவர்கள் ஆழ்குழி தோண்டிப் புதைத்தார்கள்; அதன்பின் அவர்கள் செம்மணி மாணிக்கத்தை எடுத்து நீரில் அலம்பினார்கள். பகலில்கூட அதன் செவ்வொளி நெடுந்தொலை ஒளி வீசிற்று. அது குளத்தின் நீல நீர்ப்பரப்பைக் கிழித்து, அதன் அடியிலுள்ள நுண்மணலைக் கூடத் தெளிவாகக் காட்டிற்று.
நீரின் அடித்தளத்தில் கண்ட காட்சி அவர்களுக்கு வியப்பளித்தது. அதில் பூம்பந்தர்கள்; மலர்ப் பண்ணைகள் அடங்கிய ஒரு பூங்காவே தெரிந்தது.
மானவேல், அதைப் பார்க்க விரும்பினான்; வான்மதியிடம் எதுவும் கூறாமலே, அவன் நீரில் செம்மணியுடன் குதித்தான்; வான்மதியும் உடனடியாக அவன் குதித்த இடத்திலேயே குதித்து, அவனைப் பின்பற்றி நீரில் மூழ்கினான்.
நீரடியில் நீரில்லை. ஒரு மணி நேரம் மூச்சு அடக்கி நீரைத் துளைத்துச் சென்றபின், நீருக்குள் ஒரு புதிய உலகம் போல வெளியிடம் தெரிந்தது. நீரெல்லை கடந்தவுடன் அவர்கள் அதில் விரைந்து சென்று விழுந்தார்கள். ஆனால், கீழே விழுந்த இடம் கொடி தழை நிறைந்து மெத்தென்று இருந்தது. விழுந்த அதிர்ச்சி எளிதில் நீங்கிற்று. அவர்கள் எழுந்து பூங்காவைச் சுற்றிப் பார்த்தார்கள்.
குளத்தின் அடித்தளம் முழுவதும் பூங்கா பரந்திருந்தது. ஆனால், குளத்தின் அடி கடந்து பாதைகள் நிலத்தடியில் சென்றன. அவர்கள் அதைப் பின்பற்றினர். அங்கே அவர்கள் ஒரு பெருநகரையே கண்டனர். ஆனால், நகரில் ஆள்கள் இல்லை. உயிரினங்கள் இல்லை. மேன்மேலும் வியப்புடன் அவர்கள் எங்கும் சுற்றினர். எல்லா இடங்களும் கலையழகு நிறைந் திருந்தது. அதை நுகர்பவர்களை மட்டிலும் எங்கும் காணவில்லை. ஆனால், பாரிய ஓர் அரண்மனையின் ஒரு பகுதியிலே எழில்மிக்க ஒரு நங்கை துயில்வதை அவர்கள் கண்டார்கள்.
மானவேல் பரபரப்பு முழுவதும் அந்த எழில் உருவத்தைக் கண்ட வுடன் அடங்கிற்று. அவன் கண் கொட்டாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தான். அது அணிந்திருந்த ஆடைகள் மெல்லிய நுரைகள் போன்றிருந்தன. வானவில்லின் நிறங்கள் நுரையில் நிழல்படுவதுபோல, அவை ஏழெழில் வண்ணமாக இலங்கின. எழிலுருவின் உடல் வெண் பளிங்கினாலும் சலவைக் கல்லாலும் கடைந்திழைத்த பதுமை போன்றிருந்தது.
ஆனால், பதுமையில் காணாத உயிர்க்களையும் உயிர்ப் பொலிவும் அவ்வுருவில் மிளிர்ந்தன. நுண்ணிய செவ்வண்ண அலைகளும், நீல வண்ணத் திரைகளும் அதில் நெளிந்து அதன் அழகைப் பெருக்கின. அதன் ஒவ்வொரு மென் மூச்சிலும் உடல் முழுதும் அலை எழுந்தெழுந்தமிழும் நடுக்கடல் பரப்புப்போல எழுந்தெழுந்து அடங்கிற்று. மூடிய கண்ணிமைகளின் அழகே திறந்த கண்ணின் அழகுக்கு ஓர் அறைகூவல்போலத் தோன்றிற்று. மானவேல் நிலைகண்டு வான்மதி புதுக் கவலையுற்றான்.
எழில் உருவம் உண்மையில் ஒரு நீர் நங்கை. அவள் பெயர் செம்மலர்த்தாள். அவள் சுற்றத்தாரனைவரும் கடலகத்தின் ஆழத்தில் பவளப்பாறை களிடையேதான் வாழ்ந்தார்கள். அவள் தந்தை நிலவுலகிலிருந்து வந்த ஒரு நாகன். இக் காரணத்தால் மற்ற நீர் நங்கைகளைப்போல, அவள் உடல், பாதி மீனாய் இருக்கவில்லை. அறைக்குக் கீழே, மீன் வாலுக்கு மாறாகக் கால்களே இருந்தன! அது கண்டு நீர் மைந்தரும், நீர் மகளிரும் வியப்புற்றார்கள். சிவந்த மலர் போன்ற தாள்கள் உடையவள் என்று அவர்கள் அவளுக்குப் பெயரிட்டார்கள்.
நிலவுலகக் கால்களுடன் அதற்குரிய நிலவுலக மனப்பான்மைகளும் அவளிடம் இருந்தன. அவள் நீந்துவதற்கு மாறாக நடப்பதில் மிகுதி அவாவுடையவளாயிருந்தாள். அதுவும் கடலடியில் பவளப்பாறைகளில் நடப்பதுடன் அவள் அமையவில்லை. கடற்கரையிலும், ஆற்றங்கரையிலும் நெடுந்தொலை நடக்க விரும்பினாள். தாயும் சுற்றாத்தாரும் அவள் விருப்பங்களை முழுதும் தடுக்க முடியவில்லை; தடுக்கவுமில்லை. இதன் பயனாக, அவள் அடிக்கடி நீரெல்லை தாண்டி நெடுந்தொலை நடந்தாள்.
செம்பாம்பு வடிவிலிருந்த பூதம் அச்சமயம் அவளைக் கண்டது. அது அவளை விழுங்கவில்லை. அவளை மணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் அது அவளைக் காட்டுக் குளத்துக்குக் கொண்டு வந்திருந்தது. நீரினடியில் தன் மாயத்தால் அது ஒரு பூங்காவை உண்டாக்கிற்று. அதில் அவளைச் சிறைப்படுத்திற்று.
அவள் விரும்பினாலல்லாமல் செம்பாம்பு அவளை மணம் செய்ய விரும்பவில்லை. ஏனென்றால், ஒரு பெண்ணின் விருப்பத்தாலேயே அது அழகிய மனித உருஎடுக்கும் ஆற்றல் பெற்றிருந்தது. நாள்தோறும் அது வெளியே சென்று இரை தேடிற்று. அவளுக்கும் உணவு கொண்டு வந்தது. நாள்தோறும் வகைவகையான உணவாலும் உரையாடலாலும் அவளை மகிழ்வித்தது. அவள் விருப்பம் பெற முயன்றது. அனால், அவள் மனம் செம்பாம்பைக் கணவனாக ஏற்க என்றும் இசையவில்லை.
செம்பாம்பு நாள்தோறும் காலையிலேயே இரைதேடி மீண்டது. அந்த நேரத்திலேயே செம்மலர்த்தாளும் கண் விழிப்பது வழக்கம். அம்முறையில் அன்று அவள் கண்விழித்தாள். விழித்தவுடன் அவள் அஞ்சி நடுங்கினாள்; வாய் குளறினாள். தம்மைக் கண்டுதான் அஞ்சுகிறாள் என்று மானவேலும் வான்மதியும் எண்ணினார்கள். அவர்கள் ஒதுங்கி நின்று, அவள் தெளிந்தபின் வரவிரும்பினார்கள். ஆனால், அவள் முகம் திடுமென மாறிற்று. அது அமைதியும், இனிமையும் உடையதாயிற்று.
“அன்பர்களே! நீங்கள் யார்? உங்களைக் கண்டு நான் அஞ்ச வில்லை. வழக்கமாக நான் காணும் உருவத்தைக் கண்டே அஞ்சினேன். இன்று அது, புது உருவத்தில் வந்தது என்று எண்ணினேன். நான் எண்ணியது தவறு என்றே தோன்றுகிறது. ஏனெனில், நீங்கள் இருவரா யிருக்கிறீர்கள். மேலும் நான் விரும்பினாலல்லாமல் பூதம் மனித உரு எடுக்க முடியாது என்று அதுகூறக் கேட்டிருக்கிறேன்” என்றாள் அவள்.
மானவேல் தன்னைப்பற்றியும் வான்மதியைப் பற்றியும் பேசினான். அதன்பின், “பூதத்தைப் பற்றி நீ அஞ்ச வேண்டாம், அம்மணி! அது நாங்கள் கண்ட செம்பாம்பாகவே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். நான் அதைக் கொன்று புதைத்துவிட்டேன். அது இனி வந்து உன்னை அச்சுறுத்தாது” என்றான்.
அவள் முகத்தில் மகிழ்ச்சி மின்னிட்டது. ஆனால், அதை அடுத்து அவநம்பிக்கையும் நிழலாடிற்று. மானவேல் அதைக் குறிப்பாக உணர்ந்தான். செம்மணியை எடுத்துக் காட்டினான்.
செம்மலர்த்தாள் முதல் மகிழ்ச்சியில் எழுந்து ஆடினாள்; பாடினாள்; பின் மெல்ல நண்பர்களிடம் தன் கதை முழுவதும் கூறினாள். செம்மணி மாணிக்கத்தின் முழு ஆற்றலையும் அவள் தெரிவித்தாள். “இந்தச் சிறையிலிருந்து வெளிப்பட்டுக் குளப்பரப்புக்குச் செல்ல, இந்தச் செம்மணி மாணிக்கம் ஒன்றுதான் உதவும். அதை நீங்கள் பெற்றுவிட்டீர்கள். அத்துடன் வெளியுலகத்துக்குச் சென்ற பின்னும் இதன் மதிப்புப் பெரிது. இது இரவில் பத்து நாழிகை தொலைவும், பகலில் ஐந்து நாழிகை தொலைவும் ஒளி வீசும். இதை வைத்திருப்பவர் அங்ஙனம் வைத்திருக்கும்வரை மீளா இளமையும் பெறுவர். இதைப் பெற்றதனால் தாங்கள் எனக்கு உயிரும் வாழ்வும் அளித்தீர்கள். உங்களுக்கு என் ஆவியும் உடலும் உரியன!” என்றாள்.
“எழிலரசி, என் ஆவியும் உடலும் உன்னைக் கண்ட கணத்திலேயே உனக்கு உரியன ஆகி விட்டன. ஆயினும், என் உரிமையை நான் வலியுறுத்த வில்லை. உன் விருப்பமே என் ஆணை” என்றான்.
மிகச்சில நாட்களில் மானவேலும் செம்மலர்த்தாளும் உடலும் உயிருமாகப் பழகிவிட்டனர். வான்மதி, நண்பனின் இன்ப வாழ்வு கண்டு மகிழ்வடைந்தான். ஆயினும், அவன் இளவரசனைப் போல நாட்டை மறந்து இருக்க முடியவில்லை. தன் மற்றக் கடமைகளையும் அறவே மனத்தை விட்டு அகற்றிவிடவில்லை. “தாய் தந்தையர், நாட்டு மக்கள் நம்மைக் காணாமல் கவலைப்படுவார்கள். நாம் விரைவில் திரும்பிச் செல்ல வேண்டாமா?” என்று அடிக்கடி நினைவூட்டினான்.
மானவேல் நீர் நங்கையைத் தன்னுடன் இட்டுச் சென்று மணம் செய்துகொள்ள விரும்பினான். அவளும் இதற்கு மனமகிழ்வுடன் இசைவு அளித்தாள். ஆனால், இளவரசன் வந்தபடியே திரும்பிப் போக விரும்ப வில்லை. இளவரசியின் மதிப்புக்கேற்ப அரசின் ஆரவாரத்துடன் அவளை இட்டுச் செல்ல விரும்பினான்.
“நண்பனே, நீ முதலில் சென்று, எல்லாருக்கும் என் நிலையை விளக்கிக் கூறு. இளவரசி பற்றியும் கூறி அவளுக்கேற்ற சிவிகை. காவற் படை முதலியவற்றுடன் திரும்பி வா. குளங் கடந்து செல்லும் செம்மணி மாணிக்கத்தைக்கூட நீயே கொண்டு போகலாம்; நீ திரும்பி வரும்வரை நான் இளவரசியுடன் இருப்பேன்” என்றான்.
வான்மதி இணங்கினான். ஆனால் செம்மணி மாணிக்கத்தை அவன் கொண்டுசெல்ல விரும்பவில்லை. “அண்ணலே, மணி உங்களிடமே இருக்கட்டும். தேவைப்படும் சமயம் வெளியே வரப்போக அது உங்களுக்குப் பயன்படும். நீங்கள் என்னை வெளியே வந்து அனுப்பி வைத்தால், போதுமானது. நான் திரும்பி வந்ததும் குள நடுவே தங்கள் பெயர் செதுக்கிய ஒரு கல்லை இடுவேன். அதைத் தாங்கள் அடையாளங்கண்டு வெளியே வரும்வரை காத்திருப்பேன். அதன்பின் மூவரும் முறைப்படி நாடு செல்லலாம்” என்றான்.
வான்மதியின் ஏற்பாடு மானவேலுக்குப் பிடித்திருந்தது. அன்றே வான்மதி புறப்பட்டுச் சென்றான்.
ஆனால், வான்மதி திரும்பி வரப் பல நாட்கள் சென்றன. மானவேலுக்கும் செம்மலர்த்தாளுக்கும் நாட்கள் கணங்களாகவே கழிந்தன. அந்நாட்களில் செம்மணி மாணிக்கத்தை மானவேல் ஒரு தடவைகூடப் பயன்படுத்த எண்ணவில்லை. செம்மலர்த்தாள் உறங்கும்போது, அவன் அவளைப் பார்த்துக் கொண்டே யிருப்பான். அவள் விழித்த பின் அவளுடன் பேசிக்கொண்டே பொழுது போய்விடும். ஆனால், மானவேல் உறங்க நேர்ந்த சமயம் செம்மலர்த்தாளால் அப்படி நேரம் போக்க முடியவில்லை. வீணாகக் கழியும் அந்த நேரத்தில் ஏன் மேலுலுகம் சென்று சிறிது பார்த்துவரக்கூடாது என்று அவள் எண்ணினாள். பல ஆண்டுகள் குளத்தின் சிறையில் அடைபட்டிருந்ததால், அவள் ஆர்வம் பெரிதாயிருந்தது. ஆகவே, அவள் செம்மணி மாணிக்கத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.
மாலைவெயில் பொன்னிலவுபோல் எறித்தது. அவள் குளத்தின் படிக்கட்டிலமர்ந்து உடல் மினுக்கினாள். பின் விரைந்து வந்து இளவரசன் படுக்கையண்டை அமர்ந்தாள்.
ஒரு தடவை வெளியுலகைக் கண்டபின், அவள் ஆர்வம் இன்னும் பெரிதாயிற்று. நாள் தோறும் இவ்வாறு இளவரசன் உறங்கும்வேளையில் மாலையில் அவள் மேலே வந்து குளப் படியில் ஓய்வாக இருந்து இன்புற்றாள்.
ஒருநாள் மாலையில் அவள் குளப் படியில் இருந்து, செங்கதிர் வானைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அச்சமயம் அவளருகே பின்புறம் ஒரு கிழவி அவளை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். இதைச் செம்மலர்த்தாள் கவனிக்கவில்லை. அவள் முன்னே மற்றோர் இளைஞன் வந்து கொண்டிருந்தான். அவனையும் அவள் நெடுநேரம் பார்க்கவில்லை.
முன்புறமாக வந்த இளைஞன் அருகே இருந்த மலைக்கோட்டை நாட்டின் இளவரசன். அவன் பெயர் எழுமுடி. அவன் செம்மலர்த்தாளைக் கண்டவுடன் பேச முடியாது வாயடைத்துப் போனான். அவள் அழகும் புதுச் சூழலும் அவனை மலைக்க வைத்தன. ஆனால், அந்த அழகு அவனை அவனறியாமல் அவள் பக்கம் இழுத்தது. “ஆரணங்கே!” என்று ஒரே ஆர்வ அழைப்புடன் அவன் அவளை நோக்கி வந்தான்.
புதிய ஆளைக் கண்டதும் அவள் திடுக்கிட்டாள். மறுகணம் அவள் நீரில் குதித்தாள். இளவரசன் படுக்கையண்டைபோய் நிற்கும்வரை அவள் அச்சம் தீரவில்லை. செம்மணியுடன் வெளியேறிய ஆராயாச் செயலுக்காக அவள் மனம் வருந்தினாள். தன் ஆர்வத்தையும் கடிந்து கொண்டாள். ஆனால், இப்போதும் அவள் தன் பிழையை இளவரசனிடம் சொல்லத் துணியவில்லை. அந்தப் பிழைக்கு இனி இடம் தருவதில்லை என்று மட்டும் உறுதி செய்து கொண்டாள்.
அவள் திடீரென்று நீருக்குள் சென்று மறைந்தபோது எழுமுடி ஏமாற்றமடைமந்தான். அவள் எப்படியும் நீரிலிருந்து வெளிவரத்தானே வேண்டும் என்று அவன் காத்திருந்தான். இரவு முழுவதும் சென்றது; யாரும் வரவில்லை; அவள் மனிதப் பெண்ணல்ல, நீர் நங்கையாகவே இருக்க வேண்டும் என்ற உறுதி அவனுக்கு ஏற்பட்டது. ஆயினும், அவன் உள்ளம் அவள் அழகை விட்டு வேறு எதிலும் நாடவில்லை. அவன் அதே சிந்தனையாய் பேச்சு மூச்சற்றவனானான். நடைப்பிணம் போல் அலைந்தான். வாய்க்கு வந்தபடி பிதற்றினான். இளவரசனுக்கு ஏதேனும் பேயோ, பித்தோ பிடித்து விட்டதென்று எல்லாரும் கலவரமடைந்தனர். மருத்துவர் பலப்பலர் வந்து முயன்றும் அவன் நிலை நாளுக்குநாள் சீர்கெட்டே வந்தது.
மலைக்கோட்டையின் மன்னன் பெயர் மணிமார்பன். அவனுக்கு எழுமுடி ஒரே புதல்வன். அத்துடன் செம்பாலை என்ற ஒரே புதல்வியும் இருந்தாள். எழுமுடியின் நிலைகண்டு செம்பாலையும் உருகினாள். மன்னனும் துடித்தான். அவன் குறையறிந்து குணப்படுத்துபவர்களுக்கு நாட்டில் பாதியையும் தன் புதல்வியையும் தருவதாக அவன் எங்கும் முரசறைவித்தான்.
இளவரசன் எழுமுடியின் குறை அறிந்து தீர்க்க யாரும் வரவில்லை. உண்மையில் அவன் நிலைமைக்குரிய காரணத்தை அறிந்தவர் அந்நாட்டில் ஒரே ஓர் ஆள்தான். அதுவே குளக்கரையில் செம்மலர்த்தாளின் பின் நின்று அவளைப் பார்த்திருந்த கிழவி.
அவள் பெயர் பெய்வளை. மன்னன் மகன் குளத்திலிருந்து வந்த நங்கையை எண்ணியே பித்துப் பிடித்திருக்கிறான் என்பதை அவள் அறிந்தாள். நங்கையைக் கண்டு கைப்பற்ற முடியும் என்றும், அதனால் எழுமுடியின் பித்தம் தீரும் என்றும் அவள் கருதினாள். ஆனால், இச் செயலுக்கான பரிசுகள் அவளுக்குப் பயன்பட மாட்டா. அரசை அவள் ஆள முடியாது. கிழவிக்கு அப் பெண்ணும் பயன்பட வழியில்லை. ஆயினும் “ஆண்டு ஏறினாலும் ஆசை விடாது” அல்லவா? தன் மகனுக்கு அந்தப் பரிசுகளை வாங்கித்தர அவள் எண்ணினாள்.
பெய்வளைக்கு ஒரே புதல்வன் இருந்தான். அவன் பெயர் மாயாண்டி. அவனை எல்லோரும் மாயா என்றே அழைத்தனர். அவன் இயல்பிலேயே மந்தமதியுடையவன். கிழவியின் இளக்காரத்தால் அவன் கிட்டத்தட்ட கால் கிறுக்கனாயிருந்தான். அவன் எப்போதும் “மாயா மாயா காயா சோயா” என்று புலம்பிக் கொண்டு ஆடுவான். கிழவிக்கு அவன் கொடுத்த தொல்லை கொஞ்சநஞ்சமன்று. அடிக்கடி நாள் கணக்கிலும், வாரக் கணக்கிலும் அவன் எங்கெங்கேயோ ஓடிவிடுவான். எங்கும் சுற்றிவிட்டுத் திடுமென வருவான்.
அவனது கல்லா உள்ளத்தில் உணவு ஒன்றே ஓயாத ஆசையாய் இருந்தது. அதற்கடுத்தபடியாக அவனுக்குத் திருமணத்திலும் ஒரு மட்டி ஆர்வம் இருந்தது. அவனை வீட்டில் தங்கவைக்கக் கிழவி அடிக்கடி அந்த ஆர்வத்தையே பயன்படுத்தினாள். “அடே மாயி, எங்கும் போகாதேடா! உனக்குத் திருமணம் செய்து வைக்கப் போகிறேன்” என்பாள். அவன் உடனே குதித்தாடிக் கொண்டு, ஒன்றிரண்டு நாழிகை வீட்டிலேயே சுற்றுவான்.
கிழவி மாயாண்டியை நினைத்துக் கொண்டே அரசன் மணி மார்பனிடம் சென்றாள். “நான் இளவரசனைக் குணப்படுத்த முடியும். நீங்கள் உறுதி கூறிய பாதி அரசையும், இளவரசியையும் என் புதல்வனுக்குக் கொடுப்பீர்களா?” என்றாள்.
அவள் குணப்படுத்த முடியும் என்று மன்னன் கருதவில்லை. ஆனால், குணப்படுத்துவதில் உள்ள ஆர்வத்தால், அப்படியே உறுதி கூறினான்.
கிழவி மன்னனிடமிருந்து சில வேலையாட்களும் காவலாட்களும் பெற்றுக் குளக்கரை சென்றாள். குளக்கரையிலே மறைவான ஒரு குடிசை கட்டுவித்தாள். காவலரைச் சிறிது அப்பால் மறைவிலேயே தங்க வைத்தாள். நாள்தோறும் அவள் குளத்தின்மீதே கண்ணாகக் காத்திருந்தாள்.
அவள் அனுபவமிக்கவள். பெண் மனத்தின் இயல்பை நன்கறிந்தவள். ஆகவே, ஒரு தடவை வெளிவந்த நீர் நங்கை மறுபடியும் மீண்டும் வராமலிருக்க மாட்டாள் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.
கிழவியின் நம்பிக்கை சரியானதாகவே அமைந்தது. அச்சம் செம்மலர்த்தாளை இரண்டு மூன்ற நாட்கள்தாம் தடுத்து வைத்தது. நாளாக ஆக ஆர்வம் பெருகிற்று. அச்சம் குறைவுற்றது. அவள் மீண்டும் மானவேல் உறங்கும் சமயத்தில் செம்மணி மாணிக்கத்துடன் கிளம்பினாள். இத்தடவை அவள் மிகவும் எச்சரிக்கையாகவே குளப்படியில் கால் வைத்தாள்.
செம்மலர்த்தாள் முற்றிலும் கரைமீது வரும்வரை, கிழவி பதுங்கி நின்றிருந்தாள். அதன் பின்னும் அவள் தன் நயமிக்க நடிப்பால் அவள் உள்ளத்தில் நன்னம்பிக்கை ஊட்டினாள். “குழந்தாய்! குளத்தில் சறுக்கி விடாதே. பார்த்துக் கால் வை. நான் பெரியவள்தானே அம்மா? உனக்குத் தலைகோதி விடுகிறேன்!” என்று அணுகினாள். அன்னையின் பாசமொழி போன்ற இப்பேச்சில் செம்மலர்த்தாள் அச்சம் முழுதும் அகன்றது. அவள் தலைமுடியைக் கிழவியிடம் விட்டு, அளவளாவி இருந்தாள்.
கிழவி முன்பே காவலரிடம் ஒரு சமிக்ஞைத் திட்டம் செய்திருந்தாள். தலையைக் கையில் பிடித்தபடியே சிறிது கனைத்துக் கொண்டாள். காவலர் உடனே வந்து செம்மலர்த் தாளைச் சிறைப்படுத்தினர். நீர்நங்கை ’ஆ’வென அலறினாள். ஓட முயன்றாள்; ஆனால், அவள் முயற்சி காலங்கடந்ததாகி விட்டது. காவலருடனும் கிழவியுடனும் அவள் மணிமார்பன் அரண் மனைக்கே கொண்டு செல்லப்பட்டாள்.
அவளைக் கண்டதே, இளவரசன் எழுமுடியின் பித்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அவன் தந்தையிடம் சென்று, “குளத்திலிருந்து எழுந்த பெண்ணையே நான் மணம் புரிய வேண்டும்” என்றான்.
மன்னன் இணங்கினான். விரைவில் ஒரு நாளும் குறித்தான். கிழவி, அதே நாளில் தன் புதல்வனுக்கும் இளவரசியை மணம் செய்விக்கும்படி கோரினாள். இரண்டு திருமணங்களுக்கும் ஒரே நாள் குறிக்கப்பட்டது. ஆனால், நீர்நங்கை இதற்கு ஒரு தடை உண்டுபண்ணினாள். “எனக்கு முன்பே திருமணம் குறிக்கப் பட்டிருக்கிறது. மணமகனை மணவறையில் விட்டுவிட்டு நான் வந்திருக்கிறேன். ஆகவே, நான் ஆறுமாதம் எந்த ஆடவரையும் பார்ப்பதற்கில்லை. அக்கால முழுவதும் நான் நோன்பாற்ற வேண்டும்” என்றாள். மன்னன் இதற்கு இணங்கினான். இரண்டு திருமணங்களும் ஆறுமாதம் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்த ஏற்பாட்டுக்குக் கிழவி பெய்வளையும் மகிழ்வுடன் இணங்கினாள். ஏனென்றால், அவள் குளக்கரையில் தங்கிய காலத்தில், அவள் புதல்வன் மாயாண்டி எங்கோ போயிருந்தான். அவன் வரவை எதிர்பார்த்தே திருமண நாள் குறிக்க அவள் எண்ணினாள்.
குளத்தடியிலுள்ள அரண்மனையில் இளவரசன் மானவேல் தூங்கி யெழுந்தான். எழுந்தபோது, வழக்கப்படி செம்மலர்த்தாள் அருகிலில்லை. பூங்கா சென்றிருக்கக் கூடும் என்ற எண்ணத்துடன் அவன் பூங்கா சென்றான். எங்கும் தேடியும் காணாததால் பரபரப்படைந்தான். செம்மணி மாணிக்கத்தையும் காணாததால், அவன் நிலை இன்னும் மோசமாயிற்று. அவன் குளத்தடியில் அடைபட்டான். ‘செம்மலர்த்தாள் எங்கே சென்றாள்? என்ன ஆனாள்?’ என்று தெரியாமல் அவன் துடி துடித்தான்.
இந்நிலையில் அவன் ஒருநாள் பூங்காவில் தன் பெயர் எழுதிய கல் விழுவது கண்டான். மேலெழவிரைந்தான். செம்மணி மாணிக்கமில்லாமல் தான், செயலற்றிருப்பதுணர்ந்து மீண்டும் பதைத்தான். கற்கள் அடுத்தடுத்து விழுந்தன. அவை அவன் துயரைப் பெருக்கினவேயன்றி, வேறு எவ்வகை மாறுபாடும் உண்டு பண்ணவில்லை.
அவனைத் தேடி வான்மதி மேலே சிவிகை, குதிரைகள், காவலர்களுடன் வந்திருந்தான். குளத்தருகே அவன் கூடாரமிட்டுத் தங்கியிருந்தான். கற்கள் பல எறிந்து, பல மணி, பல நாள் காத்திருந்தான். ‘இளவரசனுக்கு ஏதோ நேர்ந்திருக்க வேண்டும்’ என்று அவன் எண்ணத் தொடங்கினான். அவன் கவலை பெருகிற்று.
அவன் மூளை வேலை செய்யத் தொடங்கிற்று. சிவிகையையும் காவலர்களையும் அவன் வைகா நாட்டுக்கே அனுப்பிவிட்டு, இளவரசன் நிலை பற்றிய தடங்காண எங்கும் அலைந்தான்.
எழுமுடி, செம்பாலை ஆகியவர்கள் திருமணம் ஒத்தி வைக்கப் பட்டாலும், அதுபற்றிய ஏற்பாடுகள் மும்முரமாகவே இருந்தன. நீரிலிருந்து எழுந்த நங்கை பற்றிய ஆர்வ வரலாறு, அவளைக் கைப்பற்றிய கிழவியின் திறம்,செம்பாலைக்கு இதனால் வந்து வாய்த்த மணமகனின் பித்துக்கொள்ளித்தனம் ஆகியவையே எங்கும் பேச்சாயிருந்தது. இவை வான்மதியின் செவிக்கும் எட்டின. இவற்றால் செம்மலர்த்தாளின் செய்தியை அவனால் ஊகிக்க முடிந்தது. கூடிய விரைவில் அவளையும் தன் நண்பன் மானவேலையும் மீட்க அவன் ஆழ்ந்த திட்டமிட்டான்.
ஆறுமாதத் தவணை கடந்து வந்தது. மாயாண்டி இன்னும் திரும்பி வரவில்லை. அவனைத் தேடிக்காணப் பெய்வளை எங்கும் ஒற்றரை அனுப்பியிருந்தாள். வான்மதி மாற்றுருவில் ஒற்றருடன் ஒற்றனாகச் சென்று, அவனைப் பற்றிய தகவல்களெல்லாம் சேகரித்துக் கொண்டான். பின் மீட்டும் மாயாண்டியைப் போல ஆடையணிந்து அவனைப் போல நடித்தான். மற்ற ஒற்றர்கள் அவனைப் பெய்வளையிடம் சேர்த்தார்கள். அவள்கூட அவனை அடையாளம் அறியாதபடி, அவன் திறம்பட நடந்துகொண்டான்.
வழக்கம்போல, அவள் “உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேனடா. எங்கும் போய் விடாதே” என்றாள்.
“நீ இப்படி எப்போதுமே ஏய்க்கிறாய் அம்மா. திருமணம் உண்மையானால், எனக்குப் பெண்ணைக் காட்டு” என்றான் அவன்.
தாய், அவனை அரண்மனைக்கு இட்டுச் சென்றாள். ஆனால், செம்பாலையிடம் அவனைக் கொண்டுசெல்ல அவள் தயங்கினாள். அவன் பேச்சம் நடப்பும் கண்டு, திருமணத்துக்கு முன்பே அவள் அவனை வெறுத்துவிடக்கூடும் என்று அவள் அஞ்சினாள். ஆகவே, செம்பாலையுடன் செம்மலர்த்தாளும் இருக்கும் சமயம் பார்த்து, அவர்களை அவனுக்குக் காட்டினாள். “ஒன்று உனக்குரிய பெண், இளவரசன் எழுமுடியின் தங்கை. மற்றது இளவரசனை மணக்க இருக்கும் நீர்நங்கை. இருவரும் மணக் கோலத்தில் இருப்பதைப் பார்! இப்போது அவர்களுடன் நீ பேசி விடப்படாது. மணமான பின் ஒருத்தி உன் மனைவி. ஒருத்தி உன் தங்கை. அப்போது இருவருடனும் நீ பேசலாம்” என்றாள்.
மாயாண்டியாக நடித்த வான்மதி அவர்களைக் கண்டு தாயைச் சுற்றிவந்து கும்மாளமடித்தான். ஆனால், தாய் ,வீட்டுக்கு அவனைத் திரும்பி அழைத்தபோது, அவன் போக மறுத்தான். “நான்வேறு எங்கும் போக மாட்டேன், அம்மா! இங்கேயே சுற்றிக் கொண்டிருப்பேன். அப்போதுதான் எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கும்” என்றான்.
தாய், அவன் போக்கில் அவனை விட்டுவிட்டாள். கடிந்து கொண்டால் எங்கே பழையபடி ஓடி விடுவானோ என்று அஞ்சினாள். அத்துடன் நேரில் பெண்ணைப் பார்ப்பதால், அவன் ஓடி விடாதிருக்க ஒரு தூண்டுதலும் இருக்கும் என்று எண்ணினாள்.
அரண்மனையில் நல்ல பாதுகாப்பு இருந்தது. வான்மதி பித்தன் போல எங்கும் திரிந்தான். அவன் போக்குகளை அறிந்த காவலர் படிப்படியாக அவனைக் கண்டிப்பதை நிறுத்தினர். அவன் ஒரு சமயம் செம்பாலை அறை அருகே சென்று மீளுவான். இரவில் பலதடவை வெளியே போவான்; வருவான். இந்தப் போக்கு வரவு அவர்களுக்குப் பழக்கமாய்விட்டதால், அதை யாரும் சட்டை செய்யவில்லை.
செம்மலர்த்தாள் பெயருக்குத்தான் நோன்பிருந்தாள். தன் கள்ளமற்ற ஆர்வ அவா தன்னை இவ்வளவு பெரிய இக்கட்டில் கொண்டு தள்ளிவிடும் என்று அவள் எண்ணவில்லை. ஆனால், இப்போது என்ன எண்ணியும் பயனில்லை என்று அவள் கண்டாள்; தன்னைத்தானே அவள் ஓயாது நொந்து கொண்டாள். தப்பி ஓட எப்போதாவது வழி கிடைக்குமா என்று அவள் சிந்தித்த வண்ணம் இரவெல்லாம் விழித்திருந்தாள். பகலெல்லாம் சிந்திய மூக்கும் அழுத கண்ணுமாய், அரையுறக்கத்துடன் நாட்களைக் கழித்தாள்.
ஒருநாள் இரவு அவள்முன் வான்மதி வந்து நின்றான். அவளும் மாயாண்டியின் பித்துக்கொள்ளித்தனம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். தன்னை சிக்கவைத்த சண்டாளியின் பிள்ளை என்ற நிலையில், அவள் அவனை வேம்பாக வெறுத்தாள். ஆகவே, வான்மதியை எட்டிப் பார்க்க வில்லை. வான்மதி மெல்ல அவளுக்குத் தன்னை அறிமுகப்படுத்தினான்.
“அழகரசியே, மானவேலிடம்தான் கோபம் கொண்டு வந்துவிட்டாய். வான்மதி உனக்கு என்ன செய்தான்? அவனிடமும் ஏன் கோபம்?” என்றான்.
அவள் திடுக்கிட்டு அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். அவனே மானவேலின் நண்பன் வான்மதி என்று கண்டதும், அவளுக்குப் போன உயிர் மீண்டது போலிருந்தது. ஆனால், வான்மதி உதட்டில் விரல் வைத்து அவளுக்கு எச்சரிக்கை செய்தான். “போக வழி செய்திருக்கிறேன். நள்ளிரவுக்குள் ஆயத்தமாயிரு” என்று கூறிச் சென்றான்.
அவளுக்கு அதற்குமேல் எச்சரிக்கை தேவையில்லை. தனக்கு வேண்டிய பொருள்களை எடுத்துக் கட்டிக் கொண்டாள். எளிய ஆடையணி மணிகளை எடுத்துக் கொண்டாள்.
நள்ளிரவில் எல்லாரும் உறங்கியிருந்தார்கள். அரையுறக்கத் திலிருந்தவர்களும் வான்மதியையே பித்துக் கொள்ளி மாயாண்டி என்று கருதி விட்டுவிட்டனர். செம்மலர்த்தாளையும் யாரும் தடுக்கவில்லை. யாரோ அரண்மனைப் பணிப்பெண்ணை அவன் இட்டுச் செல்வதாகவே கண்டவர் எண்ணினார்கள். இருவரும் விரைந்து நகர் கடந்தனர்; காடடைந்தனர். இளவரசியிடமே செம்மணி மாணிக்கம் இருந்ததால், அவர்கள் குளத்தில் இறங்கி, மானவேலைச் சென்றடைந்தார்கள்.
தன் இன்னுயிர் நங்கையுடன் ஆருயிர்த் தோழனையும் கண்ட மானவேலின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவன் இருவரையும் ஆரத் தழுவி, இன்பக் கண்ணீர் ஆட்டினான்.
இத்தடவை அவர்கள் சிவிகை முதலிய ஆடம்பரங்களுக்கு முயற்சி செய்யவில்லை. எளிய உடையுடனேயே வைகா நாடு சென்றனர். கவலையிலாழ்ந்திருந்த வைகா நாட்டு மக்களும் மன்னனும் களிப்பில் மூழ்கினர். இளவரசன் மானவேல் நீர் நங்கை செம்மலர்த்தாளை மணந்து இனிது வாழ்ந்தான்.
மலைக்கோட்டை நாட்டுக்கு மானவேல், ஆள் அனுப்பி இளவரசன் எழுமுடியை வரவழைத்தான். நடந்ததெல்லாம் கேட்ட எழுமுடி, செம்மலர்த்தாளை தன் தங்கையாகக் கொள்ள இசைந்தான். அத்துடன் அவளை உரிய இடம் சேர்த்த வான்மதிக்கே தன் தங்கை செம்பாலையையும் மணம் புரிவித்தான்.
பித்துக்கொள்ளி மாயாண்டிக்குச் செம்மலர்த்தாள் செம்மணியின் கதை கூறி, அதைப் பரிசளித்தான். அவன் அதைக் கொண்டு காட்டுக் குளத்தில் இறங்கி ஏறி விளையாடிக் களித்தான். அவன் புதிய அனுபவம் அவன் பைத்தியத்தையும் தெளிய வைத்தது.
செம்பாலையின் சேடி பைம்பொழிலையே அவன் மனமுவந்து மணந்து கொண்டான். பித்தந் தெளிந்ததே ஒரு பேரரசாட்சியாயிற்று என்று பெய்வளையும் மன மகிழ்ந்தாள்.
ஆராவமுது
செம்மொழி என்று ஒரு பாணன் இருந்தான். அவன் குரல் மிக இனிமையானது. அழகாகப் பாடும் திறனும் அவனிடம் அமைந்திருந்தது. கடவுளிடம் அவனுக்குப் பற்று மிகுதி. நாள் தோறும் தன்பாட்டால் அவன் கடவுளை வழிபட்டு வந்தான்.
மற்றப் பாணர்களைப்போல அவன் செல்வரையும், இளங்கோக்களையும் பாடவில்லை. ஆகவே, அவனுக்கு எத்தகைய பரிசும் கிடைக்க வில்லை. வறுமையிலேயே அவன் நாள் கழித்தான். அவன் மனைவி சேயிழைக்கு இந்த வறுமை வாழ்வைப் பொறுக்க முடியவில்லை. “கடவுளைப் பாடினால் நம் வறுமை எப்படித் தீரும்? ஏதாவது ஒரு மன்னரைப் பாடிப் பொருள் பெற்று வாருங்கள்” என்று அவள் கூறினாள். அவனுக்கு ஒன்றிரண்டு நாளைக்குப் போதிய உணவு மூட்டை கட்டிக் கொடுத்து அனுப்பினாள்.
அவன், எந்த அரசரையும் பாட விரும்பவில்லை. கடவுளைப் பாடிக் கொண்டே காட்டு வழிகளில் அலைந்தான்.
நடுக்காட்டில் ஓர் அம்மையப்பன் கோயில் இருந்தது. அது நீண்டநாள் ஆளற்றுப் பூசையற்றுக் கிடந்தது. செம்மொழி உணவு உண்டு நெடுநாளாயிற்று. அவன் சுனையில் நீராடி, சுனையின் நீரால் அம்மையப்பனுருவுக்குத் திருமுழுக் காட்டினான். சில காய்கனிகளைப் பறித்து வந்து, அம்மையப்பனுக்குப் படைத்தான். பின்,
"அம்மையும் அப்பனும் நீ இருக்க
அண்ணலே யாரைநான் பாடிடுவேன்!
மெய்ம்மையில் மன்னனாய் நீ இருக்க
வேறெந்த மன்னரை நாடிடுவேன்!
பொய்ம்மையில் செல்வமாய் நீ இருக்கப்,
போய் எந்தச் செல்வம் அவாவிடுவேன்!"
என்று கல்லும் உருகப் பாடிக் கடவுளை வழிபட்டான். பசியும் சிறிது ஆறி, அப்பாழுங் கோயிலிலேயே துயின்றான்.
அவன் பாட்டு, அந்தக் கோயிலின் ஒருபுறத்தில் அறிதுயிலில் அமர்ந்திருந்த சித்தர் ஒருவரின் செவிகளைத் துளைத்தது. அது அவர் தூய உள்ளத்தைக் கனிவித்தது. அவர் மாயங்களில் வல்லவர். அவன் துயர் அகற்றத் திருவுளங்கொண்டு அவனருகே அவர், ஒரு கடவுட் கலத்தை வைத்து விட்டு, திருவுருவின்பின் மறைந்திருந்து உரக்கக் குரலெழுப்பினார்.
“அன்பனே, எம் வரம்பற்ற பெருஞ்செல்வம் அறிந்து நீ பாடினாய். உனக்கு வரையா நிறைகலமே அளித்தோம். அதை நீ கவிழ்த்தால் அது புதிய கட்டமுதாக ஒழுகிக் கொண்டே யிருக்கும். போதியமட்டும் உணவை அடைந்தபின், நீ அதை நிமிர்த்தால் போதும், கலம் வெறுங்கலமாய் விடும். இதை என் பரிசாகப் பெற்றுச் செல்” என்றார்.
குரல் கேட்டுச்செம்மொழி விழித்தெழுந்தான். யாரையும் காணவில்லை. ஆனால், அருகே கலம் இருந்தது. அம்மையப்பனை அவன் மீண்டும் நன்றியுடன் பாடினான். கலத்தை எடுத்துக் கொண்டு அவன் புறப்பட்டான்.
வீடு சேர நெடுந்தொலை இருந்தது. வழியில் அவனுக்குப் பசி உண்டாயிற்று. குளியாமல், கடவுள் வழிபாடாற்றாமல் அவன் உண்ண விரும்பவில்லை. ஆகவே, அருகிலுள்ள ஒரு விடுதியை அணுகினான். “ஐயனே! நான் குளத்தில் குளித்து விட்டு வருகிறேன். வரும்வரை இந்த உண்கலத்தைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். வந்து பெற்றுக் கொள்கிறேன்” என்றான்.
விடுதிக்காரன் இணங்கினான்.
செம்மொழி, ’உண்கலத்’தின் அருமையை எண்ணி, மும்முறை அதைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்ளும்படி வற்புறுத்தினான்.
‘மண்ணாலான ஓர் உண்கலத்தில் ஏன் இவ்வளவு கவலை?’ என்று விடுதிக்காரன் வியப்படைந்தான். அவன் அதை எடுத்துப் பார்த்தான். அதை நாற்புறமும் திருப்பினான். தற்செயலாகவே அவன் அதைக் கவிழ்த்துப் பார்க்கவும் நேர்ந்தது. வெறுமையாயிருந்த கலத்திலிருந்து புதிய கட்டமுது கொட்டிற்று. கவிழ்த்து வைத்திருக்கும்வரை கொட்டிக் கொண்டே இருந்தது. நிமிர்த்தவுடன் கலம் வெறுங்கலமாயிற்று. இது கண்டு விடுதிக்காரன் அதிர்ச்சியுற்றான்.
தன் விடுதியில் இத்தகைய கலம் ஒன்றிருந்தால் போதுமே! வேறு செல்வமோ, வேலையாளோ தேவைப்படாது என்று அவன் எண்ணினான். அவன் பேராசை அவனை வஞ்சனை செய்யத் தூண்டிற்று. அவன் அந்தக் கடவுட் கலத்தை மறைத்து வைத்தான். அதுபோன்ற மற்றொரு கலத்தை அந்த இடத்தில் வைத்தான். அத்துடன் அந்தக் கலத்திலிருந்து செம்மொழி உணவு நாடும்படி அவன் விடவில்லை. தானே உணவு கொண்டுவந்து கொடுத்தான்.
சூதறியாத செம்மொழி, கலத்தைக் கவிழ்த்துப பார்க்க எண்ணவில்லை. விடுதிக்காரன் கொடுத்த உணவை உண்டான். போலிக் கலத்துடன் புறப்பட்டான்.
வீடு வந்து சேர்ந்ததும் மனைவி, “இத்தனை நாள் எங்கே போய் விட்டீர்கள்? எந்த அரசரைப் பாடினீர்கள்? என்ன பரிசு கிடைத்தது?” என்றாள்.
அவன் அம்மையப்பன் தந்த பரிசின் கதை கூறினான். மனைவி உள்ளூரச் சிரித்தாள். “இப்படிப்பட்ட பைத்தியத்திட மிருந்து எப்படித்தான் நான் காலங் கழிக்கப் போகிறனோ?” என்று தனக்குள் கூறிக் கொண்டாள். ஆயினும், அவனுக்கு அறிவு புகட்ட எண்ணி, “ஏன் இப்போது கலத்தின் உணவையே நீங்கள் உண்ணலாமே?” என்று கேலி செய்தாள்.
அவன் “இதோ பார்” என்று ஆத்திரத்துடன் கலத்தைக் கவிழ்த் தான்.
கலத்திலிருந்து உணவு வரவில்லை.
அவன் வியப்படைந்து திகில் கொண்டான்.
ஆனால், மனைவி கேலி செய்தாள். “இந்தக் கதைகளால் மனைவியைத்தான் ஏமாற்ற முடியும். வேறு யாரை ஏமாற்ற உங்களுக்கு அறிவு இருக்கிறது?” என்றாள்.
அவன் எதுவும் பேசவில்லை. விடுதிக்காரனிடம் சென்றான். விடுதிக்காரன் பிடிகொடுக்கவில்லை. “நீ கொண்டு வந்த கலத்தைத் தானே எடுத்துக் கொண்டு போனாய்?” என்றான்.
விடுதிக்காரன் வேலையாளை நீக்கியதும், திடீர்ச் செல்வனானதும் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், ஓர் ஏழைக்காகப் பரிந்து ஒரு செல்வனைப் பகைத்துக் கொள்ள யாரும் விரும்பவில்லை. இரக்கமுடைய ஒன்றிரண்டு பேர் மட்டும்,“அரசனிடம் செல்வது தானே, உனக்கு வழி பிறக்கக் கூடும்” என்றார்கள்.
அரசரைப் பாடவிரும்பாத அவன், அரசரிடம் சென்று முறையிடவும் விரும்பவில்லை. அவன் மீண்டும் காடுகரைகளில் அலைந்தான். அம்மையப்பன் கோயிலிலேயே சரணடைந்தான்.
முன்போல் அவன் நாள்தோறும் குளித்து வழிபாடாற் றினான். முன்போலப் பாடினான்.
"அம்மையும் அப்பனும் நீ இருக்க
பொய்ம்மை உலகில் பரவுவதேன்?
மெய்ம்மையில் அன்புடன் நான் இருக்க
மீளவும் துன்பம் விராவுவதேன்?"
என்று அவன், காடுங் கனிவுற இரங்கிப் பாடினான். மாயச் சித்தர் ஒருநாள் அவன் பாட்டைக் கேட்க நேர்ந்தது. அவர் உள்ளம் மீண்டும் நெகிழ்ந்தது. அவர் இத்தடவை மற்றோர் உண்கலத்தை அவன் அருகே வைத்தார். இது மண்கலமாய் இல்லை வெள்ளிக்கலமாய் இருந்தது.
“அன்பனே, பொய்ம்மையற்ற மெய்ம்மையை நீ அவாவுகிறாய். பொய்யாத மற்றொரு செல்வம் உனக்களித்தேன். இதைக் கவிழ்த்தால் பொங்கல் அமுதமே வரையாது ஒழுகும்; இதை முன்போல் அசட்டையாக எங்கும் வைக்காமல் வீட்டுக்குக் கொண்டு செல்” என்று அவர் மறைவுருவாகக் கூறினார்.
செம்மொழி, கடவுளுக்கு மீண்டும் நன்றி செலுத்திப் பாடினான். புதிய வெள்ளிக்கலத்தை ஆடையால் பொதிந்த வண்ணம் அவன் வீட்டுக்கு வந்தான்.
வெள்ளிக்கலத்தைக் கண்டு சேயிழை சிறிது ஆறுதலடைந் தாள். ஆனால், அதைக் கவிழ்த்தபோது, உண்மையிலேயே இனிய பொங்கலமுதம் வழிவது கண்டு அவள் எல்லையிலா மகிழ்வு கொண்டாள். கணவன் முந்தய கலவகையில் கூறிய யாவும் உண்மையே என்பதில் அவளுக்கு இப்போது நம்பிக்கை வந்தது. விடுதிக்காரன் அவனை ஏமாற்றியிராவிட்டால் அன்றே தன் வறுமை தீர்ந்திருக்கும் என்றும் கண்டாள்.
செம்மொழி குடும்ப வாழ்வு முற்றிலும் மாறுபட்டது. குடும்பத்துக்கு வேண்டிய மட்டும் உணவு கிடைத்தது. அத்துடன் சேயிழை தன் கணவன் பெயரால் ஒரு விடுதியே தோற்றுவித்தாள்.
அதில், கடவுட்கலத்தின் இனிய பொங்கலமுதே உணவாகப் படைக்கப்பட்டது. எந்த விடுதியிலும் கிட்டாத அந்த இன்னுணவை நாடி உள்ளூராரும்,வெளியூராரும் அதில் வந்து மொய்த்தனர்.
முதலில் செம்மொழியை ஏமாற்றிய விடுதிக்காரன் செவிக்குப் புதிய கலத்தின் புகழ் சென்றெட்டிற்று. அவன் புதுச் செல்வத்தில் அவனுக்கிருந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் அகன்றது. அது வரையாது கொடுத்தாலும் மண்கலம்தான்; கட்டமுதுதான் கொடுத்தது. ஆனால், செம்மொழியின் கலமோ வெள்ளிக்கலம்; அது பொங்கல முதமாகப் பொங்கிற்று.
இவை, விடுதிக்காரன் பொறாமைத் தீயை எழுப்பின. செம்மொழியின் விடுதிக்குப் புகழ் வளர வளர, விடுதிக்காரன் தொழில் தேய்ந்து வந்தது. இது, அவன் பொறாமையைப் பகைமை ஆக்கிற்று. அவன் அரசனிடம் சென்று “செம்மொழி மாயத்தால் பொருள் ஈட்டுகிறான்” என்றான்.
செம்மொழி, நல்ல பாடகன் என்பது பாணர்களுக்குத் தெரியும். அவன் அரசனையும் செல்வரையும் பாடாதிருந்தது பற்றி அவர்கள் முதலில் சட்டை பண்ணவில்லை. அவர்களே முதன்மை பெற அது உதவிற்று. ஆனால், இப்போது அவர்களும் அவன், ‘பாடாது பெற்ற செல்வங்’ கண்டு புழுங்கினார்கள். அவர்களும் விடுதிக்காரன் கோள் சொல்லுக்கு ஒத்தூதினார்கள்.
மன்னன் செருக்குடையவன். தன் புகழ் பாடுவோர்களுக்கு அவன் பொருள் வழங்கிக் கொடைவள்ளல் என்று புகழ் பெற்றிருந்தான். தன்னைப் பாடாமல் காட்டில் யாரையோ பாடி ஒருவன் பெரும்பொருள் பெற்றது அவனுக்குப் பிடிக்கவில்லை.
மேலும் அம் மாயப் பரிசு, அவன் பரிசுகளை ஏளனம் செய்வதாக அவனுக்குத் தோன்றிற்று. ஆகவே, அவன் முன்பின் ஆராய்ந்து பாராமல், செம்மொழியை மாயக்காரன் என்று குற்றஞ்சாட்டினான். அவன் செல்வத்தையும், அவன் அமுதக் கலத்தையும் பறித்துக் கொண்டு அவனைத் துரத்தினான்.
செம்மொழி மூன்றாம் முறையாகக் காட்டில் அலைந்தான். இத்தடவை அவன் முகம் உண்மையிலேயே துயரமடைந் திருந்தது. ஏனென்றால், இப்போது அவனை வறுமை வாட்டவில்லை. அதனினும் கொடியவன் கண்மை அவன் உள்ளத்தைச் சுட்டறுத்தது. அவன் பாட்டு முன்போலவே இனிமையாயிருந்தது. ஆனால், அந்த இனிமையில் துன்பம் கலந்திருந்தது. அவன் அம்மையப்பனிடம் முறையீடு செய்தான்.
"அம்மையும் அப்பனும் நீ இருக்க
அடக்கு முறைகள்யார் செய்வதுமே!
அன்பு வடிவமாய் நீ இருக்க,
ஆரிவர் வம்புகள் செய்வதுவே!"
என்று கட்டையும் நெகிழப் பாடினான். இத்தடவை பொறுக்கிய காய்கனிகளை அவன் அம்மையப்பனுக்குப் படைத்தான். ஆனால், தான் உண்ணாமல், பசியுடனே படுத்தான்.
அவன் கண்கள் இறுகின. ஆனால், அவன் மனக்கண்கள் எப்படியோ திறந்திருந்தன. அவற்றின்முன் அம்மையப்பன் உருவமே உயிர்பெற்று எழுந்ததுபோல் இருந்தது. ஆங்காரத் துடன் அது அவன்முன் நின்று ஆடிற்று.
அம்மையப்பன் கையில் ஒரு பொன்கலம் ஒளி வீசிற்று. அதை அவர் கவிழ்த்துக் காட்டினார். அம்மையப்பனையே ஒத்த ஆங்கார உருவங்கள் நாற்புறமும் ஒன்றை ஒன்று தாக்கின. அடுத்த கணம் கடவுளுருவம் பொன்கலத்தைக் கவிழ்த்துக் காட்டிற்று. அத்தனை ஆங்கார உருவங்களும் கலத்தில் அடங்கின.
கடவுள் திருஉருவம் கலத்தை அவன் கையில் தந்தது. அது சிலையுருவத்திலேயே மறைந்தது. செம்மொழி எழுந்தான். கண்ணைக் கசக்கிப் பார்த்தான். அவன் அருகே கனவில் கண்ட பொற்கலம் இருந்தது.
தனக்காக இறைவன் கொண்ட கோபத்திருக்கோலத்தை எண்ணி அவன் உடல் பூரித்தது. மனமார அவர் ஆற்றலைப் பாடிப் பரவி விட்டு, நாட்டுக்கு மீண்டான்.
இத்தடவை தானாக அவன் பழைய விடுதிக்காரனிடம் சென்றான். அவன் கையிலிருந்து பொற்கலங்கண்டு விடுதிக்காரன் மலைத்தான். அதை அவனிடம் பெற எண்ணி முன் கொண்ட பகையையெல்லாம், மறந்தவனாக நடித்தான். அவனுக்கு உணவு பரிமாறி அன்புடன் நடத்தினான். ஆனால், செம்மொழி எக்காரணம் கொண்டும் கலத்தைக் கண்மறைய விடவில்லை.
“இதை அரசனுக்கென்றே வாங்கி வந்தேன். உன் முன்னிலையிலேயே அதை அரசனிடம் காணிக்கையாகச் செலுத்தப் போகிறேன். ஆனால், காணிக்கை செலுத்து முன், நான் இதனுதவியால், அரசனுக்கு விருந்து அளிக்க விரும்புகிறேன். நீயும் நண்பனாதலால், விருந்திற் பங்கு கொள்ள அழைத்துப் போக வந்தேன்” என்றான்.
விடுதிக்காரன் மகிழ்ச்சியுடன் அவனை அரசனிடம் இட்டுச் சென்றான்.
எல்லாரும் விருந்துக்கு அமர்ந்தனர். மன்னன் அருகே முதலிடத்திலேயே விடுதிக்காரன் அமர்ந்தான். மன்னன் மதியவைக்கு வரும் பாணரும் சூழ்ந்திருந்தனர். செம்மொழி பொற்கலத்தை எடுத்து அவர்கள் நடுவே கவிழ்த்தான். ஆங்கார உருவங்கள் ஆயிரம் வெளிவந்தன. அவை ஆரவாரம் செய்யவில்லை. ஆனால், ஓசைப்படாமலே ஒன்றை ஒன்று தாக்கத் தொடங்கின.
இடையே இருந்த மன்னனும் விடுதிக்காரனும் பாணரும் அவ்வுருவங்களின் கைக்கு ஆயுதங்களாயினர். உருவத்துக்கு உருவம் அவர்கள் மொத்துண்டனர். உருவங்களின் நீள்கரங்கள் பற்றியதால், அவர்கள் கழுத்துகள் குருதி கொப்புளிக்கத் தொடங்கின.
மொத்துண்டவாறே பாணர் மன்னனை வேண்டினர். மன்னன் மற்றவர்களைவிட மிகுதியான இக்கட்டில் சிக்கியிருந்தான். அவன் செம்மொழியைக் கெஞ்சாதவண்ணம் கெஞ்சினான். ஆனால், விடுதிக்காரனுக்குக் கெஞ்சக்கூட வழியில்லை. அவன் “கூகூ” என்று அலறினான். அரை நாழிகை நேரம் இவ்வாறு சென்றது. பின்னும் செம்மொழி கலத்தை நிமிர்த்தவில்லை. ஆனால், அதைப் பிடித்துக் கொண்டே, உருவங்களை நோக்கிக் கையமர்த்திக் காட்டினான். அவை சற்றே அமைந்து நின்றன.
“மன்னனே, பொறாமை கொண்ட பாணர் சொல் கேட்டாய். வஞ்சக விடுதிக்காரனுக்கு உடந்தையாயிருந்து அநீதி செய்தாய். அதற்குத் தண்டனையாக நீ அரசாட்சியை மக்களுக்கே விட்டுச் செல்வதானால், இந்த ஆங்கார நடனத்தை நிறுத்துவேன். இல்லையானால், இது உங்கள் அனைவர் உயிரும் போகும்வரை நடக்கும்” என்றான். மன்னன் இணங்குவதாக உறுதி கூறினான்.
செம்மொழி, பாணர்கள் பக்கம் திரும்பினான். “நீங்கள் அரசனைப் புகழ்ந்ததுடன் அமையவில்லை. அதற்கான பரிசு பெற்றதுடன் அமையவில்லை. அவனை வன்கண்மைக்கும், அநீதிக்கும் தூண்டினீர்கள். நீங்கள் காட்டிலுள்ள அம்மையப்பன் கோயிலுக்கு வாழ்நாள் முழுதும் பூசை செய்து பாடிக் காய்கனிகளை உண்பதாக இணங்கினால், ஆங்கார நடனம் நிற்கும். என்ன சொல்கிறீர்கள்?” என்றான்.
அவர்களும் இணங்கினார்கள்.
அதன்பின் செம்மொழி, விடுதிக்காரனை ஏற இறங்க நோக்கினான்.
“அப்பனே, உன் குற்றம் எல்லாரையும்விடப் பெரிது. நீ என் விடுதியைப் பெருக்கி மெழுகும் வேலையை வாணாள் முழுதும் செய்து வர வேண்டும். அத்துடன் நாள்தோறும் காட்டுக் கோயிலுக்கு நான் தரும் பூசனைப் பொருளைக் கொண்டுபோய்க் கொடுத்து வரவேண்டும். இவற்றுக்கு இணங்காவிட்டால், ஆங்கார நடனம் உன்னை விடாது” என்றான். அவனும் இணங்கினான்.
அரசன் ஆட்சியை மக்களிடம் ஒப்படைத்து அந்நாட்டைக் குடியரசாக்கினான். வெள்ளிக்கலத்தைச் செம்மொழியிடம் ஒப்படைத்துவிட்டுக் காடேகினான்.
விடுதிக்காரன் தன் செல்வத்தையும் செம்மொழியிடம் ஒப்படைத்தான். மண்கலத்தையும் திருப்பிக் கொடுத்தான். செம்மொழியின் விடுதிக்கும் காட்டுக் கோயிலுக்கும் வாணாள் முழுதும் தொண்டாற்றினான்.
பாணர்கள் - காட்டுக் கோயில் பூசை ஏற்று அதன் ஓதுவாராயினர்.
செம்மொழி புதிய குடியரசில் மக்களுக்கு வெள்ளிக் கலத்தையும், மண் கலத்தையும் பொதுவுடைமைப் பொருளாகப் பரிசளித்தான்.
பொற்கலம் அநீதி இழைப்பவர்க்கு அளிக்கப்படும் பரிசாக அம்மை யப்பன் கோயிலிலேயே வைக்கப்பட்டது. அந்தப் பரிசை யாரும் பெற முன்வரவில்லை. அநீதியும் நடைபெறவில்லை.
அடக்குமுறை ஆட்சியும், பொறாமை ஆட்சியும் ஒழிந்தது. பொது உடைமை ஆட்சி பொதுளிற்று.
இளவரசன் இதாவரேன்
ஆரியூரில் வாழ்ந்த வணிகச் செல்வர் பலர். அவர்களில் செம்மேனியின் செல்வம் அளவிடற்கரியதாயிருந்தது. தென்கடல், மேல்கடல், கீழ்கடல் ஆகிய மூன்று கடல்களின் துறைமுகங்களிலும் அவன் கப்பல்கள் சரக்கை ஏற்றி இறக்கிய வண்ணம் இருந்தன. தமிழகமெங்கணும் இருந்து அவன் பண்டகசாலையில் பொருள்கள் வந்து குவிந்து கொண்டே யிருந்தன. அவனுக்கென்று பாண்டிய மன்னன் ஒரு தனிச் சுரங்கப் பணித் தலைவரையும், சுங்கக் கணக்கரையும் அமர்த்தியிருந்தான்.
ஒருவரைவிட ஒருவர் அழகியராக, அவனுக்கு ஏழு புதல்வியர் இருந்தார்கள். எல்லாரிலும் இளையாள் வயது பதினாறு. அவள் பெயர் செங்கழுநீர். மற்ற ஆறு புதல்வியருக்கும் திருமணமாகி இருந்தது. மன்னிளங்கோக்களும், வணிக இளங்கோக்களும் அவர்கள் துணைவியராக அமைந்தனர். செங்கழுநீரையும் இருசார் இளங்கோக்களும் விரும்பி மணஞ்செய்யக் காத்துக் கிடந்தனர்.
செம்மேனியின் ஐம்பதாண்டு நிறைவுவிழா வணிகக் குழாத்தினரால் பொன்விழாவாகக் கொண்டாடப்பட்டது. ஏழு நாட்கள் நகர் முழுதும் அல்லோகலப்பட்டது. எட்டாவது நாளைச் செம்மேனி தன் குடும்ப விழாவாகத் தனி முறையில் கொண்டாடினான். மருமகச் செம்மல்கள் அறுவரும் பேரன், பேத்திமார்களும், உறவினரும் நெருங்கிக் குழுமியிருந்தார்கள். குடும்பச் சூழலிலேயே அடிசில் விருந்து, இசை விருந்து, கேளிக்கைகள், ஆடல் பாடல்கள் நடைபெற்றன. அவற்றில் செம்மேனியின் ஏழு புதல்வியரும் பங்கு கொண்டனர். அவர்களிடையே செங்கழுநீர், முத்தங்கோத்த செம்பவளமாக ஆடிப்பாடி எல்லாரையும் களிப்பில் ஆழ்த்தினாள்.
செல்வம்,செல்வாக்கு ஆகியவற்றின் செம்மாப்பில் அன்று செம்மேனி குளித்தெழுந்தான். புதல்வியரையும், மருமகச் செல்வர்களையும் சூழ இருத்திக் கொண்டு அவன் அன்று இன்னுரையாடினான்.
விளையாட்டாக அவன் புதல்வியரிடம் ஒரு கேள்வி கேட்டான். அவர்கள் கூறும் இனிய மறுமொழி கேட்டு மகிழ அவன் எண்ணியிருந்தான்.
“கண்மணிகளே! உங்கள் வாழ்வு இன்பகரமாக இருக்கிறதா? அதை இன்பகரமாக்கியதற்கு யார் முக்கிய காரணமென்று நினைக்கிறீர்கள்? நீங்கள் இன்னும் விரும்புவது ஏதேனும் உண்டா?” என்று அவன் வினவினான்.
புதல்வியர் அவன் குறிப்பறிந்து இனிய முகமனுரைகள் வழங்கினார்கள். “எங்கள் வாழ்வு எவ்வளவோ இன்பகரமானதாக இருக்கிறது. அதற்குப் பலர் உதவினாலும் அடிப்படைக் காரணம் எங்களைப் பெற்று வளர்த்து, எங்கள் நல்வாழ்வில் ஓயாது அக்கரை கொண்டிருக்கும் எங்கள் தந்தை யாகிய தாங்களே. எங்களுக்கு இப்போதிருக்கும் ஒரே விருப்பம் நீங்கள் நீடூழி வாழவேண்டும் என்பதே!” என்றனர் அவர்கள். அவர்கள் ஆறு பேரும் பாடிய புகழ்ப்பாட்டின் பல்லவி இதுவாகவே இருந்தது. ஆனால், அவர்கள் தம்தம் கணவரை நோக்கிப் புன்னகை செய்தபடியே பேசினர்.
செங்கழுநீர் கள்ளங்கபடமற்ற கன்னியாயிருந்தாள். தமக்கையர் மேலீடான தன்னலப் புகழ்ச்சியுரையில் அவளுக்கு உவர்ப்புத் தட்டிற்று. அவள், அவர்கள் உரைத்தபடி உரைக்காமல் புதிய விடை பகர்ந்தாள் “தந்தையே! துன்பம் எப்படி இருக்கும் என்பதை நான் அறியவில்லை. ஆகவே, என்னுடைய இன்பத்தை அளவிட முடியாது. அந்த இன்பத்துக்குப் பல காரணம் இருக்கலாமானாலும், அதன் அடிப்படை என் நற்பேறு என்று தான் எண்ணுகிறேன். என் ஒரே விருப்பம் என்றும் தங்களிடம் என் நேசம் மாறாதிருக்கவேண்டும் என்பது தான்” என்றாள்.
இன்பவாழ்விலும் புகழ்ச்சிப் பசப்பிலும் ஈடுபட்ட செல்வனுக்கு, இந்த மெய்யுரை மனக்கசப்பையும், சீற்றத்தையும் உண்டு பண்ணிற்று. “ஆ, அப்படியா செய்தி! உன் நற்பேறே உனக்கு இனி உதவட்டும்! அதன் ஆற்றலைப் பார்க்கிறேன்!” என்று கறுவினான்.
உறவினர் எவ்வளவு தடுத்தும் செம்மேனி கேட்கவில்லை. அவன் ஏவலரை அழைத்தான். செங்கழுநீரை ஒரு சிவிகையிலேற்றி, நடுக்காட்டில் கொண்டுபோய் விட்டு விட்டு வரும்படி ஆணையிட்டான்.
தந்தையைவிட்டுப் பிரிவதற்கே செங்கழுநீர் பெரிதும் வருந்தினாள். ஆயினும், வாழ்க்கை மாற்றத்தைப்பற்றி அவள் கவலைப்படவில்லை. அத்துடன் அவள் செவிலித்தாய் போதணங்கு, செம்மேனியின் சீற்றங் கண்டு கசிந்துருகினாள். அவள் எவ்வளவு மன்றாடியும், செம்மேனி தன் முடிவை மாற்றிக் கொள்ள மறுத்தான். அதன்பின் அவள், தன் வளர்ப்புச் செல்வியுடன் தானும் போக முனைந்தாள். செங்கழுநீரைக் கொண்டு சென்ற சிவிகையிலேயே அவளும் ஏறிச் சென்றாள்.
பணியாட்களுக்குக்கூடச் செங்கழுநீரைக் காட்டில் விட்டு வரும் போது கண்களில் நீர் ததும்பிற்று. ஆயினும், செம்மேனியின் கட்டளையை நிறைவேற்றாதிருக்க அவர்கள் துணியவில்லை. “ஆண்டவனே! எம் பிழை பொறுத்து எம் இளஞ்செல்வியைக் காத்தருள வேண்டும்” என்று அவர்கள் கடவுளை இறைஞ்சி மீண்டனர்.
திருவுடைய செல்வியின் தனிமையும், துயரும் எண்ணிக் காட்டிலுள்ள மரஞ்செடி கொடிகள்கூடத் துடித்தன. செவிலி போதணங்கு தள்ளாத வயதுடையவள். ஆயினும் செல்வி மீதுள்ள பாசம் அவளுக்குத் தெம்பளித்தது. அவள் செல்வியுடன் காட்டில் இரவு தங்க ஒரு பாதுகாப்பான இடம் தேடினாள்.
கணைப்பேறி நெளிந்து வளைந்திருந்த ஒரு முதிய இலுப்பை மரத்தடியில் அவர்கள் ஒருங்கினார்கள். அதன் உட்பகுதி அவர்களுக் கென்று கூடாய் அமைந்திருப்பது போலத் தோன்றிற்று. அத்துடன் உட்புழை மரத்தின் வளைவு நெளிவுகளுக்கிடையே மேலும் கீழும் சுற்றிலும் வளைந்து வளைந்திருந்தது. அதன் உள்வளைவு அவர்களுக்கு வாயிலமைத்த ஒரு சிறு மாளிகை போலாயிற்று. செவிலித் தாயுடன் ஒரு செவிலித்தாயாக, அந்த இலுப்பை மரம் செல்விக்கு ஆதரவு தந்தது.
அவர்களிடம் ஒருநாள் உணவே இருந்தது. அதை அவர்கள் உண்டனர். மரத்திற்குள்ளேயே இரவு நேரம் கழித்தனர். காட்டிலுள்ள கொடு விலங்குகள் நாற்புறமிருந்தும் வந்து மரத்தைச் சூழ்ந்தன. உள்ளிருக்கும் மனிதர் வாடையை மோப்பத்தால் அறிந்து, அவை, அதைச் சுற்றிச்சுற்றி வந்தன. அவற்றின் கூச்சல்களால் செங்கழுநீரும், போதணங்கும் நடுங் கினார்கள். மரத்தின் உட்புழையினுள் மேலும் மேலும் ஆழ்ந்து உட்சென்று பதுங்கினர். விலங்குகள் புழைவாயின் வளைவு நெளிவுகளிடையே அவர்களை எட்ட முடியவில்லை.
கரடிகள் மரத்தில் ஏறிப் பார்த்தன; புலிகளும் சிங்கங்களும் மரத்தின் புறத்தோட்டைக் கிழிக்க முயன்றன; காட்டுப் பன்றிகளும், யானைகளும் மரத்தைத் தாக்கி முறித்துவிட முயன்றன; அவற்றின் கோரத் தந்தங்கள் மரத்தின் பட்டையைக் குத்திக் கிளறி ஊறுபடுத்தின.
பொழுது விடிந்தது. கொடுவிலங்குகள் தத்தம் பதி விடங்களுக்குச் சென்று விட்டன. செங்கழுநீரும், போதணங்கும் மெல்ல வெளியே வந்து பார்த்தனர். அருமை இலுப்பை மரத்தின் புறப்பகுதி எங்கும் தாறுமாறாகக் கிழிந்து கிடந்தது. “அந்தோ! எம் உயிர்காக்க அருமை மரம் அடைந்த நிலை இதுவோ?” என்று செங்கழுநீர் உள்ளம் துடித்தது. “எனக்காக எவ்வளவு இன்னல் பட்டாய்? அன்னையே! உன் காயங்களை ஆற்றுவது என் முதல் கடன்!” என்று அவள் மரத்திடம் ஒத்துணர்வுடன் கூறினாள். பக்கத்திலிருந்த ஒரு குட்டையை அணுகி மண்ணும் நீரும் கலந்து நறுஞ்சேறு உண்டு பண்ணினாள். அதை மரமுழுதும் அப்பி அதன் நைவு ஆற்றினாள். போதணங்கும் இத்தொண்டில் தன்னால் இயன்ற பங்கு ஒத்துழைத்தாள்.
அவர்கள் நன்றியுணர்வு கண்டு மரத்தின் தெய்வமாகிய இலுப்பை மூதணங்கு மகிழ்வுற்றது. “குழந்தையே! செல்வியே! என் இடரிலிருந்து உங்களுக்கு நேரிட்ட இடரின் அளவை நீங்கள் உணரலாம். என் இடர்பற்றி எனக்குக் கவலையில்லை. உங்களுக்காகவே இன்னும் கவலைப்படுகிறேன். வயது சென்ற என் ஆதரவை நீங்கள் எத்தனை நான் நம்பியிருக்க முடியும்? நிலையான வேறு ஆதரவை நான் உங்களுக்கு விரைவில் தேடித்தர வேண்டும். அஃது என் பொறுப்பு. ஆனால், அதற்கிடையில் உங்களுக்கு உணவு வேண்டுமே! நான் இலுப்பை மரமாக அமைந்து விட்டேன். ஆகவே உங்களுக்கு நான் இவ்வகையில் உதவ முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன். உங்கள் கையில் உள்ள பணத்தால், அயலூரிலிருந்து உணவு தருவியுங்கள்!” என்றது.
அவர்களிடம் பணம் எதுவுமில்லை. ஆனால், செங்கழுநீர் தன் ஆடையெங்கும் தேடியபோது, அதன் ஒரு முடிச்சில் ஐந்து செப்புக் காசுகள் அகப்பட்டன. அவற்றை அவள் போதணங்கிடம் தந்தாள். போதணங்கு அவற்றுடன் அருகிலுள்ள ஒரு நகர் சென்றாள். ஒரு பிட்டுக் கடையை அணுகி, “ஐயனே, ஐந்து காசுக்குப் பிட்டுக் கொடுங்கள்” என்றாள்.
ஒரு பிட்டின் விலையே பத்துக் காசாயிருந்தது. ஆகவே, கடைக் காரன் அவள் மீது சீறி விழுந்தான். “அட படுகிழமே, ஐந்து காசுக்குப் பிட்டா வாங்க வந்திருக்கிறாய்? இங்கே நில்லாது, ஓடிப்போ!” என்று துரத்தினான்.
பாவம், கிழவி கடைகடையாக அலைந்தாள். எங்கும் இதே கூக் குரல்தான் மறுமொழியாகக் கிடைத்தது. ஆனால், கடைசிக் கடைக்காரன் அவள் திக்கற்ற நிலைகண்டு இரங்கினான். ஐந்து காசைப் பெற்றுக் கொண்டு மடி கொள்ளுமட்டும் உதிர்ந்த பிட்டை அள்ளிக் கொடுத்தான். அவள் மகிழ்வுடன் திரும்பினாள்.
செங்கழுநீரிடம் போதணங்கு பிட்டைக் கொடுத்தாள். ஆனால், செங்கழுநீர் அதை இலுப்பை மூதணங்கின் முன் வைத்தாள். “ஆருயிர்த் தாயே! முதலில் நீங்கள் பசியாறுங்கள்” என்றாள்.
மூதணங்கின் உள்ளங் குளிர்ந்தது. “மக்கள் அன்பே தாய்க்கு உணவு, அம்மா! எனக்கு ஒன்றும் தேவையில்லை. ஆனால், உங்களுக்கு இதன் தேவை மிகப் பெரிது. பாதியைச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். மறுபாதியில் இருவரும் உண்டதுபோக, மீதியைக் குட்டையைச் சுற்றிலும் தூவுங்கள்” என்றது.
அவர்கள் அவ்வாறே செய்தார்கள். மறுநாள் இரவும் அவர்கள் மரத்துக்குள்ளே அடைக்கலம் புகுந்தனர். கொடு விலங்குகள் அன்றும் அங்கே வந்து ஆர்ப்பரித்தன. மரத்தின் பட்டைகள் சேற்றால் இப்போது வலிமை பெற்றிருந்தன. சேறு காயக்காயக் காயங்களும் ஆறியிருந்தன. ஆயினும், நள்ளிரவுக்குள் அதன் அழிவு பெரிதாயிற்று. ஆனால், நள்ளிரவில் நடந்த நிகழ்ச்சி மரத்துக்குப் பாதுகாப்பளித்தது. அவர்கள் வாழ்வுக்கும் புது வழிவகுத்தது.
விலங்குகளின் ஆரவாரம் சட்டென நின்றது. அதனிலும் வீறுமிக்க பிறிதோர் இரைச்சல் கேட்டது. அஃது உண்மையில் மயில்களின் கூக்குரலே. அந்தக் காட்டில் தெய்வ மயில்களின் கூட்டம் ஒன்று வாழ்ந்தது. அம் மயில்கள் எப்போதும் இரைக்காகத் தொலை தூரம் சென்று வந்தன. அன்று இரவு குட்டையில் சிதறிய பிட்டுகளின் மணம் அவற்றை அப்பக்கம் ஈர்த்தன. அவற்றின் ஆரவாரம் கேட்டே விலங்குகள் ஓடின. மரத்துக்குப் பின்னிரவு முழுவதும் ஓய்வுகிட்டிற்று.
விடியும்வரை மயில்களின் கூச்சல் அடங்கவில்லை. பிட்டுத்துகளுக் காக அவை ஒன்றை ஒன்று நெருக்கித் தள்ளிக் கொண்டே இருந்தன.
விடியுமுன் மயில்கள் பறந்தோடி விட்டன. செங்கழுநீர் காலையில் குட்டை அருகே சென்று பார்த்தாள். சிதறுண்ட மயில்களின் இறகுகள் எங்கும் பச்சைப் பசேலென்று மின்னின. வானவில்லின் ஏழுநிறங்களும் அவற்றிடையே கண்ணைக் கவர்ந்தன. அவள் மெல்ல அவற்றைப் பொறுக்கினாள். கட்டாகக் கட்டினாள். அன்று கையில் காசில்லாத குறையை அது நீக்கிற்று. போதணங்கு அதை நல்ல விலைக்கு நகரில் விற்றாள். சிறிது பணத்துக்கு முன்போலப் பிட்டு வாங்கினாள். இரக்கமுள்ள கடைக்காரன் இப்போது முன்னிலும் மகிழ்ச்சியுடன் நிறையப்பிட்டு வழங்கினான். ஏனென்றால், மயில் இறகின் ஒரு பெரும் பகுதி முதலில் அவனுக்கே விலைக்குக் கிட்டிற்று.
அவர்கள் உணவுக் கவலை தீர்ந்தது. மரத்தின் பாதுகாப்பும் மிகுந்தது. சேற்றடையும், மயிலெச்சமும் விலங்கின் இடர்களை முற்றிலும் போக்கின. அவர்கள் கையில் வரவரப் பேரளவில் பணம் திரண்டது.
மூதணங்கின் அறிவுரைப்படி, செங்கழுநீர் மயில்களுக்கு இன்னும் உயர்ந்த உணவு வகைகள் தூவினாள். மயில்கள் விடிந்த பின்னும் அவற்றைத் தின்னக் காத்திருந்தன. அச்சமயம் செங்கழுநீர் அவற்றினும் இன்னும் உயர்ந்த உணவை நீட்டினாள். அவை, அவள் கைக்கருகே வந்து சூழ்ந்து அதைப் பெற்றன. “அன்புமிக்க அணங்கே, நீ யார், உனக்கு என்ன வேண்டும்?” என்று ஒரு மாமயில் கேட்டது. அதுவே மயில்களின் அரசனான கோமயில்.
“தெய்வப் பறவையே, நான் என் தந்தையாலேயே புறக்கணித்து ஒதுக்கப்பட்டவள். இந்தக் காட்டில் துணை யில்லாமல், இடமில்லாமல் தவிக்கிறேன். எனக்குத் தங்க ஒரு குடிசையும், வாழும் வாய்ப்பும் செய்துதரக் கோருகிறேன்” என்றாள் செங்கழுநீர்.
“மறு இரவே இது செய்கிறேன்” என்று கோமயில் வாக்களித்தது.
அன்று வழக்கத்தினும் மிகுதியாக உயர் உணவு கட்டையில் வட்டிக்கப்பட்டது. ஆனால், அன்று மயிலின் ஆரவாரம் கேட்கவில்லை. அவர்களும் மரத்துக்குள்ளிருந்து, “என்னவோ எதுவோ” என்று வியப்படைந்தார்கள். ஆனால், விடிந்ததும் விடியாததுமாக அவர்கள் வெளிவந்த போது, கண்ட காட்சியை நம்பமுடியவில்லை.நெடுநேரம் திகைத்தனர். அவர்கள்முன் மன்னர் மாளிகைகளைவிட வனப்புடைய மாளிகையும், மலர்ச் சூழலும் காணப்பட்டன. அவர்கள் வியப்பு அடங்குமுன் அதனினின்றும் தெய்வப் பெண்கள் போன்ற பணிப்பெண்கள் வந்தனர். “உங்கள் மாளிகைக்கே வாருங்கள். எல்லாம் சித்தமாய் விட்டது” என்று அவர்கள் செங்கழுநீரையும் போதணங்கையும் அன்புடன் இட்டுச் சென்றனர்.
இலுப்பை மூதணங்குக்குச் செங்கழுநீர் நாள்தோறும் சென்று கனிவுடன் வழிபாடாற்றினாள். அவ்வொரு செயல் தவிர, அவள் வாழ்வு முழுவதும் புதிய மாளிகைக்கும், மலர் வனத்துக்கும் உள்ளே நடைபெற்றது. அவள் தேவைகள் யாவற்றையும் மற்றப் பணிப் பெண்டிரே முற்றிலும் கவனித்து வந்தனர். மூதணங்கின் வழிபாட்டைக்கூட நாளடைவில் போதணங்கே மேற்கொண்டு வந்தாள்.
காலம் செங்கழுநீர் வாழ்வின்மீது நகையொளி பரப்பிற்று. அதே சமயம் அவளைப் புறக்கணித்த தந்தை வாழ்வின் மீது அது மெல்லமெல்லச் சீற்றங் காட்டிற்று. செம்மேனியின் செல்வம் கரைந்து வந்தது. அவன் கப்பல்களில் பல, ஒரு சூறாவளியில் சிக்கி அழிந்தன. அவன் வீழ்ச்சியடைந்தான். இன்னல்கள் இதனை அடுத்து விரைந்து பெருக்கமடைந்தன. வீடும் செல்வமும் மறைவுற்றன. மனைவியும் ஆறு புதல்வியரும் அவனும் கையில் காசின்றி, உதவுவார் இல்லாமல் திண்டாடித் திரிய வேண்டியதாயிற்று.
செங்கழுநீர், மயில்கள் வந்து மொய்த்த குட்டையை ஒரு குளமாக்க விரும்பினாள். அதற்காக எங்கும் கல்தச்சர், கொத்தர், திட்ட அளவையாளர்கள், கூலியாட்கள் ஆகியவர்களை வரவழைத்தாள். வேலை மும்முரமாகத் தொடங்கி நடந்து வந்தது.
காட்டு மாளிகையின் புகழும், அதன் தலைவியான இளஞ்சீமாட்டியின் புகழும் இதற்குள் எங்கும் பரவிவிட்டன. குளத்தின் பணியில் அமர்ந்தவர்களுக்கு நல்ல கூலி கிடைத்ததென்ற செய்தியும் எங்கும் பேராயிற்று. வாழ்வுக்கு அலைந்த செம்மேனிக்கு, அத் தலைவி தன் புதல்வியே என்பது ஒரு சிறிதும் தெரியவராது தன் ஆராக் கொடுஞ்செயலால் அவள் இதற்குள் இறந்திருப்பாள் என்றே அவன் உறுதியாக நம்பினான். ஆகவே, குளப்பணியில் கூலிவேலை பெற்றுப் பிழைக்கும் ஆர்வத்துடன் அவன் நடந்தான். அவன் மனைவியும், புதல்வியரும் அவனுடன் சென்றனர்.
அவர்களைப் போலவே வேலைநாடி வந்தவர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு சென்றிருந்தனர். வேலைக்காரரைத் தேர்ந்தெடுக்கும் பணிமுதல்வர் ஒவ்வொருவராக அழைக்கும்வரை அவர்கள் வரிசை வரிசையாக நின்றனர். செங்கழுநீர் அச்சமயம் தன் மாடிப் பலகணியில் வந்திருந்து வேலையைக் கவனித்திருந்தாள். அவள் கண்கள் தற்செயலாக, வேலைநாடி நின்றவர் மீது சென்றது. தன் செல்வத் தந்தையையும், தாய் தமக்கையரையும் அந்தக் கும்பலில் கண்டபோது அவள் திடுக்கிட்டாள். உடனே பணிப் பெண்களை விட்டு அவர்களை அழைத்து வரச் செய்தாள். “நாம் தெரியாமல் என்ன குற்றம் செய்தோமோ? தலைவி என்ன தண்டனை தரப் போகிறாளோ? ஒருவேளை குளப்பணிக்குத் தம்மைப் பலியிடத்தான் கருதினாளோ?” என்று அவர்கள் நடுநடுங்கிக் கொண்டே வந்தனர்.
செங்கழுநீர், தந்தை காலில் விழுந்து வணங்கினாள். தாயையும் தமக்கையரையும் கட்டிக் கொண்டு, “ஐயோ! உங்களை நான் இந்தக் கோலத்தில் பார்க்க நேர்ந்ததே” என்று கலங்கினாள். காட்டு மாளிகைத் தலைவி செங்கழுநீரே என்பதைக் கண்டு, அவர்கள் ஒருபுறம் மகிழ்சசியும், மற்றொருபுறம் வெட்கமும் அடைந்தனர். ஆனால், செங்கழுநீரின் அன்பு அவர்களை விரைவில் ஆட்கொண்டது. அவள் அவர்களுக்குப் புத்துணவு, புத்தாடை வழங்கினாள். பலவகையிலும், அவர்கள் இன்னல்களை மறக்கடித்தாள். நகருக்கு ஆள் அனுப்பித் தந்தையின் செல்வ முழுவதையும் மீட்டும் அவர்களுக்கு வாங்கித் தந்தாள். அவர்கள் அடைந்த இன்னல்கள் யாவும் இடைக்காலத்தில் அவர்கள் கண்ட ஒரு கனவோ என்று எண்ணும்படி மறைந்தன.
வணிகன், தன் மகளிடம் தனக்கு நேர்ந்த இடையூறுகளை விளக்கிக் கூறினான். அவளும் காட்டில் தனக்கு நேர்ந்தவற்றை எடுத்துக் கூறினாள். “செங்கழுநீர், முன்பு, தன் இன்பத்துக்குத் தன் நற்பேறே காரணம் என்று கூறியது முற்றிலும் உண்மையே” என்பது வணிகனுக்கு இப்போது தெரிந்தது. தான் அறியாது இழைத்த தவற்றுக்கும், கொடுமைக்கும் அவன் இப்போது வருந்தினான். மற்றப் புதல்வியரைவிடச் செங்கழுநீரிடம் மிகுதி அன்பும் மதிப்பும் கொண்டான்.
புதல்வியருடனே நகரில் வாழ்ந்தாலும் அடிக்கடி காட்டுக்கு வந்து அவளையும் கண்டு அளவளாவினான். ஆனால், மீட்டும் நகருக்கு வரும்படி, அவன், அவளை அழைத்தபோது, அவள் நயமுடன் மறுத்துவிட்டாள். “காடு தந்த செல்வம் இது; ஆகவே, நான் இந்தக் காட்டைவிட்டு வருவது நல்லதன்று; மேலும், நாட்டில் இருக்கும் வாய்ப்புகளைவிட இங்கு எல்லாம் மிகுதியாகவே உள்ளன” என்று அவள் விளக்கம் தந்தாள்.
மகள் தந்த செல்வத்தால் வணிகன் செம்மேனி மகிழ்ச்சியடைந்தான். ஆனாலும், இழந்த செல்வத்தைத் தன் முயற்சியால் மீட்டும் பெற அவன் துடித்தான். ஆகவே, பெரும் பொருட் குவையுடன் அவன் பல கப்பல்களை அமர்த்தினான். அவற்றுடன் வாணிகம் நாடித் தொலை நாடு செல்லப் புறப்பட்டான்.
கப்பல்கள் துறைமுகத்தில் நின்றன. வணிகன் மனைவியிடமும், ஆறு புதல்வியரிடமும் விடைபெற்றக் கொண்டான். ஒவ்வொருவருக்கும் அவன் தனித்தனியாகப் பிரிவு நேர ஆறுதல் மொழிகள் புகன்றான். “திரும்பி வரும் போது உங்களுக்குத் தக்க பரிசு கொண்டுவர விரும்புகிறேன். என்ன என்ன பொருள்களை நீங்கள் அவாவுகிறீர்கள்? அதைப் பெற்று வருவேன்” என்று அவன் ஒவ்வொருவரிடமும் கேட்டான். அவரவர் விருப்பப்படி நினைவுடன் பரிசு கைக்கொண்டு விரைவில் வருவதாக வாக்களித்தான்.
கப்பல்கள் பாய் விரிக்கக் காத்திருந்தன. ஆனால், போவதற்கு வாய்ப்பான திசையில் காற்று அடிக்கவில்லை. நாழிகையும் நாளும் கடந்தன. கப்பல்கள் புறப்பட்ட பாடில்லை. “இஃது என்ன தெய்வக் கோளாறோ?” என்று செம்மேனி சிந்தித்தான். “மற்றப் புதல்வியரிடமே விடை பெற்றோம்; பரிசுறுதியும் வழங்கினோம்; நம் செல்வத்துக்கே காரணமான செங்கழுநீரிடம் விடையும் பெற மறந்தோம்; பரிசுறுதி கூறவும் இல்லை; இந்த நன்றி கொன்ற செயலைத்தான் தெய்வம் நமக்குச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்” என்று அவன் கருதினான்.
அவன் பயண ஏற்பாட்டை விட்டு விலக முடியவில்லை. ஆகவே, ஒரு தூதனைக் காட்டு மாளிகைக்கு அனுப்பினான். “அன்பு மகளே, நான் வாணிகம் நாடித் தொலை செல்ல இருக்கிறேன். போகும் பரபரப்பில் அங்கே வர மறந்துவிட்டேன். அதை மன்னித்து, விடை தரும்படி வேண்டுகிறேன். அத்துடன் மற்ற புதல்வியர் விரும்பும் பொருள்களை வாங்கி வருவதாக உறதி கூறிச் செல்கிறேன். நீயும் உனக்கு விருப்பமான பொருளைச் சொல்; அதை வாங்கி வருவேன்” என்று தூதன் மூலம் அவன் சொல்லியனுப்பினான்.
தூதன் செல்லும்நேரம் செங்கழுநீர் அடுப்பில் எண்ணெய்ச் சட்டி யுடன் ஊடாடிக் கொண்டிருந்தாள். ஆகவே, தூதன் சொற் கேட்டதும், “மகிழ்ச்சி! அப்பா நன்றாகப் போய் வெற்றியுடன் மீளட்டும்” என்று கூறினாள். தூதன், “என்ன பரிசு வேண்டும்?” என்று மீட்டும் கேட்டான். செங்கழுநீர் கடுகு எடுக்க அறை வீட்டிற்குள் செல்ல இருந்த நிலையில், “இதாவரேன், சற்று இரு” என்று கூறிச் சென்றாள். அவள் கூறியது முழுவதும் தூதன் செவியில் விழவில்லை; “இதாவரேன்” என்பது மட்டும் விழுந்தது. ஒரு சொல்லில் அவள் தனக்கு வேண்டும் பொருளைச் சொல்லிவிட்டு அகன்றதாக அவன் எண்ணினான். அவன் விரைந்து கப்பலுக்குத் திரும்பினான். செம்மேனியிடம் யாவும் கூறினான். “செங்கழுநீர் வேண்டுகிற பரிசு ’இதாவரே’னாம்” என்றான்.
‘இதாவரேன்’ என்றால் என்ன பொருள் என்பது வணிகனுக்கு விளங்கவில்லை; தூதனும் இதைத் தெரிந்து கொண்டிருக்கவில்லை; ஆயினும், இதுபற்றி அவர்கள் சிந்தனை நீடிக்கவில்லை. ஏழு நாளாய் வீசாத நற்காற்று, அப்போது வீசிற்று. பாய்கள் விரிக்கப்பட்டன. கப்பல்கள் துறைமுகத்தைவிட்டு வெளியேறின.
பொருள் இன்னதென்று செம்மேனிக்குத் தெரியா விட்டாலும், அவள் சொன்ன பெயரை அவன் மறக்கவில்லை. அதை நினைவில் இருத்தும்படி அவன் அடிக்கடி `இதாவரேன்! இதாவரேன்!’ என்று உருவேற்றினான்; அடிக்கடி அதை எழுதி எழுதி மனத்திற் பதியவைத்துக் கொண்டான்; அப்பெயர் அவன் நினைவுக் குறிப்பிலும் முதல் தாளிலேயே குறிக்கப்பட்டிருந்தது.
அவன் வாணிகம் எங்கும் எதிர்பாரா வெற்றி தந்தது. கொண்டு சென்ற செல்வம் பத்திரட்டியாயிற்று. மேலும் பல விலையேறிய பொருள்களுடன் அவன் திரும்பினான். போகும் வழியிலும், வரும் வழியிலும் ஒவ்வொரு நாட்டிலும் நகரிலும் துறையிலும் அவன் “இங்கே, ‘இதாவரேன்’ கிடைக்குமா” என்று கேட்டான். ஆனால், ‘இதாவரேன்’ என்றால் என்ன என்று எவருக்கும் விளங்கவில்லை. தமிழ் வழங்கும் நிலத்திலேயே புரியாதபோது, பிறமொழி வழங்கும் நிலத்தவர் அதை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?
திரும்பி வரும் வழியில் மாபப்பலாம் என்ற ஒரு நகரில் கப்பல் தங்கிற்று. இங்கே, செம்மேனி ஓர் அழகிய செல்வ இளைஞனைக் கண்டான். அவனிடமும் “இங்கே யாராவது ‘இதாவரேன்’ என்பதை அறிவார்களா?” என்று கேட்டான்.
இளைஞன் உண்மையில் மாபப்பலாம் நாட்டின் இளவரசனே! அவன் பெயரும் தற்செயலாக ‘இதாவரேன்’ என்பதாகவே இருந்தது. தன் பெயரை ஓர் அயல்நாட்டு வாணிகன் கூறி விசாரிப்பது கேட்டு அவன் திகைப்படைந்தான்; பின், ’இதாவரே’னை எனக்கு நன்றாகத் தெரியும்; என்ன வேண்டும் அவரைப்பற்றி? என்று கேட்டான்.
செம்மேனிக்கு மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. “இதாவரேன் ஓர் ஆளின் பெயரா? அப்படியானால், ஆளை எப்படி விலைக்கு வாங்குவது?” என்று விழித்தான். இளைஞன் இப்போது விளக்கமாக கேள்விகள் கேட்டான். வணிகன் மறுமொழி அவனுக்கு முழுதும் புரியாவிட்டாலும், அவன் புத்தார்வத்தைக் கிளறிற்று. “என் இளைய புதல்வி செங்கழுநீர் ‘இதாவரேன்’ வேண்டுமென்று விருப்பம் தெரிவித்தாள். அஃது, ஓர் ஆளின் பெயராய் இருக்குமென்று நான் எண்ணவில்லை. ஒரு பொருளின் பெயராய்த்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்” என்றான்.
இளைஞன் முகம் புன்முறுவல் பூத்தது. “அப்படியா? இப்போது புரிந்தது. அப்படி ஓர் ஆளும் உண்டு; ஒரு பொருளும் உண்டு; ஆளைப் பெறுவதுதான் கடுமையான செயல்; பொருளை நான் உங்களுக்கு எளிதில் பெற்றுத் தர முடியும். நாளைக் காலையில் நீங்கள் இதே இடத்தில் இருந்தால், நான் அதைக் கொண்டுவந்து தருகிறேன்” என்றான்.
செம்மேனி உள்ளத்திலிருந்து ஒரு பெரும் பாரம் குறைந்தது. அவன் மறுநாள் கப்பலில் இளவரசன் இதாவரேனுக்காக காத்திருந்தான். அங்கு வந்த இதாவரேன், அவன் கையில் ஒரு மரப்பெட்டியை அளித்தான். “உங்கள் புதல்வி விரும்பிய ‘இதாவரேன்’ இதற்குள் இருக்கிறது. அதைப் பெற்றுச் செல்க” என்றான். செம்மேனி, “இதற்கு என்ன விலையானாலும் கூறுக; தருகிறேன்” என்று மகிழ்வுடன் உரைத்தான். ஆனால், இளவரசன் இதாவரேன் விலைபெற மறுத்து விட்டான். “இதாவரேனுக்குரியவர் கொடுத்த பரிசாக இதை உம் புதல்விக்குத் தருக” என்றான்.
செம்மேனியை மனைவி மக்களும் நண்பர்களும் ஆர்வத்துடன் வரவேற்றனர். அவன் கொண்டு வந்த பெருஞ் செல்வக்குவை கண்டு அனைவரும் வியப்பும் மகிழ்வும் கொண்டனர். அத்துடன் தத்தமக்காக வாங்கி வந்த பரிசை மனைவியும் புதல்வியரும் பெற்று அகமகிழ்வுற்றனர். ‘இதாவரேன்’ கொடுத்தனுப்பிய மரப்பெட்டியையும் செம்மேனி செங்கழு நீருக்குக் கொடுத்தனுப்பி வைத்தான்.
அதை, அவள் அன்புடன் பெற்றாள். ஆனால்,தான் ‘இதாவரேன்’ வேண்டுமென்றுகேட்டது பற்றி அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘இதாவரேன்’ என்ன என்பதோ, ‘இதாவரேன்’ என்ற பெயருடையதாகக் கூறப்பட்ட அந்த மரப்பெட்டிக்கு என்ன பயன் என்பதோ அவளுக்கு முற்றிலும் புதிராகவே இருந்தது. அவள் மரப்பெட்டியை வாங்கித் தன் அணிகலப் பொருள்களுடன் வைத்தாள். அதன்பின் அவள் அதுபற்றி எண்ணவில்லை. அதை மறந்தாள்.
பொருள்களைத் துப்புரவு செய்யும் சமயம், அவள், ஒருநாள் அப் பெட்டியைக் காண நேர்ந்தது. அதையும் திறந்து துடைக்க எண்ணினாள். ஆனால், திறந்த போது அதில் கண்ணைக் கவரும் வனப்புடைய ஒரு விசிறி இருந்தது கண்டாள். விசிறி, விரித்துச் சுருக்கும்படியாக அமைந்திருந்தது. அதன் பிடியருகே ஒரு சிறிய முகக்கண்ணாடி பதிக்கப் பெற்றிருந்தது.
அவள் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டே, விசிறியை விரித்தாள்; அவளை அறியாமலே அவள் உதடுகள் ‘இதாவரேன்’ என முனகின.
அவள்முன் ஓர் அழகிய இளைஞன் வந்து நின்றான். உண்மையில் அவனே மாபப்பாலம் இளவரசன் ‘இதாவரேன்’. விசிறி ஒரு மாய விசிறி என்பது செங்கழுநீருக்கு அதுவரை தெரியாது. அதை வீசி ‘இதாவரேன்’ என்று முணுமுணுத்த போது, இளவரசன் வந்து முன்னிற்பான் என்பதும் அவளுக்குத் தெரியாது. தற்செயலாக நடைபெற்ற அந்நிகழ்ச்சி கண்டு அவள் திடுக் கிட்டாள்.
“அழகரசியே, என்னை ஏன் அழைத்தாய்?” என்று இளவரசன் இதாவரேன், குறும்பு நகையுடன் கேட்டான்.
அவள் அப்போது தனிமையில் இருந்தாள். ஆகவே, அறிமுகமற்ற இளைஞன் வரவால் அவள் அச்சம் கொண்டாள். ஆனால், இளவரசன் அன்புக் கனிவுடனும், பண்பு நயத்துடனும் நடந்து, அவள் அச்சம் தெளிவித்தான். மாயவிசிறி பற்றிய கதையை, அவன், அவளுக்குப் பக்குவமாக எடுத்துரைத்தபோது, அவள் தன்னையறியாது கைகொட்டிச் சிரித்தாள்.
" ‘இதாவரேன்’ வேண்டும் என்று நீ தந்தையிடம் கூறினாயே, இஃது எப்படி முடிந்தது?" என்று இளவரசன் கேட்டான். தூதன் வந்த நேரத்தின் சூழல், ‘இதாவரேன்’ என்று தான் கூற நேர்ந்த குறிப்பு, அதைப் புரிந்து கொள்ளாத தூதன் செயல் ஆகியவற்றை அவள் விளக்கினாள். இவை கேட்டு இளவரசன் விலாப்புடைக்க நகைத்தான்.
இளவரசன் ‘இதாவரே’னுடன் செல்வி செங்கழுநீர் மனம் விட்டுப் பழகி நேசம் கொண்டாள். அவனும் அவளிடமே மாறாப் பாசம் கொண்டான். இருவரும் ஒருவரை ஒருவர் மணம் புரிவதென உறுதிமொழி பரிமாறிக் கொண்டனர். இரண்டொரு நாள் செங்கழுநீர் மாளிகையில் இன்பமாகப் பொழுது போக்கி இருந்துவிட்டு, ’இதாவரேன்’ தன் நாடு சென்றான்.
இதாவரேனின் தாய் தந்தையர்கள் அவன் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். இதாவரேன் தன் மண உறுதிப் பற்றியும், செல்வி செங்கழுநீரின் நற்குணம் நிறையழகு பற்றியும் அவர்களுக்குச் சொன்னான். அவர்களும் அவன் விரும்பிய பெண்ணையே மணம் நடத்த இசைவு அளித்தனர். அவர்கள் மண ஒப்பந்தம் காட்டு மாளிகையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக இளவரசன் அங்கே வந்து தங்கியிருந்தான். ஆனால், எதிர்பாராத வகையில் இது தடைப்பட்டது. செல்வி செங்கழுநீர் வாழ்வில் மீண்டும் வெங்காற்று வீசத் தொடங்கிற்று.
செங்கழுநீரின் தமக்கையர்கள் ஏற்கெனவே அவள் செல்வத்தின் மீது இழுக்காறு கொண்டிருந்தார்கள். இளவரசன் இதாவரேன் அவளுக்குக் கணவனாக வாய்த்தது கண்டு, இந்த அழுக்காறு கனலாக வீசிற்று. அவர்கள் அவள் வாழ்வைக் கெடுக்கப் பொல்லாத சூழ்ச்சி ஒன்றை உருவாக்கினர்.
இளவரசன் மணமலர்ப் படுக்கையில் மலர் தூவும் சாக்குடன் அவர்கள், அப் படுக்கையறை சென்றனர். பன்னிற மலர்களுக்கிடையே அவர்கள் பன்னிறக் கண்ணாடித் தூள்களும் கலந்து பரப்பினர். மலருடன் மலராகவும், வண்ணப் பஞ்சுகளுடன் பஞ்சாகவும் அவை விரவிக் கிடந்தன. இளவரசன் உருளும்போது அவன் அறியாமலேயே அவன் உடலில் கண்ணாடித் தூள்கள் உட்சென்று துளைத்தன. காலையில் நோவு பொறுக்காமல் அவன் துடித்தான். அவன் ஒவ்வொரு துடிப்பிலும் செங்கழுநீரும் பதைபதைத்தாள். ஆனால், மருத்துவர் எவ்வளவு முயன்றும் நோவின் காரணத்தை யாரும் அறிய முடியாமல் போயிற்று.
இளவரசனை அவன் தாய் தந்தையர்கள் மாபப்பலாம் நாட்டுக்கே இட்டுச் சென்றனர். அங்கும் நோவு, குணத்துக்கு வரவில்லை; மேன்மேலும் உக்கிரமாயிற்று; செங்கழுநீரையும், அவளைக் கண்ட நாளையும் தாய் தந்தையர் மனப் புழுக்கத்துடன் பழித்தனர். ஏனெனில், அவள் கோள் நிலையே அவன் கோளாற்றுக்குக் காரணம் என்று அவர்கள் நினைத்தார்கள்.
தமக்கையர் மணவிழாவுக்கு வைத்த வேட்டு செங்கழுநீர் வாழ்வுக்கே வைத்த உலையாயிற்று. அவள் மாளிகையை வெறுத்து ஒதுக்கினாள். குடும்பத்தை ஒதுக்கினாள். இளவரசனைக் காப்பாற்றி மீட்டு வர முடியுமானால் வருவது, இல்லாவிட்டால், எங்கேனும் திரிந்து உயிர் இழப்பது என்று அவள் தேறினாள்.
செல்வ முற்றிலும் அறச்சாவடிகளுக்கு விட்டு விட்டுப் புறப்பட்டாள். மாற்றுருவில் நாடுநாடாக, காடுகாடாக அலைந்தாள்.
அவள் மெல்லிய காலடிகள் கல்லிலும் முள்ளிலும் அலைந்து கொப்புளம் கண்டன. அவள் முகம் வாட்டம் அடைந்தது. மாற்றுருவில் அணிந்திருந்த ஆடைகள்கூடக் கந்தலாயின. உடல் நலிந்து மெலிந்தது. இந்நிலையிலே அவள் ஒருநாள் காட்டிலுள்ள ஒரு மரத்தடியில் தங்கி இளைப்பாறினாள். அதன் மூட்டில் சாய்ந்து அவள் கண்ணயர்ந்தாள்.
அந்த மரத்தில் நேமிப் பறவை எனப்படும் ஆனைக்குருகுகள் கூடுகட்டி வாழ்ந்தன. அவை மண்டலப் பறவைகள். ஆறாண்டுகள் அவை பூவுலகின் ஒரு கோடியிலிருந்து முட்டையிடும். ஆறாண்டுகள் பூவுலகின் மறுகோடி சென்று இரைதேடி மீளும். முட்டைகள் குஞ்சு பொரிக்கும்போது அவை அருகிலிருப்ப தில்லை. மீண்டபின் முட்டைகளைப் பார்க்கமாட்டா, குஞ்சு களையே பார்க்கும். ஆனால், அந்த மரத்தில் கூடு கட்டிய நாள்முதல், அவை முட்டைகளையும் பார்ப்பதில்லை; குஞ்சுகளையும் பார்ப்பதில்லை. அதன் மாயத்தை உணராமலே, அவை வருந்தி மாழ்கின.
இளவரசி துயிலைக் கலகல என்ற ஓர் ஓசை கலைத்தது. அவள் கண் திறந்தாள். மரத்தின் மேலிருந்த கூட்டில் நேமிக் குஞ்சுகள் துடிதுடித்துக் கூக்குரலிட்டன. அவற்றின் காரணமென்ன என்று காண அவள் சுற்று முற்றும் பார்த்தாள். உடனே செய்தி விளங்கிற்று. ஒரு கொடிய கருநாகம் கூட்டை நோக்கி ஏறிக் கொண்டிருந்தது. இளவரசி சட்டென வாளை உருவினாள். பாம்பைத் துண்டு துண்டாக வெட்டினாள்.
பறவைக் குஞ்சுகளின் பதறல் கலகலப்பு இப்போது இன்பக் கலகலப் பாயிற்று. அவள், ஆணுடையிலிருந்ததால், அவை அவளை ஆணென்றே கருதியிருந்தன. “அண்ணா, தாங்கள் செய்த உதவிக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்வோம்? ஆயினும், எங்கள் தாய் தந்தையர் வரும் நேரமாயிற்று. உங்கள் செயலை அவர்கள் விளக்கமாக அறியும்வரை அவர்கள் உங்களைத் தவறாக எண்ணக் கூடும். எங்களைக் கொல்ல வந்த வேடர் என்று வீணாகத் தாக்கிவிடக்கூடும். ஆகவே, சற்று மறைவில் இருங்கள். அவர்களிடம் நாங்கள் பேசியபின் அழைக்கிறோம்” என்று குஞ்சுகள் கூறின.
இளவரசி அப்படியே மறைந்திருந்தாள். நேமிப் பறவைகள் வந்ததும் வழக்கம்போல் வெறுங்கூட்டைப் பார்க்காமல், குஞ்சுகளின் கலகலப்பைக் கண்டு அகமகிழ்வுற்றன. குஞ்சுகளும் கொஞ்சிக் குலவின. தமக்கு நேரவிருந்த இன்னலையும் பிழைத்த வகையையும் அவை எடுத்துரைத்தன. இளவரசியைக் காண நேமிப் பறவைகள் அவாக் கொண்டன.
இளவரசி வெளியே வந்தாள்; பறவைகள் அவளுக்கு உலகின் மறுகோடியிலுள்ள அமுதக் கனிகள் அளித்தன; அத்துடன் தம் தெய்வப் பார்வை மூலம் அவளைப் பெண்ணென்று கண்டு கொண்டன. “அம்மணி, உங்களுக்கு நாங்கள் எத்தகைய உதவியும் செய்வோம். உங்கள் குறை எதுவானாலும் கூறுக” என்றன.
இளவரசி தன்னை மணக்க இருந்த மணாளனுக்கு நேர்ந்த இடரையும், அதனால், தான் அடையும் துயரையும் விரித்துரைத்தாள். நேமிப்புள் இரங்கிற்று.
“அழகிளஞ் செல்வியே! இஃது ஒரு பெரிய காரியமன்று; இளவரசனுக்கு நோய் ஒன்றுமில்லை; அவன் படுக்கையில் யாரோ கண்ணாடித் தூள்களைத் தூவியிருக்கிறார்கள்! அது மயிர்க்கால்தோறும் துளைத்து வருத்துகிறது. அதற்கான மருந்து எங்கள் எச்சம் தான். நீ இரவு தோறும் அதைத் திரட்டி வைத்துக்கொள். உன்னை நாங்களே விரைவில் இளவரசன் நாட்டுக்குக் கொண்டு செல்கிறோம். அதன்பின் ஈரேழு குடம் பால், ஈரேழுகுடம் பன்னீர், ஈரேழு குடம் நன்னீர் தருவியுங்கள். ஏழுகுடம் பால், ஏழுகுடம் பன்னீர், ஏழுகுடம் நன்னீரில் இளவரசனைக் குளிப்பாட்டுங்கள். பின், அவர் உடலுக்கு எங்கள் எச்சத்தை ஓர் இரவு தடவி வெறுங் கட்டிலில் படுக்க வையுங்கள். மறுநாள் மீந்த ஏழுகுடம் பால், ஏழுகுடம் பன்னீர், ஏழுகுடம் நன்னீரில் குளிக்கட்டும். நோவு இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அத்துடன் உடம்பும் மாறா நீள் இளமைப் பொலிவு அடையும். ஏற்கனெவே நாங்கள், எங்களின் அமுத உணவு அளித்திருக்கிறோம். ஆகவே, நீயும் மாறா நீள் இளமை பெற்றிருக்கிறாய். இருவரும் மகிழ்ந்து வாழ்வீர்களாக” என்று நேமிப்புள் கூறிற்று.
செங்கழுநீர் அவ்வண்ணமே செய்தாள். மூன்று இரவுகளில் அவள் அவற்றின் எச்சத்தைத் திரட்டிப் பெருமூட்டைகளாகக் கட்டினாள். பறவைகளில் ஒன்றின் முதுகில் மூட்டைகளைச் சேணம்போலக் கூட்டினாள். மற்றொன்றில் தான் ஏறி அமர்ந்தாள். இரு நொடியில் பறவைகள் அவளை மாபப்பலாம் நாட்டின் தலைநகரில் கொண்டு சேர்த்தன.
செங்கழுநீர் ஒரு மருத்துவர் வேடத்துடன் அரண்மனை சென்றாள். இளவரசன் அச்சமயம் கிட்டத்தட்டச் சாகும் நிலையிலேயே இருந்தான். ஆனால், செங்கழுநீர் அந்நொடியிலேயே ஈரேழு குடம் பால், ஈரேழு குடம் பன்னீர், ஈரேழு குடம் நன்னீர் தருவித்தாள். ஓரேழில் அவனை முழுக்காட்டினாள். வெறும் படுக்கையில் கிடத்தி இரவு முழுவதும் காவலிருந்தாள்.
இளவரசன் நோவால் உருண்டு புரண்டு துடித்தான். அவள் மனம் கவலைப்பட்டுக் கலங்கிற்று. ஆனால் கண்ணாடித் துகள் சென்ற இடமெல்லாம் எச்சம் உள் சென்றது. அது கண்ணாடித்துகளைக் கரைத்து அமுதமாக்கிற்று. காலையில் அவன் நோவகன்று எழுந்தான். செங்கழுநீரைக் கண்டு அடையாளம் அறியாமல் அவன் மிரண்டான். ஆனால், செங்கழுநீர் அவனை மீட்டும் படுக்க வைத்தாள். “நோய் முற்றும் முடியவில்லை. இளவரசே! இன்னும் சற்றுப் பொறுத்திருங்கள்” என்றாள். மீட்டும் ஏழுகுடம் பால், ஏழுகுடம் பன்னீர், ஏழுகுடம் நன்னீர் ஆகியவற்றில் அவள் அவனை நீராட்டினாள். அவன் அதன்பின் ஒரு பகலும் இரவும் நற்படுக்கையில் துயின்று முழுநலம் பெற்றான்.
செல்வி இளவரசனுக்குத் தான் யார் என்பதைக் கூறவில்லை. கூறாமலே மெல்லமெல்லச் செல்வி இளவரசனுக்கு அவன் நோவு கொண்ட வகையை விளக்கினாள்.
இளவரசனுக்குச் செங்கழுநீர் பற்றிய கவலை மீண்டும் எழுந்தது. அவள் தமக்கையர் மீது சினமும் எழுந்தது. செங்கழுநீர் முன்னிற்பதை, அவன் அறியவில்லை. அவளைத் தேடப் புறப்பட்டான். அதன்பின்னரே செங்கழுநீர், தான் பயார் என்பதை வெளியிட்டாள்.
அவன் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவள், அவனைத் தேடியலைந்த கதை, அருமருந்து கண்ட கதை கேட்டு, அவன் உள்ளம் பாகாய் உருகிற்று.
இளவரசனைச் செங்கழுநீர் முறைப்படி மணந்து கொண்டாள். விரைவில் அவளும் இளவரசனும் மாபப்பாலம் நாட்டு அரசு கட்டிலேறினர். தாய்தந்தையரை அவர்கள் வரவழைத்துச் சிறப்புச் செய்தனர். ஆனால், செங்கழுநீர் வேண்டுகோளின்படி, இளவரசன், அவர்களுக்கு அவள் தமக்கையர் செய்த கொடுமை பற்றி எதுவும் கூறவில்லை. அவர்களுக்குச் சிறந்த பரிசுகளை அனுப்பிக் கொடுத்தான். அஃது அவர்கள் உள்ளத்தைச் சுட்டது. அவர்கள் தாமாக உண்மையை உரைத்துத் தாய் தந்தையரிடம் மன்றாடி மன்னிப்புக் கோரினர்.
செம்மேனி, மெய்ம்மை பொய்ம்மைகளின் தலைமாறிய போக்குக் கண்டு, அதன் மாயைக்குக் காரணமான தன் செல்வ வாழ்வையே வெறுத்தான். செங்கழுநீருக்கு வாழ்வளித்த மரம், குளம், மாளிகை ஆகியவற்றை ஒரு கோயிலாகவும், அறச்சாலையாகவும் மாற்றி, அங்கே அறத் தொண்டாற்றி நாட்கழித்தான்.
"இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு" (குறள்.98)
பாண்மரம்
சேர சோழ பாண்டியர்கள் நெடுங்காலம் தமிழகத்தை ஆண்டார்கள். சிற்றரசர்களான வேளிர்கள் அவர்களுடன் போட்டியிட்டுத் தமிழை வளர்த்தார்கள். ஆனால், திடீரென இந்நிலை மாறிற்று. களப்பிரர் என்ற கல்லாமாக்கள் எங்கும் பரந்தனர். மூவரசுகள் அழிந்தன. வேளிர் நிலை குலைந்தனர். தமிழ்ப்புலவர் தட்டுக்கெட்டனர். பாணரும், விறலியரும் வாட்டமடைந்தனர். சில நாட்களுக்குள் இவ் இருவகையினரும் அருகிப் போயினர்.
பாணருள் கிட்டத்தட்டக் கடைசிப் பாணனாக வாழ்ந்தவன் பழனக் கிழான். அவன் பாடிப் பிழைப்பதைக் கைவிட்டான். பாடுபட்டுப் பிழைக்கவும் பழகவில்லை. ஆயினும், அவனிருந்த பண்ணையின் தலைவன் பழங்குடிப் பெருமையை எண்ணி, அவனுக்கு ஆதரவு செய்தான். இடையே பண்ணை கைமாறிற்று. புதிய தலைவனைச் சென்று காணும்படியும், பரிசு பெற்று வரும்படியும் பாணன் மனைவி பூவணி அவனை வற்புறுத் தினாள். ஓர் எலுமிச்சம் பழத்துடன் அவன் புறப்பட்டான்.
புதிய தலைவன் புதுமரபைச் சேர்ந்தவன். அவன் எலுமிச்சம் பழத்தை வாங்கிக் கொண்டான். “இன்னொரு சமயம் வா” என்று அனுப்பிவிட்டான். பழனக்கிழான் அடிக்கடி சென்று பார்த்தான். பழைய மரபை எண்ணி அரைகுறையான பாடல்கள்கூடக் கட்டிக் கொண்டு போனான். ஆனால், புதிய தலைவன் பாடுபடுபவருக்குக் கூலியைக் குறைத்துக் கொடுக்க எண்ணியவன். “பாட்டில் காலமெல்லாம் போயிற்று. வேறு தொழில்பார்” என்று அவன் அழுத்தமாகக் கூறி அனுப்பி விட்டான்.
பழனக்கிழானுக்கும் பூவணிக்கும் வறுமை, தன் கோர உருவைக் காட்டத் தொடங்கிற்று.
புதிய தலைவன் இச்சமயம் ஒரு புதிய மாளிகை கட்டத் திட்டமிட்டான். அவன் பேய் பூதங்களில் நம்பிக்கையற்றவன். ஆனால், அவன் புதிய மாளிகைகட்ட எண்ணிய தோட்ட வெளியில் வேலையாட்கள் கால்வைக்க மறுத்தனர். குறிப்பாக, அத் தோட்டத்து நடுவேயுள்ள புங்க மரத்தில் எண்ணற்ற பேய்கள் தங்கியிருந்தன. மக்கள் அதனருகே மாலை நேரத்தில் போக அஞ்சினார்கள். அறியாமல் அத்திசை சென்றவர்களின் தலைகள் காலையில் மரத்தடியில் திருகப்பட்டுக் கிடந்தன.
மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு அச்சம் ஒரு பெரிய பகைப்பண்பு என்று தலைவன் கருதினான். அதை வெல்லும் பண்பு ஆசை ஒன்றுதான் எனவும் அவன் முடிவு கட்டினான். பண ஆசையைத் தூண்டி, பேய் அச்சத்தை ஒழிக்க அவன் திட்டமிட்டான். “இரவுக்காலத்தில் புங்க மரத்தடி சென்று அதன் கொப்பு ஒன்றை முறித்துக் கொண்டு வருபவர்களுக்கு, ஆறு வேலி வரியிலி நிலம் தருவேன்” என்று அவன் பறைசாற்றுவித்தான்.
பண ஆசைகூட மக்கள் அச்சத்தை அசைக்கவில்லை. “பணம் வருகிறது என்று போய் என்ன பயன்? அதை நுகர ஆள் திரும்பி வந்தால்தானே!” என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள். தலைவன் விளம்பரம் சிலநாள் முற்றிலும் பயனற்றதாகவே இருந்தது.
சா வச்சத்தைப் பண ஆசை வெல்லவில்லை; ஆனால், வறுமை அதை வென்றது. “பட்டினி கிடந்து சாவதைவிட, பேய் கொன்று சாவது மோசமல்ல; ஆறுவேலி ஆசையோ சாவுக்குக்கூட இனிமை ஊட்டத் தக்கதே” என்று பழனக் கிழான் எண்ணினான். அவன் தலைவனிடம் சென்றான்.
“என் வறுமை தீர்க்க, புங்கமரத்தின் பக்கம் இன்றிரவு செல்கிறேன். அதன் கிளையை முறித்துக் கொண்டு வருகிறேன். பேயிடமிருந்து தப்பி வந்தால், விளம்பரப்படுத்தியபடி ஆறுவேலி தருவது உறுதி தானே!” என்றான்.
“ஆகா, நல்ல நிலமாக நீயே பொதுநிலத்தில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்” என்றான் தலைவன்.
ஒட்டிய வயிற்றைப் பழனக்கிழான்மேலும் ஒட்ட இறுக்கிக் கொண்டான். மாலை கழிந்ததும் தோட்ட வெளியை அணுகினான். எல்லா மரத்தடிகளிலுமே பேய் போன்ற வடிவங்கள் தெரிந்தன. புங்கமரத்தடியிலே வடிவங்கள் இன்னும் மிகுதியாயிருந்தன. மேலும், அவை அப்போதே ஊளையிடவும், அலறவும் தொடங்கியிருந்தன. அவன் கைகால்கள் அவனை அறியாமல் நடுங்கின. பற்கள் நெறுநெறென்று ஆட்டங் கண்டன. ஆயினும் ஆறுவேலி ஆசை அவனைப் பிடித்து உந்திற்று.
புங்கமரத்திலிருந்து கூப்பிடு தொலைவில் பூவரச மரம் ஒன்று இருந்தது. அதனருகே செல்வதற்குள், பாணன் உடலின் ஒவ்வோர் உறுப்பும் ஒவ்வொரு தாளத்தில் ஆடத் தொடங்கிற்று; அவனால், ஒரு காலடிகூட எடுத்து வைக்க முடியவில்லை; அந்த மரத்துடன் மரமாகச் சாய்ந்து அதையே பற்றிக் கொண்டு நெடுநேரம் நின்றான்.
“பால் சான்ற புலவனே, ஏன் இந்த நடுக்கம்?” என்று ஒரு குரல் அவன் செவியில் பட்டது.
அவன் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். யாரும் தென்படவில்லை. பேசியது மரத்தின் மேல் தலைகீழாகத் தொங்கிய ஒரு பேய்தான். அதைக் கண்டதும் அவன் அச்சம் பன்மடங்கு பெருக்க மடைந்தது. அவன் வாய் அவனை அறியாமல் குளறிற்று.
பேய் அவனை இரக்கத்துடன் பார்த்தது. “பாணனே! என்னைக் கண்டு அஞ்சாதே. நான் பேயானாலும் அரசப் பேய். பாணர்களுக்கு வாரிக் கொடுத்தவன்தான் நான். என் பெயர் நன்னன். ஆனால், நான் பாணர் பழிக்கும் செயல் செய்து விட்டேன். அதனால்தான் பேயாயிருக்கிறேன். நான் உனக்கு என்னாலான உதவி செய்கிறேன். அஞ்சாமல் வந்த காரியத்தைக் கூறு” என்றது.
அவன் நடுக்கம் ஒரு சிறிதே குறைந்தது. “நான் பாடலைக் கைவிட்டு வாழ்கிறேன். பாடினாலும் கொடுப்பார் தமிழ்நாட்டில் இல்லாமல் போய் விட்டனர். வறுமையால் வாடுகிறேன். ஏழுநாள் நான் பட்டினி. பதினாலுநாள் என் மனைவி பட்டினி. இந்நிலையிலும் தலைவன் என்னையோ, என் பாட்டையோ பொருட்படுத்தவில்லை. ஆனால், அந்தப் புங்கமரத்தில் இரவில் யாராவது ஒரு கிளை ஒடித்துக் கொண்டுவந்தால், ஆறுவேலி நிலம் தருவதாகக் கூறுகிறான்; அந்த ஆசையால், உயிரை வெறுத்து வந்தேன்; ஆனால், அச்சம் சாகாமலே என்னைச் சாகடிக்கிறது” என்றான்.
அரசப்பேய் அவன் முன் ஒரு கனியை நீட்டிற்று; “இஃது அரசன் அரண்மனையிலுள்ள மாங்கனி; முதலில் இதைத் தின்று பசியாறு. நீ எங்கும் போக வேண்டாம்; எதற்கும் அஞ்ச வேண்டாம். நானே உனக்கு வேண்டிய கிளை முறித்துத் தருகிறேன். அந்தப் புங்கமரத்துப் பேய்கள் கொடாதவர்களைப் பாடிய பாணர்களின் பேய்கள்தாம். அவை நான்சொன்னபடி கேட்கும்” என்றது.
பழனக்கிழான் மாங்கனியை மெல்லக் கை ஏந்தி வாங்கினான். அதைத் தின்றதே அவன் உடலில் தெம்பு வந்தது. பசிமட்டுமல்ல, அச்சமும் பெரிதளவு அகன்றது.
அரசப்பேய் புங்கமரத்தை நோக்கிச் சென்றது. கீச்சுக் குரலிலே, “மன்னன் வாழ்க, எம் தலைவன் வாழ்க!” என்ற கூச்சல்கள் காதைத் துளைத்தன. பாணப் பேய்கள் அரசப் பேயைச் சூழ்ந்து நின்று ஆடின.
“பேய்த் தோழர்களே! என் பழியையும் உங்கள் பழியையும் பேயுருவிலேயே நீக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதோ என் மரத்தடியில் நிற்பவன் ஒரு பழைய பாணர் குடியான்; வறுமையால் அவன் வாடுகிறான். பாணர் காலம் உலகில் ஓய்ந்து போய்விட்டது என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பாடலுக்குக் கொடை தராத ஒரு செல்வன், இந்தப் புங்கமரத்தின் கிளை ஒன்றுக்கு ஆறுவேலி நிலம் கொடுக்க விரும்புகிறானாம்! ஆனால், நாம் உலவும் இராப்போதிலேயே அதை முறித்துக் கொண்டு வரவேண்டுமாம்! பாணன் இதற்காக உயிரை வெறுத்து நம்மிடம் வந்திருக்கிறான். அவனுக்குத் தீங்கு செய்வதால் நம் பேய் உருவம் இன்னும் நீடிக்கும். உதவினாலோ கூடிய விரைவில், நாம் இந்தப் பழி சூழும் வடிவத்தை விட்டு நீங்குவோம். என்ன சொல்கிறீர்கள்?” என்று அரசப் பேய் பேசிற்று.
"எங்கள் அரசன் சொல்கிறபடியே செய்வோம். என்ன செய்ய வேண்டும்? என்று பேய்கள் கேட்டன.
“தற்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒரு சிறு காரியம்தான். அவனிடம் கொடுக்கும்படி என்னிடம், இம்மரத்தின் ஒரு பச்சைக்கிளையை முறித்துத் தாருங்கள்” என்றது அரசப் பேய்.
இஃது எளிதில் முடிந்தது. ஒரு செழுங்கிளையுடன் அரசப் பேய் பூவரசமரத்தை அணுகிற்று. பாணன் பழனக்கிழான் கையில் அதைக் கொடுத்தது.
பாணன், அரசப் பேய்க்குப் பன்முறை வணக்கம் தெரிவித்தான். “பேய் வடிவில் உள்ள உன் வள்ளன்மையில் ஒரு சிறு கூறு இந்தப் பேய் மனிதரிடம் இல்லையே! உன் புகழ் வானுலகு மட்டும் ஓங்குக!” என்று வாயாரப் புகழ்ந்து வாழ்த்தினான். வாழ்த்திய வண்ணம் அகமகிழ்ச்சியுடன் வீடு சென்றான்.
புங்கமரத்தை நாடிச் சென்றபோது, அவன் மனைவியிடம் சொல்லிச் செல்லவில்லை. அவன் போனபின்பே, பூவணிக்குச் செய்தி தெரியவந்தது. வறுமையானாலும் கணவனை இழக்க எந்தத் தமிழ் நங்கைதான் ஒருப்படுவாள்! “ஐயோ, வறுமை போதாதென்று, இந்தக் கண்ணராவிக் கோலமும் வேண்டுமோ?” என்று அவள் அழுதாள்.
இரவிலேயே கணவன் வந்தது கண்டு அவள் மகிழ்ந்தாள். கையிலுள்ள கிளையைக் கண்டதும் புரியாமல் விழித்தாள். பாணன் மனமகிழ்ச்சியுடன் நடந்த செய்திகளைக் கூறினான். தன் வறுமை ஒழிந்தது என்று கூறி அவளையும் தேற்றினான்.
மறுநாள் பாணன் உயிருடன் வருவது கண்டே, தலைவன் வியப்படைந்தான். பச்சைக்கிளையை கண்ட போது, அவன் தன் கண்களை நம்பமுடியவில்லை. அவன் தன் பணியாட்களுடன் புங்கமரம் சென்று பார்த்தான். கிளை அந்த மரத்தின் கிளைதான். முந்திய இரவு ஒடித்ததுதான் என்பது அவனுக்கு விளங்கிற்று. அவன் வாக்குறுதி செய்திருந்தபடியே, ஆறுவேலி நிலத்தைப் பழனக் கிழானுக்குக் கொடுத்தான். அது பயிராகும் வரை, முதலாண்டு வாழ்க்கைக்கான ஒரு சிறு தொகையும் அளித்தான்.
அரசப் பேய் பழனக்கிழானுக்கு நேரிடையாகச் செய்த உதவியுடன் அமையவில்லை. சோம்பேறியான பாணன் வயலுக்கு ஒழுங்காக நீர் பாய்ச்சவில்லை; உரம் போடவில்லை; அரசப் பேயே புங்கமரத்துப் பேய்களின் உதவியுடன் எல்லாம் செய்தது. பாணன் உழையாதிருந்தும் வயல் செழித்துக் கொழித்து வளர்ந்தது. அது கண்டு ஊரார் வியப்படைந்தார்கள்.
பாணன் இப்போது பெயரளவில் பெருஞ்செல்வனாகவே இருந்தான். ஆனால், அவன் நிலங்கள் இன்னும் ஊதியம் தரவில்லை. அரசன் கொடுத்த முன்பணம் அவன் பிழைப்புக்கே பற்றவில்லை. வேறு வேலை செய்யாததால், வீட்டு வறுமை முன் இருந்தபடியே கிட்டத்தட்ட நீடித்தது.
முதல் அறுவடையுடன் வறுமை தீர்ந்துவிடும் என்ற எண்ணத்தோடு அவன் நாட்கழித்தான். ஆனால், அறுவடையில் அவனுக்கு ஒரு புதிய இக்கட்டுத் தோற்றிற்று. அதற்காக வேலையாட்கள் தேவைப்பட்டனர். வேலைக்கு அவன் ஆட்களை அழைத்தான். அவர்கள் “பணம் கொடு” என்றனர். “என்னிடம் இப்போது ஏது பணம்? எனக்கு இது முதலாண்டு! ஆனாலும், அறுவடை நல்ல அறுவடை என்றே தோற்றுகிறது. அறுத்தவுடன் உங்கள் பங்குக்கு நெல் தந்து விடுகிறேன்” என்றான்.
எல்லா நிலக்கிழாரும் பொன்னே கொடுத்தார்கள். அதுவும் முன்கூட்டிக் கொடுத்தார்கள். ஆகவே, கூலிக்கு நெல்லைக் கடனாக வாங்க யாரும் மறுத்தார்கள். பழனக் கிழான் மீண்டும் விழித்தான்.
அவனுக்கு உலகத்தில் ஒரே ஒரு நண்பன்தான் இருந்தான். அதுவே பேய் உலக நண்பனான அரசப் பேய். அவன் முன்னிரவில் அதை அணுகினான். தன் இக்கட்டைத் தெரிவித்தான். அரசப் பேயின் கனிந்த உள்ளம் அது கேட்கத் தாளவில்லை. அஃது இப்போதும் உதவ முன் வந்தது.
“அன்புமிக்க பாணனே, என் உதவியை நீ இதில் எதிர்பார்க்கலாம். நீ போய், வேலிக்கு நூறு அரிவாள் கொண்டு போய் நாளை மாலை வை, மற்றக் காரியம் நான் பார்க்கிறேன்” என்றது அது.
பாணன் அவ்வாறே செய்தான். அரசப் பேய், புங்கமரத்துப் பேய்களை அழைத்தது. “தோழர்களே, பாணனுக்கு நாம் செய்த உதவியால், நம் பேய் உடல் மறைந்து வருகிறது. இன்னும் ஒரே ஓர் உதவிதான் செய்யவேண்டும். அதன்பின் பேய் உலகிலிருந்தே எனக்கும் உங்களுக்கும் விடுதலை கிடைக்கும். ஆகவே புறப்படுங்கள். பாணன் ஆறு வேலியிலும் ஆறு நூறு அரிவாள்கள் இருக்கின்றன. ஆளுக்கு ஒன்றாக எடுத்து, ஓர் இரவுக்குள்ளே, ஆறு வேலி நிலத்தையும் அறுவடை செய்து முடியுங்கள். வைக்கோலை ஒருபுறம் போர் போராகக் கட்டுங்கள். நெல்லை ஒருபுறம் அம்பாரம் அம்பாரமாகக் குவியுங்கள்” என்றது.
ஒரே இரவில் பேய்கள் யாரும் வியக்கத்தக்க வண்ணம் இத்தனையும் செய்தன. பாணன் பத்தாயத்தில் நெல் பொங்கி வழிந்தது. அதன் வெளியேயும் அப்hரங்கள் கிடந்தன. அவன் களமுழுவதும் வைக்கோல் போர்கள் நிறைந்தன.
இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு பாணனும் அவன் மனைவியும் கூத்தாடினர். வேலையாட்கள் இல்லாமல் எப்படி அவன் நெல்லும் வைக்கோலும் களம் சேர்ந்தனவென்று பண்ணை ஆட்களும், தலைவரும் வியந்தனர். அவனுக்குத் தனித் தெய்வ உதவி இருக்க வேண்டும் என்று கருதினர். அவனை அதுமுதல் பயபக்தியுடனே நடத்தினர்.
பாணன் பழனக்கிழான் செல்வமும் வாழ்வும் பெருகிற்று. பூவணி பொன்னணியாகத் திகழ்ந்தாள். ஆனால், அந்த மகிழ்விடையேகூட, பாணனுக்கு அரசப் பேய் நினைவு மாறவில்லை. அதற்குத் தனி நன்றியும் வணக்கப் பரிசும் கொண்டு, உணவுடன் அவன் பூவரச மரத்தை அணுகினான். அங்கே அவன் மனைவியும் வந்தாள், இருவரும் காத்து நின்றனர். ஆனால், பேயையே காணவில்லை. அவர்கள்முன் ஒரு கிழிகிடந்தது. அதில் ஓர் ஓலை நறுக்கு இருந்தது. பாணன் அதை எடுத்து வைத்துக் கொண்டான்.
அவர்கள் புங்கமரத்தை அணுகினர். அங்கும் ஒரு பேயின் அரவத்தைக் கூடக் காணவில்லை. ஆனால், இங்கும் நூற்றுக்கணக்கான கிழிகள் கிடந்தன. பூவணி அவற்றைத் திரட்டி எடுத்துக் கொண்டாள்.
வீட்டுக்கு வந்து அவர்கள் கிழிகளைப் பிரித்துப் பார்த்தனர். அரசப் பேயின் கிழி அத்தனையும் நவமணிகளாயிருந்தன. மற்றப் பேய்களின் கிழிகளில் பொன்னும் வெள்ளியும் இருந்தன. அரசப்பேயின் கிழி மீதுள்ள ஓலை நறுக்கை அவன் எடுத்துப் பார்த்தான். “பழங்குடி நண்பனே! பாணனே! நீ இனி யாரையும் அண்டி அவதியுற வேண்டாம்; யாரையும் பாட வேண்டாம். பேய்கள் குடியிருந்த மரம் புங்க மரமல்ல. இனி பாண் மரம்; அதைப் பாடு; அதைப் பாதுகாக்க ஏற்பாடு செய்; உனக்கு ஏழு தலைமுறைக்கு வேண்டிய செல்வம் தந்திருக்கிறோம். அத்துடன் உனக்குச் செய்த உதவி எங்களுக்குச் செய்த உதவியே. அதன் நலங்களின் பயனாய், நான் இந்திரர்களுள் ஒருவனானேன். பாண்மரப் பேய்களே கந்தருவர், கின்னரர் ஆயினர். உனக்கு எங்கள் வாழ்த்துக்கள். நீயும் உன் மனைவி மக்களும் நீடூழி வாழ்க!” என்று நறுக்கில் எழுதி இருந்தது.
பாணனுக்கு அப்போது பிள்ளை இல்லை. ஆகவே நீயும் உன் மக்களும் என்ற சொற்றொடர் அவனுக்கு ஒரு புது வாழ்த்தாகவே தோன்றிற்று. அதை அவன் பூவணிக்குப் படித்துக் காட்டி மகிழ்ந்தான்.
இந்திரனாய்விட்ட அரசப்பேயின் வாக்குப் பொய்க்க வில்லை. அவர்களுக்கு ஆண் பெண் மகவுகள் பல பிறந்தன. அவர்கள் தலைவனை விடச் செல்வராயினர். தலைவனுக்குத் தோட்ட வெளியிலேயே வீடு கட்டியிருந்தனர். ஆனால், அதற்கீடாகப் பாண்மரத்துக்கும், அரச மரத்துக்கும் வேலிகட்டி அவற்றைத் தமிழ்க் கோயிலாக்கினர்.
இரு மரங்களையும் வாயார அவன் இரு கவிதை நூல்களால் பாடினான். ‘அரசமரக்கோவை’, ‘பாண்மரக் கோவை’ என அவை பெயரிடப்பட்டன. தமிழ் மீண்டும் தழைக்கத் தொடங்கிற்று. பேய்கள் இவ்வாறு மனிதனுக்கு உதவி செய்தனவெனின், அஃது அம்மனிதனின் நல்வினையேயாகும்.
அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிது யாதும்
இல்லை பெறுவான் தவம். (குறள்.842)
உயிர் மந்திரம்
கோனாடு என்ற வளமான நாட்டைக் கோடபதி என்று மன்னன் ஆண்டு வந்தான். அவன் முதல் மனைவி இறந்தபின், இரண்டாவது ஓர் அரசிளஞ் செல்வியை மணந்துகொண்டான். முதல் மனைவி மூலம் அவனுக்கு நிகரிலி என்ற புதல்வனும், இரண்டாம் மனைவி மூலம் ஆரணி என்ற புதல்வனும் இருந்தனர்.
நிகரிலி வேட்டையிலும், நாடு நாடாக உலகம் சுற்றுவதிலுமே பெரிதும் நாள்கழித்தான். அவனுடன் அமைச்சன் புதல்வன் வானவன், படைத் தலைவன் புதல்வன் வளவன், கோனாட்டின் பெரிய வணிகச் செல்வன் புதல்வன் செம்பியன் ஆகிய மூவரும் எப்போதும் ஊடாடினர். அவர்களுடனேயே அவன் எங்கும் அலைந்து திரிந்தான்.
நிகரிலியே மூத்த புதல்வனானாலும், புதிய அரசி தன் புதல்வனையே இளவரசனாகப் பட்டங்கட்ட விரும்பினாள். நிகரிலியின் நாடோடி வாழ்வை இதற்குரிய சாக்காகக் காட்டினாள். கோடபதி மற்றெல்லாச் செய்திகளிலும் பெரும்பாலும் அரசியின் விருப்பப்படியே நடந்து கொண்டான். ஆனால், நிகரிலி வகையில், மட்டும் தயங்கினான். ஆயினும் நிகரிலியே அரசி பக்கம் நின்று பேசினான். “எனக்கு நாடோடி வாழ்க்கைதான் பிடித்திருக்கிறது, அப்பா! அதற்கு வேண்டிய துணைவர்களும் இருக்கிறார்கள். எங்களுக்கு வழிச் செலவும், திரும்பி வந்தால் தங்கும் இடமும் அளித்தால் போதும். தம்பி ஆரணியே நாட்டுரிமை பெறட்டும்” என்றான்.
மனைவி விருப்பத்துடன் மகன் கருத்தும் ஒத்திருந்ததால், அரசன் இணங்கினான். ஆரணிக்கு இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. நிகரிலி விழாவில் உடனிருந்து மகிழ்ந்து வாழ்த்துரை கூறினான். அதன்பின் தந்தை, அரசி, தம்பி ஆகியவரிடமும் உற்றாரிடமும் பிரியா விடை பெற்று, நாடு கடந்து உலாப் புறப்பட்டான். நண்பர் மூவரும் அவனுடனே சென்றார்கள்.
தொண்டித் துறைமுகத்திலே அவர்கள் கப்பலேறினர். பல தீவுகளையும் நாடுகளையும், மலைகளையும் காடுகளையும் கடந்து அவர்கள் மேலும்மேலும் சென்றார்கள். இறுதியில் அவர்கள் கன்னிப்போத்தம் என்னும் நாட்டில் எங்கும் காணாத ஒரு காட்சி காண நேர்ந்தது. அஃது அவர்கள் வாழ்க்கையையே மாற்றத்தக்க நிகழ்ச்சியாயிருந்தது.
கன்னிப்போத்த நாட்டின் காடுகள் மிகவும் அடர்த்தியாய் இருந்தன. அவர்கள் குதிரைகள் அவற்றைத் துளைத்துக் கொண்டு செல்ல முடியவில்லை. அரும்பாடுபட்டு, அதில் அவர்கள் தாமே காடுவெட்டி வழியமைத்துக்கொண்டு மெல்லமெல்ல முன்னேறினார்கள்.
ஒருநாள் திடீரென்று காட்டில் அடர்த்தி குறைந்தது. காட்டெல்லையை அவர்கள் எட்டிப் பிடிக்கவில்லை. காட்டின் நடுவில் உள்ள ஓர் அகல்வெளிதான் அவர்கள்முன் காட்சி யளித்தது. அதன் நடுவே ஒரு பாழடைந்த காளிகோயில் இருந்தது?
பாழடைந்த நிலையிலும் அதன் மதில்களும் மண்டபங்களும் பாரித்த கட்டுமானத்தின் சின்னங்களாயிருந்தன. நடுக்கட்டுக் கிட்டத்தட்ட அழியாமல் இருந்தது. ஆனால், அது பூட்டப்பட்டுக் கிடந்தது.
தோழர்கள் குதிரைகளைப் புறவாரங்களில் கட்டினார்கள். நடுக்காட்டைச் சூழ்ந்த மேடைகளின்மீது அவர்கள் ஏறிய மர்ந்தார்கள். குதிரைகளுக்குத் துனியிட்டுத் தாமும் உண்டபின், அவர்கள் அம் மேடையிலேயே இராத் தங்க முடிவு செய்தார்கள்.
நால்வருக்குமே களைப்பு மிகுதியாயிருந்தது. யாவருமே உறங்கத்தான் விரும்பினர். ஆனால், அவர்கள் இருந்த இடங்கூடப் பாதுகாப்பான தாய் இல்லை. அத்துடன் அவர்கள் கண் மூடினால் குதிரைகள் காட்டு விலங்குகளுக்கு இரையாகக் கூடும். ஆகவே, அவர்களில் மூவர் தூங்குவது என்றும், யாமத்துக்கு ஒருவர் விழித்துக் காவலிருப்பது என்றும் திட்டம் செய்து கொண்டனர்.
மேடையிலிருந்து கோயிலின் உட்புறம் நன்கு தெரிந்தது. ஏனென்றால், மேல்மாடம் பலவிடங்களிலும் இடிந்து கிடந்தது. உள்ளே காளியுருவின் முன்னிலையில் ஒரு சித்தர் உருவம் அறிதுயிலில் இருந்தது. அவர் உடல் எலும்பாகத்தான் இருந்தது. ஆனால், இரும்புக் கம்பிகள் போலவும் பாம்புகள் போலவும் அவர் நாடி நரம்புகள் அந்த எலும்பைச் சுற்றிப் பின்னிக் கிடந்தன. மனிதத் தன்மை கடந்த அவர் வலுவை அவை சுட்டிக்காட்டின. அவர் எவ்வளவு நேரம் அறிதுயில் நிலையில் இருந்து வருகிறார் என்று கூற முடியவில்லை. ஆனால், அவர் உடலின் தூய்மையி லிருந்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது சில தடவையாவது அவர் அறிதுயில் கலையுமென்றே தோன்றிற்று.
முதல் யாமத்தில் வணிகன் மகன் செம்பியன் காவலிருந்தான். மற்றவர்கள் தூங்கினார்கள்.
உறக்கம் வராமலிருப்பதற்காக அவன் ஒன்றிலிருந்து நூறு, ஆயிரம் வரை எண்ண முயன்றான். கணக்குகள் போட்டுப் பார்த்தான். கண்கள் இறுகுவதை இவை நிறுத்தவில்லை. அவன் சுற்றியுள்ள காட்சிகளில் கருத்துச் செலுத்தினான். சித்தர் அறிதுயில் நிலை அவன் கண்களைக் கவர்ந்தது. அதையே அவன் கூர்ந்து கவனித்தான். அவர்முன் கவர்க்கோல்போல ஏதோ ஒன்று கிடந்தது. அவன் அதை ஊன்றிக் கவனித்தான். அஃது ஓர் எலும்பு. அது யாரோ ஒரு மனிதனின் எலும்பாகவோ அல்லது ஏதோ ஒரு விலங்கின் எலும்பாகவோ இருக்க வேண்டும் என்று அவன் மதித்தான்.
“அஃது ஏன் அவர்முன் கிடக்கவேண்டும்? அஃது அவருக்கு எவ்வாறு பயன்படக்கூடும்? அஃது அவர் தின்னும் உணவின் எச்சமிச்சமாய் இருக்கக் கூடுமோ?” என்று அவன் பலவாறு சிந்தித்தான்.
அவன் சிந்தனைக்கு முடிவு காணவில்லை. ஆனால், அச் சிந்தனை அவன் உறக்கத்தைத் தடுத்து, நேரத்தைப் போக்க மிகவும் உதவியிருக்க வேண்டும். ஏனென்றால், அவன் யாமத்தின் முடிவு நெருங்கிவிட்டது. யாமத்துக்கு அடையாளமாக, அவர்கள் குறித்து வைத்திருந்த விண்மீன் கிட்டத்தட்டக் கால்வட்டத்தை அணுகி வந்தது.
அச்சமயம் திடுமென நாடகக் காட்சி நாடகமாயிற்று. கண்மூடியிருந்த சித்தர் கண்ணைத் திறந்தார்; ஒரு கையை ஓங்கினார்; ஒரு கையை ஏதோ ஒரு முத்திரை வடிவில் கூப்பி விரித்தார்; தடதடவென ஏதோ முனகினார். நிலத்தில் கிடந்த எலும்பு திடீரென்று உயிர் பெற்றதுபோலக் கடகடவென்று ஆடிற்று.
கோயிலின் நாலு மதில்களுக்கும் அப்பாலிருந்து, அதே அரவம் ஒலி எதிரொலியாக, அலை எதிரலையாகக் கேட்டது. தூர அரவம், அண்டை அரவமாக வளர்ந்தது. இறுதியில் அது காதடைக்கும் பேரொலியாயிற்று.
செம்பியன் நாற்புறமும் பார்த்தான். காட்டின் நாலா திசையிலிருந்தும் எலும்புகள் கோயிலை நோக்கித் துடிதுடித்து வந்து கொண்டிருந்தன. கதவிடுக்குகள் வழியாகச் சில உள்ளே பாய்ந்தன. சுவர் தாண்டி இடிந்த மேடை வழியாகச் சில தாவிச் சென்றன. சில சுவரில் புழை தேடிச் சுழன்று வந்து புகுந்தன.
எல்லா எலும்புகளும் முதலெலும்பின் அருகிலேயே வந்து கிடந்தன. எலும்புகளின் ஒரு குப்பை மேடாகச் சித்தர் காலடியில் அவை அமைந்தன.
செம்பியன் கண்களும் காதும் இரவின் அமைதியைத் துளைத்து, யாவும் தெளிவாகக் கண்டன. அடுத்து என்ன நடக்கும் என்று காணும் ஆர்வம் அவன் நாடி நரம்புகளையெல்லாம் முழுதும் விழிப்பூட்டின. அவன் மேலும் இமைகொட்டாது பார்த்தான்.
ஆனால், ஒன்றும் நிகழவில்லை. சித்தர் மீண்டும் அறிதுயிலில் ஆழ்ந்தார்.
அவன் யாம எல்லையும் வந்துவிட்டது. தூக்கத்தைக் கெடுத்து மேலும் இருக்க அவன் விரும்பினாலும், துணியவில்லை. திட்டத்தின்படி அவன் படைத்தலைவன் மகன் வளவனை எழுப்பி அமர்த்தி விட்டு உறக்கத்தில் ஆழ்ந்தான்.
கிட்டத்தட்டச் செம்பியன் காவலில் நடந்தபடியே, வளவன் காவலிலும் யாவும் நிகழ்ந்தன. யாமத்தின் பெரும்பகுதியும் கழிவது அவனுக்கும் பெருஞ் செயலாயிருந்தது. ஆனால், யாமம் இறுதியை அணுகுவதற்குள் அவன் கண்களைச் சித்தர் உருவம் ஈர்த்தது. அவர் முன் குப்பைமேடுபோல் கிடந்த குவியலை அவன் கூர்ந்து கவனித்தான். அஃது ஏதோ ஒரு விலங்கின் எலும்புக் குவியலாய்த்தான் இருக்க வேண்டும் என்று அவன் மதித்தான். “அஃது என்ன விலங்காயிருக்கக் கூடும்? சிறு விலங்காய் இருக்க முடியாது, பெரு விலங்காய்த்தான் இருக்க வேண்டும். ஆனால், அது மானா, ஒட்டகமா? மாடா, எருமையா? முள்ளம்பன்றியா, கரடியா?” இவ்வாறு அவன் சிந்தனை செய்தான்.
சிந்தனை எல்லை காணவில்லை. ஆனால், அது காலத்தின் எல்லைக்கு அவனைக் கொண்டு சென்றது. அந்த எல்லை வருமுன் அமைதி கலைந்தது. காட்சி விரைந்தது.
சித்தர் கண் திறந்தார். ஒரு கை உயர்த்தி ஒரு கைமுத்திரை காட்டினார். முணுமுணுக்கத் தொடங்கினார். எலும்புகள் யாவும் திடுமென உயிர்பெற்றவைபோல் துடித்தன. படைத் தலைவர் கட்டளை கேட்டு அணிவகுப்பில் இடம் பெறத் துடிக்கும் படைவீரர்கள்போல, அவை ஒன்றையொன்று இடித்துக் கொண்டு முந்தின. ஆனால், விரைவில் அவை ஒழுங்குபட ஒன்றன்மீது ஒன்று அடுக்கின. ஒரு திட்ட உருவமைய அடுக்கி இணைந்தன.
வளவன், தன் கண்களை நம்ப முடியவில்லை. குப்பை மேடாகக் கிடந்த எலும்புகள் ஒரே உருவாய்விட்டன. அஃது ஒரு புலி வடிவில் அமைந்தது; ஆம், அஃது ஒரு புலியின் எலும்பு கூடு.
அவன், மேலும் என்ன நடக்கும் என்று காணத் துடித்தான். ஆனால், எதுவும் நடக்கவில்லை. சித்தர் மீண்டும் அறிதுயிலில் அமர்ந்தார். நின்ற எலும்புக்கூடு நின்று கொண்டேயிருந்தது.
அதன்பின் யாம எல்லை வந்துவிட்டது. தூக்கத்தைக் கெடுத்து இருக்க அவன் ஆர்வம் அவனைத் தூண்டிற்று. ஆயினும் திட்டப்படி நடப்பதே தக்கது என்று அவன் துணிந்தான். அமைச்சன் மகன் வானவனை அவன் எழுப்பினான். அவனைக் காவலிருக்க வைத்துவிட்டுப்படுத்து உறங்கினான்.
வானவன் காவலும் பெரும்பகுதி இது போலவே கழிந்தது. ஆனால், சித்தர் உருவும், அவர் முன் நின்ற புலியின் எலும்புக்கூடும் விரைவில் அவன் கவனத்தை ஈர்த்தன. ‘முன் காவலிருந்த நண்பர்கள் இதைக் கவனித்தார்களோ, என்னவோ?’ முன்னிரவில் புலியுருவம் இல்லை என்பது மட்டும் அவனுக்குத் தெளிவாய்த் தெரிந்தது. “இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. அது மருங்கிலேயே நடைபெறுகிறது. அதைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும்” என்று அவன் முடிவு செய்தான்.
யாமம் எல்லையை அணுகி வந்தது. திரை அகலுவது போன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. ஓடும் காட்சிகளை அவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. கணங்கள் விரைந்தன. சித்தர் கண் திறந்தது. கை உயர்ந்தது. மறு கை சாடைகள் காட்டிற்று. வாய் முணுமுணுக்கத் தொடங்கிற்று. கங்காள உருவைச் சுற்றி மின்னொளிகள் விரைந்தன. வியக்கத்தக்க வண்ணம் தசை, தசை நார் குருதிநாளங்கள், நாடி நரம்புகள், தோல், தோலின் வண்ணம், கண் காது முதலிய உறுப்புகள் எல்லாம் பரபரவென்று எலும்புக்கூட்டைச் சுற்றி வந்து தோன்றின.
ஒரு வேங்கைப்புலியே அவன் முன் காட்சியளித்தது.
அவன் நாடி நரம்புகள் விதிர்விதித்தன. மெய் சிலிர்த்தது. மேலும் என்ன நடக்கப் போகிறதோ என்று அவன் கூர்ந்து பார்த்த வண்ணம் இருந்தான். ஆனால், அதன்மேல் ஒன்றும் நிகழவில்லை. சித்தர் மோன நிலையில் ஆழ்ந்தார். புலியின் உடல் உயிரற்ற உடலாகவே இருந்தது.
யாமம் முடியலாயிற்று. தான் பார்த்தவற்றின் முழு மெய்ம்மையும் காண அடக்க முடியா ஆர்வம் இவனுக்கு இருந்தது. ஆயினும் அமைச்சனின் ஒழுங்கார்வமும் அவன் குருதியில் ஓடிற்று. அவன் தன் விருப்பத்தை அடக்கிக் கொண்டு, அரசன் புதல்வன் நிகரிலியைத் தட்டி எழுப்பினான். அவனைக் காவல் வைத்துவிட்டு உறங்கினான்.
நிகரிலி மூன்று யாமமும் தூங்கி எழுந்திருந்தான். உறக்கத்தின் சோர்வு அவனிடம் முற்றிலும் இல்லை. அவன் கண்கள் திறந்தபடி இருந்தன. மூளையும் தெளிவாகவே இருந்தது. ஆனால், கனவிலும் காணுதற்கரிய ஒரு காட்சி அவன் கண்களில் பட்டது. கோயிலினுள் இருந்த சித்தர் உருவும் அவர்முன் நின்ற உயிரற்ற புலியுருவும் அவன் கவனத்தைத் தொடக்கத் திலேயே ஈர்த்தன.
"இந்த புலியுருவம் முன்பு இங்கே இருந்ததாகத் தெரியவில்லையே! எங்கிருந்து வந்தது? உயிரற்ற உருவம் விழுந்தல்லவா கிடக்கும்? இஃது எப்படி எழுந்து நிற்கிறது? அதற்கும் இந்தச் சித்தருக்கும் என்ன தொடர்பு?
“இஃது அவர் ஏறிச்செல்லும் ஊர்தியா? அப்படியானால், உயிரற்றிருப் பானேன்? உயிருடன் இருந்தால் அவரைக் கொன்று விடாதா?”
நூற்றுக்கணக்கான கேள்விகள் அவன் மனத்திரையில் எழுந் தெழுந்து மறைந்தன.
அவன் கேள்விகளுக்கிடையே கிழக்கு வெளுக்கத் தொடங்கிற்று. சித்தர் உருவில் துடிப்புத் தோன்றிற்று. அவன் அவரையே நோக்கினான். அவர் திடுமென கண்திறந்தார். ஒரு கை உயர்த்தி ஒன்றை முடக்கினார். கடகடவென்று சில சொற்கள் அவர் உதடுகளில் உருண்டன. அவர் முன்னின்ற வேங்கை மெல்லக் கண் திறந்துவால் ஆட்டிற்று. மயிர்கள் சிலிர்த்தன. பின் அஃது உடiலை நெளித்துக் கொண்டு, காடதிர உறுமிற்று.
அடுத்தகணம் அது மதில்தாண்டிப் பாய்ந்து வெளியே ஓடிற்று.
அரசிளஞ் செல்வன் மெய்ம்மயிர் சிலிர்த்தது. அவன் தோள்கள் படபடத்தன. தன்னைப் போலத் தன் தோழர்கள் சித்தர் பக்கம் கண் திருப்பி இருப்பார்களா? என்ன கண்டிருப்பார்கள்?
இவற்றை அறிய அவன் அவாவினான்.
மேலும் என்ன நடக்கக்கூடும் என்று அவன் கவனித்தான். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. சித்தர் மீண்டும் ஒன்றும் அறியாதவர்போல அமர்ந்து கண் மூடினார்.
புலியின் உறுமல் விட்டுவிட்டுத் தொலைவில் கேட்டது. பின் அதுமெல்லப் பகலொளியின் அரவங்களுடன் கலந்து மறைந்தது.
கதிரவன் எழுந்தான். தன் வெங்கதிர்களைப் பரப்பினான். நிகரிலி தன் தோழர்கள் எல்லாரையும் எழுப்பினான். அவர்களுடன் வெளியே காட்டகம் சென்றான். பாதுகாப்பான ஓர் இடந்தேடி அனைவரும் அமர்ந்தனர்.
அப்போது அரசிளஞ் செல்வன் மற்றவர்களுடன் இரவுக் காட்சி பற்றி அளவளாவினான். முதலில் செம்பியன் கண்டவற்றையும், பின் முறையே வளவனும், வானவனும் கண்டவற்றையும் அவன் கேட்டான். பின் அவன், தான் கண்டதையும் எடுத்துக் கூறினான்.
நாடகத்தின் நான்கு காட்சிகள்போல அவர்கள் கண்டவை ஒன்றை ஒன்று தொடர்ந்தன. முழு நாடகத்தின் போக்கும் அவர்களுக்கு நன்கு புலனாயிற்று.
முதல் யாமத்தில் கண்ட எலும்பு, புலியின் ஓர் எலும்பே, அந்த யாம இறுதியில், சித்தர் மந்திரத்தால், காட்டகத்தில் கிடந்த அதே புலியின் எலும்புகள் யாவும் வந்து குவிந்தன. இரண்டாம் யாமத்தில் அவையாவும் மற்றொரு மந்திரத்தால் அதே புலியின் எலும்புக்கூடாய் இணைந்தன. மூன்றாம் யாமத்தில் மூன்றாவது மந்திரத்தால் தசையும் குருதியும் தோலும் வண்ணமும் வந்து பொருந்தின. கடையாமத்தில் உயிர் மந்திரத்தால், சித்தர் அதற்கு உயிரூட்டி, அதைக் காட்டிற்கு அனுப்பினார்.
நாடகத்தின் முன்னிகழ்வும் பின்னிகழ்வும் உணர வேண்டி, அவர்கள் மீண்டும் ஓரிரவு காத்திருந்தனர். இத்தடவை ஒவ்வொருவரும் கண்டதும் கேட்டதும் மனத்தில் நன்கு பதியவைத்துக் கொண்டனர். உறங்கும்போது அவற்றைப் பாடம் செய்து கொண்டே உறங்கினர். அடுத்த பகலில் அவர்கள் மீட்டும் கூடிப் பேசினர்.
முதல் எலும்பு பகலின் கடையாமத்திலேயே ஒரு மந்திரத்தால் கோயிலுக்குள் வந்தது. அதன் மர்மத்தை அவர்கள் முற்றிலும் அறிய முடியவில்லை. ஆனால் இது மற்றவற்றின் தொடர்ச்சியைப் பாதிக்கவில்லை. கடையாமத்தின் இறுதியில் புலி சித்தர் பக்கம் திரும்பாமல், காட்டுக்குள் ஓடிற்று. இதையும் அவர்கள் முற்றிலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அது சித்தர் தனி யாற்றலா, மந்திரத்தின் ஆற்றலா என்று அவர்கள் புரிய முடியவில்லை. ஆனால், இதுவும் மற்றவற்றின் தொடர்ச்சிக்கோ வெற்றிக்கோ குந்தகம் விளைவிப்பதல்ல என்று அவர்கள் கருதினர்.
மற்ற நான்கு மந்திரங்களின் ஆற்றலையும் அவர்கள் செயல் தேர்வுமூலம் திட்டமாய் அறிய முனைந்தனர்.
அவர்கள் திட்டத்தின் கருமூலமாக, அங்கே ஓர் எலும்பு கிடந்தது. அதை வைத்துக்கொண்டு மந்திரத்தைத் தேர்ந்தாராயலாம் என்று செம்பியன் கூறினான். அவன் சித்தர் போலவே அதை முன் வைத்து அமர்ந்தான். தான் பாடம் பண்ணிய மந்திரத்தைக் கூறினான். அவன் முன் காட்டின் நாலாபுறமிருந்தும் எலும்புகள் வந்து குவிந்தன; அஃது என்ன விலங்கின் எலும்புகள் என்று கூற முடியவில்லை.
வளவன் தன் வேலையைத் தொடங்கினான். எலும்புகள் பொருந்தின. இன்னதென்று திட்டவட்டமாய் அறியமுடியாத ஒரு விலங்கின் எலும்புக் கூடாக அஃது, அவர்கள் முன் நின்றது. ஆனால், அஃது ஒரு புலியன்று என்பது தெளிவாயிற்று. விலங்கு இன்னதென்று தெரியாமல், அடுத்த மந்திரத்தை வழங்ககூடா தென்று செம்பியன் தடுக்க முயன்றான். ஆனால், வானவன் இதைக் கேட்கவில்லை. “அடுத்த மந்திரத்திலேயே இந்தச் செய்தி தெரிந்துவிடப் போகிறது. ஆனால், அப்போதும் அதற்கு உயிர் இராது. ‘இத்துடன் நிறுத்த வேண்டுமா? வேண்டாமா?’ என்பதை அப்புறம் பார்த்துக் கொள்வோம்” என்றான்.
வானவன் மந்திரம் பலித்தது. விலங்கின் முழு உருவமும் முன்னே நின்றது. அது கோர உருவமுடைய ஒரு காட்டுப்பன்றி. அதன் உடலின் முட்கள் அம்புகளைவிடக் கூர்மையும் கடுமையும் உடையவையாக இருந்தன. அதன் தந்தங்கள் யானைத் தந்தத்தை ஒத்த பருமனும் திண்மையும் ஒளியும் உடையவையாயிருந்தன. அதன் மேனி கார் முகிலைப் படிந்தது.
நண்பர்கள் அந்த உருவத்தைக் கண்டு திடுக்கிட்டனர். அதன் ஒரு திமிறலால் முட்கள் அம்புகள்போல் பத்துத் திசையிலும் பாயும் என்பதை அவர்கள் உணர்ந்தனர். அதே சமயம் அவர்களின் எந்தப் படைக்கலமும் துளைக்க முடியாத திண்ணிய கவசமாகவும் அம் முட்களும் அதனடியிலுள்ள தோலும் சதையும் அமைந்திருந்தன.
மூன்றாவது மந்திரத்துடன் தேர்வை முடித்துக் கொண்டுவிட வேண்டும் என்றே எல்லா நண்பர்களும் எண்ணினர். ஆனால், அரசிளஞ் செல்வன் நிகரிலி கேட்கவில்லை. “அன்பர்களே, இது காட்டுப் பன்றிதான். கரடியன்று. இதன் பிடியிலிருந்து தப்ப வழியுண்டு. இது மரத்திலேறாது. நீங்கள் முதலில் மரத்தின் உச்சிக்கிளையில் ஏறிக் கொள்ளுங்கள். நான் என் மந்திரத்தையும் தேர்ந்து பார்த்துவிட்டு, உடனே உங்களுடன் வந்துவிடுவேன்” என்றான்.
“நல்ல உயிர்த்தேர்வு!” என்று தலையாட்டிவிட்டு, மற்றவர்கள் மரங்களில் ஏறினார்கள். நிகரிலி மந்திரத்தைத் தொடங்கினான்.
மந்திரங்கூறி வாய் மூடுமுன் பன்றி, “ஆ” என உறுமிக் கொண்டு எழுந்தது.
அதன் முட்கள் நாற்புறமும் பாயத் தொடங்கின.
நிகரிலி பல மயிரிழைகள் தப்பியே மரத்தில் விரைந் தேறினான். அப்படியும் முட்களுக்கு அவன் முழுதும் தப்பவில்லை. அவன் மரத்தில் ஏறிய இடமெல்லாம் குருதி தோய்ந்தது.
தேர்வு வெற்றிகரமாக முடிந்தது. காட்டுப் பன்றியின் உறுமல் நெடுந்தொலை சென்று அடங்கும்வரை அவர்கள் மரத்தில் இருந்தனர். பின் மெல்ல மெல்ல இறங்கினார்கள்.
மந்திரங்கள் நான்கினாலும் என்ன செய்ய முடியும் என்பதை அவர்கள் அறிந்தார்கள். ஓர் எலும்பிலிருந்து அவர்களால் அதற்குரிய உயிரினத்தைப் படைத்து உயிர் கொடுக்க முடியும். ஆனால், முதல் எலும்பு இல்லாமல் அவர்களால் எதுவும் செய்யமுடியாது. உயிர் வந்தபின், விலங்கின்மீது அவர்கள் மந்திரத்தின் ஆற்றலோ, அவர்கள் ஆற்றலோ எதுவும் இல்லை.
அந்தக் காட்டில் தங்க நேர்ந்ததற்காக அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஒப்பற்ற விலை மதிப்புடைய அந்த மந்திரத்துடன் அவர்கள் மீண்டும் பயணம் தொடங்கினார்கள்.
பன்றியிடமிருந்து அவர்கள் மட்டுமே தப்பினர். அவர்கள் குதிரைகள் அதன் தாக்குதலுக்கு ஆளாயின. ஒன்றேனும் உயிர் தப்பவில்லை. அவர்கள் கால் நடையாகவே செல்ல வேண்டியதாயிற்று. அவர்கள் பலநாள் நடந்து கடற்கரையை அடைந்தனர்.
அங்கே, சிலநாள் காத்திருந்தபின், ஒரு கப்பல் தொலைவில் தெரிந்தது. கப்பலில் இருந்தவர்கள் காண, அவர்கள், தங்க மேலாடைகளை வீசிக் காட்டினர்.
கப்பல் நின்றது; படகு ஒன்று அவர்களை நோக்கி அவர்களை ஏற்றிச் சென்றது; ஆனால், கப்பலில் உணவில்லை. தண்ணீரும் போதவில்லை;அவர்கள் ஏறிய கடற்கரையிலிருந்தும் எதுவும் கிடைக்கவில்லை; இந் நிலையில் கப்பலோட்டிகள் அவர்களை அடுத்த நிலத்திட்டிலேயே விட்டுச் செல்ல விரும்பினார்கள்.
அடுத்தபடி கரையை அவர்கள் நெடுநாள் காணவில்லை. கண்ட போது அவர்கள் பேசாமல் கரையில் விடப்பட்டனர். புதிய இடம் எப்படி இருக்குமோ என்ற கவலையுடன் அவர்கள் நிலத்தின் உட்பகுதி நோக்கிச் சென்றார்கள்.
அணிமையில் அவர்கள் ஒரு பெரிய நகரத்தைக் கண்டனர். ஆனால், மனிதரையோ உயிரினங்களையோ, புல் பூண்டு களையோகூடக் காண முடியவில்லை. கடைகள் திறந்திருந்தன. கடைக்காரர் இல்லை வண்டிப் பேட்டைகளில் வண்டிகள் இருந்தன; குதிரைகளோ, வண்டிக்காரரோ இல்லை. இசையரங்குகள் நடப்பதாகத் தோற்றின; ஆனால், ஆளற்ற மேளதாளங்களே இருந்தன. பாடுபவரும் இல்லை. கேட்பவரும் இல்லை.
நகரம் - சாவின் திருக்கோயிலாகக் காட்சியளித்தது.
அவர்கள் திகிலடைந்தனர். ஆயினும், யாரையாவது அல்லது எந்த உயிரினத்தையாவது காணும் அவாவுடன் அவர்கள் மேன்மேலும் நடந்தார்கள். எல்லாவற்றையும் போலவே ஆளற்ற ஓர் அரண்மனையை அவர்கள் கண்டார்கள். அதன் கூடங்களை ஒவ்வொன்றாக அவர்கள் கடந்தார்கள். ஆறு கூடங்கள் வெறுங்கூடங்களாகவே இருந்தன. ஆனால், ஏழாவது கூடத்தில் எதிர்பாராத வகையில் நான்கு கட்டிலில் நான்கு மங்கையரை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அழகும் ஆடையணிமணிகளும், அவர்கள், இளவரசியர் என்பதைக் காட்டின.
இளவரசிகள் அவர்களை அன்பாதரவுடன் வரவேற்றனர். இனிய உணவும் நறுநீரும் அளித்தனர். ஒவ்வொரு மங்கையும் நண்பர்களுள் ஒருவரைத் தம் தோழராக ஏற்று, அவர்களைத் தத்தம் அறைக்கு இட்டுச் சென்றனர். நண்பர் நால்வருமே எதிர்பாராத இந்த இன்பத்தில் சொக்கித் தன் துன்பங்களை யெல்லாம் மறந்தனர்.
நண்பர்கள் பொழுது தங்குதடையற்ற இன்பத்தில் கழிந்தது. அவர்கள் கேட்டவற்றை எல்லாம் பெற்றார்கள். ஒரே ஒரு கட்டுப்பாடுதான் அவர்கள்மீது சுமத்தப்பட்டது. எக்காரணம் கொண்டும் அவர்கள் இளவரசியரை யார், எவர் என்று கேட்கப்படாது. அதுபோலவே நகரின் நிலை பற்றியும் உசாவக்கூடாது. முதலில் இக்கட்டுப்பாடு அவர்களுக்கு உறுத்திற்று. கட்டற்ற இன்பவாழ்வு அதை விரைவில் மறக்கடித்தது.
நிகரிலியாம் இளவரசை ஏற்ற இளவரசியின் பெயர் கொங்குலா மலர் என்று அவன் அறிந்தான். மற்ற இளவரசியர் பெயர்கள் வம்பார்குழலி, வண்டார்குழலி, மட்டார்குழலி என்று கூறப்பட்டன.
இளவரசன் தன் இளவரசியுடன் ஒருநாள் அறையில் அளவளாவிக் கொண்டிருந்தான். அப்போது அவன், இளவரசியிடம் அவர்கள் பெயர்களைப் பற்றி குறிப்பிட்டான். “கொங்கு! உங்கள் நால்வர் பெயர்களில் உன் பெயர் மட்டும் தனியாய் இருக்கிறது. மற்ற மூவர் பெயர்களும் ஒரே அச்சில் வார்த்தவைபோல இருக்கின்றனவே, முற்றிலும் நீ அவர்களில் ஒருத்தி யல்லவோ?” என்று கேட்டான்.
அவள் முகம் சட்டென்று கறுத்தது.
தன் கேள்வி தவறென்று கண்டு, அவன், பேச்சை மாற்ற முயன்றான். ஆனால், அவள் அவனை அருகே இழுத்துக் காதோடு காதாகப் பேசினாள்.
“அன்பரே, உம்மை நான் மனமார என் காதலராக ஏற்றுவிட்டேன். நீரும் என்னிடம் உண்மையான காதலராக இருந்து என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன்பின் நான் எத்தனையோ கூற வேண்டியிருக்கிறது. அவற்றைக் கூற நான் உண்மையில் துடித்துக் கொண்டிருக்கிறேன்!” என்றாள்.
நிகரிலி கொங்குலாமலரிடம் முற்றிலும் ஈடுபட்டே இருந்தான். ஆகவே, அவளை ஏற்பதாக உறுதி கூறினான். அதன்பின் அவள், நால்வரும் கேட்கக்கூடாது என்ற செய்திகளையெல்லாம் தனிமையில் விளக்கினாள்.
"என் அன்பரே, நீர் ஊகித்தது சரி! என்பெயர் எனக்கு என் தாய் தந்தையரிட்ட பெயர். அந்த மூவருக்கும் பெயரே கிடையாது. அவர்கள் அரக்கிகள். ஏதோ காதில்பட்ட பெயரையே மூன்றாக்கி வழங்குகின்றனர்.
"இந்த நகரத்தில் என் தந்தை அரசராயிருந்தார்; தாய் அரசியாய் இருந்தாள். இது வளங்கொழிக்கும் மக்கள் வாழும் நகராகவே இருந்தது. இந்த அரக்கியர் எங்கிருந்தோ வந்தார்கள். என் பெற்றோர் உற்றோர் நண்பர் யாவரையும் விழுங்கினர். மக்களையும் விலங்குகளையும் உயிரினங்களையும் ஒரு சில நாட்களில் விழுங்கி ஏப்பமிட்டார்கள்; இப்போது தொலை நாடுகளில் சென்று வயிறு நிரப்பிக் கொண்டுதான் இங்கே தங்குகிறார்கள்.
"உங்கள் நண்பர்களுக்கு இது தெரியாது. நீங்களும் திடீரெனத் தெரிவிக்கக் கூடாது. ஏனென்றால் அரக்கிகளுக்குச் சிறிது ஐயமேற் பட்டால், உங்கள் நண்பர்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் எனக்கும் பேரிடர் ஏற்படும்.
"அவர்களை விட்டுத்தப்புவது எளிதன்று; அவர்கள் நினைத்த நினைத்த மனித உருவம் எடுக்க முடியும்; அவர்கள் கழுத்து அரைநாழிகைத் தொலைவரை நீள முடியும்; கைகள் ஒரு நாழிகைவரை நீள முடியும்; கால்கள் மணிக்கு அறுபது எழுபது கல் தொலை செல்ல முடியும்.
“இவ்வளவையும் நான் சொன்னதற்காக நீங்கள் நம்பி விட வேண்டாம். ஏனென்றால், அரக்கியரும் பல சொல்லி உங்கள் நண்பர் மூளையை மாற்றக்கூடும். நீங்களே முதலில் உண்மை அறிந்து கொள்ள வழி கூறுகிறேன். உங்கள் நண்பர்கள் ஓரிரவு தூங்காமல் தூங்குவதுபோல் பாவித்து விழித்திருந்து பார்க்கட்டும். பகலில் உண்ணும் மனித உணவு அரக்கியர்களுக்குச் சிறிதும் போதாது. ஆகவே, அவர்கள் இரவு முழுதும் அலைந்து தொலை சென்று பெரிய விலங்குகளை வேட்டையாடித் தின்றுவிட்டு வருவார்கள். அத்துடன் இரவு தூங்காததால் அவர்கள் பகலில் பெரும்பகுதியும் தூங்குவார்கள். என்னை இதே வகையில் நீங்கள் பார்த்துத் தேறலாம். விரைவில் உண்மையறிந்து என்னுடன் தப்பியோட வழி தேடுங்கள். இவ்வகையில்தான் உங்கள் நண்பர்கள் இடர் நீங்கும். உங்களுக்கும் எனக்கும் பாதுகாப்பு ஏற்படும்” என்று கொங்குலாமலர் கூறினாள்.
அவள் சொற்கள் கேட்டு, நிகரிலி வியப்படைந்தான். நண்பர்களுடன் அவன் கலந்து பேசினான். அவர்கள் தங்கள் தங்கள் காதலிகளைத் தேர்ந்து பார்த்தார்கள். அவர்கள் அரக்கியர்களே என்பது தெளிவாயிற்று. நிகரிலியும் எதிர்பாராத வகையில் கொங்குலாமலரைத் தேர்ந்து பார்த்தான். அவள் இளவரசிதான் என்ற உறுதி அவனுக்கு ஏற்பட்டது.
பகலெல்லாம் அரக்கியர் உறங்கியது அவர்களுக்கு வாய்ப்பாயிருந்தது. நால்வரும் இளவரசியுடன் கலந்து திட்டமிட்டனர். அதன்படி நாள்தோறும் அவர்கள் கடற்கரை சென்று கப்பல்களின் வரவை எதிர்பார்த்திருந்தனர். ஒருநாள் தொலைவில் அவர்கள் ஒரு பாய்மரம் கண்டார்கள். மேலாடைகளை நீண்ட கழியில் கட்டி அவர்கள் சாடை காட்டினார்கள். ஒரு படகு வந்து அவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது.
அப்போது மாலை நேரமாயிற்று. எந்த நேரமும் அரக்கியர் எழுந்து வந்துவிடலாம் என்று தோழர்கள் அஞ்சினார்கள். ஆகவே, படகை விரைந்து ஓட்டும்படி அவர்கள் படகோட்டிகளை ஊக்கினார்கள். மிக விரைந்து ஓட்டினால், பெரும் பணம் தருவதாகவும் கூறினர். அவர்களும் முழு வலுவுடன் விரைந்து தண்டுகைத்தார்கள். படகு அம்பு வேகத்தில் கப்பலை நோக்கிச் சென்றது.
அவர்கள் அச்சம் பொய்க்கவில்லை. உறங்கி எழுந்த அரக்கியர் தத்தம் துணைவர்களைக் காணாமல் தேடினர். இளவரசன் அறைக்கு அவர்கள் ஓடி வந்தனர். இளவரசனையும், இளவரசியையும் ஒருங்கே காணாமற் போகவே, அவர்களுக்கு உண்மை சுரீர் என்று தைத்தது அவர்கள் கடற்கரைக்கு ஓடி வந்தார்கள். கடலில் இளவரசனும், இளவரசியும், தோழர்களும் படகில் தப்பி ஓடுவதைக் கண்டார்கள்.
அவர்கள் கடலில் இறங்கிப் பார்த்தார்கள். பத்திருபதடிக்கு மேல் செல்ல முயவில்லை. ஆனால், அவர்கள் தங்கள் கழுத்தை அரைநாழிகைத் தொலை நீட்டினார்கள். படகு அதற்கப்பால் சென்றுவிட்டது. படகில் உள்ளவர்கள் அவர்களைக் கண்டுவிட்டார்கள். அவர்கள் மூச்சு, படகிலுள்ளவர்கள் மேல் வீசிற்று. அத்துடன் அரக்கியர் கைகளையும் நீட்டிப் படகை எட்டிப் பிடிக்க முயன்றார்கள். கைகள் ஒரு நாழிகைத் தொலை நீண்டன. அவை கிட்டத்தட்டப் படகின் அருகுவரை எட்டின. ஆனால், படகைப் பிடிக்கும் முயற்சியில் கை வழுக்கிற்று. அதே சமயம் அவர்கள் கைபட்டுப் படகுகள் மேலும் முன் சென்று விட்டன.
அரக்கியர் ஏமாற்றமடைந்தனர். சீறி எழுந்து கரையிலிருந்து கற்களை சீவி எறிந்தார்கள். கற்கள் பெரும்பாலும் அருகில் விழுந்தன; அல்லது குறி தப்பின. ஒன்று மட்டும் படகின் அருகில் விழுந்து படகோட்டிகளில் ஒருவனைக் காயப்படுத்திற்று. தோழர்கள் பதைபதைத்து, அவன் காயங்களைக் கட்டி ஆற்றினர். அவனுக்குப் பெரும்பொருள் தருவதாக வாக் களித்தனர்.
கப்பல், திமிங்கில வேட்டையாடும் கப்பல். வழிப்போக்கர்களே அதில் கிடையாது. ஆகவே, அவர்கள் அடுத்த தங்கு துறையிலேயே தோழர்களையும், இளவரசியையும் இறக்கிவிட்டனர்.
அவர்கள் கரையேறிய இடத்தில் மனிதர் குடி எதுவும் காணவில்லை. கரையிலிருந்து அவர்கள் நெடுந்தொலை சென்றனர். தொலைவில் அவர்கள் ஏதோ ஒரு நகரத்தைக் கண்ணுற்றனர். நம்பிக்கைக் கொண்டனர். ஆனால், நடந்ததறியாத இளவரசி இதற்குள் முற்றிலும் களைத்துச் சோர்ந்து விழுந்தாள். இரண்டுநாள் உணவும் நீரும் இல்லாததால் கண் இருண்டது. வாய் உலர்ந்தது. பேச முடியாத நிலையில் அவள் தண்ணீர் வேண்டும் என்று சாடை கட்டினாள். இளவரசன் அவளைக் கீழே படுக்க வைத்து விசிறினான். செம்பியனை நகருக்கு அனுப்பினான். சிறிது நீரும் உணவும் கொணரும்படி கட்டளையிட்டான். செம்பியன் அவ்வாறே விரைந்து நகர் நோக்கிச் சென்றான்.
நகரையணுகியதும், செம்பியன் முதலில் ஓர் உணவகம் தேடிப் பசியும் விடாயும் தீர்த்தான். பின் அங்கே படுத்து ஓய்வு கொண்டான். திரும்பி வரும் எண்ணம் அவனுக்கு இல்லை. ஏனென்றால் அவனுக்கு உள்ளூர இளவரசி யிடம் நல்லெண்ணம் இல்லை. “மற்ற மூவரையும் போலவே இவளும் அரக்கியாகவே இருக்கக்கூடும். ஆனால் இவள், அவர்களைவிடக் கைகாரியாய் இருக்க வேண்டும். அவர்களை ஏமாற்றிவிட்டு, இளவரசனையும், மற்றவர்களையும் தானே ஏமாற்றத் திட்ட மிட்டிருக்கிறாள். மற்றவர்களிடம் இதைச் சொல்லிப் பயனில்லை. அவர்கள் எக்கேடாவது கெடட்டும். நம்மட்டில் தப்பினால் போதுமானது. இனிது இளைப்பாறி, அவர்கள் வருமுன் வேறுநாடு சென்று விடுவோம்” என்று அவன் எண்ணினான்.
நெடுநேரம் வரை இளவரசன் செம்பியனுக்காகக் காத்திருந்தான். பின் அவனைத்தேடி வளவனை அனுப்பினான். வளவனும் உணவகம் வந்தான். உணவருந்தியபின் அவன் செம்பியனைக் கண்டான். செம்பியன் தன் கருத்தைக் கூறி அவன் மனத்தையும் மாற்றினான். இளவரசன் பின்னும் நெடுநேரமான பின் வானவனை அனுப்பிப் பார்த்தான். அவனும் திரும்பி வராதது கண்டு தானே அவர்களைத் தேடி உணவகம் வந்தான்.
செம்பியன் வாதத்தை வானவனும் ஏற்றிருந்ததனால், மூன்று நண்பர்களும் சேர்ந்து இளவரசன் மனத்தைக் கரைத்தார்கள். உயிருக்குயிரான நண்பர்களின் அச்சம் அவன் உறுதியையும் மாற்றிற்று. நான்கு நண்பர்களும் இளவரசியைப் புறக்கணித்தவர்களாய், முன்போலத் தம் பயணத்தை மேற்கொண்டு தொடர்ந்தனர்.
மேலும் பல நாடுகள் சுற்றியபின், அவர்கள் தம் நாட்டுக்கு மீண்டார்கள். அவர்கள் பயணம் புறப்பட்டதற்கப்பால், கோடபதி மன்னன் காலமாயிருந்தான். அரசியும் ஆரணியும் கொடுங்கோலாட்சி செய்ததனால் மக்கள் அவர்களைத் துரத்திவிட்டு, தற்காலிக ஆட்சிக்குழு அமைத்திருந்தனர். பெருந்தன்மையுடன் ஆட்சியுரிமையைத் தம்பிக்கு விட்டுக் கொடுத்த நிகரிலியையே குடிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆகவே, நிகரிலி வந்ததும், அமைச்சர் அவனை வரவேற்று மணிமுடி சூட்டினார். நண்பர்கள் உதவியுடன் அவன் நாடாள அமர்ந்தான்.
காட்டில் விடப்பட்ட இளவரசிக்கு ஒரு வேடன் உணவும் நீரும் கொடுத்துக் காப்பாற்றினான். அவன் உதவியுடன் அவள் நகருக்குள் வந்து இளவரசனைத் தேடினாள். நால்வரும் ஒன்று கூடி நகரை விட்டுச் சென்றதைக் கேட்டாள். முதலில் அவள் மனம் இடிவுற்றது. பின் அவள், தோழர்களின் உள்ள நிலையை ஊகித்தாள். அவள், அவர்களின் ஐயமனப் பான்மைக்காக வருந்தினாள். சிறப்பாகத் தன் காதலன் அவர்களுடன் சேர்ந்தது அவள் உள்ளத்தை வாட்டிற்று. ஆயினும் அவர்கள் அனுபவங் களை அவள் எண்ணிப் பார்த்தாள். பார்த்தபின், அவர்களை குறை கூறுவதில் பயனில்லை என்று கண்டாள். அவர்கள் தவற்றைத் தக்க முறையில் காட்ட வேண்டுமென்று அவள் துணிந்தாள்.
இளவரசன் அவளுக்குத் தன் நாடு, தாய் தந்தையர் முதலிய விவரங்களைத் தெரிவித்திருந்தான். ஆகவே, இளவரசி தக்க துணை தேடிக் கொண்டு பயணப்பட்டாள். கடல் கடந்து தமிழகத்தை அடைந்தாள். பலநாள் நடந்ததும் வண்டியேறியும் கோனாட்டின் தலைநகருக்கருகில் வந்து சேர்ந்தாள்.
தன்னைப் புறக்கணித்த காதலனைத் தானாகச் சென்று காண அவள் விரும்பவில்லை. குற்றமறிந்து அவனாக வரும்படி செய்விக்க எண்ணினாள். அத்துடன் தன்னை வெறுக்கும்படி அவனைத் தூண்டிய நண்பர்களையும் தண்டிக்க எண்ணினாள். இதற்கேற்ப அவள் ஒரு திட்டமும் வகுத்துக் கொண்டாள்.
அவள் தாய் வீட்டுச் செல்வத்தின் இரண்டு கூறு இன்னும் அவளிடத்தில் இருந்தது. ஒன்று அவளிடமிருந்து ஏராளமான அணிமணிகள்; மற்றொன்று அவளுக்கிருந்த கலைப் பயிற்சி. இவற்றைப் பயன்படுத்தியே அவள் திட்டம் உருவாயிற்று. அணிமணிகளில் சிலவற்றை அவள் விற்றாள். அதைக் கொண்டு ஒரு மாளிகை அமைத்துக் கொண்டாள். அவள் கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்த கலைகளுள் “தெறிகட்டை” ஒன்று. அதன் ஓர் ஆட்டத் தொகுதியை அவள் வெள்ளி பொன் தந்தங்களால் செய்வித்துக் கொண்டாள்.
அவள் ‘பந்தய ஆட்டப் போட்டிக் கலைவாணி’ என்ற விருதுப் பெயருடன் வாழ்ந்தாள். தெறிகட்டையாடத் தெரிந்தவர்களுக்கும், மன்னர் பெருமக்களுக்கும் ஆட்டப் போட்டி அழைப்புகள் அனுப்பினாள். போட்டிக்கு வருபவர் நூறு ஆயிரம் பொன் கட்டி ஆடவேண்டும் என்றும், தோற்றால் அதை இழக்கவேண்டுமென்றும் அவள் திட்டம் செய்தாள். அத்துடன் மிகுதிப் பணம் வைத்தாடித் தோற்று, பணம் செலுத்த முடியாதவர்களைக் காவலில் வைக்கும் உரிமையையும் அரசியலாரிடம் நாடிப் பெற்றாள்.
யாருக்கு உரிமை தருகிறோம் என்பதறியாமல், நிகரிலியே உரிமை இதழில் கையொப்பமிட்டான்.
தெறிகட்டை ஆடக் கலைவாணர் பலர் வந்து ஆடித் தோற்றனர். பலர் பணம் இழந்தனர். பலர் செல்வமும், வீடும் குடியும் இழந்தனர். அவள் புகழ் பெருக்கமுற்றது. செம்பியன், வளவன் வானவன் ஆகிய மூவரும் தெறிகட்டை ஆடுவதில் வல்லவர் என்ற இறுமாப்புக் கொண்டவர்கள். அவர்கள் வந்து ஆடினார்கள். ஒன்றிரண்டு தடவை கொங்கலாமலர் அவர்களை கெலிக்க விட்டாள். அவர்கள் ஆர்வ வெறி கொண்டு ஆடினார்கள். இதனால், மேன்மேலும் தோற்றபின்னும் அவர்கள் விடாது ஆடினார்கள். அவர்கள் செல்வ முழுவதும் கரைந்தது. மேலும் கொடுக்க நூறாயிரம் பொன் இல்லாதபடியால், சட்டப்படி அவர்கள் அவள் மாளிகையின் சிறைக் கூடத்திலேயே காவலில் வைக்கப்பட்டனர்.
நண்பர்களை மீட்கும் எண்ணத்துடன் நிகரிலியும் புறப்பட்டான். அமைச்சர் தடுத்து விலக்க முயன்றனர், நிகரிலி கேட்கவில்லை. “நண்பர்களை மீட்பது என் நீங்காக் கடமை. மேலும், நான் வெற்றி பெறுவதில் ஐயமில்லை. ஆயினும், உம் உள்ளம் நிறைவுபடுத்த இடைக்கால அரசு ஏற்படுத்திச் செல்கிறேன்” என்றான். அமைச்சர் படைத் தலைவர் முதலியோர் ஓர் ஆட்சிக்குழுவாக அமைக்கப் பெற்றனர். பின் மன்னன் கொங்குலாமலர் மாளிகைக்குச் சென்றான்.
இளவரசி, மன்னனையும் சிலபல ஆட்டங்கள் கெலிக்கும்படி விட்டாள். பின் அவன் ஒவ்வொன்றாகத் தோற்றான். பணமுற்றும் கரைந்தது. ஆத்திரத்தில் அரசுரிமையையும் வைத்துத் தோற்றான். வெறிகொண்டு பின்னும் ஆடினான். பின்னும் தோற்றபின் அவனும் சிறைக் கூடத்துக்குச் செல்ல வேண்டியவனானான். மன்னனைச் சிறைப்படுத்தக் காவலர் தயங்கினர். ஆனால், கொங்குலாமலர் புன்முறுவல் பூத்தாள். “மன்னனுக் குரிய சிறைக்கூடம் அதுவன்று; காவல் வீரர்களே! அவருக்கு உயிர்த் துடிப்புடைய சிறைக்கூடம் இருக்கிறது; அஃது, அவர் தன்னுரிமையைப் பறிக்கும். ஆனால், அரசுரிமையை அளிக்கும். நண்பர்கள் விடுதலையைக் கூட அன்புப்பரிசாக அளிக்கும்” என்றாள்.
காவலர் இளரசியின் சொற்கள் விளங்காமல் விழித்தனர். அரசனும் விழித்தான். ஆனால், கொங்குலாமலர் நயம்பட விளக்கித் தன் மெய்ம்மையையும் அவன் அறியும்படி செய்தாள்.
“அரசே! தாங்கள் நீதி தவறாதவர்கள். கொள்கை உறுதி, சொல்லின் உறுதி உடையவர்கள் என்பதைக் குடிகள் வகையில்கூடக் காட்டியிருக்கிறீர்கள். ஆனால், அயல்நாடுகள் செல்லும் சமயம் இந்தப் பண்பை உங்கள் நாட்டிலேயே வைத்துவிட்டுப் போனீர்களா?” என்றாள்.
மன்னனுக்குத் திடீரென்று கொங்குலாமலரின் நினைவு வந்தது. அவளை நீரும் உணவு மற்ற நிலையில் விட்டு வந்தது அவனுக்கு ஆராக் கழிவிரக்கத்தையும், துயரையும் தூண்டிற்று. “நீங்கள் கூறுவது உண்மை, மாதரசியே! என்னையே நம்பியிருந்த ஒரு பெண்மணிக்கு நான் கொடுத்த வாக்குறுதியைக் கரையவிட்டிருக்கிறேன். அதற்காக இப்போது வருந்துகிறேன். உண்மையில் அவளை அவளது கொடுமைக் குணம் காரணமாக நான் விட்டு வரவில்லை. அவள் அரக்கியருடன் வாழ்ந்திருந்தாள். அவளும் ஓர் அரக்கியாயிருக்கக்கூடும் என்ற அச்சத்தால்தான் அவ்வாறு விட்டுவர நேர்ந்தது. ஆயினும், பிழை பிழைதான். அவளைத் தேடிக் கொண்டுவர ஏற்பாடு செய்கிறேன்” என்றான்.
கொங்குலாமலர் நகைத்தாள். அரசன் தன் தோழர் பிழையை இன்னும் ஒத்துக் கொள்ளாமல் மறைப்பது கண்டாள். அஃது, அவன் பெருந்தன்மையின் பயனே என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். ஆயினும்,தான் இன்னார் என்பதை அறிவிக்குமுன், அவர்கள் மனத்தையும் மாற்ற விரும்பினாள்.
“அரசே, பெருந்தன்மையுள்ள உள்ளம் படைத்தவர்கள் தாங்கள் என்பதில் ஐயமில்லை. அத்தகையவர் தாமாக ஒரு பெண்ணின்மீது, அதுவும் காதலையும் காதலுறுதியையும் நம்பியிருக்கும் ஒரு துணையற்ற பெண்ணின் மீது, இக் கொடுமை செய்ய முடியாது. காதலுணர்வுடன் போட்டியிடத்தக்க நட்புரிமையுடைவர்களே உங்களை அவ்வகையில் தூண்டிக் கலைத்திருக்க வேண்டும். அவர்கள் தவற்றையும் தெரிவித்துப் பின் திருத்தம் நாடுவதே முறை” என்றாள்.
மன்னன் சிறிது நேரம் தயங்கினான். “நான் தான் மன்னன். எல்லோருடைய பிழைகளும் என் பிழைகளே. அவற்றுக்கான தண்டனை பெற வேண்டியவனும் நானே” என்றான்.
“அப்படியானால், உமக்கு இப்போதே முழு விடுதலை தந்தேன், அரசே! அத்துடன் உம் நண்பர்கள் குடிகள் யாவரின் விடுதலையுரிமையும் இனி உங்களுடையதே; ஆனால்… ஆனால்…” என்று தயங்கினாள்.
“ஆனால், என்ன அம்மணி? பெருந்தன்மை மிக்க நீங்கள் எது கூறினாலும் செய்யத் தடையில்லை” என்றான் அரசன்.
“அப்படியானால் மகிழ்ச்சி; நான்தான் கொங்குலா மலர்” என்றாள்.
அரசன் நிகரிலி அணைகடந்த வெள்ளம்போல் உணர்ச்சிப் பெருக்குடன் அவளை அகமார அணைத்துக் கொண்டான். “நான் செய்த தவறு மிகப் பெரிது. என்குடிகளில் கடைப்பட்டவர் செய்தால்கூடப் பெரிது, அதை மன்னித்துவிடு கொங்கு; ஏனென்றால், இனி நீ தான் அரசி, என் நண்பர்களையும் குடிகளையும் உன் விருப்புடனேயே விடுவித்துவிடு” என்றான்.
காவலர் எல்லாரையும் விடுவித்தனர். நண்பர் செய்தியறிந்து மனமாரத் தம் தவறான எண்ணத்துக்கு வருந்தினர்.
சிலநாள் அரசன் நிகரிலியும், அரசி கொங்குலா மலரும் அமைந்து வாழ்ந்தனர். ஆனால், அடிக்கடி அரசி கொங்குலா மலரின் முகத்தில் ஏதோ ஒரு துயரம் நிழலாடுவதை அரசன் கவனித்தான். மெல்ல அவள் துயரை உசாவி யறிந்தான். “உங்கள் வரவால் நான் மீட்சியடைந்தேன். மீண்டும் அரச வாழ்வு பெற்றேன். ஆனால், என் தாய் தந்தையரும் உற்றார் உறவினர் குடிகளும் எலும்புக் குவியலாய்க் கிடக்க, அதை நான் எப்படி மறந்து வாழ முடியும்!” என்று தேம்பினாள்.
மன்னன் நண்பர்களை அழைத்தான். அவர்களுடனும், அரசியுடனும் மீட்டும் பயணமானான். நான்கு நண்பர்களும் கடல்கடந்து இளவரசியின் நாடாகிய கன்னிப்போத்த நாட்டை அடைந்தனர்.
அவர்கள் தலைநகரை அணுக இன்னும் அஞ்சினார்கள். ஏனென்றால், மறைவிலிருந்தே அவர்கள் அரக்கியர் நடமாட்டத்தைக் கவனித்து விட்டார்கள். “உயிர் மந்திரத்தால் எல்லாரையும் பிழைப்பிக்கத்தான் முடியும். மீண்டும் அரக்கியரிடமிருந்து அவர்கள் தப்ப முடியாதே” என்று அரசன் சிந்தித்தான்.
உயிர் மந்திரத்தை அவர்களுக்கு மறைவிலிருந்து காட்டிய சித்தர் நினைவு அப்போதுதான் அவர்களுக்கு வந்தது. “உயிரைக் கொடுக்கும் ஆற்றலுடையவர்களுக்கு அதை அகற்றும் ஆற்றல் இல்லாமலா போகும்? மேலும் இரவு தோறும் புலியின் உயிரை வாங்கிப் பகல்தோறும் அளிப்பவர் உயிர்கள் மீது தண்ணளி உடையவராகத்தான் இருக்க முடியும். ஆகவே அவரிடமே சென்று யாவும் ஒளியாமல் கூறி உதவி பெறுவோம்” என்று தோழர்கள் அறிவுரைத்தார்கள்.
இளவரசியுடனே யாவரும் காளிகோயிலுக்குச் சென்றனர். பகலில் சித்தர் உணர்வு நிலைக்கு வரும்வரை காத்திருந்தனர். நண்பகல் அவர் விழித்தார். “வருக அரசரே, அன்பர்களே! என்ன செய்தியாக வந்தீர்கள்?” என்று அவர் இன்முகத்தோடு வினவினார்.
“வந்தவுடன் எங்களை இனமறிந்த தாங்கள் அறியாத தென்ன இருக்க முடியும். அருந்தகைப் பெரியீர்! ஆயினும் தாங்கள் கேட்டமுறையில் கூறுகிறோம்” என்று தொடங்கி அரசன் தங்கள் கதை முழுதும் கூறினான். இறுதியில் இளவரசியை முன்னிறுத்தி, “இதுதான் இந்நாட்டின் எண்ணற்ற கோடி உயிர்களுக்கும் பெருமைக்கும் ஒரே எச்சமிச்சமாய் உயிருடனிருக்கும் அரசிளஞ்செல்வி; இவள் இப்போது என் வாழ்க்கைத் துணைவி; எங்கள் நாட்டரசி; அவள் பெற்றோர் நாட்டை மீட்டும் உயிர் வாழவைக்கவே பல்லாயிரங்கல் தொலைக்கு அப்பாலிருந்து கடல் கடந்து வந்திருக்கிறோம்” என்றான்.
சித்தர் பெருமூச்சு விட்டார். பின் நண்பர்கள் தெளிவாகக் கேட்கும்படி ஒரு மந்திரத்தை முணுமுணுத்தார். ஒரு சிறு எலும்பு முன் வந்தது. பின் நான்கு தடவை உயிர் மந்திரத்தை ஓதினார். ஒரு மான் உயிர்பெற்றெழுந்து அனைவரையும் பார்த்து மிரளமிரள விழித்தது.
“அன்பர்களே, முன் நீங்கள் கேட்ட உயிர் மந்திரம் இது; இதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இனி இதையும் கவனியுங்கள். இது சாமந்திரம். உங்கள் காரியம் வெற்றியடைய இது உதவும்” என்றார்.
அதன்பின் அவர் கையில் சிறிது நீர் எடுத்தார். உரக்க ஒரு மந்திரத்தை ஓதி அதன் மீது தெளித்தார். மான் இருந்த இடம் தெரியவில்லை. ஒரு பிடி சாம்பல் முன்னே கிடந்தது. சித்தர் வேறொன்றும் பேசவில்லை. அவர் உடனே அறிதுயிலில் ஆழ்ந்தார்; நண்பர் அவரை வணங்கி வழிபட்டுச் சென்றார்கள்.
அவர்கள் மறுநாள் மாலைவரை காத்திருந்தனர். அரக்கியர் எழுந்து உலவத் தொடங்கினர். அவர்கள் இருந்த இடம் மனிதவாடை தட்டுப்பட்டது. அப்பக்கமாக வந்தனர். தொலைவிலிருந்தே இளவரசியையும் நண்பர்களையும் அவர்கள் கண்டு சீற்றத்துடன் கழுத்தையும் கையையும் நீட்டினர். ஒருத்தி கை, இளவரசியையே தூக்கி எடுக்க முயன்றது.
அரசன் அதற்குள் நீரேந்தினான்; சாமந்திரத்தை உருவிட்டான்; நீரை எறிந்தான். அரக்கியர் மாயமாய் மறைந்தனர்; மூன்று பிடி நீலநிறச் சாம்பல் அவர்கள் முன் கிடந்தது.
செம்பியன் அதன்பின் நகர்புறத்திலுள்ள எலும்புக் குவியலை அணுகினான். ஒவ்வொரு எலும்பையும் எடுத்து வைத்து, முதல் மந்திரம் ஓதினான். அதற்குரிய எலும்புகள் விரைந்து வந்த தனித்தனிக் குவியல்களாயின. வளவன் அவற்றுக்கு உருவம் அளித்தான். வானவன் அவற்றுக்குத் தசையும் மேனியும் வருவித்தான். இறுதியில் அரசன் எல்லா உடல்களுக்கும் உயிர் கொடுத்தான். உயிர்பெற்ற உடல்கள் குதிரைகளாகக் கனைத்தன. நாய்களாகக் குரைத்தன. ஆடவர் பெண்டிர் குழந்தைகளாக ஆரவாரத்துடன் ஊடாடினர்.
உயிர் பெற்றவர்களுள் கொங்குலாமலரின் தாய் தந்தையர், பாங்கியர், சேடியர், காவலர், பணிப்பெண்கள் யாவரும் இருந்தனர். அவர்கள் கொங்குலாமலரை ஆரத்தழுவி மகிழ்ந்தனர். அவள் மூலம் அவர்கள் கோனாட்டு அரசனையும் நண்பர்களையும் பற்றிய எல்லாச் செய்திகளும் அறிந்து அவர்களைப் பாராட்டினர்.
பல நாள் விருந்தின்பின், கன்னிப்போத்த நாட்டரசன் பெரும் பொருட்குவியலுடன் மகளையும் மருமகனையும் நூறு கப்பல்களுடன் வழியனுப்பி வைத்தான்.
தமிழகமும் கடல்கடந்து கன்னிப்போத்த நாடும் நீண்டநாள் செல்வளத்துடன் நெடுவாழ்வு வாழ்ந்தன.
"குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு" (குறள்.544)
தீர்வைநாயகன்
நான், அப்போது அச்சம் என்பது இன்னது என்றறியாத இளங்காளை. எனக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகி இருந்தது.
தீர்வை நிலையத்தில் நான் பணியேற்றுச் சில காலமாய்விட்டது. தாழ்ந்த பணியில் புகுந்து, என் ஆர்வத்தாலும் சுறுசுறுப்பாலும் நேர்மையாலும் நான் சடசடவென்று உயர்ந்த படிமைகளுக்கு ஏறினேன். என் வயதுக்கு இந்தப் படிமையும் ஊதியமும் பெரிதாகவே எல்லாருக்கும் தென்பட்டது. என்னிலும் எத்தனையோ மடங்கு உயர்குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணை மணந்ததனால், என் மதிப்பு இன்னும் உயர்ந்தது. என் ஆர்வமும் பன்மடங்காயிற்று.
பல செல்வ இளைஞர்களைவிட்டு விட்டு என்னைக் காதலித்த அந்தப் பெண்ணினல்லாள் தேர்வுக்கு நான் தகுந்தவனே என்றுகாட்ட, நான், இன்னும் உயர்படிமையும் புகழும் நாடினேன்.
நான் வேலை பார்த்த பணிமனை, இங்கிலாந்தின் தென் கரை யோரத்தில் டோவர் அருகே இருந்தது. அந்தப் பகுதியிலுள்ள வணிகரில் பெரும்பாலோர், அந்நாளில் கள்ள இறக்குமதி வாணிகத்தில் ஒரு கை உடையவர்களாகவே இருந்தனர். உள் நாட்டிலும் பல கல் தொலைவுவரை உள்ள மக்கள் அந்த வாணிகத்தால் தம் சிறு ஆதாயத்துக்கு ஒரு அணை தேடுபவர்களாகவே இருந்தனர். கள்ளச்சரக்குகள் அந்நாளைய வீடுகள் பலவற்றில் மறைவிடங்களில் சேமித்துவைக்கப்பட்டிருந்தன. வீடுகள் கட்டும்போதே அந்தவகைக்கென்று நிலவறைகள் அமைக்கப்பட்டிருந்தன.
கள்ள வாணிகத்தை அடக்கும்வகையில் அரசியலார் எடுத்த நடவடிக்கைகளெல்லாம் பெரும்பாலும் எப்படியோ வெற்றுவேட்டு நடவடிக்கைகளாய் அமைந்தன. ஏனெனில் தீர்வைத்துறைப் பணியாளர்களுக்குள்ளேயே பலர் அவ்வாணிகத்தின் ஆதாயத்தில் பங்குகொண்டிருந்தனர். எனவே, அவர்கள் நடவடிக்கைகள் யாவும் இருதலை மணியங்களா யிருந்தது இயல்பே. அத்துடன் ஆதாயத்தில் பங்கு கொள்ளாத வர்கள்கூட அத்துறையில் அவ்வளவு முனைந்து உழைக்க விரும்பவில்லை. ஏனெனில் அத்தகைய உழைப்பின் மூலம் அவர்கள் பலரது வெறுப்பையும் பகைமையையும் பெறவேண்டி யிருந்தது. ஒரு சிலர் என்னைப்போல ஆர்வம் காட்டினாலும், பொதுவாக இந்த நிலைமை வளர்ந்து கொண்டுதான் இருந்தது.
அவ்வப்போது தீர்வைத்துறையாளர் நடவடிக்கைகள் பற்றிப் பரபரப்பான செய்திகள் வரும். எங்காவது ஒரு கள்ள வாணிகக் கப்பல் பிடிபடும்; அல்லது கள்ள வாணிகச் சரக்குக் கண்டு கைப்பற்றப்படும். ஆனால், இவற்றால் கள்ள வாணிகத்துக்கு மிகுதிதடை ஏற்படுவதில்லை. அதன் ஆதாயத்தில் இத்தகைய நடவடிக்கைகளால் வரும் குறைபாடு நூற்றுக்கு ஒன்று விழுக்காடுகூட இருக்காது. அந்நடவடிக்கைகள் தீர்வை நிலையத்துக்கு ஒரு தன் மதிப்பை உண்டுபண்ணவும், பங்கு கொள்பவர் அதைச் சற்று உரிமையுடன் கேட்டுப் பெறவும் மட்டுமே உதவின.
தீர்வை நிலையத்தின் இந்த மரபுகளுக்கு நான் ஒரு விதிவிலக்கு என்பது வரவரத்தான் கள்ள வாணிக மக்களுக்குத் தெரிந்தது. ஆனால், அவர்கள் அதை அறியுமுன் நிலைய மேலிடம் உணர்ந்து எனக்குப் படிமையேற்றமும் புகழும் பாராட்டும் தந்தது. இன்னும் இவை வளரும் என்ற நம்பிக்கையும் தரப்பட்டது. எனக்குக் கிடைத்த ஒரு பெருவெற்றி இவ் வகையில் என் புகழையும் கள்ள வாணிகக்காரருக்கு என்மீதிருந்த அச்சத்தையும் பெருக்கிற்று.
ஒருநாள் ஒரு கேணியிலிருந்து ஒரு மனிதன் வெளிவருவதைக் கண்டேன். உடனே கேணியுள் இறங்கினேன். நீர்மட்டத்தருகே குகைவழி ஒன்று இருந்தது கண்டேன்; அது கள்ள வாணிகக்காரரின் திருட்டுச் சந்திப்பிடம். அவர்கள் சரக்குச் சேமிப்பிடமும் அதுதான். அதில் பலர் கையும் களவுமாக அகப்பட்டு விழித்தனர்; பலர் என்னிடம் மன்றாடியும் நான் அத்தனை பேரையும் தூக்குக்கு அனுப்பினேன். என் புகழ் பின்னும் வளர்ந்தது. என் தெம்பும் மிகுந்தது. ஆயினும் என்னையறியாமல் இச் செய்கையால் நான் கள்ள வாணிகக்காரரின் மாளாப் பகைமைக்கு ஆளானேன்.
இப்போது, கள்ள வாணிகக்காரர் விழித்தனர். என்னை அச்சுறுத்தி மொட்டைக் கடிதங்கள் வரத் தொடங்கின. எச்சரித்த நண்பர்களும் பலர்; ஆனால், என் காதலியின் கண்ணில் என் தகுதியை உயர்த்த நான் விரும்பியதனால், இவற்றைச் சிறிதும் சட்டைசெய்யவில்லை. ஆயினும், என் கண்டிப்பும், இரவுபகல் அயரா உழைப்பும் அவளுக்குக்கூடக் கவலை தந்தன. அடிக்கடி என்னுடன் அவள் எவ்வளவோ நயமாக இவ்வகையில் வாதாடினாள்.
“கடமை, பணி, படிமை உயர்வு என்றெல்லாம் ஓயாது கூறுகிறீர்கள். இவற்றுக்கெல்லாமா நான் உங்களை மணந்து கொண்டேன். நமக்கு இப்போது இருப்பதைவிட இன்னும் குறைந்த செல்வம் இருந்தால்கூட, நான் வருந்தமாட்டேன். நான் விரும்புவது உங்களைத்தான்; உங்களுக்கு அமைதியாக வாழ்வதற்காக நான் வறுமை, கடுஉழைப்பு. எளிய வாழ்வு ஆகிய எதையும் பொருட்படுத்த மாட்டேன். ஆகவே என்மீது இரக்கப் பட்டாவது, இந்த வேலையை உதறித்தள்ளி விடுங்கள். அல்லது மற்றப் பேரைப் போலச் சம்பளத்துக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்வதுடன் அமையுங்கள்,” என்று அவள் ஓயாமல் என்னுடன் வாதாடினாள்; கெஞ்சினாள். என்னை வேலையார்வத்திலிருந்து தன் காதலில் ஈடுபடுத்திச் சிக்கவைக்க அவள் ஆயிரம் இனிய சூழ்ச்சி முறைகளைக் கையாண்டாள்.
அவள் அச்சத்தின் காரணத்தை நான் அன்று உணரவில்லை. அவள் நல்லெண்ணத்தை தூய உள்ளத்தை, தன்மறுப்பு மனப்பான்மையைத்தான் நான் அறிந்தேன். அறிந்த அளவில் அது என்னை என் வழியிலேயே மேலும் ஊக்கிற்று. ஏனென்றால், என் இன்ப வாழ்வுக்காக அவள் எடுத்துக்கொண்ட கவலை, அவள் கடமையுணர்ச்சியை எப்படிக் காட்டிற்றோ, அதே போல, அவள் இன்பத்துக்கான கவலையை மேற்கொண்டு உழைப்பதுதான் என் கடமை என்று நினைத்தேன். ஆகவே, அவள் சொல்லுக்கு நான் மறுப்பு எதுவும் சொல்லவில்லை. நயமாகத் தட்டிக்கழித்து என்போக்கில் மேன்மேலும் முனைந்து வந்தேன்.
கள்ள வாணிகக்காரர் விரும்பும் நாட்கள் மழை நாட்களேயாகும். அப்போது எங்கும் சேறாயிருப்பதனால், பொதுவாகப் போக்குவரவுக்கு இடைஞ்சலானாலும், அதுவே அவர்களுக்குப் பாதுகாப்பாகவும் இருந்தது. அந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதினைந்தாம் நாள்- அந்த நாளை நான் என் வாழ்நாள் முழுவதும் என்றுமே மறக்கமுடியாது- அந்தநாள் அத்தகைய நாளாயிருந்தது- அன்று என் பெயருக்கு ஒரு கடிதம் வந்திருப்பாதாக என் பணியாள் கூறி ஒரு உரையைக் கொண்டு வந்து கொடுத்தான்.
வழக்கமாக என்னை அச்சுறுத்தும் கடிதங்களில் ஒன்றாகவே அது இருக்கக்கூடும் என்று நினைத்தேன். ஆனால், வெளி உறையைப் பிரித்தவுடனே, இது, அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்று என்று கண்டேன். அது என் மேற்பணியாளர் ஒருவரின் கையொப்பத்துடன் அவர் பெயரால்- எழுதப் பட்டிருந்தது. அஞ்சல் பொறிப்போ அதே தேதியில் ஃவோக்ஸ்டன் என்ற இடத்திற்குரியதாயிருந்தது. அவர் இருப்பிடம் அதுவே யாதலால், அவசரமாக எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை ஆவலுடன் வாசித்தேன். அதில் இரண்டு சிறு வாசகங்களில் என் திறமைக்கு நற்சான்றும் பாராட்டும அளிக்கப்பட்டிருந்தது. அடுத்த வாசகத்தில் இப் புகழ்ந்துரைக்குரிய உடனடிக் காரணம் தெரிந்தது.
“இன்றிரவே கள்ள வாணிகச்சரக்கின் பெருந்தொகுதி ஒன்று, ஃவோக்ஸ்டனுக்கும் டோவருக்கும் இடையில் இறக்கப்பட இருக்கிறது. ஆகவே, இரவு பதினோரு மணிக்குள் கடலை யடுத்துள்ள குன்றின் பக்கம் என்னை வந்து சந்திக்கக் கோருகிறேன்,” என்று அம் மேற்பணியாளர் கட்டளை யிட்டிருந்தார். அத்துடன் இச் செய்தியைத் தீர்வைத்துறையில் கூட யாருக்கும் தெரிவிக்க வேண்டாமென்றும், யாரையும் உடன் கொண்டு வராமல் தனியாகவே வரும்படியும் எழுதியிருந்தது.
கடிதம் வந்ததுமுதல் என் கால்கள் நிலத்தின்மீது பதிய வில்லை. நான் நீண்டநாள் காத்துக்கொண்டிருந்த முதல்தர வாய்ப்பு இன்று கிடைத்திருக்கிறது. இன்று நான் காட்டும் திறமையின்மூலம் எனக்குக் கட்டாயம் உச்ச உயர்பணியோ அல்லது அதற்கடுத்த பணியோ கிடைக்கலாம். அத்துடன் புகழும் பாராட்டும் சிறப்பும் கிட்டுவது உறுதி. இவ்வாறு எண்ணிய வனாய் நான் மாலையிலிருந்தே புறப்படுவதற்கு வேண்டிய முன்னேற்பாடுகளெல்லாம் செய்தேன். அகமகிழ்ச்சி யுடன் செய்தேன்; ஆனால், என் இளமனைவியினுடைய கண்கள் அதேசமயம் என்னைக் கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்தன.
அவளைப் பார்க்கப் பரிவிரக்கமாயிருந்தது. நான் சட்டையின் தூசியைத் துடைக்கும்போது, அவள் உள்ளம் துடித்தது. நான் துப்பாக்கியைத் துடைத்து மெருகு கொடுத்தபோது, அவள் நெஞ்சு வெம்பிற்று. இவற்றை யெல்லாம் நான் சிறிதுநேரம் கண்டும் காணாதவனாகவே இருந்தேன். அவள் பக்கம் பார்வையைத் திருப்பினால் என்ன நேரும் என்பது எனக்குத் தெரியும். பகைவரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இல்லாத ஆற்றல்- அச்சுறுத்துக் கடிதங்களுக்கு இல்லாத வலு- அவள் நீல விழிகளுக்கும் அதில் கலங்கும் பனிநீருக்கும் உண்டு என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
அவளை நான் நன்கு அறிவேன். அவள் பெண்தான் ஆனால், கோழையல்ல! என்னை இடரிலிருந்து காக்க அவளைத் துப்பாக்கி ஏந்திக்கொண்டு வரச்சொன்னால் அவள் வரத் தயங்கமாட்டாள். அவளைக் கோழையாக்கியது அவள் என்மீதுகொண்ட அன்பு ஒன்றுதான். இந்த அன்பு என்னை ஒன்றும் செய்யவில்லை. ஆனால், அது அவளை ஒவ்வொரு நாளும் ஆயிரம் ஐயங்களுக்கும் அச்சங்களுக்கும் இரையாக்கியது. இந்த அச்சங்களையும் ஐயங்களையும் நீக்குவதற்கு ஒரே ஒரு வழிதான். அவளிடம் நன்மை தீமைகள் எவற்றையும் ஒளிக்காமல் கூறிவிடுவது ஒன்றே அது.
கற்பனை அச்சங்களும் ஐயங்களும், மெய்யான அச்சங்களையும் ஐயங்களையும்விட அன்புள்ளத்தில் மிகுதி துன்பம் உண்டுபண்ணும் என்பதை நான் அறிந்திருந்தேன். எனவேதான், ‘இன்று என் வீர இளஞ்சிறுவன் எங்கும் வெளியேறவில்லையே’ என்று அவள் என்னிடம் கேலியாகக் கேட்டபோது, அவளிடம் மட்டும் உண்மையைக் கூறிவிட்டேன். உண்மை என்றால் பிறரிடம் சொல்லும் அரைகுறை உண்மை யல்ல. பாசமுள்ளவர்கள், அதிலும் பெண்கள் உண்மையின் ஒரு தும்பைப்பிடித்து மறு தும்புவரை நயமாக இழுத்து வெளிப்படுத்தாமலா இருப்பார்கள்? அவள் கேள்விமேல் கேள்விகேட்டுப் பசப்பி, இறுதியில் கடிதத்தையே வாங்கிப் பார்த்துவிட்டாள்!
தீர்வைத்துறை மேற்பணியாளர்களிடம் மட்டுமல்ல, காவல்துறை மறை வேவுக்காரரிடமும் வழக்கு மன்றத்துமன்று உரைஞரிடமும் நான் குறுக்குக் கேள்விகளுக்கு ஆளானதுண்டு. ஆனால், என் மனைவியின் குறுக்குக் கேள்விகள்போல அவை என்னை அவ்வளவு திக்கு முக்காட வைத்ததில்லை.
“மழையும் புயலும் வாரியடிக்கிறது. வானம் கண்ணையும் முகத்தையும் மூடிக்கொண்டு அலறுகிறது இப்படிப்பட்ட நேரத்தில் யார் வெளியே போவார்கள்? மேற்பணியாளர் நீங்கள் வருவதை எதிர்பார்ப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. அவர்கூட உண்மையில் வெளியேறமாட்டார். ஆகவே, நீங்கள் இன்று போக வேண்டாம்” என்றாள்.
“அவர் வருவதாகக் கூறியிருக்கிறார். என்னையும் வரும்படி கட்டளையிட்டிருக்கிறார். நான் போய்த்தானாக வேண்டும்.”
“ஒரு தடவை மழையைச் சாக்கிட்டுக் கட்டளையை மீறினால் என்ன? தலையையா கொண்டுபோய் விடுவார்கள்? அல்லது வேலையிலிருந்து நீக்கிவிடுவார்களா? அப்படி ஒன்றும் செய்யப் போவதில்லை. உங்களைப் போல இன்னொரு துணிச்சல் பேர்வழி எங்கே கிடைக்கப் போகிறார்கள்?”
“நான் அடையவிருக்கும் உயர்பதவியையும் புகழையும் நீ மறுக்கிறாய். குறைந்த அளவு நீ உன் தந்தை வீட்டில் இருந்த நிலையிலாவது நான் உன்னை வைத்திருக்க வேண்டாமா?”
“இது ஒரு பெரிய காரியமானால், நான் தந்தை வீட்டிலேயே இருந்திருக்கலாம்! நம்மிடம் இப்போதிருக்கும் பணம் போய்விட்டால்கூட, நான் கவலைப்படமாட்டேன். நீங்கள் இப்படிச் சுற்றித்திரிவதில் நான் படும் துன்பம் அதைவிட மிகுதி.”
“இன்று ஒரு நாள் பொறுத்துக்கொள். இனிப் போகவேண்டி வராது.”
“இன்று ஒருநாள் எனக்காகப் போகாமலிருங்கள், இனி ஒருநாளும் நான் இப்படித் தடுக்கமாட்டேன். இன்று நான் உங்களுக்கென்று சுடச் சுட……..”
“என்ன ஆலிஸ், வரவரக் குழந்தையாய் விட்டாய்! என்னையும் குழந்தையென்று நினைத்து விட்டாயா என்ன?”
அவள் சற்றுநேரம் பேசாதிருந்தாள். ஒரு மட்டில் தப்பினோம் என்று நினைத்தேன். ஆனால், கண்களிலிருந்து வடிந்த நீரை அவள், நானும் அறியாமல் மறைக்க முயன்றபோது, என்மனம் துடித்தது.
ஆனால், நான் பேசவில்லை. அவளும் தலைகவிழ்ந்து கடவுள் வழிபாட்டில் ஆழ்ந்திருப்பவர்கள் தம்மை மறந்திருப்பது போல் இருந்தாள்.
ஆயினும் அவள் உள்ளம் சும்மா இருக்கவில்லை. திடுமென அவள் பாயவிட்ட கேள்வி இதற்குச் சான்றுரைத்தது.
“இக்கடிதத்தை உங்கள் மேல்பணியாளர்தான் எழுதி யிருக்கிறா ரென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?”
நான் நிமிர்ந்து பார்த்தேன். வழக்குரைஞரல்ல; இந்தக் கேள்வி கேட்டது. ஒரு பெண்தான்!
“அவர் கையொப்பம், அஞ்சலறிவிப்பு எல்லாம் இருக்கிறதே!”
“உங்களுக்கு அவர் கையொப்பம் தெரியுமா? கையெழுத்துத்தான் தெரியுமா? நீங்கள் அவரைப் பார்த்ததே கிடையாது; அவர் புதிதாக வந்தவராயிற்றே!”
நான் சிறிது நேரம் விழித்தேன். “அவரல்லாமல் வேறு யார் எழுதியிருக்க முடியும்?”
“உங்கள் பகைவர் யாராவது இப்படி எழுதி……”
குறுக்குக் கேள்வி கேட்கும் வழக்குரைஞர் படியிலிருந்து துப்பறியும் புனைகதை எழுதும் புனைகதையாசிரியை ஆய்விட்டாள் ஆலிஸ் என்று நினைத்தேன். நினைப்புச் சிரிப்பாக வெளிவந்தது.
அவள் என்னுடன் சிரிக்கவில்லை.
“அத்துடன் யாரையும் கூட்டிக்கொண்டு வரக்கூடாது, தீர்வைத் துறையிலுள்ள எவரிடமும்கூடச் செய்தி சொல்லப் படாது,’ என்ற வாசகம் தீர்வைத்துறையில் உயர்பணிக்கு வந்துள்ள, ஒருவர், அறிவு நிலைக்கும் முன் எச்சரிக்கைப் பண்புக்கும் முரணாயிருக்கிறது, எனக்கென்னவோ……….!”
அவள் வழக்கமாக முடிக்கும் பல்லவி எனக்குத் தெரியும். சட்டென நான் எழுந்து, “இதையெல்லாம் பெண்களிடம் கூறியதால் வந்த தப்பு. பேசாமல் உன் காரியம் பார்த்துக் கொண்டிரு, போ. நான் வருகிறேன்”, என்றேன். புறப்படும் நேரம் ஆகாவிட்டாலும், நான் புறப்பட்டேன். திரும்பிப் பார்க்கக்கூடத் துணிவின்றி விரைந்து சென்றேன்.
பல அடி முன் சென்றபின் திரும்பி நின்று பார்த்தேன்.
பெண்ணினத்தின் பரிவு முழுதும் அவள் கண்ணில் குடிகொண்டிருந்தது. அவள் சலவைக்கல்லால் செய்த சிலைபோல அசைவற்று நின்றிருந்தாள்.
அவள் நின்ற காட்சி என் உள்ளத்திலிருந்து என்றும் அகலவே யில்லை. அன்று அவள் சொற்கள்- அவள் கலக்கம்- அவள் இறுதியில் நின்ற காட்சி- அத்தனையும் என் மனக்கண்முன் நின்று அங்குலம் அங்குலமாக வருத்தின. என் வீர உள்ளத்தின் அறிவுத் தெளிவைவிட, அவள் அன்புள்ளத்தில் அறிவுத்தெளிவு மிகுதி அகன்றிருந்தது என்பதை நான் ஒரு தடவை சாகாதவண்ணம் செத்துத்தான் அறியவேண்டி வந்தது. நான் மட்டும் அன்று அவள் சொல்லுக்குச் செவி சாய்த்திருந்தால்….."
தெருக்கள் எங்கும் சாக்கடையில் குமிழியிட்டு ஓடும் நீரோட்டத்தின் அரவம் தவிர வேறு ஓசையில்லை. என்கால்கள் சேற்றில் பதிந்தபின் வெளியேறும்போது ஏற்பட்ட அரவம் அதற்குத் தாளமிட்டது. தெரு விளக்குகளில் ஒன்றிரண்டு மங்கலாய் எரிந்தன. மற்றவை குளிரினால் அவிந்து போயிருந்தன. நகர் கடந்தபின் வெள்ளைச் சுண்ண மண்ணாலான நிலமுழுவதிலும் நீர் தோய்ந்து எங்கும் சறுக்கிற்று. சமநிரப்புக் கடந்து குன்றின் சரிவில் ஏறும்போது இன்னும் கடுமுயற்சி தேவைப்பட்டது. மேடு பள்ளங்கள் மிகுதியாயிருந்தன. இறுதிக் கட்டத்தில் சாய்வான புல்பரப்பில் கால்களாலும் கைகளாலும் தவழ்ந்தே செல்ல வேண்டியதாயிற்று. கடைசியாகச் சந்திப்பிற்குக் குறிக்கப்பட்ட இடமாகிய பாறையின் உச்சியை அடைந்தேன்.
இந்த இடத்தை நான் நன்கு அறிவேன். கடலின் திசையிலுள்ள அதன் பக்கம் செங்குத்தாகக் கடலலைகள் மீது நின்றது. அதன்மேல் அடிக்கடி கடலோட்டிகளுக்கு உதவியாகத் தீப்பந்தங்கள் வளர்க்கப்படும். அவை கடலில் பல கல் தொலை ஒளி வீசிக் கரையோர அறிகுறியாக நிலவும். அதை ஒரு கவிஞன் பாடியிருந்த காரணத்தால், அதற்குக் கவிஞன் பாறை என்று பெயர் வழங்கியிருந்தது. கள்ள வாணிகக்காரருக்கு அது ஒரு முக்கியமான சரக்கிரக்கும் இடமாகவும், சந்திப்பிடமாகவும் இருந்தது.
நான் சிறிதுநேரம் முன்னும் பின்னுமாக அந்தப் பாறைமீது நடந்தேன். கடற்பக்கம் சென்று பாறை விளிம்பிலிருந்து கடலை எட்டிப்பார்த்தேன். இருட்டில் ஒன்றும் தெரியவில்லையானாலும் அலைகளின் ஓசை அருகே கேட்டது. மிகு தொலைவில் எங்கோ உள்ள ஒரு கரையோரப் பந்தம் சிறு செம்புள்ளியாய் ஒருகணம் தெரிந்தது. ஆனால் மறுகணம் அது ஒரு முகில் திரளுக்குள் மறைந்தது. வேறு ஒளிகளோ மனித நடமாட்ட அடையாளமோ எதுவுமில்லை. என்னையறியாமல் என் உள் எலும்புகளினூடாக ஒரு நடுக்கம் ஏற்பட்டது. வழக்கமான என் நெஞ்சுரம், இன்று ஏன் என்னிடம் செயலாற்றவில்லை என்று என்னை நானே கண்டித்துத் திடப்படுத்திக்கொண்டேன்.
இரண்டொரு விநாடிகள் இவ்வாறு கழிந்தன. குன்றின் சரிவில் எதோ கருந்திரள்கள் தெரிந்தன. சிறிது நேரத்தில் அவை சரிவுகடந்து நான் இருந்த மேட்டு விளிம்பு தாண்டி வானவெளியின் பின்னணியை ஊடுருவி எழுந்தன.
அவை புதர்களா, மனிதர்களா என்று பின்னும் சற்றுத் தயங்கினேன். அத்திசையிலிருந்து எழுந்து அடங்கிய முணுமுணுப்புக்குரல், அவர்கள் மனிதர்களே என்பதைப் புலப்படுத்திற்று. இது என் மேற்பணியாளரும் அவர் ஆட்களுமாகவே இருக்கவேண்டும் என்று நினைத்தேன். உருவங்கள் சற்று அருகே வந்ததும், ‘வணக்கம், அன்பர்களே’ என்று வரவேற்க முனைந்தேன். எதிர்வணக்கம் எதுவுமில்லை.
உருவங்கள் பேச்சு மூச்சில்லாமலே மெல்ல என்னை நோக்கி நகர்ந்தன.
அவர்கள் கள்ள வாணிகக்காரராயிருப்பார்களா? மேற்பணியாளர் வரவறிந்து அவர்கள் வந்திருக்கிறார்களா? அல்லது தற்செயலாக வந்திருக்கிறார்களா?
இன்னொரு அச்சந்தரும் எண்ணமும் மின்னலென என் உள்ளத்தில் பாய்ந்தது. என்னை அழைத்தது இவர்களே ஆயிருக்கக்கூடுமா? கடிதம் என் இளமனைவி அஞ்சியபடி என்னை அகப்படுத்தவைக்க ஏற்பாடு செய்த பொறியாகக்கூட இருக்குமா?
எனக்கு உண்மையிலேயே நடுக்கம் ஏற்பட்டது. வேறு எந்த இடமானாலும் வேளையானாலும் நான் அஞ்சி இருக்க மாட்டேன். அந்த இடத்திலும் வேளையிலும் தனியாக எதுவும் செய்யமுடியாது. மேலும் என்னைச் சூழ்ந்து கொள்வகதற்காக அவர்கள் பிரிந்து பரந்தபோது அவர்கள் இருபதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் கண்டேன்.
அவர்கள் எனக்குச் சிந்திக்கவே நேரம் கொடுக்கவில்லை. இம்மெனுமுன் நான் நிலத்தின்மீது வீழ்த்தப்பட்டேன். பத்துப்பன்னிரண்டு பேர்கள் என் துப்பாக்கி கத்தி ஆகியவற்றை அகற்றி என்னை வரிந்துகட்டினர்.
‘அடே! ஆள் ஒருவகையில் கடைசியாக அகப்பட்டான்!’ என்றது ஒருகுரல்.
‘வெட்டு’ ‘கொல்லு’ ‘மண்டைய உடைத்து அவன் மூளையை மீன்களுக்கு இரையாக்குவோம்’! ‘கடலில் தூக்கி எறியுங்கள்’! என்று பல கருத்துரைகள் வீசப்பட்டன.
‘போதும், நிறுத்துங்கள்’ என்றது ஒருகுரல். அது தலைவன் குரலாயிருக்கவேண்டும்! ஏனென்றால் உடன் தானே எல்லாரும் வாயடைத்துக் கையடக்கி நின்றனர்.
‘இரண்டு மூன்று பேர் சேர்ந்து இவனைத் தூக்கி நிறுத்துங்கள். நான் ஒளிப்பந்தத்தை அவன் முகத்தின் முன்காட்டி ஆள் அவன்தானா என்பதை ஐயத்துக்கிடமில்லாமல் முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்,’ என்றான் அவன்.
நான் எவ்வளவு திமிறியும் அவர்கள் கட்டுடன் என்னைத் தூக்கிப் பிடித்தனர். பந்தம் என் முகத்தினருகே காட்டப்பட்டது. ஒளியும் வெப்பமும் தாங்க முடியாமல் நான் கண்களை மூடினேன்.
‘ஆள் இவன்தானடா’ என்று கூவின பல குரல்கள்.
நான் சற்றே கண்களைத் திறந்து பார்த்தேன். காலன் தூதுவர்போல அச்சந்தரும் பல உருவங்கள் என்னைச் சூழ்ந்து நின்றன. அவர்கள் அனைவர் இடையிலும் கொடுங்கத்திகளின் பித்தளைப்பிடிகள் பளபளத்தன. ஒன்றிரண்டு பேரிடம் கைத்துப்பாக்கிகளும், தலைவனிடம் துப்பாக்கியும் இருந்தன. ஆனால், ஒருவரைக்கூட என்னால் அடையாளம் காண முடிய வில்லை. அவர்கள் அனைவரும் முகத்தைக் கருந்துணியாலான முகமூடியால் மறைத்திருந்தனர்.
‘ஆம். ஆள் இவன்தான். ஆல்ஃவிரட் ஹார்வி. நம்மை எல்லாம் பலநாள் அச்சுறுத்திவந்த புலி!’ என்றான் தலைவன்.
அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.
“இவன் மக்கள் பகைவன். கொஞ்சமும் மூளையில்லாமல் நம்மை எதிர்த்தழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தான். இப்பொழுது தன் உயிருக்குத் தானே உலை தேடிக்கொண்டான்.” என்றான் தலைவன்.
“ஆம்; ஆம்; இவனை விடப்படாது. வெட்டு, கொல்லு! வதை! நீரில் ஆழ்த்து! கொன்று உடலைத் துண்டு துண்டாக்கி மீனுக்கு இரையாகப் போடு,” என்று வெஞ்சீற்றக் குரல்கள் மீட்டும் எழுந்தன.
பேச்சுமட்டுமல்ல, அவர்கள் ஆத்திரத்தை எனக்குக் காட்டியது! என்னைப் பிடித்திருந்தவர்கள் பூனை தன் கையிலகப்பட்ட எலியைக் குலுக்கி ஆட்டுவதுபோல ஆட்டினர். உடலின் பல பாகங்களிலும் குத்துகள், உதைகள், அடிகள் விழுந்தன.
என் இளமனைவியின் அன்பு எச்சரிக்கையை அசட்டை செய்த என் முட்டாள்தனத்தை ஒவ்வொரு அடியும் குத்தும் உதையும் எடுத்துரைப்பவை போல இருந்தன.
‘ஏன் இன்னும் தாமதம்? அவனைச் சுட்டுத் தள்ளுங்கள்,’ என்றான் தலைவன்.
‘சுடவேண்டாம். குத்திச் சந்து சந்தாக வெட்டுங்கள்,’ என்றது ஒரு குரல்.
‘அடித்துச் சாகடியுங்கள்,’ என்றது மற்றோர் குரல்.
பல கருத்துரைகளுக்கிடையில் என் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.
தலைவன் குரல் எல்லாக் குரலையும் அடக்கி எழுந்தது: "நீங்கள் கூறுவதெல்லாம் எளிதான சாவுகள். இவனுக்கு அவை தகாது. தூக்கிட்டுக் கொல்வதுதான் சரி.’
‘ஆம். அதுதான் சரி’ என்றன பல குரல்கள்.
‘கடலின்மீதே பாறையின் உச்சியில் தூக்குவோம்.’
மீண்டும் தலைவன் குரல்: ‘படபடப்பு எதுவும் தேவையில்லை, தோழரே. தண்டிக்கத்தான் போகிறோம். அவன் தன்பக்கம் என்ன சொல்கிறான் என்று பார்த்துப் பின் தண்டிப்போம்.’
என் வாயடைப்புமட்டும் விலக்கப்பட்டது. மீட்டும் ஒளிப் பந்தம் என் முன்- இத்தடவை சற்றுத் தள்ளிகாட்டப்பட்டது.
’ஆல்ஃவிரட் ஹார்வி, உன் பக்கமாக உன் குற்றங்களுக்கு ஏதாவது விளக்கம் கூறுவதாயிருந்தால் கூறலாம்," என்றான் தலைவன்.
அவன் பேச்சில் நயநாகரிகமே அவனிடம் எனக்கு மற்றவர்களைவிட மிகுதி அச்சத்தை உண்டுபண்ணிற்று.
நான் என்ன சொன்னால் என்ன? சாவது உறுதி. ஆகவே, நான் என் ஆண்மையை முற்றிலும் வரவழைத்துக் கொண்டேன், ஆனால், மனத் துயருடன், வெப்பத்துடன் பேசினேன்:
“நான் என் கடமையைச் செய்தேன். நான் யார் மீதும் பகைமை காட்டவில்லை. என் இடத்தில் எந்த நாணயமான பணியாளனும் என்னைப் போலத்தான் நடந்து கொள்வான். இப்போது நேர்மையற்றவர்கள் என்றீர்கள். நேர்மையாளர் கைப்பட்டால் உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை நேர்மையற்றவர் கைப்பட்ட எனக்கும் கிடைத்தது. நேர்மைக்கான இந்தத் தண்டனையை நான் பெருமையுடன ஏற்கிறேன்.”
“அடே, நம்மிடம் அவர்கள் கொடுங்கோன்மைச் சட்டம் பேசுகிறான். சட்டம்! ஒழிடா இவனை, விரைவில் ஒழி!” என்றன பல குரல்கள்.
என் நெஞ்சம் பின்னும் திடுக்கிட்டது.
“ஆல்ஃவிரட்ஹார்வி, நீ மற்றவர்களைவிடக் கடமை யறிந்தவன். மற்றப் பணியாளர்களுக்குத் தரப்படும் பொது முறைத்தண்டனை உனக்குப் போதாது. உனக்குத் தனித் தண்டனை தருவேன். நீ அந்தக் கிணற்றுப் புகலிடத்தில் எங்களைச் சூறையாடவில்லையென்றால், உனக்குப் பிறருக்குரிய தண்டனையே தந்திருப்பேன். இப்போது உன்கையில் கழுத்தைச் சேர்த்துக்கட்டி மீனுக்கு இரையாக எறியவேண்டும் என்று தண்டனையை மாற்றுகிறேன்,” என்றான் தலைவன்.
“கடல் வேலி இறங்கும் நேரமாயிருக்கிறதே!” என்றான் ஒருவன்.
“அதுவும் நல்லதாயிற்று. நீரில் மெத்தென விழுவதற்கு மாறாக, பாறையில் கணீரென விழட்டும், முதலில்! பின் அலைகளுடன் மீன் வந்து நல்ல விருந்து கொள்ளட்டும்,” என்று கூறினான் தலைவன்.
அனைவரும் அதனைக் கைகொட்டி வரவேற்றனர்.
என் உடலில் எல்லாப் பகுதியும் கட்டப்பட்டது. வாய் அடைப்பு மட்டும் எடுக்கப்பட்டது. இருவர் என்னை இருபுறம் நீரிறைக்கும் கூடையைப்போல் பிடித்துத் தூக்கி ஊசலாட்டினர். “நான் ஒன்று, இரண்டு எனக் கூறி மூன்று என்றவுடன் எறியுங்கள்,” என்று தலைவன் திட்டம் வகுத்துரைத்தான்.
“ஒன்று!”
அவர்கள் என்னை முன்னும் பின்னுமாக ஊசலாட்டத் தொடங்கினார்கள். சாவின் பிடியில் நான் திணறினேன்.
“இரண்டு!”
ஊசலாட்டம் வேகமாயிற்று. அடுத்த கணம் என் உயிர் பிரிந்துவிடும் என்ற நிலையில் என் உள்ளம் வேகமாகச் சிந்தித்தது. அந்த ஒரு கணத்துக்குள் என் இளமனைவியின் முகம்- என்னை எதிர்பார்த்து அவள் அடைய இருக்கும் இன்னல்- எங்கே எப்போது என்னவகையில் இறந்தேன் என்றுகூட அறியாமல் அவள் படக்கூடும் வேதனை- இவ்வளவும் மின்னலினும் வேகமாக ஓடின. நான் வாய்விட்டு அலறினேன்!
“ஆ. லூஸி! உன்னையும் நம் குழந்தையையும் இனிக்கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!” என்று என் இறுதி மூச்சாகக் கூறினேன்.
“மூன்று” என இன்னும் கூவப்படவில்லை. ஆனால், அதற்குத் தலைவன் வாயெடுத்தாய் விட்டது. அதற்குள் என் இறுதி வாசகம் அங்கிருந்த அனைவர் உள்ளத்திலும் மின்சாரம் போல் பாய்ந்தது. அனை வரும் ’ஆ! என்று ஒருமிக்கக் கூவினர். என்னை ஊசலாட்டியவர்கள் கைகூடச் சட்டென நின்றுவிட்டது.
இச்சமயம் “மூன்று” என்றான் தலைவன்.
என் உடல் வீசியெறியப்படவில்லை. நான் வியப்படைந் தேன். ஆனால், இன்னது செய்தி என்றறியாமல் மலைப்புற்றேன்.
கூட்டமுழுதும் ஒரே முணுமுணுப்பு, ஒரே பரபரப்பு. ஆனால், தலைவன் வாய் திறக்கவில்லை.
“எனக்கு இந்தப் பழி வேண்டாம்,” என்றான். என்னைத் தூக்கி வீசக் காத்திருந்த இருவரில் ஒருவன்.
“அந்த லூஸியை ஜிம் பார்த்திருக்கிறானாம், அண்ணே! பெரிய வீட்டுப் பெண்தான். ஆனால், எல்லாரிடமும் பாசமுள்ள வளாம். அவளை நினைக்க வேண்டாமா?” என்றது ஒரு குரல்.
“ஆம் அண்ணே. நான் குழந்தையைக்கூட ஒரு நாள் எடுத்துக் கையில் வைத்திருக்கிறேன். அதன் சிரித்த முகம் என்கண்முன் நிற்கும்போது, அதன் அப்பனை எப்படி நான்…..?”
தலைவன் சீறினான்:
“உங்கள் நெஞ்சு இத்தனை கோழைத்தனம் வாய்ந்தது என்று நான் எண்ண வருந்துகிறேன்.”
“என்னவோ, எங்களுக்கும் பிள்ளை குட்டிகள், பெண்டாட்டிகள் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் நாம் எல்லாம் கொலைகூடப் பண்ணுகிறோம். அதை நினைப்பது கோழைத்தனமானால், நாங்கள் கோழைகளாகவே இருக்க விரும்புகிறோம்,” என்றனர் சிலர்.
“சரி, எல்லாரும் இவனை விட்டுவிட்டு அப்பால் வாருங்கள்,” என்றான் தலைவன்.
தலைவன் பிறர் மனத்தை மாற்ற எண்ணுகிறான் என்பது எனக்குத் தெரியாமலில்லை. ஒரு சாவிலிருந்து தப்பினோம். மறுசாவு என்ன வடிவில் வருமோ என்று கவலையுடன் ஒற்றுக் கேட்டேன். அவர்கள் தொலைவில் மெள்ளப் பேசினதால், எனக்கு எதுவும் தெளிவாகக் கேட்கவில்லை.
அவர்கள் திரும்பி வந்தனர்.
தலைவன் பேசினான். அதுதான் அவர்கள் தீர்ப்பின் முடிவு என்று தெரிந்துகொண்டேன்.
“ஆல்ஃவிரட் ஹார்வி, உனக்குப் பிழைக்க ஒரு வாய்ப்பு அறிவிப்பதென்று ஒத்துக்கொண்டிருக்கிறேன். நீ அழைத்த கடவுளிடமே உன்னைக் காப்பாற்றும் பொறுப்பை விட்டிருக்கிறோம். உன்னை நாங்களாக மீன்களுக்கு இரையாக எறியப் போவதில்லை; தூக்கிடவும் போவதில்லை; பாறையைப் பற்றிக் கொண்டு கடலின்மீது தொங்கவிடப்போகிறோம். நீயாக உறுதியாகப் பிடித்துக் கொண்டு இருந்தால், காலையில் போவார் வருவார் யாரையாவது கடவுள் அனுப்பி உன்னைக் காப்பாற்றுவார். இத்துடன் எங்கள் பொறுப்பு முடிந்தது. நாங்கள் போகிறோம்,” என்றான் அவன்.
என்னை இப்போது பல கைகள் தூக்கின. என் வாய் மீட்டும் அடைக்கப்பட்டது. கண்கள் இறுக்கப்பட்டன. எவ்வளவு தொலை தூக்கிச் சென்றனர் என்று எனக்குத் தெரியாது. ஆனால், சிறிதுநேரத்தில் அவர்கள் நின்றனர். பாறையின் அருகுக்கு வந்துவிட்டதாக உணர்ந்தேன்.
என்னைப் பாறையின் அருகுக்கு அப்பால் தொங்கும்படி செய்து அதன்பின் கைக்கட்டு மட்டும் அவிழ்த்தனர். சாகிறவன் அகப்பட்டதைப் பற்றுவதுபோல நான் பாறை விளிம்பைப் பற்றினேன். அவ்வளவுதான். அவர்கள், தம் பிடியை விட்டு விட்டனர். நான் இரங்கத்தக்க நிலையில் வெட்டவெளியில் ஒரு விரல் பிடியை மட்டும் பற்றுக்கோடாகக்கொண்டு தொங்கினேன். ‘வலிவாகப் பிடித்துக்கொள் ஹார்வி’ என்று தொலைவிலிருந்து அவர்கள் பேசிய குரல்தான் அவர்கள் சொல்வதை எனக்கு அறிவித்தது.
என் வாய் மூடப்பட்டிருந்தது. நான் வாய்விட்டுக் கதறமுடியவில்லை! என் கண் மூடியிருந்தது. நான் எதுவும் பார்க்க முடியவில்லை.
வேறு உணவை நாடிச்செல்லும் பூனை, அடித்த எலியை விட்டுவிட்டுப் போவதுபோல் அவர்கள் போனார்கள். இதை விடச் சுட்டிருந்தால், தூக்கிலிட்டிருந்தால் எத்துணையோ நன்றாயிருந்திருக்கும் என்று நான் நினைத்தேன். என் கை நரம்புகளின்மீது உடலின் பளு முழுதும் தாக்கினதால் அவை ‘விண்விண்’ என்று தெறித்தன. பின் தோளும் தலை நரம்புகளும் விம்மி அதிர்ந்தன. காதுகள் இரண்டிலும் வண்டுகள் குடைந் தாற் போன்ற இரைச்சல் உண்டாயிற்று. குருதி தலைக் கேறுவதா லுண்டான இந்த இரைச்சல் நின்றபின் கையிரண்டும் மரத்துப் போவது போன்ற உணர்ச்சி தொடங்கிற்று. எங்கே கைநரம்புகள் முற்றிலும் செயலற்றுவிட்டால் விழுந்துவிடப் போகிறேனோ என்ற கிலி ஒவ்வொரு கணமும் என்னை வாட்டி வதைத்தது.
உடல் பாதி செத்துவிட்டது; ஆனால், சாகும் மனிதன் வேகத்தில் நாடி நரம்புகளும் மூளையும் வேலை செய்தன. என் வேதனைப்பட்ட உள்ளம் லூஸியிடமும் குழந்தையிடமும் சென்றது. ‘அவர்கள் என்ன துன்பப் படுகிறார்களோ? யார் அவர்களுக்கு ஆறுதல் கூறப்போகிறார்களோ? ஆதரவு செய்பவர்கள் யாரோ? அந்தோ லூஸி. என்னை மணப்பதற்கு மாறாக வேறு யாரையேனும் மணந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்குமே’ அவள் நாள்தவறாமல் இந்த வேலையை விட்டொழித்துவிடு என்றாளே! கேட்டோமா? ‘இன்று போக வேண்டாம் என்றாளே. அவள் சொற்படி வராதிருந்திருந்தால்….. இனி இவை எல்லாம் நினைந்து யாது பயன்?’ என்று எண்ணினேன்.
நகரக் கோயிலின் மணி அருகிலிருந்து அடிப்பது போல ‘டாங், டாங்’ என்று அடித்தது. நான் அந்த நிலையிலும் மணியை எண்ணினேன். பன்னிரண்டு அடித்திருந்தது. இன்னும் விடிய ஆறு மணி நேரம். ஆள் நடமாடப் பின்னும் இரண்டு மணி நேரம் பிடிக்கும். ஏற்கெனவே மெய் முழுதும் உணர்வற்றுக் கை நரம்புகளும் விரல்களும் எரிகின்றன. இனி, நெடுநேரம் இந்த நரக வெப்பைத் தாங்க முடியாது. கைப்பிடியைவிட்டுக் கீழே விழுந்து இறந்தாலும் சாவு மூலம் அதிலிருந்து விடுதலை கிட்டுமே என்று எண்ணினேன்.
உடல் நலிவுற்ற நேரத்திலும், மூளை ஆராய்ச்சியில் இறங்கத் தவறுவதில்லை. இப்போது கடல் வேலி இறக்கமாதலால், கீழே விழுந்தால், பாறையில் விழுந்து உடல் நொறுங்கும். இதில் உடனடிச் சாவு வரா விட்டாலோ இப்போதிருக்கும் வேதனையை விட நெடுநேரம் மிகுந்த வாதனைப் படவேண்டியிருக்கும். ஆகவே, விழுந்து சாக விரும்பினால்கூட, கடல் வேலி பொங்கும் சமயம் பார்த்து விழுந்தால்தான் நோவற்ற சாவு கிடைக்கும். சாவு கொடியதாயினும், நோவுடன் சாவு அதனினும் கொடிது என்பதை அச்சமயம் நான் நன்றாக உணர்ந்தேன். எப்படியும் கடல் பொங்கிவரும்வரை, அதாவது நாலுமணிவரை பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருப்பது என்று துணிந்தேன்.
கணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊழியாகச் சென்றது, எனக்கு! இப்படி எத்தனை ஊழிகள் பொறுத்திருந்தேன் என்று தெரியவில்லை. என் உடலின் ஆற்றல் கேடு என் துணிவை வென்றது. இருந்தாலும் சரி, பிழைத்தாலும் சரி. இனி ஒரு கணம்கூட இந்த உயிர் நோவைப் பொறுத்துத் தொங்கமுடியாது என்ற நிலையை எட்டினேன். சாவோ நரக வேதனையோ எதற்கும் துணிந்து ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு கைப்பிடியை விட்டேன்.
நான் வெட்டவெளியில் கீழ்நோக்கி விழுந்தேன்.
விழுந்து நொறுங்கப் போவதாக எண்ணினேன்- விழுந்தேன்- விழுந்துகொண்டிருந்தேன்- அவ்வளவுதான் எனக்குத் தெரியும். சாவின் முன்வரும் உணர்விலாத அமைதி என்னை அணைத்ததுபோல இருந்தது.
ஆனால், நான் என்ன காரணத்தாலோ சாகவில்லை. என் உடல்மேல் காற்றுப்படுவது எனக்குத் தெரிந்தது. நான் நீரிலில்லை என்பதை இது காட்டிற்று. நிலம் ஈரமாயிருந்தது. இன்னும் கடலருகிலேயே கிடக்கலாம் என்று கருதினேன். கண்மீது வெயில் எறிப்பதை உணர்ந்தேன். கண்ணைத் திறக்க முயன்றேன். முடியவில்லை. ஆனால், கண்மீது கட்டு இருந்ததாகத் தெரிய வில்லை. கையை அசைத்துப் பார்த்தேன். அசைந்தது. ஆனால் தூக்க முடியவில்லை. கட்டு எதுவும் இல்லை என்று மட்டும் உணர்ந்தேன்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், நீடித்துச் சிந்திக்கவும் முடியவில்லை. நான் மீட்டும் உணர்விழந்தேன்:
மீட்டும் சற்று உணர்வு வந்தபோது என் பக்கத்தில் மனிதர் குரல் கேட்டது. ஆனால், அது தொலைவிலிருந்து பேசுவது போலத்தான் இருந்தது. என் வாயில் ஏதோ ஊற்றப்பட்டது. கைகளிலும் உடம்பிலும் ஏதோ சூடு தட்டுப்பட்டது. நான் கண்களைத் திறந்தேன். முதலில் நான் நீலவானைக் கண்டேன். பின்பக்கத்தில் திரும்பியபோது இரண்டு மாமனிதர்கள் என்னருகில் இருப்பது கண்டேன்.
“இன்னும் சற்று ஓய்வாகப் படுத்துக்கொள்ளுங்கள் அன்பரே! உங்கள் கண் திறந்தது கண்டு மகிழ்ச்சியடைகிறோம். இந்த இடத்துக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள் என்பதுதான் தெரியவில்லை.” என்றார், இருவரில் ஒருவர். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன்; கடலும் இல்லை, பாறையும் இல்லை; நான் சுண்ணம் வெட்டியெடுக்கும் குழி ஒன்றில்தான் கிடந்தேன்.
“இங்கே எப்படி வந்தாய்? இந்தக் குழிக்குள் எப்படி விழுந்தாய்?” என்று கேட்டார் ஒரு நண்பர்.
அப்போதுதான் இரவு முழுவதும் நான் பட்ட துன்பத்தின் உண்மை வடிவம் எனக்குப் பளீரென்று விளங்கிற்று. என்னைக் கள்ள வாணிபக்காரர் தொங்க விட்டது. கடல்மீதுள்ள பாறையில்லை. அதன் அடிவாரத்திலுள்ள ஒரு சுண்ணக்குழியின் அருகிலேதான். நான் தொடக்கத்திலேயே பிடியை விட்டிருந்தாலும் செத்திருக்கமாட்டேன். ஆனால், அச்சம் என்னைக் கோழையாக்கியிருந்தது. அவர்கள் என்னிடம் காட்டிய இரக்கத்திலும் இத்தனை கேலிக்கொடுமை இருந்தது.
நான் சாகாமல் செத்து, பிழைக்காமல் பிழைத்தேன்.
ஆனால், பழைய ஆல்ஃவிரட்ஹார்வி மீண்டும் பிழைக்கவே இல்லை. லூஸியின் சொற்களை மறுத்துக் கடமையைப் பின்பற்றிய ஹார்வி, கள்ளவாணிகக்காரர்மீது போர்தொடுத்துப் புகழ்ஏணியின் உச்சி ஏறத்துடித்த ஹார்வி செத்துவிட்டான்.
புகழுக்கு மாறாக இகழ்- பிறர் மதிப்பைப் பெறுவதற்கு மாறாக என் லூஸியின் மதிப்பையும் என் மதிப்பையும் இழந்த நிலை- லூஸிக்குத் தக்க உயர்பதவிக்கு மாறாக, அவள் வாழ்வையே மடத்துணிச்சலுக்கு இரையாக்க இருந்தநிலை, இவை பழைய ஹார்வியைக் கொன்றழித்துப் புதிய ஹார்வியை உண்டு பண்ணின.
நான் என் தீர்வைப் பணியைத் துறந்துவிட்டதாகக் கடிதம் எழுதிய பின்பே லூஸியிடம் சென்றேன்.
அந்த முடிவை லூஸியிடம் தெரிவித்தபின்பே, அவள் கையிலிருந்த குழந்தைக்கு முத்தம் தந்தேன்.
மேற்பணியாளர்கள் வியப்படைந்தனர்; வற்புறுத்தினர்; வருந்தியழைத்தனர். நான் என் உடல்நிலைக்கு அந்தப்பணி ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறி மறுத்து விட்டேன்.
என் முடிவின் காரணத்தை அறியாமலே, என் பழைய பணியை மதித்து எனக்கு வேறு அமைதியான பணியும், சில பரிசுகளும் தரப்பட்டன. அதைக்கூட நான் லூஸியிடம் பெருமையாகக் காட்டவில்லை.
லூஸி அடிக்கடி கேட்பாள்: “நீங்கள் அடைந்த மாற்றத்தினால் எனக்கு வாழ்வளித்தீர்கள். அமைதி அளித்தீர்கள். ஆனால், அந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது ஒரே நாளில்?”
“இதோ அதன் காரணத்தை நீயே கூறிவிட்டாய்! எனக்கு வாழ்வளிப்பவள் நீ. உனக்கு வாழ்வளிப்பவன் இதோ நம் செல்வம். இருவர்க்கும் வாழ்வளிக்கத்தான் அந்தச் சனியான தொழிலை விட்டேன்!”
“சரி. எப்படிக் கிடைத்தாலும் சரி இனிப்பு மாம்பழம் எப்படிக் கிடைத்தாலென்ன? தின்னக் கிடைத்தால் போதும்,” என்று அவள் என் கையைக் கிள்ளினாள்.
ஏதோ அதனால் நான் காயமடைந்துவிடுவேனோ என்று. என் ‘செல்வம்’ லூஸியுடன் வீரமாகப் போராடத் தொடங்கினான்.
என்னைக் காத்த செல்வத்தையும், அந்தச் செல்வந்தந்த செல்வத்தையும் காப்பதில் என் புதிய கடமையைக் கட்டுப் படுத்திக்கொண்டு விட்டேன்.
கிரேக்க அடிமை
என்னிடம் ஒரு கிரேக்க அடிமை இருந்தான். அவன் திடமான உடல் உடையவன். நன்றாக வேலை செய்வான். எவரிடமும் அன்பாகப் பழகுவான். யார் என்ன சீற்றம் காட்டினாலும், வாய் பேசாது இருப்பான். ஆனாலும் அவனிடம் ஒரே ஒரு குறை இருந்தது. அவன் சிரித்தோ முகமலர்ச்சி யடைந்தோ நான் கண்டதில்லை.
எனக்கு இந்த அடிமையிடம் மிகவும் பரிவும் பாசமும் ஏற்பட்டது. கிரேக்கரின் இலக்கியப் பெருமைகளை நன்கு சுவைத்துத் துய்த்த நான், ஒரு கிரேக்கன் இப்படி அடிமையா யிருப்பதை விரும்பவில்லை. அத்துடன் அடிமையாக வாழும் வாழ்வில் கசப்படைந்துதான் இந்தப் பழங்குடி மரபாளன் நகையிழந்து வாடுகிறான் என்று எண்ணினேன்.
ஒருநாள் அவனைக் கூப்பிட்டு, “தம்பி, நீ எவ்வளவோ நல்லவனாக இருக்கிறாய். என்னிடம் நீ எவ்வளவோ நாணயமாகவும் நடந்திருக்கிறாய். ஆகவே நான், உன் அடிமைத்தனத்தை நீக்கி உன்னை நண்பனாகக் கொண்டு, நல்வாழ்வு வாழும்படி உதவி செய்யப்போகிறேன்,” என்றேன்.
அப்போதாவது அவன் கட்டாயம் முகமலர்ச்சியடைவான் என்று கருதினேன். ஆனால், அவன் முகம் தூக்குத்தண்டனை பெறுபவன் முகம்போலக் கறுத்துத் துயரடைந்தது கண்டு வியப்படைந்தேன்.
“ஐயனே! நான் அடிமையாகப் பிறக்கவில்லை. வறுமையும் வாழ்வும் கண்டுவிட்டேன். ஆனால் அடிமையாகத்தான் நான் இருக்கத் தீர்மானித்து விட்டேன் உங்களிடம் அடிமையாகவே வாழ்ந்து இறந்தால் எனக்குப் போதும். அதற்குமேல் எனக்கு ஒன்றும் வேண்டாம். அருள்கூர்ந்து என் அடிமையை நீக்கவேண்டாம். உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்தை மாற்றிக் கொண்டாலல்லாமல் நான் அமைதியடைய மாட்டேன்,” என்றான் அவன்.
அவன் விரும்பியபடியே நான் என் கருத்தை மாற்றிக்கொண்டு விட்டேன். ஆனால், அவன் மனப்பான்மை எனக்குப் பெரும் புதிராயிருந்தது. அதை அறிய ஆவல் கொண்டேன்.
“தம்பி, அடிமையாயிருக்க யாரும் விரும்பமாட்டார்கள். அடிமையாகவே பிறந்தவர்கள்கூட அதை ஒழிக்க வாய்ப்பு நேர்ந்தால் துள்ளிக் குதிப்பார்கள். நீ ஏன் அடிமையாகவே இருக்க விரும்புகிறாய்?” என்று கேட்டேன்.
“நான் செய்த பழிகள் அத்தனை, ஐயனே! அவற்றின் பயனாகத்தான் அடிமையானேன். ஆனால், அடிமையான பின் எனக்கு அமைதி கிடைத்தது. அடிமையாகப் பல தொல்லை களுக்கு ஆளாவதனால் எனக்கு இன்னும் மன நிறைவு ஏற்படுகிறது. ஏனென்றால், நான் செய்த பழிகளுக்கு இவை தக்க தண்டனை என்று நினைக்கிறேன். தண்டனை பெறுவது ஒன்றினால்தான் என் பழிகளின் வன்மை குறையக்கூடும். என் பழிகள் யாருக்கும் தெரிய வராமலும், அவற்றால் எனக்கு இகழ் இல்லாமலும் இருந்தாலும், என் உள்ளம் என்னை மதிக்க வேண்டுமானால், தண்டனைகள் மூலம் நான் அவற்றின் கோர நினைவுகளைக் கழுவியாகவேண்டும்,” என்றான்.
இச்சொற்கள் அவன் வாழ்வை அறியவேண்டும் என்ற ஆவலை என்னிடம் வளர்த்தன. இதை அவன் அறிந்ததும் மகிழ்ச்சிகரமாகத் தன் வாழ்க்கை வரலாற்றைக் கூற ஏற்றுக்கொண்டான்:
"யாரிடமாவது என் பழிசார்ந்த வாழ்க்கையை எடுத்துரைத்தால், எனக்கும் ஒருவகையில் அதன் பளுக்குறையும். உங்களிடம் கூறுவதற்கு நான் இன்னும் மகிழ்ச்சியடைகிறேன். ஏற்கெனவே உங்கள் நேசத்தைப் பெற்றதனால் நான் சிறிது மனிதனானேன். என் கதை கேட்ட பின்பும் உங்கள் நேசம் நீடித்தால், எனக்கு வானகத்தில் மன்னிப்புக் கிடைக்கும் என்பதற்கு அது ஒரு நல்ல அறிகுறியாயிருக்கும்.
“நான் கிரீசில்தான் பிறந்தேன். ஆனால், என் தாய் தந்தையர் எழைகளாதலால், என்னை இளமையிலேயே சுமர்னா நகரத்துக்குக் கொண்டு சென்றிருந்தார்கள்.”
“என் தந்தை குடியேறலுக்கான மிடாக்கள் செய்யும் தொழிலை மேற்கொண்டிருந்தார். இதிலேயே நானும் பழகினேன். தந்தை வருவாய் மிகவும் குறைவானதால், செல்வமிக்க ஒரு யூதத் தேறல் வாணிகனிடம் நான் சம்பளத்துக்கு வேலை செய்யும்படி அனுப்பப்பட்டேன்.”
“என் இருபதாம் வயதுக்குள் தாய்தந்தையர் இருவரும் தம் வறுமை வாழ்வுக்கு விடைகொடுத்து விட்டனர். எனக்குப் பணமோ வீடோ இல்லாததால், யூத வாணிகனிடம் வேலைசெய்த துடன் அவன் வீட்டிலேயே தங்கினேன். அவனும் பெண்டு பிள்ளையற்றவன். ஆதலால் நான் கடைசியில் அவன் வேலைக் காரனாக மட்டுமன்றி, வீட்டில் வேலை செய்பவனாகவும் அவன் நம்பிக்கைக்குரிய பிள்ளையாகவும் இருந்து வேலை பார்த்தேன்.”
“யூத வாணிகனுக்குப் பிள்ளை இருந்தால்கூட என்னை நம்பிய அளவு நம்யிருக்கமாட்டான். அவன் இறந்தால் பிள்ளைக்கே அவன் செல்வம் சேருமாதலால் பிள்ளையா யிருப்பவன் அவன் சாவுக்கே காத்துக் கொண்டிருக்கக்கூடும். ஆனால், நானோ அவன் வாழ்வுக்குப்பின் அவன் செல்வத்தை அவன் அணுக்க உறவினரிடம் விட்டுவிட்டு, மீண்டும் துணை யிலியாகத் திரிய வேண்டுபவன். இந்த எண்ணம் வாணிகன் உள்ளத்தில் என் மீது மாறா நம்பிக்கையை உண்டுபண்ணிற்று.”
“வாணிகனிடம் ஒரு அபிசீனிய நாட்டு அடிமை வேலை செய்தான். அவன் பாரிய உடலும் வலிமையும் உடையவன். மிகப் பெரிய மிடாக்களைக் கூட அவன் எளிதாகத் தூக்கிவிடுவான். அவன் குடிக்கத் தொடங்கினால், மிடாக்களிலுள்ள தேறலின் பெரும் பகுதிக்கு அவன் உடலே கொள்கலமாய்விடும். இத்தகையவனைக் கட்டி மேய்த்து வேலை வாங்குவது என் வேலைகளில் ஒரு தலைமையான பகுதியாகவும், அதே சமயம் நான் விரும்பாத மிகக் கடுமையான பகுதியாகவும் இருந்தது.”
“என்னை அடிக்கடிச் செல்வவானக்கியவனும் அவனே. ஆனால், மீண்டும் மீண்டும் என்னைப் பழிகாரனாக்கி, அஞ்சாத கொலைகளையும் நயவஞ்சகங்களையும் நன்றிக் கேடுகளையும் துணிந்து செய்பவனாக்கியவனும் அவனே.”
“வாணிகன் தரும் தண்டனைகளைப் பொருட்படுத்தாமல் சிரித்துக் கழித்த அடிமை, நான் தண்டித்தால் சீறுவான். அப்போது அவனைக் காணவே எனக்கு அச்சமாயிருக்கும். இதனால் நான் அவனை வேலை செய்யும்படி கண்டிப்ப தெல்லாம் வாணிகன் முன்னிலையில் மட்டுமே. அவர் இல்லாத சமயத்தில் அவன் திசைக்குச் செல்ல மாட்டேன். ஆனால், ஒருநாள் வாடிக்கைக்காரன் ஒருவனுக்காக அவன் எடுத்து வைக்கவேண்டிய மிடாவை எடுதுவைக்காததுடன், அந்த மிடாவின்மீதே படுத்துக் குறட்டை விட்டு உறங்கினான். அவனை எழுப்பாமல் வேறு வழியில்லை. நான் என்னாலான மட்டும் எழுப்ப முயன்றும் அவன் எழுந்திருக்கவில்லை. அத்துடன், இன்னும் ஓசை செய்தால், எழுந்து கழுத்தை நெரித்து விடுவேன் என்று அச்சுறுத்தினான். நான் வாணிகன் வரும்வரை பேசாமலிருந்துவிட்டு, அவர் வந்தபின் மீண்டும் போய் எழுப்பினேன். உடையவர் வந்ததை அறியாத அவன், உடனே சீறிஎழுந்து என்மீது பாயவந்தான். அதற்குள் யூத வாணிகன் கழிகொண்டு அவனைத் தண்டிக்கப் புறப்பட்டார். அது கண்டதே அவன் வழக்கத்துக்கு மீறி நல்ல பிள்ளையாக நடந்து கொண்டான்.”
“ஆனால், வாணிகன் சென்றவுடன் நான் அவனைக் காட்டிக் கொடுத்ததற்காக என்மீது பழிவாங்கத் தொடங்கினான். அவர் எறிந்த கழியை எடுத்துச் சுழற்றிக் கொண்டே என்னை நோக்கி வந்தான். நான் ஒரு மிடாவின் அருகே சென்று அதைச் சுற்றிச்சுற்றி வந்தேன். அவனும் சுற்றிச்சுற்றி வருகையில் ஒரு முக்காலி தட்டி விழுந்து விட்டான் இன்னும் கோபத்துடன் என்னைத் தாக்குவான் என்று எண்ணி நான் தற்காப்புக்காக ஒரு சுத்தியை எடுத்து வைத்துக்கொண்டேன். அவன் எழுந்திருக்கு முன், என் காலைப் பிடித்து இழுக்கவும் காலைக் கடிக்கவும் முயன்றான். நான் கையிலிருந்த சுத்தியலால் அவனைத் தாக்கினேன். ஆனால், நான் சற்றும் எதிர்பாராவகையில் சுத்தி நெற்றிப் பொட்டில் பட்டது. அவன் உடனே வாய்பிளந்து பேச்சு மூச்சற்று விழுந்தான்.”
“செத்தவனாகப் பாவனைசெய்து அவன் என்னை ஏமாற்றப் போகிறான் என்றுதான் நான் முதலில் அஞ்சினேன். ஆனால், விரைவில் வேறுவகையான அச்சங்கள் எழுந்துவிட்டன. வாணிகன் வந்தால் என்ன சொல்வது? அதைவிட, காவல்துறை யாட்கள் வந்துவிட்டால் என்ன செய்வது? ஏழைகள் என்றால், சிறிது ஐயத்துக்கு இடமிருந்தால்கூட மறு பேச்சில்லாமல் தண்டனைக்கு ஆளாகவேண்டிவருமே!” என்று கலங் கினேன்.
“வாணிகன் வரும் நேரமாயிற்று. எப்படியாவது உடலை மறைத்து வைத்து, அன்று தப்புவோம் என்ற எண்ணத்துடன் பெருமுயற்சியின் மீது அவன் உடலை ஒரு மிடாவுக்குள் ஒளித்துவைத்தேன். மிடாவின்மீது மூடிப்பலகை பொருத்தித் தற்காலிகமாக ஆணியும் அறைந்துவைத்தேன். உடலை வேறெங்காவது ஒளித்து வைப்பதென்றும் அடிமை காணாமற் போனதற்கு எதேனும் பொருத்தமான கதை கட்டிவிடுவதென்றும் உறுதி செய்தேன்.”
“என் திட்டங்களுள் இரண்டாவது திட்டம் எளிதாயிற்று. வாணிகன் வந்ததும் அடிமை என்னை அடிக்கவந்த கதையைச் சற்று மாற்றி அவன் அடித்துக் கீழே தள்ளிவிட்டு ஓடிப்போய் விட்டான் என்றேன். வாகின் அவ்வளவு உடல் வலுவுள்ள அடிமையை இழக்க மனமில்லாதவராயிருந்ததனால், அவனை எப்படியும் பிடித்துவிட எண்ணி, காவல் துறைக்கு அறிவித்தார். காவல்துறையாளர் எங்கும் தேடியும் காணதபோது, அவன் எங்கேனும் கடலில் மூழ்கி இறந்திருக்கவேண்டும் என்று முடிவு செய்தனர்.”
“ஒரு திட்டம் இவ்வாறு எதிர்பாராவகையில் நிறைவேறிற்று. ஆனால், என்னுடைய முதல் திட்டம் எதிர்பாரா வகையில் தடைப்பட்டுவிட்டது. அன்று இரவு வாணிகன் தன்னுடனே என்னை இட்டுச் சென்றதால் உடலை அப்புறப்படுத்த முடியவில்லை. மறுநாள் முழுதும் இருந்தால் பிணத்தின் நாற்றத்தால் காரியம் கெட்டு விடுமே என்று நினைத்து நான் அதில் சிறு துளைசெய்து தேறலைவிட்டு நிரப்பிவைத்தேன். தேறல்சத்து உடலைக் கெடாது பாதுகாக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். இம்முறையில் நான் உடனடியாக அகப்படாமல் பார்த்துக் கொண்டேன். ஆனால், உடலை அப்புறப்படுத்தும வேலை இன்னும் கடுமையாயிற்று. ஆனால், இப்போது கடையின் வேலை முழுவதும் நானே பார்த்ததால், என்றேனும் ஒரு முழுநாள் தனி வாய்ப்புக் கிடைத்தால், என் குறை வேலையை முடித்துவிடலாம் என்றிருந்தேன். அடிமையின் உடல் இருந்த மிடாவை மட்டும் முதல் வரிசையிலிருந்து நகர்த்தி இரண்டாம் வரிசையில் நடுவில் வைத்தேன்.”
“ஒருநாள் அரசியற் பணியாளர் ஒருவர் தேறல் வாங்க வந்தார். அவர் வாடிக்கைக்காரர். தேறலில் நல்லது கெட்டது சுவையறிந்து கூறும் இயல்புடையவர். அவர் தலைசிறந்த தேறல்வகை வேண்டுமென்றார். முதல் வரிசை முழுவதையும் வாணிகன் காட்டினார். ஆனால், அதன் தேறல் எதுவும் தமக்குப் பிடிக்கவில்லை என்று கூறி, அவர் இரண்டாவது வரிசையில் அடிமையின் உடல் இருந்த மிடாவைச் சுட்டிக் காட்டி, ‘இதன் தேறலைப் பார்ப்போம்,’ என்றார்.”
“வாணிகன் கட்டளைப்படி நான் அதிலிருந்து தேறல் ஊற்றிக் கொடுக்க வேண்டியதாயிற்று. சுவையறிந்த அந்தப் பணியாளர் அதை அலக்கழித்துத் துப்பிவிடுவார் என்று எதிர்பார்த்தபடியே ஊற்றிக் கொடுத்தேன். ஆனால், அவர் போக்கு நான் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாயிருந்தது. அவர் அதை ஒருதடவை, இருதடவை, மூன்றுதடவை சுவை பார்த்தார். அவர் முகத்தில் வெறுப்பு இல்லை. காணாத இன்பம் கண்டவன் முகத்தில் தென்படும் களியாட்டமே இருந்தது.”ஓகோ; மிக உயர்ந்த தரத்தை இப்படி ஒளித்து வைத்து எல்லாரையும் போல ஏமாற்றலாம் என்று பார்த்தாயோ? தேவர்களுக்கும் கிட்டாத இத் தெள்ளமுதை வைத்துக் கொண்டு பத்தாம் தரத்தை எனக்குக் கொடுக்கப் பார்த்தாய். அதெல்லாம் முடியாது." என்றார்."
“உயர் குடியாளனான அந்த வாடிக்கைக்காரரின் ஐயந் தெளிவிக்க விரும்பி வாணிகன், ‘அப்படி வேறுபட்ட தரங்களே என்னிடம் கிடையாதே, அண்ணா! எல்லாம் ஒருதரந்தானே?’ என்றார்.”
“இதோ! நீரே இதையும் சுவைத்துப்பாரும். முதலில் தந்த தரங் களையும் சுவைத்துப்பாரும். மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருப்பதை உம்மால் கூட மறைக்க முடியாது,” என்றார் பணியாளர்.
“வாணிகன் சுவைத்துப் பார்த்தார். அவர் ஒத்துக் கொள்ளவே வேண்டியதாயிற்று. ஆனால், வியப்பு அவர் முகத்திலும் நிழலிட்டது. ‘இந்த ஒன்றின் சுவையில் மேனி எத்தனையோ மடங்கு பெரிதாகத்தான் இருக்கிறது. ஆனால், இது எப்படி வந்தது என்று எனக்கும்தான் தெரியவில்லை’ என்றார்.”
“எனக்கு அந்த மிடாவின் சுவை பார்க்கச் சிறிதும் பிடிக்கவில்லை. ஆனால், வேலையின் தேவை கண்டு நானும் சுவைத்துப் பார்ப்பதுபோலப் பாசாங்கு செய்து, ‘ஆகா, ஆகா’ என்றேன். நான் சுவையறியாதவன் என்று யாராவது நினைத்துவிட்டால், வாணிகத்துறையில் என் மதிப்புக் கெட்டு விடும் என்பதை நான் அறிவேன்.”இதில் முழுமேனி இருக்கிறது" என்று வாணிகன் உவமையைப் பின்பற்றிக் கூறினேன். ஆனால், உண்மையிலேயே ஒரு முழுத் திருமேனி அதில் இருந்தது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.
“இது போன்ற மேனிவாய்ந்த தேறல்மிடா வேறு இருக்கிறதா என்று பின்னாலிருந்த மிடாக்களையெல்லாம் சுவைத்துப் பார்த்தார் பணியாளர். வேறு இல்லை. எனவே இந்த ஒரு மிடாவின் அருமை பெரிதாயிற்று. அவர் உடனே தம் பணியாட்களை அழைத்து அதைத் தன் வீட்டிற்கே உருட்டிக் கொண்டு போகும்படி கூறினார்.”
“அடிமையின் திருமேனி அடங்கியிருந்த மிடா இங்ஙனம் பணியாளர் வீடு சென்றதுகண்டு, நான் பொறிகலங்கினேன். எப்படியும் இனி அந்த மறை செய்தி அம்பலமாவது உறுதி. அதற்குள் சுமர்னாநகர் விட்டே ஓடிவிடவேண்டுமென்று நான் தீர்மானித்தேன். வாணிகனிடம் உடல் நலிவு, உறவினர் நோய் ஆகிய சாக்குப் போக்குகள் சொல்லிப் பார்த்தேன். பின் வேறு இடத்தில் வேலை செய்ய விரும்புவதாகக் கூறினேன். நான் வந்தபின் வளர்ந்து வரும் வாணிகத்தை எண்ணி அவர் என்னை அனுப்பிவிட மறுத்தார். அத்துடன் நான் மனமார அவருடன் இருக்க விரும்பும்படி செய்வதற்காக அவர் தம் தொழிலிலேயே எனக்குப் பாதிப் பங்கு தருவதாகக் கூறினார். அதைக்கூட நான் ஆர்வத்துடன் வரவேற்காதிருப்பது கண்டு, பாதிப்பங்கு தந்துவிட்டதாக எழுதிக் கையொப்பமிட்ட எழுத்துப் படியையே என்னிடம் தந்து வற்புறுத்தினார்.”
“எனக்கு இன்னது செய்வது என்று புரியவில்லை. எந்த நொடியிலும் பணியாளர் காவலருடன் வந்து என்னை விலங்கிட்டுச் செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், பாதிப்பங்கோ முழுப்பங்கோகூட எனக்கு என்ன பயன் தரக்கூடும்? ஆனால், என் தலைவர் அன்பு விலங்கில் மாட்டப் பட்டு நான் உள்ளூரத் துடித்துப் புழுங்க வேண்டியதாயிற்று.”
“வாணிகன் என்னைப் பாங்காளியாக்கி ஒரு நாழிகை ஆவதற்குள் நான் எதிர்பார்த்த பேரிடி என்முன் வந்து விழுந்தது. தடதடவென்று சிலர் கதவைத் தட்டினர். திறந்தபோது பணியாளர் அனுப்பிய காவல் படைவீரர் நின்றனர்!”
“நடந்த செய்தி இது; தேறல் மிகவும் தித்திப்பா யிருந்ததினாலும், மிடாவில் மூன்றில் இரண்டு பங்கு இடம் உடலும் ஒரு பங்கே தேறலுமாய் இருந்ததாலும் பணியாளர் அதை விரையில் காலி செய்துவிட்டார். அது இவ்வளவு விரைவில் காலியானதையும் காலியான பின்னும் கனமா யிருப்பதையும் கண்டு அதில் ஆசூதாயம் நாடிக் கல்லையோ கட்டையையோ வைத்திருப்பதாக அவர் எண்ணினார். வாணிகன்மீது அவர் சீற்றம் பாய்ந்தது. அவர் உடனே காவற்படை நிலையத்துக்கு விரைந்து செய்தி அனுப்பினார்.”
“சூது எதுவும் அறியாத வாணிகன் அச்சமில்லாமலேயே நடந்தார்; ஆனால், நான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சென்றேன்.”
“வாணிகனை நோக்கிப் பணியாளர், தேறல் மிடாவுக்குள் என்ன அடைத்துவைத்து எங்களை ஏமாற்றுகிறாய்? நீ நல்ல தேறல் வேறு, அல்லாத தேறல் வேறு விற்பது போதாதா? இப்படிக் கொடுத்த பணத்திற்கும் வஞ்சகம் செய்யவேண்டுமா?” என்று இரைந்தார்.
“நான் அப்படி ஒன்றும் செய்வதில்லையே?” என்றார் அவர்.
“நானும் ‘அப்படி’ எதுவும் எங்கள் நிலையத்தில் கிடையாதே என்றேன்.”
“அவர் இரண்டு காவலரை அனுப்பி என் கடையிலிருந்தே திறப்பதற்கான கருவிகளைக் கொண்டு வரும்படி செய்தார். மிடாவைத் திறக்கும்படி என்னைப் பணித்தார். நடுங்கும் கைகளுடன் திறந்து அப்போதுதான் கண்டு திகிலடைபவன் போல் நடித்தேன்.”
“என் நடிப்புப் பயன் தந்தது. செய்தியறிந்த ஒவ்வொருவரும் என் தலைவர்மீதே பழி சுமத்தினர்.”
“அடிமை கறுப்பு நிறமாயிருந்தான். இப்போது அவன் உடல் தேறலில் தோய்ந்து வெண்ணிறமாயிருந்தது. அது அடிமையின் உடல் என்று எவரும் அறியவில்லை. ஆகவே உடலுக்கும் எனக்கும் எத்தகைய தொடர்பும் இருந்ததாக யாரும் எண்ணவில்லை. என் தலைவர்தான் தமக்கு வேண்டாத எவரையேனும் மிடாவில் தள்ளி இருப்பார்; அல்லது கொன்று அதில் போட்டிருப்பார் என்று யாவரும் எண்ணினர்.”
“கொலைகாரப் பயலே! இப்போது தெரிகிறது, நீ உயர்தரத் தேறல் எப்படிச் செய்கிறாய் என்று” என்று சீறி எழுந்தார் பணியாளர்.
“வாணிகன் உடல் முதல் தடவையாக நடுங்கிற்று. மறுத்து வாதாடுவதைவிடச் சமாளிப்பது எப்போதும் நல்லது என்பது அவர் பாடறிந்து கண்டமுடிவு. ஆகவே பணிவுடன்”எப்படியோ தெரியாமல் செய்த பிழையை மன்னியுங்கள். உங்களுக்கு மிடாவுக்கு மிடா புதிய தேறலே தருகிறேன். என்னை மன்னியுங்கள்" என்றார்.
“சரி, என் பணியாளையேவிட்டு வரவழைக்கிறேன் என்று கூறிய வண்ணம் பணியாளை அனுப்பினார். அவன் புதிய தேறல் மிடாவுடன் வந்துசேர்ந்தான்.”
என் தலைவர் மிடாவை ஒப்படைத்துவிட்டுப் பணியாளரிடம் விடை பெற்றுச் செல்ல முனைந்தார். நானும் அவருடன் புறப்பட இருந்தேன். அதற்குள் பணியாளர், சற்றுப் பொறுங்கள். உங்கள் தேறலை வீணாக இழக்க வேண்டாம். அதற்கு வழி செய்கிறேன்" என்றார்.
பணியாளர் தேறலுக்கு விலைதான் தரப்போகிறார் என்ற எண்ணத்தினால் வாணிகன், ‘ஐயா, நீங்கள் மனிதப் பாசம் உடையவர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் நீடுழி வாழவேண்டும்’ என்று முகமெல்லாம் மகிழ்ச்சி ஒளிபொங்கக் கூறினார்."
“பணியாளர் ஒன்றும் பேசவில்லை. மெல்ல நகைத்துக் கொண்டு மிடாவிலுள்ள தேறலை வேறு கலங்களில் மாற்றும்படி ஏவலாளர்களை ஏவினார். அது முடிந்ததும் அவர் வாணிகன் பக்கம் திரும்பினார். அவர் முகம் திடுமெனக் கடுமை மேற்கொண்டது.”
“நானும் மனிதப்பாசம் உடையவன்தான். நீரும் மனிதப்பாசம் உடையவர்தான். உம்மைத்தான் நான் எல்லாவகையிலும் பின்பற்ற இருக்கிறேன்.” என்றார்.
“அதன் பொருள் புரியாமல் வாணிகன் விழித்தார். நானும் விழித்தேன். ஆனால், விரைவில் அதன் கோரப் பொருள் விளங்கிற்று. பணியாளர் மறைவான கட்டளை பெற்று ஏவலாளர்கள் என் தலைவரைச் செந்தூக்காகத் தூக்கி வெற்றுமிடாவுக்குள் திணித்தனர். முன்பே ஒழித்து ஊற்றிவைக்கப்பட்ட தேறவை மிடாக் கொள்ளுமட்டும் ஊற்றினார்கள். என் தலைவர் கூக்குரலிட முடியாமல், துணியைத் தேறலில் தோய்த்து வாயில் திணித்தனர். விரைவில் தேறல் அவர் நெற்றிவரையும் வந்து அவரைத் திக்குமுக்காட வைத்தது.”
“என்னை என்ன செய்வார்களோ என்று நான் நடுங்கி நின்றேன்.”
“பணியாளர் என்னைப்பார்த்து, ‘மிடாவை வழக்கம் போல் மூடு. இல்லாவிட்டால், உனக்கும் இதே தேறல் விருந்து கிடைக்கும்’ என்றார்.”
“தன் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் நான் என் தலைவர்மீதுள்ள பாசத்தைத் தூர எறிந்து விட்டு மூடியால் மூடி ஆணிகளைப் பதித்தேன்.”
“அச்சம் இன்னும் என்னை விடவில்லை. பணியாளரின் திடீர்க் கோர உருவம் கொண்ட அவர் இன்னும் என்னென்ன திட்டங்கள் வைத்திருக் கிறாரோ என்று எண்ணி நடுங்கினேன்.”
“என்ன துணிகரக் கொலைகாரன் இவன்? எத்தனை பேரை இந்தமாதிரி ஒழித்து ஆதாயமும் வேறு அடைந்திருக்கிறானோ? சண்டாளன் என்றான்.”
“அவருக்கு இசைய எப்படியாவது பேசிச் சமாளிக்க எண்ணினேன் நான். ‘ஆம். பல ஆள்கள் திடுமென மறைந்ததுகண்டு நான் வியப்படைந்ததுண்டு. ஆனால், செய்தி விளங்கவே இல்லை. இப்போதல்லவா தெரிகிறது,’ என்றேன்.”
“இந்த விடை அவருக்குப் பிடித்தமாயிருந்தது. ‘நீயும் நானும்கூட இவன் தேறல்பட்டியலில் ஒரு நாள் போயிருப்போம். நல்லகாலமாகப் பிழைத்தோம். அத்துடன் சுமர்னா நகரில் எத்தனையோ பேர் உயிரையும் காப்பாற்றினோம்.’ என்றார்.”
“உயிர் பற்றிய என் அச்சம் தணிந்தது. இனிமேல் ஆகவேண்டிய காரியத்துக்கு அடிகோலத் துணிந்தேன்.”
“ஆம். உடனடியாக அடுத்த பலியாக அவர் என்னைத் திட்ட மிட்டிருந்தார் என்று இப்போது நினைக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், என்னுடன் இருந்த அபிசீனிய அடிமை திடுமென மறைந்துவிட்டான். நானும் முழுதும் அறியாவிட்டாலும் சிறிது முன்னெச்சரிக்கையுடன் வெளியேறிவிட எண்ணினேன். ஆனால், என்ன காரணஞ் சொல்லியும் மறுத்ததுடன், எப்படியாவது என்னை ஆவல்காட்டித் தங்கவைக்கும்படிக் கடையிலேயே எனக்குப் பங்கு எழுதித்தந்தார். என்னை அவர் பலியிடத் தீர்மானிக்க வில்லையானால், பணப்பேராவல் பிடித்த அவர் இதைத் செய்ய முன் வந்திருக்கமாட்டார் என்பது இப்போது விளங்குகிறது. இதோ பாருங்கள் அந்தப் பங்குப் பத்திரத்தை! என்று தலைவர் எனக்குத்தந்த பத்திரத்தைக் காட்டினேன்.”
“இதைப் பார்த்தபின் வாணிகன்பற்றிய தம் கருத்தில் அவருக்கு முழு உறுதி ஏற்பட்டுவிட்டது.”
“நீ நற்பேறுடையவன்தான், ஐயமில்லை. ஏனென்றால் நீ உயிர் தப்பியதுடன், இதனால் அவர் செல்வத்துக்கு முழு உரிமையாளனாகவும் வழி இருக்கிறது. ஆனால், இதில் உனக்கு என் ஒத்துழைப்பு இல்லாமல் முடியாது. நீ என் கட்டுப்பாட்டுக்கு இணங்கினால், நான் ஒத்துழைக்கவும், உன்னிடமே இந்த வாணிகத்தை ஒப்படைக்கவும் வழி செய்யமுடியும்” என்றார்.
"பருத்தி புடவையாய்க் காய்த்தது போன்ற மகிழ்ச்சியுடன் நான், ‘தங்கள் விருப்பப்படியே நடக்கிறேன்’ என்றேன்.
“கடையையும் அதன் சரக்குகளையும் நீ எடுத்துக் கொண்டு வாணிகம் நடத்தலாம். இரண்டு ‘முழுமேனி’ மிடாக்களையும் உன்னிடமே ஒப்படைக்கிறேன். நீ அவற்றை வைத்து இந்தப் புதிய தேறல் வாணிக முறையை நடத்தலாம் ஆனால், எப்போதும் நான் என் தேவைக்கு எவ்வளவு தேறல் கேட்டாலும் அனுப்பித் தரவேண்டும். அத்துடன் உன் தலைவர் திருமேனி அடங்கிய மிடாவின் அருகில் நான் வேண்டும்போது இருந்து அதைத் திட்டிக் கொண்டே குடிக்க இணக்கமளிக்க வேண்டும்,” என்றார்.
"நான் இரண்டு கட்டுப்பாடுகளையும் ஒத்துக்கொண்டேன். வெளியாருக்கு நான், நடந்த செய்திகளில் எதையும் வெளியிடவில்லை. என் தலைவர் சிறைப்படுத்தப்பட்டார் என்றும், அவர் கடையை அவர் பங்காளி என்ற முறையிலேயே நான் நடத்துகிறேன் என்றும் சிலநாள் கூறினேன்.
“இரண்டு திருமேனிகளடங்கிய மிடாக்களும் மற்றவற்றை விட உயர்ந்த இரண்டு மேடைகளில் பணியாளர் விருப்பப்படி வைக்கப்பட்டன. பணியாளர் வேண்டும்போது நான் கேட்ட கேட்ட அளவு தேறல் அனுப்பித் தந்தேன். அத்துடன் சிலநாள் இரவு நேரங்களில் அவர் கடையிலேயே தங்கி, என் தலைவர் திருமேனி இருந்த மிடாவினருகில், அவரைத் திட்டிக் கொண்டே, அவர் திருமேனித் தேறலைக் குடித்துக் கொண்டிருப்பார்.”
இத்தகைய சமயங்களில் அவர் அடிக்கடி தன்னுணர் வில்லாமல் கிடப்பதும் உண்டு.
“பணியாளர் வகையில் எனக்கு எவ்வளவு தேறல் செலவானாலும், அதை நான் சட்டை செய்யவில்லை. தற்செயலாக நான் கண்ட தேறல் வாணிக மறைமுறையை நான் என் தன்னறிவு கொண்டு இன்னும் வளர்த்தேன். திருமேனித் தேறலை நான் மற்ற மிடாக்களில் கலந்து அவற்றுக்கும் அதன் சுவையை ஊட்டினேன். இவ் வகையில் எல்லா மிடாவின் தேறல்களுமே பலதரப்பட்ட திருமேனித் தேறல்களாயின. கலப்பின் அளவு கண்டு அவற்றை நான் பல தரங்களாகப் பிரித்தேன்.”
பொதுவாகத் தேறல் விற்கும் விலையைவிட அவற்றின் விலையைப் பல தரங்களாக ஏற்றினேன். என் தேறலின் புகழும் அதனால் எனக்குக் கிடைத்த பெருஞ் செல்வத்தின் புகழும் சுமர்னா நகரம் கடந்து, தேறல் மாந்தும் உலகெங்கும் பரந்தது. தேறலின் இந் நறுஞ்சுவைக்குரிய காரணம் தெரியாமலே எல்லாரும் குடித்து மகிழ்ந்தனர். நான்மட்டும் அதன் நச்சுச் சுவைக்கு ஆளாகாமல், அதன் ஆதாயத்துக்கு மட்டும் உரியவனானேன்.
“மூன்று ஆண்டுகள் என் வாணிகம் தங்கு தடையற்றுப் பெருகிற்று. பணியாளரும் அடிக்கடி வந்து அதன் ஆதாயத்தில் ஒரு விழுக்காடு பெறுபவர்போலக் குடித்து மகிழ்வார்; அல்லது வாணிகன் திருமேனி இருந்த மிடாவருகில் இருந்து குடித்து அவரைத் திட்டுவதில் தன்னை மறந் திருப்பார். இச்சமயங்களில் அவர் என்னை எவ்வளவுதான் குடிக்கும்படி வற்புறுத்தினாலும், நான் திருமேனி கலவாத தேறலாக எடுத்து ஒரு சிறிதே அருந்திப் போக்குக் காட்டுவேன்.”
“இங்ஙனம் நான் எத்தனைப் பழிகளோ செய்ய நேர்ந்தாலும், பெருங்குடிக்கு ஆளாகாத ஒரு நற்பழக்கத்தால்தான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். அதுமட்டுமன்றி உங்களைப் போன்றவர் நற்பழக்கத்துக்கும் உரியவனாயிருக்கிறேன்.”
“மூன்றாவது ஆண்டில் பணியாளருக்கு வேறு இடத்துக்கு மாற்ற மாயிற்று. அவர் தம் படைவகுப்பை அனுப்பிவிட்டுப் போகுமுன் இறுதியாக என் தேறலை மாந்தவும், வாணிகன் திருமேனியைப் பழிக்கவும் என் நிலையத்துக்கு வந்தார்.”
அவர் அன்று மட்டுமீறிக் குடித்தார். மட்டுமீறி என் தலைவரைப் பழித்தார்.
பணியாளர் தொல்லை இனி இராது என்று நினைத்தவுடன் எனக்கு அவர்மீதிருந்த அச்சம் குறைந்தது. அஃதுடன் சிறிது தேறலும் என்னுள் சென்று என் நாவின் நரம்புகளைத் தளர்த்தியிருந்தது. நான் அவரிடம், “என் தலைவரை நீர் கொன்றதுதான் உண்மை; தலைவர் எந்தக் கொலையையும் செய்யவில்லை” என்றேன்.
அவர் சீறி ’உனக்கு எப்படித் தெரியும்? நீதானே அவர் உன்னையும் கொல்ல முயன்றதாகக் கூறினாய்" என்றார்.
“நான் அடிமையின் உடல் மிடாவில் அடங்கியிருந்தது பற்றிய கதை முழுவதையும் அவரிடம் கூறினேன்.”
“அன்று அவரிடம் அதைக் கூறியிருக்கக் கூடாது என்பதைக் கூறியபின்தான் அறிந்தேன். அவர் உடனே என்மீது பாயத் தொடங்கினார். ‘அவர் கொலையாளி அல்ல என்றால், நீதான் கொலையாளி. இப்போது என்ன செய்கிறேன் பார். உனக்கும் உன் தலைவன் முடிவை அளித்துவிட்டுப் போகிறேன்’ என்று கூறிக்கொண்டு என்னைப் பிடிக்க வந்தார்.”
“நானே இப்போது என் உயிருக்கு மீட்டும் இடரை உண்டுபண்ணிக் கொண்டேன். ஆனால், என்னைவிட அவர் மிகுதி குடிவெறியுடைய வராயிருந்ததால், சறுக்கி விழுந்தார். அவர் எழுந்தால் என் உயிர் அவர் கையில் இருந்திருக்கும். அதற்கு இடங்கொடாமல் நான் அவரைக் காலைப்பிடித்துப் பரபரவென்று இழுத்து, கால் பங்கு தேறல் நிறைந்த ஒரு மிடாவில் திணித்துவைத்து அவர் இன்னதென்றறியுமுன் மூடியால் அழுத்தி ஆணியடித்து மிடாவை உருட்டிவிட்டேன். அவர் திருமேனி அடங்கிய மிடாவும் இங்ஙனம் அடிமை மிடாவுடனும் என் தலைவர் மிடாவுடனும் இடம் பெற்றது.”
“என் உயிர் தப்பிற்று. ஆனால், பணியாளர் மறைவுக்கு மக்கள் உள்ளத்தில் இயற்கையான ஒரு விளக்கம் இல்லா விட்டால், என் மீது ஐயம் எழும். ஆகவே நான் அவர் வாளை எடுத்துக்கொண்டு சென்று,வெளியே நின்ற அவர் குதிரையின் கட்டவிழ்த்து, அதன் உடலைப் பலவிடங்களில் வாளால் குத்திக் காயப்படுத்தினேன். அது குற்றுயிருடன் ஓடிக் கீழே விழுந்தது. பின் கத்தியைக் கழுவித் துப்புரவாக்கி வைத்துக்கொண்டேன்.”
“நள்ளிரவில் குதிரை ஓசை கேட்டுப் பல மக்கள் எழுந்துவந்து பார்த்தனர். நானும் அப்போதுதான் வருபவன் போல ‘ஐயோ! விளக்கு வைத்து ஒரு நாழிகைக்குமேல்தானே போனார்! அதற்குள் எந்தப் பாவி குத்தி விட்டானோ’ என்று கூவி வருந்தினேன். அவர் போகும்போது வைத்து விட்டுப் போனதாகக் கூறி, அவர் வாளையும் எடுத்துவந்து காட்டினேன். எல்லாரும் ‘வழியில் பணியாளர் தாக்கிக் கொல்லப்பட்டிருக்க வேண்டும். குதிரையும் காயப்பட்டே ஓடிவந்திருக்க வேண்டும்’ என்று எண்ணினர்.”
’என் வாணிகம் முன்னிலும் தழைத்தது. தேறலுக்குச் சுவையூட்ட இப்போது ஒன்று, இரண்டு, மூன்று திருமேனிகளாயின."
“ஆயின், அந்தோ, பலநாள்திருடன் ஒருநாள் அகப்படு வான் என்ற பழமொழியை நான் மறந்து இறுமாப்படைந்தேன்.”
“என் தேறல் நிலையத்துக்கு ஒரு நாள் சுமர்னாவின் முறைநாயகர் வந்திருந்தார். என் தேறலின் புகழே அவரை அங்கே கொண்டுவந்தது. இது எனக்கு ஒரு பெரிய நன்மதிப்புக்குரிய செய்தியாதலால், நான் அவருக்கு முகமன் கூறி வரவேற்றேன். என் தேறலின் பெருமைகளைக் கூறுகையில் ‘காலஞ்சென்ற பணியாளருக்கு நான் மிடாமிடாவாக அனுப்பிவைப்பது வழக்கம்’ என்றேன்.”
‘ஆம். கலங்களில் பணியாட்களை விட்டு வாங்க விடுவது அவ்வளவு நல்லதல்லதான். நானும் அவ்வாறே மிடாமிடாவாக வரவழைத்துக் கொள்கிறேன். முதலில் உன்னிடமுள்ள மிடாக்களை யெல்லாம் நான் சுவைத்துப் பார்க்கட்டுமா?’ என்றார்.
“அவர் மிடாக்களை ஒவ்வொன்றாகச் சுவைத்துப் பார்த்தார். கடைசியில் உயர்மேடை மீதிருந்த மூன்று மிடாக்களையும் சுட்டிக்காட்டி ‘இவற்றில் என்ன தரம் வைத்திருக்கிறாய்?’ என்று கேட்டார். நான் ‘அவை வெற்று மிடாக்கள்’ என்றேன். அவர் கோலால் தட்டிப் பார்த்து ‘அவை வெற்று மிடாக்கள் என்று ஏன் பொய் கூறி ஏமாற்றுகிறாய். அவற்றிலிருந்து தேறல் ஊற்றிக் கொடு’ என்றார். வேறு வழியின்றி மூன்றிலிருந்தும் மூன்று கலங்கள் ஊற்றிக் கொடுத்தேன்.”
மூன்றும் முதல்தரமாயிருக்கக் கண்டதும் என் மீது அவர் சீற்றங் கொண்டு ‘இந்த மிடாக்கள் மூன்றையும் நான் எடுத்துக்கொள்கிறேன்.’ என்றார்.
“அம்மூன்றுமே நான் பிறவற்றுக்குச் சுவையூட்டப் பயன்படுத்துபவை. ஆகவே, அவற்றின் விலைமிக உயர்வு” என்றேன்.
“அப்படி என்ன விலை இருக்கும்?” என்று கேட்டார்.
“அவர் வாங்க விரும்பாதிருக்கத்தக்க முறையில் ஐந்து அல்லது ஆறு மடங்கு விலை கூறினேன்.”
‘அந்த விலையை கொடுக்கிறேன். என் வீட்டுக்கு அனுப்பு’ என்றார்.
“போங்கள்; அனுப்புகிறேன்” என்றேன். அவர் என் கண்முன்னா லேயே அவற்றை அனுப்பி வைத்து விட்டு மறுவேலை பார் என்றார்.
“வேறு வழியில்லாமல் மூன்று திருமேனி மிடாக்களையும் இழந்தேன். அத்துடன் எப்படியும் அவற்றால் என் மறைசெய்தி வெளிப்பட்டுவிடு மாதலால், நான் சுமர்னாவை விட்டே ஒடிவிட எண்ணினேன். முறை நாயகரிடமே இதைத் தெரிவிக்கவும் எனக்கு ஒரு வாக்குப் போக்கு ஏற்பட்டது. வாணிகத்துக்கு உயிர்நிலையாக மிடாக்கள் போனபடியால், நான் அதை மூடிவிட்டுப் போகவேண்டியவனானேன் என்று தெரிவித்தேன்.”
“காலமும் இடமும் வாய்ப்புகளும் இதுவரை எனக்கு மலைபோல வந்த இடர்களைப் பனிபோல் அகலச் செய்திருந்தன. ஆனால், இப்போது அவை எனக்கு எதிராகச் செயலாற்றத் தொடங்கின. புயல்காற்று எழுந்து நான் சென்ற கப்பலை மீட்டும் சுமர்னாவுக்கே கொண்டு வந்து சேர்த்தது. மீண்டும் வேறொரு கப்பலில் என் சரக்குகளை ஏற்றிக் கொண்டு கார்ஃவு என்ற இடத்துக்குப் புறப்பட்டேன், ஆனால், புறப்படும் நேரத்துக்கு முன்பே வேறொரு படகில் முறைநாயகன் கப்பலை நோக்கி வருவது கண்டேன்.”
“நான் கப்பல் மீகாமனிடம் சென்று என் உயிருக்குத் தப்பி நான் ஓடுவதால் முறைநாயகனிடமிருந்து என்னைக் காக்கவேண்டுமென்றும், காத்தால் நிறையப் பொருள் தருவதாகவும் கூறினேன். ‘உன்னைக் காக்க எப்படி நான் உதவ முடியும்?’ என்று கேட்டான், மீகாமன்.”
“எனக்கு மிடாவின் நினைவு வந்தது. முன் இரு உடல்களைக் கொண்ட அவை நான் ஒளிந்து இருக்கவும் உதவும் என்று கண்டேன். மீகாமன் இக்கருத்தை எற்றான்.”
மிடாவில் என்னை வைத்துமூடியிட்டு ஆணி அறைந்தனர்.
“முறைநாயகர் மீகாமனிடம் என்னைப்பற்றி உசாவினார். நான் கடலில் விழுந்து விட்டதாகக் கூறியதை அவர் கேட்கவில்லை. எங்கு தேடியும் காணாததால், கடைசியில் அவன் சொற்களை நம்பி வெளியேறி னார். கப்பல் புறப்பட்டது.”
“ஆனால் முறைநாயகர் மீகாமனிடம் என் தேறல் மிடாக்களையும் என் செயல்களையும் அம்பலப்படுத்தி விட்டார்.”
“கப்பல் புறப்பட்டபின் நான் வெளிவர விரும்பினேன். மிடாவில் உள்ள புழுக்கமும் தேறலின் வாடையும் என்னை வதைத்தன. ஆனால், எவரும் வந்து மிடாவைத் திறந்து விடவில்லை. கப்பலோட்டிகள் பேச்சிலிருந்து அவர்கள் எண்ணம் எனக்குத் தெரிந்தது. என்னை கடலில் மிடாவோடு எறிந்துவிட்டு என் சரக்குகளையும் செல்வத்தையும் கைக்கொள்ளவே அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்று அறிந்தேன்.”
“நான் மிடாவுக்குள்ளிருந்தே என்னை வெளியே விட்டுவிட்டுச் சரக்குகளை எடுத்துக்கொள்ளும்படிக் கெஞ்சினேன். எதுவும் பயனில்லை. உள்ளே புழுக்கம் தாங்காமல், ‘கடலில் எறிவதானால் இப்போதே எறிந்து விடுங்கள்’ என்று மன்றாடினேன். அவர்கள் என் துயர் கண்டு களித்தனரேயன்றி எவ்வகையிலும் இரங்கவில்லை. நான் கொலைகாரன் என்ற எண்ணம் அவர்கள் உள்ளத்தைக் கல்லாக்கியிருந்தது.”
“ஆனால், கப்பல் திடுமெனப் புயலில் சிக்கிற்று. பழிகாரனாகிய என்னால்தான் கடல் சீறுகிறது என்று ஒருவன் சொல்ல, மற்றவர்கள் அதை ஏற்று என்னை மிடாவுடன் உருட்டிக் கடலில் எறிந்தனர். புயலும் அலையும் மிடாவை உருட்டி உருட்டிக் கவிழ்த்தன. நான் மிகவும் அலைக்கழிக்கப் பட்டேன். அத்துடன் மிடாவின் சிறு துளை கடலுக்குள் அமிழும்போதெல் லாம் நீர் உள்ளே வந்து மிடா அமிழாமல் நான் அதைத் துணியால் அடைக்க வேண்டியவனானேன். அது மேலே எழுந்தபோதெல்லாம் சிறிது நேரமாவது நல்ல காற்று உட்கொள்ளும்படி அதைத் திறந்துவிட வேண்டியவனானேன். இறுதியில் கொஞ்சங் கொஞ்சமாகத் தண்ணீர் உள்ளேறி மிடா அமிழத் தொடங்கியது. இனி உயிர் போனது போலத்தான் என்று நான் சாவுக்கு ஒருங்கினேன். ஆனால், அலை தாழ்ந்ததும் மிடாவுடன் நான் அலை வாயருகே மணலில் கிடந்தேன்.”
“அது ஒரு தீவின் கரையோரம். தீவிலுள்ள மக்கள் குரல் என்னைச் சுற்றிக் கேட்டது. அவர்கள் மிடாவை உருட்டிச் சென்றனர். நான் சிறிது நேரம் அரவம் காட்டவில்லை. காட்டினால் அவர்கள் அச்சத்தால் மிடாவை அலைவா யருகிலேயே விட்டுவிட்டுப்போய் விடக்கூடும் என்று கருதினேன். சிறிது தொலை சென்ற பின் நான் மிடாவைத் திறந்து என்னை வெளி யேற்றும்படி வேண்டினேன்.”
“நான் நினைத்ததுபோல முதலில் அவர்கள் மிடாவுக்குள்ளிருந்து மனிதக் குரல் கேட்டு அஞ்சினார்கள். நான் அவர்கள் அச்சந் தெளிவித்தேன். ‘நான் ஒரு கப்பலின் தலைவன். கப்பலோட்டிகள் எனக் கெதிராகக் கிளர்ச்சி செய்து என்னை மிடாவில் அடைத்துக் கடலில் உருட்டிவிட்டு, என் கப்பலையும் செல்வத்தையும் எடுக்கச் சூழ்ச்சி செய்தார்கள். அவ்வளவே என் கதை. என்னை வெளியேற்றி உதவுங்கள்’ என்றேன்.”
“நான் வெளியே வந்தேன். களைதீர அவர்கள் எனக்குத் தேறல் அளித்தனர். ஆனால், என் அவப்போது இங்கும் தொடர்ந்தது. நான் வந்த கப்பல் கடலருகே வந்து உடைந்தது. அதிலுள்ள பொருள்கள் பலவும் அலையில் மிதந்து கரையருகே வந்தன. மக்கள் அவற்றை எடுத்ததுடன் கப்பலோட்டிகளிலும் சிலரை மீட்டனர். கப்பலோட்டிகள் மூலம் என்னைப் பற்றியும் அவர்கள் கேள்விப்பட்டார்கள். ஆகவே, என் கதையிலுள்ள நம்பிக்கை தளர்ந்தது.”
“தீவின் மக்கள் நடுநிலக் கடலிலேயே பேர்போன கடற்கொள்ளைக் காரர்கள். நான் அவர்கள் தலைவன்முன் கொண்டு நிறுத்தப்பட்டேன். அவர்கள் கொள்ளைக் காரர்களாதலால், என் வியத்தகு இடர்களின் கதை கேட்டு என்மீது இரக்கங்கொள்ளக்கூடும் என்று நான் நினைத்தேன். ஆகவே, தலைவன் கேள்விக்கு மறுமொழியாக நான் என் கதை முழு வதையும் எதுவும் விடாமல் கூறினேன்.”
“தலைவன் என்னை ஏற இறங்கப் பார்த்தான். அவன் முகத்தில் கருணையும் இல்லை; கடுமையும் இல்லை. கேலி, நகைச்சுவை, மகிழ்ச்சி தாண்டவமாடின.”
“நீ கூறுகிறபடி பார்த்தாலும் நீ ஓர் அடிமையைக் கொன்றிருக்கிறாய். ஒரு யூதனைக் கொல்ல உதவியிருக்கிறாய். ஒரு பணியாளரைக் கொன்றிருக்கிறாய். அதே சமயம் உன் மூலமும் மற்றக் கப்பலோட்டிகள் மூலமுமே எங்களுக்கு இவ்வளவு தேறலும் செல்வமும் கிட்டியிருக்கிறது. ஆகவே, உங்கள் அனைவரின் உயிரையும் காப்பாற்றுகிறோம். ஆனால் உங்களைக் கெய்ரோ நகரில் விற்பதன் மூலம் அவற்றின் விலையை நாங்கள் பெறுவோம். நாங்கள் உங்கள் தேறலை அருந்தி மகிழ்ச்சியாயிருக்கிறோம். நீங்கள் பிழைத்துப் போங்கள்.”
“கடற்கொள்ளைக்காரர்களின் தலைவன் பேச்சிலுள்ள கேலியின் பொருள் இப்போது தெற்றென விளங்கிற்று. எல்லாருக்கும் எல்லா வகையிலும் ஆதாயந்தந்த அவன் தீர்ப்புக் கேட்டுக் கொள்ளைக்கார மக்கள் அனைவரும் களித்துக் கூத்தாடினர்.”
“கெய்ரோவில் கப்பலோட்டிகளும் நானும் விற்கப் பட்டோம். கப்பலோட்டிகள் தம் நிலைமைக்கு வருந்தி நின்றனர். அவர்களைக் கொள்ளைக்காரரும் நன்கு நடத்த வில்லை. வாங்குபவர்களும் குறைந்த விலையே கொடுத்தார்கள். என் வாழ்க்கை முழுவதுமே இன்பதுன்ப வேறுபாடாயிருந்த தனால், நான் என் நிலைமையை இயல்பென்று வாளா அமைதியுடன் இருந்தேன். கொள்ளைக்காரர் நன்றாக நடத்தினார்கள். செய்ரோவில் அடிமைச் சந்தையில் நீங்களும் நல்ல விலைகொடுத்து வாங்கி இதுவரை மதிப்புடனும் அன்பாகவுமே நடத்தி வருகிறீர்கள்.”
“என் அடிமை வாழ்வில் அடிமைகள் நடத்தப்படுவது போன்று நான் கொடுமையாக நடத்தப்படவுமில்லை. அடிமைகளைப்போல நான் நடந்து கொள்ளவுமில்லை. உண்மையில் தங்களிடம் அடிமையாயிருக்கும்போது நான் காணும் அமைதி. இதுவரை எங்கும் எனக்கு இருந்ததில்லை.”
“நான் மீட்டும் விடுதலை பெற்றால் முன்போன்ற சூழல்களில் சிக்கி இன்னும் பழிகள் செய்ய நேருமோ என்று அஞ்சுகிறேன். ஆகவேதான் உங்கள் அடிமையாகவே இருந்து என் குறைநாளையும் இன்றுபோல எவருக்கும் தீங்க செய்யாத நல்வாழ்வாகக் கழிக்க அவாவுகிறேன்.”
என் நல்அடிமையின் கதை கேட்டு நான் பெருமூச்சு விட்டேன். அவன் இயற்கையில் கெட்டவன் அல்ல. ஆயினும் அறிவுடையவன் அவன். சூழல் அவன் தன் அறிவைக் கெட்டவழியிலேயே பயன்படுத்தச் செய்தது. என்னிடம் அடிமையாயிருப்பதுகூட அவனுக்கு நற்சூழலைத் தருகிறது என்றெண்ணி நான் மகிழ்ந்தேன். பெயருக்கு அடிமையாக, ஆனால் நண்பனாகவே அவனை நடத்தி வருகிறேன்.
நாட்டுப்புறக் கதைகள்
வானுலக யாத்திரை
மதுரையில் இந்திரவிழா ‘தாம், தாம்’ என்று முழங்கிற்று. வான வில்லின் ஏழு நிறங்களுடனும் கொடிகள் எங்கும் பறந்தன. மன்னர் குடிகள் யாவரும் வேற்றுமை இல்லாமல் உண்டாடி உடுத்து மகிழ்ந்தனர்.
மாடம்பிக்கு அன்று ஒரே எழுச்சி. சொக்கநாதரின் கோயில் மூலையிலுள்ள கடம்பவனத்தைக் காக்கும் பொறுப்பு அவனுடையது. அன்று அதை அணி செய்யும் இனிய கடமை அவனுக்கு ஏற்பட்டது.
கடம்பவனத்தின் எச்சமிச்சமாக அங்கே ஒரு கட்டைதான் இருந்தது. அன்று அவன் ஆர்வக சுரங்களால் கட்டை உயிருள்ள மரமாகத் தளிர்த்தது. கிளைகளில் எதிர்பாராத எதிர்பாராத இடங்களிலெல்லாம் பூக்கள் பூத்துக் குலுங்கின. சிறு கடப்பமரங்கள் சூழ்வர நின்று குலவின.
வனத்திடையே அழகிய மலர்ப்படுக்கைகள், செய் குன்றுகள், பூம்பந்தர்கள், வளைந்து வளைந்து செல்லும் மெல்லடிப் பாதைகள் முதலியவற்றை வனைவதில் அவன் பகலெல்லாம் போக்கினான். அதைச் சுற்றிலும் மதில் போன்ற உயிர்தழைவேலியையும், அவன் எழுப்பினான்.
இரவில் அவன் தானே ஓர் ஆர்வவேலையை உண்டு பண்ணிக் கொண்டான். தான் ஆர்வத்துடன் ஒரு நாளில் உருவாக்கிய கடம் பவனத்தை இரவில் எந்த விலங்காவது சென்று அழித்துவிடாமல் அவன் காத்து வந்தான்.
அவன் உறங்கவில்லை. கண்ணயர்ந்திருந்தான்; வானுச்சியில் முழுநிலா நள்ளிரவின் குளிர்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தது. அவன் கண்களுக்கு அதிலிருந்து ஓர் அலை பிரிந்து இறங்கியதாகத் தோற்றிற்று. அது தன் கண்ணின் மாறாட்டமாக இருக்க வேண்டுமென்றே அவன் நினைத்தான். ஆனால், அது ஒரு கோபுரத்தின் வழியே இறங்குவது கண்டு அவன் திகைத்தான். எனினும் விரைவில் அவன் இவற்றை மறந்து மீண்டும் முழு நிலாவைப் பார்த்துக் கொண்டு இருந்துவிட்டான்.
திடுமென ஏதோ ஒரு பாரிய உருவம் தன் தழைக்கோட்டை அருகே போவதை அவன் கவனித்தான். அதை நோக்கி அவன் தன் கையிலிருந்த மலர்ச் செண்டுகளுள் ஒன்றை எறிந்தான். அது சிரித்துக் கொண்டு உள்ளே சென்றதாகத் தோற்றிற்று.
அவனால் பொறுத்துக் கொண்டு இருக்க முடியவில்லை. உள்ளே சென்று பார்த்தான். அவன் கண்ட காட்சியை அவனால் நம்ப முடியவில்லை. தான் உண்டு பண்ணிய கடப்பமரத்தடியில் அழகிய நிலவால் செய்த பிழம்புரு ஒன்று நின்றது. அதன்முன் நிலவினாலேயே கடைந்தெடுத்தாற் போன்ற வெள்ளை வெளேரென ஒரு முழுயானை மண்டியிட்டு வணங்கி மலர் சொரிந்தது.
யானை திரும்பும் சமயம் பார்த்து அவன் அதனருகே சென்று நின்றான். ‘விலகி வழிவிடு’ என்றது யானை
“இங்கேவர உனக்கு என்ன உரிமை? இது என்வனம்” என்றான் மாடம்பி.
“அது எப்படி?” என்று கேட்டது யானை.
மாடம்பி சற்று விழித்தான். ’நான் இக்கடம்பவனத்தின் காவலாள்" என்றான்.
“அப்படியா? நீ விசித்திரமான காவலாள்தான். இரவில் உனக்க இங்கே என்ன வேலை?” என்றது யானை.
“இந்த வனத்தின் அழகு முழுவதும் பகலில் நான் செய்த கை வேலை. அதை இரவில் யாராவது அழித்துவிடப்படாதே என்று காவலிருக்கிறேன்” என்றான்.
வெள்ளையானையின் நெற்றிப்பட்டம் ஒளி வீசிற்று.
“ஆம். நான் கவனித்தேன். ஆண்டுதோறும் நான் இங்கே வந்து என் ஆண்டவனை வணங்கிப் போகிறேன். ஆனால், இன்று நீ அவனுக்குப் புதுக்கோயில் கட்டியிருக்கிறாய். அடுத்த ஆண்டும் இப்படி கட்டு. உனக்கு நான் வேண்டிய வரம் தருகிறேன்” என்று கூறி ஆனைபுறப்பட இருந்தது.
மாடம்பி அதன் கால்களைக் கட்டிக் கொண்டு,“ஒரே ஒரு சொல் சொல்லிவிட்டுப் போ, என் உயிரினும் அரிய ஆனையே! நீ யார்? எப்படி நீ எனக்கு வரந்தர முடியும்?” என்று அவன் கேட்டான்.
புன்னைக்காய் அளவாயிருந்த யானையின் மாநிறக் கண்கள் பொன்நிற மாங்காயளவாய் விரிந்தன. “நான் இந்திரன் யானை. வானுலகத் திலிருந்து வருகிறேன். முன் நான் மண்ணுலக யானையாக இருந்தபோது, இந்தக் கடம்பவனப் பெருமானை வணங்கியே வானுலகம் சென்றேன். ஆகவே ஆண்டுதோறும் வருவேன். மேலும, உன் கை வேலையைப் பார்க்க, அடுத்த ஆண்டு கட்டாயமாக, சற்று முன்கூட்டியேகூட வருவேன்,” என்றது.
யானை புறப்பட்டது.
ஆனால், மாடம்பி இப்பொழுதும் அதை விடவில்லை. வாலைப் பிடித்துக் கொண்டு “ஆனை அண்ணா, ஆனை அண்ணா! இன்னும் ஒரே ஒரு செய்தி” என்றான்.
யானையின் காதுகளிலிருந்து மின்னொளிகள் வீசின. “என்ன? விரைவில் கூறு. நான் போக வேண்டும்” என்றது அது.
“வானுலகம் எப்படி இருக்கும்? அது மதுரையவ்வளவு பெரிதாக இருக்குமா? அதைவிடப் பெரிதா?” என்று அவன் கேட்டான்.
யானையின் சிரிப்பு தொலைவிலுள்ள ஓர் அருவியின் சலசலப்புப் போலிருந்தது.
“அங்கே எல்லா அழகும் இருக்கும். ஆனால் அந்த அழகு அவரவர் விருப்பப்படி காட்சியளிக்கும்” என்றது.
“உணவுக்கும் நீருக்கும் அங்கே என்ன செய்வீர்கள்?” என்றான் அவன்.
“அங்கே பசியும் வேட்கையும் இரா. ஆனால், பிள்ளைகள் தின்பண்டம் தின்பதுபோல, நாங்கள் நிலவொளியையும், மின்னலையும், வானவில்லையும் உண்போம்” என்றது.
“அப்படியா?” என்று மாடம்பி வாயைப் பிளந்தான்.
தான் தூங்கிக் கொண்டு கொட்டாவி விடுவதாக அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது. யானையை எங்கும் காணவில்லை.
மாடம்பியின் வாழ்க்கையில் அன்று முதல் ஒரு மாறுதல் ஏற்பட்டது.
மதிச்சியத்தில் அவனுடன் கேலிப் பேச்சுப் பேசாதவர்கள் கிடையாது. அவனும் கேலிக்கு எதிர் கேலி சொல்லாத நாள் கிடையாது. ஆனால், இப்போதோ அவன் எல்லோருடனும் நேசமாக மட்டுமே இருந்தான்; பேசுவது கிடையாது. அவன் எப்போதும் தன் குரங்கு ’வாலி’யிடம் குறும்பு பண்ணுவான். தன் மனைவி மங்கையிடம் அதைத் தூதனுப்புவான். இப்போதோ வாலி குறும்பு பண்ணும், அல்லது தூது கொண்டு வரும்; அவன் அவற்றை வாங்கிக் கொள்வதில்லை. தூதனுப்புவதுமில்லை.
அவன் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவன் உள்ளத்தில் ஒரு புத்தார்வம் எழுந்தது. ‘இந்த மதிச்சியத்தில் -ஏன், இந்த மதுரையில்தான்- என்ன இருக்கிறது? நாம் எப்படியாவது வானுலகத்துக்குப் போய்விட வேண்டும். அப்போதுதான் வாழ்வில் உண்மையான இன்பம் ஏற்படும்’ என்று அவன் நினைத்தான்.
வானுலகத்துக்கு அவன் தன் உடலை விட்டுவிட்டுப் போக எண்ண வில்லை. ’உடலில்லாமல் எப்படி வாழ முடியும்? ஆனால், உடல் மட்டும் இருந்து என்ன பயன்? ’பேசுவதற்கு மங்கையும், குறும்பு செய்வதற்கு வாலியும் இல்லாத வானுலகம் ஓர் உலகமா"… இவ்வாறு அவன் சிந்தனை செய்தான்.
உள்ளத்தில் செய்த முடிவை அவன் வேறு யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், உள்ளத்தின் ஒரு மூலையில் அம்முடிவை அவன் பதிவு செய்துவிட்டான்.
அடுத்த ஆண்டு கடம்பவனம் இன்னும் புத்தம் புதிய அழகொப்பனைகளுடன் எல்லார் கண்களையும் கவர்ந்தது. காவலாளுக்கு இவ்வளவு கரிசனை எப்படி வந்தது. கலைத் திறந்தான் ஏது?" என்று எல்லாரும் வியப்படைந்தனர்.
‘அது வேறு யார் கண்களுக்காகவும் ஒப்பனை செய்யப்படவில்லை. வெள்ளை யானையின் கண்களுக்குத்தான் விருந்தாகச் செய்யப்பட்டது’ என்பதை யார் அறிவார்கள்!
அவ்வாண்டு வெள்ளை யானையின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. “மனித உலகில் உன்னைப்போல் நல்லவன் இருப்பான் என்று நான் கனவிலும் கருதியதில்லை. உனக்கு என்னவரம் வேண்டுமானாலும் கேள், தருகிறேன்” என்றது.
“நான் வானுலகம் வரவேண்டும்” என்றான் மாடம்பி.
“நீ எப்படி வர முடியும்?” என்று யானை கேட்டது.
“ஆனை அண்ணா. நீங்கள் நினைத்தால் முடியாதா?” என்றான் மாடம்பி. “போகுமுன் உங்கள் வாலை நான் பிடிக்குமட்டும் எனக்கு உத்தரவு தாருங்கள். உங்களுடன் நான் வானுலகம் வந்துவிடுகிறேன்” என்றான்.
யானை சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்துப் பின்,“சரி, உன்னிடம் எனக்கு மிகவும் பாசம் ஏற்பட்டுவிட்டது. ஆகவே, உன்னைக் கொண்டு போகத் தடையில்லை. புறப்படு விரைவில்.” என்றது.
“அண்ணா, நான் இந்த ஆண்டு வர முடியாது. அடுத்த ஆண்டுதான் வர முடியும்?”
“ஏன்?”
“வானுலகத்துக்கு நான் தனியாக எப்படி வர முடியும்?”
“பின்!…”
“என் மனைவி மங்கை பெருத்த வாயாடிதான். ஆனால், அவளில்லாமல்…”
“சரி. சரி. அடுத்த ஆண்டு இன்னும் மிக அழகாக ஒப்பனை செய்து வை. நீ விரும்பியபடியே உன்னையும் உன் மனைவியையும் இட்டுச் செல்கிறேன்” என்றது யானை.
மாடம்பியின் பண்பில் மீண்டும் ஒருமுறை மாறுதல் ஏற்பட்டது. எவரிடமும் பேசாதிருந்த அவன் அடிக்கடி மனைவியிடம் ஏதோ பேச விரும்புபவன்போல வாய் திறப்பான். குரங்கு அச்சமயம் அவன் ஏதோ பேச வருகிறான் என்று பல்லை நெறுநெறெனக் கடித்து எச்சரிக்கும். அவன் பேச வந்ததை அடக்கிவிடுவான். வாயாடியான அவன் மனைவி இதைப் பார்த்தபின். அவனிடம் பேச்சுக் கொடுத்தாள். மாடம்பி முதலில் தயங்கித் தயங்கியும், பின் ஆர்வத்துடனும் வெள்ளை யானையைப் பற்றியும், வானுலக யாத்திரையைப் பற்றியும் பேச்சுக் கொடுத்தான். அதே சமயம் இது வெளியில் எவருக்கும் தெரியாமல் அடக்கமாயிருக்க வேண்டுமென்றும் எச்சரிக்கை செய்தான்.
வானுலகம், வெள்ளையானை ஆகியவற்றை இந்தக் காலத்தில் யார் நம்புவார்கள்! அதிலும் இவ்வுலக ஆசைகளை யெல்லாம் ஒன்றுவிடாது பிடித்து அணைக்க விரும்பும் மங்கை, அதை எவ்வாறு நம்ப முடியும். அவள் முதலில் தன் கணவன் தன்னை முட்டாளென்று கருதி வம்பளப்பதாக எண்ணினாள். “கொண்ட மனைவியிடத்தில் இப்படிக் கேலியும் பொய்யும் அளக்கலாமா?” என்று சீறினாள். “கனவு கண்டாயோ!” என்று ஏளனஞ் செய்தாள். ஆனால், மாடம்பியின் நம்பிக்கையை எதுவும் எள்ளளவும் அசைக்கவில்லை.
மனைவிக்கு வரவரத் தன்னையறியாமல் நம்பிக்கை வந்தது. ஆனால், கணவனுடன் தான் மட்டும் தனியாகப் போக அவள் விரும்ப வில்லை. கணவனுக்குத் தான் துணையாயிருப்பதுபோல தனக்கு வாலி துணையாயிருக்க வேண்டுமென்று அவள் வாதாடினாள். மாடம்பிக்கும், வாலியில்லாமல் மங்கை யுடனிருந்து பொழுது யோக்குவது கடினமாகவே தோன்றிற்று. எனவே, இறுதியில் அவன் வாலியையும் தன் யாத்திரையில் சேர்த்துக் கொள்ள இணங்கினான்.
யாத்திரை தொடங்க இன்னும் பன்னிரண்டு மாதங்கள் இருந்தன. அதுவரை இந்த அரும்பெருஞ் செய்தியை ஒன்றிரண்டு பேரிடமாவது சொல்லாமலிருக்க மங்கையால் முடியவில்லை. முதலில் அவள் நாக்குப் படபடத்தது. பின் உள்ளம் படபடத்தது. இறுதியில் நாக்கும் உள்ளமும் உடலும் படபடத்தன. அவள் ஒரு நாள் இச்செய்தியைத் தன் உயிருக்குயிரான சித்தியிடம் கூறி வைத்தாள். வேறு யாரிடமும் கூறப்படாதென்ற எச்சரிக்கை யுடன் தான் கூறினாள்!
மங்கையின் சித்தி வண்டார்குழலிக்கு இரண்டே இரண்டு பொருள்களில்தான் ஆசை. ஒன்று மீனாட்சியம்மன் திருமுன்காட்சி. அடுத்தது அவள் பிள்ளை அய்யாவு.
அவள் மீனாட்சியம்மனுக்குத் தன் நன்றி தெரிவித்தாள். வீட்டுக்கு வந்து அய்யாவைக் கட்டியணைத்துக் கொண்டு அவன் காதோடு காதாக, தன் ஆவலையும் அது கிட்டத்தட்ட நிறைவேற இருப்பதையும் கூறினாள். அது நிறைவேறாதற்கிருந்த ஒரே குறையையும் அவள் தெரிவித்தாள்.
“நீ இல்லாமல் வானுலகத்தில்கூட நான் எப்படி அமைதியாயிருப்பேன்? நான் மங்கை இடுப்பைக் கட்டிக் கொண்டு வானில் ஓடும்போது, நீயும் என் இடுப்பைக் கட்டிக் கொண்டு என்னுடன் வந்துவிடுகிறயா?” என்றாள்.
“மதுரையில் பிழைப்புக்கு வழியில்லை. வானுலகில் எப்படியாவது வழி கிடைக்கலாம். வேலையில்லாமலேகூட அங்கே சாப்பிடலாம் என்று கூறுகிறார்களே! ஆகையால் மறுசொல் சொல்லாமல் அம்மாவுடன் போய்விடுவோம்” என்று நினைத்தான் அய்யாவு. ஆகவே, அவன் தாயுடன் வருவதாக உறுதி கூறினான்.
அய்யாவுக்கு வேலை வெட்டி இல்லாவிட்டாலும் அம்மா சோறு போட்டு வந்தாள். ஆனால், அத்துடன் அவன் வாழ்வு நிறைவடையவில்லை. ஓய்வு நேரங்களிலெல்லாம் அவ்வாழ்வில் நிறைவு உண்டு பண்ணியவள் ஆவுடை.
அவள் மாடம்பி வீட்டில் மங்கைக்கு உதவியாக வேலை செய்தவள். அவள் சுறுசுறுப்பாக வேலை செய்வாள். ஆனால், ஆள் காணாத நேரத்தில் அவள் சுடச்சுட அப்பத் துண்டுகளையும், புத்தம்புதிய மலர்ச்செண்டுகளையும் இடுப்பில் செருகிவைத்துக் கொள்வாள். இவற்றை அவள் அய்யாவுக்குக் கொடுத்து அவனுக்கு மகிழ்ச்சி யூட்டித்தானும் அவன் பசப்புரையில் ஆழ்ந்து மகிழ்ந்திருப்பாள்.
அய்யாவு எவருக்கும் சொல்லக்கூடாதென்று வைத்திருந்த இரக சியத்தை அவளிடம் மட்டும் சொன்னான்.
ஆவுடை, இவ் ஒரே இரகசியத்தை அடுத்த வீட்டு மாடிக்குடியில் வேலை பார்த்த சாத்திக்கும், சாத்தி அதை அவ்வீட்டில் பாட்டுக் கற்றுக் கொடுத்த எயினிக்கும், எயினி அதைத் தன் அந்தரங்க நேயனான சாத்தியின் அண்ணன் சாத்தனுக்கும் அறிவித்தாள். இப்படியாக அடுத்த ஆண்டு இந்திரவிழா வருவதற்குள் ஒருசிறு குடியிருப்புக்குப் போதிய அளவு ஆட்கள் வானுலக யாத்திரைத் திட்டத்தில் தம் பெயரைச் சேர்த்துவிட்டனர்.
இவ்வளவு பேர் சேர்ந்துவிட்டார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது.
வானுலக யாத்திரையைக் காண ஆவல் கொண்டவனைப் போல, இந்திரவிழாவன்று பொழுது சாய்ந்ததே முழுநிலாச் செல்வன் கீழ்வானின் படிக்கட்டில் கால் வைத்து விரைந்து மேலேறினான். மதிச்சியத்தில் பாதியும் மதுரை முழுவதும் இன்பத்துயிலில் அயர்ந்தன. ஆனால், மதிச்சியத்தின் மற்றொரு பாதி சிறுசிறு கும்பலாக மதுரைக் கோயிலை நோக்கிச் சென்றது. மாடம்பியின் கைவேலையாக நீண்டு வளைந்து பரந்து கிடந்த கடம்பவனைச் சோலையில் குசுகுசுவென்ற அரவமும், கலகலவென்ற அடங்கிய சிரிப்பும் இடைவிடாது கேட்டன.
நிலவின் பிழம்புருவாகத் தோன்றிய நிமலன் திருவுருவில் இனியதொரு நிழலாடிற்று. பாலொளியின் பருவடிவாகத் தோன்றிய வெள்ளானை மலர்ப் பூசையிலீடுபட்ட நேரத்திலும் கூட, அது புன்முறுவல் பூத்ததாகத் தோற்றிற்று. ஆனால் மாடம்பிக்கு இவற்றையோ தன் பின்னேயுள்ள அணிவரிசையின் திருவிளையாடலையோ கவனிக்க நேரமில்லை. அவன் இமையாநாட்டம் பூசை முடிந்து யானை எப்போது மேலெழும் என்பதைக் கவனிப்பதிலேயே முழுதும் ஈடுபட்டிருந்தது.
முழுநிலவு உச்சி ஏறிச் சரியத் தொடங்கிற்று.
யானை துதிக்கையை மெல்லமெல்ல மேலே தூக்கிற்று. அதன் முன்னங்கால்கள் சற்று வளைந்து மேலெழுந்தன.
மாடம்பி விரைந்து அதன் வாலை இருகைகளாலும் முறுகப் பற்றினான்.
முறுகப் பற்றியது நன்றாயிற்று. ஏனென்றால், ஒரு பெண்ணையும் ஒரு குரங்கையுமே தாங்க அவன் எண்ணியிருந் தான். பல ஆண் பெண்களடங்கிய அணி வரிசையைச் சுமக்க வேண்டி வருமென்பது அவனுக்குத் தெரியாது.
யானை மேலெழுந்தது, அவன் வாலில் தொங்கினான். அவன் எதிர்பார்த்தபடி மங்கை அவன் இடுப்பைப்பற்றித் தொங்கலானாள். இருவரும் எதிர் பார்ப்பதற்குமுன்பே, வாலி மங்கையின் முதுகு கடந்து அவன் தோளிலேறிற்று. குரங்குகளுக்கிருக்கும் கூரறிவைக் காட்டியவாறு, அது அவன் கழுத்தைத் தன் வாலால் சுற்றிக்கொண்டு தலைகீழாய்த் தொங்கி, மங்கை கழுத்தைக் கைகளால் பிடித்துக் கொண்டது. கணவன் இடுப்பில் தன்பிடிவிட்டாலும் குரங்கின்பிடி தன் கணவனுடன் தன்னை இணைக்கும் என்று கண்ட மங்கை. அந்நிலையிலும் குரங்குக்குத் தன் நன்றியறிவிப்பை ஒரு முத்தத்தால் தெரிவித்தாள்.
மங்கை மனம் முழுவதும் கணவனிடமும் குரங்கினிடமும் இல்லை. தன் இடுப்பில் இருகைகள் வளைந்து பற்றுவதை அவள் ஆவலுடன் எதிர்பார்த்தாள். எதிர்பார்த்தது பொய்க்கவில்லை. ஆருயிர்ச் சித்தி வண்டார் குழலியின் கைகள் அவள் வானிலெழுமுன் அவள் இடுப்பைப் பற்றின.
வண்டார்குழலியைப் பற்றி அவள் ஆசைமகன் அய்யாவு, அய்யாவைப் பற்றி அவன் நேசமிக்க தோழி ஆவுடை, அவள்பின் சாத்தி, எயினி, சாத்தன் என வானுலகம் செல்லும் உயிருள்ள தொடர் வண்டி அழகியதொரு சங்கிலியாக நீண்டது.
மதுரையின் தலைக்கோபுரம் தாண்டி யானை வானகந் தாவி உயர்ந்தது. ஆனால், அதன் வாலுடன் வாலாகத் தோன்றிய நிழற் சங்கிலித் தொடர் பின்னும் நிலத்தை விட்டு முற்றிலும் அகலவில்லை. அது அவ்வளவு நீளமாக இருந்தது.
மதுரை மக்களில் தற்செயலாக மாடியில் படுத்திருந்த சிலர் கண்விழித்தபோது ஒரு பொன்மேகத்திலிருந்து மெல்லிய சங்கிலி தொங்குவதைக் கண்டனர். அது மனிதச் சங்கிலி என்பது அவர்களுக்குத் தெரியாது. அதை ஒரு கனவுக்காட்டி என்று அவர்கள் கருதினர். ஆனால், அந்தப் பொன்மேகம் உண்மையில் நிலவொளிபட்டொளிக்கும் வெள்ளைனையே என்பதை அவர்கள் கனவில்கூடக் கருதவில்லை.
ஆண்டுதோறும் கடம்பவனத்தில் பூசை செய்து விட்டுவரும் வெள் ளானை இவ்வாண்டு ஒரு கடம்பவனத்தையே இழுத்துக்கொண்டு வருகிறதோ என்று நினைத்து முழுநிலாச் செல்வன் சிரித்தான். அந்த இரகசியம் எங்களுக்குத் தெரியும். எங்களுக்குத் தெரியும் என்று ஒன்றை ஒன்று பார்த்துக் கண்சிமிட்டுவதுபோல விண்மீன்கள் விட்டுவிட்டு மின்னின.
இந்த உயிருள்ள சங்கிலி கடைசிவரை அறுந்து விடாமல் வந்து சேருமா என்று கவலையுடன் விழித்து நோக்கிக் கொண்டிருந்த வானம், என்னவோ நினைத்து, இரண்டொரு பனித்துளிகளைத் தன் கண் களிலிருந்து சிதறிற்று.
யானைகளிடையே தன் வெண்ணிறத்தால் சிறப்புப் பெற்ற இந்திரன் யானை இப்போது தன் வால்நீளத்தாலும் தனிச்சிறப்புப் பெற்று வானில் மிதந்து சென்றது.
வாயாடி மங்கைக்கு வானுலகம் போய்ச்சேரும்வரை வாயாடாமல் இருக்க முடியவில்லை.
’அத்தான், அத்தான்! வானுலகத்தில் போனால் அங்குள்ள பெண்களிடம் நான் எந்த மொழியில் பேசுவது? அவர்களுக்குத் தமிழ் தெரியுமல்லவா?" என்று அவள் ஒரு கேள்வி கேட்டாள்.
“ஆம், தமிழ்தெரியாத வானகத்தில் நமக்கென்ன வேலை?” என்றான் மாடம்பி, தாய்மொழிப் பற்றுடன்.
“அதிருக்கட்டும் அத்தான்; வானுலக மக்கள் நம்மைப்போல வேட்டிசேலை கட்டிக் கொண்டிருப்பார்களா? அல்லது பூசாரிகளையும் அவர்கள் வீட்டுக்காரிகளையும் போல மூலக்கச்சம் போட்டிருப்பார்களா?” என்றாள்.
“அதெல்லாம் போய்ப் பார்த்துக் கொள்ளலாம். அதுவரைப் பொறுமை யாயிரேன்” என்று அவன் கடிந்தான்.
அவள் சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பின் “இந்த ஒரு கேள்விக்கு மட்டும் மறுமொழி கூறுங்கள், அத்தான்; அப்புறம் பேசாமலிருக் கிறேன்” என்றாள்.
வாலியும் இச்சமயம் தன் அரைத்தூக்கத்தில் அவளுக்கு உதவி செய்வதுபோல வாலைச் சற்று இறுக்கி நெகிழ்ந்தது.
“வானுலகத்தில் எல்லாரும் பூசை செய்பவர்களே. ஒரே ஒரு கடவுள்தான் உண்டு. ஆகவே, எல்லாரும் நம்மைப்போல்தான் வேட்டி சேலை கட்டியிருப்பார்கள்.” என்றான் அவன்.
அவளுக்கு மனங்குளிர்ந்தது. அவன் இடுப்பை அவள் கைகள் மெல்ல அணைத்துக் கொண்டன.
வண்டார்குழலிக்கு மெல்லிய நிலவில் தூக்கம் வந்துவிடும் போலிருந்தது. ஆகவே, அவள் பேசத் தொடங்கினாள்.
“அம்மணி, நம் வீட்டில் திருவிளையாடற்புராணம் வாசிக்க வருவாரே. அந்தத் தேசிகர் சொன்னார்- வானுலகத்தில் இலந்தைப்பழம் எல்லாம் மாம்பழத்தவ்வளவு பெரியதாயிருக்கும் என்று. தேங்காய் எல்லாம் பூசணிக் காயளவு பெரிதாயிருக்கு மாம்!” என்றாள்.
இந்தச் சுவைமிகுந்த செய்தியைக் கேட்டுக் கொண்டு மங்கையால் சும்மா இருக்கமுடியவில்லை. அவள் மீண்டும் கணவன் இடுப்பில் இழைந்து குழைந்த வண்ணம் அவனைப் பேச்சுக்கு இழுத்தாள்.
“அத்தான், அத்தான்! கேட்டீர்களா சேதியை? சித்தி கூறுகிறாள். வானுலகத்தில் தேங்காய் பூசணிக்காயளவு இருக்குமாம்” என்றாள்.
அவன் தன்னை மறந்து சிரித்தான்.
அவளுக்குப் பேச்சில் தெம்பு தட்டிற்று.
“தேங்காய் பூசணிக்காயளவு இருந்தால், அதற்குள் வாலியைவிட்டு அடைத்துவிடலாம்” என்றாள்.
அவன் முதலில் சிரித்தான். பின், “நீ இப்படியே பேசிக் கொண்டிருந்தால், ஆனைக்கு ஒருவேளை கோபம் வந்துவிடும். சித்தியையும் நீ கூட்டிக் கொண்டு வருகிறாய் என்று நான் அதனிடம் சொல்லவில்லை” என்றான்.
அவள் சிறிது பல்லைக் கடித்துக் கொண்டாள். ஆயினும் அவளால் முற்றிலும் தன் உள்ளத்தில் எழுந்த ஒரு சுவைகரமான கருத்தை யாத்திரை முடியுமுன் கூறாமலிருக்க முடியவில்லை.
“தேங்காய், பூசணிக்காயாய் இருக்குமானால், பூசணிக்காய் எவ்வளவு பெரியதாய் இருக்கும், அத்தான்! அதற்குள் நீங்களும் நானும் வாலியும் புகுந்து இருக்கலாமே! பூசணிக்காய் உண்மையில் அவ்வளவு பெரியதாகவா இருக்கும்!” என்றாள்.
அவனால் பொறுக்க முடியவில்லை.
“சும்மாகிட; அது, இந்த, ஆனையவ்வளவு பெரிதா யிருக்கும்.” என்று அவன் வாய்கூறிற்று. வாய் கூறுமுன் கை ஆனையவ்வளவு என்று காட்ட விரிந்தது. தான் வாலைப் பற்றிக்கொண்டு செல்வதை, அந்தோ அவன் மறந்து விட்டான்.
வாலின் பிடி அகன்றது.
அவன் விழுந்தான்:- அவனுடன் அனைவரும் சுருண்டு மடங்கி வானவெளியில் வேகமாக விழுந்தனர்.
தூங்கிக் கொண்டிருந்த வாலிக்கு ஒரு பேரதிர்ச்சி தென்பட்டது. அது தன்னையறியாமல் துள்ளிக்குதித்தது. இன்னதென்றறியாமல் அது ஆனையின் வாலையே பற்றி அதன் முதுகில் ஏறிக் கொண்டது.
வெள்ளானை துதிக்கையைப் பின்னால் நீட்டி அதைத் தடவிப் பார்த்தது.
குரங்கு அச்சத்தால் கீச்சுக்கீச் சென்று கத்திற்று.
அது குரங்குதான் என்றறிந்து யானை சிரித்தவண்ணம் துதிக் கையை முன் வாங்கிற்று.
வானுலகம் புறப்பட்ட முழுக்குடியிருப்பில் குரங்கு ஒன்றே கடைசி வரை யானையுடன் வானுலகம் சென்றது.
புயலில் சுருண்டு சுருண்டு விழும் சருகுக்கூளம்போல மனிதச்சங்கிலி வானில் புரண்டு வந்தது. சங்கிலியில் ஒவ்வொருவரும் தான் மீளாச்சாவுக்கு ஆளாய் விட்டதாக எண்ணிக் கலகலத்து மெய்மறந்தனர்.
ஆனால், வெள்ளானையின் இன்னருளால் எவருக்கும் எத்தகைய காயமும் ஏற்படவில்லை. ஒவ்வொருவராகக் காற்றடைத்த பந்தைப் போலவும், வில்வைத்த பொறியைப் போலவும் மெத்தென நிலத்தில் விழுந்து எழுந்தனர்.
இரகசியம் எத்தனை பேர் வரை எட்டி, யாத்திரையில் எத்தனை பேர் கலந்திருந்தனர் என்பதை அப்போதுதான் அவர்கள் எல்லாரும் ஒருமிக்க உணர்ந்தார்கள்.
மாடம்பி எழுந்ததும் மங்கையைப் பார்த்துச் சீறினான்.
மங்கை வெட்கத்தால் தலையைக் குனிந்து கொண்டு ஒருபுறமாக ஓடினாள்.
பயணம் நிறைவேறாது போனதைப் பற்றிக்கூட மாடம்பி பெருங் கவலைப்படவில்லை. வெள்ளானை போனால் வேறு ஏதேனும் வானுலக விலங்கைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் முயற்சி செய்யலாம் என்று அவன் தேறினான். ஆனால், வாலி இல்லாமல் அவனால் இருக்க முடியவில்லை. வாலியை வானுலகுக்கு அனுப்பிவிட்டு மண்ணுலக மதுரைக்கருகில் இருந்து எப்படி வாழ்வது என்று மங்கைக்குக்கூட வருத்தம் ஏற்பட்டது.
அடுத்த ஆண்டு வெள்ளானையிடம் சொல்லி வாலியைத் திரும்பப் பெறுவது என்று மாடம்பி துணிந்தான். ஆனால், மங்கையால் அதுவரைகூடப் பொறுத்திருக்க முடியவில்லை. அவள் சித்தியிடம் சென்று முறை யிட்டாள். “உன்னால்தான் பயணமும் முறிந்தது. என் வாலியும் போயிற்று” என்று அழுதாள்.
வண்டார்குழலி அவளுக்குத் தேறுதலும் ஆறுதலும்கூறி, அவளை அடுத்தநாள் காலையிலேயே மீனாட்சியம்மன் திருமுன்பு இட்டுச் சென்று, அம்மனிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தாள்.
“அம்மையே, பெண் குலத்தின் பிழை பொறுத்து நீ தான் எங்களைக் காக்க வேண்டும். வாலியைத் திரும்ப மண்ணுலக மதுரைக்குக் கொண்டு வந்து தராவிட்டால், எங்களுக்கு நன்மை செய்த மாடம்பி மனம் வருந்த நேரும். அவன் மனைவியிடமும் அவன் மனம் வெறுத்து விடும்” என்றாள்.
அவர்கள் வேண்டுகோள் உடனே கேட்கப்பட்டது. உடனே நிறைவேறிற்று. வாலி, அம்மன் திருப் பின் இருந்து கீச்சுக்கீச் சென்ற குரலுடன் வந்து மங்கை கழுத்தைக் கட்டிக் கொண்டது. மங்கை துள்ளிக் குதித்தாள்.
வாலியைப் பெற்ற மகிழ்ச்சியில் யாவரும் வானுலகை மறந்தார்கள். அம்மனருள்பெற்று வாலியை மீட்டுத் தந்த வண்டார்குழலியின் தவற்றையும் மங்கை முழுதும் மறந்தாள். வண்டார்குழலி அய்யாவுவின் பிழையையும், அய்யாவு ஆவுடையின் பிழையையும், ஆவுடை சாத்தி பிழையையும், சாத்தி எயினி பிழையையும் மன்னித்தாள்.
ஆனால், வாலி திரும்ப வந்ததில் உள்ள மாயத்தை எவரும் உள்ளபடி அறியவில்லை! அடுத்த ஆண்டு வெள்ளானை மூலம் மாடம்பிக்கு வாலி திரும்பிவந்த பயணம் தெரியவந்தது.
வானுலகில் எல்லாம் கிடைத்தது. கடலை கிடைக்கவில்லை. சிறப்பாக வாலிக்கு மிகப்பிடித்தமான வேர்க்கடலை, வானுலகத்தில் எவராலும் கொண்டுபோய்ப் பயிரிடப்படவில்லை. வானுலகில் வேர்க்கடலை கிடைக்காதது கண்டதே, வாலிக்கு வானுலகத்தின்மீது கொஞ்ச நஞ்சம் இருந்த மதிப்பும் போய்விட்டது. அது நிலவுலகுக்கு வரவேண்டுமென்று அடம் பிடித்து வெள்ளானையைச் சுற்றிச்சுற்றி வந்து ஓலமிட்டது.
வெள்ளானைக்குக் குரங்கின்மீது இரக்கம் தட்டிற்று. அதை அன்றே நிலவுலகுக்கு அனுப்ப ஒரு வழியும் கிடைத்தது. இந்திர விழாதோறும் இந்திரன் யானை சென்று சொக்கலிங்கத்தை வணங்கிப் பூசை செய்தது போல, இந்திராணியின் யானை அதற்கு அடுத்த நாள் மீனாட்சியம்மனைச் சென்று வணங்கிவந்தது. இந்திராணியின் யானையை, அந்த ஆண்டுதான் இந்திரன் யானை திருமணம் செய்து கொண்டிருந்தது.
வெள்ளானை, குரங்குடன் சென்று, தன் புதுமனைவியிடம் கதை முழுவதையும் கூறிற்று. வெள்ளானையின் புதுமனைவி கதைகேட்டு விலாப்புடைக்கச் சிரித்தது. சிரிப்பு ஓய்ந்தபின் வாலியைத் தன் வாலிலேயே சுருட்டிக் கொண்டு நிலவுலகம் புறப்பட்டது.
வாலி நிலவுலகம் வந்த கதை இதுதான்.
மாடம்பி ஆண்டுதோறும் கடம்பவன ஒப்பனை செய்வதில் பின்னடையவில்லை. ஆனால், அவன் வெள்ளானையிடம் மீண்டும் ஒன்றும் வரம் கோரவுமில்லை. வாயாடி மங்கையுடனும் வாலியுடனும் வாழ்வதற்கு வானுலகம் தகுதியுடையதல்ல. நிலவுலகமும் மதுரை நகரமும் மதிச்சியமுமே தகுதியுடையவை என்ற எண்ணம் அவனிடம் நிலைத்துவிட்டது.
மதிச்சியத்தில் ஒருபாதி மக்கள் தாம் ஒரு நாளிரவு வானில் பறந்த கதையை அடுத்த பாதியிடம் கூறினர். ஆனால், மறுபாதி அதை நம்பவுமில்லை. நம்பாமல் மறுக்கவுமில்லை. இந்திரவிழாவன்று நள்ளிரவில் மதிச்சியத்தின் ஒருபாதி மதிமயக்கமுற்று அறிவு தடுமாறிற்று என்று அவர்கள் கேலிபேசத் தொடங்கினர்.
"கேட்டாயா!…
மதிச்சியத்திலேபாதி- ஒருநாள்
மதிமயங்கியசேதி!"
(கேட்)
என்று பாடி அவர்கள் ஒருவரை ஒருவர் கேலி செய்வதை என்றும் மறக்கவில்லை.
நீரரமைந்தன் நித்திலன்
தண்பொருநையாறு - இன்று ஏரலின் பக்கத்தில் கடலில் சென்று விழுகிறது. நெடுங்காலத்துக்குமுன் அது - கொற்கை அருகே கடலுடன் கலந்தது. கொற்கை அன்று பெரிய நகரமாய் இருந்தது.
கொற்கை நகரிலிருந்து விலகி ஆற்றின் ஒரு வளைவின் நடுவிலிருந்த மணல்திட்டில் மணவாளன் என்ற ஒரு மீன்படவன் இருந்தான். அவன் பார்க்க அந்தசந்தமானவன். யாருடனும் சுமுகமாகப் பழகுபவன். ஆனால், அவன் மனைவி ஒய்யாரி அவனிடம் எப்போதும் கடுகடுப்பாகவே இருப்பாள். மற்ற செம்படவரைப்போல அவன் மீன் பிடிப்பதிலோ அதை நகரில் கொண்டு விற்பதிலோ திறமையுடையவனல்ல என்பதே அவள் ஓயாத குற்றச்சாட்டு.
மணவாளன் மீன்பிடிப்பதில் அக்கரையில்லாதவனல்லன். ஆனால், காலமும் இடமும் அவனுக்கு எதிராக இருப்பது போலத் தோன்றின. அவன் வலைவீசிய இடத்தில் அடுத்த நாள் பிறருக்கு நல்லமீன் கிடைக்கும். அவன் வீசும் நேரத்திலேயே, பக்கத்தில் வீசுபவர்களுக்கு மீன் கிடைக்கும். ஆனால், அவனுக்கு அன்றன்றைக்கு வயிற்றைக் கழுவப் போதுமான மீன் கிடைப்பதே அரிதாயிருந்தது.
கரைப்புயலும் கடல்புயலும் கைகலக்கும் பருவம் ஒன்று உண்டு. ஆற்றுநீரைக் கடல் நீர் தடுத்து நிறுத்தும் அத்தகைய நேரங்களில்தான், சங்கு கருவுயிர்க்கும், முத்துக் கருக்கொள்ளும் என்று கரையோர மக்கள் கூறுவதுண்டு. அத்தகைய ஒருநாளில் மணவாளன் தனியே, தன்படகை மிதக்கவிட்டவனாய், ஆற்று நீருடன் கடல்நீர் கலக்கும் அழகைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
திடுமெனப் படகு குடை கவிழ்ந்தது போன்ற தோற்றம் அவனுக்கு ஏற்பட்டது. அதன்பின் என்ன நடந்தது என்பதை அவன் நெடுநேரம் அறியவில்லை.
ஒய்யாரி இரவு நெடுநேரம் அவனுக்காகக் காத்திருந்து பின் தூங்கி விட்டாள். மறுநாள் காலையிலும் அவன் வராதுபோகவே, படகு கவிழ்ந்து தன் கணவன் இறந்துவிட்டதாகவே அவள் கருதினாள்.
நாள் ஒன்றிரண்டாகக் கழிந்தது; வாரங்கள் கழிந்தன; ஒரு மாத முடிவில் மணவாளன் எங்கிருந்தோ திரும்பி வந்து வீட்டில் கால்வைத்தான். ஒய்யாரிக்கு வியப்பும் மகிழ்ச்சியும் மாறிமாறி வந்தன. அவனில்லாதபோது, அவளுக்கு அவன் மீதிருந்த வெறுப்பெல்லாம் மாறிவிட்டது அவள் அவனிடம் முன்னிலும் சுமுகமாகப் பேசினாள்.
ஒரு வாரமாக மணவாளன் எங்கிருந்தான் என்பது பற்றி மட்டும் அவன் மனைவிக்கோ மற்றவர்களுக்கோ சரியான விடை கூறவில்லை. புயலில் படகு எங்கோ சென்று கரையில் மோதிற்று என்றும், திரும்பத் தன்னூர் தேடிவர இவ்வளவு நாளாயிற்று என்றும் அவன் கூறி வைத்தான்.
தனக்கு நேர்ந்த செய்திகளை மணவாளன் அப்படியே கூறியிருந்தாலும், எவரும் அதை உண்மை என்று ஒப்புக் கொண்டிருக்கமாட்டார்கள். அது மனித உலக நிகழ்ச்சிகளுக்கு அவ்வளவு மாறாயிருந்தது.
படகு குடைகவிழ்ந்தபோது மணவாளன் தான் இறந்துவிட இருப்பதாகத்தான் எண்ணிக் கண் மூடினான். ஆனால், அவன் கண்கள் தாமாகத் திறந்து கொண்டபோது, தான் இருப்பது இந்த உலகத்தில்தான் என்று அவன் வியப்படைந்தான். முத்தும், பவளமும் அவனைச் சுற்றி எங்கும் குவியல் குவியலாய்க் கிடந்தன. நிலவொளி எங்கும் வீசிற்று. நிலமெல்லாம் சங்கும் பாசியும் பதித்திருந்தன;
அவனருகே இருந்த முத்துக்குவியல் ஒன்றின்மீது, பவளப்பாறை ஒன்றில் சாய்ந்த வண்ணம் தந்தத்தால் கடைந்தெடுத்தது போன்ற ஒரு பாவை வீற்றிருந்தாள். அவள் பார்வையில் நேசமும், பாசமும் கலந்திருந்தன. அவன் கண்விழித்ததும், பொன்வெள்ளிப் பிடிகளுடன் சங்கினால் செய்யப்பட்டிருந்த கோப்பையில் அவள் அவனுக்கு இனிய தேன் அளித்தாள்.
அவள் அவனிடம் தமிழ்மொழியில் பேசினாள். ஆனால் அவள் பேச்சில் குழலின் இனிமையும் யாழின் இனிமையும் கலந்து இசை பாடின. ஒன்றிரண்டு நாட்களுக்குள அவன் வியப்பு அகன்றது. தன் புதிய சூழல் பற்றிய பல செய்திகளை அவன் கேட்டறிந்தான்; பலவற்றை அவன் கண்டு வியந்தான்.
அவன் இருந்த இடம் கடலின் நீர்பரப்புக்குக் கீழே இருந்தது; அவனைச் சுற்றி ஒளிவீசியது நிலவொளியுமல்ல; வெயிலொளியும் அல்ல; கடலகத்திலுள்ள முத்துமணி ஒளிகளே, அவனைச் சூழ்ந்து அலைபாய்ந்த வெளி, காற்று வெளியல்ல, கடல்நீரே. அவன் உடல்மீது மெல்ல வீசிய காற்று காற்றல்ல; கடலகத்தின் நீரோட்டமே. அவன்முன் இருந்த பாவை நில மாதன்று; கடல்மாதரிடையே ஒப்புயர்வற்ற ஒரு நீர்மங்கையே யாவள்! அவள் இடுப்பின்கீழ் நீல ஆடை போர்த்தது போலிருந்த பகுதி கால்களல்ல, மீனின் அடிப்புறமே. அத்தனையையும் மணவாளன் நுண்ணுர்வால் கண்டான்.
கடலகத்தில் தான் மூச்சுவிடவும் கண், காணவும் முடிந்தது. நீர் மங்கையின் மாயத்தாலேயே என்பதை அவன் உசாவி அறிந்தான்.
மனித உலகத்தில் அவன் காணாத செல்வமும் இன்பவாழ்வும், மனிதத் தொடர்பில் அவனுக்குக் கிட்டாத நேசபாசமும், கடலகத்திலுள்ள இந்த நீர்மாந்தர் வாழ்வில் அவனுக்குக் கிட்டின. அவனை இட்டுச்சென்ற மங்கை நித்திலச் செல்வி என்றும், அவள் கடற்புயல், கரைப் புயல் ஆகிய இருவரும் சேர்ந்து பெற்ற திருமகவு என்றும் அவன் அறிந்தான்.
அவள் வாழ்வுடன் அவன் வாழ்வு இசைந்தது. அவன் ஒய்யாரியின் ஒய்யாரத் தமிழ் உலகத்தையும் ஒய்யாரியையும் மறந்து சிலநாள் வாழ்ந்தான்.
ஒரு நாள் அவள் கேட்டாள், “அன்பரே, உமக்கு மேலுலகில் ஒருமனைவி உண்டல்லவா?” என்று.
“ஆம்” என்றான் அவன். “அவள் உங்களைத் தேடி எவ்வளவு கவலைப்படுவாளோ?” என்று மேலும் கேட்டாள்.
“ஆம் ஆனால் நீ ஏன் அதை நினைவூட்டுகிறாய். என்னுடன் வாழ்வதில் உனக்கு அலுப்புத்தட்டி விட்டதா” என்று கேட்டான் மணவாளன்.
“இல்லை, எனக்கு உங்களுடன் என்றும் இருக்கத்தான் விருப்பம். ஆனால், நீங்கள் மனித இனம்; சிலநாள் வாழ்ந்தாலும் பல தடவை காதலிப்பவர்கள் நீங்கள். நாங்கள் மிக நீண்டநாள் வாழ்கிறோம். ஆயினும் ஒரு தடவைதான் காதலிக்கிறோம். படகில் உங்களைக் கண்டு என் ஆசைக்காக உங்களை இங்கே இழுத்து வந்தேன்; என்றும் நான் உங்களை மறவேன்; ஆனால், உங்களை உங்கள் மனைவியிடம் அனுப்புவது என் கடமை,” என்றாள்.
மணவாளனுக்கு எதுவும் சொல்லமுடியவில்லை. ஆனால், மீண்டும் மனித உலகுக்குச் செல்லவே அவன் உள்ளூர விரும்பினான்.
அன்புடன் அவனைத் தழுவி அவள் அவனைக் கடல் பரப்புக்குக் கொண்டு வந்து, கரையருகே விட்டாள்.
இதுவே மணவாளன் கடலகத்தில் கண்ட இடைக்கால வாழ்வு.
மாதங்கள், ஆண்டுகள் சென்றன. மணவாளன், நித்திலங்கொழிக்கும் கடலையும் நித்திலச் செல்வியையும் முற்றிலும் மறந்தே போனான்.
ஒய்யாரிக்கு இப்போது நாற்பது வயது கடந்துவிட்டது. மணவாளனுக்கு ஐம்பது கடந்துவிட்டது. ஆனால் அவர்கள் இப்போது இளமைக்காலத்தில் வாழ்ந்ததைவிட உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்தார்கள். மிகுதி முயற்சியில்லாமலே மணவாளனுக்கு மீன் கிடைத்தது. பிடித்த மீனுக்கு நகரத்தில் எப்படியோ நல்ல விலையும் கிடைத்தது.
சிறிது செல்வமே சேர்ந்தபின் மணவாளன் கடலுக்குச் செல்வதை நிறுத்திவிட்டான். மனைவியும் அவனை இந்தத் தள்ளாத வயதில் கடலுக்கு அனுப்ப விரும்பவில்லை. ஒருநாள் அவள் கணவனிடம் தங்களுக்குப் பிள்ளையில்லாக் குறை ஒன்று தவிர வேறு குறை இல்லை என்பதை நினைவூட்டினாள். “இப்போது நமக்கு இருக்கும் செல்வத்துக்கு ஒரு குழந்தை மட்டும் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! இவ்வளவு நாளைக்குள் அந்தக் குழந்தை ஓர் இளைஞனாக வளர்ந்திருப்பான் மற்ற மீன்படவருடன் மீன்படவனாக அவன் மீன்பிடித்து வருவான். முன், நான் உங்களுக்காகக் காத்திருந்தது மாதிரி, இப்போது நாம் இருவரும் நம் பிள்ளைக்காகக் காத்திருப்போம்” என்றாள்.
மணவாளன் ஒன்றும் பேசவில்லை.
அவன் சற்று வெளியே சென்றான்.
அவன் ஆற்றின் துறையிலிருந்த ஒருபடகிலேறிச் சிறிது தொலை சென்று திரும்பத் தொடங்கினான்.
அச்சமயம் படகின் பின்புறம் பளுவேறியதை உணர்ந்து அவன் திரும்பிப் பார்த்தான்.
ஐந்தடி உயரம் வளர்ந்த ஓரிளைஞன் எங்கிருந்தோ படகில் வந்து ஏறிக் குந்திக் கொண்டிருந்தான்.
“நீ யார்?” என்றான் மணவாளன்.
“நீங்கள் தானே மணவாளன்” என்றான் அவன்.
“ஆம், உனக்கு என் பெயர் எப்படித் தெரியும்?”
“நான் உங்கள் பிள்ளை; என் தாய் நித்திலச் செல்வி தந்தையாகிய உங்களுக்கு இப்போது ஒரு பிள்ளையின் உதவி தேவைப்படுகிறது என்று கூறி, என் தாய் என்னை அனுப்பினாள்; மூன்றாண்டுகளுக்குக் குறையாமல் நான் உங்களுலகில் இருந்து உங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்றும், நீங்களும் இவ்வுலகத்திய அம்மாவும் விரும்பினால் அதன் பின்னும் இருக்கும்படியும் அவள் கட்டளையிட்டிருக்கிறாள்” என்றான்.
தன் மனைவி தன்னிடம் கூறியது மணவாளனுக்கு நினைவுக்கு வந்தது. தன் கடலக மனைவியைத் தான் மறந்தாலும், அவள் தன்னை ஒவ்வொரு கணமும் நினைத்து, தன் காரியங்களைத் தொலைவிலிருந்தே கவனிக்கிறாள் என்பதை அவன் கண்டான்.
நித்திலச் செல்வியிடம் அவன் உள்ளம் அவனையறியாமல் தாவிச் சென்றது. அவன் தன்மகன் நித்திலச் செல்வனை அன்போடணைத்துக் கொண்டு வீடுவந்து சேர்ந்தான்.
தன் மனைவியிடம் முன்பு சொல்லாமல் அடக்கிய கதையையெல்லாம் நித்திலச்செல்வனை அறிமுகப்படுத்துவதற் காக அவன் இப்போது சொன்னான்.
நித்திலன் மணவாளனை உரித்து வைத்தாற்போலவே இருந்தான். அதேசமயம் அவன் கண்கள் நிலவுலகில் காணாத நீலஒளி படர்ந்தும், காதுகள் அகன்று நினைத்த இடம் திரும்புவதாகவும் அமைந்திருந்தன. அவன் தோளும் எலும்புகளும் மலைகளை எடுத்துப் பந்தாடும் ஆற்ற லுடையவை போலத் தோற்றின.
அவனுக்கு வயது- இருபது. ஆனால், அவன் சின்னஞ்சிறு குழந்தைபோல மணவாளனை அப்பா, அப்பா, என்றும்; ஒய்யாரியை அம்மா, அம்மா என்றும் அழைத்துப் பாசம் காட்டினான்.
நித்திலன் வந்தது முதல் மணவாளனின் செல்வம் பெருக்கமுற்றது. நாள்தோறும் அவன் பேரளவில் மீன்பிடித்துவந்து நல்ல விலைக்கு விற்றான்.
அவன் வேலையைப் பார்க்க அவன் உணவு பெரிதன்று. அவன் மூன்றாள் உணவு உண்டான். ஆனால், பதின்மூன்றாட்கள் கூட அவன் செய்யும் வேலையைச் செய்ய முடியாது. ஆயினும் ஒய்யாரிக்கு அவனைப் பிடிக்கவில்லை.
அவள், அவன் உணவைக் குறைத்தாள். அவனுக்குக் குடிக்க நீர் இல்லாமல் எல்லாவற்றையும் கொட்டினாள். அவனிடம் கடுஞ்சொல் கூறினாள்.
ஏற்கெனவே நிலவுலகின் சிறுகுடிலில் அவனுக்கு இருக்கைக் கொள்ளவில்லை. ஒய்யாரியின் கொடுமைகள் அவன் மனக்கசப்பைப் பெருக்கின. அவள் கடுமொழிகள் அவனை எரியாதவண்ணம் எரித்தன. அவன் தந்தையிடம் வந்து, “அப்பா, நான் உங்களிடம் இருக்கவே விரும்புகிறேன். மூன்றாண்டு கட்டாயம் இருக்க வேண்டும் என்பது அம்மாவின் கட்டளை. ஆயினும், நான் உங்கள் உலகிலேயே மூன்றாண்டுகள் வேறு எங்காவது சென்று வேலைசெய்ய விரும்புகிறேன்,” என்றான்.
மைந்தனை விட்டுப் பிரிய மனமில்லாவிட்டாலும், நிலைமையுணர்ந்து தகப்பன் வேண்டா வெறுப்பாக இணங்கினான். நீண்ட வழிப்பயணத்துக்கு உதவும்படி பிள்ளைக்கு அவன் ஓரிணை மிதியடிகளும் ஓர் இரும்புக் கோலும் குடையும் பரிசாக அளித்தான்.
இரும்புக்கோலை ஊன்றி நித்திலன் சாய்ந்ததும் அது வளைந்தது. அவன் அதைத் தன் கையைச் சுற்றிக் கடகமாக வளைத்துக் கொண்டான். மிதியடி கொஞ்சத் தொலைவு போகுமுன் தேய்ந்துவிட்டது. குடையைப் பிடித்து அவன் நடக்கும் நடையில், கம்பு தவிரக் குடையின் மற்றப்பகுதி பின்னோக்கிக் காற்றில் பறந்து விட்டது.
“அம்மா உலகுக்கும் அப்பா உலகுக்கும் எவ்வளவு வேற்றுமை. அப்பா மட்டும் தங்கமான குணமுடையவராய் இராவிட்டால், இந்த உலகத்தை நான் தீண்டவே மாட்டேன்” என்று நித்திலன் தனக்குள் கூறிக் கொண்டான்.
ஆயினும் நிலஉலகின் மக்களைத்தான் அவனுக்குப் பிடிக்கவில்லை. கதிரவனொளி, காற்று, எல்லையற்ற நிலப்பரப்பு, ஏரி, அருவி, கானாறு ஆகிய இயற்கைக் காட்சிகள் யாவும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன. புயலிடையே அவன் உலவும் போது, புயலின் ஆற்றல் அவன் நாடிநரம்புகளில் முறுக்கேற்றி அவனுக்குத் தம் ஆற்றலைக் கொடுப்பது போன்றிருந்தது.
ஓரிரவு, ஒருபகல் முழுதும் நடந்து சென்ற பின் அவன் ஒரு சிற்றூரை அடைந்தான். ஊர்ப்புறத்தே ஒரு பெரிய பண்ணைவீடு இருந்தது. அதில் மலைபோல வாரி அடுக்கிய வைக்கோல்போர் ஒன்றைக்கண்டு, அதை அவன் அழகுபார்த்துக்கொண்டு நின்றான்.
பண்ணைக்காரன் அவனைப் பார்த்து, “நீ யார் தம்பி, எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டான்.
“நான் நெடுந்தொலைவிலிருந்து வருகிறேன்; ஏதாவது வேலை கிடைக்குமா என்றுதான் தேடித் திரிகிறேன்;” என்றான் நித்திலன்.
ஆள் வாட்டசாட்டமாயிருப்பது கண்டு, பண்ணைக்காரன் உள்ளூர மகிழ்ந்தான். “நீ என்ன வேலை செய்வாய்?” உனக்கு உழத் தெரியுமா? உழவு வேலையைச் செய்யத்தான் எனக்குத் திறமையான ஆள் வேண்டும்," என்றான்.
“ஒன்றிரண்டு நாட்களில் நான் அதைக் கற்றுக் கொள்வேன். அத்துடன் ஆறுபேர் வேலையை என்னால் செய்யமுடியும். எனக்குச் சம்பளமாக எதுவும் வேண்டியதில்லை. வயிறுநிரம்ப உணவு தந்தால் போதும்,” என்றான் நித்திலன்.
தொழிலாளருக்காகச் சமைத்த உணவில் அன்று பெரும்பகுதி செலவாகாதிருந்தது. ஆகவே நித்திலனுக்கு வேண்டிய மட்டும் உணவு கிடைத்தது. வயிறார உண்டு, இரவு முழுவதும் அவன் களையார உறங்கினான். காலையில் பழஞ்சோறும், பழங்கறியும் ஏராளமாகக் கிடைத்தது. உண்டபின் அவன் வயலுக்குப் புறப்பட்டான்.
மற்றவர்கள் கலப்பையால் உழுவதைப் பார்த்து அவனும் கலப்பையை ஓட்டினான். கலப்பைகளை அவன் ஆழமாக நிலத்தில் செருகி இழுத்ததால், கலப்பைகள் முறிந்தன. பத்து ஆட்களால் இழுக்க முடியாத கலப்பைகளை அவன் ஒருவனே இழுத்து முறித்தது கண்டு. தொழிலாளர்கள் கலகலத்தனர். பணக்காரனோ தன் கலப்பைகள் போய்விட்டனவே என்று அங்கலாய்த்துக் கொண்டான்.
எல்லாருடைய வருத்தத்தையும் தீர்க்க நித்திலன் விரும்பினான். பல தொழிலாளர் மாலைவரை வேலை செய்தும் வயலில் கால்பங்கு கூட உழுது முடியவில்லை. அவன் காடுகரை வழியாகச் சென்று கலப்பைபோல உழுவதற்குரிய ஏதேனும் ஒரு பொருளைத் தேடினான். அவன் கண்ணில் ஒரு பெரிய இரும்புத்தூண் அகப்பட்டது. அதை அவன் நிலத்திலிருந்து அசைத்தெடுத்து முட்டில் வைத்து வளைத்தான். வளைத்த பகுதியை வயலின் ஒரு மூலையில் நிலத்தில் பதித்து, அதை வயலெங்கும் இழுத்தான். அரைமணி நேரத்துக்குள் வயல் முழுதும் ஒரே மூச்சில் உழுது முடிந்து விட்டது.
அரைமணி நேரத்துக்குள் வயல் முழுதும் உழுதாய் விட்டது என்பதைக் கேட்ட பண்ணைக்காரன் அதைச் சிறிதும் நம்பாமல் அங்கே சென்று பார்த்தான். ஆயிரம் பேர் உழுதது போல் வயல் முழுதும் நன்கு கிளறப்பட்டிருந்தது. தன்னிடம் வேலைக்கு வந்தவன் மனிதனல்ல, ஒரு பூதமே என்று நினைத்து அவன் அச்சம் கொண்டான்.
தொழிலாளர் பொறாமை, பண்ணைக்காரனின் அச்சம் ஆகிய எதையும் நித்திலன் உணரவில்லை. அவன் தொழிலாளருக்கு ஆக்கிய உணவில் பாதியையும், அவர்கள் குடிக்கவும் கையலம்பவும் வைத்திருந்த தண்ணீரில் முக்கால் பங்கையும் தீர்த்துக் கட்டிவிட்டு, “இன்று என்ன வேலை?” என்று கேட்டான்.
“இந்த வேலையாளை வைத்திருப்பது ஆபத்து, ஆனால் அவனைப் போகச் சொன்னாலும் அவன் என்ன செய்வானோ? அவனை என்ன சூழ்ச்சி செய்தாவது ஒழித்துக் கட்டிவிட வேண்டும்,” என்று தொழிலாளரனைவரும் சேர்ந்து பண்ணைக்காரனிடம் சொன்னார்கள். அனைவருமாக ஊரிலிருந்த ஒரு சூனியக்காரனை அணுகி, வேலைக்காரன் உருவில் வந்த இந்தப் பூதத்தை ஒழிக்க வழி என்ன என்று கேட்டனர்.
இந்த மாதிரி மனிதப் பூதத்தைப் பற்றிச் சூனியக்காரன் கேள்விப் பட்டதில்லை. ஆயினும், எல்லாச் சூனியக்காரரையும் போலவே, அவன் சூழ்ச்சிக் காரனாயிருந்தான். சூனியம் செய்வது இவ்விடத்தில் ஆபத்து என்று கண்டு, அவன் சூழ்ச்சியையே தூண்டினான்.
ஊர்ப்புறத்தில் பாழடைந்த ஒரு ஆழக்கிணறு இருந்தது. “எல்லாத் தொழிலாளரும் சேர்ந்து அதைத் தூர்வார வேண்டும். நித்திலன் கீழே இறங்கி, வாளிகளில் சேற்றை நிறைக்க வேண்டும். மற்றவர்கள் அதை வெளியே இழுத்துக் கொட்ட வேண்டும். இந்த ஏற்பாட்டை அவனிடம் சொல்லுங்கள். அதே சமயம் கிணற்றின் அருகில் கற்களையும் பாராங் கற்களையும் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். கிணற்றினடியில் நித்திலன் இறங்கியதே அவன்மீது கல்லெறிந்து கொன்று பாராங்கல்லால் அவன் வெளி வராமல் கிணற்றை அடைத்து விடுங்கள். இதுவே அவனை ஒழிக்க வழி,” என்றான் சூனியக்காரன்.
அனைவரும் இந்த ஏற்பாட்டை மனமகிழ்ச்சியுடன் ஏற்றனர்.
நித்திலன் கிணற்றில் இறங்கினான். கற்கள் கிணற்றினுள் மழை போலச் சொரியப்பட்டன.
“பறவைகளை அடித்தோட்டுங்கள். அவை மணலைச் சொரி கின்றன,” என்றான் நித்திலன் அடியிலிருந்து!
அவர்கள் அச்சம் பெரிதாயிற்று. அவர்கள் சாந்தரைக்க வைத்திருந்த பெரிய கல்லுருளையை அவன்மீது உருட்டித் தள்ளினர்.
கடற்புயல், கரைப்புயல் ஆகிய இரு புயல்களின் மரபில் வந்த நித்திலனைப் பாராங்கல் ஒன்றும் செய்யவில்லை. அது அவன் கழுத்தைச் சுற்றி அட்டிகை போல் வந்து விழுந்தது.
இத்தடவை கல்லெறிந்தது பறவைகளல்ல என்பதை நித்திலன் அறிந்து கொண்டான். அவன் வெளியேறி வந்து உரத்த குரலில் தொழி லாளர்களைப் பார்த்துக் குறும்புக் கேலி செய்தான். “என் ஒருவனைக் கொல்ல எத்தனை பேர்? நன்று நன்று!” என்று அவன் கைகொட்டிச் சிரித்தான்.
தம்மை என்ன செய்துவிடுவானோ என்று அஞ்சி நடுநடுங்கித் தொழிலாளர் பதுங்கி ஓடினர். பண்ணைக்காரனோ இதில் தனக்கு எத்தகைய பங்கும் இல்லாதவனாக நடித்துத் தொழிலாளரை அதட்டிக் கண்டித்தான்.
ஆனால், அன்றிரவே அவன் தொழிலாளரைத் திரட்டிக் கொண்டு சூனியக்காரனிடம் சென்று இரண்டாவது ஆராய்ச்சி மன்றம் நடத்தினான்.
பூதத்தைப் பூதத்தால்தான் ஒழிக்க முடியும். அடுத்த ஊரிலுள்ள ஓர் ஆழ்கசத்தில் மீன் நிறைய இருக்கிறது. ஆனால், யாரும் அதில் மீன் பிடிப்பதில்லை. அதில் வாழும் பூதம் அண்டி வருகிறவரை விழுங்கிவிடும். இன்றே இரவோடிரவாக நித்திலனை அதில் மீன்பிடித்து வரச் சொல்லுங்கள். அவன் திரும்பிவரவே மாட்டான்", என்றான் சூனியக்காரன்.
பண்ணைக்காரன் இதைப் பக்குவமாக நித்திலனிடம் தெரிவித்தான். “நாளை காலையில் என் வீட்டுக்கு மிக முக்கியமான விருந்தாளிகள் வருகிறார்கள்; குறைந்தது ஒருமிடா மீன் தேவையாயிருக்கிறது; ஆகவே, இரவிலேயே கூடிய மட்டும் எவ்வளவு மீன் பிடிக்க முடியுமோ அவ்வளவு பிடித்துக் கொண்டுவா. நல்லகாலமாக ஊர்ப்புறத்திலுள்ள ஆழ்கசத்தில் மீன்கள் எராளமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். வலையுடன் உடனே போ,” என்றான்.
கசத்தருகில் ஒரு பாசிபடர்ந்த படகு கிடந்தது. நித்திலன் அதைக் கசத்தில் தள்ளி வலையுடன் அதில் ஏறிக்கொண்டான். நடுக் கசத்தில் வந்ததும் வலையை வீசினான்.
வலையை வீசியதுதான் தாமதம்; கசத்தின் ஆழத்திலிருந்து ஒரு பேரலை கிளம்பிற்று; மறுகணம் நீர்ப்பரப்பில் நித்திலனையோ படகையோ காணவில்லை. ஆனால், அந்த இடத்தில் தண்ணீர் குமிழியிட்டு அமளி குமளிப்பட்டது.
கசத்தில் கிளம்பிய அலை அந்தக் கசத்தின் ஆழத்திலிருந்து ஒரு பூதம் எழுந்ததால் ஏற்பட்டதேயாகும். அது ஆங்காரத்துடன் நித்திலனைக் கசத்தின் ஆழத்துக்கு இழுத்துச் சென்றது. நீரின் ஆழத்திலிருந்து அப்பூதம் முழங்கிய முழக்கத்தாலேயே கசத்தின் மேல்பரப்பு அமளிகுமளிப்பட்டது.
இன்னது நடந்தது என்று தெரியாமல் நித்திலன் சிறிதுநேரம் திகைத்து நின்றிருந்தான். கடலகத்திலேயே வாழ்ந்த அவனுக்குக் கசத்தின் ஆழம் ஒரு பொருட்டாகத் தோற்றவில்லை. அவன் பூதத்தின் பிடியிலிருந்து தன்னை உதறி விடுவித்துக் கொண்டு அதன் மீது தன் கைகளைக் குவித்துக் குத்துகள் விட்டான்.
இதுவரை எவர் எதிர்ப்புக்கும் ஆளாகாத பூதம் சீற்றமும் வெறியும் கொண்டு நித்திலனைத் தாக்கிற்று.
கசத்தின் ஆழ்தடத்திலேயே நீண்டநேரம் பூதமும் நித்திலனும் போரிட்டார்கள். இறுதியில் நித்திலன் பூதத்தை நிலத்துடன் நிலமாக ஓங்கி அறைந்து, அதன் மீது தன் கால்களையும் கைகளையும் அழுத்தி நெரித்தான். நோவு பொறுக்கமாட்டாமல் பூதம் முன்னிலும் உரக்க அலறிற்று.
“அன்புமிக்க மீன்படவனே! என்னை அருள்கூர்ந்து விட்டுவிடு; நான் உனக்குப் பெருஞ்செல்வம் அளிக்கிறேன்; விட்டுவிடு” என்று பூதம் கெஞ்சிற்று.
“உன்னை விட்டு விட்டால், நீ இன்னும் இங்கிருந்து எத்தனை பேருக்கோ கேடுசெய்வாய். உன்னை ஒழித்தே தீருவேன்,” என்று நித்திலன் மேலும் அதன்மீது தன் பிடியை இறுக்கினான்.
“நான் இந்த இடத்தை விட்டே போய்விடுகிறேன். பெருஞ்செல்வத்தையும் உனக்குத் தந்துவிட்டுப் போகிறேன்,” என்று பூதம் முன்னிலும் உருக்கமாகக் கெஞ்சிற்று.
“சரி. ஆனால் முதல் முதலாக, ஊர்க்கோயில் அருகி லிருக்கும் என் தலைவன் வீட்டுக்கு ஒருமிடா மீன் போய்ச் சேரவேண்டும் அப்படியானால்தான் விடுவேன்” என்றான் நித்திலன்.
“சரி” என்றது பூதம். நித்திலன் பூதத்தின் மீதுள்ள பிடியை விட்டான்.
பூதம், தனக்கடங்கிய கூளிகளை அழைத்து மீனை ஊர்க்கோயி லருகில் பண்ணைக்காரன் வீட்டில் கொண்டு சேர்க்கும்படியும், தன் செல்வக் குவைகளை முற்றிலும் சாக்குகளில் கட்டி நித்திலனிடம் சேர்ப்பித்துவிட்டு அவ்விடம் விட்டுப் புறப்படும்படியும் உத்தரவிட்டது.
தன் வேலையில் பெரும்பகுதி முடிந்துவிட்டதால், நித்திலன் கரையில் சென்று தான் கொண்டுவந்து வைத்திருந்த உணவை உண்டான்.
பண்ணைக்காரன் வீட்டில் ஒருமிடா மீன் கொண்டு சேர்க்கப்பட்டு விட்டதாகப் பூதம் அனுப்பிய கூளி வந்து கூறிற்று, அதன் பின் பூதம், நித்திலன் காலடியில் ஏழு சாக்குப் பொன்னை வைத்து வணங்கிற்று. " என் உயிரைக் காத்த ஆண்டவனே, நானும் என் கூளிகளும் இப்போது இங்கிருந்து நூறுகாதத்துக்கு அப்பால் சென்று விடுகிறோம். எங்கள் மீது கருணைகாட்டி, இந்தக் காணிக்கையை ஏற்றருளும்படி வேண்டுகிறேன்" என்றது.
“சரி, விரைவில் ஓடிப் போகாவிட்டால் துரத்தி வந்து எல்லாரையும் கொன்றுவிடுவேன். ஓடுங்கள் உடனே,” என்று நித்திலன் உலுக்கினான். பொன் சாக்குகளை விட்டு விட்டு அவைகள் குதிங்கால் பிட்டத்தில் பட ஓடின.
அவை கண் மறையும்வரை பார்த்திருந்துவிட்டு, நித்திலன் ஏழு சாக்குகளையும் தலையிலும்,தோளிலும், கைகளிலும், முதுகிலும் சுமந்து கொண்டு, பண்ணைக் காரன் வீடுநோக்கி வந்தான்.
பண்ணைவீட்டு முற்றத்தில் குவியல் குவியலாகத் திரண்டு கொழுத்த மீன்கள் உயிருடன் துடித்துக் கொண்டிருந்தன. ஆனால், விருந்தினர் யாரையும் காணவில்லை. பண்ணைக் காரனும் அவன் மனைவியுங்கூட வீட்டில் இல்லை.
மீன்களைக் கண்டதே, அவர்கள் கிலிபிடித்தவர்களாய்ச் சூனியக் காரனிடம் ஓடியிருந்தனர். சூனியக்காரனோ சூனியத்தையும் சூழ்ச்சிகளையும் மறந்து, அவர்களைவிட மிகுதியாக அஞ்சி நடுநடுங்கினான்.
அச்சமயம் நித்திலன், வீடுவீடாக அவர்களைத் தேடிக்கொண்டு அங்கே வந்தான். இந்த தடவை பண்ணைக் காரன், சூனியக்காரன், தொழிலாளர் யாவருமே சேர்ந்து தன்னை ஒழிக்க விரும்புவது அவனுக்கு வெட்ட வெளிச்சமாய் விட்டது. அத்துடன் அவர்கள் தன் மீது கொண்ட அச்சமே, வெறுப்புக்குக் காரணம் என்றும் கண்டான். அவன் உள்ளத்தில் அவர்கள் மீது இரக்கம் ஒருபுறமும், அவர்கள் நிலைகண்டு சிரிப்பு ஒருபுறமும் வந்தது.
“நேர்மையும் அன்பும் அற்ற கோழைகளே, என்னை அழிக்க இனி சதி செய்ய வேண்டியதில்லை. நானே போய்விடுகிறேன். ஆயினும், உங்களுக்கு நன்றியில்லாவிட்டாலும் நான் நன்றி கெட்டவனல்ல. உங்கள் ஊரில் சிலநாளாவது நீங்கள் இடமும், உணவும் கொடுத்தீர்கள். அதற்குக் கைம்மாறாக, நான் ஏற்கனவே உங்கள் ஊருக்குத் தொல்லை தந்த பூதத்தையும், அதன் கூளிகளையும் துரத்திவிட்டேன். நானும் போகிறேன். நீங்கள் அச்சமின்றி அமைதியாக வாழலாம். அத்துடன் உங்களுக்கு இந்தப் பொன்னிலும் சில சாக்குகள் தந்துவிட்டுப் போகிறேன். வளமான வாழ்வு காணுங்கள்,” என்றான்.
அச்சம் இன்னும் அவர்களைவிட்டு அகலவில்லை. அவன் சொன்னதும் புரியவில்லை. பண்ணைக்காரன் மட்டும் இப்போது சூனியக்காரனைப் பிடித்து வந்து, “இவன்தான் உங்களைக் கொல்லத் தூண்டினவன். எங்களுக்கு எந்தப் பாவமும் தெரியாது,” என்று அவன் பேரில் முழுப் பழியையும் சுமத்த முன்வந்தான்.
“எல்லார் பிழைகளையும் நான் மன்னித்துவிட்டுப் போகிறேன், ஐயனே, உங்கள் அச்சம்தான் உங்களைத் தவறான வழியில் செலுத்திற்று. நீங்கள் மனமாரத் தீங்கு செய்யவில்லை. இதோ உங்களுக்கு ஒரு சாக்குப் பொன்னும் உங்கள் மனைவிக்கு ஒரு சாக்குப் பொன்னும் எடுத்துக் கொள்ளுங்கள். என்றான் நித்திலன்.”
பண்ணைக்காரனும் அவன் மனைவியும் அச்சமுழுதும் தெளிந்து அவனை வாயார வாழ்த்தினார்கள். “எங்களைவிட்டுப் போகவேண்டாம். வாழ்நாள் முழுதும் எங்களுடன் இரு,” என்றார்கள்.
சூனியக்காரன் இன்னும் நடுங்கிக் கொண்டுதான் இருந்தான். பிறருக்குப் பரிசும் தனக்குத் தண்டனையும்தான் கிடைக்கும் என்று அவன் எண்ணினான்.
நித்திலன் அவன் பக்கம் திரும்பி, “இதோ ஒரு சாக்குப் பொன். இதில் பாதி நீ எடுத்துக்கொள். பாதியைத் தொழிலாளர்கள் எல்லாரும் பங்கிட்டுக் கொள்ளட்டும்,” என்றான்.
அவன் உள்ளார்ந்த குணம் இதற்குள் எல்லாருக்கும் விளங்கி விட்டது. “எம் வாழ்வை வளமாக்க வந்த வள்ளுவரே, நாங்கள் உங்கள் பெருமையறியாமல் கெட்டு விட்டோம்.” என்ற பண்ணைக்காரனும் அவன் மனைவியும் சூனியக்காரனும் நித்திலன் காலடியில் விழுந்தார்கள்.
தொழிலாளர்களோ, “பாண்டிநாடு தந்த புதிய வள்ளுவர் வாழ்க! தென்னாடு தந்த தீந்தமிழ்ச் சித்தன் வாழ்க!” என்று ஆரவாரம் செய்தனர்.
“வாழ்க நிலவுலகம் வாழ்க! பொறாமையும் அச்சமும், சிறுமையும் வீழ்க,” என்று கூறிக்கொண்டே, அவர்கள் தடுத்தும் நில்லாமல், நித்திலன் மீந்த நான்கு சாக்குப் பொன்னுடன் புறப்பட்டான்.
நித்திலன் நீரரமாந்தர் உலகைவிட்டு நிலஉலகுக்கு வந்து இதற்குள் ஏறத்தாழ மூன்றாண்டுகள் ஆய்விட்டன. அவன் உள்ளம் நில உலகின் மீது உவர்ப்புற்றது. கடலுலகில் தன் தாயைக் காண அவன் உள்ளம் துடித்தது. ஆயினும் தந்தைக்கும் நிலஉலகத் தாய்க்கும் தன் கடனாற்ற எண்ணி அவன் கொற்கையருகிலுள்ள அவர்கள் இல்லத்துக்கு விரைந்தான்.
மணவாளன் காலையில் தன் குடிசையின் வெளியே உட்கார்ந் திருந்தான். ஒய்யாரி உள்ளே அடுப்பில் கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தாள். நித்திலன் திடுமென மணவாளன் முன் வந்து நின்றான்.
“அப்பா மூன்றாண்டுகளையும் உங்கள் உலகில் கழித்து விட்டேன். இனி ஒருகணங்கூட அன்பில்லாத இந்த உலகில் என்னால் இருக்க முடியாது. நான் போகிறேன். ஆனால் போகு முன் உங்களுக்கும் என் நிலஉலகத் தாய்க்கும் என் வணக்கமும் கடமையும் செலுத்த விரும்புகிறேன். இதோ உங்களுக்கும் என் தாய்க்கும் என் காணிக்கை,” என்று கூறி அவன் நாலுசாக்குப் பொன்னையும் தந்தை காலடியில் வைத்தான்.
வந்திருப்பது நித்திலன் என்றறிந்தும் ஒய்யாரி இதுவரை வெளியே வரவில்லை. காணிக்கை என்றவுடனே அது என்ன என்று பார்க்க வெளியே வந்தாள்.
மணவாளன் நித்திலன் உச்சியைத் தடவி, “அப்பனே, சிலநாளாவது இருந்து போகக்கூடாதா? இந்தச் சாக்குகள் எதற்காக? அவற்றில் என்ன இருக்கிறது?” என்றான்.
நித்திலன் தன் கதைமுற்றிலும் கூறிச் சாக்கிலிருக்கும் பொன்னை எடுத்துக் காட்டினான். ஒய்யாரி வந்திருப்பதறிந்து அவள் காலடியில் இரண்டு சாக்கை வைத்து, மணவாளன் காலடியில் இரண்டை வைத்து. “எனக்குப் போக விடைதாருங்கள்.” என்று வணங்கினான்.
தங்கத்தைக் கண்டதே- அதுவும் சாக்குக் கணக்கில் கண்டதே- ஒய்யாரியின் பண்பு முழுதும் மாறிற்று. அவள் நித்திலனைக் கட்டிக் கொண்டு, “அருமை மகனே, எங்களை விட்டுப் போகவேண்டாம். உனக்கு வேண்டிய மட்டும் உணவு தருகிறேன். நீ வேலையே செய்ய வேண்டாம். எங்களுடன் இரு” என்றாள்.
மனைவியுடன் சேர்ந்து மணவாளனும் உருக்கமாக வேண்டினான்.
“அப்பா, அம்மா! உங்கள் இருவர் அன்பும் கண்டு மகிழ்கிறேன். கடலகத்து அம்மாவிடம் உங்களிருவர் பற்றியும் நான் போய்க் கூறவேண்டும். அத்துடன் நான் உங்களை வெறுக்காவிட்டாலும், இந்த நிலஉலகை வெறுத்துவிட்டேன். என் அப்பாவையும் நில உலகில் அவரைப் பாதுகாக்கும் என் அம்மாவையும் நான் ஒரு போதும் மறக்கமாட்டேன். எனக்கு விடைகொடுங்கள்,” என்று நித்திலன் மீண்டும் வேண்டினான்.
மணவாளன் உண்மையிலேயே வருத்தத்துடன் விடைகொடுத்தான். ஒய்யாரிகூட அவனிடமிருந்து பிரியும்போது இரண்டு சொட்டுக் கண்ணீர் சிந்தினாள்.
நித்திலன் ஆற்றில் நீந்திச் சென்று அலைவாயருகே மூழ்கினான். காலைக் கதிரொளியில் அவன் தோள்களும் கைகால்களும் பவளங்கள் போலச் சிவப்பாகத் தோன்றின.
அவன் கண்கள் இரண்டும் இரண்டு முத்துகளாகவும் தலையிலுள்ள நீலநிற மயிர்த்தொகுதி நீலப் பாசிகளாகவும் தென்பட்டன. அவன் மறைந்த இடத்தில் நெடுநேரம் வட்டஅலைகள் செந்தாமரை மலரின் இதழ்கள் போல ஒளி வீசின.
கிடைத்தற்கரிய செல்வப் புதல்வனைப் பெற்றும் தன் சிறுமதியால் அவனை இழக்க நேர்ந்ததே என்று ஒய்யாரி வருந்தினாள். மகன் தந்துசென்ற செல்வத்தைக் காட்டி, மணவாளன் அவளுக்கு ஆறுதல் அளித்தான்.
சேதாமை
கிட்டத்தட்ட நாற்புறமும் மலை சூழ்ந்த ஒரு பள்ளத்தாக்கில் கடம்பனேரி என்று ஓர் எரி இருந்தது. அதில் பல நீர்வாழ் உயிரினங்கள் இருந்தன. அவற்றுள் புழு, பூச்சி, மீன், தவளை போன்ற வலிமையற்ற சிறிய இனங்களுமிருந்தன. பாம்பு, சுறா, விலாங்கு முதலிய வல்லமை வாய்ந்த பெரிய உயிரினங்களும் இருந்தன. பெரிய உயிரினங்கள் சின்ன உயிரினங்களைத் தின்று வாழ்ந்தன. ஆனால், சிறிய இனங்கள் பெரிய இனங்களைவிட விரைவில் பிள்ளைக் குட்டி பெற்றுப் பெருகின. ஆகையால் எந்த இனமும் ஏரியில் அழிந்து விடவில்லை.
உயிரினங்களுள் ஒன்று, வலிமையற்ற இனங்களுடன் சேராமல், வலிமையுள்ள விலங்குகளுடனும் சேராமல் தனித்து வாழ்ந்தது. அதுவே ஆமை இனம். அது எந்த உயிரினத்தையும் தின்பதோ, துன்புறுத்துவதோ இல்லை. அதே சமயம் அதை எந்தக் கொடிய இனமும் அண்டுவதில்லை. அதன் மேலிருந்த தோடு அதற்கு ஒரு சிறு கோட்டையாயிருந்தது. தன்னைவிடப் பெரிதான எந்த உயிரினத்தைக் கண்டாலும் அது தன் கை கால்களையும் தலையையும் அந்தக் தோட்டைக்குள் இழுத்துக் கொள்ளும். அதைத் தகர்க்கும் சக்தி நீர்வாழ் உலகிலுள்ள எந்த விலங்குக்கோ, வெளியிலுள்ள விலங்குக்கோகூட இல்லை.
ஆமையினத்துக்கு எதிரி யாரும் இல்லாததாலும், அது பொதுவாக எல்லா உயிரினங்களைவிட நீண்டவாழ் நாளுடையதாயிருந்ததாலும், ஏரியில் அவ்வினம் தொகையில் பெருகிற்று. ஏரியின் ஆட்சி ஆமையினைத்தினிடமே இருந்தது.
எந்த வழியாகவோ அந்த ஏரிக்குள் முதலையினம் வந்து புகுந்தது. முதலில் முதலையின் ஒற்றன் வந்தது; பின் முதலையின் அரசனும் பரிவாரங்களும் படைகுடிகளும் வந்தன; ஏரியின் சின்னஞ்சிறு உயிரினங்களை ஆயிரக் கணக்கிலும், பாம்பு, சுறா, விலாங்கு முதலிய பேரினங்களை நூற்றுக்கணக்கிலும் அவை தின்றழித்தன.
ஆமையினத்துக்குக்கூட இப்போது ஆபத்து ஏற்பட்டது. முதலை களின் பரிய கொடிய உருவத்தைக் கண்டதே ஆமைகள் தம் வழக்கப்படி தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முயன்றன. அவை தலையையும் கை கால்களையும் தோட்டுக் கோட்டைக்குள் அடக்கிக் கொண்டன. ஆனால், ஒரு முதலை தோட்டுடனே ஓர் ஆமையை அப்படியே விழுங்கிற்று. அதைப் பார்த்த முதலைகள், இந்த எளிய முறையில் ஆமையினத்தை அழிக்க முற்பட்டன.
முதலைகளைவிட ஆமைகள் நீடித்த வாழ்நாள் உடையவை. முதலை யினத்தின் கொடுங்கோலாட்சிக்கு முன் ஆமையினமே அன்பாட்சி மிக்க குடியாட்சி நடத்தி வந்தது. ஆயினும், விரைவில் தம்மைவிட ஆண்டிலும் பண்பிலும் குறைந்த முதலையினத்திற்கு இரையாகி, அதன் தொகை வரவரக்குறையத் தொடங்கிற்று. ஆமையுலகமெங்கும் கிலி பரந்தது.
ஆமையினத்தின் காலம் இனி நெடுநாள் செல்லாது என்று ஆமை யுலக அறிஞர்களே கூறத் தொடங்கினர்.
நகரக்கூட முடியாதபடி அவ்வளவு முதுமையடைந்த ஓர் ஆமை, ஆமையின உயிர்களுக்கு ஓர் அறிவுரை கூறிற்று.
“நம் இனம் அழியாமல் இருக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. கூடியமட்டும் முற்றிலும் அழித்தொழிக்கப் படாமல் நாம் பத்துப்பன்னி ரெண்டு ஆமையூழிகள் கழித்து விடவேண்டும். அதற்குள் நமக்கு நம் கடவுளிடமிருந்து கட்டாயம் ஏதாவது உதவி கிடைக்கும்” என்றது அம் மூதாமை.
சில சிறிய ஆமைகள் இதைக் கேலி செய்தன.
“அவ்வளவு காலத்துக்குப் பின் காக்கும் கடவுள் இப்போது காத்தாலென்னவோ? ஏதோ அறிவுடையவர் மாதிரிப் பேசி இந்தக் கிழம் நம் சாவுப் போராட்டத்தை நீட்டிக்கப் பார்க்கிறது. சாவதாயிருந்தால் விரைவில் செத்து ஒழிய வேண்டும். பதுங்கிப் பதுங்கி நம் எதிரி வயிற்றுக்கு நாம் மிகுதியாக ஏன் வளந்தேடிக் கொடுக்க வேண்டும்,” என்று அவை கேட்டன.
“முதியோர் சொல்லும் முழுநெல்லிக்காயும் முன் துவர்க்கும்; பின் இனிக்கும். நான் சொல்கிறபடி செய்யுங்கள். பின் அறிவீர்கள்,” என்று மூதாமை கூறிற்று.
அப்போதும் இள ஆமைகள் கேட்கவில்லை. மூதாமை அனுபவமிக்க சில ஆமைகளைத் தனியே அழைத்து, “அன்பர்களே, நம்மைவிட வலிமையுடைய இனங்களும் வாழ்கின்றன. இதற்குக் காரணம் அவ்வினங்களின் ஒற்றுமையே. தலைவனாக ஓர் அரசனைத் தெரிந்தெடுத்து, அவை, அந்த அரசுக்கு அடங்கி நடக்கின்றன. நான் முடியாட்சி உயர்வுடையது என்று கருதவில்லை. ஆனால், இந்த ஒரு வகையில் நம் இனத்தின் குடியாட்சி நமக்கு இனப் பாதுகாப்பில்லாமல் செய்கிறது.”
“நான் உங்களுக்கு அறிவுரை கூறுவது எனக்காக அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். நான் முதலைக்கு இரையானாலும் ஆகா விட்டாலும், ஒரு சில நாளில் இறக்கத்தான் போகிறேன். ஆனால், நம் இனத்தைக் காக்கும் வகையை நான் அறிவேன். அதை உங்களிடம் கூறி விட்டுச் சாகிறேன்.”
“கடவுள் ஒவ்வோர் இனத்துக்கும் ஒவ்வொரு வகை வல்லமையை அளித்திருக்கிறார். மீனினம் - தன் தொகையைப் பெருக்கித் தன் இனத்தைப் பாதுகாத்துக் கொள்கிறது. தவளை -காய்ந்த மண்ணில் மண்ணுடன் மண்ணாய்க் கிடந்து மற்ற இனங்களைத் தாண்டி வாழ்கிறது. நம் இனமும் - தோட்டினாலும் நீண்ட வாழ்நாளாலும் இதுவரை தீங்கு செய்யாமலும் தீங்குக்கு ஆளாகாமலும் ஆட்சி செய்தது. இப்போது புதிய, கொடுமை மிக்க எதிரி முன், இவை இரண்டும் பயன்படவில்லை. ஆனால், கடவுள் நமக்கு இன்னும் ஓர் ஆற்றல் தந்திருக்கிறார். அதைக் கண்டு நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.”
மூதாமையிடம் ஏதோ புதிய அறிவு இருக்கிறது என்று கண்டு அனுபவமிக்க ஆமைகள் ஆவலாய்க் கேட்டன. தொலைவிலிருந்த இள ஆமைகளும் என்னவோ புதுச் செய்தி பேசப்படுகிறது என்று செவிகளைக் கூராக்கிக் கொண்டு உற்றுக் கேட்டன.
மூதாமை சற்று இளைப்பாறியபின் மீண்டும் பேசிற்று. “அன்பர்களே! பன்னிரண்டு ஆமையூழிக்கு ஒருமுறை ஆமையினத்திலேயே அறிவில் மிக்க ஒரு தனி ஆமை பிறக்கும்; இனத்தின் அறிவு முழுவதும் அதில் இடம் பெறும்; அது ஆமையினத்துக்குப் புத்தம் புது வாழ்வளிக்கும்,” என்றது.
“அத்தகைய ஆமையைக் கண்டுகொள்வது எப்படி?” என்று பல ஆமைகள் ஆர்வத்துடன் கேட்டன.
“அந்த ஆமைமுழுதும் சிவப்பாயிருக்கும்” என்று கூறிவிட்டு, அதுவே கடைசி மூச்சாக மூதாமை சாய்ந்தது.
மூதாமையின் அருமை தெரிந்து ஆமையுலகம் அதன் உடலை ஆரவாரத்துடனும் பெருமதிப்புடனும் அடக்கம் செய்ய முன்வந்தது. ஆனால் அந்தோ, இனத்தின் எதிர்காலத்துக்காகக் கடைசி மூச்சுவிட்ட அந்த ஆமையின் உடலையும் அதைத் தூக்கிச் சென்ற பல ஆமைகளையும் முதலையரசனும் அதன் பரிவாரங்களும் விழுங்கி விட்டன.
ஆமையுலகத்தின் தன்மானம் முற்றிலும் பறிபோயிற்று. ஆமையினம் தன்னையே தான் மதிக்காத நிலை ஏற்பட்டது.
ஆமைகள் பத்து நூற்றுக்கணக்கில் பகையினத்தின் பசிக்கு இரையாய் அழிந்தன. மீனினமும் தவளையினமும் கூட ஆமையினத்தின் அழிவு கண்டு கேலி செய்யலாயின.
ஆமையினம் முழுதும் சாகாமல் பார்த்துக் கொண்டது முதலையினமே. விரைவில் பெருகும் மீனினத்தையும் தவளையினத்தையும் பாம்பினத்தையும் தின்பதிலேயே அது முழுக்கருத்துச் செலுத்திற்று. ஆமைகளை மெல்ல மெல்லப் பெருகவிட்டு, அரசமுதலையும் உயர்குடி முதலைகளும் மட்டும் அவற்றை அவ்வப் போது சொகுசான உணவாக உண்டன.
ஆமைகள் சில ஒருங்குகூடி வேறு ஏரிகுளங்களுக்குப் போய் விடலாமா என்று கூட ஆலோசித்தன. ஆனால், வேறிடங்களுக்குச் செல்லும் நீர்ப்பாதைகள் ஒருசில. அவை முதலையினத்தின் ஆட்சியிலேயே இருந்தன. தவிர மற்ற எல்லா நீர்வாழ் உயிர்களும் வெற்றி கண்ட ஆட்சியினமாகிய முதலை இனத்துக்கே உடந்தையாயிருந்தது. ஆமையுலகின் ஆலோசனை களைக் காட்டிக் கொடுத்தன. ஆலோசனை கூறிய ஆமை முதல்வர்கள் தேடிப் பிடித்து விழுங்கப்பட்டனர்.
ஆமையினத்தின் வீர ஆமைகள், துணிகர ஆமைகள், அறிவுடைய ஆமைகள், ஆமையினத்தில் பற்றுடைய ஆமைகள் விரைந்தழிந்தன. அடிமை ஆமைகள், ஆமையினத்துக்கெதிராக எதிரிக்கு உளவுகூறிய ஆமைகள், நோயுற்று நலிந்த ஆமைகள் ஆகியவையே வாழ்ந்து வளர்ந்து பெருகின.
ஆமை உலகம் வாழவிடப்பட்டது, ஆனால் ஆமை யினத்தின் நலத்துக்காக அல்ல; முதலையினத்தின் நலத்துக்காக.
ஆமை உலக ஆண்டுகள் பல விரைந்து சென்றன. ஆமை உலக ஊழிகளும் ஒன்றொன்றாக உருண்டோடின.
பன்னிரண்டாம் ஊழியும் வந்தது. மூதாமை, கூறிய சொற்களை இதற்குள் பெரும்பாலான ஆமைகள் மறந்து விட்டன.
வழக்கத்துக்கு மாறாக ஒரு பெண்ணாமை நீண்ட நாள் சூலாயிருந்தது. அது மலட்டாமை என்று பல ஆமைகள் அதை வெறுத்துத் தள்ளின.
ஏரியின் ஒருமூலையில் முதிய ஆமைகளுடன் அது சென்று இருந்தது. வரவரநோவு மிகுதியாயிற்று. சூல் முதிர்ந்து முட்டை வெளி வந்தபோது அது முற்றிலும் குருதிச் சிவப்பாயிருந்தது.
“ஆமையினத்தை வாழ்விக்கவந்த சேதாமை இதுதான்” என்றது ஒரு மூதாமை.
“இது ஆமையேயல்ல, வேறினம்” என்றன சில.
பெண்ணாமை பொறுமையுடன் முட்டையைப் பாதுகாத்தது.
பிறந்த ஆமையும் மற்ற ஆமைகளைவிடச் சிறியதாய், மெல்லிய தோடுடையதாய், சிகப்பாய் இருந்தது. பெண்ணாமைக்குத் தாய்ப்பாசம் பெரிதாயிருந்தாலும், பிள்ளையைப் பார்த்ததும் அது பெருமூச்சு விடாமலிருக்க முடியவில்லை.
சேதாமை வளர்ந்தபின்னும் மற்ற ஆமைகளைவிட அது சிறந்தது என்பதற்கான அடையாளம் எதுவும் இல்லை. அது மிகுதி ஓடியாடு வதில்லை. உரத்துப் பேசுவதுமில்லை, அதை நோயுண்ட பிறவி என்றே ஆமைகள் கருதின. இளஆமைகள் அதன் மீதேறியும் அதைக் கடித்தும் விளையாடின.
இதனால் சேதாமை நாளடைவில் ஆமையினத்தினிட மிருந்தே ஒதுங்கித் தனித்து வாழத் தலைப்பட்டது.
தன்னைச் சூழ்ந்து கொக்கரித்த, இள ஆமைகளைக் கண்டு சேதாமை உண்மையில் அஞ்சவில்லை. ஆனால், அஞ்சுவதுபோல அது பாவனை செய்தது. அதே இள ஆமைகள் முதலைகள், முன் எப்படி நடந்து கொண்டன என்றும் அது பார்த்தது. முதலை தன்னை அணுகுமுன்னே அவை ஒவ்வொன்றாகத் தோட்டுக்குள் ஒடுங்கின. முதலை தின்றவைபோக மீந்தவை மீண்டும் கிளர்ச்சி யுடன் திரிந்தன. இவ் இள ஆமைகள் வீரமுடையவையல்ல; இனப் பற்றற்றவை என்று கண்டு, சேதாமையின் உள்ளம் உருகிற்று.
அனுபவமிக்க ஆமைகள்கூட, ஓட முயன்றனவேயன்றி, வேறு புதுவழி காணவில்லையே என்று அது கவன்றது.
அது செயலற்றுத் தன் வளைக்குள்ளேயே கிடந்து ஆர அமரச் சிந்தனை செய்தது. அதன் மூளையில் புதிய சிந்தனை ஒன்று தோன்றிற்று.
அது நேரே முதலையரசன் வாழ்ந்த பெருங்கரை நோக்கிச் சென்றது. வாயில் காவலர்களைச் சட்டை பண்ணாமல் அது அரசன் அருகிலேயே சென்று கல்லையும் மண்ணையும் வாரி இறைத்து ஆரவாரம் செய்தது.
அஞ்சி அஞ்சிப் பதுங்கும் ஆமையினத்தில் எவரும் இதுவரை இத்தகைய செயலைச் செய்ததில்லை. முதலை யரசனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
வாயை அகலத்திறந்து கோரப்பற்களைக் காட்டி அச்சுறுத்திய வண்ணம் முதலை அரசு ஆமையை நோக்கிப் பாய்ந்தது. சேதாமை சிறிதும் ஆடாமல் அசையாமல் அதை எதிர்நோக்கி நின்றது.
“யாரடா நீ, அறிவில்லாத ஆமை. முதலையினமென்றும் முதலையின் அரசனென்றும் பாராமல் வந்து அட்டகாசம் செய்கிறாய்? இம்மென்னும் முன் உன்னைப் போன்ற ஐம்பது ஆமைகளை நான் விழுங்கி ஏப்பமிடக் கூடியவன் என்று தெரியாதா?” என்று முதலையரசு வீறிட்டது.
“ஆம், அரசே! எங்கள் இனம் உருவில் சிறிய இனம். உங்கள் அளவு நாங்கள் வளர்ந்திருந்தால் நீங்கள் வாலாட்டமாட்டீர்கள்” என்றது.
தன் இனத்தைக் கோழை இனம் என்று குறித்தது கேட்க, முதலை யரசனுக்குப் பொறுக்கவில்லை; ஆமையுடன் சரிசமமாகப் பேசவும் அதற்கு மனமில்லை; அது ஆமையைத் தன் நீண்ட அலகில் பொறுக்கி விழுங்கத் தொடங்கிற்று.
சேதாமை மற்ற ஆமைகளைப் போலத் தலையையும் கைகாலையும் உள்ளே இழுத்துக் கொள்ளவில்லை. அதனால் அது அவ்வளவு விரைவாக உள்ளே சென்றுவிடவில்லை. தன் கால் கைகளில் முதலையின் பற்கள் படாமல் ஒதுங்கிக் கொண்டு, அது முதலையின் உள்ளிடத்தைச் சோதனையிட்டுக் கொண்டே மெல்ல உள்ளே சென்றது. ஆமையினத்தைப் போலவே, முதலைக்கும் புறத்தோடு தான் கோரமாயிருந்ததே தவிர, அகத்தே எல்லாம் மென்மையாகத்தான் இருந்தது. சேதாமை இதைக் கவனித்து, இடுங்கிய தொண்டைப் பகுதி வந்ததும், முதலையின் உட்கழுத்தை எட்டிப்பிடித்துக் கவ்விக் கொண்டது. கைகால்கள் அது கழுத்தின் உட்புறத் தோலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.
சேதாமையை விழுங்கி அதன் கதையை முடித்து விட்டதாக எண்ணிய முதலையரசன் வலி பொறுக்க மாட்டாமல் அலறிற்று. "குறும்புக் கார ஆமையே! ஏன் தொண்டையில் ஒட்டிக் கொண்டிருக்கிறாய்? உள்ளே போ, விரைவில் என்ற ஆங்காரத் துடன் ஆணையிட்டது. ஆனால், ஆமை பேசவில்லை, சொன்ன படி செய்யவுமில்லை. தன் கூரிய பற்களைத் தொண்டையின் மெல்யி சதையினுள் மேலும் பாய்ச்சி அழுத்திற்று.
முதலை வேதனையால் துடித்து, வாலைச் சுழற்றிச் சுழற்றி அறைந் தது. புரண்டு புரண்டு அலறிற்று “என்னைச் சாகடிக்கவந்த எமனே, உள்ளே போ! இல்லை என்றால் உன் இனத்தையே கொன்றுவிடுவேன்,” என்று உலுக்கிற்று.
சேதாமை பிடியைச் சற்றும் விடாமலே உள்ளிருந்து சிரித்தது. " என் இனத்தவர் எத்தனை பேரை நீரும் உம் இனத்தாரும் காரணமில்லாமல் கொன்றிருக்கிறீர்கள். அதற்கு நான் பழிவாங்காமல் போகப் போவதில்லை. உம் கோபம் இப்போது என்னை எதுவும் செய்ய முடியாது. நான் செத்தாலும் என் இனத்தின் பழியை உம்மீது தீர்க்க உறுதி கொண்டு விட்டேன்." என்றது.
முதலையரசு நம்பிக்கையிழந்து உயிர்வாதைப்பட்டு மண்ணில் புரண்டு புரண்டு அழுதது.
அரசன் நிலைகண்ட பரிவார முதலைகள் வந்து நயந்தும், அச் சுறுத்தியும், ஆசை காட்டியும் சேதாமையின் உறுதியைக் கலைக்கப் பார்த்தன.
“ஆமையரசே, எம் முதலையரசுக்கு ஒப்பாக உம்மையும் அரசாக மதித்து நடத்துகிறோம். எம் அரசைப் பாதுகாத்து வெளியே வாருங்கள்,” என்று அமைச்ச முதலை கெஞ்சிற்று.
“ஆமையினத்துக்கு உங்கள் தயவால் நான் அரசாக விரும்பவில்லை. ஆமையினத்தின் அரசாவதைவிட ஆதிக்க அரசை ஒழிப்பதிலேயே எனக்கு மகிழ்ச்சி.”
நீங்கள் அனைவரும் என் இனத்துக்குச் செய்த பழிக்கு உம் அரசன்மீது பழி தீர்த்துக் கொள்ளாமல் விடப் போவதில்லை," என்றது, சேதாமை.
உதவியற்றுத் தம் அரசன் துடிதுடித்துச் சாவதைக் கண்ட முதலை கள் அஞ்சி அந்த ஏரியைவிட்டே ஓடின.
பெருங்கரையில் நடந்த செய்திகளை முதலையுலகம் அறிந்து ஏரியை விட்டு ஓடிற்று. ஆனால், ஆமையினம் இன்னும் எதுவும் அறியவில்லை. ஆரவாரம் கேட்டுப் பல ஆமைகள் நாற்புறமும் ஓடிப் பதுங்கியிருந்தன; ஓடாதவையும் வாயும் கையும் காலும் அடக்கி “யோக” நிலையிலிருந்தன.
அச்சந் தெளிந்து அவை நடமாடத் தொடங்கின. எங்கும் முதலைகளைக் காணவில்லை என்று தெரிந்ததே, அவற்றுக்குத் தெம்பு வந்தது. அவை ஏரியெங்கும் சுற்றி உலவின. ஒருபுறம் மலைபோல முதலையரசன் கிடப்பதைக் கண்டு வியப்படைந்தன.
முதலில் அரசன் உறங்குவதாகவே எண்ணி அவை அண்டிவர அஞ்சின. நீண்ட நேரமாகியும் அது அசையாதது கண்டு ஒவ்வொன்றாக அதை அணுகி வந்தன. கல்லையும் மண்ணையும் எறிந்து பார்த்தன. சில சிறு ஆமைகள் வாலைக் கடித்துப் பார்த்தன. உயிரின் அடையாளம் சிறிது கூட இல்லை. அரசு செத்துக் கிடக்கிறது என்று கண்டதே, அவை, அதன் உடல்மீதேறி ஆரவாரம் செய்தன. “ஒழிந்தது முதலையினம், வாழ்ந்தது ஆமையினம்,” என்று நீர்ப்பரப்பு எதிரொலிக்கும்படி எக்காளமிட்டன.
‘முதலையரசு எப்படிச் செத்தது? முதலையினம் எப்படி ஓடிற்று?’ என்பது அவற்றுக்கு இன்னும் தெரியாது. ஆனால், தன் இனத்தவர் கூக்குரலை உள்ளிருந்து கேட்ட சேதாமை, தன் வேலை முடிந்து விட்டது என்று அறிந்து மெல்ல வெளியே வந்தது.
செத்த முதலையின் வாயினுள்ளிருந்து எதிர்பாராது வந்த சேதாமையைக் கண்டதும் ஆமைகள் வியப்படைந்தன. முதலையரசனை எதிர்த்து அது செய்த போராட்டத்தையும், மற்ற முதலைகள் ஓடியதையும் கேட்டதே ஆமையினத்தின் ஆரவாரம் நீர்மண்டலம் கொள்ளாததாயிற்று. இரண்டு ஆமைகள் சேதாமையைத் தம் முதுகிலேற்றிக் கொண்டன. முதலை யரசனின் தலைமுடியை அவை சேதாமையின் தலைமீது வைத்தன.
மற்ற ஏரிகளிலுள்ள ஆமைகளும் புதிய சேதாமையின் வீரச் செயல் கேட்டுக் கடம்பனேரிக்கு வந்தன. ஆமையுலக முழுவதும் சேர்ந்து சேதாமையைத் தம் தலைவனாகவும் அரசனாகவும் முடிசூட்டின.
ஆமையினத்தின் நலனுக்காகப் பல அறிவார்ந்த சட்டதிட்டங்களும், அமைப்புகளும், வாழ்க்கை ஒழுக்க முறைமை களும் வகுத்துக் கொடுத்து, சேதாமை ஆமையினத்துக்கு ஒரு வள்ளுவர் பெருமானாக நீடித்த அன்பாட்சியும் அறிவாட்சியும் நடத்திற்று. ஆமையினத்தின் அறிவையும் வீரத்தையும் வளர்த்து, நிலைத்த அமைதி முறைமைகளும் ஏற்படுத்தியபின், அது ஆமையுலகில் மீண்டும் குடியாட்சி நிறுவிவிட்டு மறைவுற்றது.
ஆமையினம் மீண்டும் விழாக்கள் கொண்டாடின; ஆனால், இப்போது அவற்றுக்கு அச்சம் இல்லை; அறியாமை இல்லை; பொறாமை இல்லை; பொறாமை பொச்சரிப்புப் பூசல்கள் ஏதும் இல்லை.
கழுதும் காம்போதியும்
கழுதையைக் கண்டால், கழுதுகளும் பேய் பூதங்களும் ஓடிப் போய்விடும் என்பதைப் பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். யாரும் மதிக்காத இந்த விலங்கைக் கண்டு கழுதுகளும் பேய்களும் அஞ்சுவானேன்?
ஒரு கழுதையின் முன்னோனின் வீரச்செயலே இவ்வச்சத்துக்கு மூலகரணம் என்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.
நெடுங்காலத்துக்கு முன் வாழ்ந்த அந்தக் கழுதை முன்னோனின் பெயர் காம்போதி என்பது. அதன் கண்கள் மாட்டின் கண்களைப் போல நீண்டகன்றும், மானின் கண்களைப் போல மருட்சியுடையதாகவும் இருந்தன. அதன் காதுகள் மாவிலைகளைவிட நீண்டு நிமிர்ந்திருந்தன. அதன் வால் அதன் உடலைவிட நீளமானதாகவும், நுனியில் தடித்த மயிர்க்கற்றை உடையதாகவும் இருந்தது.
கழுதைகளுக்குரிய இயற்கையான பொறுமை காம்போதிக்கு இருந்தது. ஆனால், அறிவிலும் ஆழ்ந்த சூழ்ச்சித் திறத்திலும் எந்த விலங்கும் அதற்கு ஈடல்ல. அதே சமயம் அது எல்லா விலங்குகளிடமும் அன்பும் ஆதரவும் உடையதாய், எந்த விலங்குக்கும் துன்பத்தில் உதவுவதாய் இருந்தது. விலங்குகளுக்குக் கொடுமை செய்பவரைக் கண்டால் மட்டும் அது கோப வெறி கொண்டு விடும். அச்சமயம் அதன் உருண்டு திரண்ட கண்களைப் பார்க்க பயமாயிருக்கும். கோப வெறியால் காதுகள் ஊசி முனைபோல நின்று துடிக்கும். வால், சிங்கத்தின் வால்போலச் செங்குத்தாக நின்று சுழலும். அதன் தோள்வலியும் குளம்புகளின் கடுமையும், அச்சமயம் எதிரிகளின் தசைகளைச் சிதைக்கும்.
விலங்குகளுடன் விலங்காக, உடன்பிறப்புப் பாசம் காட்டிக் கொண்டே காம்போதி அன்பாட்சி செய்தது. அதே சமயம் அது தன் அறிவையோ, ஆற்றலையோ தனக்குச் சிறிதும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அது காட்டான் என்ற விறகு வெட்டியிடமிருந்து அவனுக்கு அடங்கி ஒடுங்கிக் குற்றவேல் செய்து வந்தது.
காட்டான் சில சமயம் காம்போதியை அடிப்பான்; சில சமயம் அதைக் கட்டி முத்தமிடுவான்; கழுதை இரண்டையும் சட்டை பண்ணுவதில்லை. அவன் சில சமயம் அதைக் கடுமையாக வேலை வாங்குவான்; சில சமயம் துனியை வலுக்கட்டாயமாக அதன் தொண்டைக்குள் திணிப்பான். காம்போதி அந்தந்தச் சமயத்துக்கேற்றபடி நடந்து தன் கடமையைச் செய்து வந்தது. அறிவிலோ, ஆற்றலிலோ காட்டான் தனக்கு ஈடல்லன் என்பது காம்போதிக்குத் தெரியும். ஆயினும் அதற்கு அவனிடம் உள்ளார்ந்த அன்பும் மதிப்பும் உண்டு. ஏனெனில் அவன் சூதுவாதற்ற குழந்தை உள்ளமும் அன்புக் கனிவும் உடையவன்.
சில சமயம் விறகுகட்டுப் பெரிதாயிருப்பது கண்டு, காம்போதி சிறிது முனகும். காட்டான் உடனே பெருந்தன்மை யுடன் விறகுக்கட்டை அதன் முதுகிலிருந்து தன் தலைக்கு மாற்றிக் கொண்டு, தான் காம்போதியின் முதுகிலேயே ஏறி உட்கார்ந்து கொள்வான். அத்துடன் “நீ என்னைச் சுமந்து சென்றால் போதும். நான் விறகுகட்டைச் சுமந்து வருகிறேன்.” என்று அவன் கழுதையிடம் பேரம்பேசி அதைத் தட்டிக் கொடுப்பான். இச்செயலால் விறகுச்சுமையும் தன் சுமையும் காம்போதிமீதே அழுத்துகிறது என்பதை அவன் மூளை அறிவதில்லை. இச்சமயங்களில் காம்போதி, அவன் வெள்ளை உள்ளத்தை எண்ணி உள்ளூரச் சிரித்துக் கொண்டே, அவன் மனம் நோகாமல் இரட்டிப்புச் சுமையைச் சுமந்து செல்லும். பாவம், மனிதன்! கழுதைக்குள்ளஅறிவுதான் இல்லை; அன்புமட்டும் இருக்கிறது என்று அது பெருமிதத்துடன் தனக்குள் பேசி அமையும்.
வாய்விடா விலங்குகளுக்குக் காம்போதி ஒரு கண் கண்ட தெய்வம். போக்கற்ற எத்தனையோ உயிர்களுக்கு அது போக்களித்திருக்கிறது. கண்ணீரும் கம்பலையுமாய் வந்த எத்தனையோ விலங்குகளுக்கு அது கண்ணீர் துடைத்திருந்தது.
ஒரு நாள் ஒரு பூனை, ஒரு விட்டின் புறமதில் மேலிருந்து கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தது.
காம்போதி அதை அணுகி, “ஏன் அழுகிறாய், வெள்ளைக் குட்டி! உன்னை யார் அடித்தார்கள்?” என்று கேட்டது.
“யாரும் அடிக்கவில்லை அண்ணா! இந்த வீட்டில் எலிகள் வராமல் நான் எவ்வளவோ நாள் காத்திருக்கிறேன். ஆயினும், இந்த வீட்டுத் தலைவி என் தள்ளாத வயதில் என்னை அடித்து விரட்டுகிறாள். இப்போது நான் ஓடியாடி எலிபிடிக்க முடியாதாம்! இந்த நேரத்தில் நான் எங்கே போவேன்? எனக்கு யார் உதவி செய்வார்கள்?” என்று பூனை தேம்பித் தேம்பி அழுதது.
காம்போதி அதன் கண்ணீரைத் துடைத்தது.
“வெள்ளைக்குட்டி, நீ அழவேண்டாம். நான் இருக்கிறேன்; நீ எங்கும் போக வேண்டாம்; என் முதுகில் ஏறிக்கொள்; உன் வாழ்நாள் முழுவதும் நான் உன்னைப் பாதுகாக்கிறேன்,” என்றது.
பூனையைக் காம்போதி முதுகில் ஏற்றிக்கொண்டு காட்டான் வீட்டுக்குக் கொண்டுபோயிற்று. காட்டான் மனைவி முதலில் பூனைக்கு உணவு கொடுக்க மறுத்தாள். ஆனால், பூனை உண்ணும்வரை காம்போதி தானும் உண்ணமாட்டேன் என்று பிடிமுரண்டு செய்தது. இதனால் பூனைக்கு உணவு வைக்கப் பட்டது. பூனை வந்த அன்றுமுதல் காம்போதி இரட்டிப்பு மகிழ்ச்சியுடனிருந்து, இரட்டிப்பு வேலை செய்ததனால் பூனையை யாரும் அதன்பின் ஒரு தொல்லையாகக் கருதவில்லை.
காம்போதியின் கருணைக்கு ஆளான உயிர்களுள் குரங்கு ஒன்றும் இருந்தது. அது ஒரு கொப்பிலிருந்து ஆடும்பொழுது கொப்பு முறிந்து விழுந்து படுகாயமடைந்தது. மற்றக் குரங்குகள் அதை அந்த நிலைமை யிலேயே விட்டு விட்டு ஓடின. நாய் முதலிய அறிவற்ற சில விலங்குகள், அதற்கு உதவி செய்வதற்கு மாறாக, அதற்குத் தொல்லை கொடுக்கத் துணிந்தன. அந்தச் சமயத்தில் அவ்வழியாக வந்த காம்போதி நாய்களைத் துரத்தி, குரங்கை மெல்லத் தன் தோளில் தூக்கிக் கொண்டு வந்தது. தனக்குத் தரப்பட்ட உலர்ந்த புல்லால் அதற்குப் படுக்கை உண்டு பண்ணிற்று. பூனை, அதற்கு அண்டை வீடுகளிலிருந்து உணவு திருடிக் கொண்டுவந்து கொடுத்தது.
உடல்தேறியபின் குரங்கு காடுகளில் சென்று காய்கறிகள் கொண்டு வந்து காட்டான் மனைவிக்குக் கொடுத்தது. காம்போதியின் சமூகப் பணியாற்றியது. அது முதல் காட்டான் மனைவி முணுமுணுப்பதில்லை. அவளும் அதில் மனமுவந்து பங்குகொள்ளத் தொடங்கினாள்.
காட்டான் மனைவியின் மனமாறுதலால் அவன் வீடு ஒரு சிறிய விலங்குப் பண்ணையாகவே விளங்கிற்று. வல்லூறுகளின் பிடியிலிருந்து தப்பி விழுந்த கோழிக் குஞ்சுகள், துரத்திக் கொண்டு வரும் ஓநாய்க்குப் பயந்து ஊருக்குள் நுழைந்து விட்ட காட்டு மாடுகள், சிறகறுபட்ட பறவைகள், பால்வற்றிப்போன பசுக்கள் ஆகியவை அங்கே வந்து அடைக்கலம் பெற்றன. ஒரு விலங்கு, மற்ற விலங்குகளுக்கு உதவி செய்ததாலும், எல்லா விலங்கு களுமே வீட்டுத் தலைவிக்கு ஏதாவது ஒத்தாசை செய்து வந்ததாலும், மொத்தத்தில் காட்டான் மனைவிக்கு இப் பண்ணையின் பொறுப்பால் துன்பம் எதுவுமில்லை! இன்பமே மிகுதியாயிற்று. கோழிப்பண்ணை, பால் பண்ணை பெருகி விட்டதால், இனி கணவனும் காம்போதியும் மிகுதிவேலை செய்யவேண்டியதில்லை என்றுகூட அவள் கருதிவிட்டாள்.
வேலையில்லாத நாட்களில், காம்போதி பகலிலேயே ஊரைச் சுற்றிச் சென்று மற்ற உயிரினங்களின் சேமநலங்களைப் பற்றி உசாவி வரும். வேலை மிகுந்த நாட்களில், இரவிலேயே ஊர் சுற்றிவரப் புறப்படும். இரவு ஊர்வலம் வருவதால் அதன் சமூக சேவை இன்னும் பயனுடையதாயிற்று. கோழிகளையும் ஆட்டுக்குட்டிகளையும் பதுங்கி இருந்து திருட எண்ணும் நரிகளை, அது அவ்வப்போது கண்டது. அச்சமயம் அது தன் கழுத்தை நீட்டி முழக்கமிடும் அந்த முழக்கத்தைக் கேட்டே நரிகள் ஓட்டம் பிடிக்கும்.
இங்ஙனம் முழக்கமிடும் வேளையில், அதற்கு இன்னொரு புதிய அனுபவமும் ஏற்பட்டது. முழக்கமிடும் வகையில் கழுதை இனத்துக்கு உள்ள இன ஒற்றுமைப் பண்பை அது அப்போதுதான் முதன் முதலாகக் கண்டது. தான் முழக்கமிடும் சமயத்தில், அண்டை அயலிலுள்ள எல்லாக் கழுதைகளும், தூங்கிக் கொண்டிருந்தால்கூட எழுந்து முழக்கமிடுவதை அது கண்டது. கழுதையினத்தில் தான் பிறந்ததற்காக அது அத்தகைய தறுவாய்களில் உண்மையிலேயே பெருமைப்பட்டுக் கொண்டது.
கழுதைகளின் கூட்டு முழுக்கத்தையும் அதனையடுத்து நாய்கள், கோழிகள் ஆகியவைகளின் ஒன்றுபட்ட முழக்கத்தையும் தூண்டி, ஓநாய் புலி ஆகியவற்றைக்கூடத் துரத்த முடியும் என்று காம்போதி கண்டது.
ஒரு தடவை பள்ளத்தில் பதுங்கியிருந்த ஒரு புலி மீது காம்போதி அச்சமில்லாமல் உயரத்திலிருந்து தாவிக் குதித்தது; அதிர்ச்சிகொண்ட புலி ஓடிற்று; ஆனால், காம்போதியின் உடல் பளுவுடன் அதன் கால் குளும்புகளும், விழுந்த வேகமும் சேர்ந்து புலியை மிகவும் காயப்படுத்தியிருந்தது. விழுந்தவுடன் அது கடித்த கடியால் கழுத்திலும் காயம் ஏற்பட்டது. இக்காயங்களால் சிறிது தொலை ஓடுவதற்குள் புலி சோர்ந்து விழுந்து செத்தது.
வேட்டை நாய்கள்கூட எதிர்க்க அஞ்சும் புலியைக் காம்போதி தனியாய் நின்று வென்றதைக் கண்டதே, அதன் பெருமை விலங்குலகில் மட்டுமன்றி, மனித உலகில்கூடப் பெரிதாயிற்று. காம்போதி இருந்த ஊரில் பாதுகாப்பு மிகுந்த தனால், அங்கே விலங்குகளும் பெருகின; பயிர்ப் பச்சைகளும் வளமாயின; செல்வமும் பெருகிற்று; காம்போதி விலங்கு களாலும் மனிதராலும் நன்கு மதித்துப் பூசிக்கப்பட்ட ஓர் உண்மைத் தெய்வமேயாயிற்று.
விலங்குகளின் புகழோ, மனிதரின் பாராட்டோ, காம்போதியின் போக்கில் எந்த மாறுதலும் உண்டு பண்ணவில்லை. காட்டானுக்கு அதனிடம் அன்புமட்டுமல்ல, மதிப்பும் வளர்ந்தது. ஆனால் காம்போதி, அவன் மதிப்பைக் கண்டு புன்முறுவல் செய்ததேயன்றி, வேறெந்த வகையிலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தன்னாலியன்ற அளவு அது முன்போலவே வேலை செய்தது.
அதற்கு இருந்த பெருமை எல்லாம் ஒன்றே ஒன்றுதான். புலியைக்கூடத் தாக்கும் வீரமும் பலமும் தன் முரட்டு எலும்புகளுக்குள் இருந்தன என்பதே அது. ஆனால் இந்தப் பெருமை அதை மேன்மேலும் வீரப் பணிகளுக்கும் அஞ்சாத் துணிகரச் செயல்களுக்கும் மட்டுமே தூண்டிற்று.
ஒருநாள் காலையில் காட்டான், காம்போதிக்கு உலர்ந்த புல்லைக் கிளறி எடுத்துக் கொண்டு வந்து வைத்தான். வழக்கத்துக்கு மாறாக, காம்போதி புல்லையே கவனிக்காமல் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தது.
அதன் தலை சாய்ந்திருந்தது. நீண்டகன்ற கண்களிலிருந்து ஒன்றிரண்டு சொட்டுக் கண்ணீர் சிந்தி, அதன் கன்னத்தின் மென் மயிர்களை நனைத்திருந்தது.
தன் ஆருயிர்க் கழுதையின் கவலைகண்ட காட்டான் உள்ளம் திடுக்கிட்டது. “என் அருமைக் காம்பூ, நீ ஏன் இவ்வளவு கவலைப்படுகிறாய்? என்னிடம் உனக்கு ஏதேனும், குறை ஏற்பட்டுவிட்டதா? வேலை கடுமையாய் இரக்கிறதா? என்ன குறை இருந்தாலும் சொல்; நான் தீர்த்து விட்டு மறுவேலை பார்க்கிறேன்.” என்றான்.
காட்டானின் அன்பு ததும்பும் சொற்கேட்டுக் காம்போதி தன் கண்ணீரைச் சட்டெனத் துடைத்துக் கொண்டது.
“அன்பரே! நீங்கள் இருக்கும் போது எனக்கு என்ன குறை இருக்க முடியும்? உங்கள் தயவால் நான் இந்த வீட்டில் மட்டுமின்றி, இந்த ஊரிலேயே அரசன்போல வாழ்கிறேனே! ஆனால், நான் கவலைப்பட்டது எனக்காக அல்ல. இந்த ஊரிலுள்ள உயிரினங்களுக்கெல்லாம் இப்போது எல்லை யில்லாத் துன்பம் ஏற்பட்டிருக்கிறது.”
“நம் பூனையின் அத்தை மகனை முந்தாநாளிலிருந்து காணவில்லை. பூனை அதுமுதல் சரியாகச் சாப்பிடவில்லை. நம் குரங்கின் அண்ணன் பிள்ளையின் கழுத்தை முறித்துக் குருதி குடித்து விட்டு யாரோ உடலை வீசி எறிந்திருக்கிறார்கள். அதன் தாய் குட்டியின் உடலைத் தூக்கிக் கொண்டு வந்து என்முன் அழுதது. இவை மட்டுமல்ல. நாய்கள், ஆட்டுக் குட்டிகள், கன்று குட்டிகளைக் கூட இரவில் யாரோ தின்று அழிக்கிறதாகத் தெரிகிறது.”
“நான் இரவில் சென்று உசாவியதில் ஒரு கொடிய கூளிப் பேய் உலவுகிறதாம்! கழுதைகளும், எருமைகளும்கூட அதை எண்ணி இரவில் நடமாட அஞ்சி நடுங்குகின்றன. விலங்கினங்கள் இவ்வளவு துன்பம் அடைவதைப் பார்த்துக் கொண்டு நான் மட்டும் உங்கள் ஆதரவில் எப்படி மகிழ்ச்சியோடிருக்க முடியும்?” என்று காம்போதி கூறிற்று.
காட்டான் இதைக் கேட்டுக் கலகலவென்று சிரித்தான்.
“இத்தனை விலங்குகளுக்கும் அவற்றை வைத்துக் காக்கும் மனிதர்களுக்கும் இல்லாத கவலை உனக்கு ஏன் காம்பூ! உனக்குத் துன்பம் வராதவரை நீ பேசாமலிரு,” என்றான்.
காட்டானின் சிரிப்பும் அவன் குறுகிய தன்னலமும் காம்போதியின் ஆத்திரத்தைக் கிளப்பின. அது வாலை உயர்த்திக் கொண்டு பின்னங் கால்களை ஊன்றி மனிதனைப் போல நின்று கொண்டு “மனிதர்கள் அடிக்கடி கூறுகிறபடி நான் ஒரு மடக்கழுதையா யிருக்கலாம்; ஐயனே! சுமை தூக்குவதைத் தவிர வேறு எதற்கும் பயன்படாதவனாயிருக்கலாம்; ஆனால், என் இனத்தவர் இடர்ப்படும்போது, அவர்களுக்கு உதவுவதற்கு வேண்டிய உறுதியையும் வலுவையும் என் எலும்புகளுக்குக் கடவுள் கொடுத்திருக்கிறார்.” என்று இறுமாப்புடன் கூறிற்று.
விறகுவெட்டியின் சிரிப்பு அமர்ந்த புன்முறுவலாக மாறிற்று. “காம்பூ, உன்னை மடக்கழுதை என்று யாரும் கருதவில்லை; உன் அறிவு, வீரம், பெருந்தன்மை ஆகியவைகளை நான் அறிவேன்; ஆயினும், இதில் நீ தலையிட்டால் உனக்குக் கேடு வந்துவிடுமே என்றுதான் அஞ்சுகிறேன். நீ இரவில் வெளியே போனால் அந்தப் பாழும் கூளி உன்னை விழுங்கிவிடக் கூடும்” என்றான்.
“என்னையா? விழுங்கவா? அந்த அச்சம் உங்களுக்கு வேண்டாம். உங்கள் மொழியில் நீங்கள், கூளியைக் கழுது இனம் என்கிறீர்கள். என் இனத்தைக் கழுதைஇனம் என்கிறீர்கள். கழுதுகளை விழுங்கி ஏப்பமிடும் கழுதை இனம் நான் என்று காட்டுகிறேன்.” என்றது காம்போதி.
காம்போதியின் சொல்லுக்கு மாறு சொல்லி அதைப் புண்படுத்தக் காட்டான் விரும்பவில்லை. அதே சமயம் காம்போதியை இந்த இடருக்குள் சிக்க வைக்கவும் அவன் எண்ணவில்லை. ஆகவே, “கழுதுக் கூளியை ஓட்டநான் வேண்டிய ஏற்பாடு செய்கிறேன். நீ அதுவரையில் சும்மா இரு,” என்று கூறிச் சென்றான்.
அன்று நடைபெற்ற ஊர்க்கூட்டத்தில் காட்டான் கழுகுக்கூளி பற்றிய பேச்சேடுத்தான். எல்லாரும் உடனே தங்கள் தங்கள் கைக்கடிகாரத்தை எடுத்துப் பார்த்துக் கொண்டார்கள். கழுதின் நினைவு வந்ததே, பொழுது சாயுமுன் வீட்டுக்குப் போய்விட வேண்டுமென்ற எண்ணந்தான் எல்லாருக்கும் ஏற்பட்டது. நிறைவேறிய தீர்மானமும் அந்த அடிப்படையில்தான் அமைந்திருந்தது. “ஊர்க் கூட்டங்கள் இனி நடு உச்சியிலேயே நடைபெற வேண்டும். பொழுது சாய்வதற்கு முன்பே எல்லோரும் வீட்டுக் கதவுகளையும் பலகணிகளையும் இறுக மூடிவிட வேண்டும். எல்லாக் கதவுகளுக்கும் பலகணிகளுக்கும் ஊர்க் கொல்லர் உறுதியான பூட்டும் தாழ்ப்பாளும் செய்து கொடுக்க வேண்டும்” -இவையே மனித உலகின் தீர்மானங்கள். வீட்டு முற்றத்தில் கட்டப்படும் ஆடு மாடுகள், கோழிகள் ஆகியவற்றைப் பற்றியோ, இரவில் வெளியே திரியும் பூனை, நாய்களைப் பற்றியோ இந்த உயிராபத்தான காரியத்தில் எவரும் கவலை செலுத்தவில்லை.
காம்போதிக்குள்ள வீரமும் பெருந்தன்மையும் அன்புள்ளமும் மனித உலகத்தில் மிகமிக அருமையானதே என்று காட்டான் கண்டான். இதைக் காம்போதியிடம் கூறவும் அவனுக்கு வெட்கமாயிருந்தது. ஆகவே, காம்போதியை மட்டும் பின் தொழுவத்திலிராமல் முற்றத்தில் வெளியறைக்கு வந்து விடும்படி அவன் கூறினான்.
காற்று வீசும் வீச்சைக் காம்போதி அறியாமலில்லை. தன் தலைவன் மனம் குளிர, அறையிலேயே படுத்துக் கொள்வதாக அது கூறிற்று. ஆனால் காட்டான் மனைவி கதவுகளைச் சார்த்து முன்பே அது யாரும் காணாமல் பின் தொழுவத்துக்குள் சென்று படுத்துக் கொண்டது. இது அவ் வீட்டிலேயே இருந்த பூனை, குரங்கு முதலிய உயிர்களுக்குச் சிறிது தெம்பளித்தது. ஆனால், தன் தோழர்களுள் கடைசியான தோழன் உறங்குவதற்குள் அது வெளியே வந்து விடும். “வெளியே நான் காவலிருக் கிறேன். நீ உள்ளே கதவை அடைத்துக் கொள்,” என்று கடைசித் தோழருக்கு அது ஆணையிடும்.
வீட்டைக் காப்பதுடன் நில்லாது, அது நள்ளிரவிலேயே ஊர் சுற்றத் தொடங்கிற்று.
கூளியைக் கண்டு மருண்டோடும் விலங்குகளிடம் அது கூளி எங்கே என்று கேட்டது. இதனால் அவற்றின் அச்சம் குறைந்தது. ஆனால், கூளி எங்கே தம் அருமைக் காவலனை விழுங்கி விடுமோ என்று அவை கவலைப்பட்டன.
சிறப்பாகக் கழுதைகள் தம் இனத்தில் தலைசிறந்த வீர அறிஞனுக்குத் தீங்கு வரக்கூடாதே என்று அதன்மீது அக்கரையாயிருந்தன. குரங்கொன்று ஒரு மரத்தண்டை பதுங்கியிருந்தது. “உனக்குக் கூளியிடம் அச்சம் இல்லையா?” என்று காம்போதி அதைக் கேட்டது. கூளி என்றவுடன் அது உண்மையிலேயே நடுங்கிற்று. என்னை எங்காவது பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போய் விடு, காம்போதியண்ணா! உனக்குக் கோடி புண்ணியம் உண்டு". என்று குரங்கு கெஞ்சிற்று.
“கொண்டு போய் விடுகிறேன், ஆனால், இவ்வளவு அஞ்சுகிற நீ இங்கே இப்படி ஏன் இந்நேரம் வந்தாய்?” என்று காம்போதி கேட்டது.
குரங்கு வெட்கத்தால் தலை குனிந்தது. “கோபம் கொள்ளாதே அண்ணா; இங்கே மரத்தின் மேல் ஒரு தேன் கூடு இருக்கிறது. பகலில் அதைக் கவனித்துப் பார்த்துக் கொண்டேன். ஆனால், தேனீக்கள் கொட்டி விடுமென்று கிட்டப் போகவில்லை. இரவில் தேனீக்கள் தூங்கும் சமயம் கோலால் அதைக் குத்தி, வடியும் தேனைக் குடிக்க எண்ணி வந்து விட்டேன்,” என்றது.
காம்போதி குரங்கைத் தன் வீட்டண்டையே கொண்டு சேர்த்தது. கழுதுக் கூளியை வெல்வதற்கான வழிதுறைகளை எண்ணிக் கொண்டே அது மீண்டும் தேன்கூடு இருந்த மரத்தை நோக்கி வந்தது. அதன் மூளையில் பல எண்ணங்கள் தோற்றின.
அதே தேன்கூட்டருகில் வேறொரு மரத்தடியில் ஒரு நாயைக் கொன்று தின்று கொண்டிருந்தது ஒரு கூனல் உருவம். அது நிமிர்ந்தபோது, அதுதான் கூளி என்று காம்போதி ஊகித்தது.
“என்ன கூளி மாப்பிள்ளை? இருந்திருந்து நாயைத் தின்னத் தொடங்கிவிட்டாய் போலிருக்கிறது,” என்று கேலி பேசிற்று காம்போதி.
கழுதுக்கூளிக்கு வந்த கோபத்துக்கு எல்லையில்லை. “வா, வா, நான் உனக்கு மாப்பிள்ளையா? வா; நான் இனி நாயைத் தின்னப் போவதில்லை; அதைவிட நீ நல்ல உணவு; உன்னையே தின்னப்போகிறேன்.”என்று எழுந்து தன் பேய்த்தன்மையைக் காட்டும் முறையில் ஊளையிட்டது.
கழுதின் ஊளை பயங்கரமாகவே இருந்தது. ஆனால், காம்போதி அஞ்சவில்லை. “ஐந்திலும் சாவுதான், ஐம்பதிலும் சாவுதான்; ஆகவே, அதற்காக அஞ்சி அஞ்சிச் சாகவேண்டிய தில்லை.” என்று அது துணிந்தது. அது தன் இரு முன்கால் களையும் நீட்டிக் கொண்டு பின்கால்களில் எழுந்து நின்று தன் முழு வலிமையையும் காட்டி முழங்கிற்று.
அதன் முழக்கத்துடன் முழக்கமாக எல்லாக் கழுதை இனமும் முழங்கிற்று.
பேய்கள், கழுதுகளின் உலகில்கூடக் கூளி இத்தகைய பயங்கர முழக்கத்தைக் கேட்டதில்லை. அது உள்ளூர நடுங்கிற்று. ஆயினும், அதைக் காட்டிக் கொள்ளாமல் அது கையை ஓங்கிக் காம்போதியின் முகத்தை நோக்கி ஓரடி அடித்தது.
காம்போதி உடனே தலையைத் தாழ்த்திக்கொண்டு அடியை விலக்கிற்று; பின், முன்கால்களை உயரத் தூக்கிக் கொண்டு அதன் மீது பாய்ந்தது; காம்போதியின் பளுவும் பாய்ச்சலும் குளம்புகளும் சேர்ந்து கூளியைப் பின்னுக்குத் தள்ளிற்று.
காம்போதியை முன்னால் நின்று கொல்ல முடியாது என்று நினைத்துக் கூளி வளைந்து சென்று பின்புறம் தாக்கத் தொடங்கிற்று.
பாவம், கழுதையினத்தின் வல்லமை அதன் பின் கால்களில்தான் இருக்கிறது என்பதைக் கழுது அன்று வரை அறியவில்லை.
கூளிப்பயல் சரியாக மாட்டிக் கொண்டான் என்று தனக்குள் நகைத்த வண்ணம், காம்போதி தன் முன்கால்களை நிலத்தில் ஊன்றிப் பின் கால்களால் வேகமாக உதைத்தது.
கூளியின் முகத்தில் பின்குளம்பு பட்ட இடமெல்லாம் குருதிச் சேறாயிற்று. போதாக்குறைக்குக் குளம்புகள் கல்லையும் மண்ணையும் வீசியதனால் அதற்குக் கண் திறக்க முடியாமல் ஆய்விட்டது. இனி தப்பியோடிப் பிழைத்தால் போதும் என்று அது சரசரவென்று தேன் கூடு இருந்த மரத்தில் சென்று ஏறிப் பதுங்கிக் கொண்டது.
கம்போதிக்கு இப்போது தன் தாக்குதல் திட்டத்தின் கடைசிப்படி நினைவுக்கு வந்தது. அது பின்வாங்குவது போல் சிறிது தொலைசென்று, பின்கால்களால் மரத்தின் மேல் கல்லையும் மண்ணையும் வாரி இறைத்தது.
ஏற்கெனவே கழுதைகளின் முழக்கத்தால் தேனீக்கள் கலைந் திருந்தன. கல்லும் மண்ணும் கூட்டின் மீது வீழவே அவை நாற்புறமும் பறந்து வந்து கண்ட கண்டவற்றையெல்லாம் கொடுக்குகளால் கடித்தன. காம்போதி தொலைவில் சென்றிருந்ததால், மரத்தின் மேலிருந்த கழுதின் மீதே அவற்றின் வேகம் முழுதும் சென்றன.
தேனீக்கள் கொட்டிக் கழுதின் கண்ணும் காதும் முகமும் வீங்கின. அது தொப்பென்று கீழே விழுந்து உருண்டது.
காம்போதி அப்போதும் அதை விடாமல் உருட்டிச் சென்று சிறிது தொலைவில் வைத்துக் காற்குளம்புகளை அதன் மீது ஏவித் தாக்கத் தொடங்கிற்று.
கூளி இரு கைகளையும் கூப்பி, “மாமா, மாமா? என்னை விட்டு விடுங்கள். இனி இந்த ஊர்ப்பக்கமே வரமாட்டேன். போய்விடுகிறேன்.” என்றது.
காம்போதி அப்போதும் அதை விடவில்லை.
“இந்த ஊருக்கு எந்தக் கூளியும் வராமல் காத்துக் கொள்கிறேன்; அத்துடன் ஆண்டுதோறும் நூறுகலம் எள்ளும், நூறுகலம் நெல்லும் மற்றத் தானியங்களும் கொண்டு வந்து காணிக்கையாகக் கொட்டுகிறேன்; என்னை விட்டு விடுங்கள்” என்று அது கெஞ்சிற்று.
இந்த உறுதி மொழியுடன் காம்போதி அதைத்தன் பிடியிலிருந்து விடுவித்தது.
கூளியை அடித்துத் துரத்தி விட்டோம் என்ற பெருமித மகிழ்ச்சியுடன் காம்போதி திரும்பிற்று.
கூளியுடன் போர் செய்யும்போதே இரவு நேரம் கழிந்து விட்டது. ஆகவே, காம்போதி நினைத்தபடி போர் முழுதும் தன்னந்தனிமையில் நடக்கவில்லை. காலையில் கூவிய கோழிகள் தொலைவில் வந்து நின்றிருந்தன. தேன் கூட்டருகில் பதுங்கி யிருந்த குரங்கு, குரங்கினம் முழுவதையும் அழைத்து வந்திருந்தது. காம்போதியின் முழக்கத்துக்கு எதிர் முழக்கம் செய்த கழுதை இனம் முழுவதும் தேவைப்பட்டால் தம் இன முதல்வனுக்கு உதவும் எண்ணத்துடன் வந்து சுற்றிலும் வளையம் வளைய மாக நின்றிருந்தன.
போர்க்களத்தில் வெற்றியுடன் நின்ற வீரன் காம்போதியை எல்லா விலங்குகளும் சூழ்ந்து நின்று வாழ்க காம்போதி! வாழ்க விலங்கினத்தின் கண்கண்ட தெய்வ வீரன்!" என்று முழங்கி ஆரவாரம் செய்தன.
வாழ்த்திய விலங்குகளைத் தானும் வாழ்த்தி, “ஆண்டிறுதிதோறும் இந்த நிகழ்ச்சியைக் கொண்டாட ஊரெல்லையில் கூடுங்கள்,” என்று ஆணையிட்டபின், காம்போதி வெற்றிக் களையுடன் வீடுவந்தது.
காம்போதிக்கு முன்பே காம்போதியின் புகழ் வீடு வந்துவிட்டது. காம்போதியை விலங்குகளெல்லாம் சேர்ந்து போற்றிய அதே நேரத்தில் ஊரிலுள்ள ஆண்,பெண், குழந்தைகள் அத்தனை பேரும் காட்டானிடம் வந்து, அவன் தன் கழுதை மூலம் ஊருக்குச் செய்த அருந்தொண்டைப் பாராட்டி இருந்தனர். அவர்களை வாழ்த்தி அனுப்பிவிட்டு, புடைத்துத் தெரிந்தெடுத்த நல்ல புல்கட்டுடன் அவன் காம்போதியை எதிர்நோக்கிக் காத்திருந்தான்.
தான் ஒரு கழுதை என்பதைக் காம்போதி மறந்த கணம் ஒன்று உண்டானால், அது அந்தக் கணம் தான்!
தன் தலைவனின் இரு கைகளையும் தன் முன் கால்களால் பற்றிக் கொண்டு வீறாப்புடன் அது புல்லைக் கடித்தது.
ஆண்டிறுதியல் மனிதரும் விலங்குகளும் உழைத்த உழைப்பின் பயனாக, நெல்லும் கொள்ளும் பயறும் அம்பாரம் அம்பாரமாகக் குவிந்து கிடந்தன. கால்நடைகளுக்கு மட்டும் வைக்கோலை அளித்து விட்டு, மனிதர் தானியங்களைச் சோறாக்கி விருந்துண்டனர். ஆனால், காம்போதி முன்பே உத்தரவிட்டிருந்தபடி, எல்லா விலங்குகளும் ஊரெல்லையில் கூடின.
அவற்றின் வியப்புக்கு எல்லை இல்லை. அங்கே நூறுகலம் எள், நூறுகலம் நெல், மற்றத் தானியங்களிலும் நூறு நூறு கலம் குவிந்து கிடந்தன. “இவை ஏது, யாருக்காகக் கொட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியாமல் அவை விழித்தன. ஆனால், காம்போதி அவற்றினிடம் வந்து,”இவை அனைத்தும் நாம் துரத்தியடித்த கழுது ஆண்டுதோறும் நம் ஊருக்குத் தரும் திறைகள். இதில் உங்களுக்கு வேண்டியமட்டும் தின்று, மீதியை ஆண்டு முழுவதும் உங்களைக் காக்கும் உங்கள் தலைவர்களாகிய மனிதர்களுக்கும் கொடுங்கள். இதன் ஒரு பகுதியை விலங்கினத்துக்கு வேண்டும்போது பயன்படுத்தும்படி என் தலைவன் காட்டான் இல்லத்தில் ஒரு பொதுப் பத்தாயத்தில் சேமித்து வைக்கின்றேன்," என்றது.
விலங்குகளெல்லாம் காம்போதியின் அறிவாலும் அன்பாலும் வீரத்தாலும் தமக்குக் கிடைத்த புதுவாழ்வு பற்றி மகிழ்ந்து ஆரவாரித்தன.
குரங்கினம் தன்னை ஓர் உயிருள்ள தேராக அலங்கரித்து அதில் காம்போதியை அமரச் செய்தது, கழுதையினம் அதை முன்னின்று இழுக்கும் வடமாகவும் குதிரையினம் பின்னின்று தள்ளும் நெடுந் தடிகளாகவும் அணிவகுத்தன. பூனைகள் தேரின் பொம்மைகளாக அமர்ந்தன. பறவைகள் தேரின் கொடிகளாகவும் இயங்கின. மன்னர் பேரரசர்களுக்குக் கூட இல்லாத பெருஞ் சிறப்புடன் காம்போதி அன்று தன் இல்லத்துக்கு இட்டுச் சொல்லப்பட்டது.
காம்போதியின் பெரும் புகழை விலங்கினக் கவிஞர்களும் மனித இனக் கவிஞர்களும் போட்டியிட்டுக் காவியமாகப் பாடினார்.
காம்போதி இருந்த ஊரில் இன்று ஊர்முகப்பில் காம்போதியின் வீரச்சிலை ஒன்று எழுதப்பட்டிருக்கிறது. அதைச்சுற்றி எல்லா விலங்குகளின் உருவங்களும், அதன் இருபுறமும் காட்டான் உருவமும் அவன் மனைவி உருவமும் அவர்கள் பண்ணையிலுள்ள விலங்குகளின் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
ஆடும் பாடும் ஆடுகள்
இளைஞனான ஒரு குடியானவன் தன் வயது சென்ற தாயுடன் தொண்டகக்காட்டின் எல்லையிலுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் இளங்கொற்றன். அவனுக்கு உரிய புன்செய் நிலம் சிறிது இருந்தது. வீட்டில் அவனுக்கு இரண்டு பசுக்களும் இருந்தன. இவற்றால் கிடைத்த சிறுபொருளுடன் அவர்கள் சிறு வாழ்வு வாழ்ந்தார்கள்.
பல ஆண்டு மழையில்லாததால், புன்செய் நிலங்களில் விளைவு குன்றிற்று. வாழ்க்கை மிகவும் கடினமாயிற்று. இது பற்றி அவன் தாய், மகனிடம் ஒருநாள் குறைப்பட்டாள். “இளங்கு, நம் நிலத்தாலும் உழைப்பாலும் இப்போது பயனில்லை. நம் பசுக்களை விற்றாலல்லாமல், நாம் இப்போது வாழ முடியாது. காலம் மாறினால் நாம் திரும்பவும் பசுக்களை வாங்கிக் கொள்ளலாம்” என்றாள் அவள்.
தாயிடம் பசுக்கள் பிள்ளைகளைப் போலப் பழகியிருந்தன. இளங் கொற்றனிடமும் அவை உடன் பிறந்தவைகள் போலவே நடந்து கொண்டன. முதுகொற்றி, இளங்கொற்றி என்று தாயும் அவற்றுக்குப் பெயரிட்டிருந்தாள். அவற்றை விற்று விட இளங்கொற்றனுக்குச் சிறிதும் விருப்பமில்லை. ஆயினும், கால நிலையில் அவனுக்கும் வேறுவழி தோன்றவில்லை. அத்துடன் தாய் சொல்லுக்கு மாறாக நடக்கவும் அவனுக்கு மனமில்லை. அவன் அவ்விரண்டு பசுக்களுடனும் மறுநாள் அருகிலுள்ள பொத்தப்பி நகரின் சந்தைக்குப் புறப்பட்டாள்.
போகும் வழியில் அவன் கண்கள் இரண்டிலிருந்தும் இரண்டு தாரைகளாகக் கண்ணீர் வடிந்தன. பசுக்கள் அவற்றைக் கண்டு, “ஏன் அழுகிறாய் அண்ணா?” என்று கேட்டன.
இளங்கொற்றன் தன் நிலையை எடுத்துச் சொன்னான். அத்துடன், “எப்படியும் நான் உங்களை அதிகவிலை தருகிறவனுக்கு விற்கப் போவதில்லை. அவர்கள் மாடுகளைக் கொல்கிறவர்களாயிருந்தாலும் இருப்பார்கள். ஆகவே, குறைந்த விலையில் இப்போது வாங்கிப் பஞ்சம் கழிந்த பின் நல்ல விலையில் விற்பவர்களிடம்தான் கொடுப்பேன். பஞ்சம் கழிந்த பின் நானே வந்து வாங்கிக் கொள்வேன்,” என்றான்.
பசுக்கள் இரண்டும் ஒன்றோடன்று ஏதோ தங்கள் மொழியில் பேசிக் கொண்டன. பின் மூத்த பசுவாகிய முதுகொற்றி குடியானவனுக்கு ஓர் ஆலோசனை கூறிற்று. “நீ எங்களை விற்கவே வேண்டாம். முதல் முதல் நீ காணும் விலங்குகள் நல்லஇராசி உடையவையாகவே இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். அவற்றுக்கு நீ எங்களை மாற்றிவிடு. எல்லாம் நன்மையாக முடியும்” என்று அப் பசு கூறிற்று.
நெடுநேரம் அவன் விலங்கு எதையும் காணவில்லை. ஆனால், தன்னைப் போலவே சந்தைக்குப் போகும் ஒரு கிழவியைக் கண்டான். அவள் கையில் ஒரு வேய்ங்குழல் இருந்தது. அவள் பசுக்கள் வாங்கப் போகிறதாகவே சொன்னாள். அவள் பின்னால் மூன்று அழகிய பொன்னிறச் சடைகளை, உடைய கம்பளி ஆடுகள் இருந்தன. அவற்றின் கண்கள் பொன்னிறமாகவும் நடுவேயுள்ள கருவிழிகள் நீலநிறமாகவும் இருந்தன.
குடியானவன் பசுக்கள் கூறியவற்றை அவளிடம் கூறினான். அவள் பசுக்களை நோக்கினாள். பசுக்களும் அவளை நோக்கி வால்குழைத்தன.
“என் மூன்று ஆடுகளையும் உனக்குத் தருகிறேன், நீ பசுக்களை என்னிடம் அவற்றுக்குப் பதிலாகக் கொடுத்து விட்டுப் போ,” என்றாள் கிழவி.
“பசுக்கள் என் உடன்பிறப்புகள் போன்றவை. அவை எனக்கும் என்தாய்க்கும் உதவுபவை. இவற்றுக்கு ஆடுகள் எப்படி நிகராகும்?” என்றான் இளங்கொற்றன்.
“உனக்கு அதுபற்றிக் கவலை ஏன்? இவற்றைப் பார்த்தாலே இவை சாதாரண ஆடுகள் அல்ல என்று தெரியலாமே! இவை சந்தனமரம் வளரும் தண்பொதிகைச்சாரலில் பிறந்தவை. தண்ணிழல், தண்தளிர், தண்பூ என்பவை இவற்றின் பெயர். இவற்றின் கம்பிளிச் சடைகளில் சந்தன மரத்தின் மணமும் தங்கத்தின் பொலிவும் உண்டு. தவிர, இவை ஆடும் பாடும் ஆடுகள், இதோ பார்,” என்று கூறி அவள் தன் வேய்ங் குழலை ஊதினாள்.
ஆடல் நங்கைகளும் தோற்கும் படி மூன்று ஆடுகளும் ஒசிந்து நெளிந்து ஒய்யாரமாக ஆடின. அத்துடன் ஓர் ஆடு முதலில் பாடிய அடியைத் தொடர்ந்து இரண்டாமடியை மற்ற இரண்டாடுகளும் பாடின.
பசுக்கள் சொன்ன சொற்களில் இளங்கொற்றனுக்கு நம்பிக்கை வந்தது. அவன் பசுக்களை அன்புடன் அணைத்து விடை கொடுத்துக் கிழவியிடம் ஒப்படைத்து விட்டு, ஆட்டை ஒட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
இளங்கொற்றன் தாய், ஆடுகளைக் கண்டதும் சலித்துக் கொண்டாள். “பஞ்சகாலமில்லாவிட்டால் நான் பசுக்களை விட்டுப் பிரியவே மாட்டடேன். அத்தகைய பசுக்களைக் கொடுத்து வீணாக இவற்றை வாங்கி வந்தாயே! பார்க்கிறதற்குப் பளபளப்பாயிருப்பதைக் கண்டு ஏமாந்துபோய் விட்டாய். பசுக்களாவது அரைப்பட்டினி கிடந்தும் நமக்கு அரை வயிற்றுக்குப் பால் தரும். இந்த ஆடுகளுக்கு நாம் தீனியிடவும் முடியாது; அவை எந்த வகையிலும் பயன்படவும் மாட்டா” என்றான் அவள்.
தாயைப்போல இளங்கொற்றன் சலித்துக் கொள்ளவில்லை. ஆயினும் தாயின் சலிப்பைச் சிறிது போக்க எண்ணி, அவன் வேய்ங்குழலை ஊதினான். மூன்றடுகளும் பாடிக் கொண்டே அவ்விருவரையும் சுற்றி சுற்றித் தவழ்ந்தாடின. இயற்கையிலேயே உயிரினங்களிடம் பாசமுள்ள, அந்தத் தாய் அவற்றைக் கண்டு அகமகிழ்ந்து தன் கவலையைச் சிறிது மறந்திருந்தாள்.
ஆனால், ஆடுகளுக்கு உணவுக்கு என்ன செய்வது என்று தாய் கவலைப்பட்டாள். உடனே பெரிய ஆடு, “அதைப் பற்றி உங்களுக்குக் கவலை வேண்டாம். என் பெயர் தண்ணிழல். குளிர்ச்சி பொருந்திய நல்ல நிழல் இருக்குமிடத்துக்கு என்னை இட்டுச் சென்றால் போதும். நான் நிழலை உண்டு வாழ்வேன்,” என்றது.
அடுத்த ஆடு, “என் பெயர் தண்தளிர். என்னைச் செடி கொடி தளிர்க்குமிடம் கொண்டு செல்லுங்கள். தளிர் மீது தவழ்ந்து வரும் தென்றலை நான் உண்டு வாழ்வேன்” என்றது.
கடைசி ஆடு, “என் பெயர் தண்பூ, செடிகள் பூத்துக் குலுங்கும் இடத்திற்கு என்னைக் கொண்டு செல்லுங்கள். பூக்களின் நறுமணம் உண்டு நான் வாழ்வேன்,” என்றது.
தாய் அவற்றுக்குள்ள நன்மதியும் கூர் அறிவும் கண்டு மனமகிழ் வடைந்தாள்.
இளங்கொற்றன் ஆடுகளைக் கூட்டிக் கொண்டு ஆங்காங்கே குடியானவர்கள் கூடுமிடங்களில் நின்று வேடிக்கை காட்டினான். வேடிக்கை பார்த்த ஏழை மக்கள் செப்புத் துட்டுகளை வழங்கினார். இவை அவர்கள் உணவுக்குப் போதுமானவையாயிருந்தன.
படிப்படியாக ஆடுகளின் புகழ் எங்கும் பரந்தது. செல்வர் வீடுகளிலிருந்தும் ஆடுகளின் ஆடல் பாடல்களைக் காணவும், கேட்கவும் அழைப்பு வந்தது. செல்வர்கள் வெள்ளிப்பணம் வழங்கினார்கள். இதனால் குடியான வனுக்கும் அவன் தாய்க்கும் வாழ்வு இன்னும் சற்று வளமாயிற்று.
ஒரு நாள் நகரிலுள்ள பொத்தப்பி நாட்டரசன் அரண்மனையிலிருந்தே ஆடுகளின் ஆடல்பாடலைக் காட்டுவதற்கான அழைப்பு வந்தது.
இளங்கொற்றன் ஆடுகளுடன் சென்றான். மன்னனும் அரசியும் அவர்கள் ஒரே புதல்வியான இளவரசியும் வந்து ஆடலைக் கண்டு களித்தனர்.
இளவரசி தன்னை மறந்து ஆடுகளிடமே ஈடுபட்டு இருந்தாள்.
ஆடுகளுள் ஓர் ஆட்டையாவது தனக்கு வாங்கித் தரும்படி இளவரசி அரசனை வேண்டினாள். அரசன் இளங்கொற்றனை அழைத்து ஆடுகளுள் ஒன்றை விலைக்குத் தருமாறு கேட்டான்.
“அரசே, நான் தங்கள் குடி; உங்கள் விருப்பத்தை நான் மதிக்க வேண்டும்; ஆனால், இந்த ஆடுகள் தெய்வத்தன்மை பொருந்தியவை; விலைக்கு வாங்கவோ விற்கவோ முடியாதவை; என்றாலும் இளவரசிக்கு ஆடுகளிடம் உண்மையான பற்றுத லிருந்தால், ஒரு மிடா உணவுப் பொருட்களுடன் எங்கள் வீட்டுக்கு வந்து, என் தாயிடம் கோரி அதைப் பெறலாம்,” என்றான்.
இளவரசிக்கு ஆட்டினிடம் உயிரார்ந்த பற்றுதல் ஏற்பட்டு விட்டது. அவள் இந்த ஏற்பாட்டுக்கு முழு மனதுடன் இசைந்தாள். ஓராண்டுக்குப் போதிய உணவுப் பொருள்கள் இளங்கொற்றன் வீடு வந்து சேர்ந்தன. அவற்றைக் கண்டு, தாய் மிகவும் மனமகிழ்ந்தாள். அத்துடன் அரசன் மகளே தம் குடிசையேறி வந்து ஆடுகளில் ஒன்றைக் கேட்ட போது, அவள் மனமகிழ்ச்சியுடன் ஆட்டை ஈந்தாள். ஆடுகளின் பெருமையையும் இப்போது அவள் உணர்ந்தாள்.
வெற்றியும் திருவும் - சிலருக்கு இறுமாப்பைத் தூண்டும். சிலருக்குப் பேரவாவை உண்டு பண்ணும். குடியானவன் தாய்க்கோ, குடியானவனுக்கோ இந்த இரண்டு மாறுதல்களும் உண்டாகவில்லை. தாய், வந்த செல்வத்தில் மகிழ்ந்தாள். ஆனால் மகன் அம் மகிழ்ச்சியுடன் அமைய வில்லை. ஒரு புதிய அவா அவன் உள்ளத்தின் ஆழத்தில் எழுந்தது. அதை அவன் வெளியிட்டுச் சொல்லவோ, தனக்குள்ளேயே கூறவோ கூடத் துணியவில்லை. ஆயினும் அந்த அவா அவன் சிந்தனை களிடையே உள்ளூர உலவிக்கொண்டே இருந்தது.
இளவரசி தன் நிலைமைக்கு எண்ணக் கூடாத எட்டாக் கனியானாலும் ஆடுகளின் நல்வரத்தின் மூலம் ஒரு வேளை அதை எட்டிப் பிடிக்கக் கூடும் என்று அவன் எண்ணினான்.
இளவரசியிடம் இருந்த ஆடு அவள் எதிர்பார்த்த மனநிறைவை அவளுக்கு அளிக்கவில்லை. ஏனென்றால், அது பாடவோ ஆடவோ மறுத்தது. அரசவையின் தலைசிறந்த பாடகர்கள் பாட்டைக் கூட அது சட்டை செய்யவில்லை. அரண்மனை ஆடலாசிரியனிடம் இது பற்றிக் கேட்டபோது, அவன் அது தனக்குரிய கூட்டிணையுடன்தான் பாடும் என்று ஆலோசனை கூறினான். இவ்வாலோசனையின் பயனாக இளங்கொற்றனுக்கு மீண்டும் அழைப்பு வந்தது.
இத்தடவை இளங்கொற்றன் துணிந்து தன் கோரிக்கையை உயர்த்தினான். முன்போல மிடா வுணவு பண்டத்துடன் இளவரசியின் கையிலிருந்த கணையாழியையும் கோரினான். கோரிக்கை சற்று மிகுதிப் படியானதாகத் தோற்றக் கூடியதானாலும், இளவரசி அதைப் புன் முறுவலுடன் தன் கையிலிருந்து கழற்றிக் கொடுத்தாள். அவள் தன் ஆடுகளை விரும்பியே தன்னை அடுத்தாலும், தன்னை வெறுக்கவில்லை என்பதை அவன் உணர்ந்தான். ஆடுகளின் ஆடல்பாடல்களை அவள் பார்க்கும்போது, அவள் அவற்றில் மட்டுமின்றி, அவற்றுடன் தன் வயப்பட்டுக் குழல் வாசிக்கும் இளங்கொற்றன் தோற்றத்திலும் கவனம் செலுத்தியே இருந்தாள்.
இரண்டாவது ஆடு வந்த பின்பும் ஆடுகள் ஆடவோ பாடவோ இல்லை. ஆகவே, இளங்கொற்றனுக்கு மூன்றாவது தடவையாக மீண்டும் அழைப்பு வந்தது.
இளவரசியிடம் நாட்டங்கொண்ட இளங்கொற்றன் அவள் கணை யாழியைப் பெற்றதுடன் அமையவில்லை. தன்னலான மட்டும் அவளைப் பற்றிய வரலாறுகளை அறிய முற்பட்டான்.
இளவரசியின் கணையாழியில் வைரம், மாணிக்கம், மரகதம் ஆகிய மூன்று வகை மணிக் கற்கள் இருந்தன. இம் மூன்று கற்களைப் பற்றியும் ஒரு இரகசியம் உண்டு என்றும், அதை இளவரசி தவிர வேறு யாரும் அறிவதில்லை என்றும் அவன் கேள்விப்பட்டான்.
இந்த இரகசியத்தைப் பெறுபவனுக்கே இளவரசி உரியவளாகக் கூடும் என்ற எண்ணம் அவனுக்கு எப்படியோ உண்டாயிற்று.
ஆகவே, மூன்றாவது தடவை அவன் அழைக்கப்பட்ட போது, அவன் அவ்விரகசியத்தை அவளிடமிருந்தே அறிவது எப்படி என்ற எண்ணத்தில் ஆழ்ந்தவனாகச் சென்றான். சூழ்நிலை அன்று அவனுக்குப் பெரிதும் உதவிற்று.
இளவரசி கவலை தோய்ந்த முகத்துடன் தனியே இருந்தாள். இளங்கொற்றன் தன் ஒரே ஆட்டினுடன் வந்ததும், அவன் புன்முறுவலை வருவித்துக் கொண்டு அவனை வரவேற்றாள்.
“அன்புமிக்க இளைஞனே! ஆடுகள் இரண்டும் வாங்கிய பின்பும், என்ன முயற்சி செய்தும், அவற்றைப் பாடவைக்க முடியவில்லை. மூன்றாவது ஆட்டையும் உன்னிடமிருந்து கேட்பது சரியல்ல என்றுதான் நான் நினைக்கிறேன். அத்துடன் மூன்றையும் வாங்கின பின் கூட அவைபாடி ஆடாவிட்டால் என்ன செய்கிறது என்றும் கவலைப்படுகிறேன்,” என்றாள் இளவரசி.
“ஆடுகள் ஆடல் பாடலை மறந்து விட்டனவோ என்னவோ?” அதை முதலில் பார்ப்போம் என்றான் அவன்.
மூன்று ஆடுகளையும் ஒருங்கே நிறுத்தி இளங்கொற்றன் வேய்ங் குழலை வாசித்தான். மூன்றும் பாடின; ஆடின; இளவரசி முற்றிலும் மெய்மறந்து அவற்றையே கவனித்தாள். ஆயினும் அவள் கவனம் ஆடுகளில் பாதியும் தன்னிடத்தில் பாதியும் இருந்ததாக இளங்கொற்றனுக்குத் தோன்றிற்று.
பாடி முடிந்ததும் இளவரசி முகத்தின் மகிழ்ச்சி சிறிது குறைந்ததாக அவனுக்குப் பட்டது.
“மூன்றாம் ஆட்டை மட்டும் வாங்கினால் போதாது என்பது இப்போது எனக்கு விளங்கிவிட்டது. ஆடுகளின் ஆடல் பாடல் அந்த வேய்ங்குழல் வாசிப்புடன் தொடர்புடையது என்றே எனக்குத் தோற்றுகிறது. ஆகவே, என் மீது அன்புகூர்ந்து மூன்றாவது ஆட்டுடன் அந்த வேய்ங்குழலையும் சேர்த்து நீங்கள் தந்தாலல்லாமல், என் அவா நிறைவேறுமென்று எனக்குத் தோற்றவில்லை,” என்று இளவரசி கனிவுடன் கூறினாள்.
இளவரசி, இத்தடவை தந்தை மூலமாக உரிமையுடன் கேட்கவில்லை. நட்புப் பாசம் காட்டி, கோரிக்கையாக அன்புரிமையுடனே கேட்டாள். இளங்கொற்றன் உள்ளத்தில் கனிவும் நம்பிக்கையும் ஏற்பட்டது. ஆயினும் சிறிது தயக்கத்துடனேயே பேசினான்.
“அம்மணி, அழகிற் சிறந்த தம் ஆவலை நிறைவேற்றுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. ஆயினும் ஆட்டுடன் வேய்ங்குழலையும் தருவதற்கு நான் தங்களிடம் உரிமையான எதையேனும் பெற்றுத் தானாக வேண்டும். என்றான்.”
“எது வேண்டுமானாலும் தாரளமாய்க் கேளுங்கள். என் அவா நிறைவேறுவதற்கு நான் எத்தகைய தியாகமும் செய்ய இணங்குவேன்,” என்றாள் இளவரசி.
“தங்கள் கணையாழியில் ஒரு வைரம், ஒரு மாணிக்கம், ஒரு மரகதம் ஆகிய மும்மணிகள் இருக்கும் மருமம் என்ன என்று அறிய விரும்புகிறேன்,” என்றான் இளங்கொற்றன்.
அவன் கேள்வி அவள் விருப்பத்துக்கு மாறானதன்று. ஆனால், அஃது அவள் எதிர்பாராதது என்பதை அவள் முகம் காட்டிற்று.
“என்னை மணம் செய்ய விரும்புபவருக்குத்தான் இந்த மருமத்தை அறியும் எண்ணம் இருக்கும். அவ் விருப்பம் இந்த இளைஞனுக்கு இருக்கக் கூடுமா? இது ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இம் மருமத்தைச் சொல்வதால் எனக்குக் கேடு எதுவும் வராது. நன்மை விளையவும் கூடும். ஏனென்றால், இந்த இளைஞனைத் தவிர வேறு யாரும் இது வரை என் உள்ளத்தைக் கவர்ந்ததில்லை,” என்று இளவரசி பலவாறாகத் தனக்குள் சிந்தனை செய்தாள். ஆனால், வெளிப்படையாக அவள் கூறிய சொற்களில் இவற்றின் நிழல் எதுவுமில்லை.
“உங்கள் விருப்பப்படியே அந்த மருமத்தைக் கூறத் தடையில்லை; ஆனால், அது என் பெண்மைக்குரிய இரகசியம். அதை யாரிடமும் கூறமாட்டீர்களென்ற உறுதியுடன்தான் நான் கூற முடியும்.” என்று அவள் தன் இணக்கம் தெரிவித்தாள்.
இளங்கொற்றன் இளவரசியின் செய்தியை இரகசியமாகக் காப்பதாக உறுதி கூறினான்.
அதன் பின் இளவரசி கணையாழியின் மருமத்தை வெளியிட்டாள்.
இளவரசியிடமிருந்து மருமத்தை அறிந்தபின், இளங்கொற்றன் அவளுக்கு அகமகிழ்வுடன் மூன்றாவது ஆட்டையும் வேய்ங்குழலினையும் கொடுத்தான்.
இளவரசியிடம் தன் நாட்டம் சென்றதை, இளங்கொற்றன் இதுவரை தன் தாயிடம் கூடச் சொல்லவில்லை. மூன்றாம் ஆட்டையும் வேய்ங் குழலையும் கொடுத்தபின் அவன் தன் உள்ளத்திலுள்ள எண்ணங்களையும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் கூறினான்.
இரண்டு மூன்று தடவை தன் குடிலில் காலடி எடுத்துவைத்த இளவரசியிடம், இளங்கொற்றன் தாய்க்குப் பாசம் ஏற்பட்டிருந்தது. ஆனால், அவள் இளவரசி என்பதையும், தாம் சிறுகுடிகள் என்பதையும் அவள் எளிதில் மறக்க முடியவில்லை. எனினும் சூழ்நிலை அவள் உள்ளத்திலும்கூட நம்பிக்கை வார்த்தது.
மூன்று ஆடும் வேய்ங்குழலும் பெற்ற பின் கூட ஆடுகள் பாடவோ ஆடவோ செய்யவில்லை. ஆகவே, இளவரசி அடிக்கடி இளங்கொற்றனை வரவழைத்து அவனைக் கொண்டே அவற்றைப் பாடி யாடவைத்து மகிழ்வாள். சில சமயம் அவள் ஆடுகளை இளங்கொற்றன் வீட்டுக்கு அனுப்பி வைத்து, தான் பின்னாடி வந்து அவன் துணைகொண்டு அவற்றைப் பாடியாடவைத்து மகிழ்வாள்.
ஆடுகள் பாடியாடுவதற்கு வேய்ங்குழல் மட்டுமின்றி அதைக் கையாளும் இளங்கொற்றனும் தேவை என்று கண்ட பின், அவனும் இன்றியமையாதவன் ஆனான். அவள் அவனிடம் உள்ளூரக் கொண்ட பாசத்தை மறைத்து, சிறு குடியினான அவனுடன் பழக இது ஒரு சாக்காக இருந்தது. இளங்கொற்றன் இதை முழுவதும் உணரவில்லை. ஆனால், அவன் தாய் இதை உணர்ந்து கொண்டாள். தன் மகன் தன் எல்லைதாண்டி அவாவைச் செலுத்தியது பற்றி அவள் இப்போது மிகுதி கண்டிக்கவில்லை.
இளவரசிக்கு மணமுடிக்கும் முயற்சியில் அரசன் இறங்கினான்.
எல்லா நாட்டு இளவரசர்களும் வரவழைக்கப்பட்டனர்.
இளவரசியின் கணையாழியில் பதித்திருக்கும் வைரம், மாணிக்கம், மரகதம் ஆகிய முந்நிற மணிகளின் மருமத்தை விளக்குபவர்களுக்கே, இளவரசியை மணமுடிப்பதாக அரசன் பறைசாற்றினான்.
இளங்கொற்றன் உள்ளத்தில் மின்மினியாக ஒளிர்ந்த நம்பிக்கை, இப்போது விண்மீனாகச் சுடர்வீசிற்று. ஆயினும், இளவரசர் கூடிய அவைக்குத் தான் எப்படிச் செல்வது என்று இளங்கொற்றன் தயங்கினான். அப்போது அவன் தாய் அவனிடம் இளவரசனுக்குரிய ஆடையணிகள் அடங்கிய ஒரு பெட்டியைக் காட்டினாள்.
“இவை ஏது?” என்றான் அவன்.
“ஆடுகளை உனக்குத் தந்த கிழவி அனுப்பியதாகக் குதிரை மீதேறிவந்த ஒரு வீரன் இதைக் கொடுத்தான். நான் அவனுக்கு நன்றி கூறுமுன் அவன் குதிரையேறித் திரும்பிச் சென்றுவிட்டான்.” என்றாள் தாய்.
முதல் தடை நீங்கிற்று. இளவரசன் கோலத்திலேயே இளங்கொற்றன் இளவரசர்களுக்குரிய அவை சென்றான்.
இளவரசர் எல்லாருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதைக் காட்டியே உட்செல்ல முடியும் அத்தகைய அழைப்பு இளங்கொற்றனுக்குக் கிடையாது. மற்றும் இளவரசருக்குரிய பெயரும் மரபும் கூற வேண்டிய இடத்தில் என்ன செய்வது என்று அவன் கவலைப்பட்டான்.
அவன் ஆடையணிமணிகளிடையே இருந்த கணையாழியும் கடிதமும் இந்தத் தடைகளையும் நீக்கின. கணையாழியில் “அண்டர் கோ” என்ற பெயர் பெறிக்கப்பட்டிருந்தது. அண்டர் கோனுக்குப் பொத்தப்பி அரசன் முத்திரையிட்ட அழைப்பிதழும் இருந்தது.
தடையும் தயக்கமும் நீங்கியதே தனக்கு இனி வெற்றி தான் என்ற மகிழ்சசியுடன் இளங்கொற்றன் அரசவைக்குப் புறப்பட்டான்.
இளவரசர் நெருங்கியிருந்த அவையில் எள்விழ இடமில்லை. அவைக் கூடத்தின் ஒரு கோடியில் ஓர் உயர் அரங்கத்தில் சேடியர்களுடன் இளவரசி பன்னிறமலர்களினிடையே அசைந்து தவழும் ஒரு வனமல்லிகை போல வந்து நின்றாள். அவள் கண்கள் மருண்டு மருண்டு இளவரசர் முகங்கள் மீது வட்டமிட்டன.
“என் கணையாழியில் ஒரு வைரம், ஒரு மாணிக்கம், ஒரு மரகதம் ஆகிய மூன்றும் பதிக்கப்பெற்றுள்ளன. அவற்றின் பொருளை அறிந்து கூற வல்லாருக்கே நான் மாலையிடக் கூடும்.” என்ற வெள்ளி மணி ஓசை போன்ற குரலில் இளவரசி கூறி வாய் மூடினாள்.
ஒவ்வோர் இளவரசராக, அரங்கத்தின் கீழிருந்த உயர்பீடமேறி தம் கற்பனை விளக்கங்களைக் கூறினார்.
ஒவ்வொரு விளக்கத்தின் பின்னும் “இது சரியன்று” என்ற இள வரசியின் குரல் ஒலித்தது. விளக்கம் கூறிய இளவரசர் முகம் வாட, மலர்ச்சியுடன் மற்றொவருவர் வந்து ஆர்வத்துடன் விளக்கம் கூறினார்.
கிட்டத்தட்ட இளவரசர் அனைவரின் முறையும் இதே முறையில் கழிந்து விட்டது.
அவையோர் முகத்தில் ஏமாற்றம். சேடியர் முகத்தில் மனக்கசப்பு, இவ்விரண்டையும் கடந்திருந்தது இளவரசியின் முகங்கடந்து பரந்த மனக்கலக்கம்.
கடைசி இளவரசனாக, அண்டர் கோன் உருவில் வந்த இளங் கொற்றன் படிகளில் ஏறினான்.
“வெள்ளி பொன்மேனியைப் பழித்த எழில்மிக்க இளவரசியே! தம் நீனிறச் சுரி குழலிடையே, ஒளி நிறப்புரி குழலொன்றும், செந்நிறப்புரி குழலொன்றும், பச்சை நிறப்புரி குழலொன்றும் உள்ளன. இவற்றைக் குறிக்கவே கணையாழியில் அம் முந்நிறக் கற்களும் பதிக்கப் பெற்றுள்ளன. இவையே தங்கள் உள்ளம் குறித்த விளக்கம்” என்றான்.
“அது சரி” என்ற இளவரசியின் குரல் கணீர் என்றொலித்தது. ஆனால், அந்தக் குரலில் ஆர்வம் இல்லை. குரலைத் தொடர்ந்து எல்லாரும் எதிர்பார்த்தபடி அவள் கால்கள் அரங்கத்திலிருந்து கீழே இறங்க முன்வரவும் இல்லை; அவள் அப்படியே பதுமையாகச் சமைந்து நின்றாள்.
இளங்கொற்றன் சட்டென அவள் உள்ளக் குறிப்பை ஊகித்துணர்ந்தான். தன்னிடமிருந்த அவள் கணையாழியில் அவள் கண்படும்படி அதைக் காட்டினான்.
மந்திரத்தால் இயக்கப்பட்ட பாவை போல, இளவரசியின் முகத்தில் ஒளி படர்ந்தது.
அவள் அன்னம் நடந்து வந்தது போல நடந்து அரங்கத்தின் படிகள் ஒவ்வொன்றாக இறங்கினாள். அருகேயிருந்த சேடியர்கள் தட்டில் ஏந்தியிருந்த நறுமண மாலையை அவள் எடுத்து அவன் தோள்களில் சார்த்தினாள்.
மன்னவையின் பல்லியங்கள் முழங்கின; இளவரசர் முகங்கள் வாடின; விரைவில் அவர்கள் திரள் காலைப் பனிபோலக் கலைந்தது; மக்கள் திரள் கார்கால முகில் போலத் திரண்டது.
இளவரசியுடன் இளங்கொற்றன் திருமணம் என்னும் மலர்ப்பிணையலால் பிணைக்கப்பட்டான். தம் உள்ளத்தில் இதுவரைச் சிறைப்படுத்தி வைத்திருந்த எண்ணங்களை யெல்லாம் இளவரசியும் அவனும் பரிமாறிக் கொண்டனர்.
திருமணம் முடிந்த பின், இளவரசி ஒருநாள் தன் தாய் தந்தையரையும் உறவினரையும் ஒருங்கே வரவழைத்தாள்; தன் மூன்று ஆடுகளையும் வரவழைத்தாள்; தன் வேய்ங்குழலைக் கொடுத்து, அரண்மனை இசை வல்லார் ஒவ்வொருவரையும் வாசிக்கும்படிக் கூறினாள்.
எவர் வாசிப்பிலும் ஆடுகள் கருத்துச் செலுத்தவில்லை.
இறுதியில் இளவரசி தன் கணவனிடமே அதைத் தந்து வாசிக்கும்படி கூறினாள். மூன்று ஆடுகளும் யாவரும் களிப்பில் மூழ்கும்படி இனிமையாகப் பாடின.
தம் மருமகனாக வந்த புதிய இளவரசன் ஆடுகளை அளித்த இளங்கொற்றனே என்பதை அரசனும் அரசியும், பிறகு -இப்போது அறிந் தனர். ஆனால் அவர்கள் அதை இப்போது பொருட்படுத்தவில்லை. இளங்கொற்றன் இளவரசனாகவே நடந்து இதற்குள் அவர்கள் அனைவர் அன்பையும் மதிப்பையும் ஒருங்கே பெற்றிருந்தான்.
இளங்கொற்றன் தாய், இப்போது அரண்மனைக்கு வந்து, இளவரசி யாகிய தன் மருமகளுடன் இனிது வாழ்ந்தாள்.
ஆடுகளைக் கொடுத்துப் பசுக்களை வாங்கிச் சென்ற கிழவி ஒருநாள் அரண்மனைக்கு இரு பசுக்களையும் ஓட்டிக் கொண்டு வந்தாள்.
காவலர் முதலில் அவளை உள்ளே விட மறுத்தனர். ஆனால், அவள் அவர்களிடம் “அண்டர் கோனுக்கு அண்டர் கோப்பெரும் பெண்டு வரைந்தது,” என முகவரியிட்ட முடங்கலைக் காட்டினாள்.
இளங்கொற்றன் உடனே அவளை வரவழைத்து, அவளிடம் நன்றி காட்டி, முகமனுரை கூறி வணக்கம் செய்தான்.
அவளும் அகமகிழ்வுடன் அவனை வாழ்த்தினாள்.
“தம்பி, உனக்கு நான் கொடுத்த ஆடுகள் என் மகன், அண்டர் கோனுக்குரியவை. அவனிடம் அவை உயிரை வைத்திருந்தன. அவன் பாடினால் மட்டுமே அவை ஆடும். அவனை இழந்த பின், அவற்றின் பாடலை நான் கேட்டதில்லை. பசுக்களிடம் நீ காட்டிய அன்பினால், நீயும் அவற்றை இயக்க முடிந்தது. இளமையிலேயே போர்க்களத்தில் மாண்ட என் புதல்வனாக, நான் உன்னைக் கருதியே உனக்கு அவற்றை அளித்தேன். ஆகவே, ஆடுகள் தந்த செல்வத்துடன், அவற்றை உனக்களித்த பசுக்களையும் பெற்று, உள் வேளாண் குலத்துக்கும், என் அண்டர் குலத்துக்கும் உரிய இருகுலச் செல்வனாக நீ வாழ்வாயாக,” என்று அவள் வாழ்த்தினாள்.
“இரு குலத்தோடு மூன்றாவதாகப் பொத்தப்பிப் பெருஞ்சோழர் குடியும் சேர்த்து முக்குலம் வளர்க்க இருக்கிறாள், என் இளவரசி,” என்றான் இளங்கொற்றன் புன்முறுவலுடன்!
மூன்று பொதிகை மலை ஆடுகளும், “ஆம், ஆம்” என்று தலை யசைத்தன.
கருத்துகள்
கருத்துரையிடுக