தேவநேயம் - 9
கட்டுரைகள்
Back
தேவநேயம் - 9
இரா. இளங்குமரன்
1. தேவநேயம் - 9
2. பதிப்புரை
3. நால் வரணப் பகுப்பு
4. நாலா
5. நாவலந்தீவின் முந்நிலைகள்
6. நாவாய்
7. நாழி
8. நாழிகை
9. நாளம்
10.நாளிகேரம் என்னும் சொல் வரலாறு
11. நாளும் வேளையும் பாராமை
12.நாற்பொருளும் முப்பாலும்
13. நான்கன் திறம்
14. நிகழ்கால வினை
15. நிச்சம்
16. நித்தம்
17. நித்தல்
18. நிமை
19. நிரயம் (நரகு)
20. நிலமும் ஊரும்
21. நிலவகை
22. நிலவரி
23. நிலாக் குப்பல் விளையாட்டு
24. நிலைத்திணை
25. நிலைத்திணைத் தொகுப்பு வகை
26. நிலைத் திணைப் பாகுபாடு
27. நிலையம்
28. நிற்றியம்
29. நிறை
30. நீயிர்
31. நீர்
32. நீரம்
33. நீலம்
34. நுகம்
35. நுணா
36. நுந்து
37. நுல் (துளைத்தற் கருத்துவேர்)
38. நுல் (ஒளிர்தற் கருத்துவேர்)
39. நுல் (நெகிழ்ச்சிக் கருத்துவேர்)
40. நுல் (நோதற் கருத்துச் சொற்கள்)
41. நுல் (நீட்சிக் கருத்துவேர்)
42. நுல் (பொருந்தற் கருத்துவேர்)
43. நூல் வகை
44. நெடுங்கணக்கு (அரிவரி)
45. நெயவுத் தொழில்
46. நெருஞ்சிப் பழம்
47. நெருப்புப் பற்றிய சுள் அடிச் சொற்கள்
48. நெல்வகை
49. நேயம்
50. நேர்பாடு
51. நொச்சியார்
52. நொண்டி விளையாட்டு
53. நொறு நாட்டியம்
54.நோன்புவகை
55. பக்கம்
56. பகுத்தறிவின் பயன்
57.பகுத்தறிவு விளக்கம்
58. பச்சைக் குதிரை விளையாட்டு
59. பஞ்சாய்ப் பறத்தல்
60. பஞ்சி
61. பட்டணம்
62. பட்டடை
63. பட்டம்
64. பட்ட விளையாட்டு
65. படகம்
66. படம்
67. படர்க்கை இ விகுதி
68. படலம்
69. படாம்
70. படி
71.படிவம்
72. படு
73.படைஞன் இயல்பு
74.படையும் பாதுகாப்பும்
75. பண்டமாற்றுங் காசும்
76. பண்டாரம்
77. பண்டிதன்
78. பண்டைத் தமிழ் மணம்
79. பண்டைத் தமிழ நாகரிகம்
80. பண்டைத் தமிழப் பண்பாடு
81.பண்டைத் தமிழர் காலக்கணக்கு முறை
82. பண்டைத் தமிழர் மலையாள நாட்டிற் கிழக்கு வழியாய்ப் புகுந்தமை
தேவநேயம் - 9
இரா. இளங்குமரன்
நூற்குறிப்பு
நூற்பெயர் : தேவநேயம் - 9
தொகுப்பாசிரியர் : புலவர். இரா. இளங்குமரன்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதற்பதிப்பு : 2004
மறுபதிப்பு : 2015
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
பக்கம் : 8 + 312 = 320
படிகள் : 1000
விலை : உரு. 300/-
நூலாக்கம் : பாவாணர் கணினி
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : தமிழ்க்குமரன்
அச்சு : வெங்கடேசுவரா
ஆப்செட் பிரிண்டர்
இராயப்பேட்டை, சென்னை - 14.
கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
மொழி மீட்பின் மீள் வரவு
தனித் தமிழ் வித்தை ஊன்றியவர் கால்டுவெலார். அதை முளைக்கச் செய்தவர் பரிதிமால் கலைஞர்; செடியாக வளர்த்தவர் நிறைமலையாம் மறைமலையடிகள்; மரமாக வளர்த்து வருபவன் யானே என்ற வீறுடையார் பாவாணர்.
கிறித்து பெருமான் சமய மீட்பர்; காரல்மார்க்கசு பொருளியல் மீட்பர்; மொழிமீட்பர் யானே என்னும் பெருமித மிக்கார் பாவாணர்.
ஆரியத்தினின்று தமிழை மீட்பதற்காக யான் அரும்பாடு பட்டு இலக்கிய இலக்கண முறையோடு கற்ற மொழிகள் முப்பது என்று எழுதிய பெருமிதத் தோன்றல் பாவாணர்.
மாந்தன் தோன்றியது குமரிக் கண்டத்திலேயே; அவன் பேசிய மொழியே உலக முதன்மொழி; ஆரியத்திற்கு மூலமும், திரவிடத்துக்குத் தாயும் தமிழே என்னும் மும்மணிக் கொள்கைளை நிலை நாட்டிய மலையன்ன மாண்பர் பாவாணர்.
அவர் சொல்லியவை எழுதியவை அனைத்தும் மெய்ம்மையின் பாற்பட்டனவே என இன்று உலக ஆய்வுப் பெருமக்களால் ஒவ்வொன்றாக மெய்ப்பிக்கப்பட்டு வருதல் கண்கூடு.
இருபதாம் நூற்றாண்டைத் தம் ஆய்வு மதுகையால் தேவநேய ஊழி ஆக்கிய புகழும் வேண்டாப் புகழ் மாமணி தேவநேயப் பாவணர்.
அவர் மொழியாய்வுச் செய்திகள் ஒரு நூலில், ஓர் இதழில், ஒரு மலரில், ஒருகட்டுரையில், ஒரு கடிதத்தில், ஒரு பொழிவில் ஓர் உரையாடலில் அடங்கியவை அல்ல. கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாக அவற்றை யெல்லாம் தொகுத்து அகர நிரலில் தொகுக்கப்பட்ட அரிய தொகுப்பே தேவநேயம் ஆகும்.
நெட்ட நெடுங்காலமாகத் தேவநேயத்தில் ஊன்றிய யான் அதனை அகர நிரல் தொகையாக்கி வெளியிடல் தமிழுலகுக்குப் பெரும்பயனாம் என்று எண்ணிய காலையில், தமிழ் மொழியையும் தமிழ் மண்ணையும் தமிழ் இனத்தையும் தாங்கிப் பிடித்து ஊக்கும் - வளர்க்கும் - வண்மையராய் - பாவாணர்க்கு அணுக்கராய் - அவரால் உரையும் பாட்டும் ஒருங்கு கொண்ட பெருந்தொண்டராய்த் திகழ்ந்த சிங்க புரிவாழ் தமிழ்த்திரு வெ. கோவலங்கண்ணனார் அவர்கள் தமிழ் விழா ஒன்றற்காகச் சென்னை வந்த போது யானும், முனைவர் கு. திருமாறனாரும் சந்தித்து அளவளாவிய போது இக்கருத்தை யான் உரைக்க உடனே பாவாணர் அறக்கட்டளை தோற்று விப்பதாகவும் அதன் வழியே தேவநேயம் வெளிக் கொணரலாம் எனவும் கூறி அப்பொழுதேயே அறக்கட்டளை அமைத்தார்.
தேவநேயர் படைப்புகள் அனைத்திலும் உள்ள சொல்லாய்வுகளைத் திரட்டி அகர நிரல் படுத்திப் பதின்மூன்று தொகுதிகள் ஆக்கினேன். பதிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது; அச்சிடும் பொறுப்பு, பாவாணர் பல காலத்துப் பலவகையால் வெளியிட்ட நூல்களையும் கட்டுரைகளையும் ஒருங்கே தொகுத்து ஒரே நேரத்தில் வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் நாடு மொழி இனப் போராளி கோ. இளவழகனாரிடம் ஒப்படைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அத்தேவநேயம் தமிழ் ஆய்வர், தமிழ் மீட்பர் அனைவர் கைகளிலும் இருக்க வேண்டும் என்னும் வேணவாவால் மீள்பதிப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிடுகிறது.
பாவாணர் அறக்கட்டளை நிறுவிய கோவலங்கண்ணனார் புகழ் உடல் எய்திய நிலையில், அவர் என்றும் இறவா வாழ்வினர் என்பதை நிலைப் படுத்தும் வகையில் அவர்க்குப் படையலாக்கி இப்பதிப்பு வெளிப்படுகின்றது.
மொழி இன நாட்டுப் பற்றாளர் அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல், பல் பதிப்புகள் காண வேண்டும். வருங்கால இளைஞர்க்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும். அதற்குத் தூண்டலும் துலக்கலுமாக இருக்க வேண்டியவர்கள் தமிழ் மீட்டெடுப்புப் பற்றுமையரும் தொண்டருமாவர்.
வெளியீட்டாளர்க்கும் பரப்புநர்க்கும் பெருநன்றியுடையேன்.
வாழிய நலனே! இன்ப அன்புடன்
வாழிய நிலனே! இரா. இளங்குமரன்
பதிப்புரை
20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். இவர் வடமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை மீட்டெடுப்பதற்காகத் தம் வாழ்வின் முழுப் பொழுதையும் செலவிட்டவர்.
திராவிட மொழிகளுக்குத் தாய்மொழித் தமிழ், இந்திய மொழிகளுக்கு மூலமொழித் தமிழ், உலக மொழிகளுக்கு மூத்த மொழி தமிழ் என்பதைத் தம் பன்மொழிப் புலமையால் உலகுக்கு அறிவித்தவர்.
இவர் எழுதிய நூல்கள், கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு சேர தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டதைத் தமிழ் உலகம் அறியும்.
முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பாவாணர் வழி நிலை அறிஞர். வாழும் தமிழுக்கு வளம் பல சேர்ப்பவர். பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் தேவநேயம் என்னும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்கொள்ளும் வகையில் தொகுத்துத் தந்துள்ளார். இத்தேவநேயத் தொகுப்புகள் தமிழர்களுக்குக் கிடைத்த வைரச்சுரங்கம். இத் தொகுப்புகளை வெளியிடு வதில் பெருமைப் படுகிறோம்.
அறிஞருலகமும், ஆய்வுலகமும் இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை வாங்கிப் பயன் கொள்வீர்.
** பதிப்பாளர்**
கோ. இளவழகன்
நால் வரணப் பகுப்பு
தமிழ்ப் பொருளிலக்கணத்தில் அகப்பொருட்குச் சிறப்பாக வுரியவராகத் தலைமக்களே கொள்ளப்பட்டதனால், கல்வி காவல் வணிகம் உழவு கைத்தொழில் என்னும் மருதநிலத் தொழில்கள் ஐந்தனுள், கைத்தொழில் உழவிற்குப் பக்கத் துணையானதென்று நீக்கி, ஏனை நான்கிற்கும் உரிய அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால்வகுப்பாரையே காதலன் காதலியென்னுங் கிளவித்தலைவராகக் குறித்தனர்.
அந்தணர் என்பது துறவியரான ஐயரையே சிறப்பாகக் குறிக்கு மேனும், அகப்பொருட்டுறைக்கு அவர் ஏற்காமையின் இல்லறத் தாரான பார்ப்பாரே அந்தணர் என்னும் பெயராற் கொள்ளப் பெறுவர். அந்தணர் முதலிய நால்வகுப்பார் பெயரும் அவ்வவ் வகுப்பார் அனைவரையுங் குறிக்குமேனும், அவருள் தலைமை யானவரே, கிளவித்தலைவராகக் குறிக்கப் பெறுவர் என்பதை அறிதல் வேண்டும். ஆகவே, வேளாளர் என்பவர் அவ்வகுப் பாரின் (உழுவித்துண்ணும்) தலைவரான வேளிர் என்னும் குறுநில மன்னரேயென்றும், வணிகர் என்பவர் மாசாத்துவன் போலும் நிலவணிகரும் மாநாய்கன்போலும், நீர்வணிகருமேயென்றும், அரசர் என்பவர் கோக்களும் வேந்தருமேயென்றும், அந்தண ரென்பார் தலைமைப் புலவரும் குருக்களும் அமைச்சருமே யென்றும், இது புலனெறிவழக்க மென்னும் இலக்கிய (செய்யுள்) வழக்கேயென்றும், அறிந்து கொள்க. துறவியர் அகப் பொருட்டலை வரல்லரேனும், தூதுசெல்லல் சந்துசெய்தல் முதலிய புறப்பொருட்குத் தலைவராவர்.
உலக வழக்கில், கல்வி காவல் (ஆட்சி), வணிகம் உழவு கைத் தொழில் என்னும் ஐவகைத் தொழில் செய்வோரும், முறையே, பார்ப்பார் அரசர் வணிகர் உழவர் (வேளாளர்) தொழிலாளர் எனப்படுவர். பிராமணர் இப்பாகுபாட்டைப் பயன்படுத்தி, பார்ப்பாரையும் அந்தணரையும் ஒருங்கே பிராமணர் என்றும், அரசரைச் சத்திரியர் என்றும், உழவர் சிறார் சிலர் மாடு மேய்ப்ப தாலும், உழுவித்துண்ணும் வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர் (வெள்ளாளர்) பலர் கடைக்காரரும் வணிகருமாயிருப்பதாலும், உழவும் வணிகமும் மாடுமேய்ப்பும் ஒருங்கே செய்பவரை வைசியர் என்றும், உழவுங் கைத்தொழிலுங் கூலிவேலை யுஞ் செய்யும் மூவகுப்பாரைச் சூத்திரரென்றும், மக்களை நால்வகுப்பாக வகுத்து, பிராமணனுக்கு வெண்ணிறமும் சத்திரியனுக்குச் செந் நிறமும் வைசியனுக்குப் பொன்னிறமும் சூத்திரனுக்குக் கரு நிறமும் சார்த்திக் கூறி, நால் வரணப் பாகு பாட்டை ஏற்படுத்தி, பிராமணர் கல்வித்தொழிலையும் பிற வகுப்பார் தத்தமக்குக் குறிக்கப்பட்ட தொழில்களையும் வழிவழி செய்து வரவேண்டு மென்றும், சத்திரியன் முதலிய மூவரும் பிராமணனுக்கு இறங்கு வரிசையில் தாழ்ந்தவ ரென்றும், சூத்திரன் மேன் மூவர்க்கும் வைசியன் மேலிருவர்க்கும் சத்திரியன் பிராமணர்க்கும் தொண்டு செய்யவேண்டுமென்றும், இது இறைவன் ஏற்பாடென்றும், மேல்வகுப்பார் மூவரும் பூணூல் அணியும் இருபிறப்பாளரென் றும், வேதத்தைச் சூத்திரன் காதாலுங் கேட்கக் கூடாதென்றும், பிராமணனைக் காணின் மற்ற மூவரும் தத்தம் தாழ்வுநிலைக்குத் தக்கவாறு ஒதுங்கி நிற்கவேண்டுமென்றும், இறைவன் கட்டளை யிட்டதுபோற் கற்பித்துவிட்டனர்.
இச் சட்டதிட்டம் வடநாட்டில் விரைந்து முழுவதும், தென் னாட்டிற் படிப்படியாகப் பேரளவும், ஆட்சிக்குக் கொண்டுவரப் பட்டது.
இங்ஙனம், இயற்கையாகத் தொழில்பற்றியிருந்த குலப் பாகுபாடு நிறம் பற்றி மாற்றியமைக்கப்பட்டது.
வரணம், நிறம். வள்ளுதல் = வளைத்தல், வளைத்தெழுதுதல். வள்-வளை. வளைத்தல் = வளைத்தெழுதுதல், வண்ணப்படம் வரைதல், வரைதல்.
உருவப் பல்பூ வொருகொடி வளைஇ (நெடுதல்.113.)
வள்-வண். வளை-வணை. வண்-வண்ணம் = 1. எழுத்து. 2. எழுதிய படம். 3. படமெழுதுங் கலவை. பலகை வண்ண நுண்டுகிலிகை (சீவக. 1107). 4. எழுதுங் கலவை நிறம், நிறம். வான்சுதை வண்ணங் கொளல் (குறள். 714).
வண்ண மாலை = நெடுங்கணக்கு. வ. வர்ண மாலா.
வள்-வர்-வரி. வரிதல் = எழுதுதல். வரித்தல் = 1. எழுதுதல். வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை (சீவக. 2532) 2. ஓவியம் வரைதல். வல்லோன் தைஇய வரிவனப்புற்ற வல்லிப் பாவை (புறப். 33). 3. கோலஞ் செய்தல். புன்னை யணிமலர் துறை தொறும் வரிக்கும் (ஐங்குறு. 117).
வரி = 1. கோடு. நுண்ணிய வரியொடு திரண்டு (சீவக.1702). வரிமா = வரிப்புலி (வேங்கை). 2. தொய்யிற் கொடி வரை. மணிவரி தைஇயும் (கலித். 76). 3. கை வரி. 4. எழுத்து, எழுத்தின் வரிவடிவு. 5. ஓவியம். 6. நிறம். வரியணி சுடர் வான்பொய்கை (பட்டினப். 38).
வர்-வரு-வருவு. வருவுதல் = வரைதல். வருவுமுள் = பொன்னத் தகட்டிற் கோடிழுக்கும் இருப்பூசி.
வரு-வரை. வரைதல் = எழுதுதல்.
வரி + அணம் = வரணம் = 1. எழுத்து, ஓவியம். 2. நிறம். 3. நிறம் பற்றிய நால் வகுப்பு.
வண்ணம் = வரணம். ஒ.நோ: திண்ணை = திரணை.
வண்ணம்-வண்ணி. வண்ணித்தல் = ஓவியம் வரைந்து கோலஞ் செய்தல் போல், ஒரு பொருளைப்பற்றி அழகாகப் புனைந் துரைத்தல். வண்ணித்த லாவ தில்லா (சீவக.2458).
வரணம் - வரணி. வரணித்தல் = அழகாகப் பலபடப் புனைந் துரைத்தல்.
வண்ணி - வண்ணனை. வரணி - வரணனை.
வண்ணம் = நிறம், நிறத்தால் வேறுபடும் பொருள்வகை, வகை (பொது), இனவகை, ஓசைவகை, ஓசைவகையால் ஏற்படும் செய்யுள்வகை (இருபது தொல்காப்பிய வண்ணமும் நூறு அவிநய வண்ணமும் கணக்கற்ற திருப்புகழ் வண்ணமும்), பாட்டுவகை (கணக்கற்ற வண்ண மெட்டுகள்).
வண்ணம் என்னும் சொல்லிற்குரிய பொருள்கள், பெரும்பாலும், வரி வரணம் என்னும் சொற்கட்கு முண்டு.
அவ்வண்ணம் இவ்வண்ணம் என்பன, அப்படி இப்படி என்று பொருள்பட்டுப் பொதுவான வகையைக் குறிப்பன. இன்ன வண்ணம்-இன்னணம்.
வரணி - வ. வர்ண். வரணனை - வ. வர்ணனா.
வண்ணம் வரணம் என்னும் இரு தென்சொற்களையும் வட சொல்லென மயங்கி, வரணம் என்பதை வருணம் என்றும், வரணி என்பதை வருணி என்றும், வரணனை என்பதை வருணனை என்றும், அகரத்தை உகரமாக மாற்றி எழுதுவதோடமையாது, வண்ணம் வண்ணி என்னும் சொற்களையும் வர்ண வர்ண் என்னும் வடசொல் வடிவுகளின் திரிபாகக் கொள்வாராயினர்.
நால்வகை வரணப் பகுப்பின் பின்னரே, பேருலக வடிவான விராட் என்னும் பரம்பொருளின் முகத்தினின்று பிராமண னும், தோளினின்று (புயத்தினின்று) சத்திரியனும், தொடையி னின்று வைசியனும், பாதத்தினின்று சூத்திரனும், தோன்றினர் என்னும் புருட சூத்தம் (புருஷஸூக்த) இருக்கு வேதம் பத்தாம் மண்டலத்திற் செருகப்பட்டது. பேருலக வடிவான பரம் பொருட் கருத்தும், பிராமணர்க்குத் தமிழரொடு தொடர்பு கொண்டபின் தோன்றியதே.
முகம் முதலிய நான்கனுள்ளும், முகமே உச்சியிலும் ஏனை மூன்றும் ஒன்றினொன்று தாழ்ந்தும், முறையே மேலிருக்கும் ஒன்றையும் இரண்டையும் மூன்றையும் தாங்கியும், இருப்பது போல், நால்வரணத்துள்ளும் பிராமணனே தலைமையானவன் என்பதும், ஏனை மூவரும் முறையே ஒருவரினொருவர் தாழ்ந்த வரும் மேலுள்ள ஒருவனையும் இருவரையும் மூவரையும் தாங்க வேண்டி யவருமாவர் என்பதும்; நாலுறுப்பும் ஒரே ஆள் வடி வான பேருலக மகன் (விராட் புருஷ) கூறுகளாதலால், நால்வரண மும் இறைவன் படைப்பென்பதும்; கருத்தாம்.
இனி, கல்வித் தொழிலுக்கு வாயும் (நாவும்) மூளையும், போர்த் தொழிலுக்குத் தோளும், இருந்து துலை நிறுத்தற்குத் தொடை யும், நடந்து பாடுபடுதற்குப் பாதமும், வேண்டுமென்பது; உட் கருத்தாம்.
இனி, போருக்கு வேண்டும் தோள்வலிமை மறக் குடியினர்க்கும், வணிகத்திற்கு வேண்டும் பண்டமாற்றுத் திறமை வாணிகக் குடியினர்க்கும், உழைப்பிற்கு வேண்டும் உடல்வலிமை பாட் டாளி மக்கட்கும், இருப்பதுபோல், கல்விக்கு வேண்டும் நாவன் மையும் மதிநுட்பமும் பிராமணனுக்கே யுண்டென்பதும், ஆதலால், நால்வரணத் தாரும் தத்தமக்குக் குறிக்கப்பட்ட தொழிலையே செய்துவர வேண்டுமென்பதும், நச்சுத்தன்மை யான சூழ்ச்சிக் கருத்தாம்.
பிராமணர் பொதுமக்களொடு தொடர்புகொள்ளாது நேரே வேந்தரையடுத்து, அவர் பழங்குடிப் பேதைமையையும் கொடை மடத்தையும் மதப் பித்தத்தையும், தம் வெண்ணிறத்தையும் வெடிப்பொலி மொழியையும். வரையிறந்து பயன்படுத்திக் கொண்டு, தாம் நிலத்தேவர் என்றும் தம்மொழி தேவமொழி யென்றும், தாம் குறித்த வேள்விகளைச் செய்யின் இம்மையில் மாபெரு வெற்றியும் மறுமையில் விண்ணுலக வேந்தப் பதவியும் பெறலாமென்றும், துணிந்து சொன்னபோது, அறிவியற் கல்வி யும் மொழியாராய்ச்சியும் இல்லாத அக்காலத்து அரசர் முற்றும் நம்பி அடிமையராயினர். மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி. ஆதலால், குடிகளும் ஆரியர்க் கடிமையராயினர்.
ஒன்றரை நூற்றாண்டு ஆங்கிலர் ஆட்சியும், இரு நூற்றாண்டு ஆங்கில அறிவியற் கல்வியும், கால் நூற்றாண்டு நயன்மைக் கட்சி முன்னேற்றமும், ஏற்பட்ட பின்னும், மேலையர் திங்களையும் செவ்வாயையும் அடையும்போதும், தமிழின் திரிபான சமற் கிருதத்தைத் தேவமொழியென்றும், சமற்கிருதச் சொல்லின் ஆற்றல் தமிழ்ச்சொற்கில்லையென்றும், உறழுரையாடுவாராயின், அதைச் செவிமடுத்துத் தமிழரும் ஊமையரும் உணர்ச்சி நரம் பற்றவருமா யிருப்பாராயின், மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கள்ளங் கரவற்ற வெள்ளந்தி மக்கள் ஆரிய ஏமாற்றிற்கு இணங் கியது வியப்பாகாது. (த.வ.)
நாலா
நாலா - வ. நானா
அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நால் வகுப்பை யும் சேர்ந்த எல்லா மக்களும் வந்திருந்தனர் என்பதை, நாலா பேரும் வந்திருந்தனர் என்றும்; நாற்றிசையிலுமிருந்து மக்கள் வந்திருந்தனர் என்பதை, நாலா திசையிலுமிருந்து மக்கள் வந்திருந்தனர் என்றும்; கூறுவது மரபு.
நாலா = நால்வகை, எல்லா, பலவகை. (வ.வ:187.)
நாவலந்தீவின் முந்நிலைகள்
1. பனிமலையும் வடஇந்தியாவும் இல்லாத இந்தியப் பகுதி, தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டத்தோடு அல்லது பழம்பாண்டி நாட்டொடு கூடியது.
2. பனிமலையொடு கூடிய இந்தியாவும் பழம்பாண்டி நாடும்.
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி.
என்று சிலப்பதிகாரம் (11:19-22) கூறுவதால், பழம் பாண்டிநாடு முழுமையும் இருந்த காலத்தில் பனிமலையும் இருந்தமை அறியப்படும்.
3. பழம்பாண்டிநாடு இல்லாத இந்தியா.
நாவலந் தீவிலிந் நங்கையை யொப்பார் (மணி. 25.12) (வ.வ.)
நாவாய்
நாவாய்-நௌ, நாவ (இ.வே.)
நளியிரு முந்நீர் நாவா யோட்டி (புறம். 66)
நாவுதல் = கொழித்தல். நாவு-நாவாய் = கடல்நீரைக் கொழித்துச் செல்லும் பெருங்கலம்.
வானியைந்த விருமுந்நீர்ப்
பேஎநிலைஇய விரும்பௌவத்துக்
கொடும்புணரி விலங்குபோழக்
கடுங்காலொடு கரைசேர
நெடுங்கொடிமிசை யிதையெடுத்
தின்னிசைய முரசுமுழங்கப்
பொன்மலிந்த விழுப்பண்ட
மாடியற் பெருநாவாய்
நாடார நன்கிழிதரு
மழைமுற்றிய மலைபுரையத்
துறை முற்றிய துளங்கிருக்கைத்
தெண்கடற் குண்டகழிச்
சீர்சான்ற வுயர்நெல்லி
னூர்கொண்ட வுயர்கொற்றவ (மதுரைக். 75-88)
என்று, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மீது, அவன் முன்னோருள் ஒருவன் சாலி (சாவக)த் தீவைக் கைப் பற்றியமை ஏற்றிக் கூறப் பட்டிருத்தல் காண்க.
வேத ஆரியர் கடலையும் கப்பலையும் கண்டறியாது நிலவழியாக இந்தியாவிற்கு வந்தவர். சிந்தாற்றில் இயங்கிய படகுகளைப் பற்றித் தான் அவர்க்குத் தெரியும். அதனால் வடநாட்டில் வழங்கிய நௌ என்னும் சொல்லாற் படகையே முதலிற் குறித்தனர்.
வடவர் காட்டும் வேடிக்கையான சொன்மூலம் வருமாறு:-
(1) bes=th¢(c) - (நிருக்த, 1 : 11).
வாச் = பேச்சு, மொழி, குரல், ஒலி.
(2) நு4 = பராவு (praise).
தெய்வத்தைப் பராவும் மன்றாட்சி (prayer) வானுலகிற்குச் செலுத்துகின்ற கலமாக இருக்கின்றது.
“ 2 nau=vae, Nir. i, 11 (either because prayer is a vessel leading to heaven or fr. 4 nu, ‘to praise’)” - மா.வி.அ. பக். 571. (வ.வ : 187-188.)
நாழி
நாழி - வ. நாடி
நுள் - நள் - நாள் - நாழி = உட்டுளைப் பொருள், மூங்கிற்படி, முகவைப்படி, நெசவுக்குழல், அம்பறாத்தூணி, கன்னல் (நாழிகை வட்டில்), நாழிகை. ம. நாழி, க. நாழி.
நாழிக்கிணறு, நாழிச்செம்பு, நாழிமணி, நாழியோடு, நாழிவழி என்பன தொன்றுதொட்ட பெருவழக்குச் சொற்கள். (வ.வ:188.)
நாழிகை
நாழிகை - வ. நாடிகா
நாழி - நாழிகை = 1. உட்டுளைப் பொருள். 2. நாழிகை வட்டில். 3. நாழிகை வட்டிலில் உள்ள நீர் அல்லது மணல் முழுதும் ஒருமுறை விழும் நேரம் = 24 நிமையம் (நிமிஷம்). 4. அறை.
உண்ணாழிகை = உள்ளறை (கர்ப்பக்கிருகம்).
உண்ணாழிகையா ருமையாளோடு (தேவா. 592 : 3)
உண்ணாழிகை வாரியம் = கோயில் மேற்பார்வைக் குழு (I.M.P. Cg. 205).
திருவுண்ணாழி-திருவுண்ணாழிகை (கர்ப்பக் கிருகம்).
திருவுண்ணாழிகை யுடையார் வசமே நாள்தோறும் அளக்கக் கடவோம் (S.I.I.i, 148).
ம. நாழிக, க. நாழிகே.
நாழிகைக் கணக்கன், (சிலப். 5 : 46, உரை), நாழிகைக்கல் (mile-stone), நாழிகைத் தூம்பு (நீர்வீசுங் கருவி வகை, பெருங். உஞ்சைக். 38 : 106). நாழிகைப் பறை (சிலப். 3 : 27, உரை), நாழிகை வட்டம் (கால்வாயிலிருந்து தண்ணீர் பகிர்ந்துகொள்ளும் முறை), நாழிகை வட்டில் (சிலப். 5 : 49, உரை) நாழிகை வழி என்பன தொன்றுதொட்ட பெருவழக்குச் சொற்கள். (வ.வ : 189.)
நாளம்
நாளம்-நால
நுள்-நள்-நாள்-நாளம் = உட்டுளையுள்ள தண்டு. (வ.வ : 187.)
நாளிகேரம் என்னும் சொல் வரலாறு
வடமொழியில் தென்னைக்கு நாலிகேர என்று பெயர். அதினின்று கேரளம் என்னும் சொல்லைத் திரிக்கவுஞ் செய்வர். நாலிகேர என்பது வடமொழியில் தன்னந் தனிச்சொல். அதற்கு அம்மொழி யில் மூலமில்லை. கேரளம் என்பது சேரலம் என்பதன் திரிபா யிருக்கவும், அத்திரிவைத் தலைகீழாகக் காட்டுவது வடமொழி யாளர் வழக்கம்.
தென்னை இயற்கையாகத் தோன்றிய நிலம் குமரிநாடு. குமரிக் கண்டத் தென்பாக நாற்பத்தொன்பது நாடுகளுள் ஒரு பகுதி ஏழ் தெங்கநாடு. தென்னை தென்கோடியில் தோன்றியதனாலேயே, தென்றிசை அதனாற் பெயர் பெற்றது.
தென்னுதல் - கோணுதல், சாய்தல். இயல்பாகக் கோணுவ தனாலேயே முடத் தெங்கு என்னும் அடைமுதற்சொல் எழுந்தது.
தென்- தென்னை. தென் - தென்கு- தெங்கு. தென் = தெற்கு. தென் + கு- தெற்கு. x.neh.: வடக்கு (வடம் + கு), கிழக்கு (கீழ் + கு), மேற்கு (மேல் + கு).
தென்னைக்கு நெய்தல்நிலம் மிக ஏற்றதாதலால், நெய்தல் மிக்க சேரநாட்டில் தென்னை தொன்றுதொட்டுச் சிறப்பாகச் செழித் தோங்கி வளர்கின்றது. தீயர் (தீவார்) இலங்கையினின்று வந்தவ ரேனும், தென்னை குமரிநாட்டுத் தொடர்புடையது.
அரிசி அல்லது நெல்லளக்கும் படி முதன்முதல் மூங்கிற் குழாயாலேயே அமைந்தது.
நுள் - நள்- நாள் - நாளம் = உட்டுளை, உட்டுளைப் பொருள், தண்டு.
நாளம் - நாளி = உட்டுளையுள்ள மூங்கில், புறக்காழது.
நாளி - நாழி= மூங்கிற்படி, படி.
புறக்கா ழனவே புல்லென மொழிப (மரபு.86)
என்னும் தொல்காப்பிய மரபியல் நூற்பாவால் தென்னையும் மூங்கிலொடு சேர்ந்து நாளியினமாம்.
வேந்தன் குடிப் பெயரினின்று அவன் நாட்டுப் பெயர் திரிவதுண்டு.
எ-டு: பாண்டியன் - பாண்டியம் = பாண்டிநாடு. இம் முறைப்படி, சேரலன் - சேரலம், சேரன் - சேரம் என்று திரியும்.
தென்மொழிச் சகரம் வடமொழியிற் ககரமாகத் திரிவதால், சேரலம் - கேரள(ம்), சேரம் - கேர(ம்) என்றாம்.
ஆகவே, நாலிகேர என்பது, சேரநாட்டில் சிறப்பாக வளரும் மூங்கிலொத்த புறக்காழ்த் தென்னை என்று பொருள்படலாம். (வடமொழியிற் சொன்முறை மாறும்).
நாலிகேர என்பது, தமிழில் நாளிகேரம் என்னும் வடிவே கொள்ளும்.
வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை (தேவா. 106:5).
முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத்த போக்கறு பனுவலாகிய தொல்காப்பியம்,
உரிவரு காலை நாழிக் கிளவி
இறுதி யிகரம் மெய்யொடுங் கெடுமே
டகரம் ஒற்றும் ஆவயி னான (240)
திரிபுவேறு கிளப்பின் ஒற்றும் உகரமும்
கெடுதல் வேண்டும் என்மனார் புலவர்
ஒற்றுமெய் திரிந்து னகார மாகும்
தெற்கொடு புணருங் காலை யான (432)
என்று கூறுவதினின்று, மூங்கில் போன்றே தென்னையும் குமரி நாட்டுத் தொன்மை யுடைமை உய்த்துணரப்படும்.
நாளி - நாடி - நேடி = மூங்கில் (மலை.).
தனிச்சொல், கூட்டுச்சொல் எனச் சொல் இரு திறப்படுவது போன்றே, தனிக்கருத்து, கூட்டுக்கருத்து எனக் கருத்தும் இரு திறப்படும்.
நுழைதல் என்னுஞ் சொல்லில் நுண்மை, புகவு என்னும் இரு கருத்துகள் கலந்துள்ளன. இடுக்கமான வாயில் அல்லது புழை அல்லது இடைவெளி வழியாக, உடம்பை ஒடுக்கியும் ஒடுக் காதும் உட்செல்வது நுழைதல் என்றும், உடம்பைச் சற்றும் ஒடுக் காது, நிமிர்ந்து தாராளமாக ஒரு பெருவாயில்வழி உட்செல்வது புகுதல் என்றும் சொல்லப்படும். இவ் வழக்கு, காட்சிப் பொருள் கருத்துப் பொருள் ஆகிய இருவகைக்கும் பொருந்தும். ஆதலால், புகவுச் சீட்டை நுழைவுச் சீட்டு என்றும், புகவுத் தேர்வை நுழைவுத் தேர்வு என்றும் வழங்குதல் தவறாம்.
நுழு - நுழுது. நுழுதுதல் = தலைமயிரைச் சுருட்டி நுழைத்து முடித்தல், மயிர்நுழுதி மருங்குயர்ந்த தேசுடைய சிகழிகையில் (பெரியபு. ஆனாய. 15). க. நுலிசு, தெ. நுலுமு.
நுழுது- நுழுந்து. நுழுந்துதல் = (செ.குன்றாவி.) 1. நுழைத்தல், செருகல். 2. தலைமயிரை முடித்தல். திருக்குழலைக் குலைத்து நுழுந்த (ஈடு, 10:1:1). 3. நுழைத்து மறைவான இடத்தில் வைத்தல், மறைத்து வைத்தல்.
(செ.கு.வி.) 1. பதுங்குதல் (யாழ்ப்.) 2. நழுவுதல் (யாழ்ப்.). 3. நகர்தல் (யாழ்ப்.).
நுழு - நுழை, நுழைதல் = 1. இடுக்கமான இடைவழி உட்செல்லு தல். திருடன் பலகணி வழியாய் வீட்டிற்குள் நுழைந்து விட்டான் (உ.வ.). மலர்ப்பொழி னுழைந்து (சிலப்.10: 35). 2. இடைச் செருகலாய் அமைதல். தொல்காப்பியத்துள்ளும் ஆரியக் கருத்து நுழைந்துவிட்டது (உ.வ.). 3. வலக்காரமாக அல்லது கமுக்கமாக ஒரு வேலையிற் சேர்தல். அவன் மெள்ள மெள்ள நடுவணரசு அலுவலகத்தில் நுழைந்து கொண்டான் (உ.வ.). 4. நுண்ணிதாக விளங்குதல். அது அவன் மதியில் நுழையவில்லை (உ.வ.).
ம. நழுக, க. நொளெ.
நுழை = 1. சிறுவழி. பிணங்கரி னுழைதொறும் (மலைபடு. 379). 2.பலகணி (பிங்.).
நுழைகடவை. நுழைவழி, நுழைவாயில் முதலியன சிறு திறப்புகளை அல்லது வாயில்களை உணர்த்துதல் காண்க.
நுழு - நுழல் - நுணல் = மணலிற்குள் நுண்ணிதாய் முழுகிக் கிடக்கும் தவளை வகை.
மணலுண் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலுந்தன் வாயாற் கெடும் (பழ. 184)
நுணல் - நுணலை (பிங்.).
நுணா = நுணல் போன்ற காய் காய்க்கும் மஞ்சணாறி மரம்.
நுணா - நுணவு (மலை.) = மஞ்சணாறி மரம்.
நுணவு - நுணவம் = மஞ்சணாறி மரம்.
நாகுமுதிர் நுணவம் (சிறுபாண். 51.)
நாளும் வேளையும் பாராமை
நாள் செய்வது நல்லார் செய்யார் என்பது நம் முன்னோரின் கொள்கையே யாயினும், அறிவியல் (விஞ்ஞானம்) வளர்ச்சி யடைந்துள்ள இக்காலத்திற்கு அது ஏற்காது.
இடம் என்பது எங்ஙனம் எங்கும் பரந்து தன்னளவில் வேறு பாடற்றதோ, அங்ஙனமே காலம் என்பதும் என்றும் பரந்து தன்னளவில் வேறுபாடற்றதாம். பகலிரவும் அவற்றால் நாளும் வேளையும் ஏற்படுவதற்குக் காரணம், கதிரவன் தோற்றமறைவு அல்லது ஞாலத்தின் (பூமியின்) சுழற்சியே. ஆதலின் நாளும் கோளும் அவன் ஆணைக்கடங்கியே நடக்கும். அவனன்றி அணுவும் அசையாது. நாளுங் கோளுமே நல்லது செய்யும் என்று நம்புவார், கடவுளை நம்பாதவரும், அவரது எட்டுத் திசையும் பதினாறுகோணமும் எங்குமொன்றாய் முட்டித் ததும்பி முளைத்தெழு சோதித் தன்மையை அறியாதவருமே யாவர்.
ஒவ்வொரு நன் முயற்சிக்கும் மங்கல வினைக்கும், நாளுங் கிழமையும் ஓரையும் வேளையும் பார்த்துப் பார்த்து என்றும் அச்சத்தோடேயே வாழ்வதால், இந்தியர் சராசரி வாழ்நாள் குறைந்ததும்; அவற்றைப் பாராத மேனாட்டார் வாழ்நாள் கூடியும் உள்ளன.
நாள் செய்வது நல்லார் செய்யார் என்பது உண்மையாயின், நல்ல நாளில் மணப்பவரெல்லாம் நீண்ட வாழ்வினராயும், தீய நாளில் மணப்பவரெல்லாம் குறுகிய வாழ்வினராயும் இருத்தல் வேண்டும். அங்ஙன மன்மை வெளிப்படை.
மேலும் ஒரு பெருவினை நன்னாளிலும் நல்வேளையிலும் தொடங்கப் பெறினும், தீயநாளிலும் தீய வேளையிலும் தொடர்ந்து செய்யப்படுவதையுங் கவனிக்க.
உடல் நலத்தையும் வினைவசதிகளையும் தாக்கும் கோடை மாரி போன்ற கால வேறுபாடும், பகல் இரவு போன்ற வேளை வேறு பாடும் அல்லது, வேறு வகையிற் காலப்பகுதிகளைக் கணித்து வீணாக இடர்ப்படுவதை விட்டுவிடல் வேண்டும்.
நகரங்களில் நடைபெறும் திருமணங்கட்கு வருவார் பலர் அலுவலாளரா யிருப்பதனால், அவர் வசதி நோக்கி, பொது விடுமுறையல்லாத நாட்களில் நடத்தும் திருமணங்களை யெல்லாம், காலை 8 மணிக்கு முன்னாவது மாலை 4 மணிக்குப் பின்னாவது வைத்துக் கொள்வது நலம். (த.தி. 51-55)
நாற்பொருளும் முப்பாலும்
மக்கள் வாழ்க்கைக் குறிக்கோள் அறம்பொருளின்பம் வீடென் னும் நான்கென முதன்முதற் கண்டவர் தமிழரேயென்பதும், வீட்டைக் கண்டு திரும்பியவர் இங்கொருவரு மின்மையின் அது அறவொழுக்கமாகிய வாயில்வகையாலும் அகப்பொருளின்ப மாகிய உவமை வகையாலுமன்றித் தனித்துக் கூறப்படாதென்ப தும், அதனால் நாற்பொருளும் என்றும் அறம்பொருளின்ப மென்னும் முப்பாலாகவே யமையும்.
அறம் முதலிய நான்கும் திருக்குறள்போல் ஒருங்கே யன்றித் தனித்தனியே கூறும் நூல்களும் உள. அறத்திற்குப் பழமொழி, நன்னெறி, நீதிநெறிவிளக்கம் முதலியனவும், இன்பத்திற்குக் கோவை நூல்களும் வீட்டிற்குத் திருமந்திரம், மெய்கண்டநூல் முதலியனவும் எடுத்துக்காட்டாம். பண்டைப் பொருள் நூல் களெல்லாம் அழிந்து போயின.
இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் பாலநத்தம் வேள் பாண்டித் துரைத் தேவர் தொகுத்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான பழைய தமிழ் ஏட்டுச் சுவடிகளும் நூல்களும், மதுரைத் தமிழ்க்கழகத்தில் தமிழ்ப்பகைவரால் தீக்கிரையாக்கப்பட்டன. அவற்றுள் என்னென்ன நூல் இருந்தனவோ, இறைவன்தான் அறிவான்.
இன்று சமற்கிருதத்திலுள்ள பொருள் நூல்களெல்லாம், இறந்து பட்ட பழந்தமிழ் நூல்களின் வழிநூலும் மொழிபெயர்ப்புமே. மூல நூலில்லாக் காலத்தில் படிகளே மூலமாகக் காட்சியளிக் கின்றன. ஆரியர் தமிழைக் கெடுத்த அடிப்படை வகைகளுள் ஒன்று மூலநூலழிப்பாம் இற்றை வடமொழிப் பொருள் நூல் களுள் முதன்மையானவை பாருகற்பத்தியம், ஔசநசம், கௌடி லீயம் என்பன. இவற்றை இயற்றினோர் முறையே, வியாழன் பிருகற்பதி, வெள்ளி, சுக்கிரன், சாணக்கியர் என்போர். இவருள் தலைமையாக மதிக்கப்பட்டவர் சுக்கிரரே. இதை, சாணக்கியர் தம் நூற்றொடக்கத்தில் சுக்கிரற்கும் பிருகற்பதிக்கும் வணக்கம் என்றும், கம்பர் தம் இராமாயணத்தில் வெள்ளி யும் பொன்னும் என்போர் விதிமுறை என்றும் சுக்கிரரை முன்வைத்துக் கூறி யிருத்தலால் அறிக.
சுக்கிரர் அசுர குருவென்றும் பிருகற்பதி சுரகுரு அல்லது தேவகுரு என்றும் சொல்லப்படுவர் ஆராய்ந்து நோக்கின், ஆரியத் தொல் கதைகளில் - புராணங்களில் - அசுரர் என்பாரெல்லாம் தமிழ அல்லது திரவிட அரசரென்றும், தேவர் என்பாரெல்லாம் பிராமணரென்றும், அறியப்படும். மாவலி என்னும் மாபெருஞ் சேரவேந்தன் மகாபலி என்னும் அசுரனாகக் கூறப்பட்டிருப்பதே இதற்குப் போதிய சான்றாம். ஆரியர் இந்தியாவிற்குட் புகு முன்னும், ஆரியம் என்னும் பேரே உலகில் தோன்றுமுன்னும், தமிழகத்தை மூவேந்தரும் கணிப்பில்காலம் ஆண்டுவந்தன ரென்பதும், அவருள் முன்னோன் பாண்டியன் என்பதும் வெள் ளிடைமலையாம். ஆகவே, அரசியல் நூலான பொருள் நூல் குமரிநாட்டுப் பாண்டியரிடையே முதன்முதல் தோன்றினதாகும். அதனால் தமிழரிடத்தினின்றே சுக்கிரர் என்னும் ஆரிய அமைச்சர் பொருணூலைக் கற்றிருத்தல் வேண்டும். அவர் நூலின் வழி நூலாகவே பாருகற்பத்தியமும் அவ்விரண்டின் சார்பு நூலாகவே கௌடிலீயமும் தோன்றியிருத்தல் வேண்டும்.
நான்கன் திறம்
501ஆம் குறள் விளக்கம்
அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின்
றிறந்தெரிந்து தேறப் படும். (குறள். 501)
இதன் புணர்ச்சி பிரிப்பு
அறம்பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும்.
இதன் உரைகள்
மணக்குடவர் : அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமும் என்னும் நான்கின் கூறுபாட்டினையும் ஆராய்ந்து பின்பு ஒருவன் அரசனால் தெளியப்படுவான் என்றவாறு.
முன்பு நான்கு பொருளையும் ஆராயவேண்டும் என்றார்: பின்பு தேறப்படும் என்றார்.
பரிப்பெருமாள் : அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமும் என்னும் நான்கினையும் கூறுபடுத்து ஆராய்ந்து, பின்பு தேறப் படும் என்றவாறு.
மேற்கூறிய குற்றமும் குணமும் ஆராய்தலேயன்றி அறத்தை வேண்டியாதல், பொருளை வேண்டியாதல், இன்பத்தை வேண்டி யாதல், அச்சம் உளதாம் என்றாதல் அரசன் மாட்டுத் தீமையை நினையாமையை ஆராய்ந்து, பின்பு அவரைத் தேறப்படும் என்று கூறப்பட்டது.
பரிதியார் : தன்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்னும் நாலு காரியமும் விசாரித்து யாதொரு காரியமும் செய்வான் என்றவாறு.
காலிங்கர் : மறைமுதலாகிய நூல் யாவற்றிலும் சொன்ன அறம் பொருள் இன்பம் வீடு என வகுத்த நால்வகையாகலின் அவற்றுள் அறமானது, பாவம் அனைத்தையும் பற்று அறுப்பது என்றும், இருமை இன்பம் எய்துவிப்பது என்றும்: அவற்றுள் பொரு ளானது, பலவகைத் தொழிலினும் பொருள் வருமேனும் தமக்கு அடுத்த தொழிலினாகிய பொருளே குற்றமற்ற நற்பொருள் என் றும், மற்று இனி இன்பமாவது, கற்பின் திருந்திய பொற்புடை யாட்டி இல்லறத்துணையும் இயல்புடை மக்களும் இருதலை யானும் இயைந்த இன்பம் என்றும்: மற்றும் இவற்றுள் உயர்ந்த வீடாவது, பேதைமையுற்ற பிறப்பு இறப்பு என்னும் வஞ்சப் பெருவலைப்பட்டு மயங்காது நிலைபெற நிற்கும் வீடு இஃது என்றும் - இங்ஙனம் இவை நான்கின் திறம் தெரிந்து, பின் தமக்கு அடுத்தது ஒன்றினைத் தலைத்தேறித் தெளிய அடுக்கும் அரசர்க்கு என்றவாறு.
உயிரெச்சம் என்பது முத்தி என்றது.
பரிமேலழகர்: அரசனால் தெளியப்படுவான் ஒருவன். அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப்பொருட்டான் வரும் அச்சமும் என்னும் உபதை நான்கின் திறத்தான், மன இயல்பு ஆராய்ந்தால் பின்பு தெளியப்படும் என்றவாறு.
அவற்றுள், அற உபதையாவது, புரோகிதரையும் அறவோரையும் விட்டு, அவரால் இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப் போக்கி அறனும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம். இதுதான் யாவர்க்கும் இயைந்தது. Ë fU¤J v‹id? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். பொருள் உபதை யாவது, சேனைத்தலைவனையும் அவனோடு இயைந்தாரையும் விட்டு, அவரால் இவ்வரசன் இவறன்மாலைய னாகலின் இவனைப் போக்கிக் கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம். இதுதான் யாவர்க்கும் இயைந் தது. Ë fU¤J v‹id? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இன்ப உபதையாவது, தொன்றுதொட்டு உரிமையொடு பயின் றாள் ஒரு தவமுதுமகளை விட்டு, அவளால் உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்க வேண்டும் என்று என்னை விடுத்தாள். அவளைக் கூடுவையாயின் நினக்குப் பேரின்பமேயன்றிப் பெரும் பொருளும் கைகூடும் எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். அச்ச உபதையாவது. ஒரு நிமித்தத்தின் மேலிட்டு ஓரமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின்கண் அழைப்பித்து, இவர் அறைபோவான் எண்ணற்குக் குழீயினார், என்று தான் காவல் செய்து, ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின் அதனை நாம் முற்படச் செய்து நமக்கினிய அரசன் ஒருவனை வைத்தல் ஈண்டை யாவர்க்கும் இயைந்தது. Ë fU¤J v‹id? எனச் சூளுற வோடு சொல்லுவித்தல், இந் நான்கினும் திரிபிலனாயவழி எதிர் காலத்தும் திரிபிலன் எனக் கருத்தளவையால் தெளியப்படும் என்பதாம். இவ் வடநூற் பொருண்மையை உட்கொண்டு இவர் ஓதியது அறியாது பிறரெல்லாம் இதனை உயிரெச்சம் எனப் பாடம் திரித்துத் தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார்.
இனி இதற்குத் தமிழ்மரபுரை வருமாறு:
அரசனால் ஆட்சித் துணையதிகாரியாக அமர்த்தப்படுபவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்க் கேட்டிற்கு அஞ்சும் அச்சமும் பற்றிய நால்வகைத் தேர்திறத்தால், மனப்பான்மை ஆராய்ந்து தெளியப்படுவான்.
அரசனுக்கு ஆட்சித் துணைவனாக அமரும் அமைச்சன், குடி களிடத்து அன்பாகவும் அரசனிடத்து நம்பகமாகவும் நடந்து கொள்ள வேண்டியிருப்பதால், அறவோனாகவும் பொருளாசை யில்லாதவனாகவும் கற்பொழுக்க முடையவனாக வும் சாவிற் கஞ்சாதவனாகவும் இருத்தல் வேண்டும் என்பது கருத்து. அன்றிக் கன்னெஞ்சனாயிருப்பின். குடிகட்கு நன்மை செய்ய முடியாது; பொருள் வெறியனாயிருப்பின், பொதுப் பொருளையும் அரசன் பொருளையும் கையாட நேரும்: பெண்ணின்பப் பித்தனாயிருப் பின், குடிகளின் பெண்டிரைக் கற்பழிக்கவும் அரசனின் உரிமை மகளிரொடு தொடுப்புக் கொள்ளவுங் கூடும்: சாவிற்கஞ்சியா யிருப்பின், அரசனைக் கைவிடவுங் காட்டிக் கொடுக்கவும் மனந்திரியும்.
உரிமை மகளிர் என்பார் தேவியரும் தோழியரும் என இரு சாரார். தேவியர் பெரும்பாலும் அரண்மனையை விட்டு நீங்கார். அவருட் பட்டத்துத் தேவியென்னும் கோப்பெருந்தேவி மட்டும், ஓலக்க விருக்கையிலும் உலாவருகையிலும் இயற்கை வளங் காணலிலும் உடனிருப்பதுண்டு, வானிலை நன்றாயிருக்கும் நாள்தோறும் சாயுங்காலம் பூஞ்சோலையிலும் பொறிப்படைக் குளத்திலும் அரசனுடன் விளையாடும் இளமங்கையரே தோழி மார் எனப்படுவார். அவர் உயர்நிலைப் பணிப் பெண்களாவார்: பொறிப்படைக் குளம் இலவந்திகை யெனப்படும்.
தேரிற் றுகளைத் திருந்திழையார் பூங்குழலின்
வேரிப் புனனனைப்ப வேயடைந்தான் - கார்வண்டு
தொக்கிருந்தா லித்துழலுந் தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப்
புக்கிருந்தா லன்ன பொழில் (நள. 22)
நாடிமட வன்னத்தை நல்ல மயிற்குழாம்
ஓடி வளைக்கின்ற தொப்பவே - நீடியநற்
பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றிக் கொடுபோந்து
தங்கோவின் முன்வைத்தார் தாழ்ந்து (நள. 25)
என்னும் பாட்டுகளை நோக்குக.
இனி, அரசனது காமநுகர்ச்சிக்கென்றே, அவன் பெற்றோரால் இளமையிலேயே ஒதுக்கப்பெற்ற மகளிரும் பண்டிருந்தனர். இதை,
குரவர்கள் இவனறியாமையே இவனுரிமை இதுவெனவும், இவன் யானையுங் குதிரையும் இவையெனவும், மற்றுமெல்லாம் இவற்கென்று வகுத்து வைத்துத் தாம் வழங்கித் துய்ப்பவென்பது. அவ்வகையே குரவர்களான் இவனுரிமையென்றே வளர்க்கப் பட்டாராகலான் தலைமகளை எய்துவதன் முன் உளரென்பது என்னும் இறையனாரகப் பொருளுரையால் (40ஆம் நூற்பா வுரை) அறிந்துகொள்க.
அமைச்சனின் நால்வகைத் தகுதிகளும் பின்வருமாறு ஆய்ந்து தெளியப்படும்.
1. அறத்தேர்வு
ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பி
னாம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப்
பாஅ லின்மையிற் றோலொடு திரங்கி
யில்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி
நீரோடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென்
மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே (புறம். 164)
என்றோ,
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையு ளிருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம். (தனிப்பாடல்)
என்றோ,
களைகணற்ற ஓர் இளஞ்சூலி, அயலூரினின்று இங்கு வந்து இவ்வூர்க் கோடியிற் கருவுயிர்க்க ஈன் வலி கொண்டு தன்னந் தனியாய் நிற்கின்றாள் என்றோ,
வெள்ளத்தால் வீடிழந்த ஓர் ஏழைக் குடும்பம் தெருவில் திண்டாடி நிற்கின்றது
என்றோ, பிறவாறோ, ஒருவனைக் கொண்டு சொல்வித்துத் தேரப்படுவானின் மனநிலையை அறிதல்.
2. பொருள் தேர்வு
அமைச்சப் பதவிக்குத் தேரப்படுவானை, ஒரு திருநாளில் ஏழை மாந்தர்க்கெல்லாம் உணவளிக்குமாறோ, படைத் துறைக்கு வேண்டிய யானை குதிரைகளை வாங்கிவருமாறோ, பெருந் தொகைப் பணத்தை ஒப்படைத்து, அல்லது ஒரு பெருவருவாய்க் கோவிலை மேற்பார்க்கும் முதுகேள்வியாக அமர்த்தி, அல்லது பெரும்பொருள் செலவாகும் ஒரு வளர்ச்சித் திட்டத்தில் ஈடுபடுத்தி, பின்னர்க் கணக்குக் கேட்டுப் பொருட்டுறை வாய்மை யறிதல்.
3. இன்பத் தேர்வு
அரசனின் தேவியரல்லாத உரிமை மகளிருள் ஒருத்தியோ, மாதவி போலும் ஆடல் பாடல்வல்ல அழகியான ஒரு கணிகையோ, காதல் திருமுகம் வரைவதுபோற் பொய்யான ஓர் ஓலைவிடுத்து, ஆய்விற்குரியவனை நள்ளிரவில் ஓர் இடத்திற்குத் தன்னந் தனியாக வருவித்து, அல்லது ஓர் அழகிய பணிப்பெண்ணை ஏதேனு மொரு வகையில் அவனொடு தனியாகப் பழகுவித்து, அவனது ஒழுக்கத்தை யறிதல்.
4. உயிரச்சத் தேர்வு
பகைவேந்தன் பெரும்படையொடு போருக்கு வந்து நகர்ப் புறத்துத் தங்கியிருப்பதால், உடனே அவன் ஆட்சியை ஒப்புக் கொள்ள வேண்டும், அல்லது ஊரைவிட்டு ஓடிப்போதல் வேண்டும் என்றோ, பகைவேந்தன் பாளையத்திற்குட் சென்று வேய்வு பார்த்து வரவேண்டுமென்றோ, சாவிற்கச்சம் உண்மை யின்மையை அறிதல்.
அமைச்சன் தூதுரைத்தற்கும் உரியனாதலாலும்.
இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற்
குறுதி பயப்பதாந் தூது குறள்.690
என்று திருவள்ளுவர் கூறியிருத்தலாலும், உயிரச்சத் தேர்வும் அமைச்சனை யமர்த்துதற்கு வேண்டுவதேயாம்.
அமைச்சன் அரசனுங் குடிகளுமாகிய இருசாரார் நலத்தையும் பேணவேண்டியிருப்பதால், பரிமேலழகர் அரசன் நலத்தையே நோக்கிக் கூறும் நால்வகைத் தேர்திறங்களும், குறைவுள்ளனவும் இயற்கைக்கு மாறானவுமாம். அறத்தேர்வு, அரசனை மட்டும் நோக்கியதாயின், மூத்தோனாகிய செங்குட்டுவனிருக்கவும் இளை யோனாகிய இளங்கோவின் முகத்தில் ஆளும் பொறியுள்ளதாக உடற்குறி நூலான் கூறியதைச் சொல்லிக் கருத்தறிதலும்: அரசனையுங் குடிகளையும் நோக்கியதாயின், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆராயாது கோவலனைக் கொல் வித்ததைக் கூறிக் கருத்தறிதலும்: ஆகும்.
பரிமேலழகர்க்கு முந்திய மணக்குடவரும் பரிப்பெருமாளும் உயிரச்சம் என்ற பாடமே கொண்டிருப்பதால், பிறரெல்லாம் இதனை உயிரெச்சம் எனப் பாடம் திரித்துத் தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார் என்று பரிமேலழகர் கூறுவது பொருந்தாது. பரிதியாரும் காலிங்கருமே உயிரெச்சம் என்று பாடமோதி, அதற்கு வீடு (மோட்சம்) என்று பொருள் கொண்ட னர். பிறப்பிறப்பின்றி நிலையாக உயிர் எஞ்சி நிற்பது உயிரெச்சம் என்று, பொருட்கரணியங் கொண்டதாகத் தெரிகின்றது.
செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
யெச்சத்திற் கேமாப் புடைத்து (குறள். 112)
தக்கார் தகவில ரென்ப தவரவ
ரெச்சத்தாற் காணப் படும் (குறள். 114)
மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை (குறள். 456)
முதலிய குறள்கள் உயிரெச்சம் என்னும் பாடத்திற்கு ஓரளவு துணை செய்யுமேனும், உயிரச்சம் என்னும் பாடமே பல்லாற் றானுஞ் சிறந்ததும் உத்திக்கு ஒத்ததும் தமிழிற்கு ஏற்றதுமாகும்.
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல்
கொள்ளுமுன்பே பாண்டியர்குடி நிலைபெற்றிருந்ததனாலும், 955ஆம் குறளிற் பழங்குடி என்பதற்குத் தொன்றுதொட்டு வருகின்ற குடி என்று பொருள்கூறி. தொன்றுதொட்டு வருதல் சேர சோழ பாண்டியர் என்றாற் போலப் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருதல், என்று பரிமேலழகரே எடுத்துக்காட்டி யிருத்த லாலும், கி.மு. 4ஆம் நூற்றாண்டினரான சாணக்கியர், பண்டைத் தமிழ்நூல் களினின்றே அமைச்சரைத் தேரும் நால்வகைத் தேர்வுகளை யறிந்து, அவற்றிற்கு உபதா என்று பெயரிட்டிருத்தல் வேண்டும். உபதா என்னுஞ் சொற்கு மேலிடுதல், சுமத்துதல், கள்ளம், திருக்கு, நடிப்பு, ஆய்வு என்றே பொருள். நாற்பொருளையும் முப்பாலிற் கூறும் அறநூல்களே யன்றி, அரசியலைத் தனிப்படக் கூறும் பொருள் நூல்களும் பண்டைத் தமிழிலக்கியத்திலிருந்தமை.
ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதஞ் சாலம்
தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருள்என் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள
என்னும் தனிப்பாடலால் அறியப்படும். பொருள்நூலையே அர்த்தசாத்திரம் என மொழிபெயர்த்துக் கொண்டனர் வட மொழியாளர்.
வேதகாலத்திலேயே வடநாட்டாரியர் தென்னாட்டுத் தமிழ ரொடு தொடர்பு கொண்டிருந்தமையை. P.T. சீநிவாசையங்கார் எழுதிய தமிழர் வரலாறு (History of the Tamils) என்னும் ஆங்கில நூலிற் கண்டு தெளிக. (பக்.17-35).
இதுகாறுங் கூறியவற்றால், இக் குறள் முற்றுந் தமிழ்க் கருத்தே கொண்டுள்ள தென்றும், இவ் வடநூற் பொருண்மையை உட் கொண்டு இவர் ஓதியது அறியாது, பிறரெல்லாம்…. தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார். என்று பரிமேலழகர் கூறியுள்ளது துணிச்சலான ஆரியக் குறும்புத்தனம் என்றும் அறிந்துகொள்க. (செந்தமிழ்ச் செல்வி மே 1970.)
நிகழ்கால வினை
தொல்காப்பியர்,
நிலனும் பொருளுங் காலமுங் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட
அவ்வறு பொருட்கும் ஓரன்ன உரிமைய
செய்யும் செய்த என்னுஞ் சொல்லே (719)
என்னும் பெயரெச்ச வாய்பாட்டு நூற்பாவில், செய்கின்ற (செய்கிற) என்னும் நிகழ்காலப் பெயரெச்ச வாய்பாட்டைக் கூறாமையானும்; வினையெச்ச வாய்பாட்டு நூற்பாவில் அவர் முக்கால வினையெச்சங்களையும் கூறியிருப்பினும், நிகழ்கால வினையெச்சத்தில் நிகழ்கால இடைநிலை (கின்று-கிறு) இயல்பாய் அமை யாமையானும்:
முந்நிலைக் காலமுந் தோன்றும் இயற்கை
எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து
மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும் (725)
என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு,
மலைநிற்கும், ஞாயிறியங்கும்
என்பன போன்றும்,
மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி
அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி
செய்வ தில்வழி நிகழுங் காலத்து
மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே (727)
என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு.
தவஞ்செய்தான் சுவர்க்கம் புகும், தாயைக் கொன்றான் நிரயம் புகும் என்பன போன்றும், எதிர்காலத்திற்குரிய செய்யும் என்னும் முற்றையே உரையாசிரியன்மார் எடுத்துக்காட்டி வந்திருப்பதானும்,செய்கின்றான் என்னும் வாய்பாட்டுச் சொல் உருத்தெரியாதவாறு திரிந்தன்றித் தொல்காப்பியத்தில் ஓரிடத் தும் வாராமை யானும்: `செய்கின்ற என்னும் வாய்பாட்டுச் சொல்லோ அங்ஙனந் திரிந்தேனும் அதன்கண் வாராமையானும்: இடையியலில் முக்கால இடைநிலைகளைக் குறிப்பிடு மிடத்து.
வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும் (735)
என்று தொல்காப்பியர் பொதுப்படவே தொகுத்துக் கூறியிருத்த லானும்; கின்று என்னும் இடைநிலை பெற்ற நிகழ்காலவினை தொல்காப்பியர் காலத்து உண்டோ என்று சிலர் மருளவும், இல்லை என்று சிலர் பிறழவும் இடமாகின்றது.
தொல்காப்பியர் காலத்தில் முக்கால வினைகளும் இருந்தன என்பதும், நிகழ்காலத்திற்குத் தனிவினை இருந்திருத்தல் வேண்டும் என்பதும்,
காலந் தாமே மூன்றென மொழிப (தொல்.684)
இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளும் (தொல்.685)
முந்நிலைக் காலமுந் தோன்றும் இயற்கை
எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து
மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும் (தொல்.725)
வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள என்மனார் புலவர் (தொல்.726)
மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி
அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி
செய்வ தில்வழி நிகழுங் காலத்து
மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே (தொல்.727)
வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்
இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை (தொல்.730)
இறப்பே எதிர்வே ஆயிரு காலமும்
சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி (தொல். 732)
ஏனைக் காலமும் மயங்குதல் வரையார் (தொல். 733)
என்னுந் தொல்காப்பிய நூற்பாக்களானேயே பெறப்படும்.
இனி, சேனாவரையரும்.
உண்கின்றனம், உண்கின்றாம். உண்கின்றனெம், உண்கின்றேம், உண் கின்றனேம்: உண்கின்றன, உண்கின்ற: நடக்கின்றது, உண் கின்றது என்னும் கின்றிடைநிலை வினைமுற்றுகளை நிகழ்கால வினைமுற்றுகளாகத் தம் உரையில் எடுத்துக் காட்டியுள்ளார் (தொல்.வினை. 15,19,20 உரை).
பண்டைச் சேரநாடாகிய கேரள அல்லது மலையாள நாட்டில், இறந்தகால நிகழ்கால வினைமுற்றுகள் இன்று பாலீறு நீங்கிப் பகுதியும் இடைநிலையும் மட்டும் அமைந்த அளவில் வழங்கு கின்றன.
எ-டு:
இறந்தகாலம்
தமிழ் முற்று தமிழ் எச்சம் மலையாள முற்று
செய்தான் செய்து செய்து
அடித்தாள் அடித்து அடிச்சு
அறிந்தார் அறிந்து அறிஞ்ஞு
ஆயிற்று ஆய் ஆயி
வந்தன வந்து வந்நு
வாழ்ந்தேன் வாழ்ந்து வாணு
பாடினோம் பாடி பாடி
புறப்பட்டாய் புறப்பட்டு புறப்பெட்டு
வாங்கினீர் வாங்கி வாங்ஙி
நிகழ்காலம்
தமிழ் முற்று ஈறு நீங்கிய மலையாள முற்று
தமிழ் வடிவம்
செய்கின்றான் செய்கின்று செய்யுந்நு
அடிக்கின்றான் அடிக்கின்று அடிக்குந்நு
அறிகின்றார் அறிகின்று அறியுந்நு
ஆகின்றது ஆகின்று ஆகுந்நு
வருகின்றன வருகின்று வருந்நு
வாழ்கின்றேன் வாழ்கின்று வாழுந்நு
பாடுகின்றோம் பாடுகின்று பாடுந்நு
புறப்படுகின்றாய் புறப்படுகின்று புறப்பெடுந்நு
வாங்குகின்றீர் வாங்குகின்று வாங்ஙுந்நு
இதனால், கின்று என்னும் நிகழ்கால இடைநிலை மலையாளத் தில் குந்நு அல்லது உந்நு என்று திரிந்திருப்பதைக் காணலாம்.
செய்யும் என்னும் வாய்பாட்டு எதிர்கால வினைமுற்று. பால் காட்டும் ஈறில்லாததாயும், பலபாற்குப் பொதுவான ஈறுள்ள தாயும், பலுக்குவதற்கு எளிதாயும், இடைநிலையின்றிச் சுருங்கிய தாயும், இருத்தலின்; அதுவே மலையாளத்தில் (மூவிட) எதிர்கால வினைமுற்றாக வழங்கி வருகின்றது.
பண்டைச் சேரநாட்டுத் தமிழிற் போன்றே, முதற்கால மலை யாளத்திலும் வினைமுற்றுகள் பாலீறுகொண்டு வழங்கியமை, பழைய மலையாளச் செய்யுளாலும், யூதருக்கும் சிரியக் கிறித்த வர்க்கும் அளிக்கப்பட்ட பட்டயத்தாலும், பழமொழிகளாலும் அறியக் கிடக்கின்றது. பாலீறுகொண்ட வினைமுற்றுகள் இன்றும் மலையாளச் செய்யுளில் ஆளப்பெறும். வினைமுற்றை அடிப்படையாகக் கொண்ட வினையாலணையும் பெயர்கள், மலையாள உலக வழக்கில் இயல்பாக வழங்குகின்றன. ஆதலால், 12ஆம் நூற்றாண்டிற்குமேல் சோழபாண்டித் தமிழரொடு உறவுவிட்டுப் போனபின், சொற்களைக் குறுக்கி வழங்குவதற் கேதுவான வாய்ச்சோம்பலாலும். புலவரின் இலக்கணக் கட்டுப்பாடு அற்றுப் போனமையாலும் குடுதுறு - கும்டும் தும்றும் விகுதி பெற்ற தன்மை வினைமுற்றுகளின் தொடர்ப் பாட்டினாலும், மலையாள நாட்டு மக்கள் வினைமுற்றுகளைப் பாலீறு நீக்கி வழங்கத் தலைப்பட்டு விட்டனர்.
அம்ஆம் எம்ஏம் என்னுங் கிளவியும்
உம்மொடு வரூஉங் கடதற என்னும்
அந்நாற் கிளவியொடு ஆயெண் கிளவியும்
பன்மை யுரைக்குந் தன்மைச் சொல்லே (தொல்.வினை.5)
கடதற என்னும்
அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமொடு
என்ஏன் அல்என வரூஉம் ஏழும்
தன்வினை யுரைக்குந் தன்மைச் சொல்லே (தொல்.வினை.6)
என்று தொல் காப்பியத்தி லேயே கூறப்பட்டிருப்பதாலும், குடுதுறு - கும்டும் தும்றும் ஈற்றுத் தன்மை வினை முற்றுகள் நெடுகலும் செய்யுளில் ஆளப் பெற்று வந்திருப்பதாலும், முற்காலத்தில் பாலீறில்லா முடிவி லேயே தமிழ் வினைமுற்று வழங்கி வந்திருப்பதாகத் தெரிகின்றது. இதுவே மொழிநூற்கும் பொருந்தும் முடிபாகும். ஆயினும், மலையாள நாட்டில் பாலீற்று வினைமுற்றே அவ்வீறு நீங்கிப் பழைய வடிவில் வழங்கி வருகின்றது.
நிகழ்கால வினையாலணையும் பெயர்களும் தொழிற் பெயர் களும் பெயரெச்சங்களும் உள்ள, சில மலையாளப் பழமொழி களும் சொற்றொடர்களும் வருமாறு:
கடிக்குந்நது கரிம்பு. பிடிக்குந்நது இரிம்பு.
அலக்குந்நோன்1றெ கழுத போல.
பாபம் போக்குந்நோந் ஆர்?
‘ghu« RkªE« el¡Fª nehnu! (மத். 11 : 23)
அஞ்சு எரும கறக்குந்நது அயல் அறியும்.
கஞ்சி வார்த்துண்ணுந்நது நெஞ்சு அறியும்.
அந்நந்நு வெட்டுந்ந வாளிந்நு நெய்யிடுக.
உறங்ஙுந்ந பூச்ச எலிபுடிக்க இல்ல.
கரயுந்ந குட்டிக்கெ பால் உள்ளு.
குரெக்குந்ந நாயி கடிக்க யில்ல.
மண்ணு திந்நுந்த மண்டெலியே போல்.
இம் மலையாளப் பழமொழிகளிலும் சொற்றொடர்களிலும் வந்துள்ள நிகழ்காலச் சொற்கட்கு நேர் தமிழ்ச்சொற்கள் வருமாறு:
மலையாளம் தமிழ்
கடிக்குந்நது கடிக்கின்றது (வி.மு.)
பிடிக்குந்நது பிடிக்கின்றது (வி.மு.)
அலக்குந்நோந் அலக்குகின்றோன் (வி.மு.)
போக்குந்நோந் போக்குகின்றோன் (வி.மு.)
நடக்குந்நோர் நடக்கின்றோர் (வி.மு.)
கறக்குந்நது கறக்கின்றது (தொ.பெ.)
உண்ணுந்நது உண்கின்றது (தொ.பெ.)
வெட்டுந்ந வெட்டுகின்ற (பெ.எ.)
உறங்ஙுந்ந உறங்குகின்ற (பெ.எ.)
கரயுந்ந கரைகின்ற (பெ.எ.)
குரெக்குந்ந குரைக்கின்ற (பெ.எ.)
திந்நுந்ந தின்கின்ற (பெ.எ.)
இவ் எடுத்துக்காட்டுகளால், செய்கின்றான் என்பது செய்யுந் நாந் என்றும், செய்கின்றது என்பது செய்யுந்நது என்றும், செய் கின்ற என்பது செய்யுந்ந என்றும், மலையாளத்தில் திரிவது தெளிவு. வினையாலணையும் பெயர்களுள், அஃறிணைப் பெயர் களாயின் அவற்றின் அகரமுதல் ஈறுகள் (அ, அவ) திரியாதும், உயர்திணைப் பெயர்களாயின் அவற்றின் ஆகார முதல் ஈறுகள் (ஆன், ஆள், ஆர்) ஓகாரமுதலாகத் திரிந்தும்1, வழங்குகின்றன.
எ-டு: தமிழ் மலையாளம்
செய்கின்றது செய்யுந்நது
செய்கின்றான் செய்யுந்நோந்
கின்று என்னும் நிகழ்கால இடைநிலையைக் குந்நு அல்லது உந்நு என்று திரிந்து வழங்கும் வழக்கம், சேரநாட்டில் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கின்றது. அந்நாடு மழை மிகுதியாகப் பெய்யும் மலை நாடாதலின், அங்கத்துத் தமிழ்மக்கள் பேச்சில் மூக்கொலிகளான மெல்லின வெழுத்துகள் பேராட்சி பெற்றுவந்திருக்கின்றன.
எ-டு : தமிழ் மலையாளம்
நான் ஞான்
நாங்கள் ஞங்கள்
தந்து தந்நு
துடங்கி துடங்ஙி
வீழ்ந்து வீணு
நான் என்னுஞ் சொல்லின் முதலெழுத்து மெல்லினமேயாயினும், அது மேலும் ஒருபெரு மெல்லொலியான ஞகரமாகத் திரிந் திருப்பது. மலையாள மக்கள் பேச்சின் மெல்லோசை மிகுதியைத் தெளிவாக எடுத்துக் காட்டும். இங்ஙனம் மூக்கொலிகள், சேர நாட்டுத் தமிழிற் பேராட்சிபெற்று வந்திருப்பினும், நூன்மொழி அல்லது இலக்கிய மொழி செந்தமிழாகவேயிருத்தல் வேண்டு மென்னும் இலக்கண மரபுபற்றி, சேரநாட்டு இலக்கியமும் செந்தமிழாகவே இருந்து வந்திருக்கின்றது. கொங்குநாட்டைச் சேர்ந்த வடார்க்காட்டுப் பாங்கரில் இன்று கொச்சைத் தமிழே வழங்கிவரினும், அங்கும் இலக்கியத் தமிழ் செந்தமிழாகவே யிருந்துவருதல் காண்க.
வடார்க்காட்டுத் தமிழுக்கு எடுத்துக்காட்டு வருமாறு:
இசுத்து இசுத்து ஒச்சான். (இழுத்து இழுத்து உதைத்தான்.)
கொயந்த வாயப்பயத்துக்கு அய்வுது. (குழந்தை வாழைப் பழத்திற்கு அழுகிறது)
பசங்க உள்ளே துண்ராங்க. (பையன்கள் உள்ளே தின்கிறார்கள்).
கண்ணாலம் மூய்க்கணும். (கல்யாணம் முடிக்கவேண்டும்).
வந்துகினு போயிகினேக் கீரான். (வந்துகொண்டு போய்க்கொண்டே யிருக்கிறான்.)
சேரநாட்டுச் சொற்கள் பல செந்தமிழுக் கொவ்வாவிடினும், திசைச்சொல் வகையில் அவற்றுள் ஒன்றிரண்டு இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன.
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்
றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே (தொல்.880)
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொல். 883)
என்று திசைச்சொல்லும் செய்யுளுக்குரியதென்றும், அது கொடுந் தமிழ்நாட்டு வழக்கென்றும், தொல்காப்பியத்திற் கூறப்பட் டிருத்தல் காண்க.
நிகழ்கால வினையாலணையும் பெயர்கள் சேரநாட்டியல்புப்படி, முதலாவது பின்வருமாறு திரிந்திருத்தல் வேண்டும்.
செந்தமிழ் சேரநாட்டுக் கொடுந்தமிழ்
செய்கின்றான் செய்குந்நான் - செய்குநன்
செய்கின்றது செய்குந்நது - செய்குநது
செய்கின்ற செய்குந்ந - செய்குந
ண ந ன என்னும் மூவெழுத்துள்ளும் முதல் முதல் தோன்றியது நவ்வே. ரகரத்தின் வன்னிலையாகிய றகரம் தோன்றிய பின்பே, அதற்கினமான னகரம் தோன்றிற்று. இதனாலேயே, றனக்கள் நெடுங்கணக்கில் பமக்களின் பின் வைக்கப்பெறாது, இடையினத் தின்பின் இறுதியில் வைக்கப்பெற்றுள. முதற்காலத்தில் தந்நகரமே றன்னகரத்திற்குப் பதிலாக வழங்கி வந்ததென்பதற்கு, பொருந், வெரிந், பொருநை முதலிய சொற்களே போதிய சான்றாகும்.
செய்குந்நான் என்னும் வடிவம், சற்றுப் பிற்காலத்தில் குகரம் நீங்கி, செய்யுந்நான் - செய்யுநன்-செய்நன் என முறையே திரிந்திருக் கின்றது. இங்ஙனமே, செய்குந்ந என்னும் பெயரெச்சமும், செய்யுந்ந - செய்யுந - செயுந என முறையே திரிந்திருக்கிறது.
செய்நன் என்ற வாய்பாட்டு வடிவிலேயே, கீழ்க்காணும் பெயர்கள் அமைந்துள்ளன.
கொள்நன் - கொழுநன் = கணவன்1
பொருநன் - போர் செய்கின்றவன்
மகிழ்நன் - மகிணன் = இன்புறும் மருதநிலத் தலைவன்
வாழ்நன் - வாணன் = வசிக்கின்றவன்.
வருநர், பாடுநர், இகழுநர், வாழ்நர், அறைநர், அடுநை (முன்னிலை யொருமை). விடுநை (மு.ஒ.) தகுந, வல்லுநர், களையுநர், பருகுநர், கூறுநர், பொருநர், மலர்க்குநர், உடலுநர், நுவலுநர், முயலுநர், வருந, தப்புந, பேணுநர், மேம்படுந! (ÉË), bfhŒíe®, X«òe‹, m¿íe®,
இயல்பா குநவும் உறழா குநவும்என்று (தொல். 151)
இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும்
உறழா குநவும் என்மனார் புலவர் (தொல்.158)
வல்லெழுத்து மிகுநவும் உறழா குநவும் (தொல்.159)
நெடியதன் இறுதி இயல்பா குநவும் (தொல்.400)
கிளந்த வல்ல செய்யுளுள் திரிநவும்
வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் (தொல்.483)
சொன்முறை முடியாது அடுக்குந வரினும்
புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதநவும்
வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்
அசைநிலைக் கிளவி ஆகி வருநவும்
இசைநிறைக் கிளவி ஆகி வருநவும்
தத்தம் குறிப்பிற் பொருள்செய் குநவும்
ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவும்என்று (தொல். 735)
தத்தங் கிளவி அடுக்குந வரினும் (தொல்.912)
பெயர்நிலைக் கிளவியின் ஆஅ குநவும்
திசைநிலைக் கிளவியின் ஆஅ குநவும்
தொன்னெறி மொழிவயின் ஆஅ குநவும்
மெய்ந்நிலை மருங்கின் ஆஅ குநவும்
மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும் (தொல். 932)
பாலறி மரபிற் பொருநர் கண்ணும் (தொல்.1021)
அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும் (தொல்.1171)
நினையுங் காலைக் கேட்குநர் அவரே (தொல்.1452)
சொல்லுந போலவும் கேட்குந போலவும் (தொல்.1456)
இங்ஙனம், கின்றிடைநிலை பெற்ற நிகழ்கால வினையாலணை யும் பெயர்களின், திரிந்த வடிவுகள் தொல்காப்பியத்திலேயே வந்திருக்க, செய்கின்ற என்னும் நிகழ்காலப் பெயரெச்ச வாய்பாட்டைத் தொல்காப்பியர் கூறாதது குன்றக் கூறலேயாம்.
செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால உடன்பாட்டு வினை யெச்சத்துடன், நிற்றல் இருத்தல் கிடத்தல் பற்றிய இறந்தகால எச்சமுற்றுகள் தொடர்ந்துவரும் தொடர்ச்சொற்களினின்று, ஆநின்று, ஆவிருந்து, ஆகிடந்து என்னும் இடைப்பகுதி களைச் செயற்கையாகப் பகுத்துக் கொண்டு, அவற்றையும் நிகழ்கால இடைநிலைகள் எனப் பிற்காலத்து உரையாசிரியரும் இலக்கணவாசிரியரும் கூறுவது பொருந்தாது. நிகழ்கால இடைநிலை கின்று எனும் ஒன்றே. கிறு என்பது அதன் தொகுத்தலே. - செந்தமிழ்ச் செல்வி மே 1953.
நிகழ்கால வினையெச்சம் எது?
செய்து செய்பு செய்யாச் செய்யூச்
செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர்
வான்பான் பாக்கின வினையெச்சம்பிற
ஐந்தொன் றாறுமுக் காலமு முறைதரும் (நன். 343)
என்னும் நூற்பாவால் செய்ய என்னும் வாய்பாட்டு வினை யெச்சம் அல்லது செய என்னும் அதன் தொகுத்தல் வடிவு, நிகழ் காலமுணர்த்தும் எனக் கூறினர் பவணந்தி முனிவர். இதை யொட்டியே. செய்ய என்பது நிகழ்கால வினையெச்ச வாய்பா டென்று தொன்றுதொட்டு வழங்கி வருகின்றது. ஆயின் தொல் காப்பியர் இங்ஙனங் கூறாமை மட்டுமின்றி.
செய்து செய்யூச் செய்பு செய்தெனச்
செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென
அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி. (தொல்.713)
என செய என்னும் வாய்பாட்டை எதிர்கால வினையெச்சம் எனக் கருதுமாறு, செய்யியர் செய்யிய செயின் என்னும் எதிர் கால வினையெச்ச வாய்பாடுகட்கும், செயற்கென என்னும் எதிர் கால வினையெச்ச வாய்பாட்டிற்கும் இடையில் நிறுத்தியு முள்ளார்.
இனி, செய்ம்மன என்னும் வாய்பாடோவெனின், அதுவும் எதிர்கால வினையெச்சமே. செய்ம்மார் என்னும் வாய்பாடு வான் பார் ஈற்று வினையெச்சங் களின் பன்மையான முற்றெச்ச மாய்த் தெரிதலின், அதுவும் எதிர்காலச் சொல்லென அறியப்படும்.
தொல்காப்பியர்,
வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும் (தொல். 683)
காலந் தாமே மூன்றென மொழிப (தொல்.684)
என முற்றும் எச்சமுமாகிய இருவகை வினைச்சொற்கும் பொதுவாகக் கூறியிருத்தலின் நிகழ்கால வினையெச்சமும் தமிழ்க்குண்டென்பது தேற்றம்.
தொன்றுதொட்டு நிகழ்கால வினையெச்சமென வழங்கி வரும் செய்ய என்னும் வாய்பாட்டுச் சொல். காரண காரியமும் உடனிகழ்ச்சியும் காரிய காரணமும்பற்றி வரும் தொடர்களில் முறையே முக்காலமும் உணர்த்துதலின், நிகழ்காலத்திற்குச் சிறப்பாயுரியதெனக் கொள்ளுதல் பொருந்தாது.
எ-டு:
மழை பெய்யப் பயிர் விளைந்தது - காரண காரியம் (இறந்தகாலம்)
மின்னல் மின்ன இடி இடிக்கிறது - உடனிகழ்ச்சி (நிகழ்காலம்)
பயிர் விளைய மழை பெய்யும் - காரிய காரணம் (எதிர்காலம்)
இனி, உடனிகழ்ச்சிபற்றி, செய்ய என்னும் வினையெச்ச வாய்பாட்டை நிகழ்காலமெனக் கொள்ளுதுமெனின், அதுவும் முக்காலத்திற்கும் பொதுவாய் வருதலின், அங்ஙனம் கோடற்குரியதன்றாம்.
எ-டு:
சாத்தன் சொல்ல இளங்கோவடிகள் கேட்டனர் - இ. கா.
கண்ணொன்று காணக் கருத்தொன்று நாடுகின்றது - நி. கா.
முருகன் முழவியக்கக் கொற்றன் குழலூதுவான் - எ. கா.
இங்ஙனம் செய்ய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் ஒரு வகையிலும் நிகழ்காலத்தைச் சிறப்பாய் உணர்த்தாமையின், அதனின் வேறான ஒரு சொல்லே உண்மை நிகழ்கால வினை யெச்சமாயிருத்தல் வேண்டும். செய்ய என்னும் நிகழ்கால வினை யெச்சத்திற்கு நேரான ‘to do (infinitive mood)’ என்னும் ஆங்கில வினைவடிவமும் எதிர்காலத்தையே உணர்த்துவதும், செய்ய என்னும் வடிவுச்சொல் இயல்பாக இனிமேற் செய்ய என்றே பொருள்படுவதும் இங்குக் கவனிக்கத் தக்கன.
ஆங்கிலத்தில் நிகழ்கால வினையெச்சம் (present participle) என்று சொல்லப்படுவது ‘doing’ என்னும் வாய்பாட்டு வினைச் சொல்லாகும். அதற்கு நேரான தமிழ் வாய்பாடு செய்துகொண்டு என்பதே.தச்சன் பெட்டி செய்து கொண்டு இருக்கின்றான், என்னும் சொற்றொடரில், `செய்துகொண்டு என்னும் சொல் இருசொற்போல் தோன்றினும் ஒரு சொற்றன்மைப்பட்டும். எச்சப் பொருள் கொண்டும் நிகழ்காலத்தைச் சிறப்பாய் உணர்த்தியும், நிற்றல் காண்க.
செய்துகொண்டு என்னும் வாய்பாட்டு வினையெச்சம், இருந் தான் இருக்கின்றான் இருப்பான் என்னும் முக்கால முற்றொடும் பொருந்துதலின். நிகழ்காலத்திற்குச் சிறப்பாய் உரித்தாதல் எங்ஙனமெனின்,செய்து என்னும் இறந்தகால வினையெச்சம் செய்து வந்தான், செய்து வருகின்றான், செய்து வருவான் என முக்கால முற்றொடும் பொருந்துமாயினும் இறந்த காலத்திற்கே சிறப்பாயுரியதென்று கொள்ளப்பட்டாற் போன்றே செய்து கொண்டு என்னும் நிகழ்கால வினையெச்சமும் முக்கால முற் றொடும் பொருந்து மாயினும், நிகழ்காலத்திற்கே சிறப்பாயுரிய தென்று கொள்ளப் பட்டதென்க.
அற்றேல், செய்துகொண்டு என்னும் வாய்பாட்டுச் சொல் தொல்காப்பியத்தும் சங்க நூல்களிலும் காணப்படாமையின் பிற்காலத்துச் சொல்லென்று கொள்ளப்படுமெனின் அற்றன்று. உலக வழக்கும் செய்யுள் வழக்கும் எனச் சொற்கள் இரு தொகுதிப்பட்டு நிற்றலின், நீன் என்னும் முன்னிலை யொருமைப் பெயர் இற்றைத் தென்பாண்டி நாட்டிலும் கருநடநாட்டிலும் தொன்றுதொட்டு உலக வழக்காய் வழங்கி வரவும் அதன் கடைக் குறையான நீ என்னும் சொல்லே இலக்கண விலக்கியங்களிற் பயின்று வருதல்போல், செய்துகொண்டு என்னும் சொல்லும் தொன்று தொட்டு உலக வழக்கில் இருந்துவரினும் அதற்கீடாக செய்து என்னும் இறந்தகால வினையெச்சமும் செய்தனன் என்னும் முற்றெச்சமுமே செய்து கொண்டு என்னும் நிகழ்கால வினையெச்சப் பொருளில் இலக்கிய வழக்காய் இருந்து வருகின்றன என்க.
எ-டு:
பாடி வந்தான், பாடினன் வந்தான் - இ.கா.
பாடி வருகின்றான், பாடினன் வருகின்றான் - நி.கா.
பாடி வருவான், பாடினன் வருவான் - எ.கா.
இவற்றில் பாடி என்பது பாடிக்கொண்டு என்று பொருள்படுதல் காண்க.
இலக்கண விலக்கிய நூல்கள் எத்துணைப் பரந்துபட்டன வாயினும் அகர வரிசைச் சொற்களஞ்சியங்களல்லவென்றும் செய்துகொண்டு என்னும் வினையெச்ச வாய்பாடு சங்க கால உலக வழக்கில்லையென்பதற்கு யாதொரு சான்றும் இல்லை யென்றும், அறிதல் வேண்டும்.
புலியாற் கொல்லப்படட் மருதன் என்றும், பேயாற் பிடிக்கப் பட்ட நாகன் என்றும் சொல்லற்கேற்ற செயப்பாட்டு வினை தமிழிலிருந்தும், புலிகொன்ற மருதன், பேய்பிடித்த நாகன் என்பனவே இயல்பான இருவகை வழக்குமாதலால், சில இலக்கணச் சொல் வடிவங்கள் முற்றாட்சி பெற்றிருப்பதொன்றே அதன் மறுவடிவை மறுக்குஞ் சான்றாகா தென்பதைத் தெற்றென வுணர்க.
இனி தெலுங்கில் செய்துகொண்டு என்னும் எச்சத்திற்கு நேரான சேசுகொனி என்னும் வடிவத்துடன், சேத்து என மற்றொரு நிகழ்கால வினையெச்ச வடிவும் இருப்பது மகிழத்தக்க வொன்றாகும். - தமிழ்ப் பொழில், ஆடி 1956.
நிகழ்கால வினை வடிவம்
தொல்காப்பியர்,
வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும் (தொல்.வினை. 1)
காலந் தாமே மூன்றென மொழிப (தொல்.வினை. 2)
இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றா
அம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளு
மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே (தொல்.வினை. 3)
என்னும் நூற்பாக்கள் வாயிலாக வினைச்சொற் காலம் மூன்றெனக் கூறியிருப்பினும் நிகழ்காலவினை முற்று வடிவிலோ எச்ச வடிவிலோ இடநிலைகாட்டி யாண்டுங் கூறவேயில்லை. அவர்,
செய்து செய்யூச் செய்பு செய்தெனச்
செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென
அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி (தொல்.வினை. 31)
என வினையெச்ச வாய்பாடுகளை, ஒருவாறு நிகழ்காலமும் அடங்க முக்காலத்திற்கும் தொகுத்துக் கூறினாரேனும், பெயரெச்ச வாய்பாடுகளைக் கூறுமிடத்து.
செய்யும் செய்த என்னுஞ் சொல்லே (தொல்.வினை. 37)
என நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பொதுப்படச் செய்யும், என்னும் ஒரே வாய்பாட்டை ஆண்டாரேயன்றி,
செய்த செய்கின்ற செய்யும்என் பாட்டின் (நன். 340)
என நன்னூலாரைப்போல நிகழ்காலத்திற்கெனத் தனிப்பட ஒன்றையுங் கூறிற்றிலர்.
சேனாவரையர் உள்ளிட்ட உரையாசிரியன்மாரும், முக்கால வினை முற்றிற்கும் உண்டான், உண்ணாநின்றான், உண்பான் என எடுத்துக் காட்டினரேனும் நிகழ்கால வினையைத் தொல் காப்பியர் விதந்து குறிப்பிடும் நூற்பாக்களின்கீழ் செய்யாநின் றான் என்னும் வாய்பாட்டு வினைமுற்றைக் காட்டாவிடத் தெல்லாம் செய்யும் என்னும் வாய்பாட்டு வினையையே எடுத்தாண்டுள்ளனர்.ஆநின்று என்னும் இடைநிலை `கின்று என்பதுபோல் அத்துணைச் சிறந்ததன்று. ஆயினும், அதுவும் தொல்காப்பியத்திற் காணப்பெறவில்லை.
கிறு கின்று ஆநின்று என நிகழ்கால இடைநிலை மூன்றென்பார் நன்னூலார். இவற்றுள் கிறு என்பது கின்று என்பதன் தொகுத்தலே. இவற்றை இரண்டாகக் கொள்ளினும், மூன்றாகக் கொள்ளினும், இழுக்கன்றாம், ஆயின் இவற்றுள் ஒன்றைக் கூடத் தொல்காப்பியர் தனியாகவோ வினைச்சொல்லில் வைத்தோ குறியாதது மிகவும் வியத்தற்குரியதே.
இனி, நிகழ்கால வினைபற்றிய தொல்காப்பிய நூற்பாக்களும், அவற்றிற்குச் சேனாவரையர் தந்த எடுத்துக்காட்டும், வருமாறு:-
நிகழுஉ நின்ற பலர்வரை கிளவியின்
உயர்திணை யொருமை தோன்றலு முரித்தே
அன்ன மரபின் வினைவயி னான (தொல்.பெயரியல். 3.19)
எ-டு: சாத்தன் யாழெழூஉம், சாத்தி சாந்தரைக்கும்,
பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ்வயின் மூன்றும் நிகழுங் காலத்துச்
செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா (தொல். வினை. 30)
(இதற்கு எடுத்துக்காட்டு நூற்பாவிலேயே உள்ளது)
நிலனும் பொருளுங் காலமுங் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையு முளப்பட
அவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய
செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே. தொல். வினை. 37
எ-டு: வாழுமில், கற்குநூல், துயிலுங்காலம், வனையுங் கோல், ஓதும் பார்ப்பான், உண்ணுமூண்…. (புக்கவில், உண்ட சோறு, வந்த நாள், வென்ற வேல், ஆடிய கூத்தன், போயின போக்கு)
அவற்றொடு வருவழிச் செய்யுமென் கிளவி
முதற்கண் வரைந்த மூவீற்று முரித்தே (தொல்.வினை. 38)
(இதற்கும் எடுத்துக்காட்டு நூற்பாவிலேயே உள்ளது)
முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை
எம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து
மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும் (தொல்.வினை. 43)
எ-டு: மலைநிற்கும் ஞாயிறியங்கும், திங்களியங்கும் எனவும் வெங் கதிர்க் கனலியொடு மதிவலந் திரிதருந் தண் கடல் வையத்து எனவும் வரும்
மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி
அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி
செய்வ தில்வழி நிகழுங் காலத்து
மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே தொல்.வினை. 45
எ-டு: ……. ஒருவன் றவஞ்செய்யிற் சுவர்க்கம் புகும், தாயைக் கொல்லின் நிரயம் புகும் எனவும், மிக்க தன் வினைச் சொனோக்கி அம் மிக்கதன் திரிபில் பண்பு குறித்த வினை முதற் கிளவி நிகழ்காலத்தான் வந்தவாறு கண்டுகொள்க.
வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
இறப்பினு நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும்
இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை (தொல். வினை. 48)
எ-டு: …….. கூறை கோட்படா முன்னும், இக்காட்டுட் போகிற் கூறை கோட்பட்டான் கூறை கோட்படும் என்னும் …… மழைபெய்யா முன்னும், மழை பெய்தது, மழை பெய்யும் என்னும் ஆண்டு எதிர் காலத்திற்குரிய பொருள் இறந்த காலத்தானும் நிகழ்காலத்தானும் தோன்றியவாறு கண்டுகொள்க.
இதுகாறும் கூறியவற்றால், தொல்காப்பியர் செய்யும் என்னும் எதிர்கால வினை வாய்பாட்டையே, நிகழ்காலத்திற்கும் கொண் டமை தெளியலாம். ஆயின் அவர் காலத்துச் செய்கின்றான் என்னும் வாய்பாட்டு வினை வழக்கில் இலதோ வெனின் உண்டு, அதனை அவர் செவ்வையாய் ஆராய்ந்திலர் என்றே கொள்ளல் வேண்டும். அஃதெங்ஙன மெனின், கூறுவல்;-
செய்கின்று என்னும் பாலீறற்ற நிகழ்கால வினை, பழஞ்சேர நாடாகிய மலையாள நாட்டில், செய்யுந்நு எனத் திரிந்து இரு வகை வழக்கிலும் வழங்குகின்றது. இத் திரிபின்படியே, செய்கின் றான் என்னும் பாலீறற்ற வடிவம். முறையே, செய்குந்நான் - செய்குநன் என்றும் செய்குந்நான் - செய்யுந்நான் - செய்யுநன் - செய்நன் என்றும் திரிந்து, தமிழிலக்கியத்தில் தொன்றுதொட்டு வழங்கிவருகின்றது. இங்ஙனமே செய்குநர் செய்நர் எனப் பலர் பாற் சொல்லும் செய்குந, செய்ந எனப் பலவின்பாற் சொல்லும், வழங்கி வருகின்றன. இவையெல்லாம் தமிழில் நிகழ்காலங் குறித்த வினையாலணையும் பெயர்களாம். மகிழ்நன், வாழ்நன் (வாணன்) முதலியனவும் இத்தகையனவே. செய்யுந்து என்னும் மலையாள வடிவம் நிகழ்கால வினைமுற்றாம்.
செய்குந, செய்ந என்னும் வாய்பாட்டுப் பலவின்பால் வினையா லணையும் பெயர்கள், தொல்காப்பியத்திற் பலவிடத்தும் பயின்று வருகின்றன.
எ-கா : எழுத்ததிகாரம் : (1) தொகைமரபு
இயல்பா குநவும் உறழா குநவும் (9)
இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும்
உறழா குநவும். (16)
வல்லெழுத்து மிகுநவும் உறழா குநவும் (17)
(2) குற்றியலுகரப் புணரியல்.
கிளந்த வல்ல செய்யுளுள் திரிநவும்
வழங்கியல் மருங்கில் மருவொடு திரிநவும் (78)
சொல்லதிகாரம் (1) இடையியல்.
புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதநவும்
வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்
அசைநிலைக் கிளவி ஆகி வருநவும்
தத்தம் குறிப்பிற் பொருள்செய் குநவும்
ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவும் (2)
(2) எச்சவியல்
பெயர் நிலைக் கிளவியின் ஆஅ குநவும்
திசைநிலைக் கிளவியின் ஆஅ குநவும்
தொன்னெறி மொழிவயின் ஆஅ குநவும்
மெய்ந்நிலை மயக்கின் ஆஅ குநவும்
மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும் (53)
பொருளதிகாரம் : பொருளியல்
அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும் (37)
இஃதேல், தொல்காப்பியர் தம் நூலுள் தாம் கூறியதையே ஏன் ஆராய்ந்திலர் எனின்.
தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று (100)
என அவர் செய்யுளியலில் தாம் கூறியதையும் நோக்காதே,
ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்
பஃதென் கிளவி ஆய்தபக ரங்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகர மாகும் (தொல். 445)
எனக் குற்றியலுகரப் புணரியலிற் கூறியதுபோன்றே எனக் கூறி விடுக்க (தொண்டு 9. தொண்டு + பத்து = தொண்பது (90). தொன்பது - ஒன்பது. தொண்டு + நூறு = தொண்ணூறு (900). தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் (9000).
அற்றேல் கின்று என்பது றன்னகரங் கொண்டிருக்கவும் அதன் திரிவில் தந்நகரம் வந்த தெங்ஙனமெனின் தந்து - தந்நு. வந்து - வந்நு எனத் தந்நகரம் பயின்றுவரும் சேரநாட்டு வழக்குப் பின்பற்றி யென்க. செய்நன் என்னும் வடிவு தோன்றியதே மூக்கொலி மிக்குப் பயிலும் சேரநாட்டில்தான்.
இதுகாறும் கூறியவற்றால், கின்று என்னும் நிகழ்கால இடை நிலை திரிந்தோ திரியாதோ தொல்காப்பியர் காலத்திலும் வழங்கிற் றென்றும், அவர் நிகழ்காலத்திற்குத் தனி வினை வடிவு கூறாதது குன்றக் கூறலாமென்றும் அறிந்துகொள்க. - தமிழ்ப் பொழில் ஆனி 1956.
நிச்சம்
நிச்சம் : நில்-நிற்றம் = நிலையானது. ஒ.நோ : கொல்-கொற்றம். வெல்-வெற்றம்.
நிற்றம்-நித்தம். ஒ.நோ : முற்றகம்-முத்தகம்.
நித்தம்-நிச்சம். ஒ.நோ : அத்தன்-அச்சன், நத்து-நச்சு.
நித்தம்-நித்ய (வ.). இதற்கு வடவர் காட்டும் மூலம் பொருந்தாப் பொய்த்தல். தி.ம : 746.
நித்தம்
நித்தம் -வ. நித்ய (இ.வே.)
நில் + தம் = நிற்றம் = நிலையானது. ஒ.நோ : கொல் - கொற்றம் = பகையைக் கொன்று பெறும் வெற்றி. முடக்கொற்றான் = முடங் கொன்றான். வெல்-வெற்றம் = வெற்றி.
அதம், அத்தம், இதம், இத்தம், உதம், உத்தம் என்னும் சுட்டுச் சொற்கள், முதல் கெட்டு முதனிலையொடு புணர்ந்து தம், த்தம் என்னும் அளவில் நிற்பது.
நிற்றம்-நித்தம். ஒ.நோ : குற்று-குத்து, முற்றகம் - முத்தகம்.
நித்த மணாளர் (திருவாச. 17 : 13)
நித்தக்கட்டளை = நித்தியக் கட்டளை.
நேரினித்தமு மொட்டின னாகுமே (மேருமந். 652)
இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு
வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும். (தொல். 516)
என்னும் நெறிமொழிப்படி, நித்தம் என்பது நித்தமும் என உம்மையேற்றது.
நித்தம்-நிச்சம். ஒ.நோ: அத்தன் - அச்சன், நத்து-நச்சு, மொத்தை - மொச்சை.
அச்சமு நாணு மடனுமுந் துறுத்த
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப. (தொல்.1045) (வ.வ. 275-6)
நித்தல்
நில்-நிற்றல் (நில்+தல்) = நிலைப்பு.
குணபத் திரன்றாள் நிற்றலும் வணங்கி (சூடா. 7 : 76)
நிற்றல்-நித்தல் = என்று முண்மை, எந்நாளும் நிகழ்வு
நித்தல் விழாவணி நிகழ்வித் தோனே. (சிலப். உரைபெறு கட்டுரை)
வினையொடு முடியின் உம்மை பெறவேண்டிய முற்றுப் பொருட்சொற்கள், தம்மையுணர்த்தும்போதும், கூட்டுச் சொல்லுறுப்பாகவும் குறிப்புப் பெயரெச்சமாகவும் நிற்கும் போதும், உம்மை பெறவேண்டியதில்லை; தம்மையுணர்த்தும் போது பெறவே பெறா.
எ-டு: முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே (தொல்.809)
உலகமுழுதுடையாள், முழுதுலகு.
உமை நித்தலுங் கைதொழுவேன் (தேவா. 825 : 1)
நித்தல் பழி தூற்றப்பட்டிருந்து (இறை.கள. 1 : 14)
என்பது செய்யுள் திரிபாகவோ வழுவமைதியாகவோ கொள்ளப் படும்.
நித்தல்-நிச்சல்
நிச்சலும் விண்ணப்பஞ் செய்ய (திவ். திருவாய். 1 : 9 : 11)
வடவர் காட்டும் மூலம் வருமாறு:-
நி2 (முன்னொட்டு) = கீழ், பின், இல், உள், உட்கு, உட்பெற.
நி2 - ஜ (ஜன்) = உள்ளான, உடன்பிறந்த, சொந்த, தன்னின, தன் நாட்டிற்குரிய: அடிக்கடி நிகழ்கின்ற, தொடர்கின்ற.
நி2 - நித்ய = உள்ளன, தன் நாட்டிற்குரிய; சொந்த; தொடர்கின்ற, நிலையான, என்றுமுள்ள.
நி என்னும் வடமொழி முன்னொட்டு, இல் (E, in) என்னும் தமிழ் இடவேற்றுமை யுருபின் முறைமாற்றுத் திரிபே.
இல்-இன்-நி. ஒ.நோ : அல்-அன் (E, an, un) - ந (வ.).
ந என்னும் வடமொழி எதிர்மறை முன்னொட்டை மூலச்சொல் லாகக் கொண்டு, அதுவே அந் என்று பிரிந்ததாகத் தலைகீழாய்க் கூறுவர் வடவர்.
என்றுமுண்மைப் பொருட் சொல்லிற்கு மூலமாக இருக்கக் கூடியது, நில் என்னும் தென்சொல்லா, நி என்னும் வடமொழி முன்னொட்டா என்று, நடுநிலையறிஞர் ஆய்ந்து தெளிக. (வ.வ.276-7)
நிமை
நிமை - வ. நிமி
இமை = இமைத்தல், கண்ணிமை.
ம. ïk, f., து. இமெ.
இமை-நிமை = இமைத்தல், கண்ணிமை, க. எவே.
நீலிக்குக் கண்ணீர் நிமையிலே. (பழமொழி)
வடவர் நிமி என்னும் சொல்லை இக்குவாவின் மகன் (நிமி) பெயரொடு தொடர்புபடுத்தி, அவன் வசிட்டர் சாவிப்பினால் தன் உடம்பை யிழந்து எல்லா வுயிரிகளின் கண்களையும் இடமாகக் கொண்டானென்று, ஒரு கதை கட்டுவர். (விஷ்ணு புராணம், 4 : 5). வ.வ : 189.
நிரயம் (நரகு)
அட்டைக் குழி இருளுலகம் அளறு என நரகிற்குப் பெயர் இருப்பதால், அட்டை இட்ட குழியிலும், இருட்டறையிலும், உளையிலும் பண்டைக்காலத்தில் குற்றவாளிகள் தள்ளப் பட்டனர் என்பது வெளியாகும். (சொல். 24)
நிலமும் ஊரும்
குறிஞ்சி நிலத்து ஊர்கள் குறிச்சி, சிறுகுடி என்றும், முல்லை நிலத்து ஊர்கள் பாடி சேரி என்றும், மருதநிலத்து ஊர்கள் ஊர் என்றும் பாலை நிலத்து ஊர்கள் பறந்தலை என்றும் நெய்தல் நிலத்து ஊர்கள் பாக்கம் பட்டினம் என்றும் ஈறு கொடுத்துக் கூறப்பட்டன. மக்கள் பல்கித் திமயக்கம் உண்டானபின் இவ்வழக்கு பெரும்பாலும் நின்றுவிட்டது. (சொல்.28.)
நிலவகை
புறம்போக்கு - பண்படுத்தப்படாத அரசியலார் நிலம்;
தரிசு பயிர் - செய்யப்படாது புல் முளைத்துக் கிடக்கும் நிலம்;
சிவல் - சிவந்த நிலம்;
கரிசல் - களிமண் நிலம்;
முரம்பு - கன்னிலம் அல்லது சரள் நிலம்;
சுவல் - மேட்டு நிலம்;
அவல் - பள்ளமான நிலம். (சொல் : 72.)
நிலவரி
உழவர் செலுத்திய நிலவரி பகுதி (ஆறிலொரு பகுதி) என்றும், காணிக்கடன் என்றும் பெயர் பெற்றிருந்தது. தங்கட்கு வேண்டிய அளவே நெல் விளைவித்தவரும் புன்செய்ப் பயிர் விளைவித்தவரும் பொன்னாகவும் காசாகவும் செலுத்திய வரியும் காணிக்கடன். குறள். 754
நிலாக் குப்பல் விளையாட்டு
ஆடுவாரெல்லாரும் 1ஆம் கட்சி 2ஆம் கட்சி என இரு கட்சியாகப் பிரிந்து கொள்வர்.
பின்பு, இரு கட்சியாரும் வெவ்வேறு பக்கமாகச் சென்று, குறிப் பிட்ட எல்லைக்குள், மரநிழலும் தெருச் சந்தும் பொட்டலும் போன்ற பல இடங்களில் ஆளுக் கொன்றாகச் சிறுசிறு மண் குப்பல்களை வைத்துவிட்டு வந்துவிடுவர். மண் குப்பலுக்கு அடையாளமாக மேலே குச்சு நட்டுவைப்பதுமுண்டு. சில சமயங் களில் மண் குப்பலுக்குப் பதிலாகத் தென்னைமரம் வரைவர்.
இரு கட்சியாரும் குப்பல் வைத்துவிட்டு வந்தபின், ஒவ்வொரு கட்சியாரும் ஒருங்கே சென்று, எதிர்க் கட்சியார் வைத்த குப்பல்களைக் கண்டுபிடித்து அழித்துவிடுவர். முதலாவது, ஒன்றாங் கட்சியார் இரண்டாங் கட்சியாரின் குப்பல்களைக் கண்டுபிடிப்பர். எல்லாக் குப்பல்களையும் கண்டுபிடிப்பது பெரும்பாலும் அரிதாகும். கண்டுபிடித்தவற்றை அழித்தபின், வயிறு நிரம்பிவிட்டதா என்று 2ஆம் கட்சியார் கேட்பர். மேலுங் கண்டுபிடிக்க விருப்பமிருப்பின், இன்னும் வயிறு நிரம்பவில்லை என்றும், விருப்பமில்லாவிடின், வயிறு நிரம்பிவிட்டது என்றும், ஒன்றாங் கட்சியார் பதிலுரைப்பர். பின்பு, 2ஆம் கட்சியார் 1ஆம் கட்சியார் கண்டுபிடியாத குப்பல் களைக் காட்டி அவற்றை எண்ணிக்கொள்வர். இவ்வாறே 2 ஆம் கட்சியார் 1ஆம் கட்சியாரின் குப்பல்களைக் கண்டுபிடிக்கும் போதும் நிகழும். இங்ஙனம் இரு கட்சியாரும் கண்டுபிடித்து முடிந்தபின், எக்கட்சியார் மிகுதியான குப்பல்களைக் கண்டு பிடித்திருக்கின்றனரோ, அக்கட்சியார் தம் கட்சியை அரசன் (ராஜா) என்று சொல்லிக் கொள்வர். இங்ஙனம் பலமுறை ஆடி, 50 அல்லது 100 எனக் குறித்த எண்ணிக்கையை முந்தியடைந்த கட்சியார் வென்றவராவர். தோற்ற கட்சியார் தோப்புக்கரணம் போடல்வேண்டும்.
குப்பலுக்குப் பதிலாகத் தென்னைமரம் வரையப்படின், அதன் ஒவ்வொரு கோட்டிற்கும் எண்ணிக்கையுண்டு.
மறைக்கப்பட்டதைக் கண்டுபிடிக்கும் பயிற்சி இவ்விளை யாட்டிலுண்டு எனலாம்.
இந்த ஆட்டு சிறுமியருக்குரியதாயினும், ஐந்தாண்டிற்கும் பத்தாண்டிற்கும் இடைப்பட்ட சிறுவரும் இதிற் கலந்து கொள்வர்.
நிலைத்திணை
புல் பூண்டு செடி கொடி மரம் என்பவை (ஐவகை) நிலைத்திணை உயிர் (தாவரம்). (சொல். 2)
நிலைத்திணைத் தொகுப்பு வகை
செய் - நெல் கம்பு முதலிய பயிர்த்தொகுதி;
தோட்டம் - மிளகாய் கத்தரி முதலிய செடித்தொகுதி;
தோப்பு - மா தென்னை முதலிய மரத்தொகுதி;
காடு - முல்லை குறிஞ்சியிலுள்ள நிலத்திணைத் தொகுதி;
அடவி - மரமடர்ந்த காடு;
சோலை - மரமடர்ந்த இயற்கைத் தோப்பு;
கா - காக்கப்படும் சோலை;
கானல் - கடற்கரைச் சோலை;
வனம் - மக்கள் வழக்கற்ற காடு. (சொல் : 72.)
நிலைத் திணைப் பாகுபாடு
அகக்காழ் மா புளி போல உள்வயிரம் உள்ளவை.
புறக்காழ் புல் மூங்கில் போல வெளி வயிரம் உள்ளவை. (சொல்:71.)
நிலையம்
நிலையம் - வ. நிலய
நில் - நிலை - நிலையம் = 1. நிற்குமிடம், தங்குமிடம், இருப்பிடம்.
நியாயமத் தனைக்குமோர் நிலைய மாயினாள் (கம்பரா. கிளை. 55)
2. கோயில்
நல்லூரகத்தே திண்ணிலையங் கொண்டு நின்றான் (தேவா. 414 : 5) (திவா.)
அம் ஒரு பெருமைப் பொருட் பின்னொட்டு.
நிலை = நிற்கும் சிற்றிடம் (stand). எ-டு : கதவுநிலை, தேர்நிலை.
நிலையம் = நிற்கும் பேரிடம் (station). எ-டு : புகைவண்டி நிலையம்.
வடவர் நி+லய என்று பகுத்து, ஒன்று இன்னொன்றொடு ஒன்றி விடும் இடம் என மூலப் பொருள் கூறுவர்.
நி = கீழ், லீ = ஒட்டு. லீ-லய = ஒட்டுகை. நிலீ = கீழ்த் தங்கு, படிந்திரு, நிலைத்திரு. நிலய = தங்கிடம், இருக்கை, குடியிருப்பு, குகை, கூடு.
தென்சொல்லை வடசொல்லாகக் காட்ட வேண்டி, அதை வடவர் செயற்கை முறையிற் சிதைப்பதற்கு இஃதோர் எடுத்துக் காட்டாம். தம் கொள்கையை நிறுவவே, நிலையம் என்னும் சொல் வருமிடமெல்லாம் நிலயம் என்றே எழுதுவர், அல்லது பதிப்பிப்பர். வ.வ : 190.
நிற்றியம்
நிற்றியம் வ. நித்ய (த.ம. 153.)
நிறை
நிறை என்பது மனத்தைக் கற்பு நெறியில் நிறுத்துதல். (தி.ம. 68.)
நின்றால் பிடித்துக்கொள் விளையாட்டு
ஏதேனும் ஒரு வகையில் அகப்பட்டுக்கொண்ட பிள்ளை பிற பிள்ளைகளை நின்றால் தொடவேண்டும்; உட்கார்ந்து கொண் டால் தொடக்கூடாது. தொடப்பட்ட பிள்ளை, பின்பு பிறரைத் தொடல் வேண்டும். (த.நா.வி.)
நீயிர்
நூம் - நும்.
நீன் - நீ + இர் = நீயிர் என்பதே உண்மை. (த.இ.வ. 136.)
நீர்
நீர், நீர்மை : நீள் - நீர் = நீளும்பொருள். நீர் x நிலம். நில் - நிலம் = நிற்கும் பொருள்.
நீர் - நீர்மை = நீரின் தன்மை, குளிர்ந்த தன்மை, இனிய அல்லது சிறந்த தன்மை, தன்மை.
நீர் - நீரம் - நீர(வ.). நீரம் - நார(வ.). (தி.ம : 746.)
நீரம்
நீரம் - வ. நீர
நீள் - நீர் = நீளும் பொருள். நீர் x நிலம். நில் - நிலம் = நிற்கும் பொருள்.
நீர் - நீரம் - ஈரம். நீர் - ஈர். ஈர்மை = தண்மை. எ-டு: ஈர்ங் கதிர், ஈர்ங்கை. (வ.வ : 190.)
நீலம்
நீலம் - வ. நீல
நீர்-நீல் = நீலம்.
நீர்நிலைகட்குள் கடலே பெரிதாகவும் ஏனையவற்றிற் கெல்லாம் மூலமாகவுமிருப்பதால், நீர் என்னும் சொல் சிறப்பாகக் கடலையே குறிக்கும்.
நீரொலித் தன்ன நிலவுவேற் றானை (மதுரைக் 369.)
கடல் நிறம் நீலமாயிருப்பதால், நீர் என்னும் சொல்லினின்று நீலக்கருத்தும் நீல் என்னும் சொல்லும் பிறந்தன.
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும் (சிலப்.10 : 116.)
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே )சிலப். 17 : 126.)
நீலித ழுண்கண்ணாய் (கலித். 33 : 28.)
நீனிற மஞ்ஞையும் (சிலப். 12 : 34.)
நீல் - நீலம் = நீலநிறம், நீலச்சாயம், நீலமணி, கருப்பு, கருங்குவளை, நீலமலை.
நீலன் = காரி (சனி). நீலி = காளி, அவுரி.
நீலக்கடம்பை, நீலக்காலி, நீலச்சம்பா, நீலச்சுறா, நீலநாரை, நீலமுள்ளி முதலிய எத்துணையோ நீலப்பொருட்பெயர்கள் தொன்று தொட்டு வழங்கி வருகின்றன. (வ.வ : 190-191.)
நுகம்
நுகம் - வ. யுக (g) - இ வே.
உத்தல்-பொருந்துதல். உத்தி = 1. விளையாட்டிற் கன்னை (கட்சி) பிரித்தற்கு இவ்விருவராய் இணைதல்.
உத்திகட்டுதல் என்பது வழக்கு தெ. உத்தி (dd).
2. நூலுரைகட்குப் பொருந்தும் நெறிமுறை.
ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை
மெய்ப்படக் கிளந்த வகைய தாகி
ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின்
முப்பத் திருவகை உத்தியொடு புணரின்
நூல் என மொழிப நுணங்குமொழிப் புலவர். (தொல். 1598)
தொல்காப்பியம் ஏனைமொழியிலக்கண நூல்கட்கெல்லாம் மிக முந்திய தாம்.
உ - உக - உகம் = இணை, நுகம்.
உகம் - நுகம் = ஏரிலும் வண்டியிலும் காளைகளைப் பூட்டும் மரம்.
எருதே யிளைய நுகமுண ராவே (புறம். 102.)
ம. நுகம், க. நொக (g)
நுகக்கோல் என்பது இன்று பாண்டி நாட்டில் முகக்கோல் என்று திரிந்து வழங்குகின்றது. மோக்கால் என்பது அதன் கொச்சை வடிவம்.
உயிர்முதற் சொற்கள் நகரமெய்ம் முதலாவது இயல்பே.
எ-டு : இமை-நிமை, உந்து-நுந்து, ஊன்-நூன்-நீன், ஊக்கு-நூக்கு.
உத்தி - யுக்தி வ.
#நுணல்
தவளை இனத்தில் ஒருவகை, கருங்கல்லுக் குள்ளும் ஆழ்ந்த மணலுக்குள்ளும் நுண்ணிதாய் நுழைந்து கிடக்கும். அதனால் அதற்கு நுணல் என்று பெயர்.
மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணல்
என்றார் முன்றுறையரையனார் (பழமொழி. 114). சொல். 13
நுணா
மஞ்சள் நாறி அல்லது மஞ்சள்நத்தி மரத்தின் காய் நுணல் போன்ற தோற்றமுடைமையால் நுணா எனப்பட்டது. பின்னர் அது சினையாகு பெயராய் மரத்திற்கு ஆயிற்று.
(நுணல் என்பது நுணலை என்றும், நுணா என்பது நுணவு, நுணவம், நுணவை என்றும் திரியும். பொருள் வேறுபாடு உணர்த்தற்கு நுணல் நுணா என்பன ஈறு வேறுபட்டன). சொல். 13.
நுந்து
நுந்து - வ. நுத் (d) - இ.வே.
உந்துதல் = முன் தள்ளுதல், தள்ளுதல்.
உந்து-நுந்து. நுந்துதல் = முன் தள்ளுதல், தள்ளுதல், தூண்டுதல். வ.வ : 192.
#நுல்1 என்னும் வேர்ச்சொல்
அடிப்படைக் கருத்து : தோன்றல்.
வழிநிலைக் கருத்துகள் : இளமை, சிறுமை, மெலிவு, நுண்மை, கூர்மை, நுனிமை, முன்மை முதலியன.
நுல் - நல் - நன் - நனை. நனைதல். = 1. தோன்றுதல். மகிழ்நனை மறுகின் மதுரையும் (சிறுபாண். 67). 2. அரும்புதல். பிடவ மலரத் தளவ நனைய (ஐங்.499).
நனை = அரும்பு. மாநனை கொழுதி மகிழ்குயி லாலும் (நற்.9).
நுல் - நுரு = 1. இளம்பிஞ்சு. 2. அறுத்த தாளில் விடும் தளிர் (யா.வ.).
நுரு - நொரு = 1. சிறுபிஞ்சு. 2. காய்ப்பு மாறினபின் தோன்றும் பிஞ்சு. 3. விளைந்த பயிரின் அடியில் அல்லது கணுவில் தோன்றும் இளங்கதிர்.
நொருக்காய், நொருப்பிஞ்சு என்பன யாழ்ப்பாண வழக்கு.
நுல் - நல் - நறு - நாறு. நாறுதல் = தோன்றுதல். திருநாறு விளக்கத்து (பதிற். 52 : 13). 2. பிறத்தல். தேர் பத்தினன் மகவென நாறி (கல்லா. 94 : 95). 3. முளைத்தல். பாத்தி விதைத்தாலும் நாறாத வித்துள (பழ. 93).
நாறு = 1. முளை (W.). 2. நாற்று, நாறிது பதமெனப் பறித்து (சீவக. 45).
நாறு - நாற்று = 1. இளம்பயிர். 2. பறித்து நடக்கூடிய பயிர்.
நுல்-நுன்-நுன்னி-நன்னி = 1. மிகச் சிறியது. 2. சிறியது. நன்னிக் குரங்கும் கொசுகும் பகையோ நமக்கென்றானே (இராமநா. உயுத்.1).
நன்னிக்கல் = மருந்தரைக்குஞ் சிற்றம்மி (தைலவ. பாயி. 12, உரை).
நன்னிநூல் = துணியின் ஓரத்திலுள்ள சிறு நூல்துணுக்கு (W.).
நன்னிப் பயல் = சிறுபையன்.
சிறு பிள்ளைகளையும் சிற்றுயிரிகளையும் நன்னியுங் குன்னியும், நன்னி பின்னி என்பது உலக வழக்கு.
நுன்-நுனி = 1. நுனை, உச்சி. நுனிக்கொம்ப ரேறினார் (குறள்.476). 2. நுண்மை. (திவா.). ம. நுனி.
நுனித்தல் = 1. கூராக்குதல், 2. கூர்ந்து நோக்குதல் அல்லது ஆராய்தல். நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர் (மணிமே. 19 : 80).
நுனிப்பு = கூர்ந்தறிகை. நூனெறி வழாஅ நுனிப்பொழுக் குண்மையின் (பெருங். வத்தவ. 7 : 34).
நுனி-நுதி = 1. நுதிமுக மழுங்க (புறம்.31). 2. கூர்மை. 3. அறிவுக் கூர்மை. நுதிகொ ணாகரிகன் (சீவக. 1110). 4. தலை. நுதிநுனைக் கோட்டாற் குலைப்பதன் றோற்றங்காண் (கலித். 101). 5. முன்பு. நூற்றைவரோடு நடந்தானுதி (சீவக. 1933, உரை).
நுனி-நுனை = நுனி, முனை. கூர்நுனை வேலும் (புறம்.42).
நுல்-நொல்-நொற்பு-நொற்பம் = 1. நுட்பம், நொற்பமான வேலை (W.). 2. எளிமை. நொற்ப வுலகத்தவர் நோய்தீர்த்து (பஞ்ச. திருமுக. 611).
நொற்பம்-நொற்பன் = சிறியன், எளியன்.
நுல்-நூல் (எள்) - நோல் - நோலை = 1. எள்ளுருண்டை. புழுக்கலு நோலையும் (5, 68). 2. எட்கசிவு, அணங்குடை நோலை (பு.வெ. 3 : 40).
நூல்-நூ = எள் (சூடா.) தெ. நூ, நூவு, நுவு, நுவ்வு.
நூவு - = எள் (பிங்.). தெ. நூவு.
நூவுநெய் = எள்நெய் = எண்ணெய் (நல்லெண்ணெய்). தெ. நூனெ.
முதன்முதல் தோன்றியது ஆவின் (அல்லது எருமையின்) நெய். எள்ளிலிருந்தெடுக்கப்பட்ட நெய் எண்ணெய் (எள்நெய்) எனப் பட்டது. அது பின்னர் மாட்டுநெய் தவிரப் பிறநெய்வகைகட் கெல்லாம் பொதுப்பெயரான பின், நல் என்னும் அடைபெற்றது.
எள் மிகச் சிறிய கூலமாதலால், நூ (நூல்) எனப் பெயர் பெற்றது. எள்ளளவும், எள்ளத்தனையும், எட்டுணையும் என்னும் வழக்கு களை நோக்குக.
நூவு-நுவ்வு-நுவு-நுவல்.
நுவலுதல் = நுண்ணிய அறிவுச் செய்தியைச் சொல்லுதல். மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே (தொல்.102.) நூலே நுவல்வோன் நுவலுந் திறனே (நன்.பாயி.3).
நுவல்வோன் = அறிவுச் செய்திகளைக் கூறும் ஆசிரியன்.
நுவல்-நூல் = ஒரு பொருள்பற்றிய அறிவுத் திரட்டு; கலை, கல்வித்துறை.
பொத்தகம் என்பது ஒரு நூலைக் கூறும் ஏட்டுத் தொகுதி அல்லது தாட்கற்றை. பொத்தகக் களஞ்சியம் என்ன வேண்டியது, இன்று நூல்நிலையம் என வழங்குகின்றது.
நூற்றல் = செய்யுளியற்றுதல். நொய்யசொன்னூற்கலுற்றேன் (கம்பரா. சிறப். 5).
நுவல்-நுவள்-நுவண்-நுவணம் = 1. இடித்த மா. 2. கல்வி நூல் (அக.நி.).
நுவண்-நுவணை = 1. நுட்பம் (திவா.). 2. இடித்த மா (திவா.). மென்றினை நுவணை யுண்டு (ஐங்.285). 3. பைந்தினை (பிங்.) 4. கல்விநூல் (சூடா.).
நுவணை-நுணவை = 1. எள்ளுருண்டை (சூடா.). 2. இடித்த மா (சூடா.).
நுவல்-நுவறு. நுவறுதல் = நுண்ணிதாக அல்லது பொடியாக அராவுதல். நுணங்கர நுவறிய… மருப்பின்… பேரியாழ் (மலைபடு. 35).
நுவ்வு-நவ்வு-நவ்வி = 1. மான்குட்டி. சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை (புறம்.2). 2. இளமை (சூடா.) 3. அழகு. நவ்வித் தோகையர் (கம்பரா. மாரீச. 14).
நுவல்-நவல்-நவர்-நவரை = சிறுகாய் வாழைவகை. நவரை-வாழைப் பழத்தான் மதி (பதார்த்த. 765). நவரை-நமரை.
நுல்-நூல் = நுண்ணிய இழை.
நூற்றல் = பஞ்சிழை யுண்டாக்குதல்.
நுல்-நுள்-நுள்ளுதல் = கூரிய உகிராற் கிள்ளுதல். ம. நுள்ளுக.
நுள்ளு = 1. கிள்ளு. 2. சிறு துண்டு அல்லது துணுக்கு.
நுள்-நுள்ளல் = சிறிய உலங்கு.
நுள்-நுள்ளான் = கடிக்குஞ் சிற்றெறும்பு.
நுள்ளல்-நொள்ளல் = சிறிய உலங்கு.
நுள்-நொள்ளை = கைக்குழந்தை (நெ.வ.)
நுள்-நுளம்பு = சிறிய உலங்கு (திவா.).
ம. நுழம்பு, தெ. நுஷும.
நுள்-நுளு-நொளு-நொளுவல் = (யாழ்.வ.). 1. முற்றாநிலை, 2. இளம்பாக்கு. நொளுக்கல் = நொளுவல். நுள்-நுழு-நுழாய். நுழாய்ப் பாக்கு = இளம் பாக்கு (யாழ்.வ.) நுழு-நுழுவல் = இளம் பாக்கு.
நுழு-நுகு-நுகும்பு = பனங்குருத்து. பனைநுகும் பன்ன (புறம். 249). ஒ.நோ. : தொழு-தொகு. நுகு-நுங்கு = 1. இளம் பனங்காய். நுங்கின் தடிகண்புரையுங் குறுஞ்சுனை (கலித். 108 : 40). 2. இளம் பனஞ்சுளை. நுங்குசூன்றிட்டகண். (நாலடி. 44).
தெ. நுங்கு. ம. நொங்ஙு.
நுங்குப் பாக்கு = இளம்பாக்கு.
நுகு-நகு-நாகு = 1. இளமை. நாகிலை (சீவக. 1102). 2. இளம்பெண். 3. பெண் (தொல்.மரபு. 3).
நுழு - நுழை. நுழைதல் = 1. நுண்மையாதல். நுழைநூற்கலிங்கம் (மலைபடு. 561). 2. கூரிதாதல். நுழைந்த நோக்கிற் கண்ணுள் வினைஞரும் (மதுரைக். 517).
நுழை = 1. நுண்மை (திவா.) 2. மதிநுட்பம் (W.).
நுழைவு = 1. நுண்மை, நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை (தொல்.உரி.76). 2. நுண்ணறிவு. நூலவர் நுழைவொடு நுழைந்து (சூளா. இரத. 117).
நுழை-நூழை = நுண்மை (பிங்.).
நுள்-நுண் = 1. மிகச் சிறிய 2. கூரிய. 3. நொய்ய. 4. பருப்பொருளல்லாத. நுண்-நுண்மை.
நுண்-நுண்பு = நுண்மை. பாவியேங்கண் காண்பரிய நுண்புடையீர் (திவ். இயற்.பெரிய திருவந். 8). க. நுண்பு.
நுண்பு-நுட்பு = நுண்மை.
நுட்பு-நுட்பம் = 1. நுண்மை. நெய்யினும் யாருமறிவர் புகை நுட்பம் (நாலடி. 282). 2. மதிநுட்பம். 3. அறிவு நுட்பம் 4. பொருள் நுட்பம். திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம் (நன். 18). 5. கரந்துறை கோள்களுள் ஒன்று. வட்டம், சிலை, நுட்பம், தூமம் என்னும் கோள்கள் நான்கினும் (சிலப். 10 : 102, உரை). 6. காலநுட்பம் (பிங்.). 7. ஒரு செய்தியைக் குறிப்பாலுணர்த்தும் பொருளணி.
தெரிபுவேறு கிளவாது குறிப்பினுந் தொழிலினும்
அரிதுணர் வினைத்திற நுட்ப மாகும். (தண்டி. 63)
8. நுண்ணிய ஆராய்ச்சியுரை.
நுண்-நுணங்கு = நுண்மை (தொல். உரி. 76).
நுணங்கு - நுணக்கம் = 1. நுண்மை (யாழ்.அக). 2. கூர்மை (அக. நி.).
நுண்-நுணா-நுணாவு. நுணாவுதல் = நுனிநாவால் தடவி யுணர்தல்.
நுணாவு-நுணாசு. நுணாசுதல் = நுனிநாவால் தடவியுணர்தல். நுணா-நுணை. நுணைத்தல் = நுணாவுதல் (நெ.வ.).
ம. நுண, க. நொணெ.
நுண்-நுணி = நுனி (யாழ். அக.).
நுணித்தல் = 1. பொடியாக்குதல் (W.). 2. கூர்மையாக்குதல் (W.). 3. நுணுகி யாராய்தல். தெய்வ நுணித்தறங் குறித்த மேலோர் (கம்பரா. மந்திரப். 8).
நுண்-நுணுகு = நுண்மை (திவா.).
நுணுகுதல் = 1. நுட்பமாதல். நுணுகிய நுசுப்பினார் (சீவக. 2611). 2. மெலிதல். தோணுணுகி (புறம்.96). 3. கூர்மையாதல். நுணுகிய அறிவு (உ.வ.).
நுணுகு-நுணுக்கு. நுணுக்குதல் = 1. பொடி செய்தல். 2. நுண்மை யாக்குதல். 3. அரைத்தல். நுண்மணல் விராய் நுணுக்குநர் (திருவானைக். திருநிற். 14). 4. சிதைத்தல். வெகுளி நுணுக்கும் விறலும் (திரிகடு. 40). 5. கூர்மையாக்குதல் (இலக்.அக.). 6. மதியை அல்லது அறிவைக் கூர்மையாக்குதல். புலமை நுணுக்கி (சீவக.886). 7. சிறிதாயெழுதுதல். 8. நுட்பமாக வேலை செய்தல். 9. இன்னிசை யெழுப்புதல். அது தன்னை வீணையிலே ஏறிட்டு நுணுக்கினாள் (திவ். திருநெடுந். 15 : 122). 10. கையைக் குலுக்குதல் (கஞ்சத்தனம் செய்தல்).
நுணுக்கு - நுணுக்கம்.
நுணுகு - நுணுங்கு = பொடி (பிங்.).
நுணுங்குதல் = (செ.கு.வி.). பொடியாதல். (செ. குன்றாவி.) மெல்லப் பாடுதல். அழகை யுடைத்தான பண்ணை நுணுங்கி (திவ். திருநெடுந். 22 : 204).
நுளு-நுசு-நுசுப்பு = மகளிர் சிற்றிடை.
நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை (குறள்.1115.)
ஒ.நோ. : உளு - உசு.
நுசு - நுசி - நொசி - நொசிவு = நுண்மை (தொல். உரி. 76)
நொசிதல் = 1. நுண்மையாதல். நொசிமருங்குல் (தொல். சொல். 368, இளம்பூ.). 2. குறைவுறுதல். நொசிவிலாத பூசனை (விநாயகபு. 36 : 37). 3. செயற்கு அருமையாதல். நோற்றுணல் வாழ்க்கை நொசிதவத்தீர் (சிலப். 19 : 223). 4. நைதல். நொசித்த துகில் (தொல். சொல். 330, உரை).
நுள்-நுறு-நூறு. நூறுதல் = 1. தூளாக்குதல். அரண்பல நூறி (அகம். 69). 2. துணித்தல். யானை யருஞ்சமந் ததைய நூறி (புறம். 93). 3. அழித்தல். பழம்பகை தவ நூறுவாயென (சீவக. 324). 4. இடித்தல் (பு. வெ. 6 : 26, உரை). 5. அறைதல். முலைபொலி யாக முருப்ப நூறி (புறம். 25) 6. நெரித்தல். கரும்பினைக் கண்டகரநூறி (நாலடி. 156).
ம. üWf., தெ. நூரு.
நூறு = 1. இடித்த அல்லது அரைத்தமா, பொடி, தூள். நூறொடு குழீஇன கூவை (மலைபடு. 137.) 2. சுண்ணாம்பு. கோடுசுடு நூற்றினர் (மதுரைக். 401). ம. நூறு, து. நூத்ர. 3. நூறு என்ற எண் (பத்துப்பத்து). k., bj., க. நூறு.
நூறு எண்ண முடியாத துகள்களைக் கொண்டிருத்தலால், அதன் பெயர் பத்திற்கு மேற்பட்ட முதற் பேரெண்ணைக் குறித்தது.
நூறு - நீறு. ஒ.நோ: நூன் - நீன் - நீ. தூண்டு - தீண்டு. தீண்டா விளக்கு = தூண்டா விளக்கு.
நீறு = 1. புழுதி. அருவிதுக ளவிப்ப நீறடங்கு தெருவின் (சிறுபாண். 200-1). 2. சாம்பல். பொற்பாவாய் நீறாய் நிலத்து விளியரோ (நாலடி.266). 3. திருநீறு. மந்திர மாவது நீறு (தேவா. 857 : 1). 4. நீற்றின சுண்ணாம்பு (பிங்.)
ம. நீறு, தெ. நீரு.
நீறு - நீற்று. நீற்றுதல் = 1. பொடியாக்குதல். 2. சுட்ட சுண்ணாம்புக் கல்லை நீரிற் கலந்து தூள் அல்லது களியாக்குதல். 3. மாழைகளை (உலோகங்களை)ச் சுட்டுச் சுண்ணமாக்குதல்.
நுறு-நுறுங்கு. நுறுங்குதல் = பொடியாதல். 2. சிதைதல். நுறுங்கிய யாக்கையோடு (விநாயகபு. 80 : 442).
நுறுங்கு = குறுநொய். நொய்யும் நுறுங்குங் களைந்து அரிசி யமைத்தாரை (தொல். சொல். 1, உரை).
ம. நுறுஙு.
நுறுங்கு-நறுங்கு. நறுங்குதல் = 1. நொறுங்குதல். 2. தேய்கடை யாதல். 3. வளர்ச்சி குறைதல். அவன் நறுங்கிப் போய்விட்டான் (உ.வ.). க. நலுகு (g).
நறுங்கு-நறுக்கு. நறுக்குதல் = 1. நொறுக்குதல். 2. துண்டித்தல். உன்னைக் கண்டங் கண்டமாய் நறுக்குகிறேன். பார் (உ.வ.). 3. வெட்டுதல். கைக் கத்திரிகையிட்டு நறுக்கின தலையாட்டத் தினை (பு.வெ. 3 : 10, உரை). 4. கொட்டத்தை யடக்குதல்.
ம. நறுக்குக, தெ. நருக்கு, க. நரக்கு.
நறுக்கு = 1. துண்டு. 2. ஓலைச்சீட்டு. 3. இசைக்குழல் (நாதசுர) நாக்கு.
நுறு-நொறு-நொறுங்கு. நொறுங்குதல் = 1. பொடியாதல். 2. மனம் நொறுங்குதல் போல் வருந்துதல். மனம் நொறுங்குண்டது (உ.வ.).
நொறுங்கு = 1. நொய் (சூடா.). 2. தூள். நொறுங்காய்க் கூடியிட்டன கொடுமுடித் துறுகற்கள் (சூளா. சீய.145). 3. நுண்மை (W.).
நொறுங்கு-நொறுக்கு. நொறுக்குதல் = 1. பொடியாக்குதல். 2. மென்று தின்னுதல். 3. நையப் புடைத்தல். வீரரை நொறுக்கி (திருப்பு. 574). க. நுர்கு (g).
நொறுக்கரிசி=1.குத்தும்போதுநொறுங்கியஅரிசி.
2. அரைவேக்காட்டுச் சோறு.
நொறுக்கல் நெல் = 1. அறுப்புக் காலத்தில் மழையாற் பதத்த நெல்.
நொறு-நொறுவை = பல்லால் நொறுக்கித் தின்னும் சிற்றுண்டி, சிற்றுண்டி.
நொறுவை-நொறுகை. நொறுவை-நொறுவல்.
நொறுநொறுத்தல் = உடைந்து நொறுங்குந் தன்மையாதல்.
நொறுநொறெனல் = நொறுங்குதற் குறிப்பு.
நொறு நாட்டியம் = 1. விறலுஞ் சுவையுந் தோன்ற நடிக்கும் நுண்வினை நடம். 2. பொருட்படுத்தத்தகாத மிகச் சிறு குற்றங்களைக் கூறுந் தன்மை. 3. துப்புரவு, சுவை, ஒழுக்கம் முதலியவற்றில் அளவிற்கு மிஞ்சிக் கவனஞ் செலுத்துதல்.
நடி-நடம்-நட்டம்-வ. நாட்ய (நாட்டியம்).
நுள்-நொள்-நொய் = 1. அரிசி நொறுக்கு (திவா.). 2. நுண்மை. 3. மென்மை. 4. நொய்ம்மை.
நொய்ம்மை = 1. சிறுமை, நுண்மை. 2. மென்மை. 3. கனமின்மை. மெய்ம்மை சீர்மை நொய்மை வடிவம் (மணிமே. 27 : 254).
நொய்ய = 1. நுட்பமான. பல்கல நொய்ய மெய்யணிந்து (சீவக. 991). 2. மென்மையான, அனிச்சப் போதி னதிகமு நொய்ய (கம்பரா. கோலங். 14). 3. வலியற்ற, நொய்ய கூற்று. 4. புன்மையான. நொய்தி னொய்யசொல் (கம்பரா. பாயி.5). 5. வசையான. நொய்ய சொற் பொறாதவன் (W.).
நொள் - நோள் - நோட்கு - நோக்கு.
ஒ.நோ: கொள் - கொள்கு - கொட்கு - கொக்கு = வளைந்த கழுத்துள்ள பறவை. கொட்கு-கொட்கி-கொக்கி.
நோக்குதல் = 1. கூர்ந்து பார்த்தல். நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் (குறள்.1081). 2. சிறப்பாய்க் கருதுதல். அறனோக்கி யாற்றுங்கொல் வையம் (குறள். 189). 3. கவனித்தல். நச்சாமை நோக்காமை நன்று (ஏலாதி, 12). 4. கவனித்துத் திருத்துதல். புனையிழை நோக்கியும் (கலித். 76). 5. பாதுகாத்தல். நோக்காது நோக்கி (சி.போ. 1 : 4, வெண். ப. 79). 6. கவனித்துச் செய்தல். இவற்றை மும்மைசேர்யாண்டு நோக்கு (திருவாலவா. 31 : 15).
ம. நோக்குக.
நோக்கு = 1. கூர்ந்து நோக்கிச் சிறப்புப் பொருள் காணுமாறு அமைக்கும் எழுத்துஞ் சொல்லுமான செய்யுளுறுப்பு. மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே தொல்.செய். 103. 2. கருத்தோடு கூடிய பார்வை. செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் (நாலடி. 298). 3. சிறப்பாகப் பார்த்தற்கேற்ற அழகு. நோக்கு விளங்க (மதுரைக். 13). 4. சிறந்த கருத்து. நூலவர் நோக்கு (திரிகடு. 29). 5. கூரிய அறிவு. நுழைந்த நோக்கிற் கண்ணுள் வினைஞர் (மதுரைக். 517). 6. சிறப்பாகக் கருதற்கேற்ற பெருமை. நோக்கிழந்தனர் வானவ ரெங்களால் (கம்பரா. கும்பக. 328). 7. சிறந்த நடை. சொன் னோக்கும் பொருணோக்கும் (அஷ்டப்.திருவரங்கக்.தனியன்,2). 8. வேடிக்கைக் கூத்துகளுள் ஒன்று (சிலப்.3 : 12, உரை). 9. நோக்குங் கண். மலர்ந்த நோக்கின் (பதிற். 65 : 7).
ம. நோக்கு.
நோக்கு - நோக்கம். ம.நோக்கம்.
நோள் - நோடு. நோடுதல் = ஆய்ந்து பார்த்தல். இவ்வினை இன்று வழக்கற்றது. க. நோடு.
நோடு-நோட்டம் = 1. பொன் வெள்ளிக் காசு பண ஆய்வு. 2. பொன்மணி ஆய்வு. 3. விலைமதிப்பு. ம. நோட்டம், க. நோட்ட.
நோட்டம் பார்த்தல் = 1. விலைமதிப்பறிதல். 2. நிலைமையாய்தல். 3. வேவு பார்த்தல். நோட்டம் பார்க்க வந்திருக்கிறான் (உ.வ.).
நோட்டம்-நோட்டன் = நோட்டஞ் செய்வோன்.
நோட்டக்காரன் = 1. காசாயும் வண்ணக்கன். நோட்டக் காரர் நெஞ்சடையக் கூப்பிடுவது (பணவிடு. 182). 2. பொன்மணி ஆய்வோன்.
ம. நோட்டக்காரன், க. நோட்டகார (g).
நோடு-நாடு. நாடுதல் = 1. ஆராய்தல். நாடாது நட்டலிற் கேடில்லை (குறள். 791). 2. தேடுதல். தனக்குத்தாய் நாடியே சென்றாள் (நாலடி. 15). 3. தெரிதல். முன்னவ னிதனை நாடி (கந்தபு.ததீசியு. 32). 4. விரும்புதல். நாடல் சான்ற நயனுடை நெஞ்சின் (பதிற். 86 : 7). 5. விரும்பிக் கிட்டுதல். இனி இங்கு நாடமாட்டான் (உ.வ.) ம. நாடுக, து. நாடுனி.
நாடு-நாட்டம் = 1. சிறப்பு நோக்கு.
நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்ததற்குக்
கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும். (தொல். களவு. 5.)
2. ஆராய்ச்சி, நன்மதி நாட்டத் தென்மனார் (தொல்.எழுத்து. 483). 3. அழகு. இராசபுரம் என்னும் நாட்டமுடை நகரம் (சீவக. 1788). 4. விருப்பம். அவனுக்குப் படிப்பில் நாட்டமில்லை (உ.வ.). 5. நோக்கம். வேறொரு நாட்ட மின்றி (தாயு. பாயப்புலி. 12). 6. கண். வயவர் தோளு நாட்டமு மிடந்துடிக்கின்றன (கம்பரா. கரன்வதை. 71). ம. நாட்டம். (வே.க.)
நுல் (துளைத்தற் கருத்துவேர்)
நுல்-நொல்-நொலை = உட்டுளையுள்ள அப்பவகை.
நொலை-நொலையல் (பிங்.).
நொல்-நெல்-நெலி. நெலிதல் = கடைதல்.
நெலி-ஞெலி. ஞெலிதல் = 1. தீக்கடைதல். ஞெலிதீ விளக்கத்து (புறம். 247). 2. குடைதல் (அக. நி.). 3. உரசுதல். ஞெலிகழை (ஐங். 307).
ஞெலி = உரசித் தீப்பற்றும் மூங்கில். ஞெலிசொரி யொண் பொறி (அகம். 39).
நெல்-நெர்-நெரு-நெருப்பு = மூங்கில் ஒன்றோடொன்று உரசிப் பற்றும் தீ.
நொல்-நோல்-நோலி-நோனி-வ. யோனி. இச்சொற்கு யு (to unite) என்பதை வடவர் வேராகக் காட்டுவது பொருந்தாது.
நுல்-நல்-நல்லி = உட்டுளையுள்ள மூளை யெலும்பு.
நல்லி-இ.நல்லீ.
நல்-நால்-நாலி-நாலிகை = உட்டுளையுள்ள மூங்கில்.
நுல்-நுள்-நுளை-நுளையன் = 1. நீருட் புகுந்து அல்லது முழுகி மீன் பிடிப்பவன். 2. நெய்தல்நிலத்தான் (திவா.). ஒ.நோ:
ம. முக்குவன் = மீன் பிடிப்பவன், நெய்தல்நிலத்தான்.
நுளை = நுளையர் குலம்.
நுள்-நள் = 1. உள். 2. நடு. க. நள்.
நள்ளிடை = நடுவிடம். நள்ளிரவு = நடு இரவு.
ஒ.நோ. : அகடு = உள், நடு.
நள்-நண்-நடு = 1. உள்ளிடம். நடுவூருள் நச்சு மரம்பழுத்தற்று (குறள். 1008). 2. உள்ளுறைவோனான இறைவன். கெடுவில் கேள்வியுள் நடுவா குதலும் (பரிபா. 2 : 25). 3. வானத்தின் உச்சி. காலைக் கதிரோன் நடுவுற்றதொர் வெம்மை காட்டி (கம்பரா. நகர் நீங்கு. 123). 4. அகடு (மையம்). 5. இடுப்பு. நடுங்க நுடங்கும் நடுவு (திருக்கோ. 31). 6. இடைப்பட்டது. 7. நடுநிலை. நடுவாக நன்றிக்கட்டங்கியான் (குறள். 117). 8. நயன்மை (நீதி).
k., f., து. நடு, தெ. நடுமு.
நடு-நடுவு-நடுவண் = அகடு, இடை.
நடு-நாடு = 1. முல்லைக்கும் நெய்தற்கும் இடைப்பட்ட மருத நிலம். நாடிடை யிட்டும் காடிடை யிட்டும் (சிலப். 8 : 61, அரும்.).
2. மக்கள் வாழும் இடம். 3. தேசம். எ-டு : ஆங்கில நாடு. 4. தேசப் பகுதி. எ-டு : பாண்டிநாடு. 5. ஊர். எ-டு : கூறைநாடு. 6. சிற்றூர் (நாட்டுப்புறம்). 7. அரசியம். 8. உலகம். புலத்தலிற் புத்தேள் நாடுண்டோ (குறள். 1323). 9. இடம். ஈமநாட் டிடையி ராமல் (கம்பரா. இலங்கை தே. 45). 10. ஒரு பேரெண். (பிங்.).
k., bj., f., து. நாடு.
ஒ.நோ :
வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போருணர்த்திய கூவும்
கானத் தோர்நின் தெவ்வர் நீயே
புறஞ்சிறை மாக்கட் கறங்குறித் தகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்த
ராடுகளங் கடுக்கும் அகநாட் டையே (புறம். 28.)
அகம் = 1. உள். 2. உள்ளிடம், 3. மருதநிலம். ஆலைக் கரும்பி னகநா டணைந்தான் (சீவக. 1613).
நாடு - நாடன் - நாடான் - நாடார்.
நாடு - நாட்டான் - நாட்டார்.
நள் - நாள் - நாளம் = 1. உட்டுளை (சூடா.). கழுநீர் நாளத் தாளினா லொருத்தி யுண்டாள் (இராமநா. உண்டாட். 19).
2. உட்டுளையுள்ள தண்டு. கமல நாளத்திடை (கம்பரா. மிதிலைக். 75). 3. நரம்பு. நாளம் - வ. நால.
நாளம்-நாளி-நாழி = 1. உட்டுளைப் பொருள் (பிங்.). 2. ஒரு படி. நாழி நவைதீ ருலகெலாம் (கம்பரா. சரபங்க. 29). நாழி முகவாது நானாழி (மூதுரை, 19). 3. நாழிகை வட்டில். 4. நாழிகை வட்டிலால் அறியப்படும் நேர அளவு (24 நிமையம்) (பிங்.). 5. நெசவுக் குழல். 6. அம்பறாத் தூணி. ஆர்ததும்பு மயிலம்பு நிறைநாழி (பரிபா. 18 : 30). 7. நாழி வடிவான நாண்மீன் (பூரட்டாதி), (பிங்.).
k., க. நாழி.
நாழி - வ. நாடி.
கைந்நாழி = சிறுநாழி.
நாழி-நாழிகை = 1. நாழிகை வட்டில். 2. நாழிகை வட்டிலால் அறியப்படும் நேர அளவு (24 நிமையம்). உயிர்த்தில னொரு நாழிகை (கம்பரா. பிரமா. 200). 3. தெய்வப்படிமையிருக்கும் சிற்றறை. 4. நாடா. நெய்யு நுண்ணூல் நாழிகையி னிரம்பா நின்று சுழல்வாரே (சீவக. 3019).
ம. நாழிக க. நாளிகே (g).
நாழிகை - வ. நாடிகா.
உண்ணாழிகை (திருவுண்ணாழிகை) = கருவறை.
நாழி-நாடி = 1. அரத்தக் குழாய். 2. ஊதை பித்த கோழை காட்டும் தாது நரம்பு. மூளையெலும்புகள் நாடி நரம்புகள் (திருப்பு.918). 3. இடை, பிங்கலை, சுழிமுனை யென்னும் மூச்சுக்குழாய்கள்.
4. உட்டுளை யுள்ளது (அரு. நி.). 5. பூவின் தாள் (யாழ். அக.).
5. நாழிகை (24 நிமையம்). 7. யாழ் நரம்பு. நாடி - வ. நாடி.
நாடி-நாடா = 1. நெசவுக் குழல். தார் கிடக்கும் நாடாப் போல மறுகுவர் (சீவக. 3019, உரை). 2. ஆடைக் கரையில் வைத்துத் தைக்கும் பட்டி (ribbon). நாடா - உ. நாரா.
நாளம்-நாணல் = 1. உட்டுளையுள்ள தட்டைவகை, 2. கரும்பு வகை.
நுள்-நுழு-நுகு-நுங்கு. நுங்குதல் = 1. விழுங்குதல் (துளை போன்ற வாய்க்குளிட்டு உட்கொள்ளல்). 2. உட்கொள்ளல் மகரவாய் நுங்கிய சிகழிகை (கலித்.). 3. வயிறாரப் பகுகுதல். நூறுநூறு குடங்களு நுங்கினான். (கம்பரா. கும்ப. 60).
க. நுங்கு.
நுங்கு-நொங்கு. நொங்குதல் = விழுங்குதல். திங்களிருள் நொங்க (தேவா. 1157 : 3).
ம. நொங்ஙு.
நுகு-நுகர். நுகர்தல் = 1. உண்ணுதல். அடிசில் பிறர்நுகர்க (பு.வெ.10, முல்லைப். 8). 2. இன்புறுதல். நின்னணி நல நுகர்கென (குறிஞ்சிப். 181). 3. வினைப்பயன் துய்த்தல்.
நுகர்ச்சி = 1. உண்ணுகை. கவியமுதம் நுகர்ச்சி யுறுமோ (திவ். திருவாய். 8 : 10 : 5). 2. வினைப்பயன் துய்ப்பு. அருந்தவ மாற்றியார் நுகர்ச்சிபோல் (கலித். 30). 3. துய்ப்புணர்ச்சி. உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை (மணிமே. 30 : 189).
நுகு-நொகு-நொக்கு = வெடிப்பு (யாழ். அக.).
நுழு-நூழ்-நூழில் = 1. குழி. 2. குழியுள்ள செக்கு (அக.நி.). 3. கொன்று குவிக்கை. ஒள்வாள் வீசிய நூழிலும் (தொல். புறத். 17)
நூழிலர் = செக்கார், வாணியர்.
நூழிலாட்டு = செக்காட்டுவதுபோற் கொன்று குவிக்கை.
நுள்-நொள். நொள்ளுதல் = 1. மொள்ளுதல், முகத்தல். குடங்கையி னொண்டு கொள்ளவுங் கூடும் (சிலப். 10 : 85). 2. விழுங்குதல் (திவா.).
நொள்-நொள்கு. நொள்குதல் = மொள்ளுதல், முகத்தல்.
மொள்ளுதல் நீர்ப்பொருளையும், முகத்தல் கூலம் போன்ற பொருளையும், துளைத்தல் போன்றதுவே.
நொள்-நொள்ளல்= 1. குழிவு. 2. பார்வையற்றுக் கண் குழிந்த நிலை (W.).
நொள்-நொள்ளை = கண்குழிந்த குருடு. நொள்ளை நாகில (திருவிளை. பரிநரி. 14).
நொள்-நெள்-நெள்ளல் = பள்ளம், குழிவு.
நெள்ளல்-ஞெள்ளல் = 1. பள்ளம், பள்ளம் விழுந்த தெரு. கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் (புறம். 15). 2. குற்றம். ஞெள்ளுதல் = பள்ளமாதல்.
நொள்-நொடு-நொடி = வண்டிப் பாதையிலேற்பட்ட குழிப் பள்ளம். பாதை நொடியா யிருக்கிறது. (உ.வ.).
நொள்-நொண்டல் = நுகர்கை (திவா.)
நொள்-நொண்டு-நெண்டு. நெண்டுதல் = தோண்டுதல் (நாமதீப.737).
நொண்டு-நண்டு. நண்டுதல் = கிண்டுதல், கிளறுதல்.
நண்டல் = கிண்டிக் குழைத்த வுண்டி. நண்டல் கிண்டிப் படைக்கிறது என்பது உலக வழக்கு.
நண்டற் சோறு = கிண்டிச் சமைத்த பொங்கற் சோறு. நண்டல் பிண்டல் = உண்ணற் காகாவாறு கூழுங் கட்டியுமாகச் சமைத்த சோறு. சோற்றை நண்டல் பிண்டலாக்கி விட்டாள் (உ.வ.).
நண்டு = 1. வண்டலிலும் மணலிலும் கிண்டினாற்போற் கீறிச் செல்லும் நீருயிரி (crab). 2. நண்டு வடிவான கடகவோரை. நண்டு-ஞண்டு. (தொல். சொல். 452, உரை).
ம. நண்டு, தெ. எண்டிரி (எண்ட்ரி).
நெண்டு-ஞெண்டு. ஞெண்டுதல் = கிண்டுதல் (சூடா.).
ஞெண்டு = நண்டு. வேப்புநனை யன்ன நெடுங்கணீர் ஞெண்டு (அகம். 176).
நொள்- நோள்- நோண்டு. நோண்டுதல் = 1. தோண்டுதல். கண்ணை நோண்டிவிடுவேன். கிழங்கை நோண்டி யெடுத்து விட்டான் (உ.வ.) 2. கிளறுதல் (பிங்.) 3. முகத்தல் (திவா.) 4. குடைந்தெடுத்தல், 5. துருவி வினவுதல். நோண்டிக் கேட்கிறான் (உ.வ.) 6. கையிடுதல். அங்கே என்னத்தை நோண்டிக் கொண்டிருக்கின்றாய்? (உ.வ.) ம. நோண்டுக.
நோண்டு - நேண்டு - நேடு.
ஒ.நோ: தோண்டு - தேண்டு - தேடு.
நேடுதல் = 1. தேடுதல். கொண்டவ னிருப்ப மற்றோர்…. வேலி னானை நேடிய நெடுங்க ணாளும் (சீவக. 252). 2. பொரு ளீட்டுதல். 3. விரும்புதல் (யாழ். அக.) 4. எண்ணுதல். சூரபன்ம னிளவறன் முடிவு நேடி (கந்தபு. அசுரேந். 65). 5. இலக்காகக் கொள்ளுதல் (W.).
நேடு - நேட்டம் = ஈட்டிய பொருள் (நாஞ்.வ.). (வே.க.)
நுல் (ஒளிர்தற் கருத்துவேர்)
ஒளி நெருப்பின் பண்பாதலால், நெருப்பைக் குறிக்குஞ் சொற்களி னின்றே ஒளிர்தல் (விளங்குதல்) கருத்துச் சொற்கள் பெரும் பாலுந் தோன்றும்.
எ - டு : தீ = நெருப்பு. தீவம் (- Skt. dipa) = விளக்கு. தீ (-Skt. dhi) = அறிவு (அகவொளி).
எரிதல் = வேதல், விளங்குதல். ஒளி = நெருப்பு, விளக்கு, அறிவு, புகழ்.
காய்தல் = எரிதல், விளங்குதல்
தழலுதல் = எரிதல், விளங்குதல். தகுந்தகுமெனல் = எரிதல், ஒளிவீசுதல். தகதகவெனல் = விளங்குதல், திகழ்தல் = ஒளிர்தல்.
பொறி = அனல்துகள், ஒளி.
முளிதல் = எரிதல். மிளிர்தல் = ஒளிர்தல்.
நுல் - நெல்- நெலி- ஞெலி = உரசித் தீப்பற்றும் மூங்கில். நெல் - நெரு - நெருப்பு = உரசிப் பற்றும் தீ.
நெல் - நில் - நில. நிலத்தல் = ஒளிவீசுதல்.
நில - நிலத்தி = மின்மினி (சூடா).
நில. நிலா - நிலவிரி கானல்
நிலத்தி - நித்தி - நித்தில் = மின்மினி (நாமதீப. 253).
நித்தில் - நித்திலம் = ஒளிரும் முத்து.
உரைபெறு நித்திலத்து மாலை (சிலப்.3 :112 - 3)
நித்திலக் கோவை (முத்துமாலை) என்பது அகநானூற்றின் மூன்றாம் பகுதிப் பெயர்.
நில - நிலா = 1. திங்கள். துணிநிலா வணியினான் (திருவாச. 35 : 5). 2. நிலாவொளி. விசும்பி னகனிலாப் பாரிக்குந் திங்களும் (நாலடி. 151). 3. ஒளி. நிலா விரித்து முச்சக முற்றும் நிழல்செய் (திருநூற். 78). ம. நிலா. தெ. நெல.
நில - நிலவு. நிலவுதல் = ஒளிவிடுதல் (பிங்.).
நிலவு = நிலா. நிலவுப் பயன் கொள்ளு நெடுமணன் முற்றத்து
(நெடுநல். 95).
நில - நிழல் = 1. ஒளி. நிழல்கா னெடுங்கல் (சிலப். 5: 127). 2. படிவடிவம் (பிரதிபிம்பம்). நிழனோக்கித் தாங்கார் மகிழ்தூங்கி (சீவக. 2790). 3. சாயை. நாணிழற் போல (நாலடி. 166). 4. குளிர்ச்சி (சூடா.). 5. அருள். தண்ணிழல் வாழ்க்கை (பட்டினப். 204). 6. நயன்மை (நீதி.) (பிங்.) 7. பேய் (உ.வ.).
ம. நிழல், க. நெழல். தெ. நீட.
நிழலுதல் = 1. ஒளிவிடுதல் நெய்த்தலைக் கருங்குழனிழன்று (சீவக. 1101). 2. படிவடிவிடுதல் (பிரதிபலித்தல்) (W.). 3. சாயை வீழ்த் தல். வண்டுந் தேன்களு நிழன்று பாட (சீவக.1270). 4. காப்பா யமைதல். ஏரோர்க்கு நிழன்ற கோலினை (சிறுபாண். 233).
நிழற்றுதல் = 1. ஒளிவிடுதல். பசும்பொ னவிரிழை பையநிழற்ற (ஐங். 74). 2. சாயை வீழ்த்தல். கொல்களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும் (புறம்.9). 3. மணியடித்தல். நெடுநாவொண் மணி நிழற்றிய நடுநாள் (முல்லைப்.50).
நிழற்ற - நிழறு. நிழறுதல் = ஒளிவிடுதல். திண்சக்கர நிழறு தொல் படையாய் (திவ். திருவாய். 6:2:5).
நிழல் - நிழலி = 1. ஒளி. (திவா.). 2. நயன்மை (நீதி (பிங்.).
நிழல் - நீழல் = 1. ஒளி. 2. சாயை. 3. காப்பு. 4. காப்புடைய நாடு. பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர் (குறள். 1034)
நீழை = ஒளி. நீழை யாண்மலர் (அரிசமய. குலசே.5).
நிழல் - நிணல் = சாயை.
நிழல் - நிகர் = 1. ஒளி. நீர்வார் நிகர்மலர் (அகம். 11). 2. சாயை.
3. சமம். நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் (நாலடி.64). 4. சமமாய் நின்று செய்யும் போர்.
ஒ.நோ: சமம் = ஒப்பு, போர். சமம் - சமர்.
நிகர்தல் = ஒத்தல். மஞ்சை நிகருந் தியாக வள்ளலே (விறலி விடு. 902).
நிகர்த்தல் = 1. விளங்குதல். தஞ்சேணிகர் காவின் (திருக்கோ. 183). 2. ஒத்தல். கண்ணொடு நிகர்க்குங் கழிப்பூங் குவளை (தொல். பொருள். 290). 3. உறழ்தல், மாறுபடுதல். தன்னொடு நிகராவென்னொடு நிகரி (ஐங்.67).
நிகர்ப்பு = ஒப்பு, போர்.
நிழல் - நிறன் - நிறம் = 1. ஒளி. நிறப்பெரும் படைக்கலம் (கம்பரா. தைல. 30). 2. வண்ணம். நிறங்கொள் கண்டத்து நின்மலன் (தேவா. 370 : 4). 3. சாயம். 4. இயல்பு. வின்னிற வாணுதல் (திருக்கோ. 58). 5. இசை, இசைத்திறம். (ஈடு, 2 : 6 : 11). 6. ஆளத்தி வகை. நிறவாளத்தி நிறம்குலை யாமற் பாரணை யுடனிகழும் (சிலப். 3: 26, உரை). 7. புகழ். இவனோடு சம்பந்திக்கை தரமன்று நிறக்கேடாம் (ஈடு, 4: 9 : 3). 8. ஒளியுள்ள மார்பு, மார்பு. செற்றார் நிறம்பாய்ந்த கணை (கலித். 57). 9. நடுவிடம். கடலிற் றிரை நிறஞ் சேர் மத்தின் (திருமந். 2313). 10. உடம்பு. மெல்லியலை மல்லற் றன்னிற மொன்றி லிருத்திநின்றோன் (திருக்கோ. 58). 11. தோல். புலிநிறக் கவசம் (புறம். 13).
ம. நிறம்.
நெல் = பொன்போல் விளங்கும் தவசம் (கூலம்). சடைச் செந்நெல் பொன்விளைக்குந் தன்னாடு (நள. 68). பொன்விளைந்த களத்தூர் என்னுந் தொடர்களை நோக்குக. நெல்லிற்குச் சொல் என்னும் பெயர் தோன்றியதும் இக் கரணியம்பற்றியே.
சுல் - சுல்லி = அடுப்பு, மடைப்பள்ளி.
சுல் - சுள் - சுடு - சுடர். சுல் - சொல் - சொலி. சொலித்தல் = எரிதல், விளங்குதல். சொலி - வ. ஜ்வல்.
k., க. நெல்.
நெற்கஞ்சி, நெற்சோறு, நெற்பொரி என்னுங் கூட்டுச் சொற் களில், நெல் என்பது நெல்லரிசியைக் குறிக்கும்.
நெல் - நெள் - நெழு - நெகு - நெகிழ் - நெகிழி.
நெகிழி = நெருப்பு (அக. நி.).
நெகிழி - நெகிடி = நெருப்புக் குவை. மதயானை… நெகிடிக் கெனப் பெரிய கட்டை மிகவேந்தி (தாயு. மௌனகுரு. 7). தெ. நெகடி.
நெகிழி - ஞெகிழி = 1. தீக்கடை கோல். ஞெகிழி பொத்த (குறிஞ்சிப். 226). 2. கொள்ளிக்கட்டை, விடுபொறி ஞெகிழியிற் கொடிபட மின்னி (அகம். 108). 3. தீ (பீங்.).
நெகு - நகு. நகுதல் = 1. விளங்குதல், திகழ்தல், பொன்னக் கன்னசடை (தேவா. 644 : 1). 2. முகம் விளங்குமாறு சிரித்தல். நகுதற் பொருட்டன்று நட்டல் (குறள். 784). 3. முகம் விளங்குதற் கேற்ப அகம் மகிழ்தல். மெய்வேல் பறியா நகும் (குறள். 774). 4. பூ மகிழ்தல் போன்று மலர்தல். நக்க கண்போனெய்தல் (ஐங். 151). 5. சிரித்து அவமதித்தல். ஈகென் பவனை நகுவானும் (திடுகடு.74). க. நகு (g), தெ. நவ்வு.
நகு - நகல் - நக்கல் = 1. ஒளி (அரு. நி.). 2. சிரிப்பு (சூடா.). 3. இகழ்ச்சி, நகையாண்டித்தனம் (பரிகாசம்). அவன் நக்கலாய்ப் பேசுகிறான் (உ.வ.).
நகு - நகை = ஒளி. நகைதாழ்பு துயல்வரூஉம் (திருமுருகு. 86). 2. சிரிப்பு. நகைமுகங் கோட்டி நின்றாள் (சீவக. 1568). 3. மகிழ்ச்சி. இன்னகை யாயமோ டிருந்தோற் குறுகி (சிறுபாண். 220). 4.இன்பம். இன்னகை மேய (பதிற். 68 : 14). 5. பூவின் மலர்ச்சி. நகைத்தாரான் தான் விரும்பு நாடு (பு.வெ.9 : 17). 6. மலர். எரிநகையிடையிடு பிழைத்த நறுந்தார் (பரிபா. 13: 59). 7. நட்பு. பகைநகை நொதும லின்றி (விநாயகபு. நைமி. 25). 8. நயச் சொல் (திவா.). 9. விளையாட்டு. நகையேயும் வேண்டற்பாற் றன்று (குறள். 871). 10. நையாண்டி (பரிகாசம்). நகையினும் பொய்யா வாய்மை (பதிற்.70 : 12). 11. அவமதிப்பு. பெறுபவே… பலரா னகை. (நாலடி. 377). 12. பல்லிளிப்பு. 13. அணிகலம். 14. முத்து. அங்கதிர் மணிநகை (சீவக. 603). 15. முத்துமாலை. கோதை நகையொருத்தி (கலித். 92 : 33). 16. பல். நிரைமுத் தனைய நகையுங் காணாய் (மணிமே. 20 : 49). 17. நகைச்சுவை. நகையே அழுகை இளிவரல் மருட்கை தொல். மெய்ப். 3).
k., bj., து. நக (g), க. நக (g), நகெ (g).
நகு - நகார் = பல். மடவோர் நகாஅர் அன்ன நளிநீர் முத்தம் (சிறுபாண். 57.)
நகு - நங்கு = நையாண்டி. நங்கு தெறிப்பதற்கு நாடெங்கும் போதாது (ஆதியூரவதானி).
நங்குதல் = நையாண்டி செய்தல். நங்க வொழியினும் (பழமலை. 50). தெ. நங்கு.
நங்கு காட்டுதல், நங்கு வலித்தல் என்பன ஒக்க நடித்து நையாண்டி செய்தலைக் குறிக்கும் வழக்குச் சொற்கள்.
நகு - நகர் = 1. விளங்கித் தோன்றும் மாளிகை. பாழி யன்ன கடியுடை வியனகர். (அகம். 15). 2. வளமனை. கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியனகர் (புறம். 70). 3. அரண்மனை. நிதி துஞ்சு வியனகர் (சிலப். 27: 200). 4. சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபம். அணிநகர் முன்னி னானே (சீவக. 701). 5. இல்லத்தில் வாழும் மனைவி. தன்னகர் விழையக் கூடி (கலித். 8). 6. அரண்மனை யொத்த கோவில். முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே (புறம்.6.). 7. மாளிகையும் அரண்மனையும் மண்டப மும் கோயிலும் போன்ற கட்டடங்களாற் சிறந்து விளங்கும் ஊர். நெடுநகர் வினைபுனை நல்லில் (புறம். 23). தெ. நகரு.
நகர் - நகரி = சிறந்து விளங்கும் கட்டடங்களையுடைய ஊர்.
நகரி - வ. நகரீ. இ சினைமுதலீறு.
நகர் - நகரம் = 1. பெருமாளிகை. 2. பெரிய அரண்மனை. 3. பெருங்கோயில். மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும் (சிலப். 14 : 9). 4. வாழிடம். நகரமருள்புரிந்து நான்முகற்குப் பூமேல் (திவ். இயற். முதற். 33). 5. மாநகர், பேரூர் (சூடா.).
அம் பெருமைப் பொருட் பின்னொட்டு. இற்றைத் தமிழர் அதை அறியாது பொதுப் பொருளில் வழங்குகின்றனர்.
நகரம் - வ. நகர.
நகர் என்னும் மூலச் சொல்லும், அதன் நகு என்னும் மூலமும், வடமொழியில் இல்லை. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகர முதலியில், நகர் நகரி நகரம் ஆகிய மூவடிவுச் சொல்லும் வட சொல்லாகவே காட்டப்பட் டுள்ளன. நாம் யாதும் ஊரே யாவருங் கேளிர் என்னும் உயர்ந்த பண்பாட்டை யுடையவ ரேனும், நாட்டு வரலாறொத்த மொழி வரலாற்றைச் சிதைப்பதும், உலகில் முதன் முதல் நாகரிக விளக்கேற்றிய நம் முன்னோரைத் தகவிலாரெனக் காட்டுவதும், அவர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அரும்பாடுபட்டுத் தேடி வைத்த அருஞ்செல்வத்தைப் போற்றாது வாரி வாரியில் எறிவ தும், அறியாமையையோ, அடிமை மனப் பான்மையையோ, இறக்க இழிந்த தன்னலத்தையோ, படுகோழைத்தனத்தையோ, தமிழைப் பகைவர்க்கு வெளிப்படையாகக் காட்டிக் கொடுக்கும் நாணமில்லாச் செயலையோதான் காட்டும். பண்பாடு வேறு; காட்டிக்கொடுப்பு வேறு.
மக்களின் பழக்கவழக்கங்கள் முதன் முதல் நகர் அல்லது நகரத்திலேயே திருந்தின. அதனால், சிற்றூர் வாணனையோ நாகரிகமில்லாதவனையோ நாட்டுப்புறத்தான் என்று இழித்துக் கூறுவது இன்றும் வழக்கமாயிருக்கின்றது. வாழ்க்கைத் திருத்தம் அல்லது பண்பாடு நகரத்தில் தோன்றியதானாலேயே, நாகரிகம் என்னும் பெயர்த்தாயிற்று.
நகர் - நகரகம் - நகரிகம் - நாகரிகம்.
நகரிப் பழக்கம் = நகர்வாணரின் திருந்திய ஒழுக்கம்.
நகர்ப்புறத்தான் (நாகரிகன்) X நாட்டுப் புறத்தான் அல்லது பட்டிக்காட்டான் = திருந்தாத பழக்கவழக்கத்தான்.
ஒ.நோ: E. urban = living in a city or town, urban = polite, urbanity = polished manners.
L. civis = citizen, civil = polite, civilization = advanced stage in social development.
முதற்கண் நகரங்களில் வழங்கியதனாலேயே, இற்றை வடமொழி யெழுத்து நாகரியெனப்பட்டது. வடமொழி தேவமொழி யென்னும் ஏமாற்றினால், அது தேவநாகரியென வழங்கும்.
நுல் (நெகிழ்ச்சிக் கருத்துவேர்)
துளைக்கப்பட்ட பொருள்கள் உளுத்த மரம்போற் கட்டுவிட்டுப் போவதனாலும்; கையினாலும் கோலினாலும் எளிதாய்த் துளைக்கப்படும் அல்லது ஊடுருவப்படும் பொருள்களெல்லாம், நீருங் கூழும்போல் நெகிழ்ச்சிப் பொருள்களாகவேயிருப்ப தனாலும், துளைத்தற் கருத்தினின்று நெகிழ்ச்சி அல்லது தளர்ச்சிக் கருத்துத் தோன்றிற்று.
உளு = புழு. உளுத்தல் = புழுத் துளைத்தல்.
ஒ.நோ: துள் - தொள் - தொள - தொளர் - தளர்.
நுல் - நல்- நலி. நலிதல் = 1. மெலிதல். 2. சரிதல். 3. தோற்றல் (தோல்வியடைதல்). 4. அழிதல். நண்ணா வசுரர் நலியவே (திவ். திருவாய். 10:7:4).
நலி - நலிவு - நலிபு = மெலிந்த ககரமாகிய ஆய்தம். நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும் (தொல். செய். 221).
நல் - நால். நாலுதல் = சரிந்து அல்லது தளர்ந்து தொங்குதல். நான்ற முலைத் தலை நஞ்சுண்டு (திவ். இயற். 1: 18). 2. கழுத்திற் சுருக்கிட்டுத் தொங்கிச் சாதல். நான்றியான் சாவலன்றே (சீவக. 2513).
நால்வாய் = 1. தொங்கும் வாய். நால்வாய்க் கரி (திருக்கோ. 55).
2. தொங்கும் வாயுள்ள யானை.
நால் - நாலி = கோலுங் கொடுக்குமாய்த் தொங்குங் கந்தைத் துணி.
நுல் - நுள் - நொள் - நொள்கு. நொள்குதல் = 1. கருங்குதல். நூல் நொள்கிற்று (நன். 454. மயிலை). 2. இளைத்தல் (யாழ். அக.).
நொள்கு - ஞொள்கு. ஞொள்குதல் = 1. மெலிதல் (திவா.). 2. குறைவுபடுதல். புலங்கடை மடங்கத் தெறுதலின் ஞொள்கி (அகம். 31). 3. சோம்புதல். (திவா.) 4. அஞ்சுதல் (திவா. 5. குலைதல் (பிங்.). 6. அலைதல் (பிங்.).
நொள்கெனல் - அச்சக் குறிப்பு.
நொள் - நெள் - ஞெள். ஞெள்ளல் = சோர்வு.
நொள் - நொள. நொளநொளத்தல் = 1. குழைதல். 2. வழுவழுப் பாதல்.
நொள் - நொளு. நொளுநொளுத்தல் = குழைதல்.
நுள் - நள். நளுநளுத்தல் = குழைதல்.
நொள் - நொளில் = சேறு (பிங்.)
ஒ.நோ: தொள் - தொள்ளி = சேறு. தொள்ளி - தொளி = சேறு.
நொளில் - நொறில் = 1. நுடக்கம். நொறிலியற் புரவி யுதியர் கோமான் (தொல். சொல். 396, உரை). 2. ஒடுக்கம் (பிங்.). 3. சேறு. செருநில நொறிற்செந் நீரினுள் (சூளா. அரசி.274).
நொளு - நொளுப்பு = வேலை கழப்புகை.
நொள் - நொடு - நொடி. நொடித்தல் = 1. கட்டுக்குலைதல். சக்கரம் நொடிக்கும் (உ.வ.). 2. வணிகத்தில் இழப்படைதல். 3. செல்வநிலை தாழ்ந்து வறுமை யடைதல்.
நொடு - நொது. நொதுத்தல் = 1. தளர்தல். 2. அழிதல்.
நொது - நொந்து. நொந்துதல் = அழிதல். நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் (தேவா. 1218).
3. நொந்து - நந்து. நந்துதல் =1. கெடுதல். நாடற்கரிய நலத்தை நந்தாத் தேனை (திருவாச. 9 : 15). 2. மறைதல். இடையுறு திருவென விந்து நந்தினான் (கம்பரா. உண்டாட். 67). 3. சாதல். திருமைந்தன் நந்த றீர்ந்தது மாயுளைப் பெற்றதும் (பிரமோத். 21: 61). 4. அவிதல்.
நந்து = 1. மெல்லிய சதையுள்ள நீருயிரி. 2. அது இருக்கும் சங்கு.
நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே (தொல். மரபு. 64).
நந்து - நத்து - நத்தை = 1. மெல்லிய சதையுள்ள ஊமைச்சி. 2. அது இருக்கும் கூடு.
நத்து = சங்கு. நத்தொடு நள்ளி (பரிபா. 10)
நொது - நொதி = சேறு.
நந்து - நத்தம் = 1. சங்கு (சீவக. 547, உரை). 2. ஊமைச்சி.
நெள் - நெழு - நெகு. நெகுதல் = 1. கழலுதல். எனவளை நெகவிருந் தேனை (திவ். பெரியதி. 8 : 5 : 9). 2. மனமிரங்குதல். 3. காதலால் உருகுதல். என்புநெகப் பிரிந்தேன் (தொல். களவு.23). 4. கரைதல். 5. பொடியாதல். 6. கெடுதல். மாறு படமலைந் தாய்ப்படை நெக்கது (சீவக. 426).
நெகு - நெக்கு = நெகிழ்ச்சி.
நெக்கவிடுதல் = 1. பொருத்துவாய் விடுதல். 2. பிளத்தல்.
………………………………………………………………………………… - நெட்டிருப்புப்
பாருக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும் (நல்வழி, 83)
நெகு - நெக்கல் = 1. தளர்ந்தது. 2. அளிந்த பழம்.
நெகு - நெகிழ், நெகிழ்தல் = 1. பிணிப்புத் தளர்தல். கவவுக்கைநீ நெகிழ்ந்தமை போற்றி (அகம். 26). 2.நழுவுதல். எல்வளை நெகிழ்போ டும்மே (ஐங். 20). 3. நிலைகுலைதல். நாளினு நெகிழ் போடு நலனுட னிலையுமோ (கலித். 17). 4. பூமலர்தல். காவியுங் குவளையு நெகிழ்ந்து (சூளா. நாட். 5). 5. குழைதல் (சூடா). 6. இளகுதல். சேவடி நோக்கி விரும்பி யுண்ணெகிழ (கூர்மபு. பிரமவிஷ்ணு. 16). 7. மனமிரங்குதல். 8. மெலிதல். மென்றோள் நெகிழ விடல் (கலித். 86). 9. வெட்டிற்குப் பதமாதல். 10. விட்டு நீங்குதல்.
நெகு - நகு - நங்கு - நாங்கு. நாங்குதல் = 1. திடங்குன்றுதல். தாங்கி நாங்கிப் போக (உ.வ. யாழ்ப்.). 2. தளர்தல்
நாங்குளு - நாங்குழு - தளர்ந்து நீண்டு இயங்கும் புழு. நாங் குழுவை வள்ளுகிரா லெற்றாமல் (பணவிடு. 265).
நாங்குழு- நாங்கூழ். எறும்பிடை நாங்கூழெனப் புலனா லரிப் புண்டு (திருவாச. 6 : 25).
நால் - நால்கு - நாகு - நாக்கு = 1. வாய்க்குள் தொங்கும் உறுப்பு. 2. படகு வலிக்குந் துடுப்பின் பலகை. 3. தீக்கொழுந்து.
நாகு - நாவு.
நாவு - நா = 1. நாக்கு யாகாவா ராயினும் நாகாக்க (குறள். 127). 2. சொல். நம்பி நாவினு ளுலகமெல்லாம் நடக்கும் (சீவக. 316). 3. துலைநா. துலைநா வன்ன சமநிலை யுளப்பட (ஆத்.பேரா. பொதுப்பாயிரம்). 4. மணிநா. வாயிற் கடைமணி நடுநா நடுங்க (சிலப். 20 : 53). 5. தீக்கொழுந்து. எழுநா (பிங்.). 6. திறவுகோலின் நாக்கு. 7. இசைக்குழலின் ஊதுவாய்.
தெ. நாலுக, க. நாலகெ (g), து. நாளாயீ. ம. நாக்கு.
நொள் - நொய். ஒ.நோ : தொள் - தொய். நொய்ம்மை = 1. தளர்ச்சி. 2. உறுதியின்மை. 3. கனமின்மை. மெய்ம்மை சீர்மை நொய்ம்மை வடிவம் (மணிமே. 27 : 254). 4. மென்மை. 5. மனத்திடமின்மை. 6. மனவுருக்கம். 7. வறுமை. 8. சிறுமை. 9. இழிவு.
நொய்ய = 1. மென்மையான. அனிச்சப் போதி னதிகமு நொய்ய (கம்பரா. கோலங். 14). 2. வலியற்ற. நொய்யமதி. 3. புன்மையான. நொய்தி னொய்ய சொல் (கம்பரா. பாயி. 5). 4. வசையான. நொய்யசொற் பொறாதவன்.
நொய்யவன் = புல்லன் (அற்பன்). நொய்யவ ரென்பவர் வெய்யவ ராவர் (கொன்றை. 57).
நொய்து = 1. மெல்லியது. 2. கனமில்லாதது. விண்ணி னொய் தாய் (ஞானவர். வீதக. 76). நொய்தாந் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின் (நீதி வெண்பா. 8). 3. இழிவானது. நொய்தி னொய்ய சொல் (கம்பரா. பாயி.5). 4. விரைவு. ஆயிழை நொய்தினுரை (சீவக. 1767).
நொய் - நொசு. நொசு - நொச. நொசநொசத்தல் = சோறுங் கஞ்சியும் கட்டுவிட்டு நொந்து போதல்.
நொசநொச வெனல் = சோறு நொந்துபோன நிலையடைதல்.
நொய் - நொ. நொதல் = சோறு நொந்துபோதல்.
நொசு - நசு. நசுநசுத்தல் = 1. குழைதல். 2. தடுமாறுதல். 3. விடாது தூறுதல். நசுநசுத்த மழை (உ.வ.) 4. ஈரமாயிருத்தல்.
நசுநசெனல் = 1. கட்டு நெகிழ்தற் குறிப்பு. 2. மெதுவாயிருத்தற் குறிப்பு. 3. விடாது மழை தூறற் குறிப்பு. 4. ஈரமாயிருத்தற் குறிப்பு.
நொசு - நொசி. நொசிதல் = 1. நைதல். நொசிந்த துகில் (தொல். சொல். 330, உரை). 2. குறைவுறுதல் நொசிவிலாத பூசனை (விநாயகபு. 36 : 37).
நசு - நச்சு. நச்சுமழை = விடாத சிறு தூறல். நச்சு வாயன் = விடாது பேசும் அலப்புவாயன்.
நொய் - நை. ஒ.நோ: பொய் (உட்டுளை) - பை. நைதல் = 1. நசுங்குதல். 2. தளர்தல். இடைநை வதுகண்டு (திருக்கோ. 134). 3. வாடுதல். 4. மனம் வருந்துதல். நைந்து சாமவர்க்கே (திருநூற்.43). 5. இரங்குதல். நீநல் காமையின் நைவரச் சாஅய் (புறம். 146). 6. தன்வயமிழத்தல். அரிவை நைய (சீவக.492). 7. சுருங்குதல். நையாத வாயுளுஞ் செல்வமும் (அருட்பா. 5, பொது.2). 8. மாத்திரை குறைதல். வன்மைமே லுகர முறுவது நையும் (வீரசோ. சந்தி.2), 9. நிலைகெடுதல். 10.கெடுதல்.
நைய நறுங்கத் தட்டுதல் = மிக நொறுங்கச் சதைத்தல்.
ஒ.நோ: நெகவரைத்தல் = மாவாக அரைத்தல்.
நைச்சாந்து = மைப்பதச் சன்னக்காரை.
நையப்புடைத்தல் = உடம்பு தளர அடித்தல்.
நைபவர் = வறியவர், நிலைமை தாழ்ந்தவர். நைபவ ரெனினும் நொய்ய வுரையேல் (கொன்றை.56)
நைவு = 1. மிகப் பழுத்தது. 2. வாடினது.
நைவருதல் = இரங்குதல் (புறம். 146).
நை - நயி - நசி. ஒ.நோ: மொய் - மொயி - மொசி. நசிதல் =
1. நசுங்குதல். 2. சுருங்குதல். 3. நிலைமை கெடுதல். 4. அழிதல்.
நசி - வ. நச் (nas)
நசித்தல் = (செ.கு.வி.). 1. நிலைமை தாழ்தல். அந்தக் குடும்பம் நசிந்து கொண்டு வருகிறது (உ.வ.). 2. அழிதல். நசியா வுலகிற் பாவமும் நசிக்கும் (காஞ்சிப்பு. மணிக. 61). 3. சாதல், நசித்தவரை யெழுப்பியருள் (அருட்பா. 6, அருள்விளக்க.4).
(செ.குன்றாவி.). 1. அரைத்தல். 2. அழித்தல். ம. நசிக்க.
நசியல் = 1, நெரிந்தது. 2. துவள்வது. நசியலன் = கழப்புணி. நழுவி.
நசிவு = 1. நெரிவு, 2. பழி. 3. கேடு.
நசிவு காணுதல் = நைந்து சேதப்படுதல்.
நசி - நசுங்கு. நசுங்குதல் = 1. நைந்து போதல். 2. பழம் நசுங்கி விட்டது. (உ.வ.) 3. கசங்குதல். 4. நிலைகுலைதல்.
நசுங்கச் சப்பி = பிசினாறி.
நசுங்கு - நசுக்கு. நசுக்குதல் = 1. நசுங்கச் செய்தல். 2. சிரங்குக் கொப்புளத்தைத் தேய்த்துப் பிதுக்குதல். 3. மூட்டைப் பூச்சி பேன் முதலியவற்றை அழுத்தி அல்லது குத்திக் கொல்லுதல். 4. யானை உயிரிகளை மிதித்துக் கொல்லுதல். 5. எதிரிகளை அடக்கி யொடுக்குதல். 6. குடற்காற்றை அடக்கி வெளிவிடுதல்.
க. நசிக்கு.
நசுங்கல் = 1. நைந்த காயம். 2. மெலிந்தது. 3. சிறியது.
நசுங்கலான் = 1. உறுதியற்றவன், 2. சிறியது.
நசுங்கலாண்டி = உறுதியற்றவன்.
நசுக்கு = 1. நெரிவு. 2. சிறியது. தெ. நலுசு.
நசுக்குணி = 1. சிறியது. 2. கூழையன். நசுக்குணி - நசுகுணி.
நசுக்கான் = 1. சிறியது. 2. சிறுபையன். நசுக்கான் பையன். (உ.வ.).
நசுவல் = 1. ஊக்கமற்ற - வன் -வள் து. 2. மெலிந்த - வன்- வள் - து.
நை - நைஞ்சு - நஞ்சு. ஒ.நோ: பை - பைஞ்சு - பஞ்சு. மை - மைஞ்சு - மஞ்சு. பைம்மை = மென்மை. பைஞ்சு = மெல்லியது, நொய்யது. நஞ்சு = 1. உட்கொண்ட வுயிரிகளை நைவிக்கும் அல்லது கொல்லும் பொருள். பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் (குறள். 580). 2 தீயது. அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு, அவன் வாயிலிருந்து வருவதெல்லாம் நஞ்சு (உ.வ.). 3. நஞ்சுக்கொடி. குழந்தை பிறந்துவிட்டது; ஆனால், நஞ்சு இன்னும் விழவில்லை. (உ.வ.).
நஞ்சு - நஞ்சன் = தீயவன்.
நைந்தான் = மெலிந்தான். நைந்தான் - நஞ்சான்.
நஞ்சானுங் குஞ்சும் = மெலிந்த குழந்தை குட்டிகள்.
நைந்து = மனமிரங்கி. நைந்து - நஞ்சு.
ஒ.நோ: ஐந்து - அஞ்சு.
நஞ்சுறுதல் = மனமுருகுதல், உளங்கனிதல். நஞ்சுற்ற காம நனிநாகரிற் றுய்த்த வாறும் (சீவக.11). (வே.க.)
நுல் (நோதற் கருத்துச் சொற்கள்)
நெகிழ்ச்சிக் கருத்தில் தளர்ச்சிக் கருத்தும், தளர்ச்சிக் கருத்திற் கட்டுக்குலைவுக் கருத்தும், கட்டுக்குலைவுக் கருத்தில் வலுக் குறைவுக் கருத்தும், வலுக்குறைவுக் கருத்தில் வருந்தற் கருத்தும் பிறக்கும்.
வருந்தற் கருத்தில், நோயுறுதற் கருத்தும் துன்புறுதற் கருத்தும் தோன்றும்.
இவ்வெல்லாக் கருத்துகளினின்றும் அழிவுக் கருத்துக் கிளைக்கும்.
நுல்- நல்- நலி.
நலிதல் = 1. வருந்துதல், தேடி நலிந்தே கண்ணாற் காணாத காரணனை (சிவரக. நந்திகண.1).2. வருத்துதல். நடுங்கஞர் நலிய (பு.வெ.12, பெண்பாற். 15, கொளு). தெ. நலி.
நலித்தல் = வருத்துதல்.
நலிவு = 1. துன்பம். வையகத்து நலிவுகண்டு (பு.வெ.8 : 34, கொளு). 2. கேடு. நோற்று நலிவிலா வுலக மெய்தல் (சீவக. 2727).
நுல் - நுள் - நொள்.
நொள் - நொள்ளா - நொள்ளாப்பு = வருத்தம்.
நொள் - நொய் - (நய்) - நை.
நைதல் = மனம் வருத்துதல்.
நைகரம் = துன்பம். நைகர மொழிந்து (விநாயகபு. 57: 18)
நை = துன்பம், நைவருதல் = வருந்துதல். நைவாரா வாயமக டோள் (கலித். 103: 66).
நைவு = 1. வருந்துகை. 2. நோய். நாளு நைவகன்ற (தைலவ. தைல. பாயி. 1).
நைநையெனல் = குழந்தை விடாது அழுது தொந்தரவு செய்தல்.
நை - (நய்) - நசு - நசல் = நோய் (W.).
நசலாளி = நோயாளி (W.)
நசிறாண்டி = தொந்தரவு செய்வோன் (யாழ்ப்.).
நசிறாளி - நசிறாணி = தொந்தரவு செய்பவன் (யாழ்ப்.).
ஒ.நோ : களவாளி - களவாணி.
நசு - நசுவல் = தொந்தரவு செய்பவன் - வள்-து.
நசுநசுத்தல் = தொந்தரவு செய்தல்.
நசுநசெனல் = தொந்தரவு செய்தற் குறிப்பு.
நசு- நச்சு = 1. தொந்தரவு. நச்சுப் பிடித்தவன் (உ.வ.).2. அலப்பல்.
நச்சுதல் = 1. தொந்தரவு செய்தல். 2. அலப்புதல்.
நச்சுவேலை (நச்சுப் பிடித்த வேலை) = தொந்தரவு உண்டாக்கும் வேலை.
நச்சு-நச்சி = வீண்பேச்சுப் பேசித் தொந்தரவு செய்பவன்.
நச்சுநச்செனல் = தொந்தரவு செய்தற் குறிப்பு.
நச்சுப்பிச்சு = 1. தொந்தரவு. 2. ஓயாது அலப்புகை.
நொய் - (நொயி) - நொசி. நொசிதல் = வருந்துதல்.
நொசித்தல் = வருந்துதல். நொசித்த வெம்முலை (சீவக. 654).
நொசி - நொசிவு = வருத்தம் (சூடா.).
நொள் - நெள் (நெழு) - நெகு.
நெகுதல் = 1. வருந்துதல். இனிச்செயல் யாவதென வுள நெக்கார் (காஞ்சிப்பு. கயிலா. 30). 2. கெடுதல், மாறு படமலைந் தாய்ப்படை நெக்கது (சீவக. 426).
நொள் - நொது - நொந்து - நந்து - நந்தம்- நத்தம் = அழிந்து போன வூரிடம், பாலைநிலத்தூர்.
பகைவரால் அழிக்கப்பட்டுப் பாழடைந்த ஊரிருந்த இடங்கள், இன்றும் நத்தப்பாழ் என்றும் நத்தத்து மேடு என்றும் சொல்லப்படும்.
நொள் - நோள்- நோளை = நோய்நிலை, நோளையுடம்பு (நோளைச் சரீரம்) (W.).
நோள் - நோய் = 1. நோவு. 2. பிணி. நோயிகந்து நோக்கு விளங்க (மதுரைக். 13). 3. துன்பம். அதிர வருவதோர் நோய் (குறள். 429). 4. துயரம் (பிங்.). 5. அச்சம். நோயுடை நுடங்குசூர் (பரிபா. 5:4). 6. குற்றம். பகலென்னும் பண்பின்மை பாரிக்கு நோய் (குறள். 851).
ம. நோயி.
நோயாளி - பிணியாளி.
நோய்தல் = 1. நோயால் மெலிதல். 2. பயிர் நோயால் வாடுதல்.
நோய்த்தல் = 1. நோயால் வருந்துதல். 2. நோயால் மெலிதல். 3. பயிர் நோயால் வாடுதல். 4. நிலம் உரமற்றுப் போதல்.
நோய்த்தல் - நோய்ச்சல் = நோய்ப்படுகை.
நோய்த்தல் - நோய்ஞ்சல் = நோயால் மெலிதல், நோய்ஞ்சல்- நோஞ்சல்= மெலிவு.
நோய்ஞ்சல் - நோய்ஞ்சலன் = நோயாளி.
நோய்ந்தான் - நோய்ஞ்சான் - நோஞ்சான் = நோயால் மெலிந்தவன்.
நோய்ஞ்சி = நோயாளி. நோய்ஞ்சி - நோய்ஞ்சியன் = நோயாளி. நோய்ஞ்சி - நோஞ்சி.
நோய்முகன் = துன்பஞ் செய்யும் காரி (சனி). (தைலவ. தைல.).
நோய் - நோ. நோதல் = 1. நோவுண்டாதல், கண் நோகிறது (உ.வ.). 2. வருந்துதல். ஊரன்மீ தீப்பறக்க நொந்தேனும் யானே (நாலடி. 389). 3. துன்பப்படுதல். 4. வறுமைப்படுதல். நொந்தகுடி (உ.வ.). 5. துன்பத்தைச் சொல்லுதல். நோவற்க நொந்த தறியார்க்கு (குறள். 877). 6. சமைத்த வுண்டி பதன் கெடுதல். சோறு நொந்துபோய் விட்டது. (உ.வ.) க. நோ, ம. neh.(f.). தெ. நோகுலு (g). நோ- நோதலை = நோதல்.
நோதல் - நோசல் = நோவு (W.)
நோ - நோதிறம் = முல்லை பாலைத் திணைகட்குரிய துயரப் பண்வகை (பிங்.). பாண்வாய் வண்டு நோதிறம் பாட (சிலப். 4: 75). நோ= 1. வலி. 2. நோய் (W.). 3. துன்பம். நோநொந்து (குறள். 157). 4. வலுக்குறைவு. 5. சிதைவு.
நோ - நோக்காடு = 1. நோவு. 2. நோய். கொள்ளையா நோக்காடா? (உ.வ.). கண்ணோக் காடாம் (பணவிடு. 300). 3. மனநோவு (W.). 4. வறுமை (யாழ்ப்.).
நோ - நோப்பு - நோப்பாளம் = 1. வருத்தம். 2. சினம். உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணிக்கு நோப்பாளம் (பழ.).
நோ - நோவு = 1, வலி. 2. ஈன்வலி. ஈன்றக்கா னோவும் (நாலடி. 201). 3. நோய். 4. துன்பம் (திவா.) 5. இரக்கம். தாம் நோவுபடா நிற்பர் (ஈடு).
k., f., து. நோவு.
வறுமையும் நோய் போன்ற துன்பமாகக் கருதப்படுவதால், நோய்நொடி யென்றும் நோவுநொடி யென்றும் இணைத்துச் சொல்வது மரபு. நொடித்தல் = நிலைகெடுதல், வறுமைப்படுதல்.
நோவாளி = நோயாளி.
நோ- நொ. நொதல் = துன்புறுதல். நொக்கொற்றா (தொல். எழுத்து. 72, உரை). நொப்போ வௌவுரிஞ் (நன். 137).
நொ = 1. துன்பம். நொவ்வுற லெய்தி (கந்தபு. திருவவ.39).
2. நோய் (W.).
நொ- நொம்பு - நொம்பலம் = துன்பம். ம. நொம்பலம்.
நொ - நொவ்வு. நொவ்வுதல் = 1. நோதல். 2. துன்புறுதல்
நொவ்வு = மெலிவு.
நொவ்வல் = 1. நோவு. 2. துன்பம். மையற் பெண்டிர்க்கு நொவ்வலாக (அகம். 98)
குறிப்பு : காரிக்கோள் துன்பந் தருவது என்னும் கருத்தினால், அது நோய்முகன் என்னப்பட்டது. ஆயின், இடைக்காலத்தில் தமிழ்ப்பகைவர் காரி என்னும் தென்சொல்லை வழக்கு வீழ்த்திச் சனி என்னும் வடசொல்லைப் புகுத்தினதினால், சனியன் என்னும் சொல் வழங்கத் தலைப்பட்டது. தமிழர் அனைவரும், இனி நோய்முகன் என்னும் சொல்லையே சனியன் என்பதற்குத் தலைமாறாக வழங்குக.
நுல் (நீட்சிக் கருத்துவேர்)
நீட்சிக் கருத்து நெகிழ்ச்சிக் கருத்தின் வழிநிலைக் கருத்தே. நிற்றற் கருத்தும் நடத்தற் கருத்தும் நீட்சிக் கருத்தினின்று தோன்றும்.
நுல் - நெல் - நெள் - நெகு - நெகிழ் (நெகிள்) - நீள்.
நெகிள் (நெகிழ்) - நிகள் - நீள். நிம். நிகள் - நிகளம் = நீளம்
(உ.வ.).
எதுகை முகனை என்பதை எகனைமுகனை யென்பதுபோல், அகலம் நீளம் என்பதை அகலம் நிகளம் என்றும் பொதுமக்கள் வழங்கியிருக்கலாம்.
ஈயமும் மெழுகும் போல்வன உருகியும், களியும் களிமண்ணும் போல்வன நீர்கலந்தும், நெகிழும்போது நீளுதல் காண்க.
1. நீடல்
நீளுதல் = 1. நீளமாதல் 2. பெருமையுறுதல் நீள்கழற் கன்பு செய்வாம் (கந்தபு. கடவுள் வா. 2). 3. ஓடுதல் (திவா.).
ம. நீளுக, க. நீள்.
ஓடுதலாவது இயக்கத்தால் (செலவால்) விரைந்து நீளுதல். ஒ.நோ: படர்தல் = பரவுதல், செல்லுதல். கம்பியை நீட்டிவிட்டான் என்னும் உலக வழக்கையும் நோக்குக.
நீள் = 1. நீளம். 2. நெடுங்காலம் (கால நீட்சி). நீடூங்காய் (கலித். 131). 3. உயரம் (மேனோக்கிய நீட்சி). 4. ஆழம் (கீழ்நோக்கிய நீட்சி). நீணிலைக் கூவல் (கல்லா. 12). 5. ஒழுங்கு (நேர்வரிசை நீட்சி).
நீளம் = 1. நெடுந்தொலைவாக. 2. நெடுங்காலமாக. நீள நினைந் தடி யேனுமை நித்தலுங் கைதொழுதேன் (தேவா. 825 : 1).
நீள் - நீளக்க. (உ.வ.). 1. நெடிதாக. 2.நெடுந்தொலைவாக.
3. நெடுங்காலமாக.
நீள் - நீளம் = 1. நெடுமை. நீளம் பெறுங்கண்களே (திருக்கோ. 109). 2. தொலைவு (பிங்.). கையானீளமாப் புடைப்ப (சீவக. 2248). 3. காலத்தாழ்ப்பு.
நீளங்கடை = நாட்செல்லுகை (யாழ். அக.) ம. நீளம், க. நீள.
நீள் - நீளி. நீளித்தல் = 1. நீளுதல். 2. நெடுங்கால மிருத்தல்.
4. காலந்தாழ்த்தல்.
நீளி = 1. நெடியவன். 2. நெடியது.
நீள்- நீளை = காற்று (நீண்டு இயங்குவது) (பிங்).
நீள் - நீளல் - நீழல் = காற்று (திவா.).
நீள் - நீட்சி - நீட்சிமை = நீட்டம்.
நீள் - நீட்பு - நீட்பம் = நீளம்.
நீள் - நீண்டவன் = திருமால் (குறள் தோற்றரவில் வானளாவ வுயர்ந்தவன்). நீண்டவன் றுயின்ற சூழ லிதுவெனின் (கம்பரா. குகப். 41). நீண்டாயம் = நீளம் (யாழ். அக.)
நீள் - நீண்மை = பழைமை. நீண்மைக்க ணின்று வந்த நிதியெலாந் தருவல் (சீவக. 1119).
நீள் - நீண். நீணுதல் = நெடுந்தொலை செல்லுதல். தண்டாமரை யானு நீணுதல் செய்தொழிய நிமிர்ந்தான் (தேவா. 62:9).
நீள் - நீட்டு (பி.வி.). நீட்டுதல் = 1. நீளச்செய்தல். நாக்கை நீட்டு (உ.வ.). 2. பக்கவாட்டில் நீளக்காட்டுதல். கையை நீட்டு (உ.வ.). 3. கைநீட்டிக் கொடுத்தல். 4. பரிசிலளித்தல். பாடிய புலவர்க்குப் பரிசினீட்டின்று (பு.வெ. 3:16, கொளு). 5. காணிக்கை படைத்தல், தளிகை நீட்டினதெல்லாம் (திருவிருத். 33, ப.204). 6. நீண்ட பொருளைச் செருகுதல். குருதிவாள்… புண்ணு ணீட்டி (சீவக. 2293). 7. நீளப் பேசுதல். 8. நீள இசைத்தல். 9. காலந்தாழ்த்தல்.
நீட்டு - நீட்டல் = 1. நீளச்செய்தல். 2. குறிலை நெடிலாக இசைத்தல். நீட்டும்வழி நீட்டலும் (தொல். எச்ச.7). 3. நீட்டியளத்தல். முகத்த னீட்டல் (நன்.368). 4. தலைமயிரைச் சடையாக வளர்த்தல். மழித்தலு நீட்டலும் வேண்டா (குறள். 280). 5. பெருங்கொடை. (பிங்.).
நீட்டு - நீட்டம் = 1. நீட்டுகை. வெள்ளத் தனைய மலர் நீட்டம் (குறள். 595). 2. ஓசை நீட்சி. நீட்டம் வேண்டின்… கூட்டி யெழூஉதல் (தொல். எழுத்து.6). 3. காலந்தாழ்ப்பு. நிலைமையறிய நீட்ட மின்றி (பெருங். மகத. 23 : 51).
நீட்டு = 1. நீளவாட்டு. ஆவணம் நீட்டில் மடித்திருந்தது (உ.வ.).
2. நீட்டோலை. நீட்டோலை வாசியா நின்றான் (மூதுரை, 13).
3. தொலைவு. மதுரை நீட்டைந்து கூப்பிடு (திருவாலவா. 26 : 8). நெடு நீட்டு = பெருந்தொலைவு.
நீட்டு - நீட்டி. நீட்டித்தல் = 1. நீளச் செய்தல். கம்பியை நீட்டிக்க வேண்டும் (உ.வ.). 2.நீட்டிப் பேசுதல், பேச்சை நீட்டிக்கிறான் (உ.வ.). 3. காலந்தாழ்த்தல். தீம்பால் பெருகு மளவெல்லா நீட்டித்த காரணமென் (கலித். 83). 4. நெடுங்காலம் நிலைத்தல். இவ்வுடம்பு நீட்டித்து நிற்குமெனின் (நாலடி. 40).
நீள் - நீடு. நீடுதல் = 1. நீளுதல். 2. ஒலி நீளுதல். ஒற்றிசை நீடலும் (தொல். எழுத்து. 33). 3. பெருகுதல். நீடிய செல்வம் (W.). 4. மேம்படுதல். நிலைமை நீடுத றலைமையோ நன்றே (ஞானா. பாயி. 3). 5. காலந்தாழ்த்தல். நீடன்மின் வாரு மென்பவர் சொற்போன்றனவே (பரிபா. 14 : 9). 6. நீண்ட நேரம் அல்லது காலம் தங்குதல். அளிநீ டளகம் (திருக்கோ. 122). 7. நிலைத்தல்.
ம. நீடுக, க. நீடு, தெ. நெகெடு (g)
நீடு = 1. நெடுங்காலம். நீடுவாழ் கென்பாக் கறிந்து (குறள். 1312). 2. நிலைத்திருக்கை. நிலமிசை நீடுவாழ் வார் (குறள். 3).
நீடு - நீடி. நீடித்தல் = 1. நீளுதல். வாழ்நாள் நீடிக்கும் (உ.வ.).
2. நிலைநிற்றல்
நெள்- நெடு = 1. நீண்ட. வேனெடுங் கண்கள் (சீவக. 1951). 2. பெரிய புரவல னெடுங்கடை குறுகிய வென்னிலை (பு.வெ.9 : 2. கொளு). 3. பெருமை பெற்ற. நீங்கிய தாங்கு நெடுந்தெய்வந் தானென் (மணிமே. 10 : 93). 4. ஆழமான. நெடும்புனலுள் வெல்லும் முதலை (குறள். 495). 5. உயரமான. நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே (கம்பர் தனிப்பாடல்). 6. மிகுந்த. நெடுமிடல் சாய (பதிற். 32 : 10). 7. நீண்டகால நெடும்பகை (உ.வ.). 8. காலந்தாழ்க்கும். நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் (குறள். 605). 9. புகழ்ச்சியான. மாராயம் பெற்ற நெடுமொழியானும் (தொல். புறத்.8).
நெடுமை = 1. நீளம். குறுமையு நெடுமையு மளவிற் கோடலின் (தொல். மொழி. 17). 2. உயரம். நெடுமையா லுலகேழு மளந்தாய் (திவ். பெரியாழ். 5 : 1 : 4).
நெடு - நெடுமன் = 1. நீண்டது. 2. பாம்பு (யாழ். அக.)
நெடு - நெடுவல் = நெடிய ஆள் (யாழ். அக.).
நெடுமி = 1. நெடியவள் (யாழ்ப்.). 2. ஓங்கி யுயர்ந்த மரம் (யாழ்ப்).
நெடு - நெடுகு. நெடுகுதல் = 1. நீளுதல். 2. ஓங்கி வளர்தல். 3. நீடித்தல். 4. கடந்து போதல். 5. சாதல் (W.).
நெடுகு - நெடுக (வி.எ.) = 1. நீளமாக. 2. நேராகத் தொடர்ந்து. நெடுகப்போ (உ.வ.). 3. முழுத் தொலைவும். வழி நெடுக மழை பெய்தது (உ.வ.).
நெடுக - நெடுகல் - நெடுகலும் = காலம் முழுதும். நெடுகலும் களவாடியே வந்திருக்கின்றான். (உ.வ.).
நெடுகு - நெடுக்கு = 1. நீட்சி. 2. நீளவாட்டு. நெடுக்குச்சுவர் (உ.வ.).
நெடுக்கு - நெடுக்கம்= நெடுமை. ம. நெடுக்கம்.
நெடுக்கு - நெடுங்கு = நீட்சி. நெடு - நெடுப்பு - நெடுப்பம் = நீட்சி (W.)
ம. நெடுப்பு, தெ. நிடுப்பு.
நெடுந்தகை = 1. பெரிய மேம்பாடு (பு.வெ. 46). 2. பெரிய மேம்பாட்டாளன் (பு.வெ. 27). 3. பெரிய நிலையையுடையவன் (பு. வெ. 79, கொளு). 4. அளத்தற்கரிய தன்மையை யுடையவன் (பு.வெ.191)
நெடுநெடுத்தல் = மிக நீண்டிருத்தல் (யாழ். அக.).
நெடு நெடுகுதல் = மிக நீண்டிருத்தல் (யாழ்ப்.).
நெடுநெடெனல் = நெடு வளர்ச்சிக் குறிப்பு.
நெடு - நெடி. நெடித்தல் = 1. நீட்டித்தல். 2. காலந்தாழ்த்தல். நெடியா தளிமின் (சிலப். 16: 21).
நெடி - நெடிப்பு = நெடுநேரம். நெடிப்புறச்சானமுற்றிருந்து (சேதுபு. பராவசு. 37).
நெடிது = காலந்தாழ்ந்து. நெடிது வந்தன்றா னெடுந்தகை தேரே (புறம். 296).
நெடியோன் = 1. நெட்டையன். 2. குறள் தோற்றரவில் நெடிதாக வளர்ந்த திருமால். செங்க ணெடியோன் நின்ற வண்ணமும் (சிலப். 11:51). 3. பெரியோன். முந்நீர் விழவி னெடியோன் (புறம்.9). நெடியன் - க. நிடியன்.
நெடு - நெடில் = 1. நீளம் (தி.வா.). 2. நீளமானது. 3. நெட்டெழுத்து. குறிலே நெடிலே குறிலிணை குறினெடில் (தொல். செய். 3). 4. பதினைந்து முதல் பதினேழெழுத்து வரை கொண்ட கட்டளை நெடிலடி.
மூவைந் தெழுத்தே நெடிலடிக் களவே
ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப. (தொல். செய்.36)
5. ஐஞ்சீரடி, அளவடி நெடிலடி நாற்சீரைஞ்சீர் (யாப்பருங். 24). 6. மூங்கில். நெடில் படுத்த வெங்கானம் (வில்லி பா.வேத். 10)
நெடு - நெட்டு = 1. நெடுமை. 2. நெடுந்தொலைவு. நெட்டிலே யலையாமல் (தாயு. மலைவளர். 2). 3. ஓரிடத்திற்குப் போய்த் திரும்பும் தடவை (W.). 4. உப்பு மேடை (C.G.). 5. செருக்கு. நெட்டது செய்ய லாகாது காணும் (இராமநா. உயுத். 23). 6. குலை (W.). 7. ஒட்டாரம். ஒரு நெட்டிற்கு நிற்கிறான் (உ.வ.). 8. காம்பு (யாழ்ப்.).
நெட்டு - நெட்டம் = 1. நெடுமை. 2. செங்குத்து.
நெட்டு - நெட்டங்கம் = 1. செருக்கு. அவனை நெட்டங்க முடைக்கிறான் (உ.வ.). 2. பழித்துரை. பொட்டான தேவர்களும் நெட்டங்கம் படிப்பாரே (இராமநா. உயுத். 82).
நெட்டு - நெட்டாங்கு = 1. நீளவாட்டு. 2. செருக்கு. 3. பழித்துக் காட்டுகை.
நெட்டு - நெட்டில் = மூங்கில் (மலை).
நெடு - நெட்டை = 1. நெடுமை. நெட்டைக் குயவற்கு (திருப்பு. 1038). 2. ஒருவகைப் படைக்கலம். (பதிற். 42: 3, உரை). 3. முழு வெலும்புக்கூடு (சது.).
க. நெட்டனெ, தெ. நிட்ர.
நெட்டோலை = திருமுகம். அமணர் தங்கள்பாற் செல்ல விட்டனன் கட்டி நெட்டோலை (திருவாலவா. 26 : 2).
நெட்ட நெடுமை = மிகு நீளம். அட்டம் வளராது நெட்ட நெடுமை கொண்டன (தக்கயாகப். 406, உரை).
நெடு - நடு. நடுதல் = 1. மேனோக்கிய நீளவாட்டில் ஊன்றுதல். நடவந்த வுழவரிது (தேவா. 133 : 8). 2. அழுந்தவைத்தல். திருவடியென் றலைமே னட்டமையால் (திருவாச. 40 : 8).
3. நிலைநிறுத்துதல்
k..,f., நடு, து. நட்பினி, தெ. நாட்டு.
நடு - நடவு = 1. நாற்றைப் பிடுங்கி நடுகை. பேர்த்து நடவு செய்குநரும் (திருவிளை. நாட்டுப். 20). 2. நட்ட பயிர். தண்ணீரில்லாமல் நடவு காய்கிறது. (உ.வ.) 3. நடவு கணக்கு (R.T.)
நடு - நட்டு. நட்டுதல் = கல் கம்பு தூண் முதலியவற்றை ஊன்றுதல். நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பஞ் சாத்தியே (சிவவாக்கியர் பாடல்.)
இச்சொல் சென்னைப் ப.க.க.த. அகரமுதலியில் இல்லை.
நட்டு - நாட்டு. நாட்டுதல் = 1. நிறுவுதல். கற்பசு நாட்டி (திருவாச. 9 : 3). 2. நிலை நிறுத்துதல். சிலப்பதிகார மென்னும் பெயரால் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் (சிலப். பதி. 60). 3. நீடு வாழ வைத்தல். 4. படைத்தல். மண்ணாட்டுநர் காக்குநர் வீட்டுநர் வந்த போதும் (கம்பரா. நகர்நீ. 122). 5. எழுதுதல். இவன் நம்முடையான் என்று அங்கே நாட்டு என்று (ஈடு, 4 : 5 : 2).
கை நாட்டுதல் = 1. கையெழுத்திடுதல். 2. தற்குறி கீறுதல்.
நெட்டுக்குத்து - நட்டுக்குத்து.
நெட்டு - நட்டு = உப்புக் கொட்டி வைக்கும் மேடை (C.G.).
தெ. நட்டு.
நீள் - நீர் = நீண்டு செல்லும் புனல். ம. நீர், நீரு, க. நீர். தெ. நீலு.
நீர் - நீரம் = புனல் (பிங்.). நீரம் - வ. நீர.
நீர் - ஈர் = ஈரம். ஈர்நறுங் கமழ்கடாஅத்து (கலித். 21). 2. பசுமை. இருவெதி ரீர்ங்கழை (மலைபடு. 207). 3. நெய்ப்பு. ஈர்பெய்யுந் தளிரொடு (கலித்.32). 4. இனிமை. ஈர்ங்கொடிக்கே (திருக்கோ. 28). 5. கரும்பு (மலை.).
நீரம் - ஈரம் = 1. நீர்ப்பற்று. ஈரம் புலராக் கரத்தோருக்கு (வில்லி பா. திரௌபதி.97). 2.குளிர்ச்சி (சூடா.). 3. பசுமை. 4. அருள். மலைநாட னீரத்துள் (கலித். 41). 5. நயனுடைமை. எதிர்பெய்து மறுத்த வீரத்து மருங்கினும் (தொல். கற்பு. 6). 6. அன்பு. ஈரமில்லா நெஞ்சத்தார்க்கு (மூதுரை, 2).
k., ஈரம், க. ஈர, தெ. ஈமிரி.
நீர் = 1. புனல். நிலந்தீ நீர்வளி (தொல். மரபு. 90). 2. சாறு. கரும்பினை… யிடித்து நீர் கொள்ளினும் (நாலடி. 156). 3. சிறுநீர். இவ்வெல்லையி னீர்பெய்து யான்வரு காறும் (பிரமோத். 2 : 50). 4. கடல். நீரொலித் தன்ன (மதுரைக். 369). 5. ஈரம் (W.). 6. குளிர்ந்த தன்மை. 7. தன்மை. அன்ன நீரார்க்கே யுள (குறள். 527).
8. நீர்ப்பொருள்.
நீர் - நீர்மை = 1. நீரின் தன்மை (குறள். 195, உரை). 2. சிறந்த தன்மை. நீர்மை யுடையார் சொலின் (குறள். 195). 3. தன்மை. நெடுங் கடலுந் தன்னீர்மை குன்றும் (குறள். 17). 4. அழகு. மெய்ந்நீர்மை தேற்றாயே (திவ். திருவாய். 2 : 1 : 6) 5. நிலைமை. என்னீர்மை கண்டிரங்கி (திவ். திருவாய். 1 : 4 : 4)
நீர்நிறம் = நீல்நிறம். கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
(சிலப். 1 : 116).
நீர் - நீல் = 1. நீலம். நீனிற மஞ்ஞையும் (சிலப். 12 : 34). 2. கருமை (சூடா.). 3. கருங்குவளை. நீலித ழுண்கண்ணாய் (கலித். 33 : 28). 4. அவுரி.
நீல் - நீலம் = 1. நீலநிறம் (திவா.). நீலத் திரைக்கடலோரத்திலே (பாரதியார் பாடல்). 2. நீலச்சாயம். 3. தொண் (நவ) மணிகளுள் ஒன்று (பிங்.). (திருவாலவா. 25 : 18). 4. கருங்குவளை (திவா.). நீலமொடு நெய்த னிகர்க்குந் தண்டுறை யூரன் (ஐங். 2).
5. நீலமலை (பிங்.). 6. நீல ஆடை. பூங்கரை நீலந் தழீஇ (கலித். 115). 7. கருமை (திவா). செங்கை நீலக் குஞ்சி நீங்காதாகலின் (மணிமே. 22 : 154) 8. கண்ணிலிடும் மை. நீலமிட்டகண் மடவியர் மயக்கால் (அருட்பா, 2, கருணைபெறாதிரங். 7). 9. இருள் (திவா.). 10. துரிசு (மூ. அக.). 11. நஞ்சு. நீறேறு மேனியார் நீலமுண்டார் (தேவா. 226 : 9).
நீலம் - வ. நீல.
நீலம் - நீலன் = 1. காரி (சனி) (திவா.). 2. கொடியவன். நிவர்த்தியவை வேண்டு மிந்த நீலனுக்கே (தாயு. பன்மாலை. 6). 3. ஒருவகைச் சம்பா. 4. ஒருவகை மாங்கனி. 6. ஒருவகைக் குதிரை.
நீலா = அவுரி (சங். அக.)
நீலி = 1. காளி (பிங்.). 2. மலைமகள் (பிங்.). நீலி யோடுனை நாடொறு மருச்சித்து (சிவப். பிரபந். சோண. 55). 3. கொடியவள். 4. பழையனூர் நீலி. மாறுகொடு பழையனூர் நீலி செய்த வஞ்சனையால் (சேக். பு. 15). 5. நீலப் பூவகை. 6. அவுரி. 7. கருநொச்சி. 8. துரிசு.
நீலர் = அரக்கர் (நாமதீப. 73).
2. நிற்றல்
நீள் - நிள் - நில்.
ஒ.நோ: நெருநாள் - நெருநல் - நெருநற்று - நேற்று.
நெருநல் - நென்னல்- நென்னற்று - நென்னேற்று.
நிற்றல் = 1. உடம்பு முழுதும் நெடிதாக நிமிர்ந்திருத்தல். நின்றா னிருந்தான் கிடந்தான் (நாலடி.29). 2. மேற் செல்லாதிருத்தல். நில்லடா (கம்பரா. நாகபாச.73). 3. ஒழுக்கத்தில் உறுதியா யிருத்தல். வீடுபெற நில் (ஆத்திசூடி). 4. நிலைத்திருத்தல். என்வலத்தில் மாறிலாய் நிற்க (பெரியபு. கண்ணப்ப. 185). 5. இடங் கொண்டிருத்தல். குற்றியலிகர நிற்றல் வேண்டும் (தொல். எழுத்து. 34). 6. வேலை யொழிதல். வேலை நின்றுவிட்டது (உ.வ.). 7. அடங்கி யமைதல். சாயவென் கிளவிபோற் செவ்வழியாழி சைநிற்ப (கலித். 143 : 38). 8. எஞ்சியிருத்தல். நின்றதிற் பதினை யாண்டு (திவ். திருமாலை. 3). 9. காலந்தாழ்த்தல். அரசன் அன்று கேட்கும், தெய்வம் நின்று கேட்கும் (பழ.). 10. நீடித்தல்
ம. நில்க, க. நில்.
நில் (ஏவல் வினை) = 1. பொறுத்து நிற்றல். நில், வருகிறேன் (உ.வ.). 2. வினைசெய்யாது விடுதல். நில்லு கண்ணப்ப (பெரியபு. ஆறுமுக. உரைநடை. ப. 97). கண்ணப்ப நிற்க (பெரியபு. கண்ணப்ப. 183).
நில் - நிலம் = 1. நீர்போல் நீண்டோடாது ஒரேயிடத்தில் நிற்கும் பூதவகை. நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும் (தொல். மரபு. 90). 2. நிலத்தின் புறணி. நிலந்தினக் கிடந்தன நிதி (சீவக. 1471). 3. மண். நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் (குறள். 452). 4. நன்செய் அல்லது புன்செய். செல்லான் கிழவ னிருப்பின் நிலம்புலந்து (குறள். 1039). 5. மேன்மாடம் அல்லது மேல்தளம். பல நிலமாக அகத்தை யெடுக்கும் (ஈடு, 4 :9:3). 6. நீரும் நிலமுஞ் சேர்ந்த ஞாலம். நிலம்பெயரினு நின்சொற் பெயரல் (புறம். 3.). 7. நிலத்தி லுள்ளார். நிலம் வீசும்… குன்றனைய தோள் (சீவக. 287). 8. நில மகள். 9. நாடு. செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி (தொல். எச்ச. 2). 10. நிலத்துண்டு. நிலந்தரு திருவிற் பாண்டிய னவையத்து (தொல். சிறப்புப் பா.). 11. யாப்பின் நிலைக்களம்.
பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொலொ டவ்வேழ் நிலத்தும் தொல். செய். 78
12. செய்யுளடி யெழுத்து. மெய்வகை யமைந்த பதினேழ் நிலத்தும் (தொல். செய். 49). 13. எழுத்தசை சீரென்னும் இசைப் பாட்டிடம். நிலங்கலங் கண்ட நிகழக் காட்டும் (மணிமே. 28 : 42). 14. இடம். நிலப்பெயர் (தொல். பெயர். 11). 15. வரிசை. கற்றுணர்ந் தோரைத் தலைநிலத்து வைக்கப்படும். (நாலடி.133). 16. புலனம் (விடயம்). அவதார ரகசியம் ஒருவர்க்கும் அறிய நிலமல்ல (ஈடு, 1:3:11).
ம. நிலம், க. நெல, தெ. நேல.
நில் - நில - நிலவு. நிலவுதல் = 1. நிலைத்திருத்தல். யாரு நிலவார் நிலமிசை மேல் (நாலடி. 22). 2. தங்குதல். இறுதியு மிடையும்…. நிலவுதல் (தொல். வேற். மயங். 20). 3. வழங்குதல். நிலவு மரபினை யுடையது (W.).
நில் - நிலை = 1. நிற்கை. பணைநிலை முனைஇ (புறம். 23).
2. உறுதி. நீக்கமு நிலையும் (திருவாச. 3 : 9). 3. நிலைமை. நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானும் (நாலடி. 248). 4. தன்மை. திருந்துநிலை யாரத்து (பெரும்பாண். 46). 5. தங்குமிடம். நெடுந்தேர் நிலைபுகுக (பு.வெ. 6 : 2). 6. இடம். நின்னிலைத் தோன்றும் (பரிபா. 2: 27). 7. கதவுநிலை. ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை (நெடுநல். 86). 8. மாடியடுக்கு. எழுநிலை மாடங்கால் சாய்ந்துக்க (நறுந். 54). 9. மரபுவழி யுரிமை. தன் பாட்டன் நிலையாய் வருகிற காணி (S.I.I.II,310). வில்மறவன் நிற்கும் வகை (மடக்கு, மண்டலம், முன்வலம், பின்வலம்). 11. ஓராள் நிற்கக் கூடிய நீராழம். நீர்நிலை காட்டுங் காலத்து (பெரும்பாண். 273). 12. ஒழுக்கநெறி, நிலையிற் றிரியா தடங்கியான் றோற்றம் (குறள். 124). 13. வாழ்க்கை நிலை. பிரமசரிய முதலிய நிலைகளினின்று (குறள். பரிமே. உரைப்பா.). 14. குலம். காணிகைக் கொண்ட மறுநிலை மைந்தனை (கல்லா. 45 : 20). 15. நிலைத்த தொழில். 16. ஒட்டாரம். 17. அமையம். 18. வளர்ச்சிப் படி (stage).
ம. நில. க. நெலெ. தெ. நெலவு.
நிலை - நிலையம் = 1. தங்குமிடம். 2. உறைவிடம். நியாயமத் தனைக்குமோர் நிலைய மாயினான் (கம்பரா. கிளை. 55). 3. கோயில். நல்லூரகத்தே திண்ணிலையங் கொண்டு நின்றான் (தேவா. 414 : 5). 4.தொடர்வண்டி நிற்குமிடம்.
வடமொழியாளர் நிலையம் என்னும் தென்சொல்லை நி+லயம் என்று பகுத்து, ஓரிடத்தொடு ஒன்றிப் போதல் என்று பொருள் கூறி, வடசொல் லாகக் காட்டுவர். அம்முறையையே பின்பற்றிச் சென்னைப் ப.க.க.த. அகரமுதலியும் நிலயம் என்னும் தவற்று வடிவையே மேற்கொண்டுள்ளது.
நிலைதல் = நிற்றல், உம்மை நிலையு மிறுதி யான (தொல். உருபியல், 7).
நிலைத்தல் = 1. நிற்றல், 2. உறுதிப்படுதல். 3. நீடித்தல். 4. மாறாதிருத்தல். 5. என்று மிருத்தல். 6. நீர்மட்டம் ஆளள விருத்தல். தண்ணீர் ஆளுக்கு நிலைக்குமா? (உ.வ.).
நிலைப்பு = 1. மாறாதிருக்கை. 2. என்று மிருக்கை.
நிலைமை = 1. படித்திறம். பண்பு மேம்படு நிலைமையார் (பெரியபு. திருநீலநக். 23). 2. இயல்பு. வலியி னிலைமையான் வல்லுருவம் (குறள். 273). 3. நிற்குநிலை. 4. உறுதி நிலையி னெஞ்சத்தான் (நாலடி. 87). 5. வாழ்வு நிலை. 6. உடல் நிலை. 7. உளநிலை.
நிலையுதல் = நிலை பெறுகை. தோற்ற முடையன யாவும் நிலையுத லிலவாந்தன்மை (குறள். அதி.34, உரைத் தோற்றுவாய்).
நிலை-நினை. நினைத்தல் = ஒன்றை மனத்தில் நிலைக்கச் செய்தல்.
பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினு மலைக்கவைதா மென்செய்யு
நினையுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே (கலித். 9.)
என்னும் 9ஆம் கலித்தாழிசை யீற்றடி முதற்சீர், நிலையுங்கால் என்றும் பாட வேறுபாடு கொண்டிருந்திருக்கலாம்.
நில்-நிற்பு = நிற்றல்.
நிற்பு = நிற்பாட்டு. நிற்பாட்டுதல் = 1. நிறுத்திவைத்தல்.
நில்-நிற்றம். ஒ.நோ : வெல்-வெற்றம், கொல்-கொற்றம்.
நிற்றம் = நிலைப்பு. நிற்றம்-நிற்றல்.
நிற்றலும் = நிலையாக, என்றும், எந்நாளும், குணபத் திரன்றாள் நிற்றலும் வணங்கி (சூடா. 7 : 76).
நிற்றம்-நிச்சம். ஒ.நோ : முறம்-முற்றில்-முச்சில்.
நிச்சம் = என்றும், எப்போதும். நிச்சமும் பெண்பாற்குரிய வென்ப (தொல்.களவு.8). பிரா. நிச்சம்.
நிற்றல்-நிச்சல் = எப்போதும், எந்நாளும். நிச்ச லேத்து நெல்வாயி லார்தொழ (தேவா. 21 : 3).
க. நிச்சல், தெ. நிச்சலு.
நிச்சல்-நிச்சலும் = எப்போதும், எந்நாளும். நிச்சலும் விண்ணப்பஞ் செய்ய (திவ். திருவாய். 1 : 9 : 11).
க. நிச்சலும்.
நிச்சம்-நித்தம். ஒ.நோ : நச்சு - நத்து.
நித்தம் = 1. என்றும் (கு.வி.எ.). நித்த மணாளர் நிரம்ப வழகியர் (திருவாச. 17 : 3). 2. என்றுமுள்ள நிலை (பெ.). நேரினித்தமு மொட்டின னாகுமே (மேருமந். 652).
நித்தமணாளர் என்பது குறிப்புப் பெயரெச்சத் தொடருமாம்.
நித்தம் - நித்த. ஒ.நோ : பித்தம்-பித்த.
நித்த = என்றுமுள்ள.
நித்தம் - வ.நித்ய.
நித்தக்கட்டளை, நித்தக்கத்தரி, நித்தக்கருமம், நித்தக்காய்ச்சல், நித்தப்படிகாரன் என்பன தூய தென்சொற்றொடர்களே.
நிச்சல்-நித்தல் = எப்போதும், எந்நாளும். நித்தல் பழி தூற்றப்பட்டிருந்தது (இறை. கள. 1 : 14).
நித்தல் விழா = நாள்தொறும் நிகழும் விழா. நித்தல் விழாவணி நிகழ்வித் தோனே (சிலப். உரைபெறுகட். 4).
நித்தலழிவு = நாட்படிச் செலவு. (S.I.I.III.298).
நிச்சலும்-நித்தலும் = எந்நாளும். உமை நித்தலுங் கைதொழுவேன் (தேவா. 825). உம்மை முற்றும்மை.
நித்தம்-நித்தன் = 1. கடவுள். 2. சிவபிரான் (பிங்.). 3. அருகன் (பிங்.).
ஒ.நோ : பித்தம் - பித்தன்.
நிற்றம், நிச்சம், நித்தம் என்னும் மூவடிவுகளுட் கடைப்பட்ட நித்தம் என்னும் வடிவினின்று, நித்ய என்னும் வடசொல்லைத் திரித்துக்கொண்டு, அதையே முத்தென் சொல் வடிவிற்கும் மூலமாகக் கூறி ஏமாற்றி வருகின்றனர் வடமொழியாளர்.
என்றுமுண்மைக் கருத்தைத் தோற்றுவித்தற்கு நிலைப்புக் கருத்தே பொருத்தமானது. வடமொழியாளர் கீழ், பின், உள் என்று பொருள்படும் நி என்னும் முன்னொட்டை மூலமாகக் கொண்டு, ஒன்றன் உட்பட்டது, ஒன்றோடு தொடர்புள்ளது, தொடர்ந்தது, நீடித்தது, நிலைத்தது என்று கருத்துத் தொகுத்து, நித்ய என்னும் சொற்குப் பொருட்கரணியங் காட்டுவர். இதன் பொருந்தாமையை இனிமேலாயினுங் கண்டு தெளிக.
நில்-நிலு-நிலுவை = 1. தங்குகை. நோயு நிலுவை கொண்டது (திருப்பு. 1111). 2. கட்டண எச்சம் (arrears). ஏது குடி நிலுவை (பணவிடு.169). ம. நிலவு, தெ. நிலுவ.
நிலு-நிறு. நிறுத்தல் = 1. நிற்கச் செய்தல். 2. எடை நிற்கச் செய்தல். 3. துலை தூக்கி எடை பார்த்தல். 4. தீர்மானித்தல். நாள்வரை நிறுத்து (கலித். 31 : 23). 5. அமைத்தல். காமர்சாலை தளிநிறுமின் (சீவக. 306). 6. வைத்தல். நிறுத்த முறையானே (நன். 109, மயிலை.). ம. நிறுக்க. நிறுப்பான் = 1. துலாக்கோல் (பிங்.). 2. துலையோரை (திவா.).
நிறு - நிறுவை = 1. எடைபார்ப்பு, எடை.
நிறு - நிறை = 1. நிறுக்கை (பிங்.) 2. எடையளவை. காவெனிறையும் (தொல்.தொகை. 27). 3. நூறு பலங்கொண்ட அளவை (சூடா.). 4. துலாக்கோல் (பிங்.). 5. துலையோரை (திவா.).
நிறைகோல் = துலாக்கோல்.
நிறு - நிறுத்து. நிறுத்துதல் = 1. நிற்கச் செய்தல். 2. நிமிர்ந்து நிற்கச் செய்தல். வெயில்வெரின் நிறுத்த பயிலிதழ்ப் பசுங்குடை (அகம். 37). 3. நிலைநாட்டுதல். நீ தான் என் குடும்பத்தை நிறுத்த வேண்டும் (உ.வ.). 4. மனத்தை ஒரு நிலையில் இருத்துதல். 5. மேற் செல்லாதிருக்கச் செய்தல். 6. தள்ளிவைத்தல். 7. வாசிக்கும் போதும் பாடும்போதும் உரிய விடங்களில் நிறுத்தல் செய்தல். 8. விலக்குதல். என் வேலைக்காரனை நிறுத்திவிட்டேன் (உ.வ.). 9. தொழில் அல்லது வினை செய்யா தொழிதல். அவர் வணிகத்தை நிறுத்திவிட்டார். அவன் கட்குடிப்பதை நிறுத்திவிட்டான். (உ.வ.). 10. விளக்கையவித்தல். `விளக்க மெய்யிற் காற்றினா னிறுத்தி (உபதேசகா. சிவத்துரோ. 492).
ம. நிறுத்துக, க. நிறிசு.
நிறுத்து - நிறுத்தம் = 1. நிறுத்துகை. 2. நிறுத்துமிடம்.
நிறுத்தி வைத்தல் = ஒத்திவைத்தல்.
நிலைநிறுத்தல் = நிலையாக நாட்டல்.
நிறு - நிறுவு. நிறுவுதல் = 1. நிறுத்துதல். மறைமலையடிகளை நினைவுகூர ஒரு படிமை நிறுவப்பட்டது. (உ.வ.). 2. நாட்டுதல். தம்புகழ் நிறீஇ (புறம். 18).
நிறுவு - நிறுவனம் = தொழிற்சாலை, கல்விச்சாலை, ஆராய்ச்சிக் கூடம் முதலியவற்றின் தோற்றுவிப்பு அல்லது அமைப்பு (establishment).
நிறுவனம் - நிறுவனர் = ஓர் அமைப்பைத் தோற்றுவித்தவர் (Founder).
3. நடத்தல்
நெடு - நெட - நட. நடத்தல் = 1. நிற்கும் இடத்தைவிட்டு நீளுதல்போற் காலடி வைத்துச் செல்லுதல். காளைபின் நாளை நடக்கவும் வல்லையோ (நாலடி. 398). 2. பரவுதல். குரையழல் நடப்ப (பு.வெ. 1 : 8). 3. ஒழுகுதல். வேலைக்காரன் வீட்டுத் தலைவனிடம் பணிவாய் நடந்துகொள்ள வேண்டும். (உ.வ.). 4. நிகழ்தல் திருவிழா என்றைக்கு நடக்கும்? (உ.வ.) 5. நிறைவேறுதல். உன் வஞ்சினம். (சப்தம்) நடக்கவில்லை. (உ.வ.). அது நடக்கிற கருமமா? (உ.வ). 6. நிகழ்ந்து வருதல். எழுத்தாளர் அதிகாரம்தான் இன்று நடக்கிறது. (உ.வ.).
ம. நடக்க, க. நடெ, தெ. நடுச்சு, து. நடப்புனி.
நட - நடக்கை = 1. செல்கை. 2. வழக்கம். ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின் (தொல். புறத். 36). 3. ஒழுக்கம். நன்னடக்கைத் தகுதித்தாள் வாங்கிக் கொண்டு வா (உ.வ.). 4. நிகழ்ச்சி.
ம. நட.
நட - நடத்தை = 1. ஒழுக்கம். அவன் நடத்தை சரியாயில்லை (உ.வ.). 2. இயல்பு.
ம. நடத்த, தெ. நடத்த, க. நடத்தெ.
நட - நடப்பு. = 1. நடத்தை. 2. கருமம் நிகழ்ந்துவரும் முறை. நடப்பு எப்படி யிருக்கிறது? (உ.வ.). 3. இற்றை நிகழ்ச்சி. நடப்புச் செய்தி என்ன? (உ.வ.). 4. அவ்வப்போது நிகழ்வது. நடப்புக் கணக்கு (Current account). 5. அடுத்த ஆண்டு. நடப்பிற்குப் பார்த்துக் கொள்ள லாம். (உ.வ.). 6. அடுத்துவரும் சுறவ (தை) மாதம். நடப்பிற்குக் கலியாணம், கழுத்தே சும்மாவிரு (உ.வ.). 7. காமத் தொடுப்பு. 8. இறுதிச் சடங்கிற்கு முந்தின நாள் கல்நடுகை. 9. தாலி வாங்குகை (யாழ்ப்.). 10. குறிக்கோள். ஊதியமாகிய நடப்பின் மேலே (சீவக. 770, உரை). ம. து. நடப்பு.
நட - நடவை = 1. வழி. கான்யாற்று நடவை (மலைபடு. 214). 2. கடவைமரம் (turnstile) (பிங்.). 3. வழங்குமிடம். தலைமை வளர் தமிழ் நடவையெல்லை (சேதுபு. திருநாட். 1). 4. திட்டம். நல்வரங் கொள்ளு நடவையொன்றியம்புவன் (சேதுபு. மங்கல. 69).
தெ. நடவ, க. நடவெ.
நட - நடம். நடமாடுதல் = 1. உலாவுதல். 2. நோய் நீங்கி நடந்து செல்லுதல். 3. அடைபட்டிருந்து வெளிவருதல். 4. தீயவர் திரிதல். இங்கு இரவில் திருடர் நடமாடுகின்றனர். (உ.வ.). 5. வழங்குதல். இன்று கள்ளப்பணம் நடமாடுகிறது. (உ.வ.). 6. பரவிவருதல்.
தெ. நடயாடு.
நடமாட்டம் = 1. நடந்து செல்கை. அவன் பாயும் படுக்கையுமா யிருக்கிறான். ஒருமாதமாய் நடமாட்டமில்லை (உ.வ.).
2. வழங்குகை.
தெ. நடையாட்ட.
நட - நடை = 1. நடந்து செல்கை. கோலூன்றிச் சோர்ந்த நடையினராய் (நாலடி. 13). 2. கோள்களின் செலவு. 3. நடைவேகம். விடைபொரு நடையினான் (கம்பரா. எழுச்சி. 10). 4. வழி (பிங்.). 5. வாசலையடுத்த உட்பக்கம். 6. இடைகழி. அரக்கர் கிடைகளு நடைகளும் (இராமநா. சுந். 3). 7. கப்பலேறும் வழி. 8. சாலை யோர நடைவழி. 9. அடி. பகட்டா வீன்ற கொடுநடைக் குழவி (பெரும்பாண். 243). 10. நடவை. மூன்று நடை தண்ணீர் எடுத்தேன், மணல் வண்டி எத்தனை நடை வந்தது? (உ.வ.). 11. ஒழுக்கம். 12. ஒழுக்க நூல். நன்றாக நடைபலவும் நவின்றார் போலும் (தேவா. 722 : 11). 13. இயல்பு என்றுங் கங்குலா நடைய தோரிடம் (சேதுபு. கந்தமா. 69). 14. வழக்கம். 15. தொழில். மாயோனிகளாய் நடைகற்ற வானோர் பலரும் (திவ. திருவாய். 1 : 5 : 3). 16. வாழ்க்கை நடப்பு. நடைப்பரிகாரம் (சிறுபாண். 104.). 17. அன்றாடப் பூசை. நடையும் விழவொடு நாடொறு மல்குங் கழுமலத்துள் (தேவா. 152 : 8). 18. சொற்றொடரமைப்பு வகை. ஒன்றல்லவை பல தமிழ்நடை (காரிகை. செய். 4, உரை). தூய தமிழ்நடையைப் புதுப்பித்தவர் மறைமலையடிகள் (உ.வ.).
ம. நட, தெ. நட, க. நடெ.
நட - நடத்து. நடத்துதல் = 1. நடக்கச் செய்தல். 2. நடத்திச் செல்லுதல். 3. நிகழ்த்துதல். 4. மேற்பார்த்தல். 5. பிறரிடம் ஒழுகுதல். ஆசிரியர் மாணவரை அன்பாய் நடத்துவார். (உ.வ.). 6. கற்பித்தல். ஆசிரியர் இன்று மூன்று பாடம் நடத்திவிட்டார் (உ.வ.). 7. ஆண்டு நடத்துதல். கூட்டத்தை நடத்துகிறவர் யார்?
ம. நடத்துக, க. நடசு.
நடத்து - நடாத்து. ஆங்கில அரசர் இரு நூறாண்டு இந்தியாவிற் செங்கோல் நடாத்தினர்.
நட - நடவு. நடவுதல் = 1. கருமம் நடத்துதல். 2. ஏவுதல். செலுத்துதல். கணையினை நடவி (விநாயகபு. 80 : 704).
bj., க. நடப்பு, து. நடப்பாவுனி.
நடவு - நடாவு. நடாவுதல் = 1. நடாத்துதல். இருளால் வினைகெடச் செங்கோல் நடாவுதிர் (திவ். இயற். திருவிருத். 33).
நடைபடி = 1. நடத்தை. 2. வழக்கம். 3. அறமன்ற நடபடிக்கை. நடைபடிகள் = செயல்கள்.
நடைபடிகள் - நடபடிகள் = செயல்கள். அப்போதலர் நடபடிகள் (விவிலியம்).
நடபடி - நடபடிக்கை = அறமன்றச் செயல்.
நடபடி = 1. நிகழ்ச்சி. 2. வழக்கம். 3. நடபடிக்கை. ம. நடபடி.
நடபடி - நடவடி = நடபடிக்கை.
k., து. நடவடி.
நடபடிக்கை - நடவடிக்கை = 1. நடத்தை. 2. செயல். 3. அறமன்ற வழக்குத் தீர்ப்புச் செயல்.
க. நடபடிக்கெ, து. நடபாட. (வே.க.)
நுல் (பொருந்தற் கருத்துவேர்)
நுல் - நல் - நள்.
நள்ளுதல் = 1. சேர்தல் உயர்ந்தோர் தமைநள்ளி (திருவானைக் கோச்செங். 25). 2. செறிதல். நள்ளிருள் யாமத்து (சிலப். 15 : 105). 3. நட்புச் செய்தல். உறினட்டறினொரூஉம் (குறள். 812). 4. விரும்புதல். நள்ளா திந்த நானிலம் (கம்பரா. கைகேசி. 26).
நள்ளி = உறவு. (சூடா.).
நள்(ளு) = மருங்கு (யாழ். அக.).
நள்ளுநர் = நண்பர் (திவா.). நள்ளார் = பகைவர். நள்ளார் பெரும்படை (கம்பரா. அதிகாயன். 219).
நள் - நளி. நளிதல் = 1. ஒத்தல். நாட நளிய நடுங்க நந்த (தொல். உவம. 11). 2. செறிதல். நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின் (மலைபடு. 197). 3. பரத்தல். நளிந்த கடலுள் திமிறிரை போல் (களவழி. 18).
நளி - நளிய = ஓர் உவமவுருபு (தொல். 1232).
நளிவு = 1. செறிவு. நளியென் கிளவி செறிவு மாகும் (தொல். உரி. 25). 2. கூட்டம் (பிங்.). 3. பெருமை. தடவுங் கயவும் நளியும் பெருமை (தொல். உரி. 22). 4. அகலம். நளிகடற் றண்சேர்ப்ப (நாலடி. 166). 5. செருக்கு. விந்தகிரி நளிநீக் கென்றான் (சேதுபு. அகத். 3). 6. குறிப்பு. 7. பழிப்பு. 8. நகையாட்டு. அவன் எப்போதும் நளி பேசிக்கொண்டிருப்பான் (நாஞ். வ.).
நளி - நளம் = அகலம் (சது.).
நள் - நட்பு = 1. நேயம். அகநக நட்பது நட்பு (குறள். 786).
2. காதல். நின்னொடு மேய மடந்தை நட்பே (ஐங். 297). 3. உறவு (பிங்.). 4. நண்பன். 5. சுற்றம் (சூடா.).
நள் - நண். நண்ணுதல் = 1. கிட்டுதல். நம்பனையுந் தேவனென்று நண்ணுமது (திருவாச. 12 : 17). 2. பொருந்துதல்.
நண்ணுநர் = நட்பினர் (பிங்.).
நண்ணார் = பகைவர். நண்ணாரு முட்குமென் பீடு (குறள். 1088). ம. நண்ணார்.
நண்மை = அண்மை. நட்பெதிர்ந் தோர்க்கே யங்கை நண்மையன் (புறம். 380 : 11).
நண்பு = நட்பு. நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் (குறள். 998). 2. அன்பு. எம்மானே நண்பே யருளாய் (திருவாச. 44 : 3). 3. உறவு. (பிங்.).
k., க. நண்பு. தெ. நனுப்பு.
நண் - நணி = அண்மையான இடம். திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும் (புறம். 154).
நண் - நணுகு. நணுகுதல் = 1. கிட்டுதல். நானணுகு மம்பொன் குலாத்தில்லை (திருவாச. 40 : 6). 2. ஒன்றிக் கலத்தல். நம்புமென் சிந்தை நணுகும் வண்ணம் (திருவாச. 40 : 6).
நணுகார் = பகைவர்.
நணுகு - நணுங்கு. நணுங்குதல் = நெருங்கிக் கலத்தல். சுரும்பினங்கள்… நரம்பென வெங்கு நணுங்க (ஏகாம். உலா. 276).
நளி - நடி. ஒ.நோ : களிறு - கடிறு.
நடித்தல் = 1. ஒத்து நடத்தல். 2. கூத்தாடுதல். நடிக்குமயி லென்னவரு நவ்விவிழி யாரும் (கம்பரா. வரைக்காட்சி. 15). 3. வடிவெடுத்தல். நடித்தெதிர் நடந்த தன்றே (இரகு. ஆற்று. 20). 4. நாடகமாடுதல். 5. பாசாங்கு செய்தல். நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து (திருவாச. 41 : 3).
நடி = ஆட்டம். நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர் (தேவா. 216 : 5).
நடிகன் = நாடக மேடையில் நடிப்பவன். நடிகன் - வ. நடிக.
நடிகை = நாடக மேடையில் நடிப்பவள். நடிகை - வ. நடிகா.
நடி - நடம் = தாண்டவம். இரத முடைய நடமாட்டுடையவர் (திருக்கோ. 57).
நடம் - வ. நட (நட்ட).
நடம் - நடன் = கூத்தன். வளிநடன் மெல்லிணரப் பூங்கொடி மேவர நுடங்க (பரிபா. 22: 42)
நடன் - வ. நட (நட்ட)
நடன் - நடி = நடனப்பெண் (திவா.).
நடி - வ. நடீ (நட்டீ).
நடம் - நட்டம் = நடனம். நட்டம் பயின்றாடு நாதனே
(திருவாச. 1: 89).
நட்டம் - வ. நாட்ய, ந்ருத்த; பிரா. நட்ட.
நட்டம் - நட்டவம் = நடம் பயிற்றுந் தொழில். நட்டவஞ் செய்ய நட்டவம் ஒன்றுக்கு (S.I.I.II. 274).
நட்டவம் = நட்டுவம் - நடம் பயிற்றுந் தொழில்
தெ. நட்டுவ.
நட்டுவம் - நட்டுவன் = நடம் பயிற்றுவோன். ஆட்டுவிப்போன். உயிரையெல்லா மாட்டுமொரு நட்டுவனெம் மண்ணல் (திருவாத.பு. புத்தரை. 75).
ம. நட்டுவன், தெ. நட்டுவுடு. க. நட்டுவ.
நட்டுவம் - நட்டு = 1. நடம். 2. நடன். 3. நட்டுவன். இனி, நட்டம் - நட்டு - நட்டுவம் என்றுமாம். ஒ.நோ. : முட்டு - முட்டுவம் - முட்டுவன்.
நடி + அனம் = நடனம் = 1. கவின்கூத்து. 2. குதிரை நடை. பதினெட்டு நடனத்தொழில் பயிற்றி (கொண்டல்விடு. 176). 3. பாசாங்கு. 4. மாமாலம் (இந்திரசாலம்). நன்றுநன்றுநீ நம்முனர்க் காட்டிய நடனம் (கந்தபு. அவைபுகு. 87).
நடனம்- வ. (நட்டன) நடன.
நடனம் - நடனன் = கவின்கூத்தன்.
நடனன் - நடனி = கவின் கூத்தி. நடித்தெதிர் நடந்த தன்றே நடனியர் தம்மின் மன்னோ (இரகு. ஆற்று. 20).
நடி - அகம் = நாடகம் = 1. நடம் (பிங்.). 2. கதை தழுவி வருங்கூத்து.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம் (தொல். அகத். 53.)
நாடகம் - வ. நாடக (நாட்டக.)
நளி - நளினம் = 1. நயச்சொல். பயிலு மானவர்பேச னளினமே (சேதுபு. திருநா. 115). 2. நகையாட்டு. 3. முகமன்.
நள் - நய் - நய. நயத்தல் = 1. விரும்புதல். பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று (குறள். 150). 2. அன்பு செய்தல் (சூடா.). 3. விருப்பூட்டுதல். 4. மகிழ்தல். வல்லை மன்றநீ நயந்தளித்த (புறம். 59). 5. பாராட்டுதல். நல்லறி வுடையோர் நயப்பது வேண்டியும் (பத்துப். நச். உரைச்சிறப்.). 6. கெஞ்சுதல். 7. இணங்கிப்போதல். 8. இனிமையுறுதல். நஞ்சினுங் கொடிய நாட்ட மமுதினு நயந்து நோக்கி (கம்பரா. பூக்கொய். 7). 9. மேம்படுதல். 10. மலிவாதல். இவ்வாண்டு தவசம் நயத்துவிட்டது.
நய - நயம் = 1. விருப்பம். 2. அன்பு. நயந்தலை மாறுவார் மாறுக (கலித். 80). 3. தெய்வப்பற்று. பஃறளியு நயங்கொண்டு பணிந்தேத்தி (தணிகைப்பு. பிரமன். 54). 4. நன்மை. நயமுணராக் கையறியாமாக்கள் (நாலடி. 163). 5. பணிவொழுக்கம். சான்றோரை நயத்திற் பிணித்து விடல் (நான்மணி. 12). 6. பயன். நல்வினை யுந்நயந் தந்தின்று. (திருக்கோ. 26). 7. இனிமை. நாரத முனிவர்க்கேற்ப நயம்பட வுரைத்த நாவும் (கம்பரா. கும்பகரு. 1). 8. மிகுதி. 9. மேம்பாடு. 10. மலிவு. காய்கறி விலை நயமாயிருக்கிறது (உ.வ.). 11. நேர்த்தி. 12. நேர்மை.
க., துfffffffffff. நய, தெ. நயமு.
நயம் - நயன் = 1. நன்மை. 2. ஒப்புரவு. நயனுடை யான்கட்படின் (குறள். 216). 3. நேர்மை. நயன்சாரா நன்மையின் நீக்கும் (குறள். 194).
நயப்பு = 1. விருப்பு, அன்பு. நல்லாளொடு நயப்புற வெய்தியும் (திருவாச. 2 : 12). 2. பாராட்டு. 3. இன்பம். நயப்புறு சித்தரை நலிந்து வவ்வின (கம்பரா. கரன்வதை. 47). 4. நன்மை. 5. மேம்பாடு. 6. மலிவு.
நய - நச - நசை. நசைதல் = 1. விரும்புதல். எஞ்சா மண்ணசைஇ (மணிமே. 19 : 119). 2. அன்பு செய்தல். நசைஇயார் நல்கா ரெனினும் (குறள். 1199).
நசை = 1. ஈரம் (W.). 2. அன்பு. நசையிலார் மாட்டு நசைக்கிழமை செய்வானும் (திரிகடு. 94). 3. ஆசை. நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய (புறம். 15). 4. நம்பிக்கை. அரிதவர் நல்குவ ரென்னு நசை (குறள். 1156). ப.க. நசெ.
நசை = நண்பர் (பிங்.).
நச-நசு-நச்சு. நச்சுதல் = விரும்புதல். நச்சப் படாஅ தவன் (குறள். 1004). க. நச்சு.
நச்சு - நெச்சு.
நச்சு - நத்து. நத்துதல் = விரும்புதல். நாரியார் தாமறிவர் நாமவரை நத்தாமை (தமிழ்நா. 74).
நத்து - நெத்து.
நசுநாறி = பிசினாறி.
நுள் - நிள் - நிர் - நிர. நிரத்தல் = (செ.கு.வி.). 1. நெருங்குதல். கொண்மூக் கூடி நிரந்து (ஐந். ஐம். 5). 2. கலத்தல். நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி (தேவா. 332 : 9). 3. பரத்தல். நிரந்த பாய்மா (சீவக. 1859). 4. நிரம்புதல். பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை (தேவா. 194 : 9). 5. ஓர்மைப்படுதல். இருபகை வரும் நிரந்து போயினர் (உ.வ.).
1. (செ.குன்றாவி). ஒழுங்குபடுத்துதல். நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் (குறள். 648). 2. சமபங்கிட்டளித்தல். எல்லார்க்கும் நிரந்து கொடு. (உ.வ.). தெ. நெரயு.
நிர - நிரல் = 1. வரிசை. நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு (தொல். செய். 168). 2. ஒப்பு. நிரலல் லோர்க்குத் தரலோ வில்லென (புறம். 345).
ம. Ãu, f., து. நிறுகெ.
நிரலுதல் = ஒழுங்குபடுதல். நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு (தொல். செய். 170).
நிர - நிரை. நிரைதல் = 1. (செ.குன்றாவி). ஓலை முதலியவற்றை வரிசையாக வைத்து மறைத்தல். வீட்டைச் சுற்றி நிரைந்திருக்கிறது. (உ.வ.). 2. முடைதல். வீடுவேயக் கிடுகு நிரைகிறார்கள் (உ.வ.). 3. ஒழுங்குபடுத்துதல். 4. நிரப்புதல்.
(செ.கு.வி.). 1. வரிசையாதல். 2. முறைப்படுதல். 3. திரளுதல். நிரைவிரி சடைமுடி (தேவா. 994 : 9).
நிரை - நிரைசல் = ஓலை முதலியவற்றால் அடைக்கும் அடைப்பு. ப.க. நெரக்கெ.
நிரை = 1. வரிசை. நிரைமனையிற் கைந்நீட்டும் கெட்டாற்று வாழ்க்கையே நன்று (நாலடி. 288). 2. ஒழுங்கு (சூடா.). 3. கூட்டம். சிறுகட் பன்றிப் பெருநிரை (அகம். 94). 4. ஆன்மந்தை. கணநிரை கைக்கொண்டு (பு.வெ. 1 : 9). 5. குறிலிணையும் குறினெடிலும் ஒற்றடுத்தும் ஒற்றடாதும் இணைந்தொலிக்கும் செய்யுளசை.
ம. நிர, க. நிறி, தெ. நெரி.
நிர - நிரவு. நிரவுதல் = (செ.கு.வி.). 1. வரிசையாயிருத்தல். நிரவிய தேரின் மேன்மேல் (கம்பரா. முதற்போர். 151). 2. பரவுதல். பார்முழுதும் நிரவிக் கிடந்து (தேவா. 152 : 9). 3. சமனாதல். (W.).
(செ. குன்றாவி.) 1. சமனாக்குதல். உழாஅ நுண்டொளி நிரவிய வினைஞர் (பெரும்பாண். 211). 2. சராசரி பார்த்தல். 3. அழித்து நிலமட்ட மாக்குதல். அடங்கார் புரமூன்றும் நிரவ வல்லார் (தேவா. 777 : 2).
நிரவல் = 1. சமனாதல். 2. சராசரி.
நிர - நிரம்பு. நிரம்புதல் = 1. நிறைதல். பருவ நிரம்பாமே (திவ். பெரியாழ். 1 : 2 : 17). 2. பருவமடைதல். அவள் நிரம்பின பெண் (யாழ்ப்.). 3. மிகுதல். நெற்பொதி நிரம்பின (கம்பரா. கார்கால. 74). 4. முதிர்தல். 5. முடிவுறுதல். நெறிமயக் குற்ற நிரம்பா நீடத்தம் (கலித். 12). க. நெர.
நிரம்பு - நிரப்பு = 1. நிறைவு. (சூடா.) 2. சமதளம். 3. சமைதி (சமாதானம்). 4. வறுமை (ம.வ.). தெ. நிம்பு (நிம்ப்பு).
நிரப்பு - நிரப்பம் = 1. ஒப்புமை. நிரப்பமில் யாக்கை (கலித். 94).
2. சமம். குடக்குந் தெற்குங் கோணமுயரி நிரப்பங் கொளீஇ (பெருங். இலாவாண. 4 : 56 - 60). 3. நிறைவு. நிரப்ப மெய்திய நேர்பூம் பொங்கணை (பெருங். மகத. 14 : 62). 4. சிறப்பு (திவ். திருவாய். 1 : 2 : 3 : பன்னீ). 5. கற்பு (திவ். திருவாய். 5 : 3 : 3. பன்னீ).
நிரை - நிறை. நிறைதல் = 1. நிரம்புதல். நிறையின் னமுதை (திருவாச. 27). 2. மிகுதல். நிறையக் கொடுத்தான் (உ.வ.). 3. வியன்றிருத்தல் (வியாபித்திருத்தல்). இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றான் (உ.வ.). 4. பொந்திகை (திருப்தி) யடைதல். நிறைந்த மனத்து மாதரும் (திருவாலவா. 38 : 5). அமைதியாதல்.
ம. நிறயுக, க. நெறெ.
நிர் - நெர் - நெரு. நெருநாள் = நெருங்கிய நாள், நேற்று.
நெருநாள் - நெருநல் = நேற்று. நெருந லுளனொருவன் இன்றில்லை (குறள். 336).
நெருதலை நாள் = நேற்று. (திருக்கோ. 21, துறை விளக்கம்).
நெருநல் - நெருநை. நெருநையி னின்று நன்று (கலித். 91).
நெருதல் - நெருநற்று. நெருநற்றுச் சென்றாரெங் காதலர் (குறள். 1278).
நெருநற்று - நேற்று. நேற்றிரா வந்தொருவன் நித்திரையிற் கைப்பிடித்தான் (காளமேகம்).
நெருநல் - நென்னல் = நேற்று. நென்ன னோக்கி நின்றா ரொருவர் (சிலப். 7, பாட். 45).
நென்னல் - நென்னற்று - நென்னேற்று. காலைப் பிடிக்கா நின்ற நென்னேற்றும் (திவ். திருப்பா. 16, வியா. 158).
நெர் - நெரி. நெரிதல் = 1. நெருங்குதல். நெரிமுகைக் காந்தள் (பரிபா. 14 : 13). 2. நெருங்கி யுரசி நொறுங்குதல். தலைபத்து நெரியக் காலாற் றொட்டானை (தேவா. 17 : 7).
நெரி - நெரியல் - நெரிசல் = 1. நெருக்கமான கூட்டம். 2. நெரிந்தது.
நெர் - நெரு - நெருங்கு. நெருங்குதல் = 1. கிட்டுதல். 2. செறிதல். நெருங்கு மடியார்களு நீயு நின்று (திருவாச. 21 : 7). 3. நெருங்கிய உறவாதல். 4. ஒடுக்கமாதல்.
நெருங்கு - நெருக்கு - நெருக்கம் = 1. அருகண்மை. 2. நெருங்கிய வுறவு. 3. செறிவு. 4. ஒடுக்கம். 5. வேலைக் கடினம். 6. சடுத்தம் (அவசரம்). 7. வற்புறுத்தம். 8. நோய்க் கடுமை. 9. துன்பம்.
நெருக்கு - நெருக்கடம் = நெருக்கி யழுத்தும் நிலை.
நெருக்கு - நெருக்கடி = 1. நெருக்கும் மக்கட் கூட்டம். 2. சடுத்தநிலை. 3. வறுமைத் தொல்லை. 4. கடுந்துன்பநிலை.
நெரு - நெருள் = திணுங்கிய மக்கள் திரள். யானை போகிற போக்கைப் பார், பார்க்கப் போகிற நெருளைப் பார் (பழஞ் சொலவு).
நெர் - நேர். நேர்தல் = 1. நெருங்குதல். வீரவாகுத் தலைவனை நேர்ந்து சொல்லும் (கந்தபு. தருமகோப. 71). 2. தீண்டுதல். குழவித் திங்கட் கோணேர்ந் தாங்கு (பெரும்பாண். 384). 3. பொருந்துதல். நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை (தொல். எழுத்து. 134). 4. ஒத்தல். கனியைநேர் துவர்வாயார் (திருவாச. 5 : 27). 5. எதிர்ப் படுதல். பொழிலோ வொன்று நேர்ந்ததுவே (வெங்கைக்கோ. 321). 6. எதிர்தல். வேந்தன் றனைநேர்ந்து காண்பானா (இரகு. தசரதன். 21). 7. எதிர்த்தல். தானையை நேர்ந்து கொன்று (கம்பரா. மூலபல. 57). 8. உடன்படுதல். அழும்பில் வேளுரைப்ப நிறையருந் தானை வேந்தனு நேர்ந்து (சிலப். 25 : 178). 9. நிகழ்தல். இது தற்செயலாக நேர்ந்தது (உ.வ.) 10. நிரம்புதல். நேரத்தோன் றும் பலரறி சொல்லே (தொல். கிளவி. 7). 11. பொருத்தனை பண் ணுதல். பழனிக்குக் காவடி யெடுக்க நேர்ந்துகொண்டான் (உ.வ.).
நேர் - நேர்ச்சி = 1. நிகழ்ச்சி. 2. நட்பு. கொடைபகை நேர்ச்சி (நன். 298).
நேர்த்தம் = 1. நட்பு. 2. உடன்பாடு. இருவர்க்கும் நேர்த்தமில்லை (உ.வ.).
நேர்த்தி = 1. நேரான நிலை. 2. திருந்திய நிலை. 3. சிறப்பு.
4. பொருத்தனை. நேர்த்திக்கடன் (உ.வ.).
நேர்முகம் = 1. எதிர்முகம். 2. உடன்பாடு.
நேர்ப்பு = நேர்த்தி.
நேர்ப்பம் = 1. இயற்கை மூலம் (பிரகிருதி) (ஈடு, 8 : 1 : 6). 2. திறமை. சுழற்றிய நேர்ப்பம் இருந்தபடி (திவ். இயற். திருவிருத். 51, வியா).
நேர் = 1. ஒப்பு. தன்னே ரிலாத தமிழ் (தனிப்பாடல்). 2. உவமை. 3. பொருந்திய வரிசை. 4. நேர்நிலை. 5. நேர்மை (நீதி). 6. ஒழுங்கு. 7. ஒழுக்கம். 8. திருந்திய தன்மை. 9. எதிர். 10. தனிமை (திவா.). 11. உயிர் அல்லது உயிர்மெய் தனித்த நேரசை.
k., க. நேர், தெ. நேரு, து. நேரெ.
நேர்-நேரம் = 1. வினைநேருங் காலப்பகுதி. நேரம் பார்த்து நெடுந்தகைக் குரிசிலை மீட்டிடம் பெற்று (பெருங். உஞ்சைக் 57 : 74). 2. தக்க சமையம் (திருக்கோ. 290, துறைவிளக்கம்). 3. இரு சாமங்கொண்ட அரைநாள் (திவா.).
ம. நேரம், இ. தேர்.
நெள் - நெய். நெய்த்தல் = 1. ஒட்டுதல். 2. ஒட்டும் பசைத்தன்மை யுடையதாயிருத்தல். 3. பளபளத்தல். நீண்டு குழன்று நெய்த்திருண்டு (கம்பரா. உருக்காட்டு. 57). 4. ஒட்டும் நீர்ப் பொருளாக உருகும் கொழுப்பு வைத்தல், கொழுத்தல். நெய்த்தமீன் (W.).
நெய் = 1. ஒட்டும் நீர்ப்பொருள் (எண்ணெய்). நெய்யணி மயக்கம் (தொல். கற்பு. 5). 2. ஆவின் அல்லது எருமையின் நெய். நீர்நாண நெய்வழங்கியும் (புறம். 166). 3. அந் நெய்யாக உருக்கப்படும் வெண்ணெய். நெய்குடை தயிரி னுரையொடும் (பரிபா. 16 : 3). 4. புழுகுநெய். மையிருங் கூந்த னெய்யணி மறப்ப (சிலப். 4 : 6). 5. நெய்போலொட்டுந் தேன். நெய்க்கண் ணிறாஅல் (கலித். 42). 6. நெய்போ லுறையும் அரத்தம். நெய்யரி பற்றிய நீரெலாம் (நீர்நிறக். 51). 7. நெய்யா உருகுங் கொழுப்பு, நெய்யுண்டு (கல்லா. 71). 8. உளம் ஒட்டும் நட்பு. நெய்பொதி நெஞ்சின் மன்னர் (சீவக. 3049).
k., க. நெய், தெ. நெய்யி. வ. நிஹ் - நேஹ.
எண்ணெய் = 1. எள்ளிலிருந்தெடுக்கப்படும் நெய் (நல்லெண்ணெய்). 2. நெய்ப்பொருள், விளக்கெண்ணெய், தேங்காயெண்ணெய், புன்னைக்கா யெண்ணெய், கடுகெண்ணெய், முதலியன.
நெய்ப்பொரு ளெல்லாவற்றுள்ளும் ஆவின் அல்லது எருமையின் நெய் ஊட்டமான உணவிற்குரியதாய்த் தலைசிறந்ததாதலால், நெய்யென்னும் பொதுப் பெயரையே சிறப்புப் பெயராகக் கொண்டது.
முதன்முதலாக எள்ளின் நெய்யைக் குறித்த எண்ணெய் என்னுஞ் சொல், மிகப் பெருவழக்காய் வழங்கியதால் நாளடைவில் தன் சிறப்புப் பொருளை யிழந்து, நெய்யல்லாத நெய்ப் பொருள் களின் பொதுப் பெயராயிற்று. அதனால், தன் பழம்பொருளைக் குறித்தற்கு நல் என்னும் அடைபெற்றது. இதனால், நெய்க்கு அடுத்துச் சிறந்தது நல்லெண்ணெய் என்பது பெறப்படும். வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு என்பது பழமொழி.
நெய்த்துவர் - நெய்த்தோர் = நெய்ப்பதமுள்ள அல்லது நெய்போ லுறையும் அரத்தம். நெய்த்தோர் வாய… குருளை (நற்.2).
துவர் = சிவப்பு, அரத்தம்.
தெ. நெத்துரு, க. நெத்தரு.
நெய் - நேய் - நேயம் = 1. நெய் (பிங்.). 2. எண்ணெய் (பிங்.) 3. அன்பு. நேயத்ததாய் நென்ன லென்னைப் புணர்ந்து (திருக்கோ. 39). 4. பத்தி (தெய்வப்பற்று). நேயத்தே நின்ற நிமலனடி போற்றி (திருவாச. 1 : 13).
பிரா. நேஅம். வ. நேஹ.
நேயம் - நேசம் = 1. அன்பு. நேசமுடைய வடியவர்கள் (திருவாச. 9 : 4). 2. ஆர்வம். வரும்பொருளுணரு நேச மாசறு தயிலம் வாக்கி (இரகு. இரகுவு. 38). 3. தகுதி. பூச்சியின் வாயினூல் பட்டென்று பூசைக்கு நேச மாகும் (குமரே. சத. 59). ம. நேசம்.
நேசம் - நேசி. நேசித்தல் = 1. அன்பு வைத்தல். நேசிக்கும் சிந்தை (தாயு. உடல் பொய். 32). 2. ஆர்வங் கொள்ளுதல். நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர் (தாயு. பரிபூர).
நேசி = 1. அன்பன். 2. காதலி.
நேயம் - நேம் = அன்பு.
நேம் - நே = 1. அன்பு. 2. ஈரம். நேஎ நெஞ்சின்….. கவுரியர் மருக (புறம். 3).
நெய் - நெய்ஞ்சு - நெஞ்சு = 1. அன்பு செய்யும் மனம். தன்னெஞ்சே தன்னைச் சுடும் (குறள். 293). 2. மனத்திற் கிருப்பிடமான நெஞ்சாங்குலை (இருதயம்). 3. நெஞ்சாங்குலையுள்ள மார்பு. தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇ (தொல். எழுத்து. 83). 4. மனச்சான்று. நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை (கொன்றை. 54). 5. நடு. குன்றி னெஞ்சுபக வெறிந்த (குறுந். 1). 6. திடாரிக்கம். நெஞ்சுளோ ரஞ்சும் வித்தை (திருவாலவா. 35 : 17).
ஒ.நோ : வேய்ந்தன் - வேந்தன். ம. நெஞ்சு.
நெஞ்சு - நெஞ்சம் = 1. மனம். தாமுடைய நெஞ்சந் துணையல் வழி (குறள். 1299). 2. அன்பு. நெஞ்சத் தகநக நட்பது நட்பு (குறள். 786).
நெஞ்சு - நெஞ்சகம் = மனம். நெஞ்சக நைந்து நினைமி னாடொறும் (தேவா. 1173 : 1).
நெய்தல் = 1. நூலை ஆடையாக இணைத்தல். நெய்யு நுண்ணூல் (சீவக. 3019). 2. தொடுத்தல். நெய்தவை தூக்க (பரிபா. 19 : 80).
ம. நெய்க, க. நெய்.
நெய் - நெயவு - நெசவு.
நெய் - நெய்தல் = 1. வறண்ட கோடைக்காலத்தும் குளநிலத்தோ டொட்டியிருக்கும் கொடிவகை.
…………………………………………….. அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு (மூதுரை. 17.)
2. அக்கொடி வளரும் கடற்கரை. எற்பாடு நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும் (தொல். அகத். 8).
k., க. நெய்தல். (வே.க.)
நூல் வகை
நுவணம் (நுவணை) - கலை இலக்கணம், புத்தகத்திற் கூறப்படும் பொருள்.
புத்தகம் - நூற்பொருள் எழுதிய ஏட்டுத் தொகுதி.
பனுவல் - பிரபந்தம்
வனப்பு - செய்யுள் நூல் அல்லது காவிய வகை.
சுவடி - சிறுபுத்தகம்.
கலை - தொழிற்சாலை (art)
நூல் - அறிவுக்கலை (science) சொல். 41.
நெடுங்கணக்கு (அரிவரி)
ஜூன் மாதம் (1934) 10ஆம் 11ஆம் நாள்களில், நெல்லையில் நடந்த, சென்னை மாகாணத் தமிழன்பர் மாநாட்டில், பதின்மூவர்போல் தமிழ் நெடுங்கணக்குக் குறைவுள்ள தென்றும், அதிற் சில எழுத்து களைப் புதிதாய்ச் சேர்க்கவேண்டும் மென்றும், பேசினதாக அம் மாநாட்டறிக்கையிற் கண்டாம்.
ஒரு மொழியிலுள்ள அரிவரி நிறைவுள்ள தில்லதென்றறிதற்கு. அம் மொழியிலுள்ள ஒலிகளையெல்லாம் குறித்தற்கு வரிகளுண்டா என்று காண்டல் வேண்டும். தமிழில் அதன் ஒலிகளையெல்லாம் குறித்தற்குப் போதிய வரிகளுண்டென்றே சொல்ல வேண்டும்.
மெய்யெழுத்துகளிற் சிலவற்றிற்கு ஈரொலியும் சிலவற்றிற்கு மூவொலியு மேலுமுள.
எ-டு :
க - 1. க், க்க k. (வலிய ககரம்).
2. உலகு, அகம் என்னும் சொற்களில் மெல்லிய ககரம். ககரத்திற்கும் ஆய்தத்திற்கும் இடைத்தர ஒலி.
3. தங்கம், என்னும் சொல்லில் g போன்ற தொனிப்பொலி (voiced letter).
ஙகரத்தை யடுத்த ககரமெல்லாம் தொனித்தே ஒலிக்கும்.
ச - 1. ச், ச்ச ch வலிய சகரம்.
2. சட்டி, சட்டை என்னும் சொற்களில் c போன்ற மெல்லிய ஒலி.
3. பசி, கசி என்னும் சொற்களில் s அல்லது ஸ போன்ற மெல்லிய ஒலி.
4. பஞ்சம் என்னும் சொல்லில் j போன்ற தொனிப்பொலி.
ஞகரத்தை யடுத்த சகரமெல்லாம் தொனித்தே ஒலிக்கும்.
ஞ - 1. ஞ், ஏறத்தாழ ய்ங் போன்ற ஒலி.
2. மஞ்சள் என்னும் சொல்லில் nj போன்ற ஒலி.
ட- 1. ட், ட்ட, t@ போன்ற வல்லொலி.
2. ட, d@ போன்ற தொனிப்பொலி.
டகரம் உயிர்மெய்யாய்த் தனித்து வரும்போதெல்லாம் தொனித்தே ஒலிக்கும்.
த - 1. த், த்த, t போன்ற வல்லொலி.
தட்டை, தண்ணீர் முதலிய சொற்களிலுள்ள தகரமும் வலித்தே ஒலிக்கும்.
2. விந்தை, மதி முதலிய சொற்களில் d போன்ற தொனிப் பொலி.
நகர மெய்யை அடுத்துவரும் தகரமெல்லாம் தொனித்தே ஒலிக்கும்.
ப - 1. ப, ப், ப்ப, P வல்லொலி.
2. கம்பம், பண்பு, அன்பு, மரபு முதலிய சொற்களில் b போன்ற தொனிப்பொலி.
ம், ண், ன் என்ற மெய்களை யடுத்துவரும் பகரம் தொனித்தே யொலிக்கும்.
ற - 1. ற, ற், வலிய றகரம் (hard or trilled r)
2. ற்ற, t போன்ற வல்லொலி.
3. கன்று என்னும் சொல்லில் (candle என்னும் சொல்லி லுள்ள) d போன்ற மெல்லிய டகரம்.
னகரமெய்யை அடுத்துவரும்போதெல்லாம் றகரம் இங்ஙனமே ஒலிக்கும்.
றகரம் இரட்டிக்கும் இரண்டுமிசைந்து t போல ஒரே யொலியா யொலிக்கும்; னகர மெய்யை அடுத்துவரும்போது இரண்டு மிசைந்து, nd போல ஒலிக்கும். இதையறியாத ஆங்கிலரும், ஆங்கிலவழித் தமிழறிஞரும், வெற்றி என்பதை வெற்றிறி என்றும் வென்றி என்பதை வென்றிறி என்றும் பிழைபட உச்சரிப்பர்.
எழுத்துகள் இடமும் சார்பும்பற்றிப் பற்பல விதமாக ஒலிப்பதைக் குறித்தே.
எடுத்தல் படுத்தல் நலித லுழப்பின்
திரிபும் தத்தமிற் சிறிதுள வாகும் (நன். )
என்றார் பவணந்தியார். இங்ஙனம் ஓரெழுத்தே பற்பல விதமாக ஒலிக்கினும். எவ்விடத்தில் எவ்வொலியென்றறிய ஏதும் இடர்ப் பாடில்லை. ஏனென்றால் ஒவ்வோ ரொலியும் இயல்பாகவே இடமும் சார்பும்பற்றி வெவ்வேறொலியாய் ஒலிக்கின்றது. தமிழருள் எவர் பேசினும் இவ்வியல்பு மாறுவதின்று. பேசும் போது மட்டுமின்றி ஒரு நூலை வாசிக்கும்போதும் இவ்வியல்பு மாறுவதின்று. இதைக் கால்டுவெல் கண்காணியாரும் தமது ஒப்பியல் நூலிற் குறித்துள்ளார்.
இயல்பாகவும் எளிதாகவும் இருக்கிற தமிழ்மொழியைப் போன்றே. அதன் எழுத்துமுறையும் இயல்பாகவும் எளிதாகவு மிருக்கவேண்டி நம் நுண்மாண் நுழைபுல முன்னை யாசிரியர் ஒரு வரியானேயே பல ஒலிகளைத் குறிப்பித்தனர் என்னே! அவர் அறிவின் மாண்பு!
இனி, தமிழிலுள்ள இசையும் குறிப்பும்பற்றிய பல்வகை யொலிகளையுங் குறிக்க வரியில்லை யென்னலாம்.
எ-டு : கும் கும் (gum gum) மிருதங்கத் தொனி.
உ - நாயை உ காட்டல் அல்லது வேட்டைமேல் ஏவல்.
ஜல்ஜல் - சலங்கை யொலி.
ஜம் - கம்பீரத் தோற்றக் குறிப்பு.
இ (ezzz) - பாம்பு. வண்டு முதலியவற்றின் இரைச்சல்.
உஷ் (ush - hush) - அமைத்தற் குறிப்பு. இவையெல்லாம் எழுத்து முறைக் கேலாத புறவொலிகளாகக் கொண்டனரேயன்றி, பொருண் மொழிக்கு வேண்டும் எழுத் தொலிகளாகக் கொண்டில ரென்க.
அற்றேல் பிற மொழிகளில் இவ்வொலிகளைக் கொண்ட தென்னையெனின், அவையெல்லாம் செயற்கை மொழிகளாத லின் அவற்றுக்குக் கொள்ளப்பட்டன வென்றும், அவற்றுள்ளும் முற்கு, வீளை, கனைப்பு, கத்து, அழுகை, தும்மல் முதலிய ஒலி களையெல்லாம் குறிக்க வரியில்லையென்றும், எல்லா ஒலிகளை யும் குறிக்க வரியுள்ள மொழி உலகத்தில் ஒன்றுமேயில்லை யென்றும் கூறி விடுக்க.
எ, ஒ, ழ, ற என்ற ஒலிகள் வடமொழிக்கில்லை. ஆகையால் ஒட்டெலும்பு என்பதை ஓட்டேலும்பு என்றும், வாழைப்பழ வற்றல் என்பதை வாலபல வர்ரல் என்று மல்லவோ எழுத வேண்டும்?
ஞ, ண, ழ, ள என்ற ஒலிகள் ஆங்கிலத்திற் கில்லை. இவ் வொலிகள் வருகின்ற சொற்களை எங்ஙன் ஆங்கிலத்தில் எழுத முடியும்? கண்ணியைக் கன்னியென்றும் மூளையை மூலை யென்று மல்லவோ எழுத வேண்டும்?
இங்கிலீஷில் உள்ள f, z, zh முதலிய ஒலிகள் எத்துணையோ ஒலிகளையுடைய வடமொழிக்கும் இல்லையே! இங்ஙனம் ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப் பெழுத்துகளிருப்பதால், ஒருமொழிச் சிறப்பெழுத்துச் சொற்களைப் பிறமொழி யிலெழுத வொண்ணாதாகும். இதையறியாத வடமொழிவாணன் ஒருவன், ஒரு தமிழனை நோக்கிச் சகதிரதளாம்புஜம் என்பதைத் தமிழில் எழுதுக என்று பழித்தானாம். பின்பு வாழைப்பழவற்றல் என்பதை வடமொழியில் எழுதுக என்று தமிழன் சொன்னதும் விழித்தானாம். ஆகையால் ஒரு மொழிச் சிறப்பெழுத்துச் சொற் களை இன்னொரு மொழியில் விகாரமின்றி யெழுத வொண்ணா தென்றும், எல்லா மொழிச் சொற்களையும் தற்சமமாக எழுதும் மொழி உலகத்தே ஒன்று மில்லையென்றும் தெரிந்துகொள்க.
இதை யறியாதார் f தமிழில் இல்லையென்றும், ஜ தமிழிலில்லை யென்றும். இன்னோரன்ன எழுத்துகளைப் புதிதாய்ச் சேர்த்தல் வேண்டுமென்றும் ஓலமிட்டுத் திரிவர். உலக முழுமைக்கும் பொது மொழியாய் வந்து கொண்டிருக்கின்ற இங்கிலீஷில், ஏனைமொழிச் சிறப்பெழுத்துகளைச் சேர்க்கக் காரணமிருப் பினும், எவரேனும் ஞ, ண, ழ, ள முதலிய எழுத்துகளை இங்கிலீஷில் சேர்க்க வேண்டுமென்று கூறின துண்டா? அன்றி, மிக நிறைவுள்ளதாகக் கருதப்படும் வடமொழி யரிவரியை இன்னும் நிறைவாக்க வேண்டி எ, ஒ, ழ, ற என்ற எழுத்துகளைச் சேர்க்க வேண்டு மென்று. எவரேனும் கூறினதுண்டா? இவரெல்லாம் அமைந்திருக்கவும் தமிழர்மட்டும் முனைந்து நிற்பதேன்? இதனானேயே பிறர்க்குத் தாய்மொழிப் பற்றுளதென்றும் தமிழர்க்கிலதென்றும் விளங்குகின்றதே!
ஒரு மொழியின் அரிவரி அம் மொழியொலிகட்குமட்டும் அமைந்ததா? பிறமொழியொலிகட்கும் அமைந்ததா? ஒருமொழி யரிவரியால் அம் மொழிச் சொற்களை மட்டும் எழுதாது, பிற மொழிச் சொற்களை எழுதி நகைப்பது பெரும் பேதைமை யாகும். ஒரு மொழிக்கு அதிலுள்ள ஒலிகளை யெல்லாம் குறிக்க வரியின்றெனின் அதுவே உண்மையான குறையாகும்.
தமிழில் ஒவ்வோரொலிக்கும் ஒவ்வோர் வரியுண்டு. உலகமொழி களெல்லாவற்றின் அரிவரிக ளையும் ஒவ்வொன்றாய் உற்றுநோக் கின். தமிழரி வரியே பிறமொழிகள் அழுக்காறுமாறு அத்தனை நிரம்பினதும் வரம்பினதுமா யிருக்கிறது. உயிரெழுத்துகள் பன்னிரண்டிற்கும் தனித்தனி வரியுள்ளது. குறில் குறிலாகவும் நெடில் நெடிலாகவும் உச்சரிக்கப்படும். மெய்யெழுத்துகள் எல்லா மொழிகட்கும் பொதுவாக இயற்கையான எளிய வொலிகள் பத்தொன்பதே. g ககரத்தின் பேதமும், T சகரத்தின் பேதமுமின்றித் தனியொலிகளாகா.
இங்கிலீஷில் 5 வரிகளால் 18 (20, Nesfield) உயிர்ஒலிகளைக் குறிப்பிக்கின்றனர். ஓரொலிக்குப் பல வரியும், ஒரு வரிக்குப் பல வொலியுமுள்ளன. c.g x (ks) w என்பன மிகை வரிகள். ‡(ng), õ(sh), j(th), zh என்னும் ஒலிகளைக் குறிக்கத் தனி வரியில்லை. இணை வரி (digraph) களே.
அரபி மொழியில் ஏ, ய என்னும் ஈரொலிகட்கு ஒரே வரியும் ஒ, வ என்னும் ஈரொலிகட்கு ஒரே வரியும் உள்ளன.
தமிழில் ஒரு வரி பலவொலிப் பேதங்களைக் குறிப்பினும் அப் பேதங்கள் இடமும் சார்பும்பற்றி இயற்கையாலேயே தோன்றுவ தால் வேண்டாத வரிகளைப் பெருக்கி நம்மை வருத்தியிலர் நம் முன்னோர்.
இனி, இசை விளி புலம்பல் ஆதியில், எழுத்துகள் எத்துணையும் நீண்டொலிப்பதைக் குறிக்கத் தமிழில் இருவகை யளபெடை களுள. பிற மொழிகட் கிவையில்லை. வடமொழியில் உயிரள பெடையே யுண்டு : ஒற்றளபெடையில்லை.
தமிழில் வரிகள் எளிதாய் விளங்குமாறு வெவ்வேறு வடிவா யுள்ளன. ஔ என்பதிலுள்ளள வடிவைச் சிறிதாயெழுதாதது அச்சு வார்ப்பார் குற்றமேயன்றி எழுத்தாசிரியர் குற்றமன்று. தெலுங்கு, அரபி, சமகிருதம் முதலிய மொழிகளில் மாணவர் மயங்கு மாறு பல வரிகள் ஏறத்தாழ ஒரேவடிவாயுள்ளன.
தமிழ்வரிகள் இங்கிலீஷ் வரிகள்போல மிக நுண்ணிய (Diamond, Brilliant) வடிவிலு மெழுதப்படும். சமற்கிருதம், அரபி, தெலுங்கு முதலியவற்றின் வரிகள் அத்துணை நுணுக்கியெழுத இடந்தரா. இதனாலேயே சமற்கிருத வெழுத்துகளைக் கூட்டெழுத்துக் (சம்யுக்தாக்ஷரம்) களாக எழுதுவர்.
இனி, உயிரொலியும் மெய்யொலியும் உயிரும் மெய்யும் (life and body) கூடிய உயிர்மெய் (பிராணி) போல ஒன்றி ஒலிப்பது உயிர்மெய் வரிகளாற் குறிக்கப்பட்டது. உயிர், மெய், உயிர்மெய் முதலிய குறியீடுகள் தமிழரின் தத்துவவறிவை யுணர்த்தும். உயிர்மெய் வரிகளால் ஒலி நூலறிவும் வரிச்சுருக்கமும் பயனாம்.
தமிழ் அரிவரியில் உயிர் முன்னும் மெய் பின்னும் ஆய்தம் இடை யும், உயிருள் குறில் முன்னும் நெடில் பின்னும், மெய்யுள் வலி முன்னும் மெலி பின்னும் இடை இடையும் வைக்கப்பட்டன.
உயிர்மெய் வரியும் எழுத்து முறையும் தமிழுக்கே சிறப்பாகும். இந்திய மொழிகட்கெல்லாம் இவை பிற்காலத்தே தமிழைப் பின்பற்றியேற்பட்டன. அரபி, ஹீப்ரு முதலிய சேமியக் (Semitic) கவைமொழிகள் எல்லாவற்றிற்கும், சமற்கிருத மொழிந்த ஆரியக் கவைமொழிகள் எல்லாவற்றிற்கும் இவையில்லை. எழுத்துகள் இங்கிலீஷிற் போல உயிரும் மெய்யும் வேறுவேறு அடுத்தடுத் தெழுதப்படுவதுடன், அரிவரியில் உயிரும் மெய்யும் முறையின்றி மயங்கிக் கிடக்கும். ஆரியமும் சேமியமுமாகிய மேலை மொழி கட்கெல்லாம் உயிர்மெய் வடிவும், எழுத்து முறையும் இல்லா திருக்கவும், சமற்கிருதத்திற்கு மட்டும் அவை எங்ஙன மிருந்திருத் தல் கூடும்? சமற்கிருதத்திற்கு அவை இருந்தனவெனின், அதன் இனமாகிய செருமன், டச்சு, கிரேக்கு, இலத்தீன் முதலிய மொழி கட்கும், அவற்றை அடுத்து வழங்கும் சேமிய மொழிகட்கும் ஏன் அவையில்லை? வடமொழி ஆரியர் இந்தியாவிற்கு வந்தது கி.மு. 3000. அவர் வருகைக்கு முன்னரே தமிழில் எழுத்திருந்தது. அவ் வெழுத்துகள் உயிர்மெய் நீங்கலாக 31.
ஒலிமுறையினும் சொன்முறையினும் தமிழுக்கு அடுத்துள்ள கிரேக்க, இலத்தீன் மொழிகளில் முறையே எழுத்துகள் 24, 25; வடமொழியில் 48. இலத்தீன் எழுத்துகள் 24 என்றும், 23 என்றும் கணக்கிடுவதுமுண்டு. தமிழிலில்லாத சில செயற்கை யொலிகள் இலத்தீன், கிரேக்கு மொழிகளிலுள. ஆனால், அவற்றிற் பலவற் றிற்குத் தனி வரிகள் இல்லை. B, G, முதலிய தொனிப்பொலிகட்குத் தனி வரியுள. bh, gh முதலிய மூச்சொலி சேர்ந்த தொனிப்பொலி கட்குத் தனிவரியில்லை. சமற்கிருதத்தில் அவற்றிற்கெல்லாம் தனிவரி யுண்டு. அதோடு ஞ, ண முதலிய தமிழ் எழுத்துகளும் சேர்க்கப்பட்டுள. மேலை மொழிகட்கும் தமிழுக்குமுள்ள எழுத்துகளிற் பெரும்பாலனவற்றிற்குத் தனிவரியமைத்து வட மொழியெழுத்துகளைப் பெருக்கிக் காட்டினர் வடமொழி வாணர். க, ச, ட, த, ப என்று தமிழ்முறையில் வல்லின மெய் யெழுத்துகளிருப்பதும், k, kh, g, gh என ஒவ்வொரு வல்லின மெய்யும் தொனிப்பதும், தொனியாததும், மூச்சொலி சேர்ந்ததும் சேராததுமாக நந்நான்காக உறழப்பட்டி ருப்பதும், சமற்கிருதத் தின் செயற்கையான எழுத்துப் பெருக்கைக் காட்டும்.
சமற்கிருதம், கிரேக்க இலத்தீன் மொழிகளின் திரிபு அல்லது வளர்ச்சி யென்பதற்குப் பல ஆதாரங்களுள. கிரேக்க இலத்தீன் மொழிகள் ஆரிய மொழிகளில் மிகப் பழைமையானவை. கிரேக்க இலத்தீன் எழுத்துகளினும் சமற்கிருத எழுத்துகள் மிகுதி. கிரேக்க இலத்தீனிலுள்ள பல சொற்கள் சமற்கிருதத்தில் மிகத் திரிந்துள்ளன. சமற்கிருதம் என்னும் பெயருக்கே நன்றாகச் செய்யப்பட்டது என்பது பொருள். உலகத்திலுள்ள மொழிகள் எல்லாவற்றிலும் எழுத்துப் பெருக்கமும் செயற்கை யொலிப் பெருக்கமுள்ளது சமற்கிருதமொன்றே. அதனானேயே அது வழக்கற் றொழிந்தது.
வடமொழியெழுத்துகளை 48 ஆகப் பெருக்கியிருப்பினும், ஒலி முறைப்படி பார்ப்பின், அவற்றிற் புணரொலிகள் அல்லது கூட்டெழுத்துகள் பலவாகும்.
ரு, லு என்பவை குற்றியலுகரம் சேர்ந்த ரகர லகரங்களாகும். ரூ என்பது ரு என்பதன் நீட்டம். அம் என்பது அம் என்னும் அசை; அகர உயிரும் மகரமெய்யும் சேர்ந்தது. இவை உயிர்மெய் களும் அசையுமாகவிருந்தும் உயிரெழுத்துகளிற் சேர்க்கப்பட் டிருக்கின்றன. எ, ஒ என்ற உயிர்கள் வடமொழிக்கில்லாதது ஒரு பெருங் குறையாகும்.
மெய்யெழுத்துகளில் ஐ வருக்கத்தில் h சேர்ந்த எழுத்துக ளெல்லாம் இரட்டை யெழுத்துகளாகும். சந்தியக்ஷரங்கள் சில தனி யெழுத்துகள் போற் காட்டப்படும். இதனால் வடமொழி யெழுத்துப் பெருக்கினால் ஒரு சிறப்புமில்லை யென்க.
வடமொழி ஆரியர் இந்தியாவிற்கு வந்த பின்னரே உயிர்மெய் வரியும் எழுத்துமுறையும் வடமொழிக்கு ஏற்பட்டன. வடமொழி வரிகள் தென்மொழி வரிகளின் திரிபே என்பது இருமொழி வரிகளையும் ஒப்பு நோக்குவார்க்கு இனிது புலனாம். வடமொழி யரிவரி யேற்பட்டபின் அதையொட்டி அதன் கிளைமொழி கட்கும் பின்பு தமிழ்க் கிளைமொழிகட்கும் அரிவரிகள் ஏற் பட்டன. இதனால் பெர்சியன் அரபி வரிகளைக் கொண்ட இந்துதானி யொழிந்த ஏனை யிந்திய மொழிகட்கெல்லாம் உயிர்மெய்வரியும் எழுத்துமுறையும் ஏற்பட்டுள.
ஆதியில் ஏனைய மொழிகட்கெல்லா மில்லாது உயிர்மெய் வரிகள் தமிழுக் கிருந்ததினாலேயே, அதன் அரிவரி நீண்டு நெடுங் கணக்கெனப்பட்டது. ஏற்கெனவே நெடுங்கணக் காயிருக்கும் அரிவரியை (செந்தமிழ்ப் புரவலர் உமாமகேசுவரம் பிள்ளை யவர்கள் கூறியபடி) இன்னும் நெடுங்கணக்காக்க நினைப்பது என்னே பேதைமை!
இனி, ஒரு மொழிக்கு நிரம்பின அரிவரியிருப்பினும், பிறமொழிச் சொற்களை அதில் மொழிபெயர்க்கப் போதிய சொற்களுளவா என்று பார்த்தல் வேண்டும். இலவெனின் பிறமொழிச் சொற் களையும் பிறமொழி யெழுத்துகளையும் அதிற் புதிதாய்ச் சேர்க்க இடமுண்டு. தமிழில் எல்லாப் பொருள்களையும் வெளியிடத் தக்க எண்ணிறந்த சொற்களுள்ளன. ஆதலின் பிறமொழிச் சொற்களையேனும் எழுத்துகளையேனும் புதிதாய்ச் சேர்க்க எட்டுணையும் இடமின்று. பொருள்களின் சிறப்புப் பெயர் (Proper Name) களே எழுத்துப் பெயர்ப்பிற்கும் (Transliteration) தற்பவத்திற்கும் இடமாகும். இதற்குப் பிறமொழி யெழுத்துகள் வேண்டுவவல்ல. தமிழில் இயன்றதுணை எழுதல் தகும். ஏதேனுங் குறையிருப்பின் அது எல்லா மொழிகட்கும் பொதுவாகும். இதற்கென்றே தமிழிற் புத்தெழுத்துகளைச் சேர்ப்பின் தமிழின் தூய்மையும் இயல்பும் எளிமையும் இனிமையும் கெடும். அங்ஙனம் தமிழைக் கெடுத்து வழங்குவதினும். அதை விட்டுவிட்டு அயன் மொழியை வழங்குவதே சாலச் சிறந்ததாம். அதனாற் புத்தெழுத்து களைத் தமிழிற் புகுத்தவேண்டும் என்னும் பொருந்தாக் கூற்றைப் புறத்தே விடுக்க. - செந்தமிழ்ச் செல்வி நளி 1934.
நெயவுத் தொழில்
நூலும் நெயவும் பற்றிய சொற்கள் அறிவு நூலையும் செய்யுட் பாவையும் குறிக்க, வருதலால். நெயவுத் தொழிலுக்கும் செய்யுள் தொழிலுக்கும் யாதேனும் ஒப்புமையுண்மை பெறப்படும்.
முதலாவது இருவகை நூலையும் நோக்கின் அவற்றுக்குப் பொதுவான நுண்மை நீட்சி நேர்மை என்னும் மூவியல்புகள் புலனாகும். பஞ்சினால் நெயவு நூலிழைப்பது போலச் சொல்லால் அறிவு நூலிழைத்தல் அல்லது சிலந்தி பட்டுப் பூச்சி முதலிய வற்றின் உடம்பினின்று வெளிவரும் நெயவு நூலைப் போலப் புலவனின் உள்ளத் தினின்று அறிவு நூல் வெளிப்படுதல் மற்றுமொரு பொதுத் தன்மையாகும்.
இரண்டாவது இருவகைப் பாவையும் நோக்கின் அவற்றிற்குப் பொதுவான நீட்சி பரப்பு இசைப்பு ஆகிய மூவியல்புகள் புலனாகும். சொல் : 7. 8.
நெருஞ்சிப் பழம்
பெருநெருஞ்சி முதிர்ந்த நிலையில் நெல்லிக்கனி போலப் பசு மஞ்சள் நிறம் கொள்ளுமாதலின் பழம் எனப்படும். (தி.ம. 1120)
நெருப்புப் பற்றிய சுள் அடிச் சொற்கள்
உ - உல் - உல, உலத்தல் = எரிதல். காய்தல், உல-உலவை = காய்ந்த மரக்கிளை. இலை தீந்த வுலவையால் (கலித். 11).
உல - உலர். உலர்தல் = காய்தல்.
உலர் - உலறு. உலறுதல் = காய்தல், சினத்தல், வற்றுதல்.
உல - உலை = 1. நெருப்புள்ள அடுப்பு. 2. கொல்லன் அடுப்பு. 3. சோறு சமைக்கக் கொதிக்க வைக்கும் நீர்.
உல் - அல் - அன்று. அன்றுதல் = எரிதல், சினத்தல், பகைத்தல்.
அல் - அன் - அனல் = நெருப்பு. அனலுதல் = எரிதல்.
அனல் - அனலி = 1. நெருப்பு. 2. கதிரவன்.
அனல் - அனலம் = நெருப்பு. அனலம் - வ. அநல.
அனலம் - அனலன் = நெருப்புத் தெய்வம்.
உல் - உள் - ஒள் - ஒண்மை = 1. நெருப்பின் தன்மையான விளக்கம். 2. உள்ளொளி, நல்லறிவு. 3. இயற்கையழகு. 4. நன்மை.
ஒள் - ஒளி = 1. நெருப்பின் விளக்கம். 2. ஒளிபோல் விளங்கும் புகழ். 3. உள்ளொளி.
ஒளி - ஒளிர். ஒளிர்தல் = விளங்குதல்.
ஒளிர் - ஒளிறு. ஒளிறுதல் = விளங்குதல்.
ஒள் - ஒள்ளிய = ஒளியுள்ள, அறிவு மிக்க, நல்ல, அழகிய.
ஒள்ளியன் = அறிவுடையோன். ஒள்ளியோன் = விளக்கம் மிக்க வெள்ளிக்கோள்.
ஒள் = 1. ஒளியுள்ள. 2. அழகிய.
ஒள் + தொடி = ஒண்டொடி = விளங்கும் வளையலணிந்த பெண். ஒள் + நுதல் = ஒண்ணுதல் = விளங்கும் நெற்றியுடைய பெண்.
ஒள் + பு = ஒண்பு - ஒட்பு - ஒட்பம் = அறிவு. கல்லாதா னொட்பங் கழியநன் றாயினும் (குறள். 404).
உள் - அள் - அழ - அழல் = 1. நெருப்பு. 2. வெப்பம் 3. எரிவு. 4. நரகம். 5. துளங்கொளி (கேட்டை). 6. செவ்வாய். 7. சினம்.
அழலவன் = 1. தீத்தெய்வம். 2. கதிரவன். 3. செவ்வாய்.
அழலுதல் = 1. எரிதல். 2. விளங்குதல். 3. காந்துதல். 4. சினத்தல்.
அழல் - அழற்று (பி.வி.). அழற்றுதல் = எரித்தல், வெம்மை செய்தல்.
அழல் - அழறு - அளறு = நரகம்.
அண்ணாத்தல் செய்யா தளறு என்னுங் குறளடியில் (255) `அளறு என்னும் சொல் ஏட்டுப் பிழையாகவும் இருக்கலாம்.
பூரியர்கள் ஆழும் அளறு என்னுங் குறளடி (919) சேற்று வடி வான நரகவகை யென்று கொள்ள இடந்தரினும், நரகம் நெருப் புலகமென்றே பொதுவாகக் கொள்ளப்படுவதனாலும், அழல், எரி முதலிய பெயர்கள் அதற்குண்மையாலும், ஊற்றளவிலேயே நெருப்புத் துன்புறுத்துவதனாலும், அழறு என்னுஞ் சொல்லே அளறு என மருவிற்றென்றோ, ஏட்டுப் பிழையாக நேர்ந்த தென்றோ, கொள்வது பொருத்தமானதே.
அழல் - அழலி = நெருப்பு. அழலித்தல் = எரிச்சல்.
அழல் - அழலை = தொண்டைக் கரகரப்பு.
அழல் - அழன் - அழனம் = 1. நெருப்பு, 2. வெம்மை.
அழனம்மை நீக்குவிக்கும் என்னும் தேவார (1225 : 4) அடியி லுள்ள அழனம்மை என்னுந் தொடரை, அழன் + நம்மை என்றும் பிரிக்கலாம்.
அழன் - அழனி ஒ.நோ : அழல் - அழலி, களன் - கழனி.
அழ - அக - அகை. அகைதல் = எரிதல். அகையெரி யானாது (கலித். 139 : 26). ஒ.நோ : மழ - மக.
அழனி - அகனி - வ. அக்நி (agni) -L. ignis. இதற்கு யாசுகர் (Yaskar) தம் நிருத்தத்திற் (Nirukta) கூறியிருக்கும் வேர்ப் பொருட் காரணங்கள் முற்றும் பொருந்தாப் பொய்த்தல் புதுச்சேரி அரவிந்தர் தவநிலைய இருக்கு வேதப் பதிப்பு அகோ (ago) என்று மூலங்காட்டுவதும், முற்றும் தவறாம். இது சமற்கிருதத்தில் அஜ் என்றே நிற்கும்.
உள் - உண் - உண்ணம் = வெப்பம். உண்ண வண்ணத் தெளிநஞ்ச முண்டு (தேவா. 510 : 6).
உண்ணம் - வ. உஷ்ண. மராத். ஊன்.
உண் - உண. உணத்தல் = காய்தல். மிளகாய் உணந்துவிட்டது (உ.வ.). உணந்த மிளகாய் (உ.வ.). = மிளகாய் வற்றல்.
உண - உணத்து (பி.வி.) உணத்துதல் = 1. காயப்போடுதல். நெல்லை உணத்தினார். (உ.வ.). 2. உடம்பை மெலிவித்தல் அல்லது வற்றவைத்தல். மெய்யுணத்தலும் (தைலவ. தைலி. 110).
உண - உணங்கு. உணங்குதல் = நெல் முதலியன காய்தல் உணங் குணாக் கவரும் (பட்டினப். 22). தினைவிளைத்தார் முற்றந் தினை யுணங்கும் (தமிழ்நா. 154.) 2. மெலிதல். ஊடலுணங்க விடுவாரோடு (குறள். 1310). 3. வாடுதல். உணங்கிய சிந்தையீர் (கந்தபு. மோன. 21). 4. சுருங்குதல். உணங்கரும் புகழ் (காஞ்சிப்பு நாட்டுப். 1).
உணங்கு - உணங்கல் = 1. உலர்த்திய கூலம். உணங்கல் கெடக் கழுதை யுதடாட்டங்கண்டென் பயன் (திவ். திருவாய்) 4 : 6 : 7). 2. வற்றல். வெள்ளென் புணங்கலும் (மனி. 16 : 67). 3. உலர்ந்த பூ. (பிங்.)
உணங்கு - உணக்கு (பி.வி.) உணக்குதல் = உலர்த்துதல். தொடிப்புழுதி கஃசா வுணக்கின் (குறள். 1037).
உணக்கு - உணக்கம் = வாட்டம்.
ம. உணக்கம், க. ஒணகிலு (g), து. ஒணகெலு.
உணக்கு = வாட்டம். உணக்கிலாத தோர் வித்து (திருவாச. 30 : 1).
உல் - உர் - உரு. உருத்தல் = 1. அழலுதல். ஆக முருப்ப நூறி (புறநா. 25 : 10). 2. பெருஞ்சினங் கொள்ளுதல், ஒரு பகலெல்லா முருத்தெழுந்து (கலித் 39 : 23).
உரு - உருத்திரம் = பெருஞ்சினம். உருத்திரம் - வ. ருத்ர (d). திரம் ஒரு தொழிற்பண்பீறு. ஒ.நோ : மாத்தல் = அளத்தல். மா+திரம் = மாத்திரம் (அளவு). அவன் எனக்கு எம்மாத்திரம்? என்னும் வழக்கை நோக்குக. மானம் (மா+அனம்) என்னும் அளவுப் பொதுப்பெயரையும், மா, அரைமா, (ஒருமா), இருமா, மாகாணி முதலிய அளவுச் சிறப்புப் பெயர்களையும், மேலை வ. ஆ. மாவட்டத்தில் படி என்னும் முகத்தலளவைப் பெயர் மானம் என்று வழங்குதலையும் நோக்குக. மாத்தல் என்னும் வினைச் சொல் பண்டே வழக்கிறந்தது. திரம் - திரை. மா +திரை = மாத்திரை = அளவு. எழுத்தொலிக்குங் கால அளவு, உண்ணும் மருந்தளவு.
சினம் தீயொத்தலால், தீ பற்றிய சொற்களெல்லாம் சினத்தையுங் குறிக்கும்.
உருத்திரம் - வ. ரௌத்ர (raudra) = வெகுளி.
ஒ.நோ : E. wrath, n. anger O.E. wrreththu, AS and ON. wraedo. ME. wrathe.
E. wroth, adj. angry. OE wrath, OS. wreth, OHG - reid, ON reithier.
கீற்றும் (Skeat) கிளேனும் (Klein) இச் சொற்கள் reid (twristed) என்னும் மூலத்தினின்று திரிக்கின்றனர். அது தென்சொல்லை அறியாமையாலும் இருக்கலாம்.
உரு - உரும் - உருமம் = 1. வெப்பம். 2. வெப்பம் மிக்க நண்பகல்.
உரும் - உருமி. உருமித்தல் = வெப்பமாதல், புழுங்குதல்.
உரும் - உரும்பு = 1. கொதிப்பு. 2. வெகுளி. உரும்பில் கூற்றத் தன்னநின் (பதிற்றுப். 26 : 13).
உரும்பு - உருப்பு = 1. வெப்பம். கனமிசை யுருப்பிறக் கனைதுளி சிதறென (கலித். 16 : 7). 2. சினத்தீ. உருப்பற நிரப்பினை யாதலின் (பதிற்றுப். 50 : 16). 3. கொடுமை. உருப்பில் சுற்றமோடு (பெரும்பாண். 447).
உருப்பு - உருப்பம் = 1. வெப்பம். கனலும் ….. உருப்ப மெழ (அரிச். பு. விவா. 104). 2. சினம்.
உரு - உருகு. உருகுதல் = 1. வெப்பத்தால் இளகுதல், 2. மனம் நெகிழ்தல்.
உருகு - உருக்கம் = 1. இளக்கம். 2. மனநெகிழ்ச்சி, இரக்கம்.
உருகு - உருக்கு (பி.வி.). உருக்கு = உருக்கிய இரும்பு.
உருக்குதல் = 1. இளக்குதல் 2. வாட்டுதல், மெலிவித்தல்.
உருக்கு - உருக்கன் = உடம்பை வாட்டும் நோய்.
உருக்கு - உருக்கி = 1. மாழைவகைகளை உருக்குபவன்.
2. உடம்பை உருக்கும் நோய். உருக்காங்கல் = உருகிப் போன செங்கல். உல் - கல் - சுல்லி = 1. அடுப்பு. (திவா.). 2. மடைப்பள்ளி. (இலக். அக) சுல்லி - வ. சுல்லீ (c).
சுல் - சுள். சுள்ளெனல் = வெயில் காய்தற் குறிப்பு, உறைத்தற் குறிப்பு. சுள் = கருவாடு (காய்ந்தமீன்). சுள்ளினைக் கறித்தனர் (கந்தபு. அசமுகிநகர். 18).
சுள் - சுள்ளம் = சினம் (W.).
சுள்ளம் - சுள்ளகம் - சுள்ளக்கம் = 1. சினம் (யாழ். அக) 2. வேர்க்குரு. (சங். அக.) சுள்ளக்கம் - வ. க்ஷுல்லக.
சுள்ளக்காய் = மிளகாய். உறைப்புச் சுவை சுடுதல் போன்றிருத் தலின், சுடுதற் கருத்தினின்று உறைப்புக் கருத்துத் தோன்றும்.
ஒ.நோ : E. hot = of high temperature, pungent.
சுள் - சுள்ளி = காய்ந்த குச்சு. சுள் - சுள்ளை = செங்கல் சுடுமிடம். சுள்ளை - சூளை.
சுள் - சுளுந்து = தீவட்டி, பந்தம் எரிக்கும் மரக்கழி.
சுள் - சுள்கு - சுட்கு - சுட்குதல் = காய்தல், வற்றுதல். (W)
ஒ.நோ : வெள்கு - வெட்கு - வெட்கம்.
சுட்கு - சுட்கம் = 1. வறட்சி. 2. வறண்டது. 3. உடம்பை வாட்டும் ஒரு நோய். 4. பணம் முதலிய பொருட்குறைவு. 5. கஞ்சத்தனம். சுட்கஞ் செய்யாதே. (உ.வ.).
சுட்க தருக்கம் = வீண் சொற்போர்.
சுட்கு - சுக்கு. சுக்குதல் = உலர்தல். (நாஞ்).
சுக்கு = காய்ந்த இஞ்சி. சுள் - வ. சுஷ் (to dry). ஒ.நோ : உள்(ஒள்)- வ. உஷ் (to burn) - உஷா = ஒளி தோன்றும் விடியற்காலம்.
சுக்கு - வ. சுஷ்க.
சுக்கு - சுக்கான் = 1. சுண்ணாம்புக்கல். 2. உருக்குச் செங்கல்.
சுக்கு = காய்ந்தது, வறண்டது, பயனற்றது.
சுட்கம் - சுக்கம் = 1. வறட்சி, 2. கஞ்சத்தனம். சுக்கஞ்செட்டி = கடுஞ் செட்டுள்ளவன்.
சுள் - சுள்பு - சுட்பு - சுப்பு - சுப்பி = சுள்ளி. சுள்ளிசுப்பி என்பது மரபிணைச்சொல்.
சுப்பெனல் = ஈரமுள்ளது காய்தல் அல்லது வறண்டநிலம் நீரை உள்ளிழுத்தற் குறிப்பு.
சுள் - சுண் - சுண்ணம் = 1. காளவாயிற் சுட்ட கல். 2. அக் கல்லை நீற்றின நீறு. 3. நீறு. 4. நறும்பொடி. 5. பூந்தாது.
சுண்ணம் - சுண்ணம்பு - சுண்ணாம்பு = 1. சுட்ட சுண்ணாம்புக் கல். 2. நீற்றின சுண்ணாம்பு.
சுண்ணக்கல் = சுக்கான்கல். (யாழ். அக) = சுண்ணம் - சுண்ணகம். விழாநாட்களில் மக்கள் மேல்தூவும் நறும்பொடி.
சுள் - சுண்டு. சுண்டுதல் = (செ. கு.வி.) 1. நீர் வற்றுதல் 2. வாடுதல், சுருங்குதல், அச்செய்தி கேட்டவுடன் அவன் முகஞ் சுண்டிப் போயிற்று. (உ.வ.) - (செ. குன்றாவி) நீர் வற்றக் காய்ச்சுதல் அல்லது அவித்தல். இன்றைக்குக் கடலை சுண்டினார்கள். (உ.வ.).
சுண்டு-சுண்டல் = 1. நீர் முற்றும் வற்ற அவித்த கடலைப் பயறு. 2. சுண்டற்கறி.
சுண்டு - சுண்டான் = சிறு பிள்ளைகள் விளையாட்டாகக் கொளுத்தும் கொள்ளிக்குச்சு.
சுண்டு - சுண்டி = 1. சுக்கு (காய்ந்த இஞ்சி) 2. தொட்டாற் சுருங்கி, தொட்டாற் சிணுங்கி, தொட்டால்வாடி என்னும் பூண்டு.
சுண்டி (சுக்கு) - வ. சுண்டு (th.) இது வடமொழியிற் சுண்ட்டி என வலித் தொலிக்கும்.
சுண்டி - சுண்டில் = தொட்டாற்சுருங்கி. வாடினது சுருங்கும்.
சுள் - சுடு - சுடுவல் = வெதும்பும் அரத்தம். (திவா.)
சுடுவல் - சுடுவன் = வெதும்பும் அரத்தம். (பிங்.).
சுடுவான் = மரக்கலச் சமையலறை.
சுடு - சுடல் - சுடலை = சுடுகாடு.
சுடு - சுடர் - சுடரோன் (சுடரவன்) = கதிரவன்.
சுடு - சூடு.
சுல் - சுர் - சுரீர் எனல் = 1. நெருப்புச்சுடும் குறிப்பு. 2. தழலிற்படும் நீர் சுண்டும் குறிப்பு.
சுர் - சுரம் = 1. காய்ச்சல் 2. சுடும் பாலைநிலம். சுரமென மொழியினும் (தொல். பொருள். 216).
சுரம் (காய்ச்சல்) - வ. ஜ்வர.
சுர் - சூர் = 1. நெருப்பு. 2. கதிரவன். சூர்புக வரியது…. தொன்மதில் (கம்பரா. கவந்த. 21).
சூர் - சூரன் = 1. நெருப்பு. (பிங்.) 2. கதிரவன். (பிங்.) காதற் சூரனை யனைய சூரா (பாரத. பதினேழாம். 49). சூரன் - வ. ஸூர (sura) - ஸூர்ய (Surya). சூர் என்னும் சொல்லிற்கு, அச்சம், கொடுமை, உறைப்பு, மிளகு முதலிய பொருள்களிருப்பதும், அதைத் தென்சொல்லெனத் தெரிவிக்கும்.
சுள் (சுல் - சொல்) - L. sol, sup, Icel. sol, OE., ON, sol Dan., Swed., sol, E. sol, Goth. soule, Lith, soule, Lett, soule, Ir, su#l, Rus, Owf. solntse, W. haul (for saul), Co. heuul, hau, Bret, heol, sun.
girasol, parasol, rosolio, turnsole என்னும் கூட்டுச் சொற்களின் இரண்டாம் உறுப்புகள், கதிரவனைக் குறிப்பனவே.
solar என்பது sol என்பதன் குறிப்புப் பெயரெச்ச (adj) வடிவம்.
சகர (ஸகர) முதல் ஹகர முதலாகத் திரிதல் இயல்பே. சிந்து - பார. ஹிந்து, L. sex (E. six) - Gk. hex.
(சுல் - சுன். சொன் - சன்). E. sun, ME. sonne, OE. sunne, ON.,OS.,OHG. sunna, MDU. sonne, Du. zon MHG., G. sonne, Goth. sunna = sun.
இவற்றிற்கெல்லாம் ஸூ (su) ஸௌ (sau) என்பன உய்த்துணர்வு மூலமாகக் காட்டப்படுகின்றன. மேலையாரியர் தமிழின் தொன்மை முன்மை தென்மைத் தன்மைகளை அறியாமையால் இங்ஙனங் கூறுகின்றனர். அல்லது கொள்கின்றனர். இவற்றிற் கெல்லாம் சுல் என்னும் தென்சொல்லே அடிமூலம்.
சுல் - சொல் = நெருப்புப் போல் அல்லது பொன் போல் விளங்கித் தோன்றும் நெல்.
சடைச் செந்நெல் பொன்விளைக்குந் தன்னாடு என்று நளவெண்பா (சுயம்வர. 68) கூறுதலையும், பொன் விளைந்த களத்தூர் என்னும் வழக்கையும் நோக்குக. நெல் என்னும் பெயரும் இப் பொருட் காரணங் கொண்டதே. நில் - நில - நிலா - நிலவு. நிலத்தல் = ஒளிர்தல், விளங்குதல். நில் - நெல்.
சொல் - சொலி - சொலித்தல் = 1. எரிதல். நாப்பண் அழல் சொலிப்பதாக வுன்னி (பிரபோத. 44 : 15,) 2. ஒளிர்தல். மானமென் றுரைப்ப தெழுந்துமேற் சொலித்து வருவது போன்றும் (பிரபோத. 11 : 1).
சொலி - ஜொலி - வ. ஜ்வலி என்று திரிந்துள்ளது. ஜ்வல் என்பதை மூலமாகக் காட்டுவர் வடமொழியாளர். இது செயற்கை மூலம்.
சொலித்தல் வினைச்சொல். ஆளப்பட்ட முன்னூல்கள் வழக்கிறந் தமையால், பின்னூலினின்று மேற்கொள் காட்டப்பட்டது.
சொல் - சொன் - சொன்னம் = விளங்கும் நிறப்பொன். (திவா.) சொன்னதானப் பயனெனச் சொல்லுவர். (கம்பரா. சிறப்பு.).
சொன்னம் - வ. ஸுவர்ண = நன்னிறமுள்ளது, தங்கம். இது பொருந்தப் பொய்த்தலான சொற்றிரிப்பு.
இனி, சூர் என்பதையே cu#r என்று திரிந்து, சூர்ண (cu#rna) என்னுஞ் சொல்லைத் தோற்றுவித்துள்ளனர்.
சூர் (cu#r) = எரி (to burn) சூர்ண - த. சூரணம் = நீறு, பொடி. சூரணம் - சூரணி. சூரணித்தல் = நீற்றுதல், பொடி செய்தல். ஒ.நோ : சுள் - சுள்ளம் - சுண்ணம். சுள்ளல் = எரிதல் (வழக்கிறந்த வினைச்சொல்).
இனி, சுள் என்னும் அடிபோன்றே, குள், துள், நுள், புள். முள், என்னும் வழியடிகளும் உள் என்னும் மூல அடியினின்று திரிந்து, நெருப்புப் பற்றிய பல்வேறு சொற்களைப் பிறப்பிக்கும்.
நெல்வகை
செந்நெல் வெண்ணெல் கார்நெல் என்றும், சம்பா, மட்டை, கார் என்றும் நெல்லில் பலவகைகள் இருப்பதுடன், சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக் கொம்பன் சம்பா, குண்டுச் சம்பா, குதிரைவாலிச்சம்பா சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன. சொல். 74.
நேயம்
நேயம் - நேக
நெள் - நெய் - நே = 1. அன்பு. 2. ஈரம். நேஎ நெஞ்சின் (புறம். 3).
நே - நேயம் = 1. நெய், 2. எண்ணெய். 3. அன்பு. நேயத்ததாய் நென்ன லென்னைப் புணர்ந்து (திருக்கோ. 39). 4. கடவுட்பற்று. நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி (திருவாச. 1 : 13). நேயம் - நேசம் - நேசன்.
வடவர் காட்டும் நிஹ் (ஒட்டு) என்னும் மூலம், நெய் என்னும் தென்சொற் றிரிபே. (வ.வ : 192.)
நேர்பாடு
நேர்பாடு என்பது நீதி என்னும் வடசொற்கு நேர்த் தென்சொல். நேர்மை என்பது நேர்பாட்டையும் குறிக்கும் பலபொருள் ஒரு சொல். நேர்பாடு நேர்மையான ஒழுக்கம் கோணே நேர்பாடா யிருந்தான் (பாரத. சூது. 207). (தி.ம. 87.)
நொச்சியார்
நொச்சிமாலை சூடி முற்றுகையிடப்பட்ட நகரைக் காக்கும் மறவரான அகத்தார். குறள். 745.
நொண்டி விளையாட்டு
ஆடிடமும் பொழுதும் ஆடுவாரும் : நொண்டி என்பது, பொட்டலிலும் திறந்த வெளிநிலத்திலும், பெரும்பாலும் சிறுவரும் சிறுபான்மை சிறுமியரும், பகலிலும் நிலவிரவிலும் விளையாடும் விளையாட்டு.
ஆடு கருவி : ஆடுவார் தொகைக்கேற்ப நிலத்திற் கீறப்பட்ட ஒரு பெரு வட்டமே இவ்வாட்டுக் கருவியாம்.
ஆடு முறை : இருவருக்குக் குறையாத சிலரும் பலரும் சமத் தொகையவான இருகட்சிகளாய்ப் பிரிந்து கொள்ளல் வேண்டும். இருவர்க்கு மேற்பட்டவராயின் உத்திகட்டிப் பிரிந்து கொள்வர்.
மரபான முறைகளுள் ஒன்றன்படி துணிந்துகொண்டு ஒரு கட்சியார் வட்டத்திற்குள்ளிறங்குவர். மறு கட்சியார் வெளி நின்றுகொண்டு, ஒவ்வொருவராய் ஒவ்வொருமுறை வட்டத்திற் குள் நொண்டியடித்துச் சென்று, உள் நிற்பாருள் ஒருவரையோ பலரையோ எல்லாரையுமோ தொட முயல்வர். தொடப்பட்டவர் உடனே வெளிவந்துவிடல் வேண்டும். உள்நிற்பார் அனைவரும், தம்மை நொண்டியடிப்பவர் தொடாதவாறு, வட்டத்திற்குள் அங்குமிங்கும் ஓடித் திரிவர். அங்ஙனம் ஓடும்போது கோட்டை மிதிப்பினும், கோட்டிற்கு வெளியே கால் வைப்பினும், உடனே வெளிவந்துவிடல் வேண்டும். நொண்டியடிப்பார் களைத்துப் போயின் கோட்டிற்கு வெளியே சென்று காலூன்றல் வேண்டும். ஒருமுறை வெளியே சென்றபின், காலூன்றாக்காலும், மீண்டும் உள்ளே வரல் கூடாது. நொண்டியடிப்பவர் வட்டத்திற்குள்ளும் கோட்டின்மேலும் காலூன்றினும், கோட்டை மிதிக்கினும், அவர் தொலைவதோடு, அவராலும் (அவர் பிந்தினவராயின்) அவருக்கு முந்தினவராலும் தொடப்பட்டு வெளியேறியுள்ள அத்துணைப்பேரும் உடனே உள்ளே வந்துவிடுவர். மீண்டும் அவரைத் தொடுதல் வேண்டும். ஒருவர் நொண்டியடித்து முடிந்த பின், இன்னொருவர் நொண்டியடிப்பர். வெளிநிற்கும் கட்சி யாருள், முதலிலோ இடையிலோ இறுதியிலோ நொண்டியடிப் பவர் ஒருவரே உள்நிற்பார் எல்லாரையும் தொட்டுவிடுவது முண்டு; இடையிட்டு ஒரேயொருவர் ஒருவரையோ பலரையோ தொடுவதுமுண்டு; ஒரோவொருவர் ஒரேயொருவரைத் தொடு வதுமுண்டு; ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைத் தொடுவது முண்டு; ஒருவரும் ஒருவரையும் தொடாதிருப்பதுமுண்டு. இங்ஙனம், உள் நிற்கும் கட்சியாருள் ஒருவரே வெளியேறியிருத் தலும், சிலரோ பலரோ வெளியேறி யிருத்தலும், அனைவரும் வெளியேறியிருத்தலும், அனைவரும் வெளியேறாதிருத்தலும், ஆகிய நால்வகை நிலைமை ஏற்படக்கூடும்.
வெளிநிற்கும் கட்சியாருள் அனைவரும் நொண்டியடித்து முடிந்தபின், அல்லது உள்நிற்கும் கட்சியாருள் அனைவரும் தொடப்பட்டபின், ஓர் ஆட்டம் முடியும்.
ஆட்ட வெற்றி : உள்நிற்பார் அனைவரும் தொடப்பட்டுவிடின் வெளிநிற் பார்க்கும், அங்ஙனமன்றி ஒருவர் எஞ்சியிருப்பினும் உள் நிற்பார்க்கும், வெற்றியாம்.
ஆட்டத் தொடர்ச்சி : ஒருமுறை யாடியபின், மீண்டும் ஒரு முறையோ பல முறையோ ஆட நேரமும் விருப்பமுமிருப்பின், அங்ஙனஞ் செய்வர். முந்திய ஆட்டத்தில் வென்ற கட்சியாரே பிந்திய ஆட்டத்திலும் உள்நிற்பர். உள்நிற்பதே இனியதாகக் கருதப்படும்.
ஆட்டுத் தோற்றம் : இவ் விளையாட்டு, போர்வினையினின்று தோன்றியதாகும். போர்க்களத்தில் ஒருகால் வெட்டுண்ட மறவன் மறுகாலால் நொண்டியடித்துச் சென்றே, தான் பட்டு வீழுந் துணையும், பகைவரை வெட்டி வீழ்த்துவதுண்டு. இம் மற வினையை நடித்துக்காட்டும் முகமாகவே இவ் விளையாட்டுத் தோன்றிற்று.
குறைத்தலைகள் கூத்தாடுவதும் தலையைக் கையிலேந்தி நிற்பதும் போன்ற மறவினைகளை நோக்கும்போது, ஒரு காற் குறைகள் நொண்டிச் சென்று நூழிலாட்டுவது வியப்பன்று.
கள்வனொருவன் படையிலுள்ள குதிரையொன்றைத் திருட முயன்று கால் தறியுண்டபின் நல்வழிப்பட்ட செய்தியைச் சிந்துச் செய்யுளாற் புனைந்து கூறும் நொண்டி நாடகம் என்னும் நாடக நூல்வகையும் உளது. சீதக்காதி நொண்டி நாடகம் இதற்கோர் எடுத்துக்காட்டாம். இந் நாடகச் செய்தி மேற்கூறிய போர் வினைச் செய்தியின் வேறாம்.
ஆட்டின் பயன் : ஒருகால் நோய்ப்பட்டும் வெட்டுண்டும் நடக்க வியலாதபோது மறுகாலால் நொண்டியடித்து வேண்டுமிடஞ் செல்வதற்கான பயிற்சியை, இவ் விளையாட்டு அளிக்கும்.
நொறு நாட்டியம்
மிக நுட்பமான அவிநயங்களுடன் நடனம் செய்தல் நொறு நாட்டியம் எனப்படும். வேண்டாத நுண்ணிய வினைகளைச் செய்யும் ஒருவனை நொறுநாட்டியம் பிடித்தவன் என்பர். (சொல். 12.)
நோன்புவகை
ஆன்மாவின் தூய்மைக்காக ஓரிரு நோன்பு - வேளை அல்லது நாள் உண்ணாதிருத்தல்; தவம் - ஆன்மாவின் தூய்மைப் பாட்டிற் காகவும் அரும்பொருட் பேற்றிற்காகவும் பல நாள் உண்டி சுருக்கல்; துறவு - உலகப்பற்றை யொழித்துக் காலமெல்லாம் கடுந்தவம் செய்தல். (சொல். 59)
பக்கம்
பக்கம் - பக்ஷ (இ.வே.)
பங்கு - பங்க (bhanga)
பகவன் - பகவன் (bhagavan)
பாகம் - பாக (bhaga) (வ.வ : 193.)
பக்கம் : பகு - பக்கு - பக்கம் - பக்ஷ (வ.). (தி.ம. 746.)
#பகவன் (1)
பகவன் : பகு - பகவு - பகவன் = அனைத்துயிர்க்கும் பகுத்தளித்துக் காப்பவன். பகவன் - பகவன் (வ. bhagavan).
பகு : பகு - பஜ் (வ. bhaj). (தி.ம : 747.)
பகவன் (2)
பகுத்துக் காப்பவன் அல்லது எல்லா வுயிர்கட்கும் படியளப்பவன் (Dispenser) என்ற பொருள்படும் தென்சொல். பகு -பகவு - பகவன்.
பகு என்னும் வினைமுதல் வடமொழியில் பஜ் (bhaj) என்று திரியும். ஒ.நோ : புகு - புஜ் (bhuj), உகு - உஜ். (தி.ம. 36.)
பகவன் (3)
பகம் (ஆறு) என்னுஞ் சொல்லை முதலாகக் கொண்டு பகவன் என்பதற்குச் செல்வம், மறம், புகழ், திரு, ஓதி (ஞானம்) அவாவின்மை என்னும் அறுகுணங்களை யுடையவன் என்று பொருள் கூறுவது பொருந்தாது. (தி.ம. 36.)
பகு - பஜ் (bh) - இ.வே.
பகு - பக்கு = பிளவு, பை. பக்கு - பக்கம் = பகுதி, புறம். ஏட்டுப் புறம், பக்கம் - பக்கல்.
பக்கு - பாக்கு = பகுதி. பாக்கு - பாக்கம் = பட்டினப் பகுதி.
பாக்கு - பாக்கை = பாக்கம், ஊர், நகரப் பகுதி.
பகு - பகல் = நாட்பகுதி, நடுப்பகுதி, பகல் - பால் = வகுப்பு, பிரிவு. பகல் - பகர் = ஒளி.
பகு - பகவு = பிளவு, பகிர்வு. பகவு - பகவன் = பகிர்ந்தளிப்பவன், படியளப்பவன், ஆண்டவன்.
பகு - பகிர்.
பகு - பகுப்பு. பகு - பகுதி - பாதி. பகு - பகை. பகுதி - பஃதி.
பகு - பங்கு - பங்கி = பங்குள்ளது.
பங்கு - பாங்கு = பான்மை. பாங்கு - பாங்கர் = பக்கம்.
பாங்கு - பாங்கன் = பக்கத்திலிருப்பவன், தோழன்.
பகு - பா. பகு - பாகு = பகுதி. பக்கம், பாகன். பாகு - பாகன் = யானைப் பக்கத்திலிருந்து அதை நடத்துபவன்.
பாகு - பாகம். பாகு - பாகி = பாகமுள்ளது.
பாகு - பாகை = பகுதி, வரைப்பகுதி,
பாகு - பாகர் = தேர்ப் பக்கவேர்.
பா - பாது = பொருட் பங்கு. பாதீடு = பங்கீடு.
பா - பாத்தி = பகுதி, பயிரிடும் செய்ப் பகுதி. பாத்தி - பத்தி = பாத்தி, பகுதி, கட்டுரை கடிதம் முதலியவற்றின் தனிப்பகுதி (para).
பத்தி - பந்தி = கூடியிருந்துண்பார் பகுதி, உண்பார் வரிசை.
பகு - வகு - வக்கு = வழிவகை. வக்கு - வாக்கு = பக்கம், திசை
காற்று வாக்கு = காற்றுப் பக்கம் அல்லது திசை.
வகு - வகிர். வகிர்தல் = பிளத்தல். வகிர் - வகிடு = தலைமயிர் உச்சி வகிர்வு.
வகு - வகுதி = வகுப்பு. வகு - வகுப்பு. வகு - வகுந்து = வகுத்த வழி.
வகு - வகை = வேறுபட்ட வகுப்பு, வழிவகை.
வகு - வாகு = பக்கம், திசை. (வ.வ. : 192 - 193).
பகு
புல் = துளை, துளையுள்ளது, உட்டுளையுள்ள நிலைத்திணை.
புறக்கா ழனவே புல்லென மொழிப (தொல். மர. 86.)
புல் - பொல். பொல்லுதல் = துளைத்தல்.
பொல் - பொள். பொள்ளுதல் = துளைத்தல்.
பொள் - பொழு - போழ். போழ்தல் = துளைத்தல், பிளத்தல். பிரிவு படுத்தல்.
பொழு - பொகு. பொகுதல் = துளைபடுதல். பொகுத்தல் = துளைத்தல், ஓட்டை செய்தல். (யாழ். அக.)
ஒ.நோ : தொழு - தொகு.
பொகு - பகு. பகுதல் = பிளவுபடுதல், பிரிவுபடுதல்.
பகுத்தல் = பிளத்தல், பிரிவுபடுத்துதல், பங்கிடுதல், வகைப் படுத்துதல்.
பகுசொல் = முதனிலை ஈறு முதலிய உறுப்புக்களாகப் பகுக்கப்படுஞ் சொல். பகாச்சொல் = பல வுறுப்புக்களாகப் பகுக்கப்படாச் சொல்.
பகுவாய் = 1. பிளந்த வாய். 2. அகன்ற வாய். 3. வாயகன்ற தாழி. 4. பிழா.
பகு -பகுதி = பகுப்பு, பிரிவு, அரசிறை, திறை.
பகுதி - பாதி = இரு சமப் பாகமாகப் பகுக்கப்பட்ட பொருட்பகுதி, அரை.
பாதித்தல் = இரு சமப் பங்காகப் பிரித்தல்.
பகு - வகு. வகுதல் = பிளத்தல், பிளவு படுதல்.
வகுத்தல் = 1. பகுத்தல். 2. கூறுபடுத்துதல். 3. பகிர்தல். 4. இனம் பிரித்தல், வகைப் படுத்துதல். 5. ஏற்படுத்துதல். 6. படைத்தல்.
வகுத்தல் = பிரித்தற் கணக்கு.
வகுத்தான் = ஊழமைத்த இறைவன், ஊழ். வகுத்தான் வகுத்த வகையல்லால் (குறள். 377).
வகு - வகுதி = வகுப்பு. வகுதியின் வசத்தன (கம்பரா. இரணியன். 69).
வகு - வகுந்து = வழி. வகுந்து செல் வருத்தத்து (சிலப். 11 : 167). வழி வகுத்தல் = வழியமைத்தல்.
வகு - வகுப்பு = 1. கூறுபடுத்துகை. 2. வகிடு. 3. இனம் பிரிக்கை.
4. பிரிவு. 5. தடுக்கப்பட்ட அறை. 6. குலம்.
வகு - வகம் = வழி. (யாழ். அக).
வகு - வக்கு = 1. வகை. 2. வழி. வாங்கின கடனைக் கொடுக்க வக்கில்லை. (உ.வ.).
வகு - வகிர். வகிர்தல் = 1. கீறுதல். 2. உச்சந் தலையிலிருந்து நெற்றி நடுவரை தலைமயிரை இரு கூறாகப் பிரித்தல். 3. பிளத்தல். 4. துண்டுபடுத்துதல். 5. பங்கு செய்தல்.
வகிர் - வகிடு = தலைமயிர் உச்சியொழுங்கு.
வகிர் = வழி. (பிங்.).
வகு - வகை = 1. வகுப்பு. 2. கூறுபாடு. 3. குலம். 4. இனம். 5. முறை.
6. வழி.
k., தெ. வக (g), க. வகெ (g).
வகைதல் = 1. வகிர்தல். 2. பிரிவுபடுத்துதல். 3. வகைப்படுத்துதல்.
வகைச்சல் - வகச்சல் = மாலைவகை. திருமாலை வகச்சல் வளையம் (கோயிலொ. 59).
வகையார் = இனத்தார்.
வகையுளி = செய்யுளை இசை நோக்கி அசையுஞ் சீருமாகப் பிரிக்கை. (யாப். வி. 375).
பகு - பகல் = 1. பகுக்கை. 2. சமமாகப் பகுக்கும் நடு. (திவா.) நடுநிலைமை. அகல்வையத்துப் பகலாற்றி (பதிற்றுப். 90 : 9). 3. நுகத்து நடுவாணி. நெடுநுகத்துப் பகல் போல (பட்டினப். 206). 4. நண்பகல். 5. நள்ளிரவு. அரையிருள் யாமத்தும் பகலுந் துஞ்சார் (சிலப். 4 : 81). 6. நண்பகல் ஒளி. (திவா.). 7. ஒளியுள்ள அரை நாள். பகல் விளங்குதியாற் பல்கதிர் விரித்தே (புறநா. 8). 8. இரவுஞ் சேர்ந்த முழுநாள். ஒல்வ கொடாஅ தொழிந்த பகலும் (நாலடி. 169). 9. பகலைச் செய்யுங் கதிரவன். பன்மலர்ப் பூம்பொழிற் பகன்முளைத்தது போல் (மணி. 4 : 92).
ம. பகல், க. பகல் (g), தெ. பகலு (g).
பகல் - பகலவன் = கதிரவன். பகலவ னனையானும் (கம்பரா. கங்கை. 61). பகல் - பகலோன் = கதிரவன்.
பகல் - பால் = 1. பகுத்தல், பகுத்துக் கொடுக்கை. பாலுங் கொளாலும் வல்லோய் (பதிற்றுப். 10 : 19). 2. பகுதி, கூறு. இருபாற் பட்ட ஒருசிறப் பின்றே (தொல். புறத். 16).
3. பொருட்கூறு. பால்வரை கிளவி (தொல். எழுத். 165). 4. வகை. முப்பாற் புள்ளியும் (தொல். எழுத். 2), மடவா ரைம்பாலணை யும் (திவ். பெரியதி. 7 : 5 : 3). 5. பாதி. பானாளிரவில் (கலித். 90). 6. பக்கம். பாஅனின்று கதிர்சோரும் (புறநா. 22). ஒருபாற் கோடாமை சான்றோர்க் கணி (குறள். 118). 7. குலம். கீழ்ப்பா லொருவன் கற்பின் (புறநா. 183). 8. திசை. (பிங்.). 9. இடம். (யாழ். அக.). அப்பாற் போ. (உ.வ). 10. வேளை. அப்பால் வா. (உ.வ.) 11. இருதிணை ஐம்பாற் பிரிவு. இருதிணை மருங்கின் ஐம்பா லறிய (தொல். கிளவி. 10). 12. ஈரெண் பாகுபாடு. பன்மைப் பாலாற் கூறுதல் (தொல். சொல். 62, இளம்பூ). 13. இன்ப துன்பக் கூறு. பால்வரை தெய்வம் (தொல். கிளவி. 58). 14. நூற்பெரும் பிரிவு. அறத்துப்பால் (திருக்குறட் பிரிவு).
பகு - பகவு = 1. பிளவு, வெடிப்பு, பகுப்பு. (யாழ். அக.). 2. துண்டு. எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும் (குறள். 889). 3. பங்கு. (யாழ். அக).
பகவு - பகவன் = உயிர்கட்கெல்லாம் உணவைப் பகுத்தளித்துக் காப்பவன், கடவுள். பகவன் முதற்றே யுலகு (குறள். 1).
பகு - பக்கு. பக்கெனல் = வெடித்தற் குறிப்பு.
பக்கிசைத்தல் = (செ.கு.வி.). விட்டிசைத்தல். (செ. குன்றாவி). வேறுபடுத்திக் கூறுதல். அதுவும் இதுவும் எனப் பக்கிசைத் தோதப்பட்ட (சி.போ. சிற். 12 : 4 உரை).
பக்கு = 1. பிளப்பு. (W.). 2. கவர்படுகை தங்கள்ளத்தாற் பக்கான பரிசொழிந்து (தேவா. 17 : 3). 3. பை. பக்கழித்துக் கொண்டீ யெனத்தரலும் (கலித். 65 : 14), பகர்வர் பக்கிற்றோன்றும் (ஐங்குறு. 271).
பக்கு விடுதல் = 1. பிளத்தல்.
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும். குறள். 1068.
2. பிரம்படி யுண்ட தோலறுதல். (W.).
பக்கடுத்தல் = நொறுங்குதல். பக்கடுத்தபின் பாடியுய்ந் தானன்றே (தேவா. 785 : 11).
பக்கு - பக்கம் = 1. பகுதி. 2. தொழிற்கூறு. அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் (தொல். புறத். 20). 3. சாரி (side). பக்க நோக்கி நிற்கும் (திவ். திருவாய் 5 : 5 : 5). 4. விலாப்புறம். 5. சிறகு. இசைபடு பக்க மிருபாலுங் கோலி (பரிபா. 21 : 31). 6. திசை. தென்பக்கம் (உ.வ.). 7. இடம். ஊழையு முப்பக்கங் காண்பர் (குறள். 620). 8. தாட்புறம். அட்டையின் உட்பக்கம் (உ.வ.). மறைமலையடிகள் வரலாறு, 50-ஆம் பக்கம் (உ.வ.). 9. நூல். வாயினுங் கையினும் வகுத்த பக்கமொடு (தொல். புறத். 41).
10. அருகு. பக்கஞ் சார்ந்தவர் பான்மைய னாயினன் (மணி. 16 : 16). 11. சார்பு. அவர் தொடுத்த வழக்கு எதிரி பக்கம் தீர்ப்பாயிற்று, இரண்டாம் உலகப்போரில் சப்பான் செருமானியர் பக்கஞ் சேர்ந்திருந்தது. 12. உளச்சார்பு. நட்பு, அன்பு. 13. சுற்றம். பக்கஞ் சூழ வடமீன் காட்டி (கல்லா : 18). 14. படை. தாவரும் பக்கம் எண்ணிரு கோடியின் தலைவன் (கம்பரா. இலங்கைக் கேள்வி. 40).
15. திங்களாற் கணிக்கப்படும் காலப்பகுதி. வெண்பக்கம் (வளர் பிறைக்காலம்), கரும்பக்கம் (தேய்பிறைக் காலம்). 16. திங்களின் கலைநிலை. எட்டாம் பக்கம்.
16. ஏரணத்தில் உண்மை காண அல்லது மெய்ப்பிக்க எடுத்துக்கொள்ளப்படும் மேற்கோள்.
17. பெயரெச்சத்தை யடுத்து இடத்து என்னும் பொருளில் வரும் வினையெச்ச வீறு. எ-டு. வரும்பக்கம் = வருமிடத்து.
அக்கம் பக்கம், பக்கக்கன்று, பக்கக்குடுமி, பக்கச்சுவர், பக்கச் சொல், பக்கச் சூலை, பக்கத்துணை, பக்கத்து வீடு, பக்கப் பலகை, பக்கப் பாட்டு, பக்கப்பாளை, பக்கமேளம், பக்கவடம், பக்கவழி, பக்கவளை, பக்கவாட்டு, பக்கவெட்டு, பக்கவேர் முதலிய கூட்டுச் சொற்கள் தொன்று தொட்டு உலக வழக்கில் வழங்கி வருகின்றன.
பக்கம் - பக்கர் = இனத்தார்.
பக்கம் - பக்கல் = 1. பக்கம் என்பக்க லுண்டாகில் (பெரியபு. இயற்பகை. 7). 2. இனம் (W.).
பக்கு - பக்கறை = 1. பை, 2. துணியுறை.
பக்கு - பங்கு = 1. உடற்பாகம். பங்குலவு கோதையுந் தானும் (திருவாச. 16 : 9). 2. பாதி (சூடா.). 3. பாகப் பகுதி. பங்கிற்கு மூன்று பழந்தர வேண்டும் பனந் துண்டமே (தனிப்பா.). 4. பக்கம். என் பங்கில் தெய்வம் இருக்கிறது. (உ.வ.). 5. இரண்டு அல்லது இரண்டரைச் செறு (ஏக்கர் - acre) நன்செயும் பதினாறு செறு புன்செயுங் கொண்ட நிலம். (C.G. 288).
பங்கன் = தன் பாகமாகக் கொண்டவன். “ntíW njhË g§f‹” (njth.), மங்கை பங்கனை (தேவா. 549 : 5).
பங்கு - பங்கம் = 1. உடற்பாகம். பங்கஞ் செய்த மடவாளொடு (தேவா. 855 : 5). 2. துண்டு (W.) 3. பிரிவு. பங்கம் படவிரண்டு கால் பரப்பி (திருவாலவா. 16 : 22, கீழ்க்குறிப்பு). 4. சிறுதுகில். (பிங்.).
பங்கு - பங்கி. பங்கித்தல் = 1. பகுத்தல், பங்கிடுதல். 2. வெட்டுதல், துணித்தல். அங்கத் தெவையுமழியச் சிலரைப் பங்கித் தடைவார் (சிவதரு, சுவர்க்கநரக. 78).
பங்கி = 1. பாகமாகப் பெற்றுக்கொண்டவன். நஞ்சினைப் பங்கி யுண்டதோர் தெய்வ முண்டோ (தேவா. 302 : 6). 2. ஆறாண்டிற் கொருமுறை ஊர் நிலத்தை ஊரார்க்குப் பங்கிட்டடைக்கும் முறை. (W.G.) 3. பங்கு கொண்டது. எ-டு : திரிபங்கி (சொல்லணி வகை)
பகு - பகிர். பகிர்தல் = பங்கிடுதல்.
பகு - பகை. பகைத்தல் = வெறுத்தல், மாறு கொள்ளுதல். பகை - ம, பக, க, தெ. பக (g).
பகை-பகைஞன், பகைவன்.
பகு - பாகு = 1. பகுதி. (W.) (பாகிடுதல் = பங்கிடுதல், பாகுபடுதல் = பிரிவு படுதல்.). 2. பக்கமுள்ள கை, தோள்.
பாகு - பாகம் = 1. பகுக்கை (சூடா.) 2. கூறு தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பன்று (திருவாச. 5 : 37). 3. பாதி. பாகம் பெண்ணோ டாயின பரிசும் (திருவாச. 2 : 78). 4. பாகை (degree).
பாகம் - பாகன் = 1. பெண்ணை யிடப் பாகமாகக் கொண்ட சிவன். நாரி பாகன் (தேவா. 1172 : 9). 2. கருமத் துணைவனான பாங்கன். 3. பாங்காயிருந்து யானையைப் பேணுபவன். யானை யறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் (நாலடி. 213). 4. தேரைச் செலுத்தும் தேர்ப்பாகன் தேரிற் பாகனா யூர்ந்த தேவ தேவன் (திவ். பெரியதி. 7 : 5 : 2).
ம. பாவான், மராத். பாகா (2).
பாகு - பாகை (degree).
பாகு - பாகி. பாகித்தல் = பங்கிடுதல்.
பாகி 1 = பாகமுள்ளது. எ-டு : திரிபாகி (சொல்லணி வகை).
பாகி 2 = தேரோட்டும் பெண். (திவ். பெரியாழ். 1 : 3 : 9).
பாகன் - பாகு = யானைப்பாகன். பாகுகழிந் தியாங்கணும் பறைபட வரூஉம் வேக யானை (சிலப். 15 : 46).
பாகு - வாகு = கை, தோள், அழகு. வாகுவளையம் = தோள்வளையம், தோள்வளைவி, - வ. பாகுவலய (g).
வாகு - வாக்கு = பக்கம். இரண்டு கைவாக்கு மியங்கலிப்ப (திருவிளை. தடாதகை. 26.). காயப்போட்ட துணி காற்றுவாக்கிற் பறந்துபோய் விட்டது. (உ.வ.).
பாகு - பாங்கு = பக்கம், துணை, தோழமை, தன்மை, அழகு, கண்ணோட்டம். பாங்கு - பாங்கர் = பக்கம். பாங்கு - பாங்கன் = தோழன். பாங்கி = தோழி.
பாகு-பாக்கு = 1. பகுதி. 2. ஒரு தொழிற்பெய ரீறு. எழுதேம் கரப்பாக் கறிந்து (குறள். 1127), அஞ்சுதும் வேபாக் கறிந்து (குறள். 1128). 3. ஓர் எதிர்கால வினையெச்ச ஈறு. வான்பான் பாக்கின வினையெச்சம் (நன். 343). எ-டு : உண்பாக்குச் சென்றான்.
பாக்கு - வாக்கு = ஓர் எதிர்கால வினையெச்ச ஈறு.
கொள்வாக்கு வந்தான் (தொல். சொல். 231, உரை).
பாக்கு - பாக்கம் = 1. நெய்தல் நிலத்தூர், பட்டினப் பகுதி. எ-டு : மருவூர்ப்பாக்கம், கோடம்பாக்கம். கொழும்பல்குடிச் செழும்பாக்கத்து (பட்டினப். 27). 2. ஊர். கட்கொண்டிக் குடிப்பாக்கத்து (மதுரைக் 137). 3. அரசனிருப்பு. (பதிற்றுப். 13 : 12, உரை). 4. நகர்.
f., தெ. பாக்க.
பாக்கம் - வாக்கம் = நெய்தல் நிலத்தூர். எ-டு : கத்திவாக்கம்.
பாக்கம் - பாக்கை = 1. நெய்தல் நிலத்தூர். 2. ஊர். நென்னலிப் பாக்கை வந்து (பதினொ. திருவே. திருவைந் 74). எ-டு : கொள்ளிப்பாக்கை.
பகு - பா. பாத்தல் = பகுத்தல். பாத்தூண் மரீஇ யவனை
(குறள். 227).
பா - பாத்தி = 1. பகுதி, மருவின் பாத்தியிற் றிரியுமன் பயின்றே. (தொல். எழுத். 172), 2. செய்ப் பகுதி. வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று (குறள். 718). 3. பங்கு. (W.) 4. வீடு. (பிங்.)
பாத்தி - பத்தி (para) = 1. எழுதப்பட்ட செய்தியின் தனிப் பகுதி,
2. பாத்தி, 3. வரிசை.
பத்தி - பந்தி = கூடியுண்பார் பகுதி அல்லது வரிசை.
பா - பாத்து. பாத்துதல் = பகுத்தல், படுதிரை வையம் பாத்திய பண்பே (தொல். அகத். 2).
பாத்து = 1. பகுக்கை 2. பங்கு. 3. பாதி. 4, இணை.
பாத்து - பாது = பங்கு. பாதிடுதல் = பங்கிடுதல்.
மேலையாரியச் சொற்கள்
பக்கு(பை) - ON. baggi, ME. bagge, E. bag.
பக்கம் - L. pagina, OF., F., E. page.
இதற்கு L. pangere, to fasten என்று மூலங்காட்டுவது பொருந்தாது. E. Paginate = பக்கமிடு.
பாங்கு (இடம்), பாக்கம் (ஊர்), பாக்கை (ஊர்) - L. pagus, a place, village, district, province.
gh§f‹ - OF., ME., F. page, a boy or man, usu. in livery, employed as personal attendant of person of rank and to go on errands. paidos (பைதல்) என்னும் கிரேக்கச் சொல்லினின்று திரிந்த paggio என்னும் இத்தாலியச் சொல்லை இதற்கு மூலமாகக் காட்டுவது பொருந்தாது.
சமற்கிருதச் சொற்கள்
paksh, to take a part or side, (W).
பக்கம் - paksha, a wing, RV; the shoulder, the flank or side or half of anything, RV; the half of a lunar month (sukla or krishna paksha); a side, party, faction; place; one of two cases or one side of an argument, a thesis, the proposition to be proved in a syllogism; an army, favour, proximity, neighbourhood etc.
பந்தி - pankti, a row or set or collection of five.
பாகு - bahu, the arm.
பகு - bhaj, to divide, distribute, allot or apportion to or share with.
ஒ.நோ : புகு (உண்) - bhuj.
bhakta, distributed, assigned, allotted, RV.
bhakti, distribution, partition, separation, RV; a division, portion, share; the being a part of; that which belongs to anything else, attachment, fondness for, devotion, homage, piety, faith.
bhaktri, devotedly attached, an adorer, worshipper.
bhaga, dispenser, gracious lord, patron.
bhagavat, possessing fortune, prosperous, happy, RV; adorable, venerable, AV.
bhagaval, or bhagavan, in comp. e.g. bhagavad - gita.
bhagavati, name of Lakshmi or Durga.
bhagin, prosperous, happy.
bhagini, a sister (‘the happy or fortunate one’ as having a brother).
bhajaka, distributor, apportioner.
bhaga, a part, portion, share, allotment, inheritance, lot, good fortune,
luck, destiny.
bhagavata, relating to or coming from Bhagvat, i.e. Vishnu or Krishna, a
follower or worshipper of Bhagavat.
1. bhagya, to be shared or divided, divisible.
2. bhagya, entitled to a share, lucky, fortunate; good fortune, fate, destiny.
bhaj, sharing or participating in.
bhajaka, a divisor.
bhajana, sharing or participating in.
bhajita, shared, divided, distributed, portioned.
bhajya, to be shared or distributed., to be divided.
மேற்காட்டிய தமிழ்ச் சொற்களெல்லாம், பகு என்னும் ஒரே மூலச் சொல்லினின்று தொடர்ச்சியாகத் தோன்றியவை யென்பது. கூர்ந்து நோக்குவார்க்குத் தெற்றென விளங்கும். ஆயின், வடமொழியில், அவை பக்ஷ், பஞ்ச்சன் (pancan), பஜ் (bhaj), பஹ் (bah) என்னும் தொடர்பற்ற நால்வேறு மூலத்தினின்று தோன்றியவையாகக் காட்டப்பட்டுள்ளன. அம் மூலங்களுள் bah என்பதற்கு banh என்பதே அடிமூலம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு வளர்தல் அல்லது மிகுதல் என்பதே அடிப்பொருள். கை என்னும் சினைப்பெயருக்குப் பக்கத்திலிருப்பது என்பதே யன்றி வளர்வது என்னும் பொருள் பொருந்தாது. பந்தி என்னுஞ் சொல்லிற்கு (ஐந்து) பஞ்சன் என்னும் எண்ணுப் பெயரும் மூலமாகாது.
பால் என்னுஞ் சொல்லிற்குப் பகுதி, ஊழ் என்னும் இரு பொருள் இருப்பதுபோன்றே, பாக்கு என்னும் சொல்லிற்கும் இருத்தல் வேண்டும். பலரறியார் பாக்கியத்தால் என்னும் குறளடிக்கு (1141), அந் நிலைபேற்றைத் தெய்வத்தால் யானே அறிவதல்லது கூறுகின்ற பலரும் அறியார் என்று பரிமேலழகர் உரைத்திருப்பதை நோக்குக. அவர் தெய்வம் என்றது பால் வரை தெய்வத்தை.
கிளைவயி னீக்கியிக் கெண்டையங் கண்ணியைக் கொண்டுதந்த
விளைவையல் லால்விய வேனய வேன்தெய்வ மிக்கனவே. (6).
பொன்னிவ் வுயர்பொழில்வாய்ச் சூழுடை யாயத்தை நீக்கும்
விதிதுணையா. (7).
சொற்பா லமுதிவள் ….. நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று (8).
என்று திருக்கோவை கூறுதலையுங் காண்க.
பத்தி (பக்தி) என்னுஞ் சொல்லிற்கு ஒருவன் பாற்பட்ட தன்மை என்பதே மூலப்பொருள்.
பகுத்தறிவின் பயன்
உலகில் வேறு எந்நிலப்பகுதியிலும் இல்லாததும், இந்தியாவிலும் வடநாட்டினுந் தென்னாட்டிற் கடுமையாகவும் கண்டிப்பாகவுங் கைக் கொள்ளப்படுவதும், தென்மொழியினத்தின் ஒற்றுமையைக் குலைத்து அதன் வலிமையைக் கெடுப்பதற்கே ஆரியராற் புகுத்தப்பட்டதும், செய்யுந் தொழிலொடு சிறிதுந் தொடர்பற்றதும், பகுத்தறிவிற்கு முற்றும் முரணானதும், ஆன பிறவிக்குலப் பிரிவினையை உணர்த்தும் குலப்பட்டங்களை இன்றுந் தமிழர் தாங்கி வருவது இக்காலத்திற் கேற்காததாகும்.
பண்டைத் தமிழகத்தில் இம் மூடவழக்கம் இருந்ததே யில்லை. எல்லா வகுப்பாரும், பிறநாட்டார் போல் தம் பெயரை இணைப்பு வாலின்றி வெறுமையாகவே வழங்கி வந்தனர். அறிவும் நாகரிகமும் துப்புரவும் ஒழுக்கமும் உண்மையின்மை களே, உயர்வு தாழ்வைக் குறித்து வந்தன. ஆரியப் பிறவிக்குல வுயர்வுதாழ்வைத் திருவள்ளுவர் தெளிவாகக் கண்டித்தார்.
பகுத்தறிவியக்கப் பகலவன் என்னும் பெரியார் தம் கற்பிப்பிற் கேற்ப, பிறவிக்குல வொழுங்கை மீறியே ஒரு பெண்ணை மணந்தார். அவரைப் பின்பற்றுவதாகப் பிதற்றும் பலர், மதவியல் ஒன்று தவிர மற்றவற்றில் அவர் பெயர் கெடுமாறே ஒழுகிவருகின்றனர். பிறவிக்குல வுணர்ச்சியைச் சொல்லளவில் நீக்கினும் உள்ளளவில் நீக்கவில்லை.
பகுத்தறிவியக்கம் தமிழரெல்லார்க்கும் பொதுவாயினும், பெரியாரைப் பின்பற்றியர் அல்லது பகுத்தறிவாளர் என்று தம்மைச் சொல்லிக் கொள்வோர், தாமே முன்பு பகுத்தறிவொ ழுக்கம் பூண்டு பிறர்க்கு வழிகாட்டல் வேண்டும்.
பகுத்தறிவு விளக்கம்
குமரிநாட்டுத் தமிழிலக்கண முதனூலாசிரியன், பகுத்தறி வடிப்படையிலேயே, பொருள்களையெல்லாம் உயர்திணை, அஃறிணையென இரண்டாகப் பகுத்து, உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற இலக்கணம் வகுத்திருக்கின்றான்.
கடவுள் இல்லையென்பதற்குப் போன்றே, உண்டு என்பதற்கும் பகுத்தறிவே துணை செய்கின்றது. உலகில் எத்துணை நாகரிகப் பண்பாட்டு நாடாயினும், இரவில் நகரவிளக்கு அரைமணி நேரம் எரியாது போயினும், ஐந்து நிமையம் அரசன் அதிகாரம் இல்லாது போயினும், காட்டுவிலங்கினுங் கேடாக நாட்டுமக்கள் நடந்து கொள்கின்றனர். அங்ஙனமிருக்க, உயிரற்ற பன்னிரு கோள்களும் பற்பல நாண்மீன்களும் இடைவிடாது பெருவெளியில் ஒழுங்காய் இயங்கி வருவது இயக்குவான் ஒருவனின்றி இயலுமோ? கடவுளுண்மையைக் காட்ட இதுபோல் வேறு சான்றுகள் எத்தணையோ இருப்பினும், இஃதொன்றே போதுமானதாம்.
ஆயினும், நடுநிலையாக நோக்கி, இருசாராரும் ஒருவரை யொருவர் இகழாதுங் குறைகூறாதும் இருப்பதே பகுத்தறிவிற் கழகாம்.
பச்சைக் குதிரை விளையாட்டு
சிறுவர், குதிரைபோற் குனிந்து விளையாடும் விளையாட்டுக் களுள் ஒன்று பச்சைக் குதிரை. ஒரு சிறுவன் குனிந்து நிற்பது ஒரு சிறு குதிரைபோல் தோன்றுவதால், இது இப்பெயர் பெற்றிருக்க லாம். இதில் இருவகையுண்டு.
I. ஒரு வகை
பலர் வரிசையாக இடையிட்டுக் குனிந்துகொண்டு நிற்பர். அவருள் ஒரு கோடியில் இருப்பவன், பிறரையெல்லாந் தாண்டித் தாண்டி மறுகோடியிற்போய்க் குனிந்து நிற்பான். இங்ஙனமே பிறரும் வரிசைப்படி ஒவ்வொருவனாய்த் தாண்டித் தாண்டி மறுகோடியிற் போய் நிற்பர். இவ்வாறு ஆட்டுத் தொடரத் தொடர இடம் பெயர்ந்து கொண்டேயிருப்பர். இந்த ஆட்டு, பல சுவர்களைத் தொடர்ந்து தாண்டுதற்கேற்ற பயிற்சியாகும்.
II. மற்றொரு வகை
ஏதேனுமொரு தேர்ந்தெடுப்பில் தவறிய சிறுவன் ஒரு காலை நீட்டி உட்கார்ந்திருப்பான். அவனது நீட்டிய காலைப் பிற சிறுவர் ஒவ்வொருவராய்த் தாண்டித் தாண்டிச் செல்வர். அடுத்த முறை அவன் கால்மேற் கால்வைத்து நீட்டியிருப்பான். அதையும் அவ்வாறே தாண்டுவர், அதற்கடுத்த முறை ஒரு கை அதன்மேல் வைத்திருப்பன். பின்பு, முறையே, உட்கார்ந்த நிலையில் தாழக் குனிந்தும், அந்நிலையில் சற்று நிமிர்ந்தும், எழுந்து நின்று தாழக் குனிந்தும், அந்நிலையில் சற்று நிமிர்ந்தும், இவ்வாறு படிப் படியாக உயர்ந்துகொண்டிருப்பான். பிறரும் உடனுடன் தாண்டிக் கொண்டே வருவர். எந்நிலையிலேனும் ஒருவன் தாண்டமுடி யாது நின்றால், பின்பு அவன் கீழே உட்கார்ந்து முன்சொன்ன வாறு படிப்படியாய் உயர்ந்துகொண்டிருக்க வேண்டும். முன்பு கீழேயிருந்தவன் பின்பு பிறரொடு சேர்ந்து விளையாடுவான். இங்ஙனம் ஆட்டுத் தொடரும். சிறுவர்க்கு இஃதொரு படிமுறை யுயரத் தாண்டற் பயிற்சியாம்.
பஞ்சாய்ப் பறத்தல்
வறுமையால் வருந்தும் மாந்தர் நொய்ய உடம்புடன் வள்ளலாரை நாடி அங்கும் இங்கும் அலைந்து திரிதல் ஆலிலையும் இலவம் பஞ்சும் ஆடிக்காற்றில் அங்கும் இங்கும் பறந்து திரிவதை ஒக்கும். இதனால் ஆலாய்ப் பறத்தல், பஞ்சாய்ப் பறத்தல் என்னும் வழக்குகள் எழுந்தன.
எளிமையைக் குறிக்கும் பஞ்சை என்னும் சொல்லும், வற்கடத்தைக் குறிக்கும் பஞ்சம் என்னும் சொல்லும் பஞ்சாய்ப் பறத்தல் என்னும் வழக்கினின்று எழுந்தவையாகும். பாவேந்தர் காற்றில் இலவம் பஞ்சாகப் பறக்கையிலே என்ற படிக்காசுப் புலவர் பாடலடியை நோக்குக. சொல் : 8, 9.
பஞ்சி
பஞ்சி - வ. பஞ்சி
பைம்மை = பசுமை, இளமை, மென்மை, நொய்ம்மை.
பை - (பைந்து) - (பைஞ்சு) - பஞ்சு - பஞ்சி
ஒ. நோ : ஐ - ஐந்து - (ஐஞ்சு) - அஞ்சு.
நை - நைந்து - நைஞ்சு - நஞ்சு = நைந்து. வ.வ : 195.
பஞ்சு வெட்டுங் கம்படோ விளையாட்டு
ஆட்டின் பெயர் : பஞ்சுவெட்டுங் கம்படோ என்று சொல்லி ஆடப்பெறும் ஆட்டு. அச் சொல்லையே பெயராகக் கொண்டது.
ஆடுவார் தொகை : இதை ஆட இருவர் வேண்டும்.
ஆடிடம் : மணற் குவியலில் மட்டும் இது ஆடப்பெறும்.
ஆடுமுறை : ஒருவன் இன்னொருவனை மணலிற் படுக்க வைத்துத் துணியாற் போர்த்து அவனது உடலின் கீழ்ப் பகுதியை மணலால் மூடி பஞ்சுவெட்டுங் கம்படோ தோலே தோலே, பருத்திவெட்டுங் கம்படோ தோலே தோலே என்று மடக்கி மடக்கிச் சொல்லி மெல்ல மெல்ல அவன் முதுகில் தட்டிக் கொண்டேயிருப்பன். சிறிது நேரம் பொறுத்துப் படுத்தவன் எழுந்துவிடுவான்.
ஆட்டுத் தோற்றம் : போரில் தோற்றோடினவருள் ஒரு சாரார். தம்மைத் தொடர்ந்து வரும் வெற்றி மறவரினின்று தப்பிக்கொள் ளும் பொருட்டு நடித்த நடிப்புக்களுள் ஒன்றன் போலியாக, இவ் ஆட்டுத் தோன்றியதோவென ஐயுற இடமுண்டு. (த.நா.வி.)
பட்டணம்
பட்டணம் - வ. பட்டண
பட்டம் = பட்டையான துணி, பாய். பட்டம் - படம் = துணி, சீலை, சீத்திரச்சிலை, திரைச்சீலை.
படம் - படகு = பாய் கட்டிய தோணி.
பட்டம் = படகுவகை. (பிங்.) பட்டி = தெப்பம். பட்டி - பட்டிகை = தெப்பம், தோணி.
பட்டம் - பட்டணம் = படகுள்ள நெய்தல் நிலத்தூர்.
பட்டணம் - பட்டனம் - பட்டினம் = நெய்தல் நிலத்தூர், துறை நகர். பனிநீர்ப் படுவிற் பட்டினம் படரின் (சிறுபாண். 153.)
இனி, பண்டம் - பட்டம் = பலபண்டம் (பிங்.) பலபல தீவிற் பண்டம் பகர்வ பட்டண மென்றாமே. (சூடா. 5 : 37) என்றுமாம். (வ. வ : 195.)
பட்டடை
பட்டுதல் = அடித்தல்
பட்டுதற்கு அடை பட்டடை. (குறள். 821)
பட்டம்
பட்டம் - வ. பட்ட
பட்டுதல் = தட்டுதல், அடித்தல். பட்டு - பட்டம் = பட்டை, பட்டையான பொருள், துணி, பெருங்கொடி, காற்றாடி, தகடு, பெயரும் பதவியும் பொறித்து அரசன் நெற்றியிலணியும் தகடு, பதவிப்பெயர், சிறப்புப் பெயர், பதவி. பெண்டிர் நுதலணி.
ம. பட்டம்.
மேன்மேலும் தட்டுவதால் ஒரு பொருள் தட்டையாகும். பட்டுவதாற் பட்டையாகும் என்பதும் அதுவே.
பட்டும் அறை பட்டறை. பட்டும் சாலை பட்டசாலை. பட்டும் அடை பட்டடை (anvil). வ.வ : 195 - 196.
பட்ட விளையாட்டு
பட்டம் ஒருவன் ஆடினால் பொழுதுபோக்காம் (Pastime); இருவர் ஆடினால் விளையாட்டாம்.
ஒருவன் பட்டத்திற்குமேல் ஒருவன் பட்டத்தைப் பறக்கச் செய்வதும், ஒன்றையொன்று தாக்கி வீழ்த்தச் செய்வதுமே இவ் விளையாட்டாம்.
#பட்டி
பட்டி - வ. பட்டி ம. பட்டி, தெ. பட்டி,
பட்டிகை - வ. பட்டிகா
பட்டுதல் = தட்டுதல். பட்டு - பட்டி = பட்டை, மூங்கிற் பிளாச்சு, அதனாலமைந்த தொழு, ஏட்டிலெழுதிய பெயர் வரிசை, நாய்க் கழுத்துவார்.
பட்டி - பட்டிகை = அரைக்கச்சை, மேகலை, துணி, புண்கட்டுஞ் சீலை, ஓக (யோக) ப்பட்டி, உண்ணாழிகையைச் சுற்றியமைக்கும் அணிவேலை, பட்டியற்கல், ஏடு, அரசப் பட்டையம்.
பட்டி - பட்டியல் = வரிச்சல், தூணின் கீழ் வைக்குங் கல், சரக்குப் பெயர் வரிசை.
பட்டை = தட்டை, தட்டையான பொருள், மரப்பட்டை, மரவுரி, வாழைப்பட்டை, ஓலைப்பட்டை, மணிப்பட்டை, தோட் பட்டை, கழுத்துப்பட்டை, மினுகை (சரிகை)ப்பட்டை, பட்டைக்கோடு, பட்டையான திருநீற்றுப்பூச்சு, பட்டைத்தாறு, பட்டைத் தையல்.
தெ. பட்ட, பட்டெ; க. பட்டெ.
பட்டை - பட்டையம் (பட்டயம்) = அரசன் கொடுக்கும் செப்பாவணம். (வ.வ : 196).
படகம்
படகம் - வ. படஹ (t´) = பறை.
படகம் = அகமுழவுகளுள் ஒன்று (சிலப். 3 : 27, உரை).
படம் - வ. பட (t´)
பட்டு - பட்டம் = பட்டையான துணி. பட்டம் - படம் = துணி. துணியிலெழுதிய ஓவியம், சித்திரச்சீலை, திரைச்சீலை, யானைமுகபடாம், போர்வை, சட்டை, உடல்.
படம் - பட்ட
படம் = யானைமுகபடாம். படம் - படாம். ஒ.நோ : கடம் - கடாம்.
வெங்கதக் களிற்றின் படத்தினால் (கலித். 89). (பிங்.) (வ.வ.)
படம்
படம் - பட (Phat´a), பணம் - பண (Phan´a)
பட்டம் - படம் = (பாம்பின் கழுத்து விரிவான) படம்.
படம் - பணம். நாக பணந்திகழ் (தேவா. 84 : 4).
பைந்நாப் படவரவு (திருவாச. 34 : 1) (வ.வ : 196 - 197.)
படர்க்கை இ விகுதி
மதுரைக் கல்லூரி யிதழில் இகர விகுதியைப் பற்றி வரையப்பட்டுள்ள பகுதி வருமாறு :
தமிழில் பெண்பால் விகுதி
இ என்பது தமிழில் பெண்பால் விகுதி என்று கூறப்படுகிறது. உண்மையில் பெண்பால் விகுதி இ அல்ல. அது பெண்பால் விகுதியாயின் வில்லி, நாற்காலி முதலியவற்றில் அப் பொருளில் வராதிருப்பதேன்? உண்மை என்னவென்றால், இ என்பது திரி என்பதன் சிதைவு. பெரும்பாலும், த்தி, ச்சி, ட்டி என்பவையே பெண்பால் விகுதிகளாக வருகின்றன. இவை திரி என்பதன் மாறுபட்ட உருவங்கள் என்பது தெளிவு. முதலில் திரி என்பதே பெண்பால் விகுதியாக இருந்து பிறகு அது சிதைந்து த்தி, ச்சி, ட்டி என்று மாறியிருக்க வேண்டும்.
எ-டு :
குற + திரி = குறத்தி புலை + திரி = புலைச்சி
வெள்ளான் + திரி = வெள்ளாட்டி. வலை + திரி = வலைச்சி.
வண்ணான் + திரி = வண்ணாத்தி. ஆய் + திரி = ஆய்ச்சி.
பார்ப்பான் + திரி = பார்ப்பாத்தி பிராமண + திரி = பிராமணத்தி
ராஜா + திரி = ராஜாத்தி பறை + திரி = பறைச்சி
பெண்டு + ஆம் + திரி = பெண்டாட்டி.
கண் + ஆம் + திரி = கண்ணாட்டி.
பொம்மனாட்டி. கம்மனாட்டி என்பவையும் இவ்வாறே வந்திருக்கவேண்டும்.
இனி இதன் மறுப்பு விளக்கம் வருமாறு:
தமிழில், ஆண்பால் பெண்பால் விகுதியேற்படாத முதுகாலத்தில். அதாவது உயர்திணை அஃறிணை என்னும் திணை வேறுபாடு தோன்றாத பழங்காலத்தில், ஒருமைப்பால் பன்மைப்பால் என்னும் இருபால்களே இரு திணைக்கும் பொதுவாக வழங்கி வந்தன. முதற்காலத்திலேயே பகுத்தறிவுள்ளதும் இல்லதும் எனப் பொருள்களைத் தமிழர் இரு பகுப்பாகப் பகுத்திருக்க முடியாது. நாகரிகமும் அறிவு வளர்ச்சியுமாகிய பண்பாடடைந்த பின்னரே, அவர் அவ்வாறு செய்திருத்தல் வேண்டும். இன்றும், இருதிணைக்கும் பொதுவாகப் பல சொற்களும் விகுதிகளும் வழங்கக் காண்கின்றோம். அவை முந்துகால மொழிநிலையைக் காட்டும் எஞ்சு குறிகளாகும்.
எ-டு :
சொற்கள்
ஆண், பெண், தாய், தந்தை, பிள்ளை, குட்டி, தான், தாம்.
விகுதிகள்
கத்தரிப்பான் = கத்தரிக்கின்றவன் (உயர்திணை ஆண்பால்)
கத்தரிப்பான் = கத்தரிக்கோல் (அஃறிணை ஒன்றன்பால்)
கண்ணி = கண்ணையுடையவள் (உயர்திணைப் பெண்பால்)
கண்ணி = கண்ணையுடையது (அஃறிணை ஒன்றன்பால்)
கொல்லி = கொல்கின்றவன் (உயர்திணை ஆண்பால்)
கொல்லி = கொல்கின்றவள் (உயர்திணைப் பெண்பால்)
கொல்லி = கொல்கின்றது (அஃறிணை ஒன்றன்பால்)
இருதிணைச் சொற்கும் ஓரன்ன உரிமையின்
திரிபு வேறுபடூஉம் எல்லாப் பெயரும்
நினையுங் காலைத் தத்தம் மரபின்
வினையோ டல்லது பால்தெரி பிலவே (657)
இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே
முறைப்பெயர்க் கிளவி தாமே தானே
எல்லாம் நீயிர் நீஎனக் கிளந்து
சொல்லிய அல்ல பிறவும் ஆஅங்கு
அன்னவை தோன்றின் அவற்றொடுங் கொளலே (659)
என்னும் தொல்காப்பியச் சூத்திரங்கள் இங்குக் கவனிக்கத் தக்கன.
பால்காட்டும் விகுதிகள், இன்று எங்ஙனம் பெரும்பாலும் சுட்டுப் பெயர்களும் அவற்றின் குறுக்கமுங் குறையுமாயிருக்கின்றனவோ, அங்ஙனமே முற்காலத்தும் இருந்தன.
எ-டு : அது - வலது, தனது, உளது, நல்லது.
இது - வெளிது, வலிது, கரிது, புதிது.
உது - விழுது, பழுது, எருது (ஏருது), மருது.
அவன் - ஆன் - அன்: நல்லவன் - நல்லான் - நல்லன்.
அவர் - ஆர் - அர்: வல்லவர் - வல்லார் - வல்லர்.
இவர் - ஈர் - இர்: (மகளிவர்) - (மகளீர்) - மகளிர்.
இகர வுகரவடி விகுதிகள் இக்காலத்துப் பெரும்பாலும் வழக்கிறந்தன.
தமிழின் அசைநிலைக் காலத்தில் (Monosyllabic or Isolating Stage), சுட்டுச்சொற்கள் விகுதி பெறாமல் சுட்டடியாகவே வழங்கி வந்தன. இன்று வழங்கும் பலவின்பால் அகரவிகுதி முந்துநிலையை யுணர்த்தும் அடையாளமாம்.
எ-டு : நல்ல = நல்லவை (பெயர்)
வந்த = வந்தன (வினைமுற்று)
ஒப்ப நாடி அத்தக வொறுத்தி (புறம். 10)
என்னும் அடியில், அத்தக என்பது அதற்குத்தக என்று பொருள்படுதலால், அசைநிலைக்காலத் துவக்கத்தில், சுட்டசைச் சொற்கள் எண்ணுணர்த்தாது சுட்டுப் பொருளொன்றே உணர்த்தி வந்தன என ஊகிக்க இடமுண்டு.
சேய்மை, அண்மை, முன்மை ஆகிய மூவகையிடங்களையும் முறையே சுட்டும் அ, இ, உ (அல்லது ஆ, ஈ, ஊ) என்பன, அசை நிலைக் காலத்தில் தனிச்சொல்லேயாகவும், அதற்கடுத்த புணர் நிலைக்காலத்தில் (Compounding Stage) தனிச்சொல்லும் கூட்டுச் சொல்லுமாகவும், அதற்கடுத்த விகுதிநிலைக்காலத்தில் (Inflexional Stage) தனிச் சொல்லும் கூட்டுச் சொல்லும் விகுதியாகவும் வழங்கி வந்து, இன்று நாலாங்காலமாகிய கொளுவுநிலைக் காலத்தின் (Agglutinative Stage) பிற்பகுதியில், தனிச்சொல்லாய் வழங்குவ தொழிந்து ஏனை யிருவகை யாகவே வழங்கி வருகின்றன.
எச்சொல்லும் வேறொரு சொல்லின் விகுதியாக அமைந்தவுடன், தன் விதப்புப் பொருளை இழந்துவிடும். ஆகவே, சுட்டுச் சொற்களும் விகுதியாயமைந்தபின் தம் சுட்டுப்பொருளையிழந்து பால்மட்டும் உணர்த்தி நிற்கும்.
ஒருமைக்கும் பன்மைக்கும் வெவ்வேறு விகுதிகள் வகுக்கப்பட்ட காலத்தில், இகரச்சுட்டு ஒருமை விகுதிகளுள் ஒன்றாகக் கொள்ளப் பெற்றது. அன்று ஆண் பெண் பால்வேறுபாடு குறிக்கப்பெறாத காலமாதலால், ஆண்பால் பெண்பால் ஒன்றன்பால் ஆகிய முப் பாலுக்கும் பொதுவாகவே இகரச்சுட்டு வழங்கத் தலைப்பட்டு, அன்றிருந்து அம்முறையே தொடர்ந்து வருகின்றது. (பெண்மகள் என்னும் மாறோக்கத்து வழக்கும் பெட்டைப் பையன் என்னும் வடார்க்காட்டு வழக்கும், ஆண் பால் பெண்பால் விகுதியேற் படாத முந்துகால மொழிநிலையை ஊகித்துணர வுதவும்).
எ-டு : விறகுவெட்டி (ஆண்பால்)
மண்வெட்டி (ஒன்றன்பால்)
கயற்கண்ணி (பெண்பால்)
காடைக்கண்ணி (ஒன்றன்பால்)
ஆகவே, இகர விகுதி ஒருமை விகுதியேயன்றிப் பெண்பால் விகுதியன்று. அது ஒரு குறித்த சொல்லில் மேற்கூறிய முப்பாலுள் ஒன்றை உணர்த்துமே யன்றித் தனித்த நிலையில் உணர்த்தாது. கண்ணன் என்னும் ஆண்பாற் சொற்கு நேரான பெண்பாற் சொல். கண்ணள் என்பதே யன்றிக் கண்ணி என்பதன்று. கண்ணான் என்பது கண்ணன் என்று குறுகுவது போலக் கண்ணாள் என்பதும் கண்ணள் என்று குறுகும். வந்தான் என்பதற்கு வந்தாள் என்பது எங்ஙனம் பெண்பாலோ, அங்ஙனமே கண்ணன் என்ப தற்கும் கண்ணள் என்பதே நேரான பெண்பாலாம். கண்ணாள் அல்லது கண்ணள் என்று சொல்வதற்குப் பதிலாகக் கண்ணி என்று சொல்வது வழக்கூன்றிவிட்டதனால். இகர விகுதியைப் பெண்பாற் சிறப்பு விகுதியென்று பலர் மயங்க நேர்ந்துவிட்டது. அவ் விகுதி பெண்பால் விகுதியாயிருக்கக் கூடியதே யன்றிப் பெண்பாலுக்கே யுரிய விகுதியன்று.
இவ் விகுதி அள் விகுதியைவிடப் பலுக்குவதற்கு (உச்சரிப்ப தற்கு) எளிதாயும் இன்னோசையுள்ளதாயு மிருத்தலே, அது பெரு வழக்காய் வழங்குவதற்குக் காரணமாகும். கண்ணள் கண்ணி என்னும் இரு சொற்களையும் பலுக்கிக் காண்க. இக் காரணம் பற்றியே, தாயைக் குறிக்கும் சொற்களுட் சில அள் விகுதியை விட்டு இ வ் விகுதியை ஏற்றுள்ளன.
எ-டு : ஆண்பால் (தந்தை) பெண்பால் (தாய்)
அத்தன் அத்தி
அச்சன் அச்சி
அத்தி என்பதொடு தொடர்புள்ள அத்தை என்னும் பெயர். அத்தனின் (தந்தையின்) உடன்பிறந்தாளைக் குறிக்கும். அத்தன் என்பதன் திரிபே அச்சன் என்பது. அச்சன் என்னும் ஆண்பாற் பெயர் சேரநாடான மலையாள நாட்டிலும், அச்சி என்னும் பெண்பாற் பெயர் பாண்டிநாட்டிலும், வழங்கி வருகின்றன.
அச்சி = அக்கை (பாண்டிநாட்டு வழக்கு)
அக்கை தாய் போன்றவளாதலால் அச்சி எனப்பட்டாள்.
ஒ.நோ : தம் + அவ்வை (தாய்) = தவ்வை = தமக்கை.
அச்சு (அச்சன்) அச்சி என்னும் பெயர்கள், தொடர்மொழி யுறுப்பாக, முறையே தாய் தந்தைப் பொருளில் வழங்கி வருகின்றன.
அப்பச்சு = அப்பனின் தந்தை = பாட்டன் (பாண்டிநாட்டு வழக்கு)
அம்மாச்சி = அம்மையின் தாய் = பாட்டி (சோழநாட்டு வழக்கு)
அப்பச்சு என்பது அப்பச்சி எனத் திரிந்து வழங்குகின்றது.
அருமையும் பெருமையும்பற்றி, பருவமடைந்துள்ள ஆடவரை யும் பெண்டிரை யும் தாய்தந்தையரைக் குறிக்கும் முறைப் பெயரால் அழைக்கும் வழக்கம், நம் நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வருவதால். அப் பெயர்கள் ஆண்பாற் பெண்பாற் பெயரீற்றுத் தன்மையடைந்துள்ளன. ஓர் ஆடவரை ஐயா என்றும், ஒரு பெண்டை அம்மா என்றும் அழைத்தல் காண்க. அம்மை அல்லது அம்மா என்னும் பெயர், இயற்பெயரும் தொழில்பற்றிய பொதுப்பெயருமான பெண்பாற் பெயர்களின் ஈறாகப் பெருவழக்காய் வழங்கி வருகின்றது.
எ-டு : பொன்னம்மை, பொன்னம்மா
தாயம்மை, தாயம்மா இயற்பெயர்
வாத்தியாரம்மா, டாக்டர் அம்மா - தொழில் பற்றிய பெண்பாற் பொதுப் பெயர்.
இங்ஙனமே, அத்தி அச்சி என்னும் தாய்முறைப் பெயர்களும், குலமும் தொழிலும் குணமும் நிறமும் நிலைமையும் பிறவும் பற்றிய பெண்பாற் பொதுப்பெயர்களின் ஈறாக வழங்கி வருகின்றன.
எ-டு : குற + அத்தி = குறத்தி
தட்டா(ன்) + அத்தி = தட்டாத்தி - குலம்.
பறை + அச்சி = பறைச்சி
வலை + அச்சி = வலைச்சி
உபாத்தி + அச்சி = உபாத்திச்சி
மருத்துவ + அச்சி = மருத்துவச்சி - தொழில்
மடை + அச்சி = மடைச்சி - தன்மை
வெள்ளை + அச்சி = வெள்ளைச்சி - நிறம்
முண்டை + அச்சி = முண்டைச்சி
ஆண்டி + அச்சி = ஆண்டிச்சி - நிலைமை
பேய் + அச்சி = பேய்ச்சி
நெட்டை + அச்சி = நெட்டைச்சி
குள்ள + அச்சி = குள்ளச்சி - அளவு
குப்ப + அச்சி = குப்பச்சி - இடம்
சடை + அச்சி = சடைச்சி - உறுப்பு
சிற்றிடை + அச்சி = சிற்றிடைச்சி
வெள்ளைச்சி, பேய்ச்சி, குப்பச்சி, சடைச்சி முதலிய பெண்பாற் பெயர்கள், நாட்டுப்புறங்களில் இயற்பெயராக இடப்பட்டு வருகின்றன.
அத்தி அச்சி என்னும் பெயர்கள் ஈறாக நின்று புணரும்போது. அவற்றின் அகரமுதல் கெட்டுவிடுகின்றது. கெடாது நிற்பதும் உண்டு.
எ-டு : கள்ளவத்தி
வெள்ளைச்சி குப்பச்சி என்னும் பெயர்களை வெள்ளையம்மா குப்பம்மா என்பவற்றுடன் ஒப்புநோக்குக.
அத்தி என்னும் சொல்லின் குறையான தி ஈறு, நிலைமொழி யீற்று ளகர மெய்யோடு புணரும்போது, அவ் விரண்டும் ட்டி எனத் திரியும். அது என்னும் சொல்லின் குறையான து வ்வீறும், இங்ஙனமே டுவ்வீறாகத் திரிதல் காண்க. (தாள் + து = தாட்டு.)
ஆளன் (ஆள் + அன்) என்னும் ஆண்பாலீற்றிற்கு எதிராக ஆட்டி (ஆள் + தி) என்பது பெண்பாலீறாய் வரும்.
எ-டு : வெள்ளாளன் - வெள்ளாட்டி
கண்ணாளன் - கண்ணாட்டி
மணவாளன் - மணவாட்டி
திருவாளன் - திருவாட்டி
குணவாளன் - குணவாட்டி
குணாளன் - குணாட்டி
வெள்ளாளன் என்பதை வெள்ளான் என்பது தவறு.
மகன் என்னும் ஆண்பாலீறு மான் என்று மருவுவது போல், மகள் என்னும் பெண்பாலீறு மாள் என்று மருவும்.
எ-டு : பெருமகன் - பெருமான், குறுமகன் - குறுமான், மருமகன் - மருமான், திருமகன் - திருமான், வெளிமகன் - வெளிமான்.
பெருமகள் - பெருமாள், வேண்மகள் - வேண்மாள், திருமகள் - திருமாள்.
மாள் என்னும் பெண்பாலீற்றொடு மேற்காட்டிய தி என்னும் ஈறும் சேரும்போது, அவ் விரண்டுமே மாட்டி எனத் திரியும்.
எ-டு : ஆண்பால் பெண்பால்
பெருமான் பெருமாட்டி
திருமான் திருமாட்டி
சீமான் சீமாட்டி
பெருமான் என்பது பிரான் என்று மருவும்போது, பெருமாட்டி என்பது பிராட்டி என மருவும். பெருமாள் திருமாள் என்னும் ஒற்றையீற்றுப் பெண்பாற் பெயர்கள் இன்று வழக்கிறந்தன. விகுதிமேல் விகுதி வந்து இரட்டைப்பன்மைப் பெயர்கள் வழங்குவது போன்றே, ஈற்றின்மேல் ஈறு வந்து இரட்டைப் பெண்மைப் பெயர்களும் வழங்கும்.
எ-டு : வெள்ளாட்டி + அச்சி = வெள்ளாட்டிச்சி.
பெண்டாட்டி (பெண்டு + ஆட்டி) என்பதிலுள்ள ஆட்டி ஈறு மனைவிப் பொருள் குறிக்க வந்ததாகும். பெண், பெண்டு என்பன இடம்நோக்கி மனைவிப் பொருளுணர்த்தும் பெண்பாற் பொதுப்பெயராம்.
கை + பெண் = கைம்பெண்.
கை + பெண்டு = கைம்பெண்டு
கை + பெண்டாட்டி = கைம்பெண்டாட்டி
பெண்பெண்டாட்டி என்பது, ஆண்பிள்ளைப் பிள்ளை காரான் பசு அரைஞாண் கயிறு என்பன போன்ற மிகைபடு சொற்றொடர்.
ஒரு பெண்பெண்டாட்டி ஆணுடை யுடுத்து (ஈடு. 6 : 2.).
கைம்பெண்டாட்டி பெண்பெண்டாட்டி என்பன, முறையே, கம்மனாட்டி பொம்மனாட்டி எனக் கொச்சை வழக்கில் மருவி வழங்குகின்றன.
அத்தி அச்சி என்னும் ஈறுகள் பெண்பால் மட்டும் உணர்த்தி உயர்வு குறிக்காமையால், தட்டாத்தியம்மா, உபாத்திச்சியம்மா முதலிய பெயர்கள் உயர்வு குறிக்க வந்த இரட்டைப் பெண்பாற் பெயராகும்.
அப்பன், ஐயன் என்னும் தந்தை முறைப் பெயர்கள், அருளப்பன், கண்ணப்பன், செல்லப்பன், நாகப்பன், அருளையன், கண்ணையன், செல்லையன், நாகையன் என எவ்வாறு ஆண்பாற் பெயரீறுகளாய் ஆளப்பெறுகின்றனவோ; அவ்வாறே, அம்மை, அத்தி, அச்சி என்னும் தாய்முறைப் பெயர்களும் பெண்பாற் பெயரீறுகளாய் ஆளப்பெறும் என்க.
இதுகாறுங் கூறியவற்றால், தமிழில் பெண்பால் குறித்து வரும் த்தி, ச்சி, டி (ட்டி) என்னும் ஈறுகளெல்லாம். அத்தி அச்சி என்னும் தென்சொற்களின் குறையும் திரிபுமேயன்றி, திரி என்னும் வடசொற் சிதைவல்ல என்று தெற்றெனக் கண்டு கொள்க. ( செந்தமிழ்ச் செல்வி ஆகத்து 1951.)
படலம்
படலம் - வ. படல (t´)
படர்தல் = பரவுதல். படம் - படல் = ஓலை தட்டை மாறு முதலியவற்றாலாகிய கதவுபோன்ற அடைப்பு, உழுத நிலத்திற் பரம்படிக்கும் பரந்த மாறு, கண்ணிற் படரும் புரை. (வ.வ : 197.).
படாம்
படாம் : பட்டுதல் தட்டுதல், பட்டு - பட்டை = தட்டையாகத் தட்டப்பட்டது. பட்டு - பட்டம் = பட்டையான தகடு, பட்டையான துணி, பட்டம் - படம் = துணி. துணியிலெழுதிய ஓவியம், சித்திரச் சீலை, யானை முகபடாம். படம் - படாம்.
ஒ.நோ : கடம் - கடாம். படம் - பட (வ.). படம் (படாம்) - பட்ட (வ.). தி.ம : 747.
படி
படி - வ. பட் (t´h)
படுதல் = ஒலித்தல். படு - படி = ஒலியெழ வாயித்தல் (வாசித்தல்).
ஒ. நோ : ஓதை - ஓசை. ஓதுதல் = படித்தல். படி - பாடம்.
படி - வ. ப்ரதி
பள் - படு. படுதல் = விழுதல். படு - படி. படிதல் = ஒன்றின்மேல் விழுதல், விழுந்து பதிதல், பதிந்து உருவம் அமைதல்.
நிலத்திற் பதிந்த பொருளின் வடிவம் நிலத்திலும், தாளிற் பதிந்த அச்சின் வடிவம் தாளிலும், அமைதல் காண்க.
படி = 1. உருவம் மயிலனார்க்குப் படிவைத்து (சீவக. 1156).
2. உடம்பு.நினையாரவன்மைப்படியே(திவ்.இயற். திருவிருத். 93).
படிந்த உருவம் படிந்த பொருளை ஒத்திருத்தலால், படி என்னும் சொல் ஒப்புமைக் கருத்தை உணர்த்திற்று.
அப்படி = அதுபோல். படியொருவ ரில்லாப் படியார் போலும் (தேவா. 44 : 7).
படி = ஒத்த வடிவம் (True copy). கிழித்த வோலை படியோலை (பெரியபு. தடுத்தாட். 56).
மூலமும் படியும் என்னும் வழக்கை நோக்குக.
படி - படிவு - படிவம். படி - படிமை - படிமம்.
படி - வடி (கொச்சை). படிவு - வடிவு. படிவம் - வடிவம். (வ.வ : 197).
படிவம்
படிமை - வ. ப்ரதிமா
படி - படிமை = 1. வடிவம் கட்டளைப் படிமையிற் படியாது (சீவக. 2752). 2. பாவை. 3. வழிபடு தெய்வ வுருவம். 4. நோன்பு, தவம். பல்புகழ் நிறுத்த படிமை யோனே (தொல். சிறப்புப்.)
ப்ரதிமா - பதுமை - பொம்மை. (வ.வ : 197-198.)
படிவம் : படுதல் = விழுதல். படு - படி. படிதல் = ஒன்றின்மேல் இன்னொன்று விழுதல், விழுந்து பதிதல், பதிந்து உருவ வடிவம் அமைதல்.
படி = உருவம், உடம்பு, ஒப்பு. அப்படி = அதுபோல்.
படி - படிவு - படிவம். படி - படிமை - படிமம்.
படி - வடி, படிவு - வடிவு. படிவம் - வடிவம்.
படி - ப்ரதி (வ.). படிமை - ப்ரதிமா (வ.). (தி.ம. 747.)
படு
படு என்னும் சொல் பெருமை அல்லது மிகுதிப் பொருள் தருவதைப் படுகுழி, படுதண்டம், படுபொய், படுமோசம் என்னும் வழக்கு நோக்கி யுணர்க. (குறள். 676).
படைஞன் இயல்பு
படைஞர் போரில் ஒருகால் தம் உயிரிழக்குமாறு பகைவரைக் கொல்லுந் தொழிலை அல்லது வெல்லுந் தொழிலை மேற்கொண்டிருப்பதனாலும் அவர்களின் நாட்டுத் தொண்டும் நிலையாமைச் சிறப்பும் நோக்கி அவர்கட்குக் கொடுக்கப் பட்டிருக்கும் உரிமை அல்லது ஒழுக்கவிதித் தளர்ச்சியினாலும், அவர்கள் பிறர்பொருளை விரும்பியவிடத்து அவரைக் கேளாமலே எடுத்துக் கொள்வது வழக்கம். இதற்குத் தாராளம் என்று பெயர். தார் என்பது சேனை. ஆளம் என்பது ஆளின் தன்மை. தாராள், படைஞன். தாராளம் ஒருவரைக் கேளாமலே அவர் பொருளை எடுத்துக் கொள்ளும் படைஞன் இயல்பு. ஒருவர்க்குரிய இடத்தில் அவரைக் கேளாமற் புகுவதும் தாராளம் எனப்படும். பொருளை வௌவுவதும் உரிமையை வௌவுவதும் ஒன்றே. (சொல் : 112.)
படையும் பாதுகாப்பும்
1. படை
ஒரு நாட்டு அரசியற்குப் படையே அடிப்படை. படையிருப்பின், நாடில்லாதவனும் நாட்டைப் பெறலாம்; படையில்லாவிடின், நாடுடையவனும் அதை இழப்பான். ஆதலின், படையானது அரசனுக்கு இன்றியமையாத வுறுப்பாகும். இதனாலேயே அரசர்க்குரியவற்றைக் கூறும் தொல்காப்பியச் சூத்திரத்திலும் (1571). அரசுறுப்புக்களைக் கூறும் குறளிலும் (381). சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல் என்னும் உத்திபற்றிப் படை முற்கூறப் பெற்றது. இளங்கோவடிகள் சேனையை அரசன் திருமேனி என்றனர் (சிலப் 25 : 191). அரசர் தொழிலாகிய காவல் போர் என்னுமிரண்டும் படையின்றி யமையாமையின்,
உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையு ளெல்லாந் தலை (குறள். 761).
என்றார் திருவள்ளுவர்.
படை வகைகள் : படையானது. பொரும் இடம்பற்றி,
1. நிலப்படை (Military)
2. கடற்படை (Navy),
என இருவகைப்படும். இவற்றுள் நிலப்படை, ஊர்திபற்றி.
1. கரிப்படை.
2. பரிப்படை.
3. தேர்ப்படை.
4. காற்படை அல்லது காலாட்படை,
என நால்வகைப்படும். இவற்றின், காலாட்படை மீண்டும் கருவிபற்றி,
1. விற்படை.
2. வாட்படை.
3. வேற்படை.
என மூவகைப்படும். எப்படையராயினும். போர்மறவர்க்குப் பொருநர் என்றும் படையாட்கள் என்றும் படைஞர் என்றும் பெயர்.
மூவேந்தரிடத்தும் தொன்றுதொட்டுக் கலப்படை (கடற்படை) யிருந்து வந்தது.
வானியைந்த இருமுந்நீர்ப்
பேஎ நிலை இய இரும்பவ்வத்துக்
கொடும் புணரி விலங்கு போழக்
கடுங்காலொடு கரைசேர
நெடுங்கொடிமிசை யிதையெடுத்
தின்னிசைய முரசு முழங்கப்
பொன்மலிந்த விழுப்பண்டம்
நாடார நன் கிழிதரும்
ஆடியற் பெருநாவாய்
மழைமுற்றிய மலைபுரையத்
துறைமுற்றிய துளங்கிருக்கைத்
தென்கடற் குண்டகழிச்
சீர்சான்ற வுயர்நெல்லின்
ஊர்கொண்ட வுயர்கொற்றவ
என்று, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட வடிம்பலம்பநின்ற பாண்டியன், கலப்படை கொண்டு சாலி என்னும் சாவகத் தீவை (java) வென்ற செய்தியை, அவன் வழியினனான தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மேலேற்றி மதுரைக் காஞ்சி (75-88) கூறுவதையும்;
சினமிகு தானை வானவன் குடகடற்
பொலந்தரு நாவா யோட்டிய ஞான்றைப்
பிறர்கலஞ் செல்கலா தனையேம்
என்று, கி.பி.2ஆம் நூற்றாண்டிலிருந்த சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் செய்த கடற்போரைப் பற்றிப் புறச் செய்யுள் (126) கூறுவதையும்; கி.பி.10ஆம் 11ஆம் நூற்றாண்டுகளி லிருந்தே முதலாம் இராசராசச் சோழன், ஈழத்தையும் முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரத்தையும் (Maldive islands) கலப்படை கொண்டு வென்று, சேரநாட்டுக் காந்தளூர்ச்சாலை கலமறுத் தருளியதையும், அவன் மகன் இராசேந்திரன் நக்கவாரம் (Nicobar). மலையா (Malaya), சுமதுரா (Sumatra) முதலியவற்றை வென்ற தையும் நோக்குக.
முத்தமிழரசரிடமும் யானைப்படை மிகுதியாயிருந்தது. சோழ வேந்தனிடம் அறுபதினாயிரம் யானைகள் இருந்ததாக ஒரு சீன வழிப்போக்கன் கூறியிருப்பதால், யானை இயல்பாகக் கூட்டங் கூட்டமாய் வாழும் குடமலைத் தொடரையுடைய சேரனிடத்தும் பாண்டியனிடத்தும், அவை எத்துணைப் பெருந்தொகை யினவாய் இருந்திருத்தல் வேண்டும் என்பதை ஊகித்துணர்ந்து கொள்ளலாம்.
யானை மறவர்க்கு, ஆனையாட்கள் ஆனைப்பாகர் குஞ்சரமல்லர் அத்திமல்லர் என்னும் பெயர்கள் வழங்கின. அரசன் அடிக்கடி யானைப்படையை அணிவகுப்பித்துக் கண்டு களிப்பன். யானைப்படை அக்காலத்துச் சிறந்த படையாகக் கருதப்பட்டது.
யானையுடைய படைகாண்டல் மிகவினிதே
என்றார் பூதஞ்சேந்தனாரும்.
குதிரை தமிழகத்திற்கு அல்லது இந்து தேயத்திற்கு உரிய விலங்கன்றாதலின், அது அதன் இயற்கை வாழகமான அரபி நாட்டினின்று ஏராளமாக மாபெருஞ் செலவில் வருவிக்கப் பட்டது.
பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணம் குதிரைகளைப் புரவி, பாடலம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை, பரி, கந்துகம் என எட்டுவகையாக வகுத்துக் கூறும். (நரிபரியாக்கிய படலம், 87-94)
குதிரைமறவர், இவுளிமறவர் என்றும் குதிரைச் சேவகர் என்றுங் கூறப்படுவர்.
படைக்கு என்றும் சேங்குதிரைகளும் களிற்றியானைகளுமே பயன்படுத்தப் பெறும். வினையிற்சிறந்த குதிரைகட்கும் யானைகட்கும் சிறப்புப் பெயரிடப் படுவதுண்டு.
தேர்ப்படை சங்ககாலத்திற்குப் பின் பயன்படுத்தப் பெறவில்லை.
இனி, படையை, மேற்கூறிய முறையிலன்றி, ஊழியக் கால அளவு பற்றி, மூலப்படை கூலிப்படை யென்றும்; தொகுக்கும் இடம் பற்றி. நாட்டுப்படை காட்டுப்படை என்றும்; சேர்ந்துள்ள பக்கம் பற்றி, துணைப்படை பகைப்படை என்றும்; எதிர்நிலை வகையில் இவ்விரண்டாக வகுப்பதுமுண்டு.
மூலப்படையை வள்ளுவர் தொல்படை என்பர். வாழையடி வாழையாக இருந்து வருவதும், எவ்வகை ஊற்றையும் பொருட்படுத்தாததும், இறப்பிற்கு அஞ்சாததும், போரையே விரும்புவதும், அரசனைக் காக்க என்றும் உயிருவந்தீவதும், எக்காரணத்தையிட்டும் அறைபோகாததும், வென்றே மீள்வதும் தொல்படைத் திறங்களாம்.
உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக்
கேவா னாகலிற் சாவேம் யாமென
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப (புறம் - 68)
என்று கோவூர் கிழாரும்.
உறினுயி ரஞ்சா மறவர் இறைவன்
செறினுஞ்சீர் குன்ற லிலர்
என்று வள்ளுவனாரும், கூறியிருத்தலால்; நீண்ட நாளாகப் போர் பெறாத தொல்படை தன் மறமிகையால் தானே போருக்கு முனைவதும், அரசன் தடுப்பினும் மீறுவதும் உண்டென்பதறியப் படும்.
கூலிப்படையாவது, போர்க்காலத்தில் புதுவதாகக் கூலிக்
கமர்த்தப் படுவது. நாட்டுப்படை மருதநிலமக்கள் சேர்ந்தது. காட்டுப்படை, பாலைநிலவாசிகளும் குறிஞ்சி நிலமாந்தரும் சேர்ந்தது. அரசபத்தியாலும் நாட்டுப் பற்றாலும், கூலிக்கன்றித் தொண்டு காரணமாகத் தாமாக வந்துதவும் ஊர்மக்கள் படை குடிப்படை எனப்படும்.
போர்க்காலத்துப் பெரும்படை அமைதிக்காலத்து வேண்டா வாதலின். போர் முடிந்த பின் மூலப்படையொழிந்த பிற வெல்லாம் கலைக்கப்படுவது மரபு. அன்று மூலப்படைப் பகுதிகள் தலைநகரிலும், பிற கோநகர்களிலும் எல்லைப் புறங்களிலும், புதிதாய் வெல்லப்பட்ட பகைவர் நாட்டிலும் நிறுத்தப் பெறும், அங்ஙனம் நிறுத்தப் பெற்றவை நிலைப்படை எனப் பெயர் பெறும், முதற் குலோத்துங்கன் கோட்டாற்றில் ஒரு நிலைப்படையை நிறுத்தியிருந்தான், கலைக்கப்பட்ட படையினர் தம் மரபுத் தொழிலைச் செய்துவருவர்.
நிலைப்படை நிறுத்தப்பட்ட நகர் படைவீடு என்றும் அது நிறுத்தப்பட்ட நிலப்பகுதி படைப்பற்று என்றும், அது குடியிருக்கும் வீட்டுத் தொகுதி படைநிலை என்றும், பெயர் பெறும். நிலைப்படையினர் மனைவி மக்களுடன் கூடி வாழ்வர்.
படைப்பயிற்சி: அரசரும் படைமறவரும் மற்போர் படைக்கலப் போர் ஆகிய இருவகைப் போரும் பயின்று வந்தனர்.
மற்போர் பயில்வதற்கு ஆங்காங்கு போரவை அல்லது முரண்களரி எனப்படும் பயிற்சிக் கூடங்களிருந்தன. கோப் பெருநற்கள்ளி என்னுஞ் சோழன் ஒரு போரவை நடத்தி வந்ததால் போரவைக் கோப்பெருநற்கிள்ளி எனப்பட்டான்.
……….tÆ‹ வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை
அழுந்தப் பற்றி அகல் விசும் பார்ப்பெழக்
கவிழ்ந்துநிலஞ் சேர அட்டதை
மகிழ்ந்தன்று மலிந்தன்றும் அதனினு மிலனே (புறம்-77).
இன்கடுங் கள்ளின் ஆமூ ராங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே
………………………………….
பசித்துப்பணை முயலும் யானை போல
இருதலை யொசிய எற்றிக்
களம்புகு மல்லற் கடந்தடு நிலையே (புறம்.80).
என்னும் செய்யுட்கள், முறையே, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பல மல்லரையும், போரவைக் கோப்பெருநற்கிள்ளி ஆமூர் மல்லனையும், மற்போரிற் கொன்றதைத் தெரிவிக்கும்.
முருக்கமரத்தின் பருத்த அடியை நட்டு அதன்மேற்படைக் கலங்களை யெறிந்து, பொருநர் எறிபடைப்போர் பயின்றனர் என்பது,
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
இகலின ரெறிந்த அகலிலை முருக்கின்
பெருமரக் கம்பம் (புறம். 169).
என்பதால் அறியலாகும்.
அரண்மனையை யடுத்த செண்டுவெளி அல்லது வையாளி வீதி எனப்படும் வெளிநிலத்தில், வாசிவாரியர் என்போர் குதிரைகட்கு இருசாரிகளும் ஐங்கதிகளும் பதினெண் மண்டிலங்களும் பயிற்றினர். அவருள் தலைமையானவன் அரசவாரியன் எனப் பட்டான்.
காழோர் வாதுவர் என்போர் யானைகளைப் போர்த் துறையிற் பயிற்றினர்.
படைப்பிரிவுகள் : படைகள், கருவிவகையாலும், ஊர்தி வகையாலும், குல நில மொழி வகையாலும், ஊழியவகையாலும், முதுமை வகையாலும், வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு பெயர் பெற்றிருந்தன. அப்பெயர்கள், பெரும்பாலும், அரசனுடைய கொற்றப் பெயர்களை முன்னுறுப்பாகக் கொண்டிருக்கும். சில பிரிவுகள் சிறுதனம் பெருந்தனம் என்றும், இடங்கை வலங்கை* என்றும், இவ்விரு உட்பிரிவுகளைக் கொண்டிருந்தன.
வில்லிகள் வாள்பெற்ற கைக்கோளர், பராந்தகக் கொங்க வாளர், பண்டிதச் சோழத்தெரிந்த வில்லிகள், உத்தமச் சோழத் தெரிந்த அந்தளகத்தார், சிறுதனத்து வடுகக்காவலர், வலங்கைப் பழம்படைகளிலார், பல வகைப் பழம்படைகளிலார், சிங்களாந்தகத்தெரிந்த குதிரைச்சேவகர், மும்முடிச்சோழத் தெரிந்த ஆனைப்பாகர், பெருந்தனத்து ஆனையாட்கள், என்பன சில படைப்பிரிவுகளின் பெயராகும்.
படைத்தலைவர்: படைத்தலைவர்க்கு, படைமுதலி, தண்ட நாயகன், சேனைமுதலி, சேனாபதி, சாமந்தன் என்னும் பெயர்களும்; பெரும்படைத்தலைவனுக்குப் பெரும் படைமுதலி, சேனாவரையன், சேனாதிராயன், மகாதண்ட நாயகன், மகாசாமந்தன் என்னும் பெயர்களும் வழங்கின. நாயகன் என்னும் பெயர் சேரநாட்டில் நாயன் என வழங்கிற்று. முதலியார் நாயர் என்னும் பெயர்கள், முதலி நாயன் என்பவற்றின் உயர்வுப் பன்மை வடிவாகும்.
பொதுவாக, படைத்தலைமைக்கு அவ்வப் படைமறவருள் திறமை மிக்கவரும், பெரும் படைத்தலைமைக்கு அரச குடும்பத்தினரும் குறுநிலமன்னரும் உழுவித்துண்ணும் வேளாண் குடித்தலைவரான வேளிருமே, அமர்த்தப் பெற்றனர்.
படைகளை மேற்பார்த்தற்குப் படைகாண்பார் என்று சில அதிகாரிகள் இருந்தனர்.
படைக்கலங்கள்: அமைதிக்காலத்தில், மெய்காவற்படை பரிவாரப்படை நிலைப்படை ஆகிய படைகள் கையாளும் படைக்கலங்களைத் தவிர, மற்றப் போர்க்கருவிகளெல்லாம் படைக்கலக்கொட்டில் என்னும் ஆயுதசாலையில் வைத்துப் போற்றப்பெறும். அரசனுடைய படைக்கலங்களை வைத்தற்குத் தனியாக ஒரு கட்டில் உண்டு. அது படைக்கலக்கட்டில் எனப் பெறும்.
ஆயுதங்கட்கெல்லாம் நெய்பூசிப் பீலியணிந்து மாலை சூட்டுவது வழக்கம்.
2. பாதுகாப்பு
தற்காப்பு : அரசனுக்குக் கட்டிடவகையாலும் காவலாள் வகையாலும், சிறந்த தற்காப்பு வசதிகள் ஏற்பட்டிருந்தன.
கள்வரும் பகைவரும் ஏறற்கரிய மதிலும்; பகைவரைத் தொலைவிலேயே காண்டற்கும், உள் மனைக் கலகத்திலும் போரிலும் ஏறிப் பொருதற்கும், உய்தற்குமுரிய கோபுரமும்; பகைவன் தலைநகரை முற்றுகையிடும்போது, நொச்சிப்போர் இயலாதாயின் கரந்து வெளிப்படற்குரிய சுருங்கையும்; கட்டிட வகையான தற்காப்பாகும்.
மெய்காவலரும் வேளைக்காரருமெனக் காவலாளர் இருபாலார்.
மெய்காவலர், அணுக்கர் எனவும், வாசல் மெய்காப்போர் எனவும், பரிவார மெய்காப்போர் எனவும், மூவகையர். அவர், முறையே, அரசனுக்கு நெருங்கி நிற்பவரும், அரண்மனை வாயில்களில் நிற்பவரும், அரசன் அரண்மனைக்கு வெளியே செல்லுங்கால் சூழ்ந்து செல்பவரும், ஆவர். பாண்டியனுடைய மெய்காவற்படையில் ரோம கிரேக்கப் பொருநரும் இருந்தனர்.
வாசல் மெய்காப்போரினின்றும் வேறாக. வாசல் காப்போர் என்றும் சிலர் இருந்தனர். வாயில்கள், அணுக்க வாயில் இடைவாயில் தலைவாயில் புறவாயில் எனப் பல வாதலின், வாசல்காப்போரும், அணுக்கவாசல் காப்போர் கேரளாந்தக வாசல் காப்போர் எனப் பல திறத்தார். நடைப் பெருவாயில் எனப்படும் அரண்மனைத் தலைவாயிலில் எப்போதும் ஒரு படைத்தலைவன் நிற்பான்.
பரிவார மெய்க்காப்போரினின்றும் வேறாகப் பரிவாரத்தார் என்று சில படைப்பிரிவுகளிருந்தன. கேரளாந்தகத் தெரிந்த பரிவாரத்தார் நிகரிலிச் சோழத் தெரிந்த உடனிலைக் குதிரைச் சேவகர் என்னும் படைப் பிரிவுப் பெயர்கள், பரிவாரத்தாருள் காலாள் மறவரும் குதிரைமறவருமாக இருபிரிவினர் இருந்த மையைத் தெரிவிக்கும், மூலப் படையைச் சேர்ந்த பரிவாரத்தார் மூலப்பரிவாரம் என்னும் பெயராற் பிரித்துக் கூறப் பெற்றனர். மூலப்பரிவார விட்டேறு என்னும் பெயர், மூலப்பரிவாரத்துள் கருவிபற்றிய பல பிரிவுகளிருந்தமையைக் காட்டும்.
அரசன்பால் அளவிறந்த அன்பும் பத்தியும் உடைய சிற்றரசரும் படைத்தலைவரும், அவனுக்கு இடுக்கண் நேர்ந்தவிடத்து உடுக்கை இழந்தவன் கைபோல் உதவவேண்டுமென்னும் பூட்கை மேற்கொண்டு, அவ்வாறு சூளுறவுஞ் செய்து கொள்வர். உற்றிடத்துதவுவதோடு உடனிறப்பதும் அவர் வழக்கம். வேளையில் வந்து உதவுவதால் அவர்க்கு வேளைக்காரர் என்று பெயர். அவரைப் போன்றே சூளுற்ற படைகள் - வேளைக்காரப் படைகள் எனப்படும். வேலைக்காரர்க்குள்ளும் வேலைக்காரப் படைகட்குள்ளும், வலங்கை இடங்கைப் பிரிவுகளும் சிறுதனப் பெருந்தனப் பிரிவுகளும் இருந்தன. பாண்டியனுடைய வேளைக் காரர்க்குத் தென்னவன் ஆபத்துதவிகள் என்று பெயர்.
அரசன் சிறந்த படைக்கலப் பயிற்சி பெற்றும் இடை வாளேந்தியு மிருப்பனாதலின், அவன் மெய்வலியுங் கை வாளுங்கூட ஓரளவு தற்காப்பாயிருந்திருத்தல் வேண்டும்.
அரசமகளிர் உறையும் உவளகத்தில், சோனக (மிலேச்ச)ப் பேடியர் வாளேந்தி நின்று காவல் புரிந்து வந்தனர்.
அதிகார வேணவா தந்தையையும் உடன்பிறப்பையும்கூடக் கொல்லுமாதலின், ஐயுறவிற்கிடமான புதல்வரையும் உடன்பிறந் தாரையும், பருவம் வந்தவுடன் தலைநகர்க்குப் புறம்பே வெவ்வேறு பதவிகளில் அமர்த்தி வைப்பதும் அரசர் வழக்கம்.
தலைநகர்க் காப்பு: தலைநகரானது, மதிலரண், நிலவரண், நீரரண், காட்டரண், மலையரண் என்னும் ஐவகையரண்களுள் பலவற்றைக் கொண்டிருந்தது.
1. மதிலரண் : மதிலரண், மதில், எயில், இஞ்சி, சோ என நால்வகைப்படும். புரிசை என்பது அவற்றின் பொதுப்பெயர், புரிந்திருப்பது புரிசை. புரிதல் வளைதல் அல்லது சூழ்தல். மதில் நகரைச் சூழ்ந்திருப்பதால் புரிசை எனப்பட்டது.
நால்வகை மதிலரண்களுள், உயரமொன்றேயுடையது மதில்; உயரத்தொடு அகலமுமுடையது எயில்; அவற்றொடு திண்மையுமுடையது இஞ்சி; அம்மூன்றொடு அருமையு முடையது சோ. ஆகவே, சோவரணே தலைசிறந்ததாம்.
உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கு நூல் (743),
என்றார் திருவள்ளுவரும்.
நொச்சிப்போரில் வில்லியர் மேல்நின்று மறைந்து அம்பெய்தற் குரிய புழைகளையுடையது எயில். அம்பெய்யும் புழை ஏப்புழையென்றும் ஏவறையென்றும் கூறப்படும். எய்யும் இல்லையுடையது எயில் எனப்பட்டது.
செம்பையுருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லாற் கட்டின மதில் இஞ்சியென்பர். இஞ்சுதல் இறுகுதல். இஞ்சியது இஞ்சி.
செம்பிட்டுச் செய்த விஞ்சித் திருநகர் (கும்பகருணன் வதைப்படலம்,159)
என்று கம்பரும்,
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு (புறம். 201)
என்று கபிலரும் பாடியிருப்பதால், இலங்கையிலும் துவார சமுத்திரம் என்னும் துவரை நகரிலும்* இஞ்சியரண் இருந்தமை அறியப்படும். செப்புக்கோட்டை என்பது இராவணன் கோட்டைப் பெயராக இன்றும் ஈழத்தில் வழங்குகின்றது.
மதிலரணை அருமைப்படுத்துவது பொறியாதலால், ஏவறை களும் பொறிகளுமுடைய இஞ்சியே சோவரணாயிருந் திருத்தல் வேண்டும்.
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
என்று ஆய்ச்சியர் குரவையும்,
சுழலழலுள் வைகின்று சோ
என்று புறப்பொருள் வெண்பாமாலையும் (228), கூறுவதால், இராவணன் நகரிலும் வாணாசுரன் நகரிலும் சோவரண் இருந்த தாகத் தெரிகின்றது. மதுரை மதிலரண் பல பொறிகளைக் கொண்டிருந்ததாக இளங்கோவடிகள் கூறுவதால், அதனை ஒருவகைச் சோவரண் என்னலாம்.
மதுரைப் புறமதிலிலிருந்த பொறிகளுங் கருவிகளும் உறுப்புக் களுமாவன:-
1. வளைவிற்பொறி - வளைந்து தானே எய்யும் எந்திர வில்.
2. கருவிரலூகம் - கரிய விரலையுடைய குரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறி.
3. கல்லுமிழ் கவண் - கல்லையெறியும் இருப்புக் கவண் (இடங்கணி).
4. பரிவுறு வெந்நெய் - காய்ந்திறைத்தலாற் சேர்ந்தாரை வருத்தும் நெய்.
5. பாகடு குழிசி - செம்புருக்கும் மிடா.
6. காய்பொன்னுலை - உருகக் காய்ச்சியெறியும் எஃகு உலை.
7. கல்லிடு கூடை - இடங்கணிப் பொறிக்குக் கல்லிட்டு வைக்குங் கூடை.
8. தூண்டில் - அகழியைக் கடந்து மதிலைப் பற்றுவாரை மாட்டியிழுக்குந் தூண்டில் வடிவான பொறி.
9. தொடக்கு - கழுத்திற் பூட்டி முறுக்குஞ் சங்கிலி.
10. ஆண்டலையடுப்பு - பறந்து உச்சியைக் கொத்தி மூளையைக் கடிக்கும் ஆண்டலைப்புள் வடிவமான பொறிவரிசை.
11. கவை - அகழியினின்றேறின் அதற்குள் விழத் தள்ளும் இருப்புக்கவை.
12. கழு - கழுக்கோல்.
13. புதை - அம்புக்கட்டு
14. புழை - ஏவறைகள்.
15. ஐயவித் துலாம் - அம்புத்திரள் தொங்கவிட்ட விட்டம்.
16. கைபெயரூசி - மதிற்றலையைப் பற்றுவாரின் கையைப் பொதுக்கும் ஊசிப்பொறிகள்.
17. சென்றெறி சிரல் - பகைவர்மேற் சென்று அவர் கண்ணைக் கொத்தும் சிச்சிலிக்குருவி வடிவான பொறி.
18. பன்றி - மதிற்றலையிலேறினா ருடலைக் கொம்பாற் கிழிக்கும் இருப்புப் பன்றி.
19. பணை - அடிக்கும் மூங்கில்தடி வடிவமான பொறி.
20. எழுவுஞ்சீப்பு - கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில் நிலத்தில் கீழேவிடும் மரங்கள்.
21. கணையம் - கோட்டை மதிற் கதவுக்குத் தடையாகக் குறுக்கேயிடும் உத்தரம்.
22. கோல் - விட்டேறு.
23. குந்தம் - சிறுசவளம்.
24. வேல்.
25. ஞாயில் - குருவித்தலை என்னும் மதிலுறுப்புக்கள்.
26. நூற்றுவரைக் கொல்லி.
27. தள்ளிவெட்டி.
28. களிற்றுப்பொறி.
29. விழுங்கும் பாம்பு.
30. கழுகுப்பொறி.
31. புலிப்பொறி.
32. குடப்பாம்பு.
33. சகடப்பொறி.
34. தகர்ப்பொறி.
35. அரி நூற்பொறி.
முதலியன.
இவற்றுள், இறுதியிற் குறிக்கப்பட்ட பத்தும், இளங்கோவடி களால் பிற என்னும் சொல்லால் தழுவப் பெற்று உரையாசிரிய ரான அடியார்க்கு நல்லாரால் பெயர் குறிக்கப் பெற்றவை.
தலைநகர்களில், மதில் ஒன்றன்றி ஒன்றனையொன்று சூழ்ந்து பலவா யிருப்பதுமுண்டு. அகமதில்களைவிடப் புறமதில்கள் படிமுறையில் அரண் சிறந்திருக்கும். கோடுறழ்ந்தெடுத்த என்னும் பதிற்றுப்பத்துச் செய்யுளில் அகமதில் மதில் என்றும், புறமதில் இஞ்சியென்றும், கூறப்பட்டிருத்தல் காண்க. புற மதிலில் தான் மேற்கூறிய பலவகைப் பொறிகள் அமைக்கப்பட் டிருக்கும். மதிலையொட்டி உட்புறத்திலுள்ள மேடைக்கு அகப்பா என்று பெயர்.
பகைவர் வரவைத் தொலைவிலேயே காணும்படி, புறமதிலின் மேல் பல திசையிலும் அட்டாலை என்னுங் காவற் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றிலிருந்து காவல் செய்வார்க்கு அட்டாலைச் சேவகர் என்று பெயர். ஒவ்வொரு மதிலுக்கும் காவலரும், மதில் நாயன் என்னும் காவல் தலைவனும் இருப்பர்.
மதிலுள்ள நகர்கள் பெரும்பாலும், கோட்டை, புரி, புரிசை, எயில், கடகம் என்னும் சொற்களுள் ஒன்றைப் பெயராகவோ பெயரீறாகவோ கொண்டிருந்தன.
2. நிலவரண் : நிலவரண் என்பது, பகைவர் அகழி கடந்தவுடன் புறமதிலைப் பற்றாமைப்பொருட்டு அதன் புறத்து விடப்பட் டுள்ள வெள்ளிடை நிலமும்; பகைவர் முற்றுகை நீடித்திருக்கும் போது, அகத்தார்க்கு வேண்டும் உணவுப் பொருள்களை விளைத்துக் கோடற்பொருட்டுப் புறமதிலின் உட்புறமாக விடப்படும் தண்ணடை நிலமும் என இருவகை.
மணிநீரு மண்ணு மலையு மணிநிழற்
காடு முடைய தரண்
என்னுங் குறளில் (742). மண் என்றது நிலவரணை. பரிமேலழகர் அதற்கு வெள்ளிடை நிலமென்று சொல்லுரை கூறி, மதிற்புறத்து மருதநிலம் பகைவர் பற்றாமைப் பொருட்டு என்று விளக்க வுரை கூறியிருப்பதையும்; நாடுகண்டன்ன கணைதுஞ்சு விலங்கல் என்னும் பதிற்றுப்பத்துத் தொடருக்கு (16:2) நெடுநாட்பட அடைமதிற்பட்ட காலத்தே விளைத்துக் கோடற்கு, வயலும் குளமும் உளவாகச் சமைத்து வைத்தமையாற் கண்டார்க்கு நாடு கண்டாற்போன்ற…. இடைமதில், என்று அந் நூலின் பழைய வுரையாசிரியர் விளக்க முரைத்திருப்பதையும் காண்க.
3. நீரரண் : நீரரண் என்பது, புறமதிற் புறத்து ஆறுங் கடலுமாகிய இயற்கை நீர்நிலையாகவும், அகழி அல்லது கிடங்கு என்னும் செயற்கை நீர்நிலையாகவும், இருக்கும் அரண்.
4. காட்டரண் : காட்டரண் என்பது, படைமறவர் பகைவர்க்குத் தெரியாமல் மறைந்திருக்கக் கூடியதும், தொகுதியாகப் புக முடியாததுமான மரமடர் சோலை. இது பொதுவாக மலையடுத்திருப்பது.
5. மலையரண் : மலையரண் என்பது, மக்கள் தொகுதியாக ஏற முடியாததும். மேலிருந்து பெருங்கற்களைக் கீழே எளிதாக உருட்டக் கூடியதும், உச்சியில் போதிய உணவும் உறையுளும் உடையதுமான, பறம்புபோலும் தனிக் குன்று. இது குறுநில மன்னர்க்கு - அவருள்ளும் குறும்பரசர்க்கு - இன்றியமையாதது. சங்ககாலத்துக் குறுநில மன்னர், பெரும்பாலும், ஒவ்வொரு மலைக்கிழவராயிருந்தனர்.
தலைநகர்களில், இராக்காலத்தில், ஊர்காவலர் யாமந்தோறும் பறையறைந்து விளக்குடன் சென்று, கள்வர் களவு செய்யாதபடி காவல் செய்து வந்தனர்.
பெருநாட்டுக்காப்பு : நிலைப்படைகள், தலைநகரிலும் பிற கோநகர்களிலும் கலகம் நேரும் இடங்களிலும், பகையச்சமுள்ள எல்லைப்புறங்களிலும், நிறுத்தப்பெற்றிருக்குமென்பது முன்னரே கூறப்பட்டது.
நாட்டின் பலவிடங்களிலும், பகைவர் வரவைப் பார்த்தறியக் கூடிய உயர்ந்த பார்வலிருக்கைகள் இருந்தன.
அரசனுடைய நூற்றுக்கணக்கான (அல்லது ஆயிரக்கணக்கான) ஒற்றர், பிறவரசர் தலைநகர்களில் இரவும் பகலும் கரந்த கோலத் துடன் திரிந்து, அங்கு நடப்பவற்றை உடனுடன் அரசனுக்கு மறைவாகத் தெரிவித்து வந்தனர். சேரன் செங்குட்டு வன், தன் வடநாட்டுச் செலவை முன்னதாக வடநாட்டரசர்க்குத் தூதர் வாயிலாய்த் தெரிவிக்கக் கருதியபோது, அழும்பில்வேள் என்னும் அமைச்சன், இந் நாவலந்தீவில் நமக்குப் பகைவராயுள்ள அரச ருடைய ஒற்றரெல்லாம், இவ்வஞ்சிமா நகரில் நீங்காதுறைவர். அவ்வொற்றரே நம் செலவை அவ்வரசரிடம் தெரிவித்து விடுவ ராதலின், அவர்க்குத் தூதர் வாயிலாய்த் திருமுகம் விடுக்க வேண்டா. இந்நகரிற் பறையறைந்து விளம்பரஞ் செய்தலே போது மானது, என்று கூறியது கவனிக்கத் தக்கது.
அரசனுடைய வேலைக்காரரும் படைத்தலைவரான சிற்றரசரும் பெருநாடு முழுதுமிருந்தமையின், பகைவர் வரவையறிந்தவுடன் படைதிரண்டு எவ்விடத்திலும் போர் செய்து நாட்டைக் காத்துக் கொள்வதற்கு வசதியாயிருந்தது.
பண்டமாற்றுங் காசும்
சங்ககால நாணயத்திட்டம் : உலகமெங்கணும் முதற் காலத்தில், பொருட்பரி மாற்றெல்லாம் பண்டமாற்று (Barter) முறையி லேயே நடந்து வந்தது. அதன்பின் படிப்படியாகக் காசு (நாணயம்) என்னும் பரிமாற்றுக் கருவி ஏற்பட்டது.
பிறநாடுகளில், நாணயம் முதலாவது கல்லுங் கவடியும் கொட்டையும் தோல்துணுக்கும் போன்ற உலக மதிப்பற்ற குறிப் பொருளாயிருந்தது. பின்பு தாது (உலோக)ப் பொருளாக மாறியது. தமிழகத்தில் ஏராளமாய்ப் பொன் விளைந்ததினாலும், பழங்காலத்திலேயே தமிழர் நாகரிகமடைந்திருந்ததினாலும், தமிழர் தொடக்கத்திலேயே தாதுக்களிற் சிறந்த பொன்னைக் காசாகப் பயன்படுத்தினர்.
தமிழர் முதன்முதற் பயன்படுத்திய தாது பொன்னாயிருந்ததினா லேயே பொன் என்ற சொல்லிற்கு உலோகம் என்னும் பொருளும், பிற்காலத்திற் கிடைத்த வெள்ளி செம்பிரும்பிற்கு முறையே வெண்பொன் செம்பொன் கரும்பொன் என்ற பெயர்களும், தோன்றின.
உலக மதிப்புள்ளதும், உறுதியானதும், எளிதாய் இடம் பெயர்க்கக் கூடியதும், சிறு மதிப்பையும் பெருமதிப்பையுங் குறிக்கச் சிறிதாகவும் பெரிதாகவும் வெட்டப்படக் கூடியதும், அங்ஙனம் வெட்டப்படினும் தன் அளவிற்குரிய மதிப்பிழக்காத தும், உருக்கி வேண்டியாங்கு வடிவுறுத்தக்கூடியதும், பொன்னே யென்று தமிழர் கண்டு கொண்டதினால் அதனையே பரிமாற்றுக் கருவியாகப் பயன்படுத்தி வந்தனர்.
ஆயினும், முதலடியிலேயே, பொன் இப்போதுள்ள காசாக முத்திரையிட்ட தகட்டு வடிவம் பெறவில்லை. அது சிறிதும் பெரிதுமான கட்டியாகவே (Bullion) முதலாவது வழங்கிவந்தது. அக் கட்டிகள், கொட்பயறு (காணம், குன்றிமணி, மஞ்சாடி விதை, கழற்சிக்காய் (கழங்கு), முதலிய பல பொருள்களின் நிறை களுள்ளன வாயிருந்தன. அவற்றைக் கட்டி நாணயம் என்னலாம்.
பிற தாதுக்கள் கிடைக்கப் பெற்றுப் பொன் அருகி வந்தபோது, நாணயப் பொற்கட்டிகள் பல, நாளடைவில், அராவியெடுக்கப் பட்டு எடை குறைந்தும் செம்பு கலந்து மாற்றுத் தாழ்ந்தும் போயின. அதனால், அரசியலதிகாரிகளும் நகர வணிகர் குழாங்களும், நாணயக் கட்டிகளையெல்லாம் உரைத்தும் நிறுத்தும் நோட்டஞ்செய்து, அவற்றுள் மாற்றும் நிறையும் சரியாயுள்ளவற்றிற்கு முத்திரையிட வேண்டிய தாயிற்று. அங்ஙனம் முத்திரையிடுவதற்குக் கட்டி வடிவினும் தகட்டு வடிவம் ஏற்றதாதலின், முத்திரை நாணயங்களெல்லாம் நாளடை வில் தகட்டு வடிவு பெற்று விட்டன. முத்திரையும் தகட்டு வடிவுமே நாணத்திற்கு முதன்மையான இயல் களாதலின், முத்திரை பெற்ற நிலையைக் காசு நாணயத் தொடக்கம் எனக் கூறலாம்.
அன்றே யமைந்த பசும்பொன் அடர் ஆறுகோடி
குன்றாமல் விற்றான் குளிர்சாகர தத்தன் என்பான்
என்னும் சிந்தாமணிச் செய்யுட் பகுதியில் (1973) வந்துள்ள பொன் அடர் என்பதைத் தகட்டுப்பொன் என்பர் நச்சினார்க்கினியர். அடர் என்பது தகடு.
கடைச் சங்கக் காலத்தில், பண்டமாற்று, கட்டி நாணயம், காசு நாணயம் ஆகிய மூவகை முறைகளும் இருந்து வந்ததாகத் தெரிகின்றது. கழஞ்சு மாழை என்பன கட்டி நாணயமாகவும், அஃகம் காணம் காசு பொன் முதலியவை காசு நாணயமாகவும், இருந்தனபோலும். தனியுடைமை நாட்டிலெல்லாம், நாட்டுப் புறச் சிற்றூர்ச் சில்லறை விற்பனையில் பண்டமாற்று என்றுங் கையாளப் பெறும்.
சங்க காலத்தில், வெள்ளி செம்பிரும்பிருந்தும் தமிழகத்து நாணயங்களெல்லாம் தங்கத்தினாலேயே இயன்று, எத் தொகைக்கும் செலாவணியுள்ளனவா யிருந்ததினால், அக்கால நாணயத் திட்டத்தை (Currency Standard) ஒற்றையுலோகத் திட்டம் (Monometallism) என்றும்; தங்க நாணயத் திட்டம் (Gold Standard) என்றும், நிறை செலாவணிச் சட்ட நாணயத் திட்டம் (Unlimited legal tender) என்றும், கூறலாம்.
புலவரும் புலத்தியரும் இலக்கக்கணக்கான காணமும் காசும், பாணரும் ஆடியன்மகளிரும் ஆயிரத்தெண் கழஞ்சு பொன்னும், அரசரிடம் பெற்று வந்தனர் என்பதினால், கடைச் சங்கக் காலத்துப் பொன் நாணயங்கள் நிறை செலாவணி யுடையன வாயிருந்தமை அறியப்படும்.
அரண்மனைக்கு அணிகலம் செய்யும் தட்டாரே பொற்காசுகளை யும் அடித்து வந்தனர். காசடிக்கும் இடத்திற்கு அஃகசாலை என்றும், அதில் வினைசெய்யும் தட்டார்க்கு அஃகசாலையர் என்றும், அச்சாலையும் அவரும் இருந்த தெருவிற்கு அஃகசாலைத் தெரு என்றும், பெயர் வழங்கின. அஃகம் என்பது காசு என்னும் நாணயத்தில் பன்னிரண்டி லொரு பாகம் என்றும், காசு என்பது பதினான்கு குன்றிமணி எடையுள்ளதென்றும், சொல்லப்படும். அஃகமுங் காசும் சிக்கெனத் தேடு என்னும் பழமொழியினால், இவ்விரு காசுகளும் பெரு வழக்காய் வழங் கினமை அறியப்படும்.
மூவேந்தரும் தத்தம் முத்திரையிட்ட காசுகளையே தத்தம் நாட்டில் அரசியல் நாணயமாக வழங்குவித்தனர். அவற்றில் முத்திரை தவிர வேறொன்றும் பொறிக்கப்படவில்லை. அவை சேரன் காசு சோழன் காசு பாண்டியன் காசு என வழங்கின. அவை அளவில் சிறிது வேறுபட்டிருந்ததாகத் தெரிகின்றது. பாண்டியன் காசுகளுள் சிலவற்றில் ஒரு மீனும், சிலவற்றில் இரு மீனும், சிலவற்றில் மும் மீனும் பொறிக்கப்பட்டிருந்தன.
அக்காலத்து நாணயங்கள், பொன்னா லியன்றனவாகவும், உலோக மதிப்பாகிய (Bullion value) அகமதிப்பும் (Intrinsic value) அரசியல் மதிப்பாகிய புறமதிப்பும் (Face Value) ஒத்தனவாகவும், இருந்ததினால், தமிழகத்தார் மட்டுமன்றிப் பிற நாட்டாரும் விழுச் செல்வமாக விரும்பியேற்கும் நிலையிலிருந்தன.
சங்க காலத்திற்குப் பிற்பட்ட நாணயத்திட்டம்
தமிழரசர் காசுகள்: அளவிறந்த பொற் காசுகள் கொடைவகை யிற் கொடுக்கப் பட்டு விட்டதனாலும், அணிகலம் தெய்வச்சிலை அம்பலமுகடு தட்டுமுட்டு முதலிய பல வகையில் இட்டு வைக்கப் பட்ட பொன்முதல் முழுகிய முதலாய் (Sunk capital) இருந்ததினா லும், பற்பல இடங்களில் பெருந்தொகை யான பொற்காசுகள் மக்கட்குத் தெரியாதபடி மண்ணிற் புதையுண்டு கிடந்ததினாலும், பிற நாட்டரசர் அடிக்கடி கொள்ளை கொண்டும் திறைகொண் டும் சென்றதினாலும், வரவரப் பொன்விளைவு சிறுத்தும் மக்கட் டொகை பெருத்தும் வந்ததினாலும், சங்ககாலத்திற்குப் பின்பு நாணயச் செலாவணிக்குப் போதிய பொன் கிட்டாமையால், கீழ்த்தர நாணயங்கட்கு முதலாவது வெள்ளி பயன்படுத்தப் பட்டது. அன்று இரட்டை நாணயத்திட்டம் (Bimetallism) ஏற்பட்டது. சிறிது காலத்தின் பின் வெள்ளியும் அருகிவரவே, கடைக் கீழ்த்தர நாணயங்கட்குச் செம்பு பயன்படுத்தப்பட்டது. அன்று முக்கை நாணயத் திட்டம் (Trimetallism) ஏற்பட்டது. அதில், தலைத்தர நாணயங்கள் பொன்னாகவும், இடைத்தர நாண யங்கள் வெள்ளியாகவும், கடைத்தர நாணயங்கள் செம்பாகவும் இருந்தன. இங்ஙனம், தங்க நாணயம் தலைமை நாணயமும் (Principal coin) வெள்ளி செப்பு நாணயம் சில்லறை நாணயமும் (Subsidiary coin) ஆயின.
மூவகை யுலோக நாணயங்களும் முதலாவது ஒரே நிறை யுள்ளன வாயிருந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுவர்.
காசு பொன் கழஞ்சு மாடை (மாழை) எனப் பல தரமாய் வழங்கிய பொன் நாணயங்களுள், உயர்ந்தவையெல்லாம் ஒவ்வொன்றாய் நீங்கி, இறுதியில் காசு ஒன்றே எஞ்சியிருந்ததாகத் தெரிகின்றது. பொன் நாணய அளவிலேயே வெள்ளி செப்பு நாணங்களும் அடிக்கப்பட்டு. அவையும் அவற்றோடொர்த்த நிறையுள்ள பொன்நாணயம் போன்றே காசு கழஞ்சு மாடை என வழங்கியிருக்கின்றன.*
மூவகை யுலோகக் காசுகளும் 14 குன்றிமணியிலிருந்து 72 குன்றி மணிவரை பல்வேறு எடையுள்ளனவாக வழங்கியிருப்பதால், ஒவ்வோர் உலோகத்திலும், பெருங்காசும் அதன் பகுதிகளான சிறு காசுகளும் வழங்கியிருந்தமை ஊகிக்கப்படும். இனி, ஒரேதரக் காசு வெவ்வேறரசர் காலத்தில் வெவ்வேறு நிறையுள்ள தாயிருந் திருப்பதால், அவ்வவ்வரசர் காலத்து உலோக இருப்பிற்குத் தக்கபடி, காசுகளின் எடை ஏறியும் இறங்கியும் வந்ததாகத் தெரிகின்றது.
போர்க் காலத்தில் அரசனால் அடிக்கப்பட்ட பொற்காசு களிலும், பொதுவாகப் பொற்கொல்லரால் திருட்டுத்தனமாய் அடிக்கப்பட்ட பொற்காசுகளிலும், செம்பு கலந்திருந்ததினால்; அவற்றை மக்கள் வாசி பெற்றே வாங்கினர். அவை வாசிபெற்ற காசுகள் எனப்பட்டன. வாசியாவது, கலவைப் பொற்காசிற் கலந்துள்ள செம்பிற்காக வாங்கப்பட்ட வட்டம். தூய பொற் காசு நற்காசு எனப்பட்டது.
திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தமூர்த்தியாரும் திருவீழி மிழலைத் திருக்கோயிலிற் பெற்ற காசுகளுள், முன்னவர் பெற்றது நற்காசும் பின்னவர் பெற்றது கலப்புக் காசுமாயிருந்தன. கலப்புக் காசிற்கு வாசி வாங்கப்பட்டது. அதனால், சம்பந்தர் வாசி தீரவே - காசுநல்கிடீர் - மாசின்மிழலையீர் - ஏசலில்லையே, என்னுந் திருப்பதிகம் பாடி நற்காசு பெற்றார்.
நற்காசுகளையும் கலப்புக் காசுகளையும் உரைத்துக் காண்பதற்கு ஆங்காங்கு கட்டளைக்கல் என்னும் உரை கல்லும், தண்டவாணி என்னும் உரையாணியும் இருந்தன.
காய்ச்சி உருக்கினும் மாற்றும் நிறையும் குன்றாதென்பதற்கறி குறியாக, அதிகாரிகளால் துளையிடப்பட்ட துளைப்பொன் என்பதும், அக்காலத்து வழங்கிற்று. தூய வெள்ளிக்காசும் துளையிடப்பட்டதாகத் தெரிகின்றது.*
முதற்காலத்தில் அகமதிப்பும் புறமதிப்பும் ஒத்திருந்த நாணயங் கள் சில, பிற்காலத்தில் நிறை குறைந்தும் தாழ்ந்த தாது கலந்தும் குறிநாணயம் (Token coins) ஆயின.
சங்க காலத்திற்குப் பிற்பட்ட காசுகளில், அரசர் குல முத்திரை யோடு அவ்வவ்வரசர் சிறப்புப் பெயரும் வழிபடு தெய்வக்குறியும் பிற வடிவங்களும் பொறிக்கப்பட்டன. அவை அவற்றை அடிப் பித்த அரசர் பெயரால் மதுராந்தகன் மாடை வீரபாண்டியன் காசு என வழங்கின. முத்திரைமட்டுமுள்ள பழங்காசுகள் பழம் பாண்டியன் காசு பழஞ்சோழன் காசு எனப் பட்டன. பேரரசர் காசுகளில், அவரால் வெல்லப்பட்ட அரசர் முத்திரைகளும் உடன் பொறிக்கப்பட்டன. சில காசுகள் இருபுறமும் ஒரே வகை யாகவும், சில வேறு வகையாகவும், குறிகள் கொண்டிருந்தன.
காசடிப்பதற்குத் தனிவரி வாங்கப்பட்டது. அது அடிகாசு பொன்வரி மாடைக்கூலி முதலிய பெயர்களாற் குறிக்கப்பட்டது.
மூவேந்தர் காசுகளும், முதலாவது சதுரமாகவும் நீள் சதுரமாகவு மிருந்து பின்னர் வட்ட வடிவு பெற்றன வென்று, நாணய வாராய்ச்சியாளர் கூறுவர்.
பிறவரசர் காசுகள்: கி.பி.4ஆம் நூற்றாண்டிலிருந்து, வணிகத் தொடர்பாகவும் அரசியல் தொடர்பாகவும். பிறவரசர் காசுகளும் தமிழ்நாட்டில் வழங்கிவந்தன.
பலகால ரோமக்காசுகள் - சிறப்பாக 4ஆம் 5 ஆம் நூற்றாண்டிற் குரியவை - தமிழ்நாட்டிற் பலவிடங்களிலும், அவற்றுள்ளும் சிறப்பாக மதுரையைச் சுற்றியும், மூவுலோகத்திலும் பெருவாரி யாய்க் கிடைத்திருக்கின்றன. முதற்பாண்டியப் பேரரசுக் காலத்தில் (590-925) திருப்புத்தூரிலுள்ள ஒரு பார்ப்பனியார் அவ்வூர்க் கோயிலில் ஒரு விளக்கேற்றுதற்கு 10 தினாரம் (ரோமப் பொற்காசு)* (denarius) அளித்தனர். சடாவர்மன் குலசேகர பாண்டியன் (1190- 1217), தன் பெயர் தாங்கிய குளம் ஒன்றை ஆழமாக்குதற்கு 100 திரம்மம் (கிரேக்கப் பொற்காசு) (drachma) கொடுத்தான். இதனால், யவனக் காசுகள் அரசராலும் வழங்கப் பட்டமை அறியலாகும்.
பல்லவர் மேம்பட்டிருந்த இடைக்காலத்தில், அவருடைய காளை முத்திரையும் விளக்கு சக்கரம் முதலிய பிற குறிகளும் பொறிக்கப்பட்ட காசுகள், சோழநாடு முழுமையும் பரவி யிருந்தன.
12ஆம் நூற்றாண்டில் வீரபாண்டியனுக்கும் குலசேகர பாண்டி யனுக்கும் நடந்த உள்நாட்டுப் போரில், முன்னவனுக்குத் துணையாயிருந்த முதலாம் பராக்கிரமபாகு என்னும் இலங்கை யரசனுக்குப் பாண்டி நாட்டில் ஏற்பட்ட ஆதிக்கத்தினால், அவனது காகப் பணம் என்னும் ஈழக்காசு சிறிதுகாலம் தென்னாட்டில் வழங்கிற்று. அது சதுரமானதும், 72 அல்லது 73 குன்றிமணி எடையுள்ளதும், ஒரு முரட்டுமாந்தன் ஒரு புறத்தில் நிற்பதும் ஒரு புறத்தில் இருப்பதும் போலப் பொறித்ததும், அரசு (போதி) யானை சக்கரம் கும்பம் முதலிய வுருவங்களைக் கொண்டது மான செப்புக் காசாகும்.
சாளுக்கியர்க்குத் தமிழ்நாட்டின் வடபாகத்தில் செல்வாக்கேற் பட்ட பிற்காலத்தில், அவர்களது வராக முத்திரை கொண்டதும் 3½ ரூபா மதிப்புள்ளதுமான வராகன் என்னும் பொற்காசு, தமிழ் நாடு முழுமையும் வழங்கிற்று.
14ஆம் நூற்றாண்டில், டில்லியிலிருந்து ஆண்ட டோக்ளாக்
(1325-50) என்னும் முகமதியப் பேரரசனின் தங்கர் என்னும் செப்புக்காசு, தென்னாடுவரை வழங்கியதாகத் தெரிகின்றது.
இங்ஙனம், இறுதிக்காலத்தில், மூவேந்தர் காசுகளிடையே வேறு பல்லரசர் காசுகளும் விரவி வழங்கியிருந்திருக்கின்றன. (ப.த.ப.நா.)
பண்டாரம்
பண்டாரம் - வ. பாண்டார (bh)
பண் - பண்டு - பண்டம் = பண்ணப்பட்ட பொருள்.
பண்டம் - பண்டாரம் = சரக்கறை, பொக்கசம் (Treasure) பொக்கசச்சாலை (Treasury) களஞ்சியம், பொக்கசச்சாலையுள்ள கோயில் அல்லது அரண்மனை, பல்பொருட் சரக்கறைபோன்ற பெரும் பண்டிதன், பெரும்புலமையால் உலகப்பற்று விட்ட துறவி, போலித் துறவியான இரப்போன்.
பண்டார வாரியம் = கோயில் மேற்பார்வைக் குழுவார்.
(T.A.-S.I.293)
பண்டாரம் - வ. பிண்டார
பண்டாரம் = போலித் துறவியான ஆண்டி, இரப்போன்.
வடவர் பிண்டம் (சோற்றுருண்டை) வாங்கிப் பிழைப்பவன் என்று மூலப்பொருள் கூறுவர். இதற்குப் பண்டாரம் என்னும் சொல்லைப் பிண்டார என்று திரித்துக் கொண்டதே காரணம். (வ.வ. 198).
பண்டிதன்
பண்டிதன் - வ. பண்டித
பண்டு- பண்டம் - பண்டிதன் = பல பொருள்களை அறிந்த புலவன். பண்டிதன் - பண்டிதம் = புலமை.
பேரா. பரோ வேறு வகையில் இச்சொல்லைத் தென் சொல்லாகக் காட்டுவர். அவர் கூறுமாறு:-
“pandÀita - ‘wise, learned’; properly ‘ripened, mature’ cf. Te. panÀdÀu ‘to ripen, mature; ripe’, panÀdÀa ‘wisdom, intelligence’, Pj. panÀdÀ - ‘to mature’, Go. Kol. panÀdÀ - ‘to ripen’- The Sanskrit Language, p. 384.
வடவர், பண்டா (ஓதி, அறிவு, கல்வி) என்னும் சொல்லினின்று சிலரும், பருந்தித (துடிப்பு) என்னும் சொல்லினின்று சிலரும், ஆக இரு வேறு வகையில் பண்டிதன் என்னும் சொல்லைத் திரிப்பர். பண்டா என்னும் சொல்லும் பண்டம் என்பதின் திரிபே. துடிப்பை மனத்துடிப்பென்பர். (வ.வ. 198).
பண்டைத் தமிழ் மணம்
பண்டைத் தமிழ் மணம் என்று இங்குக் குறிக்கப்பட்டவை, தமிழகத்தில், தொன்றுதொட்டுப் பிராமணர் பெருந்தொகையாய் வந்து பலவூர்களிலும் தங்குமளவும், தமிழப் பார்ப்பாராலும் குலத் தலைவராலும் தமிழில் நடத்தப் பெற்று வந்த மணங் களாகும்.
பிராமணர் தென்னாடு புகத் தொடங்கியது ஏறத்தாழக் கி.மு.2000 எனினும், அவர் முதலடியிலேயே பெருந்தொகையினராய் இங்கு வந்தவரல்லர். முதன் முதல் இங்குக் கால் வைத்த பிராமணர் விரல் விட்டு எண்ணத்தக்கவரே யாவர். கிறித்தவ வூழி தொடங்கும்வரை இடையிட்டிடையிட்டுச் சிறு சிறு கூட்டத்தாராகவே அவர் வந்துகொண்டிருந்தனர். கி.பி.3ஆம் நூற்றாண்டிற்குப் பின், பல்லவ அரசர் காலத்தில்தான், அவர் பெருவாரியாக வட நாட்டிலிருந்து குடியேற்றப்பட்டனர். இதைப் பிற்காலச் சேர சோழ பாண்டியரும் பின்பற்றினர்.
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட என்று சிலப்பதிகாரம் பிராமண அல்லது ஆரியப் பார்ப்பனப் புரோகிதத்தைக் குறித் திருப்பது, கடைச்சங்கக் காலத்தில் நகரங்களிலும் மாநகரங் களிலும் பெரும்பாலும் அரசரிடையும் வணிகரிடையும் இருந்த நிலைமையைத்தான் குறிக்கும். இன்றும் பிராமணரில்லாத பல நாட்டுப்புறத்தூர்கள் இருப்பதாலும், சில தமிழக்குலத்தார் பிராமணப் புரோகிதமின்றித் தம் மணங்களை நடத்திக் கொள்வதாலும், பிராமணர் வந்தபின்பும், கடைச்சங்கக் காலம் வரை பெரும்பால் தமிழர் மணங்கள் தமிழ்மரபிலேயே நடந்து வந்தன என்று அறிதல் வேண்டும்.
தமிழப் பார்ப்பார், பண்டாரம், புலவன், குருக்கள், திரு(க்கள்), பூசாரி, உவச்சன், ஓதுவான், போற்றி, நம்பி, அருமைக்காரன் (புடவைக்காரன்), வள்ளுவன் முதலிய பல்வேறு வகுப்பார் ஆவர். பார்ப்பான் கோயிற் கருமங்களைப் பார்ப்பவன்.
அந்தணன் ஐயன் என்னும் பெயர்கள் முதன்முதல் தமிழத் துறவியரையே குறித்தது போன்று, பார்ப்பான் என்னும் பெயரும் முதன்முதல் தமிழப் பூசாரியையே குறித்தது. துரை என்னும் தமிழ் அல்லது தெலுங்கச் சொல் நம் நாட்டில் தங்கும் மேனாட்டார்க்கு வரையறுக்கப்பட்டது போன்றே, அந்தணர், பார்ப்பார் என்னும் பெயர்களும் பிராமணர்க்கு வரையறுக்கப் பட்டன என்க. தமிழருள், பார்ப்பார் என்பார் இல்லறத்தாரும், அந்தணர் என்பார் துறவறத்தாரும் ஆவர்.
குலத்தலைவராவார், நாட்டாண்மைக்காரன், நாட்டான், பெரிய தனக்காரன், அம்பலக்காரன், ஊர்க்கவுண்டன், ஊர்க்குடும்பன், பட்டக்காரன், ஊராளி, மூப்பன் என ஆங்காங்கு வெவ்வேறு பெயரால் அழைக்கப்பெறும் குலவியல் ஊராட்சியாளர்.
பண்டைத் தமிழ்மண முறையிலேயே இன்னும் பல மணங்கள் நடந்து வருவதால், அவற்றையுந் தழுவுமாறு பண்டைத் தமிழ் மணம் என்னும் என்று பொருள் கொள்க.
1. மணவகை
1. உலகியற் பாகுபாடு
பண்டைத் தமிழ் மணங்களின் உலகியற் பாகுபாடு, பின் வருமாறு பல்வேறு முறை பற்றியதாகும்.
2. கொள்முறை பற்றியது
பண்டைத்தமிழ் மணங்கள், பெண்கோடல் முறை பற்றி, (1) கொடைமணம் (2) காதல் மணம், (3) கவர்வு (வன்கோள்) மணம் என முத்திறப்படும்.
(1) கொடை மணம்
கொடைமணமாவது, மணமகனேனும் அவன் பெற்றோரேனும் மணமகள் பெற்றோரை அடுத்துக்கேட்க, அவர் கொடுப்பது. அது, (i) தானக்கொடை, (ii) விலைக்கொடை, (iii) நிலைப்பாட்டுக் கொடை என மூவகைத்து.
தானக்கொடையாவது, ஒருவர் தம் மகளைத் தக்க ஏழை மணாளனுக்குத் தாமே எல்லாச் செலவும் ஏற்று மணஞ்செய்து வைப்பது; விலைக்கொடையாவது, ஒருவன் தன் மகளுக்கு ஈடாக ஒரு தொகையை ஒரு செல்வனிடம் பெற்றுக் கொண்டு; அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுப்பது; விலை விற்பனை; இது கீழோரிடம் அருகி நிகழ்வது: நிலைப்பாட்டுக் கொடையாவது, ஒருவர் தம் மகளை ஒருவனுக்கு ஏதேனும் நிலைப்பாடு அல்லது அக்குத்துப் (Condition) பற்றி மனைவியாகக் கொடுப்பது. அந் நிலைப்பாடு, இத்துணைப் பரிசந் தரல் வேண்டு மென்றும், இத்துணைக் காலம் பெண்ணின் பெற்றோருக்கு உழைத்தல் வேண்டுமென்றும், இன்ன மறச் செயலைப் புரிதல் வேண்டுமென்றும், மணமகளை இன்ன கலையில் வெல்லுதல் வேண்டுமென்றும், மணத்தின்பின் பெண் வீட்டிலேயே வதிதல் வேண்டுமென்றும், பல்வேறு திறப்பட்டதாயிருக்கும்.
மறச்செயல்கள், கொல்லேறு கோடல் (ஏறு தழுவல்), திரிபன்றி யெய்தல், புலிப்பால் கறத்தல், கொடுவிலங்கு கோறல், பகைவரை யழித்தல், வில்நாணேற்றல், பெருங்கல் தூக்கல் முதலியன. ஏறு- காளை, கோடல்- அடக்கல், கோறல் - கொல்லுதல். திரிபன்றி யெய்தலாவது, மிக வுயரத்தில் விரைவாகச் சுழன்று கொண்டிருக்கும் சிறிய பன்றியுருவை ஒரே தடவையில் எய்து வீழ்த்துதல்.
பண்டைக் காலத்தில் முல்லை நிலத்திலிருந்த ஆயரிடை ஏறு தழுவி மணப்பதே குலமரபாக இருந்து வந்தது. ஓர் ஆயர்பாடியில் அல்லது சேரியில், ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் அதன் பெயருக்கு ஒரு சேங்கன்றைப் பெற்றோர் ஒதுக்கி வைப்பர். அக் கன்றைக் காயடியாமலும், வேலையில் வயக்காமலும், கொழுத்த ஊட்டங் கொடுத்துக் கொம்பு சீவிக் கூராக்குவர். ஆண்டு தோறும், குறித்த நன்னாளில், மணப்பருவமடைந்த மங்கையர்க் குரிய காளைகளையெல்லாம் ஒரு தொழுவத்தில் அடைத்து வைத்து, ஒவ்வொன்றாகத் திறந்து விடுவர். மக்கள் ஆரவாரத்தை யும் ஏறுகோட்பறை முழக்கத்தையும், கண்டும் கேட்டும், மருண்டோடும் ஒவ்வொரு கொல்லேற்றையும், மாணியரான ஆய இளைஞர் பிடித்து நிறுத்த முயல்வர். பலர் கொல்லேறுகளாற் குத்திக் கொல்லப்படுவது முண்டு. ஒரு கொல்லேற்றை எவன் பிடித்தடக்கி நிறுத்துகின்றானோ அவன் அவ் ஏற்றிற்குரிய ஆய மகளை மணப்பான். இம் மணமுறை, கலித் தொகை என்னும் சங்க நூலில், முல்லைக் கலியில், விரிவாகக் கூறப் பட்டுள்ளது. வடநாட்டிற் கண்ணன் ஏழ் ஏறுதழுவி நப்பின்னையை மணந்தது இத் தமிழ் மரபே.
இங்ஙனம் ஒரு மறச்செயலை மணமகனது தகுதியாகக் கொள்ளும் வழக்கத்தினால், ஒரு குலத்தாரின் மறத் திறம் மேன்மேலும் வளர்ந்து வருவதுடன், அவர்க்குப் பிறக்கும் குழந்தைகளும் இயல்பாக மறவுணர்ச்சி விஞ்சிய வாயிருக்கின்றன. இவ்வாறு, மறஞ்சிறந்த ஆடவரையே பெண்டிர் மணக்கும் ஏற்பாட்டை, பாலியல் தெரிப்பு (Sexual Selection) என்பர் டார்வின் பேரறிஞர். ஒரு குலத்தார் தமக்குள்ளேயே நெடுகலும் மணந்து வருவதால் ஏற்படும் எச்சவியற் குறைபாட்டிற்கு ஈடு செய்வது, ஏறுதழுவல் போன்ற மணமகன் மறவியல் தகுதி ஏற்பாடே.
ஏறு தழுவல் என்னும் பண்டை வழக்கமே, இன்று கள்ளர் மறவரிடைச் சல்லிக்கட்டு என்றும், மஞ்சுவிரட்டு என்றும் வழங்கி வருகின்றது. ஆயர் இவ் வழக்கத்தை நீண்ட காலமாக அடியோடு விட்டுவிட்டதினால், தம் முன்னோரின் மறத்தை முற்றும் இழந்துவிட்டனர். சல்லிக்கட்டு மாட்டுத் தொழுவை இன்றும் பாடி அல்லது பாடி வாசல் என்றழைப்பது, இவ் வழக்கம் பண்டைக் காலத்தில் ஆயர்பாடியில் நிகழ்ந்தது என்பதை உணர்த்தும்.
திருமணத்தன்று மணமக்கள் ஊர்வலம் வருவதும், சில சிற்றூர் களில் அயலூர் மணமகன் வந்து ஒரு பெண்ணை மணந்து மீளும்போது, அவ்வூர் இளைஞர் இளவட்டக் காசு என்னும் கைந்நீட்டம் கேட்பதும், பண்டைக்காலத்தில் ஒரு பெண்ணை நோக்கிப் பல இளைஞர் போட்டியிட்டுப் பொருததைக் குறிப்பாய் உணர்த்தும்.
ஆண்மகப் பேறில்லாத பெற்றோர், தம் மருமகனைத் தம் இல்லத்திலேயே இருத்திக் கொள்வர். இவ் ஏற்பாட்டை இல்லத்தம் என்பர் கன்னடர்.
(2) காதல் மணம்
காதல் மணமாவது, ஓர் ஆடவனும் ஒரு பெண்டும் பெற்றோரைக் கேளாதும் பிறருக்குத் தெரியாதும் ஒருவரையொருவர் காதலித்து, தாமே கணவனும் மனைவியுமாகக் கூடிக் கொள்வது. இது, களவில் தொடங்குவதும் கற்பில் தொடங்குவதும் என இரு வகைத்து. களவென்பது மறைவு; கற்பென்பது வெளிப்படை நீ இன்னவாறொழுக வேண்டும் என மணமகள் திருமண ஆசிரியனால் கற்பிக்கப்படும் நிலைமை கற்பு என்பர்.
களவில் தொடங்குவது, இருமாத எல்லைக்குள் என்றேனும் வெளிப்பட்டுக் கற்பாக மாறிவிடும், இக் களவு வெளிப்பாடு, (1) உடன் போக்கு, (2) அறத்தொடு நிலை என்னும் இருவகை களுள் ஒன்றால் ஏற்படும். உடன்போக்காவது, களவொழுக்கம் தடைப்பட்டவிடத்து அல்லது காதலியின் பெற்றோர் அவளைத் தர இசையாவிடத்து, காதலன் அவளை வேற்றூர்க்கேனும் தன் வீட்டிற்கேனும் அழைத்துக் கொண்டு போய்விடல். அறத்தொடு நிலையாவது, காதலியின் மெலிவு கண்டு அதைப் போக்குவதற்கு, அவள் பெற்றோர் கட்டுவிச்சி (குறிகாரி) வேலன் (மந்திரக்காரன்) முதலியோரின் துணை வேண்டும்போதோ, அதற்கு முன்ன தாகவோ, காதலி தானாக வேனும் தன் தோழி வாயிலாகவேனும் தன் கதலனைப் பற்றித் தெரிவித்தல்.
காதலர் ஒரு நாளுங் களவொழுக்கமின்றிக் கற்பாகவே தம் கூட்டு வாழ்க்கையைத் தொடங்குவதுமுண்டு. இவ் இருவகைத் தொடக்கமும், கரணத்தோடு கூடியதாகவும் இருக்கலாம்; கூடாத தாகவுமிருக்கலாம், அக் கரணமும், மணமகன் தானே செய்விப்பதாகவுமிருக்கலாம்; மணமகள் பெற்றோரைக் கொண்டு செய்விப்பதாகவுமிருக்கலாம்.
இங்குக் கற்பென்பது உண்மையில் களவொழுக்கத்தின் வெளிப் பாடேயாயினும், அது பொதுவாகக் கரணத்தொடு கூடியதாகவே கொள்ளப்படும்.
கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே. (கற்பியல்,1)
கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான. (கற்பியல் 2)
என்பன தொல்காப்பியம்.
உடன்போக்குச் சென்ற காதலன், தன்னூர் வேற்றூராயின் போனவிடத்தும் காதலி யூரேயாயினும், பெரும்பாலும் தன் மனையிலேயே அதை வைத்துக் கொள்வன், உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர் என்பதாலும்.
உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று
என்பதாலும் (தொல். கள. 22), காதலியின் பெற்றோர் காதலனை ஒப்புக்கொண்டு, அவன் வதுவை மணத்தைத் தம் மனையில் நடத்தவிரும்பின், அவ் விருப்பம் நிறைவேறுவதுமுண்டு, யார் மனையில் வதுவை நிகழினும், வதுவைக்கு முன் மணமகள் காலில் அவள் பெற்றோரால் அணியப்பட்டிருந்த சிலம்பை நீக்குதற்கு ஒரு சடங்கு செய்யப்படும். அது சிலம்பு கழி நோன்பு எனப்படும்.
இதை,
நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நன்மணங் கழிகெனச்
சொல்லின் எவனோ மற்றே வென்வேல்
மையற விளங்கிய கழலடிப்
பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே.
என்னும் ஐங்குறுநூற்றுச் செய்யுளால் (399) அறியலாம்.
இது, உடன்கொண்டுபோன காதலன் மீண்டு வந்து, தன் காதலியைத் தன் இல்லத்திற்குக் கொண்டு சென்ற விடத்து, அவன் தாய் அவளுக்குச் சிலம்பு கழி நோன்பு செய்கின்றாளெனக் கேட்ட நற்றாய் (பெற்ற தாய்), அங்கு நின்றும் வந்தார்க்குச் சொல்லியது.
(நும்-உம். சிலம்பு - தண்டை. கழீஇ- கழித்து. அயரினும்- கொண்டாடினாலும். கழிகென - நடக்கவென்று. எவனோ- என்ன. வென்-வெற்றி. மையற- குற்றம் நீங்க, கழல்- வீரக்காலணி, காளை - வீரனாகிய காதலன்).
கரணமின்றியும் கணவனும் மனைவியுமாக இரு காதலர் இசைந்து வாழக்கூடு மாயினும், கரணத்தொடு தொடங்கும் இல்லறமே எல்லாராலும் போற்றப்படுவதாம்; அஃதில்லாக்கால், அது வைப்பு என இழிந்தோராலும் தூற்றப்படுவதே.
காதலர் வாழ்வு களவொழுக்கத்தோடு தொடங்கின் மெய்யுறு புணர்ச்சியும், அல்லாக்கால் உள்ளப்புணர்ச்சிமாத்திரையும், கற்பிற்குமுன் பெறுபவராவார்.
பெற்றோரும், பிறரும் முடித்து வைக்கும் திருமணத்திலும் மணமக்கள் இருவர்க்கும் காதலுண்டாகலாமெனினும், காதல் மணமென்று சிறப்பித்துச் சொல்லப்பெறுவது ஓர் ஆடவனும் ஒரு பெண்டும் தாமாக வாழ்க்கை ஒப்பந்தஞ் செய்துகொள்வதே.
மடலேற்றம்
முதுபழங்காலத்தில், ஒரு கடுங்காதலன் அல்லது காதற்பித்தன் அவன் காதலியை மணத்தற்கு அவள் பெற்றோர் இசையாவிடின், அவளைப் பெறுதற்கு மடலேற்றம் என்னும் உயிர்ச்சேதத்திற் கிடமான ஒரு வன்முறையைக் கையாள் வதுண்டு. அது இக்காலத்துச் சத்தியாக்கிரகமென்னும் பாடுகிடப்புப் போன்றது.
மடலேறத் துணிந்த காதலன், நீர்ச்சீலை ஒன்றேயுடுத்து உடம்பெலாஞ் சாம்பற் பூசி எருக்கமாலையணிந்து, தன் காதலியின் ஊர் நடுவே தவநிலையிலமர்ந்து, அவள் உருவை வரைந்த ஒரு துணியைக் கையிலேந்தி, அதை உற்று நோக்கிய வண்ணமாய் வாளாவிருப்பன். அதனைக் கண்ட அவ்வூரார் ‘நீ ஆய்வு (சோதனை) தருகின்றாயா? எனக் கேட்பர். அவன் தருகின்றேன் எனின், பனங்கருக்கு மட்டையாற் செய்த ஒரு பொய்க் குதிரையின் மேல் அவனையேற்றித் தெரு நெடுக இழுத்துச் செல்வர். அங்ஙனம் இழுக்கும்போது, அவன் உடம்பிற் கருக்கறுத்துக் காயம் பட்டவிடமெல்லாம் வெளுத்துத் தோன்றின், அவனுக்கு அவன் காதலியை மணமுடித்து வைப்பர்; அல்லாக்கால் வையார். இது காதலர் தாமாகக் கூடுவதன்றா யினும், ஒருபுடை யொப்புமை பற்றி இங்குக் கூறப்பட்டது.
காதற் பாட்டுக்கள்
இவ்வுலகிற் சிறந்தது இல்லற இன்பம். அதிலும், காதலர் நுகர்வது கரையற்றது. அவர் ஓரூரராயும் ஒருவரையொருவர் முன்னறிந்த வராயும் இருக்கவேண்டுமென்னும் யாப்புறவில்லை கருங் கடலுப்பிற்கும், கருமலை நாரத்தைக்கும் தொந்தம் ஏற்படுவது போல், நெட்டிடைப்பட்ட இருவர் ஓரிடத்து ஒருவரை யொருவர் கண்டு காதலிக்கவும் நேரும். அத்தகை நிலைமை வாய்ந்த ஒரு காதலன் கூற்றாகவுள்ள பாட்டொன்று வருமாறு:-
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்.
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெய்ந்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. (குறுந், 40),
(யாய்-என் தாய், ஞாய்- உன் தாய், எந்தை- என் தந்தை. நுந்தை- உன் தந்தை, கேளிர்- உறவினர். செம்புலப் பெய்ந்நீர் போல- சிவந்த நிலத்திற் சேர்ந்த நீரும் சிவப்பதுபோல.)
இனி, ஒரு காதலி கூற்றாக வுள்ள பாட்டொன்று வருமாறு:-
இராமழை பெய்த ஈர ஈரத்துள்
பனைநுகங் கொண்டு யானையேர் பூட்டி
வெள்ளி விதைத்துப் பொன்னே விளையினும்
வேண்டேன் பிறந்தகத் தீண்டிய வாழ்வே
செங்கேழ் வரகுப் பசுங்கதிர் கொய்து
கன்று காத்துக் குன்றில் உணக்கி
ஊடுபதர் போக்கிமுன் உதவினோர்க் குதவிக்
காடுகழி இந்தனம் பாடுபார்த் தெடுத்துக்
குப்பைக் கீரை உப்பின்றி வெந்ததை
இரவல் தாலம் பரிவுடன் வாங்கிச்
சோறது கொண்டு பீறல் அடைத்தே
ஒன்றுவிட் டொருநாள் தின்று கிடப்பினும்
நன்றே தோழிநம் கணவன் வாழ்வே.
(நுகம்-நுகத்தடி-ஈண்டிய- செல்வமிகுந்த. உணக்கி- காயவைத்து. இந்தனம்- விறகு. பாடு- விழுதல். தாலம்- உண்கலம். பரிவு- வருத்தம். பீறல் - சேலைக்கிழிவு.
3. கவர்வு மணம்
கவர்வு மணமாவது, ஒரு பெண்ணைப் பெற்றோரிசைவும் அவள் இசைவுமின்றி, வலிந்து பற்றுதல்.
அது, ஊருக்கு வெளியே தனித்து நிற்கும் ஓர் இளம் பெண்ணை, வேற்றூரான் ஒருவன் வலிந்து பற்றிக் கொண்டு போய், அவளை மனைவியாகக் கொள்வது போன்றது.
ஒரு மறக்குடிப் பெண்ணை மணக்க விரும்பிய வேந்தன், அக் குடியார் அதற்கிசையாவிடத்து, பெரும் படையொடு சென்று அவரோடு போர் புரிவதுண்டு. அம் மறவர் தம் குடியின் மானத்தைக் காத்தற்கு அஞ்சாது எதிர்ப்பர். இது மகட்பாற் காஞ்சி எனப்படும்.
நிகர்த்துமேல் வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பா டஞ்சிய மகட்பா லானும்.
என்று தொல்காப்பியர் கூறியது இதுவே (புறத்திணையியல், 24). இதனையே, மறம் என்னுங் கலம்பக வுறுப்பு, அரசன் பெண் கேட்டு விடுத்த திருமுகத்தைக் கொணர்ந்த தூதனை நோக்கி, மறவர் எச்சரித்தும் அச்சுறுத்தியும் விடுப்பதாகக் கூறும்.
ஒரு மணப்பெண்ணின் அழகைப் பழிக்கும்போது, அவள் என்ன ஒரு பெரிய சிறையா? என்று பெண்டிர் கூறும் வழக்கம், ஒரு காலத்திற் பேரழகுடைய பெண்கள் வலியோராலும் அரசராலும் சிறை பிடிக்கப்பட்டமையை உணர்த்தும்.
ஓர் அரசன், தன் பகையரசனை வென்று அல்லது கொன்று, அவனுடைய தேவியரைச் சிறை பிடித்து வந்து வேளம் என்னும் சிறைச்சாலையில் இட்டு அவமானப்படுத்துவது, கவர்வு மணத்தின் பாற்படாது.
2. குலமுறை பற்றியது
பண்டைமுறைத் தமிழ் மணங்கள், குலமுறை பற்றி அகமணம் (Endogamy), புறமணம் (Exogamy) என இருவகைப்படும்.
அகமணமாவது, ஒரு குலத்தார் தம் குலத்திற்குள்ளேயே மணத்தல்; புறமணமாவது ஒரு குலப் பிரிவார் தம் பிரிவிற்குள் மணவாது வேறொரு பிரிவில் மணத்தல்.
இன்றுள்ள குலங்களுள், கலப்புக் குலங்கள் தவிர ஏனைய வெல்லாம் அகமணத்தனவே. திணைமயக்கம் ஏற்படுமுன் குறவர், ஆயர், வேட்டுவர், உழவர், நுளையர் (செம்படவர்) எனத் தமிழர் ஐந்திணை மக்களாய் வெவ்வேறு நிலத்தில் வாழ்ந்தபோது, அவர்க்குள் பெரும்பால் வழக்கமாய் நிகழ்ந்தது அகமணமே.
குலப் பிரிவுகள், நாடு, ஊர், குலம், கூட்டம், கிளை, வகுப்பு, இல்லம், கரை முதலியனவாகப் பல்வேறு திறப்படும்.
நாடும் ஊரும் இல்லும் குடியும்
பிறப்பும் சிறப்பும்
என்பது தொல்காப்பியம் (1060).
சேலம் மாவட்டத்துச் சேர்வராயன்மலை பச்சைமலை கொல்லி மலை முதலிய மலைகளில் வாழும் தமிழ் மலையாளிக் குலத்தில், (1) பெரிய மலையாளி, (2) பச்சை மலையாளி, (3) கொல்லி மலையாளி என்னும் மூன்றும் உட்குலங்கள். இவற்றுள், கொல்லி மலையாளி என்னும் உட்குலத்தில் (1) முந்நாட்டு மலையாளி,
(2) நால்நாட்டு மலையாளி, (3) அஞ்சூர் மலையாளி என்னும் நாட்டுத் தொகுதியில், (1) மயிலம் (2) திருப்புலி, (3) இடப்புலி, (4) பிறகரை, (5) சிற்றூர் என்னும் ஐந்தும் நாடுகள் என்னும் உட்பிரிவுகள். இவற்றுள், சிற்றூர் என்னும் நாட்டில், (1) பீலன், (2) மூக்காண்டி, (3) பூசன்,(4) மாணிக்கன், (5) திருவிச்சி, (6) கண்ணன் (7) தில்லான் என்னும் ஏழும் வகுப்புகள் என்னும் உட்பிரிவுகள். இவற்றுள் முன் ஐந்தும் ஒரு தொகுதித் தாயாதி வகுப்புகள்; பின் இரண்டும் மற்றொரு தொகுதித் தாயாதி வகுப்புகள், இவ் இரு தொகுதிகளுள் ஒவ்வொன்றும் அடுத்த தொகுதியுளன்றித் தன் தொகுதியுள் மணப்பதில்லை. இது புறமணமாம்.
கொங்கவேளாளர் குலத்தின் உட்பிரிவுகளான, தூரங்குலம் செம்போத்தங்குலம் ஆந்தைக்குலம் முதலிய இருபத்திரண்டு குலங்களும், புறமணத்தனவாம். இக் குலங்கள் கூட்டமெனவும் படும்.
ஒரே குலத்துள் தொடர்ந்து மணங்கள் நடைபெறுவதால் விளையும் கேட்டை விலக்குதற்கே, குலப்பிரிவுகட்குப் புறமணம் விதிக்கப்பட்டதாகத் தெரிகின்றது.
அரசர் பிறகுலத்தில் தாம் பெண்கொண்டாலும், தம் மகளிரைப் பிறகுலத்தார்க் குக் கொடுப்பதில்லை, இது உயர்மணத்தின் (Hypergamy) பாற்படும்.
3. மணமக்கள் தொகை பற்றியது
மணமக்கள் தொகைபற்றி, தமிழ் மணங்கள் (1) ஒரு மனையம் (Monogamy) (2) பல்மனையம் (Polygamy), (3) பல்கணவம் (Polyandry) என மூவகைப்படும்.
ஒரு காலத்தில் ஒரே மனைவியுடைமை ஒருமனையம்; ஒரே காலத்தில் பலமனைவியருடைமை பல்மனையம்; ஒரே காலத்தில் பல கணவருடைமை பல்கணவம்.
பண்டைக் காலத்தில், பல அரசரும் தலைவரும், பல்மனையத் தைத் தழுவியதுடன் பொது மகளிராகிய பரத்தையருடனும் தொடர்பு கொண்டிருந்தனர். பரத்தையருள், வேறாக ஓர் இல்லத்தில் இருப்பவள் இற்பரத்தையென்றும், பரத்தையர் சேரியில் இருப்பவள் சேரிப்பரத்தையென்றும், சேரிப்பரத்தை யருள் சிறந்து காதலிக்கப்படுபவள் காதற்பரத்தையென்றும் சொல்லப்படுவர்.
பரத்தையர் போன்றே பொது மகளிராயுள்ள இன்னொரு வகுப்பார் கணிகையர் (கூத்தியர்) என்பார். காலங் கணித்தாடுபவர் கணிகையர். அவர் நாடகக் கணிகையர் கோயிற் கணிகையர் என இருசாரார்.
இனி, பொது மகளில்லாது, கரணமின்றி மனைவியர் போல் வைத்துக் கொள்ளப்படும் வைப்பு என்னும் மகளிருமுண்டு. அவர் கன்னியராகவோ கட்டுப்பட்டவராகவோ கைம்பெண்டி ராகவோ இருக்கலாம்.
பண்டைத் தமிழர் பொதுவாகப் பண்பாட்டிலும் பல்துறைப் பட்ட நாகரிகத்திலும் சிறந்திருந்தாரேனும், பெண்ணின்பத் துறையில் பெரும்பாலும் நெகிழ்ந்த நெறியுடையராகவேயிருந் தனர். அரசர் கட்டுமட்டின்றிச் சிற்றின்பத்தை நுகர்ந்து வந்த தினாலேயே, உலா, மடல், காதல் முதலிய அகப்பொருட் பனுவல் களும் (பிரபந்தங்கள்) பரத்தையிற் பிரிவு என்னும் கோவைக் கிளவிக் கொத்தும் இடைக்காலத் தெழுந்தன. மேனாட்டார் இந் நாவலந் தேயத்திற்கு வந்த பின்பே, இந் நெறிதிறம்பிய நிலை திருந்தத் தொடங்கிற்று.
பல்கணவம் பெண் பஞ்சத்தாலும் பெண்கொலையாலும் ஏற்படுவது. அது இன்று நீலமலைத் தொதுவரிடையே உள்ளது.
4. மணமகள் நிலை பற்றியது
மணமகள் நிலைபற்றி, தமிழ் மணங்கள், (1) கன்னி மணம், (2) கட்டுப் பட்டவள் மணம், (3) கைம்பெண் மணம் என முத்திறப்படும்.
கன்னி மணம், ஒரு கன்னிப் பெண்ணைப் புதிதாக மணத்தல்; கட்டுப்பட்டவள் மணம், ஒருமுறை மணக்கப்பட்டுத் தீரப்பட் டவளை மணத்தல்; கைம்பெண் மணம், கணவனை யிழந்த வளை மணத்தல். இவற்றுள் பின்னவை யிரண்டும் இழிந்தோர் மணமாகவும் இடைத்தரத்தோர் மணமாகவும் இருந்து வந்திருக் கின்றன.
ஒருமுறை மணக்கப்பட்டவளை மறுமணஞ் செய்தல் சிறப் பில்லாததாகக் கருதப்படுவதால், கட்டுப்பட்டவள் மணத்தில் மணமுழா (கலியாண மேளம்) இன்றியே தாலி கட்டப்படுவது முண்டு. அது கட்டுத்தாலி யென்றும், மணமுழவு உள்ளது கொட்டுத் திருமணம் என்றும் பெயர் பெறும். கைம்பெண் மணம் பெரும்பாலும் கட்டுத்தாலியாகவே யிருக்கும்.
(2) இலக்கணப் பாகுபாடு
இனி, தமிழிலக்கண நூல்கள், மணமக்களின் காதல் நிலை பற்றித் தமிழ் மணங்களை. (1) கைக்கிளை, (2) அன்பின் ஐந்திணை, (3) பெருந்திணை என மூவகையாக வகுத்துக் கூறும்.
கைக்கிளையாவது, ஆடவன் பெண்டு ஆகிய இருவருள்ளும் ஒருவருக்கே காதல் இருப்பது; அன்பின் ஐந்திணையாவது, அவ் இருவருக்கும் காதல் இருப்பது; பெருந்திணையாவது, அவ் இருவருக்கும் காதல் இல்லாதிருப்பது அல்லது ஒருவரை யொருவர் வலிந்து கொள்வது. இம் மூன்றும், முறையே ஒருதலைக் காமம், இருதலைக் காமம், பொருந்தாக் காமம் என்றும் சொல்லப்பெறும். கை என்பது பக்கம். கிளை என்பது நேயம். ஆகவே கைக்கிளை என்பது ஒருதலைக் காதல், ஐந்தினை என்பன, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்னும் ஐந்நிலங்கள். குறிஞ்சி மலையும் மலைசார்ந்த இடமும்; முல்லை மலையற்ற செடிங்காடும் புல்வெளியும்; பாலை நீரும் நிழலுமின்றி வற்றி வறண்ட இடம்; மருதம் நீர்வளமும் நிலவளமும் ஒருங்கேயுள்ள வயல்நாடு; நெய்தல் கடலும் கடற் கரையும். இவ் ஐந்நிலங்கட்கும் பொதுவாகக் கொள்ளப்பட்ட தினால், இருதலைக் காதல் அன்பின் ஐந்திணை யெனப்பட்டது.
பெருந்திணை பெரும்பகுதி மக்கள் மணமுறைகளுட் பெரும் பாலனவற்றைத் தன்னுள் அடக்கி நிற்பதால், பொருந்தாக் காமம் பெருந்திணை யெனப்பட்டது. கவர்வு மணங்களும், இயற்கைக்கு மாறான எல்லாப் புணர்ச்சிவகைகளும், பெருந்திணையே, காதலொடு பொருந்தாமையும் நெறியொடு பொருந்தாமையும் பற்றி, பெருந்திணை பொருந்தாக் காமம் எனப்பட்டது.
கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் நிலமில்லாதபடி, ஐவகை நிலங்களையும் நடுநாயகமான அன்பின் ஐந்திணைக்கே உரிமை யாக்கிவிட்டதனால், மக்கட்கு நலம் பயவாத ஏனை யிரு மண முறைகளும் இந் நிலவுலகத்தில்லாது நீங்கல் வேண்டும் என்பது, முன்னைத் தமிழிலக்கண நூலாரின் கருத்தாகும்.
மணமக்களின் இசைவைக் கேளாது பெற்றோரே முடித்து வைக்கும் திருமணங்களில், மணமகனுக்கு அல்லது மண மகளுக்கு மட்டும் காதல் இருப்பின், அது கைக்கிளை மணமாம்; இருவருக்கும் இருப்பின், அது அன்பின் ஐந்திணையாம்; ஒருவருக்கும் இல்லாவிடின், பெருந்திணையின் பாற்படுவதாம்.
மணமக்கள் இருவருள் ஒருவருக்கு மட்டும் காதல் இருக்கும் போது, ஏனையவரும் எதிர்ப்பின்றி இசைந்திருந்தால்தான், அது கைக்கிளை மணமாகும். அல்லாக்கால் அது பெருந்திணையே. ஒருதலைக் காமம் என்பது காதலின்றியும் இசைந்துவரும் பெண்ணை ஆடவனும் ஆடவனைப் பெண்ணும் மணப்பதே யன்றி, இசையாப் பெண்ணையும் ஆடவனையும் வலிதில் மணப்பதன்று.
ஒருதலைக் காமம் என்னும் முறையில் கைக்கிளையும், பெருந்திணையும் ஒக்குமேனும், முன்னது நெறிப்பட்டதென்றும், பின்னது நெறி திறம்பியதென்றும், இவற்றின் வேறுபாடறிதல் வேண்டும்.
காமவுணர்ச்சியில்லாச் சிறுமியிடத்தும், காமவுணர்ச்சி யிருந்தும் தன்மேற் காதல் கொள்ளாப் பருவப் பெண்ணிடத்தும், ஒருவன் காதல் மொழிகளைக் கூறி இன்புறுவது கைக்கிளைக் குறிப் பேயன்றிக் கைக்கிளை மணமாகாது.
இருதலையுங் காதலுள்ளவிடத்தும், முதியாளொடு கூடுதலும், கூட்ட இடையீடு பாட்டால் ஏற்படும் காமப் பித்தமும் கழி நெஞ்சழிவும், பெருந்திணையென்று கூறப்பட்டிருப்பதால்; விண்ணின்பத்தை யொத்ததொரு பெண்ணின்பத்தை மண்ணுல கோர்க்கு வகுத்தனர் முன்னைத் தமிழ் இலக்கணியர் என்க.
இத்தகைய இன்பம் மிக மிக அரிதாய் ஒரு சிலர்க்கே கிட்டுவதாயினும், அதை ஓர் அளவையாகக் கொண்டு கூறியது புலனெறி வழக்கம் எனப்படும்.
2. மணத்தொகை
பண்டைத் தமிழ் மணங்கட்கு இத்துணை என்னுந் தொகை வரம்பில்லை. மணப்பருவம் மணமகனுக்குப் பதினாறாண் டென்றும், மணமகளுக்குப் பன்னீராண் டென்றும், நூல்கள் கூறும். பண்டைக் காலத் தமிழ் மக்கள் எத்துணை வலிமை மிக்கவராய் இருந்திருப்பினும், நூல்களில் மணமக்கட்குக் குறிக்கப்பட்ட பருவம் முந்தியதே. அக்காலத்தில் திருமணச் சட்ட வரம்பின்மையாலும், இன்பச் சிறப்பொன்றையே மக்கள் கருதியதாலும், இளமை முதல் முதுமை வரை எத்துணை மணஞ் செய்ய முடியுமோ அத்துணை மணஞ் செய்தற்கு அன்று இடமிருந்தது. ஆயினும் சில அரசரும் கீழோருமே இந்நிலையை மிகுதியாய்ப் பயன்படுத்தினர். பெண்டிர்க்குக் காமநுகர்ச்சிப் பருவம் பன்னீராண்டு முதல் நாற்பதாண்டுவரை என்பது நூன் மரபு.
பெண்ணின் ஐந்தாண்டு முதல் நாற்பதாண்டு வரைப்பட்ட பருவத்தைப் பின்வருமாறு எழுநிலையாக இலக்கண நூல்கள் வகுத்துக் கூறும்.
1. பேதை 5-7 ஆண்டு.
2. பெதும்பை 8-11 ஆண்டு.
3. மங்கை 12-13 ஆண்டு.
4. மடந்தை 14-19 ஆண்டு.
5. அரிவை 20-25 ஆண்டு.
6. தெரிவை 26-31 ஆண்டு.
7. பேரிளம்பெண் 32-40 ஆண்டு.
அரசர்க்குச் செல்வச்சிறப்பும், கீழோருக்குத் தீர்வை முறையும் மனைவியர் உழைப்பும், பல்மணஞ் செய்தற்குத் துணையா யிருந்தன.
அக்காலத்தரசர் கண்கண்ட தெய்வங்களாதலின், அவர் பன் மணஞ் செய்தலைத் தடுப்பார் எவருமிலர். ஆதலால், அவர் வழிமுறை மணங்கட்குக் காரணங் காட்ட வேண்டுவதில்லை. கீழோர், நோயும் மாதப்பூப்பும் சண்டையும்போலச் சிறு கூட்டத்தடை ஏற்படினும், அதைக் காரணமாகக் காட்டி மறுமணஞ் செய்து கொள்வர். முதல் மனைவிக்கு ஓராண்டு பிள்ளையில்லாவிடின், உடனே மறுமணஞ் செய்து கொள்வது சிலர் இயல்பு. சிலர், பிள்ளையிருப்பினும், இருபாலும் இல்லை யென்றும் பலரில்லையென்றும் சொல்லிக் கொண்டு, மறுமணஞ் செய்வதுண்டு. இது இன்றும் தொடர்ந்து வருகின்றது.
3. மண நடைமுறை
பண்டைத்தமிழ் மணங்கள் பின்வருமாறு நடந்து வந்தன.
(1) மணப்பேச்சு
பொதுவாக, ஓர் இளைஞனுக்குப் பதினெட்டாண்டு நிரம்பிய பின், அவன் பெற்றோர் அவன் காமக் குறிப்பறிந்தோ தாமாகக் கருதியோ, பெரும்பாலும் மரபுப்படி ஒத்த குலத்தில் ஒரு பெண்ணைப் பேசி மணஞ் செய்து வைப்பர்.
அம்மான் மகளும் அத்தை மகளும்போல முறைகாரப் பெண்ணாயின் உரிமைப்பெண் என்றும், வேறு செல்வர் வீட்டுப் பெண்ணாயின் பெருமைப் பெண் என்றும் அழைப்பது வழக்கம். உரிமைப் பெண் இல்லாவிடத்தும் அவளை மணவாவிடத்தும், அயலிலேயே மணம் பேசப் பெறும்.
மணப்பேச்சு முன்காலத்தில் ஒரு தொல்லையான கலையாக இருந்து வந்தது. மணமகன் பெற்றோர், மணக்கத்தக்க ஒரு பெண்ணின் பெற்றோரிடம், வள்ளுவன் அல்லது கணியன் குறித்த நன்னாளில், பெரியோரை விடுப்பர். பெற்றோரும் உடன் செல்வதுண்டு. பெண் பேசச் செல்லும்போது, குறி (சகுனம்), நற்சொல் (வாய்ப்புள்), புள் (பறவை நிமித்தம்) முதலியன பார்த்தல் வழக்கம்.
பெண்ணின் பெற்றோர் தம் மகளைத் தர இசைந்தபின் மணமகன் வீட்டார் மணமகனுக்கும் பெண்ணுக்குமுள்ள பொருத்தங் களைக் கணிய (சோதிட) முறைப்படி பல்வேறு வகையிற் பார்ப்பர். அப்பொருத்தங்கள், பொதுவாக.
1. நாள் (நட்சத்திரம்)
2. கணம்
3. எண்ணிக்கை (மாகேந்திரம்)
4. பெண் நீட்சி (திரீ தீர்க்கம்)
5. பிறவி (யோனி)
6. ஓரை (இராசி)
7. கோள் (இராசியதிபதி)
8. வசியம்
9. இணக்கம் (வேதை)
10. சரடு (இரச்சு)
எனப் பத்து வகைப்படும். இப் பத்து வகையும் ஒருங்கே பெரும்பாலும் பொருந்து வதில்லை. அதனால், பல்வேறு பெண்ணை நாடிப் பல்வேறு ஊர்க்குச் செல்வது வழக்கம், இது மிகுந்த அலைச்சலையும் காலக் கடப்பையும் உண்டு பண்ணும், இதனாலேயே, ஒரு மணத்திற்கு ஏழு செருப்புத் தேய வேண்டும் என்னும் பழமொழி எழுந்தது. இனி, மேற்கூறிய பதின் பொருத்தத்துடன், வாழ்நாள், குறிப்பு (பாவகம்), மரம், புள், குலம் என்னும் ஐம்பொருத்தம் பார்ப்பதுண்டு.
(2) மணவுறுதி (நிச்சயார்த்தம்)
யாரேனும் ஒரு பெண்ணிடம் பதின் பொருத்தமும் அமைந்திருப் பின், அல்லது அமைந்திருப்பதாகச் சொல்லப்படின், உறுப்புக் குறையும் நோய்க் குற்றமும் இல்லாவிடத்து, மணமகன் வீட்டாரும் பெண் வீட்டாரும் ஒரு நன்னாளில் பெண் வீட்டில் பலரறிய மணவுறுதி செய்து கொள்வர். அவ்வுறுதிச் சடங்கை உறுதி வெற்றிலை (நிச்சய தாம்பூலம்) என்றும் அழைக்கலாம்.
மணவுறுதிச் சடங்கில், வெற்றிலை பாக்கு, குங்குமம், மஞ்சள் முதலியன வைக்கப்பட்ட ஒரு தட்டில், பெண் வீட்டார் கேட்ட பரிசப் பணமும், பெண்ணிற்கு ஒரு கூறையும் வைக்கப்பெறும் இரு வீட்டாரும் மணப்பெண்ணிற்கு அணியவேண்டிய அணிகளும், திருமணச் செலவில் ஏற்றுக் கொள்ளவேண்டிய பகுதிகளும், அன்றே பேசி முடிவு செய்யப்படும்.
சில சமயங்களில், மணமகன் குற்றங்குறைகளை மணமகன் வீட்டாரும், மணமகள் குற்றங்குறைகளை மணமகள் வீட்டாரும், மறைத்துவைப்பதுமுண்டு. திருமணம் இருவர்க்கு வாழ்வை யுண்டுபண்ணும் மங்கல நிகழ்ச்சியாதலால், அங்ஙனம் மறைத்துவைப்போர் ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம் செய்துவை (ஒரு விளக்கேற்றிவை) என்னும் பழமொழியைச் சொல்லித் தம்மைத் தேற்றிக் கொள்வர்.
3. மணவிழா I.
(முன்னிகழ்ச்சிகள்)
மணவுறுதியான பின், மணத்திற்குரிய சித்திரை, ஆனி போன்ற நல்ல மாதத்தில், திங்கள், அறிவன் (புதன்) போன்ற நல்ல கிழமையில், 2-ஆவது 7-ஆவது போன்ற நல்ல பக்கத்தில் (திதியில்), புரவி (அசுபதி) சகடு (உரோகணி) போன்ற நல்ல நாளில் (நட்சத்திரத்தில்), நல்ல ஓரையில் (இலக்கினத்தில்) அமையும் மங்கல முழுத்தம் (முகூர்த்தம்) குறிக்கப் பெறும். அதன்பின், மணச்செய்தி காலமும் இடமுங்குறித்து, உற்றார் உறவினர் அனைவர்க்கும் பாக்கு வைத்துச் சொல்லப்பெறும்.
மணமனை, குலமரபுப்படி, மணமகன் வீடாகவோ மணமகள் வீடாகவோ இருக்கும். பொதுவாய், மணமகன் வீட்டில் மணம் நடைபெறும்.
மணமனையில், மணநாளுக்கு முன் 3, ,5, 7, 9 ஆகிய ஒற்றித்த நாட்களுள் ஒன்றில், நல்வேளையில் முழுத்தக்கால் நாட்டிப் பந்தல் அல்லது கொட்டகை போடப்பெறும். பந்தல் அலங் கரிப்பு அவரவர் செல்வ நிலையைப் பொறுத்தது. பந்தலில் வாழை கமுகு கூந்தற்பனை மடல் முதலியன கட்டப்பெறு வதுண்டு. எத்துணை யெளியராயினும் வாழை மரம் தப்பாது கட்டப்பெறும். அது மணமக்கள் மரபு குஞ்சுங் குழுவானுமாய் வழிவழி வாழ வேண்டும் என்னுங் குறிப்பையுடையதாகக் கருதப் பெறுவது.
பந்தல் நடுவில் அல்லது அதன் ஒரு கோடியில் மணவறை அமைக்கப்படும். அதன் காலொன்றில் அரசங்கொம்பு கட்டப் பெறும். அதை அரசாணிக்கால் என்பர். பண்டைக்காலத்தில் அரசன் தெய்வமாகக் கருதப்பட்டதினாலும், மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம் என்பதினாலும், அரசனைக் குறித்தற்கு அரசங் கொம்பை மணவறையில் நட்டி, அதை அரச ஆணிக்கால் என்று அழைத்ததாகத் தெரிகின்றது. மணவறையை அரசாணி மேடை என்பதுமுண்டு.
மணவறையில், பூ, மஞ்சள், குங்குமம், சந்தனம், அரிசி, அறுகு, வெற்றிலை பாக்கு, தேங்காய், முளைப்பாலிகை, விளக்கு, நிறைகும்பம், கோலப்பானை முதலிய மங்கலப் பொருள்கள் வைக்கப்பெறும், கோலப் பானையை ஆயிரங்கண்ணுப் பானை யென்றும், அரசாணிப் பானையென்றும் ஆயிரத்தாழியென்றுஞ் சொல்வதுண்டு. மணமக்கள் குறைவின்றி மங்கலமாய் நீடூழி வாழ வேண்டுமென்பதே, மணவறையில் மங்கலப் பொருள்களை வைப்பதின் கருத்து. விளக்கு தெய்வச் சின்னம்
மணவினைகள் தொடங்குமுன்பே, மணமகனுக்கும் மண மகளுக்கும், முறையே, வலக்கையிலும் இடக்கையிலும் காப்பு நாண் கட்டப்பட்டிருக்கும், மணவிழா முடியும் வரை மணமக்கட்குப் பேயாலும் பிறவற்றாலும் எவ்வகைத் தீங்கும் நேரக் கூடாதென்பதே, அதன் நோக்கம். காப்பு தீங்கு வராமற் காத்தல். முதற்காலத்தில் குளிசம்போற் கட்டப்பட்ட காப்பு நாணே, பிற்காலத்தில் அப்பெயருள்ள அணியாக மாறிற்று.
மண நாளில் மண மனையில் மங்கல மணமுழா முழங்கும், உற்றாரும் உறவினரும், மணப்பந்தற்கீழ் வந்தமர்வர். திருமண ஆசிரியன் முழுத்த வேளையில் மணவறையில் வந்தமர்வான். அவன் தமிழப் பார்ப்பானாகவோ. குலத் தலைவனாகவோ இருப்பான். மணமக்களும் நீராடி மஞ்சள் தோய்த்த அல்லது தோயாத புத்தாடையணிந்து, மணமகன் முன்னும் மணமகள் பின்னுமாக, தனித்தனியாக மணவறைக்குக் கொண்டு வரப்படுவர். மணமனை மணமகன் வீடாயின் மணமகளும், மணமகள் வீடாயின் மணமகனும், வேறோர் மனையிலிருந்து மேள தாளத்துடன் அழைத்து வரப்பெறுவர்.
II. கரணம்
திருமண ஆசிரியன் தெய்வ வழிபாடாற்றி, மணமக்கள் பெயரும் மணமும் விளம்பி, விளக்குச் சான்றாக அவர்களைச் சூளிடுவித்து, குங்குமம் மஞ்சளுடன் தட்டிலிட்டுச் சூடங் கொளுத்தப்பட்டுப் பெரியோரால் வாழ்த்தப் பெற்ற தாலியை எடுத்து, மணமகன் கையில் கொடுக்க, அவன் அதை வாங்கிப் பெண்ணின் கழுத்தில் கட்டுவன், அன்று முழவு இடியென முழங்கும். மணமக்கள் மேல் மலர் மாரி பொழியும். அதன்பின் மணமக்கள் மாலை மாற்றிக் கொள்வர். பெரியோர் அறுகும் அரிசியும் மணமக்கள் மேல் இட்டு அத்திபோல் துளிர்த்து, ஆல்போற் படர்ந்து, (தழைத்து) அரசுபோல் ஓங்கி, அறுகு போல் வேருன்றி, மூங்கில் போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர். என்றும், பகவனருளால் பாங்காயிருந்து பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்க. என்றும், பிறவாறும் வாழ்த்துவர். இது அறுகிடல் எனப்படும்.
III. பின்னிகழ்ச்சிகள்
திருமணத்திற்கு வந்தோர்க்கெல்லாம் தேங்காய் பழமும் பாக்கு வெற்றிலையும் சந்தனமும் பகிரப்பெறும். மங்கல மகளிரும் சிறுமியரும் அவற்றொடு மலரும் பெறுவர். அதன்பின் திருமண அவை கலையும். ஆயின், உற்றார் உறவினரெல்லாம் அங்கேயே யிருந்து மணவீட்டார்க்கு மொய்யும் மணமக்கட்கு நன்கொடை யும் வழங்குவர். மொய்யெல்லாம் ஓலையில் எழுதப்பெறும். மணமக்கள் பெரியோர் காலில் விழுந்து வணங்குவர்.
அன்று மாலை அல்லது இரவு, ஊர்வலம் நிகழும். மணமக்கள் அவ்வக்குல மரபுப்படி தேரிலோ, பல்லக்கிலோ, யானை குதிரை மீதோ வலம் வருவர், ஊர்வலம் முடிந்து வீடு சேர்ந்தவுடன், தேங்காயுடைத்தும், மஞ்சள் நீரால் மணமக்கள் பாதங்களைக் கழுவியும், ஆலத்தி யெடுத்தும், கண்ணெச்சில் (கண் திருஷ்டி) கழிக்கப்படும்.
திருமண விருந்து அக்காலத்தில் வேளைக்கணக்கா யிராது, நாட்கணக்கா யிருக்கும். எளியர் ஒரு நாளும், செல்வர் ஏழுநாள் வரையும், விருந்தளிப்பர்.
மணமக்கள் பருவம் வந்தோராயின் அன்றே கூட்டப்பெறுவர்.
மணவிழா முடிந்தவுடன், மணமக்கட்குக் காப்புக் கழற்றப்படும்.
மணமானபின், 3ஆம், 5ஆம், 7ஆம், 9ஆம், நாட்களுள் ஒன்றில், மணமக்கள், மணமகன் வீட்டில் மணம் நடந்தால் மணமகள் வீட்டிற்கும், மணமகள் வீட்டில் மணம் நடந்தால் மணமகன் வீட்டிற்குமாக வீடு மாறுவர். இது மறுவீடு (அல்லது மருவீடு) போதல் எனப்படும். மறுவீடு மணமகள் வீடாயின், அங்கு மணமகனுக்குச் செய்யப்படும் விருந்து, மரு அல்லது மருவு எனப் பெயர் பெறும்.
மனையறம்
மணவினைகளெல்லாம் முடிந்தபின், கோவலன் கண்ணகி போலும் செல்வக்குடி மணமக்களை இல்லறத்திற்குரிய பொருள்களெல்லலாம் இட்டு நிரப்பப்பெற்ற ஒரு தனிமனையில் இருத்துவது மரபு. அது மனையறம் படுத்தல் எனப்படும்.
சின்னாட் சென்றபின், மணமகள் பெற்றோர் மணமகன் வீடு சென்று, தம் மகள் மனையறம் நடத்தும் திறத்தைப் பார்வை யிடுவதுண்டு. அது வீடு பார்த்தல் எனப்படும்.
இதுகாறும் கூறியன எல்லார்க்கும் பொதுவான பருவினைச் சடங்குகள். இனி, அவ்வக் குல மரபிற்கேற்பச் சிறப்பாக நடை பெறும் நுண்வினைச் சடங்குகள் எத்தனையோ பல. விரிவஞ்சி அவை விடுக்கப்பட்டுள.
பண்டைக்கால வதுவைமணம் பற்றிய இரு பாட்டுக்கள் அகம். 86, 136.
இதன் பொருள் -
உழுத்தம் பருப்பொடு சேர்த்துச் சமைத்த கொழுமையான குழைந்த பொங்கலோடு பெரிய சோற்றுத் திரளையை உண்டல் இடையறாது நிகழ, வரிசையான கால்களையுடைய குளிர்ந்த பெரிய பந்தற்கீழ்க் கொண்டு வந்து கொட்டிய மணலைப் பரப்பி வீட்டில் விளக்கேற்றி, மாலைகளைத் தொங்கவிட்டு,
தீய கோள்களின் தொடர்பு நீங்கிய வளைந்த வெண்ணிலா வைக் குற்றமற்ற சிறந்த புகழையுடைய சகடம் (உரோகணி) என்னும் நாள் அடைய, மிகுந்த இருள் நீங்கிய அழகு பொருந்திய விடியற்காலையில், உச்சந்தலையிற் குடத்தையும் கையில் புதிய அகன்ற மொந்தையையும் உடைய, மணஞ்செய்து வைக்கும் ஆரவாரமுள்ள முதிய மங்கல மகளிர் முன்னே தருவனவற்றை யும் பின்னே தருவனவற்றையும் முறைப்படி எடுத்தெடுத்துக் கொடுக்க,
மகனைப் பெற்ற தேமலுள்ள அழகிய வயிற்றினையும் தூய அணிகளையும் உடைய மகளிர் நால்வர் கூடி நின்று, கற்பினின்றும் தவறாது பல நற்பேறுகளைப்பெற்று, உன் கணவன் விரும்பிப் பேணும் விருப்பத்திற் கிடமாகுக என்று வாழ்த்தி, நீரோடு சேர்த்துப் பெய்த குளிர்ந்த இதழ்களையுடைய பூக்கள், அடர்ந்த கரிய கூந்தலில் நெல்லோடு விளங்க.
17. நல்ல வதுவை மணம் முடிந்த பின்பு.
சுற்றத்தார் ஆரவார ஓசையுடன் விரைந்து வந்து, பெரிய மனைக்கிழத்தியாவாய் என்று சொல்லிச் சேர்த்து வைக்க, ஓர் அறையில் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய இரவில்,முதுகை வளைத்துக் கோடிப் புடவைக்குள் ஒடுங்கிக் கிடந்த பக்கத்தைச் சார்ந்து, கட்டியணைக்கும் விருப்பத்துடன் முகத்தை மூடியிருந்த ஆடையை விலக்க, அவள் அச்சத்தோடு மூச்சுவிட்டபோது, உன் உள்ளம் நினைத்ததை ஒளியாது சொல் என்று பின்பு யான் கேட்டதினால், இனிய மகிழ்ச்சியோடு இருக்கையில்,மானின் மடத்தோடு செருக்கையுங்கொண்ட பார்வையை யும் ஒடுங்கிய குளிர்ந்த கூந்தலையும் உடைய, அம் மாநிறத்தை யுடையவள், சிவந்த மணிகள் பதித்த விளக்கமான திரண்ட காதணிகள் காதில் அசைய, உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியளாகி முகத்தைத் தாழ்த்தி என்னை விரைந்து வணங்கினாள்.
நெஞ்சே குற்றமறப் பருப்புடன் கலந்து ஆக்கிய நெய்மிகுந்த வெண் சோற்றை, நீங்காத ஈகைத் தன்மையுடன் உயர்ந்த சுற்றத்தார் முதலியோரை உண்பித்து, புட்குறி இனிதாகக் கூட, தெள்ளிய ஒளியையுடைய அழகிய இடமகன்ற பெரிய வானம் களங்கமற விளங்க, திங்களைச் சகடம் கூடிய குற்றமற்ற நன்னாளில், மணமனையை அழகுபடுத்திக் கடவுளை வழிபட்டு, மணமேளத்துடன் பெரிய முரசம் முழங்க, தலைவிக்கு மண நீராட்டிய மகளிர், தம் கூரிய கண்களால் இமையாது நோக்கி விரைந்து மறைய,மெல்லிய பூவையுடைய வாகையின் அழகற்ற பின் புறத்தையுடைய கவர்ந்த இலையை, முதிய கன்று கறித்த பள்ளத்திற் படர்ந்த அறுகின், இடி முழங்கிய வானத்து முதன் மழைக்கு அரும்பிய கழுவிய நீலமணி போலும் கரிய இதழையுடைய பாவையொத்த கிழங்கிடத்துள்ள குளிர்ந்த மணமுள்ள அரும்புடன், சேர்த்துக் கட்டிய வெள்ளிய நூலைச் சூட்டி, தூய புத்தாடையாற் பொலியச் செய்து, விருப்பத்துடன் கூடி, மழையோசை போன்ற மண வோசை மிகுந்த பந்தலில் அணிகளை மிகுதியாய் அணிந்திருந் ததினால் உண்டான வியர்வையை விசிறியால் ஆற்றி, அவள் சுற்றத்தார் அவளை நமக்குத் தந்த முதல் நாள் இரவில்,
வெறுத்தலில்லாத கற்போடு கூடி என் உயிருக்கு உடம்பாக அடுத்தவள், கசங்காத புதுப்போர்வையைத் தன் உடல் முழுதும் போர்த்திக் கொண்டதால், மிகுந்த புழுக்கத்தையடைந்த உன் பிறை போன்ற நெற்றியில் அரும்பிய வியர்வையை, மிகுந்த காற்றுப் போக்குமாறு, சிறிது திற என்று அன்புமிக்க நெஞ்சத் தோடு போர்வையைக் கவரவே, உறையினின்று உருவிய வாளைப் போல் அவள் உருவம் வெளிப்பட்டு விளங்க, அதை மறைக்கும் வகை அறியாதவளாகி, விரைந்து நாணி விருப்பத்தோடு வணங்கினாள்.
பண்டைத் தமிழ்மணம் : இடைக்கால மாறுதல்கள்
பிராமணர் பெருந்தொகையினராய்த் தமிழகம் வந்து சேர்ந்த பின், தமிழர் திருமணங்களிற் பல மாறுதல்கள் ஏற்பட்டன.
1. பிராமணப் புரோகிதமும் வடமொழிக் கரணமும்
பிராமணர் தேவர்வழி வந்த நிலத்தேவர் (பூசுரர்) என்றும்; அவர் முன்னோர் மொழியாகிய வேதமொழியும் அதனொடு வேதகால இந்திய வட்டாரமொழிகளாகிய பிராகிருதங் கலந்த இலக்கிய மொழியாகிய சமற்கிருதமும், தேவமொழியென்றும்; இரு பெருந் தவறான கருத்துக்கள் கடைச்சங்கக் காலத்திலேயே அரசர் உள்ளத்தில் ஆழ வேரூன்றிவிட்டதனால், பிற்காலத்தில் பிராமணப் புரோகிதம் தமிழகத்தில் விரைந்து பரவுவதற்கு மிகுந்த வசதியாயிருந்தது.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், சேரன் பல்யானைச் செல் கெழுகுட்டுவனும் போன்ற தமிழ் வேந்தரும் பிற சிற்றரசரும், பிராமணரை நிலத்தேவரினும் மேலாகத் தேவரென்றே கொண்டு, அவர் சொன்னதையெல்லாம் நம்பி அவர் ஏவியதையெல்லாம் இயற்றி, வடமொழி மந்திரம் வரையிறந்த வலிமையுள்ள தென்றும், இறைவன் செவிக்கு எல்லையற்ற இன்பந் தருவ தென்றும், ஆரிய வேள்விகளெல்லாம் தப்பாது ஒருவனை உயர்கதிக்குச் செலுத்தும் என்றும், தெய்வத்தன்மையுள்ள வடமொழி மந்திரத்தைத் தெய்வத்தன்மையுள்ள பிராமணனே ஓதவல்லானென்றும், பிறர் அதை ஓதினால் அதன் ஆற்றல் கெடுமென்றும், தமிழருள் உயர்ந்தோர்மட்டும் அதைக் காதாற் கேட்கவும் அதனாற் பயன்பெறவுந் தக்கவர் என்றும், தமிழ் மக்கள் நம்புமாறு செய்துவிட்டனர். மன்னன் எப்படி மன்னுயிர் அப்படி அன்றோ!
பிராமணர் முதலாவது சிறு தொகையினரா யிருந்ததினால், அரசரிடத்துமட்டும் ஆரியக் கரணமும் சடங்கும் ஆற்றிவந்தனர். பின்பு சற்றுத் தொகை மிக்கபின், பெருஞ்செல்வரான பெரு வணிகர்க்கும் ஆற்றிவந்தனர். அதன் பின், தொகை மிகமிகச் சிறுவணிகர்க்கும் உயர் வேளாளர்க்கும் ஆற்றத் தலைப்பட்டனர். அதனால், பெரும்பாலும் ஒவ்வொரு பேரூரிலும் ஒரு பிராமணர் குடியமர அல்லது அமர்த்தப்பட நேர்ந்தது. ஓர் ஊர்க்குப் பொதுவாயிருந்து அவ்வூரிலுள்ள உயர்ந்தோர் சடங்குகளை யெல்லாம் ஆற்றி வந்த பிராமணன், ஊர்ப்பார்ப்பான் எனப் பட்டான். பிராமணன் குடியிராத ஊர்ச் சடங்குகளை, அடுத்தவூர்ப் பார்ப்பான் வந்து செய்வது வழக்கம்.
ஆரியக்கரணத்தால் விளைந்த தீமைகள்
(1) தமிழுக்கும் தமிழனுக்கும் தாழ்வு
வடமொழி வழிபாட்டு மொழியும் சடங்கு மொழியுமாய் வழக்கூன்றியபின், தமிழ் அவற்றிற்குத் தகாததென்று தள்ளப்பட்டுத் தன் பழந் தலைமையை இழந்ததுடன், தாழ்வும் அடைந்தது. வட சொற்களைச் சொன்னால் உயர்வும் தென் சொற்களைச் சொன்னால் தாழ்வும் உண்டாகுமென்ற தவறான கருத்து, தமிழ்மக்கள் உள்ளத்திற் புகுந்ததினால், வடசொற்கள் ஒவ்வொன்றாய் வழக்கிற் புகுந்து, ஆயிரக்கணக்கான தூய தமிழ்ச் சொற்களை வழக்கு வீழ்த்திவிட்டன.
தமிழுக்கு நேர்ந்த தாழ்வு தமிழனுக்கும் நேர்ந்தது. அதனால், பிராமணன் தொட்டதை எல்லாத் தமிழரும் உண்ணலா மென்றும், எத்துணை உயர்ந்த தமிழனாயினும். அவன் தொட்ட தைப் பிராமணன் உண்ணக் கூடாதென்றும் கூட்டரவு (சமுதாய) ஏற்பாடுகள் எழுந்தன. இது தமிழன் பொருளியல் வாழ்வை மிகமிகத் தாக்கிற்று.
சில தூய தமிழ்க்குலத்தார், தமிழன் உயர்வையும் வரலாற்றையும் அறியாது, தம்மைச்சத்திரியரென்றும் வைசியரென்றும்சொல்லித் தமக்கு ஆரியத் தொடர்பு கோரவும், சில உயர் வேளாளர் தம்மைச் சற்சூத்திரர் என்றழைத்து, தம்மை உயர்த்துவது போற் கருதிக்கொண்டு உண்மையில் தாழ்த்தவும், நிலைமை ஏற்பட்டு விட்டது.
தமிழருள் உயர்ந்தவராகக் கருதப்பெறும் நெல்லை மரவூண் (சைவ) வேளாளரும் பிராமணருக்குக் கீழ்ப்பட்டுவிட்டதனால், தமிழரெல்லாரும் தாழ்த்தப்பட்டுவிட்டனர். இன்று தாழ்த்தப் பட்டவர் எனப்படுவார் உண்மையில் ஒடுக்கப் பட்டவரே.
(2) தமிழப்பார்ப்பாருக்குப் பிழைப்பின்மை
பிராமணப் புரோகிதர், உயர்ந்தோரின் அல்லது உயர்த்தப் பட்டோரின், எல்லா மதவியற் சடங்குகளையும் ஆற்றும் தகுதியை முற்றூட்டாகப் பெற்றுவிட்டதினால், தமிழப் பார்ப்பார் பலர்க்குப் பிழைப்பில்லாது போயிற்று.
(3) சிறுதெய்வ வழிபாடு
தமிழருள் உயர்ந்தோர், சிறுதெய்வ வணக்க நிலையும் பெருந் தெய்வ வணக்க நிலையும் கடந்து, முழுமுதற்கடவுள் வணக்க நிலையை அடைந்தவர். அங்ஙனமிருப்பவும், இன்று ஆரியக் கரணத்தால், கதிரவன், திங்கள், வருணன், தீ முதலிய இயற்கைப் பொருள்களையும் கோள்களையும் பூதங்களையும், வணங்கும், முந்தியல் நிலைமைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டனர்.
(4) கற்பிழுக்கக் கூற்று
பிராமணப் புரோகிதன், மணமகனை நோக்கி, நீ முதல் நாள் திங்களுக்கும் (சோமனுக்கும்), இரண்டாம் நாள் யாழோருக்கும் (கந்தருவருக்கும்), மூன்றாம் நாள் தீக்கும் (அக்கினிக்கும்), உன் மனைவியை அளித்துவிட்டு நாலாம் நாள் அவளை நுகர்வாயாக என்று கூறும் கரணவுரைப் பகுதி.
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
என்று கொள்ளும் தமிழன் கற்புணர்ச்சிக்கு மிகமிக இழுக்குத் தருவ தொன்றாம். அதிலும் திங்கள் நுகர்ந்துவிட்டு யாழோர்க்குத் தர, யாழோர் நுகர்ந்துவிட்டுத் தீக்குத் தர, தீ நுகர்ந்துவிட்டு உனக்குத் தர, நீ அவளைப் பெற்று நுகர்வாயாக என்று மணமகள்மேற் பிறர்க்கு முன்னுரிமையும் மணமகனுக்குப் பின்னுரிமையுந் தோன்றக் கூறுவது, எவ்வகையினும் ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று.
வித்துவ சன கோலாகலன் என்னும் ஆக்கியாழ்வானுக்கும் ஆளவந்தார்க்கும் குலோத்துங்கச்சோழன் (?) அவைக்களத்தில் நிகழ்ந்த தருக்கத்தில், ஆளவந்தார் மேற்கூறிய கற்பிழுக்கக் கூற்றைச் சான்று காட்டி, சோழன் தேவி கற்பிழந்தவள் என்று நாட்டியபோது, அரசனும் அரசியும் உட்பட அவையோர் அனைவரும் பாராட்டியது, தமிழனுக்கு அழியாப் பழியைத் தருவதாம்.
(5) வீண் சடங்குகள்
தீ வலஞ்செய்தல், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல் முதலிய பல சடங்குகள் வீணானவையாகும்.
அம்மி மிதித்தல், அகலிகை சாவக் கதையை நினைப்பித்து மணமகளை எச்சரிக்கும் சடங்காகச் சொல்லப்படுகின்றது. அம்மியைத் திருமகள் தங்கும் பொருள்களுள் ஒன்றாகக் கொள்வதினால், அதை மிதிக்கும் வழக்கம் இயல்பாகத் தமிழர்க்கில்லை. அது கட்டுக்கழுத்தியின் அடையாளமென்று தமிழ்ப்பெண்டிர் கூறுகின்றனர். அம்மியும் குழவியும் தாயையுஞ் சேயையுங் குறித்து மணமகள் மகப்பேற்றை முன்னோக்குவன வென்றும், சிலர் கூறுவதுண்டு. எங்ஙனமிருப்பினும், சமையற் கின்றியமையாத அம்மி உணவுத் தட்டற்ற நல் வாழ்வைக் குறிப்பதென்று கொள்வது, குற்றமாகாது. ஏதோவொரு நற்குறிப்பினதாக மணவறையிற் கொண்டுவந்து வைக்கப்பெறும் அம்மிக்கும், அழகிய கோலமிடப்பெறும் ஆயிரங் கண்ணுப் பானைக்கும், பொருத்தமாக ஓர் ஆரியத்தொடர்புக் கதை கட்டப்பட்டதாகத் தெரிகின்றது. அகலிகை சாவத்தைக் குறிப்பதற்குப் பொதுவகையான கல் போதுமே! அவள் கல்லாகச் சாவிக்கப்பட்டாள் என்றல்லாது, அம்மியாகச் சாவிக்கப் பட்டாள் என்று கதை கூறவில்லையே! மேலும், கொங்கு வேளாளர் திருமணத்தில் மணமனைக்கு வெளியே அம்மி நிறுத்தப்பட்டு, நாட்டுக்கல் எனப் பெயர்பெற்றுப் பூசையுடன் வணங்கப்பெறுகின்றது.
இனி, பிராமணர் திருமணத்தில், மணமகள் ஒரு கல்லை மிதிக்கும்போது, மணமகன் ஓ பெண்ணே! இக் கல்லை மிதி. இதைப்போல் உறுதியாயிரு. உனக்குத் தீங்கு செய்ய நாடுவாரை அழித்துவிடு. உன் பகைவரை வெல். என்று மணமகளை நோக்கிக் கூறுவதும், இங்குக் கவனிக்கத்தக்கது.
அருந்ததி காட்டல் என்பதும் ஆரியத் தொடர்பு கருதியதே. தமிழ மரபுப்படி அருந்ததி தலையாய கற்பரசி யல்லள். அவள் தன் கணவனாகிய வசிட்டமுனிவன் ஒழுக்கத்தைப்பற்றி ஐயுற்று, அவனால் விண்மீனாகச் சாவிக்கப்பட்டாள் என்று கதை கூறுகின்றது. தமிழப் பத்தினிப் பெண்டிரோ, கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை, என்னுங் கொள்கையினர். ஆதலால், ஆதிமந்தியார், பூதபாண்டியன் தேவியார், கண்ணகியார், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தேவியார், திலகவதியார் முதலிய எத்துணையோ தலையாய தமிழகக் கற்புத் தெய்வங் களிருக்கவும், அவரை விட்டுவிட்டு அருந்ததியை நினைப்பித்தல், கனியிருப்பக் காய் கவர்ந்தற்றே.
(6) கரணம் விளங்காமை
மக்கள் ஆறறிவுடையார். அதனால் எதைச்செய்யினும் அறிவோடு செய்தற்குரியர். ஒருவர் வாழ்க்கையில் தலைசிறந்த நிகழ்ச்சியாயும், இருவர் இன்ப வாழ்விற்கு அடிகோலுவதாயும், பலர் மகிழ்ச்சியுறுதற்குரிய காட்சியாயும், நூற்றுக்கணக்கான மக்கள் வந்து கூடுவதாயும், உள்ள திருமணச் சடங்கைப் புரோகிதனுக்கன்றி பொருளொடு ஓதுகின்றானா பொரு ளில்லாது உளறுகின்றானா என்பதையும் அறிய வியலாத நிலையில், இவ்விருபதாம் நூற்றாண்டிலும், குருட்டுத்தனமாக நடத்தி வருவது, நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் முற்றும் முரணானதாம்.
2. குலக் கட்டுப்பாட்டு மிகை
தொழில்பற்றிய குலப் பாகுபாடு தொன்றுதொட்டுத் தமிழகத்தில் இருந்துவந்ததேனும், தமிழ இனம் ஒற்றுமை குலைந்து சின்னா பின்னமாய்ச் சிதைதற்கும், அயலார் எளிதாய்ப் படையெடுத்து வந்து கைப்பற்றுதற்கும், வழிவகுத்தது, பிற்காலத்தில் பிறப்பொடு தொடர்புபடுத்தப்பட்ட வருணாசிரம தருமம் என்னும் ஆரிய முறைக் குலப்பிரிவினையால் விளைந்த குலவெறியே. இதனா லேயே, குரங்கானாலும் குலத்திலே கொள். பழங்காலைத் தூர்க்காதே, புதுக்காலை வெட்டாதே, எனப் பல தீய கொள்கை கள் பிறந்தன. திரை கடலோடியுந் திருமிகத் தேடு என்னும் தாளாண்மை மிக்க நாட்டில், கடல் தாண்டக்கூடா தென்றும், ஆறு தாண்டக்கூடாதென்றும், கட்டுப்பாடுகள் எழுந்தன.
ஒரே குலத்திற்குள் திரும்பத்திரும்ப மணஞ் செய்து வந்ததினால், அறிவாற்றல் மிக்க பிள்ளைகள் அருகிப் பிறந்தன.
அண்டாமை, தீண்டாமை, காணாமை முதலிய கூட்டரவுக் கொடுமை களெல்லாம், இவ் இடைக்காலத்தில்தான் தலை விரித்துத் தாண்டவமாடின.
3. பொருந்தா மணமும் வீண்சடங்கும்
குலவெறி மெல்ல மெல்லச் சுற்றவெறியை உண்டுபண்ணிற்று. ஒரு முறைக்காரப் பெண்ணுக்கு அல்லது ஆணுக்கு, எங்கே வேறிடத் தில் மணம் முடிந்துவிடுகின்றதோ என்னும் அச்சத்தினால், பிள்ளைப் பருவத்திலேயே அவர்க்கு மணம் செய்து வைப்பது வழக்கமாய்விட்டது. சிலர் தொட்டிற் குழந்தைக்கும் மணஞ் செய்து வைத்ததுண்டு. அது தொட்டில் மணம் என்னப்பட்டது. ஒருத்தி கன்னியாய் இறந்தால் தீக்கதி யடைவாள் என்னும் ஆரியக்கொள்கையும், இளமை மணத்திற்குக் காரணமாயிற்று.
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு ஆதலால், மணஞ்செய்து வைக் கப்பட்ட பிள்ளை மணமகன், மணமகள் பூப்படையுமுன் இறந்து விடுவதுமுண்டு. அவனால் மணக்கப்பட்ட சிறுமி உண்மையில் அவனை மணந்திராவிட்டாலும், மணந்தது போன்றே கருதப் பட்டுக் கைம்பெண்ணாய் விடுவாள். கைம்பெண் மணஞ் செய்யுங் குலமாயின், அவட்கு மணவாழ்க்கை யுண்டு. அதிலும் புதுப்பெண்மையை இழந்தேயிருப்பாள். கைம்பெண் மணஞ் செய்யாக் குலமாயின், அவட்கு மண வாழ்க்கை இல்லவே யில்லை. காலமெல்லாம் அமங்கலியாய்க் கருதப்பட்டு, பூப் படைந்தபின் காமவுணர்ச்சியடக்கும் கரையற்ற துன்பத்திற்கோ, ஒழுக்கக்கேட்டிற்கோ உரியவளாவாள். பிற பெண்டிர்போல் ஒரு கணவனொடு கூடி வாழவும், பூச்சூடவும், மங்கல வினைகளிற் கலந்துகொள்ளவும், வெளிப் படையாய்ப் பிள்ளை பெறவும், இன்பநுகரவும், உரிமையற்றவளாய், தன் வாழ்நாள் முழுவதும் உலக வாழ்க்கையை ஒரு சிறைவாழ்க்கையும் அளற்று (நரக) வாழ்க்கையுமாகவே கழித்து, சொல்லொணாத் துன்புறுவாள்.
பிள்ளை மணமகன் தன் சிறு மனைவி பூப்படைந்து தன்னொடு கூடி வாழும்வரை இறவாதிருப்பினும், நீடித்துவாழும் நிலைமையில்லாக்கால், மேற்கூறிய துன்பங்களே நேரும். பூப்படைந்த பின்னரே மகளிர்க்கு மணஞ்செய்துவைப்பின், இத்தகைய துன்பங்களினின்று பெரும்பாலும் தப்பி யுய்வர்.
பிள்ளைப் பருவத்தில் மணஞ் செய்து வைப்பதால், மனைவி பூப்படைந்தவுடன் கணவனொடு கூடிவாழ நேரும். உடல் முழு வளர்ச்சியடையுமுன் கருக்கொள்ளும் மகளிர், தலைமகப் பேற்றில் இறந்துவிடுவதுமுண்டு. அங்ஙனம் இறவாதிருப்பினும், பிறக்கும் பிள்ளை உரனுள்ளதாயும் நீடு வாழியாயும் இருப்ப தில்லை; தாயுடலும் தளர்ந்துவிடுவதுண்டு.
பூப்படையுமுன் மணஞ்செய்து வைத்தாலும் பூப்படைந்தவுடன் மணஞ்செய்து வைத்தாலும், மகளிரின் இளமையைப் பொறுத்த வரையில், இரண்டும் ஒன்றே. பூப்படைந்தவுடன் எல்லா மகளிர்க்கும் காமவுணர்ச்சி ஏற்பட்டுவிடுவதில்லை. இதனால், மணம் நிகழ்ந்த பின்பும் கூட்டநாள் தள்ளிவைக்கப்படுகின்றது. இது சேர்வு மணம் (சாந்தி கலியாணம்) அல்லது சேர்வு முழுத்தம் (சாந்தி முகூர்த்தம்) என்னும் வீண் சடங்கிற்குக் காரணமாயிற்று.
காமக் குறிப்பும் சேர்க்கைத் துணிவும் இல்லாத இளம்பருவ ஆணிற்கும் பெண்ணிற்கும் மணஞ்செய்து வைப்பதினாலேயே, அவற்றை அவர்க்கு ஊட்டும்பொருட்டு, நலங்கிடல், உண வூட்டல், வெற்றிலை மடித்துக் கொடுத்தல், அப்பளந் தட்டல், ஒற்றையா இரட்டையா பிடித்தல், பூச்செண்டெறிதல், எழுத்தாணியெடுத்தல், ஒளிந்து விளையாடல், மோதிரம் எடுத்தல், பிள்ளையார் அல்லது பொம்மை கொடுத்தல், ஊஞ்ச லாடல், கோபித்துக்கொண்டு போன மணமகனை அழைத்து வரல், மஞ்சள் நீராடல் முதலிய பல வீணான சடங்குகள் ஏற்பட்டன. மணவாழ்க்கைக்கேற்ற வளர்ச்சியடைந்த பருவத்தில் மக்கட்கு மணஞ்செய்து வைத்தால், அவர் பிறர் துணையின்றித் தாமாகவே கூடி வாழ்வர்.
சில தமிழக்குலத்தார் மணவறையில் திரைகட்டித் தாலி கட்டுவது, மகமதியர் இந்நாட்டிற்கு வந்தபின் ஏற்பட்ட பயனற்ற செயலாகும்.
இனி, வளர்ச்சியடைந்த மக்கட்கு மணஞ்செய்து வைத்த விடத்தும், அவர் விருப்பத்தைக் கேளாது பெற்றோர் தம் விருப்பப்படியே இசையாத இளைஞனையும் இளைஞையையும் இணைத்து வைத்து, பின்பு அவர் துன்புறும்போது தாரமுங் குருவுந் தலைவிதி என்றும், கழுத்தில் விழுந்த மாலை கழற்ற முடியாது என்றும், அடுப்பில் வைத்த கொள்ளி எரிந்து தான் தீரவேண்டும் என்றும், கூறுவது அவர் மடமையைக் கோடிட்டுக் காட்டுவதேயாகும்.
இனி மணமக்களின் ஒத்த வளர்ச்சியை ஒரு சிறிதும் கவனியாது, ஒரு சிறுவனுக்கு ஒரு பெரும் பெண்ணை மணஞ்செய்து வைத்து மாமனே அவளுக்குக் கணவனாவதும், ஒரு முழு வளர்ச்சி யடைந்த முரடனைக் கண்டு அஞ்சிச் சாகுமாறு, அவனுக்கு ஒரு மங்கைப் பருவத்து மெல்லியலை மணம் புணர்ப்பதும், இடைக்காலத்து நிகழ்ந்துவந்த கொடுஞ் செயல்களாம்.
பழஞ்சேர நாடாகிய மலையாள நாட்டில், பூப்பின் முன் தாலி கட்டு என்னும் பொய் மணமும், பூப்பின் பின் சம்பந்தம் என்னும் மெய்ம் மணமும், ஆக இருமணம் ஒவ்வொரு பெண் ணிற்கும் சில குலத்தில் நேர்ந்ததற்குக் காரணம் ஆரியமே. (த.தி.)
பண்டைத் தமிழ நாகரிகம்
1. மொழி
பொதுமக்கள் அமைப்பு : ஒரு நாட்டுமக்களின் நாகரிக நிலையைக் காட்டுவது அவர் தாய் மொழியே. எந்நாட்டிலும், மொழி பொதுமக்கள் அமைப்பென்றும் இலக்கியம் புலமக்கள் அமைப்பென்றும், அறிதல் வேண்டும்.
இடுகுறி யெதுவுமின்றி ஒரு பொருட் பல சொற்களும் நுண்பொருட் பாகுபாட்டுச் சொற்களும் நிறைந்து, பகுத்தறிவிற் கொத்த சிறந்த இலக்கணம் அமைந்து, எல்லாக் கருத்துக் களையும் தன் சொற்களாலேயே தெள்ளத் தெளிவாகத் தெரிவிப்பது தலைசிறந்த மொழியாம்.
முழுகிப் போன குமரிக் கண்டத் தென் கோடியடுத்து, நிலவளமும் நீர்வளமும் உணவுவளமும் பொன் வளமும் மணி வளமும் நிறைந்திருந்த பழந்தமிழ்நாட்டில், வாழ்ந்துவந்த முதற்காலத் தமிழ் மக்கள் இக்காலப் புலவரினும் சிறந்த நுண்மாண் நுழை புலத்தினராதலின், காட்சி, கருத்து என்னும் இருவகைப் பொருள்களையும் கூர்ந்து நோக்கியும் நுணுகியாராய்ந்தும், அவற்றின் சிறப்பியல்பிற்கேற்ப அழகிய பொருட் (கரணியக்) குறிகளாகவே எல்லாச் சொற்களையும் வேறுபடுத்தல், ஒன்றுபடுத்தல் இனப்படுத்தல் என்னும் மும்முறையில் அமைத்திருக்கின்றனர்.
வேறுபடுத்தல்
நால்வகையிலை :
சில பூண்டுகளிலும், செடி கொடிகளிலும், வாழை மா புளி முதலிய மரங்களிலும், கிளை நுனியிற் காம்புடன் தனித்தும் அடர்ந்தும் பெரும்பாலும் முட்டை வடிவில் மெல்லிதா யிருப்பது இலை.
புல்லிலும் நெல் வரகு போன்ற பயிர்களிலும், நுனியிலும் தண்டையொட்டியும் ஈட்டிபோல் ஒடுங்கி நீண்டு சுரசுரப்பா யிருப்பது தாள்.
கரும்பிலும், சோளம் நாணல் போன்ற பெருந் தட்டைகளிலும், நுனியிலும் கணுவொட்டியும் பெருந்தாளாக ஓங்கி மடிந்து தொங்குவது தோகை.
தென்னை பனை முதலியவற்றிற் போல், நுனியையும் அடியையும் ஒருங்கே ஒட்டியே தனித்தனி மட்டையோடு தோன்றி, விசிறி வடிவில் அல்லது தூவு வடிவில் முரடாயிருப்பது ஓலை.
ஐவகை மலர் நிலை :
தோன்றும் நிலை அரும்பு; மலரத் தொடங்கும் நிலை போது; மலர்ந்த நிலை மலர்; கீழே விழுந்த நிலை வீ; வாடிச் சிவந்த நிலை செம்மல்.
அரும்பு, மொட்டு, முகை, மொக்குள் என்பன, பருமன் பற்றிய வெவ்வேறு அரும்பு வகைகளைக் குறிப்பன.
மூவகைக் காய்ப்புநிலை :
இளங்காய் பிஞ்சு; முதிர்ந்தது காய்; பழுத்தது பழம் அல்லது கனி.
ஆங்கிலம் மிகுந்த வளர்ச்சியுற்று, ஏறத்தாழ மூன்றிலக்கம் சொற்களைக் கொண்டுள்ளது. ஆயினும் இன்னும் அதில் காயைக் குறிக்கச் சொல் அமையவில்லை; பழுக்காத பழம் என்று வட்ட வழியே குறிக்கின்றனர்.
சில வகைப் பிஞ்சுகட்குச் சிறப்புப் பெயருமுள. தென்னை பனை முதலியவற்றின் பிஞ்சு குரும்பை; மாம்பிஞ்சு வடு; பலாப்பிஞ்சு மூசு; வாழைப் பிஞ்சு கச்சல்;
இங்ஙனமே நிலைத்திணையின் (தாவரத்தின்) எல்லாவுறுப்புக் களையும், நுண்பாகுபாடு செய்து, வெவ்வேறு பெயரிட்டிருக் கின்றனர் பண்டைத் தமிழப் பொது மக்கள்.
இடங்கர் (Alligator), கராம் (Gavial), முதலை (Crocodile) என மூவகையாக முதலைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
குதிரை முதற் கடல்கோளுக்கு முன்பே அரபி நாட்டினின்று குமரி நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. அது அயல்நாட்டு விலங்கேனும், அதைப் பல்வேறு வகைப்படுத்தி வெவ்வேறு பெயரிட்டிருக்கின்றனர்.
புரவி, பாடலம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை, பரி, கந்துகம் என்னும் எண்வகைக் குதிரைகளும் அவற்றின் சிறப்பிலக்கண மும், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்திற் கூறப்பட்டுள (நரிபரி. 87-94).
பாண்டியன் குதிரை கனவட்டம்; சோழன் குதிரை கோரம்; சேரன் குதிரை பாடலம்; குறுநில மன்னர் குதிரை கந்துகம்.
உன்னி, கண்ணுகம், கலிமா, கிள்ளை, குந்தம், கூந்தல், கொக்கு, கொய்யுளை, கோடை, கோணம், துரங்கம், தூசி, பாய்மா, மா, மண்டிலம், வயமா முதலியன குதிரையின் பொதுப் பெயர்கள். மட்டம் என்பது சிறுவகைக் குதிரை. தட்டு என்பது நாட்டுக் குதிரை. மட்டத்தினும் சிறுவகை இளமட்டம். தேசி என்பது பெருங் குதிரை.
குதிரை என்பது ஒரு சிறப்பு வகையின் பெயராகக் கூறப்பட் டிருப்பினும், உலக வழக்கிற் பொதுப் பெயராய் வழங்குவது அஃதொன்றே. குதிப்பது குதிரை. குதித்தல் தாண்டுதல். கூற்றங் குதித்தலுங் கைகூடும் என்னும் குறளடியை நோக்குக.
(குறள். 269).
உண்மை, வாய்மை, மெய்ம்மை என்னும் முச்சொல்லும், உள்ளம் வாய் மெய் (உடம்பு) என்னும் முக்கரணத்தையும் முறையே தழுவினவாகச் சொல்லப்படுவதுண்டு. இவற்றிற்கு வேறு பொருட்கரணியமும் உள.
சொல்லுதலின் வகைகளைக் குறிக்க, ஏறத்தாழ நாற்பது சொற்கள் தமிழில் உள்ளன. அவை யாவன:-
சொல் சிறப்புப் பொருள்
அசைத்தல் - அசையழுத்தத்துடன் சொல்லுதல்.
(அசையழுத்தம் - (accent)
அறைதல் - அடித்து (வன்மையாய் மறுத்து)ச் சொல்லுதல்.
இசைத்தல் - ஓசை வேறுபாட்டுடன் சொல்லுதல்.
இயம்புதல் - இசைக்கருவி யியக்கிச் சொல்லுதல்.
உரைத்தல் - அருஞ்சொற்கு அல்லது செய்யுட்குப் பொருள்
சொல்லுதல்.
உளறுதல் - ஒன்றிருக்க ஒன்றைச் சொல்லுதல்.
என்னுதல் - என்று சொல்லுதல்.
ஓதுதல் - காதிற்குள் மெல்லச் சொல்லுதல்.
கத்துதல் - குரலெழுப்பிச் சொல்லுதல்.
கரைதல் - அழைத்துச் சொல்லுதல்.
கழறுதல் - கடிந்து சொல்லுதல்.
கிளத்தல் - இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லுதல்.
கிளத்துதல் - குடும்ப வரலாறு சொல்லுதல்.
குயிலுதல்,
குயிற்று - குயில்போல் இன்குரலிற் சொல்லுதல்.
குழறுதல் - நாத் தளர்ந்து சொல்லுதல்.
கூறுதல் - கூறுபடுத்திச் சொல்லுதல்.
சாற்றுதல் - பலரறியச் சொல்லுதல்.
செப்புதல் - வினாவிற்கு விடை சொல்லுதல்.
நவிலுதல் - நாவினால் ஒலித்துப் பயிலுதல்.
நுதலுதல் - ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்.
நுவலுதல் - நூலின் நுண்பொருள் சொல்லுதல்.
நொடித்தல் - கதை சொல்லுதல்.
பகர்தல் - பண்டங்களைப் பகுத்து விலை சொல்லுதல்.
பறைதல் - மறை (இரகசியம்) வெளிப்படுத்திச் சொல்லுதல்.
பன்னுதல் - நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்.
பனுவுதல் - செய்யுளிற் புகழ்ந்து சொல்லுதல்.
புகலுதல் - விரும்பிச் சொல்லுதல்.
புலம்புதல் - தனக்குத்தானே சொல்லுதல்.
பேசுதல் - ஒரு மொழியிற் சொல்லுதல்.
பொழிதல் - இடைவிடாது சொல்லுதல்.
மாறுதல் - உரையாட்டில் மாறிச் சொல்லுதல்.
மிழற்றுதல் - மழலைபோல் இனிமையாய்ச் சொல்லுதல்.
மொழிதல் - சொற்களைத் தெளிவாகப் பலுக்கிச்சொல்லுதல்.
வலத்தல் - கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்.
விடுதல் - மெள்ள வெளிவிட்டுச் சொல்லுதல்.
விதத்தல் - சிறப்பாய் எடுத்துச் சொல்லுதல்.
விள்ளுதல் - வெளிவிட்டுச் சொல்லுதல்.
விளத்துதல் - (விவரித்துச்) சொல்லுதல்.
விளம்புதல் - ஓர் அறிவிப்பைச் சொல்லுதல்.
ஒருவனிடத்தில் ஒன்றைக் கேட்கும் போது, தாழ்ந்தவன், ஈ என்றும், ஒத்தவன், தா என்றும், உயர்ந்தவன், கொடு என்றும், சொல்லவேண்டுமென்பது தமிழ் மரபு.
ஒன்றுபடுத்தல்
யானைக்கும் தேன் வண்டிற்கும் முகத்தின் முன் ஓர் உறிஞ்சி (Proboscis) உள்ளது. இந்த ஒப்புமையைக் கண்ட முதற்காலத் தமிழர், இரண்டிற்கும் தும்பி எனப் பொதுப் பெயர் இட்டனர். தூம்பு - தும்பு - தும்பி = தூம்பு (குழாய்) போன்ற உறுப்பையுடையது.
இனப்படுத்தல்
ஒரு பொருளை, உடம்பின் அல்லது உறுப்பின் வடிவில், ஒத்த வேறு பொருள்களைக் கண்ட பண்டைத் தமிழர், முன்னதன் பெயர்க்கு அடை கொடுத்துப் பின்னவற்றிற்கிட்டு, அவற்றை யெல்லாம் ஓரினப்படுத்தியிருக்கின்றனர்.
எ.டு : வேம்பு, கறிவேம்பு, நாய்வேம்பு, நிலவேம்பு, நீர்வேம்பு.
வேம்பைப் பிறவற்றோடு ஒப்புநோக்கி நல்ல வேம்பு என்றனர்.
இடுகுறியின்மை
எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே என்பது தொல்காப்பியம் (640). ஆனால், பல சொற்கட்குப் பார்த்த மட்டில் பொருள் தோன்றாது. அவற்றை ஆழ்ந்து ஆராய வேண்டும். இதனையே, மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்று தொல்காப்பியம் (877) குறிப்பிடுகின்றது.
பலா, பனை, பொன், மரம் முதலியவற்றை மொழி நூலறிவும் சொல்லா ராய்ச்சியுமில்லா இலக்கணவுரையாசிரியர், இடுகுறி யென்று குறிப்பது வழக்கம்.
பலா பருத்த பழத்தையுடையது. பல் - பரு - பருமை.
ஒ. நோ : சில் - சின் - சிறு. சின்மை = சிறுமை.
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு. (குறுந். 18).
பனை கருக்குமட்டையுடையது. பல் - பன் = அறுவாட் பல், பன்னறுவாள், பன்வைத்தல் என்னும் வழக்குகளை நோக்குக. பன் - பனை = கூரிய பற்போன்ற கருக்குள்ளது.
பொன் பொற்பு அல்லது பொலிவுள்ளது. பொல் - பொலி - பொலிவு. பொல் - பொற்பு = அழகு. பொல் - பொலம் - பொலன். பொல் - பொன். பொற்ற = அழகிய (சீவக. 270). பொல்லா = அழகில்லாத (ஔவையார்). பொற்றது = பொலிவுற்றது
(சீவக. 649).
மரம் உணர்ச்சியற்றது. கால் உணர்ச்சியற்றால், மரத்துப் போய்விட்டது என்பது வழக்கம். உணர்ச்சியற்றவனை மரம் போலிருக்கின்றான் என்பர். மதமதப்பு = உணர்ச்சியின்மை, திமிர். மதம் - மரம். மதத்தல் = மரத்தல்.
ஒ. நோ : விதை - விரை.
இடுகுறியில்லாமலே ஒரு பெருந் தாய்மொழியை ஆக்கியது, பண்டைத் தமிழரின் நுண்மாண் நுழைபுலத்தைச் சிறப்பக் காட்டும்.
இயற்கைச் சொல்லாக்கம்
தமிழில் எல்லாச் சொற்களும் இயற்கையான முறையில் அமைந்தவை. வடமொழியில் ஆ என்னும் முன்னொட்டால் எதிர்ப்பொருள் வினைச்சொற்களை அமைத்துக் கொள்வர்.
எ.டு : கச்சதி = செல்கிறான். ஆகச்சதி = வருகிறான். தத்தே = கொடுக்கிறான், ஆதத்தே = எடுக்கிறான். இத்தகைய செயற்கையமைப்பு தமிழில் இல்லை.
தூய்மை
குமரிக் கண்டத்தில் தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்கவில்லை. வெளிநாட்டிலிருந்து பொருள்கள் வரின், அவற்றிற்கு உடனுடன் தூய தமிழ்ப் பெயர்கள் அமைக்கப் பட்டன.
கரும்பு சீன நாட்டினின்று அதிகமானின் முன்னோராற் கொண்டு வரப்பட்டது.
அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்
அருப்பெறன் மரபிற் கரும்பிவட் டந்தும்
நீரக விருக்கை யாழி சூட்டிய
தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல
என்று ஔவையார் பாடியிருத்தல் காண்க (புறம். 99) சீன நாட்டை வானவர் நாடென்பது பண்டை வழக்கு. கருப்பு நிறமானது கரும்பு.
மிளகாய் அமெரிக்காவினின்று வந்ததாகக் கருதப்படுகின்றது. மிளகு + காய் = மிளகாய். மிளகுபோற் காரமுள்ள காய் மிளகாய். இவ்வழக்கைப் பின்பற்றியே, உருளைக்கிழங்கு, புகையிலை, நிலக்கடலை, வான்கோழி முதலிய பெயர்களும் பிற்காலத்தில் ஏற்பட்டுள்ளன.
இலக்கண அமைப்பு
இருதிணை : பொருள்களையெல்லாம், பகுத்தறிவுள்ளது, பகுத்தறிவில்லது எனப் பகுத்தது தமிழப் பொதுமக்களே. காளையும் ஆவும் அஃறிணையில் ஆண்பாலும் பெண்பாலு மாயினும், காளை வந்தான், ஆவு வந்தாள் என்று யாரும் சொல்லும் வழக்கமில்லை. காளை வந்தது, ஆவு வந்தது என்று இரண்டையும் ஒன்றன்பாலிற் கூறுவதே மரபு.
முருகன் வந்தான், வள்ளி வந்தாள் என்று ஆண்பால் பெண்பால் (பகுத்தறிவுள்ள) மக்களுக்கே வகுக்கப்பட்டிருக்கின்றன. இவ்வுலகிற் பகுத்தறிவுள்ள மக்களும் இறைவனுமே உயர்ந்த வகுப்பென்றும், பிறவெல்லாம் உயிருள்ளவையாயினும் இல்லவையாயினும் தாழ்ந்த வகுப்பே யென்றும், ஏற்கெனவே பொதுமக்கள் வகுத்த இரு வகுப்பிற்கும், இலக்கணியர் முறையே உயர்திணை, அஃறிணை யென்று பெயர் மட்டும் இட்டிருக் கின்றனர். இலக்கணம் என்பது, ஏற்கெனவே ஏற்பட்டுள்ள மொழியமைதிகளுள் நல்லவற்றை மட்டும் கொண்டு, அவற்றிற்குப் பெயரிட்டுக் காட்டும் முறையேயன்றி, புதிதாக ஏற்பட்ட புலவர் படைப்பன்று. பகுத்தறிவை அளவையாகக் கொண்டு பொருள்களைப் பகுத்த இஃதொன்றே, பண்டைத் தமிழரின் அகக் கரண வளர்ச்சியைக் காட்டப் போதிய சான்றாகும்.
ஓரியலொழுங்கு
யான், யாம், யாங்கள்; நான், நாம், நாங்கள்; நீன், நீம், நீங்கள்; தான், தாம், தாங்கள் என்னும் மூவிடப் பகரப் பெயர்களும்;
அவன் இவன் உவன் எவன்
அவள் இவள் உவள் எவள்
அவர் இவர் உவர் எவர்
அது இது உது எது
அவை இவை உவை எவை
என்னும் சுட்டுப் பெயர் வினாப் பெயர்களும்; ஒன்றுமுதல் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது வரைப்பட்ட எண்ணுப் பெயர்களும், கொண்டுள்ள ஓரியலமைப்பை வேறெம்மொழியிலும் காணமுடியாது.
பொருட்பால்
ஆரிய மொழிகளிற்போல் ஈறுபற்றிய பாலமைப்பின்றி, பொருள்களின் ஆண்மை பெண்மையும் ஒருமை பன்மையும் பற்றிய பாலமைப்பே தமிழிலுள்ளது.
வடமொழியில், மனைவியைக் குறிக்கும் தார, பார்யா, களத்திர என்னும் முச்சொற்களுள், முதலது ஆண்பால்; இடையது பெண்பால்; கடையது அலிப்பால். பொத்தகத்தைக் குறிக்கும் சொற்களுள், கிரந்த ஆண்பால்; ச்ருதி பெண்பால்; புதக அலிப்பால். இதினின்று அம்மொழியின் ஒழுங்கை அறிந்து கொள்க.
பாலிசைவு
தமிழ்ச் சொற்றொடர்களில், எழுவாயும் பயனிலையும் பெரும்பாலும் திணைபால் எண் இடம் ஒத்தேயிருக்கும். திணைபால் எண் இட மயக்கம் இருப்பினும் தெளிவாய்த் தெரியும்.
வடமொழியில், தத் கச்சதி என்பது அவன் போகிறான், அவள் போகிறாள், அது போகிறது, என்று பொருள்படுவது போன்ற சொற்றொடரமைப்பு தமிழில் இல்லை.
புலமக்கள் அமைப்பு
உரைநடை, செய்யுள் என மொழிநடை இருவகைப்படும். இவற்றுள் செய்யுள் புலமக்கள் அமைப்பாகும். அது பாட்டும் பாவும் என இரு வகையாம். உரைநடை பண்பட்டு இசைப்பாட்டாகவும், இசைப் பாட்டு பண்பட்டுச் செய்யுளாக வும், திருந்தும், ஆகவே, செய்யுளே மொழியின் உச்ச நிலையாம்.
குமரிக்கண்டத் தமிழர், செய்யுட் கலையின் கொடுமுடி யேறி, அறுவகை வெண்பாக்களையும், நால்வகை அகவற்பாக்களை யும், நாலும் ஐந்தும் ஆறுமான உறுப்புக்களையுடைய நால் வகைக் கலிப்பாக்களையும், இருவகை வஞ்சிப்பாக்களையும், யாத்திருந் தனர். யாத்தல் = கட்டுதல்.
வெண்பாவும் கலிப்பாவும் போன்ற செய்யுள் வகைகளை, வேறெம்மொழியிலும் காண்டலரிது.
பண்டைத் தமிழர் செய்யுட்கலையிற் சிறந்திருந்ததனால், செய்யுளுக்கும் நூற்பாவிற்கும் பொருள்கூறும் உரை உட்பட, எல்லா இலக்கியத்தையும் செய்யுளி லேயே இயற்றியிருந்தனர்.
பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும்
…………………………………………………………………………………………………
யாப்பின் வழிய தென்மனார் புலவர்.
என்று தொல்காப்பியம் (செய்.78) கூறுதல் காண்க.
2. துப்புரவு
பண்டைத் தமிழ் மக்கள் விடிகாலையில் எழுந்தவுடன், ஊருக்கு வெளியே சென்று காலைக்கடன் கழித்து, ஆற்றில் அல்லது கால்வாயில் அல்லது குளத்தில் கால் கழுவுவர். ஆற்றிற்குப் போதல், கால்வாய்க்குப் போதல், குளத்திற்குப் போதல், கொல்லைக்குப் போதல், வெளிக்குப் போதல் என்னும் உலக வழக்கு இதை யுணர்த்தும். இத்தகைய வழக்கும் ஒன்றுக்குப் போதல் இரண்டுக்குப் போதல் என்னும் இடக்க ரடக்கலும் தமிழர் நாகரிகத்தைக் காட்டும்.
கல்வித் தொழிலாளர், காவலர், வணிகர் முதலிய உடலுழைப் பில்லா வகுப்பார் காலையிலும்; உழவர், கைத்தொழிலாளர், கூலிக்காரர் முதலிய உழைப்பாளி வகுப்பார் மாலையிலும்; நாள்தோறும் குளித்து வந்தனர். அழுக்கைத் தேய்ப்பதற்கு ஆடவர் பீர்க்கங் கூட்டைப் பயன்படுத்துவதுண்டு. பெண்டிர் மஞ்சள், சுண்ணம் முதலியவற்றைத் தேய்த்துக் குளிப்பர்.
சுண்ணம் என்பது பலவகை நறுமணப் பொருள்களைச் சேர்த்து இடிக்கும் பொடி. அதை இடித்து வைப்பது பண்டைக் காலத்து இளமகளிர்க்குப் பெருவழக்க மாயிருந்தது. சுண்ணமிடிக்கும் போது பாட்டுப் பாடுவர். இச்செயல் மாணிக்கவாசகர் மனத்தைக் கவர்ந்ததினால், திருப்பொற்சுண்ணம் என்னும் திருவாசகப் பாடல் தில்லையில் அருளிச் செய்யப்பெற்றது.
அரண்மனையில் வாழும் அரச மகளிரும், மாளிகைகளில் வாழும் செல்வப் பெண்டிரும், மாதவி போலும் நாடகக் கணிகையரும், கோட்டம், துருக்கம், தகரம், அகில், சந்தனம் என்னும் ஐவகை விரையும் (நறுமணப் பொருளும்); நாவல் அல்லது பூவந்தி, கடு, நெல்லி, தான்றி, ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக்காசு அல்லது கருங்காலி, மாந்தளிர் என்னும் பத்து வகைத் துவரும்; இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம், நாகணம், கோட்டம், நாகம், மதாவரிசி, தக்கோலம், நன்னாரி, வெண்கோட்டம், காசறை (கத்தூரி), வேரி, இலாமிச்சம், கண்டில் வெண்ணெய், கடு, நெல்லி, தான்றி, துத்தம், வண்ணக் கச்சோலம், அரேணுகம், மாஞ்சி, சயிலேகம், புழுகு, புன்னை நறுந்தாது, புலியுகிர், சரளம், தமாலம், வகுளம், பதுமுகம், நுண்ணேலம், கொடுவேரி என்னும் முப்பத்திருவகை ஓமாலிகையும்; ஊறவைத்த நன்னீரிற் குளித்து வந்தனர்.
ஆடவர் அறிவன் (புதன்) காரியும் (சனியும்), பெண்டிர் செவ்வாய் வெள்ளியும், ஒழுங்காய் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகினர். குளிப்பு நீராட்டு என்றும், தலைமுழுக்கு நெய்யாட்டு என்றும், சொல்லப்பெறும். நெய்யாட்டில் எண்ணெயையும் உடம் பழுக்கையும் போக்க, சீயற்காய் அரையல், அரைப்பு அரையல், உசிலைத் தூள், பாசி (பச்சை)ப் பயற்றுமா, களிமண் முதலிய வற்றைப் பயன்படுத்தினர்.
சீயற்காய் அல்லது சீக்காய் என்பது, அழுக்கைப் போக்குங் காய் என்று பொருள்படுவது; சிகைக்காய் என்பதன் மரூஉ அன்று.
சீத்தல் = 1. துடைத்தல். மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப (மதுரைக். 685).
2. போக்குதல். இருள்சீக்குஞ் சுடரேபோல் (கலித். 100 : 24).
3. துப்புரவாக்குதல் (சூடா).
ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே
கூழைக் கேர்மண் கொணர்கஞ் சேறும்
என்னும் குறுந்தொகைச் செய்யுள் (113), பண்டைத் தமிழ மகளிர் ஊருக்கணித்தான குடிநீர்நிலையிற் குளிக்காமல் சற்று அப்பா லுள்ள காட்டாற்றிற்குச் சென்று குளித்ததையும், கூந்தலழுக்குப் போக்கக் களிமண் எடுத்துச் சென்றதையும், கூறுதல் காண்க.
இரு பாலாரும் குளித்தவுடனும் தலைமுழுகியவுடனும், வெளுத்த துவர்த்து முண்டினால் தலையையும் உடம்பையும் துவர்த்தி, வெளுத்தாடை அல்லது புத்தாடை யுடுப்பர். மாற்றாடை யில்லாவிடின், முன்பு அணிந்திருந்த ஆடையைத் துவைத்துக் கொள்வர்.
பெண்டிர் காரகிற் புகையாலும் சந்தனக் கட்டைப் புகையாலும் தம் கூந்தலின் ஈரம் புலர்த்துவர்.
காலையிற் குளிப்பினும் குளியாவிடினும், பல் துலக்காமல் ஒருவரும் உண்பதில்லை.
சோறுண்பவர், வாயும் முகமும் கைகாலும் கழுவிய பின், துப்புரவான இடத்தில் தடுக்கில் அல்லது பலகையில் அமர்ந்து சப்பளித்திருந்து (சம்மணங்கூட்டி உட்கார்ந்து), கழுவிய வாழை இலையில் அல்லது வெண்கல வட்டிலில் வலக்கையாலேயே எடுத்து உண்பர். அரசர் பொற்கலத்திலும் செல்வர் வெள்ளிக் கலத்திலும் உண்பது வழக்கம். பெற்றோரும் பெற்ற சிறு பிள்ளை களுமாயிருந்தாலொழிய, ஒரே கலத்தில் அல்லது இலையிற் பலர் உண்பதில்லை. உண்டெழுந்தபின், உண்ட இடம் இலையகற்றித் தண்ணீர் அல்லது சாண நீர் தெளித்துத் துப்புரவாக்கப்பெறும். இலையில்விட்ட மிச்சிலைப் பெற் றோரும் மனைவியரும் இரப்போரும் தவிரப் பிறர் உண்ணார். சில உணவு வகையால் ஏற்படும் வாய் நாற்றத்தைப் போக்குதற்கு, நறுமணச் சரக்கை வாயிலிடுதல், வெற்றிலை தின்னுதல், மார்பிற் சந்தனம் பூசுதல் முதலியவற்றைக் கையாள்வர். இவற்றைச் செரிமானத்தின் பொருட்டென்று சொல்வது முண்டு.
விடிந்தவுடன் பெண்டிர் முற்றங்களிற் சாணந்தெளித்து வீடு வாசலைப் பெருக்கிக் கோலமிடுவர். செவ்வாயும் வெள்ளியும் தப்பாது வீடு முழுதும் ஆவின் சாணத்தால் மெழுகுவர். ஆண்டிற் கொரு முறையும் திருமணம் நிகழும்போதும், வீடு முழுதும் ஒட்டடை போக்கி வெள்ளையடித்துச் செம்மண் கோலமிடுவது வழக்கம். ஆண்டிற்கொரு முறையென்றது பொங்கற் பண்டிகை. பொங்கற்கு முந்தின நாள், இன்றுபோல் அன்றும் வீட்டிலுள்ள அழுக்குக் கந்தல்களையும் உதவாப் பொருள்களையும் கொளுத்தி விடுவர். அதோடு தங்களைப் பிடித்த பீழை போய் விட்டது என்னுங் கருத்தில், அதைப் போகி என்றனர். போகுதல் போதல், போகியது போகி. அச் சொல்லை வேந்தன் (இந்திரன்) பெயராகக் கொண்டு, அவனை நோக்கிச் செய்யும் விழா என்பது பொருந்தாது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழி, போகி என்னுஞ் சொற்பொருளை வலியுறுத்தும்.
வாடகை வீடுகளிற் புதுக் குடி புகும்போதும், ஒட்டடை போக்கி வெள்ளையடிக்கப்பெறும்.
வெளிச் சென்று வந்த வீட்டாரும் வெளியாரும், வீட்டிற்குள் புகுமுன் பாதத்தைக் கழுவிவிட வேண்டும் என்பது ஒழுக்க நெறி.
வெப்பமில்லாத நாளிலும் வேளையிலும் முள்ளில்லாத இடத்திலும் கூட, வீட்டை விட்டு வெளிச் செல்லின், அடியில் மண்ணும் மாசும் படாதபடி செருப்பணிந்தே செல்வர் உயர்ந் தோர். செருப்பு வாசற்கு வெளியே அல்லது வாசலண்டைதான் விடப்பெறும். எக் கரணியம் பற்றியும் உள்ளே கொண்டு செல்லப்படுவதில்லை.
பிள்ளை பெற்ற வீட்டிற்கு ஏழு நாளும், மாதவிடாய் வந்தவ ளுக்குப் பன்னிரு நாளும், இழவு வீட்டிற்குப் பதினைந்து நாளும் தீட்டாம்.
தீட்டுள்ள பெண்டிர் கலந்தொடா மகளிர் (புறம்.299) எனப்படுவர்.
3. ஊண்
உலகில் முதன் முதல் உணவை நாகரிகமாய்ச் சமைத்துண்டவன் தமிழனே. ஏனைய நாட்டாரெல்லாம், தம் நாட்டில் விளைந்த உணவுப் பொருள்களைப் பச்சையாகவும் சுட்டும் வெறுமையாய் அவித்தும் உண்டுவந்த காலத்தில் உணவைச் சோறும் கறியும் என இரண்டாக வகுத்து, நெல்லரிசியைச் சோறாகச் சமைத்தும், கறி அல்லது குழம்பு வகைகளை, சுவையூட்டுவனவும் உடம்பை வலுப்படுத்துவனவும் நோய்வராது தடுப்பனவுமான பலவகை மருந்துச் சரக்குகளை உசிலை (மசாலை) யாகச் சேர்த்து ஆக்கியும், உயர்வாக உண்டு வந்த பெருமை தமிழனதாகும்.
காய் வகைகளைக் காம்பு களைந்து சீவ வேண்டுபவற்றைச் சீவிக் கழுவியும்; பித்தமுள்ளவற்றை அவித்திறுத்தும்; மஞ்சள், மிளகு அல்லது மிளகாய் வற்றல், சீரகம், கொத்துமல்லி, தேங்காய் முதலிய வற்றை மைபோல் அரைத்துக் கலந்தும்; இஞ்சி, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், கராம்பூ (கருவாப்பூ), கருவாப்பட்டை, ஏலம், சோம்பு முதலியவற்றை வேண்டுமளவு சேர்த்தும்; வெந்தபின் புளி அல்லது எலுமிச்சஞ்சாறு விடவேண்டியவற்றிற்கு விட்டும்; கடுகு, கறிவேப்பிலை முதலியன தூவி ஆவின் நெய்யில் தாளித்தும், முதன் முதற் குழம்பு காய்ச்சப்பெற்றது தமிழகத்திலேயே. தாளிப்பு இலக்கிய வழக்கில் குய் எனப்படும். குய்யுடை யடிசில் (புறம். 127).
உலகில் அரிசியுள்ள தவசங்களிற் பலவகையுள்ளன. அவற்றுள் நெல்லரிசிச் சோறுபோல் வேறொன்றும் சுவையாய்க் குழம் பொடு பொருந்துவதில்லை. தமிழகத்திலேயே, காடைக் கண்ணி யரிசி, குதிரைவாலியரிசி, சாமையரிசி, தினையரிசி, வரகரிசி என ஐவகை யரிசியுள. அவை நெல்லரிசிக்கீடாகா. கம்பும் சோளமும் கஞ்சியும் கூழுமே சமைத்தற்குதவும். கேழ்வரகால் களியும் கூழும்தான் ஆக்க முடியும். கோதுமை, வாற்கோதுமை போன்ற பிற நாட்டுத் தவசங்கள் (தானியங்கள்), அப்பமும் (ரொட்டியும்) சிற்றுண்டியும்தான் அடவும் சுடவும் ஏற்கும்.
நெல்லரிசியுள்ளும் பலவகை யுள. அவற்றுள் தலை சிறந்தது சம்பா. அதுவும் அறுபது வகைப்பட்டதாம். அவற்றுட் சிறந்தன சீரகச் சம்பாவும் சிறுமணிச் சம்பாவும்.
பச்சரிசி, புழுங்கலரிசி என்னும் இரு வகையுள், தமிழர் விரும் பியது பின்னதே. அது சூட்டைத் தணிப்பதனால் வெப்பநாட்டிற் கேற்றதாகும்; குழம்பின் சுவையையும் மிகுத்துக் காட்டும். அதற்காகவே, அதற்குரிய தனி முயற்சியை மேற் கொண்டனர். அதனால் ஏற்படும் வலுக் குறைவிற்குக் கறி வகைகளாலும் நெய்யாலும் ஈடு செய்யப் பெறும்.
இருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த
அவைப்புமாண் அரிசி அமலைவெண் சோறு (சிறுபாண். 193-4).
என்பது, தூய வெள்ளையாய் அரிசி தீட்டப்பட்டதைத் தெரிவிக்கும்.
பொதுவாக, காலைச் சிற்றுண்டியும் நண்பகல் மாலைப் பேருண்டியும் ஆக மூவுண்டிகளே பண்டைத் தமிழர் உண்டு வந்தனர்.
காலையுணவும் நண்பகலுணவும், உழவர்க்கும் கூலியாளர்க்கும் பழஞ்சோறும் பழங்கறியும் ஊறுகாயுமாகும். புதுக் கறியாயின் நெருப்பில் வாட்டியதும் துவையலுமாயிருக்கும். இராவுணவே அவருக்குப் புதுச் சமையலாகும்.
மென்புலத்து வயலுழவர்
வன்புலத்துப் பகடுவிட்டுக்
குறுமுயலின் குழைச்சூட்டொடு
நெடுவாளைப் பல்லுவியற்
பழஞ்சோற்றுப் புகவருந்தி
என்பது புறம் (395).
உழவர் மங்கல வினைநாளும் விழா நாளும் விருந்து நாளும் போன்ற சிறப்பு நாளிலன்றி, மூவேளையும் நெல்லரிசிச் சோறுண்பதில்லை. வரகு, சாமை, கம்பு, சோளம், கேழ்வரகு முதலிய அவ்வக்காலத்து விளைந்த தவசத்தையே அவ்வக் காலத்துப் பகலுணவாய் உண்பர்.
இல்லத்திலும் நிழலிலுமிருந்து வேலை செய்வோரெல்லாம், பெரும்பாலும், காலையிற் பழையதும் நண்பகல் மாலையிற் சுடுசோறும், உண்பர். அரசரும் செல்வரும் எல்லா நாளும், பிறரெல்லாம் சிறப்புநாளும், காலையிற் பலகாரமும் பொங்கலும் போன்ற சுடு சிற்றுண்டி வகைகளை உண்பர்.
இருவேளைப் பேருண்டிகளுள், தமிழர்க்குச் சிறந்தது நண் பகலதே. குழம்புச் சோறும் மிளகு நீர்ச் சோறும் மோர் அல்லது தயிர்ச் சோறும் என, முக்கடவையுள்ளது பேருண்டி. அதை அறுசுவையுண்டியென்பது வழக்கு. முக்கனிகளுள் ஏதேனு மொன்று இனிப்பும், பாகற்காய் அல்லது சுண்டைவற்றல் கசப்பும், காரவடை உறைப்பும், புளிக்கறியும் தயிரும் ஊறுகாயும் புளிப்பும், மாதுளங்காய் அல்லது கச்சல் துவர்ப்பும், உப்பேறி உவர்ப்பும், ஆகும். இத்தகைய உண்டி, தமிழரின் சுவை முதிர்ச்சியையும் தலைசிறந்த நாகரிகத்தையும் மருத்துவ அறிவையும் உடல்நல வுணர்ச்சியையும் ஒருங்கே காட்டும். அறுசுவையுள்ளும் தமிழர்க்குச் சிறந்தவை இனிப்பும் புளிப்பும் ஆகும். இது வெப்ப நாட்டியல்பு.
முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான்துழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.
என்னும் குறுந்தொகைச் செய்யுளும் (164).
வேளை வெண்பூ வெண்டயிர்க் கொளீஇ
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை (215)
புறவுக்கரு வன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்
குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த வொக்கலொடு
………………………………………………………………………………………………………
அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க்கு (34)
பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி (381)
என்னும் புறப்பாட்டடிகளும் இங்குக் கவனிக்கத் தக்கன. புன்கம் = சோறு. மிதவை = கூழ்.
தமிழர் விருந்துள் தலைசிறந்தது திருமண விருந்து. அதிற் பதினெண்வகைக் கறியும் கன்னலும் (பாயசம்) படைக்கப் பெறும். பதினெண் வகைக் கறிகள் : அவியல் (உவியல்), கடையல், கும்மாயம், கூட்டு (வெந்தாணம்), துவட்டல், புரட்டல், பொரியல், வறுவல், புளிக்கறி, பச்சடி (ஆணம்), அப்பளம், துவையல், ஊறுகாய், வற்றல், உழுந்துவடை, காரவடை, தேங்குழல், முக்கனிகளுள் ஒன்று என்பன.
கும்மாயம் குழைய வெந்த பருப்பு, அல்லது பயறு. வெந்தாணம் (வெந்த ஆணம்) என்பது இன்று வெஞ்சணம் என மருவி வழங்குகின்றது.
திண்மை நிலைபற்றி நீர், சாறு, தீயல், இளங்குழம்பு, குழம்பு, கூட்டு எனக் குழம்பு பலவகைப்படும். சோறும், சருக்கரைப் பொங்கல் (அக்காரடலை, அக்காரவடிசில்), வெண்பொங்கல், மிளகுப்பொங்கல், நெய்ப்பொங்கல், தேங்காய்ச்சோறு, பாற்பொங்கல், கடும்புச்சோறு, ஊன்சோறு (புலவு), ஊன்று வையடிசில் எனப் பலவகைப்படும்.
ஊன்சோறு அல்லது புலவு பண்டைக் காலத்தில் தமிழகத்தி லேயே தோன்றிப் பின்பு வழக்கற்றது; முகம்மதியர் வந்தபின் அவரிடமிருந்து புதிதாய்க் கற்றுக் கொண்டதன்று.
மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்
அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும்
பெட்டாங் கீயும் பெருவளம் பழுனி
என்றும் (113),
புலராப் பச்சிலை பிடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும்
செம்மற் றம்மநின் வெம்முனை யிருக்கை
என்றும் (33), வரும் புறப்பாட்டடிகளைக் காண்க.
அமிழ்தன மரபின் ஊன்றுவை யடிசில்
என்பது (புறம். 390 : 17), புலவின் சிறப்பு வகையாகத் தோன்றுகின்றது.
இறைச்சி வகைகளுள் உடும்பிறைச்சியைத் தலைசிறந்ததாகத் தமிழர் கொண்டமை, முழுவுடும்பு, முக்காற்காடை, அரைக் கோழி, காலாடு என்னும் பழமொழியால் தெரிய வருகின்றது.
உடும்பிழு தறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
சீறின் முன்றில் கூறுசெய் திடுமார்
கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து
என்னும் புறப் பாட்டடிகளும் (325 : 7-10)
நாய்கொண்டால், பார்ப்பாரும் தின்பர் உடும்பு
என்னும் பழமொழி நானூற்றடியும் (35), இதை வலியுறுத்தும்.
சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் கபிலர் கையைப் பிடித்து, உம் கை மெல்லிதாயிருக்கிறதே! கரணியம் என்ன? என்று வினவியதற்கு, அவர்,
புலவுநாற்றத்த பைந்தடி
பூநாற் றத்த புகைகொளீஇ ஊன்றுவை
கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது
பிறிதுதொழி லறியா வாகலின் நன்றும்
மெல்லிய பெரும தாமே………………
…………………………………………………………………………………….
செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே.
என்று கூறிய விடையால் (புறம். 14 : 12-19), கடைக் கழகக் காலத்துப் பிராமணனும் ஊனுண்டமை அறியப்படும்.
நெய்கனி குறும்பூழ் காய மாக
ஆர்பதம் பெறுக தோழி யத்தை
பெருங்கல் நாடன் வரைந்தென அவனெதிர்
நன்றோ மகனே யென்றனன்
நன்றே போலும் என்றுரைத் தோனே. (குறுந். 389).
என்பதில், நெய்யிற் பொரித்த குறும்பூழ்க் கறி கூறப்பட்டது.
குறும்பூழ் வேட்டுவன் 214ஆம் புறப்பாட்டிற் குறிக்கப் பட்டான். குறும்பூழ் = காடை. மனைக்கோழி 395ஆம் புறப்பாட்டிற் குறிக்கப்பட்டுள்ளது. ஆட்டில் வெள்ளாட்டுக் கடாவையே பண்டைத்தமிழர் சுவையுள்ளதென விரும்பியுண்டனர்.
மாடந் தோறும் மைவிடை வீழ்ப்ப (புறம். 33).
மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும் (புறம். 113).
நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின் (புறம். 262).
மைவிடை யிரும்போத்துச் செந்தீச் சேர்த்தி (புறம். 364).
விடைவீழ்த்துச் சூடுகிழிப்ப (புறம். 366).
மரந்தோறும் மைவீழ்ப்ப (மதுரைக் காஞ்சி, 754).
மல்லன் மன்றத்து மதவிடை கெண்டி (பெரும்பாண். 143).
செங்கண் மழவிடை கெண்டி (பெரும்பொருள் விளக்கம்).
மை = காராடு, வெள்ளாடு. விடை = கடா, வெள்ளாட்டுக் கடா.
இக்காலத்தில் மரக்கறி வகையைச் சேர்ந்த மோர்க் குழம்பு, அக்காலத்தில் ஊன்கறி வகையாகவும் இருந்தது.
செம்புற் றீயலின் இன்னளைப் புளித்து
……………………………………………………………………………………………………..
இரவலர்க் கீயும் வள்ளியோன் நாடே.
என்று கபிலர் பாரியின் பறம்புநாட்டைப் பற்றிப் பாடியிருத்தல் (புறம். 119) காண்க. அளை = மோர்.
விடை என்பது முழு வளர்ச்சியடைந்த இள விலங்கின் அல்லது பறவையின் பெயர். விடைத்தல் = பருத்தல், விறைத்தல் முறுக்காயிருத்தல். விலங்கினத்தில் ஆணையும் பறவையினத்தில் இருபாலையும் விடையென்பது மரபு.
நெய்யிற் பொரித்த கறியைத் தமிழரெல்லாரும் விரும்பி யுண்டனர். வெள்ளரிப் பிஞ்சைக் குறுக்கேயறுத்தால் தோன்றும் விதை போன்ற வெளிறிய நறுநெய்யையே அவர் பயன்படுத்தினர்.
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் (புறம். 246)
என்று பூதபாண்டியன் தேவி கூறுதல் காண்க.
பொரித்த கறியோடு உண்பதற்குப் புலவரிசிச் சோறுபோல் நீண்ட பருக்கைச் சோற்றையே விரும்பினர். நீண்ட பருக்கை கொக்கின் விரல் போலிருத்தலால், கொக்குகிர் நிமிரல் எனப்பட்டது.
மண்டைய கண்ட மான்வறைக் கருனை
கொக்குகிர் நிமிரல் ஒக்கல் ஆர (புறம். 398 : 24 - 25).
தமிழகத்தில், முதலில், துறவியரே புலாலுணவை நீக்கி வந்தனர். திருவள்ளுவர், அருளுடைமை புலான் மறுத்தல் கொல் லாமை என்னும் மூவதிகாரங்களையும், துறவறவியலில் வைத் திருப்பதும் கண்ணப்பநாயனார் படையலும் இங்குக் கவனிக்கத் தக்கன. சமணம் தமிழ் நாட்டிற்கு வந்த பின்னரே, இல்லறத் தாரும், சிறப்பாகச் சிவநெறியர், புலாலுணவை நீக்கத் தலைப் பட்டனர். அதனால், மரக்கறியுணவு சைவம் எனப்பட்டது.
மரக்கறி யுணவினராயினும் ஊனுணவினராயினும், பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என்னும் ஆனைந்தை மிகப் பயன்படுத்தி வந்தனர்.
நறுநெய்க் கடலை விசைப்ப (புறம். 120 : 14).
கறி பொரிக்கக் காய்ச்சிய நெய்யுலையோசைக்கு மதயானையின் பெருமூச்சையும், கொதிக்கின்ற நெய்யில் துள்ளி வேகும் கறியோசைக்கு ஆழ்ந்த நிறை குளத்தில் பெருமழைத் துளிகள் விழும் ஓசையையும் பண்டைப்புலவர் உவமை கூறியிருப்பது மிக மகிழ்ந்து பாராட்டத்தக்கது.
மையல் யானை அயாவுயிர்த் தன்ன
நெய்யுலை (புறம். 261 : 8-9).
நெடுநீர நிறைகயத்துப்
படுமாரித துளிபோல
நெய்துள்ளிய வறை (புறம். 386 : 13).
யானைக்குக் கொடுக்கும் கவளமும் நெய்யில் மிதித்துத் திரட்டப்பட்டதினால், நெய்ம்மிதி எனப் பெயர் பெற்றது. சமையல் வகைக்கெல்லாம் ஆவின் நெய்யையே அக்காலத்தில் பயன்படுத்தினர். நல்லெண்ணெய் என்னும் எள் நெய் தலை முழுக்கிற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது.
அரசரும் மறவரும் பாணரும் கூத்தரும் பொருநரும் புலவர் சிலரும் உழவரும் உழைப்பாளியரும், குடிப்பு வகைகளுள் கள்ளையே சிறந்ததாகக் கொண்டனர். கள் என்னுஞ் சொல், வெறிநீர், பதநீர் (தெளிவு அல்லது பனஞ்சாறு), மட்டு (சர்பத்து), தேன் என்னும் நால்வகையையுங் குறிக்கும். இந்த நான்கையும் பயன்படுத்தினர் பண்டைத் தமிழர். இவற்றுள் வெறிநீர் வகையே வள்ளுவரால் கள்ளுண்ணாமை என்னும் அதிகாரத்திற் கண்டிக்கப்பட்டது.
வெறிநீர் இயற்கைக் கள்ளும் செயற்கைக் கள்ளும் என இருவகைத்து. பனங்கள்ளும் தென்னங்கள்ளும் ஈச்சங்கள்ளும் இயற்கை; அரிசிச் சோற்று நீரைப் புளிக்க வைத்து அரிக்கப் பட்ட அரியலும், மேனாடுகளினின்று புட்டிகளில் வந்த மதுக் கள்ளும் செயற்கை.
யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல் (புறம். 56 : 18).
வெப்ப நாடாகிய தமிழகத்தில், காலையிலிருந்து கதிரவன் அடையும் வரை காட்டில் கடுவெயிலில் வருந்தியுழைக்கும் உழவர்க்கு, உழைப்பு நோவைப் போக்கவும் நீர் வேட்கையைத் தணிக்கவும், வெறிப்பும் குளிர்ச்சியும் புளிப்பான குடிப்பு வேண்டியதாயிருந்தது. அதனால், அவர்க்கென்று தனிக் கள் உண்டாக்கப்பட்டது.
களமர்க் கரித்த விளையல் வெங்கள் என்பது (புறம். 212 : 2) இதையுணர்த்தும்.
கள்ளின் புளிப்பையும் வெறிப்பையும் மிகுக்க, அதைக் கண்ணாடிக் கலங்களிலும் மூங்கிற் குழாய்களிலும் இட்டு மூடிப் பன்னாள் மண்ணிற் புதைத்து வைப்பதும் வழக்கம். அத்தகைய கள்ளின் கடுமைக்குத் தேட்கொட்டும் பாம்புக் கடியும் உவமை கூறப்பட்டுள்ளன.
நிலம்புதைப் பழுனிய மட்டின் தேறல் (புறம். 120).
தேட்கடுப் பன்ன நாட்படு தேறல் (புறம். 392 : 16).
பாப்புக்கடுப் பன்ன தோப்பி (அகம். 348 : 7).
தேறல் = தெளிந்த கள். தோப்பி = நெற் கள்.
இன்கடுங்கள் (புறம். 80) என்பதனாலும், பூக்கமழ் தேறல் (பொருநர். 157) என்பதனாலும், செயற்கைக்கள் இனிமையும் மணமும் ஊட்டப் பெற்றிருந்தமை அறியலாம்.
நாட்படாத இயற்கைக் கள்ளை உடலுழைப்பாளிகள் வெறி யுண்டாகாவாறு அளவாக உண்பதாற் கேடில்லை யென்பதும் நன்றென்பதும், ஆராய்ச்சியாளர் கருத்து. வேனிற் காலத்திற்குக் குளிர்ச்சியான பனங்கள்ளையும் மாரிக் காலத்திற்கு வெப்பமான தென்னங்கள்ளையும், இயற்கை வகுத்திருப்பது கவனிக்கத் தக்கது.
4. உடை
தமிழகத்திற் பழங்காலத்திலேயே நெசவு தோன்றிவிட்டதென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். வயவர் யோவான் மார்சல் (Sir John Marshall) தம் மொகொஞ்சோ-தாரோவும் சிந்து நாகரிகமும் (Mohenjodaro and the Indus Civilization) என்னும் நூலில் கி.மு. 3000 ஆண்டுகட்குமுன் மேனாடுகட்கு இந்தியாவினின்றே துணி ஏற்றுமதியான தென்று கூறியிருக்கின்றனர். அக்காலத்திந்தியா தமிழகமே.
பருத்தி தொன்று தொட்டுத் தென்னாட்டில் விளைந்து வருகின்றது. மூதாட்டியரும் கைம்பெண்டிரும் பண்டைக் காலத்தில் மேற்கொண்ட தொழில்களுள் பெருவழக்கானது நூல்நூற்றல். அதனால் அவர் பருத்திப் பெண்டிர் எனப்பட்டார்.
பருத்திப் பெண்டிர் பனுவ லன்ன (புறம். 125 : 1).
ஆளில் பெண்டிர் தாளிற் செய்த
நுணங்குநுண் பனுவல் (நற். 353).
பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்
செஞ்சொற் புலவனே சேயிழையா - எஞ்சாத
கையேவா யாகக் கதிரே மதியாக
மையிலா நூன்முடியு மாறு (நன். பாயிரம்).
பனுவல் = நூல்.
நூற்பதற்குப் பஞ்சைச் சுருளாகத் திரட்டி வைப்பதனால், நூல்நூற்றலைக் கொட்டை நூற்றல் என்பது வழக்கு. நூற்குங் கருவி, சுற்றும் சக்கர முடைமையால் இறாட்டு அல்லது இறாட்டை எனப்பட்டது.
இறத்தல் = வளைதல், இறகு = வளைந்த தூவு.
இறவு = கூரையின் சாய்ப்பு, இற - இறப்பு = கூரையின் சாய்ப்பு. இது இறவாணம், இறவாரம் என்றும் சொல்லப்படும்.
இறவு - இறவுள் = மலைச்சரிவு.
இறை = 1. வீட்டிறப்பு, குறியிறைக் குரம்பை (புறம். 129). 2. பெண்டிரின் வளைந்த முன்கை. எல்வளை யிறையூ ரும்மே (கலித். 7 : 16).
இறைதல் = வளைதல், வணங்குதல். இணையடி யிறைமின் (பதினோ, ஆளு. திருக்கலம். 48).
இறை - இறைஞ்சு. இறைஞ்சுதல் = வணங்குதல்.
இற - இறா = வளைந்த பெருங் கூனி.
இறா - இறால் = 1. வட்டமான தேன்கூடு. 2. பெருங்கூனி.
இறா - இறவு = 1. பெருங்கூனி. கடலிறவின் சூடுதின்றும் (பட்டினப். 63). 2. தேன்கூடு (ஞானவா.)
இறா - இறாட்டு = 1. பெருங்கூனி. 2. தேன்கூடு. 3. நூற்கும் சக்கரம்.
இறாட்டு - இறாட்டை = நூற்கும் சக்கரம்.
இறாட்டு - இறாட்டினம் = 1. நூற்கும் சக்கரம். 2. நீரிறைக்கும் உருளை. 3. ஏறிவிளையாடும் குடையிறாட்டினம் அல்லது இறாட்டின வூஞ்சல்.
நூற்கும் சக்கரம் கையினாற் சுற்றப்படுவதனால், அது கையி றாட்டு அல்லது கையிறாட்டை, அல்லது கையிறாட்டினம் என்று சொல்லப்படும். இறாட்டு என்னும் சொல்லே, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியில் இல்லை. இராட்டு என்னும் வழூஉச் சொல் மட்டும், தேன்கூடு என்னும் பொருளிற் குறிக்கப்பட்டுள்ளது.
இறாட்டு, இறாட்டை, இறாட்டினம் என்னும் மூவடிவும், இந்தியில் ரஹட் அல்லது ரஹண்ட்டா என்னும் வடிவில் நூற்குங் கருவியைக் குறித்து வழங்கு கின்றன. ஆயின், இந்திச் சொல்லே தமிழ்ச் சொற்கு மூலமாகச் சென்னை அகரமுதலியிற் குறிக்கப்பட்டுள்ளது.
நூல் என்னுஞ் சொல்லே நுண்ணியது என்னும் வேர்ப் பொரு ளுடையது. நுணங்கு நுண் பனுவல் என்பது மிக நுண்ணிய நூலைக் குறிக்கும்.
அக்காலத்தில், பட்டு, பருத்திப் பஞ்சு, விலங்கு மயிர் ஆகிய மூவகைக் கருவி யாலும் ஆடை நெய்து வந்தனர். இது,
நூலினு மயிரினும் நுழைநூற் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்
என்னும் சிலப்பதிகார அடிகளால் (14 : 205 -7) அறியலாம். மயிரினும் என்பதற்கு எலி மயிரினாலும் என்று உரை வரைந் துள்ளார் அடியார்க்கு நல்லார்.
மயிர் நிறைந்த ஒருவகை மலையெலி பண்டைத் தமிழ் நாட்டி லிருந்த தென்பதும், அதன் மயிரால் சிறந்த தாவளி (கம்பளம்) நெய்யப்பட்ட தென்பதும்,
புகழ்வரைச் சென்னிமேற் பூசையிற் பெரியன
பவழமே யனையன பன்மயிர்ப் பேரெலி.
செந்நெ ருப்புணுஞ் செவ்வெ லிம்மயி
ரந்நெ ருப்பள வாய்பொற் கம்பலம்.
என்று சீவகசிந்தாமணி (1898, 2686) கூறுவதால் அறியப்படும். ஆயினும், எலிமயிரால் மட்டுமன்றி ஆட்டுமயிராலும் ஆடை நெய்யப் பட்டமை.
எலிப்பூம் போர்வையொடு மயிர்ப்படம் விரித்து
என்னும் பெருங்கதை யடியால் (உஞ்சைக் 47 : 179) அறியலாம்.
பண்டைத் தமிழ்நாட்டில் நெய்யப்பட்ட ஆடை வகைகளுள், கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்டுகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர், கோபம், சித்திரக் கம்மி, குருதி, கரியல், பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்க் காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி என 36 வகைகள் அடியார்க்கு நல்லாராற் குறிக்கப் பெற்றுள. இவையல்லாமல், கம்பலம், கலிங்கம், காழகம், சீரை, துகில், தூசு, படம் முதலிய பலவுள.
அறுக்கப்படுவதனால் அறுவை என்றும், துணிக்கப்படுவதனால் துணி என்றும், சவண்டிருப்பதனால் சவளி யென்றும், ஆடை பல பொதுப் பெயர் பெறும். சவளுதல் துவளுதல். மென் காற்றிலும் ஆடுவது (அசைவது) ஆடை.
சவளி என்னும் தமிழ்ச்சொல், த்ஜவளி என்று தெலுங்கிலும் ஜவளி என்று கன்னடத்திலும் எடுப்பொலியுடன் ஒலிக்கப்படுவ தாலும், தமிழிலும் அங்ஙனம் இற்றைத் தமிழர் ஒலிப்பதாலும், வடசொல்லென்று தவறாகக் கருதப்படுகின்றது. வடமொழியில் இச்சொல் இல்லை.
சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி
சளிசகடு சட்டை சவளி - சவிசரடு
சந்து சதங்கை சழக்காதி ஈரிடத்தும்
வந்தனவாற் சம்முதலும் வை.
என்னும் மயிலைநாதர் எடுத்துக்காட்டுச் செய்யுளால், சவளி என்பது தூய தென்சொல்லாதல் அறியப்படும்.
அக்காலத்து மெல்லாடை, பாம்புச் சட்டை போன்றும், மூங்கி லின் உட்புற மீந்தோல் போன்றும், புகை விரிந்தாற் போன்றும், நீராவி படர்ந்தாற் போன்றும், இழை யோடியது தெரியாமலும், பூத்தொழிலுடன் நுண்ணிதாய் நெய்யப் பட்டிருந்ததென்று பண்டைத் தமிழ் நூல்கள் கூறுகின்றன.
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரி யன்ன அறுவை (பொருநர். 82-83)
பாம்புரி யன்ன வடிவின காம்பின்
கழைபடு சொலியின் இழையணி வாரா
ஒண்பூங் கலிங்கம் (புறம் 383 : 9 : 11)
காம்புசொலித் தன்ன அறுவை (சிறுபாண். 236)
புகைவிரிந் தன்ன பொங்குதுகில்
ஆவி யன்ன அவிர்நூற்கலிங்கம் (பெரும்பாண். 469)
கண்ணுழை கல்லா நுண்ணூற் கைவினை
வண்ண அறுவையர் (மணி. 28 : 52 - 3)
இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம் (மலைபடு. 561)
நீலக் கச்சைப் பூவா ராடை (புறம். 274)
போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன
அகன்றுமடி கலிங்கம் (புறம். 393)
திருமல ரன்ன புதுமடிக் கொளீஇ (புறம். 390.)
இக்காலக் காஞ்சிபுரப் பட்டுச் சேலை போன்றே, அக்காலப் பட்டாடையும் முன்றானை யோரத்தில் அழகிய மணி போன்றநூன் முடிச்சுக்களை யுடையதா யிருந்தது.
கொட்டைக் கரைய பட்டுடை நல்கி (பொருநர். 155).
அக்காலத்தில், உயர்குடி ஆடவர் வேட்டியும் மேலாடையும், உயர்குடிப் பெண்டிர் சேலையும் கச்சும் (இரவிக்கையும்), அணிந்திருந்தனர். தாழ்குடி யாடவர் வேட்டியொடு தலை முண்டும், தாழ்குடிப் பெண்டிர் கச்சின்றிச்சேலை முன்றானை யாலமைந்த மார்யாப்பும், கொண்டிருந்தனர். ஊராட்சித் தலைவரும் பெரியோரும் மேலாடையொடு வட்டத் தலைப் பாகையும் அணிந்திருந்தனர்.
அரசர்க்கும் அரசியல் அதிகாரிகட்கும் அரண்மனை அலுவலர்க்குமே, சட்டையணியும் உரிமையிருந்தது. சட்டை உடம்பிற்குப் பை போன்றிருப்பதால், மெய்ப்பை என்றும் பெயர் பெறும்.
நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர
மெய்ப்பை புக்கு வியங்குநடைச் செலவிற்
கைக்கோற் கொல்லனை (சிலப். 16 : 106 - 8).
ஈசனுங் கற்றுச்சொல்வோர் பின்வர விகலிற் கூடித்
தேசுடைச் சட்டை சாத்தி
என்னும் பெரும் பற்றப் புலியூர் நம்பி கூற்று பிற்காலத்ததேனும், சட்டை என்னும் சொல் முற்காலத்ததே. கஞ்சுக மாக்கள் என்னும் சிலப்பதிகாரச் சொற்கு சட்டையிட்ட பிரதானிகள் என்று அருஞ்சொல்லுரைகாரர் வரைந்திருத்தல் காண்க. பேடிக் கோலத் தாரும் அரசகுலப் பெண்டிரும், வட்டுடை என்னும் ஒரு வகைச் சிறப்புடையை, அரையினின்று முழந்தாளளவாக அக்காலத்தணிந் திருந்தனர். (மணி. 3 : 122; பெருங் 3. 4 : 122).
வேடர், அரையினின்று அடித் தொடையளவாக, காழம் என்னும் ஒரு வகை யுடையை அணிந்திருந்தமை காழமிட்ட குறங் கினன் என்னும் கம்பர் கூற்றால் (கம்பரா. கங்கைப். 32) தெரிய வருகின்றது. அது சல்லடம் போற் குறுகிய அரைக்காற் சட்டை போலும்!
வெயிற் காலத்திலும் வறண்ட இடத்திலும் செல்லும் வெளிப் போக்கரும் வழிப் போக்கரும், இல்லறத்தாராயின் தொடுதோல் என்னும் செருப்பும், துறவியராயின் மிதியடி என்னும் பாதக் குறடும், அணிந்து சென்றனர்.
சட்டையிட்டும் மேனாட்டாற்போற் பாதக்கூடு (Boots) அணிந்தும் காட்டுவழியிற் சென்றதாகப் பெரும்பாணாற்றுப் படையிற் கூறப்படும் வணிகர், வெளிநாட்டார் போல் தெரிகின்றது.
அடிபுதை யரணம் எய்திப் படம்புக்கு
……………………………………………………………………………………
உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர் பெரும்பாண். (69 - 76).
அடிபுதையரணம் = அடியை மறைக்கின்ற பாதக்காப்பு. படம் = சட்டை.
5. அணி
பண்டைத் தமிழகத்தில், சிறந்த வகையில் விரும்பிய அளவு அணிகலம் செய்வதற்கேற்ற பொன், வெள்ளி, முத்து, மணி முதலிய கருவிகளும் தேர்ந்த பொற்கொல்லரும், அணிபவரும், இருந்தனர்.
இக்காலத்தும், உலகில் மிகுதியாய்ப் பொன் கிடைக்குமிடம் ஆத்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவுமாகும். இவை முழுகிப் போன பழந்தமிழகமான குமரிக் கண்டத்தைச் சேர்ந்தவை. ஆதலால், குமரி நாட்டிலும் தமிழர்க்கு ஏராளமாய்ப் பொன் கிடைத்திருக்க வேண்டும்.
குமரிக் கண்டம் முழுகிய பின்பும், கொங்கு நாட்டில் மிகுதியாய்ப் பொன் கிடைத்தது. அது கொங்குப் பொன் எனக் கல்வெட்டிற் சிறப்பாய்க் குறிக்கப் பெற்றுள்ளது. இன்று தங்கச் சுரங்கமுள்ள குவளாலபுரம் (கோலார்) கொங்கு நாட்டைச் சேர்ந்ததே. அந்நாட்டில் தோன்றும் காவிரியாறு, பண்டைநாளிற் பொன் மணலைக் கொழித்ததனால் பொன்னி யெனப்பெற்றது. கொங்கு நாடு பண்டைத் தமிழகத்தின் ஒரு பகுதியாகும்.
மதுரையிலிருந்த வெள்ளியம்பலமும் தில்லையிலிருந்த பொன்னம்பலமும், பண்டைத் தமிழகத்தின் வெள்ளி பொன் வளத்தைக் காட்டும்.
முதற்காலத்தில் ஏராளமாய்ப் பொன் கிடைத்ததனால் பொன்னாலேயே காசடிக்கப்பட்டது. அதனால், காசிற்கு மட்டுமன்றி, தாது (உலோக) வகைகட்கும் பொன் என்பது பொதுப் பெயராயிற்று வெண்பொன் = வெள்ளி, செம்பொன் = செம்பு, கரும்பொன் = இரும்பு. பொன் = தாது (Metal). இதனால், தமிழகத்தில் இரும்புக் காலத்திற்கு முன் பொற்காலம் ஒன்று இருந்ததோ என ஐயம் எழுகின்றது.
கடைக்கழகக் காலப் புலவர் சிலர்க்கு அளிக்கப்பட்ட பொற்பரிசிலே, அக்காலத்துப் பொன்வளத்தைக் காட்டப் போதுமானது.
காப்பியாற்றுக் காப்பியனார், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் மீது பதிற்றுப்பத்தின் 4ஆம் பத்தைப் பாடி, நாற்பது நூறாயிரம் பொன்னும் அவன் ஆண்டதிற் பாகமும் பெற்றார். பொன் என்பது பொற்காசு.
காக்கைபாடினியார் நச்செள்ளையார், ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் மீது பதிற். 6ஆம் பத்தைப் பாடி, அணிகலனுக் கென்று ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும் பெற்றார்.
கபிலர், செல்வக்கடுங்கோ வாழியாதன் மீது பதிற். 7ஆம் பத்தைப் பாடி, நூறாயிரம் பொற்காசும் அவன் மலை மீதேறிக் கண்டு கொடுத்த நாடும் பெற்றார்.
அரிசில் கிழார், தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை மீது பதிற். 8ஆம் பத்தைப் பாடி, ஒன்பது நூறாயிரம் பொற்காசும் ஆட்சியுரிமையை மறுத்து அமைச்சுரிமையும் பெற்றார்.
பெருங்குன்றூர் கிழார், குடக்கோ இளஞ்சேர லிரும்பொறை மீது பதிற். 9ஆம் பத்தைப் பாடி, முப்பத்தீராயிரம் பொற்காசும் பவவகைப் பரிசிலும் பெற்றார்.
கடியலூர் உருத்திரங்கண்ணனார், கரிகாற் பெருவளவன் மீது பட்டினப்பாலையைப் பாடி, பதினாறு நூறாயிரம் பொன் பெற்றார்.
பதிற்றுப் பத்தில் முதற்பத்தும் 10ஆம் பத்தும் இன்றின்மையால், அவற்றைப் பாடிய புலவர் பெற்ற பரிசும் தெரியவில்லை.
மாதவிபோல் ஆடல்பாடல் அரங்கேறிய நாடகக் கணிகையின் மாலை விலை ஆயிரத் தெண் கழஞ்சு பொன்னாக மதிக்கப் பட்டிருந்தது.
கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய
நுண்விளைக் கொல்லர் (சிலப். 16 : 105 -6)
மத்தக மணியொடு வயிரம் கட்டிய
பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூல்
சித்திரச் சிலம்பின் செய்வினை யெல்லாம்
பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கிக்
கோப்பெருந் தேவிக் கல்லதை யிச்சிலம்பு
யாப்புற வில்லை யென (சிலப். 16 : 117 - 122).
பலவுறு கண்ணுள் சிலகோல் அவிர்தொடி (கலித். 85 : 7)
என்னும் பகுதிகள் அக்காலத்து அணிகல வினைத்திறத்தைக் காட்டும்.
மலைபயந்த மணியும் கடறுபயந்த பொன்னும்
கடல்பயந்த கதிர்முத்தமும் (புறம். 377 : 16 - 7).
என்பது தமிழகத்தின் பொன் மணி முத்து வளத்தைக் காட்டும்.
பாண்டி நாட்டைச் சேர்ந்த கீழைக்கடல் முத்து, தொன்று தொட்டு உலகப் புகழ் பெற்றது.
விளைந்து முதிர்ந்த வெண்முத்தின்
இலங்குவளை இருஞ்சேரிக்
கட்கொண்டிக் குடிப்பாக்கத்து
நற்கொற்கையோர் நசைப்பொருந (மதுரைக். 135 - 138)
மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும்
கொற்கையம் பெருந்துறை முத்தின் அன்ன (அகம். 27 : 8-9).
இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும்
நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை (அகம். 130 : 9 - 11)
வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன்
புகழ்மலி சிறப்பிற் கொற்கை முன்றுறை
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து (அகம். 201 : 3-5).
இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி
வலம்புரி மூழ்கிய வான்திமிற் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்
கலிகெழு கொற்கை எதிர்கொள இழிதரும் (அகம். 350 : 10-13).
காண்டொறுங் கலுழ்த லன்றியும் ஈண்டுநீர்
முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை. (நற். 23 : 5 - 6)
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும் (பட்டினப். 189).
அணிகலத்திற்குரிய பொன், இயற்கையாகத் தூயதும், புடமிடப் பட்டுத் தூயதாக்கப் பெற்றதும், என இருவகை. இவற்றுள் முன்னது ஓட்டற்ற பொன் எனப்படும்.
ஓட்டற்ற செம்பொன் போலே (ஈடு, 1, 10, 9)
மாற்றறியாத செழும் பசும் பொன்
என்று இராமலிங்க அடிகள் கூறியதும் இதுவே.
புடமிடப்பட்டது மாற்றுயர்ந்த பொன் எனப்படும். பத்தரை மாற்றுத் தங்கம் சிறந்ததெனக் கூறுவது உலகவழக்கு. தாயுமான அடிகள் இதைப் பத்துமாற்றுத் தங்கம் என்பர்.
பத்துமாற்றுத் தங்க மாக்கியே பணிகொண்ட (சின்மயா. 7)
அபரஞ்சி என்னும் ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன்னும் உள்ளதாக நூல்கள் கூறும்,
ஆயிரத்தெட்டு மாற்றின் அபரஞ்சி (மச்சபு. தாரகாசுரவ. 26).
அயோக்கியர் அழகு அபரஞ்சிச் சிமிழில் நஞ்சு.
என்றொரு பிற்காலப் பழமொழியும் உளது.
பொன்னின் மாற்றுரைக்குங் கல் கட்டளைக்கல் என்றும், உரைக்கும் கம்பி உரையாணி என்றும், பெயர் பெற்றன.
மாதவி, விரலணி (கான் மோதிரம்), பரியகம் (காற்சவடி), நூபுரம் (சிலம்பு), பாடகம், சதங்கை, அரியகம் (பாத சாலம்), குறங்குசெறி (கவான்செறி), விரிசிகை, கண்டிகை (மாணிக்க வளை), தோள் வளை, சூடகம், கைவளை (பொன்வளை), பரியகம் (பாசித்தா மணி, கைச்சரி), வால்வளை (சங்க வளை, வெள்ளி வளை), பவழவளை, வாளைப் பகுவாய் மோதிரம், மணி மோதிரம், மரகதத்தாள் செறி (மரகதக் கடை செறி), சங்கிலி (மறத் தொடரி), நுண்ஞாண், ஆரம், கயிற்கடை யொழுகிய கோவை (பின்றாலி), இந்திரநீலக் கடிப்பிணை (நீலக் குதம்பை), தெய்வவுத்தி (திருத்தேவி), வலம்புரி, தொய்யகம் (தலைப்பாளை, பூரப்பாளை), புல்லகம் (தென்பல்லியும் வடபல்லியும்) என 27 வகை அணிகள் அணிந்திருந்ததாகச் சிலப்பதிகாரக் கடலாடு காதை கூறுகின்றது. இவற்றுள் அடங்காத வேறு சில அணிகலம் அக்காலத்திருந்தன. அவற்றுள் ஒன்று சூடை அல்லது சூடாமணி. பெண்டிர் அரைப்பட்டிகை மட்டும் மேகலை, காஞ்சி, கலாபம், பருமம், விரிசிகை என ஐவகைப் பட்டிருந்தது.
எண்கோவை காஞ்சி எழுகோவை மேகலை
பண்கொள் கலாபம் பதினாறு - கண்கொள்
பருமம் பதினெட்டு முப்பத் திரண்டு
விரிசிகை யென்றுணரற் பாற்று.
என்பது பழஞ் செய்யுள்.
இக்கால அணிகளே ஏறத்தாழ ஐம்பது வகைப்பட்டிருப்பதால், முதன்மையான அணியினையே இளங்கோவடிகள் குறித் திருத்தல் வேண்டும். இக்காலத்து அரைப்பட்டிகை ஒட்டியாண மாகும். இங்ஙனமே சில அணிகள் வடிவும் பெயரும் மாறியுள.
இக்காலத்துப் பாண்டி நாட்டுப் பழ நாகரிக மகளிர் போல், அக்காலத்தில் எல்லாத் தமிழப் பெண்டிரும் காது வளர்த்திருந்தனர். காது வளர்க்கும்போது அணிவது குதம்பையும், வளர்த்தபின் அணிவது குழையும் கடிப்பிணையு மாகும். குதம்பை இன்று குணுக்கு என வழங்குகின்றது.
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள் (சிலப். 4 : 50)
வள்ளைத் தாள்போல் வடிகா திவைகாண்
உள்ளூன் வாடிய உணங்கல் போன்றன (மணி. 20 : 53-4).
என்பன காண்க.
அக்காலத்தில் ஆடவரும் அணிகலன் அணிவது பெருவழக்கு. வணிகர் காதிற் குண்டலமும் தோளில் (புயத்தில்) கடகமும், மார்பில் மணிக் கண்டிகையும், அணிந்திருந்தனர். பிற வகுப்பார் காதிற் கடுக்கனும், கையிற் காப்பும் அணிந்திருந்தனர். கடுக்கனைப் பின்பற்றியே பிற்காலக் கமலம் (கம்மல்) என்னும் மகளிர் காதணி எழுந்தது. மறவர் தோளிற் கடகமும் காலிற் கழலும் அணிந்திருந்தனர். கழல் பிற்காலத்தில் வெண்டையம் எனப்பட்டது. கை மோதிரம் இரு பாலார்க்கும் பொதுவாம்.
அரசர், பாணனுக்குப் பொற்றாமரையும், அவன் மனைவியாகிய பாடினிக்கு அல்லது விறலிக்குப் பொன்னணிகலமும், பரிசிலாக அளித்து வந்தனர். விறலி விறல் (சத்துவம்)பட ஆடுபவள். விறல் உள்ளக் குறிப்பால் உடம்பில் தோன்றும் வேறுபாடு. அவை கண்ணீர் வார்தல், மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலியன.
13ஆம் நூற்றாண்டில் பாண்டி நாட்டைப் பார்க்க வந்த மார்க்கோ போலோ என்னும் வெனீசு நகர வணிகர், சுந்தர பாண்டியன் தன் கழுத்தில் விலைமதிக்க வொண்ணாத பன்மணி மாலையும், மார்பில் விலையேறப் பெற்ற இருமணியாரமும், தோளில் மூன்று பன்முத்தக் கடிகையும், காலிற் கழலும், கால் விரல்களில் மோதிரமும் அணிந்திருந்த தாகக் கூறியுள்ளார்.
மைதீர் பசும்பொன் மாண்ட மணியழுத்திச்
செய்த தெனினும் செருப்புத்தன் காற்கேயாம்
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும். (நாலடி. 347)
என்னும் நாலடிச் செய்யுளால், பண்டை மூவேந்தரின் செருப்பு எத்தகைய தாயிருக்கும் என்பதை உய்த்துணரலாம்.
மயிலுக்குத் தோகைபோலப் பெண்டிர்க்குக் கூந்தல் அழகு தருவதால், அக்காலத்துப் பெண்டிர் தம் கூந்தலை நன்றாய்ப் பேணி, குழல், கொண்டை, பனிச்சை, சுருள், முடி என்னும் ஐவகையில் அழகுபெற முடித்து வந்தனர். அவை ஐம்பால் எனப்படும். அவற்றைக் குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என நச்சினார்க்கினியரும்; சுருள், குரல், அளகம், துஞ்சு குழல், கொண்டை எனச் சாமுண்டி தேவநாயகரும்; சிறிது வேறுபடக் கூறுவர். கூந்தலுக்கு மணம் இயற்கை என்னும் அளவிற்கு நறுமணம் ஊட்டுவது ஒரு தனிக் கலையாயிருந்தது. நாறைங் கூந்தல் என்றார் இளங்கோவடிகளும் (சிலப். 10 : 43).
பெண்டிர் தம் கண்ணிற்கு மையூட்டுவது பெரு வழக்கமா யிருந்தது.
எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து.
என்னும் குறள் (1285) இதைத் தெரிவிக்கும். மையூட்டுவதன் பெருவழக்கினால், உண்கண் என்னுந் தொடரே மையுண்ட கண்ணைக் குறிக்கும்.
இருநோக் கிவளுண்கண் ணுள்ளது. (குறள். 1091).
மையூட்டல் கண்ணிற்கு அழகு மட்டுமன்றிக் குளிர்ச்சியும் தருமென்பது, அறிஞர் கருத்து.
இக்காலத்து மேனாட்டுப் பெண்டிர் போல், அக்காலத் தமிழப் பெண்டிரும் தம் உதடுகட்குச் செஞ்சாயம் ஊட்டி வந்தனர். அது அவரழகைச் சிறப்பித்ததனால் பெண்டிரழகை வண்ணிக்கும் இடமெல்லாம் இலவிதழ்ச் செவ்வாய் (சிலப். 14 : 136) என்றும், கொவ்வைச் செவ்வாய் (திருவாச. 6 : 2) என்றும், துப்புறழ் தொண்டைச் செவ்வாய் (சீவக. 550) என்றும், பிறவாறும், கூறுவது புலவர் வழக்கமாயிற்று.
இனி, உள்ளங்காற்கும் செந்நிறம் பெறச் செம்பஞ்சுக் குழம்பு ஊட்டி வந்தமை. அலத்தக மூட்டிய அடி (மணி. 6 : 110) என்பதால் அறியலாம். அலத்தகம், செம்பஞ்சுக் குழம்பு.
மகளிர் மார்பிலும் தோளிலும் காதலர் சந்தனக் குழம்பால் வரையும் ஓவியங்களும், இருபாலாரும் நெற்றியிலும் கையிலும் குத்துவிக்கும் பச்சைக் கோலமும், ஓவிய வுணர்ச்சியையன்றி நாகரிகத்தைக் காட்டா.
6. உறையுள்
உறையுள் என்பது குடியிருக்கும் வீடு.
குறிஞ்சிநில வாணரான குறவர் குன்றவர் இறவுளர் முதலிய வகுப்பாரும், பாலைநிலவாணரான மறவர் எயினர் வேடர் முதலிய வகுப்பாரும், இலை வேய்ந்த குடிசைகளிலும் குற்றில் களிலும்; முல்லைநிலவாணரான இடையர் கூரை வேய்ந்த சிற்றில்களிலும் மருத நிலச் சிற்றூர்வாணரான உழவர். மண்சுவர்க் கூரை வீடுகளிலும்; வதிந்தாரேனும்; மருதநிலப் பேரூர்வாணர் ஏந்தான (வசதியான) பச்சைச் செங்கற்சுவர்க் கூரை வீடுகளிலும் சுட்ட செங்கற்சுவர்க் காரை வீடுகளிலும் வாழ்ந்துவந்தனர். சுட்ட செங்கல், சுடுமண் என்றும் சுடுமட் பலகை என்றும் சொல்லப்பட்டது. பச்சைச் செங்கல் மட்பலகை யெனப்பட்டது.
சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பில் (பெரும்பாண். 405).
சுடுமட் பலகைபல கொணர்வித்து (பெரியபு. ஏயர்கோன். 49).
சிறு செங்கல் இட்டிகை எனப்பட்டது.
கண்சொரீஇ இட்டிகை தீற்று பவர் (பழ. 108).
இட்டிது = சிறிது (குறள். 478). இட்டிமை = சிறுமை (திவா,). இட்டிய = சிறிய (ஐங்குறு. 215).
இட்டிகை என்பது, வடமொழியில் இஷ்டிகா என்று திரிந்து தன் சிறப்புப் பொருளையிழந்து, செங்கல் என்று மட்டும் பொருள்படும்.
சிறியதும் பெரியதும் உயர்ந்ததும் தாழ்ந்ததும் அல்லாது நடு நிகர்த்தான உறையுள், குடி, மனை, இல், வீடு என்னும் சொற்களுள் ஒன்றாற் குறிக்கப்பெறும். இல்லம், வளமனை, மாளிகை, நகர் என்பன, பெருஞ்செல்வர் வாழும் சிறந்த உறையுளைக் குறிக்கும். அரசர் வாழும் மாளிகை அரண் பெற்றிருக்குமாதலால், அரண்மனை யெனப் பெறும்; அரசன் மனை என்னும் பொருளிற் கோயில் என்றும் சொல்லப்பெறும்.
குடி, நகர், மாளிகை என்னும் தூய தமிழ்ச் சொற்கள் வடமொழிச் சென்றும் வழங்குகின்றன.
மேனிலையுள்ள வீடு மாடம் எனப்பட்டது. அது உலக வழக்கில் மாடிவீடு எனவும் மெத்தைவீடு எனவும் வழங்கும். இருநிலை முதல் எழுநிலை வரை அக்காலத்து மாடங்கள் கட்டப்பட்டன.
இன்அகில் ஆவிவிம்மும் எழுநிலைமாடஞ் சேர்ந்தும் (சீவக. 2840).
ஒவ்வொரு மாடமும் அல்லது மாளிகையும், சுற்றுச் சுவர், முகமண்டபம், தலைவாசல், இடைகழி, (நடை), முன்கட்டு, உள்முற்றம், பின்கட்டு, கூடம், அடுக்களை (சமையலறை), புழைக்கடை (கொல்லைப்புறம்), மனைக்கிணறு, குளிப்பறை, சலக்கப்புரை (கக்கூசு), சாலகம் அல்லது அங்கணம் என்னும் பகுதிகளையுடையதாயிருந்தது. மேனிலையில் நிலாமுற்ற மிருந்தது.
வகைபெற எழுந்து வானம் மூழ்கிச்
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்இல்
என்னும் மதுரைக்காஞ்சி அடிகட்கு (357 -8).
மண்டபம் கூடம் தாய்க்கட்டு அடுக்களை என்றாற் போலும் பெயர்களைப் பெறுதலின், வகைபெற வெழுந்தென்றார் என்று நச்சினார்க்கினியர் சிறப்புரை வரைந்திருத்தல் காண்க:
வணங்கு - வாங்கு - வங்கு - அங்கு. ஒ.நோ : வளை - அளை. அங்குதல் = வளைதல், சாய்தல், அங்கு - அங்கணம். ஒ. நோ : சாய்கடை - சாக்கடை.
காற்று வரும்வழி, காலதர், சாளரம், பலகணி என்னும் பெயர்களைப் பெற்றிருந்தது.
காரை வீடுகள் உச்சியில் ஓடு வேய்ந்ததும் மச்சுப் பாவியும் இருவகையா யிருந்தன. ஓடும், இலக்கிய வழக்கில் சுடுமண் எனப்பட்டது.
சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்
முடியர சொடுங்கும் கடிமனை
என்பதற்கு (சிலப். 14 : 146-7), ஓடு வேயாது பொற்றகடு வேய்ந்த மனை என்று அருஞ்சொல்லுரைகாரர் ஓர் உரை வரைந்திருப்பது கவனிக்கத்தக்கது. முடிவேந்தரும் விரும்பும் நாடகக் கணிகையர் மனைகளாதலின், பொற்றகடு வேய்ந்ததாகவும் இருந்திருக்கலாம். காஞ்சி நகரிற் பலர் கூடுதற்குரிய பொது அம்பலமும் பொன்னால் வேயப் பட்டிருந்ததாக மணிமேகலை கூறுதல் காண்க.
சாலையுங் கூடமும் தமனியப் பொதியிலும் (மணி. 28 : 66)
மழைதோயும் உயர்மாடத்து
என்னும் பட்டினப்பாலை (145) யடியும்,
மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர்
கூடம் மரத்திற்குத் துப்பாகும்.
என்னும் பழமொழிச் செய்யுளும் (71) மாடத்தின் பெருமையை உணர்த்தும்.
7. ஊர்தியும் போக்குவரத்தும்
ஊர்தல் ஏறிச் செல்லுதல், ஊர்தி ஏறிச் செல்லுங் கருவி.
நிலவூர்திகள் அணிகம், வண்டி, விலங்கு என மூவகைப்படும்.
அணிகம், சிவிகை, பல்லக்கு, மேனா, சப்பரம் என்பன.
சிவிகை, இருவர் காவிச் செல்லும் கூண்டுப் பல்லக்கு. பல்லக்கு எண்மருக்குக் குறையாது தோளில் தாங்கிச் செல்லும் திறந்த தண்டையப் படைப் பல்லக்கு. சப்பரம் உருளியின்றி ஒற்றைத் தட்டுள்ள சப்பை (மொட்டை)த் தேர்.
சிவிகை என்பது சிபிக்கா என்றும், பல்லக்கு என்பது பர்யங்க என்றும், வடமொழியில் திரியும். சப்பரம் இன்று தெய்வப் படிமையைக் கொண்டு செல்லவே பயன்படுத்தப் பெறும்.
வண்டி : சகடம், கூடாரப்பண்டி, கொல்லாப்பண்டி, வையம், பாண்டில், வங்கம், தேர் என்பன. சகடம் பொதுவகையான மாட்டு வண்டி, கூடாரப் பண்டி கூண்டு வண்டி. கொல்லாப் பண்டி சிறந்த காளைகள் பூட்டப் பெற்றதும் பெருமக்கள் ஏறிச் செல்வதுமான நாகரிகக் கூண்டு வண்டி, வையம் இரு குதிரை பூண்டிழுக்கும் தேர் போன்ற வண்டி. பாண்டில் ஈருருளியுள்ள குதிரை வண்டி. வங்கம் பள்ளியோட வண்டி : அது பள்ளி யோடம் போன்றது. தேர் இக்காலத் தேர் போற் சிறியது.
விலங்கு : காளை, குதிரை, கோவேறு கழுதை, யானை, ஒட்டகம் என்பன.
நீரூர்திகள் : புணை, பரிசல், கட்டுமரம், ஓடம், அம்பி, திமில், பஃறி, தோணி. படகு, நீர்மாடம் (பள்ளியோடம்) நாவாய் (கப்பல்) என்பன. நாவாய், வங்கம், கப்பல் என்பன சிறிது வேறு பட்டவையாயுமிருக்கலாம்.
தமிழ் நாட்டிலும் வட நாடுகளிலுமுள்ள பேரூர்கட்கும் கோ நகர் கட்கும், தடிவழி என்னும் பெருஞ்சாலைகள் சென்றன. இச்சாலைகள் காடுகளிற் கூடும் கவர்த்த இடங்களில், அவ்வந் நாட்டு வேந்தனின் விற்படைகள், வணிகச் சாத்துகட்கு வழிப்பறிக்கும் கள்வராலும் கொள்ளைக்காரராலும் பொருட் சேதமும் ஆட்சேதமும் நேராவாறு இரவும் பகலும் காத்து நின்றன.
உடம்பிடித் தடக்கை யோடா வம்பலர்
…………………………………………………………………………………
அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட் டியவின் (பெரும்பாண். 76-82).
என்று கடியலூர் உருத்திரங் கண்ணனார் தொண்டை நாட்டைப் பற்றிக் கூறுதல் காண்க.
நாடு கைப்பற்றற்கும் வாணிகத்திற்கும் அயல்நாடு பார்த்தற்கும், அரசரும் வணிகரும் பொது மக்களும் செல்லக் கூடிய நாவாய் என்னும் பெருங்கலங்கள், கீழ்கடலிலும் மேல்கடலிலும் அடிக்கடி சென்று கொண்டிருந்தன.
வானியைந்த இருமுந்நீர்ப்
பேஎநிலைஇய இரும் பவ்வத்துக்
கொடும்புணரி விலங்குபோழக்
கடுங்காலொடு கரைசேர
நெடுங்கொடி மிசையிதையெடுத்
தின்னிசைய முரசமுழங்கப்
பொன்மலிந்த விழுப்பண்டம்
நாடார நன்கிழிதரும்
ஆடியற் பெருநாவாய்
மழைமுற்றிய மலைபுரையத்
துறைமுற்றிய துளங்கிருக்கைத்
தெண்கடற் குண்டகழிச்
சீர்சான்ற வுயர்நெல்லின்
ஊர்கொண்ட வுயர்கொற்றவ.
என்று மதுரைக்காஞ்சி (75-88), வடிம்பலம்ப நின்ற பாண்டியன் சாலி (சாவக)த் தீவைக் கைப்பற்றியதை, அவன் வழித் தோன்றலான தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் மீது ஏற்றிக்கூறுதல் காண்க.
கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியாற் கரைசேர்க்குந்து
மலைத்தாரமும் கடற்றாரமும்
தலைப்பெய்து வருநர்க்கீயும்
புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்குகடல் முழவின் முசிறி யன்ன (புறம். 343 : 5-10).
என்பது வணிகம் பற்றியது.
சாதுவன் என்போன் தகவில னாகி
………………………………………………………………………….
வங்கம் போகும் வணிகர் தம்முடன்
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி
என்பது, (மணி. 16 : 4-12) அயல் நாடு காணச் சென்றமை பற்றியது.
8. வாழ்க்கை வகை
உலக வாழ்க்கை, இல்லறம் துறவறம் தனி வாழ்க்கை என மூவகைப்படும்.
ஒரு கற்புடைப் பெண்ணை மணந்து இல்லத்திலிருந்து அறஞ் செய்து வாழும் வாழ்க்கை இல்லறமாகும். உலகப் பற்றை யொழித்து வீடுபேற்று முயற்சியில் ஈடுபடுவது துறவறமாகும். மணஞ் செய்யாது உலகப் பற்றோடு தனியாயிருப்பது தனி வாழ்க்கை (Celibacy) ஆகும். இவற்றுள் இல்லறத்தையே சிறந்ததாகக் கொண்டனர் தமிழர். இறைவன் மக்களை ஆணும் பெண்ணு மாய் படைத்திருப்பதே, அவர் கூடி வாழ்தற் பொருட்டே. இல்லறத்தாலும் ஒருவர் வீடுபேற்றை அடைய முடியும்.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன் (குறள். 46).
அறன்எனப் பட்டதே யில்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. (குறள். 49).
என்றார் தமிழ் அறநூலாசிரியர் திருவள்ளுவர். இவற்றையே,
இல்லற மல்லது நல்லற மன்று
எனச் சுருங்கச் சொன்னார் பிற்காலத்து ஔவையார். ஆடவரும் பெண்டிரும் கூடாது வாழ்வது அரிதாயிருப்பதுடன், துறவறத் திற்கும் இல்லறமே இன்றிய மையாத துணையாகின்றது.
மேற்கூறிய மூவகை வாழ்க்கையுள், ஒவ்வொன்றும் நல்லதும் தீயதும் என இருதிறப்படும். இல்லறத்தில் ஒரே மனைவியுடன் வாழ்வது நல்லது; பல மனைவியருடன் அல்லது பல பெண் டிரைக் காதலித்து வாழ்வது தீயது. துறவறத்தில் உண்மையா யிருப்பது நல்லது; உள்ளொன்றும் புறம் பொன்றுமாயிருப்பது தீயது; அது கூடாவொழுக்கம் எனப்படும். தனி வாழ்க்கையில் ஒரு பெண்ணையும் காதலியா திருப்பது நல்லது; மறைவாய்க் காதலித்தொழுகுவது தீயது. இவற்றுள் நல்ல வற்றையே தமிழ் மேலோர் போற்றினர்.
உலக வாழ்க்கைக்கு இன்றியமையாத் துணையாயிருப்பதால் மனைவிக்கு வாழ்க்கைத் துணைவி என்று பெயர்.
இல்லறம்
மணப் பருவம் வந்த பின்பே, பலவகையிலும் ஒத்த ஓர் இளைஞ னும் இளைஞையும், தாமாகக் கூடியோ தம் பெற்றோராற் கூட்டப்பட்டோ, கணவனும் மனைவியுமாகி வாழ்வது, ஆரிய வருகைக்கு முற்பட்ட பண்டைத் தமிழ மரபு. மணமானமைக்கு அடையாளமாக, மனைவியின் கழுத்தில் தாலி என்னும் மங்கலவணி அணியப் பெறும்.
கணவனும் மனைவியும் எங்ஙனம் கூடியிருப்பினும் காதல் அவர்க்கு இன்றியமையாததாகும் காதல் என்பது இறக்கும் வரையும் ஒருவரை யொருவர் இன்றியமையாமை. கணவன் மனைவியரிடைப் பட்ட காதல், காமம் என்னும் சிறப்புப் பெயர் பெறும். அச்சொல் இன்று பெண்ணாசை என்னும் தீய பொரு ளில் வழங்கி வருகின்றது.
காமத்தை ஒருதலைக் காமம், இருதலைக் காமம், பொருந்தாக் காமம் என மூவகையாய் வகுத்தனர் முன்னோர். ஓர் ஆடவனும் பெண்டுமாகிய இருவருள், ஒருவர் மட்டும் காதலிப்பது ஒரு தலைக் காமம்; யாரேனும் ஒருவர் நெறி தவறிக் காதலிப்பது பொருந்தாக் காமம். இவற்றுள் இருதலைக் காமமே சிறந்ததாகவும் நெறிப்பட்டதாகவும் கொள்ளப்பட்டது. பெற்றோரும் மற்றோருமின்றித் தாமாகக் கூடுவதெல்லாம், பெரும்பாலும் இருதலைக் காமமாகவே யிருக்கும்.
காமத்தை அகப்பொருள் என்றும், ஒருதலைக் காமத்தைக் கைக்கிளை என்றும், இருதலைக் காமத்தை அன்பின் ஐந்திணை என்றும்; பொருந்தாக் காமத்தைப் பெருந்திணை என்றும் இலக்கணம் கூறும். அன்பின் ஐந்திணையே நெறிப்பட்டதாகக் கொள்ளப்பட்டதினால் அதையே அகம் என்று சிறப்பித்தும், ஏனையிரண்டையும் அகப்புறம் என்று இழித்தும், கூறுவர் இலக்கணியர்.
கைக்கிளை, குறிப்பு என்றும் மணம் என்றும் இரு வகையாய்ச் சொல்லப்படும். ஒருவன் காமவுணர்ச்சியில்லாத ஒரு சிறுமியிடம் அல்லது காதலில்லாத ஒரு பெண்ணிடம், சில காதற்குறிப்புச் சொற்களை மட்டும் தானே சொல்லி யின்புறுதல் கைக்கிளைக் குறிப்பாம். பெற்றோராற் கூட்டப் பெற்ற கணவன் மனைவி யருள், யாரேனும் ஒருவர் காதலில்லாமலே இசைந்திருப்பின் அது கைக்கிளை மணமாம். கைக்கிளை ஒருபக்கக் காதல். கை பக்கம். கிளை காதல்.
ஒரு பெண்ணை மணவுறவு முறை தப்பியோ, வலிந்தோ, ஏமாற்றியோ, தூக்க நிலையிலோ, நோய் நிலையிலோ, இறந்த பின்போ பூப்பு நின்ற பின்போ கூடுவதும், தன்பாலொடும் விலங்கொடும் கூடுவதும், பெருந்திணையாம். இது இங்ஙனம் பலவகையாய்ப் பெருகியிருப்பதாற் பெருந்திணை யெனப் பட்டது. தமிழுக்குச் சிறப்பான பொருளிலக்கணம் ஆரிய வருகைக்கு எண்ணாயிரம் ஆண்டுகட்கு முன்பே அமைந்து விட்டதனால், ஆரிய வொழுக்க நூல்களிற் சொல்லப்பட்ட எண்வகை மணத்துள் தான் ஒன்றே நால்வகை பெற்றதினால் பெருந்திணை யெனப் பட்டதென்பது, காலமலைவும் நூன் மலைவுங் கலந்த பெருவழுவாம்.
பெற்றோர் செய்து வைக்கும் மணம், பேச்சு மணமும் அருஞ்செயல் மணமும் என இருதிறப்படும். மணவாளப் பிள்ளை வீட்டார் போய்க் கேட்க, பெண் வீட்டார் இசைந்து பெண் கொடுப்பது. பேச்சு மணம்; பெண்ணின் பெற்றோர் குறித்த ஓர் அறவினையோ மறவினையோ செய்து பெண்ணைக் கொள்வது அருஞ்செயல் மணம். பண்டைத் தமிழகத்தில் கொல்லேறு தழுவி அதற்குரிய பெண்ணை மணப்பது; முல்லை நில வழக்கமாயிருந்தது. மணமான அன்றே மணமக்கள் கூடுவர்.
கொடுப்பாரும் அடுப்பாருமின்றிக் காதலர் தாமாகக் கூடும் கூட்டம், மறைவாகக் தொடங்குவதும் வெளிப்படையாய்த் தொடங்குவதும் என இருவகைப்படும். மறைவான கூட்டம் களவு என்றும், வெளிப்படையான கூட்டம் கற்பு என்றும், சொல்லப்பெறும். களவு பெரும்பாலும் இருமாதத்திற்குட் பட்டேயிருக்கும் அது வெளிப்பட்டபின் கற்பாம். கற்பெல்லாம் கரணம் என்னும் தாலிகட்டுச் சடங்கோடும் பந்தலணி, மணமுழா, வாழ்த்து, வரிசை உற்றாருடன் உண்ணும் உண்டாட்டு முதலியவற்றோடும் கூடிய மணவிழாவொடு தொடங்கும். களவுக் காலத்தில் கூட்டம் தடைப்படினும், பெண்ணின் பெற்றோர் பிறர்க்குப் பெண் கொடுக்க இசையினும், காதலன் காதலியைக் கூட்டிக் கொண்டு வேற்றூர் சென்றுவிடும் உடன் போக்கும் உண்டு. அவர் திரும்பி வந்தபின், காதலன் வீட்டிலேனும் காதலி வீட்டிலேனும் வதுவை என்னும் மணவிழா நிகழும்.
இனி, களவுக்காலத்தில் கூட்டம் தடைப்படுவதால், காதலி தன் காதலனைக் காணப்பெறாமல் மனம் வருந்தி மேனி வேறுபடும்போது, பெற்றோர் வேலன் என்னும் மந்திரக்காரனை வரவழைத்து தம் மகள் நோய்க்குக் கரணியம் (காரணம்) வினவுவதும், அவன் அது முருகனால் நேர்ந்ததென்று கூறி, வெள்ளாட்டுக் கறியும் கள்ளும் விலாப்புடைக்க வுண்டு வெறியாட்டு என்னும் கூத்தை நிகழ்த்தி அந்நோயைப் போக்கு வதாக நடிப்பதும் உண்டு. அன்று காதலி நேராகவோ தன் தோழி வாயிலாகவோ, தன் பெற்றோரிடம் உள்ளதைச் சொல்லி விடுவாள். அது அறத்தொடு நிற்றல் எனப்படும். தன் காதலனன்றி வேறு யார்க்கும் தன்னைப் பேசினும், காதலி அறத்தொடு நிற்பாள்; அதன்பின் காதலனுக்கு மணஞ் செய்துவைக்கப் பெறு வாள். மணமகன் அல்லது அவன் வீட்டார் மணமகளுக்குப் பரிசம் கொடுப்பர். மணமகன் பரிசம் பெறும் அநாகரிக மானங்கெட்ட ஆரிய இழிவழக்கு அக்காலத்தில்லை.
தமிழப் பெண்டிர் கற்பிற் சிறந்தவராதலின், ஒருவரை மணந்தபின் அல்லது காதலித்த பின் வேறொருவரையும் கனவிலும் கருதுவதில்லை; வேறு எவரையேனும் மணக்க நேரின், உடனே உயிரை விட்டு விடுவர்.
காதலர் கூடும் கூட்டம், உடம்பாற் கூடுவதும் உள்ளத்தாற் கூடுவதும் என இருவகை. இவற்றுள் முன்னது மெய்யுறு புணர்ச்சி என்றும், பின்னது உள்ளப்புணர்ச்சி என்றும், சொல்லப்பெறும். கற்புடைப் பெண்டிர்க்கு இரண்டும் ஒன்றே. இதனாலன்றோ, திலகவதியம்மையார் தமக்குப் பேசப் பெற்றிருந்த கலிப்பகையார் போர்க் களத்திற் பட்டபின் இறக்கத் துணிந்ததும், அதன் பின் தம் ஒற்றைக் கொரு தம்பியார் திருநாவுக்கரசரின் பொருட்டு உயிர் தாங்கியதும், இறுதி வரை மணவாதிருந்ததும், என்க.
(ஆரியர் வருமுன்) கரணம் என்னும் தாலி கட்டுச் சடங்கை, ஊர்த் தலைவன், குடி முதியோன், மங்கல முது பெண்டிர், குலப் பூசாரி முதலியோர் நடத்தி வைத்தனர்.
பண்டையரசரும் பெருஞ்செல்வரும் பெரும்பாலும் சிற்றின்ப வுணர்ச்சி சிறந்து, பல தேவியரையும் காமக் கிழத்தி இற்பரத்தை காதற்பரத்தை முதலியோரையும் கொண்டிருந்தமை யால், ஓருயிரும் ஈருடலுமான இருதலைக் காம இன்ப வாழ்க்கை, பூதபாண்டியனும் அவன் தேவியும் போன்ற ஒரு சில அரசக் குடும்பங்களிடையும், உழவரும் இடையரும் போன்ற பொது மக்களிடையும். புல மக்களிடையும்தான் பெரும்பாலும் இருந்து வந்தது.
மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத்
தடங்காத் தானை வேந்தர் உடங்கியைந்
தென்னொடு பொருதும் என்ப அவரை
ஆரமர் அலறத் தாக்கித் தேரொ
டவர்ப்புறங் காணே னாயின் சிறந்த
பேரம ருண்கண் இவளினும் பிரிக
என்று பூதபாண்டியன் தன் பகைவரை நோக்கிக் கூறிய வஞ்சினமும் (புறம். 71), அவன் இறந்தபின் உடன்கட்டையேறிய அவன் தேவி யாடிய,
பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
……………………………………………………………………………………………
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம்
நுமக்கரி தாகுக தில்ல எமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே.
என்னும் பாட்டும் (புறம். 246), அறிஞர் உள்ளத்தை என்றும் உருக்குந் தன்மைய.
ஒருவனுடைய மனைவி உரிமைப் பெண்ணாயினும் பெருமைப் பெண்ணாயினும் உழுவற் பெண்ணாயினும், மூவகையும் ஊழின் பயனே என்று முன்னோர் கருதினர். தாரமும் குருவும் தலைவிதி (ஆசிரியனும் மனைவியும் அமைவது ஊழ்முறை) என்னும் பிற்காலப் பழமொழியும், எங்கே முடிபோட்டு வைத்திருக் கிறதோ அங்கேதான் முடியும் என்று கூறும் வழக்கச் சொல்லும், “Marriage are made in heaven,” “Marriage and hanging go by destiny” என்னும் ஆங்கிலப் பழமொழிகளும் இங்குக் கருதத்தக்கன. வாழ்க்கைத் துணையாகிய மனைவிக்கு ஊழ்த் துணை என்றும் பெயர்.
அம்மான் மகளும் அக்கை மகளும்போல், மணக்கக்கூடிய உறவுமுறைப் பெண் உரிமைப் பெண்; உறவுமுறை யின்றிச் செல்வக் குடும்பத்தினின்று எடுக்கும் பெண் பெருமைப் பெண்; இரண்டுமின்றி ஒருவன் தானே கண்டவுடன் காதலித்து மணக்கும் பெண் உழுவற் பெண் பல பிறப்பாகத் தொடர்ந்து மனைவியாய் வருபவள் உழுவற் பெண். என்பது, பிறவித் தொடர் நம்பிக்கையாளர் கருத்து. உழுவலன்பைப் பயிலியது கெழீஇய நட்பு என்பர் இறையனார் (குறுந். 2). ஊழால் ஏற்பட்ட ஆவலை உழுவல் என்றனர். இதைத் தெய்வப்புணர்ச்சியென்றும், இயற்கைப் புணர்ச்சியென்றும், நூல்கள் கூறும்.
மூவகைப் பெண்களுள்ளும் உழுவற் பெண்ணை மணப்பதே குலமத நிலச்சார்பு கடந்ததாகலின், தெய்வத்தால் நேர்ந்ததாக விதந்து கூறப்பெறும்.
காதலன் களவுக் காலத்தில் தன் காதலியை நோக்கி, உலக முழுவதையும் பெற்றாலும் நான் உன்னைக் கைவிடேன் என்று (குறுந்.300) உறுதி கூறியதற்கு ஏற்ப, கற்புக் காலத்தில், நீ தொட்டது நஞ்சாயிருந்தாலும் எனக்குக் தேவர் அமுதமாகும். (தொல், கற்பியல், 5) என்றும், நீ எனக்கு வேப்பங்காயைத் தந்தாலும் அது தீஞ்சுவைக் கற்கண்டு போல் இனிக்கும் (குறுந்.166) என்றும், உன் கூந்தலைப்போல் நறுமணமுள்ள மலரை நான் உலகில் எங்குங் கண்டதில்லையென்றும், (குறுந்.2) பலபடப் பாராட்டி அவளை மேன்மேலும் ஊக்கி இன்புறுத்து வது வழக்கம்.
காதல் மனைவியும், தன் கணவனைத் தெய்வம் போற் பேணி, அவன் இட்ட சூளை (ஆணையை) நிறைவேற்றாவிடத்து அதனால் அவனுக்குத் தீங்கு நேராதவாறு தெய்வத்தை வேண்டிக் கொள்வதும், அவன் சூள் தப்பவில்லை யென்பதும் (குறுந்.87), தன் தலைவன் குற்றத்தைப் பிறர் எடுத்துரைப்பின் அதை மறுத்து அவனைப் புகழ்வதும், (குறுந். 3), தன் கணவனும் தானும் ஒருங்கே இறக்க வேண்டுமென்று விரும்புவதும் (குறுந். 57), வழக்கம்.
அரசரும் மறவரும் போர் செய்வதற்கும், முனிவரும் புலவரும் தூதுபற்றியும், வணிகர் பொருளீட்டற்கும், வேற்றூரும் வேற்று நாடும் செல்ல நேரின், அவர் திரும்பி வரும்வரை அவர் மனைவியர் ஆற்றியிருப்பதும், சுவரிற் கோடிட்டு நாளெண்ணி வருவதும், அவர் குறித்த காலத்தில் வராவிடின் விரைந்து வருமாறு தெய்வத்தை வேண்டுவதும், இயல்பாம்.
கணவனுக்குக் கற்புடை மனைவியும், பெற்றோருக்கு அறிவுடை மக்களும், சிறந்த பேறாகக் கருதப்பட்டனர்.
என்னொடு பொருதும் என்ப அவரை
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
அவர்ப்புறங் காணே னாயின் சிறந்த
பேரமர் உண்கண் இவளினும் பிரிக.
என்று பூதப்பாண்டியன் வஞ்சினங் கூறுதலும், சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ என்று (பதிற். 88), குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையும், செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ என்று (புறம். 3), பாண்டியன் கருங்கை யொள்வாட் பெரும் பெயர் வழுதியும், பாராட்டப் பெறுதலும் காண்க.
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.
என்றார் திருவள்ளுவர் (குறள். 54).
இனி மக்கட் பேறுபற்றி,
படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லைத்தாம் வாழும் நாளே.
என்று (புறம். 188) பாண்டியன் அறிவுடை நம்பியும்,
பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனும் உடையரோ - இன்னடிசில்
புக்களையும் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய்
மக்களையீங் கில்லா தவர்.
என்று புகழேந்திப் புலவரும் (நளவெண்பா, கலிதொடர். 63).
பெறுமவற்றுள் யாமறிந்த தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.
என்று திருவள்ளுவரும் (குறள். 61), கூறியிருத்தல் காண்க.
கணவன் தவற்றாலோ மனைவியின் பேதைமையாலோ, சில சமையங்களில் அவரிடைப் பிணக்கு நேர்வதுண்டு. அன்று மனைவி ஊடிக் கணவனொடு பேசாதிருப்பாள். ஊடுதல் சடைவு கொள்ளுதல். அது கணவனால் எளிதாய்த் தீர்க்கப்படும். அது சற்றுக் கடுமையானால் புலவி எனப்படும். அது குழந்தையைக் கணவன் எடுத்துக் கொண்டு போய்க் கொடுப்பதனாலும், வீட்டிற்கு விருந்தினர் வந்திருப்பதாலும், உறவினரும் நண்பரும் தலையிடுவதாலும், தீர்க்கப்படும். புலவி முற்றி விட்டால் துனி எனப்படும். அதை ஒருவராலும் தீர்க்க முடியாது. நீண்ட நாட் சென்று அது தானே தணியும். பழகப் பழகப் பாலும் புளிப்பது போல், கணவன் மனைவியரிடைப்பட்ட காமவின்பம் சற்றுச் சுவை குறையும்போது அதை நிறைத்தற்குப் புலவியும் வேண்டு மென்றும், அது உணவிற்கு உப்பிடுவது போன்ற தென்றும், ஊடல் உப்புக் குறைவதும் துனி உப்பு மிகுவதும் போன்றவை யென்றும், உப்பு மிகையாற் சுவை கெடுவதுபோல் துனியால் இன்பங் கெடுமாதலால் அந்நிலையை அடையாதவாறு புலவியைத் தடுத்துவிட வேண்டுமென்றும், திருவள்ளுவர் கூறுவர்.
உப்பமைந் தற்றாற் புலவி அது சிறிது
மிக்கற்றால் நீள விடல். (குறள். 1302).
பெண்டிர் எத்துணைக் கல்வி கற்றவராயிருப்பினும், உழத்தியரும் இடைச்சியரும் மறத்தியரும் குறத்தியரும் பண்டமாற்றுப் பெண்டிரும் கூலியாட்டி யரும் வேலைக்காரியரும் வறியவருமா யிருந்தாலொழிய, மணமானபின், மூப்படையு மட்டும், கணவரோடும் பெற்றோரோடும் அண்ணன் அக்கை மாரோடும் மாமியாரோடும் பாட்டன் பாட்டிமாரோடுமன்றி, வீட்டை விட்டு வெளியே தனியே செல்லப் பெறார்.
கணவனைப் பேணுதலும் சமையல் செய்தலும் பிள்ளை வளர்த்தலும் கணவனில்லாதபோது வீட்டைக் காத்தலுமே, பெண்டிர்க்கு இயற்கையால் அல்லது இறைவனால் வகுக்கப் பட்ட பணியென்பது, பண்டைத் தமிழர் கருத்து. மணமான பெண் வீட்டிலேயேயிருந்து வேலை செய்வ தனாலேயே, அவளுக்கு இல்லாள், இல்லக் கிழத்தி, மனைவி, மனையாள், மனையாட்டி, மனைக்கிழத்தி, வீட்டுக்காரி என்னும் இடம் பற்றிய பெயர்களும், இல், மனை, குடி என்னும் இடவாகு பெயர் களும் ஏற்பட்டன.
வீட்டிற்கு அல்லது இல்லத்திற்கு வேண்டிய பொருள்களை யெல்லாம் கணவனே ஈட்ட வேண்டுமென்பதும், அதனால் மனைவியும் இள மக்களும் இன்பமாய் வாழவேண்டுமென் பதும், பண்டையோர் கருத்து.
வினையே ஆடவர்க் குயிரே வாள்நுதல்
மனையுறை மகளிர்க் காடவர் உயிர்.
என்னும் குறுந்தொகைச் செய்யுளடிகள் (135 : 1-2), இதனைப் புலப்படுத்தும்.
இக்காலத்திற் காலைமுதல் மாலை வரை ஆடவர் கடுமையாய் உழைத்தும், குடும்பத்திற்குப் போதிய அளவு பொருள் தேடவோ உணவுப் பொருள் கொள்ளவோ முடியவில்லை. இதனாலேயே, பெண்டிர் வெளியேறி ஆசிரியப் பணியும் அரசியலலுவற் பணியும் ஆற்ற வேண்டியதாகின்றது. ஆகவே, இன்று அவர் கடமை இரு மடங்காய்ப் பெருகியுள்ளது. இந்நிலைமை மக்கட் பெருக்கையும் உணவுத் தட்டையும் காட்டுமேனும், இதற்கு அடிப்படைக் கரணியம் அரசியல் தவறே.
பெண்டிரைத் தனியே வீட்டைவிட்டு வெளிப் போக்காமைக்கு இன்னொரு கரணியமுண்டு. அவர் பொதுவாக ஆடவரால், சிறப்பாகக் காமுகரால், நுகர்ச்சிப் பொருளாகக் கருதப்படும் நிலைமை இன்னும் மாறவில்லை. ஆடவரை நோக்க, அவர் மென்மையர், வலுவற்றவர். இதனால் அவர்க்கு மெல்லியல், அசையியல், தளரியல் என்னும் பெயர்கள் இலக்கியத்தில் ஏற்பட்டுள்ளன. தீயோரால் அவர்க்கும் அவருறவினர்க்கும் சேதமும் மானக் கேடும் நேராவண்ணமே, அவர் துணையோ டன்றி வெளியே அனுப்பப்படுவதில்லை. ஆடவர் நான்முழ வேட்டியுடுக்கும் போது, பெண்டிர் பதினெண் முழச் சேலை யணிவதும், இக் கரணியம் பற்றியே.
ஆகவே, பெண்டிரை வெளிவிடாதிருப்பது, அவருடைய நலம் பேணலேயன்றி அவரைச் சிறைப்படுத்தலாகாது. கடைகட்கும் கோயிற்கும் திருவிழாவிற்கும் உறவினர் வீட்டு மங்கல அமங்கல நிகழ்ச்சிகட்கும் பிற இடங்கட்கும், துணையொடு போய் வர அவர்க்கு நிரம்ப வாய்ப்புண்டு.
பூப்படைந்த கன்னிப் பெண்களையும் தக்க துணையின்றி வெளியே விடுவ தில்லை.
கணவன், பொருளீட்டல் பற்றியோ தீயொழுக்கம் பற்றியோ பிரிந்திருக் கும்போது, கற்புடை மனைவி தன்னை அணி செய்து கொள்வதில்லை; மங்கலவணி தவிர மற்றவற்றை யெல்லாம் கழற்றி விடுவாள்.
அக்காலத்தில், இல்வாழ்க்கைக்குரிய அறங்களையும் செய்வதில்லை.
அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை.
என்று (சிலப். 16 : 71-73), கண்ணகி மதுரையில் தன் கணவனை நோக்கிக் கூறுதல் காண்க.
மறுமுகம் பாராத கற்பென்பது கணவன் மனைவி யிருவர்க்கும் பொதுவேனும், பூதப்பாண்டியன் போன்ற ஒரு சிலரே அவ்வறத்தைக் கடைப்பிடித்த ஆடவராவர்; பெண்டிரோ பற்பல்லாயிரவர். காதலிலும் ஆடவர் பெண்டிர்க்கு ஈடாகார். உடன்கட்டையேறுதலும் உடனுயிர் விடுதலுமே இதற்குப் போதிய சான்றாகும். மறுமணஞ் செய்யாத கைம்மை நிலையும் பெண்டிர் சிறப்பைக் காட்டும்.
புலவர், அரசர், வணிகர், வெள்ளாளர் ஆகிய வகுப்புக்களைச் சேர்ந்த பெண்டிர், கணவன் இறந்த பின், எட்டாம் நாள் இறுதிச் சடங்கில் மங்கலவணியும் பிறவணிகளும் நீக்கப்பெறுவர். அது தாலியறுப்பு எனப்படும். அதன் பின் வெள்ளாடையணிந்து வேறெவரையும் மணவாமல் தம் எஞ்சிய காலத்தைக் கழிப்பர். அவர் உயர்குடிப் பிறந்தவர் எனப்படுவர்.
வீட்டைவிட்டு வெளியேறி உழவும் கைத்தொழிலும் அங்காடி விற்பனையும் கூலி வேலையும் தெருப்பண்டமாற்றும் செய்யும் பிற வகுப்புப் பெண்டிரெல்லாம், கணவன் இறந்தபின் தாலியறுப்பினும் மறுமணம் செய்து கொள்வர். அது அறுத்துக் கட்டுதல் எனப்படும். இனி, சில வகுப்புப்பெண்டிர், கணவன் உயிரோடிருக்கும் போதே தீர்வை என்னும் கட்டணத்தைக் கொடுத்துத் தீர்த்துவிட்டு வேறொருவனை மணந்து கொள்வதும் உண்டு. அது, தீர்த்துக் கட்டுதல் எனப்படும். அது எத்தனை முறையும் நிகழும்.
அரசர் போர்க்களத்தில் தோற்றுத் தற்கொலை செய்து கொண் டாலும், பகைவராற் கொல்லப்பட்டாலும், அவர் தேவியரும் மகளிரும் பகையரசர்க்கு அடிமையாகாதவாறு தீக்குளித்து இறப்பதுமுண்டு.
கணவன் உயிரோடிருக்கும் வரை அவனுக்கு உண்மையான மனைவியா யிருந்து, அவன் இறந்தபின் வேறொருவனை மணப்பதும், கணவன் இறந்தபின் மறுமணம் செய்யா திருப்பதும், கற்பின் பாற்படுமேனும், அவற்றைத் தமிழகம் கற்பெனக் கொள்ளவில்லை. தமிழகக் கற்பு உலகத்திலேயே தலை சிறந்ததாகும்.
குடும்பத் தலைவன் இறந்தபின், ஈமக் கடனும் இறுதிச் சடங்கும் அவன் புதல்வரால், புதல்வன் இல்லாவிட்டால் அவன் உடமைக்கு உரிமை பூணும் உறவினனால், நடத்தப்பெறும். ஈமம் என்பது சுடலை.
துறவறம்
பட்டினத்துப் பிள்ளையார் போல் உலக வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தோ, தாயுமானவர் போல் குருவினால் அறிவுணர்த்தப் பெற்றோ, சிவப்பிரகாசர் போல் இயல்பாகவே இல்லறத்தில் வெறுப்புக் கொண்டோ, இராமலிங்க அடிகள் போல் இளமையிலேயே கடந்த அறிவடைந்தோ, இளங்கோ வடிகள் போல் உடன் பிறந்தார்க்குக் கேடுவராது தடுத்தற் பொருட்டோ, கோவல கண்ணகியர் தந்தையரும் மாதவி மணி மேகலையரும் போல் கண்ணன்ன உறவினர் நெடும் பிரிவைத் தாங்க முடியாமலோ, துறவு பூணுவது தொன்று தொட்ட வழக்கமாகும்.
குடும்பச் சண்டையாற் சடைவு கொண்டும், குடும்பப் பொறுப்பை நீக்கிக் கொள்ளவும், துறவு பூணுவதுமுண்டு. இவற்றுள் முன்னது சிறப்புடையதன்று; பின்னது பெருங்குற்ற மாகும்.
ஆண்டி, பண்டாரம், அடிகள், முனிவன், சித்தன் எனத் துறவியர் பலவகையர். ஆண்டி இரப்போன்; பண்டாரம் அறிவு நூல்களை நிரம்பக் கற்ற பண்டிதன்; அடிகள் உள்ளத் தூய்மையும் ஆவிக் குரிய (Spiritual) செய்திகளிற் பட்டறிவும் வாய்ந்தவர், பட்டினத் தாரும் தாயுமானவரும் இராமலிங்கரும் போல். இம்மூவரும் நாட்டிலிருப்பவர். முனிவரும் சித்தரும் மலை யிலிருப்பவர்.
முனிவர் அல்லது முனைவர் உலகப்பற்றை முற்றும் வெறுத்தவர். முனிதல், வெறுத்தல். முனைதல், வெறுத்தல்.
இல்லறத்தாருள் ஒருவனுக்கு அரசன், ஆசிரியன், தந்தை, தாய், தமையன் என்று ஐவகைப் பெரியோரிருப்பதால், அவர் ஐங்குரவர் என்றும்; அவருட் சிறந்த பெற்றோரிருவரும் இருமுது குரவர் என்றும்; அழைக்கப்பெறுவர். குரவன் பெரியோன்.
தமிழர் இல்லறத்தில் வெற்றி கண்டது போன்றே துறவறத்திலும், அருளுடைமை, புலான் மறுத்தல், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை, அவாவறுத்தல் என்னும் அறுவகை யறங்களையும்; நோன்பு (தவம்), மெய்யுணர்தல் (ஓகம்) என்னும் இருவகை வழிகளையும், கடைப்பிடித்து வெற்றி கண்டனர்.
தமிழத் துறவியருள் தலைசிறந்தஒவர் சித்தர். அவர் வான்வழி இயங்குதல், கூடுவிட்டுக் கூடு பாய்தல், தோன்றி மறைதல், மண்ணுள் இருத்தல், உண்ணாது வாழ்தல் முதலிய பல ஆற்றல் களை அடைந்தவர். திருமூலர் ஒரு சித்தர். பட்டினத் தாரும் இராமலிங்க அடிகளும், இறுதியில் சித்தநிலை அடைந்ததாக அவர் வரலாறு கூறும்.
நோன்பு (தவம்) என்பது இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் பொதுவாம்.
9. சமயவொழுக்கம்
சமயம் என்பது மதம். அது ஒருவகைச் சமைவைக் குறித்தலால் சமயம் எனப்பட்டது. சமைதல் நுகர்ச்சிக்குப் பதமாதல். அரிசி சோறாகச் சமைவது உண்பதற்குப் பதமாதல். பெண்பிள்ளை மங்கையாகச் சமைவது மண நுகர்ச்சிக்குப் பதமாதல். ஆதன் (ஆன்மா) இறையடிமையாகச் சமைவது, வீடுபேற்றிற்கு அல்லது இறைவன் திருவடிகளை யடைவதற்குப் பதமாதல்.
சமையம் என்பது வேளையைக் குறிக்கும்போதும், ஒரு வினைக்குப் பதமான அல்லது தக்க காலநிலை என்னும் பொருளதே. நல்ல சமையம், தக்க சமையம், ஏற்ற சமையம் என்னும் வழக்குக்களை நோக்குக. பலவகைச் சமைவுகளுள்ளும் ஆதன் இறையடிமை யாகச் சமைவது தலைசிறந்ததாதலால், சமைவு என்னும் வினை, அதனையே சிறப்பாகக் குறிக்கும். ஆயினும், பொருள் மயக்கமில்லாவாறு, சோறு சமைவது சமையல் என்றும், பெண் சமைவது சமைதல் என்றும், நேரம் சமைவது சமையம் என்றும், ஆதன் சமைவது சமயம் என்றும், வேறுபடுத்திச் சொல்லப் பெறும்.
சமையம் என்னும் சொல் அமையம் என்னும் சொல்லின் முதன்மிகை (Prothesis). அமைதல் பொருந்துதல் அல்லது தகுதியாதல். நல்லதொன்று வாய்ப்பின், அமைந்து விட்டது என்பர். அமையும் நேரம் அமையம்.
உயிர் முதற்சொற்கள் சொன்முதல் மெய்களுள் ஒன்றும் பலவும் பெற்றுச் சொற்களைப் பிறப்பித்தல், சொல்லாக்க நெறி முறைமை யாம்.
எ-டு : உருள் - சுருள், ஏண் - சேண்.
அமை என்னும் முதனிலையும் அம் என்னும் வேரினின்று திரிந்ததாகும். இதனால், சமயம் என்னும் சொல் தூய தென் சொல்லாதல் தெளிக. அது வட சொல்லென்று வடமொழிச் சொற் களஞ்சியங்களிலும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியிலும் குறித்திருப்பது கொண்டு மயங்கற்க.
ஆரியர் வருமுன்பே, தமிழர் சமயத் துறையிலும் தலை சிறந்திருந்தனர். ஆயினும், எல்லாரும் அந்நிலையடையவில்லை. எந்த நாகரிக நாட்டிலும், தலையாயார் இடையாயார் கடையாயார் என்னும் முத்திறத்தார் இருக்கவே செய்வர்.
ஆகவே, தமிழர் மதமும், சிறு தெய்வ வணக்கம், பெருந் தெய்வ வழிபாடு, கடவுள் நெறி என முந்நிலைப்பட்டிருந்தது.
சிறு தெய்வங்கள்
(1) தென்புலத்தார் (இறந்த முன்னோர்).
2. நடுகல் தெய்வங்கள்.
3. பேய்கள் (பேய், பூதம், முனி, சடைமுனி, அணங்கு (மோகினி), சூரரமகளிர் முதலியன).
4. தீய வுயிரிகள் (பாம்பு, சுறா, முதலை முதலியன).
5. இடத் தெய்வங்கள் (ஆற்றுத் தெய்வம், மலைத் தெய்வம், காட்டுத் தெய்வம். நகர்த் தெய்வம், நாட்டுத் தெய்வம்).
6. இயற்கைப் பூதங்கள் (காற்றும் தீயும்).
7. வானச் சுடர்கள் (கதிரவனும் திங்களும்).
8. செல்வத் தெய்வம் (திருமகள்).
9. கல்வித் தெய்வம் (நாமகள் அல்லது சொன்மகள்).
10. பால்வரை தெய்வம் (ஊழ் வகுப்பது).
பெருந் தெய்வங்கள்
இவை ஐந்திணைத் தெய்வங்களாகும்.
குறிஞ்சி - சேயோன்
முல்லை - மாயோன்.
பாலை - காளி.
மருதம் - வேந்தன்.
நெய்தல் - வாரணன்.
சேயோன் சிவந்தவன். சேந்தன் என்னும் பெயரும் அப் பொருளதே. முருகன், வேலன், குமரன் என்னும் பெயர்களும் இவனுக் குண்டு. சிவன் என்பது சேயோன் என்பதன் உலக வழக்கு வடிவம். இப்பெயர் வடிவு வேறுபாட்டைக் கொண்டு, பிற் காலத்தில் ஆரியர் ஒரே தெய்வத்தை இரண்டாக்கித் தந்தையும் மகனுமாகக் கூறி விட்டனர். குமரன் என்பதற்கும் சேய் என்னும் குறுக்கத் திற்கும் மகன் என்று தவறாகப் பொருள் கொண்டதே இதற்கு அடிப்படை.
சிவன் என்று ஆரியத் தெய்வம் ஒன்றுமில்லை. சிவ என்னும் சொல், நல்ல அல்லது மங்கல என்னும் பொருளில், உருத் திரனுக்கும் இந்திரனுக்கும் அக்கினிக்கும் பொதுவான அடைமொழியாகவே ஆரிய வேதத்தில் வழங்கிற்று.
புறக்கண் காண முடியாதவற்றையும் நெடுந்தொலைவிலுள்ள வற்றையும் கண்டறியும் ஓர் அறிவுக்கண் போன்ற உறுப்பு, குமரி நாட்டு மக்கள் நெற்றியிலிருந்ததென்றும், அதனாலேயே அவர்தம் இறைவனுக்கும் (சிவனுக்கும்) ஒரு நெற்றிக் கண்ணைப் படைத்துக் கூறினரென்றும், ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். வெள்ளிமலை (கைலை) யிருக்கையும் காளையூர்தியும் சிவனைக் குறிஞ்சி நிலத் தெய்வமாகக் காட்டுவது கவனிக்கத்தக்கது.
வரகுண பாண்டியனின் தலைமையமைச்சரும் பிராமணரும் சிறந்த சிவனடியாரும் வடமொழி தென்மொழி வல்லுநருமாகிய மாணிக்கவாசகர்,
பாண்டி நாடே பழம்பதி யாகவும் திருவாசகம், 2: 118
தென்னா டுடைய சிவனே போற்றி (4:164)
என்று பாண்டி நாட்டையே சிவநெறிப் பிறப்பிடமாகக் குறித்தல் காண்க. இனி, சிவபெருமான் அறுபத்து நான்கு திருவிளையாடல் களையும் மதுரையில் அருளிச் செய்ததையும், முத்தொழில் அல்லது ஐந்தொழில் திருநடத்தைத் தில்லையில் ஆற்றுவதையும், எண்மறச் செயல்கள் செய்த இடங்கள் (அட்டவீரட்டம்) தமிழ் நாட்டிலிருப்பதையும் , ஊன்றி நோக்குக.
மாயோன் கரியவன். மா கருப்பு. மாய கிருஷ்ணன் என்னும் பெயர்க்கும் இதற்கும் யாதொரு தொடர்புமில்லை. கண்ண பிரான் பிறக்குமுன்பே, கிருஷ்ண என்னும் சொல் கருப்பு என்னும் பொருளில் இருக்கு வேதத்தில் வழங்கிற்று. கிருஷ்ண பக்ஷ (கரும்பக்கம்), கிருஷ்ண ஸர்ப்ப (கரும்பாம்பு) என்னும் பெயர்களை நோக்குக. கிருஷ்ண என்னும் சொற்கு வேத மொழியில் வேரில்லை; தமிழிலேயே உள்ளது.
கள்-கரு-கருள்= 1. கருமை கருள் தரு கண்டத்து… கைலையார் (தேவா.337, 4) 2. இருள் (பிங்.) 3. குற்றம். கருள் தீர்வலியால் (சேதுபு. முத்தீர்த். 5).
கருள் = க்ருஷ். ளகர மெய்யீறு வேதமொழியில் ஷகர மெய்யீறாகத் திரியும்.
எ-டு: சுள்-சுஷ் (to dry) உள் - உஷ், (to burn).
மாயோன், மால், விண்டு என்னும் பெயர்கள் ஒரு பொருட் சொற்கள்.
மால் = கருமை, முகில், திருமால்.
விண்டு = முகில், வானம், திருமால்,
விண் = வானம், முகில், மேலுலகம்.
விண் - விண்டு.
ஆரிய வேதத்தில் விஷ்ணு என்னும் பெயர் கதிரவனைக் குறித்தது. காலை எழுச்சியையும் நண்பகற் செலவையும் ஏற்பாட்டு (சாயுங்கால) வீழ்ச்சியையுமே மூவடியால் (மூன்று எட்டால்) உலக முழுவதையும் விஷ்ணு (கதிரவன்) அளப்பதாக முதலிற் கொண்டனர் வேத ஆரியர்.
குறிஞ்சி நிலத்தார் தம் தெய்வத்தை மலையில் தோன்றும் நெருப்பின் கூறாகவும், முல்லை நிலத்தார் தம் தெய்வத்தை வானத்தினின்று பொழியும் முகிலின் கூறாகவும், கொண்டனர். இதனாலேயே, சிவனுக்குத் தீவண்ணன், அந்திவண்ணன், மாணிக்கக் கூத்தன் என்னும் பெயர்களும்; திருமாலுக்குக்
கார்வண்ணன், மணிவண்ணன் என்னும் பெயர்களும்; தோன்றின.
காளி கருப்பி. கள்- கள்வன் = கரியவன். கள்-காள்- காழ் = கருமை. காள்- காளம் = கருமை. காள்- காளி. காளி கூளிகட்குத் தலைவி. கூளி பேய். பேய் கருப்பென்றும் இருள் என்றும் பெயர் பெறும். கருப்பி, கருப்பாய் என்னும் காளியின் பெயர்களை, இன்றும் பெண்டிர்க்கிடுவது பெருவழக்கு. தாய் என்னும் பொருளில் அம்மை (அம்மன்) ஐயை என்றும், இளைஞை என்னும் பொருளில் கன்னி, குமரி என்றும், வெற்றி தருபவள் என்னும் பொருளில் கொற்றவை (கொற்றவ்வை) என்றும், காளிக்குப் பெயர்கள் வழங்கும். அங்காளம்மை என்பது அழகிய காளி யம்மை என்னும் பொருளது.
ஆரியர் வருமுன் வட இந்தியா முழுதும் திரவிடர் பரவியிருந்த தினால், வங்க நாட்டில் காளிக் கோட்டம் ஏற்பட்டது.
வேந்தன் = அரசன். முதற்காலத்தில் அரசனும் தெய்வமாக வணங்கப்பட்டான். அதனால், இறைவன் என்னும் பெயர் அரசனுக்கும் கடவுட்கும், கோயில் என்னும் பெயர் அரண்மனைக்கும் தெய்வக் கோட்டத்திற்கும், பொதுவாயின. வேந்தன் இறந்தபின் வானவர்க்கும் அரசனாகி வானுலகத் தினின்று மழையைப் பொழிவிக்கின்றான் என்று பண்டை மருத நிலமக்கள் கருதியதால், மழைத் தெய்வத்தை வேந்தன் என்னும் பெயரால் வணங்கி வந்தனர்.
ஆரியர் வருமுன்பே, மொழி வேறுபாட்டினால் வேந்தனுக்கு வடநாட்டில் வழங்கி வந்த பெயர் இந்திரன் என்பது. இந்திரன் அரசன். ஆகவே இரண்டும் ஒரு பொருட் சொற்களே. வேத ஆரியர் இந்திர வணக்கத்தை, வடநாட்டுத் திராவிடரைப் பின் பற்றியே மேற்கொண்டிருத்தல் வேண்டும். மேலையாரிய நாடுகளில் இந்திர வணக்கமே யிருந்ததில்லையென்று, மாகசு முல்லர் (Max Muller) கூறியிருப்பது, இங்குக் கவனிக்கத்தக்கது.
கடைக் கழகக் காலம் வரை காவிரிப்பூம்பட்டினத்தில் நடை பெற்று வந்த இந்திர விழாவும், தமிழர்வேந்தன் விழாவே.
வாரணன் = கடல் தெய்வம். வாரணம், கடல். கடலுக்கு ஒரு தெய்வ மிருப்பதாகக் கருதி, அதை நெய்தல் நிலமக்கள் வணங்கி வந்தனர்.
முதற்காலத் திரவிடர் வடமேற்காய்ச் சென்று கிரேக்க நாட்டிற் குடியேறியபின், வாரணம் என்னும் சொல் (Ouranos) எனத் திரிந்தது. அப்பெயர்த் தெய்வம் முதலிற் கிரேக்கர்க்குக் கடல் தெய்வமாகவேயிருந்து, பின்பு, வானத் தெய்வமாயிற்று. கிரேக்கத் திற்கு மிக நெருங்கிய மொழியைப் பேசிவந்த கீழையாரியருள் ஒரு பிரிவாரான வேத ஆரியர், கடலையறியாமல் நெடுகவும் நிலவழியாகவே வந்ததினால், மழைத் தெய்வத்தையே வருணா என அழைத்தனர். அவர் இந்தியாவிற்குட் புகுந்து வடநாட்டுத் திரவிடரோடும் தென்னாட்டுத் தமிழரோடும் தொடர்பு கொண்ட பின்னரே, வருணனைக் கடல் தெய்வமாகக் கருதத் தொடங்கினர். ஆயினும், இன்னும் மழைக்காக வருணனை வேண்டுவதே பிராமணர் வழக்கமாயிருந்து வருகின்றது.
தொல்காப்பியத்தில் வருணன் மேய பெருமணலுலகமும் (அகத். 5) என்று, வாரணன் என்னும் பெயரை வடமொழி வடிவிற் குறித்திருப்பது தவறாகும். அது வாரணன் மேய ஏர்மண லுலகமும் என்றிருந்திருத்தல் வேண்டும்.
ஐந்திணைத் தெய்வ வழிபாடுகளுள், சேயோன் வழிபாடும் மாயோன் வழிபாடும் பிற்காலத்தில் இருபெருஞ் சமயங்களாக வளர்ச்சியடைந்துள்ளன.
கடவுள் நெறி
ஊர்பேர் குணங்குறியற்று, மனமொழி மெய்களைக் கடந்து எங்கும் நிறைந்திருத்தல், எல்லாம் அறிந்திருத்தல், எல்லாம் வல்லதாதல், என்றுமுண்மை, அருள் வடிவுடைமை, இன்ப நிலைநிற்றல், ஒப்புயர்வின்மை, மாசுமறுவின்மை ஆகிய எண் குணங்களையுடையதாய் எல்லாவுலகங்களையும் படைத்துக் காத்தழித்துவரும் ஒரு பரம் பொருளுண்டென்று நம்பி, அதனை வழிபடுவதே கடவுள் நெறியாம். இது சித்தமதம் எனவும் படும்.
எல்லாவற்றையும் கடந்திருப்பதனாலேயே இறைவனுக்குக் கடவுள் எனப் பெயரிட்டனர். ஆரியர் வந்த பின், இச்சொல் முதலிற் பெருந்தெய்வங்கட்கும், பின்பு சிறுதெய்வங்கட்கும், இறுதியில் மக்களான முனிவர்க்கும் வழங்கி இழிவடைந் துள்ளது.
திருவள்ளுவர் தம் நூன்முகத்திற் கூறியிருப்பது உருவமற்ற கடவுள் வழுத்தே. தமிழரின் உருவவணக்க மல்லாக் கடவுள் வழிபாட்டை உளியிட்ட கல்லையும் எட்டுத் திசையும் என்னும் பட்டினத்தடிகள் பாடலையும் அங்கிங்கெனாதபடி. பண்ணேன் உனக்கான பூசை என்னும் தாயுமானவர் பாடலையும் நோக்கியுணர்க.
கடவுளையும் மறுமையையும் நம்பாத ஒரு சிறு கூட்டத்தாரும் அக்காலத் திருந்தனர். ஆயின், அறிஞர் அவரைக் கண்டித்தனர்.
உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும். (குறள். 850)
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை யென்போர்க் கினனா கிலியர் (புறம். 29: 11-12)
மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு செய்ம்மின்என் பாரே- நறுநெய்யுள்
கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர். (பழமொழி, 108).
10. தொழில்கள்
1. உழவு
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே (புறம். 18)
உழுவார் உலகத்திற் காணியஃ தாற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து (குறள். 1032)
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் (சிலப். 10: 151-2)
உழவர். ஆதலால், ஒரு நாட்டு வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படை உழவு என்பதைப் பண்டைத் தமிழ்மக்கள் உணர்ந்திருந்தனர்.
உழவுத் தொழிற்கு இன்றியமையாதவை நிலம், நீர், விதை, எருது என்னும் நான்காம்.
பண்டைத் தமிழர், ஐந்திணைகளுள் மருதத்தையும் நெய்தலை யும் மென்புல மென்றும், குறிஞ்சியையும், முல்லையையும் வன்புல மென்றும், வகுத்திருந்தனர். மருதநிலத்தை நாடு என்றும், மற்ற நிலங்களைக் காடு என்றும் அழைத்தனர். குறிஞ்சி நிலத்தில் உழத்தக்க இடத்தை ஏர்க்காடு என்றும், உழத் தகாததைக் கொத்துக் காடு என்றும் பகுத்தனர். குறிஞ்சியிலும் முல்லையிலு முள்ள விளைநிலங்கள் கொல்லை அல்லது புனம் என்றும், மருதத்திலுள்ள விளைநிலங்கள் செய் என்றும், புதுக் கொல்லை இதை என்றும், பழங் கொல்லை முதை என்றும், சிறிது செய்யப் பெற்ற செய் புன்செய் என்றும், நன்றாய்ச் செய்யப்பெற்ற செய் நன்செய் என்றும் பெயர் பெற்றன.
செய்தல் என்பது திருத்துதல் அல்லது பண்படுத்துதல். புன்மை சிறுமை.
கொல்லை என்பது வானவாரிக் காடென்றும், புன்செய் கிணற்றுப் பாய்ச்ச லென்றும், நன்செய் ஆற்று அல்லது ஏரிப் பாய்ச்சலென்றும், அறிதல் வேண்டும். எள் கொள் முதலியன கொல்லைப் பயிர்; கேழ்வரகு சோளம் முதலியன புன்செய்ப் பயிர்; நெல் கரும்பு முதலியன நன்செய்ப் பயிர்.
நன்செய்களுள், பழமையானது பழனம் என்றும், போரடிக்கும் களமுள்ளது கழனி என்றும் சொல்லப் பெறும். பண்ணை என்பது பண்ணப்பட்டது (பண்படுத்தப்பட்டது) என்னும் பொருளதேனும், வழக்கில் களமர் அல்லது செறுமர் என்னும் பண்ணையாட்கள் குடியிருந்து வேலை செய்யும் பெரிய வயற் பரப்பையே (Farm) குறிக்கும். சேறுள்ளமையால் செறு என்றும், வைப்புப் போன்றமையால் வயல் என்றும், நன்செய்க்குப் பெயர்களுண்டு.
புனமாயினும் புன்செயாயினும், பண்டைத் தமிழர் மேட்டு நிலத்திற் பயிர் செய்ய விரும்பவில்லை. மேடு சுவல் என்றும் பள்ளம் அவல் என்றும் பெயர் பெறும். மேட்டுப் புன்செயை உழுதவனும் கெட்டான், மேனி மினுக்கியை மணந்தவனும் கெட்டான் என்பது பழமொழி.
நன்செய்ப் பாசனத்திற்கு, ஆற்றுநீர் இல்லாவிடங்கட்குக் கண்ணாறுகளும் கால்வாய்களும் வெட்டிப் பாய்ச்சினர். அது இயலாவிடத்து ஏரிகளை வெட்டினர். ஏர்த் தொழிற்கு உதவுவது ஏரி. குளிப்பது குளம். இன்று ஏரியைத் தவறாகக் குளமென்பர் ஒரு சாரார். இயற்கையாக உண்டான ஏரி அல்லது குளம் பொய்கை எனப்படும். முல்லை நிலத்திற் புன்செய்ப் பாசனத்திற்குக் கிணறுகளை வெட்டினர்.
எருதுகளைக் கொண்டு கிணற்று நீரை இறைக்கும் ஏற்றம் கம்மாலை எனப்பட்டது. அம், நீர். அம் - கம் = நீர். கம் + ஆலை = கம்மாலை. ஆலை சுற்றி வருவது. கரும்பாலை என்பதை நோக்குக. ஆலுதல் ஆடுதல். முதற் காலத்தில் எருதுகள் ஒரு மரத் தூணைச் சுற்றி வந்தன. கம்மாலை என்பது இன்று கமலை என்றும் கவலை என்றும் திரிந்து வழங்குகின்றது. இன்றும் கமலையாடுதல் என்னும் வழக்கை நோக்குக. இன்று எருதுகள் நேராகச் செல்வதால் கவலை யோட்டுதல் என்றும் கூறுவர். கமலை யேற்றத்தைக் கபிலை யேற்றம் என்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி குறித்திருப்பது தவறாகும், கபிலை (வ) யென்பது குரால் என்னும் ஆவகை. ஆவைக் கட்டி நீரிறைப்பது வழக்கத்திற்கு மாறாகும்.
விதைக்கென்று முதற் காய்ப்பையும் சிறந்த மணிகளையும் ஒதுக்கி வைத்தனர். அக்காலத்து உழவர் பொருளீட்டலைக் குறிக் கொள்ளாது, உணவு விளைத்தலையே குறிக்கொண்டு பதினெண் கூலங்களையும் அவற்றின் வகைகளையும், ஆண்டு தோறும் விளைத்து வந்தனர். நூற்றுக்கணக்கான நெல்வகைகள் விளைக்கப் பெற்றன. அவற்றுட் பெரும்பாலனவற்றை இன்று கண்ணாலும் காண முடியவில்லை; காதாலும் கேட்க முடியவில்லை. பொன் தினை, செந்தினை, கருந்தினை என்னும் மூவகையுள், இன்று பொன்றினையே காண முடிகின்றது. அவரை வகைகளுட் பல ஆண்டுதோறும் ஒவ்வொன்றாய் மறைந்து வருகின்றன. இன்று ஆட்சியை நடத்துபவருக்குப் பதவியைக் காக்கவேண்டு மென் பதேயன்றி, விதை வகைகளைப் பேண வேண்டுமென்னும் கலை நோக்கில்லை.
தமிழகத்தில் உழவுத் தொழிற்கு இன்றியமையாத் துணையாக, தொன்று தொட்டுப் பயன்பட்டுவரும் விலங்கு எருதாகும். ஏர்த் தொழிற்கு உதவுவதனால் காளை எருதெனப் பட்டது. ஏர்-ஏர்து- எருது. காட்டு மாட்டைப் பிடித்துப் பழக்கி வீட்டு விலங்காக்கி ஏர்த் தொழிற்குப் பயன்படுத்தினர்.
எருதின் இன்றியமையாமை நோக்கியே ஏர்த் தொழிலைப் பகடு என்றனர்.
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பி (புறம் 35)
பகடு நடந்த கூழ் (நாலடி. 4)
உழவுத் தொழிலும் பாண்டியம் எனப்பட்டது.
பாண்டியஞ் செய்வான் பொருளினும் (கலித். 136).
பாண்டி எருது.
எருதுகளை நிறம் பற்றியும் திறம் பற்றியும் பல வகையாக வகுத்து, அவற்றுள் நால்வகையைச் சிறப்பாக இறக்க வரிசையில் எடுத்துக் கூறினர். அது முழுப்புல்லை, முக்கால் மயிலை, அரைச் சிவப்பு, கால் கருப்பு; எனப் பழமொழியாய் வழங்கி வருகின்றது.
பண்டையுழவர் எல்லாப் பயிர் பச்சைகளையும் பருவமறிந்தே விளைத்து வந்தனர். (சித்திரைமாத வுழவு பத்தரை மாற்றுத் தங்கம். பட்டந் தப்பினால் நட்டம் ஆடிப் பட்டம் தேடி விதை, என்பன பிற்காலத்துப் பழமொழிகளாகும்.) மாரிக்கால வேளாண்மையைக் காலம் என்றும், வேனிற்கால வேளாண்மை யைக் கோடை என்றும் கூறினர்.
இன்று நடைபெற்றுவரும் வேளாண்மை வினைகள் பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்பு தொட்டே பண்டாடு பழநடையாய் வருவன வாகும்.
காடு வெட்டிக் களப்புதல், கல் பொறுக்குதல், எருவிடுதல், ஆழ வுழுதல், கட்டியடித்தல், பரம்படித்தல் (தாளியடித்தல், பல்லியாடு தல், ஊட்டித்தல், படலிழுத்தல்). புழுதியுணக்கல், விதைத்தல், களையெடுத்தல், காவல் காத்தல், அறுவடை செய்தல், களஞ் சேர்த்தல், சாணையடைதல் (சூடுபோடுதல் போரமைத்தல்), சாணை பிரித்தல், காயப் போடுதல், பிணையலடித்தல் (கடா விடுதல், அதரிதிரித்தல்), வைக்கோல் அல்லது சக்கை அல்லது கப்பி நீக்கல், பொலி தூற்றல், பொலியளத்தல், விதைக்கெடுத்தல், களஞ்சியஞ் சேர்த்தல் என்பன வானவாரிப் புதுக் கொல்லை வேளாண்மை வினைகளாம், காடு வெட்டிக் களப்புதல் புதுக் கொல்லைக்கே நிகழும்.
பழங்கொல்லையாயின், உரம்போடுதற்கு எருவிடுதலோடு கிடையமர்த்தலும் குப்பையடித்தலும் நிகழும்.
புன்செய் வேளாண்மையாயின், புழுதியுணக்கற்குப் பின்னும் களையெடுத்தற்கு முன்னும், நாற்றுப் பாவல், பாத்தி பிடித்தல், நீர் பாய்ச்சி நடுதல் ஒன்றரைவாடம் நீர் பாய்ச்சல் ஆகிய வினைகள் நிகழும்.
நன்செய் வேளாண்மையாயின், நாற்றுப் பாவல், நீர் பாய்ச்சல், தொளி(சேறு)க் கலக்கல், குழை மிதித்தல், நடுதல் என்னும் வினைகளும், அவற்றிற்குப்பின் களையெடுத்தல் முதலிய வானவாரி வேளாண்மை வினைகளும், நிகழும்,
அகம் - அகரம் = மருதநிலத்தார். ஒ.நோ: L.agros, field E.acre.
ஏர் - E. ear, to plough ME. eren, AS. erian, Ice. erja, Goth, arjan, L,arare, Gk. arow, I plough, Ir. araim. I plough. E. arable = ploughable; earth = that which is ploughed. Root - ar
ஏர் என்னும் சொல் வடமொழியிலின்மை கவனிக்கத்தக்கது.
காறு (கொழு)- AS. scear, ME. schar, Ger. schar, schaar, E. share.
தொள் (தோண்டு) - E. till. A.S. tilian, ME. tilien, Du. telen,
தொள் - தொய். தொய்யாவுலகம் = தொழில் அல்லது வினை செய்யா விண்ணுலகம்.
தொள்- தொழு- தொழில். உலக முதல் தொழில் உழவே.
கல் (தோண்டு)- L. colere, to till. கல் என்னும் வினையினின்று கல்வி என்னும் சொல் தோன்றியது போன்றே, colo என்னும் வினையி னின்று cultivation, culture என்னும் சொற்களும், ar (உழு) என்னும் வினையினின்று ars, artis (art) என்னும் சொற்களும், தோன்றி யுள்ளன. உலக முதற் கல்வியும் உழவே.
புல்லம் (எருது) ME. bole, ON. boli MLG., MDu. bulle. E. bull.
புல்லமேறி தன்பூம்புகலியை (தேவா. 76,11)
2. நெசவு
நெய் - நெயவு - நெசவு.
மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப்
படா அம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக.
என்று பரணர் பாடியிருப்பதாலும் (புறம். 145).
புதையிருட் படாஅம் போக நீக்கி
என்னும் சிலப்பதிகார அடிக்கு (5:4), அல்லற்காலைப் பசந்து வாரப் பனித்துப் போர்த்த இருளாகிய படாத்தை என்று அடியார்க்கு நல்லார் உரைவரைந் திருப்பதனாலும்,
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும் நுண்வினைக் காருக ரிருக்கையும்
என்பதால் (சிலப். 5:16-17), மயிர்நெசவும் கடைக்கழகக் காலத்திருந்தமை அறியப்படுவதாலும், படாம் என்பது சால்வை (shawl) என்னும் பாரசீகச் சொல்லாற் குறிக்கப் பெறும் மென் மயிர்ப் போர்வையாயிருக்கலாம்.
கண்டங் குத்திய மண்டப எழினியும் (உஞ்சைக். 37 : 103)
கழிப்பட மாடம் காலொடு துளங்க (உஞ்சைக். 44:42)
என்னும் பெருங்கதையடிகளும் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியென்னும் பெயரும் கொண்டு, கூடாரம் அமைத்தற்குரிய முரட்டுத் துணியும் நெய்யப்பட்டமையை உய்த்துணரலாம்.
திரையால் அமைக்கப்பட்ட மண்டபம் மண்டப எழினி.
படம்-துணி, மாடம-மாடம் போல் உயர்ந்த கூடம். படமாடத்தைப் படமாளிகை, படமண்டபம் என்பதுமுண்டு. கூடாரம், கூடம் போல் உள்ள படமாடம். கூட ஆரம்- கூடவாரம்- கூடகாரம்- கூடாரம். ஆரம் ஓர் ஈறு.
எ-டு: கொட்டாரம், வட்டாரம், கடிகையாரம் - கடிகாரம்.
3. கம்மியம்
கருத்தல் செய்தல். இது வழக்கற்றுப் போன ஒரு தமிழ் வினைச்சொல்.
தமிழ் நாட்டிற் கருநிறமும் புகர் (brown) நிறமும் பொன்னிறமும் உள்ளவர் தொன்றுதொட்டு இருந்து வருகின்றனர். பொன் னிறத்தைச் சிவப்பென்றும் வெள்ளையென்றும் சொல்வது வழக்கம். பொன்மை கருமை ஆகிய இருநிறம் பற்றியே, வெண்களமர் கருங்களமர், வெள்ளாளர், காராளர், வெள் ளொக்கலர் காரொக்கலர் என்னும் சொல்லிணைகள் எழுந்தன. காய்ப் பேறுமாறு வினை செய்யின் கருப்பர் அகங்கை கருப்பதும் சிவப்பர் அகங்கை சிவப்பதும் இயல்பு. இதுபற்றி வினை செய்தலைக் குறிக்க, கருத்தல் செய்தல் என்னும் இரு சொற்கள் தோன்றின. கைகருக்குமாறு செய்வது கருத்தல்; சிவக்குமாறு செய்வது செய்தல்.
கரு-கருமம்-செய்கை. கரு-கருவி= செய்கைக்கு வேண்டும் துணைப் பொருள். கரு-கரணம்= செய்கை, கருவி. அணம் ஒர் ஈறு.
இனி, கருமைச் சொற்குப் பெருமைப் பொருளுமிருத்தலால், கருத்தல் = மிகுத்தல் என்றுமாம். புதிதாய்ச் செய்யப் பெறும் ஒரு பொருள் ஏற்கெனவேயுள்ள அதன் வகையை மிகுத்தல் காண்க. make என்னும் ஆங்கிலச் சொல்லையும் magnus (great) என்னும் இலத்தீன் சொல்லினின்று திரிப்பர் ஆங்கிலச் சொல்லாராய்ச் சியாளர். தன்வினையும் பிறவினைப் பொருள் பயப்பது சொல்லாக்க மரபிற் கொத்ததே.
ஒ.நோ : வெளுத்தல் = வெள்ளையாதல் (தன்வினை), வெள்ளையாக்குதல் (பிறவினை). வண்ணான் துணிகளை வெளுக்கிறான் என்பதில், வெளுத்தல் வினை பிறவினையா யிருத்தல் காண்க.
கருமம்-கம்மம்= செய்கை. தொழில், கைத் தொழில், கொல் தொழில், கம்மியத் தொழில்.
கம்மம் = கம்மியத் தொழில்.
கம்மம் = கம்மியத் தொழில்.
கம்மஞ்செய் மாக்கள் (நாலடி.393)
கம்மம்- கமம்.
இவ்விரு வடிவும் முதலில் தொழில் என்றே பொருள்பட்டன. உலகில் முதலில் தோன்றிய தொழில் உழவே. தொழில், கை என்னும் தொழிற்பெயரும், செய், பண்ணை என்னும் நிலப் பெயரும் இதனை வலியுறுத்தும்.
தொள்- (தொளில்) - தொழில். தொள்ளுதல் தோண்டுதல்.
கை= கையாற் செய்யும் செய்கை அல்லது தொழில், முதல் தொழிலான உழவு.
இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
என்னும் திருக்குறளை (1035) நோக்குக.
கை என்பது செய்கையைக் குறித்தலாலேயே ஒரு தொழிற் பெயரீறாயிற்று. எ-டு: செய்கை, வருகை.
உழவு முதல் தொழிலானதினால், கம்மம் கமம் என்னும் இருவடிவும் முதலில் உழவைக் குறித்தன.
கம்மவாரு (தெ.) - கம்மவார்= தெலுங்க வுழவர்.
f«k¤j« - f«k¤jK(bj.)= பண்ணைப் பயிர்த் தொழில்.
கமம் = பயிர்த் தொழில். கமக்காரன் = உழவன்.
கமம் - கம் = 1. தொழில் ஈமும் கம்மும் உருமென் கிளவியும் (தொல், எழுத். 328) 2. கம்மியத் தொழில், (நன், 223, விருத்தி.)
கம்+ஆளன் கம்மாளன். கம்மாளர் என்பார் கொல்லன், தச்சன், கம்மியன் (சிற்பி), தட்டான், கன்னான் என்னும் ஐங்கொல்லர். கம்மியனைக் கல்தச்சன் என்று கூறுவது வழக்கம்.
கம்-கம்மியம் = 1. கைத்தொழில். 2. கம்மாளத் தொழில்.
கம்மாளன் என்னும் சொற் போன்றே, கம்மியன் என்னும் சொல்லும் பிற கொல்லரையும் குறிக்கும்.
கம்மியன் = 1. தொழிலாளி. கம்மியரும் ஊர்வர் களிறு (சீவக. 495) 2. கம்மாளன் (தி.வா.). 3. பொற்கொல்லன். ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த (புறம். 353)
கம்மியநூல் = கட்டடநூல் (சிற்ப சாத்திரம்) கம்மியநூல் தொல்வரம் பெல்லை கண்டு (திருவிளை. திருநகரங். 38)
கருமகன் என்பது, கருங்கைக் கொல்லர் (சிலப். 5: 29) என்பது போல் இருப்புக் கொல்லனை மட்டும் குறிக்கும். கருமகன் - கருமான்.
ஒ.நோ: பெருமகன் - பெருமான், மருமகன் - மருமான்.
கரு என்னும் வினைமுதனிலை வடமொழியில் க்ரு எனத் திரியும். கரணம் என்பதைக் காரண என நீட்டியும், க்ரு என்னும் முதனிலையினின்று கார்ய என்னும் சொல்லை ஆக்கியும், கருமம் என்பதைக் கர்மன் எனத் திரித்தும், உள்ளனர் வடமொழியாளர்.
மின்னும் பின்னும் பன்னும் கன்னும்
அந்நாற் சொல்லும் தொழிற்பெய ரியல.
என்னும் தொல்காப்பிய நூற்பாவில் (எழுத். 345) கன்னாரத் தொழில் குறிக்கப் பட்டுள்ளது. தொல்காப்பியர் பாரதக் காலத்திற்கும் கடைக்கழகக் காலத்திற்கும் இடைப்பட்டவர்; பாணினிக்கு முந்தியவர்.
நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்
அல்லது கிளப்பினும் வேற்றுமை யியல.
என்பதில் (தொல். எழுத். 371) கொல்லத் தொழில் குறிக்கப் பட்டுளது.
நடைநவில் புரவியும் களிறும் தேரும்
…………………………………………………………………………………………………..
தெரிவுகொள் செங்கோல் அரசாக் குரிய.
என்பது (தொல், மரபியல், 72), அரசன் ஏறிச்செல்லும் தேரையும்,
தேரோர் தோற்றிய வென்றியும்
என்பது (தொல். புறத். 21), தேர்ப் படையையும் குறித்தன.
உலைக்கல் லன்ன பாறை யேறி (குறுந். 12: 1),
பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்கும்
கருங்கைக் கொல்லன் இரும்புவிசைத் தெறிந்த
கூடத் திண்ணிசை வெரீஇ (பெரும்பாண். 436-438),
நல்ல பெருந்தோ ளோயே கொல்லன்
எறிபொற் பிதிரின் சிறுபல் காய
வேங்கை வீயுகும் (நற். 13 : 5-7),
வன்புல மிறந்த பின்றை மென்றோல்
மிதியுலைக் கொல்லன் முறிகொடிற் றன்ன
கவைத்தான் அலவன் (பெரும்பாண். 206 - 208),
இரைதேர் எண்கின் பகுவாய் ஏற்றை
…………………………………………………………………………………………………..
நல்லரா நடுங்க உரறிக் கொல்லன்
ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த் தகழும் (நற். 125 : 1-4),
கருங்கைக் கொல்லனை யிரக்கும்
திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே. (புறம். 180: 12-13),
என்னும் பகுதிகள், இற்றைக் கொல்லத் தொழில் நிலையே அன்று மிகுந்தமையைக் காட்டும்.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். (குறள். 505),
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு (குறள். 267),
பொன்காண் கட்டளை கடுப்பக் கண்பின்
புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின் (பெரும்பாண். 220-21),
சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும்
பொன்னுரை காண்மரும் (மதுரை. 512-13).
ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
பொலஞ்செய் பல்கா சணிந்த அல்குல்
ஈகைக் கண்ணி இலங்கத் தைஇ (புறம். 353).
உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்
பொலங்கல ஒருகா சேய்க்கும்
நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே. (குறுந். 67).
என்பவை பொற்கொல்லரின் பணியைக் குறிப்பன. குறுந் தொகைச் செய்யுளில், பொற்கொல்லன் புதுக்கம்பியிற் கோக்கு மாறு தன் உகிரால் (நகத்தால்) பற்றியிருக்கும் உருண்டையான பொற்காசிற்கு, வேப்பம் பழத்தை கவ்விக் கொண்டிருக்கும் கிளிமூக்கை உவமங் கூறியிருப்பது, பாராட்டத்தக்கது.
தச்சு வேலையிற் சிறந்த வேலைப்பாடுள்ள செய்பொருள் தேராகும்.
எம்முளும் உளனொரு பொருநன் வைகல்
எண்டேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே. (புறம்).
என்பது தேர்த்தச்சனைக் குறித்தது.
தச்சனை மரங்கொல் தச்சன் என்பது இலக்கிய வழக்கு. கொல்லுதல் வெட்டுதல்.
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே (புறம். 206 : 11-12)
தச்சுவேலை பெரும்பாலும் பல பலகைகளையும் கால்களையும் ஒன்றாகத் தைத்தலாதலால், அப்பெயர் பெற்றது. தைச்சு-தச்சு. தைத்தல் இணைத்தல் அல்லது பொருத்துதல்.
பலகை தைத்து (பாரத. கிருட்டிண. 102). ஐகார முதற்சொல் அகர முதற் சொல்லாகத் திரிவது இயல்பே.
ஒ. நோ : ஐ - ஐந்து - அஞ்சு
மை - மைஞ்சு - மஞ்சு = முகில்.
பை - பைஞ்சு - பஞ்சு - பஞ்சி.
கைச்சாத்து - கச்சாத்து
ஆங்கிலத்திலும், தட்டுமுட்டுக்கள் செய்யும் தச்சனை joiner என்று கூறுதல் காண்க.
தச்சன் என்பது, வடமொழியில் தக்ஷ என்றும், கிரேக்கத்தில் tekton என்றும் திரியும். உண்மை இங்ஙனமிருப்பவும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியைத் தொகுத்த பிராமணத் தமிழ்ப் புலவர் தக்ஷ என்னும் சொல்லினின்று தச்சன் என்பது வந்ததாகக் குறித்திருக்கின்றனர்.
பாண்டியன் தேவியின் வட்டக்கச்சைக் கட்டில், பின்வருமாறு யானை மருப்பினால் (தந்தத்தினால்) சிறந்த வேலைப்பாட்டுடன் செய்யப் பெற்றதாக, நெடுநல்வாடை கூறுகின்றது.
நாற்பதாண்டு அகவையுள்ளதும், முரசுபோன்ற பெரிய கால்களையும் அழகிய புகர் நிறைந்த மத்தகத்தையும் உடையதும், போருக்குச் சிறந்ததென்று பெயர் பெற்றதும், போர் செய்து இறந்ததுமான, யானையின் தானே வீழ்ந்த கொம்பை இருபுறமும் கனமும் செம்மையும் ஒப்பச் செதுக்கி, கூரிய சிற்றுளியாலே பெரிய இலைத் தொழிலை இடையிலே அமைத்து; நிறைசூலி யின் பால்கட்டிய மார்பு போலத் திரண்ட குடத்தையும், உள்ளிப் பூடு போன்ற கடைச்சலையும், கொண்ட கால்களைப் பொருத்தி; மூட்டுவாய் மாட்சிமைப்படத் தகடுகளை ஆணிகளால் தைத்து, அழகாகத் தொடுத்த முத்துக் குஞ்சங்களைச் சுற்றிவரத் தொங்க விட்டு; புலியின் வரியைக் கொண்ட பொலிவு பெற்ற கச்சாலே தகடுமறைய நடுவிடம் முழுதும் பின்னி; குற்றமற்றுப் பேரளவு கொண்டு பெரும் பெயர்பெற்ற வட்டக்கச்சைக் கட்டில்
தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள்
இகல்மீக் கூறும் ஏந்தெழில் வரிநுதல்
பொருதொழி நாகம் ஒழியெயி றருகெறிந்து
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூருளிக் குயின்ற ஈரிலை இடையிடுபு
தூங்கியல் மகளிர் வீங்குமுலை கடுப்பப்
புடைதிரண் டிருந்த குடத்த இடைதிரண்டு
உள்ளி நோன்முதல் பொருத்தி யடியமைத்துப்
பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில்
மடைமாண் நுண்ணிழை பொலியத் தொடைமாண்டு
முத்துடைச் சாலேகம் நாற்றிக் குத்துறுத்துப்
புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடுகண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்து (நெடுநல். 115-128).
நிலத்தின் மேலோடும் வண்டியும் தேரும் போன்றே நீர்மேலோடும் மரக்கலங்களும், முதன் முதல் தமிழ்நாட்டில்தான் செய்யப் பெற்றன. ஓடம் செய்பவனுக்கு ஓடாவி (ஓடாள்வி) என்றும், நாவாய் போன்ற பெருங்கலம் செய்பவருக்குக் கலஞ்செய் கம்மியர் (மணி. 25 - 124); கலம்புணர் கம்மியர் (மணி. 7:70) என்றும், பெயர். இவர் கப்பல் தச்சர்.
கலத்தையுடைய நெய்தல் நில மக்கள் கலவர், கலத்தை ஓட்டும் தலைவன் நீகான் (நீகாமன், மீகாமன் மீகான் (Captain)). கலத்தில் வினை செய்பவர் ஓசுநர் (Sailors). கலத்திற் சென்று வாணிகம் செய்பவன் கடலோடி.
திரைகட லோடியும் திரவியம் தேடு.
என்று ஔவையார் கூறியது காண்க.
கொடித்தேர் வீதியும் தேவர் கோட்டமும்
என்று மணிமேகலை (21:120) கூறுவதால், தெய்வ உருவத்தை வைத்திருக்கும் பெருந் தேரும் அக்காலத் திருந்திருக்கலாம்.
இக்காலத்துள்ள தேர்களுள் திருவாரூர்த் தேர் மிகப் பெரிது. அதுவும் அரையே யரைக்கால் தேரேன்றும், முன்பு எரிந்து போனது முக்கால் தேரென்றும், கூறுவர். அங்ஙனமாயின், அதற்கும் முன்பே முழுத்தேர் இருந்திருத்தல் வேண்டும். முழுத் தேர் ஏழு தட்டும் முக்கால்தேர் ஐந்து தட்டும் அரைத்தேர் மூன்றுதட்டும் உள்ளனவாகச் சொல்லப்படும். இவை முறையே நூறடியும், எழுபத்தைந்தடியும் அறுபதடியும் உயரமுள்ளன என்பர்.
மன்னார்குடி மதிலழகு… மனையழகு, திருவாரூர்த் தேரழகு, திருவிடைமருதூர்த் தெருவழகு என்றொரு பழமொழி வழங்குகின்றது.
வானளாவும் கோபுரங்கள் கட்டப்பட்டிருந்த பண்டைக் காலத் தில், மாபெருந் தேர்கள் செய்யப்பட்டிருந்ததில் வியப்பில்லை.
தெய்வத் தேரிற் பல அணியுறுப்புக்களும் தேவர் முனிவர் படிமைகளும் யாளி குதிரை யுருவங்களும் செய்து வைக்கப் பெறுதலால், தேர்த்தச்சர் தச்சுக் கலையில் தலைசிறந்தவராவர்.
கட்டுமரம் முதல் கப்பல்வரை பல்வகைக் கலங்களையும் செய்யும் தச்சர் கலம்புணர் கம்மியர் (கப்பல் தச்சர்) எனப்பட்டார்.
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
என்னும் வெட்சித்திணைத் துறைகளும் (தொல். புறத். 5). செங்குட்டுவன் பனிமலையிற் கல்லெடுத்துக் கண்ணகிக்குப் படிமஞ் சமைப்பித்ததும், கல்தச்சு வினைக்குச் சான்றுகளாம்.
மண்டபங்களை யெல்லாம் கல்லாற் கட்டுவதே தொன்று தொட்ட வழக்கம். நூற்றுக்கால் மண்டபங்களும் ஆயிரக்கால் மண்டபங்களும் விழாப்படி மண்டபங்களும் அத்தகைய. கற் கோயில் கற்றளியெனப்பட்டது. தளிகோயில், தெய்வப்படிமைகள் (சிலைகள்) ஐவகைக் கொல்லராலும் செய்யப் பட்டன.
4. கொத்தம்
கொத்தம் என்பது கொத்தன் வேலை அல்லது கட்டடத் தொழில்.
5. கல வினை
கல வினை என்றது குயவன் செய்யும் கலத்தொழில்.
கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
இருள்திணிந் தன்ன குரூஉத்திரள் பரூஉப்புகை
…………………………………………………………………………..
அகலிரு விசும்பின் ஊன்றும் சூளை
…………………………………………………………………………..
அன்னோற் கவிக்கும் கண்ணகன் தாழி
…………………………………………………………………………..
இருநிலம் திகிரியாப் பெருமலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே.
என்னும் புறப்பாட்டில் (228) சுள்ளை, திகிரி (சக்கரம்) மண் என்பவையும்,
உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
என்னும் குறளில் (883), மட்பகை யென்னும் வனைகலம் அறுக்குங் கருவியும், சொல்லப்பட்டன.
கழிபெரு மூப்பினால் உடல் வற்றிக் கூன் விழுந்து படுகிடையிற் புரளவும் இயலாத மக்களை வைத்துப் பாதுகாப்பதும், உயிர் நீங்கியபின் அப்படியே கொண்டுபோய் இடுகாட்டில் கவிழ்த்து வைப்பதும், இறந்த போர் மறவர் உடல்களை இட்டு வைப்பது மான முதுமக்கள் தாழி என்னும் மாபெரு மிடா அக்காலத்தில் வனையப்பட்டது.
கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
…………………………………………………………………………
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலி தாக வனைமோ…..
என்னும் முதுபாலைச் செய்யுள் (புறம். 256), இருவருடலைக் கொள்ளத்தக்க முதுமக்கள் தாழியும் அக்காலத்திற் செய்யப் பட்டமையை உணர்த்தும்.
6. பிற தொழில்கள்
பாய் நெசவும் முடைவும், தையல், தோல் பதனிடல், செருப்புத் தைத்தல், தோலுறை செய்தல், பெட்டி சுளகு (கூடை முறம்) முடைதலும் பின்னுதலும், கட்டிற் பின்னுதல், துணியாலும் நெட்டியாலும் பல்வேறு கவர்ச்சிப் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளும் அணிகளும் செய்தல், வண்ணம் பூசுதல், வண்ண ஓவியம் வரைதல், மண்பாவை செய்தல், நறு மணப் பொருள் கூட்டுதல், சுண்ண மிடித்தல், செக்காட்டுதல், ஆடைவெளுத்தல், மாலை கட்டுதல், சங்கறுத்தல், பவழ மறுத்தல், மணி கோத்தல், மீன் பிடித்தல், முத்துக் குளித்தல், உப்பு விளைத்தல், கள்ளிறக்குதல், கள் சமைத்தல், ஆடு மேய்த்தல், மாடு மேய்த்தல், தயிர் கடைதல், வேட்டையாடுதல், கொடிக்கால் வைத்தல். சாணைக்கல் செய்தல், பல்வகைச் சிற்றுண்டி செய்தல், குயிலுவக் கருவிகள் (பல்வேறு இசைக் கருவிகள்) செய்தல் முதலியன.
11. வாணிகம்
நாகரிக மக்கள் வாழ்க்கைக்கு, உணவு போன்றே உடை, கலம், உறையுள், ஊர்தி முதலிய பொருள்களும், பொன் வெள்ளி முதலிய செல்வமும், இன்றியமையாதிருப்பதால், பொருளாட்சித் துறையில், ஒரு நாட்டின் நல்வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது உழவுத் தொழிலென்றும், அதற்கடுத்தவை இயற்கையும் செயற்கையுமான விளைபொருட்களாற் செய்யப் படும் பல்வேறு கைத்தொழில்களென்றும், அவற்றிற்கடுத்த நிலவழியும் நீர்வழியும் நடத்தப்பெறும் வணிகமென்றும், பண்டைத் தமிழர் நன்கு அறிந்திருந்தனர். அதனால், மூவேந்தரும் இருவகை வணிகத்தையும் ஊக்குதற்குச் சாலைகளும் துறை முகங்களும் அமைத்தும், அவற்றைப் பாதுகாத்தும் வந்தனர்.
வணிகம் என்பது வணிஜ் என்றும், வாணிகம் என்பது வாணிஜ்ய என்றும், வடமொழியில் திரியும்.
நாட்டிற்கு உள்ளிருந்து ஆட்சியைச் செவ்வையாய்ச் செய்தற்கு ஒரு மருதநிலத் தலைநகரும், நாட்டோரத்திற் கடற்கரையி லிருந்து நீர் வணிகத்தை ஊக்குவதற்கு ஒரு நெய்தல் தலைநகரு மாக, இரு தலைநகரை மூவேந்தரும் தொன்றுதொட்டுக் கொண்டிருந்தனர்.
வேந்தன் மருத்தலைவர் நெய்தல் தலைநகர்
பாண்டியன் மதுரை கொற்கை
சோழன் உறையூர் புகார் (காவிரிப்பூம்
பட்டினம்)
சேரன் கருவூர் (கரூர்) வஞ்சி
முதலிரு கழக நூல்களும் முற்றும் அழிந்து போனமையால், பாண்டியரின் இடைக்கழகக்கால மருதநிலத் தலைநகரும் தலைக்கழகக்கால நெய்தல் நிலத் தலைநகரும், அறியப் படவில்லை. சேரர் கொங்குநாட்டை இழந்த பின்னர், வஞ்சிக்கே கருவூர்ப் பெயரை இட்டுக் கொண்டனர்.
கோநகர்களிலும் துறைநகர்களிலும் இருந்து நில வணிகமும் நீர் வணிகமும் செய்து வந்த நகரத்தார் அல்லது நகரமாந்தர் என்னும் வகுப்பினரை, எண்பேராயங்களுள் ஓராயமாகக் கொண்டு, அவரை மன்னர் பின்னோர் என்று சிறப்பித்தும், அவருள் தலைமையானவர்க்கு எட்டிப் பட்டம் வழங்கியும், மூவேந்தரும் ஊக்கி வந்தனர்.
எட்டிப் பட்டச் சின்னமாக ஒரு பொற்பூ அளிக்கப்பெறும்.
எட்டிப்பூப் பெற்று (மணி. 22: 113)
எட்டிப் பட்டம், அதைப் பெற்ற வணிகனின் மனைவிக்கும், அல்லது மகட்கும் மதிப்புரவுப் பட்டமாக (Title of Courtesy) வழங்கி வந்ததாகப் பெருங்கதை கூறும்.
எட்டி காவிதிப் பட்டந் தாங்கிய
மயிலியன் மாதர் (பெருங். இலாவா. 3: 144)
எட்டிப் பட்டத்தார்க்கு, எட்டிப்புரவு என்னும் நிலமானியமும் அளிக்கப்பட்டதாக மயிலைநாதர் உரை குறிக்கும் (நன். 158)
கோடியும் தேடிக் கொடிமரமும் நட்டி
என்னும் உலக வழக்குத் தொடர்மொழியால், கோடிப் பொன் தேடிய செல்வாக்குக் கொடியும் ஒன்று கொடுக்கப்பட்டதாகத் தெரிகின்றது.
எட்டுதல் = உயர்தல். எட்டம் = உயரம். எட்டி = உயர்ந்தோன். எட்டி-செட்டி (முதன்மெய்ப் பேறு).
ஒ.நோ: ஏண்- சேண். ஏமம்- சேமம். செட்டியின் தன்மை செட்டு.
சிரேஷ்டி என்னும் வடசொல், திரு என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபான் ச்ரீ (ஸ்ரீ) என்பதன் உச்சத்தர (superlative degree) வடிவினின்று திரிந்ததாகும்.
ஒப்புத்தரம் உறழ்தரம் உச்சத்தரம்
ச்ரீ (ஸ்ரீ) ச்ரேய ச்ரேஷ்ட
நில வாணிகம்
நிலவாணிகர் வணிகப் பண்டங்களைக் குதிரைகள் மேலும் கோவேறு கழுதைகள் மேலும் ஏற்றிக்கொண்டு கூட்டங் கூட்டமாய்க் காட்டு வழியே தமிழகத்தையடுத்த வடுக நாட்டிற்கும் நெடுந்தொலைவான வட நாட்டிற்கும், காவற் படையுடன் சென்று ஏராளமாய்ப் பொருளீட்டி வந்தனர். அவ்வணிகக் கூட்டங்கட்குச் சாத்து என்று பெயர். சாத்து கூட்டம், சார்த்து - சாத்து. சார்தல் சேர்தல்.
சாத்து = 1. கூட்டம். சுரிவனைச் சாத்து நிறைமதி தவழும் (கல்லா. 63, 32) 2. வணிகக் கூட்டம். சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன் (சிலப். 11, 190)
சாத்து என்பது வடமொழியில் ஸார்த்த என்று திரியும்.
வணிகச் சாத்துக்களின் காவல் தெய்வமாகிய ஐயனார்க்குச் சாத்தன் என்று பெயர். அதனால், வணிகர்க்குச் சாத்தன் சாத்துவன் என்னும் பெயர்கள் இயற் பெயராய் வழங்கின. ஐயனார் கோயிலில், வணிகச் சாத்தைக் குறித்தற்கு மண்குதிரை யுருவங்கள் செய்து வைத்திருத்தலைக் காண்க. சாத்தன் என்னும் தெய்வப் பெயர் வடமொழியில் சாதா எனத் திரியும்.
இனி, வணிகச் சாத்தின் தலைவனும் சாத்தன் எனப்படுவான். இப் பெயரும் ஸார்த்த என்றே வடமொழியில் திரியும். இதனால், வடமொழியில் சாத்தைக் குறிக்கும் சொற்கும் சாத்தின் தலைவனைக் குறிக்கும் சொற்கும் வேறுபாடின்மையும், சாத்தன் என்னும் தெய்வத்தைக் குறிக்கும் சொல் வேறுபட்டிருப்பதும், கண்டு உண்மை தெளிக.
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே.
என்னும் குறுந்தொகைச் செய்யுள் (11), வடுக நாட்டிற்கும்,
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண்
தங்கலர் வாழி தோழி
………………………………………………………………………….
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி யுருளிய குறைத்த
இலங்குவெள் ளருவிய அறைவா யும்பர்
மாசில் வெண்கோட் டண்ணல் யானை
வாயுள் தப்பிய அருங்கேழ் வயப்புலி
மாநிலம் நெளியக் குத்திப் புகலொடு
காப்பில வைகும் தேக்கமல் சோலை
நிரம்பா நீளிடைப் போகி
அரம்போழ் அவ்வளை நிலைநெகிழ்த் தோரே
என்னும் நெடுந்தொகைச் செய்யுள் (251), விந்தியமலைக்கப் பாற்பட்ட வட நாட்டிற்கும், வணிகச் சாத்துக்கள் போய் வந்தமையைக் குறிப்பாய்த் தெரிவித்தல் காண்க.
நீர்வாணிகம்
உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ
என்பதால் (அகம். 255 : 1-2), கடலைப் பிளந்து செல்லும் மாபெருங் கப்பல்கள் தமிழகத்திற் செய்யப்பட்டமை அறியப்படும்.
கப்பல்கள் தங்கும் துறைமுகத்தைச் சேர்ப்பு, கொண்கு என்பது இலக்கிய வழக்கு.
கீழ் கடற்கரையில் கொற்கை, தொண்டி, புகார் (காவிரிப்பூம் பட்டினம்) என்னும் துறைநகர்களும், மேல் கடற்கரையில் வஞ்சி, முசிறி, தொண்டி என்னும் துறைநகர்களும் இருந்தன. இடைக் கழகக் காலத்தில் பாண்டியர் துறைநகர் குமரியாற்றின் கயவாயில் (estuary) அமைந்திருந்தது. அதன் தமிழ்ப் பெயர் (அலைவாயில்?) மறைந்து, அதன் மொழிபெயர்ப்பான கபாட புரம் என்னும் வடசொல்லே இன்று இலக்கிய வழக்கிலிருக் கின்றது.
இரவில் வழிதப்பிச் செல்லும் கலங்கட்கு வழிகாட்டுவதற்கு, ஒவ்வொரு துறைநகரிலும் கலங்கரை விளக்கம் (Light house) இருந்தது.
இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும் (சிலப். 6 : 141)
வான மூன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத் தோடுகலங் கரையும்
துறை (பெரும்பாண். 349- 51)
கடற்கரை உள்நாட்டை நோக்க மிகத் தாழ்ந்த மட்டத்திலிருப்ப தால், துறைநகர்களெல்லாம் பட்டினம் எனப்பட்டன.
பதிதல் தாழ்ந்திருத்தல். பள்ளமான நிலத்தைப் பதிந்த நிலம் என்பர். பதி + அனம் = பதனம் - பத்தனம் - பட்டனம் - பட்டினம்.
தகரம் டகரமாவது பெருவழக்கு.
ஒ.நோ: கொத்து மண்வெட்டி- கொட்டு மண்வெட்டி.
களைக்கொத்து- களைக்கொட்டு.
பொத்து - பொட்டு - பொருத்து.
வீரத்தானம் (வ.) - வீரட்டானம்.
பதனம் - படனம் = நோயாளியைப் பாதுகாத்தல்.
இனி, பதனம் என்பது, கலங்கள் காற்றினாலும் கொள்ளைக் காரராலும் சேதமின்றிப் பாதுகாப்பாயிருக்குமிடம் என்றுமாம். பதனம், பாதுகாப்பு.
பட்டினம் என்பதைப் பட்டணம் என்பது உலக வழக்கு. இக் காலத்திற் பட்டணம் என்பது சென்னையைச் சிறப்பாய்க் குறித்தல் போல், அக்காலத்தில் பட்டினம் என்பது புகாரைச் சிறப்பாய்க் குறித்தது. பட்டினப்பாலை, பட்டினத்துப் பிள்ளையார் என்னும் வழக்குக்களை நோக்குக.
ஒரு திணைக்கும் சிறப்பாயுரியதன்றி நகரப் பொதுப் பெயராய் வழங்கும் பதி என்னும் சொல், மக்கள் பதிவாய் (நிலையாய்) இருக்கும் இடத்தைக் குறிக்கும். பதிதல் நிலையாய்க் குடி யிருத்தல்.
கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்து சேரும்போதும் அதை விட்டுப் புறப்படும்போதும், முரசங்கள் முழக்கப்பட்டன.
இன்னிசை முரசமுழங்கப்
பொன்மலிந்த விழுப்பண்டம்
நாடார நன்கிழிதரும்
ஆடியற் பெருநாவாய் (மதுரை. 80-83)
கப்பலில் வந்த பொருள்கள் கழிகளில் இயங்கும் தோணிகளாற் கரை சேர்க்கப்பட்டன.
கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியாற் கரைசேர்க்குந்து (புறம். 343 : 5-6)
அக்காலத்திற் காவிரியாறு அகன்றும் ஆழ்ந்தும் இருந்ததால், பெருங் கப்பல்களும் கடலில் நிற்காது நேரே ஆற்று முகத்திற் புகுந்தன.
……………………………………………………………………………T«bghL
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் (புறம். 30: 10-12)
பாய் களையாது பரந்தோண்டாதென்பதனால், துறை நன்மை கூறியவாறாம் என்று பழைய வுரை கூறுதல் காண்க. கரிகால் வளவன் காவிரிக்குக் கரை கட்டியது இங்குக் கருதத்தக்கது.
நீர் வணிகம் நிரம்ப நடைபெற்றதால், துறைமுகத்தில் எந்நேரமும் கப்பல்கள் நிறைந்திருந்தன.
வெளிலிளக்கும் களிறுபோலத்
தீம்புகார்த் திரைமுன்றுறைத்
தூங்குநாவாய் துவன்றிருக்கை (பட்டினப்.172-74)
ஏற்றுமதியும் இறக்குமதியும் Vராளமாயிருந்ததால், eள்nதாறும் Mயத்துறைக்fணக்கர் _டைகளைÃறுத்துcல்கு (சுங்கம்) tங்கிnவந்தன் Kத்திரையைப்b பாறித்துக் Fன்று nபாற்Fவித்துi வத்திருந்தனர். mt‰¿‰F¡ கடுமையான காவலிருந்தது.
வைகல்தொறும் அசைவின்றி
உல்குசெயக் குறைபடாது
…………………………………….
நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி
மதிநிறைந்த மலிபண்டம்
பொதிமூடைப் போரேறி
மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன்
வரையாடு வருடைத் தோற்றம் போல (பட்டினப்: 124-139)
பல நாடுகளிலிருந்து வந்த பல்வேறு பொருள்கள், காவிரிப்பூம் பட்டினக் கடை மறுகில் மண்டிக் கிடந்தன.
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின் (பட்டினப். 155-193)
நீர் வாணிகத்தின் பொருட்டு, பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு நாட்டு மக்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் வந்து கலந்தினிது வாழ்ந்தனர்.
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம் (பட்டினப். 216-18)
கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவனர் இருக்கையும்
கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந் துறையும் இலங்கு நீர்வரைப்பும். (சிலப். 5 : 9-12)
யவனர் கிரேக்கர். பின்பு உரோமரும் யவனர் எனப்பட்டார்.
மேலை யாரியக் கலப் பெயர்கள்
கலங்கள் முதன்முதல் தமிழகத்திலேயே செய்யப்பட்டன. அதனால், பல கடல் துறைச் சொற்களும் கலத் துறைச் சொற்களும் மேலை யாரியத்திலும் கீழை யாரியத்திலும் தமிழாயி ருக்கின்றன.
வாரி = நீர், பெரிய நீர் நிலையான கடல். L. mare, Skt. vari (வாரி)
வாரணம் = கடல். L. marinus, E. marina Skt. varuna (வாருண)
வார்தல் = நீள்தல். வார்-வாரி, ஒ.நோ: நீள்- நீர்.
வார்-வாரணம்= பெரிய நீர்நிலை அல்லது வளைந்த நீர்நிலை.
கரை = கடற்கரை. நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப (நாலடி. 224).
E.shore = “land that skirts sea or large body of water” (C.O.D.)
C (k) - sh ஒ.நோ: L. curtus-E.short.
படகு- LL. barca, Gk. baris, E.bark. ML. barga, variation of barca. E.barge.
ட-ர. ஒ. நோ: பட்டடை- பட்டரை, அடுப்பங்கடை அடுப்பங் கரை, படவர்-பரவர்.
கொடுக்கு - ME. croc, ON. krokr, E. Crook.
குடகு - E. Coorg.
நாவாய் - L. navis, Gk. naus, Skt. nau, E, navy (கப்பற்படை)
நாவுதல் = கொழித்தல், நாவாய் கடல்நீரைக் கொழித்துச் செல்வது. வங்கம்… நீரிடைப் போழ என்னும் அகப் பாட்டுப் பகுதியை (255: 1-2) நோக்குக.
கடலையும் கப்பலையும் காணாதவரும் நெடுகலும் நில வழியாய் ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தவருமாகிய இந்திய ஆரியர், நௌ என்னும் (படகைக் குறிக்கும்) வட சொல்லினின்று நாவாய்ச் சொல் வந்த தென்பது, வாழைப் பழத் தொலியை நட்டால் வாழை முளைக்கும் என்பது போன்றதே.
கப்பல் - L.scapha, Gk. skaphos, Ger. schiff, OHG. scif, OS, ON, Ice. Goth, Skip, OE. scip. F. esquif, Sp., Port, esquife, It. schifo, E. skiff, ship.
கப்புகள் (கிளைகள்) போன்ற பல பாய்மரங்களையுடையது கப்பல்.
L.galea, Gk. galaia, E. galley, galleon முதலிய சொற்களும், கலம் என்னும் தென் சொல்லோடு ஒப்புநோக்கத் தக்கன.
OS. OE, segal, OHG, segel, ON, segl, E. sail, என்னும் சொற்களும் சேலை என்பதை ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது.
இங்ஙனம், கட்டுமரம் (E. catamaran) முதல் கப்பல்வரை, பலவகைக் கலப் பெயர்கள் மேலை யாரிய மொழிகளில் தமிழாயுள்ளன.
நங்கூரம் - L. ancora, Gk. angkyra, Fr.ancre, E. anchor, Pers. langar.
கவடி - E.cowry.
மேனாடுகட்கு ஏற்றுமதியான பொருட் பெயர்கள்
தோகை (மயில்) - Heb, tuki, Ar. tavus, L. Pavus, E.pea (-cock, hen)
mÇá - Gk., L. oruza, It, riso, OF. ris, E.rice.
இஞ்சிவேர் - Gk - ziggiberis, L.zingiber, OE. gingiber, E. ginger. Skt. srungavera.
இஞ்சிவேர் என்பது தெளிவாயிருக்கவும், வட மொழியாளர் (ச்ருங்க = கொம்பு, வேர = வடிவம்) மான் கொம்பு போன்றது என்று தமிழரை ஏமாற்றியதுமன்றி, மேலையரையும் மயக்கியிருப்பது வியக்கத்தக்கதே.
இஞ்சுதல் = நீரை உள்ளிழுத்தல். இஞ்சு - இஞ்சி.
திப்பிலி– Gk.peperi, L. piper, ON, pipar, OHG. pfeffar, OE. piper,
E. pepper, Skt. pippali,
பன்னல் (பருத்தி) - L. punnus, cotton, It. panno, cloth,
கொட்டை (பஞ்சுச்சுருள்)- Ar. qutun, It. cotone, Fr. coton, E.cotton.
கொட்டை நூற்றல் என்பது பாண்டி நாட்டு வழக்கு.
நாரந்தம் (நாரத்தை) - Ar. Pers. naranj, Fr., It. arancio, E. Orange.
கட்டுமரம், கலிக்கோ (Calico), தேக்கு (Teak), பச்சிலை (patc houli) வெற்றிலை (betel) முதலிய சொற்கள் கிழக்கிந்தியக் குழும்பார் காலத்திற் சென்றனவாகும். கோழிக்கோட்டிலிருந்து (Calicut) ஏற்றுமதியான துணி கலிக்கோ எனப்பட்டது.
குமரிக் கண்டத் தமிழக் கலவரும் கடலோடிகளும் உலக முழுதும் கலத்திற் சுற்றினமை வடவை (Aurora Borealis) என்னும் சொல்லாலும், தமிழர் கடல் வணிகத் தொன்மை,
முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை
என்னும் தொல்காப்பிய நூற்பாவாலும் (980), அரபி நாட்டுக் குதிரையும் ஒட்டகமும் தொல்காப்பியத்திற் குறிக்கப்படு வதாலும், உணரப்படும்.
பேரா. நீலகண்ட சாத்திரியாரும் தாம் எழுதிய திருவிசய (Sri Vijaya) நாட்டு வரலாற்றுத் தோற்றுவாயில், “The more we learn the further goes back the history of eastern navigation’ and so far as we know, the Indian Ocean was the first centre of the oceanic activity of man” என்று, தமிழர் முதன் முதல் இந்துமா வாரியிற் கலஞ் செலுத்தியதையும் அவர் கடல் வாணிகத் தொன்மையையும் கூறாமற் கூறியிருத்தல் காண்க.
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
என்பது (அகம். 149: 9-10), கிரேக்கரும் உரோமரும் பொன் கொண்டு வந்து மிளகு வாங்கிச் சென்றதையும்,
விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியோ டனைத்தும்
என்பது (மதுரை. 321-23), அரபியரும் பிறரும் குதிரை கொண்டு வந்து அணிகலம் வாங்கிச் சென்றதையும், கூறும்.
12. அரசியல்
முதற் காலத்தில், முழுகிப் போன குமரிக் கண்டம் முழுவதும் பாண்டி நாடாகவும், குமரிமுனை முதல் பனிமலை வரையும் குடபாதி சேர நாடாகவும் குணபாதி சோழ நாடாகவும், இருந்தன.
பழம் பாண்டிநாடு, தென்பாலி நாடு முதல் குமரியாறு வரை எழு நூறு காதம் (2001 கல்) நீண்டிருந்தது. பாண்டியன் அதையிழந்த பின், பிற்காலத்துப் பாண்டி நாடாகிய நெல்லை மதுரை முகவை மாவட்டப் பகுதியை, சோழ நாட்டினின்றும் கைப்பற்றி யாண்டான். இதன் உண்மையை,
மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்
என்னும் முல்லைக்கலித் தரவாலும் (4).
அங்ஙனமாகிய நிலக் குறைக்குச் சோழ நாட்டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும் சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றமுமென்னு மிவற்றை, இழந்த நாட்டிற்காக வாண்ட தென்னவன் என்னும் அடியார்க்கு நல்லார் உரையாலும் (சிலப். பக். 303), அறிக.
குமரிக்கண்டம் முழுகி, வடநாட்டுக் கொடுந்தமிழ் திரவிடமாகத் திரிந்து வடநாடு மொழிபெயர் தேயமான பின் தமிழகம் மிகச் சுருங்கிவிட்டது. முதற்காலத்தில் பாண்டி நாடு ஐம்மண்டலங் களாகவும், சோழ நாடு புனல் மண்டலம் (புன்னாடு) தொண்டை மண்டலம் என இரு மண்டலங்களாகவும், சேரநாடு மலை மண்டலம் கொங்கு மண்டலம் என இரு மண்டலங்களாகவும், பிரிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகின்றது.
பாண்டியன் ஐந்துணையரசரைக் கொண்டு ஆண்டதால், பஞ்சவன் எனப்பட்டான்.
பழியொடு படராப் பஞ்சவ வாழி (சிலப் 20:33). அஞ்சவன் என்ற சொல்லே பஞ்சவன் என்று திரிந்திருத்தல் வேண்டும்.
ஒ.நோ: அப்பளம் - அப்பளமு - அப்படமு (தெ); அப்பள - பப்பள (க.) பப்படம் (ம.) பர்ப்பட்ட (வ); அப்பா - E. papa.
அப்பளித் துருட்டுவது அப்பளம். அப்பளித்தல் - சமனாகத் தேய்த்தல்.
பாண்டியனைக் குறிக்கும் பஞ்சவன் என்னும் பெயர் ஒருமை யென்றும், பாண்டவரைக் குறிக்கும் பஞ்சவர் என்னும் பெயர் பன்மை யென்றும், வேறுபாடறிதல் வேண்டும்.
தொண்டை மண்டலம் சோழர் ஆட்சியினின்று நீங்கினது போன்றே, கொங்கு மண்டலமும் சேரர் ஆட்சியினின்று பிற் காலத்தில் நீங்கி விட்டது. கொங்கு மண்டலம் முதலிற் சேர நாட்டின் பகுதியாயிருந்தமை, கொல்லிச் சிலம்பன் என்னும் சேரன் பெயராலும், சேரர் குடியினனான அதிகமான் தகடூரை ஆண்டதினாலும், சேரர் கொங்குவை காவூர்நனாடதில் என்று அருணகிரிநாதர் பாடியிருப்பதாலும், வஞ்சிக்குக் கருவூர் என்னும் பெயருண்மையாலும், பிறவற்றாலும், அறியப்படும்.
ஒவ்வொரு நாடும் பல கோட்டம் அல்லது வளநாடு என்னும் பெரும் பிரிவுகளாகவும், ஒவ்வொரு பெரும் பிரிவும் பல கூற்றம் அல்லது நாடு என்னும் சிறு பிரிவுகளாகவும், பிரிக்கப்பட்டி ருந்தன. முத்தமிழ் நாடும் ஒரே வேந்தனது ஆட்சிக்குட்பட்ட பிற்காலத்தில், ஒவ்வொரு தமிழ்நாடும் ஒரு பெரு மண்டலமாகக் கருதப்பட்டது. இந்நிலைமை முற்காலத்தில் இல்லை. ஆட்சி பற்றி முந்நாடும் வேறுபட்டவேனும், மொழி பற்றித் தமிழகம் என ஒன்றுபட்டே யிருந்து வந்தன. ஒவ்வொரு கூற்றமும் அதை யொத்த நாடும் பல தனியூர்களாகவும் பல சிற்றூர்கள் சேர்ந்த பற்றுக்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. தனியூர் ஊராட்சியும் பற்று ஊராட்சி யொன்றியமும் ஒத்தன.
ஒவ்வொரு தனியூரிலும் அல்லது பற்றிலும், ஊரவை என்ற அடிப்படை யாட்சிக்குழு இருந்தது. அது ஆண்டுதோறும் திருவுளச் சீட்டுப் போன்ற குடவோலையால் தேர்ந்தெடுக்கப் பட்டது. குற்றவாளிகளும் பொறுப்பற்றவர்களும் அதில் இடம் பெறவில்லை. ஊராட்சியின் ஒவ்வொரு துறையையும் கவனிக்க, வாரியம் என்னும் உட்குழு அமைக்கப்பட்டது. அவ் வாரியங்கள் ஏரி வாரியம், கலிங்கு வாரியம், கழனி வாரியம், தோட்ட வாரியம், குடும்பு வாரியம், பொன் வாரியம், கணக்கு வாரியம், கோயில் வாரியம், தடிவழி (பெருஞ்சாலை) வாரியம், பஞ்சவார வாரியம், ஆட்டை வாரியம் முதலியனவாகும். ஊரவை நடவடிக்கை களையும் கணக்கையும் எழுதி வைக்க ஊர்க்கணக்கன் என்னும் அலுவலன் இருந்தான்.
பஞ்சவார வாரியம் வரித்தண்டலைக் கவனிப்பதென்றும், பிற வாரியங்களை மேற்பார்ப்பதென்றும். பலவாறாகக் கூறுவர். அது இயற்கையாகவோ செயற்கையாகவோ உண்டாகும் உணவுப் பஞ்சத்தைத் தடுக்க ஏற்பட்டதாகவும் இருக்கலாம். வழக்குத் தீர்த்து முறை செய்தல் ஆட்டை வாரியத்தின் கடமையாகும். உரிமை. (Civil) வழக்கு, குற்ற (Criminal) வழக்கு ஆகிய இரண்டையும் கேட்டு, கொலைத் தண்டம் செய்யவும் அவ் வாரியத்திற்கு அதிகாரமிருந்தது. மன்றுபாடு, தண்டா, குற்றம் எனத் தண்டனை மூவகைப் பட்டிருந்தது.
அமை - அவை, ஒ.நோ: அம்மை - அவ்வை, குமி - குவி. அமைதல் = நெருங்குதல், பொருந்துதல், கூடுதல். அமை= கூட்டம் (முதனிலைத் தொழிலாகு பெயர்). ஒ.நோ: இமை-குமை. (வ.).
ஒவ்வொரு கூற்றத்தையும் கவனிக்க நாடாள்வான் என்ற அதிகாரியும், ஒவ்வொரு கோட்டத்தையும் மேற்பார்க்க நாடு கண்காட்சி என்ற அதிகாரியும் இருந்தனர்.
ஊரமை செய்யும் வாரியப் பெருமக்களோம் (S.I.I.i, 117).
அவை - சவை - சபா (வ.). ஒ.நோ: வடவை - வடவா (வ.) - படபா(வ.).
அரசன் தலைநகரிலிருந்து ஆண்டு வந்தான். அரசனுக்குக் காவல் தொழிலே சிறப்பாதலாலும், காவலன் புரவலன் என்னும் பெயருண்மையாலும், அரசு என்பது அரண் என்னும் சொல்லிற்கு இனமாய், பாதுகாப்பு அல்லது காவல் என்னும் கருத்தை அடிப்படையாய்க் கொண்டதாகத் தெரிகின்றது. அரசு- அரசன்.
Gk. archon, L. rex, regis, Skt. rajan.
அரசன் - அரைசன்- அரையன் - ராயன் (கொச்சை) - ராயலு (தெ).
E. roy, king, as in Viceroy. ME. royal (adj.) f. OF. roial.
அரசர் குறுநில மன்னரும் பெருநில மன்னரும் என இரு திறத்தார். சிலவூர்த் தலைவரான கிழவரும் பலவூர்த் தலைவரான வேளிரும் பொருநரும் குறுநில மன்னர். பெருநாட்டுத் தலைவ ரான சேர சோழ பாண்டியர் மூவரும் பெருநில மன்னர். அவர் முடி சூடியதால் வேந்தர் எனப்பட்டார். குறுநில மன்னர் அவருக் கடங்கிய சிற்றரசர்.
வேய்ந்தோன்- வேந்தன். வேய்தல்- முடியணிதல். கொன்றை வேய்ந்தோனான சிவனைக் கொன்றை வேந்தன் என்று ஔவையார் கூறுதல் காண்க.
மூவேந்தரும் அவர் குடும்பத்தினரும் பொதுவாகக் கோக்கள் எனப்படுவர். குடவர்கோ, கோப்பெருஞ்சோழன், கோயில், கோப்பெருந்தேவி, இளங்கோவடிகள் என்னும் பெயர்களை நோக்குக.
கோவன் - கோன் = இடையன், இடையன் ஆடுகளைக் காப்பது போல் மக்களைக் காக்கும் அரசன்.
கோன் - (Turk. Khan) (கான்) என்பர் கால்டுவெல். கோன் - கோ.
மூவேந்தரும், ஐம்பெருங்குழு, எண்பேராயம், உறுதிச் சுற்றம் என மூவகைப் பட்ட பதினெண்கணத் துணைவருடன், ஆட்சி செய்து வந்தனர்.
அமைச்சர், போற்றியர், படைத்தலைவர், தூதர், ஒற்றர் என்பவர் ஐம்பெருங் குழுவார், அமைச்சர் அரசியல் வினைகளை அமைப்பவர் அல்லது அரசனுக்கு நெருங்கியிருப்பவர். அமைதல்- நெருங்குதல். போற்றியர் தமிழப் பூசாரியர். பிராமணர் வந்தபின், போற்றியர் இடத்தில் புரோகிதர் அமர்த்தப்பட்டார். தூதன் என்பது முன் செல்பவன் என்று பொருள்படும் தென் சொல். தூது - தூதன். இவ்விரு சொல்லும் வடமொழியில் தூத (duta) என்று திரியும்.
கணக்கர், கருமத் தலைவர், பொன் சுற்றத்தார் அல்லது பொக்கச சாலையர், வாயிற் காவலர், நகர மாந்தர், படைத்தலைவர், குதிரை மறவர், யானை மறவர் என்பவர் எண்பேராயத்தார். இதிற் படைத் தலைவர் என்பார் தேர்ப்படைத் தலைவராயிருக்கலாம்.
ஆருயிர் நண்பர், அந்தணர், சமையற்காரர், மருத்துவர், கணியர் என்பவர் உறுதிச் சுற்றத்தார்.
இனி, அறிவாலும் அகவையாலும் மூத்த பெரியோரை அரசர் அறிவுரையாளராக அமர்த்திக் கொள்வதுமுண்டு. அவர் முதுகண் எனப்படுவர்.
ஒவ்வோர் அரசியல் துறையும் திணைக்களம் (department) எனப்பட்டது. அரசிறைத் திணைக்களத் தலைவன் புரவுவரித் திணைக்கள நாயகம் எனப்பட்டான். நிலவரி, தொழில்வரி, வணிகப் போக்குவரத்து வரி, நல்லா நல்லெருது முதலிய இயங்கு திணைவரி, திருமண வரி (கலியாணக் காணம்) காவல் வரி முதலிய பலவகை வரிகள் குடிகளிடம் வாங்கப்பட்டன. நாடுகூறு என்பவன் நிலத் தீர்வையைத் திட்டஞ் செய்பவன். வரியிலார் என்பவர் வருகின்ற வரித் தொகைகளை வாங்கிப் பதிவு செய்பவர். வரிக் கூறிடுவார் என்பவர் பதிவு செய்த வரித் தொகை
களைப் பங்கிடுபவர் அல்லது பாகுபாடு செய்பவர். வரிப் பொத்தகம் என்பவன் நிலவரிக் கணக்கன். புரவு வரி என்பவன் பிற வரிக் கணக்கன். நிலவரி விளைவில் ஆறிலொரு பங்கு கூலமாகவும், பிற வரிகள் குறிப்பிட்ட பணத் தொகையாகவும், வாங்கப்பட்டன. ஊரவையார் அவற்றை வாங்கித் தலைநகரி லுள்ள பண்டாரத்திற்கும் பொக்கச சாலைக்கும் அனுப்பி வந்தனர். நிலவரியைத் திட்டஞ் செய்ய நிலங்கள் எல்லாம் துல்லியமாய் அளக்கப் பட்டன.
வேந்தன் அமைதிக் காலத்தில் ஒவ்வொரு நாளும் பகலில் முதற் பத்து நாழிகை கொடைக்கும், இடைப்பத்து நாழிகை வழக்குத் தீர்த்து முறை செய்வதற்கும், கடைப் பத்து நாழிகை தன் இல்லற இன்பத்திற்கும் செலவிட்டான். அவன் காலையில் எழுந்தவுடன் பள்ளியெழுச்சி முரசம் அறையப்படும். எட்டர் என்பவர், அவனுக்கு நாழிகை யறிவிப்பவர். அகவர் (சூதர்) என்பவர், நின்று கொண்டு அவன் முன்னோர் பெருமையைக் கூறி அவனைப் புகழ்ந்து பாடுபவர். ஓவர் (மாகதர்) என்பவர், இருந்து கொண்டு அங்ஙனம் பாடுபவர். ஏத்தாளர் பிற சமையங்களிற் புகழ்ந்து பாடுபவர்.
வேந்தன் தன் கொலு மண்டபத்திற்குச் செல்லும்போதும், அங்கு அமர்ந்திருக்கும் போதும், அதினின்று மீளும்போதும், மெய் காவலர் பக்கத் துணையாவர். பிற நாட்டரசரும் அவர் தூதரும் குறுநில மன்னரும் பதினெண் கணத்தாரும் திணைக்களத் தலைவரும் நாட்டுப் பெருமக்களும் கூடிய கொலு மண்டபத்தில், அரசு கட்டில் என்னும் அரியணையில் வேந்தன் வீற்றிருக்கும் கொலு ஓலக்கம் எனப்படும். காலைக் கொலு நாளோலக்கம் என்றும், அரிதாய்க் கூடும் மாலைக் கொலு அல்லோலக்கம் என்றும் பெயர் பெறும். கொடை வேளை கொடை முரசும் முறை வேளை முறை முரசும் அறைந்து தெரிவிக்கப்பெறும்.
வேந்தன் அரசியற் பணியில் ஈடுபட்டிருக்கும் போதெல்லாம், சில அதிகாரிகள் அவனுடனிருப்பர். அவர் உடன் கூட்டத்தார் எனப்படுவர்.
வேந்தன் அவ்வப்போது இடும் கட்டளைகளைத் திருவாய்க் கேள்வி என்பவர் கேட்டு வந்து, எழுத்தாளரிடம் அறிவிப்பார். வேந்தன் கட்டளைகளை எழுதுபவர் திருமந்திரவோலை என்பார். அவருக்குத் தலைவராயிருப்பவர் திருமந்திரவோலை நாயகம் எனப்படுவர். நாள்தோறும் நடப்பவற்றை நிகழ்ச்சிக் குறிப்பில் எழுதிவைப்பவர் பட்டோலைப் பெருமான். ஊரவை களினின்றும் பிற அதிகாரிகளிடத்திருந்தும் வரும் ஓலைகளைப் படித்துப் பார்த்து, அவற்றிற்குத் தக்க விடையனுப்புவோர் விடையிலார் என்போர். வேந்தன் கட்டளைகள் பதிவு செய்யப் படும் பொத்தகம் கேள்வி வரி எனப்படும்.
நாட்டுத் தலைநகரிலும் கோட்டத் தலைநகரிலும், நிலப் பதிவு செய்யும் ஆவணக் களரியும் அறங்கூறவையம் என்னும் வழக்குத் தீர்ப்பு மன்றமும், இருந்ததாகத் தெரிகின்றது. அரசர் வழக்குக் களையும் அறங்கூறவையத்தாரின் தவறான தீர்ப்புக்களையும், வேந்தனே கவனித்து வந்தான்.
வரிப் பணமும் புதையலும் சிற்றரசரிடும் திறையும் தோற்றுப் போன பகையரசர் கொடுக்கும் தண்டமும், வேந்தன் வருவாய் களாகும்.
பணம், அச்சிட்ட காசாகவும் நிறைப் பொன்னாகவும் இருவகை யில் வழங்கிற்று. அக்கம், காசு, காணம், பொன், மாடை முதலியன காசு வகைகள். பொற்காசுகளையும் பொற் கட்டிகளையும் நோட்டஞ் செய்யும் அதிகாரிகள் வண்ணக்கர் என்னப்பட்டார். காசு- E. cash
கோநகர் காவலும் பாடிகாவல் என்னும் ஊர்க் காவலும் போக்குவரத்துச் சாலைக்காவலும், இரவும் பகலும் ஒழுங்காய் நடைபெற்றன.
நிலன்அகழ் உளியர் கலன்நசைஇக் கொட்கும்
கண்மா றாடவர் ஒடுக்கம் ஒற்றி
வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்
துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த
நூல்வழிப் பிழையா நுணங்குநுண் தேர்ச்சி
ஊர்காப் பாளர் ஊக்கருங் கணையினர்
தேர்வழங்கு தெருவில் நீர்திரண் டொழுக
மழையமைந் துற்ற அரைநாள் அமயமும்
அசைவிலர் எழுந்து நயம்வந்து வழங்கலின்
கடவுள் வழங்கும் கையறு கங்குலும்
அச்சம் அறியா தேம மாகிய
மற்றை யாமம் பகலுறக் கழிப்பி
என்னும் மதுரைக் காஞ்சிப் பகுதி (641-53), மதுரையில் ஊர்காவலர் பெருமழை பொழிந்த நள்ளிரவிலும் ஊக்கமாய்ச் சுற்றி வந்து ஊர் காத்தமையைத் தெரிவிக்கும்.
மருதநிலத் தலைநகரெல்லாம், அகழியாலும் பல வகைப் பொறி களைக் கொண்ட கோட்டை மதிலாலும் சூழப் பெற்றிருந்தன. கிரேக்கரும் உரோமரும் மதில் வாயிற் காவலராயிருந்தனர்.
கடிமதில் வாயில் காவலிற் சிறந்த
அடல்வாள் யவனர் (சிலப். 14: 66-7)
கரிபரி தேர்கால் என்னும் நால்வகைப் படைகள் வேந்தனுக் கிருந்தன. தெரிந்தெடுக்கப்பெற்ற சிறந்த பொருநரைக் கொண்ட தனிப் படைப்பிரிவு களுமிருந்தன. அவை தெரிந்த என்னும் அடைமொழியால் விதந்து கூறப்பட்டன.
எ-டு: உத்தம சோழத் தெரிந்த அந்தளகத்தாளர் (S.I.I.ii , 97)
அந்தளகம், மெய்ம்மறை (கவசம்).
இனி, வேந்தன் மேல் அளவிறந்த பற்றுடையவராய், அவனுக்குத் துன்பம் நேர்ந்த வேளையில் உயிரைக் கொடுத்துக் காக்கவும் உடன் மாயவும் சூளிட்டுக் கொண்ட போர் மறவருமிருந்தனர். அவர் வேளைக்காரர் எனப்பட்டார். அவர் உயிர் கொடுத்தல் செஞ்சோற்றுக் கடன் கழித்தல் எனப்பட்டது.
வேந்தன் இறந்தபின், அல்லது துறந்தபின், அல்லது கழிபெரு மூப் படைந்தபின், அவன் மூத்தமகன், மூத்த மகன் இல்லாவிட்டால் இளைய மகன், மகனே இல்லாவிட்டால் மகள், மகளும் இல்லா விட்டால் தகுதியுள்ள நெருங்கிய உறவினன், முடிசூட்டப் பட்டார். தடாதகை யென்னும் கயற்கண்ணியார் பாண்டி நாட்டை யாண்டதையும், சேரமான் பெருமாள் நாயனார் சேரநாட்டை யாண்டதையும் காண்க. முடிசூட்டு விழாவிலும் வேந்தன் பிறந்த நாளாகிய வெள்ளணி விழாவிலும், பிற சிறந்த நிகழ்ச்சிகளிலும், கோப்பெருந்தேவியும் உடன் கொலு விருப்பாள்.
காவிதி என்பது சிறந்த அமைச்சனுக்கும், ஏனாதி என்பது சிறந்த படைத் தலைவனுக்கும், வேள் அல்லது பிள்ளை என்பது சிறந்த குறுநில மன்னருக்கும், மாவரையன் என்பது சிறந்த அரசியற் கருமத் தலைவனுக்கும், எட்டி என்பது சிறந்த வணிகனுக்கும், சிறுதனம், பெருந்தனம், தலைக்கோல் என்பன நாடகக் கணிகையர்க்கும், வேந்தன் அளிக்கும் பட்டங்களாகும்.
ஏனை + அரி = ஏனாரி (யானைகளை அழிப்பவன்) - ஏனாதி. த-ர ஒன்றிற் கொன்று போலியாக வரும். எ-டு: விதை- விரை, குரல்வளை- குதவளை (கொச்சையுலக வழக்கு). மாவரையன் - மாவரையம்- மாராயம்.
மாராயம் பெற்ற நெடுமொழி யானும் (தொல். புறத். 8)
அரசியல் வினைஞர் ஊதியத்திற்குக் கைம்மாறாகக் கொடுக்கப் பட்டது, நெல்லும் பொன்னுமாயின் சம்பளம் என்றும், நிலமானியமாயின் உம்பளம் என்றும், பெயர் பெற்றன.
13. கல்வி
கல்வி ஒரு குலத்தார்க்கு மட்டும் என்று வரையறுக்கப்படாது, எல்லாத் தொழில் வகுப்பார்க்கும் பொதுவாயிருந்தது. இதை,
தந்தைமகற் காற்றும் நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்.
என்னும் குறளாலும் (67),
ஈன்றுபுறந் தருதல் என்றலைக் கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. (புறம். 312)
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பா லொருவனும் அவன்கட் படுமே (புறம். 183)
என்னும் புறப்பாட்டுக்களாலும், பல்வேறு தொழிலார் கடைக் கழகக் காலத்துப் புலவராயிருந்தமையாலும், அறியலாம்.
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார், அறுவை வாணிகன் இளவேட்டனார், இளம் பொன் வணிகனார், மருத்துவன் தாமோதரனார், தண் காற்பூட் கொல்லனார், ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத் தனார், வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் முதலிய புலவர் பல்வேறு தொழிலரா யிருந்தமை காண்க.
கல்வி பெண்டிர்க்கு விலக்கப்படவில்லை. ஒக்கூர் மாசாத்தியார், ஔவையார், காக்கை பாடினியார் நச்செள்ளையார், காவற் பெண்டு, குறமகள் இளவெயினி, நக்கண்ணையார், பாரி மகளிர், பூதப்பாண்டியன் தேவியார், பேய்மகள் இளவெயினி, மாறோக் கத்து நப்பசலையார், வெண்ணிக் குயத்தியார், வெறிபாடிய காமக் கண்ணியார் முதலியோர் பெயர் வெளிவந்த கடைக்கழகக் காலப் புலத்தியர். அக்காலத்துக் குடித்தனப் பெண்டிர் தம் கல்வியறிவை யெல்லாம் இல்லறத்திற்கே பயன்படுத்தியமையால், அவருட் பெரும்பாலார் பெயர் வெளிவரவில்லை. காரைக்காலம்மையார் சிறந்த புலத்தியரா யிருந்தும், கணவரால் விலக்கப் படும்வரை, அவர் பாவன்மை வெளிப்படா திருந்தமை காண்க. சிவப்பிரகாச அடிகள் காலமான பதினேழாம் நூற்றாண்டிலும், திருக்காட்டுப் பள்ளியில் தெருவில் உப்பு விற்கும் பெண் ஒருத்தி, அடிகள் நிறையவுளதோ என்று பாடி வினவிய வெண்பாவிற்கு விடையாக,
தென்னோங்கு தில்லைச் சிவப்பிரகா சப்பெருமான்
பொன்னோங்கு சேவடியைப் போற்றினோம் - அன்னோன்
திருக்கூட்டம் அத்தனைக்கும் தெண்டனிட்டோம் தீராக்
கருக்கூட்டம் போக்கினோம் காண்.
என்று கடுத்துப் பாடினமை காண்க. கடுத்தல் - விரைதல்.
புகழேந்திப் புலவர் காலமான 14ஆம் நூற்றாண்டில், உழவன், கொல்லன், தட்டான், தச்சன், மஞ்சிகன் (முடி திருத்தாளன்) முதலிய பல்வகைத் தொழிலாளரும் சிறந்த செய்யுள் செய்யும் ஆற்றல் பெற்றிருந்தமையால், பண்டைக்காலக் கல்விப் பரப்பு அறியப்படும். ஆறலைக்கும் கள்வர் கூட அக்காலத்திற் கற்றுவல்ல பாவலரா யிருந்திருக்கின்றனர்.
இக்காலத்திற்போல் கல்வித் துறை என்னும் அரசியல் துறை அக்காலத்தில்லை. மக்கள் தனிப்பட்ட முறையில், ஆசிரியனுக்குப் பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் கற்று வந்தனர்.
உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடியிருத்தல் காண்க. (புறம். 183).
கற்பிப்போர் கணக்காயன் என்றும் ஆசிரியன் என்றும் குரு அல்லது குரவன் என்றும் மூவகையர். கணக்காயன் எழுத்தும் சிற்றிலக்கியமும் உரிச்சொல்லும் (நிகண்டும்) கணக்கும் கற்பிப் போன்; ஆசிரியன், பிற்காலத்தில் ஐந்தாக விரிக்கப்பட்ட மூவிலக்கணமும், அவற்றிற் கெடுத்துக் காட்டான பேரிலக்கியமும் கற்பிப்போன்; குரவன் சமய நூலும் பட்டாங்கு (தத்துவ) நூலும் கற்பிப்போன்.
கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பிருந்தது. வேந்தரைப் புகழ்ந்து பாடிய புலவர்க்குச் சிறந்த பரிசும் முற்றூட்டும் (சர்வ மானியமும்) அளிக்கப்பட்டன.
பாண்டியர் தலைசிறந்த புலவரை யெல்லாங் கூட்டி, தமிழ்க் கழகம் நிறுவிப் போற்றினர்.
புலவரின் பாடல்களும் நூல்களும், பாண்டியர் தமிழ்க் கழகத்தில் குற்றமற்றவையென ஒப்புக் கொள்ளப்பட்டாலொழிய, உலகில் வழங்கா. அங்ஙனம் ஒப்பம் பெறுதல் அரங்கேற்றம் எனப் பட்டது.
நாடகக் கணிகையரின் ஆடல் பாடல்களும் வேந்தர் முன்னிலை யிலேயே அரங்கேற்றப்பட்டன. அரங்கேறிய கணிகையர் தலைக் கோற் பட்டமும் ஆயிரத்தெண் கழஞ்சு பரிசமும் பெற்றனர்.
இத்தகைய அரங்கேற்ற முறையால், அக்காலத்துக் கல்வி தலை சிறந்திருந்தது. அரைப் படிப்பினரும் திரிபுணர்ச்சியரும் தலை யெடுக்க இடமில்லை, பல துறையிலும் புலமை பெற்ற பேரறிஞர், தவறாகக் கற்பித்து மக்களைக் கெடுப்பவரைக் கொடிகட்டி அறைகூவி வரவழைத்து, சொற்போர் புரிந்து தோற்கடித்துத் தண்டித்து அறிவு புகட்டுவதும் அக்கால வழக்கம்.
பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
உறழ்குறித் தெடுத்த உயர்கெழு கொடி (பட்டினப். 167-171)
கல்வி என்னும் சொல், கல் என்னும் முதனிலையினின்று தோன்றியதாகும். கல்லுதல், தோண்டுதல். மாந்தன் முதன் முதற் கற்ற கல்வி உழவுத் தொழிலாதலால், கல்வி என்னும் சொல் முதலில் உழவுத் தொழிலையே குறித்திருத்தல் வேண்டும். ஆங்கிலத்தில் நிலப் பண்பாட்டையும் உளப்பண்பாட்டையும் ஒருங்கே உணர்த்தும் culture, cultivation என்னும் இரு சொற்களும், col என்னும் ஒரே இலத்தீன் வேர்ச் சொல்லினின்று தோன்றியிருப்பது, இங்குக் கவனிக்கத் தக்கது.
14. கலைகள்
பயிற்சியாற் கற்கப்படுவன கலைகள்.
(1) இசை
குமரிக்கண்டத் தமிழர் நுண்மாண் நுழை புலத்தராயும் தலை சிறந்த நாகரிகராயும் எஃகுச் செவியராயு மிருந்ததினால், ஏழு பேரிசையும் ஐந்து சிற்றிசையுமாகிய பன்னீரிசையை (சுரத்தை) யும் கண்டு ஆயப்பாலை என்னும் முறையில் எழுபாலைப் பண்களைத் திரித்ததுமன்றி, அப் பன்னீரிசையையும் வட்டப் பாலை என்னும் முறையில் 24 ஆகவும், திரிகோணப்பாலை என்னும் முறையில் 48 ஆகவும் சதுரப்பாலை என்னும் முறையில் 96 ஆகவும், நுட்பமாய்ப் பகுத்து எல்லையற்ற இசைப் பேரின் பத்தை நுகர்ந்திருக்கின்றனர். பன்னீரிசைக்கு மேற்பட்ட நுண்ணி சையினை எடுத்துக் கூறும் நூலே இசை நுணுக்கம் போலும்! ஏழிசையும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப் பெயர் பெற்றன. சிற்றிசை ஆகணம் என்றும், குரலும் இளியுமல்லாத பேரிசை அந்தரம் என்றும் சொல்லப்பட்டன.
திரி, சதுரம் என்னும் சொற்கள் தமிழே என்பது என் வடமொழி வரலாற்றில் விளக்கப்பெறும். சதுர் என்பது, நான்கு என்னும் எண்ணுப் பொருளிலன்றி, நாற் கோணம் என்னும் வடிவுப் பொருளில் வடமொழியிலில்லை.
அகநிலை மருதம், புறநிலை மருதம், அருகியல் மருதம், பெருகியல் மருதம் என்னும் பண் வகுப்பும், கிழமை நிறைகுறை என்பனவும், தமிழரின் இசை நுணுக்கத்தைக் காட்டும்.
இக்காலத்து ஆரிய இசையறிஞர், பண்டைத் தமிழரின் அறிவு நுணுக்கத்தை ஓராது, தம்போல் அவரையுங் கருதி 96 இசைகள் பாடற்கியலாதவை என்பர்.
இசைக் கருவிகள் தோல்,துளை, நரம்பு, வெண்கலம் (கஞ்சம்) என நால்வகைப் பட்டிருந்தன.
தோற் கருவிகள் ஆடல் முழா, பாடல் முழா, பொது முழா என்றும்; அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாள் முழவு, காலை முழவு, என்றும்; மணப்பறை, பிணப்பறை என்றும்; வகுக்கப்பட்டிருந்தன. பறை என்பது தோற்கருவிப் பொதுப் பெயர். தெய்வம் உணாவே மாமரம் புட்பறை (தொல். 964).
இன்னிசைத் துளைக் கருவிகள் புல்லாங் குழல், இசைக்குழல் (நாதசுரம்), முகவீணை என்னும் ஏழிசைக் குழல்களாகவும்; ஒத்து (ஊமைக் குழல்), என்னும் ஓரிசைக் குழலாகவும்; இருவகைப் பட்டிருந்தன. தாரை, சின்னம், வாங்கா, கொம்பு, சங்கு முதலிய ஓரிசைத் துளைக் கருவிகள், ஊர்வலம் போர் முதலிய நிகழ்ச்சிகளில் ஆரவார இசைக் கருவிகளாய்ப் பயன்படுத்தப் பட்டன. மகுடி என்பது நல்ல பாம்பை மயக்குதற்கென்றே அமைக்கப்பட்ட ஏழிசைச் சிறப்பின்னிசைக் குழலாகும்.
நரப்புக் கருவிகள் ஒரு நரம்புள்ள சுரையாழிலிருந்து ஆயிரம் நரம்புகள் பெருங்கலம் (ஆதியாழ்) வரை, பல்வேறு வகைப் பட்டிருந்தன. அவற்றுள், பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்னும் நான்கும் சிறந்தவை. அவற்றுள்ளும் தலைசிறந்தது செங்கோட்டியாழ். அதுவே பின்னர் வீணையாகத் திரிந்தது. ஆயிரம் நரம்பென்பது, ஆயிரங்காற் பூச்சி என்பதிற் போல், நரம்பின் பெருந்தொகையையே குறிக்கும்.
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் என்னும் திருவாசகக் கூற்று (369) செங்கோட்டியாழ் வீணையென்று சிறப்புப் பெயர் பெற்றமையையே காட்டும். எல்லா நரப்புக்கருவிகளும் யாழே. வீணை என்னும் பெயரும் விண் என்னும் வேரினின்று பிறந்த தென்சொல்லே. அது வடமொழியில் வீணா என்று திரியும். விண்ணெனல், நரம்பு தெறித்தொலித்தல். விண்-வீணை முதுகுன்றம் (பழமலை) விருத்தாசலமென்று பெயர் மாறியதால் வேறு நகரமாகிவிடாது. அங்ஙனமே வீணையெனப்படும் செங்கோட்டியாழும் என்க.
இரண்டாம் நூற்றாண்டினதான சிலப்பதிகாரத்தில் நாரதன் வீணை நயந்தெரி பாடலும் என்றும், 7ஆம் நூற்றாண்டினதான அப்பர் தேவாரத்தில் மாசில் வீணையும் என்றும், வருதலால், வீணை 11ஆம் நூற்றாண்டில் தோன்றியதென்பது பொருந்தாது. வேத கால நாரதர் தமிழ்நாடு வந்தே இசை கற்றுப் பஞ்சபாரதீயம் என்னும் இசைத் தமிழ் நூலை இயற்றினார். பத்தாம் நூற்றாண் டினதான சீவக சிந்தாமணிக் காந்தருவதத்தை யிலம்பகத்தில், யாழென்றும் வீணையென்றும் ஒரே கருவி குறிக்கப் படுவதால், யாழ் வேறு வீணை வேறு அல்ல. இக்காலத்தில் சுரையாழும் வீணையென்றே பெயர் பெற்றிருத்தல் காண்க.
திருஞான சம்பந்தர் பாடிய யாழ்முரிப் பண்ணின் இயல்பு இன்று எவருக்கும் தெரியாமையால், யாழ்முரி வீணைக்கமையும் என்பதும் பொருந்தாது.
தாளக் கருவி வெண்கலத்தினாற் செய்யப்பட்டதினால், அது வெண்கலக் கருவியெனப்பட்டது. சல் அல்லது சல்லரை என்னும் ஓசையுடைமையால், தாளக் கருவியிற் பெரியது சல்லரியென்றும் சிறியது சாலர் என்றும் பெயர் பெற்றன.
குரல் என்பது ம என்னும் 5ஆம் இசையென்றும், ஒரு நரம்பில் ஒரேயிசை யெழுஉம் நரப்புக் கருவியே தமிழரது என்றும், கூறுவார் தமிழராயினும் இசைத் தமிழ் அடிப்படையே அறியாதார் ஆவர். `குரல் முதலேழும் என்று இளங்கோவடி களும் (சிலப். 5 : 35), முதற்றானமாகிய குரலிலே என்று புறநானூற்று உரையாசிரியரும் (புறம். 11), மூவேழ்துறையும் முறையுளிக் கழிப்பி என்று வன்பரணரும் (புறம். 152), கூறியிருத்தலையும், அவர் கவனித்திலர்.
குரல் என்னும் சொல்லே, இயல்பான குரலாகிய முதலிசையையே குறிக்கும். சுரையாழும் பெருங்கலமுமே வில்யாழ் (Harp) போல் மெட்டின்றி ஓரிசைக்கொரு நரம்பு கொண்டவை. பேரியாழ் முதலிய நரம்பு கொண்டவை. பேரியாழ் முதலிய பிற யாழெல்லாம் மெட்டுக்களோடு கூடி, ஒரே நரம்பில் பல விசை யிசைக்கக்கூடிய பண்மொழி நரம்புகள் கொண்டன வாகவே தெரிகின்றன.
பண்களை, ஏழிசையுமுள்ளவை பண் என்றும், ஆறிசையுள்ள பண்ணியல் என்றும், ஐயிசையுள்ளவை திறம் என்றும், நாலிசையுள்ளவை திறத்திறம் என்றும், நால்வகையாக வகுத்திருந்தனர். இந் நால்வகைப் பண்களும் மொத்தம் 11,991 எனக் கணிக்கப்பட்டிருந்தன.
இசையாவது, நரப்படைவால் உரைக்கப்பட்ட பதினோரா யித்துத் தொள்ளா யிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதியிசை களும்; அவையாவன: உயிருயிர்… கடனே என்னுஞ் சூத்திரத் தான் உறழ்ந்து கண்டுகொள்க என்று சிலப்பதிகார அருஞ் சொல்லுரைகாரர் (பக். 64) கூறியிருத்தல் காண்க. பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி என்பன நாற்பெரும் பண்கள். இவற்றுள் ஒவ்வொன்றும் பல திறங்களாகவும் ஒவ்வொரு திறமும் பலவகைகளாகவும் பகுக்கப்பட்டிருந்தன.
ஏழிசையும் சேர்ந்த ஒரு வரிசை அல்லது கோவை நிலையெனப் படும். சிறந்த பாடகரின் தொண்டையில் கீழும் இடையும் மேலுமாக முந்நிலையிருப்பதால், அவற்றிற்கேற்ப நால்வகைச் சிறப்பியாழும் நரம்பும் மெட்டும் அமைக்கப்பெற்றன. முந் நிலையும், முறையே மெலிவு, சமன், வலிவு எனப் பெயர் பெற்றன. நால்வகை யாழிலும் மெட்டுத் தொகை வேறு பட்டிருந்ததாகத் தெரிகின்றது.
பண்மொழி நரம்பு ஏழும் ஒற்று நரம்பு மூன்றும் ஆர்ப்பு நரம்பு பதினொன்றுமாக, 21 நரம்புகள் பேரியாழிலும்; பண்மொழி நரம்பு இரண்டு குறைந்து 19 நரம்புகள் மகரயாழிலும்; ஆர்ப்பு நரம்பு ஐந்து குறைந்து 14 நரம்புகள் சகோடயாழிலும்; ஆர்ப்பு நரம்பு அடியோடு இல்லாதும் பண்மொழியிரண்டு குறைந்தும் இற்றை வீணையிற்போல் 7 நரம்புகள் செங்கோட்டி யாழிலும்; இருந்ததாகக் கருதலாம். ஒன்பது நரம்புள்ள முண்டகயாழ் 4 பண்மொழி நரம்பும் 3 ஒற்று நரம்பும் 2 ஆர்ப்பு நரம்பும் கொண்டது போலும்!
நரப்புச் சித்தார் என்னும் முகமதியர் நரப்பிசைக் கருவியில், இன்றும் 11 ஆர்ப்பு நரம்புகள் கட்டப்பெறுதல் காண்க. அவற்றி னால் உண்டாகும் அதிர்வு இசையினிமையைக் கெடுத்ததினால், அவற்றை வரவரக் குறைத்து வந்து இறுதியில் அடியோடு நீக்கி விட்டனர். இசையின்ப வுணர்ச்சி பெருகப் பெருக, யாழ்கள் திருந்தி வந்திருக்கின்றன. வரவரத் திருந்துதலே யன்றித் திருந் தாமை இயற்கையன்று. அநாகரிக மாந்தர் இசைக் கருவிகளின் ஓசை மிகுதியையும், நாகரிக மக்கள் அவற்றின் இனிமை மிகுதியை யும், இன்றும் விரும்புதல் இயல்பாயிருத்தல் காண்க.
யாழ்ப்பத்தரின் மூடியாகிய போர்வை, முன்பு தோலாயிருந்து பின்பு பாதுகாப்பிற்காக மரமாக மாற்றப் பெற்றது. யாழின் அமைப்பை அறிய விரும்புவார், தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் மகனார் வரகுண பாண்டியனார் ஆராய்ந்தெழுதிய பாணர் கைவழி என்னும் நூலைப் பார்க்க. அருட்டிரு விபுலானந்த அடிகளின் யாழ்நூல் அடிப்படையில் தவறியதால் முதற் கோணல் முற்றுங்கோணலாய்ப் போயிற்று.
உலகிற் சிறந்த இசை இந்திய இசையே. அதிற் சிறந்தது தமிழிசை. அதையே இன்று உழையிசையடிப்படையில் தாய்ப் பண்களை யும் கிளைப் பண்களையும் வகுத்தும், பழந்தமிழ்க் குறியீடு களையும் பண்ணுப்பெயர்களையும் வடசொல்லாக மாற்றியும், கருநாடக சங்கீதம் எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர். கேள்வியைச் சுருதி யென்றும், நிலையை தாய் என்றும், மொழிபெயர்த்திருத்தல் காண்க. கருநாடக சங்கீதத்திற்கு இலக்கணம் வகுத்த வேங்கடமகியும் (17ஆம் நூற்). அதற்கு இலக்கியமாகத் தெலுங்கு கீர்த்தனைகள் பாடிய தியாகராசரும் (18ஆம் நூற்.) தமிழ் நாட்டில் வாழ்ந்தவரே.
கொட்டு, அசை, தூக்கு, அளவு என்னும் நாலுறுப்புக்களை யுடைய தாளத்தை, அகக் கூத்திற்குரிய பதினொரு பாணிகளும் புறக்கூத்திற்குரிய நாற்பத்தொரு தாளமுமாக, ஐம்பத்திருவகைப் படுத்தியிருந்தனர்.
ஏழிசைக்குரிய எழுத்துக்கள் முதற்காலத்தில் ஏழ் உயிர் நெடில் களாயிருந்தன. அவை நிறவாளத்தி என்னும் சிட்டையிசைக்கு ஏற்காமையால் ச ரி க ம ப த நி என்னும் எழுத்துக்கள் நாளடைவிற் கொள்ளப்பட்டன. இவை ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் வடசொற்களின் முதலெழுத்துக்களாகச் சொல்லப் படுகின்றன. இக் கொள்கை மத்தியமம் பஞ்சமம் என்னும் இரண்டிற்கே ஏற்கும். சமன் பட்டடை என்னும் இரு தென் சொற்களின் முத லெழுத்துக்களே ச ப என்பது, சிலர் கருத்து. இவையிரண்டுமன்றி, இசையின்பத்திற்கேற்ற ஏழெழுத்துக்கள் நாளடைவிற் பட்டறிவி னின்று தெரிந்துகொள்ளப்பட்டன என்பதே, பெரும்பால் தமிழிசைவாணர் கருத்தாம்.
பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை, இசைப்பாணரும் யாழ்ப் பாணரும் குழற்பாணரும் மண்டைப் பாணருமான நால்வகைப் பாணரே பெரும்பாலும் தமிழ் நாட்டில் இசைவாணராயிருந்து தமிழிசையைப் போற்றி வந்தனர். பாண் சேரியில் பாட்டுப் பாடுகிறதா? என்னும் பழமொழியும், திருமுறைகண்ட சோழன் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த ஒரு பெண்ணைக் கொண்டு தேவாரத்திற்கு இசை வகுப்பித்தமையும், இதை வலியுறுத்தும். ஆரியக் குலப்பிரிவினை ஏற்பட்டபின், பாணர் தீண்டாதவராகித் தம் தொல்வரவுப் பாண்தொழிலை இழந்தனர். எழூஉம் இசைத் தொகையினின்று தோன்றிய ஏழ் என்னும் எண்ணுப் பெயரும்,
தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப.
என்னும் தொல்காப்பிய நூற்பாவும் (அகத். 18), தமிழிசையின் தொன்மையை உணர்த்தும். இனி இசைத் தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் தேவ விருடி நாரதன் செய்த பஞ்ச பாரதீய முதலாவுள்ள தொன்னூல்களு மிறந்தன என்னும் அடியார்க்கு நல்லார் கூற்றால், வடமொழியிசை நூல்கட் கெல்லாம் தமிழ்நூல்களே முதனூலென அறிக.
அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்.
என்னும் தொல்காப்பிய நூற்பாவால் (33), தமிழிசையின் யாழ்ச் சிறப்பு உணரப்படும்.
(2) நாடகம்
நாடகம் என்பது தென்சொல்லே. நள்ளுதல் = பொருந்துதல், ஒத்தல். நள் - நளி. நளிய என்பது ஓர் உவமவுருபு. நளிதல் ஒத்தல். நளி - நடி. ஒ.நோ : களிறு - கடிறு. நடித்தல் என்பது, இன்னொரு வனைப் போல் அல்லது இல்லாததை உள்ளது போலச் செய்து காட்டுதல்.
முத்தமிழ் தொன்றுதொட்டு இயலிசை நாடகம் என்றே வழங்கும்.
நாடகக் கலை கூத்து, நடனம், நாடகம் என முத்திறப்படும்.
குதித்தாடுவது கூத்து. அது வேத்தியல், பொதுவியல்; உலகியல், தேவியல்; வசைக் கூத்து, புகழ்க்கூத்து; வரிக்கூத்து வரியமைதிக் கூத்து (வரிச்சாந்திக் கூத்து; அமைதிக் கூத்து). (சாந்திக் கூத்து), வேடிக்கைக் கூத்து (விநோதக் கூத்து); அகக் கூத்து, புறக் கூத்து; விளையாட்டுக் கூத்து, வினைக் கூத்து; வெற்றிக் கூத்து, தோல்விக் கூத்து; எனப் பல்வேறு வகையில் இவ்விருவகைப்படும்.
நடனம் அல்லது நடம் என்பது, அழகுற ஆடுவது. அது நூற்றெட்டு உடற்கரணங் களோடும் கைகால் கண்வாய் முதலிய உறுப்புக்களின் தொழில்களோடும் கூடியது. கைவினைகள் எழிற்கை தொழிற்கை, பொருட்கை என முத்திறப்பட்டு, பிண்டி அல்லது இணையா வினைக்கை யெனப்படும் ஒற்றைக்கை வண்ணம் முப்பத்து மூன்றும், பிணையல் அல்லது இணைக்கை யெனப்படும் இரட்டைக்கை வண்ணம் பதினைந்தும், கொண்டனவாகும்.
தமிழ் நடனம் இன்று பரத நாட்டியம் என்று வழங்குகின்றது. பரத சாத்திரம் வடமொழியில் இயற்றப்பட்டது. கி.மு. 4ஆம் நூற்றாண்டாகும். அதற்கும் முந்தியது தமிழ்ப் பரதமே யென்பதை, நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்திய முதலா வுள்ள தொன்னூல்களுமிறந்தன, என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரவுரைப் பாயிரத்திற் கூறியிருப்பதால் அறிந்து கொள்க.
நாடகம் என்பது கதை தழுவிவரும் கூத்து. அது பொருள், கதை (யோனி), தலைமை (விருத்தி), நிலை (சந்தி), சுவை, வகுப்பு (சாதி), குறிப்பு, விறல் (சத்துவம்), நளிநயம் (அபிநயம்), சொல், சொல் வகை, வண்ணம், வரி, சேதம் என்னும் பதினான் குறுப்புக் களையுடையது.
நாடக அரங்கு நல்ல கெட்டி நிலத்தில், ஈரடி நீளமுள்ள கோலால், எண்கோல் நீளமும் எழுகோல் அகலமும் ஒருகோல் உயரமும் உள்ளதாக அமைக்கப்பட்டு, மேலே முகடும், ஒரு முகவெழினி பொருமுக வெழினி கரந்துவர லெழினி என்னும் மூவகைத் திரை களும், புகுவாயில் புறப்படுவாயில் (Exit) என்னும் இருவாயில் களும், உடையதாயிருந்தது.
தமிழ் நாடகமெல்லாம் இசைப்பாட்டுள்ளவையே (Operas).
நாடகம் என்பது நாட்டக்க என்றும், அரங்கு அரங்கம் என்பன ரங்க என்றும், வடமொழியில் திரியும்.
அர் - அரங்கு = அறை, அரங்கு - அரங்கம் = நாடக மேடை, நாடகசாலை, விளையாடிடம், படைக்கலம் பயிலுமிடம், போர்க்களம், ஆற்றிடைக் குறை, திருவரங்கம்.
(3) மடைநூல்
மடை = சோறு, உணவு. மடைநூல் சமையல் நூல்.
கந்துகக் கருத்தும் மடைநூற் செய்தியும் (மணி. 2 : 22).
என்பது தமிழில் மடை நூலிருந்தமையைத் தெரிவிக்கும்.
காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் தன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட்
பனுவலின் வழாஅப் பல்வே றடிசில்
என்று சிறுபாணாற்றுப்படை (238 - 41) கூறும் வீமன் மடைநூல், தமிழ் மடை நூலைத் தழுவியதேயென்பது அதன் பின்மை யாலும், அவன் பாண்டியர் குடியான திங்கள் மரபினனாயிருந் தமையாலும், அறியப்படும். நளனும் திங்கள் மரபினனே.
(4) மருத்துவம்
தமிழ் மருத்துவக் கலை சித்தரால் வளர்க்கப் பெற்றது. அதனால் அது சித்த மருத்துவம் எனப்பெறும். கட்டிகளையும் பிளவை களையும் கரைப்பதும், ஒடிந்த எலும்பை ஒட்டவைப் பதும், முதியவரை இளைஞராக்குவதும், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்விப்பதும், சித்த மருத்துவம்.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று (குறள். 941).
ஆதலால், ஊதை (வாதம்) பித்தம் கோழை என்னும் முந் நாடியையும் நாடி அதனால், இற்றைக் கருவிகளைக் கொண்டு தலைசிறந்த தேர்ச்சி பெற்ற மேலை மருத்துவரும் கண்டுபிடிக்க முடியாத.
நோய்நாடி நோய்முதல் நாடி யதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் (குறள். 648).
சித்த மருத்துவனின் தெய்வத்திறமாம்.
நுள் - நள் - நாளம் - நாளி - நாழி - நாடி.
நாடி பார்க்கும் திறமில்லாதான் மருந்தனேயன்றி மருத்துவனா கான். இந்திய மருத்துவம் சித்த மருத்துவமே. ஆயுர்வேதம் என்னும் ஆரிய மருத்துவம், சித்த மருத்துவத்தின் வடநாட்டு வகையே. சேரவேந்தர் இருந்தவரை சித்த மருத்துவ மாயிருந்த மலையாள மருத்துவம், இன்று ஆரிய மருத்துவமாய் மாறியிருத் தல் காண்க. ஒரே நோய்க்குப் பல மருந்துகள் உள. மருந்துகள் இடந்தோறும் வேறுபடும். ஆயின், மருத்துவமுறை ஒன்றே.
ஆரிய மருத்துவம் வேர்களை மிகுதியாகக் கொண்ட தென்றும், சித்த மருத்துவம் செந்தூரத்தை மிகுதியாகக் கொண்ட தென்றும், சிலர் கூறுவர். அவர் அறியார். வேர்பார், தழைபார், மெல்ல மெல்லச் செந்தூரச் சுண்ணம் பார். என்பது சித்த மருத்துவப் பழமொழியாகும். ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை மருத்துவன். என்பது ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை மருத்துவன் என்றும் வழங்கும். சிறுபஞ்சமூலம், பெரும்பஞ்ச மூலம் என்னும் ஈரைந்து வேர்களும், தமிழ் நாட்டிலேயே விளையும் தமிழ் மருந்துச் சரக்காம். மருந்து என்னும் பெயரே மணமுள்ள வேரையும் தழையையும்தான் குறிக்கும். மரு = மணம். மரு - மருந்து.
சித்த மருத்துவத்தின் சிறந்த மருந்து, மூவகை உப்புச் சேர்ந்த முப்பு என்பதாகும். அது இரும்பு முதலியவற்றைப் பொன்னாக்கவும் ஓரிலக்கம் ஆண்டுகள் உயிர்வாழச் செய்யவும் வல்லதென, அதன் ஆற்றலை உயர்வுநவிற்சியாகக் கூறுவர்.
நெடு நாளிருந்த பேரும், நிலையாகவேயினும் காயகற்பந் தேடி நெஞ்சு புண்ணாவர் என்று தாயுமானவர் கூறியது, முப்பை நோக்கித்தான் போலும்!
அறுவை (Surgery) முறையும் சித்தமருத்துவத்திலிருந்தமை
மீன்தேர் கொட்பிற் பனிக்கயம் மூழ்கிச்
சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்
அம்புசேர் உடம்பினர் (பதிற். 42 : 2-5).
(கயம் மூழ்கிச் சிரல் பெயர்ந்தன்ன நெடுவெள்ளூசி = குளத்திலே முழுகிச் சிச்சிலிக் குருவி எழுகின்ற காலத்து அதன் வாயலகைப் போல, புண்களை நூலால்தைக்கும் போது அப்புண்ணின் அரத்தத்தில் மறைந்தெழுகின்ற நீண்ட வெள்ளையான ஊசி. நெடுவசி = நீண்ட ஊசித் தழும்பு. வடு = காய்ப்பு).
என்னும் பதிற்றுப் பத்தடிகளாலும்,
உடலிடைத் தோன்றிற் றொன்றை யறுத்ததன் உதிர முற்றிச்
சுடலுறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர் (கம்பரா.
கும்ப. 146)
ஆரார் தலைவணங்கார் ஆரார்தாம் கையெடார்
ஆரார்தாம் சத்திரத்தில் ஆறாதார் - சீராரும்
தென்புலியூர் மேவும் சிவனருள்சேர் அம்பட்டத்
தம்பிபுகான் வாசலிலே தான்.
என்னும் கம்பர் பாட்டுக்களாலும் அறியப்படும்.
மருத்துவத்தின் இன்றியமையாமை யறிந்தே, பண்டைக்காலத்தில் ஊர்மருந்து வனுக்கு இறையிலி நிலம் மானியமாக விடப்பட்டது. அது மருத்துவப்பேறு எனப்பட்டது. (S.I.1,ii. 43).
உலகிற் சிறந்த சித்த மருத்துவம், ஊக்குவாரின்றி நாளுக்கு நாள் மறைந்தும் குறைந்தும் வருகின்றது.
குழந்தை மருத்துவம், பேறுகால மருத்துவம், அரசமருத்துவம் (விலக்கமற்றது), நஞ்சு மருத்துவம், மாட்டு மருத்துவம் என்பன, சித்த மருத்துவத்தின் சிறப்புக் கூறுகளாகும். விலக்கம் பத்தியம். (பற்றியம்)
நீர், கருக்கு (கஷாயம்) குழம்பு, நெய் அல்லது எண்ணெய் (கிருதம்), களிம்பு, மெழுகு (லேகியம்), குளிகை, நீறு (பபம்) முதலிய பல வடிவிலும் சித்த மருந்துகள் உண்டு. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு புறத்தை உரசும் மாத்திரைக் கட்டிகளும் உள.
குளிகை - குளிகா (வ.) செந்தூள் - செந்தூளம் - செந்தூரம் - சிந்தூரம் - ஸிந்தூர (வ).
மருத்துவனுக்குப் பண்டிதன் என்றும், மருத்துவத்திற்குப் பண்டிதம் என்றும், பெயருண்டு. மருந்து கொடுப்பவன் மருத்துவன்; பல பொருள்களை அறிந்தவன் பண்டிதன். பண்டிதன் என்பது பண்டுவன் என்றும், பண்டிதம் என்பது பண்டுவம் என்றும், மருவும்.
பண்டுவம் (medical treatment) மருத்துவப் பண்டுவம் என்றும் நம்பிக்கைப் பண்டுவம் (faith cure) என்றும், இருதிறப்படும். பாம்புக்கடி யுண்டவனுக்குக் கடிவாயில் பாம்புணிக் கருங்கல் வைப்பதும், எருக்கம் பூவைத் தின்னக் கொடுப்பதும், மூக்கிற் பச்சிலைச்சாறு பிழிவதும், மருத்துவப் பண்டுவம்; மந்திரத்தினால் நஞ்சை யிறக்குவது நம்பிக்கைப் பண்டுவம்.
நம்பிக்கைப் பண்டுவம், இறும்பூது (miracle), நேர்த்திக்கடன்; குளிசம் (amulet), மணி, பார்வை, மந்திரம், ஊழ்கம் (தியானம்), பாணிப்பு (பாவகம்), முட்டி, அரசக் காட்சி முதலியனவாகப் பலவகைப்படும்.
இயேசு பெருமான் தொழு (குட்ட) நோயாளியைத் தொட்டு நலப்படுத்தியதும், திருஞான சம்பந்தர் கூன்பாண்டியன் சுரநோயைத் தீர்த்ததும், இறும்பூது. வழிபடு தெய்வத்தைநோக்கி, ஒன்று படைப்பதாக அல்லது செய்வதாக நேர்ந்துகொள்வது நேர்த்திக் கடன். மந்திர எழுத்துள்ள தகட்டைக் கையிற் கட்டிக் கொள்வது குளிசம். உருத்திராக்கம், துழாய் (துளசி) மணி, முத்துமாலை முதலிய அணிகள் மணியாகும். மந்திரிகன் தேட்கொட்டுப் பட்டவனை அல்லது பாம்புக்கடியுண்ட வனைப் பார்த்துக் குழையடித்து மந்திரிப்பது பார்வை. நஞ்சேறி யவனே மந்திரத்தை ஓதுவது மந்திரம். பாம்புக்கடி யுண்டவன் கலுழனை (கருடனை) உள்ளுவது ஊழ்கம். அவன் தன்னைக் கலுழனாகவே கருதுவது பாணிப்பு.
திடங்கொள் மந்திரம் தியானபா வகநிலை முட்டி (பெரியபு. 34 : 1060).
மணிமந்திரமாதியால் வேண்டு சித்திகள் (தாயுமா. பரிபூ.9).
சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும் பொறையைக் கண்டவுடன், நரிவெரூஉத்தலையார் நல்லுடம்பு பெற்றதாக, 5ஆம் புறப்பாட்டின் கொளுக் கூறும். இது, கண்ட மாலையை (scroula) அரசன் தொடின் குணமாகுமென்று கருதி அதற்கு அரசன் தீங்கு (king’s evil) என்று ஆங்கிலேயர் பெய ரிட்டதனொடு ஒப்புநோக்கத் தக்கது.
(5) மணிநோட்டம்
காக பாதமும் களங்கமும் விந்துவும்
ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா
நூலவர் நொடித்த நுழைநுண் கோடி
நால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும்
ஏகையும் மாலையும் இருளொடு துறந்த
பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும்
பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்
விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்
பூச உருவின் பொலந்தெளித் தனையவும்
தீதறு கதிரொளித் தெண்மட் டுருவவும்
இருள்தெளித் தனையவும் இருவே றுருவவும்
ஒருமைத் தோற்றத் தைவேறு வனப்பின்
இலங்குநீர் விடூஉம் நலங்கெழு மணிகளும்
காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும்
தோற்றிய குற்றம் துகளறத் துணிந்தவும்
சந்திர குருவே அங்கா ரகனென
வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்
கருப்பத் துளையவும் கல்லிடை முடங்கலும்
திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும்
என்னும் சிலப்பதிகாரப் பகுதி (14:180-198), மணிகளின் குணங் குற்றங்களை எடுத்துக்கூறுதல் காண்க.
6. ஓவியம்
ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும்
என்பது (மணி 2 : 32), ஓவியநூலைத் தெரிவிக்கும்.
மாடக்குச் சித்திரமும் என்னும் நன்னூற் பொதுப்பாயிரத் தொடரும், சுவரை வைத்துக்கொண்டன்றோ சித்திரமெழுத வேண்டும்? என்னும் பழமொழியும், மாடச்சுவர்களிலெல்லாம் அக்காலத்தில் ஓவியம் வரையப் பெற்றிருந்தமையை அறிவிக்கும்.
வம்ப மாக்கள் கம்பலை மூதூர்ச்
சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்
மையறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
கண்கவர் ஓவியம் கண்டுநிற் குநரும்
என்று மணிமேகலை (3 : 126 - 131) கூறுதல் காண்க.
ஒருவன் ஓர் அரசனது அவைக்களம் சென்று அங்கு அரசன் தன் அமைச்சருடன் அமர்ந்திருந்ததைக் கண்டு, தான் கொண்டுவந்த காணிக்கையை நீட்ட அரசன் அதை வாங்காமையால் நெருங்கிச் சென்று அது ஓர் ஓவியமாயிருக்கக் கண்டானென்று, ஒரு கதை வழங்கி வருகின்றது. அத்தகைய ஓவியத் திறவோர் அக்காலத் திருந்தனர்.
ஓவியக்காரரைக் கண்ணுள் வினைஞர் என்று சிலப்பதிகாரம் கூறும் (5 : 30). ஆடை அணிகலம் கட்டிடம் முதலிய எல்லாப் பொருளும் ஓவிய வேலைப்பாடுள்ளன வாயிருந்தன.
(7) உருவம் (SCULPTURE)
மண்ணால் உருவஞ் செய்பவர் மண்ணீட்டாளர் (மணி. 28 : 37)
மரத்தாலும் கல்லாலும் பொன்வகையாலும் உருவஞ்செய்பவர்
கம்மியர்; சாந்தினாற் செய்பவர் கொத்தர்.
கம்மியநூல் தொல்வரம் பெல்லை கண்டு (திருவிளை, திருநகரங். 38).
கோயில் தேரும் கோபுரமும் உருவங்கள் நிறைந்தவை. பாவை யுருவமும் பூதப் படிமையும் புகாரிலும் பிற நகர்களிலும் இருந்தன.
(8) கட்டிடம்
மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் மணி மண்டபங் களும், மூவேந்தர் தலைநகர்களிலும் கோநகர்களிலும் மிகுந் திருந்தன.
மாளிகை, கோபுரம், மணி, மண்டபம் என்னும் நாற்சொல்லும் தென்சொல்லே.
பகைவர் வரவு காண்டற்குக் கோபுரம் சிறந்த அமைப்பென்று கண்டபின், நகரைச் சூழ்ந்த கோட்டை மதிலிலும், வாயிலிற் பெரிதாகவும் மற்ற இடங்களிற் சிறியனவாகவும் கோபுரங்கள் கட்டப்பட்டன. சிறியன கொத்தளம் எனப்பட்டன.
மதுரை நகரைச் சூழ்ந்த மதிலின் நாற்புறத்திலும், வாயிலும் மாடமும் வானளாவிய கோபுரமும் இருந்தன. நான்கு வாயில் மாடங்கள் இருந்ததினால், மதுரை நான்மாடக்கூடல் எனப்பட்டது. கூடல் என்பது தமிழ்க் கழகம். அது பின்பு இடவனாகு பெயராய் மதுரையைக் குறித்தது. இதையறியாது, தொல்கதைஞர் (புராணிகர்) ஒரு கதையைக் கட்டிவிட்டனர்.
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே (புறம். 58 : 13)
தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை (சிறுபாண். 66-7).
இனி, கூடல்நகர் என்பது நாளடைவில் கூடல் எனக் குறுகிற்று எனினுமாம்.
மதுரை நகர்வாயில், இடைவிடாது ஒழுகிய வைகையாறு போல் அகன்றும், இடையறாத மக்கள் போக்குவரத்து மிகுந்தும், இருந்தது.
மழையாடு மலையின் நிவந்த மாடமொடு
வையை யன்ன வழக்குடை வாயில்
என்று மதுரைக்காஞ்சி (355-6) கூறுதல் காண்க.
கோபுர மன்றி வாசலை மாடமாகவுஞ் சமைத்தலின், மாடமென்றார். என்னும் நச்சினார்க்கினியர் சிறப்புரை இங்குக் கவனிக்கத் தக்கது.
அரசனுக்குரிய சிறப்புக்களெல்லாம் இறைவனுக்கும் செய்யப் பெற்றதினால், கோயில் தேர் மிகப் பெரிதாய்ச் செய்யப்பெற்றது போல், கோயில் மதிற் கோபுரமும் மிகப்பெரிய எழுநிலை வானளாவியாகக் கட்டப்பெற்றது. அதன் அமைப்பும் தேரை ஒத்ததாகும். அதன் எழுநிலைகளும் தேரின் எழுதட்டுக்களைப் போன்றவை. எழுநிலை அல்லது எழுதட்டுக் கருத்து ஏழுலகம் என்னும் கருத்தினின்று தோன்றியது. ஏழுலகக் கருத்தும் எழுதீவுக் கருத்தினின்று தோன்றியதாகும்.
ஏழுடையான் பொழில் (திருக்கோவை, 7)
தச்சுக் கலையில் கோயில்தேர்போல், கட்டிடக் கலையில் கோயிற்கோபுரம் பண்டைத் தமிழரின் அறிவையும் ஆற்றலையும் சிறப்பக் காட்டும். தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கோபுரத் திற்கு, 10 கல் தொலைவிலுள்ள சாரப்பள்ளம் என்னும் இடத்தி லிருந்து சாரம் கட்டியதாகவும், கடைகாலில் ஒழுகிய நீர்த்துளை களை அடைத்தற்குக் குறவை மீன்களைப் பிடித்து விட்ட தாகவும், கூறுவர்.
தண்புனல் பரந்த பூசல் மண்மறுத்து
மீனிற் செறுக்கும் யாணர்ப்
பயன்திகழ் வைப்பிற்பிறர் அகன்றலை நாடே
என்பது (புறம் : 7) தஞ்சை நிகழ்ச்சியை ஒருவாறு நினைவுறுத்தும்.
மணி = 1. ஒளிக்கல், 2. நீல ஒளிக்கல்.
இவ்விரு பொருள்களுள், முதலாவது மண்ணுதல் என்னும் வினையினின்றும், இரண்டாவது மள்குதல் என்னும் வினையி னின்றும், தோன்றியவையாகும். அழகு என்பது இவ்விரண்டி னின்றும் தோன்றிய வழிப்பொருள்.
மண்ணுதல் கழுவுதல். மண்ணப்பட்டது மண்ணி. மண்ணி - மணி.
மண்ணி யறிப மணிநலம் (நான்மணி. 5).
மண்ணுறு மணியும் (பெருங். 2-5 : 123)
மண்டபங்களுள் நூற்றுக்கால் மண்டபங்களும் ஆயிரக்கால் மண்டபங்களும் இருந்தன.
மாடங்களின் முகப்பில் புலியுருவம் அமைக்கப்பட்டும், புலித்தொடர் என்னும் சங்கிலி தொங்கவிடப்பட்டும், இருந்தன.
புலிமுக மாட மலிர வேறி (பெருங். இலாவாண, 9, 69)
புலித்தொடர் விட்ட புனைமாண் நல்லில் (முல்லைப். 62)
மாட மதுரை (புறம். 32), மாடமலி மறுகிற் கூடல் (முருகு. 71), மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் (மதுரை. 429), நான் மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் (கலித். 92), மதிமலி புரிசை மாடக் கூடல் (திருமுகப் பரசுரம்).
கோநகர்களில் அங்கண நீரைக் கண்ணிற் படாமற் செலுத்து தற்கு, கரந்துபடை என்னும் புதைசாலகம் இருந்தது. அது தெரு நடுவிற் கட்டப்பட்டு யானைக் கூட்டம் மேற்செல்லும்படி, கருங்கல்லால் மூடப்பட்டிருந்தது. அதிற்சென்ற நீர் யானைத் துதிக்கை போன்ற தூம்பின் வாயிலாய் அகழியில் விழுந்தது.
மாடங்கள் மதுரையில் மிகுந்தும் சிறந்தும் இருந்ததாகத் தெரிகின்றது.
பெருங்கை யானை யினநிரை பெயரும்
சுருங்கை வீதி (சிலப். 14 : 64 -5).
கோநகர்களில், ஊரைச் சுற்றிக் கோட்டை மதில் இருந்தது. அது புரிசை எனப்பட்டது. புரிதல் வளைதல். புரிசையுள்ள நகர்ப்பெயர்களே முதலில் புரி என்னும் ஈறு பெற்றன. கோட்டை என்பதும் வளைதற் பொருளதே. கோடுதல் வளைதல்.
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.
என்னும் திருக்குறட்கேற்ப, (743) மதிலரண் மதில், எயில், இஞ்சி, சோ என நால்வகைப்பட்டிருந்தது.
மிக உயரமானது மதில்; ஞாயில் என்னும் ஏவறைகளையுடையது எயில்; செம்பை யுருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லாற் கட்டியது இஞ்சி; அரிய பொறிகளை யுடையது சோ.
வானுட்கும் வடிநீள மதில் (புறம். 18)
எய் இல் (ஏவறைகள்) உள்ளது எயில்.
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை (புறம். 201)
செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வம் தேறி (கம்பரா.
கும்ப. 160).
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த (சிலப். 17 : 35).
சோ என்பது அரண்வகையே யன்றிச் சோணிதபுரம் என்னும் நகர்ப் பெயரன்று.
பாம்புரி, கொத்தளம் (bastion), வாயிற் கோபுரம் பதணம் (rampart), ஞாயில் முதலிய பல வுறுப்புக்களை யுடையது கோட்டை மதில். சில நகர்களில் ஏழெயில்கள் இருந்தன. புறமதிலைச் சுற்றி அகழி இருந்தது.
கோநகர்களைப் பகையரசர் முற்றுகையிட்ட காலத்தில் மறைந்தோடித் தப்பிக் கொள்ள, நெடுந்தொலைவிற்குச் சுரங்கம் அல்லது சுருங்கையென்னும் கீழ் நிலவழிகளும் இருந்தன.
கோட்டை - கோட்ட (வ.) L. castrum E. caster, chester (suffixes of place names)
òu« - òu (t)., OE. burg, burh OS. burg, OHG burug ON. burg, Goth. baurgs, E. borough, Sc. burgh. òÇ - òß (t.), E. bury (sfx. of place - name. பாழி = நகர் Gk. polis.
(9) பொறிவினை (MACHINERY)
வேந்தன் தன் உரிமைச் சுற்றத்தோடு இன்பமாய் நீராடுவதற்கு, வேண்டும்போது நீரை நிரப்பவும் வடிக்கவும் நீர்ப்பொறியமைந்த குளம் இருந்தது. அது இலவந்திகை யெனப்பட்டது.
இலவந் திகையின் எயிற்புறம் போகி (சிலப். 10 : 31)
நிறைக்குறின் நிறைத்துப் போக்குறின் போக்கும்
பொறிப்படை யமைந்த பொங்கில வந்திகை (பெருங். 1 : 40; 311-2)
முழுமுதலரணம் (புறத். 10) என்றும், வருபகை பேணார் ஆரெயில் (புறத். 12) என்றும், தொல்காப்பியம் கூறுவது, மிளை யும் (காவற்காடும்) அகழியும் சூழ்ந்து பல்வேறு பொறிகளைக் கொண்ட சோவரணையே.
(10) பொன்நூல்
சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம்
சாம்பூ நதமென ஓங்கிய கொள்கை
என்பது (சிலப். 14 : 201-2), பொன்னின் வகைகளைக் காட்டும்.
ஜாத ரூப்ப என்னும் வடசொல் பொலிந்த வடிவம் என்றும், ஹாட்டக என்னும் வடசொல் ஒளிர்வது என்றும் பொருள்படும். இவற்றைப் பொன் என்றும் தங்கம் என்றும் சொல்லலாம். ஜம்பூநத என்னும் வடசொல், பொன் (மேரு) மலைக்கு வடக்கில் நாவற் பழச்சாறு பெருகியோடுவதாய்க் கருதப்பட்ட ஆற்றின் பெயர். இது ஆரியத் தொல்கதைக் கொள்கை. இதன்படி, சாம்பூ நதத்தை நாவலாறை என்று சொல்லல் வேண்டும்.
பொன் என்பது, பொன் போன்ற பிற கனியப்பொருள்களையுங் குறிக்கும்.
வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் முதலிய பிற கனியங்களும் பண்டைத் தமிழர்க்குத் தெரிந்திருந்தன. ஈயம் என்பது இளகுவது என்னும் பொருளது.
ஈயம் - ஸீஸ (வ.) இள் - (இய்) - ஈ - ஈயம்.
ஒ. நோ : எள் - எய். எய்த்தல் இளைத்தல்.
வெண்கலம் தமிழர், முதன் முதல் அமைத்த கலவைக் கனியமாகத் தோன்றுகின்றது. அதன் ஒரு சொற்பெயர் உறை, முறி என்பன.
(11) இதள் மாற்றியம்
சித்தர் இதளினால் (பாதரசத்தால்) தாழ்ந்த கனியங்களை (உலோகங்களை) வெள்ளியாகவும் சிறப்பாகப் பொன்னாகவும் மாற்றினதாக, மருத்துவ நூல்கள் கூறும். அப் பொன்னாக்கம் வடமொழியில் (இ)ரசவாதம் எனப்படும். அக்கலையைக் குறிக்கும் alchemy என்னும் சொல்லிலிருந்து chemistry என்னும் சொல் தோன்றியிருத்தலால், கெமிய நூலை ரஸாயனம் என்றனர். இம்முறையில் அதைத் தமிழில் இதளியம் எனலாம்.
பொன்னாக்கம் எகிபது (Egypt) நாட்டில் வழங்கியதால், அக்கலை அரபியில் அல்கிமிய (al-kimia) எனப்பட்டதென்றும், அல் என்பது அந்த என்று பொருள்படும் சுட்டுச் சொல் லென்றும், கிமிய என்பது எகிபது நாட்டின் பெயரென்றும், எருதந்துறை ஆங்கிலச் சுருக்க அகரமுதலி கூறும். (The Concise Oxford Dictionary of Current English).
அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர் என்று தாயுமானவர் பாடுவதால் (பரிபூர. 10), இதள் மாற்றியக் கலை தமிழ் நாட்டில் இருந்தமை அறியப்படும்.
பொதுவாக, இது சித்தர் கலையெனப்படும். இராமலிங்க அடிகள் சித்த நிலையடைந்திருந்ததினால் இக்கலையை அறிந்திருந்தனர்.
(12) மற நூல்
தனிமக்கள் போர், படைமக்கள் போர் எனப் போர் இரு திறப்படும். சிலம்பம், மற்போர், குத்துச் சண்டை, வாட்போர் முதலியன தனி மக்கள் போராம்.
முக்காவல் நாட்டு ஆமூர்மல்லனைப் பொருது கொன்ற கோப்பெருநற்கிள்ளி, ஒரு போரவை நடத்தி வந்தான்; அதனால், போரவைக் கோப்பெரு நற்கிள்ளி எனப்பட்டான். அவன் நடத்தி வந்தது மற்பயிற்சிக் களரி. மற்போரில், சில உயிர்நாடியான நரம்புகளைத் தொட்டு, எதிரியை வீழ்த்திக் கொல்லவும், வீழ்ந்தவனை மூன்றே முக்கால் நாழிகைக்குள் எழச்செய்யவும், சில மருமப் பிடிகள் உள.
மற்களரி, விற்களரி, வாட்களரி எனப் போரவை அல்லது முரண்களரி பலவகைப் படும்.
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்,
இகலினர் எறிந்த அகலிலை முருக்கின்
பெருமரக் கம்பம் (புறம். 169 : 9 -11)
என்பதிலிருந்து, எய்படை எறிபடை முதலிய படைக்கலப் பயிற்சி நடைபெற்ற வகையை அறியலாம்.
குதிரைப் படைப் பயிற்சி நடைபெற்ற களம் செண்டு வெளி யெனப்பட்டது.
கரி பரி தேர் கால் ஆகிய நால்வகைப் படைப்போரையும் பற்றிய தமிழ் நூல்கள் இறந்துபட்டன.
(13) ஓக நூல்
ஓவுதல் = ஒத்தல், ஒன்றுதல். ஓவு - ஓகு. ஓவு - ஓவம் - ஓகம் = அறிவன் உளத்தில் இறைவனோடு ஒன்றும் ஊழ்கம் (தியானம்).
உகம் என்பது வடமொழியில் யுக என்றும் உத்தி என்பது யுக்தி என்றும் ஆயதுபோல், ஓகம் என்பதும் அம்மொழியில் யோக என்றாகும். இம்முறை பற்றி ஓகு என்பது யோகு எனப்படும்.
ஓகப் பயிற்சி எண்ணுறுப்புக்களை யுடையது. அவை ஒழுக்கம் (இயமம்), ஒழுங்கு (நியமம்), இருக்கை (ஆசனம்), வளிநிலை (பிராணாயாமம்), புலனடக்கம் (பிராத்தியாகாரம்), நிறை (தாரணை), ஊழ்கம் (தியானம்), ஒடுக்கம் (சமாதி) என்பன. இவற்றுள் இருக்கையும் வளிநிலையும் உடற்பயிற்சி; ஏனைய உளப் பயிற்சி.
பிறப்பால் தம்மை உயர்வாகக் கருதும் பேதைமையும் செருக்குமுள்ளோர், ஓகப்பயிற்சி செய்வது முயற்கொம்பாம். இடைகலை, பின்கலை, சுழிமுனை என்பன வளிநிலைத் தொடர்பான நாடிகளைக் குறிக்கும் தென்சொற்கள். இவற்றை இடாகலா, பிங்கலா, ஸுஷுமுனா எனத் திரித்துள்ளனர் வடமொழியாளர்.
ஓக நூலிற் கூறப்படும் அறு நிலைக்களங்கள் அல்லது நரப்புப் பின்னல்கள் அடிமுதல் முடிவரை, முறையே, அண்டி குறியிடை நாலிதழ்த் தாமரை வடிவிலும், அண்டி கொப்பூழிடை ஆறிதழ்த் தாமரை வடிவிலும், கொப்பூழ் மண்டலத்தில் பத்திதழ்த் தாமரை வடிவிலும், நெஞ்சாங்குலை மண்டலத்தில் பன்னீரிதழ்த் தாமரை வடிவிலும், அடிநா மண்டலத்தில் பதினாறிதழ்த் தாமரை வடிவிலும், இரு புருவத்திடை ஈரிதழ்த் தாமரை வடிவிலும், இருப்பதாகச் சொல்லப் பெறும்.
ஓக நூல் இறந்துபட்டதால் அறுநிலைக்கள (ஷடாதார)ப் பெயர் களும் இறந்துபட்டன. இருக்கைகளின் பெயர்களும் வடமொழி யிற் பலவாறு திரிக்கப்பட்டும் மொழி பெயர்க்கப்பட்டும் உள. ஆஸனம் என்னும் சொல்லே தென் சொல்லின் திரிபு.
(14) மாயம் (CONJURY)
இது மாலம் அல்லது கண் கட்டு.
(15) வசியம் (ENCHANTMENT)
இது மகளிரையும் பிறரையும் மருந்தாலும் மந்திரத்தாலும் மனப் பயிற்சியாலும் வயப்படுத்தல்.
வயின் - வயம் - வசம் - வசி - வசியம்.
(16) மந்திரக் கட்டு
இது தீ காற்று முதலிய இயற்கைப் பூதங்களையும், புலி நாய் பாம்பு முதலிய உயிரிகளையும் மாந்தரையும், இயங்காதவாறும் தீங்கு செய்யாதவாறும், மந்திரத்தால் தடுத்தல்.
கரடி வெம்புலி வாயையும் கட்டலாம் (தாயு. தேசோ. 8)
(17) மகிடி (மோடி)
இது மந்திரத்தாற் பொருள்களை மறைத்தலும் அவற்றை எடுத்தலுமாகும்.
(18) பேயோட்டல் (EXORCISM)
பல்வகைப் பேய்களையும் கோடங்கி அல்லது உடுக்கடித்து, பேய் கோட்பட்டாரினின்று ஓட்டுதல் பேயோட்டல் ஆகும்.
(19) குறளி
இது குட்டிப் பேயால் சிறு குறும்புகள் செய்வித்தல்.
(20) செய்வினை (SORCERY OR WITCHCRAFT)
இது பேயை ஆளும் மந்திரக்காரனைக் கொண்டு, வேண்டாத வர்க்கு நோயும் சாக்காடும் வருவித்தல்.
இது சூனியம் என்றும் உலக வழக்கில் வழங்கும். சுல் - சுன் - சுன்னம் - சூன்ய (வ.).
(21) கரவட நூல்
இது களவு நூல்.
மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம்
தந்திரம் இடனே காலம் கருவியென்
றெட்டுட னன்றே இழுக்குடை மரபில்
கட்டுண் மாக்கள் துணையெனத் திரிவது.
என்பது (சிலப். 16 : 166 - 9), கரவட நூலின் கூறுகளைத் தெரிவிக்கும். நிமித்தம் தந்திரம் என்னும் வடசொற்கட்கு, புள் விரகு என்பன முறையே நிகர் தென்சொற்களாம்.
(22) உடல் நூல்
மெய்ப் பொருள் தொண்ணூற்றாறெனும் பட்டாங்கு நூல் முறையிலும், மருத்துவ முறையிலும், புலாலுணவு முறையிலும், மற்போர் முறையிலும், உடற்கூறுகளைப் பண்டைத் தமிழர் நன்கறிந்திருந்தனர்.
(23) காவல் நூல்
நூல்வழிப் பிழையா நுணங்குநுண் தேர்ச்சி
ஊர்காப் பாளர்
என்னும் மதுரைக் காஞ்சியடிகளையும் (646-7), அவற்றின் களவு காண்டற்கும் காத்தற்கும் கூறிய நூல்கள் வழிப் போவார் என்னும் உரையையும், நோக்குக.
15 அறிவியல்கள் (SCIENCES)
பெரும்பாலும் படிப்பினாற் கற்கப்படுவன அறிவியல்கள்.
(1) இலக்கணம்
இலக்கு - இலக்கியம். இலக்கு - இலக்கணம். இலக்கு = குறி, குறிக்கோள். சிறந்த வாழ்க்கைக் குறிக்கோளான அறத்தை எடுத்துக் காட்டுவது இலக்கியம். சிறந்த மொழிக் குறிக்கோளான அமைப்பை எடுத்துக் கூறுவது இலக்கணம்.
உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலன்எனக்
கொள்ளும் என்ப குறியறிந் தோரே
என்னும் தொல்காப்பிய நூற்பா (அகத். 47) இலக்கணத்தைக் குறியெனக் குறித்தல் காண்க.
இலக்கணத்திற்கு அணங்கம் என்றும், இலக்கியத்திற்கு அணங்கியம் என்றும் பெயருண்டு.
இலக்கணம் இலக்கியம் என்னும் இரு சொற்களும் தொன்று தொட்டே தமிழில் வழங்கி வருகின்றன.
தமிழ் இலக்கணம், எழுத்து, சொல், பொருள் என முத்திறப்படும். பொருளில் யாப்பும் யாப்பில் அணியும் அடங்கும். பண்டை யிலக்கியமெல்லாம் செய்யுளில் இருந்ததினால், உரைநடைக் கெனச் சிறப்பாய் இலக்கணம் வகுக்கப்படவில்லை. சொல்லிற்கே பொருளிருப்பதால், சொல்லிற்குப் பின்பு பொருளையே இலக் கணப் பகுதியாக எடுத்துக்கொண்டனர். பொருட் பகுதியின்றித் தமிழிலக்கணம் நிறைவுள்ளதாகாது.
தமிழ் எழுத்து கீறெழுத்தும் வெட்டெழுத்தும் என இருவகைப் பட்டது. முன்னது ஓலையெழுத்து; பின்னது பட்டய வெழுத்து. பட்டய வெழுத்தையே வட்டெழுத்தென்பர்.
இன்று அச்சிலுள்ள ஓலையெழுத்து தொன்று தொட்டு வருவதே.
தொல்லை வடிவின எல்லா எழுத்தும்ஆண்
டெய்தும் எகர ஒகரமெய் புள்ளி.
என்று 13ஆம் நூற்றாண்டு நன்னூல் (98) கூறுதல் காண்க. ஆண்டு என்றது முற்காலத்தை. எகர ஒகரம் புள்ளி பெற்றதே முற்கால எழுத்தின் வேறுபாடென்பது நன்னூலார் கருத்து. அவர் காலத்தில் எகர ஒகரம் புள்ளி பெறவில்லை; பெற்றிருக்குமாயின் அதை ஏன் கூற வேண்டும்? ஆதலால், அது உரையன்மை அறிக. `அக்காலம் என்பது இன்றும் முற்காலத்தைக் குறித்தல் காண்க.
எழுத்தாணி கொண்டு ஏட்டில் கீறியெழுதுவதற்கு வளை கோட் டெழுத்தும், உளிகொண்டு பட்டயத்தில் குழித்தெழுதுவதற்கு நேர்கோட்டெழுத்துமே, ஏற்றதாதல் காண்க.
இந்திய ஆரியர்க்கு முதலில் எழுத்தில்லை. அவர் மறை எழுதாக் கிளவி யெனப்பட்டது. வேதக்காலப் பிராமணர் தமிழ்நாடு வந்தபின், வடமொழியில் நூலெழுதத் தமிழெழுத்தை யொட்டிக் கிரந்த வெழுத்தை அமைத்துக் கொண்டனர். அதன்பின், கி.பி. 10ஆம் அல்லது 11ஆம் நூற்றாண்டில் தேவநாகரி தோன்றிற்று.
அறியப்பட்ட சமற்கிருத முதற் பழங்கல்வெட்டு, கத்தியவாரில் சுனாகர் என்னுமிடத்தில் ஒரு பாறை மேல் உளது. அது உருத்திரதாமன் கல்வெட்டென வழங்கிவருகின்றது. அதன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு. அது நாகரியில் இல்லை; பழைய கல் வெட்டெழுத்தில் உளது. ஏறத்தாழக் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற் குரிய பவர் கையெழுத்துப் படிகள், நாகரியை நோக்கிய மிகுந்த முன்னேற்றத்தைக் காட்டுகின்றன; அதே சமையத்தில் தந்திதுருக்கனின் கி.பி. 750ஆம் ஆண்டுக் கல்வெட்டு, இன்று வழக்கிலுள்ள நாகரியைப் பெரிதும் ஒத்த குறிகளின் முழுத் தொகுதியையும் கொண்டுள்ளது. எனினும், உண்மையான இற்றை நாகரியிலுள்ள முதற் கல்வெட்டு, கி.பி. 11ஆம் நூற்றாண் டிற்கு முந்தியதன்றென்பது கவனிக்கத்தக்கது. (khÅa® cšÈa«R rk‰»Uj - M§»y mfuKjÈ - K‹Diu, g¡., XXVIII, அடிக்குறிப்பு).
தேவநாகரியும் தமிழெழுத்தைப் பின்பற்றியதே என்பது, கூர்ந்து நோக்குவார்க்குப் புலனாகும்.
பொருளிலக்கணம் தமிழிலன்றி வேறெம் மொழியிலுமில்லை.
தமிழர் இன்னிசைக் கலையிலும் நாடகக்கலையிலும் சிறந்திருந்த தினால், மொழியொடு அவ்விரு கலைகளையும் சேர்த்து, தமிழை இயலிசை நாடகமென முத்தமிழாய் வழங்கினர், இத்தகைய மொழியமைப்பும் வேறெங்கணுமில்லை.
தமிழர் இயலுமிடமெல்லாம் தம் வினைகளை இசையொடு செய்து வந்தனர் என்பது, தாலாட்டுப் பாட்டு, ஏர்மங்கலப் பாட்டு, நடவைப் பாட்டு, முகவைப் பாட்டு, ஏற்றப் பாட்டு, ஏலப் பாட்டு, வள்ளைப் பாட்டு, கழியற் பாட்டு, கும்மிப் பாட்டு, கோலாட்டப்பாட்டு, ஊஞ்சற் பாட்டு, வழிநடைச் சிந்து, ஒப்பு (ஒப்பாரி)ப் பாட்டு முதலியவற்றால் அறியப்படும்.
முதலிரு கழகங்களிலும் இருந்த இலக்கணமெல்லாம் முத்தமி ழிலக்கணங்களே. இயற்றமிழ் இலக்கணம் பிண்டம் என்றும், முத்தமிழிலக்கணம் மாபிண்டம் என்றும் கூறப்பெறும்.
பொருளிலக்கணம் பொருள்களை அகம்புறம் என இரண்டாக வகுத்து, கணவன் மனைவியர் காதலின்பத்தை அகம் எனச் சிறப்பித்து, மற்றெல்லாவற்றையும் புறத்துள் அடக்கும். புறத்துள் போர்த்துறை மிகச் சிறப்பாகக் கொள்ளப்பட்டு, மற்றவையெல் லாம் எழுபுறப் பொருள் திணைகளுள் ஆறாவதான வாகைத் திணையுள் அடக்கப்பெறும்.
(2) மொழி நூல்
மொழி நூற்கு வித்தூன்றியவர் தமிழரே. தமிழ்ச் சொற்களை, இலக்கண வகைச் சொல் மூன்றும் பொருள் வகைச் சொல் ஒன்றும் சொற்பிறப்பியல் வகைச் சொல் மூன்றுமாக வகுத்திருந்தனர்.
எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே. (தொல். பெயர்.1)
சொல்லெனப் படுப பெயரே வினைஎன்று
ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே. (தொல் பெயர். 4)
இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும்
அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப. (தொல் பெயர். 5)
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் என மூன்றியலும் செய்யுள் ஈட்டச் சொல்லே.
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி. (தொல். எச்ச. 4)
அந்நாற் சொல்லும் தொடுக்குங் காலை
வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும்
விரிக்கும்வழி விரித்தலும் தொகுக்கும்வழித் தொகுத்தலும்
நீட்டும்வழி நீட்டலும் குறுக்கும்வழிக் குறுக்கலும்
நாட்டல் வழிய என்மனார் புலவர். (தொல். எச்ச. 7)
இந்நூற்பாக்களும், முதனிலை, இடைநிலை, ஈறு, உருபு, புணர்ச்சி, சாரியை முதலிய சொல்லுறுப்புக்களும், பண்டைத் தமிழரின் மொழி நூலறிவைக் காட்டும்.
இயற்சொல் என்பது வேர்ச் சொல்லும் அடிச்சொல்லுமான இயல்பான சொல் (primitive word). திரிசொல் என்பது அதினின்று திரிந்த சொல் (derivative word). இவை யிரண்டும் செந்தமிழ்ச் சொல். திசைச் சொல் என்பது கொடுந்தமிழ்ச் சொல். அக் காலத்தில் வடசொல்லும் பிற அயற்சொல்லும் தமிழிற் கலக்க வில்லை.
(3) அறநூல்
இது பொருள்களை அறம் பொருள் இன்பம் வீடு என நான்காகப் பகுத்து, நல்லொழுக்கத்தைக் கூறும்.
(4) பொருள் நூல்
இது எல்லாரும் தத்தம் தொழிலாற் பொருளீட்டுவதற்கு, இன்றியமையாத பாதுகாப்புச் செய்யும் அரசியலைப் பற்றிக் கூறும்.
(5) இன்ப நூல்
இது ஆடவர் பெண்டிர் காமவின்பத்தைச் சிறப்பித்துக் கூறும். இன்ப வாழ்க்கையைக் கூறுவது அகப்பொருள் நூல் என்றும் இன்பத் துய்ப்பை மட்டும் கூறுவது காமநூல் அல்லது வேணூல் என்றும், பெயர் பெறும்.
(6) மறை நூல் (THEOLOGY)
இது பெரும்பாலும் சமயக் குடுமிகளை அல்லது கொண்முடிபு களைக் கூறும். இது மந்திரம் எனவும் வாய்மொழி எனவும் படும். மன்னும் திரம் (திறம்) மந்திரம். மன்னுதல் = கருதுதல், எண்ணுதல். இது உண்மையாகும் என்று திண்மையாய் எண்ணிச் சொல்வது மந்திரம்.
பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே (தொல்.செய். 78)
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப. (தொல்.செய்.176)
முன்னுதல் கருதுதல். முன்னம் = மனம். முன் - மன் - மனம். இனி, முன்னம் - முனம் - மனம் என்றுமாம்.
மந்திரம் சமயக் கொள்கை பற்றியதும் சாவிப்பு வாழ்த்துப் பற்றியதும் என இரு வகைப்படும்.
சமயக் கொள்கை பற்றியதும், கடவுள் வழுத்து, கொண்முடிபு நூல் என இரு திறப்படும். நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி கடவுள் வழுத்து; திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம் கொண்முடிபு (சித்தாந்த) நூல்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
என்றது (குறள். 28) இத்தகைய நூல்களை நோக்கியே.
சாவிப்பு வாழ்த்து மொழிகளை மந்திரம் என்பது உலக வழக்கு; நூல் வழக்கன்று.
(7) பட்டாங்கு நூல் (PHILOSOPHY)
பட்டாங்கு உண்மை. பட்டாங்கு நூல் மெய்ப்பொருள் நூல். மாந்தன் உடலமைப்புப் பற்றித் தமிழர் கண்ட மெய்ப் பொருள்கள் (தத்துவங்கள்), 96. அவை ஆதன் (ஆன்ம) மெய்ப் பொருள் 24, நாடி 10, நிலை (அவத்தை) 5, மலம் 3, குணம் 3, மண்டலம் 3, பிணி 3, திரிபு (விகாரம்) 8, நிலைக்களம் (ஆதாரம்) 6, தாது 7, ஊதை (வாயு) 10, உறை (கோசம்) 5, வாயில் 9, என்பன.
ஆதன் மெய்ப் பொருள் 24 ஆவன : - பூதம் 5, புலன் 5, அறிவுப் புலன் 5, கருமப்புலன் 5, கரணம் 4.
எல்லாப் பொருள்களும் ஐம்பூதமாய் அடங்கும் என்பதும்; ஆண்டவன் (பதி), ஆதன் (பசு), ஆசு (பாசம்) என மூன்றாய் அடங்கும் என்பதும்; உயிர், மெய் (உடம்பு) என இரண்டாய் அடங்கும் என்பதும்; தமிழரின் வேறுபட்ட கொள்கைகளாம்.
ஆதனுக்கு இறைவனோடுள்ள தொடர்புமுறை இருமை (துவைதம்), ஒன்றிய இருமை (விசிஷ்டாத்துவைதம்) என இருவகையாகவே, பண்டைத் தமிழராற் கொள்ளப்பட்டன. ஒருமை (அத்துவைதம்) தமிழர் கொள்கையன்று.
தமிழிலக்கண முதனூல் முனிவனால் இயற்றப்பெற்றதினால், உயிர், மெய், உயிர்மெய், குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம், புணர்ச்சி, முதலிய எழுத்திலக்கணக் குறியீடுகளும்; பெயர், வினைமுதல், எண் வேற்றுமை, வினை, வினைமுற்று, வினையெச்சம், இறந்தகால வினை, நிகழ்கால வினை, எதிர்கால வினை முதலிய சொல்லிலக்கணக் குறியீடுகளும்; மெய்ப்பொருள் நூற்கருத்தும் தழுவுமாறு அமைக்கப் பெற்றுள்ளன.
(8) அளவை நூல்
இது பொருள்களின் உண்மையை அறிதற்கு ஏதான (ஏதுவான) அளவைகளை (பிரமாணங்களை) எடுத்துக் கூறுவது. அளவைகள் மொத்தம் பத்து. அவற்றுள் முதன்மையானவை காட்சி கருத்து ஒப்பு உரை என்னும் நான்கு. கருத்தென்பது உய்த்துணர்வு.
(9) ஏரணம் (LOGIC)
இது அளவைகளைக் கொண்டு பொருள்களின் உண்மையை அறியும் வகைகளை எடுத்துத் கூறுவது.
வடிவேல் செட்டியார் பதிப்பித்த தர்க்க பரிபாஷை என்னும் நூலிறுதியில், அகத்தியர் பேரால் 20 தருக்க நூற்பாக்கள் உள. அவற்றுள் முதலது.
பொருள்குணம் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை
இன்மை யுடன்பொருள் ஏழென மொழிப.
என்பது. இது பொருள்களை ஏழாகப் பகுப்பது. இதையே பிற்காலத்தில் வடவர் வைசேடிகம் என்றனர்.
ஏரணம் உருவம் யோகம் இசைகணக் கிரதம் சாலம் (தனிப்பாடல்).
ஏரணங்காண் என்பர் எண்ணர் (திருக்கோவைச் சிறப்புப்பாயிரம்)
(9) வான நூல் (ASTRONOMY)
வானத்திலுள்ள நாள் (நட்சத்திரம்), கோள் (கிரகம்), ஓரை (இராசி) முதலியவற்றை விளக்கிக் கூறுவது வான நூல். இருபத்தெழு நாட்களும் எழு கோள்களும் பன்னீரோரைகளும் குமரிக் கண்டத் தமிழர் கண்டிருந்தனர்.
எழு கோள்களின் பெயரால் எழு நாட் கிழமையை முதன் முதல் ஏற்படுத்தியவர் தமிழரே. அது பின்னர் உலக முழுவதும் பரவியுள்ளது.
கொள் - கோள். கொள்ளுதல் வளைதல். கொள் - கொட்கு. கொட்குதல் = சுழலுதல், சுற்றி வருதல். கொட்பது கோள். கோள்கள் வானத்திற் சுழன்று சுற்றிவரும் தோற்றத்தால் அப் பெயர் பெற்றன. இராகு கேது என்பன சாயைகளாகவே கொள்ளப்பட்டன. நிறம் பற்றி அவை அணிவகையில் கரும்பாம்பு செம்பாம்பு எனப்பட்டன. இருத்தல் கருத்தல். இர் - இரா - இராகு. சே - சேது = சிவப்பு. சேதாம்பல் செவ்வாம்பல். சேது - கேது. ஒ. நோ: செம்பு - கெம்பு.
தமிழ் வடமொழி ஆங்கிலம்
ஞாயிறு ஆதித்தன் Sun-Sunday
திங்கள் சோமன் Moon-Monday
செவ்வாய் (மங்களம்)
அறிவன் புதன்
வியாழன் பிருகபதி (குரு)
வெள்ளி சுக்கிரன்
காரி (சனி)
வடமொழிக் கிழமைப் பெயர்களுள், மங்கள வாரம், சனிவாரம் ஆகிய இரண்டு தவிர மற்றவையெல்லாம் நேர் மொழி பெயர்ப்பாயிருத்தல் காண்க.
ஆங்கிலப் பெயர்களுள், பின் ஐந்தும் பிற்காலத்தில் மாறிவிட்டன. ஆயினும், எழுநாள் என்னும் கால அளவு மாறாதிருத்தல் காண்க.
செவ்வாய் செந்நிறமுள்ளதென்றும், வியாழன் பொன்னிறமுள்ள தென்றும் பெரியதென்றும், வெள்ளி வெண்மையான தென்றும், காரி கரியதென்றும், கண்டறிந்தது வியக்கத் தக்க செய்தியாம்.
வியல் = 1. பெருமை. மூழ்த்திறுத்த வியன்றானை (பதிற். 33, 5).
2. அகலம் வியலென் கிளவி அகலப் பொருட்டே (தொல்.சொல். 354). 3. மிகுதி. (சிலப். 3, 7, உரை).
வியல் - வியலன் - வியாழன்.
விள்ளுதல் = விரிதல், மலர்தல். விள் - விய் - வியல்.
பிருகபதி என்னும் வடசொல் வியாழன் என்பதன் மொழிபெயர்ப்பா யிருப்பதோடு, பெருகு என்னும் தென்சொல்லின் திரிபை நிலைமொழி முதனிலையாகக் கொண்டிருப்பது கவனிக்கத் தக்கது.
பன்னிரு ஓரைகள்
தமிழ் வடமொழி இலத்தீன்
மேழம் மேஷம் Aries
விடை ரிஷபம் Taurus
இரட்டை மிதுனம் Gemini
அலவன் கர்க்கடகம் Cancer
ஆளி சிம்மம் Leo
கன்னி கன்னி Virgo
துலை துலா Libra
நளி விருச்சிகம் Scorpio
சிலை சாபம் (தனுசு) Sagitarius
சுறவம் மகரம் (Capricornus)
கும்பம் கும்பம் Aquarius
மீனம் மீனம் Pisces
வடமொழியில் எல்லாப் பெயர்களும், இலத்தீனில் பதினொரு பெயர்களும், தமிழ்ச் சொற்களின் நேர்மொழிபெயர்ப்பா யிருத்தல் காண்க.
முழுத்தல், திரளுதல். முழுத்த ஆண் பிள்ளை என்னும் வழக்கை நோக்குக. முழுது, மொத்தம். முழு - முழா = திரண்ட முரசு. முழா - முழவு - முழவம். முழா - மிழா = திரண்ட மான் (Stag). மிழா - மேழம் = திரண்ட செம்மறியாட்டுக் கடா. மேழம் - மேஷ (வ.) மேழம் - மேழகம் - ஏழகம் - ஏடகம் - ஏடு - யாடு - ஆடு.
துல்லுதல் = பொருந்துதல், ஒத்தல். துல் - துன், துன்னுதல் பொருந்துதல். துல் - துலை = ஒப்பு. இரு புறமும் ஒத்த நிறைகோல். துல் - துலா = துலை போன்ற ஏற்றம். துலா - துலாம் - துலான் = ஒரு நிறை. ஒ. நோ : ஒப்பு = துலை. ஒப்பராவி = துலை செய்வோன். கும்முதல், குவிதல். கும் - கும்பு - கும்பம் - கும்ப (வ.). மின் - மீன் - மீனம் - மீன (வ.).
பழந்தமிழ் நாட்டில் பன்னீ ரோரைப் பெயர்களே பன்னிரு மாதப் பெயர்களாக வழங்கி வந்தன.
மதி - மாதம் - மாஸ (வ.). ஒவ்வொரு பிறை நிலையும் பக்கம் எனப்பட்டது. வளர்பிறை வெண்பக்கம் என்றும், தேய்பிறை கரும்பக்கம் என்றும் சொல்லப்பட்டன.
பகு - பக்கம். பகு - bhaj (வ.). பக்கம் - பக்ஷ (வ.).
இருபத்தேழு நாட்களும், புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, கொடிறு, அரவு, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, முற்குளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி எனப் பெயர் பெற்றிருந்தன. இவற்றிற்குப் பிற பெயர்களுமுண்டு. இவையல்லாத பொது உடுக்கள் வெள்ளி யெனப்பட்டன. புகைக்கோள் (comet) வால்வெள்ளி யெனப் பட்டது.
ஒரு பகலும் ஓர் இரவும் சேர்ந்தது ஒரு நாள் என்றும், ஏழு நாள் கொண்டது ஒரு கிழமையென்றும், ஒரு வளர்பிறையும் ஒரு தேய்பிறையும் சேர்ந்தது ஒரு மாதம் என்றும், கதிரவன் பன்னீரோரைக்குள்ளும் புகுவது பன்னிரு மாதம் என்றும், அதன் ஒரு வடசெலவும் ஒரு தென் செலவும் சேர்ந்து ஓர் ஆண் டென்றும், கணக்கிடப்பட்டிருந்தது. ஒரு நாளை ஆறு சிறுபொழுதாகப் பிரித்தது போன்று, ஓர் ஆண்டை ஆறு பெரும் பொழுதாகப் பிரித்திருந்தனர்.
ஒரு கோநகர்த் தோற்றம் அல்லது ஒரு பேரரசன் பிறப்புப் போன்ற நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, தொடராண்டு கணித்து வந்ததாகத் தெரிகின்றது.
செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந் தறிந்தோர் போல என்றும்
இனைத்தென் போரும் உளரே
என்னும் (புறம். 30) உறையூர் முதுகண்ணன் சாத்தனார் கூற்றும், மாகவிசும்பு (புறம். 35, அகம். 253, மதுரைக்கா. 454, பரி. 1) என்னும் வழக்கும், மாகமாவது பூமிக்கும் சுவர்க்கத்துக்கும் நடுவு என்னும் பரிமேலழகர் உரையும்,
இன்னிசை யெழிலியை இரப்பவும் இயைவதோ
வளிதரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதோ?
என்னும் பாலைபாடிய பெருங்கடுங்கோவின் பாட்டடிகளும் (கலித். 15), கவனிக்கத் தக்கன.
மழைக்கும் காற்றிற்கும் கதிரவன் கரணியம் என்பதை முன்னைத் தமிழர் கண்டிருந்தனர். எழிலி முகில். எழிலியைத் தோற்றுவிக்கும் கதிரவனை எழிலி என்றது இலக்கணையென்னும் ஆகுபெயர்ப் போலி.
(11) கணியம் (ASTROLOGY)
ஒருவர் பிறந்த நாளையும் வானத்திலுள்ள நாள் கோள் நிலையையும் அடிப்படையாக வைத்து, அவருக்கு வரும் இன்ப துன்பங்களை முற்படக் கணித்துக் கூறுவது கணியம். வாழ்நாள் முழுவதற்கும் வரையப்படும் கணியமே பிறப்பியம் (ஜாதகம்).
கோச்சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை இன்னநாள் இறப்பான் என்று, கூடலூர்கிழார் ஒரு விண்வீழ் கொள்ளியைக் கண்டு கணித்தறிந்த செய்தியை 229ஆம் புறப்பாட்டுக் கூறும். நல்ல நாளும் வேளையும் பார்த்து வினைகளைத் தொடங்குவது, பண்டைநாளிற் பெருவழக்கமா யிருந்தது. நாளேரடித்தல், குடைநாட்கோள், வாள்நாட்கோள் என்பன இதைத் தெரிவிக்கும்.
தொன்றுதொட்டுக் கணியத் தொழில் செய்து வரும் தமிழ் வகுப்பான் வள்ளுவன். வள் கூர்மை. வள்ளுவன் கூர்மதியன். ஆரியக் குலப் பிரிவால், அவன் தாழ்த்தப்பட்டுப் பேரிடங்களிற் பெரும்பாலும் பிழைப் பிழந்தான்.
கண்ணுதல் = அகக்கண்ணாற் பார்த்தல், கருதுதல், மதித்தல். கண்ணியம் = மதிப்பு. கண் - கணி. கணித்தல் = மதித்தல், கணக்கிடுதல், அளவிடுதல். கணி - கணிதம் - கணிசம் = மதிப்பு (approximation). கணி - கணிகை = தாளம் கணித்தாடுபவள். கணி - கணிகன், கணியன் = நாள்கோள் நிலைகண்டு வருங்கால நன்மை தீமை கணிப்பவன். கண், கணி, கணிதம், கணிகை என்னும் தென்சொற்கள், வடமொழியில் முதலெழுத் தெடுப்போசை யுடன் வழங்குகின்றன. கணிதம் என்பது கணித என்றும், கணிகை என்பது கணிகா என்றும், ஈறு குன்றியும் திரிந்தும் வழங்கும்.
(12) கணக்கு
கள்ளுதல் = பொருந்துதல், ஒத்தல், கூடுதல், கள்ள = ஒக்க (உவம உருபு), கள் - களம் = கூடுமிடம். கள் - கள - கண. கணத்தல் = பொருந்துதல், கூடுதல், ஒத்தல். கணக்க = போல. குரங்கு கணக்க ஓடுகிறான் என்னும் வழக்கை நோக்குக. கண - கணம் = கூட்டம். கணவன் கூடுகின்றவன். கண - கணக்கு = கூடிய தொகை, அளவு.
கணக்கு என்பது முதலில் கூட்டல் கணக்கை மட்டும் குறித்து, பின்பு நால்வகைக் கணக்கிற்கும் பொதுப் பெயராயிற்று.
பண்டைத் தமிழர் கணக்கில் மிகத் தேர்ந்தவர் என்பது, அவர் கையாண்ட நுண்ணிய அளவைகளால் அறியப்படும்.
எண்ணலளவை
கீழ்வாய்ச் சிற்றிலக்க வாய்பாடு
6½ தேர்த்துகள் = 1 நுண்மணல்
100 நுண்மணல் = 1 வெள்ளம்
60 வெள்ளம் = 1 குரல்வளைப்பிடி
40 குரல்வளைப்பிடி = 1 கதிர்முனை
20 கதிர்முனை = 1 சிந்தை
14 சிந்தை = 1 நாகவிந்தம்
17 நாகவிந்தம் = 1 விந்தம்
7 விந்தம் = 1 பாகம்
6 பாகம் = 1 பந்தம்
5 பந்தம் = 1 குணம்
9 குணம் = 1 அணு
7 அணு = 1 மும்மி
11 மும்மி = 1 இம்மி
21 இம்மி = 1 கீழ்முந்திரி
320 கீழ்முந்திரி = 1 மேல்முந்திரி
320 மேல்முந்திரி = 1 (ஒன்று என்னும் முழுஎண்)
1 தேர்த்துகள் = 1
2,3238245,3022720,0000000
1 கீழ்முந்திரி = 1
102400
1 மேல்முந்திரி = 1
320
கீழ்வாயிலக்கம்
பெயர் அளவு
முந்திரி, முந்திரை 1
320
அரைக்காணி 1
160
காணி 1
80
அரைமா 1
40
ஒருமா 1
20
இருமா 1
10
நான்மா 1
5
மாகாணி, வீசம் 1
16
அரைக்கால் 1
8
முண்டாணி, மூன்று வீசம் 3
16
கால் 1
4
அரை 1
2
முக்கால் 3
4
மேல் வாயிலக்கத்திற்குப் போன்றே கீழ் வாயிலக்கத்திற்கும் பெருக்கல் வாய்பாடு கூறும் எண் சுவடியுண்டு. அது கணக்காயர் பள்ளியிற் சிறப்பாய்க் கற்பிக்கப்பட்டது.
நீட்டலளவை வாய்பாடு
8 அணு = 1 தேர்த்துகள்
8 தேர்த்துகள் = 1 பஞ்சிழை
8 பஞ்சிழை = 1 மயிர்
8 மயிர் = 1 நுண்மணல்
8 நுண்மணல் = 1 கடுகு
8 கடுகு = 1 நெல்
8 நெல் = 1 பெருவிரல்
12 பெருவிரல் = 1 சாண்
2 சாண் = 1 முழம்
4 முழம் = 1 கோல் அல்லது பாகம்
500 கோல் = 1 கூப்பீடு
4 கூப்பீடு = 1 காதம்.
அக்காலத்தில் அரசியலாரால் நிலம் எவ்வளவு நுட்பமாய் அளக்கப் பட்டதென்பது, இறையிலி நீங்குநிலம் முக்காலே இரண்டு மாகாணி அரைக்காணி முந்திரிகைக் கீழ் அரையே இரண்டுமா முக்காணிக் கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரிகைக் கீழ் நான்குமாவினால் இறை கட்டின காணிக் கடன் என்பதால் விளங்கும்.
இங்குக் குறிக்கப்பட்ட அளவு 52000 ஆகும்.
1
மேல்வாயிலக்கப் பேரெண்கள்
தொல்காப்பியத்தில், இலக்கம் நூறாயிரம் என்னும் தொடர்ச் சொல்லால் குறிக்கப்பட்டாலும், இலக்கம் என்னும் சொல்லின்மையால், ஆயிரத்திற்கு மேற்பட்ட பேரிலக்கப் பெயர்கள் தமிழில் இல்லையெனப் பலர் ஐயுறுகின்றனர். தொல்காப்பியரே,
ஐஅம் பல்என வரூஉம் இறுதி
அல்பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும்.
எனப் (393) பல கோடிகளைக் குறிக்கும் பேரெண்களைக் குறித்தலால், இலக்கம், கோடி என்னும் எண்ணுப் பெயர்கள் அவர் காலத்தில் தமிழில் இல்லையென்பது பொருந்தாது.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
என்னும் குறளில் (954), கோடி வந்திருத்தல் காண்க. அடுக்கிய கோடிகளைக் குறிக்கும் பேரெண்களிற் சில வருமாறு:-
கும்பம் = ஆயிரங் கோடி
கணிகம் = பத்தாயிரங் கோடி
தாமரை = கோடா கோடி
சங்கம் = பத்துக் கோடா கோடி
வாரணம் = நூறு கோடா கோடி.
பரதம் = இலக்கம் கோடிக் கோடா கோடி.
(1-இன் பின் 24 சுன்னங் கொண்டது).
ஐ அம் பல்என வரூஉம் இறுதி என்று தொல்காப்பியர் (தொல். 393) குறிப்பாய் ஈறுபற்றிச் சொன்னவற்றை:
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மையில் கமலமும் வெள்ளமும்
என்று (பரிபாடல், 2; 13 -14) கீரந்தையார் வெளிப்படையாய்க் கூறினார். கமலம் (வ.) தாமரை.
தாமரை, குவளை என்பன ஐயீறு; கணிகம், சங்கம், வெள்ளம் என்பன அம்மீறு; ஆம்பல் பல்லீறு; நெய்தல் அல்லீறு. இதைத் தொல்காப்பியர் குறித்திலர். ஆம்பல் குமுதம் என்றும் குறிக்கப் பெறும்.
கும்பம், தாமரை, சங்கம், வாரணம் என்பன தூய தென் சொற்களே. சங்கம் சங்கு. தாமரை என்னும் எண்ணைப் பதுமம் என்று மொழிபெயர்த்துக் கூறுவர் வடவர்; முளரி என்று ஒரு பொருள் மறுசொல்லாற் குறிப்பர் கம்பர்.
தாமரை - தாமரச (வ.) சங்கு - சங்கம் - Sankha (வ.).
கணக்கு அல்லது கணித நூல் எண்ணூல் எனவும் பெயர் பெறும். ஏரம்பம் என்னும் பண்டைத் தமிழ்க் கணித நூல் இறந்து விட்டது.
சிற்றிலக்கத்திற்கும் பேரிலக்கத்திற்கும் பெருக்கல் வாய் பாடி ருந்தது போன்றே, சதுர (square) வாய்பாடும் பண்டைக் காலத்தி லிருந்தது. அது குழிக்கணக்கு எனப்பெற்றது. குழித்தல் சதுரித்தல். அது ஓர் எண்ணை அவ்வெண்ணைக் கொண்டே பெருக்குதல். சிற்றிலக்கக் குழிப்பு சிறு குழியென்றும், பேரிலக்கக் குழிப்பு பெருங்குழியென்றும், பெயர் பெற்றன.
குழி - குணி - gun (வ.)
ழ - ண. ஒ. நோ : ஆழி - ஆணி = ஆழமாயிறங்குவது. ஆணிவேர் ஆழமாய் இறங்கும் வேர்.
தழல் - தணல்.
குணித்தல் பெருக்குதல், சதுரித்தல்.
குணி + அனம் = குணனம்.
(3) உடற்குறி நூல் (PHYSIOGNOMY)
தலை, கழுத்து, மார்பு, கைகால் முதலிய உறுப்புக்களிலுள்ள வரி (இரேகை), மறு, மச்சம், சுழி முதலியவற்றைக்கொண்டும்; அவ்வுறுப்புக்களின் வடிவு, நிறம் முதலியவற்றைக்கொண்டும்; மக்களின் இயல்புகளையும் அவர்க்கு நேரும் இன்ப துன்பங் களையும் எடுத்துக் கூறுவது உடற்குறி நூலாகும்.
கைவரி நூல் (Palmistry) ஒரு தனி நூலாய் வழங்கி வரினும், அது உடற்குறி நூலின் ஒரு பிரிவே.
இளங்கோவடிகளின் உடற்கூற்றைக் கண்டு அவருக்கு அரசாளும் திருப்பொறி யுண்டென்று குறிகாரன் கூறியது, உடற்குறிநூல் தழுவியே.
நுந்தை தாள்நிழல் இருந்தோய் நின்னை
அரைசுவீற் றிருக்கும் திருப்பொறி யுண்டென்று
உரைசெய் தவன் (சிலப். 30 : 174-6)
என்று இளங்கோவடிகள் பத்தினித் தெய்வக் கூற்றாய்க் கூறுதல் காண்க.
………………………………………………………… நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை (முல்லை. 2-3).
என்பது கைவரியையும்,
எழுமரங் கடுக்கும் தாள்தோய் தடக்கை (புறம். 90-10).
என்பது கைவடிவளவையும்,
செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண் (சிலப். 11 : 184).
என்பது கண்ணிறத்தையும் குறிக்கும் உடற்குறி நூற் சான்று களாம்.
(14) புள் நூல்
வல்லூறு, ஆந்தை, காகம், கரிக்குருவி, காடை முதலிய பறவை களின் குரலையும் இயக்கத்தையும் கொண்டு, வரப்போகும் நன்மை தீமைகளைக் கணித்துக் கூறுவது புள் நூல்.
புள் பறவை. புள்ளால் அறியப்படும் குறியைப் புள் என்பது ஆகுபெயர்.
வழிச்செல்வார் வாயினின்று தற்செயலாய் வரும் சொல்லைக் குறியாகக் கொள்வது, வாய்ப்புள் எனப்படும்.
உடம்பின் பலவுறுப்புக்கள் துடிப்பதைக் கூறும் துடிநூலும், கட்டு என்னும் நெற்குறியும், கழங்கு என்னும் காய்க் குறியும், ஏதேனும் ஓர் ஏட்டைத் தொடும் தொடுகுறியும், எண்குறியும், பெயர்க் குறியும், நின்ற நிலைக் குறியும் கவடிக்குறியும், கண்ட காட்சிக் குறியும் நேர்ந்த நிகழ்ச்சிக் குறியும், சொன்னசொற் குறியும், கோடிழைத்தற் குறியும், மூச்சுவிடற் குறியும், தேவராளர் குறியும், விரிச்சிக் குறியும், (Oracle) இரண்டிலொன்றன் குறியும், பல்வேறு நிகழ்ச்சிகளான நற்குறி தீக்குறிகளும் பிறவும் புள் நூலின் பாற்படுவனவே.
(15) கனா நூல்
இன்ன யாமத்தில் இன்ன பொருள் அல்லது நிகழ்ச்சி காணின், இவ்வளவு காலத்தில் இன்னது நேரும் என்று கூறும் நூல் கனா நூலாம்.
மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட ஒரு கனா நூல் இன்றும் உளது.
(16) உள நூல் (PSYCHOLOGY)
தனிப்பட்டவரும் தொகுதியாளருமான மக்களின் உளப்பாங்கு களை எடுத்துக் கூறுவது உள நூல்.
இது தொல்காப்பிய மெய்ப்பாட்டியலால் அறியப்படும். எண்சுவைகளையும் அவற்றின் நுண்ணிய வேறுபாடுகளையும், முதன் முதல் எடுத்துக் கூறியது தமிழிலக்கணமே.
(17) பூத நூல்
நிலம் நீர் தீவளி வெளி என்னும் ஐம்பூதங்களின் இயல்புகளைக் கூறும் நூல் பூத நூல்.
கருவளர் வானத் திசையின் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று
உண்முறை வெள்ளம் மூழ்கி யார்தருபு
மீண்டும் பீடுயர் பீண்டி அவற்றிற்கும்
உள்ளீ டாகிய இருநிலத் தூழியும் (பரி. 2 : 5-12)
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து (பு.வெ. 35)
மலைமாறிய வியன்ஞாலத்து (மதுரை. 4)
நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின் (தொல். மர. 90)
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். (குறள். 271)
இவை ஐம்பூதங்களைப் பற்றிப் பண்டைத் தமிழர்க்கிருந்த அறிவைப் புலப்படுத்தும்.
(18) நில நூல்
நிலத்தின் வகைகளையும் நிலப்படை வகைகளையும் மண்ணின் வகைகளையும் எடுத்துக் கூறுவது நில நூல்.
(19) நீர் நூல்
கிணறு தோண்டுவதற்கு நீரிருக்கும் இடங்களைத் தெரிவிப்பது நீர் நூல். இது கூவ நூல் எனவும்படும்.
(20) புதையல் நூல்
புதையல் இருக்குமிடங்களை அறியச் செய்வது புதையல் நூல்.
(21) கோழி நூல்
இது போர்ச் சேவற் கோழிகளின் நிறங்களையும் திறங்களையும் எடுத்துக் கூறுவது.
(22) பரி நூல்
இது பல்வகைக் குதிரைகளைப் பற்றிய செய்திகளை யெல்லாம் விளக்கிக் கூறுவது.
(23) யானை நூல்
இது யானையைப் பற்றிய செய்திகளையெல்லாம் விரிவாகக் கூறுவது.
(24) வரலாற்று நூல்
முக்கழக வரலாற்றில் பாண்டியர் தொகை குறிக்கப்பட்டிருப்ப தாலும், அன்றாட நடவடிக்கைளைப் பட்டோலைப் பெருமான் எழுதிவந்ததாலும், பரணி என்னும் வாகைப் பனுவல்களில் அரசவழி மரபு கூறப்படுவதாலும், வரலாற்று நூல் ஒருவகையில் எழுதப்பட்டு வந்தமை உய்த்துணரப்படும். மூவேந்தர் குடி வரலாற்று நூல்களும் அவர் வரலாற்றுக் கருவி நூல்களும் இறந்துபட்டன.
(25) திணை நூல்
முதல் கரு உரி என்னும் மூவகைப் பொருளையும் பற்றிக் கூறும் திணை நூல், ஒரு வகையில் ஞால நூலை (Geography) ஒக்கும்.
(26) பொழுதுபோக்கு
பண்டைத் தமிழ் மக்கள் ஒழிவு நேரத்தையும் ஓய்வு நாட்களையும் பின்வருமாறு கழித்து வந்தனர்.
சிறுவர்
கோலியடித்தல், தெல் தெறித்தல், கிளித்தட்டு, சடுகுடு, கில்லித் தாண்டு, பாண்டி (சில்லாக்கு), முதலிய விளையாட்டாடல், கற்றாடி விடுதல், மரமேறுதல், நீருள் மூழ்கி விளையாடல் முதலியன.
இளைஞர்
சடுகுடு, கிளித்தட்டு முதலிய விளையாட்டாடல், மற்பயிற்சி, இளவட்டக்கல் தூக்கல், கழியலடித்தல், வேட்டையாடல், ஏறுகோள் (சல்லிக்கட்டு) முதலியன.
முதியோர்
சேவற்போர், கடாப்போர், கதுவாலிப்போர், காடைப்போர், புறாப் போட்டி முதலியன காணல், வேட்டையாடல், தூண்டில் போடுதல், பணையம் வைத்தும் வையாதும் தாயமாடுதல் முதலியன.
சிறுமியர்
வீடுகட்டி விளையாடல், கும்மியடித்தல், பூப்பறித்தல், கழங்காடல், தெள்ளேணம் கொட்டல், அம்மானையாடல் முதலியன.
பெண்டிர்
கிளி வளர்த்தல், பூவை (நாகணம்) வளர்த்தல், புறா வளர்த்தல், மான் வளர்த்தல், மாலை தொடுத்தல், தாயமாடுதல், குரவை யாடல் முதலியன.
அரசர்
குதிரைப் பந்தயம், தேர்ப் பந்தயம், யானைப் போர், சாக்கைக் கூத்து முதலியன காணல்; யாழ்ப் போர், இசைப் போர், ஆடற் போர், செய்யுட் போட்டி, பட்டிமன்றம், பல்கவன அரங்கு, நூலரங்கேற்றம் முதலிய நடப்பித்தல்; வேட்டையாடல், பணையம் வைத்துத் தாயமாடல், உரிமைச் சுற்றத்துடன் இலவந்திகைச் சோலையில் விளையாடல் முதலியன.
ஊரார்
திருவிழாக் கொண்டாடல், நாடகம் நடிப்பித்தல், ஏறுகோள் நடத்துதல், முதலியன. ஏறுகோள் இன்று சல்லிக்கட்டு என்றும் மஞ்சு வெருட்டு என்றும் மாடுபிடி சண்டை என்றும் சொல்லப் பெறும்.
நகரத்தார்
வேந்தன் (இந்திர) விழாக் கொண்டாடல், புதுப்புனலாடல் முதலியன. வேந்தன் விழாவைக் கொண்டாடும்போது பிற தெய்வங்கட்கும் பூசைகள் நடத்தினர். (ப.த.நா.ப.)
பண்டைத் தமிழப் பண்பாடு
1. பொது
மேலை நாடுகளெல்லாம் நாகரிகமடைந்திருந்தாலும், அவற்றுள் ஆங்கில நாடே பண்பாட்டிற் சிறந்ததாகச் சொல்லப்படுவது போல், நாவலந்தேயத்திலும் தமிழ் நாடே நல்லதாகச் சொல்லப் பட்டது.
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து
என்று, தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் இயற்றிய பனம்பார னார் கூறுதல் காண்க.
வடுகர் அருவாளர் வான்கரு நாடர்
சுடுகாடு பேய்எருமை என்றிவை யாறும்
குறுகார் அறிவுடையார்.
என்பது ஒரு பழஞ் செய்யுள் (தொல். சொல். 51, சேனா. உரை மேற்கோள்).
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல
என்பதால் (புறம். 31). தமிழர் அறத்தையே எல்லாப் பேறுகட்கும் அடிப்படையாகக் கொண்டிருந்தனர் என்பது புலனாகும்.
மொழித் துறையில், அவர் நாகரிகம் அடைந்திருந்தது போன்று பண்பாடும் அடைந்திருந்தனர். ஒன்றிற்கு இரண்டிற்குப் போதல் என்றும் கால் கழுவுதல் என்றும் இடக்கரடக்கியும், இறந்தவனைத் துஞ்சினான் என்றும் சாவைப் பெரும் பிறிது என்றும் நல்ல பாம்பு கடித்தலைக் கொடித்தட்டல் என்றும் மங்கல வழக்காகவும், கூறிவந்தனர்.
பெரியோரைக் கை நீட்டிச் சுட்டாமலும், அவரை நோக்கிக் கால் நீட்டாமலும், அவர் நிற்க இருந்து கொண்டு பேசாமலும், அவரை நீங்கள் என்று முன்னிலைப் பெயராற்குறியாது தாங்கள் என்றும் அங்குற்றை என்றும் படர்க்கைச் சொல்லாற் குறித்தும், பணிவுடைமை காட்டி வந்தனர். பொதுவாக, இழிந்தோனை நீ என்றும், ஒத்தோனை நீர் என்றும், மூத்தோனை நீங்கள் என்றும், உயர்ந்தோனைத் தாங்கள் என்றும், துறவுமடத் தலைவனை அங்குற்றை என்றும், அரசனையும் முனிவனையும் அடிகள் என்றும் சொல்லாற் சுட்டுவது தமிழ் மரபாகும்.
தென்புலத்தார் (இறந்த முன்னோர்) நாளன்று, இரப்போர்க்கும் ஏழை யெளியவர்க்கும் ஆண்டியர்க்கும் விருந்தளித்தும், இறந்துபோன சூலியின் பொருட்டுச் சுமைதாங்கிக் கல் நட்டும், வேனிற் காலத்தில் வழிப்போக்கர்க்குத் தண்ணீர்ப் பந்தலும் மோர்ப் பந்தலும் வைத்தும், ஆவிற்கு உரிஞ்சுதறி நட்டியும், விலங்குகட்குத் தண்ணீர்த் தொட்டி கட்டியும், பலவாறு அறஞ்செய்து வந்தனர்.
அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிதலும் தொல்லோ சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் (சிலப். 16 : 71 -3).
இல்லறத்தாரால் இயன்றவரை கடைப்பிடிக்கப்பட்டன. முதற்கால அந்தணர் தமிழ முனிவர்.
வீடு கட்டும்போது, அயலாரும் ஆண்டியரும் படுத்துறங்கத் தெருத் திண்ணை அமைக்கப் பெற்றது. மாடங்களின் உச்சியில் காட்டுப் புறாக்கள் தங்கற்குப் புரைகள் விடப்பட்டன. சாரங்கள் இட்ட துளைகளும் குருவிகள் கூடுகட்ட விடப்பட்டன. கோயில் மண்டபங்களின் முகடுகள் வௌவால்கள் தங்குமாறு அரையிருட்டறைகளாய் அமைக்கப்பட்டன. அவை வௌவால் நத்தி எனப் பெயர் பெற்றன. அயல் நாட்டாரும் வழிப் போக்கரும் தங்குவதற்கு ஊரார் ஊர் மடங்கள் கட்டி வைத்தனர்.
உடைகோ வணமுண் டுறங்கப் புறந்திண்ணையுண்டு
சகமுழுதும், படுக்கப் புறந்திண்ணை யெங்கெங்குமுண்டு
என்று பட்டினத்தடிகள் பாடியிருத்தல் காண்க.
கருங்கைக் கொல்லன் இரும்புவிசைத் தெறிந்த
கூடத் திண்ணிசை வெரீஇ மாடத்
திறையுறை புறவின் செங்காற் சேவல்
இன்றுயில் இரியும் பொன்துஞ்சு வியனகர்
என்பது (பெரும்பாண். 437-440), மாடப் புறாவைக் குறித்தல் காண்க.
கூரை வீடுகளின் இறப்பிலும் சிட்டுக் குருவிகள் தங்கும். இதனால், பிறப்பிறப்பிலே. என்று சிட்டுக் குருவிக்கும் சிவபெருமானுக் கும் இரட்டுறலாகச் சொன்னார் காளமேகனார். மக்களை நம்பி அடைக்கலம் புகுவதனாலேயே, வீட்டுக் குருவிக்கு அடைக்க லான் என்று பெயர் வந்தது.
திருவீழிமிழலையில் ஒரு வௌவால் நத்தி மண்டபம் இன்றும் இருக்கின்றது.
பெண்டிர் தம் வீட்டு முற்றத்திற் கோல மிடுவதற்கு அரிசி மாவைப் பயன்படுத்தியது, எறும்பிற்கு உணவாதற் பொருட்டாகும்.
தமிழர் எல்லாரும் பொதுவாக அஃறிணையுயிரிகளிடத்து அன்பு காட்டி வந்தனர். வீட்டில் வளர்ப்பனவும் மிகப்பயன்படுவனவும் கண்ணிற் கினியனவுமான நிலைத்திணை (தாவரம்) ஓடுயிரி பறவை முதலியவற்றைப் பிள்ளைகளைப் போன்றே பேணினர்.
அதனால் அவற்றின் இளமைக்குப் பிள்ளைப் பெயர் தோன்றிய தோடு, அவற்றைப் பிள்ளைப் பேறில்லாதவர்கள் பிள்ளைக ளாகவே கருதி வளர்க்கும் வழக்கமும் ஏற்பட்டது. இருக்கும் பிள்ளை மூன்று, ஓடும் பிள்ளை மூன்று, பறக்கும் பிள்ளை மூன்று. என்பது பழமொழி. தென்னம் பிள்ளை போன்றது இருக்கும் பிள்ளை; கீரிப் பிள்ளை போன்றது ஓடும் பிள்ளை; கிளிப் பிள்ளை போன்றது பறக்கும் பிள்ளை.
மாடு வளர்ப்பவர்கள், சிறப்பாக உழவரும் இடையரும், காளைக் கும் ஆவிற்கும், முறையே, சாத்தன் சாத்தி, முடக் கொற்றன் முடக்கொற்றி, கொடும்புறமருதன் கொடும்புற மருதி முதலிய மக்கட் பெயர்களையே இட்டு வழங்கினர். அதனால், அவை இரு திணைக்கும் பொதுவான விரவுப் பெயர் வகையாக இலக்கணத் திலும் இடம் பெறலாயின. (தொல்.சொல். 20 - 29).
பொங்கற் பண்டிகையில் மாடுகட்கும் ஒரு நாளை ஒதுக்கி, அவற்றிற்கு அழகிய அணிகளைப் பூட்டிச் சிறந்த உணவூட்டி மாட்டுப் பொங்கல் எனக் கொண்டாடுவது வழக்கம்.
எல்லாரும் வாழ வேண்டுமென்பது தமிழர் பொது நோக்கம்.
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி (மணி. 2 : 70 -71)
விழாத் தொடங்குவதும்,
பாரக மடங்கலும் பசிப்பிணி யறுகென
ஆதிரை யிட்டனள் ஆருயிர் மருந்தென்
என்னும் மணிமேகலைக் கூற்றும் (16 : 134-5),
எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லால் வேறொன் றறியேன் பராபரமே
என்னும் தாயுமானவர் பராபரக் கண்ணியும் (221), தமிழரின் பொதுநல நோக்கைத் தெளிவாய்க் காட்டும்.
பிறப்பால் சிறப்பில்லை யென்பதும், மாந்தர் எல்லாரும் ஓரினம் என்பதும் பண்டைத் தமிழர் கொள்கைகளாம். தொழில் பற்றிய வகுப்பே தமிழர் குலப்பிரிவாகும்.
பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (குறள். 972).
தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா வொருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே. (புறம். 189).
நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்லள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம். (நாலடி. 195)
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் (திருமந்திரம், 2104)
குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
பிறப்பும் ஒன்றே இறப்பும் ஒன்றே. (கபிலர் அகவல்).
தமிழர் கடைப் பிடித்த தலையாய அறங்களுள் இரண்டு, வாய்மையும் நேர்மையுமாகும். பொய் சொன்ன வாய்க்குப் புகாக் கிடையாது. என்பது பழமொழி. புகா = உணவு.
மாவலி என்னும் மாபெருஞ் சேர வேந்தன், தனக்கு இறுதி நேர்வது தெரிந்த பின்னும் தன்வாய்ச்சொல் தப்பவில்லை.
ஊரவைத் தேர்தலில், இளைஞர் முதல் முதியோர் வரை எல்லாரும் கூடியுள்ள மண்டபத்தின் நடுவில் வைக்கப்பட்ட குடத்தை, அங்குள்ள நம்பிமாருள் முதிர்ந்தார் ஒருவர் எடுத்துக் கவிழ்த்து அதனுள் ஒன்றுமில்லையென்று காட்டிக் கீழே வைப்பர். ஒவ்வொரு குடும்பிலும் (Ward) தகுதியுள்ளவர் பெயரை யெல்லாம். தனித்தனி வரைந்த ஓலைகளை, குடும்பின் பெயர் பொறித்த வாயோலையுடன் சேர்த்துக்கட்டி, அக்குடத் துள் இடுவர். அதன்பின், முற்கூறிய முது நம்பியார் அங்கு நடை பெறுவது இன்னதென்றறியாத சிறுவனைக் கொண்டு ஒரு கட்டை எடுப்பித்து, அதை அவிழ்த்து வேறொரு குடத்திலிட்டுக் குலுக்கி, அவற்றுள் ஓர் ஓலையை அச்சிறுவனை எடுக்கச் சொல்லி வாங்கி, அங்குள்ள கணக்கன் கையிற் கெடுப்பர். அவன் தன் ஐந்து விரலையும் அகல விரித்து அதைப் பெற்று, அதிலுள்ள பெயரை அங்குள்ளார் அனைவர்க்கும் கேட்குமாறு உரக்கப் படிப்பான். அதன்பின், அங்குள்ள நம்பிமார் எல்லாரும் ஒவ் வொருவராய் அதை அவ்வாறே படிப்பர். அதன் பின்னரே அப் பெயர் ஏட்டிற் பதியப் பெறும். இங்ஙனம் எல்லாக் குடும்பி னின்றும் தெரிந்தெடுக்கப் பெற்றவரே ஊரவை யுறுப்பினராவர்.
ஊரவைக் கணக்கன் நல்லொழுக்கமும் நல்வழியில் ஈட்டிய பொருளும் உடையவனாயிருத்தல் வேண்டும். அவன் அவை யார்க்குக் கணக்குக் காட்டும்போது, பழுக்கக் காய்ச்சிய இருப்பு மழுவைக் கையில் ஏந்திக் கொண்டு, தான் காட்டும் கணக்கு உண்மையான தென்று உறுதி கூறவேண்டும். அவன் கை சுடப் படாவிடின், அவன் ஆட்டை நன்னர் (Annual Bonus) ஆகிய ஏழு கழஞ்சிற்குமேல் காற்பங்கு பொன் சேர்த்துக் கொடுக்கப் பெறும்; சுடப்படின், பத்துக் கழஞ்சு பொன் தண்டமும் வேறு தண்டனை யும் அவன் அடைவான்.
வழக்கு மன்றங்களில், வழக்காளிகள் தம் கூற்றுக்களைப் பழுக்கக் காய்ச்சிய இரும்பைப்பிடித்தல், நச்சுப் பாம்புக்குடத் திற்குள் கைவிடுதல் முதலிய தெய்வச் சான்று கொண்டு மெய்ப் பிக்கும் வழக்கமும் அக்காலத்தில் இருந்தது.
சீவகசிந்தாமணி நூலாசிரியரான திருத்தக்க தேவர், பழுக்கக் காய்ச்சிய இருப்புக் கம்பியை ஏந்தி, தம் கற்பைப் பற்றிப் பிறர்க்கிருந்த ஐயத்தை அகற்றினார் என்னும் கதையும், இங்குக் கருத்ததக்கது. கற்புடை மகளிர் தம் கற்பை மெய்ப்பிக்க இம் முறையையே பெரும்பாலும் கையாண்டனர்.
பழையனூர் வேளாளர் எழுபதின்மர், அவ்வூர் வணிகனுக்கு உறுதி கூறியதை நிறைவேற்றுமாறு தற்கொலை செய்து கொண்டது, இலக்கியப் புகழ்பெற்ற செய்தியாகும்.
தாளாண்மை, வேளாண்மை, தன்மானம், நன்றி மறவாமை என்பன தமிழரின் பிற பண்பாட்டுக் குணங்களாகும்.
வினையே ஆடவர்க் குயிரே வாள் நுதல்
மனையுறை மகளிர்க் காடவர் உயிர் (குறுந். 135)
வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து
வாளாண்மை யாலும் வலியராய்த் - தாளாண்மை
தாழ்க்கும் மடிகோள் இலராய் வாழாதார்
வாழ்க்கை திருந்துத லின்று. (பழமொழி. 151)
எந்நன்றி சொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறள். 110)
பல்வேறு வகுப்பார் பண்பாடு
2. அந்தணர் பண்பாடு
(1) ஐயரது
மணப்பருவம் வந்தபின் ஆணும் பெண்ணும் தாமாகக் கூடி வாழ்ந்த முதற் காலத்தில், மணக்கவில்லையென்று பொய் சொல் லியும், மணந்ததாக ஒப்புக் கொண்டவிடத்தும் கைவிட்டும், ஆடவர் பெண்டிர்க்குத் தீங்கு செய்து வந்ததால், அவை பெரும் பாலும் நேராவண்ணம், பலர்க்கு முன் உறுதி கூறி மணமகன் மண மகளை மணக்குமாறு, மக்கள் மீது அன்பும் அருளும் கொண்ட இராமலிங்க அடிகள் போலும் பெரியோர் கரணம் என்னும் திருமணச் சடங்கை ஏற்படுத்தினர்.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப. (தொல். கற். 4)
அறியாமை எல்லாத் தீமைக்கும் வேராகையால் அதை அகற்றும் பொருட்டுப் பல துறைகளில் முதனூலை முனிவர் அருளிச் செய்தனர்.
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூல் ஆகும் (தொல். மர. 95)
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பினை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே
என்று திருமூலர் (திருமந்திரம், 724) கூறியபடி, உடம்பாற் பெறக்கூடிய பயனை முற்றும் பெறுமாறு வாழ்நாளை நீட்டிக்கும் மருத்துவக் கலையை, சித்தர் கண்டு இல்லறத்தார்க் குதவி யருளினர்.
இறைவனுக்கு உண்மை அறிவு இன்பம் முதலிய பிற பண்புகளும் வடிவாகுமேனும், அன்பே சிறந்ததாகக் கண்டறிந்து இறைவனை யடைய அதுவே வழியாகக் கூறியவர் நாவலந் தேயத்தில் தமிழ அந்தணரே.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
என்றார் திருமூலர் (திருமந்திரம், 270).
அன்பெனும் பிடியு ளகப்படு மலையே
அன்பெனுங் குடிபுகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தம ரமுதே
அன்பெனுங் கடத்து ளடங்கிடுங் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
அன்புரு வாம்பர சிவமே
என்னும் இராமலிங்க அடிகள் பாட்டும் அதுவே.
இறைவனிடத்தில் அடியார் சிற்றின்பத்தை வேண்டுவதினும் பேரின்பத்தை வேண்டுவதே தக்க தென்பதை,
………………………….. யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே.
என்னும் பரிபாடலடிகள் (5 : 78-81) உணர்த்தும். காரைக் காலம்மையார் வேண்டியதும் அதுவே.
தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்
றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சன்றோர் கடன்.
என்பதும் (நாலடி. 58) அந்தணர் பண்பாட்டை யுணர்த்தும்.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
என்று (குறள். 30) அந்தணர் சிறப்பியல்பாகக் கூறப்படும் அருளுடைமை, மூலன் என்னும் இடையன் காட்டில் இறந்தபின் அவன் மந்தை மாடுகள் கதறியதைக் கண்டிரங்கி, திருமூலர் அவனுடம்பிற் புகுந்து அவற்றை வீடுகட்குக் கொண்டுபோய்ச் சேர்த்தமையால் அறியப்படும்.
(2) பார்ப்பாரது
புலவர், ஆசிரியர், பூசாரியர், கணியர், ஓதுவார், கணக்கர் எனப் பல்வேறு பெயர் பெற்றுக் கல்வித் தொழில் புரியும் இல்லற வகுப்பார் பார்ப்பார் ஆவர். நூல்களைப் பார்ப்பவர் பார்ப்பார், அல்லது பார்ப்பனர். பார்ப்பனன் என்னும் சொல் பிராமணன் என்பதன் திரிபன்று. பார்த்தனன், பார்க்கின்றனன், பார்ப்பனன் என்னும் அனன் ஈற்றுச் சொற்கள்; பார்த்தான், பார்க்கின்றான், பார்ப்பான் என்னும் ஆன் ஈற்றுச் சொற்களின் மறு வடிவங்களாகவேயிருத்தல் காண்க.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே மின்னொடு
வானம் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை யிகழ்தல் அதனினும் இலமே.
இது (புறம். 192), எந்தவூரும் சொந்தவூர்; எல்லாரும் உறவினர்; ஒருவரின் இன்ப துன்பத்திற்கு அவரே கரணியம் (காரணம்); வாழ்விலும் தாழ்விலும் ஒத்திருக்க வேண்டும்; எல்லாம் ஊழால் நடப்பதால் பெரியோர் சிறியோர் என்னும் வேறுபாடு காட்டக் கூடாது. என்று சில சிறந்த பண்பாட்டுக் கருத்துக்களைக் கணியன் பூங்குன்றனார் தெரிவித்தது.
ஊழை வினைப் பயனென்றும் இறைவன் ஏற்பாடென்றும் இயற்கையென்றும், மூவேறு வகையிற் கொள்வர்.
மண்கெழுதானை ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே
எம்மால் வியக்கப் படூஉம் மோரே
இடுமுட் படப்பை மறிமேய்ந் தொழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு
புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம்
சீறூர் மன்ன ராயினும் எம்வயின்
பாடறிந் தொழுகும் பண்பி னாரே
மிகப்பே ரெவ்வம் உறினும் எனைத்தும்
உணர்ச்சி யில்லோர் உடைமை உள்ளேம்
நல்லறி வுடையோர் நல்குரவு
உளளுதும் பெருமயாம் உவந்துநனி பெரிதே.
இது (புறம். 197), நாற்பெரும்படைப் பெருநாட்டு வேந்த ராயினும் பண்பில்லாதரை மதியோம்; சிற்றூர் மன்னராயினும் பண்புடையாரை மதிப்போம்; அறிவிலிகள் செல்வத்தை நினையோம்; அறிவுடையார் வறுமையையே நினைப்போம். என்று மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
ஈயென இஃத்தல் இழிந்தன் றதன்எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிநதன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன் றதன்எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்த்திரைப் பெருங்கடல்
உண்ணா ராகுப நீர்வேட் டோரே
ஆவும் மாவும் சென்றுணக் கலங்கிச்
சேறொடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும்
புள்ளும் பொழுதும் பழித்த லல்லதை
உன்னிச் சென்றோர்ப் பழியலர் அதனால்
புலவேன் வாழியர் ஓரி விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே.
இது (புறம். 204), இரத்தல் இழிவானது; ஈயாமை அதனினும் இழிவானது; கொடுத்தல் உயர்ந்தது; கொடுத்ததை வாங்காமை அதனினும் உயர்ந்தது. தண்ணீர் குடிக்க விரும்பியவர் பெரிய கடலுக்குச் செல்லார்; சிறிய ஊற்றிற்கே செல்வர். நீ ஒரு குறுநில மன்னனாயிருந்தாலும் கொடையாளி என்று வந்தேன். நீ கொடா விட்டாலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன். அது நான் புறப்பட்டு வந்த வேளையின் குற்றமேயன்றி உன் குற்றமன்று. என்று கழைதின்யானையார் வல்வில் ஓரியிடம் கூறியது.
முற்றிய திருவின் மூவராயினும்
பெட்பின் றீதல் யாம்வேண் டலமே
இது (புறம். 205 : 1-2), நிறைந்த செல்வத்தையுடைய மூவேந்தர் தரினும் எம்மிடம் ஆர்வமின்றித் தருவதை யாம் விரும்பவில்லை என்று பெருந்தலைச் சாத்தனார் கடிய நெடுவேட்டுவனிடம் கூறியது.
குன்றும் மலையும் பலபின் னொழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென
நின்ற என்நயந் தருளி ஈது கொண்
டீங்கனஞ் செல்க தானென என்னை
யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன்
காணா தீத்த இப்பொருட் கியானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
தினையனைத் தாயினும் இனிதவர்
துணையள வறிந்து நல்கினர் விடினே.
இது (புறம். 208), பெருஞ்சித்திரனார் அதிகமான் நெடுமானஞ்சி யிடம் பரிசில்பெறச் சென்றபோது, அவன் அவரைக் காணாமலே பரிசு கொடுத்தனுப்ப, அவர் அதை வாங்காது,
பல குன்றுகளையும் மலைகளையும் கடந்து பரிசில் பெற வந்த என்மீது அன்பு கொண்டு இப்பொருளைக் கொண்டு இப்படிச் செல்க என்று சொல்வதற்கு, அவன் என்னை எப்படி அறிந்தான்? என்னைக் காணாமற் கொடுத்த இப்பரிசிலைப் பெறுவதற்கு நான் ஒரு வணிகப் பரிசிலன் அல்லேன். தினையளவாயினும் என் தகுதியறிந்து மதித்துக் கொடுத்தால் நான் பெறுவேன். என்று கூறியது.
சான்றோர் புகழு முன்னர் நாணுப
என்பது (குறுந். 252), அறிஞர் புகழ்ச்சியை விரும்பாமையைத் தெரிவிக்கும்.
புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி
கல்லா வொருவன் உரைப்பவுங் கண்ணோடி
நல்லார் வருந்தியுங் கேட்பரே மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து.
என்னும் நாலடிச் செய்யுள் (155), கல்லாத ஒருவன் ஓர் அவையில் பொருளற்றவுரை நிகழ்த்தினாலும், அவன் பலர் முன் வெட்கப்படுவதற்கு இரங்கி, வருத்தத்தோடும் அறிஞர் கேட்டுக் கொண்டிருக்கும் பண்பாட்டைத் தெரிவிக்கின்றது.
சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஒற்றனாக வந்தானென்று கொல்லப்புகும் போது, கோவூர்கிழார்,
வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி
என்னும் பாட்டைப் பாடி (புறம். 47), அப்புலவனைத் தப்புவித்தார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், மலையமானின் இரு குழந்தைகளை யானை மிதித்துக் கொல்லும்படி இடப் புகுந்தபோதும், கோவூர்கிழாரே நீயே, புறவின் அல்ல லன்றியும் என்னும் பாட்டைப் பாடி (புறம்.46), அக்குழந்தைகளைத் தப்புவித்தார்.
அக்காலத்துப் புலவர் அரசரையடுத்து, அரசியல் தவறுகளை எடுத்துக்காட்டி அவற்றைத் திருத்தவும், பொதுநலத் திட்டங் களை வகுத்துக் கொடுத்து அவற்றை நிறைவேற்றவும், அறிவுரை கூறி வந்தனர்.
காய்நெல் லறுத்துக் கவளம் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினும் தமித்துபபுக குணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே.
இது (புறம். 184), பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பிக்குக் கூறிய அறிவுரை.
இதன் பொருள் : விளைந்த நெல்லையறுத்து யானைக்குக் கவளங் கொடுத்தால், ஒரு மாவிற்குக் குறைந்த நிலமும் பல நாளைக்கு வரும். நூறு செய் அளவு நன்செய்யானாலும் யானை தானே தின்னும்படி விட்டுவிட்டால், அதன் வாய்க்குள் புகுவதை விட அதிகம் அதன் கால்பட்டுச் சேதமாகும். அறிவுடைய அரசன் நல்ல வழியில் வரிதண்டினால், அவன் நாடு கோடி பொருளைத் தொகுத்துக் கொடுத்துத் தானும் மிகத் தழைக்கும். அவன் அறிவு கெட்டு நாள்தோறும் தகுதியறியாத வீண் ஆரவாரக் கூட்டத்தோடு கூடி, வலிந்து கவரும் பெரும் பொருள் திரளை விரும்பினால், யானை புகுந்த நன்செய் போலத் தானும் உண்ன்; நாடும் கெடும் என்பது.
சோழன் நலங்கிள்ளி ஆவூரை முற்றியிருந்த காலத்தில் கோட்டை வாயிலை அடைத்துக்கொண்டு உள்ளே சும்மாவிருந்த நெடுங்கிள்ளியை நோக்கிக் கோவூர்கிழார்,
கரிய பெண்யானைக் கூட்டத்தோடு பெரிய குளத்திற் போய்ப் படியாமலும், நெற் கவளத்தோடு நெய்ம் மிதிக் கவளமும் பெறா மலும், திருந்திய பக்கத்தையுடைய வலிய கம்பம் கெடச்சாய்த்து நிலத்தின் மேற்புரளும் கையை யுடையனவாய், வெப்பமாக மூச்சு விட்டு வருந்தும் யானை இடியோசை போல முழங்கவும், பாலில்லாத குழவி அழவும், பெண்டிர் பூவில்லாத வெறுந் தலையை முடிக்கவும், நீரில்லாத அழகிய வேலைப்பாடுள்ள நல்ல மனைகளிலுள்ளவர் வருந்திக் கூக்குரலிடுதல் கேட்கவும், நீ இங்கு இனிதாக இருத்தல் தீயதாகும். கிட்டுதற்கரிய வலிமையுள்ள குதிரையையுடைய அரசே! நீ அறத்தை மேற்கொண்டால் இதோ நகர் உனதன்றோ என்று சொல்லித் திறந்து விடு; மறத்தை மேற் கொண்டால் போர் செய்து கொண்டு திறந்து விடு. இவ்விரண்டு மன்றி, உறுதியான நிலையொடு கூடிய கதவினையுடைய மதிலுக் குள் ஒரு பக்கத்தில் ஒடுங்கிக் கிடத்தல், ஆராயுங் காலத்து, வெட்கப்படத்தக்க செய்தியாகும். என்று அஞ்சாது இடித் துரைத்தார். (புறம். 44).
சோழன் நலங்கிள்ளி இன்னொரு சமையம் உறையூரை முற்றுகை செய்திருந்தபோதும், நெடுங்கிள்ளி கோட்டை வாயிலை அடைத்து உள்ளேயிருந்தான். அன்றும் கோவூர்கிழார் தலை யிட்டு அவ்விருவர் செயலும் அவர் குடிக்குப் பொருந்தாமையைக் காட்டிப் போரை நிறுத்தினார்.
கோப்பெருஞ் சோழன் தன்னோடு மாறுபட்ட தன் மக்கள் மேற் போருக்குச் சென்றபோது, புல்லாற்றூர் எயிற்றியனார் அதன் இழிவையும் பயனின்மையையும் எடுத்துக் காட்டித் தடுத்து, அவனை நல்வழிப்படுத்தினார். (புறம். 213).
எழுபெரு வள்ளல்களுள் ஒருவனாகிய வையாவிக் கோப்பெரும் பேகன் தன் தேவியாகிய கண்ணகியைத் தள்ளிவிட்டபின், அவள் பொருட்டுக் கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் என்னும் புலவர் நால்வர், கல்லுங் கரையக் கனிந்து பாடியுள்ளார். (புறம். 143-7).
குடபுலவியனார் என்னும் புலவர் பண்டியன் நெடுஞ் செழியனிடம் சென்று,
மல்லல்முதூர் வயவேந்தே
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ யாகல் வேண்டினும் சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்
தகுதி கேள்இனி மிகுதி யாள
நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரி யோர்ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற் றாயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்குத வாதே அதனால்
அடுபோர்ச் செழிய இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண்தட் டோரே
தள்ளா தோர்இவண் தள்ளா தேரே.
என்று (புறம். 18), ஓர் உணவுப் பெருக்கத் திட்டத்தை விளக்கிக் காட்டினார்.
இதன் பொருள் : வளமுள்ள பழமையான ஊரையுடைய வலியவேந்தே! நீ மறுமையிற செல்லக்கூடிய உலகத்தில் நுகரும் (அனுபவிக்கும்) செல்வத்தை விரும்பினாலும், உலக அரசரின் தோள் வலிமையைக் கெடுத்து நீ ஒருவனே தலைவனாக விரும்பினாலும், மிகுந்த நல்ல புகழை இவ்வுலகத்தில் நிறுத்த விரும்பினாலும், அதற்குத்தக்க செயலை இப்போது கேட்பாயாக. பெரியோனே! நீரையின்றி யமையாத உடம்பிற்கெல்லாம் உணவு கொடுத்தவர் உயிர் கொடுத்தவராவர். உணவை முதற் கருவியாகவுடையது அவ்வுணவால் உள்ளதாகும் உடம்பு. ஆதலால், உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர். அந்நீரையும் நிலத்தையும் ஒருவழிச் சேர்ந்தவர் இவ்வுலகத்தில் உடம்மையும் உயிரையும் படைத்தவராவர். நெல் முதலியவற்றை விதைத்து மழையை எதிர்பார்க்கும் நீர்வளமற்ற நிலம் இடமகன்று பரப்புள்ளதாயினும், பொருந்தி யாளும் அரசனது முயற்சிக்குப் பயன்படாது. ஆதலால், கொல்லும் போரைச் செய்யும் பாண்டியனே! இதை இகழாமல் விரைந்து நிலங் குழிந்த விடங்களில் நீர் பெருகத் தேக்கினோர், தாம் செல்லும் உலகத்துச் செல்வம் முதலிய மூன்றையும் இவ்வுலகத்துத் தேக்கினோராவர். அந்நீரைத் தேக்காதோர் அவற்றையும் தேக்காதோரே யாவர். என்பது.
3. அரசர் பண்பாடு
பண்டைத் தமிழரசர் தம்மை ஆளும் தலைவர் எனக்கருதாது, காக்கும் தந்தையர் போன்றே கருதினர். அதனால் காவலர் என்றும் புரவலர் என்றும் பெயர் பெற்றார்.
அரசனாலும் அரசியலதிகாரிகளாலும் பகைவராலும் கள்வர் கொள்ளைக்காரராலும், காட்டு விலங்காலும் நேரக்கூடிய, ஐவகைத் துன்பமாகிய வெயிலினின்றும் குடிகளைக் காத்து, இன்பமாகிய நிழலைத் தருபவன் என்னும் கருத்திலேயே, குடை அரசச் சின்னங்களுள் ஒன்றாகக் கொள்ளப்பட்டது.
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மு
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்
கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
வெயில்மறைக் கொண்டன்றோ அன்றே வருந்திய
குடிமறைப்பதுவே கூர்வேல் வளவ
என்று (புறம். 35), வெள்ளைக்கூடி நாகனார் பாடுதல் காண்க. வெண்மதி போன்ற தண்மையையும் குற்றமற்ற தூய்மையையும் குறிக்க, அரசன் குடை வெண்பட்டினாற் செய்யப்பட்டு வெண் கொற்றக் குடை எனப்பட்டது. கொற்றம் வெற்றி. அரசாட்சி நிழல் என்றும், அரசாட்சிக்குட்பட்ட நாடு குடை நிழல் என்றும் பெயர் பெற்றன.
உறுதுப் பஞ்சா துடல்சினம் செருக்கிச்
சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு
ஓருங்ககப் படேஎ னாயின் பொருந்திய
என்நிழல் வாழ்நர் செல்நிழல் காணாது
கொடியன்எம் இறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக.
என்பது, பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வஞ்சினம் (புறம். 72).
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
என்றார் திருவள்ளுவர் (குறள். 1034).
ஆட்சி நேர்மையாயிருக்க வேண்டும் என்பதை உணர்த்த அரசன் கையில் ஒரு செங்கோல் இருந்தது. செங்கோல் நேரான கோல். குடிகளைத் துன்புறுத்திய ஒரு சிலர் செங்கோல் பிடிப்பினும், கொடுங்கோலர் எனப் பழிக்கப்பட்டார்.
அரசன் முறை (நீதி) தவறி ஆண்டால் அவன் நாட்டில் மழை பெய்யாதென்றும், அரசனும் குடிகளும் உயிரும் உடம்பும்போல நெருங்கிய தொடர்புடையவரென்றும், இரு கருத்துக்கள் அக்காலத்து மக்கள் உள்ளத்தில் வேரூன்றியிருந்தன.
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. (குறள். 545)
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒலவாது வானம் பெயல். (குறள். 559)
கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை
மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயிர் என்னும் தகுதியின் றாகும். (மணி. 7 : 8-12)
மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம்
பிழைஉயிர் எய்தின் பெரும்பேரச்சம்
குடிபுர வுண்டும் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில் (சிலப். 25 : 100-105)
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை யல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும்இக் கண்ணகன் ஞாலம் (புறம். 35).
அரசர் குடிகளிடத்து அன்பு கொண்டிருந்ததனால், காட்சிக் கெளியராயும் கடுஞ்சொல்லர் அல்லராயும் இருந்தனர். இது கண்ணகி வழக்காட்டினின்று நன்கு புலனாகின்றது.
செங்கோல் அரசர் தம் ஆட்சியும் உயிரும் இழக்கினும், வாய்ச் சொல் தவறுவதில்லையென்பது, மாவலி என்னும் சேரமா வேந்தன் செய்தியினின்று அறியலாம்.
நடுநிலையாகக் குடிகளின் வழக்குத் தீர்த்து முறை வழங்கும் பொருட்டு, வழக்குக்களின் உண்மை காண்பதற்கு, மாறுகோலம் பூண்டு நகர் முழுதுஞ் சுற்றிப் பொது மக்கள் பேச்சைக் கவனித் தறிவதும், வழக்கிழந்தவர் தம்மிடம் முறையிட அரண்மனை வாயிலில் ஆராய்ச்சிமணி கட்டி வைப்பதும், தெய்வச் சான்று வாயிலாய்த் தம் கூற்றை மெய்ப்பிப்பாரை ஊக்குவிப்பதும், எவ்வகையிலும் துப்புத் துலங்காத வழக்கின் உண்மையை அறிவிக்குமாறு இறைவனை வேண்டுவதும், பண்டைத் தமிழரசர் கையாண்ட வழிகளாகும்.
குற்றங்கட்குத் தண்டனை, இரப்போனென்றும் புரப்போ னென்றும் வேறுபாடு காட்டாது நடுநிலையாய் நிறைவேற்றப் பட்டது. கொற்கைப் பாண்டியன் தன் கை குறைத்ததும், மனுமுறை கண்ட சோழன் தன் மகன்மேல் தேரைச் செலுத்திக் கொன்றதும், இதை வலியுறுத்தும்.
நாள்தோறும் காலையில் முரசறைவித்துக் கொடை வழங்கிய துடன், அவ்வப்போது சிறு சோற்று விழாவும் அரசர் நடத்தி வந்தனர். ஊன் சோற் றுருண்டை வந்தவர்க்கெல்லாம் வழங்கு வது சிறு சோற்று விழாவாகும்.
அரசர் தம் பிறந்தநாட் கொண்டாட்டமாகிய வெள்ளணி விழாவன்று, சிறையாளிகளை விடுதலை செய்வது வழக்கம்.
அடித்தளை நீக்கும் வெள்ளணியாம் (சிலப். 27 : 229)
அரசர் அறிஞரின் அறிவுரைகட்குச் செவிசாய்த்ததோடு, அவர் சொன்ன குறைகளையும் நீக்கிவந்தனர்.
மனுமுறை கண்ட சோழன் தலைநகராகிய திருவாரூரில் கட்டப்பெற்றிருந்த ஆராய்ச்சி மணியை, கன்றையிழந்த ஓர் ஆவும் பயன்படுத்திற்று. அதை அவ்வரசனும் ஓர் உயர்திணைச் செயல் போன்றே ஏற்று, தன் ஒரே மகன்மீது தேரோட்டி முறை செய்தான். இத்தகைய செய்தி வேறெந்நாட்டு வரலாற்றிலு மில்லை. பண்டைத் தமிழ் வேந்தர் மூவரும் இங்ஙனமே தம்மையும் தம் மக்களையும் நடுநிலையாய்த் தண்டனைக் குள்ளாக்கி வந்தனர்.
வெள்ளைக்குடி நாகனார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப்பாடி, தம் நிலவரி நிலுவை நீக்கப்பெற்றார்.
கூனர் குறளர் ஊமையர் செவிடர் முதலிய எச்சப் பிறவியர் அரண்மனைகளில் அரசியர் இருக்கும் உவளகங்களில் குற்றேவல் செய்ய அமர்த்தப் பெற்றனர்.
கூனும் குறளும் ஊமும் கூடிய
குறுந்தொழில் இளைஞர் செறிந்துசூழ்தர
…………………………………………………………..
கோப்பெருந் தேவி சென்றுதன் தீக்கனாத் திறமுரைப்ப (சிலப். 20 : 17-21)
பல்வேறு சமயக் குரவர் தத்தம் சமயமே உண்மையென்று மக்களை மயக்கி வந்ததால், அவற்றின் உண்மை காண்பதற்கு அரசர் பட்டி மண்டபம் என்னும் தருக்க மண்டபத்தை அமைத்து, எல்லாச் சமய ஆசிரியரையும் அதில் ஏறித் தத்தம் சமய உண்மையை நாட்ட ஏற்பாடு செய்திருந்தனர்.
ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டிமண் டபத்துப் பாங்கறிந் தேறுமின்
என்று, காவிரிப்பூம்பட்டினத்தில் வேந்தன் (இந்திர) விழாவை அரசன் ஏவலாற்பறையறைந்தறிவித்த வள்ளுவன் கூறினமை காண்க. (மணி. 1 : 61).
போர்வினையில் முதலிலிருந்து முடிவுவரை பல்வேறு அறங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. வேற்று நாட்டைக் கொடுங்கோல் அரசர் ஆட்சியினின்று விடுவிக்கச் செய்யும் அறப்போராயினும், மண்ணாசையாற் பிற நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று தாக்கும் மறப்போராயினும், வேற்று நாட்டு முல்லை நிலத்திலுள்ளனவும் தீங்கற்றனவும் தீங்கு செய்யத் தகாதனவுமான ஆவின் மந்தைகளை, போரிற்சேத முறாதபடி தப்புவித்தற்கு, போர் தொடங்கும் அரசன் தன் படையை ஏவிக் களவாகக் கவர்ந்துகொண்டு வரச் செய்து காப்பது வழக்கம். இது பொருளிலக்கணத்தில் புறப்பொருட் பகுதியில் வெட்சித்திணை யெனப்படும்.
வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந் தோம்பல் மேவற் றாகும்.
என்று தொல்காப்பியம் வெட்சித் திணையிலக்கணம் கூறுதல் காண்க. (புறத். 2). நோயின்றுய்த்தல் (ஆக்களைச் சேதமின்றி ஓட்டிக்கொண்டு வரல்) என்னும் வெட்சித் துறையும் இதை வலியுறுத்தும்) பாதீடு என்னும் துறை, படைத்தலைவன் கட்டளைப்படி மறவர் ஆக்களைத் தமக்குட் பகுத்துக் காத்தலைக் குறிக்கும். பாதுகாத்தல் என்னும் சொல் இதினின்றே தோன்றிற்று. பாது = பங்கு.
குறித்த இடத்தில் போர் தொடங்குமுன், அக்கம் பக்கத்துள்ள தனிப்பட்ட ஆக்களையும் ஆவைப்போல் அமைந்த இயல்புள்ள அறிஞரையும், பெண்டிரையும் நோயாளிகளையும் பிள்ளை பெறாத மகளிரையும், அவ்விடத்தை விட்டகன்று பாதுகாப்பான இடத்திற் சேர்ந்து கொள்ளுமாறு முன்னறி விப்பது மரபு.
ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென் புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும்
பொன் போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்தின்
என்று புறநானூற்றுச் செய்யுள் (9) கூறுதல் காண்க. பார்ப்பார் என்பது, ஆரியர் வருமுன் தமிழப் பார்ப்பனரையும், அவர் வந்தபின் பிராமணரையும், குறித்தது.
எளிய படைக்கலமுள்ளவன், கீழே விழுந்தவன், முடி குலைந்த வன், தோற்றோடுகின்றவன் ஆகியோர் மீது படைக் கலத்தை ஏவாமையும், இரவில் போரை நிறுத்துதலும், பாசறை புகுந்து பகைவரைத் தாக்காமையும், தோற்ற அரசனைக் கொல்லாது திறை செலுத்தச் செய்தலும், இயலுமாயின் அவனொடு மணவுறவு, கொள்ளுதலும், பிற போரறங்களாம்.
அக்காலத்திற் படைத் தலைவர் போன்றே அரசரும் போர்க்குச் சென்றனர். இது அவர் பொறுப்புணர்ச்சியையும் மறத்தையும் காட்டும்.
போரில் முதுகிற் புண்பட்டபோதும், வாழ்க்கையில் தன்மானங் கெட ஏதேனும் நேர்ந்த போதும், அரசர் வடக்கு நோக்கி உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தனர். இது வடக்கிருத்தல் எனப்படும். சேரமான் பெருஞ்சேரலாதான் சோழன் கரிகாற் பெருவளத்தானெடு பொருதுபட்ட புறப்புண் நாணியும், கோப்பெருஞ் சோழன் தன் மக்கள் தன்னொடு பொரவந்த நிகழ்ச்சி பற்றிய அகப்புண்ணாலும் வடக்கிருந்தனர்.
சேரமான் கணைக்கா லிரும்பொறை சோழன் செங்கணானோடு பொருது சிறைப்பட் டிருந்தபோது, தண்ணீர் கேட்டுக் காலந் தாழ்த்துப் பெற்றதினாற் பருகாது இறந்தான்.
அக்காலத்தரசர் சிறந்த புலவராயும் பாவலராயும் இருந்தனர். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், பூதப் பாண்டியன், சேரமான் கணைக்காலிரும்பொறை, பாலைபாடிய பெருங் கடுங்கோ முதலியோர் பாடியுள்ளவை சிறந்த பாமணிகளாகும். சேரமான் தகடூரெறிந்த பெருஞ் சேரலிரும்பொறை, முரசு கட்டிலின் மேல் அறியாது ஏறித்துயின்ற மோசிகீரனார்க்கு, அவர் எழுமளவும் கவரி வீசியதும் பண்பாட்டுச் செயலே.
முத்தமிழ் வேந்தருள்ளும் பாண்டியன் செங்கோற்குச் சிறந்தவன் என்றும், அவன் நாடு தீங்கற்றதென்றும், நாற்றிசையும் பேரும் புகழும் பரவியிருந்தது.
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலங் காவலின் ஓரீஇப்பிறர்
வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே
என்பது பூதப்பாண்டியன் வஞ்சினம் (புறம். 71).
தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும்
கண்மணி குளிர்ப்பக் கண்டேன் ஆதலின்
வாழ்த்திவந் திருந்தேன் இதுவென் வரவு
என்பது மாங்காட்டு மறையோன் கூற்று. (சிலப். 11:54-56).
கடுங்கதிர் வேனில் இக் காரிகை பொறாஅள்
படிந்தில சீறடி பரல்வெங் கானத்துக்
கோள்வல் உளியமும் கொடும்புற் றகழா
வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா
அரவும் சூரும் இரைதேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கும் நாடென
எங்கணும் போகிய இசையோ பெரிதே
பகலொளி தன்னினும் பல்லுயிர் ஓம்பும்
நிலவொளி விளக்கின் நீளிடை மருங்கின்
இரவிடைக் கழிதற் கேதம் இல்
என்பது கோவலன் கூற்று (சிலப். 13: 3-13).
பொன்செய் கொல்லன் தன் சொற் கேட்ட
யானோ அரசன் யானே களவன்
மன்பதை காக்கும் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுள்என
மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே.
என்றது ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை (சிலப். 20: 74-78).
4. வணிகர் பண்பாடு
அக்காலத்து வாணிகர்,
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்.
என்னும் (குறள். 120) நெறியைக் கடைப் பிடித்து, நடுநிலை பூண்டு நல்லுள்ளத்தினராய்ப் பிறர் பொருளையும் தமது போற்பேணி, தாம் கொள்ளும் சரக்கையும் தாம் கொடுக்கும் விலைக்கு மிகுதியாகக் கொள்ளாது தாம் கொடுக்கும் சரக்கையும் தாம் கொண்ட விலைக்குக் குறையக் கொடாது, குற்றத்திற் கஞ்சி உண்மையான விலை சொல்லிப் பல்வேறு நாட்டு அரும்பொருள் களைவிற்று, பேராசையின்றி நேர்மையாகப் பெரும் பொரு ளீட்டிப் பல்வேறு அறஞ்செய்து, வாழ்ந்து வந்தனர்.
நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது
பல்பண்டம் பகர்ந்துவீசும்
தொல்கொண்டித் துவன்றிருக்கை. (பட்டினப். 206-212)
அறநெறி பிழையா தாற்றின் ஒழுகி
…………………………………………………….
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும் (மதுரைக்கா. 500-506)
அறநெறியிற் பொருளீட்டுதலே அக்கால வாணிகர் குறிக்கோள் என்பது, மூன்றன் பகுதி என்னும் துறையால் (தொல். அகத். 41) அறியப்படும். மூன்றன் பகுதியாவது, அறத்தாற் பொருளீட்டி அப்பொருளால் இன்பம் நுகர்வேன் எனல்.
கோநகர்க் கடை மறுகில், எப்பொருள் அங்கு விற்கும் என மக்கள் மயங்காதபடி, ஒவ்வொருவகைக் கடைக்கும் ஒவ்வொரு வகையான கொடி கட்டப்பட்டிருந்தது.
சாத ருபம் கிளிச்சிறை ஆடகம்
சாம்பூ நதமென ஓங்கிய கொள்கையில்
பொலந்தெரி மாக்கள் கலங்கஞர் ஒழித்தாங்கு
இலங்குகொடி யெடுக்கும் நலங்கிளர் வீதியும். (சிலப். 14:)
கள்ளின் களிநவில் கொடி (மதுரைக்கா. 372)
வெளிநாட்டு வணிகரும் இம் முறையைக் கையாண்டனர்.
கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
வேலைவா லுகத்து விரிதிரைப் பரப்பில்
கூலமறுகில கொடியெடுத்து நுவலும்
மாலைச்சேரி (சிலப். 6: 130-3)
வணிகம் செய்து வண் பொருள் ஈட்டாது கணிகையொடு கூடிக் கைப்பொருள் தொலைத்த கோவலனும், பல பேரறங்கள் செய்து வந்தமை பின்வரும் பகுதிகளால் அறியப்படும்.
மாமுது கணிகையர் மாதவி மகட்கு
நாம நல்லுரை நாட்டுதும் என்று
…………………………………………
மணிமே கலையென வாழ்த்திய ஞான்று
மங்கல மடந்தை மாதவி தன்னொடு
செம்பொன் மாரி செங்கையிற் பொழிய (சிலப். 15: 25-41)
பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
…………………………………………………………………….
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானம் செய்தவன் தன்துயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
நல்வழீப் படுத்த செல்லாச் செல்வ! (54-75)
பட்டோன் தவ்வை படுதுயர் கண்டு
கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி
என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாஎன
………………………………………………….
ஒழிகநின் கருத்தென உயிர்முன் புடைப்ப
அழிதரும் உள்ளத் தவளொடும் போந்தவன்
சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப்
பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்! (80-90)
பண்ணியம் அட்டியும் பசும்பதம் கொடுத்தும்
புண்ணியம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கை
என்று, பட்டினப்பாலை (203-4) பொதுப் படக்கூறுவதினின்று, அறவைச் சோறு அளிக்கும் ஊட்டுப்புரையமைத்தல், வெளி யூரார் தங்கச் சத்திரம் சாவடி போன்ற தாவளங்கள் கட்டுதல், வழிப் போக்கர்க்குச் சோலையொடு கூடிய குளம் வெட்டுதல் முதலிய அறங்கள், அக்காலத்துப் பெருவணிகராற் செய்யப்பட் டிருந்திருக்கும் என உய்த்துணரலாம்.
கருமமும் உள்படாப் போகமுந் துவ்வாத்
தருமமு தக்கார்க்கே செய்யா- ஒருநிலையே
முட்டின்றி மூன்றும் முடியுமேல் அஃதென்ப
பட்டினம் பெற்ற கலம். (நாலடி. 250)
5. வேளாளர் பண்பாடு
வேளாளர் உழுதுண்பாரும் உழுவித் துண்பாரும் என இருவகை யர். முன்னவர் சிறு நிலக்கிழார்; பின்னவர் பெரு நிலக்கிழார்.
வேளாளரின் சிறந்த பண்பு விருந்தோம்பல். அதனாலேயே உழவன் வேளாளன் எனப்பெற்றான். உழவுத் தொழிலும் வேளாண்மை எனப் பெற்றது.
வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான் (திடுகடுகம், 112)
விருந்தென்றது உறவினரும் நண்பருமன்றிப் புதிதாய் வருபவரை.
உரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை
…………………………….
தொடிக்கை மகடூட மகமுறை தடுப்ப
என்றது (சிறுபாண்: 190-2) புதியோரையே.
செட்டி மக்கள் வாசல் வழிச் செல்லோமே செக்காரப்
பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே - முட்டிபுகும்
பார்ப்பார் அகத்தையெட்டிப் பாரோமே எந்நாளும்
காப்பாரே வேளாளர் காண்.
என்று கம்பர் பாடியதும் இது பற்றியே.
புறஞ்சிறை மாக்கட் கறங்குறித் தகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தென
என்னும் புறப்பாட்டடிகள் (28: 11-13), கரும்பு தின்னக் கைக்கூலியா என்னும் பழமொழியைத் தோற்றுவித்த காவிரிப் பூம்பட்டினத்து வேளாளன் செயலை நினைவுறுத்தம்.
பிராமணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால்வகுப் பாருள்ளும், வேளாளனே அமைச்சுத் தொழிற்குச் சிறந்தவன் என்று குலோத்துங்கச் சோழனிடம் ஔவையார் கூறியதும், வேளாளரின் வேளாண்மை பற்றியே.
நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்
கோலெனிலோ ஆங்கே குடிசாயும் - நாலாவான்
மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையாவான்
அந்த அரசே அரசு. (தனிப்பாடல்)
உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றாது
எழுவாரை யெல்லாம் பொறுத்து.
என்பதும் (குறள். 1032) பண்பாடு குறித்ததே.
வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிக்சில் மிசைவான் புலம்.
என்னுங் குறள் (85), வேளாளரின் விருந்தோம்பற் சிறப்பைக் குறிப்பாய் உணர்த்தும்.
6. பிறவகுப்பார் பண்பாடு
உறுவரும் சிறுவரும் ஊழ்மா றுய்க்கும்
அறத்துறை யம்பியின் மான
என்று நன்னாகனார் கூறுவதால் (புறம்.381), ஓடக்கூலி கொடுக்க இயலாத எளியாரையும் இரப்போரையும், இலவசமாக ஆறு கடத்தும் அறவோடங்களும் அக்காலத்திருந்ததை அறியப்படும்.
கள்வர் பண்பாடு
பாலை நிலத்தில் வாழ்ந்த கள்வர் மறவர் எயினர் வேட்டுவர் முதலிய வகுப்பினர், ஓருணவும் விளையாத கடுங்கோடைக் காலத்தில் வழிப்பறியையும் கொள்ளையையும் களவையும் மேற் கொள்ள நேர்ந்தது அங்ஙனம் நேரினும். பண்பாட்டைக் கைவிடவில்லை. தெய்வ வணக்கம், எளியார் பொருளைக் கவராமை, புலவரையும் முனிவரையும் போற்றல், விருந்தோம்பல், அரசப்பற்று, ஈகையாளரைக் காத்தல் முதலிய நற்கொள்கை களைக் கடைப்பிடித்தனர்.
பட்டினத்தடிகள் துளுவநாட்டுக் கோகரணத்தில் பிள்ளையார் கோயிலில் ஓகத்திலிருந்தபோது, அந்நகர மன்னரான பத்திரிகிரி யாரின் அரண்மனையில் பல அணிகலங்களைக் கவர்ந்த கள்வர், தாம் முன்பு வணங்கி நேர்ந்து கொண்டவாறே பிள்ளையார் கோயிற்குச் சென்று, ஒரு வினையுயர்ந்த பதக்கத்தைப் பட்டினத் தடிகள் கழுத்திற் பிள்ளையாரென்று கருதி இட்டுச் சென்றனர்.
கொடுவில் எயினக் குறும்பிற் சேப்பின்
களர்வளர் ஈந்தின் காழ்கண்ட டன்ன
சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி
ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்
வறைகால் யாத்தது வயின்தொறும் பெறுகுவிர்.
என்னும் பெரும்பாணுற்றுப் படைப் பகுதி (129-133), எயினரின் விருந்தோம்பற் பண்பை உணர்த்தும்.
கோவலன் விலையேறப் பெற்ற பொற்சிலம் பணிந்திருந்த கண்ணகியோடு காட்டுவழியாய்ச் சென்றது மன்றி, வழிப்பறித்துக் கொள்ளை கொண்டுண்ணும் வேட்டுவச்சேரியிலும் தங்கின தற்குக் காவலாயிருந்தது, கண்ணகி கற்புமட்டுமன்று, கவுந்தி யடிகளின் துறவு நிலையுமாகும். மாடலன் செங்குட்டுவனிடத் தும், பராசரன் பல்யானைச் செல்கெழுகுட்டுவனிடத்தும், ஏராள மாய்ப் பொன்னும் அணிகலமும் பெற்று வழிப்பறி கொடாமல் ஊர் திரும்பியதற்கும், மறையோர் (பிராமணர்) முனிவர் போற் கருதப்பட்டதே கரணியமாம்.
புலவரும் பாணரும் கூத்தரும் பொருநரும், அவ்வப்போது வள்ளல்களிடம் பெற்ற பரிசிலைக் காட்டு வழிகளிற் பறி கொடாது வீடு கொண்டு வந்து சேர்த்ததும் கள்வரின் பண் பாட்டுத் தன்மையினாலேயே,
பொய்யா மொழிப் புலவர் தஞ்சைவாணன் மீது கோவை பாடி அரங்கேற்றி, அவன் தேவியாரிடம் நானூறு பொற்றேங்காய் பெற்றுப் பாலைநில வழியாய்ச் சென்றபோது வழிமறித்த முட்டை என்னும் வேட்டுவன், புலவனாயிருந்ததினால் பொய்யா மொழியாரின் புலமையை ஆய்ந்ததும், அவரைப் பொருளொடு விட்டதும்,
விழுந்த துளி அந்தரத்தே வேமென்றும் வீழின்
எழுந்து சுடர்சுடுமென் றேங்கிச்- செழுங்கொண்டல்
பெய்யாத கானகத்தே பெய்வளையும் போயினாள்
பொய்யா மொழிப்பகைவர் போல்.
என்னும் விழுமிய வெண்பாவைப் பாடியதும், கருதி மகிழத் தக்கன. குட்டை, மொட்டை என்பனபோல் முட்டை என்பதும் ஓர் இயற்பெயர்.
பீசப்பூர் என்னும் விசயபுரச் சுலுத்தானின் படைகள் 1659-ஆம் ஆண்டு வல்லத்தின் மேற் சென்றபோது, விசயராகவ நாயக்கரும் அவர் படைஞரும் கோட்டையை விட்டுவிட்டு ஓடிப் போய் விட்டனர். அன்று வல்லத்தைக் கொள்ளையடித்துப் பெரும் பொருள் கவர்ந்த கள்வர், சுலுத்தான் படைகள் திரும்பிய பின், தாம் கவர்ந்ததில் ஒரு பகுதியை விசயராகவ நாயக்கருக்கு மீளக் கொடுத்துவிட்டனர்.
இந்நூற்றாண்டிலும் கள்வரும் கொள்ளைக்காரரும் பல இடங்களிற் பண்பாடு காட்டியுள்ளனர். மன்னார் குடியிருந்த ஒரு பண்ணையார் (மிராசுதார்) தம் பெருங் குடும்பத்துடன் இராமே சுவரம் போய்ப் பல வண்டிகளில் திரும்புபோது, வழிப் பறித்த கொள்ளைக் கூட்டத் தலைவன், அப்பண்ணையாரின் மனைவியார் ஈகையாட்டியரா யிருந்ததினால், அவர் இருந்த வண்டியை மட்டும் தானே காவல்செய்து கவராது விட்டு விட்டனர்.
வறண்ட நிலத்துப் பாலைவாணர் இக்காலத்தும் இங்ஙனம் ஒழுகின், வளமிக்க அக்காலத்தில் ஏனை நிலவாணர் எங்ஙனம் இருந்திருப்பர் என்பதை ஒருவாறு உய்த்துணரலாம்.
7. பெண்டிர் பண்பாடு
உயர்குடிப் பெண்டிர் கொண்டிருந்த கற்புக் குணங்களுள், நாணமும் பயிர்ப்பும் பண்பாட்டுக் குணங்களாம். கணவன் பெயர் சொல்லாமை, அவன் சொல்லைத் தட்டாமை, அவன் குற்றத்தை மறைத்தல், பின்னுண்டல், பின்தூங்கி முன்னெழுதல், விருந்து மிக வரினும் சலியாமை, கணவனில்லாக் காலத்துத் தன்னை அணி செய்யாமை, அவன் இறப்பின் உடன்கட்டை யேறல் அல்லது வேறு வகையில் உயிர் துறத்தல், அவனுக்குப் பின் உயிர் வாழ நேரின் மறுமணம் செய்யாமை ஆகியவை கற்புடை மனைவியா பண்பாட்டுக் குணங்களாகும்.
மறக்குல மகளிர் மறப்பண்பு, தன்மானம், அரசப் பற்று, நாட்டுப் பற்று முதலிய பண்பாட்டுக் குணங்களை உடையவராயிருந்தனர்.
பொது மகளிரோடு சேர்த்தெண்ணப்படும் நாடகக் கணிகையர் கூட, ஒரு கணவனொடு கூடி வாழ்வதைக் கொள்கையாகக் கொண்டிருந்தனர். அரசர்க்கும் பெருஞ் செல்வர்க்கும் காமக் கிழத்தியராதற்குரியர் அவரே. மாதவி கோவலனின் காமக் கிழத்தியானமையும், அவன் கொலையுண்டபின் மகளொடு துறவு பூண்டமையும், காண்க.
இங்ஙனம், தமிழர் முதன் முதல் நாகரிகப் பண்பாட்டைக் கண்டும், ஆரியர் வருமுன் எல்லாத் துறையிலும் தலைசிறந்த நாகரிகமும் பண்பாடும் உடையவராயிருந்தும், பிற்காலத்தில் அயலாரை நம்பி அடிமைப்பட்டும் அறியாமைப்பட்டும் வறுமைப் பட்டும் சிறுமைப்பட்டும் போயினர். (ப.த.ப.நா.)
பண்டைத் தமிழர் காலக்கணக்கு முறை
ஆதியில் ஒவ்வொரு நாட்டிலும், மக்கள் காலத்தைக் கணக்கிடு வதற்குச் சூரியனையே அடிப்படைக் கருவியாகக் கொண்டிருந் திருக்கின்றனர் என்பது எவர்க்குஞ் சொல்லாமலே விளங்கும்.
தோற்றஞ்சான் ஞாயிறு நாழியா வைகலுங்
கூற்ற மளந்துநுந் நாளுண்ணும் (நாலடி.7)
என நாலடியாருங் கூறுகின்றது.
சூரியனின் தோற்ற மறைவுகளினால் முறையே பகலும் இரவும் நிகழ்கின்றன. ஒரு பகலும் ஓர் இரவுஞ் சேர்ந்து ஒரு நாள் என்னும் அளவாயிற்று.
மக்கள் நாகரிகமடைந்து. நுட்பமாய்க் காலத்தைக் கணக்கிட நேர்ந்தபோது, ஒரு நாளுக்குள், நாழிகை (24 நிமிடம்) மணி, நிமிடம், நொடி (விநாடி) முதலிய நுண்கால அளவுகளும் சூரியனின் எழுச்சி வீழ்ச்சிகளால் காலை மாலை என்னும் வேளைகளும், இராப்பகல்களின் தோற்ற நடுவிறுதிகளால்4 மணி நேரங்கொண்ட சிறுபொழுது என்னும் அளவும் எழுந்தன.
ஒருநாளுக்கு மேல், எழுகோள் (கிரகம்)களின் பெயரால் வாரம் என்னும் அளவும், மதியின் வளர்வு தேய்வுகளால் பக்கம் (Fortnight) என்னும் அளவும், ஒரு வளர்பிறையும் ஒரு தேய்பிறையுஞ் சேர்ந்து மாதம் என்னும் அளவும், மருத்துவ முறையால் மண்டலம் (40 அல்லது 48 நாள்) என்னும் அளவும், தட்பவெப்பநிலை (சீதோஷ்ணதிதி) மாறுபாட்டால் பெரும் பொழுது (பருவம் = 2 மாதம்) என்னும் அளவும், சூரியனின் வட தென் வழிகளால் அயனம் (6 மாதம்) என்னும் அளவும். ஒரு வட வழியும் ஒரு தென்வழியுஞ் சேர்ந்து ஆண்டு என்னும் அளவும், சில பஞ்சங்களினால் அறுபதாண்டு கொண்ட ஓர் அளவும், எரி மலையாலும் கடல் கோளாலும் நிகழ்ந்த சில பெருநிலத்தழிவு களால் ஊழி(யுகம்) என்னும் அளவும், நாலூழி கூட்டிச் சதுரூழி என்னும் அளவும் ஏற்பட்டன. இவற்றுள் ஊழியும் சதுரூழியும் புராணமுறை பற்றியனவேயன்றி, உண்மையான சரித்திர முறை பற்றியனவல்ல.
மேற்கூறிய சிற்றளவுகட்கும் பேரளவுகட்கும் ஆதாரமாயிருப்பது நாள் என்னும் அளவேயாகும்.
பகல் இரவு என்னும் இருபகுதிகளில், பகலானது வீட்டை விட்டு வெளியேறி வழங்கவும். வேலை செய்து பொருள் தேடவும் இரு திணைப் பொருள்களையுங் காட்சிகளையுங் கண்டுகளிக்கவும். அன்பான நண்பருடன் அளவளாவவும். இனத்தாரொடு கூடி உறவாடவும் பெரிதும் உதவுவதாகும். ஆதலால் பகல் இன்பகால மாக எண்ணப்படுகின்றது. ஆனால், இரவோ மேற்கூறியவற்றிற்கு மிகுதியும் இடமாகாமையானும், தெளிந்த பார்வையின்மை யானும் துன்பகாலமாக எண்ணப் படுகின்றது. இதனாலன்றோ, சிறையாளரை இருட்டறையில் அடைப்பதும், நரகத்தை இருளுலகம் என்பதும். துன்பத்தை யிருளாகப் பாவித்துக் கொண்டு நரகாசுரன் மாய்வால் துன்பந் தீர்ந்ததைக் குறிக்கத் தீபாவளியிரவன்று தீபமேற்றிக் களிப்பதும், (இத் தீபமேற்றும் வழக்கம் இக்காலை நின்று விட்டது.) இரவில் வேலைசெய்தலின் அருமை நோக்கியே அல்லும் பகலும், இரவும் பகலும், இரவு பகலாய் என்னும் தொடர்களில் இரவு முற்கூறப்பட்டது.
இனி, இராக்காலம் பேய்கள் வழங்குங் காலமாகக் கூறப்படுத லால், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்றபடி அச்சத்திற்கிடமானதுமாகும். அஃதோடு நச்சுயிர் (விஷப்பிராணி)களும் கொடிய விலங்குகளும் வழங்குங் காலமு மாகும். ஆனால் இவையெல்லாம் நம் முன்னோர் கருத்தில் ஓர் துன்பமாகத் தோன்றியில. எவ்வகையொலியும் அடங்கிய உறக்க நிலையே இராக்காலத்தில் ஓர் அழிவுணர்ச்சியைத் தமிழ் மக்கள் உள்ளத்தில் உண்டு பண்ணியிருக்கின்றது. மூச்சு ஒன்று தவிர மற்றப் பேச்சு முதலிய யாவும் ஒடுங்கிய உறக்கநிலை இறப்பு நிலைக்கு ஒப்பாயிருப்பதால், அதையே ஓர் அழிவுபோல நம் முன்னோர் கருதியிருக்கின்றனர். இறந்தவனை அடங்கி விட்டான் என்றும், ஊரார் உறங்குவதை ஊர் அடங்கிற்று என்றும் கூறுவதை உய்த்துணர்க.
உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (குறள். 339)
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் (குறள். 926)
என்றார் திருவள்ளுவரும்.
பண்டைத் தமிழர் உறக்கநிலையை ஒருவகை அழிவுநிலை யென்றும். அது நிகழ்கின்ற இராக்காலத்தை ஒருவகை அழிவுக் காலமென்றுங் கருதியதை, எல்லாப் பொருள்களும் இறைவனுக் குள் ஓடுங்குவதாகக் கூறப்படுகின்ற ஊழியிறுதிச் சங்கார நிலையை ஓர் இரவிற்கும், அப்பொருள்களின் ஒடுக்கத்தை ஓர் இளைப்பாறலுக்கும் அவர்கள் ஒப்பிட்டுக் கூறியதானே விளங்கும். ஆகவே, சிறுமுறையாகவும் பெருமுறை யாகவும் பல்வகை யழிவுகளைக் கண்டு, அவற்றை யெல்லை யாகவுடைய பல்திறக் காலப்பகுதிகளையே பற்பல கால அளவுகளாக அவர்கள் கொண்டிருத்தல் வேண்டும். ஆராய்ந்து பார்ப்பின், நாள் முதல் ஊழி வரையுள்ள எல்லாக்கால அளவுகளும் ஒவ்வோர் வகையில் ஒவ்வோரழிவில் முடிவனவேயாகும். இன்பத்தைவிடத் துன்பமே கவனிப்பிற் கிடமாதலால், அது காலத்தை அளப்பதற்கோர் எல்லை யாயிற்று.
முதலாவது நாளை யெடுத்துக் கொள்ளின், அஃது உயிர்களின் உணர்ச்சியும் முயற்சியும் ஆழிந்த இரவில் முடிவதாகும்.
இரண்டாவது வாரம். ஒரு வாரத்தின் கடை நாள் சனி. சனி என்னுங்கோள் துன்பத்திற் கேதுவானதென்றும், சனிக்கிழமை மங்கலவினை செய்யலாகாதென்றும் நம் நாட்டுச் சோதிட மென்னும் வான்நூலும் ஜோசியமென்னும் வான்குறி நூலும் கூறா நிற்கும் ஒரு சனியில் முடியும் ஏழு நாளளவு ஒரு வாரமாகும்.
மூன்றாவது மாதம், மாதந்தோறும் ஓர் அமாவாசை நிகழ் கின்றது, அன்று சந்திரன் மறைந்து உலகெங்கும் இருள் கவிகிறது; கடல் கொந்தளிக்கிறது; நோயாளிகளின் நிலை மிகக் கேடா கிறது. மதி தோன்றாமையாலுள்ள துன்பத்தைப் போக்குவதாக இந்துக்கள் எண்ணெய் முழுக்காடுகின்றனர். சிலர் ஊணுழைப்பும் ஒழிகின்றனர். அல்லது குறைகின்றனர். ஆகவே, அமாவாசை ஒரு துன்ப நாளாக எண்ணப்படுகின்றது. ஓர் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி அடுத்த அமாவாசையில் முடிவது ஒரு மாதமாகும்.
நாலாவது ஆண்டு. ஓர் ஆண்டில், மார்கழி மாதம் ஓர் துன்ப காலமாக எண்ணப்படுகின்றது. ஆடவர் பஜனை முதலிய பக்தி முயற்சிகளாலும். பெண்டிர் இல்லங்களைத் துப்புரவாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வதாலும் அம்மாதத்தில் தங்கட்கு நேர்வதாகக் கருதும் துன்பங்களைப் போக்க முயல்கின்றனர். அம் மாதத்தின் கடைநாள் போகிப் பண்டிகை என்னும் பேரால் ஓர் சுத்திகரிப்பு (துப்புரவாக்கல்) நாளாகக் கொண்டாடப்படுகிறது. அன்று சுகாதாரக் கேடான பழம்பொருள்கள் சுட்டெரிக்கப் படுகின்றன. அது துன்பந் தொலைவதற்கோர் அறிகுறியெனவும் கருதப்படுகின்றது.
மார்கழிக்கடுத்த தைமாதம் மங்கல மாதமாக மதிக்கப்படு கின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர். தை முதல் துன்ப மாதமாகிய மார்கழியீறான காலப்பகுதி ஓர் ஆண்டாகும்.
ஐந்தாவது அறுபதாண்டுச் சக்கரம். முன் காலத்தில் சில பஞ்சங்கள் அறுபதாண்டுக் கொருமுறையாக அடுத்தடுத்து நிகழ்ந்ததால், அத்தகைய பஞ்சமொன்று அறுபதாண்டுக் கொரு முறை நிகழுமென்றெண்ணி அதற்கு அறுபதாம் ஆண்டுப் பஞ்சமென்று பெயரிட்டனர். இக்காலத்தும் அது (60ஆம் ஆண்டாகிய) தாதுவருடப் பஞ்சமென்றழைக்கப்படுகிறது. அறுபதாண்டென்னும் கால அளவு தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வழங்கி வந்ததாகும். அவ்வாண்டுகளின் பெயர்களே சாலிவாகனனால் கி.பி.78-ல் ஏற்படுத்தப்பட்டவை. இதனால் அதிலிருந்து அவன் பெயரால் ஒரு சகாப்தமும் (Era) வழங்கலா யிற்று.
சிலர் சாலிவாகனனுக்கு அறுபது மக்களிருந்தனர் என்றும், அவர்கள் பெயரையே ஆண்டுகளுக்கு இட்டனன் என்றும் கூறுவது நம்பத்தக்கதன்று.
அறுபதாண்டுகளின் பெயர்கள் யாவும் இடுகுறியான வட சொற்கள். அவை வடமொழியாயிருப்பது பற்றி அக்கால அளவு ஆரியரதாகாது. பொருள் வேறு. சொல் வேறு பல நாட்டு நகரங் கட்கும் தமிழ்மக்களுக்கும் இக்காலத்து வடமொழிப் பெயர்கள் வழங்குதல் காண்க. அறுபதாண்டென்னுமளவு ஒருவர் ஆயுட் காலத்திலேயே முடிந்துவிடுவதினாலும். அது திரும்பத் திரும்ப நிகழ்வதால் ஓர் ஆண்டின் பெயர் ஆங்கில ஆண்டின் எண்ணைப் போல ஓர் ஆண்டையே குறியாமல் முன்பின் பல ஆண்டுகளைக் குறிப்பதாலும், அதன் பெயரீடு எத்துணையும் சிறந்ததன்று. அதனாலேயே தமிழர் அவ்வாண்டுகட்குப் பெயரிட்டிலர். ஆண்டுகளின் பெயர்களை அறியாமலே ஒருவர் தம் ஆயுளைச் சொல்லக்கூடும்.
மக்களின் சராசரி ஆயுளெல்லை ஆதியில் பன்னூறாகவும், பின்பு வேத காலத்தில் 100 ஆகவும். சாலோமோன் காலத்தில் 80 ஆகவு மிருந்து இன்று 60 ஆகக் குறைந்துள்ளது. அறு பதாண்டான வுடன் சஷ்டி பூர்த்தி என்னும் அறுபதாண்டு விழாவைக் கொண்டாடுகின்றனர். பெருமக்கள் அறுபதாண் டிற்கு மேற் பட்ட காலம் சராசரி ஆயுட்கு மிஞ்சினதாக எண்ணப்படு கின்றது. ஆயினும். 60 ஆண்டிற்கு மேற்பட்டோர் மிகப் பலரிருக்கின்றனர். இக்காலத்திலேயே அறுபதாண்டிற்கு மேற்பட்டோரிருக்கும்போது, முற்காலத்தில் அத்தகையோர் கழிபலரிருந்தார் என்பதற்கெட்டுணையு மையமின்று. ஆதலால், ஆண்டுகளின் பெயர்களில்லாக்காலும் அறுபதாண்டென்னுங் கணக்கு ஒருவர் நினைவி விருந்திருக்கக் கூடியதே. ஆகவே, ஒரு பஞ்சத்தில் முடியும் அல்லது முடிவதாக எண்ணப்படும் அறுபதாண்டுக்காலமும் ஓர் அளவாயிற்று.
ஆறாவது, ஊழி, ஊழிகள் கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கென்றும் அவை முறையே 17.28.000. 12.96.000. 8.64.000. 4.32.000 ஆண்டுகளென்றும் புராண முறை தழுவிப் பஞ்சாங்கங்கள் கூறாநிற்கும். இவ்வூழியளவுகளின் கழிபெரு நீட்சியையும் இவைமுறையே ஒவ்வொன்றிலும் 4.32.000 ஆண்டு குறைந்து வருவதையும் நோக்குமிடத்து, இவை கற்பனை யென்றும், இதுவரை உண்மைச் சரித்திரத்தில் ஒருமுறையேனும் கணக்கிடப்பட்டில வென்றும் தெள்ளிதிற் றெரியும். உலகத்தில் எந்த நாட்டிலும் உண்மையான அல்லது நம்பத்தக்க சரித்திரம் கிறித்துவின் காலத்திலிருந்து, அல்லது அதற்குச் சில நூற்றாண்டு கட்கு முன்னிருந்துதான் தொடங்குகிறது. ஆதலால், அதற்கு முற்பட்ட கழிநெடுங்காலக் கணக்கு, சரித்திர முறைபற்றியதன்று.
ஊழி யென்னுஞ் சொற்பொருளை யாராயின். அச்சொல் குறிக்கும் கால அளவு ஏற்பட்டமைக்குக் காரணம் புலனாகும். ஊழி என்னும் சொல் ஊழ் என்னும் பகுதியடியாய்ப் பிறந்து இகர விகுதி கொண்ட தொழிற் பெயராகும். ஊழ் என்னும் பகுதிக்கு முறைமை, விதி என்னும் பெயர்ப் பொருளும், முதிர்வு அழிவு என்னும் வினைப் பொருளு முள்ளன. இவற்றுள், வினைப் பொருளே பெயர்ப் பொருட்கு மூலமாகும். ஊழ் என்னும் வினைப் பகுதி முதிர்வு அல்லது அழிவு என்னும் பொருளில் சங்க நூல்களிற் பலவிடத்து வந்திருப்பதைக் காணலாம்.
எ-டு:
தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே (புறம். 109)
உழுதூர் காளை யூழ்கோ டன்ன (புறம். 322)
பழமூழ்த்து (புறம். 381)
ஊழ்கோடு = செவ்வியழிந்த கோடு (சாமிநாதையர் உரை).
கழைவளர் நெல்லி னரியுழை யூழ்த்து (மலைபடு. 180)
ஊழுற் றலமரு முந்தூழ் (மலைபடு. 133)
ஊழுறுத்து - வீழ்த்தி (பெருங்கதை உரை. ப. 264)
காந்த ளுழ்த்துச் சொரிவபோல (சீவக. 1742)
ஊழ் என்னும் பகுதியடியாய்ப் பிறந்து அல் விகுதி பெற்ற ஊழல் என்னும் தொழிற் பெயர் கேடு என்னும் பொருள் தருவதாகும். சூரியனைக் குறிக்கும் என்று என்னும் பெயர் ஊழ் என்னும் சொல்லோடு புணர்ந்தான என்றூழ் அழிவுக்குரிய கோடை காலத்தையும் வெயிலையும் அவற்றை யுண்டாக்கும் சூரியனை யுங் குறிக்கும்.
மேற்காட்டிய உதாரணங்களினின்று, ஊழ் என்னும் சொல் முதலாவது அழி என்னும் பொருள் தரும் வினைப் பகுதியே யென்பதும், பின்பு முதனிலைத் தொழிற் பெயராயும் இகர விகுதி பெற்ற தொழிற் பெயராயும் நின்று அதன் பின்பு ஆகுபெயராகி விதி, முறைமை, யுகம் என்னும் பொருள்களைத் தந்தது என்பதும் அறியக் கிடக்கின்றன. ஆக்கமுங்கேடுமாகிய இரண்டும் விதியே யேனும், கேடு அல்லது துன்பம் வந்தவிடத்தே விதியென்று இறைவனை யெண்ணுவதும், ஆக்கம் அல்லது இன்பமுள்ள விடத்து, இறைவனை மறந்து மகிழ்ந்திருப்பதும் உலகவியல் பாதலால். அழிவு என்று பொருள்படும் ஊழ், ஊழி என்னுஞ் சொற்கள் மேற்கூறிய விதி முதலிய பொருள்களை முறையே கொள்ளலாயின.
ஒவ்வோர் ஊழியின் இறுதியிலும் ஒவ்வொரு பேரழிவும் ஒவ்வொரு சதுரூழியின் இறுதியிலும் ஒவ்வொரு மாபேரழிவும் நிகழ்வதாகச் சித்தாந்த நூல்கள் கூறும். இவ்வழிவு எரிமலை யெழுச்சியாகவாவது கடல்கோளாகவாவது இருக்கலாம். இவ் விரண்டிற்குங் காரணம் நிலத்தின் உள்நடுவிலிருக்கும் வெங்கொடு நெருப்பேயாகும். சிவனுக்கிருப்பு மலையும் திருமாலுக்கிருப்பு (பாற்) கடலுமாதலால், சைவர்கள் எரிமலை வடிவாகவும் வைணவர்கள் (மாலடியார்கள்) கடல்கோள் வடிவாகவும் ஊழியிறுதி உலக அழிவைக் கூறுவர். உலகம் என்பது உலக முழு வதையுமேனும் அதில் ஒரு பாகத்தையேனுங் குறிக்கும். இந்துமா பெருங்கட லிருக்குமிடத்து முன்னொரு காலிருந்து இதுபோது நீர்க்கீழ் மூழ்கியுள்ள பண்டைத் தமிழ் நாட்டில் மூன்று பேரழிவுகள் நிகழ்ந்ததாகச் சங்க நூல்களா லறியக் கிடக்கின்றது. அம் மூன்றுங் கடல்கோள்களே, அவை முறையே தலைச் சங்கத்திறுதியிலும், இடைச்சங்கத்திறுதியிலும் கடைச் சங்கத் திறுதியிலும் நிகழ்ந்தவை.
அடுத்தடுத்து நெட்டிடையிட்டு முன்று கடல்கோள்கள் நிகழவே. இவ்வகை யழிவு ஒவ்வோர் நெடுங்காலத்தின்பின் நிகழு மென்றெண்ணி அதற்கு ஊழியெனப் பெயரிட்டனர். (ஊழி = அழிவு. உலக ஊழியை அல்லது அழிவை எல்லையாகவுடைய காலத்தை ஊழியென்றது. ஆகுபெயர்.) மூன்றாம் அழிவிற்குப் பிறகு இதுபோது நடக்குங் காலப் பகுதியை நாலாம் ஊழி யென்றனர். தொல்காப்பியரின் காலத்தைக் குறிக்குமிடத்து இவ்வாசிரியர் ஆதியூழியின் அந்தத்தே இந்நூல் செய்தலின் என்று (தொல். பொருள். கற்பியல் 4ஆம் சூத்திரவுரை) நச்சினார்க்கினியர் கூறியிருப்பதை உய்த்துணர்க.
இதுவே ஊழி, சதுரூழி என்னும் கால அளவுகள் தோன்றிய வரலாறாகும். இவற்றுக்குப் பிற்காலத்தார் வடமொழிப் பெயருங் கற்பனையளவுங் கூறியதன்றிச் சதுரூழியைத் திரும்பத் திரும்ப நிகழுங் காலச் சக்கரமாகவுங் கூறிவிட்டனர்.
இப்போது நடக்கும் கலியூழி தோன்றி 5039 ஆண்டுகளாகின்றன என்று கூறப்படுகின்றது. சங்கநூல்கள் கூறும் 3ஆம் அழிவிற்குப் பின் 1800 ஆண்டுகளே கழிந்துள்ளன. 5039 ஆண்டு என்னும் கணக்கு உண்மையாயின். அஃது 2ஆம் கடல்கோளிலிருந்து தொடங்கியதாகக் கொள்ளல் வேண்டும். முதல் கடல் கோட்கு முன்னும் சில கடல்கோள்கள் நிகழ்ந்திருக்கலாம். இங்ஙனம் சரித்திரத்திற்கெட்டாத பல தொன்முது கடல்நோள்கள் பண்டைத் தமிழ்நாட்டில் நிகழ்ந்தமை காட் எலியட் என்பவர் எழுதிய மறைந்த லெமூரியா (Lost Lemuria) என்னும் நூலா லறியப்படும். ஆதலால், எவ்விதத்தும் ஊழிக்கணக்கு மேற்கூறிய முறையைத் தழுவியதே யென்பதற்கு யாதும் இழுக் கின்று. ஆகவே, நாள் முதல் ஊழியீறான எல்லாக் கால அளவும் ஒவ்வோர் அழிவை எல்லையாக வுடையவென்றும், எல்லாக் கால அளவுகட்கும் ஆதாரமான நாளானது ஓர் அழிவில் முடிவதால், அதற்கு மேற்பட்ட எல்லாப் பேரளவுகளையும் அங்ஙனமே ஒவ்வோர் அழிவில் முடிவனவாக அமைத்துக் கொண்டனர் என்றும் அறிந்துகொள்க. (செந்தமிழ்ச் செல்வி மடங்கல் 1939)
பண்டைத் தமிழர் மலையாள நாட்டிற் கிழக்கு வழியாய்ப் புகுந்தமை
மலையாள நாடு பண்டை முத்தமிழ் நாடுகளுள் ஒன்றான சேரநாடாகும். கி.பி. 2ஆம் நூற்றாண்டில், இந்தியா முழுவதையும் தன்னடிப்படுத்திய சேரன் செங்குட்டுவன் கீழ், அது தலைசிறந்த தமிழ்நாடா யிருந்தது. ஆனால், இன்றோ முற்றிலும் ஆரியமய மாய்க் கிடக்கின்றது. இதுபோதுள்ள தமிழ்ப் பாவியங்களுள் சிறந்த சிலப்பதிகாரம் மலையாள நாட்டிற் பிறந்த தென்பதை நினைக்கும் போது, சரித்திரம் அறிந்தவர்க்கும் ஒரு மருட்கை தோன்றாமற் போகாது. கி.பி.9ஆம் நூற்றாண்டுவரை அது தமிழ் நாடாகவேயிருந்தமை, சேரமான் பெருமாள், சுந்தரமூர்த்தி என்னும் இரு நாயன்மார் சரித்திரத்தாலும் அறியக்கிடக்கின்றது.
அதற்குப் பின்னும் சில நூற்றாண்டுகள் தமிழ் நாடாகவே இருந் திருக்க வேண்டும். நூற்றாண்டிற்குப் பின்தான் மலையாளம் என்னும் மொழி முளைக்கத் தொடங்கிற்று. அது தன் முற் பருவத்தில் தமிழையே தழுவியிருந்தது; பிற்பருவத்தில் தான் ஆரியத்தைத் தழுவிற்று. துஞ்சத்து எழுத்தச்சன் (17ஆம் நூற்றாண்டு) ஆரிய வெழுத்தை யமைத்தும், வடசொற்களைப் புகுத்தியும், சேரநாட்டுக் கொடுந்தமிழாயிருந்ததை முற்றும் ஆரியமயமாக்கிவிட்டார். மலையாளம் இன்றும் ஐந் நூறாட்டைப் பருவத்ததே. ஆயினும் தமிழறியாமையாலும், ஆரியப் பழைமையை நம்பியும் தங்கள் நாட்டைப் பரசுராம க்ஷேத்ரம் என்றும், மிகப் பழைமையான தென்றும், தமிழ்நாடன் றென்றும் சொல்லிக் கொள்கின்றனர் மலையாளத்தார். இது அவர்கட்கு இழிவேயன்றி உயர்வன்று. ஆயினும் இது அவர்கட்குத் தோன்றுவதில்லை.
மலையாள மொழித்தோற்ற வளர்ச்சிகளை S. ஸ்ரீநிவாச ஐயங்கார் அவர்கள் எழுதிய தமிழிலக்கிய ஆராய்ச்சி (Studies in Tamil Literature) என்னும் நூலிற் கண்டுகொள்க.
மலையாளம் என்னும் மொழிபோன்றே, அதன் பெயரும் பிற்காலத்தது.
மலை + ஆளி = மலையாளி. ஆளி = ஆள். ஓ.நோ: கூட்டாளி, வங்காளி, பங்காளி, தொழிலாளி, மலையாளி = மலைநாட்டான்.
மலையாளியின் மொழி மலையாளம், மலையாளி + அம் = மலையாளம், ஓ.நோ: வங்காளி - வங்காளம்.
மலையாள நாட்டின் வடபாகம் மலபார் (Malabar) என்று அழைக்கப்படுகிறது. முதன்முதல் மலையாள நாட்டில் வந்திறங் கின மேலை விடையூழியர், மலையாள நாட்டு மொழிக்கு மலபார் என்று பெயரிட்டு, தமிழையும் அப் பெயரால் அழைத்தனர், அன்றவ் விரண்டிற்கும் வேறுபாடு சிறிதேயாதலின்.
மலைவாரம் - மலவாரம் - மலவார் - மலபார்.
வாரம் = சாய்வு அல்லது சரிவு, ஒ.நோ: அடிவாரம், தாழ்வாரம். வாரம் இடப்பெயராதலை நக்கவாரம் என்பதாற் காண்க நக்கவாரம் - Nicobar. மலைவாரம் - Malabar.
இப்போதுள்ள மலையாள மக்களின் முன்னோரான தமிழர், மலையாள நாட்டிற் புகுந்தது கிழக்குவழியா யென்பதற்குச் சான்றுகள்:
1. பாண்டியனின் தம்பிமாரான சோழ சேரர் தெற்கினின்றும் வடக்கே வந்து, சோழ சேர நாடுகளை நிறுவினர் என்னும் வழக்கு.
சேர நாடு முதலாவது குடமலைக்குக் கிழக்கில் நிறுவப்பட்டுத் திருச்சிராப்பள்ளிக் கோட்டகையைச் சேர்ந்த கரூர் அதன் தலைநகரானதாகவும், பின்பு சேரன் குடமலைக்கு மேற்கிலுள்ள பகுதியைக் கைப்பற்றி நீர்வாணிகத்திற்கும் சோழ பாண்டி யரினின்றும் பாதுகாப்பிற்கும் மேல்கரையில் வஞ்சி நகரைய மைத்துக் கரூர் என்றும் அதற்குப் பெயரிட்டதாகவும், பிற் காலத்தில் கீழ்ப்பகுதியைக் காத்துக் கொள்ள முடியாமையால், அது கொங்கு நாடென்று தனி நாடாய்ப் பிரிந்தபின் பழங் கரூர் கைவிடப்பட்டதாகவுந் தெரிகின்றது.
வினையெச்சமே பண்டைத் தமிழில் வினைமுற்றாக வழங்கிற்று. மலையாளத்தில் இன்றும் அங்ஙனமே. இது சேரன் மேல் பாகத்தைக் கைப்பற்று முன்னிருந்த பழந்தமிழ் நிலையைக் குறிக்கும், சேரர் செந்தமிழை வளர்த்தனர்; ஆயினும் அது எழுத்து வழக்கிலேயே சிறப்பா யிருந்திருக்கின்றது. பேச்சு வழக்கில் கற்றோரிடம் வினைமுற்று வடிவும் மற்றோரிடம் வினையெச்ச வடிவுமாக இருவகை வடிவுகளும் வழங்கியிருக்க வேண்டும். பிற்காலத்தில் செந்தமிழ்ச் சேரமரபின்மையாலும், தமிழொடு தொடர்பின்மையாலும், ஆரிய முயற்சியாலும், பண் படுத்தப்பட்ட செந்தமிழ் வழக்கற்று, பழைய வினையெச்ச வடிவமே வழங்கி வருகின்றதென்க. ஆயினும், வான், பான், ஈற்று வினையெச்சங்கள் இன்றும் வழங்குவதால், சேரநாட்டிற் செந்தமிழ் வழங்கியதை யுணரலாம்.
கிழக்கு மேற்கு என்னும் திசைப் பெயர்கள், குமரி நாட்டிலேயே அல்லது சேர ஆட்சியேற்பட்ட பின் மலையாள நாட்டார்க்குள் தோன்றியிருக்க வேண்டும்.
2. குமரிநாட்டில் ஒரு பகுதியின் பெயரான கொல்லம் என்பது, மலையாள நாட்டில் ஓர் இடத்திற்கிடப்பட்டமை.
3. திரிந, மகிழ்நன், பழுநி முதலிய மெலித்தல் வடிவங்கள் செந்தமிழில் வழங்குதல்.
இவை குமரி நாட்டிலேயே தோன்றின குமரி மலைநாட்டு வழக்காகும்.
4. உரி (அரைப்படி), துவர்த்து (தோர்த்து) முதலிய திருநெல் வேலிச் சொற்கள் மலையாளநாடு நெடுக வழங்கல்.
5. பாணர் என்னும் பழந்தமிழ்க்குலம் மலையாள நாட்டிலிருத்தல்.
6. மலையாளநாட்டில் மாதங்கட்கு ஓரைப் பெயர் வழங்கல்.
இதுவே பண்டைத் தமிழ்முறை. தமிழ்நாட்டில் இது மாற்றப் பட்டது. திராவிடத்திற்குச் சிறந்த தமிழ்நாட்டையே முதன் முதல் ஆரிய மயமாக்கினர். இது ஒரு வலக்காரம். தமிழ்நாடு ஆரிய மயமாயின், பிற திராவிட நாடுகள் தாமே யாகுமென்பது ஆரியர் கருத்து.
7. பண்டைத் தமிழ் அவிநயங்கள் கதகளி என்னும் பெயரால் மலையாள நாட்டில் வழங்குதல்.
8. தம்பிராட்டி, சிறுக்கன் (சக்கன்) முதலிய செந்தமிழ்ச் சொற்கள் மலையாள நாட்டில் வழங்கல்.
9. மருமக்கட் டாயம் போன்ற ஒரு வழக்கு கருநீசியத் தீவுகளில் வழங்கல்.25
ஒரு விதப்பான மன்பதைய (Social) வழக்கு தென் கண்டத்திற்கு வடகிழக்கிலுள்ள தீவுகளிலும் மலையாள நாட்டிலும் வழங்கு வதாயிருந்தால், இவ்விரு நிலப்பகுதிகளும் ஒரு காலத்தில் ஒன்றா யிணைக்கப்பட்டிருந்திருத்தல் வேண்டுமென்பத்தைத் தவிர வேறென்ன அறியக் கூடும்? குமரிநாட்டிலும் பெண்வழிச் செல்வமரபு வழங்கியிருக்க வேண்டும். தாய் + அம் = தாயம். தாயினின்றும் பெறும் உரிமை தாயம்.
பட்டம் விடுதல் சேவற்போர் முதலிய பொழுது போக்குகள், தென்னாட்டிலும் கீழ்நாடுகளிலும் இன்றும் ஒரே படியா யிருக்கின்றன.
கீழ்நாடுகளிலுள்ள வீடுகள் கோயில்கள் முதலிய கட்டங்களின் அமைப்பும் வேலைப்பாடும், பெரும்பாலும் தமிழ்நாட்டில் அல்லது மலையாள நாட்டில் உள்ளவை போன்றேயிருக்கின்றன.
கடாரம் ஐப்பான் முதலிய நாடுகளில், எரிமலை நிலநடுக்கம் வெள்ளம் முதலியனபற்றி, அடிக்கடி வீடுகளும் ஊர்களும் இடம் பெயர்ந்து கொண்டே யிருக்கின்றன. குமரி நாட்டிலும் இவ் வியல்பு இருந்ததாகத் தெரிகின்றது. ஊர் நகர் என்னும் பெயர்கள் முதலாவது வீட்டின் பெயர்களாயிருந்தமையும், பெயர்வுப் பொருளுடையனவா யிருத்தலையும் நோக்குக. பண்டு தென் பெருங்கடலில், குறைந்தது ஒரு பிறை வட்டமான எரிமலைத் தொடரிருந்திருத்தல் வேண்டும். அதுவே சக்கரவாள கிரியென்றும், அதற்கப்பாற்பட்ட கடலே பெரும்புறக் கடலென்றுங் கூறப்பட்டிருத்தல் வேண்டும். நெட்டிடையிட்டு நிகழ்ந்த பல எரிமலைக் கொதிப்பும் வெள்ளமும் பற்றியே, ஊழியிறுதியில் நெருப்பால் அழிவு நேருமென்று மலை வாணராகிய சிவனை வணங்கு வோரும், நீரால் அழிவு நேரு மென்று கடல்வாணராகப் பிற்காலத்திற் கூறப்பட்ட திருமாலை வணங்குவோரும், முறையே கொண்டிருத்தல் வேண்டும்.
பண்டைத்தமிழ் நூல்களிற் பிறநாட்டுப் பொருள்கள் கூறப்படாமை
பழந்தமிழ் நூல்களில், தமிழர் வடக்கிருந்து வந்தார் என்பதற்குச் சான்றாகத்தக்க ஒருவகை அயல்நாட்டுப் பொருளும் கூறப்பட வில்லை.
வெம்மை யென்னுஞ் சொல்லுக்கு விருப்பப் பொருளிருப்பது ஒரு சிறிது சான்றாகத் தோன்றலாம். குளிர்நாடுகளில் வெப்பத்தையும் வெப்ப நாடுகளில் குளிர்ச்சியையும் விரும்புவது இயல்பு. அதனாலேயே. ‘a warm welcome,’ ‘to pour cold water’, பாட்டுக் குளிர்ச்சியா யிருந்தது சூடான சொல் முதலிய வழக்குகள் முறையே நற்பொருளும் தீப்பொருளும் பற்றித் தோன்றியுள்ளன. ஆனால், ஆராய்ந்து பார்ப்பின், தமிழ்நாட்டில் வெம்மையும் சில காலங்களில் வேண்டப்படுவது தெரியவரும். பனிக்காலங்களில் வெம்மையை வேண்டுவதையும், பொதுவாய் மழையையும் குளிரையும் தாங்க முடியாமையையும், கொன் வரல் வாடை, பல நாளைப் பாவத்தை (வெயிலை)த் தாங்குகி றோம். ஒரு நாளைப் புண்ணியத்தை (மழையை)த் தாங்க முடிய வில்லையே என்னும் வழக்குகளையும், இங்கிலாந்திலும் ‘a warm reception’ என்பது தீப் பொருளில் வழங்குவதையும் நோக்குக.
வெம்மை வேண்டல் (உரி.38)
என்பது தொல்காப்பியம்.
கருத்துகள்
கருத்துரையிடுக