ஏலக்காய்
கட்டுரைகள்
Back
ஏலக்காய்
பூவை. எஸ். ஆறுமுகம்
மணிவாசகர் பதிப்பகம்
ஏலக்காய்
மணிவாசகர் பதிப்பகத்தின்
வெள்ளிவிழா வெளியீடு
பூவை எஸ். ஆறுமுகம்
மணிவாசகர் பதிப்பகம்
சிதம்பரம் .
முதற்பதிப்பு : டிசம்பர், 1986 உரிமை : ஆசிரியருக்கு
விலை ரூ. 6.00
கிடைக்குமிடம்
மணிவாசகர் நூலகம்
12-B, மேல சன்னதி, சிதம்பரம்.608001
14. சுங்குராம் தெரு, பாரிமுனை, சென்னை-600001
55, லிங்கிச் செட்டித் தெரு, சென்னை-600001
28.A. வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை-625001
3/4 ராஜ வீதி கோயமுத்தூர்.641001
20. நந்திக்கோயில் தெரு, திருச்சி.620002
* * *
சென்னை போன். 512996, சிதம்பரம் போன்: 2799
* * *
அச்சிட்டோர் : கற்பகம்.அச்சகம், 6, நல்லதம்பி தெரு,
சென்னை - 600 002.
மணப்பொருள் மாண்பு ச. மெய்யப்பன் எம். ஏ.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
ஏலக்காய் மணப் பொருளும், மருந்துப் பொருளும் ஆகும். உணவுக்குச் சுவையூட்டும். உடலுக்கு நலம் ஊட்டும். அறுசுவை உணவில் சுவையை அதிகரிப்பதற்கும், நறுமணம் பெறச் செய்வதற்கும் ஏலக்காய் பயன்படுகிறது. இந்திய நாடு மணப்பொருளுக்கு பெயர் பெற்ற நாடு. இந்தியர்கள் மணப்பொருளைப் பயன்படுத்திய திறத்தினை வேதகால இலக்கியங்கள் பேசுகின்றன. இந்திய மணப் பொருளின் மாண்பினை வெளிநாட்டு யாத்ரிகர்களும் வியந்து போற்றியுள்ளனர். ஏலக்காயும், கிராம்பும் நெடுங் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததைத் தமிழ் இலக்கி யங்கள் விரிவாகப் பேசுகின்றன. மலையில் தோன்றும் பொருள்களைப் பற்றி மலைவளம் பேசும் போது இலக்கிய ஆசிரியர்கள் எழில்படக் கூறியுள்ளனர்.
ஏலக்காய் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது. ஏலக்காய் வாரியத்தில் நீண்டநாட்கள் பணி செய்த திரு. பூவை, எஸ். ஆறுமுகம் இந்நூலை சிறப்பாக எழுதியுள்ளார். ஏலக்காயின் இயல்பு, அதை விதைப்பதற் கேற்ற நிலம், விதைக்கும் காலம், உரமிடுதல், களை யெடுத்தல், காய் பறித்தல் முதலியனவற்றையும் கூறி யுள்ளார். ஏலக்காயின் விலை பற்றியும் விளைச்சல் அளவு, ஏற்றுமதி விவரம் எல்லாம் இந்நூலில் பகுத்தும் தொகுத்தும் கூறப்பெற்றுள்ளன. ஒரு பொருளைப் பற்றிய எல்லா அம்சங்களும் வண்ணம், வடிவம், பொருள், இயக்கம், பயன், அமைப்பு பலவற்றையும் எவ்வெவ்வகையில் விளக்க இயலுமோ அவ்வவ்வகையில் விளக்கியுள்ளார்.
ஆசிரியர் பூவை. ஆறுமுகம் சிறுகதை, நாவல் முதலிய படைப்பிலக்கியங்களில் அரசின் பரிசையும் பலரின் பாராட்டையும் பெற்றவர். சிறந்த பத்திரிகையாசிரியர். எதனையும் எளிமையாகக் கூறும் திறத்தினர். நீண்ட காலமக எழுதிவரும் எழுத்தாளர். தம்முடைய எழுத்துலக அனுபவங்களையெல்லாம் அழகு ஓவியமாக ஆக்கி வருபவர். புகழ் பெற்ற ஆசிரியர் பூவை. ஆறுமுகம் புதுவகை நூல்களைப் படைப்பதிலும் சிறந்தவர் என்பதற்கு இந்நூல் ஒர் எடுத்துக்காட்டு. ஏலக்காயின் எல்லா வகைப் பயன்களையும் ஆசிரியர் மணக்க மணக்க எழுதியுள்ளார்.
புகழ் மணம் பரப்பி வரும் மணிவாசகர் பதிப்பகம் வெள்ளிவிழா ஆண்டில் ஏலக்காயின் மணம் தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் பரப்ப முன்வந்துள்ளது. துறைதோறும் தமிழுக்கு வளம் சேர்க்கும் பதிப்பகத்திற்கு மேலும் புகழ் மணம் கூட்டுகிறது.
எண்ணிப் பார்க்கிறேன்
தமிழ்ப் படைப்பு இலக்கியத் துறையிலே வெள்ளி விழாக் கொண்டாடிய நிலையில், பத்திரிகைத்துறை எழுத்துப் பணிகளைத் தொடர்ந்த எனக்கு பாரதத்தின் பிரதமர் மாண்புமிகு அன்னை இந்திரா காந்தியின் கீழ் ஓர் அரசு ஊழியனாகப் பணிபுரியக்கூடிய ஒரு நல்வாய்ப்புக் கிட்டியதென்றால், அதை ஆண்டவனின் ஒர் அருட் கொடை என்பதாகவே அரசுப் பணியினின்றும் ஒய்வுபெற்ற இந்நேரத்திலும்கூட நான் கருதுகிறேன்! அந்த நல் வாய்ப்பின் விளைபலனாகவே, ஏலக்காயின் கதையைப் பற்றி—இந்திய ஏலக்காயின் நறுமண இன்சுவை பொதிந்திட்ட வரலாற்றைப்பற்றி—உங்களுக்கு எடுத்துரைக்கும் பொறுப்பும் எனக்கு இப்போது விதிக்கப்பட்டிருக்கிறது போலும்!
நறுமணப் பொருட்களின் ராணி ஏலக்காய். ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சிறப்பைக் கொண்டு, இன்று உலக நாடுகளிடையே வரலாறு படைத்து வருவதும் குறிப்பிடத் தக்கது. மேலும், பாரதத் திருநாட்டுக்கு ஆண்டுதோறும் ரூ. 50 கோடிக்கும் கூடுதலாகவே அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தருகிறது.
ஏலக்காயின் வளர்ச்சிக்காக இந்திய அரசின் நிர்வாகப் பொறுப்பின் கீழ் இயங்கிவரும் ஏலக்காய் வாரியம்’ அண்மையில், ஏப்ரல் 14ஆம் நாளில் வடக்கே ஹரித்துவாரில் நடந்த சிறப்புமிக்க 'கும்பமேளா' விழாவிலே ஏலக்காய் மணம் பக்தர்களிடையே பரவிக்கிடந்த அதிசயத்தைச் செய்தி ஏடுகளில் படித்திருப்பீர்கள்! இந்தப் புதிய ஏற்பாட்டினைச் செய்த பெருமைக்கு வாரியத்தின் புதிய தலைவர் திரு. கே. எம். சந்திரசேகர் உரியவர் ஆகிறார்.
கேரளத்து மண்ணிலே கொச்சி எர்ணாகுளத்தில் இயங்கிவரும் வாரியத்தில் தமிழ் எழுத்தாளனாகிய நான் பொது விளம்பரத்துறை மற்றும் 'ஏலக்காய்' ஏடு ஆகியவற்றில் என் பணியை ஆரம்பித்துத் தொடர்ந்த அந்த 1974-84 காலக்கட்டத்தில் எனக்குத் தமிழ்த் தலைவராக வாய்த்த பெருந்தகை திருமிகு டி. வி. சுவாமிநாதன் ஐ. ஏ. எஸ். பிறகு, பேராசிரியர் கே. எம். சாண்டி, பின்னர், தமிழகம் சார்ந்த திரு. எஸ். ஜி. சுந்தரம், பிறகு, கேரளக்காரர் திரு. மோகனசந்திரன் ஆகியோரும் வாரியத்தின் தலைவர்களாகப் பொறுப்பேற்று, ஏலக்காய் வளர்ச்சியின் கீழ் ஏலச்சாகுபடி, ஏலச்சாகுபடியாளர்கள் மற்றும் ஏலத் தோட்டப் பணியாளர்களின் மேம்பாட்டுக் கான பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தினார்கள்.
தொட்ட இடம் பூ மணக்கும் என்று பாடினார் கவியரசு.
இந்த உண்மை ஏலக்காய்க்குச் சாலவும் பொருந்தும்.
வாரியத்தின் கிளை அலுவலகம் ஒன்றைத் தமிழ் நாட்டிலும் திறக்க வேண்டுமென்று விரும்பியது வாரியம்! நான் இணைப்புத்துறை அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றேன். தமிழ் மண்ணை மிதித்தேன்; வாசமிகு ஏலக்காய் மணத்தில் தேமதுரத் தமிழ் மணமும் கலந்தது. சென்னையில் நடைபெற்ற கண்காட்சிகளிலும் சரி, வர்த்தகப் பொருட்காட்சியிலும் சரி பொதுமக்கள் விலை மதிப்பு மிகுந்த ஏலக்காயை விலைச் சலுகையோடு பெறவும் வழி செய்தேன். வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் ஏலமணம் பரப்பியதும் உண்டு; தமிழ் ஏடுகளில் பெரும்பாலானவை ஏலச்செய்தி விரும்பி வெளியிட்டன. செய்தித் திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டன: உண்மை தான்!—இந்திய ஏலக்காயின் செல்வாக்கும் புகழும் உலக அரங்கிலே கொடிகட்டிப் பறந்தன; பறக்கின்றன.
பண்டைத்தமிழ் இலக்கியங்களான குறுந்தொகை, சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்றவற்றில் ஏலக்காய் மணக்கும். தவிர, ஏலக்காய்க்குப் பக்தி மணமும் உண்டு. திருவாசகத்திலே, 'ஏலவார்குழலிமார்' என்பதாக ஏலக்காய் மூலம் பெண்டிர் சிறப்பிக்கப்படுவதையும் காண்கிறோம்.
என்னுடைய பதவிக் காலத்தின் கடைசி நாட்கள் உணர்ச்சி பூர்வமானவையாகவே அமைத்தன! தொலைக் காட்சியில் ஏலக்காய் பற்றிய என்னுடைய பேட்டி ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது. அப்போது, தொலைக்காட்சிக்காக நான் எழுதிய பாடலையும் இப்போது நான் எண்ணிப் பார்க்கிறேன்.
"எங்கள் ராணி, ஏலக்காய் ராணி!
எங்கெங்கும் வாழ்கின்ற இனிய ராணி!
நறுமணப் பொருட்களின் ராணி—உலகில்
நறுமணச்சுவையுடன் பவனி வருவாள்!
இந்தியநாடே ஏலக்காயின் அன்புத் தாய்விடு;
இனிதான மேற்குமலைத் தொடரின் காடுகளிலே
சிந்துகின்ற இதமான தட்பவெப்பச் சூழலிலே
சிணுங்காமல் வளர்ந்திடும் நுட்பமிகு ஏலச்செடி!
இந்திய ஏலக்காயின் தொழில் துறையில்
ஏற்றங்கள் கண்டுவரும் ஏலக்காய் வாரியத்தின்
பந்தமிகு செயற்பணிகள் இந்திய ஏலக்காயைப்
பந்தமுடன் பாரினிலே வளர்த்து வாழ்த்தும்!"
ஏலக்காயின் நறுமண இன்சுவையிலே, ஏலக்காய்ப் பண்பாடும் பண்பாட்டுப் பாடல் வாஞ்சையுடன் பிறந்திடக் கேட்கவா வேண்டும்!
முன்னர், நான் எழுதிய அன்னை தெரேசா நூலை மணிவாசகர் பதிப்பகத்தினர் சிறப்புற வெளியிட்ட்னர். இப்போது, ஏலக்காயின் கதையைச் சொல்ல அவர்கள் எனக்கு நல்ல வாய்ப்புத் தந்திருக்கிறார்கள். என் எழுத்துக்களில் அன்பும் பாசமும் கொண்ட பேராசிரியர் திரு. ச. மெய்யப்பன் அவர்கள் எனக்குக் கிடைத்திட்ட சடையப்ப வள்ளல் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருப்ப்து குறிப்பிடத்தக்கது.
தமிழ் ஆர்வலர்களாகிய நீங்கள் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் நான் எழுதியுள்ள எத்தனை எத்தனையோ நூல்களின் வாயிலாக என்னை—உங்கள் பூவையை நன்கு அறிவீர்கள்!—உங்கள் அன்பும் ஆதரவும் உயர்ந்தவை; மனம் உயர்த்திக் கைகளை உயர்த்திக் கும்பிடுகிறேன்.
ஒன்று:
ஏலக்காய்க்குக் கிடைக்கின்ற மரியாதை இப்போது என்மூலம் இலக்கியபூர்வமாகவும் அமைந்துவிட்டதில் நான் மெய்யாகவே மகிழ்ச்சி அடைகிறேன்.
வணக்கம்.
பூவை எஸ். ஆறுமுகம்
கருத்துகள்
கருத்துரையிடுக