கடவுள் கைவிடமாட்டார்
சுட்டி கதைகள்
Back
கடவுள் கைவிடமாட்டார்
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
கடவுள்
கைவிடமாட்டார்
தேசிய விருது பெற்ற பேராசிரியர்
அமரர்: பல்கலைப் பேரறிஞர்
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
M.A., M.P.Ed., Ph.D., D.Litt., D.Ed., FUWAI
சாந்திமலர் பதிப்பகம்
8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,
தி. நகர், சென்னை-600 017.
தொலைபேசி: 4332696
நூல் விபர அட்டவணை
நூலின் பெயர் : கடவுள் கைவிட மாட்டார்
மொழி : தமிழ்
பொருள் : சிறுவர் புதினம்
ஆசிரியர் : டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
(1937 – 2001)
பதிப்பு : முதல் பதிப்பு 31 - டிசம்பர் 2001
நூலின் அளவு : கிரவுன்
படிகள் : 1200
தாள் : வெள்ளை
பக்கங்கள் : 96
நூல் கட்டுமானம் : பேப்பர் அட்டைக்கட்டு
* * *
விலை : ரூ. 20-00
* * *
உரிமை : பதிப்பகத்தாருக்கு
வெளியிட்டோர் : சாந்திமலர் பதிப்பகம்
8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,
தி.நகர், சென்னை -600 017
தொலைப்பேசி: 4332696
அச்சிட்டோர் : எவரெடி பிரிண்டர்ஸ்
தி.நகர், சென்னை - 600 017. தொலைப்பேசி: 8252271
பதிப்புரை
உண்மையான இன்பம் உழைப்பில்தான் இருக்கிறது. உற்சாகமான உழைப்பினால் கிடைக்கின்ற பலனில்தான், நல்ல நிம்மதியும் கிடைக்கிறது. அந்த இன்பமும் மகிழ்ச்சியுமே நீடித்து நிலைத்து நிற்கும். அதுவே வாழ்வின் பயனுமாகும்.
‘எந்த வழியிலேனும் பணம் சேர்த்து விடலாம், இஷ்டம் போல் வாழலாம்’ என்று ஒருசிலர் முயற்சி செய்கிறார்கள். அது முறையான வாழ்க்கையல்ல, குறுக்கு வழி எப்பொழுதும் துன்பத்தையே தரும்.
துன்பம் தரும் வழியை தெரிந்தே தேர்ந்தெடுத்துப் பயணம் செய்வது, அறிவுடையோர்க்கு அழகல்ல. நல்ல வாழ்க்கை வாழ்பவரையே உலகம் மதிக்கிறது. போற்றுகிறது, புகழ்கிறது. அதனால்தான் வள்ளுவரும் ‘தோன்றிற் புகழொடு தோன்றுக!’ என்றார்.
நாம் புகழுடனும் நிம்மதியுடனும், இன்பத்துடனும் வாழ்ந்திட விரும்பினால், நல்ல பாதையையே தேர்ந்தெடுக்க வேண்டும். வேறுபாதை வேண்டாம் அவ்வாறு சென்றால் என்ன ஆகும் என்ற ஓர் கேள்விக்குப் பதிலாக, இந்த குறுநாவல் அமைந்திருக்கிறது.
மாணவர்கள், சிறுவர் சிறுமிகளுக்காக அமரர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்களால் எழுதப்பட்டிருக்கும் இந்நூலை, எல்லோரும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையில் உங்களிடம் அளிக்கிறோம்.
கடின உழைப்பையும், திடமான மனதையும், நல்ல கொள்கைகளில் நம்பிக்கை வைத்து நடப்பவர்களையும் கடவுள் கைவிடமாட்டார் என்ற பெரியோர்கள் பொன் மொழியை உங்களிடம் இந்நூலில் நினைவுபடுத்தி இருக்கிறார். டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா.
சென்னை - 600 017.
பதிப்பாளர்
பொருளடக்கம்
1. நெஞ்சத்தில் நிம்மதி!
2. கண் முன்னே காரியம்!
3. நடையும் விடையும்!
4. காட்டிலே வேட்டை!
5. பேராசை பெரு நஷ்டம்!
6. தேடி வந்த திரவியம்!
7. யோசனையும் வாசனையும்!
8. சக்தியும் பக்தியும்!
9. கனவு நினைவாயிற்று!
1. நெஞ்சத்தில் நிம்மதி
எங்கு பார்த்தாலும், எப்பொழுது பார்த்தாலும், அந்த ஊர் பசுமையாகவே காட்சியளிக்கும். ஊரைச் சுற்றிலும் நஞ்சை வயல்கள். உயரமாக வளர்ந்திருக்கும் மரங்கள். பச்சைப்பசேலென்ற புல்வெளி மைதானங்கள். பார்க்க அழகாக இருக்கும்.
இவ்வளவு செழிப்பான ஊருக்கு என்ன பெயர் தெரியுமா? வாழவந்தபுரம். வயல் அறுவடை செய்வதற்காக வேலைக்கு வந்தவர்கள் எல்லோரும், இங்கே தங்கிவிட்டார்கள். குடிசைகள் பலதோன்றின. குடும்பங்களும் பெருகின. வாழ வந்தவர்கள் அனைவரும் மனத்தால் ஒன்று சேர்ந்தனர். குணத்தோடு பழகினர். அது ஊராயிற்று, சீராயிற்று.
அந்த ஊரிலே பெரும் பணக்காரராக இருப்பவர், நில புலம் நிறைந்தவராக வாழ்பவர் தருமலிங்கம். வாழவந்தபுரத்திற்கு முதன் முதலில் குடியேறிய குடும்பமும் அவருடையதுதான்.
குணத்திலே தருமர் போன்றவர். கடவுள் பக்தி நிறைந்தவர். பணம் இருந்தாலும் பகட்டோ, படாடோபமோ இல்லாதவர், பிறருக்கு மரியாதை தந்து பேசுபவர். திறமைக்கு மதிப்பளிக்கும் அரிய பண்பாளர்.
அவர், அழகும் அறிவும், அன்பும் அடக்கமும் நிறைந்த தன் மனைவி மீனாட்சியுடன் வாழ்ந்து வந்தார்.
வீடு, வயல், மாடு, மனை, கைநிறைய பணம் போன்ற எல்லா செல்வ வசதிகள் அவருக்கு இருந்தாலும், வீட்டிலே தவழ்ந்து விளையாட குழந்தைச் செல்வம் இல்லாமல் வாழ்ந்தது. அவர்களிருவருக்கும் பெரிய குறையாகவும் வேதனையாகவும் இருந்தது.
எவ்வளவோ வைத்தியங்கள் செய்தாயிற்று, எத்தனையோ வைத்தியர்களின் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கேட்டுப் பார்த்தாயிற்று, போகாத கோயிலில்லை, முழுகாத குளமில்லை, மேற்கொள்ளாத நோன்பில்லை, எல்லாமே ஏமாற்றமளித்தன. இதயத்தில் வேதனை அதிகமாயிற்றே தவிர குறையவில்லை. அலைகடல்போல மனம் தத்தளித்துத் தடுமாறியது.
எப்பொழுது பார்த்தாலும் மீனாட்சி மிக மனக் கவலையுடனேயே வாழ்ந்து வந்தாள். தருமலிங்கத்திற்கோ, தன் மனைவிக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவதென்றே தெரியாமல், தவித்தவாறு வாழ்ந்து வந்தார்.
மனம் வேதனைப்படும் சமயங்களில் எல்லாம் மீனாட்சி, அம்பிகைக் கோயிலுக்குச் சென்று, மனம் உருக வேண்டிக் கொள்வாள், கடவுளின் சன்னிதானத்திலே தன் குறையைக் கூறிக்கொள்ளும்பொழுது, கண்ணீர் பெருகிவழியும், அப்பொழுது மனம் கொஞ்சம் சாந்தியடைவது போல் தோன்றும் அதனால் அம்பிகைக் கோயிலுக்கு அடிக்கடி போகத் தொடங்கினாள் மீனாட்சி.
மனிதர்களால் தன் குறையைத் தீர்க்க முடியாது என்ற ஒரு முடிவுக்கும் வந்து விட்டாள் மீனாட்சி, கடவுள் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை ஆலமரம்போல, அவள் மனதில் பல்கிப் பரவத் தொடங்கியது.
வழக்கம் போல, அன்றும் கோயிலுக்குப் போயிருந்தாள் மீனாட்சி, அன்பினால் நெகிழ, நம்பிக்கையுடன் அம்பிகையைத் தொழுதாள்.
“தாயே! நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் என்னை இவ்வாறு சோதிக்கிறாய்?
மகப்பேறு இல்லாத மலடி என்று மற்றவர்கள் ஏசுவதற்காகவா என்னைப் படைத்தாய் ? எத்தனையோ வசதியைக் கொடுத்தாய்! எல்லையில்லாத இன்பம் பெறுக என்று செல்வமான வாழ்வினை அளித்தாய் இதில் மட்டும் ஏன் குறை வைத்தாய்?”
அம்பிகையே! பழியோடு என்னை வாழவைக்காதே! உன் பாதார விந்தங்களில் என்னை எடுத்துக் கொள்வதானால் கூட, நான் நிம்மதியாக வருவேன். என் கணவன் மனங்குளிர, எங்கள் பெயர் சொல்ல, ஒரு குழந்தையைக் கொடு தாயே!
தாயே! எனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தால், உனக்கு வைரத்தோடு செய்து போட்டு, வான வேடிக்கையுடன், இதுவரை இந்த வட்டாரத்திலேயே இல்லாத அளவுக்குப் பெரிய விழாவே எடுக்கிறேன்!
என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, என் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். என்னை வருத்துகின்ற குறையைப் போக்க வேண்டும். உன்னைத் தவிர, நான் யாரிடம் போய் முறையிடுவேன்!”
மீனாட்சியின் கண்கள் கண்ணீரால் நனைந்து கொண்டிருந்தன. கைகள் இரண்டும் குவிந்து தொழுது கொண்டிருந்தன. நின்ற நிலையிலே மெய்மறந்து, பிரார்த்தனை செய்த மீனாட்சி, அன்புக்கு ஏங்கிய குழந்தை ஒன்று தன் அன்னையின் முகத்தையே பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தாள்.
அம்பிகை தன்னையே பார்ப்பது போலவும், தன்னைப் பார்த்தே புன்னகை செய்வது போலவும் மீனாட்சிக்குத் தோன்றியது, தான் தேவியிடம் கோரிய கோரிக்கையும் நினைவுக்கு வந்தது.
அந்த நேரத்தில் கோயில் மணி ஒலிக்கும் சத்தம் கேட்டது. வெளியே நின்றவர்களில் யாரோ ஒரு பக்தர், கோயில் மணியை அடித்து வேண்டிக் கொண்டதை, தனக்கு ஏற்பட்ட நல்ல சகுனமாகவே நினைத்துக் கொண்டு மீனாட்சி வீட்டுக்குப் புறப்பட்டாள்.
மனதிலே ஒரு நிறைவு, முகத்திலே மகிழ்ச்சி, நடையிலே ஒரு புது வேகம் என்றுமில்லாத ஒரு புதிய தெம்புடன் மீனாட்சி வீட்டுக்குள் நுழைவதை, வாசலில் நின்று கொண்டிருந்த தருமலிங்கம் பார்த்துக் கொண்டேயிருந்தார். அவளின் அருகிலே வந்தார்.
இவ்வாறு மகிழ்ச்சியாக மீனாட்சி இருக்க வேண்டும் என்பதுதானே தருமலிங்கத்தின் ஆசை! ‘வெளியில் ஏதோ நடந்திருக்கிறது. அதனால் தான் மீனாட்சி இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள்’ என்று புரிந்து கொண்டார் தருமலிங்கம், தன்னிடம் வந்து கேட்பதற்கு முன்னே, மீனாட்சி முந்திக் கொண்டாள்.
தன் கையிலிருந்த கோயில் பிரசாதத்தைக் கணவனிடம் கொடுத்து விட்டு, அவரது காலில் விழுந்து வணங்கி எழுந்தாள்.
‘என்ன விசேஷம்’ என்று கேட்பது போல, தருமலிங்கம் தனது விழிகளின் புருவங்களை மேலே உயர்த்தியவாறு நின்றார்.
கோயிலில், அம்பிகை முன்னால் தான் வேண்டிக் கொண்டதையும், கோயில் மணி அசரீரீபோல ஒலித்ததையும், நமக்கு நிச்சயம் நல்ல வழி பிறக்கும் என்று தான் நம்புவதாயும், மினாட்சி முகம் மலரக் கூறினாள். வைரத் தோடு போட்டு அம்பிகையை அலங்கரிக்க வேண்டும் என்ற தன் ஆசையையும் ஆர்வத்துடன் கூறினாள். வைரத்தோடு என்றதும், அவர் வீட்டில் இருக்கும் வைரக்கற்கள் தான் அவருக்கு நினைவு வந்தது.
அந்த வைரக் கற்கள் அவருக்கு பரம்பரைச் சொத்தாகும். பரம்பரை பரம்பரையாகப் பாதுகாத்து வரும் வைரக் கற்களினாலேயே அம்பிகைக்கு வைரத்தோடு அணிவிக்க வேண்டும் என்று அவரும் ஆசைப்பட்டார்.
‘தேவிக்கில்லாத சொத்தா! என்று மீனாட்சியைப் பார்த்து சந்தோஷத்துடன் கூறினார்.
எப்படியும், இனி ஒரு மாதத்திற்குள், நீ நினைத்தது போலவே அபாரமாக செய்து விடுகிறேன். கவலையை விரட்டி விட்டு, களிப்புடன் நீ இருக்க வேண்டும்’ என்று கணவர் கூறியதும், மீனாட்சிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. குறையெல்லாம் போனது போலவும், குழந்தை கிடைத்தது போலவும் மீனாட்சி எண்ணி மகிழ்ந்தாள். நெஞ்சத்தில் நிம்மதி அடைந்தாள்.
2. கண்முன்னே காரியம்!
‘நன்றே செய், அதை இன்றே செய்’ என்பதற்கேற்றவாறு, அம்பிகைக்கு ஆகவேண்டிய காரியத்தை இன்றைக்கே தொடங்கிவிட வேண்டும் என்று மீனாட்சியிடம் விடைபெற்றுக்கொண்டு, வெளியே கிளம்பினார் தருமலிங்கம்.
அம்பிகைக் கோயிலைச் சுற்றித்தான், அந்த ஊரின் தெருக்கள் அழகாக அமைக்கப்பட்டிருந்தன. யார் எங்கே புறப்பட்டாலும், அம்பிகையின் கோயிலைக் கடந்துதான் போகவேண்டும். அப்படி ஒரு பக்தி நிறைந்த ஊரின் அமைப்பு அது.
கோயில் முன்னே வந்ததும், காலில் போட்டிருந்த காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டு, கண்களை மூடியவாறு, கைகளைத் தலைக்குமேலே உயர்த்தி, மிகவும் பயபக்தியுடன் அம்பிகையை வணங்கினார் தருமலிங்கம்.
கண்ணை விழித்துப் பார்த்தபொழுது, அம்பிகையை மறைத்தவாறு ஒருவர் நின்று கொண்டு, மிகவும் பக்தி நிரம்பிய புன்னகையுடன் நோக்கி தன்னை வணங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தார் தருமலிங்கம்.
வணங்கி நின்றவர், நகை செய்யும் நடேசன்.
உனக்கு ஆயுசு நூறய்யா! என்று தருமலிங்கம் சிரித்துக்கொண்டே கூறினார்.
‘உங்க தயவு இருந்தா, இன்னும் நூறுவயசு கூட இருப்பேங்க’ என்று மரியாதையுடன் பதில் சொன்னார் நடேசன்.
உன்னைப் பார்க்கத்தான் வந்து கொண்டிருந்தேன். அம்பிகை முன்னாலேயே உன்னைப் பார்த்து விட்டேன்.
எல்லாம் கடவுளோட கருணைதாங்க! என்று மீண்டும் கைகுவித்து வணங்கினார் நடேசன்.
நடேசன்! உனக்கு ஒன்றும் வேலையில்லையே!
‘இல்லை’ என்பதற்கேற்றவாறு தலையை மெதுவாக அசைத்தார்.
‘வீடுவரை வந்து போங்கள். உங்களால் ஒரு முக்கியமான காரியம் ஆகவேண்டி யிருக்கிறது’ என்றார் தருமலிங்கம்.
நினைத்தது நடக்கிறது என்று தருமலிங்கமும், தனக்கு நல்லது நடக்கப் போகிறது என்று நடேசனும் தனித் தனியே நினைத்தவாறு, இருவரும் நடந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் கோயில் மணி டாண் டாண் என்று ஒலித்துக்கொண்டு இருந்தது.
தருமலிங்கம் வீட்டுக்கு முன்புறம் வெளியே முற்றத்தில் அமர்ந்திருந்த நடேசன், ‘ஏன், நம்மை தருமலிங்கம் அழைத்தார்? என்னவாக இருக்கும்?!’ என்று மண்டையைச் சொறிந்தவாறே யோசனையுடன் அமர்ந்திருந்தார். அடிக்கடி அவர் கண்கள் வீட்டின் உட்புறத்தை நோக்கியவாறு இருந்தன.
பெட்டியில் இருந்த வைரக்கற்களைப் பத்திரமாக தன் கைகளில் ஏந்தியவாறு, உள்ளிருந்து வந்தார் தருமலிங்கம். வானத்தில் உள்ள விண்மீன்கள் போல வைரக்கற்கள், அந்த நீலத் துணியில் வண்ண ஒளிகாட்டின.
பளபளப்பைப் பார்த்த நடேசன், தன்னை மறந்து, கிடந்த அக்கற்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.
என்ன நடேசன்! அப்படி ஆச்சரியமா பார்க்குறே?
‘இப்படிப்பட்ட வைரக் கற்களை நான் என் வாழ்நாளிலே பார்த்தது கிடையாது! இனிமேலும் பார்க்கப் போறது இல்லிங்க!’
நடேசன் உண்மையிலேயே மயங்கித்தான் போனார், அவரது மனம் எதற்காகவோ கனமாகி வருவதுபோல் தோன்றியது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டார்.
“நடேசன்! சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேட்கவேண்டும் இப்பொழுது நான் காட்டினேனே! இது எங்கள் பரம்பரைச் சொத்து, என்பாட்டனாருக்குப் பாட்டனார், பர்மாவில் பெரிய வைரவியாபாரியாக விளங்கினார். அவர் எவ்வளவோ வைரங்களைப் பார்த்திருந்தாலும், இக்கற்களின் மேல் ஆசைப்பட்டு, எவ்வளவோ பணம் கொடுத்து வாங்கி, தனது குடும்பச் சொத்தாக வைத்துக்கொண்டார்.”
எங்கள் குடும்பத்திலே வாரிசு ஒன்றே ஒன்றுதான் வந்தது. என் பாட்டனாருக்கு என் தாத்தா ஒரே மகன், என் தாத்தாவுக்கு என் தந்தை ஒரே மகன், என் தந்தைக்கு நான் ஒரே மகன்.
“எனக்குத்தான் குழந்தையேயில்லை”
தருமலிங்கத்தின் குரல் தணிந்தது. கனிந்துபோய் கம்மியது. கண்களிலே கண்ணீர் கசிந்தது. மிகவும் வேதனையுடன், தன் தோளில் கிடந்த துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டார். பெருமூச்சு வெகுவேகமாக வெளிவந்தது.
‘கடவுள் உங்களைக் கைவிடமாட்டார்! கவலையை விடுங்கய்யா’ என்று ஆதரவாகப் பேசினார் நடேசன்.
அந்த நம்பிக்கையுடன் தான் நம்ம ஊர் அம்பிகைக்கு ஒரு வைரத் தோடு செய்யவேண்டுமென்று நான், இப்பொழுது உன்னை அழைத்து வந்தேன்.
அம்பிகை தன்னை நிச்சயம் கைவிட மாட்டாள் என்ற நம்பிக்கையில் தருமலிங்கம் பேசிக்கொண்டிருந்தார். ‘எப்படியும் தன் பெயர் சொல்ல, தன் குலம் தழைக்க அம்பிகை அருள் செய்வாள்’ என்று அவரது உள்மனம் கூறியதால், அவர் கண்கள் கண்ணீரால் பளபளத்தன.
‘வைரத்தோடுதானே? இன்னும் ஒரே மாதத்திற்குள் முடித்து விடுகிறேன். இதைவிட வேறு வேலை எனக் கென்ன இருக்கிறது?’ என்றார் நடேசன்.
வேலைக்குக் கூலியெல்லாம் பேசி முடித்துக் கொண்டார்கள். அதற்காக முன்பணமும் தந்தார் தருமலிங்கம். பெற்றுக்கொண்ட நடேசன் பெருமை பொங்கப் பேசினார். ‘அம்பிகையின் அருளால்தான் இந்த வேலை கிடைத்தது. கூலியும் கிடைத்தது. இனி வயிறார சோறும் கிடைக்கும்’ என்று வணங்கினார்.
‘தினமும் வீட்டுக்கே வந்துவிடு. வேலையை செய்து முடிக்கும்வரை உமது ‘பட்டரை’ இங்கேயே இருக்கட்டும். சாப்பாடு முதல் சகல வசதிகளையும் நானே கவனிக்கிறேன். சரிதானே! என்றார் தருமலிங்கம்.
‘இதைவிட வேறு என்னங்க எனக்கு வேணும்’ நீங்க நல்லாயிருக்கனும்!
நடேசன் நன்றிப்பெருக்குடன் சொல்லிவிட்டு வணங்கிச் சென்றார். தருமலிங்கம் தனது கடமை தொடங்கிவிட்டது. எந்தவித இடையூறின்றி நடக்கும் என்பதைத் தன் மனைவியிடம் சொல்வதற்காக, வீட்டிற்குள்ளே சென்றார், அவரது நடை பந்தயக் குதிரைபோல இருந்தது.
3. நடையும் விடையும்!
வழியெல்லாம் வைரக்கற்களின் மதிப்பைப் பற்றியே நடேசனின் மனம் நினைத்துக் கொண்டிருந்தது, பாரவண்டிகளே இழுத்துப்போகும் கிழட்டு மாடுகளைப்போல அவரது நடை இருந்தது.
‘விலைமதிக்க முடியாத வைரக்கற்கள் பல லட்சம் பெறும். இவற்றை வீணே பெட்டியில் பூட்டி வைத்திருக்கிறாரே! தருமலிங்கத்து குடும்பத்தின் சொத்து அப்படி எவ்வளவு இருக்கும்? அவரது செழுமை எங்கே? அன்றாடம் கால்வயிற்றுக் கஞ்சிக்கு ஆளாய் பறக்கும் தன் குடும்பத்தின் வறுமை நிலை எங்கே?’
‘ஏணி வைத்தாலும் எட்டாது. பாடுபட்டாலும் பற்றாது’ என்று நடேசன் மனம், பஞ்சப்பாட்டைப் பாடியவாறு இருந்தது. சில சமயங்களில் பதறியது.
நடேசன் நினைவுகளிலேயே இலயித்துப் போனவராய், தன் வீட்டுக்கு வந்துசேர்ந்தார். அவர் மனம் மிகவும் குழம்பிப்போய் இருந்தது.
‘அப்பா! அப்பா! என்று ஏழெட்டுக் குழந்தைகள் அவரை சுற்றிச் சுற்றி வந்து நின்றன.’
இழுத்துக் கொண்டும். பிடித்துக் கொண்டும். தள்ளிக் கொண்டும் அவரது குழந்தைகள், அவரை பாடாய்படுத்தின. அடம்பிடித்தன.
குழந்தைகளுக்கு அப்பா மேல் அவ்வளவு அன்பு என்று நீங்கள் தவறாக எண்ணிவிடக்கூடாது. தங்கள் தந்தையின் மடி, புடைத்துக் கொண்டு இருந்ததால், தின்பதற்கு ஏதாவது இருக்கும் என்ற நம்பிக்கையில்தான். அவர்கள் தந்தையை சிறை பிடித்தது போல, அணைத்துப் பிடித்துக்கொண்டு இழுத்துச் சென்றனர். அடித்து பிடித்தபடி அவர் மடியை இழுத்தார்கள். அவர் அவிழ்த்துத் தருவதற்குள்ளேயே மடி அவிழ்ந்து கொண்டு பொட்டலங்கள் பொதபொதவென்று விழுந்தன. ஆளுக்கு ஒன்றாய் எடுத்துக் கொண்டு. மூலைக் கொன்றாய் பறந்தனர் குழந்தைகள். அவர்கள் பசி அவர்களுக்கல்லவா தெரியும்!
நாடகம் முடிந்தபிறகு கொட்டகைக்காலியாகக் கிடப்பதுபோல, தின்பண்டம் வந்ததும், ஓடி ஒளிந்த குழந்தைகளை மறந்தும் மறக்காமலும் அப்படியே நடுவீட்டில், தரையில் அமர்ந்து கொண்டார் நடேசன். ஒரு வாரமாய் சவரம் செய்யாமல் வளர்ந்து போன தன் தாடியை சொறிந்தவாறு அண்ணாந்து பார்த்தார். மாலை நேரத்து சூரிய வெளிச்சம், வேண்டாத விருந்தாளியைப் போல, கூரைக்குள்ளே புகுந்து வட்ட வட்டமாகத் தரையில் வண்ணக் கோலம் போட்டுக் கொண்டிருந்தது. வானமும் கூரை வழியே நன்றாக ஆங்காங்கே தெரிந்தது.
கண் கூசுகிறது என்று குனிந்து தன் வேட்டியைப் பார்த்தார். ஆங்காங்கே குறுக்குத் தையல் போட்ட பாகங்கள், மூலை காட்டிக் கேலி செய்து கொண்டிருந்தன.
என்னங்க அப்படி யோசனை? எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறீங்க! என்றவாறு அவரது மனைவி பார்வதி, பக்கத்திலே வந்து உட்கார்ந்து கொண்டாள்.
‘இனிமேல் ஒல்லியாகப் போக முடியாது’ என்பது போல இளைத்துப் போன தேகம். அவளை ஏற இறங்க ஒருமுறைப் பார்த்தார் நடேசன், குழிவிழுந்த கன்னங்கள் கலைந்த கேசம். வறுமை தாக்கியதால் வதங்கிப்போன முகம்.
‘வீட்டை விட்டுப் போகும் பொழுது, மகிழ்ச்சியுடன் போனிங்க, வருகிறபொழுது, எதையோ பறிகொடுத்தவர் மாதிரி வந்திருக்கிறீங்க’ என்று கேலியாகக் கேட்ட பார்வதியிடம், தான் பெற்ற முன் பணக் கூலியைக் கொடுத்தார் நடேசன்.
ஆவலுடன் வாங்கிய பார்வதி, அவசரம் அவசரமாகத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். அவளது குழி விழுந்த கண்கள்கூட், சந்தோஷத்தில் மலர்ந்து பிதுங்கின.
‘ஏதுங்க இத்தனை ரூபாய்?’ ஆச்சரியம் அந்தக் கேள்வியில் கொடி கட்டிப் பறந்தது.
கூலி! ஏக்கத்தின் பெருமூச்சில் நடேசன் வாய்பேசியது.
எதற்குக் கூலி? கொஞ்சம் விளக்கமா சொல்லக்கூடாதா? அவள் பேச்சில் கொஞ்சம் வேகம் இருந்தது.
தருமலிங்கம் வீட்டிலேதான் இனிமேல் வேலை, அந்த வைரத்தோடு வேலையை எப்படித்தான் முடிக்கப் போகிறேனோ, எனக்கே தெரியவில்லை!
அதுதான் கவலையா? உங்கள் கைப்பட்டால் வைரம் கூட வேணுங்கற தினுசிலே வளைஞ்சிக்குமே! இந்த வட்டாரத்தில் உங்களை விட்டா யார் இருக்காங்க? என்று கணவனின் கைவண்ணத்தைப் புகழத் தொடங்கிவிட்டாள் பார்வதி.
பணமல்லவா நடேசன் தந்திருக்கிறார்! பார்வதியின் புகழ்ச்சிக்கு என்ன குறைச்சல்? கொண்டுபோன தீனியை தின்று தீர்த்தக் குழந்தைகள் எல்லோரும் ஓடி வந்து இருவர் பக்கத்திலும் உட்கார்ந்து கொள்ளவே, இருவர் பேச்சும் தடைப்பட்டது.
ஒரு வாரம் நடேசன் குடும்பம் நிம்மதியாக உண்டு, பசியில்லாமல் உறங்கி, மகிழ்ச்சியுடன் வாழ்ந்தது. பழுத்தமரத்தில் பறவைகள் கூட்டம் கத்துவது போல, அந்தக் குடும்பத்தில் சதா மகிழ்ச்சி சத்தமே நிறைந்து கிடந்தது.
அந்த ஊரில், ஒருவித விஷக் காய்ச்சல் பரவி வந்த நேரம். நடேசனும் அவரது குடும்பத்தாரும் நன்றாக வாழ்வது பிடிக்கவில்லையோ என்னவோ, அந்த விஷக் காய்ச்சல் நடேசன் வீட்டுக்குத் திடீரென்று விஜயம் செய்தது. முதலாவதாக கடைசிக் குழந்தையைக் காய்ச்சல் பிடித்துக் கொண்டு, தொடர் கதை போல ஒவ்வொருவரையும் பிடித்துக் கொண்டது. அது அந்தக் குடும்பத்தையே ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. வீட்டில் எப்பொழுது பார்த்தாலும் மருந்து வாடையே வீசிக்கொண்டிருந்தது. வயிற்றுப் பிரச்சினைக்காக இருந்த பணமெல்லாம், வைத்திய செலவுக்காகப் போயிற்று.
இவ்வாறு, ஒருவர் மாற்றி ஒருவர் என்றவாறு, எல்லா குழந்தைகளும் விஷக் காய்ச்சலில் படுத்துப் படுத்து எழுந்தன.
பணக் கஷ்டம் ஏற்படும் பொழுதெல்லாம், தருமலிங்கத்தினிடம் பணம் பெற்றுக் கொண்டார். எத்தனை முறை கேட்டாலும் மனம் சலிக்காமல், கோபப்படாமல், கேட்ட பணத்தைக் கொடுத்து வந்தார் தருமலிங்கம். அந்த மாதிரி ஒருவர் ஆதரவு இருந்தது. நடேசனுக்கு நல்ல காலம் என்றே சொல்ல வேண்டும்.
குழந்தைகளுக்கெல்லாம் வந்த காய்ச்சல் போய்விட்டதென்று நடேசன் நினைத்தபொழுது, ‘அதற்குள் போய் விடுவேனா’ என்று கூறுவது போல, பார்வதியை காய்ச்சல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.
ஏற்கெனவே இளைத்துப் போயிருந்த பார்வதி, குழந்தைகள் காய்ச்சலால் கஷ்டப்பட்டபோது இரவு பகல் பாராது கண் விழித்தாள். அதனால் மீண்டும்
மெலிந்து களைத்துப் போனதால், காய்ச்சல் அவளையும் கவ்விக் கொண்டது. பார்வதி படுத்த படுக்கையாகி விட்டாள். எலும்பும் தோலுமாக ஆகிவிட்டத் தன் மனைவியைப் பார்த்துக் கண்ணீர் வடித்தார் நடேசன். தனக்கு ஒரே துணையாகவும், வாழ்க்கை முழுவதும் அன்பு துணைவியுமாக இருக்க வேண்டும் என்று இருந்தவருக்கு பார்வதியைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த உலகத்தையே ஒழித்துவிட வேண்டும் என்ற வெறிகிளம்பும்.
‘பக்கத்து நகரத்தில் உள்ள அரசாங்க மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால்தான் பார்வதியின் உடல் தேறும்’ என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் நடேசனிடம் புத்திமதி கூறினார்கள். அவ்வாறு மருத்துவ மனைக்குப் போக வேண்டும் என்றால், குறைந்தது நூறு ரூபாயாவது தேவைப்படும்.
எங்கே போவது? யாரைப் போய் கேட்பது?
எப்பொழுதும் உதவி செய்யும் தருமலிங்கம் இருக்கிறாரே? அவரிடம் போனால்தான் முடியும் என்று முடிவு வந்தார் நடேசன்.
அன்றைக்குப் பார்த்துத்தானா தருமலிங்கம் ஏதோ கவலையில் ஆழ்ந்து இருக்க வேண்டும்?!
பணம் வேண்டும் என்று நடேசன் கேட்டதுதான் தாமதம். உட்கார்ந்திருந்த தருமலிங்கம் எழுந்தார்! நடேசனை நோக்கி வந்தார்.
‘உனக்கு வேறு வேலையே கிடையாதா? பணம் பணம் என்று ஏன் என் உயிரை எடுக்கிறாய்! வேலையை முடித்துவிட்டு போய் தொலைப்பதுதானே? ஏற்கனவே பேசிய சுலிக்கு மேல் ஐம்பது ரூபாய் அதிகம் வாங்கியிருக்கிறாய்? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? இளிச்சவாயன் என்று என்னை நினைத்துவிட்டாயா?
நடேசனுக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது. குனிந்த தலை நிமிராமல் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டார்.
நடேசன் போன பிறகுதான் தருமலிங்கத்தின் கோபம் குறைந்தது. இப்படி ஏன் நடேசன் மேல் கோபப்பட்டோம் என்று தன்னைத் தானே நொந்து கொண்டார். காலையில் நடந்த வயல் வரப்புத் தகராறை நடேசன் மீதா காட்டி விட்டேன்? ஐயோபாவம் என்று வருத்தப்பட்டார்.
நடந்துபோன வழியெல்லாம், நடேசனின் மனம் தீராத சிந்தனையிலேயே லயித்துப் போயிருந்தது, அந்த நடை ஒரு விடையைத் தராமல், நடேசனைக் குழப்பியது.
அன்று இரவு முழுதும் துங்காமலே விழித்திருந்தார் நடேசன். காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், எப்பொழுதும் போல வேலைக்கும் போனார்.
வைரத்தோடு முடியும் வரை தருமலிங்கம் வீட்டில்தான் வேலை செய்யவேண்டும் என்பதாக இருவருமே சேர்ந்து எடுத்துக்கொண்ட முடிவுதானே!
நடேசன் வேலை செய்கிற நேரம் வரை செய்துவிட்டு, அந்த அரைகுறையானவற்றை, ஒரு பேப்பரில் மடித்து மீனாட்சியிடம் கொடுப்பார். அது வழக்கமாக நடந்து வரும் செயலாகும்.
மீனாட்சியும் அப்படியே பொட்டலத்தைக் கொண்டு போய் பெட்டியில் வைத்துவிட்டு, மறுநாள் நடேசன் வந்ததும் திரும்ப எடுத்துக்கொண்டு வந்து தருவது வழக்கம்.
வழக்கம் போலவே, பொட்டலத்தைக் கொண்டுவந்து நடேசனிடம் கொடுத்துவிட்டு, மீனாட்சி தனது வீட்டு வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டாள். மமாலை வரை வேலை செய்து விட்டு, நடேசன் அரைகுறையாக முடிந்த தோட்டினை எடுத்து மடித்து, காகிதப்பொட்டலத்தை மரியாதையாகக் கொடுத்தார்.
பழக்கத்தின் காரணமாக, பொட்டலத்தைப் பிரித்துப் பார்க்காமலேயே மீனாட்சியும் வாங்கிக் கொண்டாள்.
நடேசன் மீனாட்சியிடம் மகிவும் பணிவுடனும் அடக்கத்துடனும் வணங்கி, விடைபெற்றுக் கொண்டார். மீனாட்சியும் நடேசனின் பணிவையும் அன்பையும் கண்டு மகிழ்ந்து, ‘தோடு முடிந்ததும் நல்ல சன்மானம் தந்து கெளரவிக்க வேண்டும்’ என்று நினைத்தவாறு புன்சிரிப்புடன் விடை தந்தாள்.
வீட்டைவிட்டு வெளியே வந்த நடேசன், திரும்பி மீண்டும் ஒருமுறை, ஒரு மாதிரியாக அந்த வீட்டைப் பார்த்தார். பிறகு தன் வேட்டியில் சுருட்டி மடக்கிக் கட்டியிருந்த மடிப் பகுதியை ஒரு தரம் தடவிப் பார்த்துக் கொண்டார்.
இப்பொழுது, நடேசன் நடையில் வேகம் இருந்தது.
4. காட்டிலே வேட்டை
வறுமையிலே வாடிய தன் குடும்பத்தை விஷக் காய்ச்சல் மேலும் கொடுமைப்படுத்தியதைக் கண்டும், கொஞ்சமும் கருணை காட்டாமல் கடுமையாகப் பேசித் தன்னை அவமானப்படுத்திய தருமலிங்கத்தை நினைத்துப் பார்க்கும் பொழுதே, நடேசனுக்கு அவர்மேல் கோபங் கோபமாக வந்தது.
அந்தக் கோபத்தின் விளைவாக, என்ன செய்கிறோம் என்று யோசித்துப் பார்க்காமலேயே அவசரமான காரியம் ஒன்றில் ஈடுபட்டு விட்டார் நடேசன்.
வைரக் கற்களுக்குப் பதிலாக போலிவைரங்களான இமிடேஷன் கற்களை வாங்கி, பொட்டலங் கட்டிக் கொண்டு வந்தார். உண்மையான பொட்டலத்தை மடியிலே வைத்துக்கொண்டு, தான் கொண்டுவந்த போலி வைரப் பொட்டலத்தைத் தந்துவிட்டு, நைசாக வீட்டை விட்டு வெளியே வந்தார் நடேசன்.
“இன்று இரவே, பக்கத்துப் பட்டணமாக விளங்கும் பேருருக்குச் சென்று, வைரக்கற்களை விற்றுவிடவேண்டும். விற்ற பணத்துடன் இரவோடு இரவாகத்தன் குடும்பத்தை வெகுதூரம் உள்ள ஒரு ஊருக்குக் கூட்டிச் சென்று, அங்கே நிம்மதியாக வாழவேண்டும்.”
இதுதான் நடேசனின் திட்டம்.
‘தருமலிங்கத்திற்கு இதுதான் சரியான தண்டனை’ என்று நடேசனின் மனம் மகிழ்ச்சியால் துள்ளி விளையாடியது. ‘தருமலிங்கத்தை நன்கு பழிவாங்கி விட்டேன்’ என்ற பேரானந்தத்துடன் வீட்டுக்கு வந்து சேர்ந்த நடேசன், ‘இதோ சீக்கிரம் வந்து விடுகிறேன்’ என்று தன் மனைவியிடம் கூறிவிட்டு, வேகமாக நடக்கத் தொடங்கினார்.
இந்த நம்பிக்கைத் துரோகத்தைக் காண மனம் சகிக்காமல், சூரியனும் கொஞ்சங் கொஞ்சமாக மறைந்தான். ‘என்ன ஆகுமோ, ஏதாகுமோ’ என்று பயப்படுவதுபோல, மேகங்கள் வானத்தில் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தன.
அந்த வட்டாரத்திலேயே தலைநகரம் போல விளங்கியது பேரூர். சர்க்கரைத் தொழிற்சாலை ஒன்று புதிதாக அந்த ஊரில் தொடங்கியிருந்ததால், அந்த சிறிய ஊர் குட்டி நகரத்தைப் போல விரிவடையலாயிற்று. பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கெல்லாம் நாகரிகம் கற்றுத் தரும் நகரமாகவும் அது மாறியிருந்தது.
அந்த பேரூருக்குப் போனால், எந்தவித சிரமமுமின்றி, வைரக்கற்களை விற்று விடலாம் என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக, நடேசன் ஓட்டமும் நடையுமாகப் போய்க் கொண்டிருந்தார்.
இருட்டானது உலகத்தை இப்பொழுது நன்றாகப் பிடித்துக்கொண்டு விட்டது. விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னிக் கொண்டிருந்தன.
வாழவந்தபுரத்திலிருந்து அந்தப் பேரூருக்குப் போகவேண்டும் என்றால், வேறு பெரிய பாதைகளோ, ரோடுகளோ எதுவும் கிடையாது. கரும்பு விளைந்திருக்கும் வயல்களின் வரப்புகள் மீதுதான் நடந்து போக வேண்டும்.
கரும்பு வயல்கள் என்பதைவிட, கரும்புக் காடு என்பதுதான் பொருத்தமாக இருக்கும். புதிதாக வயல்களில் கரும்பு பயிரிடப்பட்டு இருந்ததால், மண் வளம் அதிகமாக இருக்கவே, எதிர்பார்த்த அளவுக்குமேல் கரும்பு உயரமாக வளர்ந்து, அடர்த்தியாக பின்னிக் கொண்டு இருந்தன. ஆகவே, அதனை இனி கரும்புக்காடு என்றே கூறலாம்.
பேரூரை அடைய வேண்டும் என்றால், குறைந்தது ஒரு மைல் தூரம் கரும்புக் காட்டிற்குள் நுழைந்துதான் செல்ல வேண்டும் என்பது நடேசனுக்கு நன்றாகத் தெரியும். பகலில் பத்துபேராக சென்றால் பயந் தெரியாது என்பதால், பலர் கூடி சேர்ந்து கும்பலாகவே பேரூருக்குப் போவார்கள்.
நடேசனுக்கோ இப்பொழுது அவசரம், யாரையும் துணைக்கு அழைக்கவோ, சேர்க்கவோ முடியாது. ஏனென்றால் இவர் திருட்டு வேலையல்லவா செய்திருக்கிறார் இருட்டிலே போவதாக இருந்தாலும் யாரையும் துணைக்குக் கூப்பிட முடியாதே! பயந்தவராக இருந்தாலும், இப்பொழுது எப்படியும் போய்த் தானே ஆகவேண்டும் நடேசன் துணிந்து, கரும்புக் காட்டின் வழியே நுழைந்து செல்லத் தொடங்கினார்.
நடுக் காட்டிற்குள் சென்றபொழுது, அவர் கரும்புகள் மீது மோதுகிற சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. இப்பொழுது ஒரு புதிய சத்தமும் கேட்கத் தொடங்கியது.
கரும்புகள் ‘மடமட’ வென்று முறிவதுபோல் சத்தம் தூரத்தில் கேட்கத் தொடங்கி, இப்பொழுது அவருக்கு மிகவும் அருகாமையிலே கேட்கத் தொடங்கியது. அத்துடன், சரசரவென்ற கரும்பு சரகுகளின் ஒலியுடன், யாரோ வேகமாக பின்னால் நடந்துவரும் சத்தமும் கேட்டது.
‘மனிதர்கள்தான் அவசரமாக வருகிறார்கள் போலிருக்கிறது’ என்று எண்ணித் திரும்பினார் நடேசன்!
என்ன பயங்கரம்! தீப்பந்தயம்போல இரண்டு கண்கள் மின்னின. தரை அதிர்வதுபோல கால்களைத் தூக்கி வைத்துக் காலடி போடுகின்ற தன்மையில், புலி ஒன்று அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது.
'புலி! இங்கே, இந்த ஊருக்கு எப்படி வந்தது? என்று எண்ணக் கூட நேரமில்லை நடேசனுக்கு. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடத்தொடங்கினார்.
புலியிடம் ஓட்டப் பந்தயமா?
பயங்கரமாகப் பாய்ந்தது புலி. நடேசனைத் தாக்கியது. தப்பித்து ஓடமுயன்ற நடேசன் இடுப்பிலே ஓங்கி அறைந்தது. ஒரே அறைதான்.
‘ஐயோ செத்தேன்’ என்று கீழே விழுந்தார் நடேசன். புலியின் ஒரே அறையில் மயக்கமடைந்து விட்டார். சுற்றுப் புறம் எங்கும் இரத்தம் தெளித்ததுபோல் பரவித் திட்டுத் திட்டாகக் கிடந்தது.
மீண்டும் புலி அவரைத் தாக்க முயன்றபொழுது, துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. சத்தத்தைக் கேட்ட புலியானது நடேசனை விட்டுவிட்டு ஓடிவிட்டது.
துப்பாக்கியும் கையுமாக ஒரு ஆள் அங்கே ஓடிவந்தான். அவனைப் பார்த்தால் வேட்டைக்காரன் போல இல்லையே! அந்த இருட்டில் புலி வேட்டையாட வந்தானா என்றால் அதுவும் இல்லை.
சர்க்கஸ் கம்பெனியில் புலியை அடக்கி வேடிக்கை காட்டும் ‘ரிங் மாஸ்டர்’ தான்.
முதள் நாள் இரவு பேரூரில் நடந்த சர்க்கஸ் காட்சியில், யாருக்கும் அடங்காமல், அந்தப் புலி கூண்டுக்குள் இருந்த வேலைக்காரனைத் தாக்கிவிட்டு வெளியேறி வந்ததும், வேடிக்கை பார்த்த மக்கள் பதுங்கிக் கொண்டதும், மக்கள் எச்சரிக்கையுடன் நடமாட வேண்டும் என்று தண்டோரா மூலம் ஊரெல்லாம் அறிவித்திருந்ததும் நடேசனுக்குத் தெரியாது. தெரியவும் நியாயமில்லையே! அவர்தான், வைரக்கற்களை கடத்திக் கொண்டு போவதில் ஒரே குறியாக இருந்தாரே!
நடேசன் தான் நாள் முழுவதும் நகை வேலையில் ஈடுபட்டிருந்துவிட்டு, வீட்டுக்குப் போய் மனைவியின் பக்கத்தில் இருந்து மருந்து தந்தவராயிற்றே!
தப்பி வந்த புலியானது, தவறுசெய்து திருடிவந்த நடேசனைத் தாக்கிவிட்டுத் தப்பிவிட்டது.
துப்பாக்கியும் கையுமாக நின்ற ‘ரிங் மாஸ்டர்’ துரைசாமி, குனிந்து நடேசன் மூக்கருகில் கை வைத்து, மூச்சு வருகிறதா என்று பார்த்தார். மூச்சு மெதுவாக வந்து கொண்டிருந்தது.
அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்று துரைசாமி நினைத்தார். என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது, நடேசன் மடியில் வைத்திருந்த வைரக்கற்கள் அடங்கிய பொட்டலம் வெளியில் வந்து அவிழ்ந்து கிடந்ததைப் பார்த்துவிட்டார்.
மின்னிய வைரக் கற்கள், துரைசாமியின் எண்ணத்தையே மாற்றிவிட்டன. ஒரு மனித உயிரை விட, வைரமே மேலாகத் தோன்றியது. துரைசாமிக்கு, யாரும் அங்கு இல்லையே! வைர ஆசை, அவரது மனிதப் பண்பை மடக்கிவிட்டு, கொடூரப்படுத்திவிட்டது.
நடேசனை அப்படியே குற்றுயிராகப் போட்டுவிட்டு, பொட்டலத்தைத் தன் பைக்குள் போட்டுக்கொண்ட, துரைசாமி, புலியையும் மறந்து வேகமாகப் பிறப்பட்டார்.
துணையாக இருந்த துப்பாக்கியையும் கீழே போட்டுவிட்டார் துரைசாமி. காணக் கிடைக்காத வைரக் கற்களின் மீதே நினைவு இருந்ததால், சீக்கிரம் பேரூருக்குப்போக வேண்டும் என்ற அவசரமே அவருக்கு மேலோங்கியிருந்தது.
பாவம் நடேசன்! பேராசைக்கு அடிமையாகி, அனாதையாக, அந்த கரும்புக் காட்டிற்குள் குற்றுயிராகக் கிடந்தார். உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக, மார்பு மேலும் கீழுமாக ஏறி இறங்கிக் கொண்டு இருந்தது.
நடேசன் அடிபட்டுக் கிடந்த இடத்திற்குப் பக்கத்திலே ஒரு பெரிய மரமும், அதன் கீழே ஒரு சிறிய பரப்பளவு உள்ள ஒரு திடலும் இருந்தது.
அந்த இடத்தை அடைந்ததும், ஆசை உந்தித் தள்ள பையில் உள்ள பொட்டலத்தை எடுத்து, விரித்து, எத்தனைக் கற்கள் இருக்கின்றன என்று எண்ணிப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார் துரைசாமி.
எண்ணி முடித்து, பொட்டலத்தை மடித்து வைத்த பிறகு, தனது எதிர்காலம் எவ்வளவு ஒளிமயமாக விளங்கப் போகிறது என்று நினைக்கும் பொழுதே, துரைசாமிக்கு தலைகால் புரியவில்லை. சினிமா வில்லன் போல சத்தம் போட்டுச் சிரித்து மகிழ்ந்தார்.
‘சர்க்கஸ் கூடாரத்தில், வெறி பிடித்த மிருகங்களுடன் போராடும் வேலையை விட்டுவிட்டு, இனி காரும் பேருமாக, சீரும் சிறப்புமாக சிங்கார வாழ்வு வாழப்போகிறேன்’ என்று சத்தம் போட்டுப் பேசினார். இன்று நல்ல வேட்டை என்று வெடிச் சிரிப்பு சிரித்தார்.
5. பேராசை பெருநஷ்டம்!
தொப்பென்று யாரோ குதிக்கும் சத்தம் கேட்டது. யாரென்று திரும்பி பார்ப்பதற்குள்ளே, இரண்டு மனிதர்கள் இருபக்கமும் வந்து, துரைசாமியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள்.
தங்கள் கையிலிருந்த கயிற்றால், துரைசாமியின் கால்களையும் கைகளையும் சேர்த்துக் கட்டி, கீழே உருட்டி விட்டார்கள்.
யார் இவர்கள்? எங்கிருந்து இந்த நேரத்தில் இங்கு வந்தார்கள்? என்பது துரைசாமிக்குப் புரியவில்லை. அவர் பேச ஆரம்பித்தாலோ, அவர்கள் கால்களால் மாறி மாறி துரைசாமி முகத்திலே உதைத்தனர். அதனால், துரைசாமியால் கோபமாகப் பார்க்கமுடிந்ததே ஒழிய, ஏதும் பேச முடியவில்லை.
அவர்கள் இருவரும் பக்கத்து ஊராகிய வயலூரைச் சேர்ந்தவர்கள். மாலை நேரத்தில் மீன் பிடித்து, அவைகளை விற்று வாழும் விவசாயிகள்.
அன்று இருவரும் தூண்டில்போட்டு, மீன் பிடித்து, அவைகளைக் கொண்டுபோய் பேரூரில் விற்றுவிட்டு, கரும்புக் காட்டுவழியாக வீட்டுக்குப் போகலாம் என்று புறப்பட்டவர்கள்தான்.
‘ஐயோ புலி’ என்று நடேசன் போட்ட கூக்குரலைக் கேட்ட இருவரும், பயந்து ஓடிப்போய், உயர்ந்த அந்த மரத்தின்மீது ஏறிக் கொண்டார்கள். துரைசாமி வருவதும் அவர்களுக்குத் தெரிந்தது. துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது. அவர் அந்த மரத்தடிக்கு வந்து நின்று, அந்த வைரக் கற்களை எண்ணியதும் தெரிந்தது.
பிறகு என்ன? வைரக் கற்கள் வயலூர் ஆட்களிடம் சிக்கின.
‘நம் தூண்டிலில் இதுவரை மீன்கள்தான் சிக்கின. இப்படி வைரக் கற்கள் சிக்கும் என்று நாம் எண்ணியதே இல்லை’ என்று ஒருவன் சிரித்தான்.
‘சத்தம் போட்டு சிரிக்காதே! இந்த ஆள் சிரித்துத்தான் நம்மிடம் சிக்கிக்கொண்டான். நம்மை யாராவது... என்று முடிப்பதற்குள், “ஆமாம்! மூச்சுவிடும் சத்தம் கூட இனி கேட்கக் கூடாது. பகலில் பக்கம் பார்த்துப் பேசு. இரவில் அதுவும் பேசாதே! என்று இருவரும் புறப்படத் தொடங்கினர். நடையில் வேகம் இருந்தது.”
துரைசாமி கெஞ்சினார். ‘என்னை அவிழ்த்து விடுங்கள். நான் என் வழியே போய்விடுகிறேன். உங்களை ஒன்றும் செய்யமாட்டேன்’ என்று அழுது கொண்டே கேட்டார். கெஞ்சக் கெஞ்ச, அவர்களுக்குக் கோபம்தான் வந்தது.
‘எங்களை ஏமாற்றப் பார்கிறாயா? என்று இருவரும் களைத்துப் போகும் அளவுக்கு துரைசாமிக்கு, தங்களால் முடிந்தவரை உதை கொடுத்துவிட்டுப் போனார்கள். உதை வாங்கிய துரைசாமி, ‘மனிதனை மதிக்காமல், வெறும் வைரக் கற்களுக்கா குற்றுயிராக விட்டுவிட்டு வந்தேனே! அதற்கு இது சரியான தண்டனைதான்’ என்று அழத் தொடங்கினார்.
துரைசாமியின் அழுகைக் குரலைக் கேட்டாலும், திரும்பிப் பார்க்கக்கூட, அவர்களுக்கு விருப்பமில்லை. வைரமல்லவா மடியில் இருக்கிறது!
‘பேரூருக்குப்போய் வைரக் கற்களை விற்று, வரும் பணத்தை சரிபாதியாகப் பிரித்துக் கொள்வோம். இனி, சேற்றில் வேலை செய்கின்ற சின்னத் தொழிலையும், மீன்பிடிக்கும் மோசமான வேலையையும் விட்டுவிட்டு, கெளரவமாக ஒரு கடை வைத்துப் பிழைப்போம் என்று ஒருவன் கூற, மற்றொருவன் ‘ஆமாம்’ என்று ஆமோதித்தான்.
வெளியிலே அவர்கள் சந்தோஷமாகப் பேசிக் கொண்டாலும், மனதிலே அத்தனை வைரக்கற்களும் தனக்கே கிடைக்காமற் போயிற்றே என்ற கவலையுடன், எச்சிலை விழுங்கிய வண்ணம் ஏக்கத்துடனேயே நடந்தனர்.
‘தக்க சமயம் கிடைத்தால், அடுத்தவனை ஏமாற்றி வைரக் கற்களைத் தட்டிக் கொண்டுபோய் விட வேண்டும்’ என்று சந்தர்ப்பத்தை இருவரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
புலி மீண்டும் அந்தப்பக்கம் வந்தாலும் வரும். ஆகவே, ஆற்றங்கரை வழியாகப் போவதுதான் நல்லது என்று, தாங்கள் வந்த வழியே சென்று ஆற்றங்கரைமீதே நடந்து போய்க் கொண்டிருந்தனர்.
பேருரும் வந்து விட்டது என்பதை ஒரு டீக்கடையிலிருந்து வந்த ரேடியோ சத்தம் ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. ‘வா ராஜா வா, என்ற பாட்டு அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தது.’
பங்கு போட்டுக் கொள்வதற்கு முன்னர், ஆற்றங்கரை படித்துறையில் இறங்கி, கைகால் முகம் கழுவி, சுத்தமாக வரவேண்டும் என்று இருவருமே விரும்பினர். வயல் வரப்பில் நடந்தபோது, சேறுபட்டு விட்டதாம். அந்த, சேறு அவர்களுக்கு அன்றை தினம் அருவெறுப்பாக இருந்தது.
ஆற்றங்கரையில் படித்துறையில் இருவருமே நின்றனர், பேச்சு தொடங்கியது. பிரிப்பதற்கு முன், எத்தனை வைரக் கற்கள் இருக்கின்றன என்று எண்ணத் தொடங்கினான் ஒருவன். முத்தையா என்பது அவன் பெயர்.
வைரக் கற்கள் ஒற்றைப் படையிலான எண்ணிக்கையில் இருந்தன. பதின்மூன்று என்று முத்தையா எண்ணிச் சொன்னான்.
எப்படித்தான் பிரித்தாலும், மீதி ஒன்று வருமே! அந்த மீதியுள்ள வைரக்கல்லை யார் எடுத்துக் கொள்வது? ஏகாம்பரம் எதிர்க் கேள்வி போட்டான்.
பிரச்சினை அங்கு பெரிதாக எழுந்தது. வரவர பேச்சில் சூடேறியது.
‘நான் தான் அந்த துப்பாக்கிக்காரனை முதன் முதலாகப் பார்த்தேன். அதனால் எனக்குத்தான் மீதியுள்ள ஒரு வைரக்கல் சேர வேண்டும்! என்றான் ஏகாம்பரம்.
மரத்தில் இருந்து குதித்து, அவனை மிதித்துக் கட்டியவனே நான்தானே? அதனால் எனக்குத்தான் அதுசேர வேண்டும் என்றான்.
‘முடியாது’ என்று ஆற்றுப் படிக்கட்டில் இருந்த ஏகாம்பரம் அலறினான்.
‘அப்படித்தான் எடுத்துக் கொள்வேன்’ என்று கரையில இருந்த முத்தையா, பொட்டலத்தை மடித்து, மடியில் வைக்க ஆரம்பித்தான்.
‘எங்கே தன்னை ஏமாற்றி விட்டுப் போய் விடப் போகிறானோ’ என்று படிக்கட்டில் நின்ற ஏகாம்பரம் பதறிப் போய், கரைக்கு வந்து, முத்தையாவின் கையைப் பிடிக்க, பொட்டலம் கீழே விழுந்து விட்டது.
ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு, பொட்டலத்தை எடுக்கப் போய் கட்டிப் புரண்டார்கள். தடுத்தார்கள் கையைப் பிடித்து மடக்கினார்கள். அது பயங்கர மல்யுத்தமாக மாறியது. ஒருவரை ஒருவர் கொல்ல முயல்வது போல தாக்கிக்கொண்டார்கள்.
ஆற்றின் கரை சரிவாக இருந்ததால் கரையிலிருந்து இருவரும் கட்டிப் புரண்டபடி, ஆற்றில் விழுந்தார்கள். ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது.
யாரும் கரையேறாதபடி இருவரும் ஒருவரை ஒருவர் கெட்டியாகப் பிடித்து மடக்கிக் கொண்டார்கள்.
வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்ததால், இருவரையும் ஆற்று வெள்ளம் வேகமாக அடித்துக் கொண்டு சென்றது.
கரை மேல் அவிழ்ந்த நிலையில் பொட்டலம் கிடந்தது. லட்சக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்கள், ஒரு கசங்கிய காகிதத்தில் குப்பைக் கூளம்போல கவனிப்பாரற்றுக் கிடந்தது.
இந்த வைரக் கற்களுக்கு ஆசைப்பட்ட ஒருவர், புலியால் அறையப்பட்டு அநாதையாக கரும்புக் காட்டிலே கிடக்கிறார். அவரை உதாசீனம் செய்து வந்த துரைசாமியோ, கையும் காலும் கட்டப்பட்டு உதைவாங்கிக் களைத்து போய்கிடக்கிறார். அவரை அடித்துத் துன்புறுத்திய இருவரும், இப்பொழுது ஆற்றோடு போய்க் கொண்டிருக்கிறார்கள்.
யார் பிழைப்பார் யார் இறப்பார் என்று யாருக்குத் தெரியும்? தேள் கொட்டிய திருடன் போல, இருவரும் மரணப் போராட்டத்தை மெளனமாக அல்லவா நடத்திக்கொண்டு ஆற்றோடு போகின்றார்கள்!
6. தேடிவந்த திரவியம்!
இராப்பிச்சை எடுப்பதற்காகத் தன் பிச்சைப் பாத்திரத்தை அலம்புவதற்காக, ஆற்றுப் படித்துறைக்கு வந்த ‘பத்மா’ என்னும் பத்து வயதுச் சிறுமி, அந்தப் பொட்டலத்தைப் பார்க்கிறாள்.
பளபளவென்று உள்ளே ஏதோ மின்னுகின்றன. பக்கத்தில் வா என்று அழைப்பது போல அது இருந்தது. ஒன்றும் புரியவில்லை. எடுத்துக் கண்ணருகில் வைத்துப் பார்க்கிறாள். பத்மாவுக்கு புரியவில்லை, என்ன பொருளாக இருந்தாலும் சரி, அதைக் கொண்டு போய், ஊர்க்கோடி சத்திரத்தில் தங்கி இருக்கும் தன் தாயிடம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.
பத்மாவின் பழக்கம் அது தான். எது கிடைத்தாலும் அதைக் கொண்டு போய் தாயிடம் கொடுப்பது தான் பத்மாவின் வழக்கம். தாய் எது சொன்னாலும், சரியாகவே இருக்கும் என்பது
அவளுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாகும். தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்பது படித்துத் தெரியாமலே கற்றுக் கொண்ட பண்பாடு.
ஆகவே, பாத்திரத்திற்குள்ளே பொட்டலத்தை மடித்துப் போட்டு, அதைத்தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, ஓட்டமும் நடையுமாக ஒடிக் கொண்டிருந்தாள். செல்வம் தேடிவந்திருக்கிறது என்று புரியாமலே பறந்தோடிக் கொண்டிருந்தாள்.
நான்கு ரோடு சந்திக்கும் இடம். அது பரபரப்பு நிறைந்த இடம். எதிரே லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. மறுபுறம் ஐந்தாறு சைக்கிள் ஒட்டிகள் சேர்ந்தாற் போல் பேசியவாறு ஒட்டிக் கொண்டு வந்தனர். இன்னொரு புறம் வாடகைக்கு ஆள் ஏற்றும் குதிரை வண்டி ஒன்று வந்து கொண்டிருந்தது.
ஆசையும், ஆவேசமும் விரட்ட ஓடிக் கொண்டிருந்த பத்மா, லாரியைப் பார்க்காமல் குறுக்கே ஓடி வந்தாள். லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டுவிடவே, லாரி கொஞ்ச தூரம் ஓடி குதிரை அருகிலே போய், பெருஞ்சத்தம் போட்டு நின்றது.
பயந்து போன குதிரை, ஒருபுறம் திரும்பிக் குதித்தது. லாரியைப் பார்த்து பயந்து, வண்டியின் பின்புறமாக ஓடிய பத்மாவை, திரும்பிய வண்டி திடீரென்று தாக்கியதும் அல்லாமல், தூக்கியும் எறிந்தது.
தலையைத் தாக்கியதால், ‘ஐயோ’ என்று அலறியபடி கொஞ்சதூரம் போய் தள்ளி விழுந்தாள் பத்மா, தலையிலிருந்த பாத்திரமும் தூக்கி எறியப்பட்டது. அலுமினியப் பாத்திரத்தின் உள்ளே இருந்த பொட்டலமும், பந்து போல மேலே பறந்து, அங்கே தூரத்தில் போய்க் கொண்டிருந்த ஒருவரின் கையிலிருந்த பைக்குள் சென்று விழுந்தது.
பொட்டலம் ஒன்று விழுந்தது என்றுதெரிந்ததும், பையைப் பிடித்திருந்த அந்த மனிதர், தன் தோள்மீதிருந்த துண்டை எடுத்து, பையை ‘லபக்’ கொன்று மூடிக் கொண்டு, தன் வீட்டை நோக்கி வேகமாக நடந்தார்.
அதனுள் என்ன இருக்கும் என்று அவருக்கே தெரியாது. பின் ஏன் அப்படி மூடினார் என்றால், அதுதான் அவருடைய தனித்தன்மை.
அவரின் பெயர் அற்புதசாமி, அவர் பெயரைப் போலத்தான் ஆளின் குணமும், பெரிய கஞ்சன் என்று பேர் எடுத்தவர். வாழைப்பழம் தின்றால் வாழைத்தோலை வீசி எறிய அவருக்கு மனம் இருக்காது. அருகில் யாரும் இல்லாவிட்டால், அப்படியே தோலோடு விழுங்கி விடுவார். இல்லையேல், அவருக்குத் திருப்தியே இருக்காது.
அப்படி யாராவது பார்த்துக் கேட்டுவிட்டால், அதில் ருசி இல்லாமலா ஆடும்மாடும் அவ்வளவு சுவையாக ரசித்துச் சாப்பிடுகின்றன என்று எதிர் வினா போடுவார்.
வீதியில் எது கிடந்தாலும், காலால் எத்திப்பார்த்து விட்டால் தான், கொஞ்சமாவது மனதில் நம்மதி இருக்கும். வீதியில் கிடக்கும் வெற்று நெருப்புப் பெட்டியை எடுத்துப் பிரித்துப் பார்ப்பது அவரது பொழுதுபோக்கு, ஒரு முறை பத்து ரூபாய் நோட்டுடன் ஒரு தீப்பெட்டியைக் கண்டு பிடித்ததில் இருந்து, இப்படி ஒரு அசட்டு எண்ணம்.
பத்து பைசாவை செலவு செய்வதற்குள், பத்துத்தரம் யோசனை செய்வார். சின்னவயதிலேயே இலங்கை போய் அங்கே தங்கி விட்டவர். ஆனால் எப்பொழுதாவது தம் சொந்த ஊராகிய பேரூருக்கு வந்து போவார்.
இந்த முறை வந்து. இலங்கைக்குப் போகின்ற கெடுவும் முடிய இருந்தது. மறுநாள் புறப்படுவதாக இருந்ததால், அவர் கடைவீதிக்குச் சென்று,
தேவையான துணிமணிகளை மற்றும் வீட்டிற்கு வேண்டிய சாமான்களை வாங்கி வர வந்தார்.
அவ்வாறு வந்த பொழுத தான், பொட்டலம் வந்துதானாக அவர் பையிலே விழுந்தது.
பிச்சைக்காரி பாத்திரத்தில் இருந்து விழுந்த பொட்டலம், நிச்சயமாக காசு மடித்திருக்கும் பொட்டலமாகத்தான் இருக்கும் என்று நினைத்து, வீட்டிற்குள் போனதும் கதவை சார்த்திக்கொண்டு, பொட்டலத்தை அவிழ்த்தார் அற்புதசாமி.
குப்பையிலேதான் குண்டுமணி கிடைக்கும் என்று அவர் அடிக்கடி அனைவரிடமும் சொல்வதுண்டு.
பொட்டலத்தை ஏளனமாகவும், அதே சமயத்தில் பயபக்தியுடனும் அவிழ்த்தார்! என்ன ஆச்சரியம்! அவரது வாய் “ஆ வெனப் பிளந்து, அதிக நேரம் அப்படியே திறந்தே கிடந்தது.”
அப்பா அப்பா! என்று அவருடைய மகன், பத்து முறைக் கத்தி அழைத்துக்கொண்டே வந்து, உடலை ஆட்டி அசைத்த பொழுதுதான், அவருக்கு இந்த உலகத்தைப் பற்றிய நினைவு வந்தது. திறந்தவாயும் மூடியது.
குப்பையைக் கிளறிய கோழி, சிலிர்த்து இறக்கைகளை விரித்து உலுக்குவதுபோல, உடலை ஒருமுறை சிலிர்த்துக் கொண்டார்.
அப்படியே வைரக்கற்களைக் கொண்டுவந்து முகத்திலும் கண்களிலும் ஒத்திக் கொண்டார். தழுவிக் கொண்டார். வாயார முத்தமிட்டார். சின்னக் குழந்தைபோல, அங்குமிங்கும் ஓடினார். ஆடினார், பாடினார். வீட்டிற்குள்ளேதான், வெளியிலே யாருக்கும் கேட்காமல் தான். அவர்தான் பேர் எடுத்தக் கஞ்சன் ஆயிற்றே!
வெளியே தெரிந்தால், தன் உயிரே போனதுபோல் தான் என்ற நினைவு வந்தவுடன், அவரைக் கவலை சூழ்ந்துகொண்டது.
தன் அப்பா அற்புதசாமி செய்கின்ற காரியங்கள் எல்லாம், சிறுவனுக்கு அதிக ஆச்சரியமாக இருந்தது. மின்னுகின்ற கற்களைப் பார்த்தான். மீன்போலத் துள்ளுகின்ற தந்தையைப் பார்த்தான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஆடிப்பாடிய அப்பா, ஏன் அசையாமல் இப்பொழுது நிற்கிறார்?
இந்த வைரக்கற்களை இலங்கைக்கு எப்படி எடுத்துக் கொண்டுபோவது என்ற கவலையால்தான் அப்பா இப்படி நிற்கிறார் என்பது அவனுக்கு எப்படித் தெரியும்? பத்துவயது பாலகன் ஆயிற்றே!
‘அப்பா பசிக்குது! அப்பா பசிக்குது’ என்று அழுகையோடு மகன் பேய்க் கூச்சல் போட்டவுடன் தான், அற்புதசாமிக்கு ஒரு அபூர்வமான யோசனை தோன்றியது.
அப்படியே தன் மகனைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு கூத்தாடத் தொடங்கிவிட்டார்.
ஆமாம்! மகனால்தானே இப்படி ஒரு மாபெரும் யோசனை மூளைக்கு வந்தது!
7. யோசனையும் வாசனையும்
அற்புதசாமி இரவில் சாப்பிடுவது இல்லை. இட்லி, தோசை, ஆப்பம் போன்ற பலகாரங்களைத்தான் மிகவும் விரும்பி இரவில் சாப்பிடுவார். அதற்குப் பெயர் விரதம் என்பார். தான் பெரிய பக்திமான் என்று பெருமையாக மற்றவர்களிடம் சொல்லிக்கொள்வார்.
அவரது தங்கையும் வந்து சாப்பிடுவதற்காக அழைத்தாள். எதிரே இட்லி வைக்கப்பட்டிருந்தது. அதைப் பிட்டு வாயில் போட்டு சுவைத்துக்கொண்டு இருக்கும் பொழுதே, அவரது மனமும் திட்டம் போட்டுக் கொண்டே இருந்தது. யோசனை சிகரமாக உட்கார்ந்து கொண்டிருந்தார்.
மறுநாள் காலை, அவசரம் அவசரமாக எழுந்தார் அற்புதசாமி, சமையலறைக்குள் நுழைந்தார். அவரது தங்கை சிவகாமி, காலை ஆகாரமாக இட்லியை தயார் செய்து
கொண்டிருந்தாள் இரவில் மீதியாகி இருந்த மாவைத்தான் காலையிலும் இட்லியாக்கிக் கொண்டிருந்தாள்.
‘இன்றுதான் நான் இலங்கைக்குப் போகப் போகிறேனே! என் கையால் உனக்கு இட்லி சுட்டுத் தருகிறேன். சாப்பிட்டுவிட்டு என் சமையலைப் பற்றி உன் பாராட்டைக் கூறு’ என்று சாகசமாகப் பேசினார் அற்புதசாமி!
அடுப்படிக்கே எப்பொழுதும் வராத தனது அண்ணன், எப்படி இன்றைக்கு இவ்வளவு பொறுப்பாக வந்து பேசுகிறார்! சிவகாமிக்கு ஒரே ஆச்சரியம்.
‘பரவாயில்லை, அண்ணா! நீங்கள் போய் பயணத்துக்கு வேண்டியவைகளை தயார் செய்யுங்கள். இன்னும் ஒரு நிமிஷத்தில் இட்லி தயாராகிவிடும்’ என்றாள்.
கேட்பாரா அற்புதசாமி கடைசி வரை சிவகாமி எவ்வளவோ மறுத்துக் கூறியும், திரும்பத் திரும்பப் பேசி, தன் எண்ணத்திற்கே தன் தங்கையை சம்மதிக்கச் செய்தார்.
பயணத்திற்கு வேண்டிய பொருட்களை எடுத்து வைக்கும் பொறுப்பு சிவகாமியிடம் சேர, இட்லி தயாரிக்கும் பொறுப்பு அற்புதசாமிக்கு வந்தது.
தங்கை இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு, ஒரு இட்லிக்குள்ளே வைரக்கற்களைப் பதித்து வைக்க ஆரம்பித்தார்.
அவரது அன்பு மகனும் அப்பா தயாரிக்கும் அற்புதமான இட்லியையும், ஆசையோடு பார்த்துக் கொண்டேயிருந்தான்.
இரண்டு இட்லிக்குள்ளே எல்லா வைரக்கற்களும் சங்கமமாயின. அவைகளின் மேலே மிளகாய் பொடி, எண்ணெய், சட்டினி வகையறாக்களை இட்டு, அவற்றின் மேலே மேலும் பல சாதாரண இட்லிகளை மேலோட்டமாக வைத்து, ஒரு அருமையான பொட்டலமாகக் கட்டினார். அதற்குப் பிறகுதான் அற்புதசாமியின் நெஞ்சின் பாரம், கொஞ்சம் குறையத் தொடங்கியது.
எந்தப் பயலாலும் இதைக் கண்டுபிடிக்கவே முடியாது? என்று மனதுக்குள்ளே சவாலும் விட்டார்.
தங்கையிடம் வைரக் கற்களைப் பற்றி கூறினால், எங்கே தனக்கும் பங்கு வேண்டுமென்று கேட்டுவிடுவாளோ என்ற பயத்தினாலே, தங்கையிடம் பேச்சையும் சிக்கனமாகவே பேசி வைத்தார்.
தன் மகன் எங்கே அவளிடம் ஏதாவது உளறி விடுவானோ என்று அஞ்சி, அவளிடம் தனியே இருக்காதவாறு, தன் மகன் முருகனையும் பார்த்துக் கொண்டார்.
‘இரவு முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், இந்த பலகாரப் பொட்டலம் தேவைப்படுகிறது’ என்று பைக்குள்ளே பொட்டலத்தை வைக்கும்பொழுது கூறினார். அவருக்கு ஒரு ஆறுதல், சிவகாமிக்கோ முகம் மாறுதல்.
அண்ணனின் பேச்சும் நடத்தையும் அவளுக்கு சந்தேகத்தை ஊட்டியது. இருந்தாலும், என்ன இப்படிப் பேசுகிறீர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என்று கேட்கப்பயந்து, அவளும் பேசுவதை நிறுத்திக் கொண்டாள்; ஆசை வந்துவிட்டால், பாசம் எப்படி மறைந்து போகிறது பார்த்தீர்களா!
இராமேசுவரம் இரயிலில் ஏறிக் கொண்டு, கையசைத்து விடை கொடுத்தார் அற்புதசாமி, தங்கை சிவகாமியும் ஏதோ கையை ஆட்ட வேண்டும் என்பதற்காக, சிரிப்பை வலிய வரவழைத்துக் கொண்டு, விடை கொடுத்தாள். மெளனமான போராட்டம் அண்ணன் தங்கையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.
இரயில் புறப்பட்டபோது, புகையாகக் கக்கியது ரயில் எஞ்சின், அற்புதசாமியின் இதயமும் கவலையைப் பெருமூச்சாகக் கக்கிவிட, நிம்மதியாக பயணத்தைத் தொடர்ந்தார். தங்கையிடம் தப்பி வந்துவிட்டோம் என்பதுதான் அவர் பெருமூச்சு வெளியிட்ட சேதியாக இருந்தது.
அவர் வாய் இப்பொழுது அடிக்கடி ‘முருகா, முருகா’ என்று அழைக்கத் தொடங்கியது.
ஒவ்வொரு தடவை ‘முருகா’ என்கிறபொழுதும், ‘ஏன்பா’ சும்மா கூப்புடுறெ என்று வந்து எதிரே நிற்பான் மகன் முருகன்.
ஒன்றும் கூறாமல் அசட்டுச் சிரிப்புச் சிரிப்பார் அற்புதசாமி.
‘கல்யாண வீட்டிலே கட்டிப் பிடித்துக் கொண்டு அழுபவன், இழவு விழுந்த வீட்டிலே எப்படி அழுவான்?’ என்பது ஒரு பழமொழி. அதைப் போல, பைசாவைப் பார்த்தாலே பேயாய்ப்பிடித்துக் கொள்பவர், லட்சக் கணக்கான வைரக் கற்கள் வந்த பிறகு சும்மா இருப்பாரா?
அதனால்தான் முருகனைத் துணைக்கழைத்து உதவி செய்ய கேட்டுக் கொள்கிறார். சின்னப் பையன் முருகனுக்கு அது எப்படி புரியும்?
இராமேஸ்வரத்தில் இறங்கியவுடன், கோயில் இருக்கும் திசையைப் பார்த்து பெரிய கும்பிடு ஒன்றைப் போட்டுக் கொண்டார்.
படகுத் துறைக்குப் போவது போன்ற வேலைகளையெல்லாம் பதறாமல் பக்குவமாகவே செய்தார்.
அவருடைய பயணச் சீட்டு, இலங்கைக்குப் போகவேண்டிய அனுமதிச் சீட்டு, அதற்கேற்ற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது, காலரா போன்ற தொத்துநோய் இல்லாமல் இருக்கிறாரா என்பதற்குரிய இரத்தப் பரிசோதனைகள் எல்லாவற்றையும் கனகச்சிதமாகவும் முடித்துக் கொண்டார்.
ஏதாவது ‘கடத்தல் பொருட்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் சாமான்கள் ஏதாவது எடுத்துப் போகிறாரா என்று சுங்க இலாகா அதிகாரிகள், அவருடைய பெட்டி படுக்கை அத்தனையையும் பரிசீலித்தார்கள்.
எல்லாம் எந்தவிதமான தடையுமின்றி நடந்தேறியது. அங்கு இருந்த ஒரு அதிகாரி, என்ன பொட்டலம் என்று கேட்டு விசாரித்தார்.
“எல்லாம் இந்தப் பையனால்தான் சார், பத்து நிமிடத்திற்கு ஒரு முறை பசி பசியென்று கத்தி, பாடாய் படுத்திவிடுவான். அந்த அட்டகாசத்தை அடக்கத்தான், இந்தப் பொட்டலம் கொஞ்சம் தாமதம் செய்தால்கூட, ‘கத்தோ கத்து’ என்று கத்தி ஊரையே கூட்டிவிடுவான். தாயில்லாத பையன். அதனால்தான் அதட்டாமல் வளர்க்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே, ஒரு இட்லியை எடுத்துப் பிட்டு, முருகனுக்கு ஊட்டினார்.
பையனும் கை கொட்டி சிரித்துக் கொண்டே, இட்லியை மிகவும் விருப்பத்துடன் உண்டான்.
வேடிக்கை பார்த்து நின்ற அதிகாரியும், தன் மகன் மேல் அவர் வைத்திருக்கும் பாசத்தில் நெஞ்சுருகிப் போனார். சிரித்துக் கொண்டே அற்புதசாமியைப் போகும்படி பணித்தார். பொட்டலத்தைக் கட்டிக் கொண்டு, மற்றவர்கள் இருக்கும் இடத்திற்குப் போனார். கப்பல் புறப்படுவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் பேசிக் கொண்டார்கள்.
அற்புதசாமிக்கோ ஆனந்தம் தாங்க முடியவில்லை, வாயை விட்டு வெளியே வந்து விடாமல், பல தெய்வங்களை வேண்டிச் கொண்டார்.
ஆயிரக் கணக்கான ரூபாய்களுக்கு சொந்தக்காரராக இருக்கும் அற்புதசாமி, இன்னும் இரண்டே நாளில் இலட்சக்கணக்கான ரூபாய்களுக்கு அதிபதி என்று எண்ணியதும், லட்சாதிபதி தோரணையில் ஜம்மென்று உட்கர்ந்து கொண்டார்.
இன்னும் அரைமணி நேரந்தான் இருக்கிறது. வாழ வந்தபுரம் தருமலிங்கத்தின் முன்னோர்கள், தங்கள் பரம்பரைச் சொத்தாக மிகவும் பாதுகாப்புடன் பத்திரப்படுத்திக் கண்ணேபோல் காத்திருந்த வைரங்கள், இலங்கைக்குப் போய்விடும்!
அப்புறம் யார் கையில் இருக்குமோ! யார் பெட்டியில் உறங்குமோ? என்ன ஆகுமோ யார் கண்டார்? அந்த அம்பிகைக்கே வெளிச்சம்! மகன் இட்டிலி வாசனையிலும் அப்பாவோ வைரயோசனையிலும் மூழ்கிக் கிடந்தனர். அவர்களை விட்டுவிட்டு இந்த அரைமணி நேரத்திற்குள் நாம் வாழவந்தபுரம் போய், தருமலிங்கம் எப்படி இருக்கிறார் என்று பார்த்து வருவோமா!
8. சக்தியும் பக்தியும்
காலையிலே எழுந்ததும் காபி குடிப்பதுபோல் தன் வீட்டிற்குவந்து, காபியுடன் காலை ஆகாரமும் சாப்பிட்டு விட்டு வேலையைத் தொடங்கிவிடும் நடேசனை தருமலிங்கம் அன்று ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆள் வரவில்லை,
‘மனைவிக்கு உடல் நலம் இல்லை என்றாரே, எப்படியும் மாலையில் வந்து நம்மைப் பார்ப்பார்’ என்று தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொண்டு, மற்ற வேலைகளைக் கவனித்தார். ஆனாலும், மனம் எதற்காகவோ, நடேசனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.
மாலையிலும் நடேசன் வரவில்லை, தருமலிங்கத்திற்குத் ‘திகீர்’ என்றது. ஒரு வேலைக்காரனை அனுப்பிப் பார்த்துவிட்டு வரச் சொன்னார். சரியான பதிலில்லை. பிறகு தானே போய் விசாரித்தார்.
அன்புடன் கேட்டுக் கேட்டுப் பார்த்தபொழுது, சரியான பதில் தரவில்லை அவரது மனைவி பார்வதி. ஆத்திரத்துடன் கேட்டபோதுதான், அவள் தடுமாறிக் கொண்டே பதில் சொன்னாள்.
‘நேற்று மாலையே பேரூருக்குப் போய், உடனே திரும்பி வந்துவிடுகிறேன் என்று போனவர்தான். இன்னும் வீடு வந்து சேரவில்லை. நீங்கள்தான் அவரைக் கண்டுபிடித்துக் கொண்டு வரவேண்டும். அவருக்கு ஏதோ ஆபத்துதான் வந்திருக்கிறது’ என்று அழவும் தொடங்கி விட்டாள்.
தங்கள் தாய் அழுவதைக் கண்டு, எல்லாக் குழந்தைகளும் ஏக காலத்தில் சத்தம் போட்டு அழத் தொடங்கின. தகர டப்பாவில் கற்களைப் போட்டுக் குலுக்கியதுபோல கூச்சல்.
அவர்களை சமதானம் செய்து, மீண்டு வருவதற்குள் தருமலிங்கத்திற்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. உடும்பு பிடிக்கப்போய் கையை விட்டால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்.
அவர் மனதிலே எப்படியோ சிறு சந்தேகம் அரும்பத் தொடங்கியது.
அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து, தன் மனைவி மீனாட்சியை அழைத்து, நடேசன் தந்த நகைப் பொட்டலத்தை எடுத்துக்கொண்டு வருமாறு கூறினார். வந்ததும் அவசரமாக அவிழ்த்துப் பார்த்தார். சந்தேகப் பட்டது சரியாகவே போயிற்று.
வைரக் கற்களுக்குப் பதிலாக, வெறும் கண்ணாடியால் இழைக்கப் பெற்றது போன்ற வெள்ளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்தன.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார் தருமலிங்கம்.
“எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து நடேசனை இங்கே கொண்டு வாருங்கள். அதற்கு என்ன செலவானாலும் சரி, என் சொத்தே அழிந்தாலும் சரி சீக்கிரம் புறப்படுங்கள்” என்று தன் வேலைக்காரர்களை விரட்டினார் தருமலிங்கம்.
“நன்றி மறந்த துரோகியே! நடேசா! உண்ட வீட்டுக்கே இரண்டகம் நினைத்த நீ உருப்படுவாயா? அம்பிகைக்குப் போட இருந்த வைரக்கற்களை, இப்படி அபகரித்துக் கொண்டு ஓடிவிட்டாயே! நீ நல்ல வாழ்வு வாழ்வாயா? உனக்கு நிம்மதிதான் கிடைக்குமா? என்று ஏதேதோ பேச அரம்பித்து விட்டார் தருமலிங்கம்.”
அவரது அருகில் வந்த கணக்கப்பிள்ளை, தான் கேள்விப்பட்ட சேதியை, தருமலிங்கத்தின் காதருகில் போய் ரகசியமாகச் சொன்னார். எதையோ யோசித்தபடி தலையசைத்துவிட்டு, தருமலிங்கம் வெளியே புறப்பட்டார். கூடவே கணக்கப் பிள்ளையும் ஓடினார். தருமலிங்கம் அவ்வளவு வேகமாக அல்லவோ போய்க்கொண்டிருந்தார்!
மீனாட்சிக்கு எதுவுமே விளங்கவில்லை. கவலையுடன் மெளனமாகக் கண் கலங்கியவாறே நின்றுகொண்டு இருந்தாள்.
வீட்டிற்குள்ளே, தான் மெளனமாக நின்றாலும் மீனாட்சியின் உள்ளம் அம்பிகையை நோக்கித் தொழுத வண்ணமாகத்தான் இருந்தது. ‘தேவி! எங்கள் பரம்பரை சொத்துக்களை உனது பாதார விந்தத்தில் சேர்க்கலாம் என்று. நான்தானே முதலில் நினைத்தேன்.’
அதையும் என்னால் நிறைவேற்ற முடியவில்லையே வாழ்வில் எதையுமே அடையக் கொடுத்து வைக்காத இந்தப் பாவியை மன்னித்துவிடு, எங்கிருந்தாலும், அந்த வைரக் கற்களைத் திரும்பப் பெற்று, என் பிரார்த்தனையை நிறைவேற்ற வாய்ப்புக்கொடு’ என்று குமுறும் நினைவுகளுடன் கும்பிட்டாள்.
கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது! ‘நிச்சயம் என் பிரார்த்தனை நிறைவேறும்’ என்று நம்பினாள் மீனாட்சி...
அம்பிகைக் கோயில் மணி ஒலிக்கும் சத்தம் கேட்டது. கண்களில் கண்ணீரைத் துடைத்து கொண்டு கோயிலை நோக்கி ஓடினாள் மீனாட்சி.
இன்னும் பத்தே நிமிடந்தான் இருக்கிறது. அற்புத சாமிக்கோ ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு வருடமாகத்தோன்றியது. அங்கிருந்த கடிகாரத்தின் முள் அப்படியே நிற்பதுபோல் தோன்றியது. என்ன கடிகாரம்? ஆமை வேகத்தில் போகிறதோ என்று அசட்டுத்தனமாக வேடிக்கை செய்தார்.
அங்குமிங்கும் போய் வேடிக்கை பார்த்து விளையாடிக்கொண்டிருந்த முருகனுக்கு, பசி வந்து விட்டது.
“அப்பா பசிக்குது என்றான் வந்து மடியில் உட்கர்ந்து கொண்டே.”
பசிக்குதாடா கண்ணு! இந்தா! என்று பொட்டலத்தை அவிழ்த்து, ஒரு இட்லியை எடுத்துக் கொடுத்தார்.
‘இன்னும் ஒரு இட்லிப்பா’ என்றான் முருகன்! அதற்கென்னப்பா உனக்கில்லாத இட்லியா? என்று
அற்புதசாமி, அடுத்திருக்கும் இட்லியை எடுத்துக் கொடுத்தார்.
‘அந்த இட்லி எனக்கு வேண்டாம் வேற இட்லிதான் வேண்டும்’ என்றான் அற்புதசாமியின் அருமைக் குமாரன் முருகன். முருகன் திருவிளையாடல் ஆரம்பமாயிற்று.
வேற இட்லியா! அது வேண்டாம்! இதையே சாப்பிடுபோதும் என்று அதட்டினார் அற்புதசாமி!
எனக்கு அந்த இட்லிதான் வேண்டும் என்று அடியில் வைத்திருக்கும் மிளகாய் பொடியுள்ள இட்லியை சுட்டிக் காட்டிக் கேட்டான்.
அற்புதசாமி அவனை அடிப்பதற்காக் கையை ஓங்கியபடி, ‘அறிவு கெட்டவனே! அந்த இட்லி ரொம்ப உரைக்கும்! வயிற்றை வலிக்கும்! பேசாம நான் கொடுப்பதை சாப்பிடு’ என்று அளவுக்கு மீறி, கொஞ்சம் கோபமாகவே கத்தி விட்டார்.
பையன் பிடிவாத குணம் உள்ளவன், அந்த இட்லிதான் தனக்கு வேண்டும் என்று கேட்டபடியே சத்தம் போட்டு அழ ஆரம்பித்தான்.
அப்பா மகன் பிடிவாதத்தையும், எதிர்வாதத்தையும் பொழுது போகாத மற்ற பயணிகள், மிகவும் ஆர்வத்துடன் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினார்கள்.
அவர்களிலே ஒருவர் அற்புதசாமியைப் பார்த்து, ‘பாவம் ! பையன் அழுகிறான்! உரைக்கட்டுமே! உரைத்தால் துப்பிவிடுகிறான்’ என்று சிபாரிசு வேறு செய்ய ஆரம்பித்தார்.
‘அவன் வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாது. அதிக காரம்’ என்று கூறிப் பார்த்தார்.
‘அது காரமா இருக்காது. அதுலதான் கல்கண்டு வச்சு சுட்டியேப்பா! அந்த இட்லி எப்படிப்பா உரைக்கும்!’ முருகன் சத்தம் போட்டுக் கூறினான்.
இட்லியில் கல்கண்டா?
எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இட்லியில் கல்கண்டா! பையனைப் பார்த்து ஒருவர் கேட்டார்!
இருக்காதா அந்த இட்லிக்குள்ளே பாருங்க நிறைய கல்கண்டு இருக்குது எங்க அப்பா அதை எவ்வளவு ஆசையா வச்சுட்டாரு! தெரியுமா? பையன் மிகவும் அழகாக அப்பா செய்ததையெல்லாம் விளக்கமாக வருணித்துக்கொண்டே போனான்.
‘நேரமாகி விட்டது. எல்லோரும் புறப்படுங்கள்’ என்று சொல்ல வந்த சுங்க இலாகா சோதனை அதிகாரியின் காதில் 'இட்லியில் கல்கண்டா’ என்று அந்த ஆட்களில் ஒருவரும் பையனும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது.
அந்த அதிகாரிக்கு சந்தேகம் வந்துவிட்டது.
அற்புதசாமியை மட்டும் தனியாகக் கூப்பிட்டுத் தன் அறைக்கு அழைத்துக்கொண்டு போனர்.
தேகம் நடுங்கியவாறு, அற்புதசாமி அவரைப்பின் தொடர்ந்தார்.
இட்லிகள் எல்லாவற்றையும் எடுத்து எடுத்து அந்த அதிகாரி விண்டு பார்த்தார். மிளகாய்ப்பொடி நிறைய தூவப்பெற்ற இட்லிக்குள்ளே வைரக்கற்கள் இருப்பது தெரிந்தன.
அற்புதசாமிக்கோ, மேற்கொண்டு அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. மயங்கியவர்போல, நாற்காலியில் சாய்ந்து விட்டார்.
முகதத்தில் தண்ணீர் அடித்தபோது, மயக்கம் தெளிந்து, எழுந்து உட்கார்ந்தார். கைக்கெட்டியது. வாய்க்கு எட்டவில்லையே என்று மனம் புழுங்கினார். வாயாடி மகனால் தன் எதிர்கால வாழ்வு பாழாகிப்போய்விட்டது என்று புலம்பினார்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. அற்புதசாமியின் பயணமும் தடுக்கப்பட்டது.
தன் தங்கை சிவகாமியிடம் மட்டும் சொல்லியிருந்தால், இந்த கதி தனக்கு நேர்ந்திருக்காது என்று நினைத்தார். இனிமேல் நினைத்து என்ன பயன்? கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எப்படி முடியும்?
இங்கே அநாதைபோல, போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்திருந்தார் அற்புதசாமி. தன் தங்கையின் முகவரியைத் தந்தார். எப்படியும் என் தங்கையைப் பார்த்தாக வேண்டும் என்று துடித்தார்.
அவரது மனவேதனையை அறிந்த போலீஸ் ஒருவர் ஏற்பாடு செய்து தருவதாக ஆறுதல் கூறினார்.
‘அப்பா இட்லிப்பா’ என்று முருகன் கேட்டுக் கொண்டேயிருந்தான்.
‘எட்டிப் போடா’ என்று அவனை நெட்டித் தள்ளிக் கொண்டேயிருந்தார். பாசம் எல்லாம் வேஷம், மோசம், என்று அவர் உள் மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது.
‘இனிமேல் இந்த ஆசையே வேண்டாம்’ என்று தீர்மானம் செய்து கொண்டார். நல்ல முடிவுதானே!
9. கனவு நினைவாயிற்று
மறுநாள் இராமேசுவரத்திற்குத் தருமலிங்கமும் மீனாட்சியும் வந்தார்கள். அவசர அவசரமாக போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார்கள். அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம், தன் வைரக்கற்களை அடையாளம் காட்டினார் புகாரும் எழுதித் தந்தார் தருமலிங்கம்.
தருமலிங்கத்தின் நண்பர்தான் அந்த இன்ஸ்பெக்டர். இருவரும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள். நண்பருக்கு உதவி செய்ய தன் கடமையை சரிவர நிறைவேற்ற கிடைத்த சந்தர்ப்பம் குறித்த திருப்தி, அவர் முகத்தில் தெரிந்தது.
தனது நகையும் வைரக்கற்களும் நடேசனால் கடத்தப்பட்டுவிட்டது என்று தருமலிங்கம் பதறியபோது கணக்கப் பிள்ளை ரகசியமாகப் பேசினாரே! அவர் தெரிவித்த யோசனை இதுதான்
போலீஸ் ஸ்டேஷனில் போய் ரிப்போர்ட் கொடுத்து விட்டு, இராமேசுவரத்தில் இருக்கும் அவரது நண்பருக்கும் தெரிவித்தால், அவர் மேற்கொண்டு உதவி செய்வார், என்பதுதான் அவர் கூறிய யோசனை. தருமலிங்கமும் கணக்கப் பிள்ளையின் பேச்சுக்கு மதிப்புகொடுத்து, போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து விட்டுப் போகும்பொழுது, எதிரே வேலைக்காரன் வேம்புலி வந்தான்.
எசமான்! எசமான்!
வேம்புலி வேகமாக எதையோ சொல்வதற்கு முயற்சித்தான். ஆனால், பேச முடியவில்லை. மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. ‘என்ன விஷயம் வேம்புலி?’ தருமலிங்கம் தன் மனதில் படபடப்பு இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் நிதானமாகக் கேட்டார். ஆனாலும், என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆவல் அவர் கண்களில் அலைமோதி நின்றன.
எசமான்! நடேசனைக் கண்டு பிடிச்சிட்டேன்! வேம்புலி ஒரு முக்கியமான சேதியைச் சொல்லி, தான் ஒரு நன்றியுள்ள வேலைக்காரன் என்பதைக் காட்டிக் கொள்கின்ற பெருமையுடன் சொன்னான்.
‘எங்கே பார்த்தாய் வேம்புலி?’ ஏன் அழைத்துக் கொண்டு வரவில்லை? என்றார் தருமலிங்கம்!
எசமான்! இன்னிக்கி பெரிய ஆஸ்பத்திரிக்கு போயிருந்தேன். என் தம்பிக்கு காய்ச்சல். அவனுக்கு மருந்து வாங்கனும்னு போனேன். அப்பொ தாங்க பார்த்தேன். பார்த்தா பாவமா இருந்ததுங்க!
பாவமா துரோகம் பண்ணுனவன் முகம் கொடூரமா இல்லே இருக்கும். பாவமாவா இருக்கும்? அவர் குரலில் கோபமும் கிண்டலும் கலந்து உறவாடிச் சென்றன. போ போய் அழைத்துப் பார்! இல்லையென்றால் கட்டி இழுத்துவா! என்று ஆணையிட்டார் தருமலிங்கம்.
முடியாதுங்க! அவரை புலி அடிச்சு போட்டுட்டு போயிடுச்சுங்க! ஐயோ! புலி அடிச்சா எப்படி இருக்குங்க! என்று வேம்புலி பயந்தவன் போல் நடித்து காட்டினான். அவர் எழுந்திருக்க முடியாதுங்க. கால் இரண்டையும் கட்டி தூக்கிலே மாட்டுனெ மாதிரி உயரமா தொங்கப் போட்டிருக்காகங்க!
என்ன? ஆஸ்பத்திரியில் படுக்கையிலே கிடக்கிறாரு! அப்ப வா போய் பார்க்கலாம்' என்று வேகமாகப் புறப்பட்டார். தருமலிங்கத்தின் வேக நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் வேம் புலி பின்னால் ஓடிக்கொண்டிருந்தான்.
எதிர்பார்த்த நேரத்திற்கு முன்னதாகவே, இருவரும் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். நடேசனைப் பார்க்க வேண்டும் என்ற வேகத்தில், நடேசனைப் போட்டிருந்த படுக்கையை நோக்கிப் போனார்கள். அங்கே போய் பார்த்தபொழுது, தருமலிங்கத்திற்கே மிகவும் மனக் கஷ்டமாக இருந்தது.
நடேசன் மருத்துவமனையில் இரண்டு காலை தூக்கிக்கட்டிய நிலையில் கிடப்பதைப் பார்த்தார்.
பதறி ஓடிப் போய் பார்த்தார் தருமலிங்கம், நின்று கொண்டிருந்த தருமலிங்கத்தின் கால்களைக் கட்டிப் பிடித்தவாறு படுத்தபடியே புலம்பினார் நடேசன்.
‘நான் செய்த துரோகத்திற்குத் தெய்வம் புலியைத் தாக்கச் செய்து சரியான தண்டனையைத் தந்து விட்டதுங்க! நம்பிக்கையுடன் தந்த நகைகளை எடுத்துக் கொண்டு ஓடிய இரண்டு கால்களையும் என்னால் அசைக்க முடியாது போயிற்று. எனக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்! என்று அழுதார் நடேசன்.
‘பரவாயில்லை நடேசன்’ நடந்தது நடந்ததாக இருக்கட்டும். கவலைப்படாமல் இருங்கள். உடல் நலமானதும் வீட்டுக்கு வாருங்கள். உங்களைக் காப்பாற்றும் எல்லா பொறுப்பும் என்னைச் சார்ந்தது’ என்று ஆறுதல் கூறினார்.
‘ஆமாம் நடேசன்! நீங்கள் வைத்திருந்த வைரக்கற்கள் எங்கே? இப்பொழுது கொடுத்துவிடுங்கள். அது மிகவும் புனிதமான கற்கள் ஆயிற்றே என்று கேட்டார்.
அந்த வைரக்கற்கள் எங்கே போயிற்று என்று எனக்குத் தெரியவில்லையே என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார் நடேசன்.
‘நீங்கள் அழவேண்டாம்! நிதானமாகக் கூறுங்கள். அதுவரை காத்திருக்கிறேன்’ என்று தருமலிங்கம் கூறினார்.
நான் கரும்புக் காட்டிற்குள் அடிபட்டுக் கிடந்தேங்க! இராத்திரி முழுதும் அப்படியே மயக்கமாகவே கிடந்தேங்க காலையில் வேலைக்கு வந்த ஆளுங்க என்னைப் பார்த்ததும், அப்படியே தூக்கிட்டு வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டுப் போனாங்க.
‘இல்லாட்டி நான் இந்நேரம் செத்துப் போயிருப்பேங்க,’ என்று இன்னும் ஒருமுறை குலுங்கிக் குலுங்கி அழுதார் நடேசன்.
அவரை அழவிட்டு விட்டு, தருமலிங்கம் யோசனையில் ஆழ்ந்து போனார். வைரக்கற்கள் எங்கேபோயிருக்கும்? அவற்றை எப்படி கண்டுபிடிப்பது என்னும் கேள்விகளே அவர் மனதில் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருந்தன.
இதோ பாருங்கய்யா! அந்தப் படுக்கையில் படுத்திருக்காரே ஒருத்தர்! அவர் பேரு துரைசாமி. சர்க்கஸ்ல ரிங் மாஸ்டராம். அவர் தாங்க என்கிட்டே இருந்து எடுத்திருக்காரு. அவரை அடிச்சு போட்டுட்டு அடுத்த படுக்கையில் கிடக்கிறாங்களே ரெண்டு பேர். அவங்ககொண்டு போயிட்டாங்க.
அவங்களுக்குள்ளே சண்டை, ரெண்டுபேரும் ஆத்தோட போனாங்க!
அப்போ, வைரக் கற்கள் ஆற்றோடு போயிட்டதா? என்று மிகவும் வேதனையுடன் கேட்டார்.
இல்லிங்க! அதை எடுத்துகிட்டு அந்தப் பொண்ணு ஓடியிருக்கா! அவளும் குதிரை வண்டியிலமோதி, இந்த ஆஸ்பத்திரியில கிடக்குறாங்க! அதுக்கப்புறம் அந்தப் பொட்டலம் எப்படி போச்சுன்னுதாங்க தெரியலே...
நடேசன் தான் செய்த தவறுக்கு வெட்கப்பட்டவராக தலையைக் குனிந்து கொண்டார். அவர் தலையணையை கண்ணீர் நனைத்துக்கொண்டிருந்தது.
நடேசனைப் பார்த்துவிட்டு, அப்படியே பார்வையை அந்தப் பக்கம் செலுத்தினார்.
ரிங்மாஸ்டர் துரைசாமி படுக்கையில் கண்ணை மூடியபடிக் கிடந்தார். இரத்தம் உறிஞ்சும் அட்டை, அவரது ரத்தத்தை உறிஞ்சி விட்டது. அடிபட்ட மயக்கம், இரத்தம் இழந்த மயக்கம் மிகவும் களைப்புடன் காணப்பட்டார்.
‘உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை. ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் அவர் படுக்கையை விட்டு எழுந்திருக்க’ என்று பக்கத்தில் பேசிக்கொண்டார்கள்.
அதற்கடுத்த படுக்கை ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவராகப் போட்டிருந்தார்கள். முத்தையாவும் ஏகாம்பரமும், தான் காலில் சேறுபட்டதற்காக கவலைப்பட்டவர்கள், வயிறு தெரியாமல் செய்த தவறுக்கு, தலையிலே பட்ட சிறு காயத்துடன் தப்பித்துக் கொண்டாள் பத்மா. பிச்சையெடுத்துப் பிழைக்கும் அவள் பிழைப்பை மாற்றி ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று தருமலிங்கம் மனதில் உறுதி செய்து கொண்டார்.
மருத்துவ மனையில் முக்கியமான டாக்டரை சநதித்தார் தருமலிங்கம். அவர்கள் எல்லோரைப் பற்றியும் எடுத்துக் கூறினார். தான் வைரத்தோடு செய்யத் தொடங்கியதால் தான் இவ்வளவு பேரும் இப்படிக் கஷ்டம் அடைந்திருக்கிறார்கள் என்று சொன்னார்.
டாக்டர் அவருடைய நல்ல மனதைப் புரிந்து கொண்டு ஆறுதல் சொன்னார். இவர்களைப் பற்றி நீங்கள் கவலையே படவேண்டாம். அவர்களை ஒரு சில நாட்களிலே குணப்படுத்தி அனுப்பிவைத்து விடுவேன். உங்கள் வைரக்கற்களைப் பற்றித்தான் எனக்குக் கவலை, என்றார் டாக்டர்.
‘நான் வைரக்கற்களைப் பற்றி கவலையேபடவில்லை டாக்டர். அது ஆண்டவனுக்காக் கொடுத்து விட நான் முடிவு செய்த அன்றே, அது கடவுளின் சொத்தாகி விட்டது. அதைக் கண்டு பிடித்துக் காப்பாற்றிக் கொள்ளும் பொறுப்பு கடவுளின் பொறுப்பு. என்னுடையதல்ல’ என்று பேசிய தருமலிங்கத்தின் கடவுள் பக்தியைக் கண்டு டாக்டர் ஆச்சரியமடைந்தார்.
வீட்டுக்கு வந்தார் தருமலிங்கம், வேகமாகப் போன தன் கணவன், இன்னும் வரவில்லை என்ன ஆனதோ தெரியவில்லையே என்ற கவலையில், வாசலிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தாள் மீனாட்சி. அவர் வந்ததைக் கண்டதும் தான் அவளுக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
தருமலிங்கம் அவசரப்படாமல், அதே சமயத்தில் கோபப்படாமல் எல்லா விஷயத்தையும் விவரித்தார்.
மீனாட்சிக்கோ எல்லாம் கனவு காண்பது போலவே தோன்றியது. இப்படியும் நடக்குமா உலகத்தில் என்று ஆச்சரியம் அடைந்தாள். இருவரும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனை செய்து கொண்டிருந்தார்கள்.
சார், தந்தி!
தந்தி சேவகன் கொடுத்த தந்தியை, கையெழுத்து போட்டு பெற்றுக் கொண்டார் தருமலிங்கம்.
‘என்ன தந்திங்க’ என்று பயத்துடன் கேட்டாள் மீனாட்சி.
இராமேஸ்வரத்திலிருந்து தந்தி வந்திருக்கிறது. என்னுடைய நண்பர் இன்ஸ்பெக்டர் தந்தியடித்திருக்கிறார். அங்கே வந்தால் எல்லாம் விவரமாகக் கூறுகிறேன் என்பதுதான் முக்கிய சேதி.
உடனே இராமேஸ்வரம் நோக்கிப் புறப்பட்டார்கள். இவ்வாறு தருமலிங்கமும், மீனாட்சியும் இராமேஸ்வரம் வந்து, வைரக்கற்களை அடையாளம் காட்டி உறுதி செய்தார்கள்.
எல்லாம் நல்ல படியாகக் கிடைத்தது என்று தருமலிங்கம் மகிழ்ந்தார்.
வெளி நாட்டுக்கு கடத்தப்படாமல், தனக்கு சேர வேண்டிய வைரக் கற்களை தானே காத்துக் கொண்டாள் அம்பிகை என்று மிகவும் மகிழ்ச்சியடைந்தாள் மீனாட்சி.
‘தீமை செய்ய முயற்சி செய்தால், ஆரம்பத்தில் வெற்றி பெறுவது போலத் தோன்றினாலும், முடிவில் உண்மையே வெல்லும் தீமை தோல்வியே அடையும்’ என்று நடேசன் மட்டும் நினைக்கவில்லை. துரைசாமியும் நினைத்தார். அந்த விவசாயிகளும் நினைத்தார்கள்.
கடவுள் எப்பொழுதும் கைவிடமாட்டார் என்று தருமலிங்கமும் மீனாட்சியும் அம்பிகைக் கோயிலில் பூசை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
உழைத்து சம்பாதித்த பொருட்கள் தான் ஒருவருக்கு ஒட்டும். ஏமாற்றி சேர்க்கும் பொருட்கள் ஆரம்பத்தில் இன்பம் தருவது போலத் தோன்றினாலும், தொடர்ந்து துன்பத்தையே தரும் என்பது தான். உலகத்தில் நாம் அன்றாடம் காண்கின்ற காட்சியாக இருக்கிறது.
மனதிருப்தியும் மகிழ்ச்சியும், பொன்னாலும் பொருளாலும் மட்டும் வருவதில்லை. உண்மையான உழைப்பில், நன்மை செய்வதில், பிறரை மதிப்பதில், ஆபத்தில் உதவுவதில், அன்புகாட்டுவதில் தான் வருகிறது.
நாமும் இதை நினைப்போம். உண்மையுடன் உழைப்போம். உயர்ந்த வாழ்வு வாழ வேண்டும் என்ற நல்ல லட்சியத்துடன் உழைப்போம். நல்ல பாதையில் நடப்போம். இந்த லட்சியத்தை நெஞ்சிலே உறுதியாகக் கொண்டவர்களைக் கடவுள் என்றும் கைவிடவே மாட்டார்!
கருத்துகள்
கருத்துரையிடுக