ரோஜாச் செடி
சுட்டி கதைகள்
Back
ரோஜாச் செடி
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
மூன்றாம் பதிப்பு : மே, 1968
விலை ரூ. 1.50
ஸ்டார் பிரசுரம்
66. பெரிய தெரு,
திருவல்லிக்கேணி : : சென்னை.5.
* * *
ஜீனோதயம் அச்சகம், சென்னை.5.
உள்ளடக்கம்
1. ரோஜாச் செடி
2. மான்குட்டி
ரோஜாச் செடி
பூம்புதூர் பெரிய பட்டணமும் அல்ல; சிறிய கிராமமும் அல்ல. நடுத்தரமான ஒர் ஊர். அந்த ஊரில் பாரதி சிறுவர் சங்கம் ஒரு சங்கம் இருக்கிறது. அந்தச் சங்கம் சில சங்கங்களைப் போல் தூங்குமூஞ்சிச் சங்கமாக இருப்பதில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டேயிருக்கும்.
அந்தச் சங்கத்தார் வருஷத்துக்கு ஒரு முறை புஷ்பக் காட்சி நடத்துவார்கள். அந்தக் காட்சியில் ஏராளமான சிறுவர்களும், சிறுமிகளும் கலந்து கொள்வார்கள். கலந்து கொள்வதென்றால், சும்மா வந்து காட்சியைப் பார்த்துவிட்டுப் போவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொட்டியில் அவரவர் வளர்த்த புஷ்பச் செடிகளைக் கொண்டுவந்து, காட்சியில் வைப்பார்கள். பதினாறு வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதில் கலந்து கொள்ளலாம்.
காட்சி நடக்கும் தினத்தன்று காலை 6 மணிக்குள் செடிகளைக் கொண்டு வந்து வைத்துவிடவேண்டும். ஒவ்வொரு செடியிலும் அதை வளர்த்த பையன் அல்லது பெண்ணின் பெயர், வயது, வீட்டு விலாசம் முதலியவற்றை அட்டையில் எழுதிக் கட்டி வைக்க வேண்டும். மிகவும் நன்றாக இருக்கும் செடிக்குப் பரிசு கொடுப்பார்கள். பரிசு ஐம்பது ரூபாய்.
இந்தக் காட்சியைப் பார்த்துப் பரிசு கொடுப்பதற்குக் கல்வி அதிகாரிகளும் பெரிய தலைவர்களும் வருவார்கள். அந்த வருஷம் கல்வி மந்திரியே வர ஒப்புக்கொண்டுவிட்டாராம். ஆகையால், மிகவும் பிரமாதமாக ஏற்பாடு செய்திருந்தார்கள் பாரதி சிறுவர் சங்கத்தார்.
※※※※
மிராசுதார் முருகேச பிள்ளை என்றால் பூம்புதூரில் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அவர் பெரிய பணக்காரர். அவருடைய மகள் மீரா ஏழாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள்.
புஷ்பக் காட்சி நடப்பதற்கு முதல் நாள் முழுவதும் அவளுக்கு ஒரே கவலை. வசந்தா கனகாம்பரச் செடி வளர்த்திருக்கிறாள். மல்லிகா சூரியகாந்தி வளர்த்திருக்கிறாள். ரேவதி ரோஜா வளர்த்திருக்கிறாள். ஆனால், நான் மட்டும் எதுவுமே வளர்க்கவில்லை, கல்வி மந்திரியே இந்த வருஷம் வரப்போகிறாராம் உம் என்ன செய்வது? நாளை விடிந்தால் புஷ்பக்காட்சி! என்று ஏங்கிக்கொண்டிருந்தாள்.
அப்போது, அங்கே வந்தாள் மீராவின் சிநேகிதி கமலா. அவள் மீராவிடம், “ஏன் மீரா ஒரு மாதிரியாக இருக்கிறாய்?” என்று கேட்டாள்.
“இந்த வருஷம் புஷ்பக் காட்சிக்குக் கல்வி மந்திரி வருகிறாராம். அவர் கையாலே ஐம்பது ருபாய் பரிசு வாங்க எனக்குக் கொடுத்துவைக்கவில்லை. உம், யாருக்கு இருக்கிறதோ அதிர்ஷ்டம்!” என்றாள் மீரா.
உடனே கமலாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. “மீரா, நீ கவலைப்படாதே நான் சொல்லுகிறபடி செய். நிச்சயம் உனக்குத் தான் பரிசு” என்றாள்.
“என்ன ! பரிசு எனக்கா அது எப்படி ?” என்று கேட்டாள் மீரா,
“நாலாவது தெருவிலே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறதே, அதற்குப் பக்கத்திலே ஒரு குடிசை இருக்கிறது. அந்தக் குடிசையிலே பார்வதி என்று ஒருத்தி இருக்கிறாள். அவளும் காந்தி இலவசப் பள்ளிக்கூடத்தில்தான் படிக்கிறாள். ஏழாவதிலே படிக்கிறாள். அவளை எனக்குத் தெரியும். நேற்று அவளுடைய வீட்டுக்குப் போயிருந்தேன். அவள் ஒரு ரோஜாச் செடி வளர்த்திருக்கிறாள். அடடா ! எவ்வளவு அழகான செடி! எவ்வளவு ரோஜாப் பூக்கள்! அவள் வீட்டுக்கு நாம் இப்போதே போவோம். ஏதேனும் துட்டுக் கொடுத்தால் அவள் அந்தச் செடியைத் தந்து விடுவாள்....”
“உண்மையாகவா ! எவ்வளவு ரூபாய் கேட்பாள் ? பத்துருபாய் கேட்பாளா ?”
“பத்து ரூபாயா? அம்மாடியோ! அவ்வளவு எதற்கு? ஒரு ரூபாய், இரண்டு ருபாய் கொடுத்தாலே போதும்.”
“சரி, எதற்கும் நான் சேர்த்து வைத்திருக்கிற பணத்திலே ஐந்து ரூபாய் எடுத்து வருகிறேன்” என்று கூறிவிட்டுத் தன்னுடைய மேஜை அறையைத் திறந்தாள் மீரா ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக்கொண்டு, கமலாவுடன் புறப்பட்டாள்.
இருவரும் அந்தக் குடிசையை நோக்கிச் சென்றனர். குடி சையைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. கமலாவும் மீராவும் வேலி ஒரமாக நின்று உள்ளே பார்த்தார்கள். அங்கே ஒரு மண் தொட்டியில் மிகவும் அழகான ஒரு ரோஜாச்செடி இருந்தது.
“அதோ அந்தச் செடிதான். எப்படி இருக்கிறது. பார்த்தாயா !” என்று கேட்டாள் கமலா.
“ஆஹா! அந்தச் செடி எவ்வளவு அழகாயிருக்கிறது! எத்தனை பூக்கள்! அது எனக்குக் கிடைத்தால் நிச்சயம் பரிசு எனக்குத்தான்” என்றாள் மீரா.
உடனே வேலிக் கதவைத் திறந்தாள், கமலா.
“யாரது?” என்று கேட்டுக்கொண்டே பார்வதியின் அம்மா குடிசையிலிருந்து வெளியே வந்தாள்.
“ஏனம்மா, நாங்கள்தான். பார்வதி இல்லையா?” என்று கேட்டாள் கமலா.
"கடைவீதிக்கு மண்ணெண்ணெய் வாங்கப் போயிருக்கிறாள். என்ன விஷயம்?” என்று கேட்டாள், அந்த அம்மா.
“ஒன்றுமில்லை. இவள் யார் தெரியுமா? மிராசுதார் முருகேச பிள்ளை மகள் இவள்தான். பெயர் மீரா” என்று மீராவை அறிமுகப்படுத்தி வைத்தாள் கமலா.
“அடடே அப்படியா . . . . . ஆமாம். பார்வதியை எதற்காகத் தேடி வந்தீர்கள் ?” என்று கேட்டாள் அந்த அம்மாள்.
உடனே கமலா ஒரு சின்ன உதவி வேணும். இவள் அருமையாக ஒரு ரோஜாச் செடி வளர்த்து வந்தாள். அதைப் புஷ்பக் காட்சியிலே வைக்கவேண்டுமென்பது இவளுடைய அப்பாவின் ஆசை. ஆனல் எதிர் பாராமல் ஒன்று நடந்து விட்டது. இவளுடைய தம்பி படுசுட்டி. அவன் இன்றைக்குக் காலையிலே விளையாட்டாக அந்தச் செடியைப் பிடுங்கி, ஒடித்துப் போட்டுவிட்டான். இவள் அப்பாவுக்கு இந்த விஷயம் இதுவரை தெரியாது. தெரிந்தால், பாவம், அந்தச் சின்னப் பையனைப் போட்டு அடிஅடி யென்று அடித்து விடுவார் ! அப்பா பார்ப்பதற்கு முன்னாலே, வேறு ஒரு ரோஜாச் செடியை வாங்கி, அந்தத் தொட்டியிலே வைத்துவிட வேண்டும். உங்கள் வீட்டில் ரோஜாச் செடி இருப்பது இவளுடைய அம்மாவுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. அதனால்தான் எங்களை இங்கே அனுப்பி வைத்தார்கள்” என்று சாமர்த்தியமாகப் புளுகினாள்.
இதைக் கேட்டதும் அந்த அம்மாள், “என்ன! ரோஜாச் செடியையா கேட்கிறீர்கள்? வேண்டாம் வேண்டாம். வேறே எதைக் கேட்டாலும் தரலாம். பார்வதி கண்ணைப் போல ரோஜாச் செடியை வளர்த்து வருகிறாள். அதைமட்டும் கேட்காதீர்கள்... ஐயோ, பார்வதி வந்தால் என்னைச் சும்மா விடுவாளா?” என்றாள்.
“என்னம்மா, நீங்கள் இப்படிச் சொல்லலாமா? நாங்கள் சும்மாவா கேட்கிறோம்? பணம் தருகிறோம் அம்மா!” என்றாள் மீரா.
“பணம் இருக்கட்டும். பார்வதியின் மனம் நோகுமே...!” என்றாள் அந்த அம்மாள்.
உடனே கமலா, “பணமென்றால் நாலணா எட்டணா இல்லை அம்மா. எவ்வளவு வேணுமோ கேளுங்கள். இரண்டு ரூபாய் வேனுமா? இல்லே, மூன்று ரூபாய். அதுவும் இல்லை. நாலு ரூபாய்...சரி. உங்களுக்குத் திருப்தியாக இருக்கட்டும். ஐந்து ரூபாய் தருகிறோம்” என்று கூறிவிட்டு, மீரா இந்த அம்மாள் மிகவும் நல்லவர்கள். அந்த ஐந்து ரூபாயை எடு. கொடுத்து விட்டு, உடனே ரோஜாச் செடியை வாங்கிக்கொண்டு போகலாம். நேரமாகிறது” என்றாள். மீரா தன்னிடமிருந்த ஐந்து ரூபாய் நோட்டைக் கமலாவிடம் கொடுத்தாள். கமலா அதை வாங்கி அந்த அம்மாளிடம் நீட்டினாள்.
இதை வாங்கிக்கொள்ளுங்கள். ஒரு சின்னப் பையனைக் காப்பாற்றிய புண்ணியம் உங்களுக்கும் கிடைக்கும். இன்னென்றையும் சொல்லிவிடவேண்டும். இந்தச் செடிக்குப் பரிசு கிடைக்குமென்று தாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. கல்வி மந்திரி வருகிற போது காட்டாயம் இவளும் கலந்து கொள்ள வேணுமாம். இப்படி இவள் அப்பா ஆசைப்படுகிறார். இந்த ஐந்து ரூபாயிருந்தால் உங்களுக்கு எவ்வளவு உதவியாயிருக்கும் ! பார்வதிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுக்கலாம். சும்மா வாங்கிக்கொள்ளுங்கள் அம்மா” என்று கூறி அந்த அம்மாளின் கையிலே நோட்டைத் திணித்தாள், கமலா.
அந்த அம்மாள் கொஞ்ச நேரம் யோசித்தாள். பார்வதி வந்தால் நிச்சயம் வருத்தப்படுவாள்...ஆனாலும், அவளுக்குப் பரிசு கிடைக்கிறது என்ன நிச்சயம்? ஒன்றுமே கிடைக்காமல் போனாலும் போகலாம். ஆனால், இந்த ஐந்து ரூபாயோ நிச்சயம் நமக்குக் கிடைக்கிறது. பார்வதியின் பாவாடை சட்டையெல்லாம் கிழிந்து போயிருக்கின்றன. இந்த ஐந்து ரூபாயிலே ஒரு பாவாடையும் சட்டையும் வாங்கிக் கொடுக்கலா மல்லவா? என்று தனக்குத் தானே சமாதானம் கூறிக்கொண்டாள். பிறகு “சரி, மிகவும் கட்டாயப் படுத்துகிறீர்கள். பார்வதிதான் வருத்தப்படுவாளே என்று பார்த்தேன். உம், நடக்கிறபடி நடக்கட்டும்” என்று கூறி ரோஜாச் செடியை அந்த ஐந்து ரூபாய்க்குக் கொடுக்க ஒப்புக்கொண்டு விட்டாள்.
மீராவும் கமலாவும் ஆனந்தமாக அந்த ரோஜாச் செடியுடன் வீடு நோக்கிக் கிளம்பினர்கள். போகும் போதே, மீரா, ஐந்து ரூபாய்க்கு ஐம்பது ரூபாய் கிடைக்கப் போகிறது! அப்போது என்னே மறந்து விடாதே!" என்று சிரித்துக்கொண்டே கூறினாள் கமலா.
※※※※
பார்வதி மண்ணெண்ணெய் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தாள். வேலிக் கதவைத் திறந்ததும், ரோஜாச் செடி இருந்த இடத்தைப் பார்த்தாள். உடனே, அவளுக்குத் ‘திக்’கென்றது. பார்வதி அந்த ரோஜாச் செடி மீது உயிரையே வைத்திருந்தாள். கண்ணும் கருத்துமாக இத்தனை நாளாக வளர்த்து வந்தாள். போட்டியில் எப்படியும் அதற்குப் பரிசு கிடைக்கும் என்று நம்பியிருந்தாள். போகும் போதும் வரும் போதும் அதைப் பார்க்காமல் போக மாட்டாள். பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம், “அம்மா, வேலிக் கதவைத் திறந்து போட்டுவிடாதே அம்மா. ஆடு மாடு வந்து ரோஜாச் செடியைத் தின்றுவிடும்!” என்று எச்சரிக்கை செய்துவிட்டுத்தான் போவாள். இப்படியிருக்கும்போது
அந்த ரோஜாச் செடியைத் தொட்டி யோடு காணோம் என்றால் அவளுக்கு எப்படி இருக்கும் !
“அம்மா, அம்மா என் ரோஜாச் செடி எங்கே அம்மா ?” என்று பதறிக்கொண்டே கேட்டாள் பார்வதி.
“பார்வதி, ஒன்றும் ஆபத்து வந்துவிடவில்லை. பதறாதே! நான் சொல்லுவதைக் கேள்” என்று கூறிக் கொண்டே பார்வதியின் அருகிலே வந்தாள், அவளுடைய அம்மா. நடந்ததை அப்படியே எடுத்துச் சொன்னாள்
அதைக் கேட்டதும்! “என்ன அம்மா, இப்படிச் செய்து விட்டாயே! நான் எவ்வளவு பாடுபட்டு வளர்த்தேன் ! உனக்குத் தெரியாதா அம்மா ? பணம்தானா பெரிது! அப்படிப் பார்த்தால்கூட நாளைக்கு நமக்குப் பரிசு கிடைத்தாலும் கிடைக்குமே அம்மா!”
“பரிசு நிச்சயமாய்க் கிடைக்கும் என்று எப்படியம்மா சொல்லுவது ? பரிசு கிடைக்காதபோனால், இந்த ஐந்து ரூபாயும் போய்விடுமே ! இப்போது, இதில் உனக்கு அழகான ஒரு சட்டை, ஒரு பாவாடை....”
“போம்மா. நான் அருமையாக வளர்த்த செடியே போய் விட்டது. இதெல்லாம் எதற்கு அம்மா ?” என்று கூறிவிட்டு விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள் பார்வதி.
※※※※
மறுநாள் அதிகாலை நேரம். சிறுவர் சிறுமியர் அவரவருடைய பூச்செடிகளைக் கொண்டுபோய்க் காட்சியில் வைத்துக் கொண்டிருந்தார்கள். மீராவும் அவளுடைய ரோஜாச் செடியை ஒரு வேலையாளின் தலையில் ஏற்றிக்கொண்டு வந்தாள். ஆணால், எல்லோரையும் போல மண் தொட்டியில் அந்த ரோஜாச் செடியை அவள் வைத்திருக்கவில்லை. பணக்காரியல்லவா? அதனால் எவர்-சில்வர் தொட்டியில் வைத்திருந்தாள். முன்பு பார்வதி வைத்திருந்த பழைய மண் தொட்டியிலிருந்து இதற்கு மாற்றியிருந்தாள். மாலையில் கல்வி மந்திரி வந்தார். காட்சியைச் சுற்றிப் பார்த்தார். எல்லாச் செடிகளையும் விட மீராவின் ரோஜாச் செடிதான் நன்றாகவும் அழகாகவும் இருப்பதாக அவருடைய அபிப்பிராயம். மற்றவர்களின் அபிப்பிராயமும் அதுதான். அதனால் அந்தச் செடிக்கே பரிசு கொடுப்பது என்று முடிவு செய்தார்கள். உடனே மீராவுக்கே முதல் பரிசு என்றார்கள். மீரா மிகவும் குதுகலமாக மந்திரியின் அருகே ஒடி வந்தாள்.
அப்போது மந்திரிக்கு எப்படியோ சந்தேகம் வந்து விட்டது. “ஏனம்மா எவர்-சில்வர் தொட்டியில் செடியை வளர்த்திருக்கிறாயே தொட்டியை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வைத்தால், யாராவது தூக்கிக்கொண்டு போய்விட மாட்டார்களா?” என்று கேட்டார்.
தோட்டத்திலே நான் இதை வைக்கவே மாட்டேன். என் அறைக்குள்ளேயே பத்திரமாக வைத்திருப்பேன்” என்றாள் மீரா.
மந்திரி புன்சிரிப்புடன், “சரி. ஒரு நாளைக்கு எத்தனை தடவை இதற்குத் தண்ணிர் ஊற்றுவாய் ?” என்று கேட்டார்.
மீராவுக்கு செடி வளர்ப்பதைப் பற்றி என்ன தெரியும்? “பத்துப் பதினைந்து தடவைக்குக் குறையாமல் ஊற்றுவேன். இல்லாதபோனால் இப்படி ஜோராக வளர்ந்திருக்குமா?” என்றாள்.
“ஒஹோ, அப்படியா! சரி. இந்த எவர் - சில்வர் தொட்டியிலே ஓட்டை ஏதாவது இருக்குமோ?” என்று கேட்டார் மந்திரி.
“ஓட்டையா! ஓட்டைச் சாமான்களை நாங்கள் உபயோகப்படுத்தவே மாட்டோம். ஒரு சின்ன ஓட்டைகூட இருக்காது. நல்ல தொட்டி!”
மீரா சொன்னதைக் கேட்டதும் சிரித்துக் கொண்டே “அப்படியானால் இந்தப் பரிசு உனக்கு இல்லை” என்று சொன்னார் மந்திரி.
மீராவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
காரணம் என்ன தெரியுமா ? நீ சொன்ன மாதிரி அறைக்குள்ளேயே இந்தச் செடி இருந்திருந்தால், சூரிய வெளிச்சம் இல்லாமல் கெட்டுப் போயிருக்கும். அத்துடன் நீ தினமும் பத்துப் பதினைந்து தடவை தண்ணிர் ஊற்றினதாகச் சொன்னாயே, அப்படி ஊற்றியிருந்தால் அழுகிப் போயிருக்கும் நீ மண் தொட்டியைப் பார்த்திருக்கிறாயா? அதிலே இரண்டு மூன்று துவாரம் போட்டுவைப்பார்கள். துவாரங்கள் இருந்தால் தொட்டியிலே அதிகமாகத் தண்ணிர் தங்காது. அதனாலே செடி கெடாது. மண் தொட்டிக்கே துவாரம் தேவையாயிருக்கிற போது, இந்த எவர் - சில்வர் தொட்டிக்குத் தேவையில்லையா? ஆகையால் நீ சொன்னது எல்லாமே சுத்தப் பொய். உள்ளதைச் சொல்; உனக்கு இதை யார் வளர்த்துக் கொடுத்தது ?” என்று மந்திரி கேட்டார்.
மந்திரி சொன்னதைக் கேட்க கேட்கக் மீராவின் தலை குனிந்தது. கண்ணிர் வழிந்தது. உடனே அவள் நடந்ததை நடந்தபடி கூறி, “தெரியாமல் செய்து விட்டேன். மன்னிக்க வேண்டும்” என்றாள்.
உடனே மந்திரி, “நான் சந்தேகப்பட்டது சரிதான். போகட்டும். இப்போதாவது உண்மையைச் சொன்னாயே! வருத்தப்படாதே” என்று கூறிவிட்டு, “பார்வதி என்ற பெண் இங்கே இருக்கிறாளா?” என்று கேட்டார்.
பார்வதி அங்கே இல்லை. உடனே ஆள் அனுப்பி, அவளை அழைத்துவரச் செய்தார்கள்.
வீட்டில் அழுதுகொண்டிருந்த பார்வதி, தனக்குப் பரிசு கிடைக்கப் போவதை அறிந்தாள். உடனே சொல்ல முடியாத மகிழ்ச்சியுடன் ஓடோடி வந்தாள். மந்திரியின் அருகே சென்றாள். அவர் அவளைத் தட்டிக் கொடுத்துப் பரிசு ரூபாய் ஐம்பதையும் அவள் கையிலே கொடுத்தார்.
பரிசைக் கையிலே வாங்கியதும் நேராக மீராவிடம் ஒடினாள் பார்வதி. “இந்தா, நீ என் அம்மாவிடம் கொடுத்த ஐந்து ரூபாய்” என்று கூறி அவள் கையிலே ஐந்து ரூபாயைத் திணித்து விட்டு, வேக வேகமாக வீட்டுக்கு ஓடினாள்.
மீதம் உள்ள நாற்பத்தைந்து ரூபாயையும் அம்மாவிடம் சேர்க்கத்தான் அவள் அப்படி அவசரம் அவசரமாக ஒடினாள்.
மான்குட்டி
ஒரு பெரிய காடு. அந்தக் காட்டிலே ஒரு மான் இருந்தது அந்த மானுக்கு ஒரு குட்டி இருந்தது. அம்மா மான் எப்போதும். குட்டி மானைக் கூடவே அழைத்துச் செல்லும். புல் இலை தழைகளையெல்லாம் எப்படித் தின்பது எங்கே எப்படித் தண்ணிர் குடிப்பது என்றெல்லாம் கற்றுக் கொடுக்கும்.
அந்தக் காட்டுக்கு அடிக்கடி வேட்டைக்காரர்கள் வருவார்கள். அவர்கள் வரும் போது கூடவே வேட்டை நாய்களையும் அழைத்து வருவார்கள். முயல், மான் முதலிய பிராணிகளைத் தான் அவர்கள் அதிகமாக வேட்டையாடுவார்கள். ஏதாவது ஒரு முயல் அல்லது மானைக் கண்டுவிட்டால், உடனே வேட்டை நாயை ஏவி விடுவார்கள். அந்த நாய்களைக் கண்டாலே முயல்களுக்கும். மான்களுக்கும் கிலிதான். தலை தெறிக்க ஒட ஆரம்பித்து விடும்.
ஒரு நாள் அம்மா மான் குட்டி மானப் பார்த்து, “கண்ணு, இந்தக் காட்டிலே வேட்டை நாய் உபத்திரவம் அதிகம். அதனாலே நீ வெகு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்” என்று எச்சரிக்கை செய்தது.
அதற்குக் குட்டி மான், “வேட்டை நாயா அது எப்படி யம்மா இருக்கும் ? நான் பார்த்ததே இல்லையே!” என்றது.
“நான் கூட அதைச் சரியாகப் பார்த்ததில்லை. அதைப் பார்க்கவே பயமாயிருக்குமாம்!” என்று சொன்னது அம்மா மான்.
“பயமா அது என்னம்மா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டது குட்டி மான்.
“நீயோ இளங்கன்று. உனக்குப் பயத்தைப் பற்றி என்ன தெரியும்? ஆனாலும், நாம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தூரத்தில் வேட்டைநாய் வரும் சத்தத்தைக் கேட்டால், உடனேயே நாம் எதிர்த் திசையிலே வெகு வேகமாய் ஒடிப் போய்விட வேண்டும்” என்று சொன்னது அம்மா மான்.
உடனே குட்டி மான் “அப்படியா! ஏனம்மா அப்படி ஒட வேண்டும்? அது என்ன செய்துவிடுமாம்?” என்று கேட்டது.
“என்ன செய்யுமா ? வேகமாக ஓடிவந்து அப்படியே ‘குபுக்’ கென்று மேலே பாயும். பாய்ந்து பல்லாலே சதையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். உடனே வலி தாங் காமல் நாம் தொப்'பென்று கீழே விழுந்து விடுவோம். அப்போது, வேட்டைக்காரர்கள் ஓடிவந்து நம்மைப் பிடித்துக்கொண்டு போய் விடுவார்கள்” என்று விளக்கிச் சொன்னது அம்மா மான்.
இதைக் கேட்டதும் குட்டி மான், “ஏனம்மா, வேட்டை நாய்க்கு நீ மட்டும்தான் பயப்படுகிறாயா ? அல்லது எல்லா மான்களுமே பயப்படுமா?” என்று கேட்டது.
“எல்லா மான்களுக்குமே பயம்தான். வேட்டை நாய்க்குப் பயப்படாத மானே இருக்காது” என்றது அம்மா மான்.
“அப்படியானால், ஆண் மான்கள் கூடவா பயப்படும் ?” என்று சந்தேகத்தோடு கேட்டது குட்டி மான்.
“ஆண் மானாவது, பெண் மானாவது? எந்த மானாயிருந்தாலும் வேட்டை நாய்க்குப் பயம்தான்” என்றது அம்மா மான்.
“ஏனம்மா ஆண் மானுக்குத்தான் கொம்பு இருக்கிறதே! அது ஏன் பயப்படவேண்டும்? வேட்டை நாய் பக்கத்திலே வந்ததும், கொம்பாலே - குத்திக் கீழே தள்ளி விடலாமே ! எனக்குக் கொம்பு முளைக்கட்டும். நான் என்ன செய்கிறேன் பார்” என்று பெருமையோடு சொன்னது குட்டி மான்.
“கண்ணு, நமக்குக் கடவுள் கொம்பைக் கொடுத்தது சண்டை போடுவதற்காக அல்ல. அழகுக்குத்தான் கொடுத்திருக்கிறார் ” என்றது அம்மா மான்.
இப்படி அம்மா மானும், குட்டி மானும் பேசிக்கொண் டிருக்கும்போதே, தூரத்தில் ஏதோ சத்தம் கேட்பது போலிருந்தது. உடனே, அம்மா மான் தன் காதுகளை நிமிர்த்திக் கொண்டு சத்தம் வந்த பக்கம் பார்த்தது. மறுநிமிஷம், “ஐயையோ, வேட்டைநாய் வருவதுபோல் தெரிகிறதே! வா. வா. சீக்கிரம் ஒடிவா” என்று கூறிவிட்டு முன்னால் ஓட ஆரம்த்தது அம்மா மான்.
ஆனால் குட்டி மான் ஒடவில்லை. இந்த வேட்டை நாய் எப்படித்தான் இருக்கும் என்று பார்த்துவிடவேண்டும்’ என்று நினைத்தது. உடனே அங்கே இருந்த ஒரு புதரில் ஒளிந்து கொண்டது.
சிறிது நேரத்தில், ‘தடதட’ என்று வேட்டை நாய் அந்தப் பக்கமாக ஒடி வந்தது. ஆனால், நல்லகாலம்; அது ஒளிந் திருந்த மான்குட்டியைப் பார்க்கவில்லை ! ஏதோ ஒரு திசையைப் பார்த்து ஓடிவிட்டது.
வேட்டை நாய் போனபிறகு, குட் டிமான் வெளியே வந்தது. அம்மா போன திசையைப் பார்த்துக் கொண்டே நின்றது. வெகு நேரம் சென்று அம்மா மான் அங்கு வந்து சேர்ந்தது. வந்தவுடனே அது குட்டி மானைப் பார்த்து, “அப்பா! நல்லகாலம். அந்தச் சண்டாள நாயிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பித்துக் கொண்டாய்! இளங்கன்று பயமறியாது என்பார்கள். அது உன் விஷயத்தில் உண்மைதான். என்ன இருந்தாலும் நான் ஒட ஆரம்பித்தவுடனே நீயும் ஓடி வந்திருக்க வேண்டும். நீயும் கூட வருவாய் என்று நினைத்துத்தான் நான் முன்னால் ஒடினேன். போகட்டும். இனி, இந்த மாதிரி செய் யாதே. ஆபத்து!” என்று புத்தி சொன்னது.
“அம்மா, நீ மிகவும் பயப்படுகிறாய் அம்மா ! நான் இந்தப் புதருக்குள் ஒளிந்துகொண்டு, வேட்டை நாய் எப்படியிருக்கும் என்று பார்த்தேன். அது உன் உயரம்கூட இல்லை. அதற்குக் கொம்பு இருக்கிறதா என்று பார்த்தேன். அதுவும் இல்லை. அதனால் நம்மை என்ன செய்ய முடியும் ? எனக்கு மட்டும் கொம்பு முளைக்கட்டும்; ஒரே குத்திலே அதைக் குத்திக் கீழே சாய்த்து விடுகிறேன்” என்று வீரமாகச் சொன்னது குட்டி மான்,
இதைக் கேட்டதும், அம்மா மான் சிரித்துக்கொண்டே , “குழந்தாய், நீ பெரிய தைரியசாலிதான். இருந்தாலும், வேட்டை நாய், சிங்கம் புலி இந்த மாதிரி மிருகங்களுக்கெல்லாம் நாம் பயப்படாமல் இருக்க முடியாது. கடவுள் நமக்கு அந்த மாதிரி படைத்திருக்கிறார் ” என்றது.
உடனே குட்டி மான், “ஏனம்மா, இந்தக் காட்டிலே சிங்கம் கூட இருக்கிறதா?” என்று கேட்டது.
“இருக்கிறது. ஆனால் எப்போதாவது அபூர்வமாகத்தான் இந்தப் பக்கம் வரும்” என்றது அம்மா மான்.
“அப்படியா! அதையும் ஒரு நாளைக்கு நான் நேரிலே பார்த்து விடுகிறேன்” என்றது குட்டி மான்.
“ஐயையோ, சிங்கத்தை நேரிலே பார்ப்பதா! அது நம்மைக் கொன்று போட்டு விடுமே!” என்று உடம்பை உதறிக் கொண்டே சொன்னது அம்மா மான்.
“போம்மா, எதைச் சொன்னாலும், அது கடித்துவிடும். இது கொன்றுவிடும் என்றுதான் சொல்கிறாய்” என்று சலிப்போடு கூறியது குட்டி மான
“நீயோ சிறுபிள்ளை, உனக்கு எங்கே பயம் தெரியப் போகிறது?..சரி. வா. தண்ணிர் குடித்துவிட்டு வரலாம்” என்றது அம்மா மான்.
பிறகு அம்மா மானும் குட்டி மானும் தண்ணீர் குடிக்கச் சென்றன.
இது நடந்து ஒரு வாரம் இருக்கும
அன்று ஒரு நாள் குட்டி மானும் அம்மா மானும் ஒரு குட்டைக்குத் தண்ணிர் குடிக்கச் சென்றன. தண்ணிர் குடித்து விட்டுத் திரும்பி வரும்போது, அம்மா மான் குனிந்து தரையைப் பார்த்தது. பார்த்ததும் “ஐயையோ சிங்கமல்லவா இங்கே வந்திருக்கிறது !” என்று பயத்தோடு சொன்னது.
“என்னம்மா சிங்கமா! அது எப்படி இருக்கும்? சொல்லம்மா” என்று கேட்டது குட்டி மான்.
“இதோ பார், சிங்கத்தின் காலடி தெரிகிறது. இந்தப் பக்கமாகத்தான் அது போயிருக்கிறது. ஆகையால், நாம் இப்படிப் போவதே ஆபத்து வந்த பக்க மாகவே ஓடி விடலாம். சிங்கம் நம்மைப் பார்த்தால், சும்மா விடாது. அப்படியே மேலே பாய்ந்து கடித்துத் தின்றுவிடும் ” என்று திகிலுடன் கூறியது. அம்மா மான்.
உடனே குட்டி மான், “நீ வேண்டுமானல், போம்மா. நான் இங்கேயிருந்து சிங்கத்தைப் பார்த்து விட்டுத்தான் வரப்போகிறேன் ” என்றது.
இதைக் கேட்டதும் அம்மா மானுக்குக் கோபம் வந்து விட்டது. என்ன இது, புரியாமல் பேசுகிறாயே! சாவதானமாகப் பேச இது நேரமில்லை. துஷ்டரைக் கண்டால் தூர விலகவேண்டும். வா, நாம் இருவரும் ஒடிப் போய்விடலாம்” என்று கட்டாயப் படுத்தியத
அதே சமயம் ‘தடதட’ என்று தூரத்திலே ஒரு சத்தம் கேட்டது. உடனே அம்மா மான் "ஐயோ வேட்டை நாய் வேறு வருகிறதே! இனியும் இங்கு நிற்கலாமா! வா, வா, சிக்கிரம் வா. நிற்காதே! உம், ஒடி வா’ என்று கூறிக்கொண்டே ஒட ஆரம்பித்தது.
அம்மாவின் பின்னால் குட்டி மான் ஓடவில்லை. முன்போலவே அங்கிருந்த ஒரு பெரிய புதருக்குள் மறைந்து கொண்டது வேட்டை நாய் எந்தப் பக்கம் வருகிறது என்று இடுக்கு வழியாகப் பார்த்தது.
வேட்டை நாய் அதே வழியாகத்தான் வந்தது. புதருக்குச் சிறிது தூரத்தில் வந்ததும், அது நின்றது. இங்கும் அங்குமாக மோப்பம் பிடித்தது. பிறகு புதருக்குப் பக்கத்திலே வந்தது. இன்னும் ஒரு விநாடியில், அது மான் குட்டி ஒளிந்திருப்பதைக் கண்டு பிடித்துவிடும் உடனே ஒரு தாவாகத் தாவி, அதன் மென்னியைப் பிடித்துவிடும்!
ஆனால், அதற்குள் ‘ஹா!’ என்ற சத்தம் கேட்டது. உடனே அந்தக் காடே கிடுகிடுத்தது. அது என்ன சத்தம்? சிங்கம்தான் அப்படிக் கர்ஜனை செய்தது. சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டதும் வேட்டை நாய் ஓடிப்போய் ஒரு மரத்தின் பின்னல் பதுங்கிக் கொண்டது.
சிறிது நேரத்தில் சிங்கம் அந்தப் பக்கமாக வந்தது. புதருக்குள் மறைந்து கொண்டிருந்த குட்டி மான் சிங்கத்தை உற்றுப் பார்த்தது. பார்த்ததும், ‘ப்பூ, இந்தச் சிங்கத்திற்குத் தானா அம்மா பயப்படுகிறாள்! இது நம்மை என்ன செய்து விடும்? இது நம் அம்மா உயரம் கூட இல்லை. தலையிலே கொம்பையும் காணோம். சத்தம்தான் பலமாகப் போடுகிறது’ என்று நினைத்தது.
சிங்கம் அப்படியும் இப்படியுமாகப் பார்த்துக் கொண்டே நடந்தது. அப்போது மரத்தின் பின்னல் ஒளிந்து கொண்டிருந்த வேட்டை நாயை அது பார்த்து விட்டது. உடனே, அது கர்ஜித்துக் கொண்டே வேட்டை நாயை நோக்கிப் பாய்ந்தது. வேட்டை நாயைக் கண்டாலே அந்தச் சிங்கத்துக்குக் கோபம் அபாரமாக வந்துவிடும். “இந்த வேட்டை நாய்களால்தானே காட்டிலுள்ள முயல்களும், மான்களும் குறைந்து கொண்டே வருகின்றன! ஆகையால், நாம் இதைச் சும்மா விடக்கூடாது” என்று நினைத்துக்கொண்டே சிங்கம் வேகமாகப் பாய்ந்தது.
வேட்டை நாய்க்குத் தப்ப வழியில்லே. அதனால், அது சிங்கத்தை எதிர்த்துச் சண்டைபோட ஆரம்பித்தது. ஒளிந்திருந்த மான் குட்டி சிங்கத்தையும் வேட்டை நாயையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே இருந்தது. இரண்டும் ஒன்றை ஒன்று பற்களால் கடித்தன; நகங்களால் கீறின, ‘உர்ர். . உர்ர்’ ‘வள்...வள் என்று சத்தம் போட்டன. சிறிது நேரத்தில் இரண்டுக்கும் உடம்பெல்லாம் காயம் தரையெல்லாம் இரத்தம்!
நேரம் ஆகஆக வேட்டை நாய் ஒய்ந்து விட்டது. சிங்கம் சளைக்கவில்லை. வீராவேசத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் வேட்டை நாயின் ஆயுள் முடிந்துவிடும் என்று குட்டி மானுக்குத் தெரிந்து விட்டது. உடனேயே, அதன் உடல் நடுங்கியது: உரோமம் சிலிர்த்தது. பயம் மனத்திலே புகுந்துகொண்டது! ‘சரி, இனிமேல் நாம் இங்கிருந்தால் நமக்கும் இதே கதிதான் ! நாயைத் தீர்த்துக் கட்டிவிட்டு, சிங்கம் நம்மிடத்திலே வந்துவிடும். சிங்கத்தைப் போலவே வேட்டை நாய்க்கும் கோரமான பற்கள் இருக்கின்றன; கூர்மையான நகங்கள் இருக்கின்றன. அப்படி யிருந்தும், அதனாலேயே, சமாளிக்க முடியவில்லையே! நம்மால் எங்கே முடியப் போகிறது? சிங்கத்தின் உருவத்தையும், வேட்டை நாயின் உருவத்தையும் பார்க்கும்போது எனக்குப் பயம் ஏற்படவில்லை. ஆனால் அவைகளின் துஷ்ட குணங்களைப் பார்க்கும் போதுதான் ஒரே பயமாக இருக்கிறது. ‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு’ என்று அம்மா சொன்னதைக் கேட்காமல் போனேனே. இப்போது என்ன செய்வது?...சிங்கம் சண்டை மும்முரத்தில் இருக்கிறது ஆகையால், இந்த நிமிஷமே நாம் இந்த இடத்தை விட்டு ஓடிவிடவேண்டும். ஆம், ஒடுவதற்காகத்தானே கடவுள் எனக்கு நீளமான கால்களைக் கொடுத்திருக்கிறார்! இதோ ஒடுகிறேன். என்று கூறிக்கொண்டே ஓட்ட ஒட்டமாக ஒட ஆரம்பித்தது குட்டி மான்.
அம்மா மானைப் பார்த்த பிறகுதான் குட்டி மானின் ஒட்டம் நின்றது. குட்டி மானைப் பார்த்த பிறகுதான் அம்மா மானின் கவலை தீர்ந்தது!
கருத்துகள்
கருத்துரையிடுக