அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
கட்டுரைகள்
Back
அன்னை கஸ்தூரிபாயின்
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
என். வி. கலைமணி
அன்னை கஸ்தூரிபாயின்
நம்மை மேம்படுத்தும்
எண்ணங்கள்
புலவர் என்.வி. கலைமணி எம்.ஏ.,
பாரதி நிலையம்
புதிய எண் : 126,
உஸ்மான் சாலை,
தியாகராயநகர்,சென்னை-17.
விலை : ரூ. 24.00
* * *
ANNAI KASTURI BAYIN NAMMAI MEAMBADUTHTHUM ENNANGAL ☐ BY: N.V.KALAI MANI First Edition:DECEMBER 2002 Price:Rs.24.00 © BAHARATHI NILAYAM Published by: BHARATHTI NILAYAM,126/108,Usman Road,T.Nagar,Chennai-600017.Printed at:Sivakami Printo Graphics,160,Big Street,Triplicane,Chennai-6000 005.Phone:28445051 xxx
எமது பிற
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
வரிசை நூல்கள்
டாக்டர் மு.வ.வின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
பகவான் ராமகிருஷ்ணரின் „
அண்ணல் மகாத்மா காந்தியின் „
காமராஜரின் „
டாக்டர்.வி.ராதாகிருஷ்ணனின் „
சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் „
அறிஞர் அண்ணாவின் „
அன்னிபெசண்ட் அம்மையாரின் „
கவிஞர் கண்ணதாசனின் „
குன்றக்குடி அடிகளாரின் „
பெஞ்சமின்ஃபிராங்கிளினின் „
அன்னை தெரேசாவின் „
நம்நாட்டுத் தலைவர்களின் „
நாட்டுக்கு உழைத்த நல்லவர்களின் „
அரிஸ்டாட்டிலின் „
பிளட்டோவின் „
ரூசோவின் „
சாக்ரடீசின் „
சிந்தனையாளர் சாக்ரடீசின் „
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் „
நீட்சேயின் „
கன்பூசியஸின் „
தந்தை பெரியாரின் „
டாக்டர்.முத்துலட்சுமியின் „
பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரத்தின் „
மார்ட்டின்லூதரின் „
எமர்சனின் „
வால்டேயரின் „
ஆல்பர்ட்ஜன்ஸ்டைனின் „
நார்மன் வின்செண்ட்பீலின் „
டென்னிஸ் டைடிராட்டின் „
மூதறிஞர் ராஜாஜியின் „
கார்ல் மார்க்ஸ்சின் „
சாஅதியின் „
உலகஅறிஞர்களின் „
சிக்மண்ட்ஃப்ராய்டின் „
தமிழகமுன்னோடிகளின் „
திருவள்ளுவரின்திருக்குறளில் „
ஹிராடெசின் „
பாரதியின் „
கவிக்குயில்சரோஜினியின் „
கலீலியோவின் „
இங்கர்சாலின் „
வேதஇதிகாசபுராணங்களில் „
இங்கர்சாலின்உண்மை „
உள்ளடக்கம்
1. ஒவ்வொரு
2. அகழ்வாரைத்
3. காந்தியின்
4. வெறி
5. அகிம்சை
6. புலால்
7. ஆசிரம
8. புலனடக்கம்
9. மக்கள்
10. பரிசுப்
11. சபர்மதி
12. ராஜ்கோட்
13. மதம்
14. வெள்ளையனே
15. கஸ்தூரிபாய்
16. முதுமைத்
17. மங்கையராகப்
அன்னை கஸ்தூரிபாயின்
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
* * *
ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண்!
"ஒவ்வொரு பிரபலமான, வெற்றி பெற்ற ஆணுக்குப் பின்னால், நிச்சயமாக ஒரு பெண் இருப்பாள்" என்பது ஆங்கிலப் பழமொழி!
"தாய்க்குப் பின் தாரம்", "இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை.” என்பவை எல்லாம் தமிழ்நாட்டுப் பழமொழிகள்!
ஏறுக்கு மாறாக மனைவி அமைந்தால், அவன் சந்தியாசம் பெறுவதே நல்லது என்று அவ்வைப் பெருமாட்டி கூறியுள்ளார்.
திருவள்ளுவர் பெருமான், மனைவியை, மனைவி என்ற வார்த்தையால் சுட்டிக் காட்டாமல், வாழ்க்கைத் துணை என்றும் கூறாமல், வாழ்க்கையிலே துணையாக நின்று அவனது எல்லாச் செயல்களிலும் நன்மை புரிபவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மனைவி என்பவளை "வாழ்க்கைத் துணை நலம்' என்று குறிப்பிட்டது சிந்தனைக்குரியதாகும்.
நமது அண்ணல் மகாத்மா காந்தியடிகளது வெற்றிக்கும், புகழுக்கும் பின்னால் அன்னை கஸ்தூரிபாய் அற்புதமான ஒரு வாழ்க்கைத் துணை நலமாக வாழ்ந்து காட்டினார் என்பது குறிப்பிடத்தக்க வரலாறாகும். எடுத்துக் காட்டாக ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.
பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தியடிகள், தனது சொந்த ஊரான, ராஜ்கோட் சமஸ்தான நகரிலே வழக்குரைஞர் தொழில் செய்த போது, போதிய வருமானம் வரவில்லை என்ற நிலையில் தென் ஆப்ரிக்க நாட்டில் வாழும் இந்தியர் பகுதிக்குச் சென்றார். அப்போது, அவர் தனது மனைவி கஸ்தூரிபாயையும் உடன் அழைத்துச் சென்றார்.
அங்கு இந்தியர்களை இழிவாக நடத்தி வந்த அடிமைத் தனத்தை எதிர்த்து அங்குள்ள இந்தியர்களை ஒன்று திரட்டி உரிமைப் போர் என்ற தியாக வேள்வியில் பலரை ஈடுபட வைத்து, தன்னையும் அதில் இணைத்துக் கொண்டு போராடினார்.
அந்தப் போராட்டத்தின் போது சட்டத்தை எதிர்த்து அறப்போர் செய்வதற்கு மகளிர் படையைத் திரட்டி, சக்தியாக்கிரகம் செய்யப் போகும் பெண்கள் எப்படியெல்லாம் சட்ட மறுப்புப் போரைச் செய்ய வேண்டும் என்று தனது திட்ட முறைகளை விளக்கிக் கொண்டிருந்ததை மகாத்மாவின் துணைவி கஸ்தூரிபாய் தனது வீட்டின் ஜன்னலருகே நின்று கேட்டுக் கொண்டிருந்தார்.
காந்தியடிகள் வீட்டிற்குள் வந்ததும், 'பெண்கள் சட்ட மறுப்புப் போராட்டம் செய்யப் போவதைப் பற்றி என்னிடம் நீங்கள் என் கூறவில்லை? நான் என்ன அதற்குத் தகுதியற்றவளா?' என்று கஸ்துரிபாய் அடிகளாரைக் கேட்டார்.
அதற்குக் காந்தியடிகள், "கஸ்தூரி உனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அவர்களைப் பார்ப்பதோடு, மேலும் உனக்குத் தொந்தரவு கொடுக்க என் மனம் விரும்பவில்லை. மற்றப் பெண்களோடு நீயும் சிறை புகுந்தால் எனக்கு மகிழ்ச்சிதான். எனது மகிழ்ச்சிக்காக உன்னை நான் சிறை புகவிட விரும்பவில்லை.”
"போராட்டம் செய்வதற்கு பெண்களே துணிந்து வர வேண்டுமே தவிர, நீ போகிறாயா சிறை புக சம்மதமா? என்று கேட்பது சரியல்ல. ஒரு வேளை நீ எனக்காகச் சம்மதித்துப் போராடி நீதி மன்றம் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டால், அப்போது நடுங்கினால், சிறை புகப்பயந்து பின்வாங்க நேர்ந்து திரும்பி வந்து விட்டால், என்னுடைய அரசியல் வாழ்வு பாதிக்கப்படும் அல்லவா? இந்தியர்கள் உரிமைக்குக் களங்கம் உருவாகிவிடுமே...! அப்போது எனது அரசியல் மரியாதை என்னவாகும், என்பதைச் சற்று எண்ணிப்பார். நான் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா? இதையெல்லாம் சிந்தித்துத் தான் நான் உன்னைக் கேட்கவில்லை.... என்றார் காந்தியடிகள்.
"சிறைத்துன்பங்களுக்குப் பயந்து அல்லது நீதி மன்றத்தின் முன்பு மன்னிப்புக் கேட்டு விட்டு நான் வெளியே வந்தால், நீங்கள் என்முகத்தில் விழிக்க வேண்டாம். கஷ்டங்களை, கணவர் அனுபவிக்கும்போது நான்மட்டும், என் பிள்ளைகளுடன் சுகவாசியாக இருப்பேனா? அப்படிப்பட்ட நான் உங்களது மரியாதைக்குரிய மனைவியாவேனா?"
"நான்தான் இந்தப் பெண்கள் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்துவேன். இதில் யோசித்துப் பார்க்க இருவித கருத்துக்கள் இல்லை".... என்று கூறினார் கஸ்தூரி பாய்.
அதற்கேற்ப, தென்னாப்ரிக்க இந்தியர்களது போராட்டத்தை, குறிப்பாகப் பெண்கள் படைக்குத் தலைமையேற்று அறப்போர் செய்து வீராங்கனையாக சிறை புகுந்தார் கஸ்தூரி பாய்!
அரசியல், பொருளாதாரம், சமூக உரிமைகள் இவற்றைப் பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாத அன்னை கஸ்தூரிபாய், தனது கணவரின் லட்சியம், அரசியல், மரியாதை, போராட்டம், மக்களது உரிமைகள் மீட்பு என்பதை மட்டுமே புரிந்து, தனது கணவர் ஏதாவது செய்கிறார் என்றால், அதில் உண்மை, சத்தியம், நியாயம் இருக்கும் என்று தனது புருஷன் சொல்லே வேதவாக்கு என்று நம்பி அவர் சிறை புகுந்தார்!
இதற்குப் பிறகு தென்னாப்ரிக்க இந்தியரின் உரிமைப் போராட்டம் வெற்றி பெற்றது. இந்தியருக்கு விரோதமான சட்டங்களை ஆங்கிலேயர் திரும்பப் பெற்றுக் கொண்டனர். அன்னை கஸ்தூரி பாய் விடுதலை செய்யப்பட்டார்!
இந்த சேவை மனப்பான்மை நிறைந்த தொண்டுள்ளத்துடன் எண்ணற்ற செயல்களை இந்திய விடுதலைக்காகச் செய்து மறைந்தவர் அன்னை கஸ்தூரிபாய் காந்தி. அந்த மாதரசியின் வரலாற்றை தொடர்ந்து இனி காண்போம்.
xxx
‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல’
கஸ்துரிபாய்!
குஜராத் மாநிலத்தில் போர் பந்தர் என்பது ஒரு சிறுநகர். அங்கே வாழ்ந்தவர் கோகுல்தாஸ் மாகன்ஜீ. அவருடைய மனைவியின் பெயர் விரஜகும் பா. இவர்களின் மூத்தமகள் தான் கஸ்தூரி பாய். இவர் 1869-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலே அந்த நகரிலே பிறந்தார்! காந்தி அடிகளாரை விட வயதில் ஆறுமாதம் மூத்தவர் அன்னை கஸ்தூரி பாய்.
சிறுவயதில் பெற்றோருக்கு இவர் செல்லக் குழந்தை. பள்ளிக் கூடத்துக்கு அனுப்பப்பட்டாரா என்றால் அதுவுமில்லை; செல்லக் குழந்தை அல்லவா? அதனால் ஆனால், குடும்ப வேலைகளை எல்லாம் அக்கறையாகவும், அழகாகவும் செய்யும் திறமை மட்டும் அவருக்கு இருந்தது.
கஸ்தூரிபாய் பிறந்து வளர்ந்த போர் பந்தர் சிறுநகரிலேயே கரம்சந்த் காந்தி என்ற வைசியர் ஒருவரும் வாழ்ந்து வந்தார். அவருக்கு மனைவிகள் நான்கு. நான்காவது மனைவி பெயர் புத்லிபாய். இவர்கள் இருவருக்கும் 1869-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள், இரண்டாவது மகனாகப் பிறந்தவர் தான் மகாத்மா காந்தி அடிகள் என்ற மோகன்தாஸ் காந்தி.
காந்தியின் தந்தையாரும், கஸ்தூரிபாய் தந்தையாரும் ஒரே நகரைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, மிகவும் நெருங்கிய நண்பர்களும் கூட. அதனால் இருவரும் கலந்து பேசி காந்திக்கும் - கஸ்தூரிக்கும் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணமானதும் மனைவிமீது மிகுந்த பற்றும் அன்பும் கொண்டு இல்லற சுகத்தில் கவனம் செலுத்தியதால் கஸ்தூரி பாய்க்கு கல்விப் பயிற்சி கொடுக்கத் தவறிவிட்டார் காந்தி.
தனக்கொரு மனைவி சிறுவயதிலேயே கிடைத்துவிட்டதால் அதிகாரம் புரியும் மனமும், தனக்கு மனைவி எல்லா வகையிலும் கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடக்கத்தான் வேண்டும் என்ற ஆதிக்கமும் காந்தியடிகளுக்கு இருந்தது.
இந்தப் போக்கு இருவரையுமே சில நாட்கள் பகல் நேர ஊமைகளாக்கி விட்டது. ஆனால் இரவு நேரங்களில் இருவருமே ஊமை களைந்து ஒரே ஓட்டிற்குள் ஆமைகள் புகுவது போல் வாழ்ந்து வந்தார்கள்.
இந்த நிலையில் தான் காந்தியை சில சமயங்களில் கட்டுப் பாட்டுடன் நெறிப்படுத்திய பெருமையும் பெற்றிருந்தார், கஸ்துரி பாய்.
உயர்நிலைப் பள்ளியில் காந்தி படித்துக் கொண்டிருந்தார். அப்போது தீய குணங்களையுடைய நண்பன் ஒருவன் அவரிடம் நட்புக் கொண்டு பல கெட்ட பழக்கங்களை காந்திக்குக் கற்பித்து வந்தான்.
பிறரிடம் கேள்விப்பட்ட அவனது தீச் செயல்களைக் கேட்டு, காந்தியின், அன்னை அவரை எச்சரித்தார்; அவரது தமையனும் கண்டித்தார்; இறுதியாக மனைவி கஸ்தூரிபாயும் கடுமையாக அறிவுரை கூறினார்:
இம் மூவரின் புத்திமதியைக் காந்தி கேட்காமல், 'நான் நல்லவனாக நடந்தால் என்னை யாரும் கெடுக்க முடியாது. என் மனம் மற்றவரை உணரும் திறன் பெற்றது', என்று கூறியபடியே அவனிடம் நெருங்கிப் பழகினார்! இதைக் கண்ட கஸ்தூரிபாயும், சற்றுக் கடுமையாகவே கணவனைக் கண்டித்து அறிவுரை கூறினார். இதைப் பார்த்த காந்தி, கணவனுக்கே புத்திமதி கூறிடும் தகுதி மனைவிக்கு உண்டா? யார் கொடுத்த அதிகாரம் உனக்கு? அந்தத் தகுதி எப்படி வந்தது? என்றெல்லாம் ஆணாதிக்கத் தொனியில் கஸ்தூரி பாயைக் கேட்டார். இருந்தும், மனைவி கணவனை அடிக்கடி எச்சரித்தவாறே இருந்தார்.
இறுதியாக அந்தத் தீயவன் கஸ்தூரிபாயின் கற்பொழுக்கம் மீதே சந்தேகத்தை உருவாக்கிவிட்டான் காந்திக்கு! அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் அல்லவா? அதனை நம்பி, மனைவி கஸ்தூரி பாய் நடத்தையிலேயே ஐயம் கொண்டு துன்புறுத்தினார் காந்தி.
கஸ்தூரி பாய்க்கு, அந்த நேரத்தில் நண்பனின் வார்த்தைகளை நம்பிச் செய்த கொடுமைகளை காந்தியடிகள் தனது சுயசரிதையில் கீழ்க் கண்டவாறு எழுதியுள்ளார். உண்மையை உணர்பவன் தானே உத்தமமான மனிதன்? காந்தி அடிகள் எழுதுவதைப் படியுங்கள்:
"நான் நண்பன் கூறிய சந்தேகத்தை நம்பியதால் என் மனைவிக்குச் செய்த கொடுமைகளை இப்போது எண்ணும் போதும், என்னை நானே மன்னிக்க முடியவில்லை.
"இத்தகைய கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ளப் பாரதப் பெண்களைத் தவிர வேறு யாரால் முடியும்? இந்தியப் பெண்கள் பொறுமையின் வடிவம் என்று நான் கூறுகிறேன்.
"ஏனென்றால், குற்றம் செய்யாத ஒரு வேலைக்காரனைக் கண்டித்தால் அவன் வேலையைத் துறக்க முடியும். மகனும் அவ்வாறே தனது தந்தையைப் பிரிய முடியும்; மனைவிக்கு கணவன் மீது சந்தேகம் உண்டானால் மெளனமாகப் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனால், கணவனுக்கு மனைவி மீது சந்தேகம் வந்து விட்டாலோ அவள் வாழ்க்கை அடியோடு நாசம்தான். அவளுக்கு வாழ்க்கை வேறு ஏது?. எங்கே போவாள்?
மனைவி விடுதலை கேட்டுச் சட்டத்தின் துணைகொண்டு நீதி மன்றம் செல்வாள்! அந்தச் சட்டங்களல் அவளுக்குரிய வாழ்வு கிடைத்துவிடுமா என்ன?
"நான், அன்று என் மனைவி கஸ்துரி பாயை இத்தகைய ஒரு கொடுமைக்கு ஆளாக்கி விட்டதை எண்ணி இன்றும் சொல்லொணா வேதனையால் வருத்தப்படுகிறேன். எனக்கு மன்னிப்பு ஏது? என்று காந்தியடிகள் கஸ்தூரி பாயின் அன்றைய நிலையை உணர்ந்து கண்ணீர் வடித்து வருத்தப்பட்டு எழுதியுள்ளார்.
ஆனால், அன்னை கஸ்தூரி பாய், இந்த அக்ரமங்களை எல்லாம் வள்ளுவர் பெருமான் கூறியபடி ’அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல’ பொறுத்துக் கொண்டார்! அதனால் காந்தியடிகளுக்கு மனைவி மீது ஒரு கருணை ஏற்பட்டது. தீ நட்பால் கெட்டு விடாதே என்று தந்தை எச்சரித்த போதும், தாய் கண்டித்தபோதும், தமையன் கண்டனம் செய்த போதும் கேளாத காந்தியடிகள், இறுதியில் தனது மனைவி கஸ்தூரி பாய் கண்டித்ததற்காக அவருக்கு அக்கிரமமாக தண்டனை வழங்கி’,’பிறகு தன்னையே தான் உணர்பவந்தான் மனிதன்’ என்ற தத்துவ வாதியாக மாறினார்!
மனைவி சொல்வதைக் கேளாத காரணத்தையும், அதனால் ஏற்பட்ட இன்னல்களை எல்லாம் ஒரு தாளில் எழுதி, தனது தந்தையிடம் கொடுத்து, தீய நட்பால் உருவாகிய துன்பங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் காந்தியடிகள்!
xxx
காந்தியின் இளமை உணர்வுகள்
கரம் சந்த்காந்தி நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். தனது தந்தையை இரவிலே கண்போல காத்து அவருக்குரிய பணிகளைச் செய்து வந்தார் காந்தி!
பகலிலே காந்தி பள்ளிப் படிப்புக்குச் சென்ற பின்பு, நோயாளிக்குரிய சேவைகளை அவரது மனைவி புத்லி பாயும், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த கஸ்துரி பாயும் செய்து வருவார்கள்.
ஒரு நாள் இரவு! தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் காந்தி அவசரம் அவசரமாகச் செய்தார்! ஆசையோடு தனது படுக்கை அறைக்குச் சென்று கர்ப்பிணி கஸ்தூரி பாயைத் தட்டி எழுப்பினார்; சில நிமிடங்களுக்குள் அவரது தந்தையார் இறந்து விட்ட செய்தி காந்தி அறைக்கு வந்தது!
ஓடினார் தகப்பனார் அறைக்குக் காந்தி! பாவம் கரம் சந்த், காலமாகிவிட்டார். காந்தியடிகள் மிகவும் வேதனைப்பட்டு சிற்றின்ப ஆசையால், தந்தையின் கடைசி நேரத்தில் அவருக்குப் பக்கத்தில் இருக்க முடியவில்லையே என்பதை எண்ணி எண்ணி கண்ணீர் விட்டு வருத்தப்பட்டார் இளம் வயதுக் காந்திக்கு இந்தச் சோகம் நீண்ட நாள் தனது நினைவை விட்டு அகலவில்லை. சத்திய சோதனை நூலில் அதைக் குறிப்பிடுகிறார்.
தந்தை மறைவுக்குப் பின்கஸ்தூரி பாய்க்கு முதல் குழந்தை பிறந்தது. சில மணி நேரம் கழித்து அதே அறையிலேயே அந்தக் குழந்தை இறந்துவிட்டது. இளம் தம்பதிகள் இருவருமே மீளா வேதனையிலே வருத்தப்பட்டார்கள்!
காந்தி, கி.பி.1888-ஆம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேர்விலே தேறினார். இதைக் கண்ட அவரது தமையனும், குடும்ப நண்பர்களும் அவரை இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பி சட்டத்துறையிலே பாரிஸ்டராக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.
வெள்ளைக்காரன் நாட்டுக்குக் காந்தி படிக்கப்போவதை, காத்தியின் வைசிய குல மக்கள் எதிர்த்தார்கள்! தாயும், தமையனும் காந்தி மேல் நாட்டு மோகத்திலே சிக்கி வழி தவறிப் போய்விடும் நிலை ஏற்படுமோ என்று பயந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் காந்தி ஆறுதல் கூறி, ஒருக்காலும் ஒழுக்கத்தை விட்டு நழுவமாட்டேன் என்று சத்திய வாக்கு கொடுத்துவிட்டு இங்கிலாந்துக்குப் புறப்பட்டார்.
அந்த நேரத்தில் கஸ்தூரிபாய் தனது பிறந்த வீடான ராஜ்கோட் நகரில், இரண்டாவது ஆண் குழந்தையுடன் இருந்தார். கணவன் மீதுள்ள பாசத்தால், அவரைப் பிரிகிறோமே என்று மனம் கலங்கினார்.
காந்தி பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் திரும்புவதற்கு முன்பே புத்லி பாயும் மறைந்தார். தாயார் இறந்து விட்ட செய்தியை, படிப்பு வீணாகிவிடக் கூடாதே என்ற கவலையால் இங்கிலாந்திலே உள்ள காந்திக்கு அவரது தமையனார் உடன் தெரிவிக்காமல் இருந்து விட்டார். இந்தியாவுக்கு வந்த பிறகு தான், அவரது தாயார் மரணத்தை காந்தி அறிந்து மிகவும் வருந்தினார்.
பாரிஸ்டராக காந்தி திரும்பி வந்தார்; குடும்பத்தில் தந்தையில்லை தாயுமில்லை; மீண்டும் கஸ்தூரி பாயுடன் குடும்பம் நடத்தினார். முன்பு எப்படி மனைவிக்குத் தொல்லை களையும் உபத்திரவங்களையும் தந்து கொண்டிருந்தாரோ அதே நிலைதான் மீண்டும் உருவானது. இந்தக் குறை கஸ்தூரி பாயிடம் இல்லை!
இளம் வயதுக் காந்தியிடம் பெருங்குறைகள் குடி கொண்டிருந்தன. பாரிஸ்டர் படிப்புக்காக மூன்றாண்டுக் காலம் இங்கிலாந்தில் இருந்து அனுபவம் பெற்ற பின்பும், பாரிஸ்டர் பட்டம் பெற்ற கல்வித்துறை அறிவு இருந்தும் கூட கல்வி அறிவு அறவே அற்ற கஸ்தூரி பாய் மீது அவர் கொண்ட பழைய அழுக்காறுகள் நீங்கியபாடில்லை!
தீய நண்பன் மூட்டிவிட்ட பொய்யுரை, கற்பனைப் பழி காந்தியை விட்டு அகலவில்லை. சிறு சிறு குடும்ப விஷயங்களுக்கு எல்லாம் கூட அவர் மனைவி மீது சந்தேகப்படும் நிலைவெட்ட வெட்டத் துளிர்க்கும் மரமாக முளைத்தது.
இங்கிலாந்தில் இருந்தபோது கஸ்தூரி பாய்க்கு படிக்க, எழுத கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அடிக்கடி எண்ணுவார்! ஆனால், தந்தை இறந்த போதும் அவரின் சிற்றின்ப ஆசை விடாததைப் போன்று, இரண்டு குழந்தைகளைப் பெற்று விட்ட பிறகும் கூட சிற்றின்ப உணர்வு அவரை அலைக்கழித்துக் கொண்டே இருந்தது.
ஒரு முறை அவர் மனைவியைத் தாய் வீட்டுக்குக் கோபமாக, துன்புறுத்தி அனுப்பிவிட்டார். அங்கே கஸ்தூரிபாயும் மனம் நொந்திருந்தார். ஆனால் சிற்றின்ப உணர்வால் உந்தப்பட்டு அவரை மீண்டும் அழைத்து வந்தார்.
xxx
வெறி பிடித்த வெள்ளையரும்
காந்தியும்
ராஜ்கோட் நகரில் தொழில் செய்து வந்த பாரிஸ்டர் காந்திக்குப் போதிய வருவாய் வரவில்லை. பம்பாய் சென்றால் வருமானம் வருமென்று அங்கிருந்த வழக்குரைஞர்கள் காந்தியிடம் கூறினார்கள்.
வந்தார் பம்பாய்க்கு காந்தி! இங்கும் அவருக்குரிய வருமானம் கிடைக்கவில்லை. வழக்குரைஞர் பணி புரிவோருக்கு அச்சம் அரும்பக்கூடாது. சட்டத்தின் சந்நிதானத்திலே கம்பீரமாகப் பேசும் தொனி இருக்க வேண்டும். எள் மூக்களவும் கூட கூச்ச சுபாவம் இருக்கக் கூடாது என்பது மட்டுமல்ல, எங்கும் எப்போதும் எவரிடமும் சரளமாக வாதாடும் திறமையும் அமைய வேண்டும்.
இந்தியாவில் படித்த வழக்குரைஞருக்கே இந்த அளவுகோல் என்றால், இங்கிலாந்து போய் சட்டம் படித்து விட்டு வந்த ஒரு பாரிஸ்டருக்கு இவற்றை விட அதிகத் திறமை இருந்தால் தானே, வரம்பற்ற வருமானம் வர வழி பிறக்கும்!
காந்திக்கு எப்போது பார்த்தாலும், சங்கோஜ சுபாவமும், அச்சத்தால் அஞ்சும் குணமும் குடிகொண்டு இருந்ததாலும், அவரது தோற்றமும் அவருக்குச் சரிவர ஒத்துழைக்காததாலும், அவரால் புகழ் பெற்ற பாரிஸ்டராக வர முடியவில்லை. அதனால், அவருக்குப் போதிய வருமானம் இல்லை; வீண் செலவு தான் மிச்சமாக இருந்தது மீண்டும் காந்தி ராஜ்கோட் நகருக்கே திரும்பி விட்டார். காந்தியின் தமையனார் உதவியால் நீதிமன்றம் வருவோருக்கு மனுக்களை எழுதிக் கொடுத்து வருமானம் தேடினார். இந்த நேரத்தில் அவரது அண்ணன், கரிம் ஜவேரி என்ற ஒருவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்த கரீம் ஜவேரி, தென் ஆப்ரிக்காவில் இருந்த தாதா அப்துல்லா என்ற பெரிய வியாபாரச் சீமானுக்கு நண்பர், அந்த வியாபார நிறுவன உரிமையில் இவர் பாகஸ்தர். அவர்களுடைய வழக்கு ஒன்று தென் ஆப்ரிக்காவில் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அந்த வழக்குக்கு உதவி செய்ய காந்தியை ஜவேரி அழைத்தார். காந்தியும் ஒப்புக் கொண்டார். இருப்பினும் தனது இல்லத் தரசியை விட்டுவிட்டுப் போக அவருக்கு மனமில்லை.
இருந்தாலும், தென் ஆப்ரிக்காவுக்குப் போயே ஆக வேண்டும் என்ற தொழில் விருப்பத்தால் "ஒரு வருடத்தில் திரும்பி வந்து விடுகிறேன்" என்ற வாக்குறுதியை மனைவிக்குக் கொடுத்துவிட்டு விடைபெற்றார்.
இளம் வயதிலேயே இரண்டு பேருக்கும் பால்ய விவாகம் நடந்ததாலும், எப்போதும் அந்தத் தம்பதிகள் சேர்ந்து வாழக் கூடாது என்பதற்காகவும் இருவரும் அடிக்கடி பிரிக்கப்பட்டு, தாய் வீடு, மாமனார் வீடு என்று பிரிந்து வாழும் வாழ்க்கையினை நடத்தி வந்தார்கள்.
இப்போது சதி, பதி இருவருமே எல்லா விவரமும் தெரிந்து கொண்ட பின்பும், பிரிவுத்துயரத்தைக் கஸ்தூரி பாய் ஏற்கவேண்டிய துன்பநிலை உருவானது. இருபத்து நான்கு வயதான பின்பும், இரு குழந்தைகளை ஈன்ற பின்பும் கூடவா பிரிவுத் துன்பம் என்று எண்ணி, தனது தந்தை வீட்டிலேயே அவர் வாழ்ந்தார்.
ஓராண்டுக்குள் மீண்டும் சந்திப்போம் என்ற வாக்குறுதியைத் தந்து விட்டுப் போன காந்திக்கு தென்னாப்ரிக்கா அனுபவம், ஒரு சோதனைக் கூடமாக உருவெடுத்து விட்டது.
ஒரு வழக்கில் வாதாடிடச் சென்ற காந்தி, தென் ஆப்ரிக்கா சென்றதும் ஓர் அரசியல் வாதியாகும் நிலை எதிர்பாராமல் அவருக்கு ஏற்பட்டு விட்டது.
எந்த வழக்குக்காக அவர் உதவி செய்திடச் சென்றாரோ, அந்த வழக்கை அவர் சமாதானம் பேசி, சுமுகமாகத் தீர்த்து வைத்து விட்டதால் காந்திக்கு அங்குள்ள இந்தியர்கள் இடையே புகழ் உருவானது; நற்பெயரும் பெற்று விட்டார்.
அந்த நேரத்தில் தென் ஆப்ரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்றது. அவர்களால் இந்தியாவிலே இருந்து அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள் கூலிகள் என்றும், அடிமைகள் என்றும், சம உரிமைகளற்று இழித்துரைக்கப் படுவதைக் காந்தி நேரிலேயே கண்டார்; வேதனைப்பட்டார்; அந்த அவமானத்தை அவரும் இந்தியர் என்ற காரணத்தால் அனுபவிக்கும் இழிநிலைகளுக்கு ஆளானார். இதனால் அறப் போர் வீரராக மாறினார்.
தென்னாப்ரிக்காவின் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து சட்ட மறுப்புப் போராட்டம் என்ற ஒரு புது அறப்போரைத் துவக்கினார். இந்தியர்கள் தன்மானத்தோடும், சுயமரியாதையோடும் அவர்களது உரிமைகளைப் பெற்றாக வேண்டும் என்பதே அந்தப் போராட்டத்தின் நோக்கமாகும். அதற்காகவே, வன்முறைகள் இல்லாத ஒரு போராட்டத்தைக் காந்தியடிகள் துவக்கினார்.
எந்தவித ஆதரவும் இல்லாமல், யாருடைய ஒத்துழைப்பையும் எதிர்பாராமல், காந்தி நடத்திய இந்த சத்தியாக்கிரகத்தால் அவர் உலகில் பிரபலமான ஒரு போராட்ட வீரர் என்ற புகழைப் பெற்று விட்டார்.
"ஒராண்டுக்குள் திரும்பி வந்து விடுகிறேன்” என்று கஸ்தூரி பாயிடம் வாக்களித்து விட்டு சென்ற காந்தியடிகள் மூன்றாண்டுகள் வரை தென்னாப்பிரிக்காவில் தங்கும் நிலை ஏற்பட்டு விட்டது. அவர் நடத்திய போராட்டம் முடிந்ததும் காந்தி இந்தியா திரும்பினார்.
இந்தியா திரும்பி வந்த அவர், தென்னாப்ரிக்க இந்தியரின் உரிமைகளை மீட்டுக் கொடுத்து விட்டுத் திரும்பியதால், இந்தியாவில் உள்ள தலைவர்களையும், பத்திரிகை ஆசிரியர்களையும் சந்தித்து நடந்த விவரங்களை உலகுக்கு உணர்த்தினார்.
பிறகு, மனைவி கஸ்தூரி பாயையும், தனது இரு குழந்தைகளையும், சகோதரி மகனையும் தன்னோடு அழைத்துக் கொண்டு, மீண்டும் தென்னாப்ரிக்காவுக்கு கப்பல் ஏறிப் புறப்பட்டார்.
ஆப்பிரிக்காவிலுள்ள டர்பன் துறை முகத்தைக் கப்பல் அடைந்தது. இதைக் கேள்விப்பட்ட தென்னாப்ரிக்க ஆங்கிலேயர் ஆட்சி, காந்தி மீண்டும் தென்னாப்ரிக்கா வருவதை விரும்பவில்லை.
காந்தியடிகள் பயணம் செய்து வந்த கப்பல் தாதாபாய் நிறுவனத்துக்கு உரிமையானது. அதனால், காந்தியை மீண்டும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி விடுமாறும், அதற்கான செலவுகளை கப்பல் நிறுவனத்துக்குக் கொடுத்து விடுவதாகவும் ஆங்கிலேயர் அரசு தாதாபாயிடம் தெரிவித்து விட்டது. அதற்கு கப்பல் உரிமையாளர் இணங்காமல் மறுத்து விட்டார். தென்னாப்ரிக்கா வெள்ளையர்கள், தங்களை இழிவுபடுத்தி காந்தி போராடியதால், ஆத்திரம் அடைந்தனர். குடும்பத்தோடு காந்தி கப்பலை விட்டு இறங்கியதும் அவர்களைத் தாக்கத் தயாராக இருந்தார்கள்.
இதனால்,வைத்திய சோதனை என்ற காரணத்தைக் காட்டி அவர் பயணம் புரிந்து வந்த கப்பலைத் துறை முகத்திலேயே ஆங்கில அரசு நிறுத்தி விட்டது. இவ்வாறு நான்கு நாட்கள் கப்பல் கடலிலேயே காத்திருந்தது.
காந்தியடிகள் தனது குடும்பத்தினருக்கும், கப்பல் பயணிகளுக்கும் தைரியம் கூறினார். இறுதியாக, ஐந்தாவது நாளன்று கப்பலிலிருந்த அனைவரும் கரைக்கு வர அனுமதிக்கப்பட்டார்கள்.
காந்தி கரை வந்தால் ஆங்கிலேயர்கள் வன்முறையில் ஈடுபட ஆயத்தமாக இருக்கிறார்கள் என்ற தகவல் கப்பல் தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனால், சூரியன் மறைந்த பிறகு காந்தி கரை வந்து சேர்ந்திடத்தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இவ்வாறு திருட்டுத் தனமாகக் காந்தி கரைவந்து சேர்ந்திட தாதா அப்துல்லா கப்பல் நிறுவன வழக்குரைஞர் லாப்டன் பிரபு விரும்பவில்லை. அதனால், லாப்டன் பிரபுவே தக்க பாதுகாப்புடன் காந்தியை அழைத்துக் கொண்டு கரை வந்து சேர்ப்பதாகக் கப்பல் தலைவருக்குத் தெரிவித்தார்.
கஸ்தூரி பாயும் குழந்தைகளும் கப்பல் நின்றிருந்த இரண்டு மைல் தூரத்திலிருந்து நடந்து வந்தே கரை சேர்ந்து ரஸ்தோம் ஜி என்ற காந்தியின் நண்பருடைய வீட்டிற்கு வந்தார்கள். அதற்குப் பிறகு காந்தியும் வழக்குரைஞரும் கப்பலை விட்டு இறங்கி பாதுகாப்புடன் கரை சேர்ந்தாார்கள்.
காந்தியைத் தாக்குவதற்காகத் திரண்டிருந்த வெள்ளையர் கூட்டம் அதோ காந்தி வருகிறார் என்று வெறித் தனத்தோடு கூச்சலிட்டுக் கலவரம் செய்தார்கள். பிறகு அவரை ரிக்ஷாவில் ஏற்றி அனுப்பிட லாப்டன் முயன்றபோது, அதைத் தடுத்து வன்முறையில் அவர்கள் ஈடுபட்டதைக் கண்ட ரிக்ஷாக்காரன் பயந்து ஓடி விட்டான்.
பிறகு, காந்தியைத் தாக்க அந்த வன்முறைக் கூட்டம் முயன்றது. பாதுகாப்புக்கு வந்திருந்த ஒரு காவல் துறை அதிகாரியின் மனைவி, காந்தியைக் காப்பாற்றி ரஸ்தோம் ஜி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
வெறிக் கூட்டத்தினரின் ஆரவார அட்டகாசங்களைக் கண்ட கஸ்தூரி பாய் பயந்து போனார். வெளிநாட்டில் முதல் அனுபவம் அல்லவா அது?
கஸ்தூரி பாயும் காந்தியும் அவரது குழந்தைகளும், வழக்குரைஞர் லாப்டனும் தக்க பாதுகாப்புடன் ரஸ்தோம் ஜி வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்!
xxx
அகிம்சை நெறியின் ஆரம்பம்
நேட்டால் என்ற நகரில் 'இந்தியர் காங்கிரஸ்' என்ற ஓர் இயக்கத்தைத் துவக்கி, அதற்குரிய உறுப்பினர்களைச் சேர்த்தார் காந்தியடிகள் இதற்கிடையில் அவரைத் தாக்க வந்த வெள்ளையர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தென்னாப்ரிக்க இந்தியர்கள் அவரை வற்புறுத்தினார்கள்.
தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாது வெள்ளையர்கள் என்மீது கோபமடைந்து வன்முறையில் ஈடுபட்டார்கள். அவர்களை மன்னித்து விடுவது தான் மனிதத் தன்மை என்று இந்தியர்களுக்குக் கூறி அவர்களை அமைதிப்படுத்தினார். தனது அகிம்சா நெறிக்கு கால் கோள் விழா நடத்தும் வகையில் வெள்ளையர்களை மன்னித்து விட்டார். இதனை அறிந்த வெள்ளையர்களிற்கு காந்தி மீது ஒருவித அனுதாபத்தை உருவாக்கிவிட்டது.
இந்தியாவிலிருந்து டர்பன் நகர் வந்த காந்தி, கஸ்தூரி பாயுடனும், தனது பிள்ளைகளுடனும் நேராகத் தென் ஆப்ரிக்காவிலே உள்ள இந்தியர்கள் வாழும் நேட்டால் என்ற நகருக்கு வந்து, ஃபீனிக்ஸ் செட்டில்மெண்ட் என்ற தனி வீடு ஒன்றை எடுத்துக் குடும்பத்தை நடத்தி வந்தார்.
நேட்டால் நகரிலே உள்ள இந்தியர்களை ஒன்று திரட்டி, அதன் மூலமாக, வெள்ளையர்களின் நிற வெறியை எதிர்க்கத் திட்டமிட்டுக் காந்தி பணியாற்றி வந்தார்.
குடியிருக்கத் தனி வீடு கிடைத்து விட்டதால், இனி சுகமாகத் தனிக் குடித்தனம் நடத்தலாம் என்று கணவர் காந்தியுடனும் பிள்ளைகளுடனும் கஸ்தூரிபாய் குடும்பத்தைக் கவனித்து வந்தார்.
நேட்டால் இந்தியர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தினந்தோறும் காந்தியின் வீட்டிற்கு வருவதும், இரவு பகலாக அவரது இல்லத்தில் தங்குவதும் அதிகமானதால், அவர்களுக்குரிய உணவு வகைகளைச் சமைத்துப் போட்டுப் பரிமாறும் பணிகள் கஸ்தூரிபாய்க்கு அதிகரித்து விட்டன.
மருத்துவ மனைகளில் உடல் நலம் குன்றிச் சிகிச்சை பெறும் இந்தியர்களை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களுக்கும் உணவு சமைத்துப் போடும் பணிகள் நாளுக்கு நாள் கஸ்தூரிபாய்க்கு பெருகிவந்தன.
தொழு நோயாளிகளைக் காந்தி தனது வீட்டுக்கே அழைத்து அவர்களையும் அதே வீட்டில் தங்கும்படி செய்வார். அவர்களது புண்களைத் தினந்தோறும் கழுவி சுத்தம் செய்து மருந்து போடுவார் காந்தி. கஸ்தூரி பாயும் அவருடன் சேர்ந்து அவர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய கஸ்தூரிபாய் முகம் சுளித்தால், அருவருப்புக் காட்டினால் காந்தி தனது மனைவியிடம் எரிந்து விழுவார். வாயில் வந்தபடியெல்லாம் திட்ட ஆரம்பிப்பார்:
வருவோர் போவோருக்குச் சமைத்துப் போடவும், அவர்களுக்குரிய பணிகளைச் செய்யவும் கஸ்தூரி பாயினால் முடியவில்லை. உடல் வலிக்க, களைக்க வேலைகளைச் செய்து வருவார்.
'நான் நினைப்பதை எல்லாம் நீயும் நினைக்க வேண்டும். நான் செய்வதை எல்லாம் நீயும் செய்ய வேண்டும்; எனக்கு வேண்டியவர்கள் எல்லாம் உனக்கும் வேண்டியவர்கள் தான் என்று நீ எண்ண வேண்டும்; முகம் சுளித்தால் உன் முகத்தில் நான் விழிக்கமாட்டேன்' என்று அதட்டிப் பேசுவார் காந்தி,
இந்தக் குடும்பச் சூழ்நிலைகளை இதற்கு முன்பு கஸ்தூரி பாய் அனுபவித்தவர் இல்லை! அதனால் அவருக்கு இவரது பொது வாழ்க்கை தொல்லைதரும் அனுபவங்களாக இருந்தன. இருந்தாலும், கணவன் என்ற முறையிலே அவர் இடும் கட்டளைகளை ஏற்று உழைத்துத் தேய்ந்து வந்தார் கஸ்துரி பாய்.
காந்திக்கு வழக்குரைஞர் தொழிலில் நல்ல வருமானம் வந்தது. அந்தப் பணம் எல்லாம் காந்தியின் செயல்களால் செலவாகும் நிலையும் ஏற்பட்டது.
கஸ்தூரி பாய் கூறும் குடும்ப கஷ்டங்களைச் சிந்தித்தார்; செலவாகும் வழிகளைக் குறைத்தார்; தனது வாழ்க்கையை எளிமையாக நடத்தி வரப் பழகினார் காந்தி.
காந்தியின் வீடு நாகரீக முறையில் கட்டப்பட்டது தான் என்றாலும், அந்த வீட்டில் கழிவு நீர் போக நல்ல சாக்கடை வசதி இல்லை. ஒவ்வொரு அறையிலும் சிறுநீர் கழிப்பதற்கு ஒவ்வொரு மண் சட்டிதான் இருக்கும். விருந்தாளிகளாக வந்து தங்கியிருப்பவர்களின் மண் சட்டிகளை எல்லாம் கஸ்தூரி பாய் தான் எடுத்து வெளியே கொட்டிச்சுத்தம் செய்ய வேண்டும் என்று காந்தி கட்டளையிடுவார் கஸ்தூரிபாய்க்கு இந்தப் பணிகளை எல்லாம் இதற்கு முன்பு செய்து பழக்கம் இல்லாததால் அவர் மனம் தீராத வேதனைப் பட்டுக் கொண்டே இருந்தது.
ஒருநாள் ”இது என்ன அருவருப்பான வேலை? அவரவர் மண்சட்டிகளை அவரவர் சுத்தப்படுத்திடக் கூடாதா? இதை எல்லாம் நான் செய்ய வேண்டும் என்பது எனது தலை எழுத்தா?" என்று கேட்டுவிட்டார் கஸ்தூரி பாய்.
’நீ செய்துதான் ஆகவேண்டும்’ என்று ஆங்காரமாக உரத்த குரலில் பேசினார் காந்தி. ஒருநாள் கிறிஸ்துவர் ஒருவர் காந்தி வீட்டில் வந்து தங்கினார். அவர் நேட்டால் நகருக்குப் புதியவர். அவருடைய படுக்கை அறையை சுத்தப் படுத்துவதைக் காந்தியோ, கஸ்தூரிபாயோ செய்து வந்தார்கள். மல ஜலம் கழிக்கும் பீங்கான் பாத்திரங்களைச் சுத்தம் செய்வதையும் கஸ்தூரி பாய் தயக்கமின்றி காந்திக்குப் பயந்து செய்தார்.
ஆனால் ஹரிஜனன் ஒருவருடைய மல ஜலம் கழித்த பீங்கான் பாத்திரத்தைக் கழுவிச் சுத்தம் செய்ய கஸ்தூரி பாய்க்கு மனம் இடம் தரவில்லை. தான் மட்டுமல்ல; தனது கணவர் காந்தியும் அந்தப் பணியைச் செய்ய அவர் விரும்ப வில்லை. இதனால் கணவருக்கும் மனைவிக்கும் சண்டையும் சச்சரவுகளும் மூண்டன. இருப்பினும், கஸ்தூரி பாய்தான் அப்பீங்கானைக் கழுவ வேண்டும் என்று காந்தி கட்டளையிட்டார்.
கஸ்தூரிபாய் கண்கள் நெருப்புக் கோளமாகச் சிவந்து விட்டன; மளமளவென்று கண்ணிர் சிந்தினார். மனவேதனையுடன் கஸ்தூரி பாய் பீங்கான் பாத்திரத்தைக் தூக்கிக் கொண்டு படியிறங்கி வரும்போது; காந்தி மனைவியை கோபக் கண்களுடன் பார்த்து ஆத்திரப் பட்டார். இது போன்ற வேலைகளை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டுமே தவிர, வெறுப்புடன் முகம் சுளித்துக் கொண்டு அருவருப்பாக எனது வீட்டில் செய்யக் கூடாது என்று இரைச்சலிட்டுப் பேசினார் காந்தி.
இதைக் கேட்ட கஸ்தூரி பாய் பொறுமை இழந்து, "அப்படியா உங்கள் வீட்டை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்; நான் போகிறேன்" என்று எதிர்த்து கூச்சலிட்டுக் கத்தினார்.
உடனே கோபம் கொதித்து வந்த காந்தி மனைவியை உதைத்து, அறைந்து பரபரவென்று கையைப் பற்றி இழுத்துக் கொண்டு கதவைத் தாண்டிக் கொண்டு வந்து வெளியே தள்ளி விட எண்ணினார் கதவைத் திறந்தார்! பாவம் கஸ்தூரிபாய்! கண்களில் கண்ணிர் சிந்தியபடியே அழுது கொண்டு நின்று விட்டார்.
எங்கே போவார் கஸ்தூரி? கண்காணாத தென்னாப்பிரிக்காவில் யார் தயவுக்கு ஏங்குவார்? எவர் வீட்டுக்குப் போவார்? அப்படிப் போனால் கணவனுக்கு அல்லவா அவமானம்? என்றெல்லாம் எண்ணிக்கொண்டு என்ன செய்வது என்று திகைத்து நின்றுவிட்டார்.
"ஐயோ என்ன செய்வேன்! கோபத்தில் நான் அப்படி நடந்து கொண்டு விட்டேனே! இந்தியாவா இது? இங்கே யார் இருக்கிறார்கள் எனக்கு ஆதரவாக? எங்கே போவேன்?” என்று மீண்டும் அழுது கொண்டே இருந்தார் கஸ்தூரி
கோபம் கொந்தளித்த காந்தி, மனைவியின் கண்ணீரைக் கண்டு மனமிரங்கி சமாதானம் செய்தார்! ’சரி போ வீட்டிற்குள் என்று சொன்னார் பிறகு காந்தியே வெட்கப் பட்டு, கதவை மூடிக் கொண்டு ஆறுதல் கூறினார் மனைவிக்கு.
இந்த சம்பவத்தைப் பற்றி மேலும் விரிவாகக் காந்தி தனது சுய சரிதையில் எழுதும் போது, "என் மனைவி என்னை விட்டுப் பிரிய முடியாது என்றால், நானும் அவளை விட்டுப் பிரிய முடியாது. எங்களுக்குள் பலமுறை சண்டை சச்சரவுகள் ஏற்பட்டது உண்டு. ஆனால், முடிவு எப்போதும் சமாதானம் தான். ஒப்பற்ற பொறுமையாலும், எதையும் சகித்துக் கொள்ளும் தன்மையாலும், இறுதியிலே வெற்றி பெறுகிறவள் என் மனைவி கஸ்தூரி பாய்தான்”. என்று குறிப்பிடுகிறார்.
தென்னாப்பிரிக்காவில் குடியேறிய காந்தி, பொது வாழ்க்கை, மனிதநேயம், சாதி ஒழிப்பு என்ற பெயரால் தனது மனைவியிடம் ஒரு கொடுங்கோலராக, ஆணாதிக்கம் கொண்ட ஒரு சாதாரண மனிதராகவே நடந்து கொண்டார்.
மாதரசி கஸ்தூரி பாய் கணவனது இந்தக் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு, காந்தியை மகாத்மாவாக உருவாக்கிக் கொண்டு வந்தார்.
xxx
புலால் எதிர்ப்பு: டாக்டருடன் வாதம்
தென் ஆப்பிரிக்காவில் காந்தி சட்ட மறுப்பு, நிறவெறி எதிர்ப்பு அறப்போர் நடத்திய போது, கஸ்தூரி பாய் ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்து ஓடாய் தேய்ந்ததால், ரத்தப் பெருக்கு நோய் ஏற்பட்டு உயிர் பிழைப்பதே கடினம் என்ற நிலை உருவாகிவிட்டது.
கஸ்தூரி பாய்க்கு மருத்துவச் சிகிச்சை பார்த்த டாக்டர் காந்திக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிலே ஒருவர். அதனால் அவர், கஸ்தூரி பாயை மிகப் பொறுப்புடனும், அக்கறையுடனும் கவனித்து, உடனே அறுவைச் சிகிச்சை செய்தால் தான் அவர் உயிர் பிழைப்பார் என்று காந்தியிடம் கூறினார்.
முதலில் கஸ்தூரி பாய் தயங்கினார்! காரணம், அவரது உடல் ஓயாத ரத்தப் பெருக்கால் மிகவும் பலம் குன்றிப் போயிருந்தது. பிறகு, அவர் அறுவைச் சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டார்.
மயக்க மருந்து கொடுக்காமலேயே டாக்டர் அவருக்கு அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். என்றாலும், அவர் அறுவைக்குப் பிறகு மேலும் பலவீனம் அடைந்தார். இந்த சிகிச்சை டப்ளின் நகரிலே நடந்தது.
ஜோஹன்ஸ் பர்க் என்ற நகரிலே காந்திக்கு ’இந்தியர் காங்கிரஸ்’ இயக்கப் பணி அதிகமாக இருந்ததால், அவர் டாக்டரை நம்பி, அவரது உத்தரவைப் பெற்று, ஜோஹான்ஸ் பர்க் நகரை வந்தடைந்தார்.
சில நாட்கள் கழித்து டப்ளின் நகரில் உள்ள டாக்டரிடம் இருந்து காந்திக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் கஸ்தூரி பாய் உடல் மிகவும் பலவீனமாக இருக்கிறது என்றும், எழுந்து உட்கார முடியாத நிலையில் அவரது உடல் உள்ளது என்றும், ஒரு முறை அவருக்கு மயக்கம் ஏற்பட்டு விட்டது என்றும் எழுதியிருந்தார்.
உடனே காந்தி அங்கிருந்து தொலை பேசியில் பேசி அவர் உடல் நிலை பற்றி விசாரித்த போது, டாக்டர் காந்தியிடம் 'உமது மனைவிக்கு மாட்டிறைச்சி சூப் கொடுக்கலாமா? என்று கேட்டார். அதற்கு காந்தி கஸ்தூரி பாயைக் கேளுங்கள் என்று பதில் கூறிவிட்டார்.
"நான் நோயாளிகளைக் கலந்து யோசிக்க முடியாது. நீங்களே நேரில் வரவேண்டும். எனது விருப்பப்படி உணவு தராவிட்டால் உமது மனைவியின் உயிருக்கு நான் பொறுப்பல்ல" என்று டாக்டர் காந்தியிடம் கூறினார்.
காந்தி உடனே டப்ளின் நகருக்கு வந்தார். அவரைப் பார்த்த டாக்டர் ”உமது மனைவிக்கு மாட்டு சூப் கொடுத்து விட்டேன்” என்றார்.
'டாக்டர் இது பெரிய நம்பிக்கைத் துரோகம்" என்று காந்தி கூறினார்.
”நோயாளிக்கு மருந்து தருவதும் பத்தியம் சொல்வதும் டாக்டரின் உரிமை. இதில் ஏதும் நம்பிக்கைத் துரோகம் இல்லை. நோயாளி உயிரைக் காப்பாற்றுவது தான் டாக்டரின் கடமை” என்றார் டாக்டர்.
நல்ல எண்ணத்தோடு, ஓர் உயிரைக் காப்பாற்றவே டாக்டர் தனது கடமையைச் செய்தார் என்று சிந்தித்த காந்தி, ”டாக்டர் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? என்பதை என்னிடம் கூறுவீர்களா? எனது மனைவிக்கு மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி தருவதை நான் விரும்பவில்லை. அவள் செத்தாலும் பரவாயில்லை. ஒருவேளை அவள் விரும்பினால் நீங்கள் அவைகளைக் கொடுக்கலாம்" என்றார்.
”உமது மனைவியின் உடல் சுகம் பெற, அதற்கு நான் மருத்துவம் செய்யும் வரை, எனது முடிவு என்னவோ அதைச் செய்வேன்; எனக்கு அந்த உரிமை உண்டு. இதற்கு நீர் உடன்படாவிட்டால் உமது மனைவியை இங்கிருந்து அழைத்துச் செல்லலாம். எனது மருத்துவ சிகிச்சையில் ஓர் உயிர் இறப்பதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறினார் டாக்டர்.
”அப்படியானால் நோயாளியை இங்கிருந்து அழைத்துச் செல் என்கிறீர்களா?” என்று காந்தி டாக்டரைக் கேட்டார்.
"நானா அழைத்துச் செல்லுங்கள் என்கிறேன். நீங்கள் நான் சொல்வதற்குச் சம்மதித்தால் நானும் எனது மனைவியும் எங்களால் முடிந்ததைப் பொறுப்புடன் செய்வோம். பிறகு, நோயாளியைப் பற்றிய கவலையே இல்லாமல் நீங்கள் போங்கள். இந்தச் சிறிய விஷயங்கள் கூட உங்களுக்குப் புரியவில்லையே! உமது மனைவியை எனது வீட்டிலே இருந்து அழைத்துப் போங்கள் என்று நான் கூறும் அளவுக்கு, நான் உங்களைக் கேட்டுக் கொள்ளுமாறு தூண்டுவது யார்? நீங்கள்தானே!" என்றார் டாக்டர்.
அப்போது உடன் இருந்த காந்தியின் மகன், தந்தையின் கருத்தை ஆதரித்தான். "தாயாருக்கு எக் காரணம் கொண்டும் மாட்டிறைச்சி சூப் கொடுக்கக் கூடாது" என்றான்.
இதற்குப் பிறகு காந்தி, மனைவியின் கருத்தறிய கஸ்தூரிபாயிடம் சென்று, தனக்கும் டாக்டருக்கும் நடந்த வாக்கு வாதத்தைக் கூறினார்.
அதற்கு கஸ்தூரிபாய், "என்ன மாட்டிறைச்சியா? அதன் ரசமா? பருகமாட்டேன். மாட்டின் உடலை வெட்டித் துண்டாக்கிய அந்தப் புலால், மாட்டின் உடலிலுள்ள புண்தானே அந்தப் புண்ணிலே வடிக்கப்பட்ட புலால் ரசத்தை நான் குடிக்க மாட்டேன். உலகத்தில் மனிதப் பிறவியே பெறுவதற்கரிய உன்னதமான பிறவி. இந்த மாதிரிப் பிற உயிர்களைக் கொன்று அதன் புண்களிலே வடித்து எடுக்கப்பட்ட ரசத்தைக் குடித்து எனது உடம்பைக் கறைப்படுத்திக் கொள்ள மாட்டேன். இதைவிட என் உயிர் எனது கணவன் அரவணைப்பிலே பிரிவதே மேல்” என்றார்.
டாக்டர் கூறிய, அக்கறை மிகுந்த வாதங்களைக் காந்தியும்-கஸ்தூரிபாயிடம் வலியுறுத்தினார். எல்லா விஷயங்களிலும் மனைவி கணவனைப் பின்பற்றியாக வேண்டிய அவசியமில்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மதுவையும், புலாலையும் நண்பர்கள் உண்பதைக் காந்தி தனது மனைவிக்கு எடுத்துரைத்தார்.
ஆனால், ”புலால் ரசம் என்ற பிற உயிரின் ரசத்தைக் கண்டிப்பாக அருந்தமாட்டேன் என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டார் கஸ்தூரிபாய். உடனே என்னை டாக்டரிடம் இருந்து அழைத்துச்செல்லுங்கள்” என்றும் வேண்டினார் அவர்.
காந்தி, கஸ்தூரி பாய் கருத்தைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். மனைவியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்பி டாக்டரிடம் அனுமதி பெற்றார். டாக்டர் ”காந்தி உணர்ச்சியற்ற ஒரு கல்நெஞ்சர்” என்று வருத்தப் பட்டார்.
மழை தூறிக் கொண்டிருந்தபோதே, தனது மனைவியைக் குண்டுக் கட்டாகத் தூக்கி ரிக்க்ஷாவில் ஏற்றிக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று விட்டார். போகும் வழியில் தனது கணவரிடம் கஸ்தூரிபாய் எனக்கு ஒன்றும் இல்லைங்க. நீங்கள் கவலைப்பட வேண்டாம்! என்றார்.
எலும்பும் தோலுமாக இருந்த கஸ்தூரி பாயைக் காந்தி தனது இரு கைகளால் தூக்கிச் சுமந்து கொண்டு ரயிலேறி பீனிக்ஸ் என்ற இடத்திலே உள்ள தனது வீட்டுக்கு வந்து, இயற்கை வைத்திய முறையில் ஜல சிகிச்சை கொடுத்து, மனைவி உயிரைக் காப்பாற்றி விட்டார்.
காந்தி வீட்டிற்கு, அப்போது ஒரு துறவி வந்தார். டாக்டர் கூறிய புலால் ரசம் யோசனையை அந்தத் துறவியிடம் காந்தி கூறினார்!
சாமியார் பேசும்போது, ”புலால் உண்பதைச் சாஸ்திரங்கள் தடை செய்யவில்லையே! தாராளமாக இறைச்சியை உண்ணலாமே” என்று சாஸ்திர ஸ்மிருதியிலே இருந்த ஆதாரங்களை எடுத்துரைத்தார்.
துறவி கூறிய சாஸ்திரச் சான்றுகள் எல்லாம் இடைச் செருகல் என்று எண்ணிய காந்தி, துறவிக்கு ஏதும் பதில் கூறாமல், முன்னோர்கள் கடைப்பிடித்த புலால் உண்ணாமை என்ற கொள்கையைக் பின்பற்றினார்.
”நீங்கள் எத்தனை சாஸ்திர மேற்கோள்களை என்னிடம் எடுத்துரைத்தாலும், மாட்டிறைச்சிப் புண்ணிலே வடித்தெடுக்கப்பட்ட புலால் ரசத்தைப் பருகமாட்டேன். அதை உண்டு என் உடல் குணமடைய வேண்டும் என்ற விருப்பமும் எனக்கில்லை. என்னைத் தொல்லைப்படுத்தாதீர்கள். என் கணவரோடும், குழந்தைகளோடும் இதைப்பற்றிப் பேசுங்கள். என் மனம் புலால் ரசம் விஷயத்தில் மிக உறுதியாக உள்ளது” என்று கூறிவிட்டார் கஸ்தூரிபாய்.
எதைக் குடித்தாகிலும், உண்டாகிலும் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ளும். மனிதர்களிடையே கஸ்தூர்பாய் பிற உயிர்களைக் கொன்று உண்டு தனது உயிரைக் காத்துக் கொள்ள விரும்பவில்லை என்பது எத்தகைய பண்பு பார்த்தீர்களா?
xxx
ஆசிரமத் தலைவியாக கஸ்தூரிபாய்
தென்னாப்பிரிக்காவில் பல சோதனைகளை எதிர் கொண்டு வெற்றிகண்ட மகாத்மா காந்தி, அங்கே ஃபினிக்ஸ் செட்டில் மெண்ட்’ என்ற ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு இந்தியர் உரிமைகளுக்காகப் போராடி வந்தார்.
அதே ஆசிரம வாழ்க்கையைத்தான், அவர் இந்தியா வந்த பிறகும் சபர்மதி, வார்தா போன்ற நகரங்களிலே அமைத்துக் கொண்டு வாழ்ந்தார்.
ஃபினிக்ஸ் செட்டில்மெண்ட் ஆசிரமத்திலே வாழ்ந்து கொண்டிருந்த அவர், அப்போது ஆடம்பர வாழ்க்கையை மட்டும் ஒழிக்கவில்லை; தென்னாப் பிரிக்காவிலே உள்ள ஆங்கிலேயர் ஆட்சியையே அந்த ஆசிரமத்திலே இருந்து கொண்டுதான் எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார்.
எனவே, காந்தியடிகளது ஆசிரம வாழ்க்கை தென்னாப்பிரிக்காவிலே ஆரம்பமாகி, அங்குள்ள இந்தியர்களது உரிமைகளை மீட்டு, ஆங்கில ஏகாதிபத்தியத்தின் நிறவெறிக் கொழுப்பை உருக்கி சமத்துவம் என்ற விளக்குக்குரிய மனித நேயர் என்ற திரியாக மாறி ஒளி தந்தது!
ஆசிரம வாசிகள் ஒரு குடும்பத்தினர் போல சமத்துவமாக, மனித நேயமாகக் கூடி வாழ்ந்திடும் பண்புடையவர்கள் என்பதைக் காந்தியடிகள்தான் முதன் முதலில் வாழ்ந்து காட்டினார்.
இத்தகைய ஃபினிக்ஸ் செட்டில்மெண்ட் ஆசிரமத்திற்கு அன்னை கஸ்தூரிபாய்தான் தலைவியாக இருந்துகொண்டு எல்லா வேலைகளையும் கவனித்துக்கொண்டார். அங்கே தென்னாப்பிரிக்காவின் பல முக்கிய தலைவர்களும், பெரியோர்களும் ஆசிரமத்திற்குள் வந்து குடியேறினார்கள். எழுத்து வாசனையும் படிப்பறிவும் இல்லாத அன்னை இந்த ஆசிரமத்திலேதான் தனது எண்ணங்களை ஆங்கில மொழியிலே வெளிப்படுத்தப் பயிற்சி பெற்றார்.
மறுபடியும் ரத்தப்போக்கு நோய் அன்னையைப் பற்றி வாட்டி வதைத்தது. எளிதில் அந்த நோய் குணமடைவதாகத் தெரியவில்லை. எந்த மருந்தாலும் அவரது வியாதி சுகமடையவில்லை.
இதனைக் கண்டு மனம் நொந்த காந்தியடிகள், இயற்கை மருத்துவமான ஜல சிகிச்சையாலும் அந்நோய் தீராததால், நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது, தனது மனைவி உண்ணும் உணவில் உப்பையும், மசாலாவையும் நீக்கி விட்டார். இந்த ரத்தப் போக்கு நோய் குணமாகலாம் என்று உணர்ந்து, இதனால் இரண்டையும் விட்டுவிடும்படி தனது மனைவியை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.
ஆனால், கஸ்தூரிபாய் இந்த கெஞ்சுதல் நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்டார். பலவீனமான உடம்பில் விரைவில் கோபம் கொப்பளித்து வருவது இயற்கை அல்லவா?
அதனால் அவர் கணவன் மீது கோபப்பட்டார். ”வைத்தியர் ஒருவர் உம்மைப் பார்த்து உப்பையும் மசாலாவையும் கைவிட்டு விடுங்கள் என்று யோசனை கூறினால் விட்டு விடுவீர்களா?” என்று தனது கணவனைத் திருப்பிக் கேட்டு விட்டார்.
காந்தியடிகளுக்கு அதைக் கேட்டதும் மனைவி மீது ஓர் அனுதாபம் ஏற்பட்டது. இருப்பினும் வருத்தத்துடன் மகிழ்ச்சியும் பெற்றார். மனைவியிடம் தனக்குள்ள அன்பு, பாசம், பிடிப்பு எத்தகையது என்பதை எடுத்துக்காட்டிட இதுதான் தக்க நேரம் என்று உணர்ந்தார்!
”கஸ்தூரி, நான் நோயாளியாக இருந்து எனக்கு மருத்துவர் உப்பு மசாலாவை மட்டுமல்ல, வேறு எந்தப் பொருளையும் கைவிடு என்பாரேயானால், நான் உறுதியாக அவற்றைத் தொடமாட்டேன்.
”எனக்கு மருத்துவர்கள் யாரும் அவ்வாறு கூற வில்லையே! இப்போது நான் கூறுகிறேன் கேட்டுக் கொள்; இன்று முதல் ஓராண்டு காலத்திற்கு நான் உப்பையும், மசாலாவையும் தொடமாட்டேன். நீ அவற்றைக் கைவிடுகிறாயோ இல்லையோ, நான் நிச்சயமாக அப்பொருள்களைச் சுவைக்க மாட்டேன்” என்று உறுதிபட மனைவியிடம் உரைத்தார்.
திடுக்கிட்டார் கஸ்தூரிபாய்! ”தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். உங்களுடைய சுபாவம் நான் அறிந்ததே ஐயோ, தெரியாமல் இப்படி உங்களைக் கோபமடையச் செய்து விட்டேன்! நான் இன்று முதல் உப்பையும் மசாலாப் பொருட்களையும் உண்ண மாட்டேன் என்று வாக்குறுதி அளிக்கின்றேன். நீங்கள் உங்களுடைய சபதத்தைக் கைவிடுங்கள். அதனை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று கண்ணிர் சிந்தினார் கஸ்தூரிபாய்.
உடனே காந்தியடிகள் அரைகுறையான பச்சாதாபத் தோடு, ”கஸ்தூரி, உனது உடம்பு நலமாகத்தான் நான் கூறுகிறேன். எனக்குக் கூட வருத்தமாகத்தான் இருக்கிறது. சுவையோடு உண்டவர்களுக்கு இது ஒரு சோதனை தான்; என்ன செய்வது?
”உப்பையும், மசாலாப் பொருட்களையும் நீ சேர்த்துக் கொள்ளாவிட்டால் உனது வியாதி உன்னை விட்டு நீங்கும்; உடலும் முழுமையான குணமடையும். அவற்றை விலக்க விலக்க உனக்கு நன்மைதான்; சந்தேகமே இல்லை.
"ஆனால், நான் செய்த சபதத்தை என்னால் மாற்றிக் கொள்ள இயலாது. அதனால் எனக்கும் தான் நன்மை. புலன் அடக்கத்திற்கு உதவும் எதுவும் நன்மைகளைத்தான் தரும். எனக்கு இது ஒரு சோதனையாகவும், உனக்கு உன் தீர்மானத்தை நிறைவேற்றும் அறத்தின் வலிமையாகவும் இருக்கட்டுமே!” என்றார் அடிகள்.
கணவரைத் மாற்ற முடியாது என்றுணர்ந்த கஸ்தூரிபாய், ”நீங்கள் பிடிவாதக்காரர், யார் சொன்னாலும் கேட்க மாட்டீர்கள்” என்றார், வருத்தமும் சோகமும் கலந்த குரலோடு:
உப்பையும், மசாலாப் பொருட்களையும் அறவே நீக்கி விட்ட அன்னைக்கு, விரைவிலே ரத்தப்போக்கு நின்றது. சாகும்வரை அவருக்கு அந்த நோய் வரவே இல்லை.
ஏற்கனவே, பாமரவைத்தியன் என்ற பெயரைப் பெற்றிருந்த காந்தியடிகளாருக்கு, அன்னையின் ரத்தப் போக்குத் தடுப்பு மேலும் ஒரு புகழைத் தேடித் தந்து விட்டது.
xxx
புலனடக்கம்
தனது மனைவியிடம் உண்மையாக நடப்பதை, ஒழுக்கமாக இருப்பதை, அவ்வாறு வாழ்வதை சத்தியத்தின் ஒரு பகுதியாகவே காந்தி நம்பினார்! வாழ்ந்தும் காட்டினார்!
காந்தியடிகள், அன்னை கஸ்தூரிபாய் இருவருக்கும் இறுதியாகப் பிறந்த குழந்தைதான் தேவதாஸ் காந்தி என்பவர். எதிர்பாரா நேரத்தில் தேவதாஸ் பிறக்க கஸ்தூரி பாய்க்கு பிரசவ வேதனை உண்டானது.
அந்த இக்கட்டான நேரத்தில் பிரசவம் பார்க்க எந்த மருத்துவரும் அங்கே திடீரெனக் கிடைக்கவில்லை- போய் அழைத்து வரவும் நேரமில்லை. அதனால், காந்தியே மனைவியுடன் இருந்து பிரசவத்தைக் கவனித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது. இவ்வாறு காந்தியடிகளாராலேயே பிரசவம் பார்க்கப்பட்டவர்தான் இந்தியாவின் இறுதி கவர்னர் ஜெனரலான சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியாரின் மகள் லட்சுமியைத் திருமணம் செய்து கொண்ட தேவதாஸ் காந்தி.
இந்தக் குழந்தை பிறந்ததற்குப் பிறகுதான் காந்தி தன்னையே மிகக் கடுமையான சோதனைகளிலே ஈடுபடுத்திக் கொண்டார்.
ஒரு மனிதன் தன்னைப் புலனடக்கம் செய்து, ஆசைகளை அடக்கவேண்டும். அப்படி அடக்கி வெற்றி பெறாதவனால் மனப் பூர்வமான மக்கட் தொண்டு செய்ய முடியாது என்பது காந்தியமாகும்.
இதே கருத்தைத்தான் பிளேட்டோ என்ற சிந்தனையாளர் தனது குடியரசு நூலில் கூறும்போது, மனித இனத்தை மூன்றாகப் பிரித்து முதல் தர மனிதனை தங்க மனிதன் (Golden Man) என்றார். இந்த மனிதனைத்தான் காந்தியடிகள் இங்கே நினைவுகூர்ந்து, அவரது ஆன்மிகம் கலந்த சிந்தனைக்கு பிரம்மச்சரியம் என்று பெயர் சூட்டுகிறார். இவர்கள்தான் ஆட்சியிலும், பொதுத் தொண்டிலும் அமரவேண்டும் என்கிறார் பிளேட்டோ.
இரண்டாவது தரத்திற்குரிய மனிதன் வெள்ளி மனிதன் அதாவது {Siver Man) என்கிறார். இவர்கள் கல்வி, அறிவியல் வரலாற்றுத் துறைகளில் மேன்மைகளை உருவாக்கும் திறன் உடையவர்களாக நாட்டுக்கு நன்மையாக விளங்குவார்கள் என்கிறார்.
மூன்றாவது தரத்திற்குரிய மனிதனை Iron Man அதாவது இரும்பு மனிதன் என்கிறார். இவனுடைய உழைப்புத்தான் மக்களது வாழ்வுக்கும் வளமைக்கும் உபயோகமான உழைப்பாக உயரும் எனகிறார்! அவனால்தான் அந்த நாடு வளமும் நலமும் பெறும் என்று அறுதியிட்டு உரைக்கின்றார்.
இந்த மூன்று மனிதர்களில் முதல் ரகம்தான் பிரம்மச் சரியம் பேண வேண்டும் என்ற காந்திய முறையாகும்!
காந்தி தென்னாப்பிரிக்காவில் 1906ஆம் ஆண்டு ஆசிரம வாழ்க்கையின் போதே இந்த பிரம்மச்சரிய முடிவுக்கு வந்து, தனது வாழ்நாள் முழுவதும் அந்த விரதத்தை மேற் கொண்டார்.
”பொதுநலவாழ்க்கையில் மக்கள் சேவை செய்ய நினைப்போர் அல்லது செய்து கொண்டிருப்போர் இந்த பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் குரங்குபோல குறும்புசெய்து அங்குமிங்கும் தாவிக் கொண்டிருக்கும் மனத்தையும், ஆத்மாவையும் ஈடுபடுத்தி மக்கட் தொண்டு செய்ய முடியாது என்பதை நான் தெளிவாக உணர்ந்து கொண்டேன்.
”இல்லற இன்பங்களில் மூழ்கி, குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தால், நான் செய்த பல பணிகளைச் செய்திருக்க முடியாது. குறிப்பாக மண், பெண், பொருள் என்ற மூவாசைகளையும் ஒழிக்காதவன், முக்தி என்ற மோட்சத்தை நாட முடியாது என்பது உறுதி... என்று மகாத்மா காந்தி தனது சத்திய சோதனை வரலாற்றில் எழுதுகிறார்.
பட்டினத்தடிகள் பாடியதைப் போல "பொல பொலவென குழந்தைகளைப் பெற்றுவிட்டுப் பின்பு ஆப்பசைத்த குரங்கைப்போல, வாழ்க்கையின் நிலை ஆகிவிடக் கூடாது” என்ற சிந்தனைதான் அவளுக்கு புலனடக்கத்தைத் தூண்டி விட்டது. அதனால், சுயேச்சையாகப் புலனடக்கத்தைக் கட்டுப்படுத்தலானார். இந்த அரிய ஆத்ம முயற்சியில் பல தொல்லைகள் ஏற்படலாயின. அன்னை கஸ்தூரிபாய்க்கு ஒரு படுக்கை! காந்தியடிகளுக்கு ஒரு படுக்கை அதுவும் ஒரே அறையில்!
காம வேட்கை மிகுந்து மோக வெறிக்கு அடிமையான காந்தியடிகள், சிற்றின்ப வேட்கையை ஒடுக்க முடியாமல் மிகவும் துன்பப்பட்டார்!
ஆனால், கஸ்தூரி பாவுக்கோ அது மிகவும் எளிதாக இருந்தது. இந்த உண்மையைக் காந்தியடிகளே ஒப்புக் கொண்டு, தனது 'சத்திய சோதனை'யில் ”என் மனைவி என்னை ஒருபோதும் தூண்டியதில்லை, வேண்டியதில்லை என்பதைக் கூற நான் கடமைப்பட்டவன். மன உறுதி இல்லாததாலும், காமவேட்கையாலும் துணிந்து அந்த பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடிக்க என்னால் இயலவில்லை” என்று எழுதுகிறார்.
பிரம்மச்சாரிய விரதத்தைக் கடைப்பிடிக்க அவர் அமைத்த வியூகம் என்னவென்றால், விரதத்தை மேற்கொள்வதற்கு முன்பாக, அவர் கஸ்தூரி பாயைக் கலந்து யோசித்தார். கஸ்தூரிக்கு அப்போது வயது என்ன தெரியுமா? முப்பத்து ஒன்றுதான்! அதே நேரத்தில் காந்தியடிகளுக்கு என்ன வயது என்றால் முப்பதரை ஆண்டுகள்.
சிற்றின்ப ஆசைகள் தீவிரமாக இருக்கும் வயது இருவருக்கும். என்றாலும், தனது கணவர் பிரம்மச்சாரிய விரதம் இருக்கப் போவதாக கூறியதும், சற்றும் தயங்காமல் ”சரி உங்களது விருப்பம் அதுவானால் நான் குறுக்கிடமாட்டேன்” என்று கூறி சம்மதம் தெரிவித்து வாழ்நாள் முழுவதும், சாகும் வரையிலும் இருப்பேன் என்று இணக்கம் தெரிவித்த இல்லத்தரசியாக விளங்கினார் கஸ்தூரி பாய்! அவ்வாறே தான் இறக்கும்வரையும் கடைப்பிடித்தார்.
இதே நேரத்தில், கஸ்தூரிபாய் இடத்தில் வேறோர் பெண் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? காந்தியடிகளாருடைய பிரம்மச்சரிய நோன்பு வெற்றி அடைந்திருக்குமா? பாதிக் கிணறு தாண்டியவன் கதியல்லவா ஏற்பட்டிருக்கும்?
ஆனால் ஒன்று உறுதி. கணவர் கூறிவிட்டார் என்பதற்காக மட்டும் எதையும் சிந்திக்காமல் ஏற்றுக் கொள்கிறவர் அல்லர் அன்னை கஸ்தூரிபாய். 'எப்பொருள் எத்தன்மைத்தாயினும், அப்பொருளில் மெய்ப்பொருள் காணும் அறிவுத்திறம் பெற்ற தாயுள்ளம் கொண்டவர் அவர்.
எதிலும் சுயேச்சையாக சிந்திக்கும் தகுதி உடையவர் அவர் என்பதால், கணவர் காந்தியடிகள் தன்னைக் கலந்து ஆலோசித்ததும், இந்த விரதத்தால் உலகம் என்ன வியத்தகு வரலாற்றுச் சம்பவங்களைப் பெறுமோ என்று எண்ணி, தயங்காமல் சரி என்று சம்மதம் கூறி ஏற்று இணங்கியதுடன், அந்த வாக்குறுதியை தான் சாகும்வரை பிடிவாதமாக, சபதமாக, வைராக்கியமாகக் கடைப்பிடித்து காந்தியடிகளாரின் ஞான வேட்கையை வெற்றி பெறச் செய்தார் கஸ்துர்பா காந்தி!
xxx
மக்கள் உரிமைகளை மீட்ட
மாதரசி சிறை புகுந்தார்!
இல்லறத்தில் பிரம்மச்சாரிய விரதம் மேற்கொண்ட காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் சட்ட மறுப்பு அறப்போர் இயக்கம் துவக்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்தார்.
இந்த சத்தியாக்கிரகப் போரிலே பெண்கள் அணியை ஈடுபடுத்துவது என்று முடிவு செய்த அவர், அதற்குத் தேர்ந்தெடுக்க வேண்டிய மகளிர்கள் எப்படியெப்படி அறப்போரைச் செய்ய வேண்டும் என்பதை விளக்கினார்.
இந்த மகளிர் அணிக்கு தனது மனைவி கஸ்தூரிபாய் தலைமை ஏற்று அறப்போர் ஆற்றுவார் என்பதைக் கூடியிருந்த பெண்மணிகளிடம் கூறினார்.
ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து அறப்போர் புரிவதால் பெண்களை இந்த ஆட்சி கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதைகளையும் கொடுமைகளையும் செய்யக்கூடும். அதற்கெல்லாம் அஞ்சக்கூடாது என்றார்.
சத்தியாக்கிரகம் செய்து சிறைத்தண்டனை கிடைத்து நீதிமன்றத்தின் முன்பு பெண்களை நிறுத்தவேண்டிய நிலை வந்தால், நீதிபதி உங்களை விசாரணை செய்யும்போது, தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள் உரிமைகளைப் பெறுவதற்காகவே இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம் என்றும், இந்த ஆட்சியிலே இந்தியர்களை இழிவுபடுத்தும் நிறவெறியை எதிர்த்தே இந்த அறப்போராட்டத்தை நடத்தினோம் என்றும், ஆங்கிலேயர் ஆட்சியின் நிறவெறிச் சட்டங்களை எதிர்த்தே போராட்டம் புரிகிறோம் என்றும், அந்தக் கொடுமையான சட்டங்களை இந்த ஆட்சி திரும்பப் பெறும்வரை பெண்களாகிய நாங்கள் ஓயாமல் சத்தியாக் கிரகத்தைச் செய்து கொண்டே இருப்போம் என்றும் நீதிபதி விசாரணையின்போது கூறவேண்டும் என்பதனைப் போராட்டத்திற்குப் போகும் பெண்களிடம் காந்தியடிகள் விளக்கினார்.
போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட பெண்களுக்குச் சிறைத் தண்டனை கிடைத்தால் அதை மகிழ்ச்சியோடு அனுபவிக்க வேண்டுமே தவிர, தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னால் எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறையிலே இருந்து வெளியே வரக்கூடாது என்பதை அந்தப் போராட்டப் பெண்களுக்கு வலியுறுத்திக் கூறி, அதற்குச் சம்மதம் உள்ள பெண்கள் மட்டுமே, இந்த அறப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் காந்தியடிகள் வலியுறுத்திக் குறிப்பிட்டு வீரஉரை ஆற்றினார்.
அப்போது கஸ்தூரிபாய் பேசும்போது, ”இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களாகிய நாங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஜெயிலில் அனுபவிக்கும் துன்பங்களுக்குப் பயந்து, மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வெளியே வரமாட்டோம். இந்தியத் திருநாட்டின் பெயருக்கும் புகழுக்கும் களங்கத்தை உருவாக்க மாட்டோம். இது எங்கள் தாய் நாட்டின் மீது ஆணை” நாங்கள் அணிந்திருக்கும் திருமாங்கல்யம் மீது ஆணை என்று கோபாவேசமாகக் குறிப்பிட்டார்.
கஸ்துரரிபாயின் வீர உரையை ஏற்று நடப்போம் என்ற உணர்ச்சியோடு மற்ற போராட்ட வீராங்கனைகள் கையொலி எழுப்பி, கஸ்தூரிபாயின் வீர மொழிகளை ஆமோதித்தார்கள்.
பெண்கள் போராட்டக் குழுவில் சம்மதம் தெரிவித்தபடியே, ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து அறப்போர் செய்து சிறை புகுந்தார்கள். இந்தப் போராட்டத்தை தென்னாப்பிரிக்க இந்தியர்கள் காந்தியடிகள் தலைமையிலும், கஸ்தூரிபாய் தலைமையிலும் ஏறக்குறைய ஆறு ஆண்டுக் காலமாகத் தொடர்ந்து நடத்தி வந்தார்கள். ஆண்களும் பெண்களும், விக்ரமாதித்தன் என்ற மன்னன் காடாறு மாதம், நாடாறுமாதம் ஆட்சி நடத்தியதைப் போல, வீடாறுமாதம் சிறை ஆறுமாதம் என்று போராடி இறுதியிலே வெற்றி பெற்றார்கள்.
காந்தியடிகளோடு ஃபீனிக்ஸ் செட்டில்மெண்டில் வசித்த நண்பர்களில் சிலர் மட்டுமே, சிறைத் தண்டனைக்குப் பயந்து போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என்று பின்வாங்கி விட்டார்கள்.
நண்பர்கள் சிலரின் இந்தத் தவறுக்கு தன்னுடைய பலவீனமே காரணம் என்று கருதினாரே தவிர, பின்வாங்கிச் சென்றவர்களை அவர் குறை கூறவில்லை. அந்தப் பலவீனத்திற்குத் தண்டனையாக, பதினான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து காந்தியடிகள் தன்னைத் தானே வகுத்திக் கொண்டார்.
இந்தப் பதினான்கு நாள் உண்ணாவிரதத்தின்போது கஸ்தூரிபாய் தனது கணவர் காந்தியடிகளுக்குரிய பணி விடைகளைச் செய்து கொண்டு அதே நேரத்தில் போராட்ட வீரர்களுடனும் வீராங்கனைகளுடனும் ஒன்று சேர்ந்து அந்தப் போராட்டத்தின் வெற்றிக்காக அல்லும் பகலுமாக உழைத்து வந்தார்.
இறுதியில் தென்னாப்பிரிக்க இந்தியரின் அறப்போர் வெற்றி பெற்ற பின்பு, ஆங்கிலேயர் ஆட்சி இந்தியர்களுக்குரிய நீதியை வழங்கியது. இதன் எதிரொலியாக, இந்திய மக்களுக்கு விரோதமான நிறவெறிச் சட்டங்களை அந்த ஆட்சி திரும்பப் பெற்றுக் கொண்டது.
காந்தியடிகளும் அதற்குப் பிறகு தனது அறப்போர் இயக்கத்தை நிறுத்திக் கொண்டார் பிறகு தனது தாய்நாடான இந்தியாவிற்குத் திரும்ப முடிவு செய்தார்.
பரிசுப் பொருட்களால்
கணவன் மனைவி சர்ச்சை !
வழக்குரைஞராக வருவாய் தேடப் புறப்பட்டுத் தென்னாப்பிரிக்கா சென்ற காந்தியடிகள், அங்கே உள்ள இந்தியர்கள் எல்லாம், ஆங்கிலேயரின் நிறவெறிச் சட்டங்களுக்குப் பலியாகி அவமானப்படுவதைக் கண்டு, அதற்காகப் போராடி, அந்த ஆட்சியைப் பணியவைத்து, அந்த இந்தியர்களை வெள்ளையர்களுக்குச் சமமாக உரிமைகளை அனுபவிக்கச் செய்து மானத்தோடு வாழவைக்கப் பாடுபட்டதைக் கண்ட தென்னாப்பிரிக்க இந்தியர்கள், இந்தியாவுக்கு மீண்டும் திரும்பிடும் காந்தியடிகளது குடும்பத்தை வழியனுப்பிட ஒரு பெரும் பாராட்டு விழாக் கூட்டத்தை நடத்தினார்கள்.
தென்னாப்பிரிக்க மக்களிற்கு காந்தியடிகளுடைய குடும்பத்தை விட்டு பிரிய மனமில்லை. ஆனால் அவர்கள் இந்தியாதிரும்புவதையும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை உணர்ந்து, அவருக்கு விடை தந்து வழி அனுப்பிடவே அந்தக் கூட்டத்தை நடத்தினார்கள்.
அந்த வழியனுப்பும் விழாவில், தென்னாப்பிரிக்க இந்தியர்கள் ஏராளமான பரிசுப் பொருட்களை வழங்கினார்கள். அன்னை கஸ்தூரிபாய்க்கு ஐம்பத்திரண்டு பவுன் மதிப்புள்ள ஒரு நெக்லசைப் பரிசுப் பொருளாக அன்புடன் வழங்கி, அவரையும் பாராட்டி மகிழ்ந்தார்கள்.
பாராட்டு விழா முடிந்தது! வீட்டுக்கு வந்தார் காந்தியடிகள்! அன்று இரவு முழுவதும் அவருக்கு நித்திரை வரவில்லை. காரணம், மக்களுக்குத் தொண்டு செய்வது பிறப்பெடுத்ததன் கடமை! அந்தத் தொண்டுக்கு அன்பளிப்பாக இந்தப் பரிசுப் பொருட்களை மக்கள் வழங்கினார்களா அல்லது தொண்டு செய்ததற்கு இவை கூலியா? என்று சிந்தனை செய்தவாறே இருந்ததால் அவருக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை.
தொண்டர்கள் மக்களிடம் செய்த தொண்டுகளுக்காகப் பரிசு வாங்கலாமா? அவ்வாறு வாங்கினால் தொண்டு என்பதே பொருளற்றுப் போகாதா? தங்களுக்குக் கிடைத்த பரிசுகளைத் தொண்டர்கள் தனது சொந்தத்துக்கு உரிமையாக்கிக் கொள்ளலாமா? என்ற நோக்கம் காந்தியடிகளது மனத்தைக் குத்திக் குடைந்து கொண்டிருந்தன.
இறுதியாக, தங்களது தொண்டுகளுக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களைத் தங்களது சொந்த உரிமைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று முடிவுக்கு வந்தார்.
தொண்டர்கள் அன்போடு கொடுத்த பரிசுகளை அவர்களிடமே திருப்பித் தருவதும் தவறு. தந்தவர்கள் மனது புண்படுமே! எனவே, கொடுக்கப்பட்ட பரிசுகளைத் தான் அனுபவிக்காமல் அவற்றைப் பொது நன்மைகளுக்குப் பயன்படுத்துவது தான் நியாயம் என்றும் தீர்மானித்தார்.
இதைப் பற்றி தனது மனைவியிடமும் கலந்து பேசினார். ஏனென்றால், கஸ்தூரிபாய்க்கும் சில பரிசுப் பொருட்கள் வந்துள்ளனவே! அதனால் மனைவி கருத்தையும் தெரிந்து கொள்ளலாம் என்று தனது தீர்மானத்தின் முடிவை மனைவியிடமும், பிள்ளைகளிடமும் காந்தியடிகள் விவரித்தார்.
அவரது பிள்ளைகள் இருவரும் அப்பாவின் கருத்தை ஒப்புக் கொண்டார்கள். ஆனால், கஸ்தூரிபாய் மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை. "உங்களுக்கும், பிள்ளைகளுக்கும் நகைகள் தேவையில்லை. நீங்கள் சொல்கிறவாறு பிள்ளைகள் சரி என்று கூறலாம். ஆனால், நான் பரிசாக வந்த நகைகளைக் கூடவா அணிந்து கொள்ளக் கூடாது?" என்ற கேள்வியை எழுப்பினார்.
காந்தியடிகள் இதற்கு மெளனமாக இருக்கும்போது, மீண்டும் கஸ்தூரிபாய், "சரி நான் நகைகளைப் போட்டுக் கொள்ளவில்லை. என் பிள்ளைகளுக்குத் திருமணமாகி, மருமகள்கள் வந்தால் என்ன செய்கிறது? அவர்களுக்கு வேண்டாமா நகைகள்? மக்கள் கொடுத்த பொருட்களை நான் திருப்பித் தர மாட்டேன்" என்று அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் கணவரிடம்!
அப்போது காந்தி முன்புபோல் கோபப்படாமல் அமைதியாக, "பிள்ளைகளுக்கு எப்போதோ திருமணமாகப் போகிறது; அவர்கள் பெரியவர்களான பிறகு, அந்த நேரத்தில் அந்த வேலையை அவர்களே கவனித்துக் கொள்வார்கள். அதே நேரத்தில் நகைப் பைத்தியமுள்ள மருமகள்களை நாம் நமது வீட்டிற்குக் கொண்டு வர மாட்டோம். அப்படிப்பட்ட பெண்களை நமது பிள்ளைகளுக்கு மணம் செய்தும் வைக்கமாட்டோம். அவர்களுக்கு நகைகள் அணிய வேண்டிய ஆசைகள் இருந்தால் அதை நான் கவனித்துக் கொள்கிறேன். அப்போது நீ என்னைக் கேள்" என்றார்.
"அது சரி, உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா என்ன? நான் போட்டிருந்த நகைகளை எல்லாம் வாங்கிக் கொண்டு என்னை நிர்க்கதியாக நிறுத்தி விட்டீர்களே! இப்படிப்பட்ட நீங்களா எனது மருமகள்களுக்கு நகை போடுவீர்கள்? எனது பிள்ளைகளை இப்போதே சாமியார்களாக்கி விட்டீர்கள். நீங்களா மருமகள்கள் வந்த பிறகு நகைபோடப் போகிறீர்கள்? எனக்குப் பரிசாக மக்கள் தந்த நகைகளை நான் திருப்பித் தர மாட்டேன்" என்று கூறினார் கஸ்தூரிபாய்.
"அது சரி, இந்த நகைகளை மக்கள் ஏன் தந்தார்கள்? உனது தொண்டுக்கா? அல்லது எனது சேவைக்கா? அதைச் சொல்" என்றார் காந்தியடிகள்.
"உங்களுடைய தொண்டுக்காகத்தான் மக்கள் கொடுத்தார்கள் என்று இருக்கட்டுமே. நீங்கள் செய்தால் என்ன? நான் செய்தால் என்ன? நீங்கள் செய்த தொண்டுக்கு நான் உடனிருந்து பாடுபடவில்லையா? இரவும் பகலும் கண் விழித்துப் பணி செய்தது எல்லாம் தொண்டாகப்பட வில்லையா? என்னிடம் எவ்வளவு அருவருப்பான, கேவலமான, அற்பமான வேலைகளை எல்லாம் செய்யச் சொல்லி வேலை வாங்கினீர்கள்? ரத்தக் கண்ணிர் வடிக்கும் அளவிற்கு என்னை அலைக்கழித்து, அதட்டி, உருட்டி, நோய் வாய்ப்படும் அளவிற்கு வேலை செய்யச் சொன்னீர்கள்? நானும் மக்களுக்காக உழைக்கவில்லையா?" என்று கஸ்தூரிபாய் நறுக் நறுக்கென்று சில கேள்விகளைக் கேட்டுக் கண்ணிர் விட்டார்.
கஸ்தூரிபாய் பேசியதை எல்லாம் காந்தியடிகள் ஏற்கவில்லை. நகைகளைப் பொது நிதியில் சேர்ப்பது தான் நியாயம் என்று கூறி, மனைவியை எப்படியெப்படியோ சமாதானம் செய்து நகைகளை வாங்கிவிட்டார் அவர்.
இதற்குமுன்பு கிடைத்த பரிசுகளை எல்லாம் ஒன்று சேர்த்து அவற்றை நிதியாக்கி அதற்கு ஒரு அறக்கட்டளை உருவாக்கி அந்த நிதிகளை எல்லாம் திருப்பி மக்களுக்கே உதவுமாறு செலவு செய்திட திட்டம் தீட்டினார்.
கணவன், பொதுவாழ்க்கையில் உயர்ந்து நல்ல பெயர் எடுக்க, மனைவி கஸ்துரிபாய் எத்தகைய துணைபுரிந்தார் என்பதற்கு, அவர் தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை எல்லாம் கணவரிடமே திருப்பிக் கொடுத்த பெருந்தன்மைச் செயலும் ஒர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
xxx
சபர்மதி ஆசிரமத் தலைவி!
கஸ்தூரிபாயின் தேசத் தொண்டு!
களிமண்ணிலிருந்து போராட்ட வீரர்களைத் தேர்ந்தெடுத்தவர் மகாத்மாகாந்தி என்று காந்தியடிகளைப் புகழ்ந்த கோபால கிருஷ்ண கோகலே, அப்போது இங்கிலாந்து நாட்டிலே இருந்தார்.
தென்னாப்பிரிக்காவிலே சட்டமறுப்புப் போராட்டத்தை நடத்தி மாபெரும் வெற்றி கண்ட மகாத்மா காந்தி, அங்கே இருந்து இந்தியா திரும்பியபோது, நேராக இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று கோபால கிருஷ்ண கோகலேவைச் சந்தித்தார்.
கி.பி. 1915ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து நாட்டிலே இருந்து இந்தியாவிற்கு காந்தியடிகள் தனது குடும்பத்தோடு அகமதாபாத் நகர்வந்து சேர்ந்து, அங்கே சபர்மதி என்ற ஓர் ஆசிரமத்தைத் துவங்கி அதிலே வசித்து வந்தார்.
ஆசிரமத்தில் முதல் உறுப்பினராகத் தனது மனைவியையும், அத்துடன் இருபத்தைந்து உறுப்பினர்களையும் அவர் சேர்த்தார். எளிய முறையில் வாழ்ந்து தேச சேவை செய்வதுதான் ஆசிரமத்தின் நோக்கமாக இருந்தது.
எல்லோருக்கும் பொதுவான சமையல் அறை; சேர்ந்து வேலை செய்து சமைத்து உண்பது. இந்த ஆசிரமத்தின் தலைவியாகவும், அன்னையாகவும் கஸ்தூரிபாய் விளங்கினார்.
கணவர் காந்தி பொது வாழ்க்கையில் தோல்வியுறும் போது எளிமையுடனும், அஞ்சா நெஞ்சத்துடனும், கம்பீரத்துடனும் ஆடியோடி கஸ்தூரிபாய் பணியாற்றினார். அது போலவே, அவர் வெற்றி வீரராக விளங்கிய நேரத்திலும், கம்பீரத்தோடும், கண்ணியத்தோடும், எளிமை யோடும், எவரிடமும் பற்றும் பாசத்தோடும் பழகும் மாதரசியாகவும் அவர் காட்சி தந்தார்.
தென்னாப்ரிக்க ஃபினிக்ஸ் செட்டில்மெண்ட் ஆசிரமத்தில் வாழ்ந்ததற்கு மாறாக, சபர்மதி ஆஸ்ரமத்தில் ஒரு திண்டு மீது சாய்ந்து காந்தி உட்கார்ந்திருந்தார். காந்தியடிகள் அப்போது உடல் நலம் குன்றி, கொட்டைகளையும், பழவகைகளையும் ஆகாரமாகக் கொண்டு மெலிந்து நலிந்து காணப்பட்டார்.
"அன்னை கஸ்தூரி பாய் தென்னாப்பிரிக்காவின் சட்ட மறுப்புப் போராட்டத்தில் எப்படிப் பணியாற்றினாரோ, அதே மனஉறுதியோடு இந்திய விடுதலைப் போராட்டத்திலும், குடும்ப சம்பந்தமான விவகாரங்களிலும் ஈடுபட்டுக் கம்பீரமாகப் பணியாற்றி வந்தார். இப்படிப்பட்ட ஆசிரம சேவையே தனக்குப் போதுமானது; உகந்தது என்ற அளவில் அன்னை கஸ்தூரிபாய் தோற்றமளித்துக் கொண்டிருந்தார்" என்று கவிக்குயில் சரோஜினி தேவி ஆசிரமம் சென்று அதை நேரில் பார்த்தபோது கூறி வியப்புற்றார்.
சரோஜினி தேவி பின்னர் அன்னையைப் பற்றிய தனது வருணனையில், "ஆசிரம அமைப்புக்காக விதிகளை எழுதும் போதே, தாழ்த்தப்பட்ட ஹரி ஜனங்களையும் ஆசிரமத்தில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று எல்லா உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டார்கள்.
"சபர்மதியில் ஆசிரமம் அமைக்கப்பட்ட நேரத்தில், ஹரிஜனக் குடும்பம் ஒன்று அங்கு வந்து சேர்ந்தது. அந்தக் குடும்பத்தையும், அவர்களைச் சேர்ந்தவர்களையும் காந்தியடிகள் அப்போது ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டார். அதற்குப் பெரும் எதிர்ப்பு எழுந்தது. ஆசிரமத்திற்கு யார் யார் பண உதவிகளைச் செய்தார்களோ அவர்கள், தங்களது உதவிகளை நிறுத்திக் கொண்டார்கள். ஆனால், காந்தியடிகள் அதையெல்லாம் ஒருவாறு சமாளித்துக் கொண்டார். ஆசிரமத்துக்குள் எழுந்த கலவரங்களை ஆனால் அடக்குவது கஷ்டமாகவே இருந்தது.
"அன்னை கஸ்தூரிபாய் தாழ்த்தப்பட்ட ஹரி ஜனங்களை ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார். மற்றும் சில ஆசிரமப் பெண்களுக்கும் இது திருப்தியளிக்கவில்லை. ஹரிஜனங்களைக் கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்; இது ஆசிரம விதிகளுள் ஒன்று என்பதைக் கலவரமடைந்தவர்களுக்கு காந்தியடிகள் விளக்கிப் புரிய வைக்க இயலவில்லை. அதனால் மக்களிலே பலர் ஆசிரமத்தைப் புறக்கணித்ததால், ஆசிரம வாழ்க்கை மிகவும் பாதித்து விட்டது.
"அதே நேரத்தில் ஆசிரமத் தலைவியான கஸ்தூரிபாயும் ஹரிஜன எதிர்ப்பு எழுப்புவதைப் பார்த்து காந்தியடிகள் மிகவும் கவலையடைந்தார். அதனால் அவர் ஆசிரமத்துக்கு உள்ளேயே ஏழு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார் என்பது கஸ்தூரிபாய்க்கு மட்டும்தான் தெரியும்.
"ஏழு நாட்கள் அவர் உண்ணாவிரதம் இருந்தபோதுதான்,கஸ்தூரிபாய்க்கு அந்த ஆசிரமத்தின் அடிப்படைத் தத்துவம் சரியாகப் புரிந்தது. தீண்டத் தகாதவர்கள் என்று மக்களுள் ஒரு பிரிவினர் ஒதுக்கி வைக்கப்படுவதும், மனித உயிர்களுக்குள்ள உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுவதும், மாபெரும் தவறாகும். அந்த உயிர்களுக்கு ஆசிரம விதிப்படி எல்லா உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என்பதும் அப்போதுதான் கஸ்தூரி பாய்க்குப் புரிந்தது. காந்தியடிகளின் உண்ணாவிரத ஏழாம் நாளன்று அடிகளின் விருப்பப்படி ஆசிரமத்தில் நடந்து கொள்கிறேன் என்று அவர் ஒப்புக் கொண்டு, அன்று முதல் தாழ்த்தப்பட்ட மக்களுடன் சமத்துவமாகப் பழக ஆரம்பித்து விட்டார்.
"ஹரிஜன மக்களுக்காக காந்தியடிகள் செய்த எல்லாப் போராட்டக் கிளர்ச்சிகளிலும், கஸ்தூரிபாய் இணைந்து பங்கேற்று எல்லாவிதமான தொண்டுகளையும் செய்தார்... என்று சரோஜினி தேவி தனது வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.
சம்ப்ரான் என்னும் ஊரிலுள்ள அவுரித்தோட்டப் பயிர் விவசாயிகளுக்காக நடந்த போராட்டத்தை 1917ஆம் ஆண்டு காந்தியடிகள் நடத்தினார். அந்தக் கிராம மக்களுடைய உரிமைகளுக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த அந்தப் போராட்ட்த்திற்கு பெண்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். அந்த மாதர்களுக்கு வழிகாட்டியாகக் கஸ்தூரி பாயைக் காந்தியடிகள் நியமித்தார்.
அப்போது, சம்ப்ரான் பகுதியில் ஆறு பள்ளிக்கூடங்கள் உருவாக்கப்பட்டன. அந்தப் பள்ளிகளில் ஒன்றில் கஸ்தூரி பாய் ஆசிரியையாகப் பணி புரிந்தார். கல்வி கற்பிப்பது மட்டுமல்ல அந்தப் பள்ளியின் பணி. கிராமத்து மக்களுக்குரிய அகத்தூய்மையையும், புறத்தூய்மையையும் சொல்லிக் கொடுப்பதும் அப்பள்ளிகளின் வேலை. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அந்த மக்கள் பேசும் குஜராத் மொழி கூட கஸ்துரிபாய்க்குச் சரியாகத் தெரியாது. இருந்தாலும், தனக்குத் தெரிந்த அளவில் அந்த மொழியைக் கொண்டே அவர்களுடன் பழகி, அவர்களுக்குக்குரிய ஒழுங்குகளை அவர் போதித்தார்.
சம்ப்ரான் பகுதியிலே உள்ள ஒவ்வொரு கிராமத்திலுள்ள வீடுகளுக்கும் தவறாது செல்வார். "கிராமப் பெண்கள் தினந்தோறும் குளிக்க வேண்டும். துணிகளைச் சுத்தமாகத் துவைத்து அணிய வேண்டும்; வீடுகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது மட்டுமல்ல, வீட்டின் சுற்றுப் புறங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று பள்ளிப் பாடங்களைப் போல அவர்களுக்குப் போதித்தார்.
உடனே அந்தப் பெண்கள், "அம்மா எங்களிடம் இருப்பது ஒரே ஒரு புடவை. அதைத் துவைத்துக் கட்டிக் கொள்வது எப்படி? காந்தியடிகளிடம் சொல்லி, எங்களுக்கு ஒரு மாற்றுச் சேலை வாங்கிக் கொடுங்கள். நாங்கள்.தினந்தோறும் குளித்துவிட்டுச் சுத்தமான சேலைகளைக் கட்டிக் கொள்கிறோம்" என்றார்கள்.
வறுமையிலே வாடும் இந்தப் பெண்களின் வார்த்தைகள் அன்னையின் மனத்தைப் பக்குவப்படுத்தியது. அவர்கள் மீது மேலும் கருணை பிறந்தது. அப்போதுதான் காந்தியடிகளது மக்கள் சேவையின் உட்பொருள் அன்னைக்குத் தெளிவாகப் புரிந்தது.
வறுமையான ஒரு குடும்பத்தின் கஷ்டங்களைத் தீர்த்து வைப்பதைக் காட்டிலும், வறுமை பெருகிய ஒரு நாட்டின் கஷ்டத்தைத் தீர்ப்பது தான் பெரிய தொண்டு என்பதை அவர் நன்றாக அப்போது தெரிந்து கொண்டார். அதற்குப் பிறகுதான், காந்தியடிகள் நடத்திய ஒவ்வொரு போராட்டங்களிலும் அன்னையும் சேர்ந்து பங்கு பெற்றார். கணவரது தேசத் தொண்டுகளுக்கு தானும் இளைத்தவர் அல்லர் என்பதை அன்னை ஒவ்வொரு போராட்டத்திலும் கலந்து கொண்டு மெய்ப்பித்தார்.
1921-ஆம் ஆண்டு, காந்தியடிகள் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் தோற்று வித்தார். 1922-ஆம் ஆண்டு மகாத்மா கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு நாடெங்கும் மிகுந்த பரபரப்பை உருவாக்கி விட்டது.
வழக்கு விசாரணையின் போது காந்தியடிகள் தனது ஒத்துழையாமைக்குரிய காரண, காரியங்களைக் கூறி குற்றங்களை ஒப்புக்கொண்டார். நீதிபதி, காந்தியடிகளைக் குற்றவாளி என்று தீர்மானித்து ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். அப்போது இந்தியத் தலைவர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுச் சிறை சென்றார்கள்.
அந்த இக்கட்டான நேரத்தில் போராட்ட இயக்கத்துக்குத் தலைமையேற்று நடத்திட எவருமில்லை. அப்போதுதான் அன்னை கஸ்தூரி பாய், தென்னாப்பிரிக்காவிலே தான் போராடிய வீரத்தின் எதிரொலியாக ஓர் அறிக்கையை விடுத்து தனது அஞ்சா நெஞ்சத்தை, ஆங்கிலேயர் ஆட்சிக்குரிய எதிர்ப்புணர்ச்சியை மக்களுக்கு உணர்த்தலானார். அந்த அறிக்கையின் விவரம் இதுதான்:
"எனது நாட்டுச் சகோதரிகளே!
எனது கணவர் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சியின் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது. இந்த நீண்ட காலத் தண்டனையைக் கேட்டு நான் மனம் கலங்க வில்லை என்று கூற முடியாது. இந்தத் தண்டனை முழுவதையும் அவர் அனுபவித்து முடிப்பதற்குள், நாம் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக முயன்றால், அவருடைய தண்டனையைக் குறைத்துச் சிறையிலிருந்து அவரை விரைவில் மீட்க முடியும் என்று உணருகிறேன். அதனால் ஆறுதலும் அடைகிறேன்.
இந்திய மக்கள் விழிப்புற்றுக் காங்கிரசின் வேலைத் திட்டங்களை முழு மனத்துடன் நிறைவேற்ற முன் வருவார்களானால், நாம் அவரைச் சிறையிலே இருந்து மீட்பதுடன், பதினெட்டு மாதங்களாக நாம் எந்த எந்த விஷயங்களுக்காகப் போராடித் துன்பங்களை ஏற்று வருகிறோமோ, அவைகளிலும் நாம் வெற்றி காண முடியும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பரிகாரம் நம்மிடந்தான் உள்ளது. இந்தப் போராட்டம் தோல்வி கண்டால் அந்தக் குற்றம் நம்மையே சாரும். ஆகையால், என்னிடம் அனுதாபம் காட்டவும், என் கணவரிடம் மதிப்புச் செலுத்தவும், காங்கிரசின் திட்டங்களில் கவனம் முழுவதும் செலுத்திப் போராட்டத்தை வெற்றிகரமாக முடிக்கவும், பெண்கள்-ஆண்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
என் கணவருடைய திட்டத்தில் பலவேலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவைகளுள் சர்க்காவும், கதரும் முக்கியமானவை. இந்த இரு விஷயங்களிலும் நாம் வெற்றி பெற்றால் இந்தியப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குச் சிறப்பான உதவிகள் கிடைக்கும்; நம் அடிமைத்தனமும் நீங்கும். ஆகவே, காந்தியடிகளின் நிர்மாணத் திட்டத்துக்கு இந்திய மக்கள் கீழ்க் கண்ட உதவியை அளிக்க வேண்டும்.
1. ஆண், பெண் அனைவரும் அயல்நாட்டுத் துணிகளை ஒழித்துக் கதர் கட்ட வேண்டும். மற்றவர்களையும் அணியுமாறு தூண்ட வேண்டும்.
2. பெண்மணிகள் அனைவரும் நூல் நூற்கும் ராட்டினம் என்ற சர்க்காவில் நூல் நூற்பதை ஒரு வைக்கிராக்கிய நோன்பு போல நினைத்துப் பின்பற்ற வேண்டும். மற்ற மக்களையும் மேற்கண்டவாறு செய்திடத் தூண்ட வேண்டும்.
3. வியாபாரிகள் எல்லாரும் வெளி நாட்டுத் துணிகளை விற்பனை செய்யக் கூடாது.
மகாத்மாவின் ஆணைகளை எவ்வளவு உண்மையாக இந்த அறிக்கை எதிரொலிக்கின்றது என்பதை மக்கள் உணர்ந்து கஸ்துரி பாயின் தேசப் பற்றை எல்லாரும் வரவேற்றனர். காங்கிரஸ் இயக்கத்தை மேலும் வலுவாக வளர்த்திடும் முயற்சியை அந்த அறிக்கை மக்களிடையே ஏற்படுத்தியது என்று கூறலாம்.
xxx
ராஜ்கோட் சமஸ்தானப் போர்!
கஸ்துரி பாய் கைது!
1924-ஆம் ஆண்டு, இருபத்தொரு நாட்கள் உண்ணா விரதப் போர் நடந்தது. இந்தப் போராட்டம் இந்தியாவையே குலுக்கி உலுக்கிற்று! அன்னை கஸ்தூரிபாய்க்கு அடி வயிற்றில் நெருப்பு!
ஆம், மேற்கண்ட ஆண்டில் மகாத்மா காந்தியடிகள், இந்தியத் தலை நகரமான புதுடில்லியில் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக, இருபத்தொரு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அறப்போரைத் துவக்கினார். இந்தப் போராட்டத்தினால், தனது கணவர் உயிருக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்து விடுமோ என்று கலங்கினார்.
நடப்பது நடக்கட்டும் என்ற பொறுப்பை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு, கஸ்தூரி பாய், தனது கணவர் அருகே அமர்ந்து அவருக்குரிய உண்ணாவிரதப் போர்ப் பணிகளைச் செய்தபடியே இருந்தார்!
இந்திய விடுதலைக்காக, ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து காந்தியடிகள் அந்த உண்ணாவிரத்தின் மூலமாகத் தன்னைத்தானே வருத்திக் கொண்டார். நாட்டுக்காகத் துன்பங்களை ஏற்ற மகாத்மாவுடன், கணவருக்காக அன்னை யும் துன்பங்களை ஏற்றார்!
1932-ஆம் அண்டு பர்தோலி நகரில் ஒரு போராட்டம்! அந்த அறப்போரில் அன்னை 'கஸ்தூரிபாயும் கலந்து கொண்டதால், பர்தோலி மாஜிஸ்திரேட் அன்னைக்கு ஆறுவாரம் சிறைத் தண்டனை என்று தீர்ப்பளித்தார்! அந்தத் தண்டனையையும் ஏற்று அன்னை சிறை புகுந்தார்! எனவே, அண்ணல் நாட்டு நலனுக்காக எந்தப் போராட்டத்தை நடத்தினாலும் அந்த அறப்போரில் அன்னையும் முந்திக் கொண்டு வந்து கலந்து கொள்வார்.
அலகாபாத் சபர்மதி ஆசிரமத்தை அண்ணல் 1933-ஆம் ஆண்டு கலைத்துவிட்டார். பிறகு 'வார்தா' என்ற நகர் அருகே, 'சேவா கிராமம்' என்ற ஒரு கிராமத்தை உருவாக்கி அங்கே ஓர் ஆசிரமத்தை அமைத்து அதிலே வசித்து வந்தார் காந்தியடிகள் அந்த ஆசிரமத்துக்கும் அன்னை கஸ்துரிபாய் தான் ஆசிரமத் தலைவி, நிர்வாகி!
சேவா கிராமத்திற்கு வருகை தரும் எண்ணற்ற வருவோர், போவோர், விருந்தினர் அனைவரையும் உபசரிக்கும் தாயாகத் திகழ்ந்து அவர்களுடன் தனது பாசத்தையும், மனிதநேய அன்பையும் காட்டிப் புகழ் பெற்றார் கஸ்தூரிபாய்!
காந்தியார் தேச விடுதலைப் போராட்டம், ஆன்மீக உணர்வு, அரசியல் ஆலோசனைகள், ஆகியவற்றைக் கவனித்துக் கொண்டு இந்திய விடுதலைப் பணிகளைச் செய்து கொண்டிருந்தார்! கஸ்தூரிபாய், காந்தி மேற்கொண்ட அத்தனை பணிகளுக்கு அப்பாலும் பணியாற்றி வந்தார்! ஆசிரமத்தின் எல்லாப் பணிகளையும் தானே நிர்வகித்து எந்த விதக் குறைகளாவது ஏற்பட்டுவிட்டால் அது அடிகளுக்கும் நாட்டுக்கும் அவப் பெயரை உண்டாக்கி விடுமே என்ற எச்சரிக்கையுடனும், அச்சத்துடனும், அடிகளால் ஆற்ற முடியாத, இயலாத, நெருக்கடிகளால் நேரமில்லாத தேசத்தொண்டுகளை அண்ணலையும் மீறி செய்து நற்புகழ் பெற்றிருந்தார்.
டாக்டர் அன்னி பெசண்ட் அம்மையார், ஒரு புத்தகத்தில் அன்னை கஸ்தூரிபாயைப் பற்றி எழுதும் போது:
"கஸ்தூரிபாயைப் பற்றி அதிகமாக எவரும் பாராட்டி எழுதியது இல்லை. ஆயினும் இந்திய அரசியல் என்றதும், காந்தியடிகள் தொண்டுகள் அல்லது காங்கிரஸ் தேசிய இயக்கச் சேவை, அல்லது போராட்டம் இவற்றில் எவையாயினும் சரி, அவற்றில் கஸ்தூரி பாய் தொண்டுகளை, சிறைவாசங்களை, போராற்றல் உணர்ச்சிகளை எவராலும் மறைக்கவோ, மறுக்கவோ, மறக்கவோ முடியாது. இது ஓர் உணர்ச்சி வரலாறாகும். எந்தத் தலைவர்களுக்கும் அவர் சளைத்தவரல்லர்! குறிப்பாக, சேவா கிராமத்தின் உயிரோட்டமே கஸ்தூரி பாயிடம் தான் இருக்கிறது. அந்த ஆசிரமத்தின் எந்தத் திக்கை நோக்கினாலும் சரி, அவரின் தியாகமே மனம் வீசுகின்றது. அவருடைய பொறுமையும், மற்றவர்களின் தேவைக்கு ஏற்றவாறு அவரவர் இயல்புகளை அறிந்து சேவை செய்யும் ஆற்றலும், அந்த ஆசிரமத்திற்கே பெருமை அளிக்கின்றன.
"பாரத நாடு போற்றிப் புகழ்கின்ற சுபாவங்களுக்கு, பண்புகளுக்கு உறைவிடமான அன்னை கஸ்தூரிபாய், மிக மிக உயர்ந்தவர். அவர் இந்த நாட்டுக்கு வழங்கிய விலை மதிப்பற்ற பரிவு, கருணை, அன்பு, இரக்கம், மனிதநேயம், சேர்ந்து பழகும் பாச உணர்வு அனைத்திலும், அவருடைய கணவர் மகாத்மாவினால் நாம் பெறும் எல்லா நன்மைகளிலும் மெளனமான பங்காளி கஸ்தூரிபாய் ஒருவரே என்று அந்த அம்மையார் எழுதியுள்ளார்.
அதனைப் போலவே, ஆசிரமத்தில் வாழ்பவர்களுக்கும், வருவோர் போவோர்களுக்கும், குறிப்பறிந்து பணியாற்றும் உயர்ந்த ஓர் இல்லறத் தலைவி அன்னை கஸ்தூரி பாய் தான் என்றால் அது ஒன்றும் அதிகபட்சமான அளவுகோல் ஆகாது என்று பண்டித ஜவகர்லால் நேரு தனது சேவா கிராம வருகைப் பதிவு ஏட்டிலே எழுதினார்.
'காந்தி அடிகளாரின் துனைவியார் அன்னை கஸ்தூரி பாய் சேவா கிராமத்திற்குச் செல்வோரை எல்லாம் வசீகரிப்பவர்; இந்தியாவில் இருக்கும் போது கஸ்தூரிபாய் அம்மையாரைத் தரிசிப்பதைப் போல் நம் அன்பையும், மரியாதையையும் ஒன்று போல வசீகரிக்கும் வேறொரு தாயன்புக் காட்சியை நாம் உலகெங்கும் உள்ள எந்த ஒரு பெண்மணியிடமும் காணமுடியாது. என்று, தேசப் பணிகளில் ஏணிபோல விளங்கிய சுசிலா நாயர் என்ற அம்மையார், அன்னை கஸ்தூரிபாயின் மறைவுச் செய்தி கேட்டுக் கண்ணீர் சிந்தினார்.
கஸ்தூரி பாய் பிறந்தகமான ’ராஜ்கோட் சமஸ்தான’ மக்களின் உரிமைகளுக்காக ஒரு போராட்டத்தை 1939-ஆம் ஆண்டு துவக்கினார் காந்தியடிகள்.
இந்தப் போராட்டத்தைத் துவக்கத் திட்டமிட்ட நேரத்தில் கஸ்தூரிபாய்க்கு உடல் நலம் சரியில்லை. மிக பலவீனமாகவே அவர் காணப்பட்டார். ஆனாலும், எனது தொண்டு சத்யாக்கிரகம் தான் என்று.அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
இதை அறிந்த ராஜ் கோட் சமஸ்தானத்து அதிகாரிகள் கஸ்தூரி பாயைக் கைது செய்து, விசாரணை செய்யாமலே அவரைச் சிறையில் அடைத்து விட்டார்கள்.
'கஸ்தூரி பாய்' தனது பிறந்த மண்ணிலேயே அறப்போர் செய்ததைப் பற்றி, மகாத்மா காந்தியடிகள் தனது 'ஹரிஜன்' பத்திரிக்கையிலே கீழ்க் கண்டவாறு எழுதினார்:
"ராஜ்கோட் போராட்டத்தில் என் மனைவி ஈடுபட்டதைப் பற்றி எதையும் நான் கூற விரும்பவில்லை. ஆனால், எனது மனைவி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டது குறித்து பலர் பலவிதமான கொடிய வார்த்தைகளைப் பேசுவதாகக் கேள்விப்பட்டதால் தான், நான் எனது கருத்துக்களைக் கூற முன் வந்தேன்.
"சட்ட மறுப்பு இயக்கங்களில் ஈடுபடுவதால் உண்டாகும் துன்பங்களை சுமக்கமுடியாத முதுமை வயதை அடைந்து விட்டாள் என் மனைவி. எழுதப் படிக்கவும் அவளுக்குத் தெரியாது. ஆனாலும், அவள் விரும்பியபடி எதையும் செய்திட அவளுக்கு உரிமை உண்டு. இவ்வாறு நான் எழுதுவதைப் பார்க்கும் போது என் மனைவியைக் குறை கூறுவோருக்கு ஒரு வித ஆச்சரியம் ஏற்படும்.
"ஆப்பிரிக்காவில் இருந்தபோதும், இந்தியாவில் இருக்கும் போதும் என் மனைவி, தன் மனம் தூண்டிவிடும் எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்வாள். தற்போதும் அப்படியே நடந்திருக்கிறாள். பேரன் மணிபென் சிறை புகுந்ததாகக் கேள்விப்பட்டாள். அவள் அதைப் பொறுக்க முடியாமல் உடனே, 'நானும் போராட்டத்தில் சேருகிறேன்' என்று என்னிடம் கூறினாள்.
"உனது உடல் நிலை சரியாக இல்லையே, நலம் குன்றி நடமாடுகிறாயே, பலவீனம் அதிகமாக இருக்கிறதே என்றேன் நான். சில மாதங்களுக்கு முன்புதான் அவள் டில்லியில் இருக்கும்போது, குளியலறையிலே உணர்விழந்து கீழே விழுந்தாள்.
"அந்த நேரத்தில் எனது மகன் தேவதாஸ், கலக்கம் அடையாமல் தாய்க்குரிய சேவைகளைச் செய்திரா விட்டால் அப்போதே அவள் இறந்து போயிருப்பாள். அதனால், சத்தியாக்கிரகத்தில் சேர வேண்டாம் என்று நான் கூறியதையும் அவள் எடுத்துக் கொள்ளவில்லை. உடனே புறப்பட்டுச் சென்று விட்டாள்.
"சர்தார் வல்லபாய் படேலிடம் இது பற்றி யோசனை கேட்டேன். அவள் போராட்டத்தில் கலந்து கொள்வதை அவரும் விரும்பவில்லை. ஆனால், அவரும் இறுதியில் ஒப்புக் கொண்டார்'.
"கஸ்தூரிபாய், ராஜ்கோட்டுப் பெண். அந்த ஊராருக்காகப் போராட வேண்டியது தனது கடமை என்று எண்ணினாள். அந்த சமஸ்தான மக்களின் சுதந்திரத்துக்காக, ராஜ்கோட்டைச் சேர்ந்த மற்ற பெண்கள் துன்பப்படும்போது அவளால் சும்மா இருக்க முடியவில்லை.
"ராஜ்கோட் போராட்டத்தின் வெற்றி; விடுதலைப் போரிலே நாம் ஒரு படி முன்னேறியதைக் குறிப்பிடும். இப்போதோ, சிறிது காலம் கழித்தோ வெற்றி கிடைப்பது உறுதி; அந்த வெற்றி கிடைக்கும் போது அதற்காகக் கஸ்தூரிபாயும் தனது பங்கைச் செலுத்தினாள் என்று மக்கள் எண்ணுவார்கள். சத்தியாக்கிரகப் போராட்டத்தில் வயது முதிர்ந்தவர்களும், பலவீனமாக உள்ளவர்களும் பங்கேற்கலாம். ஆனால், அவர்களுக்கு நெஞ்சில் உரம் இருக்க வேண்டும்” என்று காந்தி எழுதினார்.
ராஜ்கோட் போராட்டம் மக்கள் இடையே பரபரப்பும் தீவிரமுமாய் பரவியது. இதைக் கண்ட காந்தியடிகள் 'சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்’ என்றார். அப்போது கஸ்தூரிபாய் இதே ராஜ்கோட் போராட்டத்துக்காக சிறையில் இருந்தார்.
கணவரின் உண்ணாவிரத முடிவைக் கேள்விப்பட்ட அன்னை கஸ்தூரிபாய், மிகவும் வேதனையடைந்தார்; கண் கலங்கினார். தம்மைக் கேட்காமல் உண்ணா விரதம் தொடங்கியதற்காக, பணிவுடன் கோபம் கொண்டு ஓர் மடலை காந்தியடிகளுக்கு எழுதினார்.
அதற்கு மகாத்மா எழுதிய பதில்: "வீணாக நீ கவலைப்படுகிறாய். கடவுள் ஒரு வாய்ப்பு அளித்துள்ளார். அது பற்றி நீ மகிழ வேண்டும். நான் உண்ணாநோன்பு இருக்கப் போவது எனக்கே தெரியாது. அவ்வாறிருக்க, தான் உன்னையோ மற்றவர்களையோ எப்படிக் கலந்து கொண்டு பேச முடியும்?
"உண்ணா நோன்பு இருக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார் கடவுள். அவருக்குக் கீழ்ப்படியாமல் நான் என்ன செய்ய முடியும்? வருவது வந்தே தீரும். அவ்வாறு அவர் என்னை உரிமையுடன் அழைக்கும் போது, வரமாட்டேன் என்று நிற்க முடியுமா? அல்லது உன்னையோ, மற்றவர்களையோ யோசனை கேட்கத்தான் முடியுமா?
மகாத்மா இந்தப் பதிலுடன் திருப்தி பெறவில்லை. அவர் உண்ணாவிரதம் இருக்கும் போதெல்லாம் பக்கத்தில் இருந்து கஸ்தூரிபாய் பணிவிடை செய்பவர் என்பதால், இப்போது இருக்கும் உண்ணாவிரதத்திலும் உடனிருந்து பணிவிடை செய்ய அவர் விரும்பலாம். அவ்வாறு அவருக்கு விருப்பம் இருந்தால் அதற்கு ஏற்ப அவரைச் சிறையிலே இருந்து விடுதலை செய்யுமாறு சமஸ்தான அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்யலாமா? கஸ்தூரி பாயின் விருப்பம் என்ன என்பதை அறிய சிலரை காந்தி அனுப்பி வைத்தார்.
"வேண்டாம், வேண்டாம். எனது கணவர் உண்ணாவிரதம் பற்றியும் அவரது உடல் நிலை இருக்கும் விதம் குறித்தும், எனக்கு அடிக்கடி தகவல்கள் தந்தால் போதுமானது. இதற்கு முன்னர் அவர் உண்ணாவிரதம் இருந்தபோது காப்பாற்றிய கடவுள், இப்போதும் அவரைக் காப்பாற்றுவார். என்றாலும், ஒருவர் இப்படி அடிக்கடி அபாயத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது. என்று கஸ்தூரிபாய், சிறைக்கு தூது வந்தவர்களிடம் சொல்லி அனுப்பிவிட்டார்.
மகாத்மா இந்த பதிலைக் கேட்டதும் என்ன கூறினார் தெரியுமா? "ஆம். அப்படியும் நடக்கக் கூடும். ஆன்மீக நோக்கோடு மேற்கொள்ளும் உண்ணாவிரதத்தின் முடிவைக் கொண்டு அதன் பலத்தை முடிவுகட்ட இயலாது.
"தெய்வ அருளுக்குப் பரிபூரணமாகப் பணிவதைப் பொறுத்தே உண்ணாநோன்பின் வலிமையைக் கணக்கிட முடியும். தெய்வத்திடம் அவ்வாறு உண்மையாகப் புகலடைவதே உண்ணா நோன்பின் ஒரு பகுதியாகும். மிகச் சிறந்த கடமையைச் செய்யும் போது, இறப்பு ஏற்பட்டாலும் அதை இன்முகத்தோடு ஏற்றே ஆகவேண்டும், என்றார் காந்தியடிகள்.
காந்தி பெருமான், குறிப்பிட்ட நாளன்று தனது உண்ணா நோன்பைத் துவக்கினார். இதைக் கேட்ட ராஜ் கோட் சமஸ்தான நிர்வாகத்தினர் ஒரு மணி நேரத்துக்கெல்லாம் அன்னை கஸ்தூரி பாயை சிறையிலே இருந்து அவசரம் அவசரமாக விடுதலை செய்து விட்டார்கள்!
xxx
மதம் மாறிய மகனுக்கு
கண்ணீர்க் கடிதங்கள்!
காந்தி அடிகளது பெருமை உலகம் எல்லாம் பரவியது! இந்திய மக்கள் போற்றி வணங்கும் அற்புதத் தலைவராக அடிகள் வளர்ந்து வந்ததால். மகாத்மாவை, அவரது பெயர் அருமையை அறியாதார் எவருமில்லை எனலாம்.
காந்தியடிகள் இந்த அளவு வளர்ச்சியுறுவதற்கு அன்னை கஸ்தூரிபாய் தான்தலை சிறந்த காரணம் என்றால், அது ஏதோ சடங்குக்காக எழுதும் வாசகமல்ல; சத்தியத்துக்காக எழுதும் உண்மையாகும்.
இந்த இருவருக்கும் பிறந்த புதல்வர்தான் ஹீராலால் என்பவர். இவர் தனது தந்தையான மகாத்மா காந்தியடிகளுக்கு நேர் எதிரான குணங்களை உடையவராக இருந்தார். காந்தியடிகள் ஒழுக்க சீலர் என்றால் ஹீராலால் ஒழுக்கமற்றவர். தந்தை அமைதியானவர், இவர் ஆர்ப்பாட்டமுடைய அராஜகவாதி; காந்தி மதுபான விரோதி; இவர் மதுபானப் பிரியர்; காந்தி அகிம்சாவாதி; இவர் அகிம்சைக்கே பகையானவர்; காந்தி இந்துமதப் பேரறிவளார்; மகன் முகமதிய மதம் மாறியவர். இவ்வாறு எல்லா நிலைகளிலும் அவர் தனது தந்தையான காந்தி பெருமான் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துபவராக வாழ்ந்தவர்.
முகமதியராக மாறிவிட்ட தனது மகனுக்கு கஸ்தூரி பாய், ஒரு கடிதம் எழுதினார். அவர் எழுதிய கடித விபரம் வருமாறு:
"எனது அன்புள்ள மகன் ஹீராலாலுக்கு,
சென்னை நகரில், நள்ளிரவில், நடுத்தெருவில், நீ குடி வெறியோடு பல தவறுகளைச் செய்ததற்காகப் போலீசார் உன்னைக் கைது செய்து, மறுநாள் ஒரு பெஞ்சு மாஜிஸ்திரேட் விசாரணையில், உனக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். இவ்வளவு எளிய தண்டனையோடு உன்னை விடுதலை செய்து விட்டார்களே! இது தவறு என்றே எனக்குத் தோன்றுகிறது.
"உனது தந்தையாரின் பெருமையை மனத்தில் கொண்டுதான் அந்த மாஜிஸ்திரேட் உனக்கு இவ்வளவு சிறு தண்டனையை விதித்திருக்க வேண்டும். இந்த விவரத்தைக் கேட்டு எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அன்றைய இரவு நீ தனியாக இருந்தாயா? அல்லது வேறு யாராவது நண்பர்கள் உன்னோடு இருந்தார்களா என்று எனக்குத் தெரியாது. எப்படியானால் என்ன? நீ செய்தது பெருந்தவறு.
"உனக்கு என்ன சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. தன்னடக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் உனக்குக் கண்ணீருடன் கூறியிருக்கிறேன். ஆனால், நீயோ, மேலும் மேலும் வீழ்ச்சி அடைகிறாய். இப்போது நீ, என் உயிருக்கே அபாயமாக முடியும்படியான காரியங்களைச் செய்கிறாய். இறுதியை நெருங்குகிற பெற்றோருக்கு நீ அளிக்கும் துயரத்தைப் பற்றி எண்ணிப்பார்.
"கயமையான வாழ்க்கை நடத்துகிற நீ, சமீபத்தில் பெருமை வாய்ந்த உனது தந்தையைக் குறை கூறி ஏளனம் செய்வதாய் அறிந்தேன். பகுத்தறிவு உள்ளவனுக்கு அடாத செய்கை இது. ஈன்ற தந்தையாரை இழிவு படுத்துவதால் நீ உன்னையே இழிவு செய்து கொள்கிறாய் என்பதை உணரவில்லையா? அவரோ, உனக்கு இன்றும் அன்பையே வழங்குகிறார். ஒழுக்கத் தூய்மைக்கு அவர் தருகிற மரியாதை என்ன என்று உனக்குத் தெரியும். ஆனால், அவருடைய அறிவுரைகளை எல்லாம் நீ அலட்சியம் செய்து விட்டாய். ஆயினும் அவர் உன்னைத் தம்மோடு வைத்துக் கொண்டார்; உணவும் உடையும் அளித்தார்; நீ, நோயுற்ற போது பணிவிடைகளும் புரிந்தார்.
"அவருக்கு இந்த உலகத்தில் தான் எத்தனை பொறுப்புக்கள்! அவர் உனக்குச் செய்தது அதிகம். அவர் விதியை எண்ணித்தான் வருந்த முடியும். பகவான் அவருக்கு மாபெரும் ஆன்ம சக்தி அளித்துள்ளார். அவர் இந்த உலகத்தில் நிறைவேற்றி வந்திருக்கும் கடமைகளைச் செய்து முடிக்க ஆண்டவன் தான் அவருக்கு ஆயுளும் உடல் வலிமையும் தரவேண்டும். நான் அபலை. உன்னுடைய அடாவடித் தனத்தை என்னால் தாங்க முடியவில்லை.
"உன்னுடைய தீய ஒழுக்கம் பற்றிப் பலர் உனது தந்தையாருக்குக் கடிதம் எழுதுகின்றனர். உன்னால் உண்டாகும் அவமானங்களை எல்லாம் அவர் ஏற்க வேண்டியுள்ளது. ஆனால், என் அவமான உணர்ச்சியை எங்கு மறைப்பது? நண்பர்களுக்கும் அறிமுகமில்லாதவர்களுக்கும் இடையில் நான் நிமிர முடியாதபடி செய்து விட்டாய் உனது செயல்கள் அவ்வளவு வெட்கக் கேடாக உள்ளன. உன் தந்தையார் உன்னை மன்னிப்பார்! கடவுள் உன்னை மன்னிக்கவே மாட்டார்.
"சென்னையில், ஒரு பிரமுகர் வீட்டில் விருந்தாளியாக இருந்து, அங்கு தவறான காரியங்கள் செய்து விட்டு, ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி விட்டாயாம்! உனது செயலைக் கண்டு அந்தப் பிரமுகர் திணறிப்போய் இருப்பார். ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழித்ததும் தினசரிகளில் உன்னைப் பற்றி என்ன செய்திகள் வருமோ என்ற அச்சத்தினால் எனது நெஞ்சு நடுங்குகின்றது.
"சில சமயம் நீ எங்கிருக்கிறாயோ, எங்கு தூங்குகிறாயோ, என்ன உண்ணுகிறாயோ என்று கவலைப் படுகின்றேன். ஒருவேளை நீ, அனாசாரமான உணவுகளையும் சாப்பிடத் தொடங்கி இருக்கலாம். இவ்வாறெல்லாம் எண்ணி இரவெல்லாம் தூக்கம் இழந்து துன்புறுகிறேன். ஆனால், உன்னை எங்கே பார்க்க முடியும் என்றும் தெரியவில்லை. நீ என்னுடைய மூத்த மகன், உனக்கு ஐம்பது வயதாகி விட்டது. உன்னை நேரில் பார்த்தால் என்னையும் அவமதித்து விடுவாயோ என்று எனக்கு அச்சமாகவும் இருக்கிறது.
"உன்னுடைய மூதாதையரின் மதத்தை நீ துறந்ததின் காரணம் எனக்குப் புரியவில்லை. அது உன் சொந்த விஷயம். ஆனால், ஒரு மாசும் அறியாத பாமர மக்களை ஏமாற்றி இச்சகம் பேசி உன்னைப் பின்பற்றும்படி தூண்டுகிறாய் என்று அறிகிறேன். உனக்கு மதத்தைப் பற்றி என்ன தெரியும்? உன்னுடைய மனநிலையில் மற்றவர்களுக்கு நியாயம் கூற உனக்கு என்ன தகுதி இருக்கிறது? உனது தகப்பனார் பற்றிப் பேச உனக்குச் சிறிதும் தகுதி கிடையாது. இவ்வாறு நீ ஒழுகினால், விரைவில் எல்லோரும் உன்னை வெறுத்து ஒதுக்கும் நிலையை அடைவாய். வழி தவறியுள்ள உன் மனத்தை நேர் வழியில் திருப்பு. இது எனது வேண்டுகோள்.
”நீ மதம் மாறியதை நான் விரும்பவில்லை. ஆயினும், 'நன்னெறி செல்லவே மதம் மாறினேன்' என்று நீ அறிவித்த போது, மத மாற்றங்கூட நல்லது தான் என்று உள்ளுக்குள் மகிழ்ந்தேன். இனி நீ ஒழுக்கம் தவறாமல் வாழ்வாய் என்று நம்பினேன். ஆனால், அந்த நம்பிக்கையும் உடைந்து விட்டது.
"உன்னுடைய நடத்தையால் உன் பிள்ளை எவ்வளவு துயரப்படுகிறான் என்பதை நீ அறிவாயா? உன் நடத்தையால் ஏற்பட்ட சோகச் சுமையை உன் பெண்களும், மருமகளும் மிகவும் கஷ்டப்பட்டுச் சுமக்கிறார்கள்."
ஹீராலுக்கு இவ்வாறு கடிதம் எழுதிய அன்னை கஸ்தூரிபாய், ஹீராலாலின் முகமதிய நண்பர்களுக்கும் பத்திரிகை வாயிலாக ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை விவரம் வருமாறு:
"என்மகன் சமீபத்தில் செய்த காரியங்களுக்கு உதவி புரிந்தவர்களுக்குத்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உங்கள் செயலும், மனப்போக்கும் எனக்கு விளங்கவில்லை. சிந்தனையில் சிறந்த முஸ்லிம் பெரியோர்களும், எங்கள் வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு நண்பர்களாக இருந்த முஸ்லிம்களும், என் மகன் செய்ததைச் சற்றும் ஏற்கவில்லை என்பதைதான் அறிவேன். அதற்காக, நான் மகிழ்கிறேன். மத மாற்றத்தால் என் பிள்ளை உயரவில்லை. இன்னும் இழி செயல்களிலே ஆழ்ந்து விட்டான். ஆனால், உங்கள் மதத்தைச் சார்ந்த சிலர், அவனுக்கு 'மெளல்வி' என்று பட்டம் சூட்டவும் முனைந்துவிட்டார்கள். இது உங்களுக்கு நீதியா என்று கேட்கிறேன். என் மகனைப் போன்ற ஒழுக்கம் கெட்டவர்களுக்கு 'மெளல்வி' பட்டம் சூட்ட உங்கள் மதம் சம்மதிக்கிறதா?
"ஆணேறு என்று அவனைத் தட்டிக் கொடுத்து, நீங்கள் கண்ட ஆனந்தம் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அவனுடைய நன்மைக்காக இவ்வாறு செய்கிறீர்கள் என்றும் என்னால் நம்ப முடியவில்லை. எங்களை இழிவு செய்ய வேண்டும் என்பதே உங்கள் நோக்கம் என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. நீங்கள் உங்கள் விருப்பப்படி செய்யலாம்.
"உங்களுக்குள் சிலருக்காவது மனச்சாட்சி இருக்காதா? நொந்து நலியும் ஒரு தாயின் சோகக் குரல் உங்களுடைய உள்ளத்தைத் தீண்டாதா? அதனால், அவர்கள் என் பிள்ளையை நேர் வழிக்குத் திருப்பிட முயற்சி செய்ய மாட்டார்களா? தெய்வ சந்நிதானத்தில் நியாயமான வேலைகளையே செய்ய வேண்டும் என்று எனது மகனுக்குக் கூறினேன். அதையே உங்களுக்கும் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்."
அன்னை கஸ்தூரிபாய், தன்னுடைய மகன் செய்கையால் எவ்வளவு நொந்து போயிருந்தார் என்பதையே மேலே உள்ள இரண்டு கடிதங்களும் உணர்த்துகின்றன.
இதற்குப் பிறகு தான் ஹீராலால் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பினார். அவர் தனது செயல்களுக்காக வருந்தினார். ஆனால் அவர், தனது பெற்றோர்களுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பவில்லை.
xxx
‘வெள்ளையனே வெளியேறு’
போராட்டம்: கஸ்தூரிபாய் கைது!
1942-ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டம் தொடங்கியது. இதுதான் எனது கடைசிப் போராட்டம் என்று காந்தியடிகள் கூறிவிட்டார். அந்த ஆண்டு ஆகஸ்டு 9-ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரஸ் செயற்குழு பம்பாயில் கூடுவதாக இருந்தது!
விடியல் நேரம்! இருள் இரவை விட்டுப் பிரியாத வேளை! மகாத்மாவும் கஸ்தூரிபாயும் அன்று பிர்லா மாளிகையில் தங்கி இருந்தார்கள். அப்போது ஆங்கிலேயர் அரசு அந்தக் கருக்கல் இருட்டு நேரத்தில் மகாத்மா காந்தியைக் கைது செய்தது!
அன்று மாலை சிவாஜி பூங்காவில் காந்தி அடிகள் பொதுக் கூட்டத்தில் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரை ஆட்சி கைது செய்து விட்டதால், கஸ்துரிபாய் அடிகளாருக்குப் பதிலாக பேசுவார் என்று கூறப்பட்டது.
அன்றுமாலை இரண்டு காவலர்கள் பிர்லா மாளிகைக்கு வந்து, இன்றைய பொதுக்கூட்டத்தில் கஸ்தூரிபாய் பேசப்போகிறாரா என்று அங்குள்ளவர்களைக் கேட்டார்கள். உடனே ஆம் நான் தான் பேசப் போகிறேன் என்று அந்த அதிகாரிகளிடம் கஸ்தூரிபாய் கூறினார். உடனே போலீசார், கஸ்தூரி பாயையும், பியாரிலாலையும், சுசிலா நய்யாரையும் கைது செய்தார்கள். ஏற்கனவே கைது செய்யப்பட்ட காந்தியடிகளை பூனாவில் உள்ள ஆகாகான் அரண்மனையில் அதிகாரிகள் சிறைவைத்திருந்தார்கள். அதே இடத்திற்கு கஸ்தூரிபாயையும் அழைத்துச் சென்று அவர்கள் சிறை வைத்தார்கள்.
அன்னையின் உடல் நலம் ஏற்கனவே மிகவும் பலவீனம் பெற்றிருந்தது. அடிகளுடனே சிறை வைக்கப்பட்டதால் அவர் மகிழ்ச்சி அடைந்தார்.
இந்த நேரத்தில், மகாத்மாவின் நேர்முகச் செயலாளராகவும், அவரது மகனைப்போன்று நம்பிக்கையுடன் உழைத்த வரும், தேசிய காங்கிரசின் செயல் வீரராக விளங்கியவரும், கர்ந்தியடிகளுடன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப் பட்டிருந்தவருமான மகாதேவதேசாய் என்பவர் மரணமடைந்து விட்டார். இவர் மகாத்மாவுக்கு சேவை செய்தவாறே தாம் இறக்கவேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தவர். அவர் இறப்பு காந்தியடிகளை உலுக்கிவிட்டது. சோகமே உருவானார் அடிகள்.
"மகனே! மகாதேவ தேசாய் செல்வமே; என்னை விட்டு விட்டு எங்கேயடா சென்றாய்?" என்று கஸ்தூரிபாய் கதறி அழுதார்!
ஆனால் காந்தியடிகள், துக்கத்தை அடக்கிக் கொண்டு ஆறுதலடைந்தவராய், காங்கிரஸ் தொண்டர்களைக் கைது செய்த ஆணவ ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து இருபத்தொரு நாள் உண்ணாவிரதப்போரைத் துவக்கி விட்டார். அதை ஆண்டவன் கட்டளை என்று மனைவியிடம் கூறிவிட்டார்.
தேசாய் மறைந்த துக்கம் தாளவில்லையே என்று கஸ்தூரிபாய் அழுது கண்ணீர்விட்டார். இருந்தாலும் கணவனை மாற்ற முடியாது; அவர் அறிவித்தால் அறிவித்ததுதான் என்று ஆண்டவனைத் தொழுதுகொண்டு, தேசத்துக்காகக் கணவன் தொடங்கிய போராட்ட வேள்வி வெற்றி பெற்றிட கடவுளை வேண்டினார்.
காந்தியடிகளின் படுக்கையைச் சுற்றிச் சுற்றி அந்த மெலிந்த உடல் வலம் வந்து பணிசெய்து கொண்டே இருந்தது. வயது ஏறிய அந்த மாதரசி, தள்ளாத நேரத்திலும் கணவன் சேவையே கடவுள் சேவை என்று நாட்டுக்காகவும், கணவரது உடல் நலத்துக்காகவும், தனது தள்ளாமையையும் பாராமல் அவருக்குரிய தேவைகளை செய்து கொண்டே இருந்தார்.
1943-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அன்னைக்கு இருமுறை இருதய நோய் தாக்கியது. அதற்கடுத்து டிசம்பர் மாதத்தில் மீண்டும் இரு முறை வந்தது. இத்தனை உடல் நெருக்கடியிலும் குணமாகி, குணமாகி மீண்டும் மீண்டும் கணவருடைய சேவையே தெய்வச் சேவை என்று செய்து கொண்டே வந்தார். 1944-ஆம் ஆண்டில் மீண்டும் மார்பு அடைப்பு நோய் வந்தது. இந்த நோய் வந்த போதெல்லாம் ஆங்கில அரசு தக்க சிகிச்சைகளை அவருக்குத் தந்து, அவரது உடல் நிலை விவரங்களை நாட்டிற்குத் தெரிவித்துக் கொண்டே இருந்தது.
அதே நேரத்தில் இந்திய மக்கள், கஸ்தூரி பாயை விடுதலை செய் என்று குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். இதே போலவே இங்கிலாந்திலே வாழும் இந்தியர்களும் அன்னையை விடுதலை செய் என்று போராடினார்கள். ஆனாலும், ஆங்கிலேய அரசு அன்னையை விடுதலை செய்யவில்லை.
xxx
கஸ்தூரிபாய் மறைந்தார்:
காந்தியடிகள் கண்ணி மல்க 'ஹேராம்' எழுதினார்
தேவதாஸ் காந்தி, காந்தியடிகளின் இளைய மகன். சக்கரவர்த்தி ராஜாஜியின் மருமகன்! அவர் தனது தாயாரின் இறுதி நேரத்தைப் பற்றி எழுதியுள்ள மரண வரலாறு இதோ:
"எனது அன்னையாருக்கு கடைசி நேரம் வரை, ஒரு முறை கூட உணர்வு தவறவில்லை. பிப்ரவரி 20-ஆம் நாள் அவருடைய உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.
"ஆங்கிலேய அரசு அறிக்கை வெளியிட்ட போதும், எப்படியாவது நோய் நீங்கிப் பிழைத்து விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது அவருக்கு.
"இருதயம் பலவீனமாக இயங்கியதால் சிறு நீர்ப்பை அவருக்குச் சரியாக வேலை செய்யவில்லை. அத்துடன் தாயாருக்கு நிமோனியாக் காய்ச்சலும் கண்டுவிட்டது. ரத்த வேகமும் குறைந்து விட்டதால் டாக்டர்கள் என் தாயார் உயிர்மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள்.
"திங்கள் கிழமை காலை நான் தாயாரைப் பார்க்கச் சென்றேன். அவர் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். உறவினர்களும், நண்பர்களும் செய்த ஓரளவு பணிவிடைகளால் அவர் நலமடைந்தவர் போலக் காணப்பட்டார்.
"அன்றிரவு டாக்டர்கள் சொன்னதற்கு மாறாக தாயார் உயிருடன் இருந்தார். இந்த உலகத்தில் அவர் உயிரோடு இருந்தது அன்று இரவுதான். அந்த இரவிலே நண்பர்களும், சுற்றத்தாரும், எனது தந்தையும் அம்மாவுக்கு வேண்டிய பணிகளைச் செய்தார்கள்.
"ஏதாவது கேள்வி கேட்டால், அம்மா அரைகுறை நினைவோடு ஒரே வார்த்தைதான் பதில் கூறுவார். அதுவும் இயலாத போது தலையை மட்டும் ஆட்டுவார். ஒருமுறை அப்பா அருகில் சென்று உட்கார்ந்த போது, அம்மா கைகளைத் தூக்கி அவர் யார்? என்று அப்பாவைப் பார்த்துக் கேட்டார்.
"அம்மா அருகிலே இருந்து சில பணிகளைச் செய்ததன் மூலம் அப்பா ஓர் ஆறுதல் கிடைத்தது போலக் காணப்பட்டார். அம்மாவுக்கு அருகில் இருந்த அப்பா, அப்போது சில ஆண்டுகள் குறைந்து விட்ட வயதினரைப் போலத் திகழ்ந்தார். ஆனால், அப்பா கைகள் மட்டும் நடுங்கிக் கொண்டே இருந்தன.
"அந்த சமயம், முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சி எனது நினைவுக்கு வந்தது. அப்போதுதான் எனது தாயார் சிறையிலே இருந்து வெளியே வந்தார். உடல் நலம் மிகவும் மோசமாக இருந்தது. எனது பெற்றோருக்கு அறிமுகமான ஓர் ஐரோப்பியர் இவர்களை ரயில்வே நிலையத்தில் சந்தித்தார். 'மிஸ்டர் காந்தி இவர் உங்கள் தாயாரா?' என்று அப்பாவைப் பார்த்து, அம்மாவைக் காட்டிக் கேட்டார்.
"பொழுது விடிந்தது. அன்னையின் உடல் நிலை முன்பு இருந்ததை விட, கவலை தருவதாக இருந்தது. என்றாலும். அம்மா அமைதியாக இருந்தார். திங்கட்கிழமை எப்படியும் பிழைத்து விடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. செவ்வாய்க்கிழமை 'பகவான் விட்ட வழி' என்று சரணாகதியாகி விட்டார்.
திங்கட்கிழமை முதல் மருந்து அருந்த மறுத்து விட்டார். தண்ணீரும் ஏற்கவில்லை. ஆனால், செவ்வாயன்று மாலை கங்கை தீர்த்தம், ஒரு துளி வாயில் விட்டார்கள். அவராகவே வாய்திறந்தார். பிற்பகல் மூன்று மணிக்கு என்னைக் கூப்பிட்டு ஆள் அனுப்பினார். "நான் போனதும், என்னை அருகில் அழைத்து, 'நான் போகிறேன், என்றாவது போகத்தானே வேண்டும், இன்றே ஏன் போகக் கூடாது?" என்றார்.
"நான் அவருடைய கடைசிக் குழந்தை. நான்தான் அவருடைய வழியை மறித்துக் கொண்டது போல் இருந்தது. வேறு பல கனிவான வார்த்தைகளைக் கூறி என் அணைப்பிலிருந்து அவர் விலகினார். அதற்கு முன்னால் அவருடைய சொற்கள் இவ்வளவு தெளிவாக இருந்ததில்லை என்று எனக்குத் தோன்றியது.
"பேசியானதும், யாருடைய உதவியையும் நாடாமல் விரைந்து எழுந்து உட்கார்ந்தார். இருகைகளையும் குவித்துத் தம்மால் முடிந்த அளவு உரத்த குரலில் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்தார். அவருடைய பிரார்த்தனையில் மீண்டும் மீண்டும் வந்த சொற்களை, நான் இவ்வாறு தான் மொழி பெயர்ப்பேன். 'ஆண்டவனே அபயம்; கருணை வேண்டி வணங்குகிறேன்!'
"கண்ணிரைத் துடைத்துக் கொள்வதற்காக நான் அறையிலிருந்து வெளியே வந்தேன். ஆகாகான் அரண்மனைக்கு அப்பொழுதுதான் பென்சிலின் ஊசி வந்தது. அதைப் பயன்படுத்த டாக்டர்கள் விரும்பவில்லை. சிறுநீர்ப்பைகளைப் பென்சிலின் இயக்காது, நிமோனியாவைக் குணப்படுத்தக் கூடிய இந்த மருந்தைத் தருவதற்கு ஏற்பாடுசெய்தார்கள். சுமார் ஐந்து மணிக்குத் தைரியப்படுத்திக் கொண்டு அம்மாவைப் பார்க்கச் சென்றேன். என்னைக் கண்டதும் அவர் புன்னகை புரிந்தார். அந்தப் புன்னகைதான் நாற்பத்து மூன்று ஆண்டுகளாய் என்னைக் கெடுத்து வந்தது. மகனுக்குத் தைரியம் கூற மரண வேளையில் அன்னை வழங்கிய புன்னகை அது. என் தாய் புனிதத் தன்மையின் வடிவம். அவர் என்னிடம் மிகுதியாக அன்பைப் பொழிந்தார். அவரிடம் காணப்பட்ட இந்த வஞ்சவைக்காக அவரை மன்னிக்க வேண்டும் என்று அவருக்குத் தெரிந்த எல்லோரிடமும் அவர் சார்பில் வேண்டிக் கொள்கிறேன்.
“தம்முடைய படைப்பிலே, எல்லா விதங்களிலும் சிறந்து விளங்கிய ஓர் ஆன்மாவின் சின்னஞ்சிறு குறைகளைக் கடவுள் கட்டாயம் மன்னிப்பார். என் தாயாரின் புன் சிரிப்பினால், பென்சிலின் மருந்தின்மீது எனக்குப் பெருத்த நம்பிக்கை உண்டானது. அதைப் பற்றி டாக்டர்களோடு பேசினேன். அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எனக்காகச் சோதனை செய்து பார்க்க அவர்கள் சம்மதித்தார்கள்.
"ஊசி குத்தி அன்னையை ஹிம்சை செய்ய நான் இசைந்ததைத் தந்தையார் அறிந்தார். மாலையில் வழக்கப்படி தோட்டத்தில் உலாவச் செல்லாமல் என்னோடு இதைப் பற்றிப் பேசவந்தார். 'நீ எவ்வளவு அரிய மருந்தைக் கொண்டு வந்து கொடுத்தாலும், உன் தாயாரை இனிமேல் குணப்படுத்த முடியாது. நீ வற்புறுத்துவதால் நான் சம்மதிக்கிறேன். ஆயினும், நீ செய்வது தவறு.
"இரண்டு நாட்களாக உனது தாயார் மருந்து உண்பது இல்லை; தண்ணீர் குடிக்கவும் மறுத்து விட்டாள். இப்போது அவள் பகவானின் வசம் இருக்கிறாள். உனக்கு விருப்பமானதைச் செய். ஆனால், நீ செய்வது சரியல்ல என்று எச்சரிக்கிறேன். சாகப்போகும் தாயை, நான்கு அல்லது ஆறு மணிக்கு ஓர் ஊசியால் குத்தி வலியால் துடிக்கச் செய்ய விரும்புகிறாய் என்றார் அவர். அவரை மறுத்துப் பேசுவது சரியாகாது, முறையாகாது. ஊசி குத்தும் யோசனையை நான் கைவிட்டதாக அறிந்ததும் டாக்டர்களும் அதை நிறுத்தி விட்டார்கள்.
"நானும் தந்தையாரும் இவ்வளவு அழகாய் ஒரு நாளும் பேசிக் கொண்டதில்லை. அது முடிந்ததும் அம்மா அப்பாவை அழைப்பதாகத் தகவல் வந்தது. அவர் உடனே போனார். அம்மாவை ஏந்தி அணைத்துக் கொண்டிருந்தோரிடமிருந்து விலக்கித் தாமே மார்போடு சாய்த்து அனைத்துக் கொண்டார்; தம்மால் முடிந்த ஆறுதலை அளித்தார்.
"அங்கிருந்த பத்துப் பேர்களோடு நானும் அம்மாவைப் பார்த்தபடியே நின்றேன். அப்போது அவர் முகத்தில் இருள் சூழ்ந்தது. அம்மா பேசினார். இன்னும் வசதியாக இருப்பதற்காகச் சிறிது அசைந்தார்.
"இமைப் பொழுதில் முடிவு வந்தது. அப்பா கண்ணீரை அடக்கிக் கொண்டார். மற்றவர்கள் கண்ணீர் பெருக்கினார்கள். எல்லோரும் பிறைவடிவில் கூடி, அம்மாவுக்குப் பிரியமான பிரார்த்தனைப் பாடலைப் பாடினார்கள். இரண்டே நிமிடங்கள். எல்லாம் முடிந்தன. அம்மா 7.35 மணிக்கு உயிர் நீத்தார்.
அன்று 1944-ஆம் ஆண்டு சிவராத்திரி நாள் புண்ணிய தினம்! அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எழுபத்தைந்து வயது. அம்மா உயிரைத் துறந்த போது அவருடைய மூன்று பிள்ளைகள், டாக்டர் சுசிலா நய்யார், பியாரேலால், பிரபாவதி தேவி, டாக்டர் கில்பர், கனுகாந்தி, சுவாமி ஆனந்தா ஆகியோர், அங்கு இருந்தார்கள். மரணத்துக்குச் சற்று நேரத்துக்கு முன்னால் கஸ்தூரி பாயின் ஒரே சகோதரர் மாதவதாஸ் கோகுல்தாஸ் பரபரப்பாக உள்ளே வந்தார். கணவன் மடியில் உயிர்துறந்தார் கஸ்தூரிபாய்!
மறுநாள் காலை பத்தேமுக்கால் மணியளவில் வெள்ளைக் கதர் புடவை கட்டி, நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டு, கிச்சிலி நிறப்போர்வையால் அன்னையின் உடலைப் போர்த்தி மூடினார்கள். மலர்களால் அலங்கரித் தார்கள். பிள்ளைகளும், உறவினர்களும் மயானத்துக்குக் கொண்டு சென்று கஸ்தூரிபாய் உடலைத் தகனம் செய்தார்கள். இறுதிச் சடங்குகளை இளைய மகன் தேவதாஸ் காந்தி செய்தார். அப்போது சுமார் நூறு பேர் கூடியிருந்தார்கள்.
கஸ்தூரிபாய் சடலத்தைச் சிதையில் வைத்த போது மகாத்மா காந்தியடிகள் போர்வையால் தனது முகத்தை மறைத்துக் கொண்டு அழுதார். கீதை, குரான், பைபிள் முதலிய சமய நூல்கள் ஓதப்பட்டன. காந்தி அடிகளும், கஸ்தூரிபாயும் தங்கள் மக்களுள் ஒருவராகப் போற்றிய மகாதேவ தேசாய் சமாதிக்கு அருகிலேயே கஸ்தூரிபாய் அடக்கம் செய்யப்பட்டார்.
அன்னை கஸ்தூரி பாய் சமாதி மீது மகாத்மா காந்தியடிகள் தம்முடைய கைகளால் சிறுசிறு சங்குகளைக் கோர்த்து, ஹேராம் என்று எழுதினார் கஸ்தூரி பாய் சகாப்தம் முடிந்தது.
xxx
முதுமைத் துளிகள்
பூனாவிலே உள்ள ஆகாகான் அரண்மனையுள் காந்தியடிகள் சிறைவைக்கப்பட்டிருந்த போது! 'வெள்ளையனே வெளியேறு' போராட்டப் பொதுக் கூட்டத்திலே கஸ்தூரி பாய் பேசப் போகிறார் என்பதற்காக அவரை ஆங்கிலேயர் அரசு கைது செய்தது.
சிறை வைக்கப்பட்ட அறையிலுள்ள அவரது படுக்கைக் கட்டிலின் அருகில் 'ஹேராம்' படம் தொங்கவிடப்பட்டிருந்தது. உடல் நலம் குன்றி மாரடைப்பு நிமோனியா காய்ச்சல் என்று இப்படி பல நோய்களின் துன்பங்களால் அவதிப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார் கஸ்தூரி பாய்.
அவருக்குத் துணையாக இருந்த சுசிலா நய்யாரும் கைது செய்யப்பட்டதால், அவரும் பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தார்!
1944-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் நாள் விடிந்தது. இரவெல்லாம் அன்னையுடன் கால்தூக்கம், அரைத் தூக்கம் என்று விழித்துக் கொண்டு இருந்த சுசிலா அன்னை முனகல் ஒலியைக் கேட்டு எழுந்தார்! உடனே 'சுசீலா என்னை வீட்டுக்கு அழைத்துப் போ' என்றார் கஸ்தூரிபாய்.
"அம்மா, நாம் இப்போது நமது வீட்டில் தானே இருக்கிறோம்; அதோ பாருங்கள் நீங்கள் வழக்கமாகத் தூங்கும் கட்டில். எதிரே 'ஹேராம் படம் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதுதானே உங்களுக்குரிய விருப்பமான படம்" என்று சுசீலா நேரத்துக்கேற்றவாறு கூறி, கவனத்தைத் திசை திருப்பினார்.
சிறிது நேரம் கழித்து சுசீலாவை அழைத்து தன்னை வீட்டிலுள்ள பாபுவின் அறைக்கு அழைத்துச் செல்லுமாறு வேண்டினார் கஸ்தூரிபாய்.
"நீங்கள் 'பாபு' அறையில் தானே இருக்கிறீர்கள் அம்மா" என்றார் சுசீலா ஒருவேளை தனது கணவரான காந்தியடிகளைப் பார்க்க விரும்புகிறாரோ என்னவோ என்று எண்ணிய அவர் பக்கத்து அறையிலே சிற்றுண்டி உண்டு கொண்டிருக்கும் காந்தியடிகளுக்கு ஆள் அனுப்பி, வருமாறு கூறினார்!
சுசீலாவின் மடியிலே சாய்ந்து கொண்டிருந்த கஸ்தூரி பாய், திடீரென்று, 'சுசீலா, எங்கே போவோம்? இறந்து விடுவோமா? என்றார்.
கஸ்தூரி பாய் உடல் நலம் சாதாரணமாகக் குன்றி இருந்த போதெல்லாம் இதே சொற்களைப் பலமுறை கூறி இருக்கிறார் அவர்.
அப்போதெல்லாம் சுசீலா அதற்குப் பதில் சொல்லும் போது "ஏனம்மா இப்படியெல்லாம் பேசுகிறீர்கள் கற்பனையாகக் கூட இப்படியெல்லாம் சொற்கள் உங்களது வாயிலே இருந்து வரக் கூடாதம்மா! நாம் எங்கே போகிறோம், நாம் எல்லோரும் வீட்டுக்குத்தான் திரும்புவோம்' என்று கூறுவதும், தேற்றுவதும் முன்புள்ள வழக்கமாகும்.
ஆனால், 1944ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் நாளன்று சுசிலாவுக்கு அப்படிச் சொல்லத் துணிவு வரவில்லை. அதனால் அவர் அன்று கூறியது என்ன தெரியுமா?
"நாம் எல்லோரும் ஒரு நாள் போக வேண்டியவர்கள்தாம் தாயே! இதனால் என்ன?" என்றார் சுசீலா!
இதற்கு கஸ்தூரிபாய், 'ஆமாம், உண்மை தான்' என்பது போல தனது தலையை மட்டுமே ஆட்டினார், பாவம்!
கொஞ்ச நேரம் கழிந்த பின்பு, சுசீலா சொல்லி அனுப்பியதற்கு ஏற்றவாறு காந்தியடிகள் வந்தார். சிறிது நேரம் மனைவி அருகே நின்று கொண்டிருந்தார். பின்பு, அவர், தனது மனைவியிடம் நான் உலாவப் போகட்டுமா பாய்? என்று கேட்டு விட்டு நின்று கொண்டே இருந்தார்.
வழக்கமாகக் காந்தியடிகள் கஸ்தூரி பாயிடம் எதுவும் கேட்கும் போது, கஸ்தூரிபாய், ஒரு நாளும் தடுக்கவோ, அல்லது மறுப்போ, மறுபதிலோ ஏதும் கூறமாட்டார். ஆனால், அன்று அவர் தடுத்தார்!
காந்தியடிகள் கட்டிலின் மேலே உட்கார்ந்தார். தனது கணவரின் தோள்மீது தலை வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டே இருந்தார். அப்போது கணவன் மனைவி இருவர் முகங்கள் இடையே ஏதோ ஓர் அதிர்ச்சியும். அன்பின் அமைதியும், அக நெகிழ்ச்சிகளும் அவர்களையே அறியாதவாறு நிகழ்ந்தன.
இந்த இருவரது உள்ள உருக்க உணர்வுகளை உணர்ந்து அந்த அறையில் இருந்தோர் அனைவரும், ஒலி எழாமல் அவரவர் பாதங்களில் இலவம் பஞ்சு கட்டிக் கொண்டு நடப்பதை போல, மெதுவாக நடந்து நகர்ந்தார்கள். அந்தக் காட்சி, அந்த நேரத்தில், ஏதோ முழு நிலா ஒளியிலே இரண்டு அன்னப் பறவைகள் தங்களது சிறகுகளால் மரண வருடல்களை நெருடுவது போன்ற கண்கொள்ளாக் கண்ணிர்க் காட்சியாக அந்த தேசபக்தப் பறவைகளுக்குத் தென்பட்டது.
இது இரவு சுமார் பத்து மணி நேரம் வரை நீடித்தது. இருவருமே ஏறக்குறைய 1906-ஆம் ஆண்டு முதல் இல்லறத் துறவறம் ஏற்றவர்கள். ஆனால் அந்த மரண மயக்கம் அவ்வளவு நேரம் நீடித்தபடியே நின்றது. இடையிடையே ஹேராம், ஹேராம் என்று அவர்களுடைய உதடுகள் ஒலித்தன.
திடீரென்று கஸ்தூரிபாய்க்கு இருமல் வந்து விட்டது. அப்போது பெருமான் காந்தி தனது கைகளால் மிருதுவாகத் தடவிக் கொடுத்தபடியே இருந்தார்:
இக்காட்சி தான் உலகக் கவிஞர்கள் எவரும் இன்று வரை எழுதாத, பாவேந்தர் பாரதிதாசனாரின், குடும்ப விளக்கில் வருகிறது.
கஸ்தூரி பாய், திருவள்ளுவர் கூறிய “வாழ்க்கைத் துணை நலம்" என்ற தத்துவ இலக்கணத்திற்கு இலக்கியமாக வாழ்ந்து காட்டி மறைந்த பெருமாட்டியாவார்!
அந்த இரு பெரும் ஞானிகளின் உடல்கள் நம்மிடையே நடமாடாவிட்டாலும், அவர்கள் வாழ்ந்து காட்டிய உயிரினும் மேலான ஒழுக்க விழுப்ப மேன்மைச் சீலங்கள், "நெருநெல் உளனொருவன் இன்றில்லை" என்னும் பெருமையை இந்த உலகிலே உலாவரச் செய்துள்ளார்கள்: வாழ்க கஸ்தூரிபாய் போன்ற வாழ்க்கைத் துணை நலங்கள்
xxx
‘மங்கையராகப் பிறக்க மாதவம்
செய்திட’ வேண்டுமம்மா!
பெண்ணின் பெருந்தக்க யாவுள?' என்று வள்ளுவர் பெருமான் கேள்வி எழுப்பினார் பெண்ணின் பெருமை அவ்வளவு சிறப்புமிக்கது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அய்யன் திருவள்ளுவனாரின் கேள்வியோடு கொஞ்சம் ஆன்மிக தத்துவத்தைக் கலந்து, "மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா" என்றார்.
கஸ்தூரி பாயின் உடல் தனது நாட்டுக்காகவும், வீட்டுக்காகவும் அரும் பணிகளாற்றி ஓடாய் தேய்ந்து நோய்களால் பலவீனமானது.
ஆனால் அவர், ஒரு நாளும் இந்த நோய் நொடித் தண்டனைகளுக்காக அஞ்சி வாழ்ந்தது இல்லை. தனது கணவர் வாழ்வே தனது உயிர் வாழ்வு என்று வாழ்ந்து காட்டியவர் கஸ்தூரி பாய்.
அவர் சுபாவம் மென்மையானது, பணியாற்றும் பாங்கு மெதுவானது; நடப்பதோ அன்னத்தின் வேகம்; சுறுசுறுப்பு சிற்றெறும்பு ஓட்டம்! இத்தகைய பண்பாடுகள் பூண்ட கஸ்தூரிபாய், ஆன்மீக வழிபாடுகளில் மயில் போன்றவர்!
சபர்மதி ஆசிரமமானாலும் சரி, சேவாகிராம ஆசிரமமானாலும் சரி, அவர் அதிகாலை நான்கு மணிக்கே எழுவார், காலைக் கடனோடு நீராடலும் புரிந்து விட்டு ஆசிரமப் பிரார்த்தனைக் கூட்ட வழிபாடுகளிலே கலந்து கொண்டு, மீண்டுமோர் கோழி உறக்கம் செய்து சிலிர்த் தெழுவார்
ஆசிரம வாசிகளுடன் கலந்து பணிகளைப் பகிர்ந்து செய்வார்; சமையல் வேலைகளை மேற் பார்வையிடுவார்; அடிகளுக்குரிய சிற்றுண்டி தயாரானதும், உடனே தனது அறைக்கு அதைக் கொண்டு போய் பாதுகாப்புடன் வைத்து, அடிகள் உண்ணும் நேரம் வந்ததும் அவருக்குப் பரிமாறி விட்டு அவர் அருகிலேயே அமர்ந்து இவரும் உண்பார்.
ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரமோ, ஒன்றரை மணி நேரமோ ராமாயணம், கீதை போன்ற நூல்களைப் படிப்பார். மறுபடியும் மகாத்மாவின் மதிய உணவுக்கு வேண்டியவற்றைக் கண்காணித்து, அடிகளுக்கு அமுது படைத்து, தானும் உண்பார்.
கணவர் மீது ஓர் ஈ கூட அமரக் கூடாது. ஒருவுேளை ஈ அமர்வதை அவர் பார்த்து விட்டால் போதும், உடனே கைக் குட்டையாலோ, விசிறியாலோ அதை ஒட்டுவார். காந்தியடிகள் காலடியில் அமர்ந்து கால்களை வருடுவார். அதற்குப் பிறகுதான் தனக்கு கிரமப்பரிகாரம் செய்து கொள்வார்.
காலையில் எழுந்தவுடன் ராட்டையில் நூல் நூற்பார்; எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அதை மட்டும் நிறுத்த மாட்டார் கஸ்தூரிபாய், ஏனென்றால் தான் நூல் நூற்பு வேலையை தவறாமல் ஒழுங்காகச் செய்தால், கணவரின் நோக்கத்தை நிறைவேற்ற முடியும்; நூல் நூற்றலின் நுனியில்தான் இந்திய நாட்டின் விடுதலை இருப்பதாகக் அடிகள் அடிக்கடி மக்களுக்கு அறிவிப்பதால், அதனைக் கஸ்தூரிபாய் தவறாமல் செய்து வந்தார்.
மாலை நேரமா? மீண்டும் மகாத்மாவுக்கு உணவுத் தயாரிப்பு மேற்பார்வை; ஆசிரம வாசிகளுக்குத் தயாராகும் உணவு மேற்பார்வை; வருவோர் போவோர், தங்குவோர் விருந்தினர் உபசரிப்புக்களின் கண்காணிப்பு ஆகிய வேலைகளைத் திட்டமிட்டு, அங்கங்கே தேனீ போலப் பறந்து, சரியாக நடக்கின்றதா வேலைகள் என்பதை நோக்குவார்.
அவர் மாலை உணவு உண்பதை நிறுத்தி விட்டார்; வெறும் காப்பிமட்டும் அருந்துவார்; அதையும் சில மாதங்கள் கழித்து நிறுத்தி விட்டார்.
அடிகள் மாலை வேளைகளில் உலாவச் சென்றதும், இவர் ஆசிரம நோயாளிகளைப் பார்த்து அவர்களது தேவைகளை நிறைவேற்றுவார்.
உலாவி விட்டு அடிகள் வந்ததும், ஆசிர்ம வழிபாடுகள் நடக்கும்; அந்தப் பிரார்த்தனை வழிபாடுகளில் கஸ்தூரி பாய் முழுப் பங்கேற்றுக் கலந்து கொள்வார் இராமாயணம், கீதையின் கருத்துகளை அந்த வழிபாடுகளிலே ஆசிரம மக்களுக்கு எடுத்துக் காட்டி நெறிப்படுத்துவார். மாலை நேர பிரார்த் தனைகளில் பெரும்பாலும் கஸ்தூரி பாயின் ஆன்மீக தர்பார்தான், அமர்க்களமாக, கோலாகலமாக தினசரி நடைபெறும்.
ஆசிரமப் பெண்கள், சேவா கிராமத்தில் வசிக்கும் பெண்கள் எல்லாரும் கஸ்தூரி பாய் அருகே உட்கார்ந்து பஜனை பாடுவார்கள்.
ஆன்மீக வழிபாடுகள் முடிந்ததும், இரவு உணவு வகைகள் எல்லாருக்கும். பொதுவாக நடைபெறும். இறுதியாக காந்தியடிகளது படுக்கைக்கான ஏற்பாடுகளை ஒழுங்கு செய்து விட்ட பின்பு, தனது அறையிலே வந்து உறக்கம் கொள்வார். பேரப்பிள்ளைகள் மீது அடிகளுக்கும் அன்னைக்கும் அளவிலா அன்பும் பற்றும் உண்டு.
1939-ம் ஆண்டு கஸ்தூரி பாய் ராஜ்கோட் சமஸ்தானப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். தனது பேரன் கனுவை அந்த சமஸ்தான அதிகாரிகள் கைது செய்து விட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்ட அடுத்த விநாடியே, கஸ்தூரிபாய் தனது உடல் நலிவு, மெலிவு, நோய்களது கொடுமைகள், இருதயக் கோளாறுகள் எல்லாவற்றையும் மறந்து விட்டு, பேரன் சிறுவனாயிற்றே என்ற பாசம் மேலிட்டதால் உடனே போராட்டத்தில் கலந்து கொண்டார். இச்சம்பவத்தை காந்தியடிகளும் தனது ராஜ் கோட் போராட்ட அறிக்கையில் குறிப்பிட்டு விளக்கம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அன்னை கஸ்துரிபாய் 'மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்ற கவிமணியின் கருத்துக்கும்.
'பெண்ணின் பெருந்தக்கயாவுள' என்ற திருவள்ளுவர் பெருமானின் பெருமைக்குரிய கருத்துக்கும் இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர். என்றால் அது மிகையல்ல.
* * *
கருத்துகள்
கருத்துரையிடுக