அலிபாபா
சுட்டி கதைகள்
Back
அலிபாபா
தியாகி ப. ராமசாமி
அலிபாபா
தமிழாக்கம் :
ப. ராமஸ்வாமி
பழனியப்பா பிரதர்ஸ்
கோனார் மாளிகை
25, பீட்டர்ன் சாலை, சென்னை - 600 014
கிளைகள் :
திருச்சி - 620 002 சேலம் - 636 001
மதுரை - 625 001 கோயமுத்தூர் - 641 001
ஈரோடு - 638 001.
முதற்பதிப்பு - 1965
ஆறாம் பதிப்பு – 1984
ஏழாம் பதிப்பு - 1989
எட்டாம் பதிப்பு - 2002
விலை : ரூ. 15 - 00
* * *
ஏஷியன் அச்சகம், சென்னை - 600 014.
இந்தக் கதை
அலுப்போ சலிப்போ இல்லாமல் படிக்கவும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் ஏற்றது அலிபாபாவின் கதை. கதையை ஒருமுறை படித்தவுடன், நமக்கு அந்த விறகுவெட்டியிடம் அன்பு ஏற்பட்டு விடுகின்றது; அவனுடைய எதிரிகள் நம் எதிரிகளாக ஆகிவிடுகின்றனர். அவனை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் மார்கியானா என்னும் வேலைக்காரி உண்மையிலேயே உலகில் ஒரு பெண்ணாக உயிருடன் இருந்தால், அவளைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று ஆவலுண்டாகின்றது.
இந்தக் கதை ‘அராபியர் நிசிக்கதைகள்’ அல்லது ‘ஆயிரத்தோர் இரவுகள்’ என்று சொல்லப்பெறும் கதைகளோடு பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்பெற்றுள்ள கதைகளுள் ஒன்று. இது தமிழிலும் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு இன்பமூட்டக்கூடிய ‘சிந்துபாதின் கடல் யாத்திரைகள்’, ‘அலாவுத்தினும் அற்புத விளக்கும்’, ‘இரண்டு நண்பர்கள்’, ‘அலிபாபா’ ஆகிய அரபுக்கதைகளை தமிழில் தனித்தனியாக வெளியிட்டிருக்கிறோம். தமிழகத்தில் இவைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்குமென்று நம்புகிறோம்.
பழனியப்பா பிரதர்ஸ்
உள்ளுறை
1. விறகுவெட்டியும் நிதிக்குவியலும்
2. பொறாமையால் விளைந்த கேடு
3. திருடர்களின் சூழ்ச்சிகள்
4. மார்கியானாவின் மதிநுட்பம்
5. விருந்து, நடனம், மரணம்!
…
1
விறகுவெட்டியும் நிதிக்குவியலும்
பற்பல ஆண்டுகளுக்கு முன்னால், பாரசிக நாட்டிலே, ஒரு நகரில் இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் மூத்தவன் பெயர் காஸிம். இளையவன் பெயர் அலிபாபா. அவர்களுடைய தந்தை வைத்துச்சென்ற சிறிதளவு சொத்தை அவர்கள் விரைவிலேயே செலவழித்துக் கரைத்து விட்டனர். ஆனால், காஸிம், செல்வம் மிகுந்த ஒரு பெண்ணை மணந்துகொண்டதில், அவனுடைய மாமனார் சொத்துகள் அவனை வந்தடைந்தன. ஒரு பெரிய கடை, ஏராளமான பொருள்கள் நிறைந்த ஒரு கிடங்கு, பூமிக்குள்ளே புதைத்து வைத்திருந்த தங்கம் முதலியவையும் அவனுக்கு உரிமையாயின. அவன் ஒரு கனவான் என்று ஊரெல்லாம் பெயராயிற்று. ஆனால் அலிபாபா, தன்னைப் போன்ற ஏழையான ஒரு பெண்ணை மணந்துகொண்டதால், அவன் ஒரு குடிசையிலேயே வாழ்ந்து வந்தான். ஒவ்வொரு நாளும் அவன் காட்டிற்குச் சென்று, விறகு வெட்டி, அதை விற்று, வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் மூன்று கழுதைகள் இருந்தன. அவைகளின் மீது விறகுக் கட்டுகளை ஏற்றிக்கொண்டு வருவது அவன் வழக்கம்.
ஒருநாள் அவன் வனத்தில், காய்ந்த கொப்புகளை வெட்டி, கழுதைகளின் மேல் ஏற்றி, வீட்டுக்குத் திரும்பும் சமயத்தில், அவனுக்கு வலப்புறம் சிறிது தூரத்தில், புழுதிப் படலத்தை அவன் கண்டான். குதிரைகளின்மீது எவர்களோ வந்து கொண்டிருந்தனர். அவர்கள் திருடர்களாயிருந்தால், தன்னை வெட்டிப் போட்டுவிட்டு, தன் கழுதைகளையும் பற்றிக்கொண்டு போய்விடுவார்கள் என்று அவன் அஞ்சினான். எனவே, அவன் அங்கிருந்து ஓடத் தொடங்கினான். கழுதைகளை ஓர் ஒற்றையடிப் பாதையில் விரட்டிவிட்டு, அவன் ஒரு பெரிய மரத்தின் கிளையில் ஏறி மறைந்துகொண்டான். அந்த மரத்திற்கு எதிரில் உயரமான பாறை ஒன்று இருந்தது. மரத்தில் இருந்துகொண்டே அலிபாபா கீழே என்ன நடந்தாலும் பார்த்துத் தெரிந்து கொள்ள வசதியாக இருந்தது. குதிரைகளில்வந்தவர்கள் வல்லமை மிக்க வாலிபர்கள். அவர்கள் கொள்ளைக்காரர்கள் என்பதைப் பார்த்தவுடனேயே அலிபாபா தெரிந்துகொண்டான். எங்கோ சாலையில் சென்றுகொண்டிருந்த வணிகர்களைக் கொள்ளையடித்து, கைப்பற்றிய பணத்தையும் பொருள்களையும் வனத்திலே ஒரு குகையில் மறைத்து வைப்பதற்காக, அவர்கள் அங்கு வந்திருந்தார்கள். எல்லோரும், தங்கள் குதிரைகளை, அலிபாபா அமர்ந்திருந்த மரத் தினடியில் நிறுத்திவிட்டுத் தாங்கள் கொண்டு வந்திருந்த கோணிப்பைகளைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்கி நடந்து சென்றார்கள். பைகளில் ஏராளமான பொன்னும் வெள்ளியும் இருந்ததை அலிபாபா ஒரளவு கவனித்துக்கொண்டான். அவர்கள் மொத்தம் நாற்பது பேர்கள் இருந்தார்கள் என்பதை அவன் எண்ணிப் பார்த்தான். அவர்களின் தலைவனாக காணப்பெற்ற திருடன், மற்றவர்களுக்கு முன்னால், முள்ளிலும் புதரிலும் நடந்து சென்று, எதிரேயிருந்த நெடிய பாறையின் முன்பு நின்றுக்கொண்டு, “ஓ ஸிம்ஸிம், திற!” என்று கூறினான்.
உடனே, பாறையில் பெரிய வாயில் ஒன்று தோன்றிற்று. அந்த வாயிலில் பொருந்தியிருந்த பாறை, திருடர் தலைவனின் சொற்களால் ஒரு கதவு போல் உட்புறம் சென்றுவிட்டது. தலைவன் அந்த வாயிலடியில் நின்றுகொண்டு மற்றவர்கள் எல்லோரும் உள்ளே சென்ற பிறகு, தானும் உள்ளே சென்றான். உடனேயே பாறை தானாகவே வாயிலை அடைத்துக்கொண்டது. திருடர்கள்
வெகு நேரம் உள்ளே தங்கியிருந்தார்கள். அலிபாபா கீழே இறங்கிச் செல்ல முடியாமல், துடித்துக் கொண்டிருந்தான். அவன் இறங்கிய சமயத்தில், திருடர்கள் வெளியே வந்து விட்டால் என்ன செய்வது? ஆனால், மரத்தின் மேலே எவ்வளவு நேரம் குந்தியிருப்பது? அவன், மெதுவாகக் கீழே இறங்கி, ஒரு குதிரை மேல் ஏறிக் கொண்டு, தன் கழுதைகளை ஓட்டிச் செல்லலாம் என்று எண்ணினான்.
அந்த நேரத்தில் குகையின் வாயில் திறந்து, திருடர்கள் வெளியே வரத் தொடங்கினர். தலைவன், முன் போலவே, வாயிலில் நின்று கொண்டிருந்தான்; எல்லோரும் வெளியேறிய பிறகு, அவன் “ஓ ஸிம்ஸிம், மூடிக் கொள்!” என்று சொன்னான். பாறை, குகையின் வாயிலை மூடிக் கொண்டது. நாற்பது திருடர்கள், தத்தம் குதிரைமீது ஏறிக்கொண்டு, தாங்கள் வந்த வழியிலேயே திரும்பச் சென்றுவிட்டார்கள். உடனே அலிபாபா கீழே குதித்துவிடாமல், சிறிது நேரம் மரத்தின்மீதே மறைந்திருந்தான். ஏனெனில், எவனாவது ஒரு திருடன் திடீரென்று திரும்பி, அந்தப் பக்கத்தைச் சுற்றிப்பார்க்க நேர்ந்தால், தன் உயிருக்கு ஆபத்து வரும் என்று எண்ணினான்.
திருடர்கள் நெடுந்துாரம் சென்றபிறகு, அவன் கீழே இறங்கினான். திருடர் தலைவன் சொல்லிய மந்திரச் சொற்களைத் தான் சொன்னால் பாறை விலகுமா என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று. ஆகவே, அவன் “ஓ ஸிம்ஸிம், திற” என்று உரக்கச் கூவினான். என்ன ஆச்சரியம்! பாறை விலகிப் பாதை திறந்துவிட்டது. அவன் குகையினுள் புகுந்துவிட்டான். குகையின் வாயில் மட்டும் ஓர் ஆள் உயரத்தில் இருந்த போதிலும், உள்ளே பெரிய பண்டகச் சாலை அமைந்திருப்பதை அவன் கண்டான் குகையின் மேலேயிருந்த பாறைகளில் அமைந்திருந்த துவாரங்களின் வழியாக ஒளிக்கதிர்கள் உள்ளே வீசிக்கொண்டிருந்ததால், அங்கு நல்ல வெளிச்சமாயிருந்தது. அங்கே, குவியல் குவியலாகவும், அடுக்கு அடுக்காகவும் சேர்த்து வைக்கப் பட்டிருந்த பொருள்களைக் கண்டவுடன் அலிபாபா பிரமித்துப் போனான். பற்பல வண்ணங்களின் பட்டுத்துகில்கள், பருத்தி ஆடைகள், விலைமதிப்புள்ள இரத்தினக் கம்பளங்கள் முதலியவை தரையிலிருந்து
உச்சிவரை அடுக்கப்பெற்றிருந்தன. அவற்றுடன், எத்தனையோ தோற்பைகளில் பொற்காசுகளும் வெள்ளி நாணயங்களும் மின்னிக் கொண்டிருந்தன. அவைகளையெல்லாம் கண்ட அலிபாபா பல தலைமுறைகளாகத் திருடர்கள் சேர்த்து வைத்திருந்த செல்வங்களாகவே அவை இருக்க வேண்டும் என்று எண்ணினான். ஏனெனில், ஒரே தலைமுறையில் அவ்வளவு பொருள்களைச் சேர்க்க முடியாது.
அலிபாபா குகையினுள்ளே நிற்கையில் வெளியேயிருந்த பாறை தானாகவே வாயிலை அடைத்துக் கொண்டது. ஆனால், அவன் அதைப்பற்றி கவலைப்படவேயில்லை. வாயிலைத் திறப்பதற்கும் அடைப்பதற்கும் உரிய மந்திரத்தை அவன் நன்றாக நினைவில் வைத்திருந்தான். அவனுடைய எண்ணமும் பார்வையும் நாணயங்கள் மீதே பதிந்திருந்தன. அவன் மற்றைப் பொருள்களை நாடவில்லை. ஆகவே, தன் கழுதைகள் இரண்டும் எத்தனை கோணி மூட்டைகளைச் சுமக்க முடியுமோ, அத்தனை நாணய மூட்டைகளை அவன் குகையின் வாயிலண்டையில் கொண்டுபோய் வைத்துக் கொண்டு, மந்திரமொழிகளை கூறினான். பாறை அகன்றதும் அவன், பொன், வெள்ளி, நாணயங்கள் நிறைய மூட்டைகளைக் கழுதை மேல் ஏற்றி, அவை வெளியே தெரியாத முறையில், அவற்றின்மீது சில விறகுச் சுள்ளிகளையும் வைத்துக்கட்டினான். “ஓ எலிம் எலிம், மூடிக் கொள்!” என்று அவன் கூறியதும், பாறை, குகையை மூடிக்கொண்டது. அவன் வழக்கம் போல், கழுதையை ஓட்டிக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான்.
கழுதைகள் வீட்டு முற்றத்தினுள் சென்றதும் அவன் வெளிக்கதவை அடைத்துவிட்டு, முதலில் மேலாக இருந்த சுள்ளிகளை இறக்கினான். பின்னர், நாணய மூட்டைகளை ஓரிடத்தில் அடுக்கி வைத்தான். அப்பொழுது அவன் மனைவி, எல்லா மூட்டைகளும் தங்கமும் வெள்ளியுமாயிருப்பதைக் கண்டு அவன் எங்காவது கொள்ளையடித்துக்கொண்டு வந்திருப்பான் என்று கருதினாள். அதனால் அவள் வருத்தமடைந்து, “நமக்கு இந்த ஈனமான தொழில் தகுமா?” என்று அவனைக் கண்டித்துப் பேசத்தொடங்கினாள். அப்பொழுது அலிபாபா, “நான் கொள்ளைக்காரன் ஆக வில்லை! என் கதையை முழுவதும் கேட்டால், நீயே ஆச்சரியப்படுவாய்!” என்று சொல்லி, வனத்திலே நேர்ந்த விஷயங்களை விவரமாக அவளுக்கு எடுத்துக் கூறினான். அத்துடன், பையிலிருந்த தங்க நாணயங்களை அவள் கண்முன்பு அவன் கீழே கொட்டிக் குவியல்களாகக் குவித்து வைத்தான்.
பொற்காசுகளின் ஒளி அவளுடைய கண்களைப் பறித்தது. அவன் கூறிய வரலாறும் அவள் உள்ளத்திற்கு உவப்பாக இருந்தது. அந்நிலையில் அவள் நாணயங்களைக் கையிலெடுத்து எண்னத் தொடங்கினாள். அதைக்கண்ட அலிபாபா, “அடுத்தாற்போல், இவைகளை யாருக்கும் புலப்படாமல் குழி தோண்டி மண்ணுக்குள் புதைத்து வைக்கவேண்டும்! அதைப்பற்றி யோசனை செய்யாமல் எண்னத் தொடங்கிவிட்டாயே! இவைகளை எண்ண முடியுமா?” என்று கேட்டான். அவன் மனைவி, “எண்ண முடியாவிட்டாலும், எவ்வளவு நாணயம் இருக்கிறது என்பதற்கு ஒரு கணக்குத் தெரிய வேண்டாவா? அதற்கு வழி செய்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, எழுந்து வெளியே சென்றாள்.
அவள் நேராக மைத்துனன் காஸிமின் வீட்டுக்குச் சென்றாள். அங்கே அவன் இல்லாததால், அவன் மனைவியைக் கண்டு, ஒரு தராசும் படிக்கற்களும் வேண்டும் என்று கேட்டாள். அந்த அம்மாள் தராசுகளில் பெரியது வேண்டுமா அல்லது சிறியது போதுமா என்று கேட்டாள். சிறிய தராசையும் கற்களையும் வாங்கிக் கொண்டு, இளையவள் வெளியே சென்றாள். அந்தத்
தராசில் பண்டங்களை வைக்கும் தட்டில், அவளுக்குத் தெரியாமல், காஸிமின் மனைவி கொஞ்சம் மெழுகைத் தடவி வைத்திருந்தாள். தராசில் நிறுக்கும் பொருளில் தட்டிலும் சிறிதளவு ஒட்டிக்கொண்டிருந்தால், அதைக் கொண்டு என்ன பொருள் நிறுக்கப்பட்டது என்று கண்டு கொள்ளலாம் என்பது மூத்தவளின் நினைப்பு.
வீட்டிலே அலிபாபா குழி தோண்டிக் கொண்டிருந்தான். அவன் மனைவி நாணயங்களை எடைபோட்டுக் கொண்ருந்தாள். எல்லா நாணயங்களையும் நிறுத்துக் கணக்குச் செய்தபின், இருவருமாக அவைகளைப் பூமிக்குள்ளே புதைத்து மண்ணினால் மூடிவிட்டனர். பின்னர் அலிபாபாவின் மனைவி, தராசையும் கற்களையும் எடுத்துச்சென்று, காஸிம் வீட்டில் சேர்த்துவிட்டு வந்தாள். தராசுத் தட்டிலிருந்த மெழுகில் ஒரு பொற்காசு ஒட்டிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு காஸிமின் மனைவி உண்மையை உணர்ந்துகொண்டாள். அலிபாபாவின் வீட்டில் பொற்காசுகளையே எடை போட்டிருக்கிறார்கள்! மகா ஏழையான அவனுக்கு தங்க நாணயங்கள் ஏது? அதிலும் தராசில் நிறுத்துப் பார்க்கும்படி, அவ்வளவு அதிகமான காசுகள் எங்கிருந்து வந்தன? இத்தகைய கேள்விகளை அவளே கேட்டுக்கொண்டு, பொறாமையால் உள்ளம் புழுங்கினாள். இரவிலே கனவன் காஸிம் வீட்டுக்கு வந்ததும், அவள் அவனை ஏளனம் செய்து பேசத் தொடங்கினாள்: நீங்கள்தாம் பெரிய பணக்காரர் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தம்பி உங்களைவிட அதிகச் செல்வங்களைப் பெற்றிருக்கிறார். இன்று அவருடைய தங்க நாணயங்களை, உங்களைப் போல், கைகளால் எண்ண முடியாது என்று, நம் வீட்டுத் தராசை வாங்கிக்கொண்டுபோய் நிறுத்தார்கள். தராசுத் தட்டில் ஒட்டியிருந்த காசும் இதோ இருக்கிறது, பாருங்கள்!'
காஸிம் காசைக் கண்களால் கண்டு கொண்டான். அதில், பழங்காலத்து மன்னர் ஒருவருடைய முத்திரையும் இருந்தது. தன் தம்பி அத்தகைய காசுகளில் ஆயிரக் கணக்காகப் பெற்றுவிட்டானே என்ற பொறாமையினால், அவனுக்கு இரவு முழுவதும் தூக்கம் பிடிக்கவில்லை. பொழுது விடிந்ததும், அவன் எழுந்து சென்று, அலிபாபாவைக் கண்டான். “என்ன தம்பி! வெளிப்பார்வைக்கு நீ ஏழைபோலத் தோன்றிய போதிலும் எடைபோட்டுப்
பார்க்க வேண்டிய அளவுக்கு உன்னிடம் பொற்காசுகள் குவிந்திருக்கின்றன!” என்று அவன் சொன்னான். அலிபாபா, “அண்ணா! நீ சொல்வது ஒன்றும் புரிய வில்லையே! விளக்கமாய்ப் பேசு!” என்றான். காஸிம் கோபமடைந்து, “உனக்கா புரியவில்லை? நன்றாகப் புரிந்துகொண்டு விஷயத்தை மறைக்கப் பார்க்கிறாய்!” என்றான். அவன் தன் கையிலிருந்த தங்க நாணயத்தைக் காட்டி, “இதைப்போல் நீ ஆயிரக்கணக்கில் வைத்திருக்கிறாய். தராசுத் தட்டில் ஒட்டியிருந்த இந்தக்காசை என் மனைவி எடுத்து என்னிடம் கொடுத்தாள்!” என்றும் அவன் தெரிவித்தான். ஏராளமான காசுகள் தன்னிடம் வந்துள்ளதைக் காஸிமும், அவன் மனைவியும் தெரிந்து கொண்டு விட்டனர் என்பதை அலிபாபா உனர்ந்து கொண்டான். மேற்கொண்டு மறைப்பதில் பயனில்லை என்பதையும் அவன் கண்டான். எனவே, முந்தையநாள் வனத்திலே குகையில் நடந்த நிகழ்ச்சியை அவன் அண்ணனிடம் விவரமாகச் சொன்னான்.
காஸிம், “அந்தக் குகை எங்கேயிருக்கிறது? அதன் வாயிலைத் திறப்பதற்கும் அடைப்பதற்கும் உரிய மந்திரச் சொற்கள் எவை? இவற்றையெல்லாம் நீ எனக்கு விளக்கமாகச் சொல்லாவிட்டால், உன்னிடம் புதையற் செல்வம் வந்திருப்பதாக நான் வாலியவர்களிடம்[1] தெரிவித்துவிடுவேன்! நீ உன் செல்வம் முழுவதையும் இழக்க நேரும்!” என்று பயமுறுத்தினான். இதற்குப்பின் அலிபாபா முழுவிவரத்தையும் அவனுக்குச் சொல்லி விட்டான். அவன் அண்ணனுடைய பயமுறுத்தலுக்குப் பணிந்துவிட்டான் என்பதில்லை. இயற்கையிலேயே அவன் நற்குணமும் அமைதியும் நிறைந்தவன். ஆதலால், குகை இருந்த இடத்தையும், அதன் வாயிலைத் திறப்பதற்கும் அடைப்பதற்கும் உரிய மந்திரச் சொற்களையும் காஸிமுக்கு அறிவித்தான்.
↑ வாலி - காவலர் தலைவர் போலிஸ் தலைமையதிகாரி.
2
பொறாமையால் விளைந்த கேடு
அடுத்த நாள் காலையில் காஸிம் பத்துக் கோவேறு கழுதைகளை ஒட்டிக்கொண்டு வனத்திற்குச் சென்றான். அங்கே, முன்பு அலிபாபா அமர்ந்திருந்த பெரிய மரத்திற்கு எதிரேயிருந்த பாறையைக் கண்டுகொண்டு, அவன் மிக்க மகிழ்ச்சியுடன், “ஓ ஸிம்ஸிம் திற!” என்று கூவினான். உடனே, குகையை அடைத்திருந்த பாறை விலகிக் கொண்டது. காஸிம் உள்ளே சென்று, சுற்றிலும் குவிந்து கிடந்த பெருநிதிகளைக் கண்டான். அவன் உள்ளே சென்றதும், பாறை தானாகவே வாயிலை அடைத்துக் கொண்டது. அவன் அங்கேயிருந்த செல்வங்களைக் கண்டு வெகுநேரம் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருந்தான். பிறகு தான் வந்த காரியத்தை எண்ணிக்கொண்டு, அவசர அவசரமாகத் தங்க நாணயங்களை அள்ளிப்போட்டுக் கோணிகளை நிரப்பினான். பத்துக் கழுதைகள் எத்தனை மூட்டைகளைச் சுமக்க முடியுமோ அத்தனையையும் அவன் கட்டி, வாயிற்பக்கமாகத் தூக்கிக்கொண்டு போய் அடுக்கி வைத்துக்கொண்டான். பிறகு வாயிலை அடைத்திருந்த பாறையைப் பார்த்து, அவன், “ஓ பார்லி, திற!” என்று கூவினான். வழக்கமாகச் சொல்லவேண்டிய மந்திரச் சொல்லை அவன் மறந்துவிட்டதால், 'ஸிம்ஸிம்' என்பதற்குப் பதிலாக ‘பார்லி’ என்று தானாகக் கற்பனை செய்து கூவினான். அதனால் பாறை அசையவில்லை. ‘ஸிம்ஸிம்’ என்ற சொல் எள்ளுச்செடியின் பெயரை நினைவுறுத்தக் கூடியதாக இருந்ததால், அவன் வேறு பல தானியங்கள் பெயர்களைச் சொல்லி, “திற!” “திற!” என்று கூவிப் பார்த்தான். வழி திறக்கப்படவில்லை. அப்பொழுதுதான் அவன் தனக்கு ஏற்பட்டிருந்த அபாய நிலையை நன்கு உணர்ந்துகொண்டான். ஆசையுடன் அள்ளிக் கட்டி வைத்திருந்த நாணயமூட்டைகளை அப்பொழுது அவன் மதிக்கவில்லை. நாலு பக்கங்களிலும் நிறைந்திருந்த கண்ணைப் பறிக்கும் பொருள்களிலே அவன் நாட்டம் செல்லவில்லை. குகையைக் கடந்து வெளியேறுவது எப்படி என்பதை மட்டுமே சிந்தனை செய்துகொண்டு, அவன் குகையில் குறுக்கிலும் நெடுக்கிலுமாக நடந்து கொண்டிருந்தான். அவன் தேடி வந்தது பொன். இப்பொழுது அவன் உயிரே ஆபத்துக்குள்ளாகியிருந்தது!
நண்பகலில் திருடர்கள் குகைப்பாதையிலே குதிரைகள் மீது சென்றுகொண்டிருந்தார்கள். அப்பொழுது புதர்களின் பக்கமாகப் பல கோவேறு கழுதைகள் சுற்றி மேய்ந்து கொண்டிருந்ததை அவர்கள் கண்டனர். அங்கேயிருந்த பத்துக் கழுதைகளையும் பிடித்து விற்றால், நல்ல விலை கிடைக்கும். ஆனால், அவர்கள் அவைகளைப் பிடித்துக்
கொள்ள வேண்டுமென்று எண்ணவில்லை. அத்தனை கழுதைகள், நகரைவிட்டு வெகுதூரம், ஆளில்லாமல் தனியாக வந்திருக்க முடியாது என்று அவர்கள் சந்தேகப் பட்டனர். அவைகளைப்பற்றி வந்த ஆசாமி எங்கே? அவன் திருடர்களின் குகைப்பக்கமாக அவைகளைக் கொண்டு வந்ததன் நோக்கம் என்ன? இவ்வாறு அவர்கள் சிந்தித்து, உடனே எதற்கும் குகையைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.
திருடர் தலைவனும் மற்றவர்களும் குகை வாயிலுக்குச் சென்றனர். தலைவன் வழக்கமாக மந்திரச் சொற்களைக் கூறியதும், பாறை விலகி விட்டது. இதற்கிடையில் குதிரைக் குளம்புகளின் ஓசைகளைக் கேட்டு காஸிம், திருடர்கள் அங்கு வந்துவிட்டதை முன்பே தெரிந்து கொண்டான். அவர்கள் உள்ளே வந்ததும் தன்னைக் கொலை செய்துவிடுவார்கள் என்று அஞ்சி, அவன் தரையில் விழுந்து தயங்கிக் கொண்டிருந்தான். வாயிற் பாறை விலகியதும், அவன் விரைவாக வெளியே ஓடித் தப்பித்துக் கொள்ளவேண்டும் என்று கருதி ஆவலோடு ஓடத் தொடங்கினான். ஓடிய ஓட்டத்தில் அவன் குகை வாயிலில் முதலில் நின்று கொண்டிருந்த திருடர் தலைவன்மீதே முட்டிக் கொண்டான். உடனேயே, தலைவன் அவனை ஒரு கையால் ஓங்கியடித்துத் தரையிலே தள்ளி விட்டான். தலைவனின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த திருடன் ஒருவன், தன் உடை வாளை உருவி, காஸிமை இரு துண்டுகளாக வெட்டிப் போட்டுவிட்டான். பிறகு எல்லாத் திருடர்களும் குகைக்குள் சென்றனர். காஸிம்
வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்காகத் தூக்கி வைத்திருந்த நாணயக்கோணிகளை அவர்கள் மற்ற நாணயங்களோடு கொண்டுபோய்ச் சேர்த்துக் கொட்டினர். இறந்து கிடந்தவன் குகைக்குள் எப்படி நுழைந்தான் என்பதைப்பற்றி அவர்கள் பன்முறை சிந்தித்துப் பார்த்தும் புலன் தெரியவில்லை. குகையின் மேல் முகட்டிலிருந்து யாரும் உள்ளே இறங்க முடியாது. குகையின் வாயிலை அடைத்திருந்த பாறையும் மந்திரச் சொற்களை உச்சரித்தாலன்றி வழி விடாது. இறந்து கிடந்த ஆசாமி மந்திரச் சொற்களை எப்படி அறிந்துகொண்டிருந்தான்? இந்தப் புதிர் அவர்களுக்கு விளங்கவேயில்லை. அவர்கள், காஸிமின் உடலை மேலும் இரண்டு துண்டுகளாக்கி, தங்கள் பொக்கிஷசாலைக் கதவின் இரண்டு பக்கங்களிலும், பக்கத்திற்கு இரண்டு துண்டுகளாகத் தொங்கவிட்டனர். இனியும் எவனாவது அங்கு வந்தால், அந்த அங்கங்கள் அவனுக்கு எச்சரிக்கை யாயிருக்கும் என்பது அவர்கள் கருத்து. பிறகு, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர். பாறையும் வெளி வாயிலை அடைத்துக்கொண்டது. இரவு நேரமான பின்னும் தன் கணவன் வராததால், நகரிலே, காஸிமின் மனைவி மிகவும் வருத்தமடைந்தாள். அவள், மனம் தடுமாறிக்கொண்டே, அலிபாபாவின் வீட்டுக்குச் சென்று, நாதன் வராத காரணம் ஏதாயிருக்கலாம் என்று கேட்டாள். அவன் சென்றிருந்த இடம் அலிபாபாவுக்குத் தெரிந்திருந்ததால், அவன் மூலம் விவரம் தெரியும் என்று அவள் நம்பியிருந்தாள். அலிபாபாவும் மனம் கலங்கித்தான் இருந்தான். காலையிலே சென்ற காஸிம் இரவு வரை திரும்பி வராததால், அவனும் துயரமடைந்து உளைந்து கொண்டிருந்தபோதிலும், அவளைப் பார்த்து ஆறுதல் சொன்னான். ஒருவேளை, மற்றவர்களுக்குத் தெரியாமல் வீட்டுக்கு வரவேண்டும் என்பதற்காக, இருட்டிலேயே வரக்கூடும் என்றும், நேர் பாதையில் வராமல், நகரைச் சுற்றிக்கொண்டு வந்தால், நேரம் ஆகத்தான் செய்யும் என்றும் அவன் அபிப்பிராயப்பட்டான். அவனுடைய மதினி சற்று ஆறுதலடைந்து, தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றாள்.
அன்று நள்ளிரவு வரை காஸிம் வராததால் அவள் நடுக்கமடைந்தாள். உள்ளத்திலே கொந்தளித்துக் கொண்டிருந்த துக்கத்தை வெளிப்படுத்தி உரக்க அழலாம் என்றால், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் இரகசியத்தை அறிந்துகொண்டுவிடுவார்கள் என்று அஞ்சினாள். ஆகவே, அவள் வாயைத் திறக்காமல், மெளனமாகவே அழுது கண்ணீர் பெருக்கினாள், ‘பாவியாகிய என்னாலேயே எல்லாம் விளைந்து விட்டது! பொன்னைப்பற்றிய இரகசியத்தை நான் ஏன் அவரிடம் சொன்னேன்? மைத்துனனின் செல்வத்தை எண்ணி, நான் ஏன் பொறாமை கொண்டேன்? என் பொறாமையே என் குடியைக் கெடுத்துவிட்டதா?’ என்று. அவள் இரவு முழுவதும் தன்னைத்தானே பல விதமாக அலட்டிக்கொண்டிருந்தாள். மறுநாள் பொழுது புலர்ந்தவுடனேயே, அவள் மீண்டும் அலிபாபாவை நாடி ஓடிச்சென்றாள்.
உடனே, அவன் அண்ணனைத் தேடிச்சென்று பார்க்கவேண்டும் என்று அவள் வேண்டிக்கொண்டாள். அவன் அவளைச் சிறிது தேற்றிவிட்டு, தன் கழுதைகளைப் பற்றிக்கொண்டு வனத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான். அங்கே, குகை அடியில் சென்றதும், தரையில் புதிதாக உதிரம் சிந்தியிருப்பதைக் கண்டான். அண்ணனையோ, அவன் கொண்டு சென்ற கழுதை களையோ கானவில்லை. ஏதோ பெரிய விபரீதம் விளைந் திருக்கும் என்று அவனுக்கு அப்பொழுதே தோன்றிற்று. உடனே, பாறையை நோக்கி, “ஓ எலிம்ஸிம், திற!” என்று அவன் கூறினான். அது அகன்று வழிவிட்டது. உள்ளே சென்றதும், கதவில் காஸிமின் உடல் நான்கு பாகங்களாகத் தொங்குவதை அவன் கண்டு நடுக்கமடைந்தான். எனினும், தன் கடமையை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று கருதி, அவன் அந்த அங்கங்களை எடுத்து, இரண்டு துணிகளில் கட்டி, ஒரு கழுதையின் மேலே ஏற்றி வைத்தான். அந்தத் துணிகளுக்கு மேலே காய்ந்த விறகுகளையும் கட்டிவைத்து மூடினான். பிறகு, குகையிலிருந்து தங்க நாணயங்களைக் கோணிகளில் கட்டி, மற்ற இரண்டு கழுதைகளின் மேலே ஏற்றி, அவற்றையும் விறகுகளால் மறைத்து, பாறையை முன்போல் மூடிக்கொள்ளச் செய்துவிட்டு, வனத்திலிருந்து வெளியேறிச் சென்றான்.
வீட்டுக்குச் சென்றதும், அவன் நாணய மூட்டைகளைக் கீழே இறக்கி, மனைவியிடம் ஒப்படைத்து, அவைகளை மண்ணுக்குள் உடனே மறைத்து வைக்கச் சொன்னான். ஆனால், தன் அண்ணனுக்கு நேர்ந்த கதியை அவன் அவளிடம் சொல்லவில்லை. அங்கிருந்து ஒரு கழுதையை மட்டும் ஒட்டிக்கொண்டு அவன் அண்ணன் வீட்டுக்குச் சென்று, வாயிற்கதவை மெதுவாகத் தட்டினான்.
காஸிம் வீட்டில் மார்கியானா என்ற அடிமைப் பெண் ஒருத்தி வேலை பார்த்து வந்தாள். அவள் மிகுந்த புத்திக்கூர்மையுள்ளவள். சந்தர்ப்பத்தை அறிந்து எதையும் திறமையுடன் சமாளிப்பதில் அவள் கெட்டிக்காரி. கதவைத் தட்டிய ஓசை கேட்டதும், அவள் ஓடி வந்து, ஓசைப் படாமல் மெதுவாகத் தாழைத் திறந்தாள். அலிபாபா, தான் பற்றி வந்த கழுதையை உள்ளே முற்றத்திற்குக் கொண்டு சென்று, அதன்மீது வைத்திருந்த இரண்டு துணி மூட்டை களையும் கீழே இறக்கி வைத்தான். பின்னர், வேலைக் காரியைப் பார்த்து. அவன், “மார்கியானா மரித்துப்போன உன் எசமானரின் ஈமச்சடங்குகளுக்கு ஏற்பாடு செய்! முதலில் நான் போய் மதினியிடம் செய்தி சொல்லிவிட்டு, மீண்டும் வருகிறேன்!” என்று சொன்னான். அந்த நேரத்தில், மதினியே அங்கு வந்துவிட்டாள். அவள் மைத்துனனின் முகத்தில் தென்பட்ட சோகக் குறிகளைக் கண்டு, உளம் கலங்கி, என்ன செய்தி என்று விசாரித்தாள். அலிபாபா, குகையில் தான் கண்ட காட்சியையும், அண்ணன் அங்கங்களைச் சேகரித்து வந்திருப்பதையும் சுருக்கமாகக் கூறினான். “நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இந்த விஷயத்தை நாம் மிகவும் இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இரகசியம் வெளியானால், நம் எல்லோருடைய உயிருக்கும் ஆபத்து வந்துவிடும்!” என்றும் அவன் கேட்டுக் கொண்டான். காஸிமின் மனைவி ‘ஓ’ வென்று அழுது கொண்டே, “என் கணவரின் விதிப்படி அவர் வாழ்க்கை முடிந்துவிட்டது. இனி உங்களைக் காப்பதற்காக நான் எல்லாவற்றையும் இரகசியமாக வைத்துக் கொள்கிறேன்!” என்று சொன்னான்.
அதன் பின்பு அலிபாபா, “ஆண்டவன் கட்டளையை யாரும் மீறி நடக்கமுடியாது. நீ பொறுமையுடன் இருக்க வேண்டும். நெடுநாள் கைம்பெண்ணாகக் கஷ்டப்படும்படி விடாமல், நானே உன்னைப் பின்னால் இரண்டாம் தாரமாக
மணந்து கொள்கிறேன். என் மனைவி நல்ல குணமுள்ளவள். உன்னை ஆதரிப்பாள்!” என்று கூறினான். அவள் அழுது அலறிக் கொண்டே, “இனி உங்கள் விருப்பம் போல் நடந்து கொள்வதே என் கடமை!” என்றாள். பின்னர், அலிபாபாவும், மார்கியானாவும் காஸிமின் உடலை அடக்கம் செய்வதைப் பற்றி நெடுநேரம் கலந்து ஆலோசனை செய்தனர். காஸிம் கொலையுண்டு மடிந்தான் என்பதை எவரும் தெரிந்து கொள்ள முடியாதபடி காரியங்களை நடத்த வேண்டும். வெளியே எவரேனும் இரகசியத்தைத் தெரிந்து கொண்டால் பின்னர், பலருக்கும் அது அம்பலச் செய்தியாகிவிடும். திருடர்களும் அதைத் தெரிந்து கொள்வார்கள். அதிலிருந்து அலிபாபாவையும், அவனுடன் சம்பந்தபட்டவர்களையும் அவர்கள் கண்டு பிடித்துப் பழி வாங்கிவிடுவார்கள். மார்கியானா நிலை மையைப் தெளிவாக உணர்ந்திருந்ததால், எல்லாவற்றையும் கவனமாக நடத்துவதாக உறுதிகூறி, அலிபாபாவை அனுப்பி வைத்தாள்.
அவன் வெளியே சென்றபின், மார்கியானா ஒரு மருந்துக்கடைக்குப்போய், கொடிய நோய் கண்டவர்களுக்குக் கொடுக்கவேண்டிய மருந்து ஒன்று வேண்டும் என்று கேட்டு, வாங்கி வந்தாள். அப்பொழுது கடைக்காரன், வீட்டில் யாருக்கு உடல் நலமில்லை என்று கேட்டான். “எங்கள் முதலாளி காஸிம் பல நாள்களாகப் படுத்த படுக்கையாய்க் கிடக்கிறார். அன்னம், ஆகாரமில்லை; வாய் திறந்து பேசவுமில்லை. அநேகமாய்ப் பிழைக்கமாட்டார் என்றே தோன்றுகிறது!” என்று அவள் மறுமொழி சொல்லிவிட்டுத் திரும்பினாள்.
மறுநாளும் மார்கியானா, முன் சென்ற மருந்துக் கடைக்கே போய், மரண அவஸ்தையில் இருப்பவருக்குக் கொடுக்கக்கூடிய உயர்ந்த மருந்து வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டாள். அப்பொழுது, “இந்த மருந்து அவர் தொண்டையில் இறங்குமோ, என்னவோ, தெரியவில்லை. நான் வீடு போய்ச் சேருமுன்பே அவர் காரியம் முடிந்துவிடக் கூடும்!” என்று சொல்லிக்கொண்டே சென்றாள்.
இடையில் அலிபாபா அண்ணன் வீட்டில் அழுகைக் குரல் கேட்டவுடன் தானும் அங்கே சென்று ஈமச் சடங்குகளில் கலந்துகொள்ள வேண்டுமென்று கருதி, தன்
வீட்டிலேயே காத்துக் கொண்டிருந்தான். இரண்டாவது நாள் காலையில் பொழுது புலரு முன்பே, மார்க்கியானா, முகத்திரை அணிந்து கொண்டு வெளியே சென்று, பாபா முஸ்தபா என்ற வயோதிகத் தையற்காரனைக் கண்டு பேசினாள். அவனிடம் ஒரு தங்க நாணயத்தை நீட்டினாள். அவன் அன்று தனக்கு வந்த அதிருஷ்டத்தை எண்ணி மகிழ்ந்து, “என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். “நீ உன் கண்களில் ஒரு துணியைக் கட்டி மறைத்துக் கொண்டு என்னுடன் வர வேண்டும். கொஞ்சம் தையல் வேலை இருக்கிறது!” என்று அவள் கூறினாள். அவன் முதலில் இணங்காமல் திகைத்தான். உடனே, மார்கியானா மீண்டும் திர்ஹமை[1] அவனுக்கு அளித்தவுடன், அவன்
புறப்பட இசைந்து விட்டான். அவர்கள் சிறிது தூரம் சென்ற பின், அவள் அவனுடைய கண்களைத் துணியால் மறைத்துக் கட்டி, அவனைக் காஸிமுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். அங்கே வெளிச்சமில்லாத ஓர் அறையில், ஒரு மேடை மீது காஸிமின் அங்கங்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கு அவள் முஸ்தாவின் கண்களிலே கட்டியிருந்த துணியை அவிழ்த்து விட்டு, அவன் அந்த அங்கங்களை முறையாகப் பொறுத்தி வைத்து, ஒரே உடலாகத் தைத்துக் கொடுக்க வேண்டுமென்றும், அந்த உடலுக்கு ஏற்ற அளவில் ஒரு கபன்[2] தைக்க வேண்டுமென்றும் கூறினாள். வேலை முடிந்ததும், கையில் மேலும் ஒரு திர்ஹம் தருவதாகவும் அவள் வாக்களித்தாள். பணத்திற்காக எதையும் செய்யத் தயாராகி விட்டான் முஸ்தபா. அவள் கோரியபடியே பினத்தைத் தைத்து, கபனையும் முடித்துக் கொடுத்தான். அவள், தன் சொற்படி, மேலும் ஒரு தங்க நாணயத்தை அவனுக்கு அளித்து, மீண்டும் அவனுடைய கண்களைக் கட்டி, வெளியே அழைத்துச் சென்று, அவன் கடைப்பக்கம் கொண்டுபோய் விட்டு விட்டு வந்தாள்.
வீட்டுக்கு வந்ததும் அவள், அலிபாபாவையும்கூட வைத்துக்கொண்டு, பினத்தை வெந்நீரில் குளிப்பித்து, அதன்மீது கபனைப் போர்த்திச் சுத்தமான தரையிலே அதைத் துக்கி வைத்தாள். பிறகு, அவள் பள்ளிவாசலுக்குச் சென்று, இமாமை அழைத்து வந்தாள். சமய முறைப்படி இமாம் திருக்குர்ஆன் ஓதிய பின்பு, நான்கு பேர்கள் சவப்பெட்டியைத் துரக்கிக் கொண்டு கபருஸ்தானை[3] நோக்கிப் புறப்பட்டனர். இமாமும் அலிபாபா முதலியோரும் தொடர்ந்து சென்றனர். மார்கியானா, விரித்த தலையுடன், மார்பில் அடித்து அழுதுகொண்டே பிரேதப் பெட்டிக்கு முன்னால் சென்று கொண்டிருந்தாள். இடுகாட்டில் பிரேதம் முறைப்படி அடக்கம் செய்யப்பெற்ற பின், எல்லோரும் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.
நகரின் வழக்கப்படி பெண்டிர் பலரும் காஸிமுடைய வீட்டுக்கு வந்து, அவன் மனைவியிடம் துக்கம் விசாரித்தனர். சிலர் ஒப்பாரி வைத்து அழுதனர். பலர் விதவைக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினர். இவ்வாறு ஈமச்சடங்கு முறைப்படி நடந்தேறியது. ஆனால், காஸிம் மரித்த விவரம் அவன் மனைவி, வேலைக்காரி, அலிபாபா ஆகிய மூவருக்கு மட்டுமே தெரியும். மற்றவர் அனை வரும் அவன் இயற்கையாக நோயுற்று மாண்டதாகவே எண்ணிக்கொண்டனர்.
நாற்பது நாள்கள் துக்கம் காத்த பின்பு, அலிபாபா அண்ணனுடைய சொத்துகளைத் தன் வீட்டிலேயே கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு, விதவையைத் தானே திருமணம் செய்துகொண்டான். அவளுடைய மூத்த மகன் ஒரு வியாபாரிடம் தொழிலிலே பயிற்சி பெற்றிருந்ததால், காஸிமுடைய கடையை அவனே நடத்தும்படி ஏற்பாடு செய்து, மேற்கொண்டு தேவையான பணத்தைத் தானே கொடுப்பதாகவும் அலிபாபா தெரிவித்தான்.
↑ திர்ஹம் - தங்க நாணயம்.
↑ கபன் - பிணத்திற்குப் போர்த்தும் துணி.
↑ கபருஸ்தான் - இடுகாடு, கபர் - சவக்குழி.
3
திருடர்களின் சூழ்ச்சிகள்
வனத்திலே திருடர்கள் தங்கள் வழக்கம் போல் ஒரு நாள் குகைக்குள்ளே சென்றிருக்கையில், அங்கே இவர்கள் மாட்டி வைத்திருந்த காஸிமின் உடலைக் காணாமல் ஆச்சரியடைந்தனர். ஓர் அங்கம், ஓர் எலும்பு கூட இல்லாமல், எல்லா அங்கங்களும் எப்படி மாயமாய் மறைந்தன என்று அவர்கள் கூடி யோசித்தனர்.
இறந்தவனுக்குப் பாறையைத் திறக்கும் மந்திரம் தெரிந்திருந்தது; இல்லாவிட்டால், அவன் குகைக்குள் நுழைந்திருக்கவே முடியாது. இப்பொழுது அவனுடைய உடலை வேறு ஒருவன் எடுத்துக் கொண்டு போயிருக்கிறான். ஆகவே, இறந்தவனைத் தவிர, மற்றொருவனுக்கும் இரகசிய மந்திரம் தெரிந்திருந்தது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். காஸிமின் உடலை எடுத்துச் சென்றவன் ஏராளமான தங்க நாணயங்களையும் எடுத்துச் சென்றிருந்தான் என்பதையும் அவர்கள் கவனித்துக் கொண்டனர். திருடர் தலைவன், இத்தனைக்கும் காரணமானவனை உடனே கண்டு பிடித்துப் பழி வாங்காமல் விட்டிருந்தால், அவன் மேற்கொண்டும் அடிக்கடி வந்து பொக்கிஷத்தை அள்ளிக் கொண்டு போய் விடுவான் என்றும், பல தலைமுறைகளாகச் சேர்த்து வைத்திருந்த தங்கள் செல்வம் முழுவதும் அதனால் கரைந்து போய்விடும் என்றும் எடுத்துக்காட்டிப் பேசினான். திருடர்களிலே ஒருவன், தான் நகரிலே சென்று, ஒரு வணிகனைப்போல நடித்து, தெருத்தெருவாகவும், வீடு வீடாகவும் விசாரித்து, தங்களுக்குத் துரோகம் இழைத்த வனைக் கண்டுபிடிப்பதாகக் கூறினான்: “நான் கண்டுபிடித்து வருகிறேன்; தவறினால் என் உயிரை இழக்கத் தயாராயிருக்கிறேன்!” என்று அவன் வீரமும் பேசினான். தலைவனும் அதற்கு இசைந்ததால், அத்திருடன், மாறுவேடம் பூண்டு, இரவு நேரத்தில் நகரத்திற்குச் சென்றான்.
மறுநாள் காலையில் நன்றாக விடியுமுன்பே அவன் கடைத் தெருவைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான்; பெரும்பாலும் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால், ஒரு தையற்கடை மட்டும் திறந்திருப்பதைக் கண்டு, அவன் அதனுள் சென்று கவனித்தான். அது முஸ்தபாவின் கடை. அவன் அங்கே ஏதோ உடை ஒன்றைத் தைத்துக்கொண்டிருந்தான். திருடன் அவனைப் பார்த்து, “இந்த மங்கிய ஒளியில் தைப்பதற்கு உங்களுக்குக் கண் தெரிகிறதா?” என்று கேட்டான். உடனே முஸ்தபா, “என்னைப்பற்றி இந்த நகரம் முழுவதும் நன்கு அறியும். நீர் ஊருக்குப் புதிது போலிருக்கிறது. இல்லாவிட்டால் இப்படிக் கேட்கமாட்டீர்! எனக்கு வயது அதிகமான போதிலும் கண் பார்வை மிகவும் கூர்மையாகவே உள்ளது. நேற்றுக்கூட ஓர் இருட்டறையில் இருந்துகொண்டே, நான் ஒரு பிணத்தைத் தைத்துக் கொடுத்தேன்! என் கண் போகிற வழியிலே என் கையிலுள்ள ஊசியும் தவறாமல் செல்லும்! என்று பெருமையுடன் பேசினான். அதைக் கேட்ட திருடன், அந்த ஆசாமியிடமிருந்து மேலும் செய்திகளை அறிய முடியும் என்று கருதி, “நீங்கள் விளையாட்டாகப் பேசுகிறீர்கள் என்றே எண்ணுகிறேன். பினங்களுக்குப் போர்த்தும் துணிகள் தைப்பதே உங்கள் தொழில் என்று சொல்லுகிறீர்களா? துணிக்குப் பதிலாக, ஏதோ பிணத்தையே தைத்ததாகச் சொன்னீர்களே!” என்று கேட்டான்.
முஸ்தபா, “அதைப்பற்றி உமக்குச் சம்பந்தமில்லை. மேற்கொண்டு என்னிடம் கேள்விகள் கேட்க வேண்டா!” என்றான். அந்த நிமிடத்திலேயே திருடன் அவன் கையில் ஒரு தங்க நாணயத்தை எடுத்து வைத்தான். தங்கத்தால் ஆகாதது தரணியில் என்ன இருக்கிறது? மேஸ்திரியின் முகம் மலர்ந்தது. திருடன் துணிந்து பேசத் தொடங்கினான். “மேஸ்திரி யாரே! உங்களிடமிருந்து இரகசியம் எதையும் அறிந்துவிட நான் விரும்பவில்லை. ஆனால், நீங்கள் எந்த வீட்டிற்குச்சென்று தைத்திர்கள் என்பதை மட்டுமே தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அந்த வீடு எங்கே இருக்கிறது என்று சொன்னால் போதும், அல்லது நீங்களே வந்து காட்டினாலும் நலம்!”
முஸ்தபா, பணத்தை ஆவலோடு சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு பேசலானான்: “எனக்கு அந்த வீடு தெரியாது. அந்த வீட்டிலிருந்த அடிமைப்பெண் ஒருத்தி என்னை அழைத்துச் சென்றாள். இங்கிருந்து சிறிது துரம்வரை நான் கண்களைத் திறந்துகொண்டே சென்றேன். ஆனால், அங்கே ஓரிடத்தில் நிறுத்தி வைத்து, அவள் என் கண்களைக் கட்டிவிட்டாள். அந்த இடத்தை இப்பொழுதும் நான் காட்ட முடியும். அதற்குப் பின்னால் அவள் என் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள். குறித்த வீடு வந்ததும், என்னை உள்ளே அழைத்துப்போய், ஓர் இருட்டறையில், நான்கு துண்டுகளாகக் கிடந்த ஒரு பிரேதத்தை ஒன்றாகச் சேர்த்துத் தைக்கும்படி சொன்னாள். நான் அப்படியே செய்தேன். அத்துடன் சவத்தைப் போர்த்தும் கபனும் தைத்துக் கொடுத்தேன். அதன்பின், அவள் மறுபடி என் கண்களைக் கட்டி, முதலில் நின்ற இடம்வரை அப்படியே அழைத்துவந்த பிறகுதான் கண்களில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து விட்டாள்!”
திருடன், “சரிதான்! முதலில் உங்களுடைய கண்களைக் கட்டிய இடத்திற்குப் போவோம். அங்கே நானும் உங்களுடைய கண்களைத் துணியால் கட்டி, உங்களை மெதுவாக அழைத்துப் போகிறேன். முன்னால் நடந்து சென்றதை நினைவில் வைத்துக்கொண்டு, குறித்த வீடு வந்துவிட்டதாக உங்களுக்குத் தோன்றும் இடத்தில் நடையை நிறுத்தி விடுங்கள்!” என்று சொல்லி, இரண்டாவது தங்க நாணயம் ஒன்றை அவன் கையிலே வைத்தான். உடனே, முஸ்தபா அவனுடன் கடையை விட்டு வெளியே சென்று, தன் கண்கள் கட்டப்பெற்ற இடத்தைக் காட்டினான். அங்கிருந்து திருடன் அவனுடைய
கண்களைத துணியால் மறைத்து அழைத்துச் சென்றான். முஸ்தபா அடிகளை எண்ணிக் கொண்டு நிதானமாக நடந்து சென்றான். திடீரென்று ஒரு வீட்டின் முன்பு அவன் நின்று விட்டான். “இதுவரைதான் நான் அவளுடன் வந்தேன்!” என்று அவன் திருடனிடம் கூறினான். அந்த வீடு காஸிமுடைய வீடு. அங்கேதான் இப்பொழுது அவனுடைய தம்பி அலிபாபா வசித்து வந்தான்.
அந்த வீட்டின் கதவில், திருடன் சுண்ணாம்பினால் அடையாளங்கள் செய்து விட்டு, முஸ்தபாவின் கண்களைத் திறந்து வைத்து, “இது யார் வீடு, தெரியுமா?” என்று கேட்டான். அதற்கு முஸ்தபா தனக்கு அந்தப் பகுதியில் அதிகப் பழக்கமில்லை என்று சொன்னான். மேற்கொண்டு
அவனிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி எதுவுமில்லாததால், திருடன் அவனைத் தையற் கடையிலே கொண்டு விட்டு, அவனுக்குப் பல தடவைகள் நன்றி கூறி விட்டுச் சென்றான். காட்டிலே உள்ள தோழர்களுக்குத் தான் அதுவரை அறிந்த செய்தியைச் சொல்லுவதற்காக அவன் போய் விட்டான்.
அவன் சென்ற சிறிது நேரத்திற்குப் பின், மார்கியானா வீட்டு வாயிற் பக்கம் வந்து நிற்கையில், கதவின் வெளிப்பாகத்தில் சுண்ணாம்பினால் புதிதாக அடையாளங்கள் செய்யப்பட்டிருப்பதைக் கவனித்தாள். எவரோ பகைவர், பின்னால் அடையாளம் தெரிந்து கொண்டு வருவதற்காகச் சுண்ணாம்பினால் அப்படிக் குறிகள் போட்டிருக்க வேண்டும் என்று அவள் யூகித்துக் கொண்டாள். உடனே, அவளும்
சுண்ணாம்புக் கட்டிகளை எடுத்து வைத்துக் கொண்டு, அக்கம் பக்கத்திலிருந்த எல்லா வீடுகளின் கதவுகளிலும் அதே மாதிரியான குறிகளைப் போட்டு விட்டாள்.
நகரைச் சுற்றிப் பார்த்து விட்டுச் சென்ற திருடன், தலைவனிடமும், மற்றவர்களிடமும் தான் தெரிந்துகொண்ட செய்தியை அறிவித்தான். அவன் அடையாளம் செய்திருந்த வீட்டுக்கு எல்லோரும் இரவிலே செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப் பெற்றது. இரவிலே திருடர்கள், கூட்டம் கூட்டமாகப் பிரிந்து சென்று நகருக்குள்ளே சந்தித்துக் கொண்டனர். புலன் விசாரித்த திருடனுடைய கையைப் பிடித்துக் கொண்டு தலைவன் முன்னால் நடந்து சென்றான். மற்றவர்களும் தொடர்ந்து சென்றனர். திருடன் ஒரு வீட்டுக் கதவில் சுண்ணாம்புக் குறிகளைக் கண்டதும், அங்கே நின்று “இதுதான் அந்த வீடு!” என்று தலைவனிடம் கூறினான். தலைவன் பக்கத்திலிருந்த வேறு சில வீடுகளின் கதவுகளை உற்றுக் கவனித்தான். அவைகளிலும் ஒரே மாதிரியான சுண்ணாம்புக் குறிகள் காணப்பெற்றதால், அவன் திகைப்படைந்து, தோழனிடம் அதை தெரிவித்தான். தான் முன்பு போட்டிருந்த குறிகளே பல வீடுகளிலும் இருந்ததால், அவன் தான் பார்த்த வீட்டை அடையாளம் தெரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, அவன் ஏதோ கோளாறு நேர்ந்திருக்க வேண்டும் என்று அஞ்சினான். தலைவன், மறுபடி எல்லோரையும் வனத்திலே குகைக்கு வந்து சேரும்படி சொல்லிவிட்டு, தானும் வேறு ஒரு வழியாகப் பயணமானான்.
குகையிலே கூடிய திருடர் கூட்டத்தில் முதலாவதாகப் புலன் விசாரிக்கத் சென்று தோல்வியடைந்த திருடனைக் காவலில் வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப் பெற்றது. அடுத்தாற்போல் நகருக்குள் சென்று விசாரித்துவர யார் தயார் என்று தலைவன் கேட்கையில், ஒருவன் முன் வந்தான். அவனைத் தலைவன் மிகவும் பாராட்டி, சில பரிசுகளும் அளித்து, வாழ்த்தி, அனுப்பி வைத்தான்.
அவனும் நகரில் முதன் முதலாகப் பாபா முஸ்தபாவையே சந்தித்து, அவனுக்குத் தங்க நாணயங்கள் கொடுத்து, அலிபாபா தங்கியிருந்த வீட்டைத் தெரிந்துகொண்டான். முதலாவது திருடன் செய்தது போலன்றி, அவன் கதவு நிலையில் சிவப்புக்காவியால் தெளிவான அடையாளம் செய்துவிட்டு, வனத்திற்குத் திரும்பினான். இரவில் முன்போலவே திருடர் அனைவரும் தலைவனுடன் வந்து அவ்வீட்டைத் தேடிப் பார்த்தனர். எல்லா வீடுகளின் நிலைகளிலும் சிவப்புக் குறிகள் இருந்தமையால் மீண்டும் அவர்கள் ஏமாற்றமடைந்து, திரும்பிச் சென்றனர். எல்லா வீடுகளுக்கும் சிவப்புக் குறிகள் அமைத்தது மார்கியானா தான் என்று சொல்லத் தேவையில்லை. மதிநுட்பம் வாய்ந்த அந்தப் பெண் முன்னதாகவே அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தாள். திருடர் தலைவன் இரண்டாவது திருடனையும் சிறையில் வைத்தான்.
4
மார்கியானாவின் மதிநுட்பம்
திருடர் தலைவன் மேற்கொண்டு சாதாரண ஆள்களை அனுப்பி ஏமாறக்கூடாது என்று கருதி, தானே நகருக்குள் சென்று, முஸ்தபாவின் உதவியால் அலிபாபாவின் வீட்டைத் தெரிந்து கொண்டான். வீட்டைக் காட்டும் வேலையிலேயே முஸ்தபாவுக்கும் பல பொற்காசுகள் சேர்ந்துவிட்டன. தலைவன் அந்த வீட்டில் அடையாளம் எதுவும் செய்யாமல், படம் பிடித்து வைத்துக்கொள்வது போல், அதை நன்றாக மனத்திலே பதிய வைத்துக் கொண்டு, திரும்பிச் சென்றான்.
மூன்று நாள்களுக்குப் பின்பு இரவில் முப்பத்தெட்டுத் திருடர்களும் நகருக்குச் சென்று, குறித்த வீட்டை அடைய வேண்டுமென்று திட்டம் செய்யப் பெற்றது. திருடர் தலைவன், பத்தொன்பது கோவேறு கழுதை களையும், தோலினால் செய்த பெரிய தாழிகள் முப்பத்தெட்டையும் வாங்கிவரச்செய்து, அவைகளை ஆயத்தமாக வைத்துக்கொன்டான் ஒவ்வொரு திாழியிலும் ஒரு திருடன் ஆயுத பாணியாக அமர்ந்து கொள்ளவும், அவ்வாறு முப்பத்தேழு தாழிகளிலும் அவர்கள் மறைந்திருக்கவும், ஒரு தாழியில் மட்டும் கடுகு எண்ணெயை நிரப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பெற்றது. மற்றைத் தாழிகளின் வெளிப்புறங்களிலும் சிறிது சிறிது எண்ணெய் பூசப் பட்டது. ஒவ்வொரு கழுதையின் பக்கங்கள் இரண்டிலும் இரண்டு தாழிகள் வீதம் கட்டித் தொங்கவிடப்பட்டன. தலைவன், பின்னர், எல்லாக் கழுதைகளையும் ஓட்டிக் கொண்டு நகரத்திற்குச் சென்று, அலிபாபாவின் வீட்டை அடைந்தான். நள்ளிரவில், தான் கை தட்டியவுடன் எல்லாத் திருடர்களும் தாழிகளை விட்டு வெளிவந்து, வீட்டுக்காரனைத் தீர்த்துக் கட்டிவிட வேண்டுமென்று, அவன் எல்லோருக்கும் முன்னதாகவே சொல்லி வைத்திருந்தான்.
அப்பொழுது அலிபாபா. இரவு உணவு அருந்திவிட்டு, வீட்டின் முன்வாயிலில் உலவிக் கொண்டிருந்தான். ஒரு வணிகனைப்போல் உடையணிந்திருந்த திருடர் தலைவன், அவனைக் கண்டு வணக்கம் செய்தான். அலிபாபாவும் பதிலுக்கு வணக்கம் செய்தான். தலைவன், “நான் ஓர் எண்ணெய் வியாபாரி. பல தடவை கிராமத்திலிருந்து இந்த நகருக்கு எண்ணெய் கொண்டுவந்து விற்றிருக் கிறேன். ஆனால், இன்று கழுதைகளை ஒட்டிக்கொண்டு நகருக்குள் வருவதற்குள் இருட்டிவிட்டது. இன்று இரவு மட்டும் நானும் என் கழுதைகளும் தங்குவதற்குத் தாங்கள் இடம் கொடுத்தால் பெரிய உதவியாயிருக்கும். வாயில்லாப் பிராணிகளாகிய இவை நீண்டநேரமாக எண்ணெய் தாழிகளைச் சுமந்து கொண்டிருப்பதால், பாரத்தை இறக்கி, அவைகளுக்குச் சற்றே ஓய்வு கொடுக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். அவனுடைய குரலை அலிபாபா முன்பு வனத்தில் மரத்தில் ஒளிந்திருக்கையில் கேட்டிருந்தும், அவன் அப்பொழுது மாறுவேடம் புனைந்து வந்திருந்ததால், அக்குரல், திருடர் தலைவனின் குரல் என்பதைக் கண்டு கொள்ள முடியவில்லை. எனவே, அவன் ஒரு வியாபாரிதான் என்று நம்பி, அலிபாபா அவனை வரவேற்று, இரவிலே தன்வீட்டில் தங்கியிருக்க அனுமதியளித்தான். வீட்டின் பக்கத்தில் காலியாயிருந்த ஓர் ஒலைக் கொட்டகையைக் காட்டி, அதிலே கழுதைகளை நிறுத்தி வைக்கலாம் என்று அவன் கூறினான். பின்னர், ஓர் அடிமைப் பையனை அழைத்து, கழுதையின் உணவுக்குத் தேவையான காணம் முதலியவற்றையும் தண்ணிரையும் கொட்டகையில் கொண்டு வைப்பதற்கும் அவன் ஏற்பாடு செய்தான். அப்பொழுது அந்தப் பக்கமாக வந்த மார்கியானாவிடம், “இன்று ஒரு விருந்தாளி வந்திருக்கிறார். அவருக்கு விரைவிலே சாப்பாடு தயாராகட்டும்! அத்துடன், அவர் படுப்பதற்கு மாடியில் ஓர் அறையில் படுக்கையை எடுத்துப் போட்டுவை!” என்று அவன் உத்தரவிட்டான்.
திருடர் தலைவன், கழுதைகளைக் கொட்டகையில் கொண்டுபோய் நிறுத்தி, தாழிகளை அவிழ்த்துக் கீழே வைத்தான். பிறகு, கழுதைகளுக்குத் தீனி வைத்து, தண்ணி காட்டிவிட்டு, அவன் முன்வாயிலுக்குச் சென்று, அலிபாபாவைக் கண்டான். அலிபாபா அவனை அன்புடன் அழைத்துக்கொண்டுபோய், மார்கியானாவைக் கண்டு, “விருந்தினர் இதோ வந்துவிட்டார். அவருக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்! நான் முன்புறம் படுக்கச் செல்கிறேன். நாளை அதிகாலையில் நான் குளிப்பதற்காக ஹம்மாமுக்குப் போக வேண்டும். ஆகையால், எனக்கு வேண்டிய வெளுத்த துணிகளை அடிமைப் பையன் அப்துல்லாவிடம் கொடுத்துவை. காலையில் நான் குளித்துவிட்டு வந்ததும் குடிப்பதற்கு நல்ல சூப்பும் தயாரித்து வை!” என்று சொன்னான்; அவள், “அவ்விதமே செய்கிறேன்!” என்று சொன்னாள். பின்னர், அலிபாபா உறங்கச் சென்றான். தலைவன், இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு, மறுபடி கொட்டகைக்குச் சென்று கழுதைகளைப் பார்த்துவிட்டு, நடுச்சாமத்தில், தான் கை தட்டியுடன், எல்லாத் திருடர்களும் தங்கள் வாள்களால் தோலினால் செய்த தாழிகளைக் கீறிப் பிளந்து கொண்டு வெளிவர வேண்டுமென்று அவர்களுக்குத் தனித் தனியாகச் சொல்லிவிட்டு, மாடியில் தனக்காக ஒதுக்கப் பட்டிருந்த அறைக்குச் சென்றான். மார்கியானா ஒரு கைவிளக்கை எடுத்துக்கொண்டு அவனுக்கு வழி காட்டியதுடன், “உங்களுக்கு ஏதேனும் தேவையாயிருந்தால், என்னை அழையுங்கள்! உங்கள் பணிவிடைக்காகக் காத்திருக்கிறேன்!” என்றும் கூறினாள். தலைவன் மேற்கொண்டு தனக்கு எதுவும் தேவையில்லை என்று சொல்லிவிட்டுப் படுக்கச் சென்றான்.
மார்கியானா, எசமானருக்கு வேண்டிய சலவைத் துணிகளை எடுத்து அப்துல்லாவிடம் கொடுத்து விட்டு, சூப்பு தயாரிப்பதற்காக அடுப்பிலே சட்டியைத் தூக்கி வைத்தாள். அவள் அடுப்பை ஊதிக் கொண்டிருக்கையில், எல்லா விளக்குகளும் அணைந்து போய் விட்டன. அவற்றில் இருந்த எண்ணெய் தீர்ந்து போய் விட்டது. வீட்டிலும் வேறு எண்ணெய் இல்லை. அப்பொழுது அப்துல்லா, மார்கியானாவைப் பார்த்து, “நீ ஏன் வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறாய்? நமது கொட்டகையில் தாழி தாழியாக எண்ணெய் இருக்கிறது. அவசரத்திற்கு உனக்குத் தேவையான அளவு ஒரு தாழியிலிருந்து எண்ணெய் எடுத்து வா!” என்று யோசனை சொல்லிவிட்டு கூடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான். மார்கியானா அவன் கூறிய ஆலோசனைப்படியே. எண்ணெய் டப்பாவைப் துரக்கிக் கொண்டு கொட்ட கைக்குப் போனாள். தாழிகள் பல வரிசைகளாக இருந்ததில், முன்னாலிருந்த ஒரு தாழியருகில் சென்று. அவள் மெது வாகக் குனிந்து பார்த்தாள். அதிலிருந்த திருடன், விவரம் தெரியாமல், காலோசை கேட்டதுமே தலைவன் வருவதாக எண்ணி, “நாங்கள் வெளிக் கிளம்பி வரலாமா?” என்று மெல்லிய குரலில் வினவினான். உடனே, மார்கியானா திடுக்கிட்டுப் பின்னால் நகர்ந்தாள். தாழிக்குள்ளே மனிதன் குரல் கேட்கிறதே என்று அவள் திகைத்த போதிலும், அவள் சமயத்திற்கு ஏற்றபடி உடனே யுக்தி செய்து கொண்டு, “இன்னும் நேரமாகவில்லை!” என்று, தானும் மெல்லிய குரலில் பதிலுரைத்தாள். தாழிகளில் எண்ணெய் இல்லை என்பதால், அவள் சிந்திக்கலானாள். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது! என் முதலாளிக்கு எதிராக இந்த எண்ணெய் வியாபாரி துரோகமான சதி ஏதோ செய்திருக்கிறான்! இவனுடைய வலையிலிருந்து அருளாளனான அல்லாஹ்தான் எங்களையெல்லாம் காப்பாற்ற வேண்டும்!”
அவள் மற்றொரு தாழிப்பக்கம் சென்றாள்; அதனுள் இருந்தவனும், “வெளியே வரலாமா?” என்றே கேட்டான். மார்கியானா எண்ணெய் வியாபாரியின் குரலைப்போல் தன் குரலையும் மாற்றிக்கொண்டு, “இன்னும் நேரமாகவில்லை!” என்று பதில் கூறினாள். இவ்வாறே அவள் மற்றைத் தாழிகளில் இருந்தவர்களுக்கும் ஒரே பதிலைத் திரும்பத் திரும்பக் கூறினாள், பிறகு அவள், ஆண்டவனே! இவன் எண்ணெய் வணிகன் என்று நம்பியல்லவா இவனை என் முதலாளி வீட்டினுள் ஏற்றினார்! ஆனால், இவனோ திருடர்களைக் கொண்டுவந்து அடைத்திருக்கிறான்! எல்லோரும் இவனுடைய உத்தரவை எதிர்பார்த்துக் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்! இவர்கள் இன்று வீட்டைக் கொள்ளையடித்து, முதலாளியையும் கொன்று விடுவார்கள்!” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டாள். பிறகு, கடைசியாக எஞ்சியிருந்த தாழிப்பக்கம் சென்று பார்த்தாள். அதில் ஆளில்லை, நிறைய எண்ணெய் இருந்தது. உடனே, அவள் தன் டப்பா நிறைய எண்ணெயை எடுத்துக் கொண்டு சென்றாள்.
அவள் வீட்டிலிருந்த விளக்குகள் எல்லாவற்றிலும் எண்ணெய் ஊற்றி, திரிகளை நன்றாகத் துண்டிவிட்டு, எல்லாவற்றையும் பொருத்தி வைத்தாள். பின்னர், அடுப்பில் நிறைய விறகுகளை அள்ளிப்போட்டு, ஒரு பெரிய அண்டாவைத் துக்கி அடுப்பின்மேல் வைத்தாள். டப்பாவில் இருந்த எண்ணெயை அண்டாவில் ஊற்றி விட்டு, மேலும் மேலும் ஏராளமான எண்ணெயை எடுத்து வந்து ஊற்றி, அதை வேகமாகக் கொதிக்க வைத்தாள். பின்பு, கொதிக்கும் எண்ணெயைப் பல கலயங்களிலே கொண்டுபோய் ஒவ்வொரு தாழிக்குள்ளும் ஊற்றத் தொடங்கினாள். ஒவ்வொரு தாழியினுள் அமர்ந்திருந்த திருடனும், வெளியே வரமுடியாமலும், வாய் திறந்து கூவ முடியாமலும், கொதிக்கும் எண்ணெயால் தலை, முகம், உடலெல்லாம் வெந்து, அந்தத் தாழியிலேயே செத்துக் கிடந்தான். ஒவ்வொரு தாழியிலும் ஒரு பிரேதம் கிடந்தது! இவ்வாறு ஓர் அடிமைப் பெண், தன் புத்தி சாதுரியத் தால், ஓசைப்படாமல், வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரி யாமல், முப்பத்தேழு திருடர்களைப் பரலோகத்திற்கு அனுப்பிவிட்டாள்! எந்தத் தாழியிலும் எவனும் உயிருடன் இல்லையென்று உறுதியான பின், அவள் சமையலறைக்குத் திரும்பி, அண்டாவை இறக்கி விட்டு, மீண்டும் அலிபாபாவுக்காகத் தயாரிக்க வேண்டிய குப்பை அடுப்பில் ஏற்றி வைத்தாள்.
ஒரு மணி நேரம் கழிந்தபின், திருடர் தலைவன் கண்விழித்து, மேலேயிருந்து படிக்கட்டில் இறங்கி நின்றுகொண்டு, ஒருமுறை தன் கைகளைக் கொட்டினான். பதிலே இல்லை. சிறிது நேரத்திற்குப்பின் அவன் இரண்டாம் முறை கொட்டி, உரக்கக் கூவினான். அப்பொழுதும் பதில் வரவில்லை. அவன் மூன்றாம் முறையாகக் கைகளைக் கொட்டிக் கூவியும் பார்த்தான். மறுமொழியில்லை. எனவே, அவன் கீழே இறங்கி, நேரே கொட்டகைக்குச் சென்றான். ‘எல்லோரும் உறங்கிவிட்டனர் போலிருக்கிறது! எடுத்த காரியத்தை முடிக்க இதுவே தருணம்! ஒவ்வொரு வரையும் தட்டி எழுப்பியாவது உடனே அழைத்து வர வேண்டும்!’ என்று அவன் தீர்மானித்தான்.
முன்னணியில் இருந்த தாழி அருகில் அவன் சென்றதும், காய்ந்த எண்ணெயின் வாடையும், வெந்த சதையின் வாடையும் அவன் முகத்தில் கலந்து வீசின. அவன் தாழியைத் தொட்டுப் பார்த்தான். அது கொதிப்பாக இருந்தது. பிறகு, அவன் ஒவ்வொரு தாழியாகச் சென்று தொட்டுப் பார்த்தான். எல்லாம் கொதிப்படைந்தே இருந்தன. எண்ணெய்த் தாழி மட்டும் குடில்லாமல் இருந்தது. உடனே, அவன் தன் தோழர்கள் அனைவருக்கும் நேர்ந்த கதியை உணர்ந்துகொண்டான். மேற்கொண்டு தானும் அங்கே தங்கியிருந்தால் ஆபத்து நேரும் என்று கருதி, அவன் அருகிலிருந்த சுவரின்மீது ஏறி, அடுத்த தோட்டம் ஒன்றிலே குதித்து அங்கிருந்து வெளியே தப்பி ஓடி விட்டான்.
எண்ணெய் வியாபாரி மாடியிலிருந்து இறங்கிக் கொட்ட கைக்குச் சென்றதுவரை மார்கியானா கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் அங்கே சென்றவன் நெடுநேரமாகத் திரும்பி வரவேயில்லை. அப்பொழுது, அவள் சந்தேகமடைந்து, மெதுவாகக் கொட்ட கைப் பக்க மெல்லாம் சென்று சுற்றிப் பார்த்தாள். அங்கே யாருமில்லை. தெருப்பக்கம் செல்லக்கூடிய கதவில் இரட்டைப் பூட்டுகள் பூட்டப்பட்டிருந்தன. ஆகவே, திருட்டு வியாபாரி சுவரேறிக் குதித்து வெளியேறிவிட்டான் என்று அவள் யூகித்துக் கொண்டாள். அன்று தான் பார்க்க வேண்டிய வேலைகளை வெற்றிகரமாக நிறை வேற்றியதில் அவள் மகிழ்ச்சியடைந்தாள். இனியாவது சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று எண்ணி, அவள் வீட்டிலே ஒருபக்கத்தில் தலையைக் கீழே சாய்த்தாள்.
பொழுது விடிவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே, அலிபாபா துயிலெழுந்து, அப்துல்லாவை
அழைத்துக் கொண்டு, ஹம்மாமுக்குச் சென்றான். அவன், குளித்து விட்டுத் திரும்புவதற்குள், சூரியன் அடிவானத்திற்கு மேலே எழுந்து விட்டான். அவன் வீட்டினுள் நுழைந்ததும், கொட்டகையில் தாழிகள் வைத்த இடங்களில் அப்படியே இருந்ததைக் கண்டு, “என்ன, இந்த வியாபாரி இவற்றை இன்னும் சந்தைக்கு எடுத்துப் போகவில்லையா?” என்று மார்கியானாவிடம் கேட்டான். அவள் உடனே, “உங்களுக்கு ஆண்டவன் நூறு வயதுக்கு மேல் அளித்து அருள் புரிய வேண்டும்! அந்த வியாபாரியைப் பற்றி நான் உங்களிடம் தனியாகச் சொல்லுகிறேன், வாருங்கள்!” என்று சொல்லி அழைத்துச் சென்றாள். முதலில் வாயிற் கதவைத் தாழிட்டாள். பிறகு, கொட்டகைப் பக்கம் சென்று, ஒரு தாழியை அவனுக்குக் காட்டி, “இதில் எண்ணெய் இருக்கிறதா? வேறு ஏதேனும் இருக்கிறதா
என்று பாருங்கள்!” என்றாள். அவன் அவ்விதமே குனிந்து தாழிக்குள்ளே பார்த்தான். உடனே, அவன் கூக்குரலிட்டுக் கொண்டே பின்னால் நகர்ந்து, துள்ளிப் பாய்ந்தான். அவனுக்கு ஏற்பட்ட அச்சத்தில், அவன் வெளியிலேயே ஓடிப் போயிருப்பான். ஆனால், மார்கியானா அவனைத் தடுத்து, “தாழிக்குள்ளே இருப்பவன் உங்களுக்குத் தீங்கு செய்யக் கூடிய நிலைமையில் இல்லை! அவன் செத்து, மரக்கட்டை போல் விறைத்துக் கிடக்கிறான்!” என்றாள். அலிபாபா. “எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து நாம் தப்பியிருக்கிறோம்! இவையெல்லாம் எப்படி நிகழ்ந்தன என்று தெரியவில்லையே!” என்று கூறினான்.
மார்கியானா, “அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியது! எல்லா விவரத்தையும் நான் உங்களுக்குப் பிறகு சொல்லுகிறேன். அக்கம்பக்கத்திலுள்ளவர்களுக்கு காதில் கேட்காதபடி நாம் மெதுவாகப் பேசவேண்டும். இனி நாம் எச்சரிக்கையாகயிருக்க வேண்டும். தவறினால் பெரிய ஆபத்து வந்துவிடும்! இப்பொழுது எல்லாத் தாழிகளையும் ஒருமுறை நீங்கள் பாருங்கள்!” என்று சொன்னாள். அவன் அவ்வாறே பார்த்ததில், ஒவ்வொன்றிலும் ஆயுதங்களுடன் கூடிய ஒரு பினம் இருப்பதைக் கண்டான். அவனால் ஆச்சரியத்தை அடக்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த வியாபாரி எங்கே?' என்று அவன் கேட்டான். “அவனைப்பற்றியும் உங்களுக்குச் சொல்லுகிறேன். வியாபாரியா அவன்? உங்களை அழிக்க வந்த கொலைக் காரன் அவன்! இனிய சொற்களால் உங்களை ஏமாற்றி விட்டான் அந்தப் பாதகன். அவன் கதையை அப்புறம் சொல்லுகிறேன். குளித்துவிட்டுப் பசியோடு இருக் கிறீர்கள். முதலில் கொஞ்சம் குப்பைக் குடியுங்கள்! மற்ற விஷயங்களைப் பின்னால் கவனிப்போம்!” என்றாள் மார்கியானா.
அலிபாபா அவளுடன் வீட்டுக்குள்ளே சென்று. சூப்பைப் பருகி முடிந்ததும், அவள் முந்தைய இரவில் நடந்ததையெல்லாம் விவரமாக அவனுக்கு எடுத்துச் சொன்னாள். அதற்குப்பின் அவள் மேலும் கூறியதாவது: “சென்ற சில நாள்களாகவே எனக்கு இப்படி ஏதோ நடக்கப்போகிறது என்று சந்தேகம் இருந்து வந்தது. அதை உங்களிடம் சொன்னால், மெல்ல மெல்ல விஷயம் அண்டை அயலார்களுக்கும் தெரிந்துவிடுமே என்று அஞ்சி, நான் மெளனமாயிருந்தேன். இதுதான் விஷயம். ஒருநாள் நம் வீட்டுக்கதவில் சுண்ணாம்புக்கட்டியால் யாரோ ஒரு வெள்ளை அடையாளம் செய்திருந்தனர். புதிதாக அதைப் பார்த்தவுடன், நான் வியப்படைந்தேன். உடனே ஒரு யோசனை செய்து, வேறு பல வீடுகளிலும் அதேபோல வெள்ளை அடையாளம் செய்துவிட்டேன். பிறகு, மற்றொரு நாள் நம்முடைய கதவில் மட்டும் சிவப்புக்குறி ஒன்றைக் கண்டேன். வேண்டுமென்று எவரோ இப்படிக் குறியிடுவதால், எந்த நேரத்திலும் உங்களுக்கு அபாயம் நேரும் என்று எண்ணி, நான் அதே சிவப்புக் குறியை மற்ற வீடுகளிலும் திட்டி வைத்தேன். இப்பொழுது நடந்ததையும் சேர்த்துக் கவனித்தால், வனத்திலுள்ள திருடர்களே நம் வீட்டில் குறியிட்டார்கள் என்பது தெளிவா கின்றது. முதலில் இருவர் வீட்டைப் பார்த்துவிட்டு, மறுபடியும் இதே வீட்டுக்கு வருவதற்காக இருமுறை அடையாளம் செய்திருந்தனர். நாற்பது திருடர்களில் மாண்டுபோன முப்பத்தேழு பேர்களைத் தவிர, மற்ற இருவரும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. மூன்றாவது ஆசாமியான திருடர்கள் தலைவன் விஷயமாக இனி நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவன், இந்தத் தடவை சுவரேறிக் குதித்துத் தப்பிப் போய்விட்டான். இனி, அவன் உங்களை வஞ்சம் தீர்க்கவேண்டுமென்று கறுவிக்கொண்டேயிருப்பான். ஒரு முறை அவனிடம் நீங்கள் சிக்கினால், அப்புறம் உயிருடன் மீளமுடியாது. இங்கே எனக்குத் தெரிந்த அளவுக்கு நான்
உங்களைக் கவனித்துக் கொள்வேன். உங்களுடைய அடிமையாகிய நான் தங்களுக்காக எதையும் செய்யத் தயாராயிருக்கிறேன்!”
இந்த வார்த்தைகளைக் கேட்டு அலிபாபா மிகவும் மகிழ்ச்சியடைந்து, “இதுவரை நீ செய்து முடித்த அரிய காரியங்களைக் கேட்டு உன்னை நான் மெச்சுகிறேன். உனக்கு நான் கைம்மாறாக என்ன செய்ய வேண்டும் என்பதை உடனே நீ சொல்ல வேண்டும்! என் உடலில் மூச்சு உள்ள வரை, நான் உன் உதவிகளை மறக்க மாட்டேன்!” என்று கூறினான். மார்கியானா “அதெல்லாம் இருக்கட்டும். முதலில் நாம் இந்தப் பினங்களை மண்ணுக்குள் புதைக்க வேண்டும். இல்லாவிட்டால், மற்றவர்களுக்கு விவரம் வெளியாகிவிடும் அல்லவா?” என்றாள். அலிபாபாவும், அடிமைப் பையன் அப்துல்லாவும் கொல்லைத் தோட்டத்தில் ஒரு பெருங்குழியை வெட்டினார்கள். அதிலே திருடர்களுடைய உடல்களையெல்லாம் தள்ளி, மீண்டும் குழியின்மீது மண்கொட்டி நிரப்பினார்கள். திருடர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும், தோலாலான தாழிகளையும் வெளியே வேறிடத்தில் அவர்கள் மறைத்து வைத்தார்கள். கொட்டகையில் நின்று கொண்டிருந்த கோவேறு கழுதைகளை, இரண்டு இரண்டாகவும், மூன்று மூன்றாகவும் சந்தைக்குக் கொண்டுபோய், அத்தனையையும் அப்துல்லா விற்றுக் காசாக்கி விட்டான்.
5
விருந்து, நடனம், மரணம்!
அலிபாபாவுக்கு மனத்தில் நிம்மதியில்லை. திருடர் தலைவனும், இரண்டு திருடர்களும் உயிரோடு இருந்தால், தனக்கு எப்பொழுது, என்ன நேருமோ என்று அவன் அஞ்சினான். கூடியவரை அவன் ஒதுக்கமாகவே வாழ்ந்து வந்தான். தன்னிடம் உள்ள செல்வத்தைப்பற்றியோ, தன் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகளைப்பற்றியோ, வெளியே எவரும் தெரிந்து கொள்ளும்படி அவன் எதையும் செய்யவில்லை.
இனி, திருடர் தலைவனைப்பற்றிக் கவனிப்போம். அவன் அலிபாபாவின் வீட்டிலிருந்து தப்பி ஓடியதும், நேரே வனத்திற்குச் சென்றான். அவனுடைய உள்ளம் உடைந்து போயிருந்தது. கூடச்சென்றிருந்த நண்பர்கள் அனைவரும் மாண்டு ஒழிந்து போய்விட்டனர். குகையிலிருந்து செல்வங்களை அள்ளிக்கொண்டு சென்றவன் மேலும் உயிரோடு உலவிக்கொண்டிருக்கிறான். அவன் எத்தனை தடவைகள் வேண்டுமாயினும் குகையிலிருந்து பொக்கிஷங்களை அள்ளிக் கொண்டு செல்லமுடியும். ஏனெனில், அவனுக்கு குகைக்குள் நுழைவதற்கு வேண்டிய மந்திரச் சொற்கள் தெரிந்திருக்கின்றன. இந்த
விஷயங்களைப் பற்றியெல்லாம் தலைவன் நெடுநேரம் யோசித்து, தானே இவற்றுக்குப் பரிகாரம் தேட வேண்டுமென்று தீர்மானித்தான். முதலில் அலிபாபாவைத் தொலைக்க வேண்டும்; பிறகு, புதிதாக வேறு துணையாட்களைச் சேர்த்துக் கொண்டு, முன் போல் வழிப்பறி, கொள்ளை முதலியவற்றை நடத்தி வர வேண்டும் என்று அவன் எண்ணமிட்டுக் கொண்டே, அன்றைய இரவுப் பொழுதைக் காட்டிலேயே கழித்தான்.
மறுநாள் காலையில், அவன் பொருத்தமான ஒரு மாறுவேடம் புனைந்து கொண்டு நகருக்குள் நுழைந்தான். முதலில் அவன் வியாபாரிகள் பலரும் தங்கக் கூடிய பெரிய சத்திரத்திற்குச் சென்றான். சத்திரத்து நிர்வாகியைக் கண்டு, அவனுடன் நீண்ட நேரம் பேசிப் பார்த்தான். சமீபத்தில் நகரில் ஏதாவது விசேடமான செய்தி உண்டா என்றும் கேட்டான். சத்திர நிருவாகி என்னென்னவோ கதைகளைக் கூறினாரே தவிர, அலிபாபா வீட்டு நிகழ்ச்சி களைப்பற்றி அவன் எதிர்பார்த்த செய்தி எதுவும் அவர் வாயிலிருந்து வரவில்லை. அப்பொழுது அவன், அலிபாபா தன்னைவிடச் சிறந்த மூளையுடையவன் என்று உணர்ந்தான். நகரில் ஒரு மனிதனைக் கொலை செய்தால், செய்தவனுக்கு அரசாங்க அதிகாரிகள் மரண தண்டனை விதித்து, அவன் சொத்துகளைப் பறித்துக்கொண்டு, அவனுடைய வீட்டையும் தரைமட்டம் ஆக்கிவிடுவார்கள். ஆனால், அலிபாபா ஒரே சமயத்தில் பல உயிர்களைப் பலி வாங்கியவுடன், தான் செய்த முப்பத்தேழு கொலைகளையும் மூடி மறைத்துவிட்டானே என்று தலைவன் வியப்படைந்தான். அவ்வளவு வல்லமையுடையன் கையில் தானும் எளிதில் மாட்டிக்கொண்டுவிடக்கூடாது என்று அவனும் எச்சரிக்கை யாயிருந்தான்.
அவன் கடைத் தெருவிலே ஒரு பெரிய கடையை வாடகைக்கு எடுத்து, குகையிலே இருந்த உயர்ந்த ரகமான ஜவுளிகள் முதலிய பொருள்களை அங்கே கொண்டு வைத்து வியாபாரம் செய்து வந்தான். வியாபாரத்தில் அவனுக்குப் பலருடைய பழக்கம் ஏற்பட்டது. தன்னுடன் பழகிய வியாபாரிகளை அவன் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் நடத்தி வந்தான். அந்த வியாபாரிகளில் ஒருவன் அவன் கடைக்கு எதிர்ப்பக்கம் கடை வைத்திருந்தான். அவன்தான் அலிபாபாவின் சகோதரனான காஸிமின் மைந்தன். அவனிடத்தில் திருடர் தலைவனுக்கு அலாதியான அன்பு இருந்து வந்தது. அவனுக்குத் தலைவன் அடிக்கடி விருந்துகளும் நடத்தினான். அவனும் தலைவனுக்கு தானும் விருந்தளிக்க விரும்பினான். அவனுடைய வீடு சிறிதாகவும், வசதியில்லாமலும் இருந்ததால், அவன் தன் சிற்றப்பனான அலிபாபாவிடம் தன் வீட்டிலேயே விருந்து தயாரிப்பதாயும், வெள்ளிக்கிழமை யன்று மாலை அந்தப் புதிய வணிக நண்பனை அழைத்து வரும்படியும் கூறினான். விருந்து என்று முன்னதாக அறிவிக்காமல், நண்பனுடன் உலவச் செல்லும்பொழுது அவனை அங்கே அழைத்து வரும்படியும் அவன் ஆலோசனை சொன்னான்.
திருடர் தலைவன் குவாஜா ஹஸன் என்று பெயர் வைத்துக்கொண்டிருந்தான். காஸிமின் மகன் யார் என்பது முதலில் பல நாள் அவனுக்குத் தெரியாமலிருந்தது. பின்னர், ஒருநாள் அலிபாபா தன் அண்ணன் மகனைப் பார்க்க வந்திருந்தான். அப்பொழுது ஹஸன் அவனை யாரென்று தெரிந்துகொண்டு, பின்னால், காஸிம் மகனிடம் அவன் யார் என்று வினவினான். அந்தப் பையன் விவரம் தெரியாமல், “அவர் என் தந்தையின் உடன்பிறந்தவர்” என்று சொல்லிவிட்டான். அதிலிருந்துதான் போலி வியாபாரியான ஹஸன் அவனுடன் அதிகமாக அளவளாவிப் பழகி வந்தான். வெள்ளிக்கிழமையன்று கடையடைப்பு ஆதலால், காஸிமின் குமாரன் தன் நண்பன் குவாஜா ஹலனை அழைத்துக்கொண்டு, மாலை நேரத்தில் வெளியே உலவச் சென்றிருந்தான். இரவுவரை அவர்கள் பூந்தோட்டங்களில் தங்கியிருந்துவிட்டுத் திரும்பி வரும்பொழுது, ஹஸ்னைத் தன்னுடன் ஒரு வீட்டிற்குள் வருமாறு இளைஞன் அழைத்தான். அது அலிபாபாவின் இல்லம். இளைஞன், “என் சிறிய தந்தைக்குத் தங்களைப்பற்றி நான் சொல்லியிருப்பதால், அவரும் தங்களைப் பார்க்க ஆவலாயிருக்கிறார். வாருங்கள்!” என்று அழைத்தான். ஹஸன் முதலில் இனங்காவிட்டாலும், பின்னர் மகிழ்ச்சியோடு இணங்குவதாகப் பாவனை செய்துகொண்டு, வீட்டுக்குள்ளே சென்றான். இப்படியாவது பகைவனின் வீட்டுக்குள் செல்லும் வாய்ப்புக் கிடைத்ததே! என்று அவன் உள்ளுக்குள் குதுாகலமாயிருந்தான். அவர்கள் உள்ளே வந்ததும், அலிபாபா ஹஎலனை உபசாரத்துடன் வரவேற்று, வணக்கம் கூறி, அவனுடைய உடல் நிலை, வர்த்தக வளர்ச்சிபற்றியெல்லாம் விசாரித்தான். “தாங்கள் என் சகோதரன் மைந்தனிடத்தில் என்னைவிட அபிமானம் வைத்திருப்பதாக அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு மிக்க வந்தனம்!” என்றும் அவன் கூறினான். ஹஸனும் அவனை வணங்கி இனிய உரைகள் பகர்ந்தான். இருவரும் ஆசனங்களில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். ஹஸன் காஸிமின் குமாரனைப் பாராட்டிப் பேசினான். “இவன் பார்வைக்கு இளைஞனாயிருந்த போதிலும் ஆண்டவன் அருளால், புத்தியில் முதியவனாக விளங்குகிறான்; இவனிடத்தில் எனக்கு அளவற்ற அன்பு உண்டு. இவன் என் உள்ளத்தைக் கவர்ந்தவன்!” என்றான்.
அந்நிலையில் அவன் எழுந்து நின்று, தான் தன் வீட்டுக்குச் செல்ல விடை கேட்டான். “நான் தங்கள் அடிமை. இன்ஷா அல்லாஹ் (ஆண்டவன் விரும்பினால்) நான் மறுபடியும் ஒருமுறை இங்கு வருகிறேன்!” என்று அவன் கூறினான். அலிபாபா, அவனை வெளியே செல்ல விடவில்லை. “நண்பரே! எங்களுடன் அமர்ந்து ஒருவேளை உணவு உண்ணாமல் தாங்கள் வெளியேறுவது நன்றாயில்லை! சாப்பிட்டுவிட்டுத் தாங்கள் வீட்டுக்குச் செல்லலாம்! நாங்கள் தயாரிக்கும் உணவுகள் தாங்கள் வழக்கமாக அருந்தும் சுவையுள்ள அமுதுக்கு ஈடாக இருக்கமாட்டா. ஆயினும் எங்களுடைய திருப்திக்காகத் தாங்கள் எங்களுடன் அமுது செய்ய வேண்டுகிறேன்!” என்று அவன் ஹஸனைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.
ஹஸன், “உங்களுடைய அன்புக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆயினும், நான் உங்கள் வீட்டு உணவுகளைச் சாப்பிட முடியாது. சமீபத்தில் வைத்தியர் அவ்வாறு எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்!” என்று கூறினான். “என்ன காரணத்திற்காக வைத்தியர் கட்டளையிட்டார்? என்ன உணவை உண்னக்கூடாதென்று சொல்லியிருக்கிறார்?” என்றெல்லாம் அலிபாபா துளைத்துக் கேட்டான். அப்பொழுது ஹஸன், “உப்புள்ள பண்டங்களை நான் உண்ணக்கூடாது என்பதுதான் வைத்தியர் கட்டளை!” என்றான். உடனே அலிபாபா, 'இவ்வளவுதானா! இன்னும் சமையல் முடியவில்லை. நான் உள்ளேபோய் உப்பில்லாமலே பதார்த்தங்களைத் தயாரிக்கச் சொல்லி விடுகிறேன்!” என்று சொல்லி, உள்ளே ஓடிச் சென்றான். அங்கு மார்கியானா விடம், இறைச்சி முதலிய எதிலும் உப்பு போடாமலே சமைக்கும்படி சொன்னான். அதைக் கேட்டு அவள் “உப்பில்லாமல் உண்ணக்கூடிய விருந்தாளி யார் வந்திருக்கிறார்?” என்று கேட்டாள். “யாராயிருந்தாள் உனக்கென்ன? உப்பு வேண்டாமென்றால், என் கட்டளைப்படி நீ செய்!” என்று அவன் உத்தரவிட்டதும், அவளும், அப்படியே ஆகட்டும்! என்று சொல்லி விட்டாள். அலிபாபா முன் வாயிலுக்குப் போய் விருந்தாளியுடன் பேசிக் கொண்டிருந்தான்.
மார்கியானாவுக்கு உப்பில்லாமல் உண்ணும் அந்த விசித்திரமான விருந்தாளியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல். அவள், விரைவாகச் சமையல் வேலைகளை முடித்துக்கொண்டு, அடிமை அப்துல்லாவின் உதவியால், மேசைகளின்மீது தட்டுகளையும், உணவுகளையும் எடுத்து வைத்துவிட்டு, முன்புறம் சென்றாள். அங்கே ஹஸ்னைக் கண்டதும், அவன் யார் என்பதை அவள் உடனே தெரிந்து கொண்டாள். பழைய சைத்தானே புது உடைகளில் வந்திருக்கிறான் என்பதை அவள் உணர்ந்தாள். அவனுடைய உடைக்குள் ஒரு வாள் மறைத்து வைக்கப் பட்டிருப்பதையும் அவள் கவனித்தாள். ஒகோ இதற்காகத்தான் இந்தத் துரோகி உப்பு வேண்டா என்று சொல்லியிருக்கிறான்! உப்பிட்டவரைக் கொல்லக்கூடாது என்ற சாஸ்திரப்படி நடக்கிறான் போலிருக்கிறது! என் முதலாளியைக் கொல்லவே இவன் வந்திருக்கிறான். ஆனால், அதற்குமுன் இந்த நீசனையே பரலோகத்திற்கு அனுப்பி விடுகிறேன்! என்று அவள் தனக்குள்ளே எண்ணிக்கொண்டாள்.
அலிபாபாவும், ஹஸனும் உணவருந்தியபிறகு, அப்துல்லா மார்கியானாவை அழைத்து வந்தான். அவள் மேசைகளைத் துடைத்து, புதிதாக வந்த பழங்களையும், உலர்த்தி வைத்திருந்த கனி வகைகளையும் எடுத்து வைத்தாள். பின்னர், திராட்சையைப் பிழிந்து தயாரிக்கப்பெற்றிருந்த உயர்ந்த மதுவையும் , கிண்ணங்களையும் எடுத்து வைத்துவிட்டு, அவள் அப்துல்லாவை அழைத்துக்கொண்டு வேறு ஓர் அறைக்குள்ளே சென்றாள். அவர்கள் உணவருந்தப் போயிருப்பதாக ஹஸ்ன் எண்ணிக்கொண்டான்.
அப்பொழுது அவன் தன் காரியம் நிறைவேறும் தருணம் நெருங்கிவிட்டதை உணர்ந்தான். “என் வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ள இதுவே சமயம்! ஒரே வெட்டில் இந்தப் பயலைப் வீழ்த்தி விடுவேன்! இவன் அண்ணன் மகன் என்னைத் தடுக்கமுடியாது. அவன் தலையிட்டால், அவனையும் வாளுக்கு இரையாக்க வேண்டியதுதான்! ஆனால், இந்த வேலைக்காரியும்,
பையனும் உணவுண்டு, சமையலறையில் போய்ப் படுக்கும் வரை நான் பொறுத்திருக்க வேண்டும். பிறகு, ஒரு நொடியில் வேலையை முடித்து விட்டு, தோட்டத்தின் வழியாக வெளியே ஓடி விடலாம்! என்று அவன் தனக்குள்ளே சிந்தித்துக் கொண்டான்.
அடுத்த அறையிலிருந்த மார்கியானா கதவின் இடுக்கு வழியாக அவனைக் கவனித்துக் கொண்டே தன் உடைகளை மாற்றிக் கொண்டிருந்தாள். நடனத்திற்குரிய சல்லடம், சரிகைத் தாவணி, மஸ்லின் முகத் திரை, காற் சலங்கைகள், பட்டுத் தலைப்பாகை முதலியவற்றை அவள் வேகமாக அணிந்து கொண்டாள். அவற்றுடன், இடுப்பில் பளபளப்பான தங்கச் சரிகையிலே செய்த அரைக் கச்சை கட்டி, அதில் ஒரு பிச்சுவாவையும் செருகிக் கொண்டாள். அப்துல்லாவைப் பார்த்து அவள், “விருந்தினருக்காக நாம் நடனமாட வேண்டும்!” உன் கஞ்சிராவை எடுத்துக்கொள்!” என்றாள்.
சிறுவன் கஞ்சிராவை குலுக்கிக்கொண்டு, முன்னே சென்றான். மார்கியானா ஜல்ஜல் என்று காற்சலங்கைகள் ஒலிக்க, ஒய்யாரமாக அவனைத் தொடர்ந்து சென்றாள். இருவரும் விருந்தினர் அறைக்குள் புகுந்து, தலை வணங்கி விட்டு, ஒதுங்கி நின்றனர். அவர்களைக் கண்டதும் அலிபாபா மகிழ்ச்சியடைந்து, “சரிதான், விருந்தில் நடனமும் அவசியம்தான், நடக்கட்டும்!” என்றான். குவாஜா ஹஸன், “பிரபுவே, அறுசுவை உண்டிக்குப்பின் ஆனந்த நடனமும் அளிக்கிறீர்கள்!” என்று மெச்சினான். உடனே, அப்துல்லா கஞ்சிராவைத் தட்டி முழங்கத் தொடங்கினான். அவனுடைய தாளங்களுக்கு ஏற்ப, கட்டழகி மார்கியானா, தோகை மயில்போல் துள்ளிக் குதித்து ஆடினாள். அவளுடைய ஆட்டமும் வளைவுகளும் குழைவுகளும் கண்களைக் கவர்வனவாயிருந்தன. சிறிது நேரத்திலேயே அவள் நடனக்கலையில் தனக்கிருந்த பயிற்சியைத் தெளிவாகக் காட்டிவிட்டாள். பின்னர், தாளம் மாறியவுடன், அவள் இடையிலிருந்த பிச்சுவாவை உருவி வலக்கையிலே வைத்துக்கொண்டு புதிய நடனம் ஒன்றை ஆடிக்காட்டினாள். வலக்கையிலே அந்தக் கூரிய ஆயுதம் பளபளவென்று ஜொலித்துக்கொண்டிருந்தது. அதை ஏந்தியவண்ணம் அவள் வலப்புறமும் இடப்புறமும் சாய்ந்து. நிமிர்ந்து, ஒடி. அங்கே வீற்றிருந்தவர்கள் அருகிலே சென்று சில அபிநயங்கள் காட்டினாள். நேரம் செல்லச் செல்ல, ஆட்டத்தின் வேகம் அதிகரித்தது. அவள் பம்பரம்போல் சுழன்றாள். அலிபாபாவும் ஹஸனும், வைத்த கண்ணை வாங்காமல், அவளையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் உடலைக் குலுக்கி ஆடிக் கொண்டே, அப்துல்லாவிடம் இருந்த கஞ்சிராவை வாங்கி, இடக்கையிலே வைத்துக்கொண்டு பிச்சுவாவின் முனையை அதற்கு நேரே பிடித்துக் காட்டினாள். பிறகு, பிச்சுவாவைத் தன் மார்புக்கு நேரே பிடித்தாள். உடனே, அலிபாபாவிடம் சென்று, சில நிமிடங்கள் ஆடினாள். அதேபோல் ஹஸனிட மும் நின்று ஆடினாள். அவளுடைய கண்களும் கால்களும் கைகளுமே பேசத் தொடங்கியவை போல் இருந்தன. இவ்வாறு சிறிது நேரம் ஆடியபின் அவள் நடனத்தை நிறுத்திக்கொண்டு, உடலை வளைத்து, அலிபாபாவிடம் கஞ்சிராவை நீட்டினாள். அவன் உடனே ஒரு தங்கக் காசை அதிலே வைத்தான். அடுத்தாற்போல் காஸிமின் மகனும் ஒரு காசை எடுத்து அதிலே போட்டான். பிறகு, மார்கியானா கஞ்சிராவை ஹஸன் பக்கமாக நீட்டினாள். அவன் இடுப்பிலிருந்த பணப்பையை எடுப்பதற்காகத் தலையைக் குனிந்துகொண்டு, தன் அரைக் கச்சையை இரண்டு கைகளாலும் தடவிப் பார்த்தான். அந்த நேரத்தில் மார்கியானா, அவளுக்கே உரித்தான உறுதியுடன், வலக்கையிலே பிடித்திருந்த பிச்சுவாவை ஓங்கி அவன் நெஞ்சிலே குத்தி இறக்கிவிட்டாள்! அந்தக் கணத்திலேயே அவன் தரையிலே சுருண்டு விழுந்து மாண்டு போனான்.
“அடி பாதகி என்ன வேலை செய்துவிட்டாய்! இம்மையிலும் மறுமையிலும் எனக்கு நீங்காத பழியை உண்டாக்கிவிட்டாயே!” என்று அலிபாபா அலறித் துடித்தான்.
“உங்களைக் காப்பாற்றவே இவனை வீழ்த்தினேன்! இவனுடைய அங்கியைத் துக்கிப் பார்த்தால் பழியும் பாவமும் புலனாகும்!” என்றாள் மார்கியானா.
அலிபாபா அவனுடைய உடைகளைச் சோதனை செய்தான். அவைகளின் உள்ளே நீண்ட வாள் மறைந்திருந்தது!
அப்பொழுது மார்கியானா கூறியதாவது: “இந்த ஐயாவை உங்களுக்குத் தெரியவில்லையா? இந்த வஞ்சகன் தான் உங்களுடைய பகைவன்! நன்றாக இவனை உற்றுப் பாருங்கள்! இவனே எண்ணெய் வியாபாரி; இவனே திருடர்களின் தலைவன்! உங்கள் உயிரைப் பலிவாங்க வந்த இவன், அதற்காக உங்கள் உப்பை உண்ண மறுத்தான்! நீங்கள் உணவில் உப்பைப் போடவேண்டா என்று சொன்னவுடனேயே, இவன் உங்கள் உயிருக்கு உலைவைக்க வந்தவன் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நான் நினைத்ததே சரி என்பது ஆண்டவன் அருளால் வெளியாகி விட்டது!”
உடனே அலிபாபா, அவளுக்குப் பல முறை நன்றி கூறி, “இரண்டு தடவைகள் என் உயிரை நீ காப்பாற்றி விட்டாய்! உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யமுடியும்? இன்று முதல் நீ அடிமைப்பெண் அல்லள். இப்பொழுதே உனக்குச் சுதந்தரம் அளிக்கிறேன்!” என்று சொல்லி, அன்போடு அவள் கையைப் பிடித்துக்கொண்டு, “உனக்கு என் மகனையே பரிசாக அளிக்கிறேன்! உன் விசுவாசத்திற்கு நன்றியாக அவன் உன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்!” என்றான். பிறகு, அவன் தன் சகோதரன் மகனைப் பார்த்துப் பேசிலானான் : “நீ நான் சொல்வதுபோல் நடக்க வேண்டும். இந்த மார்கியானாவையே திருமணம் செய்துகொள். கடமைக்கும், உண்மையான அன்புக்கும். இவள் எடுத்துக்காட்டாக விளங்குபவள். இவர் மாதர்குல விளக்கு. அதோ விழுந்து கிடக்கும் குவாஜா ஹஸன் உன்னிடம் நட்புக் கொண்டு உறவாடியதன் இரகசியம் இப்பொழுது உனக்குப் புரிகிறதா? உன் உயிரைப் பலி வாங்கவே அவன் உன்னைப் பற்றிக் கொண்டிருந்தான். ஆனால், இந்தப் பெண்ணுடைய மதி நுட்பமும் சமயோகிதயுக்தியும் நம்மைக் காப்பாற்றிவிட்டன!
இளைஞன், தந்தை சொல்லைத் தலைமேல் தாங்கி உடனேயே, 'தங்கள் விருப்பப்படி மார்கியானாவை மணந்து கொள்கிறேன்” என்றான்.
பிறகு, அம்மூவரும் சேர்ந்து மிகவும் கவனமாக அங்கிருந்த பிணத்தைத் தூக்கித் தோட்ட்த்திற்கு எடுத்துச் சென்று. அங்கே அதைப் புதைத்துவிட்டனர். அன்று முதல் பின்னால் பல ஆண்டுகள் கழிந்தும் அந்த விஷயம் வெளியே யாருககும் தெரியாமல் மறைந்து போய்விட்டது.
சில நாள்களுக்குப்பின் காஸிமின் மகனுக்கும் மார்கியானாவுக்கும் கோலாகலமாத் திருமணம் நடந்தேறியது. அலிபாபா, காஸிமின் மகனை அண்ணன் மகன்தானே என்று வேற்றுமை பாராட்டாமல், அவனுக்காகப் பெரு நிதியைச் செலவழித்து விருந்துகள், நடனக் கச்சேரிகள் முதலியவற்றை முறைப்படி நடத்தி வைத்தான். விருந்தினர் பலருக்கும் மார்கியானாவின் வீரமும் தீரமும் உறுதியும் மதிநுட்பமும் தெரிந்திராத போதிலும், உத்தமமான அந்தப் பெண்ணுக்கு அலிபாபா சுதந்தரம் அளித்துத் தன் குடும்பத்திலேயே அவள் தங்கியிருக்கும்படியும் செய்ததை அவர்கள் மிகவும் பாராட்டிப் புகழ்ந்தனர்.
அதுமுதல் அலிபாபாவுக்கு மேலும் மேலும் தொழிலில் வெற்றி கிடைத்து வந்தது. அவன் தொட்டவையெல்லாம் பொன்னாக விளைந்தன. அதிருஷ்டம் புன்னகையோடு அவனுடன் ஒட்டிக் கொண்டேயிருந்தது. அவன் மேற் கொண்டு வனத்திற்குச் செல்லவோ, திருடர்களின் பொக்கிவடிக் குகையைப் பார்க்கவோ மனமில்லாமல், நெடுங்காலம் அஞ்சிக் கொண்டிருந்தான். ஏனெனில், நாற்பது திருடர்களில் இன்னும் இருவருடைய கதி என்ன ஆயிற்று என்பதை அவன் தெரிந்துகொள்ள முடியவில்லை. அந்த இருவரும் தன்னைப் பழிவாங்கக்கூடும் என்று அவன் கருதியிருந்தான். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல, அவன் ஒருமுறையாவது போய்க் குகையைப் பார்த்து வரவேண்டுமென்று விரும்பினான். அவன் தன் குதிரையில் ஏறிக் கொண்டு, குகைக்கு சென்று, முன் போலவே “ஒ ஸிம் ஸிம், திற!” என்று சொன்னான். உடனே வாயிற்பாறை நகர்ந்துவிட்டது. அவன் உள்ளே சென்று பார்க்கையில் முன்பு காஸிமின் உடலை அவன் துக்கிக்கொண்டு செல்லும்பொழுது எல்லாப் பொருள்களும் எப்படி எப்படி இருந்தனவோ அப்படி அப்படியே இருக்கக் கண்டான். ஆகவே, இனிமேல் தனக்குத் திருடர்களின் பயமே இல்லையென்றும் அவன் உணர்ந்தான். மேலும், குகையைத் திறக்கும் ‘ஸிம் ஸிம்’ மந்திரம் தெரிந்தவன் உலகிலே அவன் ஒருவன்தான் என்றும் ஆகிவிட்டது. குகைக்கு வந்தமட்டிலும், வெறுங்கையோடு திரும்ப வேண்டாமென்று, அவன் தன் குதிரை சுமக்கக்கூடிய அளவுக்குப் பொற்காசுகளை அள்ளிக் கட்டிக்கொண்டு திரும்பிச் சென்றான்.
பிற்காலத்தில் அவன் தன் பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளையும் குகைக்கு அழைத்துக்கொண்டு போய் எல்லாவற்றையும் காட்டினான். குகையைத் திறக்கவும் அடைக்கவும் பயன்படும் மந்திரச் சொற்களையும் அவர்களுக்கு மனப்பாடம் செய்து வைத்தான். இவ்வாறு, அலிபாபாவும், அவன் குடும்பத்தினரும், என்றும் வற்றாத செல்வத்துடன், நகரத்திலே பல மேன்மைகளையும் பெற்று. இன்பமாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக