கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
கட்டுரைகள்
Back
கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
என். வி. கலைமணி
கவிக்குயில் சரோஜினி தேவியின்
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
புலவர் என்.வி. கலைமணி எம். ஏ.,
பாரதி பதிப்பகம் புதிய எண் 126, உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை-600017. த.பெ. எண். 4984
தொலைபேசி : 4340205
விலை : ரூ. 24-00
* * *
□ KAVIKKUIEL SAROJINI DEVIIN NAMMAI MEMBADUTHUM ENNANGAL □ By : N. V. Kalaimani □ First Edition; December 2000 □ Price Rs. 24-00 □ Copy Right Holder: Bhaarathe Pathippaham, Chennai-17 □ Published by : BAARATHE PATHIPPAHAM, New no. 126, Usman Road, T. Nagar, chennai-600017. P. B. No. 4984, Phone: 4340205 □ Printed at: Kumar Printers, Chennai-600033. □
உள்ளடக்கம்
01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
14
15
16
17
18
1. பிரிட்டிஷ் மந்திரிக்குப் பதில்
கோமகன் மன்னிப்புக் கேட்டார்!
உலக நாடுகளில் பலவிதமான ஆட்சிகள் நடந்தன; நடைபெறுகின்றன. அவை எவை? எந்த ஆட்சிக்காகக் கவிக்குயில் சரோஜினி இங்கிலாந்து நாட்டிலே போராடினார் என்பதை பார்ப்போம்.
★ ஆள்பவர் இல்லாமல் நடக்கும் ஆட்சி; அதாவது அதற்கு அராஜக ஆட்சி Anarchy; என்று பெயர்!
★ 'உயர்குடி மக்கள் ஆட்சி' Aristocracy; என்ற ஓர் ஆட்சி உண்டு!
★ ஏக ஆட்சி அதாவது தன்னாட்சி Autarchy என்ற பெயருடைய ஆட்சி ஒன்று இருந்தது!
★ ஏகாதிபத்தியம் ஆட்சி, அல்லது தன்னரசு என்ற பெயரில் Autocracy ஒன்று நடந்தது.
★ குடியாட்சி அல்லது ஜனநாயக ஆட்சி Democracy என்ற ஆட்சியில் நாம் இன்று வாழ்கின்றோம்.
★ இரட்டை ஆட்சி என்ற பெயரில் கி.பி. 1921-ம் ஆண்டு இந்தியாவில் Dyarchy நடைபெற்றது.
★ சர்வாதிகாரம் என்ற பெயரில் Dictatorship ஆட்சிகள் நடந்ததை நாம் வரலாற்றில் படிக்கின்றோம்!
★ Dyarchy என்ற இரு வகை ஆட்சி கிரேக்க நாட்டில் நடந்துள்ளதாகச் சரித்திரம் கூறுகின்றது. ★ தொழிலாளர்களால் நடத்தப்பட்ட ஆட்சிக்கு Ergatocracy என்று பெயர்!
★ பிரெஞ்சு நாட்டிலும், ஜெர்மனியிலும், Georontociacy என்ற முதியோர்களால் ஓர் ஆட்சி நடந்தது!
★ முற்றும் துறந்த சாதுக்கள் ஆட்சி என்ற ஆட்சி ஒன்று Hagiarchy நடந்ததாக வரலாறு சுட்டுகின்றது.
★ பண்டைய காலத்தில் பல நாடுகளில் முடியாட்சிகள் Monarchy சில நடந்துள்ளதையும் படித்துள்ளோம்!
★ சமுதாய விரோதிகள் என்று கூறப்படும் காவிகள் கூட Ochiocracy என்ற பெயரால் ஓராட்சியை நடத்தி இருக்கிறார்கள்!
★ சமுதாய முக்கியஸ்தர்கள் பலரால், பொறுப்பான ஓர் ஆட்சி Oligarchyயை நடத்திக்காட்டப்பட்டிதாக உலக வரலாற்றால் உணர்கின்றோம்.
★ செல்வச் சீமான்களும், கோமான்களுமாகச்சேர்ந்து அணிதிரட்டி tutocracy என்ற பெயரில் ஓர் பணக்கார ஆட்சியை நடத்தியுள்னார்கள்.
★ நமது இந்தியா இப்போது Republic என்ற ஜனநாயக குடியாட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.
★ மாவீரர்களான லேனினும், பிறகு சிறுசிறு மாற்றங்களோடு ஸ்டாலினும், Soviet சோவியத் ருஷ்ய முறையில் உழைப்பாளிகளின் என்ற ஆட்சியை நடத்தியதை நாம் பார்த்திருக்கிறோம்-படித்திருக்கிறோம்.
★ மூன்றாம் நெப்போலியனுக்குப் பிறகு, பிரான்ஸ் நாட்டு மதச் சார்பாளர்களும், முதியவர்களும் இணைந்து நடத்திக் கொண்ட ஆட்சிக்கு Thocracy தெய்வீக ஆட்சி என்று கூறிக் கொண்டார்கள்.
இன்றைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷ்ரத், இட்லர் முசோலினி போன்றோரது ஆட்சியை மக்கள் Tyranny ஆட்சி என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.
இத்தகைய ஆட்சிகளைப் பற்றிய வரலாறுகளை எல்லாம் நன்குணர்ந்த கவிக்குயில் சரோஜினி தேவி, தனது உடல்நலம் சரி இல்லாமல் சிகிச்சைப் பெற்றுக் கொண்டு இலண்டன் மாநகரில் உள்ள ‘கிங்ஸ்லீ’ என்ற மாமன்றத்தில் சொற்பொழிவு ஆற்றும் வாய்ப்பு ஒன்று வாய்த்தது.
அந்த நேரத்தில், பஞ்சாப் மாநிலத்தில் ஜாலியன் வாலா பாக் என்ற இடத்தில், ஆங்கிலேயர்கள் அரசு நடத்திய ‘பஞ்சாப் படுகொலை’யைப் பற்றி மிக கோபாவேசத் தேசப்பற்றுடன் சரோஜினி தேவி முழக்கமிட்டார்.
அக்கூட்டத்தில் ஆங்கிலேயரும்-இந்தியரும் பெருந்திரளாகக் கூடி இருந்தார்கள். அந்த மாமன்ற பேச்சில் கவியரசி சரோஜினி தேவி குமுறிக் கொந்தளித்து ஆற்றிய உரையில்:
"குடிகளைக் கொடி விலங்குகள் போல் வேட்டை ஆடலாமா? நிரபராதிகளையும், நிராயுதபாணிகளையும், சுட்டேன், சுட்டேன், துப்பாக்கிகளுள் இருந்த வெடி குண்டுகள் தீரும் வரைச் சுட்டேன்." என்று போர் வெறியன் ஜெனரல் பயர் சுட்டானே! இது அராஜக ஆட்சியின் அடக்குமுறைப் போர் ஆர்ப்பாட்ட வெறி அல்லவா?”
”இது நியாயமா? பிரிட்டிஷாரின் வீரம் இதுதானா? ஆங்கிலேய ஆட்சியின் ஜனநாயகம் இதுதான் பெண்களுக்குரிய மரியாதைகளை வழங்குகிறோம் என்று கூறும் பிரிட்டிஷ் ஆரசு, பெண்மணிகளை நிர்வாணமாக்கி நிறுத்தலாமா?”
"கசையடிகளால் பெண்களைக் கதறக் கதற அடிக்கலாமா அவர்களை வீதியிலே நிறுத்திக் கற்பழிக்கலாமா எனது நாட்டுச் சகோதரிகளை மானபங்கம் செய்த சண்டாளர்களை, பிரிட்டிஷ் ஆட்சி தண்டிக்காமல் விட்டது ஏன்?"
இப்படிப்பட்ட பயங்கரக் காட்டுமிராண்டித்தனம் செய்த டயர் என்பவனது அராஜகத்தைப் பிரிட்டிஷ் பாராளுமன்றம் பாராட்டலாமா? நீதியா அது?”
அப்போது கூட்டத்தில் இருந்த மக்கள் வெட்கம், வெட்கம் என்று ஓங்காரக் குரலிட்டு முழக்கமிட்டார்கள். பேச்சைக் கேட்க வந்த வெள்ளைக்காரர்கள் பலர் தேவியின் வீர உரையால் எழுந்த கோஷங்களைக் கேட்டுத் தலைகுனிந்து வெளியேறினார்கள்.
இந்தியாவில் பிரிட்டிஷ் செய்யும் ஆட்சியைப் பற்றி வெள்ளையர்களிடம் அதுவரை ஒரு நல்ல எண்ணம் இருந்தது. சரோஜினி தேவியின் அந்த கடல் கொந்தளிப்பான உரை, பிரிட்டிஷ் ஆட்சியை நிலை குலைய வைத்த கெட்டப் பெயரை உருவாக்கி விட்டதை அன்று லண்டன் மாநகரமே பெருமூச்சு விட்டு அவமானம் அடைந்தது. இத்தகைய ஓர் ஆட்சியை அம்பலப்படுத்ததான் உலகில் நடைபெற்ற பல வகையான ஆட்சிகளைப் பற்றி தேவி விமர்சனம் செய்தார்!
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அன்று இந்திய மந்திரியாக இருந்தவர் மாண்டேரு என்ற ராஜதந்திரி! அவர், சரோஜின் தேவியை நோக்கி, நீங்கள் மேடையில் பொய்க் குற்றச்சாட்டுக்களைக் கூறியதற்காக அவற்றை மீண்டும் வாபஸ் பெற்று, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற அறை கூவலை விட்டார்!
சரோஜினி தேவி அந்த அறைகூவலை ஏற்று, ஆவர் வார்த்தைகளுக்குத் தக்கக் கடிதம் எழுதி மறுத்தார். அப்போது, கானாட்டுக்கோமகன் இந்தியாவிற்குவரும் வாய்ப்பு ஏற்பட்டு, இந்தியர்களின் கொந்தளிப்பான மன எழுச்சிகளைப் பார்த்து, இந்தியர்க்கு ஆறுதலாக நடந்ததை மறந்து விடுங்கள்; பிரிட்டிஷ் ஆட்சியின் சார்பில் நான் மன்னிப்புக் கேட்கிறேன்" என்று மன்னிப்புக் கேட்டார்.
ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் இடையே ஒரு கருவி இருந்தது. அதற்கு ‘பூமரெங்க்’ என்று பெயர் அது மரத்தால் செய்யப்பட்ட ஒரு வளையம். அதன் முனைப் பகுதி வளைவுடையது. எந்த இடம் நோக்கி அதை வீசுகிறார்களோ, அங்கே சென்று எதிரியைத் தாக்கிவிட்டு மீண்டும் அந்த வளையம் வீசியரிடமே வந்து சேரும். இதற்குத்தான் Boomarang என்று ஆங்கிலத்திலே கூறுவார்கள்.
அந்த கருவி போல், பிரிட்டிஷ் மந்திரி வீசிய பூமரெங்க் கருவியை, சரோஜினி மீது 'பொய்க்குற்றச் சாட்டு' என்று கூறி ஏவினார்! சரோஜினி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதும், அதே கருவி மீண்டும் அந்த மந்திரியையே திருப்பித் தாக்குவதைப் போல, கானாட்டுக் கோமகன் இந்தியா வருகை தந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால், சரோஜினி தேவியை அது தாக்காமல் திரும்பி, பிரிட்டிஷ் மந்திரி மாண்டேகுவையை திருப்பித் தாக்கியது.
பிரிட்டிஷ் அரசிடம் சரோஜினி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார் இந்திய மந்திரி மாண்டேகு. ஆனால், அதற்கு மாறாக, இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டது பிரிட்டிஷ் அரசு இந்த சாதனையில், ‘பூமரெங்’ என்ற பிரிட்டிஷ் மந்திரிகணையே சரோஜினி தேவியிடம் தோல்வி கண்டது; வெற்றி தேவிக்குத்தான் கிடைத்தது!
2. பாரதி கண்ட புதுமைப்பெண் பிறந்தார்!
தொட்டிலை ஆட்டும் கை; தொல்லுலகை ஆளும் கை என்று பாரதியார், புதுமைப் பெண்ணை வாழ்த்தி வரவேற்றார்! அதற்கேற்ப, கவிக்குயில் சரோஜினி தேவி கி.பி. 1879ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் நாள் வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பிராமணர் அகோரநாத் சட்டோபாத்தியாயர் என்ற அறிஞருக்குப் பெண்ணாக ஐதராபாத் நகரில் பிறந்தார்.
அகோரநாத் வேதம் ஓதி இறைவனை வழிபடும் குலத்தில் தோன்றியவர்! "சட்டோபாத்தியாய" என்பது அவரது குடும்பப் பட்டப் பெயர். இவரது மரபுப்படி வேதமும், மற்ற கலைகளையும் ஒழுக்கத்துடனும், ஆசாரத்துடனும் கற்று நடந்து வந்தார்.
ஆங்கிலக் கல்விக்கு அப்போதிருந்த உயர்வையும், மதிப்பையும், மரியாதையையும் கண்டு ஆங்கிலம் படித்து வல்லுநரானார். இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றார்; படித்தார்; அங்கு சிறப்பானக் கல்வியாளராய் விளங்கியதால் "டாக்டர்" பட்டமும் பெற்றார்.
இந்தியா திரும்பி வந்த அகோரிநாத், வங்காளத்தை விட்டு ஐதராபாத் நகருக்கு குடும்பத்தோடு வந்து குடியேறினார் அங்கே ஓர் பணியில் சேர்ந்தார். அந்தப் பணிக்கும் அவருக்கும் பொருந்தி வரவில்லை. அதனால், ஐதராபாத் நகரிலே ஒரு கல்விக் கோட்டத்தை நிறுவி, அவரே அக்கல்விச் சாலையில் ஆசிரியராகவும் பணியாற்றி, தனது கல்விச் சாலையை உயர்த்தினார்.
ஆசிரியரான அகோர நாத்துக்கு ஏழு குழந்தைகள் ஐதராபாத் நகரிலே பிறந்தன. அக்குழந்தைகளுள் சரோஜினி, மிருணாளினி, நளினி, சுகாசினி என்ற நால்வரும் பெண்களாவர்.
பூபேந்திரநாத் சட்டோ பாத்தியாயர், இரவீந்திரநாத் சட்டோபாத்தியாயர், ஹரீந்திரநாத் சட்டோ பாத்தியாயர் என்ற மற்ற மூவரும் ஆண்மக்களாவர். இந்த ஏழு பேருமே தந்தையின் அறிவாற்றலுக்கு அடையாளமாகப் பிற்காலத்தில் திகழ்ந்தார்கள்.
மூத்தப் பெண்ணான சரோஜினி மிகுந்த அறிவரசியாகக் காணப்பட்டார். பெற்ற தந்தையே ஓர் ஆசிரியரானதால், அதன் முழு எதிரொலியும் சரோஜினியிடம் தவழ்ந்தது. அதனால், நல்ல மாணவி என்ற நற்பெயரைப் பிற ஆசான்களிடமும் பெற்றார்.
வெந்தணலால் வேகாது; வெள்ளத்தாலும் அழியாது: கள்ளர்களாலும் களவாட முடியாது; கொடுக்கக் கொடுக்க கல்வி நிறைவுறுமே தவிர குறையாது என்ற நல்லுரைக்கு ஏற்றவாறு, சரோஜினியுடன் கல்வி கற்கும் மாணவிகளும் நற்கல்வியும், நற்புகழும் பெற்று மகிழ்ந்து தேர்ந்தனர்!
ஆரம்பக் கல்வி ஐதராபாத்தில் முடிந்ததும், அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? என்ற பழமொழிக்கு சரோஜினியை ஆளாக்காமல், பொது அறிவு பெறத்தக்க வேறுபல கல்வி விஷயங்களையும் தந்தையே மகனுக்குக் கற்பித்து கல்வியாளியாக்கினார்.
‘விளையும் பயிர் முளையிலே' என்பதற்கேற்ப சரோஜினி இளமையிலேயே இயற்கையை ஊடுருவிப் பார்க்கும் நுண்ணறிவை இயற்கையாகப் பெற்றிருந்தார்! அவருடைய அந்த நுண்மான் நுழைபுல நோக்கு; அவருக்கு ஒரு கவிஞனாவதற்குரிய கற்பனையையும், காட்சியையும் வழங்கியது.
தனது, செல்வியின் அறிவாழத்தைக் கண்டு வியந்த அகோரநாத் சட்டோடாத்தியாயர், அவரைத் தக்க, மேல் கல்வி கற்றிட சென்னை மாநகருக்கு அனுப்பி வைத்தார். அக் காலத்தில் ஒரு பெண்ணைத் தனியாக வெளியூருக்கு அனுப்பி கல்வி கற்கச் செய்த இவரது துணிச்சலான நெஞ்சத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது அல்லவா?
எனவே, சரோஜினி சென்னை நகர் வந்தார்; கற்க வேண்டிய கல்வியைத் தந்தையின் எண்ணங்களுக்கேற்பக் கற்றார்: சென்னை மாநிலத்திலேயே அப்போது நடைப்பெற்ற மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் பெண்ணாக தேர்வு பெற்றார்.
ஏறக்குறைய பனிரெண்டு வயதுடைய ஒரு பெண், மெட்ரிகுலேஷன் தேர்வில், ஆங்கிலத்தில், பிற பாடங்களில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்வானதைக் கண்டு பள்ளி ஆசிரியர்களும், உடன்படிக்கும் மாணவிகளும் ஆச்சரியமுற்றார்கள்.
சரோஜினி தேர்வு வெற்றியால், பள்ளிக்கு நற் பெயரைத் தேடித் தந்ததுடன், அவருடன் கல்வி கற்ற மாணவிகளும் அவருக்கு அடுத்தபடியாகத் தேர்வாகி நற் புகழைப் பெற்றார்கள்.
சென்னை படிப்பை முடித்துக்கொன்டு, சரோஜினி மேற்கொண்ட பட்டப்படிப்புக்கு லண்டன் மாநகரம் சென்றார். அவரது தந்தையார் லண்டனிலே தாம் பட்டம் பெற்ற கல்லூரிக்கே, சகல ஏற்பாடுகளுடன் இவரை அனுப்பி வைத்தார்.
3. ஞானக் கிறுக்கே கவிதைச் சிறப்பு!
மகள் சரோஜினி மெட்ரிலேஷன் கல்வித் துறையிலே முதல் மாணவியாக வெற்றி பெற்றது அகோர நாதருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இதனால் தனது செல்வி மேலும் கல்வியில் வெற்றிபெற வேண்டும் என்ற ஊக்கம் அவருக்கு ஏற்பட்டது.
அறிவியல் துறையில் உலகம் முன்னேறி வருவதைக் கண்ட அவர், தனது மகளும் அறிவியற் செல்வியாக வளர வேண்டும் என்றும் விரும்பினார். இலண்டன் மாநகரத்திலே உள்ள மன்னார் கல்லூரியில் தனது புதல்வியைச் சேர்த்தார்.
தந்தை ஆசையை அறிந்த சரோஜினி, அவர் விருப்பத்தை நிறைவேற்றிட இலண்டன் சென்று அறிவியல் பாடங்களை ஆரம்பத்தில் மிகவும் அக்கறையுடன் படித்தார். அத்துடன் பீஜ கணிதமும், விஞ்ஞானப் புதுமைகளையும் நாளுக்குநான் விரும்பிக் கற்க முனைந்தார்!
சிறுமியாக இருக்கும்போதே கவிதை புனையும் ஞானச் செருக்கோடு வளர்ந்த சரோஜினியின் மனம், லண்டனிலேயும் கவிதைக் கிறுக்கை விடவில்லை. உள்ளத்திலே ஒளி தோன்றிவிட்டால், வாக்கிலும், செயலிலும் ஒளி வெளிச்சமிடும் என்பது உண்மைதானே!
ஒருநாள் வகுப்பிலே பீஜகணிதம் ஒன்றைக் கொடுத்து அதற்கு விடை எழுத வேண்டும் என்றார் ஆசிரியர். பீஜ கணக்கு என்றதும் பாரதியாரைப் போல சரோஜினிக்கும் கணக்கு பிணக்கை உருவாக்கி விட்டது!
நோட்டுப் புத்தகத்திலே ஏதேதோ கோடுகளைப் போட்டுப் போட்டுக் கிறுக்கிப் பார்த்தார். விடை வரவில்லை. சிந்தனையாளன் ஆர்க்கிமிடிசைப் போல வகுப்பிலே அங்கும் இங்கும் அவரே எழுந்து அலைந்தார்!
வகுப்பாசிரியர் கோபம் கொண்டு விடை தேடு என்றால், வகுப்பிலே அங்குமிங்கும் அலைந்து எதைத் தேடுகிறாய்? என்று கேட்டார். சரோஜினிக்கு அவமானமானது. உள்ளம் சோர்ந்தார்!
அந்த சோகத்தைத் தனது நோட்டுப் புத்தகத்திலே சொற்களாக எழுதினார். அந்த அவமானச் சம்பவத்தால் வந்த வார்த்தைகளை அப்படியே நோட்டில் எழுதி ஆசிரியர் இடம் காட்டவே, அவர் கணக்குப் போடு என்றால் கவிதை எழுதுகிறாயே! உனக்கென்ன பைத்தியமா? அல்லது சிந்தினைச் சிக்கலா? என்றார்.
ஆசிரியர், சரோஜினி எழுதிய கவிதையைப் படித்தார்! சிலிர்த்தது அவரது சிந்தனை! உடனே சரோஜினியை வாசித்து, உனக்குக் கணக்கு வராது; அறிவியலுக்கும் உனக்கும் அணுவளவு கூட சம்பந்தமில்லை; போ, கவிதையே எழுது என்று கண்டித்து விட்டார்!
சரோஜினியைப் பொறுத்தவரை, அவரது மனச் சிந்தனைகள் எழிலான புதுக் கருத்துக்கள் பூக்கும் செடிகளாக இருக்கின்றன. இதை மனதிலே பாத்திக் கட்டி வளர்க்கும் ஆர்வமே அசைந்தாடுவதாக ஆசிரியர் உணர்ந்தார்!
மாணவர்கள் மத்தியிலே சரோஜினி வெட்கித் தீ சுடப்பட்டவரைப்போல முகம் சிவந்து, புத்தகத்தை எடுத்துக்கொண்டு வகுப்பை விட்டு வெளியேறினார்; அவருடன் படித்த மாணவிகளும் ஒன்றும் புரியாமல் ஊமைகளாக வெளியேறினார்கன் ஆசிரியரே திகைத்தார்! பாவம்!
கவியுள்ளம் கணிதத்தை நாடாது என்பதால், ஆசிரியர் போ, கவிதை எழுது என்று விரட்டாதக் குறையாக விரட்டிவிட்டதால் சரோஜினி மனம் நொந்து தனது தந்தை ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்று வேதனைப்பட்டார்.
கணக்கு நோட்டில் தான் எழுதிய கவிதைக் கிறுக்கலைத் தொகுத்தார்! மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தார்; அந்த இன்பத்திலேயே மெய் மறந்தார் கணக்கு நோட்டில் தொடர்ந்து எதையெதையோ எழுதினார்.
பூந்தோட்டம் புகுவார்! பூத்த மலர்களின் வண்ணங்களை உற்று நோக்குவார்! அந்த இன்பத்திலேயே அவரது மனம் மயங்கும்! பிறகு! பூக்களுள்ளே உள்ள தேனைப் பார்ப்பார்! அதைச் சுற்றிச் சுற்றி ரீங்காரமிடும் வண்டுகளின் இசை ஒலியைக் கேட்டு இன்பம் பெறுவார்.
இங்கிலாந்து நாட்டின் பருவ மாற்றங்களால் பூக்கும் பூக்களது பலவித வனப்புகளை ஊன்றி ரசிப்பார்! ஆம் மலர்களின் நிறபேதங்கள் சரோஜினிக்குரிய பாடங்களாயின. காரணம், மங்கையின் இதயமும் மலர்கள் போன்றதல்லவா?-அதனால்!
ஒருநாள் தனது விடுதியிலே உள்ள செடிகள் மலர்கள் மலர்ந்து அழகுக்கு அழகாகப் போட்டியிட்ட வண்ணமிருப்பதைக் கண்டு, மனதைப் பறிகொடுத்தார் குமரி சரோஜினி
“பூக்களே! நீங்கள் அடர்த்தியாக, நெருக்கமாகப் பூத்திருப்பதால் செடியின் கொம்புகள் இருக்கும் இடம் புலப்படவில்லையே! பூச்சரமா? கொம்பா? என்ற குழப்பத்தை உண்டாக்குகின்றீர்களே!
பூக்களே! மனம் வீசும் உங்களைச் சுமந்து கொண்டிருக்கின்ற கொம்புகளும்-கொடிகளும் அதிருஷ்டசாலிகள் அல்லவா? எவ்வளவு அழகாக அவை உங்களைச் சுமந்து கொண்டிருக்கின்ற அழகே- அழகுக்கு அழகு!
வட்டமிட்டுக் கொண்டிருக்கும் வண்டுகள் நேற்று காணப்படவில்லையே; ஏன் இன்று போட்டியிட்டு அவை உங்களையே சுற்றிச் சுற்றி வருகின்றன? உங்களுடைய நாற்றமோ! தேனோ! மகரந்த பண்போ! அந்த வண்டுகளின் இசையிலே என் மனம் மயங்குகின்றபோது, நீங்கள் தேனைப் பறிகொடுத்து மயக்கமடைகின்றீர்கள்? விடுத்திக்குள்ளே இருக்கும் என்னையே மணம் வீசி இன்புறுத்துகிறீர்களே! நியாயமா மலர்காள்!
பூக்களை சுற்றி சுற்றி வலம் வரும் சிட்டுக்குருவிகளே! என்னையும் உங்களுடன் ஏந்திச் செல்லக்கூடாதா! ரோசா வண்ண இதழ்களால் எனது உடலையே மூடி மறைத்துக் கொள்ளக்கூடாதா? அந்த மலர்களின் தேனிலே என்னை மூச்சு திணற விடக் கூடாதா? செந்திற வண்ண ரோஜா மலர்களே, உங்களுடைய இதழ்களால் என்னை இறுக்கிக் கட்டிக் கொண்டால் என்ன? நிறமா உங்களுக்குக் கெட்டு விடும்? என் நிறம், உங்களது நிழல்களால் என்ன நிறமா உங்களுக்குக் கெட்டு விடும்? என்நிறம், உங்களது நிழல்களால் வண்ணம் பெறலாமே? ஏன் என்னை அணைய மறுக்கிறீர்கள்? என்றெல்லாம் பூக்களைப் பார்த்துத் தனக்குதானே பேசுவார்.
இலண்டனில் படித்துக் கொண்டிருந்த குமாரி சரோஜினி, கணிதத்தை மறந்தார்! விஞ்ஞானத்தை இகழ்ந்தார்! இயற்கை உணர்ச்சிகளிலே மிதந்தார்! சிந்தனை வான்வெளியிலே பறந்தார்! கவிதையெனும் சிறகடித்தார்! கவிஞரெனும் காற்றோடு கலந்து மக்களது உணர்வுப் பூந்தோட்டங்களிலே மணம் வீசிக் கொண்டே பவனி வந்தார்!
இவ்வளவு ஆற்றல்கள் இருந்தாலும், கவிதை எழுதும் இலக்கணங்கள் தெரியுமா?-தெரியாது சரி, இலக்கணம் படித்தவர்கள் எல்லாருக்குமே கவிதை எழுதும் ஆற்றல் வருமா? வராது ஏதோ ஒன்றிரண்டு பேர்கள்தானே விதி விலக்கு?
சரோஜினி தனது கவிதைகளை வங்காள மொழியிலா எழுதினார்? இல்லை; தெலுங்கு மொழியிலா வரைந்தார்? இல்லை. பிறகு எந்த மொழியில் எழுதினார்?-ஆங்கிலத்தில்!
பெண்பாற்புலவரான சரோஜினி, தனது இன்பத்துக்காக உள்ளது உள்ளபடியே, கண்டதைக் கண்டவாறே கவிதைகளை மளமளவென்று எழுதியபடியே இருந்தார்!
அவரது கவிதைகளைக் கல்லூரி மாணவி-மாணவியர் படித்தார்கள்! மக்கள் நெஞ்சங்கள் சுவைத்தன! கவிஞர்கள் அவற்றின் ஆழம் என்னவென்று அளந்தார்கள்! ஆங்கில அதிகாரிகள் அதைக் கேட்டு மொய்த்தார்கள்! கவிதைப் பூக்களின் மகரந்தத்தைச் சுவைஞர்கள் எல்லாருமே சுவைத்து வியந்து போனார்கள்!
ஆங்கில மொழியிலே கவிதை எழுதிட இவருக்கு எப்படி வந்தது இந்த ஆற்றல்? சொற்குற்றம் இல்லை; பொருட்குற்றமும் இல்லை; இலக்கணம் தானே தளை தட்டுகிறது; அவை கூட ஓசை நயத்துடன் ஒன்றி விட்டனவே! இந்த இளம் கண் யார்? யார் இந்த இளம் பெண்? என்று லண்டன் மாநகரக் கல்வியாளர்கள், மக்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் ஒருவரை ஒருவர் கலந்து ஆச்சரியத்துடன் பேசினார்கள்!
சரோஜினியின் கவியாற்றல், நண்பர்கள் அறிய, நண்பர்களால் அறிஞர்கள் அறிய, அறிஞர்களால் அரசு அறிய, இவ்வாறே விளம்பரமானார் குமரி சரோஜினி அறிஞர்கள் எட்மண்ட் கர்ஸ், ஆர்தர் சைலன்ஸ், போன்றவர்கள் பாராட்டிப்பேசினார்கள்! சரோஜினி கிறுக்கிய கவிதைகளை எல்லாம், லண்டன் புத்தகாலயங்கள் நூலாக வெளியிட்டு விற்பனை செய்தன!
இலண்டன் மாநகரிலே சரோஜினி, கவிதைகளுக்கு ரசிகர்கள் தோன்றினார்கள். அன்றிலிருந்து எங்கு பேசினாலும் சரோஜினி என்ற பலாச் சுளையிலே மொய்க்கும் ஈக்களானார்கள் மக்கள்!
சரோஜினி எந்த மண்டபத்திலே பேசினாலும் சரி, பொதுக் கூட்டங்களானாலும் சரி, இலக்கிய விழாக்களானாலும் சரி, ஆங்காங்கே மக்கள், ரசிகர்கள், இலக்கியவாதிகள் அனைவரும் தேடி நாடி வந்து அவர் பேச்சுக்களை மதுவுண்ட வண்டுகள் போலக் கேட்டு மயங்கினார்கள்.
நாளுக்கு நாள் சரோஜினி இலக்கியக் கவியுணர்ச்சி லண்டன் மக்களிடையியே மட்டுமல்ல; இவரது கவிதை நூற்களின் விற்பனைகள் எங்கெங்கே விற்றனவோ அங்கங்கே எல்லாம் பொங்கி பெருகியது அவரது கவிதைகளைப் பற்றி அவரே கூறும்போது:
"அழகும் பொலிவும் அமைந்த தரை, வண்ணப் பூச்சுக்களால் வனப்பான சுவர்கள், கண்களைக் கவர்ச்சி செய்யும் வீட்டுச் சாமான்களான மேசை, நாற்காலிகள், ஓவியப்படங்கள், இவற்றினூடே அமர்ந்து அமர்ந்து களைத்து சமைத்து விட்டேன்."
"இறைவழிபாடும். பூசையும், ஆடலும், பாடலும், திருவிழாக் கேளிக்கைகள், மக்கள் கூடும் அறிவுக் கோட்டங்கள் அனைத்திலும் அமர்ந்து பொறுமை இழந்து விட்டேன்!"
"பூக்கள் மலிந்த கானகம், பூந்தோட்டம், மலர்க் காட்சி, இன்னிசைக்கு வண்டுகள், பறவைகள், தேன் குடித்தக் களிப்பில் மதரீங்காரமிடும் வண்டுகளது பேரோசை இரைச்சல், இவற்றினிடையே அகப்பட்டு உடல் வியர்த்து விட்டேன்."
"எனக்கு இப்போது தேவை தனியான இடம், சந்தடியற்ற மண்டம், தாமரைக்குளம், அதிலே நீராடிடும் கோபிகா ஸ்திரிகள், காட்சியின் சாந்தி; இதற்கும் மேலாக இறைவனை வழிபாடியற்றும் அமைதியான இயற்கைச் சூழல்கள் மட்டுமே தேவை எனக்கு!" என்று பேசிக் கொள்வார்.
கல்லூரி படிப்பு தேவையா இந்த இளம் கவிக்கு? கற்றாலும் ஏறுமா கவனத்துக்கு? என்ற நிலையில் சரோஜினியின் கல்வி ஒழுக்கம் சீர்குலைந்து வந்தது என் செய்வாள் குமாரி இயற்கை அல்லவா அவளது இளமையை; மூளையை; சிந்தனையை; களவாடிவிட்டது! எனவே கல்வியில் ஊமையானாள்!
கணிதம் போச்சு கற்பனைக் கவி வந்தது டும்டும்; அறிவியல் போச்சு மேடை பேச்சு ஆற்றல் பலம் வந்தது டும்டும் என்று பாலர் பாடிடும் பாடல் பொருள் போல அந்தக் குமாரியின் சிந்தனை வளையங்கள் வளைந்தன! நெளிந்தன! முறுக்கேறின! ஆனால் முறிவு மட்டும் பெறவில்லை; காரணம் தனது தந்தையின் அன்பு!
இலண்டன் மாநகரத்துப் பேச்சு மண்டபங்களில் எல்லாம்-சரோஜினி குரலோசையின் நாதம்; அதுவும், ஆங்கில மொழியின் நயமான பெண்குரலின் நாதம்; ஆயிரக்கணக்காகத் திரண்ட மக்கட் கூட்டம் இவ்வளவு அற்புதங்களோடும் லண்டன் மாநகர் மண்டபங்கள் இன்னோசைகளோடு காட்சி தந்தன!
கவிதையாற்றல் எவ்வாறு கரும்புச் சாறென சுவை தந்ததோ, அதே ருசி, பேச்சு மேடைகளிலும் சரோஜினிக்குப் பேராதரவைத்திரட்டித் தந்தன.
இளம் ஆங்கிலக் கவியின் பேச்சு கவிஞர் பெருமக்களையும், இலக்கிய வித்தகர்களையும் ஈர்த்தது! இளம் ஆங்கிலப் புலவரின் மேடைப்பேச்சுக்களைக் கேட்டவர்கள்; ஆஹாஹா என்று வாய் திறந்தார்கள்!
திறந்த வாயில் அரசியல் அலைகள் எழும்பிப் புரளுமானால், அரசியல் வாதிகளும்-அதிகாரிகளும் குடல் விழுங்கும் உணவாவார்கள்;
சரோஜினி பேச்சு இலக்கியமானால், கல்வியாளர்கள் கிடைத்ததடா கற்கண்டு என்று வாய் நிறையப் போட்டுக் குதப்பி விழுங்குவார்கள்; சுவைத்துத் தின்றிட நேரமாகுமே என்று திக்குமுக்காடி அவசர அவசர விழுங்குகளோடு மேலாய் கேட்கத் தயாராக்கிக் கொண்டு செவிகளோடு காத்திருப்பார்கள்!
ஆட்சியின் அதிகாரிகள், சீமான்கள், இந்திய மத குருமார்கள்; இந்திய பெரு மக்கள்; மாணவ-மாணவிகளது அணிகள் ஆகிய அனைவருமே மீண்டும் எப்போது, எங்கே இளம் கவிக்குயில் குரலெடுத்துப் பாடிடும் நான் எந்நாள் என்று சந்தேகமறக் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.
கற்றோரைக் கவிதைகள் களிக்க வைத்தன; உரை நடைகள் அரசியலாரை உற்று நோக்க வைத்தன. சரோஜினி குரலோ நான் நினைத்தால் சிம்மமாவேன் என்று சீற்ற முழக்கமிட்டது.
சரோஜினி படிப்பு நின்றது; உடலும் நோய்வாய்ப்பட்டு சிகிச்சையுடன் உறவாடியது; எனவே, சரோஜினி தனது தாயகம் திரும்பி ஓய்வு பெறுவது நலம் என்றனர் டாக்டர்கள். ஆதனால், சரோஜினி நாடு திரும்பிடத் தயாரானார்!
வரும் வழியில் இத்தாலி நாட்டையும், வர்ஜில், தாந்தே போன்ற மகாகவிகள் பிறந்த மண்ணைக் காண விருப்பினார்; சென்றார்!
மைக்கேல் ஏஞ்சலோ, ராஃபேல் போன்ற பெரும் ஓவியச் சக்கரவர்த்திகள் தோன்றிய மண்ணையும் பார்க்க பெரிதும் ஆசைப்பட்டார்-பார்த்தார்!
ரோம் சாம்ராச்சிய எழுச்சியும்-வீழ்ச்சியும் அடைத்த விபரீத மனவிளைவுகளைப் பார்க்க ரோம் நகர் சென்றார்! கண்டார்! ரசித்தார்! பாடம் பெற்றார்!
பைரன், ஷெல்லி போன்ற புகழ் பெற்ற மாபெரும் கவிஞர்கள் பிரிட்டனை விட்டு, ரோமாபுரி நகர் வரக் காரணம் என்ன? தங்கிய சூழ்நிலை என்ன? கவிதை உணர்ச்சிகளை எவ்வாறு அவர்கள் தீட்டிக் கொண்டார்கள் என்ற விவரங்களை தந்தார்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் எவ்வாறு ரோம் நகருக்குள் ஆட்சி செய்கிறது? என்பதை எல்லாம் ஊடுருவி கண்ட இளம் கவி சரோஜினி பற்பல புதுமைக் கிளர்ச்சிகளைத் தமது எண்ணமென்ற சானைக் கல்லிலே தீட்டிக் கொண்டார்! அதன் பளபளப்பான கூர்மையால் ஆங்கில மொழி ஆப்பிளைக் கீற்றுக் கீற்றாக அறிந்து அரசியல் வறுமையிலே பசித்த மக்களுக்கு தீனியாக்கினார்!
கி.பி. 1893ம் ஆண்டு இளம் கவிக்குயில் குமாரி சரோஜினி தேவி ஐதராபாத் நகரம் திரும்பினார். தந்தை, தம்பிகள், தங்கைகள் வரவேற்றனர். புதுமையுடன் திரும்பிய ஒரு இளம் பெண்கவியை!
4. கலப்பு-மணமும்; போற்றலும்! தூற்றலும்!!
இலண்டன் மாநகரத்திலே இருந்து குமாரி சரோஜினி இந்தியா திரும்பி ஐதராபாத் மாநகர் வந்து சேர்ந்தார்; மகள் நாம் ஆசைப்பட்டக் கல்வித் துறையை முடிக்காமல் திரும்பிவிட்டாரே என்ற மனக்கவலை அகோரநாதருக்கு ஏற்பட்டது.
இருந்தாலும் பரவாயில்லை; இளம் கவி நெஞ்சம் கொண்ட துடிப்பான குமாரியாகத் திரும்பி வந்து சேர்ந்த மகளை அன்புடன் வரவேற்றுத் தாயும் தந்தையும்வாழ்த்தி மகிழ்ச்சிப் பெற்றனர்.
பெற்றோர் முகம் பார்த்தவுடன் சரோஜினிக்கு நோயெல்லாம் எங்கே பறந்ததோ தெரியவில்லை. அகோர்நாதர் குடும்பமே புது மகிழ்ச்சிப் பூத்தத் குடும்பமாகத் காட்சி தந்தது. ஒருவரை ஒருவர் அன்புடன் அளவளாவி ஆனந்தமடைந்தார்கள்.
தாய் மண்ணை மிதித்ததும், அவர் தக்க மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதால், சரோஜினிதேவி முன்பு போல் வாலைக் குமரியாகக் காட்சி தந்தார்! வயது பத்தொன்பதுதான் என்றாலும் அழகு தவழும் சிலையாகவே விளங்கினார்.
வளமையானது இளமை; பசுமையான கனவுகள் மனதில் மலர்ந்தன! எப்போதும் கற்பனையான சொற்களின் ஆரவாரமே எதிரொலித்தன; கவிதைப் பூக்கள் நாள்தோறும் சரோஜினிதேவி என்ற பூந்தோட்டத்தில் பூத்துப் பொலிந்தன!
ஐதராபாத் நகரில் மருத்துவத்துறையில் புகழ்பெற்று விளங்கியவர் பா. கோவிந்தராஜுலு இவர் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர்; தந்தை பெயர் பாஷியக்காரலு நாயுடு; தாயார் பெயர் முனியம்மாள்; கோவிந்தராஜூலு நாயுடுவும், சரோஜின் தேவியும் நெருங்கியவர்களாகப் பழகினார்கள்.
கோவிந்தராஜுலு இராணுவப் படையில் சுபேதார் மேஜராகப் பணிபுரிந்த ஓர் இராணுவ வீரர். உயர்ந்த பண்புகள் கொண்டவர்; நாயுடு குணங்கள் சரோஜினி தேவிக்குப்பிடித்திருந்தன. இருவருக்கும் இடையே அன்பு இணைந்தது; அது இல்லறத் தம்பதிகளாக மாறிடும் காதல் வலிமை கொண்டதானது. குறிப்பாக சரோஜினி தேவி கவியுள்ளம் நாயுடுவை கவர்ந்து விட்டதும் ஒரு காரணமாகும்.
நாயுடுவுக்கு உடன் பிறந்த ஆண் மக்கள் இருவர்: அவர்கள். துரைசாமி நாயுடு; கோவிந்தராஜுலு நாயுடு என்பவராவர்; பெண்மக்கள் ஐவர்; அவர்கள் அம்மணி, ஜானகி, சின்னம்மாள், தாயாரம்மாள், செல்லம்மாள் என்பர்களாவர்.
பாஷியகாரலு நாயுடுவுக்கு மொத்தம் எட்டுக் குழந்தைகள்! அதனால், அவர் வருவாயில் முக்கால் பங்குக்கு மேல் தமது மக்களது கல்விக்காக செலவழிக்க வேண்டி கட்டாய நிலை ஏற்பட்டது.
நாயுடுவுக்கு பதினெட்டாம் வயதிலேயே முதல் திருமணம் நடந்து விட்டது; பெண், நாயுடு ஜாதி; பெயர் சாராதாம்பாள்; பதின்மூன்றாம் வயதிலேயே அந்தப் பெண் சாவு என்ற தீரா நோய்க்குப் பலியானாள்!
மருத்துவத் துறையில் நாயுடுக்கு நல்ல பெயருண்டு; காரணம், நோயாளிகளை இன்முகம் காட்டி, பேசி, வரவேற்றுப் பழகுவார். என்ன நோய்; எப்படி வந்தது; என்ற காரணங்களை எல்லாம் கேட்டு; தக்க மருந்துகளைத் தருவதில் வல்லவர், நல்லவர் என்ற பெயர் பெற்றிருந்தார்!
ஏழைகளுக்குக் கருணை காட்டி, பரிவு கூர்ந்து, செல்வர்களுக்கு அன்பு காட்டி உளமாரப் பழகும் பண்பால், அவரது மருத்துவத் தொண்டு புகழ்பெற்றது; தொழிலும் ஓங்கியது; மக்களும் அவரைப் பாராட்டினர்.
குடும்பப் பாசத்துடன் சகோதர சகோதரிகளோடு நெருக்க உறவு கொண்டு அவர் பழகுவார் நேர்மையான உள்ளம்; கண்டிக்கும் நெஞ்சுரம்; தவறைத் தட்டிக் கேட்டுத் திருத்தும் பண்பு; அநியாயம் கண்டவிடத்துக் கேட்கும் துணிவு கொண்ட அரிய பண்பாளர் நாயுடு யாருக்கும் எதற்கும் அஞ்சாத கடமையாளர்!
இத்தகைய ஒரு பண்பாளரை சரோனனி திருமணம் செய்துகொள்ள விரும்பினார். தந்தை அகோரநாத் அவர்களுக்கும் தெரிவித்து அனுமதி கேட்டார்
சரோஜினிதேவி திருமணத்தை நெருங்கிய உறவும், சீர்திருத்த நெஞ்சங்களும் பாராட்டிப் போற்றின; வழக்கம் போல பிரமாணம் தனது சாதிமுறை வருணாசிரமக் கணைகளை விடுத்தது! ஆனால், தம்பதிகள் இருவருமே எதற்கும் அஞ்சவில்லை!
அகோரநாதரும், மகளை விடப் பெரியது ஒன்றுமிலை என்ற முடிவை மேற்கொண்டார்! திருமணத்திற்குச் சம்மதித்தார்! வாதப் பிரதிவாதங்கள் நெருப்புப்போல எதிர்த்துக் கிளம்பின.
இருப்பினும், பிராமணப் பெண் நான் அவரை விரும்புகிறேன். நாயுடு வகுப்பினரான அவர் என்னை விரும்புகிறார்! இடையே உங்களுடைய அனுமதி எமக்குத் தேவையில்லை; எவர் தடுத்தாலும் விடேன்; மணப்பேன்; என்று சரோஜினி வீர தீர திருமண முரசு கொட்டினார்!
கோவிந்தராஜுலு பிரம்மசமாஜத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்; பொருளற்ற சடங்குகளை எதிர்த்தவர்; அதனால் பிரம்மசமாஜத்து முறைப்படியே தம்பதிகள் இருவருடைய திருமணமும் நடந்தேறியது.
கவிக்குயில் சரோஜினி நாயுடு திருமணம், கலப்புத் திருமணமாக நடந்து முடிந்தது; சீர்திருத்தவாதிகள் போற்றினார்கள்; பழமை விரும்பியான வருணாசிரம அடிமைகள் மற்றும் சிலர் தூற்றினார்கள். இல் வாழ்க்கையை கோவிந்தராஜுலு-சரோஜினிதேவி இருவருமே இன்பமாகத் தொடர்ந்தார்கள்.
5. நெஞ்சிலே தைத்த நெருஞ்சி முள்!
டாக்டர் கோவிந்தராஜுலு நாயுடு டாக்டர் தொழிலில் புகழ் பெற்ற வருவாயாளர்! சரோஜினிதேவி, ஆங்கிலப் புலமை உடைய அருமையான பேச்சாளர்; இளம்பெண் கவிஞர்!
கல்வி அறிவு நன்கு பெற்ற இருவர்கள் இடையே பொருளாதார வலிமை இருந்தது; இத்தனைக்கும் மேலே இருவரிடமும் ஒத்த அன்பும்-பண்பும் இருந்தது;
டாக்டர் நாயுடு பிரம்மசமாஜ தொண்டர்; அவர் இல்லத்துக்குள் எப்போதும் விருந்தாளிகள் நடமாட்டம் இருந்தகொண்டே இருக்கும்! வம்பர்களோ, துன்பர்களோ, வஞ்சர்களோ, நஞ்சர்களோ எவருமே அங்கு வாரார்!
காரணம், பிரம்ம சமாஜத் தோழர்களுடன் அடிக்கடி சமுதாய சீர்திருத்தங்களைப் பற்றி, டாக்டர் கலந்துரையாடுவார்; திட்டம் தீட்டுவார்; படித்தவர்கள், படிக்காதவர்கள், படித்துப் பக்குவம் பெற்ற பண்பாளர்கள், அன்போடு எவரையும் அரவணைத்துப் போகும் அன்பாளர்கள், சமூகப் பிரச்னைகளை அகற்றிட கலந்துரையாடுவோர். உலக மாறுதல்களைப் பற்றி உணர்ந்து பேசுவோர், சமுதாயம் என்ற நெல்லுள்ளே அரிசியை மூடிக் கொண்டிருக்கும் உமி, தவிடு போன்ற மாசுகளை அகற்றிட என்ன வழி என்று ஆய்வோர் அனைவரும் கூடி நாயுடு வீட்டில் வாதிப்பார்கள்!
இந்த சமுதாயச் சீர்திருத்தப் பேச்சுக்களிலே கவியரசி சரோஜினி நாயுடுவும் கலந்துகொண்டு, இடையிடையே தக்க யோசனைகளைக் கூறுவார். அதனால், கவிக்குயில் சிந்தனையில் கவிதை உணர்ச்சி மட்டுமல்லாமல் சீர்திருத்த எழுச்சி எண்ணங்களும் இடையிடையே தோன்றி வளர்ந்தன.
டாக்டர் கோவித்தராஜுலு சரோஜினி தம்பதிகளுக்கு குழந்தைகள் நால்வர் பிறந்தனர் தனது குழந்தைகளுக்கு கவிதையுணர்ச்சியுடன் இளம்கவி சரோஜினி பெயர் சூட்டினார்.
தனது குழந்தைகளுக்கு அவர் பெயரிட்ட சம்பவத்தை பற்றிப் பாடல்களை இயற்றியுள்ளார். இதோ அப் பாடலின் உட்பொருள்:
'ஜயசூரியா' இது அவர்களது மூத்த மகன் பெயர் கதிரவனைப் போல் ஒளிபடைத்தவனே! கவி புனைவதிலும், நாட்டுக்குச் சேவை செய்வதிலும், ஜெயசூரியா உனது பெயருக்கு ஏற்ப வெற்றிக் கொடி நாட்டி வா! என்பார்!
இரண்டாவது பெண் குழந்தை; பெயர் பத்மஜா; இவர் மேற்கு வங்கக் கவர்னராகப் பணியாற்றியவர்; பத்மஜா தாமரையில் வாழும் பெண்மணியே மலர் மகளாம் திருமகள் உனக்கு எல்லாத் திருவினையும் ‘நல்கிடுவாளாக’ என்றார்!
மூன்றாவது ஆண்மகன்; பெயர் ரணதீரன்!
போர்க் களத்தில் வீரத்துடன் விளங்குவோனே; இராமாயணத்தில் வருணிக்கப் பெறும் வீர புருடர்க்ளை நிகர்த்து, நின் வாழ்க்கைக் களத்திலே அறம் வழுவாது முன்னேறுவாயாக! அன்பில் நின்றிடுவாயாக! என்று வாழ்த்துவார்.
இறுதிப்பெண் லீலாமணி, உள்ளத்தில் உவகையூட்டும் நீலமணி நிகர்த்தவளே, நின் பெயருக்கு ஏற்ப செம்மை நெறியில் ஒளிருவாயாக இடுக்கண் ஏதுமின்றி என்றும் இன்ப நெறிகளுடன் வாழ்வாயாக! என்பார் கவியரசி சரோஜினி தேவி, தனது குழந்தைகளின் பெயர்களை இவ்வாறு கவிதைகளால் விளக்குகிறார்.
கவியரசி சரோஜினி தேவி, யாரை மனமார நேசித்தாரோ, அவரையே தனது வாழ்க்கைக்குத் துணைவராக ஏற்கும் பேறு பெற்று, “தற்காத்தி தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்து சோர்விலாள் பெண்” என்ற இலக்கணத்திற்கு ஏற்ப, அமைதியும் பிறர் போற்றும் இல்லற அழகுடன் குழந்தைகள் ஈன்று வாழ்க்கையை வளமாக நடத்தி வந்தார்.
தாய்மை பண்புக்குகந்தவாறு நான்குக் குழந்தைகளைப் பெற்றெடுத்து அக்குழந்தைகளைப் பேணி, பாதுகாத்து வளர்த்தார். அப்படி வாழ்ந்தும் கூட, அவரது வாழ்க்கையில் ஏதோ ஒரு ஏக்கம், நெஞ்சிலே ஒரு நெருஞ்சி முள் தைத்தாற்போல உறுத்திக் கொண்டே இருந்தது.
கவிதையும், கற்பனையுமா வாழ்க்கை? மலர்கள் அழகும்-சோலைகளின் வனப்புகளும், வெண்ணிலாவும், தென்றலும், மேடைப் பேச்சுகளும் மேன்மையான புகழ் தரும் இலக்கிய ஆய்வுகளும் தானா வாழ்க்கை?
இல்லை; வேறு ஏதோ ஓர் ஏக்கம், பிரச்னைகள் அழுத்தம், ஆற்ற வேண்டிய மற்றும் ஒரு கடமையும் உள்ளதே- அதுதான் வாழ்க்கை என்று சரோஜினி தேவி நம்பினார். ஆனால், அந்தப் பிரச்னை என்ன என்று சிந்தித்துக் கொண்டே இருந்தார்.
6. “கெய்சர் ஹிந்த்” பதக்க வழங்கி பிரிட்டிஷ் பாராட்டு!
கவிக்குயில் சரோஜினி நெஞ்சிலே தைத்திட்ட அந்த நெருஞ்சி முள் நெருடல் எது?
ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்பதும், நாட்டுப் பற்றோடு மக்களுக்குத் தொண்டாற்றி, அவர்களை வீறு கொள்ளச் செய்து வீர உணர்வுகளை உருவாக்குவதும், இந்திய சுதந்திரத்தைப் பெற்றிட சோர்விலாமல் உழைத்து நாட்டை விடுவிப்பதும் தான் அந்த நெருஞ்சி முள் நெருடலாகும்.
சுயராஜ்ய உணர்வுகளை மக்களிடம் எவ்வாறு ஊட்டுவது என்று சிந்தித்தார். கவிதைகளைப் புனைந்து அதன் மூலம் மக்களைத் தட்டி எழுப்புவது ஒன்றுதான் அதற்குரிய வழியென்று கண்டார்.
மேடைகள் தோறும் ஆங்கிலேயர் அராஜக ஆட்சியின் கொடுங்கோன்மைகளை விளக்குவது மற்றொரு வழி! மூன்றாவதாக, மக்களது அடிமை மனப்பான்மையை அகற்றி, இந்திய நாகரீகப் பண்பாடுகளை, பழம் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துக் கூறி, அவர்களை உணர்வு பெறச் செய்வது என்ற மூன்று வழிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டார் கவிக்குயில்.
ஏழை மக்கள் நிர்கதியாகத் தவிப்பதை மக்களுக்கு உணர்த்தும் கவிதையை எழுதினார் சரோஜினி தேவி. இதோ அந்தக் கவிதையின் இரக்க உருக்க வடிவம்!
"கிழவி ஒருத்தி-
இளமையில் சணல்களையும் குழந்தைகளையும் உறவினரையும்
பேணிக் காத்தவளே; அவள்-
இன்று ஆதரவற்று ஆலமரத்தடியில் அமர்ந்து,
இறைவனின் திருப்பெயரால் இறைஞ்சுகிறாள்
இரக்கம் உடையோர் ஈந்து நடக்கின்றனர்;
மற்றோர் ஈயாமல் நீங்குகின்றனர்;
அதுவும் பொருளன்று; இதுவும் பொருளன்று அவளுக்கு
ஆண்டவன் திருநாமமே அவளுக்கு;
வறுமையின் வன்மை, வன்மை, ஒண்மை!...”
-என்று கவிதை மூலம் பேசுகிறார் கவிக்குயில் சரோஜினி தேவி! கவிதை எமக்குத் தொழில் என்று அவர் சும்மா இருந்துவிடவில்லை.
தேசத்துக்கும், ஏழை மக்களுக்கும் எப்படியாவது, எந்த வழியிலாவது சேவை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உந்தியது.
மக்கட் தொகையில் சரி பாதியுடைய பெண்ணினம், கல்வியில் மட்டும் தாழ்வுற்றுக் கிடப்பது ஏன்? என்ற கேள்வியை தாய்க்குலம் சார்பாக எழுப்பினார். பெண் கல்விக்கு இடையறாத முயற்சிகளை சமூகம் மூலமும், அரசு வாயிலாகவும் ஏற்பாடு செய்தார்.
ஐதராபாத் நகரைச் சூழ்ந்து விட்ட வெள்ளக் கொடுமையைக் கண்டு மன வேதனைப்பட்டதோடு நிற்கவில்லை! அச்சேவையிலே சரோஜினி நேரடி பங்குகொண்டு பணியாற்றினார்.
பணக்காரர்கள் பண உதவிகனைச் செய்தாலும், அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்தாலும், அவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்மணியாக சரோஜினி தேவி இல்லை. எந்த உதவியும் நம் கையாலேயே செய்யப்படவேண்டும் என்ற நோக்குடையவர் ஆனார்.
பொதுப் பணிகளுக்குப் பொருள் திரட்டும் பணியில் களைப்பே இல்லாமல் உழைக்கும் மன அறம் கொண்டார். எத்தகைய இரும்பு நெஞ்சனையும் இளக வைக்கும் நெருப்புலையாகப் பாடுபட்டார்.
காந்தியடிகளுக்கு அவரது தாயார் புட்லி அம்மையார் அரிச்சந்திரன் கதை கூறி அற மனதை வளர்த்ததைப் போல, சிவாஜியின் தாயார் பவானி தேவி அருள் பாலிப்பு கதைகளைக் கூறி வீரம் ஊட்டியதைப் போல, கவியரசி சரோஜினி புராண, வரலாற்றுப் கதைகளைக் கூறித் தாலாட்டித் தனது குழந்தைகளை வளர்க்காமல், தான் எழுதிய பாடல்கலைப் பாடியே தூங்க வைப்பார்.
அவரது ஆராரோ பாடிடும் தாலாட்டுப் பாடல்களின் கருத்துக்களை ஒரு முறை படியுங்கள். அப்பாடல்கள் எவ்வளவு வித்தியாசமானவை என்று விளங்கும்
"இன்னமுதே! வயல்கள், தாமரைத் தடாகங்கள், வான்முட்டும் மலைச் சிகரங்களில் இருந்து உனக்காக எனது ஆசைக் கனவுகளை ஏந்தி வந்திருக்கிறேன். கண்ணே சலிக்கும், உனது கண்களை மூடி உறங்கு’ நான் கொண்டு வந்த எல்லாக் கருத்துக்களும் உனது கனவுகளிலே வந்து இன்பமூட்டும்.
"கண்ணின் மணியே! பளபளவென்ற ஒளியோடு பறக்கும் மின்மினிப்பூச்சி, செடிகளுக்கு இடையே பறந்து செல்வதைப் பார். கொடிகளிலும், செடிகளிலும் பூத்துச் சிரிக்கும் பல வண்ணப் பூக்களில் இருந்தும் உனது மனதுக் இனிய கனவுகளைக் களவாடிக் கொண்டு வந்திருக்கிறேன். என்னை அன்போடு பார்க்கும் உனது விழிகளை மூடித் தூங்கு, நான் திருடி வந்த கனவுகள் உன்னைத் தூக்கத்தில் இன்பப்படுத்தும்."
"அன்பே நிலா விண்வெளியில் உலா வருகிறது; விண்மீன்கள் ஒளி உதறுகின்றன; இரவு வந்துவிட்டது! விழித்திருந்து மற்றவர்களுக்கு இன்னல்களைத் தராதே. நீலமணிக்கு நிகரான உனது கண்மணிகளை மூடித்தூங்கு. எனது பாடல்கள் உனது செவியில் இசைப்பது போல் உனக்குக் கனவுகள் வந்து மகிழ்வூட்டும்."
மேற்கண்டவாறு தாலாட்டுக் கவிதைகளையும், இயற்கை அற்புதங்களை வருணனை செய்யும் பாடல் களையும், கவிக்குயில் சரோஜினி எழுதிச் குவித்தார். இந்தப் பாடல்கள் மக்கள் இடையே செல்வாக்குப் பெற்றுப் பரவின.
ஐதராபாத் நகரை விட்டு பம்பாய் வந்தார். அங்கே 'தாஜ்மகால் மாளிகை' என்ற உணவு மனையில் தங்கினார். உலகளாவிய போக்கோடும், சிந்தனையோடும், தனது பொதுத் தொண்டு பற்றியும் இலக்கியச் சேவையைப் பற்றியும் சிந்தித்தார்.
அவரது ஆழ்ந்த கவனத்துக்குப் பம்பாய் நகரமே ஐதராபாத் நகரைவிட சிறப்பாக இருந்தது. காரணம், பல நாட்டு அறிஞர்களும், வணிக மக்களும், அரசியல் பணியாளர்களும், கட்சித் தலைவர்களும் நாள்தோறும் வந்து போகும் இடமாகப் பம்பாய் இருந்ததால், அவருக்கு பிறநாடுகளின் முக்கியஸ்தர்கள் தொடர்பும் ஏற்பட்டது.
அதே நேரத்தில் இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக உழைக்கும் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களின் சந்திப்பும் நட்பும்-தொடர்பும் ஏற்பட வசதியாகப் பம்பாய் நகரம் இருந்தது.
இதனால், கவிதைகள் எழுதிய நேரம் போக, மற்ற நேரங்களில் எல்லாத்துறை நண்பர்களையும், நாட்டு நடப்புக்களையும் அறிந்திட வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டார்.
பம்பாய் நகரிலே இருந்து வெளிவந்த இவரது கவிதை நூல்கள், பிறநாடுகளின் தொடர்பையும், நட்பையும் அவருக்கு உண்டாக்கியது. இவரது கவிதைப் புத்தகங்களைப் படித்து ரசித்த பன்னாட்டு அறிஞர்கள், கவிக்குயில் சரோஜினி ஷெல்லி, கீட்ஸ், டென்னிசன் போன்ற மேனாட்டுப் பெருங்கவிஞர்களது சிந்தனைகளோடு ஒப்பிட்டுப் பாராட்டி கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தார்கள். அதனால், அவருக்குக் கவியரசி என்ற பட்டத்தையும் அவர்கள் வழங்கிப் போற்றினார்கள்.
கவிதைகள் படைப்பால் உலகத்தையே ஈர்க்கலாம், வெல்லலாம், இறைவனையுமே வசப்படுத்தலாம் என்ற அவரது எண்ணத்திற்கேற்ப, பிற நாட்டு மேதைகள் அவருக்குக் கவியரசி என்ற பட்டத்தைத் தந்ததோடு இல்லாமல், 'கவிக்குயில்' என்ற பட்டத்தையும் வழங்கிப் பாராட்டலானார்கள்.
பம்பாய் மாநகர் வந்ததற்குப் பிறகு, கவிக்குயில் சரோஜினி தேவிக்கு உலகளாவிய பாராட்டும், பட்டங்களும் தேடிவந்தன; ரசிகர் பெருமக்களும் கவிகுயிலை நேரில்கண்டு பாராட்டிட வந்தவண்ணம் இருந்தார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சி கவிக்குயிலின் மக்கள் செல்வாக்கைக் கூர்ந்து கவனித்தது; தினந்தோறும் சரோஜினி பாடல்கள் ஏதாவது ஒரு நாட்டின், ஏதாவது ஒரு பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருப்பதையும் நோக்கமிட்டார்கள். அதனால், பிரிட்டிஷ் அரசு சரோஜினி தேவியின் புகழ் குவியும் துவக்கக் காலத்திலேயே அவரது அறிவையும், புலமையையும் பாராட்டிட முன்வந்தது.
இந்தியாவின் மாபெரும் கவிஞராக அப்போது போற்றப்பட்டு கொண்டிருந்த கவிஞர் இரவீந்த்ரநாத் தாகூருக்கு "கெய்சரீ ஹிந்த்" என்ற பட்டத்தைக் கொடுத்துப் பிரிட்டிஷ் அரசு பாராட்டியதைப் போல, அதே பட்டத்தை கவிக்குயில் சரோஜினிதேவிக்கும் அரசு சார்பாக வழங்கப்பட்டது. சரோஜினி தேவியின் புகழ் வெளி நாடுகளில் மென்மேலும் வளர்ந்து, உயர்ந்தது.
கவிக்குயில் சரோஜினி தேவிக்கு அரசு சார்பாகக் கெளரவித்து பட்டம் வழங்கி, பிரிட்டிஷ் அரசும் பெருமை தேடிக்கொண்டது குறிப்பிடத்தக்க ஒரு சம்பவமாகும்.
7. காஞ்சிபுரம் மாநாடு; கவிக்குயில் முழக்கம்!
பம்பாய் மாநகரில் தங்கியிருக்கும் கவிக்குயில் சரோஜினிதேவிக்கு புகழாரங்கள் தேடிவந்தன மக்களும், அறிஞர்களும், மேனாட்டு மேதைகளும், பிரிட்டிஷ் பேரரசும் அந்தப் புகழாரங்களைச் சூட்டியதுடன்-பெருமைகளையும் அவர்களுக்குத் தேடிக் கொண்டார்கள்.
இந்த நேரத்தில் சரோஜினி தேவியின் நெஞ்சில் தைத்த நெருஞ்சிமுள் நினைவு சுருக்கென்று நிழலாடியது. நெருஞ்சி முள் கால் பாதத்தில் குத்தும்போது சுருக்கென்று சிறுவலி மட்டுமே ஏற்படும். அதனால் உடல் பாதிப்பு எதுவும் ஏற்படாது.
காலில் குத்திய இடத்தில் வேண்டுமானால் சிறு ரத்தக் குறிப்புத் தோன்றும்-அவ்வளவுதான்! அதைத் தட்டித் தடவி விட்டால் அந்த முள் கீழே விழுந்து விடும். அது போல, கவிக்குயிலுக்கு நெஞ்சிலே தைத்த நெருஞ்சி முள் போன்ற சிந்தனைகள் அவ்வப்போது அவருக்குச் சுருக் கென்று தாக்கும்.
நெருஞ்சி முள் தரையில் படர்ந்து காணப்பட்டாலும் நெருப்புச் சூடுதரும் சூரியன் எப்பக்கம் சாய்ந்து கதிர்களை வீசுகின்றதோ அப் பக்கமே-முள் தலைபாகம் திசை திரும்பும் தன்மையுடையது. அதற்கும் வெப்பம் வேண்டுமல்லவா? அதனால்
அந்த நெருஞ்சிமுள் தத்துவம் போலவே, கவிக்குயில் சரோஜினிக்கு, கவிதை, இலக்கியம், தேசத்தொண்டு, மக்கள் சேவை என்ற வெப்பம் நோக்கி, அவரது நெஞ்சுக் காயத்தின் தாக்குதல்கள் அவரது சிந்தனையிலே அவ்வப்போது நிழலாடித்தாக்கி நினைவுறுத்தும்.
அந்த நினைவுக்கு ஏற்ப, தற்போது கவிக்குயிலுக்குத் தேசத் தொண்டு என்ற வடுக்காயத்தை நெஞ்சு நினைவுபடுத்தியது. அந்த நினைவுச் சிந்தனை பம்பாய் நகர் வந்ததும் அடிக்கடி அவருக்கு எழுவது உண்டு.
பெற்றதாயினும் சிறந்த தாய் நாடு, வெள்ளையனிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதும், நெஞ்சிலே உரமற்றவர்கள் நேர்மைத் திறனற்ற ஏழை மக்கள் வயிற்றுக்குத் திண்டாடுவதும், அந்த விடுதலைப் போருக்கு ஏழை மக்கள் எழுச்சி பெறாமல், தானுண்டு வயிறுண்டு என்று வாழ்வதும் சரோஜினியின் நெஞ்சத்தைத் தாக்கின. அதற்காக பம்பாய் நகரிலே சிந்தித்துக்கொண்டே இருந்தார்.
“The never Sunset in British Empire” என்று உலகம் கூறக்கூடிய சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராச்சியக்காரன், மிகவும் பலம் பொருந்திய பகைவன்
அந்த தந்திர விரோதியை எதிர்த்து, இந்திய நாட்டின் சுயராச்சியத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் தியாகிகளையும், பொதுமக்களையும், அறிஞர்களையும், அவர்தம் ஆகிய உழைப்புத் திறன்களையும் எண்ணிப் பார்த்தார் சரோஜினிதேவி.
மாபெரும் சாம்ராச்சியபதிகளான வெள்ளையர்கள், ஒரு காலத்தில் ஆட்டுத் தோலுக்கு இடம் கேட்டு அலைந்த வியாபாரக்கம்பெனி ஊழியர்களாக இருக்கலாம். ஆனால், இப்போது:
ரத, கஜ. துரக, பதாதிகள் என்ற நால்வகைப்படைகட்கு மட்டும் அதிபதிகள் அல்லர்; அவர்களது அதிகாரம் என்ற சூரியன் உதிக்காத நாடுகள் இல்லையே!
இத்தகைய ஒரு சாம்ராச்சியாதிபதிகளை எதிர்த்து விடுதலைப் போராட்டம் நடத்துவது எளிய, சுலபமான பணியா? சரி, சுலபமான வேலை ஆல்ல என்பதால், இந்தியர்கள் எல்லாம் மானரோஷத்துடன் மறப்போர் புரியும் பக்குவப்பட்டவர்களா? அல்லவே!
எனவே தாய்தாட்டின் மானம் பெரிதா? மனிதன் உயிர் பெரிதா? என்று எண்ணிய போர்க்கள விடுதலை வீரர்கள் அனைவரும் எந்தத் தியாகம் புரியவும் தயாராகி விட்டார்கள் என்பதை சரோஜினி கண்டார்.
இத்தகைய அடிமைகளை தம்மால் எவ்வாறு விடுதலை வீறு பெறச் செய்ய இயலும்? நம் கவிதைகளால் இந்திய மக்களின் விழுச்சியுற்ற தேகத்தில் எழுச்சியைப் பெற வைக்க இயலாதா? ஏன் இயலாது?
தாம் எழுதும் கவிதைகள் மூலமாகவே இந்தியர்களைப் போர் வீரர்களாக்க முடியும் என்று கருதி, விடுதலைக் கீதங்களைப் பாட ஆரம்பித்தார்; அந்தப் பாடல்கள் மக்கள் உள்ளத்தை கனற்களமாக்கியது.
கவிக்குயில் சரோஜினிதேவிக்கு முன்பே, மராட்டிய சிங்கமாகக் காட்சிதந்த விடுதலைப்போராளி, பால கங்காதர திலகர் பெருமான், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போர் புரிந்து சிறைவாசமடைந்திருந்தார்.
ஏன் அவர் சிறைபட்டார் தன்னைவிட தாய் நாட்டு மானம் பெரிது என்று நம்பிய திலகா, 'சுயராஜ்யமே எனது பிறப்புரிமை; அதை நான் அடைந்தே தீருவேன்'! என்று, வீர முழக்கமிட்டதற்காகச் சிறை புகுந்தார். துன்புற்றார். கவிக்குயில் சரோஜினிக்கும் திலகர் பெருமான்-ஒரு விடுதலைப் போராட்டப் பாடமானார். அதனால், திலகர் சிறை மீண்ட பிறகு, அவரைச் சந்தித்து சுதந்திரப் போராட்டத்திற்கான உத்வேகத்தைப் பெற்றார் கவிக் குயில் சரோஜினிதேவி.
திலகர் பெருமானைச் சந்தித்ததற்குப் பிறகு, கவியரசி, காந்தியடிகளின் அரசியல் குருவான கோபால கிருஷ்ண கோகலேயைச் சந்தித்தார்.
கோகலே எத்தகைய பண்பாளர் தெரியுமா? ஒழுக்க சீலர்; பண்பட்ட கல்வியாளர்; மான்போன்ற சாதுவான மனித மேதை; ஆனால், அவருக்கும் மற்ற விடுதலை வீரர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்; அவர் ஆங்கிலேயர்களைப் பகைவராகக் கருதவில்லை காரணம் அவர்களோடு அன்பாகப் பழகியே இந்திய மக்களுக்கு ஏதாவது நன்மைகளைச் செய்யலாமே என்ற பெருந்தன்மைப் படைத்த பெருந்தகை ஆவர்.
இதுபோன்ற அரிய பண்புகள் அவரிடம் இயற்கையாகவே இருந்ததனால், காந்தி பெருமான் கோகலேயை தனது அரசியல் ஆசானாக நம்பினார்; ஏற்றார்; அவர் வழியையே பின்பற்றினார்.
இதே நேரத்தில் பாகிஸ்தான் பிரிவினைதேவை என்று காங்கிரஸ் கட்சியை எதிர்த்துப் பிற்காலத்தில் போராடிய முகமதலி ஜனாப்ஜின்னா, அப்போது காங்கிரஸ் கட்சியிலே தேசியவாதியாக உழைத்துக் கொண்டிருந்தார்.
சரோஜினி தேவிக்கு முகமதலி ஜின்னாவின் நட்பும் அப்போது கிடைத்தது. அவரோடும் தேவி நெருங்கிப் பழகினார். அரசியல் பற்றிய விளக்கம் கேட்டறிந்தார்.
இந்திய சுதந்திரத்திற்காக மேற்கண்டவாறு போராடிய தேச பக்தர்களின் தொடர்பு; கவிக்குயிலுக்கும் நெருக்கமாக, இறுக்கமாக ஏற்பட்டதால், அவருக்கும் சுயராச்சியப் போரின் முக்கியத்துவம் புரிந்தது.
இந்த நேரத்தில்தான் இங்கிலாந்து நாட்டிலே இருந்து இந்திய வந்த தியாசாபிகல் சொசைட்டியின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான அன்னிபெசண்ட் அம்மையாரின் தொடர்பும் சரோஜினிக்கு ஏற்பட்டது.
அன்னிபெசண்ட் அயல்நாட்டு வீரமங்கைதான் என்றாலும், அவர் இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்ற வேட்கைக்காக Home Rule என்ற சுயாட்சி இயக்கத்தை தமிழகத்திலே உருவாக்கி, வெள்ளையர்களையே எதிர்த்து போராடி சிறை புகுந்தார்.
அல்லும் பகலும் அன்னிபெசண்ட் அயர்வில்லாமல் உழைப்பதைக் கண்ட கவிக்குயில் தேவியார். அவரைப் பின்பற்றி அரசியல் தொண்டு புரிவது என்ற முடிவுக்கு வந்தார்.
சரோஜினிதேவியின் பேச்சு, மூச்சு, உழைப்பு, திறன், செயல், கவிதை, மேடைமுழக்கம் அனைத்தும் அன்னி பெசண்ட் அம்மையாரைப் பின்பற்றியே அரசியல், சமையம் ஆகிய துறைகட்கு பயன்பட்டு வரலாயின.
வழக்கம்போல சரோஜினிதேவியின் எழுத்தாற்றல் இயற்கை அழகிலும், தாலாட்டுக் கற்பனையிலும் ஈடுபடாமல் கனல்தெறிக்கும் கவிதைக் கருத்துக்களை ஏற்றிக் கொண்டு, இந்திய நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. இந்த அரிய செயல்கள் யாவும் பிரிட்டிஷ் அரசுக்கு நெருப்பூட்டுவதுபோல அமைந்தது.
இந்த விடுதலை வேட்கை உணர்ச்சிகளுடன் சரோஜினி தேவி இந்தியக் கிராமங்கள், நகரங்கள், இலக்கிய மன்றங்கள், திருவிழாக்கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்ற பல நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டு பெண் சிங்கம் போல கர்ஜனை விட்டுக் கொண்டு நாட்டைச் சுற்றி வந்தார்.
ஒரு பெண்மணி, கவிக்குயில், கவியரசி நாடு சுதந்தரம் பெற வேண்டும் என்று பற்பல மேடைகளிலே பேசி வந்த எண்ணங்கள், புழுப் போன்ற மக்களைப் புலியாக்கிற்று; கோழைகளை வீரராக்கின என்றால் மிகையல்ல!
"தாய்மார்களே, நீங்கள் அடுப்பூதிக் கொண்டிருப்பது மட்டும் உங்கள் கடமையல்ல; நாட்டு விடுதலைக்காக உழைக்க வாருங்கள் என்று தாய்மார்களை நோக்கி அறை கூவலிட்டார்.
எழுச்சி பெற்றனர் இளைஞர்கள்; உணர்ச்சியுற்றனர் முதியவர்கள்; புரட்சி எண்ணங்களைப் பெற்றனர் பெண்கள்; நடுத்தர வயதுடைய வாலிபர்கள்; எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு என்ற நிலையிலே உருவானார்கள்!
சரோஜினியால் புதியதோர் விடுதலைப் படை தயாராகி வருவதைக் கண்ட வெள்ளையர் அரசு வெலவெலத்து சிந்தித்தது. என்ன செய்வது? எப்படி அடக்குவது? இதற்கு வழிகள் என்ன? என்று திட்டமிட்டபடியே இருந்தது பிரிட்டிஷ் ஆட்சி!
கவிதை பாடிக் கொண்டிருந்த சரோஜினி தேவி கனல் தெறிக்கப் பேசுகிறாளே; இதற்கா அவளைப் பாராட்டினோம்; பட்டம் வழங்கினோம்; உலகப் புகழை உருவாக்கிக் கொடுத்தோம் என்று உள்ளம் தடுமாறி அவளை அடக்கும் அடக்குமுறைகளைப் பற்றி விவாதித்தனர் வெள்ளையர்கள்!
போர்க்கள ஆடு ஒன்று பின்னுக்குப் போய் முன்னுக்கு வந்து கரடுமுரடாக பகையாட்டை மோதி மோதித் தாக்குவதைப் போன்ற ஆத்திர வெறியோடு அலைமோதிக் கிடந்தார்கள் ஆங்கிலேய அதிகாரிகள்!
கவிக்குயில் மேடைப் பேச்சுக்கு எதிர்ப்பாகப் பலரை தூண்டி விட்டு எதிர்வாத முழக்கமிட்டது ஆங்கில அரசு! எதுவும் எடுபடாததால் அடக்குமுறை ஆயுதங்கனை சரோஜினி தேவி மீது ஏவிட முயன்றது.
இந்த நேரத்தில், 1918ம் ஆண்டு, தமிழ்நாட்டிலே உள்ள காஞ்சிபுரத்தில் தமிழ் மாநில அரசியல் மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாடு அன்னி பெசண்ட் அம்மையாரது இயக்கமான சுயாட்சி இயக்கத்தினரால் நடத்தப்பட்ட மாநாடாகும்.
அந்த அரசியல் சுயாட்சி கட்சி மாநாட்டிற்குக் கவிக்குயில் சரோஜினிதேவி தலைமை வகித்தார். அந்த மாநாட்டில், அவர் வீர முழக்கமிட்ட பேச்சு வருமாறு:
வீரர்களை ஈன்றளிக்கும் இந்தியத் தாய்மார்களே! பகையை விளையாட்டாக எதிர்த்து விளையாடிடும் பக்குவமுள்ள பாலகர்களைத் தோற்றுவிக்கும் பெண் குலமே! ஜான்சி ராணியின் வீரத்தை அவரவர் வயிறுகளிலே சுமந்து கொண்டிருக்கும் வீரத்தின் விளைநிலங்களே! இளைஞர்களே! சகோதரர்களே!
என்னை வரவேற்றுப் பேசிய நண்பர், சொல்லிலே இனிமையைத் தவழவிட்டு தீஞ்சுவைக் கவிதைகளைப் பாடிவரும் கவிக்குயில் என்றார். அது உண்மை தான்! ஆனால், நான் இப்போது அப்படியெல்லாம் பாடி, கல்வியாளர்களையும், ரசிகர்களையும் மகிழ வைப்பதை மறந்து விட்டேன்! என் மனம் அவ்வாறு செய்ய மறுத்து விட்டது. ஏன் தெரியுமா?
"நம்முடைய பாரதத் தாய் அந்நியர்களான ஆங்கிலேயர்கள் இடையே அடிமைப்பட்டு அவதிப்படுகின்றாள்! பெற்ற தாயினும் சிறந்த நமது அன்னை நாடு. வெள்ளை அராஜகவாதிகளிடம் கட்டுண்டு, தறிகெட்டு, நிலைகெட்டு, குலைந்திருப்பதை ஒரு கணம் நாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?"
"திலகர் பெருமான், ஞானமகான் கோகலே, அயல் நாட்டு அன்னை அன்னி பெசண்ட், பண்டித மோதிலால் தேரு, புரோஷாய் மேத்தா, புலாபாய் தேசாய், சர். செதல்வாட்டு, வ. உ. சிதம்பரம் பிள்ளை, திரு. வி. கலியாண சுந்தரம், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. ஐயர், ஈ.வி.ஆர் ராமசாமி போன்றவர்கள் ஓயாத போராட்டத்தில் குதித்து விட்டார்கள்."
தியாகிகள், அறிஞர்கள், நாடக நடிகர்கள், கலைஞர்கள், அடிமட்ட வறுமையிலே நாள் தோறும் அவஸ்தைதைகளை அனுபவிக்கும் கீழ்மட்ட ஏழைகள் உட்பட்ட எல்லாருமே அவரவர்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள சுதந்திரப் போராட்டத்திலே ஈடுபட்டுச் சிறை செல்கிறார்கள;
மானத்தோடுதான் வாழவேண்டும் மனிதப் பிறவி என்பதை-நீங்கள் அறியாதவர்கள் அல்லர்! அதனாலே தான் எந்த லாப நட்டத்தையும் பாராமல் விடுதலை வேள்வியிலே சுடர்விட்டெரியும் நெருப்பிலே குதித்து விட்டார்கள்.
எனது நாக்கு கவிபாடிய நாக்குதான்; ஆனால் இன்று, அக்கவிகளிலே கனற் கட்டிகளை (நெருப்பை) ஏற்றிப் பாடி வருகிறேன்? ஏன் தெரியுமா? சுதந்திரம் சுதந்திரம் சுதந்திரமே நமது பிறப்புரிமை என்பதை மக்கள் நெஞ்சங் களிலே நிலைநாட்டத்தான்.
நான் எழுதிய அனல் கட்டிக் கவிதைகள், பிரிட்டிஷ் பகைவர்களைச் சுட்டுக் காயமாக்கி அருகிறது. பொறாமை பற்றியோரைப் பொசுக்கி வருகிறது.
அதனால் வெள்ளை அராஜகவாதிகள் என்னைச் சுதந்திரப் போராட்டக் களத்திலே இருந்து எப்படி வெளியேற்றலாம் என்று திட்டமிட்டு வருவதாகக் கேள்விப்படுகின்றேன்.
விடுதலைப் போராட்டத் தலைவர்களிடம் நான் பழகக் கூடாது; பேசக்கூடாது; அவர்கள் சம்பந்தமே எனக்குத் தொடரக்கூடாது என்பதற்காகத்தான், ஆங்கில அரசு எனக்கு விருது அளித்துப் பாராட்டியதாக மந்திரி மாண்டேகு கூறியுள்ளார்.
கவிபாடும் குயிலுக்கு விடுதலைப் போர்க்களத்தில் என்ன வேலை? குழலும் யாழும் வாசித்து மக்களை மகிழ்விப்பதல்லவா ஒரு கவியின் பணி! அதை மறந்து சுயராச்சியப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட வேண்டும் என்று எங்களுக்கு எதிராக அறை கூவலிட்டு அழைப்பதா ஒரு பெண்கவியின் வேலை?
உலகம் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என்பதற்காகத்தான், தாகூருக்கு பெருமைபடுத்தி அளித்த அதே விருது பதக்கத்தையே சரோஜினி தேவிக்கும் வழங்கினோம்; அதற்குரிய நன்றியா எங்களை வசைபாடுவது? அழகா? என்றெல்லாம் ஆங்கிலேயர்கள் அறிக்கை விடுத்துள்ளார்கள்.
ஆங்கிலேயர்களே! உங்களது விருதுக்கு நான் ஆசைப்பட்டவள் அல்லள்! வலிய வந்து நீங்களே என்னைப் பாராட்டி விருது வழங்கினீர்களே அல்லாமல்-நானா உங்களைக் கேட்டேன்?
விருது கொடுத்துப் பாராட்டிய பதக்கத்துக்கா எனது தாய் மண் மானத்தை அடகு வைப்பேன்? அவ்வாறு கனவு காணாதீர்கள். சரோஜினி உங்களுடைய பட்டம் பதவிகளுக்கு மயங்கி விடுதலையை விலை பேசிடுவாள் என்று எண்ணாதீர்கள்! எனது மூச்சு போகும்வரை பாரத் மாதாகீ ஜெய் என்ற கோஷம் போடுவேனே தவிர, வேறு எதற்கும் உங்களிடம் அஞ்சேன் என்று வெள்ளையர்கள் கேள்விகளுக்கும் பதில் கூறினார். அவர் மேலும் தன்னைப் பற்றியும், தனது கவிதைகளைப் பற்றியும் ஒரு தன் நில விளக்கம் தந்துப் பேசியதாவது:
“ரோஜா பூக்கள் மணக்கும் தோட்டத்துக்கு நடுவே, விண்ணளாவும் கோபுரத்தின் மீது தனியாக உட்கார்ந்து பாடுவது மட்டுமே கவிஞன் கடமையல்ல; கவிஞர்கள் மக்களோடு மக்களாகப் பழகவேண்டும். வீதிகளிலும், சந்து முனைகளிலும், பொது மன்றங்களிலும், குப்பை மேடுகளிலும், களம் கண்ட போர் முனைகளிலும் கவிஞனது கால்கள் கடும் பயணம் புரிதல் வேண்டும்.
கவிஞன் என்பவன் யார்? தேசத்துக்கு அபாயம் வந்தால், நாடு அடிமைப்பட்டுக் கிடந்தால்; சோதனைகள் சமுதாயத்துக்குச் சூழ்ந்தால், மக்களிடம் சோர்வும், தோல்வியும், தைரியமின்மையும் ஏற்பட்டால்-அந்தந்தக் காலங்களில் நன்மை தீமைகளை அறிந்து பாடுபவன் அல்லவா கவிஞன்?
நன்மைகளை நாட்டி, தீமைகளை ஓட்டி, ஊமைகளை பேசவைக்க, ஆமைகளை வேகமாக நகரவிட ஏழைகளை கோழைகளை, மோழைகளை, பாழைகளை, கூழைகளை வீரர்களாக்கிட கவிஞன் உணர்வுகளும், கனற் கருத்துக்களும் யாரிடமிருந்து பூகம்பம் போல் வெடித்து வெளி வருகின்றதோ அவனல்லவா கவிஞன்?
பாரத நாட்டில் அடிமைகளாக வாழ்கின்ற வாலிபர்களே, வீறிட்டு எழுங்கள்! விடியல் விடிகின்றது. தைரியம் பெற்றிட எழுங்கள்; மக்களை ஊக்குவிக்கும் தைரியம் இன்பம், ஆற்றலும் நம்பிக்கையும் உடைய ஒரு பெண் கவி நெஞ்சம் உங்களை அழைக்கின்றது?
இந்தியா, இன்றில்லாவிட்டாலும், நாளை, நாளை அல்லாவிட்டாலும் நாளைய மறுநாள் நிச்சயமாக பூரண விடுதலைப் பெற்றே தீரும் என்ற நம்பிக்கையில் மக்களைப் போராட தான் அழைக்கின்றேன்.
சுதந்திரப் போராட்டம் ஆங்காங்கே நாடு முழுவதுமாக தீவிரமாக நடைபெற்று வருவதை நீங்களும் அறிவீர்கள்.
நான் ஒரு பெண் ; தொட்டிலை ஆட்டிய பெண்! வீட்டை மறந்து விட்டேன்! பம்பாயிலே இருந்துப் போராட்டம் செய்கிறேன்: கவிபாடும் பழக்கத்தையும் தூக்கி எறிந்து விட்டேன்! சகோதரர்களே! எழுக! போராடிட வருக!
சகோதரிகளே! குழந்தைகளைப் பெறுவது மட்டுமே தமது பணியன்று; பாலூட்டி சீராட்டி அவர்களைப் பராமரிப்பது மட்டுமே நமது வேலைகளன்று; கணவரைக் கவனிப்பது மட்டுமே நமது கடமையன்று.
நமது நாட்டுக்காக நாம் ஆற்றிய தொண்டு என்ன என்று உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். என் வீடு, என் வாசல், என் குழந்தைகள், என் தாய், தந்தை, கணவர் ஆகியவைதான் பொதுஎன்று எண்ணாதீர்!
மக்களுக்கு அந்த கடுகு உள்ளம் வரக்கூடாது. யாதும் ஊரே, யாவரும் உறவே, எல்லாருக்கும் வேண்டுவது எல்லா வசதிகளுமே நாடு பெற வேண்டியது தன்மானச் சுதந்திரமே என்ற தொன்னையுள்ளத்தை பெறவேண்டும் நீங்கள்!
மக்களுக்கு சேவை செய்வதில் ஆணென்றும் பெண்னென்றும் பேதம் எழக்கூடாது சொந்தக் கடமைகளைச் செய்திட எப்படி பொங்கி எழுகின்றீர்களோ, அதே உணர்வுகள் நாட்டுக்கு விடுதலை பெறவேண்டும் என்ற எண்ணத்திலேயும் பீறிட்டு-வீறிட்டுத் தோன்ற வேண்டும்.
தாம் பிறந்த மண்! நம்மால் விடுதலைப் பெற்றது என்ற எண்ணம் உங்களுக்குள் உதிக்க வேண்டும்! அது தான் தாய்நாட்டு பற்று விடுதலை வேட்கை!" என்று பேசி முடித்தார்
8. "பதக்கம் பெறச் சுதந்திரத்தை அடகு வைக்க மாட்டேன்"
கவிக்குயில் சரோஜினி தேவி இந்தியா முழுவதுமாகச் சுற்றிச் சுற்றிச் சுயராஜ்ஜியம் பெறவேண்டும் என்பதற்காக, சுய ஆட்சிக்கட்சி நடத்தியக் கூட்டங்களிலும், மற்ற பிற கூட்டங்களிலும் சூறாவளிச் சுற்றுப்பயணம் பிரச்சாரம் செய்தார்:
ஓய்வு ஒழிவின்றி, கவிதைகள் எழுதக்கூட நேரமின்றி, தனிமையாகவும், விடுதலைப் போராட்டத் தலைவர்களோடும் சுயாட்சிக் கட்சி சார்பாகவும் கிராமம் கிராமமாகச் சென்று பேசியதால் அவரது உடல் நலம் சீர் குலைந்தது; நோயுற்றார்; லண்டன் பயணம் சென்று சிகிச்சைப் பெற்று, அங்கே சில மாதங்கள் ஓய்வு எடுக்குமாறு கவிக்குயில் நண்பர்கள் கூறியதற்கேற்ப லண்டன் மாநகர் சென்றார்.
முதல் உலகப்போர் 1914-1918-ம் ஆண்டு நடந்து முடிவுற்றது. கோபாலகிருஷ்ண கோகலே ஆங்கிலேயர்களையும், அவர்களது அரசையும் எதிர்க்காமல் அனுசரித்து போனவாறு, காந்தியடிகளும் அவரைப் பின்பற்று நடந்தார்!
உலகப்போரில் இங்கிலாந்து நாடும், பிரிட்டிஷ் ஆட்சியும் சிக்கித் தவிக்கும்போது, அதற்கு உதவி செய்வதுதான் மனிதாபிமானம் என்று காந்தியடிகள் நினைத்தார்!
அதற்கு ஏற்றவாறு பிரிட்டிஷ் போர்ப்படைக்குக் காந்தியடிகளே முன்னின்று ஆட்களைச் சேர்த்துக் கொடுத்தார்! கடுமையாகக் காந்தியார் அலைந்ததால் அவரது உடல் நலமும் நலிந்து, நோயுற்றார்! போர்க்களத்தில் இந்திய ராணுவத்தினர் ஆற்றிய அரிய செயல்களையும், உயிர்த் தியாகங்களையும், பண உதவிகளையும் ஏற்று ஆங்கிலத் தளபதிகளும், அரசு அதிகாரிகளும் மனமாரப் பாராட்டினார்கள்.
போரில் இங்கிலாந்து பெற்றது வெற்றி. ஆனால், மறந்தது நன்றியை எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு; ஆனால், செய்நன்றியைக் கொன்ற மாபாவிகளை மறக்குமா காலம்?
செய்நன்றி மட்டுமல்ல; காலத்தால் செய்த உதவியை கொன்றுவிட்ட பிரிட்டிஷ் பாம்பு நஞ்சு கக்க ஆரம்பித்தது எந்தவித விசாரணைகளும் இல்லாமல், விடுதலைப் போராட்டத்தலைவர்களைச் சிறையிலடைத்தது. இதனால் மக்கள் ஆங்காங்கே பொங்குமாங் கடலெனப் பொங்கி எழுந்தார்கள்.
பொதுமக்கள் எதிர்ப்புகளைக் கண்டு பீதியடைந்த பிரிட்டிஷ் அரசு, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடத் தயாரானது; அந்த காட்டுமிராண்டிச் செயல்களில் ஒன்று தான் ஜாலியன் வாலாபாத் துப்பாக்கிப் படுகொலை.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஓர் ஊர் ஜாலியன் வாலா பாத். விடுதலைப் போராட்ட வீரர்களையும், தலைவர்களையும் பலாத்காரமாகச் சிறை பிடித்து அடைக்கப்பட்டதால், அவ்வூர் பொதுமக்களும், சுற்றுச் சார்பு வாழ் மக்களும் கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள்.
அந்தக் கூட்டத்தைக் கேட்கக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆயுதம் ஏந்தாதவர்களாவார்கள். அப்படிப்பட்ட நிராயுதபாணி மக்களை, ஆங்கில தளபதியாக இருந்த ஜெனரல் டயர் என்பான், துப்பாக்கிகளிலும் இயந்திரத் துப்பாக்கிகளிலும் இருந்த குண்டுகள் எல்லாம் தீரும் வரை, சுட்டேன். சுட்டேன், சுட்டேன் என்று சிட்டுக் குருவிகளைச் சுடுவதுபோலச் சுட்டுத்தள்ளினான்.
சுட்டதோடு மட்டுமா அந்த அரக்கன் நின்றான்? கூட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்களை அவமானப்படுத்தினான்! பெண்களைக் கேவலமாக நடத்தினான்! ராணுவ வீரர்கள் செய்த கொடுங்கோன்மைகளை வரவேற்று வாழ்த்தி ஊமைபோல வேடிக்கைப் பார்த்த வெறியனானான் டயர்!
பஞ்சாப் படுகொலை நிகழ்ச்சிகளைக் கேள்விப்பட்ட உலகநாடுகள் அதிர்ச்சி அடைந்தன! இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் கொந்தளித்து வீறு கொண்டது!
உலக நாடுகளை எல்லாம் பதைபதைக்க வைத்த இந்த பஞ்சாப் படுகொலையை விசாரணை நடத்திட பிரிட்டிஷ் அரசு ‘ஹன்டர் கமிட்டி’ என்ற ஒரு குழுவை அமைத்தது.
இந்தக் குழு ஒரு கண் துடைப்பு; இதனால் உண்மை வெளிவராது; பிரிட்டிஷ் கொடுமைகளை மூடி மறைக்கவே இந்தக் குழுவை அந்த அரசு அமைத்துள்ளது என்று இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை கிளர்ந்தெழுத்து கண்டனம் செய்தது.
எனவே, அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக, ஜாலியன் வாலாபாத் தில் நடந்தது என்ன? என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திட பண்டித மோதிலால் நேரு, மகாத்மா காந்தி ஆகியோரைக் கோண்ட வேறொரு குழுவை அமைத்து விசாரணை நடத்தியது.
'பிரீட்டிஷ் அரசும், ராணுவமும் எவ்விதத் தவறும் செய்யவில்லை; இந்தியப் போலீசார்தான் அக்கிரமமான அராஜகங்களைச் செய்து விட்டார்கள்! என்று ஹன்டர் கமிட்டி தனது விசாரணையில் தெரிவித்தது.
காங்கிரஸ் மகாசபை விசாரணைக்குழு ஜாலியன் வாலாபாத் என்ற ஊருக்கே சென்று, அங்குள்ள ஊர் மக்களை விசாரித்து, துப்பாக்கித் தர்பார் வேட்டுகள் நடந்த இடத்தை நன்றாகச் சுற்றிப் பார்த்து, அந்த இடத்தை ஒரு படமாகவும் வரைந்து, செத்த உடல்களையும் புகைப்படம் எடுத்து மிக நுட்பமாக விசாரணை செய்து, ‘ராணுவம்தான் அராஜகம் செய்தது; பெண்களிடம் மிருகத்தனமாக நடந்தது’ என்ற கருத்துக்களை வெளியிட்டது.
இந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் சரோஜினி நாயுடு உடல்நலம் இல்லாமல் லண்டன் சென்றார்!
நடந்த கொடுமைகள் அனைத்துக்கும் ராணுவம்தான் பொறுப்பு என்ற காங்கிரஸ் மகாசபை விசாரணைக்குழு கருத்துக்களை எல்லா இந்தியப் பத்திரிகைகளும் வெளியிட்டு அதனதன் கண்டனங்களை அப்போது வெளியிட்டன.
இலண்டன் மாநகர் சென்ற கவியரசி சரோஜினி தேவி லண்டனில் இந்திய ஜிலாபத் கமிட்டியின் சார்பாக நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
பஞ்சாப் படுகொலைச் சம்பவம் மிகவும் மோசமான பழிவாங்கும் பாதகப் போக்கு என்பதை கவியரசி உணர்ந்தார். இந்த ஆவேச உந்தல்களால் லண்டன் நகரில் கிங்ஸலீ ஹாலில் நடந்தக் கூட்டத்தில் பேசுவதாக ஒப்புக் கொண்டார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு லண்டன் வந்துள்ள கவியரசி சரோஜினி நாயுடு என்னப் பேசப்போகிறார் என்பதைக் கேட்க ஆவல் கொண்ட மக்கள் திரள்திரளாக மண்டபத்துள் குழுமினார்கள்.
கூடிய அந்தக் கூட்டத்தில் சரி பாதி பேர் ஆங்கிலேயர்களே என்பது குறிப்பிடத்தக்கது. மற்றையோர் இந்திய மக்களே! மேற்கண்ட கூட்டத்தில் கவிக்குயில் சரோஜினி வீராவேசமாகப் பேசியபோது குறிப்பிட்டதாவது:
★ “ஏ, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களே இந்திய மக்களைக் கொடிய மிருகங்களை வேட்டையாடுவதுபோல வேட்டை ஆடலாமா?
நிராயுதபாணிகளாகக் கூட்டம் கேட்க வந்த நிரபராதிகளைச் சுட்டேன், சுட்டேன், வெடிமருந்து தீரும் வரைச் சுட்டேன் என்று ஜெனரல் டயர் வெறியாட்டமாடி குண்டடிப்போர் செய்தது நியாயமா? பிரிட்டிஷ் வீரம் இதுதானா? ஜனநாயகத்தின் தொட்டில் இங்கிலாந்து நாடு என்கிறீர்களே, இதுதான் அந்த ஜனநாயக வெறியாட்டமா? லட்சணமா?
பெண் குலத்துக்கு பெருமை தேடுகிறோம் என்று வாய் மேளம் அடிக்கும் பிரிட்டிஷ்காரர்களே. இந்தியப் பெண்களை அம்மணமாக நிறுத்தலாமா? ஆடைகளை அகற்றலாமா?
★ நிர்வாணமானப் பெண்களைக் கசைகளால் அடிக்கலாமா? கண்டபடி கற்பழிக்கலாமா? கதறி ஆழ ஆழ அவர்களைச் சித்ரவதை செய்யலாமா?
★ எனது நாட்டுச் சகோதரிகளை மானபங்கம் செய்தச் சண்டாளர்களை, நியாயத்திலும்-நாகரிகத்திலும் உயர்ந்தவர்கள் என்று டம்பமடித்துக்கொள்ளும் பிரிட்டிஷார் தண்டிக்காமல் விட்டது ஏன்?
மனிதாபிமானமே இல்லாத இந்த காட்டுமிராண்டிகளின் பயங்கரச் செயல்களை நடத்திய முரடர்களை, பிரிட்டிஷ் பாராளுமன்றம் பாராட்டியதே-அது நீதிதானா?
★ இந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த இந்திய மக்கள் ‘வெட்கம், வெட்கம்’ என்று கூக்குரலிட்டார்கள்.
★ கூட்டத்தில் பாதியளவுக்கு மேல் கலந்துகொண்ட ஆங்கிலேயர்கள், வெட்கத்தால் முகம் கருகித் தலை குனிந்தார்கள்.
இந்திய அரசு பற்றி பிரிட்டிஷ் மக்களுக்கு இருந்த நல்லெண்ணத்தைச் சரோஜினி பேச்சு தவிடுபொடியாக்கி விட்டது.
பிரிட்டிஷ் மந்திரி சபையில் அப்போதைய இந்திய மந்திரியாக இருந்தவர் மாண்டேகு என்பவர். கவிக்குயில் பேச்சு இங்கிலாந்து மக்களிடையே ஒருவித அதிருப்தியை பிரிட்டிஷ் அரசு மீது உருவாக்கி விட்டதை அவர் நேரிடையாகவே பார்த்தார்.
அதனால், கவிக்குயில் சரோஜினி நாயுடுவுக்கு மாண்டேகு நேரிடையாகவே ஒரு கடிதம் எழுதினார் அந்தக் கடிதத்தில் அவர் எழுதியதாவது:
★ "பஞ்சாப் மாநிலத்தில், இந்தியப் பெண்கள் நிர்வாணமாய் நிறுத்தப்பட்டார்கள், கசைகளால் அடிக்கப்பட்டார்கள் என்றேல்லாம் ராணுவ அதிகாரிகள் மீது தாங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமே இல்லை.”
★ “அரசாங்கம் நியமித்த ஹண்டர் கமிட்டியில் இதைப் பற்றி ஒன்றும் இல்லை. காங்கிரஸ் விசாரணைக் குழுவின் அறிக்கையிலும் ராணுவ அதிகாரிகள் பெண்களை மானபங்கம் செய்ததாய்க் கூறப்படவில்லை.”
★ “எனவே, தாங்கள் கிங்ஸ்லி ஹாலில் பேசியபேச்சு சற்றும் ஆதாரமற்றது; ராணுவ அதிகாரிகள் மீது கூறிய குற்றச்சாட்டுக்களைத் தாங்கள் உடனே வாபஸ் பெற்று, மன்னிப்புக் கோரவேண்டும்” என்றார் மாண்டேகு.
மந்திரி மாண்டேகு சிறந்த ஒரு ராஜதந்திரி என்று பெயர் எடுத்தவர். அவருக்கு கோகலே போன்ற இந்தியத் தலைவர்களிடம் நல்ல செல்வாக்கு இருந்தது இந்த நேரத்தில் மாண்டேகு சரோஜினிதேவி பேச்சின் மீது ஓர் அறை கூவலை வேறு விட்டுவிட்டார் அல்லவா?
அதனால் பிரிட்டிஷ் பத்திரிகைகளும் அதன் எடுபிடி இந்திய ஏடுகளும், கவியரசி சரோஜினி தேவியைக் கேலியாகவும், கிண்டலாகவும் கண்டித்தும் எழுதின.
"இந்தியத் தலைவர்கள் பிரிட்டிஷ் ஆட்சி மீது இப்படித் தான் கண்டபடி புளுகுகிறார்கள் என்ற முடிவை உலகுக்கு உருவாக்கிவிட்டன பிரிட்டிஷ் சார்பு ஏடுகள்!
விடுவாரா சரோஜினிதேவியார்? இந்திய மந்திரி மாண்டேகு அறை கூவலைச் சவாலாக ஏற்றார். அவருக்கு உடனே விவரமாக மறுகடிதம் எழுதினார். என்ன விவரம் அது?
★ மாண்டேகு பெருந்தகையாளரே!
என் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவையா? பொய் என்றால் அதை நிரூபிக்க தாங்களும், பிரிட்டிஷ் அரசும், இந்திய அரசும் முன் வருமா என்று உம்மை நோக்கி அறை கூவுகின்றேன்! வருவீரா?
★ காங்கிரஸ் மகா சபையின் விசாரணைக்குழு அறிக்கையைக் கவனமாக நீர் படித்தீரா?
★ பஞ்சாப் மாநில ராணுவ ஆட்சியில் போலீசார் செய்த பயங்கர அட்டூழியங்கள் ஒன்றா? இரண்டா? பக்கம் பக்கமாக காங்கிரஸ் விசாரணைக்குழு அறிக்கை வெளிவிட்டிருக்கிறதே, அதைப் பார்த்தீரா?
★ ஒரு வேளை நீர் சூரியனையும் மறைக்கலாம்; பஞ்சாபில் என் சகோதரிகளுக்கு செய்யப்பட்டக் கொடுமைகளை நீரோ அல்லது உமது அரசோ, மறக்கவோ, மறைக்கவோ முடியாது.
★ நேர்மை, இரக்கம், மரியாதை என்ற மூன்றும் பெண்களுக்கு வழங்கும் மனித நேயங்கள் என்றைக்கும் வெட்கப்பட்டுத் தலையைக் குனியத்தான் வேண்டும். மறந்து விடாதீர்!
★ இந்திய அரசின் கெளரவத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் உமக்கு இருக்கிறதே என்றா? சரோஜினி தேவி தனது கடிதத்தில்.
மறுபடியும் மாண்டேகு மந்திரி சரோஜினியை எதிர் கேள்வி கேட்டபோது, "போலீசார் செய்த அக்ரமங்களை ராணுவ ஆட்சி மீது எவ்வாறு சுமத்தலாம்?" என்றார்.
அதற்குக் கவியரசி பதில் கூறிய போது: ராணுவ ஆட்சியில் நடந்த போலீஸ் அக்கிரமங்களுக்கு ராணுவ அதிகாரிகள் பொறுப்பன்று என்றால், வேறு யார் தாம் பொறுப்பு; ராணுவத்தையும் மீறிப் போலீஸ்காரர்கள் அவற்றைச் செய்தார்கள் என்று மந்திரி மாண்டேகு நிரூபிக்கப் போகிறாரா? என்று மறுவிடை தந்தார்.
இவ்வளவு உரையாடல் விவரங்களுக்குப் பிறகு, சிறந்த ராஜதந்திரி என்று புகழ்பெற்ற மந்திரி மாண்டேகு சரோஜினி நாயுடு பதிலைக் கண்டு மெளனமானார்.
இலண்டன் நகரில் எடுத்துக் கொண்ட சிகிச்சையால், கவியரசி உடல் தேறி நலமானது. மீண்டும் அவர் இந்தியா திரும்பினார்.
இந்தியா வந்து சேர்ந்ததும், இந்திய அரசாங்கத்துக்கும், வைசிராய்க்கும் ஒரு கடிதம் எழுதினார்; என்ன அந்தக் கடிதம், இதோ:
"பஞ்சாப் ராணுவ ஆட்சியில் ஏற்பட்ட கொடுமைகளை இந்த அஞ்சலிலே விளக்கினார். நடைபெற்ற பஞ்சாப் குற்றங்களுக்கு பொறுப்பு ஏற்க வேண்டியது அரசாங்கமாகும்.
அந்த பொறுப்பை அரசு எடுக்காததால், பிரிட்டிஷ் என்னைப் பாராட்டி வழங்கிய 'கெய்சர் ஹிந்த்' என்ற பதக்கத்தை நான் அணிந்து கொள்ள முடியாது. அதனால் அதைத் திருப்பி அனுப்பி விடுகிறேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டு விட்டு அந்தப் பதக்கத்தை அனுப்பிவிட்டார்.
"பிரிட்டிஷ் அரசு பதக்கத்தை நான் அணிய மாட்டேன்; அது என் கெளரவத்துக்கும், சுயமரியாதைக்கும் இழுக்கானது; இந்தப் பதக்கத்தை நான் அணிவேனானால், எனது தாய் நாட்டின் தன்மானத்தை அடகு வைத்தவளாகி விடுவேன் என்று அக்கடிதத்தில் தெரிவித்து திருப்பி அனுப்பினார்
கவியரசி சரோஜினி நாயுடு பிரிட்டிஷ் ஆட்சி வழங்கிய பதக்கத்தைத் திருப்பி அனுப்பிவிட்ட சம்பவம், பெரும் கிளர்ச்சிக்கான எழுச்சியை உண்டாக்கியது. கவியரசியைப் பின்பற்றி பலர் தமது பட்டம் பதவிகளைத் தூக்கி எறிந்தார்கள். பஞ்சாப் சகோதரிகள் மானபங்கம் செய்யப்பட்டதால், பெண் சிங்கம் சரோஜினி சீறி எழுந்து கர்ஜனை செய்தது. இதனால் இந்தியாவின் எல்லா பகுதிகளுமே புதியதோர் விழிப்புணர்வு பெற்றது.
சரோஜின் தேவியின் இந்தப் பதக்கம் துறப்புச் சம்பவம் மற்ற நாடுகளிலும் ஒரு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நேரத்தில் கானாட்டுக் கோமகன், இந்தியா வருகை தந்தார். பஞ்சாப் படுகொலை சம்பவத்தால் இந்திய மக்கள் மனம் பூகம்பம் வெடித்துப் பிளவுபட்டிருப்பதை அக்கோமகன் கண்டார்.
இந்திய மக்கள் உள்ளத்தை சாந்தப்படுத்திட ஏதாவது செய்ய வேண்டுமே, அவ்வாறில்லாவிட்டால் நிலமை மிக்க விபரீதமாகிவிடுமே என்று அஞ்சியக் கோமகன், 'நடந்ததை மறந்து விடுங்கள்: என்று கூறி, பிரிட்டிஷ் ஆட்சியின் சார்பில் மன்னிப்பும் கேட்கிறேன் என்று வேண்டினார்.
இந்திய மந்திரி சிறந்த ராஜதந்திரி; அவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு சார்பாக சவால்விட்டார்.
அந்த சவாலை கவியரசி ஏற்றுத்தக்க பதில் மூலமாக வாதமிட்டார். பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட களங்கத்துக்காகப் போராடினார். அந்தப் போராட்டத்தை லண்டன் மாநகரிலே, அதாவது சிங்கத்தின் குகைக்கே சென்று அதைச் சந்தித்தார்.
இறுதியாக, சரோஜினிதேவி வாதமே வெற்றி பெற்றது; கானாட்டுக் கோமகன் பிரிட்டிஷ் அரசு சார்பாக இந்திய மக்களிடமே மன்னிப்புக் கேட்டார்.
9. காந்தியடிகள் தத்துவம் கவிக்குயிலை ஈர்த்தது!
கவியரசி சரோஜினிதேவி பிரிட்டிஷ் இந்திய மந்திரி மாண்டேகு சவாலை ஏற்று வெற்றிபெற்ற பின்பு இந்திய மக்கள் அவரை ஒரு தேசியக் கவியாக மதித்துப் போற்றினார்கள்.
கவிக்குயில் பொதுத்தொண்டு, மக்கட்சேவை, ஆகியவற்றைக் காலம் திசை மாற்றியது. இதற்கு முன்பு கவி பாடியதைப் போலல்லாமல் இப்போது நாட்டின் விடுதலையைப் பற்றியும், மக்களின் அவல நிலையினைப்பற்றியும் அடுத்தடுத்து அவர் பாடிக்கொண்டே இருந்தார்.
நாட்டுக்கு எந்தெந்த சக்திகள் தேவையோ, அவற்றையே பல வியூகங்களில் பாடிப்பாடி அவர் மக்களை எழுச்சிப் பெற வைத்தார்! இதனால், கவியரசி ஒரு தேசியக்கவி என்று மக்களால் மதிக்கப்பட்டார்.
'பாரதமாதா பள்ளி' எழுச்சியென்று அவர் பாடிய பாடலிலே ஒன்று மக்களிடையே மாபெரும் மரியாதையை உருவாக்கியது. அந்தப்பாடல் இதுதான்:
"பாரத மாதாவே!
நீ மிக மிக முதியவள். மிக மிகத் துன்புற்றவள்!
குழந்தைகள் பல ஈன்றவள்! எனினும்,
குன்றாத இளமை உடையவள்!
சின்னாள்களாய் ஏனோ துயில் கொண்டனை?
இனியேனும் கண் விழித்துக்கொள்!
சுதந்திர வழி தவறி அடிமை நெறி நடக்கும்
உன் மக்களை நேர்வழியில் செலுத்து!
இன்னும் ஏன் உறங்குகின்றனை?
உன் குழந்தைகளுக்காக விழிக்கலாகாதா?
அரியாசனத்திலிருந்து செங்கோலோச்சிய நீ
இழந்த அரசை மீண்டும் அடையும் காலம்
வந்துற்றது; துயில் நீங்கிக் கண் விழித்திடு!
அரசை ஏற்ற உன் மக்களை மகிழ்வுடன் காத்திடுக!
பாரதமாதாவுக்கு இவ்வாறு கவியரசி பாடிய பள்ளி எழுச்சிக் கீதம், மக்கள் மனதிலே பதிந்து விடியல் காலங்களில் விடிவெள்ளிப் பாடலாக பாடிடும் உயிர்நிலைப் பெற்று விட்டது.
அதே நேரத்தில் காந்தியடிகளின் அகிம்சை தத்துவத்தின் செல்வாக்கு, நாட்டிலே பரவி வேரூன்றிப் பரந்து வந்தது. கவியரசி இந்த புகழைக் கண்டு மனம் பூரித்தார். அந்த மக்கள் மதிப்பு கவிக்குயிலையும் ஈர்த்து விட்டது.
"தீமையைத் தீமையால் அழிக்க முடியாது தீமையை நன்மையால்தான் வெற்றி பெற முடியும்; பகைவனுக்குக் அருள்வாய் நன்னெஞ்சே!” என்ற காந்தியடிகளது தத்துவத்திலே சரோஜினிதேவியின் மனம் நம்பிக்கைக் கொண்டது.
மேற்கண்ட தத்துவ உண்மையை காந்தியடிகள் மக்களது மனதிலே பதியுமாறு ஒவ்வொரு மேடைதோறும் பேசிவந்தார்; பத்திரிகையிலேயும் தவறாது நாளும் எழுதி வந்தார். இந்த அற்புதமான அகிம்சை நெறி நாட்டிலே ஒரு புதிய திருப்பத்தை மாறுதலை நிகழ்த்தியபடியே இருந்தது.
“காந்தியடிகளது இந்த அரசியல் தாரக மந்திரம் கவியரசியை எவ்வாறு ஆட்கொண்டது என்பது சரோஜினி தேவி வேறொரு வாயிலாக நாட்டுக்குத் தெரிவித்திருப்பதைப் படியுங்கள்:
"தீர்க்கதரிசிகளும், புரோகிதர்களும், அவர்களுடைய கொள்கைகளைப் போற்றட்டும்.”
“அரசர்களும், அமைச்சர்களும், அவர்களுடைய வெற்றிச் செயல்களைப் புகழட்டும்; வேண்டாம் என்று கூறவில்லை; ஆனால்;”
“இறைவனே! தோல்வி கண்டோருக்கு ஆறுதல் கொடுத்து அருள்வாய் வளமை அற்றோருக்குத் தைரியம் அருள்வாய்!"
“கவி பாடி, மெய் மறக்கும் பேறு எனக்கு அளித்து அருள்வாய்!”
-என்று ஒரு கவிதையிலே மகாத்மா மந்திரப் பொருளைக் கவி மூலமாக மக்களுக்கு எடுத்துக் காட்டிப் போற்றினார்; அவர் எழுதிய மற்றொரு பாடலிலே மகாத்மா தத்துவம் கீதமாகத் தவழ்ந்தாடுவதையும் பாருங்கள்:
"போரும்-பூசலும் நிறைந்துள்ள இடங்களில் மறத்தை புல், அறியாமையையும் அன்பு வெல்க!"
"வாளேந்தியப் போர் வீரர்கள் போர் முனைக்குச் சென்றால், நான் எனது இனிய பாடல்களையும் ஏந்தி உடன் செல்வேன்!”
"அயர்ந்து, களைத்துச் சோர்ந்து காணப்படும் அவர்கள் கரங்களுக்கு நான் நம்பிக்கை என்ற வலிமையைக் சேர்ப்பேன்!"
"எங்கும் அமைதி நிலவுக, அதனுள் ஆனந்தம் துளிர்த்திடுக. சத்தியம் வெல்க. அன்பும் இன்பும் வையகமெலாம் பரவிடுக."
-என்று கவியரசி சரோஜினிதேவி தேசபக்திப் பாடல்களை பற்பல எழுதிக்குவித்தார் அதனால், மக்கள் அவரைத் தேசியக்கவி என்று போற்ற ஆரம்பித்தார்கள்!
தேச சேவையே, நாட்டுப்பற்றே, சுயராஜ்ஜிய மந்திரமே, அவரது வாழ்க்கையாக மாறிவிட்டது. காந்தியக் கொள்கை மூச்சானது; தான் பின்பற்றும் மதம் அதுவே என்ற உணர்ச்சிக்கு அவர் உந்தப்பட்ட கவிஞர் ஆனார்.
10. மறுபடியும் பிரிட்டிஷ் அரசு பணிந்தது!
சரோஜினி தேவி கி.பி. 1922-ம் ஆண்டு தென் இந்திய சுற்றுப்பயணப் பிரசாரத்தில் ஈடுபட்டார். கேரள மாநிலத்தில் உள்ள கள்ளிக்கோட்டை என்ற ஊரிலே பேசினார்!
அப்போது கேரளாவிலே வாழும் 'மாப்பிள்ளை' என்ற ஒரு வகுப்பாரை, ராணுவ வீரர்கள் முன்பு பஞ்சாப் மாநிலத்திலே பெண்களையும்-ஆண்களையும் காட்டு மிராண்டித்தனமாக துன்புறுத்தியதைப் போல, கேரளத்திலும் மிகக் கீழ்த்தரமாகக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
அந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் அவர் அன்று பேசிய மேடையிலே கூறிக் கூறி வன்மையாகவும், ஆணித்தரமாகவும், ஆவேசம் பொங்கப் பொங்கக் கண்டித்தார்.
பாஞ்சாலத்திலே ராணுவம் நடந்து கொண்ட கொடுமைகளைப் போல-கேரளத்திலும் நடந்து கொன்டது நியாயந்தானா? என்று கேட்டார்.
பெண்களை நிர்வாணப்படுத்துவதும், அவர்களைக் கற்பழிப்பதும், கதறக் கதற அவர்களை உதைப்பதும்தான் பிரிட்டிஷ் ராணுவத்தின் வீரச்செயல்களா?
மனித குலத்தைத் திடுக்கிடச் செய்யும் இத்தகைய அநீதிகள் ராணுவ வீரர்களின் வீரத்துக்கும்-தீரத்துக்கும் இழிவாகாதா? கோழைத்தனமான இந்த மிருகச் செயல்களைச் செய்யவா மக்கள் வரிப் பணங்களைக் கொடுக்கிறார்கள்?
மேற்குறிப்பிட்ட கடுமையான கேள்விகளை கேட்டுப் பிரிட்டிஷ் ஆட்சியின் அவலங்களைக் கண்டித்தார்! அதனால் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டதைப் பிரிட்டிஷார் நடத்தும் சென்னை அரசு பார்த்துக் கிலி கொண்டது.
நெருப்பு உமிழும் சொற்களால் கவியரசி அன்று கேட்ட கேள்விகள், கவிகுயிலுக்கு ஒரு புகழைத் தேடித் தந்தது மட்டுமன்று அங்கு வாழும் மாப்பிள்ளை வகுப்பாருக்கும் ஒரு ஆறுதலை அளித்தது.
சென்னை அரசாங்கம் ஆத்திரமுற்றது; காரணம், கேரளப்பகுதி மக்கள் இடையே உருவான பரபரப்புச் சூழ் நிலைதான் பிரிட்டிஷ் இந்திய மந்திரி மாண்டேகு முன்பு பஞ்சாப் படுகொலைப் பிரச்னையிலே கவியரசியை எச்சரித்தது போல, சென்னை வெள்ளையர் அரசாங்கமும் அவரை எச்சரித்தது!
"அந்த எச்சரிக்கை அறிக்கையில், மலையாள ராணுவ ஆட்சி குறித்து நீங்கள் கூறியது எல்லாம் உண்மை அன்று: உங்களுடைய கடுமையான குற்றச் சாட்டுக்களை உடனே வாபஸ் வாங்க வேண்டும். இல்லையென்றால், உங்கள் மீது வழக்குத் தொடரப்படும்" என்று சென்னை அரசாங்கம் கவியரசிக்கு நோட்டிஸ் அனுப்பியது.
இந்த சென்னை அரசு அறிக்கையைய் பெற்றுக் கொண்ட சரோஜினி தேவி, "இராணுவம் பற்றி நான் கூறியக் குற்றச்சாட்டுகள் பொய் என்றால், அரசாங்கம் என்மீது நடவடிக்கை எடுக்கட்டும். எதற்கும் நான் தயார்; அவ்வாறில்லை என்றால், அரசாங்கம் எனக்கு அனுப்பிய வழக்கு நோட்டீசைத் திரும்பப் பெற்று என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று மறுகடிதம் எழுதினார்.
காந்தியடிகளுக்கும், மகாகவி ரவீந்திரதாத் தாகூருக்கும் அப்போது நெருங்கிய நண்பராக இருந்தவரும், தீனபந்து என்று மக்களால் போற்றப்பட்டும் புகழ்பெற்றவருமான ஆண்ட்ரூஸ் என்ற கிறித்துவப் பாதிரியார், கவியரசி சரோஜினி தேவி சாட்டியக் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவைகளே" என்று ஓர் அறிக்கையினை விடுத்துக் கவிக்குயில் பேச்சை உறுதிப்படுத்தினார்.
பாதிரியாரின் இந்த மறுப்பு அறிக்கை, எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியது போல சென்னை அரசாங்கத்துக்கு எதிரிடையாக காட்சி தந்தது!
அதே நேரத்தில் கேரளா பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த காங்கிரஸ் மகாசபையின் தொண்டர் படைத்தலைவரான என் பீ. ஹார்டிகர் என்பவரும் சரோஜினி குற்றச்சாட்டுக்கள் உண்மையானவைதான் என்று கூறி ஓர் அறிக்கையை விட்டு ஆதரித்தார். இந்த அறிக்கையும் எரியும் சென்னை அரசு நெருப்புக்குரிய காற்றாகப் மாறிப் பரவியது:
இந்த அறிக்கை வெளியானதற்குப் பிறகு, கேரள காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் விடுத்த அறிக்கை ஒன்றில்:
“சரோஜினி தேவி பேசியதில் தவறு ஏதும் இல்லை; அவர் கூறியன எல்லாம் உண்மைதான்; கேரள ராணுவ ஆட்சியின் போது, மாப்பிள்ளை வகுப்பார் வாழ்ந்த இடங்களில் ராணுவ வீரர்கள் காட்டுமிராண்டித்தன பயங்கரங்களோடு அக்கிரமங்களைச் செய்தார்கள். அந்த விவரங்களை தேவியாருக்கு நான்தான் தந்தேன். அக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க நான் எப்போதும் தயார்" என்றார்.
இந்த அறிக்கை சென்னை அரசாங்கத்தின் எரியும் நெருப்புக்கு நெய்வார்த்து விசிறிவிட்டப் பேய்க்காற்றாக வீச ஆரம்பித்தது.
பிரிட்டிஷ் மந்திரி மாண்டேகு பட்ட அவமானம் போல சென்னை அரசாங்கமும் அவமானம் அடைய விரும்பவில்லையோ என்னவோ ஊமையாகி விட்டது.
ஒருநாட்டில் அந்நியர் ஆட்சி செய்ய பெரும் துணையாக இருப்பவை ராணுவமும்-போலீசும் தானே! அதனால் அந்த இரு சக்திகளை எந்த ஓர் அயலரசும் காட்டிக் கொடுத்திடத் துணியாது அல்லவா? அதனால், சென்னை அரசு ஊமையானது!
சென்னை ஆங்கிலேயர் ஆட்சி, சரோஜினி தேவியின் கொந்தளிப்பான குற்றச்சாட்டுக்களை எதிர் கொள்ள அஞ்சி, அவர் மீது தொடுத்த வழக்கு நோட்டீசையும் வாபஸ் வாங்காமல் பயந்து வெலவெலத்து பணிந்து விட்டது. இதனால் சரோஜினி தேவியிடம் ஆங்கிலேயர் அரசு இரண்டாவது தடவையாகவும் பணிந்துவிட்டது என்ற உண்மையைக் கேரளப் பகுதி மக்களும்-மாப்பிள்னை வகுப்பாரும் கண்டு புது மகிழ்ச்சிப் பெற்றார்கள்.
11. பிரிட்டிஷ் பொய்ப்பிரச்சாரம் அமெரிக்காவில் அம்பலம்!
பிரிட்டிஷ் வழக்குத் தொகுப்புப் பயமுறுத்தலையும், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற எச்சரிக்கைகளையும் இரண்டு முறைகள் எதிர்கொண்ட கவியரசி சரோஜினி தேவி, அந்த இரு தடவைகளிலும், பிரிட்டிஷாரின் அச்சுறுத்தல்களைத் தவிடு பொடியாக்கி வெற்றி கண்டார்.
அதற்குப் பிறகு, பிரிட்டிஷ் ஆட்சி அமெரிக்காவிடம் பல உதவிகளைப் பெறவும், அதே நேரத்தில் உலகம் நம்பும்படியாகவும், இந்தியாவிலுள்ள மக்களுக்கு பல நன்மைகளைச் செய்து வருவதாகப் பொய்ப் பிரச்சாரங்களைச்செய்து வந்தது.
இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் ஆதரவாளர்களைக் கைக்கூலிகளைப் போலப் பயன்படுத்தி ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைத்து, "பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்கள் வளமாகவே வாழ்கிறார்கள்" என்ற உண்மையற்ற நம்பிக்கைகளை உலகுக்கு வழங்கி அரசியல் பித்தலாட்டங்களைப் புரிந்து கொண்டிருந்தது.
அந்த பொய்ப் பிரச்சாரங்களைத் தகர்த்தெறியும் கடமை காங்கிரஸ் மகா சபைக்கு உண்டல்லவா? அதனால் காங்கிரஸ், லாலாலஜபதிராய், டாக்டர் சுதீந்திரபோஸ் போன்ற தலைவர்களை அனுப்பி எதிர்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டது!
ஆனால் வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியத் தலைவர்களது பேச்சாற்றல் எடுபடவில்லை; பிரிட்டிஷ் ராஜ தந்திர சூழ்ச்சிகளை முறியடிக்க முடியவில்லை என்ற உண்மை வெளிநாடுகளுக்கும், காந்தியடிகளுக்கும், காங்கிரஸ் மகா சபைக்கும் புரிந்தது.
இந்த நேரத்தில் இந்தியாவிற்கு வந்து திரும்பிய கிறித்துவப் பாதிரிமார்களும் பிரிட்டனுக்கு ஆதரவாகவே பிரச்சாரம் செய்து வந்தார்கள். அதனால் பிரிட்டனுடைய கோயாபல்ஸ் பிரச்சாரமே ஓங்கி நின்றது. வெளிநாட்டார்கள் அதையே நம்பி வந்தார்கள்.
பிரிட்டிஷாருடைய உண்மைகளை நம்ப விரும்பாத அமெரிக்கா, காந்தியடிகளாரை அமெரிக்கா வருமாறு பல முறை வேண்டி அழைத்தார்கள். ஆனால், மகாத்மாவுக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு ஏற்படாத நெருக்கடிகள் இந்திய அரசியலில் ஏற்பட்டன. அதனால் அவர் அமெரிக்கா செல்ல மறுத்தார். காரணம், காந்தியடிகள் ஒரு அடிமை நாட்டுத்தூதுவராக வெளிநாடுகளுக்கு சென்றிட விரும்பவில்லை.
அமெரிக்க அரசு 1928-ம் ஆண்டு மீண்டும் காந்தியடிகளை அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை மறுக்க முடியாத சூழ்நிலையால், தனது பிரதிநிதியாக கவியரசி சரோஜினிதேவியை அனுப்பி வைப்பதாக அவர் ஒப்புக்கொண்டார்.
சரோஜினிதேவி அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டால், பிரிட்டனுடைய ராஜதந்திரம் பொய்ப் பிரச்சாரங்களைத் தகர்த்தெறிவார் என்ற நம்பிக்கையும் காந்தியடிகளுக்கு இருந்ததும் ஒரு காரணமாகும். அதனால் சரோஜினி தேவியை அமெரிக்கா சென்று வருமாறு காந்தியார் பணித்தார்.
கவியரசி சரோஜினிதேவி வெளிநாடுகளுக்குச் செல்வது என்பது புதிய அனுபவம் அன்று. அவர் உலகம் முழுவதும் பலமுறை சென்று திரும்பியவர். இந்தியத் தலைவர்களிலேயே வெளிநாடுகளுக்கு பலதடவை சென்று அனுபவப்பட்டவர் சரோஜினிதேவியே.
இந்தியாவிற்கு வெளியே மட்டுமன்று; இந்திய மாகாணங்கள் எல்லாவற்றுக்கும் ஊர் ஊராக, நகரம் நகரமாகச் சென்று காங்கிரஸ் மகாசபைப் பற்றியக் கருத்துக்களை விளக்கமாக எடுத்தக்கூறிய ஆற்றல் பெற்றவர். அதனாலும் அவரைக் காந்தியடிகள் அமெரிக்கா செல்லுமாறு கூறினார்.
எனவே, கவியரசி சரோஜினிதேவி காந்தியடிகளுடைய அன்புக் கட்டளையை ஏற்று அமெரிக்கா சென்றார். அங்கே சென்ற கவிகுயிலுக்கு அமெரிக்கா அமோக வரவேற்பை அளித்து மகிழ்வித்தது.
அமெரிக்காவில் சரோஜினிதேவி அங்குள்ள ராஜ தந்திரிகளைச் சந்தித்தார்; அறிஞர்களோடு அளவளாவினார்; அரசு அதிகாரிகளைப் பார்த்தார்; பொதுக்கூட்டங்கள் பலவற்றில் அமெரிக்க மக்களிடையே பேசினார்.
அவர் எந்தெந்த கூட்டங்களில் பேசினாரோ, அந்தந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரிட்டனுடைய பொய்ப் பிரச்சாரங்களைத் தகர்த்துத் தவிடுபொடியாக்கினார்.
அமெரிக்க அரசுக்கும், அறிஞர்களுக்கும், ராஜதந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இந்தியாவில் பிரிட்டிஷ் செய்து வரும் கொடுங்கோன்மை ஆர்ப்பாட்டங்களை அம்பலப்படுத்தினார். இந்தியாவின் உண்மை நிலைகளை விவரமாக எடுத்து விளக்கினார்.
இந்திய மக்களின் உரிமைப் போராட்டமான விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும், காந்தியடிகளாருடைய அகிம்சை நெறிகள், சத்தியாக்கிரகப் போராட்டத்தன்மைகள், காந்தியத் தத்துவங்கள் அனைத்தையும் அருமையாக விளக்கி, மகான் காந்தியடிகள் வழியிலே இந்தியா பீடு தடை போட்டு வருவதையும் அழகாக எடுத்துரைத்து, அமெரிக்க மக்கள் இடையே புதியதோர் விழிப்பை உருவாக்கினார்.
கவிக்குயில் சரோஜினியின் காந்தியப் பிரச்சாரத்தால் இந்தியா மேலும் பெருமை பெற்றது மட்டுமன்று; பிரிட்டனுடைய பொய்ப் பிரச்சாரங்களையும் தனது பேச்சாற்றலால் முறியடித்தார்.
12. ஆப்ரிக்கப் பிரதமர் ஸ்மட்கடன் வாக்குப்போர்!
பிரிட்டனுடைய பொய்ப் பிரச்சாரத்தை அமெரிக்காவில் அடிமரம் நுனிமரமாக வேட்டி வீழ்த்திய பின்னர், கவிக்குயில் சரோஜினி தேவி தென் ஆஃப்பிரிக்காவுக்கு காந்தியடிகள் கட்டளைக்கேற்ப சென்றார்.
தென் ஆஃப்பிரிக்காவில் நடைபெறுவது வெள்ளைக்காரர்களைக் கொண்ட சிறுபான்மை கட்சியினரின் ஆட்சியாகும். அங்கே பிழைப்புக்காக இந்தியர் பெரும் பகுதியினர் சென்று குடியேறினார்கள். அவர்களில் தமிழ் மக்களே அதிகமாக இருந்தார்கள்.
இந்தியர்களை வெள்ளையர் அங்கே மிகவும் கொடுமைப்படுத்தினார்கள்: அவமானப்படுத்தினார்கள்; கூலிகள் என்று இழிவாகப் பேசிக் கேவலமாக நடத்தினார்கள்: கருப்பர்கள் என்றனர்; நாகரிகமற்றவர் என்று நகைத்தார்கள்; அடிமைகளைப்போல கீழ்மட்ட வேலைகளிலே ஈடு படுத்தினார்கள். இவ்வளவு துராக்கிரதத் துயர்களைச் சகித்துக் கொண்டுதான் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் அங்கே வாழ்ந்தார்கள்.
காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, பலமுறை சத்தியாக்கிரகப் போராட்டங்களை நடத்தினார்; காரணம், அவர் கண்ணெதிரேயே இந்திய மக்கள் கடுமையாகக் கேவலமாக அவமதிக்கப்பட்டதுதா !
அகிம்சா போராட்டங்களை அங்கே அறப்போரிகளை நடத்தி வெற்றி பெற்றவர் காந்தியடிகள். அந்த வெற்றி பெருமையினால் விளைந்த கௌரவத்தை, புகழை, சாதனைச் சம்பவத்தின் பலனை இந்தியருக்காக அங்கேயே விட்டு விட்டு, காந்தி பெருமான் தனது தாயகமான இந்தியாவுக்கு 1914-ம் ஆண்டு வந்தார்!
தென் ஆப்பிரிக்கப் பிரதமராக அப்போது பதவியில் இருந்தவர் ஜெனரல் ஸ்மட்ஸ் என்பவர். இந்த மனிதன் தான் காந்தியடிகளாரைக் கைது செய்து முதன் முதலாகத் சிறைக்குள் அடைத்தவர்.
அதற்காக அண்ணல் காந்தியடிகள் ஸ்மட்ஸை தனது விரோதியாக நினைக்கவில்லை; அவர் கடமையை அவர் செய்தார்; இவர் உரிமைக்காகப் போராடினார்! ஆனால், கடைசிவரை ஜெனரல் ஸ்மட்சும்-காந்தியடிகளும் அரசியல் நண்பர்களாகவே நடமாடினார்கள். பதினொன்று ஆண்டுகள் அவர்கள் தொடர்பு தென்னாப்பிரிக்காவில் நீடித்தது.
ஜெனரல் ஸ்மட்ஸ் நிறவெறியர்; அதனால் காந்தியடிகள், இந்தியா திரும்பியதும், மீண்டும் நிறவெறி வேதாளம் முருங்கை மரம் மீது ஏறிக் கொண்டு தலை கீழாகவே தொங்க ஆரம்பித்தது.
தென் ஆப்ரிக்க இந்தியர்களுக்காக அங்கே தங்கி அரும் பணியாற்றி, சிறை மீண்டு என்று இந்தியா திரும்பினாரோ அதற்குப் பிறகு மீண்டும் அவர் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லவில்லை.
அயல் நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு ஏதாவது நன்மைகள் புரிய நாட்டம் இருந்தால், முதலில் இந்தியா சுதந்திரம் அடைந்தால்தான் செய்ய முடியும் என்று காந்தியடிகள் உணர்ந்தார்.
இந்தக் காரணத்தால்தான் அவர் இந்திய விடுதலைக்காகவே முழுமூச்சுடன் பாடுபட்டார். தென் ஆப்ரிக்காவுக்கு மீண்டும் போகவே அவருக்கு விருப்பமும் இல்லை, மனமும் இல்லை. தென் ஆப்பிரிக்க மக்கள் பழைய பாசத்தோடு அடிகளாரை பன்முறை அழைத்தும் அங்கே போகாமலேயே இருந்து விட்டார்.
கென்யா நாட்டில் வாழ்ந்த இந்தியர்களும் துன்பப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் தங்களது உரிமைக்காக மாநாடு ஒன்று நடத்தி அரசுக்கு உணர்த்திட எண்ணினார்கள்.
அந்த மாநாட்டுக்குத் தலைமை தங்கிட கென்யா மக்கள் காந்தியடிகளாரை அல்லது சரோஜினி தேவியை 1924-ம் ஆண்டு அழைத்தார்கள்! அந்த அழைப்பை ஏற்று காந்தியடிகளுக்குப் பதிலாக கவியரசியை அனுப்புவது என்று காங்கிரஸ் மகாசபை எண்ணியது.
கிழக்கு ஆப்பிரிக்கா காங்கிரஸ் மகாசபை நடத்திய அந்த மாநாட்டுக்கு கவியரசி சரோஜினி தலைமை வகித்தார். இந்த மாநாடு மொம்பசா நகரில் நடந்தது. அங்கே அவர் பேசும்போது:
"இந்தியாவில் உள்ள ஓர் இந்தியன் உயிரோடு இருக்கும்வரை வெள்ளையர்கள் அக்கிரமச் செயல்களை எதிர்த்துப் போராடியே தீருவான்; அதற்குரிய தண்டனைகளும் கிடைத்தே தீரும்" என்று தென்னாப்பிரிக்காவிலே வாழ்கின்ற இந்தியர்களே தைரியமாகக் கூறுங்கள் என்று இந்தியர்களுக்கு ஊக்கம் தந்தார்.
நாயுடு பேசியபேச்சிலே வந்து விழுந்த சொற்சிலம்பங்கள், தெளிவான கருத்துக்கள், கோர்வையான பேச்சுத் தொடர்புகள், உணர்ச்சி வயப்பட்டு அவர் பேசும்போது, ஏற்படும் ஏற்றத்தாழ்வான குரல் ஒலிகள், அனைத்தையும் கண்டு இந்தியரும்-வெள்ளை இனத்தவரும் வியப்படைந்தார்கள். அதே நேரத்தில் ஆங்கிலேயரை இந்த அம்மையார் எப்படியெல்லாம் குற்றம் கூறுவாரோ என்ற பயமும் வெள்ளையரிடையே உருவானது.
நேடால் என்ற நகருக்கும் சென்றார் சரோஜினி! அந்த நேரத்தில் இந்தியர்களின் உரிமைகளைப் பறிக்கும் மசோதா ஒன்று சட்டமன்றத்திலே விவாதத்தில் இருந்தது. இந்தியர்கள் மிக நெருக்கடியான ஒரு துன்பச் சூழலிலே அப்போது அங்கே வாழ்ந்து வந்தார்கள்.
இந்திய பெருமக்களே! எதற்கும் அஞ்சாதீர்! நீங்கள் நடத்த இருப்பது உரிமைப்போர். தைரியமாக, துணிவாக, சிங்கம்போல் சிலிர்த்து எழுந்து கர்ஜனையிட்டும் போரை நடத்துங்கள்.
அடக்கு முறைகள் அலைகளைப் போல திரண்டு, புரண்டு வந்தாலும் அஞ்சாதீர்கள். தளர்ச்சியே இல்லாமல் கட்டுப்பாட்டுடன் போராடுங்கள் இந்தியர்கள் புற முதுகு காட்டாதவர்கள் என்ற இயல்பை நிலை நாட்டுங்கள். விடுதலை வீரர்களாக நிமிர்ந்து நில்லுங்கள்; முன்னேறிப் போராடுங்கள் என்று இந்தியர்களுக்கு உரிமைப் போர் நெஞ்சுரம் ஊட்டினார்.
அமெரிக்காவிலே உள்ள இந்தியர்களைப்போல நீங்கள் அமைதியாக வாழ முடியாவிட்டாலும், அதற்காக இங்குள்ள வெள்ளையரை விரோதிகளாக நினைக்காதீர்கள். நீங்கள் இரு இனங்களும் இங்கே சேர்ந்து வாழ வேண்டியவர்கள்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் எப்படியாவது சமாதானமாக நல்வாழ்வு வாழ்ந்தாக வேண்டும். அதற்கான சமரச வழிகளை நீங்கள் கடைப்பிடித்துப் பழக வேண்டும்.
இந்தியருக்கோ அல்லது வெள்ளையருக்கோ தென் ஆப்பிரிக்கா பூமி சொந்தம் இல்லை. இரு இன மக்களும் குடியேறிய சகோதரர்கள். நீங்கள் மனித நேயத்தோடு சரி சமமாகவும், ஒற்றுமையோடும், முடித்தால் பிரிட்டிஷ் ராஜ்யத்தில் சேர்த்து வாழவும் கற்றுக் கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களுக்கு சேர்ந்து வாழ விருப்பம் இல்லையென்றால் பிரிட்டிஷ் ராஜ்யத்தை விட்டுப் பிரிந்து செல்லுங்கள்.
இந்தியரும்-வெள்ளையரும் சேர்ந்து வாழ வேண்டுமா? எது வேண்டும் மனமே என்று பிரிட்டன் ஆட்சிதான் தன்னைத்தானே கேட்டு; இரு இன மக்களுக்கும் பதில் கூறியாக வேண்டும் என்று கவியரசி வெள்ளைக்காரர்களுக்கு புரியுமாறு விளக்கினார்!
கவிக்குயில், இவ்வாறு பேச்சளவோடு நின்று விடவில்லை; பத்திரிகைகளுக்குப் பேட்டியும் தந்து நிலையை விளக்கினார் ஆங்கிலேய அதிகாரிகளைச் சந்தித்தார்: முதன் முதலாக காந்தியடிகளைக் கைது செய்து சிறைக்கு அனுப்பிவைத்த பிரதமர் ஜெனரல் ஸ்மட்சையும் நேரில் சென்று கண்டு இந்தியர்கள் பிரச்னையை எடுத்துரைத்தார்.
அப்போது, உர்பன் நகரம் டவுன் ஹாலில் நடந்த ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு டர்பன் நகர உதவி மேயர் தலைமை வகித்தார். அவர் ஒரு பெண்ணின் தைரியத்தையும்-தேச பக்தியையும் வெகுவாகப் பாராட்டி தலைமையுரையில் பேசினார்.
அக்கூட்டத்திற்கு திரளாகத்திரண்டு வந்து காத்திருந்து இந்தியர்கள் மட்டுமல்லர்; வெள்ளைக்காரப் பெண்களும் கனதனவான்களும் கூட திரண்டு வந்து கவியரசியின் பேச்சைக் கேட்டார்கள்.
ஜெனரல் ஹெரிட் ஜாக், கர்னல் கிரேஸ்வெல் போன்ற உயர் அரசு அதிகாரத் தலைவர்களும், மக்களும் பெருங் கூட்டமாகக் கூடி சரோஜினியின் பேச்சைக் கேட்டார்கள். கூட்டத்திற்கு தலைமை வகித்த அந்த ஐரோப்பியர், கவிக்குயில் அறிவாற்றலையும், 'நா' நயத்தையும் நாட்டுப் பற்றையும் வெகுவாகப் பாராட்டினார். ஆனால் ஒன்று!
டர்பன் டவுன்ஹால் கூட்டத்திற்குத் தலைமை வகித்த வெள்ளைக்கார உதவி மேயர் டாக்டர் கில்பர்ட் என்பவர், கவிக்குயில் சரோஜினிதேவியை மேடையிலே பேசும்போது சூதாக, வஞ்சமாக, சாமர்த்தியமாக, சாதுர்யமாக பேச்சு மூலமாகவே ஒரு கேள்வியைக் கேட்டு மடக்கிடப் பார்த்ததே-அந்த ஒன்று!
என்ன கேள்வி அது என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா? இதோ அவர் கேட்கிறார்:
"சரோஜினி நாயுடு அவர்களே, நீங்கள் 'சமத்துவம்' 'சமத்துவம்' என்று பேசுகிறீர்களே அந்த 'சமத்துவம்' என்ற சொல்லின் பொருள் என்ன?" என்று கேட்டது தான் அக்கேள்வி: மேலும் அந்த உதவி மேயர்:
"சமத்துவம் என்றால் ஆனைவருக்கும் நன்மை புரிவதும், உதவுவதும், ஏழை எளியவர்களுக்கு ஏற்றம் அளிப்பதும் சமத்துவம் அல்லவா? வெள்ளைக்காரர்களாகிய நாங்கள் உலகம் முழுவதும் செய்துவரும் ஜீவகாருண்யம் உங்களுக்குத் தெரியாதவையா?”
"நாங்கள் சமத்துவத்தை மறுப்பதாக மக்களிடம் உண்மையைத் திரித்துக் கூறி, இந்திய மக்களுக்கு ஆத்திரம் உண்டாக்கி, முன்னரே உள்ள மக்களது மனஸ்தாபங்களுக்கு ஏன் தூபம் போடுகிறீர்கள்?" என்று கேட்டார் அந்த உதவி மேயர் நமது கவியரசியை நோக்கி!
இவ்வாறு அந்த உதவி மேயர் ஏன் பேசினார்? அதுவும் கவிக்குயிலை நேராகவே வைத்துக்கொண்டு முகத்துக்கு முகமாக, தலைமை உரையில் பேசும் போது குறிப்பிட்டது ஏன்?
வெள்ளையர்கள் பொய்ப்பிரச்சாரம் என்ற கற்கோட்டையைச் இரும்புச் சம்மட்டிகளைக் கொண்டு உடைத்துத் தகர்த்துக் கொண்டு வரும் கவியரசியைப் பார்த்துக் கேட்ட கேள்வி. மக்கள் இடையே ஒரு சலசலப்பு ஓசை எழுப்பிக் கொண்டு இருந்தது.
சமத்துவம் என்ற சொல்லுக்குரிய பொருளைக் கேட்பது போலக் கேட்டது ஏன்? இந்த சொல்லுக்கு, நமது கவிக்குயிலுக்குப் பொருள் தெரியாதா என்ன? கேட்டவருக்கும் இது புரியாதா என்ன? பிறகு ஏன் அப்படிக் கேட்டார்-பொருள்?
சிறப்புக் கூட்டத்திலே என்ன பேசலாம் என்று சரோஜினி நினைத்திருந்தாரோ அந்த நினைப்பைச் சீர்குலைத்து, அவரது எண்ணங்களைத் திசை திருப்பி, சொல் மயக்கம் உண்டாக்கி, தேவியின் பிரச்சாரத்தை உருக்குலைத்து ஏதோ ஒரு கெட்டப் பெயரை உண்டாக்கவே, அந்த உதவி மேயர் தமது கவிக்குயிலைப் பார்த்துக் கேள்வி கேட்டிருக்கிறார்!
முடியுமா அவர் சூழ்ச்சி இந்தியப் பெண் சிங்கமான தமது சரோஜினி தேவியிடம்? எரிமலை போல வீறிட்டு வெடித்து எழுந்தார். எரி குழம்புகள் போன்ற கருத்துக்களை அந்த வீரிய வெடிப்பு கொட்டிக் கொண்டே இருந்தது. இதோ அதிலுள்ள மணிகள்.
"தலைவர் அவர்களே! சமத்துவம் என்ற சொல்லை விளக்குமாறு கேட்கிறீர்கள்; கற்பனைச் சிறகுகளால் எங்கோ பறந்து சென்று விவாத விஷயத்தின் அடிப் படையை முழுவதுமாகவே மறந்து விட்டீர்கள்!"
'எளியவர்களுக்கும் இரவலர்களுக்கும் உதவ வேண்டியது அவசியம் என்பதை நான் மறுக்கவில்லையே! ஆனால், அதற்கும் சுதந்திரம் வேண்டாமா?
கை, கால்கள் கட்டப்பட்டவர்களிடம் பிறருக்கு உதவி செய் என்றால், அவர்களால் முடியுமா? தண்ணீர் தாகத்துடன் வந்தவர்களுக்கு ஒரு கோப்பை நீரும் தர முடியாத வேதனை நிலையில் இந்திய மக்களை உருவாக்கி விட்டு, நீங்கள் என்ன பரோபகாரம் செய்கிறீர்கள்? என்று கேட்கலாமா?
'அவ்வாறு கேட்பதானது ஒரு கேள்விக்குள் மறு கேள்வியை மூடி மறைத்து வைத்துக் கொண்டு கேட்கும் அநீதிச் செயல்களேயாகும். தலைவர் அவர்களே! உமக்கு இது தெரியாதா? புரிந்தும் புரியாதது போல் கேட்டவரே, இதோ அதற்குப் பதில்,
'பரோபகாரம் செய்யும் சூழ்நிலையை பிரிட்டிஷ் அரசு இந்தியருக்கு தர மறுத்துள்ளது. இரண்டாவதாக இந்தியர்களை அடிமைப்படுத்தியதற்காக வெட்கப்பட வேண்டிய வெள்ளைக்காரர்களே!'
'தங்களுடைய ஆட்சியால் ஏற்பட்டுள்ள அலங்கோலங்களுக்கு இந்தியர்கள் தான் பொறுப்பாளிகள் என்று குற்றம் சாட்டுவது பொருத்தமற்ற பேச்சாகும்.
சுதந்திரம் இல்லாமல் சமத்துவம் இல்லை. ஐரோப்பியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளும் சலுகைகளும் இந்தியர்களுக்கு தரப்பட வேண்டாமா? அவற்றைக் கேட்பது எப்படித் தவறாகும்?
உலகத்தின் அறிவுக் கதிராகவும், ஆன்மிகத்துக்குச் செவிலித் தாயாகவும் விளங்கும் இந்தியாவிடம் இருந்துதான், ஐரோப்பியர்கள் பரோபகாரச் சேவைகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமே தவிர, பிறரிடம் இருந்து அல்ல.
உலகம் உயர்வடைவதற்காக உன்னதமான அளவிட முடியாத தியாகங்களைச் செய்துள்ள மகாத்மாக்களை ஈன்ற இந்தியா, நிறவெறி கொண்ட தென்னாப்பிரிக்க வெள்ளையரிடமிருந்து எதுவும் கற்க வேண்டிய தேவை அவசியமில்லை என்றார் தேவி.
கூட்டத்துக்குத் தலைமை வகித்த வெள்ளைக்கார உதவி மேயர் ஊமையரானார்! மக்கள் தேவி பேச்சைக் கேட்டு ஆரவாரமிட்டு குரல் எழுப்பினார்கள்.
தென்னாப்பிரிக்காவின் முடிசூடா மன்னராக இருந்தவர் பிரதமர் ஜெனரல் ஸ்மட்ஸ்! இவர் சிறந்த அரசியல்வாதி மட்டுமன்று; ராஜதந்திரியும் கூட!
இந்த மனிதர்தான் மகாத்மா காந்தியடிகள் சிறை வாழ்வுக்கு முதன்முதலில் அடிப்படை அமைத்து சிறையில் பூட்டியவர் இருந்தாலும், காந்தியடிகளின் நண்பராகவே கடைசி வரை இருந்தார்!
அத்தகைய சிறந்த ஓர் அற்புத அரசியல்வாதியான ஜெனரல் ஸ்மட்சுக்கும், இனவெறி எரிச்சல் ஏற்பட்டதால் கவியரசி சரோஜினி தேவியுடன் நேருக்கு நேராக வாக்கு வாதம் செய்திட ஒரு வாக்குப்போரே தொடுத்துவிட்டார்.
கவிக்குயில் சரோஜினி தேவி அவர்களே! சுயராஜ்யம் என்றால் என்ன? இந்தியாவில் எண்ண முடியாத ஜாதி பேதங்களையும்-உயர்வு தாழ்வுகளையும், தீண்டாமையையும் வைத்துக் கொண்டு, தென்னாப்பிரிக்காவுக்கு வந்து சமத்துவம் பற்றிப் பேசிட எப்படித் துணிவு பெற்றீர்?" என்று சிரித்துக் கொண்டே பிரதமர் ஸ்மட்ஸ் சரோஜினி தேவியைக் கேட்டார்.
அதற்கு நமது கவிக்குயில் பதில் கூறியபோது; "இந்தியாவில் உள்ள ஜாதி, சமூக பேதங்களை விட நூறு ஆயிரம், மடங்கு மிகுதியான நிறபேத உணர்ச்சியும், ஆங்காரமும் ஐரோப்பியரிடம் காணப்படவில்லையா?"
வேற்றுமைகளை எல்லாம் களைய எங்கள் தேசியவாதிகளும், சீர்திருத்தச் செம்மல்களும் அயராது உழைக்கின்றார்கள். அதே நேரத்தில் பிரதமர் ஸ்மட்ஸ் கேட்ட "சுயராஜ்யம் என்றால் என்ன?" என்பதற்கும் தான் விளக்கம் தருகிறேன்:
"நிர்வாகத்தின் பொறுப்பு முழுவதையும் ஏற்பதும், அயல் நாட்டுக் கொள்கையை வகுப்பதும் அயல்நாடுகளுடன் ராஜதந்திர உறவு கொள்வதும், போரைப் பற்றியும், அமைதியைப் பற்றியும் தீர்மானிப்பதுமான சுயராஜ்ய அதிகாரங்களை எல்லாம் மக்கள் அடைவதற்கு இந்தியா பணியாற்றிட உறுதி பூண்டுள்ளது.
இந்தியாவிலும், இந்தியர் குடியேறியுள்ள நாடுகளிலும் இந்த உரிமையைத்தான் இந்தியர்கள் வெள்ளையர்களைக் கேட்கிறார்கள் அவற்றை எம் மக்கள் அடையத்தான் போகிறார்கள் அதுதான் சுதந்திரம்; சுயராஜ்யம்; விடுதலை புரிகிறதா பிரதமர் அவர்களே!
வெள்ளைக்காரர்கள் இந்தியர்களை கூலிகள் என்றே அழைக்கிறார்கள்; அது பெரிய இந்தியச் கோடீஸ்வரனாக இருந்தாலும் இங்கே அவனும் "கூலி" தான்! இந்தியர்களை இவ்வாது இளப்பமாக பேசிய இனத் திமிருக்குச் சரோஜினி தேவி பலரறிய அங்கே கசையடி கொடுத்தார்!
"இந்தியரை வெள்ளையர்கள் கூலிகள் என்கிறார்கள். கூலிகள் என்றால் பொருள் என்னவென்று ஐரோப்பியர்களுக்குத் தெரியாதா? அவர்களுக்காக நான் இப்போது அதை விளக்குகிறேன். அவர்களுக்கும் பொருள் புரிந்து விட்டால் பிறகு 'கூலிகள்' என்று இந்தியரை அழைக்க மாட்டார்கள் அல்லவா?
பிரதமர் அவர்களே! நான் கூறுகிறேன் பிரிட்டிஷ் ராஜ்யமே ஒரு கூலிகள் ராஜ்யம்தான்! இன்று பிரிட்டனை ஆட்சி புரிவோரும் கூலிகளே! இன்று தொழிற்கட்சியாளர்கள் தானே அரசு புரிகிறார்கள்? அவர்கள் தொழிலுக்குக் கூலி பெறாமலா, இலவசமாகவா தர்ம சேவைகளா செய்கிறார்கள் என்று கேட்கிறேன்! கூறமுடியுமா பதில்?
தென்னாப்பிரிக்காவின் சர்வாதிகாரியான ஜெனரல் ல்மட்ஸ், இங்கிலாநதின் குடியேற்ற நாட்டு மந்திரியான 'கூலி' மிஸ்டர் தாமசின் கட்டளைக்குக் கீழ்படிகிறார்; ஆகையால் என் சகோதரர்களை ஐரோப்பியர்கள் கூலிகள்" என்னும் அந்தப் பெயர் இங்கிலாந்து ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு மிகப் பொருத்தமானது.
எதிரிகளின் ஆயுதத்தைப் பறித்து, அதனாலேயே அவர்களை அடித்து வீழ்த்துவது சிறப்பான ஒரு போர்க்கள வியூகம் இல்லையா! அத்னையே கவியரசி சரோஜினி தேவி அன்று ஜெனரல் ஸ்மிட்ஸ் முகம் தொங்கும்படி ஆணித்தரமாகப் பதில் கூறினார்.
பிரதமர் ஜெனரல் ஸ்மட்சுடன் நடைபெறும் வாக்குப் போரை மக்கள் ஆரவாரமாக வரவேற்றுக் கையொலிகளை எழுப்பிக் கொண்டே இருந்தார்கள்!
கவிக்குயிலின் கடுமையான சொற்பிரயோக வாக்குப் போரைக் கேட்ட மற்ற ஆங்கிலேய அதிகாரிகள், அன்று முதல் இந்தியர்களைக் கூலிகள் என்று அழைக்கவே கூச்சப்பட்டார்கள் நிறுத்திக் கொண்டார்கள்!
தென்னாப்ரிக்காவில் இவ்வாறு கடும் மேடைக்களம் கண்டு வரும் கவியரசியின் சம்பவங்கள் ஒவ்வொன்றும் அன்றாடம் காந்தியடிகள் காதுக்கு எட்டின. நாயுடுவின் இந்த வீரவுரைப் பேச்சுக்கள் தென்னாப்ரிக்காவில் மட்டுமன்று; இந்திய மக்கள் இடையேயும் வீர உணர்ச்சிகளை எழுப்பியபடியே இருந்தன. ஆனால், வாக்குப் போர் தொடுத்த ஸ்மட்சும், வழக்குத் தொடுப்பேன் என்ற ஆங்கில சென்னை அரசும், ‘மன்னிப்புக்கேள்’ என்று மருள் வாதமிட்ட மந்திரி மாண்டேகும் வெகுண்டு போனார்கள்; வெகுண்டார்கள்.
கவியரசி சரோஜினி நாயுடு தனது உலகச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா வந்தார். கூற வேண்டுமா எப்படிப்பட்ட வரவேற்பு பெற்றிருப்பார் என்று; அப்பப்பா... பம்பாய் மாநகரில் அவர் மாபெரும் வரவேற்பைப் பெற்றார்; கவியரசியும் அதை ஏற்றார்.
பெல்ஹாம் நகரில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை கூடியது, தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் அந்த மகாசயை மாநாட்டில் கலந்து கொண்டு மாபெரும் மகிழ்ச்சி பெற்றார்கள், டாக்டர் அப்துல்ரஹ்மான் என்பவர் தென்னாப்பிரிக்கா மகாசபை அணிக்குத் தலைமை வகித்து கலந்து கொண்டார்.
அந்த அணிக்கு தலைமை வகித்த ரஹ்மான் மகா சபையில் பேசும் போது:
"தென்னாப்பிரிக்க இந்தியராகிய நாங்கள் உங்களுக்கு மகாத்மா காந்தியடிகளைக் கொடுத்துள்ளோம், அவருக்கு நிகராக விளங்கும் சரோஜினி தேவியாரை எங்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும், ஆனால், மறுப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.
இந்தியாவின் மாதர்குல விளக்காகவும், பெண்கள் விழிப்புணர்ச்சிகளுக்கு வித்தாகவும் விளங்கும் சரோஜினி தேவியார் இந்திய மக்களிடையே ஓர் அரசியல் எழுச்சியை உருவாக்கி வருகிறார். அவர் உங்களுக்கு மிகவும் தேவையானவர் என்பதை நான் அறிவேன்.
தென்னாப்பிரிக்காவில் அவர் பேசிய பேச்சுக்கள் ஆற்றிய பணிகள் எங்களை மிகவும் கவந்து விட்டன. தேவியாரை அழைத்துச் செல்வதே எங்கள் வருகையின் நோக்கம்.
தேவியாரின் திருவுருவப் படம் ஒன்றை நேற்று நான் மகாசபைக்கு பரிசாக வழங்கினேன், அழகான அந்தப் படத்தை வைத்துக் கொள்ளுங்கள், தேவியாரை மட்டும் எங்களோடு தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்லுகிறோம்! என்று அவர் பேசினார்.
இந்த உரை ஒன்றே போதும் அல்லவா தேவியார் தென்னாப்பிரிக்காவில் எவ்வளவு கடுமையாக இந்தியர்கள் உரிமைக்கு போராடினார் என்பதை இந்தியா உணர்ந்திட!
பெல்காம் காங்கிரஸ் மகாசபை, சரோஜினி நாயுடு தென்னாப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் ஆற்றிய அரிய பணிகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றி மகிழ்ச்சி கொண்டது.
காங்கிரஸ் மகாசபை மாநாடு முடிந்ததும், சரோஜினி தேவியார் மீண்டும் வழக்கம் போல, தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் மாநாட்டுக் கருத்துக்களைப் பேசி, இளைஞர்களை வீறு கொள்ளச் செய்தார்! மக்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
13. கான்பூர் காங்கிரஸ் சரோஜினிதேவி தலைவர்
சரோஜினிதேவி காங்கிரஸ் மகாசபை பிரச்சாரத்துக்காக அவர் செல்லாத இடமில்லை; அவர் பேசாத அயல் நாட்டுக் கூட்டங்கள் இல்லை; அவரைப் பாராட்டாத தலைவர் இல்லை; என்ற அளவில், அவர் பல ஆண்டுகளாக உலகத்தைச் சுற்றிச் சுற்றிப் பிரசாரம் செய்தார்.
அப்படிப்பட்ட ஒரு தலைவரை, ஆற்றல் மிக்க வீராங்கனையை, பெண் சிங்கச் சேவையைப் பாராட்டிப் பெருமைப் படுத்திட இந்தியாவும், அகில இந்திய காங்கிரசு மகாசபையும் விரும்பியது.
தொடக்கக்காலம் முதல் சரோஜினிநாயுடு தாய்க்குல முன்னேற்றத்துக்காகக் கடுமையாக உழைத்தவர். அப்படிபட்டவரை மக்களும், மகாசபையும் 1925-ம் ஆண்டு கான்பூரில் நடந்த அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபைக்குத் தலைவராக்கிப் பெருமை பெற்றது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து பல சாதனைகளைச் செய்து, அங்குள்ள இந்தியர்களுக்கு பெருமையை, உரிமையை, தனி மனித சுதந்திரத்தைப் புதையலாக்கிக் கொடுத்து விட்டு, 1913-ம் ஆண்டு இந்தியா வந்த காந்தியடிகள், இங்கும் உண்ணாவிரதம் சத்தியாக்கிரகம், கிளர்ச்சி, போராட்டம் போன்ற ஆக்கப்பணிகளிலே அயராது, ஓய்வு ஒழிச்சலின்றி ஈடுபட்டு, உருவாக்கி மக்களை வேலை வாங்கிக்கொண்டே இருந்தார்.
அத்தகைய மகாத்மாவை வெள்ளை அரசு புறக்கணித்தாலும், அந்த மகானை மாபெரும் அரசியல் ஞானியாவே இந்தியத் தலைவர்கள் ஏற்று இவருடைய தலைமையின் கீழ் பணியாற்றிப் பெருமை பெற்று வந்தார்கள்.
எப்போது சுதந்திரம் பெறுவோம், எப்படிப்பட்ட அறப்போர்களைச் செய்தால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்ற எண்ணங்களே மக்களிடையே ஓங்கி வளர்ந்து வந்திருந்தன. இதற்கான திட்டங்கள் என்ன என்பதை வரையறுக்கவே கவிக்குயில் சரோஜினிதேவி தலைமையில் காங்கிரஸ் மகாசபை கான்பூர் நகரில் கூடியது.
சரோஜினி தேவி தனது தலைமை உரையிலே பேசும்போது:
"நாடு விடுதலை பெற வேண்டும் என்பதிலே நமக்குள் எந்தவிதக் கருத்து வேறுபாடும் கிடையாது ஆனால், விடுதலைப் பாராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளைக் கண்டு அச்சப் படவோ, அஞ்சவோ கூடாது. அப்படி பயத்து செத்தால், அவர்கள் மன்னிப்பே வழங்கப்பட முடியாத மாபெரும் துரோகம் செய்தவர்கள் ஆவார்கள்.
நாட்டின் விடுதலைக்காக தாம் செய்ய வேண்டிய தியாகம் என்ன? அதற்காகக் கடக்கவேண்டிய தூரம் எவ்வளவு? என்றெல்லாம் சுதந்திரக் கணக்கை போட்டு மனக்களைப்பும், சோர்வும் கொள்வது ஒரு விடுதலைக் போராட்டதுக்கு அழகாகாது.
அச்சத்தை அகற்ற வேண்டும், அயர்வைத் தூக்கி எறிய வேண்டும்; நம்பிக்கை நமக்கு உடல் நரம்பாக அமைய வேண்டும். துணிவே துணை என்ற மந்திரத்தைச் சதா சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். தமக்குள் ஒற்றுமை உருவாக வேண்டும்; எல்லோரும் சகோதரர்களே என்ற எண்ணம் எழுச்சிப் பெற்றால், நாம் ஒரு புதிய மகத்தான் சக்தியைத் தோற்றுவித்தவர்கள் ஆவோம்!
வெளிநாடுகளில் உள்ள நமது இந்தியர்களும் நாமும் ஒன்றுபட்டு நமக்குப் பூட்டப்பட்ட அடிமைச் சங்கிலியின் ஒவ்வொரு இரும்பு வளையத்தையும் நொறுக்கி உடைத்தாக வேண்டும்.
பெருமைக்குரிய தமது பாரதமாதா காங்கிரஸ் கொடியை ஊர்தோறும் உயர்த்திப் பிடித்து, அதற்கான கொள்கைப் பிரச்சாரங்களைச் செய்யவேண்டும். மக்களை மகாசபை உறுப்பினர்களாக்க தாம் அயராது உழைத்தாக வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை ஏந்துவேன் காங்கிரஸ் கொடியை உயர்த்திப் பிடித்து படை நடை போடுவேன்; கொடியைத் தாழ்த்தமாட்டேன். மற்றவர் தாழ்த்தினாலும் பொறுக்க மாட்டேன். வீரசுதந்திரம் பெறும் வரை ஓய மாட்டேன். என்னைப்போல நீங்களும் ஊர்தோறும் ஏறுநடை வீறுடன் செயலாற்றுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
தாய்மார்களே! வீட்டுப்பணிகளை திறமையாகச் செய்பவர்கள் நீங்கள் நம் நாட்டுப் பணியையும் தீவிரமாகச் செய்திட முன்வந்தாக வேண்டும். இந்தியாவின் மூலப் பொருள்களையும், மூலதனங்களையும் காப்பாற்றும் உரிமை தமக்கு வேண்டாமா?
பாரதமாதாவின் பக்தி மிக்கப் புதல்வி என்ற முறையில், எல்லாப் பணிகளையும், அவை எவ்வளவு கடினமானவையாக இருப்பினும் கடுமையாகச் செய்து காட்டுவேன்! மகாசபை அன்பர்களிடம் பேசி கட்சிப் பூசல்கள் என்ற வேரை அறுப்பேன்.
பிரிவினையாகாத ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை போல் ஒன்றுபட்டு, பகைவிட்டு பசுமையாக வாழவேண்டி நாம், நமக்குள்ளே சாதிப்பகைகளையும், மதப்பகைகளையும், மறந்தும் மூளவிடவேண்டாம். என்று கேட்டுக் கொள்கிறேன்.
காந்தியடிகள் நமக்கு மகான். அவர் காட்டும் வழியில் நடப்போம். வலியவரும் மெலியவரும், நலிந்தவரும் நயந்தவரும் சரிநிகர்ச் சமானமாக வாழவேண்டும் என்ற புதுமுறையை, புனிதவழியை நமக்கு அண்ணல் காட்டுகிறார்.
சமத்துவம், சகோதரத்துவம், இந்தியாவிலே உள்ள மக்களுக்கு மட்டுமல்ல; இந்தியாவைத் தாய் நாடாக கொண்ட அயல்நாட்டு இந்தியர்களுக்கும் அந்த தத்துவங்கள் பயன்படப் பாடுபடவேண்டும் என்று மகாசபை மக்களை அழைக்கின்றேன்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முப்பெரும் ஜனநாயகத் தத்துவங்களை கவியரசி சரோஜின் தேவி எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கனவு கண்டார். சுதந்திரம் நமக்கு வந்து ஐம்பதாண்டுகள் ஆகின்றன. இன்னும் சரோஜினி அன்று கண்ட கனவு கனவாகவே கலையாமல் இருக்கின்றது.
14. சிறைக் கூண்டில் கவிக்குயில்
கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் தேசிய மகாசபை மாநாட்டிற்குக் கவிக்குயில் சரோஜினி தேவி தலைவராகப் பதவி ஏற்றதிலிருந்து, இந்தியாவின் விடுதலைக்கான செயல்களில் அயராது பாடுபட்டு உழைத்து வந்தார்.
காந்தியக் கருத்துக்களைச் சுமந்து கொண்டு அவரது பாடல்கள் ஒவ்வொன்றும் வெளிவந்துக் கொண்டிருத்தன. மக்கள் இடையே அந்தப் பாடல்கள் பரவி சரோஜினி தேவிக்குப் பெரும் புகழையும், செல்வாக்கையும் உண்டாக்கின.
இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிடரியைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில், அவருடைய கீதங்கள் அனைத்தும் தொகுத்தப் புத்தகங்களாக வெளிவந்தன!
மகாத்மா காந்தியடிகளுக்கு நாடெங்கும் புகழ் பெற்ற பல தளபதிகள் உருவானார்கள். அவர்களுள் ஒருவராக பெரும் புகழுடன் சரோஜினிதேவியும் விளங்கி வந்தார்.
அவருடைய கவிதை ஆவேசம், நாட்டு விடுதலைக்கான தேசபக்தி வெறிவேகம் பெரும் வெள்ளத்தைப் போல் பெருகியது. இந்த சிறப்பு நாடெங்கும் எதிரொலித்தது. மக்கள் எல்லோரும் எதற்கும் தயாரான நிலையிலே காத்துக்கிடந்தார்கள்:
"மோகன கிருஷ்ணன் இளம் வயதிலே வெண்ணெய் திருடினார்! மோகன்தாஸ் காந்தி உப்பைத் திருடினார்! என்ற கருத்துள்ள பாடல் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.
1930-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ம் நாள், காந்தியடிகள் உலகப் பிரசித்தி பெற்ற உப்புப் போராட்டத்தை தண்டி என்ற இடத்திலே தொடங்கினார். அவரைப் பின்பற்றித் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் சென்றார்கள்.
இந்த உப்புப் போராட்டம் இருபத்து நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன; காந்தியடிகளும்-தொண்டர்களும் சரோஜினி தேவி எழுதியப் பாடல்களைப் பாடிக் கொண்டே (Marching song) பஜனை கோஷ்டிகளைப் போல நடந்தார்கள்.
காந்தியடிகள் தண்டியில் எடுத்ததோ ஒருபிடி உப்பு தான்! அந்தப் பிடி உப்புப்போர் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. இப்படி ஒரு அறப்போராட்டமா? இதுவரை எவரும் எந்த நாட்டிலும் உப்பு சப்பு இல்லாத ஒரு உப்புப் போராட்டத்தை, ஓர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துச் செய்தது இல்லையே என்று மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
நாடெங்கும் உள்ள மக்கள் ஆங்கிலேயர் ஆட்சி விதித்த உப்புச் சட்டத்தைத் தூள் தூளாக்கினார்கள்; மக்கள் உத்வேகத்துடன் எழுச்சி பெற்று சட்டத்தை மீறினாலும், காந்தியடிகளின் கட்டளைக்குக் கீழ்படிந்து அரசு அடக்குமுறைகளுக்கு அடங்கியே நடந்து அமைதிக் காத்தார்கள்.
பம்பாய் பெருநகரிலே உள்ள தர்சனா என்ற இடத்தின் உப்பளத்தைக் கைப்பற்ற போவதாக மகாத்மா காந்தி ஆங்கிலேயர் ஆட்சிக்கு அறிவித்தார். அப்போது உடனே அவர் கைது செய்யப்பட்டார்; சிறையில் அடைக்கப்பட்டார்.
காந்தியடிகளின் அறப்போராட்ட உத்தரவுக்கு ஏற்றவாறு, சரோஜினி தேவியும், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பின் தொடர தர்சனா உப்பளத்தை நோக்கிச் சென்றார்.
போகும் வழியிலேயே கவிக்குயிலும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டு, எரவாடா என்ற ஊரிலே உள்ள சிறையிலே அவர்களை ஆங்கிலேயர் அரசு அடைத்தது.
சிறையிலே பூட்டப்பட்ட சரோஜினி, மேலும் பல கவிதைகளை, முன்னைவிட அதிக உத்வேகத்துடன் எழுதினார். சிறையிலே தனது உணவு விடுதி அருகிலேயே அங்குள்ள மண்ணைப் பண்படுத்திப் பூச்செடிகளை வளர்த்தார்.
சிறை அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல், அவரது கவிதை உள்ளத்துக்கு ஏற்றவாது அனுமதித்தார்கள்; அதனால், விதவிதமான மலர்ச் செடிகளை கவியரசி அங்கே பயிரிட்டு வளர்த்தார்.
கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் பிரிந்திருந்த துன்பத்தை மறந்தார்! சிறைவாசமே சுகவாசமாக மதித்து, பூத்துக் குலுங்கும் பூக்களின் வண்ண நிறங்களையும் அதன் மணங்களையும் சுவாசித்து, சரோஜினி தேவி நாள்தோறும் மகிழ்ச்சி அடைந்தார்
அந்த மலர்களின் மனத்திற்கு நாட்டு நிலையை ஒப்பிட்டுக் கவிதைகளை எழுதிக் கொண்டே இருந்தார். அவர் எழுதிய பாடல்களிலே ஒன்று இது:
“செவ்வண்ண பூக்களே! உங்களுடைய அழகான நிறத்துக்கு நிகராக எதை நான் ஒப்பிடுவேன். மணமகள் ஒருத்தி அணியும் ஆடைகளை ஒப்பிடுவதா? உங்களது நிறம் நாகமணிக்கு ஒப்பானவையா?”
"காலையில் உதயமாகும் சூரியனுக்கு முன்னே காட்சி தரும் கோலக்கடலின் ஒளிச் சிதறல்களுக்கு இணையானவை உங்களது நிறங்கள் என்பதா!"
"அழகரசி பத்மினிக்காகப் போரிட்டு மடிந்த அரசர்களின் மார்பிலே இருந்து வடிந்த ரத்த நிறத்தை ஈடு சொல்வதா! உவமையே உரைக்க முடியாத வண்ணத்தோடு பூத்துக்குலுங்கும் உங்களை எதற்கு ஒப்பிடுவது!" என்று வியந்து வியந்து கவிதைகளை எழுதினார்!
செண்பகமலரே! உனது இதழ்கள் அழகானவை; நீண்ட தூரம் மணத்தை வீசி அனைவருக்கும் நீ இன்பம் அளிக்கிறாயே! பெண்கள் உன்னைத் தலையில் சூட்டி, பிறகு மண்ணிலே மறைக்கின்றாயே; அது போலத்தான் மக்களது புகழும்-பெயரும் ஒரு நாள் மறைந்து விடுமோ!
செண்பக மலர் என்றதுமே. இன்பத்தேன் வந்து காதில் பாய்கிறதே. அது எத்துணை இன்பம் அளிக்கின்றது தெரியுமா! எவ்வனவு விரைவாக மலர்கிறீர்கள்! பிறகு எவ்வளவு விரைவாக வாடி விடுகிறீர்கள்?
மாம்பூ ஒன்று மலர்ந்து உதிர்ந்த விட்டாலும், பிறகு காயும் கனியும் தோன்றக் காரணமாகின்றதே! ஆனால், செண்பகமே! நீ அவ்வாறு எதனையும் தோற்றுவிப்பதில்லையே! என்றாலும், உன்னைப் பாடாமல் இருக்க முடியவில்லையே! இது நீங்கள் இழைத்த புண்ணியத்தின் பயனோ!" என்று கவியரசி ஒரு செண்பகப் பூவைக் கையிலே எடுத்து வைத்துக் கொண்டு; அதன் நிற அழகோடு கொஞ்சி மகிழ்வார்! இவ்வாறே ஒவ்வொரு பூவையும் பார்த்துப் பார்த்துப் பாடல் புனைந்திட மலர்களின் மலர்ச்சியிலே கரு பெறுவார் சரோஜினி தேவி!
கவிக்குயில் சிறைவாசம் சிறிது நாட்கள் இவ்வாறே நகர்ந்தன! விடுதலை நாளும் வந்தது! தான் வளர்த்த பூஞ்செடிகளையும் அதனதன் வண்ண வண்ணப் பூக்களையும் விட்டு விட்டுப் பிரிய மனமில்லாதவராக அவர் இருந்தார்.
சிறை அதிகாரிகளிடம் தனது விடுதலை நாளை மேலும் ஒரு வாரம் தள்ளித் தாமதமாகப் போடும்படிக் கேட்டுக் கொண்டார்! அதிகாரிகளும் பெண் கைதியின் வேண்டுகோளை ஏற்று அனுமதியும் அளித்தார்கள்! சரோஜினி தேவி வைத்த செடிகள் எல்லாமே மலர்ந்தன பிறகு, சரோஜினி தேவி ஒரு வாரம் கழித்து சிறையிலே இருந்து விடுதலையானார்!
சிறை மீண்ட கவியரசி, வெளியே வந்ததும் 1930-ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் மகாசபையின் செயற்குழு உறுப்பினர் ஆனார்! தனது பணியை எவ்விதத் தடையுமின்றி வேகமாகவும், பொறுப்பாகவும், உடனுக்குடனும், சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறும் நாட்டுக்காக உழைத்தார்; காந்தியடிகளின் தலைமையிலே இரவு பகல் பாராமல் ஓய்வின்றி சரோஜினி நாயுடு அரும்பாடுபட்டார்!
15. வெள்ளையனே வெளியேற போர்! சரோஜினி கைது!
இரண்டாவது உலகப்போர் 1989-ம் ஆண்டு ஆரம்பமானது. ஏதேச்சாதிகார ஆணவத்தால் பிரிட்டிஷ் பேரரசு காந்தியடிகளையும் கேளாமல், காங்கிரஸ் கட்சியையும் அழைத்துப் பேசாமல், காங்கிரஸ் கட்சி அமைத்துள்ள அமைச்சரவைகளையும் கலந்து ஆலோசியாமல், இந்தியாவையும் போரில் ஈடுபடுத்தி விட்டார்.
இந்த சர்வாதிகார அகம்பாவப் போக்கினை எதிர்த்துக் காங்கிரஸ் அமைச்சரவைகள் தங்களது மந்திரி சபைகளைக் கலைத்துப் பதவிகளைத் துறந்தன. பிரிட்டிஷாரின் இந்த எஜமானப்போக்கு மக்களுக்குக் கோபத்தையும் கொதிப்பையும் உருவாக்கிற்று!
காந்தியடிகள் அதனால் பேச்சுரிமைப் போராட்டத்தை 1940-ம் ஆண்டு துவக்கினார். வெள்ளைக்காரர்களின் இந்த தான்தோன்றித்தனத்தை விளக்கி நாடெங்கும் பொதுக் கூட்டங்களை நடத்தும்படி அவர் ஆணையிட்டார்.
இந்த பேச்சுரிமைக்கு அரசு தடை போட்டால், வீதிக்கு வீதி, சந்துக்கு சந்து, கிராமத்துக்கு கிராமமாக கூட்டம் நடத்தாமல், தனி நபர்கள் ஆங்காங்கே சென்று வெள்ளைக்காரர்களின் கொடுங்கோல் ஆநியாயங்களை எதிர்த்து மக்களிடம் விளக்குங்கள் என்று உத்தரவிட்டார்.
இந்தப் போராட்டத்திற்கு அகிம்சை அண்ணல் தனி நபர் சத்தியாக்கிரகம் என்று பெயரிட்டார். இந்த தனி நபர் பேச்சுரிமைப் போரை வினோபயோவே, ஜவஹர்லால் நேரு போன்றவர்களைத் தலைமையேற்று நடத்துமாறு காந்தியடிகள் கேட்டுக் கொண்டார்.
கவியரசி சரோஜினி தேவி இந்த தனிநபர் இயக்கத்தை திட்டமிட்டு ஆங்காங்கே நடத்திடப் பணிபுரிந்தார்! அவரது முயற்சி இயக்கத்தின் வேகத்தை மென்மேலும் தீவிரமாக்கியது.
சத்தியாக்கிரம் செய்து மீண்டும் சிறையேகினார்! சிறை புகுந்த சரோஜினி தேவிக்கு மேலும் உடல்நலம் சீர்குலைந்தது; பிரிட்டிஷ் அரசு அவரை உடனே சிறையிலே இருந்து விடுவித்து விட்டது.
சத்தியாக்கிரகப் போராளிகள் எல்லாரும் சிறையிலே மெலிந்து, நலிந்து, குலைந்து, வாடும் போது, தாம் மட்டும் வெளியே இருப்பதா என்று நினைத்தக் கவிக்குவில் மீண்டும் சத்தியாக்கிரக அறப்போரிலே கலந்து சிறைப்புகத் திட்டமிட்டார். காந்தியடிகள் அம்மையாரைத் தடுத்து நிறுத்தி, ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு பணித்தார்.
தலைவர் உத்தரவுக்கு ஏற்ப, சிறைபுகும் எண்ணத்தைக் கைவிட்டார் நாயுடு. அதனால், வெளியிலே இருந்தவாறு, தொண்டர்களுக்கு ஊக்கமூட்டிப் போராட்டத்தை நடத்திடும் தூண்டுகோலாகவே அவர் செயல்பட்டார்.
அப்போது இந்தியருடன் சமரசப் பேச்சை நடத்திட இங்கிலாந்திலே இருந்து ஸ்டாப் போர்டு கிரிப்ஸ் என்பவர் 1942ம் ஆண்டு துவக்கத்தில் இந்தியா வந்தார். தலைவர்களை விடுதலை செய்யுமாறும், அவர்களுடன் கலந்துரையாடிக் கருத்தறிய வேண்டும் என்றும் கிரிப்ஸ் வந்ததை அறிந்த வெள்ளையர் ஆட்சி காங்கிரஸ் தலைவர்களை சிறையினின்று விடுதலை செய்தது.
ஸ்டாப்ஃபோர்டு கிரிப்ஸ் திட்டத்தைக் காந்தியடிகள் நிராகரித்தார்! கிரிப்ஸ் தூது தோல்வி கண்டதால், பிரிட்டிஷார் எரிச்சல் அடைந்தார்கள் அடுத்த அடக்குமுறைத் திட்டத்தை எப்படி உருவாக்கலாம் என்று யோசனை செய்து கொண்டே இருந்தார்கள்.
அரசியல் நிலமைகளையும், போர்க்காலச் சூழல்களது போக்கையும் கண்ட அகிம்சா மூர்த்தி காந்திமகான், இது தான் தக்க சமயம் என்று எண்ணி 'Quit India' வெள்ளையனே வெளியேறு, 'பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே வெளியேறு' என்ற போராட்டத்தைத் துவக்கத் திட்டமிட்டார்.
அகில இந்திய காங்கிரஸ் க்ட்சி 1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் நாள் பம்பாய் மாநகரில் கூடி, "ஹரிஜன்" பத்திரிகையிலே மகாத்மா எழுதிய அரசியல் கிளர்ச்சித் திட்டத்தைத் தீர்மானமாக நிறைவேற்றியது.
அந்தத் தீர்மானம் தான் 'க்விட் இண்டியா' என்ற வெள்ளையனே வெளியேறு' தீர்மானமாகும். காந்தியடிகள் இந்தத் தீர்மானத்தின் மீது பேசும்போது, 'இது தான் எனது இறுதிப் போராட்டம் என்று போர்ப்பிரகடனமாக திட்டத்தை ஆதரித்தார்.
அவ்வளவுதான், மறுநாள் விடியல் நேரம்; புலராத பொழுது; அதிகாலை பொழுது காந்தி பெருமானும், பல முக்கிய தலைவர்களும், சரோஜினி தேவியும் கைது செய்யப்பட்டு, பலாத்காரமாக சிறையில் அடைக்கப்பட்டார்கள்! மக்களும் நாடெங்கும் தீப்பொறி பறக்கும் காற்றுபோல முக்கிய நகரங்களிலே வந்து சூழ்ந்து கொண்டார்கள்.
மறுநாள் தலைவர்கள் எல்லாரும் கைது செய்யப்பட்டார்கள் என்ற செய்தி காட்டுத் தீபோல நாடெங்கும் பரவியது. இதனைக் கேள்விப்பட்ட மக்கள் ஆங்காங்கே கூடினார்கள். பெரும் புரட்சியாளர்களாக மாறிவிட்டார்கள்.
இரயில் வண்டிகளைக் கவிழ்த்தார்கள்; பெட்டிகளுக்குத் தீ வைத்தார்கள்; போலீஸ் நிலையங்களைத் தாக்கினார்கள். காவல் நிலயங்களும் எரிந்தன; தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இவற்றைப் பார்த்து சும்மாவா இருக்கும்? ராணுவத்தைக் கொண்டு வந்தது அரசு கடுமையான அடக்கமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது; துப்பாக்கி வேட்டுத் தர்பார் சர்வ சாதாரணமாக நடந்தன. போராட்டத்தை நடத்தும், அறிவாளர்களும், தலைவர்களும் சிறையிலே அடைத்து வைக்கப்பட்டதால், அதனை நடத்துவதற்கான தலைவர்கள் இல்லை; அதனால் ஆகஸ்ட் புரட்சி தணிந்தது!
16. இரத்த வெள்ளத்தில் வந்தது சுதந்திரம்!
இரண்டாம் உலகப் போர் 1945-ம் ஆண்டில் முடிவடைந்தது; நேச நாடுகள் வெற்றி பெற்றன. இரண்டு கூறுகளாகப் பிளவுபட்டிருந்த போர்க் கூட்டணி நாடுகளில் நேச நாடுகள் கூட்டணி மகிழ்ந்தன.
இந்தியாவின் வைசியராயாக வேவல் பிரபு வந்தார்; வந்தவுடனே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இந்தியத் தலைவர்களை எல்லாம் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
அப்போதுள்ள இந்திய மக்களின் மனக்குமுறல்களை நன்கு புரிந்து கொண்டார். என்ன செய்யலாம் இதற்குப் பரிகாரம் என்று சிந்தித்த வேவல் பிரபு, "இந்தியாவை இனிமேல் துப்பாக்கியால்தான் ஆள முடியும்" என்ற கருத்தை இங்கிலாந்து அரசுக்கு தெரிவித்து விட்டார்.
பிரிட்டிஷ் அரசாங்கமும் இதுவரை நடந்த அந்த இந்திய அரசியல் ரணக்களங்களைக் கண்டு, இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்து விடலாம் என்று கூறியது; ஆனால் இந்து-முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டால்தான் நல்லது என்பதைத் திட்டவட்டமாக அது முடிவு செய்தது!
முஸ்லிம் லீக்கின் தலைவரான முகமது அலி ஜின்னா காங்கிரஸ் மகாசபையில் இருந்தபோது தனிப்பெரும் செல்வாக்குடன் திகழ்ந்து வந்தார். பிறகு, முஸ்லிம் லீக் என்ற ஒரு கட்சியைத் துவக்கினார்; முஸ்லிம் மக்களுக்குத் தனி நாடு தேவை என்ற கோரிக்கையை எழுப்பிக் கொண்டிருந்தார்.
காந்தியடிகள் கூறிய எந்த யோசனைகளையும் ஜின்னர் கேட்கவில்லை; தனிநாடு என்ற மோகத்திலேயே மூழ்கிக் கிடந்தார்! அதனால்தான் பிரிட்டிஷாரும் இந்து-முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டும்; அப்படி ஒரு ஒற்றுமை உருவானால்தான் சுதந்திரம் வழங்க முடியும் என்ற நிபந்தனையை விதித்தார்கள்.
கவியரசி சரோஜினி தேவி ஜின்னாவுடன் பல ஆண்டுகள் பழகியவர்; காந்தியார் பேச்சு சுமூகமாக முடியவேண்டும் என்பதற்காக கவிக்குயிலும் அவரிடம் பல தடவைகள் பேசிப் பார்த்தார். ஆனால், ஜின்னாவும்-லீக்கும் பிடிவாதமாகவே இறுதிவரை இருந்தன.
சரோஜினி, இந்து-முஸ்லிம் ஒற்றுமைப் பற்றித் தெளிவான கருத்துடையவர். முகமதுஅலி சகோதரர்களுடனும் காந்தியடிகளுடனும், கிலாபாத் இயக்கத்தில் சேர்ந்து போராடியவர். கவிக்குயில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார் என்பதை இங்கே பார்ப்பது நல்லதல்லவா? இதோ ஒரு கூட்டத்தில் அவர் ஆற்றிய பேச்சின் ஒருபகுதி:
"உலக மதங்களில் முதன்முதலாக ஜனநாயகத்தின் உண்மையான தத்துவங்களைப் பகிரங்கமாகப் போதித்துக் காட்டிய பெரிய மதம் இஸ்லாம் ஒன்றே!"
மேல்நாட்டினர் ஏதோ தமது நாட்டில்தான் முதன் முதலாக ஜனநாயகம் தோன்றிவிட்டதாகப் பெருமையோடு பேசுகிறார்கள். ஆனால், அதுவல்ல உண்மை! ஜனநாயகம் என்பது பரந்த பொருளில் ஆசியாவின் ஒரு பகுதியான அரேபியா பாலைவனத்தில் தோன்றிய ஒரு தீர்க்கதரிசியால் உருவாக்கப்பட்ட ஒன்று!
இந்த தத்துவத்தை, பெருமைமிக்க அக்பர், சக்ரவர்த்தி இஸ்லாத்தின் ஜனநாயகத்தை, அதன் உண்மை வடிவத்தில் காட்டினார்; அவரைப் பின்பற்றியாவது எனது இந்து-முஸ்லிம் சகோதரர்கள் மனத்திற்கொண்டு ஒற்றுமையை வளர்க்கப் பாடுபட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்."
சரோஜினி இவ்வளவு கருத்துக்களைக் கூறியும் ஜின்னா அதை மதிக்கவில்லை; அதனால், இடைக்கால அரசு ஒன்று ஜவகர்லால் நேருவால் அமைக்கப்பட்டது. அதில் சேருமாறு நேரு ஜின்னாவை அழைத்தார்.
முதலில் அந்த அரசில் அங்கம் வகித்த ஜின்னா, இடையில் இடையூறு சில செய்தார்.
இந்தியாவுக்கு மவுண்ட் பேட்டன் பிரபு 1947-ம் ஆண்டு மார்ச் 21 அன்று வைசியராயாக வந்து பதவி ஏற்றார்; இந்தியாவை இரண்டு துண்டாக்கினார்; ஒன்றை இந்துஸ்தான் என்றார்; மற்றொன்றைப் பாகிஸ்தான் என்று அறிவித்தார்.
இந்த பிளவுகளுக்குப் பிறகு 1941-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர இந்தியா உதயமாயிற்று. பண்டித நேரு முதல் பிரதமரானார்.
நாட்டில் நடைபெற்ற கலவரங்களைக் கண்ட கவிக்குயில் காந்தியடிகளாரைப் போலவே, அவரும் கவலை அடைந்தார். நாடு எங்கு பார்த்தாலும் போர்க்கள இரத்த காடாகக் காட்சி தந்தது.
"இரத்தப் பலி இல்லாமல், சுதந்திர தேவியைப் பெற முடியாது”. என்று சுவாமி விவேகானந்தர் கூறிய வாக்கு உண்மையாகவே மாறிவிட்டது.
17. சரோஜினி தேவி கவர்னர் ஆனார்!
பாரதநாடு தனது அடிமைச் சங்கிலியை உடைத் தெறிந்து ஏகாதிபத்திய ஆட்சியிலே இருந்து இந்தியா விடுதலை பெற்றது; சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்று புகழ் பெற்ற வெள்ளையர்கள் ஆட்சியில் பாரதம் என்ற நாடு விடுதலை பெற்றுவிட்டது.
இந்தியா சுதந்திரம் பெற்றது என்னவோ உண்மை தான்; ஆனால் அந்த நாட்டை உலகம் போற்றும் ஜனநாயக நாடாக மாற்றவேண்டும் அல்லவா? அதனால் நாடு விடுதலைப் பெற்றும் தலைவர்களுக்கு ஓய்வே இல்லாமல் இருந்தது.
அந்தந்த மாகாண நிர்வாகப் பொறுப்பும் ஆக்க வேலைகளும் அவர்களுக்கு நெருக்கடி தந்து கொண்டிருந்தன. கவிக்குயில் சரோஜினி தேவி ஐக்கிய மாகாணக் கவர்னராகப் பொறுப்பேற்று பணியாற்றினார்.
மகாத்மா காந்தியின் அகிம்சா தத்தவமும், தேசப் பற்றும், மக்கள் சேவையும்தான், சரோஜினி தேவியை முழுநேர அரசியல்வாதியாக மாற்றியது.
மனிதத் தன்மைக்கு இலக்கணம் வகுத்துக் கொண்டு, மக்களை மீண்டும் மனித நேயத்துக்கு மீளுமாறு உழைத்து வந்த உத்தமப் பெருமானை, 1948 சனவரி 31ஆம் நாள் கோட்சே என்ற ஒரு இனவெறியன், மத விரோதி, சுட்டுக் கொன்றுவிட்டான்.
சரோஜினி தேவி காந்தியடிகளை ஆசானாக, அப்பாவாக, தலைவராக, வழிபட்டுத் தொண்டாற்றியவர்! குழந்தை போல காந்தியடிகளிடம் பழகியவர்; இருவரும் எப்போதும் நகைச்சுவை ததும்பவே பேசுவார்கள்.
மகாத்மா கருத்தை உலகுக்கு உணர்த்துவதில், பேசுவதில், எழுதுவதில் மிக வல்லவராக விளங்கியவர் சரோஜினி அதனால்தான், மகாத்மாவிடம் முழு நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தார்.
மகாத்மா உண்ணாவிரதம் இருக்கும் போதும் சரி நோயுறும் போதும் சரி, சரோஜினி அவருடன் மகள்போல அமர்ந்து பணிவிடைகளை ஒவ்வொரு முறையும் செய்தவர் ஆவார். இந்த பாசத்தால் அவரது மரணச் செய்தி கேட்டதும் துடிதுடித்தது படபடப்புடன் ஓடினார்.
தில்லிக்கு ஓடிவந்தார் கவியரசி! காந்தியடிகளின் இறுதிச் சடங்கில் கண்ணீரும் கம்பலையுமாக, சோகமே உருவாகக் கலந்து கொண்டார்.
காந்தியடிகளது அஸ்தியிருத்த குடம் பின்வர, சரோஜினி தேவி முன்செல்ல டில்லியில் ஆஸ்திக்குடம் வந்து கொண்டிருந்தபோது, பண்டித நேரு, சர்தார் வல்லபாய் படேல், மௌலானா அபுல்கலாம் ஆசாத், மற்றும் எல்லாத் தலைவர்களும் உடன் வந்தார்கள்.
மகாத்மா மரணமடைந்த சோகத்தினால் துக்கத்தில் ஆழ்ந்துவிட்ட நாட்டு மக்களுக்கு கவியரசி சரோஜினி விடுத்த துயரச் செய்தி வருமாறு:
“காந்தியடிகளின் உயிரும் எங்கள் உயிரும் ஒன்றே; அவை பிரிக்க முடியாதவை என்று எண்ணும்படி எங்களிலே சிலர் அவ்வளவு நெருங்கிப் பழகினோம்.
எங்களிலே பலர் அவருடன் உண்மையாகவே செத்து விட்டோம்; பாதி உயிர் போனவர்கள் போலாகி விட்டோம்! ஏனென்றால், நம் உயிரும், ஊனும், ரத்தமும் அவர் வாழ்க்கையோடு இணைந்தவை.
மகாத்மா மறைந்து விட்டார்; அவரோடு எல்லாமே போய்விட்டன என்று நாம் எண்ணினால், அது அவரை நிராகரித்ததாக ஆகும். அவருடைய உடல் நம்மிடையே இருந்து மறைந்து விட்டதால், அதனால் எல்லாவற்றையும் தாம் இழந்துவிட்டோம் என்று நினைத்தால், அவரிடம் நாம் வைத்திருந்த அளவுக்கும்: நம்பிக்கைக்கும் என்ன மரியாதை? அவருடைய வாரிசாக, பரம்பரையினராக, அவருடைய ஆன்மீக நிதியத்துக்கு உரிமையாளராக, அவருடைய இலட்சியங்களின் காவலராக நாம் இருக்கிறோம் என்பதை நாட்டுக்கு உணர்த்த வேண்டும். உரிமைக்காகத் துக்கம் காக்கும் காலம் கடந்துவிட்டது.
மரணத்தைக் கண்டு மாரடித்துக் கொண்டும், தலை மயிரைப் பிய்த்துக் கொண்டும் புலம்பும் நேரம் அல்ல இது. யார் யார் மகாத்மாவை எதிர்த்தார்கனோ அவர்களின் அறை கூவல்களை நாம் ஏற்றாக வேண்டும். பெற்ற விடுதலையை நாம் காப்பாற்றி, நாட்டைப் பாதுகாக்க வேண்டும்.
இந்த உலகத்தின் முன்னிலையில் நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மகாத்மாவுக்குச் சேவை செய்வதற்கெனவே அவரிடம் சரணாகதி அடைந்தேன். மீண்டும் இன்றும் அதே கொள்கைகளுக்காகவே சரணடைகிறேன்!
மரணம் என்பது என்ன? எனை ஈன்ற தந்தையார் மகாத்மா மாண்டார்; "பிறப்பு உண்டு; இறப்பு இல்லை; சத்தியத்தை நோக்கிப் படிப்படியா உயிர் முன்னேறுவதே வாழ்க்கை" என்று காந்தியடிகள் உயிர் மறையும் முன்பு கூறினார்.
மகாத்மாவின் ஊனுடல் நேற்று நீராயிற்று; ஆனால், அவர் சாகவில்லை, அக்காலத்தில் இயேசுபிரான் உயிர் மீண்டு எழுந்து வந்துவிட்டார்.
மக்கன் புலம்புவதைக் கேட்டு உள்ளம் உருகி, வழி நடத்தும்படி உலகமே கோரியற்கு ஏற்றவாறு அவர் மீண்டும் தோன்றிவிட்டார்.
தில்லியில், அரசர்கள் பலர் துஞ்சிய இடத்திலேயே மகாத்மாவின் உடலும் தகனம் செய்யப்பட்டது மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், அவர் அரசர்களின் அரசர்; சத்தியமே வடிவானவர். பெரும் வீரர்களுக்குகந்த முறையில் அடக்கம் செய்யப்பட்டதும் மிகப் பொருத்தம்; ஏனென்றால், அவர் வீரர்களின் வீரர்.
என் தலைவரின், என் குருநாதரின், என் தந்தையாரின் ஆன்மா அமைதி பெறாமல் இருக்குமாக! என் தந்தை ஓய்வு கொள்வதை அவர் விரும்பமாட்டார்.
எந்தாய்! தங்கள் மக்கள், வாரிசுகள், மாணவர்களாகிய நாங்கள் உங்களை வேண்டுகிறோம்; எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றும் சக்தியை எங்களுக்கு அருளுங்கள்.
இன்றுவரை தோன்றிய இந்துக்களிலே மிகச் சிறந்த வரும், இந்துமத உண்மைகளையும், கடமைகளையும் கைக்கொண்டவருமான ஒரு மகான் அரசியல்யோகி! ஓர் இந்துவின் கையால் கொல்லப்பட்டது எவ்வளவு வருந்தத்தக்கது எண்ணிப்பார்த்து இதயம் நொந்து துடிக்கின்றது! தந்தையே! மகாத்மாவே! மீண்டும் எழுந்து வரமாட்டிரோ!
18. சரோஜினி கூண்டிலிருந்து குயில் புள் பறந்தது!
"குடம்பை தனித்து ஒழியப்புள் பறந்தற்றே;
உடம்போடு உயிரிடை நட்பு"
என்ற திருவள்ளுவர் பெருமான் எழுதிய திருக்குறள் தமிழ் மறைப்படி 'நிலையாமை என்ற தத்துவத்திற்கு ஏற்றவாறு, கவியரசி சரோஜினி என்ற உடம்புடன் நட்பாக இருந்த உயிர் என்ற குயிற்புள், 1949-ம் ஆண்டு மார்ச் வாதம் இரண்டாம் தேதி பறந்தோடி விட்டது.
காந்தியடிகள் 1948-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 30-ம் நாள், காலத்தோடு கரைந்துவிட்டார்! அவரது மரணத்திற்குப் பிறகு, ஏறக்குறைய பதினைந்து மாதங்களுக்குள் கவிக்குயில் சரோஜினியும் தனது எழுபதாவது வயதில் மரணமெனும் காற்றோடு கலந்து விட்டார்.
இனிமையுடனும், வன்மையுடனும் காந்தியத் தத்துவக் கீதங்களை இசைத்துக் கொண்டிருந்த இன்னிசைக் குயில் ஆன்மா ஓய்ந்த விட்டது. என்றாலும், அவரது பொது வாழ்க்கைத் தொண்டுகள், தேசப்பற்றுடன் அவர் ஆற்றிய சேவைகள் தம்மை விட்டு மறையாமல் கானம் பாடிக் கொண்டே இருக்கின்றன.
இசையரசி சரோஜினி தேவியின் வாழ்க்கை நமக்கு ஒரு நாட்டுப்பற்றுப் பாடமாக அமைந்துள்ளத்தை எவராலும் மறக்கவோ, மறைக்கவோ முடியாது.
பெண் குலத்திற்கு சரோஜினி ஒரு மனப்பாடமாக இன்றும் நின்று நிலவுகிறார். சிறுமியாக இருந்தபோதே அவர் கவிபாடும் திறன் பெற்றிருந்தார். அதற்காகவே அவர் அயராது உழைத்து வாழ்ந்தார். குமரியான உடனே அவரது பாடல்கள் உலகத்தையே மெய்மறக்க வைத்தவையாகப் பாராட்டுப் பெற்றன.
மகாகவி ரவீந்திரநாத் தாகூர் பெற்ற 'கெய்சர் ஹிந்த்' என்ற விருதை, பிரிட்டிஷாரால் வழங்கிப் பாராட்டும் அளவுக்கு அவர் புலமை பெற்றது பெண்ணினத்துக்குரிய ஒரு பெருமையாக விளங்கியது.
தாய்க்குலம் கவனிக்கப்பட வேண்டிய படிப்பினைகள் என்னவென்றால்;
சரோஜினி தேவி தேசப்பக்திக்கே முதலிடம் தந்தார்; அதற்கு முன்னால் தனது சொந்த சுகபோக வாழ்க்கையை தூக்கி எறிந்தார். தியாகம் செய்ய எந்த ஆண் வேண்டுமானாலும் முன்வரக்கூடும்; ஆனால், சரோஜினி தேவி ஒரு பெண்! பருவ மங்கை, குமாரி இளமை எழிலாடும் இன்ப வாழ்வைப் பெற்றாக வேண்டிய வயது.
கணவன் இருக்க, செல்வச் செழிப்புத் தவழ, குழந்தை பேறு பூரிப்போடு காட்சிதர, பட்டம், பதவி, படிப்பு, சொல்வன்மை, அறம்பிறழ் நெஞ்சம் இத்தனையையும் இழந்து தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பண்பு எந்த பெண்ணுக்கு வரும் இந்த மனம் வியப்புக்குரிய ஒரு இயற்கை மனமல்லவா?
அன்னி பெசண்டுக்கு மதக் கொடுமைகள், கணவன் கொடுமைகள், பணிபுரிந்து வருவாய் தேட முடியாத சூழ்நிலை, தாய்வீட்டு ஆதரவோ, கணவன் ஆதரவோ, உடன் பிறப்பினர் உதவியோ இல்லாமையால், கற்றக் கல்வியை வளர்த்துக் கொண்டு வேறு ஒரு நாட்டுக்கு வந்து, தியாசாபிகல் சொசைட்டியின் முழு ஆதரவோடு அதன் தலைவியாகி இந்திய அரசியலிலே பெரும் செல்வாக்குப் பெற்றார் பெண் இன முன்னேற்றத்துக்கும் உழைத்தார்.
ஆனால், சரோஜினி தேவி மேற்கூறிய அவ்வளவு ஆதரவுகளும் இருந்தும் கூட. அவற்றை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு, பெண் இன முன்னேற்றத்திற்காகவும், தேச சேவைக்காகவும், மக்கள் தொண்டுக்காகவும் பாடுபட முன் வருவோர் ஓரிருவராகவே இருக்க முடியும். அவர்களில் ஒருவர் சரோஜினி. விடா முயற்சியோடு அவர் பலதுறைகளில் ஈடுபட்டு பெற்ற வெற்றியும் புகழும் தாய்க்குலத்தை மேம்படுத்தும் எண்ணமல்லவா?
03-ம் ஆண்டு, சரோஜினி தேவியார், தனது இருபத்து நான்காவது வயதில் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மாணவர்கள் மத்தியிலே ஓர் உரையாற்றினார். அந்த பேச்சில் அவர் என்ன குறிப்பிட்டார் பாருங்கள்:
இளைஞர்களே! என்றார்! இந்த பெண்ணுக்கோ வயது இருபத்து நான்கு இருந்தும் பட்டப்படிப்பு படிக்கும் பருவமுடையவர்களைப் பார்த்து "இளைஞர்களே என்று கம்பீரமாகக் குரல் கொடுத்து. மேற்கொண்டு என்ன பேசுகிறார் தெரியுமா?. இதோ அது:
"உங்கள் விருப்பும் பற்றும் உங்கள் மாகாணத்துடன், உங்கள் நகரத்துடன், உங்கள் ஜாதியுடன், ஜாதியின் உட் பிரிவுடன், உங்கள் கல்லூரியுடன், உங்கள் வீட்டுடன், வீட்டிலும் உங்கள் உறவினர்களுடன், இறுதியில் உங்களுடனே நின்று விடுகின்றன.
இந்தச் சுயநலத்தை, தன்னை மட்டுக் காத்துக் கொண்டு மற்றவரைப் பாராமல் ஒதுங்கும் தன்மையை நீங்கள் கைவிடவேண்டும். நாடு பூராவையும், மக்கள் அனைவரையும், எல்லாப் பகுதியினரையும், எல்லா மதத்தினரையும், எல்லோரையும் சகோதரர்களாய் கருதி, சர்வஜன சகோதரத்துவத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.
ஆங்கிலக் கவிகளான ஷெல்லியையும், கீட்சையும் படிக்கிறீர்கள்; அவர்கள் அறிவுறுத்தும் உலக சகோதரதுதுவத்தைப் போற்றுகிறீர்கள். ஆனால், நீங்கள் ஒழுகுவது எவ்வாறோ?
இந்து என்றும், முஸ்லிம் என்றும், பிராமணன், பிராமணன் அல்லாதவன் என்றும், சென்னைவாசி, வெளி மாகாணவாசி என்றும், வேற்றுமைகளைப் பாராட்டுவது ஏன்?
ஏட்டுக் கல்வி நாட்டுக்குப் பயன்படுவது அரிதுதான். ஆயினும், நான் சென்னைக்காரன், பிராமணன், பிராமணன் அல்லாதவன் என்று நீங்கள் கூறிக்கொள்வதால் பெருமை ஏதுமில்லை. அதற்கு மாறாக, நீங்கள் நான் இந்தியன், இந்திய ஜாதியைச் சேர்ந்தவன், தேசபக்தி உடையவன் என்று கூறிக்கொண்டால் அதற்குப் பெருமை உண்டு.
என் வாழ்க்கையில் நான் இந்தப் பரந்த, தேசிய சகோதரத்துவத்தைக் கடைபிடிக்க முயன்று வருகிறேன்" நான் வங்காளத்தில் பிறந்தவள். ஆனால், சென்னைக்குச் சொந்தமானவள், ஒரு முஸ்லிம் நகரத்தில் வளர்ந்தேன்; அங்கேயே மணந்தேன்; இல்வாழ்க்கை நடத்தினேன்; ஆனால் நான் வங்காளி அல்ல; நான் ஒரு இந்தியப்பெண்!
நான் இந்துவும் அல்ல; பிராமண ஜாதியைச் சேர்ந்தவளுமல்ல; நான் ஓர் இந்தியப்பெண்! இந்துக்களும்-முஸ்லிம்களும் சகோதரர்கள்; இந்த இரு வகுப்பினரையும் மற்ற வகுப்பினரையும் நான் என்னுடன் பிறந்த சகோதரர்களாகவே கருதுகிறேன்-நேசிக்கிறேன்-மதிக்கிறேன்! என்று பேசியவர் சரோஜினி தேவியார்.
இதுதான் கவிக்குயில் சரோஜினி தேவியின் தம்மை மேம்படுத்தும் எண்ணங்கன்! அவர் ஓர் இந்தியப் பெண்ணாகவே வாழ்ந்தார்! தேசத் தொண்டாற்றினார்! கவிஞரானார்! எழுத்தாளாரானார்! மக்கள் வாழ்வுக்கு மாண்பு தேடியவராக மறைந்தார்! வாழ்க சரோஜினி!
(முற்றும்)
கருத்துகள்
கருத்துரையிடுக