அந்த நாய்க்குட்டி எங்கே
சுட்டி கதைகள்
Back
அந்த நாய்க்குட்டி எங்கே
பூவை. எஸ். ஆறுமுகம்
அந்த நாய்க்குட்டி
எங்கே?
(சிறுவர் குறுநாவல்கள்)
ஆசிரியர் :
பூவை. எஸ். ஆறுமுகம்
பதிப்பாசிரியர் :
லேனா தமிழ்வாணன் எம். ஏ.
மணிமேகலைப் பிரசுரம்
த.பெ.எண் : 1447,
தணிகாசலம் சாலை,
தியாகராய நகர்,
சென்னை - 600 017.
தொலைபேசி: 4342926
தொலைநகல் : 044-4340682.
முதல் பதிப்பு : 1996
விலை ரூ.24.00
ரூபாய் இருபத்து நான்கு
............................................................................................................................................................................................................................................................................................................
அந்த நாய்க்குட்டி எங்கே?
............................................................................................................................................................................................................................................................................................................
மாஸ்டர் உமைபாலன்
............................................................................................................................................................................................................................................................................................................
இளவரசி வாழ்க!
............................................................................................................................................................................................................................................................................................................
லேசர் வடிவமைப்பு :
எக்ஸ்பிரஸ் கம்ப்யூட்டர்ஸ்
1-ஏ, பிருந்தாவனம் தெரு விரிவு,
மேற்கு மாம்பலம், சென்னை – 600 033.
அச்சிட்டோர் :
ஜோதி ஆப்செட்,
159/1, வி.எம். தெரு,
சென்னை – 14
போன் : 8265691
என்னுடைய பிறந்த நாள்!.....
* * *
இன்று புதிதாய் பிறந்திருக்கின்றேன். நான்! – ஆமாம், உண்மை இது! ஆகவேதான், உடலும் உள்ளமும் புத்துயிர் பெற்றிருக்கின்றன! – இடைப்பட்ட சோதனைப் பொழுதுகள் பொய்யாகட்டும்!
என்னிடம் மெய்யான பாசமும் அன்பும் பாராட்டு நண்பர்கள், "பூவை என்றால், சோதனை என்று பொருள்" என்பார்கள். அந்நாட்களிலே அமரர் டாக்டர் ஜி. உமாபதி அவர்களின் 'உமா' இலக்கிய மாத இதழிலே நான் செய்து பார்த்த – செய்து காண்பித்த இலக்கியச் சோதனைகளை எண்ணித்தான் அவர்கள் அவ்வாறு கூறுவது வழக்கம் – பழக்கம்!
தமிழ்ப் படைப்பு இலக்கியத்தின் பெரும்பாலான துறைகளையும் என்னுடைய எழுத்துகள் தொட்டுப் பாத்திருக்கின்றன! இவ்வகையில், இதுவரை வெளிப்படுத்தப்பபட்ட நூல்களின் எண்ணிக்கை நூற்று எழுபத்தொன்பதைத் தாண்டி விட்டன! – மெய்தான்! எண்ணிப்பார்த்தால், என் மெய் சிலிர்க்கிறது!
இடைவெளியைக் கடந்து, இப்பொழுது என்னுடைய புதிய கதைத் தொகுதி ஒன்றை அண்மையில் மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ளது. அமரர் தமிழ்வாணன் என்பால் கொண்டிருந்த உண்மையான அன்பிற்கும் பாசத்திற்கும் ஓர் அடையாளச் சின்னமாகவே இந்நூல் திகழும். கதைக்கொத்தின் பெயர்: ‘மகாத்மா காந்திக்கு ஜே!’– நவரசங்கள் சிந்துபாடும் அருமையான சிறு கதைகள். கதைகளை வெளியிட்ட இதழாசிரியர்கள் என் அன்பிற்கு உரியவர்கள் அல்லவா?
இப்போது, அடுத்ததாக, இந்தச் சிறுவர் - சிறுமியர் நூலும் வெளிவருகிறது. ‘அந்த நாய்க்குட்டி எங்கே?, மற்றும் இளவரசி வாழ்க என்னும் முத்தான மூன்று நாவல்களைக் கொண்டது இந்நூல்: இதுவும் கட்டாயம் பேர் சொல்லும். மணிமேகலைப் பிரசுரத்தின் உடைமையாளச் சகோதரர்கள் திருவாளர்கள் லேனா தமிழ்வாணன் அவர்களுக்கும் ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும் நான் நிரம்பவும் கடமைப்பட்டவன்!
என்னுடைய எழுபத்தோராவது பிறந்த நாளை நினைவுகூரச் செய்யும் வகையில், என்னுடைய இவ்விரு நூல்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன! – நான் பாக்கியவான்தான்!
இடையில் நான் நோய்வாய்ப்பட்டுத் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றிருந்த நாட்களில் என்னுடைய இவ்விரு நூல்களின் கைப்பிரதிகளை என் சார்பில் பதிப்பகத்தில் சேர்ப்பித்து உதவிய மெய்யன்பர் திரு. கு. சண்முகசுந்தரம் அவர்களை நான் நாளும் பொழுதும் நன்றியுடன் நினைப்பேன்.
உங்கள் அன்பிற்குகந்த ‘பூவையைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்ற இலக்கிய ஆர்வலர்களாகிய உங்களை நான் மறந்துவிட மாட்டேன். நன்றி!
சென்னை – 600 045 அன்புடன்,
25–6–1966. பூவை எஸ். ஆறுமுகம்
அந்த நாய்க்குட்டி எங்கே?
* * *
1
ஹாலிவுட் நட்சத்திரம் ஜிப்பி தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு வருகை தந்திருந்ததல்லவா? அதைப் பற்றி அன்றைய தினசரியில் செய்தி வெளியாகியிருந்தது.அந்த மனிதக் குரங்கை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான் பூபாலன். அவனுக்கு வாயெல்லாம் பல்லாகிவிட்டது.
சிரிப்பு அடங்கியது. அப்பொழுது அவனுடைய சிறுகுடலைப் பெருங்குடல் கவ்வியது, ஓடினான்.
மாம்பலம், ஜானகிராமப் பிள்ளைத் தெரு வீட்டு எண் இரண்டு.
“அம்மா, பசிக்குதே, அம்மா ஏம்மா இப்படிப் பசிக்குது?” என்று கேட்டான் பூபாலன்.
“உனக்கு பசிக்குதுன்னா அரை நாழிப் பொழுதிலே சோறு சமைச்சுப் போடுறேன். ஏன் பசிக்குதுங்கறதுக்கு உன் வயிற்றைக் கேட்டுத்தான் பதில் தெரிஞ்சுக் கோணும். நாம்ப ஏழைங்க பாரு நமக்கும் பசிக்கும் மட்டும்தான் ரொம்பச் சொந்தம்” என்றாள் பூபாலனின் தாய் அஞ்சலை.
“இன்னிக்கு நான் ஸ்கூலுக்குப் போகலேம்மா”
“ஏண்டா ?”
“ஏண்டாவா? அம்மாவுக்குக் கோபத்தைப் பாரு கோபத்தை..! அந்தக் காலத்திலே எல்லாப் பெரிய மனிதர்களும் சின்ன வயசிலே அடிக்கடி பள்ளிக்கூடத்துக்கு டிமிக்கி அடிச்சவங்கதானாம். அதுபோல நான் இப்போ ஸ்கூலுக்கு மட்டம் போட்டா, அப்பாலே பெரிய மனிதனாகிப் போயிடுவேனாக்கும்” என்றான் சிறுவன், சிரித்தபடி.
“போடா, மண்டு!” என்று கடிந்தாள் தாய்.
பூபாலனின் வயிற்றுக்குள் சோற்று உருண்டைகள் இருபது போனதும்தான் தெம்பு வந்தது.
அப்பொழுது அவன் தந்தை முருகேசன் வந்தான்,
“அப்பா, என்னை அம்மா மண்டுங்கறாங்களே? நான் முட்டாளாயிருந்தா வருஷத்துக்கு வருஷம் இப்படி பாஸாவேனா?... என் சுயகெளரவத்தை யார் குறைச்சலா மதிச்சாலும் எனக்கு நெஞ்சு பொறுக்காது” என்றான்.
“பலே, மகனே! முதலிலே நீ ஒழுங்காகப் பள்ளிக் கூடத்துக்கு போ. அப்புறம் பெரிய மனிதனாக ஆகலாம். எனக்கு உடம்புக்கு முடியலே. அதாலே எங்க கண்ணாடித் தொழிற்சாலையிலே லீவு சொல்லி வந்திட்டேன்.” என்று சொன்னான் முருகேசன்.
புத்தகப் பையுடன் பூபாலன் ஸ்கூலுக்குப் புறப்பட்டான். சுவரில் பதித்திருந்த உடைந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டு, கையால் தலையைக் கோதி விட்டுக் கொண்டான். புறப்பட்டு விட்டான்.
பூபாலன் ராஜாவுக்கு பராக் !...பராக்!
கோடம்பாக்கம் பெரியசாலையில் திரும்பினான் பூபாலன். அங்கே வ.உ.சி-யின் சிலை காணப்பட்டது. கப்பல் ஒட்டிய தமிழனுக்குச் சிரம் வணங்கிக் கரங்கூப்பி வணக்கம் தெரிவித்தான். அவன் தலையை நிமிர்த்தியபோது “கா.கூ. க்கூ” என்று பயங்கரமான தீனக் குரல் கேட்டது. நாற்புறமும் திரும்பிப் பார்த்தான். பூங்காவின் வடக்குக் கோடியில் காரின் அடியில் நசுக்கப்பட்டு உயிர் விட்ட ஒரு நாயைக் கண்டான். உடல் நடுங்கியது. அவனுக்கு அழுகை பீறிட்டது. அப்பொழுது அங்கு ஓர் அதிசயத்தைக் கண்டான். அழகானதொரு நாய்க்குட்டி அந்த நாயின் அருகில் கிடந்தது. விழிகளை நிமிர்த்திக் கூட்டத்தை நோட்டம் விட்டான். கார் டிரைவர், நாயின் உயிரைக் கொன்றதுமின்றி, அதன் வழி உயிரையும் தட்டிக் கொண்டு போக எண்ணுவதை ஊகித்தது பிஞ்சு நெஞ்சம். அவ்வளவுதான், பூபாலன் அந்த நாய்க் குட்டியைக் எடுத்துத் தன் பையில் திணித்துக் கொண்டு பிடித்துவிட்டான் ஒட்டம்!
2
“அம்மா. அம்மா’’ என்று அலறிக் கொண்டு ஓடி வந்தான் பூபாலன். ரேழியில் இருந்த தண்ணீரை மொண்டு ‘மடக் மடக்’ கென்று குடித்தான் மூச்சுக்கு அணைகட்ட முடியவில்லை.
அஞ்சலை என்னவோ ஏதோ என்று பதறிப்போனாள்.
“அம்மா, நான் போனவருஷம் பள்ளிக்கூடத்திலே தங்கப் பதக்கம் ப்ரைஸ் வாங்கினேனே, நினைவிருக்குதா?”
“ஆமாடா, தம்பி. வாயில்லாப் பிராணிகளிடம் அன்பு காட்டனும்னு நீ பிரசங்கம் செய்ததுக்கு பதக்கம் தந்தாங்க சர்க்காரிலே என்ன சேதி...?”
“சொன்னபடி நடக்கணும்னுதானே பெரியவங்க அடிக்கடி சொல்லுறாங்க...?”
“என்னென்னமோ கேட்கிறியேடா’கண்ணு! வேளா வேளைக்குச் சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு திட்டம் போடவே எனக்குப் பொழுது காணலே. சரி. சேதியைச் சொல்லு”
பூபாலன் பதில் எதுவும் சொல்லவில்லை. புத்தகப் பையைக் கீழே வைத்தான். ‘வாள்-வாள்’ என்று ஒரு கூக்குரல் எழுந்தது. உடனே அந்த நாய்க்குட்டி தரைக்குப் பாய்ந்து விட்டது. பிறகு அது பூபாலனைப் பார்த்தது.
“பூபாலா. உன்னைப் பார்த்து அப்படி வாலை ஆட்டுதே நாய்க்குட்டி?” என்றாள் அஞ்சலை.
“ஆமாம், அம்மா நான் அது உசிரைக் காப்பாற்றினேன். நன்றி சொல்லுது. நன்றி மறக்கக்கூடாதுன்னு ஒளவைப் பாட்டி சொன்னது இதுக்குக்கூடத் தெரியுதே! பாவம், அது தாயைத்தான் என்னாலே காப்பாற்ற முடியவில்லை. அம்மா, இனி இந்த நாய்க் குட்டியும் என்னோடே இருக்கட்டும்...” என்று பயந்த குரலில் கெஞ்சினான் அவன்.
“என்னா சொன்னே? இந்தத் தெரு நாய்க்குட்டிக்கு யார் படி அளக்கிறதாம்.? உள்ளதுக்கே சாப்பாட்டுக்குத் திண்டாட்டம் போடுகிறோம். போடா, போய் அதைத் தெருவிலே விட்டுவிட்டு வந்துடு!” என்று உத்தரவிட்டாள் அவன் அம்மா.
அப்பொழுது பூபாலனின் தந்தை முருகேசன் வந்தான். தன் புதல்வனை அழைத்து, “தம்பி. நீ அழுகாதே; நான் உன் நாய்க் குட்டியைக் காப்பாத்துறேன். நீ சும்மாயிரு...!” என்று சொன்னான்.
பிறகு முருகேசன் உள்ளே சென்று. “அஞ்சலை. குழந்தையின் மனசை நோகடிக்காதே. நம்ப பையன் என்னவெல்லாமோ பேசறான்; கேட்கிறான். சின்னப்பிள்ளை பேச்சாவே எனக்குத் தோணலை. ஒரு வேளை அவன்கூட பின்னாலே பெரிய மனிதனாக ஆனாலும் ஆகலாம். கல்லுக்குள்ளே இருக்கும் தேரைக்குக் கூட படியளக்கும் சத்தி படைச்சவன் ஆண்டவன். இந்த நாய்க்குட்டியை பகவான் மறந்திடவே மாட்டான். அன்பும் ஆண்டவனும் நமக்குத் துணை இருக்கு: காந்தித் தாத்தா சொல்லித் தந்த உண்மையும் நேர்மையும் நமக்கு நல்ல வாழ்க்கையைத்தரும்” என்றான் முருகேசன். அவன் கண்களில் கண்ணிர் இருந்தது.
“அப்பா நல்லவருதான். அம்மாவுக்குத்தான் ஜீவகாருண்யம்னா என்னான்னு புரியவே மாட்டங்குது..!” என்று கூறிய பூபாலன் வானத்துக்கும் பூமிக்குமாகத் தாவிக் குதித்தான்.
பிறகு, முருகேசன் தன் ‘காக்கி’ சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து மகனிடம் கொடுத்தான்.
அவன் வாசித்தான் :
பூவைமாநகர்
‘அன்புள்ள முருகேசன்,
பிறந்த ஊரை மறந்து விட்டாயா ? உனக்கு ஒரு நல்ல செய்தியை எழுதவே இந்த லெட்டர் போடுகிறேன். 'என் பசி, ஒருவனின் பசியல்ல; கோடிக் கணக்கான ஏழைகளின் பசி என்று வினோபாஜி பூதான இயக்கத்தின் போது சொன்ன சொற்கள் என் இதயத்தைத் தொட்டு விட்டன. நீ நம் ஊர் நாடி வா என் நிலத்தை உனக்கும் உன் சகோதரர்களுக்கும் பங்கிட்டுத் தருகிறேன்.
இப்படிக்கு
மிராசுதார் சுகவனம்
“அடடே மிராசுதார் ஐயா புது மனுஷராயிட்டாரே?”என்றாள் அஞ்சலை; அவளுக்கு ஆனந்தம் மேலிட்டது.
அப்பொழுது வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு சிறுமி இறங்கினாள் “பூபாலா“ என்று சத்தமிட்டுக் கூப்பிட்டுக் கொண்டே உள்ளே துள்ளி ஓடி வந்தாள்.
“வா பூங்கோதை!” என்று வரவேற்றான் பூபாலன். வாசல் திண்ணை மீது ஒரு கிழிந்த பாயை விரித்து,"உட்கார். இது எங்கள் பங்களாவின் சுழல்நாற்காலி” என்று உபசரித்தான். பிறகு “இதோபார் என்னுடைய மற்றொரு தோழன்,"என்று சொல்லி அந்த நாய்க்குட்டியைக் காட்டினான் பூங்கோதையிடம். அது அமைதியாக அடங்கியிருந்தது.
“பூபாலன், நான் இன்றைக்கு ராத்திரி சினிமாவிலே நடிக்கப் போகிறேன். எங்க அம்மாவும் என் கூட நடிக்கிறாங்க. நீ வர்றியா ஷூட்டிங் பார்க்க?"
“ஓ, பேஷா வர்றேன். எனக்குக் கூட படத்திலே நடிக்க வேணும்னு ரொம்பவும் ஆசை. உன்கூட நடிக்கிறதுக்கு எனக்கு சந்தர்ப்பம் வந்தா, ரொம்பவும் குஷியாயிருக்கும். அத்தோட என் நாய்க்குட்டியையுங் கூடப் படத்திலே நடிக்கவச்சு, இதையும் ஒரு பெரிய ஸ்டாராக ஆக்கனும்!” என்றான் பூபாலன்.
அதே சமயம், வாசலிலே சினிமா விளம்பர கார் ஒன்று போய்க் கொண்டிருந்தது. நாய்க்குட்டியைக் கீழே விட்டுவிட்டு, வெளியே ஒடினான் சிறுவன். சிறுமியும் தொடர்ந்து அவனுடன் ஒடினாள்.
விளம்பரத்தில் சிறுவன் சுதாகரின் படம் இருந்தது. ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டான். சுதாகர் மாதிரி தானும் ஒரு ‘பால நட்சத்திரமாக’ ஆவது போன்ற இன்பக் காட்சிகள் தோன்றின.
பூங்கோதை அவன் தோளைத் தட்டி அழைத்ததும்தான், பூபாலனுக்குச் சுயநினைவு வந்தது.
“போகலாமா, கார் காத்திருக்குது?”என்று நினைவு படுத்தினாள் பூங்கோதை,
“இதோ.என் நாய்க்குட்டியையும் எடுத்துக்கிட்டு நொடியிலே ஒடியாந்துடுறேன்...!” என்று சொல்லிவிட்டு நாய்க்குட்டியைத் தேடினான் பூபாலன்.
ஆனால்-
“ஐயோ, நம்ப நாய்க்குட்டியை கார்ப்பரேஷன் நாய் வண்டியிலே தூக்கிப் போட்டுக்கிட்டுப் போயிட்டாங்களே!”என்று அலறினாள் பூபாலனின் தாய்.
“ஐயோ!"என்று கூப்பாடு போட்டவாறு, பூபாலன் வெறி பிடித்தவனைப் போலத் தெருவிலே ஓடிக் கொண்டிருந்தான். 3
“ஏய், தம்பி”
“....”
“ஏய், தம்பி”
பூபாலன் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தான். வலது காதின் ஒரத்தில் படர்ந்திருந்த செம்மை அவனுக்கு வேதனை தந்தது. தடவி விட்டுக் கொண்டான். பாவிப் பயல் காதைத் திருகாமல் எழுப்பினால், அவன் குடியா முழுகிப் போய்விடும்?
“ஏன் ஐயா, எங்க பள்ளிக்கூடத்துக் கணக்கு வாத்தியார்கிட்டே நீங்க காதைத் திருகுற வித்தையைக் கத்துக்கிட்டிங்களோ?...ம்!. என் மாதிரி உமக்கு ஒரு பயல் இருந்தா இப்புடிச் செய்வீங்களா?” என்று வேதாந்தம் பேசினான் பூபாலன். உடனே அவன், அந்த மனிதனை நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்கள் எதிரில் நின்ற மனிதனை எடை போட்டுப் பார்த்தன.
மறுகணம் பூபாலன் வாயடைத்துப் போய் ‘யார் இந்த மனிதன்? நான் எங்கே இருக்கிறேன்? ஐயோ, என்னுடைய அருமை நாய்க்குட்டி எங்கே...?’ என்று மனத்திற்குள் வேதனைப்பட்டுக் கண்ணீர் வடித்தான்.
மறுபடியும் என்ன தோன்றிற்றோ, பூபாலன் எழுந்தான்; நடந்தான். காம்பவுண்ட் வாசலைத் தாண்டப் போனான். அப்போதும் அவனை யாரோ தடுத்து நிறுத்தியதை உணர்ந்தான். சற்று முன் எழுப்பிய அதே மனிதன்தான் எவ்வளவு ஆடம்பரமாக உடை உடுத்துக் கொண்டிருக்கிறான் இவன் ? எல்லாம் சில்க் மயம்!
“தம்பி, நீ யார்?”
“ஐயா, நீங்க யார்? அதை முதலிலே சொல்லுங்க”
“ஹி, ஹி! சுட்டிப்பயலாக இருக்கிறாயே? பேஷ் ! நான் யார் தெரியுமா? நான்தான் சுகுமார் சர்க்கஸ் கம்பெனி முதலாளி. என் பெயர் சுகுமார். சரி, இப்போது உன் பெயரைச் சொல்!”
“என் பெயர் பூபாலன்! ஐயா நான் எப்படி இங்கே வந்தேன்? நான் இப்போதே வெளியேற வேணும். என்னுடைய அருமை நாய்க் குட்டியைத் தேடிப்பிடிக்க வேணும். எனக்காக என் அப்பாவும் அம்மாவும் வேறே கவலைப்பட்டுக் கொண்டிருப்பாங்க.”
‘தம்பி, நீ தெருவில் மயக்கம் போட்டுக் கிடந்தாய். காரில் போட்டுக் கொண்டு வந்து சேர்ந்தேன். அது சரி தம்பி, உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேணும். உன்னைப் போல ஒரு கெட்டிக்காரப் பையன் என்னுடைய சர்க்கஸ் கம்பெனிக்கு வேண்டும். உனக்கு வேண்டிய சகல வசதியையும் நான் ஏற்பாடு செய்கிறேன். உன் பெற்றோருக்கும் இப்போதே தகவல் சொல்லியனுப்பி விடுகிறேன். நீ என்னுடனேயே தங்கிவிடு. உனக்கு எல்லா வித்தைகளையும் கற்றுத் தருகிறேன். உன் படிப்புக்கும் ஏற்பாடு செய்கிறேன். உனக்கு இங்கே ஒரு தோழியும் இருக்கிறாள். அல்லி என்று பெயர். அவள் என்னுடைய ஒரே பெண். ம், சரி என்று சொல்...!”
பூபாலன் என்ன சொல்லப் போகிறனோ என்னவோ என்று சர்க்கஸ் முதலாளி அவன் முகத்தையே உற்று நோக்கியவாறு நின்றான்.
“ஐயா, என்பேரில் நீங்க கொண்டிருக்கிற அன்புக்கும் பாசத்துக்கும் ரொம்ப நன்றி. உங்களுக்கு நான் கடமைப்பட்டவன். எனக்குக்கூட சினிமாவிலே, சர்க்கஸிலே பங்கெடுத்துக் கொள்ளணும்னுதான் ரொம்ப ஆசை. பள்ளிப் படிப்பு மட்டும் எனக்குச் சோறு போட முடியாது. அத்தோடு தொழிற்கல்வியும் அவசியம் தேவைன்னு நம்ம ராஜாஜி அவர்கள் சொல்லியிருப்பதைப் பற்றி வாத்தியார் அடிக்கடி எடுத்துக் காட்டியிருக்கிறார். ஆனால் இப்போ என்னாலே இங்கே, ஏன் எங்கேயும் ஒரு நிமிஷங்கூட தங்கவே முடியாது. என்னுடைய உயிருக்குயிரான நாய்க்குட்டியைக் கண்டுபிடித்தால்தான் எனக்கு நிம்மதியாக இருக்கும். அது இல்லாமல் எனக்குப்பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்குது. அந்த நாய்க்குட்டியைத் தூக்கிக்கிட்டு ஸ்டுடியோவுக்கு போகிறதாக இருந்தேன். புறப்படப் போறபோது நாய்க் குட்டியைத் தேடினேன்; காணவில்லை. அதை கார்ப்பரேஷன் நாய் வண்டியிலே துக்கிப் போட்டுப் போயிட்டதாக என் அம்மா சொன்னாங்க... ஐயா. நான் போயிட்டுவர்றேன்″என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான் பூபாலன்.
அவனது கையைப் பற்றியவாறு, “தம்பி, அவசரப்படுகிறாயே? நில், நான் உனக்கு அந்த நாய்க் குட்டியைத் தருகிறேன். சரிதானே? அப்புறம் இங்கேயே தங்கி விடுவாய் அல்லவா?”என்றார் சுகுமார் புன்சிரிப்புடன்.
“ஓ நிச்சயமாக !”என்று தலையைப் பலமாக ஆட்டினான் சிறுவன்.
“அல்லி!” அழைத்தார் சர்க்கஸ் உரிமையாளர்.
நீலத் திரையை நுனி விரலால் நீக்கிக் கொண்டு ஒரு சிறுமி வந்தாள். அவள் கையில் அழகிய நாய்க்குட்டி ஒன்று இருந்தது.
பூபாலன் கண் இமைக்காமல் அந்த நாய்க்குட்டியையே பார்த்தவாறு இருந்தான். அந்தச் சிறுமி நெருங்கி வந்தாள். பூபாலன் அந்த நாய்க் குட்டியைக் கை நீட்டி வாங்கினான். ஆனால் அது ‘வாள் வாள்’ என்று விடாமல் குரைத்தது.
அடுத்த கணம், “ஊஹூம், இது என் நாய்க்குட்டி இல்லவே இல்லை! என்னை ஏமாற்றப் பார்க்கிறீங்க. என் நாய்க்குட்டியாயிருந்தால், என்னைக் கண்டதும் வாலை ஆட்டுமே என் நாய்க் குட்டியை எனக்கு அடையாளம் தெரியாதா? பொய் சொல்லி நீங்க என்னை ஏமாற்றப் பார்க்கிறீங்க...!” என்று கோபம் பொங்கப் பேசிவிட்டு அந்த பங்களாவிலிருந்து உடனடியாக வெளியேறினான் பூபாலன்.
4
அந்த ஸ்டுடியோ ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது.
பூபாலன் வியர்வையைச் சட்டைத் தலைப்பால் துடைத்து விட்டவாறு, கூர்க்காவின் முன் நின்றான். அவன் ஏதோ கேட்டான். பையன் என்னவோ சொன்னான். இருவருக்கும் இடையில் இந்தியும் தமிழும் உயிரை விட்டுக் கொண்டிருந்தன. கடைசியில் பூபாலன் சைகை காட்டி, தான் உள்ளே செல்ல வேண்டுமென்பதையும், அங்கு தன் தோழி பூங்கோதை இருக்கிறாள் என்பதையும் சொன்னான். ஒன்றும் பதில் சொல்லாமல் பையனை ‘கல்தா’ கொடுத்து நெட்டித் தள்ளிவிட்டான் காவல்காரன்.
இருட்டில் கண் தெரியவில்லை. பூபாலன் ஒருமுறை அந்தக் கட்டடத்தை வலம் வந்தான். பிறகு பின்புறமாக வந்து, கவர் மீது ஏறினான். உள்ளே அமைந்திருந்த ‘செட்’ டில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. சிறுமி பூங்கோதைக்கு டைரக்டர் ஏதோ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பூங்கோதை அழகாகப் பேசி நடித்துக் கொண்டிருந்தாள். அதே சமயம் அங்கு ஒரு சிறுவன் வந்தான்.அவனிடம் டைரக்டர் ஒரு நாய்க்குட்டியைக் கொடுத்து, “ம், நான் சொல்லிக் கொடுத்தபடி நடி, பார்க்கலாம்” என்று சொன்னார். பையனைக் கண்ட அந்த நாய்க்குட்டி குரைத்துக் கடிக்க முயன்றது. சிறுவன் பயந்து அலறினான்.
அதே சமயம், “ஆ என் நாய்க்குட்டி” என்று ஆர்ப்பரித்த வண்ணம் பூபாலன் உள்ளே குதித்து ஓடி வந்தான். அந்த நாய்க் குட்டி அவனைக் கண்டவுடன் சந்தோஷ மிகுதியால் வாலைக் குழைத்தது; அன்புடன் அவனுடைய முகத்தை நாக்கால் நக்கியது.
“பூபாலன், உன்னை எங்கெல்லாம் தேடுவது? உன்னுடைய நாய்க்குட்டியைக் கார்ப்பரேஷன் வண்டிக்காரன் தூக்கிப் போகவில்லை. நாம் பேசிக்கிட்டிருந்தபோது ஒரு சினிமா விளம்பர கார் வந்ததல்லவா? அந்தக் கார்காரன்தான் தூக்கிப் போய் விட்டிருக்கிறான். வழியிலே கண்டுபிடிச்சு, அவனோடு சண்டை போட்டு அதை மீட்டுக்கிட்டு வந்து விட்டோம்!”என்றாள் பூங்கோதை.
அப்போது அவனைத் தேடிக் கொண்டு அவன் பெற்றோர் வந்தார்கள். அன்று கடிதம் போட்டிருந்த மிராசுதார் சுகவனத்தைப் பார்த்துவர பூவைமாநகர் செல்வதாகவும், இரண்டு நாட்களில் திரும்பி விடுவதாகவும் சொன்னான் முருகேசன். அதுவரையில் பூபாலன். பூங்கோதை வீட்டில் தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
பெற்றோரை வழியனுப்பி வைக்க ஸ்டுடியோவுக்கு வெளியே வந்தான் பூபாலன்.
அப்பொழுது ஸ்டுடியோ வாசலில் ஒரு கார் வந்து நின்றது. காரில் தன் பெற்றோர் ஏறிக் கொண்டதைக் கண்ட பூபாலன் வியப்பிற்குள்ளானான். அவனது வியப்பு அடங்குவதற்குள், அவனையும் கையைப் பிடித்து காருக்குள் அமர்த்திக் கொண்டான் அவனுடைய அப்பா.
பூபாலனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. திரும்பிப் பார்த்தான். முன் ஆசனத்தில் அந்த, சர்க்கஸ் முதலாளி சுகுமார் விஷமப் புன்னகையுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார்!
5
‘ஹ...ஹ்....ஹா!’
ஜப்பானில்தானே ப்யூஜியாமா போன்ற எரிமலைகள் அதிகம் என்று புத்தகங்கள் பேசுகின்றன? இங்கே தண்டையார் பேட்டையில் எரிமலை எங்கிருந்து இப்படி வெடித்துச் சீறுகிறது; ஓங்காரச் சிரிப்புச் சிரிக்கிறது..?
பூபாலன் இப்படி எண்ணினான். இடது கையைத் தலைக்கு அணை கொடுத்து வெளித் திண்ணையில் படுத்திருந்தவன், வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தான்.
“தம்பி!”
‘எனக்கு அண்ணன் இல்லையே, யாருக்கு என்னைத் தம்பி என்று கூப்பிட உரிமையிருக்குது’.
“தம்பி!....ஹஹ்ஹா!”
“நன்றாகச் சிரிக்கிறீங்க! பாவம், நீங்கள் சினிமாவிலே சிரிக்கக் கற்றுக் கொடுக்கவென்று இருக்க வேண்டியவர். இங்கே சர்க்கஸிலே வந்து அகப்பட்டுக்கிட்டிருக்கீங்க போலிருக்கிறது”.
“தம்பி!”
“முதலிலே என்னைப் பெயரிட்டு அழையுங்க!”
“சூடாகப் பேசுகிறாயே?”
“இளரத்தம் சார், இளரத்தம்!”
“பேஷ், நானே சொல்லலாமென்றிருந்தேன். நான் ஒரு அருமையான சிறுத்தை வளர்க்கிறேன். அதற்குக் கூட உன் போன்ற பையன்களின் இளம் ரத்தம்தான் தேவையாம். உன்னை அன்றைக்கு நான் காரில் போட்டு என் வீட்டுக்குக் கொண்டு வந்தேன் பார். அன்றிலிருந்தே அது சொல்லிக்கொண்டேயிருக்கிறது. இன்றுதான் என்னால் நிறைவேற்ற முடியப் போகிறது!”
“சந்தோஷம், அப்படியே செய்யுங்கள். நான் கூட முந்தி ஸ்கூலிலே பேசியிருக்கேனாக்கும், வாயில்லா ஜந்துக்களிடம் அன்புகாட்ட வேணுமின்னு. இப்போ நீங்க உங்களுடைய சிறுத்தையிடம் அன்பு காட்டுகிறது. இதுதான் முதல் தடவையோ? பரிதாபம் சிறுத்தை வாடி மெலிஞ்சிருக்குமே..? ம், ஜல்தி...எங்கே அந்தச் சிறுத்தை? கொண்டு வாரும் இப்படி நான் அதனிடம் கேட்கிறேன். என்னுடைய ரத்தம்தான் அதற்குத் தேவையா என்று?” – இடி முழக்கம் செய்தான் பூபாலன். முகத்திரையில் ரத்த வர்ணம் வழிந்தது.
சர்க்கஸ் உரிமையாளர் ககுமார் பேய்ச் சிரிப்புச் சிரித்தார். அடுத்த நிமிஷம், அங்கிருந்த பொத்தானை மெல்ல அழுத்தினார்.
அவ்வளவுதான் – பயங்கரமான உறுமல் முழங்க, அச்சம் தரும் பற்கள் ஒளியில் மின்ன, பெரிய சிறுத்தையொன்று தோன்றியது.
“ஐயோ, அப்பா! ஐயோ, அம்மா!” என்று அலறினான் பூபாலன்.
அடுத்த தடவையும் சர்க்கஸ்காரன் பயங்கரமாகச் சிரித்தான்.
“தம்பி, உன் அப்பாவையும் அம்மாவையும் ஏன் வீணாகக் கூப்பிடுகிறாய்? அவர்கள் இருவரும் உன்னை என் வசம் ஒப்புவிக்கச் செய்த சூழ்ச்சிதான் இப்போது உன் கண்முன்னாலே நாடகம் ஆடுகிறதே? பாவம்...!”
“இரக்கப்படக் கூட உமக்கு நெஞ்சு இருக்குதா..?”
“இரக்கப்பட மட்டுமல்ல, உன்னை அகில இந்திய சர்க்கஸ் விளையாட்டுக்காரனாக ஆக்கவும் எனக்கு இதயம் இருக்கிறது; துணிவு இருக்கிறது”
“பேஷ்!“
“பேஷ், பேஷ்! அப்படியென்றால், என் இஷ்டப்படி நீ இங்கேயே என்னுடனேயே தங்கி விடுகிறாயா?”
“அது பகற்கனவு ஐயா, பகற்கனவு!”
“அப்படியென்றால் முடியாதென்றுதான் மறுமுறையும் சொல்கிறாயா?”
“ஆமாம், முடியாது...! முடியாது...! முடியவே முடியாது...!”
“அப்படியென்றால் இனி நீ இங்கிருந்து மீளவும் முடியாது. இதோ, உன்னை விழுங்கி ஏப்பம் விடக் காத்துக் கொண்டிருக்கும் இந்தச் சிறுத்தையிடமிருந்து தப்பவும் முடியாது. ஆமாம் மாஸ்டர், முடியாது! முடியாது! முடியாது!”
“எனக்கு இனி என்னைப் பற்றிக் கவலையில்லை. காணாமற் போன என் அருமை நாய்க்குட்டி கிடைச்சும் கடைசி நேரத்திலே அது கை நழுவிப் போச்சு, இப்போ என்னைப் பெற்றவங்களும் என்னைக் கை கழுவிப்பிட்டாங்க. சத்தியமாகச் சொல்றேன்; நான் சாகத் துணிஞ்சிட்டேன்!”
“பூபாலா, உன்னிடம் அடைக்கலமடைந்திருக்கும் அந்த நெஞ்சுரத்திற்காகவேதான் தம்பி உன்னை என் கம்பெனியில் அமர்த்திக் கொள்ள ஆசைப்படுகிறேன்.”
“வாஸ்தவம் சார். உங்கள் ஆசைக்குக் காரணம் எனக்குப் புரியாமலா போயிடும்? என்னைக் கொண்டு பணம் பண்ணத்தான் நீங்க கோட்டை கட்டுறீங்க, இல்லையா...?”
“இல்லை, தம்பி. உன்னைக் கொண்டுதானா எனக்குப் பணம் கிடைக்கவேணும்? உன் அப்பாவை இப்போது அவர் வேலை செய்யும் தொழிற்சாலையிலே சேர்த்துவிட்டது நான்தான். அந்த நன்றியில்தான் உன்னை என்னிடம் சேர்ப்பித்துச் சென்றிருக்கிறார் அவர் நினைவு வைத்துக்கொள் அப்பனே!”
“ஐயா, உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு. என் நிலையிலே உங்கள் மகள் அல்லி அகப்பட்டுத் திண்டாடினால் என்ன பாடுபடும் உங்கள் மனசு? நினைச்சுப் பார்த்து, என்னை விட்டு விடுங்கள்.. சார், என் நாய்க்குட்டியைக் காணாமல் ஒரு நிமிஷம் கூட என்னாலே தங்க முடியாது!” என்று கண்ணீரைத் தாரை வார்த்துக் கெஞ்சினான் பூபாலன்.
சர்க்கஸ் மாஸ்டர் இம்முறை வாய் திறக்கவில்லை. அருகிலிருந்த பொத்தானை இடது கை நுனி விரலால் அழுத்தினார். சிறுத்தை பயங்கரமாக உறுமிக் கொண்டு அவன் மீது பாய்ந்தது.
“ஐயோ!” என்று கூக்குரலெழுப்பினான் பூபாலன். அவனுடைய தலை சுற்றியது.
அப்பொழுது ஓர் அதிசயம் நடந்தது.
“பூபாலா, பயப்படாதே!”
எங்கிருந்தோ ஒரு குரல் சூன்யத்தைத் துண்டாடி எதிரொலித்தது. அதே வேகத்தில், பாய்ந்து கொண்டிருந்த அந்தச் சிறுத்தையின் உடலில் ஒரு பட்டாக்கத்தி வந்து பாய்ந்து செருகிக் கொண்டது. மறுகணம் அந்தப் பயங்கரமான சிறுத்தை மாயமாக மறைந்து விட்டது!
என்ன அதிசயம் இது!
பூபாலனின் உடலில் வேர்வை ஊற்றெடுத்துப் பெருகியது.
“பூபாலா, பயப்படாதே! உன்னைப் படிய வைக்க எங்க ‘நைனா’ செஞ்ச நாடகமாக்கும் இது” என்று கூறி கடகட வெனச் சிரிக்கலானாள் சிறுமி அல்லி.
“தங்கச்சி“ என்று உணர்ச்சிப் பெருக்கோடு அழைத்து, அல்லியைத் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணிர் விட்டான் பூபாலன்.
“அண்ணா, என் அப்பாவின் இஷ்டத்துக்கு இணங்கி நட. நீ சர்க்கஸிலே விளையாட ஆரம்பிச்சா நான்கூட உன்னோட சேர்ந்து விளையாடுவேன். நம்ப ரெண்டு பேராலேயும் எங்க கம்பெனிக்கும் நல்ல பேர் கிடைக்கும். எனக்காக வேண்டியாச்சும் ‘சரி’ சொல்லு, இங்கே உனக்கு எந்தவிதக் குறைச்சலுமே இல்லை. உன் அப்பாவும் அம்மாவும் கூட அடுத்த வாரம் வந்திடுவாங்க” என்று தன் பங்குக்குக் கெஞ்சினாள் அல்லி – அவனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டே
“ஆகட்டும். ஆனா என் அருமை நாய்க்குட்டி...?” என்று கேட்டான் பூபாலன் வேதனையுடன்.
“இதோ, பார்”என்றார் சுகுமார்.
அதே நிமிஷம் பூபாலனுடைய நாய்க்குட்டி அங்கு வந்து நின்றது.
“ஐயா, ஆத்திரத்திலே வயசையும் வார்த்தையையும் மீறி என்னென்னமோ பேசிப்பிட்டேன். மன்னிப்பீங்களா? என்னோட நாய்க்குட்டி கிடைச்சப்புறம் இனி எனக்கு எந்தக் கவலையுமே இல்லை. உங்க ‘நன்றிக் கடனை’ அடைக்க வேண்டியது என் பொறுப்பாச்சே... சினிமாவிலே அந்த சுதாகர் மாதிரி நடிக்க ஆசை கொண்டேன். இப்போ என்னடான்னா சர்க்கஸ் மாஸ்டர் ஆகிறதுக்கு யோகம் வந்திருக்குது!ம்.. இப்பவே எனக்கு சர்க்கஸ் ஆட்டத்தைக் கற்றுத் தர ஆரம்பிச்சிடுறீங்களா” என்று பூபாலன் மகிழ்ச்சி கரை புரளக் கூறினான்.
“ஒகே!” என்று சொல்லி அவனைத் தட்டிக் கொடுத்தார் சுகுமார்.
6
சுகுமார் சர்க்கஸ் கம்பெனியில் மாட்டப்பட்டிருந்த காலண்டரில் இரண்டு மாதத்திய தினசரித் தாள்களைக் கால தேவன் திருடிச் சென்றுவிட்டானாம்!
அன்று சர்க்கஸ் கொட்டகையில் எள் விழுவதற்குக் கூட இடம் இல்லாதபடி கூட்டம் கூடியிருந்தது. மாஸ்டர் பூபாலன் புதிதாக அரங்கேறி, ஊசலாடிக் கொண்டிருக்கும் கம்பி வளையத்தில் நின்று விளையாடும் காட்சிகளைப் பற்றிய விளம்பரங்களெல்லாம் பலன் பெறாமல் போய்விடுமா என்ன?
ஆயிற்று, கோமாளி வந்து கூத்தடித்துச் சென்றான். அடுத்தவன் வந்து கரணம் போட்டுச் சென்றான். மூன்றாமவள் அல்லி, வந்து ‘ஜிப்பி டான்ஸ்’ ஆடிச் சென்றாள்.
ஆம்; அதோ பூபாலன் அழகாக உடை உடுத்துக் கொண்டு வந்து வணக்கம் சொல்கிறானே! என்ன விந்தை இது? அவன் எப்படி இவ்வளவு அற்புதமாக ‘பார்’ விளையாடுகிறான்? ஆஹா, அவனுடைய கழுத்தில் எவ்வளவு உரிமையோடு அந்த நாய்க்குட்டி பின்னிப் பிணைந்திருக்கிறது?
பூபாலன் அதிர்ஷ்டமே, அதிர்ஷ்டம்!
மக்களின் ஆரவாரம் மிகுந்தது; ஒரே கைதட்டல். ஆனால் மறுகணம்...?
நாய்க்குட்டியுடன் ’பார்’ விளையாடிக் கொண்டிருந்த பூபாலன் அப்படியே ’தொபுகடீர்’ என்று தாவிப் பாய்ந்தான்.
காம்பவுண்ட் கவரைத் தாண்டி நின்ற அந்த லாரியில் அவன் நாய்க்குட்டியுடன் விழுந்தான்.
அதே சமயத்தில்....
“டுமீல், டுமீல்“ என்ற வெடி ஒலி திக்கெட்டும் பரவியது!
7
“இப்போது நிறுத்தப்போகிறாயா...? இல்லையா...?”
“முடியாது.”
“முடியாதா?”
“ஆமா, முடியாது”
தம்பி, நீ சிறுபிள்ளை, நான் சொல்கிறதைக் கொஞ்சம் கேள்.”
“முடியாது”
“முடியாதா?”
“முடியாது; முடியாது; முடியாது..!”
“பூபாலன்!”
“ஆ!”
“ஏன் அப்படி அதிசயப்படுகிறாய்?”
“என் பெயர் உமக்கு எப்படித் தெரிந்தது?”
“தெரியும்.”
”விளக்கமாகச் சொல்லுங்கள்.”
“முடியாது!”
“முடியாதா?”
“ஆமாம், முடியாது; முடியவே முடியாது!”
“பழிக்குப் பழியா?”
“இல்லை”
“பிறகு...?”
“அன்புக்கு அன்பு!”
“என்ன, அன்புக்கு அன்பா? முன் ஒரு சமயம் என்னைத் தமிழ்ப் படம் ஒன்றிலே நடிக்கச் சொன்னாங்க. அங்கே இப்படித் தான் அழகான தமிழ் வார்த்தைகள் பேசினாங்க. நீங்கள் அந்தக் கும்பலைச் சேர்ந்தவரில்லையே? பிறகு அன்பைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எப்படித் தெரியும்? ம்...! ஏன்தான் தெரியப் போகிறது?”
“தம்பி, கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கு அன்பைப் பற்றி என்ன தெரியும் என்றுதானே நீ சந்தேகப்படுகிறாய்? நியாயம் இருக்கிறது. உன் எண்ணத்தில். தமிழ் ரத்தம் துடிக்கிறது, உன் கேள்வியில். நெஞ்சு இருக்கிறது, உன் கண்ணிரில்!”
“போதும், நிறுத்துங்கள்! வேண்டாம், நீங்கள் பாடம் பண்ணி வைத்திருப்பதையெல்லாம் பேஷாக ஒப்பியுங்கள். ஆனால், என்னை இங்கிருந்து விடுதலை செய்து அனுப்பிவிட மாத்திரம் தடை போட்டு விடாதீங்க."
“இந்தக் குருட்டு இருட்டிலா நீ வெளியேறப் போகிறாய், தம்பி?”
“என்னுடைய அருமை நாய்க்குட்டி மூன்றாம் தவணையாக என்னை விட்டுப் பிரிஞ்சபோதே என் கண்கள் குருடாகிடுச்சு; உலகம் இருட்டாகிப் போச்சு. பயங்கரமான இந்தக் குகை எனக்கு ஒரு பொருட்டல்ல!”
“பூபாலன், உன் அழுகையை நிறுத்தச் சொல்லி இந்த மூன்று நாட்களாகக் கெஞ்சினேன். இந்த வேண்டுகோளுக்கா இவ்வளவு வியாக்யானம்? இதோ பார், முதலாவதாக நீ உன் கண்ணீர் வெள்ளத்துக்கு அணை போட்டாக வேணும். இரண்டாவதாக நீ சிரிக்க வேணும்,” என்றான் அந்த மனிதன். அவனுடைய விரல்கள் பூபாலனின் கன்னத்தில் இழைந்திருந்த கண்ணிர் முத்துகளை வருடி விலக்கி விட்டன.
பூபாலன் திமிறிக் கொண்டு விலகினான். தன்னை மறந்த நிலையில் விர்ரென்று பாய்ந்து ஓடினான். எங்கு பார்த்தாலும் பாறைச் சுவர்கள் நந்தியாக வழி மறைத்து நின்றன. ஆத்திரம் தாளவில்லை; வெறி தாளவில்லை. அழுகை மூண்டது; வேதனை மூண்டது. “ஐயோ, என் நாய்க்குட்டி ?” என்று கதறியவனாக, பாறையில் படார், படார் என்று தலையை மோதிக் கொண்டான். ரத்தம் ஊற்றெடுத்தது. மயங்கிக் கீழே சாயப் போனான் பூபாலன்.
அப்பொழுது–
“ஐயோ, பூபாலா!” என்ற குரல் முன்னோடிச் சென்றது. அடுத்து, ஒரு சிறுமி பாய்ந்து சென்றாள். தரையில் விழுந்திருந்தவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு மெதுவாகக் கீழே அமர்ந்தாள். சிறுமியின் அன்பு மடியில் சிறுவன் தன் நினைவைக் கொள்ளை கொடுத்து விட்டுக் கிடந்தான்.
ஒரு நாழிகைப் பொழுது கழித்திருக்கும்.
பூபாலன் கண்களைத் துடைத்துக் கொண்டான்; கண் மலர்கள் விரிந்தன. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான். கை நீட்டும் தொலைவில் கிடந்த ஒரு பழைய காகிதக் கிழிசலை அவசர அவசரமாக எடுத்தான். அவனுடைய கைகள் நடுங்கின. வாய் விட்டுப் படித்தான்.
‘பூபாலா! பயப்படாதே! இன்று இரவு சர்க்கஸ் கூடாரத்தின் வெளி வாசலில் உனக்காக காருடன் காத்திருக்கிறேன்– உன்னுடைய அருமை நாய்க்குட்டியோடு, நல்ல சமயம் பாத்துத் தப்பி வந்து விடு...’
இப்படிக்கு உன் அன்புள்ள தங்கை,
–பூங்கோதை
பூபாலன் அந்தத் துண்டுத் தாளைக் கசக்கி வீசி எறிந்தான். கண்ணிர் கரை உடைத்துப் பொங்கியது. மறுபடியும் தரையில் தலையைப் ‘படார், படார்’ என்று மோதிக் கொண்டான். உறைந்திருந்த ரத்தக் கோடுகளில் செந்நிறம் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.
‘பூங்கோதை! தங்கச்சி உன் அன்புக்கு ஈடே இல்லை. எனக்காக, என்னை அந்தப் பாவிப் பயல் சர்க்கஸ்காரன்கிட்டே இருந்து விடுவிக்கிறதுக்காக, நீ எவ்வளவு பாடுபட்டியோ? கடைசியா, எல்லாம் வீணாகிப் போச்சே, புலி வாயிலிருந்து தப்பி சிங்கம் வாயிலே வந்து அகப்பட்டுக்கிட்டேனே? தெய்வமே, என்னைப் பெற்றவங்கதான் அடியோடு மறந்து விட்டாங்க – நீ கூடவா இப்படி மறந்திடணும்? அறியாத வயசு, சின்னப் பையன்; எனக்கா இத்தனை பெரிய சோதனை.?”
சிறுவன் பூபாலன் வாய்விட்டுப் புலம்பினான். சித்தம் தடுமாறியவனைப் போன்று, அப்படிப் பிதற்றினான்.
“அண்ணா!”
வெட்டிப்பாயுமே மின்னல். அம்மாதிரி திரும்பிப் பார்த்தான் அவன்.
அன்பின் அழைப்பு – பாசத்தின் குரல். எங்கிருந்து, யார் இதயத்திலிருந்து வெட்டிப் பாய்கிறது...?
“அண்ணாச்சி...”
“ஆ! பூங்கோதையா...? என் அருமைத் தங்கச்சி பூங்கோதையா? நீ எப்படி இங்கே அகப்பட்டுக்கிட்டே? கொள்ளைக் கூட்டத்துக்குப் பலியாகும் தலைவிதி என்னோடு மட்டும் தப்பலையா? உனக்குங்கூடவா அந்தத் தலை எழுத்து....? நான் சாவதைப் பற்றி அக்கறைப்படலே; அச்சப்படலே. ஆனா, உன்னைக் காப்பாற்றி உயிர் தப்பிக்கச் செய்யறதிலே என் உயிர் போனா, அதைத்தான் பெரும் பாக்கியமாய் நினைப்பேன். இது படைத்தவன் பேரிலே இடுற ஆணை, தங்கச்சி!” என்று வீறு கொண்டு ஆவேசத்துடன் முழங்கலானான் சிறுவன்.
அதே கணம்–
“ஹ ஹ் ஹா!”
“யார், நீயா சிரிக்கிறாய்? பிஞ்சுக் குழந்தைகளைத் தஞ்சம் அடையச் செஞ்சுட்ட, உன்னுடைய வெற்றியை நினைச்சா அப்படி அட்டகாசச் சிரிப்புச் சிரிக்கிறே? இல்லை, பச்சை ரத்தத்தைக் குடிக்கப் போகிறோமே என்ற போதை வெறியிலே நீ அப்படி எக்காளமிட்டுச் சிரிக்கிறாயா? ஆனா, ஆண்டவன் உன்னைக் கண்டு பரிகாசமாகச் சிரிக்கிறதை மட்டும் நீ மறந்திடாதே...?” என்று ஆத்திரத்துடன் பேசினான் பூபாலன்.
அப்பொழுது ஒர் அதிசயம்!
என்ன ஆச்சரியம்? கொள்ளைக் கூட்டத் தலைவனுக்குக் கூடக் கண்ணீர் வருமா, அவனுக்குக் கூட இதயம் என்ற ஒன்றை மறக்காமல் கொள்ளாமல் பிரம்மா படைத்திருக்கிறானா...?
“தம்பி, இதோ இந்தக் கடுதாசியைப் பார். உன்னால் எழுதப் பட்டதுதான். இது பற்றி உனக்கு நினைவிருக்கிறதா? நீ சர்க்கஸ் கூடாரத்திலேயிருந்து தப்பப் போகிற துப்பு பூங்கோதைக்குத் தெரிஞ்சுது பூங்கோதை தக்க ஏற்பாடுகளோடு வெளி வாசலிலே காத்துக் கிட்டிருந்துச்சு. நீ ‘பார்’ விளையாடின கையோட நாய்க்குட்டியுடன் குதிச்சேயில்லையா, அப்போது துப்பாக்கி வெடிச்ச ‘டுமீல்’ சத்தம் கேட்டுச்சு. நீ தாவிப் பாய்ஞ்ச கார் என்னுடையது.. மெய்தான், கொள்ளைக் கூட்டத் தலைவனுடையது. நான்தான் உன்னையும் பூங்கோதையையும் காப்பாற்றி, காரிலே வைத்துக் கொண்டு புறப்படப் போனேன். அப்பொழுது திரும்பவும் சர்க்கஸ் தலைவன் நம் எல்லோர் பேரிலும் குறி வைத்துச் சுட்டான். உன்னையும் பூங்கோதையையும் காப்பாற்ற வேணுமே என்ற பதட்டத்திலே, உன் நாய்க்குட்டியைப் பற்றிக் கவனிக்க முடியல்லே. அது எங்கே போச்சோ தெரியவும் இல்லை. தம்பி, கண் சிமிட்டுற நேரம் தாமதிச்சு இருந்தால் கூட, நாமெல்லாம் கூண்டோடு கைலாசம் போயிருக்க வேண்டியதுதான். கடவுள் புண்ணியத்திலே நல்ல வேளை தப்பிச்சிட்டோம். தம்பி, பயப்படாதே! உன்னையும் பூங்கோதையையும் என் குழந்தைகள் போலக் காப்பாற்றுகிறேன். என் சொல்லை நம்பு...” என்று கெஞ்சினான் கொள்ளைக்காரன்.
‘முடியாது! நீ என்னைக் கொல்; நான் கவலைப்படலே. ஆனா, என் தங்கச்சியை உன்னாலே ஒண்னும் செய்ய முடியாது; ஞாபகம் வச்சுக்க தங்கச்சி, வா புறப்படுவோம்!” என்று சொல்லிப் பூங்கோதையின் கையைப் பிடித்துக் கொண்டான்; எதிரே குறுக்கிட்டு நின்ற அந்தக் கொள்ளைக்காரனை விலக்கி விட்டு நடந்தான் பூபாலன்.
“தம்பி! தங்கச்சி!”
கொள்ளைக் கூட்டத் தலைவன் அவர்கள் இருவரையும் வழி மறித்தான்.
“சீ! போ!” என்று ஆத்திரம் பொங்கக் கூறினான் பூபாலன். அதே சடுதியில், அருகில் கிடந்த ஒரு கழியை எடுத்து அவன் மீது வீசினான் பூபாலன். கள்வனின் மண்டையில் ரத்தம் பீறிட்டது.
“அப்பா!” என்ற குரல் வானை முட்டியது.
மறுகணம், பூங்கோதை அந்தக் கொள்ளைக் கூட்டத் தலைவன் அருகே சென்று விம்மினாள்.
யார் இவன்? இந்தக் கொள்ளைக்காரனா பூங்கோதையின் தந்தை...?
“அப்பா, போதும் இந்த நாடகம்!”
“தம்பி!”
“ஏன்!”
“இதோ பார்!”
“ஆ!”
“நீங்களா? என் பூங்கோதையின் அப்பாவேதான்! ஏன் இந்தக் கொள்ளைக்காரன் வேஷம்?”
“உன்னைக் காப்பாற்றத்தான்!”
“இல்லை, ஏமாற்ற...!”
“ஆமா, அண்ணா மூணு நாளைக்கு முன்னாலே அப்பாவுக்கு ஷூட்டிங் இருந்திச்சு. படமுதலாளி, அப்பாவுக்கு இந்தக் கொள்ளைக்கார வேஷம் தந்திருந்தாங்க. அதே வேஷத்தோடேதான் உன்னைக் காப்பாற்ற வந்தாங்க - ரகசியம் வெளியே தெரிஞ்சுடக் கூடாதல்லவா? மூணு நாளாகக் கெஞ்சுறாங்க அப்பா. நீ மனசு மாறவேயில்லை. என்ன, அப்படிப் பார்க்கிறே, ஆமாம், நான் இப்போது இருக்கும் இடம் ஸ்டுடியோவேதான். நீ முன்பு நடிக்கப் பழகிக்கிட்டியே அதே இடம்தான். படப்பிடிப்புக்காக வேண்டி திருடர்கள் குகையா கட்டப்பட்டிருக்குது – அவ்வளவு தான்! அண்ணா, என் சொல்லை, அப்பாவின் சொல்லை இனியாவது கேளு. ரொம்பவும் ஜாக்கிரதையாக நீ இருக்கணும். இல்லாமப் போனா அந்தப் பாவி சர்க்கஸ்காரன் திரும்பவும் உன்னைப் பிடிச்சிக்கிட்டுப் போயிடுவான்!” என்றாள் பூங்கோதை.
“ஆகட்டும் பூங்கோதை.ஆனா, என் அருமை நாய்க்குட்டி?” என்று விம்மினான் பூபாலன்.
“கடவுள் கட்டாயம் அதைக் காப்பாற்றுவார்“ என்று ஆறுதல் சொன்னாள் பூங்கோதை,
பூபாலன் வானத்தில் பறந்தான்.
அப்பொழுது அவன் கண்ணில் பட்டது ஒரு செய்தித்தாள். மறு வினாடி, அவன், “ஐயோ!’ என்று அலறியவாறு மூர்ச்சித்துக் கீழே விழுந்தான்.
செய்தி ‘...சுகுமார் சர்க்கஸ் கம்பெனியில் பார் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பூபாலன் எப்படியோ தப்பிவிட்டதை அறிந்து, சுகுமார் அவனைத் துப்பாக்கியால் சுட்டான். பூபாலன் தப்பித்து விட்டான். ஆனால் பாவம், அவனுடைய நாய்க்குட்டி துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகி விட்டது!”
8
பூபாலன் நன்றாகச் சிரித்து நாட்கள் பன்னிரண்டு ஆகி விட்டன.
பூங்கோதையும் வாய்விட்டுச் சிரித்துப் பன்னிரண்டு நாட்கள் ஆகிவிட்டன.
“பூபாலன் அண்ணாச்சி! எதையோ பறிகொடுத்தாற் போல சதா உட்கார்ந்துகிட்டு இருந்தா என்ன தான் ஆகப்போகிறது...?”
“தங்கச்சி, தன் அருமை நாய்க்குட்டியைப் பறிகொடுத்தவன் பின்னே எப்படி இருக்க முடியும்...? என் நாய்க்குட்டி காணாமப் போச்சு; அப்பவே என் நிம்மதியும் காணாமப் போயிட்டுது. இப்போ என்னுடைய நாய்க்குட்டி செத்துப் போயிட்டதாக பத்திரிகையிலே வேறே தாக்கல் வந்திடுச்சு. பூங்கோதை, நீ மட்டும் இல்லையானா நான் என் நாய்க்குட்டியைத் தேடி எமலோகம் போயிருப்பேன். பெற்றவங்க அன்புண்ணா அது என்னான்னு நான் கேட்க வேண்டிய நிலையில் இருக்கேன். ஆனா உன் அன்பைப் பற்றி, என் பேரிலே நீ கொண்டிருக்கிற அந்தப் பாசத்தைப் பற்றி நான் மணிக்கணக்கிலே பேசுவேன். ஆனா ஒண்ணு மேலே இருக்கிறதாச் சொல்றாங்களே, அந்த ஆண்டவன் நம்ப ரெண்டு பேர் அன்பையும் அறிஞ்கக்காம இருந்தாரோ, நாம் பிழைச்சோமோ, பூதக் கண்ணாடி வச்சு இந்த ரகசியத்தைப் புரிஞ்சுக்கிட்டாரோ, அப்புறம் நமக்கு சோதனை காட்ட அவர் மூளை துரிதமாக வேலை செய்ய ஆரம்பமாகிடும்....!”
‘களுக்’கென்று சிரித்தாள் பூங்கோதை முத்துப் பற்கள் பிஞ்சு உதடுகளுக்கு அழகு சேர்த்தன.
“அண்ணா, நீ இப்படிப் பேசுறதைக் கூட திரை மறைவாத்தான் வைத்துக் கொள்ள வேணும். முன்னே, உன்னைப் படத்திலே நடிக்க எங்க அப்பா வலை போட்டாங்க, அப்புறம் உன்னைச் சர்க்கஸிலே விளையாடச் செய்ய ஒரு பாவி சதி செஞ்சான். இப்போ நீ அழகாப் பேசற துப்பு – வெளியே தெருவே பரவினா, பிரசங்கம் செய்யறதுக்கு உன்னை யாராச்சும் ஏரோப்ளேனிலே தூக்கிட்டுப் பறந்திடப் போறாங்க உஷார்! கபர்தார்!”
“நீ கூட ஜாக்கிரதையாக இருக்கணும், தங்கச்சி நீ பேசத் தொடங்கிட்டா என் காதிலே தேன் வந்து பாயுது. அப்புறம் நான் அடையும் சந்தோஷத்திலே திரும்பவும் மயக்கம் வந்திடப் போகுது!” என்று பதிலுக்குச் சொல்லிவிட்டுப் பலமாகச் சிரித்தான் பூபாலன்.
“அண்ணா, இன்னும் கொஞ்சம் சிரி அண்ணா...! சிரிச்சுக்கிட்டே இரு அண்ணா! இந்த மாதிரிச் சிரிப்பைக் கண்டு எத்தனை யுகமாயிடுச்க...?”
“தங்கச்சி!”
பூபாலனால் மேற்கொண்டு பேச முடியவில்லை. கண்களில் பொங்கி வந்த கண்ணீர், வாய்க்குள்ளிருந்து புறப்பட்ட வார்த்தைகளைத் தடுத்துவிட்டது.
அப்பொழுது ...
“தம்பி” என்ற இரட்டைக் குரல் ஒன்றாக ஒலித்தது.
பூபாலன் திரும்பினான்.
அங்கே அவனுடைய தாய் தந்தையர் நின்றார்கள்.
அவன் தலையைத் திருப்பிக் கொண்டான். “நம்ப மாரியம்மன் கிருபைதான். அப்பா மேலே நீ கோபப்படாதே, தம்பி. அந்த சர்க்கஸ்கார ஐயாதான் உன் அப்பாவுக்கு வேலை வாங்கிக் கொடுத்தாங்க. உன்னை பெரிய சர்க்கஸ்காரனாக ஆக்கிப்பிடுகிறதாகவும் சொன்னாங்க. ஆனா, இப்படியெல்லாம் இல்லாததும் பொல்லாதும் நடக்குமின்னு நாங்க என்னத்தைக் கண்டோம்? நாம் இனி நம்ப பிறந்த இடத்திலேயே தங்கி வெள்ளாமை விளைச்சலைப் பார்த்துக்கிட்டிருப்போம்... போதும், பட்டணத்து வாழ்வு!” என்று சொல்லிக் கண்ணீர் பெருக்கினாள் பூபாலனின் அன்னை.
“ஆமாம், தம்பி” என்று சொல்லித் தன் மகனின் முகத்தை அன்போடு வருடினான் முருகேசன், -
திக்கு திசை எதுவும் புரியவில்லை பூபாலனுக்கு அருகே நின்று தன்னையே அன்புப் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி பூங்கோதையை நோக்கினான் பூபாலன்.
“தங்கச்சி, நான் இப்போ எங்கே இருக்கிறேன்?”
“எல்லாரும் உங்க பிறந்த ஊரிலேதான் இருக்கிறோம்– பட்டணத்திலே இல்லே! அண்ணா, உனக்கு நிம்மதி கிடைக்க வேண்டுமென்றுதான் இங்கே பூவைமாநகருக்கு உன்னைக் காரிலே கொண்டாந்தோம். இத்தனை நாளாகத்தான் உனக்கு சுய நினைவே வரல்லியே! இனியாச்சும் நடந்த கதையையெல்லாம் மறந்திடு. மத்தியானத்துக்கு இந்த ஊரிலே மாரியம்மன் தேர் திருநாள் நடக்குதாம் – அதைப் படம் பிடிக்கப்போறாங்க எங்க அப்பா. சினிமா கம்பெனிக்காரங்க கூட வந்திருக்காங்க. இளைஞர் சங்கத்திலே தங்கியிருக்காங்க, நீயும் நானும் கூட கொஞ்ச நேரம் நடிக்க வேணுமாம். ‘வசந்த பைரவி’ சினிமாவுக்காக...! அதோ அப்பா காரிலிருந்து இறங்குறாங்களே!” என்றாள் பூங்கோதை, சிரிப்பு வெள்ளத்தில் அன்பின் அலைகள் ஆர்ப்பரித்தன.
தீப்பொறி தோன்றி மறைந்தது.
பூபாலன் சிலைபோல அப்படியே மயக்க நிலையில் நின்று விட்டான்.
“பூபாலா, மறுபடியும் உன் கண்ணிலே கண்ணீர் இருக்குதே? நீ அழுதா, நானும் அழுவேன். நீ அழாதே, அண்ணா”.
“பூங்கோதை, நம்பளோடே என் நாய்க்குட்டியும் நடிக்க வேணுமின்னு ஆசை வைச்சிருந்தேன். அது நிறைவேறலியேன்னுதான் வருத்தமாயிருக்குது..” என்று சொல்லிவிட்டு விம்மினான் அவன்.
அதே சமயம்–
“பூபாலன், இதோ பார் ஒரு நாய்க்குட்டி’ என்று கூப்பிட்டு அவனிடம் ஓர் அழகிய நாய்க்குட்டியைக் கொடுத்தார் பூங்கோதையின் தந்தை.
‘ஊஹூம், இது எனக்கு வேண்டவே வேண்டாம் என் நாய்க் குட்டி இல்லை இது. ஒரு தரம் நான் பட்டபாடு, அனுபவிச்ச வேதனையெல்லாம் போதும்!” என்று சொல்லிப் புலம்பினான் அவன்.
மத்தியானம்–
“பூங்கோதை!” என்று அழைத்தான் பூபாலன். பிறகு உள்ளே எட்டிப் பார்த்தான்.
பெண்கள் நாலைந்து பேர் சிறுமி பூங்கோதையைச் சற்றி நின்றுகொண்டு பாட்டுப் பாடிக்கொண்டிருந்தார்கள். ஆகா! எவ்வளவு அற்புதமான காட்சியுடன், இனிமையான பாடல்.
‘குங்குமத்தின் பொட்டுதனை நெற்றியிலிட்டு
குலச் சுடராம் கோதைக்கு வாழி பாடுவோம்.
எங்கள் குலக்கொடியில் பூத்த பூங்கோதை;
எல்லோரும் அன்பு செயும் நல்ல பூங்கோதை;
மங்களம் பிறந்த தினம் போற்றி மகிழ்வோம்,
மலரிதழைத் தூவி இறை பதம் பணிவோம்;
தங்கத்தைப் பொடிசெய்து கோல மிடுவோம்;
தந்தத்தை வந்தவர்க்குச் சீர் வழங்குவோம்!’
“பூபாலா, புறப்படு, இன்றைக்கு ஷூட்டிங் இருக்கு. பூவைமாநகர் மாரியம்மன் தேர் திருநாளையும் படம் பிடிக்க வேணும். நீயும் கோதையும் அற்புதமாக நடிச்சிடணும்?” என்றார் கோதையின் தந்தை – டைரக்டர் பரசுராம். “ஓ” – ஒரு குரல் மட்டுமல்ல; இரட்டைக் குரல்!
கோயிலின் எதிர்ப்புறத்தில் இருந்த பங்களாவில் படப்பிடிப்புக்குரிய வேலைகள் நடைபெற்றன.
தேர் ஊர்வம் படமாக்கப்பட்டது.
பிறந்த நாள் வைபவ வாழ்த்துப் பாட்டைச் சற்றுமுன் பூபாலன் கேட்டு மெய் மறக்கவில்லையா? அதே பாட்டைத் திரும்பவும் பாடினார்கள்.
பூங்கோதை சிரித்த வண்ணம் நின்றாள். அப்பொழுது பூபாலன் மகிழ்ச்சி பொங்க, ஓர் அழகிய வைரச்சங்கிலியை யாரும் எதிர்பாராத சமயத்தில் பூங்கோதையிடம் நீட்டினான். “அண்ணா!”
“கோதை, இது என்னுடைய பரிசு. உன் பிறந்த நாளுக்கு இந்த ஏழையின் அன்புப்பரிசு!” என்றான் பூபாலன்.
பூங்கோதை மகிழ்ச்சியுடன் அதை வாங்கி அணிந்து கொண்டாள்.
“நானும் உனக்கு ஒரு பரிசு தரவேண்டாமா? இதோ!” என்று சொல்லித் தன் கழுத்திலிருந்த அந்தப் புதிய வைரச் சங்கிலியை கழற்றி அவன் கழுத்தில் போட்டாள் பூங்கோதை.
பிறகு இருவரும் சிரித்து மகிழ்ந்து, கை கோர்த்து நடனமாடினார்கள்.
“கட்!... ஒகே!... டேக்!...”
டைரக்டரின் குரல்கள் மாறி மாறி ஒலித்தது.
படம் பிடிக்கப்பட்டது:
அடுத்த இரண்டாவது வினாடி–
“ஆ!” என்று கதறினான் பூபாலன். கீழே கிடந்த கத்தியொன்றை எடுத்து எதிரே வீசினான்.
“ஆ!” என்ற எதிர்க்குரல் கேட்டது. எதிரே அந்தக் குரலுக்குரிய உருவம் நின்றது.
“ஐயோ! சர்க்கஸ்காரன்... சுகுமாரன்!”
சில வினாடிகள் தேய்ந்தன.
“தம்பி பூபாலன்! உன்னைக் கைது செய்திருக்கிறோம், இதோ நீ கழுத்தில் போட்டுக் கொண்டிருக்கும் இந்த வைரச் சங்கிலி திருட்டுச் சொத்து. இதோ பார் ‘சர்க்கஸ் சுகுமார்!’ என்ற எழுத்துகள் இந்தச் சங்கிலியின் டாலரில் மின்னுகின்றன...! சர்க்கஸ்காரர் சுகுமாரனுடையதாம் இந்தச் சங்கிலி! அதோடு, நீ அவரைக் கத்தியால் குத்த யத்தனித்த குற்றம் வேறே! ம்... புறப்படு தம்பி, அறந்தாங்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு..!”
சட்டம் சிரித்தது; சிரித்துக் கொண்டேயிருந்தது!
9
அறந்தாங்கி போலீஸ் ஸ்டேஷனில் என்றுமில்லாத கூட்டம். அடுத்த கட்டடத்திலுள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டிலும் ஜனங்கள் கூடி நின்றனர்.
பெரியவர் ஒருவர் சொன்னார் “பாவம், பூபாலன் நல்ல பையனாச்சே! பிறந்த மண்ணிலேயே பூவை மாநகரிலேயே முருகேசன் தங்க நினைச்சிருந்தான். போதாத காலம், அப்பன் மனசை ஒடியச் செய்ய, மகனுக்கு - அறியாத பிள்ளைக்கு இப்படி ஜெயிலும் விலங்கும் வந்து விடிஞ்சிருக்குது. படம் பிடிக்க பட்டணத்துக்காரங்க வந்த அதிசயத்தையே நம்ப நாடு நகரம் கதை கதையாய் பேசுது! அதுக்குள்ளே சட்டத்தின் அதிசயமான இந்தக் கதையையும் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அந்த சர்க்கஸ்காரனோட வைரச் சங்கிலியை இந்தச் சின்னப் பிள்ளை திருடிடுச்சாம். அதுக்காக அவனுக்குத் திருட்டுப் பட்டம் கட்டின கையோடு விலங்கையும் கைக்கு மாட்டிப்பிட்டானே பாவி..! பட்டணத்துப் போக்கிரின்னா சரியாய்த்தான் இருக்கிறான்...! ம். ஆண்டவன் விட்டவழி! அரசாங்கத்தின் நியாயம் எப்படி இருக்கப்போகுதோ..? ஹும்...! படைச்சவனின் நீதி எப்படித் தீர்ப்புச் சொல்லப் போகுதோ..? வரவர உலகம் உருப்படாமல் போகுது. இல்லையானா, இந்தப் புயல் அடிச்சு ஊர் உலகத்தை இப்படி திமிலோகப் படுத்தியிருக்குமா?”
காலை மணி பதினொன்று.
அரசாங்கச் சேவகன் கூப்பாடு போட்டான்.
கூடியிருந்தவர்களின் கவனம் ஒன்று கூடியது.
சிறுவன் பூபாலன் கைதிக் கூண்டில் விலங்கும் கையுமாக கண்ணீரும் கம்பலையுமாக நின்றான். அருகே போலீஸ் ஜவான்கள் இரண்டு பேர் பாதுகாப்பிற்காக நின்றார்கள். ஒரு ஓரத்தில் பூங்கோதையின் தந்தை டைரக்டர் பரசுராம், பூங்கோதை, சர்க்கஸ்காரர் சுகுமாரன், பூபாலனின் அப்பா முருகேசன் ஆகியோர் நின்றார்கள்.
நாற்காலியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் சிந்தனைக் கோடுகள் கிழிக்கப்பட்டிருந்தன. அவருடைய கையில் அந்த வைரச் சங்கிலியும் கத்தியும் மின்னிக்கொண்டிருந்தன.
பட்டணத்துக்கு இந்த வழக்கை மாற்ற முயன்ற டைரக்டர் தோற்றார். பட்டணத்துக்கு இந்த விசாரணையை மாற்றத் தேவையில்லை என்று வாதாடிய சர்க்கஸ்காரர் வெற்றி பெற்றார்.
விசாரணை நடந்தது. இரு தரப்பு வக்கீல்களும் வாதப்பிரதிவாதங்களை முடித்துக் கொண்டார்கள்.
மாஜிஸ்திரேட்டின் கவனம் தன் மேஜை மீதிருந்த தாளில் ஓடியிருந்த எழுத்துக்களில் ஈடுபட்டிருந்தது. பூபாலனின் வாக்குமூலம் அது :
“...என் பெயர் பூபாலன். என் பிறந்த ஊர் அறந்தாங்கியிலிருக்கும் பூவைமாநகரம் என்பது. என் அப்பா பிழைப்பு காரணமாக சென்னைப் பட்டணத்துக்குப் போனார். அப்பாவுக்கு இந்த சர்க்கஸ்கார முதலாளி சுகுமாரன்தான் சிபாரிசு பண்ணி வேலையில் அமர்த்தினார். நான் சினிமாப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டதை இவர் எப்படியோ அறிந்து, தன்னுடைய சர்க்கஸ் கம்பெனியில் என்னைச் சேர்த்துவிடத் துடியாய்த் துடித்தார். எனக்கு இது கட்டோடு பிடிக்கவில்லை ஒரு நாள் என்னைத் தந்திரமாக தன்னுடைய இருப்பிடத்துக்குக் கூட்டிச் சென்றார். வேறு ஏதோ ஒரு நாய்க்குட்டியைக் காட்டி அதுதான் காணாமல் போன என்னுடைய நாய்க்குட்டி என்று பொய் சொல்லி, என்னை ஏமாற்றப் பார்த்தார். கடைசியில் என்னுடைய அந்த நாய்க்குட்டியும் கிடைத்தது. ஆகவே, அவருடைய மகள் அல்லி என்ற சிறு பெண்ணின் அன்பு நிறைந்த நிர்ப்பந்தத்தின் பேரில் நான் அங்கு தங்கினேன். எனக்கு என்னவோ சர்க்கஸ் விளையாட்டு வெறுப்பாகயிருந்தது. ஆனால் நான் சர்க்கஸில் விளையாட ஆரம்பித்ததிலிருந்துதான் அவருக்கு நிறைய வசூலானது. ஒரு நாள் இந்தச் சர்க்கஸ்காரனை ஏமாற்றிவிட்டு ஓடி விட முன் கூட்டியே நான் திட்டங்கள் போட்டிருந்தேன். நானும் என் அருமை நாய்க்குட்டியும் ‘பார்’ விளையாடிக் கொண்டிருக்கையில், காம்பவுண்ட் சுவருக்கு அருகில் தயாராக நின்ற என் உயிர் தோழி – அன்புச் சகோதரி பூங்கோதையின் காரில் குதிக்கப் போன சமயம், என் ரகசியத்தை எப்படியோ துப்பறிந்திருந்த இவர் என்னைக் குறிபார்த்துச் சுட்டார். நான் தப்பித்துக் கொண்டேன். நான் மட்டுமே காரில் தொப்பென்று விழுந்தேன். என் நாய்க்குட்டி கை தவறி விட்டதை அப்புறம்தான் அறிந்துகொண்டேன். என் நாய்க்குட்டி இறந்து விட்டதாக அடுத்த நாள் பேப்பரில் படித்தேன். அதிலிருந்து எனக்கு மூளை குழம்பி விட்டது. கடைசியில் என் மனத்தின் அமைதிக்காகப் பட்டணத்தை விட்டு பூவைமாநகருக்கு வந்தேன்.
என் பெற்றோர் பேரில் நான் கொண்டிருந்த ஆத்திரத்தையும் அவர்கள் மாற்றி விட்டார்கள். சென்ற வாரம் சூட்டிங்கில் தேர்த் திருவிழாவில் – நானும் பூங்கோதையும் நடித்தோம்.
கோதையின் பிறந்த நாள் பரிசாக ஏதாவது கொடுக்க வேண்டுமென்று எண்ணியவாறு நடந்து முன் சென்ற போது, வழியில் ஒரு புத்தம் புதிய வைரச் சங்கிலி கிடக்கவே, சடக்கென்று அதை எடுத்து சமயோசிதமாக என் அன்புக் கோதைக்கு பரிசளித்து விட்டேன். அவளோ அதையே கழற்றி எனக்குத் தன் பரிசாகத் திரும்பப் போட்டு விட்டாள் சிறிது நேரம் சென்றதும் என்னை நோக்கி ஒரு கத்தி வருவது கண்டு விலகிக் கொண்டேன். குறி தவறிய கத்தி சிறிது தூரம் தள்ளி விழுந்தது. எதிரே பார்த்தேன். இந்தச் சர்க்கஸ்காரர் என் முன் நின்றார். என் மீது அவருக்கு இருந்த பல நாள் கோபத்துக்கும் ஆத்திரத்துக்கும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளத்தான் இச்சதி செய்திருக்கிறார் என்று தோன்றியது. உடனே அவர் என் மீது குறி வைத்து வீசிய அதே கத்தியை பதிலுக்கு நான் குறி வைத்து அவரை நோக்கி வீசினேன். அடுத்த நிமிஷம் போலீஸ்காரர்கள் என்னைக் கைது செய்தார்கள். இந்த வைரச் சங்கிலியைப் பற்றிய விவரம் எதுவுமே எனக்குத் தெரியாது. நான் நிரபராதி. ககுமார் சொல்வது பொய். அவருடைய வைரச் சங்கிலியை நான் வேலை பார்த்தபோதே திருடி வந்து விட்டதாகப் பழி சுமத்துவது அபாண்டப் பொய். நான் நிரபராதி. கடவுள் சாட்சியாக நான் சொன்னது பூராவும் உண்மை...!”
மாஜிஸ்திரேட் சைகை காட்டினார். எஸ்.ஐ. எழுந்து சென்றார். கத்தியும் வைரச் சங்கிலியும் இப்பொழுது அவரது மேஜையில் கிடந்தன. மாஜிஸ்திரேட் அவை இரண்டையும் புரட்டிப் பார்த்தார் ‘சுகுமார்’ என்ற அழகான எழுத்துக்கள் அவை இரண்டிலும் மின்னின. அடுத்த மூன்றாம் நாள் தீர்ப்புச் சொல்லப்படுமென்று அறிவிக்கப்பட்டது.
மூன்றாம் நாள்...!
கூடியிருந்த அனைவரின் பார்வையும் ஒரு முகமாக மாஜிஸ்திரேட்டையே நோக்கியிருந்தது. அப்பகுதிக்கு அவர்தானே நீதியின் காவலர்!
பூபாலன் பழைய கைதிக் கோலத்துடன் கிளிக் கூண்டில் நின்றான். டைரக்டர், பூங்கோதை, பூபாலனின் தகப்பன் முருகேசன் முதலியோர் தெய்வத்தின்மீது பாரத்தைப் போட்ட வண்ணம் நின்றார்கள்.
இந்தத் துயரக் காட்சிகளைக் கண்டு அந்தக் கூட்டத்தில் ஒரே ஒரு மனிதரால் தான் சிரிக்க முடிந்தது. ஆம். அவர்தான் சர்க்கஸ் கம்பெனிச் சொந்தக்காரரான சுகுமார்! நீதி பேசியது: “சிறுவன் பூபாலனை விடுதலை செய்கிறேன். தன் மீது குறி வைத்து வீசப்பட்ட சுகுமாரனின் கத்தியைக் கொண்டுதான் எதிரியைத் தாக்கியிருக்கிறான் சிறுவன். எதிரியின் பெயர் கத்தியிலிருப்பதே இதற்குச் சாட்சியம். அடுத்ததாக, இந்தப் பையன் களவாடி விட்டதாகச் சொல்லப்படும் இந்த வைரச் சங்கிலி சர்க்கஸ் சுகுமாரனுடையதென்று இவரே சொல்கிறார். அதற்கு அத்தாட்சியாக இவர் பெயரே இதிலும் பொறிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் பாவம், இந்த வைரச் சங்கிலி போலி நகை...! இதில் வைரமும் இல்லை; தங்கமும் இல்லை. யானை தன் தலையில் மண்ணைக் கொட்டிக் கொண்டு விட்டது. பொய்யாக கேஸ் கொடுத்த இந்தச் சுகுமார் மீது மானநஷ்ட வழக்குத் தொடரப்பட வேண்டும். பாவம், இவரையும் மன்னிக்கிறேன். இனியும் இந்த சுகுமாரன் திருந்தவில்லையென்றால், மறுபடியும் கம்பி எண்ணாமல் இவர் தப்பவே முடியாது சிறுவன் பூபாலனை இப்போதே விடுதலை செய்கிறேன்!”
அடுத்த மின்வெட்டும் இடைவேளையிலே மற்றுமொரு எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது.
அவசரத் தந்தியொன்று வந்தது.
மாஜிஸ்திரேட் உத்தரவு போட்டார் : “எஸ்.ஐ! அந்தச் சர்க்கஸ்காரர். சுகுமாரை உடனே கைது செய்யுங்கள்!”
1O
பூவைமாநகரில் எங்கு பார்த்தாலும் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதற்குரிய காரணங்கள் - அவ்வூர் ஆரம்பப்பள்ளி, உயர் தர ஆரம்பப் பள்ளியாக அன்று தான் உயர்த்தப்பட்டது. அந்தக் கிராமத்தில் அன்றைக்குத்தான் புதியதாக தபாலாபீஸ் திறக்கப்பட்டது. பிறகு, சந்தோஷத்துக்குக் கேட்க வேண்டுமா, என்ன?
புது உலகிலே சஞ்சரிப்பதாக அப்பொழுது பூபாலனுக்குத் தோன்றியது.
‘போன வாரம் இதே நேரத்துக்கு அறந்தாங்கி ஜெயிலிலே அடைப்பட்டுக் கிடந்தேன். ஆண்டவன் புண்ணியத்திலே தலைக்கு வந்தது தலைப்பாகையோடே போயிடுச்சு. நல்லவங்க ஒரு நாளும் கெடுவதில்லைன்னு தமிழ் வாத்தியார் அடிக்கடி பாடம் படிச்சுக் கொடுப்பாங்க - அது நூற்றுக்கு நூறு நிஜம் தான். அந்தச் சர்க்கஸ்காரன் பலே ஆள்தான். நெஞ்சில்லாத இரக்கமில்லாத அந்தப் பாவிக்கு நெஞ்சுள்ள, இரக்கமுள்ள அல்லி மகளாகப் பிறந்திருக்குது. நத்தை வயிற்றிலே முத்து பிறக்கிற கதைதான்..! ஆனா, தங்கச்சி பூங்கோதை, பூங்கோதையேதான்! அது உடம்பெல்லாம், அன்பு: செய்கையெல்லாம் அன்புதான்! அது மாதிரியேதான் அதோட அப்பாவும்...! நான் ஏழை வீட்டுப் பையன் அதுவோ பணக்கராங்க வீட்டுப் பொண்ணு! மலையும் மடுவும் சடுகுடு விளையாடற கதைதான் ஆண்டவன் பலே கில்லாடிதான்! படைப்பின் புதிர் ரொம்ப அதிசயம், அதைக் காட்டிலும் அதிசயம் வாழ்க்கையின் புதிர்!’
வயதிற்கும் அப்பாற்பட்ட வரப்புக் கோட்டில் நின்று அவனது எண்ணங்கள் ஓடின சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டான். புதுச் சட்டை, நிஜார் மாற்றினான். வாரிவிடப்பட்ட கிராப்பில் ஒரே ஒரு மயிரிழை அவன் நெற்றியோடு மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தது சிரித்துக் கொண்டே ஓடினான் அவனை முந்திக் கொண்டு, ஏப்பம் ஒட்டமாக ஓடியது ஆறு இட்டிலி, இரண்டு தோசை, ஒண்ணரை டம்ளர் அசல் காப்பி என்றால் காசா, லேசா?
சிறுவன் பூபாலன் கீழத் தெருவிலிருந்து ஓடி வந்தான்.
“தம்பி, உன்னை விடுதலை பண்ணிட்டாங்களாமே? நல்லவேளை, தம்பி” என்றார் காந்திஜி நூல் நிலையக் காரியதரிசி சோமசுந்தர ஆசாரி.
“அடடே, மிஸ்டர் பூபாலனா..? உன் பெயர் ஞாபகம் வந்ததும், உடனே எனக்கு நம் ஊர் எழுத்தாளர் ஒருவரின் புனைப்பெயரும் ஞாபகத்துக்கு வந்துவிடும். சாப்பிடப்பா! அடைக்கலம். இரண்டு டீ போடு ம்...! அப்படியே உட்காரப்பா? பட்டணத்து வாடை அமர்க்களமாய் வீசுதே? ஆமா, நீ மறுபடியும் பட்டணத்துக்கு டேரா தூக்கப் போறியா. உங்க அப்பாரு இங்கேதான் வெள்ளாமை விளைச்சலைப் பார்த்துக்கிட்டு இருக்கப் போறதாகச் சேதி கிடைச்சுதே...? மெய்யா? அந்த சர்க்கஸ்காரனை ‘அரஸ்ட்’ பண்ணிட்டாங்களாமே?” என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக் கொண்டே போனார் பாலகிருஷ்ணன்.
தன் எதிர்காலத் திட்டம் பற்றிய கேள்விகள் எழுந்தபோது பூபாலன் நறுக்குத் தறித்த மாதிரி கூறின பதில் இதுதான் “ஆமா எனக்குப் பட்டணம் அறவே பிடிக்கவில்லை. நல்லவங்களுக்கு வரக்காத்திருக்கிற ஆபத்துக்களுக்குக் கணக்குமில்லே, வழக்குமில்லே. இதுதான் என் பிறந்த ஊர் இங்கேதான் நான் படிக்கப் போறேன். அப்பாவோடு நானும் வெள்ளாமை செய்யக் கூடப் பழகிக்கிடுவேன். எங்களைப் போன்ற ஏழை பாழைங்களைப் பற்றி எண்ணிப் பார்க்கிற பெரிய மனிதர்கள் தாம் என் வரை தெய்வங்கள்:”
தப்பித்தோம் பிழைத்தோம் என்று நடந்துவந்தான் பூபாலன். வழியில் அவனுடைய நண்பர்கள் மனோரஞ்சிதம், தங்கவேலு, வீரமணி, சிங்காரம் ராஜாக்கண்ணு, துரைராசன், தியாகு முதலியோர் குறுக்கிட்டார்கள்.
“பலே, முன்பு நம் ஊர்க்கார எழுத்தாளர் பெயர் திரையிலே வந்தது; இப்போது நம் பூபாலனைப் படத்திலே சந்திக்கப் போகிறோம். பூவைமாநகர் இப்போதுதான் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது”
“ஆமா, ஆமா! அதுபோலவே இந்த ஊர்க்காரங்க எல்லாரும் ஒருவருக்குள்ளே ஒருவர் வம்படிச்சிக்கிடாம, கட்சி மனப்பான்மையை மறந்து, ஒற்றுமையாகி, பூவைமாநகர் என்ற பேரிலே கூட்டுக்குரல் எதிரொலிக்கும் நாள்தான் இந்த ஊருக்கு விடிவு நாளாகும்!” என்று உணர்ச்சிப் பெருக்கோடு எடுத்துச் சொன்னான் பூபாலன்.
அப்பொழுது–
அவன் அருகாமையில் ஒரு பெரிய நாய் வாலைக் குழைத்துக் கொண்டே வந்து நின்றது.
ஒரு கணம் தொடுத்த கண் வாங்காமல் அந்த நாயைப் பார்த்துக் கொண்டிருந்தான் பூபாலன். ‘குபுக்’கென்று கண்கள் கலங்கிவிட்டன. அந்த ஒரு நாள் – கப்பலோட்டிய தமிழனுக்குச் சிரம் வணங்கிக் கரம் கூப்பி அஞ்சலி செய்து திரும்புகையில், கார் விபத்துக்கு ஆளாகி உயிர் துறந்த தாய் நாய் விட்டுச் சென்ற அந்த நாய்க் குட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடிய சம்பவத்தை அவன் எப்படி மறப்பான்...? வீட்டுக்கு வந்ததும் அந்த நாய்க்குட்டிக்கு உண்டான எதிர்ப்புகளைச் சமாளித்து அதைத் தன்னோடு வைத்துக் கொண்டு வளர்க்கத் திட்டமிட்ட போது, அது காணாமற் போன நிகழ்ச்சியைத்தான் அவனால் மறக்க முடியுமா? இல்லை. காணாமற் போன அவனுடைய அருமை நாய்க்குட்டியை சினிமா ஸ்டுடியோவில் கண்ட கண்கொள்ளக் காட்சியைத் தான் அவன் மறப்பானா, கடைசியில், சர்க்கஸ்காரன் சுகுமாரின் கம்பெனியில் ‘பார்’ விளையாடினான் அல்லவா? அப்போது, முன்கூட்டியே முடிவெடுத்த திட்டத்தின் படி அவன் அந்த நாய்க் குட்டியுடன் தப்பி வாசலுக்கு வெளியே நின்ற பூங்கோதையின் காரில் குதிக்க எத்தனம் செய்த போது, சர்க்கஸ்காரன் குறி வைத்துச் சுட்டதை நீங்களே நினைவு வைத்துக் கொண்டிருப்பீர்களே? அப்பொழுது அவன் மட்டுமே தப்பினான். நாய்க்குட்டி சர்க்கஸ் கூடாரத்தில் அகப்பட்டுவிட்டதாக எண்ணியிருந்தான்..! ஆனால், பாவம். அடுத்த நாள் பத்திரிக்கையில் தான் தப்பிய விவரத்தைப் பற்றியும், தன்னுடைய நாய் சுகுமாரனால் சுடப்பட்டு மாண்டதைப் பற்றியும் படித்த போது, அவனுக்கு மூளை குழம்பிவிட்ட துயரம் மிகுந்த நாட்களையும் அவன் மறத்தல் சாத்தியமே இல்லை!
‘என்னோட அருமை நாய்க்குட்டியைப் பிரிஞ்சு எத்தனை மாசமாயிட்டது? அது இந்நேரம் உயிரோடே இருந்திருந்தால், பெரிய நாயாக ஆகியிருக்குமே? என்று மனதிற்குள் நினைத்துப் பார்த்த பூபாலனுக்கு அழுகை வந்து விட்டது.
அப்பொழுது–
உலகத்து அதிசயங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து கை குலுக்கிக் கொண்டிருந்தன – ஆஹா பட்டணத்திற்குப் புறப்பட்டுச் சென்ற பூங்கோதையும் அவளுடைய அப்பா டைரக்டர் பரசுராமனும் அல்லவா!
உண்மைதானா–அல்லி!... அரக்கன் சர்க்கஸ் சுகுமாரின் புதல்வி!
என்ன அதிசயம்! என்று அவனைக் கைது செய்து விடுவித்த அதே எஸ்.ஐ – அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்!
அவன் முன் நின்று கொண்டிருந்த அத்தனை பேரிலும் பூங்கோதை முன்னாடி வந்தாள்.
“பூபாலன் அண்ணாச்சி! நாங்க இந்த ஊரை விட்டுப் பட்டணத்துக்குப் போன இரண்டு மூணு நாளுக்குள்ளே ரொம்ப ரொம்ப அதிசங்கள் நடந்து விட்டன.
சர்க்கஸ்காரன் சுகுமாரன் கள்ள நோட்டு தயாரிப்பவனாம்..! அவனுடைய அட்டூழியத்தைப் பொறுக்காமல் அல்லியே அவனைக் காட்டிக் கொடுக்க இருந்துச்சாம். அதுக்குள்ளே அவனைக் காட்டிக் கொடுத்திட்டுது அவன் கிட்டேயிருந்த ஒரு நாய்க்குட்டி...! இது முதல் அதிசயம்! அடுத்த அதிசயம் என்னான்னா, அல்லி அவனோட வளர்ப்புப் பெண்ணாம்! நீ அங்கே வேலைக்கு இருக்கிறப்பவே அது எல்லா ரகசியத்தையும் உங்கிட்டே சொல்லத்தான் துடிச்சுதாம்; சமயம் வாய்க்கலையாம். இப்போது மூன்றாம் அதிசயம் நடக்கப் போகுது. ரெடி, ரெடி, பார், பார்” என்று சொல்லி விட்டுப் பூபாலனுக்கு முன்னே வந்து நின்றாள் பூங்கோதை.
அவர்கள் முன்னிலையில் இப்பொழுது ஒரு பெரிய நாய் வாலைக் குழைத்துக் கொண்டே‘ஜாம் ஜாம்’ என்று வந்து நின்றது.
காண்பது கனவா, நனவா என்றே சிறுவனுக்குப் புரியவில்லை. எதிரில் நின்ற அந்த நாயைக் குனிந்து தொட்டு பார்த்தான். அவனை நெருங்கி அவன் முகத்தை நாக்கால் நக்கியது அது. அன்பு, அன்பு, அன்பு! மறுகணம் அவன் அந்த நாயைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு கூத்தாடினான். இரண்டு கண்களும் இரண்டு லட்சம் கண்ணிர் முத்துக்களைச் சரம் தொடுத்து அவனுடைய நாய்க்கு மாலை போட்டன.
“தெய்வமே, நீ நிஜமாகவே உலகத்திலே எங்கேயோ ஓர். இடத்திலே இருக்கத்தான் இருக்கிறாய்! இல்லையானால் என் அருமை நாய் என்கிட்டே திரும்பவும் கிடைச்சிருக்குமா?” என்று சொல்லிய வண்ணம் குதித்தான் பூபாலன்.
“பூபாலன், நாய்தான் ரொம்பவும் நன்றியுள்ள பிராணி, அது செத்து விட்டதாகப் பேப்பரிலே போட்டிருந்த சேதிகூட அந்தச் சர்க்கஸ்காரன் செஞ்ச சூழ்ச்சிதானாம்! இந்த நாய்க்குட்டியின் நன்றிக் கடனுக்கு ஈடும் இல்லை; இணையும் இல்லை. அன்றைக்கு சாவிலிருந்து இதைக் காப்பாற்றினாய்! அந்த நன்றியை இன்னமும் மறக்கலே, பாரு...! சரி. இதோ பார், நாலாவது அதிசயம்!” என்று கூறிக்கொண்டே ஒரு பத்திரிக்கையை எடுத்து நீட்டினார் டைரக்டர் பரசுராம்.
பூபாலன் ஆவல் பொங்கப் படித்தான் :
பிரசித்தி பெற்ற சர்க்கஸ் முதலாளி கைது செய்யப்பட்டார். அவர் வளர்த்த பெண் அல்லியும் ஒரு பெரிய நாய்க்குட்டியுமே அவரைக் காட்டிக் கொடுத்து விட்டன. அவர் பெரியதொரு கள்ளநோட்டுத் தயாரிப்பாளர் என்ற ரகசியத்தை இந்த நாய்க்குட்டி மூலம்தான் போலீஸ் இலாகாவினர் அறிந்தார்களாம். இந்த நாய் மவுண்ட்ரோட் போலீஸ் ஸ்டேஷனில் நின்று குரைத்து சில சைகைகள் செய்ததன் பேரில், போலீஸ்காரர்கள் சிலர் அதைப் பின் தொடரவே அது சர்க்கஸ் கூடாரத்தை அடுத்த பங்களாவிலிருந்த பாதாளச் சுரங்கத்துக்கு வழிகாட்டியது. கூடியிருந்த சிலபேர் கைது செய்யப்பட்டனர். சுகுமாரன் அப்பொழுது அறந்தாங்கியில் இருப்பதறிந்து, அந்த போலீஸுக்குத் தகவல் அனுப்பி உடனே அவரையும் கைது செய்து விட்டார்கள்.
சென்னை போலீஸ் இலாகா பராமரிக்கும் ‘துப்பறியும் நாய்களுக்கு’ இருக்கும் சில பண்புகள் இதற்கும் இருப்பதால், இதைத் தாங்களே வைத்துக் கொள்ள எண்ணி இந்த நாயின் விவரத்தை அறிய-முயன்றார்கள். இது பூபாலன் என்ற சிறுவனின் நாய் என்ற செய்தி கிடைத்தது. சிறுவனுக்கு வஞ்சனை செய்தவனைக் கடைசியில் பழி வாங்கிவிட்ட இந்த நாயின் நன்றிக் கடனைப் பற்றித்தான் ஊரெல்லாம் ஒரே பேச்சாக இருக்கிறது. ஆம்; இந்த நாய்க்குட்டிக்குத்தான் ‘கோஹினூர்’ என்ற செல்லப் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள் போலீஸ் இலாகாவிலே!'
பூபாலன் உணர்ச்சி வசப்பட்டு அப்படியே நின்றான்.
“தம்பி பூபாலன்! நான்கு அதிசயங்கள் நடந்து முடிந்தன. இப்பொழுது ஐந்தாவது அதிசயம் நடக்கவிருக்கிறது. உன்னுடைய நாய் கோஹினூர் சாதித்த நல்ல செயலுக்கு தமிழக அரசினர் உன் நாய்க்குப் பரிசாக ஒரு தங்கப் பதக்கத்தையும் உனக்கு இருநூறு ரூபாய் ரொக்கப் பரிசையும் எங்கள் மூலம் அனுப்பியிருக்கிறார்கள். கோஹினுரை நீ பிரியப்பட்டு சென்னை போலீஸ் இலாகாவுக்கு அனுப்பினால், பெருமையுடன் பெற்றுக் கொள்வதாகவும் செய்தி அறிவிக்கும்படி எழுதியிருக்கிறார்கள். ஆனால், உன் கதையை முழுதும் அறிந்த பிறகு, அந்த வேண்டுகோளை உன்னிடம் கூறவே மனம் மருகிற்று. ஆகவே, இந்த கோஹினூர் உன்னுடனேயே இருக்கட்டும்” என்று சொல்லிய போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கப் பதக்கத்தை நாயின் கழுத்தில் மாட்டினார்.
வாலைக் குழைத்துச் சிரித்த கோஹினூரை முகத்தோடு முகம் பொருத்திக் கொஞ்சினான் பூபாலன்.
“எல்லாருக்கும் என் வணக்கமும் நன்றியும். எனக்குப் புது உலகப் புது வாழ்வு தந்த அன்பு ஜீவன் அருமை கோஹினூர். என் உயிருள்ள மட்டும் அதை என்னால் மறக்கவே முடியாது...!” என்று பூபாலன், உணர்ச்சி பொங்கும் குரலில் சொன்னான்.
“பூபாலன் அண்ணாச்சி! எங்க படத்திலே இன்னொரு காட்சி எடுக்க வேண்டியிருக்குதாம். அதிலே நீ, நான், அல்லி, உன் கோஹினூர் எல்லாருமே சேர்ந்து நடிச்சிடுவோம்...ம்! ஓ.கே. சொல்லித் தீரணும்...! நாளைக்குப் பட்டணத்துக்குப் பயணப்படணும்...!”
“பூங்கோதை ! உன் பேச்சைத் தட்டிப் பேச எனக்கு ஏது உரிமை?” என்றான் பூபாலன், கண்களைச் சிமிட்டியபடி,
உடனே, எல்லோரும் சேர்ந்து ‘களுக்’கென்று சிரித்தார்கள். ஆமாம்; கோஹினூரும் சேர்ந்துதான்!.
மாஸ்டர் உமைபாலன்!
* * *
1
உமைபாலன் அந்தப் புதிய இடத்துக்கு வந்து சேர்ந்ததும், மறந்துவிடாமல் பெருமூச்சை வெளியேற்றிவிட்டான். அதே சூட்டோடு, உள்ளத்திலே பரவிக்கிடந்த சூட்டையும் தணித்துக்கொள்ள எண்ணினான். ஆகவே, தன் பிஞ்சு நெஞ்சில் எழுதி, மனப்பாடம் செய்து வைத்திருந்த அந்த மூதுரையை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்திக் கொண்டான். பிறகுதான், அவனுக்குத் தன்னுடைய உடற்சூடும் நினைவுக்கு வந்தது. உடனே, அரைக்கைச் சட்டையின் பொத்தான்களைக் கழற்றினான்; பூந்தென்றலை உள்ளே புகச் செய்தான். ஒரு சில வினாடிகள் வரை கண்களை மூடிக்கொண்டு அப்படியே நின்றான்!
இப்பொழுதுதான் அவனுக்குத் தன் நினைவு மீண்டது. விழிகளைத் திறந்தான், ஈரத்துளிகள் இரண்டு சிந்தின. அவற்றைக் கண்டதும், அவன் ஒரு முறை தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.
இடுக்கண் வரும்போது சிரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவன் சிரித்தானோ?....
இரண்டு நாள் பட்ட கஷ்டங்களை அவனால் மறப்பது சாத்தியமா?
காலாற சிறுபொழுது நின்றான்; பின்னர் புறப்பட்டான்; சுற்றுமுற்றும் பார்த்தான்; மணிக்கூண்டு பளிச்சிட்டது. அந்தி வெயிலில் எவ்வளவு அழகுகொண்டு விளங்கியது அந்த மணிக் கூண்டு!
பஸ் நிலையத்தின் பரபரப்பைக் கடந்து ராமநாதன் செட்டியால் ஹால் வாசலில் நின்று, முச்சந்தியில் வழி வகைகளை வெகு சிறப்புடன் காண்பித்துக் கொண்டிருந்த போலீஸ்காரரின் திறனை வியந்தபடி திரும்பினான். விண்முட்டிய கோபுரக் கலசம் தெரிந்தது. ‘ஆஹா! பாடப் புத்தகத்திலே படிச்சது கனகச்சிதமாக இருக்குதே!... கலசத்தின் நிழல் படியாத அதிசயத்தையும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருக்கும் நந்தியையும் நேரில் பார்த்து ரசித்து, அதே ரசனையுடன் ராஜ ராஜசோழனின் கலாபிமானப் புகழையும் போற்ற வேணும்!... என்று இளம் மனத்தில் நினைவுகள் விளையாடலாயின. சோழர் மண் அவனை மெய்மறக்கச் செய்தது போலும்!
காந்திஜி வீதியில் வந்து மிதித்து, குறுக்கிட்ட வளைவுப் பகுதியையும் கடந்து, பூங்காவின் கீழ் முனையில் ஒதுங்கி நின்றான் உமைபாலன். லேசாகத் துளிர்த்திருந்த வேர்வையைத் தன்னுடைய சட்டையின் நுனியினால் துடைத்தான். கிழிசல் ‘சடக்’ கென்று முத்தமிட்டது; கிழிசலின் அளவு சற்றே விரிந்துவிட்டது.
அவனது பிஞ்சு மனமும் விரியத்தான் செய்தது. மிஞ்சிக் கிடந்த அந்த ஒரு பைசாக் காசையும் ‘பிச்சை’ இட்ட மனம் விரியாமல் என்ன செய்யும்!...
“ரொம்பப் புண்ணியம், அண்ணா” என்றாள் ஏழைச்சிறுமி.
“நீ என்ன தங்கச்சி, என்னமோ புண்ணியத்தைக் கண்டதாட்டம் பேசுறே?... எனக்குப் புண்ணியம் வேண்டாம்; உன்னோட பசியைப் போக்குறதுக்குத் துளியளவு உதவிசெய்ய முடிஞ்ச வரைக்கும் நான் சந்தோஷப்படுகிறேன். இன்னமும் நிரம்பச் செய்யத்தான் ஆசை. ஆனா, ஆண்டவன் என்னைச் சோதிக்கத் தொடங்கியிருக்கிற நேரம் கெட்ட நேரமம்மா இது!... .நான் என்ன செஞ்சிட்டேன்!....ம்!...”
“நீ ரொம்ப ரொம்ப நல்ல அண்ணன்!..."
“ம்... உனக்காச்சும் நான் நல்லவனாத் தோணுறேனே, அது போதும்!” அவன் கண் இமைகள் நனைந்தன. அவன் கேட்டான். “தங்கச்சி, உம் பேர் என்ன?”
அச்சிறுமி சொன்னாள் : “பூவழகி”
உமைபாலனின் வயிறு கெஞ்சியது; சிறுகுடலைப் பெருங்குடல் கவ்வியது. எதிர்ப்புறம் இருந்த ஓட்டலும் அதன் முகப்பு வாசலில் கூடியிருந்த பிச்சைக்காரக் கும்பலும் அவனுள் ஒரு தத்துவமாகத் தெரிந்தது. அந்த ஒரு தத்துவமே வாழ்க்கையாகவும் அவனுக்குத் தோன்றத் தொடங்கியது. ‘ஊம்’ என்று மீண்டும் பெருமூச்செறிந்தான் !
பாவம், பொழுது விடிந்ததிலிருந்து அவன் எவ்வளவு பாடுபட்டுவிட்டான்!
“ஏ, தம்பி!”
அழைப்புக் குரல் கேட்டுத் திரும்பினான். ஒளிவிளக்கின் பாதத்தில் இரட்டை நாடி ஆசாமி ஒருவர் காலடியில் சாய்த்து வைத்திருந்த பெட்டியுடன் நின்றார். ‘இதை பஸ் ஸ்டாண்டுக்குக் கொண்டு வா; இருபத்தஞ்சு காசு கூலி தர்றேன்!”என்றார்.
‘சரி’ என்று பையன் பெட்டியைத் தலையில் தூக்கிக் கொண்டு நடந்தான். விழிமூடி விழி திறப்பதற்குள் அவன் கடமை நிறைவேறி விட்டது.
பெரிய மனிதர் சொன்ன சொல்படி காசுகளை நீட்டினார்.
என்ன ஆச்சரியம்!
உமைபாலன் பதின்மூன்று காசை மட்டிலும் எடுத்துக் கொண்டு, மிகுதியை உரியவரிடமே திருப்பிக் கொடுத்தான்."என் உழைப்புக்கு இது கூட அதிகம்னு தோணுதுங்க, பெரியவரே!” என்று மிடுக்குடன் பதில் கூறியபடி, வணக்கம் சொல்லி நடந்தான்.
ஓர் இட்டிலியும் ஒரு சாயாவும் அந்த சிறிய கும்பிக்குப் போதும் போலும்!
அடுத்தது ஓட்டல் வந்தது. ஆம் ஓட்டல் வரவில்லை; அவன் ஓட்டலுக்கு வந்தான். நுழைவாசலில் வைத்திருந்த படங்களைக் கண்டதும் அவன் கரங்குவித்தான். கல்லாவில் இருந்த முதலாளியிடம் பணிவுடன் நெருங்கி ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டான்; கடையின் சொந்தக்காரர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னான்.
“காலையிலே வா தம்பி! யோசிச்சுச் சொல்லுறேன்!”
“நல்லதுங்க, ஏழை பாழைங்களோட நல்ல வாழ்வுக்காகவே அல்லும் பகலும் உழைச்சுக்கிட்டு வர்ற அந்தத் தமிழ்த் தலைவரை நீங்க பூசிக்கிறதிலேருந்து, இந்த ஏழைச் சிறுவனுக்கும் நல்ல வழி கெடைக்குமிங்கிற நம்பிக்கையோட நான் விடிஞ்சதும் உங்களை வந்து சந்திக்கிறேனுங்க, ஐயா!”
உரிமையாளர் புன்னகையுடன் தலையை அசைத்து அவனுக்கு விடை கொடுத்தனுப்பினார்.
தெருவில் அன்றைய மாலைப் பதிப்புப் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தவரிடம் உமைபாலன் மெல்ல அண்டிப் பார்த்தான். பார்த்த சடுதியில் அவனது முகம் கலவரம் அடையத் தொடங்கிவிட்டது.
2
புன்னகை சிந்தப் பழகுகின்ற பாப்பாவைப் போன்று இளஞ் சூரியன் அப்போதுதான் பூவுலகைத் திரும்பிப் பார்த்துப் புன்னகை சொரியத் தொடங்கியிருந்தான்.
கீழ்வாசல், மிகுந்த அழகுடனும் நிறைந்த சுறுசுறுப்புடனும் விளங்கிக்கொண்டிருந்தது.
உமைபாலன் துவைத்து உலர்த்திய உடுப்புகள் துலாம்பரமாகப் பளிச்சிடவும், நெற்றியில் பூசப்பட்ட திருநீறு பக்திபூர்வமாக மின்னவும் நடந்து வந்து, நேற்று வரச்சொன்ன அந்த ஓட்டலுக்குள் பிரவேசித்தான். அவன் தன்னையும் அறியாமல், கைகளைக் குவித்து வணங்க எத்தனம் செய்தான்.
ஆனால், என்ன ஏமாற்றம்!
கல்லாவில் தடிமனான மனிதர் ஒருவர் அல்லவோ வீற்றிருந்தார்!....
பின்வாங்கினான். உணவுக் கடையின் பெயரை மீண்டும் படித்தான். அட்டியில்லை; ‘லக்ஷ்மி விலாஸ்’ ஓட்டல் தான்!
சிறுவன் அறிந்ததுண்டு–கும்பிடு சொடுத்துத்தான் கும்பிடு வாங்கவேண்டும் என்பது! ஆகவே, கும்பிட்டான். ஆனால் பாவம், அவன் பதிலுக்குக் கும்பிடு வாங்கவில்லை. ‘நேற்றுப்பார்த்த அந்த ஆள் எங்கே?’ என்று மனம் மறுகினான். இவர் இப்படி அழுத்தமாக இருக்கிறாரே?....
‘ம்... வாஸ்தவந்தான் நானோ வேலைக்கு வந்தவன். இவரோ முதலாளி. ‘பெரிய’ முதலாளி... பெரிய உடம்புள்ளவர் பெரியவர் இல்லையா, பின்னே?...அவரும் எனக்குச் சமதையாய் கும்பிட்டு விட்டால், அப்பால், கும்பிடு என்கிறதற்கு அர்த்தம் இருக்காதே!...” வேடிக்கையான சிந்தனைகளை வினயமாகப் பின்னினான் அவன்.
கல்லா மனிதரை ஒரு முறை உன்னிப்பாக நோக்கினான் உமைபாலன். இரட்டை நாடியான உருவம். யானைக்குட்டியை அதுவும் அவன் டிராயிங் வரைந்த யானைக்குட்டியை அதே சமயத்தில் எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. திருநீற்றுப்பட்டைகளின் நடுவே சந்தனப் பொட்டு திகழ்ந்தது. உச்சியில் நாலைந்து மயிரிழைகள். விசிறிக்காற்றில் அவை பறந்தன. -
“தம்பி, எங்கேருந்து வந்தே?”
“வடக்கேயிருந்துங்க!”
“அடடே, வடக்கேயிருந்தா?...”
“ம்!”
“சீனாக்காரன் எப்படி இருக்கான்?”
“அவன்தான் நம்ப மூஞ்சியிலே கரியைப் பூச நெனைச்சு, இப்ப தம் மூஞ்சியிலேயே கரியைப் பூசிக்கிட்டு, ஒட்டம் பிடிக்கத் தலைப்பட்டிட்டானே!...அந்தச் சீனாக்காரனுங்க பட்ட கஷ்டங்களை இப்ப நெனைச்சாலும் எனக்கு ரொம்பக் குஷியாயிருக்குதுங்க!”
வெகு மிடுக்குடனும் கம்பீரத்துடனும் பேசினான். “நான் வடக்கே லடாக் பகுதியிலே இருந்தவரைக்கும் ஒரு சீனன் மூச்சுக் காட்ட வேணுமே!... நம்ப மண்ணிலே ஒரு துளி எடுக்கிறதுக்கு அவன் யாருங்க?” மேஜையில் ஓங்கிக் குத்தினான்.
இரண்டு பில்கள் அவனுக்குப் பயந்துகொண்டு ஓடினவோ?-அவனா விட்டுவிடுபவன்?
“பலே பாண்டியா!” என்ற குரல் கேட்டுத் திரும்பினான் உமைபாலன்.
நேற்று கல்லாவில் காட்சியளித்த இளைஞன் நின்றான். முகத்தில் சிரிப்பு. கண்களிலே கனிவு, “உன் மாதிரிச் சிறுவர்களைத்தான் நம் நேருஜி எப்போதுமே நேசிப்பார். நேருஜி இருக்கும்வரை இந்தச் சீனன் நம் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க மாட்டான், தம்பி!.... உன்னுடைய தாய்நாட்டுப் பற்று ரொம்பவும் உயர்வு!...”என்று போற்றினான்.
பையனுக்குப் போன உயிர் திரும்பியது.
பிறகு, பெரியவருடன் அவ்விளைஞன் ஏதோ பேசினான். “நீ சொன்னாச் சரிடா கோபு!” என்று முடிவு வெளியிட்டார் அவர்.
கோபு குதூகலத்துடன் திரும்பினான் “தம்பி உள்ளே வா” என்று அழைத்துச் சென்றான். தம்பி என்ற அச்சொல் அவனைப் புல்லரிக்கச் செய்தது.
இருபுறமும் அற்புதமாக அலங்காரம் செய்து போடப்பட்டிருந்த நாற்காலிகளும், அவற்றின் உச்சியில் அலங்காரம் செய்த வண்ணம் இருந்த சுவாமி படங்களும் சிறுவனின் பிஞ்சு மனத்தைக் கவரலாயின.
“தம்பி!”
உள்ளே எட்டிப் பார்த்தான்.
அது ஒரு கிட்டங்கி.
மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. டின்கள் வேறு வேறு சின்னப்பையன் ஒருவன் குந்தியபடி அரிசி அளந்து கொண்டிருந்தான். அவன் வேர்வையை வழித்துவிட்டுக்கொண்டு ஒயிலாகத் தன்னுடைய சட்டைக் காலரைத் தூக்கிவிட்டபடி, உமைபாலனை ஜாடையாகப் பார்த்துச் சிரித்தான்,
சிறுவர் பட்டாளத்துக்குப் பொழுதுபோக்குவதற்குக் கூட இன்னொரு புள்ளி கிடைத்துவிட்டது என்கிற மனோபாவத்தில் விளைந்த சிரிப்புப் போலும்! ஆனாலும், அவனுக்கென்று இப்படி ஒரு கர்வமா?
உமைபாலன் நடந்தான்.
அடுத்த அறையில் சரக்குப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
கோபு ஒரு போண்டாவை எடுத்து ஊதி, அதை உமைபாலனிடம் நீட்டினான்.
உமைபாலன் ரொம்பவும் யோசித்தான்; பிறகு தயங்கினான். “எனக்கு உங்க அன்புதான் இப்ப வேணுமுங்க. என்னாலே உங்களுக்கு ஒரு பத்து பைசா நஷ்டம் ஏற்பட மனக வரலீங்க!” என்று நாசூக்காகச் சொன்னான்.
கோபு வியப்பில் விரிந்த விழிகளுடன் அவனையே இமை மூடாமல் பார்த்தான். ஏனோ, புராண புருஷர்கள் சின்னஞ் சிறார்களாக இருக்கையில் செய்து காட்டிய திருவிளையாடல்களின் நிழல்கள் அவன் உள்ளத் திரையில் ஓடிக் காண்பித்தன.
“தம்பி!”
அண்ணா!”
பாசத்தின் குரல்கள் தழுவின.
“உனக்கு ஊர்?”
“ராமநாதபுரம் சீமைங்க ”
“அப்பா அம்மா?”
“நான் அனாதைங்க!”
“உனக்கு என்ன வேலை தெரியும்?”
“இன்ன வேலை தெரியும்னு சொல்றதுக்கு எனக்கு முன் அனுபவம் ஏதுமில்லீங்க. இப்பத்தான் முழுவருடப் பரீட்சை எழுதினேன். ஒன்றுவிட்ட மாமாவோடே கொஞ்சம் மனத்தாங்கல். பிரிஞ்சு வந்திட்டேன். ஆனதாலே, எந்த வேலையையும் பெருமை சிறுமை பார்க்காமல் பார்க்க வேணுமிங்கிற நினைப்பு எனக்கு இருக்குதுங்க!”
‘ஒவ்வொரு பேச்சையும் எவ்வளவு தூரம் சிந்தனை பண்ணிப் பேசுகிறான் இச்சிறுவன்!’ கோபுவுக்கு அதிசயம் அடங்க வில்லை.
“தம்பி! இப்போதைக்கு நீ எடுபிடி வேலை செய்துக்கிட்டு இரு. போகப் போக, பின்னாடி வேறே நல்லதா ஏற்பாடு செய்யிறேன்!”
“ரொம்பப் புண்ணியமுங்க”
“சம்பளம், சாப்பாடு போட்டு அஞ்சு ரூபாதான் தரமுடியும்!"
“சரிங்க! எல்லாம் உங்க தயவுங்க!”
கோபு வாசலுக்கு விரைந்தான்.
உமைபாலன் அவனைப் பின்தொடர்ந்து திரும்பிய நேரத்தில், கிட்டங்கிப் பையன் விரல்களை இணைத்துத் தட்டி அழைத்தான். “அண்ணாச்சி புதுசு போல!” என்று மெல்லப் பேச்சுக் கொடுத்தான். அவன் கழுத்தில் சிலுவைச் சின்னம் அழகு காட்டிக் கிடந்தது.
உமைபாலன் ‘ம்’ கொட்டிவிட்டு, ரவை நேரமும் தாமதிக்காமல் தன்னுடைய கடமைகளைச் செய்யவேண்டிப் புறப்பட்டான்.
ஹாலில் ஒரு முடுக்கில் கிடந்த அழுக்குத் துணியை எடுத்துக் கொண்டு மேஜைகளைச் சுத்தம் செய்யலானான், உமைபாலன்.
வேலை முடிந்த கையுடன், அவனுக்குக் காலைச் சிற்றுண்டி கிடைத்தது. கலங்கி வந்த கண்களை மூன்றாம் பேருக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டான். இட்டிலிகளைச் சாப்பிட்டான். தொண்டையை அடைத்தது. சமாளித்துக் கொண்டான். தண்ணீர் குடித்தான். சாப்பிட்டு முடித்ததும், தன்னுடைய ட்ரவுசர் பையிலிருந்த அந்தச் செய்தித்தாளை மீண்டும் ஒரு தரம் பார்க்க வேண்டுமென்கிற துடிப்பு வலுவடைந்தது! 3
புதன்கிழமை!
அன்றுதான் அந்த ஒட்டலுக்கு விடுமுறை நாள்.
உமைபாலன் வழக்கம்போலவே சூரிய உதயத்துக்கு முன்பாகவே படுக்கையை விட்டு எழுந்துவிட்டான். படுக்கை என்றால் என்ன தெரியுமா? உடைந்த செங்கல்தான் தலையணை. கிழிசல் துணிதான் பாய். படுக்கையை ஒரு புறமாக மறைத்துவிட்டுப் பல் துலக்கிவிட்டு வந்தான். மலரும் கதிரவனைக் கண்டதும் மலர்ந்தது அவன் உள்ளம். கைகூப்பி அஞ்சலி செய்துவிட்டு வந்தான்... பசியின் உணர்வு எழுந்தது. அரை நிமிஷம் அவன் எதையோ நினைத்துக் கொண்டவனாக - எதற்கோ ஏங்குபவன் போலத் தோன்றினான். ஆனால் மறுவினாடியே, எதையும் நினைக்காதவன் போலவும் எதற்குமே ஏங்காதவன் மாதிரியும் மாறினான்.
‘பிஞ்சு மனத்தில் விதைக்கப்படும் தன்னம்பிக்கை, பக்தி, அறிவு, அன்பு போன்ற குண நலன்கள் நாளடைவில் பண்பட்டு வந்தால், அவை ஒவ்வொன்றுமே பிற்காலத்தில் அவனுக்குப் பக்கபலமாக அமையவல்லது!’– நேருஜி அடிக்கடி சொல்லி வந்த இவ்வாசகத்தை அவன் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டான். அவனையும் அறியாமல், அவனுக்குத் தெம்பு ஊறியது; தன்னம்பிக்கையும் ஊறியது. ஏதோ ஓர் இலட்சியத்தைத் தன் சித்தத்தில் ஏற்றியவனாக, அவன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
அவனுடைய தோழர்கள் இன்னமும் கும்பகர்ண சேவையில் லயித்திருந்தார்கள்.
உமையாலன் அவர்களை எழுப்பினான்.
அவர்களுக்கு எப்படிக் கோபம் வந்து விட்டது!
அந்தப் பையன் ஜெயராஜ் மட்டும் முகத்தைச் சுளித்துக் கொண்டே எழுந்தான். மூக்கின் நுனியில் கோபம் இருந்தாலும், விரல் நுனியில் சுறுசுறுப்பு இருந்ததே!... இல்லாவிட்டால் இவனைக் கிட்டங்கிப் பொறுப்புக்கு வைத்திருப்பார்களா?
“பாலா!”
“என்னப்பா, ராஜ்?”
“இன்னிக்கு என்ன ப்ரோக்ராம்?”
“ப்ரோக்ராமா?....நாம் என்ன பெரிய மனிதர்களா, நாளைக்கு ஒரு நிகழ்ச்சியும் வேளைக்கொரு விழாவும் நமக்காகக் காத்திருக்க!...”
“ப்பூ. இவ்வளவுதானா நீ?... என்னைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது போலிருக்குது ம்..”
“ஊஹும், தெரியாது”
“சரி, சரி..இன்னிக்கு லீவு. அதாவது ஒனக்குத் தெரியுமில்லையா?”
“ஓ, தெரியுமே”
“அதாகப்பட்டது, இன்றைக்கு நமக்கு சம்பளத்தோடு ஒருநாள் சட்டப்படி லீவு என்பது உனக்குத் தெரியும்!”
“ம்!”
“அப்படியென்றால், இன்று நமக்கு லீவு. அதாவது, நம் உழைப்புக்கு விடுமுறை. இல்லையா, பிரதர்?”
“வாஸ்தவம்!”
“இதுக்கு முந்தி உழைச்சதுக்காகவும் இதுக்குப் பிந்தி உழைக்க வேண்டியதுக்காகவும் நாம, நம்ம உடம்பைத் தயார்ப்படுத்துறதுக்காகக் கொடுக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பம் இன்னிக்கு! ”
“மெய்தான்!”
உமைபாலன் சிரிப்பைக் காட்டிக்கொள்ளத் தவறவில்லை.
“ஆகவே...”
“ஆகவே...இன்றைக்கு நம்ம இஷ்டப்படி ஜாலியாக இருக்க வேணும் என்ன, பாலா?” உமைபாலன் பதில் எதையும் வெளியிடக்கானோம்!
அதற்குள் ரேடியோவை யார் வைத்தார்கள்?
துதிப்பாடலின் பக்தி ஒலி மிதந்து வந்தது.
ஜெயராஜ் மறுபடி கேட்டான். கழுத்தில் ஊசலாடியது சிலுவைக் கயிறு.
உமைபாலன் திரும்பவும் சிரித்தான்."ராஜ்! ஜாலியாக இருப்பது என்றால் முதலிலே அதற்கு விளக்கம் சொல்லு, கேட்கலாம்!”
“ஜாலியாக இருப்பதுன்னா, மூக்குப் பிடிக்கச் சாப்பிடுவது, ஊர் சுற்றுவது, சாயந்திரம் இரண்டு ஆட்டம் சினிமா பார்ப்பது, அரட்டை அடிப்பதுன்னு அர்த்தம்!”
“பேஷ்!...”
“ம்...நீ ரெடியா?”
“உன் திட்டத்துக்கு வசதி...?”
“நான் என் செலவுக்கு ரெண்டு ரூவா வச்சிருக்கேன்!”
“என்கிட்டே பைசா கூட இல்லியேப்பா!”
“நான் தர்றேன்!”
“உனக்கு ஏது உபரிப்பணம்?”
“ஏய் ! அதைப்பத்தியெல்லாம் உனக்கு ஏன் வம்பு?...உனக்கு என்னைப்பத்தி முதலிலே சொல்லியாகவேனும்... சரி, நீ குளிச்சிட்டுப் புறப்படு!...நானும் ரெடியாகிடுறேன்!...”
“அப்போது அப்துல்லா!” என்று அழைத்தான் ஜெயராஜ்,
சிறுவன் ஒருவன் வந்தான்.
அப்துல்லாவையே மாறாமல் பார்த்தான் உமைபாலன். தொப்பியோ, கைலியோ இல்லாமல், கிராப்புத் தலையுடன் இந்துப் பையன் போலவே இருந்தான் அவன். இம்மாதிரி வேலைக்கெல்லாம். இந்தப் பக்கத்தில் இம்மாதிரி வேஷம்தான் லாயக்கு என்கிற விவரம் தெரிந்ததும் உமைபாலனுக்கு ஆத்திரம் வந்து விட்டது; ‘பாவம்!’.... கடிகாரம் ஓடியது.
ஜெயராஜ் புறப்பட்டுவிட்டான்! நேர்த்தியான ‘சில்க் ஷர்ட்’ மேனியில் மின்னியது. அவன் துள்ளிக் குதித்து உள்ளே ஆளோடியை அடைந்தான். “பாலா...!” என்று குரல் கொடுத்தான்.
அங்கே ஒரு மூலையில் உமைபாலன் குந்தி பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் முன் மண்டியிட்டு உட்கார்ந்த ஜெயராஜ், “நான்தான் உனக்குக் காசு தர்றதாச் சொன்னேனே, பின்னே நீ எதுக்கு இன்னிக்கும் இதைச் சாப்பிடனும்?” என்று பரிவுடன் வினவினான்.
கடைசிக் கவளத்தை வழித்துப்போட்டுக் கொண்டான் உமைபாலன். சுண்டல் குழம்பைத் தொட்டுச் சுவைத்தபடி இலையைச் சுருட்டி வீசிக் கை கழுவித் திரும்பியதும் அவன் சொன்னான்: “கடன் வாங்கி இட்டிலி சாப்பிடுறதைக் காட்டிலும் இதுதான் எனக்கு நிம்மதி ராஜ்! எங்க மாதிரி எழை பாழைங்களுக்கு வயிறும் ஆசையும் சுருங்கித்தான் இருக்கவேனுமாக்கும்! உனக்கென்ன, ராஜா! நிஜமாகவே நீ ராஜாதான் என்கிற விஷயத்தை இப்பத்தான் அறியமுடிஞ்சுது!...உன்னோட பட்டுச் சொக்காயே சொல்லுதே நீ பெரிய இடத்துப் பிள்ளை என்கிறதை!...”
ஜெயராஜ் முகம் திடுதிடுப்பென்று கறுத்தது. “சரி, புறப்படு” என்று தூண்டினான்.
இருவரும் கை கோத்துக் கொாண்டு கிளம்பி விட்டார்கள்!
பிரகதீஸ்வரர் ஆலயம், சரபோஜி மன்னர் அரண்மனை, கலைக்கூடம் போன்றவற்றைப் பார்த்துக் களித்துவிட்டார்கள் அவர்கள். ஆகவே, அடுத்ததாக எங்கே போவது என்று மட்டுப்படவில்லை. முதலில் ஜெயராஜ் வயிற்றுப்பாட்டைக் கவனித்தான். உமைபாலன் வெளியே நின்றான். அப்போது, முன்பொரு சமயம் பார்த்த பிச்சைக்காரத் தங்கச்சி பூவழகியைக் கண்டான். விடுமுறைச் செலவுக்கென்று கிடைத்த நாலணாச் சில்லறையில் ஒரு பத்துக்காசை எடுத்து அவளிடம் நீட்டிவிட்டு, ஆர்ச்சுக்கு நெருங்கி ஒரு பக்கம் ஒதுங்கினான். நிஜார்ப்பையில் கையை நுழைத்துப் பழைய பத்திரிகைத்தாளைப் பிரித்தான். ‘காணவில்லை’ என்ற தலைப்பில் செய்யப்பட்டிருந்த விளம்பர வரிகளைப் படித்தான். அவனுடைய கண்கள் ஏன் இப்படிக் கலங்குகின்றன?...அவன் ஏன் அப்படிப் பெருமூச்சு விடவேண்டும்?....
கண்களைத் துடைத்தபடி, மனத்திற்குள் ‘ஒன்று... இரண்டு...’ என்று சொல்லி நாட்களைக் கணக்கிட்டான். காலடி அரவம். கேட்டது. சடக்கென்று பத்திரிகைத்தாளைக் குறுக்கு வசமாக மடித்தான். விளம்பரத்தில் ‘காணவில்லை’ பகுதியில் இருந்த அந்தப் படத்தில் பென்சிலால் ஏதோ கிறுக்கினான். அவசரமாக அதை மடித்து வைத்தான். “பாலா!” என்று கூப்பிட்டு அவன் தோளைப் பற்றினான் ஜெயராஜ். .
வெள்ளைப் பிள்ளையார் கோயிலைக் கடக்கும் வரை ஜெயராஜ், உமைபாலன் இருவரும் மெள்ள நடந்தனர். அப்போது நேருஜியின் உடல் நலம் கெட்டது பற்றி யாரோ பேசிக்கொண்டு போனது உமைபாலனின் செவிகளில் விழுந்தது. அதல பாதாளத்தில் விழுந்துவிட்டதைப் போல் அவன் பதைப்புற்றான்.
அதற்குள், “பாலா, உன்னைப் பற்றிச் சொல்லேன்! ” என்றான் ஜெயராஜ்.
கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாமல், உமைபாலன் சொன்னான்: “நான் அனாதை. ராமநாதபுரச்சீமைப் பக்கம் எனக்கு. உழைச்சால்தான் வயிற்றுக்கு வழிபிறக்கும்!... ”அவன் இப்போது ஜெயராஜை நோக்கி “உன்னைப்பற்றியும் நான் தெரிந்து கொள்ள வேணாமா?” என்றான்.
“தாராளமாக!” என்று தொடங்கினான் ஜெயராஜ், “எனக்கு மெட்ராஸ் ஊர்.என் தகப்பனார் பெரிய வியாபாரி. பெரிய பங்களா, கார் எல்லாம் உண்டு. ஒருநாள் கோபித்துக்கொண்டார் என் அப்பா. அதைப் பொறுக்காது ஓடி வந்துவிட்டேன். பத்திரிகையிலே விளம்பரம் கூட போட்டுவிட்டார். எனக்கு சுயகவுரவம்தான் ஒசத்தி”
ஒரு சந்து வந்தது.
ஜெயராஜ் தன் நண்பனை நிறுத்தி, அவன் கால்சட்டையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து அவனிடம் நீட்டினான் “டே ! பிடிடா”
உமைபாலன் மறுத்தான். என்ன சொல்லி மன்றாடியும் மறுதளித்தான்.
ஆகவே, ஜெயராஜ் வெகு குதூகலத்தோடு சிகரெட் பிடித்தான். “எங்க வீட்டிலே – ஊஹும், பங்களாவிலே சிகரெட் எடுத்துக் குடுக்கிறதுக்குன்னே ஒரு பையன் உண்டு!” என்றான்.
“சிகரெட்டை உனக்கு எடுத்துக் கொடுக்கவா?...”
“நீ சுத்த கண்ட்ரியாக இருக்கியே? நான் அவ்வளவு தைரியமாக அங்கே பிடிக்க முடியுமாடா?”
“உஸ்...‘டா’ போடாதே....இதுதான் உனக்கு மாப்பு!.. உன்னைப் போல எனக்கும் சுயகவுரவம் உண்டு. உஷார்!” என்று கம்பீரமாக மொழிந்தான் உமைபாலன். சென்னையைப் பார்க்கவேண்டுமென்ற தன் ஆசையை வெளியிடவே, உடனேயே நிறைவேற்றுவதாக வாக்களித்தான் ஜெயராஜ்.
இருவரும் ஒட்டலை அடைந்தபோது மணி இரண்டு அடிக்கச் சில வினாடிகள் இருந்தன.
சாப்பாட்டு இலைகள் அவர்களை அழைத்தன.
ஜெயராஜ் உட்கார்ந்து வாயில் அள்ளிக் கொட்டத் தொடங்கினான்.
கை கழுவி வந்த உமைபாலன் இலையில் குந்தினான். சோற்றைப் பிசைந்தான்.
அப்போது, ரேடியோ பயங்கரமான விதி போல அலறியது.
குந்திய உமைபாலன் குபிரென்று எழுந்து விட்டான். ‘தெய்வமாகி வந்த நேருஜியே!... இவ்வளவு சீக்கிரமாக நீங்கள் தெய்வமாகி விட்டீர்களே!...
அவனது பிஞ்சு மனம் வெந்து உருகியது.
4
அந்த ஓட்டலிலே மிகவும் பரபரப்பான பொழுதல்லவா அது!
கல்லாவில் ‘கனபாடி’ கங்காதரம்-அதாவது, கோபுவின் தகப்பனார் வீற்றிருந்தார். உச்சியில் சுற்றிய காற்று அவருக்குப் போதுமா...போதாது. ஆகவே, கையிலும் ஒரு விசிறி மட்டையை வைத்திருந்தார். பில்களைப் பார்த்துப் பணம் வாங்கிப் போட்ட நேரம் போக, ஒழிந்த வேளையில் அவரது கை அவ்விசிறியை நாடும் முதுகு அரித்தாலும் விசிறி அவருக்குக் கை கொடுப்பது உண்டு.
“வைரக் கடுக்கன் அறுபது காசு!” என்ற குரல் உள்ளேயிருந்து கேட்டது.
குரல் ஈந்தவன் மாஸ்டர் மணி.
ரொம்ப துடி!
இல்லையென்றால் புளித்துப்போன ஒரு பழைய ஹாஸ்யத்தை இத்தனை தைரியமாகச் சொல்லி ஒப்பிடக்கூடுமா?
ஹோட்டல் அதிபர் வைரக்கடுக்கனை எடை போட்டாரே, அதைப் போட்டிருந்த நபரை எடை போட்டாரோ?....அவர் கொடுத்த காசுகளை எண்ணிப் பெட்டியில் போட்டுக்கொண்டார். பிறகு, காற்றில் புறம் மாறிவிட்ட அந்த அட்டையை வாகாய்த் திருப்பி விட்டார்.
அதில் :
“இன்று முதல் சாப்பாடு ஆரம்பம்!” என்ற அறிவிப்பு இருந்தது. அளவுச் சாப்பாடு, எடுப்புச் சாப்பாடு, முழுச் சாப்பாடு, டிக்கட் சாப்பாடு என்ற பாகுபாடுகளின் விலை விவரங்களும் இருந்தன.
அது தருணம், முதலாளி கூப்பிட்டார்: “டேய் பாலா!”
உமைபாலன், பாலாவாக வடிவம் பெற்று ஓடி வந்தான். கையில் துடைக்கும் நீலத் துணி காட்சியளித்தது. பணிவுடன் நின்றான்.
“எங்கேடா ஜெயராஜ்!”
அவன் உள்ளே சென்றான். “பாலா, நம்ம ராஜ், சர்பத் சாப்பிடக் கொல்லைப் பக்கமாய்ப்போயிருக்கான், நீ கண்டுக்காதே, பெரிய பணக்காரப்பிள்ளை அவன். அவன் தயவு நமக்கு எப்பவும் வேணும். அவன் இங்கே இனி இருக்கப் போறது நாள் கணக்குத் தாண்டா!... உன்னையும் என்னையும் கூட அவன் பட்டணத்துக்கு அழைச்சுக்கிட்டுப்போய்த் தன்னோட பங்களாவிலே வச்சுக்கிடப் போறதாச் சொல்லியிருக்கானே!...” என்றான் அப்துல்லா.
இவர்களின் சம்பாஷணை முடிவதற்கும் ஜெயராஜ் அங்கு வருவதற்கும் கனகச்சிதமாக இருந்தது.
“முதலாளி அய்யர் கூப்பிடுகிறார் உன்னை!” என்றான் உமைபாலன், ஜெயராஜிடம்.
அவனோ வெகு அலட்சிய பாவத்தோடு, “ம்...சரிடா நீ போ!” என்றான்.
உடனே இதைக்கேட்டதும் உமைபாலனுக்குக் கோபம் வந்துவிட்டது. “டே பட்டம் போடறியா?...ரொம்பத் திமிர்தான்! உன் பணக்கொழுப்பை எங்கிட்டவா காட்டறே?...” என்று முஷ்டியை ஓங்கினான்.
ஜெயராஜ் அதற்குள் அசந்துவிட்டான். “வீட்டிலே கூப்பிட்டு கூப்பிட்டுப் பழக்கமாகப் போச்சுப்பா! கோபிக்காதே!” என்று பவ்யமாகக் கெஞ்சினான்.
உமைபாலன் கோபம் ஆறினான்.
இருவரும் வெளிப்புறம் வந்து நின்றார்கள்.
“சாப்பாட்டுக்கு நேரமாயிடுத்து... உள்ளே டேபிள், நாற்காலியையெல்லாம் செட்டிலாப் போட்டாச்சாடா?. ஆத்திலேருந்து வந்ததுகளையும் உள்ளவே போட்டுடனும்டா!” என்றார் முதலாளி.
“ஆத்திலேருந்து மேஜை–நாற்காலி கூடவா வரும்?” என்று ஜெயராஜ் ‘ஜோக்’ அடிக்க, மற்றவன் ரசித்தான்.
இருவரும் ஒருவரையொருவர் பொருளுடன் பார்த்தனர். பேச்சுக்குப் பேச்சு ‘டா’ போட்டுப் பேசினாரே, அதற்காகவா?
காரியம் என்றால் உமைபாலனுக்கு எப்போதுமே கண். அவன் உள்ளே போய்த் திரும்பி வந்து ‘சரியாக எல்லாம் போடப்பட்டிருப்பதாகச்’ சொன்னான்.
“நானும் பார்க்கிறேன், அந்தப் பயல் ஜெயராஜ் என்னவோ பெரிய குபேரர் வீட்டுப்பிள்ளையாண்டான் மாதிரிதான். கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாமத் திரியறான்!” என்றார் பெரியவர்.
உமைபாலன் முன்வந்து, தன் நண்பன் ஜெயராஜின் உண்மைக் கதையைச் சொல்லிவிட வேண்டுமென்று துடித்தான்.
ஆனால், அதற்குள்ளாக கார் ஒன்று வாசலில் வந்து நிற்பதைக் கண்டதும், ஏனோ உமைபாலன் சலனம் அடைந்தவனாக வாய் மூடி மெளனியானான்.
ஐயரோ அவரையும் அறியாமல் மேஜையிலிருந்த அழைப்பு மணியை அழுத்திவிட்டு, ‘ம்’...போங்களேண்டா பசங்களா!... யாரோ பெரியவா வர்றா!... போய் டேபிளைச் சுத்தம் பண்ணுங்களேண்டா!... என்றார். பதட்டம் குரலில் பேசியது.
சிறார்கள் இருவரும் உள்ளே விசையுடன் விரைந்தனர்.
வெளியே கார் நின்றதும், அதிலிருந்து பட்டுச் சொக்காய் போட்ட ஆசாமி ஒருவர் இறங்கி வந்து, கல்லாவை அணுகினார். தம் பையன் ஒருவன் காணாமல் போய்விட்டதாயும் பேப்பரிலே விளம்பரம் செய்தும் பயனில்லை என்றும், பையன் பெயர் கருணாகரன் என்றும், தமக்குக் காரைக்கால் சொந்த ஊர் என்றும், பெரிய ஜவுளி வியாபாரி எனவும் விவரித்தார் அவர்.
படம் – 6
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட பின் “உங்க நேம்?” என்று கேட்டார் ஓட்டல்காரர்.
“செங்காளியப்பன்!” என்று சொல்லி, சாண் அகல ஜரிகை கரையைத் தரையில் படாமல் கொய்து ஒதுக்கினார்.
அப்படிப்பட்ட பையன் வந்தால் தெரிவிப்பதாகக் கூறி, காரைக்கால் புள்ளியின் முகவரியைக் கேட்டார். அதற்கு, அவர் தமது விலாசம் எழுதி தபால் தலை ஒட்டப்பட்ட வெள்ளைக்கூடு ஒன்றையும் கொடுத்தார். “இருங்கோ...ஒரு கப் டிக்ரி காப்பி சாப்பிட்டுப் போங்கோ....தஞ்சாவூர் ஸ்பெஷல் இது!... உங்க ஊரிலே காப்பி நல்லதாக் கிடைக்காதில்லே!” என்று கூறி, உமைபாலன் – ஜெயராஜ் இருவரது பெயர்களையும் அழைத்தார்.
இருவருமே வரவில்லை.
மேஐையைச் சுத்தம் பண்ண அப்துல்லாதான் வந்தான்.
“காப்பி எனக்கு ஒத்துக்காதுங்க!” என்று தீர்ப்பளித்தார் காரைக்கால் செங்காளியப்பன்.
“போச்சு, இருபத்தஞ்சு காசு” என்ற ஏமாற்றத்தில், வந்தவரை வழியனுப்பக்கூட ஒப்பாமல், வியாபாரத்தில் கவனம் செலுத்தலானார் ஐயர்.
சாப்பாட்டு டிக்கட்டுகள் கேட்டு, ஆட்கள் வந்தனர்.
ஐயர் தம் உடம்பை வெகு சிரமத்துடன் சுமந்துகொண்டு நடந்து உள்ளே சென்றார். “அம்பி கோபுவுக்கு உடம்பு நன்னா இல்லாததாலே இத்தனை கஷ்டம்...ஈஸ்வரப் பிரபோ..!” என்று வாய்விட்டு அலுத்துக்கொள்ள வேண்டியவர் ஆனார்.
டிக்கட்டுகள் வியாபாரம் ஆயின.
உள்ளே முதற்பந்தி ஆரம்பாயிற்று.
கல்லாப் பெட்டி முடிக்கொண்டது.
தலைக்கு மேலே தொங்கிய ‘இங்குள்ள பலகாரங்கள் அசல் நெய்யில் செய்தவையல்ல!’ என்ற எச்சரிக்கைப் பலகையினை இடது கையால் லேசாகத் துடைத்தார். பிறகு வலம் வந்தார்.
கீழ்ப்பகுதியில் உமைபாலன் டபரா–தம்ளர் முதலியவைகளைச் சுத்தம் செய்து கழுவிக்கொண்டிருந்தான். காலடியில் ஒட்டி உறவாடிய சூட்டைச் சட்டை செய்தால் முடியுமா? சட்டையை உதறி வேர்வையைத் துடைத்தபடி கைவேலையில் முனைந்தான். மகாத்மா காந்தி வீட்டுப்பாத்திரங்களைக் கழுவிய நிகழ்ச்சியையும் அவன் அப்போது எண்ணிப் பார்த்தான்.
‘இங்கே எச்சில் துப்பு’ என்ற பலகை இருந்த இடத்தை நெருங்கினார். எச்சில் துப்பினார். அப்புறம், தூங்கி வழிந்த ஜெயராஜை முதுகில் தட்டி, சாக்குக்கட்டி வாங்கி வரச் சொல்லி, ‘துப்பு’ – என்கிற இடத்தில் ‘ங்கள்’ – என்று சேர்த்துவிட்டு நகர்ந்தார்.
கல்லாச் சாவியை எடுத்துத் திறந்தார்.
அவ்வேளையில் :
“சாமி! தண்டனுங்க!... என் பையன் காத்தான்...நல்ல செகப்புங்க... இங்காலே வந்தானுங்களா?” என்று பரிதாபமாகக் கேட்டான். அவனுக்கு அறந்தாங்கிப் பகுதியாம்! பெயர், சாம்பான்!
கடைக்காரருக்குப் பைசா லாபம் வருகிறது என்றால்கூட, வாய்ச்சோம்பல் படமாட்டார். ஆனால் வந்த ஆள் வாசலிலேயே நின்றதைக் கண்டதும் ஐயருக்கு விஷயம் விளங்கிவிட்டது. உடனே முகம் கோணியது. திரும்பியபடி, “யாரும் அப்படி இங்கே இல்லேப்பா...போ....ஜல்தி!” என்று பதட்டத்துடன் மொழிந்தார் ரேடியோவை ‘டியூன்’ பண்ணினார். “ஜாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்!”
என்று பாடியது ரேடியோ.
அலுப்புக்கொண்டு தலையை வடபுறம் திரும்பினார்.
அங்கே, தேசத்தலைவர்கள் விஷமப் புன்னகையை வேதனையுடன் சிந்தியபடி காட்சி தந்தார்கள்.
இப்போது அதிபருக்கு மனத்தை என்னவோ செய்தது. திரும்பிப் பார்த்தார். வந்த ஏழை இன்னமும் தயங்கி நின்றான். ஒரு பொட்டலம் பக்கோடாவை எடுத்து, அவன் கை தொட்டுக் கொடுத்து, உள்ளே கையைப் பிடித்து அழைத்து வந்து ஸ்டூலில் குந்தச் செய்து காப்பியும் கொடுத்து அனுப்பினார். காணாமற் போன அந்த ஏழையின் குமாரனின் விவரங்களையும் முன் போலவே வாங்கிக் கொண்டு அனுப்பினார்.
இப்போது ஐயர் நிம்மதியாகப் பெருமூச்சு விடலானார்.
முதற் பந்தி முடிந்தது,
ஐயர் எட்டிப் பார்த்தார்.
எச்சில் இலைகள் அப்படி அப்படியே இருந்தன.
“டேய் பசங்களா!” என்றார்.
ஜெயராஜ் மட்டுமே ஐயரின் பார்வையில் தென்பட்டான். அடுத்து உமைபாலனும் ஓடிவந்தான்.
“இலைகளை எடுங்கடா!” என்று பணித்தார் அவர்.
உமைபாலன், ஜெயராஜை நோக்கினான்.
ஜெயராஜோ “எவண்டா எச்சில் இலையை எடுப்பான்!... "சே!” என்றான் கம்பீரத்தொனியுடன். “சே! கேவலம்!”
ஆனால் உமைபாலன் அங்கிருந்து நகர்ந்தான். மேல் வரிசையிலிருந்த முதல் எச்சில் இலையை எடுத்துக் கொண்டிருந்தான். ‘திருடறது கேவலம்: பொய் பேசறது கேவலம்! இது கடமை!’
அப்போது “அடகடவுளே!” என்று விம்மியபடி அங்கே தோன்றிய காரைக்கால் செங்காளியப்பன், அந்த எச்சில் இலையைப் பிடுங்கி மடித்து, அதை எச்சில் இலைத் தொட்டியில் போட்டுவிட்டு அந்த மேல் வரிசை இலைகளையும் எடுத்து கத்தம் செய்யலானார்
உமைபாலனைப் பேய் அறைந்துவிட்டதா என்ன?
5
ஆம்; உமைபாலன் பேயறை பட்டவனாக வாய்ச் சொல் ஏதுமின்றி, வாய்ச் சொல்லுக்கு ஏது எதுவுமின்றி அப்படியே நிலைகலங்கி நின்று விட்டான்!
உமைபாலன் தன் கடமையின் பேரில் அந்த எச்சில் இலைகளை எடுத்துத் துப்புரவு செய்ய வேண்டியிருக்க, அவனுக்குப் பதிலாக, அந்தப் பணக்காரப் பெரிய மனிதர் அந்த எச்சில் இலைகளை அவ்வளவு அவசரமாக எடுத்துப் போட்டுச் சுத்தம் செய்த நிகழ்வு அங்கே ஒரு பெரும் பரபரப்பையும் அதிசயத்தையும் விளைவித்தது.
இச் செய்தியைச் சரக்கு மாஸ்டரும் சர்வர் மணியும் சொல்லக் கேட்டு, வேகமாக வந்தார் பெரிய ஐயர். தற்செயலாக, கோபுவும் வந்துவிட்டான்.
அற்பம் என எண்ணப்படும் சிறிய சம்பவம், ஒருவனது வாழ்க்கையில் மகத்தான திருப்பத்தை உண்டாக்கக்கூடும். இதற்கு உதாரணமாக, எத்தனையோ பெரிய மனிதர்களின் வாழ்வு ஏடுகளிலே இடம் பெறவில்லையா?
இதை மனத்தில் கொண்டு, அச்சிறுவனையும் அப்பெரியவரையும் மாறி மாறிப் பார்த்தான் கோபு. ‘சரிதான்; இந்தச் சீமானுக்குப் பிள்ளை இருக்காது. துடியான களை சொட்டும் நம்ம உமைபாலனை சுவீகாரம் எடுத்துக்கப் போறார் போலிருக்கு!’ என்ற முடிவுதான் அவன் நெஞ்சில் மேலோங்கியிருந்தது.
படம் – 8
"தம்பி!..."
“........”
“கருணாகரா!..."
“.....”
“மகனே!..கருணாகரா.!..”
உமைபாலன் சீற்றத்துடன் தலையை உயர்த்தினான். “யார் உமது மகன்?” என்று ஆங்காரமாகக் கேட்டான்.
“நீ!....நீதான் என் மகன்!...” என்று நெஞ்சு வெடிக்க விம்மினார் காரைக்கால் மனிதர்!
“நானாவது உம் மகனாவது.உமக்குப் பைத்தியமா ஐயா?” சிரித்தான் சிறுவன்!
என்ன அதிசயம் இது!.
சுற்றி நின்றவர்கள் மூக்கில் விரலை வைத்தனர்; குழப்பம். அடைந்தனர்.
சிறுவர்கள் ஜெயராஜ், அப்துல்லா, காளி முதலியவர்கள் உமைபாலனையே இமை வலிக்கப்பார்த்தார்கள்.“உங்க அப்பாகூட இப்படி ஒரு நாள் வந்து உன்னை அழைச்கக்கிட்டுப் பறந்திடுவார்! நீ கொடுத்து வச்சவனப்பா!” என்று ஏக்கப் பெருமூச்சுடன் செப்ப, “நீ போடா!... என் கதையே தனியடா!... நான் ராஜா! டே, அப்துல்லா. இப்ப நடக்கிற நாடகத்திலே கட்டாயம் ஏதோ ஒரு ரகசியம் இருக்கணும்டா!” என்று பேச்சுக்குப் பேச்சு ஆளை அறிந்து ‘டா’ போட்டு, அந்த வெற்றியிலேயே கர்வம் கொண்டு நின்றான் ஜெயராஜ்.
அப்போது, வாசலில் யாரோ சிலர் சாப்பாட்டு டிக்கட் கேட்பதறிந்து விரைந்து, மேஜை மீதிருந்த டிக்கட்டுகளைக் கிழித்துக் கொடுத்தான். கொடுக்கப்பட்ட சில்லறைகளை எண்ணி வாங் கினான். அவ்ன் யதேச்சையாகத் திரும்பிய பொழுது, ஏன் அவன் முகம் அப்படி வேர்த்துக் கொட்ட வேண்டும்?
கத்தரி வெயிலுக்கென்று இப்படியொரு மகிமையா?
ஜெயராஜ் ரொம்பவும் சுருக்காகவே திரும்பிவிட்டான். நாடகத்தின் முழுவிவரத்தையும் அறிய வேண்டாமா? வந்ததும், டிக்கட்டுக்கள் விற்ற பணத்தை முதலாளியிடம் சமர்ப்பித்தான். அவன் போய்த் திரும்புவதற்குள் எந்த ரகசியமும் இடம்பெற்றுவிட வில்லை என்பதையும் தன் சேக்காளிகள் மூலம் புரிந்து கொண்டான்.
கைக்குட்டையில் முகத்தைப் புதைத்த வண்ணம் அப்படியே நின்றிருந்தார் காரைக்கால் ஆசாமி.
உமைபாலனோ அங்கிருந்து நகர்ந்துவிட்டான், கிராப்பை ஒதுக்கியபடி !
இந்தப் புதிர்க் குழப்பத்திற்கு ஏற்ற நேரம் இதுவல்லவென்றும், இப்படியே இந்நிலை நீடித்தால், ‘பிஸினஸ்’ கெட்டுவிடுமென்றும் அறிந்துணர்ந்த முதலாளியும் அவர் பிள்ளையும், இரவு கடை அடைக்கும் நேரத்துக்கு வரும்படியும் காரைக்கால் அன்பரிடம் சொல்லி அனுப்பினார்கள்.
உடம்பு சரியில்லையென்று அரை நாள் லீவு வாங்கிக் கொண்டு போனான் ஜெயராஜ்.
காலம் கரைந்தது.
இரவு மணி ஒன்பது.
விளக்குகள் பிரகாசமாக எரிந்தன.
உமைபாலனை அனுப்பிவிட்டு, கோபு கல்லாவில் அமர்ந்தான். மேஜை இழுப்பைத் திறந்து சில்லறைகளையும் ரூபாய்த் தாள்களையும் இனம் பகுத்து மேஜையின் மீது வைத்தான். அருகில் உட்கார்ந்திருந்த ‘கனபாடி’ பொடிமட்டையைப் பிரித்து மூக்கின் துவாரங்களிலே பொடியைச் செலுத்திவிட்டு, குத்துக் கம்பியில் செருகப்பட்டிருந்த பில்களையும் சாப்பாட்டு டிக்கட்டுகளையும் எண்ணிக் கணக்கிட்டார்.
அப்போது, வாசல் பெட்டிக்கடையில் ஏதோ கசமுசவென்று பேச்சுக் கேட்டது. தம் கடையில் அலுவல் பார்க்கும் ஜெயராஜ் என்பவனும் பெரிய இடத்துப் பிள்ளை என்ற அங்கு பேச்சு அடிபட்டது. “டே அம்பி கேட்டியாடா சங்கதியை! நம்ம ஓட்டல் பேர் பேப்பரிலே வரப்போகுதுடா” என்று ‘குஷி’ யுடன் பேசி, ஜெயராஜ் பற்றிக் காதில் விழுந்ததையும் கொட்டினார். மத்தியானம் நடந்த கூத்தின்போது, டிக்கட் விற்ற பணத்தை ஜெயராஜ் தம்மிடம் கொடுத்ததையும் அவர் நினைத்தார்.
ஆனால், கோபு ஏனோ உதடுகளைப் பிதுக்கினான். முதற் பந்தி முந்ததும், எச்சில் இலைகளை எடுக்க மறுத்த ஜெயராஜைப் பற்றி யாரோ சொன்ன விவரத்தை அப்பாவிடம் எடுத்துக் காட்டினான். “ம்...விதின்னு ஒண்னு இருக்கத்தாண்டா இருக்கு!...நம்ம வேலையைக் கவனிப்போம்டா” என்றார், பெரியவர் சின்னக் குரலிலே!
டிக்கட்டுகளின் வரிசை எண்களைச் சரிபார்த்து வந்த பெரியவர் சடக்கென்று திகைப்புற்றார். இடையில் விற்கப்பட்ட டிக்கட்டுகளிலே இரண்டின் எண்கள் அடுத்தடுத்து விடுபட்டிருப்பதைக் கண்டார். உடனே அவருக்கு ஜெயராஜின் ஞாபகம் வந்தது. ‘நாலு டிக்கட்டுக்கு மாத்திரமே பணம் தந்தான். இரண்டைச் சாப்பிட்டுவிட்டான் பயல்’ என்று சிந்தித்தபடி, அந்தப் பையனுக்கு ஆள் அனுப்பினார். லீவு எடுத்துச் சென்றவன் இன்னமும் மீளவில்லை என்று தாக்கல் சொல்லப்பட்டது.
அப்போது ஜெயராஜைத் தேடி, அவனது கழுத்தில் தொங்கிய சிலுவைச் சின்னத்தை அடையாளம் கூறி, யாரோ ஒருவர் வந்தார். தாம் யாரென்று சொல்லாமல், அவர் வேகமாகத் திரும்பிவிட்டார், சைக்கிளிலே!
ஒன்பதரை மணி.
காரைக்கால் செங்காளியப்பன் கையில் ஒரு துணி முடிச்சுடன் உள்ளே பிரவேசம் செய்தார். பெரிய“செவர்லே” கார் வாசலில் நின்றது. வந்தவர் குந்தினார். பட்டு ஜிப்பா பளபளத்தது.
“பையனை எவ்வளவோ கேட்டுப் பார்த்துட்டேன்னா!... ஒன்றும் பலிக்கல்லே உம்மைத் தெரியவே தெரியாதுன்னு சாதிக்கிறான்” என்று விளக்கினார் பெரியவர்.
“அப்படியா?...” அதற்கு மேல் காரைக்கால் நபர் பேச முடிய வில்லை. விழிகள் சிவப்பு ஏறின. பிறகு பேசலானார். “என்னோட மானத்தைப் பறிக்கிற அளவுக்கு அவன் – என் மகன் பொய் பேசறான், சார்!...பெற்ற தகப்பன் ஐயா நான்!... எனக்கு இவன் முதல் தாரத்துப் பையன். இவனோட தாய் காலராவிலே இறந்த தால், நான் இரண்டாந்தாரம் பண்ணிக்கிட்டேன். அதுக்கு ஒரு பெண் குழந்தை மட்டுந்தான். ஒரு நாள் இவனோட சின்னம்மா என்னவோ சொல்ல, இவன் அவளை எதிர்த்துப் பேச. புத்தி தப்பியிருந்த நான் இவனை அடிக்கப் போக, ஐயையோ, இப்ப நான் நிலைகுலைஞ்சு, என் மகனே எனக்கு இல்லைன்னு ஆயிடுமோ என்கிற துர்ப்பாக்கிய நிலையிலே நிற்கிறேனுங்க!... பகவான் என்னை ஏன்தான் இப்படிச் சோதிக்கிறானோ?.... இவனுக்குள்ள சொத்து நாலு தலைமுறைக்குக் காணும் இவன் வந்து இங்கே பெயரை மாற்றிக்கிட்டு, தன்னையும் மாற்றிக்கிட்டு, அடிமை வேலை செய்யனுமா?...சரி!... ரொம்பக் கெட்டிக்காரப் பிள்ளை என் பேரைச் சொல்ல வைப்பான்னு கனவு கண்டேன். ஆனா இப்படி என்னை ஏமாத்துகிறானே!..தெய்வமே!. இதோ பாருங்க, இதுங்களை!.”
மூச்சு இரைத்தது. அவர் கொணர்ந்த முடிச்சை அவிழ்த்தார்.
“எல்லாம் தங்க நகைகள்! எல்லாம் இவனுடையது!.... இது தேதி வச்ச கடிகாரம்!”
ஒவ்வொன்றாகக் காட்டினார். அவன் காணாமல் போனவுடன் அவன் புகைப்படத்தைப் போட்டு விளம்பரம் செய்த தாளையும் காண்பித்தார்.
“தெய்வத்தின்மீது பாரத்தைப் போட்டு விட்டு நீங்க ஊருக்குப்போங்க!...உங்க பையன்தான் இவன். எனக்குப்புரியது. வரட்டும்!... பாசத்துக்கு மகிமை ஜாஸ்தி. நான் உங்க மகனை ஜாக்கிரதையாப் பார்த்துக்கறேன். கவலைப்படாமல் நீங்க போங்க ஊருக்கு...அவன் மனம் சட்டென மாறிவிடும். உம்மோட கண்ணீரைப் பகவான் சீக்கிரமே துடைச்சுடுவார். அவரோட விளையாட்டு வேலையும் அதுவேதானாக்கும்!
கனபாடி கங்காதரம் பாசத்தின் அற்புதம் அறிந்தவராக, உணர்ந்து, மனம்விட்டுப் பேசினார்.
காரைக்கால் நபர் விடைபெறும் பொழுது, நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து ஐயரிடம் நீட்டினார். “என் உயிர் இங்கேயேதானுங்க இருக்கும்!. இதை வச்சக்கங்க!..”
ஒட்டல் உரிமையாளர் ஏற்க மறத்துவிட்டார். “உம் பையன் இனி எம் பையனாட்டம் பணத்தை நீங்களே வச்சுக்கங்க.. பத்திரம். நிம்மதியாய்ப்போயிட்டு வாங்கோ...”என்று வழியனுப்பி வைத்தார்.
அன்றிரவு எல்லோரும் உறங்கி விட்டார்கள்.
ஆனால் சிறுவன் உமைபாலன் மட்டும் சிலை போல் உட்கார்ந்திருந்தான். சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, நேருஜி போன்ற மனிதத் தெய்வங்களின் முன்னே மண்டியிட்டு வணங்கிக் கண்ணீர் சொரிந்துகொண்டிருந்தான்!
தரையிலே விரிந்து கிடந்த பத்திரிகை விளம்பரத்தில் அச்சிடப்பட்டிருந்த சிறுவன் கருணாகரனின் கிறுக்கப்பட்ட முகத்திலே, உமைபாலனின் கண்ணீர்த்துளிகள் சிதறிச் சிந்தின!...
6
காலை இளங்காற்றிலே பறந்த அந்த அழகிய பட்டம் காற்றை எதிர்த்து மேலே விண்ணிலே செல்ல எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. கீழே மண்ணை நோக்கிச் சாய ஆரம்பித்தது.
ஓட்டல் ஆரம்பமாகி மூன்று மணி நேரமாகியுங்கூட, இன்னமும் ஜெயராஜ் திரும்பாதது கண்டு, ஒட்டல் முதலாளி மகன் கோபுவுக்கு ஐயம் தட்டத் தொடங்கியது. பெரியவர் மாதிரியே அவனுக்கும் சந்தேகம் ஏற்பட்டது.
நேற்று வந்து தேடிய ஏழைக்கிழவன் சாம்பான் இன்றும் வந்தான். மகனைப் பற்றித் தடயம் ஏதாவது கிடைத்ததா என்று ஆவல் பொங்கக் கேட்டான்.
ஐயர் கையை விரித்தார்.
சாம்பான் போய்விட்டான்.
இருந்திருந்தாற்போல என்னவோ நினைத்தவராக, ‘விசுக்’ கென்று எழுந்த கனபாடி கங்காதரம் ஐயர், பொடிமட்டையுடன் உள்ளே சென்றார். கொல்லைப்புறம் இருந்த பெட்டிகளில் ஜெயராஜின் பெட்டியைக் கேட்டு, அதன் பூட்டை உடைத்தார்.
நல்ல, அழகிய, உயர்ந்த சட்டைகள், ட்ரவுசர்கள் இருந்தன. அடியில் ரூபாய் நோட்டுகள் சில இருந்தன. மொத்தம் இருபது ரூபாய்!– சில்லறைகள் வேறு! எல்லாவற்றையும் பார்த்ததும், ‘நிஜமாகவே இவன் பெரிய இடத்துப் பிள்ளைதானோ?’ என்ற குழப்பம் அவரை உலுக்கியது. இன்னும் நன்றாகப் பெட்டியை அலசினார்.
ஒரு முகமூடி காணப்பட்டது.
அடியில் ஒரு சீசா இருந்தது. மூடியைத் திறந்தார். ‘குப்’ பென்று அடித்தது வாசனை - நாற்றம்! அதில் இருந்த எழுத்துகளைப் படித்தார். ஏதோ ஒரு வகை பிராந்தி வைக்கப்பட்டிருந்த வெறும் சீசா போலும் “சே, சுத்த ரெளடிப்பயல்...காலிப்பயல்!’ அவரது பற்கள் சத்தம் பரப்பின. 'இவனுக்கு இந்தச் சனியன் எல்லாம் ஏது?...நம்ம கடைப் பேரையே கெடுத்துடுவான் போலிருக்கே!' என்று வருந்தினார்.
உள்ளே எட்டிப் பார்த்துத் தலையை நீட்டிய அப்துல்லாவுக்கு நல்ல அடி கிடைத்தது.
உமைபாலன் வெளியே தன் கடமைகளை ஆற்றிக் கொண்டி ருந்தான்.
இன்னமும் பிரித்தார் பெரியவர். சிகரட்டுகள் சில கிடந்தன. கிழிக்கப்பட்டுப் பெட்டிக்கடியில் போடப்பட்டிருந்த நோட்டுத் தாள்களை எடுத்தபோது, ஒன்றில் 'எஸ். காத்தான்' என்ற பெயர் இருந்தது. காத்தான்!...
சடக்கென்று ஐயர் குடுமியைத் தட்டி முடிந்தார். சாம்பான் கிழவன் சொன்ன பேர் காத்தான் என்பதுதானே... ஒரு வேளை இவன் அவனோட மகனாயிருக்குமோ? ...பேரையும் ஜாதியையும் மாற்றிக்கிட்டு வேஷம் போட்டிருப்பானோ? சே! எனக்கு மண்டைன்னா கனக்குது!... பாலன், அப்துல்லாதான் நல்ல பையன். எதையும் மறைக்கலே!'
கனபாடி கிளம்பினார்.
அப்துல்லாவுக்குப் புதிதாகப் போட்ட ஜாங்கிரியை எடுத்துக் கொடுத்தார். இதைத் தூரத்தேயிருந்து பார்த்துக்கொண்டிருந் தான் உமைபாலன் என்பதை உணர்ந்து, இன்னொரு ஜாங்கிரியை எடுத்து, அவனை நெருங்கி, அவனிடம் கொடுத்தார்.
உமைபாலன், “இது வேண்டாமுங்க உங்க அன்புதானுங்க வேணும்” என்று சொல்லி விட்டான்.
‘இவனைப் படிக்கிறதுக்கு எனக்கு வயசு பத்தாது போல!’ என்று எண்ணமிட்டார் கங்காதரம். .
அவரவர் பலகாரங்களை உண்டனர்.
கடிகாரமோ காலத்தை உண்டது.
வெயில் எரித்தது.
அப்போது மிகவும் ‘ஸ்டைலாக’ அங்கு வந்தான் சிறுவன் ஜெயராஜ்.
உள்ளே அடியெடுத்து வைத்துதும், அவனை அழைத்து, உன் அப்பா சாம்பான் வந்திருக்காரப்பா” என்றார் கனபாடி
உடனே ஜெயராஜின் சிவந்த முகம் மாறிவிட்டது. சுதாரித்துக் கொண்டான். “என் அப்பா உயிருடன் இல்லிங்களே!” என்று பதிலளித்தான்.
“ஏய்!” என்று அதட்டியபடி அங்கு தோன்றினார் அம்மனிதர். இரவு இவனைத் தேடி வந்தாரே அவர்தான்! அவர் இப்போது போலீஸ் உடுப்புகளோடு நின்றார். அவர், அவன் கன்னங்களிலே அறைந்தார்.
“பெற்ற அப்பனைப் பற்றிக் கூடவா உனக்கு இளக்காரம் வந்துவிட்டது” என்று அதட்டினார் போலீஸ்காரர்.
அருகில் ஒதுங்கி நின்ற உமைபாலன் ஏன் அப்படித் துடித்தான்?
செருமியபடி நின்றான் ஜெயராஜ்.
“ம்... நடந்ததையெல்லாம் சொல்லு. இந்த ஐயரும் கேட்கட்டும்...”
ஜெயராஜ் சொன்னான். அவனுடைய பெயர் காத்தான்; சேரிச் சாம்பான் அவன் தகப்பன். சாப்பாட்டு டிக்கட்டுகள் இரண்டை அவன் விற்றுப் பணம் திருடினான். இப்போது சில நாளாக, ஒருவனுக்குப் பிராந்தி பாட்டில்களைப் பெரிய மனிதர்களிடம் ரகசியமாக விற்க உதவினான். பணம் கிடைத்தது அதில், அதன் காரணமாக, இப்போது போலீஸ்காரரிடம் வசமாக அகப்பட்டுக்கொண்டான். போலீஸ்காரரோ, அவனை ஐயருக்காக ஒரு முறை இப்போது மன்னித்துள்ளார்.
“இந்த நாளிலே பிள்ளைகள் வரவரக் கெட்டுப் போயிடுச்சு, கான்ஸ்டபிள் சார்!...வரவர லோகத்திலே நடிப்பும் வேஷமும் தான் மலிஞ்சுடுத்து. பாருங்களேன் இவனை. முளைச்சு மூணு இலை விடலே, அதற்குள்ளாற சட்டத்தையே ஏமாத்த ஆரம்பிச்சுட்டானே!... என்னமோ, உங்க இரக்கத்துக்கு ரொம்ப நன்றிங்க! இவனை இவன் அப்பன்கிட்ட ஒப்படைச்சுட்டா, நம்ம தண்டா விட்டுது!...”
மனம் நொந்து பேசினார் பெரியவர். வந்த சினத்தை அடக்கிக்கொண்டார்.
ஜெயராஜ் கூனிக் குறுகி நின்றான்!....
உமைபாலன் டபரா - டம்ளர்களை எடுத்துச் சேகரம் செய்து கொண்டிருந்தான்.
அப்போது –
வாசலில் ஒரு கூச்சல் கேட்டது.
எல்லோரும் வெளியே ஒடி வந்தார்கள்.
பிச்சைக்காரச் சிறுமி பூவழகி பதற்றத்துடன் கதறினாள்: “ஐயையோ, ஓடியாங்க!... ஓடியாங்க! திருடன் இந்தக் குழந்தையோட நகைகளைக் கழற்றுகிறானே?”
எல்லோரையும் முந்திக்கொண்டு உமைபாலன் ஓடினான்.
அழகான அப்பெண் குழந்தையின் கழுத்துச் சங்கிலியைக் கழற்றிக்கொண்டிருந்தான் ஒரு திருடன் !
யார் அவன்?
கிழவன் சாம்பானல்லவா அவன்?
ஒடிச் சென்ற உமைபாலன் குழந்தையைக் கண்டு பதறி, “ஆ!"என்று அலறினான். கழுத்துச்சங்கிலியைக் கழற்ற முனைந்த கிழவனைக் கீழே பிடித்துத் தள்ளினான்.
பூவழகி கதறினாள்.
கனபாடி கங்காதரமும் அவர் பிள்ளை கோபுவும் ஓடி வந்தார்கள். கிழவன் சாம்பானைக் கண்டதும் ஐயர் திகைப்புற்றார். “சரிதான்... இந்த அப்பன் புத்திதான் மகனுக்கும் வந்திருக்குது!...” என்று பற்களைக் கடித்தார். பற்கள் சில எப்படியோ, யார் செய்த பூஜாபலன் மூலமோ அவர் வசம் எஞ்சின.
கிழவன் சாம்பான் தலைமுடியை முடிந்தான்; “டேய்...நீ யாருடா என்னைத் தடுக்க!. இது யார் குழந்தையோ இதிலே நீ ஏண்டா தலையிடுறே...? போடா!...” என்று சீறினான் அவன்.
உமைபாலனின் உடல் முழுவதும் நடுங்கியது; ரத்தம் கொதித்தது. துடிதுடிப்பு வளர்ந்தது. “ஏ கிழவா, நான் யாருன்னா கேக்கிற?...இது என் தங்கச்சிடா!.. இது இங்கே எப்படி வந்துச்சு அப்படின்னுதான் புரியலே...! எங்க சின்னம்மா இதை விட்டுப்புட்டு ஒரு செகண்ட் கூட இருக்கமாட்டாங்களே!...” என்று விம்மினான்.
கிழவன் தலையை உயர்த்தி, “தம்பி, நீ யாரு...? அதை முதலிலே சொல்லு. ஓட்டலிலே மேஜை துடைக்கிற உனக்கு இவ்வளவு பணக்காரத் தங்கச்சி எப்படி இருக்க முடியும்?..” என்று அமத்தலாகக் கேட்டான்.
உமைபாலன் தடுமாறிப் போனான். காற்சட்டையிலிருந்த தாளை பிரித்தான். அதில் பிரசுரமாகியிருந்த ′காணவில்லை’ விளம்பரப் பகுதியைக் காட்டினான்.
“இந்தாப் பாரய்யா. இதுதான் நான்... படம் சரியாத் தெரியாது... இதுதான் என் அப்பா... பெயர்... செங்காளியப்பன்..... ஊர், காரைக்கால்!” மீண்டும் செருமினான் பையன்.
“இதுக்கெல்லாம் என்ன ஆதாரம்?″
″ஐயோ, கடவுளே!“ புரண்டான் உமைபாலன்.
″போடா தள்ளி” என்று ஆத்திரத்துடன் நெருங்கிய ஐயர், அக்கிழவனை ஒதுக்கித் தள்ளினார். அருகில் ஓடி வந்த ஜெயராஜைக் கன்னத்தில் அறைந்து நெட்டித் தள்ளினார். கிழவனை மீண்டும் அடிக்கக் கழி ஒன்றை எடுத்தார்.
அப்பொழுது, ஒரு கை வந்து அதைத் தடுத்தது.
திரும்பினார் கனபாடி,
அங்கு காரைக்கால் செங்காளியப்பன் கண்ணீர் வழிய நின்றார்!
“ஐயா! இந்தக் கிழவரை ஒண்ணும் செய்யாதீங்க... என் மகன் எனக்குக் கிடைச்சிட்டதுக்கு உண்டான புண்ணியத்திலே இவருக்கும் இந்தப் பெண் பூவழகிக்கும் பங்கு ரொம்ப உண்டு. எல்லாம் நான் நடத்திய நாடகம்... தெய்வம்... என் தெய்வம் மனமிரங்கிட்டுது!” உணர்ச்சி வசப்பட்டு நின்றார் அவர்.
உமைபாலன் தன் தங்கையை வாரியெடுத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தான். பிறகு, குழந்தையைத் தன் தந்தையிடம் கொடுத்துவிட்டு, அவர் பாதங்களிலே விழுந்து விம்மினான். “ நான் பாவி. உங்க மனசைப் புண்படுத்திட்டேன்...! பொய்யும் சொல்லிப்பிட்டேன்..” என்று தலையில் அடித்துக் கொண்டான்.
பதறினார் செங்காளியப்பன். “நீ எங்களுக்குக் கிடைச்சதே பெரிய பாக்கியம் அப்பா! உனக்காக நாங்கள் பட்ட கஷ்டம் உனக்குத் தெரியாதப்பா!... நடந்ததையெல்லாம் மறந்திடு. இனி நான் உன் மனசு கோணாம நடப்பேன், தம்பி!...” என்று பாசத்துடன் சொன்னாள் அவனது சின்னம்மா.
“அம்மா!” என்று விம்மினான் உமைபாலன். அவன் தன்னுடைய அன்புச் சிற்றன்னையின் பாசப்பிடிப்பில் கட்டுண்டு கிடந்தான்.
ஏழைச் சாம்பானிடம் மன்னிப்பு வேண்டினார் கனபாடி, “உம் பையனைப் புதுப் பையனாகத் திருத்திக் கொண்டு வந்து சேரும்” என்றார் கண்டிப்புடன்!
மகனுடன் ஊருக்குப் புறப்படுவதற்கு உத்தரவு கோரினார் செங்காளியப்பன். ஆஹா, அவரது முகத்தில்தான் எத்துணைக் களிப்பு! எத்துணை நிறைவு!
உடனே, உமைபாலன் வேலை செய்த நாட்களைக் கணக்கிட்டு, அதற்குரிய சம்பளத்தை உறையிலிட்டு நீட்டினார் ஐயர்.
“பணம் இருக்கட்டும். நான் இந்தப் புதிய உலகத்திலேருந்து படிச்சுக்கிட வேண்டியது ரொம்ப இருக்கு. நான் இங்கேயேதான் இருப்பேன்!″ என்றான் உமைபாலன். வெறுங்கையுடன் வீட்டைத் துறந்து புறப்பட்ட அவனுக்கு நடந்த சம்பவங்கள் மீண்டும் மனத்தில் தோன்றின.
காரைக்கால் அன்பர் மீண்டும் கலவரம் அடைந்தார். அவர் ஐயரைப் பரிதாபமாய்ப் பார்த்தார்.
“தம்பி இத்தனை வயசிலே நான் இதுவரை அறிஞ்சிராத இரண்டு அதிசயங்களை இங்கே கண்டேன். பணக்காரப் பிள்ளையான நீ அனாதை ஏழைப் பிள்ளையாய் நடிச்சே. ஆனா, அந்தப் பையன் ஜெயராஜோ ஏழையாய் இருந்து, மனசைப் பெருக்காமல் ஆசைகளை மட்டும் பெருக்கிக்கிட்டு, பணக்காரப் பிள்ளையாய் நடிச்சான்! இரண்டுக்கும் எத்தனை எத்தனையோ வித்தியாசம் இல்லையா?... தம்பி! நீ ஊருக்குப் போயி உங்க அப்பா அம்மா இஷ்டப்படி அங்கேயே தங்கி நல்லாப் படி. அப்புறம் இன்னும் தெளிவாயும் சுலபமாயும் இந்த லோகத்தைக் கத்துக்கலாமே! பின்னே நீ இஷ்டப்பட்டாலும் இங்கே வரலாம். இது உன் சொந்த ஓட்டல்!..”
கனபாடி ஐயர் சிரித்தபடி நிறுத்தினார். சிறுவன் உமைபாலனை ஆசீர்வாதம் செய்தார். புறப்பட வழியனுப்பினார். அவன் சம்பளம், அவன் சட்டைப்பையில் இருந்தது.
நகைகள் பளிச்சிட ஜம்மென்று புறப்பட்டான் உமைபாலன். பிச்சைக்காரத் தங்கை பூவழகியும் அவனுடன் புறப்பட்டாள்!
அந்த ஒட்டல் தொழிலாளத் தோழர்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி வழியனுப்பினார்கள்.
″உமைபாலனுக்கு ஜே” என்ற கோஷங்கள் வானைப் பிளந்தன. -
முத்துப் பல்லக்கு மாதிரி ஆடி அசைந்து புறப்பட்டது அந்த நீலநிற கார்.
உமைபாலனின் அழகான விழிகளிலிருந்து கண்ணீரின் துளிகள் வழிந்துகொண்டே இருந்தன.
அவனது பிஞ்சுக் கரங்கள் குவித்தது குவித்தபடியே இருந்தன.
மீண்டும் “ஜே!" முழக்கங்கள் புறப்பட்டன!
★ ★ ★
இளவரசி வாழ்க!
* * *
1
தேமதுரத் தமிழ் வாழ்த்துகின்ற பொங்குவிரி காவிரியின் வாழ்த்தைப் பெற்றது அல்லவா சோழவள நாடு!
புலிக்கொடி வாகை சூடிக் கொடிகட்டி பறந்த சோழமண்டலத்திற்கு, அன்றைக்கு வழித்தடம் அமைத்துக் கொடுத்த முதல் மரியாதைக்குரியது சிருங்காரபுரி நாடு!..
அந்நாட்டின் பூலோக சொர்க்கமாகத் திகழ்ந்த அரண்மனையின் தலைவாசலில், வண்ணக் கலாபமயில் சின்னம் பொறித்த வெண்பட்டுக்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது!
அப்பொழுது –
அத்தாணி மீண்டபம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. மண்டபத்தின் பிரதான வாயிலில் காவலர்கள் இருவர் கடமையின் கண்ணியத்தோடு, கட்டுப்பாடு காத்து நின்றனர். அவர்களுடைய முகங்களிலே பளிச்சிட்ட கேள்விக்குறியில் ஆச்சரியக்குறி மின்னிமின்னி மறைந்தது.
அடுத்த கால்நாழிகைப் பொழுதில், அரண்மனை அறிவிப்பு மணியின் ஒலி திக்கெட்டும் எதிரொலிக்கத் தொடங்கியது.
ஆம், அன்று அங்கே மந்திராலோசனை சபை கூடப்போகிறது! சற்றைக்கெல்லாம், காவலர்கள் மரியாதையுடன் சிரம் தாழ்த்திட, அவர்களது மரியாதையை மனிதாபிமானத்துடன் ஏற்றுக் கொண்ட பெருமிதத்துடனே, பொறுப்பு வாய்ந்த உயர் அதிகாரிகள் மிடுக்குடன் உள்ளே பிரவேசித்தனர்.
அதோ தலைமை அமைச்சர் அழகண்ணல்! அவரைத் தொடர்ந்தார் ஆஸ்தான கவிஞர் தமிழேந்தி!
இருவரும் உற்ற காவலர்களுடனும் உரிய மரியாதைகளுடனும் இடைவழி கடந்தனர். அங்கு குழுமியிருந்தவர்களின் அஞ்சலிகளை ஏற்றனர்.
தலைமை அமைச்சர் அழகண்ணல். மேனியைத் தழுவிக் கிடந்த பட்டு அங்கியின் நுனி கொண்டு நெற்றிப் பொட்டின் விளிம்பினைத் துடைத்துக்கொண்டே அமர்ந்தார். மன்னர்பிரானின் சிம்மாசனத்திற்குச் சற்றுக் கீழே இருந்த மேடையில் அமைக்கப்பட்டிருந்தது அவரது இருக்கை.
கவிஞர் பெருமான் தமிழேந்தியும் அமர்ந்து கொண்டார். முதுமையின் தளர்ச்சியை அவர் மாற்ற முடியாமல் திணறினார்.
மன்னர் வருகை பற்றிய அறிவிப்புச் சொல்லப்பட்டது, அரசாங்கத் தோரணையில்!
சில கணங்கள் கழிந்திருக்கும்.
“மாட்சிமை தங்கிய மாமன்னர் வருகிறார்!..பராக்...பராக்!” என்று ஆரவாரப் பேரொலி கிளம்பியது.
முறையான சடங்குகளின் பிரகாரம் சிருங்காரபுரி தேசத்தின் முழு முதல் காவலர் பூபேந்திர பூபதி வெகு கம்பீரத்துடன் தலைமை மந்திரியின் தகுதிவாய்ந்த ராஜ மரியாதைச் சிறப்புகளை ஏந்தி வந்து தம்முடைய ராஜபீடத்தில் மிடுக்குடன் அமரலானார்.
முதுகுப்புறம் இரு மருங்கிலும் தவழ்ந்த வெண்பட்டுத் ‘துப்பட்டாக்களை’ கைகளில் ஏந்தி நின்றனர் ஏவலாளர் இருவர். வெண்சாமரம் வீசினர் இருவர். மணிமகுடத்தை நாசூக்காக நகர்த்திக் கொண்டு வைரக்கற்களும் நவரத்தினங்களும் கண் சிமிட்டின.
முதல் அமைச்சர் எழுந்து மன்னரின் காதோரம் குனிந்து பவ்யமாக ஏதோ பேசினார். மன்னர் ‘ம்!’ கொட்டினார்.நெற்றியில் சிந்தனைக் கோடுகள் இருந்தன! அரசவைக் கவிஞருக்கு அடையாளம் காட்டப்பட்டது.
தோத்திரப்பா சொன்னர் கவிஞர் தமிழேந்தி :
‘கல்லார்க்குங் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பே!
காணார்க்குங் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே!
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே’
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே!
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில்நின்ற நடுவே!
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே!
எல்லாருக்கும் பொதுவில்நடமிடுகின்ற சிவமே!
என்னரசே! யான்புகலு மிசையுமணித் தருளே!’
பாட்டு முடிந்தது.
அமைதியின் அடையாளத்திற்கென இராமேசுவரம் சங்கு இதமாய் முழங்கியது.
மந்திராலோசனை மண்டபம் பேரமைதி பூண்டது.
மதிப்புக்குகந்த தலைமை அமைச்சர் அழகண்ணல், வேந்தரை வணங்கிட்டுப் பேசத் தொடங்கினார் :
“மரியாதை மிகுந்த கவிஞர் அவர்களும் ஏனைய என் சகாக்களும் இப்பொழுது மிகவும் அவசரமான செய்தி ஒன்றினை அறியப் போகிறார்கள்.
மாட்சிமை தங்கிய மன்னர்பிரானது அனுமதியின் பேரில் நேற்றிரவு யாம் நடத்திய அந்தரங்கக் கூட்டத்தின் முடிவின்படி இது தருணம் நீங்கள் அறியக் கடமைப்பட்டதாவது: குணதிசைப் பகுதியில் உள்ள நம் மன்னர் அவர்கட்கு உட்பட்ட சிற்றரசன் வேழ நாட்டு அரசன் விஜயேந்திரன் மாமூலாகக் கட்டக் கடமை கொண்ட கப்பத் தொகையைச் செலுத்த மறுத்துள்ளான். ஆகவே, அவனைப் படை கொண்டு தாக்க வேண்டும் என்பதே நம் புவி முதல்வரின் விருப்பம். இச்செய்தியை நாம் அனைவரும் கருத்திற்கொண்டு, அரண்மனையின் ஆட்சிபீடம் அறிவிக்கும் திட்டப்படி செயற் படுவோமாக!”
பேசி முடித்தார் பெரியவர். முத்து வடமாலை பளிச்சிட்டது.
“மாமன்னர் வாழ்க!...எதிரியை வெல்வோம்!” என்று மண்ணதிர, விண்ணதிர ஒலி எழுப்பனான் பிரதமசேனாதிபதி.
பூபேந்திர பூபதி ஆத்திரம் தொனிக்க எழுந்தார். உட்புறம் நோக்கி அவரது பாதணிகள் நடைபயின்றன!
ஆய்வுக் குழு கலைந்தது.
சுற்றுமதிற் கோட்டையின் நெடு வாயிலில் காவல் இருந்த வாயிற்காப்போன் அரண்மனையின் உட்புறம் நோக்கி அடிக்கடி கண்களைப் பாயவிட்டபடி இருந்தான்.
அடுத்த சில கணங்களில், உட்புறமிருந்து வந்த வெண்புரவிச் சிப்பாய் ஒருவன் அங்கிருந்து விரைந்தேகும் தருணத்தில், “மதிப்புக்குரிய மேன்மை மிகுந்த மகாராணி அவர்களுக்குத் திடீரென்று நோவு தொடங்கி விட்டதாம். சிறுபொழுதில் குழந்தை பிறந்து விடுமாம்!...” என்று செய்தி சொன்னான்.
பதட்டம் ஊர்ந்தது.
“ஐயனே மன்னருக்கு ஆண்மகவைக் கொடுத்து அருள்செய். அம்மையப்பனே” என்று நெஞ்சம் நெக்குருகப் பிரார்த்தித்தனர் காவலாளிகள்!
2
சிருங்காரபுரி நகரத்தின் முச்சந்தித் தகவல் அறிவிப்புக் கூடம் அது.
பறை ஒலி வானைப் பிளந்தது.
படைத்தலைவன் ஒருவன் தன்னுடைய நீலத்தலைப்பாகையுடன் கம்பீரமாக அழகிய குதிரையினின்றும் இறங்கினான். கையிலிருந்த ஒலைச்செய்தியைத் தயாராக எடுத்து வைத்துக் கொண்டான். ‘டம்...டம்...டமார்’ என்று பலதரப்பட்ட மேள வாத்திய ஒலிகளும் தொடர்ந்தன.
நாட்டு மக்கள் களிபேருவகையுடனும் நனிமிகு ஆர்வத்துடனும் அங்கு கூட ஆரம்பித்தனர். பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், அயலவர்கள் என்ற பாரபட்சம் ஏதுமில்லாமல் கூட்டம் நெருக்க ஆரம்பித்தது.
அப்போது, அக் கூட்டத்தில் ஒர் அங்கமாக அழகான புதிய யுவதி ஒருத்தி வந்து இணைந்தாள். வந்தவள் உண்மையிலேயே அந்நாட்டுக்குப் புதியவள் என்பது அவளது விழிப்பிலிருந்தே புரிந்துவிட்டது. உச்சி வெயிலின் வெக்கை அவளுக்குப் பிடிக்க வில்லைபோலும்!
படைத்தலைவன் அக் கூட்டத்தைக் கூர்ந்து நோட்டம் விட்டான். பிறகு, இடுப்பில் செருகியிருந்த ஒரு கருவியைக் கண்களிலே இடுக்கி, அதை ஒலைத்துணி கொண்டு லாகவமாக மறைத்தபடி கும்பலைக் கவனித்தான். அவன் முகம் ஏன் அப்படி வெளிற வேண்டும்?
பிறகு தன் அரசாங்கக் கடமையை நிறைவேற்றலானான். ஒலைச் சேதியைப் பிரகடனப்படுத்தினான் :
“சிருங்காரபுரி நாட்டுப் பிரஜைகளுக்கு பெருமைமிக்க அரண்மையின் ஆட்சிக் குழு மகிழ்ச்சிப் பெருக்குடன் தெரிவிப்பது யாதெனில், நம் மாண்பு கெழுமிய மகாராணியார் அவர்கள் ஒர் ஆண்மகவைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். தாயும் சேயும் நலமாயிருக்கிறார்கள். எல்லாம் நம் மதிப்புக்குரிய மேன்மை பொருந்திய மாமன்னர் கைதொழும் எம்பிரான் கந்தவேளின் கடாட்சமேயாகும். ஆகவே, ஆண்டவனை எண்ணி மன்னர் குடும்பத்தின் வளப்பத்திற்காக ஒரு கிழமை தோத்திரம்செய்து விழாக் கொண்டாடி மகிழுங்கள்!”
அவ்வளவுதான் –
மறுகணம் குடிமக்கள் குதித்துக்கும்மாளமிட்டுக் கையொலி எழுப்பினர்.
கூட்டம் கலையத் தொடங்கிய கட்டத்தில், அந்தப் படைத் தலைவன் விசுக்கென்று விரைந்து கூட்டத்தை ஊடுருவினான்.
அதோ... அந்தப் புதிய யுவதி!...
அவள் தாவணியை இழுத்து மூடியவண்ணம், வண்ணம் காட்டி, வனப்புக் காட்டி கற்றுமுற்றும் எதையோ ஆராய்வது போலவும் யாரையோ தேடுவது போலவும் பார்க்கலானாள். அவளை நலியாமல் நெருங்கி, அவளது பூங்கரங்களை இறுகப் பிடித்துக் கொண்டான் படைத்தலைவன். அவள் எதிரி நாட்டின் உளவாளிப் பகுதியை சார்ந்தவளாகவே இருக்க வேண்டுமென்பது அவனுடைய திடமான கருத்து. ஆகவேதான். அப்பெண் முதன் முதலில் கூட்டத்தில் ஒண்டியதிலிருந்தே அவள்பால் ஒரு கண் பதித்து வந்திருக்கிறான் அவன். பாம்பின் கால் பாம்புக்குத்தான் தெரியுமோ?
“நீ யார்?”
“நானா, பெண்!... குமரி!....”
“ஊர்?”
“மணிபல்லவம்?”
“உண்மையாகவா?”
“ஆம்; புத்தர் வழிபாடு எங்களுக்குச் சொந்தம். பொய் பேசோம்!...”
“இங்கே ஏன் வந்தீர்கள்?”
“ஏன், உங்கள் நாட்டிற்கு யாத்ரீகர்கள் யாருமே காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று ஏதாவது தடுப்புச் சட்டம் பிரகடனம் ஆகியுள்ளதா?”
தலைவன் வாயடைத்துப் போனான். “பின், நீ மட்டுந்தானா வந்தாய்?” என்று மீண்டும் வினவினான்.
“ஆம், எனக்கு நான்தான் காவல். வேறு அச்சம் எனக்கு ஏன் இருக்கப் போகிறது?”
“பெரிய பெண்தான் நீ”
“ஊஹம். நான் சின்னப்பெண். குமரிப் பெண்!”
“ம்!”
“ஐயா, ஒரு வேண்டுகோள்!”
“சொல்லலாம்!”
“உங்கள் இளைய ராஜாவை நான் கண்டுகளிக் வேண்டும்!”
“ஏன்?”
“அப்படி ஒர் ஆவல் என்னை உந்தித் தள்ளுகிறது!”
“ஓ!”
அவள் புறப்பட்டாள். மெட்டி இசைத்தது.
“ஆமாம், உன் பெயரைச் சொல்லவில்லையே நீ?”
“நீங்கள் கேட்டால்தானே சொல்வேன்?... பெண் எதையும் வலுவில் திணிப்பது பண்பாடல்ல, எங்கள் நாட்டில்!”
“இங்கு எங்கள் நாட்டிலும் அதுதான் மரபு! ம்... உன் பெயர்?”
“நாதசுரபி!..”
“புதிதாக ஒலிக்கிறது!”
“நானே புதியவள்தான்!”
அவன் சிரிப்புடன் நடந்தான். அவளைத் தொடரச் செய்தான். குளம்புகள் ஓசைப்படுத்தின.
நடந்து வந்த நாதசுரபி அந்த ஆலமரத்தின் அருகில் சற்று நேரம் நின்றாள். அரண்மனையின் குடதிசைக் கோட்டைச் சுவர் கம்பீரமாக மின்னியது. நின்றவள், சற்றும் எதிர்பாராத வகையில் ஏனோ மயங்கிச் சாய்ந்தாள்.
நடத்திச் சென்ற குதிரையை நிறுத்திவிட்டு, தண்ணீருக்காகத் தேடினான். தெரிந்த கிழவியிடம் வேண்டி நீர் பெற்று, அக் கன்னியின் முகத்தில் தெளித்தான்.
அப்போது, மாண்புநிறை மகாராணி அழகிய சீதேவி அம்மையார் சிவபதம் அடைந்த துயரச் செய்தி கிட்டவே, படைத் தலைவன் பராக்கிரமசீலன் விம்மிப் புடைத்தபடி பறக்கலானான்! 3
பண்புசால் பழந்தமிழ் இலக்கியங்களிலே ஓர் உண்மை செப்பப்பட்டிருப்பது மாறாத நடப்பாகவும் மாற்றமுடியாத நிகழ்ச்சியாகவும் இடம் பெற்றுள்ளன. அந்த உண்மை இதுவேயாகும்: ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்’ என்றும் பூமகளே இறையவனுக்கு நிகரானவன் என்றும் மன்னன் உயர்த்தப் பட்டிருக்கிறான். மன்னன் வழிப்படியே குடிமக்கள்!
சிருங்காரபுரி நாடு ஆனந்தக் களிப்பைச் சிந்தாக்கிப் பாடித்திளைத்திருக்க வேண்டிய இந்த இனிய நறபொழுதிலே, தெய்வம் எப்படிப்பட்ட தலைச்சுழியை எழுதி வைத்துவிட்டான். நாட்டின் அரசவைப் பாவாணர் தமிழேந்தி குறித்த பிரகாரம், அயன் கையெழுத்தை யார்தாம் அறிய வல்லமை பெற்றிருக்கிறார்கள்?
மன்னர் பூபேந்திரபூபதி, யார் என்ன தேற்றியும் மனம் தேறினார் இல்லை. ஈடு செய்ய முடியாத பேரிழப்பால் அவரும் அவரது அரசவையினரும் அவருடைய குடிமக்களும் முகத்தில் ஈயாடாமல், சோம்பிய தோற்றத்துடன் காணப்பட்டார்கள்!
“என் ராணியை இனி என்று காண்பேன்?...அவள் தெய்வம் போல வந்தாள். தெய்வமாக ஆகிவிட்டாள்.”அடிக்கொரு முறை அரசர் பெருமான் சித்தம் பேதலித்தவர் போன்று புலம்பினார். தம் மனைவி தன் நினைவுச்சின்னமாக விட்டுச் சென்றுள்ள ஆண்மகவின் அழுகையும் தவிப்பும் வேறு அவரைப் பாடாய்ப்படுத்தின.
யார் யாரோ தாதிகள் அரண்மனைக் குழவியைப் பராமரிக்க அமர்த்தப்பட்டார்கள். அவர்களிலே யாருடைய அன்புக்கும் அது கட்டுப்படவில்லை. விடிய விடிய விழித்திருந்தும், அதன் ஒலத்தை அடக்க முடியவில்லை, பணிப்பெண்களால்.
“நான் இந்த அவலக் காட்சிகளையெல்லாம் கண்கொண்டு கண்டு சகித்துக்கொண்டு உயிர்தரித்திருக்க மாட்டேன்!”என்று கதறினார் பூபேந்திர பூபதி. துயரம் அவரது உடலை துரும்பாக்கிற்று.
முதல் மந்திரி அழகண்ணல் புழுவாய்த் துடித்தார்.“மன்னர் பெருந்தகைக்குத் தெரியாததல்ல. நம் நாடு இன்று இருக்கக் கூடிய அபாயகரமான கட்டத்திலே, நீங்கள் இப்படி மனம் சோர்ந்து தளர்ந்தால், பிறகு, நாங்களெல்லாம் என்ன செய்வது?... எங்களைத் தேற்றுவார் யார்? எங்கள் அன்னையை இழந்த ஆறாத் துன்பத்தை மறந்து ஆறுதல் புகட்டத்தான் இளையராஜா அவதரித்திருக்கிறார் என்றுதான் நானும் மற்றவர்களும் மனம் தேறி வர முயலுகிறோம். மேலும்... எதிரி நாட்டானுக்குக் கொண்டாட்டமான நேரம் இது. நம் பகைவனுடைய நாட்டு ஒற்றர்கள் வேறு இப்பகுதிகளிலே நடமாடி வருவதாக ஐயப்படுவதாகவும் யாரோ ஒரு பெண்ணை அவ்வாறு சந்தேகித்து இங்கு சந்நிதானத்தில் அவளைக் கொண்டுவர எத்தனித்த போதில், அரசவையின் பேரிடிச் செய்தி அவனைக் கதிகலங்கச் செய்யவே, அவளை மறந்து இங்கு ஓடிவந்து விட்டதாகவும் நம் படைத் தலைவன் வருந்தினான்.
நீங்கள் மனம் தெளியக் கண்டால்தானே எனக்கு அரசாங்கக் காரியங்களில் மனம் செலுத்தி, நாட்டின் பாதுகாப்பு, படைதிரட்டல் போன்ற பணிகளைச் செவ்வனே ஆற்ற முடியும்?வரும் பெளர்ணமியன்று நம் பாதாளக் கோயிலுக்குப்பூஜை நடத்தி அண்டவெளிக் காளியை அருள் பாலிக்கும்படி வேண்டப் போகிறோம்..!”என்று உணர்ச்சிகள் துடிதுடிக்க பேசி முடித்தார்.
வெயில் இறங்கு முகத்தில் இருந்தது.
பொழுதுபோக்கு மாளிகையில் எத்தனையோ வகைகளிலே அழகும் அமைதியும் கொடிகட்டி விளையாடின. இருந்தும், வேந்தருக்கு எல்லாமே வேம்பாகக் கசந்தன. அந்தப்புரத்திலிருந்து குழந்தையின் அழுகுரல் காற்றில் மிதந்துவந்ததைக் கேட்டதும் மேலும் விரக்தி பெற்றார். அமைச்சர் தலைவரை நோக்கினார்: “எனக்கென்று இனி இவ்வுலகில் என்ன இருக்கிறது?” என்று நாத் தழுதழுக்கச் சொன்னார். பட்டுத் துகிலில் சுடு நீர்த்திவலைகள் தெறித்து விழுந்தன.
பசுங்கிளி ஒன்று தூரத்திலிருந்து கத்தியது.
“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? உங்கள் வாரிசு இல்லையா? அப்பால் உங்கள் ..."என்று தலைமை அமைச்சர் முடிக்குமுன்னே, அங்கே தோன்றினான் இளவரசி கன்யாகுமரி! – “தம்பி இருக்கிறான்; நான் இருக்கிறேன்!... உங்கள் குடிஜனங்கள் இருக்கிறார் கள்! இல்லையா அப்பா! மன்னர் எல்லாம் கடந்தவராக இருக்க வேண்டாமா? நான் சொல்வது தவறா அப்பா?”என்று நயமாக அழுத்திச் சொன்னாள் கன்யா குமாரி.
விலைமதிக்க வொண்ணாத இருபெருஞ்செல்வங்களும் நாட்டுமக்களும் அப்போது அவருக்கு ஒன்று சேர்ந்து ஆறுதலாகத் தோன்றினர்.
அருமைத் திருமகளின் அழகிய தத்துவப் பேச்சுகள், தந்தையின் உள்ளுணர்வைத் தூண்டின போலும்!
மெல்லிய இளங்கீற்று, வேந்தரின் உதடுகளில் இழைந்தது. “ஆமாம் என் நாட்டின் கவுரவத்தை முதலில் பாதுகாக்க வேண்டும்!... பவள நாட்டானைப் பல்லுடையச் செய்தவன் நான். கோமளபுரியைக் குடல் தெறிக்க ஓடச் செய்தவன் நான் என்பதை இந்த வேழ நாட்டான் அறியச் செய்ய வேண்டும். நேற்று இவன் அப்பன் கப்பம் கட்டினான். இன்று அவன் பிள்ளை மறுக்கிறான் திறை செலுத்த இளவட்டம் அல்லவா?” சீற்றம் செம்மை காட்டிற்று.
அப்போது, கன்யாகுமரி ‘கலகல’ வென்று நகை புரிந்தாள். தவிர்க்க முடியாத ஏளனம் நகைப்பில் இருந்தது. அதைக் கேட்டதும், மன்னர் பூபேந்திர பூபதிக்கு உள்ளத்தை என்னவோ பண்ணியது. “கன்யா ஏன் இப்படி நகைக்கிறாய் நீ?” என்று கேட்டார்.
“அப்பா!...”
“சொல்... உன் நகைப்பு என்னைப் பற்றிப் படர்ந்ததாகத் தோன்றவில்லை... என் நாட்டைப் பற்றியதாக இருக்க வேண்டு மென்று ஊகம் செய்கிறேன்!” என்று நிறுத்தினார்.
“அப்படியா? உங்கள் நாட்டினைப் பற்றி உங்களுக்கு இருக்கும் கவலை, எனக்கும் என் நாட்டைப் பற்றி இருக்கும். இல்லையா, அரசே?”
“ம்!”
முதலமைச்சர் அழகண்ணல் திணறிக் கொண்டிருந்தார்.
“வேழநாட்டான் திறை செலுத்தாததால் உங்கள் கவுரவம் பாதிக்கப்பட்டு விட்டது போன்று சற்றுமுன் பேசினீர்கள். வாஸ்தவம். அதேபோல், உங்கட்குக் கீழ்ப்படிந்து, ஒப்பந்தக் கப்பம் கட்டுவதால், வேழநாட்டு அரசனுக்கு மனம் நோகாதா, தன் கவுரவம் பாழ்பட்டதை எண்ணி?....”
ஆமாம்; பேசியவள் சிருங்காரபுரி நாட்டு இளவரசி கன்யா தான்!
மலைத்து விட்டார் நாடாளும் நல்லவர்.
அதிர்ந்து போனார் அறிவுக்கு விருந்து வைப்பவர்.
புரட்சியின் கனவாக அமைதியான முறுவலை அழகு சிந்த வெளிக் காட்டியபடி அப்படியே நின்றாள் இளவரசி.
“மகளே!”
“அப்பா!”
“அப்படியென்றால், வேழ நாட்டான் மீது படையெடுப்பதை நீ விரும்பவில்லையா?
“அது உங்கள் சொந்த விருப்பு வெறுப்பைப் பொறுத்த ராஜரீக விஷயம்-ராஜீய விஷயம்! அதில் குறுக்கிட நான் யார்?”
“நீ என் அருமைச் செல்வி!”
“இது நம் சொந்தபந்தம்!.”
“ஓஹோ!”
மன்னர் தீர்மானமான ஒரு பார்வையுடன் அமைச்சர் தலைவரின் திசைப் பக்கம் திரும்பினார். “தலைமை அமைச்சர் அவர்களே!. விதி இப்போது என் மகளின் உருவிலே விளையாடப் போகிறது ... ஆகவே, முன் நடந்த மந்திராலோசனையின் திட்டத்தைச் செயற்படுத்துவதில் முழுமூச்சுடன் இறங்குங்கள். என் மன அமைதிக்கும் இது நல்லதொரு திருப்பமாக அமையட்டும்!” என்று வீறுடன் மொழிந்தார்.
மீண்டும் நகைப்பொலி உதிர்த்துவிட்டு, பட்டுத் தாவணியைச் சமன் செய்தபடி அங்கிருந்து புறப்பட்டாள் இளவரசி கன்யாகுமரி! 4
ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாளி தேவத்திருச் சந்நிதனத்தில் நின்று மெய்யுருகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள், சிருங்காரபுரி நாட்டின் இளவரசி கன்யாகுமரி.
ராஜ குடும்பத்தவர்க்கென்று தனிப்பட்ட முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது அக்கோயில், அரண்மனைக்குள்ளாகவே இருந்தது அது.
கன்யாகுமரி மட்டிலுமே அம்மனைத் தரிசிக்க வந்திருந்தாள். அவள் தன் தந்தைக்கு மட்டும் புதிராகவும்-புதிர் விளங்காத விடுகதையாகவும் தோன்றவில்லை! அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும் கூட, அவள் எல்லோருக்குமே ஒரு வினாக் குறிதான்! இப்படிப் பட்டவள் அவளை ஈன்ற மகாராணிக்கு ஓர் ஆச்சரியக் குறியாகவே திகழ்ந்தாள். ‘என் மகள் பரம்பரை வழி வருகிற அசட்டுக் கொள்கைகளிலும் வெறும் சம்பிரதாயங்களிலும் துளியளவும் நம்பிக்கையற்றவள். அவள் பிற்காலத்தே ஒரு புரட்சிப் பெண் ஆவாள். ஏனென்றால், அவள்பால் பண்பட்டுள்ள மனிதாபிமானப் பண்பு அவளை இப்படி ஆக்கியுள்ளது. நாட்டு மக்களுக்கு அவள் பேச்சு என்றால் தேனும் தினைமாவும் சாப்பிட்டது மாதிரிதான்!... என்று புகழ்ந்தார்கள்.
ஆம், கன்யாகுமரி என்றால் நாட்டு மக்களுக்குத் தனித்த ஓர் ஆர்வம் தழைத்தது. “மகாராஜாவுக்குச் சந்ததி இனி எங்கே உண்டாகப் போகிறது?... ஆகவே இளவரசிதான் பட்டம் சூட்டிக் கொள்வார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால், நம்நாடு புதிய பாதையில் கண் விழிக்கத் தொடங்கி விடும்!.... அவர்களுக்குத் திருமணமாகி, சகல சௌபாக்கியங்களையும் கடவுள் அருள வேண்டும்!” என்றே அனைவரும் முன்பு வாழ்த்தினார்கள். பெருமை சிறுமை பாராமல் பட்டி தொட்டிகளெல்லாம் அவள் கால் நடையாக நடந்து சென்று எழை எளியவர்களின் இடர்ப்பாடுகளைக் கண்டும் கேட்டும் அறிந்தும் உணர்ந்தும், தந்தையிடம் எடுத்துச் சொல்லி அவர்களுக்கு ஆவன செய்த நிகழ்வுகள் ஒன்றா, இரண்டா?
இப்போது நாட்டின் குடிமக்களுக்கெல்லாம் புதிய ஆனந்தம் கிளைத்தெழுந்தாலும், புதிய குழப்பமும் உண்டாகாமல் இல்லை. பிறந்துள்ள வாரிசான பட்டத்து இளவரசு எப்படி இருக்குமோ என்ற கவலை அப்போதிருந்தே அரிக்கத் தொடங்கியது.
சரி!
இளவரசி கன்யாகுமரி தன் நினைவு பெற்றாள். பலதரப்பட்ட சிந்தனைகளினின்றும் விடுதலை பெற்றாள். பூஜை முடிந்து, பிரசாதங்களுடன் அங்கிருந்து புறப்பட்டாள். ஒருத்தியாகவே வந்து ஒருத்தியாகவே திரும்பினாள். இளங்கதிர்கள் சிவக்கத் தொடங்கின.
அன்று தன் தந்தையிடம் மனத்திலுள்ளதைத் திறந்து சொன்னது, அவளுக்கே வியப்பாகப்பட்டது. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகமில்லை என்பதை அவள் அறிவாள். தமிழ் மறை தந்த பாடல்களிலே அவளுக்கு மிகவும் பிடித்தமானது ‘அன்பின் வழியது உயிர் நிலை’ என்னும் குறள் அடியாகும். அவளுக்குக் கற்பித்த கவிஞர் தமிழேந்தி, பாடலுக்காக எத்தனை எத்தனை விளக்கங்கள் சொல்லியிருக்கிறார்!... கோமான் குவலயத் தலைவனான தெய்வத்திற்குச் சமதையென்றால், ஆண்டவன் பாராட்டாத அந்தப் பெருமை – சிறுமை, உயர்வு – மட்டம் போன்ற ஏற்றத் தாழ்வுகளை மன்னன் ஏன் பொருட்படுத்த வேண்டும் என்பதே அவளது அந்தரங்கக் கருத்தாகக் கனன்றது.
இன்னொரு விவரமும் இப்போது அவளுக்கு நெஞ்சில் நின்றது. கொன்றைப் பூக்களின் அர்ச்சனையை ஏற்றபடி நின்றாள் அவள். கொண்டைச் சாமந்தி கொள்ளை வாசனையை இறைத்தது. நினைவில் குதித்த சிந்தனையை அவள் மறக்க மாட்டாள். வேழநாட்டரசன் விஜயேந்திரன் தர்ம சிந்தையுள்ளவன் என்றும் பெரிய கொடையாளி என்றும் நல்லறிவு படைத்த இளைஞன் என்றும் அவள் கேள்விப்பட்டாள். தன் தந்தைக்குப் பணிந்து முறையாய்த் திறை செலுத்த ஒப்பாததன் இயல்புதனை அவளால் ஒரளவு அங்கீகரிக்கவும் சம்மதித்தது, அவளது பெண் மனத்தின் உள்ளுணர்வு.
இளவரசியை எதிர் கொண்டழைக்க அவளது அந்தரங்கச் சேடி ஆரவல்லி வந்தாள். பிரசாதத் தட்டை வாங்கிக் கொண்டாள்.
அப்போது, அங்கு மறித்து ஓடிவந்தாள் நாதசுரபி, அவளைப் பின் தொடர்ந்து ஓடிவந்த படைத்தலைவனை ஜாடை காட்டிப் போய்விடப் பணித்தாள் கன்யாகுமரி.
நாதசுரபி “இளவரசி வாழ்க!” என்றாள். குறும்பான பார்வை, கண் நிரம்பிய அழகு ராஜகளை கொண்ட பாவனையில் அவள் விளங்கினாள்.
“ஒஹோ, நீதான் நாதசுரபியோ?” என்று மிகவும் நிதானமாக விசாரித்தாள் இளவரசி.
தன் பெயர், தன்னைப் பார்ப்பதற்கு முன்னதாகவே ராஜகுமாரிக்கு எங்ஙனம் தெரிந்தது என்ற அதிசயத்தில் விரிந்த கயல் விழிகளால் கன்யாவை அளந்தாள்.
“ஆமாம், இளவரசி!”
“சரி. நீ இங்கே வந்த காரணம்.” என்று சுருக்கிக் கொண்டாள் கன்யா. நாதசுரபி பற்றிய ஏனைய விவரங்கள் தனக்கு ஏற்கெனவே தெரியும் என்ற அளவில் இருந்தது அவள் பார்வையின் அழுத்தம்.
“நான் அனாதை. இப்போது அன்னையிழந்திருக்கும் இளையராஜாவை இமை, கண்ணைக் காப்பதுபோல நான் வளர்த்துக் காப்பாற்றுவேன்! நான் என் கன்னித்தன்மையின் மீது ஆணைவைத்துச் சொல்கிற உறுதிமொழி இது!...” என்றாள் தன்மையான தொனியில், நாதசுரபிக்கு இரைத்தது.
“அப்படியா?” என்று ஆர்வம் காட்டிய இளவரசி அவளை உள்ளே அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றாள். தங்கத் தொட்டிலில் சயனித்திருந்த இளவரசு நாதசுரபியின் ஸ்பரிசம்பட்டு விழித்து, அவளைக் கண்டு ஆனந்தக் கடலாடியது. “ஆஹா, எல்லாம் தெய்வசித்தம்” என்று குதூகலம் எய்தினாள் கன்யாகுமரி.
“ஏதோ விட்டகுறை–தொட்டகுறை என்பது போலத் தான் இருக்கிறது. இச்சம்பவம். நம்மையெல்லாம் பார்த்துப் பயந்து வீறிட்ட இச்சிசு – பச்சைமண் இந்தப் புதியவளைக் கண்டதுமே இப்படி அழகாகச் சிரிப்புக் காட்டுகிறதே!..... இவள் ஒருக்கால், சூன்யம் பயின்ற கன்னியோ?” என்று கூட தங்களுக்குள் ஒருவர் காதை மற்றவர் கடித்துக் கொள்ளலாயினர்.
தன் தந்தை தன் மீது கொண்டிருக்கும் சீற்றத்தினையும் மறந்து, பாசத்தின் மேலீட்டினால், அரசரின் ஓய்வுமனையை நாடிச் சென்று, “அப்பா, அப்பா! இளவரசுக்கு நம் குலதெய்வம் நல்ல செவிலித்தாயைக் கொண்டு வந்து காட்டியிருக்கிறது!” என்று செப்பினாள். நவரத்தினமாலை மின்னியது.
மன்னரின் கண்கள் “அப்படியா!” என்று களிப்புக் கண்ணீர் சிந்தின!... 5
சிருங்காபுரி நாட்டின் மன்னரவையும் ஆட்சிபீடமும் மிகவும் கறுசுறுப்புடன் இயங்கின. நாட்டின் ஆளுகைக்கு உயிர்ப்பான சக்திகள் எண்பேராயம், பன்னிரு அமைச்சர் குழு, சீரெழுபடையணி, நீதிமிகு நிதிக்காப்பு, உயிரொத்த நகர்ப் பாதுகாவல் போன்ற பல பிரிவுகளால் இயங்கின; இயக்கப்பட்டன.
“வேழநாட்டான் நம் எதிரி!...வடபுலம் நம் பகைவர்! இக் கருத்தை என் குடிமக்கள் யாரும் மறக்கக்கூடாது! எதிரி எப்போதும் விழிப்புடன்தான் இருப்பான்!...நமக்கு அவன் ஒரு பொருட்டல்ல! ஆனால், நாம் என்றென்றும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டிய காலம் அணுகிக் கொண்டிருக்கிறது. ஜாக்கிரதையுடன் இருங்கள்!” என்பன போன்ற தூண்டுதல் பிரசங்கங்கள், துண்டோலைகளின் வாயிலாக மன்னரின் வாய்மொழிகளாய் நாட்டில் எங்கெங்கும் பரவின.
மன்னர் பெருமான் இப்போது எந்நேரம் பார்த்தாலும் அந்தப்புரத்தில்தான் காட்சி தந்தார். புதிதாக வந்த நாதசுரபியோடு மிகவும் இறுக்கமாக ஒட்டிக் கொண்டது மன்னரின் குழந்தை. நல்ல செவிலித்தாயாக தன் மகனுக்குக் கிடைத்திருக்கும் நற்பேறு தெய்வப்பிரசாதமேயாகும் என்று அகமகிழ்ந்தார் அரசர்!
அத்துடன் முடிந்ததா கதை? ஊஹூம் அதிலிருந்துதான் கதையே ஆரம்பமானது.
விலகி விலகியிருந்த வேந்தர் நாளாவட்டத்தில் ஒட்டி ஒட்டி வந்துவிட்டார் – பணிப்பெண் நாதகரபியின் பக்கமாக!
இந்த விசித்திரமான மாற்றத்தை முதலில் அனுமானம் செய்து கண்டறிந்தவள், இளவரசி கன்யாகுமரிதான்!
ஒரு நாள், அவள் தந்தையிடம் தனியே பேச விழைவதாகத் தகவல் அனுப்பி இணக்கமும் பெற்றுக்கொண்டாள். அன்றொரு நாள் தான் மனம் விட்டுப் பேசிய யதார்த்தப் பேச்சைத் தவறாக எடுத்துக்கொண்ட தன் தந்தையிடம் முகம் நிமிர்த்தி, நேர்கொண்ட பார்வை பார்த்துப் பேச வாய்த்த சந்தர்ப்பம் வெகு சொற்பம்.
இப்போது மீண்டும் அவள் தந்தையிடம் பேசவேண்டும். இன்னும் பகுத்துக் கூறினால், அந்நாட்டின் அரசரிடம் பேச வேண்டும்! அவள் அண்டிவந்தாள். “அப்பா! புதுச் செவிலியைப் பற்றி உங்கள் கருத்தை அறியலாமா?” என்று ஆரம்பித்தாள்.
மகிழ்வின் வெள்ளம் கண்களில் விளிம்பு கட்டி நிற்க, வீற்றிருந்த மன்னர் பஞ்சணை மெத்தையில் திண்டுகளின்மீது ஆரோகணித்துச் சாய்ந்தவாறு “ம்....நாதசுரபியைத்தானே கேட்கிறாய் கன்யா?” என்று எதிர்க் கேள்வி கேட்டார் அரசர்.
“ஆமாம் தந்தையே!” பணிவுடனும் பாசத்துடனும் பதிலிறுத்தாள் அரசிளங்குமரி தொடர்ந்தாள்:
“தங்கமான பெண். ரொம்பவும் அடக்கம். அதிகப்படியான பாசம். குழந்தை அவளுடன் ஒட்டிக் கொண்டுவிட்டது! நீங்கள் மட்டும் அவளிடமிருந்து எட்டி இருந்துவிட மறந்துவிடாதீர்கள். என்ன இருந்தாலும், உங்கள் பணிப்பெண் நாதசுரபி! ராஜ அந்தஸ்து, கவுரவம் முதலியவற்றை நீங்கள் இந்தச் செவிலிக்காக ஒதுக்கிவிட முடியுமா? ஒதுக்கிவிடலாகுமா!?....நீங்கள் நாட்டின் காவலர். அவளோ குழந்தைக்கு மட்டுமே காவல் பெண்!...அவள் யாரோ! உங்கள் நாட்டின் கவுரவம் காற்றில் அலைந்துவிடாமல், பாதுகாத்துக் கொள்ளுங்கள்!”
உள் அர்த்தம் தொனிக்கப் பேசி முடித்தாள் கன்யாகுமரி.
அரசருக்குச் சினம் மூண்டது. “நீ தந்தைக்கே உபதேசம் செய்கிறாய். புராணத்தில் என் அப்பன் குமரனுக்கு அந்தப் பெயர் கிடைத்தது! இன்று நீ அப்பெயரைத் தட்டிக்கொள்ளப் போட்டியிடுகிறாய் போலிருக்கிறது!...கன்யா! எனக்கு யாரும் புத்தி புகட்ட வேண்டாம்!... என் கவுரவம் எப்போதுமே என்னிடம் மாசுபடாமல் தங்கிவிடும். நீ போகலாம்!...நாடு என்னுடையது!...” என்று தூக்கலான குரலில் பேசினார்.
“ஆனால், மக்கள் உங்களுடையவர்களாக எப்போதும் இருக்கமாட்டார்கள்! கவனமிருக்கட்டும் தந்தையே!...” என்று பதில் அளித்தபின் அங்கிருந்து விடைபெற்றாள் கன்யாகுமரி.
இவர்களின் பேச்சுகளை ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்த நாதசுரபி, சடக்கென்று திரை மறைவினின்றும் விலகிக்கொண்டு, அப்போதுதான் உட்புறமிருந்து வெளிக்கிளம்பி வருபவள் மாதிரி வந்தாள். கையில் குழந்தை சிரித்தபடி இருந்தது.
கன்யாகுமரியும் குழந்தைக்காக அனைத்தையும் மறந்தாள். அவன் நிமித்தம், தன் தந்தை புதிய செவிலியின்மீது கொண்டுள்ள மோகத்தையும் மறந்தாள். இந்நிலையைத் தவிர்க்கக் கடப்பாடு கொண்ட நாதசுரபியையும் மன்னித்து மறந்தாள்.
எதிர்ப்பட்டாள் நாதசுரபி.
இளவரசி, குழந்தையை வாங்கி கால்நாழிப் பொழுதுவரை கொஞ்சினாள்; உச்சிமோந்தாள்; முத்தமாரி பொழிந்தாள், இன்பக் கண்ணிர்விட்டாள்.'அம்மா!... அப்பாவின் எதிர்காலம் பயங்கரமாக இருக்கும் போலத் தோன்றுகிறதே!... என்று மனத்திற்குள் வருந்தினாள். தெய்வத்தை வேண்டினாள். அவள் நாதசுரபியை ஆழ்ந்து பார்த்தாள்.
“இளவரசி! தயைசெய்து என்னைத் தவறுபட எண்ணாதீர்கள். நான் விஷம் ஏதும் இல்லாத ஏழைப்பெண். என் நெஞ்சுரம்தான் என் பெண்மைக்கு–கற்பு நிலைக்குக் காப்பு. இதோ, பாருங்கள், இந்தப் பவளமாலையை உங்கள் மதிப்புக்குரிய தந்தை அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். எவ்வளவு மறுத்தும் கேட்கவில்லை...” என்று நயந்த குரலில் விவரித்து மாலையையும் காட்டினாள்.
ஆ!..இது என் அன்னையின் மாலை ஆயிற்றே!... ஐயோ, அம்மா!... என்று உள்மனத்துள் நைந்தாள் ராஜகுமாரி. பிறகு, “நீ போகலாம் குழந்தை ஜாக்கிரதை!...”என்று எச்சரித்தனுப்பினாள்.
நாதசுரபி குழந்தைக்குக் கட்டி முத்தங்கள் ஈந்தபடி உள்ளே அடியெடுத்து வைத்தாள்.
மலைத்து நின்ற கன்யாகுமரி, ‘அப்பாவின் நடத்தையை அமைச்சர் தலைவரிடம் சொல்லி, இந்தப் பெண் நாதசுரபியை வெளியேற்றிவிட வேண்டும்!’ என்று தன்னுள் திட்டம் வகுத்தபடி, ஏதோ ஓர் உறுதியுடன் தன் மாளிகைக்கு வழி நடந்தாள்!
6
இளவரசி கனயாகுமரி, தன்னுடைய ஏகாந்த மாளிகையின் மாடி வெளியில் நின்றாள். எதிர்ப்பார்வையில் பட்டுக் கம்பீரமான லாவண்யத்துடன் காட்சியளித்த நடன மகாலையும் அதனின்றும் தனித்து ஒதுங்கியிருந்த நீதிமண்டபத்தையும் இமை மூடாமல் பார்த்துக்கொண்டேயிருந்தாள். மகாராணியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய நாட்டுக் கொடிகள் அப்போதுதான் பறக்கத் தொடங்கியிருந்தன.
விடிந்தும் விடியாத நேரம்.
அரசாங்க சாரட்டு வண்டி பிரதம அமைச்சரைச் சுமந்து வந்ததை அவள் அறிந்தாள். இவ்வளவு சீக்கிரமாக–ஐந்து நாழிப் பொழுது கூட ஆகியிராத இந்நேரத்தில் அழகண்ணல் வந்திருந்தது அவளுக்கு விசித்திரமாகத் தெரிந்தது. ‘அந்நிய நாட்டுப் படையெடுப்பின் ரகசியக் குழு கூடவிருக்கலாம். அரசியலுக்கு அப்பாற்பட்ட பெண் பிறவி என்றல்லவா என்னை நினைத்து விட்டார் அப்பா!’ என்று தனக்குத்தானே மனம் நொந்தாள். அழகண்ணலைத் தான் சந்திக்க விழைவது பற்றிச் சேதி கொடுத்தனுப்பி சேடியைப் போய்வரச் சொல்லியிருந்தாள். அவரும் இணக்கம் காட்டியிருந்தார். ஒருவேளை, தன்னைக் காணவே தான் அமைச்சர் வருகிறாரோ என்று கூட பரபரப்பு எழுந்தது. ‘கூத்தரங்கு’க்குத் தோழியுடன் செல்ல வேண்டுமென்ற திட்டம் மாறியது.
ஆம்; அவள் கருத்து மெத்தச் சரியே.
அமைச்சர் தலைவர் அரசகுமாரியைத்தான் காண வந்திருந்தார்.
‘அரண்மனையின் ரகசியங்கள்’ என்ற அபாய அறிவிப்பில் தன் தந்தையின் மதிமயக்கத்தையும் இணைத்துவிட அவள் ஒப்பவில்லை. தனிப்பட்ட மனிதர் அல்லர் மன்னர். அவர் பொதுவானவர். ஆகவே, இதில் யாருக்கும் எப்போதும் சுயநலப் பண்புக்கே இடம் கிடையாது அவளுக்கும் இது பொருந்தும்! அதனால்தானே ரகசியமாக அவளும் பிரத்யேகமாக படைப்பயிற்சி பெற்றாளோ?
முதல் அமைச்சர் அழகண்ணல் வந்தார். இளவரசியைச் சந்தித்தார். பேசினார். அவள் நாதசுரபியைப் பற்றிய விஷயங்களை வெளியிட்டாள். கடந்த சில தினங்களாக அவளுடன் தான் நெருக்கமாகப் பழகியபோது, ஓரளவு யூகிக்க முடிந்த சிற்சில சமாசாரங்கள் குறித்தும் பேசினாள்.
எல்லாவற்றையும் தீரக் கேட்டுக் கொண்டிருந்தார் தலைமை அமைச்சர்.“இளவரசி உங்களுக்கு நாட்டினிடத்திலும் உங்களைப் பெற்றவரிடத்திலும் இயல்பாக ஏற்பட்டுள்ள கவலையும் பாசமும், இருநிலைக் கெளரவமும் காக்கப்பட வேண்டுமென்கிற பெருந்தன்மையும் எனக்கு நிரம்பவும் மகிழ்வையூட்டுவதாக இருக்கின்றன. ஆனால் முதன்முதலில் ஒன்று உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அது எனது கடமையுங்கூட. இளவரசி அன்றொரு நாள் நீங்கள், உங்கள் தந்தையாரை எதிர்த்துப் பேசிய பேச்சு தர்க்க ரீதிக்குச் சரியாக இருக்கலாம். ஆனால், அரசியல் மரபுக்கு தினையளவுகூட ஒத்துவரமாட்டாததாகும்!... எதிரியின் கவுரவம் பாழ்படுமே என்பதற்காக, நம் நாட்டுக்கு வம்சவழிப் படி கட்டித் தீரக் கடமை கொண்ட கப்பத்தைக் கட்டவில்லையென்றால், அவனை – அப் பகைவனை முறியடிக்காமல் இருந்து விடலாமா? அம் முடிவுதான் சாத்தியப்படவல்லதா? உங்கள் கருத்தை அனுசரித்து ஒரு மன்னர் இருந்தால், மறுகணமே அவரது அரியாசனம் காற்றில் பறந்து விடாதா? சரித்திரத்தின் கதியைக் காப்பதுதான் அப்புறம் ஏனென்று ஆகிவிடமாட்டாதா?....நன்கு சிந்திக்க வேண்டும்!”
மேலும் தொடரலானார்:
“இளவரசி.... அடுத்த நடப்புக்கு இனி நான் வரவேண்டுமல்லவா?.... மாண்புமிகு மன்னவர்கள் குழந்தையின் வளர்ப்பை மேற்கொண்டுள்ள நாதசுரபியுடன் சற்று நெருக்கமாக இருந்து வருவதாகச் சொல்கிறீர்கள். உங்களுக்கு முன்னதாகவே நான் அரசரிடம் இதுபற்றி எச்சரித்தேன். குழந்தைமீது கொண்ட அளப்பரிய பாசமே இந்த நிலைக்கு உரிய தக்க காரணம் என்றும், இது அந்தப்புர நட்பு என்றும் சமாதானம் சொல்லிவிட்டார். அடுத்தது, நாதசுரபி என்ற கன்னிப் பெண் வேழநாட்டு உளவாளிப் பெண்ணாக இருக்கவேண்டுமென்பதும் உங்களது ஐயப்படாகும்!... அவளுக்கு அரசர் பெருமான் பிரத்தியேகமாகக் கொடுத்த முத்துமாலையும் முத்திரை மோதிரமும் உங்கள் கட்சிக்குக் காட்சியாகவும் சாட்சியாகவும் அமைகின்றன. ஆனால்...?” அமைச்சர் தலைவரால், மேற்கொண்டு தொடரக் கூடவில்லை. இருமினார். பிறகு பச்சைத் தண்ணீர் ஒரு மிடறு பருகிவிட்டுத் தொடர்ந்தார்: “கன்யா!.. ஆனால். மன்னர் சாமான்யரல்லர் என்பதை நாம் மறந்துவிடுவது சரியல்ல. அவர் அரசியல் சூழ்ச்சியில் மாமேதை. ஒருக்கால், நாதசுரபி எதிரியின் கைப்பாவையாக இருந்து விட்டிருந்தால் என் செய்வது என்ற எச்சரிக்கையுடன் தான், அவரும் அவளைக் கண்காணிக்க ரகசிய ஆட்களை நியமனம் செய்திருக்கிறார். இன்றுவரை அவளைச் சந்தேகப்படுவதற்கான தடயம் ஒன்றுகூட–ஒன்றின் சாயல்கூட எழவில்லை; நிகழவுமில்லை. வருமுன் காவாதான் வாழ்வின் கதியைத் தமிழ்மறை புகலவில்லையா?...”
அவர் இப்பொழுது நல்லமூச்சு விடலானார்.
இளவரசியும் அமைதியுடன் முறுவல் பூத்தாள். “உங்கள் உரை எனக்கு மிகுந்த அமைதியைத் தருகின்றன. உங்கள் அன்புக்கு நன்றி. உங்கள் பொன்னான காலத்தில் குறுக்கிட்டதற்காகப் பொருட்படுத்தமாட்டீர்கள் என்று நம்புகிறேன்!” என்று சம்பிரதாயப் பாவனை மிளிரச் சொல்லிவிட்டு, “வேழநாட்டின் மீது எப்போது படையெடுக்க உத்தேசம்?” என்று வினா விடுத்தாள் இளவரசி.
“இளவரசி மன்னிக்க வேண்டும். அது பற்றி நீங்கள் என்னிடம் கேட்டிருக்கக் கூடாது!...” குனிந்த தலையை நிமிர்த்தாமல் கடமைப் பண்புடன் சொன்னார் முதல்மந்திரி.
“ஓஹோ!...சரிதான்! நீங்கள், எங்கள் அரண்மனைக்கு அல்ல, எங்கள் சிருங்காரபுரி நாட்டுக்குத் தலைமை அமைச்சராகக் கிட்டியது எங்கள் நாட்டின் மாபெரும் அதிர்ஷ்டமேயாகும்! உங்களைப் பற்றி அப்பாவுக்கு மிகவும் உயர்ந்த அபிப்பிராயம்!... ஆமாம், உங்கள் புதல்வியின் திருமணம் எப்போது நடக்கப் போகிறது?....”
“போர் முடிந்ததும், இளவரசியாரின் திருமண ஏற்பாடுதான் அடுத்த கட்டம். அதன் பின்தான் என் மகளைப் பற்றி என்னால் கவலை கொள்ள முடியும்!...” இளவரசி நாணம் மீட்டி நின்றாள்.
அது தருணம், நாதசுரபி அங்கு தயங்கியபடி வந்தாள். மன்னர் அவர்களை, முதல்மந்திரி உடன் சந்திக்க வேண்டுமென்ற மன்னரின் ஆணையைப் பணிவுடன் சமர்ப்பித்துவிட்டுச் சென்றாள்!
7
சிருங்காரபுரி நாட்டின் மாமன்னர் பூபேந்திர பூபதி, பட்டுப் பீதாம்பரம் பொலிய, கம்பீரமான தேஜசுடன் வீற்றிருந்தார்.
நளினமிகு ஓய்வு மண்டபம் அது.
அங்கு சிரம் தாழ்த்திக் கரம் குவித்து வந்தார் மந்திரிகளுக்குத் தலைவர், அழகண்ணல். அமர்ந்தார், அரச ஆக்கினைப்படி. இருவரும் ஒருவரையொருவர் பொருள்செறிவுடன் ஓரிரு கணங்கள் வரை பார்த்துக் கொண்டனர்.
“மன்னர் அவர்கள் சிந்தனை வசப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது!...நான் இருக்க, நீங்கள் எதற்காக மூளையைக் குழப்பிக் கொள்ள வேண்டும்?...இளவரசரைக் கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டியது ஒன்றுதான் உங்களது தலையாய கடமையாகும். வரும்போது இளவரசைப் பார்த்து விட்டுத்தான் வந்தேன்.”
“அப்படியா? மெத்த மகிழ்ச்சி!”
பூபதியின் நன்றியுணர்வு, புன்னகை காட்டியது. மறுபடி தொடரலானார்: “வருகிற விசாக பெளர்ணமியன்று வேழநாட்டின் மீது நாம் படையெடுக்க வேண்டும். ஆகவே இடையுள்ள இந்த ஒரு மண்டலப் பொழுதை துளியும் வீணடிக்காமல் பயன்படுத்தி, நம் படைபலத்தைப் பெருக்குவதற்கான உத்தரவுகளையும் திட்டங்களையும் செயற்படுத்துங்கள். வேழநாட்டானுக்குப் பல பல வெளி வியவகாரங்களாம்! நாம் தாக்கப் போகும் விஷயம் இதுவரை அவனுக்குத் தெரியவே நியாயமில்லை. தெரிந்திருந்தால், எச்சரிக்கையுடன் படைக்கல வீடுகளையும் பாசறைத் திடல்களையும் பற்றி அக்கறை காட்டாமல் இருப்பானா? நம் ஒற்றர்கள் வெகு கண்காணிப்புடன் அந்நாட்டிலே உலவி வருகிறார்கள்! அடுத்து...ஆம்; இளவரசிக்கு மணம் செய்தாக வேண்டும்!...அவள் பேச்சு மட்டுமல்ல, போக்கும் புதிராக இருக்கிறது. சதா கூத்தரங்கில் ஏதோ ஆராய்ச்சி நடத்துகிறாளாம்!....வேழநாட்டரசன் விஜயேந்திரனை ஒருமுறை காண வேண்டுமென்று துடிக்கிறாளாம் நாதசுரபியிடம் சொல்லியிருக்கிறாள்!....நம் கன்யா!”
ஆதங்கமும் ஆதுரமுமாக உரைத்தார் அரசர்.
வியப்பின் அதிர்ச்சியுடன் அப்படியே பேசச் சக்தியற்று சிறுபொழுது இருந்தார் அழகண்ணல். “தாங்கள் கவலைப்படலாகாது. எல்லாவற்றையும் நான் கவனித்துக் கொள்கிறேன். இளவரசியை அவ்வளவு குறைத்து எடைபோட்டுவிடக் கூடாது மன்னர்பிரான்!. அவர்கள் விவேகமானவர்கள்!. படையெடுப்பைப் பற்றிய நாள் விவரங்களை நாம் வெகு அந்தரங்கமாகக் காக்க வேண்டும்!...” என்று கூறித் தயங்கினார்.
“நாதசுரபி என் பணிப்பெண்! தாங்கள் அறிவீர்கள்!...”
“நான் பொதுவாகச் சொன்னேன். மன்னர் பிரான் பொறுத்தருள வேண்டும்!...”
அப்போது, யாரோ கிழவன் ஒருவன் வந்தான். தாடியும் மீசையுமாக பழுத்த பழம்போலவே காணப்பட்டான். “எனக்குக் கங்காபுரி தேசம். வடக்கே... மூன்று நாள் நடக்க வேண்டும்... வித்தை காட்டிப் பிழைப்பவன்!...” என்று சொன்னான், வெளி வாசற்படியில் நின்றபடி. “இவர்களையெல்லாம் யார் உள்ளே அனுமதித்தார்கள்?” என்று சீறினார் வேந்தர்.
புதிதாகச் சேர்க்கப்பட்ட காவலாளிகளின் குறையாக இருக்கும் என்று சமாதானம் சொன்னார், அமைச்சர்.
“புதிய ஆட்களை நீங்கள் இப்போது சேர்ப்பதற்கு அனுமதி வழங்கியிருக்கக் கூடாது! அவர்கள் ஒருக்கால்..!”சன்னக் குரலில் எச்சரித்தார், மன்னர்பிரான்.
வித்தையாடிக் கிழவன் இருமினான். அவன் ஒதுங்கி எங்கோ நின்றான்.
“வித்தைகள் சிலவற்றை ராஜ சந்நிதியில் காட்ட இந்த ஏழைக்கு அருள வேண்டும்!”
“வித்தை பார்க்க நேரமல்ல இது!...” என்று சொல்லி தங்க நாணயங்கள் சிலவற்றை எடுத்து வீசினார் அரசர்.
ஆனால் வந்த கிழவன் ஊன்றுகோலைப் பற்றியவாறு வழி நடந்தான். தங்க நாணயங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை!
″இவனைச் சோதித்துப் பார்க்கலாமே!” என்று சொன்னார் . அழகண்ணல் இருக்கையை விட்டு எழுந்தார்.
அந்நேரத்தில், “ஐயையோ!.. இளவரசைக் காண வில்லையே..” என்று பயங்கரமாக ஓலமிட்டபடி ஓடிவந்தாள் நாதசுரபி!...
“ஆ!” என்று அதிர்ந்தார், அரசர் பெருமான்!
8
சிருங்காரபுரி நாட்டின் கோள்கள் வக்கரித்துவிட்டன போலும்! இல்லையென்றால், அடிக்கொரு துன்பமாக அந்நாட்டை அல்லற்படுத்துமா?
‘குழந்தையைக் காணவில்லை!’ என்று நாதசுரபி கூக்குரல் பரப்பிக் கதறியதைக் கேட்ட மாத்திரத்திலே, மாமன்னர் பூபேந்திர பூபதி மயங்கினார்; விழுந்தார், அடிசாய்ந்த ஆலமரமாக. “தெய்வமே!” என்று அவர் இதழ்கள் முணுமுணுத்தன.
கனகமணிக் கட்டிலிலே மன்னரைத் தாங்கிப் பட்டு மெத்தையில் படுக்க வைத்தார் அமைச்சர் திலகம். இளவரசியை அழைத்தார். அவள் வரவில்லை. அவளைத் தேடி அழைத்துவர, சேடி பறந்தாள். பிறகு, நாதசுரபியைக் கூப்பிட்டார். அவளையும் காணவில்லை.
அமைச்சர் பெருமகனுக்கு, ‘நாதசுரபியைக் காணவில்லை’ என்றதும், ஏனோ சந்தேகம் தட்டியது. இனியும் வாளாவிருப்பது தவறு என்று கருதி, குழந்தையைக் கண்டுபிடிப்பதற்கான வழி வகைகளை செய்வதற்காக அவர் விரைந்து தன்னுடைய அலுவலகத்தை அடைந்தார். குழந்தையைத் தேடித்தான் இளவரசி போயிருக்க வேண்டும் என்ற திடம் அவருள் உதயமானது. வைரமும் நவரத்தினங்களுமாகத் திகழ்ந்த இளவரசரின் நிலையை எண்ணிய போது அவருக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. பெற்ற தந்தையின் நிலைக்குக் கேட்கவா வேண்டும்!
பூபேந்திர பூபதி கண் மலர்ந்தார். உடனே “கண்ணே! என் ராஜா!” என்று சிறு பாலகனாக மாறிக் கதறினார். கண்ணீர் பெருகிற்று. மீனாவதி ஆறு மடை உடைந்துவிட்டதோ, மகளை நினைந்து மனத்தை அலட்டினார். இளவரசியை எங்கு தேடியும் காணவில்லை என்றும், குழவியைத் தேடித்தான் அவள் போயிருக்க வேண்டும் என்றும் கருதி ஓரளவு அமைதியைச் சேகரம் செய்து கொள்ள முனைந்தார். பணிப்பெண்கள் கொணர்ந்த உணவில் ஒரு துளியைக் கூட தொடவில்லை அவர். நாதசுரபியையும் காணவில்லை என்றும் அறிந்தார்.அவருக்கு ஏனோ இதுவரை தோன்றாத சந்தேகம் இப்போது நாதசுரபி மீது ஏற்பட்டது. ஒற்றர்கள் ஊரெங்கும் பறந்த செய்தி கேட்டார். படைகள் பல திசைகளிலும் பிரிந்து சென்ற விவரமும் காதுகளில் விழுந்தது. தொட்டிலில் கண்வளர்ந்த குழந்தை எப்படிக் காணாமல் போனது? யாராவது எதிரிகளின் சூழ்ச்சியாகவும் இருக்குமோ?. ஏதும் புரியவில்லை வேந்தருக்கு “நாதசுரபியை முதலில் எங்கிருந்தாலும் தேடிப் பிடியுங்கள்!” என்று ஆக்கினை பிறப்பித்தார்.
திண்டுகளில் சாய்ந்தபடியே சோக பிம்பமாக இருந்தார் கோமான்.
வெயில் சுட்டெரித்தது.
ஓடோடி வந்தாள் இளவரசி கன்யாகுமரி. அவள் கையில் சாட்டை; இடுப்பில் கூர்வாள்! எதிரே வெண்புரவி!
“மகளே!”
“அப்பா வேழநாட்டரசன் இன்று அந்தி அணையும் பொழுதில் நம் நாட்டின் மீது திடீர்ப் படைஎடுப்புச் செய்யப்போகிறான்!... ஜாக்கிரதை!....நான் இளவரசுக் குழந்தையைத் தேடிக் கண்டுபிடிக்காமல் இனி இங்கு வர மாட்டேன்!” என்று சூளுரைத்தாள். பிரிந்தாள். குதிரை காற்றாய்ப் பறந்தது.
மறுகணம், தலைமை அமைச்சர் வரவழைக்கப்பட்டார். மண்டலப் பேரவை அவசரமாகக் கூடியது. படைத் தலைவர்கள் குழுமினர். -
ஆராய்ச்சி மணி அவசரமாக ஒலித்தது.
சிருங்காரபுரி நாடு திமிலோகப்பட்டது!
அரண்மனையின் நாற்புறக் கோட்டைகள், கொத்தளங்கள், அகழிகள், அம்பாள் கோயில், மீனாவதி ஆறு, பன்னெடு வாசல்கள் இருபெரும் பாசறைகள் எங்கெங்கும் படை வீரர்கள் புத்துணர்ச்சி எய்தி அணிவகுத்து நின்றார்கள்.
இப்படிப்பட்ட எச்சரிக்கையுடன் சிருங்காரபுரி நாடு இருக்குமென்று வேழநாடு எங்ஙனம் எதிர்பார்த்திருக்க முடியும்? எதிர்பாராத வகையில் தாக்கி விடலாமென்று மனப்பால் குடித்த வேழ நாட்டு அரசன் விஜயேந்திரனுக்கு மாலையில் சிருங்காரபுரி நாட்டின் எல்லையிலே ஏமாற்றம்தான் காத்திருந்தது. அங்கங்கே ரகசியமாக ஒளிந்திருந்த வீரர்கள் எதிரிகளை மிகுந்த கண்காணிப்புடன் தாக்கினர். வேழ நாட்டுடன் அண்டை நாடான அழகாபுரியும் ரகசியக் கூட்டுச் சேர்ந்திருந்தது.
இளவரசி கன்யாகுமரி தன் நாட்டின் படைக்குத் தலைமை ஏற்றாள். ரகசியப் பயிற்சி எப்படி ஆபத்துக்கு உதவிவிட்டது!... மன்னருக்குப் பதிலாக மன்னரின் மகள்!
வேழ நாட்டு வேந்தன் விஜயேந்திரனே தன் நாட்டுப் படைக்குத் தலைமை தாங்கினான். இளமைப் பொலிவுடன் அவன் திகழ்ந்தான். இப்படிப்பட்ட இக்கட்டான கட்டத்தில்தான் கன்யாகுமரி – விஜயேந்திரன் சந்திப்பு நிகழ வேண்டுமென்று விதி முடிவு கட்டியதோ?
சிருங்காரபுரி நாட்டின் இளவரசியும் வேழநாட்டின் இளவரசனும் நேருக்கு நேர் போரிட்டனர். இருவருடைய வாட்களும் மின்னல்களாகி மோதின, ஜோடிக் கண்கள், ஒருமித்த வைராக்கியத்துடன் இரு தரப்பிலிருந்தும் கிளைபரப்பிச் சமர் புரிந்தன. இரு பகுதிக் குதிரைகளும் எம்பி எம்பிக் குதித்தன.
மறுகணம்:
“ஆ!”என்றலறினான் விஜயேந்திரன்!
விழுப்புண்களின் நோவையும் மறந்தாள் இளவரசி. திரும்பினாள். “வேழநாட்டு அரசனின் முதுகில் யார் இப்படிக் குத்துவாளை கோழைபோல வீசியது?... ஐயோ, என் நாட்டுக்குக் கெட்ட பெயர் உண்டாக்கி விட்டார்களே! யுத்த தர்மத்திற்கே களங்கம் கற்பித்துவிட்டார்களே!”
விஜயேந்திரனைத் தன் மடியில் கிடத்திக் கொண்டாள் கன்யாகுமரி!
இரு தரப்புப் படைகளும் இந்த எதிர்பாராத முடிவின் திருப்பத்தில் வாய் அடைத்து நின்றனர்.
“அம்மா!”
கன்யாகுமரி விசை பாய்ச்சித் திரும்பினாள்.
அங்கே –
முதுகில் பாய்ந்த வாளுடன் நாதசுரபி தரையில் சாய்ந்து கிடந்தாள் “இளவரசி என்னைப் பற்றி நீங்கள் தொடக்கத்திலேயே சந்தேகப்பட்டீர்கள். அது சரியே! நான் வேழ நாட்டின் வேவுகாரியாகத்தான் உங்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டேன். ஆனால், இளவரசுக் குழந்தை என்னைப் பைத்தியமாக்கியது. நான் அதன் அடிமையானேன். இந்நிலை அறிந்து, வேழ நாட்டரசர்–இந்த விஜயேந்திரன் எனக்கு அவப்பெயர் சூழச் செய்யவே, குழந்தையை ஆள் வைத்து எடுத்துச் செல்லச் செய்து விட்டிருக்கிறார். குழந்தை இல்லாமல் அங்கு வர முடியாதென்று எண்ணி, வேழநாடு சென்றேன். அபகரித்து வந்த குழந்தையை யாரோ வழிமறித்துப் பறித்துச் சென்று விட்டார்களாம்!... என்னால் நம்ப முடியவில்லை!...என் வஞ்சனைக்கு வேழ நாட்டான் யாரோ ஒருவன் பரிசளித்தான். வேழ நாட்டரசனின் வஞ்சனைக்கு, நானும் அவருக்கு பரிசு கொடுக்க வேண்டாமா, கொடுத்து விட்டேன்!. அம்மா! என்னை மன்னியுங்கள்! என் கூத்து முடிந்து விட்டது!...”
நாதசுரபியின் விழிகள் நீருடன் மூடின, எதிர்பாராத வகையில்!
இளவரசி என்னவோ சொல்ல வாயெடுத்தாள். அதற்குள் நாதசுரபியின் வாழ்வு, கதையாக முடிந்துவிட்டதே! வேழநாட்டரசன் விஜயேந்திரன் விம்மினான்:
“இளவரசி!.... இருவகையில் நான்தான் யுத்த தர்மத்தை மீறியிருக்கிறேன். நாதசுரபியை ஏவினேன். அவள் முதுகில் என் நாட்டானே வாள் வீசினான். இப்போது என் நாட்டைச் சார்ந்த நாதசுரபியே என் முதுகில் வாளைப் பாய்ச்சினாள். இரு தப்புக்களும் என் நாட்டினையே சேரும்!...”
மனிதாபிமானம் நெகிழக் கண்களைத் திறந்தாள் இளவரசி கன்யாகுமரிக் கண்ணீர் மாலை மாலையாக வழிந்தது.
“அரசே! இப்போது நாம் பிரிவோம், உங்கள் உடல் நலம் பேணுங்கள். மீண்டும் ஒரு தினம் பகிரங்கமாக நாள் நிர்ணயம் செய்து நாம் இருவருமே மீண்டும் போரிடுவோம்!... எந்த அரசிலும் நிகழாத புதுமையாக இது இருக்கட்டும்!...”
அப்போது அங்கு-யுத்த களத்தில், சிருங்காரபுரி நாட்டின் அரசர் பூபேந்திர பூபதி அமைச்சர் புடைசூழத் தோன்றினார்.
மயங்கிச் சோர்ந்து இருந்த வேழ நாட்டரசன் மெல்லமெல்ல விழி திறந்தான். இளவரசியின் மடியில் தலை சாய்த்துக் கிடப்பதை அப்போதுதான் அறிந்தவனாக, வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான். “இளவரசி! இப்போது நாம் போரை மீண்டும் தொடங்கலாம்... எனக்கு வீர மரணமே பிடிக்கும்!” என்று வீறு பூண்டு கர்ஜித்தான்.
இளவரசி விம்மினாள்!
கோல நிலவு விளையாடியது.
சிருங்காரபுரி நாட்டின் வேந்தர் பூபேந்திரபூபதி வாய் திறந்தார். “முதலில் விஜயேந்திரனின் புண்ணை ஆற்றுவது அவசியம்,” என்று சொல்லி, தம் நாட்டு அரண்மனை வைத்தியரை வரவழைக்கும் படி ஆணையிட்டார்.
பாசறையின் ஒய்வுமனையில் வேழ நாட்டரசன் விஜயேந்திரன் இடம் பெற்றான். புண் வலி லேசாகக் கட்டுப்பட்டது. நித்திரை வசப்பட்டான்.
“இதோ வருகிறேன்!” என்று விளித்து விட்டுக் குதிரையில் ஏறினாள் இளவரசி கன்யாகுமரி.
அரைநாழிப் பொழுது அமைதிப் புலரியில் கழிந்தது.
அப்போது–
அன்றொரு நாள் சிருங்காரபுரி நாட்டின் அரண்மனையில் வித்தையாடிக் கிழவன் ஒருவன் வந்தானே, அவன் அங்கு சுற்றுமுற்றும் விழித்தபடி நின்றான்!
அதற்குள், “இதோ இவன்தான் மன்னர்பிரானின் குழந்தையை என்னிடமிருந்து ஏமாற்றிப் பறித்தவன்” என்று ஓடிவந்த வேழநாட்டுச் சிப்பாய் அக்கிழவனை உடும்புப் பிடியாகப் பற்றினான்.
மாமன்னர் பூபேந்திர பூபதி எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. அவர் கை இடுப்பிலிருந்த குத்துவாளை எடுத்தது.
அதற்குள், வித்தையாடிக் கிழவன் மேலங்கியால் மறைத்து வைத்திருந்த இளவரசனை மன்னர் பெருந்தகையாம் பூபேந்திரபூதியிடம் சமர்ப்பித்தான் “ம்!...இனி என்னைத் தாராளமாக் குத்துங்கள் எதிரியரிடமிருந்து உங்கள் குழவித் தங்கத்தை நான் காப்பாற்றியதற்கு உங்கள் பரிசு இதுவென்றால், அதை ஏற்க நான் கடமைப்பட்டவனில்லையா?....ம்.எடுத்த கத்தியை உறையில் போடக்கூடாது ஊம்!..” என்று விம்மலானான் வித்தையாடிக் கிழவன்.
மாமன்னர் விழியில் நீர் சோர, “என்னை மன்னியுங்கள். ஆத்திரம் என் அறிவைச் சிறுநேரம் மறைத்து விட்டது” என்று கெஞ்சிக் கை கூப்பினார். குழந்தை சிருங்காரபுரியின் இளவரசாக மட்டுமல்லாமல், விளையாட்டுடைய தெய்வமாகவும் சிரித்தது!
அத்தருணம்,"அப்பா.என்னையா நீங்கள் வணங்குவது?” என்றபடி, அங்கு இளவரசி கன்யாகுமரி நின்றாள்!
தாடி - மீசை, உடுப்புகள் தரையில் சிரித்தபடி கிடந்தன.
வேந்தர் பூவேந்திர பூபதி “ஆ!என் மகள்!” என்று அதிசயப்பட்டார். அருமை திருமகளை உச்சி மோந்தார், அன்பு சிலிர்த்தது!
சுய ஞாபகம் மீண்ட வேழநாட்டு அரசன், "நேற்று என் அரண்மனையில் இதே வேடத்தில் வந்ததும் இளவரசிதானா?... என் சூழ்ச்சியை உங்கள் சூழ்ச்சி மிஞ்சி விட்டதே!. படைப்பயிற்சியுடன் கூத்துக் கலையிலும் பலகாலம் பயிற்சியோ?... மகிழ்வுதான்!... சரி! எழுந்திருங்கள். நாம் போர் துவக்கலாம்!. இன்றைய பொழுதே நம் இருநாட்டின் விதியையும் நிர்ணயிக்கட்டும்!” என்று அலறியவாறு, மறுபடியும் சுயகெளரவ வெளியுடன் எழுந்தான். விஜயேந்திரனின் கைகள் இடுப்பு வாளை உருவின!
இளவரசி சிரித்தாள் ; சிரித்துக் கொண்டே இருந்தாள்!
சிருங்காரபுரி மாமன்னர் பூபேந்திர பூபதி அதிர்ந்தார்! அவரது தீட்சண்யப் பார்வை, வேழநாட்டின் மன்னன் விஜயேந்திரனையும், சிருங்காரபுரி நாட்டின் இளவரசி கன்யாகுமரியையும் மாறிமாறி-மாற்றி மாற்றி எடை போட்டிருக்க வேண்டும்!
விஜயேந்திரன், தன் முதுகில் ஏற்பட்டிருந்த ரணத்தின் வலியையும் மறந்து, வாளும் கையுமாகப் போரிட ஆயத்தமாகி தலை நிமிர்த்தி நின்றான்!
இளவரசி கன்யாகுமரியோ, விதியாகச் சிரித்தவாறு நிற்கிறாளே?
ஓர் அரைக்கணம், பேய்க் கணமாக ஊர்ந்தது.
மறு இமைப்பிலே–
உருவிய வாளுடன் கம்பீரமாகக் காட்சியளித்தாள் இளவரசி.
“போரிடத் தொடங்குவோமா, வேழநாட்டின் விஜயேந்திர மன்னரே?” என்று வினவி, மீண்டும் விதியாகச் சிரித்தாள்.
“ஒ!” என்றான் விஜயேந்திரன்.
மறுகணம்–
இரு தரப்பிலிருந்தும் வீறுகொண்டு புறப்பட்ட வாட்கள் இரண்டும் மின்னல் பிழம்புகளாகிச் சமமான வல்லமையுடன் ஒன்றையொன்று முட்டி மோதின!
மாமன்னர் பூபேந்திர பூபதி மேனி சிலிர்த்தார். விழிகளில் கண்ணிர் தளும்பத் தொடங்கியது. “ஆண்டவனே மன்னன் விஜயேந்திரனும் இளவரசி கன்யாகுமரியும் ஒருவருக்கு மற்றவர் துளியும் விட்டுக் கொடுக்க மனமின்றி, தங்கள் தங்கள் நாட்டின் மீது கொண்ட பாசத்தை முன் நிறுத்திச் சரிசமானமான ஆக்ரோஷத்துடனே போரிடத் தொடங்கி விட்டார்களே?... வாட்போர் நடத்தத் தொடங்கிவிட்ட விஜயேந்திரன்–கன்யாகுமரி இருவரில் வெற்றி பெறுவது யாராவது ஒருவராகத்தானே இருக்கமுடியும்? அப்படியென்றால், மற்றவர் தோல்வியைத் தழுவ நேரும் அல்லவா?– வேண்டாம் இந்த வாட்போர்ச் சோதனை!. ஆதிபகவனே! அலகிலா விளையாட்டுடைய ஆண்டவனே!–என்னுடைய பாசக்கனவை மெய்ப்படுத்திப் பலிக்கச் செய், அப்பனே!? நெஞ்சம் நெக்குருகி அஞ்சலி செய்தார். மறு இமைப்பில், மெய் சிலிர்க்க விழிகளைத் திறந்தார்: “போர் வேண்டாம் போரை நிறுத்துங்கள்!” என்று ஆணையிடலானர்!
அந்நேரத்தில்–
"தந்தையே!” என்று வீறிட்டு அலறியவளாக மண்ணிலே மயங்கிச் சாயப்போன இளவரசி கன்யாகுமரியைத் தன்னுடைய பாசமும் நேசமும் கொண்ட இருகைகளாலும் ஆரத்தழுவிப் பற்றிக் கொண்டான், வேழ நாட்டரசன் விஜயேந்திரன்!
"அன்புத் தெய்வமே! மகளே கன்யா!”
மாமன்னர் பூபேந்திர பூபதி விம்மினார்; சுடுநீர்த் துளிகள் முடிசூடிச் சிதறின!
சிந்திச் சிதறிய பாசத்துளிகளின் தேவாமிர்தத்தை உடலும் உள்ளமும் உணர்ந்ததும், கனவு கண்டு விழிப்பவள் போன்று வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள், சிருங்காரபுரி இளவரசி கன்யாகுமரி. "தந்தையே! என்ன ஆயிற்று எனக்கு ? நான் இவ்வளவு நாழி வேழநாட்டின் மடியிலே ஏன் கிடந்தேன்?. என்னவோ நினைத்தேன்; தலை சுற்றத் தொடங்கியது. அவ்வளவுதான் தெரியும் எனக்கு!” என்று கூறியவளாகத் தந்தையின் மேனியில் சாய்ந்தாள். மறு நொடியில் சிலிர்த்துத் தலையை நிமிர்த்தினாள்: "வேழநாட்டு மன்னவா! எடுங்கள் உங்கள் வாளை!" என்று வீறு கொண்டு முழங்கினாள்; கண்பார்க்க மண்ணிலே புரண்டு கிடந்த தன்னுடைய உடைவாளை விரைந்தோடி எடுத்தாள், கன்யாகுமரி!
“இளவரசி வாழ்க!” என்று பாசமும் நேசமும் வீரமுழக்கமிட, ஏந்திய வாளுடன் தோன்றினான் விஜயேந்திரன்.
“மீண்டும் போரிடத் தொடங்குவோமா?”
“நான் தயார்!"
விஜயேந்திரன், கன்யாகுமரி இருவரின். இரு ஜோடி விழிகளும் ஈரம் சொட்டச் சொட்ட, ஆரத் தழுவிக் கொண்டன!
வேழநாட்டின் அரசன் விஜயேந்திரனின் வீரவாள், தன்னம்பிக்கையோடும் தன்மானத்தோடும் சுழன்றது.
அதே தன்மானத்துடனும் தன்னம்பிக்கையுடனும் தன்னுடைய வீர வாளைச் சுழலவிட்டாள் இளவரசி கன்யாகுமரி!
இருதரப்பின் வாள்களும் ஒன்றையொன்று தன்னம்பிக்கையோடும் தன்மானத்தோடும் சந்தித்துக் கொண்ட நேரத்தில்–
“நில்லுங்கள் இருவரும் அப்படியே நில்லுங்கள்!”
ஆமாம்; சிருங்காரபுரியின் மாண்புமிக்க–மேன்மைதங்கிய மாமன்னர் பிரான் பூபேந்திர பூபதி அவர்கள்தாம் ஆணையிட்டார்!– ஆணையைத் தொடர்ந்து, எதிர்ப்புறம் நோக்கிக் கைகளை உயர்த்தி அடையாளம் காட்டினார். வெற்றிமுரசும் விண் அதிரவும் மண் அதிரவும் வீர முழக்கம் செய்தது!
வேழநாட்டரசன் விஜயேந்திரனும் சிருங்காரபுரியின் இளவரசி கன்யாகுமரியும் புது நிலவும் புன்னகையுமாகப் பார்த்துக் கொண்டனர்!
மாமன்னர் பூபேந்திர பூபதி மறுபடி பேசத் தொடங்கினார்:
“விஜயேந்திர மன்னரே!...இளவரசி கன்யாகுமரியே!...நீங்கள் இருவருமே, நடக்காத இந்தப் போரில் வெற்றிபெற்று விட்டீர்கள்!.. ஒருவருக்கு மற்றவர் துளியும் விட்டுக் கொடுக்காமல், சரி சமானமான தன்னம்பிக்கையுடனும் தன்மானத்துடனும் உருவிய உங்கள் வாள்களை விளையாடச் செய்த அந்தத் துணிச்சலே உங்கள் இருவருக்கும் வெற்றிவாகையைச் சூட்டிவிட்டது!... ஒன்று பட்ட உங்கள் இருவரின் உள்ளக்காதலையும் மறந்து, நீங்கள் இருவரும், நாட்டின் தன்மானம் காத்திடவும் தன்னம்பிக்கையுடனே போரிடத் தொடங்கிய அந்த மகத்தான மாண்புதான் உங்கள் இரு வருக்கும் சரிசமமான வெற்றியை வழங்கிவிட்டது!...”
மாமன்னருக்கு மூப்பின் தளர்ச்சியால் மூச்சிரைத்தது. மீண்டும் பேச்சைத் தொடரலானார்:
“விஜயேந்திரமன்னரே! நீங்கள் திறை செலுத்தாததால், என் கவுரவம் பாதிக்கப்பட்டுவிட்டதாக நான் சொன்னேன்!. அதற்கு என் அருமை மகள் இளவரசி கன்யாகுமரி என்ன பதிலிறுத்தாள் தெரியுமா?– ‘உங்களுக்குக் கட்டுப்பட்டுக் கப்பம் கட்டுவதால், வேழநாட்டின் அரசனின் கவுரவம் பாழ்பட்டதாக அவர் பொன்மனம் நோகாதா?' என்று என்னையே எதிர்த்துக் கேட்டாள். அவளுடைய மனித நேயம் மிகுந்த அந்தப் பேச்சு, அவள் உங்கள்மீது கொண்டிருந்த அளப்பரிய பாசத்தையும் நேசத்தையும் சுட்டிக்காட்டி விட்டதே?....என் மனமும் திறந்தது; என் கண்களும் திறந்தன!.. ஆகவேதான், நீங்கள் இருவருமே நடக்காத இந்தப் போரிலே வெற்றி பெற்றுவிட்டதாகத் தீர்ப்புக் கூறினேன்!...”
சிலகணங்கள் மெளனம் காத்தபின், சிருங்காரபுரி மாமன்னர் பூபேந்திர பூபதி மனம் திறந்து திரும்பவும் பேசலானர்:
“அருமைத் திருமகளே, கன்யா!... நான் மண்ணை நேசித்தேன்; நீயோ, மண்ணை நேசித்ததுடன், மனிதர்களையும் நேசித்தாய்! அதைவிடவும், சிறப்பாகப் பகைவனையும் நேசிக்கத் தலைப்பட்டாய்! அந்த ஒப்பற்ற மனிதாபிமானமும் மனிதநேயமும் உனக்கு ஒப்புயர்வற்ற ராஜகிரீடத்தைச் சூட்டிவிட்டனவே!.. நான் புதுப்பிறவி எடுத்துவிட்டேன், இப்போது!... நடக்காத இந்தப் போரிலே, இருவருமே வெற்றி பெற்றுவிட்டீர்கள் அல்லவா? – ஆகவே, விரைவிலேயே உங்கள் இருவருக்கும் சிருங்காரபுரி நாட்டின் இளவரசுக் குழந்தை புடை சூழ்ந்திடத் திருமணம் செய்துவைக்கப் போகிறேன்!... 'ஒன்றேகுலம் ஒருவனே தேவன்' என்னும் அற்புதத் தத்துவம் உயிர் வாழ்ந்திட, என் எஞ்சிய நாட்களையும் கழிப்பேன்!...என் இலட்சியக் கனவு, வருங்காலத்தில் முழு வீச்சுடன் செயற்படுமெனவும் நான் நம்புகிறேன்!...என்னை நம்புவீர்களா, விஜயேந்திர மன்னரே!... அருமைத் திருமகளே, கன்யா!.உன் தந்தையை நம்புவாயா?...”
கண்ணீர்த்துளிகள் விளையாடின.
“மன்னர் பிரானே ! நீங்கள் மகத்தான மாமன்னர்! நான் மட்டுமல்ல, உங்கள் தெய்வத் திருமகளும் பாக்கியம் செய்தவளே!” என்றார், வேழநாட்டு அரசர் விஜயேந்திரன்; ஆனந்தக்கண்ணிர் ஆனந்தமாகச் சிரித்தது! “ஆமாம், தந்தையே!...நான் மிகமிகப் பாக்கியம் செய்தவள்!.. என் மனம் ஆனந்தக் கடலாடுகிறது, தந்தையே!.. எங்கள் காதலுக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்ட உங்கள் அன்பும் கருணையும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்! நான் கொடுத்து வைத்தவள்! அகவேதான், என் மனம் கவர்ந்த காதலராம் வேழ நாட்டரசரை நான் எடுத்துக் கொள்ளவும் என்னால் முடிந்தது!..."
அருமைத் தந்தைக்குக் கரங்கூப்பி நன்றி தெரிவித்தாள் இளவரசி கன்யாகுமரி!
அந்திப் பூந்தென்றல் ஆனந்தம் பொங்கிட விளையாடியது.
வெற்றி முரசுகள் வீர முழக்கம் செய்தன!
மக்கள் வெள்ளம் அணைகடந்தது.
“சிருங்காரபுரி நாட்டின் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உகந்த மாட்சிமை தங்கிய மாமன்னர் பூபேந்திர பூபதி அவர்கள் வாழ்க பல்லூழி!...”
“சிருங்காரபுரியின் மாண்புநிறை இளவரசி கன்யாகுமரி வாழ்க பல்லாண்டு!”
"வேழிநாட்டு வேந்தர் மேன்மைமிக்க விஜயேந்திரன் வாழிய, வாழியவே!...”
மங்கள நல்வாழ்த்துகள், மங்களகரமாகவே திக்கெட்டும் ஒலித்தன; எதிரொலித்தன!...
அதோ, சிருங்காரபுரி நாட்டின் விலைமதிப்பில்லாச் செல்வம், குழந்தைத் தெய்வமாக – தெய்வக் குழந்தையாகச் சிரித்துக் கொண்டே இருக்கிறது!
(முற்றும்)
கருத்துகள்
கருத்துரையிடுக