குதிரைச் சவாரி
சுட்டி கதைகள்
Back
குதிரைச் சவாரி
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
குதிரைச் சவாரி
மாலை நேரம். கடல் காற்று ‘ஜில்’ என்று வீசிக் கொண்டிருந்தது.
பட்டினத்தில் காசு கொடுக்காமல் வாங்கக்கூடியது அந்தக் காற்று ஒன்றுதானே! ஆகையால், அதை வாங்கு வதற்காகக் கடற்கரையை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தான் மோஹன், கடற்கரை மணலில் பாதி துாரங்கூட அவன் போகவில்லை. அதற்குள் தூரத்தில் வந்துகொண்டிருந்த இரண்டு குதிரைகளை அவன் பார்த்து விட்டான்.
குதிரைகள் இரண்டும் சும்மா வரவில்லை. ஒன்று, ஒரு பையனை முதுகில் ஏற்றிக்கொண்டு வந்தது. மற்றொன்று ஒரு பெண்ணை ஏற்றிக்கொண்டு வந்தது. ‘ஜாம், ஜாம்’ என்று அந்தக் குதிரைகள் வருவதைக் கண்டான் மோஹன்; அப்போது அவனையும் அறியாமல் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டது.
உடனே, குதிரைகள் வரும் திசையை நோக்கி ஓடினான். சமீபத்தில் வந்ததும் குதிரைமேல் இருப்பவர்கள் யாரென்று நிமிர்ந்து பார்த்தான். அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது! அவர்கள் வேறு யாருமில்லை. மோஹனுடைய வகுப்பில் படிக்கும் கண்ணப்பனும் அவன் தங்கை கமலாவும்தாம்! அவர்கள் குதிரைகளின் மேல் ஒய்யாரமாக உட்கார்ந்திருந்தார்கள்.
“டேய், கண்ணா!” என்று கூப்பிட்டான் மோஹன்.
கண்ணப்பன் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
“டேய், கண்ணா! கண்ணா!” என்று மறுபடியும் கூப்பிட்டான்.
குதிரைமேல் செல்லும் கண்ணப்பனுக்கு, தரைமேல் நிற்கும் மோஹனைப்பற்றி என்ன கவலை! முன்பின் தெரியாதவனைப் போலவே போய்க்கொண்டிருந்தான். ஆனாலும், அதற்காக மோஹன் கவலைப்படவில்லை, அவர்கள் எங்கே போகிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான். குதிரைகளின் பின்னலேயே சென்றான்.
அந்தக் குதிரைகள் மெதுவாக நடக்கவும் இல்லை; மிக வேகமாக ஓடவும் இல்லை. நடுத்தர வேகத்திலே சென்றன. மோஹன் அவற்றை விடாமல் பின் தொடர்ந்தான்.
குதிரைகள் கடற்கரையில் சிறிது தூரம் சென்றன. பிறகு, முன்பு புறப்பட்ட திசையை நோக்கி ஓடி வரலாயின. அப்போதும், நமது மோஹன் சளைத்தானா? இல்லை. அவற்றைப் பின் தொடர்ந்தான்.
குதிரைகள் இரண்டும், ஒர் இடத்திற்கு வந்ததும் கின்றுவிட்டன. அங்கே ஒரு குதிரைக்காரன் நின்றன். அவனுடன் ஏராளமான குழந்தைகள் நின்றார்கள். சில பெரியவர்களும் நின்றார்கள். குதிரைகள் அங்கே வந்து நின்றதும், குதிரைக்காரன் கண்ணப்பனையும், கமலாவையும் கீழே இறக்கிவிட்டான். அவர்களை இறக்கிவிட்டதுதான் தாமதம்; “இந்தாப்பா, இந்தப் பையனை ஏற்றிவிடு” என்றார் ஒருவர்.
“நாங்கள்தாம் முதலிலே வந்தோம். இவளை முன்னாலே ஏற்றிவிடப்பா” என்றார் இன்னொருவர்.
“எவ்வளவு நேரந்தான் காத்துக்கொண்டேயிருப்பது?” என்று சலித்துக்கொண்டார் வேறு ஒருவர்.
இப்படியே ஒவ்வொரு தகப்பனாரும், அவரவர் குழந்தையை அந்தக் குதிரைகள்மேல் ஏற்றிவிடப் போட்டி போட்டார்கள். இதைப் பார்த்ததும், மோஹனுக்கு ஒன்றும் புரியவில்லை. பார்த்துக்கொண்டே இருந்தான்.
“அதெல்லாம் அவசரப்படக் கூடாது. நான் இஷ்டப் பட்டவர்களைத்தான் ஏற்றிவிடுவேன்” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டான் குதிரைக்கார முனுசாமி. பிறகு, “தம்பி, நீ இங்கே வா; தங்கச்சி, நீயும் வா” என்று இரண்டு குழந்தைகளைக் கையைக் காட்டிக் கூப்பிட்டான். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியோடு முன் வந்தார்கள்.
“சரி, உங்களை நான் இப்போது ஏற்றிவிடப் போகிறேன்: துட்டு எங்கே?” என்று கேட்டான் முனுசாமி.
உடனே, அந்தப் பையனுடைய அப்பாவும் பெண்ணினுடைய அப்பாவும் முன்னால் வந்தார்கள். ஒவ்வொருவரும் இருபது காசை எடுத்து முனுசாமியிடம் நீட்டினார்கள். பணத்தை வாங்கி இடுப்பில் செருகிக்கொண்டான் முனுசாமி.
பிறகு, அந்தப் பையனையும் பெண்ணையும் தூக்கி, குதிரைமேல் வைத்தான். குதிரைகளைத் தட்டி, 'ஹை' என்றான். உடனே, அவை கிளம்பிவிட்டன.
அப்போது அந்தப் பெண்ணின் அப்பா, “சீதா, கெட்டியாய்ப் பிடித்துக்கொள், ஜாக்கிரதை” என்று எச்சரிக்கை கொடுத்தார்.
“அதெல்லாம் நீங்கள் பயப்படவே வேண்டாம். நம் முடைய குதிரை நல்ல குதிரை. ஆபத்தே வராது” என்று தைரியம் கூறினான் முனுசாமி.
இவ்வளவு நேரம் நடந்ததையெல்லாம் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த மோஹனுக்கு இப்போது தான் விஷயம் விளங்கியது.
‘நம்மிடமும் இருபது காசு இருந்தால் ......?’ என்று எண்ணலானான்.
ஆனால் அவனிடம் அப்போது ஒரு பைசாகூடக் கிடையாது! குதிரைகள் குழந்தைகளை ஏற்றிச் செல்வதையும், திரும்பி வருவதையும் வெகு நேரம் பார்த்துப் பார்த்து ஏங்கிக்கொண்டே நின்றான். சூரியன் மறைந்துவிட்டது.கூட அவனுக்குத் தெரியவில்லை. மணிக்கூண்டுக் கடிகாரம், ‘டாண் டாண்’ என்று ஏழு தடவைகள் அடித்தது. உடனே முனுசாமி, “சரி, இனிமேல் நாளைக்குத்தான்; நாளை நான்கு மணிக்கு வந்தால் குதிரைச் சவாரி செய்யலாம்” என்று, அங்குக் காத்துக் கொண்டிருந்தவர்களிடம் கூறிவிட்டு, குதிரைகள் இரண்டையும் ஒட்டிக்கொண்டு புறப்பட்டான்.
மோஹனுடைய மனம் ஒரு நிலையில் இல்லை. ஒரு தடவையாவது குதிரைச் சவாரி செய்துவிட வேண்டும், ஆனல், குதிரைக்காரர் சும்மாவா ஏற்றிக்கொள்வார்: இருபது காசுக்கு எங்கே போகிறது?’ என்று ஏதேதோ நினைத்துக்கொண்டே வீடு சென்றான்.
அன்று இரவு முழுவதும் அவனுக்குத் தூக்கமே இல்லை. குதிரைகளைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான்.
மறுநாள் மாலை-சரியாக மணி நான்கு - மோஹன் முதல் நாள் குதிரைகள் புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தான். அங்கே முதல் நாளைப் போலவே அநேகர் கூட்டமாக நின்றனர். எல்லோரும் முனுசாமி வரும் திசையையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். மோஹனும் அந்தப் பக்கமே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.
“அதோ, குதிரைகள் வந்துவிட்டன!” என்று முதல் முதலில் மோஹன்தான் கூறினான். உடனே எல்லாக் குழந்தைகளும், “ஆமாம், ஆமாம், அதோ வருகின்றன” என்று சந்தோஷத்துடன் குதித்தார்கள்.
முனுசாமி குதிரைகளைக் கொண்டுவந்து அந்த இடத் தில் நிறுத்தினன். அன்றும், முதல் நாளைப் போலவே பணத்தை வாங்கிக்கொண்டு குழந்தைகளை ஏற்றிவிட்டான்.
இப்படியே வழக்கமாக நடந்து வந்தது. மோஹனும் நாள் தவறாமல் அங்கே வந்துகொண்டிருந்தான். அவன்
எப்போதும் முனுசாமியின் பக்கத்திலேயே நிற்பான். முனுசாமி ஏதாவது சொன்னால், மோஹனும் அவனுடன் சேர்ந்துகொண்டு பேசுவான்.
ஒரு நாள், முனுசாமி மடியை அவிழ்த்தான். அதிலிருந்து ஒரு பாக்கை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். பிறகு, வெற்றிலையை எடுத்தான். அப்புறமும் மடியில் எதையோ தேடினன்; காணவில்லை. உடனே ஒருவரைப் பார்த்து, “உங்களிடம் சுண்ணாம்பு இருக்குமா?” என்று கேட்டான்.
“இல்லையே!” என்று கையை விரித்தார் அவர்.
உடனே மோஹன், “என்ன, சுண்ணாம்புதானே வேண்டும்? இதோ கொண்டுவருகிறேன்” என்று சொல்லி விட்டு வேக வேகமாக ஒடினான். சிறிது தூரத்திலிருந்த வெற்றிலைபாக்குக் கடைக்குச் சென்றான். கொஞ்சம் சுண்ணாம்பு வாங்கி வந்து முனுசாமியிடம் நீட்டினான்.
முனுசாமிக்கு அதிலிருந்து மோஹனிடத்தில் ஒரு பிரியம் ஏற்படலானது. தினமும் மோஹன் அங்கே வருவது முனுசாமிக்குத் தெரிந்ததுதான்! அன்று இரவு மணி ஏழு ஆனதும், வழக்கம் போல முனுசாமி குதிரை களுடன் புறப்படத் தயாரானான். அதுவரை மோஹனும் அங்கேயே நின்றான்.
முனுசாமி மோஹனைப் பார்த்ததும், “தம்பி, நீ ஏன் ஒரு நாளைக்குக்கூட என் குதிரைமேல் ஏறுவதில்லை?” என்று கேட்டான்.
“என்ன செய்வது? நானோ ஏழை. பணத்துக்கு எங்கே போவேன்? என் அப்பாவுக்கு 40 ரூபாய்தான் சம்பளம். அவர் சம்பாதிக்கிற பணம் சாப்பாட்டுக்கே...” என்று மோஹன் கூறி முடிப்பதற்குள்,
“அடடா, பாவம்! உனக்குக் குதிரைமேலே ஏறி, சவாரி செய்ய ஆசைதானே?” என்று பரிதாபத்துடன் கேட்டான் முனுசாமி. “எந்தப் பையனுக்குத்தான் ஆசையிருக்காது?” என்றான் மோஹன்,
“சரி, இப்படி வா,” என்று மோஹனைப் பிடித்து முனுசாமி, அப்படியே துரக்கி, ஒரு குதிரைமேல் உட்கார வைத்தான். “ஹை” என்று குதிரையைத் தட்டினான் அது நடக்க ஆரம்பித்தது.
“என்ன தம்பி, எப்படி இருக்குது சவாரி?” என்று கேட்டுக்கொண்டே முனுசாமி இன்னொரு குதிரையைப் பிடித்துக்கொண்டு நடந்தான்.
“குஷியாயிருக்குது” என்று பல்லைக் காட்டியபடி பதில் சொன்னான் மோஹன். சிறிது தூரம் சென்றதும், “ஏன் தம்பி, உன் வீடு எங்கே இருக்குது?” என்று கேட்டான் முனுசாமி.
“என் வீடு ராமானுஜம் தெருவிலே இருக்குது.”
“அடடே, ராமானுஜம் தெருவா! நான்கூட அதற்கு முன்னால் ஒரு தெரு இருக்கிறதே-பெரியகுளத் தெரு-அதிலேதான் இருக்கிறேன். என் வீட்டுக்கு முன்னால் வந்துகூட நீ இறங்கிப் போகலாமே!” என்று சொன்னான் முனுசாமி.
மோஹனுக்கு ஆனந்தம் இவ்வளவு அவ்வளவு அல்ல. பெரிய ராஜகுமாரன் போல நினைத்துக்கொண்டே சவாரி செய்தான்.
முனுசாமி வீடும் வந்துவிட்டது. “இதுதான் தம்பி என் வீடு. இப்போது நீ இறங்கிப் போகலாம்,” என்று கூறி முனுசாமி மோஹனைக் கீழே இறக்கிவிட்டான்.
கீழே இறங்கியதும், “அண்ணா, உன்னை நான் மறக்கவே மாட்டேன். போய் வரட்டுமா?” என்றான் மோஹன்,
“சரி, தம்பி, நாளே மறக்காமல் வந்துவிடு” என்றான் முனுசாமி.
மறுநாள் முதல் மோஹன் முனுசாமி விட்டுக்கே போய்விடுவான். சரியாக மூன்றரை மணிக்கே முனுசாமி யின் வீட்டில் அவன் இருப்பான். இருவரும் அங்கிருந்து நான்கு மணிக்குப் புறப்படுவார்கள். போகும்போதுதான் வழியிலுள்ள வெற்றிலைபாக்குக் கடைகளில் முனுசாமி வெற்றிலை பாக்கு வாங்குவான், டீ சாப்பிடுவான்.
ஆனால், அப்போதெல்லாம் மோஹன்தான் குதிரைகளை ஒட்டிச் செல்வான். இரண்டு குதிரைகளின் கடிவாளங்களையும் பிடித்துக்கொண்டு, அவற்றை ஒட்டிச் செல்வதிலே அவனுக்கு ஒர் அலாதிப் பெருமை!
இப்படியே பத்து நாள்கள் சென்றன.
மோஹன், தான் தினமும் குதிரைகளை ஒட்டிச் செல்வதையும், குதிரைச்சவாரி செய்வதையும் அப்பா. அம்மா விடம் சொல்ல வேண்டும் என்று நினைப்பான். ஆனல், அவர்கள் என்ன சொல்வார்களோ 'ஒரு குதிரைக்காரனுடனா. சேருவது' என்று கோபித்துக்கொண்டால்...? அதனால்தான் மோஹன் இதை அவர்களிடம் கூறவில்லை, மறைத்தே வைத்திருந்தான்.
ஒரு நாள் மாலை-சுமார் நான்கு மணி இருக்கும் - ‘டக் டக்’ என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது. தூங்கிக் கொண்டிருந்த முனுசாமி சத்தம் கேட்டு விழித்தான். உடனே எழுந்து வந்தான்; கதவைத் திறந்தான். எதிரே நின்றது வேறு யாரும் அல்ல! நம் மோஹன்தான்!
“என்ன அண்ணா, மணி நாலு ஆகிறதே நேரம் தெரியாமல் துரங்கிவிட்டாயா!” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் மோஹன்.
“ஆமாம் தம்பி, இரவு சினிமாவுக்குப் போயிருந்தேன். அதனால் நல்ல தூக்கம். உன் சத்தம் கேட்ட பிறகுதான் எழுந்தேன்.”
“சரி அண்ணா, எல்லோரும் கடற்கரையிலே கூட்டமாக நிற்பார்கள். நேரம் அதிகம் ஆகிவிட்டது.”
“ஆமாம், தம்பி, நான் முகத்தைக் கழுவிக்கொண்டு. அந்த மூலைக்கடையிலே "டீ" குடித்துவிட்டு வருகிறேன். நீ குதிரை இரண்டையும் ஒட்டிக்கொண்டு முன்னாலே போ. என்ன, சரிதானா?” என்றான் முனுசாமி.
“ஓ, அப்படியே” என்றான் மகிழ்ச்சியுடன் மோஹன், குதிரைகளின் கடிவாளங்களைக் கையில் பிடித்துக் கொண்டான். ஆனந்தமாகக் கடற்கரையை நோக்கிக் குதிரைகள் இரண்டையும் ஒட்டிச் சென்றான்.
வழியிலே பல தெருக்களைக் கடந்துதான் கடற்கரைக்குச் செல்ல வேண்டும். ஒரு தெருவில் நாலைந்து துஷ்டப் பையன்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் மோஹனையும், குதிரைகளையும் கண்டார்கள். ஒரு சிறு பையன் இரண்டு குதிரைகளை ஒட்டிக்கொண்டு வருவதைக் கண்டு, அவர்கள் சந்தோஷப்படவில்லை; ஆச்சரியப்படவும் இல்லை; கலாட்டா செய்ய ஆரம்பித்தார்கள்: ‘ஆய், ஊய்’ என்று கத்தினர்கள்: கை தட்டினார்கள்; கற்களை எடுத்து, குதிரைகளின் மேல் எறிந்தார்கள்.
இந்த ‘ரகளை’யில் குதிரைகள் இரண்டும் வேகமாக ஒட ஆரம்பித்தன. ஒட, ஒட, அந்தத் துஷ்டப் பையன்களும் விடாமல் விரட்டலானார்கள். மோஹனும் மூச்சைப் பிடித்துக்கொண்டு, குதிரைகளைத் தொடர்ந்து ஒடினான்... ஆனாலும், அவனால் அதிக தூரம் ஓட முடியவில்லை: களைத்து விட்டான். கையிலிருந்த கடிவாளங்கள் நழுவி விட்டன: குதிரைகள் இரண்டும் அவனை விட்டு விட்டு ஒடலாயின. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வீதியில் நுழைந்து ஓடி மறைந்துவிட்டன!
மோஹன், அப்படியே சிலை போலச் சிறிது நேரம் நின்றுவிட்டான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு, ”ஐயோ! குதிரைகளை எப்ப்டிப் பிடிப்பது? இந்தப் பக்கம் ஒன்று ஓடிவிட்டது; அந்தப் பக்கம் ஒன்று ஓடிவிட்டதே” என்று திகைத்தான். குதிரைகள் சென்ற திசைகளில் ஒன்றை நோக்கி ஒடினான்; இங்குமங்கும் தேடினான். பயனில்லை ! பிறகு, மற்றொரு குதிரை சென்ற தெருவழியே சென்றான். அங்கும் தேடியலைந்தான். குதிரை கிடைக்கவில்லை.
வெகு நேரம் தேடினான். இரவும் வந்துவிட்டது. அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அழுகை அழுகையாக வந்தது. “ஐயோ குதிரைக்கார முனுசாமி என்ன சொல்லு வானோ? என்ன செய்வானோ? ... என்மேல் என்ன குற்றம்? எல்லாம் அந்தப் பாழாய்ப்போன துஷ்டப் பையன்களால் வந்த வினை தானே! ... யார் குற்றமானாலும் , குதிரைக்காரன், சும்மா விடுவானா?”
இப்படி அவன் ஏதேதோ எண்ணினான். நேரம் ஆக ஆகப் பயம் அதிகரித்தது. பேசாமல் வீட்டுக்குப் போய் விடுவதுதான் நல்லது என்று நினைத்தான் . அழுகையை அடக்கிக்கொண்டு, வீட்டை நோக்கி நடந்தான்.
அப்போது அவனுக்குப் பற்பல எண்ணங்கள் தோன்றின.
“நான் இருக்கும் வீதிப்பெயர்கூட அந்தக் குதிரைக் காரனுக்குத் தெரியுமே! வீட்டுக்கு வந்துவிட்டால், என்ன செய்வது ? அப்பாவிடம் வந்து, குதிரை வேண்டும். அல்லது குதிரை விலையைத் தந்தால்தான் விடுவேன் என்று சொன்னால், என்ன பண்ணுவது ? அப்பா என்னைச் சும்மா விடுவாரா ? சரியாக அடி கிடைக்கும். அடி கிடைத்தால்கூடப் பரவாயில்லையே! பணம் கேட்டால், பணத்துக்கு அப்பா எங்கே போவார் ? என்னவெல்லாம் நடக்குமோ ?” என்று ஒரே கவலையாக வீட்டை அடைந்தான்.
நடந்ததைப்பற்றி அப்பா அம்மாவிடம் ஒன்றுமே கூற வில்லை. கூறினால் என்ன நேருமோ, ஏது நடக்குமோ என்று எண்ணி, பேசாமல் இருந்துவிட்டான். ஆனாலும், அவன் மனம் சும்மா இருக்குமா ? உறுத்திக்கொண்டே இருந்தது. இரவு முழுவதும் சரியான தூக்கம் இல்லை.
மறுநாள் விடிந்தது. குதிரைக்கார முனுசாமி வந்து விடுவானோ. வந்துவிடுவானோ என்று பயந்துகொண்டே இருந்தான் மோஹன். தெருப்பக்கமே தலை காட்டவில்லை. வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்துகொண்டு ஏதோ கதை படிப்பவன் போலப் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டே இருந்தான்.
அப்பா ஆபீஸிற்குப் போய்விட்டார். அம்மா சமையல் கட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். மோஹன் வாசல் கதவை நன்றாக அடைத்துவிட்டு, படுக்கையில் படுத்துக் கொண்டான். அப்போதும் அவன் மனத்தில் நிம்மதி இல்லை.
‘முனுசாமி நேற்றுக் கடற்கரைக்குச் சென்றிருப்பான். குதிரைகளையும் என்னையும் அங்கே காணாமல் என்ன செய்தானோ? ஒரு வேளை, வீட்டு எண் தெரியாததால்தான இன்னும் இங்கு வரவில்லையோ ?’ என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும்போது, ‘டக்-டக்’ என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது.
“ஐயோ! முனுசாமி வந்துவிட்டானே!” என்று நடுங்கினான் மோஹன். பேசாமல் கண்களை இறுகமூடிக்கொண்டு தூங்குகிறவன் போலப் பாசாங்கு செய்தான்.
கதவைத் தட்டும் சத்தம் வர வர அதிகரித்தது. ஆனாலும், மோஹன் அசையவில்லை. சத்தம் பலமாகக் கேட்டதும், அடுப்பங்கரையில் இருந்த அம்மா ஒடி வந்தாள்.
“ஏண்டா நீ கதவைத் திறக்கப்படாதா ?...சரிதான். தூங்குகிறயாக்கும்” என்று சொல்லிக்கொண்டே கதவின் அருகே சென்றாள். “யாரது?” என்று கேட்டுக்கொண்டே கதவைத் திறந்தாள்.
அப்போது, மோஹன் மெதுவாகக் கண்களைத் திறந்து கதவுப்பக்கம் பார்த்தான். அங்கே முனுசாமி இல்லை! யாரோ ஒரு பையன் நின்றுகொண்டிருந்தான்.
‘இவன் யாராக இருக்கும்?’ என்று மோஹன் யோசிப்பதற்குள்,
“அம்மா, நான் ராமச்சந்திரன் செட்டி கடையிலிருந்து வருகிறேன். கடைப்பாக்கியை இந்த மாசம் பிறந்தவுடனே தருவதாகச் சொன்னீர்களாம். இன்னும் தம்படி தரவில்லை. எங்கள் முதலாளி கண்டிப்பாகக் கேட்டு வாங்கிவரச் சொன்னர்” என்று மளமளவென்று கூறி முடித்தான் அந்தப் பையன். “சரிதான், ஐயா ஆபீஸ் போயிருக்கிறார், சாயங்காலம் வந்ததும் சொல்கிறேன். கொண்டுவந்து கொடுப்பார்.” என்று பதில் சொன்னாள் அம்மா.
உடனே, அவன் போய்விட்டான். “அப்பாடா!” என்று உள்ளுர மகிழ்ச்சி அடைந்தான் மோஹன்.
ஆனாலும் அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. அவனுக்கிருந்த பயம் அந்த மகிழ்ச்சியை அப்படியே விழுங்கிவிட்டது. படுத்தபடியே திரும்பவும் யோசனை செய்தான். இரவு நல்ல தூக்கம் இல்லாததால் சிறிது கண்மூடலானான்.
யாரோ கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கூர்ந்து கவனித்தான் மோஹன். உடனே, அவனுடைய உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அங்கு வந்தது சாட்சாத் குதிரைக்கார முனுசாமியேதான்! அவன் வந்ததும், மீசையை ந்ன்றாக முறுக்கிவிட்டுக்கொண்டான். அவன் கண்கள் அபாய விளக்கைப்போல் சிவப்பாக இருந்தன.
“ஐயா, மோஹன் என்கிற பையன் இங்குதானே இருக்கிறான்?” என்று அதிகாரத்துடன் கேட்டான் அவன்.
“ஆமாம். என்னப்பா விஷயம்?” என்று கேட்டார் மோஹனுடைய அப்பா.
“என்னவா என் குதிரைகள் இரண்டையும் அவனிடம் கொடுத்திருந்தேன். இப்போது குதிரைகளையும் காணோம் அவனையும் காணோம் எங்கே அவன் ?”
“என்னப்பா, குதிரையாவது: காணோமாவாது விளையாடுகிறாயா, என்ன?...அது என்ன குதிரை ? பொம்மைக் குதிரையா?”
“நாணா விளையாடுகிறேன் ? நீங்கள்தாம் விளையாடுகிறீர்கள். எங்கே அந்தப் பையன் ? கூப்பிட்டுக் கேளுங்கள், யார் விளையாடுவது என்று தெரியும்” - இப்படி ஆத்திரத்துடன் கூறினான் முனுசாமி. அவன் முன்பு பார்த்த முனுசாமியாக இல்லை; அவன் முகம் கடுகடுப்பாக இருந்தது. குரலில் சாந்தம் இல்லை.
“டேய் மோஹன்” என்று அப்பா கூப்பிட்டார்.
இதையெல்லாம் கம்பிகளின் இடுக்கு வழியாகக் கவனித்துக்கொண்டிருந்த மோஹனின் உடல் நடுங்க ஆரம்பித்தது. கைகால்களெல்லாம் தந்தி அடித்தன. சர்வ நாடியும் ஒடுங்க, “ஏனப்பா!” என்று அழுது கொண்டே முன்னால் வந்தான்.
அப்பா நடந்தவற்றை விசாரித்தார். ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் நடந்தது நடந்தபடியே மோஹன் சொன்னான்.
மோஹன் சொல்லி முடித்ததும், “இப்போது என்ன சொல்கிறீர்கள்? என் பிழைப்பிலே மண்ணப் போடப் பார்க் கிறீர்களா ? இப்போது குதிரைகள் இரண்டையும் தந்தால் தான் விடுவேன். இல்லாவிட்டால் குதிரை ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் தரவேண்டும்” என்று முனுசாமி கண்டிப்பாகக் கூறினான்.
“என்ன இரண்டுக்கும் இரண்டாயிரம் ரூபாயா ! அதற்கு எங்கே போகிறது ? இந்தச் சனியன் பிடித்த பயல் ஏன் குதிரைகளைப் பிடித்துப் போனான் ?...என்னவோ அப்பா, எனக்கு ஒன்றும் தெரியாது. குதிரைகளை நீ இந்தப் பையனிடம்தானே கொடுத்தாய் ? சரி, இவனை வேண்டுமானால் பிடித்துக்கொண்டு போ. பணம் கொடுக்க நான் எங்கே போவேன் ?” என்று கூறிவிட்டார் அப்பா.
“ஒஹோ, அப்படியா! சரி, இந்தப் பையனை இப்பொழுதே என்னோடு அனுப்பி வையுங்கள்.”
“நான் என்ன அனுப்புகிறது ? நீயே பிடித்துக் கொண்டு போ, இந்த நாசமாய்ப்போன பயலை”
“அப்படியா! சரி” என்று கூறிவிட்டு, முனுசாமி மோஹனைப் பிடித்து, ‘பரபர’ வென்று இழுத்தான்.
உடனே, “ஐயோ : அம்மா : அம்மா !” என்று கதறினான் மோஹன்.
“என்னடா மோஹன், என்ன உளறுகிருய் ? சொப்பனமா ?” என்று கேட்டாள் அம்மா.
அப்போதுதான் மோஹனுக்கு, தான் கண்மூடியதற்குப் பிறகு இதுவரை நடந்ததெல்லாம் வெறும் கனவு என்பது தெரிந்தது.
“ஒன்றுமில்லை அம்மா !” என்று கூறி அம்மாவை அனுப்பிவிட்டான்.
கனவிலே கண்டவற்றையெல்லாம் நினைக்க நினைக்க, அவனுக்குப் பயமாக இருந்தது. “கடவுளே, இப்படியெல்லாம் நடக்கக் கூடாது” என்று வேண்டிக்கொண்டான் அன்று மாலை அவன் கடற்கரைக்குப் போகவேயில்லை. ‘போனால் அகப்பட்டுக்கொள்வோம்’ என்ற பயம் அவனுக்கு. வீட்டிலேயே இருந்துவிட்டான்.
இது அவனுடைய அம்மாவுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. “மோஹன், இந்தக் கோடை விடுமுறையில் நீ தினமும் மூன்று மணிக்கே கடற்கரைக்குப் புறப்பட்டுவிடு வாயே! இன்றைக்கு ஏன் போகவில்லை ?” என்று கேட்டாள்.
“ஒன்றுமில்லை, அம்மா. தினசரி கடற்கரைக்குப் போய், சலிப்புத்தட்டிவிட்டது” என்று சமாதானம் கூறினான் மோஹன்.
இப்படியே அவன் ஒரு வாரம் கடற்கரைக்கே போகாமல் காலம் தள்ளிவிட்டான். அதுவரை குதிரைக்கார முனுசாமி அவனைத் தேடி வராதது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. அப்பாவுக்கு ஆபீஸ் விடு முறை. அவர் அவனைப் பார்த்து, “மோஹன், இன்று நாம் கடற்கரைக்குப் போவோமா? வா, போகலாம்” என்றார்.
மோஹனுக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. முனுசாமி ஞாபகம் வந்துவிட்டது.
“ஒரு வேளை முனுசாமி, பழைய குதிரைகள் போனால் போகிறது என்று புதிதாகக் குதிரைகள் வாங்கியிருக்கிறானோ என்னவோ......யார் கண்டது? கடற்கரையில் அவன் என்னைப் பார்த்துவிட்டால் சும்மா விடுவானா?” என்று எண்ணினான், உடனே, அவனுடைய பயம் அதிகரித்தது.
வேண்டாம் அப்பா, எனக்கு விட்டிலே உட்கார்ந்து கதை படிப்பதில்தான் ஆசை. கடற்கரையிலே என்ன அப்பா இருக்கிறது?’ என்று தட்டிக் கழித்துப் பார்த்தான் மோஹன்.
ஆனால் அப்பா விடவில்லை. “இந்த வயதிலே நன்றாக ஒடி ஆடி விளையாட வேண்டும். வீட்டுக்குள்ளேயே இருக்கலாமா! வா, போகலாம்,” என்று விடாப்பிடியாக அவனை அழைத்துக்கொண்டு சென்றார்.
இருவரும் கடற்கரையை நெருங்கிவிட்டார்கள். மோஹன், அப்பாவின் பின்னால் மறைந்து மறைந்து வந்து கொண்டிருந்தான். முனுசாமி எங்கேயாவது தன்னைக் கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அவனுக்கு. கடற்கரையை நெருங்கியதும்,
மோஹனின் அப்பா, “டேய், டேய், மோஹன், அதோ பாரடா; இரண்டு பிள்ளைகள் குதிரைச்சவாரி செய்கிறார்கள்!” என்றார் ஆச்சரியத்துடன்.
மோஹன் உடனே சட்டென்று நிமிர்ந்தான். அப்பா குறிப்பிட்ட திசையை நோக்கினான். இரண்டு குதிரைகள் வருவதைக் கண்டான். ஒவ்வொன்றின்மீதும் ஒவ்வொரு பையன் உட்கார்ந்திருந்தான். மோஹன், குதிரைகள் இரண்டையும் கூர்ந்து கவனித்தான். குதிரைகள் நெருங்க நெருங்க அவன் மனத்திலிருந்த பாரம் குறைந்து கொண்டே வந்தது. காரணம்? அந்தக் குதிரைகள் இரண்டும் புதியவை அல்ல, பழைய குதிரைகளேதாம் ! அன்று, மோஹனை ஏமாற்றிவிட்டு ஒடிப்போன அதே குதிரைகள் தாம் : இதை அறிந்ததும் மோஹனுக்குச் சொல்ல முடியாத ஆனந்தம் உண்டாயிற்று.
‘சரி, முனுசாமி எப்படியோ குதிரைகளைக் கண்டு பிடித்துவிட்டான். இனிமேல் பயமில்லை. அப்பாவிடம் இனி அவன் பணம் கேட்கமாட்டான்’ என்று ஆறுதல் அடைந்தான்.
ஆனல், திடீரென்று திரும்பவும் ஒர் எண்ணம் தோன்றியது.
‘ஆமாம், குதிரைகளை முனுசாமி எப்படிக் கண்டு பிடித்தானோ! எவ்வளவு கஷ்டப்பட்டு அவற்றைப் பிடித்து வந்தானோ : இப்போது என்னைக் கண்டால் அவன் என்ன பண்ணுவானோ : கோபம் கொண்டு சண்டைக்கு வந்து விட்டால் என்ன செய்வது ? குதிரைகளைத் தேடிப் பிடிக்க அவன் எவ்வளவு செலவு செய்தானோ அதையாவது கேட்கத்தானே செய்வான் ?’ என்றெல்லாம் நினைத்துக் கொண்டே நடக்கும்போது,
“மோஹன், நீயும் இந்த மாதிரி குதிரைச் சவாரி செய்ய வேண்டாமா ? உனக்கு ஆசையாக இல்லை ?” என்று கேட்டார் அப்பா.
“ஆமாப்பா, ஆசையிருந்தால் சும்மா சவாரி செய்ய முடியுமா? காசு கொடுத்தால்தான் சவாரி பண்ணலாமாம். அந்தக் குதிரைக்காரன் இருபதுகாசு கொடுத்தால்தான் குதிரை மேலே ஏற்றிவிடுவான். இல்லாவிட்டால் நம்மைத் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டான், அப்பா.” “இருபது காசுதானே ? சரி, வா. இன்றைக்கு எப்படியாவது உன்னைக் குதிரைமேல் ஏற்றிவிடவேண்டும்” என்று கூறிக்கொண்டே அவனை அழைத்துச் சென்றார்.
மோஹனுக்குத் தர்மசங்கடமாகிவிட்டது. ஆனாலும் அவன் சும்மா இருக்கவில்லை.
“வேண்டாம், ஆப்பா. போயும் போயும் இந்தக் குதிரைச் சவாரிக்கா இருபது காசு கொடுப்பது ? இந்தப் பணம் இருந்தால், வீட்டுக்கு ஏதாவது சாமான் வாங்கலாமே!... அங்கே பாரப்பா, ஒரே கூட்டம்! காசைக் கொடுத்தாலும் காத்துக்கொண்டே இருக்க வேண்டும். இரண்டு மணி மூன்று மணி நேரங்கூடக் காத்திருக்க வேண்டும். குதிரைக்காரன் தயவு வைத்தால்தான் உண்டு. காசையும் கொடுத்து ஏன் நாம் அவனைத் தாங்க வேண்டும்?” என்று பெரிய மனிதன் போலப் பேச ஆரம்பித்தான்.
மோஹன் இப்படித் தட்டிக் கழிப்பதன் காரணம் அந்த அப்பாவுக்கு எப்படித் தெரியும் ? ‘ஏதோ நம்மாலே அதிகமாக ஒன்றும் பண்ண முடியாது போனலும், இருபது காசு கூடவா செலவழிக்க முடியாது. இன்றைக்கு எப்படியாவது மோஹனைக் குதிரைமேலே ஏற்றிவிட்டுத்தான் மறுவேலை. மற்றக் குழந்தைகளெல்லாம் சந்தோஷமாகக் குதிரைச் சவாரி செய்கிறபோது, பாவம், மோஹன் மட்டும் சும்மா இருக்கலாமா?’ என்று எண்ணினார். இதனால்தான் அவர் அவ்வளவு பிடிவாதமாக மோஹனை அழைத்துச் சென்றார்.
குதிரைகள் புறப்படும் இடத்தை நோக்கி இருவரும் சென்றுகொண்டிருந்தார்கள். அங்கே குதிரைக்காரன் நடுவே நின்றுகொண்டிருப்பதை மோஹன் பார்த்து விட்டான். உடனே, பயம் அதிகரித்தது. அப்பாவின் பின்னால் ஒளிந்துகொண்டே நடக்கலான். அடிக்கடி, குதிரைக்காரன் என்ன செய்கிறான் என்று தலையை நீட்டிப் பார்த்துக்கொண்டே சென்றான். இருவரும் மிகவும் சமீபத்தில் சென்றுவிட்டார்கள், அப்போது குதிரைக்கார முனுசாமி எப்படியோ மோஹனக் கண்டுவிட்டான்!
உடனே, “தம்பி ! தம்பி மோஹன் ' என்று சத்தம் போட்டுக்கொண்டே முனுசாமி மோஹனின் அருகில் ஓடி வந்தான். வந்து கையைப் பிடித்தான். அப்போது மோஹனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கால்களெல்லாம் அவனை அறியாமலே ஆடின.
“என்ன மோஹன், உனக்கு இந்தக் குதிரைக்காரரைத் தெரியுமா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் மோஹனின் அப்பா.
“என்னை மட்டும்தானா இந்தத் தம்பிக்குத் தெரியும் ! என்னைத் தெரியும்; என் குதிரைகளைத் தெரியும்; என் வீடு கூடத் தெரியுமே!” என்றான் முனுசாமி.
“அட, அப்படியா விஷயம்! மோஹன் என்னிடம் இதெல்லாம் சொல்லவே இல்லையே!” என்றார் அப்பா.
அப்போது முனுசாமி மோஹனைப் பார்த்து, “தம்பி, ஏழெட்டு நாளாக இந்தப் பக்கம் உன்னேக் காணவே காணோமே! எங்கே போயிருக்தாய்?... அது சரி, போன வெள்ளிக்கிழமை குதிரைகளை இங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டு நீ போய்விட்டாயே! திரும்பி வருவாய், வருவாயென்று எதிர்பார்த்தேன், வரவேயில்லையே ?” என்றான்.
மோஹனுக்குத் தைரியம் பிறந்துவிட்டது. ‘சரி, இனி மேல் உள்ளதைச் சொல்லிவிட்டால்தான் நல்லது’ என்று எண்ணினான்.
நான் குதிரைகளை இங்கே கொண்டுவந்து விட வில்லையே! வழியிலேயே விட்டுவிட்டேன்."
“வழியிலேயே விட்டுவிட்டாயா! என்ன தம்பி, நீ சொல்வது புரியவே இல்லையே!” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் முனுசாமி. அப்பாவுக்கு இது ஒரு பெரிய புதிராக இருந்தது.
உடனே, மோஹன் நடந்தவற்றையெல்லாம் முதலிலிருந்து கூறினான். கேட்கக் கேட்க அப்பாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. முனுசாமிக்குச் சிரிப்பு வந்தது.
மோஹன் கதையை முடித்ததும் முனுசாமி உரக்கச் சிரித்துவிட்டான். “இதற்கா இவ்வளவு பயம் ? என்னுடைய குதிரைகளை டில்லியில் கொண்டுபோய் விட்டாலும், அவை நேராக இங்கு வந்து சேர்ந்துவிடுமே ! நீ குதிரைகளை விட்டவுடனே, அவை. நேராக என்னைத் தேடிக்கொண்டு இந்த இடத்துக்கே வந்துவிட்டன. என்னே இங்கே காணாததால், வழக்கமாக நிற்கும் இடத்திலே என்னை எதிர்பார்த்துக் கொண்டே நின்றன. நான் வந்ததும், குதிரைகளைப் பார்த்தேன். ஆனால் உன்னைக் காணோம்! எங்கேயாவது போயிருப்பாய் என்று நினைத்தேன். இதுதானா விஷயம்! நன்றாகத்தான் பயந்தாய்” என்றான், முனுசாமி சிரித்துக் கொண்டே.
இவ்வளவு நேரம் இந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த அப்பாவுக்கும் சிரிப்புத்தான் வந்தது. உடனே அவர், “மோஹன், இதனால்தான் நீ வீட்டுக்குள்ளேயே இருந்தாயோ ? கடற்கரைக்குத் தினமும் போய்ச் சலித்து விட்டதாம் காசைக் கொடுத்து, குதிரைச் சவாரி செய்ய வேண்டாமாம்! அடடே, பயத்தில் எப்படி எப்படியெல்லாம் சாமர்த்தியமாகப் புளுகியிருக்கிறாய்?” என்று கூறிக் கொண்டே, அவன் கன்னத்திலே மெதுவாக ஒரு தட்டுத் தட்டினார்.
பிறகு, “நடந்ததெல்லாம் சரிதான். இருந்தாலும் நீ குதிரைகள் கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடனே, நேரே முனுசாமியிடம் போய்த் தகவல் சொல்லியிருக்க வேண்டாமோ? செய்த இந்தக் குற்றத்தை மறைக்க எவ்வளவு பொய் சொல்ல வேண்டியதாயிற்று ? நல்ல வேளை, குதிரைகள் கிடைத்துவிட்டன. இனிமேல் இந்த மாதிரி செய்யாதே. என்ன, சரிதானா ?” என்று அன்போடு புத்திமதி கூறினார் அப்பா.
“சின்னப் பிள்ளைதானே, ஏதோ பயத்தினால் இப்படி யெல்லாம் நடந்துவிட்டது. இனிமேல் ஒரு நாளும் இது போல் நடக்காது. என்ன மோஹன், அப்படித்தானே?” என்று கூறிக்கொண்டே மோஹனை அப்படியே அலாக்காகத் தூக்கினான் முனுசாமி. பக்கத்தில் நின்ற குதிரை மேல் உட்கார வைத்தான்.
அப்போது, ‘இந்தாப்பா முனுசாமி, இருபது காசு சவாரிக் கட்டணம்’ என்று இரு பத்துக் காசு நாணயத்தை முனுசாமியிடம் நீட்டினார் மோஹனின் அப்பா.
“துட்டா: எதற்காக ? மோஹனுக்கா நான் பணம் வாங்குவது ? நன்றாயிருக்கிறது...என் தங்கக் கட்டி மோஹனுக்கா நான் பணம் வாங்குவது ?” என்று முனுசாமி கூறிவிட்டு,
“ஹை, நம்முடைய ராஜா மேலே உட்கார்ந்திருக்கிறார், ஜோராய்ப் போ. உம்...” என்று ஒரு தட்டுத் தட்டினான், அந்தக் குதிரையை.
உடனே மோஹனைத் தூக்கிக்கொண்டு ‘ஜாம் ஜாம்’ எனறு நடந்தது அந்தக் குதிரை.
கருத்துகள்
கருத்துரையிடுக