செயலும் செயல்திறனும்
கட்டுரைகள்
Back
செயலும் செயல்திறனும்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
செயலும் செயல் திறனும்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தென்மொழி வெளியீட்டகம்
சென்னை
பொருளடக்கம்
முன்மொழிவுரை
நூல் முன்னுரை
1. முன்னுரை
1. செயலே உயிர்வாழ்க்கை
2. பெருமைக்கும், சிறுமைக்கும் செயல்களே அடிப்படை
3. நல்லவன் வறுமையும் பாராட்டுப் பெறும்
4. தீயவன் பெருமை இகழப் பெறும்
5. அறம் என்பது உயர்வான குறிக்கோளே
6. அறம் என்றும் அழிவதில்லை
7. செயலில் ஈடுபடாமல் வாழக்கூடாது
8. உயிர் வாழ்க்கை என்பது என்ன?
9. செயலும் செயல் திறனும்
10. இக்கால் உள்ள நாட்டு நிலை
11. நம் கடமை
2. எண்ணமும், விழைவும்
1. எண்ணும் திறன்
2. எண்ணித் தொடங்குதல்
3. வினை விழைவு
1. வினையை விரும்புதல் வேண்டும்
2. செப்பம், நுட்பம், ஒட்பம்
3. இன்பம் விரும்பாமை
3. வினையறிவு பெறுதல்
1. நூலறிவு
2. அறிந்து செய்தல்
3. தெளிவு பெறுதல்
4. இயன்றது அறிதல்
5. வினையால் வரும் பயன் தேர்தல்
1. செயல் நமக்கும் பிறர்க்கும்
2. பொதுவுடைமையும் பொதுமையும்
6. நம் தகுதிக்குத் தாழ்வான செயல்களைத் தவிர்த்தல்
1. தொடக்கம், முடிவு பயன்
2. புகழ்ந்தவை போற்றிச் செய்தல்
3. பழியான செயல்களைச் செய்யாமை
4. ஏமாற்றுதல் கூடாது
5. செய்யத் தக்கனவும் செய்யத்தகாதனவும்
6. செய்யத் தகாதவற்றைத் தவிர்த்தல்
7. வினைவலிமை அறிதல்
1. ஆழந்தெரியாமல் காலை விடாதே!
2. வினை வலிமை
3. பொருள், கருவி, காலம்
8. தன் வலிமை அறிதல்
1. அறியாமை
2. தன்னை அறிதல்
3. உண்மையான திறமையும் அறிவும் மதிக்கப்பெறும்
4. தன்னால் முடிந்ததில் ஈடுபடவேண்டும்
5. தெரியாததில் ஈடுபடவே கூடாது
9. எதிர்ப்புநிலை வலிமையறிதல்
1. ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு
2. எதிர்ப்பு இயற்கையே
3. எதிர்ப்பு பல முனைகளில் இருக்கும்
4. எதிர்ப்பு இயற்கை ஆசிரியன்
5. இன்பத்தை மட்டும் நாடக்கூடாது
6. எதிர்ப்புகள் எப்படி எங்கிருந்து வரும்?
7. மாற்றான் வலிமையை உணர வேண்டும்
10. துணை வலிமை அறிதல்
1 முதலில் எண்ண வேண்டுவது
2. அறிவும் அறியாமையும்
3. மூன்று வகைத் தொழிலறிவு
4. பொருளே குறிக்கோளாக இருத்தல் கூடாது
5. எல்லாருமே துணைக்கு வரமுடியுமா?
6. நண்பர்களின் தன்மை
7. நட்பின் சிறப்பு
8. வினைத் தொடர்புள்ள நட்பு
9. தன்னலமற்ற அன்பும் அறிவும்
10. பொதுவுணர்வு தேவை
11. பொருள் தேடல்
1. வினைக்கு முதல் தேவை பொருளே
2. யானைப் போர்
3. பொருளென்னும் பொய்யா விளக்கு
* கருவி தேடல்
1. இரண்டாவது பொருள் கருவி
2. சுவரில் ஆணி அடிப்பது
3. சொல்லுதல் எளிது செய்தல் கடினம்
4. அவரவர்க்கு ஏற்ற செயல்
5. கருமமே கட்டளைக் கல்
6. வல்லவனுக்குப் புல்லும் வல்கருவி
7. கருவியை கையாளச் செய்தல்
8. அறிவுக் கருவி
9. உடல்குறை குறையன்று ஊக்கம் தேவை
10. கருவியும் காலமும்
13. வினையறிந்தாரைத் துணைக்கொள்ளல்
1. தெரிதல் வேறு திறம்படச் செய்தல் வேறு
2. நுட்பங்கள் அறிதோறும் அறியாமை
3. கற்றலின் கேட்டலே நன்று
4. வினையறிந்தார் நட்பு
5. நல்வழி வரவு
6. நேர்மையான வழி வரவு
7. செயலுக்குத் துணையாக வேண்டாதவர்கள்
8. இழி செயல்கள்
9. ஒருவர்கொருவர் துணை
10. இயற்கைக் கூறுகளும் செயற்கைக் கூறுகளும்
11. சில மனவியல் நுட்பங்கள்
12. மரத்தைப் போன்றவர்கள் 13. எவ்வளவில் தேர்ந்தாலும் வேறாக இருப்பவர்கள்
14. காலம், இடம் தேர்தல்
1. காலத்தின் இன்றியமையாமை
2. காலம் என்பது என்ன?
3. தெரிந்து செய்தல்
4. அனைத்து நலன்களும் பொருத்துதல்
5. இடம் என்றால் என்ன?
6. தேரும் படகும்
7. காலத்தில் சில நுட்பம்
8. காலத்தாழ்ச்சி எப்பொழுது இருக்கலாம்
9. இயற்கை இயைபு
15. உறுதி கொள்ளுதல்
1. உறுதியும் ஊக்கமும்
2. எதிர் தாக்கம் ஏற்படுதல்
3. உடலும், உள்ளமும்
4. ஒருவந்தம்
5. அறிவு, உள்ளம், உடல்
6. தன்னை அறிவித்தல்
7. செயலுறுதி
8. பொருத்தமானதும், பொருத்தமில்லாததும்
9. நம்மினும் பொருள் வலியாரோடு ஈடுபடலாகாது
10. செயலே பெருமையாகாது; பயனே பெருமை
11. ஊக்கம் இல்லாதவர்கள்
12. பெருமையும் புகழும் இல்லாத வாழ்க்கை
16. தாழாது உழைத்தல்
1. உழைப்பின் பெருமை
2. இருவகை உழைப்பு
3. அறிவு பெறும் ஐந்து வழிகள்
4. மன விருப்பம் தேவை
5. உழைப்பும் ஒய்வும்
6 முயற்சி, முயற்சி, முயற்சி 7. இழப்பால் சோர்வுறுதல் கூடாது
8. நிலையான தொடர்ந்த முயற்சி தேவை
9. பணம் மட்டுமே போதாது
10. பின்னர் வருந்தும்படி செய்யற்க
17. முன்னெச்சரிக்கையும் கண்காணிப்பும்
1. வரலாறு, வாழ்க்கை, அறிவியல்
2. எச்சரிக்கை உணர்வு
3. முன்னறிவே அறிவு
4. எதிர்கால அறிவு - ஆவதறியும் அறிவு
5. உள்ள உணர்வும், அறிவுணர்வும்
6. எச்சரிக்கை உணர்வு
7. எச்சரிக்கையின் ஆறு கூறுகள்
1. இதற்குப் பின் இது
2. இதனால் இது
3. இதற்காக இது
4. இது போனால் இது
5. இது வந்தால் இது
6. இதுவே இது
8. எச்சரிக்கைக்கு எடுத்துக்காட்டுகள்
9. எச்சரிக்கையே கண்டுபிடிப்புகளாகின
10. கண்காணிப்பு உணர்வு
11. எச்சரிக்கையினும் கண்காணிப்பு மேலானது
12. எச்சரிக்கை முன்னுரை, கண்காணிப்பு முடிவுரை
18. இடையூறு கண்டு மனந்தளராமை
1. அஞ்சாமையும் பிறதுணையும்
2. அஞ்சாமை வேண்டும்
3. அஞ்சாமை துன்பத்திற்குத் துணை
4. துன்பம் இன்பத்திற்கு ஆசிரியன்
5. இன்பத்தையே எதிர்பார்த்தல் கூடாது
6. இடையூறு உறுதிக்கு அடிப்படை
7. இடையூறுகளின் வகை : இடர்ப்பாடுகள்
1. அகத்தாக்கம்
2. புறத்தாக்கம்
8. அகத்தாக்கம்
1. உடல் நலிவு
2. உடல்தான் அனைத்தும்
3. உடல்தான் மூலமுதல்
4. உடல் ஒரு பொறி
5. பழுதுபடும் பொழுதுதான் பெருமை தெரியும்
6. உடல், உள்ளத்திற்கும், உள்ளம், அறிவிற்கும் அடிப்படை
7. உடல் கெட அனைத்தும் கெடும்
8. உடல் நலத்துக்கே உணவு வகை
9. உடல் வலிவும் உடல் நலமும்
10. உடல் மேல் ஆறுவகைக் கவனம்
1. களைப்பு ஏற்படும்படி உழைத்தல்
2. அளவான உணவு
3. போதுமான ஒய்வு
4. நாள்தோறும் எளிமையான உடற்பயிற்சி செய்தல்
5. உடலை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருத்தல்
6. எதிலும் நல்லெண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் இருத்தல்
9. உள்ளச் சோர்வு
1. உடல் தாக்கம் உள்ளச் சோர்வை ஏற்படுத்தும்
2. உடல் இயக்கத்தைப் போலவே உள்ளத்தையும் இயக்கலாம்.
3. உடலின் இரண்டு இயக்கங்கள்
4. உள்ளத்தின் இரண்டு இயக்கங்கள்
5. விருப்பம் என்பது என்ன?
6. மொத்த இயக்கங்கள் எத்தனை?
7 ஏழாவது இயக்கம் ஒன்று உண்டா?
8. நலியும் உள்ளத்தை அறிவு கொண்டு தேற்றுதல் வேண்டும்
10. அறிவுத் தளர்ச்சி
1. அறிவே தளர்ந்தால் என்ன செய்வது?
2. உடல் சோர்வுக்கும் உள்ளச் சோர்வுக்கும் உள்ள வேறுபாடு 3. உள்ளச் சோர்வை மூடி மறைப்பதால் உண்டாகும் நன்மைகள்
4. அறிவுத் தளர்ச்சி என்றால் என்ன?
5. தன்னம்பிக்கையும் தன்னுணர்வும் தேவை
6. ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்
11. புறத்தாக்கம்
1. கருவிச் சேதம்
2. துணைத் தொய்வு
3. எதிர்ச் செயல்கள்
4. பொருள் முடை
5. காலப் பிறழ்ச்சி
6. இடம் பொருந்தாமை
7. ஆட்சி முரண்
19. இழப்பு கண்டு சோர்வுறாமை
1. ஊதியமும் இழப்பும்
2. பொருள் வருவாய்க் கணக்கீடு
3. செயல் விளைவுக் கணக்கீடு
4. பொருள், கொள்கை ஒப்பீட்டுக் கணிப்பு
5. இழப்பு கண்டு சோர்வுறாமை
6. இழப்பே இல்லாத ஊதியமும்
ஊதியமே இல்லாத இழப்பும்
20. துன்பம் கண்டு துவளாமை
1. தோல்வியும் துன்பமும்
2. துன்பம் கண்டு கலங்கக் கூடாது
3. துன்பம் இல்லாத செயல் உலகில் இல்லை
4. துன்பம் என்பதன் பொருள்
5. செயலும் எதிர்ச்செயலும் - விளக்கம்
6. எண்ண அலைகள், ஆற்றல்கள்
7. எதிர்ச் செயலே துன்பம்
8. துன்பத்தை வரவேற்க வேண்டும்
9. இன்பம் துன்பம் செயலின் இருதன்மைகள்
10.துன்பமே இன்பம்; இன்பமே துன்பம்.
21. துன்பம் வரும்பொழுது தவறான வழிகளைக் கடைப்பிடியாமை
1. நேர்மை நெகிழ்ச்சியே குற்றம்
2. பிறரை வஞ்சியாமையே நேர்மை
3. துன்பம் வரும்பொழுதே நேர்மை இழக்கின்றோம்
4. கீழ்மைச் செயல்கள்
5. தவறான வழியில் செல்லாதவர்கள்
6. தவறான செயல்கள் வெற்றி பெற்றாலும் துன்பம் தரும்
7. குற்றத்திற்குக் காரணங்கள்
8. நல்லதே வருவதானாலும் தவறானவற்றைத் தவிர்க்க
9. இல்லையே என்றும் தீமையைக் கடைப்பிடியாதே
10. நல்ல குடிமரபு உடையவர் குற்றச் செயல்கள் செய்யார்
22. ஒருவினை செய்பவர் துணை வருவாய் கருதி வேறு வினைகளில் ஈடுபட விரும்புதல்
1. தேவைகள் ஆசைகள்
2. உள்ளத் தேவையும் அறிவுத் தேவையும்
3. செயல் செய்யச் செய்ய ஆசை தோன்றும்
4. பல்வகைத் திறன்கள்
5. துணைத் தொழிலானால் இணைத் தொழில்
6. இரண்டு படகுகளில் கால் வைத்தல்
7. அமைந்து ஆங்கு ஒழுகுதல்
8. எதையும் ஆசையால் செய்யலாகாது
9. அளவறிந்து வாழ்தல்
23. துணையாளரையும், பணியாளரையும் அமர்த்துதல்
1. எல்லாவற்றையும் நாமே செய்ய முடியாது
2. பணித்துணையாளர்
3. பணியாளர் திறன்கள் 4. திறனற்ற திறனுள்ள இருவர் நிலை
5. தேறிய பின் வேறுபடுவார் பலர்
6. அறிந்தும்அமைந்தும் செய்பவரே தேவை
7. நுண்ணுணர்வு விளக்கங்கள்
1. அகவுணர்வுக் கூறுகள் அல்லது இயற்கை உணர்வுகள்
2. புறவுணர்வுக் கூறுகள் அல்லது செயற்கை உணர்வுகள்
3. உலகியல் உணர்வுக் கூறுகள் அல்லது செயற்பாட்டு உணர்வுக்கூறுகள்
8. துணையாளர்க்கும் பணியாளர்க்கும் உள்ள வேறுபாடுகள்
9. பணியாளர் குணங்கள்
10. சில இயலாமைகள்
24. முடிவுரை
1. சில ஏற்றத்தாழ்வுகள்
2. அகலக்கால் வையாதே
3. பிறப் பயன்
25. செயல்திறத்திற்கோர் எடுத்துக்காட்டு
1. அருஞ்செயல்கள்
2. திறன் மிக்கச் செயல்கள்
3. திறன்கள் இயைந்து இயங்க வேண்டும்
4. இறுதிவரை
இரண்டாம் பதிப்பு
பதிப்புரை
மாந்தரில் பலர், தாங்கள் எப்படிப்பட்ட செயல்களைச் செய்ய வேண்டும், எவ்வெவ்வாறு செய்ய வேண்டும் என்பன போன்றவற்றைச் சிந்திக்காமல் ஆழ எண்ணாமல் - தாங்கள் விரும்புகின்ற செயல்களில் மனம் போனபடி எல்லாம் ஈடுபட்டு அல்லல் உறுகின்ற அவலக் காட்சிகளைக் கண்ணுற்று கவலையுற்று பாவலரேறு ஐயா அவர்கள் எதிர்காலத் தலைமுறையினரான இளையோர்க்கு அறிவு கொளுத்தும் வகையில் சிறார் இதழான தமிழ்ச்சிட்டில் ஆசிரியவுரைக் கட்டுரைகளாக 56 தொடர்களாக 1980 முதல் 1987 வரை எழுதி வந்தார்.
இக்கட்டுரைகளின் தொகுப்பு முதல்பதிப்பாக தி.பி2019(1988 இல் நூல் வடிவம் பெற்று வெளிவந்தது. படிகள் தீர்ந்த நிலையில் மறுஅச்சாக காலத்தாழ்த்ததுடன் ஏற்பட்டு இப்போது இப்பதிப்பு வெளிவருகிறது.
இப்பனுவலுக்கு ஆசிரியர் அவர்கள் தந்துள்ள முன்னுரையும் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துயதமிழ் அகரமுதலிகள் துறைத் தலைவரான சொல்லாய்வறிஞர் அருளியார் அவர்கள் உரைத்துள்ள முன்மொழிவுரையும் இந்நூலின் சிறப்புகளைப் பறைசாற்றும்.
ஐயா அவர்கள் தமிழியக் கொள்கைகளை மேற்கொண்டு முழுமூச்சாக அவற்றுக்கு பாடுபட்டவர் ஆவார். இந்நூல் தமிழ் மக்களுக்கு மட்டுமே பயன்படக் கூடிய வகையில் இல்லாமல் உலகின் அனைத்து மக்களுக்கும் பயன்படக் கூடிய வகையில் விளங்கும் தன்மையுடையதை எவரும் மறுக்கவியலாது.
ஐயா அவர்களின் நாற்பாண் ஆண்டுகளுக்கு மேலான கடும் உழைப்பில் விளைந்த பல படைப்புகள் இன்னும் நூலாக வரவேண்டியிருக்கிறது. இருப்பினும் இந்நூலின் தேவை உணர்ந்து மறுபதிப்பு வெளியிடப்படுகிறது. தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறுமாக!
இந்நூலுக்கு கணினி எழுத்தாக்கம் செய்த திரு. ச. அழகுஒளி, குட்டி என்கிற இளமுருகன், மெய்ப்பு திருத்திய தென்மொழி குழந்தை ஈகவரசன் ஆகியோர்க்குப் பதிப்பகத்தின் நன்றிகள் உரிதாகுக.
முன்மொழிவுரை
ஐம்பத்தாறு தொடர்களாக - ஏழாண்டையும் கடந்த ஒரு நீளிய காலப் பரப்பினிடையில் - தமிழகச் சிறார்க்கென மாதம் பாடியாகப் பறந்துலவித் திரியும் தமிழ்ச்சிட்டு இதழின் ஆசிரியவுரைப் பகுதியில் பதிப்பேறிவந்த செயலும் செயல்திறனும் என்னும் கட்டுரை தொடர் இப்பொழுது இந்நூல் வழியாகத் தொடரியாக்கப்பெற்று நம் கைகளில் கமழ்கின்றது.
தம் உள்ள மன அறிவு நிலைகளை நலத்தோடும் வளத்தோடும் வலிவோடும் காத்து வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் நல்லுணர்வாளர் ஒவ்வொருவரும் இதனை வாழ்வியல் வழிகாட்டி நூலாகக் கொண்டு இதனைக் கடைப்பிடித்து வந்து உருப்பட்டு உயரலாம்.
அதற்கெனவே மிக மிக உழைப்பெடுத்து நீளவும் அகலவுமாக ஆழவும் ஓங்கவுமாகத் தம் எண்ணத்தைச் செலுத்திச் செப்பமுற்ற நிலையில், இதற்குரிய பாகுபாடுகளை நன்கு திருத்தமுற வகுத்துக் கொண்டு, அருமையான அமைப்பொழுங்கில் இக்கட்டுரையைக் கட்டமைத்திருக்கின்றார் ஆசிரியர்.
இக்காலத்து இளையோர்களில் பலரும் பெரியோர்களில் சிலரும் செயல் பற்றியோ அல்லது செயல்திறன் பற்றியோ, அடிப்படைத் தெளிவேயில்லாது அலமரலுற்று உழன்றவாறே தாறுமாறாய் இடறிவீழ்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் அவல நிலைகளைக் கண்டு அவற்றை அகங்கொண்டு அன்னார்க்கென மிக்க கழிவிரக்கங் கொண்டு நம் பெருமதிப்புகுரிய ஐயா பாவலரேறு அவர்கள் இந்நூலை மிகமிக அருமையாக யாத்தளித்துள்ளார்கள்.
கட்டுரைத் தொடர்களைத் தொடர்ந்து படித்துப் பார்க்கையில் சேம்சு ஆலனின் வெளிப்பாட்டு முறைப்பாங்கு பல்வேறு இடங்களில் நிழலாடுகின்றது. செய்திகள் தாம் அவ்வவ்விடங்களில் வேறுவேறாக வெளிப்பட்டிருக்கின்றனவே தவிர இவ்விருவகை வெளிப்பாடு களினுள்ளும் இயல்பெழும் கனற்சியும் தணப்பும் பல்லிடங்களில் ஒரேவகை அலையொழுங்கினவாகவே படுகின்றன.
நூலாசிரியரின் முப்பதாண்டிற்கும் மேற்பட்டு நீண்டு வரும் திருக்குறள் தோய்வும் ஆய்வும் செயலும் செயல் திறனும் என்னும் தலைப்பின் கீழ் இவ்வளவு திட்ட நுட்பஞ் செறிந்த ஒட்டநூலை வரையும் ஆற்றலைத் தந்துள்ளமை நூலின் அமைப்பாக்கத்தினுள் துலங்கத் தெரிகின்றது.
திருக்குறளின் மீதும் திருவள்ளுவர் மீதும் மீமதிப்பும் பெருவணக்கவுணர்வும் நிறைந்த நெஞ்சத்தைத் தாம் பெற்றிருப்பதை ஐயா அவர்கள் இந்நூலின் பல்வேறிடங்களில் பதித்துள்ளார்கள்.
திருக்குறளை உலகநெறி நூல் : புகழுரை , திருவள்ளுவர் திருவாய்மொழி: மெய்யுரை பொய்யாமறை ; தெளிவுரை பொன்னுரை: வாயுரை, திருவள்ளுவம் , வாய்மையுரை ; குறளுரை : அறிவுமொழி: குறள்மொழி; வாய்மைமொழி பொய்யாமொழி என்றவாறு பதினைந்து வகைகளிலும்
திருவள்ளுவரை - பொய்யாமொழிப் புலவர்; திருவள்ளுவர் பெருமான்: திருவள்ளுவப் பேராசான்; குறளார்; திருவள்ளுவப் பெருந்தகை, திருவள்ளுவப் பெரியார்: பேரறிஞர்; பொய்யாமொழிப் புலவர்; குறள் பெருமான் ; பேரறிஞர் திருவள்ளுவர் ; திருக்குறள் பயந்த செம்மலார்; குறளாசான்; மெய்யுணர்வாசான்; மெய்ந்நூலறிவர்; திருக்குறள் ஐயன்; திருக்குறள் ஆசான்; ஆசான்; மெய்ப்பொருளாசிரியர் என்றவாறு பத்தொன்பது வகைகளிலும் உள்ளமெல்லாம் நிறைவு ததும்பும் பற்றுணர்வோடு இந்நூலாசிரியர் நூலில் பதித்துள்ளார்.
இவ்வாறு வேறெந்நூலினும் இவ்வளவு வேறுபட்ட வகைபாடுகளில் திருக்குறளோ திருவள்ளுவரோ சுட்டப்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை.
முந்நூற்றுக்கும் மேற்பட்ட திருக்குறள் மேற்கோள்களை முறையுற்ற விளக்கங்களோடு ஆங்காங்கே தெளிவாக நிறுத்தி வைத்துள்ளார்.
செயல் என்பது பற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே இத்தமிழ்ப்புலத்தில் எத்தகு நிலையளவுக்கு அஃகியகன்ற நுண்மாண் துழைபுலம் தழைத்திருந்தது என்பதை இக்கட்டுரைத் தொகுப்புள் ஊடாடும் திருக்குறள் மேற்கோள்களே வெள்ளிடை மலையென விளங்கிச் சான்று நாட்டுகின்றன.
சிறப்புத் தலைப்புக் கொண்ட அதிகாரங்களின் கீழ் படிந்துள்ள குறள்களினுள்ளும், வினை செயல் தொடர்பான நுட்பச் சிறப்புச் செய்திகளிருப்பவற்றை நுணித்துப் பார்த்துப் பாகுபடுத்திக் காட்டி விளக்கங்களினூடேயே முறையுற அவற்றைப் பிணைத்து நிலைநாட்டி, சொல்லவந்த கருத்துகளுக்கு ஊற்றமும் உரமும் ஊட்டமும் ஊட்டி நிற்கும் தனிப்பெருந்திற நிலைகளின் பதிவுகளை, நூலின் ஒட்டத்திடையில் பல இடங்களில் பார்க்கவியல்கின்றது.
தம் வாழ்வில் தாமே பட்டறிந்து தெளிந்த பல்வேறு உண்மைகளின் சார நிலைகளையும் இலைமறைகாயாகக் கருத்துகளோடு கருத்துகளாக இந்நூலாசிரியர் மொழிந்து நிற்கும் அழகே தனி!
ஒரு சிறு செய்தியை விளக்கப் புகுகையிலும், அணியணியாக அடுக்கடுக்காக எடுத்துக்காட்டுகளையும் சான்றுகளையும் நூலேடுகளாகிய தாளோடைகளில் கரைபுரண்டு நுரைததும்பப் புனலோடி நீடும்படிச் செய்துள்ள இவரின் திறம் அருமையான பாங்குடையதாகும். எண்ணுதொறும் வியப்பளிக்குந் தகையவாகும்.
சான்றுகளும் எடுத்துக்காட்டுகளும் அனைவர்க்கும் பளிச்செனப் பற்றும்படியான தகைமையுடையவை. அன்றாட நடைமுறைகளினின்று யாவர்க்கும் விளங்கும்படி எடுத்துச் சுட்டப்பெறும் இனிய தன்மையன! 'எச்சரிக்கைக்கு எடுத்துக்காட்டுகள் இதற்கு ஒர் அருமையான எடுத்துக்காட்டாகும்.
செயலையும் செயல் திறனையும் விளக்கி நிற்கும் மூலப் பணியோடு ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் எவ்வெவ்வாறெல்லாம் - எவ்வெவ்விடங்களிலெல்லாம் எப்படியெப்படியெல்லாம் நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்னும் வாழ்வியல் சூழ்வியல் நிலைகளையெல்லாம். தன் குழந்தைக்குப் பாலூட்டும் விருப்பம் நிறைந்த அன்புத் தாயின் உணர்வுடன் இடையிடையே ஊட்டமாகத் தந்துள்ளார்.
குளிப்பது பல்துலக்குவது கால்கழுவுவது போன்ற அன்றாட வினைகளிலும் எவ்வளவு முறைகள் உள்ளன என்பது பற்றியும் - மக்களில் சிலர் துய்மைப்படுத்த வினைகளைப் புறக்கணித்து, எப்படியெப்படியெல்லாம் அருவருப்பாக இயங்கி வருகின்றனர் என்பது பற்றியும் அருளுணர்வோடு அருமையாகச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்தும் பாங்கிலெல்லாம் ஆசிரியரின் இயல்பான மக்கள்நல நாட்ட உள்ளுணர்வே ஒளிகாட்டுகின்றன.
ஒவ்வொரு சிறப்புச் சொல்லும் அதன் நிலையில் பல்வேறு கோணங்களில் ஊட்டம் பெற்றுச் சிறந்திருப்பதை நன்கு உன்னிப் பார்த்து - அக்கருத்துகளைத் திரட்டிய பொருள்வடிவை அச்சொல்லுக்கு நேரிதாக எடுத்து வைக்கும் பாங்கே தனிச்சிறப்புடையதாகும்.
விருப்பம். விருப்பம் என்பது உயிருக்கு ஏற்கனவே தொடர்பாய ஒரு பொருளின் மேல் தானாகச் செல்லும் மனநாட்டம்.
செருக்கு. செருக்கு என்பது நமக்கு தெரிந்த சிறிய அளவை மிகுதியாகக் கருதிக் கொள்வது.
இந்நூலின் மூலப்பகுதியே 250 பக்க அளவு கொண்டது. இதில் பன்னூற்றுக் கணக்கான பாரிய உண்மைகள் பரக்கப் பேசப் பெறுகின்றன.
மனவியல் மெய்ம்மவியல் கூறுகளைச் சிறக்க உள்ளடக்கி நிற்கும் இந்நூல் படித்த அளவிலேயே முற்ற விளங்கித் தோன்றும் அல்லது புரிந்து விடும் பான்மைத்தாக வில்லாமல், உற்று உற்று உள்நோக்கிப் படிக்க வேண்டிய தன்மைத்தாகவுள்ளது.
ஒவ்வொருவரும் . அவரவர்க்குரிய - அவரவர்க்குகந்த நற்செயலைத் தெரிந்தெடுத்து மேற்கொண்டு வாழ்க்கையில் செழித்தோங்குதற்குரிய வகைமுறைகளைப் பற்றியும் அச்செயலைச் செப்பத்தோடும் நுட்பத்தோடும் திட்பத்தோடும் ஒட்பத்தோடும் செய்வதன் வழி திறநிலை கொள்ளும் தகைமையை அடைவது எவ்வெவ்வாறு என்பது பற்றியும் பல கோணங்களில் ஒளிகாட்டுகின்றது; தெளிவூட்டுகின்றது.
வாழ்க்கைச் செப்பத்தையும் உயர்ச்சியையும் விரும்பும் மாந்தர் எவர்க்கும் - இவ்வரிய, செந்நூல், செழிப்பையும் சீரையும் விழிப்பையும் வீற்றையும் விளைக்கும் திறத்ததாகும்.
செயல்திறன் யெய்த விழையும் எவருக்கும் இந்நூல் ஒரு கையேடு! ஒரு வழிகாட்டி
'பெற்றுப் பயனெய்தல் பெறுவார் பேறு'
இத்தகு அருமை உடைய செயலை - இந்நூல் யாத்த செயலை திறனோடு செய்துள்ள தமிழ்ப் பெருந்தகை பாவலரேறு ஐயா அவர்களை நிறைவுணர்வோடும் இதன் வெளிநாட்டுப் பயன்கருதிப் பார்த்த நன்றியுணர்வோடும் நெஞ்சம் குளிர வணங்குகின்றேன்.
இதனை நாம் அனைவரும் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும்.
நம்மவர்களையும் படிக்கச் செய்ய வேண்டும்.
உருப்பெறுதற்கும்
உயர்வுறு தற்கும்
உளஞ் சிறத்தற்கும்
உறுதுணையான
உயர்நூல் இஃது!
ஊன்றி படிப்பவர்
ஓங்குவதுறுதி!
3.2.1958 அன்பன் தமிழ்ப்பல்கலைக்கழகம் ப. அருளி தஞ்சை பதிப்பாசிரியர் தூயதமிழ் அகரமுதலி, அறிவியல் அகரமுதலி
முன்னுரை
திருவள்ளுவர் இவ்வுலகத்தைப் 'பொருள் உலகம்' என்று குறிப்பிடுகின்றார். எனவே, 'செய்க பொருளை' என்றும் கட்டளை இடுகின்றார். "பொருளே, மதிப்பில்லாத எவர்க்கும் மதிப்பை அளிப்பது". எனவே பொருளைப் பெறுவதற்கு ஏதாவது முயற்சி செய்தல் வேண்டும். ஆனால், பொருளைப் பெறுவதற்குப் பெறுவதே முழு முயற்சியாகவும் செயலாகவும் இருந்துவிடக் கூடாது.
பொருள் அழியக்கூடியது. எனவே அழியக்கூடிய பொருளைப் பெற்று, அழியக்கூடாத செயல்களைச் செய்தல் வேண்டும் என்பது திருவள்ளுவர் கருத்து.
அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அது பெற்றால்
அற்குப ஆங்கே செயல், (333)
இனி, செயல்கள் பலவகையானவை. அவற்றுள் அழியும் செயல்கள் பல அழியாச் செயல்கள் சில எளிய சொற்கள் பல அரிய செயல்கள் சில. அவற்றுள்ளும் அரிய செயல்களாகவும் அழியாச் செயல்களாகவும் தமக்கும் பிறர்க்கும் பயன்படக்கூடிய செயல்களாகவும் இருப்பவை மிகவும் சில.
எளியவர்கள் எளிய செயல்களையே செய்து மறைந்து போகின்றனர். வலியவர்கள் அஃதாவது பெருமை உடையவர்கள், செய்வதற்குக் கடினமான அருமையுடைய செயல்களையே செய்து, புகழ்பெற்று நிலைநிற்கின்றனர்.
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய சொல். (975)
செய்வதற்கு எளிய செயல்களையே இவ்வுலகில் பெரும்பாலும் அனைவரும் செய்கின்றனர். அவை அறிவதற்கும் எளிது. ஆற்றுவதற்கும் எளிது. எனவே, அவற்றையே அனைவரும் தேர்ந்து, விரும்பிச் செய்கின்றனர். அத்தகைய செயல்களைச் செய்பவர்களை இவ்வுலகம் நினைவில் வைப்பதில்லை; அவர்களின் மறைவுடன் அவர்தம் செயல்களும் மறைந்து போகின்றன. அவை அவர்களுக்கே பயன் தந்தன; அவர்களுடனேயே மடிந்தும் மறந்து போயின.
செய்வதற்கு அரிய செயல்களாகவும், அனைவர்க்கும் பயன்படும் செயல்களாகவும் இருப்பவை, அவற்றைச் செய்தவர்கள் மறைந்தாலும், மறையாமல், மற்றவர்க்கு என்றென்றும் பயனுடைய செயல்களாக விளங்குகின்றன.
தமக்கும் பிறர்க்கும் இன்பம் தரும் பயனுடைய அழியாத செயல்களையே அறச் செயல்கள் என்று நம் முன்னோர் கருதினர். அச் செயல்களே ஒருவர் செயத்தக்க செயல்களாகும். 'செயற்பாலது ஒரும் அறனே என்று முழங்குகிறது திருக்குறள் (40). அவற்றைச் செய்பவரே போற்றுதற்கும் புகழ்தற்கும் உரியவர். 'செயற்கரிய செய்வார் பெரியர்' (26) என்பது திருக்குறள் இலக்கணம்.
எல்லாருக்கும் பயனுடைய செயல்களைச் செய்வது மிகக் கடினம்! எனவேதான் பலர் அவற்றைச் செய்யாமல், தங்களால் இயன்ற எளிய செயல்களையே செய்ய விரும்புகின்றனர். இனி, செயல்களைப் பற்றிச் சொல்லுதல் எவர்க்கும் எளியது; ஆனால், அவற்றைச் செய்வது கடினமானது. (664)
பெரும்பாலும், இவ்வுலகில், நல்ல செயல்கள் யாவும் கடினமாகவும், கெட்டசெயல்கள் யாவும் எளிமையாகவுமே இருப்பதைக் காணலாம். இன்றைய நிலையில் நல்ல செயல்கள் குறைந்து, நல்லவை அல்லாத செயல்கள் மலிந்து வருகின்றன. அஃதாவது, பொருள் ஈட்டுவதற்கு எளிய செயல்கள் தீய செயல்களாகவே இருக்கின்றன. எனவே, எல்லாரும் தீய செயல்களாக உள்ள எளிய செயல்களையே செய்ய முற்பட்டு விடுகின்றனர்.
செயல்களின் உயர்வு தாழ்வு, பெருமை இழிவு அறியாதவர்களே, தாழ்வான, இழிவான, எளிய செயல்களையே செய்ய முற்படுகின்றனர். அவர்கள் அவவாறு செய்வதற்கு ஒர் அடிப்படைக் காரணம், அவர்கள் செயல்களின் தரங்களையும் பெருமைகளையும் சிறப்புகளையும் அறியாமல் இருப்பதே ஆகும். இவற்றை அறிந்தவர்கள், கற்றவர்கள் பிறர்க்கு எடுத்துச் சொல்லுதல் வேண்டும். அவ்வாறு சொல்லுவாகளானால், அல்ல செயல்கள் மறைந்தொழியும்; நல்ல செயல்கள் தழைத்தோங்கும்.
அல்லவை தேய அறம்பெருகும், நல்லவை
நாடி இனிய சொலின் (96)
என்பது திருவள்ளுவப் பேராசானின் திருவாய்மொழி.
நல்லவ ற்றை நாடவும், அவற்றைப் பிறர் மனங்கொள்ளுமாறு இனிமையாக எடுத்துச் சொல்லவும் வேண்டும். அவ் வகையில் இந்த நூல் அப் னியைச் செவ்வனே செய்யப் புகுந்தது என்க.
இனி, செயல்கள் எவ்வெவ் வகையில், எவரெவர் மேற்கொள்ள வேண்டும் அவை எவ்வெவ்வாறு செய்யப் பெறுதல் வேண்டும்; என்னெல் ன முயற்சிகள், முன்னெச்சரிக்கைகள், முன்னேற்பாடுகள் அவற்றுக் த் தேவை செயல்களுக்கு இடையில் வரும் இடையூறுகள், இடர்ப்பாடுகள், பொருள் தடைகள், ஆள்தடைகள் எவ்வெவ்வாறு இருக்கும் அவற்றை எப்படியெப்படிக் கடந்து மேற்செல்லுதல் வேண்டும்: அவற்றில் என்னென்ன சிக்கல்கள் இருக்கும், அவற்றை எப்படியெப்படித் தீர்ப்பது, என்றிவை பற்றியெல்லாம் மிக விளக்கமாகவும் மிக விரிவாகவும் இந்நூலுள் கூறப்பெறுகின்றன. இனி, இவையெல்லா வற்றுக்கும் ஒருபடி மேலாகச் சென்று, நல்ல, அரிய, பயனுள்ள செயல் களைத் திறம்படச் செய்வது எப்படி, எவ்வெவற்றில் எத்தகைய கவனமும் கண்காணிப்பும் கொள்ளுதல் வேண்டும் அவற்றுக்கு எவரெவரைத் துணையாளராகவும் பணியாளராகவும் கொள்ளுதல் வேண்டும். அவர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பவை பற்றியும் எல்லாருக்கும் விளங்கும் வண்ணம் நன்கு எடுத்து விளக்குகிறது இவ்வரிய நூல்.
இந்த வகையில், தமிழில் இதுபோல், இதுவரை, எந்தவொரு நூலும், நமக்குத் தெரிந்த வரையில், வெளிவந்ததில்லை என்றே கூறுதல் வேண்டும். இந்த உண்மையை இதைப் படித்த பின் நன்கு உணர்வீர்கள்; அதனால் ஒரு பெருத்த மகிழ்ச்சியும் முழுநிறைவும் கொள்வீர்கள் என்னும் நம்பிக்கையும் நமக்குண்டு. இதில் கூறப்பெறும் விரிவான, மிக நுட்பமான அறவியல், உளவியல், உலகியல், தொழிலியல், தொழில் நுட்பவியல், அறிவியல் தொடர்பான செய்திகளுக்கெல்லாம், நம் அரிய, இனிய நூலாகிய திருக்குறளிலிருந்தே ஏராளமான எடுத்துக் காட்டுகள் காட்டப்பெறுகின்றன. இஃது அனைவர்க்கும் மகிழ்ச்சியும், வியப்பும், பெருமிதமும் அளிக்கும் ஒரு செய்தியாகும்.
எனவே, இதைப் படித்து முடித்தபின், நம் திருக்குறளிலும் இத்தனைச் செய்திகளுண்டா என்று பலருக்கும் ஒரு வியப்பு வினா தோன்றும். ஆம், நம் திருக்குறளில் இதுவும் உண்டு; இதற்கு மேலும் உண்டு. எனவேதான், அதை ஒர் அறநூல், இலக்கிய நூல் என்பதைவிட, அதை ஒரு வாழ்வியல் நூல், இனநலம் காக்க வந்த புரட்சி நூல் என்றெல்லாம் நாம் எடுத்துக் கூறி மெய்ப்பித்து வருகிறோம். நம் இன முன்னேற்றத்திற்குரிய அத்தனைச் செய்திகளையும் திருவள்ளுவப் பேராசான் முன்கூட்டியே நமக்குப் பலவாறு அவரின் ஒண்டமிழ் நூலாம் திருக்குறளின்கண் நமக்கு உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார். அவற்றை நாம்தாம் ஆழப் பாராமல் அகலப் பார்த்துவிட்டு, அவற்றையும் புறக்கணித்து வந்திருக்கிறோம் என்பதை, இனியாகிலும் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டுகிறோம். அதற்கு இந்நூலே ஒரு கலங்கரை விளக்கமாகவும், வழிகாட்டியாகவும், சான்றாகவும் விளங்கும் என்பதைக் கூறத் தேவையில்லை.
இந்நூல், நம் தமிழ்ச்சிட்டு என்னும் சிறுவர் இதழில் 1980 பிப்ரவரி (குரல் 1; இசை 10 முதல், 1987 ஏப்ரல் குரல் 18, இசை 10 வரை, ஏழு ஆண்டுகள், 56 தொடர்களாக வெளிவந்த ஆசிரியவுரைக் கட்டுரைகளாகும். இவை கட்டுரை வடிவில் வெளிவந்து கொண்டிருந்த பொழுதே, இஃதோர் அரிய நூல்; மேனாட்டாரும் படித்துப் பயனடைந்து, வியந்து போற்றுவதற்குரிய அரிய செய்திகளைக் கொண்டது; இஃது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பெற்றால், நோபல் ப்ரிசு பெறுவதற்கும் உரியது என்று பலரும் அவ்வப்பொழுது நமக்கு மடல்கள் எழுதிப் பாராட்டி வந்தனர். அவர்களின் ஊக்க உரைக்கும் ஆர்வத்திற்கும் முதற்கண் நம் நெஞ்சு நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இக்கால், இதை நூல் வடிவில் கொணரவே பெருமுயற்சி தேவைப்பட்டது. இதைத் தக்கவர் ஒருவரைக் கொண்டு ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிடும் எண்ணம் உண்டு. அதைக் காலந்தான் செய்தல் வேண்டும்.
இந்நூல் அச்சாகி வருங்கால், இதன் கட்டுரை வடிவ 40-ஆவது தொடருக்குப் பின், அஃதாவது 18ஆவது தலைப்பாக உள்ள இடையூறு கண்டு மனந்தளராமை என்னும் கட்டுரை இறுதியில், மேலும் 20 பக்கங்கள் அளவில் சில மனவியல் நுட்பங்கள் புதிதாக எழுதிச் சேர்க்கப் பெற்றிருக்கின்றன. அவ்விளக்கங்கள் அங்குத் தேவை என்று கருத வேண்டியிருந்தது. அவை பெரும்பாலும் மெய்யறிவியல் சான்ற கருத்துகளாகும். எனவே, மிகவும் பயனுடையவாக இருக்கும். இவற்றை வெறெந்த நூலிலும் பார்ப்பது கடினம்.
இந்நூலுக்கு அரியதொரு முன்மொழிவுரை நவின்ற தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடுகளாகிய துய தமிழ் அகரமுதலி, அறிவியல் சொல் அகரமுதலி ஆகிய இருபெரும் அகரமுதலிகள் பதிப்பாசிரியரும், இன்றைக்குத் தமிழ்ச்சொல் ஆய்விலும் அறிவிலும் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவரும் ஆகிய சொல்லாய்வறிஞர் திரு.ப. அருளி, வணிஇ சஇ, அவர்களுக்கு நம்நெஞ்சு நிறைந்த வாழ்த்தும் நன்றியும் உரியவாகுக.
என் இளைய மகன் திரு மா. பொழிலன், கமு, பொருளடக்கமும், பிழை திருத்தப்பட்டியும் எடுத்துதவினார். அவர்க்கும் நம் அன்பு நம் நூல்களை முறையாக வெளியிடுவதற்கென்றே நம் உழுவலன்பர்கள் சிலரின் முயற்சியால் தொடங்கப்பெற்ற செந்தமிழ்நூல் தொகையையும் ஊதியத்தையும் கொண்டு, மேலும் இக்குழு இம்முயற்சியில் சிறந்த விளங்கவும் வெற்றி காணவும் நம் வாழ்த்துடன், அன்பர் அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்.
இதனை அழகுற அச்சிட்டுதவிய புதுமைக் கலை அச்சக (நாவல் ஆர்ட் அச்சக) உரிமையாளர் பாவலர் திரு. நாரா. நாச்சியப்பன் அவர்களுக்கு எம் நன்றி.
கும்பம் உஎ அன்புடன்
10-3-1988 பெருஞ்சித்திரனார்
செயலும் செயல்திறனும்
* * *
1. முன்னுரை
1. செயலே உயிர்வாழ்க்கை:
‘வினையே ஆடவர்க்குயிரே’ என்பது குறுந்தொகை (135). ஆடவர்கள் எல்லாரும் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட வேண்டும்; செயலையே உயிராகக் கருதுதல் வேண்டும் என்பது அதன் பொருள். இக்காலத்து ஆடவர்கள் மட்டுமின்றிப் பெண்டிரும் செயல்திறன் மிக்கவர்களாக இருத்தலைப் பார்க்கின்றோம். எனவே மாந்தர் அனைவர்க்கும் செயல் பொதுவாகிறது. செயலே உயிர் வாழ்க்கை செயல் இல்லாதவரை வாழ்கிறார் என்று சொல்லமுடியாது.
2. பெருமைக்கும், சிறுமைக்கும் செயல்களே அடிப்படை
வாழ்க்கை வெறும் இன்ப துன்பத்தைப் - பெறுவதற்காக மட்டும் என்றே கொள்வோமானாலும் கூட, அந்த இன்ப துன்பங்களுக்கும் அடிப்படையாக இருப்பது செயல்தான். செயல் என்பதும் வினை என்பதும் ஒரு பொருள் தரும் சொற்கள். ஒருவன் பெருமையான வாழ்வும் ஒருவன் சிறுமையான வாழ்வும் வாழ்கிறான் என்று கொண்டால், அஃது அவனவன் செய்த, செய்கின்ற வினை செயல்களால் ஏற்படுவதே என்பது திருவள்ளுவர் கருத்து. அவனவன் செயலே அவற்றுக்கு அளவுகோல் ஆகும் என்று அவர் கூறுகிறார்.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் (505)
3. நல்லவன் வறுமையும் பாராட்டுப்பெறும்
ஒருவன் செய்கின்ற வினை அல்லது செயல் அல்லது கருமம் எத்ததையாக இருக்கிறது என்பதையுணர்ந்தே உலகம் அவனை மதிப்பிடுகின்றது. திருடனையும் ஏமாற்றுக்காரனையும் பிற இழிவான செயல்களைச் செய்பவனையும் அவர்கள் எத்துணைதான் செல்வர்களாகவும் வளமுற்றவர்களாகவும் இருப்பினும் உலகம் அவர்களை மதிப்பதில்லை. ‘நல்லவன் வறுமை உடையவனாக இருப்பினும் உலகம் அவனைப் பாராட்டிப் பெருமைப்படுத்தும்’ என்பார் திருவள்ளுவர்.
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின் (988)
4. தீயவன் பெருமை இகழப் பெறும்
ஒருவன் நல்ல செயலைச் செய்து வறுமைப்படுவது இழிவன்று என்பது போலவே, தீயவற்றைச் செய்து வறுமைப்பட்டுக் கிடப்பது, அவனைப் பெற்ற தாயாலும் வெறுக்கத்தக்கது; அவன் தாயும் அவனை வேறு யார் போலவோ கருதுவாள்; தன் மகனென்று பெருமை பெறக் கருதமாட்டாள் என்றும் திருக்குறள் கூறுகிறது.
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும் (1047)
5. அறம் என்பது உயர்வான குறிக்கோளே
இனி, இக்காலத்தில் இந்நெறிமுறைகளெல்லாம் பிறழக் காணப்பெறுகின்றன. ஒருவன் எந்தச் செயலைச் செய்தாவது பொருளீட்டலாம் ஈட்டிய பொருளைக் கொண்டு எச்செயலையும் செய்து இன்பம் பெறலாம்; எப்படியும் வாழலாம் என்பது இக்காலத்து மக்களுடைய கடைப்பிடியாக இருக்கிறது. அவ்வாறு இருக்கிறது என்பதால் இக்கொள்கை உயர்ந்ததாகிவிடாது. உலகில் எந்தக் காலத்தும், எந்தவிடத்தும், எந்த மக்களினத்தும் தாழாத கொள்கைகளையே அறம் என்று தமிழ்நெறி நூல்கள் சாற்றுகின்றன.
6. அறம் என்றும் அழிவதில்லை
அவ்வறவுணர்வு என்றுமே அழிவதில்லை. ஒருகால் ஒரு தலைமுறை மக்கள் கூட்டத்து அஃது அழிவது போல் தோன்றினும், அஃது அடுத்த தலைமுறையினரிடம் தழைத்துச் செழித்தோங்கியே நிலைபெறுகிறது. இஃது அறவியல் வரலாறு. எனவே தீச்செயல்கள் என்றும் தீச்செயல்களே, நற்செயல்கள் என்றும் நற்செயல்களே! அவற்றுக்குள்ள பெருமை சிறுமைகளும் என்றும் மடிவதில்லை. இது நிற்க.
7. செயலில் ஈடுபடாமல் வாழக்கூடாது
நாம் இவ்வுலகத்துள்ளவரை ஏதேனும் நமக்குப் பொருந்திய தகுதியான, நம் அறிவுணர்வுக்கும் மனவுணர்வுக்கும் ஏற்ற, நல்ல் ஒரு செயலை, ஒரு நல்வினையை தாம் மேற்கொண்டுதான் வாழவேண்டும் செயல் இல்லாழல் வாழ முடியலாம்; ஆனால் வாழக்கூடாது. சிலர்க்கு முன்னோர் திரட்டிய செல்வம் அள்ள அள்ளக் குறையாதபடி கொண்டிருக்கலாம். ஆனால் அப்பொழுது கூட அவர்கள் ஏதாவது வினையில், செயலில் ஈடுபடாமல் வாழக் கூடாது. அவ்வாறு வாழ்வு தை வாழ்க்கை என்று சொல்ல முடியாது. இதனை இன்னும் சற்று விளக்கமாகக் கூறுவோம்.
8. உயிர் வாழ்க்கை என்பது என்ன ?
வாழ்க்கை என்பது, உயிர் ஒரு செயலில் தோய்ந்து அழுந்தியியங்கி, அதன் வழியாகப் பெறும் அறிவுநிலை, உளநிலை, இயக்கநிலை ஆகிய மூநிலை உணர்வு நிலைகளையும் எய்தி, அவற்றால் அதன் ஒளிக்கூறும் உணர்வுக் கூறும் மிக விரியப் பெற்று, அதனால் வாய்க்கப் பெறும் நிலையான இன்பத்தில் மூழ்கி நிற்க எடுத்துக் கொள்ளும் பயிற்சியே ஆகும். அப்பயிற்சிக்கு இவ்வுலகமும் இது போலும் வேறு உலகங்களும் பயிற்றகங்களாக பள்ளிக்கூடங்களாக - கல்லூரிகளாக விளங்குகின்றன. நாம் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று, அங்கு எப்படிப் படிக்காமலும் பயிற்சி பெறாமலும் இருத்தல் கூடாதோ, அப்படியே ஒருயிர் தமக்குற்ற துய்ப்புக்கருவியாகிய இவ்வுடலுடன் இந்நிலவுலகத்திற்கு வந்து, பயிற்சி பெறாமல் இருத்தல் கூடாது. எனவே, இங்குப் பிறவியெடுத்த ஒவ்வோருயிரும் இங்கு வாழ்கின்ற வரையில் ஏதாவது தமக்குற்ற ஒரு செயல் வழி இயங்கிப் பயின்று, அதால் இன்பதுன்ப நுகர்ச்சி பெற்று, தம் அறிவுணர்வும் மனவுணர்வும் இயக்கவுணர்வும் மிகவும் விரிவும் விளக்கமும் பெறும்படி செய்து கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு பிறவி பெற்று ஏதாமொரு செயலில் ஈடுபடாத உயிர் பள்ளிக்குச் சென்று படிக்காமல் காலத்தை வீணே கழிக்கும் மாணவனைப் போன்றதாகும். அஃது, அப்பள்ளித் தேர்வுகளில் தோல்வியுற்றுத் தோல்வியுற்று நெடுங்காலமும் கடைத்தேறாத மாணவனைப் போல் இவ்வுலகச் சுழற்சியில் சிக்கிச் சுழன்று திக்கித் திணறிக் கிடக்க வேண்டியதுதான். எனவேதான் வினையே மக்களுக்கு உயிர் வாழ்க்கை என்று குறிக்கப்பெற்றது.
9. செயலும் செயல் திறனும்
இனி, ஒரு செயல் எவ்வாறு செய்யப் பெறுதல் வேண்டும். அதில் எவ்வகையில் கருத்துச் செலுத்துதல் வேண்டும். முறைப்படி நாம் ஒரு செயலில் ஈடுபடுமுன், எந்தெந்தத் துணைநிலைகளை ஆய்தல் வேண்டும் என்பன பற்றியெல்லாம் நம் செந்தமிழ் நூல்களில் குறிப்பாகத் திருக்குறளில் என்னென்ன சொல்லப் பெற்றிருக்கின்றன, என்பது பற்றி இக்கட்டுரைத் தொடரில் ஓரளவு ஆயலாம். இக்கட்டுரைத் தொடர் மிக இன்றியமையாத ஒரு கருத்துக் குவியலாகும். இக்காலத்து இளைஞர்கள் பலரும் பெரியவர்கள் சிலரும் வினை அல்லது செயல் என்பது பற்றியோ, வினைத்திறன் அல்லது செயல் திறன் என்பது பற்றியோ, ஆழமற்ற அறிவுடையவர்களாக உள்ளதைப் பலநிலைகளிலும் கண்டு மிகவும் வருந்தியிருக்கின்ற ஒரு நிலையே இக்கட்டுரைத் தொடரை எழுதத் துண்டுகோலாய் இருந்தது.
10. இக்கால் உள்ள நாட்டு நிலை
படித்த இளைஞர்கள் பலர் உடலை வளைத்து அல்லது வருத்திச் செய்யும் வினைகளை வெறுக்கின்ற மனப்பான்மை உடையவர்களாக வளர்ந்து வருகின்றார்கள். அறிவுநிலைகளைப் பற்றிய உடல் உழைப்பற்ற மேலோட்டமான வினைகளில் மட்டுமே அவர்கள் ஈடுபட விரும்புவதாகத் தெரிகிறது. இத்தகைய மனப்போக்கு நாகரிக ஆரவாரங்களிலும் மிகு சோம்பலிலுமே அவர்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும். இந்த நிலை மேலும் வளர்ந்தால், நாட்டில் ஏமாற்று, பொய், வஞ்சகம், சூழ்ச்சி முதலிய மனவுணர்வுகளும், திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை, தற்கொலை முதலிய வினையுணர்வுகளுமே மேம்பட்டு விஞ்சி வளர்ந்து, மாந்த இன மீமிசை அறிவு வளர்ச்சி நிலைகளையே பொருளற்ற கூறுகளாக ஆக்கிவிடும் என்று அஞ்ச வேண்டியுள்ளது. இப்பொழுதுள்ள நாட்டு நிலையும் இம்முடிவுக்கு ஒரு தொடக்கமாக உள்ள ஓர் ஏத நிலையை உறுதிப்படுத்திக் கொண்டு உள்ளது.
11. நம் கடமை
எனவே இளைஞர்களின் மனவுணர்வு அத்தகைய தீயவுணர்வுகளில் வேரூன்றா வண்ணம் கட்டிக்காப்பது நிறைமாந்த உணர்வுடைய ஒவ்வொருவரினதும் கடமையாகிறது. அக்கடமையுள் ஒரு சிறு முயற்சியாகவே இக்கட்டுரைக் கருத்துகள் வைக்கப் பெறுகின்றன. இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுவதும் கொள்ளாததும் இளைய தலைமுறையினர் தம் மனவுணர்களின் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்தனவாகும். இனி, செய்திக்கு வருவோம்.
2. எண்ணமும், விழைவும்
1. எண்ணும் திறன்
முதற்கண் விலங்குக்கும் நமக்குமுள்ள வேற்றுமைகளில் தலையாய வேற்றுமை எண்ணுதிறன் ஆகும். பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் அறவே எண்ணுதிறன் இல்லையென்று சொல்லிவிட முடியாது. ஆனால் அவற்றின் எண்ணுதிறன் ஒரளவுக்கு உட்பட்டதாகவும், அதற்குமேல் வளர்ச்சியற்றதாகவும், உள்ளது. மாந்தனின் எண்ணுதிறன் அவ்வாறில்லை. பறவை, விலங்குகளைக் காட்டிலும் பன்னூறு மடங்கு எண்ணுதிறன் உடையவர்கள் மாந்தர்கள். இன்னுஞ் சொன்னால், நம் எண்ணுதிறன் பயன்படுத்தப் பயன்படுத்த ஆழமாகவும் அகலமாகவும் விரிந்து வளரும் ஆற்றலுடையது. ஆனால், சோம்பல் கரணியமாகவும், அமைந்துவிடும் சூழ்நிலை அடிப்படையிலும் நம்முள் சிலர் தங்களின் எண்ணுகின்ற ஆற்றலை மேன்மேலும் விரிவடையச் செய்து கொள்ளாதவர்களாகவும், இன்னும் சொல்வதானால் அதை மழுங்கடித்துக் கொள்பவர்களாகவும் இருக்கின்றனர். எண்ணுதிறனை மிகுத்துக் கொள்ளாதவர்களை நாம் உயர்நிலையுற்ற பெருமைக்குரிய மாந்தர்கள் என்று கூறிவிட முடியாது.
இனி, எண்ணுதிறன் என்றால் என்ன? மனம் பற்றிக் கொள்ளுகின்ற ஒரு பொருளைப்(Subject) பற்றி அறிவுணர்வால், அதனுடை விரிவான தன்மைகளையும் குணநலன்களையும்; தன்மை தீமைகளையும் ஆராய்ந்து பார்க்கின்ற தன்மையே எண்ணுதிறன் ஆகும். இந்த எண்ணுதிறன்தான் ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன் வேண்டுவதாகும். எந்த ஒரு செயலும் தொடங்கப்படுவதற்கு முன் நன்றாக, நம் அறிவு முழுமையாக அதில் ஈடுபடும் அளவிற்கு எண்ணப்படுதல் வேண்டும். எண்ணிய பின்தான் ஒரு செயலில் நாம் ஈடுபடுதல் வேண்டும். எண்ணாமல் தொடங்குவது தவறு மட்டுமன்று பின்னர் நமக்கு இழுக்கையும் உண்டாக்கிவிடும். இதைத்தான்.
எண்ணித்துணிக கருமம், துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு (467).
என்னும் குறளில் நமக்கு அறிவுறுத்துகிறார் திருவள்ளுவப் பேராசான்.
2. எண்ணித் தொடங்குதல்
எனவே, ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன் நாம் அதைப் பற்றி நன்கு எண்ணி முடிவு செய்தல் வேண்டும். நாம் இந்த வினையைச் செய்ய இவ்விவ் வகையில் தகுதியுடையவர்; அல்லது இன்னின்ன அடிப்படையில் இந்த வினை நமக்குத் தகுதியுடையது; இதனை மேற்கொண்டால் நாம் இன்ன வகையில் அதனை வெற்றியுடன் நடத்துவோம்; நம் வாழ்க்கையும் இன்ன வகையில் பயனுடையதாகும் என்றெல்லாம் ஒரு வினையைப் பற்றி நாம் தீர எண்ணி அதனை மேற்கொள்ளுதல் வேண்டும். இவ்வகையிலன்றி நாம் ஏதோ ஒரு வினையில் ஈடுபடுதல் வேண்டும் என்றபடி, நமக்குப் பொருந்தாத வினைகளில் போய் ஈடுபட்டுத் தோல்வியையும் இழுக்கையும் தேடிக் கொள்ளுதல் கூடாது.
இனி, எண்ணத்தால் நாம் ஒரு வினையைத் தேர்ந்து அதில் ஈடுபடுவதென்றாலும், அவ்வினையை முழுமையாக நாம் செய்யத் தொடங்கும் பொழுதும், அதைச் செய்து கொண்டிருக்கும்பொழுதும், நமக்கும் அந்த வினைக்கும் பல வகையான பொருத்தமின்மைகள் தோன்றும் ஒரு செயலை எண்ண அளவில் நாம் விரும்பினாலும், அதில் ஈடுபட ஆர்வம் கொண்டிருந்தாலும், செயலளவில் நமக்கு அது விருப்பத்தையோ ஆர்வத்தையோ குறைப்பதாக இருக்கலாம். அப்பொழுது, இதில் நாம் ஏன் இவ்வளவு விரைவுப்பட்டு ஈடுபட்டு விட்டோம் என்று வருந்த வேண்டி வரும் அப்பொழுது நாம் ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அவ்வேலையைக் கைவிட்டு விலக வேண்டியிருக்கும். இதைத்தான் திருக்குறள்,
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர் (514)
என்று குறிப்பிடுகின்றது. "எத்தனை வகையாக எண்ணிப் பார்த்து. ஒரு வினையை நமக்குப் பொருத்தமுடையது என்று தேர்ந்து அதிலே சிலர் ஈடுபட்டாலும், வினை செய்யத் தொடங்கிய பின்போ, செய்து கொண்டிருக்கும் பொழுதோ, அத்தேர்வு நிலைக்கு மாறாகப் போய், அந்த வினை நிலைகளில் நெகிழ்ச்சி ஏற்பட்டுவிடுபவர்களும், அதைக் கைவிட்டு விலகி விடுபவர்களும் இவ்வுலகில் பலராவர்” என்பது இதன் கருத்து. எனவே, வினை தொடங்கியபின், அல்லது ஈடுபட்ட பின் மனவேறுபாடோ, வினைவேறு பாடோ அடைவது உலக மாகலின், அதற்கு முன்பே நன்கு ஆராய்ந்து எண்ணி ஒரு வினையில் ஈடுபடுவது மிகவும் இன்றியமையாததாம் என்க.
இனி இவ்வாறு ஒரு வினையைப் பலவாறானும் எண்ணி, இவ்வினையை நாம் கட்டாயம் செய்யலாம். இது தான் நமக்குத் தக்கது. இதில்தான் நம் வாழ்க்கை முழுமைபெறும், உயிர் நிறைவு பெறும், என்று தேர்ந்து கொண்ட பின், அதில் முழுமையாக நம்மை ஈடுபடுத்திக் கொள்ளுதல் வேண்டும். ஏதோ தேர்ந்தோம், ஈடுபட்டோம் என்று ஏனோ தானோ போக்காக ஒரு வினையை நாம் மேற்கொள்ளக் கூடாது. நமக்குள்ள ஆர்வம், தகுதி, காலநிலை, இடம் இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டே நாம் ஒரு வினையைத் தேர்வு செய்வதோ, ஈடுபாடு கொள்வதோ வேண்டும். இவ்வாறு ஒருவகையாக, ஒரு வினையை நாம் தேர்ந்துகொண்ட பின், நாம் செய்ய வேண்டிய அடுத்த படிநிலை என்ன என்பது பற்றி இனி எண்ணிப் பார்ப்போம்.
வினை விழைவு
1. வினையை விரும்புதல் வேண்டும்
நாம் செய்ய வேண்டிய வினை இதுதான். இதுதான் நமக்குப் பொருத்தமுடையது என்று தெளிவாக நாம் தேர்ந்து கொண்டபின், அந்த வினையை நாம் முழுவதுமாக விரும்புதல் வேண்டும். வினையை முழுவதுமாக விரும்புதல் என்பது, நம் சிந்தனையையும்.ஆர்வத்தையும் அறிவையும் அதிலேயே ஈடுபடுத்துதல். அதைச் செய்கின்ற பொழுதும், செய்யாத பொழுதும் அது பற்றியே எண்ணிக் கொண்டிருத்தல், அதைப் பற்றிய எண்ணுதல் என்பது, அதன் பயன் பற்றியோ, விளைவு பற்றியோ, ஊதியம், அதால் கிடைக்கும் இன்பம் என்பன பற்றியோ எண்ணிக் கொண்டு இருப்பது அன்று. முற்றிலும் அதன் பயனைப்பற்றி எண்ணாமல், அதை எப்படிச் செய்வது, இன்னும் எவ்வெவ் வழி முறைகளைக் கடைப்பிடித்தால் இன்னும் அதனைச் சிறப்பாகச் செய்ய முடியும். அதனைத் திருத்தமுற எப்படிச் செய்வது, அழகுற எப்படிச் செய்வது, செப்பமாகவும், நுட்பமாகவும், ஒட்பமாகவும் எப்படிச் செய்வது என்பது பற்றி யெல்லாம் எண்ணுதல்.
2. செப்பம், நுட்பம், ஒட்பம்
செப்பம் என்பது செவ்வையாக திருத்தமாக, அழகாக, தவறில்லாதபடி என்க. நுட்பம் என்பது மிகவும் பொருத்தமாக, கூர்மையாக, ஆழமாகக் கவனித்து என்க. ஒட்பம் என்பது தெளிவாக, விளக்கமாக, அறிவுணர்வு புலப்படும்படி என்க.
ஒரு சிலையைச் செதுக்குவதாக வைத்துக் கொள்வோம். அதன் உருவம் சரியாக அமையும்படி, தலைக்குத் தக்கபடி உடல், உடலுக்குத் தக்கபடி கை, கால்கள், அவற்றிற்குத் தக்கபடி உயரம், இப்படி அளவுகள் பொருத்தமாய், நாம் அதற்கெனத் தேர்ந்த வடிவப் பொருத்தமாய் அதைச் செய்வதற்கென்று தேர்ந்தெடுத்த கல்லோ, மரமோ, பொருத்தமாய் அமைவது என்பது செப்பம் என்பதற்குள் அடங்கும்.
அச்சிலையினது கண், இமை, காது, மூக்கு வாய், உதடுகள், தாடை, தோள், கை, விரல்கள் முதலியன எல்லாம் இயற்கையாகவும் தவறின்றியும் செதுக்கப்பட வேண்டுமென்பது நுட்பம் ஆகும். இனி, அவற்றை அடுத்து, அச்சிலையினது சாயல், முகக்குறிப்பு, பொதுவான வடிவ அமைப்பு, அதனைச் செதுக்கிய முறை, உணர்வு வெளிப்பாடு, தோற்றம் முதலியன பற்றியெல்லாம் கருத்துச் செலுத்திச் செயல் ஒட்டம் ஆகும். மொத்தத்தில் செப்பம் என்பது உடலைப் போன்றதும், துட்பம் என்பது அதன் உறுப்புகளைப் போன்றதும், ஒட்பம் என்பது அதன் உயிர்த் தன்மை போன்றதும் ஆகும் என்க.
இவ்வாறு மூவகையாகவும் செய்வதில் நாம் எப்படி எப்படியெல்லாம் கருத்தாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கலாம் என்று, அவ்வினை முடிவில் அடையும் பயனை, ஊதியத்தை, இன்பத்தைப் பற்றி நினைவு கொள்ளாமல், வினையை விரும்புவது இரண்டாம் படிநிலையாகும்.
3. இன்பம் விரும்பாமை
‘இன்பம் விழையாது, வினை விழைதல்’ என்று திருக்குறள் (எண் 615) இதனைக் கூறும். ஏன் இன்பத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கக் கூடாது விரும்பக்கூடாது என்று கூறப்பெறுகிறது என்றால், இன்பம் விழைபவன், இடையில் எதிர் பாராத வகையில் வினைக்கு இடையூறு தேர்ந்தால், துன்பம் வந்தால், ஊக்கம் குன்றிப்போவான், வினைச் சோர்வு கொள்வான் ஆகையால், இன்டவிழைவு இருத்தல் கூடாது எனப் பெற்றது. அஃதாவது இன்பமே ஒரு வினையின் நோக்கமாக இருத்தல் கூடாது. இன்பம், துன்பம் இரண்டு உணர்வுகளையும் ஓர் உயிர் நுகரப் பெறுதல் வேண்டும். அவை இரண்டையும் சமமாகக் கருதுதல் வேண்டும் என்பது உயிரியல் கோட்பாடு. இவ்வுணர்வைப் பெறுதற்கு வினையிடுபாடுதான் நமக்கு வழி வினையின் முடிவில் நாம் காண்பன, ஒன்று வினைமுடிபால் வரும் இன்பம்; இரண்டு அதன் பயனால் அஃதாவது அதற்குரிய விலையாக வரும் பொருளால் நாம் பெறும் இன்பம். இவ்விரண்டனுள் வினையின்பமே உயர்ந்ததாகும்; பொருளின்பம் சிறியதாகும்.ஒரு வினையை நாம் முழுமையாகச் செய்து முடித்தோம் என்னும் இன்பம் அதனால் வரும் பொருளால் நமக்குக் கிடைப்பதில்லை. வினையின்பம் உயிரை மகிழ்விக்கும் இன்பம், பொருளின்பம் உடலை மகிழ்விக்கும் இன்பம். எனவே, உடல் அழிந்து பேர்வது போல், அப்பொருளும் அதால் வரும் இன்பமும் விரைவில் அழிந்து போய் விடுவனவாகும். ஆகவே தான் வினைவிழைவான் இன்பம் விழயக்கூடாது எனப் பெற்றது. அவன் தான், வினைக்கிடையில் வரும் எத்தகைய துன்பத்தாலும் மனநெகிழ்ச்சியும், அதனால் வினை நெகிழ்ச்சியும், அதன் வழி ஊக்கக் குலைவும் கொள்ளான் என்றனர்.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்ப உறுதல் இலன் (628)
என்றார் திருவள்ளுவர்.
3. வினையறிவு பெறுதல்
1. நூலறிவு
ஒரு வினையை விரும்பித் தேர்ந்து கொண்டபின், அவ்வினையைப் பற்றிய முழு அறிவையும் நாம் பெறுதல், வினை முயற்சிக்கு அடுத்த படிநிலையாகும். ஒரு வினையை விரும்பிய அளவிலேயே அதைச் செய்வதற்குரிய அறிவு நமக்கு ஏற்பட்டுவிடாது. வினை விழைவு அல்லது விருப்பம் வேறு வினையறிவு வேறு விருப்பம் என்பது உயிருக்கு ஏற்கனவே தொடர்பான ஒரு பொருளின் மேல் தானாகச் செல்லும் மன நாட்டம் மனத்துக்குப் பிடித்த ஒரு தொழிலை நாம் மேற்கொள்ளத் திட்டமிட்டவுடன், அத்தொழில் பற்றிய அறிவை நாம் பல வழிகளிலும் பெற்றுக் கொள்ளுதல் மிகவும் இன்றியமையாததாகும். நம்பால் ஏற்கனவே உள்ள அறிவு நுட்பத்துடன் நாம் மேற்கொள்ள விருக்கும் தொழிலறிவு பற்றிய நூல்களை நாம் வருந்திக் கற்றல் வேண்டும். நமக்கு முன்பே உள்ள நிலை விருப்பம் என்னும் மனவுணர்வின் அடிப்படையிலேயே அமைந்து, அதுபற்றிய பொதுவான அறிவையே கொண்டதாகலின், அது தொடர்பான சிறப்பறிவைப் பெறுதற்கு, அத்தொழில் விளக்கம் பற்றிய நூல்களை நாம் கற்றலே, நமக்கு அத்தொழில் தகுதியை உண்டாக்க உதவும்.
ஒரு தொழிலை நாம் தெரிந்து கொள்ளாமல் அத்தொழிலில் ஈடுபடுதலோ, அல்லது அத்தொழில் தெரிந்தாரைக் கொண்டு செய்தலோ நன்மை பயவாது. தொழில் தெரிந்தவர்கள் அதனைச் சரியாகச் செய்கிறார்களா என்று அறிவதற்கும் , அவர்கள் அதனைச் சரிவரச் செய்யாவிட்டால் அவர்கட்கு அறிவுறுத்தற்கும் நமக்கு அத்தொழில் முழு அளவில் தெரிந்திருத்தல் வேண்டும்.
எனவேதான் நூலறிவாலும் செய்முறையறிவாலும் நாம் அத்தொழில்திறன் பெற்றிருத்தல் வேண்டும். அவ்வாறு பெறாமல் ஒரு தொழில் செய்ய முற்படுதல், நமக்கும் பல வகையான இழப்புகளை ஏற்படுத்தும், தொழில் திறன் பெற்றவர்க்கு எவ்வகையான வினைத்தடையும் நேர்வதில்லை.
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை. (636)
என்பது குறள். 2. அறிந்து செய்தல்
இனி, ஒரு தொழிலை அறிந்து செய்பவர்க்கு அல்லால் பிறர்க்கு அவ்வினை ஏவப்படுதல் கூடாது, என்பது கவனிக்கத் தக்கது.
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. (515)
எனவே, அறிந்து செய்தல் ஒரு வினைக்குச் சிறந்த திறனாகும். வினையறியாதவரை, நம்மிடத்து அன்புடையவர் என்பதற்காக ஒரு வினையில் அமர்த்துதல் கூடாது. நாமும் வினையறிவு பெறாமல் அதனை மேற்கொள்ளுதலும் கூடாது. ஒரு வினை பற்றிய நூலறிவோடு செயலறிவும் நமக்குத் தெரிந்திருத்தல் வேண்டும். செய்வினை, செய்வான், செயல் முறை - குறள் (677) என்று படிப்படியாக நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும்.
3. தெளிவு பெறுதல்
ஒரு வினையைப் பற்றிய நூலறிவும் செய்முறை யறிவுந்தாம் ஒரு வினையில் நம்மைத் தெளிவுடையவர்களாக்கும். தெளிவு பெறாமல் வினை செய்வது எங்ஙன்? தெளிவு பெறாமல் செய்வது வினையில் தவறுகளை உண்டாக்கும்; அதனால் இழப்புகள் ஏற்படும். எனவே வினைத் தவறுக்காகவும் அதன்வழி ஏற்படும் இழப்புகளுக்காகவும் அஞ்சுகிறவர்கள், முதலில் வினையில் ஒருவகைத் தெளிவை ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
தெளிவி வதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர் (464)
என்பார் திருவள்ளுவர். இந்தத் தெளிவு நூலறிவாலும், செயல் முறையறிவாலும் பெற வேண்டுவதாகும்.
ஒரு சவளி வாணிகத்தில் ஈடுபட விரும்புகிறவன் துணி மணிகள் பற்றிய அறிவையும், அவை மலிவாகக் கிடைக்குமிடங்கள், விலை கூடி விற்குமிடங்கள், அவற்றை விற்கும் காலம், அவற்றினைத் தேக்கி வைக்கும் காலம், பல வகையிலும் அவ் வாணிக வகையில் ஏற்படும் செலவுகள், வருகின்ற ஊதியம் இவற்றையெல்லாம் தெளிவுபட உணராமல் அவ் வாணிகத்தில் வெற்றி பெறுவது எப்படி?
4. இயன்றது அறிதல்
1. ஈடுபாடு
இனி, ஒரு வினையின் ஆழ அகலங்களை நாம் அறிந்து கொண்டபின், அவ்வினையில் நம்மால் செய்ய முடிந்த அளவுகளைத் தெரிந்து தேர்ந்து கொள்ளல் வேண்டும். தெரிதலும் தேர்ந்து செய்தலும் (குறள் 634 வினை - செயலுக்கு மிகவும் தேவையான ஆக்க உணர்வாகும். ஒரு வினையை நாம் முழு அளவில் செய்துவிட முடியாது. எந்த வினையையும் ஓரளவினதாகவே நம்மால் செய்ய இயலும் அகலக்கால் வைப்பதினும் ஆழக்கால் வைப்பது நல்லது. வினை பெரிதென்று எண்ணிச் சோர்ந்து விடவும் கூடாது. அதற்காகப் பெரிய வினைகளைத் தூக்கிப் போட்டுக் கொண்டு தொல்லைப்படுதலும் கூடாது. நமக்கு முடிந்த வினையளவு - ஒல்லும் அளவு - அறிந்து நாம் வினை செய்தல் வேண்டும்.
ஒல்வ தறிதல் அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல் (472)
என்பது திருக்குறள். அறிந்ததன்கண் தங்கி என்பது அறிந்த அளவில் முழுவதும் ஈடுபட்டுச் செய்தல் என்பதை உணர்த்தும்.
தன்னால் முடிந்த அளவு செய்யும்பொழுதுதான், வினையும் சிறக்கும். அதனால் இன்பமும் கிடைக்கும். இல்லெனின் வினையும் சிறவாது. அதனால் துன்பமே எஞ்சும். எனவேதான் நமக்குச் செய்ய முடிந்த அளவு நோக்கிச் செய்தல் வேண்டும்.
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல் (367)
முடிந்த அளவறிந்து, முடிந்த வகையிலெல்லாம் ஈடுபட்டால் தான் வினை சிறக்கும். முடியாவிட்டால் நமக்கு இயைபான வேறு ஒரு வினையைச் செய்ய முற்படலாம். அதிலேயே வாழ்நாளை ஈடுபடுத்தி உடலையும் மனத்தையும் வருத்திக் கொண்டு பொருளையும் இழந்து கொண்டிருக்க வேண்டியதில்லை.
5. வினையால் வரும் பயன் தேர்தல்
1. செயல் நமக்கும் பிறர்க்கும்
அடுத்து நாம் ஒரு வினையை மேற்கொள்ளத் தொடங்குமுன், நாம் அவ்வினையை ஏன் செய்தல் வேண்டும். அதனால் நமக்கோ, பிறர்க்கோ வரும் பயன் யாது' என்று எண்ணிப் பார்த்தல் வேண்டும் (பிறர்க்கு என்றால் நம்மை யொட்டியவர்க்கும், ஒட்டாத பொதுமக்கள் பிறர்க்கும் நாடு, மொழி, இனம், அறிவியல், இலக்கியம் முதலிய கூறுகளெல்லாம் பிறர் நலம் நாடும் தன்மைகளாம். நமக்கென்பது, நம் வாழ்க்கை நலன்களுக்கும், நம்மைச் சேர்ந்த குடும்பம், சுற்றம், உற்றம் ஆகியவர்களுக்காகவும் என்று பொருள்படும். நமக்கு என்பது தன்னல அடிப்படையில் எழும் உணர்வாகும். இவ்வுணர்வு தவறாகாது, என்றாலும் இவ்வுணர்வு ஒன்றின் காரணமாகவே நாம் ஒரு வினையைத் தொடங்குதலும் செய்தலும் அவ்வளவு பாராட்டக்கூடிய செயலாக ஆகிவிடாது. நம் மக்கள் தன்மைக்கும் அது பொருந்தாது. நாம் செய்யும் ஒவ்வொரு வினையிலும் குறைந்தது நமக்கொரு கூறும், பிறர்க்கு மூன்று கூறும் நலன் விளையுமாறு எண்ணிச் செய்தல் வேண்டும். நமக்கு ஒதுக்கப்படும் கூறைவிட, பிறர்க்கு ஒதுக்கப்பெறும் கூறு மிக மிக, நாம் பொதுநல உணர்வில் மேம்பட்டு விளங்குகிறோம் என்று பொருள். இவ்வுணர்வே தன்னல மறுப்புணர்வாகும். தன்னலமும் பொது நலமும் கருதிச் செய்யும் செயல்களில் அவ்விரு உணர்வுகளிலும் முன்னதைவிடப் பின்னதற்கு ஒருவர் எத்துணையளவு மதிப்பளிக்கின்றாரோ, அத்துணையளவு அவர் இவ்வுலகில் பொதுநலவுணர்வினராக மதிக்கப்பெற்றுப் பெருமையும் நிறைவும் பெறுகிறார். அத்தகையோரே வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் என்ற சிறப்பைப் பெற முடியும் மீதிப்பேர் வாழ்ந்தோராகவே கருதப் பெறமாட்டார்.
2. பொதுவுடமையும் பொதுமையும்
எனவே தாம் செய்யும் செயல்களில் நமக்கு எத்துணையளவு நலன் அல்லது பயன் என்றும், பிறர்க்கு எத்துணையளவு நலன் என்றும் ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். நமக்காகவே வாழ்தல் மிகக் கீழ்மையானது. விலங்குத் தன்மையது. இன்னுஞ் சொன்னால் விலங்குகளுக்கும் கீழான தன்மையது. ஏனெனில் விலங்குகளும் பறவைகளும் கூட கொடுத்தும் கொண்டுமே வாழ்கின்றன. இவ்வுலகில் இன்னொருவர்க்குக் கொடுப்பதும் அதனால் வரும் மகிழ்வும் நிறைவுமே வாழ்க்கையின் முழுப்பயன் ஊதியம் என்பது குறளறம் ஆகும்.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதிய மில்லை உயிர்க்கு. (23)
இது பொதுவுடைமை கூறும் நலத்தினும் கொள்கையினும் உயர்ந்ததாகும். பொதுவுடைமை உடலால் செய்யப்பெறும் முயற்சி என்று பொருள் கொண்டால், இக்குறளறம் கூறும் பொதுமையுணர்வு உளத்தால் செய்யப்பெறும் முயற்சியாகும். சட்டத்தால் ஒரு பொருளை இருவர்க்குப் பகிர்வதை விட அன்பால் பகிர்வது; உயர்ந்தது: சட்டவுணர்வு; பருமையானது, அன்பில்லாதது; உயிர் மலர்ச்சிக்கு வழி வகுக்காதது, அறவுணர்வு நுண்மையானது; அன்பு நிறைந்தது; உயிர் மலர்ச்சிக்கு உதவுவது. எனவேதான் பொதுமை யுணர்வு பொதுவுடைமை உணர்வை விடச் சிறந்ததாகும். பொதுவுடைமையுணர்வு. உடைமைகளை மட்டும் பகிர்வு செய்யும் அடிப்படையுடையது. பொதுவுடைமைக் கொள்கையில் ஒருவன் பொருளில்லாமல் இருக்க மற்றொருவன் பொருளுடன் இருத்தல் கூடாது. பொதுமைக் கொள்கையில் ஒருவன் மகிழ்த்திருக்க அல்லது துயருற்றிருக்க இன்னொருவன் மகிழ்ச்சியுடனும் இருக்க இயலாது. ஒருவன் துன்பத்திலும் மற்றொருவன் பங்கு கொள்ளும் பொதுமையுணர்வுதான் அறவுணர்வாகும். அறம் என்னும் சொல்லுக்குப் பகிர்வு என்பதே சரியான சொல்லாகும். அறு என்னும் வேரடியாகப் பிறந்த சொல்லே அறம். பகு என்னும் வேரடியாகப் பிறந்த சொல்லே பகிர்வு. இதற்குப் பழஞ்சொல் ஒப்புரவு என்பது. இவ்வுயர்ந்த உணர்வுக்கு மக்கள் உயர்ந்து செல்ல வேண்டும் என்பதே தமிழர் அறக்கோட்பாட்டின் குறிக்கோள் ஆகும். விலங்குகளைக் கட்டியாளுவது போல் மக்கள் கட்டியாளப்பெறுதல் சிறப்பன்று. அவர்கள் தாமே இயங்குதலே சிறப்பு. எனவேதான் அறவுண. வை அவர்கள்பால் வளரச் செய்தனர் பழந்தமிழ்ச் சான்றோர். சட்டவுணர்வை அல்லது சட்ட அறிவை எப்படி மக்கள் எல்லாம் பெற்றிருக்க வேண்டும் என்பது அரசியல் கோட்பாடோ, அப்படியே அறவுணர்வை அல்லது ஒப்புரவை அல்லது பகிர்வுணர்வை மக்கள் இயல்பாகவே பெற்றிருக்க வேண்டும் என்பது அறவியல் கோட்பாடு. எனவே சட்டவுணர்வை விட அறவுணர்வு தாழ்ந்தது என்று சொல்லிவிட முடியாது. அப்படியே பொதுவுடைமை யுணர்வை விடப் பொதுமையுணர்வு தாழ்ந்தது ஆகாது. மாறாக, உயர்ந்ததுமாகும். அதனடிப்படையிலேயே நாம் செய்ய விரும்பும் ஒரு தொழிலின் விளைவு அல்லது நலன் அல்லது பயன் கருதப்பெறுதல் வேண்டும். நலன் விளைக்காத ஒரு வினையை நாம் மேற்கொள்ளுதல் தவறு. இனி, நலன் மட்டுமே வரும் தொழில் உலகில் எங்கும் இல்லை. நன்மை வருவதில் கொஞ்சம் தீமையும் வரலாம். நல்லதும் தீதும், இன்பமும் துன்பமும், உயர்ச்சியும் தாழ்ச்சியும், ஒளியும் இருளும் சேர்ந்தனதாம் உலகமும் அதன் இயக்கமும். எனவே நன்மையே அல்லது இன்பமே ஒரு வினையான் வரும் என்று எண்ணிவிடக்கூடாது. இன்பம் துன்பம், நன்மை தீமை இரண்டுமே ஒரு வினையால் வரும். இவற்றுள் எது மிகுதி எது குறைவு என்று எண்ணி நலம் மிகுதியாக வருவதைப் பார்த்துத்தான் நாம் வினைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையால் ஆளப்படும் (5)
என்பது குறள்.
ஒரு வினையில் தொடக்கம், இடை, முடிவு என்று உண்டு. தொடக்கத்தில் ஒரு வினை கடினமாகவும் செலவுடைய தாகவும்துன்பம் தருவதாகவும் இருக்கலாம். ஆனால் இந்நிலை இடையில் நீங்கி, முடிவில் எளிதாகவும், வருவாயுடைய தாகவும் இன்பம் தருவதாகவும் இருக்கும். இந்நிலைகளை யெல்லாம் ஆராய்ந்து தேர்தல் வேண்டும் தொடக்கத்தில் துன்பமாக உள்ளதென்பதற்காகவே ஒரு வினையைத் தொடங்காமல் விட்டுவிடக் கூடாது. அல்லது தொடக்கத்தில் இன்பமாக உள்ளதென்பதற்காகவே ஒரு வினையைத் தொடங்கி விடவும் கூடது. நாம் ஆராய்வதில் ஒரு வினையின் முடிவையே, இறுதிப் பயனையே ஆராய வேண்டும். முடிவான பயன் தொடக்கத்தையும் இடைநிலைகளையும் விட நல்லதாக இருக்கிறதா என்றே பார்த்தல் வேண்டும்.
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல் (676)
என்னும் குறளை ஒர்க.
6. நம் தகுதிக்குத் தாழ்வான செயல்களைத் தவிர்த்தல்
1. தொடக்கம், முடிவு பயன்
அவ்வாறு தொடக்கமும், முடிவும் இடையில் வரும் இடையூறுகளையும் ஆராய்ந்து அறிந்தபின், அல்லது வினை வல்லார் வாய்க் கேட்டு அறிந்தபின், அவ்வினையால் வரும் பயனையும் அதன் அளவையும் தேர்ந்துணர்ந்து, அதன் பின்னரே ஒரு வினையில் ஈடுபடுதல் வேண்டும். இதுவன்றி, நாம் இன்னொன்றையும் கூடவே கருதுதல் மிகவும் சிறப்புடையதாகும். அஃதாவது நாம் மேற்கொள்ளப் போகும் வினை, பொருள்வகையிலோ வேறுவகையிலோ மிகுந்த பயனைத் தருவது என்றாலும், அந்த வினையைப் பிறர் தாழ்வாக மதிக்கின்றார்களா உயர்வாகக் கருதுகின்றார்களா என்றும் எண்ணிப் பார்த்தல் வேண்டும். பிறர் இழிவாகக் கருதும் வினையைக் கட்டாயம் தவிர்த்தல் வேண்டும். நமக்குப் பொருந்தாத - நாம் செய்யத் தகாத வினையை நாம் மேற்கொண்டு செய்தோமானால் உலகம் நம்மை மதிக்காது. ஏனெனில், நமக்கு, நம் அறிவு, பண்பு, ஊக்கம், ஆற்றல் இவற்றைக் கணித்து, ஏற்கனவே உலகம் ஒரு தகுதியைத் தந்திருக்கின்றது. இந்தத் தகுதிக்கு ஏற்பவே ஒரு செயலை நம்மிடமிருந்து அஃது எதிர்பார்க்கும். அந்தத் தகுதிக்குத் தாழ்வாக, நாம் கொள்ளக் கூடாத அல்லது செய்யக் கூடாத ஒன்றைச் செய்யத் தொடங்கினால் உலகம் நம்மை எள்ளி நகையாடும். இகழ்ந்து பேசும் ஒதுக்கிவிடும். எனவே நமக்குப் பொருந்தாத, அல்லது நம் நிலைக்குக் கீழான ஒரு செயலை நாம் மேற்கொள்ளவே கூடாது.
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு (470)
என்பது குறள்.
2. புகழ்ந்தவை போற்றிச் செய்தல்
இனி, இகழத்தக்க வினைகளை நாம் செய்யக் கூடாது என்பது மட்டுமன்று. புகழத் தக்க வினைகளையே நாம் செய்தலும் வேண்டும். புகழத் தக்க வினைகள்தாம் உண்மையான நன்மையைக் கொடுக்கும். அத்தகைய வினைகளைச் செய்வதில் நமக்குத் துன்பங்கள் இருக்கலாம். தொல்லைகள் இருக்கலாம். ஆனால் அவை கருதி நாம் அவற்றைத் தவிர்த்து விடல் கூடாது. எனவே, நன்மை தரவல்ல, பிறர் புகழ்ச்சிக்குரிய வினைகளையே, அவை எவ்வளவு துன்பம் தரவல்லனவாக இருப்பினும், எத்துணைப் பொருளிழப்புக்கு நம்மை ஆளாக்கினும், அவற்றையே மிகுந்து பாராட்டி ஏற்றுக்கொண்டு செய்தல் வேண்டும். இதைத் திருவள்ளுவர் மிகுந்த அழுத்தமாக இப்படிக் கூறுகிறார்.
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். (538)
புகழத்தக்க செயல்களைப் போற்றி அல்லது மதித்துச் செய்தல் வேண்டும். அவ்வாறு போற்றாமல் அவற்றைப் பொருள் வருவாய் கருதி இகழ்ந்து, செய்யாமல் விட்டவர்களுக்கு எப்பொழுதும் உய்வில்லை என்பது இதன் பொருள். புகழத்தக்கவற்றைத் தவிர்த்தால் இகழத் தக்கவற்றைத் தாம் செய்ய வேண்டியிருக்கும். அத்தகைய செயல்களால் தொடக்கத்தில் பெரும் பொருள் வருவதானாலும், அப்பொருள் நல்ல பயன்களையும் தராது. இறுதியில் பேரழிவுக்கு உட்படுத்தி, நமக்கும் பல்வேறு இடர்களை உண்டாக்கிக் கொடுக்கும் என்பது திருவள்ளுவப் பெருந்தகையின் தெளிவான கருத்து. எனவே, இதனை இன்னொரு குறளிலும் வலியுறுத்துவார்.
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை (652)
இக்குறள் வரும் வினைத்துசய்மை என்னும் அதிகாரத்தின் கீழ் உள்ள அனைத்துக் குறள்களிலும், அப்பேரறிஞர் அந்தக் கருத்துகளையே திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்வார். 'நலம் தரும் வினைகள், துணையும் நல்கும். ஆக்கமும் தரும்' என்பார் (651) 'தம் ஒளி (புகழ்) கெடுக்கின்ற செயல்களை ஒருவர் தவிர்தல் வேண்டும்' (653) என்பார். 'துன்பப் படினும் நல்ல அறிவுடையவர் இழிவான வினைகளைச் செய்யமாட்டார்கள். தன் தாய் பசித்திருக்கக் கண்டாலும், பெரியோர்கள் - நல்லவர்கள் - பழிக்கும் செயலை ஒருவன் செய்யக்கூடாது' (656) 'பழிக்கத்தக்க செயல்களைச் செய்து அதனால் வரும் வருவாயைவிட நல்லவர்களுக்கு வறுமையே நல்லது' (657) என்றெல்லாம் சொல்வார்.
3. பழியான செயல்களைச் செய்யாமை
இனி, அவ்வாறு பிறர் பழிக்கின்ற செயல்களைப் பொருளுக்காக ஒருவன் செய்ய வேண்டுமானால் அவன் பொய் சொல்லுதல் வேண்டும். ஏமாற்றுதல் வேண்டும். திருடுதல் வேண்டும். அல்லது கொள்ளை, கொலை செய்தல் வேண்டும். இல்லெனில் பிறரை நம்ப வைத்து அவர்கள் அறிவையும் மனத்தையாகிலும் மயக்குதல் வேண்டும். அதுவும் இல்லெனில் மக்களின் உடல், உள்ளக் கீழ்மை உணர்வுகளையாவது து.ாண்டுதல் வேண்டும் மொத்தத்தில் இவன் பொருள் பெறுவதற்கு மற்றவர்களுடைய உள்ளத்தின் அல்லது உடலின் அல்லது அறிவின் அல்லது உடைமையின் நலன்களைக் கவர்தல் அல்லது மயக்குதல் வேண்டும். அப்படிப்பட்ட நிலையினில் தம் அறிவு, உள்ளம், உடல் அல்லது உடைமைகளைப் பறிகொடுத்தவன் என்றாவது ஒரு நாள் தன் முன்னைய பிழைகளுக்கு அறியாமைக்கு அல்லது இழப்புக்கு எண்ணி வருந்தவே செய்வான். அழவும் செய்வான். அவ்வாறு பிறர் அழும்படிக்கு அவர்களை வருத்தி அல்லது ஏமாற்றிச் சேர்ப்பவனது பொருள்கள் அனைத்தும், பின்னொரு நாளில் இவன் வருந்தும்படி, அழும்படி விட்டுவிட்டு இவன்பாலிருந்து வெளியேறி விடும் என்றும் அறத்தின் வழி - உலக இயற்கைக் கோட்பாட்டின் வழி எச்சரிக்கை செய்கிறார். அக்குறள் இது.
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை (659)
4. ஏமாற்றுதல் கூடாது
நல்ல செயல்களைச் செய்பவன் தொடக்கத்தில் கையிலுள்ள பலவற்றை இழப்பினும், பின்னர் கட்டாயம் அவன் மேற்கொள்ளும் நல்ல செயல்கள் நல்ல பயனையே தரும் என்று, நல்ல வினைகளை மேற்கொண்டு துன்புறுகிறவர்களுக்கு இக்குறளில் உறுதி கூறுகின்றார். 'பொய்யால், ஏமாற்றால் பொருளைச் செய்பவர்கள், பசுமண் கலத்தினால் தண்ணிரைத் தேக்கி வைப்பவர்களைப் போன்றவர்கள். விரைவில் அத்தண்ணிரும் இல்லாமற் போகும். அம் மண்பாண்டமும் கரைந்து அழிவுற்றுப் போகும். அப்படியே அவன் சேர்த்த பொருளும் அழியும். பொருளைத் தேடித் தர இவன் மேற்கொண்ட தொழிலும் அழிந்து போகும் என்று எவ்வளவு பொருள் பொதிந்த உவமையைக் காட்டி எச்சரிக்கிறார் பாருங்கள்.
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று (660)
5. செய்யத் தக்கனவும் செய்யத்தகாதனவும்
எனவே, இதிலிருந்து நாம் பொருளை ஈட்டுதற்கு என்று, நம் தகுதிக்குத் தாழ்வான செயல்களைச் செய்யக்கூடாது. அத்தகைய செயல்களைச் செய்வதற்கு ஒரு நல்வாய்ப்பு ஏற்பட்டாலும் அதைத் தவிர்த்து விடுதல் வேண்டும் என்று கண்டோம் நமக்கு ஒரு தொகுப்பான உண்மை இப்பொழுது தெரிய வருகிறது. அஃது, உலகில் நாம் எந்தச் செயலையும் செய்வதற்கான செயல்திறம், பொருள்வலி, ஆள்வலி இவற்றைப் பெற்றிருந்தாலும், நாம் நமக்குரிய அல்லது ஏற்ற செயல்களிலேயே ஈடுபாடு காட்டி, அவற்றையே செய்வதற்கு முயலுதல் வேண்டும் என்பது. உலகில் நாம் எப்படியும் வாழ்ந்துவிட முடியாது. அது கூடவும் கூடாது. பறவைகளும் விலங்குகளும் கூட தமக்குப் பொருந்தாத செயல்களைச் செய்வதில்லை. ஒரு மாடு ஒரு நாயின் வேலையைச் செய்யாது. ஒருதுக்கணாங்குருவி ஒரு காக்கையைப் போல் கூடு கட்டி வாழ விரும்புவதில்லை. ஒரு தேனி தன் தேன் திரட்டும் வேலையை எப்பொழுதும் எந்தச் சூழலிலும் தவிர்ப்பதில்லை. அல்லது விடுவதில்லை. அவ்வாறிருக்க, உயர்ந்த அறிவும் தெளிந்த மனவுணர்வும் திருத்தமான சிறந்த உறுப்புகளும் பெற்றுள்ள நாம் நம்முடைய முயற்சிகளால் நல்ல உயர்வான, பிறர் புகழத்தக்க வினைகளையே தேர்ந்து செய்தல் வேண்டும். இவ்வுலகின்கண் செய்யத் தகுந்த வினைகள் என்று சிலவுண்டு செய்யக்கூடாத வினைகள் சில உண்டு. அவற்றின் வேறுபாடுகளை நாம் அறிவுள்ள வழிகாட்டிகளின் வழியாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும் செய்யத் தகுந்த வினைகளைச் செய்யாமற் போனாலும், செய்யக் கூடாத வினைகளைச் செய்ய முற்பட்டாலும் நமக்கு இழுக்கு வரும் இழப்பு வரும். சிறப்பு கெடும். சீரழிவு நேரும் பிறகு நம் வாழ்க்கையே துன்பமுள்ளதாகப் போய்விடும். அதற்காக நாம் காலமெல்லாம் வருந்தி அழவேண்டியிருக்கும். இதைத்தான் குறளாசிரியர்,
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். (466)
என்று கூறுகின்றார். எனவே முன்கூட்டியே செய்தக்க வினையும் செய்யத்தக்க அல்லாத வினையும் நன்றாகப் பிரித்துணர்ந்து செய்தக்க வினைகளையே மேற்கொண்டு செய்தல் வேண்டும்.
6. செய்யத்தகாதவற்றைத் தவிர்த்தல்
ஒருகால் நம் தேர்ச்சி தவறாகவிருந்து, செய்தக்க அல்லாத வினையைத் தெரியாமல் செய்யத் தொடங்கிப் பின் அதனால் வருந்தும்போது, இந்த வினையை நாம் ஏன் செய்தோம்; இதைப் பற்றி எவரையும் கேட்காமற் போனோமே என்று மனம் நெகிழ்ந்து, நம்மையே நொந்து கொள்கின்றோம். அந்நிலையில் இன்னொரு விழிப்புணர்வைத் திருவள்ளுவப் பெருந்தகை நமக்கு ஊட்டுகிறார். அஃதாவது, நாம் இதைப்பற்றி நன்கு ஆராயாமலும், அறிந்தவரிடத்தில் அது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமலும் செய்துவிட்டோம். அதனால் இப்பொழுது வருந்தும்படி நேரிட்டு விட்டது. எனவே இது போன்ற செயல்களை இனிமேலாவது செய்யக் கூடாது. இப்பொழுதும் தவறாகத் தொடங்கிச் செய்யப் பெற்ற வேலையையும் இனி தொடரக் கூடாது. வேறு சிறந்த நல்ல, பெருமை தரக்கூடிய வேலையாகப் பார்த்துச் செய்ய முற்படுவோம் என்று எண்ணி, விழிப்படைந்து, அந்த வினைநிலையிலிருந்து விடுபட்டுவிடச் சொல்கிறார். விடுபடுவதுடன் இனிமேல் அத்தகைய வினைகளையே செய்யாமல் தவிர்த்துவிட வேண்டும். அதுதான் நல்லது என்கின்றார். அவ்வறிவுரை இது.
எற்றென்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று (655)
இனி, நமக்கென்று ஒரு வினையைச் தேர்ந்து, உறுதிப்படுத்திக் கொண்டோம். அவ்வளவில் அதனைத் தொடங்கிவிடலாமா என்ற கேள்விக்கு விடையாக அடுத்த நிலைகளைப் பார்ப்போம்.
7. வினைவலிமை அறிதல்
1. ஆழந்தெரியாமல் காலை விடாதே!
எப்பொழுதும், பலர் இதைச் செய்வேன். அதைச் செய்வேன் என்று பெருமையாகப் பேசிக்கொண்டேயிருப்பர். ஆனால் ஒன்றையும் செய்யமாட்டார்கள். ஏனெனில் அவர் செய்வதாகச் சொல்லும் வினையின் தன்மை தெரியாது. அந்த வினை செய்வதற்கு நாம் தகுதியுள்ளவர்கள்தாமா? அவ்வளவு பெரிய வினையை நம்மால் செய்யமுடியுமா? என்றெல்லாம் எண்ணிப் பார்ப்பதில்லை. ஏதோ கையில் கொஞ்சம் பணம் கிடைத்தவுடன், ஏதோ ஒரு செயல் செய்ய வேண்டுமே என்பதற்காக அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு ஒரு வினையை உடனே செய்யத் தொடங்கிவிடுவர். பின்னர் அந்த வினைகளின் சுமைகளையும், பெரும்பொருள் தேவையையும், உணர்ந்தவுடன், அடடா, ஆழந்தெரியாமல் காலை விட்டு விட்டோமே, இஃது இவ்வளவு, கடினமான வேலை என்று தெரியாமல் போனதே. இப்பொழுது நிறைய பொருள் தேவையாகவிருக்கிறதே. யாரிடம் போய்க் கேட்டது? யாரைத் துணைக்கழைப்பது? மேலும் இவ்வேலை இவ்வளவு உழைப்பை வாங்குகிறதே, ஒய்வொழிச்சலின்றிப் பாடாற்ற வேண்டியுள்ளதே! உண்ண நேரமில்லையே, உடுக்க நேரமில்லையே, மனைவி மக்களொடு பேச நேரமில்லையே, இரவில் நெடு நேர்ம் உழைக்க வேண்டியிருப்பதால் சரியாகத் துரங்கக்கூட நேரமில்லையே! ஐயோ! என்ன செய்வது? என்றெல்லாம், வினைச் சுமை தாங்காமல், அரற்றிக் கொண்டேயிருப்பார்கள். அப்படிப் பட்டவர்களை நோக்கித் திருவள்ளுவர், முதலில் ஒருவர் தாம் செய்யப் போகும் வினையினுடைய வலிமையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பார்.
2. வினை வலிமை
ஒரு வினையைத் தொடங்குமுன் நாம் அளந்தறியும் ஆற்றல்களில் முதலாவது வினை வலிமை. அஃதாவது அந்த வினை எவ்வளவு வலிமையுடையது என்டது. அந்த வேலையில் ஈடுபட எத்துணையளவு பணம் வேண்டும். எவ்வளவு உழைப்புத் தரல் வேண்டும். அதை முடிக்க எவ்வளவு காலம் பிடிக்கும் என்றெல்லாம் ஆய்ந்து பார்க்க வேண்டும். சும்மா எடுத்த எடுப்பிலேயே வெறுங்கையால் முழம் போடத் தொடங்கிவிடக் கூடாது. கையில் போதுமான பணத்தை வைத்துக் கொள்ளாமல் கடன் வாங்கிச் செய்துவிடலாம் என்று எண்ணிவிடக் கூடாது. அப்படி நல்ல வினைகளைக் கடன் வாங்கிச் செய்யவும் செய்யலாம். அப்பொழுது நம்பால் இரங்கியோ, நாம் செய்யப் புகும் வினையின் பெருமை தெரிந்தோ, நமக்குக் கடன் தந்துதவும் சிலராகிலும் இருக்கிறார்களோ என்று பார்க்க வேண்டும். பிறகு, யாரும் கடன் கொடுக்க முன்வரவில்லையே என்று வருத்தப்படவோ, வினைச்சுமை தாங்காமல் பாதியில் விட்டுவிட்டு இழப்பேற்படுத்திக் கொள்ளவோ கூடாது.
திருவள்ளுவர் வினைவலி (47) என்று வலியறிதல் அதிகாரத்தில் வலியுறுத்தும் முதல் வலிமை அதுதான். அதை நம்மால் செய்ய முடியுமா? என்று பார்க்க வேண்டும். ஒன்றுமில்லாமல் அதைச் செய்துவிடமுடியும் என்று இறங்கிவிடக்கூடாது. பிறகு பரமார்த்த குருவின் சீடர்கள் கதையாகிவிடும். இவ்விடத்தில் இன்னொன்றை நன்கு விளங்கிக் கொள்ளுதல் ரேண்டும். வினைவலிமை என்பது பொருளைக் குறிக்கும் சொல்லன்று. பொருள் வலிமை என்பது வேறு. ஒரு வினைக்கு நாம் எவ்வளவு பொருளை ஈடுபடுத்த வேண்டும் என்பதும் அது நம்மால் இயலுமா என்பதும் நோக்கி நம் வலிமையை உணர்வதும், வினை வலிமையுள்தான் அடங்கும். பொருள் இல்லாவிடில் நாம் பொருளுதவி பெறும் திறன் நமக்குள்ளதா என்று பார்ப்பது தன் வலியுள் அடங்கிவிடும். வினைவலி என்பது உடல், உழைப்பு, ஈடுபாடு இவற்றை மட்டும் பொறுத்தது அன்று. வினைச்சுமை என்பது நம்மால் தாங்கக் கூடியதா என்பதில் பொருள் அளவையும் அடக்குதல் வேண்டும். பொருள் தேவை என்பது வேறு. பொருள் அளவு தெரிதல் என்பது வேறு. ஒரு வினைக்குப் பொருள் வேண்டும் என்பதும் அது நம்மிடம் உள்ளதா என்பதும் பொருள் வலிமையைக் குறிக்கும். ஆனால் அதற்கு எவ்வளவு பொருள் தேவையாக இருக்கும் என்று ஆய்வதும், அச்சுமை நம்மால் தாங்கக் கூடியதா, அந்த வலிமை நம்மிடம் உண்டா என்று எண்ணிப் பார்ப்பதும் வினைவலிமையுள் அடங்கும். அவ்வாறு போதுமான பொருள் இல்லாவிடத்து அதைப் பிறரிடம் கடனாகப் பெறுவது தன் வலியுள் அடங்கும். இவ்வேறுபாடுகளை ஒருவர் மிக நுட்பமாக அறிந்து கொள்ளுதல் மிக நன்றாம்.
3. பொருள், கருவி, காலம்
இனி, அறியாமை அகலும்படி ஆய்ந்து எண்ணிச் செய்ய வேண்டிய கூறுகளுள் குறளாசிரியர் வினைவலியையும் ஒன்றாகக் குறித்துள்ளார்.
பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். (675)
இக்குறளுள் வினைவலி நான்காவதாகக் குறிக்கப் பெற்றுள்ளது. பொருள் முதலாவதாகக் குறிக்கப் பெற்றது அதன் இன்றியமையாமை கருதியே. தன் கையில் பொருளில்லாமல், மற்றவர் கையிலுள்ள பொருளையெண்ணி ஒரு வினையைத் தொடங்கிவிட முடியாது. நம் கையில் உள்ள ஒரு பொருளை அடிப்படையாக வைத்துத் தான் நாம் ஒரு வினையைத் தொடங்குதல் வேண்டும். அது நாம் அச்சமில்லாமல், குன்றின் மீதிருந்து கொண்டு, கீழே நடக்கும் யானைகளின் சண்டையைப் பார்ப்பது போன்றதாகும் என்பது குறள்.
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை. (758)
8. தன் வலிமை அறிதல்
1. அறியாமை
வலியறிதல் அதிகாரத்துள் திருவள்ளுவர் வினைவலியை அடுத்து, வினைசெய்யப் புகுவான் ஒருவன் அறிந்து கொள்ள வேண்டுவதாகக் குறிப்பிடுவது தன் வலிமையை அறிந்து கொள்ளுதல் வேண்டும் என்னும் அறிவையே மிகப்பலருக்குத் தன் வலிமை தெரியாது. கொஞ்சம் படித்தவனும் தனக்கு நிறையத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருப்பான். பிறரை விடத் தனக்கு அதிகமாகத் தெரியும் என்று நினைக்கும் அறியாமையே தலையாய அறியாமையாகும். இஃது, இந்தக் காற்றை நான் மட்டுந்தான் நுகர்கிறேன், இந்த வெயில் என்மேல் மட்டுந்தான் அடிக்கிறது. இப்படிப்பட்ட எண்ணத்தை நான் மட்டுந்தான் எண்ணமுடியும் என்று நினைப்பது போன்ற அறியாமையாகும். உலகில் படைக்கப்பெற்றுள்ள உயிர்கள் குறிப்பாக மாந்த உயிர்கள் அனைத்துக்கும் அறிவு, மன உணர்வு, இன்பதுன்ப நுகர்ச்சிகள் முதலிய அனைத்தும் பொதுவே. இயற்கை எல்லோருக்கும் தாயும் தந்தையும் இறைமையும் ஆகும். இந்நிலையில், நமக்கு மட்டுமே அறிவுண்டு என்று நினைப்பது போன்ற அறியாமை வேறிலது. இந்த உணர்வே அறிவின் தொடக்க உணர்வாகும். எனவே, நமக்கு எல்லாம் தெரியும் என்றோ, நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்றோ நினைக்கக் கூடாது. எல்லாவற்றிலும், நம்மைவிட வல்லவர்களும் இருக்கின்றார்கள். நல்லவர்களும் இருக்கின்றார்கள். இனி, அதற்காக நாம்தாம் எல்லோருக்கும் தாழ்ச்சி என்று நினைத்து விடவும் கூடாது. நம்மை விட வல்லவர்கள் எப்படி உண்டோ, அப்படியே நம்மை விட வல்லமை குறைந்தவர்கள் அல்லது நல்ல தன்மை குறைந்தவர்களும் உலகில் உளர். இப்படித்தான் ஒவ்வொருவரின் நிலையும். நாம் படித்த படிப்புக்கு அல்லது கற்ற கல்விக்குக் கீழே படித்தவர்களும் உண்டு. மிக மிக மேலாகப் படித்தவர்களும் உண்டு. இந்த ஏற்றத்தாழ்வு அவரவர்கள் முயற்சியால் வருவது. தொடக்கத்தில் எல்லோரும் ஒரு நிலையில்தான் இருந்தோம். பலர் பலபடியான சூழல்களால், முயற்சிகளால் தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள். பலர் நல்ல சூழல் வாய்க்காமையாலும் முயற்சியின்மையாலும் தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்கள். எனவே, இதன் தொடக்கம், வேறுபாடு முடிவு இவை பற்றியெல்லாம் நாம் எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிராமல், நம் அறிவு, முயற்சி, உழைப்பு, ஊக்கம் இவற்றில் தாழாமல் ஈடுபட்டு முன்னேறுவதைப் பற்றியே சிந்திக்க வேண்டும். உலகில் சிறப்பான முயற்சி, ஊக்கமுடையவர்களே வெற்றி பெறுகிறார்கள். நாமும் எப்பொழுதும் ஊக்க முடையவர்களாக இருத்தல் வேண்டும்.
2. தன்னை அறிதல்
ஆனால், நம்மை, நம் முயற்சியை, நம் திறமையை அளவுக்கு மீறி மதிப்பிட்டு, ஒரு வினையில் செயலில் இறங்கிவிடக்கூடாது. நம் திறமையைச் சரியாக மதிப்பிட்டுக் கொள்வதில்தான் நம் வெற்றியே அடங்கியிருக்கிறது. தம் திறமையைச் சரியாக மதிப்பிடாமல் அளவுக்கு மீறித் தம் ஆற்றலை மதிப்பிட்டுத் தம் வலிமைக்கு மீறிய வினைகளில் இறங்கி, ஈடுபட்டு அவ்வினைகளின் சுமை தாளாமல் இடையில் அவற்றை விட்டு வெளியேறி, மனம் உடைந்து போனவர்கள் இவ்வுலகில் மிகப் பலர் என்று திருக்குறள் அறிவுறுத்துகின்றது.
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர் (473)
3. உண்மையான திறமையும் அறிவும் மதிக்கப்பெறும்
உலகில் அளவுக்கு மீறிய போட்டிகளும், பொய்ம்மைகளும் என்றும் இருப்பது இயல்பு. இவற்றுக்கிடையில் நேர்மையாளர்களும், உண்மையாளர்களும் பின்தங்கிப் போவதும் ஒரு வகையில் உண்மை. ஆனால், அதற்காகத் திறமை என்றுமே மதிப்பிழந்து போய்விடாது. திறமைக்கும் அறிவாண்மைக்கும் என்றுமே மதிப்பு உண்டு. உண்மையான திறமையையும் பொய்யிலாத அறிவையும் உலகம் போற்றவே செய்யும். எனவே, திறமையுடையவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளும் பொழுது, தங்கள் தகுதி நிலைகளை ஒருவாறு தாங்களே உணர்ந்து வெளிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும் அளவுக்கு மீறித் தங்களை மதிப்பிட்டுக் கொள்ளக்கூடாது. அம்மதிப்பீட்டால் தங்களைத் தாங்களே வியந்து கொள்ளவும் அதனால் செருக்கடையவும் கட்டாது.
4. தன்னால் முடிந்ததில் ஈடுபடவேண்டும்
அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும். (474)
தன்னை வியந்து அளவுக்கு மீறி ஒரு வினையிலீடு படுபவர்கள், அவ்வினை கெடுதலால், தாமும் விரைந்து கெடுவார்கள் என்று எச்சரிக்கை கொடுக்கின்றது இக்குறள். எனவே தன் வலிமையைத் தான் உணர்ந்து, தன்னால் முடிந்த வினைகளில் மட்டும் ஒருவன் ஈடுபட வேண்டும். இரவு பகலாகக் கண்விழித்துச் செய்யும் வினைகளில், அதற்குத் தக உடல் வலிவற்றவன் ஈடுபடுதல் கூடாது. அப்படியே தன் அறிவுக்கு மிக மேம்பட்ட ஒரு துறையைப் பற்றி ஒருவன் ஒரு நூலெழுதுவானானால், அந்நூலை உலகம் மதிக்காது. பெருமைப்பட நினைக்காது. மாறாக இழிவாகவே கருதும்.
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளா அறிவுடை யார் (404)
போதுமான நூலறிவின்றி, ஒரு துறையில் ஈடுபடுதல் அல்லது அறிந்தார் அவையின் கண் அது பற்றிப் பேசுதல், அரங்கின்றி வட்டாடுதல் (தாயம் போலும் விளையாட்டு போன்றது என்பர் திருவள்ளுவர்.
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல் (40)
5. தெரியாததில் ஈடுபடவே கூடாது
மேலும் ஒன்றைச் சரிவரக் கல்லாமல், அது கல்வியோ தொழிலோ எதுவாகட்டும், ஒன்றில் ஈடுபட்டு ஒழுகுதல் அல்லது தோல்வியுறுதல், உலகினரை இவனுக்கு ஒன்றுந் தெரியாது என்று அவனுக்குள்ள இயல்பான அறிவு நிலையைக் கூடக் குறைத்து மதிப்பிட்டு, ஐயம் கொள்ளச் செய்துவிடும்.
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற
வல்லதுTஉம் ஐயம் தரும். (845)
எனவே, நம் அறிவையும், திறமையையும் அளவிறந்து, மிகுதியாக மதிப்பிட்டுக் கொண்டு எந்தச் செயலிலும் இறங்கிவிடக் கூடாது. நமக்குத் தெரிந்த நம்மால் முடிந்த, தம் வலிமைக்குப் பொருந்திய செயல்களிலேயே, நாம் துணிந்து இறங்குதல் வேண்டும். இக்காலத்தில் ஏற்படும் வினைக் கோளாறுகளில் முக்காற் பங்கு இத் தவறான மதிப்பீடுகளாலேயே ஏற்படுவதாகும் என்று அறிதல் வேண்டும். தன் வலியறிதல் அறியாமை, செருக்கு ஆகியவற்றின் கரணியமாக மிகுதியும் தவறாக உணரப் பெறும் உணர்வாகலின், இதை முதலில் நாம் நன்கு உணர்ந்து செயல்படுதல் இன்றியமையாதது என்க.
9. எதிர்ப்புநிலை வலிமையறிதல்
1. ஒவ்வொரு வினைக்கும் ஒர் எதிர்வினை உண்டு
வினைசெயப் புகுவான், தன் வலியைத் தானே நன்குணர்ந்த நிலையில், அந்த வினையில் துணிவுடன் ஈடுபடலாம். ஆனால் அவ்வாறு ஈடுபடுமுன், அவ்வினைக்கு முன்னாகவுள்ள எதிர்ப்பு நிலைகளையும் அறிந்து கொள்ளுதல் மிகவும் இன்றியமையாதது. உலகில் எதிர்ப்பின்றி எந்த இயக்கமும் இல்லை. ஒவ்வொரு வினைக்கும், அதே ஆற்றலுடைய நேர் எதிர்வினையுண்டு என்பது அறிவியல் கோட்பாடு. இயற்கை வினைகளுக்கு மட்டுமின்றி, மாந்த முயற்சிகளுக்கும் எதிர்ப்பு வினைகள் உண்டு. வினையும் அதற்கு எதிர்வினையும் சேர்ந்துதான் வினையியக்கம் உருவாகிறது. மின்சாரத்தில் நேர் மின்னாற்றல் எதிர் மின்னாற்றல் என இருவகை ஆற்றல் நிலைகள் உண்டு என்பதைப் பலரும் அறிவர். இவை இரண்டும் சேர்ந்த பின்தான் மின்னாற்றல் இயங்குகிறது. அது போலவே ஒரு வினை யியக்கத்திற்கு எதிர்ப்பு வினையியக்கம் மிகவும் இயல்பானது. இவ்விடத்தில் இயற்கையமைப்பின் ஒர் இயக்கக் கூறை நாம் நன்கு உணர்ந்து கொள்ளல் வேண்டும், எதிர்ப்பின்றி எந்த இயக்கமும் சிறப்புறாது. இஃது ஓர் இயற்கைத் தேர்வு நிலை.
2. எதிர்ப்பு இயற்கையே
ஒருவன் ஒரு வினை செய்யப் புகுகையில் எதிர்ப்பு வராமல் இருப்பின் இயற்கைத் தூண்டுதல் இராது. எனவே, எதிர்ப்பு என்பது ஓர் இயற்கைத் தூண்டுதலே. வினையில் ஈடுபடுவானை, அவ்வெதிர்ப்பு நிலை, அவ்வினையில் நன்கு அழுத்தி ஈடுபட வைக்கிறது. அவனை அதற்குத் தகுதியுடையவனாக்குகிறது. இல்லெனில் அவன் ஊக்கம் குறைந்து போவான். எதிர்ப்பு நிலை உருவாக உருவாகத்தான் அவன் அவ்வினையில் படிந்து ஈடுபட முடியும். உள்ளூக்கம் பெற முடியும். இயற்கை, அவ்வெதிர்ப்புகளை உருவாக்கும் வகையில் ஒருவனை அவ்வினைக்கும் தகுதியுடையவனாக்குகிறது. அவ்வெதிர்ப்பு இல்லையெனில், அவன் அவ்வினைக்கண் மிகவும் ஈடுபாடு குறைந்தவனாகப் போய்விடுவான். அவன் ஈடுபாட்டை மிகுவிக்கவே, இயற்கை அவன் செய்யும் வினைக்கு எதிர் வினைகளைத் தோற்றுவிக்கிறது. எதிர் வினை தோன்றும்பொழுது, ஒருவன் தன் வினையில் மிகுந்த கவனம் செலுத்துகின்றான். மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றான். எங்குத் தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சுகின்றான். எனவே அவன் வினையில் விழிப்பாயிருக்கின்றான். இல்லெனில் அவனுக்கு ஊக்கம் குறையும். கவனம் குறையும். எச்சரிக்கை இல்லாது போகும். இந்நிலையில் அவ்வினை வலுக் குறைந்து, வினை வெறுமை தோன்றுகின்றது. இவ்வினை வெறுமை உண்டாகாமல் இருக்கவே இயற்கை எதிர்ப்புகளை உருவாக்கி, அவன் ஊக்கத்தை மிகுதிப்படுத்தி, அவனை அவ்வினையில் மேன்மேலும் ஆழ்ந்து போகின்ற வல்லமையை உருவாக்கித் தருகின்றது.
3. எதிர்ப்பு பல முனைகளில் இருக்கும்
மாந்த முயற்சிகளில் இவ்வெதிர்ப்பு நிலை பல முனைகளிலிருந்து வரும். ஒருவனுக்கு அவன் செய்யும் வினைகளில் எதிர்ப்புத் தோன்றவில்லையானால், அவன் அவ்வினைக்குத் தகுதியுடையவனாக ஆக மாட்டான். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சுகின்றவன், அவன் தொடங்கிச் செய்கின்ற வினையை ஈடுபாட்டுடன் செய்ய மாட்டான். எதிர்ப்புகளைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை ஒருவனுக்கு இருந்தாலொழிய, ஒருவன் ஒரு செயலில் படிந்து ஈடுபட முடியாது. எதிர்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் முயற்சிகளில் அதன் அறிவை இயற்கை பரவலாக்குகிறது. ஆழமுடையதாக்குகிறது. அதனால் மேலும் மேலும் அவ்வினையைச் செய்ய அறிவுடையனாகிறான்; ஆற்றலுடைய வனாகிறான்; அவ்வினையின் நெளிவு சுழிவுகளை யெல்லாம் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறான். ஒருவன் ஒரு வினையைத் தொடங்கும் பொழுதே, அது பற்றிய எல்லா நிலைகளையும் தெரிந்தவனாக இருப்பதில்லை. ஏதோ ஒர் ஊக்கத்திலும் ஆர்வத்திலும் தேவையிலும் ஒரு வினையை ஒருவன் தொடங்குகிறான். ஆனால் அவன் அவ்வினைக்கு முழுத் தகுதி படைத்தவனாக அப்போது இருப்பதில்லை. அவனை முழுத் தகுதி படைத்தவனாக ஆக்குவதற்கே இயற்கை அவனுக்கு எதிர்ப்புகளை உருவாக்குகிறது. அவன் அவ்வெதிர்புகளுக்குத் தன்னை ஈடுகொடுத்துக் கொண்டு, அவ்வினையில் மேன்மேலும் ஈடுபடத் தன்னை அணியமாக்கிக் கொள்கிறான். அவன் அவ்வினையில் மேலும் மேலும் ஈடுபட ஈடுபட, எதிர்ப்பு இன்னும் வலிவாகிக் கொண்டே வருகிறது. எதிர்ப்புகள் வலிவாக வலிவாக, அவன் மனவலிமையும் மிகுகிறது. உடல் வலிமையும் தோன்றுகின்றது. பல்வேறு அறிவு நிலைகளும் அவனுக்குப் புலப்படுகின்றன.
4. எதிர்ப்பு இயற்கை ஆசிரியன்
இயற்கை, இவ்விடத்தில் அவனுக்கு ஆசிரியனாக இருந்து கொண்டு, மறைமுகமாக, ஒரு வினையில் பலவகையான உத்திகளையும் அவனுக்குக் கற்பிக்கிறது. நாளடைவில் அவன் அத்துறையில் தெளிந்த அறிவுடையவனாகிறான். அவ்வினைக்குத் தகுதியுடையவனாகிறான். இயற்கையின் இந்த நுட்பமான போங்கு நிலையை ஒருவன் உணர்ந்து கொள்வானாகில், அவன் அவனுடைய முயற்சிகளில் எதிர்ப்படும் எதிர்ப்புகளையும் இடர்களையும் கண்டு கொஞ்சமும் மனம் சோர்ந்து போக மாட்டான். மாறாக அவன் எந்த நொடிப்பொழுதிலும், எந்தப் படிநிலையிலும் எதிர்ப்புகளையும் இடர்களையும் அவனே இரு கை நீட்டி எதிர்கொள்வான். ஏதோ இயற்கையின் நுணுக்கம் ஒன்றைக் கற்பிக்கவே அவ்வெதிர்ப்புகள் வருவதாக அவன் மன மகிழ்வு கொள்கிறான்.
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல் (627)
என்பார் திருவள்ளுவர். இடும்பைகள் துன்பங்கள் அல்லது எதிர்ப்புகள்) மாந்தனாய்ப் பிறந்த ஒவ்வோர் உடல் இயக்கத்திற்கும் உண்டு. உடலை வருத்தித் துன்பந் தருவதே அவற்றின் இயற்கை கொள்கை. இதை அறிவினால் உணர்ந்து கொண்டு மனக்கலக்கம் கொள்ளுதல் கூடாது என்று இக்குறள் அறிவுறுத்துகின்றது.
5. இன்பத்தை மட்டும் நாடக்கூடாது
மேலும், உடம்பு இன்பத்தை மட்டுமே நாடக்கூடாது; இன்பத்தை நாடினால் வருந்துன்பம் சிறிதாயினும் மிகப் பெரிதாகத் தோன்றும். ஆகையால் எதிர்ந்து வருகின்ற பெருந் துன்பங்களையும் தடைகளையும், எதிப்புகளையும் இயற்கை என்று கருதி, அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை ஒருவன் கொண்டுவிட்டால், அவன் அவற்றால் துன்பப்படுவதும் இல்லையாகின்றது. இக்கருத்தைக் கீழே வரும் குறள் நன்கு எடுத்துக் கூறுகிறது.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன் (628)
எனவே இயற்கையால் வரும் இடுக்கண்களையும், மாந்தர்பாலிருந்து செயற்கையாக வரும் எதிர்ப்புகளையும் இடர்ப்பாடுகளையும் கண்டு ஒருவன் அஞ்சிவிடக் கூடாது. வினை செயலினின்று பின் வாங்கி விடக்கூடாது. ஒருவன் முனைந்து முன்னே செல்லச் செல்ல எதிர்ப்புகளும் துன்பங்களும் பின் வாங்கிப் போகும். துன்பத்திற்குத் துன்பம் வரும்படி நாம் நடந்து கொள்ளுதல் வேண்டும்.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர் (623)
என்பார் திருவள்ளுவர். இதற்கு, மனத் திட்பமுடையராய் விடாது முயலவே வினை முற்றுப் பெற்றுப் பயன்படும். படவே, எல்லா இடும்பையும் இலவாம் என்று பரிமேலழகர் பொருள் எழுதுவார். வினையை எதிர்த்து வரும் இடும்பைகள் பற்றியும் இடுக்கண்கள் பற்றியும் துன்பம் பற்றியும் பின்வரும் வேறு தலைப்புகளில் இன்னும் விரிவாகப் பார்ப்போம். இங்கு, ஒரு வினைக்கு மக்களால் வரும் எதிர்ப்பு நிலைகள் பற்றி இன்னும் சிறிது விளக்கமாகப் பேசுவோம்.
6. எதிர்ப்புகள் எப்படி எங்கிருந்து வரும் ?
ஒருவனை வினை செய்ய முற்படுங்கால் அவனை நெருங்கியிருக்கும் சிலராலும், அவனை எதிர்த்து நிற்கும் பலராலும் அவனுக்குப் பல வகையிலும் எதிர்ப்புகள் தோன்றும் அவனை எதிர்க்கின்றவர்கள் அனைவரும் அவனுக்கு மாற்றார் ஆகிவிடுகின்றனர். மாறுபாடான எண்ணங்களுடனும் செயல்களுடனும் இயங்குகின்ற அனைவரும், அவர்கள் அன்பர்களாயினும், எதிரிகளாயினும் அவர்கள் மாற்றாரே. அவர்களைப் பற்றி, வினை செய்யப் புகுவார்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். அப்படிப் பட்டவர்களின் அறிவு வலிமை, செயல் வலிமை, உடல் வலிமை, கருவி வலிமை முதலியவற்றை நாம் முதலில் அளவிட்டுத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். அவ்வலிமைகளை நாம் உணர்ந்து கொண்டால்தான் நம் வலிமைகளை அவற்றுக்கு மேலாகக் கொண்டு செலுத்தி, அவர்களின் எதிர்ப்புகளை முறியடிக்க முடியும் செயலிலும் இறுதியில் வெற்றி பெற முடியும்.
7. மாற்றான் வலிமையை உணர வேண்டும்
தன் வலிமையை ஒருவன் உணர்ந்து கொண்டால் மட்டும் போதாது. தன்னை எதிர்க்கின்ற, தன் செயலுக்கு எதிர்ச்செயலில் ஈடுபடுகின்ற மாற்றானின் வலிமைகளையும் நாம் கணித்தறிந்து தெரிந்து கொள்ளுதல் . வேண்டும். மாற்றான் வலிமையை ஆராய்ந்து வினை செய்தல் வேண்டும் என்பது திருக்குறள் (471), நம் செயலால் வரும் பயனை மட்டும் அளவிட்டு அச்செயலில் இறங்கி விடுதல் கூடாது. இடையில் வரும் இடையூறுகளையும் எண்ணிப் பார்த்துச் செயல் செய்தல் வேண்டும் என்பார் திருவள்ளுவர் (676)
நம் வினைக்கு மாற்றார் பிறர் எதிராக இருப்பதற்குப் பல கரணியங்கள் அடிப்படையாகவிருக்கும். அவர்கள் நம் மேல் கொள்ளும் பொறாமை, நம் வினையின் வளர்ச்சியால் அவர்கள் எய்தவிருக்கும் தளர்ச்சி, நம் அறிவூக்கத்தால் அவர்கள் கொள்ளும் மனக்காழ்ப்பு இதுபோல் பலவகையான அறிவு, மனம், செயல் தழுவிய கரணியங்களால், ஒரு செயலுகுக்குப் பிறரிடமிருந்து எதிர்ப்புகள் வருகின்றன. ஆனால் இக்கரணியங்கள் வெளிப்படையாகத் தெரியவரின், அவர்ளைப் பிறரும் அடையாளங் கண்டு கொள்வார் களாகையால், அவர்கள் அத்தகைய உள்முகக் கரணியங்களை வெளியே புலப்படுத்திக் காட்டாதவாறு, வேறு பலரும் அவர்களின் எதிர்ப்பை ஒப்புகின்ற வகையில் எல்லார்க்கும் வெளிப்படையாகத் தெரிந்த, நம் குணநலன்கள், அறிவு முனைப்புகள், செயல் ஊக்கங்கள் இவற்றைப் பிறரிடம் பிறழக் காட்டிக் குற்றஞ்சாட்டி, எதிர்ப்புகளை உருவாக்குகின்றனர். அவ்வெதிர்ப்புக் கருத்துகளுக்குத் துணை சேர்த்து, அவற்றுக்கு வலிமை சேர்க்கின்றனர். இத்தகைய வலிவான எதிர்ப்பு ஒரு வினைக்கு ஏற்படுவதால், அவ்வினை தடைப்பட்டுப் போகாமல், அதைச் செய்கிறவன், அவ்வெதிர்ப்புகளை முறியடிக்கத் தன் அறிவு, மனம், செயல் முறைகளை மேலும் வலிவாக்கிக் கொள்ளும் வழிவகைகளைச் செய்து கொள்ளுதல் வேண்டும். மனச் சோர்வு அடைந்துவிடக் கூடாது. மேலும் அறிவு முனைப்புக் காட்டுதல் வேண்டும். தான் செய்யும் செயலை மேலும் வலிமையாக்க என்னென்ன முயற்சிகள் செய்யப்பட வேண்டும் என்பதை ஆய்ந்தறிதல் வேண்டும். எதிர்க்கின்றவர்களின் அறிவு, மனம், செயல்வலிமை, கருவிகளை உணர்ந்து, அவை செயற்படும் வகைகளைக் கண்டறிந்து, அவற்றினும் கூடுதலான வலிமையுடன் தன் செயலைச் செய்து கொண்டு போதல் வேண்டும். அப்பொழுதுதான் இவன் செய்யும் செயல்கள் செவ்வனே நடைபெறும். செயல்களுக்கு ஏற்படும் மாந்த எதிர்ப்புகளால் ஒருவன் செய்கின்ற செயல்கள் தூய்மையுறும். செப்பமடையும். வலிவு பெறும் என்று ஒருவன் கருதிக்கொள்ளுதல் வேண்டும். மேலும் ஒரு செயலுக்கு ஏற்படும் எதிர்ப்புகள் அச்செயலுக்கு ஒருவகையில் கிடைத்த விளம்பரங்கள் என்றும் எண்ணுதல் வேண்டும். எதிர்ப்பாளர்களின் கருத்துகளுக்கும் செயல்களுக்கும் நாளடைவில் பிற வேறு எதிர்ப்புகள் ஏற்படும் பொழுது, அப்பிற வேறு எதிர்ப்புகள், முன் தொடங்கப்பெற்ற மூலச் செயலுக்கு நல்ல துணைகளாக அமைவதும், இயற்கை தரும் ஒரு வெற்றிப் பரிசாகும்.
10. துணை வலிமை அறிதல்
1. முதலில் எண்ண வேண்டுவது
தான் செய்யப் புகுகின்ற வினைக்கு எதிரானவர்களின் அறிவு, மனம், செயல் இவற்றால் வரும் எதிர்ப்புகளை நன்றாக உய்த்துணர்ந்து அறிந்த ஒருவன் மனச் சோர்வுறாது தன் வினைகளில் மேன்மேலும் ஊக்கமாக உழைத்தல் வேண்டும் என்பது பற்றி முன்னர் ஒருவாறு தெரிந்து கொண்டோம். இக்கட்டுரையில், வினைக்கு வரும் எதிர்ப்புகளைப் போல் அதற்கு வரும் துணை நிலைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
வலியறிதல் என்னும் அதிகாரத்துள், அறிய வேண்டிய வலிமைகளை நான்காகப் பகுத்த திருவள்ளுவப் பேராசான் துணை வலிமையை இறுதியில்தான் எண்ணிப் பார்த்தல் வேண்டும் என்று கூறுவார். வினை வலிமை, தன் வலிமை, மாற்றான் வலிமை இவற்றையே முறையாக முன்னர் எண்ணுதல் வேண்டும் என்னும் கருத்துள் பல உலகியல் அறிவு நிலைகள் பொதிந்துள்ளன. கூர்மையாகப் பார்ப்பார்க்கு இவை தெரியவரும். சிலர் தனக்கிருக்கும் வலிமையையே முதலாவதாகக் கருதிக் கொண்டு, அதைச் செய்ய என்னால் முடியும் என்று அளவிறந்த முனைப்புக் காட்டி ஈடுபடுவர். அது தவறு என்பது குறள் கொள்கை. முதலில் கவனிக்கப்பட வேண்டுவது, ஒரு வினையைப் பற்றிய தன்மைகளையே. அது பற்றிய அறிவு, உழைப்பு அழுத்தம், செயல் திறன் ஆகியவையே முதற்கண்டு அறியப் பெறவேண்டியவை.
2. அறிவும் அறியாமையும்
பொதுவாக நமக்கு எந்த வேலையும் செய்யத் தெரியும் என்னும் தவறான மனப்போங்கு ஒன்று உண்டு. அது தவறான சூழலால் எழுந்த அறியாமை முனைப்பாகும். அறிவு நிலையில் முதலில் கவனிக்கப்பட வேண்டியது அறியாமையே. நமக்கு என்னென்ன தெரியும் என்று எண்ணிக் கொண்டிருப்பதைவிட, என்னென்ன தெரியாதன என்று எண்ணிப் பார்ப்பதே அறிவுடைமையாகும். அறியாமையை அறிவதுதானே அறிவு. 'அறிதோறும் அறியாமை கண்டற்றால்' என்பார் திருவள்ளுவப் பெருந்தகை (குறள் 110). இக்கருத்து சொல்லப் பெறும் இடமும் மிக நுட்பமானது. அதைக் காலத்தால் அறிந்து கொள்ளுக. இங்கு அறியாமை என்பதே முதலில் அறியத் தக்கது என்று மட்டும் தெளிவாக அறிந்து கொள்வது மட்டும் போதுவதாகும் அறியாமையைத் தெரிந்து கொண்ட பின்னர்தான் அறிவுக்கே ஊக்கம் பிறக்கும். அறிவு முனைப்பு தோன்றும். அதன் பின்னரே அறிவு இயக்கம் தொடங்குகிறது. அறிந்து கொண்டதைப் பற்றி எண்ணிக் கொண்டிருப்பவனுக்கு அறிவு இயக்கம் இல்லை. நமக்குத் தெரிந்தது பற்றி எண்ணியவுடன், அறிவு அங்கேயே அமர்ந்து கொள்கிறது. நாம் நிற்கின்ற இடந்தான் நாம் தேடிப் போக வேண்டிய இடம் என்று நாம் தெரிந்தவுடன், நாம் ஏன் மேலே போகின்றோம்? அங்கேயே உட்கார்ந்து கொள்கிறோம். அதன் பின்னர் நாம் வேறோர் இடம் போக வேண்டியிருந்தால்தான் நாம் எழுந்து நடக்கத் தொடங்குவோம். அதுபோல் அறிவு, அறிவை அறிவதற்குப் பயன்படக் கூடாது. அங்கு அதற்கு வேலையில்லை. ஒளியுள்ள இடத்தில் விளக்குக்கு என்ன வேலை? என்ன தேவை? இருள் உள்ள இடத்தில்தான் அது பயன்பட வேண்டும். பயன்படும். அப்பொழுதுதான் அங்குள்ள இருளைப் போக்குதற்கு நாம் வைத்திருக்கும் விளக்கின் ஒளி போதுமா, போதாதா என்று தெரிந்து கொள்ள முடியும். அப்படித் தெரிந்து கொண்டால்தான், ஒரு வேளை ஏற்கனவே உள்ள விளக்கின் ஒளி போதாத விடத்து, வேறு ஒளி மிகுந்த விளக்கைத் தேடலாம். அல்லது அதனைச் செய்யத் தொடங்கலாம். உலகில் இதுவரை தோன்றிய அறிவுழைப்பாளரெல்லாரும் தம்தம் அறியாமையைக் கண்டு அதனை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு உழைத்து வெற்றி கண்டவர்களே ஆவர்.
3. மூன்று வகைத் தொழிலறிவு
எனவே, ஒரு வினையைத் தெரிந்து கொண்டோம் என்பது, அது பற்றிய அனைத்து அறியாமைகளையும் போக்கிக் கொண்ட ஒரு நிலையே ஆகும். ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலைக்குள் ஒரு நாளோ இரு நாட்களோ நுழைந்து விட்டு வெளிவந்தவுடன், அந்தத் தொழிலைப் பற்றிய அறிவு நமக்கு வந்துவிடாது. அறிவு மூவகைப்பட்டது. தொழிலறிவு. தொழில் செய்யறிவு, தொழில் திருத்த அறிவு என்பன அவை. ஒரு தொழிலைப் பற்றித் தெரிந்து கொள்வது தொழிலறிவு (Theory) ஆகும். அத்தொழிலை நன்கு திறம்படச் செய்வது தொழில் செய்யறிவு (Practical) ஆகும். அத்தொழில் செய்கின்றபொழுது நம் வகையாலோ கருவிகள் வகையாலோ ஏற்படுகின்ற இடைத் தவறுகளைத் திருத்தி, ஒக்கிட்டு (Repair) மேலும் அத்தொழிலைச் சரிவர இயங்கும்படி கட்டமைத்தல் பற்றிய அறிவு (Mechanical) தொழில் திருத்த அறிவாகும். இம்மூன்று வகையான தொழிற் கூறுகளும் படிப்படியாக வளர்ச்சி பெறுவனவாகும். எனவே, ஒரு வினை, அல்லது தொழில், அல்லது செயல் பற்றிய அறிவு பெறுவது, வினை செயப் புகுவான் ஒருவன் முதலில் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். வெல்லம் காய்ச்சும் வேலையில் ஈடுபடவேண்டும் என்று முனைபவன், வெல்லந் தின்னுவதை மனத்தில் நினைத்துக் கொண்டு செல்லக் கூடாது. அதைக் காய்ச்சி எடுக்கத் தெரியும் திறனை வைத்துத்தான் செல்லுதல் வேண்டும்.
4. பொருளே குறிக்கோளாக இருத்தல் கூடாது
இக்காலத்தில் பயன் கருதியே பலரும் தொழிலில் ஈடுபடுகின்றனர். கல்வி நோக்கமும் அப்படித்தான் உள்ளது. எந்தத் துறைப் படிப்புப் படித்தால் அதிகச் சம்பளம் உள்ள வேலை கிடைக்கும் என்று கல்வி கற்கப் புகின்றனரே தவிர, தமக்குள்ள இயற்கையறிவை, உணர்வை உணர்ந்து அது தொடர்பான கல்வி கற்றால்தான் தம் ஊக்கம் வெற்றி பெறும் என்று நினைப்பதில்லை. மாணவர்கள் மட்டுமல்லாது, பெற்றோர்களும் இதை நினைக்கத் தவறி விடுகின்றனர். எனவேதான், வாழ்க்கையில் பலரும் வெற்றி பெறுவதில்லை. பொருளைத் திருடியோ, ஏமாற்றியோ, கொள்ளை, கொலை செய்தோ ஈட்டுவது பெருமையன்று. அன்பில்லாமலும், தன்னை இழந்து கொண்டும், அறம் நோக்காமலும் ஈட்டிய பொருளை மற்றவர்களே கவர்ந்து கொள்வார்கள் என்பது உலக நெறி நூல் (1009). மேலும், அது கூறும் பின்வரும் கருத்துகள், பொருளை எவ்வாறேனும் ஈட்ட வேண்டும் என்னும் "கொள்கை"யுடையவர்கள் கவனிக்க வேண்டுபவையாகும்.
'பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் பயன் தராமல் விரைவில் அழிந்துப போகும் (1000). தீதில்லாமல் வந்த பொருளே நல்ல செயல்களுக்குப் பயன்பட்டு, அறத்தையும் இன்பத்தையும் தரும் (754). அன்பில்லாமலும் அருளில்லாமலும் ஈட்டப் பெறுகின்ற செல்வப் பெருக்கம் தீது. அதை வரவேற்கக் கூடாது (755). மனச் சீர்மையில்லாதவர்களிடம் வந்து சேரும் செல்வம் எல்லாவற்றையும் அழித்தொழிக்கும் வேலையையே செய்யும் (1009) என்பன பொய்யாமொழியாரின் புகழுரைகளாகும்.
எனவே, செல்வத்தை மட்டும் திரட்டும் நோக்கத்தில் கல்வியையோ, செயலையோ பயிலக்கூடாது. அறிவு நோக்கமும் அறநோக்கமும் செல்வப் பெருக்கத்தைப் பயனுடையதாக்கும். மகிழ்ச்சியுடையதாக்கும் என்று அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஆதலால், செயல் ஒன்று செய்ய நினைக்கும்பொழுது, அதனால் பணந் திரட்டுவதை மட்டும் முதல் நோக்கமாகக் கொள்ளுதல் கூடாது. பொருள் திரட்டுவதும் நோக்கங்கள் பலவற்றுள் ஒன்றாக இருக்கலாம் என்பது தவறாகாது. எனவே தான் வினையைத் தெரிந்து கொள்வது தான் வினை செய்யும் எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். வினைவலி எண்ணப் பெற வேண்டியவற்றுள் முதலானது என்று குறள் கூறும் கரணியதை நன்கு தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
5. எல்லாருமே துணைக்கு வரமுடியுமா?
இனி, தன் வலியும் மாற்றான் வலியும் அடுத்தடுத்து எண்ணப் பெற வேண்டியவை என்று கண்டோம். இவ்வரிசையில் எண்ணப் பெறும் இறுதி நிலையே துணைவலி என்பது திருவள்ளுவர் கருத்து. சிலர் தமக்கிருக்கும் நண்பர்கள் கூட்டத்தையே பெரிதாக முன் நினைந்து உடனே ஒரு தொழிலில் ஈடுபட்டுவிடுவர். இது தவறு என்று கடிகிறார் திருவள்ளுவர். உலகில் உள்ளவர்கள் அனைவருமே நண்பர்களாக அமைந்தாலும் அவர்களைக் கொண்டு ஒரு செயலைத் தொடங்கி வெற்றி கண்டுவிட முடியாது. அவர்களின் வலிமை நான்காம் தரத்தினதே என்று கருதுதல் வேண்டும். ஏனெனில் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருமே தம் தம் வழியில் வாழ முற்படுவார்கள் இல்லையா? எனவே அவர்கள் எல்லாரும் நமக்குத் துணைவருவார்கள் என்பதை எண்ண முடியுமா ? அவரவர்கள் செயலைக் கவனிக்கவே அவரவர்களுக்குச் சரியாக இருக்கும் என்பதுடன், இனி அவரவர்களுக்கென்று தனித்தனியாகச் சுற்றமும் உற்றமும் உண்டு. நண்பர்கள் இருவரும் இளமைப் பருவத்தில் தங்களைத் தாங்களே அறிந்தவர்களாகையாலும், பொருளிட்டும் முயற்சி அக்கால் தலையெடுக்காதிருக்குமாகையாலும், அவர் தம்மை வந்து சூழும் குடும்பச் சுமைபற்றி அவர்கள் அக்கால் உணரார் ஆகையாலும் ஒருவர் பணிக்கு ஒருவர் துணை நிற்பதாயும் தோள் கொடுப்பதாயும் மிக்க ஆரவாரமாய் அக்கால் பேசிக் கொள்ளலாம். ஆனால் காலம் செல்லச் செல்ல ஒருவரினும் ஒருவர் திருமண அமைப்பு, பொருள்நிலை, அறிவுநிலை, செயல்நிலை இவற்றால் சிறந்து விளங்க விளங்க, மற்றவர்க்குப் பொறாமையும், காழ்ப்பும், கெடு நினைவும், இகலும், பகையும் வந்து மனத்தை இருளாக்கி விடுகின்றன. அக்கால், அவர்கள் தங்கள் ஒருவர்க்குள் ஒருவர் துணையாகி நில்லார். பகையாகி நிற்பர். வெளிப்படப் பகையென்றில்லையானாலும், மனத்துள்ளேனும் மேற்கூறிய தீயுணர்வுகள் வந்து அலைமோதிக் கொண்டிருக்கும். அதனால்தான் துணைவலிமையை இறுதியில் வைத்து நாலாம்படியாக வைத்துப் பேசுவர் திருவள்ளுவர் பெருமான்.
6. நண்பர்களின் தன்மை
இனி, ஒரு வினைக்குத் துணையாக வந்து வாய்ப்பவர்கள் அல்லது நண்பர்கள் - அனைவருமே நல்லவர்களாக இருந்துவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. நண்பர்கள் என்போர் எப்பொழுதுமே அல்லது பெரும்பாலும் இடையில் வந்தவர்களாகவே தாம் இருப்பர். பிள்ளைப் பருவந்தொட்டு, இறுதிக் காலம் வரையில் நண்பர்களாக அமையும் வாய்ப்பு, இலக்கம் பேர்களில் ஒருவர்க்குக் கூட வாய்ப்பது அருமை. எனவே, பெரும்பாலானவர்கள் பலவேறு சூழல்களில், பலவேறு கொள்கைகளுக்காக, பலவேறு தேவைகளின் பொருட்டு, நண்பர்கள் ஆனவர்களாகவே இருப்பர். அவர்களெல்லாரும் சூழல்கள் மாறும்பொழுது, கொள்கைகள் வலிவடையும் பொழுது, அல்லது துன்பம் நேரும்பொழுது, தேவைகள் நிறைவு பெற்றவுடன், அல்லது நிறைவு பெறாது என்று தோன்றியவுடன், நட்பில் தளர்ந்து அல்லது விலகி அல்லது பகையாகிப் போய்விடுவார்கள். அரசியல் காரணமாக, கொள்கைகள் காரணமாக, அல்லது கட்சிகள் காரணமாக, பொருள் காரணமாக, அல்லது கலைகள் தொடர்பாக, அல்லது குடும்ப ஈடுபாடு அடிப்படையில், தொழிலடிப்படையில் நட்பு வைத்த பெரும்பாலார்களின் நிலை இப்படியே. அன்புமுறையாக நட்பு வைத்தவர்களே பிற எக்காரணங்கள் தொடர்பாகவும் விட்டு விலகாமல், கை நெகிழ்த்துக் கொள்ளாமல் என்றும் இருப்பர். இவற்றுள் எதிலும் தொடர்பில்லாமல் அறிவு அடிப்படையில் நட்புச் செய்வோரும் உண்டு. அவர்களுக்கிடையிலும் நாளடைவில் இருவர் உள்ளங்களையும் இறுகச் செய்யும் அன்பு தோன்றாவிடில் பிளவு ஏற்படுவது உறுதியே. அறிவு மட்டுமே ஒரு நட்புக்குக் காரணமாக இருந்து விடுவது இயலாது. அறிவு வேறுபாட்டுணர்வுகளை வளர்க்கக் கூடிய ஒருணர்வு பகுத்தாய்கின்ற தன்மையது அது. எனவே அறிவொன்றே காரணமாக நட்பு வைப்பவர்களின் தொடர்பு விரைவில் பிளவுப்பட்டுப் போக வாய்ப்பேற்படும். அந்நிலைகளிலெல்லாம் அன்புணர்வைத் துணையாகக் கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்ளாதவர்களிடம் பகையுணர்வு கூடக் கால்கொள்ளும். பகை பின்னர் கடும் பகையாக மாறி, ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளும் மனப்பான்மையைக் கூடத் தோற்றுவித்து விடும்.
7. நட்பின் சிறப்பு
உண்மையான நட்பு என்பது உயிரொடு கலந்த அன்புணர்வால் தோன்றுவது. அது பல பிறவித் தொடர்புடையது. உலகில் உள்ள எல்லாத் தரப்பினருக்கும் நட்பு அடிப்படையானது. தேவையானது. நட்புச் செய்யாத மாந்தன் ஒருவனும் இருக்க முடியாது. ஒருவன் அரசனாயிருக்கலாம். அமைச்சனாய் இருக்கலாம். தொழிலாளியாக விருக்கலாம். படை வீரனாய் இருக்கலாம். அதிகாரியாக விருக்கலாம். இன்னும் ஏழையாக, பணக்காரனாக, கலைஞனாக, உழவனாக, திருடனாக ஒழுக்கமில்லாதவனாக, இன்னும் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நண்பனில்லாதவனாக இருத்தல் முடியாது. இவ்வுலகில் உள்ள எல்லாருக்குமே நண்பர்கள் இருந்தாக வேண்டும். மக்கள் அனைவர்க்குமே நட்புணர்வு பொதுவானது. ஆகவே, நட்பைப் பற்றி அனைவரும் விரிவாக, நுட்பமாக, கட்டாயமாகச் சில உண்மைகளைத் தெரிந்து கொண்டே ஆகல் வேண்டும். எனவேதான், இதன் இன்றியமையாமையைக் கருதிய திருவள்ளுவப் பேராசான், தாம் எடுத்துக்கொண்ட பிற பிற செய்திகளைப் பற்றியெல்லாம், ஒரதிகாரத்தின் பத்துக் குறள்களிலோ, இருபது அல்லது முப்பது குறள்களிலோ விளக்கிச் சென்றவர் நட்பைப் பற்றி மட்டும், நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு, இகல் முதலிய ஆறு அதிகாரங்களில் வெளிப்படையாகவும், நேரடியாகவும், பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினஞ் சேராமை, பகைமாட்சி, பகைத் திறத்தெரிதல், உட்பகை, பெரியாரைப் பிழையாமை முதலிய ஆறு அதிகாரங்களில் மறைமுகமாகவும், நுட்பமாகவும் விளக்கியதுடன் நில்லாமல் பெண்டிரொடு கொள்ளும் நட்பு பற்றி, பெண்வழிச் சேறல், வரைவின் மகளிர் ஆகிய இரண்டு அதிகாரங்களிலும், நண்பர்கள் வழியாகத்தான் ஒருவன் கட்குடியனாகவும், சூதாடியாகவும் ஆகின்றான் என்பதைத் தெளிந்து, கள்ளுண்ணாமை, சூது ஆகிய இரண்டு அதிகாரங்களிலும், இவற்றால் நோய்வாய்ப்பட்டவன் விடுபட மருத்துவர் நட்பை நாட வேண்டும் என்று கருதி மருந்து என்னும் ஒரதிகாரத்தையும் ஆக மொத்தம் பதினேழு அதிகாரங்களில், நூற்றெழுபது குறட்பாக்களில் அளாவியும் விளக்கிப் போந்ததுடன், நட்பு என்றொரு தனியியலையும் வகுத்துக் கூறினார் என்று அறிதல் வேண்டும். இவையன்றி அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்நன்றியறிதல், பிறனில் விழையாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, ஈகை முதலிய அதிகாரங்களிலும் நட்புச் செய்வானுக்கு இருக்க வேண்டிய பண்புகள், எதிர் நேரும் குறைகள் இவற்றை யெல்லாம் பொதுவாகவும் அதேபொழுது மிகமிக விளக்கமாகவும் கூறிய கருத்துகள் அனைத்தும் கவனிக்கப் பெற வேண்டியனவாகவும் சுட்டுகின்றார்.
8. வினைத் தொடர்புள்ள நட்பு
இனி, வினை செய்யப் புகுவானுக்கும் நட்பு துணையாக வேண்டியுள்ளது. இது பற்றி முன்னரே ஒரளவு கூறப்பெற்றது. வினை செய்யப் புகுவானுக்கு ஏற்படும் தட்பு வினைத் தொடர்புடையதாகத் தான் இருக்க முடியும். இருத்தல் வேண்டும். எனவேதான் அதை நட்பு என்று குறியாது, துணை என்று குறிப்பிடுவார் குறளார். திருக்குறளில் துணை என்ற சொல், அளவு என்னும் பொருளைத் தவிர, இரண்டு பெயர்களை மட்டுமே சுட்டும் சொல்லாக அமைந்துள்ளது. ஒன்று மனைவி, இரண்டு துணைவர். அஃதாவது வினைக்குத் துணையாக வரும் நண்பர். மனைவியைத் துணை என்றது, இல்லற வாழ்க்கையில் அவள் இறுதி வரையில் வர வேண்டியவள் என்பதற்காகவும், அவள் தன் வாழ்வில் பாதி உரிமை பெற்றவள் அடிமையல்லள் - என்பதற்காகவும், தன் இன்ப துன்பங்களில் அவள் ஒருத்திக்குத்தான் பகிர்ந்து கொள்ளும் பங்குண்டு என்பதைக் குறிக்க வேண்டியும் என்று கருதுதல் வேண்டும். இனி, நண்பனைத் துணை என்றது அவன் தான் செய்யப் புகும் வினைக்கு மனைவி போல் நெருங்கிய தொடர்புடையவன். அச்செயலால் வரும் ஊதிய இழப்பில் பங்கு கொள்ளற்குரியவன், தம் வினைக் கமுக்கங்களைப் பகிர்ந்து கொள்ளத் தகுதியுடையவன் என்பதன் பொருட்டே என்று தெளிதல் வேண்டும்.
9. தன்னலமற்ற அன்பும்
அறிவும் தனியாக வினை செய்வதுடன், ஒரு துணையொடு வினை செய்வது பொருள்நிலைக்கும் ஏற்றது. எனவேதான், துணை நலம் ஆக்கம் தரும் (55) என்று திருவள்ளுவர் கூறுவார். துணையிருந்து வினை செயத் தொடங்கினால் இழப்பிலும் பகுதி ஊதியம் ஆகும். ஆனால் வினைக்குத் துணையாக வருபவர் வெறும் வினைத் துணையாக மட்டும் இராமல் ஒரளவு நட்புணர்வும் கொண்டு விளங்குதல் வேண்டும். நட்புணர்வுக்கு அன்பே அடிப்படை, கரவான அன்பும், செருக்கான அறிவுணர்வும் என்றுமே வினைக்குத் துணையாக வருதல் இயலாது. தன்னன்பே அன்பு என்பது தன்னறிவே அறிவு என்பது போலும் ஒரு செருக்குணர்வினதே! உண்மை அன்புள்ளவனே பிறரையும் அன்புள்ளவர்களாகக் காண முடியும் அதுபோல் உண்மையான அறிவுள்ளவனே பிறரிடம் அறிவு இருப்பதாகக் கருத முடியும். அன்புக்கு எல்லையில்லை. அது பரந்துபட்டுப் பாயும் நீர் போன்றது. அதை எல்லைப்படுத்தி, அணைக்கட்டித் தேக்குங்கால் அது தன்னலமாக மாறுகிறது. அது போல அறிவுக்கும் எல்லையில்லை. அதுவும் பரந்துபட்டு எரியும் தீப் போல்வது. அதை எல்லைப்படுத்தி சுவர்கட்டி அடக்குங்கால் அதுவும் தன்னலத்திற்கே பயன்படுகிறது. தன்னலம் என்பது தனக்கும் தன்னைச் சார்ந்தவர்க்குமே பயன்படும் ஒரு குறுகிய உணர்வு எல்லைகளைத் தாண்டி வெளியே வந்து, பலருடன் ஊடாடுபவனே . உறவாடுபவனே - தன்னலமற்ற அன்பினனாகவும், தன்னலமற்ற அறிவுடையவனாகவும் இருக்க முடியும். அப்படிப்பட்ட மனப் பாங்குள்ளவனே வினைக்குத் துணையாகும் தகுதியுள்ளவன் ஆவான். அவனே வினைக்குத் தக்கவன். அவனே பிறரொடு கலந்து பழகும் தன்மையுள்ளவன். அவனே செயலுக்குரிய வாய்ப்பைப் பெற முடியும். உருவாக்கவும் முடியும்
10. பொதுவுணர்வு தேவை
செயல் என்பது ஒரு குறுகிய இடத்தில் மட்டும் அடங்குவதாக இருப்பின் அது பெரும்பாலார்க்குப் பயனளிக்காது. மாந்தனிடம் தோன்றும் எந்த உணர்வுமே பொதுவுணர்வாக மாறும் தன்மையுடையது. தான் ஒழுக்கமாக இருக்கும் உணர்வுடையவன், தன்னளவில் மட்டும் ஒழுக்கவுணர்வுள்ளவனாக இருந்தால் போதாது. தன்னைச் சார்ந்தவர்களிடமும், அவர்களையும் கடந்த பிறரிடமும் அந்த ஒழுக்கவுணர்வை வருவித்தல் வேண்டும். தன்னை மட்டும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பது ஒளி ஆகாது. பிறவற்றையும் வெளிப்படுத்திக் காட்டவல்லதே ஒளி மேலும் அஃது எவ்வளவுக் கெவ்வளவு மிகுதியான பொருள்களை வெளிப்படுத்தவும், ஒளிப்படுத்தவும் வல்லதோ, அந்த அளவுக்கு அது பேரொளி. அப்பேரொளி போலவே மாந்தனுக்குள்ள அன்பு, அறிவு, பண்பு, பயன் முதலியவை பரந்துபட்டு விரிந்து உலகை மலரச் செய்தல் வேண்டும். அம்முயற்சியே வாழ்க்கை எனப் பெறும். இவை தவிர்த்துத் தான் தானாக மட்டுமே இருப்பது வாழ்க்கையன்று. ஒருவன் தன்னையிழந்து தாமாக மாறுவதையே அன்பு வாழ்க்கை, அருள் வாழ்க்கை, அற வாழ்க்கை, வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை என்று கூறுவர் சான்றோர். அத்தகைய வாழ்க்கையை நோக்கிப் போய்க்கொண்டிருப்பவனே மாந்தத் தகுதியுள்ளவன். அவனே தக்கவன். அத் தக்கவனைத் தேர்ந்தே ஒரு வினைக்கு செயலுக்குத் துணையாக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் உலகில் செய்யப் பேறும் வினைகள் அனைத்தும், பொதுநலம் கருதியதாகவே இருத்தல் வேண்டும். பொது நலத்துள் தன்னலமும் இயல்பாகவே அடங்குமாகலின் வினை நோக்கம் தன்னலத்தைக் கருதியதாக மட்டும் அமைந்துவிடக் கூடாது. அவ்வாறானால் வினைப் பயனும் குறுகியதாக அமைந்து விடும். தன்னையும் தன்னைச் சூழ்ந்திருக்கும் மக்களினத்தின் நலனையும் அளாவிட அமைந்ததாகவே வினைகள் இருத்தல் வேண்டுமாகலின், தக்கவர்களையே அவ்வினைக்குத் துணவர்களாக அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். தக்க துணைவர்கள் அமைத்துக் கொண்டு இயங்கும் ஒரு செயலைப் பகைவராலும் அழித்துவிட முடியாது என்பது திருவள்ளுவம்.
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில் (446)
11. பொருள் தேடல்
1. வினைக்கு முதல் தேவை பொருளே
வினை செய்யப் புகுந்தவன், அதற்குரிய துணை ஒன்றைத் தேர்ந்தபின், வினைக்குத் தேவையான பொருளைத் திரட்டுவதில் தன் கருத்தைச் செலுத்துதல் வேணடும். வினைக்குப் பொருள்தான் முதல் தேவையாகக் கருதுவார் திருவள்ளுவர்.
பொருள், கருவி, காலம், வினை, இடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல் (675)
என்பது குறள் பொருளில்லாமல் வினை செய்ய முடியாது. நிலமிருந்தால்தான் வேளாண்மை செய்ய முடிவதைப் போல், பொருள் இருந்தால்தான் வினையைச் செய்ய முடியும் பொருளை வைத்துத்தான் பொருளை ஈட்ட முடியும், சிறிது பொருளை வைத்துப் பெரும் பொருளை ஈட்டவல்ல ஒன்றே வினைத்திறன் என்று சொல்லப் பெறும். வினைக்குப் பொருள் கட்டாயம் தேவையென்பதால், பெரும் பொருள் தான் வேண்டும் என்பதில்லை. எந்த அளவினதாக இருந்தாலும், பொருள் வினைக்கு முதற்கருவி என்றே கருதல் வேண்டும். ஐந்து உருபாவைக் கொண்டு ஏழு உருபா ஈட்டலாம். ஏழு உருபாவை வினையினால் பத்து உருபாவாகப் பெருக்கலாம். பத்து பதினைந்தாகலாம். பதினைந்து இருபத்தைந்தாகப் பெருகலாம். இருபத்தைந்து நாற்பதாகலாம். இப்படிச் சிறு பொருளும் பெரும் பொருளுக்கு ஆக்கமாகும் அளவுக்கு நம் வினையும் வலியதாக உழைப்புடையதாக இருத்தல் வேண்டும். பெரும் பொருள் தேவை என்பதற்காகத் தொடக்கத்திலேயே கடன் பெறுதல் கூடாது. தன் கையிலுள்ள பொருள் சிறிய அளவாக இருப்பினும், அதுவே வினைக்குத் தக்கது. அயலான் கையிலுள்ள பொருளை நம்பி வினையில் ஈடுபடுவது, அக்கரையில் உள்ள படகை நம்பி ஆற்றில் இறங்குவதைப் போன்றது.
2. யானைப் போர்
வினை என்பது யானைப் போரைப் போன்றது என்பார் திருவள்ளுவப் பெருந்தகை. யானைகளுக்குள் நிகழும் போர் அண்டையில் நிற்கும் ஆளையும் அழித்து விடும் தன்மையது. வினைக்கிடையில் நிகழும் போராட்டம், அவ்வினை செய்வானையே அழிக்கும் தன்மையுடையது. அக்கால், அவன் அவ்வினைப் போராட்டத்தில் சிக்கி அழியாமல் இருக்க வேண்டுமானால், அடுத்தவன் கைப்பொருளை நம்பி இருத்தல் கூடாது. வினைக்கிடையில் எழும் போராட்டம், வினைத் தடை, கருவித்தடை, வினைஞர் தடை, காலத்தடை, இடத்தடை என்னும் ஐந்து கரணியங்களால் தோன்றும். இவ்வனைத்துத் தடைகளையும் பொருளால் நீக்கவியலும்.
யானைகளுக்கிடையில் நடக்கும் போரை அருகில் நின்று வேடிக்கைப் பார்ப்பவனுக்கு வரும் இடையூறுகளும் பலவாகும். போரிடும் யானைகளுக்குள் ஒன்று, அருகில் நிற்பவனை நோக்கித் தாக்க வருவது; இரண்டு, அவை ஒன்றின் மேல் ஒன்று தாக்குவதற்கு எடுத்து வீசும் அல்லது முரித்து வீசும் கற்கள், அல்லது மரக்கிளைகள் நம்மேல் வந்துபடுவது; மூன்று போரிடும் யானைகளின் பிளிறல்களைக் கேட்டு, அக்கம் பக்கத்திலுள்ள யானைகள் அவற்றின் உதவிக்கு வரும்பொழுது, வழியில் வேடிக்கை பார்ப்பவருக்குத் தீங்கு தருவது முதலியன. இத்தகைய கேடுகளினின்று நீங்கியும், தீமை வருமோ என்று அச்சம் இல்லாமலும், நாம் யானைகளின் போரைப் பார்த்து மகிழ வேண்டுமானால், அருகில் உள்ள உயரமான ஒரு குன்றின் மேல் ஏறி நின்று பார்த்தல் வேண்டும் என்றும், அப்பொழுதுதான் போரிடும் யானைகளாலோ, பிறவகையிலோ நமக்குத் தொல்லை வராது என்றும், அதுபோல், வினை செய்பவன் வினைக்கிடையில் வரும் முன் கூறப்பெற்ற வினைத்தடை முதலிய துன்பங்களால் தான் தொல்லையுறாது தப்ப வேண்டுமானால், தன்கையில் உள்ள பொருளையே நம்ப வேண்டும். துணையாகக் கொள்ள வேண்டும் என்பது திருவள்ளுவர் திருவாய்மொழி. அயலான் கையிலுள்ள பொருள், அத்துன்பங்களை உடனுக்குடன் நீக்கப் பயன்படாது என்பது அவர் குறிப்பு. இன்னும், அவர், யானைப் போரைக் கண்டு களிக்க விரும்புவான், ஒரு மலையின் மேல் ஏறிப் பார்ப்பதுபோல் என்று கூறுவதால், தன் கையில் உள்ள செல்வம் பெரிய அளவினதாக இருத்தல் வேண்டும் என்பதில்லை. சிறிய அளவினதாக இருப்பினும் தன் ஆளுகைக்கு உரிய உடைமையாக இருக்க வேண்டும் என்ற நுட்பமும் புலப்படுகின்றது. நாளை இன்னொருவனிடம் கேட்டுப் பெறும் கடனைக் கொண்டு இன்று நேர்ந்த வினைக் கேட்டை நீக்க எண்ணினோமாயின், இன்று நடக்க வேண்டிய வினை கெட்டுப் போகும். அதனால் இழப்பு நேரும் என்பதை நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும். அதனால் வினையே அழிய நேரினும் நேரலாம் என்பன போன்ற, இத்துணைக் கருத்துகளையும் கொண்ட குறள் இது.
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை. (758)
தன் கைத்து (கையில்) ஒன்று (ஒரளவேனும்) உண்டு ஆகச் செய்வான் வினை - என்று அவர் கூறும் சொல்லடுக்குகளைக் கவனித்தல் வேண்டும்.
வினைக்குப் பொருள் மிகவும் தேவையான ஒன்று என்பதை எல்லாரும் அறிந்திருப்பர். ஆனால் அப்பொருள், எவ்வெவ்வகையில், எஃது எதற்காக, எவ்வளவில் தேவை என்பதைப் பலர் சரியாக உணர்ந்திருக்க இயலாது. பொருளால் இவ்வுலகத்து எல்லாவகையான வினைகளையும் செய்து கொள்ளவியலும் என்பதை எல்லாரும் முழுமையாக உணர்ந்திருப்பர் என்று கூறிவிட முடியாது. "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை", என்பது திருக்குறள். அஃது இவ்வுலகம் பொருள் அடிப்படையான பொருள் உலகம் . பொருள் என்பது பணம் மட்டுமே என்று பொருள் படாது. பொருள் மதிப்புடைய அனைத்து உடைமைகளும் பொருளே. இருப்பினும் பொருள் என்னுஞ் சொல் பேரளவில் பணத்தைத் தான் குறிக்கும்.
3. பொருளென்னும் பொய்யா விளக்கு
பொருள் இருந்தால் இடம், காலம், பகை, பொய் முதலிய அனைத்தையும் வெல்லலாம் என்பார் திருவள்ளுவர்.
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. (753)
இப்படிக் கூறுகையில் திருவள்ளுவர் கூறும் அற நுட்பத்தை நாம் நன்கு உணர்தல் வேண்டும். பொருளைக் கொண்டு தீமையான பண்புகளைத் தான் ஒழிக்க வேண்டுமே தவிர, நன்மைப் பண்புகளை ஒழிக்க பொருளைப் பயன்படுத்தக் கூடாது என்னும் குறிப்பை இக்குறள் தெரிவிக்கிறது. பொருளைப் பொய்யா விளக்கம் அஃதாவது பொய்யாதது, மெய்ம்மையானது என்றும், ஒளி பொருந்தியது என்றும் அதன் தன்மையை அவர் கூறுவதும், இருளறுக்கும் அஃதாவது இருளை விரட்டும் என்று அதன் பயனைக் கூறுவதும் நோக்கத்தக்கன. எண்ணிய தேயத்துட் சென்று, என்பதால், விரைவும், அதன் ஆளுமைக்குத் தொலைவு ஒரு தடையில்லை என்பதும் விளங்கும். எனவே, பொருள் நல்லவினைக்காகவே, நல்ல நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப் பெறுதல் வேண்டும் என்பதும், அவ்வகையில் அதற்கீடானது அதுவே என்பதும் திருக்குறள் கருத்தாகும். பொருள் - அதுவும் அளவு சிறியதாயினும் நம் கையிலுள்ள பொருள் - வினைக்கு முதல் இன்றியமையாதது. என்பதை உணர்ந்து கொள்க. அடுத்து, வினைக்குத் தேவையாகும் என்று அவர் கூறும் கருவியைப் பற்றி அடுத்துப் பார்ப்போம்.
12. கருவி தேடல்
1. இரண்டாவது பொருள் கருவி
எந்தவொரு செயலுக்கும் அதற்குரிய கருவி இன்றியமையாதது. கருவியின்றி எந்தச் செயலும் நிறைவேறாது. கருவி நம் கையாகவும் இருக்கலாம். வேறு பொருளாகவும் இருக்கலாம். ஆனால் கையே ஒரு செயலுக்கு முதல் கருவியாக இருக்கிறது. கை என்னும் சொல்லுக்கே செயல் என்னும் பொருளுண்டு கைஇ என்றால் செய்து என்று பொருள். கை செய்தல்' என்றால் வினை செய்தல் என்று பொருள். கையறுதல் என்னும் சொல் செயலறுதல் செயலற்று போதல் என்னும் பொருளைத் தரும். கைதுவல் என்பதற்கு வினையைத் தவிர்த்தல் - செயலை நீக்குதல் என்று பொருளுண்டு இனி, திருக்குறளில் கை என்னும் சொல்லுக்கு ஒழுங்கு (832), கைத்திறன் அல்லது செயல் திறன் (935) என்னும் பொருள் கொள்ளப் பெற்றுள்ளது கவனிக்கத் தக்கது. எனவே, எந்தச் செயலுக்கும் கையே முதல் கருவியாகிறது. கை இல்லாமல் எதையும் செய்ய முடியாது. கருவியிருந்தாலும் அதைக் கைக் கொண்டு தான் செயலில் ஈடுபடுத்த முடியும்.
திருக்குறளில் பொருள், கருவி, காலம், வினை, இடனோடு ஐந்தும், இருள் தீர எண்ணிச் செயல் (675) என்னும் குறளில் குறிக்கப்பெறும் கருவி என்னும் சொல் தொழில் கருவியையே குறிக்கும். கருவியும் காலமும் (63) என்னும் குறளிலும் அச்சொல் அதனையே குறிக்கும். எனவே, ஒரு செயலுக்கு முதலாவதாக வேண்டிய பொருள்முதலுக்கு அடுத்தப்டி கருவி முதல் மிகவும் தேவையான ஒன்றாகும். கருவியிருந்தால் ஒரு செயலை நாமே செய்யலாம் அல்லது இன்னொருவரைச் செய்விக்கலாம். ஆனால் செயலுக்குக் கருவி மிக மிகத் தேவை.
2. சுவரில் ஆணி அடிப்பது
கருவி செயலுக்கு அடிப்படை என்று தெரிந்தவுடன், அந்தக் கருவியைக் கொண்டு நாம் செய்யவிருக்கும் செயலும் நமக்குத் தெரிந்ததாக இருத்தல் வேண்டும். வெறும் கருவியை வைத்துக் கொண்டால் மட்டும் செயல் நிறைவேறி விடாது. அந்தக் கருவியை நாம் விரும்பும் செயலில் எப்படிப் பயன்படுத்துவது என்றும் தெரிந்திருத்தல் வேண்டும். ஒரு சுத்தியலையும் ஆணியையும் வைத்துக் கொண்டு, அதைச் சுவரில் அல்லது மரப்பலகையில் அடிக்கத் தெரியாதவர்கள் எத்தனையோ பேர்கள் உளர். சுவரில் ஆணியை அடிக்கப் புகுமுன் (1). அந்த ஆணி வளையாமல் நேராக துருப்பிடிக்காததாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும். (2). அதன் கொண்டை சரியானபடி தட்டையாக அமைந்துள்ளதா (3). அதன் முனை மழுங்காமல் கூராக உள்ளதா என்று பார்த்தல் வேண்டும் (). பிறகு அந்த ஆணி நாம் அதில் மாட்டவிருக்கும் படத்தின் கனத்தைத் தாங்கும் அளவு கனமும் வலிவும் உள்ளதா என்று கணித்தல் வேண்டும். (). அதன்பின் அந்த ஆணி அடிக்கும் அளவு சுவர் மென்மையாக உள்ளதா என்பதை ஆய்தல் வேண்டும். (), அந்தப் படம் மாட்ட வேண்டிய இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவ்விடம் அந்த ஆணி அறையும் அளவிற்கு மென்மையாக உள்ளதா, கல்லோ காறையோ உள்ள பகுதியா என்று நோக்க வேண்டும் (), பின்னர் ஆணியை அடித்திறக்க நம் கையிலுள்ள சுத்தியல் போதுமான கனமுள்ளதாக உள்ளதா என்றும் (8), அதன் அடிப்பகுதி மொழுக்கையாக இல்லாமல் ஆணியின் கொண்டை மேல் அடிக்கப்படும் வகையில் தட்டையாக உள்ளதா என்றும் கவனித்தல் வேண்டும். (8. சுத்தியலின் பிடி நாம் ஆணியை ஓங்கி அறையும் பொழுது சுழன்று வராதபடி அதன் பூணுடன் நன்றாக இணைந்து இறுகியுள்ளதா என்று பார்த்தல் வேண்டும். (1), நாம் அடிக்கப் போகும் ஆணியை நாம் நின்றுகொண்டே அடிக்கும் அளவு உயரம் எட்டுமா, இல்லையானால் உயரமான வலிவுள்ள முக்காலியோ மொட்டானோ போட்டு அதன் மேல் நின்று அடிக்க வேண்டுமா என்றெல்லாம் பார்த்தல் வேண்டும். (1). இனி, நாம் அடிக்கவிருக்கும் படம், அதன் கொக்கியின் வலிவு (12) அது சுவரில் இருக்க வேண்டிய இடம் அமைப்பு அழகு இவற்றைத் தேர்ந்து கொள்ளுதல் வேண்டும். இறுதியில் அந்த ஆணியை நேராக வைத்து இடக்கையால் பிடித்துக் கொண்டு வலக்கையில் உள்ள சுத்தியலால் முதலில் மெதுவாகத் தட்டி ஆணியின் முனையை மெதுவாக, சுவரின் சுண்ணாம்புக் காறையின் உட்புகுந்து நிற்குமாறு இறக்கி, அதன்மேல் பிறகு சிறிது சிறிதாக வலுவேற்றி, ஆணியின் கொண்டையின் மேல் அடித்து அடித்து, ஆணியை இறக்க வேண்டும். இடையில் வளைந்தால் அதைச் சுத்தியால் தட்டிச் சரி செய்துகொண்டு மேலும் அடி சமநிலையாக விழுமாறு அடித்து இறக்குதல் வேண்டும். ஆணி இறங்கிய பின்னும், அதை எந்த அளவில் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும்படி நிறுத்த வேண்டுமோ அந்த அளவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இப்படி, சுவரில் ஓர் ஆணியை அறைவதற்கே இவ்வளவு கவனம் செயலளவில் நமக்குத் தேவையானால், ஒரு நாற்காலி செய்ய, ஒரு விசி (Bench) யைச் செய்ய, ஒரு மிசை (Table)யைச் செய்ய, ஒரு பேழையைச் செய்ய, ஒரு வீட்டைக் கட்ட, ஒரு கப்பலைக் கட்ட ஒர் அணைக்கட்டைக் கட்ட நமக்கு எவ்வளவு அறிவும், கவனமும், தொழில்நுட்பமும், கருவித் தேவையும், ஆளுமைத் திறனும், பொறுமையும், ஈடுபாடும், ஊக்கமும் இன்னும் பலப் பல ஆற்றலும் தேவையாக இருக்கும் என்று எண்ணிப் பார்த்தல் வேண்டும். அப்படி எண்ணிப் பார்ப்பதற்கும் நமக்கு ஒர் அடிப்படை அறிவு தேவையன்றோ?
2. சொல்லுதல் எளிது செய்தல் கடினம்
செயல் என்பது கடினமானது மிகவும் கடினமானது. அதுவும் அந்தச் செயலைச் செப்பமாகவும், நுட்பமாகவும், திறம்படவும், அழகாகவும், உறுதியாகவும், தொடர்ந்து, நிலைப்பாடுறும்படியும் செய்வதானால், எவ்வளவு அறிவும் முயற்சியும் கடின உழைப்பும் தேவையாக விருக்கும். சொல்லுவது எளிது; மிகமிக எளிது. இவ்வுண்மை எல்லாருக்கும் தெரியும். ஆனால் தெரிய வேண்டிய உண்மைகளுள் இதனையும் ஒன்றாக எடுத்துச் சொன்ன திருவள்ளுவர் அறிவை நாம் பாராட்ட வேண்டும் இல்லையா? பாராட்டுகிறோமோ இல்லையோ, அதை உணரவாவது செய்கிறோமோ? அவர் கூறிய உண்மை இது:
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். (664)
ஆம் சொல்லுதல் எளிது. யார்க்கும் எளிது. எல்லாரும் சொல்லலாம். அறிவுள்ளவனும் சொல்லலாம். அறிவு இல்லாதவனும் சொல்லலாம். தெரிந்தவனும் சொல்லலாம். தெரியாதவனும் சொல்லலாம். பார்த்தவனும் சொல்லலாம். கேட்டவனும் சொல்லலாம். நம்மேல் அன்புள்ளவனும் சொல்லலாம். அன்பு இல்லாதவனும் சொல்லலாம். எவரும் சொல்லலாம். ஆனால் செய்வதுதான் கடினம். அதுவும் தான் சொல்லியபடியே தான்ே செய்து காட்டுவதுதான் கடினம். கட்டிய வீட்டிற்குப் பழுதுரைப்பார் பலர் உழுத நிலத்தில் புரைசல் சொல்வார் பலர். ஆனால், வீடு கட்டுவதும், நிலம் உழுவதும் சொல்வது போல எளியன அல்ல. அவை செயல்கள், கடினமானவை. அதுவும் மேற்கண்ட குறளில் சொல்லியவண்ணம் செயல் அரியவாம் என்று திருவள்ளுவப் பெரியார் கூறியதில் தான் சொல்லியபடி தானே செய்தல் அரிது என்னும் குறிப்பையும் வைத்துள்ளது கவனிக்கத் தக்கது. சீர்திருத்தம் பேசுகிறவர்கள் அனைவரும் அவர்கள் சொல்கிற சீர்திருத்தத்தை அவர்களே சொல்லியபடி செய்வதானால் உலகம் எவ்வளவு விரைவில் செப்பமடையும். இந்த நிலையில் செயற்கரிய செய்பவர் பெரியார்தாமே! (26) பெருமையுடையவர் ஆற்றுவர் ஆற்றின் அருமையுடைய செயல் (975) என்று திருவள்ளுவப் பேராசான் கூறியது சரிதானே!
4. அவரவர்க்கு ஏற்ற செயல்
எனவே, செயல் அருமைப்பாடுடையது என்று கருதி, எவரும் செயல்களைச் செய்யாமல் இருந்து விடுதல் கூடாது இன்னுஞ் சொல்வதானால், செயல்களிலும் செய்வதற்கு எளிமையுடைய செயல்களையே செய்ய முனைதல் கூடாது. அவரவர் அறிவுக்கும் திறனுக்கும், இயல்கின்ற தன்மைக்கும், தம்மிடமுள்ள பொருள் வலிவுக்கும், அதால் கிடைக்கும் கருவி வலிவுக்கும் தக்கபடி, பிறர் செய்வதற்கு அரியவான செயல்களையே செய்தல் வேண்டும் (25. ஒருவன் ஒரு மூட்டையைத் தூக்கும் வலிவுடையவனாக இருப்பின், அவன் ஒரு பையை மட்டும் தூக்கிக் கொள்ள விரும்புவது பெருமையாகாது. இழுக்காகும். ஒரு யானை செய்யும் வேலையைச் செய்ய முடிந்தவன். ஒரு மாடு செய்யும் வேலையைச் செய்வது எளிதுதான். ஆனால் இஃது இகழ்ச்சியானது. அவரவரின் தகுதிக்கேற்ற, வலிவிற்கேற்ற பெருமைக்குரிய செயல்களையே எவரும் செய்ய விரும்புதல் வேண்டும். எனவேதான் பெருமையை விரும்புகிறவர்கள் அல்லது பெருமைக்குரியவர்கள் எப்பொழுதும் பிறர் செய்வதற்கு அருமையுடைய செயல்களை, அவர்கள் செய்யத் தயங்குகின்ற செயல்களை, எல்லாரும் செய்வதற்கு அஞ்சி ஒதுங்குகின்ற செயல்களை, தங்கள் நிலைக்கு ஏற்பதான செயல்களையே தேடிச் செய்வர். அவை செய்வதற்கு அருமையாக இருந்தாலும், அவ்வினை செய்வதற்குப் போதிய வழி வகைகள் தமக்குக் கிடைக்காமல் இருப்பினும், அவற்றையே தேடி அமைத்துக் கொண்டு, அவ்வருமையான செயல்களையே செய்வர். அப்படிப்பட்டவர்கள்தாம் பெருமையைப் பெற முடியும். அவர்களே பெரியவர்கள். இக்கருத்தையே "பெருமையுடைய ஆற்றுவர்" (975) என்றும் திருக்குறள் நமக்கு உணர்த்துகின்றது.
5. கருமமே கட்டளைக் கல்
இனி, இதே பொருளுடைய இன்னொரு திருக்குறளும் உண்டு. ஒருவன் பெருமையை நாம் எப்படி உணர்வது? அதற்கு என்ன அளவு கோல்? அவன் வைத்திருக்கும் பணத்தைக் கொண்டு அவனை மதிப்பிடுவதா அல்லது அவன் கற்ற கல்வியைக் கொண்டு அவனைத் தக்கவன் என்று கருதுவதா? அல்லது அவனைச் சேர்ந்த ஆட்களின் எண்ணிக்கையைப் பார்த்து, இவன் மிகப் பெரியவன் என்று கூறுவதா? அல்லது அவன் உடல் அழகை, உயரத்தை, வாழ்க்கை நலன்களைக் கண்டு, இவன் சிறந்தவன் என்று சொல்வதா? எதைக் கொண்டு சொல்வது? என்ன அடையாளம்? என்று திருவள்ளுவப் பேராசானைக் கேட்கும் பொழுது, அவர் சொல்வார், அவன் செய்கின்ற செயலை வைத்து அவனை மதிப்பிடு என்று. அவன் பெரிய செல்வனாக இருப்பான். ஆனால் கள்ளக் கடத்தல் தொழிலையோ, கள்ள நாணயம் அடிப்பதையோ செய்து கொண்டிருப்பான். அவனைப் பெரியவன் என்று மதிக்கலாமா? கூடாது என்பார் திருவள்ளுவர். ஒருவன் உயர்ந்த கல்வி கற்றிருப்பான். ஆனால் எல்லாரையும் ஏமாற்றிப் பணம் பறித்துக் கொண்டிருப்பான். அவனை உயர்ந்தவன், பெருமைக்குரியவன் என்று மதிக்கமுடியுமா? ஒருவன் பெரிய வளமனையில் குடியிருப்பான். அவனிடம் எடுபிடி ஆட்கள் நிறைய பேர் இருப்பார்கள். உயர்ந்த, சாரமுள்ள உணவு உண்டான். சிறந்த, விலையுயர்ந்த உடைகளையே உடுப்பான். போகவும் வரவும் சொகுசான ஊர்திகள் இருக்கும். இப்படிப்பட்டவன் பெருமைப்படுத்து வதற்குரியவன் ஆகிவிடுவானா? ஆகிவிடமாட்டான். அவன், இப்படியெல்லாம் இருப்பதால் மட்டும் பெருமைக்குரியவன் ஆக மாட்டான். அவன் அப்படி இருந்து கொண்டு, அல்லது இருப்பதற்கு என்ன செயல் செய்கின்றான் என்று பார்க்க வேண்டும். அவன் பெரிய சூதாட்டத் தொழிலை அல்லது ஆணும் பெண்ணும் குடித்துக் கும்மாளமடிக்கும் களியாட்டரங்கை நடத்தி, அவற்றால் பெரிய அளவு வருவாயை உடையவனாக இருப்பான். அப்படிப்பட்டவன் பெருமைக்குரியவனாவானா? ஒரு போதும் ஆகமாட்டான். இப்படிப்பட்டவர்கள். எப்பொழுதும், எவ்விடத்தும் இருக்கவே செய்வார்கள். இவர்கள் செய்யும் தொழில் பெருமைக்குரிய செயலும் அன்று. செய்வதற்கு அருமையானதும் அன்று! எளிமையுடையதும் இழிவானதுமாகும்! எனவே, அப்படிப்பட்ட செயலால் இவன் எவ்வாறு பெருமையுடையவனாக முடியும்? எனவேதான் திருவள்ளுவர் சொல்வார். ஒருவன் பெருமைக்குரியவன் என்பதும் சிறுமைக்குரியவன் என்பதும் அவன் செய்கின்ற தொழிலைப் பார்த்தால் தெரிந்துவிடும். அவன் தொழிலே அவன் தகுதிக்கு உரிய அளவுகோல் ஆகும் என்பது அவர் வாய்மொழி!
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக் கல். (505)
6. வல்லவனுக்குப் புல்லும் வல்சருவி
இனி, தொழிலுக்குக் கை முதற்கருவியாக இருந்தாலும் வெறுங்கையைக் கொண்டே அனைத்துத் தொழிலையும் செய்துவிட முடியாது. கைக்கும் ஒரு கருவி தேவை. வீரனுக்கு வாளும், வில்லும் வேலும் தேவை. சில இடங்களில் இரண்டு கருவிகள் தேவைப்படும். ஒரு கையில் வாளும், இன்னொரு கையில் கேடயமும் தேவை. அதுபோல் ஒரு கை வில்லைப் பிடித்திருக்கும் பொழுது, பிறிதொரு கை அம்பை வைத்து நாணேற்றுதற்கு வேண்டும். இப்படியே, எழுதுதற்கு எழுதுகோலும், உழுவதற்கு ஏரும், மரம் வெட்டுதற்குக் கோடரியும், இன்னும் பல தொழில்களுக்கும் பல்வேறு கருவிகளும் தேவை என்பது நம் அனைவர்க்கும் தெரியும். வல்லவனுக்கு புல்லும் வல்கருவி (ஆயுதம்) என்பது ஒரு பழமொழி இல்லையா? இது வல்லவனுக்குக் கூட ஒரு கருவி தேவையே என்பதையும் சுட்டுகிறது.
அடுத்து, தம் கையிலுள் கருவிகளைப் பற்றிச் சிலர் கவலைப்படுவதே இல்லை. மாணவர்களின் கைகளில் உள்ள கரிக்கோல்கள் (Pencil) பெரும்பாலும் மொக்கையாகவே இருக்கும். ஆசிரியர் ஏதாவது எழுதிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் பொழுதுதான், சிலர் கரிக்கோலைச் சீவுதற்கு மழிதகடு (Blade) எடுப்பார்கள். அல்லது பக்கத்து மாணவர்களிடம் கேட்பார்கள். அல்லது தங்களிடம் தூவலில் (Pen) உள்ள முள்ளின் முனை சரியாயிருக்காது. சில கிறுக்கும், சில பட்டையடிக்கும். சில தூவல்களில் உள்ள நாக்குகள் சரியாய் இரா. அதனால் மை கொட்டும். சிலவற்றில் கழுத்து மறைகள் சுழன்று கொண்டே இருக்கும். அதனால் மை கசிந்து, கையெல்லாம், சட்டைப் பையெல்லாம், அல்லது பொத்தகப் பையெல்லாம், இன்னுஞ் சொன்னால் பொத்தகம், எழுது சுவடிகளிலெல்லாம் மைக் கறையிருக்கும். சிலரிடம் நல்ல துரவலாய் இருந்தாலும் உள்ளே மை இருக்காது, சிலரிடம் மை இருந்தாலும் அது தண்ணிர் மையாக இருக்கும். எழுதினால் எழுத்துச் சரியாய்த் தெளிவாய்த் தெரியாது. இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன: நாம் நமக்குத் தேவையான கருவிகளைப் பற்றிச் சரிவர கவனம் செலுத்தாததைத்தான்!
இனி, மாணவர்களின் நிலைதான் இப்படி என்று நினைக்க வேண்டா. தொழிலாளர்கள், குடும்பத்தவர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் முதலிய அனைவருடைய நிலையினும் இக்குறைபாடுகள் உண்டு. அவற்றை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும்.
7. கருவியை கையாளச் செய்தல்
அம்மா அடுப்பு ஊதும் ஊதாங்குழல் நெளிந்து, நசுங்கியிருப்பதால் சரியாகக் காற்று வராது. அடுப்பின் குமிழ்கள் தேய்ந்து போய், அதன் மேல் வைக்கின்ற ஏனங்கள் சரிவரப் படியாமல் ஆடிக்கொண்டு இருக்கும். அகப்பை தேய்ந்திருக்கும். அல்லது அது கைப்பிடிக் கம்பிலிருந்து எளிதே கழன்று கொள்ளும்படி தளர்ந்து இருக்கும். குழம்பை மொள்ளும் பொழுது அகப்பை அதிலேயே விழுந்துவிடும் கம்பு மட்டும் கையில் வரும். வீட்டில் உள்ள மின்சாரச் சொடுக்கி (Switch) தொள தொளவென்று இருக்கும். மின் விசிறி முடுக்கப் பெற்ற ஆணிகள் தளர்ந்து அது சுழலும் பொழுது தடதடவென்று ஒலி வரும். நாம் ஒட்டும் மிதிவண்டியில் உள்ள பல வகைக் கோளாறுகளை நாம் முன்னெச்சரிக்கையாகக் கவனிக்காமல் இருப்போம்.
உந்து வண்டி ஒட்டுநர் உந்துவண்டிகளைச் சரியாகக் கண்காணிக்காமையால்தானே, பல சமயங்களில் பல வண்டிகள் கவிழுகின்றன! அவற்றால் பலர் உயிர்களை இழக்க நேரிடுகின்றது. தொழிலாளர்கள் சிலர் தாங்கள் புழங்கும் கைக்கருவிகளைச் சரியாகவே வைத்திருப்பதில்லை. சரியாகச் சாணை பிடிக்காத கத்தரிக்கோல்களை வைத்துக் கொண்டு முடிவெட்டுகிறவர் நம் முடியை வெட்டும் பொழுது எத்தனை முறை முடி சுள் சுள் என்று இழுக்கப்படுவதை உணர்ந்திருக்கிறோம். தெருவில் வைக்கப்பெறும் ஒலி பெருக்கிகள் அவற்றின் இயக்கக் கருவிகள் சரிவர இல்லாமையால், அவற்றினின்று ஒலிப்பரப்பப் பெறும் பாடல்கள் நாம் கேட்க எத்துணை கொடுமையாக இருக்கின்றன. தாம் ஒட்டிச் செல்லும் வண்டிகளைப் பெரும்பாலார் சரிவர ஒட்டாமல் கவனக்குறைவாக இருப்பதால் சாலைகளில் எத்தனை மோதல்கள் ஏற்படுகின்றன!
அதிகாரிகள் கட்டிய அணைக்கட்டுகள் உடைவதும், வீடுகளின் கூரைகள் சரிவதும் எதனால்? கருவிகளைச் சரியாகக் கவனம் செலுத்திக் கையாளாமையால்தானே அமைச்சர்கள் அரசுக் கருவிகளாகிய அதிகாரிகளைச் சரிவரக் கவனிக்காமல் போவதால்தானே, அரசுக்குப் பல கோடி உருபாக்கள் இழப்பேற்படுகின்றன! கருவிகள் சரிவரப் பேணப்படாமையால் தொழிற்சாலைகளில் ஏற்படும் கோளாறுகள் கொஞ்சமா?
8. அறிவுக் கருவி
இனி, கருவிகளைப் பற்றி எண்ணுகையில், முதல் கருவியாகிய கைகளை விட, அக்கைகளில் உள்ள துணைக் கருவிகளை விட, மூலக்கருவியாகிய அறிவுக் கருவியே முதலில் வேண்டப்படுவது என்பதைத் தெளிதல் வேண்டும். அறிவு என்னும் கருவியே அனைத்து வினைகளுக்கும் அடிப்படையாகிய மூலக் கருவி அறிவு அற்றம் இறுதி) வராமல் காக்கும் கருவி (42) என்பார் பேராசான். "அறிவுடையார் எல்லாம் உடையார்” (430 என்பதும் அவரின் வாய்மொழி. அறிவுத் தெளிவில்லாத ஒருவனிடம் பொருள்கருவி இருந்து என்ன பயன்? ஒருவனுக்குக் கைகளோ கால்களோ வேறு பொறிகளோ இருந்தும், அவற்றைச் சரியான வழியில் பயன்படுத்தத் தெரியும் அறிவில்லாமல் இருப்பானாயின் அக்கருவிகள் பயன்படுவது எங்ங்ன்? மூலக் கருவியாகிய அறிவு ஒருவனிடம் இயல்பாக அமைந்துவிடின், அவன் தன் வினைக்கான கருவிகளைத் தானே தேடித் தேர்ந்து கொள்ள முடியும் அன்றோ? எனவே, கருவிகள் இல்லாமற் போயினும் ஒருவனுக்கு அறிவும் அதன் உந்துதலாகிய ஊக்கமும் இருப்பின் அன்றோ அவன் வினைகளுக்குப் பயனுடையவனாக இருத்தல் இயலும்.
9. உடல்குறை குறையன்று ஊக்கம் தேவை
இயற்கையிலேயே சிலர்க்கு முதல் கருவிகளாகிய ஐம்பொறிகளுள் ஒன்றோ சிலவோ பழுதுபட்டிருக்கலாம். அதனால் அவர் முடங்கிக் கிடக்கத் தேவையில்லை. அப்பொறிகளின்மையையே ஒரு குறையாக, இயற்கைமேல் போடும் பழியாகக் கொண்டிருத்தல் வேண்டுவதில்லை. இதனைப் 'பொறியின்மை யார்க்கும் பழியன்று; அறிவறிந்து, ஆள்வினையின்மை பழி'(618), என்னும் திருக்குறள் வழி, தனக்கு முதற்கருவியாகிய பொறி - கை, கால், கண், காது முதலிய பொறிகளும், கைக்கருவிகளாகிய வினைத்துணைக் கருவிகளும் இல்லையே என்று, இயற்கையின் மேலோ அன்றிப் பிறர்மேலோ, சூழ்நிலைகளின் மேலோ, ஒருவன் பழி கூறிக் கொண்டிருப்பதில் பயனில்லை. தன் அறிவுக் கருவியை மூலக் கருவியாகக் கொண்டு, அதன் வழி தான் ஈடுபட இயலும் வினைக்குரிய ஊக்க உணர்வை ஒருவன் பெறாமல் போவானாயின், அதுதான் அவன் குற்றம்; அவனுக்குரிய பழி - என்று திருவள்ளுவப் பெருமான் காட்டுவார். இக்குறளுள் வரும் பொறி என்னும் சொல்லுக்கு விதி (ஊழ்) என்று பொருள் தருவார் உரையாசிரியர் பரிமேலழகர். அஃது அத்துணை நேரிடையாகப் பொருந்தும் பொருளன்று. அவர் கருத்து, ஒருவனுக்கு ஊழின் வயத்தால்தான் பொறி குறைவு ஏற்படுகிறது என்பது. அப்பொருள் நம் அறிவுக்கு அப்பாற்பட்ட உணர்வியல் பொருளாக இருக்கலாம். அதனை நாம் ஆராய்ந்து கொண்டோ எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டோ இருக்கத் தேவையில்லை. உலகில் வாழ்கின்றவர்க்குச் சொன்ன அறிவுரைகளே திருக்குறளாதலின் உலகியற் பொருளையே நாம் கொள்ளுதல் வேண்டும். முயற்சி திருவினைக்கும் (616), ஊழையும் உப்பக்கம் காண்பர் (620), உள்ளம் (ஊக்கம்) உடைமை உடைமை (592) முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும் (619), அருமை உடைத்தென்று அசாவாமை தளராமை) வேண்டும் (611) அற்றே மென்று அல்லற் படுபவோ (626) உரம் (அறிவு ஒருவற்கு உள்ள (ஊக்க வெறுக்கை (மிகுதி (600), அசைவிலா ஊக்கம் (தளராத முயற்சி (594, உள்ளத்து (ஊக்கத்தின் அனையது (அளவினது உயர்வு (595), சிதைவிடத்து (அழிவு வந்த விடத்து) ஒல்கார் (தளர்ந்து விடமாட்டார்கள்) உரவோர் (அறிவுள்ளவர்கள் (597), உடையர் எனப்படுவது ஊக்கம் (591), 'வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத் திட்டம்' (661), 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியர் ஆகப்பெறின்' (666), 'துன்பம் உறவரினும் செய்கதுணைவாற்றி' (669). 'ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை (ஊக்கமிகுதி) (97) கருமம் செய ஒருவன் கைதுவேன், என்னும் பெருமை' (1021) என்றெல்லாம் ஒருவன் எந்நிலையில் பழுதுபட்டிருந்தாலும் குறைவுபட்டிருந்தாலும், தாழ்ந்திருந்தாலும் , போதிய கருவிகள் இல்லாதவனாக இருந்தாலும், அவனுக்கு ஊக்கவுரைகள் கூறி எழுச்சியூட்டுவர் திருவள்ளுவப் பெருந்தகை.
10. கருவியும் காலமும்
இனி அறிவும் ஊக்கமும் உற்ற ஒருவனுக்கு மட்டுந்தான் தேவையான கருவிகள் கிடைப்பின் அவை பயனுடையவையாக இருக்கமுடியும். அவ்வறிவும் ஊக்கமும் அற்றவனிடம் அக்கருவிகள் இருந்து பயன் என்ன? இனி, அறிவும் ஊக்கமும் உடையவனும், அக்கருவியைக் காலம் அறிந்து செய்தல் வேண்டும்.
கலப்பையை உடைய உழவன், விதைப்புக் காலம் அறிந்து உழுதல் வேண்டும். இல்லாவிடில் அக்கலப்பையால் அவன் பெறும் பயன் இல்லையாகிவிடும். பனிக்கட்டிகளைத் தேக்கிச் சாறுபிழிந்து விற்கும் பொறியை வைத்திருக்கும் ஒருவர் நல்ல கோடை காலத்திலேயே அவ்வாணிகம் செய்ய முடியும். இதுபோல் கருவிக்குரிய காலமும், காலத்துக்குரிய கருவியும் தேர்ந்து கொண்டுதான் வினையில் ஒருவன் ஈடுபட வேண்டும். அக்கால் அவன் எத்தகைய அரிய வினைகளையும் செய்து விட முடியும்.
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் (483)
என்பது திருமறை. இவ்வினை பழுதுபடாமல் செய்ய வல்லதே ஆட்சி என்பார் பேரறிஞர்.
கருவியும் காலமும் செய்கையும் செயும்
அருவினையும் மாண்டது அமைச்சு. (631)
என்னும் மெய்யுரையால், தனியொருவன் அவ்வாறு கருவியும் காலமும் அறியாமல் செய்யினும் அஃது அத் தனியொருவனுக்கு மட்டுந்தான் பெருங் கேடாக முடியும். ஆனால் அரசு அவ்வாறு செய்ய முற்படின் அது நாட்டினர் அனைவர்க்குமே ப்ெருங்கேடாக முடியுமன்றோ! இக்கால், அரசால் ஏற்படும் அனைத்துக் கேடுகளுக்கும் இத்திருக்குறளின் பொய்யா மொழியைப் பற்றாமையன்றோ கரணியம்!
இனி, திருவள்ளுவர் வினை செய்வார்க்கு இன்னோர் உணர்வையும் கருவியாகக் கூறுவார். அது மறதியின்மை. ஆம் மறதியின்மையும் ஓர் இன்றியமையாத கருவியே ஆகும். பொறியை இயக்கும் தொழிலாளி ஒருவர், தாம் தம் பொறியை இயக்கத் தொடங்குவதற்குமுன், அதை முழுவதும் ஒரு முறை நோட்டம் விடுதல் வேண்டும். முன் நாள் செய்த வினைகளின் பின், அதன் உறுப்புகள் யாவும் சரியாகப் பொருத்தப் பெற்று உள்ளனவா, இல்லை; திருகுகளும் பொருத்துகளும் இயக்க அசைவால் கழன்றும் தளர்ந்தும் உள்ளனவா என்று பார்த்துக் கண்காணித்த பின்னரே, பொறியை இயக்குதல் வேண்டும். இல்லெனில் எங்கோ ஒரு திருகாணி தளர்ந்து போவதால், பொறி பெரும் பழுதுக்கு உள்ளாகலாம். இதை மறவாமல், நாளும் செய்தல் வேண்டும். என்றாவது ஒரு நாள் மறந்து விடின் முடிவு பெரும் இழப்புக்குள்ளாகு மன்றோ? அதே போல் வாணிகத்தில் கொடுக்கல் வாங்கலில் மறவர்மை, எழுத்தாளர் தாம் கற்றறிந்தவற்றை மறவாமை, உந்து ஒட்டுநர் போதிய நெய் உள்ளதா என்று பார்ப்பதிலிருந்து, தக்க நேரத்தில் தக்க கருவிகளை இயக்குவதில் மறவாமை, குடும்பத் தலைவி தன் சமையல் வேலையில் தக்க பொருள்களைத் தக்க நேரத்தில் பயன்படுத்துவதில் மறவாமை இப்படி அனைத்து வினைகளிலும் மறவாமையை ஒரு கருவியாகவே கருத வேண்டும் என்பது பொய்யாமொழிப் புலவரின் மெய்யுரை. இவ்வாறு ஒருவன் மிகுகவனமாக இருப்பின் அரிய செயல்களையும் செய்துவிட முடியும் தொழில் நிலைக்கு இம் மறவாமை மிக மிக இன்றியமையாத ஒன்றாகக் கருதுவதால்தான் இதை ஒரு கருவி என்றே குறள் பெருமான் குறிப்பார்.
அரியனன்று ஆகாத தில்லையோச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின் (537)
என்பது பொய்யாமறை.
எனவே, கருவி தேடல் என்னுந் தலைப்பில், நாம் தெரிந்து கையாளப்பட வேண்டிய கருவிகளை நன்றாக உணர்ந்து, அவற்றை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுதலே வினையைச் செப்பமாகவும், நுட்பமாகவும், திட்பமாகவும் செய்வதற்குரியதாகும் என்பதறிந்தோம்.
'பொறிக் குறைவு யாவும் புலக் குறைவே' என்பது 'உலகியல் நூறு'[1] வரி, பொறி அஃதாவது கருவிமேல் குறையில்லை. அதைச் சரிவரத் தேர்ந்து கொள்ளாத நம் அறிவின் மேல்தான் குறை என்பது அவ்வடியின் பொருள். கருவிகளைச் சரிவரக் கையாள்வதற்கு அறிவுத் தெளிவு வேண்டும். ஒரு வினைக்குரிய கருவியைக் கொண்டுதான் அவ்வினை செய்யப் பெறல் வேண்டும் கொடுவாளைக் கொண்டு மரத்தைச் செதுக்க இயலாது. கத்தி முனையால் திருகாணியைத் திருக முற்படுவது தவறு. அவ்வவ் வினைக்குரிய கருவிகளாலேயே அவ்வவ் வினை செய்யப் பெறுதல் வேண்டும். அப்பொழுதுதான் அவ்வினை சரிவரச் செய்யப்பெறும் இல்லெனில் வினைத் தொய்வும் வினைக்குறைவும் ஏற்படும். அடுத்து ஒரு வினையைத் திறம்படச் செய்ய வேண்டுவதற்கு, அவ்வினையை, ஏற்கனவே தெரிந்த ஒருவரைத் துணையாகக் கொள்ளுதல் மிகவும் பயனுடையதாகும். அது பற்றி அடுத்த இயலுள் பேசுவோம்.
↑ உலகியல் நூறு: உலக இயல்புகளை எடுத்துக் காட்டும் நூ. வெண்பாக்கள் அடங்கிய நூல். பாவலரேறு எழுதியது.
13. வினையறிந்தாரைத் துணைக்கொள்ளல்
1. தெரிதல் வேறு திறம்படச் செய்தல் வேறு
ஒரு வினையை எடுத்த எடுப்பில் திறம்படச் செய்வதற்கு நாம் அறியோம். கண் பார்த்தால் கை செய்யும் என்பது ஒரளவு உண்மைதான். எதிலும் எல்லா வினைகளையும் கண் பார்த்து விட்டாலே கை செய்துவிடும் என்பது அத்துணை சரியாகிவிடாது. ஒரு வினையைச் செய்யுமுன் அவ்வினையை நன்றாகச் செய்யத் தெரிந்தவனை நாம் துணையாகக் கொள்ளுதல் வேண்டும். வினைசெய்யத் தெரிந்தவன், அதைச் செய்யத் தெரியாதவனை விட மேலானவனல்லனோ? ஒரு வினையில் முன்னரே ஈடுபட்டு, அதில் உள்ள சுழிவு நெளிவுகளைப் பலவாறு உணர்ந்து, தம் பட்டறிவால் அந்த வினையை எளிதாகவும் செப்பமாகவும் சுருங்கிய செலவுடனும் செய்யத் தெரிந்தவர் ஒருவர் இருப்பார். அவர் அந்த அறிவு வரப் பெறுவதற்கு எவ்வளவோ காலத்தைச் செலவு செய்திருப்பார். எவ்வளவோ பணத்தைச் செலவு பண்ணியிருப்பார். 9ئےlgi[ தொடர்பாக எத்தனையோ திறமுடையவர்களைப் பார்த்து, அவர்களிடம் அதுவகையில் எத்தனையோ நுட்பங்களைக் கேட்டு அறிந்திருப்பார். அத்துணை அறிவும் நமக்கு ஏற்பட வேண்டுமானால், நாமும் எவ்வளவோ காலத்தை, பணத்தை வீணடிக்க வேண்டியிருக்கும். அவற்றை வீணாக்காமல் நாம் காக்க வேண்டுமானால், நாம் அவரிடம் போய், அவருக்குத் தெரிந்த வழிகளைக் கேட்டறிவதும், அவருக்குத் தெரிந்த உத்திகளை நாமும் கையாள்வதும் நம் வினை நிலைகளை எளிதாக்க உதவும் அன்றோ? அதைவிட்டு, நமக்கே எல்லாம் தெரியும் என்பதாக நாம் எப்பொழுதும் நினைத்துக் கொள்ளக்கூடாது. நமக்கு ஒரு வினைபற்றி முன்னரே ஓரளவு தெரியும் என்றாலும், ஒரு வினையைத் தெரிதல் வேறு, அதைத் திறம்படச் செய்தல் வேறு.
2. நுட்பங்கள்
ஒரு வினை முன்னரே நமக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அதைத் திறம்படச் செய்ய நமக்குத் தெரியும் என்று எண்ணி விடக்கூடாது. அதன் தொடக்கம், இடைமுயற்சி, முடிவு என்பவற்றில் எத்தனையோ நுட்பங்கள் இருக்கும். அவற்றை நாம் முன்கூட்டியே அறிந்திருப்போம் என்று சொல்ல முடியாது. அப்படியே அறிந்திருந்தாலும் அதன் நுட்பங்கள் அனைத்தும் விளங்கியிருக்கும் என்று கொள்ள முடியாது. எனவே, நாம் எல்லாவற்றையும் தெரிந்து விட்டோம் என்று நம்மை அளவுக்குமேல் மதித்துக் கொள்ளக் கூடாது.
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. (438)
என்பது குறள் கூறும் அடக்க நிலை. ஒரு வினையால் நல்லது விளையுமா தீயது விளையுமா என்பது அவ்வினையில் ஈடுபட ஈடுபடத்தான் தெரியவரும். முழுவதும் முன்கூட்டியே உணர்ந்து கொள்வது கடினம். அடுத்து என்ன நடைபெறும் என்று அறிய முடியாத நாம், ஒரு வினைமுடிவில் என்ன நேரும் என்று அறிந்து விட்டதாகக் கருதுவது அறியாமை.
3. அறிதோறும் அறியாமை
எனவே, ஒரு வினைபற்றிய முழுமையான தொடக்க முடிவுகளை, ஏற்கனவே அவ்வினையறிந்தாரைக் கொண்டு தான் நாம் தெரிந்து கொள்ளமுடியும். அப்படித் தெரிந்து கொள்ளாமல் நாமே வினையில் ஈடுபட்டுத் தெரிந்து கொண்டுவிடலாமென்று நினைப்பது அறியாமை. அறியாமை என்பது அடுத்தடுத்து வரும். அறிய அறியத்தான் அது விளங்கும். 'அறிதோறும் அறியாமை கண்டற்றால் (10) என்னும் தெளிவுரை அறிய அறியத்தான் அறியாமை தெரியும் என்று எச்சரிக்கின்றது. அறிவு நிலைகளிலேயே அறியாமை தொடரும் என்றால், வினைநிலைகளில் வரும் அறியாமயை முன்கூட்டியே உணர்தல் மிகக் கடினம். ஒரு மிதிவண்டியின் பாகங்களையோ, ஒரு கடிகாரத்தின் உறுப்புகளையோ ஒவ்வொன்றாக அடையாளம் வைத்துக்கொண்டு - நினைவு வைத்துக்கொண்டு - நாம் பிரித்தெடுப்பதாக வைத்துக் கொண்டாலும், அவற்றை மீண்டும் பழையபடி பூட்டிவிடுவது அவ்வளவு எளிதன்று. கழற்றிய பல திருகாணிகளை, எங்கே எந்த உறுப்பில் வைத்துப் பொருத்துவது என்பதில் நாம் திண்டாடும் பொழுதுதான் நம் அறியாமை நமக்கு விளங்கும். இனி எல்லா உறுப்புகளையும் ஆய்ந்து அவ்வவற்றின் இடங்களைத் தேடிக் கண்டு பொருத்திவிட்டாலும் ஏதோ ஒரு கோளாறால், வண்டியின் அல்லது கடிகாரத்தின் இயக்கம் சரிவர அமையாது போகும். அது, அவ்வாணிகளுள் சிலவற்றைத் தளர்த்தியும், இறுக்கியும் முடுக்காமல் போவதால் அல்லது முடுக்கி விடுவதால் வந்த இடையூறாகக் கூட இருக்கும். எஃது எதனால் நேர்ந்தது என்பதை நாமே பட்டறிந்து கண்டுகொள்வதைவிட, ஏற்கனவே அதுபற்றிக் கண்டறிந்த ஒருவரைக் கேட்டறிந்து கொள்வது எளிதானதாக அல்லது சிக்கனமானதாக இருக்கும். இஃது இதனால் வரும். இதை இப்படிச் செய்வதால், இந்த இடர்ப்பாடு வராது என்பதே பட்டறிவு என்பது. இவ்வறிவு நமக்குப் படாமல் அஃதாவது நாமே ஈடுபடாமல், அல்லது துன்பப்படாமல் வரும் என்பது அறியாமை அல்லது செருக்கு செருக்கு என்பது நமக்குத் தெரிந்த சிறிய அறிவை மிகுதியாகக் கருதிக் கொள்வது. செருக்கு மிகுதி. செருக்காகக் கருதிக் கொள்ளுதல்.
4. கற்றலின் கேட்டலே நன்று
ஆகவே, இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் ஒன்றை நாமே அறிந்து கொள்வதைவிடக் கேட்டறிந்து கொள்வது எளிது; நல்லது என்பது தெரிகிறது. “கற்றலின் கேட்டலே நன்று” என்பது அறிந்தார் வாய்ச்சொல் திருவள்ளுவப் பெருந்தகையும் கற்றிலனாயினும் கேட்க (414) என்பார் தெரியாதார் தெரிந்தாரைக் கேட்டது இழிவாகாது. மானக்கேடும் ஆகிவிடாது. கேட்டுச் செய்வது இழிவென்று கருதி, சிலர் கேட்காமலே செய்து, பிறகு துன்புறுவர். ஒருவர் கேட்பதால், சொல்லுபவர்க்குக் கிளர்ச்சியும் மலர்ச்சியும் ஏற்படும். தமக்குத் தெரிந்ததைப் பிறர்க்குச் சொல்லவேண்டும் என்பது ஒர் இயற்கை உணர்வு. அவ்வுணர்வுதான் அறிவு பரவ வழியாக அமைகிறது. தன் பிள்ளைக்குப் பாலூட்டுவதை எப்படி தாய் இன்ப உணர்வாகக் கருதுகிறாளோ, அப்படி ஒருவர் தமக்குத் தெரிந்ததை மற்றவர்க்குச் சொல்வதை இன்பமாகக் கருதுகிறார். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நல்லவர் எல்லாரும் எண்ணுகின்றனர். தன்னிடம் இருப்பதை மற்றவர்க்குக் கொடுப்பதை ஈத்துவக்கும் இன்பம் (228) என்பார் திருவள்ளுவர். ஈவது பொருளை மட்டுமன்றி அறிவையுந்தான்! தாய் தன் குழந்தைக்குப் பால் கொடுப்பதைப் போன்றது, ஒர் ஆசிரியர் மாணவனுக்கு அறிவூட்டுவது, அறியாதவனுக்கு அறிந்தவன் ஒருவன் சொல்லித் தருவது தெரிந்தவன் தனக்குத் தெரிந்ததைப் பிறர் எப்பொழுது வந்து கேட்பார்களோ என்று இருப்பான். தீய எண்ணம் அல்லது தன்னலம் உடைய சிலர்தாம் தமக்குத் தெரிந்ததைப் பிறர் கேட்டாலும், சொல்லுவதற்கு விரும்பமாட்டார்கள். அத்தகைவில்லாதவர்கள், பிள்ளைக்குப் பால் கொடுக்காத கொடிய தாய்மார்களைப் போன்றவர்கள். தன் அழகு கெடுமென்று பிள்ளைக்குப் பால்கொடாமல் இருப்பது தன்னலம். அவர்களுக்குத் தாய்மை உணர்வும் குறைவாகவே இருக்கும்! அவர்களைத் தாய்கள் என்று சொல்வதைவிடப் பேய்கள் என்று சொல்லலாம். மற்றபடி நாய்கள் என்று கூடச் சொல்லக் கூடாது. ஏனெனில் நாய்கள் தாம் தம் குட்டிகளுக்கு அன்போடு பால் கொடுக்கின்றனவே? தாம் அறிந்ததைப் பிறர்க்குச் சொல்லிக் கொடுத்து மகிழாதவர்களையும் தந்நலப் பேய்கள் என்றுதான் சொல்லல் வேண்டும். இத்தகைய தந்நலப் பேய்களாகச் சிலர் இருப்பர். அவர்களுக்காக நாம் கவலைப்பட வேண்டுவதில்லை. ஒருவர் சொல்லித் தராமற்போனால் இன்னொருவரிடம் போதல் வேண்டும். அவர் இல்லையானால் இன்னொருவர். எவ்வாறாயினும் தெரியாதவர் தெரிந்தவரை - அதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றவரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். (56)
என்பது திருவள்ளுவம்.
5. வினையறிந்தார் நட்பு
வினைத்திறம் உடையவரை நாம் நட்பாக்கிக் கொள்ளுதல் வேண்டும். அவரை நம்மினும் வேறாக நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் நம் வினையால் பொருட்பயனை உண்டாக்கிக் கொள்ளமுடியாது. வினைத் திறம் உடையவனை வினையுடையான் என்பார் திருவள்ளுவர். பொருளுடையவனைப் பொருளுடையான் என்பதுபோல், வினையுடையான் வினைத்திறம் உடையான் ஆகின்றான்.
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு. (519)
வினைத்திறம் உடையானை வேறாகக் கருதக்கூடாது. நமக்குப் பசிக்கின்றபொழுது அவனுக்கும் பசிக்கும் என்று கருத வேண்டும். நாம் உண்ணும்பொழுது அவனையும் உண்ணச் செய்தல் வேண்டும். நாம் உறங்கப் போகும்பொழுது அவனையும் ஒய்வெடுத்து உறங்கும்படி செய்தல் வேண்டும். அவனுடைய தொடர்பை நட்பாகக் கருதுதல் வேண்டும். இன்னும் கேண்மை என்பது நட்பு மட்டுமன்று. சொந்தமும் ஆகும். எனவே, நண்பனாக மட்டுமன்று. சொந்தக்காரனாகவும் கருதுதல் வேண்டும் அப்பொழுதுதான் அவன் வினைத்திறத்தை நமக்குக் கற்றுத்தர விரும்புவான். தாய் தன் சொந்தப் பிள்ளைக்குத்தானே பால் தர விரும்புவாள். சொந்தமல்லாத பிள்ளைக்குப் பால் தருவதை எந்தத் தாயும் அவ்வளவாக விரும்ப மாட்டாளன்றோ?
6. நல்வழி வரவு
ஆகவே, வினைத்திறம் உடையவர்களைச் சொந்தமாகக் கருதிப் போற்றிக் கொள்ள வேண்டும். இனி, வினைத்திறம் உடையவர்களுக்கு இன்னொரு தகுதியும் தேவை. உலகியல் நிலையில் சரியானதையும் தவறானதையும் அவர்கள் தெரிந்து வினையில் ஈடுபடுதல் இன்றியமையாதது. உலக நயங்களை நியாயங்களை அவர் அறிந்திருத்தல் மிக மிகத் தேவை. இல்லாவிடில், வினைத்திறத்துடன் கள்ளவழிகளையும், தவறான போக்குகளையும் நமக்குக் காட்டிவிடலாம். பணம் ஈட்டுவதற்காக மட்டும் நாம் ஒரு செயலைச் செய்யக் கூடாது. நல்ல வழியில் வராத எந்தவகை சட்டமும் சிறந்த பயனைத் தராது. நல்லவர்கள், அறிவுடையவர்கள் அத்தகைய பண வருவாயை விரும்புதல் கூடாது. சிலர் எவ்வாறேனும் பணத்தைச் சம்பாதித்து, நல்ல செயல்களைச் செய்ய எண்ணங்கொள்வார்கள். நல்ல செயல்களைச் செய்ய விரும்புபவர்கள், அவற்றை ஒரு கொள்கை நோக்கமாகக் கொண்டவர்கள். அச்செயல்களைச் செய்வதற்குரிய பணம் தவறான வழியில் கிடைப்பதாயின், அதனை விரும்பக் கூடாது, அதைத் தவிர்த்து விடல் வேண்டும் என்பார் திருவள்ளுவர்.
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல் (113)
என்பது திருக்குறள்.
7. நேர்மையான வழி வரவு
நேர்மையாக வரும் பொருள் எந்தச் செயலைச் செய்வதன் வழி வரும்; எந்தச் செயலைச் செய்து பொருள் திரட்டக்கூடாது என்பதை அறிவுள்ளவர் அறவுணர்வு கொண்டவர்தாம் பிரித்து உணர முடியும். எனவே அறவுணர்வை - நடுநிலை உள்ளத்தைக் கொண்டவர்தாம் நமக்கு நல்ல வழியில் பொருளை ஈட்ட உதவுவார்கள். அவர்கள்தாம், அவ்வழியை நமக்கு அமைதியான அறிவுரையால், இனிமையான சொற்களால், நாம் மனங்கொள்ளுமாறு எடுத்துச் சொல்வார்கள். செயல் நிலைகளில் நமக்குத்துணையாக வருபவர்கள் நமக்கு ஓர் அமைச்சரைப் போல் நின்று வழிகாட்ட வேண்டும். அவர் கூறும் வழிகளில் நமக்குப் பொருள் வரும் என்றாலும், அவ்வழிகளும் நல்லனவாக, தீயவை அல்லாதவனவாக இருத்தல் வேண்டும். அந்த வழிகளை அவர் நமக்குக் காட்டுவதற்கு அவர் நேர்மையானவராகவும், அறவுணர்வு கொண்டவராகவும் இருத்தல் வேண்டும் அன்றோ? எனவே அறவழியை அறிந்து அதனை அமைந்த பட்டறிவால் நமக்கு அன்பாக எடுத்துக் கூறி நம்மை நல்ல நெறியில் கொண்டு செலுத்தும் திறமுடையவர்களையே நாம் வினைக்குத் துணையாகக் கொள்ள வேண்டும் என்பது திருவள்ளுவப் பெருந்தகையின் கருத்து.
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லால் எஞ்ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை (635)
என்பது அப்பொன்னுரை. எஞ்ஞான்றும் எப்பொழுதும், எந்த நிலையிலும், நமக்கு அவர் காட்டிய வழியில் ஒருகால் பொருளிழப்பு நேர்ந்தாலும், அல்லது இடர்கள் வந்து இன்னல் தந்தாலும் அவ்விடத்தும், அப்பொழுதும், நமக்கு நல்ல வழியினையே இறுதியாக நின்று காட்ட வேண்டியவராக இருப்பதால்தான் அவர் திறம் உடையவராக இருத்தல் வேண்டும் என்கிறார். திறம் உறுதிப்பாடு. உலகியல் நெறிமுறைகளை அறிந்த நல்லுணர்வு இழப்பு வந்தவுடன், நாம் கொண்ட நல்வழியை நெகிழ விட்டு, வேறு அல்வழியை, தவறான வழியை அவர் காட்டிவிடக் கூடாது. கொள்கை உறுதியும் உலகியல் பட்டறிவும் அவர்க்கு இருந்தாலல்லது அவர் காட்டும் வழியில், அவர் துணையில் அவர் தொடர்ந்த ஓர் உறுதியை நமக்குக் காட்ட முடியாது. எனவேதான் நமக்குத் துணைவருபவரிடம், அல்லது நாம் வினைத்துணையாகக் கொள்வோரிடம் நல்லது தேரும் திறனும், செயலறிவும், உலகியலறிவும், அவற்றை நமக்கு அன்புடனும் அறிவுடனும் எடுத்துக் கூறும் அமைதித் தன்மையும், அத்தகைய சொல்திறனும் இவற்றில் நெகிழாத உறுதிப்பாடும் இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நமக்குத் துணையாக, செயலுக்கு வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அவருக்கிருக்கும் அந்தத் திறமைதான் செயல்முறை எனப்படும்.
8. செயலுக்குத் துணையாக வேண்டாதவர்கள்
செயல்முறை என்பது செயலைச் செய்கின்ற புறத்திறனை மட்டும் குறிப்பதன்று. அந்தச் செயலைச் செய்யும் திறமுடையவனின் அகத்திறனையும் குறிப்பதாகும். செயல் செய்யும் புறத்திறனால் அச்செயல் நன்கு செய்யப்படலாம். வருவாயும் நிறைய வரலாம். ஆனால் அச்செயலின் தன்மையை, மேன்மையை, சிறப்பை, அதால் வரும் உலக நன்மையை, தீமையில்லாத தன்மையை எண்ணிப் பார்த்தல் சிறப்பானது. அவற்றையும் எண்ணிப் பார்த்துச் செயல் செய்பவனைத்தான் செயல்திறன் உடையவன், செயல்முறை தெரிந்தவன் என்று கூற முடியும்.
கள்ள நாணயம் செய்தல் அல்லது தாள் அடித்தல், திருடுதல், கூட்டுக் கொள்ளையடித்தல், வழிப்பறி செய்தல், ஏமாற்றுதல், வஞ்சித்தல், கையூட்டுப் பெறுதல், கள்ளக் கடத்தல் செய்தல், வட்டி வாங்குதல், வெறிக்குடிப்புகளைக் காய்ச்சுதல், பெண்களைக் கொண்டு பணம் ஈட்டுதல், பொதுநலன்களுக்கு உகந்த பொருள்களைத் தவறாகத் தன் நலன்களுக்குப் பயன்படுத்தல் முதலியவற்றால் வரும் ஊதியங்கள், வருமானங்கள் தவிர்க்கத் தக்கனவாகும். அவற்றைச் செய்பவர்கள் தீயவர்கள், கொடியவர்கள், கயவர்கள், பொதுநலக் கேடர்கள், உலக நலங்கெடுக்கும் உலுத்தர்கள், தந்நலமே கருதும் தகவிலர்கள், குமுகாயக் கொலைஞர்கள் இவர்களைப் போன்றவர்கள் என்றுமே வினைக்குத் துணையாக வேண்டாதவர்கள். அவர்களுக்கு அறவுணர்வு இராது. நன்மை கருதும் எண்ணமிராது. உலக நலம் நாடும் உயர்ந்த நோக்கம் இருக்காது. மக்களுள் மாக்களாக இருப்பவர்கள் இவர்கள்! இவ்வகையினரைத்தாம் திருவள்ளுவச் சான்றோர் மக்களே போலும் கயவர்கள் (107) என்றார். 'தகவிலர்' (14) என்றார். இன்னும், தம் ஒப்பற்ற திருக்குறளில் அப்படிப்பட்டவர்களை, அவ்விய நெஞ்சத்தார். (69), 'அறனல்ல செய்வார்' (173) 'அன்பிலார்' (72) 'அறம் செய்வார்' (266), 'அறிவிலார்' (427, 430), 'அளவறிந்து வாழாதார் (479), 'அகத்தின்னா வஞ்சர்' (824), 'இசையிலா யாக்கையர்' (239), 'இனமல்லார்' (822), 'இசை வேண்டார்' (1003), 'இழிந்த மயிரனையர் '(964), உடம்பாடிலாதவர் (890), என்புதோல் போர்த்த உடம்பர் (80), ஒப்பிலார் (மாறுபட்டவர்) (800, 812), ஒட்டார் (பொருந்தாதவர்), (826), காரறிவாளர் (287), களவறிந்தார் (288, கீழ்கள் (10.75), கொடியர் (550), சிறியார் (970), சீரல்லவர் (977), நகைவகையர் (817, பண்பிலார் (81), பூரியர் இழிந்தவர், கீழ்மக்கள் (241, 918 பேதையர் (782, 797) மரம் போல்வர் (997), மக்கட் பதடி (பதர்) (196) மாணார் பெருமையில்லாதவர் (823), மெய்ப்பொருள் காணார் (857), வன்கண்ணவர் (228), வாழாதவர் (240), விளிந்தார் (செத்தவர்) (1430) முதலிய சொற்களால் குறித்து, அவர்களின் மனவுணர்வு, அறிவுணர்வு, செயலுணர்வு ஆகியவற்றில் உள்ள இழிவுகளையும், அவற்றால் அவர்களுற்ற தாழ்ச்சி நிலைகளையும் சுட்டிக் காட்டுவார்.
இத்தகவிலாரால் நமக்கு எத்துணையளவு ஊதியம், வருவாய், பொருள்கள், நலன்கள், வளவாழ்க்கை முதலியன கிடைப்பதாயினும், அவர்களை எவ்வகையிலும் நாம் துணைவர்களாகக் கொள்ளக்கூடாது என்பதை நன்றாக மனத்தில் இருத்திக் கொள்ளல் வேண்டும். அப்படிப்பட்டவர்கள் எப்பொழுதும் நமக்குக் கேடானவற்றையே பழுதான எண்ணங்களையே எண்ணுவர்.0 639) அவர்களால் பெறுகின்ற பொருள் நலன்கள் எவ்வளவாயினும் அவற்றை நாம் துறந்துவிடல் வேண்டும். பண்பு உடைய செயல்கள் வழி வராத அச்செல்வம் தவறானது. துய்மையில்லாத கலத்தில் ஊற்றிய பாலைப் போன்றது (1000) என்பது திருக்குறள் கொள்கை. துன்பமே வருவதானாலும் அத்தகைய வருவாய்க்காக நாம் செயல்களை மேற்கொள்ளக்கூடாது. நல்ல அறிவுடையவர்கள் அவ்வாறான செயல்களை எந்தத் துன்ப நிலையிலும் செய்ய மாட்டார்கள்.
9. இழி செயல்கள்
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர் (654)
நடுக்கற்ற காட்சி - நடுக்கம் (அசைவு, நெகிழ்ச்சி) இல்லாத அறிவு. இளிவந்த செயல் - இழிவான செயல்கள், அவ் விழிசெயல்களின் வழியாக வந்த அல்லது வருகின்ற செல்வங்கள், பொருள்கள் இழிவான செயல்களை தீமை தரும் செயல்களைத்தாம் செய்ய உதவும். நல்ல செயல்களைச் செய்ய அப்பொருள் உதவுவதில்லை.
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின் (977)
தீதில்லாமல் வந்த பொருள்தான் அறச்செயல்களைச் செய்ய உதவும். இன்பம் காணத் துணைநிற்கும்.
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள் (754)
எனவே, அத்தகைய பொருளை ஈட்டித் தருகின்ற செயல்களைத் தாம் நாம் செய்ய வேண்டும். அவ்வகை உயர்ந்த செயல்களைச் செய்ய வல்லவர்களையே, நல்லவர்களையே, நாம் நம் வினைத் துணைவர்களாகக் கொள்ளவேண்டும். அவ்வாறல்லாத தீயவர்களை, உலகியலைத் தவறாக அறிந்த கேடர்களை, அறவுணர்வு அறியாத பேதைகளை நாம் வினைத்துணைவர்களாகக் கொள்ளக்கூடாது. அவ்வாறின்றி, அவர்களை நாம் துணைவர்களாகக் கொண்டு செய்யும் வினைகள் அல்லது செயல்கள் அல்லது கருமங்கள் அல்லது உழைப்புகள் வீணாய்ப் போகும். தவறாகப் போகும். அல்லாவிடில் வெறும் விளம்பரம் பூண்டு நிற்கும். பிறர் ஏமாறுவதற்குரிய வகையில் ஆரவாரம் காட்டி நிற்கும். போலிப் பெருமை செய்து இருக்கும். அவற்றால் யாருக்கும் உண்மைப் பயன் விளைய முடியாது; நல்ல மாந்த ஆக்கத்திற்குதவ முடியாது என்பது பேரறிஞர் திருவள்ளுவர் மெய்யுரை எச்சரிக்கை உரை.
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின் (836)
கையறியா என்பது செய்தல் அறியாத என்று பொருள்படும். கைசெய். செய்தல் அறியாத என்பதனுள் செயல் அறியாத, செய்கின்ற திறனறியாத, எந்தச் செயல் செய்ய வேண்டும் என்றறியாத, எச் செயலால் என்ன விளைவு நேரும் என்றறியாத, மொதத்தில் நன்மை, தீமை உணராத என்னும் பொருள்களெல்லாம் அடங்கும். அதனால்தான்,
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல் (677)
என்னும் குறட்பாவில், வினை உள்ளறிவான் என்று செயலறிந்தவண்னக் கூறுவர் மெய்ப்பொருளாசான்.
10. ஒருவர்க்கொருவர் துணை
இனி, துணை என்று சொல்லும் பொழுது, ஒருவர் சார்பாக மட்டும் அதனைப் பொருள்படுத்தி விடக்கூடாது. இருவர் சார்பாகவும் அது பொருள்படும். முத்துக்குமரனாருக்குத் துரையரசனார். துணை என்றால், துரையரசனாருக்கும் முத்துக்குமரனார் துணை என்றே இருவரும் கருதிக் கொள்ளுதல் வேண்டும். இறைவாணனார், முல்லை வாணனாரைத் தமக்கு மட்டும் துணை யென்று கருதி விடக்கூடாது. முல்லைவாணனாருக்கும் இறைவாணனார் துணையாக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. இவ்விடத்தில் ஒன்றை மட்டும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
ஒருவரை யொருவர் துணையாக்கிக் கொள்ள விரும்பும் இருவர் பல்வேறு கூறுகளில் வேறு வேறு தன்மைகள் கொண்டவராக இருக்கலாம். அவற்றுள், பெரும்பான்மையும், ஒருவர்க்கொருவர் பொருந்திவரக் கூடிய கூறுகளைக் கொண்டவராக ஒருவர் இருக்கின்றாரா என்று, மற்றவர் ஆய்ந்து பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
பெரும்பாலும், மாந்தராகப் பிறந்த ஒவ்வொருவரிடமும், இயற்கையாகவும் செயற்கையாகவும் பல்வேறு தன்மைகள் இருக்கும். இவற்றுள் இயற்கைக் கூறுகள் எவை, செயற்கைக் கூறுகள் எவை என்பனவற்றை வேறு பிரித்து அறிவது ஒருவாறு கடினமானதே. இன்னும் சொன்னால் சில கூறுகளை அறிவது மிகவும் கடினமாகவே இருக்கும். சில அறிந்து கொள்ள இயலாத கூறுகளாக இருக்கும். எனவே, நாம் ஒருவர் துணையை எவ்வகையில் எதன் பொருட்டு நாட விரும்புகிறோம் என்பதை, முதலில் நன்றாக எண்ணி முடிவு செய்தல் வேண்டும். அவ்வகையில் நமக்கு அவர் துணை பொருந்தி வருமா என்பதை அறிவுவழி ஆய்ந்தறிதல் வேண்டும். இந்நிலைகளை எல்லாரும் அறிந்திருப்பது மிகவும் கடினமாதலால், இவற்றைக் கொஞ்சம் விரிவு படவே கூறுவோம்.
11. இயற்கைக் கூறுகளும் செயற்கைக் கூறுகளும்
மக்களுக்கு இருக்கும் இயற்கைக் கூறுகளை ஒருங்கே தொகுத்துக் கூறுதல் மிகவும் கடினம். ஆனால் அவற்றை ஒருவாறு கீழ்வருமாறு எடுத்துக் கூறலாம். . அன்பு, பண்பு, அவா, குணம் அறிவு நாட்டம் முதலிய உணர்வுகள் பிறவி வழி உயிரியக்கத்துடன் ஒன்றிய இயற்கைக் கூறுகளாகும்.
அறிவிடுபாடு பழக்க வழக்கம், மொழியுணர்வு, இனவுணர்வு, நாட்டுணர்வு, உணவு, உடை, நாகரிகம் முதலியன சார்பு வழி அமையும் செயற்கைக் கூறுகளாகும்.
ஒருவரிடம் அமைந்த இயற்கை உணர்வுக் கூறுகளைப் பெரும்பாலும் மாற்றவே இயலாது. செயற்கை உணர்வுக் கூறுகளை நெருங்கிப் பழகுவதன் வழியாலும், அறிவுத் தாக்கத்தாலும் படிப்படியாக மாற்றியமைத்து விடலாம்.
நல்ல ஒழுகலாறுகள் பெரியோர்களிடம் பழகுவதால் நமக்கும், படிந்து சிறக்கும். சிறியோர்களிடம் பழகுவதால் அவை தவிர்ந்து அழியும். எனவேதான் உலகின் உயர்ந்த மெய்ப்பொருள் நூலாகிய திருக்குறளில், பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தையும், அதனை யொட்டிச் சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தையும், வைத்துள்ளார் மெய்ந்நூலறிவராகிய திருவள்ளுவர் பெருமான். இவ்விரண்டு அதிகாரங்களிலும் சில அரிய கருத்துகள் சொல்லப் பெறுகின்றன. அவற்றுள் தலையாய ஒரு கருத்தை நாம் நன்கு கவனித்தல் வேண்டும். மனம் எல்லாருக்கும் தொடக்கத்தில் பெய்யும் மழை நீரைப் போல் தூய்மையாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்நீர் விழுகின்ற நிலத்தைப் பொறுத்து, அதன் தன்மைகள் திரிபடைந்து விடுகின்றன. சூழ்நிலையால்தான் தன்மைகள் அமைகின்றன என்று, பிற்காலத்து வளர்ந்த அறிவியல், மனவியல் அறிவால் கண்டுகாட்டிய தன்மையை, நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே, திருவள்ளுவப் பெருமான் உணர்ந்து கூறியது வியந்து போற்றுதற்குரியது.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு (452)
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படும் சொல். (453)
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு. (454)
மனந்துய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்துாய்மை துரவா வரும் (455)
மனந்துயார்க் கெச்சம்நன் றாகும் இனந்துரயார்க்
கில்லைநன் றாகா வினை. (456)
ஆகிய ஐந்து குறள்களின் கருத்துகளுள் உலகில் உள்ள மாந்தர்க்கு வேண்டிய மனவியலறிவின் அடிப்படை முழுவதும் சொல்லப் பெற்றுள்ளன. இவற்றை விரிக்கில் மிகவும் பெருகும். இவற்றின் ஆழ்ந்த உட்பொருள் மனத்தின் தன்மையால்தான் ஒருவர்க்கு உணர்வு, உரை, செயல், நன்மை, தீமை முதலிய அனைத்தும் விளைகின்றன என்பதாகும். ஒருவரின் உள்ளத்தில் இருக்கும் உணர்வை நாம் எளிதாக உணர முடியாது. ஆனால் அவரின் உரையால் (சொல்லால் நாம் அதனை ஒருவாறு அறியலாம். நிலத்தில் உள்ள அடிச்சுவடுகளைக் கொண்டு அவற்றுக்குரிய விலங்குகளையும் உயிரிகளையும் நாம் அறிந்து கொள்வது போல், ஒருவரின் சொற்களைக் கொண்டு, அவரின் மனஉணர்வையும், அவரின் தன்மையையும்அவற்றுக்கடிப்படையான அவரது மரபு நிலையையும் அறிந்து கொள்ளலாம் என்பார் திருவள்ளுவப் பெருந்தகை.
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல் (959)
எனவே மனத்தின் உணர்வுகளெல்லாம் இயற்கை உணர்வுகளாகும். அவை மாற்ற முடியாத உயிரொடு தொடர்புற்ற உணர்வுகள். அந்த மனம் சார்ந்த உடல் இவ்வுலகில் எவ்விடத்து வந்து பிறக்கின்றதோ, அவ்விடத்துச் சூழல்களை அளாவி அமையும் உணர்வுகள் செயற்கை உணர்வுகளாகும். இவற்றை நாம் நம் வலிந்த முயற்சிகளால் மாற்றிக் கொள்ள இயலும் என்பது அறிவு நூலார் கொள்கை. எனவே, அறிவீடுபாடு செயற்கையுணர்வு ஆகும். அவ்வறிவிடுபாட்டின் அனைத்து முயற்சிகளையும் தமிழ்ச் சான்றோர் பொருள் என்னும் பாகுபாட்டில் அடக்குவர். மனவீடுபாட்டின் அனைத்து முயற்சிகளையும் அறம் என்றும் பாகுபாட்டில் அடக்குவர். இவ்விரு உணர்வுகளே தமிழ்நூல்களில் புறம் என்றும் அகம் என்றும் குறிப்பிடப்பெறுகின்றன.
12. சில மனவியல் நுட்பங்கள்
இவ்வுணர்வுநிலை நுட்பங்களையெல்லாம் விளக்கிச் சொல்வதானால் அஃது ஒரு பெருநூலாகவே விரியும். ஆகலின் அதனை இத்துடன் நிறுத்திக் கொண்டு, வினைக்குத் துணைவரத் தக்கவரைப் பற்றி மேலும் சிறிது விளக்கி மேலே சொல்லுவோம்.
ஒருவர்பால் அமைந்துகிடக்கும், மாற்றலாகாத இயற்கை உணர்வுகளைக் கொண்டே, ஒருவரை எடையிட்டுத் தேர்ந்து, அவர் ஏதோ சில வகையில் நமக்குப் பொருந்தியவராயின், அவருடன் தொடர்பு கொள்ளவும், பொருந்தாதவராயின் அவருடன் தொடர்பு தவிர்க்கவும் வேண்டும். ஒரு வகையில் மட்டும் இச்செயல் நிகழும் என்று சொல்ல முடியாது. இருவகையிலுமே இச் செயல் நிகழலாம். நாம் ஒருவரின் தொடர்பு நமக்குக் கூடாது என்று நினைக்கும் அதே நேரத்தில், அவரும் நம்முடைய தொடர்பைக் கூடாது என்று ஒதுக்கலாம். இதனால் நாம் வருந்திக் கொண்டிருக்கத் தேவையில்லை. நிலை எளிதானது என்று எண்ணி, மனம் நிறைவுறுதல் வேண்டும்.
இயற்கை உணர்வுகளால் வேறுபடாமல், நாம்துணையாகக் கொள்ள விரும்பும் ஒருவர், நமக்கு, செயற்கை உணர்வுகளால் மட்டும் வேறுபட்டிருப்பாராயின், நாம் அவரைத் தவிர்க்கத் தேவையில்லை. அத்தகைய உணர்வுகள் என்றும் மாற்றிக் கொள்ளத் தக்கனவே ஆகும். ஆனால், அதற்காகச் சில முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கும். அவ்வளவே! அம் முயற்சிகள் நம் வினை முயற்சிகளுள் அடங்கிவிடும். எனவே, அவற்றுக்காக நாம் சலிப்படைய வேண்டுவதில்லை. எப்படியோ ஒரு வினைக்குத் துணையாக, முழு நிறைவாக, நாம் எதிர்பார்க்கும் அத்தனைக் கூறுகளுடனும், ஒருவர் கிடைப்பது மிக மிக மிக அரிது.
ஒருவர் நாம் விரும்பும் அன்புடையவராக இருப்பார். ஆனால் அறிவில் அத்துணை விருப்பத்திற்குரியவராக இரார். இன்னொருவர். அறிவில் நம்மைக் கவரலாம். ஆனால் அன்புடையவராக இருக்கமாட்டார். அவரைத் துணையாகத் தேர்ந்துவிட்டால், அவரிடம் எப்பொழுதும் முரண்பட்டுக் கொண்டு கிடக்க வேண்டியதுதான்.
இனி, ஒருவர் நாம் விரும்பும் அன்புடையவராகவும் இருப்பார். நாம் எதிர்பார்க்கும் அல்லது மதிக்கும் அறிவுடையவராகவும் இருப்பார். ஆனால் நல்ல பண்புடையவராக இருக்கமாட்டார். ஒழுக்கக் கேடுகள் சில அவரிடம் இருக்கும் எல்லாரிடமுங் முரட்டுத்தனமாகப் பேசுபவராக இருப்பார். பழகுபவராக இருப்பார். அவரால் வேறு பிறர் நம் வினைக்குத் துணையானவர்கள், நம்பால் நல்லிணக்கம் கொள்ளத் தயக்கம் கொள்ளலாம். கடிநாய் ஒன்றைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பவரிடம், எப்படிப் பிறர் நெருங்கிப் பழகத் தயங்குவார்களோ, அப்படி அவருக்காக நம்மிடம் பழகுவதற்குச் சிலர் தயங்கலாம். அப்படிப்பட்ட தன்மையுடையவர்களையும் நாம் துணையாகக் கொள்ளுவது பற்றிச் சிந்திக்க வேண்டும்.
13. மரத்தைப் போன்றவர்கள்
இனி, இன்னொரு வகையானவர் இருப்பார். அவரிடம் அன்பிருக்கும் அறிவிருக்கும், பண்பும் இருக்கும். பொதுநல உணர்விருக்காது. தன்னலவுணர்வே, தானே அல்லது தன்னோடு சேர்ந்த சிலரே எல்லா நலன்களையும் பெற வேண்டும் என்னும் கரவுள்ளம், கடுகு உள்ளம் இருக்கும். இதுவும் ஒருவகைப் பண்புக் குறைவுதான். அவரையும் நாம் அவ்வளவு எளிதில் துணையாகக் கொண்டுவிடக் கூடாது. ஏனெனில் அன்பைவிட, ஒருவினை முயற்சிக்கு அறிவு தேவையானது. அதேபோல் அறிவைவிட ஒருவர்க்குப் பண்பு தேவையானது. பண்பு இல்லாதவர் தன்னலவுணர்வுடன் இருப்பார். தன்னலவுணர்வுள்ளவர் கொடியவராகவும் மாறுவார். எனவே ஒருவர் எவ்வளவு சிறந்தவராக இருப்பினும் அவர் பண்பில்லாதவராக இருப்பின் அவரை மரத்துக்குச் சமம் என்பார் திருவள்ளுவப் பெருந்தகை.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர் (997)
மக்கட் பண்பு என்பது மக்கட்கு நலம் செய்கிற பண்பு. மக்கள் அனைவரையும் ஒன்றாக மதிக்கின்ற பண்பு மக்களுக்காக உழைக்கின்ற பண்பு. அவர்களின் பொருட்டுத் தன் நலத்தை இழக்கின்ற பண்பு. இத்தகைய பண்பு இல்லாதவர் எவ்வள்வு பெரிய அறிவாளியாக இருப்பினும் அவரை நாம் மதிக்க வேண்டியதில்லை. போற்ற வேண்டியதில்லை. ஒரு மரம் நின்று கொண்டிருந்தால் நாம் எப்படி அதைப் பார்த்தும் பாராமல் போவோமோ, அதுபோல் அவரை நாம் பார்த்து மதிக்காமல் போகலாம் என்பது அவர் கருத்து.
ஒரு மரமானது, தன் கீழாக வேறு ஒரு மரத்தை வளர விடாது. அதற்கு வேண்டிய சாரத்தையும் இதுவே உறிஞ்சிக் கொள்ளும். பின்னர் அஃதெப்படி வளரும், அதுபோல் அறிவிருந்து பொது மக்களுக்கு நலஞ்செய்யும் பண்பில்லாதவன், அவ்வறிவின் திறத்தால், அதன் சூழ்ச்சியால், அவனைச் சுற்றியிருப்பவர்களையும் சுரண்டி வாழத்தக்கவனாகவே இருப்பான். அவர்களுக்கு நலஞ்செய்பவனாக இவன் இருப்பான் என்று சொல்ல முடியாது. இவனுண்டு. இவன் வேலைகள் உண்டு என்று இருப்பான். இவனும் இவன் குடும்பமும் மட்டுமே வாழ்ந்தால் போதும் என்றிருப்பான். பிறருடைய செயல்களைப் பற்றி இவன் கவனம் செலுத்த மாட்டான். செலுத்தினாலும் அவர்களைப் பற்றி அக்கறை காட்டமாட்டான். அவர்களின் செயல், நடைமுறைகள் இவைபற்றி எரிச்சல் அடைவான். மகிழ்ச்சியடைய மாட்டான். இத்தகையவனையே மக்கட் பண்பில்லாத மரம் என்று திருள்ளுவப் பேராசான் கூறுவார்.
14. எவ்வளவில் தேர்ந்தாலும் வேறாக இருப்பவர்கள்
இனி, ஒருவனை அன்பும் அறிவும் பண்பும் உடையவனாகக் காண்பதோடு மட்டுமின்றி, அறம், செல்வம் உடையவனாகவும் நாம் காணமுடியும். அத்தகைய நாம் விரும்பும், அல்லது நம் வினைக்கு வேண்டிய வகையில் அமைந்த சிறப்புக் கூறுகள் பல அமைந்தவனாக ஒருவன் இருந்து, அவனை நாம் நம் வினைக்குத் துணையாகக் கொண்டாலும், அவ்வினை நிலைகளில் பலவாறு மாறுபட்டு விடலாம் என்பார் திருக்குறள் பயந்த செம்மலார்.
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர். (514)
என்னும் வாயுரை அது.
எனவே, எல்லாத் தகுதியும் உடைய ஒருவரை நம் வினைக்குத் துணையாகக் கொள்வது அரிதினும் அரிதாகும். அத்தகையவர்களே உண்மையானவர்களாக இருத்தல் இயலும். அப்படிப்பட்டவர்களைத் திருக்குறளில் பல பண்புப் பெயர்களால் குறிப்பார் திருவள்ளுவப் பெருமான். அவர்களையே 'நல்லாற்றின் நின்ற துணை' (41) என்று பெருமைப்படுத்துவார். 'வாழ்பவர்' (5, 240) என்பார். 'சான்றோர்' (69, 15, 657) என்பார். இன்னும் அத்தகையவர்களை அன்புடையார் (72), 'பணிவுடையார்' (95), 'இன்சொல்லர்' (95), 'மாசற்றார்' (106, 31, 800), 'செப்பம் உடையவர்' (112), 'தக்கார்' (114), 'தெளிந்தார்' (143), 'செவ்வியார்' (169) 'ஒத்ததறிவார்' (214), 'நயனுடையார்' (214), 'பெருந்தகையார்' (217), 'குலனுடையார்' (223), அளவறிந்தார், (288), 'அறிவுடையார்' (427, 816, 430), பெரியார் (443), 'ஒள்ளியவர்' (487),'நடுக்கற்ற காட்சியவர்' (654), 'நீரவர்' (அறிவுடையர்),(782), 'பண்புடையாளர்' (783, 996), 'பழிநாணுவார்' (794), 'எல்லைக் கண் நின்றார்' (805) 'இற்பிறந்தார்' (951), 'குடிப்பிறந்தார்' (952, 954), 'குலத்தில் பிறந்தார்' (954), 'மானம் உடையார்' (970),'பெருமை உடையார்' (974), 'பாடறிவார்' (பெருமையறிவார் (955), 'நல்லவர்' (1011) என்று பலவாறாக வியந்து போற்றுவார்.
இத்தகையவர்களே உலகியல் அறிந்தவர்கள். உயிருக்குத் துணையாக நிற்பவர். அவர்களே வினைக்குத் துணையாக இருக்க இயலும் என்பது குறிப்பால் உணர்த்தப் பெற்றவராவர். அவர்களைத் தேர்ந்து தெளிவது கடினம். இருப்பினும் அவர்களையே கொடுத்தும் கொளல் வேண்டும். (867), உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் வேண்டும் (703).
இனி, வினைக்குப் பொருந்திய காலம், இடம் முதலியவற்றைத் தேர்தல் குறித்து அடுத்த பகுதியில் பேசுவோம்.
14. காலம், இடம் தேர்தல்
1. காலத்தின் இன்றியமையாமை
ஒருவினையைத் தொடங்குவதற்கும், அவ்வினை பழுத்து வருவதற்கும், அது கனிந்து முற்றுப் பெறுவதற்கும் காலம் மிகவும் இன்றியமையாததென்பதை அனைவரும் அறிவர். அடுத்து, முயன்றாலும் ஆகுநாள் அன்றி, எடுத்த கருமங்கள் ஆகா என்பது வாக்குண்டாம் செய்யுளடி எச்செயலும் பருவத்தால் அன்றிப் பழா என்பது, அது கூறும் முடிவு. கண் இலான், மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே, ஆம் காலம் ஆகும், அவர்க்கு என்று நல்வழி நவில்வதும் அதுவே.
பொருள்கருவி காலம் வினை இடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். (675)
என்று திருக்குறள், காலத்திற்கு மூன்றாவது முகாமை தருவது பற்றி முன்னரே கண்டோம்.
காலம் அறிந்தாங் கிடமறந்து செய்வினையின்
மூலம் அறிந்து விளைவறிந்து மேலுந்தாம்
சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து
ஆள்வினை ஆளப்படும்.
என்பது குமர குருபர அடிகளின் நீதிநெறிவிளக்கம்.
திருக்குறளிள் காலம் அறிதல் என்பது மிக நுட்பமான ஓர் அதிகாரமாக இடம் பெறுகிறது.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின் (484)
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர் (485)
என்னும் குறள்களில் காலம் கருதிச் செய்தால் இவ்வுலகையும் விலைக்கு வாங்கலாம் என்பார் திருவள்ளுவப் பேராசான். ஒருவன் தக்க கருவி 'கொண்டு, காலத்தை அறிந்து செயல்படுவானாயின், உலகில் செய்வதற்குக் கடினமான வினை என்பதே ஒன்றுமில்லை.
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் (483)
என்று திருவள்ளுவர் நெப்போலியனின் வீரக்குரலொடும், கிரேக்கப் பேரறிஞன் ஆர்க்கிமிடீசின் அறிவுக் குரலொடும், ஒன்றி முழங்குவார்.
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல். (489)
என்னும் குறளிலும்
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து (490)
என்னும் குறளிலும், வினைக்கு வேண்டிய கால உளவும் கூறுவார். இவ்வாறு அனைத்து அறிஞர்களின் உரையிலும் வினை செய்வதற்குரிய காலம் மிகுந்த இன்றியமையாத ஒன்றாகக் கூறப்பெற்றுள்ளதை நாம் மிக ஆழமாக மனத்தில் ஊன்றிக் கொள்ளுதல் வேண்டும். மற்றும் கழக நூல்களிலும் காலத்தின் முகாமை பலவாறு வருந்தியுரைக்கப் பெற்றிருப்பதைப் பரக்கக் காணலாம். வினைக்குப் பொருந்துவதாகிய காலம் நற்காலம் என்று சான்றோர் பாராட்டியுரைப்பர். எடுத்துக்காட்டாக சிற்சில இடங்களைப் பார்ப்போம்.
தொல்நலம் பெறூஉம் இதுநற்காலம் (அகம்.164)
காலத்தில் தோன்றிய கொண்மூப் போல (கலி. 82-2)
காலனும் காலம் பார்க்கும் (புறம் 41-)
காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது (பதிற். 30-14)
எனவே, ஒரு வினை செய்வதற்குரிய காலம் என்று உண்டு என்று தெரிகிறது. பருவத்தே பயிர்செய் காற்றுள்ளபோதே, தூற்றிக் கொள், வெயில் உள்ளபோதே உலர்த்திக் கொள் என்பன போன்ற பழமொழிகளும் அவ்வுண்மையையே உணர்த்துகின்றன.
2. காலம் என்பது என்ன ?
இனி, காலம் என்பது என்ன? நல்ல காலம், கெட்ட காலம் என்று கணியர்கள் குறிப்பிடுகின்ற காலமா? வினை விளை காலம் ஆகலின் என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறாரே அந்த ஊழ் என்னும் பொருள் தருகிற காலமா, இல்லை; வேனில், கதிர், முன்பணி, பின்பணி, கார், இளவேனில் என்னும் பருவ காலங்களா? இல்லை; காலை, பகல், மாலை, முன்னிரவு, நள்ளிரவு, பின்னிரவு என்று குறிப்பிடுகின்ற பொழுதுகளா? இல்லை. நமக்கு வந்து வாய்க்கும் குழந்தைமை, இளந்தை, இளமை; வாலை, நடுமை, முன்முதுமை, பின்முதுமை போன்ற வாழ்க்கைக் காலங்களா? அல்லது இவை எல்லாம் பொருந்திய ஒரு சேர்க்கைக் காலமா என்று முதலில் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒரு வினையைத் தொடங்குவதற்கு ஏற்ற காலம் என்பது முழுமையாக, நாம் எடுத்துக் கொண்ட வினையையே பொறுத்தது. நாம் செய்ய எடுத்துக் கொண்ட வினை என்ன? அதால் யார்யார்க்கு எத்தகைய வகையில் எவ்வளவு பயன் கிடைக்கும்? அதற்கு யார் யாரைத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும். பிறகு அந்த வினை செய்வதற்குப் பொருத்தமான சூழ்நிலையைக் காலத்தாலும் இடத்தாலும் முடிவு செய்ய வேண்டும். அதற்கு, அவ்வினை செய்ய வேண்டிய கால கட்டாயத்தை முதலில் உறுதி செய்ய வேண்டும். செய்யப் பெற வேண்டிய வினை அந்தக் காலச் சூழலுக்குப் பொருத்தமானதா, அந்த இடத்திற்குப் பொருத்தமானதா என்று ஆராய்ந்து முடிவு செய்தல் வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையே அவ்வினைக்கு இயைந்த சூழ்நிலை என்று முடிவு செய்து கொள்ளுதல் வேண்டும். அந்தச் சூழ்நிலை இயையுமானால், அதுவே அதற்கேற்றது என்று தெரிவு செய்தல் வேண்டும். நம் வினைக்கு அது வந்து பொருந்துமானால், அதுவே அதற்கேற்றது என்று தெரிவு செய்தல் வேண்டும். நம் வினைக்கு ஒரு பெருத்த முதலீடு தேவைப்படுவதாயின், அம் முதலீடு நமக்கு வந்து வாய்க்கும் காலமே, சூழலே அதற்கேற்ற காலம் ஆகும். அல்லது, அதற்குரிய கருவிகள் நமக்கு வந்து வாய்க்குமானால் அதுவே அதற்கு ஏற்ற காலம் என்றும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். அல்லது அவ்வினைக்குரிய துணைவர்கள் வந்து பொருந்துவார்களானால், அதுவே அவ்வினைக்குத் தக்க காலம் என்று கருதிக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு ஒரு வினைக்குரிய, தேவையான பொருள், கருவி, துணை என்னும் மூவகைக் கூறுகளில் ஒன்றோ இரண்டோ, தானாக, அல்லது தாமாக வந்து பொருந்தும் காலமே அவ்வினை தொடங்குவதற்கு ஏற்ற காலம் என்று துணிதல் வேண்டும்.
இவற்றுள் நாம் எடுத்துக் கொண்ட வினைக்கு ஒன்று பொருந்தும். ஒன்று பொருந்தாமல் இருக்கும். அஃதாவது நம் வினைக்கேற்ற பொருள் கிடைத்திருக்கும். கருவிகள் கிடைக்கா, கருவிகள் கிடைக்கும். ஆள்கள் கிடைக்க மாட்டார்கள். இனி, பொருளும் கருவியும், ஆள்களும் கிடைத்திருக்கும். ஆனால், அவ்வினை தொடங்குவதற்கு அந்தச் சூழ்நிலை பொருத்தமில்லாமல் போகும். அந்நிலையிலும் அவ்வினையைச் செய்ய நாம் துணிந்து விடக்கூடாது. அஃதாவது நாம் வெல்ல வாணிகம் செய்யவிருப்பதாக வைத்துக் கொள்வோம். அதற்குரிய முதலீடும், கடையும் கருவிகளும், போதிய ஆட்களும் இருக்கலாம். ஆனால் அது மழைக்காலமாக இருக்கும். அந்தக் காலச் சூழ்நிலை நம் வெல்ல வாணிகத்திற்கு ஏற்றதாக அமையாதன்றோ? எனவே, அந்நிலையில் பருவக் காலமே நமக்கு ஏற்றமென்று கருதிக் கொள்ளுதல் வேண்டும்.
3. தெரிந்து செய்தல்
திருக்குறளில், செயல் நிலைகளை முறைப்படுத்தும் அதிகார வரிசை சிறிது உற்று நோக்குவதற்குரியது.
எந்தச் செயலைச் செய்யப் போகின்றோம் என்பதைத் தேர்ந்து கொள்வதைத் தெரிந்து செயல்வகை என்னும் அதிகாரத்தால் கூறுவர் குறளாசான்.
அதன்பின், ஒன்று, அச்செயலின் வலிமை, இரண்டு அதைச் செய்வதற்கு முனைந்த நம்முடைய வலிமை, மூன்று அச்செயலைச் செய்ய முற்படுங்கால், இயல்பாகவே அதற்கு வந்து வாய்க்கின்ற பகைவர்களின் அல்லது எதிர்ப்பாளர்களின் வலிமை, நான்கு, அச்செயலுக்கு என நமக்குத் துணை வருவோரின் வலிமை ஆகிய நான்கு கூறுகளையும் உள்ளடக்கி நிற்கும் கருத்துகளையெல்லாம் வலியறிதல் என்னும் அதிகாரத்துள் விரித்துரைப்பார் திருவள்ளுவர் பெருமான்.
அதையடுத்து அவர் கூறுவது காலம் அறிதல் அதிகாரம் அதன்பின் இடன் அறிதல், இவற்றையெல்லாம் நன்றாக ஆராய்ந்து அறிந்தபின், அவ்வினைக்குரிய துணைவர்களைத் தேர்தலாகிய தெரிந்து தெளிதல், அவ்வினை நிலை நுட்பங்களையும், கொண்டு செய்விப்பார்களையும் செய்முறைகளையும் கூறும் தெரிந்து வினையாடல் ஆகிய அதிகாரங்கள் ஒன்றன்பின் ஒன்று முறையே சொல்லப்பெறுகின்றன.
எனவே காலம் அறிதல், இடனறிதல் ஆகிய இரண்டு அறிவுத் தேர்வு நிலைகளும், வினைக்கு நடுவாக அறிய வேண்டிய நுட்பங்கள் ஆகும் என்று கண்டு கொள்ளுதல் வேண்டும். காலத்தை உணர்ந்த பின் காலத்தாழ்ச்சி கூடாது.
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது - (671)
என்பதை என்றுமே மறத்தல் கூடாது.
4. அனைத்து நலன்களும் பொருத்துதல்
வினைக்குரிய சூழல் அமைவது கடினம். மிகவும் கடினம். அது வாய்ந்தபின் உடனே அது செய்யப்பெறுதல் வேண்டும். வாழ்க்கை நிலையாமை உடையது. எனவே அடுத்து வரும் காலத்துள், நமக்கு இன்றிருக்கும் ஊக்கம் தொடர்ந்து இருக்கும் என்று சொல்ல முடியாது. இன்று நமக்குள்ள உடல் நலம், மனநலம், அறிவுநலம், கருவிநலம், செல்வநலம்,துணைநலம், காலப்பொருத்தம், இடப்பொருத்தம் முதலியன இனிவரும் காலத்தின் மாறுபடலாம். எப்பொழுதும், ஒவ்வொரு நொடிப்பொழுதும், இயற்கை நிலைகள் மாறுபட்டுக்கொண்டே இருக்கும் தன்மை வாய்ந்தன என்பதை முதற்கண் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
இன்றிருக்கும் மனநிலை நாளை இராது. இன்றுள்ள உடல்நலம் அடுத்தநாள் இராது. உடல் நலம் கெடலாம். அல்லது நமக்கேதாவது ஏதங்கள் வரலாம். பலவாறான தடைகள் வரும். இன்று ஒருவன் நமக்கு உதவி செய்வதாகச் சொல்லிச் செல்வான். நாளை வரும்பொழுது அவ்வாறு செய்ய இயலவில்லை என்று சொல்வான். எனவே காலம் மிக மிக இன்றியமையாதது. மேலும் இன்று நம் வினைக்குரியதாக நாம் திரட்டி வைத்திருக்கின்ற செல்வம் நாளை கை தவறிப் போகலாம். திருடு போகலாம். செலவழிக்கப்பட்டுவிடலாம். அல்லது வேறு தேவைகள் வந்து அதனை அவற்றுக்கென ஒதுக்க வேண்டிய கட்டாயம் வரலாம். எனவேதான் வினைக்கு வாய்த்த அல்லது வாய்க்கும் காலம் மிக மிக இன்றியமையாதது.
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல் (489)
என்னும் குறட்பாவிலும்,
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல் (333)
அஃதாவது, நில்லா இயல்பினை உடையது செல்வம். அது வந்து வாய்க்குமானால், நிலைக்கின்ற செயல்களை அங்கே, அப்பொழுதே செய்யத் தொடங்கிவிட வேண்டும் என்றும் குறளாசான் வலியுறுத்துவார்.
மேலும் நம் உடல் நலமும், நமக்குற்ற பருவமும், காலம் என்ற அடிப்படையில் கவனிக்கப் பெற வேண்டிய முகாமையான கூறுகளாகும். நாம் ஒரு செயலைச் செய்து முடிக்க இருபது ஆண்டுகள் ஆகும் என்றால், இருபது ஆண்டுகளுக்குப் பின் நம் நிலை, அகவை, உடல் நிலை எவ்வாறு இருக்கும் என்று கணித்துவிட வேண்டும். கழி முதுமையில் அவ்வாறு நெடிய முயற்சிகளைச் செய்ய நினைத்தாலும் செய்யவியலாது. அதற்குக் காலம் இடந் தராது என்பதை உறுதியாக எண்ணிப் பார்த்தல் வேண்டும்.
ஏராளமாகச் செய்யவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் நமக்கிருந்தால் போதா. காலமும் நமக்கு வேண்டும். மீளமுடியாத நோய்வாய்ப்பட்ட ஒருவன், நோய் நீங்கிச் செய்ய வேண்டிய பலவாறான வினைகளைத் திட்டமிட்டுக் கொண்டிருப்பதால் என்ன பயன்?
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. (337)
என்றும்
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்செனறு செய்யப் படும் (335)
என்றும் திருவள்ளுவப் பேராசான் காலம் கருதுதலை நிலையாமையுள் அடக்கி, நாம் வாழ்கின்ற காலத்தையும் எண்ணிப் பார்க்க வலியுறுத்துவார்.
எனவே காலம் என்பது வேளையோ, பருவமோ, நம் அகவையோ வினைக்குரிய சூழலோ என்றில்லாமல் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு வாய்ப்புக் கூறு என்றே பொருள் கொள்ளுதல் வேண்டும்.
5. இடம் என்றால் என்ன?
இனி இடனறிதல் என்னும் நுட்பத்தையும் நாம் நன்கு தெரிந்து கொள்ளுதல் வேண்டும். பொதுவாக இடம் என்பது நிலம் சார்ந்த பரப்புக்கூறு (Place) என்றே பொருள்பட்டாலும், தன்னிலை, முன்னிலை, படர்க்கை என்றும் நம் சான்றோர்களால் பகுத்துக்கூறும் திறன் வியந்து நோக்குதற்குரியது.
வினை செய்வதற்குரிய இடம், அதற்குரிய கருவிகள், கிடைக்கும் இடம், அதற்குரிய வினையாள்கள் அல்லது தொழில் வினைஞர்கள் வாழ்விடம், அத்தொழிலால் அல்லது வினையால் உருவாகும் பொருள்களை விலைபோக்குதற்குரிய இடம், பொருள் வாய்ப்பு வசதிகள் நிறைந்த இடம் முதலிய அனைத்தையும் உள்ளடக்கிப் பொருள் தருவதாகும் ஒரு நில எல்லையையே இடம் என்னும் சொல் சுட்டும்.
தொடங்கற்க எவ்வினையும்..... இடங்கண்ட பின் அல்லது (491) என்பது திருவள்ளுவப் பேராசானின் முதல் அறிவுரை,
இடனறிந்து செய்யாதவிடத்து, நம் எண்ணங்கள் வலிவிழக்கும். பகைவரது எண்ணம் வலிவு பெற்றுவிடும், என்பது, ஒரு கருத்து.
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின் (494)
என்னும் குறளுள், பகைவரது எண்ணங்கள் முறியடிக்கப்பெற வேண்டுமாயின், நாம் வினைமேற் கொள்ளும் இடத்தைச் சரியாகத் தேர்ந்து எடுத்துக்கொள்ளுதல் வேண்டும் என்பார் திருவள்ளுவர்.
இங்கும் இடம் என்பது பாதுகாப்பான, வினை செய்வதற்குரிய பகைவர்கள் எளிதில் நெருங்க இயலாத முயற்சிகளுக்கேற்ற வாய்ப்புகள் மிகுந்த இடம் என்று பொருள்படுவதாகும்.
ஞாலங் கருதினும் கைகூடும் காலங்
கருதி இடத்தாற் செயின் (483)
என்பதை நன்கு எண்ணிப் பார்த்தல் வேண்டும்.
முதலைக்கு வலிவு அது தண்ணிரில் உள்ள பொழுதே, அது நிலத்துக்கு வருமானால் தன் வலிவை இழந்துவிடும். அதுபோல் தன்வலிவு மிகக்கூடிய இடமே வினைக்குரிய இடம் என்று கருதிக் கொள்ளுதல் வேண்டும்.
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற - (495)
இவ்விடத்தில் நாம் கவனிக்க வேண்டியது நெடும்புனல் என்பது. அஃதாவது புனல் (தண்ணிர்) என்று மட்டும் குறிக்காமல் நெடும்புனல் என்று குறித்தது. ஆழமான தண்ணீர் எப்பொழுதும் வற்றாமல் இருக்கும் நீர்நிலை, இட அளவாக நீண்டு விரிந்த நீர்ப்பரப்புள்ள இடம் முதலிய அனைத்துப் பொருள்களையும் குறிக்கவே என்க. ஒரு காலத்து நிறைந்திருந்தது. அடுத்த காலத்தில் வற்றிப் போகும் நீர்நிலை முதலை வாழ்வதற்கு ஏற்ற இடமன்று. ஒரு குறுகிய நீர்நிலையாகவும் அஃது இருந்தால் போதாது. அதுபோல் ஆழமற்ற நீர்நிலையும் அதற்கு ஏற்றதன்று. எனவே தான் நெடும்புனல் என்று குறித்தார் பேராசான்.
இவ்வாறு வினை செய்கிறவன், வினை செய்யப் பொருத்தமான இடத்து, அவன் வினைக்குரிய பொருள், கருவி, துணை முதலியவை எப்பொழுதும், எந்த நிலையிலும் தாழ்ச்சியின்றிக் கிடைத்துக் கொண்டே இருத்தல் வேண்டும். சான்றாக வட்டிக்கடை வைக்கின்ற ஒருவன், செல்வர்கள் வாழ்கின்ற இடத்தையோ, ஊரையோ அவன் வினைக்கென்று தெரிவு செய்தல் கூடாது. அங்கு வட்டிக்குப் பணம் பெறுவார் எவரும் இரார் இருப்பினும் பேரளவில் இருத்தல் இயலாது. அதேபோல் மிகுந்த ஏழைகள் உள்ள இடமும் ஊரும் அத்தொழிலுக்குரிய இடம் ஆகாது. ஏழைகளுமாக இல்லாமல், பணக்காரர்களுமாகவும் இல்லாமல், நடுத்தர வருமானமுள்ளவர் வாழ்கின்ற இடமாக, ஊராக அல்லது பகுதியாக அஃது இருத்தல் வேண்டும்.
6. தேரும் படகும்
இன்னும் நன்றாக எண்ணிப் பார்ப்போமானால், அவ்வினை நிகழும் இடம், மக்கள் போதிய வருமானம் இல்லாதவர்களாகவும், அதேபொழுது தொழில் ஆர்வம் உள்ளவர்களாகவும் துணிந்து கடன் பெற்று முதலீடு செய்து தொழில் இயற்றும் ஊக்கமுடையவர்களாகவும் நிறைந்திருக்கின்ற இடமாக இருத்தல் வேண்டும். இன்னும் பார்ப்போமானால் அவர்கள் செய்யும் தொழிலுக்குரிய வருமானமும் அங்குக் கிடைக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் பணத்தை வட்டிக்கு வாங்கித் தொழில் செய்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு கடனை அடைக்க இயன்றவர்களாய் இருக்க முடியும். அவ்வாறில்லாதவர்கள் வாழ்கின்ற இடத்தில் வட்டித் தொழில் செய்தால் அது வெற்றி பெறாது. இழப்புதான் ஏற்படும்.
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து (496)
வலிந்த கால்களை உடைய தேராயினும் அது கடலில் ஒட இயலாது. இனி, கால்கள் இல்லாத படகு, தண்ணீரில்தான் ஓடும். அது நிலத்தில் ஒட இயலாது. எது, எது எங்கு இயங்க இயலுமோ, அது அது அங்குதான், அதற்குரிய இடத்தில் தான் இயங்கும். வினையும் அப்படிப் போன்ற நிலையை உடையதுதான் என்று அறிதல் வேண்டும்.
எனவே, வினை செய்பவன், அதற்குரிய காலத்தையும் இடத்தையும் நன்கு தேர்ந்து, அவ்வினையைத் திறம்பெறச் செய்தல் வேண்டும் என்று தெரிந்து கொள்க
7. காலத்தில் சில நுட்பம்
இனி, காலம் கருதுதலில் இன்னொரு நுட்பமான செய்தியையும் நாம் நன்றாக விளங்கிக் கொள்ளுதல் மிக மிக இன்றியமையாததாகும்.
காலம் கருதுதல் இடத்திற்கு இடம், வினைக்கு வினை மாறுபடும் அல்லது வேறுபடும் அளவுடையது. சில நேரம் காலத்தை மேலோட்டமாகக் கருதுதல் வேண்டும். ஆனால் சில நேரமோ காலத்தை மிக முகாமையாகக் கருத வேண்டும்.
ஒரு சந்தைக்குப் போய்ச் சில பொருள்களை நாம் வாங்க வேண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். அதன் பொருட்டு நாம் கருதியாக வேண்டிய காலம், சந்தை நடைபெறும் காலமாகும். அஃதாவது சந்தை, பொதுவாகக் காலை 10 மணி முதல் கூடத் தொடங்கி முன்னிரவு 8 மணி வரை நடைபெறும் என்றால், அதுவே சந்தைக்குச் செல்ல வேண்டிய காலமாகும். அந்த இடைப்பொழுதில் நாம் எந்த நேரத்திலாவது சந்தைக்குச் சென்று பொருளை வாங்கலாம். அது நாம் மற்ற வினைகளைச் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட காலத்தைப் பொறுத்து அமைத்துக் கொள்ள வேண்டியதாகும். அந்நிலையில் நாம் முன்பின்னாகச் செயல்படலாம். அதில் தவறில்லை. ஆனால் நாம் குறிப்பிட்ட ஒரு காலத்தில், அஃதாவது மாலை 6 மணிக்குப் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்றிருந்தால், அதற்குக் கட்டாயம் அந்த நேரத்தில் போயே ஆகவேண்டும். அந்த நேரத்திற்குப் பின்னர் காலந்தாழ்த்தி நாம் போவது, நமக்கு ஒன்று இழுக்கை உண்டாக்கும். இரண்டு, பொதுமக்களுக்கு நம்மேல் இருக்கும் நம்பிக்கையைக் குறைக்கும். எனவே, அவ்விடத்தில் காலம் கருதுதல் மிகவும் இன்றியமையாததாகும். இனி, ஒருவேளை, நாம் 6 மணிக்குப் போக முடியாதபடி ஒரு தடை வந்து, அந்தப் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொள்ள 6 மணிக்கே போக முடியாமற் போகுமானால், கொஞ்ச நேரம் காலந்தாழ்த்திப் போனாலும் அதனால் குற்றமாகிவிடாது. அவ்வாறு காலந்தாழ நேர்ந்ததற்குரிய அமைவை நாம் பொதுமக்களிடம் விளக்கிக் கூறி அவ்விழுக்கும் அந்நம்பிக்கைக் குறைவும் வராதவாறு காத்துக் கொள்ளவியலும். அதனால் நாம் செய்யப் புகுந்த வினை ஒன்றும் தடைப்பட்டு விடாது. இவ்வகையில் காலந் தவறுதல் அவ்வளவு கேடு தந்து விடாது.
ஆனால், நாம் சரியாக 6 மணிக்குச் செல்லும் தொடர் வண்டியைப் பிடித்தாக வேண்டும் என்றிருந்தால், கட்டாயம் நாம் 5 1/2 மணிக்கே நிலையத்திற்குப் போயாக வேண்டும். இனி, 5 1/2 மணிக்கு நாம் அங்குப் போய் சேர வேண்டுவதாக இருந்தால், நாம் வீட்டிலிருந்து 5 மணிக்கே புறப்பட்டாக வேண்டும். அப்பொழுது தான் நாம் வண்டி நிலையத்திற்குப் போய் முன்கூட்டியே சீட்டு வாங்கவோ, அல்லது ஒதுக்கப்பெற்ற இடத்தைத் தேடிப் பார்த்து அமரவோ முடியும். இங்குக் காலத்தாழ்ச்சி நமக்கு மிகக் கேடாகவும், நாம் செய்யவிருக்கும் வினைக்கு மிகவும் இடையூறாகவும் போய்விடுவது தவிர்க்க முடியாததாகிவிடும். எனவே காலங் கருதுதலை எந்தவிடத்தில் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். எந்த இடத்தில் சிறிது கை நெகிழ்ந்தாலும் அதில் தளர்ச்சி காட்டினாலும் அதில் தாழ்வில்லை. எந்த இடத்திலும் காலத்தைத் தவறவே விடக்கூடாது, மாறாக, முன்கூட்டியே செயல்பட வேண்டும் என்றெல்லாம் நன்கு உணர்ந்து தேறுதல் வேண்டும் என அறிக.
8. காலத்தாழ்ச்சி எப்பொழுது இருக்கலாம்
காலத்தாழ்ச்சி அல்லது காலம் வரும் வரை அமைந்திருத்தல் என்பதுவும் கூடக் காலங்கருதுதல் என்னும் செயலுக்குள்ளேயே அடங்கும். காலத்தாழ்ச்சியோ கால அமைவோ, அந்தச் செயலை மேலும் நன்கு அஃதாவது இன்னும் திறம்படச் செய்வதற்குத்தான் பயன்படுவதாக இருக்க வேண்டுமே தவிர, அந்தச் செயலை நெகிழ்த்து விடுவதற்காக, அதில் மெலிவு தோன்றி விடுவதற்காக இருந்துவிடக்கூடாது.
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து (486)
என்பார் திருவள்ளுவப் பேராசான், சண்டைக்கு விட்ட ஆட்டுக்கடா, தன் முனைப்பில் சிறிது பின்வாங்குதல், காலத்தைச் சிறிது தளரத் தாழ விடுதல், ஏற்கனவே அந்த வினையின் பொருட்டுத் தான் கொண்ட உள்ள உறுதியை வலிமைப்படுத்தி, மேலும் முனைப்பாகத் தாக்குவதற்கே ஆகும் என்பது அவர் கருத்து. அஃதாவது முன்னினும் வலிவு பெறுவதற்காகக் காலத்தைத் தாழ்த்தலாம். இடத்தைக்கூட மாற்றலாம். மழைக்காலத்தில் சதுப்பு நிலத்தில் தொடங்கும் போர் வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்பை உறுதியாகத் தரும் என்று சொல்ல முடியாது. ஆகையால், அங்குக் காலத்தைப் பின் தள்ளுவதும், இடத்தை மாற்றியமைப்பதும் தவறாகா என்று அறிதல் வேண்டும்.
இனி, நாம் ஒரு வினை முடிவதற்குரியதாக ஒரு காலத்தைத் தேர்ந்தெடுத்துக் காத்துக் கொண்டிருக்கையில், அவ்வினை அக்குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே கனிந்து முடியும் என்னும் நிலை தோன்றினால், குறிப்பிடப்பெற்ற காலத்திற்காகக் காத்துக் கொண்டிராமல், வினை வந்து சூழ்வுற்ற காலமே அதற்கு ஏற்ற காலம் என்று கருதி, அப்பொழுதே அவ்வினையைச் செய்யத் தொடங்கிவிடுதல் வேண்டும். இவ்விடத்தில் இடத்தையும் கூட அவ்வாறு கருதுதல் வேண்டும்.
எய்தற் கரிய(து) இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல். (489)
என்பது திருவள்ளுவம் இடம் என்பது சில நேரம் காலத்தையும் சுட்டுவதாக அமையும். மேல் காட்டப் பெற்ற குறளில் அந்நிலை என்பது காலத்தையும் இடத்தையும் இணைந்து சுட்டும் ஒரு பொருள் பொதிந்த சொல்.
9. இயற்கை இயைபு
இனி, ஒரு செயல் நடைபெற மாந்த முயற்சியும் இயற்கையின் இயைபு நிலையும் பொருந்தி வருதல் வேண்டும் என்பதை நாம் மேலும் தெரிந்து கொள்ளுதல், செயல் திறனுக்கு உரிய இன்னொரு நுட்பக் கூறாகும். மழைக் காலத்தில் விதைப்பது என்பது இயற்கையை அறிதலும் மாந்த முயற்சியும் இயைபுபட்ட ஒரு செயலுக்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். எனவே, காலம் கருதுதல் என்பது இயற்கையால் வந்துறும் காலம் என்றும் பொருள் தருவதாகும். தரவே, எய்தற்கரியது இயைவது என்பது இயற்கையாக ஏற்படுத்திக் கொடுக்கும் பருவக் காலங்களையும் வானியல், கோளியல் ஆகியவற்றால் அமையும் காலத்தையும் ஒருவாறு குறித்ததாகவும் பொருள் கொள்ளலாம். இனி, இயற்கையின் இயைபு நிலை என்பது, நமக்கு மட்டுமே இயைந்த செயலாகவன்றி, நம் அனவரையும் இயைபுப்படுத்தி இயங்கும் ஒரு பொதுநிலைச் செயலாகவே இருக்க முடியும் ஆகலின், அது வகுத்துக் கொடுக்கும் காலத்தையே நாம் எதிர்பார்த்து நம்பியிராமல், நம் முயற்சியையும் நாம் கருதியிருத்தல் வேண்டும் என்பதற்காகவே,
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (619)
என்றார் பேராசான். இது பருவ மழையை எதிர்பார்த்து விதைத்த ஒருவன், அது தப்பியவிடத்து, கிணற்றடி நீருக்கும் முயற்சி செய்வது போன்றதாகும். ஊழ் என்பது மூவகைச் செயற்பாட்டு எதிர் விளைவைக் குறிக்கும் ஒரு பொருள் பொதி சொல்லாகும் ஊழ் வேறு விதி வேறு. தேவையான விடத்து, இது மிக விரிவாக விளக்கப்பெறும் இக்கால், காலங் கருதுதல் என்பது இயற்கை வழியமைந்த ஒர் இயைபு நிலையை உணர்தலும் ஆகும் என்னும் அளவிற்கே இக்கருத்தைக் கவனித்தல் தகும். ஆனால், இயற்கை இயைபுக்குக் காத்திருந்து, மாந்தன் தன் முயற்சியால் அமைத்துக் கொள்ளும் காலத்தைக் கருதாமல் இருந்து விடுதல் கூடாது என்று உணர்ந்து கொள்க.
15. உறுதி கொள்ளுதல்
1. உறுதியும் ஊக்கமும்
உறுதி என்னும் சொல் உறுதல் என்னும் வினைச் சொல்லை ஒட்டிப் பிறந்த சொல்லாகும். உறுதல் - உறுதி உறுதல் என்னும் சொல்லுக்கு, அடைதல், உண்டாதல், கிடைத்தல், கூடல், பொருந்துதல், சேர்தல், தங்குதல், வருதல், மிகுதல், ஒத்தல் முதலிய பொருள்கள் உண்டு.
ஒரு செயலைச் செய்யும் முன்னம் அதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் உண்டாகும். அவ்வாறு உண்டான எண்ணம், அந்தச் செயல் செய்து முடிக்கப்படும்வரை உள்ளத்திலேயே தாங்கியிருத்தல் வேண்டும். இன்னும் சொன்னால் அந்த எண்ணம் உண்டாகி, தோன்றிய அளவோடு நில்லாமல், அந்தச் செயல் செய்து முடிக்கப்படும் வரை உள்ள கால நீட்டிப்பு, உழைப்பு மிகுதி, தேவை நிலைகள், எதிர்தாக்கங்கள் முதலியவற்றிற்கு ஏற்ற படி மேலும் மேலும் மிகுந்து வலிவாகிக் கொண்டே (அந்த உணர்வு உள்ளத்தை விட்டுப் பெயராமல் அல்லது நீங்கி விடாமல் அல்லது குறைந்துவிடாமல் நிலைத்து நிற்க வேண்டும். அத்தகைய மிகுந்து வளரும் எண்ணத்தின் வலிவுணர்வுக்கே உறுதி என்று பெயர். இந்த உணர்வுக்கு ஊக்கம் என்று வேறு பெயரும் உண்டு. ஊக்குதல் - மிகுதல், அஃதாவது தோன்றிய அளவில் மெலியாது, மேலும் மேலும் வலிவு பெறுதல்.
2. எதிர் தாக்கம் ஏற்படுதல்
ஒரு செயலைச் செய்ய முற்படும் பொழுது அதற்கு வேண்டிய உழைப்பின் அளவு நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒரு பெரிய கல்லைப் பார்த்தவுடன் அதை நாம் ஒருவரே புரட்டி அல்லது அப்புறப்படுத்தி அல்லது தூக்கிவிடலாம் என்று கருதலாம். ஆனால் அதை நெருங்கி அசைத்துப் பார்த்த பின்தான் இன்னொருவரும் அதற்கு வேண்டும் என்பது நமக்குத் தெரியவரும் இனி, இன்னொருவருடன் முயல்கின்ற பொழுதுதான் மேலும் ஒருவர் தேவைப்படுவது தெரியும். இப்படி ஒருவர் இருவராக அசைத்தசைத்துப் பார்த்தபின் மொத்தம் ஐந்துபேர் வந்துதான் அதை நகர்த்தமுடியும் என்று ஒரு நிலை ஏற்படும். இதுதான். அந்த வேலையைச் செய்வதற்குரிய உழைப்பு அளவு. இந்த அளவைக் கண்டுபிடிக்க ஓரளவு காலத்தை நாம் செலவிட்டிருக்கிறோம். இது நாம் நினைத்திருந்த காலத்திற்கும் மேலான காலத்தை எடுத்துக் கொண்டது. இது கால நீட்டிப்பு ஆகும். இந்த உழைப்பு அளவு முன்பே நமக்குத் தெரிந்திருந்தால் அந்தக் காலத்தை நாம் மீதி பண்ணியிருக்க முடியும் வேலையும் முன்னரே முடிந்திருக்கும்.
இனி, அந்தக் கல்லை ஐந்து ஆட்களைக் கொண்டு புரட்ட வேண்டி வந்து ஐந்து ஆட்கள் நமக்குக் கிடைக்காமல் போனால், இரண்டு ஆட்களையும் ஒரு கடப்பாரையையும் கொண்டு புரட்டி விடும்படி ஒரு நிலையும் இருக்கும். அப்பொழுது இரண்டு ஆட்கள் ஒரு கடப்பாரை நமக்குப் போதும். அது தேவைநிலை. அந்த நிலையும் நமக்கு முன்பே தெரிந்திருந்தால், மேலும் மூன்று ஆட்களைத் தேடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. அப்பொழுது காலம் இன்னும் நமக்குக் குறையும். முயற்சியும் குறையும்.
இனி, அந்தக் கல்லை மேலோட்டமாகப் பார்க்கும் பொழுதுதான் அது நிலத்தின் மேல் கிடப்பதாகத் தெரிந்திருக்கும். ஆனால் அதைப் புரட்ட முயற்சி செய்யும் பொழுதே, அது நிலத்தினுள் சில அடிகள் கீழே புதைந்திருப்பதும் நமக்குத் தெரிய வருவதாக வைத்துக் கொள்வோம். அதுதான் நம் செயலுக்கு நேர்ந்த எதிர் தாக்கம் ஆகும். அஃதாவது, நாம் ஒரு செயலை இயல்பாக எண்ணிச் செய்துவிட முயற்சி செய்கையில், நாம் நினைத்திராதபடி இயற்கையாகவோ, அல்லது ஓர் ஆள் வழியிலோ நமக்கு வரும் தடையோ, எதிர்ப்போ எதிர்தாக்கம் ஆகும்.
நாம் ஒரு செயலைச் செய்ய வெளியே புறப்பட்டுக் கொண்டிருப்போம். உடனே மழை வரும் புறப்பட முடியாமல் போகும். இஃது இயற்கை எதிர்தாக்கம் நாம் ஒரு வாணிகம் செய்ய ஓர் இடத்தைத் தேர்ந்தெடுப்போம். அதே இடத்துக்குப் பக்கத்தில் இன்னொருவர் அதே வாணிகத்தைச் செய்ய முற்படுவார். அஃது ஆள் எதிர்தாக்கம். இவ்வாறன்றி வேறு ஒருவர் நம் மேல் பொறாமை கொண்டு அல்லது பகைகொண்டு, நாம் செய்ய எடுத்துக் கொண்ட செயலுக்கு முட்டுக்கட்டை போடுவார். அல்லது தடை செய்வார். அல்லது நம் வேலையைக் கெடுக்கும்படியான சூழலை உருவாக்குவார். இவையெல்லாம் ஆள் எதிர்தாக்கந்தாம்!
இவ்வாறு ஒவ்வொரு செயலுக்கும் அஃது எந்த வகைச் செயலாக இருந்தாலும், அதற்கு இயற்கையாகவும் செயற்கையாகவும் பல தடைகள், எதிர்ப்புகள், கேடுகள், தேவை நிலைகளில் பற்றாக்குறைகள், உழைப்பு அளவை நிறைவு செய்ய இயலாமை முதலிய நிலைகள் கட்டாயம் முழு அளவிலோ சிறு அளவிலோ நாம் எடுத்துக்கொண்ட வேலைக்குத் தக்கபடி வந்தேதான் தீரும் எதிர்ப்பு வராத எந்தச் செயலும் உலகத்தில் இல்லை. அறிவியலில் ஓர் உண்மை உண்டு. ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்ச் செயல் உண்டு என்பதை நாம் எப்பொழுதும் எந்த நிலையிலும் மறந்துவிடக் கூடாது. உலகமும் அதிலுள்ள அனைத்து ஆற்றல்களும் நேர் ஆற்றல் - எதிராற்றல் என்ற அளவிலேயே இயங்குகின்றன என்று நாம் முன்பே அறிந்திருக்கிறோம். அந்த உண்மை எல்லாச் செயல்களுக்குமே பொதுவானது.
3. உடலும், உள்ளமும்
எனவே ஒரு செயலைச் செய்யத் தொடங்கியவுடன் அதற்கு ஏற்படும் தடைகளைப் பார்த்து நம் உள்ளம் சோர்ந்துவிடும். துவண்டுவிடும். வருத்தம் கொண்டுவிடும். பின்னர் படிப்படியாக இந்தச் செயலே வேண்டாம் என்று அமைந்துவிடும். ஆனால், அவ்வாறு சோர்ந்துவிடாமல் துவண்டு விடாமல், வருத்தம் கொள்ளாமல், அமைந்துவிடாமல், மேலும் மேலும் அந்தச் செயலை செய்வதில் ஆர்வமும் முனைப்பும் கொண்டு ஈடுபடுதல் வேண்டும் அதையே உறுதி ஊக்கம் என்னும் சொற்கள் குறிக்கின்றன.
இந்த இரண்டு சொற்களும் நம்முடைய இரண்டு வகையான தன்மைகளைக் குறிக்கின்றன. உறுதி என்பது உடலுணர்வுத் தன்மையையும், ஊக்கம் என்பது உள்ள உணர்வுத் தன்மையையும் குறிக்கும். அவ்வாறு குறித்தாலும் உடலில் உள்ளமும் உள்ளத்தோடு உடலும் பொருந்தியிருப்பதால், பொதுவாக இரண்டின் தன்மைகளையுமே இவ்விரண்டு சொற்களும் குறிக்கக் கூடியன. அவ்வாறு ஒன்றுக்கே உரிய சொல்லை இன்னொன்றுக்குக் குறிக்கும் பொழுது, அதனதன் இயல்பான தன்மைகள் இன்னும் மிகுந்து தோன்றும்படியான உணர்வுகளை அவை உணர்த்துவதை அறிந்து மகிழலாம்.
அஃதாவது உடல் உறுதியாக இருக்கிறது என்கிற பொழுது இயல்பான நிலையில் உடல் நலமாக இருப்பதை அஃது உணர்த்தும். ஆனால் உடல் ஊக்கமாக இருக்கிறது என்கிறபொழுது அது நலமாக மட்டுமின்றி அச்செயல் செய்யும் கிளர்ச்சியுடனும் இருக்கிறது என்பதை அஃது உணர்த்தும். அதேபோல், உள்ளம் ஊக்கமாக இருக்கிறது என்கிற பொழுது, இயல்பான நிலையில் அது செயல் செய்யும் விருப்பத்தில் - ஆர்வத்தில் அஃது இருக்கிறது என்பதை உணர்த்தும். உள்ளம் உறுதியாக இருக்கிறது என்னும் பொழுது, அச்செயல் செயல் முடிக்கும் வரை அந்த விருப்பம் தளராமல் இருக்கும் என்பதை அஃது உணர்த்தும். தமிழில்தான் இத்தகைய நுண்பொருளை உணர்த்தும் சொற்களை நாம் பார்க்க முடியும்.
ஆகவே, நாம் எந்தச் செயலைச் செய்வதற்கு முற்பட்டாலும், அந்தச் செயல் முடியும்வரை, அதனால் வரும் எவ்வகை இடர் பாடுகளையும், எதிர்ப்புகளையும், தொல்லைகளையும் பற்றாக்குறைகளையும் கால நீட்டிப்பையும் கண்டு, சோர்வு கொள்ளாமல், அச்செயலைத் தொடங்கிய அதே ஆர்வத்துட்ன், இன்னுஞ் சொன்னால் மேலும் மேலும் மிகுந்த முனைப்புடனும் உள்ள உறுதியுடனும் உடல் ஊக்கத்துடனும் செய்து முடிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.இதனை இன்னும் கொஞ்சம் விரிவாக விளக்கமாகப் பார்ப்போம்.
4. ஒருவந்தம்
ஊக்கம் என்னும் சொல்லுக்குப் பரிமேலழகர், "மனம் மெலிதலின்றி, வினை செய்தற்கண் கிளர்ச்சி உடைத்தாதல்" என்று பொருள் தருகிறார். ஒரு செயலிலோ, நோக்கிலோ உள்ளமானது படிந்து அல்லது பற்றி அதைப் பெயராது அதிலேயே இறுதிவரை உறுதி கொண்டிருப்பதால், அதற்கு ஒருவந்தம் என்றும் ஒரு சொல் திருக்குறளில் ஆளப்பெறுகிறது (563, 593)
ஒரு செயல் முயற்சி கொண்டு உழைக்குங்கால், அதில் ஊதியம் வரவில்லையென்றோ, அல்லது முன்னரே இட்ட முதல் இழந்துவிட்டோமே என்றோ, ஊக்கமுடையவர்கள் துன்பப்பட மாட்டார்கள். மேலும் மேலும் முயற்சி செய்வார்கள்.
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார் (593)
இதில் திருவள்ளுவர் ஊக்கம், ஒருவந்தம் எனும் ஏறத்தாழ ஒரே பொருளுடைய இரு சொற்களையும் ஒரே இடத்திலேயே கையாள்வது இன்னும் கவனிக்கத்தக்கது. உறுதியை உறுதியாகக் கைக்கொள்ளுபவர் என்று இதற்குப் பொருள். இதைக் கூற வந்தவர், முதல் உறுதிக்கு 'ஊக்கம் எனும் சொல்லையும் இரண்டாவது உறுதிக்கு, ஒருவந்தம் எனும் சொல்லையும் அமைத்துப் பேசுகிறார்.
இனி, உடல் படிப்படியாக நலம் பெறுதலைத் தேறுதல் என்று சொல்லுகிறோம். இவன் உடல் தேறிவருகிறது என்பது வழக்கு இனி, எவரோ ஒருவரின் மறைவால், மிகுந்த துயரமுற்ற இன்னொருவர் செயலற்று இருக்கும் நிலையை மனமுடைதல் என்று குறிக்கும் நாம், அவர் மீண்டும் ஊக்கம் பெற்று வருவதை மனம் தேறி வருகிறார். என்றும் கூறுகிறோம். இங்கு உடலும் மனமும் தேறி வருவது அல்லது தேறுதல் பெற்று வருவது, ஊக்கம் பெற்று வருவதையே ஆகும். எனவே ஊக்கத்திற்குத் தேறுதல் என்றும் ஒரு சொல் உண்டு.
அன்பறிவு தேற்றம். (513)
இங்குத் தேற்றத்திற்கு, மனம் கலங்காத உறுதி என்று பொருள். செயலுக்குரிய ஒருவனைத் தேறும் பொழுது அஃதாவது, தேர்ந்தெடுக்கும்பொழுது, அவன் அன்பும், அறிவும், மனம் கலங்காத உறுதியும், பொருளாசை இன்மையும் உடையவனாக இருக்கின்றானா என்று பார்க்க வேண்டும் என்பது குறள்.
இனி, திருக்குறளில் இன்னொரு சிறந்த குறிப்பும் உள்ளது. அதைப்பற்றி நாம் கொஞ்சம் விரிவாகவே தெரிந்து கொள்ள வேண்டும்.
5. அறிவு, உள்ளம், உடல்
மக்களுக்கு உறுதியாக இருக்க வேண்டியவை மூன்று. அறிவு, உள்ளம், உடல். இந்த மூன்று பொருள்களும் உறுதியாக இருந்தால்தான், இந்த உலக வாழ்க்கை மிக நிறைவாகவும், சிறப்பாகவும் நடைபெறும். அறிவுஉறுதி என்பது, ஒரு செயலையோ பொருளையோ பற்றித் தெரிந்திருக்கின்ற அறிவு, அதில் ஈடுபாடு கொண்ட பின் தவறாகவோ நெகிழ்ச்சி அடைந்தோ போகுமானால், அந்த அறிவால் பயனில்லை. அஃது உறுதியற்ற அறிவாகும். நாம் தெரிந்த அறிவுநிலை இறுதிவரை சரியானதாகவே இருந்தால்தான் அஃது உறுதியான அறிவு ஆகும். அதேபோல் நம் உடலும் ஒரு செயலைத் தொடங்கும் பொழுது இருப்பதுபோல், அச்செயல் முடிவடையும்வரை உறுதியோடு இருத்தல் வேண்டும். அதுவே உடலுறுதி. இனி, இரண்டிற்கும் மேலாக உள்ளம் உறுதியுடன் இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அறிவுறுதியும் குலையாதிருக்கும். உடலுறுதி குறைந்தாலும் சரி செய்து கொள்ளலாம். உள்ள உறுதியிழந்து போனால், அறிவும், உடலும் உறுதியாக இருந்தும் பயனில்லை. படிப்படியாக அவையும் உறுதி குலைந்து போகும். உள்ளம் உறுதியாக இருப்பின், அறிவும் உடலும் தொடக்கத்தில் உறுதியற்றிருந்தாலும் கூட படிப்படியாக அவை உறுதிபெற்று விடமுடியும். எனவே உறுதி என்னும் உணர்வுக்கே உள்ளந் தான் நிலைக்களன் ஆகும். ஆகையால், உறுதி என்பதற்கு உள்ளம் என்றே பெயர் கொடுத்து விடுவார் திருவள்ளுவர்.
உள்ளம் உடைமை உடைமை (592) - உறுதி,
உள்ளத்து அனையது உயர்வு (595), உறுதி - ஊக்கம்.
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை (600) உறுதி - ஊக்கம்.
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை (97)- உறுதி,
உரன் நசைஇ, உள்ளம் துணையாக (1263) - உறுதி.
உள்ளற்க உள்ளம் சிறுகுவ (798) - உறுதி.
ஒருவனுக்குச் செல்வம் என்பது வேறு இல்லை. உள்ளத்தின் உறுதியே செல்வம் ஆகும். மற்றபடி பொருளைச் செல்வம் என்பதெல்லாம் சரியன்று. உள்ள உறுதி இருந்தால் எவ்வளவு பொருளையும் திரட்டிவிட முடியும். உள்ள உறுதியில்லாமல் பொருள் மட்டும் இருந்து பயனென்ன? பொருள் ஒரு சமயத்தில் ஒரேயடியாகப் போய்விடுமே! அதுபோல், உள்ளத்தில் உறுதி இருந்தால் அஃது எப்பொழுதும் ஒருவரை விட்டுப் போகாது என்பார் திருவள்ளுவப் பேராசான்.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். (592)
இனி, இன்னுஞ் சொன்னால் அறிவு என்பது வேறு ஒன்றும் இல்லை. உள்ள உறுதிதான் அறிவு ஆகும். உள்ளத்தில் உறுதியில்லையானால் அந்த அறிவுதான் எதற்கு மேலும் உறுதியில்லாத உள்ளம உடைய ஒருவனை மாந்தன் என்று கூற முடியாது. மரம் என்றுதான் கூற முடியும். மரத்திற்கு அறிவும், செயல் முயற்சியும் இல்லாதது போலவே இவனுக்கும் அவை இல்லையாகிவிடும் என்பார் திருவள்ளுவர்.
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லார்
மரம் மக்கள் ஆதலே வேறு. (600)
உரம் என்பது அறிவு. உள்ள வெறுக்கை என்பது உறுதியின் மிகுந்த - தன்மை.
மேலும் உறுதி, அஃதாவது ஊக்கம் இல்லாத அறிவு செயலுக்குப் பயன்படாது. வெறும் அறிவால் மட்டும் பயனில்லை. இது செயலுக்குப் பயன்பட வேண்டும். எனவே, மேலும் மேலும் அறிவைப் பெறுவதையே ஒருவன் விரும்பிக் கொண்டிராமல், இதுவரை பெற்ற அறிவுக்குரிய செயலைச் செய்து கொண்டே மேலும் அறிவு பெறுவதுதான் வாழ்க்கைக் குரிய பயனைத் தருவது ஆகும்.
6. தன்னை அறிவித்தல்
இனி, ஒருவன் பிறந்து, தன்னை உலகுக்கு அறிவிக்க வேண்டும். அவ்வறிவித்தல் நில்ைத்து நிற்றல் வேண்டும். அதற்குத்தான் புகழ் என்று பெயர். புகழை ஒளி என்றும் கூறுவர்.
ஒளிதொழுது ஏத்தும் உலகு. (970)
இப்புகழே கூட ஒருவர்க்கு உள்ள உறுதியால்தான் ஏற்படும் என்பார் திருவள்ளுவர். உள்ளத்தில் உறுதி இருந்தால்தான், அறிவு செயலாக மலர்வதற்கு ஊக்கம் தோன்றும் அறிவு செயலாக மலர்ந்தால்தான். அது பலராலுல் போற்றப்பெறும். அதுதான் புகழாகும். எனவே உள்ளத்தில் உறுதி இல்லையானால் புகழ் ஏற்பட வழியில்லை, உள்ள உறுதியற்றவன் எந்தச் செயலையும் செய்ய இயலாது. புகழும் பெறமுடியாது. எனவே,
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை (971).
7. செயலுறுதி
மன உறுதி உள்ளவன், ஒருபொழுதும் தான் மேற்கொண்ட செயலை, அது தொல்லை கொண்டது, இழப்புத் தருவது, கடினமுடையது. பல இடர்ப்பாடுகளை அடுக்கடுக்காகத் தருவது என்பன போன்ற காரணங்களுக்காகக் கைவிட மாட்டான். செயலுக்கே உள்ள உறுதிதான் அடிப்படை மற்றனவாகிய செயலுக்குரிய பொருள்,துணை, கருவிகள், இடம், காலம் எல்லாம் மனவுறுதிக்குப் பின்னால் வைத்து எண்ணத் தக்கவைதாம். இத்தகைய துணைப் பொருள்கள் இல்லை என்றாலும் மனவுறுதி இருந்தால் அவற்றை ஒவ்வொன்றாகப் படிப்படியாகத் தேடிக்கொள்ள முடியும். ஆனால் மன உறுதியை யாரும் புறத்தே இருந்து தேடிக் கொள்ள முடியாது. அஃது அகத்தேயே பிறவி முதல் இருப்பது உயிருடன் கலந்தே ஒருவன் அதைப் பெறுகிறான். வினைக்குத் தேவையான பிறபொருள்கள் உலகியல் பொருள்கள். ஆனால் மனவுறுதி உயிரியல் கூறு. எனவே தனக்கு இயல்பாகவே வந்து வாய்த்த இயற்கை உணர்வான உள்ள உறுதியை உலகில் முயற்சி செய்தால் கிடைக்கக்கூடிய பிற துணைப் பொருள்களுக்காக இழந்துவிடக் கூடாது என்பார் திருவள்ளுவப் பேராசான்.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. (661)
எனவே வினைத்திட்பத்திற்கே, அஃதாவது உறுதியான செயலுக்கே அவனிடமுள்ள மனவுறுதியே காரணமாக அமைகிறது. ஆகையால் மனவுறுதியே (திட்பமே வினை உறுதி (வினைத்திட்பம்). வினை உறுதியையே எல்லாரும் போற்றுவர். வரவேற்பர்; புகழுவர்; அதற்குத் துணை நிற்பர். வினை உறுதியே இல்லாதவனை எவரும் பாராட்ட மாட்டார்கள். விரும்ப மாட்டார்கள்; வெறுத்து ஒதுக்கி விடுவார்கள். அவனிடம் வேறு உறுதிப்பாடுகள் இருக்கலாம். அஃதாவது பொருள் இருக்கலாம் அறிவு இருக்கலாம். ஆள்துணை இருக்கலாம். கருவி முதலிய உலக உறுதிப் பொருள்கள் இருக்கலாம். ஆனால் உலகம் ஒருவனிடம் எதிர்பார்ப்பன இவையன்று. அவனின் உள்ள உறுதியையே! அவ்வுள்ள உறுதி இல்லாத பொழுது அவனைப் பயனற்றவனாகவே உலகம் கருதும், அவனின் பிற சிறப்பியல்களை அது விரும்புவதில்லை என்பார் திருவள்ளுவர்
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு. (470)
இந்த வினைத்திட்பம் என்பதே மனத்திட்பம்தானே! எனவே வினைத்திட்பம் செயல் உறுதி, செயல்திறன் எல்லாமும் மனத்திட்பத்தைப் பொறுத்தே அமைந்திருக்கும் என்க.
8. பொருத்தமானதும், பொருத்தமில்லாததும்
இனி, இத்தகைய உள்ள உறுதி, சில செயல்களை மேற்கொள்ளுவதால் மேலும் மேலும் வலிவு பெறும். வேறு சில செயல்களைச் செய்வதால் சிறிது சிறிதாகக் குறைந்து மெலிவு பெறும் என்னும் ஓர் உண்மையையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும். எந்தச் செயல் நம் உள்ளத்தை மேலும் மேலும் வலிவுபெறச் செய்கிறதோ, அந்தச் செயலே நமக்குப் பொருத்தமான செயல் என்று கொள்ள வேண்டும். அந்தச் செயலையே நாம் தொடர்ந்து செய்யவும் வேண்டும்.
இனி, எந்தச் செயலால் நம் உள்ளம் படிப்படியாக உறுதி தளர்ந்து வருகிறதோ, அந்தச் செயலை நாம் உடனே கைவிட்டு விடவேண்டும். அதை நினைக்கவும் கூடாது என்பார் திருவள்ளுவர். இதுபோலும் கூரிய நுட்பங்களை நாம் திருக்குறள் தவிர வேறு எந்த நூலிலும் பார்க்க இயலாது.
இந்த உண்மையைக் கூறும்போது, திருவள்ளுவர் நமக்கு அது விளங்க வேண்டும் என்பதற்காக வேறொரு நமக்கு நன்றாய் விளங்கும் ஒர் உண்மையைப் பொருத்திக் காட்டுவார்.
நாம் நல்ல நிலையில் அஃதாவது இன்பமாகவும், மகிழ்வாகவும் இருக்கின்ற பொழுது சில நண்பர்கள் வந்து, நம்மோடு பொருந்தியிருந்து, நட்புப் பாராட்டித் தாங்கள் உண்மையான நண்பர்கள் போல் நம்மோடு மகிழ்ந்திருப்பர். ஆனால் துன்பம் வரும்பொழுது அவர்கள் நம்மை விட்டு ஏதோ காரணம் கூறிவிட்டு, அந்தத் துன்பத்தில் பங்கு கொள்ள மாட்டாதவர்களாய், விலகி விடுவார்கள். அந்த நிலையில் நம் உள்ளம் அவர்களை நினைந்து மிகவும் வருந்தும் அது நாம் பெற்ற துன்பத்தை விட மேலும் துன்பமாக இருக்கும். அபொழுது நம் உள்ளம் சிறுத்து விடும். ஊக்கம் குறைந்துவிடும். அத்தகைய நண்பர்களை நாம் உடனே விட்டு விலகிவிட வேண்டும். அவர்கள் நட்பை நாம் மேலும் விரும்பக்கடாது. அதுபோலவே நம் உள்ள உறுதியைக் குலைக்கின்ற சிறுக்கச் செய்கின்ற - தாழ்ச்சியடையச் செய்கின்ற - செயல்களை நாம் விரும்பக் கூடாது. அவற்றை முன் தெரியாமல் மேற்கொண்டிருந்தாலும் தெரிந்த பின்னாவது அவற்றைத் தவிர்த்துவிட வேண்டும் என்பார், திருவள்ளுவர்.
உள்ளற்க உள்ளம் சிறுகுவ; கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
இதில் உள்ளம் என்பது ஊக்கம், உறுதி. நம் உள்லத்தின் உறுதியைக் குறைக்கின்ற செயல்களை நினைக்கவும் வேண்டா என்கிறார். இதற்குப் பொருள் எழுதுங்கால் பரிமேல் அழகர், "உள்ளம் சிறுகுவன ஆவன, தம்மின் வலியாரோடு தொடங்கியனவும், பயனில்லனவும் ஆம் என்பார். 9. நம்மினும் பொருள் வலியாரோடு ஈடுபடலாகாது.
ஒரு செயலை நம்மோடு ஒத்தவராக உள்ளவரின் துணை கொண்டே செய்ய வேண்டும் என்னும் ஒரு நுட்பம் இங்குக் கவனிக்கத் தக்கது. நம்மிடம் ஒர் ஆயிர உருபா முதல் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நம்மோடு இணைத்து செயல்பட விரும்பும் ஒருவரிடம் அதைவிடப் பலமடங்கு பொருள் இருந்தால், அவரிடம் நாம் சேர்ந்து ஒரு வினையில் ஈடுபடலாகாது என்கிறார் பேராசான். மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது பலருக்கு இது விளங்காது. அவர்கள் எப்படி நினைப்பார்கள். "நம்மிடம் கொஞ்சம் பொருள்தானே உள்ளது. அவரிடம் உள்ள நிறைய பொருளை ஏன் பயன்படுத்திக் கொண்டு அவ்வினையைச் செய்யலாகாது?’ என்று நினைப்பார்களாம். ஆனால் இறுதியில் என்ன நேருமாம். பொருள் வலிவு படைத்தவர், சிறு பொருள் உடைய நம்மைத் தொடக்கத்தில் நாம் ஈடுபடுத்திய சிறு முதலீட்டைத் தந்து நம்மை விலக்கிவிடுவார்களாம். அப்பொழுது நமக்கு முன்பிருந்த உறுதி குலைந்து உள்ளம் துணுக்குற்றுச் சுருங்கிவிடும் என்கிறார். அதனால் தொடக்கத்திலேயே அவ்வாறு ஊக்கத்தைக் குறைத்து விடுகின்ற செயல்களில் ஈடுபட எண்ணாதே ஆசைப்படாதே என்கிறார் திருவள்ளுவர். இத்தகைய நிலைகள் நண்பர்கள் வழியாகத்தான் ஏற்படும். ஆகையால், நட்பாராய்தல் என்னும் அதிகாரத்தில் இந்த உண்மையைச் சொல்லுகிறார். பெரும்பாலும் ஒரு செயலைச் செய்கிற பொழுது. எல்லாரும், தனக்கு நெருக்கமான நண்பர்களைக் கலந்து கொண்டும், இயன்றால் அவர்களில் ஓரிருவரைத் துணைக் கொண்டுந்தாம் செயல் செய்ய முற்படுவர். ஆகையால் நட்பாராய்தல் அதிகாரத்தில் அதைச் சொல்வதே பொருத்தம் என்று கருதி அங்கே அதைச் சொன்னார். என்க.
10. செயலே பெருமையாகாது; பயனே பெருமை
இனி, இன்னொரு நிலையிலும் நம் உள்ளம் சிறுத்துப் போவதுண்டு. அஃதாவது நாம் செய்கின்ற செயலால் பலருக்கும் பயன் ஏற்பட வேண்டும். அல்லது நமக்காவது பயன் ஏற்பட வேண்டும். பிறர்க்கும் பயன்படாமல் நமக்கும் பன்படாமல் செய்கின்ற செயல் எதற்கு? நாம் . ஒரு மதுக்கடை வைத்து வாணிகம் செய்கிறோம். அதனால் யாருக்குப் பயன்? பலருக்கும் தீமை தரும் செயல் அது. அதனால் நமக்கும். பயனில்லை. மது விற்கும் காசு நமக்கு வருகிறதே, அது பயன். இல்லையா என்று கேட்கலாம். காசு வருவதே பயனாகாது. அதன் பயன் நோக்கித்தான் செயலைப் பெருமைக்கு உரியதா இல்லையா என்று பார்க்க வேண்டும். ஒருவன் செய்யும் செயலே பெருமையாகாது. ஒரு புறம் இருக்கும் பெரிய கல்லை இன்னொருபுறம் பரட்டித் தள்ளுகிறோம் என்றால் அச்செயலால் பயன் இருக்க வேண்டும் மற்றபடி கல் அங்கிருந்தால் என்ன? வேறு இடத்தில் இருந்தால் என்ன? அந்தக் கல், நாம் நடக்கும் வழியை அடைத்துக் கொண்டு கிடந்தால், அதை அப்புறப்படுத்தலாம். அதனால் பயனுண்டு. மற்றபடி அக்கல் எங்குக் கிடந்தால்தான் என்ன? அதுபோல் கள் குடிக்கின்றவனிடம் உள்ள காசுகள் விற்பவனுக்கு வருகிறது. அதனால் என்ன பயன்? இருவருக்கும் அந்தக் காசால் கெடுதலே வருகிறது. கல் இடம் பெயருகிறது.போலக் காசும் இடம் பெயருகிறது. பயன் என்ன? ஒரு செயல் யாருக்காவது பயன் தர வேண்டும். வெறும் செயலே. பயனாகி விடாது. ஒருவன் எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதில் பெருமையில்லை. அவன் என்ன தொழில் செய்து அதைச் சம்பாதிக்கிறான் என்பதில்தான் பெருமை உள்ளது.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக் கல். (505)
எனவே பெருமையை அளக்கப் பயன்படுவது செயல்தான். செயலை அளக்கப் பயன்படுவது பயன்! பயனுடைய செயலைத்தான் எல்லாரும் பெருமையாகக் கருதுவார்கள். தீமை தருவது பயனாகாது. நன்மை தருவதைத்தான் பயன் என்று கொள்ள வேண்டும். அறிவு ஆக்கத்திற்கும் உலக ஆக்கத்திற்கும், உதவுவதும் அதுதான். அதையே பயன் என்று சொல்வார்கள். அழிவைத் தருவது பயனாகாது.
அழிவது உம் ஆவது உம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். (461)
என்பார் திருவள்ளுவர். எனவே பயனுடைய செயல்களைச் செய்வதே தக்கது. அதனாலேயே உள்ளம் ஊக்கம் பெறும் இல்லெனின் உள்ளம் ஊக்கமழிக்கும்.உறுதி குலையும் சிறுகும். இறுதியில் அழிந்தே போகும். உள்ளத்தை அழிக்கின்ற செயலை நாம் செய்து ஊக்கத்தை இழந்துவிடக் கூடாது.
11. ஊக்கம் இல்லாதவர்கள்
ஊக்கம் இல்லாதவரை மக்கள் விரும்பமாட்டார்கள். போற்ற மாட்டார்கள் என்று முதலில் கண்டோம். இனி ஊக்கமில்லாதவர்கள் மக்களே ஆகமாட்டார்கள். விலங்குகளுக்குக் கூட அவர்களை இணைவைத்து பேசமுடியாது. பறவைகளுக்கும் அவர்கள் இணையாக மாட்டார்கள். ஏதாவது ஒன்றோடு பொருத்திச் சொல்ல வேண்டுமே என்றால் அவர்கள் நிலைத்திணையாகிய மரம், செடிகொடிகள் முதலிய ஓரறிவு உயிர்களாக இருப்பவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.என்.பார் பேராசான்.
உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை, அஃதில்லார்
மரம்;மக்களாதலே வேறு. (600)
இவர்களுக்கும் மரத்திற்கும் உள்ள வேறுபாடு ஒன்றே ஒன்றுதானாம். அஃது இவர்களுடைய வடிவந்தான். அஃதாவது மக்களைப் போன்ற வடிவம். மற்ற தன்மைகளெல்லாம் மரத்திற்கு உரிய தன்மைதான் என்று இக்குறளின் இரண்டாம் அடி அவர்களை மேலும் இழிவுப்படுத்துகிறது.
பறவைகள், விலங்குகள் முதலிய அனைத்தும் அவ்வவற்றின் பிறவிகளுக்கும், உயிர்த்தன்மை, உடல் தன்மைகளுக்கும் ஏற்ப ஊக்கமுடையனவாய் இருக்கின்றன; முயற்சியுடன் இயங்குகின்றன. எந்த ஒரு பறவையோ, அல்லது விலங்கோ, பிறிதொரு பறவையோ விலங்கோ ஈட்டிக் கொண்டு வந்து கொடுத்துத் தின்பதில்லை. நாம் கட்டிப் போட்டு வளர்க்கும் ஆடுமாடுகளும் கூண்டில் அடைத்து வளர்க்கும் கிளி, பூவை (மைநாகப்புள் - நாகணவாய்ப்புள், (அஃதாவது மைனா, முதலிய பறவைகளும் கூட, அவற்றைக் கட்டவிழித்தும், கூண்டைத் திறந்தும் வெளியே போக விடுவித்து விட்டால், அவை தத்தமக்குரிய உணவுப் பொருள்களைத் தாமே தேடிக் கொள்ளும் திறமை உடையன அன்றோ? ஈரறிவு உயிரியாகிய எறும்புகூட தனக்கு வேண்டிய உணவைத் தானே தேடிக் கொள்கிறது. ஆனால் உலகில் பல மக்கள், ஊக்கமற்றவர்களாக இருந்து பிறர் உழைப்பால்தானே வாழ்கிறார்கள்.
ஒரு வீட்டில் ஐந்து அல்லது ஆறு பேர்கள் இருந்தால், அவர்களில் ஒருவர் அல்லது இருவர் உழைப்பில்தாமே மற்றவர்கள் உண்ண வேண்டியிருக்கிறது. இப்படி ஆட்டுக்குடும்பத்தில் பார்க்க முடியுமா? நாய்க் குடும்பத்தில் பார்க்க முடியுமா? குருவிக் குடும்பத்தில் பார்க்க முடியுமா? முடியவே முடியாது. அக்குடும்பங்களில் உள்ள உறுப்பினர்கள் அனைவருமே அவரவர்களுக்குரிய உணவுக்காக அவரவர்களுமே ஊக்கமுடன் உழைக்கின்றனர். எனவே உழைப்பில் ஊக்கம் உறுதி. இல்லாதவர்களைப் பறவைகளுக்கோ விலங்குகளுக்கோ இணை வைத்துச் சொல்ல முடியாது.
இனி, ஓரறிவுள்ள மரம் போன்றவையும் தத்தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களைத் தம்வேர்களாலும், இலைகள் போன்றவற்றாலும் தேடிக் கொள்கின்றனவே என்றால், அஃது அவ்வாறில்லை. அவை அவ்வாறு உண்பதற்கு ஏற்றவாறு அருகில் நீர் இருத்தல் வேண்டும்; அல்லது யாரேனும் நீர் கொணர்ந்து ஊற்றவோ எருப்போடவோ வேண்டும். அல்லாக்கால் அவை பிழைத்திருக்க முடியாது. நீர் இல்லாமல் காய்ந்து விடும். காடுகளிலும் மலைகளிலும் உள்ள மரங்களும் கூட நிலத்தடியில் நீரோட்டம் இல்லையானால் உயிர் வாழ முடியாது. எனவேதான் திருவள்ளுவப் பேராசான் உள்ள ஊக்கத்துடன் ஒடியாடித் தேடி உண்ண முடியாதவர்களை, உழைக்காதவர்களை மரம் என்கிறார்.
ஊக்கமே செல்வம், ஒருவன் பொருள் இல்லாதவனாக இருக்கலாம். ஆனால் ஊக்கம் உறுதிப்பாடு இல்லாதவனாக இருக்கக் கூடாது. உள்ள ஊக்கமும் உடல் உழைப்புமே மாந்தத் தன்மைகள். இந்தத் தன்மைகளே மாந்தனுக்கு உயிரியக்கம் ஆகிறது; எனவே அத்தன்மைகள் இல்லாதவனை உயிருள்ளவன் என்று கூற முடியாது; இருப்பவன் என்றும் கூற இயலாது. இல்லாதவனே அவன்.
உடைய ரெனப்படுவது ஊக்கம்; அஃதில்லார் உடையது உடையரோ மற்று. (591)
என்பது திருக்குறள், ஊக்கம் என்னும் உள்ள உறுதியை ஒருவன் பெற்றிராமல், வேறு, நல்ல உடல், நிறைந்த செல்வம் முதலியவற்றைப் பெற்றிருப்பானாயினும், அவன் இல்லாதவனே, இருப்பவன் ஆகான் என்று அழுத்தந் திருத்தமாக இக்குறள் அறைகின்றது.
12. பெருமையும் புகழும் இல்லாத வாழ்க்கை
உள்ள உறுதியே செல்வம், பிற செல்வங்கள் ஒருவனிடம் ஏதோ ஒரு வகையில் வந்து சேர்ந்தாலும், அவை அவன்பால் தொடர்ந்து நில்லாமல், படிப்படியே அவனை விட்டு நீங்கி விடும் (592). ஆனால் உள்ள உறுதி இருந்து அதற்குரிய முயற்சி இருந்துவிட்டால், முன்னொருகால் வந்த செல்வத்தை அவர்கள் இழந்து விட்டாலும், அதற்காக அவர்கள் வருந்த மாட்டார்கள்; மீண்டும் அச்செல்வம் வந்து சேரும்படியான ஊக்கத்தை இழந்து போகாமல் அவர்கள் உறுதியுடையவர்களாகவே இருப்பார்கள் (593).
உள்ளத்தில் உறுதியும் அதனால் முயற்சியும் உள்ளவர்களிடம் , செல்வம்தானாக வந்து சேரும் (594) உள்ள உறுதியில்லாதவர்கள் முயற்சியில்லாதவர்களாகையால், அவர்களிடம் செல்வம் வராது; அதனால் அவர் பிறர்க்கு எதையும் தந்து உதவ இயலாது; அவ்வாறு தருவதால் வரும் பெருமையை, புகழைப் பெற முடியாது (598). பெருமையும் புகழும் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை?
திருக்குறளில் ஊக்கம் உடைமை என்னும் அதிகாரத்தைத் தொடர்ந்து மடி இன்மை சோர்வு - சோம்பல் இல்லாமல் இருத்தல்), ஆள்வினை உடைமை இடைவிடாத உடல் முயற்சியோடு இருத்தல் இடுக்கண் அழியாமை துன்பங்களைக் கண்டு அஞ்சாமல், மேலும் மேலும் உறுதியுடையவராய் இருத்தல்) ஆகிய அதிகாரங்கள் தொடர்ந்து வருகின்றன. இவை அனைத்துத் தன்மைகளும் உள்ள உறுதியை, வேறு வேறு துணை உணர்வுகளைக் கொண்டு வலுப்படுத்தும் கருத்துகளைத் தெரிவிப்பனவாகும். சோம்பலோ, சோர்வோ உள்ளத்தின் உறுதியைக் கெடுத்துவிடும்; எந்தக் காரணத்தாலும் உள்ள உறுதியைத் தளர்வடையச் செய்துவிடக் கூடாது; உறுதியுடன் முயற்சி செய்தால் எதையும் செய்துவிட முடியும். முயற்சிகளுக் கிடையில் எத்தகைய துன்பம் எவ்வளவில் வந்தாலும் அதற்காக உள்ளம் சோர்ந்து விடக்கூடாது; உறுதி இழந்துவிடக்கூடாது; என்றெல்லாம் அவற்றுள் கருத்துகள் கூறப்பெற்றுள்ளன.
ஆகவே அனைத்து முயற்சிகளுக்கும், செயல்களுக்கும் உள்ள உறுதியே மிகத் தேவையானது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளல் வேண்டும்.
இனி, உள்ள உறுதி, அறிவு உறுதி, உடல் உறுதி இம்மூன்றும் இருந்தால் மட்டும் ஒரு செயல், வினை நடந்துவிட முடியாது. அவற்றுடன் உழைப்பும் வேண்டும். செயலுக்குரிய பொறி, இயந்திரம் ஒன்றை வாங்கி அமைத்துவிட்டோம். பின்னர் அஃது இயங்க வேண்டுமே இயங்கினால்தானே செயல் நடைபெறும். எனவே உடல் இயந்திரம் போன்றது. நோயற்ற நல்ல உடல் பழுதற்ற நல்ல இயந்திரத்திற்குச் சமம் உள்ள உறுதியும் அறிவு உறுதியும் மின் ஆற்றலைப் போன்றன. மின் ஆற்றலுக்கு நேர் மின்னோட்டமும், எதிர் மின்னோட்டமும் தேவை. இவ்வாறு இயந்திரமும் மின்சாரமும் கிடைத்த பின், அவ்வியந்திரமாகிய உடலை உள்ளத்தாலும் அறிவாலும் இயக்க வேண்டியதுதானே! அவ்வியக்கமே செயலாகும். நல்ல உறுதியான உள்ளமிருந்தாலும் போதாது நல்ல அறிவிருந்தாலும் போதாது; நல்ல உடல் இருந்தாலும் போதாது. இவை மூன்றும் நன்றாக ஒன்றுபட்டு இயங்கி, அஃதாவது நன்றாக உழைத்து, நல்ல செயல்களை விளைவிக்க வேண்டும். எனவே, இனி, உழைப்பைப் பற்றிச் சிறிது விளக்கமாகப் பேசுவோம்.
16. தாழாது உழைத்தல்
1. உழைப்பின் பெருமை
உழைப்பு, செயல், தொழில், தொண்டு, பணி ஆகிய சொற்கள் யாவும் உழவுத் தொழிலையே அடிப்படையாகக் கொண்டு தோன்றிய சொற்களாகும். அவற்றுக்குரிய மூலங்கள் உழு, செய், தொள், பள் ஆகியனவாம். உழு-உழை செய் நிலம் செயல் தொள். தொளுதொடு தோண்டு; பள் - பள்ளம் பள்ளு - பண்ணு - பணி ஆகிய சொல் தோற்றங்களைக் கவனித்தால் அவை விளங்கும். இவை முதலில் மாந்தன் உழவையே முதல் தொழிலாகச் செய்தான் என்பதையும், அதைச் செய்தவன் தமிழனே என்பதையும் வரலாற்றடிப்படையில் உணர்த்தும். எனவே மாந்தனின் முதல் உழைப்பு உழவையே அடிப்படையாகக் கொண்டது எனலாம்.
நிலத்தை உழவு செய்து, பண்படுத்தி, விளைவு செய்வதற்கு நாம் எவ்வளவு உழைக்க வேண்டியிருக்குமோ அவ்வளவு உழைப்பை நாம் பிறவற்றிற்கும் தரவேண்டியிருக்கும். உலகில் எந்தச் செயலானாலும் சரி, அதற்கு உள்ள உறுதியையும், அறிவுழைப்பையும், உடல் உழைப்பையும் தந்தாக வேண்டும். உழைக்காமல் யாரும் உய்ய முடியாது. எனவே, அனைவருமே ஒவ்வொரு வகையில் உழைத்தாக வேண்டும். இனி, ஒரு குறிப்பிட்ட செயலுக்குக் குறிப்பிட்ட அளவு உழைப்பைத் தந்தாக வேண்டும். குறிப்பிட்ட அளவு உழைக்கவில்லை யானால், குறிப்பிட்ட அளவு பயனை எய்த முடியாது. எனவே, இவ்வுலகில் பிறந்த அனைவருக்குமே உழைப்பு தேவை.
இனி, உழைப்பில்லா விட்டால், உடல் நலிவடைந்துவிடும்; உடல்கெடும், நோயுறும். உடல் நோயுற்றால், உள்ள உறுதியும் தளரும்; உள்ளம் தளர்வுற்றால், அறிவால் பயனிராது அறிவுணர்வும் கெடும். ஆகவே, உடலுழைப்பால்தான் உள்ளமும், அறிவும் உறதிப்படும். அதே போல் உள்ள உறுதியாலும், அறிவுறுதியாலும், உடலும் ஊக்கமுறும். இந்நிலைகளை முன்னரே விளக்கியுள்ளோம். இத்தலைப்பில் இவற்றை இன்னுங் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
2. இருவகை உழைப்பு
உழைப்பு இருவகைப்படும் அறிவுழைப்பு உடலுழைப்பு என்பன அவை. ஒன்றைப் பற்றிய நன்மை, தீமை, பயன், இழப்பு, பெருமை, சிறுமை ஆகியனபற்றி அறிந்து கொள்ளும் முயற்சி அறிவுழைப்பின் பாற்படும். இனி அறிந்து கொண்ட அறிவைச் செயல்படுத்துவதற்கான முயற்சி உடலுழைப்பின் பாற்படும். எனவே ஒரு செயலைச் செய்வதற்கு இவ்விரண்டு வகையான உழைப்பும் தேவை. இரண்டு முயற்சிகளையும் ஒருவரே செய்யலாம்; அல்லது தனித்தனியாக இருவரும் செய்யலாம்.
ஒரு செயலைச் செய்வதற்கு முன் அச்செயலைப் பற்றிய அனைத்து. நிலை அறிவையும் ஒருவர் பெற்றிருந்தால்தான் அச்செயலை அவரால் செப்பமாகவும் திட்பமாகவும் நுட்பமாகவும் செய்ய முடியும். செயல் அறிவு வேறு; செயல் திறன் வேறு. ஒரு செயலைப் பற்றித் தெரிந்து கொள்ளும் அறிவு செயலறிவு. இதை ஆங்கிலத்தில் தியரி (Theory) என்பர். தெரிந்து கொண்ட அறிவைச் செயலாகச் செய்யும்பொழுது செயலாகிவிடுகிறது. இதை ஆங்கிலத்தில் பிராக்டிக்கல் (Practical) என்பர்.
செயலறிவு கல்வியால் அல்லது கேள்வியால் வரும். ஒன்றைச் செய்யத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அதற்குரிய நூல்களைக் கற்க வேண்டும். அல்லது அச்செயலைச் செய்யத் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இவை இரண்டு வழியாகவும் அல்லாமல் ஒருவர் ஒரு செயலைச் செய்துவிட முடியாது.
3. அறிவு பெறும் ஐந்து வழிகள்
பொதுவாகவே ஒருவர் ஒன்றைப் பற்றிய அறிவு பெறுவதற்கு ஐந்து வழிகள் உண்டு. அவை காட்சி, கேள்வி, உசாவல், கல்வி, பாடு என்பன. காட்சி என்பது ஒருவர் ஒன்றைக் கண்ணால் கண்டு அறிதல். கேள்வி என்பது ஒன்றைப் பிறர் சொல்லக் கேட்டு அறிதல். உசாவல் என்பது ஒன்றைப் பற்றி ஒருவரிடம் உசாவி (விசாரித்து அறிதல். கல்வி என்பது ஒன்றைப் பற்றி அதன் தொடர்பான நூலைப் படித்து அறிதல். பாடு என்பது, ஒருவர் ஒரு செயலில் நேரடியாக ஈடுபட்டு அறிந்து கொள்ளுதல் இதைப் பட்டறிவு என்றும் சொல்லலாம். ஒரு செயலைப் பற்றிய முயற்சியை ஒருவர், இந்த ஐந்து வகைகளில் ஒன்றின் வழியாகத்தான் தொடங்க வேண்டும். இவற்றுள் எதன் வழியாகவும் ஒருவர் ஒன்றைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ளாமல், எந்தச் செயலையும் தெரிந்து கொள்ளவும் முடியாது செய்து விடவும் முடியாது. அதைத் திறமையாகச் செய்வதென்பது வேறு செய்தி. அஃது அவர் அறிவையும், கூர்மைத் திறனையும், ஊக்கத்தையும், விடாமுயற்சியையும், பொறுமையையும், மணஞ் சலியாமையையும் பொறுத்தது.
இனி, ஒருவர், மேலே சொல்லப்பெற்ற ஐந்து வழிகளில் ஒன்றின் வழியாக மட்டுமே ஒரு செயலைத் தெரிந்து கொண்டு செய்வது என்பது அத்துணைச் சிறப்பன்று. கண்ணால் காண்பதால் மட்டுமே ஒருவர் ஒரு செயலைச் செய்வதாக இருந்தால் அச்செயலும் எளிமையான செயலாகவே இருக்கும்; மண்வெட்டியைப் பிடித்து மண்ணை வெட்டுவது, செடிகளை நடுவது, மரத்தை அறுப்பது போலும் எளிய, அறிவுத்திறன் மிக வேண்டாத செயல்களை ஒருவர், பிறர் செய்வதைக் கண்ணால் கண்டவுடன் செய்யலாம். ஆனால் எல்லாத் தொழில்களையுமே அவ்வாறு செய்துவிட முடியாது. சில தொழில்களைப் பற்றி அவற்றை அறிந்தவர்கள் சொல்வதைக் கேட்டும் செய்ய வேண்டும். இனி, இன்னும் சில தொழில்களை அவர்கள் சொல்லுவதோடு மட்டும் அல்லாமல் நாம் உசாவியும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும் இப்படி ஐந்து வழிகளாகவும் தெரிந்துகொண்ட செயலறிவே, ஒரு செயலைச் சரியாகச் செய்வதற்கு உதவும். அந்த வகை எண்ணிக்கைகளின் கூடுதலுக்கும் குறைவுக்கும் ஏற்ற வகையில், ஒருவர் பெறுகின்ற செயல்திறனும் கூடுதலாகவோ குறைவாகவோதான் அமைய முடியும்.
4. மன விருப்பம் தேவை
அடுத்து, ஒருவர் பெற்ற அறிவுத்திறனை ஒட்டிச் செயல் திறன் அமையும் என்றாலும், செயலில் இறங்கியபின் அவரின் உடல் திறனும், உள்ள உறுதியும், அவரின் செயல்திறனுக்கு உந்து விசைகளாக அமைய வேண்டும். செயலறிவு செயலில் ஊன்றுவதற்கு மனஉணர்வு முகாமையானது. மனவிருப்பமின்றி எந்தச் செயலிலும் ஈடுபட முடியாது. மனவிருப்பமே மன ஊக்கமாகவும் மன உறுதியாகவும் செயல்படும். இனி, செயலறிவும், மன விருப்பமும் அல்லது ஊக்கமும் இருந்தாலும், உடல் அதற்கு ஒத்துழைப்புத் தரவில்லையானால் செயல்திறம் ஏற்பட வழியில்லை.
எனவே, நாம் முன்பே கூறியவாறு, ஒரு செயல் சிறப்புற அமைய வேண்டுமாயின், மேற்காட்டிய ஐந்து வகையானும் பெற்ற செயலறிவும், அதற்கு உந்து விசையாக அமையும் உள்ளத்தின் ஊக்கமும், அவையிரண்டுக்கும் உறுதுணையாக நின்றியங்கும் உடல்திறனும் அல்லது உறுதியுமே ஒரு செயலின் செப்ப, திட்ப நுட்பங்களுக்குக் காரணங்களாக அமையமுடியும் என்பதை உய்த்துணர்தல் வேண்டும். இதற்கு ஓர் உவமை கூறவேண்டுமானால், ஒரு பேருந்து இயக்கத்தைச் சொல்லலாம். பேருந்து ஒட்டுவதை ஒருவர் அறிந்திருப்பது செயல்திறம், அதற்குக் கன்னெயாக பெட்ரோலாக இருப்பது உள்ள ஊக்கம். பேருந்து அனைத்துக் கருவிகளுடனும் சரியான இயக்கத்திற்குப் பொருத்தமாக அமைந்திருப்பது உடல்திறன். இந்த மூன்று நிலைகளும் சரியாக இருக்குமானால், பேருந்தும் சரியாக செயல்படுகிறது.
ஆகவே, தாழாது உழைத்தல் என்னும் தலைப்பு ஏறத்தாழ ஒருவரின் உடலியக்கத்தையே வெளிப்படையாகக் குறிப்பு தென்றாலும், அவ்வுழைப்பிற்குப் பின்னால், உள்ளமும், அறிவும் செயல்படுவதைக் கட்டாயம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
5. உழைப்பும் ஒய்வும்
பெரும்பாலும் செயல்கள் அனைத்துமே உடல் இயக்க அடிப்படையிலேயே அமைகின்றன. அறிவு உழைப்பானாலும், உடல் உழைப்பானாலும், அனைத்து முயற்சிகளுக்கும் உடலே களமாக அமைவதால், உடல் நலத்தின் அடிப்படையிலேயே செயல்கள் சிறந்து விளங்குகின்றன. உடல் நலிவுற்றவர் அல்லது நோயுற்றவர் எவ்வளவு அறிவுத் திறன் கொண்டிருந்தாலும் அவ்வறிவு செயலாக மலர்வதில்லை.
இவ்விடத்தில் இன்னொன்றை நாம் நன்கு விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். உழைப்பினால் உடல் என்றும் ஊறுபடுவதில்லை. கடுமையான உழைப்பிற்குப் பின்னர் கூட உடலுக்குத் தேவையான ஒய்வெடுத்துக் கொண்டால் உடல் நலம் கெடாததுடன் மேலும் அஃது உழைக்கவும் போதுமான உறுதி பெற்றுவிடுவதைப் பலரும் அறிந்திருக்கலாம். இந்த இயற்கை கூறை அனைவரும் நன்கு தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.
ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து (486)
தூங்குக தூங்கிச் செயற்பால (672)
என்னும் குறட்பாக்களில் இக்கருத்தும் ஓரளவு உட்பொருளாக ஒலிப்பதைக் காணலாம்.
இவ்வளவும் ஏன் இங்குச் சொல்லப் பெறுகின்றதெனில், செயல் வெற்றிக்குத் தாழாத உழைப்பு என்னும் அடிப்படையில், உடலை அளவுக்கு மீறி வருத்திக் கொண்டு செய்யும் செயல் என்று தவறாகக் கருதிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே ஆகும். தாழாமை எனில் காலந் தாழ்த்தாமை, முயற்சியில் குறைவு படாமை என்னும் பொருள்களே கொள்ளப்பெறுவன ஆகையால், ஓய்வில்லாமலேயே உழைத்து உடலை நலிவித்துக் கொள்ளுதல் என்று எவரும் கருதிக் கொள்ளுதல் வேண்டா என்க.
6. முயற்சி முயற்சி, முயற்சி
ஒரு செயலைச் செய்கின்ற முயற்சி பலவகையிலும் தாழ்வுப்பட்டு விடலாம். அதற்குக் காரணம் எடுத்தவுடனேயே வெற்றிக் கிட்டாமை, எதிர்ப்புகள் சூழ்தல், பொருள் இழப்பு, உடல் நலிவு, வரவேற்பின்மை, அருமையுடைமை துன்பம் சூழ்தல் முதலியவை ஆகும். எனினும், இந்நிலைகளிலெல்லாம் அறிவானும், மனத்தானும் உடலானும் உறுதி தளராமல், செயல் வெற்றியடையும் வரை மீண்டும் மீண்டும் முயற்சியுடன் உழைத்தல் வேண்டும் என்பதையே அனைவரும் உணர்தல் வேண்டும்.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் (616)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (629)
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துளுற்று பவர் (620)
என்னும் குறட்பாக்களில் திருவள்ளுவப் பேராசான் முயற்சிக்கும் உழைப்பிற்கும் எத்துணை ஊக்கம் காட்டுகிறார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இனி, ஒரு செயலைச் செய்வதற்குப் பலரும் துணை ந நிற்கலாம், அவர்களெல்லாரும் துணை நிற்கின்றாரே, என்று எண்ணிக் கூட அம்முயற்சியிலும் உழைப்பிலும் தாழ்ச்சி காட்டிவிடக் கூடாது. அவ்வாறு மெத்தனமாக விட்டுவிடுவது அவ்வினையையே ஊறு படுத்திவிடும் என்பார் மெய்யுணர்வாசான்.
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும் (468)
இங்கு பொத்துப்படும் என்பதற்கு அவ்வாறான முயற்சி நெகிழ்வால் அல்லது தளர்ச்சியால், செயல் வெற்றி பெறாதது மட்டுமன்று, தோல்வியும் இழுக்கும் ஏற்பட்டுவிடும் என்பது பொருள். அஃதாவது ஊதியம் வராதது மட்டுமன்று, இழப்பும் ஏற்படும் என்பதாகும். எனவே, எந்தச் சூழலிலும் முயற்சியும் அதனடிப்படையிலான உழைப்பும் தாழ்ச்சியுறவே கூடாது என்று அறிக.
7. இழப்பால் சோர்வுறுதல் கூடாது
இனி, ஏதோ ஒரு காரணத்தால் நாம் தொடங்கிய வினையில் நாம் எதிர்பார்த்த இழப்பும் வரலாம். அவ்விடத்திலும் நாம் ஊக்கத்தையும் உழைப்பையும் தாழ்த்திக் கொள்ளுதல், தளர்த்தி விடுதல் கூடாது. ஆக்கம் வராமைக்கும் அல்லது இழப்புக்கும் உரிய காரணத்தை நன்கு ஆய்ந்து கண்டுபிடித்து, மேலும் அத்துறையில் அல்லது செயலில் தாழ்ச்சியுறாது உழைத்தால், கட்டாயம் நாம் விரும்பிய ஆக்கம் வரவே செய்யும்; அல்லது இழப்பாவது தவிர்ந்து போகலாம்.
ஊதியம் வரவில்லையே என்று யாரும் இடிந்துபோய் விடக்கூடாது. ஊக்கத்துடன் மேலும் உழைத்தல் வேண்டும்.
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார்; ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். (593)
என்பார் பேராசான். 'சிதைவிடத்து ஒல்கார் உரவோர்' (597) அஃதாவது பயன் சிதைந்தவிடத்து, அல்லது இழப்பு நேர்ந்தவிடத்து, உள்ளம் குறுகி, உழைப்பைத் தாழ்த்திக் கொள்ளமாட்டார்கள். உள்ளம் உறுதியுடையவர்கள் என்று மேலும் உழைப்புக்கு வலிவு சேர்ப்பார் அவர்.
எனவே, ஒரு செயல் வெற்றிக்குத் தாழ்ச்சியற்ற உழைப்பே முதலிலும் முடிவிலும் வேண்டற்பாலது என்று அறிந்து கொள்க. நம்மில் சிலர், புதிதாக ஒரு செயலில் ஈடுபடும்போது மிகவும் ஆர்வம் காரணமாக, மிக முடுக்கத்துடன் ஈடுபடுவர். பின் போகப் போக ஆர்வம் குன்றிச் செயலில் தொய்வு அடைந்துவிடுவர். முயற்சியில் தாழ்ந்துவிடுவர். இது பெரும்பாலான மக்களிடம் இயல்பாக இருக்கின்ற உணர்ச்சியாகும். எனவேதான் எடுத்துக்கொண்ட வினையில் பலர் தோல்வியுற்று விடுகின்றனர்.
8. நிலையான தொடர்ந்த முயற்சி தேவை
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையால் நீளும் குடி (1202)
என்னும் திருக்குறளில் திருவள்ளுவப் பேராசான் ஒரு செயல் நீளச் செய்யப்பெறுதல் வேண்டும் என்பார். தொடர்ந்து, ஒரே உறுதியுடனும், ஊக்கத்துடனும் செய்யப் பெறுவதன் வழியாகத்தான், ஒரு செயல் முழு வெற்றி பெறும் என்பதைக் கட்டாயம் நாம் நினைவில் வைத்திருத்தல் வேண்டும்.
சிலர் ஏதாவது ஒரு வாணிகத்தில் தொடக்கத்தில் ஈடுபடுவார்கள். சில மாதங்கள் கழித்துப் பார்த்தால், தொடங்கிய வாணிகத்தை விட்டுவிட்டு, வேறொரு வாணிகத்தில் ஈடுபட்டிருப்பார்கள். காரணம் கேட்டால், அந்த வாணிகத்தில் அவ்வளவாகப் பயன் கிடைக்கவில்லை என்று சொல்லுவார்கள். ஆனால் புதிய வாணிகத்திலும் நெடுநாள்கள் அவர்கள் தங்கியிருப்பதில்லை. ஓரிரண்டு ஆண்டுகள் கழித்து அவர்களைப் பார்த்தால், வாணிகத்தையே விட்டுவிட்டு, ஏதாவது ஒரு பள்ளிக்கூடம் தொடங்கி யிருப்பார்கள். இவ்வாறு நம்மில் நிறைய பேர்கள் நிலையான முயற்சியில்லாமல் இருப்பதைக் காணலாம். இம்முறைகள் அனைத்துமே சரியென்றோ தவறென்றோ சொல்ல முடியாவிட்டாலும், நம் அறிவுக்கும் திறனுக்கும், கைப்பொருளுக்கும், சூழலுக்கும் ஏற்ற ஒரு செயலை, முன்பே நன்கு எண்ணி, ஏற்றுக் கொண்டால், அதிலேயே முழு முயற்சியுடனும், தொய்வில்லாமலும், தாழ்வுறாமலும் ஈடுபட்டு வெற்றி காண முடியும். ஆழ எண்ணிப் பாராமல் ஒரு முயற்சியில் திடுமென ஈடுபடுபவர்கள்தாம் அடிக்கடி தம் ஈடுபாட்டை எளிதாக மாற்றிவிடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். செயல்நிலையில் இந்த நடைமுறை மிகமிகத் தவறானதும், பயன்தராததும், சிறுசிறு இழப்புகளை உண்டாக்கக் கூடியதுமாகும்.
9. பணம் மட்டுமே போதாது
ஒரு செயலில் ஈடுபடும்போது, ஒரு சிறு தொகையை அதற்காகச் செலவிட வேண்டிவரும். பின் அதிலிருந்து வேறு செயலுக்கு மாறும்பொழுது, முன்னர் ஈடுபடுத்திய சிறு தொகையும் அவ்வகையில் செலவான காலமும் வீணாகப் போகின்றன. எனவே, ஒரு செயலில் இறங்கும்பொழுதே நமக்கு அச்செயல் ஏற்றதுதானா, நம் அறிவுக்குப் பொருந்தியதா, அல்லது அந்தச் செயலுக்கு நாம் ஏற்றவரா, அதற்குரிய அறிவு நமக்கு இருக்கிறதா, என்றபடியெல்லாம் நாம் எண்ணிப் பார்த்து முடிவு செய்ய வேண்டும். ஒன்றுமே எண்ணிப் பாராமல் திடுமென நாம் எந்தச் செயலிலும் பணம் உள்ளதென்றோ, போதுமான துணை உள்ளதென்றோ உடனே ஈடுபட்டுவிடக் கூடாது. எந்த அளவு பணமிருந்தாலும், துணையிருந்தாலும் நமக்கு அச்செயலைப் பற்றிய அறிவு கொஞ்சமேனும் இருத்தல் வேண்டும். நீந்தத் தெரிந்தவன் உதவியுடன் நாம் ஓர் ஆற்றைக் கடப்பதாக வைத்துக் கொள்வோம். தவிர்க்கவே முடியாத நிலையில் நாம் ஒருமுறை இருமுறை அப்படிப் போகலாம். ஆனால் அப்படி ஆற்றைக் கடந்து கடந்து போய்த்தான் ஒரு வேலையை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று வந்தால் கட்டாயம் நாம் நீந்தத் தெரிந்து கொண்டுதான் அதில் ஈடுபட வேண்டும். இல்லெனில் என்றைக்கோ ஒரு நாள் நாம் ஆற்றில் முழுகி உயிரையே இழந்து போகும்படி ஆகிவிடும்.
10. பின்னர் வருந்தும்படி செய்யற்க
ஆனாலும் சில நேரங்களில் வேறு வழியில்லாமல் நாம் முன் பின் எண்ணிப் பாராமல் ஒரு செயலில் ஈடுபட வேண்டிய கட்டாயச் சூழல் ஒன்று வரும். எனவே அச்செயலில் இறங்கி விடுவோம். அதன் பிறகு, எதற்கடா இச்செயலில் இறங்கினோம் என்று வருந்தும்படி ஆகிவிடும். எனவே, அதை விட்டுவிட்டு வேறொரு செயலில் ஈடுபட முற்படுவோம். ஆனால், அவ்வாறு இரண்டாம் முறை ஈடுபடும் பொழுதாவது முதல் செயலில் எண்ணிப் பாராமல் இறங்கியது போல, ஈடுபட்டு விடக்கூடாது. இதில் கட்டாயம் ஒரு முறைக்குப் பலமுறை நன்றாக எண்ணிப் பார்த்து இறங்குதல் வேண்டும். இல்லெனில் இதிலும் அதே வகையான பொருள் இழப்பும் கால இழப்பும் ஏற்படலாம். அவை முன்னிலும் அதிக அளவினவாகவும் இருக்கலாம். இஃது அறியாமை அன்றோ? இதனைத் திருக்குறள் மிக அருமையாகவும் உணரும்படியாகவும் எச்சரிக்கை செய்து கூறுகிறது.
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று. (655)
இவ்வினையை ஏன் செய்தோம் என்று பின்னர் வருந்தும்படி ஒன்றைச் செய்ய வேண்டாம். அவ்வாறு அறியாமையாலும், அதிவிரைவாலும், அன்றைய தேவையாலும் அவ்வாறு செய்ய நேர்ந்துவிட்டாலும், மீண்டும் அவ்வாறு, பின்னர், வருந்தும்படியான செயற்பாடுகளைச் செய்ய முற்பட வேண்டாம் என்பார் திருவள்ளுவப் பெருந்தகை ஒருவன் ஒரு கல்லில் ஒருமுறை இடித்துக் கொள்வது பிழையன்று. அஃது அறியாமையாகக் கூட இருக்கலாம். ஆனால் அதே கல்லில் பிறிதொரு முறையும் பின் பலமுறையும் இடித்துக் கொள்வது பேதைமையும் பிழையும் குற்றமுமாகும். இவ்விடத்தில் அறியாமைக்கும் பேதைமைக்கும் விளக்கம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
அறியாமை என்பது ஒன்றைத் தெரிந்து கொள்ளாமை ஆகும். பேதைமை என்பது ஒன்றைத் தெரிந்து கொள்ள இயலாமை ஆகும். அறியாதவன் பின்னர் தானேசுட அறிந்து கொள்ளலாம். அல்லது ஒருவன் அறிவித்தால் அறிந்து கொள்ள இயலும். ஆனால் பேதைமையான ஒருவன் என்றும் அறிந்து கொள்ளவே இயலாது. பேதைக்குச் சொன்னாலும் தோன்றது உணர்வு. இனி, திருவள்ளுவர், பேதைமைக்கு மிகத் தெளிவான இலக்கணம் கூறுவார். அஃதாவது இழப்பை வருவித்துக் கொண்டு, ஊதியத்தைப் போகவிடுவது பேதைமை என்பர்.
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங் கொண்டு
ஊதியம் போக விடல் (831)
ஒருமுறை ஒரு செயலில் இறங்கி அதனால் தொல்லைப் படுவது அறியாமை என்று கொண்டால், மறுமுறை அதே போலும் செயலில் இறங்கி இடர்ப்படுவது பேதைமை ஆகுமன்றோ? எனவே, ஒரு செயலில் முன்பின் ஆராயாமல் இறங்குவது எத்துணையளவு தவறானது என்று அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
இனி, தாழாது உழைத்தல் என்னுந் தலைப்பின்கண் இதனை ஏன் இவ்வளவு விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறினோம் என்றால், ஒருவர் தமக்குத் தெரியாத ஒரு செயலில் எத்துணைதாம் முயற்சி கெடாமல் உழைத்தாலும், அது தமக்குப் பொருந்தாத செயலாக இருப்பதால், அதில் பயன்பெறுவது கடினமானதாகவே இருக்கும் என்பதால் என்க. எனவே, ஒருவர் ஒரு செயலில் மிக எண்ணிப் பார்த்து இறங்க வேண்டும் என்பதும், அவ்வாறு இறங்கிய செயலில், கொஞ்சமும் பின்வாங்காது, தாழ்ச்சியுறாமல் உழைத்தல் வேண்டும் என்பதும் அதுவே முகாமையானதாகும் என்பதும் உணரப்பட வேண்டியனவாகும்.
17. முன்னெச்சரிக்கையும் கண்காணிப்பும்
1. வரலாறு, வாழ்க்கை, அறிவியல்
பொதுவாகவே அறிவு மூன்று காலத்துக்கும் உரியது. ஆனால் அதன் பயன் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் மட்டுமே உரியது. நேற்றைய அறிவால் இன்றைக்குப் பயன் வரும். இன்று பெறுகின்ற அறிவால் நாளைக்குப் பயன் வரும். ஆனால் இன்று பெறுகின்ற அறிவு நேற்றே பயனை விளைவித்திருக்க முடியாது. பயன் என்பது விளைவும் துய்ப்பும். எனவே ஒரு விளைவுக்கான அறிவு பின்னால் வந்து பயனில்லை. முன்னாலேயே அறிவு அறியப் பெற்றால்தான் அது பயன்தர முடியும். அதனால்தான், திருவள்ளுவப் பேராசான் எதிரதாக் காக்கும் அறிவு (429) என்று அதனைச் சிறப்பித்துக் கூறுவார்.
காலத்துக்கு ஏற்ப அறிவு மூன்று பெயர் பெறும். கடந்த கால அறிவு வரலாறு என்றும் நிகழ்கால அறிவு வாழ்க்கை என்றும், எதிர்கால அறிவு அறிவியல் என்றும் பெயர் பெறும்.
செயலைப் பொறுத்த அளவில் முதலிரண்டு அறிவு நிலைகள் கட்டாயம் ஒருவர்க்கு வேண்டும். எதிர்கால அறிவு ஆராய்க்குப் பின்னால் விளைவது, முன்னிரண்டு நிலைகளால் அறிவு துலங்கத் துலங்க, எதிர்கால அறிவு நமக்குத் தானே விளங்கும். எதிர்கால அறிவைப் பெறுவதில் நமக்கு விழிப்புணர்வு பயன்படுகின்றது. விழிப்போடிருப்பது எச்சரிக்கை.
2. எச்சரிக்கை உணர்வு
தொழில் நிலையில் இவ்வெச்சரிக்கை உணர்வு நமக்கு எப்பொழுதுமே இருத்தல் வேண்டும். இதைச் செய்தால் இது விளையும் என்று நமக்குத் தெரிந்திருத்தல் எச்சரிக்கை ஆகும். கடந்தகால அறிவு விதை போன்றது. நிகழ்கால அறிவு நிலம் போன்றது. விதையை நிலத்தில் ஊன்றினால் விளையும் விளைவு எதிர்கால அறிவு போன்றது. நல்ல விளைவை ஒருவன் பெற விரும்பினால், விதையையும் நிலத்தையும் ஒருவன் முன்கூட்டியே பெற்றிருக்க வேண்டும். தவறான விதை நல்ல விளைவைத் தராது. எனவே, உற்ற அறிவால் உறவேண்டிய பயனை அடைய விரும்புபவர், அதை நல்ல முறையில் ஈடுபடுத்த வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் அத்தகையவர்க்கு விழிப்புணர்வு மிகவும் இன்றியமையாதது.
இந்த விழிப்புணர்வாகிய எச்சரிக்கை இல்லாமற் போனால் ஒருவர் பல இடர்ப்பாடுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். எச்சரிக்கையாக இருப்பவர்க்கு இவ்விடர்ப்பாடுகள் ஏற்படுவது இல்லை. அல்லது அவை குறைவாகவே இருக்கும்.
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். (429)
முன்னறிவுடையவர்கள் என்பவர்கள் எப்பொழுதுமே எச்சரிக்கையாக இருப்பார்கள். பொதுவாக மக்கள் எல்லார்க்கும் நிகழ்கால அறிவே அஃதாவது வாழ்க்கை அறிவே இருக்கும். ஒரு சிலர்க்கே கடந்தகால அறிவு இருக்கும். மிகச் சிலர்க்கே எதிர்கால அறிவு இருக்கும். இந்த மூன்று அறிவு நிலைகளும் கூட ஒருவர்க்கே வேறுபட்டதாக இருக்கும். பலரிடமோ இவ்வறிவு உணர்வுகள் பல்வேறுபட்ட நிலைகளில் இருக்கும். அதனாலேயே பலவகையான சிக்கல்கள் அவ்வப்பொழுது எழுந்து கொண்டிருக்கும். இவற்றைத் தீர்வு செய்வதற்கே பலர்க்கு வாழ்க்கை சரியாகப் போய்விடும். எனவேதான் மிகமிகச் சிலரே வாழ்க்கையைத் தாங்கள் எண்ணியபடி பயனுடையதாகச் செய்து கொள்ள முடிகிறது.
3. முன்னறிவே அறிவு
முன்னறிவுடைமையே சிறப்பான அறிவாகும். மிகப் பலருக்கு இச்சிறப்பறிவு இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் அவ்வப்போது அவர்களுக்கு கிடைக்கும் அறிவுநிலைகளை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர். சிலர் தாங்கள் பெற்ற கடந்தகால அறிவை வைத்துக் கொண்டு, அதனை நிகழ்கால அறிவுடன் பொருத்திக் கண்டு, தங்கள் வாழ்வை இன்னுங் கொஞ்சம் மேம்பட்டதாக அமைத்துக் கொள்கின்றனர். ஆனால் மிகமிகச் சிலரே, தாங்கள் பெற்ற கடந்தகால அறிவு, தாங்கள் பெற்ற நிகழ்கால அறிவு, இதனுடன், தாங்கள் பெறவேண்டிய எதிர்கால அறிவு, இவற்றுடன், தாங்கள் பெற வேண்டிய எதிர்கால அறிவை ஆராய்ந்துணர்ந்து அறிவியல் சார்ந்த சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து, பயனும் பெருமையும் பெறுகின்றனர். இந்த மூன்று நிலை அறிவை உடையவர்களைத் தாம் அறிவுடையவர்கள் என்று சொல்லலாம். இவர்களே எதிர்வரும் விளைவுகளை அறிந்து அதற்கேற்பத் தாங்கள் வாழ்ந்து வருவார்கள். மற்றவர்கள் அவ்வாறு வாழ்வதற்கு இயலாது.
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர் (427)
பெரும்பாலும் அறிவுடையவர்கள் என்றாலே முன்னறிவுடையவர்களே என்று கருதுதல் வேண்டும். ஏனெனில் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பொதுவாக நிகழ்கால அறிவுமட்டுமே இருக்கும். உணவை உண்ணுதல், நீர் அருந்துதல், பகைக்குத் தப்புதல், மற்ற தன்னினத்துடன் ஒன்றாயிருத்தல், ஆணும் பெண்ணும் சேர்ந்து இனப்பெருக்கச் செயலில் ஈடுபடுதல், சண்டையிட்டுக் கொள்ளுதல், உறங்குதல் முதலிய செயல்களுக்கும் நிகழ்கால அறிவே போதுமானதாகும்.
பறவைகளுள் சிலவும் விலங்குகளுள் சிலவும் கடந்தகால அறிவையும் நினைவில் வைத்திருக்கும். அவ்வகைய உயிரினங்கள் தாங்கள் சென்ற வழியை அடையாளம் வைத்திருத்தல், இரை கிடைக்கும் இடங்களை நினைவில் வைத்திருத்தல், தம்மிடம் பழகியவரை நினைவில் வைத்திருத்தல், அவர்களிடம் அன்பு காட்டுதல் தம் தம்துணைகளையும் குஞ்சுகளையும், குட்டிகளையும் அடையாளந் தெரிந்து கொள்ளுதல், கற்றுக் கொடுத்த செயல்களைத் திரும்பச் செய்தல், சொல்லிக் கொடுத்த ஒலிகளையும், சில சொற்களையும் திரும்ப ஒலித்தல், சொல்லுதல் முதலிய செயல்களுக்கும் கடந்த கால அறிவு உதவுவதாகும்.
ஆனால் மாந்தர்களுக்கு மட்டுமே சிறப்பாக உள்ள எதிர்கால அறிவியல் அறிவு அவற்றிற்குச் சிறிதும் இருப்பதில்லை. அதனால்தான் புதிய சூழ்நிலைகளை அவை ஆராய்ந்து அறிவதில்லை. தங்களுக்குரிய உணவை அவை விளைவித்துக் கொள்வதில்லை;அவற்றின் ஒலியிலும் நடையிலும் வளர்ச்சியிருப்பதில்லை.
எனினும், பறவையினங்களுள் சிலவற்றிற்கும், விலங்கினங்கள் சிலவற்றுள்ளும் சில முன்னுணர்வுகள் உண்டு. அவை, வருகின்ற பருவகாலங்களை உணர்ந்து, அவற்றுக்கேற்பத் தங்கள் இருப்பிடங்களை மாற்றிக் கொள்ளுதல், எதிர்காலத்திற்கு வேண்டிய உணவுகளைச் சேமித்து வைத்தல், தங்கட்குக் குஞ்சுகளோ, குட்டிகளோ பிறக்கும் காலங்களை உணர்தல், அவற்றிற்கேற்பப் பிறப்பிடங்களை அமைத்தல், தொலைவிலுள்ள நீர் நிலைகளை உணர்ந்து அவற்றைத் தேடிச் செல்லுதல் முதலியன அவற்றின் உணர்வு நிலைகளே தவிர அறிவு நிலைகள் அல்ல. அதனால்தான் இந்நிலை உணர்வுகள் அவற்றிற்குப் படிநிலை வளர்ச்சி பெறுவதில்லை. பொதுவாக அறிவுநிலைகளே வளர்ச்சி பெறக் கூடியன. உணர்வுநிலைகள் எல்லா உயிர்களுக்குமே பொதுவானவை. அவ்வுணர்வு நிலைகள் கூட அவற்றின் மன உணர்வுகள் அல்ல. உறுப்பு உணர்வுகளே.
4. எதிர்கால அறிவு - ஆவதறியும் அறிவு
கண்களுக்குப் பார்க்கின்ற உணர்வும், காதுகளுக்குக் கேட்கின்ற உணர்வும் பிற பொறிகளுக்கு அவ்வவற்றிற்குரிய உணர்வுகளும் இருப்பன போலவே, அவற்றிற்குச் சில உடல்நிலை ஊறுணர்வுகளும் உண்டு. எறும்புக்கும், தும்பி முதலிய பூச்சிவகைகளுக்கும் மழை வரப்போவது தெரிந்திருப்பது ஊறுணர்வே தவிர, அறிவுணர்வன்று. அறிவுணர்வு ஊறுணர்வுகளையும், உள்ள வுணர்வுகளையும் கூட நுனித்து அறியும் உணர்வாகும். அது விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அறவே இல்லை. சில பறவைகளும், விலங்குகளும் தங்களுக்கு மாறான சில உணர்வுகளை மோந்து பார்த்த அளவில் தவிர்த்து விடுகின்ற உணர்வும் மூக்கின் ஊறுணர்வே ஆகும்; அறிவுணர்வு அன்று. நாயும் பூனையும் கோழியும் போன்றவை தம்மிடம் பழகுகின்றவர்களை அறிந்து கொள்ளுதல் ஊறுணர்வே ஆகும். ஆனால் மாந்தர்களிடம் உள்ள அனைத்து உணர்வு நிலைகளுக்கும் அறிவுக்கும் நிறைய தொடர்புண்டு அறிவுணர்வு வளர வளர ஊறுணர்வு குறைந்து விடுகிறது. எனவே, மாந்தனை மட்டுமே அறிவுள்ள விலங்கு என்று கூற முடியும். ஆனால் இக்காலத்து மாந்தத் தொடர்புடைய குரங்கு முதலிய அறிவு நிலை வளர்ச்சி உடைய விலங்குகளுக்கும் ஓரளவு அறிவியலறிவு ஊட்டப் பெறுகின்ற முயற்சிகள் நடக்கின்றன. எனினும் இவ்வறிவு படிநிலை வளர்ச்சிப் பெறுவதில்லை.
ஆகவே, மாந்த அறிவுநிலை என்பது, எதிர்கால அறிவை ஆராய்கின்ற அறிவியலறிவு ஆகும். இதைப் பகுத்தறிவு என்று குறிப்பிடுவது சரியன்று. நன்மை தீமைகளைப் பகுத்துப் பார்க்கும் அறிவையே பகுத்தறிவு என்று கூறிவருகின்றோம். ஆனால், அறிவு வளர்ச்சியில் பகுத்தறிவு ஒரு படிநிலையே தவிர முற்ற முடிந்த அறிவாகாது. அதற்கு மேலும் அது வளர்ச்சி பெற்று அறிவியலறிவாகவும், மெய்யறிவியலறிவாகவும் விளங்குவது உண்டு. அவற்றின் விளக்கங்களெல்லாம் இங்குத் தேவையில்லை.
இனி, எதிர்காலத்தை ஆய்ந்தறியும் அறிவியலறிவே மாந்தர் அனைவர்க்கும் மிகச் சிறப்பையும் பயனையும் அளிப்பது; இந்த அறிவுநிலகளையே திருவள்ளுவப் பெருமான், ஆவதறியும் அறிவு (427), எதிரதாக் காக்கும் அறிவு (429), வருமுன்னர் காக்கும் அறிவு (435), முற்காக்கும் அறிவு (442), ஒவ்வதறியும் அறிவு (472), எண்ணித் துணியும் அறிவு (467), மூத்த அறிவு (411), ஆயும் அறிவு (198, 914, 918, 622, 517, 79) வழக்கறியும் அறிவு 795, ஆராய்ந்த அறிவு (682, 634, 586, 682, 711, 584) என்று பலவாறு விதந்தும் போற்றியும் கூறுவார்.
இத்தகைய சிறப்பான அறிவியலறிவே, உலகின் அனைத்துத் தொழில்களுக்கும் காரணமாகி நின்று, இன்பத்தையும் பயனையும் தருகின்றது. எந்தச் செயலை அல்லது வினையைச் செய்பவரும் இந்த அறிவுநிலை வளர்ச்சி பெறப்பெறத்தான், அவர் அதில் சிறப்புற இயங்குதல் இயலும் இல்லெனில் அவர் அதில் சிறப்புற இயலாததுடன், இழுக்கையும் இழப்பையும்கூட எய்துவது திண்ணம்.
எனவே, ஒரு செயலில் ஈடுபட விரும்புவார், அதற்குரிய பொருள் முதலிய கருவிகளை அறிந்து அவற்றைத் தேடிக் கொள்வதைப் போலவே, தாம் செய்யப் புகும் தொழிலில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதும் மிகவும் இன்றியமையாத விழிப்புணர்வாகும். கருவிகளை அறிந்து கொள்ளுதலும் ஒரு முன்னுணர்வுதான். அதுபோல் தமக்குரிய செயலைச் செய்யப் புகுவதும் ஒரு முன்னுணர்வாலேயே நடைபெறுதல் வேண்டும். இம்முன்னுணர்வே முன்னெச்சரிக்கையாக வளர்கிறது.
5. உள்ள உணர்வும், அறிவுணர்வும்
பெரும்பாலும் உணர்வு உள்ளத்தினது; அஃது அறிவுணர்வாக வளர்ச்சியடையும் பொழுதுதான் அதனால் பயன் கிடைக்க முடியும். மேலும் உள்ள உணர்வு உயிர்த்தொடர்புடையது; அறிவுணர்வே பொருள் தொடர்புடையது. முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு அறிவுணர்வே பெரிதும் வேண்டும். இந்த இரண்டு நிலைகளையும் விளக்குவதற்கு ஓர் எடுத்துக்காட்டைப் பயன்படுத்துவோம்.
திருமணமாகாத பெண் ஒருத்தி ஒருவனைக் கண்டு, இவன்தான் நம் கணவனாவதற்கு உரியவன் என்று எண்ணுவாளானால், அது முற்றும் உள்ள உணர்வின்பால் படுவது ஆகும். இது பெரும்பாலும் உயிர்த்தொடர்பால் அறியத்தகும் உள்ளுணர்வாகும். அதன்பின் அவள், அவனைப் பற்றி மேலும் அறிய விரும்பி, அவன் யார், எந்த ஊர், எந்தக் கல்வி கற்றவன், என்ன பொருளேந்துகளைப் படைத்தவன், என்ன அளவில் துணிவுள்ளவன் என்பன பற்றிய அறிய விரும்புவாளானால், அவ்வுணர்வு அறிவின்பால் படுவதாகும்.
எனவே, ஒரு செயலை மேற்கொள்ள விரும்புபவன், அச்செயலைச் செய்ய விரும்புவது உள்ளத்தின் உணர்வாகவே தோன்றும். அக்கால் அது முன்னுணர்வு என்று பெயர்பெறும். அதன் பின் அந்தச் செயலுக்கும் தனக்கும் உள்ள பொருத்தத்தைப் படிப்படியாக ஆய்ந்து பார்க்க முற்படும் பொழுது, அது முன்னெச்சரிக்கை என்று பொருள்படும். முன்னது வாழ்க்கை அறிவு. பின்னது அறிவியல் அறிவு.
இவ்வாறு ஒருவன் தனக்கு இயலுகின்ற செயலையும் அதன் பொருட்டுத் தேவையான பிறவற்றையும் அறிந்து எப்பொழுதும் விழிப்புணர்வுடனேயே இயங்குதல் வேண்டும் அவ்வாறு இயங்குவார்க்கு இவ்வுலகில் இயலாத செயல் ஒன்றுமே இல்லை என்பார் திருவள்ளுவர்.
ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல். (472)
என்பது அவர் வாய்மையுரை. 'எண்ணித் துணிக கருமம்' (467) என்பதும் இதுவே.
6. எச்சரிக்கை உணர்வு
இனி, செயலுக்கு முன்னர் தொடக்கத்தில் உள்ள இவ்வுணர்வே, செயல் நடந்து கொண்டிருக்கின்ற பொழுதில் எச்சரிர்கை உணர்வாகச் செயல்படுகிறது. இது செயல்படும் வகையை இன்னோர் எடுத்துக்காட்டால் விளக்குவோம்.
ஓர் உழவர் ஒரு நிலத்தில் வேளாண்மை செய்யப் புகுவதாக வைத்துக் கொள்வோம். அவ்வேளாண்மைக் குரியதாக உள்ள நிலம் எத்தகைய விளைச்சலுக்கு ஏற்றது என்றோ, அல்லது தாம் விளைவிக்கும் பயிருக்கு அந்நிலம் தகுதியுடையதாக இருக்குமா என்றோ எண்ணிப் பார்ப்பது தொடங்கி, அதன்பின் படிப்படியாக விதை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும். எவ்வளவு விதை வேண்டும். எப்பொழுது விதைக்க வேண்டும். அதற்கு என்னென்ன எருவிட வேண்டும். எவ்வெக் காலத்து நீர் பாய்ச்சுதல் வேண்டும். எக்காலத்தில் மறு உழவு செய்தல் வேண்டும், களையெடுத்தல் வேண்டும். எவ்வாறு காப்புச் செய்தல் வேண்டும் என்பன பற்றியெல்லாம் எண்ணி முன்னுணர்ந்து செய்யப் புகுவதெல்லாம் எச்சரிக்கை என்னும் உணர்வுக்குள் அடங்குவனவே ஆகும். இவ்வாறு ஒன்று, ஒன்றுக்குமேல் இரண்டு, இரண்டுக்குமேல் மூன்று என்றவாறு, ஒன்றை ஒன்று அடுத்தடுத்து எண்ணுவதும் செய்வதுமாக இருப்பது எச்சரிக்கையாகும். இவ்வாறு எச்சரிக்கையாக இருப்பவர்களுக்குப் பதினாறு போனால் பதினேழு வரும் என்று தெரியுமன்றோ?
இவ்வெண்ண வரிசையில் ஒரு செயலை எண்ணிப் பார்ப்போம். ஒருவர் ஒர் ஆற்றின் குறுக்காக ஒரு பாலத்தைக் கட்ட முயலுவதாக வைத்துக் கொள்வோம். அந்தச் செயலைத் தொடங்குமுன், பாலத்தை எவ்விடத்தில் கட்டுவது என்னும் இடத் தேர்வும், எப்படிக் கட்டுவது என்னும் திட்ட அமைப்பும், அவ்வாறு கட்டுவதற்கு எதை எதைப் பயன்படுத்த வேண்டும் என்னும் கருவிகள் தேவையும், அவற்றை வாங்குவதற்கும், கூலி ஆட்களை அமர்த்துவதற்கும் பொருள் தேவையும் நன்றாக எண்ணி வரையறுத்துக் கொள்வதும்,
அதன் பின், எக்காலத்தில் அப்பாலத்தின் வேலையைத் தொடங்க வேண்டும் என்று காலத்தை அறிந்து கொள்வதும்,
அவ்வேலையைத் தொடங்கி நடத்துங்கால் ஏற்படுகின்ற இடையூறுகளை - எடுத்துக்காட்டாக மழை வருவது, அதனால் ஆற்றில் வெள்ளம் வருவது போல்வனவற்றை எவ்வாறு தடுத்துக் கொள்வது என்று எண்ணுவதும் - படிப்படியாக வளர்ச்சியுறும் எச்சரிக்கைகளே.
மேலும், பாலம் கட்டத் தொடங்குவதற்குமுன், ஆற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்; அல்லது நீரின் வரவைத் தொலைவிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். அல்லது தற்காலிக அணையிட்டுத் தடுத்து நிறுத்துதல் வேண்டும் என்று எண்ணுவதும் வளர்நிலை எச்சரிக்கையே!
இவ்வாறு, ஒரு செயலில் ஈடுபடுவார், தாம் வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் என்ன விளைவு வரும் என்று மட்டுமே எண்ணாமல், என்னென்ன எதிர் விளைவுகள் வரும் என்று எண்ணிப்பார்ப்பதுவும், அவற்றை எவ்வாறு தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுவும் எச்சரிக்கையின் மிக வளர்ந்த உணர்வு நிலைகளாகும். மொத்தத்தில், இதற்குப் பின் இது, இதனால் இது, இதற்காக இது, இது போனால் இது, இது வந்தால் இது, இதுவே இது, என்னும் எண்ண முடிச்சுகளும் எச்சரிக்கை உணர்வின் ஆறு சூழ்திறங்கள் (சூத்திரங்கள்) ஆகும். ஒவ்வொரு செயலின் ஒவ்வொரு படிநிலையிலும் இவ்வாறு எண்ணக் கால்களும் ஊன்றி ஊன்றியே செயலானது நடைபெறுதல் வேண்டும். இவையே எச்சரிக்கை உணர்வுக்கு அடிப்படை உணர்வுகளாகும்.
"உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றி" என்பது எச்சரிக்கையின் வடிவம் தோய்ந்த அறிவுநிலையாகும். ஏற்கனவே நம் வினைக்கிடையில் வந்த இடர்ப்பாட்டை நீக்குதல் செய்து, மீண்டும் அதுபோல் ஓர் இடர்ப்பாடு வந்து விடாமல் காக்கின்ற தன்மை அது. 'வருமுன்னர் காத்தலும்' (435) அதுதான்.
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர் (464)
என்னும் குறளுரையில் இளிவென்னும் ஏதப்பாடு என்று குறிப்பிடுவது, எடுத்துக் கொண்ட வினைப்பாட்டைத் தாழ்ச்சியுறச் செய்யும் குற்றம்' என்பதாகப் பொருள்படும். இக்குற்றத்தை வராமற் செய்யும் தெளிவை, வினை செய்ய முற்படுபவர் பெற்றிருத்தல் வேண்டும்.
7. எச்சரிக்கையின் ஆறு கூறுகள்
எனவே முன்கூறியபடி, தாம் எடுத்துக்கொண்ட வினைக்கு இடையில் வரும் குற்றங்கள் வராமற் காக்கின்ற வகையில் கீழ்வரும் ஆறு எச்சரிக்கைகளையும் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
1. இதற்குப் பின் இது : இந்த வினையைச் செய்து முடித்த பின் இந்த வினையைச் செய்ய வேண்டும்; அதற்குப் பின்னர் இதைச் செய்ய வேண்டும் என்று வரிசை முறையாக, நிரல் முறையாகத் திட்டமிட்டுக் கொண்டு, ஒரு முறைக்குப் பலமுறையாக எச்சரிக்கையுடன் எண்ணிப் பார்த்துச் செய்ய முற்படுதல் வேண்டும். எடுத்துக்காட்டாக, மின்சாரத்தைப் (Bulb) போட்டுவிட்டுக் குமிழைப் பொருத்த முற்படுதல் கூடாது. குமிழைப் பொருத்திவிட்டே மின்சாரத்தைப் பாய்ச்சுதற்குச் சொடுக்கியைப் (Switch) போட வேண்டும். பேருந்து ஒட்டுநர் சிலர், இயந்திரம் ஒடிக் கொண்டிருக்கையிலே, வண்டியினின்று இறங்கி வேறு வேலை செய்வதைப் பார்த்திருக்கலாம். இயந்திரம் ஒடிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டே வண்டியினின்று இறங்க வேண்டும் என்பதே இதற்குப் பின் இது என்னும் எச்சரிக்கை முறையாகும். ஆங்கிலத்தில் கூறப்பெறும் One by one, onething at a time என்னும் கருத்து மொழிகளும் இதையே வலியுறுத்தும்.
2. இதனால் இது : இந்தச் செயலால்தான் இந்தச் செயல் நிகழ்ந்தது அல்லது நிகழும் என்று எண்ணிப் பார்க்கும் உணர்வு இது.
எடுத்துக்காட்டாக, அடுப்பில் சமையல் செய்தபின் நெருப்பு முழுவதையும் அணைக்காமல், அர்ை. குறையாக அணைத்துவிட்டுவந்தால், அதிலுள்ள அணைக்கப்படாத ஒரு சிறு நெருப்பே, காற்றினால் மெதுவாகக் கனன்று பெரு நெருப்பாக மாறி, வீடு தீப்பற்றி எரியும் அளவுக்குக் கூட வளர்ந்துவிடும் என்ற வகையில் எண்ணிப்பார்க்கும் உணர்வு எச்சரிக்கையின் இரண்டாம்படி உணர்வாகும். புகைப்பிடிப்பவர்கள் தீயை அணைக்காமல் சுருட்டை எரிந்து விடுவதாலும் இத்தகைய தீமைகள் வரலாம் அன்றோ?
இவை போலவே, பொறிக்கு எண்ணெயிடாமல் ஒட்டினால், அதன் சுழலும் உறுப்புகள் எளிதில் இயங்காமல், அழுத்தமான உராய்தல் ஏற்பட்டு, அதனால் சூடு உண்டாகி, இரண்டு உராய்வு உறுப்புகளும் சூட்டினால் விரிவடைந்து, ஒன்றை ஒன்று சுழலவிடாமல் இணைந்து, இறுகல் (lam) ஆகிப் பிடித்துக் கொள்ளும்படியான நிலை ஏற்படும் அன்றோ? எண்ணெய் இடாமல் ஒட்டினால் உறுப்புகள் ஒட்டிக் கொள்ளும் என்று முன்கூட்டியே உணர்தலே இதனால் இது என்னும் உணர்வாகும்.
3. இதற்காக இது : இந்த விளைவை உண்டாக்க வேண்டுமானால் இதைச் செய்தல் வேண்டும் என்று முன்கூட்டியே எச்சரிக்கையாக அறிந்து செய்தல் வேண்டும் என்னும் மூன்றாம்படி உணர்வு நிலை இது.
எடுத்துக்காட்டாக, இயந்திரங்களில் உள்ள முகாமையான உறுப்புகளை நிலையாகப் பொருத்துவதற்கு முன், அவை விரைந்து தேய்மானமுறுவதைத் தடுப்பதற்கும், பூட்டியதைப் பிறகு எளிமையாக சுழற்றுவதற்குமாக, பொருந்து வாய்களில் மசகுநெய் (Grease) போடுவார்கள். இன்ன விளைவுக்காக அல்லது விளைவைத் தடுப்பதற்காக இதைச் செய்ய வேண்டும் என்று எண்ணும் உணர்வே, இதற்காக இது எண்ணும் உணர்வாகும்.
மிதிவண்டி, உந்துவண்டிச் சக்கரங்களிளால் அடிக்கும் சேற்றைத் தடுப்பதற்காகச் சக்கரங்களின் மேல் மட்காப்பு (Mudguard) போடுவதும், மிதிவண்டித் தொடரி(Chain)யின் மேல், உடைகளும், அழுக்கும், துரசும் படாமல் காப்பதற்காக அதன்மேல் தொடரிக்காப்பு (Chain guard) போடுவதும் இந்த எச்சரிக்கை உணர்வின் அடிப்படையால்தாம் என்று எனணுக.
4. இது போனால் இது: ஒரு செயலுக்குப் பொருத்தமான முறையை நாம் தேர்ந்தெடுத்து, அதற்குரிய முறையில் கருவிகளை நாம் வாங்கியிருப்போம். ஆனால், அவற்றில் ஒரு கருவி மட்டும் பொருத்தமாகக் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலையில் அத்ற்கிணையாக எந்தக் கருவியைப் பயன்படுத்த வேண்டும் என்று உணர்ந்துள்ள நான்காம் படிநிலை எச்சரிக்கை உணர்வாகும் இது.
கடலில், பாய்மரக் கப்பலில் போகும்பொழுது பாய்மரம் விழுந்து பாய் பழுதுற்றால் அல்லது கிழிந்து சேதமுற்றால், உடனடிப் பயன்படுத்தத்திற்குரிய வகையில் பெரிய துடுப்புகளைப் பயன்படுத்தி நிலைமையை எதிர்கொள்ளும் உணர்வு இது.
விளையாட்டில் ஈடுபடத் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஆட்டக்காரர் ஒருவர், ஆட்டத்துக்கிடையில் அடிப்பட்டு மேலும் ஆட இயலாத நிலையினை அடைந்தால், அவருக்கு மாற்றாக ஆட மாற்றாள் (substitute) வைத்திருப்பதும், பேருந்து வண்டி பழுதுறுமானால், மாற்று வண்டி (SpareBus) வைத்திருப்பதும் இந்த உணர்வின் அடிப்படையிலேயே 5. இது வந்தால் இது : ஒரு செயலுக்கிடையில் நாம் எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத விளைவுகள் வரலாம். அப்படி வருகிற பொழுது, நாம் முனைப்பாகச் செய்து கொண்டிருக்கும் இன்றியமையாத ஒரு பணி தடைப்படலாம். அந்த நிலையில் அப்பணி தடைப்படாத வண்ணம், இடையில் வந்த தடைநிலையினை அகற்றும்வரையில் வேறு ஒரு முறையில் அச்செயலை ஈடேற்றிக் கொள்ளத்தக்க வகையில் உள்ள உணர்வு இது.
மின்சாரம் தடைப்பட நேரும்பொழுது, காற்றுக்காக விசிறியையும், விளக்குக்காக மெழுகுத் திரியையும், மின் அடுப்புக்காக மண்ணெய் அடுப்பையும், மண்ணெய் அடுப்புக்காகக் கரி அடுப்பையும் அணியப்படுத்தி வைத்திருக்கும் உணர்வு இது.
இவ்வுணர்வு எச்சரிக்கை உணர்வின் ஐந்தாம் படிநிலை உணர்வாகும்.
6. இதுவே இது: எண்ணியிருக்கும் பணிக்கு ஏற்ற கருவி கிடைக்காதபொழுது, அதே பணியைச் செய்யும் வேறு ஒரு கருவியால் அதே பணியைச் செய்து கொள்ளும் உத்தி உணர்வு இது.
திருகாணியைத் திருகி எடுக்க ஏற்ற ஆணி முடுக்கி இல்லாதபொழுது, அகலமான நுனியுள்ள வேறு கத்தியையோ, ஓர் இரும்புக் கருவியையோ அக்கருவி போலவே பயன்படுத்தி அப்பணியைச் செய்து முடிக்கும் உத்தி இதுவாகும்.
எனவே இங்கு கூறப்பெற்ற ஆறு உத்தி உணர்வுகளும் எச்சரிக்கை உணர்வின் ஆறு கூறுகளாகும் என்று அறிக.
8. எச்சரிக்கைக்கு எடுத்துக்காட்டுகள்
நாம் செய்யப் புகும் வினைகளில் பல எச்சரிக்கை யின்மையினாலேயே பயனற்று விடுகின்றன. சிறு சிறு செயல்களிளெல்லாம் முன் எச்சரிக்கை மிகவும் தேவைப்படுகிறது.
பாலை வாங்குமுன், ஏனம் நன்றாகக் கழுவப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பதும், தீப்பெட்டியைப் பயன்படுத்திக் கொண்டு, ஈரமில்லாத இடமாகவும், கவனந் தப்பாமல் உடனே எடுக்கக் கூடிய இடமாகவும் பார்த்து வைப்பதும், ஊருக்குப் ப்ோகையில், நமக்கு ஆகும் செலவுகளை எண்ணிப் பார்த்துக் கணக்கிட்டுத் தேவையான பணத்தை எடுத்துச் செல்வதும், உடலின் கூறுபாடுகளையும் தேவைகளையும் எண்ணி, அதற்குரிய வகையில், நோய் வராமல் இருக்கும் பொருட்டுப் பொருந்துகின்ற உணவை உண்பதும், வண்டி நின்றபின் ஏறுவதும் இறங்குவதும், வளாவி வைக்கப் பெற்றுள்ள வெந்நீரைத் தொட்டுப் பார்த்து அதன் பின்னர் மேலுக்கு ஊற்றிக் கொள்வதும், பூட்டைப் பூட்டியபின் ஒன்றுக்கு இருமுறை இழுத்துப் பார்த்துச் சரியாகப் பூட்டியிருக் கின்றோமா என்று உறுதி செய்து கொள்வதும், கொடுக்கப் பெறுகின்ற சில்லறையும் உருபாத்தாள்களும் சரியாக உள்ளனவா என்றும், ஒட்டை விழாமல் கிழியாமல் இருக்கின்றனவா என்றும் நோட்டம் விடுவதும், மழைக் காலங்களில் மழை பெய்யாதிருப்பினும் வெளியே செல்கையில் குடையையெடுத்துக் கொண்டு செல்வதும், படைப்பதற்கு முன் சமைத்து வைத்த பண்டங்களுக்கு உப்பு சரியாக உள்ளதா என்று பார்ப்பதும், படைக்கின்ற இலையில் முன் கூட்டியே உப்பைக் கொஞ்சம் வைப்பதும், படித்துக் கொண்டிருக்கும் பொத்தகங்களுக்கிடையில் அடையாளத் தாள் வைப்பதும், பெட்டிகளில் பூச்சிக் குண்டுகளை இட்டு வைப்பதும், எச்சரிக்கை உணர்வுகளே.
இன்னுஞ் சொன்னால் ஆறுகளில் அணைகள் கட்டுவதும், தோட்டங்களுக்கும் தோப்புகளுக்கும் வேலிகள் போடுவதும், பணத்தை வைப்பகங்களில் இட்டு வைப்பதும், உணவுப் பொருள்களைச் சேமித்து வைப்பதும், கையில் கடிகாரம் கட்டிக் கொள்வதும், மின்சார ஆய்வுக் கருவியை வைத்திருப்பதும் முன்னெச்சரிக்கைக்கான செயல்களே ஆகும், எச்சரிக்கையே வாழ்க்கையாகப் போய்விட்ட தன்மையாலேயே சில பொருள்கள் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன.
9. எச்சரிக்கையே கண்டுபிடிப்புகளாகின
குளிர்பதனப் பெட்டிகள், கத்திகள், கரண்டிகள், சூடாக்கிகள், எடைப்பொறிகள், அளவுமானிகள், படிகள் கால் மிதிகள், பூட்டுகள், சட்டைப்பைகள், பேழைகள், செருப்புகள், அழைப்பு மணிகள், இடிதாங்கிகள், நகம் (உகிர்) வெட்டிகள், சில மருந்துகள், கோப்புகள், விளக்குகள், மெழுகுத்திரிகள் எழுதுச்சுவடிகள், கத்தரிக்கோல்கள், துமுக்கிகள் முதலிய நூற்றுக்கணக்கான பொருள்கள் மாந்தருடைய எச்சரிக்கை உணர்வால் கண்டுபிடிக்கப் பெற்ற பொருள்களே.
எனவே, எச்சரிக்கை உணர்வு மாந்தனின் மிக இன்றியமையாத உணர்வாகப் போய்விட்டது. இவ்வுணர்வு வளர வளர எதிர்வருந்துன்பங்கள் நமக்கு இல்லாமல் போகின்றன. முன்னர் கூறப்பெற்ற அறுவகை எச்சரிக்கை உணர்வுகளையும் நுணுகி ஆய்ந்து ஒருவன் வாழ்க்கையில் கடைப்பிடிக்கக் கற்றுக் கொண்டால், கட்டாயம் நம் செயற்பாடுகள் அத்தனையும் செப்பமாக அமையும் என்பதைக் கூறவும் வேண்டுமோ?
10. கண்காணிப்பு உணர்வு
இனி, எச்சரிக்கை உணர்வின் அடிப்படையில் தோன்றும் இணையான உணர்வு கண்காணிப்பு உணர்வாகும். இவ்விரண்டு உணர்வுகளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து கொண்டுள்ள இணை உணர்வுகள். இவ்விரண்டும் ஒன்றினால் ஒன்று சிறந்து விளங்குவதாகும். எச்சரிக்கையாக இருக்க வேண்டுமானால் கண்காணிப்பு இருக்க வேண்டும். ஒரு பொருளோ செயலோ கெட்டுவிடக் கூடாது என்றால், அவற்றின்மேல் கருத்து வைத்துக் கண்காணிப்பாக இருத்தல் மிகவும் இன்றியமையாதது. முன்னதாகக் காக்காமல், பின்னதாக வரும் அழிவைத் தடுத்து நிறுத்த முடியாது.
முன்னுற காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரக்கி விடும். (535)
என்னும் அறிவுமொழி, பிழைகள் நேர்ந்துவிடாதவாறு நாம் மிக எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்பதை மிக வலிவாக வலியுறுத்துக் காட்டும் அழுந்தியுணர்ந்த மெய்ம் மொழியாகும்.
எச்சரிக்கை உணர்வும் கண்காணிப்பு உணர்வும் ஆகிய இவ்விரண்டு உணர்வுகள் மட்டும் இருந்தாலே ஒருவன் விரைவில் முன்னேறி விடுவது திண்ணம். இருளைப் போக்க நாம் விளக்கைக் கொளுத்தினால் மட்டும் போதாது. கொளுத்தப்பட்ட அவ்விளக்கு காற்றில் அணையாமல் காக்கப் பெறுதலும் வேண்டும். எனவே விளக்குக்குக் கண்ணாடிக் குமிழ் ஒன்றைப் பொருத்திக் கொள்கிறோம். இங்கு விளக்கு எச்சரிக்கை உணர்வையும், குமிழ் கண்காணிப்பு உணர்வையும் நன்கு புலப்படுத்துகின்ற எடுத்துக் காட்டுகளாம்.
11. எச்சரிக்கையினும் கண்காணிப்பு மேலானது
தொழில் ஒன்றைத் தொடங்கிய ஒருவன், தொழிலுக்கு அடிப்படையாக உள்ள பொருளைக் கண்காணிக்கவும் செய்தல் வேண்டும்.
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. (1038)
என்னும் உழவு அதிகாரத்தில் வரும் குறள்மொழியுள் கூறப்பெற்ற, ஏர் உழுதலும், எருவிடுதலும், களையெடுத்தலும், நீர்ப்பாய்ச்சுதலும் பயிரின் நல்ல விளைவுக்குற்ற எச்சரிக்கை உணர்வுகளாகும். அதை விலங்குகளிடமும், பறவைகளிடமும், திருடர்களிடமும் இருந்து காப்பது கண்காணிப்பு உணர்வாகும். இதில் எச்சரிக்கை உணர்வைவிடக் கண்காணிப்பு உணர்வு மிகச் சிறந்தது; தேவையானது என்று கூறப்பெறுகிறது. இதனை அடுத்து வரும் இன்னொரு குறளிலும் வலிவாகவும் தெளிவாகவும் வலியுறுத்துகிறார் திருக்குறள் பேராசான்.
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும். (1039)
மனைவியைப் பேணுதல் செய்யவில்லையானால், அவள் எவ்வாறு கணவனிடம் ஊடிக் கொள்வாளோ, அவ்வாறு நிலமும் தன்னைப் பேணிக் காத்தல் செய்யவில்லையானால் நிலக்கிழானிடம், வேறுபட்டுத் தன் பயனைத் தராது என்று நுட்பமாகவும் நயமாகவும் உணர்த்திக் காட்டுவார் பேராசான். இங்குச் செல்லுதல் என்னும் ஒரே சொல்லுக்குச் சென்று வருதல், சென்று கண்காணித்து வருதல், நாள் தோறும் அவ்வாறு செய்து வருதல், மனைவி கருவுயிர்க்கும் காலங்களில் அருகிருந்து கவனமுடன் கண்காணிப்புச் செய்வது போல், நிலத்தின் விளைவுக்காலங்களில் அவ்வாறு அருகிருந்து கணகாணித்து வருதல் . என்னும் வகையில் பலவாறு மேன்மேலும் பொருள் பெருகிக் கொண்டே போதலைக் கண்டு திருக்குறள் ஐயனின் நுணுகிய பேரறிவை உற்றுணர்ந்து மகிழலாம். இக்குறளின் மிக விரிவான நுட்பமான, மாந்தர் மனவியல் தழுவிய சிறந்த பொருளை, யாம் எழுதவிருக்கும் திருக்குறள் மெய்ப்பொருள் உரையில் கண்டு நிறைவு பெறுக)
இதில் உழவியலுக்குப் பொருந்திய பொருள் மட்டுமன்று உளவியலுக்கும், உலகியலுக்கும், அவை பொருந்திய வாழ்வியலுக்கும் ஒத்த பொருளைக் கண்டு உள உவகை கொள்ளலாம். உழவும் ஒரு தொழிலாதலால், தொழிலியலுக்கும் இக்கருத்து மிகவும் பொருந்துவதாகும். தொழிலுக்கும் இத்தகைய கண்காணிப்பு மிகமிகத் தேவையாகும்.
சவளி விற்பனையாளர், பெரும் முதலீடு செய்து, ஏராளமான துணிமணிகளை அணியணியாக அடுக்கி வைத்தால் மட்டும் போதாது. நாளடைவில் அவற்றைப் பூச்சி அரித்திடாமல் கண்காணிப்புச் செய்தல் வேண்டுமன்றோ? பொத்தகக் கடை, தாள் கடை வைத்திருப்பவர்களும் நாள்தோறும், இன்னுஞ் சொன்னால் பொழுதுதோறும், அவற்றைக் கண்காணிப்புச் செய்தல் வேண்டும்.
தலைமுடியை நாள்தோறும் கழுவித் துய்மை செய்ய வில்லையானால், தூசியும் துகளும் காற்றீரமும் படிந்து, தலைமுடி பிசுக்கேறிப் போவதுமட்டுமன்று, முடியொடு முடியிணைந்து, திரிந்து, சடைந்து போகுமன்றோ? பின்னர் அதில் ஈரும் பேனும் இனம் பெருக்கி வாழ்ந்து தலையையே மொட்டையடிக்கத் செய்துவிடும் அன்றோ? அதனாலன்றோ நாள்தோறும் எச்சரிக்கை உணர்வொடு தலைகழுவுவதும் எண்ணெய் தடவிப் பிசுக்கேறா வண்ணம் கண்காணிப்பதும் செய்கின்றோம். இவ்விரண்டு உணர்வுகளும் வாழ்வியல் கடமைகளில் ஒன்றாகக் கலந்துவிட்டன என்பதை எண்ணுக 12. எச்சரிக்கை முன்னுரை, கண்காணிப்பு முடிவுரை
முடிவாக, முன்னெச்சரிக்கை உணர்வு ஒரு செயலுக்கு முன்னுரைபோல் அமையவேண்டுவது என்றால், கண்காணிப்பு உணர்வு, அச்செயலுக்கு முடிவுரைபோல் அமைய வேண்டுவது, முன்னெச்சரிக்கை உணர்வின்றிக் கண்காணிப்பு உணர்வு செயல்படுவதில் பயனில்லை. பின் விளைவு கருதித்தான் முன்னெச்சரிக்கையாக செயல்படவேண்டும். அதேபோல், விளைவு நீடித்து நிற்க வேண்டும் என்பதாகத்தான் கண்காணிப்பு உணர்வு செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு பொருளை வாங்கும்போது எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். வாங்கிய பின் கண்காணிப்போடு இருத்தல் வேண்டும். முன்னெச்சரிக்கையுடன் வாங்கியும் கண்காணிப்பு இல்லையானால், ஒரு பொருளோ, செயலோ, கட்டாயம் தம் பயன்களில் குறைவுப்பட்டுவிடும். இரண்டு உணர்வுகளும் காத்தல் உணர்வின் இரண்டு முனைகள். ஒருணர்வு பொருளின் அல்லது செயலின் தரத்தை உறுதி செய்வது. மற்றவுணர்வு அவற்றின் தரத்தைக் குறையாமல் நிலைத்திருக்கச் செய்வது வருமுன் காத்தல், வருங்கால் காத்தல், வத்தபின் காத்தல் என்னும் மூன்று காத்தல் உண்ர்வுகளில் வருமுன் காத்தல் எச்சரிக்கை உணர்வையும், வருங்கால் காத்தல், வந்தபின் காத்தல் கண்காணிப்பு உணர்வையும் வெளிப்படுத்துவதாகும். எனவே செயலுக்கு எச்சரிக்கை உணர்வும், செயல் திறனுக்குக் கண்காணிப்பு உணர்வும் மிகமிகத் தேவையானவை. ஒரு செயலால் ஏற்படும் பயனைத் தொடர்ந்து நடைபெறச் செய்பவை. முன்னெச்சரிக்கை உணர்வு புறக்காப்பு. கண்காணிப்புணர்வு அகக் காப்பு. இனி, முன்னெச்சரிக்கை உணர்வுடன் ஒரு செயலைத் தொடங்குவதும், பின் எச்சரிக்கை உணர்வுடன் ஒரு செயலைக் கண்காணிப்புச் செய்வதும், தவறாமல் நிகழ்ந்தாலும், ஒரு செயல் தொடர்ந்து நடைபெறுகையில், நம் எச்சரிக்கை உணர்வையும், கண்காணிப்புணர்வையும் மீறி, ஒரு செயல், இடையில் ஏற்படுகின்ற இடையூறுகளால் தொய்ந்தோ, சிதைந்தோ, அழிந்தோ விடுவதுண்டு. எனவே, ஒரு செயலைத் தொடங்கிய பின், அது நடைபெறுங்கால் ஏற்படும் இடையூறுகளைக் கண்டு, மனந்தளராமையும் ஒருவர்க்கு வேண்டும். அது பற்றிச் சிறிது விரிவாகப் பார்ப்போம்.
18. இடையூறு கண்டு மனந்தளராமை
இது, 15ஆவது தலைப்புக் கட்டுரையான உறுதி கொள்ளுதல்' என்னும் கட்டுரை போன்றதொரு தலைப்புப் போல இருந்தாலும், அஃது, ஒரு செயல் தொடக்கத்தில், அதைத் தொடங்கும் முன்னரோ, தொடங்கிய பின்னரோ ஏற்படும் எதிர்பாராத எதிர்ப்புகளையும் அல்லது சுமைகளையும் கண்டு, உள்ள உறுதியும் உடல் உறுதியும் தளர்ந்து விடாமல் இருத்தல் வேண்டும் என்னும் கருத்துகளை உள்ளடக்கியதாகும். ஆனால், இக்கட்டுரை, ஒரு செயல் தொடங்கி நடைபெற்று வருங்கால், அச் செயல்நிலையிலிருந்தோ, அச்செயலுக்கு அயலான, ஆனால் அதற்குத் தொடர்பான புறநிலைகளிலிருந்தோ, எதிர்பார்த்தோ, எதிர்பாராமலோ ஏற்படுகின்ற இடர்ப்பாடுகளையும், இடையூறுகளையும் கண்டு, தாம் தொடக்கத்தில் கொண்ட மன உறுதியிலிருந்து, தளர்ந்துவிடாமை ஆகும். எனவே இந்நிலை, ஒரு செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஏற்படும் ஒரு நெகிழ்ச்சி நிலையைக் குறித்ததாகும் என்க.
1. அஞ்சாமையும் பிறதுணையும்
ஒரு செயலைச் செய்ய முற்பட்டவர்க்குப் பொருளும் கருவியும் முதல் துணைகளாகவும், அத்துறைச் செயல் வல்லார், அல்லது தம் நலம் நாடுகின்ற நண்பர் இரண்டாந் துணையாகவும் அமைதல் போலவே, வேறோர் இன்றியமையாத் துணையும் உண்டு. அவ்வின்றியமையாத் துணையிருப்பின் பிறதுணைகள் இல்லாமற் போயினும் தாழ்வில்லை என்பார் திருக்குறள் ஆசான். அந்தத் துணைதான் அஞ்சாமை ஆகும். இந்த அஞ்சாமை என்னும், உள்ளத்தின் உணர்வு ஒன்று துணை வருமாயின் எவ்வகைக் கடினமான செயலுக்கும் வேறு பிறதுணைகள் இல்லாமற் போயினும், தாழ்வில்லை. ஆனால், செயலை மட்டும் எச்சமில்லாமல், மிச்சம் வைக்காமல், மீதியாக விடாமல் பிறகு செய்து கொள்ளலாம் என்று எண்ணி விடாமல், செய்துவிட வேண்டும்.
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா, எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின். (497)
அஞ்சாமை இருந்தால் பிறதுணைகள் வேண்டாம் என்றே சொல்லுவார் ஆசான். பிறதுணைகள் ஒரு வேளை இடையில், பூசல் கொண்டு, இகல் விளைவித்துப் பகையாக மாறினும் மாறலாம் என்பதால் துணைகள் வேண்டா என்பார். மனவேறுபாடு கொள்ளாத துணை கிடைத்தற்கு அரிது என்னும் உலகியற் குறிப்பு இவ்வாய்மை மொழியுள் உணர்வாய் அடங்கியுள்ளதை உய்த்துணர்க.
2. அஞ்சாமை வேண்டும்
அஞ்சாமை, ஒரு செந்துணிவை மனத்திற்கும் அறிவிற்கும் வழங்கிக் கொண்டே இருக்கும் ஒர் ஊக்க உணர்வு. இது, குழந்தைப் பருவத்தில் மாந்தரிடம் விளங்கித் தோன்றிப் பின் படிப்படியாக, பல்வேறு வகைப்பட்ட அகப் புறச்சூழல்களால் பலரிடத்து அமுங்கியும், சிலரிடத்து எழுந்தும் இயலும் ஓர் உள்ளுணர்வாகும். இது, பிறப்பியல், வாழ்வியல், உடலியல், அறிவியல், சூழ்வியல் ஆகிய அகப்புறக் காரணங்களால் அவ்வாறு வளர்ந்தும் வளராமலும் இருக்கும். இது முற்றுற வளர்ந்தால் பல வினைகளுக்கு ஆக்கமாகவும், முற்றுறத் தளர்ந்தால், பல அழிவுகளுக்கு ஊக்கமாகவும் அமைந்துவிடும். எனவே, அனைத்துச் செயல்களுக்கும் அடித்தளமாகிய அஞ்சாமை என்னும் உணர்வே உயிர்க்கு அனைத்து வளர்ச்சிகளுக்கும் காரணமாக அமைகிறது.
அஞ்சாமை உணர்வு அறிவொடு கலக்கும் பொழுது ஒர் ஆக்கத் துணிவையும், அறியாமையுடன் கலக்கும் பொழுது ஒரு கொடுமை விளைவையும் மாந்தர்க்குத் தரும் அஞ்சாமை உணர்வு துளியும் அற்ற ஒருவன் வெறும் கோழையாகவே இருப்பான். இக்கோழைமை உணர்வு ஒருவனிடம் நன்கு வளர்ந்துவிட்டால், அவன் அறிவுள்ளவனாக இருந்தாலும் எதிலும் முன்னேறி விடமுடியாது. ஏதோ, தனக்குக் கிடைத்த ஒரு தனிப்பட்ட நிலையிலேயே, நிலையாகத் தங்கிவிடுவான். அந்நிலையினின்று அவனால் மேம்பட்டு வளரவே இயலாது. வளர்ந் தாலும், கிளையற்ற மரம்போல், தனித்தே நின்று இயங்குவான். அவனால் பிறர்க்கு ஒர் எள்ளின் மூக்கத் துணையும் உதவியாக இருத்தல் இயலாது.
அஞ்சாமை உணர்வுள்ள ஒருவன் அறிவற்றவனாக இருப்பினும் வீரனாக மலர்ச்சியுறுவான். அவனால் நல்ல பல ஆக்கமான வினைகள் கூட நடந்து விடலாம். அவ்வினைகளின் பயன், அவனைச் சார்ர்த பலருக்கும் கிடைக்கலாம். ஆனால் அஞ்சாமை அறிவொடு இனையும் பொழுது பல்வேறு வகையான செயல்களுக்கு அஃது ஊற்றமாக அமைந்து விடும். எனவே, அஞ்சாமையில்லாத அறிவை விட, அஞ்சாமை மட்டுமே உள்ள வீரம், ஒரளவு பொதுப்பயனுக்கு பொதுச் செயல்களுக்கு நலந்தருவதாகும். இவ்வுணர்வு நிலைகளைக் கீழ்வரும் சமனியங்களாக
வகுத்துச் சொல்லலாம். அஞ்சாமை + கோழைமை > தனிமை > தன்னலம்
அஞ்சாமை + வீரம் > ஓரளவு பயன்
அஞ்சாமை + அறியாமை > கொடுமை
அஞ்சாமை + அறிவு > செயலாண்மை
எனவே, உலகில் ஒரு செயலுக்கு அஞ்சாமை தான் மூலமுதல். அஃது ஒருவனிடம் இயற்கையாகவே அமைந்துவிடுமானால், அவன் எவ்வகையானும் இவ்வுலகில் வேறு பொருள்களைத் துணையாக்கிக் கொண்டு, தான் எண்ணிய செயற்பாடுகளைக் கட்டாயம் செய்வான். அதனால் பிறர்க்கு நன்மையுடையவனாகவும் இருப்பான். அஞ்சாமை அறிவுடன் சேர்ந்து இயங்கவில்லையானால், முரட்டுத் துணிவாகிக் கொடுமை உணர்வாக வளர்ந்துவிடும். அசைவிலாத ஊக்கமே அஞ்சாமையின் விளைவுதான். ஒருவனிடம் அறிவு கலந்த அஞ்சாமை இருந்தால்தான் ஊக்கம் தோன்றும். அந்த ஊக்கம் அஞ்சாமையொடு கலந்தே அசைவின்மையைத் தரும். அசைவின்மை என்பது நடுக்கமின்மை. ஒன்றை நினைக்கவும் நினைத்ததை வெளிப்படுத்தவும் வெளிப்படுத்தியதைச் செய்யவும் அஞ்சாமை உதவுகிறது. மேலும் அஞ்சாமை, மனவுணர்வுடன் கலக்கின்ற பொழுதுதான் உண்மையுணர்வைத் தோற்றுவிக்கிறது. உண்மையுணர்வு நேர்மையைத் தோற்றுவிக்கிறது. மற்றபடி அஞ்சாமையற்ற உள்ளம் உண்மையை உணரு மானாலும் கூட அது செயலுக்குரிய ஊக்கத்தைத் தோற்றுவிக்காது.
3. அஞ்சாமை துன்பத்திற்குத் துணை
ஒரு செயலைத் தொடங்குவதற்கும் தொடங்கிய செயலுக்கிடையில் பல இடர்ப்பாடுகள் வந்தாலும் மேன்மேலும் அதைத் தொடர்ந்து செய்வதற்கும் அஞ்சாமை அடிப்படை உணர்வாகும். அஞ்சாமை உணர்வு ஒருவனிடம் நன்கு கால் கொண்டிருந்தால், அது மன ஊக்கத்திற்கு உறுதுணையாக நின்று, எத்தகைய துன்பத்திலும் அதைத் தளரவிடாமல் காத்துக் கொள்ளும், துன்பம் வரும் பொழுது துவண்டு விடுகிற உள்ளம், மேற்கொண்டு துணிவாக இயங்குவதற்கு அவனை. விடாது. எனவேதான் 'இடுக்கண் வருங்கால் நகுக' (621) என்றார் பேரறிஞர்.
ஒருவன் துன்பத்தில்தான் துவண்டு போகின்றான். சிலர். ஏதானுமொரு சிறுதுன்பம் வந்தாலும் தாங்குவதில்லை. பெருந்துன்பம் வருமானால், அனைத்து நிலைகளும் இல்லாமற் போய்விட்டது போல் அப்படியே இடிந்து போய், தலைமேல் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுகின்றனர். அக்கால், அவர்களுக்குத் துணையாக இருப்பவர்களும் அவர்களின் துன்பத்தை எடுத்துப் பேசி அதைப் பெரிதுபடுத்தி இல்லாத கற்பனையெல்லாம் பண்ணி அவன் துன்பத்தில் ஏதோ தாங்கள் பங்கு கொள்பவர்களைப் போல், பலவாறு கூறி, அவனைக் கோழையாக்கி விடுகின்றனர் பின்னர், அக்கோழைமை உணர்வினின்று அவன் மீண்டெழுவதற்குள், அவன் மேற்கொண்ட வினை தொய்வடைந்து விடுகிறது. அதன் பின் மேலும் அவ்வினையைக் கட்டியெடுப்பதற்குள் நீண்டகாலம், நெடிய முயற்சி செய்ய வேண்டியுள்ளது.
4. துன்பம் இன்பத்திற்கு ஆசிரியன்
நமக்கு வினையின்கண் வரும் துன்பங்கள், அல்லது இடையூறுகளில் எல்லாம் பொருள் முடையும் கருவிமுடையுந்தாம் பேரளவினவாக இருக்கும். ஆள்களால் வரும் இடையூறுகள் சில செயல்களைக் குறைவுப்படுத்திவிடும். செயல்நிலைகளில் வரும் பொருள்முடை, பொருள் கிடைக்குங்கால் நீங்கிவிடும். துன்பம் கருவிகளாலும் ஆள்களாலும் வருமானால், அவற்றையும் முறைப்பட்ட தோதுக்களால் தவிர்த்துக் கொள்ளலாம்.
பெரும்பாலும் இடர்ப்பாடுகள் என்பன நம் ஊக்கத்தை மிகுதிப்படுத்தும் காரணங்களாகவே அமைகின்றன. அவை சிதறியிருக்கும் கவனத்தை ஒருமுகப்படுத்துகின்றன. நம்மை நாம் மேற்கொண்ட செயலினின்று நெகிழவிடாமல், ஈடுபட வைக்கின்றன. மனத்தையும் அறிவையும் ஊக்கப்படுத்தி, நம்மை மேலும் நம் செயலில் தெளிவடையச் செய்வதற்காக இடர்ப்பாடுகள் நமக்கு உதவுகின்றன.
துன்பமெனும் ஆசிரியன் துன்னப் பயிற்றுவிக்கும்
இன்பமெனும் கல்விக்கு ஈடில்லை
என்பது உலகியல் நூறு.
5. இன்பத்தையே எதிர்பார்த்தல் கூடாது மேலும், செயல்படும் இடங்களில் எல்லாமே காளைபோல் உழைப்பும் ஊக்கமும் உடையவனாகச் செயல்படுபவனை, அவனுக்கு வந்துறும் துன்பங்கள் ஏதும் செய்யா என்பது திருவள்ளுவர் திருவாய்மொழி.
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. (624)
இன்னோர் உண்மையையும் நாம் உணரும்படி திருக்குறள் நமக்குத் தெளிவிக்கிறது. செயலை விரும்பியவன் எப்பொழுதும் இன்பத்தையே எதிர்பார்த்திருத்தல் கூடாது. துன்பத்தை அவன் எதிர்கொள்ள எப்பொழுதும் அணியமாக இருத்தல் வேண்டும். இன்பத்தை மட்டும் விரும்பாமல், துன்பத்தையும் எதிர்கொண்டிருப்பவன் எந்த இடர்ப்பாட்டையும் எளிதாகத் தாங்கிக் கொள்ள முடியும்.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன். (628)
6. இடையூறு உறுதிக்கு அடிப்படை
ஒரு செயலைத் தொடங்குகையில், ஒருவன் ஈடுபாட்டை உறுதியுடையதாக ஆக்குவன, அவன் தொடக்கத்தில் பெறும் இடர்ப்பாடுகளே! பின்னர் அந்த உறுதிப்பாட்டையே துணையாகக் கொண்டு, அவன் மேற்கொண்ட வினையில் அல்லது செயலில் மூவுரமாக (மூவுரம் என்பது, உடல், உரம், உள்ள உரம், அறிவு உரம் என்பவற்றை, இவற்றின் உறுதிப்பாட்டைக் குறிக்கும். மூவுரம் என்னும் இச்சொல்லே, வழக்கில் முவ்வுரம் - மும்முரம் என்று திரிந்தது. இந்தச் செயலை அவன் மும்முரமாகச் செய்கிறான் - என்னும் வழக்கை அறிக - ஈடுபடுவானாகில், அடுத்து வரும் துன்பங்கள் அவனை ஒன்றும் செய்து விடுவதில்லை.
7. இடையூறுகளின் வகை
ஒரு செயலுக்கிடையில் வரும் இடர்ப்பாடுகள் பலவகையானவை. முதற்கண் ஒரு செயலுக்கு இடையூறாகவும், இடர்ப்பாடாகவும் அமைவது அவன் உடலே ஆகும். உடல் நலிவடையும் பொழுது உள்ளம் சோர்வடைகின்றது. உள்ளம் சோர்வுற்றால் அறிவு தளர்கிறது. இவை மூன்றும் அவனுக்கு வரும் அகத்தாக்கங்கள்.
இனி, அவனுக்குப் புறந்தாக்கங்களாக வருவன கருவிச் சேதம், துணைத் தொய்வு, எதிர்ச் செயல்கள், பொருள் முடை, காலப் பிறழ்ச்சி, இடம் பொருந்தாமை, ஆட்சி முரண் போன்றவை ஆகும். இவற்றைக் கீழ்வருமாறு ஒரு பட்டியலில் அமைத்துக் கொள்ளலாம்.
இடர்ப்பாடுகள்
1. அகத்தாக்கம்
அ. உடல் நலிவு.
ஆ உள்ளச் சோர்வு
இ. அறிவுத் தளர்ச்சி
2. புறத்தாக்கம்
அ. கருவிச் சேதம்
ஆ துணைத் தொய்வு
இ. எதிர்ச் செயல்கள்
ஈ. பொருள் முடை
உ காலப் பிறழ்ச்சி
ஊ. இடம் பொருந்தாமை
ஏ. ஆட்சி முரண்.
8. உடல் தாக்கம்
இது நமக்குள்ளேயே ஏஹ்படும் தாக்கம். ஒரு செயல் தொடக்கப் பெற்று நடந்து வருகையில், உடல் அவ்வினைச் சுமை தாளாது நலிவடைதலும், அதனால் உள்ளத்தின் உணர்வு தாக்கமுற்றுச் சோர்வடைதலும், அதன் வழி நம் அறிவு தளர்ச்சியுற்றுப் போதலும், நமக்கு நாமே வருவித்துக் கொள்ளும் இடையூறுகள் ஆகும். எனவே இவை அகத் தாக்கங்களாக ஆகின்றன. இவ்வகத் தாக்கமாக வருகின்ற இம்மூன்று நிலைகளையும் படிப்படியாக ஆராய்வோம்.
1. உடல் நலிவு
ஒரு செயல் அல்லது வினை என்பது பெரும்பாலும் உடலைக் கொண்டுதான் தொடங்கப் பெறுகிறது; அதைக் கொண்டுதான் முழுமை பெறுகிறது; அல்லது வெற்றி பெறுகிறது. உடலே அனைத்துக்கும் மூலமுதல், உடல் இல்லையானால் வாழ்வே இல்லை. உடல் என்பது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் கொண்டு இயங்குவது. ஒரு பொறியில் எப்படி அனைத்து உறுப்புகளும் சரியாக அமைந்தால்தான், அப்பொறி இடர்ப்பாடின்றி இயங்குமோ, அப்படி உடலின்கண் அகவுறுப்புகளாகவும், புறவுறுப்பு களாகவும் உள்ள சிறிய, பெரிய உறுப்புகள் அத்தனையும் சரிவர இயங்குமானால்தான் உடலும் சரிவர இயங்க முடியும். உடலின்றி உலகமில்லை. உடல் நலிவடையும் பொழுது உலக வாழ்வே தொய்வடைந்து போகிறது.
2. உடல்தான் அனைத்தும்
எனவே, செயலுக்கு அடிப்படையான முதல் உடலே. சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும் என்பது வழிவழியாகக் கண்டுவரும் உண்மை. பலபேர் உடலைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. (377)
என்று திருவள்ளுவப் பெருமான் ஊழ் அதிகாரத்துள் குறித்த உண்மை, முதலில் உடலே நோக்கியதே ஆகும். எத்தனைக் கோடி பணத்தைத் தொகுத்து வைத்திருந்தாலும், அல்லது எத்தனை ஆயிரம் செல்வங்களை ஈட்டியிருந்தாலும், அவற்றைத் துய்ப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் முதலில் உடல் முழுத்திறன் பெற்றதாக இருத்தல் வேண்டும். உடல் நன்றாக இல்லையானால், இவ்வுலகச் செயல்கள் ஒன்றிலும் நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ள இயலாது. உடல் இல்லையானால் அனைத்தும் இல்லை. உடல்தான் உலகம்; உடல் தான் உயிரியக்கத்திற்கு அடிப்படை உடல்தான் செயல்; உடல்தான் அறிவுமுதல்; உடல்தான் அன்பு முதல். உடல் தான் அனைத்தும்.
3. உடல்தானம் மூலமுதல் (First Capital)
எனவே, இவ்வுலகின் அனைத்து நிலைகளுக்கும் மூல முதலாக உள்ள உடலை நாம் பேணிக் கொள்ள வில்லையானால், பழுதுபடாமல் வைத்திருக்க வில்லையானால், நாம் எத்துணை அறிவுள்ளவராக இருந்தாலும், அன்புள்ளவராக இருந்தாலும், பணம் உள்ளவராக இருந்தாலும், செல்வம் உள்ளவராக இருந்தாலும், என்ன பதவியில் இருப்பவராக இருந்தாலும், எந்த இடத்தில் வாழ்பவராக இருந்தாலும் நாம் பயனற்றவர்களே! இவ்வுலகிற்கு வேண்டாதவர்களே!
இத்தகைய அரிய, தேவையான, இன்றியமையாத, அனைத்துக்கும் அடிப்படையான உடலை நாம் எளிதாக நினைத்துவிடுகிறோம். இன்னுஞ் சொல்வதானால், நம்மில் நூற்றுக்குத் தொண்ணுறு பேர் உடலைப் பற்றியே கவலைப்படாதவர்களாக, கருத்தில்லாதவர்களாக, அக்கறையற்றவர்களாக இருந்து வருகிறோம். ஒர் அரிய கருவூலத்தைக் காப்பது போல், எல்லாவற்றுக்கும் மேலாக, நமக்குக் கிடைத்த உடலைத்தான் நாம் முதலில் காத்து வருதல் வேண்டும். அதனால்தான் திருமூலர் என்னும் மிகப்பெரும் மெய்ப்பொருள் அறிஞர், உடலைப்பற்றித் தம் அருமைக்கருமையான திருமந்திரம் என்னும் நூலில், கீழ்வருமாறு கூறுகிறார்.
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்;
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்;
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தபின்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே!
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்;
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்!
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந்தோம்புகின் றேனே!
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடுயிரிடை நடப்பறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே
இவ்வருமையான பாடல்கள் உடம்புதான் அனைத்துக்கும் அடிப்படையாக நின்று இயங்குவது என்றும், அதனால், அதனை மிகக் கருத்துடன் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறுவதை நன்கு உணர்ந்து பார்த்தல் வேண்டும்.
4. உடல் ஒரு பொறி (Working Machine)
உடல் ஒரு பொறியைப்போல் உள்ளது என்றாலும், உடல்போல் ஒரு பொறியை எங்கும் எவரும் செய்ய இயலாது. பொறிக்கும் உடலுக்கும் உள்ள எளிய ஒரு வேறு பாட்டை உணர்ந்தாலே, உடம்பின் பெருமையும் அருமையும் விளங்கிவிடும். நாம் காணுகின்ற எந்தப் பொறி (Machine)யிலும், ஒரு சிறு உறுப்பாகிய ஒரு திருகாணி இல்லையானாலும் அப்பொறி இயங்காது. ஆனால், இவ்வுடலில் பல உறுப்புகள் இல்லையானாலும், இஃது இயங்கும், அஃதாவது கால்களில் ஒன்றோ அல்லது இரண்டுமோ இல்லையானாலும், அல்லது கைகளில் ஒன்றோ அல்லது இரண்டுமோ இல்லையென்றாலும், அல்லது இரண்டு கண்கள் இல்லையென்றாலும், காதுகள் இல்லையென்றாலும், மூக்கோ வாயோ இல்லையென்றாலும் இவ்வுடல் இயங்கும் வல்லமை உடையது. இதைப்போல் ஒர் அரிய பொறி உலகில் எங்குமே இல்லை. இத்தகைய அரிய பொறியை நாம் இயற்கையால் தரப்பெற்றிருந்தும், இதைப் பேணிப் புரக்காமல் இருப்பது எத்துணை அறியாமை. இவ்வுடலில் உள்ள உறுப்புகளின் அருமையை நாம் அவ்வுறுப்புகள் இல்லாதபொழுதுதான் உணரமுடியும்.
5. பழுதுபடும் பொழுதுதான் பெருமை தெரியும்
காலை இழந்த பொழுதுதான், காலின் அருமை, தேவை நமக்கு விளங்குகிறது. கண்களை இழந்த பொழுதுதான், அக் கண்களின் பெருமையை நாம் உணர முடிகிறது. காதுகள் செவிடான பின்னர்தாம் காதுகள் நமக்கு எவ்வளவு இன்றியமையாத உறுப்புகள் என்பது நமக்குத் தெரிய வரும் பற்களை நாம் இழக்கின்ற பொழுதுதான், அடடா, நாம் பற்களைப் பாதுகாவாமல் போனோமே என்று அறிய முடிகிறது. உறுப்புகள் அனைத்தும் இருக்கின்றபொழுது, பேண முடியாத, பேண அறியாத நாம் அவற்றை இழந்துவிட்ட பின்னர், பெருந்துன்பம் அடைகின்றோம். அவற்றை முன்னதாகவே காக்கின்ற அறிவை நாம் பெறவில்லை யானால், நமக்கு அவை இருந்து என்னபயன்? நம் உடலும் அதிலுள்ள ஒவ்வோர் உறுப்பும், நம்முடைய ஒவ்வொரு பயனுக்காகவே இயற்கைத் தாயால் நமக்குத் தரப்பெற்றுள்ளது. இனி, அவற்றைக் காத்துக் கொள்ளும் அறிவையாகிலும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டாவா? உடலைக் காக்க அறியாதவன் உயிரையும் காத்துக் கொள்ள இயலாதவனாகப் போய் விடுகிறான் என்ற உண்மையை நாம் எப்பொழுதும் மறக்கவே கூடாது.
6. உடல், உள்ளத்திற்கும், உள்ளம், அறிவிற்கும் அடிப்படை
உடலைப் பேணிக் கொள்ளும்பொழுதுதான், மன ஊக்கத்தைக் காத்துக் கொள்கிறோம். உடல் நலமாகவும், உள்ளம் ஊக்கமாகவும் இருந்தால்தான் அறிவைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். உடலும் உள்ளமும் அறிவும் அக அளவாக நின்று நமக்கும், புற அளவாக நின்று பிறர்க்கும் பயன்படுகின்றன. உடல்நலம் இல்லாதபொழுது, மனம் ஊக்கம் தளர்கிறது. மன ஊக்கம் தளர்ந்தால், உலகச் செயல்கள் எதிலும் நாட்டம் குறைகிறது. முயற்சி இல்லாமல் போகிறது. மன ஊக்கம் குறையக் குறைய, உள்ள வலிவு குறைகிறது. உள்ள வலிவற்றவன், தன் உடலைப் பேணவும் அறிவை வளர்த்துக் கொள்ளவும் இயலாமல் போகிறான். நம்மில் சிலர் எந்தச் செயலிலும் நாட்டம் குறைந்திருப்பதற்கு உள்ளம் நலமில்லாமல், வலிவில்லாமல் ஊக்கம் குறைந்திருப்பதே கரணியம், உடல் நலம் குறைந்தவன், எந்தவொரு செயலுக்கும் பிறர் உதவியை நாடுகின்றான். பிறரை நம்ப வேண்டியவனாகப் போகிறான். உள்ள ஊக்கம் குறைந்தவன் தன்னம்பிக்கை குறைகின்றான். தன்னம்பிக்கைக் குறைவு தன்னுக்கத்தையும் தன்னறிவையும் கெடுக்கிறது.
7. உடல் கெட அனைத்தும் கெடும்
உடல் நலமும் அதால் உள்ள நலமும் குறைந்து காணப்படுகின்றவன் பிறரை ஐயுறுகின்றான். அவர்கள்மேல் எரிச்சலுறுகின்றான்; பிறரின் ஒவ்வொரு செயலும் அவனுக்கு ஐயுறவை உண்டாக்கி, எரிச்சலைத் தந்து, வெறுப்பை வளர்த்துப் பொறாமையைத் துரண்டிப் பகை கொள்ளச் செய்து, மனத்தைப் பலவாறாக இடர்ப்பாடுகளுக்கும் உளைச்சலுக்கும் ஆளாக்குகிறது. அவன் எப்பொழுதும் பிறரின் செயல்பாடுகளிலேயே கவனமாக இருக்கிறான். முடிந்த அளவில் அவற்றில் குற்றம் காணுகிறான். அவற்றைப் பொறாமையால் எதிர்க்கவும் முனைகிறான். பொறாமை மிகுதியால், பிறரிடம் தனக்கு வேண்டாதவனைக் குறை கூறுகிறான். நல்லறிவுத் திறம் அவனிடம் குறைகிறது. நற்சிந்தனை குறைகிறது. எனவே, அவன் அறிவுத் திரிபு கொள்கிறான். திரிந்த அறிவு எந்தச் செயலிலும் நாட்டங் கொள்ளச் செய்யாமல் அவனைத் தடுக்கிறது. உடலால் உள்ளமும், உள்ளத்தால் அறிவும், அறிவால் செயலும் படிப்படியாகக் கேடுற்றுக் கொண்டே போகின்றன. இது தொடர்வினைபோல், அவன் உடல் நலமுறுகிறவரை நீண்டு கொண்டே போகிறது. தான் செய்ய இயலாத நிலை, பிறர் செயல் நிலைகளால் எரிச்சலையும், பொறாமையையும், பகையையும் தொடர்ந்து வளர்க்கவே, அவன் யாருக்கும் பயனற்றவனாகவே, போகின்றான். இறுதிவரை அவன் ஒரு மன நோயாளியாகவே அல்லலுறுகின்றான்.
உடல்நலமே அனைத்துச் செயலுக்கும் மூலகாரணமாக நிற்பதை நம்மில் பெரும்பாலோர் உணர்வதில்லை. எனவே, உடல் நலமின்மையே அனைத்துத் தீமைகளுக்கும் அடிப்படையாக அமைந்து விடுகிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் நன்கு உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
8. உடல் நலத்துக்கே உணவு வகை
உடலை நலமாக வைத்திருப்பதற்கு ஓரளவு நல்ல உணவு தேவையே. ஆனால் பலர் உடல் நலத்துக்காகவே உண்ண வேண்டும் என்பது தெரியாமல், பசிக்காகவே உண்ண வேண்டும் என்று நினைக்கின்றனர். மிகப்பலர் ஆசைக்காகவே உண்கின்றனர். எனவே, நல்ல உணவைத் தேர்ந்து தேடி உண்ணாமல், கிடைத்த உணவை உண்ணுகின்றனர். ஆசைக்காக உண்பது தாழ்ந்த நிலை; பசிக்காக உண்டது அதனினும் சிறிது உயர்ந்த நிலை; உடல் நலத்திற்காக உண்பதே மிக உயர்ந்த நிலை; இனி, செயலுக்காக உண்பதும், அறிவுக்காக உண்டதும் மிக மிக உயர்ந்த நிலைகள். அறிவுக்காக உண்பவர்கள் வயிற்றுப் பசிக்காக உண்ணும் நிலையைக் கூடிய மட்டில் தவிர்க்கிறார்கள்; குறைவாக மதிக்கிறார்கள். பசி, உடலுக்கு உணவு தேவை என்று உணர்த்துகிற ஓர் இயற்கை உணர்வே, உண்ணும் நேரத்தை அறிவிக்கின்ற ஓர் எச்சரிக்கை அறிவிப்பே. பசிக்காக உண்ணும் நிலை என்பது தவறு. உண்ணுவதற்காகவே பசிக்கிறது. உண்ண வேண்டும் என்பதால் எதையும் உண்ணவேண்டும் என்பதில்லை. உடலுக்காக உண்ணக் கூடாது. உடல் நலத்துக்காகவே உண்ண வேண்டும். உடல் நலம் என்கிற பொழுது, உடலில் எந்த ஆற்றல் குறைகிறதோ, அந்த ஆற்றலை நிறைவு செய்வதற்காகவே உண்ண வேண்டும். பார்வையைக் கூர்மையாக்கவும், செவியை நன்றாகக் கேட்கச் செய்யவும், பிற உடல் கருவிகளை வலுப்படுத்தவும், அறிவை வளர்த்துக் கொள்வதற்கு அடிப்படையான மூளையை நன்றாகச் செயல்படச் செய்யவும் உயிரியக்கத்தைக் காத்துக் கொள்ளவும் பலவாறான உணவுகள் தேவை. ஒரே வகை உணவால், இவை அனைத்தையும் நலமுறச் செய்ய முடியாது.
எலும்பை உறுதியாக வைத்துக் கொள்ள உதவும் உணவு, தசை வளர்ச்சிக்குப் பயன்படுவதில்லை. தசை வளர்ச்சிக்கும் உறுதிக்கும் தேவையான உணவு, நரம்பு மண்டிலங்களை வலுப்படுத்துவதில்லை. இனி, நரம்பு மண்டிலங்களுக்கு ஏற்ற உணவு, மூளை நலத்துக்கு உகந்ததாக இருப்பதில்லை. உடல் வலிவு வேறு; உடல் நலம் வேறு. உடல் வலிவு என்பது தசைகளின் உறுதி, நரம்புகளின் உறுதி, எலும்புகளின் உறுதி ஆகியவற்றைப் பொறுத்தது. உடல் நலம் என்பது, நெஞ்சாங்குலை இயக்கம், கல்லீரல், மண்ணிரல் இயக்கம், கழிவுப் பொருள்களுக்குரிய உள்ளுறுப்புகளின் இயக்கம், அறிவுக் கருவிகளுக்கான இயக்கம், குருதித் தூய்மை முதலியவற்றைப் பொறுத்தது.
9. உடல் வலிவும் உடல் நலமும்
உடல் வலிவாகவும் இருத்தல் வேண்டும்; அதேபொழுது நலமாகவும் இருத்தல் வேண்டும்; உடல் வலிவு மிகுந்தால் நலம் கேடுறலாம்; நலம் மிகுந்தால் வலிவு கெடாது. எனவே உடல் வலிவினும், உடல்நலமே கருதத் தக்கது. வெறும் உடல் வலிவு முரட்டுத் தனத்தை வளர்க்கும். முரட்டுத்தனம் உள்ளத்தின் உணர்வுகளைக் கேடுறச் செய்யும் திசைத் திரும்பச் செய்யும். உடல் நலமே உள்ளத்தையும் அறிவையும் நல்ல செயல்களில் ஈடுபடச் செய்யும். கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு ஒடும் கட்டற்ற காளைமாடு போல், உடல்வலிவு, முரட்டுத் தனமாகச் செயல்படும். வண்டியில் பூட்டிய காளை போல, ஒழுங்குறச் செயல்படச் செய்வது, உடல்நலம். உடல் வலிவு, கட்டுப்பாடற்று வளர்ந்து கிடக்கும் காட்டுப்புதர் போல்வது. அதில் முட்செடிகளும் இருக்கும்; நச்சுக் கொடிகளும் இருக்கும். ஆனால், உடல் நலம் அழகுறச் சமைத்த ஒரு பூங்கா போல்வது. அங்கே அழகிய பூஞ்செடிகளும், பழந்தரும் மரங்களும், அழகிய புல்வெளிகளும் இருக்கும். உடல் வலிவு, உடல் நலம் இவை தொடர்பாகவும், அவற்றுக்கான உணவுத் தேவை தொடர்பாகவும் சில இயற்கையான பிரிவினர்களைக் கீழ்வருமாறு வகைப்படுத்தலாம்.
சிறந்த அறிஞர்கள் அறிவு நலந்தரும் உணவையே உண்கின்றனர்.
நன்கு கற்றவர்கள் உடல் நலத்துக்கான உணவையே உண்கின்றனர்.
ஒரளவு கற்ற பொதுவானவர்கள் உடல் வலிவுக்கான உணவையே உண்கின்றனர்.
கல்லாதவர்களும் சிறிதே அறிவுள்ளவர்களும் உடல் தேவைக்கான எந்த உணவையும் உண்கின்றனர்.
கீழாக அறிவுள்ளவர்கள் - பசிக்காகவே உண்கின்றனர்.
அதனினும் கீழானவர்கள் - ஆசைக்காகவே உண்கின்றனர்.
விலங்குகளும், பறவைகளும் - உண்பதே உயிரியக்கமாகக் கொண்டன.
இவ்வகைகளையே இன்னும் பலவாறாகவும் பிரித்துக் கூறலாம். அவை இங்குத் தேவையில்லை என்பதால் இந்த அளவோடு நிறுத்திக் கொள்கிறோம். இனி, உணவை மிகக் குறைத்து உண்கின்ற நிலைகளும், பருவுணவு அன்றிப் பருகுநிலை உணவு உண்கின்ற நிலைகளும், பருகுநிலை உணவும் இன்றி, ஒரோ ஒருகால் உண்ணும் பச்சிலை உணவு நிலைகளும், அதுவும் இன்றிக் காற்று உணவு நிலைகளும் பிறவும் உண்டு. இங்கு அவை பற்றிய அறிவு அறவே தேவையில்லையாதலால் அவற்றையும் தவிர்க்கிறோம்.
இனி, உடலை நலமாக வைத்துக்கொள்ளும் ஒரு மாந்தப் பொதுநிலையே, உடல், உள்ளம், அறிவு ஆகிய மூன்று இயக்கங்களும் கூடிய செயல் நிலைக்கு உகந்ததாகும். இந்த மூன்று உயிர்க்கூறுகளிலும் ஒன்றை மட்டுமே சிறப்பாக வளர்த்தெடுக்க விரும்புகின்றவர்களுக்கும் அல்லது, இரண்டை மட்டுமே சிறப்பாக வளர்த்தெடுக்க விரும்புகின்றவர்களுக்கும், அல்லது மூன்றையுமே சிறப்பாக வளர்த்தெடுக்க விரும்புகின்றவர்களுக்கும், அவரவர்களின், வாழ்க்கை முறைகளுக்கும் வளத்துக்கும் தக்கபடி, உணவு நிலைகள் வேறுபடுகின்றன: அல்லது தேவைப்படுகின்றன. அவற்றையும் அறிவு நூல்களில் கண்டு கொள்க.
இங்கு நாம் செயலையும், அதன் திறப்பாட்டையும் மட்டுமே எடுத்துப் பேசிக் கொண்டிருப்பதால், அவற்றுக்குப் போதுமான உடல்நலக் கூறுகள் மட்டுமே, சிறிது விரிவாகக் காண்போம்.
10. உடல் மேல் ஆறுவகைக் கவனம்
இதுவரை, ஒவ்வொருவரும் ஏதாவது, ஒரு செயலில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவும், அந்தச் செயலைத் திறமையாகச் செய்வதற்கும் உடல் நலம் மிகமிக இன்றியமையாதது என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டோம். அந்த உடல் நலத்தைப் பேணுவதும் அதை வளர்த்துக் கொள்வதும் அவ்வளவு கடினமான செயலன்று; ஆனால் கவனமான செயலாகும். அந்தக் கவனம் ஆறு நிலைகளில் எப்பொழுதும் நினைவில் இருந்து கொண்டே இருத்தல் வேண்டும். அவையாவன. (1. களைப்பு ஏற்படும்படி உழைத்தல். 2. அளவான ஆனால் தேவையான உணவு கொள்ளுதல். 3. போதுமான ஒய்வு எடுத்துக் கொள்ளுதல், 4. நாள்தோறும் எளிமையான உடற்பயிற்சி செய்தல், 5. உடலை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருத்தல், 6. எதிலும் நல்லெண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் இருத்தல்)
இந்த ஆறு கூறுகளைப் பற்றியும் சிறிது விரிவாகத் தெரிந்து கொள்ளுவது மிக மிகத் தேவையானதாகும்.
1. களைப்பு ஏற்படும்படி உழைத்தல்
உழைப்பு என்பது செயலை அடிப்படையாகக் கொண்டது. செயல் உடலை அடிப்படையாகக் கொண்டது. எந்தச் செயலுக்குமே உடல்தான் காரணமூலம். எழுதுவது, பேசுவது, இயங்குவது போன்ற புறச்செயல்களுக்கும், எண்ணுவது, பார்ப்பது, கேட்டது.துய்ப்பது போன்ற அகச் செயல்களுக்குமே உடல்தான் அடிப்படைப் பொருள். உடல் நலமிழந்தால், இவை அனைத்துச் செயல்களுமே தம் தம் இயக்கத்தில் குன்றிவிடும். உடல் நலமின்மை முதன் முதலில் புறச் செயல்களைக் குன்ற வைக்கிறது. பிறகு, புறச் செயல்களுக்குக் காரணமான அகச் செயல்கள் குறைவுபடுகின்றன. இறுதியில், எண்ணவும், சிந்திக்கவும் முடியாத அளவுக்கு உடல்நலமின்மை மாந்தனைச் செயலற்றவனாக ஆக்கிவிடுகிறது. எனவே, உடல் நலமே அனைத்துக்கும் இயக்கக் களமாகி விடுகிறது.
உடல் நலமாக இருக்க வேண்டுமெனில், உடல் இயங்க வேண்டும். உடலும் அதன் இயக்கமும் ஒன்றையொன்று சார்ந்து நிற்பன. உடல்தான் இயக்கத்தைக் கொடுக்கிறது; இயக்கந்தான் உடலை நிலைநிற்கச் செய்கிறது. உடல் இன்றேல் இயக்கமில்லை; இயக்கம் இன்றேல் உடல் இல்லை என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே, உடலை நாம் இயக்க வேண்டும்.
படுத்துக்கொண்டே உடலை நலமாக வைத்துக்கொள்ள இயலாது. உடல் ஒரு பொறி போன்றது. அந்தப் பொறி இயங்கியாக வேண்டும். அதிலுள்ள அனைத்துக் கருவிகளும் அதனதன் தேவைக்கேற்ப இயங்கியாகல் வேண்டும். எந்தக் கருவி இயங்கவில்லையோ, அந்தக் கருவி நாளடைவில் செயலை இழக்கிறது. ஒரு கருவி செயல் இழந்தபின் அதை இயங்க வைப்பது கடினம் கண் ஒளித்திறனை இழந்துவிட்டபின், அதனை மீட்டெடுப்பது மிகவும் அரிது; காது ஒலித்திறனை இழந்துவிடில், அதனைச் சரிசெய்வது மிகவும் கடினம். கை, கால்கள் இயங்காமல் தொய்ந்து போனால், அவற்றை மீண்டும் இயங்க வைத்தல் இயலாது. இப்படியே நம் உடலிலுள்ள ஒவ்வோருறுப்பும் தன்தன் ஆற்றலை இழந்து விடுமாயின், அவற்றைச் சீர் செய்தல் மிக மிகக் கடினம். பொறிக்கும், உடலுக்கும் அதுதான் வேறுபாடு. உடல் பொறி கெட்டுப்போனால், இயந்திரப் பொறியைப் போல் அதனை ஒக்கிடவோ மாற்றியமைக்கவோ அரும்பாடுபட வேண்டியிருக்கும். சில நேரங்களில் சில உடல் உறுப்புகளைச் சரி செய்யவே முடியாமற் போய்விடும். எனவேதான், நம் உடலைக் கெட்டுப் போகாமல் எச்சரிக்கையாக வைத்துக் கொள்வது உடலொடு பிறந்த ஒவ்வோர் உயிருக்கும் உண்டான முதற்கடமை என்று உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
உடல் இயங்க வேண்டும். அது தானே இயங்காது, எனவே, அதை இயக்க வேண்டும். உடலை இயக்குவதற்கு இரண்டு உள் ஆற்றல்களும், ஒரு புற ஆற்றலும் தேவை. இயந்திரப் பொறியை இயக்க மின்சாரம் தேவை. மின்சாரம் இரண்டு ஆற்றல்களால் உண்டாவது ஒன்று நேர்மின் ஆற்றல்; மற்றொன்று எதிர்மின் ஆற்றல். இரண்டும் இணையும் பொழுதுதான் மின் ஆற்றலின் இயக்கம் தொடங்குகிறது. ஆனால், இந்த இரண்டும் தாமே இணையாது. அவை இணைய ஒரு புறப்பொருள் அஃதாவது பருப்பொருள் தேவை. அதுபோலவே உடல் இயக்கம் கொள்ள, மனமும் அறிவும் இரண்டு அக ஆற்றல்களாக, அஃதாவது, இரண்டு நுண்பொருள் ஆற்றல்களாக, நின்று செயல்படுகின்றன. ஆனால், அவை இரண்டும் இணைந்து இயங்க உடல் முழுமையான பருப்பொருள் தன்மை பெற்றிருத்தல் வேண்டும். உடலியக்கத்தால் அந்தப் பருப்பொருள் தன்மை குறைபடும். அது குறைவுபட குறைவு பட மீண்டும் மீண்டும் பருப்பொருள் தன்மையை, அஃதாவது பருப்பொருள் ஆற்றலை இட்டு நிரப்ப வேண்டும். அந்தப் பருப்பொருள் ஆற்றலையே நாம் உணவிலிருந்து பெறுகிறோம்.
எனவே, உடல் இயங்க மனம், அறிவு ஆகிய இரண்டு நுண்பொருள் ஆற்றல்களும், உணவு எனும் ஒரு பருப்பொருள் ஆற்றலும் தேவை. மனம், அறிவு, உணவு ஆகிய இந்த மூன்று கூறுகளும் சரியாக இயங்குமானால், உடல் இயங்குகிறது. இந்த மூன்று கூறுகளில், மனம், அறிவு ஆகிங் இரண்டு துண் கூறுகளும் இயற்கையால் நமக்கு அளிக்கப்பட்டவை. உணவிலிருந்து கிடைக்கும் பருப்பொருள் ஆற்றல் கூறு ஆகிய ஒன்றையே நாம் தேடி, உடலியக்கத்துக்கு அளித்தல் வேண்டும்.
மேலும், மேற்கூறிய மூன்று ஆற்றல்களும், உள்ளும் புறமுமாக உடலுக்குள் இணைந்து உடலை இயக்கினாலும் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாகவே இயங்குகின்றன; உடலையும் இயக்குகின்றன. எரிகின்ற மின்சாரக் குமிழ் ஒன்றைப் பாருங்கள். அதில் எரிகின்ற டங்சுடன் (Tungston) என்னும் எளியிழைப் பருப்பொருளால் ஆனது. அதைச் சூடேற்றி எரிய வைக்கின்ற மேற்கூறிய மின்னாற்றல்கள் இரண்டும் அவ்விழையில் ஒன்றிணைகின்றன; அதனாலேயே குமிழ் ஒளி பெறுகிறது. இது போன்றதுதான் உடலும்.
இனி, உடலியக்கத்துக்கு மிகு தேவையான மனம், அறிவு, உணவு (அஃதாவது உண்ணுதலின் வழியாக உள்ளே செலுத்தப்படுவதால், அதை உணஷ் என்று சிறப்பித்துச் சொல்லுகிறோமே தவிர, அஃது ஒரு பருப்பொருள் ஆற்றலை உண்டாக்குகிற ஒரு புறக்கருவியே ஆகிய மூன்று ஆற்றல்களும் தம்முள் ஒத்து இயங்கினால்தான் உடல் இயங்கும் என்னும் ஒரு மெய்ம்மத்தை (தத்துவத்தை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த மூன்றில் ஒன்று கெட்டாலும் மற்ற இரண்டும் சரியாக இராது. அஃதாவது மனம் கெட்டால் அறிவும், உணவும். சரியாகப் பொருந்தா, அறிவு கெட்டால் மனமும், உணவும் சரியாகப் பொருந்தா, உணவு கெட்டாலும் அறிவும் மனமும் சரியாகப் பொருந்தா) எனவே, உடல் இயங்க மனம் இயங்க வேண்டும்; அறிவு இயங்க வேண்டும் புறப்பொருள் ஆற்றலாகிய உணவு, உடலியக்கத்தால் குறையக் குறைய, இட்டு நிரப்பப்பட்டுக் கொண்டே இருத்தல் வேண்டும் இந்தப் புறப் பொருளாற்றலாகிய உணவை அவ்வப்பொழுது இட்டு நிரப்பும் ஒரு பணியையே இயற்கை நமக்குக் கடமையாகக் கொடுத்திருக்கிறது. மற்ற இரண்டும் நமக்கு எளிதில் புலப்படாத நுண் ஆற்றல்களாகையால், அவ்விரண்டையும் இயக்கும் செயலை, இயற்கை தானே வைத்துக் கொண்டுள்ளது. ஏனெனில் அவற்றை இயக்குவதற்கு நமக்கு மிக மிக மேம்பட்ட துண் ஆற்றல்கள் தேவை. அதைப்பற்றியெல்லாம் இங்கு விளக்கத் தேவையில்லை.
இனி, மேற்கூறிய இவ்வடிப்படை உண்மைகளை உணர்ந்து கொண்டால்தான், நாம் நம் உடலை நோய்வாய்ப்பிடாமல், அஃதாவது கெட்டுப்போகாமல் நலம்ாக வைத்துக் கொள்ளவும், அதனை உலகச் செயல்களுக்கு ஈடுபடுத்தவும் முடியும். அதனாலேயே மேற்கூறிய விளக்கங்கள் தேவைப்படுகின்றன.
இனி நம் உடலை நன்றாக அஃதாவது அதற்குண்டான இயல்பான, தன்மையைக் கெட்டுப் போகாமல் வைத்திருக்க வேண்டுமானால், உடல் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அஃதாவது உடலை ஏதாவதொரு செயலில் ஈடுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதுவும், உடலில் உள்ள புறக் கருவிகளும், அகக் கருவிகளும் நன்றாக, முழுமையாகச் செயலில் ஈடுபடுத்தப் பெற்று. நன்கு களைப்படையும்படி செய்ய வேண்டும். அப்பொழுதுதான், அவை தங்களுக்குக் கொடுக்கப்பெறும், உயிர்ப்பாற்றல்களை நன்றாக உள் வாங்கிக்கொள்ளும், நிலம் நன்றாகக் காய்ந்தால்தான் ஆண்ணிரை உள்ளிழுத்துக் கொள்ளும், நமக்கு நன்றாகப் பசித்தால்தான் உணவை நாம் உண்ண முடியும். பசிக்காமல் உண்ண முடியாது. பசி என்பது நம் உடல் உறுப்புகள் இயங்கிக் களைத்துப் போய்விட்டன என்பதை அறிவிக்கும் ஒர் உணர்வு. அவற்றுக்கு மீண்டும் (அஃதாவது உணவு தேவை என்று அறிவிக்கும் ஒர் எச்சரிக்கை அறிவிப்பு.
முதலில் உடலியக்கத்துக்காக கொடுக்கப் பெற்ற ஆற்றல், (உணவு) முழுவதும் தீர்ந்துவிட்டது; மீண்டும் ஆற்றல் (உணவு தேவை என்பதை உணர்த்துவதே பசி, இந்தப் பசி ஏற்பட, உடல் முன் கொடுக்கப்பட்ட உணவாற்றலை முழுவதும் உழைப்பால் செலவிட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் மீண்டும் உணவாற்றலை அதற்குக் கொடுக்க முடியும். இல்லெனில் முன் கொடுக்கப்பட்ட ஆற்றலை அது (உடல் வீண்ாக செலவிடாமல் வைத்துக் கொள்ளும். உணவாற்றலை உடல் வெளிவிடாமல் சேமிக்கப்படுகையில் அது கொழுப்பாக மாற்றப்படும். இந்தச் சேமிப்பு மிக மிக, உடல் தன் இயக்கத்தில் தடுமாறிப் போகிறது; செயல் குன்றிப் போகிறது. ஒருவன் சுமையை எடுத்துக் கொண்டு வேகமாகவும், தடையில்லாமலும் நடக்கவோ, ஒடவோ முடியாதது போல், உடலானது, தான் உண்ட உணவாற்றலைச் செயல் செய்து செலவிடாமல், கொழுப்பாக மாற்றிச் சேமித்து வைத்துக் கொள்ளுமானால், உடலின் சுமை கூடிவிடும்; அஃதாவது உடலின் எடை மிகுந்துவிடும் உடலின் எடையாகிய சுமை கூடிவிடவே அதனால் இயங்குவதற்குத் தடை உண்டாகும். உடல் சுமையாகிய கொழுப்பை உடலில் சேமித்துக் கொண்டவர்கள் சரியாக நடக்க முடியாது செயல் செய்ய முடியாது; இயங்கவே முடியாது. உடல் மீண்டும் இயங்கினால்தான் சேமிக்கப்பெற்ற கொழுப்பு, இயக்கச் சூட்டினால் உருகி மீண்டும் ஆற்றலாக மாறி, உடல் மேலும் மேலும் இயங்குவதற்கு இடந்தரும்.
எனவே உடல் இயங்குதிறன் பெறுதற்கு அஃது இயங்க வேண்டும். மீண்டும் இயங்குவதற்கு அஃது இயங்கு திறன் பெற வேண்டும். இவ்வாறாக மாறி மாறி இயங்கவும் இயங்குதிறன் பெறவும் இயங்குதிறன் பெறவும் இயங்கவும் ஆன முழுமையான செயல் இயக்கத்தையே நாம் ஒருவனின் வாழ்க்கை என்கிறோம். எனவே வாழ்க்கை என்பது நீடிய செயல் அதில் நாம் செய்யும் குறுஞ்செயல்கள் என்பவையே, அப்பெருஞ் செயலும் பெருமைக்குரிய செயலும் ஆகிய வாழ்க்கையை நிறைவுடைதோக் நிறைந்த பயனுடையதாக ஆக்கிக் கொள்வதற்கு உதவுகின்றன. இவை நிற்க.
இனி நம் உடல் களைப்புறும்படி உழைப்பது என்றால் என்ன? உடலை அப்படியும் இப்படியுமாக ஆட்டி வருத்துவதா? இல்லை, அலைக்கழிப்பதா? இல்லவே இல்லை. உடலை அதன் உறுப்புகள் அனைத்தும் அசைவுறும்படி உழைப்பில், அல்லது செயலில் ஈடுபடுத்துவது. உடலில் அகத்தும் புறத்தும் உள்ள உறுப்புகள் அசைவுறும்படி அஃதாவது இயக்கம் கொள்ளும்படி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் உடல் நலத்துடன் இருக்கும். இல்லையானால் இயக்கம் குன்றி நோய்ப்பட்டு, இவர் என்னை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று உடலும், உயிரும் தம் தம் இயக்கங்களை நிறுத்திக் கொள்ளும்.
லுடலை இயங்க வைப்பதே உழைப்பு உழைப்பு இல்லையானால், உடல் இயங்க வழியில்லை. உடல் இயங்காமல் போனால், அது நலம் குன்றும், நலம் குன்றுவது நலிவை உண்டாக்கும், நலிவு நோயை வருவிக்கும்; நோயுற்ற உடலில் உயிர் குடியிருக்க விரும்பாமல் ஒெளியேறிவிடும். பழுதாய்ப் போன வீட்டிலிருந்து நாம் வெளியேறி வேறு வீட்டிற்குக் குடிபோக விரும்புகிறோம். இல்லையா? அப்படித்தான். உயிரும் நன்றாக உள்ள உடலிலேயே குடியிருக்க விரும்பும். உயிரின் இயக்கமே உடலொடு பொருந்தித்தான் இருக்கும். உயிர் இயங்குவதற்கு உடல் தடையாக இருக்கக் கூடாது அன்றோ? அதனாலேயே உடல், உயிர் இயக்கத்துடன் ஒத்துழைப்பதற்கு நல்ல நிலையில் இருந்தாக வேண்டும். அதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
உடல் உழைப்பு என்பது உறுப்புகளை நன்றாக இயக்கிக் களைப்படையும்படி செய்கிறது. உறுப்புகள் உழைக்க உழைக்க நாம் உண்ட உணவு ஆற்றலாக மாறுவதும், பின்னர் அது செலவாகிப் போவதும், எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். இதுபற்றி முன்னரே நன்கு விளக்கமாக அறிந்து கொண்டிருக்கிறோம்.
எனவே, உடல் நலமாக இருக்க உறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்கும்படி நாம் உழைத்தாகவேண்டும். இவ்வுலகில் பல பேர் நன்கு உடலை வருத்தி உழைக்கிறார்கள். சிலர் உடல் வருத்தாமல் உடலை நோயுறும்படி செய்து கொள்கிறார்கள்.
உடல் உழைப்பு புலவகையானது. உழைப்பு பயன் கருதியே செய்யப்படுகிறது. பயனற்ற உழைப்பை எவரும் செய்யமாட்டார்கள். உடலின் உழைப்பால் வரும் பயன் நம் வாழ்க்கைக்குப் பயன்படுகிறது. எனவே, முதலில் நமக்காகவாகிலும் நாம் உழைத்தாக வேண்டும். அஃது ஒரு வகையில் தன்னலத்தையே அடிப்படையாகக் கொண்டது என்றாலும், நாம் உழைத்துச் சாப்பிடுகிறோம் என்ற மண், நிறைவை நாம் பெறுகிறோம். உலகில் உள்ள பெரும்பாலோர் அவர்களுக்காகவே உழைக்கிறார்கள். ஆனால் பலர் முழு உழைப்புத் தராமல் அரைகுறை உழைப்பாலேயே முழுப் பயன் பெற விரும்புகிறார்கள். இன்னும் சிலர் அறவே உழைக்காமலேயே உண்ண - உயிர்வாழ விரும்புகிறார்கள். அவர்கள் பிறரின் உழைப்பைச் சுரண்டி வாழ்கிறார்கள். அவர்கள் சிறுமைக்குரியவர்கள். கண்டிக்கவும் தண்டிக்கவும் தக்கவர்கள்.
உழைப்பை இந்த வகையில் கீழுள்ளவாறு வகைப்படுத்தலாம்.
1. உழைப்பு அல்லது செயல் நமக்காக மட்டும் பயன்படுவது.
2. அது, நமக்காகவும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் பயன்படுவது.
3. அது, நமக்காகவும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நம்மைப் போல் உள்ள பிறர்க்காகவும் பயன்படுவது.
4. அது நமக்கும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நம்மைப் ப்ோல் உள்ள பிறர்க்கும், எப்பொழுதும் பயன்படுவது.
இவ்வகைகளை இன்னும் பலவாறும் பிரித்துக் கூறலாம். இவ்வரிசையுள் உள்ள ஒன்று, முன்னுள்ள ஒன்றை விடப் பெருமையானது. நான்காம் வகை உழைப்பை நாம் செய்யும் பொழுது, நம் வாழ்க்கை மிகப் பெருமை பெறுவதாக அமைந்துவிடும். இவற்றை இவ்வளவில் நிறுத்திக் கொண்டு களைப்பு ஏற்படும்படி உழைத்தல் என்னும் நிலை என்பது தொடர்பாக இன்னும் சிறிது மேலே கூறுவோம்.
நாம் எந்தச் செயலைச் செய்தாலும் அதில், நம் முழு உடலையும் ஈடுபடுத்த வேண்டும். சிலர் உடல் உழைப்பே இன்றி அறிவுழைப்பில் மட்டும் ஈடுபடுவர். அத்தகையோர் காலப்போக்கில் உடல் நலம் குன்றவே செய்வர். எனவே, அத்தகையவர்கள் உடலாலும் சில உழைப்புகளைக் கட்டாயம் செய்தல் வேண்டும். சில குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்கிக் கொண்டு, நடத்தல், ஒடுதல், தாண்டுதல், நீந்துதல், உடற்பயிற்சி செய்தல், விளையாடுதல் போன்ற உடலியக்க செயற்பாடுகளைச் செய்தல் வேண்டும் அல்லாக்கால் உடல் உறுப்புகள் இயக்கமின்றிக் கட்டாயம் நோயுறும் அறிவுழைப்புள்ளவர்கள் உடலை ஒரே இடத்தில் வைத்துக் கொண்டே செயல்பட முடியும். சில கலையுழைப்பாளர்களும் அவ்வாறே இயங்குவர். ஒவியம் வரைதல் சிலை செய்தல், எழுதுதல் முதலிய கலை, அறிவு உழைப்பாளர்களுக்கு மேலே குறிப்பிடப்பெற்ற பயிற்சிகள், அல்லது விளையாட்டுகள் கட்டாயம் தேவை.
பொதுவில் நாம் எந்தச் செயலை அல்லது பணியை அல்லது உழைப்பைச் செய்தாலும், அதைத் திறமையுடன் செய்வதற்கு முதலில் நம் உடலே அடிப்படையானது. ஆகையால் நாம் அதை நலமாகவும், வளமாகவும் வைத்துக் கொள்வதே முதற் கடமையாகும். செயல்கள் உடல்நலக் குறைவினாலேயே திறமையோடு செய்யப் பெறுவதில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். உடல் நலத்திற்கு மூலத்தேன். வே உடல் உழைப்புத்தான். உழைப்பால்தான் உடல் நலம்தரும் உணவை ஏற்றுக் கொள்ளும் தகுதியையும், அதை ஆற்றலாக மாற்றும் திறனையும் பெறுகிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உடலைக் களைப்புற உழைப்பில் ஈடுபடுத்திய ஒருவர்க்கு அடுத்த தேவை உணவாகும். எனவே, அதுபற்றியும் நாம் சிறிது கூடுதலாய்த் தெரிந்து கொள்ள வேண்டும்.
2. அளவான உணவு (Balanced Diet)
அற்றால் அளவறிந்து உண்க என்பது திருக்குறள் மொழி (943) திருவள்ளுவப் பேராசான், தாம் எழுதிய திருக்குறளில், மருந்து அதிகாரத்தில், உணவுத் தொடர்பாக கூறிய அத்தனைக் கருத்துகளும் மிக மிக நன்றாக ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியவை.
1. முன் அருந்திய உணவு முழுவதும் செரித்தபின்பே மீண்டும் உண்ண வேண்டும். (942 உண்ட உணவு செரிப்பதற்குள் உண்ணக்கூடாது.
2. எது நமக்கு எளிதாகச் செரிக்கிறதோ அதையே போற்றி உண்ண வேண்டும் (942) (ஒருவர்க்கு எளிதாகச் செரிப்பது, இன்னொருவர்க்கு எளிதாகச் செரிக்காது.
(எனவே, எந்த வகை உணவு தமக்குப் பொருந்தியதோ அஃதாவது எளிதாகச் செரிக்கிறதோ, அந்த வகை உணவையே அவர் விரும்பி உண்ணவேண்டும். சிலர்க்கு எண்ணெய் உணவு செரிக்காது. சிலர்க்குக் கோதுமை உணவு செரிக்காது; சிலர்க்குப் புளியுணவு செரிக்காது: சிலர்க்கு சில பழவகைகள் செரிக்கா. எனவே அவரவர்க்கு எளிதில் செரிக்கும்படியான உணவையே உண்ணவேண்டும்)
3. செரித்த பின், அதுபோல் செரிக்கின்ற அளவே உண்ண வேண்டும் (943) (உணவு செரிக்கின்றது என்பதற்காக, அதிக அளவும் உண்டுவிடக்கூடாது. ஏனென்றால் செரிக்கின்றதன்மையுள்ள உணவும், அளவுக்கு மீறினால் செரிக்காமல் போகலாம்.)
4 நம்முடைய உடல் உள்ளம் அறிவு ஆகியவற்றின் இயக்கங்களுக்கு மாறுபாடு அல்லாத உணவையே உண்ண வேண்டும் (944), (உணவால் உடல்நிலை மாற்றமும் உடலால், உள்ளம் அறிவு நிலைகளின் மாற்றங்களும் நிகழ்தலால், அவற்றிற்கும், மாறுபாடில்லாத உணவை உண்ணுதலே தக்கது என்க)
6. உணவு மாறுபாடுகளால் உடல் துன்புறுவதுடன் உயிரும் துன்பமடைவதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். (945)
7. அளவான சரியான உணவால் உடல் ஆற்றல், பெறுவது மட்டுமன்றி, இன்பமும் அடைகிறது. அதுபோல் மறுபாடலின, அளவு குறைந்த அல்லது அளவு மிகுந்த அல்லது சரியில்லாத ஆணவால், உடல் ஆற்றலை இழப்பது மட்டுமன்றித் துன்பமும் அண்டகிறது. அதனால் நோயும் படுகிறது. (94)
8. பசித் தீயின் அளவு தெரியாமல், ஆசைத்தீயின் அளவுக்கு உண்பவனிடம் பலவகையான நோய்கள் வந்து சேரும். (947)
9. மருந்தென்பது தனியாக ஒன்று இல்லை. உணவுதான் மருந்தாகவும் மருந்துதான் உணவாகவும் பயன்படுகின்றன. உடல் பூதங்களின் சேர்க்கை பூதவியல் மூலகங்களே வேறு வேறு மணமும் சுவையும் நிறமும் கொண்டு அவரவர் மனவுணர்வுக்கும் காலம், இடம் இவற்றுக்கும் பொருந்திய வகையில் வேறு வேறு பெயர்களுடனும் உருவங்களுடனும் உணவுகள் என்று பெயர் பெறுகின்றன. இனி, உடலில், உணவு வகையில் சேரும் பல்வேறு மூலகங்கள், உடலின் பல்வேறு இயக்கங்களால் அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப, ஆற்றலாக மாறிச் செலவிடப் பெறுகின்றன. அவ்வாறு செலவிட்டுத் தீர்ந்துபோன மூலகங்களை அறிந்து அவற்றையே உணவாகவும் அல்லது மருந்தாகவும் உண்ண வேண்டும். பூதவியல் மூலகங்களே இயற்கையாகக் கிடைக்கின்ற பொழுது உணவாகவும், செயற்கையாகப் பிரித்தெடுக்கப் பெறுகின்றபொழுது மருந்தாகவும் கருதப்படுகின்றன. ஆனால், மூலகங்கள் மருந்து என்னும் பெயருடன் செயற்கைப் பொருள்களாக மாற்றப் பெறுகையில், அவை சுவையும், அளவும், நிறமும் மாற்றப்பெற்று விருப்பமுடன் உண்ணுவதற்கு ஏற்பில்லாத தன்மைகளை எய்துகின்றன. எனவே, மருந்து என்ற வகையில் செயற்கை மூலகங்களை உண்ணுவதைவிட உணவு என்ற வகையில் இயற்கை மூலகங்களை மன ஏற்புடன் உண்ணுவதே தக்கது. ஆகவே மருந்து என்னும் நிலை பூதங்களால் ஆக்கப் பெற்ற உடலுக்குத் தேவையில்லை. நாம் முன்னர் அருந்திய உணவாகிய மூலகத்தில் எது குறைந்துவிட்டதோ, அதையே தேடி விரும்பி உண்ணின் அதுவே உடலுக்குப் போதுமானதாகும். 84ஆஉடலில் இரும்புச் சாரம் அற்றுப்போமாயின் இரும்புச் சாரமுள்ள புளிச்சக்கீரை, முருங்கை, கரிசலாங்காணி போன்றவற்றையும், சுண்ணச்சாரம் அற்றுப்போமாயின் எலுமிச்சை, சீமைக் கத்தரி, போன்றவற்றையும், கந்தகச் சாரம் அற்றுப்போமாயின் துதுவளை, அகத்தி முதலியவற்றையும் பொன்சாரம் அற்றுப்போமாயின், பொன்னாங்காணி முதலியவற்றையும் மருத்துவ நூல்வழித் தெரிந்து தேர்ந்து விரும்பி உண்ணவேண்டும் என்க.
இனி, மேலே கூறபெற்ற உணவு முறைகளை அறிந்து அவரவர் தம் அகவை, உழைப்பளவு, காலநிலை, இடநிலை, சுவை நிலை, பொருள் நிலை முதலியவற்றுக்குத் தக்கவாறான அளவு முறைகளுடன் பின்பற்றுவது, உடல் என்றும் நல்லியக்கத்துடனும் திறத்துடனும் செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு அடிப்படையாக அமையும் என்க.
3. போதுமான ஒய்வு
இனி, உடல் உழைத்தபின் அதற்குக் கட்டாயம் ஒய்வு தேவையானது. ஒய்வென்பது உழைப்புக்கும், உழைப்புக்கும் உள்ள இடைவெளி இரண்டு பொருள்களுக்கும் உள்ள இடைவெளி இடம் என்றும் இரண்டும் நிகழ்ச்சிகளுக்கும் உள்ள இடைவெளி காலம் என்றும், இரண்டு மாறுதல்களுக்கும் உள்ள இடைவெளி பொருள் என்றும் எவ்வாறு கணிக்கப் பெறுகின்றனவோ, அவ்வாறே இரண்டு இயக்கங்களுக்கும் உள்ள இடைவெளி இயக்கமற்றநிலை அஃதாவது ஒய்வு என்று கணிக்கப் பெறுகின்றது. உடலானது இயக்கம், அமைதி இயக்கம், அமைதி என்று மாறி மாறிச் செயல்படுகிறது. இயங்கும் நிலையால் அது வலிவும் வளர்ச்சியும், பயனும் பெறுகிறது. இயக்கமமற்ற அமைதி நிலையால், அஃது உயிர்ப்பும், ஊக்கமும், இன்பமும் பெறுகிறது. எனவே, ஓர் உடலுக்கு உழைப்பு எவ்வளவு தேவையோ, அவ்வளவு ஓய்வும் தேவை.
ஒய்வு என்பது உடலின் பழுதுபார்ப்பு முயற்சி; புத்துயிர்ப்பு நிலை; புத்தாக்கத்தேவை. எனவே ஒய்வு ஒவ்வொரு செயலுக்கும் முடிவில் இருக்கவேண்டிய கட்டாய நிலைப்பாடு. இதுபற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
ஒய்வு என்பது ஒவ்வொரு செயலுக்கும் முடிவில் உடலுக்குத் தேவைப்படும் அமைதி, உடல் மீண்டும் செயலில் ஈடுபடத் தன்னை அணியப்படுத்திக் கொள்ளும் முயற்சி அது உடல் உழைக்க உழைக்க, ஆற்றலை இழக்கிறது. அந்த ஆற்றலை உணவால் மீண்டும் உடலுக்குத் தருகிறோம். உணவு உண்ட உடனேயே அது செரித்து ஆற்றலாக மாறிவிடாது. அவ்வுணவு படிப்படியாகச் செரித்துக் குருதியாக மாறி உடலின் பல பகுதிகளுக்கும் போய்ச் சேர்ந்த பின்தான் உடலுறுப்புகள் மீண்டும் இயங்குவதற்குரிய ஆற்றல் பெறுகின்றன. எனவே அதுவரை உடல் சிறிது நேரம் ஓய்வாக இருக்க வேண்டுவது தேவையாகிறது. பெரும்பாலும் ஒவ்வொரு முறையும் சிறு சிறு ஓய்வு பெற்று இறுதியாக, நாள் முடிவில் ஒரு நீண்ட ஒய்வை உடல் எடுத்துக் கொள்ளுகிறது. உடல் இயங்குவது ஒருவகைப் புறச் செயலானால், உணவு செரிக்கின்ற செயலும் ஒருவகையான அகச் செயலே. புறச்செயலை இயக்குவன புறவுறுப்புகளாகிய கைகள், கால்கள், ஐம்பொறிகளாகிய கண்கள். காதுகள், முக்கு வாய், மெய் ஆகியன. அகச்செயலை இயக்குவன நெஞ்சாங்குலை, வயிறு, சிறுகுடல், பெருங்குடல், நுரையீரல், கல்லீரல், நரம்புகள், நாடிகள் போலும் பல்வேறு நுண்ணிய உறுப்புகள்.
அதேபோல் அகவுறுப்புகள், அகச் செயல்களால் களைப்படைகின்றன. புறவுறுப்புகள் புறச்செயல்களால் களைப்படைகின்றன. ஆற்றல் இழப்பு என்பது வேறு; களிைப்பு என்பது வேறு. ஆற்றல் இழப்பு என்பது, உணவு வழியாகக் கிடைக்கப்பெறும் உயிர்ப்பாற்றல், உணவு முழுவதும் தீர்ந்து போனபின், இல்லாமற் போவது களைப்பு என்பது உடலும், உறுப்புகளும் உழைத்தலால் சோர்வு அடைவது.
சோர்வு அடைந்த உடலும், உடலின் அகவுறுப்புகளும், புறவுறுப்புகளும், உழைத்த சோர்வு, அயர்வு, அல்லது தளர்வு நீங்கவும் மீண்டும் தங்களை உழைப்புக்குத் தகுதிப் படுத்திக் கொள்ள, கட்டாயம் தாங்கள் உழைத்த அளவு நேரத்தில் மூன்றில் ஒரு பகுதி நேரத்தை ஓய்வில் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அந்த நேரத்தில், அவை அசைவற்று அமைந்து இருத்தல் தேவையாகிறது. எனவே உழைப்புக்குப் பின் ஒவ்வொருவரும் கட்டாயம் ஒய்வெடுத்துக் கொள்ளுதல் மிக மிக இன்றியமையாதது.
சிலர் இளமைக் காலங்களில், முரட்டுத்தனமாக, ஒர் உந்துணர்வின் அடிப்படையில், ஒய்வின்றி உழைப்பதையே ஒரு பெருமையாகக் கருதிக்கொண்டு தொடர்ந்து உழைப்பதைப் பார்க்கிறோம். இதுபோல் உழைப்பவர்கள் விரைவில் உணர்வுகுன்றி, உடல்நலம் குன்றிக் கிழப்பருவம் எய்துவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே, அத்தகையவர்கள் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும் என்பதற்காகவே இந்நிலைகளையெல்லாம் இங்கு விரிவாகச் சொல்லியாக வேண்டியுள்ளது.
இதில் இன்னும் நாம் விழிப்பாக இருக்க வேண்டியது. நாம் எடுத்துக்கொள்ளும் ஒய்வு போதுமானதாக இருக்க வேண்டும் என்பதே. எனவே, ஒவ்வொருவரும், தம் உழைப்பின் நேரத்தில் மூன்றில் ஒரு பகுதி நேரத்தை அவ்வாறு இயலாதவிடத்துக் கட்டாயம் நான்கில் ஒரு பகுதி நேரத்தையேனும் ஒய்வில் கழிக்க வேண்டும். அமைதியான ஒய்வு என்பது அமைதியான உறக்கமே. உறக்கத்தில்தான் அகவுறுப்புகளும், புறவுறுப்புகளும் நன்கு ஒய்வு கொள்ளுதல் முடியும். எனவே, செயலில் ஈடுபடுகிறவர்கள் போதுமான அளவு உறக்கம் கொள்ளுவதையும், அந்தச் செயலுக்கு அடிப்படையான தேவைகளில் ஒன்றாகக் கருதுதல் வேண்டும். அந்நிலை, அவர்களை மேலும் அச்செயலில் ஊக்கமுடன் ஈடுபடுத்திக் கொள்ள உதவும் என்பதை நன்கு மனத்தில் இருத்திக் கொள்ளுதல் வேண்டும். அப்பொழுதுதான் உடல் நலத்தோடிருந்து நாம் எடுத்துக் கொண்ட செயலுக்குத் தகுதியாக நம்மை ஆக்கிக்கொள்ள இயலும்.
4. நாள்தோறும் எளிமையான உடற்பயிற்சி செய்தல்
உடல் உழைப்பே ஒருவகையான உடற்பயிற்சிதான். இருப்பினும், மனத்தை இயல்பாக இயங்க விடுவது ஒன்று; அதை நாம் சில நிலைகளில் இயக்க விரும்புவது ஒன்று. நாம் செய்யும் உழைப்பு, மனத்தை இயல்பாக இயங்க விடுவதைப் போன்றது. நாம் மனத்தைச் சில நிலைகளில் பயிற்றுவிப்பதைப் போன்றதே, உடலைச் சில நிலைகளில் பயிற்சியால் வளர்தெடுப்பதும், தகுதி பெற வைப்பதும்.
குறிப்பிட்ட உழைப்பால், உடல் ஒரே தன்மையில்தான் இயங்கிக் கொண்டிருக்க முடியும். ஒருவர் நெசவுத் தறியில் பணி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதால் குறிப்பிட்ட சில செயல் நிலைகளில் தாம் அவர் தம் உடலை இயங்க வைக்க முடியும். அதேபோல் தையல் பொறியில் பணியாற்றுபவரின், இயக்கம் எப்பொழுதும் ஒரே படியாகத் தான் இருக்கும். எழுத்தாளர்களுக்கோ, வலக்கையும், கண்கள் மட்டுமே இயங்க முடியும். பிற உறுப்புகளெல்லாம் இயங்காமல் இருப்பின் காலப்போக்கில் அவை தம் வலிமையில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் அன்றோ? அதற்காகத்தான் இதுபோலும் ஒரேவகைச் செயலைச் செய்பவர்கள், நாளுக்குச் சிறிது நேரமாகிலும் எளிய உடற்பயிற்சிகளால், தங்களின் பிற உறுப்புகளையும் இயக்கி, அவற்றையும் நன்னிலையில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
மேலும் வலிமையான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கே வலிமையான உடல் அமையும். உடலை நாம் எந்தச் செயலில் பழக்குகிறோமே அந்தச் செயலுக்குத் தக்கபடி தன்னை வடிவமைத்துக் கொள்கிறது. நோஞ்சான் உடலை உடைய சிலர், கொஞ்ச காலத்துக்குக் கடின உடலுழைப்புள்ள வினையைச் செய்து வருவார்களானால், அவ்வுழைப்புக் கேற்றவாறு, உடலும் வலிமைபெற்று விடுகிறது. உடல் இயக்கமற்ற பணிகளுக்கு உடல் வலிமை தேவையில்லாமல் போவதால், உடல் வலிமை குன்றுகிறது. இந்தப் பொது அறிவை நாம் உணர்ந்து கொண்டு, அதற்கேற்றவாறு நம் உடலை இயக்கக் கற்றுக் கொள்ளுதல் மேலும் மேலும் ஒரு செயலைச் செய்கின்ற வகையில் தம் உடலை வலுப்படுத்திக் கொள்ள உதவும்.
எழுத்துப்பணி போலும் மென்மையான, அறிவுழைப் புள்ள செயல்களில் ஈடுபடுவோர்க்கு, நாளடைவில் உடலில் உள்ள பிற உறுப்புகள் வலிமை குன்றும் அறிவு வளர்ந்தால் மட்டும் போதுமா? உடலும் வலிமை குன்றாமல் இருந்தால்தானே, அறிவுப் பணியையும் நாம் தொடர்ந்தும், திறம்படவும் செய்ய முடியும். எனவே, மென்மையான செயல் செய்பவர்கள் கட்டாயம் அதிகாலைப் பொழுதுகளில், உடல் முழுவதையும் இயக்க வல்ல உடற்பயிற்சிகளில் கட்டாயம் ஈடுபடுதல் வேண்டும். அல்லாக்கால், அவர்களின் உடல் அவர்களின் பணிக்கே, நாளடைவில் ஒத்துழைக்காமல் போய்விடும் என்பதை முன்னெச்சரிக்கையாகக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
இதில், இன்னொன்றையும் நாம் கவனித்தல் மிகவும் இன்றியமையாதது. உடற்பயிற்சி என்று நாம் சொல்லும் பொழுது, மல்லர்கள், கடும் களரிப் பயிற்சியாளர்கள் (Gymnasts) போல், கடும் பயிற்சிகளை (Gymnastics) நாம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்பது தேவையில்லை. அதே துறையில் சிறந்து விளங்க வேண்டும், போட்டிகளில் ஈடுபட்டுப் பரிசுகளைப் பெறவேண்டும் என்னும் நோக்கத்துடன் ஈடுபட விரும்புவர்களே அவ்வாறு பல கடும் பயிற்சி முறைகளில் ஆர்வம் செலுத்தலாம்; கவனம் கொள்ளலாம்; காலையிலும் மாலையிலும் இதே வேலையாக உடற்பயிற்சிகளுல் ஈடுபடலாம். ஆனால் பொதுவான பிற வாழ்வியல் செயற்பாடுகளில் ஈடுபடும் பிறரும் அவ்வாறு கடுமையான பயிற்சிகளைச் செய்துதான் உடலை வலிவுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்பது அகத்தியமன்று. அத்தகையவர்கள், மென்மையான உடற்பயிற்சிகளை ஒவ்வொருநாள் காலையிலும், தவறாமல், தொடர்ந்து ஒர் அரை மணி நேரமோ, அதுவும் செய்ய நேரமில்லாதவர்கள் இருபது நிமையமோ (அதற்கும் குறைவான நேரத்தில் செய்யும் உடற்பயிற்சிகளால் அவ்வளவு பயன் ஏற்பட்டு விடாது. எனவே, அந்த அளவு நேரமாகிலும்) உடற்பயிற்சி செய்தால் போதுமானது. இயன்றால் மாலையிலும் அதே நேரத்தை உடற்பயிற்சிக்கு ஒதுக்கலாம். ஆனால் இதை ஒவ்வொருவரும் கட்டாயம் கடைப்பிடிப்பது, உடல் நலத்தைப் பேணிக் காத்திடவும், உடலைச் சீராக நல்ல நிலையில் வைத்துக் கொள்ளவும் உதவும்.
பெரும்பாலும் இளமைக் காலத்திலிருந்தே, அல்லது தாம் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடும் காலத்திலிருந்தே இத்தகைய பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் நல்லது. அத்தகையவர்களுக்கு, உடல் தொடர்ந்து நலமுடனும் உறுதியுடனும் இருப்பது உறுதி, அவர்களுக்குத் தலைவலி வயிற்றுத் தொடர்பான செரியாமை, வளித்தொல்லை, தொந்தி சரிதல், குடலிறக்கம், சிறுநீர்க்கோளாறு, மலச்சிக்கல் முதலியனவும், உடல் கொழுப்பேறி சதைபோடுதல், கைகால் மூட்டுகளில் வலியேற்படுதல், இடுப்பு வலித்தல், முதுகு வலித்தல், தோள் வலித்தல், கூன் போடுதல், விரைந்து முதுமையடைதல், உடல் தளர்ச்சி, சோர்வடைதல், அடிக்கடி களைப்புறுதல் முதலிய உடல் கோளாறுகள், நோய்கள் ஆகியவும் கட்டாயம் வருவதற்கு வாய்ப்புகளே இல்லை. உறுதியாக இவை வரவே வரா. உடல் நோயின்றி இருந்தால்தான் எடுத்த செயலைத் திறம்படவும், ஊக்கத்துடன் விடாமலும் செய்ய இயலும் இல்லெனில், உடல் நலிவால் செயலும் கெடும்; செயல் திறனும் குன்றும் வாழ்வும் கெட்டுப்போய், மனமும் மகிழ்வை இழக்கும்; இனி, அறிவு நலமும் குறைந்துவிடும். எவ்வளவு பணம் இருந்தாலும், உடல் நலமில்லாத நிலையை எய்தியவனால் ஒன்றுமே செய்ய இயலாது. அவன் பிறர் நலத்தோடு வாழ்வதைப் பார்த்துப் பொருமிக் கொண்டே இருப்பான்; தன்னையே உள்ளுர வெறுப்பான், நாளடைவில் அவன் ஒரு மனநோயாளியாகி, நடைப்பிணம் போல் வாழ்ந்து சாக வேண்டியதுதான். இந்த நிலையில் அவன் பல செயல்களைத் தெரிந்து கொண்டிருந்தாலும் எவ்வாறு அவற்றைச் செய்ய முடியும்? அந்த நிலையை அடைந்த சிலர், தம்மிடம் உள்ள பெரும் பணத்தால், பிறரை வைத்தேனும், அவர்களை ஏவியேனும், தாம் எண்ணிய செயல்களைச் செய்து விடமுடியும் என்று நம்பிக் கொண்டு இருப்பார்கள். ஆனால், உடல் நலமில்லாத தொழில் முதல் உள்ளவர்களை, மற்றவர்கள் எளிதில் ஏமாற்றவே செய்வர். ஒரு சிலர் நல்லவர்களாக இருந்தாலும், அவர்களையும் அத்தகைய முதலாளர்களுக்கு ஒத்துழைப்புத் தராமல் செய்து விடுவார்கள்.
நோயுள்ள ஒருவன் முதலில் தன் உடல் நலத்தை இழக்கிறான். அதன்பின் தன் மன உறுதியை இழக்கிறான்; மனவுறுதியிழந்தவுடன், தன்னம்பிக்கை போய்விடுகிறது. பிறரையே நம்ப வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான்; பிறரை நம்பி ஒரு செயலைத் தொடங்குபவன், தன்னறிவை இழக்கிறான்; எனவே, பிறர்மேல் ஐயப்பாட்டையும் அவநம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளுகிறான். உடனே குறுக்கு வழிகளில் பயன்கான விரும்புகிறான். அதற்காகக் குறுகிய மனப்பாங்கு உள்ள தீயவர்களின் துணையை நாடுகிறான். அவர்களால் அவனுக்கு ஒவ்வொரு நொடியும், நேரமும், நாளும் துன்பமே படர்கிறது.துன்பங்கள் படரப் படர எல்லா நல்லுணர்வுகளும் அவனிடத்தில் அழிந்து விடுகின்றன. அழிந்து விடவே, அவன் கடும் நோய்ப்பட்டு உடலையும் பிறகு உயிரையும் துறந்து விடுகிறான். அதன் பின் அவன் நன்னிலையில் உள்ளபொழுது தேடிய செல்வங்கள், அவனைச் சுற்றியுள்ள சோம்பேறிகளுக்குப் போய் வீணாகிக் கரைந்துவிடுகின்றன. இந்த விரிவான விளைவுப் படிநிலைகளை ஒவ்வொருவரும் மனத்தில் இருத்தி, நம்முடைய அரிய வாழ்க்கையை எவ்வாறு செயற்கரிய செய்து, அதால் வாழ்வாங்கு வாழ்ந்து வசையொழிந்து இசைபெற்று என்றும் நீடுபுகழ் எய்திட, நற்செயல்களில் ஈடுபட வேண்டும் என்று எண்ணிப் பார்த்தல் வேண்டும்.
5. உடலை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருத்தல்
இனி, வினைத்திறன் உள்ளவர்கள் வினைகளில் அதிகம் ஈடுபாடு கொள்பவர் ஆகையால், உடல் அடிக்கடி அழுக்கடைவதற்கு இடம் ஏற்படுகிறது. எனவே அவர்கள் தம் உடலைச் சுறுசுறுப்புடனும், தூய்மையுடனும், நோயில்லாமலும் வைத்துக் கொள்ளத் தேவை உண்டாகிறது. உடல் தூய்மையுடன் இருந்தால்தான் மனமும் தூய்மையாக இருக்கும். மனம் தூய்மையாக இருந்தால்தான் அறிவும் தூய்மையாக இருக்கும்.
உடல் தூய்மையில்லாத ஒருவர் அடிக்கடி உடல் நோயுறுகின்றார். அதனால், மனம் கெடுகிறது. உடல்மேல் நாட்டம் உண்டாகிறது. உடல்மேல் நாட்டம் கொண்டவர் மனவுணர்விலோ, அறிவுணர்விலோ, அவற்றின் வழிச் செயலிலோ நாட்டம் குறைகிறது.
புறந்துாய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும். (298)
எனும் வாய்மை மொழியில் புறந்துாய்மை, அகந் துாய்மைக்கு அடிப்படையாகப் பேசப் பெறுதல் காண்க.
புறந்துய்மை என்பது உடலை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்ளும் நிலையையே வலியுறுத்துகிறது. அது நீரால் அமையும் என்பது. உடலை நாளுக்கு ஒரு முறையாகிலும் முழுவதும் நீர்விட்டுக் கழுவுதலும் மற்று எப்பொழுதும் திறந்தே கிடக்கின்ற புறவுறுப்புகளாகிய கைகள், கால்கள், முகம், வாய் இவற்றை அவ்வப்பொழுது நீரால் கழுவித் தூய்மை செய்து கொள்வதும் ஆகும். நம்மில் பலர் நாள்தோறும் குளிப்பதில்லை. உடலிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் சூடு தணியவும், வியர்வை கழுவப்படவும் நீர்க்குளிப்பு மிகமிகத் தேவை என்று அவர்கள் உணர்வதில்லை. நாம் பயன்படுத்தும் எந்தப் பொருளையும் அவ்வப்பொழுது தூய்மை செய்து கொண்டிருப்பது போல், உடலாகிய கருவிப் பொருளையும் அவ்வப்பொழுது தூய்மை செய்யவே வேண்டும். அல்லாக்கால் அஃது அழுக்கடைகிறது; துய்மை கெடுகிறது. நலிவுறுகிறது; தன் இயக்கத்தில் குறைபடுகிறது; அக்கால் நாம் நினைத்த அல்லது எடுத்துக் கொண்ட செயல்களுக்கு அது தடையாக இருக்கிறது. இந்த உண்மையை உணர்ந்த செயலாளர்கள், தங்கள் உடல்களை எப்பொழுதுமே தூய்மையாக வைத்திருப்பதன் தேவையை இயல்பாகவே உணருகின்றனர்.
பலரும் உடல் தூய்மை என்றால் வெறும் குளித்தல் என்றும், குளித்தல் என்றால் உடலில் நீர் வார்த்துக் கொள்ளுதல் என்றுமே பொதுவாக எண்ணியிருக்கின்றனர். ஆனால், குளித்தலின் இன்றியமையாமையை உணர்ந்திருப்பவர்கள், வெறும் நீர் விட்டுக் கழுவுவதாலேயே உடல் தூய்மையடைந்து விடாது என்று அறிவார்கள். நீர் விடுதல், தேய்த்தல், கழுவுதல், மறைவிடங்களில் சேரும் அழுக்குகளை அகற்றல், செயல்களுக்கும், உடல் இயக்கத்திற்கும் உதவும் உறுப்புகளைச் சிறப்பாகத் துய்மை செய்தல் என்பவற்றை ஒருவர் செவ்வையாக உணர்ந்திருத்தல் வேண்டும்.
நம்மில் எத்தனைப் பேர் குளிக்கும் பொழுது, சரியாகப் பல் விளக்குகிறார்கள்? கண்களைக் கை விரலால், நீர் கொண்டு உள்ளலம்பித் துய்மை செய்து கொள்கிறார்கள்? காதுகளை விரலால் உள்குடைந்தும், மூக்குத் தொளைகளை விரலை உள்விட்டுத் துய்மை செய்தும், கொப்பூழ் போலும் அழுக்கடையும் இண்டு இடுக்குகளை விரலால் அழுத்தித் தேய்த்துக் குடைந்தும் கொள்கிறார்கள்? பலர், சிறுநீர் கழித்தவுடன், அவ்வுறுப்பை நீரால் கழுவுவதே இல்லை; பலர் மலங்கழித்தவுடன், எருவாயை வெளிப்புறம் மட்டுமே நீர் கொண்டு அலம்பும் தன்மையையே அறிந்திருக்கின்றனர். விரலில் நீர்விட்டு நீர்விட்டு, எருவாயின் உட்புறத்துச் சுவர்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் மலப்பசையை, முரமுரப்பாக ஆகும் வகையில், தூய்மை செய்வதை அவர்கள் அறிந்திருப்பதில்லை. ஐயோ, இதனால் அவர்கள் எத்தனை வகையான உட்புறக் கீழ்ப்புற நோய்களை வருவித்துக் கொள்கிறார்கள். பெரும்பாலோர் விரல்களில் உள்ள உகிர் நகங்களில் உள்ள அழுக்கைக் குளிக்கும் பொழுது நீக்குவதோ, அல்லது அவ்வழுக்குகள் சேரா வண்ணம் உகிர்களையே ஒட்ட வெட்டுவதோ இல்லை. சிலர் கைவிரல்களில் உள்ள உகிர்களில் மட்டுமே கவனம் செலுத்துவதும், கால் விரல்களைப் பற்றியே கவலையில்லாமல் இருப்பதும் அறியப்படலாம்; அதனால் சிலரின் கால் விரல்களில் உள்ள உகிர்கள் வளைந்தும், சிதைந்தும், திருகல் முருகலாகியும், அழுக்கடைந்தும், வெடித்தும் இருப்பதைப் பார்க்கலாம். கால் விரல் இடுக்குகளை அவர்கள் கவனிப்பதே இல்லை. நம்மில் பலர் கால்களைக் கழுவுவது என்றால், முகம், கை, இவற்றைக் கழுவிய பின்னர், எஞ்சியுள்ள செம்பு நீரைக் கால்களின் மேல் ஊற்றிக் கொள்வது என்றே அறிந்திருக்கிறார்கள். ஒரு கால் பாதத்தால் மற்றொரு காலை நீர்விட்டு அழுந்தத் தேய்த்தும், பாதப் புறங்களைச் சொரசொரப்பான காறைத் தரையிலோ கல்லிலோ திருப்பித் திருப்பி நீர்விட்டு ஊற வைத்து, நொதி தோல்களைத் தேய்த்தும், அகற்றுவதே இல்லை.
அதனால் சிலர் பாதங்களும், பாதப் பக்கச் சுவர்களும், முருடுதட்டியும், வெடித்தும், அழுக்கடைந்தும், குழிகள் விழுந்தும் இருப்பதைப் பார்க்கலாம். சிலர் கால்களை முழங்கால் வரை கழுவுவதே இல்லை. தேவையானால், கால்கள் கழுவும் ஒவ்வொரு முறையும், எருவாய், கருவாய், தொடையிடுக்குகள் இவற்றையும் நீர்விட்டுக் கழுவுவது மிகவும் நல்லது. மலங்கழித்துத் தூய்மை செய்கையிலும், இரவு படுக்கைக்குப் போகு முன்பும் இவ்வாறாக நீர்விட்டு அலம்புதல் பற்பலவாறான கீழுறுப்பு நோய்கள் வராமல் தடுக்கும் என்பதைப் பலர் அறிவதில்லை. பலருடைய வியர்வை அவர்கள் கழிவுப் பொருள்களைப் போலவே தீ நாற்றமடிப்பதை மிகப் பலர் உணர்ந்திருக்கலாம். சிலரின் வாய்க்காற்றும் அவ்வாறு அடிப்பது உண்டு.
பலர் காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன், வாயை நீர்விட்டுப் பலமுறை கொப்பளித்துத் தூய்மை செய்வதும் முகம் கழுவுவதும், கண்களில் உள்ள மலங்களையும், கசண்டுகளையும் நீர்விட்டு விரலால் தூய்மை செய்து கொள்வதும் இல்லை. இத்தகையவர்கள் அருகில் பிறர் நிற்கவும் அருவருப்பாக இருப்பதை அவர்கள் நினைப்ப தில்லை. அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதுமில்லை.
இனி, இன்னும் பலர், குளிப்பது எனில் தலையை விட்டு மேலுக்கு மட்டுமே நீர் விட்டுக் கழுவுவது என்று கருதிக் கொண்டிருக்கின்றனர். தலைக்கு நீர் விடாமல் குளிப்பது என்பதற்குப் பொருளே இல்லை. நாள்தோறும் உடலைக் கழுவுகையில், தலையையும் சேர்த்தே கழுவுதல் வேண்டும். தலையை விட்டுவிட்டு மேலுக்கு மட்டுமே நீர் வார்த்து வருவதன் கெடுதல் தன்மை, உடனே விளங்காது. ஆனாலும் காலப்போக்கில் கண், காது, மூக்கு, தொண்டை, தலை இவற்றுக்கு வரும் பலவகையான நோய்களை வைத்து விளங்கிக் கொள்ளலாம். சிலருடைய தலைமுடியில் நிறைய அழுக்கு மண்டியிருப்பதை, அவர்கள் தலைவாரிக் கொள்ளும் சீப்பைப் பார்த்தாலே விளங்கிவிடும். ஒரு முறை அவர்கள் தூய்மையான புதுச்சீப்பைக் கொண்டு, வாரிப்பார்த்து அறிந்து கொள்ளலாம். தலை அழுக்கடைவதுடன், பிசுக்கும் தீ நாற்றமெடுத்தும், பேனும் ஈரும் குடியிருக்கும் கூடாரமாக அவர்கள் தலை விளங்குவதை அவர்களே தாம் அறிய வேண்டும். இனி, குளிப்பதற்கு வெந்நீரைவிட, தண்ணிரே எக்காலத்தும் எவ்விடத்தும் எந்நிலையிலும் நல்லது. உடல் நலிவு, நோய் வாய்ப்பட்டிருக்கும் பொழுதும், எண்ணெய்க் குளியலின் பொழுதும் வெதுவெதுப்பான நீர் நல்லது.
உடல் தூய்மை என்பது, சிறு பருவம் முதலே அறிந்து கொள்ளப்பெறுவதும், பழக்கப்படுத்திக் கொள்வதுமான ஒன்று. பெற்றோர் தம் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் நல்ல பழக்கங்களுள் இது மிகவும் முகாமையானது. இவையன்றி உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும் நடைமுறைகள் நிறைய உண்டு அவற்றை வல்லார் வழியாக அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
இனி, இவையெல்லாம் செயலுக்குத் தேவையில்லை என்று கருதிவிடக் கூடாது என்பதாலேயே இவற்றை இவ்வளவு விரிவாக எடுத்து விளக்கவேண்டி வந்தது என்க.
6. எதிலும் நல்லெண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் இருத்தல்
இனி உடல்துய்மைக்கு அடுத்தபடி செயல்திறம் உடையவர்களுக்கு . நல்லெண்ணம் மிகவும் தேவை. பலர் நல்லெண்ணம் என்பதற்கும். நேர்மையான உணர்வுகளுக்கும் வேறுபாடு தெரியாமல் இருக்கின்றனர். நல்லெண்ணம் என்பது, தாம் வாழ்வது போலவே பிறரும் வாழ வேண்டும் என்று எண்ணுவதும், நமக்குப் பிறரின் உதவி தேவையாயிருப்பதைப் போலவே, பிறர்க்கும் நம் உதவி தேவைப்படும் என்று கருதுவதும், நம்மிடம் பிறர் இணக்கமான அன்பு காட்டுவதுபோல், நாமும் எல்லாரிடமும் இணக்கமான நட்புணர்வோடு அன்பு காட்டுவதுமே நல்ல எண்ணங்களாகும். நேர்மையான உணர்வுகள் என்பன, அந்நல்லெண்ணங்களைக் கடைப்பிடித்தொழுகுகையில் மேற்கொள்ள வேண்டிய உணர்வுகள். அவை பொய்யாகவும், வஞ்சனையாகவும், ஏமாற்றும் நோக்கத்துடனும் நடவாமை. பிறரின் சிறு முயற்சியையும் பெரிதும் பாராட்டல் முதலியன. ஆனால் இவற்றிற்கும் கூட நல்லெண்ணம்தான் காரணம்.
ஒரு செயலைத் தொடங்கும் பொழுதே, அச்செயல் ஒருவருக்குப் போட்டியாகவோ அவரை வீழ்த்துகின்ற நோக்குடனோ தொடங்குவதாக எண்ணுதல் கூடாது. அல்லது அந்நோக்கத்துடன் தொடங்குதல் கூடாது. நமக்கும் அச்செயலுக்கும் உள்ள உறவு அல்லது இணைவு அல்லது பொருத்தம், நாம் அதைச் செய்யவேண்டுவதன் நோக்கம், அதனால் கிடைக்கவிருக்கும் பயன் போன்றவற்றையெல்லால் நல்ல எண்ணத்துடனேயே கருதிப் பார்க்க வேண்டும். அவ்வாறில்லை யாயின், அச்செயல் படிப்படியாக நசித்து வெற்றியடையாமல் போகும். காரணம் நம் முழு எண்ணமும் உணர்வும் அச்செயலில் படியாமல், நம் தவறான எண்ணங்களிலேயே தோய்ந்து, விளைவைக் கெடுப்பதுதான்.
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள் (178)
இப்பொய்யாமொழியுள் அக்கருத்து விளங்கித் தோன்றுவதைக் காண்க. இந்நிலையில் ஒருவர் எத்துணை அறிவு வாய்ந்தவராக இருப்பினும் கூட பயன்படுவதில்லை. அந்த அறிவும் தீயவற்றிலேயே பெய்யப்படுவதால், அதுவும் பாழாகவே போகும் என்பதைத் திருவள்ளுவப் பேராசான்.
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின். (175)
என்னும் குறட்பாவில் நன்கு உணர்த்தியுள்ளார். இக்கருத்துகள் சாவிப்புப் போலவோ, ஊழ்வழிப் பட்டனவாகவோ உரைக்கப் பெற்றனவல்ல. மனவியலும், அறிவியலும் கலந்து செயன்மையைத் தாக்கும் இயல்பியல் அல்லது இயங்கியல் கோட்பாடுகள் வழியே உரைக்கப் பெற்றனவாகும். நமக்கு ஆக்கம் வேண்டும் என்றெண்ணுவது பிழையன்று; இன்னொருவருக்கு ஆக்கம் வருதல் வேண்டாம் என்றோ அல்லது அவருக்கு வருகின்ற ஆக்கம் நமக்கும் வரவேண்டும் என்றோ விரும்புவதுதான் தீயவெண்ணம். எனவே, பிறன் பொருளும் நமக்கு வேண்டாம் நம்மால் பிறர்க்கு இழப்பும் நேரவேண்டாம் என்று எண்ணும் எண்ணம் உயர்ந்தது. அதே மன உயர்வைக் காட்டுவதாகும். அதுவே, நம்மைச் செயலில் ஊக்கும் மனப்பாங்காகும். அதுவே, வெற்றியை ஈட்டித் தரவல்ல விருப்பம்.
இறலினும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை என்னும் செருக்கு (180)
இனி, செயலில் ஈடுபட்ட ஒருவர்க்கு நல்ல நம்பிக்கையும் மிக வேண்டுவதாகும். நம்பிக்கை என்பது நல்லெண்ணங்களை ஊக்குவிக்கும் ஒரு மனவுணர்வு. இம்மனவுணர்வு இல்லெனின் அனைத்துச் செயல்களின் நடைமுறையிலும் அவநம்பிக்கை தோன்றி ஊக்க உணர்வைக் கெடுக்கும். அது செயலில் தொய்வை உண்டாக்கும். வருகின்ற நல்விளைவு எத்தகையது என்று தெரியாமற் போயினும், அதன்பாலுள்ள நம்பிக்கை நமக்கு அச்செயலுக்கான மன உரத்தையும் முயற்சியையும் கட்டாயம் தரும் தரவே அச்செயலில் நாம் முழு ஈடுபாடு காட்டி, நம் வினையை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதை உறுதியாக எண்ணிக் கொள்ள வேண்டும்.
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின். (666)
நம்பிக்கையில்லாதவர்களுக்கு இவ்வுலகமே வெறுமையாகத் தோன்றும். அவர்கள் எதையும், எவரையும் ஐயப்பாட்டுடனேயே பார்ப்பர். எனவே, அவர்களின் செயல்களில் உறுதிப்பாடு இராது; தெளிவு இராது. முடிவு அண்மையில் இருக்கும்; அதில் வெற்றி இருக்கும் என்று நம்பாதவர்களுக்கு முயற்சியும் கூட முழுமையாய் இராது. எனவே, ஒரு வேளை தோல்வி ஏற்பட்டாலும் ஏற்படும். நம்பிக்கையின்மை தோல்வியைச் சந்திக்கின் மனம் தொய்ந்து போகிறது. எனவே, நாம் எடுத்துக் கொண்ட வினையில் நமக்கு வெற்றியுண்டாகும் என்ற நம்பிக்கை வேண்டும். இத்தகைய நம்பிக்கையால் உலகில் எத்தனையோ ஆக்கமான செயல்கள் நிகழ்ந்திருக்கின்றதைப் பல்வேறு வரலாற்று நிகழ்ச்சிகள் நமக்கு என்றென்றும் உணர்ததிக் கொண்டிருக்கின்றன.
2. உள்ளச் சோர்வு
1. உடல் தாக்கம் உள்ளச் சோர்வை ஏற்படுத்தும்
உடல், உள்ள இயக்கத்திற்கு அடிப்படை என்று முன்னர் பலவிடங்களில் விளக்கப் பெற்றுள்ளது. நலம் குறைந்த உடல் உள்ளத்தையும் நலிவுறச் செய்கிறது. அது பொதுவான நடைமுறை. ஆனால் உடல் நலமாக உள்ளவர்களும், வேறு வகையான புறத்தாக்கங்களால், உள்ளச் சோர்வு கொள்கிறார்கள். இவ்வாறு ஏற்படுகின்ற உள்ளச் சோர்வு, நல்ல உடலையும் தாக்குகிறது.
வினையழுத்தங்கள், பணிச்சுமைகள், தொடர்ந்த தோல்வி, எதிரிகளின் மறைமுகமான எதிர்ப்புகள், பகைவர்களின் குறுக்கீடுகள், உடன் பணியாளர்கள் - தொழில் செய்பவர்களின் ஒத்துழைப்பின்மை அல்லது முரண்பாடுகள் குடும்பநிலைகள், பொருள் பற்றாமை, காலம், இடம் பொருந்தாமை, ஆட்சியாளரிடமிருந்து வரும் எதிர்ப்புகள், தாக்கங்கள் . முதலியவற்றால் ஒரு செயலில் ஈடுபடுபவரின், உள்ளம் தாக்கமுறுகிறது.
இவ்வகைத் தாக்கங்களில் ஒன்றோ இரண்டோ சிலவோ தொடர்ந்து வரும்போது, வினை செய்வார், மனச்சோர்வுறுவது இயற்கையாகவே அமைகிறது. இந்நிலைகளால் நாம் மனம் - உள்ளம் - சோர்வுற வேண்டியதில்லை. இவ்விடத்திலெல்லாம்,
இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல் (627)
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். (628)
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். (629)
ஆகிய மூன்று குறட்பாக்களின் பொருளுரைகளை நன்கு எண்ணி, உள்ளத்தைச் சோர்வுற விடாமல், துக்கி நிறுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
நாற்கதியிலும் உள்ள உடம்புகள், இடும்பை என்னும் வாளுக்கு இலக்கு என்று தெளிந்து, தம் மேல் வந்த இடும்பையை இடும்பையாகக் கொள்ளார் அறிவுடையார் என்றும்,
'தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாமல், வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தெளிந்திருப்பான், தன் முயற்சியால் துன்பமுறான்' என்றும்
'வினையால் தனக்கு இன்பம் வந்துழி, அதனை (உடலால்) நுகர்தலன்றி, மனத்தால் விரும்பாதவன், துன்பம் வந்துழியும் அதனை (உடல் நுகர்தலன்றி, மனத்தான் வருந்தான்' என்றும்,
இம்மூன்று திருக்குறள் மெய்யுரைகளுக்கும், உரையாசிரியர் பரிமேலழகர் எழுதும் பொருளுரைகளைத் தெரிந்து தெளிந்து, உள்ளச் சோர்வைப் போக்கிக் கொள்ளுதல் இன்றியமையாதது.
2. உடல் இயக்கத்தைப் போலவே உள்ளத்தையும் இயக்கலாம்.
நம்மில் பெரும்பாலார் நாம் நம் உடலைப் பயிற்சியாலும், செயலாலும் இயக்குவதைப் போலவே, நம் உள்ளத்தையும் இயக்க முடியும் என்பதை அறிவதில்லை. உடல் பருப்பொருள்; உள்ளம் அதற்குள்ளிருந்து அடங்கி இயங்கும் நுண்பொருள்.
நாம் பருப்பொருளாகிய நம் உடலை இயக்குவது நமக்குத் தெரிகிறது; முடிகிறது. ஆனால் நம் உள்ளம், நாம் கண்களால் காண முடியாத பொருளாகையால் அதை இயக்குவதை அல்லது அது நம்மால் இயங்குவதை அறிய முடிவதில்லை. நம்மால் அறிய முடியாமலேயே அது நம்மால் இயக்க முறுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். அதற்கு, உடலைப் பயிற்றுவிப்பதைப் போலவே, உள்ளத்தையும் பயிற்சியால் இயக்க முடியும் என்று அவர்கள் அறியாமல் இருப்பதே காரணமாகும்.
3. உடலின் இரண்டு இயக்கங்கள்
நம் உடல் தானாகவும் இயங்கும்; நம்மாலும் இயக்கப்படும் அவற்றுக்கு விரும்பாச் செயல் (அநிச்சைச் செயல் விருப்பச் செயல் இச்சைச் செயல் என்று பொருள்.
நாம் விரும்பாலேயே சில உடல் செயல்கள் தாமாகவே நடைபெறுகின்ஹன. பார்க்க விரும்பாமலேயே கண் பார்க்கிறது; கேட்க விரும்பாமலேயே காது கேட்கிறது; நாம் மூச்சுக் காற்றை உள்ளிழுக்கவும், வெளியே விடவும் செய்யாமலேயே, வெளிக்காற்று தானாகவே மூக்குத் தொளைகளின் வழியாக உள்ளே போகவும், வெளியே வரவுமான, உயிர்ப்பு வேலை நடந்து கொண்டிருக்கிறது; நம் வாயில் எப்பொழுதும் ஊறிக்கொண்டிருக்கும் உமிழ்நீர் நாம் விரும்பாமலேயே விழுங்கப்படுகிறது. இனி, நாம் விரும்பாமலேயே நம் உடலின் உள்ளுறுப்புகள் அவையவைபாட்டிற்கு இயங்கிக் கொண்டிருக்கின்றன; நெஞ்சாங்குலைத் துடிப்பு, செரிமான வேலைகள், குடல் இயக்கங்கள், அரத்த ஓட்டம் முதலிய நூற்றுக்கணக்கான உடலின் உள்ளுறுப்புப் பணிகள் எப்பொழுதும், நாம் விழித்திருக்கும் பொழுதும், துங்கும்பொழுதும், இறுதிவரை நடந்து கொண்டே இருக்கின்றன. இவை யாவும் விரும்பாச் செயல்கள் (அநிச்சைச் செயல்கள்) என்பதை நாம் அறிதல் வேண்டும்.
இனி, இவை போலவே விருப்ப இச்சைச் செயல்களும் நம்மில் நடைபெறுகின்றன. நாம் விரும்பி ஒரு பொருளைப் பார்க்கிறோம்; விரும்பி ஓர் இசையைக் கேட்கிறோம், விரும்பி ஒரு பொருளை உண்கிறோம்; விரும்பி ஓர் இடம் நோக்கி நம் கால்களை நடக்க விடுகிறோம்; விரும்பி நம் கைகளால் ஒரு வேலையைச் செய்கிறோம்.
இவ்வாறு, நம் உடல் நாம் விரும்பாமலும் இயங்குகிறது; நம் விருப்பத்துக்கும் இயங்குகிறது. இவ்விரண்டு இயக்கங்களும் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றன. இவற்றை நாம் உணர்கிறோம்; அறிகிறோம். இங்கு, விரும்பாமல் நடக்கும் இயக்கங்களையே உணர்வதாக நாம் கூறுகிறோம். விரும்பி நடைபெறும் இயக்கங்களையே அறிவதாக நாம் குறிப்பிடுகிறோம்.
4. உள்ளத்தின் இரண்டு இயக்கங்கள்
இனி, உடலைப் போலவே, உள்ளத்திற்கும் இரண்டு இயக்கங்கள் உண்டு. அவையும் விரும்பா எண்ணங்களும் விருப்ப எண்ணங்களும் ஆகும். உடலின், உடல் உறுப்புகளின் அசைவுகளை இயக்கங்களைச் செயல்கள் என்று நாம் குறிப்பது போல், உள்ளத்தின் இயக்கங்களை அசைவுகளை அலைகளை - நாம் எண்ணங்கள் என்று கூறுகிறோம். (உடல் அசைவுகள், செயல்கள் எனப் பெறுவது போலவே உள்ளத்தின் அசைவுகள், அலைகள், எண்ணங்கள் ஆகின்றனர்.)
உடல் தானாகவும் இயங்குகிறது; நாமும் இயக்குகிறோம். உடல் தானாக இயங்கும் நிலை தொடர்ந்தும். இடைவிடாமலும் நடைபெறுகிறது. நாமாக உடலை இயக்கும் பணி தடைப்பட்டும், இடையிடை நின்றும் நடைபெறுகிறது. உடலின் தன்னியக்கம் நம் அறிவிற்கும், மனத்திற்கும் அப்பாற்பட்டு மூளை உறுப்பு வழியாகச் செயல்படுகிறது. உடலின் உந்து இயக்கம் நம் அறிவிற்கும் மனத்திற்கும் உட்பட்டு அதே மூளை வழியாகவே செயல்படுத்தப்படுகிறது. ஆக, உடல் தானாகவும் மூளைவழியாகவும் இயங்குகிறது; நம்மாலும் அதே மூளை வழியாக இயக்கவும் படுகிறது. இரண்டு செயல்களுக்குமே மூளை ஒரு கருவியாக உள்ளதை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
அது போலவே, நம் உள்ளமும் நம் மூளை வழியாகத் தானாகவே இயங்குகிறது. அதே மூளை வழியாக நம் அறிவாலும் இயக்கப்படுகிறது.
உடலின் இரண்டு வகை இயக்கங்களுக்குமே நாடி, நரம்புகள் மூளைக்குத் தொடர்புக் கருவிகளாக உள்லன.
உள்ளத்தின் இரண்டு வகை இயக்கங்களுக்கும் உணர்வு அலைகள் அஃதாவது எண்ண அசைவுகள் தொடர்புக் கருவிகளாக உள்ளன.
நாடி, நரம்புகள் நம் விருப்பத்திற்கும் இயக்கப் பெறுகின்றன; நம் விருப்பத்திற்கும் அப்பாற்பட்டு, அஃதாவது தன்னியக்கத்திற்கு உட்பட்டும் இயங்குகின்றன.
அதுபோலவே, உள்ளத்தின் உணர்வு அலைகளும் அஃதாவது எண்ண அலைகளும் நம் விருப்பத்திற்கு அப்பாற்பட்டு. |எழும்புகின்றன. நம் விருப்பத்திற்கு உட்பட்டும் எழுப்பப் பெறுகின்றன.
5. விருப்பம் என்பது என்ன ?
நம் விருப்பம் என்பது உடலை ஒட்டி எழுகிறது. உடல் துய்க்க விரும்புவதையும் விருப்பம் என்கிறோம்; உள்ளம் துய்க்க அஃதாவது உணர விரும்புவதையும் விருப்பம் என்கிறோம்.
உடல் துய்ப்பு, உள்ளத் துய்ப்பு இரண்டுக்குமே கருவி மூளையாகிறது. இனி, அறிவுத்துய்ப்புக்கும் கருவி மூளையே.
நம் அறிவுணர்வும் ஒரு வகையான அலை உணர்வே.
ஒலிக்கும் ஒளிக்கும் எவ்வாறு ஒலியலையும் ஒளி அலையும் ஆக இரண்டு வகையான அலைகள் இருக்கின்றனவோ, அர்வாறே நம் உள்ளத்திற்கும் அறிவிற்கும் இருவேறு வகையான அலைகள் உண்டு.
ஒன்று எண்ண அலை; மற்றது அறிவு அலை;
எண்ண அலை (உள்ள அலை) உணர்வு எனப்பெறும்.
அறிவு அலை அறிவு எனப்பெறும்.
உடல் அலை (அ) அல்லது அசைவு செயல் எனப்பெறும்.
இம்மூன்று செயற்பாடுகளுக்கும் மூளைதான் கருவியாக இருக்கிறது.
6. மொத்த இயக்கங்கள்
எனவே, நம் ஒவ்வொருவருக்கும் மொத்தம் ஆறு இயக்கங்கள் உள்ளன. உடல், உள்ளம், அறிவு - ஆகிய ஒவ்வொன்றுக்கும் இரண்டிரண்டு இயக்கங்களாக ஆறு இயக்கங்கள் உள்ளன. அவற்றை இவ்வாறு வகைப்படுத்தலாம்.
உடலுக்கு :
1. விரும்பா இயக்கம் அல்லது தன்னியக்கம்
2. விருப்ப இயக்கம் அல்லது செயல்.
உள்ளத்திற்கு :
1. தோன்றும் எண்ணம் அல்லது நினைவு
2. தோற்றும் எண்ணம் அல்லது எண்ணுவது அல்லது நனவு
அறிவிற்கு :
1. தானாய் அறிய வருதல் அல்லது அறிவு
2. நாமாய் அறிதல் அல்லது பகுத்தறிவு
(இது நம் பொறி, புலன்களால் அறிதல்)
7. ஏழாவது இயக்கம் ஒன்று உண்டா?
இவ்வாறு இயக்கங்களுக்கும் மேலான அல்லது வேறான ஏழாவது இயக்கமும் அதற்கான ஒர் உணர்வு அலையும் உண்டு. அதுவே மெய்யுணர்வு அல்லது மெய்யறிவு.
மெய்யுணர்வின் அல்லது மெய்யறிவின் காரணியாக - மூலப் பொருளாக நிற்பதே இறைமை. இவைபற்றியெல்லாம் விரிப்பின் பெருகுமாகலினாலும், அவை காலத்தால் உணரப்பெற வேண்டிய பேரறிவு ஆகலாலும், அவ்வகண்ட அறிவின் ஒரு சிறு கூறே இங்குத் தேவை கருதி விளக்கப் பெறுதல் போதும் ஆகையினாலும், இவ்விளக்கங்களை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். இனி, இவ்விடத்து நாம் கவனிக்க வேண்டியது, உள்ளத்தையும் நாம் இயக்க முடியும் என்பதே
8. நலியும் உள்ளத்தை அறிவு கொண்டு தேற்றுதல் வேண்டும்
உடல் நலிவால் உள்ளம் ஊக்கமிழக்குங்கால், உடலுக்கு நலமூட்டி, அதன்வழி உள்ளத்தைச் சோர்வுறாமல் செய்யலாம். ஆனால், உடல் நலமாகவே இருந்து, வேறு பிற காரணங்களால் உள்ளம் நலிவுறுமானால், அதனை அறிவு கொண்டும் உடல் நலத்தையே முன் வைத்தும் தேற்றிக் கொள்ளுதல் வேண்டும்; ஊக்கப்படுத்தல் வேண்டும்.
நாம் உடல் நலமாக உள்ளோம்; வலிவாகவும் உள்ளோம். நாம் நன்றாக உள்ள பொழுது இந்த இடும்பைக்காக துன்பத்திற்காக - தொய்விற்காக இடையூறுக்காக நாம் ஏன் ஊக்கமிழக்க வேண்டும்? இந்த இழப்பை துன்பத்தை வேறு வகையாக ஈடுகட்டிக் கொள்ளலாமே. இதை ஏன் பெரிதாகப் பொருட்படுத்த வேண்டும் என்று அடிக்கடி எண்ணி மனந்தேற்றிக் கொள்ளுதல் வேண்டும் என்க.
உள்ளத்தை இயக்குவது அறிவு - என்பதைத் திருவள்ளுவப் பேராசான், நன்றின்பால் உய்ப்பது அறிவு 422) என்னும் குறட்பாவால் உணர்த்துகிறார். உய்ப்பது என்னும் சொல்லுக்கு இயங்குவது, செலுத்துவது, ஆற்றுப்படுத்துவது, உய்விக்கச் செய்வது, தேற்றுவது, மலர்த்துவது என்றெல்லாம் பொருள். எனவே, அவ்வப்பொழுது நேரும் உள்ளச் சோர்வை அறிவுணர்வால் ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உற்றுணர்ந்து கொள்க.
3. அறிவுத் தளர்ச்சி
1. அறிவே தளர்ந்தால் என்ன செய்வது?
உடல் நலிவுற்றால் உள்ளத்தால் ஊக்கமிழக்காமல் இருக்கலாம். அதேபோல் உள்ளம் சோர்வுற்றால் அறிவால் தேற்றலாம். இனி, அறிவே சோர்வுற்றால் என்ன செய்வது? பெரும்பாலும், உடல் நலிவு எல்லாருக்கும் தெரியக்கூடியதாக இருக்கும். பிறர்க்கும் தெரியும்; நமக்கும் தெரியும். அதை முழுவதுமே மூடி மறைத்துவிட முடியாது. உடல் நலிவு நோய்களாலும், உறுப்புகள் தாக்கத்தாலும், ஒய்வின்மையாலும், ஊட்ட உணவு பற்றாக்குறையாலும் வரும்.
2. உடல் சோர்வுக்கும் உள்ளச் சோர்வுக்கும் உள்ள வேறுபாடு
உள்ளச் சோர்வு என்பது எல்லாருக்குமே தெரியக் கூடியதாக இராது. மிகத் திறமையான மனவுணர்வு உள்ளவர்களால்தாம் பிறருடைய உள்ளச் சோர்வைத் தெரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்டவர்கள் கண்டு கொள்ளாதபொழுது, நம் உள்ளம் சோர்வடைந்திருப்பது நமக்கு மட்டுமே தெரிய வரும் ஒரு செய்தியாகும். எனவே, இதனைப் பிறர்க்கு அல்லது ரெளிக்குத் தெரியாதவாறு நாம் மறைத்துக் கொள்ள முடியும். உலகில் பெரும்பாலார், இப்படித்தான், தங்களுக்குற்ற மனத்துயரங்களையும் சோர்வுகளையும் பிறர் அறியாதவாறு மறைத்துக் கொள்கின்றனர். அவ்வாறு மறைத்துக் கொள்வதுடன், பிறர்க்குத் தாங்கள் மகிழ்ச்சியாக உள்ளவர்கள் போலவும், தென்பை அல்லது ஊக்கத்தை இழக்காதவர்கள் போலவும், வெளிக்குக் காட்டிக் கொள்கின்றனர். இவ்வாறு இருப்பதைத் தவறு என்று சொல்ல முடியாது. ஒருவாறு இப்படிச் செய்வது அவர்களுக்கு இரு வகையிலும் நன்மையாகவே இருக்கும். இன்னொரு படியில், இவருக்கு அண்மையிலிருப்பவர்க்கு தொல்லையாக, அஃதாவது அவரின் தாக்கம் பிறர்க்கும் துன்பம் தராததாக இருக்கும்.
3. உள்ளச் சோர்வை மூடி மறைப்பதால் உண்டாகும் நன்மைகள்
இனி, தங்கள் உள்ளச் சோர்வை மூடி மறைத்துக் கொள்பவர்களுக்கு விளைவதாகக் கூறும் இருவகை நன்மைகள் எவை? ஒன்று, தங்கள் உள்ளச் சோர்வையோ, துன்பத்தையோ பிறர் அறியமாட்டார்கள். அதனால் இவரை விரும்பாதவர்கள் இவரைக் குறைத்து மதிப்பிடவோ, இவர்மேல் பொறாமை கொண்டவர்கள், இவர் துன்புறுவதைப் பார்த்து மகிழ்ச்சியடையவோ முடியாது. அல்லது இவரைப் பகைப்பவர்கள் இவர் வீழ்ச்சியடைவதை எதிர்பார்க்கவும் இயலாது. இவ்வகையில் இவர்க்கு அந்நிலை நன்மையாகவே இருக்கும்.
இரண்டு, இவர் மெலிவை யுணர்ந்தால், இவருக்கு உண்மையாக உதவக் கூடியவர்கள் கூட, ஒரு வேலை உதவாமல் போனாலும் போகலாம். அந்நிலை, இவர் அத்துன்பத்திலிருந்து தம்மை உய்வித்துக் கொள்ளவும் அடுத்து மேலும் தம்மை நிலைப்படுத்திக் கொள்ளவும், முன்னேற்றிக் கொள்ளவும் இயலாமல் செய்துவிடும். இது அவருக்கு செயல்நிலை முடக்கத்தை உண்டாக்கிவிடலாம்.
அதுவுமின்றி, நாம் நம் மனச்சோர்வுகளையும் மனத் துயரங்களையும் பிறரிடம் கூறி அவர்களுக்கு ஏன் வருத்தத்தை உண்டாக்க வேண்டும்? இது பெரும்பாலானவர்களின் மனநிலைக்கு ஏற்றதன்று. நம்மேல் உண்மையான அன்பும் நட்பும் கொண்டவர்கள்தாம் நம் துன்பங்களையும் துயரங்களையும் மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் கேட்டு, இரக்கமும் ஆறுதலுரையும் கூறுவார்கள். ஆனால் மற்ற பிறர் தங்களுக்குள் மகிழவே செய்வார்கள். இப்படித் தான் பெரும்பாலாரின் மனநிலை இருக்கும். இது மாந்த மனவியலைச் (Sodal Psychology) சார்ந்த உண்மையாகும். மேலும், நம்மைச் சூழ்ந்திருப்பவர்களின் மனநிலையை, இந்த வகையில் எடையிடுவதும் கடினம். அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், அல்லது என்ன நினைப்பார்கள் என்பதை எவராலும் எளிதில் கண்டு கொள்ள முடியாது. பெரும்பாலும் இவ்வுலகில் பிறரின் துன்ப துயரங்களைக் கண்டு உள்ளத்தில் மகிழ்கின்றவர்களே அதிகம். அவ்வாறில்லாமல், நல்ல பொதுவுணர்வுடன் நம்மேல் உண்மை அன்பு காட்டுபவர்களும் நம் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுபவர்களும் மிகமிகக் குறைவாகவே இருப்பார்கள். அவர்களை நாம் இனம் பிரித்தறிவது மிகமிகக் கடினம். இந்நிலையில் வீணாக ஏன் பிறரிடம் நம் துன்ப, துயரங்களைச் சொல்லுதல் வேண்டும்? ஒரு வேளை, நமக்கு மாறானவர்களிடம் நம் கேடுகளையும் மனத் துயரங்களையும் கூறிக் கொண்டு ஆறுதல் பெற விரும்புவதால், நமக்கு இரக்கம் காட்டும் உணர்வுக்கு மாறாக அவர்களிடமிருந்து இழிவும் எள்ளலும் சில நேரம் கெடுதலுமே நமக்கு வரவாக வரலாம்.
எனவே, நம் உள்ளச் சோர்வையும், துயரங்களையும் பிறரிடம் சொல்லாமல் இருப்பதே பொதுவில் நல்லது என்று கருதிக் கொள்ள வேண்டும்.
4. அறிவுத் தளர்ச்சி என்றால் என்ன ?
இனி, உள்ளச் சோர்வையே பிறரிடம் கூற வேண்டியதில்லை என்று ஆனபின், நம் அறிவுத் தளர்ச்சியை யாரிடம் போய்ச் சொல்வது? இதைத் தீர்மானிக்குமுன் அறிவுத் தளர்ச்சி என்றால் என்னவென்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்வது நல்லது.
ஒரு செயலில் நாம் ஈடுபடும்பொழுது, அச்செயலைப் பற்றி எழுகின்ற சிக்கலாலோ, அதனால் ஏற்படுகின்ற இடர்ப்பாட்டுச் சூழலாலோ, அல்லது அந்நிலையில் வரும் எதிர் விளைவுகளாலோ, நம் அறிவுக்கு ஏதோ விளங்காத ஒரு முட்டுப்பாடும் தளர்ச்சியும் உண்டாகும். சே! என்ன நம் அறிவு. அறிவில்லாமல் இதில் போய். இறங்கி விட்டோமே, ஆழந்தெரியாமல் காலை விட்டு விட்டோமே. என்று நம்மை நாமே நொந்து கொள்ள வேண்டியிருக்கும். அப்பொழுது நாம் எடுத்துக் கொண்ட செயல் மீதே நாம் வெறுப்புக் கொள்ள வேண்டி வரும். அல்லது சோர்வு கொள்ள வேண்டி வரும். அந்த நிலையில் கூட நாம் சோர்வு அடைய வேண்டுவதில்லை.
5. தன்னம்பிக்கையும் தன்னுணர்வும் தேவை
அப்பொழுதும் எப்பொழுதும் நமக்கு ஒரு தன்னம்பிக்கை தேவை. நம் உள்ளம் சோர்ந்து போகும்பொழுதும் சரி, அறிவு தளர்வுறும் பொழுதும் சரி, 'இச்செயலை நம்மால் செய்ய முடியும். நாம் சோர்வடையத் தேவையில்லை நமக்கு இன்றைக்கு இந்நிலை உள்ளது. நாளை இந்நிலை மாறலாம். அல்லது மாற்றி விடலாம்' என்னும் உள்ளத்துணிவும் அறிவுத் துணிவும் நமக்கு வேண்டும். அத்துடன் நம் அறிவின் மேலேயே நமக்கு ஒரு தன்னம்பிக்கையும் ஒரு தன்னுணர்வும் தேவை.
'நாம் இச்செயலை எப்படியும் முழு வெற்றியுடன் செய்து விடமுடியும் என்பது தன்னம்பிக்கை. நாம் இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள முடியும். இதில் ஈடுபட ஈடுபட, இது பற்றிய முழு அறிவும் நமக்கு விளங்கிவிடும் என்று எண்ணி ஊக்கம் பெறுவது தன்னுணர்வு. இவ்வுணர்வுகள் வளர வளர மேலும் நமக்கு உள்ள ஊக்கமும் அறிவூக்கமும் தோன்றிக் கொண்டே இருக்கும்.
6. ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்
அத்துடன், இன்னொன்றையும் நாம் செய்யலாம். இதற்குத் திருவள்ளுவப் பேராசான் ஊக்க உரையாகவும், உளவுரையாகவும் ஒன்றை நமக்கு அறிவுறுத்துகிறார். அவ்வாறு உள்ளமும் அறிவும், சோர்வும் தளர்ச்சியும் ஊறும் பொழுது, நமக்குத் தெரிந்த நண்பர்களுள் முதிர்ந்த பட்டறிவுள்ளவர்களுள் ஒழுக்கம் உடையவர்களை அண்டி நம் நிலைகளை எடுத்துச் சொல்லி, அத்தொய்வு நிலைக்கும் செயல் இடர்ப்பாட்டிற்கும் உள்ள காரணத்தைத் தெரிந்து, கொண்டு அவர்களின் வாய்ச் சொல்லின்படி நடந்துவிட வேண்டும் என்பார்.
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல் (415)
அஃதாவது, 'வழுக்குதலையுடைய சேற்று நிலத்தில் நடக்கும்பொழுது, நமக்கு ஊன்று கோல் போல் உதவுவன ஒழுக்கம் உடையவர்களின் வாய்ச் சொற்கள் என்றார்.
செல்வம் உடையவரைச் சென்று கேளுங்கள்; அல்லது பதவி அல்லது அதிகாரம் உடையவர்களைப் போய்க் கேளுங்கள்; அல்லது கற்றவர்களைக் கேளுங்கள்' என்று அவர் அறிவுரை கூறவில்லை. 'ஒழுக்கம் உடையவரிடம் போய் விளக்கம் கேளுங்கள்' என்று பண்புடையாளர்களை நமக்கு ஆற்றுப்படுத்துகின்றார், ஏன்? செல்வம் உடையவர், செல்வ நாட்டம் கொண்டு மட்டும் நமக்கு அறிவுரை கூறுவாராம் பதவி அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள், நாம் எடுத்துக் கூறுவதை முழுவதும் செவ்வனே சிந்தியாமல், கட்டளைத் தோரணையிலேயே நமக்கு அறிவுறுத்துவார்களாம்; கற்றவர்கள் ஒருவேளை ஒழுக்கம், பண்பு அற்றவர்களாக இருப்பின், தவறான சூழ்ச்சிகள், குறுக்குப் பாதைகள், நெறியற்ற முறைகளில் நமக்கு வழிகாட்டி விடலாமாம். ஆகவேதான் ஒழுக்கமுடையவர் வாய்ச் சொல்லை, அவ்வக் காலத்தில் கேட்டுச் செய்யுங்கள்' என்றார்.
இதற்குப் பரிமேலழகர், 'கல்வியுடையரேனும், ஒழுக்கம் இல்லாதார், அறிவிலராகலின், அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பது தோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்' என்றார்' என விளக்கம் தருவார். எனவே, ஒருவர், தம் செயலுக்கிடையில் எதிர்ப்படும் அறிவுத் தளர்ச்சி கொள்ளுதல் தேவையில்லை; அவ்வாறு நேரினும், அதனைத் தம் உள்ளுணர்வாலோ அறிவு நம்பிக்கையாலோ, நம் அறிவால் இயலாத நிலையில், கல்வியொழுக்கம் நிறைந்த பண்புடையாளர் வழி, அவர் அறிவால் கண்டு காட்டிய தீர்வுகளைக் கேட்டறிந்து, மேலும் செயலின் கண் ஊக்கமுடன் ஈடுபடுதல் வேண்டும் என்க.
9. புறத்தாக்கம்
இது நமக்கு வெளியிலிருந்து வரும் தாக்கம். நம் செயலுக்கிடையில் அகத்தாக்கங்களாக வரும் உடல் நலிவு, உள்ளச் சோர்வு, அறிவுத் தளர்ச்சி ஆகிய மூன்றுமோ அல்லது அவற்றுள் ஒன்றோ, அல்லது இரண்டுமோ, நம்மைத் தாக்கிக் கொண்டிருக்கும் பொழுதோ, அல்லது தாக்காத பொழுதோ இப்புறத் தாக்கங்கள் வரலாம்.
இப்புறத்தாக்கங்கள் கருவிச் சேதம், துணைத் தொய்வு, எதிர்ச் செயல்கள், பொருள் முடை, காலப் பிறழ்ச்சி, இடம் பொருந்தாமை, ஆட்சி முரண் ஆகியன என்று முன்னர் கண்டோம்.
இங்கு அவை ஒவ்வொன்று பற்றியும் சிறு அளவில் விளக்கி விட்டு மேலே செல்லுவோம்.
1. கருவிச் சேதம்
கருவிச்சேதம் என்பது நம் செயலுக்கு உரிய கருவிகள் சேதமுறுவது அல்லது பழுதுபடுவது. அக்கால் வினை தடைப்படும். அத்தடை குறுகிய காலத் தடையாக இருக்கலாம். அல்லது கொஞ்சம் நீளலாம். இந்நிலையில் வரும் இடையூறுகளுக்காக நாம் வருந்திப் பயனில்லை. ஆனால் இவ்வாறு வரும் அல்லது அடிக்கடி நேரும் என்று அறிந்து, முன்னரே நாம் எச்சரிக்கையாக சேதமேற்படும் அல்லது பழுதுபடும் கருவிகளுக்குரிய சேமக்கருவியை அல்லது துணைக் கருவியை (Space) முன்பே வாங்கி வைத்திருக்கலாம். இவை அடிக்கடி பழுதுறுவனவாக இருப்பின் மலிவாகக் கிடைக்கும் இடங்களில் அல்லது காலங்களில் ஒன்றுக்கு இரண்டாக வாங்கி இருப்பில் வைத்திருக்கலாம். இப்படி அடிக்கடி சேதம் செய்யும் தொழிலாளர்களை மாற்றி, வேறு நல்ல தொழிலாளரை அமர்த்தலாம். இந்த வகை எச்சரிக்கைகளால் இதன்வழி ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கலாம்.
2. துணைத் தொய்வு
வினைக்குத் துணையாளர்களாலும், தொழிலாளர்களாலும் இடையூறு இது. சிறந்த வினைத்திறம் இல்லாதவர்கள், இடையிடை நின்று கொள்பவர்கள், ஒத்துழைப்புணர்வு அற்றவர்கள், குழுமனப்பாங்குள்ளவர்கள், முரண்படுபவர்கள் ஆகியவர்களால் வரும் இடையூறுகளை, முறையான சிறந்த தொழிலாளர்களையும் துணையாளர்களையும் அமர்த்துவதன் வழி தீர்த்துக் கொள்ளலாம்.
3. எதிர்ச் செயல்கள்
நம் செயலுக்கு ஏற்படும் எதிர்விளைவுகளும், நமக்கு எதிராகச் செயல்படுபவர்களுடைய செயல்களும் ஆகும். இவை பற்றியும் ஆங்காங்கு விளக்கப் பெற்றிருக்கின்றன. எனவே, இவை செயலுக்கிடை நேராதவாறு எச்சரிக்கையோடு இருப்பதுடன், இவ்விடையூறுகளுக்காக வருந்திக் கொண்டிராமல், மேலும் ஊக்கத்துடன் செயலைச் செய்து கொண்டிருப்பதே நல்லது.
4. பொருள் முடை
பொருள் முடை என்பது பொதுவாக எல்லாருக்குமே எல்லாவகைச் செயல்களிலுமே ஏற்படும் இடையூறுதான். பொருள் இழப்பு எதனால் நேர்கிறது என்பதையும், ஏன் ஊதியம் வருவதில்லை என்பதையும், உருவாக்கிய பொருள்களின் விற்பனைக் குறைவு, தேக்கம் ஏன் ஏற்படுகின்றன என்பதையும், மேலும் எவ்வெவ் வகையில் செயலை அல்லது தொழிலை விரிவாக அமைக்க அல்லது வளர்த்தெடுக்க முடியும் என்பதையும் தீவிரமாகச் சிந்தித்து இப்பொருள் முடையை நீக்கலாம்.
மற்றபடி பொருள்முடை ஏற்படும் பொழுதெல்லாம் கடன்வாங்கிச் செயலில் ஈடுபடுத்துவதும், இவ்வகையில் ஏற்படும் குருட்டுத் துணிவும், பின்னர் நம்மைப் பேரிழப்புக்கும் பேரிழிவிற்கும் பலவகையான தொல்லைகளுக்கும் ஆளாக்கிவிடும் என்பதை நாம் ஒன்றுக்குப் பத்து முறை நன்கு எண்ணிப் பார்த்தல் வேண்டும்.
பொருள் நலிவு என்பதற்காக உருவாக்கிய விற்பனைப் பொருள்களை விலைகூட்டி விற்பதோ, மலிவாக விற்பதோ தேவையில்லாதது. சில நேரங்களில் அல்லது காலங்களில் விலை வீழ்ச்சியும் விலை உயர்ச்சியும் தவிர்க்க முடியாதவை. அக்கால் நம் முயற்சியை இடைக்காலத்துக்குத் தாழ்த்தி வைத்திருப்பதும் குற்றமில்லை. ஊக்கமும் முயற்சியும் உடையவர்கள் சில எதிர்பாராத நிலைகளில், தங்கள் செயலை முடக்கி வைத்துத் தாங்கள் செயல்படுவதினின்று ஒடுங்கி ஒய்ந்திருக்கலாம். அதில் தவறில்லை. அப்படிப் பட்டவர்களுக்கு அவர்கள் எந்த வினையிலும் ஈடுபடாத காலம், அவர்களை அவ்வுணர்வில் ஊக்கத்தில் - புதுப்பித்துக் கொள்ளப் பயன்படுகிறது. அது, சண்டையிடும் ஆடு எதிரியை மேலும் தாக்குவதற்குத் தன்னை ஊக்கப்படுத்திக் கொள்ள, பின்வாங்குவதைப் போன்றது என்பார்.
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து. (486)
எனவே, பொருல் முடையால், தட்டுப்பாட்டால், ஓர் அரிய செயலில் ஈடுபட்டிருப்பவர், அப்பொருள் நிலையைச் சரி செய்து கொண்டு, மேலும் அதில் தம்மை ஊக்கமுடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அவ்வருஞ் செயல் செய்வதிலிருந்து பின்வாங்கிவிடக் கூடாது என்பதைச் செயல் திறமுடையவர்கள் உறுதியாகக் கொள்க.
5. காலப் பிறழ்ச்சி
அடுத்து, ஒரு செயலில் ஈடுபட்டவர்கள், தாங்கள் செய்யும் செயலைப் பொருத்தமில்லாத ஒரு காலத்தில் தொடங்கிவிடலாம். அல்லது அச்செயலைச் செய்து கொண்டிருக்கும் பொழுது, அப்படி ஒரு காலம் வந்து அவர்களின் செயலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அந்த நிலையிலும் கூட அவர்கள் மனச்சோர்வு கொள்ளத் தேவையில்லை. அடுத்துவரும் காலம் அவர்களுக்கு ஒரு பொருத்தமான காலமாக இருக்கலாம். அதை எதிர்பார்த்து, அவர்கள் தம் முயற்சியில் தளர்ந்துவிட வேண்டுவதில்லை. அதற்காக தாம் சரியென்று கருதி மேற்கொண்ட செயலிலிருந்து விலகி விட வேண்டியதில்லை.
இவ்வுலகில் பலபேர் ஒரு செயலில் தொடர்ந்து வெற்றி கிடைக்கும் வரை ஈடுபடுவதை நாம் பார்ப்பது அரிது. ஒரு காலத்தில் ஒருவர் ஒரு தொழிலைச் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லுவார். ஆனால் சிறிது காலம் சென்று மீண்டும் அவரைப் பார்க்கையில் தாம் வேறு வகையான ஒரு செயலைச் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லுவார். அத்துடன் நில்லாது, முன்னர் தாம் செய்து கொண்டிருந்த தொழிலைக் கைவிட்டுப் பிறிதொரு தொழிலை மேற்கொண்டதற்கான காரணத்தையும் பலவாறு விளக்கிச் சொல்லுவார். இது ஒரு வகையில் சரியாகவும் இருக்கலாம். ஆனால், மீண்டும் சில காலம் சென்று அவரைப் பார்க்கையில், இரண்டாவதாகச் செய்து கொண்டிருந்த தொழிலையும் அல்லது செயலையும் கைவிட்டு விட்டு, அக்கால் வேறு ஒரு செயலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்லுவார். இந்நிலைக்கும் ஒரு காரணத்தைப் புதிதாகச் சொல்லுவார். இவர் தம் வாழ்க்கை முழுவதும் இப்படியேதான் ஒன்றிலும் நிலை பெறாமல், ஆடு இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் தழையைக் கடித்துத் தின்பது போல், அலைவு மனம் கொண்டவராய், அலைந்து திரிவர். இந்நிலையைத் தவிர்த்துக் கொண்டால், காலப் பிறழ்ச்சியியால் வரும் இடர்ப்பாடுகளை இவர்கள் விலக்கிக் கொள்ள இயலும்.
6. இடம் பொருந்தாமை
செயலுக்குப் புறத்தாக்கமாக வருகின்ற இன்னொரு நிலை இடம் பொருந்தாமை நாம் ஒரு செயலை அமைத்துக் கொண்ட இடம் ஒன்றாக இருக்கும். ஆனால் அவ்விடம் அச்செயலுக்கு பொருந்துவதாய் இல்லாமல் இருப்பது, செயலைத் தொடங்கிய பின்னர் தெரிய வரலாம். அந்நிலையில் அவ்விடத்தை உடனே மாற்றி, அச்செயலுக்குப் பொருத்தமாய் உள்ள வேறோர் இடத்தில் அதை மாற்றியமைப்பது நன்று. செயலுக்குக் காலம் எப்படி முகாமையானதோ, அப்படி முகாமையுடையது இடமும் ஆகும். எனவே, செயலுக்குரிய இடத்தைத் தேர்வது செயல் தொடங்குவதற்கு முன்னதாகவே செய்ய வேண்டுவது.
செயல் எத்துணைச் சிறந்ததாக இருந்தாலும், அது சரியான இடத்தில் தொடங்கப் பெற்றால்தான் சரியான முழுமையான பயனைத் தர முடியும்.
காடுகள் உள்ள பகுதியில் விறகுக் கடையும், கடலோரத்தில் இரும்புக் கடையும் வைத்தால் எப்படி? நாம் எடுத்துக் கொண்ட செயலுக்குத் தகுந்தாற்போல, பொருந்திய முறையில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பின்னரே, அந்தச் செயலை அல்லது வினையைத் தொடங்குதல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் கண்ட இடத்தில் ஒரு செயலைத் தொடங்கிவிடக் கூடாது, என்பது திருக்குறள்.
தொடங்கற்க எவ்வினையும்; எள்ளற்க முற்றும் இடம்கண்ட பின்அல் லது (491)
இத் திருக்குறளில் எள்ளற்க என்னும் சொல், 'இடப் பொருத்தமில்லாமல் ஓர் இடத்தை ஒரு செயலுக்குத் தேர்ந்த பின், அச்செயல் பயன் தராத நிலையில், அச்செயலையோ, அதற்குத் துணையான வேறெந்தக் கூறையோ இகழ்தல் வேண்டா” என்னும் பொருளை விளக்கும்.
இனி, ஒரு செயலை ஏதோ ஒரு தேவையோ சடுத்தமோ கருதி ஓர் இடத்தில் தொடங்கி விட்டாலும், அது பயன் குன்றியிருப்பதைக் கண்டு, உடனே அச்செயலிடத்தை மாற்றி, அதற்குப் பொருத்தமான இடத்தை அமைத்துக் கொண்டால், அவ்விடப் பொருத்தமின்மையால் வரும் இடர்ப்பாட்டைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்க.
7. ஆட்சி முரண்
இனி, ஆட்சி முரண் என்பது செயல் ஆளுமையால் வரும் இடர்ப்பாடு என்க. இஃதன்றி, அதிகாரக்காரர்களால் வரும் இடர்ப்பாடும் ஆகும்.
ஒரு செயல் எத்துணைச் சிறப்பினதாக இருந்தாலும், எத்தனை அடிப்படைக் கூறுகளை நிறைவுறக் கொண்டிருந்தாலும், அஃது ஆளும் திறம் இல்லாமையால் கேடுறும் என்க.
செயலாளுமை என்பது தனிச்சிறப்புப் பொருந்தியது. 'ஒரு செயலில் ஈடுபட விரும்பியவன் தன்மை, செயலினது தன்மை, செய்கின்ற முறை, அச்செயலைச் செய்கின்றவன் தன்மை - ஆகிய நான்கையும் எண்ணியே அச்செயலில் ஈடுபட வேண்டும்.
செய்வினை, செய்வான், செயல்முறை, அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல் (677)
என்பது திருவள்ளுவப் பேராசான் கருத்து. செயல்முறை என்பது செயல் செய்கின்ற முறையையும் ஆளுமையையும் குறித்தது. செயலை உள்ளறிவான் என்பவனே அச்செயலைச் செய்ய விரும்பியவன். இவனே ஆளுமைக்கு உகந்தவன். இவன் தன்னாளுமை, தன்னுணர்வு, தன்னறிவு பெற்றவனாகவும், செய்யப் பெறுகின்ற செயலை முழுவதும் அறிந்தவனாகவும் இருத்தல் வேண்டும். தான் பலர் கருத்துக் கூறுவதைக் கேட்கும் உரிமையும், பொறுமையும், ஆர்வமும் உள்ளவனாக இருப்பினும், செயல் பற்றிய முடிவைத் தானே இறுதி செய்யக் கூடியவனாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லையானால் முடிவு சிதறும்; கெடும் சிறப்பு எய்துதல் கடினம்.
ஒருவர் எல்லாரையும் நிறைவு செய்தல் கடினம். எல்லாருக்கும் உகந்தபடி ஒருவர் நடக்க இயலாத நிலையில், தக்கவர் அறிவுரையைக் கேட்கலாம். ஆனால் அதையும் ஆளுமையுள் நிலைப்படுத்துதல் கடினம்.
எனவே, செயலாளுமை என்பது ஒன்றைக் கண்டறிதல், கேட்டறிதல், உசாவியறிதல், ஆய்தல், நடுநிலை உணர்வுடன் முடிவு செய்தல் என்னும் படிநிலைகளைப் பொறுத்தது ஆகும் என்று அறிக
இது வரை கூறியவற்றால் நாம் ஒரு செயலைச் செய்ய முற்படுகையிலோ, அது நடைபெறுகையிலோ, உடலாலும், அதன் வழி உள்ளத்தாலும், அவற்றின் வழி அறிவாலும், சில பல இடர்ப்பாடுகள் வந்து வாய்க்கலாம் என்றும், அவ்வாறு வரும் இடர்ப்பாடுகளை எவ்வாறு முன் எச்சரிக்கையுடன் இருந்து தடுத்து நிறுத்திக் கொள்ளமுடியும் என்றும், பலவாறு விரித்தும் ஒருவாறு தொகுத்தும் விளக்கப்பெற்றன.
செயலுக்கிடையில் வரும் அகப்புற இடர்ப்பாடு களாலேயே, பெரும்பாலான செயல்கள் நின்றுபோதல், உலகியல்பாக உள்ளதாலும், பெரும்பாலார் அதன் மேலும் செயலைத் தொடர்தல் இயலாமையாலும், இத்தலைப்பை இத்துணை விளக்கமாகவும் விரிவாகவும் கூற வேண்டி வந்த தென்க. இனி, அடுத்த தலைப்பிற்கு வருவோம்.
19. இழப்பு கண்டு சோர்வுறாமை
1. ஊதியமும் இழப்பும்
செயலின்கண், அடுத்த தடையாக வந்து நிற்பது இழப்பு. ஊதியமற்ற செயலில் ஈடுபட ஒருவரும் விரும்பார். ஊதியம் என்பது உழைப்பால் வரும் செயல் விளைவு தொடக்கத்தில் நாம் ஒரு செயலில் ஈடுபடுத்திய முதல், நம் தொடர்ந்த முயற்சியாலும் உழைப்பாலும், ஒன்றுக்கு இரண்டாகவும், இரண்டுக்கு மூன்றாகவும் பல்கிப் பெருகி, மேன்மேலும் அச்செயலைத் திறம்படச் செய்வதற்கு வரும் இயல்பான கூடுதல் வருவாயே ஊதியமாகும். அக்கூடுதல் வருவாயை நாம் நம் வாழ்க்கைக்கும் ஓரளவு பயன்படுத்திக் கொண்டு, நாம் மேற்கொண்ட செயலை மேலும் பெருக்கவும் சிறப்புற நடைபெறவும் அவ்வருவாயின் எச்சத்தை மீண்டும் ஈடுபடுத்துவதே அச்செயலை நிலைநிறுத்துவதாகும்.
'முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை' (449) என்பதால், முதல் இல்லாது போனால் ஊதியமாக வருவதும் இல்லாமற் போவதும், முதல் குறைவாக இருந்தால், ஊதியமும் குறைவாக வருவதும் உலகியல்பு. ஊதியமே இல்லாத முதலையும் இழந்து போகிற ஒரு செயலை எவருமே செய்யார்.
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார் (463)
என்பது பேரறிஞர் கூற்று.
இனி, முதல் என்பது பொருளும், உழைப்பும் அவ்வுழைப்புக்கேற்ற அறிவும், இவ்வனைத்தையும் சிதறவும் தளரவும் செய்யாத ஊக்கமும் ஆகும். முதல் என்பது வெறும் பொருள் மட்டுமில்லை என்பதைத் தெளிவாக நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். இனி, உழைப்பு என்பது நம்முடைய உழைப்பும், நம்மைச் சார்ந்த செயல்திறமுடையோர் உழைப்புமாகும். இனி, செயலறிவு இல்லையாயின் நாம் முதலீடாகப் போட்ட பொருளும், உழைப்பும் வீணாகப் போய் இழப்பையே ஏற்படுத்தும். எனவே, ஒரு செயலுக்குப் பொருளும், உழைப்பும் எவ்வளவு இன்றியமையாதனவோ அவ்வளவு இன்றியமையாதது செயலறிவு செயலறிவில்லாமை பொருள், உழைப்பு இவை இரண்டும் இருப்பினும் இழப்பையே தரும், இனி, இழப்பை மட்டுமன்று, சில துன்பங்களையும் தரும். இதை நன்கு விளக்குகிறது. பேராசானின் கீழ்வரும் மெய்யுரை.
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல். (831)
இனி, விருப்பமற்ற, அதுபற்றிய அறிவில்லாத செயலுள் ஈடுபடுவது, அறியாமையிலும் அறியாமை யாகும் என்பார் திருவள்ளுவர். ஒன்றைப் பற்றி அறிந்தால்தான், நமக்கு அதன்மேல் விருப்பம் ஏற்படும் என்பது மனவியல்)
பேதைமையு ளெல்லாம் பேதமை காதன்மை
கையல்ல தன்கண் செயல் (832)
இனி, 'செயலறிவில்லாமல், பேதைத் தனமாக ஒருவன் ஒரு செயலில் ஈடுபடுவானானால், அவனும் கெடுவான்; அவன் மேற்கொண்ட அச்செயலையும் கெடுத்துவிடுவான்' என்பது அவர் எச்சரிக்கை
பொய்படும் ஒன்றே புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின் (836) இதில் பொய்படும் என்பது உருப்படியாகாமல் பொய்யாய்ப் போய்விடும் என்பதையும், புனைபூணும் என்பது, 'அச்செயல் நான் இதைச் செய்கிறேன் என்னும் வெறும் ஆரவாரத்தையே விளைவிக்குமேயன்றிப் பயனை அல்லது ஊதியத்தை விளைவியாது' என்பதையும் உணர்த்தும்.
முதலும் உழைப்பும் ஊதியமாக அல்லது வருவாயாக மாற்றம் பெறுதல் வேண்டும். அல்லாக்கால் அந்த முதலாலும் பயனில்லை; உழைப்பாலும் விளைவில்லை என்றே பொருளாகும்.
இனி, செய்கின்ற செயலுள் ஒரொவொருகால் காலநிலை, விலை ஏற்ற இறக்க நிலை, போட்டிகள், பொருள் உருவாக்க மிகுதி, கருவிச் சேதம், ஊழியர் ஒத்துழைப்புக் குறைவு, உழைப்புக் குறைவு முதலியவற்றால் நாம் எதிர்பார்த்த ஊதியம் வராமற் போகலாம்; அல்லது இழப்பு ஏற்படலாம். இவ்வெதிர்பாராத நிலைக்காக நாம் மனம் சோர்ந்துவிட வேண்டியதில்லை என்பதே இக்கட்டுரைப்பகுதியின் அறிவுறுத்தமாகும்.
மேலும், ஊதியம் என்பதும், இழப்பு என்பதும் பொருளளவாக மட்டுமே கணிக்கப் பெறும் கூறுகள் அல்ல.
2. பொருள் வருவாய்க் கணக்கீடு
பொருள் வருவாய்க்காக மட்டுமே ஒரு செயல் அல்லது வினை தொடங்கப் பெற்றதால், அச்செயலில் நாம் கணக்கிட்டு எதிர்பார்த்த பொருள் வராமற் போனால், அது பொருளிழப்பாகும். அவ்வாறின்றி, நாம் எதிர்பார்த்த அல்லது எதிர்பார்ப்புக்கு மேல் அல்லது சிறிது குறைவாக வருவாய் வருமானால் அது பொருளுதியமாகும்.
பொருள் வருவாயின்றி, ஒரு கொள்கைப் பரப்புக்காக ஓர் இலக்கு அல்லது நோக்கத்திற்காக, நாம் ஒரு செயலில் ஈடுபடுவதாக வைத்துக் கொள்வோம். அக்கால் ஊதியமும் இழப்பும், பொருளை மட்டுமே அடிப்படையாக வைத்துக் கணக்கிடப் பெறுதல் வேண்டும். அஃதாவது ஊதியம் என்பது பொருட்பயனாகவும் இருக்கலாம்; செயல் பயனாகவும் இருக்கலாம். அதேபோல் இழப்பு என்பதும் பொருளிழப்பாகவும் இருக்கலாம்; அல்லது செயலிழப்பாகவும் இருக்கலாம். இவ்விடத்தில் இரண்டு நிலைகளை வைத்தே ஊதியமும் இழப்பும் கணக்கிடப் பெறுதல் வேண்டும், அக்கால், கீழ்வரும் சமன்பாடுகளின்படி ஊதிய இழப்பு கணக்கிடப்பெறும்.
1. பொருள் + உழைப்பு = வருவாய் முதல்>(+) ஊதியம்.
2. பொருள் இழப்பு = வருவாய் - முதல்>() இழப்பு
3. செயல் விளைவுக் கணக்கீடு
3. பொருள் கொள்கை + உழைப்பு= பொருள் வருவாய் + - கொள்கை விளைவு >(+) ஊதியம்.
4. பொருள் + கொள்கை உழைப்பு = பொருள் வருவாய் (-) கொள்கைவிளைவு > பொருளுதியம் (-) செயலிழப்பு.
5. பொருள் + கொள்கை உழைப்பு = (-) பொருள் வருவாய் (+) கொள்கை விளைவு >+ செயலூதியம் - பொருளிழப்பு
4. பொருள், கொள்கை ஒப்பீட்டுக் கணிப்பு:
1. பொருளுதியம் மிகுதி, செயலூதியம் மிகுதி = முழு ஊதியம்.
2. பொருளுதியம் குறைவு, செயலூதியம் குறைவு = முழு இழப்பு.
3. பொருளுதியம் மிகுதி, செயலூதியம் குறைவு = பொருளுதியம்.
4. பொருளுதியம் குறைவு, செயலூதியம் மிகுதி = செயலூதியம்.
எனவே, பொருள் வருவாயை மட்டும் கருதுபவர்கள் மேற்கூறிய பொருள் வருவாய்க் கணக்கீட்டை மட்டும் அளவீடாகக் கொண்டு ஊதியம், இழப்புக் கணக்கிடலாம்.
பொருள் வருவாயுடன் செயல் விளைவையும் கருதுபவர்கள், செயல் விளைவுக் கணக்கீட்டின்படி கணித்துப் பொருள் கொள்கை ஒப்பீட்டுக் கணிப்பின்படி, ஊதியம், இழப்புக் கணக்கிடலாம்.
மேற்கூறிய முதல் சமன்பாட்டில் உள்ள, வருவாயில் கழிபட வேண்டிய முதல் என்பதில், கருவித் தேய்வு, எச்சரிக்கை வைப்பு முதலியவற்றையும், அரரவர் செயல் நிலைகளுக்கு ஏற்ப, சேர்த்துக் கணக்கிடலாம்.
5. இழப்பு கண்டு சோர்வுறாமை
இக்கணக்கீடுகளுக்குப் பின்னர் நாம் ஈடுபட்ட செயலில் உறுதியாக இழப்புதான் ஏற்பட்டது எனில், அதைக் கண்டும் உடனே சோர்வடைந்து விடுதல் வேண்டியதில்லை. மேலும் முயற்சி செய்வது நல்லது; இனி, மேன்மேலும் முயற்சி செய்வது நல்லது.
ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார் (593)
என்பது பேராசானின் பேருரை.
'ஏற்பட்ட இழப்பு எதனால் ஏற்பட்டது. அஃது ஏற்படாமல் காக்கும் வழியென்ன, அவ்விழப்பால், நாம் கொண்ட முதல் எவ்வாறு ஊறடைந்தது முதலியவற்றை யெல்லாம் நன்கு ஆய்ந்து சீர்தூக்கி, மேலும் இழப்பு நேராவண்ணம் நாம் விரும்பி மேற்கொண்ட நமக்குத் தெரிந்த வினையை மேன்மேலும் ஊக்கமாகச் செய்ய வேண்டும் என்றெண்ணிச் செய்வதே நாம் வெற்றியடையும் வழி என்று திண்ணமாக எண்ணிக் கொள்ளுதல் வேண்டும்.
இனி, எல்லா நிலைகளிலும், மிக எச்சரிக்கையாக இருந்து, வேறு புறக் காரணங்களாலோ, இயற்கை அழிவுகளாலோ, ஆளழிவுகளாலோ ஒரு பெரும் இழப்புக்குள்ளாகிய நிலையிலும் கூட, நாம் வருந்த வேண்டியதில்லை. யானை ஒன்று அம்பினது தைப்புக்குள்ளாகிய நிலையிலும் தன் ஊக்கத்தை இழவாதது போல், நாமும் மன, உடல் சோர்வுகளால் ஒரு வினையைக் கைவிட வேண்டியதில்லை.
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்
பட்டுப்பா டூன்றும் களிறு. (597)
என்னும் ஊக்கவுரையை என்றும் உயிருரையாகக் கருது.
இனி, புதிய ஒரு வினையை மேற்கொள்வதினும் பல இழப்புகளைக் கண்ட பழைய வினையை மேற்கொள்வதே சிறந்தது.
நம் முதலீட்டை முழுவதும் இழந்து வறுமையுற்றாலும் அதற்காகவும் நாம் வருந்தி நின்று, நம் முயற்சியைக் கைவிடுதல் நன்றன்று.
அற்றேம் என்று அல்லல் படுபவோ பெற்றேமென்று
ஒம்புதல் தேற்றா தவர். (626)
6. இழப்பே இல்லாத ஊதியமும் ஊதியமே இல்லாத இழப்பும்
ஊதியம் பெற்றவிடத்து நாம் மகிழவில்லையா! அது போல் இழப்பைப் பெற்றவிடத்து மட்டும் ஏன் நாம் மகிழக் கூடாது? அல்லது நம்மைத் தேற்றிக் கொள்ளக்கூடாது? மேலும் இவ்வுலகின் செயல்கள் யாவுமே நல்லதும் அல்லதும், ஏற்றமும் இறக்கமும், மேடும் பள்ளமும், இன்பமும், துன்பமும், மகிழ்வும், துயரமும், ஒளியும், இருளும், ஊதியமும், இழப்பும் என்னும் முறையில் தாமே நடைபெற்று வருகின்றன. இவற்றுள் ஒருவர்க்கு எப்பொழுதும், எந்நிலையிலும் நல்லதே, அல்லது மகிழ்ச்சியே அல்லது ஊதியமே நடைபெறும் என்று நினைப்பது எவ்வளவு அறியாமை இழப்பே இல்லாமல் ஊதியமாகவே வருமானால், அவ்வூதியத்தை உயர்வாக நாம் மதிப்போமா? இருளே இல்லாமல் ஒளியாகவே இருந்தால் நாம் ஓய்வு கொள்வது எப்படி? துரங்குவது எப்படி? எப்பொழுதும் உடல் வேலை செய்து கொண்டிருக்க முடியுமா? உடல் ஓய்வு கொள்வதற்குத்தானே இருள், தூக்கம் எல்லாமும், துரக்கம் இன்றி ஊக்கமாகவே இருந்தால் உடல் மிக விரைவில் அழிவுறாதா? இவற்றை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும். இழப்பே இல்லாமல் ஊதியமாகவே இருந்தால் அவ்வூதியத்தால் என்ன பயன்? அதில் இன்பமே இருக்காதே. அப்பொழுது உள்ளச் செருக்கும், உடல் மதர்ப்பும், அறிவுக் கிறுக்குமன்றோ ஏற்பட்டுப் போகும்? பசியெடுக்காமல் உணவு உண்டது எப்படி? பசித்தால்தானே உணவு உண்ண ஆர்வம் வரும். பெய்த மழைத் தண்ணிர் எல்லாம் வற்றாமலிருந்து மேலும் மேலும் மழை பெய்து கொண்டே இருந்தால், ஊரும் உலகமும் நீருக்குள் அன்றோ மூழ்கிவிடும். அதுபோல் இழப்பில்லாமல் ஊதியமாகவே இருந்தால், மேலும் மேலும் வரும் வருமானத்தை எப்படிச் செலவிடுவது? தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று வரங்கேட்டவனின் கதையாகவன்றோ ஆகிவிடும். எண்ணிப் பாருங்கள்.
எனவே, இயற்கையின் நெறிமுறையே, இயக்கமே ஏற்றத் தாழ்வுடையதாகத்தான் இருக்கும். அதற்காக நாம் வருந்த வேண்டியதில்லை. நல்லவை ஏற்படும் போது மகிழ்கின்ற நாம், அல்லவை ஏற்படும்போது ஏன் வருந்தவேண்டும்? என்று கேட்கிறார் குறளாசான்.
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்? (379)
வாழ்க்கை முழுநலமாகவே இருப்பின் வாழ்க்கை சுவையாகவே இராது. நலத்தை எதிர்பார்க்க வேண்டும். அது தானே வந்தால் மதிப்பிழந்துபோகும். எதிர்பார்த்தல், ஏங்குதல், ஆசைப்படுதல் என்ற உணர்வுகள் இருந்தால்தான் ஒரு பொருளோ, நிலையோ, நிகழ்ச்சியோ மதிக்கப்படும்; வரவேற்கப்படும். எதிர்பார்ப்புதான் வரவேற்பை உருவாக்கும். அப்பொழுதுதான் அவ்வரவால் மகிழ்வு இருக்கும். இல்லையானால் இயல்பான நிகழ்வாக அஃது ஆகிவிடும். இயல்பாக இருப்பதற்குப் பெருமை இராது; அதனால் சுவையும் இராது; சுவையில்லையானால் வாழ்க்கையே இல்லை. துய்ப்புதான் வாழ்க்கை. துய்ப்பு என்பது இரண்டு எதிர் நிலைகளையும் உணர்ந்த நிலையில் ஏற்படுவது, காரத்தையும், புளிப்பையும், கசப்பையும் உணரவில்லை யானால், உவர்ப்பையும்,துவர்ப்பையும், இனிப்பையும் உணர முடியாது. எனவே இரு கூறுகளும் கலந்த வாழ்க்கையில் இரு கூறுகளையும் நாம் துய்க்கவில்லையானால், துய்ப்பு என்பதற்கே பொருளில்லை என்பதை உறுதியாக நாம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே, செயலில் தோல்வி, இழப்பு, ஏமாற்றம், எதிர்பார்த்தது கிடைக்காமை என்பவை பற்றியெல்லாம் கருதி ஊக்கத்தை இழப்பதோ, செயலைத் துறப்பதோ, இடிந்துபோவதோ, செய்த அல்லது அறிந்த செயலை விட்டுவிட்டு வேறொரு செயலைக் கைப்பற்றுவதோ கூடாது; தேவையில்லாதது என்பதைத் தெளிவாக உணர்தல் வேண்டும்.
20. துன்பம் கண்டு துவளாமை
1. தோல்வியும் துன்பமும்
செயலில் தோல்வி என்பது வேறு, துன்பம் என்பது வேறு. தோல்வி என்பது செயலினால் வருவது.துன்பம் செயல்களுக்கிடையில் வருவது, துன்பம் என்பது தோல்வியன்று. ஒரு செயலை வெற்றியாகச் செய்வதிலும் துன்பங்கள் உண்டு. தோல்வியாகச் செய்வதிலும் துன்பங்கள் உண்டு. இவ்விருவகைத் துன்பங்களும் அகமும், புறமும் ஆகும். செயலில் அகத்துன்பமானாலும் சரி, புறத்துன்பமானாலும் சரி, அவற்றால் நாம் மனச்சோர்வு கொள்ள வேண்டியதில்லை.
செயலினால் வரும் அகத்துன்பங்கள், செயல் முடக்கம் முதலீடு போதாமை, போதிய ஆள் துணையின்மை, கருவிப் பழுது முதலியவற்றால் வருவன. புறநிலைத் துன்பங்கள் உடல் ஒத்துழையாமை, எதிரிகள் இடையூறு, துணைப் பொருட் குறைவு, காலம் இடம் பொருந்தாமை முதலியவற்றால் வருவன. இவ்வகையான துன்பங்களுள் எது வரீனும், அத்துன்பத்திற்கான காரணத்தை ஆய்ந்து கண்டு, அதனைப் போக்குவதற்குரிய முறையைத் தேர்ந்து, அதைத் தீர்க்க வேண்டுமே அன்றி, அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டு, அறிவும், முயற்சியும், செயலும் முடப்பட்டு நிற்க வேண்டும் என்பதில்லை.
ஒரு செயலை இதுதான் நமக்குரியது என்றும், இதனால் தான் நாம் பயனோ, மகிழ்ச்சியோ, விளைவோ பெற முடியும் என்றும் கருதித் தேர்ந்து, ஈடுபாடு கொண்டு அதில் இறங்கிய பின், எதிர்பாராமல் வரும் அகப் புறத்துன்பங்களுக்காக நாம் அலமர வேண்டியதில்லை.
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை (669)
என்பார் அறவாசிரியர்.துன்பம் வருபம்பொழுது, அச்செயலால் நாமோ, பிறரோ அல்லது உலகமோ பெறப் போகும் அச்செயலின் விளைவையும் பயனையும் எண்ணிப் பார்த்துத் துணிவாக அதில் ஈடுபட வேண்டும்.
2. துன்பம் கண்டு கலங்கக் கூடாது
துன்ப நிலைகளால் உறுதியாக இருக்க வேண்டிய உள்ளம், கலக்கமுற்று உறுதியிழக்குமாயின், மீண்டும் அது உறுதி பெறுவது கடினம். உள்ளத்தின் உடைவு கண்ணாடியின் உடைவைப் போன்றது. சரி செய்யப்பெற்றாலும் வலிவற்றதாகவே இருக்கும். எனவே, கலக்கமுற்று, மனம் துன்பத்திற்குள்ளாகமல் காப்பது அறிவின் பாற்பட்டது. அறிவால், மனம் கலக்கமுறாமல் காத்தல் வேண்டும்.
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல். (668)
ஒரு செயலின்கண் ஏற்படும் துன்பத்தால் மனம் கலக்கமுறு மாயின்' செயலிலும் ஈடுபாடு கொள்ளாமை நேரும். எனவே, செயல் தாழ்த்தமும், முடக்கமும், தேக்கமும் வினை நீட்டிப்பும் ஏற்படும். அக்கால இடைவெளியால் செயல் நாளுக்கு நாள் மிகவும் தொப்வுறலாம். எனவேதான் திருவள்ளுவப் பேராசான், கலங்காமல், வினைசெய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லாமல், அதனால் நேரும் தேக்கத்தையும், கால நீட்டிப்பையும் செய்ய வேண்டாம் என்று வேறு எச்சரிக்கிறார். துளங்குதல் என்பது மன அசைவைக் குறித்தல் போலவே, மன அச்சத்தையும் குறித்து, மேற்கொண்டு இயங்காத நிலைப்பாட்டையும் குறிக்கும். துன்பத்தால் தாக்கமுற்ற மனம் முதற்கண் வருந்தும். பின் அந்த வருத்தத்தை ஏற்படுத்திய வினைக்கண் மேலும் செல்ல அச்சப்படும்ச அவ்வச்சத்தால் சோர்வுற்றுக் காலத்தை நீட்டிக்கும். அக்கால் செயல், மேலும் வலிவிழக்கும். எனவே, துளங்காது, தூக்கம் கடிந்து அஃதாவது சோர்வால் செயலிழந்து நிற்காது, மேன்மேலும் அச்செயலில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார் என்க. திருவள்ளுவப் பேராசான் மிகச் சிறந்த மனவியலாசிரியர்; ஆகையால், செயலின்கண் நேரும்.அசைவுகளிலெல்லாம் மனம் எவ்வெந்தத் தாக்கவுணர்வுகளுக்குட்படும் என்றும் அவற்றை எவ்வாறு தவிர்த்தல் வேண்டும் என்றும் உணர்த்தினார் என்க.
3. துன்பம் இல்லாத செயல் உலகில் இல்லை
ஒரு செயலின் கண், அச் செயலால் வரும் துன்பம் இருக்கவே செய்யும். துன்பமில்லாத செயல் உலகத்தில் ஒன்றும் இல்லை. தாம் எடுத்துக் கொண்ட செயலுக்கேற்றபடி துன்பமும் குறைத்தோ, மிகுத்தோ வரும். செயல் எளிதாயின் அதனால் வரும் துன்பமும் எளிதாகவே இருக்கும்; செயல் வலியதாயின் அதனால் வரும் துன்பமும் வலிதாகவே இருக்கும். வலிய செயலுக்கு எளிதான துன்பம் வராது; வலிய துன்பம் வரும்.
எனவே, செயலை வலிதாக எடுத்துக் கொண்டவர்கள் வலிதான துன்பத்தையே எதிர்கொள்ளும் அளவுக்கு மனத்தையும் உறுதியாக வைத்துக் கொள்ளவேண்டும். எந்தச் செயலையும் எவரும் எளிதாகக் கருதிவிடுதல் வேண்டா. சிறிய கல்லைப் பெயர்த்தெறிவதற்குச் சிறிய வலிவே போதும். பெரிய கல்லைப் பெயர்ப்பதாயின் பெரிய வலிவே வேண்டும். பெரிய கல்லைப் பெயர்ப்பதில், சிறிய கல்லைப் பெயர்ப்பதற்கு வேண்டிய சிறிய வலிவே போதும் என்று எண்ணிவிடக் கூடாது. சிறிய கல்லைப் பெயர்ப்பதற்கு நமக்கு இயல்பாக உள்ள உடல் வலிவே போதுமானதாக இருக்கலாம். ஆனால் பெரிய கல்லைப் பெயர்ப்பதற்குப் போதுமான உடல் வலிவுடன், மனவலிவும், அறிவு வலிவும் தேவையாக இருக்கலாம். அக்கால் உடல் துன்பமும், மனத் துன்பமும், அறிவுத் துன்பமும் இருக்கலாம். இன்னும் தேவையானால் ஒரு துணைக் கருவியும் வேண்டுவதாக இருக்கலாம். இந் நால்வகைக் கரணப் பொருள்களையும் கொண்டு ஒரு கருமத்தைச் செய்யுங்கால், அந்நால்வகைக் கரணப் பொருள்களாலும் வரும் துன்பத்தையும் எதிர்கொள்ள வேண்டுமன்றோ? அக்கால் துன்பம் அளவில் பெரிதாகத்தானே இருக்கும். அதற்காக மலைத்து நிற்க முடியுமா? மலைத்து நின்றால் செயல் என்னவாது? எனவே செயலை விரும்பியவர் துன்பத்தையும் எதிர்பார்க்க வேண்டும்; இன்னுஞ் சொன்னால் அத்துன்பத்தையும் விரும்ப வேண்டும்.
4. துன்பம் என்பதன் பொருள்
துன்பம் என்பது வேறொன்றுமில்லை; செயலால் வரும் எதிர்வுநிலை, ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு எதிரான, அதற்கு நிகரான ஒரு எதிர்ச் செயல் உண்டு என்று முன்பே கண்டோம் இல்லையா? அந்த இணையான எதிர் விளைவு தான் துன்பம்.துன்னுதல் என்றால் பொருந்துதல். இதன் வேரடியாகப் பிறந்த சொல்லே துன்பம். எனவே துன்பம் எனில் பொருந்தி வரும் எதிர்ச்செயல் என்பதே பொருள். ஒரு செயலுடன் பொருந்திவரும் எதிர்ச்செயலே துன்பம் எனப்படுவது. எதிர்ச்செயல் இல்லாமல் ஒரு நேர்ச்செயல் இல்லை. ஒரு கல்லைப் பெயர்க்கும் பொழுது, நாம் எத்தகைய ஆற்றலை அக்கல்லின் மேல் செலுத்துகிறோமா, அதே ஆற்றலை அக்கல்லும் நம்மேல் செலுத்துகிறது. நாம் நம்முடைய உடல் வலிவைக் கொண்டு ஆற்றலைக் கொண்டு அக்கல்லைப் பெயர்க்கும்பொழுது, அக்கல்லும் அதன் எடை வலிவைக் கொண்டு, நம்மை எதிர்த்துச் செயல்படுகிறது. அந்த ஆற்றலை வெல்லுவதே நாம் அந்தக் கல்லைப் பெயர்ப்பது. சிறுபையன் ஒருவன் அந்தக் கல்லை அசைக்கவும் முடியவில்லை என்பது, அச்சிறுவனின் உடல் ஆற்றலைவிட, அக்கல்லின் கன ஆற்றல் மிகுதியாக உள்ள தென்பதே பொருள்.
எனவே, ஒரு செயலால் வரும் எதிர்ச் செயலேதுன்பம், அவ்வெதிர்ச் செயலுக்கு மீறிய செயலாக, நம் ஆற்றலையும், அது மட்டும் போதாதபொழுது நம் மன ஆற்றலையும், அதுவும் போதாதபொழுது நம் அறிவாற்றலையும், அதுவும் போதாத பொழுது ஒரு துணைக் கருவியின் ஆற்றலையும் சேர்த்து அக்கல்லின் கன ஆற்றலை நாம் வெற்றிக் கொள்ள வேண்டும். அதுவே செயல்.
5. செயலும் எதிர்ச்செயலும் - விளக்கம்
இப்பொழுது இக் கல்லைப் பெயர்க்கும் செயலை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். நாம் பெயர்த்தெறியும் கல்லுக்கு உள்ள ஆற்றல் அதன் எடையே. அல்லது கணமே. ஆனால், அக்கனத்தை - அவ்வெடையைப் போலவே நம் கனமும் அல்லது எடையும் இருந்தால் நாம் எவ்வாறு அக்கல்லைப் பெயர்க்க முடியும்? அக்கல்லுக்கு அதன் எடை ஒன்றுமட்டுந்தான் ஆற்றலாக அமைகிறது. அதற்கு வேறு பிற ஆற்றல்கள் இல்லை. அஃதாவது அக்கல்லுக்கு மன ஆற்றலோ, ஒரு துணைக் கருவியைப் பயன்படுத்தும் ஆற்றலோ இல்லை. ஆனால் நமக்கோ நம் உடலின் எடையாற்றலைவிட, மன ஆற்றலும் அறிவாற்றலும் கருவியாற்றலும் கூடுதலாக இருக்கின்றன. எனவே, அக்கல்லின் எடையாற்றலை வெல்ல, நம் உடலின் எடையாற்றல் போதாத பொழுது, நம் மன ஆற்றலையும் பயன்படுத்துகிறோம்.
மன ஆற்றல் என்பது நாம் அக்கல்லைப் பெயர்க்க வேண்டும் என்று எண்ணுகின்ற எண்ணம். அதன் உறுதி. எண்ணம் ஒரு நுண்ணுணர்வுதானே. அதற்கு ஆற்றலுண்டா என்று கேட்கத் தோன்றுகின்றதா? ஆம் எண்ணத்திற்கு வலிவுண்டு எண்ணத்தின் வலிவு பொதுவாக நமக்குத் தெரிவதில்லை. எண்ணம் ஒரு வகை நுண்ணிய அலைகளை உண்டாக்குகிறது. ஆனால், அது காற்றைப் போலவோ ஒளியை அல்லது ஒலியைப் போலவோ, உணரப் பெறுவதில்லை. அவ்வெண்ண அலைகள் அவற்றினும் மிக நுண்ணிய வாகையால், பிறவற்றைப்போல் நாம் அதை அவ்வளவு எளிதாக உணர்வதில்லை. ஆனால், அவ்வலைகள் அவ்வொலி, ஒளி அலைகளைவிட, மிக நுண்ணியனவும், மிக வேகம் உடையனவும் ஆகும்.
மின்சார அலைகள் எவ்வாறு மின் விசிறியை - உந்ததத்தை இயக்குகின்றனவோ, அவ்வாறே எண்ண அலைகள் பருப்பொருள்களின் மேல் இயைந்து அவற்றை இயக்குகின்றன. ஆனால், பருப்பொருள்களை அவ்வலைகள் இயக்குவதை நாம் உணர்வதைவிட, உயிர்ப்பொருள்களை அவை இயக்குவதை நாம் எளிதில் உணர முடியும். எண்ண அலைகள் உயிராற்றலுடன் கலந்து உயிர்ப் பொருள்களை இயக்குகின்றன. அல்லது ஆட்சி செய்கின்றன. ஆனால், இயக்கப் படும் உயிர்ப் பொருள்களின் நிலைகளும், அவற்றின் ஆற்றல்களுக்கு ஏற்ப அவ்வெண்ண அலைகளுக்கு ஆற்றலை மிகுத்தோ, குறைத்தோ செயல்படுதல் வேண்டும்.
6. எண்ண அலைகள், ஆற்றல்கள்
பெரும்பாலும், நம்மிடத்துத் தோன்றும் எண்ண அலைகள் நம்முடைய உடலை இயக்கவே போதுமான அளவில் ஆற்றலில் இயங்குகின்றன; அவை பிறருடைய உடலை இயக்குமாறு எழுப்பப்பெற வேண்டுமானால், இயக்கப்படும் ஒருவருடைய உடலாற்றலினும், அவருடைய எண்ண ஆற்றலினும் வலிவுடையனவாக, எழுப்பப்பெறல் வேண்டும். மீண்டும் அந்தக் கல்லைப் பெயர்க்கும் கதைதான். முதலில், பிறருடைய எண்ண ஆற்றலைச் செயலிழக்கச் செய்யவும், அதன்மேல் அவருடைய உடலை இயக்கவும் போதுமான வலிவுடன் நம் எண்ண ஆற்றல் செயல்பட்டால்தான் நாம் பிறருடைய உடலை எண்ணத்தினால் இயக்க முடியும்.
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின். (676)
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின். (494)
தெரிந்த இனத்தொரு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல் (462)
எண்ணித் துணிக கருமம் (467)
அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின் (497)
பொருள் கருவிகாலம் வினையிடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல் (675)
கடனறிந்து காலம் கருதி இடனறிந்து
எண்ணி உறைப்பான் தலை. (687)
ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். (264)
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு. (595)
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு. (598)
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல். (677)
- என்பனபோல் வரும் இடங்களில் எல்லாம், நாம் மேலே கூறிய உண்மைகள் புலப்படுத்தப் பெற்றுள்ளவற்றை ஆய்ந்து கண்டு கொள்க. மேலும் இவற்றுள் எண்ணமும் அதற்கிடனாய் உள்ளமும் வேறு வேறு கரணிய கருமங்கள் பற்றி மாறி மாறிக் கூறப்பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் விரிக்கின் மிகப் பெருகுமாகலின் ஈண்டு இந்த அளவில் மட்டும் கூறப்பெற்றன.
7. எதிர்ச் செயலே துன்பம்
இனி, ஒரு செயலுக்கு எதிராக வரும் தாக்கச் செயலே துன்பமாகத் தோன்றுகிறது என்னும் உண்மை தெரியப்பெற்ற பின், இதையறிந்த அறிவுள்ளவர்கள் இத்துன்ப நிலைகளை உள்ளத்தளவிலேயே தவிர்த்துக் கொள்ளும் உணர்வுப் பாடறிந்தவர்க ளாதலின், இத்துன்பங்கள் இவர்களிடத்தும் தோன்றாவாம் என்க.
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். (622)
என்பதில் இக்கருத்தைப் பேராசான் புலப்படுத்துவார். இனி இதனினும் மேலாக, இத்தகையவர்கள் இத்துன்பத்திற்கே துன்பம் விளைவிப்பார்கள் என்பார் இவர்.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். (623)
இக்கருத்தையொட்டி இவர் திருக்குறளுள் எடுத்துரைக்கும் பல கருத்துகள், இன்னும் விரிவாகவும், விளக்கமாகவும் இது தொடர்பாக உண்மைகளை நமக்குத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
உடல் என்பது செயல் கருவி என்பதையும், எனவே செயல்களுக்கிடையில் வரும் துன்பங்கள் என்னும் எதிர் நிலைச் செயல்களால் உடல் ஒவ்வொரு நிலையிலும் தாக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும் என்பார் திருவள்ளுவர்.
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல். (627)
8. துன்பத்தை வரவேற்க வேண்டும்
எனவே, துன்பத்தை நாம் வரவேற்கவே வேண்டும். அத்துடன் மட்டும் அமையாமல் இன்பத்தை எதிர்பார்க்கவும் கூடாது என்பார் அவர். ஏனெனில் துன்பம்தான் உயிர்களுக்கு இயற்கையேயன்றி இன்பம் அன்று. துன்பங்களுக்கிடையில் தான் இன்பம் வரும் என்று எண்ண வேண்டுமேயன்றி, இன்பங்களுக்கிடையில் துன்பம் என்று எதிர்நிலையாக இயற்கைக்கு மாறாக எண்ணிக் கொண்டு, இடர்ப்படலாகாது என்பார் உலகியற்கைப் பேராசிரியராகிய திருவள்ளுவர்.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன் (628)
எனவே,
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். (629)
இனி, இவையே மட்டுமல்லாமல் துன்பத்தையே இன்பம் என்று கொள்ளுதல் வேண்டும் என்பதும் அவரின் மெய்ப்பொருள் சான்ற கருத்காகும்; அவ்வாறு கொண்டால்தான் தம் பகைவரும் தம்மை விரும்பும்படியான பெருமையை ஒருவர் பெறமுடியும் என்கிறார் அவர். அவ்வாய் மொழியைப் பாருங்கள்.
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு. (630)
9. இன்பம் துன்பம் செயலின் இருதன்மைகள்
இன்பம் என்பதும் துன்பம் என்பதும் ஒரே செயலின் இரண்டு தன்மைகள் ஒன்றை விட்டு ஒன்று இயங்குவதில்லை. அவ்வாறு இயங்கச் செய்யவும் முடியாது. உடம்பு செயலுக்குரியது. செயலோ துன்பத்திற்கும் இன்பத்திற்கும் இடையில் இயங்கும் ஒர் அசைவுப் பொருள். எனவே உடம்பு துன்பத்திற்கும் இன்பத்திற்கும் பொதுவான ஒர் அச்சு. நம்மால் இன்பத்தை ஏற்று நுகர்வதைப் போல் துன்பத்தை ஏற்று நுகர முடியாமல் போவதால், துன்பமே பெரிதாகத் தோன்றுகிறது. இன்னுஞ் சொன்னால் இன்பமும் ஒரு துன்பமே. துன்பமும் ஒர் இன்பமே. மெய்ப்பொருளடிப்படையில் கூறுவதானால், மிகுந்த இனிப்பு கசப்பாவுதுபோல், மிகுந்த இன்பம் மிகுந்த துன்பத்திற்கே அடிப்படையாக விளங்குவதால், உயிர் கூறுகளுக்குத் துன்பமே மிகுதியும் நுகரப் பெறும் உணர்வாக விளங்குகிறது. இன்பமோ சட்டென்று மாய்ந்துவிடும் ஓர் உணர்வாக விளங்குகிறது. எனவே, திருவள்ளுவப் பேராசான் உடம்பே துன்பத்தை இட்டு நிரப்பும் கலனாக உள்ளது என்றார். உடம்பே ஒரு துன்பம். அஃது உயிருக்குச் சுமை என்னும் மெய்ப்பொருள் உண்மையினையும் எடுத்து விளக்குகிறார். கீழே உள்ள இரண்டு திருக்குறட்பாக்களையும் கவனியுங்கள்.
இடும்பைக்கே கொள்கலன் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு. (1029)
மற்றுத் தொடர்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. (345)
10. துன்பமே இன்பம் ; இன்பமே துன்பம்
இனி, துன்பமே இன்பம்; இன்பமே துன்பம் என்னும் உண்மையை உணர்ந்தபின் இன்னோர் உண்மையையும் அதனை ஒட்டி நாம் உணர்தல் வேண்டும். அஃதாவது துன்பத்தை நாம் நுகரவில்லையானால் இன்பத்தையே நுகர முடியாது. இருள் விலகுவதுதானே ஒளி? எனவே இருள் இல்லையானால், ஒளியை நாம் எவ்வாறு உணர்வது?
'நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்' என்னும் உண்மை, 'ஒருவன் நிழலின் அருமையை, அதன் இன்பத்தை அறிய வேண்டுமானால், அவன் வெய்யிலிலே நின்று விட்டு அதன் பின் நிழலிலும் நின்றுதான் அறியமுடியும் என்பதையே உணர்த்துகிறது.
எனவே, துன்பம் என்பதைத் தவிர்க்கவோ அதனின்று தப்பவோ எவராலுமே முடியாது என்பதைத் தெளிதல் வேண்டும். காலமுழுவதும் ஒருவன் நிழலிலேயே இருந்துவிட முடியாது. இருந்துவிடவும் கூடாது. உடலியல் தன்மை அவ்வாறு அமையவில்லை. நிழலிலேயே உடல் தொடர்ந்து இருந்தால், அது நோயுறுகிறது. வெய்யிலிலும் நிழலிலும் மாறி மாறி இருந்து பயிலுமாறே உடலின் இயற்கைத் தன்மை அமைக்கப்பட்டிருப்பதை நாம் உணர்தல் வேண்டும். அதுபோலத்தான் நம் உள்ளத்தின் தன்மையும் பலவாறான உணர்வு நிலைகளை மாறி மாறி உணர்கின்றபடியாக இயற்கையால் அமைக்கப் பெற்றுள்ளது. 'இடும்பையாவது உள்ளத்தின் ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை' என்பார் பரிமேலழகர்.
உடலால் ஒருவன் வலுப்பெற்று ஊக்கமுறுதலை வீரம் என்று நாம் சொல்வதுபோல், உள்ளத்தால் ஒருவன் வலுப்பெற்று ஊக்கமுறுதலையும் வீரம் என்றே கருதுதல் வேண்டும். பருப்பொருள் தாக்கத்தை உரமுற்ற உடல் தாங்கிக் கொள்வதுபோல், நுண்பொருள் தாக்கமாகிய துன்பத்தையும் உரமுற்ற உள்ளம் தாங்கிக் கொள்கிறது.
இவ்வாறு துன்பத்திற்குத் துவளாமல் எதிர்நின்று ஏற்றுக் கொள்பவர்களையும் அவர்கள் செய்யும் வினைகளையும் திருவள்ளுவப் பேராசான், உயிர் அஞ்சா மறவர் (778), 'ஊறு அஞ்சா வன்கண்' (762, 'கூடி எதிர் நிற்கும் ஆற்றல்' (765), 'மனத்திட்பம்' (661), 'தாழாது உஞற்றுபவர்' (620), 'சிதைவிடத்து ஒல்கார் உரவோர்' (597), 'அறிவறிந்து ஆள்வினை' (618), 'அறிந்தாற்றிச் செய்தல்', (515), என்று பலபடப் பாராட்டிப் பெருமைப்படுத்திக் கூறுவார். அவர்களின் உழைப்பை 'எருது போல் உழைத்தல்' (624) என்றும் உவமை கூறி அமைவு செய்குவார்.
ஆகவே, ஒரு வினையையோ, செயலையோ மேற்கொண்ட ஒருவர், அகப்புறத் தாக்கங்களாகிய துன்பத்தாலோ வேறு பிறர் செய்யும் தடைகளாலோ, பொருள் தொய்வுகளாலோ இடை நிறுத்தம் இன்றியும் (472), இறுதி வரையிலும் (663) செய்து முடித்தல் வேண்டும் என்பதை உறுதியாகக் கொள்ளுதல் வேண்டும்.
21. துன்பம் வரும்பொழுது தவறான வழிகளைக் கடைப்பிடியாமை
1. நேர்மை நெகிழ்ச்சியே குற்றம்
மாந்தன் எப்பொழுதுமே நேர்மையாளனாக இருப்பதில்லை. குற்றமற்றவனாகவும் விளங்குவதில்லை. எனவே, தவறு செய்பவனாகவே இருக்கிறான். இன்னும் சிலர் சில நேரங்களில் பிறர்க்குக் கொடுமை செய்யவும் துணிந்து விடுகின்றனர்.
மாந்த மனவியல்படி நேர்மையின்றி இருக்கத் தேவையில்லை. நேர்மையுணர்வும், குற்றமற்ற உணர்வும், உயர்ந்த மன உணர்வுகள். மாந்தன் விலங்குணர்வினின்று படிப்படியாக விலகித்தான் மாந்தவுணர்வு பெறுகிறான். இனி, மாந்தவுணர்வினின்று உயர்ந்து மீமிசை மாந்த உணர்வும் பெற்று உயர்தல் வேண்டும். இல்லெனில் மாந்த நிலைக்கே பொருளில்லாமற் போய்விடும். விலங்குக்கும் மாந்தனுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.
ஒரு மாடு தன் உடைமையாளர்க்கு உரிமையில்லாததும், வேறொருவர்க்கு உரிமையுடையதுமான ஒர் அயலார் நிலத்தில், தான் புல்மேயக் கூடாது என்று எண்ணுவதில்லை. அதேபோல், வேறொரு மாட்டுக்குரிய உணவைத் தான் உண்ணக்கூடாது என்று கருதுவதில்லை. தனக்கு உரிமையான உணவைத்தான் தான் உண்ண வேண்டும் என்னும் நேர்மை உணர்வு பறவைகளிடமும் இல்லை; விலங்குகளிடமும் இல்லை. ஆனால், அவற்றினும் உயிர்வளர்ச்சி நிலையிலும், உள வளர்ச்சி நிலையிலும் மிக முன்னேற்றம் அடைந்த மாந்தனிடம் அவ்வுணர்வுகள் இருக்கக் கூடாது அன்றோ?
ஒரு செயலில் வினையில் ஈடுபட்ட ஒருவர் அதனைச் செய்து முடிக்கும் வரையில், தனக்குள்ள உரிமைகளையும் உயர்வுத் தன்மைகளையும் உணர்ந்து செயல்பட வேண்டுவது மிகவும் இன்றிமையாதது.
2. பிறரை வஞ்சியாமையே நேர்மை
பெரும்பாலும், செயலில் நேர்மையாக நடக்க விரும்பும், அல்லது நடக்கும் ஒருவர், அச்செயலில் துன்பங்கள் எதிர்ப்படும்பொழுதுதான், அந்நேர்மையில் நெகிழ்ச்சி காட்டுகிறார். பிறகு தம் செயல் வலுப்பெற வேண்டும் என்பதற்காகப் பல தவறான வழிகளைக் கடைப்பிடிக்கிறார். இன்னும் சிலர் குறைந்த முயற்சியில் மிகுதியாகப் பணம் தொகுக்கப்பட வேண்டும் என்னும் பேராசையால், செயலின் தொடக்கத்திலிருந்தே நேர்மையில்லாத வழிகளையும் குறுக்கு வழிகளையும் பின்பற்றுவது பொதுவான உலகியலாகவே மாறி வளர்கிறது. செயலில் நேர்மையைக் கடைப்பிடிப்பது, அச்செயலின் நிலைப்பாட்டுக்கு நல்லதையே பயக்கும் என்பதை அனைவரும் அறிதல் வேண்டும். பிறரை வஞ்சித்து, ஏமாற்றித் திருடி, அல்லது பொய்க்கூறிப் புரட்டல் செய்து, ஈட்டுகின்ற பொருள், என்றேனும் ஒருநாள் அத்தீச்செயல்கள் வெளிப்படும்பொழுது, ஒருசேரப் போய்விடும் என்னும் உலகப் பொதுவுண்மையை நாம் உணர்தல் வேண்டும்.
அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. (659)
என்னும் அறவுரை, சாவிப்புப் (சாவம் போலக் கூறப்பெற்றதன்று. உலகியலடிப்படையில் கூறப்பெற்ற பொதுவுண்மையே ஆகும்.
தொழிலியலில், ஒருவர் முற்கூறிய தவறான வழிகளைக் கையாண்டு மிகுபொருள் திரட்டுவதாக வைத்துக் கொள்வோம். இதனால் தாக்குண்டவர் பலராக இருத்தல் வேண்டும்; எடுத்துக்காட்டாக, வாணிக நிலையில் ஒருவர் தாம் கொண்ட கொள்முதலீட்டுக்கு மேல் ஒன்றுக்குப் பத்தாக ஊதியம் வருமாறு கூறிப் பிறர்க்கு விலைபோக்குவதாக வைத்துக் கொள்வோம். அவ்வாறு செய்பவர் அந்த நிலையில் அவ்வப்பொழுது தம்மை மறைத்துக் கொண்டு செயல்படலாம். ஆனால், அரசு அதிகாரிகள் ஒருநாள் அவரை அணுகவும், அவர் தவறான முயற்சிகளைத் தெரிந்து கொள்ளவும் முற்படும்பொழுது, அவர் இதுவரை தவறாக ஈட்டி வைத்த பொருள் பறிமுதல் செய்யப்படலாம். அல்லது தாம் செய்த குற்றங்களுக்குத் தண்டமாகவோ, வழக்கு நடத்தவோ தாம் ஈட்டியவற்றுள் மிகுபொருளைச் செலவிட வேண்டியிருக்கலாம். நடைமுறைகளாலேயே ஊறுபாடு வந்தெய்துவதும் இயல்பானதே யாகும்.
3. துன்பம் வரும்பொழுதே நேர்மை இழக்கின்றோம்
இந்நிலையில், பொதுவான, தங்களுக்கு இயல்பான தாழ்ந்த மனநிலைகளுடன் செயல்படுபவர்களைத் தவிர்த்து, (ஏனெனில் அவர்கள் தாமே தம்மைத் திருத்திக் கொண்டால் தான் உண்டு) செயல்களுக்கிடையில் வரும் துன்பங்களைத் தாளமுடியாமல், தொடக்கத்தில் நேர்மையாக நடந்து கொண்டு, இடையில் அதே நேர்மையுடன் இருக்கவியலாமல், தம் நிலைகளினின்று விலகி, நேர்மையில்லாத வழிகளைக் கடைப்பிடிக்க முற்படுபவர்களுக்குச் சில சொல்லியாகல் வேண்டும். அத்தகையவர்கள் துன்பங்களின் பொருட்டாகவே தவறான நெறிகளில் செல்ல முற்படுவர். இனி, இவர்களையுமல்லாமல் இயல்பாகவே எந்தத் தாழ்வான நிலையிலும், தங்களை நேர்மை வழிகளிலிருந்து தாழ்த்திக் கொள்ளாதவர்களுக்கும் நாம் கூறுவது ஒன்றுமில்லை. அத்தகையவர்களை அசைவற்ற தெளிவான தன்மையுடை யவர்கள் என்று திருக்குறளாசான் பாராட்டுகிறார்.
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். (654)
திருக்குறளில் வினைத்துய்மை என்னும் அதிகாரத்துள் கூறப்பெற்ற அனைத்துக் கருத்துகளும் உலகியல் பொருத்தம் உடையனவே, செயல் முனைப்புக் கொண்ட அனைவராலும் கடைப்பிடிக்கப்பட வேண்டுவனவே.
4. கீழ்மைச் செயல்கள்
தவறான, நேர்மையற்ற முறையல்லாத பழி தருகின்ற குற்றந்தருகின்ற, இழிவான, கீழ்மையான செயல்களைப் பேராசான், நன்றி பயவா வினை (652) ஒளிமாழ்கும் செய்வினை அஃதாவது பெருமையைக் குலைக்கும் செயல் (653), இழிவான செயல் (55, எற்றென்று இரங்கும் அஃதாவது எதற்கு இவ்வாறு செய்தோம் என்று பின்னர் வருத்தப்படுகின்ற செயல் (65), நல்லவர்கள் பழிக்கும் செயல் (65), பழிகளைத் தழுவிய செயல் (557) தவிர்க்க வேண்டும் செயல் (658) பிறர்க்குத்துன்பத்தை உண்டாக்கும் செயல் (659), ஏமாற்றுச் செயல் (65) என்று பலவாறு அவற்றின் தன்மைகள் புலப்படுமாறு கூறுவார்.
மேலும், எத்தகைய தேவைக்குரிய, கட்டாயம் செய்ய வேண்டிய கடமை தழுவிய செயல்களே ஆனாலும் பெருமையைக் குறைக்கும்: மானத்தைக் கெடுக்கும்; அத்தகையவற்றைச் செய்யவே கூடாது', என்பதைப் பலவாறு வற்புறுத்துகின்றார், அறமுதல் பேராசிரியர்.
5. தவறான வழியில் செல்லாதவர்கள்
இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். (961)
கச் சிறந்த பேராளுமை உடையவர்கள் (Great Administrators) சிறப்பல்லாத இத்தகைய இழிவான வழிமுறைகளில் ஈடுபடமாட்டார்கள்.
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர். (962)
நல்ல, சிறந்த குடிப்பெருமை உடையவர்கள், தமக்குத் துன்பம் நேர்ந்து, பிறர்க்கு உதவமுடியாத நிலையிலும், துன்பங்களுக்கு இயல்பாக உள்ள பண்பு நலன்களில் தாழ்ந்துவிட மாட்டார்கள்.
வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று. (955)
மேலும், தீயவழிகளைக் கடைப்பிடித்துப் பொருள் திரட்டுதல், சுடாத பச்சை மண்சட்டியில் நீர் ஊற்றி வைப்பதற்கு ஈடானது. அந்த நீர், சட்டியையும் கரைத்துக் கொண்டு வெளியேறிவிடும் தன்மையைப் போல், எவ்வளவு காத்து வைத்தாலும் அப்பொருள், அக் காவலையும் உடைத்துக் கொண்டு வெளியேறிவிடும் தன்மையுடையது என்பது பேராசான் கருத்து.
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பகமட்
கலத்துள் நீர் பெய்திரீஇ யற்று - (660)
5. தவறான செயல்கள் வெற்றி பெற்றாலும் குற்றம் தரும்
இனி, இன்னொன்றை நாம் தவறாக எண்ணிக் கொள்கின்றோம். ஒரு செயலைத் தவறான வழிகளைக் கடைப்பிடித்து வெற்றியாகச் செய்து முடித்துவிட்டபின், அதனால் பிறகு தீங்கு வராது என்று நினைக்கின்றோம். அது சரியான முடிவன்று.
மாணவப் பருவத்தில் மிகவும் தொடக்கநிலைக் கல்வியில் கூட, தவறான் படிப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொடுத்து, அதன் அடிப்படையில் உயர்கல்வியும், மிக மேற்பட்ட கல்வியும் பெற்று, மிக மேற்பட்ட பணிகளுக்குப் போயிருந்த அதிகாரிகள் சிலர், பின்னர் நெடுங்காலம் கழித்துக் கண்டுபிடிக்கப்பெற்றுத் தாழ்ச்சியும் தண்டனையும் பெற்ற பல செய்திகளை உலகியலில் காண்கின்றோம்.
எனவே தவறான வழிகளைப் பின்பற்றி ஒரு செய்லை வெற்றியுடன் செய்து முடித்துவிட்டதாக எண்ணிவிட வேண்டாம் செயல் முடிந்து மிகவும் பிந்திய காலத்தில்கூட முன்னர் நல்விளைவை உண்டாக்க உதவிய தவறான செயல்கள், திடுமெனத் தீமைகளைத்தரும் என்று எச்சரிக்கை செய்வார், திருக்குறள் பேராசான்.
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும். (658)
7. குற்றத்திற்குக் காரணங்கள்
மாந்த இனத்தில் நேர்கின்ற குற்ற நடவடிக்கைகள் அனைத்துக்கும் பெரும்பாலும் மிகு ஆசை, பொறாமை பகையுணர்வு, வெறுப்பு, வறுமைத் துன்பம் முதலிய அகப்புறத் தாக்கங்களே காரணங்கள் ஆகும். இவற்றுள்ளும் இல்லாமையென்னும் வறுமையால் ஏற்படும் துன்பமே அனைத்துக் குற்றங்களுக்கும் தலையாய காரணமாக இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
வறுமைத் துன்பம் இருவகையானது. இல்லாமல் துன்பப்படுவது; இருந்து இழந்து துன்பப்படுவது இவ்விரண்டுள்ளும் கூட இல்லாமைத் துன்பத்தைவிட இருந்து இழக்கும்துன்பமே மாந்தனைக் குற்றம் செய்யத் தூண்டுகிறது.
ஒரு குழந்தை தன்னிடம் இல்லாத ஒரு பொருளுக்காக வருந்துவதில்லை. அதனிடம் ஒரு பொருளைக் கொடுத்து விட்டுப் பின்னர் அதை வாங்கும்பொழுது, அதன் இழப்பை அதனால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அந்தப் பொருளே வேண்டு மென்று அழுகிறது; அடம் பிடிக்கிறது; சினம் கொள்கிறது. வேறு பொருள்களைக் கொடுத்தால் அவற்றைத் தூக்கி எறிகிறது. அல்லது சேதப்படுத்துகிறது. மாந்த மனம் இத்தகையதுதான்.
ஒருவர் ஒரு செயலை ஊதியத்துக்காகச் செய்ய முற்படுகிறார். (ஊதியம் என்பது பொருள், பதவி, புகழ் ஆகிய மூன்றையுமே உள்ளடக்கியது. அச்செயலால், தமக்கு ஊதியம் வரவில்லையாயால் மனம் சோர்வடைகிறது. இனி அதைவிட இழப்பு ஏற்படுமானால் அவரால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அந்த நிலையில் மனம் அவ்விழப்பை எவ்வகையிலேனும் ஈடுசெய்ய விரும்புகிறது. அதனால் பின்னர், தனக்கோ பிறர்க்கோ வரும் கேடுகளை எண்ணிப் பாராமல், தனக்கேற்பட்ட இழப்பைச் சரி செய்ய விரும்புகிறது. இத்தகைய நிலைதான் நம்மில் பெரும்பாலார்க்கு ஏற்படுகின்ற கோணலான போக்குக்குக் காரணமாகிறது.
நமக்கு ஏற்படுகின்ற துன்பத்தை இடர்ப்பாட்டை இழப்பை சறுக்கலை ஈடுகட்டிக் கொள்ள உடனே ஒரு வழியைக் கடைப்பிடிக்கத் துடிக்கிறோம்; விரைவுப்படுகிறோம். அந்தத் துடிப்பிலும் விரைவிலும் நாம் அச்சூழ்நிலையை வென்றெடுக்கக் கடைப்பிடிக்கப் போகும் வழி, சரியானதா - தவறானதா பழிவாங்கக் கூடியதா - குற்றம் தரக்கூடியதா என்றெல்லாம் ஆராய முற்படுவதில்லை. அதற்கென எண்ணிப் பார்க்க நேரத்தை ஒதுக்கிக் கொள்ளும் பொறுமையும் அமைவும் நமக்கு இருப்பதில்லை. உடனே நமக்குட்பட்ட, அல்லது நம் நண்பர்கள் கூறுகின்ற வழியைப் பின்பற்றத் தொடங்கி விடுகிறோம்.
ஒரு செயலில் கேடு வருவதும் ஆக்கம் வருவதும் இயல்பு. அவை எதனால் வருகின்றன? கேடு வந்தால் ஏன் வந்தது என்று ஆராய்ந்து, அதைத் தவிர்க்கும் சரியான வழியை நாம் கடைப்பிடித்தல் வேண்டும். செயலில் ஏற்படும் குற்றங்களுக்காகவும் மனத்தை - நெஞ்சத்தை ஊறுப்படுத்திக் கொள்ளக் கூடாது. தவறான வழிகளைக் கடைப்பிடிப்பதன் வழி உள்ளம் - நெஞ்சம் ஊறுபடுகிறது; பின்னர் அது தொடர்ந்து அதுபோல் ஊறுபாடான, குற்றமான வழிகளிலேயே செல்லத் தொடங்கி விடுகிறது. இதைத் திருவள்ளுவப் பேராசான் கடிகிறார்.
கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. (115)
என்கிறார்.
8. நல்லதே வருவதானாலும் தவறானவற்றைத் தவிர்க்க
நல்லதையே தந்தாலும் கூட, நடுநிலைமை யில்லாமல் வருகின்ற ஊதியத்தை - ஆக்கத்தை அவ்வாறு எண்ணத் தோன்றிய அப்பொழுதே தவிர்த்து விட வேண்டும் என்பது அவர் கோட்பாடு.
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல் (113)
வறுமைத் துன்பம் எய்தினாலும் இழிவான செயல்களைச் செய்து இன்பத்தைத் தேட வேண்டாம். அப்படித் தேடுபவர்கள் முரட்டுத் துணிவுடையவர்கள்; பழிக்கு அஞ்சாதவர்கள்; உள்ளம் நடுங்காதவர்கள்; நடுநிலையில்லாதவர்கள் தெளிவில்லாதவர்கள், அறிவில்லாதவர்கள் என்று கடிகிறார் பெருந்தகை.
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்குற்ற காட்சி யவர். (654)
தங்களுக்கு இல்லையே; பிறருக்கு இருக்கிறதே என்ற பொறாமையும் ஆசையும் கலந்த உணர்வோடு எந்தத் தவறான செயலிலும் ஈடுபட்டு விடக்கூடாது அப்படி ஈடுபடுபவர்கள் இழிந்தவர்கள்: மூடர்கள்; புலனுணர்வுக்கு அடிமைப் பட்டவர்கள்.
இலமென்று வெஃகுதல் செய்யார்; புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர் (174)
இனி இப்பொழுது வந்து கொண்டிருக்கின்ற பயன் அல்லது நன்மை அல்லது ஊதியம் இவற்றைவிட, இன்னமும் மேற்கொண்டு வருகின்ற கூடுதல் பயனையும், Gr೯೬೧೯ಾಬು, ஊதியத்தையும் எண்ணிப் பார்த்துக் கணக்கிட்டு, நேர்மையல்லாத பழி தருகின்ற செயல்களைச் செய்பவர்கள் இழிவுகளுக்காக வெட்கப்படாதவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்னும் பேராசைகொண்ட தந்நலம் உடையவர்கள் என்பார் பேராசிரியர்.
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர். (172)
மேன்மேலும் பழிகளும் குற்றங்களும் வந்து கொண்டே இருக்குமாறு இழிவான அல்லது தவறான செயல்களைச் செய்வதால் வருகின்ற நலன்களை, ஊதியங்களைக் காட்டிலும், அவ்வாறு செய்ய முற்படுவதற்குக் காரணமாக இருந்த, மிகுந்த வறுமைத் துன்பமே இல்லாமையே சிறந்தது.
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. (657)
நடுநிலை தவறி, நல்ல ஊதியம் அல்லது ஆக்கத்தை மிக விரும்பிப் பேராசைப்பட்டுத் தவறான வழிகளைக் கடைப்பிடிப்பதால் வரும் பின் விளைவுகள், அப்படிச் செய்பவர்க்குத் தண்டனையைத் தருவதோடு மட்டும் நில்லாமல், அவரையும் அவரைச் சார்ந்த குடும்பத்தையும், மற்றும் உறவினர்களையும், அவர்கள் அனைவரும் சேர்ந்த குடியையும் கூடத் தாழ்த்தி அழித்துவிடும் என்று கடுமையாக எச்சரிப்பார் அறவியல் பேராசிரியர்.
நடுவின்றி, நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். (171)
எனவே, நாம் செய்ய எடுத்துக்கொள்ளும் செயல் அல்லது வினை சரியானது, நல்லது, சிறந்தது, நமக்கும் பிறர்க்கும் இன்பம் தருவது என்று தெளிந்து, தெரிந்து, தொடங்கிவிட்டால், பின்னர் அதைச் செய்கின்றபொழுது துன்பங்கள் அடுக்கடுக்காக, வகை வகையாக, வந்தாலும், மனம் தளர்ச்சியில்லாமல், தாழ்ந்துவிடாமல், திசை திரும்பாமல், நல்லது அல்லாத வழிகளில் போகாமல், தொடர்ந்து, துணிவோடு செய்தல் வேண்டும் என்பார் அறிவாசான்.
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை (660)
9. இல்லையே என்றும் தீமையைக் கடைப்பிடியாதே
இந்த வகையில் திருவள்ளுவப் பேராசான் இன்னும் இரண்டு கருத்துகளை மிகத் தெளிவாக நமக்கு எடுத்துக் கூறுகிறார். அவை இரண்டையும் நாம் எப்பொழுதும் மனத்தில் இறுத்திக் கொண்டு, நம் வாழ்க்கையின் கடைசிப் பொழுது வரையில் கடைப்பிடித்து ஒழுகுதல் வேண்டும்.
அவற்றுள் ஒன்று, ஒருவன் தனக்குத் தான் மேற்கொண்ட நல்ல செயலில் பெரு நன்மை கிடைக்கவில்லையே என்றோ, வருவாய் வரவில்லையே என்றோ, வறுமை வந்துற்றதே என்றோ, பின்பற்றத் தகாதனவாகிய தீய செயல்களையோ, அல்லது வழிகளையோ, செய்தல் கூடாது. அவற்றில் ஒரு வகையான நலன் கிடைக்கின்றது என்பதற்காக, அவ்வாறு செய்வானாயின், பின்னர் அந்தச் செயலால் வரும் நன்மைகளையும் ஏற்கனவே அவனுக்கிருந்த பல நலன்களையும் சேர்த்து இழந்து போவான்' என்பார்.
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து. (205)
இக்குறளில் உலகில் தீயவை செய்யப்படுவனவெல்லாம் பெரும்பாலும் இல்லை என்னும் நிலையில் செய்யப் பெறுவனவே என்று உலகியல் பொதுவுண்மை சுட்டப்பெறுவதை ஆழ்ந்து நோக்குதல் வேண்டும். தவறான வழிகளைக் கடைப்பிடிப்பதற்கு, இல்லையே, வேறென்ன செய்வது என்பதே பெரும்பாலார் காரணம் காட்டுவதால், 'அவ்வாறான நிலையிலும் கூட தீயவை செய்யக்கூடாது; அவ்வாறு செய்தால் உள்ளதும் போய்விடும் என்கிறார். இவ்வுண்மையை ஏதோ மந்திர நோக்காக அவர் கூறவில்லை. மனவியல், உலகியல் அடிப்படையில் நிகழ்கின்ற செயல்களைக் கொண்டுதாம் கூறுகிறார் என்பதை உணர்தல் வேண்டும்.
எவ்வாறெனில், தீயவை செய்தாவது இல்லாமையை அல்லது வறுமையைப் போக்கவேண்டும் நலன்களைத் தேட வேண்டும் என்று எண்ணுபவர்கள், தீயவற்றால் இயல்பாகத் தொடக்கத்தில் வரும் நன்மைகளைக் கண்டு மேலும் கூடுதலான நன்மைகளை விரும்பி, மேன்மேலும் கூடுதலான தீமைகளில் ஈடுபட முயல்வார்கள். அக்கால் அவர்களின் தவறான செயல்கள் அண்டை அயலாராலும் ஆட்சியதிகாரிகளாலும் காவலர்களாலும் கண்டு கொள்ளப் பெறுதலும், அவர்கள் தீயவற்றால் வந்த நலன்களை மட்டுமே பிரித்துணராது, ஒட்டுமொத்தமாக, முன் நேர்மையில் வந்த நலன்களையும் பொருளீட்டங்களையும் தீமையிற் கொண்டனவாகவே கருதி, அவற்றையும் சேர்த்துக் குற்றப்படுத்தி அவற்றையும் ஒருங்கே கைப்பற்றிக் கொள்ளலும், உலகியல் நடைமுறையாகுமன்றோ? இவ்விளைவைப் 'பெயர்த்து என்னும் சொல்லால் உணர்த்தினார், உளவியலும் உலகியலும் முற்ற உணர்ந்த மூதறிஞர் என்க.
10. நல்ல குடிமரபு உடையவர் குற்றச் செயல்கள் செய்யார்
இனி, மேற்கூறப்பெற்ற உண்மையின் அடிப்படையில் இன்னொரு மேல்விளைவையும் குறிப்பர், அப்பேரறிஞப் பெருந்தகை.
நல்ல மரபு வழிப்பட்ட குடிமைச் சிறப்புடையவர்கள், சில நிலைகளில், தம் குடிப்பெருமை முன்னோர் சிறப்பு இவற்றையெல்லாம் எண்ணிப்பாராமல், சூழ்ச்சியாலும், ஏமாற்றாலும் பிறரை வஞ்சித்துத் தீமையான வழிகளில் நலமும் வளமும் தேடிக் கொள்வார்கள். அக்கால், இவர்கள் செய்யும் தவறுகளால், இவர்களின் முன்னோர் பெருமையும் அஃதாவது இவர்களின் மரபு வழிப்பட்ட குடிப்பெயரும் தாழ்ச்சியுறும். எனவே, தங்களுக்கு மட்டுமன்றித் தங்கள் முன்னோர்க்கும் இழுக்கு வரக்கூடாது என்று எண்ணுபவர்கள் பிறரை ஏமாற்றித் தீயவழிகளில் பொருளைத் தேடமாட்டார்கள் என்று கூறுவர், மாணவழி கூறும் அவ் வினைநலப் புரவலர்.
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார் (956)
எனவே, செயல்திறம் கொண்டவர்கள், எந்த நிலையிலும், தவறான வழிகளைக் கடைப்பிடித்துத் தம் செயல்களையோ, வாழ்வையோ நலப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஒரு செயலைச் செய்வதுமட்டுமன்றி, அச்செயலையும் திறம்படச் செய்யும் செயல்திறவோர்க்கு இதுவும் கவனிக்கப்பட வேண்டும் என்பதால், இதனை இவ்வளவு விரிவாகவும் விளக்கமாகவும் கூற வேண்டி வந்தது.
22. ஒருவினை செய்பவர் துணை வருவாய் கருதி வேறு வினைகளில் ஈடுபட விரும்புதல்
1. தேவைகள் ஆசைகள்
உயிர்களுக்குத் தேவை என்பது ஓர் இயற்கை நிலை பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உடல் தேவை என்னும் ஒர் இயற்கை நிலையை மட்டுமே தம் முழு வாழ்வாக அமைத்துக் கொண்டுள்ளன. உள்ளத் தேவையும் அறிவுத் தேவையும் சிறவாமல், உடல் தேவை மட்டுமே சிறப்பாய் அமைந்த ஐயறிவு உயிர்க் கூறுகளுக்கு அத்தேவையுணர்வின் நிறைவே அவற்றின் வாழ்வெல்லையாகும். உடலின் தேவைகள் உணர்வும், ஊறுணர்வும். எனவே, உணவுத் தேவையும் ஊறுணர்வு ஆகிய உயிர்ப்பெருக்க உணர்வுத் தேவையுமே பறவையினங்களின் விலங்கினங்களின் வாழ்வாக அமைந்து கிடக்கின்றன. உள்ள உணர்வுத் தேவையும் அறிவுணர்வுத் தேவையும் அறவே அவற்றுக்கில்லை. அஃதாவது உணவுத் தேரைக்காகவும் ஊறுணர்வுத் தேவைக்காகவும் அவற்றின் உடல்கள் இயங்குகின்றன. எனவே இரை தேடுவதும் உடல் இணைவுத் துணை தேடுவதுமே அவற்றிற்குப் போதுமான வாழ்வியல் உணர்வுகளாம். அவ்வுணர்வுகளின் தேவையை நிறைவு செய்வதே அவற்றுக்கான வாழ்க்கை முயற்சியர்கும்; அவற்றின் செயல் வெற்றியுமாகும்.
ஆனால், ஆறறிவு படைத்த மாந்தர்களுக்கு உடல் தேவையுடன் இன்னுஞ்சொன்னால் அதனை அடிப்படையாகக் கொண்டு உள்ள உணர்வும் அறிவுணர்வும் அவர்களின் கூடுதல் தேவைகளாக ஆகி, அவர்தம் வாழக்கையை மேலும் சிறப்புடையதாக ஆக்குகின்றன. உள்ளத்தின் தேவை ஆசையைப் பற்றி வளர்கிறது. அறிவுத்தேவை ஒரு நோக்கத்தை குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு தொடர்கிறது.
உள்ளத்தின் தேவை ஆசையாக முகிழ்த்து, அன்பாக மலர்ந்து, அருளாக மணந்து, ஈகமாக அஃதாவது தன்னை இழந்து கொண்டு கனிவும் நிறைவும் பெறுகிறது.
அறிவின் தேவை யாதாம் ஒரு குறிக்கோளாய்த் தோன்றி உழைப்பாய் உரம்பெற்று, உலகநலமாக மலர்ந்து தொண்டாக மணந்து, வீரமாக விளைந்து, செயற்கரிய செய்து புகழ்க் கனிவு பெறுகிறது.
இவ்விரண்டு உணர்வுக் கூறுகளும் விளக்கமும் வளர்ச்சியும் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் அறவே இல்லை. மாந்த இனம் பெற்ற பேறுகள் இவை. இயற்கைப் பேராற்றலால் மாந்தச் சிறப்புயிர்களுக்கு வழங்கப்பெற்ற கொடைகள் இவை.
2. உள்ளத் தேவையும் அறிவுத் தேவையும்
உள்ளத்தின் தேவை, நீர்போல், வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஒடும் தன்மையது. இயங்கும் வல்லமையுடையது.
அறிவின் தேவை, நெருப்பு போல், பற்றிப் படரக் கூடியது. பொருள்களை உட்கவர்ந்து தன்னைக் கரைத்துக் கொள்ளும் தன்மையுது. அடங்கும் ஆழ்மை உடையது.
உள்ளத்தின் தேவையாகிய ஆசை துய்ப்பின் மேல் செலுத்தச் செலுத்த மிகுந்த வேகத்தில் எம்பிப் பாயும் ஆற்றலுடையது. அதுவே உடல் தோற்றத்திற்கும் அதன் இயக்கத்திற்கும் அடிப்படை
அறிவின் தேவையாகிய பொருளறிவுணர்வு, நுகர்வின் மேல் செலுத்தச் செலுத்த ஊன்றி ஒன்றும் தகைமையுடையது. அதுவே உயிர் மலர்ச்சிக்கும் பிறவி முடிவுக்கும் அடிப்படை.
உள்ள உணர்வே ஆற்றலாகிறது (Energy).
அறிவுணர்வே பொருளாகிறது (Matter)
உள்ளம் அறிவைத் துணைதேடும்
அறிவு உள்ளத்தின் துணைநாடும்.
உள்ளம் (ஆற்றல் Energy) அறிவிலும் (பொருள் Matter) ஊன்றும் தன்மையது; அதேபோல் அறிவு (பொருள்) உள்ளத்தொடும் (ஆற்றலோடும் இணையும் தன்மை உடையது. ஒன்றுக்கொன்று கவர்ச்சி உண்டு ஏனெனில் உள்ளம் பெண் தன்மையது. அறிவு ஆண்தன்மையுது அத்துடன், ஒன்றின் வலி மிகுந்தால் அஃது இன்னொன்றைத் தன்வயப்படுத்தும். எனவே உள்ளம் (ஆற்றல் Energy), அறிவாகவும் (பொருள் Matter) ஆகவும் அறிவு (பொருள்) உள்ளமாகவும் (ஆற்றலாகவும்) மாறும்.
உள்ளம் அறிவில் ஊன்றி வலுப்பெறும்பொழுது உள்ளத்தின் அலைவால் (அஃதாவது ஆசையால் பொருள் இயங்குகிறது; செயல் தொடங்குகிறது. அதனால் உலகமும் நடைபெறுகிறது. அறிவு உள்ளத்தோடு (ஆற்றலொடு Energy) இணைந்து வலுப்பெறும் பொழுது அறிவின் அழுத்தத்தால் உள்ளம் அமைவுறுகிறது; செயல் நிலை பெறுகிறது; உலகம் ஒடுங்குகிறது.
3. செயல் செய்யச் செய்ய ஆசை தோன்றும்
எனவே, செயல் செய்யச் செய்ய ஆசை பற்று தோன்றிக் கொண்டே இருக்கும். ஆசை (பற்று தோன்றத் தோன்றச் செயல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இவ்வுண்மைகளைக் கீழ்வரும் ஒண்திங் குறள்களால் நன்கு புலப்படுத்துவர் மெய்ப்பொருளாசிரியராகிய திருவள்ளுவர்,
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞசான்றும்
தவாஅப் பிறப்பினும் வித்து.
சென்றவிடத்தான் செலவிடாது தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. (422)
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும். (367)
அவாஇல்லார்க் கில்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். (368)
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (005)
இவ்வுண்மைகளை ஒரு தேவையளவில் மட்டும் இங்குக் கூறவேண்டியுள்ளதால் இம்மட்டோடு நிறுத்திக் கொள்ளுவோம்.
இவற்றின் கொள்பொருளாக நாம் அறிய வேண்டுவது என்னவெனில், செயல் செய்யச் செய்ய ஆசை அடங்காமல் மேலும் அதன் பயனாகிய விளைவு நலன்களிலேயே மனம் ஈடுபட்டு நிற்கும் என்பதுதான்.
4. பல்வகைத் திறன்கள்
எனவே, ஒரு வினையில் ஈடுபட்டார், அதிலுள்ள வருவாயையும் பிறநலன்களையும் பெறப்பெற, இன்னும் ஆசையாலும் திறமையாலும் உந்தப்பெற்று, மேலும் மேலும் தாம் மேற்கொண்ட வினையிலேயே ஆழமாகவும் அகலமாகவும் ஈடுபட விரும்புவதுடன், தமக்கு அக்கம் பக்கத்திலுள்ளாரைக் கண்டு, அவர்கள் ஈடுபடும் நல்ல வருவாயும் நலன்களும் உள்ள பிற வினைகளிலும் கால் வைக்க விரும்புவது பெரிதும் இயற்கை உணர்வாக உள்ளது. அவ்வாறு விரும்புவது பிழையன்று என்பதுடன், தம் திறமையும் ஆர்வமும் அவ்வாறு ஈடுபட - இடங்கொடுப்பின், அது சிறப்பாகவும் கருதப்பெறும்.
பெரும்பாலும் அறிவுடையவர்கள், தம் ஆற்றலுக்கும், ஆர்வத்திற்கும், இயல்கின்ற தன்மைக்கு ஏற்ப, ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் சிறந்து விளங்குவது இயலுவதாகவே உள்ளது. தொழில் திறமும் கலைத்திறமும் பல்வேறு வகைப்பட்டனவாக இருப்பினும், பெரும்பாலான தொழில்களும் கலைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவே. எனவே, ஒன்றில் ஈடுபட்டால் அதற்கு இணையான அல்லது தொடர்பான தொழிலிலோ கலையிலோ ஈடுபடுவது பிழையாகாது; சிறப்பே ஆகும். ஒன்றில் இருக்கும் பொதுவான அறிவுத் திறனைச் சிறப்பான அறிவுத் திறனாக வளர்த்துக் கொள்வதென்பது அத்துணைக் கடினமானதன்று. சிறிது முயற்சியிலேயே பெரிதும் பயன் தருவது ஆகும். எடுத்துக்காட்டாக நூற்பும் (Spinning) , நெய்வும் (Weaving) அவை தொடர்பான அனைத்துத் தொழில்களும் சாயத்தோய்ப்பு (Dyeing), உருஅச்சடிப்பு (Disign Printing) முதலியவை இணைவானவையும் இணக்கமானவையுமான தொழில்களே. அதேபோல், ஓவியமும், சிற்பமும் இணைவுக் கலைகளே. ஒளிப்படப்பிடிப்பும் (Photography), படக்கட்டை (Block Making) செய்வதும் இணைவானவையே. இவைபோல் உள்ள தொழில்களும் கலைகளும், கலைத் தொழில்களும் அறிவியல் தொழில்களும் நிறைய உள.
5. துணைத் தொழிலானால் இணைத் தொழில்
இவ்வடிப்படை உண்மைகளை உணர்கின்ற அளவில் நாம் தெரிந்து கொள்ள வேண்டுவது என்னெனில், ஒருவர் ஒரு துறையில் திறமையுற்று, அது தொடர்பான செயலில் ஈடுபட்டு ஓரளவு வெற்றியுடன் நல்ல வருவாயை உடையவராக இருந்து, அவர் மேலும் வருவாயை ஈட்ட விரும்பி, வேறு ஏதாகிலும் துணைத் தொழிலில் ஈடுபடக் கருதினால், அவர் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கு அல்லது செயலுக்குத் தொடர்புடைய அல்லது இணைவுடைய தொழிலில் அல்லது செயலிலேயே ஈடுபடுவது நல்லது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.
தனிநிலையில் ஈடுபட விரும்புவார்க்கும் இந்த முறைதான், பொது நிலையில் ஈடுபட விரும்புவார்க்கும் இந்த முறைதான் உகந்தது என்று நாம் அறிதல் வேண்டும். பொது நிலையில் அஃதாவது பொதுத் தொண்டில் ஈடுபட விரும்புவார் ஒருவர் தம் துணை வருவாயைப் பெருக்கிக் கொள்ளக் கருதும் பொழுது, அப்பொதுத் தொண்டுக்குத் தொடர்பில்லாத ஒரு வினையில் அல்லது செயலில் ஈடுபாடு கொண்டால், அப்பொதுத் தொண்டும் கெடும்; அவருடைய தொழிலும் கெடும். இரண்டையும் கெடுத்துக் கொள்வது செயல் திறமாகாது என்பதை நாம் தெளிதல் வேண்டும் எடுத்துக்காட்டாக, இலக்கியத் திறமுடைய ஒருவர் தம் இலக்கியப் படைப்புப் பணியுடன் ஒரு துணைவினை செய்ய விரும்பும்பொழுது, வேறு வாணிகத்தில் ஈடுபடுவது, அவ்விலக்கியப் பணிக்கும், அவர் தொடங்கவிருக்கும் வாணிகத்திற்கும் ஒரேபொழுதில் கேடு செய்து கொள்வதாகும். அவர் வாணிகம் செய்து பொருளிட்ட விரும்பினால், அவரின் இலக்கியப் பணிக்குத் தொடர்புடைய பொத்தக அச்சீட்டகமோ, வெளியீட்டகமோ விற்பனையகமோ தாம் அவருக்குத் துணைத் தொழில்களாக அமைய முடியும். அவ்வாறாக சிலர், அவர்களுக்குத் தொடர்பற்ற தொழில்களில் ஈடுபடுவது, அவர் முன்னேற்றத்தைக் கெடுத்துவிடக் கூடியதாகிவிடும்.
வினையால் வினையாக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று (678)
என்னும் திருக்குறளின் கருத்தை நாம் ஒர்தல் வேண்டும். செய்கின்ற வினையாலேயே அதுபோலும் பிறிதொரு வினையை முடித்துக் கொள்ளுதல் வேண்டும். அது மதங்கொண்ட யானையால் அன்ன பிறிதோர் யானையைப் பிணித்ததோடு ஒக்கும். என்பது திருவள்ளுவப் பெருந்தகை கூறும் ஒரு வினையளவு ஆகும் என்க. இத்திருக்குறளுக்குச் சிறப்பு விளக்கமாகப் பரிமேலழகர், தொடங்கிய வினையானே பிறிதும் ஒரு வினையை முடித்தற்கு உபாயம் (உளவு ஆமாறு எண்ணிச் செய்க செய்யவே, அம்முறையான் எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம் என்றார்.
6. இரண்டு படகுகளில் கால் வைத்தல்
இனி, அவ்வாறு செய்ய முற்படுங்கால், நாம் கவனிக்க வேண்டிய கூறுகள் பல. அவற்றுள், ஒன்று, நாம் முன் தொடங்கிய வினையிலேயே முழுதும் ஈடுபட்டுள்ளோமா என்று எண்ணிப்பார்க்க வேண்டியது. ஒரு வினையில் ஒருவர் முழு நிலையில் ஈடுபாடு காட்டாமலேயே இன்னொரு வினைக்குத் தாவக்கூடாது. முதலில் தொடங்கிய வினையில் முழு அளவும் முழு முயற்சியும் காட்டுவதே, அதை முழுமையாகச் செய்வதாகும். அதை விட்டுவிட்டு, இடையிலேயே இன்னொரு வினையைச் செய்யத் தொடங்குவது இரண்டு வினைகளையும் கெடுத்து விடுவதாகும். இரண்டு பட்குகளில் கால் வைப்பதாகும்.
இனி, அடுத்து, நாம கவனிக்க வேண்டுவது, நாம் முதலில் தொடங்கிய வினை முழுவதுமாகச் செய்யப்பெற்று வந்தாலும், நாம் புதிதாகத் தொடங்கவிருக்கும் வினை முன்னதற்குத் தொடர்புடையதா என்று கருதியும் ஆராய்ந்தும் பார்ப்பது, அவ்வாறு பார்த்துத் தெளிந்த பின்னர், நாம் துணையாகத் தொடங்கவிருக்கும் புதிய செயலுக்குப் போதுமான வலிவும், சூழலும், காலமும், முதல் செயலை ஊறுபடுத்திக் கொள்ளாத அளவில் அமைந்துள்ளனவா என்று கவனிக்க வேண்டுவது. அஃதாவது, நம் முதற்பணிக்கு ஈடுபடுத்திய பொருள் போக, புதிதாகத் தொடங்கவிருக்கும் துணைப் பணிக்கு அல்லது வினைக்குப் போதுமான பொருளியல் வலிவும் ஆள்துணையும் நமக்கு இருக்கின்றனவா என்று கருதிப்பார்ப்பது. அவ்வாறில்லாமல், முதல் செயலில் உள்ள பொருளியலைப் பகிர்ந்தளிக்க வேண்டி வரும் என்றால், அந்நிலைப்பால், முதல் செயலும் இரண்டாவது செயலும் கெடுவதற்கு வாய்ப்பு உண்டன்றோ? இதுவே வலி கருதுவதாகும்.
இனி, முதலில் தொடங்கிய செயல் அல்லது தொழில் ஓர் இடத்தில் இருந்து கண்காணிக்கப் பெறவும், பின்னர் தொடங்க விருக்கும் தொழில் பிறிதோர் இடத்திலிருந்து மேலாண்மை செய்யப் பெறவும் இருப்பது, நம் முழு ஈடுபாட்டுக்குத் தடையாக அமைந்து விடுவதாகும். இது போன்ற நிலைகளைக் கருதிப் பார்ப்பதே சூழல் கருதுவதாகும்.
இனி, மூன்றாவதாகக் காலம் கருதுவதென்பது, நாம் முன் தொடங்கிய செயல் அல்லது வினை பகலில் செய்வதாக இருக்கையில், இரண்டாவதாகத் தொடங்கும் துணைவினை, இரவில் செய்யப் பெறுவதாக இருக்குமானால், அதுவும் நம் இயக்கத்துக்குத் தடையாக இருக்கும் என்று கருதுவதும் அதுபோல் பிறவும் ஆகும் என்க.
7. அமைந்து ஆங்கு ஒழுகுதல்
மேற்கூறிய இரண்டாம் நிலையிலும் மூன்றாம் நிலையிலும் நாம் ஈடுபாடு கொள்ளும்பொழுது, நம் ஆர்வம் ஈடுபாடு, உடல் நலம் முதலியவையெல்லாம் தொடக்கத்தில் நன்றாகவே இருந்தாலும், போகப்போகப் படிப்படியாக ஒவ்வொன்றாகக் குறைவுப்பட்டு, இறுதியில் அனைத்தும் ஒரு நிலையில் வலுவற்றதாகப் போய்விடலாம் அன்றோ! அக்கால் உள்ளதும் கெட்டதடா நொள்ளைக்கண்ணா? என்றாகிவிடும் எனவேதான்,
அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும். (474)
என்பார் திருவள்ளுவப் பேராசான். இக்குறள்மணி, பொருட்பாலில் அரசியலில், வலியறிதல் அதிகார்த்துள் சொல்லப் பெற்றதால், அரசர்க்குச் சிறப்பானதாகவும், பிறர்க்குப் பொதுவானதாகவும் பொருள் கொள்ளத் தக்கதென்று எண்ணுதல் வேண்டும் அமைந்தாங்கு ஒழுகான் என்பது, ஏற்கனவே அமைந்த அல்லது அமைத்துக் கொண்ட ஒரு செயலிலேயே முழுமையாகத் திறம்பட ஒழுகாமல் இருப்பவன் என்று பொருள் தருவது. இவ்விடத்தில் ஒழுகுதல் என்பது ஈடுபடுதலைக் குறிக்கும். அளவறியான் என்பது, தன் திறமறியாமல் பிற பிறவற்றையெல்லாம் எண்ணி, ஏங்கி அவற்றுள் ஈடுபாடு கொள்ள விரும்புபவனின் மிகுதுடிப்பினால், அகலக் கால் வைக்கும் அறியாமை. தன்னை வியந்தான். என்பது, தன்னை அளவுக்கு மேல் திறமையும் ஆற்றலும் நிறந்தவனாகக் கருதிக் கொள்ளுதலும், அவற்றால் பெறவிருக்கும் வருவாயைக் கருதி மகிழ்தலும் வியத்தலும் ஆகும். விரைந்து கெடும் என்பது, அவ்வாறானவன் படிப்படியாக ஆனால் உறுதியாகவும் விரைவாகவும் தாழ்ந்துபோவான் என்பது.
உலகில் இரண்டு, மூன்று வினைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய திறமுடையவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இனி, ஒரே பொழுதில் எட்டும், பத்தும் பத்துக்கும் மேற்பட்டவுமான செயல்களிலும் கருத்துச் செலுத்தும் வல்லமையுள்ள எண் கவனகர் (அட்டவதானிகளும், பதின் கவனகர் தசாவதானிகளும், பற்பதின் கவனகர் (சதாவதானிகளும் கூட இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் கவன (அவதானிப்பு அடிப்படையில் சிறப்புறுவோர்களே தவிர, செயல்கள் அடிப்படையில் அல்லர். செயல்களைக் கவனிப்பது வேறு செயல்களைச் செய்வது வேறு; இனி, செயல்களைத் திறம்பட நுட்பமாகவும், செப்பமாகவும், திட்பமாகவும் செய்வதோ அவற்றினும் வேறு என்று கருதுதல் வேண்டும். மேலும், அக்கவனகர்கள் கூட ஓர் எல்லைப்பட்ட நேரத்தில், தங்களுக்குப் பயிற்சியுள்ள செயல்களில் மட்டுமேதான் கவனம் செலுத்தமுடியும். எந்நேரத்தும் எல்லாவகைச் செயல்களிலும் எவரும் தங்கள் கவனத்தைச் செய்து விடுதல் அரிதினும் அரிதாகும். ஆளுமைக்குரிய செயல்கள் பற்பல. அவற்றின் ஏற்றத்தாழ்வுகள் அறிந்து, அவை காலத்தொடும் இடத்தொடும் சூழலொடும் பொருந்துமாறு வெற்றியுடன் ஒரு செயலைச் செய்து முடிப்பதற்குத் தனித்திறம் வேண்டும். அஃது பயிற்சியால் மட்டும் வருவது அன்று. இயற்கையாகவும் அமைவது என்க.
8. எதையும் ஆசையால் செய்யலாகாது
எனவே, ஒரே சமயத்தில் ஒரு செயலில் மட்டுமல்லாமல் இரண்டு மூன்று செயல்களிலும் ஈடுபடும் திறமுடையவர்கள் பொருள் வருவாய் கருதிப் பல வினைகளில் நாட்டங்கொள்வது இயலுவதே. இதைத் திறமையாலும் அறிவாற்றலாலுமே செய்ய வேண்டும். அவையாலன்றி ஆசையால் செய்யலாகாது. புதிய புதிய செயல்கலில் ஈடுபட்டுப் பொருள் திரட்டும் நோக்கம் கொண்டார் சிலர், ஒரே சமயத்தில் இரண்டு படகுகளில் கால் வைத்துப் பெரிதும் துன்பப்படுவர். சில நேரம் பிறிதொரு தொழிலில் ஈடுபட்டு, முதலில் செய்து கொண்டிருந்த செயலிலும் திறம் குன்றி, வருவாய் இழந்து, துன்பப்படுவர். அவர்கள் அரசனை நம்பிக் கணவனைக் கைவிட்ட பெண்ணைப் போல, இல்லதை நாடி உள்ளதையும் இழந்து இடர்ப்பட வேண்டும்.
ஒரு செயலைச் செய்து இதனால் கிடைக்கும் சிறு வருவாயையும், அடுத்துச் செய்ய விரும்பும் பிறிதொரு வினையால் இழந்து போகின்றவர்கள் இவ்வுலகில் பலர்.
ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை, போகாறு அகலாக் கடை. (478)
என்னும் பொய்யாமொழியில், போகாறு என்று குறிப்பது செலவை மட்டுமன்றிச் செயலிடுபாட்டின் அகலத்தையும் குறிக்கும் என்றும் கருதுதல் வேண்டும். ஆகவே,
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார். (463)
என்பார் திருவள்ளுவப் பேராசான். இதற்குச் சிறப்புப் பொருள் எழுதுகையில், பரிமேலழகர், "வலியும் காலமும் இடனும் அறியாது, பிறர் மண் கொள்வான் சென்று, தம் மண்ணும் இழத்தல் போல” என்பார். இங்குப் பிறர் மண் என்றது அரசர்க்குப் பொருந்துவது போல், பிற செயல் என்பது வினை செய்வார்க்கும் பொருந்தும் என்க.
9. அளவறிந்து வாழ்தல்
மேலும் தம் கை முதலீட்டையும், தம் வலிவையும் அறியாது, ஆசைப்படுகின்ற வினையிலெல்லாம் மேல் வருவாய் கருதி ஈடுபடும் ஒருவர், தொடக்கத்தில் அவ்வாறு ஓரளவு பெற்றாலும், போகப்போக, ஆய்ந்து பார்க்கையில் உள்ளதுபோலத் தோன்றியது இல்லை ஆகிவிடும் என்பார் பேராசிரியப் பெருமான்.
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும் (479)
என்பது அவர் எச்சரிக்கை.
எனவே, இவ்வனைத்து வகையானும் எண்ணிப் பார்த்தே நம் ஆற்றலையும், பொருள் முதலையும், துணை வலிமையையுமே அளவாக எண்ணிப் பிறிதொரு வினையில் ஈடுபடலாமேயன்றி, ஆசையை அளவாகக் கொண்டு, ஒரு வினை செய்வார், பொருள் வருவாய் கருதி வேறொரு வினையில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வது கூடாது என்க.
இனி, செயல்பாடு கொள்வார், தமக்குத் துணையாளர்களையும், பணியாளர்களையும் எவ்வாறு தேர்தல் வேண்டும் என்பது பற்றிச் சில கூறி, இத்தொடரை முடிப்போம்.
23. துணையாளரையும், பணியாளரையும் அமர்த்துதல்
1. எல்லாவற்றையும் நாமே செய்ய முடியாது
நாம் தனியாக ஒரு சில செயல்களைச் செய்யலாமேனும் எல்லாவகைச் செயல்களையும் எப்பொழுதும் நாமே செய்துவிடமுடியாது. பெரும்பாலான செயல்களைப் பிறர் உதவியுடன்தான் செய்யமுடியும். தொடக்கத்திலோ, இடையிலோ இறுதியிலோ வேறு ஒருவரின் உதவி தேவைப்படாத எந்தச் செயலும் உலகில் இல்லை. குறைந்த அளவு இருவராகிலும் ஒரு செயலில் ஈடுபட்டே ஆதல் வேண்டும்.
அன்பிற்கிருவர், அறிவிற்கிருவர், கல்விக்கிருவர், கலைக்கிருவர், நட்புக்கிருவர், வாழ்க்கைக்கிருவர், செயலுக்கிருவர் என்று குறைந்தது இருவர் இருவராகச் சேர்ந்து இயங்கும் உணர்வுகளும், அறிவுக் கூறுகளும், செயல் கூறுகளுமே உலகில் உள்ளன. ஒரே ஒருவர் தனித்து இயங்கும் செயல் எங்கும் இல்லை. நாம் உயிராகப் பிறப்பெடுப்பதற்கே இருவர் செயல் தேவைப்படுகிறது. உண்ணுவதைக் கூட இன்னொருவர் உதவியின்றிச் செய்துகொள்ள இயலாது என்பதை எண்ணிப் பார்க்கவும்.
எனவே, நாம் ஒரு செயலில் ஈடுபடுவதற்கு இன்னொருவர் உதவி எந்த வகையிலும், எந்த நிலையிலும் கட்டாயம் தேவை என்பதைச் செயலின் முற்படுவார் எவரும் முன்னதாக உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். பணிக்குத் துணையாக இருப்பவர் பணித்துணையாளர் என்றும், பணியை நம்முடனோ, அல்லது நமக்காகவோ செய்பவர் பணியாளர் என்றும் கூறப்பெறுவர்.
2. பணித்துணையாளர்
பணித் துணையாளர், நம் குடும்ப உறுப்பினராகவோ, நம் நண்பராகவோ, அல்லது சம்பளம் வாங்கிக்கொண்டு செய்யும் ஒருவராகவோ, அல்லது நம் முதலீட்டுப் பங்கினராகவோ இருக்கலாம். ஆனால், கட்டாயம் அப்படிப்பட்ட ஒருவரின் உதவி நமக்குத் தேவை. நாமே செயலின் அனைத்துக் கூறுகளையும் கவனிப்பது மிகக் கடினம். துணையே தேவையில்லாத சிறுசிறு செயல்பாடுகளும் இருப்பினும், அவற்றில் ஈடுபடுபவருக்கே கூட முழுப்பயன் விளைந்துவிடாது.
இனி, செயல் துணையாளர் தவிர, செயலுக்குப் பணியாளர்கள், சம்பளம் பெறுபவராகவோ, அல்லது குத்தகைக்கு உழைப்பவராகவோ, ஊதியத்தில் கழிவு பெறுபவராகவோ இருத்தல் வேண்டும்.
இவ்விரு வகையினரிலும் செயல் துணையாளர்கள் பணித்துணையாளர் ஆகியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் நாம் மிகவும் கவனம் செலுத்துதல் வேண்டும். நம் குடும்ப உறுப்பினர்களாக அஃதாவது நம் உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நம் பிள்ளைகளாக இருப்பினும் நாம் செய்யப்போகும் வினைகளில் நம் போலவே அவர்களும் ஈடுபட்டு விடுவார்கள் என்று எண்ணிவிட முடியாது. நம் உணர்வு நோக்கம் அல்லது கொள்கை, ஆசை, பாசம், பேணுதல் உணர்வு, கடமையுணர்வு, பொறுப்புணர்வு முதலியவை வேறாக இருக்கலாம். அவர்களுடையவை வேறாக இருக்கலாம். இவை ஒன்றியிருப்பது கடினம். ஒரே அரத்தத் தொடர்புள்ளவர்களும் பெரும்பாலும் இவ்வகையில் வேறு வேறு தன்மையுடையவர்களாகவே இருப்பர். அவ்வாறில்லாமல் இவற்றுள் ஒரே தன்மையுடையவர்களைக் கண்டுபிடிப்பது மிகமிகக் கடினம். அவ்வாறு ஓரிருவர் தேர்ந்தாலும் அவர்கள் நம்முடன் ஒத்துப் போவார்கள். என்பதைச் சொல்லமுடியாது. ஏனெனில், அறிவுணர்வும், கொள்கை உணர்வும் உள்ள இருவர் பெரும்பாலும் மாறுபட்டே இயங்குவார்கள்.
3. பணியாளர் திறன்கள்
பொதுவாக, முழுச் செயல் அல்லது வினைத்திறம் கொண்டவர்கள் கீழ்க்காணும் உணர்வுகளில் மிக்கக் கூர்மை உடையவர்களாக இருப்பர்.
1. அறிவுண்ர்வு, 2. செயலறிவு, 3. செயல் திறம், 4. கடமை உணர்வு, 5. பொறுப்புணர்வு, 6. கண்காணிப்புணர்வு, 7. சிக்கன உணர்வு, 8. பேச்சுத் திறன், 9. தருக்கத் திறன், 10. சிறந்த தேர்வுணர்வு, 11. தூய்மை உணர்வு, 12. சுறுசுறுப்பு, 13. பசி பொறுத்தல், 14. தூக்கம் பொறுத்தல், 15. ஊக்கமுடைமை, 16 உழைப்புத் திறன், 7, பிறர் செய்யும் இடர்களுக்கு அஞ்சாமை, 18 பிறர் கூறும் பழிகளைப் பொருட்படுத்தாமை, 19 உடனுக்குடன் முடிவெடுக்கும் நுட்ப அறிவு, 20. தற்சார்புடைமை, 21. பிறர் கையை எதிர்பாராமை, 22. பேராசையின்மை, 23. மானவுணர்வு, 24. பெருமித உணர்வு, 25. பரபரப்பில்லாத அமைவான நடைமுஹை. 26. ஆடம்பரம் விரும்பாமை, 27 குடும்பவுணர்வு 28. உண்மையான நட்பு உணர்வு, 29. மெய்யான அன்புடைமை, 30. முன்கோபம் 31. யாருக்கும் கட்டுப்படாமை, 32. எளிதாக நம்பும் திறனும், எளிதாக நம்பாமையும், 33. மன்னிக்கும் உணர்வு, 34. கஞ்சத் தனமின்மை, 35. கலையார்வம், 36. கணக்குத் திறம், 37 அழகுணர்வு, 38. எளிதில் இணங்கி வராத தன்மை, 39. சுவையுணர்வு, 40 எதிலும் அதிகப் பற்று வையாமை, 41. நினைவாற்றல் ஆகிய நாற்பத்தொரு திறன்களும் மிகக் கூர்மையாக அவர்களுக்கு இருக்கும். இவை ஏனோதானோ என்று வரையறுக்கப்பெற்ற உணர்வு நிலைகள் அல்ல. மனவியல், அறிவியல், தொழிலியல், இயல்பியல் முதலியவற்றின் அடிப்படையில் வரையறுக்கப்பெற்றவை என்க.
இவற்றுள் எத்தனை உணர்வு நிலைகள் குறைவாகவோ மிகுதியாகவோ உள்ளனவோ, அத்தனை அளவில் அவர்கள் செயல் திறன் மாறுபட்டதாக இருக்கும். எனவே, இவற்றுள் பெரும்பான்மையும் பொருத்தமாக உள்ள ஒருவரே இருவரே வினைத் துணைவர்களாக முடியும். இவற்றுள் பெரும் பான்மையும் மாறுபட்ட உணர்வுடையவர்கள் கட்டாயம் தாம் ஈடுபடும் வினை உணர்வுகளில் ஒன்றியிருக்க இயலாது. அவர்கள் அரிமாவும் - வரிமாவும் போலவோ, மானும் ஆனும் போலவோ, குதிரையும் - கழுதையும் போலவோ, ஆடும் மாடும் போலவோ ஒன்றுபடாத தன்மை உடையவர்களாகவே இருப்பர்.
இவ்வுண்மையைச் சில எடுத்துக்காட்டு உணர்வுகளைப் பருப்பொருளாக மாற்றிக் காட்டி விளக்குவது எளிதாக இருக்கும் என்று கருதுகிறோம்.
4. திறனற்ற, திறனுள்ள இருவர் நிலை
மேலே கூறப்பெற்ற உணர்வுகளுள் அறிவுணர்வு வாய்க்கப் பெற்றவர்கள் எப்பொழுதும் எதையாவது அறிந்து கொள்வதில் துடிப்பாகவும், ஆர்வமுடையவர்களாகவும் இருப்பார்கள், அவ்வுணர்வு குறைந்தவர்கள் அவ்வாறி ல்லாமல், மந்தவுணர்வு உடையவர்களாக இருப்பர். இவ்விரு திறத்தாரும் ஒரு செயலில் துணைவர்களாக அமைந்து விடுவதாக வைத்துக் கொள்வோம். இதில் முன்னவர் பின்னவரைத் தம் உணர்வு நிலைக்கு இழுத்துக் கொண்டு போக வேண்டியிருக்கும். பின்னவருக்கு அது சுமையாகவும், வெறுப்பை ஊட்டுவதாகவும் இருக்கும். எனவே, நீண்ட நாள்களுக்குப் பின்னவர் முன்னவருடன் ஒத்துப் போக இயலாமல் பின் தங்கிவிடுவார்.
இனி, இரண்டாவதாக, செயலறிவுடைய ஒருவர் அஃதில்லாமல் உள்ளவருடன் இணைந்து இயங்குவதாக வைத்துக் கொள்வோம். பின்னவர் முன்னவரை எதற்கெடுத்தாலும் எதிர்பார்த்துச் செயலில் ஈடுபட வேண்டியிருக்கும். அது முன்னவர் செயலாற்றலுக்குத் தடையாக இருக்கும். எனவே, முன்னவர் பின்னவரை நெடுநாள்களுக்குத் தம்முடன் வைத்து இருக்க இயலாமல் அவரை விலக்க நேரிடும். இதுவும் செயலுக்கு வெற்றியைத் தராது போகும்.
5. தேறிய பின் வேறுபடுவார் பலர்
இவ்வாறே பிற உணர்வு நிலைகளில் ஒருவரோடு ஒருவர் பொருத்தமில்லாற் போய்விடின், அவர்களின் வினை இணைவு நீண்ட நாளுக்கு நிலைத்திராமல் போகும். இனி, மேலே கூறப்பெற்ற அத்தனை உணர்வுகளிலும் பொருந்திய உணர்வுள்ளவர்களைக் காண்பது மிக மிக அரிது. இத்தனை நுண்ணுணர்வுகளும் பொருந்தியவர்களே அல்லாமல் பொருந்தாத பலரும் வினைக்கு முயல்வார்கள் என்பது உலகியலாக இருப்பதாலும், அவ்வாறு பொருந்தியவர்கள் இருவர் இணைவது மிகவும் அருமையாக அமைவதாலுமே, வினை வகையால் தொடக்கத்துப் பொருந்தியவர்கள், இடையிலோ இறுதியிலோ வேறுபட்டு விடுவதே நடைமுறை உலகியலாக உள்ளது என்று திருவள்ளுவப் பேராசிரியர் கருதுவர்.
எவைகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர். (514)
இக்குறள் மொழிக்குச் சிறப்புப் பொருள் எழுதுகையில், நுண்ணுணர்வு சான்ற பரிமேலழகர், "கட்டியங்காரன் போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவதல்லாது, அதனைக் குற்றம் என ஒழிந்து, தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், வேறாகும் மாந்தர் பலர் என்றார்; வினை வைப்பதற்கு முன் எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின் விகாரப்படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம்” என்று விதந்து கூறினார் என்க.
6. அறிந்தும்அமைந்தும் செய்பவரே தேவை
இனி, வினைத்திறம் உடையாரையல்லது, நம்மாட்டு அன்புடையவர், என்பதற்காக உறவினரையோ, அல்லது அறிவுத்திறம் மட்டும் உடையார் என்பதற்காக நண்பரையோ வினையில் ஈடுபடுத்தக் கூடாது என்பது திருவள்ளுவப் பேராசான் கருத்தாகும்.
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று. (515).
என்பது அவ்வாய்மொழி. இதற்குப் பரிமேலழகர் செய்யும் உபாயங்களை அறிந்து, செயலானும் இடையூறுகளானும் வரும் துன்பங்களைப் பொறுத்து முடிவு செய்ய வல்லானையல்லது, வினைதான், இவன் நம்மாட்டு அன்புடையன் என்று பிறனொருவனை ஏவும் இயல்புடைத்தன்று என்று பொருளுரையும் 'அறிவு, ஆற்றல்களான் அல்லது அன்பான் முடியாது என இதனான் வினையினது இயல்பு கூறப்பட்டது' என்று சிறப்புரையும் தருவார்.
'அறிந்தாற்றி என்னும் பண்பு இணைச்சொற்கள் அறிந்தும் ஆற்றியும் எனப் பிரிபட்டு ஒரு வினையைத் தானே அறிந்து கொள்ளும் திறத்தையும், வினைக்கிடையில் ஏற்படும் இடர்ப்பாடுகளைப் பொறுத்துத் தாங்கி அமைவுகொண்டு மேற்செல்லும் உள்ளத்தின் உண்மையையும் விளங்கி நின்றன என்க.
7. நுண்ணுணர்வு விளக்கங்கள்
இனி, இத்தலைப்பின் கீழ், தொடக்கத்தில் கூறிய செயல் திறம் உடையவர்களுக்கான கூர்மை உணர்வுகளெனும் நுண்ணுணர்வுகள் பற்றி, இன்னும் கொஞ்சம் விரிவாக அறிந்து கொள்வது, அவ்வுணர்வுடையவர்களை எளிதில் கண்டு தேர்வதற்குத் துணை செய்யும். ஆகையால், அவை பற்றிச் சிறிது விளக்குவோம். அங்குக் கூறப்பெற்ற நாற்பதோர் உணர்வுகளை மூன்று வகையாகப் பகுக்கலாம். அவை,
1. அகவுணர்வுக் கூறுகள் அல்லது இயற்கை உணவுர்கள்.
இவை உயிர்ப்படிநிலை வளர்ச்சியாலும், மரபு வளர்ச்சியாலும், இயற்கையாக அமைவன. இவையே இயற்கை கொடை (Natural Gif) அல்லது உளதாகும் அறிவு (Existant Wisdom) அல்லது உண்மை அறிவு (True Wisdom) திருக்குறள் 373 என்று கூறப்பெறுகின்றன.
2. புறவுணர்வுக் கூறுகள் அல்லது செயற்கை உணர்வுகள்
இவை மாந்த முயற்சியால் அடையப் பெறுவன, இவற்றையே கற்றனைத்துறும் அறிவு என்கிறது திருக்குறள் (336)
3. உலகியல் உணர்வுக் கூறுகள் அல்லது செயற்பாட்டு உணர்வுகள்
இவை சூழ்நிலைகளாலும், உலகியல் ஈடுபாடுகளாலும் மாந்தத் தொடர்புகளாலும், செயலிடுபாடுகளாலும் வளர்த்தெடுக்கப் பெறுவன. உலகம் தழிஇய ஒட்பம் (425) என்றதும் உலகத் தோடு அவ்வது உறைவது (425) என்றதும் இவையே என்க.
இம்மூன்று தலைப்புகளிலும், அங்குக் கூறப்பெற்ற உணர்வுக் கூறுகளைக் கீழ்வருமாறு பாகுபாடு செய்யலாம். இவற்றை மிகக் கவனமாகப் படித்து உணர்ந்து கொள்ளுதல், நமது அறிவுத் திறனையும், தேர்வுத் திறனையும் மிகுத்துக் கொள்வதாகும். அகவுணர்வுக் கூறுகள் அல்லது இயற்கை உணர்வுகள்:
1. இயற்கையறிவு:
(இவ்வறிவுக்கூறில் சிலசிறப்பறி வுணர்வுகள் அடங்கும். அவை வருமாறு)
அ. அறிவுத்திறன் - Cleverness
ஆ. ஆய்வறிவு - Intellect
இ. கூர்த்த அறிவு - Wisdom
ஈ. நுண்ணறிவு - Intelegence
உ. மூளைத்திறன் - Perception by the scene
ஊ. விளங்குதிறன் - Comprehension
எ. விளக்கு திறன் - elucidation
2. ஊக்கமுடைமை
3. உடனுக்குடன்
முடிவு எடுக்கும் நுட்ப அறிவுணர்வு - Presence of mind
புறவணர்வுக் கூறுகள் அல்லது செயற்கைக் கூறுகள்:
1. செயற்கையறிவு (இவ்வறிக் கூறில் சில சிறப்புணர்வுகள் அடங்கும். அவை வருமாறு.)
அ. கல்வியறிவு - education
ஆ. கற்றறிவு - erudition (having learned from books)
இ. கேள்வியறிவு - gathering, knowledge by hearing asking and inquiry - wit
ஈ. சொல்லறிவு - Wit
2. சுறுசுறுப்புணர்வு
3. செயல்திறம்
4. கடமை உணர்வு
5. பொறுப்புணர்வு
6. கண்காணிப்புணர்வு
7. சிக்கன உணர்வு
8. பேச்சுத்திறன்
உலகியல் உணர்வுக்கூறுகள் அல்லது செயற்பாட்டு உணர்வுகள்
1. உலகியலறிவு:
(இவ்வறிவுக் கூறில் சில சிறப்பறிவணர்வகள் அடங்கும். அவை வருமாறு:)
அ. செய்தியறிவு - Knowledge
ஆ. செயலறிவு - Skill
இ. பொது அறிவு - General knowledge
2. சிறந்த தேர்வுணர்வு
3. பிறர்செய்யும் இடையூறுகளுக்கு அஞ்சாமை
4. பிறர் கூறும் பழிகளைப் பொருட்படுத்தாமை
5. ஆடம்பரம் விரும்பாமை
செயற்கை உணர்வுகள்
4. தற்சார்சார்புடமை
5. பேராசையின்மை
6. மானவுணர்வு
7. பெருமித உணர்வு
8. குடும்பவுணர்வு
9. உண்மையான நட்வுணர்வு
10. மெய்யான அன்புடைமை
11. முன்கோபம்
12. மன்னிக்கும் உணர்வு
13. கலையார்வம்
14. கணக்குத் திறம்
15. அழகுணர்வு
16. சுவையுணர்வு
17. நினைவாற்றல்
செயற்கைக் கூறுகள்:
9. தருக்கத்திறன்
10. தூய்மையுணர்வு
11. பசி பொறுத்தல்
12. தூக்கம் பொறுத்தல்
13. உழைப்புத் திறம்
14. பிறர் கையை எதிர்பாராமை
15. பரபரப்பில்லாத அமைவான நடைமுறை
16. எவர்க்கும் கட்டுப்படாமை
17. கஞ்சத்தன மின்மை
18. எளிதில் இணங்கி வராத தன்மை
19. எதிலும் அதிகப் பற்று வையாமை
செயற்பாட்டு உணர்வுகள்:
6. எளிதாக நம்பு திறனும் எளிதாக நம்பாமையும்.
இவற்றுள் அறிவுணர்வை மூன்றாகப் பகிர்ந்ததாலும் செயலறிவை உலகியலறிவுக்குள் அடக்கியதாலும் உணர்வு எண்ணிக்கையில் ஒன்று கூடியது என்க.
இவற்றுள் சில நுட்ப உணர்வுகளுக்கான விளக்கங்கள் வருமாறு (அகவுணர்வுக் கூறுகளில்)
2. ஊக்கமுடைமை : செயலுக்கு இதுவே அடிப்படையான முதலீடு போன்றது. பொருள் முதலைவிட இதனை முகாமைப்படுத்துவர் பெரும்பேராசான். உள்ளம் (ஊக்கம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கிவிடும் , 592)
3. உடனுக்குடன் முடிவெடுக்கும் நுட்பவுணர்வு : இவ்வுணர்வு எச்செயலுக்கும் மிகு தேவையானது. கால நீட்டிப்பையும் வீண் இழப்பையும் இவ்வறிவுணர்வு தடுக்கிறது. செயல் திறத்துக்கு மிக அடிப்படையான உணர்வு இது.
4. தற்சார்புடைமை : என்பது எப்பொழுதும் பிறரையே சார்ந்திராமல், அஃதாவது பிறரையே நம்பியிராமல், தன்னையே சார்ந்து, அஃதாவது தன்னையே நம்பியிருக்கும் தன்மை. இது செயல்திறனுக்கு மிகத் தேவையானது. இவ்வுணர்வு இயற்கையாக அமைவது. உலகின் பெரும்பாலான மக்கள் பிறரையே சார்ந்து இயங்கும் தன்மையுடையவர்களாய் இருத்தலை எண்ணிப் பார்க்கவும்.
5. பேராசையின்மை : ஆசை இருக்கலாம். மேன்மேலும் பொருளிட்டும் ஆசை செயல்திறனைக் குறைத்துப் போலிச் செயல்களுக்கு வழிவகுக்கும்.
6. மானவுணர்வு : மானம் . தன்மானம் . இவ்வுணர்வு செயலாட்சிக்கு மிக இன்றியமையாதது. மாந்தனைத் தன் கொள்கை நோக்கிலிருந்து நெகிழ விடாமல் கட்டிக் காப்பது இவ்வுணர்வுதான்.
7. பெருமித உணர்வு : தந்நலத்தின் அடிப்படையில் கொள்ளும் செருக்குணர்வு இன்றிப் பொதுநல உணர்வின் அடிப்படையில் செய்யப்பெறும் செயலினால் தோன்றும் பெருமை, உண்ர்வு இது. செயல்களுக்கிடையில் எதிர்ப்படும் மனச்சோர்வைப் பேர்க்கும் ஒருவகைத் தென்பைத் தரும் மனவுணர்வு இது.
8. குடும்ப உணர்வு : ஒருவரை நன்னெறிக்கண், மரத்திற்கு வேர்போல் நின்று நிலை நிறுத்தும் உணர்வு இது செயலாக்கத்தால் தட்டுக் கெட்டுத் தடுமாறாமல், இது மனத்திற்கு ஊட்டமளிக்கும் உணர்வாகவும், மனச்சோர்வு அகற்றும் மருந்தாகவும் செயலில் ஈடுபட்ட ஒருவர்க்கு உதவுகிறது.
9. உண்மையான நட்புணர்வு : செயலில் திறமையாக ஈடுபட விரும்புவார் உண்மையான நட்புணர்வு கொண்டவராகவே இருப்பார். போலிகளைத் தவிர்க்கவும், மெய்யான நண்பர்களைத் தமக்குத் துணையாக ஏற்கவும் இவ்வுணர்வு அவர்க்குப் பாதுகாப்பாக நின்றுதவும்.
10. மெய்யான அன்புடைமை : அன்பு மெய்யாக இல்லையானால் அஃது உண்மையான பயன் தருவதில்லை. போலியான அன்பு போலி விளைவுகளையே உண்டாக்கும்.
11. முன்கோபம் : கோபம் - கடுஞ்சினம் முன்கோபம் சில நொடிப்பொழுதே வந்து தோன்றி இருந்து மறைவது, இஃது நன்னெறியாளர்களுக்கு ஒரு காப்புணர்வாகத் தோன்றுகிறது. இவ்வுணர்வு இல்லையானால் பிறர் இழுத்த இழுப்புக்கு ஒருவர் ஆட்பட்டுச் சூழலை வென்றெடுக்கவும் தவிர்க்கவும், மீளவும் முடியாமல் போகும். இது திறமையானவர்களுக்கும் நல்லவர்களுக்கும் இயற்கை தரும் ஒரு தற்காப்புக் கருவியாகப் பயன்படுகிறது.
12. மன்னிக்கும் உணர்வு : கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டுபவர் என்றார் அறப் பேராசிரியர். ஒருவர் ஒரு செயலுக்குத் தடையாக இருப்பதைச் சுட்டவும் கண்டிக்கவும் பின் அவர் அத்தவற்றை உணர்த்து திருந்திய விடத்து அவரைப் பொறுத்துக் கொள்ளவும் உதவும் உணர்வு, இது. திருந்தியவர் மீண்டும் செயலுக்கு நல்ல துணையாக உதவும் நிலையில் வளர்ந்து நிற்பதால், அவரை மன்னிக்கும் மனப்பாங்கு ஒரு செயல்திறம் உடையவர்க்குக் கட்டாயம் தேவையாகிறது.
13. கலையார்வம் : கலையார்வம் இல்லையானால் ஒரு செயலைச் செப்பமாகவும் திறமையாகவும் தூய்மையாகவும் பிறரைக் கவரும் வகையில் சிறப்பாகவும் செய்ய இயலாது. மேலும் இக் கலையார்வமே ஒரு செயலுக்கு இடையில் வரும் மனச் சோர்வைப் போக்கி, மேலும் மேலும் அவரை அசசெயலில் இன்னும் சிறப்பாக ஈடுபட ஊக்கி உதவுகிறது. வெறும் தொழிலறிவு வறட்சியானது. அதைச் செழுமையுடடையதாக்கி வளமை தர இவ்வுணர்வு மிகவும் தேவையாகிறது. எனவே, செயலில் ஈடுபட விரும்புபவர்களுக்கு இவ்வுணர்வு இருக்கிறதா என்று பார்த்தல் வேண்டும்.
14. கணக்குத்திறம் : உலகில் உள்ள அனைத்துச் செயல்களுமே கணக்கை அடிப்படையாகக் கொண்டவையே. உலகப பெரும் உருண்டை சுழல்வதும், கதிரவ மண்டில இயக்கமும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு உலகின் கண் நிகழும் செயற்பாடுகளும் உயிர்களின் தோற்றமும், வாழ்வும் முடிவும், அவ்வுயிர்களின் அனைத்து உடற்கூறுகளும், அவற்றின் பல்வேறு வகையான இயக்கங்களும் ஆகிய அத்தனை வினைகளும் கணக்கியல் கூறுகளை அடிப்படைகளாகக் கொண்டவையே. கணக்கின்றி ஒர் அணுக்கூறும் இயங்குவதில்லை. இந்த அரும்பெரும் உண்மையை அனைவரும் உற்று நோக்கி உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
அனைத்து மூல ஆற்றல்களும் கணக்கை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. அக்கணக்கறிவைக் கொண்டுதான் ஆற்றல்களை அறிய முடிகிறது. அளக்க முடிகிறது. பயன்படுத்த முடிகிறது.
இனி, ஆற்றல்களின்றிப் பொருள்களும் இல்லை. எனவே அப்பொருள்களும் கணக்கை அடிப்படையாகக் கொண்டே தோன்றுகின்றன; வடிவம் எய்துகின்றன; இயங்குகின்றன; இணைகின்றன; மாறுதலுறுகின்றன; மறைகின்றன. பின் மீண்டும் தோன்றுகின்றன. அறிவு என்னும் உணர்வே கணக்கை அடிப்படையாகக் கொண்டதுதான்.
பொருள்களைப் பார்க்கின்ற ஒளித்திறன் அளவைக் கண்கள் பெறவில்லையானால், பொருள்களைத் நம்மால் பார்க்க இயலாது. ஒசையைக் கேட்கின்ற ஒலித்திறன் அளவை நம் செவிகள் பெற்றிருக்கவில்லையானால் பொருள்களின் அசைவொலியை நாம் கேட்க முடியாது. அவ்வாறுதாம் நம் ஐம்புலன் உணர்வுகளும். எனவே அறிவே கணக்குதான்.
இனி, கணக்குத் தொடர்பு இல்லாதவனாகவாக நாம் கருதிக் கொண்டிருக்கும் பிற கலையறிவுகள், அழகுணர்வுகள், இலக்கிய இலக்கண உணர்வுகள், நிலைகள், பிற வாழ்வியல் நிலைகள், உணவு முறைகள் அனைத்தும் கணக்கியலை அடிப்படையாகக் கொண்டனவே.
கணக்கில்லையானால் அழகில்லை; ஒவியமில்லை; சிற்பமில்லை; இசையில்லை; பிற கலைகள் இல்லை; இலக்கியமில்லை; இலக்கணமில்லை; ஏன், நாம் பேசும் மொழிகளும், பறவைகள், விலங்குகள் இவற்றின் ஒலிகளும், நம் எழுத்தும் எழுத்தொலிகளும் கூட கணக்கியலையே அடிப்படையாகக் கொண்டவையே.
அகர ஒலிக்கு ஒரு மாத்திரை, ஆகார ஒலிக்கு இரு மாத்திரை என்பனவும், அம்மாத்திரை எழுத்துகளால் ஆன மொழிகளும், அவற்றின் இலக்கண அமைப்புகளும், பாடல்களின் நிரையசை நேரசை அளவுகளும், அகவல், செப்பல் முதலிய ஓசை அளவுகளும் கணக்கே, கணக்கே, கணக்கே!
ஒர் உயிர் பிறப்பதும் கணக்கு அது வளர்வதும் கணக்கு அது வாழ்வதும் கணக்கு மறைவதும் கணக்குதான். கணக்கின்றிக் கணமும் இல்லை. காலமும் இல்லை; இடமும் இல்லை!
இனி, இன்னோர் உண்மையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இக் கணக்கு அமைப்புகளின் பிறழ்ச்சிகளே - பிசகுகளே அழிவுகள் என்பதை நாம் அறிதல் வேண்டும்.
இயற்கை இயக்கப் பரப்பில் எங்கோ ஓரிடத்தில் நிலவும் கணக்கியல் பிறழ்ச்சியே பருவக் கோளாறுகள், புயல்கள், நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், கடல் கொந்தளிப்புகள், உலகழிவு முதலிய கொடுநிகழ்ச்சிகள்.
உடலியக்கத்தின் கணக்குப் பிறழ்ச்சிகளே - பிசகுகளே - நோய்கள். இடையழிவுகள், இறப்புகள் முதலிய கொடுநிகழ்ச்சிகள்!
எனவே, கணக்கே உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் வினைகளுக்கும் செயல்களுக்கும் மூல அடிப்படையானது. ஆகவே, கணக்கறிவு செயலறிவுக்கு செயலுக்கு மிக மிக இன்றியமையாதது என்பதை அறிதல் வேண்டும். இந் நுட்பங்களை மிக நுண்ணியதாக உணர்ந்துதான் நம் திருவள்ளுவப் பேராசான் மாந்த உயிரியக்கத்திற்கு மொழி முகாமையானது; அம்மொழிக்கும் முகாமையானது கணக்கறிவு என்னும் பொருளில்,
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு (392)
என்று கணக்கிற்கு மொழியினும் முதலிடம் கொடுத்துப் பேசுகிறார். இன்னும், அவர் அருளித் தந்த திருக்குறள் என்னும் மெய்ப்பொருள் ஆக்கத்தில், கணக்கறிவு பற்றிக் கூறும் உணமைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவனவாகும். இவற்றை ஒரு சிறிது கூறி மேல் செல்லுவோம்.
கணக்கறிவு இல்லையானால் செயல் ஆக்கம் கெடும். அதன்பின் அந்தச் செயலைச் செய்வதற்கு நேர்மையல்லாத களவு வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் என்பார் திருவள்ளுவர். கணக்கறிவை அவர் அளவு என்னும் சொல்லால் உணர்த்துவர். எதையும் அளந்து பார்த்து, அஃது அதற்குரிய அளவுடன் செய்யப் பெறுதல் வேண்டும் என்பது அவர் குறிப்பு. அதனை வெறும் அளவு என்று குறிப்பிடாமல், அளவென்னும் ஆற்றல் என்று வலியுறுத்தியும், திறன் என்று அகலப்படுத்தியும், கூறுவார் அவர். இங்குதான் செயல்திறன் முழுமை பெறுகிறது என்பததைக் கவனிக்க வேண்டும்.
"எந்தச் செயலையும் அளவு என்னும் கணக்குத் திறனுடன் செய்ய இயலாதவன், காரறிவை அஃதாவது விளக்கமற்ற அறிவை உடையவனாவான். அவன் செயல்களில் நேர்மை, உண்மை இருக்கா, திருட்டுத்தனமான செயற்பாடுகளே இருக்கும். இத்தவறான நடைமுறை, அளவு என்னும் கணக்குத் திறன் உடையவர்களிடத்தில் இருப்பதில்லை என்னும் பொருளைத் தருகிறது. கீழ்வரும் குறள்,
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல். (287)
மேலும், ஒருவன் எதையும் அளவிட்டுக் கணக்குப் பண்ணிச் செய்யப் பழகுவானானால், அவனிடத்தில் அறிவுணர்வு நிலைப்பெற்றிருக்கும். எதையும் நேர்மையாகவும் உண்மையாகவுமே அவன் செய்வான். நேர்மைப் பிறழ்ச்சி அவனிடத்தில் இருக்காது. எப்படி வேண்டுமானாலும் அஃதாவது தவறான அல்லது தீய வழிகளைக் கடைப்பிடித்தேனும் அச்செயலைச் செய்துவிட வேண்டும் என்னும் ஒர் அறமற்ற உணர்வே அளவிட்டுச் செய்யாதவனிடத்தில் வளரும். எனவே, என்றென்றும் அவன் உள்ளத்தில் களவுணர்வும். (திருட்டுணர்வும் கரவு உணர்வும் வஞ்சக உணர்வும் நிலையாக இருந்து கொண்டிருக்கும்” என்னும் பொருளை உணர்த்துகிறது, இன்னொரு குறள்,
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு. (288)
"அளவு பண்ணிக் கணக்கறிவுடன், செய்வதைக் கடைப்பிடிக்காதவன், தவறான, பொய்யான, நேர்மையற்ற திருட்டு உணர்வில் மேலும் மேலும் விருப்பமும் ஆர்வமும் உடையவனாகி, அதனையே தொடர்ந்து கடைப்பிடித்து ஒழுகுவான் என்று இன்னொரு திருக்குறளில் உணர்த்துவார் பேராசான்.
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர் (286)
எனவே, "இந்நேர்மையற்ற வழிகளில் செயல்களைச் செய்து, அதனால் வருகின்ற செல்வம் கூடி வருவதுபோல் தோன்றி விரைவிற் படிப்படியாகக் குறைந்து இல்லாமற் போய்விடும்” என்று அவர் எச்சரிக்கை செய்கிறார்.
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும். (283)
என்பது, அது.
"ஆகவே, களவும் கரவும் இல்லாத மற்ற நேர்மையான வழிகளில் செயல்களைச் செய்யப் பழகிக் கொள்ளாதவர்கள் தாம் எதையும் அளவுப்படுத்திச் செய்யாமற் போவதால், அவற்றைச் செய்யத் தொடங்கிய அடுத்த பொழுதிலேயே தம் செயல் நிலையினின்று வீழ்ந்து விடுவர்” என்று முடிவாகவும் தெளிவாகவும் சொல்லுவார், அற முதல்வர்.
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர். (289)
வரவு செலவு அளவு
இனி, எப்பொழுதுமே ஒரு செயலால் வருகின்ற வருமான அளவையும் அவ் வருமானத்தால் செய்கின்ற செலவுகளின் அளவையும் கணக்குப் பார்த்து, அச்செயலைச் செய்யும் திறமற்றவர்கள் பலவகையான செயல் தாழ்ச்சிகளுக்கு உட்படுவர் என்பதையும், அவ்வாறு கணக்கிட்டுச் செயல் செய்கையில் வருமான அளவு குறைந்திருப்பினும், செலவு அளவு கூடாமல் இருப்பின் தாம் தொடங்கிய செயலுக்கோ, தமக்கோ கேடு வராது என்பதையும் மிகவும் நுண்ணியதாகக் கீழ்வரும் குறளில் உணர்த்திக் காட்டுவர், வாழ்வியல் பேராசான்.
ஆகாறு அளவு இட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை (478)
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பது பழமொழியன்றோ? எனவே, வரவானாலும், செலவானாலும் கணக்குப் பண்ணிச் செய்திட வேண்டுவது எத்துணை இன்றியமையாததாக இருக்கிறது. இனி, வரவை விடச் செலவுக்குக் கணக்கறிவு அஃதாவது அளவையறிவு முகாமையானது என்பதை அறிதல் வேண்டும்.
கல்வி அளவு
கற்பதைக்கூட எண்ணிப் பார்த்து, அளவு பண்ணி, எதைக் கற்க வேண்டும், எவ்வளவு காலம் கற்க வேண்டும், எத்துணை அளவு கற்க வேண்டும் என்று ஆய்ந்தறிந்து கற்க வேண்டும் என்பது திருக்குறள். கல்விக்கு எல்லையில்லை; எனவே, காலமும் இல்லை, சாகும் வரை கற்றுக் கொண்டேதான் இருக்க வேண்டும் (397) என்றாலும், இந்தக் காலத்திற்குள் இதைக் கற்க வேண்டும் என்பது ஒர் அளவறிவாகும். அதே போல் இதற்காக இதை இந்தக் காலத்திற்குள், இந்த அளவு, இந்த வகையில் கற்க வேண்டும் என்பதும் ஒரு கணக்கறிவாகும். இதைத்தான் திருவள்ளுவப் பெருமான்,
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு. (725)
என்பார், அவையஞ்சாமை அதிகாரத்துள் இக்கருத்துக் கூறப்பெறினும், வாழ்க்கை அளவில் அதன் முழுமைக்கும் பயன்படக்கூடிய கல்விக் கூறுகள் பல. செயலும் அதைத் திறமையாகச் செய்ய வேண்டிய திறனும் அக் கூறுகளில் அடங்குவதாகும். கணக்கறிவே ஒரு கல்விக் கூறாயினும், பிறவற்றைக் கற்பதற்கும் அந்தக் கணக்கறிவு, அளவை அறிவு இன்றியமையாததாகும் என்று கூறுகிறார், பேராசிரியர்.
ஈகை அளவு
கல்விக்கு அளவறிதல் தேவை போலவே, நம்மிடம் உள்ள ஒரு பொருளை ஒருவர்க்கு ஈயும் போதும் அவ்வளவை யறிவு தேவை என்பது திருக்குறள்.
சாவை விடக் கொடியது இல்லை; அதுவும் பிறர்க்கு ஈகின்ற செயல் இயலாத பொழுது இனியதாகப் போய் விடுகின்றது; அஃதாவது பிறர்க்கு ஈயாத விடத்து, இறந்து போவதே நல்லது, இனியது, என்னும் பொருள் பட,
சாதலின் இன்னாத தில்லை; இனிததுரஉம்
ஈதல் இயையாக் கடை (230)
என்றும்;
மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (222)
என்றும்;
இல்லை யென்று ஒருவர் தம்மிடம் சொல்லிக் கேட்பதற்கு முன்னர், நாம் அவர் குறிப்பையறிந்து கொடுப்பது சிறந்தது, அதுவே நல்ல குடியிற் பிறந்தாரது நாகரிகச் செயல்.
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள (223)
என்றும்,
'கொடுத்துக் கொடுத்து உயர் நிலையில் தாழ்ந்து ஏழையாகப் போயின. பின்னும் அக் கொடுத்தல் பண்பில் விலகா திருப்பதே பழைமையில் சிறந்த பெருமையுடைய குடியாளனுக்குச் சிறப்பு என்று பொருள் தரும்,
'வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று' (955)
என்றும், ஈதலுக்குச் சிறப்பிலக்கணம் கூறிய அதே திருவள்ளுவப் பேரருளாளர்,
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி. (477)
என்றும், அளவையறிவு கொண்டு ஈகையை வளமைப்படுத்துகிறார்.
எந்தத் தேவைக்கு, எவர்க்கு எவ்விடத்து, எவ்வளவு ஈயவேண்டும் என்று மதிப்பிட்டு ஈகின்ற கணக்கியலறிவும் ஒருவர்க்கு தேவை என்பதை வலியுறுத்துகின்றார்.
பெரும்பாலும் ஒருவர்க்கு பொருள் செயலாலேயே வரும். பெரும் பொருள் சிறந்த நேர்மையான உயர்ந்த வருவாயைத் தருகின்ற செயல்களாலேயே வரமுடியும். அப்பொழுதுதான் அவர் செல்வராகத் திகழமுடியும். அவ்வாறு செல்வராகத் திகழ்கின்ற பொழுதுதான், அவர் ஈகையறத்தைச் செப்பமாகச் செய்ய முடியும். பொருள் நிறைய வருகின்றதே அல்லது இருக்கின்றதே என்பதற்காகக் கண்டவர்க்குச் கண்டபடி, கண்டவிடத்துக் கண்டவாறு ஈந்து விடக்கூடாது; அக்கால் கணக்கறிவோடு, அளவை அறிவோடு நடந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும் என்பது திருவள்ளுவர் கோட்பாடாகும். எனவே, கணக்கறிவு, ஈகைக்கும் தேவை என்று வலியுறுத்தப்படுகிறது.
வாழ்க்கை அளவு
எனவே, வாழ்க்கை முழுமைக்கும் எல்லா நிலைகளிலுமே கணக்கறிவு மிகமிகத் தேவையான ஒன்றாகும் என்பதில் ஐயமே இல்லை.
வாழ்க்கை, அஃது எத் திறத்தினதாயினும், எத் தரத்தினதாயினும், எந்த வகையினதாயினும், அதிலும் கட்டாயம் ஓர் அளவியலறிவு, கணக்கியலறிவு தேவை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். (479)
என்பது திருவள்ளுவம்.
இதில் அளவறித்து வாழுதல் என்பது, அறம், பொருள், இன்பம் ஆகிய உறுதிப் பொருள்கள் மூன்றையும், அவற்றின் உட்கூறுகளையும், அவற்றின் கருப்பொருளையும், காரணப் பொருள்களையும் உள்ளடக்கியது என்க. இஃதோர் அளவையறிதல் என்னும் கணக்கியலையே கொண்டதாகும்.
எனவே, வாழ்க்கை நிலைகள் முழுமைக்கும் கணக்கியலறிவு எத்துணை இன்றுயமையாதது என்பதைத் தெள்ளிதின் உணர்ந்து கொள்க.
15. அழகுணர்வு: அழகுணர்வு இல்லாமற் போயின் எந்தச் செயலும் செப்பமாக இராது கவர்ச்சியுடன் திகழாது. எந்தச் செயலாக இருப்பினும், அது சில கருவிகளைக் கொண்டே இயங்க வேண்டும். அந்தக் கருவிகள் செப்பமாக இராமல் போனால், செயலும் செப்பமாக இருக்க முடியாதன்றோ? எனவே, அழகுணர்வை செப்பத்தை அளவிடும் ஒரு கருவியாகவே இயற்கை கொடுத்திருக்கிறது. அழகுணர்வுதான் செப்பத்தையும், ஒழுங்கையும், மன ஈடுபாட்டையும், செயலூக்கத்தையும், பொருள் காப்புணர்வையும், உரிமைப் பிடிப்பையும் நமக்குத் தருகிறது. ஒரு பொருள் அழகாக இல்லையானால் நாம் அதை விரும்பமாட்டோம் விரும்பாத பொருளைக் காக்க மாட்டோம் காக்கப் பெறாத பொருளுக்கு நாம் ஏன் உரிமை கொண்டாடப் போகிறோம்? எண்ணிப் பாருங்கள். இவ்வுணர்வும் இயற்கையாக அமைதல் வேண்டும்.
16. சுவையுணர்வு:
மாந்தனுக்குச் சுவையுணர்வும் மிகவும் இன்றியமையாத ஒர் இயற்கை உணர்வாகும். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சுவையுணர்வு அவ்வளவாகத் தெரிவதில்லை. பொறிகளின் கூர்மையான உணர்வுகளுள் ஒன்று சுவையுணர்வு. அறிவுணர்வு கூர்மையெய்த எய்த பொறிகளும் கூர்மையான புலன் உணர்வுகளைப் பெறுகின்றன. அக்கால் பார்வையுணர்வு, நுகர்வுணர்வு, சுவையுணர்வு, செவியுணர்வு, மெய்யுணர்வு ஆகிய ஐம்புலன் உணர்வுகளும் துல்லியமான உணர்வுகளாக வளர்ச்சியுறுகின்றன. நாச்சுவை இழிவன்று. உடல் நன்கு இயங்குவதற்கு உணவு எத்துணை இன்றியமையாததோ, அத்துணை இன்றியமையாதது உணவுக்குச் சுவையும். சுவையுணர்வு, நல்ல உணவைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது. இயற்கைப் பொருள்கள் அனைத்தும் ஒவ்வொரு சுவையுடையன. அறிவுணர்வு உள்ள ஒருவனுடைய உடலுக்குத் தேவையான சாரப் பொருள்களே அவனுக்கு நல்ல சுவையான மனவுணர்வைத் துரண்டி, உணவை விருப்பமாகவும் தேவையான அளவினதாகவும் ஏற்றுக் கொள்ளச் செய்கிறது. உடலுக்குக் கேடு தரும் கண்ட பொருள்களையெல்லாம் ஏற்றுக் கொள்வதைத் தடுத்து நிறுத்துகிறது. எனவே, நல்ல செயலாளன் ஒருவன், நல்ல சுவையுணர்வு கொண்டவனாகவும் இருக்கிறான் என்பதை உலகியலால் தெரிந்து கொள்க.
17. நினைவாற்றல்:
செயலுணர்வுக்கு நினைவாற்றல் மிக இன்றியமையாதது. நினைவாற்றலின்றிச் செயல் தொடர்ச்சி இருப்பதில்லை. செயல் தொடர்ச்சி இல்லையானால், செயல் நிறைவுறுவதில்லை. பொதுவாக உள்ள நினைவுத்திறன், செயல் திறன் உடையவர்களுக்கு நல்ல ஆற்றலுடன் இயங்குதல் வேண்டும்.
இங்கு இதுவரை ஒருவர்க்கு இயற்கையாக அமைகின்ற அகவுணர்வுக்கூறுகளின் விளக்கங்களைக் கண்டோம் இனி, செயற்கைக் கூறுகளாக உள்ள புறவுணர்வுக்கூறுகளின் விளக்கங்களைக் காண்போம்.
1.1. கல்வியறிவு: ஆசிரியர் வழிப் பள்ளிகளில் கற்பிக்கப் பெறும் அறிவு.
1-2. கற்றறிவு: நூல்கள்வழித் தன் முயற்சியால் தானே படித்து அறிந்து கொள்ளும் அறிவு.
13. கேள்வியறிவு : உலகியல் வழிப் பிறர் வாயிலாகவும், உசாவியும், தானே பட்டும் (அனுபவித்தும் அறிந்து கொள்ளும் அறிவுத்திறன்.
1-4.சொல்லறிவு: உணர்ந்ததைத் தகுந்த சொற்றொடர்களால் வெளிப்படுத்தும் திறன். இஃது ஒரு செயலைப் பற்றித் தான் தெரிந்ததைப் பிறர்க்குத் தெளிவாக உணர்த்தவும் உணரவும் பயன் தரும்.
2. சுறுசுறுப்புணர்வு: பொறிகளும், புலன்களும் எப்பொழுதும் எதனையும் ஏற்றுச் செய்யும் இயங்குதிறன்
3. செயல்திறம் எதையும் நிறைவுறச் செய்யும் செயலாற்றல். 4. கடமை உணர்வு கொடுக்கப்பட்ட செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வமும் அக்கறையும் கலந்த செயலுணர்வு.
5. பொறுப்புணர்வு: ஒரு செயலைக் குறிப்பிட்ட திட்டப் படியும், குறித்த காலத்திற்குள்ளும் செப்பமாகவும் நிறைவாகவும் செய்ய வேண்டும் என்னும் செயலறுதி.
6. கண்காணிப்புணர்வு: செயல் சிதைவுறாமல் செப்பமாகச் செய்யப் பெறுகிறதா என்று அடிக்கடி மேற்பார்வையிடுகின்ற காப்புணர்வு.
7. சிக்கன உணர்வு: முதலீடு சிதைந்து போகாமல் செயலுக்கே பயன்படும்படி, பிறதுறைச் செலவுகளைக் கட்டுப்படுத்திக் காக்கின்ற கட்டுப்பாட்டுணர்வு.
8. பேச்சுத் திறன் செயலைப்பற்றிப் பிறர்க்கு நன்கு விளக்கவும், விளங்காத நிலைகளைத் தெளிவாக எடுத்துக் கேட்கவுமான சொல் ஆற்றல்.
9. தருக்கத் திறன் சரியெது சரியல்லாததெது என்று கருத்து வழி ஆய்கின்ற கருத்துத்திறன்.
10.துய்மையுணர்வு: பணியைத் துய்மையாகச் செய்யவும், பணிக் கருவிகளையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவுமான உணர்வு.
11-12. பசி பொறுத்தல், தூக்கம் பொறுத்தல்: பணி நிலையை முகாமையாகக் கருதி, பசி, கண்விழிப்பு, சோர்வு முதலிய உடல் நலிவுகளைப் பெரிதாகப் பொருட்படுத்தாத ஊக்கவுணர்வு செயல் திறனுடையவர்கள் இவற்றைப் பெரிதாகக் கருத மாட்டார்கள்.
மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்; கண்துஞ்சார்;
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்;
கருமமே கண்ணாயி னார்.
என்னும் குமரகுருபரரின் நீதிநெறி விளக்கச் செய்யுளை ஒர்க.
13. உழைப்புத்திறம் உள்ளத்தாலும், உடலாலும் உழைக்கின்ற உணர்வும் வலிமையும் உடைய வன்திறம்.
14. பிறர் கையை எதிர்பாராமை பொருளுக்கோ, செயலறிவுக்கோ, வேறு வகை உதவிகளுக்கோ பிறருடைய கைகளை எதிர்ப்பார்த்துக் காத்திராத தன்மை.
15. பரபரப்பில்லாத அமைவான நடைமுறை சுறுசுறுப்பு வேறு; பரபரப்பு வேறு. எதிலும் பரபரப்பான நடைமுறை செயல் செப்பத்திற்குதவாது; பொருள் இழப்பும், வினைத்தொய்வும் இதனால் விளையும். அமைவான நடைமுறையே செயலுக்கு ஏற்றது.
16. எவர்க்கும் கட்டுப்படாமை. இவ்வுணர்வு அறிவு தழுவாமல் வெறும் மன அளவாக மட்டும் செயல்பட்டால் அது செருக்கு எனப்பெறும். இதுவே அறிவு தழுவிய உணர்வாக இயங்கினால் அது பயனுடைய உணர்வாக நின்று செயலுக்கு உதவும். ஒருவர்க்கு எளிதில் கட்டுப்பட்டு விடுகிற உணர்வை விட, எளிதே கட்டுப்படாத உணர்வே செயலுக்கு உரித்தானதாகும்.
17. கஞ்சத்தனமின்மை: கஞ்சத்தனம் என்பது சிக்கனத்தின் போலியான ஒருவுணர்வு. பொருட் பொறுப்பினால் இயங்குவது சிக்கனம் பொருளாசையால் இயங்குவது கஞ்சத்தனம். முதலது கடமையை உறுதிப்படுத்தித் தொடர்ந்த செயலுக்குத் துணையாக இயங்கும் உணர்வு. இரண்டாவது கடமை நன்கு நிறைவேறாமல், துணையாளரைப் பிரித்துத் தனிப்படுத்திச் செயலை நிறைவேற்றாமல் செய்யும் ஒர் உணர்வு.
18. எளிதில் இணங்கி வராத தன்மை: இப்படிப்பட்டவர்களிடத்துத்தான் செயல் பிடிப்பு, செயலுறுதி இருக்கும். ஒரு பணியில் ஈடுபட்டவர்கள் வேறு பணிக்கு எளிதில் மாறி விடுகிற உணர்வு செயலுக்குப் பயன்படாது. இத்தகையவர்களைத் துணையாகவோ, பணியாளர்களாகவோ கொள்ளக்கூடாது.
19. எதிலும் அதிகப் பற்று வையாமை பற்றில்லாமல் எதிலுமே ஈடுபட இயலாது. ஆனாலும் செயல்திறம் உடையவர் எதிலுமே அதிகப்பற்று வைத்தலாகாது. ஒன்றை ஏற்கவும், ஒன்றைத் தவிர்க்கவும் ஆன உணர்வே செயலுக்கு உகந்தது.
இங்குக் கூறப்பெற்ற 19 உணர்வுகளும், ஒருவர் செயற்கையாக படிப்படியாக வருவித்து வளர்த்துக் கொள்ளும் உணர்வுகளாகும். அடுத்து வரும் 6 உணர்வுக்கூறுகளும், உலகியலால் ஒருவர் அறிந்து கொள்ளும் உணர்வுகளாகும். காலப்போக்கில் பட்டறிவால் ஒருவர் இவற்றைத் தாமே பெற்றுக் கொள்ள முடியும். எனவே, இது உலகியலறிவு எனப்பெறும். அதனையும் ஒரு சிறிது விளக்குவோம்.
1-1. செய்தியறிவு: பல வகையான செய்திகளை பற்றியும் அறிந்து கொள்ளுதல்.
1-2. செயலறிவு: பல வகையான செயற்பாடுகளைப் பற்றியும் அறிந்திருத்தல்.
1-3. பொது அறிவு: செய்திகள், செயல்பாடுகள் இல்லாமல் பொதுவான இயற்கை செயற்கை நிகழ்ச்சிகள் உலகியல் உளவியல், அறிவியல், அரசியல், பொருளியல், வரலாறு, இலக்கியம் போன்றவற்றில் உள்ள ஈடுபாடு.
2. சிறந்த தேர்வுணர்வு: ஒரே வகையான பல பொருட் கூறுகள், செயல் கூறுகளில் சிறந்தவற்றைத் தேர்ந்து கொள்ளுகிற அறிவுணர்வு.
3. பிறர் செய்யும் இடையூறுகளுக்கு அஞ்சாமை பெரும்பாலும் இவ்வுலக உயிரியக்கமே ஒரு போட்டி உணர்வுடனேயே இயங்குகின்றது. ஒன்றினை ஒன்று முந்தப் பார்ப்பதும் வெல்லப் பார்ப்பதும் இயற்கை இப்போட்டியில் பின்தங்கும், அல்லது தோல்வியுறும், அல்லது வெற்றி பெற வலிவில்லாத உயிர்கள், வென்ற அல்லது வெல்லுதிறம் உடைய, அல்லது போட்டியில் ஈடுபட்ட பிற உயிர்களைப் பொறாமை உணர்வு கொண்டு தாக்குதல், ஊக்கமிழக்கச் செய்தல், இடையூறு விளைவித்தல், அழித்தல் ஆகிய முயற்சிகளால் பின் தங்கவோ அல்லது போட்டியினின்று விலகிக் கொள்ளவோ செய்யும். இஃது உயிர்களின் வாழ்வியல் போராட்டமாக இருக்கிறது. மாந்தர்களும் இதற்கு விலக்கல்லர். இன்னும் சொல்வதானால் மாந்தரின் அறிவு வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும், அறிவியல் வாழ்வுக்கும் ஏற்ப, இவ்வடிப்படையான இயற்கைப் போட்டிகள், மிக வலிந்தும், சூழ்ச்சியாகவும், நயவஞ்சகமாகவும் நடைபெறுவதை உணரலாம்.
இப்போட்டி முயற்சிகள், பொருள், புகழ், அதிகாரம், ஆட்சி முதலிய கூறுகளில் மிகுந்து தோன்றுகின்றன. செயல் கூறுகள் பொருளியலை அடிப்படையாகக் கொண்டு இயங்குவன ஆகையாலும், பொருளியலே வாழ்வியலுக்கு அடிப்படையாக அமைந்த கூறாக உள்ளதாலும், செயல் கூறுகளிலேயே, போட்டிகள், பொறாமைகள், கீழறுப்புகள், வஞ்சகங்கள் முதலிய மாந்த அறிவு முயற்சிகளின் பெரும் பகுதிக் கூறுகள் இயங்குகின்றன.
எனவே, செயல் நிலைகளில் இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் பஞ்சமே இல்லை. அவரவரும் தமக்காகச் செய்யும் செயல் முயற்சிகளைவிட, தம் அண்டை அயலார் செய்யும் முயற்சிகளில் அதிகக் கவனமும் பொறாமையும் வைத்திருப்பது இயற்கையாகவே அமைந்திருக்கிறது. இஃது உயிர்களின் கூர்தலறபடிநிலை (பரிணாம) வளர்ச்சிகளில் ஒன்றாகவே அமைந்திருக்கிறது. விலியவரைப் பார்த்து அவர் போல், மெலியவராகிய தாமும் முன்னேற, இஃதும் ஒரு வழியாக உயிர்களின் இயங்கியல் கூறாக அமைந்திருக்கிறது. உலகில் இரண்டு மாந்தர்களே எஞ்சியிருந்தாலும் ஒருவரை ஒருவர் அழிக்கவே முயற்சி செய்வர். தம்மைப்போல் இன்னொருவர் இருக்க அல்லது இயங்க, அவருக்குப் பிடிப்பதில்லை. உயிரியலின் இயங்கியல் கோட்பாடு இப்படித்தான் அமைந்திருக்கிறது. ஒரே ஒரு தனி மாந்தனுக்குள்ளேயே கருத்தளவிலும், உள்ளுறுப்புகளின் அளவிலும் கூட இப்போட்டி முயற்சிகளும் நடந்து கொண்டுதாம் இருக்கின்றன.
ஆகவே, செயல் நிலைகளில் எதிர்ப்புகளையும் பிறர் குறுக்கீடுகளையும் கொண்டு அஞ்சத் தேவையில்லை. அதனை ஒரு செயல் போட்டி என்றும், அஃது இயற்கை என்றுமே கருதிக் கொள்ளல் வேண்டும்.
4. பிறர் கூறு பழிகளைப் பொருட்படுத்தாமை இதுவும் முந்திய வகை முயற்சியுணர்வே எனலாம். ஒருவரின் செயல் வலிமைக்கு எதிராக நின்று இயங்க முடியாதவர்கள், அல்லது இயங்கத் தெரியாதவர்கள், கருத்தளவில் எதிர் நின்று இயங்கும் உணர்வு இது. பொறாமைப்படுவது, எள்ளுவது, இழிப்பது, பழிப்பது, எதிர்ப்பது, பகைப்பது ஆகியன கருத்தளவானும், போட்டியிடுவது, இடையூறு விளைவிப்பது, வஞ்சிப்பது, ஏமாற்றுவது, அழிப்பது ஆகியவை செயலளவானும் நிகழுபவையாகும். எனவே இதுவும் உயிரியங்கியல் செயல்நிலை முயற்சிகளுள் ஒன்றேயாகும் என்று கருதி அதனைப் பொருட்படுத்தாத உணர்வை ஒரு செயலாளன் பெறுதல் வேண்டும் என்பது.
5. ஆடம்பரம் விரும்பாமை ஆடம்பரம் என்பது அளவி மீறிய தேவைகளும், அவற்றைப் பெறுவதும் துய்ப்பதுமான கவர்ச்சியான செயற்பாடுகளே. இதுவும் பிறர்க்கு எரிச்சலூட்ட வேண்டும் எனபதற்காகவும் அவர்களுக்குத் தம்மின் மேனிலைகளை உயர்த்திக்காட்ட வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் தம்மைப் பார்த்து மனம் அழிய வேண்டும் என்பதற்காகவும் செய்யப் பெறும் போலிமை முயற்சிகள், இதுவும் பொறாமை உணர்வின் வெளிப்பாடே. எனவே இந்தச் செயலை உண்மையான செயல் விரும்பிகள் செய்யக்கூடாது என்பது.
6. எளிதாக நம்பு திறனும், எளிதாக நம்பாமையும் முரண்பாடுகள் போல் தோன்றும் இவ்வுணர்வு ஒரு செயல் திறமுடையவனுக்கு மிகவும் தேவையான இரு எதிர் உணர்வுகளாகும்.
இவ்வுலகின் எல்லா வகைச் செயற்பாடுகளிலும் ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை வைத்தே இயங்க வேண்டியுள்ளது. சிலரிடம் கொள்ளும் இந்நம்பிக்கையால் நன்மையும், சிலரிடம் கொள்ளும் நம்பிக்கையால் தீமையும் நேரலாம். இவ்விளைவுகளை முன்கூட்டியே உணர்ந்து கொள்வது கடினம். ஏனெனில் ஒருவர் மனத்தை அதன் உணர்வு நிலைகளை இன்னொருவர் முன்கூட்டியே சரியாக மதிப்பிட்டு அறிந்து கொள்ளுதல் இயலாது. அவற்றைப் பழகியே அறிதல் இயலும். அப்பழக்கத் தொடர்புக்கு முன் அவரொடு கொள்ளும் தொடக்க ஈடுபாட்டுக்கு அவரை நம்பவும் செய்தல் வேண்டும்; நம்பாமலும் இருத்தல் வேண்டும். அவரை முழுமையாக நம்பி விடுவதும், முழுமையாக நம்பாமலிருப்பதும் பின்வரும் பழக்கத் தொடர்புக்கு வாய்ப்பு அமையவும் அமையாலிருக்கவும் செய்து விடலாம். எனவே படிக்கட்டுகளில் நடப்பது போல், அடுத்துள்ள படிக்கட்டில் ஒருகால் வைத்து ஏறியே, அதற்கடுத்த படிக்கட்டில் இன்னொரு கால் வைப்பதான ஒரு முயற்சியாக இஃது இருக்க வேண்டும். முதலில் இரண்டு கால்களையும் ஒரு சேரவே அடுத்த படியில் வைக்காமல், இரண்டில் ஒன்றை முதலில் வைப்பது நம்பாமையையும், படி உறுதி என்று தெரிந்தபின் அடுத்த காலையும் எடுத்துவைப்பது நம்பிக்கையையும் குறிக்கும்.
இவ்வாறு மாறி மாறி நம்பிக்கையுடனும், நம்பாமையுடனும் செயலுறவில் ஒருவரிடம் பழகுதல் வேண்டும் படிக்கட்டுகளையெல்லாம் தாண்டிக் கடந்து ஒருவர் மேல் உள்ள சமதளத்துக்கு வந்துவிட்ட பின், இரண்டு கால்களையும் பாவ விடுவதுபோல், இருநிலை உணர்வுகளையும் தாண்டி அஃதாவது பழக்கக் காலத்தைத் தாண்டி முற்றும் நம்பிக்கை நிலையையோ முற்றும் நம்பாமை நிலயையோ ஒருவர் பெறுவது இயல்பாக ஆகிவிடும் என்க.
இனி செயல்கள் பலவகைப்பட்டனவாக இருப்பதால், அவற்றுக்குத் துணையாளர்களும், பணியாளர்களும் அவ்வவ் வகைச் செயல்களுக்கேற்பப் பலவகைப்பட்டவர்களாகவே இருப்பர்; இருத்தலும் வேண்டும்.
எனவே, மேலே கூறப்பெற்ற அனைத்து உணர்வுக் கூறுகளிலும் நாம் மேற்கண்ட செயல்களுக்கு மிகவும் தேவையான, அல்லது பொருந்துவதான உணர்வுக் கூறுகளைக் கொண்டவர்களையே நாம் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
இருப்பவர்கள் அல்லது கிடைப்பவர்களைக் கொண்டு செயல்படுவதென்பது வேறு. செயலுக்கு வேண்டியவர்கள் அல்லது பொருந்தக் கூடியவர்களைத் தேடிப்பிடித்து அமர்த்திச் செயலைச் செய்தல் அல்லது செய்வித்தல் என்பது வேறு. முன்னது பொது பின்னது சிறப்பு. ஒரு செயலை முன்னவர் போலவே செய்வது என்பது பொது. அவரை விட இன்னும் சிறப்பாகச் செய்வது என்பது சிறப்பு அதுவே வாழ்வில் பெருமை சேர்ப்பதும் ஆகும்.
பெருமை உடையவர் ஆற்றுவார், ஆற்றின் அருமை உடைய செயல் (975)
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் கருமமே கட்டளைக் கல். (550)
என்னும் பொய்யா மொழிகளை ஒர்க, இவற்றுள்உள்ள 'அருமை', 'பெருமை' இரு சொற்களும் சிறப்புறச் செய்வதையும் குறிப்பனவாகும்.
நாம் செய்யும் அனைத்துச் செயல்களும், பொதுவாக நான்கு வகைப்பட்டன. உலகின் அனைத்துச் செயல்களையுமே இந்நான்கு கூறுகளுக்குள் அடக்கிவிடலாம்.
1. வாழ்வியல் நிறைவுச் செயல்கள் - அடிட்பபடைச் செயல்கள்:
இவை வாழ்வியலுக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் இவற்றை மட்டுமே நோக்கி அவற்றை நிறைவுறுத்துவதற்காகச் செய்யப்பெறும் செயல்களாகும். இவற்றை மட்டுமே செய்வதால் ஒருவர் எவ்வகைச் சிறப்பும் பெறுவதில்லை. இவை மாந்தராகப் பிறந்த அனைவரும் செய்யக் கூடிய செயல்களே ஆகும்.
2. வாழ்வியலுடன் கூடியஆளுமை செயல்கள் சிறப்புச் செயல்கள்:
முன்னர் கூறிய வாழ்வியல் நிறைவுச் செயல்களுடன் கலை, கல்வி, வாணிகம், வீரம், ஆட்சி முதலி ஒன்றனுள்ளோ, ஒன்றுக்கு மேற்பட்டனவற்றுள்ளோ ஈடுபட்டுச் சிறப்புறச் செய்யும் செயல்கள்.
3. வாழ்வியலுடன் ஒரு கொள்கை நோக்கிய செயல்கள் செயற்கரிய செயல்கள் :
இவை வாழ்வியல் நிறைவுச் செயல்களுடன், தம் அறிவுக்கும், உணர்வுக்கும் உகந்ததும், தமக்கன்றிப் பிறருக்கும் பயன்படுவதும் ஆன ஒரு கொள்கையை எடுத்துக் கொண்டு, செய்யும் அரிய செயல்களாகும். இவற்றுள் சமயம், மாந்த உரிமை, பொதுநலம், மாந்த மேம்பாடு முதலியவை நோக்கிச் செய்யப் பெறும் செயல்கள் அடங்கும்.
4. வாழ்வியலைப் பெரிதாகக் கருதாமல், முழுவதுமாக ஒரு கொள்கை நோக்கிய செயல்கள். ஈகச் தியாகச் செயல்கள்:
இவை தந்நலம் கருதாமல் பொதுநலம் கருதி ஈகவுணர்வால் மூன்றாம் பகுதியில் கூறப்பெற்ற செயல்களைச் செய்வதாகும்.
இந்நான்கு வகைச் செயல்களுக்குமே துணையாளர்களும், பணியாளர்களும் தேவை. ஆனால் ஒவ்வொரு வகைச் செயலுக்கும் உரிய துணையாளர்களையும் பணியாளர் களையும் தேறுவதுதான் மிகவும் கடினமானது. ஆனால் அதனைச் செயலுக்கு முன் நிற்பவர்கள் திறம்படச் செய்துதான் ஆகவேண்டும். இல்லெனில் செயல் செய்வது கடினம் சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். (6.64) என்னும் திருக்குறட்பாவில் செயலருமை நன்கு கூறப்பெற்றிருப்பதை நன்றாக மனத்தில் இறுதிக் கொள்ளுதல் வேண்டும். சரியான துணையாளர்களும் பணியாளர்களும் அமையாத விடத்து, அச்செயல் இன்னும் பல மடங்கு கடுமையாகப் போய்விடும் என்று உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அதனால்தான் திருவள்ளுவப் பேராசானும்,
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். (517)
என்றும்
செய்வானை நாடி வினைநாடி காலத்தொடு
எய்த உணர்ந்து செயல். (516)
என்றும்
வினைக்குரிமை நாடிய பின்னை அவனை
அதற்குரியன் ஆகச் செயல் (518)
என்றும் கூறி, வினைமுடிக்கத் தகுதியுடையவனையும் செய்யத் தகுந்தவனையும், வினையைத் தன்னுடையது என்று உரிமையுடையவனாகக் கருதுபவனையும் துணையாளாகவும் பணியாளாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்.
இனி, மேற்கூறிய நான்குவகைச் செயற்பாடுகளுள், முதல்வகைச் செயற்பாடுகளுக்கு அத்துணைத் திறமையுடைய ஆள்கள் தேவையில்லை. அஃதாவது ஒரளவு துணையாளராகவும் பணியாளர்களாகவும் இருந்தால் போதும்.
இரண்டாவது வகைச் செயற்பாடுகளுக்குத் துணையாக வரவேண்டியவர்கள் முதலாம் நிலையுடையவர்களை விடக் கூரிய அறிவுடையவர்களாகவும் சீரிய வினைத்திறம் உடையவர்களாகவும் இருத்தல் வேண்டுவது இன்றியமையாதது.
இனி, மூன்றாவது நான்காவது வகைச் செயற்பாடுகளுக்கோ கூரிய திறப்பாடுகளுடனும், உயரிய பண்புகள், பட்டறிவுகள், செயலறிவுகள், நடுநிலையுணர்வு, அவாவின்மை, பொருள் நசையின்மை, தந்நல மறுப்பு, ஈகவுணர்வு முதலியவை கட்டாயம் தேவையன்றோ? எனவே அத்தகைய உணர்வுடையவர்களையே நாம் தேர்ந்தெடுத்துத் துணையாளர் களாகவும் பணியாளர்களாகவும் அமர்த்துதல் வேண்டும்.
துணையாளர்களும் பணியாளர்களும் செப்பமற்றவர் களாக இருப்பின் வினைத்தொய்வு ஏற்படும். அதனால் சிறு சிறு அளவிலோ, பேரளவிலோ, ஒவ்வொரு முறையிலுமோ, ஒட்டுமொத்தமாகவோ இழப்புகள் நேரும் என்பதையும் சில நேரங்களில் இழப்புகளும் ஏதங்களும் கூட நேரும் என்பதையும் உறுதியாகத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். இனி, துணையாளர்களுள் உறவினர்கள் முதலானவர்கள் நல்ல உறவினர்கள் நல்ல துணையாளர்களாக இருப்பார்கள். அவர்கள் பொது நல உணர்வுள்ளவர்களாக அமையாதவிடத்து, வினைக்குத் தொல்லையாகவும் தடையாகவுமே அமைந்துவிடுவர். அவர்கள் நம்பிக்கை யுடையவர்களாக இருத்தல் மிக மிக இன்றியமையாதது.
உறவினர்கள் நல்ல உணர்வுடையவர்களாகக் கிடைக்காவிடில், நல்ல நண்பர்கள் துணையாக அமையலாம். நல்ல நண்பர்களைத் தேறுவது மிக்வும் கடினம். பெரும்பாலும் நல்ல நண்பர்கள் எனத் தகுதியுடையவர்கள், ஒருவரோ இருவரோதாம் அமைய முடியும். அன்பர்கள் எனப்படுபவர்கள் வேறு; நண்பர்கள் எனப்படுபவர்கள் வேறு. அன்பர்கள் எல்லாரும் நண்பர்கள் ஆகிவிட மாட்டார்கள். நல்ல நண்பர் என்பவர் மனைவிக்கு உள்ள உணர்வுடையவர்களாகவே இருப்பதும் இன்றியமையாதது.
நல்ல நட்புக்குரியவனே நல்ல நண்பனையும் பெற முடியும். நட்பு இருபுறத்தும் ஒன்றுபோல் இருக்கும் உணர்வுடையது. திருக்குறளில் நட்பைப்பற்றி நிறையக் கருத்துகள் கூறப்பெறுகின்றன. ஒவ்வொரு கருத்தைப் பற்றியும் ஒன்றிரண்டு அதிகாரங்களில், பத்து, இருபது. குறட்பாக்களாக எடுத்துக் கூறிய திருவள்ளுவப் பேராசான், நட்புணர்வைப் பற்றி மட்டும், நட்பு, நட்பாராய்தல் பழைமை, தீநட்பு, கூடாநட்பு என்னும் ஐந்து சிறப்பதிகாரங்களையும் இகல், பகை மாட்சி, பகைத்திறந் தெரிதல், உட்பகை, பெரியாரைப் பிழையாமை ஆகிய ஐந்து பொதுவதிகாரங்களையும் பெண்வழிச் சேறல், வரைவின் மகளிர் ஆகிய இரண்டு பெண் வழி நட்பதிகாரங்களையும் ஆகமொத்தம், பன்னிரண்டு அதிகாரங்களில் நூற்று இருபது குறட்பாக்களை எடுத்துக் கூறுவது பெரிதும் கவனிக்கத் தக்கது. நட்புக்குத் திருவள்ளுவப் பெருமான் ஒரு சிறப்பிலக்கணம் கூறுவார்.அதை அனைவருமே மனத்தில் இருத்திக் கொள்வது நல்லது.
நாடாது நட்டலின் கேடுஇல்லை; நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. (797)
என்பது அது. அஃதாவது நட்பு என்பது பிரிவு இல்லாதது. பிரிவு இருந்தால் முன்னர் கொண்ட தொடர்பு, நட்பு என்று பெயர்பெறாது. ஏதோ ஒன்றுக்காக ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகியிருக்கிறார் என்பதே பொருள். இணைந்தவுடன் எவரிடத்துப் பிரிவு என்பது (அஃதாவது தொடர்பு அறுவது இல்லையோ, அதுவே நட்பாகும். எனவேதான் ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார் அவர்.
எனவே, ஏதோ ஒரு செயலின் பொருட்டாக ஒன்று சேர்பவர் நண்பர் என்று கொள்ளப் பெறார். நண்பராக இருந்துதான் அவரை ஒரு செயலின் பொருட்டாக இணைக்கவோ துணையாகக் கொள்ளவோ வேண்டும். பழகுகின்ற எல்லாரையுமே நண்பராகக் கருதிச் செயலுக்குத் துணையாகக் கொண்டுவிடக் கூடாது. இதில் செயலுக்கு முனைந்தவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும் செயல் தொடங்குகின்ற வரையில் ஒன்றாக இணைந்து நின்றவர்கள் அது தொடங்கி நடைபெறுகையில் வேறாகப் பிரிந்து விடுவதுதான் உலகில் பேரளவில் நண்டபெறுகிறது என்பது திருவள்ளுவர் கருத்து.
எனைவகையான் தேறிய கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர், (541)
என்னும் குறளை முன்னரே உணர்ந்திருக்கின்றோம் அன்றோ?
8. துணையாளர்க்கும் பணியாளர்க்கும் உள்ள வேறுபாடுகள்
நல்ல துணையைளர்களை அமர்த்துதல் தொடர்பாக இதுவரை சில விளக்கங்களைப் பார்த்தோம். இனி, நம் செயலுக்குத் தக்கப் பணியாளர்களை அமர்த்துதல் தொடர்பாக மேலும் சில கருத்துகளைப் பார்ப்போம். அதற்கு முன்துணையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் உள்ள சில வேறுபாடுகளையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
துணையாளர்கள் என்பவர்கள், தொடங்கியுள்ள நம் செயலுக்குத் துணையாக இருந்து இயங்கும் தகுதி படைத்தவர்கள். அவர்கள் நம்மைப் போலவே செயல் நிலைக்கு உறுப்பாக இருப்பவர்கள். முதலீடு, உழைப்பு, ஊதியம் அல்லது இழப்புப் பகிர்வு முதலியவற்றுள் நம்மோடு ஒன்றி நின்று பங்கு பெறுபவர்கள் நமக்கு பகரமாக இயங்குபவர்கள்.
ஆனால் பணியாளர்கள் எனப்படுபவர்கள், நாம் அமைக்கின்ற செயலில் தொழில் செய்பவர்களாக அமர்த்தப்பெறுபவர்கள். அவர்களுக்கு நம் செயலைப் பற்றியோ, செயல் நோக்கத்தைப் பற்றியோ கவலையில்லை. இன்னும் தொழிலில் ஊதியம் வருவதைப் பற்றியும் இழப்பு வருவது பற்றியும் அவர்களுக்குக் கவலை இருக்காது. அவ்வாறு கவலைப்படுவதுபோல நடந்து கொண்டாலும் அதில் உண்மையிருக்காது. ஒருவேளை உண்மையிருந்தாலும் அக்கவலையோ அக்கறையோ நீடித்து அல்லது நிலைத்து இருக்காது. அவர்கள் உண்டு அவர்களின் பணி உண்டு என்றே பெரும்பாலும் இருப்பார்கள்.
எனவே செயல்திறமுள்ளவர்கள் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பது பற்றியும், அவர்களை இயக்குவது பற்றியும் மிகு கவனம் செலுத்துதல் இன்றியமையாதது. தொழிலை அல்லது செயலைப் பொறுத்த வரையில், அதன் பின்புலம், பொருள், தொழில், திறன் எவ்வளவு வலியனவாக இருப்பினும், பணியாளர்கள் என்றும் கூறு திறமையாக அல்லது வலிவாக அல்லது செயலுக்குத் தடையில்லாத தன்மையுடையதாக அமையவில்லையானால் தொழில் அல்லது செயல் கெட்டுவிடும் என்பதை நாம் நன்கு உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். பணியாளர்களைப் பொறுத்த அளவில் அவர்களை, அவர்களின் மனஉணர்வை, செயல் திறத்தை, பழகுமுறையை, பொறுப்புகளை, அவர்கள் ஏற்றுக் கொள்ளும் தன்மையை நாம் முதலில் நன்கு உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அத்துடன் அவர்களை நடுநிலையான உணர்வுடன் நாம் நன்கு மதிக்கவும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
பணியாளர்கள் நம் அடிமைகளல்லர். ஒரு வகையில் அவர்கள் நம் செயலுக்குத் துணை நிற்கும் துணையாளர்களைப் போன்றவர்களே. அவர்களை நம் துணையாளர்களாகவே கருதுவதில் தவறில்லை. நம் செயல் நலன்களை நாம் எவ்வளவு பெரிதாகக் கருதுகிறோமோ, அதேபோல் அவ்வளவில் அவர்களின் நலன்களையும் நாம் கருதிப் பார்த்தல் வேண்டும்.
அவர்கள் நம்மேல் நம்பிக்கை வைக்கும் அளவிற்கு, நாமும் அவர்கள் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் நம் செயல்களின் மேல் அதிக அக்கறையும் ஆர்வமும் கொண்டு உழைக்க முன் வருவார்களானால் நாமும் அவர்களின் அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற மதிப்பும், பெருமையும், வெகுமதியும் தந்து அவர்களைப் போற்றிக் கொள்ளுதல் வேண்டும். நாம் செய்யும் செயல்களில், அக்கறையும் ஆர்வமும் ஊக்கமும் கொள்ளாத பணியாளர்களைப் பணிக்கு அமர்த்திக் கொண்டு, நம்மையும் வருத்திக் கொண்டு, நாம் செய்யும் செயலுக்கும் ஊறுவிளைவித்து விடுதல் கூடாது.
பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தொடக்கத்திலேயே மிகு கவனம் செலுத்துதல் நல்லது.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். (510)
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர். (514)
என்னும் திருக்குறள் கூற்றுகள் ஒவ்வொரு பணியாளரையும் தேர்வதற்கு முன் நாம் மனத்தில் இருத்திக் கொள்ளக் கூடிய எச்சரிக்கைக் கருத்துகளாகும்.
"நன்றாக ஆராய்ந்து பாராமல் ஒருவரை நாம் பணியாளராக வைத்துக் கொள்ளலாம் என்று தெளிவுறுதலும், அவ்வாறு தெளிந்து தேர்ந்து கொண்டவர்மேல் நாம் அடிக்கடி ஐயப்பட்டுக் கொள்ளுதலும், இடைவிடாத துன்பத்தையே நமக்குத் தருவதாகும்” என்பதும்,
நாம் ஒருவரை அறிவு, அன்பு, பண்பு, வினைத்திறம், நடைமுறை, ஈடுபாடு, பொறுப்பு முதலிய அனைத்து நிலைகளாலும் தகுதியானவர் என்று பணிக்கு அல்லது வினைக்குத் தேர்ந்தெடுத்தாலும், அவரை வினைக்கு அமர்த்திய பின் தம் தகுதி நிலைக்கூறுகளில் நாம் எதிர்பார்த்த அல்லது முன்னிருந்த தன்மையில் வேறாக இயங்குபவர்கள் பலர் ஆக இவ்வுலகில் உள்ளனர்; ஆகையால் அவரும் மாறி போகலாம் என்பதும், தாம் எண்ணி ஆராய்ந்து பார்க்கத் தகுந்தன.
9. பணியாளர் குணங்கள்
ஒருவரை நம் வினைக்கு அல்லது தொழிலுக்கு பணியாளராக அமர்த்துதற்கு முன்னர் அவரைப் பற்றிய கீழ்க்காணும் குணநலன்களில் மிகு கவனம் செலுத்துதல் வேண்டும்.
1. அவர் நம் செயலில் ஈடுபட்டுப் பணியாற்றுதற்குப் போதிய கல்வியறிவு செயலறிவு ஆகிய இரண்டும் முழுமையாகப் பெற்றிருத்தல் வேண்டும்.
2. செயலில் தொடர்ந்து ஈடுபடுவதற்குரிய உடல் நலத்துடன் விளங்குதல் வேண்டும்.
3. அவர் தம் உடன் பணியாற்றும் பணியாளர்களுடன், மேலாளர்களுடன் இணக்கமாகப் பணியாற்றுதற்குரிய மனநலம், பண்புநலன், ஒத்துப்போகும் தன்மை ஆகியவற்றுடன் இருத்தல் வேண்டும்.
4. ஊக்கமுடன் உழைப்பவராகவும், தாழ்ச்சி, வீழ்ச்சி, இகழ்ச்சி முதலிய தொய்வுகளைப் பொருட்படுத்தாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. பொய், திருட்டு, வஞ்சகம், ஏமாற்றுதல், புறம் பேசுதல், பணியாளர்களைக் கலைத்தல், அணி சேர்த்தல், போராட்டக்குணம் ஆகியவை அற்றவராக இருத்தல், நயன்மையான குறைபாடுகளைச் சுட்டினால் அவற்றை ஏற்றுக் களைந்து கொள்ளும் மனவுணர்வு பெற்றிருத்தல் முதலிய குண நலன்களுடன் விளங்குதல் வேண்டும்.
6. கூடியவரையில் தந்நலவுணர்வு மிக்கில்லாதவராகவும், பொதுநலவுணர்வில் ஆர்வமுடையவராகவும், நடுநிலை, நேர்மை உணர்வுள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
7. தெரியாதவற்றைத் தெரிந்து கொள்ளவும், தெரிந்தவற்றுக்காகச் செருக்கடையாமல் பிறர்க்கும் அவற்றைத் தெரியச் சொல்லித் தருபவராகவும் இருத்தல் வேண்டும்.
8. பணிகளை ஏவித்தான் செய்ய வேண்டும் என்றிராமல் தாமே அறிந்து கொள்ளவும், அறிந்தவற்றை எடுத்துச் செய்யவும், அவற்றைப் பதற்றமோ சிதர்வோ இல்லாமல் பொறுமையாகவும் திறமையாகவும், நுட்பமாகவும், செப்பமாகவும், கலையுணர்வுடன் அழகாகவும் செய்யத் தெரிந்தவராகவும், அவ்வாறு தெரியா விடத்து அவற்றுள் ஆர்வமுள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
9. தமக்கு ஏதாவது பணித் தொடர்பான மனக்குறைகள் இருப்பின், அவற்றை வேறு யாரிடமும் கூறாமல், பணிப் பொறுப்பாளர்களிடம் நேரடியாகக் கூறித் தீர்வு காண விரும்புகிற தன்மை உடையவராக இருத்தல் வேண்டும்.
10. கூடியவரை குடி, சூதாட்டம், பொழுதுபோக்குக் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபாடு, இன்பநாட்டம், ஆடம்பரம் முதலியவற்றில் தொடர்பும், அவை பொருட்டுப் பணத் தேவையும் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.
11. மணந்தவராக இருந்தால் குடும்பத்தில் ஈடுபாடும் அன்பும் அக்கறையும் உடையவராகவும், மணவாதவராக இருந்தால் தான்தோன்றியாகத் திரியாமல் இல்லறவொழுக்கத்தில் நாட்டமுடையவராகவும் இருத்தல் வேண்டும்.
12 ஆண் பணியாளர்களாக விருப்பின் உடன் பணியாற்றும் பெண் பணியாளர்களிடம் அமைவாகவும், பண்பாகவும், ஒழுக்கமாகவும் இயங்கவும், பெண் பணியாளர்களானால் ஆண் பணியாளர்களிடம் அடக்கமாகவும் வாயாடாமலும் அதே பண்புடனும் ஒழுங்குடனும் இயங்கவும் வேண்டும்.
10. சில இயலாமைகள்
இங்குக் கூறப்பெற்ற தகுதிகள் சிறப்பானவையே தவிர, பொதுநிலைக்கு இத்தகுதிகள் முழுவதும் உடையவர்களையே தேடிக் கொண்டிருக்க இயலாது. இவற்றுள் மிகுதியும் தகுதியுடையவர்களாகத் தேறும்பொழுது செயலும் மிகு சிறப்புடையதாக இருக்கும். அவ்வாறின்றிக் குறைவான தகுதியுடைய பணியாளர்களாக உள்ளவர்களை நாம் ஊக்குவித்து, முழுத் தகுதியுடையவர்களாக வளர்த்தெடுத்துக் கொள்ளவும் முடியும் என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.
அத்துடன், நமக்கு வாய்த்த துணையாளர்களாயினும் பணியாளர்களாயினும், நாம் முன்னர் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒருவர் தகுதிக் குறைவானவராக இருந்தாலும், அல்லது தம் தகுதிகளை வளர்த்தெடுத்துக் கொள்ள இயலாத தன்மையுடையவராக இருந்தாலும், அவரை உடனே தவிர்த்து விட்டு, வேறு தகுதியாளரைப் பணியில் அமர்த்திக் கொள்வதில், நாம் கவனம் செலுத்தாமலோ தயக்கம் காட்டிக் கொண்டோ இருந்துவிடக் கூடாது. ஒருவேளை ஒருவர் தகுதியுடையவராக இருந்து, நமக்குப் பொருந்தாத உணர்வுடைய வராகவோ, மாறான போக்கினை யுடையவராகவோ இருந்தாலும், நாம் அவ்வாறானவரையும் உடனடியாக அப்புறப்படுத்தவும் வேண்டும்.
பெரும்பாலும் திறமையான செயலாற்றல் உள்ளவர்களிடத்தில், சிற்சில பொருந்தாத தன்மைகளும் இருக்கவே செய்யும். அவ்வாறே, திறமைக் குறைவானவர்களிடம் நமக்குப் பொருந்திய சிற்சில கூறுகளும் இருக்கலாம். அவ்வாறான நிலைகளில் முன்னவர்களைவிடப் பின்னவர்களை நாம் பணிக்கு அமர்த்திக் கொள்வது பிழையாகாது என்பதையும் நாம் எண்ணிப் பார்த்தல் நல்லது.
24. முடிவுரை
1. சில ஏற்றத்தாழ்வுகள்
இதுவரை கூறப்பெற்ற செய்திகளில், பெரும்பாலும் செயல் கூறுகளான அனைத்தையும் ஒருவாறு நாம் அடக்கிக் கூறியுள்ளோம். இவற்றுள் ஒவ்வொரு கூறும் இன்றியமையாததே. ஒன்று சிறந்து ஒன்று தவிர்ந்தாலும், அல்லது ஒன்றில் கவனம் செலுத்தி ஒன்றில் கவனம் குறைந்தாலும், நாம் எடுத்துக் கொண்ட செயலில், அந்த அளவு குறைகள் நேர்ந்துவிடவே செய்யும். எனவே, போதுமான அளவில் அனைத்துக் கூறுகளிலும் ஒருவர் முழு அளவிலான செய்திகளையும் நன்கு தெரிந்து கொள்வதுடன், அவற்றுள் முழுக் கவனமும் கருத்தும் கொள்ளுதல் மிகவும் நல்லது. அல்லாக்கால் செயல் விளைவுகளுள் குறைகள் ஏற்படுவதைத் தடுக்க இயலாது. அவ்வாறு குறைகள் நேருங்கால், அவை எந்தக் கோணங்களில் நாம் கவனம் செலுத்தாமையால் நேர்ந்துள்ளன என்று தீவிரமாக ஆய்ந்து தெளிந்து கொண்டு, அவற்றைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதே எச்சரிக்கையான, செயற்கடமையாகும்.
2. அகலக்கால் வையாதே
செயலடிப்படையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டுவன இங்குக் கூறப்பெற்றவற்றினும் இன்னும் கூடுதலாகவே இருக்கலாம். ஆனால் அவை யாவற்றினும் பொதுவான ஓர் உண்மை யாதெனில், ஒன்றுக்கு மேற்பட்ட பலவற்றுள்ளும் அகலக்கால் வைத்துத் தோல்வியுறுவதைவிட, ஏதோ நமக்குப் பொருந்திய ஒன்றினுள் ஆழக்கால் வைத்து வெற்றி பெறுவதே சிறந்ததும் தக்கதும் ஆகும் என்பதைச் செயலுக்கு முன் வரும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது தேவையானதாகும்.
ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை;
போகாறு அகலாக் கடை - (478)
என்னுங் குறள் மொழி இவ்வகையிலும் பொருத்தமுடையதே.
இனி, இறுதியாக, ஒரு செயலைப் பற்றி எண்ணுவது எவ்வளவு எளிது; அதைச் செய்வது எவ்வளவு கடினமானது என்பதைப் பெரும்பாலும் அனைவருமே அறிந்திருப்பர். நாம் இயற்கையாகவே ஒவ்வொன்றில், ஒரு சிலர் சிலவற்றில் திறமையும் ஆர்வமும் உடையவராகவே இருப்போம். அந்த நிலையை முதலில் நாம் தெரிந்து கொண்டே பிறகு அனைத்து நிலைகளிலும் முனைந்து போக வேண்டும்.
அடுத்து, இன்னொன்று. நாம் எப்படி தேவையானதைப் பயனுடையதைக் கற்க வேண்டுமோ, அவ்வாறே நமக்கும் பிறர்க்கும் தேவையான பயனுடைய செயல்களையே செய்ய முனைதல் வேண்டும்.
"செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும் (486)
வெறும் பணநோக்கம் கொண்டுமட்டும் செயல்களைச் செய்ய எண்ணிவிடக் கூடாது. மாந்தன் தன் அரிய பிறப்பைப் பணத்தைத் தேடுவதிலேயே அழித்துக் கொள்ளக் கூடாது. மாந்தன் உயர்ந்த பிறப்புடையவன். அவன் வாழ்க்கையும் உயர்ந்ததாகவே இருக்க வேண்டும். பணத்தை ஈட்டுவதும் அதைச் செலவழிப்பதுமே வாழ்க்கை ஆகாது.
பொருட் செல்வம் யூரியார் கண்ணும் உள (412)
என்பர் குறளாசான்,
இதைவிட உயர்ந்த குறிக்கோளுக்காகவே ஒவ்வொருவரும் உளர்.
3. பிறவிப் பயன்
நம் அனைவர்க்கும் வாழ்க்கையின் பொதுவான குறிக்கோள் உயிர்மலர்ச்சியே. இவ்வுலகில் தோன்றிய அனைத்து உயிர்களையும் பார்க்கின்ற பொழுது, அவை எல்லாவற்றுள்ளும் மாந்த உயிரே சிறந்து விளங்குவதை நாம் காண்பதிலிருந்து, மலர்ச்சியுற்ற உயிர்க்கும் மலர்ச்சியற்ற உயிர்க்கும் உள்ள வேறுபாடுகளையும் சிறப்புகளையும் நாம் அறிய முடிகிறது. ஆனால் அவற்றை அறிந்த பின்னரும் நாம் வெறும் உணவுக்காகவும், இன்பத்திற்காகவும் அவற்றை உண்டாக்கிக் கொள்ளும் பொருட்டுப் பணத்திற்காகவுமே நாம் வாழ்கிறதாக இருத்தல் கூடாது. விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இல்லாத உயிர் மலர்ச்சி நமக்கு இருப்பது, அவற்றைப் போலவே வாழ வேண்டும் என்பதற்காக அன்று. அவற்றினும் உயர்ந்த குறிக்கோளுடைய வாழ்க்கையை நாம் வாழ்ந்தாக வேண்டும். இல்லெனில் நம் பிறவி பயனற்றதாகவே கருதப் பெறும்.
எனவே, உயர்ந்த உயிர் இயக்ககத்திற்கு நிலைக்களன்களாக அமைந்த நம் உணர்வு. அறிவு, குறிக்கோள் ஆகியவை, நம் வாழ்வைப் பயனுடையதாகச் செய்தல் வேண்டும். அந்தப் பயன் நோக்கிய செயல்களையே நாம் முனைந்து செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் நாமும் பிறரும் பயன்பெற முடியும்.
ஒரு செயலால் விளையும் நன்மையும் தீமையும் எண்ணி ஆராய்ந்து, அனைவர்க்கும் நலம் தருகின்ற செயல்களையே, அந்த நலனுக்கேற்ற அளவு முயற்சிகளுடன் செய்தல் வேண்டும் என்பது முன்னரே கூறப்பெற்றுள்ளது.
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். (511)
முடிவாக நாம் ஒவ்வொருவரும் ஒரு செயலைச் செய்தே ஆகல் வேண்டும். அதையே திறம் உடையதாகச் செய்தல் வேண்டும். அது மட்டும் அன்று. அதையே பயனுடையதாகவும் செய்தல் வேண்டும். இனி, அனைத்திலும் பயனுடைய செயலையே திறம் உடையதாகச் செய்தலை வாழ்க்கைக் கடமையாகக் கொள்ளுதல் வேண்டும்.
இனி, இத்தொடர் கட்டுரையை முடிப்பதற்கு முன், ஒரு செயல் எத்துணைக் கருத்தோடும் முன்னெச்சரிக்கையோடும் செய்யப் பெறுதல் வேண்டும் என்பதை இவ்வுலகின் அருஞ்செயல் ஒன்றை எடுத்துக் காட்டி விளக்குவதுடன், செயலருமை என்பதும் செயல்திறம் என்பதும் எத்தகையன என்பதையும் உணர்த்திக் காட்டுவோம்.
x`
25. செயல்திறத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
1. அருஞ்செயல்கள்
இவ்வுலகின்கண், மாந்த இனத்திற்கு அறிவு மலர்ச்சியுறாத காலத்திலும் சரி, அறிவு மலர்ச்சியுற்ற காலத்திலும் சரி, எத்தனையோ வகையான அருஞ்செயல்கள் நிகழ்ந்திருக்கின்றன. உடல் திறத்தாலும், அறிவுத் திறத்தாலும், உள்ளத்திறத்தாலும் இம்மூன்றுஞ் சேர்ந்த ஆளுமைத் திறத்தாலும் மாந்தன் பற்பல அருஞ்செயல்களைத் தனித்தனியாகவும் கூட்டாகவும் ஆற்றியிருக்கின்றான். அவற்றுள் நாம் வியக்கத் தக்கனவும், எண்ணி மகிழத் தக்கனவும், எடுத்துக்காட்டாகக் கருதிப் பார்க்கத் தக்கனவும், பின்பற்றத் தக்கனவும் ஏராளம்.
2. திறன் மிக்கச் செயல்கள்
மாந்தனால் தனித்துச் செய்யப்பெறும் செயல்கள் ஒரு மாந்தனின் தனித்திறனை, அவன் அறிவாற்றலை, ஊக்க உணர்வினை, செயல் திறத்தைப் புலப்படுத்துவனவாகும். மாந்தர்களின் கூட்டுச் செயல்களோ, அனைவரின் ஒன்று சேர்ந்த திறன்களையும் கூட்டுணர்வையும் புலப்படுத்துவனவாகும். அத்தகைய கூட்டுச் செயல்களைச் செய்கின்றன பொழுது, அனைவரின் மனவுணர்வும், செயல் நோக்கமும், அறிவுத் திறனும் ஒன்றுபட்டு ஒருமுக எண்ணத்துடன் இயங்குதல் வேண்டும். பலபேர்கள் இணைந்து செயல்படும் பொழுது ஒருவர் செய்கின்ற பிழை அனைத்துத் திறப்பாடுகளையும் கெடுத்துவிடுவதுண்டு. அதேபோல் ஒருவர் திறன் பலருக்கும் பெருமை சேர்ப்பதும் உண்டு. உலகின் பெரும்பாலான செயல்கள் கூட்டுச் செயல்களே ஆகும். உலகமே கூட்டுச் செயலால் உருவாவதுதான். ஒரு செயலுக்கு ஒரு வகையான அறிவுத் திறனே போதுவதில்லை. பல்வேறு வகைப்பட்ட அறிவுத் திறன், உணர்வுத் திறன், உழைப்புத் திறன், செயல்திறன் ஆகியவற்றாலேயே செயல்கள் நிகழ்கின்றன; அல்லது நிகழ்த்தப் பெறுகின்றன. இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், அறிவியல் கூறுகளில், இயல்பியல், வேதியியல், பொறியியல், தொழிலியல், தொழில்நுட்பவியல், நிலவியல், மண்ணியல், விண்ணியல், கலையியல் போலும் அனைத்து அறிவுக் கூறுகளும் இணைந்து இயங்கும் செயல்பாடுகள் மிகு திறம் வாய்ந்தவை. விண்ணில் ஏவும் செயற்கைக் கோள் போன்றவற்றிற்கு இவ்வனைத்தும் அறிவுக் கூறுகளும் இயைந்து இயங்குதல் எத்துணை இன்றியமையாதது என்பதை எண்ணிப் பாருங்கள்.
அவ்வாறு அனைத்துக் கூறுகளும் இணைந்து இயங்கிய ஒரு செயல் திறன் நாம் சிறிதே ஆழமாகக் காட்டுவதன் வழியாக, ஒரு செயல் வெற்றியுற முழுமையும் எத்தனை வகையான அறிவு முயற்சிகள் தேவை என்பதையும், அவை எவ்வெவ்வாறு ஒன்றினோடொன்று இயைந்து, இயங்க வேண்டும் என்பதையும் பார்ப்போம்.
3. திறன்கள் இயைந்து இயங்க வேண்டும்
அமெரிக்காவில், நியூயார்க்குத் துறைமுகத்திற்கு வரும் வெளிநாட்டினரை வரவேற்குமாறு, அதன் அருகிலுள்ள பெட்லோ தீவில் உள்ள உரிமைச் சிலை செய்யப்பெற்ற செயல்திறத்தை நாம் கொஞ்சம் நினைவு கூர்தல் வேண்டும்.
பேரழகும், பெருமிதமும் பொழிந்து தோன்றும் ஒர் உரிமைப் பெண் போலும் வடிவமைந்த அந்த உரிமைச் சிலை (Liberty Statue) செய்வதிலும், அதை அங்கு கொண்டு வந்து நிறுவுவதிலும்தான் எத்துணை அறிவியல் திறம், மாந்த அறிவு, உடலுழைப்பு, தொழில்நுட்பம், கலைத்திறம், பொறியியல், வேதியல், கணக்கியல் முதலிய ஆற்றல்கள் செயல்பட்டிருக்கின்றன என்பதை எண்ணுகையில் மாந்தமனம் வியப்பிலும் வியப்பு எய்திக் களிக்கிறது.
அந்தச் சிலையை உருவாக்குவதில்தான் எத்தனைப் பேரறிஞர்கள், செயலறிவுடையவர்கள், பொறியியல் வல்லுநர்கள், கலைஞர்கள், தொழிலாற்றல் உடையவர்கள், தொழில் நுட்பம் சான்றவர்கள், அறிவியலாளர்கள் போன்றவர்கள் இரவும் பகலும் ஏறத்தாழ ஒன்பதாண்டுகள் உழைக்க வேண்டியிருந்தது. அதில் தாம் எத்தனைச் சிக்கல்கள்; இடர்ப்பாடுகள்; துன்பங்கள் துயரங்கள் அப்பப்பா!
ஒரே ஒரு சிலையை உருவாக்குவதில் இத்தனைச் சிக்கல்களா? இத்தனை நுட்பங்களா? இத்தனை அறிவாற்றல்களா? பல்வேறுபட்ட அத்தனை அறிவாற்றல்களும் ஒருங்கிணைந்து, ஒன்றுக்கொன்று மாறுபடாமலும் வேறுபடாமலும் இயங்க வேண்டியுள்ளனவே. இத்தனைக்கும் உயிரற்ற சிலை அது. உடலியக்க உள்ளுறுப்புகள் அனைத்தும் அற்ற உள்ளே ஒன்றுமில்லாமல், புறத்தோலாக மட்டும் ஒரு மாழைத்தகடு போர்த்தப் பெற்ற சிலைக்கே இத்தனை அறிவுத் திறன்கள் தேவைப்படுமானால், ஒர் உயிருள்ள உடலை - அவ்வாறு வேறுவேறான பல்லாயிரங்கோடி உயிருள்ள உடல்கள் சான்ற இவ்வுலகத்தை இவ்வுலகம் போலும் பல்லாயிரங்கோடி உலகங்களை உள்ளடக்கிய இப்புடவியைக் கட்டமைக்க - இயக்க - எத்தனை ஆயிரம் அறிவுத் திறன்களும் செயலறிவுகளும், அவற்றுடன் எத்தனை எத்தனை இயற்கையியல், உயிரியல் இயக்கத்திறன்களும் தேவை? அவை அனைத்தையும் பெற்றிருப்பவர் யாரோ? அல்லது எதுவோ? அஃது எங்கோ? இவ்வினாக்கள் அனைத்திற்கும் வெறும் இயற்கை என்னும் ஒரு சொல்லில் விடை கூறிவிட்டு அடங்கி விடுமாறு, நம் அறிவுணர்வு நிறைவடைவதில்லையன்றோ?
ஒரு செயல் என்றால் என்ன? அஃது எண்ணத்தில் தோன்றிக் கருத்தில் கருக்கொண்டு, நுண் பொருளாய் உருக்கொண்டு, உணர்வு வடிவமாகி நின்று, அந்த வடிவம் பருப்பொருளாய்ச் செயலுக்கு வருவதற்குள் நேரும் இயற்கை இடையூறுகள் எத்தனை? தடைகள் எவ்வளவு? அம்மவோ, நினைக்கவும் அறிவு நிலைக்குத்திப் போகின்றதே!
இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்த்தால்,
சொல்லுதல் யார்க்கும் எளிது; அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் (664)
என்னும் மெய்க்கூற்றில்தான் எத்துணை உண்மை விளங்குன்றது. மேலோட்டமாய் ஒரு வகைப் பொருளைத் தரும் இவ்வரிய திருக்குறளடிகள் ஆழமாய்ப் பார்ப்பவர்க்கு எத்துணை விரிந்த வியத்தகு பொருளைத் தருகின்றது.
பொதுவாகவே பிரெஞ்சு நாட்டு மக்கள் வேறெந்த நாட்டினரையும் விடக் கலையுணர்வு மிக்கவர்கள், என்பதை அந்நாட்டில் சந்து சதுக்கங்களிளும், மூலை முடுக்குகளிலும், புல்வெளிகளிலும் பூங்காக்களிலும், நீர் நிலைகளிலும், வாவிகளிலும், கட்டட முகப்புகளிலும் கலையொழுகும் கட்டட உட்புற மேல் வளைவுகளிலும், சிறியனவாகவும் பெரியனவாகவும் மலிந்து கிடக்கும் செதுக்குச் சிற்பங்களையும் வண்ண ஒவியங்களையும் பார்த்தாலே கண்டு கொள்ளலாம்.
எனவேதான் அமெரிக்கப் பெட்லோ தீவில் உள்ள உரிமைப் பெண்மணியின் சிலை செய்யும் பொறுப்பைப் பிரடரிக் அகஸ்டெபர்தோல்டி என்னும் பிரெஞ்சு நாட்டுச் சிற்பி மனமுவந்து ஏற்றுக் கொண்டார். முதலில் இப்படி உரிமையின் வடிவமாக ஒரு சிலை செய்ய வேண்டும் என்னும் கருத்தினை வெளிப்படுத்தியவர் அமெரிக்க நாட்டின் பெரும் புகழ் வரலாற்றிஞரும் சட்ட வல்லுநருமான எட்வர்ட் டி லாபோலே என்பவரே யாவர். 1865 இல் வெளிப்படுத்தப்பெற்ற இக்கருத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்று எண்ணிய பிரெஞ்சுச் சிற்பி, 1871 இல் நியூயார்க்கு சென்று இட அமைப்பையும் அங்கு வைக்கப்பெறும் சிலையின் பெருமாண்ட அளவையும் கணித்து வந்தார்.
எகிப்து நாட்டில் உள்ள மிகு பெயர் பெற்ற பாறாங்கல் உருவங்கள் அச்சிற்பியின் மனத்தில் சிலைக்கு ஒரு பெரும வடிவத்தையும் உருவத்தின் அளவையும் தோற்றுவித்தன. மற்றும் சிலைப் பிராட்டியின் உருவத்திற்கேற்ற முக அமைப்புக்குச் சிற்பி, தம் அன்னையார் முகத் தோற்றத்தையும், உடல் வடிவத்திற்குத் தம் காதலியின் எழில் வடிவத்தையும் இணைத்துக் கற்பனை செய்து வைத்துக் கொண்டார். மேலும் இவ்வுரிமைக் கன்னியின் சிலை கலங்கரை விளக்கமாகவும் பயன்பட வேண்டும் என்று கருதப்பட்டதையும் நினைவில் இருத்திக் கொண்டார்.
அமைக்க விருந்த சிலை, பீடம் ஆகியவற்றுடன் கலங்கரை விளக்கை ஏந்தியிருக்க வேண்டிய வலக்கை வரை, உயரம் 300 அடிகள் இருக்க வேண்டும் என்றும், இவற்றுள் சிலையின் உயரம் மட்டும் 15 அடி இருக்க வேண்டும் என்றும் சிற்பி தன் மனத்துள் திட்டமிட்டுக் கொண்டார். சிலையைத் தாங்குவதற்கு உள்ள பீடம் 89 அடி. அதற்கடியில் உள்ள தளம் 6 அடி உயரமுள்ள கருங்கல்லால் அமைய வேண்டியது. உலகிலேயே இதுதான் மிக உயரமான சிலையாக இருக்க வேண்டும் என்றும் சிற்பி உறுதிப்படுத்திக் கொண்டார்.
சிலை வடித்து, உருவாக்கிய பணி தலைசிறந்த ஒரு தொழில்நுட்பப் பணியாகும் என்பதை அனைத்துத் துறை அறிஞர்களுமே ஒப்புவர்.
1875 ஆம் ஆண்டின் இறுதியில், சிற்பி பர்தோல்டி தம் உள்ளத்தில் கருவாகித் திருவாகி நின்ற சிலைக்கு 4 அடி உயரமுள்ள களிமண் மாதிரி உருவம் ஒந்றை உருவாக்கினார். அம்மாதிரிச் சிலையின் சாயல் வடிவத்திற்கு ஒரு பிரெஞ்சு அழகி ஒருத்தியின் சாயல் (Style) அமைப்புப் பயன்படுத்தப் பெற்றது. வடிவத்தைச் சிற்பி, தாம் எண்ணிய அளவிற்குத் திருத்தமாக அமைத்துக் கொண்டபின், அதனினும் பெரிய வடிவத்தை வெள்ளைக் களியத்தில் (Plaster of Paris) வடித்தெடுத்தார். பின்னர் அதையும் சீர்திருத்தி, அதனினும் பெரிய வடிவம் என இப்படியாக இறுதியில் 36 அடி உயரமுள்ள மிகத் திருந்திய வடிவம் கொண்ட ஒரு சிலையை வெள்ளைக் களியத்திலே செய்து முடித்தார். இவ்வாறு - - கொண்ட ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒன்பதினாயிரம் (9000) கோண, பரும, நுட்ப அளவைகளை எடுக்க வேண்டியிருந்தது.
அவ்வாறாக இறுதிப்படுத்தப் பெற்ற 36 அடி உயரமுள்ள வெள்ளைக் களியத்தால் ஆன உரிமைப் பிராட்டியின் மாதிரிச் சிலையைப், பர்தோல்டியும் அவருடைய தொழில்நுட்ப உதவியாளர்களும் 300 பகுதிகளாக அறுத்துக் கூறு போட்டுத் தனித்தனிப் பகுதிகளாகப் பிரித்தெடுத்துக் கொண்டனர். பின்னர் ஒவொரு கூறையும் அதே வடிவ அமைப்பில் நான்கு மடங்கு பெரிதாகச் செய்து கொண்டனர். அவ் வடிவங்களும் வெள்ளைக் களியத்தாலேயே செய்யப் பெற்றன.
அவ் வடிவங்கள் செப்பப்படுத்தப் பெற்று, அவற்றை ஒன்றிணையும்படி தழுவி அணைத்து நிற்க, தச்சர்கள் பெரும்பெரும் மரச் சட்டங்களைச் செய்து கொண்டனர். அதனையடுத்து, அவற்றைப் போர்த்துவதற்குக் கொல்லர்கள் மாழைத் தோல் (Metal) தகட்டை உருவாக்க முனைந்தனர். இதற்காக முதலில் பர்தோல்டி வெண்கலத்தைப் பயன்படுத்தக் கருதினார். ஆனால் அது மிகக் கடினமானதாக இருக்கும் எனக் கருதிப் பின்னர் செம்பைப் பயன்படுத்தினார்.
துண்டுத் துண்டாக உருவாக்கப் பெற்ற அம்முந்நூறு செப்புத் தகடுகளும் இலக்கம் செப்புத் திருகாணிகளால் இணைக்கப்பட வேண்டும். பின்னர் சிலையைத் தாங்குவதற்கு 89 அடி உயரமுள்ள பீடமும், அதற்கு அடியாக 6 அடி உயரமுள்ள கருங்கல் தளமும் வரையறுத்துக் கொள்ளப் பெற்றன.
அதன் பின்னர் இன்னொரு சிக்கலுக்கு வழி காண முற்பட்டனர். உடலைத் தாங்கி நிற்க முதுகதந்தண்டு உதவுவது போல், சிலையை உள்முகமாக நிமிர்ந்து நிற்கச் செய்ய முதுகந்தண்டு போல் பயன்படும் ஒர் இரும்புச் சட்டம் ஒன்று சிலையின் உயரத்திற்குத் தேவைப்பட்டது.
இதற்கென அலெக்சாண்டர் கஸ்டாவ் ஈஃபில் என்னும் பொறியியல் வல்லுநரைப் பர்தோல்டி அழைத்துக் கலந்து பேசி முடிவெடுத்தார். பாரீசு நகரில் சீன் ஆற்றங்கரையில் உள்ள உலகப் புகழ்ப்பெற்ற ஈஃபில் இரும்புக் கோபுரத்தைக் கட்டி பெருமை பெற்றவர் அவர். அதனாலேயே அக்கோபுரத்திற்கு (ஈஃபில் கோபுரம் என்று பெயர் வந்தது. ஆனால் எல்லாவற்றையும் விட அவருடைய சிறப்புப் படைப்பு இந்தச் சிலையின் மேல் பகுதியாக விருக்கும் செம்புத் தோலைத் தாங்குவதற்கான ஓர் இரும்புச் சட்டகத்தினை உருவாக்கியதே ஆகும்.
மேல் தோல் மெல்லியதாக இருப்பினும் அதன் மொத்த எடை 2 இலக்கம் தூக்கு (Pound) ஆகும் (ஏறத்தாழ 89.5 கல்லெடை) இவ்விரும்புச் சட்டகத்தை நியூயார்க்குத் துறைமுகத்தில் அடிக்கும் கொடுங்காற்றை எதிர்த்து நிற்கும் வலுவுடையதாகவும், நிலத்தின் ஈர்ப்பாற்றலுக்கு ஈடுகொடுக்கக் கூடியதாகவும் அமைக்க வேண்டியிருந்தது. இவற்றைக் கருத்தில் கொண்டு சிலையின் செப்புத் தோலைத் தாங்குவதற்கு ஈஃபில் மிகவும் அறிவு நுட்பமாக இரும்புப் பாளங்களைப் பயன்படுத்திச் சிலந்தி வலைபோல், சிலையின் உட்புற வளைவு சுழிவுகளுக்கு ஏற்றவாறு பின்னியிருந்தார். ஒவ்வோர் இரும்புப் பாளமும் இரண்டு விரலம் (அங்குலம்) அகலமும், அரை விரலத்திற்கு மேல் கனமும் உடையது. இந்தப் பாளங்கள் தோலுடன் சாடில்சு என்று கூறப்படும் செம்பு இணைப்பட்டைகளால் இணைக்கப்பட்டன. இப்பட்டைகள் பாளங்களுக்கு மேலாக வந்து அந்தந்த இடத்தில் திருகாணிகளால் பொருத்தப்பட்டன. இவ்வாறு ஏறத்தாழ 1500 இணைப் பட்டைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வமைப்பால், தட்டையான பாளங்கள் காற்று அடிக்கும் போது, தாராளமாக அசைந்து கொடுக்கவும், தகட்டுத் தோலும் காற்றுக்கு ஏற்றவாறு இயங்கவும் முடியும். மேலும் தட்வெப்ப நிலையின் மாறுதல்களுக்கு ஏற்ப விரிவடையவோ சுருங்கவோ இயலும்.
இவ்வாறு சிலையின் மாதிரி வடிவம் தொடங்கி அதன் முழுவடிவமும் திருத்தமாக உருவாக ஒன்பது ஆண்டுகள் ஆயின. சிலை அழகு கொழித்தது. அமைதி, அருள், நம்பிக்கை, பெருமிதம், வாழ்க்கை ஆர்வம் - அனைத்து உணர்வுகளும் முகத்தில் தவழுகின்றன. உடலை முழு உரிமையில் இருக்கச் செய்யும் அழுத்திப் பிடிக்காத தொளதொளத்த மேலாடை சிலைப் பெருமாட்டியின் ஓங்கி உயர்த்திய வலக்கையில் கதிரொளி வீசும் எரிசுடர். அது கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டது. இடக்கையில் அரசியல் அமைப்பை மக்களுக்கு உரிமையாக்கும் வகையில் பொத்தகம் ஒன்று. பக்கவாட்டிலே அணைந்தவாறு, தலையில் உலகின் ஏழு கண்டங்களையும் ஏழு கடல்களையும் குறிக்கின்ற வகையில் ஏழு கதிர்வீச்சுகள் கொண்ட அழகிய மகுடம், அத்தனையும் சிலையின் அழகுக்கு அழகு ஊட்டின.
சிலை உருவாகி வருகையில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் பாரீசு நகர மக்களும் பிற நாட்டினரும் நூற்றுக் கணக்கில் வந்து பார்த்த வண்ணமேயிருந்து வந்தனர். சிலையின் இறுதி வடிவம் கூரைக்கு மேல் போய்விட்டது.
சிலையின் எடை 280 கல்லெடை (Ton) ஆகியது. இது பிரெஞ்சு நாட்டு மக்கள் அமெரிக்கா நாட்டு மக்களுக்குத் தரும் அன்பளிப்பாகக் கருதப்பட்டது. 1884 ஆம் ஆண்டு சூலை மாதம் 4 ஆம் பக்கல் ஒரு மாபெரும் மக்கள் விழாவில் அமெரிக்கத் துரதரிடம் சிலை வழங்கப்பட்டது.
பரிசாக வழங்கப்பெற்ற அந்த உரிமைக் கன்னியின் சிலையைப் பல கூறுகளாக்கினர். சிலையின் செப்புத் தோல் 300 பகுதிகளாகப் பிரிக்கப்பெற்று, அவை மட்டும் 49 பெரும் பெட்டிகளில் மிகவும் காப்பாகச் சிப்பம் செய்யப்பட்டன. சிலையின் இருப்புச் சட்டங்கள் இணைப்புகள் கழற்றப்பெற்று 36 பெட்டிகளில் அடைக்கப்பெற்றன. அப்பெட்டிகளை இழு வண்டிகள், தொடர்வண்டி, போர்க்கப்பல் ஆகியவற்றின் வழியாக அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு அமெரிக்கா வந்த சிலை 1886இல் பெட்லோ தீவில் நிறுவப்பெற்றது. பெட்லோ தீவு அதன் பின் உரிமைச் சிலைத் தீவு (Liberty Island) என்றே அழைக்கப்பெறுகிறது.
பயணத்தின்போது எதிர்பாராத வகையில் சிலையின் சில உறுப்புகள் உருமாறிப் போயிருந்தனவாம். இந்நிலை சிலையை அரும்பாடுபட்டு உருவாக்கிய சிற்பிக்கும் பிரெஞ்சு மக்களுக்கும் பெரும் வருத்தத்தைத் தந்தது. இதன் மேலும் ஏற்பட்ட சில விளைவுகள் அவர்களுக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினது போல் பெருந்துயரைத் தந்தது.
சிலையைப் பெட்லோ தீவில் பொருத்துகையில் அமெரிக்கத் தொழிலாளர்களின் கவனக் குறைவினாலும், பொறுப்பின்மையாலும், செயல்திறக் குறைபாட்டினாலும், உறுப்புகளின் பொருத்துத் திருகாணிகளை அந்தந்தத் தொளைகளில் சரியாகப் பொருந்தாமையாலும் சிலையில் பலவகையான மாற்றச் சிதைவுகள் காலப்போக்கில் ஏற்பட்டன. அவை,
1. உரிமைப் பெருமாட்டியின் தலை, ஈஃபில் அமைந்திருந்த இடத்தைவிட்டு 2 அடி தள்ளிப் போய்விட்டது. இதனால் சிலையின் பீடத்திற்குத் தேவையற்ற அழுத்தம் உண்டாயிற்று. தலையின் தோற்றத்திலும் எழில் குறைந்தது.
2. சிலையின் நடுக்கட்டமைப்பிலும் தொழிலாளர்கள் செய்த தவறுகளால், மகுடத்தில் உள்ள ஒரு கம்பி, சிலையின் கையை இடித்துக் கொண்டு செப்புத் தோலில் தொளையை உண்டு பண்ணியது.
3. மகுடத்தைத் தாங்கிக் கொண்டிருந்த இரும்புச் சட்டம் தேய்ந்து
4. தலையை அமைத்த வளைவுகள் சரியான நிலையில்
5. நடுத்தண்டுக்கு அடிப்படையான கம்பிகள் நன்கு செயல்படவில்லை. ஒரு கம்பி சரியான விறைப்பில் இல்லை. அவற்றில் இரண்டு சிலையின் விலா எலும்புகளை அழுத்திக் கொண்டிருந்தன.
இவ்வாறாகப் பல சிதைவுகள் செயலின் திறப்பாட்டைக் குறைவுப்படுத்திக் காட்டியதில் வியப்பில்லையன்றோ?
இனி, கடந்த 1985 ஆம் ஆண்டில் சிலைக்கு 100 ஆண்டு முடிவடைந்தது. அந்த ஆண்டில் சிலையின் பேணுகைப் பொறுப்பை ஏற்றிருந்த தேசிய பூங்காப் பேணுகை நிறுவனம், பல்திற வல்லுநர்களைக் கொண்டு ஆய்ந்ததில் பெரும் கவலை கொண்டது. ஏன் தெரியுமா? சிலைச் சீமாட்டி பலவகையிலும் நோயுற்றிருந்தாள்.
மக்களுக்கு நோய்வந்தால், மருத்துவர் நோயாளிகளிடமிருந்து எவ்வளவு புலனங்களைப் பெற முடியுமோ, அவ்வளவையும் பெறுவது போலவே, உரிமைச் சிலைக்கு ஏற்பட்ட சிதைவு நோய்க்கும் கட்டடக்கலை, பொறியியற் கலை மற்றும் கலைத்துறை வல்லுநர்களான மருத்துவர்களும், வண்டி வண்டியாக ஆய்வுக் கருவிகளைக் கொண்டு வந்து, சிலையின் உயிர்நாடிகள் போன்ற உறுப்புகளை ஆய்வு செய்தனர்.
சிலையின் சட்டம் போலவே 8 அடி உயரமுள்ள மாதிரி ஒன்றை அமைத்து, ஒரு கணிப்பொறி மாதிரி ஒன்றையும் உருவாக்கினர். பின்னர் கணிப்பொறிக்குச் சில பல கட்டளைகளை வழங்கினர். அதன் பின்னர் தொழிலாளர்கள் சிலையைச் சுற்றிச் சாரங்களை அமைத்தனர். இஃது எளிதான பணியன்று. 300 அடி உயரமுள்ள சிலைக்குச் சாரங்கள் அமைப்பது தொழில்நுட்பம் மிகுந்த கடினமான பணியாகும். அதுவும் சிலையின் பழுதுபார்ப்பு முடியும் வரை, சாரங்கள் துரு ஏறாமல் இருக்க வேண்டும். இனி, சாரமும் சிலையை எங்கும் தொடாமல், அதைச் சுற்றியிருக்கவும் வேண்டும்.
1980-ஆம் ஆண்டுதான், அஃதாவது சிலை நிறுவிய 94 ஆண்டுகளுக்குப் பின்னர்தான், கூெ-ஊறுபாடு அடைந்திருட்டது. கண்டுபிடிக்கப் பெற்றது. மொத்தம 13 இடங்கள் சேதமுற்றிருப்பது, அறிந்து கொள்ளப் பெற்றது.
சிலையின் தோல் செம்பினால் ஆனது.எனவே காலத்தால் செம்பு களிம்பு பிடித்துவிட்டது. நிதமும்மாறிவிட்டது. தோலுக்குள்ளே எலும்புக் கூடாக நின்று, அதை இறுகப் பிடித்துக் கொண்டிருப்பது இரும்புச் சட்டம் நாளடைவில், கடலினது உப்புக்காற்றினாலும், தட்பவெப்ப மாறுதல்களினாலும் இரும்புச் சட்டத்தில் துரு ஏறி அரிப்பு ஏற்பட்டு விட்டது. சிலைக்கே மூலமாகவுள்ள செம்புத் தோலும், அதை வடிவப்படுத்தித் தாங்கிக் கொண்டிருக்கும் இருப்புச் சட்டமும், உடனடியாகப் பழுது பார்க்காமற் போனால், போகப் போகச் சிலை மிகுந்த கேடுகளுக்கு ஆளாகும் என்று அஞ்சப்பட்டது.
செம்பும், இரும்பும் தனித்தனியே இருந்த நிலையில் இத்தகைய இயற்கைத் தாக்கங்களுக்கு ஆளானதுடன் இரண்டும் இணைந்திருந்த சில இடங்கள் மின்வேதியல் (Electrolysis) மாற்றங்களாலும் காற்று, மழை, வெப்பம் ஆகியவற்றின் தாக்கங்களாலும் மிகவும் சேதமுற்றுப் போயின சிலையின் கைதுணியில் கலங்கரை விளக்கம் வைக்கப்பெற்றிருந்தது. அதிலுள்ள சுடருக்காக வைக்கப்பெற்றிருந்த கண்ணாடித்துண்டுகளைக் கோத்து வைத்துள்ள செப்புத் தகடுகளில் தாம் அம்மின்வேதியல் தாக்க விளைவுகள் ஏற்பட்டிருந்தன.
சிலையின் சுடர் தாங்கும் கையும் மிகவும் பழுதடைந்திருந்தது. வல்லுநர்கள், அதன் சேதம் எத்தகையது என்று ஆய்ந்து அறிந்த பின்னர், சேதம் அதிகமாக இருந்தால் இப்பொழுதுள்ள கையை அகற்றிவிட்டுப் புதிய கையும் சட்டமும் பொருத்த வேண்டியிருக்கும்.
சுடர்பற்றி இப்போது உறுதியாகச் சொல்வதற்கில்லை. உள்ளே இருக்கும் இரும்பு அமைப்பும் தீக்கொழுந்தும், அழகு நகை வேலைகளும் பழுது பார்க்க முடியாத அளவுக்குச் சேதமடைந்துள்ளன. சுடர் அகற்றப்பட வேண்டுமா என்பது முடிவாகவில்லை. புதிய சுடர் நீர்புகாத வண்ணம் அமைக்கப்படும். செம்பில் அமைத்துத் தங்கப்பூச்சு பூசலாம் என்பது அண்மைத் திட்டமாகும். மக்கள் சுடரைப் பார்க்க மேடை (பால்கனி ஒன்று இருந்தது. அது 1916 இல் மூடப்பட்டது. நியூசெர்சியில் இருந்த வெடிமருந்து ஆலை வெடித்தபோது சிலையின் கையிலிருந்து 100 திருகாணிகள் வெளியேறின.
பழுதுபார்ப்புட்டபணிகளால் உரிமைச் செல்வியின் வெளிப்புறத் தோற்றத்தில் மாற்றம் எதுவும் இருக்காது. இன்று எப்படி பெருமிதமாகவும் பேரெழிலோடும் காட்சியளிக்கின்றாளோ, அப்படியே இருந்து வருவாள் என்று உறுதி-கூறுகிறார். தேசியப் பூங்காப் பராமரிப்புக் குழுமத்தின் இயக்குநர் ரசல் இ. டிக்கெர்சன்.
சிலைக்குள்ளே சாயம் அகற்றும் பணியுடன் வேலை தொடங்கும். சிலைக்கு இதுவரை 12 தடவைகள் சாயம் பூசப்பெற்றிருக்கிறது. தட்பவெப்ப நிலையினால் தோல் எவ்வளவு சேதம் அடைந்திருக்கிறது என்பததையும் அவர்கள் அறிவர். நியூயார்க்கு துறைமுகத்தின் நடுவில் 100 ஆண்டுக்காலம் கழித்திருக்கும் உரிமைச் செல்விச் சிலையின் செம்பு தேய்வு அடைந்து எடை மிகவும் குறைந்து போயிருக்கும் என்று நினைத்தனர். ஆனால் 10 விழுக்காடு தான் தேய்மானம் அடைந்துள்ளது என்பதை 1981 இல் நடத்திய ஆய்வு புலப்படுத்தியிருந்தது.
பழுது பார்ப்பதில்தான் மிகவும் பெரிய அளவு பணி காத்திருந்தது. 1300 க்கும் அதிகமான பாளங்கள் ஏறத்தாழ 5000 தூக்கு (Pound) எடையுள்ளவை - நிலைவெள்ளி (எவர்சில்வர்) கொண்டு உருவாக்கப்பெறும் காரணம் இது துருப்பிடிக்காது. ஆனால் உறுப்புகள் அனைத்தும் மூல உறுப்புகளைப் போலவே இருக்கும். புதிய பாளங்கள் தளத்திலேயே உருவாக்கப் பெறும், அவை இரும்பு பாளங்களைப் போலவே அமையும். சிலையின் அருகில் இட நெருக்கடியிருப்பதால், ஒரு சமையத்தில் தொழிலாளர்கள் ஒரு சிலரே வேலை செய்ய முடியும். இதனால் காலத் தாழ்த்தம் ஏற்படும்.
பழுதுபார்ப்புப் பணி நடந்து கொண்டிருக்கையிலே சிலை நல்ல நிலையில் இருக்க, வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றைக் கட்டுப்பாடு செய்யும் சூழ்நிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒன்று பொருத்தப்படும். பார்வையாளர்கள் வந்த வண்ணம் இருப்பதால் சிக்கல் அதிகப்படுகிறது. அவர்களுடைய மூச்சுக் காற்று ஈரத்தை அதிகப்படுத்துகிறது. உடம்பின் சூடும் வெப்ப நிலையை உயர்த்துகிறது. பழுது பார்க்கப்படும் பொழுது கடந்த ஆண்டு மட்டும் 20 இலக்கம் பேர் சிலையைச் சுற்றிப் பார்த்தனர். இந்தப் பழுது பார்ப்புக்கென ஆகும் செலவு மொத்தம் 3 கோடியே 90 இலக்கம் டாலர், என மதிப்பிடப்பெற்றுள்ளது.
(இவ்வுரிமைச் சிலை பற்றிய செய்திகள் அனைத்தும் டாம் பர்ரோ அவர்களின் கட்டுரையையும் தினமணி மொழி பெயர்ப்பையும் (23-7-1985) அடிப்படையாகக் கொண்டவை)
4. இறுதிவரை
இங்கு, செயல் திறத்திற்கோர் எடுத்துக்காட்டாகக் காட்டப் பெற்ற இவ்வுரிமைச் சிலை செய்யப்பெற்ற வகையில் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்திகள், செயற்பாடுகள் மிகப் பலவாகும். அவற்றையெல்லாம் முறைப்பட எண்ணிப் பார்த்து முடிவு செய்தல் வேண்டும்.
அது செய்யப்படுமுன் அதுபற்றிச் சிற்பிக்குத் தோன்றிய எண்ணம், கற்பனை ஆகியவற்றையும், அச்சிலை இருக்க வேண்டிய அமைப்பு, உருவம், சாயல், முகவெழில் முதலியவற்றையும் எவ்வாறு சிந்தித்து அமைத்துக் கொண்டாரோ, அவ்வடிநிலைச் சிந்தனை, அனைத்துநிலைச் செயற்பாடுகளுக்கும் மிகவும் தேவை.
அதன்பின்னர், அவர் சிந்தித்த செயல்முறை வடிவமைப்பு, அதற்குத் தேர்ந்து கொண்ட மூலப் பொருள்கள், அவற்றை உருவாக்க வேண்டிய வழி, வகைகள் ஆகியவற்றையும் கருதிப் பார்த்தல் வேண்டும்.
அவ்வெவ்வேறு வகைச் செயல்களுக்கெல்லாம் உரிய அறிவுத் திறவோரையும், கலைத்திறவோரையும், தொழில் திறவோரையும் அவர்களைக் கொண்டு செய்விக்கும் ஆக்க விளக்கங்களையும் நாம் படிப்படியாக, ஒன்று விடாமல் எண்ணிப் பார்ப்பது நலம்.
இனி, இவ்வுரிமைச் சிலையின் செயல் திறத்தால் நாம் இறுதியாக உணர வேண்டிய செய்திகள் இவை.
1 எவ்வகைச் செயலையும் செய்து முடிப்பதற்குரிய அறிவாற்றலையும் செயல்திறனையும் மாந்தர் இயற்கையாகவே பெற்றிருந்தனர்.
2. ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதில்தான் வேறுபடுகின்றனர்.
3. செயல்களை எல்லாருமே செய்வர். ஆனால் சிறப்பான செயல்களைச் சிறப்பானவர்களே செய்வர். இதை,
பெருமை யுடையவர் ஆற்றுவார், ஆற்றின்
அருமையுடைய செயல் (975)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். (676)
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு. (470)
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். (664)
வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. (661)
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் (505)
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். (462)
என்பன போன்ற திருவள்ளுவப் பெருமானின் வாய்மொழிகள் மெய்ப்பிக்கின்றன. இனி,
4. செயல்களைச் செய்வதில் திறமை மட்டுமில்லை; ஆனால், விருப்பம், பொறுமை, பெருமை, நல்லுணர்வு, உயர்நோக்கம் ஆகியனவும் ஒருவர்க்கு உள்ளத்தின் அளவாக அமைந்திருத்தல் வேண்டும்.
5. ஒருவர் செய்யும் செயலை இன்னொருவர் அதே போலவே செய்வார் என்று எதிர்பார்க்கக் கூடாது. மற்றவர் முன்னவரினும் மேலாகவும் செய்யலாம்; கீழாகவும் செய்யலாம்.
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர் (514)
என்னும் திருக்குறளை ஒர்க. இறுதியான செயல் முடிவு அவரவர் திறப்பாட்டையே பொறுத்தது. ஒவ்வொருவரும் ஒரு செயலை ஒவ்வொரு வகையாகவே செய்வர்.
6. இனி, ஒவ்வொரு செயலும் ஒவ்வொரிடத்தும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு வகையாகவே அமையும், மக்கள் முகங்கள், தோற்றங்கள், குணநலன்கள் வேறுபடுவன போல் செயல்களும் வேறுபடுகின்றன; திறன்களும் வேறுபடுகின்றன.
7. கொடுத்துச் செய்வதினும் எடுத்துச் செய்வதேமேல்.
அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
தெரிந்தான்என் றேவற்பாற் றன்று. (515)
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த உணர்ந்து செயல். (516)
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் (517)
8. இனி ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் இடத்தேர்வும் காலத்தேர்வும் மிக இன்றியமையாதன. எந்தச் செயலையும் எந்தவிடத்திலும் எந்தக் காலத்திலும் செய்துவிடமுடியாது. சில செயல்களைச் சில இடத்திலேயே செய்ய முடியும்; அது போல் சில செயல்களைச் சில காலத்திலேயே செய்யமுடியும்.
குளம்பி (காப்பி)ச் செடியை வயலிலோ, கரும்பை மலைப் பகுதியிலோ விளைவிக்க முடியாது.
நெல்லைக் கோடையிலோ, பலாவைப் பணிகாலத்திலோ விளைவிக்க இயலாது. எனவே,
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது. (491)
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் (483)
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின். (484)
9. அடுத்து, எந்த ஒரு செயலும் எண்ணம், கற்பனை, தேர்வு, கருவி, தொடக்கம், இயைபு, முடிவு பயன் என்னும் எட்டுக் கூறுகளில் அடங்கும். அவற்றுள்,
எண்ணம் என்பது, ஒரு செயலைப் பற்றி எண்ணுவது, என்ன செய்வது, எதற்குச் செய்வது, ஏன் அதையே செய்வது, எப்படிச் செய்வது, எப்பொழுது செய்வது, எவ்விடத்தில் செய்வது, எவரைக் கொண்டு செய்வது என்பனபோல் எண்ணிப் பார்ப்பது எண்ணம்.
கற்பனை என்பது, கற்பித்துக் கொள்வது. அச்செயல் இப்படியிப்படி அமைத்ல் வேண்டும். இன்னின்ன கூறுகளைக் கொண்டிருத்தல் வேண்டும். அதனுடைய அமைப்பு இப்படி, செயற்பாடு இப்படி என்பனபோல் கற்பித்துப் பார்ப்பது கற்பனை.
தேர்வு என்பது, முடிவாக இத்ைத்தான் செய்யவேண்டும் என்று தீர்மானிப்பது. இதைத்தான் இப்படித் தான், இன்னவகையாகத்தான், இந்த இடத்தில்தான், இந்தக் காலத்தில்தான், இவரைக் கொண்டுதான் என்று முடிவு செய்வது தேர்வு.
கருவி என்பது, அச்செயலுக்குரிய பொருள், மூல துணைக்கருவிகள், வினையாட்கள் ஆகிய பொருள்கள். இவ்வளவு பொருள் வேண்டும்; இத்தனைப் பெருங்கருவிகள். சிறுகருவிகள், இன்னின்ன வினைக்கு இவ்வத்திறனுடைய ஆள்கள் வேண்டும் எந்பதும் அவர்களை அணியப் படுத்துவதும் ஆகும்.
தொடக்கம் என்பது அவ்வினையைத் தொடங்கும் இடம் காலம் இவற்றை ஆராய்ந்து செயலைத் தொடங்குவது.
இயைபு என்பது, அசெயலை இன்னின்ன வகையால் இன்னின்ன துணைவினைகளால், இவ்விவ்வாறு நடத்திச் செல்ல வேண்டும்.
முடிவு என்பது, அச்செயலை இந்திந்த முடிவுத் திறனுடன் செய்து நிறைவு செய்வது. பயன் என்பது, எந்தக் காரணத்திற்காக, அச்செயலைத் தொடங்க எண்ணினோமோ அது முற்றுப் பெற்று, அதன் விலைவைத் தருவது.
10. இனி செயல் என்பது பொதுவானது; எல்லார்க்கும் உரியது; எல்லாராலும் செய்யப் பெறுவது. செயல்திறம் என்பது ஒரு செயலைத் திறம்பெறச் செய்வது; சிறப்பானது, ஒரு சிலராலேயே செய்ய இயல்வது. எல்லாரிடமும் செயல் இருக்கலாம் திறம் இருத்தல் அரிது. ஒரு செயலை ஒட்பம் நுட்பம், திட்பம், செப்பம் ஆகியதுண்திறன்களோடு இடைமுறிவின்றித் தொய்வின்றி, நெகிழ்ச்சியின்றி, இடையீடின்றிப் பழுதின்றிப் பயன்தருமாறு செய்வது அரிதினும் அரிதாகும். அவ்வாறு செய்யத் திறன் பெற்றவர்களே எல்லார்க்கும் வழிகாட்டிகளாகவும் முந்து திறன் உடையவர்களாகவும் கருதப் பெறுவர்.
கருமம் செயலொருவன் கைதுவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில். (1021)
முற்றும்
இந்நூலுள் எடுத்துக்காட்டப்பெற்ற திருக்குறள்மணிகள் (அகர வரிசையில்)
அச்சமே அறனறிந்து மூத்
அஞ்சாமையல் அறனீனும்
அடுக்கிய கோடி அறிதோறும்
அமைந்தாங்கு அறிந்தாற்றி
அரங்கின்றி அறிவுடையார் ஆவ
அரம்போலும் அறிவுடையார் எல்
அரிய என்று அறிவுரு
அரியவற்றுள் அற்கா
அருள்இல்லார்க்கு அற்றது
அருட்செல்வம் அற்றால் அளவு
அரும்பயன் அற்றேமென்று
அருமை உடைத்தென்று அன்பறிவு ஆ
அருவினை என்ப அன்பிலார்
அருளொடும் அன்பின் வழியது
அல்லவை அன்ஸாரீஇ
அவாஇல் அஃகாமை
அவா எனப அஃகியகன்ற
அவா வினை ஆகாறு அளவிட்டி
அவையறிந்து ஆக்கம் அதர்
அவ்விய நெஞ் ஆக்கம் இழந்
அழக் கொண்ட ஆக்கம் கருதி
அழச்சொல்லி ஆக்கம் அறிவினர்
அழிவது உம் ஆள் வினையும்
அளவல்ல ஆற்றின் அளவு-ஈக
அளவறிந்தார் ஆற்றின் அளவு-கற்க
அளவறிந்து ஆற்றின் வருந்தா
அளவின் கண் இடுக்கண் படினும்
அறஞ்சாரா இடுக்கண் வருங்கால்
அறனறிந்து ஆன் இடும்பைக்கு
இதனை இதனால் உள்ளற்க உள்ளம்
இருள்சேர் உறின் உயிர்
இலக்கம் உறின் நட்டு
இலமென்று வெஃகுதல் உற்ற நோய்
இலன் என்று ஊக்கமுடயான்
இலன் என்னும் ஊதியம்
இல்வாழ்வான் ஊழையும்
இழிவறிந்து எண்ணித் துணிக
இழுக்கல் எண்ணிய எண்
இளிவரின் எண்ணியார் எண்ணம்
இறப்பே புரிந்த எண்ணென்ப
இறலினும் எதிரதாக்
இங்பிறந்தார் எய்தற்கரியது
இனம் போன்று எல்லைக் கண்
இன்பத்துள் இன்பம் எள்ளாத எண்ணி
இன்பம் விழையான் எற்றென்று
இன்மை ஒருவற்கு எனைத்திட்பம்
இன்றியமையா எனைவகையான
இன்னாமை என்றும் ஒருவுதல்
இன்பம் ஏரினும் நன்றால்
ஈட்டம் இவறி ஒத்ததறிவான்
ஈதல் இசைபட ஒருபொழுதும்
ஈத்துவக்கும் ஒருமை மகளிரே
ஈன்ற பொழுதின் ஒல்லும் வாய்
ஈன்றாள் பசி ஒல்வது அறிவது
உடம்பாடு இலா ஒழுக்கமும்
உடைதம் ஒளி ஒருவற்கு
உடையர் ஒன்னார்த்
உரமொருவற்கு ஓஒதல் வேண்டும்
உரன் நசைஇ கடலோடா
உலைவிடத்து
உள்ளம் இலாதவர்
கடனறிந்து செய்க பொருளை
கடிந்த கடிந் செய்தக்க
கடைக்கொட்க செய்வானை நாடி
கருமத்தால் செய்வினை
கருமம் செய செல்லான் கிழவன்
கருவியும் காலமும் சென்றவிடத்தான்
கலங்காது சொல்லுதல்
கல்லாத ஞாலம் கருதினும்
கல்லாதான் ஒட்பம் தக்கார் இனத்த
களவினால் தக்கார் தகவிலர்
களவென்னும் தலையின் இழிந்த
கற்றிலனுயினும் தவம் செய்வார்
காலம்கருதியிருப்ப தீயளவன்றி
குடிப்பிறந்துதன் தீவினையார்
குறிப்பில் குறிப்புணர் துணைநலம்
குன்றேறி துறந்தார் படிவத்த
கூற்றுடன்று துன்பம் உறவரினும்
கேடும் பெருக்கமும் தூங்குக தூங்கி
கொக்கொக்க தெய்வத்தான்
கொடுத்தும் தெரிந்த
கொலையிற் கொடியார் தெருளாதான்
சலத்தால் தெளிவிலதனை
சலம் பற்றிச் தேரான் தெளிவும்
சாதலின் இன்னாத தொடங்கற்க
சிதைவிடத்து நகையுள்ளும்
சிறப்பீனும் நகைவகைய
சிற்றின்பம் நடுவின்றி
சீரினும் சீரல்ல நயனிலன்
சூழ்ச்சி முடிவு செப்பம் உடை நல்லாறெனினும்
செயற்கரிய செய் நவில்தொறும்
முன்னுரை நன்மையும்
நன்றாங்கால்
நன்றேதரினும் மருந்தென
நாச்செற்று மருவுக
நிலத்தியல்பால் மறவற்க
நிலத்தில் கிடந்தமை மனத்தானாம்
நிறைநீர மனத்துளது
நெடும் புனலுள் மனம் தூயார்
படுபயன் மனந்துய்மை
பணிவுடையன் மாறுபாடு
பண்பிலான் பெற்ற மிகல் மேவல்
பண்புடையார் முகத்தின் இனிய
பயன்பமரம் முடிவும் இடையூறும்
பருகுவார் முயற்சி திருவினை
பலநல்ல முன்னுறக் காவாது
பழிமலைந்து வகுத்தான்
பழுதெண்ணும் வசையிலா
புகழ்ந்தவை வசையொழிய
புறந்துய்மை வருமுன்னர்
பெருமை உடைய வழங்குவது
பெருமைக்கும் வியவற்க
பேதை பெருங் விளிந்தாரின்
பேதைமை என்ப வினைக்கண் வினை
பேதைமையுள் வினைக்குரிமை
பொய்படும் வினைத்திட்டம்
பொருட்பொருளார் வினையால் வினையாக்கி
பொருளென்னும் வினைவலியும்
பொருள்கருவி வெள்ளத்தனைய இடும்பை
பொள்ளென வெள்ளத்தனைய மலர்
பெறியின்மை மக்களே வையத்துள்
போல்வர்
மடுத்தவாய்
மதிநுட்பம்
மருந்தாகி
கருத்துகள்
கருத்துரையிடுக