லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
கட்டுரைகள்
Back
லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
என். வி. கலைமணி
லியோ டால்ஸ்டாயின்
நம்மை மேம்படுத்தும்
எண்ணங்கள்
புலவர் என்.வி. கலைமணி எம்.ஏ.
அலமு நிலையம்
எண் :18, மேட்லி சாலை,
தியாகராய நகர், சென்னை-600 017.
விலை : ரூ. 24-00
* * *
□ LEO TOLSTOYIN NAAAMAI MEAMBADUTHTHUM ENNANGAL □ BY : N.V. KALAIMANI □ First Edition: December 2001 □ Price: Rs.24. 00 □ © ALAMU NILAYAM □ Published by: ALAMU NILAYAM, 18, MADLY Road, T. Nagar, Chennai - 600 017, □ Printed at: Sivakami Printo Grophics, 160, Big Street, Triplicane, Chennai - 600 005 □ Phone: 8445051 □
எமது பிற
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
வரிசை நூல்கள்
டாக்டர் மு.வ.வின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் "
அண்ணல் மகாத்மாகாந்தியின் "
காமராஜரின் "
டாக்டர்.வி.ராதாகிருஷ்ணனின் "
சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் "
ஸ்டாலினின் "
டார்வினின் "
அறிஞர் அண்ணாவின் "
அன்னிபெசண்ட் அம்மையாரின் "
கவிஞர்கண்ணதாசனின் "
குன்றக்குடி அடிகளாரின் "
பெஞ்சமின்ஃபிராங்கிளினின் "
அன்னை தெரேசாவின் "
நம்நாட்டுத் தலைவர்களின் "
நாட்டுக்கு உழைத்த நல்லவர்களின் "
அரிஸ்டாட்டிலின் "
பிளட்டோவின் "
ரூசோவின் "
சிந்தனையாளர் சாக்ரடீசின் "
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் "
ரஸ்லலின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
நீட்சேயின் "
கன்பூசியஸின் "
தந்தை பெரியாரின் "
டாக்டர் முத்துலட்சுமியின் "
பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரத்தின் "
மார்ட்டின் லூதரின் "
வால்டேயரின் "
எமர்சரின் "
ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் "
நார்மன் வின்செண்ட் பீலின் "
டென்னிஸ் டைடிராட்டின் "
மூதறிஞர் ராஜாஜியின் "
கார்ல் மார்க்ஸ்சின் "
சா அதியின் "
உலக அறிஞர்களின் "
சிக்மண்ட்ஃப்ராய்டின் "
தமிழக முன்னோடிகளின் "
திருவள்ளுவரின் திருக்குறளில் "
ஹிராடெசின் "
பாரதியின் "
கவிக்குயில் சரோஜினியின் "
கலீலியோவின் "
இங்கர்சாலின் "
வேத இதிகாச புராணங்களில் "
இங்கர்சாலின் உண்மை "
உள்ளடக்கம்
அண்ணல் காந்தியின் அறவுணர்ச்சி ஆசான்!
வாழையடி வாழையாக வளர்ந்த மனித நேயம்!
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
மரணதண்டனை கொடுமையான அநீதியே!
அடிமை முறைகள் அழிய டால்ஸ்டாயின் எழுத்துப்போர்!
இன்றும் உலகம் போற்றும் இரு பெரும் நாவல்கள்!
ஜார் மன்னன் படுகொலையும் டால்ஸ்டாய் வேண்டுகோளும்!
பஞ்ச நிவாரண நூல்; ருஷ்ய அரசால் பறிமுதல்!
ஆண்டவனோடு போராடுவோர்
டால்ஸ்டாய் மதத்துரோகியா?
டால்ஸ்டாயின் 80-வது ஆண்டு விழா
டால்ஸ்டாயின் கடைசி நூல்
காந்தியடிகளின் வழிகாட்டி மறைந்தார்!
1. அண்ணல் காந்தியின் அறவுணர்ச்சி ஆசான்!
* * *
மனித இனம் நல்வாழ்வு வாழ, எண்ணற்ற மனித குல மேதைகள் தங்களது சொந்த வாழ்வினையே பலியாக்கிக் கொண்டார்கள். அத்தகைய மாமேதைகளில் ஒருவர் லியோ டால்ஸ்டாய் என்ற எழுத்துலகச் சிற்பி.
வளர்ந்து வரும் புதிய மக்கள் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் ‘நல்லவராக இருக்க வேண்டும்’ என்று மற்றவர்களுக்கு அறிவுரை கூறியவர் மட்டுமன்று டால்ஸ்டாய், என்னென்ன புத்திமதிகளை அவர் உலகுக்கு கூறினாரோ அதற்கேற்ப நல்லவராகவும் வாழ்ந்து காட்டிய நல்வழி நல்லறிஞராகவும் இருந்தவர்;
புகை மனிதனுக்குப் பகை என்று அவர் அறிவுரை கூறினார்! அதற்குத் தக்க, அபினி, கஞ்சா, சாராயம் மற்றும் பணக்காரர்களின் மதுபானபோதை வகைகள் முதலியவற்றால் வரும் தீமைகளை எடுத்துச் சொல்லி, அவற்றைத் தன் சொந்த வாழ்க்கையிலே அறவே கையாளாமல் நல்ல பழக்கங்களையே கடைப்பிடித்து வாழ்ந்து காட்டியவர் லியோ டால்ஸ்டாய்!
மேற்கண்ட பழக்க வழக்கங்கள் இல்லாதவரா டால்ஸ்டாய் என்றால், அவற்றின் சிகர போதையாளராக வாழ்ந்து கொண்டிருந்தவர்; ஆனால், இவற்றின் கேடுபாடுகளை விளக்கி எழுத என்று எழுதுகோல் எடுத்தாரோ அன்றே பழக்க வழக்கங்களைத் தனது புலனடக்கங்களால் கொன்று அழித்து, நல்ல சமுதாய வளர்ச்சிக்கான பழக்க வழக்கங்களை வளர்த்து அதன்படி வாழ்ந்து காட்டினார் டால்ஸ்டாய்!
இரஷிய நாட்டிலே புலால் உண்பதே பிறவிப்பயன்! அவர்கள் இடையே மாமிசம் உண்பதை அறவே கைவிட்டு, ‘இறைச்சி உண்ணாதே’ என்றுதான் கூறியதற்கு எடுத்துக்காட்டு இலக்கணமாகத் திகழ்ந்தவர் லியோ!
தமிழ்மக்களிலே வாழும் சில வீர சைவர்களைப் போல கம்பீரமாக சைவ உணவுகளைப் பற்றித் தனது கட்டுரைகளிலே எழுதியவர் அவர். ருஷ்ய நாட்டிலேயும் சில வீரசைவக் குடும்பங்களைத் தோற்றுவித்து உடலோம்பலின் வழிகாட்டியாக நின்றவர் டால்ஸ்டாய்!
பொழுதுபோக்குக் குடிபோதைக் களியாட்ட மன்றங்களிலே ஆடிப்பாடி ஆடம்பரமாக வாழ்ந்து பெரும் போதையெனும் பள்ளத்தாக்குக்குள்ளே வீழ்ந்து கிடந்த அவர், என்று அது சமுதாயத் தீமைகளிலே ஒன்று என்று நிலை நாட்டி எழுதினாரோ, அன்று முதல் அவற்றின் போக முகங்களை ஏறெடுத்தும் பாராமல், மிக மிக எளிமையான வாழ்வை மேற்கொண்டு சமுதாய மேன்மைக்குச் சான்றாக விளங்கினார்.
இந்திய நாட்டிற்கு அரும்பாடு பட்டு சுதந்திரம் பெற்றுத்தந்த அண்ணல் பெருமான் காந்தியடிகளை, பாரதப் பெருமக்கள் தேசப்பிதா என்று பெருமதிப்போடும் பெருமிதத்தோடும், பேருணர்ச்சி யோடும் எப்படி அழைக்கின்றோமோ, அந்த மனிதப் பண்பாட்டு ஒழுக்க உணர்வோடு, காந்தியடிகள் லியோ டால்ஸ்டாயை “எனது குருநாதர்” என்று வணக்கம் செலுத்தி ஏற்றுக் கொண்டதாக வரலாறு கூறுகின்றது.
காந்தியடிகள் தனக்கு குரு என்று இரண்டு மாமனிதர்களை ஏற்றுக் கொண்டார். அவர்களிலே ஒருவர், கோபால கிருஷ்ண கோகலே என்பவர். அவரை உத்தமர் காந்தியடிகள் தனது அரசியல் வழிகாட்டியாக, குருவாக ஏற்றுக் கொண்டார்.
மற்றொருவர் லியோ டால்ஸ்டாய், உலக மக்களுக்கு என்ன ஒழுக்க உணர்வுகளை எடுத்தோதினாரோ, அதே நற்குண சீலங்களோடு தனது மரணம் வரை அவர் வாழ்ந்து காட்டி மறைந்தவர் என்பதால், காந்தியடிகள் அவரை, தனது அறவுணர்ச்சிகளுக்குரிய ஆசானாக ஏற்றுப் பெருமைப்பட்டு வாழ்ந்து மறைந்தார்.
வாழையடி வாழையாக வளர்ந்த மனித நேயம்!
சோவியத் ருஷ்ய ஞானியான லியோ டால்ஸ்டாயை, மகாத்மா காந்தியடிகள், ‘என் வழிகாட்டி டால்ஸ்டாய், அவர் சென்ற சமுதாய அறவுணர்ச்சிப் பாதையில் நான் செல்லுகிறேன்’ என்றார்.
தென்னாப்பிரிக்காவிலே ஒரு வழக்குக்காக வாதாடச்சென்ற அகிம்சை ஞானி காந்தியடிகள், டால்ஸ்டாய் பெயரிலே அங்கே கூட்டு வாழ்க்கை பண்ணையை உருவாக்கினார். அந்த அளவுக்கு டால்ஸ்டாயின் அறவுணர்ச்சி அவரை மாற்றி அமைத்தது.
அத்தகைய ஞானி டால்ஸ்டாய் பிறந்த சோவியத் ருஷ்யா இன்று பொதுவுடைமை நாடாக இருக்கிறது. ஆனால், அவரது காலத்தில் ஜார் மன்னனின் முடியரசு நாடாக இருந்தது.
பாரதியார் பாஷையிலே சொல்வதென்றால், ருஷ்யாவை ஜார் மன்னன் என்ற கொடுங்கோலன் நமது புராணங்களிலே கூறப்படும் இரண்யனைப் போல ஆண்டு வந்தான். ருஷிய அரசரை ஜார் என்பார்கள் அந்நாட்டு மக்கள். மன்னன் ஆட்சி என்பது மக்களுக்காக நீதியோடும், அறவுணர்வுகளோடும் ஆளப்படும் என்பது அரச நீதி.
ஆனால், ஜார் என்ற மாபாவி - ஆட்சி என்ற பெயரிலே, பொய், சூதுவது, தீமை, கொடுங்கோல், ஆட்சியை நடத்தி வந்தான். அவன் அரசிலே ‘இம்’ என்றால் சிறைவாசம், ஏனென்றால் தலைகளது நாசம் என்று நாளுக்கு நாள் காட்டாற்று வெள்ளம் போலக் காட்சி தந்தன.
பேய் ஆட்சி செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாரதி பாடியதற்கு ஏற்றவாறு; ஜார் என்ற கொடுங்கோலன் பேயாவான்! சாத்திரங்கள் என்ற அதிகார வர்க்கங்கள் மக்களைப் பிணமாகத் தின்னும்!
உழுகிறவர்கள் உணவுக்காக ஊர் ஊராய் அலைந்தார்கள்; தவித்தார்கள்; தொழிலாளர் பெருமக்கள் விலங்குகளை விடக் கேவலமாகக், கண்டதை தின்று பசியோ பசி என்று பராரியாய் வாழ்ந்தார்கள்.
ஏழை, நடுத்தர மக்களின் இந்த இழிவு நிலைக்கு இரங்கி, மனித நேயத்தோடு ‘உணவு கொடு வேலை கொடு, வசிக்க வீடுகொடு’ என்று மக்கள் போராட ஆரம்பித்தால், அவர்கள் ‘கில்லெட்டின்’ என்ற கோரக் கொலைக் கருவிக்குத் தங்களது தலைகளைப் பலிகொடுக்கும் நிலை; அல்லது தூக்கிலே தொங்கித் துடி துடித்துச் சாகும் நிலை அல்லது சோவியத் மண்ணை விட்டே நாடு கடத்தப்பட்டும், துரத்தப்பட்டும் ஓடுவார்கள்! அவ்வளவு அராஜகத்தோடு அந்த ஆட்சி நடைபெற்று வந்தது.
இவை போன்ற கோர வாழ்க்கைக்கு இடையே, ருஷிய மக்கள் பஞ்சத்திலும் நோய்களிலும் சிக்கிப் பல தவித்தார்கள். ஆனால், அரண்மனை எடுபிடிகளிலே இருந்து அரசு அதிகாரிகள் வரை, ஆஷாடபூதி ரஸ்புடீனிலே இருந்து அரசனுக்குக் குற்றேவல் புரிபவர்கள் வரை ஏகபோகமாக எக்காளமாக, சுகபோகிகளாக வாழ்ந்து வந்தார்கள். இந்தச் சூழ்நிலை நீடித்துக் கொண்டிருந்த நேரத்திலேதான் மனிதாபிமானியான டால்ஸ்டாய் ருஷ்யாவிலே பிறந்தார்.
ருஷ்யாவில் ஜார் என்ற கொடுங்கோலன் ஆட்சியின் போது, மன்னர்களுக்கு வேண்டியவர்களானாலும் சரி, செல்வாக்கும் சொல்வாக்கும் படைத்தவர்களனாலும் சரி, அவர்களுக்குக் கவுண்ட் (COUNT) என்ற பிரபு பட்டம் வழங்கப்படுவது அன்று வழக்கமாக இருந்தது. டால்ஸ்டாயின் முன்னோர்கள் ஜார் மன்னன் பரம்பரையின் அன்பைப் பெற்றிருந்தார்கள். அதனால், டால்ஸ்டாயின் முன்னோரான பீட்டர் டால்ஸ்டாய் என்பவருக்கு, மகாபீட்டர் என்ற ருஷ்ய மன்னர் அந்தப் பிரபு பட்டத்தை வழங்கினார்.
மகாபீட்டர் என்ற மன்னன் மாண்டதும் மகாகாதரைன் என்ற அரசி ருஷ்ய ஆட்சிக்கு வந்தாள். அவளும் மகா பீட்டரைப் போலவே, டால்ஸ்டாய் முன்னோர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தாள். அவளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டாவது பீட்டர் மன்னன், பீட்டர் டால்ஸ்டாயை நாடு கடத்தி விட்டான். அது மட்டுமன்று, ‘பிரபு’ என்ற பட்டத்தையும் ஆணவத்தால் பறித்துக் கொண்டான். பாவம், நாடு கடத்தப்பட்ட அந்த அதிர்ச்சியால் பீட்டர் டால்ஸ்டாய் இறந்தார்.
மகாராணி எலிசபெத் பிறகு ருஷ்ய ராணியானாள். அவள், ஜாக் பரம்பரையால் பறிக்கப்பட்டு விட்ட பிரபு என்ற பட்டத்தை மீண்டும் டால்ஸ்டாயின் முன்னோருக்கு வழங்கினாள். அத்துடன் ஆட்சியினரால் பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தையும், சொத்துக்களையும் திருப்பிக் கொடுத்தாள்.
மன்னர் பரம்பரையான மகாராணியின் கருணையால் மீண்டும் வழங்கப்பட்ட நிலத்தையும், சொத்தையும் டால்ஸ்டாயின் முன்னோர் விற்று விழுங்கி விட்டு, ஒருவேளை உணவுக்கே வக்கற்று வழியற்று, வறுமை நோயால் வருந்தினார்கள்.
ஆனால், 18-ம் நூற்றாண்டில் கவுண்ட் நிகோலஸ் டால்ஸ்டாய் என்பவர், தனது பரம்பரையின் மரியாதையினையும் முன்னைய மதிப்பையும் எப்படியாவது காப்பாற்றியாக வேண்டுமென்று பாடுபட்டார். தகுதியும், திறமையும் உள்ள நிகோலஸ், தனது இளமையான வயதிலேயே ராணுவப் படையில் சேர்ந்தார். ஆனால், சில மாதங்களுக்குள் அவர் எதிரிகளால் சிறைபிடிக்கப் பட்டார்.
சிறையிலே இருந்து வெளிவந்த நிகோலஸ் டால்ஸ்டாய், தனது தந்தையார் வைத்திருந்த மீதி நிலத்தில் விவசாயம் செய்தார். அதே நேரத்தில், அவருக்கும் மேரிவால் கான்ஸ்கி என்ற இளவரசிக்கும் திருமணம் நடந்தது; திருமணப் பரிசாக நிகோலஸ் டால்ஸ்டாயிக்கு நிலம் கிடைத்தது.
தனது தந்தையின் நிலத்தையும், மனைவியின் நிலத்தையும் சேர்த்து அவர் விவசாயம் செய்தார். முழுக்கவனத்தையும் அவர் வேளாண்துறையிலே செலுத்தி, அரிய உழைப்பாற்றிப் பயிரிட்டதால், அறுவடை மூலம், நல்ல செல்வ நிலையினைப் பெற்றார்.
நிகோலஸ் டால்ஸ்டாய், பசு போன்ற குணமுடையவர்; இனிமையாகப் பேசுபவர், இரக்கப் பண்புடையவர்; கோபம் வந்தால் தான் ராணுவ மிடுக்கும், தோற்றமும், செயலும், வீரமும் கொள்வார். இதையெல்லாம் நன்கு தெரிந்து கொண்ட அக்கம் பக்கத்து ஊர் மக்கள் எல்லாம் அவரிடம் அன்புடன் பழகி நண்பர்களானார்கள்.
ஜார் மன்னன் ஆட்சியிலே நிலப்பிரபுக்கள், உழவர் பெருமக்களை அடிமையாகவும், இரக்கமற்றும் நடத்திவந்த கொடுமையான நேரத்தில், நிகோலஸ் டால்ஸ்டாய் மட்டும் சற்று வித்தியாசமாக, மனித நேயமாக, இரக்கமாக, கருணையாக, பொறுமையாக, பொறுப்பாக, நேர்மையாக, நடந்து கொண்டார்!
நிகோலஸ் மனைவி இளவரசி மேரியும் தனது கணவரைப் போலவே அன்பெனும் இரக்க குணத்துடன் அவர்களிடம் பழகி பண்பெனும் பலனைப்பெற்று, பாசத்தை வளர்த்துக் கொண்டாள்.
இவ்வாறாக அவர்கள் பண்புடனும் பாசத்துடனும், உற்றார், சுற்றார் ஆதரவுடனும் விளங்கி, நல்ல குடும்பம் பலகலைக் கழகம் என்பதற்கு ஈடாக, ஐந்து மக்கட் செல்வங்களைப் பெற்றார்கள். அந்த ஐவரில் ஒருவரான நம்முடைய நாயகனான லியோ டால்ஸ்டாய், 9.9.1828-ஆம் ஆண்டில் பிறந்தார்.
லியோ டால்ஸ்டாய் தாயார் இளவரசியாக செல்வாக்குப் பெற்று வளர்ந்திருந்தாலும், தான் பெற்ற பிள்ளைகளைப் பாதுகாக்க, வளர்க்க சீராட்ட தாதியர்களையோ, பணிப் வைத்துக் கொள்ளாமல், தானே நேரடியாக, தகனது எல்லா வசதிகளையும் கவனித்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.
தந்தை நிகோலசும், தானே நேரிடையாகக் குழந்தைகளை வளர்ப்பதிலே போதிய கவனம் செலுத்தி, அக்கறையோடு வளர்த்துவந்தார். இந்த நேரத்தில் லியோ டால்ஸ்டாய் சிறு குழந்தையாக இருக்கும்போதே அவருடைய அன்னை இளவரசி மேரி மரணமடைந்தார். இதனால், டால்ஸ்டாய் இளமையிலேயே தாயற்ற பிள்ளையானார்!
ஜெர்மன் வேலைக்காரனான தியோடார் ரஸ்ஸெல் என்பவரும், நோவ்னா என்ற வேலைக்காரியும் குழந்தை டால்ஸ்டாயை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார்கள். அவர்களை மேற்பார்க்கும் பொறுப்பை டால்ஸ்டாய் அப்பாவுடன் பிறந்த அத்தையும் கவனித்துக் கொண்டார். அவரது அத்தை ஒழுக்கத்தின் சிகரம், குழந்தைகள் மேல் அளவில்லா பாசம் வைத்திருந்தவர், அதனால், டால்ஸ்டாய் வளர்ப்பு நன்றாகவும், கவனமாகவும், குறைபாடுகளற்றதாகவும் இருந்தது. அத்தையின் மேற்பார்வைக் கவனத்தால் அவரது மனமும் கண்ணாடி போல பளிச்சென்றிருந்தது.
1839-ல், டால்ஸ்டாய் பதினொரு வயது சிறுவனாக இருக்கையில் தந்தை மனைவியை இழந்த சோகம் மேலும் மேலும் நெருக்கவே, மனம் விரக்தியைடைந்து மாஸ்கோ நகரில் காலமானார். அதனால், குடும்பப் பாரம் முழுவதும் அத்தையின் மேலேயே விழுந்தது.
இந்தச் சுமைகளை அவரால் தாங்க முடியவில்லையோ என்னவோ, அண்ணனும் அண்ணியும் சென்ற மரணப் பாதையிலேயே 1840-ம் ஆண்டில் அத்தையும் சென்று விட்டார்!
இப்போது டால்ஸ்டாய் நிலை மிகவும் சோக மயமாக இருந்தது. ஆனால், தூரத்து உறவுடைய ஒருத்தி அக்குடும்பத்தை ஏற்று நிர்வாகம் செய்யும் நிலை ஏற்பட்டது.
இந்த உறவுக்காரியிடம் எல்லாவித பலவீனங்களும் குடி கொண்டிருந்தன. குடி போதை ஒருபுறம் ஆடல் பாடல் இரவு பகலாக இன்ப நுகர்ச்சிகளின் விருந்துக் கேலிக் கூத்துகள் இன்னோர் புறம் தன்னைச் சேர்ந்த ஆண் பெண் நட்புகளுக்கு அன்றாடம் நடத்தும் விருந்துகள் வேறோர் புறம் இவ்வாறு, நாலா புறங்களிலும் டால்ஸ்டாயின் தந்தை சேர்த்து வைத்த குடும்பச் சொத்துகள் காலியானது, அவளின் கீழ் வளர்ந்த டால்ஸ்டாயினுடைய, உடன்பிறப்புகளது மனத்தில் ஏதோ சில நெருஞ்சி முட்கள் நெருடலாயின.
இருந்தாலும், நிகோலஸ், இளவரசி மேரி என்ற டால்ஸ்டாயின் பெற்றோர்களது. வளர்ப்பு மிகச் சிறப்பாகவும் பொறுப்பாகவும், இருந்ததால், டால்ஸ்டாயும் அண்ணன்மார்களும் நற்குணம் பெற்றவர்களாகவே வளர்ந்து வந்தார்கள்.
உடன் பிறப்புக்கள் ஐவரிலும் மூத்தவர் பெயர் நிக்கோலஸ்; இவர், அறிவு நுட்பமும், எந்தப் பிரச்னையை அணுகுவதிலும் ஆழ்ந்த திட்டமும் சிந்தனையும் உடையவர். அதனால் நன்மை எது தீமை எது என்பதை அறியும் திறனுடையவராக இருந்தார். அவருக்கு கற்பனைச் சக்தி அதிகம்! தனது தம்பியர் நால்வருக்கும் புதிய புதிய புத்திக் கூர்மைகளை வழங்கும் கதைகளை அவர் சொல்லுவார். அதைக் கேட்ட உடன் பிறப்புக்கள் அனைவரும் உண்மைகளை உணர்ந்து கொள்வார்கள்.
மூத்த அண்ணன் கூறும் கதைகளைப் பற்றி டால்ஸ்டாய் பின்னர், தனது கருத்தைக் கூறும் போது, எனக்கு வயது ஐந்து. அடுத்த அண்ணன் டிமெட்ரிக்கு ஏழுவயது; “அப்போது பெரிய அண்ணன் நிக்கோலஸ் தனக்கு ஒரு ரகசியம் தெரியும் என்றும், அந்த ரகசியம் யாருக்குத் தெரிந்தாலும், நோயோ, துன்பமோ, துயரமோ, சினமோ, பேராசையோ அவர்கள் அருகில் கூட அண்டாது என்றும், மக்கள் இடையே எறும்புகளைப் போன்ற சகோதர உணர்வு உருவாகிவிடும்” என்பார்! ‘எறும்பு’ என்று அவர் கூறிய சொல்லை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. அப்போது எங்களுக்கு எறும்பு ஊர்ந்து செல்லும் பாதைகளும், வரிசை அழகுகளும் அவற்றின் துவாரங்களும் நினைவுக்கு வந்து சுறு சுறுப்பாகி, எங்கள்து அடுத்த பணிகளிலே இறங்கி விடுவோம்! அந்த சொல் அவ்வாறு எங்களை ஈர்த்துவிடும்.
அதே வேளையில், சில தினங்களில் ‘எறும்புகளின் சகோதர பாசம்’ என்ற ஆட்டம் ஒன்றை ஆடுவோம்.”
எறும்பு விளையாட்டு என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? இதோ டால்ஸ்டாயே அதற்கு விளக்கம் கூறுகிறார் கேளுங்கள்:
“நாங்கள் நால்வரும் நாற்காலிகளின் அடியில் பதுங்கிக் கொள்வோம். எங்களைச் சுற்றி நாலா பக்கங்களிலும் பெட்டி, படுக்கைகளை அடுக்கி சந்துகளை மறைத்துக் கொள்வோம். துணிகளால் இடுக்குகளை மூடி மறைத்துவிடுவோம். இருட்டில் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு அமர்வோம். அந்த நேரத்தில் எங்களுக்கு அதிகமான அன்பும், இரக்கமும் மனத்தில் உண்டானதை இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை. இந்த ஆட்டம் எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார், டால்ஸ்டாய்.
நிக்கோலஸ் தனது தம்பிகளுக்கு இது போன்ற அதிசயமான, புத்தி நுட்பமான செய்திகளை அடிக்கடி கூறுவார்; அவர் கூறுவது எல்லாமே உண்மை தான் என்ற நம்பிக்கை தம்பிகளுக்குத் தோன்றிவிடும்.
டால்ஸ்டாய் தனது தமையன் கூறும் மற்றொரு செய்தியை குறிப்பிடுகிறார். அதில்;
“நீண்ட தூரத்தில் ‘பெண்பெரன்’ என்ற ஒரு மலைச் சிகரம் உள்ளது. அவர் கூறும் சில பணிகளை நாங்கள் தவறாமல் சரியாகச் செய்துவிட்டால், அந்த மலை உச்சிக்குச் சுற்றுலா அழைத்துச் சென்று இயற்கைக் காட்சிகளைக் காட்டுவதாகக் கூறுவார். அவ்வாறு அவர் கூறுவதில் மூன்று நிபந்தனைகள் இருக்கும். அவற்றுள்
ஒன்று இது:
“நாங்கள் ஒரு மூலையில் நின்று கொள்ள வேண்டும். வெள்ளைக் கரடி என்று ஒரு மிருகம் உள்ளதல்லவா? நெஞ்சிலே அதை நினைக்கவே கூடாது என்பார். நாங்கள் மூலையில் நின்று கொண்டு வெள்ளைக் கரடியை நினைக்காமல் இருக்க முடியுமா? முயற்சிப்போம் ஆனால், என்ன முயன்றாலும், வெள்ளைக்கரடி எங்களுடைய மனத்தைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.”
இரண்டாவது நிபந்தனை என்னவென்றால்: “ஒரு மெல்லிய கோட்டின் மேல் தடுமாறாமல் நடக்க வேண்டும்.
ஓராண்டுவரை உயிரோடுள்ள முயலையோ; செத்த முயலையோ பார்க்கக் கூடாது என்பது மூன்றாவது விதி. இந்த நிபந்தனைதான் எளிமையானது. ஆனால், உள்ளத்தில் நன்றாகப் பதிந்துவிட்டது. அவரே இது பற்றி மேலும் என்ன கூறுகிறார் என்பதைப் பாருங்கள்:
எறும்புகளின் சகோதர உணர்ச்சி என்ற ஆதரிசம், இப்பொழுதும் என் மனத்தில் இருக்கின்றது. வேற்றுமை இதுதான். நாற்காலிகளுக்கு அடியில் இருந்து கொண்டு ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டிருப்பதோடு இந்த ஆதரிசம் இப்போது நின்று விடவில்லை. இந்த நீல வான வரம்புக்கு அடியில் வாழ்ந்து கொண்டிருக்கும். மக்கள் அனைவரையும் கொள்வேதே இப்போதைய எனது ஆதரிசம் ஆனது.
டால்ஸ்டாயின் மூத்த தமையனைப் பற்றி இதுவரை கூறிய லியோடால்ஸ்டாய், இப்போது தன்னுடன் பிறந்த மற்ற உடன் பிறப்புக்களைப் பற்றி என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்:
“நிக்கோலசிடம் எனக்கு மரியாதை இருந்தது. டிமெட்ரியை என் நண்பராய் எண்ணினேன். ஆனால் செர்ஜியஸ் என்ற அண்ணனை நான் பக்தியுடன் பூஜித்தேன். எதற்காக?
“அவனைப் போல நான் பேச வேண்டும்; ‘நா’, சாதுர்யம் இருக்க வேண்டும், நடத்தையிலும் அவனைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். அவனிடம் எனக்கு அவ்வளவு அதிக பற்றுதல் இருந்தது.
“அவனுடைய பாடல்கள், ஓவியங்கள், ஆர்வங்கள் அனைத்தையும் நான் போற்றுவேன். அதே நேரத்தில் சூதுவாது இல்லாத அவனது அகங்காரத்தை நான் எனது மனதுக்குள்ளேயே பாராட்டிக் கொள்வேன். என்னைப் பொறுத்த வரையில் அவனது செயற்பாடுகளைப் பின்பற்றிட மிகவும் விழிப்புடனேயே இருந்தேன்.”
“என்னைப் பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை நான் முயற்சிப்பேன். சில நேரங்களில் எனது யூகம் சரியாகவும் இருக்கும். தவறுதலாகவும் தென்படும். ஆனால், என்னைப் பற்றி பிறருடைய கருத்தைத் தெரிய எனக்கு வருத்தமாகவே இருக்கும். இக்காரணத்தால் தான், இதற்கு சூது வாதில்லாத நேர்மாறான தன்மையைக் கண்டு செர்ஜியசை நான் மிகவும் பூஜிக்கும் நிலக்குள்ளானேன்.
என்னுடைய இரண்டாவது அண்ணன், தியாக மனம் உடையவன்! அதற்குக் காரணம் அவரிடம் இருந்த சமயப் பற்றுத்தான்.
டால்ஸ்டாய் குழந்தைப் பருவ வளர்ச்சிகளில் சில இவை. தனியாகவே அவர் அமர்ந்து எதைப் பற்றியோ சிந்தனை செய்து கொண்டே இருப்பார். இவ்வாறு அவர் மணிக் கணக்கில் தனிமைச் சிந்தனையிலேயே மூழ்கியிருப்பார்.
எவ்வளவு நேரம், எத்தனை நாட்கள் தான் இவ்வாறு ஒரு இளைஞன் தனிமைச் சிந்தனையில் இருக்க முடியும்? அவர் என்ன யோகியா? ஞானியா? தியானியா சாதாரணமாகப் பதினைந்து வயதுடைய சிறுவர்தானே! எனவே, தனிமை ஒரு நாள் தலைதூக்கித் தத்தளிக்க வைத்தது. எரியும் தீயானது! வெடித்துச் சிதறியது.
எல்லோரும் ஒரு நாள் இறந்து தானே ஆக வேண்டும்? இதற்குள் ஏன் மனக்கட்டுப்பாடும் புலனடக்கமும்? உயிருள்ள வரை எல்லா இன்பங்களையும் ஏன் அனுபவித்துச் சாகக்கூடாது? என்பதே டால்ஸ்டாயின் இளமைக் காலக் கேள்வி! இந்த எண்ணம் புகைவிட்டு, சுடர்விட்டு, சோதியாக எரிந்தது. தூக்கி எறிந்தார் பள்ளி நூல்களை;
நகர்ந்தது காலச் சக்கரப் பற்கள். படிப்படியாக டால்ஸ்டாயும் மனம் மாறிவிட்டார். அதன் எதிரொலி என்ன தெரியுமா? கத்தோலிக்க கிறித்தவ மதப்பிரிவைச் சேர்ந்த அவருக்கு சமயப்பற்று அதிகமானது. கிறித்துவத் தேவாலயத்துக்கு அடிக்கடி சென்று பாதிரிமார்களின் அருட் ஜெபங்களைக் கூர்ந்து கேட்பார்!
கேட்பதோடு மட்டும் அவர் நில்லாமல், மதகுருக்கள் என்ன கூறுகிறார்களோ அதைப் பின்பற்றுவார். இயேசு பெருமானிடம் அவருக்கு அளவு கடந்த பற்றுண்டு.
தேவாலயம் சென்ற நேரம்போக, மிகுதியான வேளைகளில், அவர் உடல் பயிற்சி, வீர விளையாட்டுக்கள் ஆகியவற்றில் கலந்து உடல்வளம் சீரடைய தேகப் பயிற்சிகளையும் செய்வார்.
அக்கால ருஷ்யாவில், ஏழை, பணக்காரன் என்ற வேற்றுமைப் பிரிவுகள் அதிகமாக இருந்தன. ஏழைப் பிள்ளைகளோடு சீமான் வீட்டுப் பிள்ளைகளையோ, நடுத்தர வர்க்கப் பிள்ளைகளோடு நிலச்சுவான்தாரர்கள் அல்லது பெரும் பிரபுக்கள் பிள்ளைகளையோ, பணக்காரக் குழந்தைகளோடு வறுமைபடைத்த சிறுவர்களையோ படிப்பதற்கும் கூட விடமாட்டார்கள்; கூடிப்பழகிட மனம் விரும்ப மாட்டார்கள். அதனால், இளம் வயது டால்ஸ்டாய் தேகப் பயிற்சிகளை அவர்களோடு சேர்ந்து செய்யமாட்டார்; ஆனால், தனியாக ஜிம்னாசியம் செய்வார். அதனால் அவர் நெடுநாள் வாழும் உடல் வளமும் வனப்பும் பெற்றார்.
★
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
ஒவ்வொரு இளைஞனும் தனது எதிர்கால முன்னேற்றத்துக்கான வாழ்க்கையைப் பற்றிக் கம்பீரமாக, துணிவாக எதையும் சிந்திக்க வேண்டும். அவற்றைச் செயற்படுத்தும் ஆற்றலோடு பணியாற்றவேண்டும். அந்த செயற்பாடுகளிலே மனித நேயம் பெருமை பெற வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்கான நற்பணிகளாக அவை அமைய வேண்டும். சமுதாய மாற்றத்தை உருவாக்கும் வரலாற்றுச் சம்பவங்களாக அவை இருக்க வேண்டும்.
காவியுடை மாவீரத் துறவி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்காவிற்குச் சென்றிருந்த போது, அவரது சொற்பொழிவுக்கான சில குறிப்புக்களை எடுக்க அங்குள்ள நூலகம் ஒன்றிற்குச் சென்று புத்தகத்தின் பெயரை நூலகரிடம் கூறி எடுத்துத் துருமாறு கேட்டார்.
நூலகர் அதனைத் தேடிப் பார்த்து அது கிடைக்காததால், ‘நாளை தேடித் தருகிறேன் வாருங்கள் சுவாமி’ என்றார் நூலகர். ‘முயற்சி திருவினயாக்கும்’ என்பதற்கேற்ப, மறுநாள் அவர் நூலகம் சென்றபோது, நூலகர் அரும்பாடுபட்டுத் தான் தேடிய நூலைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து மகிழ்ந்தார்.
நூலைப் பெற்ற மகான், அதைச் சில நிமிடங்கள் பக்கம் பக்கமாகப் புரட்டிப் பார்த்து விட்டு, அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, நூலகருக்கு நன்றி கூறிப் புறப்பட்டார் அவர்.
“சுவாமி, நூலைத் திருப்பித் திருப்பிப் பக்கங்களைப் பார்த்துவிட்டுப் போகிறீரே, தாங்கள் தேடிய கருத்துக்கள் நூலில் கிடைத்து விட்டனவா?” என்று நூலகர் அவரைக் கேட்ட போது, “அன்பரே! இந்த நூலைநான் ஏற்கனவே படித்து விட்டேன். தேவையான குறிப்புக்களை மட்டும் மீண்டும் அதன் தலைப்புக்களிலே பார்த்து நினைவு படுத்திக் கொண்டேன். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், இந்த நூலிலே உள்ள ஒரு தலைப்பைக் கூறி, அதில் கூறப்பட்டிருப்பது என்ன? என்று கேளுங்கள் சொல்கிறேன்” என்றார்.
அப்போது, நூலகர் அவர் கூறியது கேட்டு வியந்து போய் மரமாக நின்று, சுவாமி முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். உடனே மகான் விவேகானந்தர், “அன்பரே வரிவரியாகப் புத்தகத்தைப் படிப்பதும், பக்கம் பக்கமாகப் படிப்பதும், அத்தியாயம் அத்தியாயமாக அதை அணுகுவதும் சிலருடைய பழக்கம்! ஆனால், நான் புத்தகம் புத்தகமாகப் படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிவன்” என்றார்!
எனவே, விவேகானந்தர் எவ்வளவு நூல்களைப் படித்திருந்தால், ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்த்ததும் அதில் இருக்கும் கருத்துக்கள் இதுதான் என்று கணித்திருப்பார் என்பதை மாணவர்களும் இளைஞர்களும் எண்ணிப் பார்க்கும் போது தான் எத்தகைய ஒரு நினைத்தற்குரிய செயல் இது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்!
மகான் விவேகானந்தரின் இந்த வரலாற்றுச்சம்பவம் போல, பல நிகழ்ச்சிகளை லியோ டால்ஸ்டாய் அவரது மாணவப் பருவத்தில் சந்தித்துள்ளார்.
டால்ஸ்டாயும், அவரது உடன் பிறப்புக்களும் கல்லூரிக் கல்வி கற்றிட மாஸ்கோ நகர் கல்லூரியில் சேர்ந்தார்கள். அந்தக் கல்லூரி, செல்வந்தர்கள், பிரபுக்களின் பிள்ளைகளுக்காகவே நிறுவப்பட்ட கல்லூரியாகும்.
அங்கே கல்வி பயிலும் மாணவர்கள், தங்களது மனம் போன பாதையில் படிப்பவர்களாவர். யாரும் அவர்களைத் தட்டிக் கேட்கவோ, கண்டிக்கவோ முடியாது; தங்களது பாடங்களை விருப்பம் போல மாற்றிக் கொண்டு அங்குள்ள மாணவர்கள் படிப்பார்கள்; அதை எவரும் ஏன் எப்படி என்று கேட்க முடியாது. காரணம், அவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற கவலை இல்லாததுதான்!
கல்லூரியை சுற்றிலும், மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும், உணவு விடுதிகள், பொழுது போக்கும் கேளிக்கை மன்றங்கள், ஆடல் பாடல் அரங்குகள், நாடகங்கள் போன்றவை எப்போதும் நடந்து கொண்டே இருக்கும். செல்வச் சீமான்கள், பிரபுக்களின் பிள்ளைகள் படிக்கும் பல்கலைக் கல்லூரி தானே அது அதற்கேற்றவாறு எல்லா ஆனந்தங்களையும் அங்கே அனுபவிக்கும் வசதிகள் உண்டு.
இதே நேரத்தில், டால்ஸ்டாய் வீட்டை நிர்வாகம் நடத்தும் அவரது சிறிய தாயார். தனது வீட்டிலேயே தன்னைச் சார்ந்த ஆண்-பெண் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் ஆடல் பாடல், கேளிக்கை விருந்துகள் நடத்துவாள். அதனால், படிக்கக் கல்லூரி வந்த அவருக்கும் தனது வீட்டிலேயே உறவுக்காரி நடத்தும் எல்லா இன்ப போகங்களிலும் கலந்து கொள்ளும் ஆர்வம், பழக்கம் அதிகமாகி, நாளாவட்டத்தில் வழக்கமான மகிழ்ச்சியாகவும் மாறிவிட்டது. அதனால் அவருக்குப் படிப்பும் கசந்தது; ஊர் சுற்றும் பழக்கமும் உருவானது; எந்தத் தீயப் பழக்கத்திற்கும் அவர் வெளியே போகாமல், தனது வீட்டிலேயே எல்லா மகிழ்ச்சிகளையும் பெற முடியும் என்ற சூழலமைந்தது.
தனது வீட்டிலேயே எல்லாவிதமான ஒழுங்கீனங்களையும் அவர் அனுபவித்து வந்ததால், கல்லூரிக் கழகத்துக்குப் போக மாட்டார். அப்படிப் போனாலும் வகுப்பில் சரியாகப் பொறுமையாக உட்காரமாட்டார், உட்கார்ந்தாலும் ஆசிரியர் நடத்தும் பாடங்களைக் கவனமாகப் பின்பற்றமாட்டார், அடிக்கடி ஆசிரியருக்குத் தெரியாமல், கேட்காமல் திடீரென வெளியே ஓடிவிடுவார்.
இவர், இவ்வாறு செய்வதைக் கண்ட கல்லூரி நிர்வாகம், டால்ஸ்டாயைக் கல்லூரியிலேயே பூட்டிச்சிறை வைத்தார்கள். அப்படியும் அவர் திருந்தியபாடில்லை.
கல்லூரிக்கே சரியாக வராத டால்ஸ்டாயிக்கு பரீட்சையில் எப்படித் தேர்வு எண் கிடைக்கும்? அதனால், ஒவ்வொரு தேர்விலும் குறைந்த மதிப்பெண்களையே அவர் பெற்று வந்தார். அதேநேரத்தில் அவருக்கு விருப்பமான பாடவிஷயம் என்றால் மிகவும் ஆழ்ந்து படிப்பார்! அதில் அக்கறையும் செலுத்துவார்.
எந்த ஒரு பிரச்னையிலும் அவருக்குத் தெளிவான அறிவும், கூர்மையான பற்றும் இல்லாமல் எதிலும் வௌவால் புத்தியோடு சஞ்சலப்படுவார். டால்ஸ்டாய் இளமைப் பருவம் நன்றாக இருந்தது. அதற்குக் காரணம் பெற்றோர்களது முழுப் பாதுகாப்பும் அக்கறையுள்ள கவனமுமே. ஆனால், தாய் தந்தையாரை இழந்து, உயிருக்கு உயிராகப் பற்றுதலோடு பாதுகாத்த அத்தையையும் இழந்து, யாரோ ஒரு தொலைதூர உறவுக்காரி, அவர் குடும்பத்துள் பேய் புகுந்தது போல் நுழைந்ததால், டால்ஸ்டாய் சஞ்சல புத்தியோடு மட்டுமல்லாமல் தீய பழக்க வழக்கங்களின் பிறப்பிடமாகவே திகழ்ந்தார்.
அதனால் அவரது மாணவர் பருவம் அமைதியே இல்லாத கானல் நீரானது. என்றாலும், மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். தானும் திருந்த வேண்டும் என்ற எண்ணம் பிடாரன் பெட்டிக்குள்ளே உள்ள பாம்புபோல அடங்கியும் சீறிக் கொண்டும் இருந்தது. எனவே, அவருக்கு வழக்கமாகிவிட்ட தீய பழக்கங்களை அவரால் கைவிட முடியவில்லை.
ஆனால், ஒரு நல்ல பழக்கம் அவரிடம் இருந்து வந்தது. என்ன தடைகள், குறுக்கீடுகள் ஏற்பட்டாலும், அன்றாடம் நடக்கும் அவரது நிகழ்வுகளை நாட்குறிப்பாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டே வருவது தான், அந்த நல்ல பழக்கமாகும். தான் சாகும் வரை இந்தப் பழக்கத்தை அவர் மறவாமல் கடைப்பிடித்து வந்ததால், அந்த நாட்குறிப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் பிற்காலத்தில் அச்சாகி புத்தகமாக வெளிவந்தது. அதை இன்றும் படிக்கலாம். அதைப் படிப்போருக்கு மட்டும்தான்்டால்ஸ்டாயின் இளமைப்பருவ, மாணவர் பருவ மனப்போக்கையும், மன வளர்ச்சியையும் புரிந்து கொள்ள முடியும்.
1847ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல்...
நான் எனக்குள் பல மாறுதல்களைச் செய்து கொண்டேன். படிப்பில் நான் வெற்றிபெற விரும்பும் முன்னேற்றங்களை இதுவரை அடைய முடியவில்லை. நான் செய்ய விரும்புவதைத்தான் செய்கிறேன். ஆனால், இதை செம்மையாக செய்ய முடியவில்லை. அதற்கு நான் எனது நினைவுச் சக்தியை நன்றாகப் பயன்படுத்தவில்லை. இதற்காகச் சில விதிகளைத் தயாரித்துக் கொள்கிறேன். இந்த நாட்குறிப்பின் படி நடந்தால் எனக்கு மிகுந்த நம்பிக்கையான நன்மை ஏற்படும் என்று நம்புகிறேன். இங்கே நான் என்பது மாணவன் டால்ஸ்டாயைக் குறிப்பதாகும்.
1. ஒருவன் எடுத்துக் கொண்ட காரியத்தை தடையின்றி முடிக்க வேண்டும்.
2. செய்வதைத் திருந்தச் செய்ய வேண்டும்!
3. படிக்கும் பாடத்தில் மறதி ஏற்பட்டால் புத்தகத்தைப் புரட்டக் கூடாது; படித்ததையே நினைவுபடுத்த முயற்சிக்க வேண்டும்.
4. மூளையை சுறுசுறுப்பாக இயக்க, அதற்கு நாம் நிறைய வேலைகளைத் தரவேண்டும்.
5. எந்தப் பாடத்தையும் உரத்துப் படிக்க வேண்டும். காலத்தோடு தூக்கத்திற்குச் செல்லவேண்டும்.
6. மற்றவர்கள் இடையூறுகள் நீ படிக்கும் போது ஏற்பட்டால், அல்லது இருந்தால், அவர்களிடம் அதைச் சொல்ல வெட்கப்படாதே.
7. முதலில் ஜாடை மாடையாகக் கூறு! அதை அவர்கள் புரிந்து கொள்ளாவிட்டால், அவர்களிடம் பணிவாக மன்னிப்புக் கேட்டுக் கொள். தெளிவாகவே அவர்களிடம் சொல்லிவிடு.
8. சிறு பிராயத்துச் சிந்தனைப் பழக்கம்; மாணவப் பருவத்திலும் தொடர்ந்து நீடிக்கும் பழக்கமாக இருக்க வேண்டும்.
9. என் நாட்டு மக்களும், உலகமும் என்னை உயர்ந்தவன் என்று போற்றும்படி நல்ல பணிகளைச் செய்யவேண்டும். அதற்குரிய சிந்தனைகள் மாணவப் பருவத்திலேயே தோன்ற வேண்டும். அப்படிப்பட்ட சிந்தனைகளையே மாணவர்கள் சிந்திக்க வேண்டும்.
10. உலக மக்களுக்கு நன்மை விளைவிக்கும் அல்லது வளம் உருவாக்கும் ஒரு நல்லவழியை விரும்பும் எந்தத் துறையிலாவது மாணவர்கள் கண்டு பிடித்து, அதற்கான நெறிமுறைகளோடு பழகிக் கொண்டு செயலாற்ற வேண்டும்.
மேற்கண்ட நோக்கங்கள் அனைத்தையும் டால்ஸ்டாய் மாணவப் பருவத்தில் கடைப்பிடித்தார்; அவற்றைத் தனது டைரியில் எழுதினார் உலகுக்கு ஒரு பாடமாக்கி அதற்கு நாட்குறிப்பு நிகழ்ச்சிகள் என்று பெயர் சூட்டினார்.
இந்தக் குறிக்கோள்களால் தூண்டப்பட்ட டால்ஸ்டாய், கிழக்கு நாடுகளது மொழிகளை எல்லாம் கற்றார். அரபு, துருக்கி மொழிகளைப் படிக்க விரும்பினார்.
பிறகு, சட்டம் படித்தார்; ஆனால் அவருக்கு சட்டம் கற்பித்த ஜெர்மன் பேராசிரியருக்கு ருஷிய மொழி நன்றாகத் தெரியாது; மாணவர்களுக்குப் புரிய வைக்கக் கூடிய அளவுக்கு அவருக்கு ரஷ்ய மொழி தெரியவில்லை. அதனால், சட்டக் கல்வியைப் பாதியளவோடு நிறுத்திக் கொண்டார்.
இவற்றுக்கெல்லாம் பிறகு வரலாறும் அறநூல்களும் படிக்க ஆசைப்பட்டார். ஆனால், வரலாறு படிப்பதால் என்ன பயன்? என்ற சிந்தனை அவர் மனதை உறுத்தியது. அதனால், அதையும் படிக்காமல் கைவிட்டார்.
அறநூலாவது படிக்கலாமா என்று அவர் நீண்ட நெடு நாட்களாகச் சிந்தித்துப் பார்த்தார் என்ன காரணமோ அந்த ஆர்வமும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. அறநூல் படிக்க முடியாமல் ஊக்கம் குன்றியதற்கு என்ன காரணம்?
சிறுவயதில் தன் பெற்றோர்களுடன் நாள்தோறும் கிறித்துவத் தேவாலயம் சென்று வழிபட்ட டால்ஸ்டாய், ஆலயக் குருமார்கள் செய்யும் ஜபத்தினை ஊக்கமுடன் கேட்டு அதற்கேற்ப பக்திவேத பாராயணம் செய்து வந்தார். அவரது சிறு வயது மத நம்பிக்கை; வயது வளர வளரக் குன்றியதால், இப்போது நாத்திகராய் நடமாட ஆரம்பித்த அவருக்கு இப்போதைய தெளிவான வாழ்க்கையின் சிந்தனையில் எக்கல்வியும் சுவையூட்ட வில்லை. குழம்பியது மூளை! சஞ்சலமடைந்தது மனம்; அதனால், கற்ற கல்வியே போதும் என்ற மனதோடு கல்வியை அவர் துறந்து விட்டார்.
சிந்தனை சிதறியது; குழம்பியது மூளை, அது மட்டுமல்ல; உடல் நலமும் குன்றியது; எனவே, 1847-ஆம் ஆண்டு நிறுத்தினார் படிப்பை, வெளியேறினார் பல்கலைக் கல்லூரியை விட்டு; போனால் போகட்டும் என்றனர் பல்கலை அதிகாரிகள்; எனவே, முற்றுப் புள்ளியை வைத்துவிட்டார் டால்ஸ்டாய் தனது கல்விக்கு!
இந்த நேரத்தில், டால்ஸ்டாயும், படிப்பை முடித்து விட்ட அவரது மூத்த அண்ணனும் தமது கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்கள் சரி, என்ன செய்யலாம் என்ற சஞ்சலத்திலே மிதந்தார்கள்.
கிராமத்துக்கு வந்தவர்கள், அங்குள்ள வேளாண் மக்களது நிலையைப் பார்த்து வேதனைப்பட்டார்கள். ஜார் மன்னன் பரம்பரைகளது கொடுங்கோல் கொடூரங்கள், அதிகாரிகளின் அட்டுழியங்கள், சட்டங்களின் சதிராட்டங்கள், இவற்றைப் பொறுக்க முடியாமல் கிராமத்து விவசாயிகள் சொல்லொணா வேதனைகள் அனுபவிப்பதை டால்ஸ்டாய் சகோதரர்கள் பார்த்து பரிதாபமடைந்தார்கள்!
இந்தக் கொடுமையான சூழலையுடைய ருஷ்யாவிலே பஞ்சம். பஞ்சமோ பஞ்சம், சோற்றிக்கும் பஞ்சம், வேலைக்கும் பஞ்சம்; லியோ டால்ஸ்டாய் பிறபகுதிகளில் இக் கூக்குரல்களைக் கேட்டார் என்று கூறுவதைவிட; தனது கிராமப் பகுதியிலேயே நேரிடையாகப் பார்த்து அவர் மனம் கொதித்தார். உடனே கிராம மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய நம்மால் முடியுமா என்று எண்ணமிட்டார்.
பஞ்சமோ பஞ்சமென்று பரிதவிக்கும் மக்களுடைய நெஞ்சை நனைத்துக் கொள்ள, ‘நா’வை-குளிராக்கிக் கொள்ள; தண்ணீர் இல்லை எனும் போது, பயிர்கள் விளைய மட்டும் தண்ணீர் கிடைக்க வழி எது? மழைபொழிய மறுத்துவிட்டது.
பசிக்கு உணவில்லை; உணவு உற்பத்தியும் இல்லை; உற்பத்தியின்மைக்கு மழை பொய்த்தது பெரும் காரணமாயிற்று! இந்த நிலைகளுக்கு இடையே டால்ஸ்டாய் புகுந்து ஏதாவது மக்கள் வேலை செய்யத் தயாரானார்!
லியோ டால்ஸ்டாயின் குடி பரம்பரையான பெருங்குடி ராஜவிசுவாசம் பெற்ற பிரபுக்கள் குடியில், செல்வம் பெருக்கெடுத்த பணக்கார வம்சத்தில்; இளவரசி மேரியின் புகழ்வயிற்றில் பிறந்ததால் அன்பு, இரக்கம், கருணை, மனிதாபிமானம், பசி, தாகம், அனைத்தையும் அறிந்து கொள்ளும் சக்தியுடையவர்களாக இருந்தார்கள்.
எனவே, ஏழை மக்களுக்கு ஏற்றதைச் செய்யலாம்; பசி, பஞ்சங்களைத் தவிர்க்கலாம் என்ற திறந்த மனதுடன் கிராம விவசாயிகள் இடையே தங்களாலான சேவைகளை அவர்கள் செய்தார்கள்.
★
மரணதண்டனை கொடுமையான அநீதியே!
ருஷ்யாவின் தென் பகுதியிலே உள்ளது சாகஸஸ் என்ற மாநகர். படிப்பை முடித்து விட்ட டால்ஸ்டாயின் மூத்த சகோதரர் நிகோலஸ் அந்நகர் ராணுவத்திலே பணியாற்றி வந்தார். 1851-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர் விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்தக் கிராமத்திற்கு தனது தம்பியைப் பார்க்க வந்திருந்தார்.
தம்பி டால்ஸ்டாய் எந்த வேலையும் செய்யாமல் வீட்டோடு விரக்தியாக இருப்பதை நிக்கோலஸ் கண்டார். நடனம், நாடகம் என்று தலைகால் தெரியாமல் அவர் மூழ்கிக் கிடப்பதையும், மிருகங்களை வேட்டையாடிக் கொன்று கொண்டிருப்பதையும், அளவுக்கு மீறிய இன்ப கேளிக்கைகளில் மிதந்து கொண்டிருப்பதையும் அவர் நேரிலே பார்த்தார். வேதனைப் பட்டார்! டால்ஸ்டாயின் மனம் கெட்டுப் போனதையும் உடல் சீரழிந்ததையும் கண்டு மனம் குன்றினார்!
டால்ஸ்டாயின் இந்தத் தீய குணங்களையும், அவரது தீய நண்பர்களின் தொடர்புகளையும் ஒழித்து அவரை எவ்வாறு திருந்துவது என்று யோசித்த போது அவரது தமையனார் ஒரு முடிவுக்கு வந்தார். நிக்கோலஸ் விடுமுறை கழிந்து மீண்டும் ராணுவ சேவைக்குப் போகும். போது டால்ஸ்டாயைத் தன்னுடன் காக்கசஸ் மலைப்பகுதிக்கு அழைத்துக் கொண்டு போனார்.
காக்கஸஸ் மாநிலத்திலே வாழும் மக்களுக்கு கஸ்ஸாக்குகள் என்று பெயர். அவர்கள் மலைவாழ் மக்கள். கள்ளம் கபடமறியாத சூதுவாதற்ற ஜனங்கள் எளிமையாக வாழ்பவர்கள். அவர் பார்வை பாயும் மலைப்பகுதி இடங்களில் எல்லாம் பசுமைத் தோற்றங்களே அழகுக்கு அழகாகத் தோற்றமளித்தன.
இத்தகைய ஓர் அருமையான இடத்திலேதான் ‘ஸ்டாரியும்’ என்ற ஒரு குன்றம் சூழ்ந்த நகர் இருந்தது. அந்த இடத்திலேதான், ருஷ்ய நாட்டிலே உள்ள நோய்வாய்ப்பட்டோர் மலை சுவாச ஆரோக்கிய வாழ்வுக்காக வந்து தங்குவார்கள். காரணம், அப்படிப்பட்ட இயற்கை சூழ்ந்த ஒரு பிரதேசம் அது.
இந்த இடத்தைக் கண்ட டால்ஸ்டாய் அங்கேயே தங்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்தார். இதை தம்பியிடமிருந்து அறிந்த நிகோல்ஸ், அவரை, அங்கேயே தங்கியிருக்குமாறு கூறி விட்டுத் தனது வேலைக்குச் சென்றார்.
டால்ஸ்டாய் அங்கே ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தங்கினார். எளிய வாழ்க்கை வாழ்ந்ததுடன், அங்கிருந்தே தனிமையாக தனது படிப்பைத் தொடங்கினார்! அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஓடியாடி குதுகலமாக இருந்தார் பொழுதும் நாளும் போவது தெரியாமலேயே இயற்கைக் காட்சியின் அழகுகளை ரசித்த வாறே நாட்களை ஓட வைத்தார்!
ஆனால், வேலை ஏதுமில்லாமல் காலம் தள்ளுவது வாலிபத்துக்கு அழகா? என்று மனம் கலங்கினார்!
அண்ணன் நிக்கோலஸ் தம்பியைப் பார்த்துப் போக மீண்டும் அங்கே வந்தார். தம்பியின் மன உளைச்சலைக் கேட்டு ஆறுதல் கூறினார். அதனால், டால்ஸ்டாயையும் ராணுவப் பணியில் சேர்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்தார்.
அண்ணன் திட்டத்தின் படி டிக்லின் என்ற ராணுவக் கல்லூரியில் டால்ஸ்டாய் சேர்த்து, சில நாட்கள் பயிற்சி பெற்று, தேர்வில் தேறி, பீரங்கிப் படை வீரரானார்!
காக்கசஸ் மலைப் பகுதியில் காசியில் என்ற மலைவாழ் வகுப்பார், வழிப்போக்கர்களையும் ஊரார்களையும் கொள்ளையடிப்பதும், கொலை செய்வதுமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களை அடக்குவதற்காக அடிக்கடி சிறுபடைகளை ஜார் அரசு அனுப்பி வைக்கும். அந்தப் படைகளுடன் டால்ஸ்டாயும் அவ்வப்போது அனுப்பப்படுவார்.
காக்கசஸ் போரில் நடை பெறும் கொள்ளை, கொலைகளைக் கண்டு அவர் பதறுவார். அதனால் போர்ப் படையில் தொடர்ந்து பணியாற்றிட அவர் விரும்பவில்லை; உடனே தனது பதவி விலகல் கடிதத்தை சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரிகளுக்கு அனுப்பி விட்டார்.
இந்தக் கடிதம் ராணுவ அதிகாரிகள் பார்வைக்குச் செல்லும் முன்பே, கிரிமியா நாட்டுப் பகுதியில் போர் துவங்கப்பட்டு விட்டது. ஆனால் நாட்டுப் பற்று உந்திய டால்ஸ்டாய் மனம், போரிலே இருந்து விலக மறுத்து விட்டதால், அதிகாரிகளை அணுகித் தன்னைப்போர் முனைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். 1854-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவர் செபாஸ்டபூல் என்ற யுத்தக் களத்துக்கு அனுப்பப்பட்டார்.
ஆங்கிலலேயரும், பிரெஞ்சுக்காரரும் செபாஸ்டபூல் கோட்டையைச் சூழ்ந்து போரிட்டுக் கொண்டிருந்தார்கள். ஓராண்டுக்கு மேல் ருஷ்யர்கள் அக்கோட்டை முற்றுகையை எதிர்த்து எதிரிகளுடன் போர் செய்து கொண்டே இருந்தார்கள்.
டால்ஸ்டாய் படைகளுடன் அக் களத்திற்குச் சென்று பகைவர்கள் இடையே புகுந்து தனது படை வீரர்களை எழுச்சிபெறச் செய்து உற்சாகப்படுத்திப் போர் செய்து கொண்டே இருந்தார். வீரர்களே, வெற்றி நமக்கு நிச்சயம், தேசபக்தியுடன் தொடர்ந்து போரில் ஈடுபடுங்கள்; என்று முழக்கமிட்டபடியே களவீரர்களை ஊக்குவித்தார்.
போர் வீரர்களும் ‘நாங்கள் நாட்டுக்காக சாகத்தயார்’ என்ற கூக்குரலோடு டால்ஸ்டாய் முழக்கத்திற்குப் பதில் கூறிக் கொண்டே யுத்தம் செய்தார்கள். இருந்தாலும் யுத்த களத்தின் கோரச் சாவுகள் தளத்தில் எழுந்த தீனக் குரல்களின் முனகல்கள், ரத்தம் தேங்கும் களக் காட்சிகள், கைவேறு கால்வேறு என்று அறுபட்ட அங்கங்களின் துள்ளல்கள், துடிப்புகளைக் கண்டு அவர் மனம் வேதனைப்பட்டு கண்ணீரைச் சிந்தியது.
ருஷ்யர்கள் பெற்ற போர் வெற்றிக்காக ஓரிடத்தில் வீரர்களுக்குப் பாராட்டும் விருந்தும் நடைபெற்றது. என்றாலும், அதில் டால்ஸ்டாய் கலந்து கொள்ளவில்லை. போர் முனைக் காட்சிகளைக் கண்ட அவர் நெஞ்சு; தீராத துயரைப் பெற்றது. அதனால், இரவு பகலாக நெஞ்சம் நெகிழ்ந்து அல்லலுற்றார்.
போர் வீரர்களைப் பலிகொடுத்துவிட்டு, துடிக்கும் அவயவங்களின் துள்ளல் மீது நமக்கு விருந்தா? கேளிக்கைக் கூத்தா? என்று அவர் அந்த வெற்றி விழாக்கூட்டத்தை விட்டே வெளியேறி விட்டார். உடனே, செபாஸ்டபூல் நகருக்குச் சென்று, போரில் படுகாயமடைந்த வீரர்களுக்கு பணிவிடைகளைச் செய்தார். தனது உயிரைப் பணயம் வைத்தே இந்த போர்க்கள உதவிகளைத் துணிந்து செய்தார்.
இந்தப் போர்க்கள வாழ்க்கையை அவர் கட்டுரைகளாக எழுத ஆரம்பத்தார். எப்போது அவர் யுத்தகளப் பணியில் சேர்ந்தாரோ, அன்று முதல் தனக்குள் கிளர்ந்து எழுந்த எண்ண எழுச்சிகளை எழுத்தில் வடிக்கலானார். அப்போது அவர் எழுதிய கட்டுரைகள், அவர் எழுதும் முதல் எழுத்துப் பணியாக உருவெடுத்தன.
இந்த எழுத்துப் பணிகளால் உருவான கட்டுரைகள் ‘சாப்ரோ மேனிக்’ என்ற பத்திரிக்கையில் குழந்தைப் பருவம் என்ற பெயரில் தொடர்ந்து வெளிவரலாயின. டால்ஸ்டாய் கட்டுரைகளைப் பத்திரிகை ஆசிரியர்கள் படித்து, உணர்ச்சி உந்தி அவரும் அவற்றை முதலிடம் கொடுத்து வெளியிட்டார்.
டால்ஸ்டாய் எழுத்துக்களால் உருவான குழந்தைப் பருவக் கட்டுரைகள் தான் அவரை ஒரு உணர்ச்சிமிகுந்த எழுத்தாளராக்கிற்று எனலாம். கட்டுரைகள் தொடர்ந்து பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருந்ததால், அவருக்கு உற்சாகம் அதிகமாயிற்று. அதனால் ஓய்வு கிடைக்கும் போது எல்லாம் பத்திரிகைக்கு எழுத ஆரம்பித்து விட்டார்.
‘குழந்தைப் பருவம்’ என்ற கட்டுரைகளுக்குப் பிறகு, நிலச்சுவான்தாரின் காலை நேரம், இளம் பருவம், இளமை என்ற கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார். மக்கள் அவரது கட்டுரைகளைப் படித்து வர வேற்றார்கள். அதனால் அவரது எழுத்தார்வம் மட்டும் மேலும் மேலும் வளர்ந்தது வளர்ந்து கொண்டே வந்தது.
ஒரு பக்கம் குண்டுகள் வெடித்துக் கொண்டே இருக்கும்! மறுபுறம் பீரங்கித் தாக்குதலின் ஓசைகள் கேட்டுக் கொண்டே இருக்கும். அப்போதெல்லாம் டால்ஸ்டாய் செபாஸ்டபூல் கதைகள், என்ற சிறுகதைகளை எழுதிக் கொண்டே இருந்தார். இந்த எழுத்துக்களின் உணர்ச்சிகளை மக்கள் ஆர்வத்துடன் படித்துப் பெரிதும் பாராட்டினார்கள். பொதுவாக ருஷ்ய நாட்டில் லியோடால்ஸ்டாய் என்றால் யார்? எப்படிப்பட்ட ஓர் எழுத்தாளர் என்பதை மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ளும் நிலை உருவாகிவிட்டதால் பெயரும் புகழும் ஏற்பட்டு விட்டது.
அப்போது இருந்த ரஷ்ய மாமன்னரும், டால்ஸ்டாய் சிறுகதைகளை உணர்ச்சியூன்றிப் படித்து மிகப்பேரானந்தம் கொண்டார். யார் அந்த எழுத்தாளர் எந்தப் போர்ப் படைப் பிரிவிலே அந்த மேதை பணியாற்றுகின்றார்? அபாயகரமான போர் முனைகளுக்கு எல்லாம் அவரை அனுப்பவேண்டாம். என்று அந்த சக்கரவர்த்தி தனது அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.
செபாஸ்டபூல் போர் அனுபவங்களைக் குறித்து அறிக்கை ஒன்று தயாரித்து அனுப்புமாறு மன்னன் கட்டளையிட்டுள்ளதாக அதிகாரிகள் டால்ஸ்டாயிடம் தெரிவித்ததை முன்னிட்டு அவர், அரசர் உத்தரவுக்கு ஏற்றவாறு அறிக்கையைத் தயாரித்துக் கொண்டு ருஷ்ய மாமன்னனை நேரில் பார்க்க, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குப் புறப்பட்டார்.
சக்கரவர்த்தியைக் காணவந்த டால்ஸ்டாயை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் வரவேற்றார்கள். மன்னர் சார்பில் மாபெரும் பாராட்டுக் கூட்டம் நடந்ததால், அக்காலத்தில் ருஷ்யாவில் புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்த டர்கெனிவ் என்பவரும் கலந்து கொண்டு டால்ஸ்டாய் எழுத்துக்களைப் பாராட்டினார். அந்தக் கூட்டத்தில் யார் யார் கலந்து கொண்டார்கள் தெரியுமா?
அவரது சிறுகதைகளது உணர்ச்சி வார்ப்படங்களாகக் கொலுவீற்றிருந்த நிலவுடைமையாளர்கள், குடியான விவசாயிகள், பணக்காரப் பிரபுகள், ஏழைகள், எல்லாவற்றுக்கும் மேலான வாசகர்கள் எல்லாருமே கூடி அவரைப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.
ருஷ்யாவின் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், அவரவர் இல்லங்களுக்கு லியோ டால்ஸ்டாயை அழைத்துச் சென்று விருந்தளித்தார்கள். இவையனைத்தையும் டால்ஸ்டாய் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும், நமது எழுத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பா? என்று டால்ஸ்டாய் ஆச்சரியப்பட்டுப் போனார்.
இவ்வளவு பெரிய மதிப்பும், மரியாதையும் நாட்டில் உருவானதைக் கண்ட டால்ஸ்டாய், தனது ராணுவப் பணியை ராஜிநாமா செய்து விட்டார். அயல் நாடுகளுக்குச் செல்ல ஆசைப்பட்டார். அதற்கு முன்னதாக அவர் தனது சொந்தக் கிராமத்துக்குச் சென்று தங்கி தனது எழுத்துக்களுக்கான கருக்களைச் சிந்தித்தார்.
1857-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தனது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். பாரிஸ் மாநகர் சென்றார். அங்கே அவர் வருகை தருவதைக் கேள்விப்பட்ட வரும், செயிண்ட பீட்டர்ஸ் பர்க் நகரில் நடைபெற்ற டால்ஸ்டாயின் பாராட்டுக் கூட்டவிழாவில் முன்பு கலந்து கொண்டு அவரைப் பாராட்டி மகிழ்ந்த வருமான டர்கெனிவ், டால்ஸ்டாயை மீண்டும் சந்தித்து வரவேற்றார். எழுத்தாளர்கள் இருவரும் சில நாட்கள் பாரிஸில் தங்கியிருந்தார்கள்.
லியோ டால்ஸ்டாய் பாரிசில் தங்கியிருந்த போது. ஒரு மரண தண்டனைக் கைதிக்கு தண்டனையை எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள் என்பதைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. கைதியை கில்லட்டின் என்ற வெட்டுக் கத்தி முன்பு அழைத்து வந்து அமரவைத்தார்கள். கொடுவாளின் கோரமான ஒலி கேட்டது; அவ்வளவுதான் கைதியின் சிரச்சேதத்தைக் கண்ட அவரது மனம் நடுக்கம் கொண்டது; பதறிப்போனார்! ஐயோ இவ்வளவு பெரிய கொடூரமா? என்று விருட்டென்று எழுந்து வந்து விட்டார். அந்த மரணதண்டனையை நேரில் கண்ட அவர் அதுபற்றி எழுதும் பதட்டத்தைப் பாருங்கள்:
“மரணதண்டனை பெற்ற அந்தக் கைதியின் தலை உடலிலே இருந்து தெறிந்து தனியாக வெளியே வந்து கூடை ஒன்றில் விழுந்ததைக் கண்டேன்! கில்லட் வெட்டரிவாளிலிருந்து ரத்தம் ஒழுகுகிறது; தலை சிதறி விழுந்த இடம் முழுவதும் ரத்தப் பெருக்கு முண்டத்தின் துள்ளல் ரத்தம் தேங்கி ஓடுகின்ற காட்சி! நம் நாகரிகத்தினால் நிர்மாணிக்கப் பெற்ற நிறுவனங்கள், சிந்தனைசக்தி, குறிக்கோள்கள் யாவும் ஒன்று சேர்ந்து வாதாடினாலும் இந்தக் கோரமான செயலை நியாயமானது என்று ஏற்க முடியாது. பண்டையக் காலத்தில் இக் கொடூரம் நீதியானது என்று வாதாடி முடிவெடுத்திருந்தாலும், எந்த நிலையிலும் இந்த மரணக்கொடுமையை ஒரு மனித குலத் தீமையாகவே நினைக்கிறேன்.” என்று டால்ஸ்டாய் குறிப்பிட்டார்.
ஒரு மனிதன் அருவருப்பான, இரக்கமற்ற செயலோடு தலைவேறு உடல் வேறாகக் கொல்லப்பட்டதைக் கண்ணால் கண்டு விட்ட பிறகு, அழகு ததும்பும் அற்புத பாரீஸ் நகரம் ஓர் அருவருப்பான நகரமாகே அவருக்குப் புலப்பட்டது. அதனால் அப்போதே சுவிட்சர்லாந்து நாட்டுக்கு ஓடி விட்டார்!
ஜெனிவா மலை மேலே உள்ள இயற்கை எழில் தவழ, உருவாக்கப்பட்டிருந்த கிளாரன்ஸ் என்ற நகருக்கு வந்து தங்கினார்! அந்த நகர் அழகானது மட்டுமன்று; நகருக்கு நான்கு பக்கங்களிலும் ஓடும் ஆறுகளது அழகும், அருவிகளது சலசலப்பும், மேகத்தையும் பின்தள்ளிக் கொண்டு நிமிர்ந்து நின்ற பனிச்சிகரப் பாறைகள் கரைந்துருகும் பனிச்சிதறல்களது சாரலும் கண்டு டால்ஸ்டாய் மிகமிக வியந்து அங்கேயே சில நாட்கள் தங்கிவிட்டார். அதற்குப் பிறகே சுவில் நாட்டுப் பகுதியின் உள்ளூர்களது காட்சிகளையும் கண்டு மகிழ்ந்தார். அங்கே லூசெரன் என்ற ஓர் ஏரிக்கரை உணவு விடுதியிலே அவர் தங்கியிருந்தபோது தான், ஓர் இனிமையாகப் பாடும் பாடகன், அங்கே வந்து சேர்ந்தான்.
அந்தப் பாடகன் அங்குக் கூடியிருந்த மக்கள் இடையே பாடிப் பரவசப்படுத்தினார். பாடலைக் கேட்டு சபாஷ் போட்டார்களே தவிர, ஒருவரும் அவரது நிலையினை, அறிந்து ஒரு காசும் தரவில்லை. என்ன செய்வான் பாடகன்?
இந்தக் காட்சியைக் கண்ட டால்ஸ்டாய் ஐயோ பாவம்! என்று வருந்தி, பாடகரைத் தன்னுடன் அழைத்துச் சென்று, வேண்டிய உணவும் மற்றும் தேவைகள் அனைத்தையும் வழங்கினார். இதைக் கண்ட கூடியிருந்த இசைச் சுவைஞர்கள், மற்றப் பயணிகள் எல்லாரும் டால்ஸ்டாயை இழிவாகப் பேசினார்கள். இந்த மனிதநேய ஈனர்களைப் பற்றிக் கவலைப்படாத டால்ஸ்டாய் அதே விடுதியிலேயே மேலும் சில நாட்கள் தங்கிய பின்பு ஜெர்மன் நாட்டுக்குச் சென்றார்.
ஜெர்மனியிலே எந்தெந்த நகரங்களைப் பார்க்க வேண்டுமென்று அவர் திட்டமிட்டிருந்தாரோ அவற்றையெல்லாம் பார்த்தபின்பு, அவர் ருஷ்யா சென்றார். ருஷியாவுக்கு அவர் திரும்பியபோது அங்கு பனி உறையும் காலமாக இருந்தது. எனவே, பனிக்காலத்தைக் கழிப்பதற்காக டால்ஸ்டாய் தனது குடும்பத்தோடு மாஸ்கோ நகர் சென்றார்.
மாஸ்கோ சென்ற பின்பு, டால்ஸ்டாய் பயிற்சிக் கூடங்களுக்குச் சென்று பயிற்சி பெற்றார். வேட்டைக்குச் சென்று வேட்டையாடும் கலையிலே திறமை பெற்றார். அதற்குள் பனிக்காலம் முடிவுற்றது. பின்னர், டால்ஸ்டாய் தனது குடும்பத்துடன் சொந்தக் கிராமத்திற்குத் திரும்பி வந்தார். ஊர் திரும்பிய டால்ஸ்டாய், தனது சொந்த நிலங்களை நிர்வகித்து விவசாயப் பண்ணை ஒன்றை அமைத்து விவாசயத்தை நன்கு கவனித்து வந்தார்.
★
அடிமை முறைகள் அழிய டால்ஸ்டாயின் எழுத்துப்போர்!
சொந்தக் கிராமத்திலே ஒரு விவசாயப் பண்ணையை அமைத்த டால்ஸ்டாய், அத்துறையிலே மிக வெற்றிகரமாக முன்னேறியதுடன், மக்களுக்கும் தனது பண்ணை விவசாய வழிமுறைகளைக் கற்றுக்கொடுத்து, விவசாயப் பெருமக்களுக்கு காலத்துக்கேற்ற வழிகாட்டியாக வாழ்ந்து கொண்டிருந்தார்.
இந்த வேளையில் அவருடைய மூத்த அண்ணன் நிக்கோலஸ் நோய்வாய்பட்டு துயரடைந்து கொண்டிருந்தார். மருத்துவர்கள் அவருக்கு எலும்புருக்கி நோய் தாக்கியுள்ளதாக முடிவு செய்து, அதற்குரிய மருத்துவ சிகிச்சைகளைத் தந்து கொண்டிருந்தார்கள்.
இதற்கிடையே நோய் அதிகமாவதைக் கண்ட டாக்டர்கள், நிக்கோலசை சோடேன் என்ற நகரிலே இருக்கும் காசநோய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல யோசனை கூறினார்கள். அதனால், நிக்கோலஸ் அந்நகரின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை செய்யப்பட்டார்.
டால்ஸ்டாய், உடன் பிறந்த தங்கையுடன் புறப்பட்டார். தங்கையை முதலில் சோடேன் நகரிலே உள்ள அண்ணனிடம் அனுப்பிவிட்டு, அவர் நேரே ஜெர்மன் நாட்டுக்குச் சென்றார்.
ருஷ்ய நாட்டுக் கல்விமுறை டால்ஸ்டாய்க்குப் பிடிக்கவில்லை. அதனால், ஜெர்மன் போன்ற நாடுகளில் உள்ள கல்வி முறையைக் கண்டறிய அவர் நேரில் சென்றார். அங்கே அவர் அறிந்தவரை அங்குள்ள கல்வி முறைகள் அவருக்குத் திருப்தி தருவனவாக இல்லை. மாணவர்கள் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் பழக்கம் அங்கே இருந்தது. இந்த முறையின் போக்கும் நோக்கும் பற்றி ஜெர்மன் அறிஞர்களிடம் விவாதித்துக் கருத்தறிந்தார் டால்ஸ்டாய்.
கடைசியாக அவர் சோடேனுக்கு வந்து சேர்ந்தார். அண்ணன் நிக்கோலஸ் மரணத்துடன் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். அவருடன் பிரெஞ்சுக் கடற்கரையிலே உள்ள ராய் வீல் என்ற இடத்துக்குச் சென்று டால்ஸ்டாய் தங்கியிருந்தபோது அங்க நிக்கோலஸ் காசநோய் முற்றிக் காலமானார்.
அண்ணனின் அருமை பெருமைகளையும் அவர் தன் மீது காட்டிய அக்கறையினையும். அன்பினையும் எண்ணி எண்ணி டால்ஸ்டாய் கண்ணீர் சிந்தினார். தமையனாரின் தாளாத்துயரம் அவரை மேலும் வேதனைப்படுத்தி கவலையுற வைத்தது. அந்தத் துன்பத்தை தனது நண்பருக்கு அவர் தெரியவித்தபோது எழுதிய கடிதம் வருமாறு:
“மரணம் போல் தீயது உலகத்தில் வேறொன்றும் இல்லை!” என்று என் அண்ணா நிக்கோலஸ் அடிக்கடி கூறுவார். எவ்வளவு தூரம் அந்தக் கணிப்பு சரியானது என்று இப்போது நான் அதைப் புரிந்து கொண்டேன். சாவு ஒன்றால் தான் இந்த வாழ்க்கை முடிகிறது என்றால், இந்த வாழ்க்கை முழுவதும் நாம் வாழ்ந்தது வெறும் விழலுக்கு இறைத்த நீரல்லவா?
சாவு காரணமாக நிக்கோலசுக்கு உலகத்தில் எதுவுமே மிஞ்சவில்லை என்றால், இந்த உலகத்திலே உள்ள பொருள்களைப் பெற்றிட அவர் நடத்திய வாழ்க்கைப் போராட்டமே வீணல்லவா? ஆனால், மரணம் எனது அண்ணனது கழுத்தைக் கயிறு கட்டி இறுக்கிக் கொண்டிருப்பதை அவர் சாகும்வரையிலும் என்னிடம் கூறவில்லை. பாவம்! ஆனால் அவரது சாவு அவரைத் தேடி வருவதும், நாடிவந்து நாடி நரம்புகளை நொருக்குவதும் அவருக்கு சிறிது சிறிதாகப் புரிந்தது!”
‘இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அவருக்குத் தூக்கக் கலக்கம் போன்ற ஒரு மயக்கம் வந்தது; அப்போது அவர் திடுக்கிட்டுக் கண்விழித்து’ என்ன இது என்று கேட்டார். அப்போதுதான் தான் பிறந்த மண்ணை விட்டுப் பிரியப் போவதை அவர் உணர்ந்து கொண்டார். நிக்கோலசுக்கே மரணத்திலே இருந்து மீள்வதற்குரிய மார்க்கம் தெரியவில்லையே! எனக்கு மட்டும் எப்படித் தெரியும்?...
எனவே, “இருக்கும்வரை இன்பமாக இரு பிறருக்கு உதவி செய்” என்று எளிமையாக எவரும் அறிவுரைகளையும் அறவுரைகளையும் கூறலாம்; அது சுலபமும் கூட! ஆனால், அதைக் கேட்பவர்களுக்கு வியப்பாகவே விளங்கும். ஆனால், பிறருக்கு உதவி, புரிவது; நல்லொழுக்கம், இன்பம் எல்லாமே ஒரு சத்தியத்தில் உள்ளன.
“முப்பத்திரண்டு ஆண்டுகள் இந்த உலகத்திலே! வாழ்ந்துள்ளவன் நான்; என்னுடைய வாழ்க்கையின் நிலைமை மிகப் பயங்கரமானது என்ற உண்மையையே நான் அறிந்திருக்கிறேன்.” என்று டால்ஸ்டாய் தான் எழுதிய கடித இலக்கியத்தில் வரைந்திருக்கிறார்.
இந்தக் கடிதத்தில் லீயோ, தனது அண்ணனை இழந்த துயரத்தையும், துன்பத்தையும், மயான வைராக்கியம் என்பார்களே அதுபோல குறிப்பிட்டுள்ளார். ஆனால், அது அவரது மன வளர்ச்சியைக் காட்டுகிறதே அன்றி; வாழ்க்கையின் பொருளையோ, பயனையோ அவர் அறியவில்லை என்பதல்ல. ஆனாலும் வாழ்க்கை என்பது பயனற்றது தானே? என்ற கேள்வியும் அவரது மனத்தைக் குத்திக் குடைந்திருப்பதும் தெரிகிறது அல்லவா?
சாவு என்ற அவரது சோக வடிவ உணர்ச்சி டால்ஸ்டாயின் மன நிலையை முழுவதுமாகச் சீர்குலைத்துவிட வில்லை. எனவே, ஜெர்மன், பிரான்ஸ், சுவிஸ் நாடுகளிலே உள்ள கல்வி முறைகளை முற்றிலுமாக அலசி ஆய்ந்து, ருஷ்ய நாட்டின் கல்வி முறையையும் ஆராய்ந்தார்; தொடர்ந்து அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வை நடத்தியாக வேண்டும் என்பதற்காகவே, டால்ஸ்டாய் முன்கூட்டியே வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தனது தமையனார் இறந்த பிறகு கிடைத்த ஓய்வின் போது, ருஷ்யக் கல்வி முறையில் சோதனையை நடத்திடலானார்.
சோவியத் ருஷிய நாட்டில், குடியானவர்கள் அடிமைகளை விடக் கேவலமாக, கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட காலம் அது. நிலம் விற்கப்படும் போது, அதை யார் உழுது விவசாயம் செய்தானோ அவனையும் சேர்த்து அநியாயமாக விற்றுவிடுவார்கள். நிலச்சுவானின் அடிமைகள் என்று அவர்களுக்குப் பெயர்.
இந்த அடிமைப் பழக்கத்தை, கொத்தடிமை ஏகபோகத் தன்மைகளை எதிர்த்து ருஷ்ய நாட்டின் சில பகுதிகளில் பல முறைகள் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் நடந்தன என்ன பயன் அவற்றால்?
ருஷிய மன்னர் இதையெல்லாம் கேட்டும், பார்த்தும், செவிகேளாராய், விழி பாராராய் இருந்து வந்தார். அதிகார வர்க்கம் இதனால், இந்த அடிமை முறைப் பழக்கத்தால் நன்மை அடைந்தது. அதனால்தான், அதிகார வர்க்கம் நிலச்சுவான் அடிமைகள் கிளர்ச்சிகளைக் கடுமையான முறையில் அடக்கியாண்டது!
1857-ஆம் ஆண்டு ஜார் நிக்கோலஸ் மறைந்து விட்ட பிறகு, அலெக்சாண்டர் என்பவர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். அவர் இயற்கையாகவே நற்குணமும் வாய்ந்தவர். இப்படிப்பட்ட ஒரு பண்பாளரிடம், மனித உரிமைகளால் நலம் பெறலாம் என்று எண்ணிய ரஷ்ய மக்களின் சீர்த்திருத்தக் காரர்களது பிரிவுகள், கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வந்தன. ஆனால், நில முதலாளிகளும், அரசியல் தலைவர்களில் சிலரும் இந்தச் சீர்திதுத்தங்களைக் கடுகளவும் விரும்பவில்லை.
ஜார் மன்னர் மக்களது கோரிக்கைகளை தலைவர்கள் ஏற்கும்படி செய்யவேண்டும் என்று ஒரு குழுவை அமைத்தார்! அந்தக் குழுவிடம் ஜார் மன்னர் சீர்திருத்தப் பொறுப்பை ஒப்படைத்தார். இந்தக் குழு மூன்றாண்டுகளாக விசாரணைகளை நடத்தி, 1861-ஆம் ஆண்டின் போது எப்படியும் அடிமைப் பழக்கத்தை, அதன்சார்பாக மனிதனை விலைக்கு விற்று விடும் மனித உரிமை மீறில்களை ஒழிந்துவிட வேண்டும் என்று அறிவித்தது.
இந்த இக்கட்டான அரசியல் சமுதாயவியல் கொடுமைகளுள் ஒன்றான அடிமை முறைப் பழக்கத்தை விளக்கி, அதன் விரிவான வரலாறுகளை உணர்வு பூர்வமாகப் பல கட்டுரைகளில் எழுதி, டால்ஸ்டாய் பெரும் எழுத்துப்போரைச் சளையாமல் நடத்தி வந்தார். அவர் எழுதிய பல கதைகளில் இந்த தத்துவ ஈனத்தைக் கண்டித்தார். அதே நேரத்தில் அந்த அடிமைகளின் கேவலமான அவல வாழ்க்கையை நன்றாக வருணனை செய்து, உணர்ச்சியே உருகும் வடிவத்தில் கதையாக்கினார். இவ்வாறு டால்ஸ்டாயால் எழுதப் பட்ட உலகப் புகழ் பெற்ற கதைகளில் ஒன்று தான் ‘போலிகோஷ்கா’ என்ற கதையாகும். அந்தக் கதையில் வரும் அடிமை ஒழிப்புத் தத்துவம், மக்கள் மனத்தை நெகிழ வைத்துக் கண்களை அருவியாக்கிக் காட்டியது. எண்ணற்றோர் அக்கதைகளை எண்ணற்ற முறைகள் படித்துக் கண்ணீர் சிந்தினார்கள்.
ஜார் நிக்கோலஸ் மாண்டு அலெக்சாண்டர் என்ற ஜார் மன்னன் அமைத்த விசாரணைக் குழுவினர் - அடிமைகளுக்கும், நிலக்கிழார்களிடமிருந்து விடுதலை அளித்தது. இதன் நடவடிக்கையின் எதிரொலியாக, டால்ஸ்டாயும் ஓர் ஊராட்சி சபைத் தலைவராக நியமனமானார்.
அடிமைகள் சார்பான நியாயங்களை உணர்ந்து டால்ஸ்டாய் வாதாடியதால் பல தலைவர்கள் அவரிடம் விரோதம் கொண்டார்கள். அதனால் டால்ஸ்டாயைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் கோள்மூட்டி அவதூறு செய்தார்கள். இறுதியில், வேறு வழியில்லாமல் அவர் தனது ஊராட்சித் தலைவர் பதவிப் பெறுப்பை விட்டு விலகிவிட்டார்.
ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு அமுல் செய்யப்பட்டிருந்த கல்வித் துறை நிர்வாகத்தை ஆய்ந்த டால்ஸ்டாய், மீண்டும் அந்தக் கல்வி நிலையைப் பற்றி சோதனை செய்யலானார். அந்த சோதனையைக் கடைப்பிடித்துப் பார்க்க அவர் தனது சொந்தக் கிராமத்திலேயே ஓர் ஆரம்பப் பள்ளியை ஆரம்பித்தார். அவரது அப்பள்ளியைப் பற்றி அவர் என்ன கூறுகிறார் பார்ப்போமா?
இரண்டு மாடிக் கட்டடத்தில் அந்தப்பள்ளி இருக்கிறது. வகுப்புகள் இரண்டு அறைகளில் நடந்தன. ஆசிரியர்களுக்காக இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மற்றும் ஓர் அறை விஞ்ஞான சம்பந்தப்பட்ட கருவிகளை வைக்கவும் பயன்பட்டது. அப் பள்ளியின் நுழைவிடத்தில் மணி ஒன்று கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது.
பள்ளியின் கீழ் மாடியில் மாணவர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், பாரலல், ஹரிசாண்டல் பார்கள் இருந்தன. மேல் மாடி அறையில் தச்சு வேலைக்கான கருவிகள் வைக்கப் பட்டிருந்தன. மற்றொரு பெரிய அறையில் நிகழ்ச்சி நிரல் பட்டியல் தொங்குகிறது;
அந்த நிகழ்ச்சி நிரல் விவரம் வருமாறு:
“எட்டு மணிக்கு ஆசிரியர் மணியடிக்கச் சொல்கிறார். மணியடித்துச் சிறிது நேரமானதும் அந்தக் கிராமத்துக்கும் பள்ளிக்கும் இடையில் உள்ள இடைவெளியில் சிறுவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.
அவர்கள் பனிக்கும் மழைக்கும் கவலைப்படாமல் தொடர்ந்து பள்ளிக்குச் சரியான நேரத்தில் வந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் வரிசை வரிசையாக இருவர் மூவருடன் அணிவகுத்து வந்தார்கள். இதனால், ஆடு மாடுகளைப் போல ஒருவரை ஒருவர் மோதி தள்ளி, கட்டிப்பிடித்து ஓடிவரும் இழிவான நிலைகள் நீங்கின. பள்ளி மாணவர்கள் இடையிலே பள்ளி ஒழுக்கங்கள் வளர்ந்தன.
மாணவர்கள் இதுவரை கற்றக் கல்வியினால் அவர்களுடைய தனித் தன்மை அதிகமானது. புத்தகங்களையோ நோட்டுக்களையோ மூட்டை போல முதுகுகளிலே சுமந்து வரும் பழக்கம் ஒழிந்தது. அவர்களுக்கு கல்வி சம்பந்தமான வீட்டு வேலையையும் பிற பணிகளையும் செய்யச் சொல்வதில்லை.
ஏன் வீட்டு வேலைகளைச் செய்யவில்லை என்று மாணவர்களைப் பள்ளியாசிரியர்கள் மிரட்டுவதோ அடிப்பதோ என்ற பழக்க வழக்கங்கள் இல்லை. நேற்று பள்ளியில் கிடைத்த கல்வியின்பம் இன்றும் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டே பள்ளிக்கு மாணவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். நேரம் கழித்துத் தாமதமாக அவர்கள் வந்தால்; அதற்காக அவர்களுக்குத் தண்டனை தரும் வழக்கம் இல்லை. அதற்காகக் காலம் கழித்தே வரலாம் என்ற எண்ணமும் அவர்களிடம் வளர்ந்ததில்லை. சில நேரங்களில் பெரிய மாணவர்களில் சிலர், அவர்களது வீட்டில் சில வேலைகள் காரணமாக பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே இருந்து விடுவார்கள்; ஆனால் ஒன்று, அவர்கள் தங்களது பள்ளிப் படிப்பைத் தவறவிட்டு விடக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில், தங்களது வீட்டு வேலைகள் முடிந்த பின்பு, அது எந்த நேரமாக இருந்தாலும், பள்ளிக்கு வந்து சேர்ந்து விடும் பசுமை எண்ணம் அவர்களிடையே வளர்ந்து வழக்கமாயிற்று.”
இப்படிப்பட்ட பள்ளிப் பழக்க வழக்கங்கள். ஓர் அரசுப் பள்ளியின் உருவாகுமானால், தொடர்ந்து அவ்வொழுக்கங்களைக் கடைபிடிக்கும் கட்டளை இருக்குமானால், பள்ளிக் கூடத்தில் படிக்கும் மாணவர்கள் ஏன் மகிழ்ச்சியைப் பெற மாட்டார்கள்? இதைக் கல்வி முறைப் பயிற்சியாளர்களும் அதை நடத்தும் அரசுகளும் கட்டாயமாகச் சிந்திக்க வேண்டும்.
இந்த நேரத்தில், டால்ஸ்டாய் தனது ஓய்வில்லாப் பணிகளில் காரணத்தால் உடல் நலம் குன்றினார். அதனால், இதுவரை இருந்த இடத்தை விட்டு அகன்று வேறோர் இடத்துக்குச் சென்றார்.
இடம் மாறவேண்டும் என்ற நோக்கத்துக்காக அவர் சென்றதைக் கண்ட காவல்துறையினர். அச்சமயத்தில் சந்தேகம் காரணமாக டால்ஸ்டாய் வீட்டைச் சோதனையிட்டார்கள். இந்த போலீசாரின் சோதனையைக் கண்ட அவ்வூர் கிராமமக்கள், அவரவர்கள் பிள்ளைகளை பள்ளிக் கூடத்துக்கு அனுப்ப மறுத்து விட்டார்கள். யார் மேல், யார், எதற்காக, இதுவரை நடந்ததென்ன, என்ற, முழு விவரங்களை ஓர் அரசு சரியாக உணராத காரணத்தால், ஒழுங்காக நடந்து வந்த ஒரு ஒழுக்கமான பள்ளி அமைப்பை அரசாங்கமே சீர் குலைத்து விட்டதை மக்கள் பிறகே எண்ணிப் பார்த்தார்கள்.
சிறுகச் சிறுகக் கட்டபட்ட தேன் கூடு போன்ற ஒரு சீரான பள்ளியை அவசரக்காரர்களது அரசு, சந்தேகத்தின் பெயரால் சிதைத்து விட்டார்களே என்று கூறி அக்கம்பக்கம் உள்ள கல்வியாளர்கள் வருத்தமடைந்தார்கள்.
வாழை ஒன்று குலை தள்ளிய பிறகு, அதனடியிலேயே வேறோர் வாழைக் கன்று வாரிசாக வளர்வது போல, டால்ஸ்டாய் நடத்திய ஆரம்பப் பள்ளியைப் பின் தொடர்ந்து வேறு சிலர் அதே போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட சில பள்ளிகளை தொடங்கி நடத்தலானார்கள். அதனால், டால்ஸ்டாய் நோக்கம் மக்கள் இடையே வெற்றிபெற்றிடும் நிலையேற்பட்டது.
இதற்குப் பிறகுதான் ருஷ்ய அரசாங்கம், டால்ஸ்டாயின் கல்விச் சோதனைகளையும், அதன் உயர்ந்த லட்சியங்களையும், அடிப்படை உணர்வுகளையும் புரிந்து கொண்டது.
ருஷ்யாவில் பொதுவுடைமைவாதிகளின் நோக்கங்கள் மக்களிடையே உணர்வு பூர்வமாகப் பரவி வந்த நேரம் அது என்பதால், இக் கல்வி முறைத் தத்துவத்தால் பொதுவுடைமைவாதிகளுக்கு அதிக செல்வாக்கும் பெருமையும் புகழும் பரவி, எதிர்காலத்தில் கம்யூனிஸ்டுகள் அதிகமாகிவிடுவார்களோ என்று ஜார் மன்னனது அரசு அச்சம் கொண்டது.
அந்த அச்சத்தின் அடிப்படையில் யோசித்த அரசு, அந்தப் பள்ளிகள் வளர்ந்தால் நாட்டின் நிலை என்னவாக இருக்கும் என்பது பற்றிய ஓர் அறிக்கையை விவரமாக அனுப்பி வைக்குமாறு அரசுக் கல்வித் துறைக்குக் கட்டளையிட்டது.
டால்ஸ்டாயின் கல்வித் தத்துவம், அவர் செய்து காட்டிய முன்மாதிரிப் பள்ளி நிர்வாக நடவடிக்கைகள் எல்லாமே போற்றத் தக்கவை, பாராட்டத்தக்கவை, எதிர்காலக் கல்வி வளர்ச்சி முன்னேற்றத்துக்கு ஏற்கத்தக்கவை என்றும், கல்வித் துறையின் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் தகுந்த அடிப்படையான ஒரு கல்விச்சோதனைக்குரிய அறிவியல் நெறிகள் என்றும் ருஷ்ய அரசு கல்வித்துறை 1862-ஆம் ஆண்டின் இறுதி வாக்கில் அரசுக்கு விரிவான அறிக்கையை அனுப்பி வைத்தது.
ஜார் மன்னனது அரசும், அதன் கல்வித் துறையும், பொது மக்களும், கல்வியாளர்களது தீர்க்க தரிசனமும் டால்ஸ்டாயின் கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தந்தும்கூட, அதே ஜார் மன்னது அரசு தனது அறிக்கையின் ஓர் முனையில், “டால்ஸ்டாயின் கருத்துக்கள் எல்லாவற்றையும் கல்வித்துறை ஏற்கவில்லை என்றும், விரும்பத்தகாத திட்டங்களை அவர் கைவிடுவார் என்று எதிர்பார்ப்பதாகவும், விருந்திலே நஞ்சு வைப்பது போன்று சேர்த்துக் கொண்டது.
ருஷ்ய அரசுக்கு ஏற்பட்டுவிட்ட உள்ளூர அச்சம் காரணமாக, எப்படியாவது டால்ஸ்டாயின் கல்வித் தத்துவப் பள்ளிகளை மூடிவிடவேண்டும் என்ற எண்ணமே அந்த அரசுக்கு இருந்தது. காரணம், பொதுவுடைமைக் கொள்கை ருஷ்யாவில் பரவி விடுமோ என்ற பயத்துக்கு அருமையான ஓர் அறிவியல் கல்வித்திட்டத்தை ஜார் அரசு பலிகொண்டு விட்டது.
ஆட்சியை அதிர வைக்கும் இந்த திட்டத்தை டால்ஸ்டாய் மாதிரிப் பள்ளிகளிலே போதித்த ஆசிரியர்களை கல்வித் துறையினர் பயமுறுத்தி மிரட்டி வெளியேற்றினார்கள். அந்தப் பள்ளிகளுக்கு யாரும் அவரவர் பிள்ளைகளைக் கல்வி கற்றிட அனுப்பக் கூடாது என்று கல்வித்துறையினர் தடை செய்தார்கள்.
கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்கள் இது கண்டு பயந்தார்கள்; படாதபாடு பட்டார்கள்; பெற்றோர்களும் அச்சுறுத்தப்பட்டார்கள்; மாணவர்களும் துன்புறுத்தப்பட்டார்கள்! இந்த நிலையில் டால்ஸ்டாயின் கல்வித் திட்டப் பள்ளிகள் நடக்குமா? எனவே, டால்ஸ்டாய் தனது கல்வித் திட்டத்தின் வெற்றியை இழந்தார் எதிர்காலக் கல்வித்துறை தனது அருமையான நாட்டுச் சேவையைக் கைவிட்டது!
★
இன்றும் உலகம் போற்றும் இரு பெரும் நாவல்கள்!
உடல் நலம் பெற்ற எழுத்துலகச் சக்கரவர்த்தியான லியோ டால்ஸ்டாய், தனது சொந்தக் கிராமத்துக்கு மீண்டும் திரும்பினார். 1862-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அப்போது அவருக்கு வயது முப்பத்து நான்கு!
ஒரு டாக்டரின் மகள்; பெயர் பேஹர்; அவளுக்கு வயது பதினெட்டு! தன்னை விட மணப்பெண் பதினாறு வயது சிறியவளாக இருந்தாலும், அவர் அந்தப் பெண்ணையே விரும்பி மணம் செய்து கொண்டார்! தம்பதிகள் இருவரும் எழுதுகோலும் தாளும் போல ஒருவரை ஒருவர் பிரியாமல் மனமொத்து வாழ்ந்து வந்தார்கள்.
இல்வாழ்க்கையை ஏற்ற பின்பும் டால்ஸ்டாய் தனது இலக்கியச் சேவையை மீண்டும் தொடர்ந்தார். கட்டுரைகள், கதைகள், நாவல்கள் போன்றவற்றை எழுதிக் குவித்தார். ஏற்கனவே, ருஷ்ய நாடு முழுவதும், ஏன் அரண்மனைவாசிகள் உட்பட வாசகர்கள் அவருக்கு மிக அதிகமாக இருந்தார்கள்.
இடையிடையே கல்விச் சோதனைகளும், அயல்நாட்டுப் பயணங்களும் அரசுத்துறை இடையீடுகளும், அவரது எழுத்துப் பணியைத் தொடர முடியாமல் செய்தன. இப்போது மாணவாழ்க்கை ஏற்றபின்பு பொருளாதார வளர்ச்சிக்காகவும் அவர் தனது எழுதுகோலை முழுக்க முழுக்க இலக்கியப் பணியிலே ஈடுபட வைத்தார்.
எழுத்துப் பணி செய்வதுடன் அவர் நிற்கவில்லை; இடையிடையே கிராமத்து மக்களுக்குரிய நற்பணிகளையும் ஆற்றிவந்தார். ஏழை எளியோர், அநீதிகளுக்கு ஆட்பட்டோர், பண ஆதிக்கத்துக்குப் பலியானோர், வாழ்க்கைக்கு ஆதரவற்றோர் போன்றவர்கள் அவரது உதவியைத் தேடி வந்தால் அவர்களுக்குரிய பரோபகாரங்களையும் மனிதாபிமானத்துடன் செய்து வந்தார்.
டால்ஸ்டாயும், காலமான அவரது அண்ணன் நிக்கோலசும் அதே கிராமத்தில் வாழ்ந்திருந்த போது அச்சப்பட்டு ஒதுங்கியிருந்த கிராமத்து மக்கள், இப்போது முன்பு போல இல்லாமல் டால்ஸ்டாயிடம் தாரளமாகப் பழகிடும் தன்மை பெற்றனர்.
அதற்குக் காரணம், டால்ஸ்டாய் தனது கிராமத்தில் துவங்கிய ஆரம்பப் பள்ளியின் அருமையின் பெருமையை உணர்ந்ததுதான். அதன் வாயிலாக அவர் மக்கள் நேயமுடைய பரோபகாரி என்று புரிந்து கொண்டதும். மற்றொரு காரணமாகும்.
அவர் வாழ்ந்து வந்த கிராமத்துக்கு அருகிலேயே ஜார் மன்னனது ராணுவப் படை முகாம் பிரிவுகளில் ஒன்றிருந்தது. அந்தப் படையின் அதிகாரி ஒரு முரடன், ஆணவம் கொண்டவன், இரக்க நெஞ்சமற்ற அரக்கனாக இருந்தான். அதனால் படைவீரர்களை அவன் மிகக் கொடுமையாக நடத்தி வந்தான்.
அந்தப் படை முகாமிலே சிபனின் என்ற ஒரு போர்வீரன்; அவனுக்கும் அதிகாரிக்கும் எந்த ஒரு விஷயத்திலும் கூட ஒத்துவராத முரண்பாடுகள் அடிக்கடி ஏற்படும். அதிகாரி எப்போது பார்த்தாலும் அடாவடித்தனமாக சிபனிடம் நடந்து கொள்வதும், எரிந்து விழுந்து ஏசுவதும் பேசுவதும், அடிப்பதுமாக இருந்து வருவான். அதனால் இருவரிடையே பகை இருந்து கொண்டே வந்தது.
ஏதோ ஓர் அற்பவிஷயத்துக்காக ஒரு நாள் அதிகாரிக்கும் சிபனினுக்கும் தகராறு மூண்டுவிட்டது. எல்லாவீரர்களின் முன்னிலையிலேயே அதிகாரி அவனை அடித்துவிட்டான் பொறுமை இழந்து, மற்ற வீரர்கள் முன்பு அடிபட்டதை எண்ணி ஆத்திரமடைந்து விட்ட சிபனின், அதிகாரியைத் திருப்பி அடித்துவிட்டான்.
பிறகு என்ன? எரியும் நெருப்புக்கு எண்ணெயை ஊற்றிவிட்ட வீரனின் நிலை எவ்வாறு இருக்கும்? ராணுவ நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து விட்டான் அதிகாரி. அந்த வீரனுக்கு யாரும் உதவிபுரிய முன் வரவில்லை. இந்தச் செய்தி அருகிலே உள்ள கிராமத்திலே வாழ்ந்து கொண்டிருந்த டால்ஸ்டாயின் கவனத்துக்கு வந்துவிட்டது. டால்ஸ்டாய் ராணுவத்திலே அதிகாரியாகப் பணியாற்றியவர் அல்லவா? அதனால் அதிகாரிகள் போக்கும், ராணுவ நீதி மன்றத்தின் செயலும் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தவர் தானே அவர்?
அதனால் வீரன் சிபனினுக்காக ராணுவ நீதிமன்றத்தில் வாதாட முன்வந்தார் டால்ஸ்டாய். ஆனால், ராணுவம் சார்பாக வாதாடவோ, தலையிடவோ கூடாது என்று நீதிமன்றம் அவரைத் தடுத்துவிட்டது.
இருந்தாலும், டால்ஸ்டாய் பேசும் போது, வீரன் செய்தது சாதாரணத் தவறு. அதிகாரியின் கொடுமையைத் தாங்க முடியாமல் இந்த வீரன் அதிகாரியைத் திருப்பி அடித்து விட்டான். எனவே, அவரை மன்னிக்க வேண்டும். என்று கேட்டுக் கொண்டார்.
இராணுவ நீதிமன்றம் அவர் பேச்சைக் கேட்க மறுத்து விட்டது. அதிகாரியை அடித்தவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லவேண்டும் என்று தீர்ப்பளித்தது. எவ்வளவோ முயன்றும் அவனைக் காப்பாற்றிட டால்ஸ்டாயினால் முடியவில்லை. சிப்சனும் சுடப்பட்டு மாண்டான்!
இந்த நிகழ்ச்சி மனித நேயத்தில் தோய்ந்து ஊறிக்கிடந்த டால்ஸ்டாயிக்கு கவலையளித்தது. அதனால் மனச் சோர்வடைந்தார். வீரன் சிப்சன் சுடப்பட்ட சம்பவம் கிறித்துவ மதத்துக்கே அவமானம், இழுக்கு என்று கூறிவிட்டு வீடு சென்றார்.
டால்ஸ்டாய் தம்பதிகளுக்கு 1863 - ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. நாளாக நாளாக அவருக்குப் பல குழந்தைகள் பிறந்தன.
பெற்றக் குழந்தைகளை வளர்ப்பதிலே தாயும், கல்வி கற்பிப்பதிலே தந்தையும் அக்கறை கொண்டார்கள். அதனால், தனது எழுத்துப் பணிக்கு இடையூறு இருப்பதை எண்ணி, குழந்தைகளைப் பாதுகாத்துப் பேணிட ஆங்கிலேயத் தாதிகளையும், ஜெர்மானியப் பணிப்பெண்களையும் வேலைக்கு அமர்த்தினார். ஓய்வு நேரத்திலே குழந்தைகளுக்குரிய கல்வியைக் கற்பிப்பார்.
டால்ஸ்டாய், தான் முன்பு துவங்கிய பள்ளியில் கல்விச் சோதனைகளை எவ்வாறு திட்டமிட்டு அமல்படுத்தி மக்கள் இடையே நல்ல பெயரையும் புகழையும் பெற்றாரோ, அது போலவே தனது குழந்தைகளை அடிக்காமலும், அதட்டமாலும், திட்டாமலும் அவர் வளர்த்தார். அது போலவே, பிறரும் தனது குழந்தைகளை மிரட்டாமலும், ஏசாமலும், அடிக்காமலும் பார்த்துக் கொண்டார். அவரது பிள்ளைகள் ஏதாவது தவறுகளைச் செய்வதால் அவற்றை அவர் அலட்சியம் செய்து விடுவார்; பொருட்படுத்த மாட்டார்; மீண்டும் பிள்ளைகள் தொடர்ந்து தவறுகளைக் செய்தால், பிள்ளைகளிடம் பேசாமல் அவர்கள் திருந்தும் வரை பகிஷ்கரிப்பார்!
எழுத்துலக ஞானியான லியோ டால்ஸ்டாய் தனது பண்ணைப் பணிகளிலே ஈடுபட்டுக் கடுமையாக உழைப்பார்; வயலுக்குச் செல்வார்; மண்வெட்டி ஏந்தி வரப்புகளை அமைப்பார், வயல்களைக் கொத்துவார், களை எடுப்பார், நீர் பாய்ச்சுவார், பயிரிடுவார், தோட்டப்பாத்திகளைக் கட்டுவார்; பிறகு அறுவடை செய்வார்; இப்படிப் பட்ட பணிகளை அவர் செய்யும் போது தனது குழந்தைகளையும் உடன் சேர்த்துக் கொண்டு வேலைகளைச் செய்வார்.
இவ்வளவு இடைவிடாத வேலைகளுக்கு இடையிலேயும் தனது குடும்பத்துக்கான பணிகளையும் மனைவியுடன் சேர்ந்து கொண்டு களைக்காமல் செய்வார்! மனைவியின் வேலைகளாயிற்றே என்று அவரும் கணவன் காரியங்களாயிற்றே என்று மனைவி பேஹரும் அவர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வு பாராமல் குடும்ப சமத்துவத்தோடு, ஒருவருக்கொருவர் உதவிகளைச் செய்து கொள்ளும் பண்புடன் குடும்பக் கடமைகளைச் செய்து கொள்வார்கள்.
இந்நிலையில் எல்லா வேலைகளையும் தொடர்ந்து வந்து வந்த டால்ஸ்டாய் பெருமகன், தனது இலக்கியச் சேவைகளையும் தொய்வின்றிச் செய்துவந்தார். எந்த சேவைகளை எப்போது செய்ய வேண்டும் என்ற கால அட்டவணையைத் தயாரித்துக் கொண்டு, அந்தக் காலத்திற் கேற்ற படி தவறாமல், அந்தந்தப் பணிகளை அந்தந்த நேரத்தில் செய்து கொண்டே இலக்கியப் பணியை இடைவிடாமல் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்க ஒரு செயலாகும்.
இவ்வாறு காலக் கிரமப்படி பணி செய்து கொண்டே வந்த உழைப்பாளியான மேதை டால்ஸ்டாய், பதினெட்டு ஆண்டுகளாக அரும்பாடுபட்டு, தனது அனுபவச் சிந்தனைகளை எல்லாம் தொகுத்து, நூலறிவுகளின் உதவிகளோடு, உலகம் போற்றும் இரண்டு மாபெரும் நாவல்களை ஆயிரக்கணக்கான பக்கங்களில் எழுதி வெளியிட்டார்.
“போரும் அமைதியும்”, ‘ஆன்னா கரீனனா’ என்ற நாவல்களே அவை. இந்த இரு பெரும் நாவல்கள், டால்ஸ்டாயின் பெயரைப் புகழேணியில் ஏறவைத்து எழுத்துலகச் சிகரத்தில் நிறுத்தி அழகு பார்த்தன என்றால் மிகையல்ல.
உலகத்தின் எல்லா நாடுகளும் அந்த நூல்கள் இரண்டையும் படித்து டால்ஸ்டாயைப் பாராட்டி மகிழ்ந்தன. அந்த நாவல்களைப் படிக்காத வாசகர்கள் எந்த நாட்டிலும் இருக்க முடியாது என்ற நிலையை அந்த நாவல்கள் நிலைநாட்டி விட்டன. அவரது புகழை மென்மேலும் அவை பெருக்கிவிட்டன.
டால்ஸ்டாய் உலகப் பெரும் எழுத்தாளர்களின் வரிசையில் தலையாயவர் என்று பிற நாட்டுப் பேரறிஞர்கள் பாராட்டி மகிழ்ந்தார்கள். இவ்வாறு அவரது நூல்களைப் படித்த மேதைகளிலே ஒருவர்தான் நமது இந்திய விடுதலைத் தந்தையான மகாத்மா காந்தியடிகள்! அதனால் தான் காந்தியண்ணல் தென்னாப்ரிக்காவிலே வழக்கறிஞராகப் பணியாற்றச் சென்றிருந்தபோது, அங்கே டால்ஸ்டாய் சிற்றுண்டி விடுதியைக் கூட்டுறவு முறையிலே நடத்திக் காட்டினார்.
டால்ஸ்டாய் எவ்வாறு ஒவ்வொரு வேலையிலும் தனது கவனத்தைச் செலுத்தி ஆழ்ந்து ஊக்கத்துடன் பணியாற்றினாரோ, எல்லா வேலைகளிலும் தனது முத்திரை முயற்சி இருக்க வேண்டும் என்று ஓய்வு ஒழிச்சலின்றிக் கடுமையாகவே உழைத்தாரோ, எந்தப் பணியும் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று எண்ணிச் செய்து காட்டினாரோ, கல்வித் துறையில் ஒரு புதிய தத்துவத்தையே வளர்த்தாரோ, ஆசிரம வாழ்க்கை வாழ்ந்து தனது வேலைகளைத்தானே செய்து கொண்டு தன் கையே தனக்கு உதவி என்று நம்பி அவரது பணிகளைப் பிறர் உதவியின்றித்தானே செய்து கொண்டாரோ, தனது குடும்பப் பணிகளிலே எப்படிப் பொறுப்புடன் கடமையாற்றினாரோ- அதே போலவே, அண்ணல் காந்தியடிகளும் டால்ஸ்டாய் பெருமகளைப் பின்பற்றி நடந்து காட்டினார்!
மேற்கண்ட சான்றுகள் போல, மேலும் பல எடுத்துக் காட்டுக்கள் காந்தியடிகள் வாழ்விலே ஒளிவிடுவதால்தான், டால்ஸ்டாயை அண்ணல் தனது வழிகாட்டி என்று பகிரங்கமாக பெருமையுடன் குறிப்பிட்டும் அவர் வாழ்ந்து காட்டியும் புகழ்பெற்றார்.
இதற்கிடையே ஞானி லியோ டால்ஸ்டாய் ஓய்ந்து விடவில்லை, மேலும் தொடர்ந்தார் தனது எழுத்துப் பணிகளை. “க்ரூசர் சோனடா” என்ற வேறொரு குறு நாவலை எழுதினார். அந்தச் சிறு நாவலும் இலக்கிய உலகின் விண்மீனாக இன்றும் ஒளிவீசுவதால், இலக்கிய உலகம் அதனையும் போற்றிக் கொண்டே இருக்கின்றது.
★
ஜார் மன்னன் படுகொலையும் டால்ஸ்டாய் வேண்டுகோளும்!
இலக்கிய வளம் செறிந்த நூல்களான ‘போரும்-அமைதியும்’, ‘ஆன்னாகரீனா’, ‘க்ரூசர் சோனடா’ மற்றும் எண்ணற்ற சிறுகதைகளின் லட்சக்கணக்கான பிரதிகளின் விற்பனையாலும், டால்ஸ்டாய் விவசாயப் பண்ணையின் வருவாயாலும் கிடைத்த வருமானத்தைக் கொண்டு, சமாரா என்ற நகர் அருகே சொத்துக் கொஞ்சம் வாங்கினார்.
1873- ஆம் ஆண்டுவரை அவர் சமாரா நகரிலேயே தங்கி அதன் பிற பகுதிகளையும் சுற்றிப் பார்த்தார். வெகு சீக்கிரத்தில் அப்பகுதியில் பஞ்சம் வருமென்றும், உடனடியாக ஜார் மன்னனின் அரசு பஞ்சம் போக்க அல்லது பஞ்சம் வராமல் தடுக்க ஏதேனும் பெரிய முயற்சியை மேற்கொள்ளாவிட்டால், அங்கு வாழும் மக்கள் பலமான சேதமடைவார்கள். அவர்களது உயிருக்கும் - உடைமைக்கும் அபாயம் ஏற்படும் என்றும் அறிந்தார்! அதனால், தான்கண்ட உண்மை நிலைகளை விளக்கி அரசாங்கத்துக்கு அறிக்கை மூலம் அறிவித்தார்.
ஆனால், ஜார் மன்னனான அலெக்சாண்டர், டால்ஸ்டாய் அறிக்கைக்கு உடனடி நடவடிக்கை எதையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்தான். இதுபற்றி ஒன்றும் அறிந்து கொள்ளவாவது முயற்சிக்கவில்லை.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நிலைக்கேற்றவாறு, டால்ஸ்டாய் தனது இடைவிடாப் பணிகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இலக்கிய சேவைகளை எல்லாம் அகற்றி வைத்துவிட்டு, அவரே நேரடியாகக் கிராமம் கிராமமாகச் சென்று ஆங்காங்கே உள்ள உண்மைகளை உணர்ந்தார்.
எந்தெந்த இடத்தில் என்னென்ன பார்த்தாரோ அவற்றை எல்லாம் கொஞ்சமும் கூட்டாமல் குறைக்காமல் உள்ளதை உள்ளவாறே ‘மாஸ்கோ கெஜட்’ என்ற பத்திரிகைக்கு அறிக்கை விடுத்தார். அதன் விளைவைச் சுட்டிக்காட்டி மக்களது ஆதரவைக் கேட்டு பத்திரிகையில் டால்ஸ்டாய் வேண்டுகோள் வெளிவந்தது. அதனைக் கண்ட ருஷ்ய மக்களும் டால்ஸ்டாய் ஆதரவாளர்களும் மிகக் குறுகிய காலத்தில்குள் அளவுக்கும் அதிகமான தானியங்களையும், இரண்டு லட்சம் ரூபிள்களையும் வசூல் செய்து அனுப்பி வைத்தார்கள்.
மக்களும் அவரது எழுத்துலக வாசகர்களும் செய்த உதவியால், பஞ்சத்தால் தாக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய பஞ்ச நிவாரண உதவியை அவரே செய்தார். தனியொரு மனிதனின் இந்தக் கருணையான செயலைக் கண்ட ருஷ்ய மக்கள் ஞானி டால்ஸ்டாயை மிகவும் நேசித்து, ஏழைப் பங்கானர் என்று பேசிப் பாராட்டினார்கள்.
குடியானவர்களின் அடிமைப் பழக்க வழக்கத்தை அகற்றியதால் ருஷியாவில் அமைதி உருவாகவில்லை. ஆனால், அதற்குப்பிறகுதான் புதிய புதிய வரிச் சுமைகளை அரசு அவர்கள் மீது திணித்தது. அவர்களுடைய குறைகளை அரசனோ, அதிகாரிகளோ கவனிக்க மறுத்த நிலை ஏற்பட்டது. இதனால் மக்களிடையேயும், குடியானவர்கள் மத்தியிலும் பெரும் குழப்பம் நிலவியது. நாளுக்கு நாள் கொடுமைகள் அதிகமானதால் அதிருப்தியும், ஆத்திரமும் மக்களது உள்ளத்தில் பொங்கி வழிந்தன.
ஆத்திரமடைந்த மக்கள் புரட்சிக் கொடியை ஏந்த ஆரம்பித்து விட்டார்கள். இந்த நெருக்கடிகள் நாளுக்கு நாள் நெருப்புபோல சுடர்விட்டு எரிந்தனவே தவிர, அவர்கள் கோபம் தணியவில்லை. இவற்றின் எதிரொலியாக ஜார் மன்னன் அலெக்சாண்டரை மக்கள் படுகொலை செய்து விட்டார்கள். இந்தப் புரட்சி 1881 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் நாள் நடந்தது. ருஷ்ய நாடெங்கிலும் கலகமும், கலவரங்களும் பெரிய குழப்பங்களும் நடந்து கொண்டே இருந்தன!
மன்னன் படுகொலைக்கு அல்லது படுகொலைக் குழப்பங்களுக்கு யார் யார் காரணமோ இல்லையோ, அவர்களை எல்லாம் கைது செய்தார்கள்! காராக்கிரகத்தில் அடைத்தார்கள் ஒரு பாவமும் இல்லாத பலரைத் தூக்கிலிட்டுக் கொன்றார்கள்! துடிதுடிக்கக் கில்லெட்டின் கொலைக் கருவியிடையே தலைகளை வைத்து வெட்டித் தலைவேறு முண்டம் வேறாகத்துள்ள வைத்த்தார்கள், பாவம்!
இவற்றையெல்லாம் டால்ஸ்டாய் கண்டார்! ஒரு முறையா அல்லது பல முறையா அவர் இவ்வாறு ரத்தாபிஷேகப் படுகளங்களைக் காண்பது? என்றாலும், ஏன் இந்த அவல நிலை? எதற்காக இந்த ஆட்சி இப்படி மக்கள் உயிர்களை வேட்டையாடுகின்றது? இது என்ன நாடா? இல்லை காடா? என்ற கேள்விகளுக்கு இடையே அவர் தவித்தார்.
புதிதாக அரச பீடம் ஏறிய ஜார் மன்னன் மூன்றாம் அலெக்சாண்டரிடம், சதிகாரர்களை மன்னிக்குமாறு வேண்டினார் டால்ஸ்டாய். இயேசு பெருமான் அருள் மொழிக்கு ஏற்றவாறு அவர்களுக்குப் பாவ மன்னிப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். அவ்வாறு அரசன் செய்தால், மக்களுக்கு மன்னன் மீது மதிப்பும் மரியாதை போன்ற நல்லெண்ணமும் ஏற்பட ஒரு புதிய வழி உருவாகும் என்ற எண்ணத்திலே டால்ஸ்டாய் மேற்கண்டவாறு வேண்டினார்.
கொடுங்கோலன் தானே ஜாரும் அவனது அரச பரம்பரையும்? எனவே பெருந்தன்மையே இல்லாமல் ஓர் ஞானியின் வேண்டுகோளை அலட்சியம் செய்துவிட்டான்! அதன் பலன் என்ன?
ஜார், பலரை மேலும் சிறையில் அடைத்துப் பழிதீர்த்தான். வஞ்சனைப் படலத்தைத் தொடர்ந்து நடத்திக் கொன்று குவித்தான். கொலையிலே சம்பந்தப்படாத வாலிபர்களை! ஏனென்று எவரும் இந்த அக்ரமத்தைக் கேட்காது ஊமையாக இருந்தபோது பேசியவர்தான் டால்ஸ்டாய் என்ற ஞானி!
ஒரு மனிதாபிமானியின் வார்த்தைகள் மதிக்கப்படவில்லையே என்ற மன வருத்தத்தை மறந்து அவர் சென்றார் மாஸ்கோ நகருக்கு! போன இடத்திலாவது அந்த ஞானிக்கு ஏற்பட்டதா மன அமைதி? இல்லை. அங்கேயும் உள்ள நிலைமை அவரது மனதில் எரியீட்டி சொருகியது போல ஆனது.
அளவுக்கு அதிகமாகப் பணத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு, அளவுக்கு அதிகமான சுகபோக களியாட்ட வெறிகளிலே மூழ்கிக் கிடக்கும் சிலரைக் கண்டார். இரவு பகல் எந்த நேரமும் அவர்கள் இன்பக் கேளிக்கைகளிலே ஈடுபட்டு வெறி மயக்கத்தில் வீழ்ந்துகிடப்பதையும் பார்த்தார். மனம் குமுறினார் டால்ஸ்டாய்!
ஒரு புறம் சோற்றுக்குத் திண்டாடும் மக்கள் கூட்டம்; மறுபுறம் நாய்க்கும் கூட பிஸ்கட்டும் சாராயமும் ஊற்றி அதை வெறியூட்டி முத்தமிடும் கூட்டம்; அடுத்த வேளை உணவுக்கு எலும்பொடியக் கஷ்டப்படும் மக்கள் மீது அந்த நாய்களை ஏவி விட்டுத் துரத்தியடிக்கும் ஆணவ போதையர்களது படாடோப வாழ்க்கையின் ஆர்ப்பாட்டம்!
மேற்கண்டவாறு மாஸ்கோ மக்கள் சுகபோக போதையிலே புரள்வதைக் கண்ட டால்ஸ்டாய் துயரத்தோடும் வேதனையோடும் மனம் வெதும்பித் தனது உள்ளக் கிளர்ச்சியை ஓர் அஞ்சல் மூலம் நண்பர் ஒருவருக்கு கண்ணீர்க் கடிதம் என்ற பெயரிலே எழுதியனுப்பினார். அதன் விவரம் இதோ:
“நண்பரே! எனது வீட்டுக்கு நான் திரும்பிய போது ஏதோ ஒரு பெரிய குற்றத்தைச் செய்துவிட்டு வந்தவன் போலத் தோன்றியது.
‘மிதி விரிப்புகளால் மூடுண்டுகிடக்கும் படிக்கட்டு களைக் கடந்து விலையுயர்ந்த ரத்தினக் கம்பளங்கள் விரித்த அறைக்குள் துழைந்தேன். நான் அணிந்திருந்த விலை உயர்ந்த கோட்டைக் கழற்றினேன். உணவுண்ண உட்கார்ந்தேன்.
என் முன்னே வித விதமான இன்சுவைப் பண்டங்கள் பரிமாறப் பட்டிருந்தன. என்னெதிரே - அழகான சீருடை அணிந்த பணியாளர் இருவர் நின்று கொண்டு எனக்குப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களைப் பார்த்ததும், நான் பாரிஸ் மாநகரத்திலே பார்த்த ஒரு மரண தண்டனைக் காட்சிதான் என் கண்கள் முன்பு பளிச்சென தெரிந்தது.
ஆயிரக் கணக்கான மக்கள் கூடியுள்ள ஓரிடத்தில் ஒரு மனிதனின் தலை கில்லட்டின் கொடுவாளால் வெட்டப்பட்டுத்துண்டாக எகிறி வந்து ரத்தம் பீறிடப் பீறிட ஒரு குப்பைக் கூடையிலே விழுந்ததை முப்பது ஆண்டுகளுக்கு முன்னாலே பார்த்தேன்.
தலை வெட்டப் பட்டவன் பெரிய குற்றவாளி என்று எனக்குத் தெரியும். இந்தக் கொடுமையான தண்டனையை விதிப்பதற்காகக் கூறப்படும் காரணங்களையும் நான் அறிவேன். ஒரு கூர்மையான கொடுவாட் கருவியால் அவன் தலை நறுக்கென்று துண்டிக்கப்பட்டதைப் பார்த்தபோது எனக்குத் தவிப்பாக இருந்தது. அந்தத் தண்டனைக்காகக் கூறப்பட்டக் காரணங்கள் அனைத்தும் பயனற்றவை என்று எனக்குத் தோன்றின. நான் வாயை மூடிக் கொண்டு ஊமையாக இருப்பதால் அந்தப் பாவத்தில் நானும் பங்காளி ஆகிவிடுவேன் என்று தோன்றியது.
“அப்போது நான் பார்த்த நேரத்தில் எப்படி இருந்தேனோ அதைப் போலவே இப்போதும் என் மனத்தில் பல எண்ணங்கள் வட்டமிட்டன. வறுமையால் மக்கள் படும் துன்பத்தைப் பார்த்தேன். பசியால் அவர்கள் துடிப்பதையும் கண்டேன்.
ஆடம்பரமான, படாடோபமான சுகபோக வாழ்க்கையில் ஈடுபட்டதன் வாயிலாக இந்தத் தீமையை வளர்ப்பவர்களில் நானும் ஒருவன் ஆகிவிட்டதையும் உணர்ந்தேன்.” என்று நண்பருக்கு எழுதிய கடிததத்தில் ஞானி லியோ டால்ஸ்டாய் மனமுருக, நெஞ்சுருக, எழுதியுள்ளார்.
ஏழை மக்களது வறுமைப் பிரச்னைகளைப் பற்றி ஞானி டால்ஸ்டாய் நன்கு சிந்தனை செய்தார். அது பற்றி அறிவாளிகளுடனும் நண்பர்களுடனும் வாதம் செய்தார். இது குறித்து அவர் பேசும்போது, சில சமயம் பொறுமை இழந்து ஓ வென்று கத்தி விடுவார். ஒரு நாள், அவர் கூச்சலிடுவதைக் கேட்டு உள்ளே இருந்த டால்ஸ்டாய் மனைவி பஹேர் ஓடிவந்து என்ன நடந்தது என்று கவனித்தாள்.
“நான் இப்படி வாழக்கூடாது, நான் இப்படி வாழக்கூடாது, இந்த மாதிரி வாழ்வதை நிறுத்த வேண்டும்.” என்று டால்ஸ்டாய் பெருங்கூச்சலிடுவதை அவரது மனைவி கேட்டாள். உடனே அவரை அடக்கிவிட்டு மனைவி உள்ளே சென்றாள்.
டால்ஸ்டாய் தனது கூப்பாட்டை நிறுத்திய, பின் அவருடைய சிந்தனையிலே ஒரு தெளிவு பிறந்தது. இந்த சமூகத்தைத் தலை கீழாகப் புரட்டினால் ஒழிய எந்த வித நன்மையும் நாட்டுக்கு ஏற்படாது என்கிற முடிவுக்குத்தான் அந்த சமுதாய ஞானியால் வரமுடிந்தது.
ஏழைகளின் அன்றாடப் பிரச்னைகள், அவர்களுக்கு உணவும் உடையும் தருவதால் மட்டும் தீர்ந்து விடாது. அவர்களுடைய தேவைகள் பல என்பதை அவர் நெஞ்சார உணர்ந்தார்.
ருஷ்ய சமுதாயத்தில் மக்கள் எந்தெந்த வகையில் வாழ்க்கையோடு போராடுகிறார்கள் என்பதை அன்றைய பொருளாதார ரீதியாகச் சிந்தித்தார் டால்ஸ்டாய். அதனால் வாழ்க்கையில் துன்பப் படுவோரை மூன்று பிரிவாகப் பிரித்தார். அந்த மூவர் யார் தெரியுமா?
1. வேலை கிடைக்காததால் வேலை செய்யாதவர்கள். 2. வறுமையால் வாழ முடியாமல் பரத்தைத் தொழிலில் புகுந்துவிட்ட விலைமகளிர் 3. குழந்தைகள்.
மேற்கண்ட மூன்று வகையினரின் வாழ்க்கையிலே ஒளி வீசிட மூன்று வழிகளையும் டால்ஸ்டாய் கூறினார். என்ன அவை:
முதல் வகையினருக்கு எந்த வித தான தருதமும் தேவையில்லை. ஏனென்றால் அவர்கள், வேலை இல்லாமையால் வேலை செய்யாதவர்கள். அப்படியானால், வேலை கொடுத்தால் வேலை செய்வார்கள்! செய்தால் அவர்களது வறுமை அழியும் இல்லையா? எனவே, அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் அது அரசின் கடமையாகின்றது.
இரண்டாம் வகையினருக்கு, அதாவது வறுமையால் விலை மகளாகி உடலை விற்பவர்கள். அத்தகைய பெண்களை ஒழுக்கத்தோடு வாழக் கல்விகற்பிக்க வேண்டும். கற்றக் கல்வியைக் கொண்டு அவர்கள் வேலை தேடிக் கொள்ள முடியும். சமுதாயத்தில் அந்தப் பெண்களும் மற்ற மங்கையர்களைப் பார்த்து, நாமும் ஒருவன் ஒருத்தி என்ற பண்பாட்டுக்கேற்றவாறு மானத்தோடு வாழ்வோம் என்ற எண்ணம் அவர்களுக்கும் வரத்தானே செய்யும்? எனவே, உடனடியாக இரண்டாவது பிரிவினருக்குரிய கல்வியையும் அரசுதான் கொடுக்க வேண்டும்! இல்லையா?
மூன்றாவது வகையினரான குழந்தைகளுக்கு அவரவர் என்ன படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அதற்கேற்றவாறு கல்வி கற்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அரசும் அதற்கேற்ற வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கவேண்டும். பிறகு, அக் குழந்தைகள் உரிய பருவமடைந்ததும் இந்த நாட்டையே ஆளும் அரசனாக, அமைச்சனாக, உலகம் போற்றும் மேதையாக, அறிவியல் வித்தகனாக வர வாய்ப்பு இருக்கும் - இல்லையா?
சமுதாயத்தில் நிறைந்துள்ள, பரவியுள்ள தீமைகளுக்கு எல்லாம் என்ன காரணம்? பணம் தானே அடிப்படை? என்ற முடிவுக்கு டால்ஸ்டாய் வந்தார். அந்தப் பணம்தானே பொய்யை மெய்யாக்குகிறது; மெய்யைப் பொய்யாக்குகின்றது; எவ்வளவு பெரிய இமாலய உயர மோசடிகளைச் செய்தாலும் பணம் அதன் சிகரத்தைக் கூடத் தகர்த்தெறிந்து விடுகிறது; எப்படிப்பட்ட அதிகாரப் போதைகளைக் கூட பணம் தெளியவைத்து விடுகின்றது; மிகப் பெரிய பலசாலிகளாக இருந்தாலும்; பணம் அவர்களை ஒடுக்கிவிடப் பயன்படுகிறது என்பதை அனுபவித்துணர்ந்த ஞானி டால்ஸ்டாய், ‘இனி நாம் செய்ய வேண்டியது யாது?’ என்ற தனது புத்தகத்தில் பணத்தின் கேடுபாடுகளை விபரமாக விளக்கியுள்ளார்.
எனவே, ‘இதுவரை செய்த தீச்செயல்களுக்காக வருந்துங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள்; ஏழைகளின் துன்பங்களை அகற்றவும், அவர்களோடு சேர்ந்து வேலை செய்யவும் முன்வாருங்கள்’ என்று அவர் இன்ப வாழ்க்கையில் ஆழ்ந்த தோய்ந்து கலந்து, மிதந்து தத்தளித்துத் தவிப்போரைப் பார்த்துத் தியான வாழ்க்கைக்கு வாருங்கள் என்று டால்ஸ்டாய் வேண்டி அழைக்கின்றார் அல்லது தூண்டி விடுகின்றார் என்று கூறலாம்.
ஞான வித்தகர் டால்ஸ்டாய் தான் எழுதிய கட்டுரைகள், கதைகள், சிறுகதைகள், குறு நாவல்கள், பெரும் நாவல்கள், நாடகங்கள் ஆகியவற்றின் மூலம் உபதேசம் செய்வேதோடு மட்டும் நின்று விடவில்லை. என்ன செய்தால் நாட்டுக்கும். சமுதாயத்துக்கும். மக்களுக்கும் நல்லது என்று கூறுகிறாரோ, அப்படியே அவர் எவ்வளவு துன்பங்கள், அரசு தொல்லைகள் வந்தாலும் அவற்றை ஏற்று முன்மாதிரி வாழ்க்கை வாழ்ந்து காட்டிய ஞானி அவர்.
‘ஊருக்குத்தான் உபதேசம், உனக்கு இல்லையடி கண்ணே’ என்ற அரசியல்வாதியின் தன்மை அவரிடம் இருந்ததில்லை. காரணம்; அவர் இலக்கியவாதி; சிந்தனாவாதி; திருத்தவாதி; லட்சியவாதி எனவே, அவரால் சொல்வதற்கு ஏற்றபடி வாழ்ந்து காட்ட முடிந்தது என்பது மட்டுமல்ல; அவர் ஒரு அறம் சார்ந்த ஞானியும் ஆவார்.
அவர் உலகப் புகழ்பெற்ற போதும் கூட, அவருடைய தினசரிக் கடமைகளை ஒழுங்கு படுத்திப் பட்டியலிட்டுக் கொண்டு செய்து வந்தார். தன்னுடைய சிறு வயதுப் பழக்கமான நாட்குறிப்பு எழுதுவதையும் மறக்காமல் கடைப்பிடித்து வநதார்.
அதிகாலையில் எழுவார்; எழுதுவார் படிப்பார்; எதைப் பற்றியும் பொறுமையாக, பொறுப்பாகச் சிந்திப்பார். பிறகு, தனது உடலுக்கு ஆரோக்கியம் தருவதற்கான உடலுழைப்புகள் எதுவோ, அது கடினமாக இருந்தாலும் சரி வியர்வை சொட்டச் சொட்ட வேலை செய்து கொண்டே இருப்பார். உழைப்புக்கு மட்டும் அவர் வேளை நேரம் பார்க்கமாட்டார்.
மனைவிக்கு ஒத்தாசையாகவும் வேலை செய்வார்; அவருக்கு அன்றாடம் வரும் அஞ்சல்களைப் பார்த்து, பதில் எழுத வேண்டியவைகளுக்கு அப்போதே எழுதிவிடுவார். எதையும் நாளை பார்ப்போமே என்று நாள் நகர்த்தும் எண்ணம் அவருக்கு மறந்தும் வருவதில்லை. காரணம் பழக்கவழக்கமே!
இறுதியாக என்ன செய்வார் தெரியுமா? இதுதான் மிக முக்கியமான ஒன்றாகும். அதாவது ஞானி டால்ஸ்டாய் தன்னைத் தேடி வரும் மக்களைப் பார்ப்பார், காரணமறிவார்; அதற்கான உதவிகளை எல்லாம் தவறாமல் செய்து இனிமையாகப் பேசி அவர்களுடைய குறை நிறைகளை அறிந்து கொள்வார். அல்லது அவர்களுடன் சென்று நேரில் கண்டுணர்வார்.
டால்ஸ்டாய் தனது குணத்தையும் செயல்களுள் சிலவற்றையும் மாற்றிக் கொள்ள முடிவெடுப்பார்; முயல்வார் கோபத்தை அடக்குவார்; ‘உன்னையே நீ எண்ணிப் பாரு’ என்று தமிழ் நாட்டுச் சித்தர்கள் கூறியதுபோல, டால்ஸ்டாய் தன்னைத்தானே உணர்ந்து நீக்க வேண்டிய பண்புகளை நீக்கும் பணிகளிலே ஈடுபட்டார்.
மாஸ்கோவிலே இருந்த மாபெரும் ஞானி டால்ஸ்டாய் மனைவி மக்களோடு மீண்டும் தனது சொந்தக் கிராமத்துக்குத் திரும்பினார். வழக்கம் போல பண்ணையையும் கவனித்துக் கொண்டு ஓய்வு நேரங்களில் நீதி போதனை செய்யும் கருத்துக்களைக் கொண்ட கதைகளையும் எழுதினார்.
ஞான மேதை டால்ஸ்டாயின் கருத்துக்களை நன்கு புரிந்து கொண்டவர்கள், ஒரு புத்தகம் பதிப்பிக்கும் நிறுவனத்தை நிறுவி, டால்ஸ்டாய் கட்டுரைகளை, சிறுகதைகளை, குறுநாவல்களை, நாவல்களை, அரசியல் விமரிசனங்ககளை நாடகங்களை அனைத்தையுமே திரட்டித் தொகுத்து நூல்களாக வெளியிட்டார்கள்.
ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து அவரது சொல்லோவியங்கள் வெளிவந்து கொண்டே இருந்ததால், டால்ஸ்டாய் புத்தகங்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்கள் இடையே நல்ல மதிப்பும், வரவேற்பும் விற்பனையும் வளர்த்து வந்தது.
நாளுக்கு நாள் லியோ டால்ஸ்டாயின் வாசகர்கள் நாடு நகரங்கள் எங்கும் பெருக ஆரம்பத்தார்கள். ஒவ்வொரு நாடுகளிலும் டால்ஸ்டாயினுடைய நூல்களை விரும்பி வாங்கி, மக்கள் இடையே விற்பனை செய்ய முகவர்கள் இருந்தார்கள். இவ்வாறு, நாடுகள் தோறும், நகரங்கள் தோறும் டால்ஸ்டாய் நூல்கள் விற்பனை பெருகி வந்ததால், நான்கே ஆண்டுகளில் அவரது நூல்களது விற்பனை பன்னிரண்டு லட்சங்களாகப் பெருகியது.
புகழேணியின் படிக்கட்டுகளிலே பொறுமையாகவும், பெருமையாகவும் ஏறிக்கொண்டு வந்த டால்ஸ்டாய் என்ற அறிவுலக வித்தகர், நகரத்திலே வாழ்ந்தாலும் சரி, கிராமத்திலே வாழ்ந்தாலும் சரி மனைவி மக்களோடு தனது வாழ்க்கையை மிகவும் எளிமையோடு நடத்தி வந்தார்.
எந்த ஊரிலே அந்த ஞானி வாழ்ந்தாலும், அவர் மக்களோடு மக்களாகவே ஒன்றி வாழ்ந்து வந்தார். எடுத்துக் காட்டாக அவர் மாஸ்கோ மாநகரிலே இருந்தபோது, ஏழைகளோடு ஏழையாக சேர்ந்து விறகு வெட்டுவார், தண்ணீர் சுமந்து வருவார், செருப்புத் தைப்பார்; தனது கைகளால் தயாரித்த செருப்புக்களையே அவர் அணிந்திருப்பார். கிராம மக்களைப் போலவே டால்ஸ்டாய் தனது முதுகிலே மூட்டைகளைச் சுமந்து கால்நடையாகவே செல்லுவார்.
கிராமங்களில் டால்ஸ்டாய் மரங்களை வெட்டி, அந்த விறகுகளை அநாதைகளுக்கும் விதவைகளுக்கும் இலவசமாகக் கொடுத்துவிடுவார். ஏழைகளுக்கு அவர் எப்போதெல்லாம் உதவிட நினைக்கின்றாரோ, அப்போதெல்லாம் அவர் எவ்வளவு பெரிய துன்பங்களை, ஆபத்துக்களை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதற்காக அஞ்சாது, துணிந்து செய்வார். செய்தபிறகு எப்படிப்பட்ட ஆபத்துக்கள் வந்தாலும் மகிழ்ச்சியோடு அதைக் கடமையாக ஏற்றுக் கொள்ளும் பண்பாளர் டால்ஸ்டாய்.
வண்டியில் ஒரு முறை வைக்கோலை ஏற்றும் போது, அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டது. பிறகு வலி குறைந்தது. டால்ஸ்டாய் காயம் ஆறியதால் தான் வலி நீங்கியது. என்று எண்ணி அலட்சியமாக இருந்துவிட்டார். நாளாகநாளாக, காயம் பட்ட அதே இடத்தில் மீண்டும் வலியும் வீக்கமும் உண்டானது. படுத்த படுக்கையானார்; பிறகு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளும் நிலையேற்பட்டது அவருக்கு!
அறுவைச்சிகிச்சை முடிந்த பின்பு, காயமும் வலியும் சிறுகச் சிறுகக் குறைந்து சுகமானது. படுக்கையாக இருந்தபடியே டால்ஸ்டாய் ஒரு நாடகத்தை எழுதி முடித்தார். அந்த நாடகம் தான் ருஷ்ய மக்களால் பெரிதும் பாராட்டப்பட்ட “இருளில் ஒளி” என்ற நாடகமாகும்.
சிகிச்சை முடிந்து எழுந்த லியோ டால்ஸ்டாய் மீண்டும் அயராது எழுத ஆரம்பித்தார். அன்று வரை அவர் எழுதிய எழுத்துத் தொகுப்புகளை எல்லாம் மாஸ்கோ பதிப்பக நிறுவனத்துக்குக் கொடுத்தார். போரும் அமைதியும் நாவலை சிறப்புப் பதிப்பாக வெளியிட்டு, அமெரிக்கா முகவர்களுக்கு அனுப்பியதும், டால்ஸ்டாய் பிரதிகள் முன்பைவிட அதிகமாக இப்போது விற்பனையாயிற்று.
★
-
பஞ்ச நிவாரண நூல்; ருஷ்ய அரசால் பறிமுதல்!
ருஷ்ய நாட்டில், குறிப்பாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் பகுதி வாழ் மக்கள் மீது டால்ஸ்டாயிக்குத் திடீரென்று ஏற்பட்டதல்ல இரக்கமும் - அனுதாபமும்! அவர் பல்கலையிலும் கல்லூரியிலும் படித்தபோது வந்த மனித நேயக் கருணையாகும்!
கல்விப் பருவத்திலே உருவானது அந்த மக்கள் தொண்டு தன்னால் இயன்ற சேவைகளைச் செய்திட ஊர் ஊராக அலைந்து மக்களது நிலைகளை விளக்கிக் கூறி நிதி திரட்டியவர்!
தானிய வகைகளைச் சேகரித்து அவற்றை மூட்டைகளாகக் கட்டித் தன் முதுகிலேயே சுமந்து கொண்டு வந்து பஞ்ச நிவாரண வேலைகளைச் செய்து ஏழைகளின் ஏந்தலாக வாழ்ந்தவர். ஏறக்குறைய லட்சக் கணக்கான ரூபாயைத் தனியொரு மனிதனாக அலைந்து சேகரித்த ஏழை பங்காளர் அவர்.
ருஷ்ய மக்கள் இந்தியர்களைப் போல விவசாயத் தொழிலை நம்பி வாழ்பவர்கள். இயற்கையின் பருவகாலச் சக்தி பொய்த்துப் போனதால், மழை பொழியாததால் அங்குள்ள கிராமங்களின் வயல்கள் வறண்டு போயின. மக்கள் பசியால் மடிந்தார்கள்! 1891-ஆம் ஆண்டில் பயிர்கள் எல்லாம் பாழானதால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பரிதவித்தார்கள்! எனவே, பஞ்சத்தால் துன்புறும் மக்களுக்கு எப்படித் தொண்டு செய்யலாம் என்று அவர் இரவும் பகலுமாய் யோசனை செய்தார்.
ஊர் ஊராகச் சென்ற டால்ஸ்டாய்; மக்களை எச்சரிக்கையோடு இருக்கும்படி எச்சரித்தார். பஞ்சத்தில் துன்புறுவோருக்குப் பணக்காரர்களை, தொழில் முதலாளிகளை உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். பத்திரிக்கைகளுக்கு கிராம மக்கள் நிலைகளை எல்லாம் விளக்கிச் செய்திகளைத் தொகுத்து அனுப்பி வைத்தார்.
அடுத்த அறுவடைக் காலத்தில் எந்த விவசாயியும் அறுவடை ஏதும் செய்ய முடியாத காரணங்களை ஜார் அரசுக்கும் அறிக்கை வாயிலாக எடுத்துரைத்தார்! அதே நேரத்தில் மற்றவர்களுடைய உதவிகளையே எதிர்பார்த்துக் கொண்டு அவரால் சும்மா இருக்க முடியவில்லை. தானாகவே - தனியாகவே தனது நிவாரண வேலையை அவர் தொடர்ந்தார்.
டால்ஸ்டாய் தான் வாழும் ‘ரேயசா’ என்ற பகுதியில் பஞ்சத்தின் கோரம் மிகவும் மோசமாகத் தாண்டவமாடுவதை அறிந்தார். அங்கே சென்று மிக அதிகமாக வேலை செய்தாக வேண்டுமென்ற அக்கறையால் தனது மகள்கள் இருவரையும், மருமகனையும் அழைத்துக் கொண்டு ரேயசா பகுதியிலே உள்ள கிராமங்களுக்குச் சென்று பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் அவரிடம் கையிருப்பாக எழுநூற்றைம்பது ரூபிள்தான் இருந்தது. அந்த ரூபாயை வைத்துக் கொண்டு என்னென்ன செய்யலாமோ அவற்றையெல்லாம் தனது சக்திக்கேற்றவாறு அவர் செய்துவந்தார். மக்களிடம் அவர் சேகரித்த தானிய வகைகளைப் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்குப் பங்கீடு செய்தார்.
தனியொரு மனிதன் தனது குடும்பத்துடன் வந்து ஏழை எளிய மக்களுக்கு செய்துவரும் பரோபகாரப் பணிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்துப் பணக்காரர்களில் பலர், அவருடன் ஒத்துழைக்கத் திரண்டனர்.
பஞ்சத்தால் வேதனைப்படுவோர்களுக்கு எப்படியெல்லாம் உதவிசெய்யலாம் என்று அவர் எழுதியக் கட்டுரைகளை; அப்போதுள்ள பத்திரிக்கைகள் தக்க சமயத்தில் வெளியிட்டு உதவின. அதைப் படித்த பிறகே மக்கள் பெருவாரியாகத் தானிய வகைகளையும், பணத்தையும் நலிந்தோருக்குக் கொடுத்து உதவினார்கள்.
பஞ்சத்திலே உள்ள மக்களானாலும் சரி, நடுத்தர வசதி படைத்தவர்களானாலும் சரி, அவரவர் வீடுகளிலே உள்ள உணவுப் பொருட்களைத் திருடர்கள் புகுந்து கொள்ளையடித்துச் செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்தார். அப்படிக் காப்பாற்றிய பொருள்களை உணவுப் பொருள்கள் இல்லாதவர்களுக்கு அவரவர் நிலைமை அறிந்து பங்கிட்டுக் கொடுப்பது சிறந்த உதவி என்றார்.
கிராமங்கள் ஒவ்வொன்றிலும் உணவு விடுதி ஒன்றை உருவாக்கி, அதன் மூலமாக எல்லாருக்கும் உணவுகளைத் தயார் செய்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவை பஞ்ச நிவாரணப் பணிகளுக்கு டால்ஸ்டாய் கூறிய யோசனைகளாகும்.
தனது புதல்விகள் இருவரும், மருமகனும், கணவர் டால்ஸ்டாய் தலைமையில் பஞ்ச நிவாரண மக்கள் தொண்டு செய்வதைக் கண்ட டால்ஸ்டாய் மனைவியான பேஹர் என்ற சோன்யா, தானும் வலியச் சென்று குடும்பத்துடன் இணைந்து வேலைகளைச் செய்தார். அத்துடன் நில்லாமல், மற்ற மக்களும் பஞ்சநிவாரணப் பணிகளுக்கு ஏற்ற உதவிகளை கருணையோடு செய்ய முன்வர வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
டால்ஸ்டாயின் மனைவி வெளியிட்ட வேண்டுகோளை பத்திரிக்கைகளும் பெரிய அளவில் வெளியிட்டன. பத்திரிக்கையைப் படித்த பெண்கள், தாராளமாகவும், ஏராளமாகவும் அவரவர் வீடுகளிலே உள்ள உணவுப் பொருட்களை வழங்கினார்கள். இவ்வாறு; கும்பல் கும்பலாகப் பெண்கள் அந்தந்த ஊர் கிராம உணவு விடுதிகளுக்கு வருகை தந்து, உணவு தயார் செய்து அவரவர் கைகளாலேயே அன்னதானம் செய்வதைக் கண்ட சீமாட்டிகளும், பணக்காரிகளும் முன்வந்து அளவுக்கு அதிகமாக உதவிகளைச் செய்தார்கள்.
கிராமங்களில் இருந்த உணவு விடுதிகள் இரு நூற்றைம்பதாக உயர்ந்தது. பஞ்ச நிவாரண உணவை உண்டு வந்தவர்களின் எண்ணிக்கை பதினைந்தாயிரமாக உயர்ந்தது.
ஆலை முதலாளிகள், வேறு வகையான தொழிலதிபர்கள் ஒன்று கூடி, குடியானவர்களை அழைத்து, வேலைகளையும் கொடுத்து கூலிகளையும் வழங்கினார்கள். இந்தப் பஞ்ச நிவாரணப் பணியில் நாட்டை ஆண்டு கொண்டிருந்த ருஷ்ய அரசாங்கமே முன்வராத போது, தனியொரு குடும்பமான டால்ஸ்டாய் குடும்பம் முன்வந்து பணியாற்றியதைக் கண்ட ரேயசா நகர்ப் பகுதி மக்கள் டால்ஸ்டாயையும், அவரது உறவினர்களையும், குடும்பத்தையும் பாராட்டினார்கள்.
இந்தப் பாராட்டுக் கூட்டத்தில் டால்ஸ்டாயோ அவரது குடும்பத்தினரோ எவரும் கலந்து கொள்ளாமல், நிவாரண வேலைகளிலேயே மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், டால்ஸ்டாய் சமாரா நகர் பகுதியிலே 1873- ஆம் ஆண்டில் வாழ்ந்த போது ஏற்பட்ட பஞ்சத்தில் லட்சக் கணக்கான பணம் திரட்டியும், தானிய வகைகளையும் மக்களுக்கு வழங்கியதற்காக, நன்றி தெரிவிக்கும் வகையில், அங்குள்ள மக்களில் நூற்றுக் கணக்கான பேர்கள் ரேயசா பஞ்ச நிவாரணப் பணிப் பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு டால்ஸ்டாயின் ஏழைபங்காளக் கருணையுள்ளத்தைப் பாராட்டினார்கள் என்பது, வரலாறு காணாத சம்பவமாகும்.
மனித நேய மகானான டால்ஸ்டாய், பஞ்ச நிவாரணப் பணிகளைச் செய்து கொண்டிருந்த நெருக்கடி நேரத்திலும் ஓய்வு நேரம் ஒதுக்கி, ‘சொர்க்க சாம்ராஜ்யம்’ என்ற ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். ரேயசா நகர்ப் பகுதிப் பஞ்சத்தை ருஷ்ய அரசு கண்டும் காணாதபடி எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருந்த ஊமைச் செயலை, டால்ஸ்டாய் அந்த நூலிலே மிக வன்மையாகக் கண்டித்தார்.
இந்த ‘சொர்க்க சாம்ராஜ்ய’த்தைப் படித்த ஜார் ஆட்சி, டால்ஸ்டாய் மீது பெருங் கோபம் கொண்டது. இரஷ்யாவிலே உள்ள புத்தக விற்பனைக் கடைகளிலே எல்லாம் போலீசார் புகுந்து அராஜகம் செய்து ‘சொர்க்க சாமாராஜ்ய’ புத்தகங்களைப் பறிமுதல் செய்தார்கள்! பொது மக்கள் அந்த நூலைப் படிக்கக் கூடாது என்று தடை விதித்தது ஜார் மன்னனது செங்கோல்! இதனால் ரஷ்ய மக்கள் பரபரப் படைந்தார்கள்.
டால்ஸ்டாய் தனது நூல் பறிமுதல் செய்யப்பட்டதையும், யாரும் அவரின் அந்தப் புத்தகத்தைப் படிக்கக் கூடாது என்று ஜார் கொடுங்ககோல் ஆட்சி தடைபோட்டதைப் பற்றியும் பதில் ஏதும் கூறாமல் வாயையும் திறக்காமலே இருந்ததுடன், மேலும் சில புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுக் கொண்டே இருந்தார். அந்தப் புத்தகங்கள் எல்லாம் பரபரப்பாகவும், லட்சக்கணக்காகவும் விற்பனை ஆயின என்பது; டால்ஸ்டாயின் ஜார் ஆட்சிக் கொடுங்கோல் எதிர்ப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
★
ஆண்டவனோடு போராடுவோர்
ஆண்டவனோடு போராடுவோர் என்பது ருஷ்யாவின் பழம்பெரும் மனித இனங்களுள் ஒன்று. அவர்களை ருஷ்ய மக்கள் ‘ஆண்டவனோடு போராடுவோர்’ என்றே அழைப்பார்கள். உள்ளன்போடு உயிரினங்களுடன் பழக வேண்டும் என்பதுதான் அந்த இனத்தின் கோட்பாடு.
இந்த இன மக்கள் தனியார் உடைமையை ஏற்பதில்லை. அதை அவர்கள் பாவம் என்பார்கள். சமூகத்தாரின் எல்லா சொத்துக்களும் ஓரிடத்திலேயே இருக்கும்; அவற்றைக் கொண்டுதான் அவர்களது வாழ்க்கை நடப்பது வழக்கமாகும்.
ஆண்டவனோடு போராடுவோர், தங்கள் கோட்பாடுகளை உறுதியாக நம்பிப் பின்பற்றி வந்தார்கள். அதற்காக அந்த இனத்தவர் அரசு செய்யும் எவ்விதக் கொடுமைகளையும், துன்பங்களையும் ஏற்கத் தயாரானவர்கள், அதனால் அவர்களை அரசாங்கம் கண்காணித்து வந்தது எல்லோருக்கும் நன்மை தராத ஜார் மன்னன் ஆணைகளை அந்த மக்கள் மதிக்கமாட்டார்கள், ஏற்கமாட்டார்கள், ஒப்பமாட்டார்கள்.
ஜார் மன்னர் அவர்களை ராணுவத்தில் சேருமாறு கட்டளையிட்டார். ஆனால், ஆண்டவனோடு போராடும் நாங்கள் போராளிகள் அல்லர்; அமைதியை நாட்டிடும் சமாதானவாதிகள். எனவே, எக்காரணம் கொண்டும் ராணுவப் படைகளில் பங்கு பெற மாட்டோம் என்று முரட்டுத்தனமாகவே மறுத்து விட்டார்கள்.
கோபமலையின் மேலே ஏறி ஜார் கொக்கரித்தான் என்னை மதியாத உங்களை மக்களோடு மக்களாக இணைந்து வாழ விடமாட்டேன்! காக்கசஸ் மலைமேலே உள்ள காட்டு மிராண்டிகளோடு மிருகங்களைப் போல போய் வாழுங்கள் என்று கொடுமையான சீற்றத்தோடு சீறி ஆணையிட்டான்!
அந்தப் பழம்பெரும் இனம் ஜார் உத்தரவுப்படி காக்கசஸ் சென்று; அங்கே மிருகங்களைப் போல வாழ்ந்த காட்டுவாசிகளோடு அன்பாகப் பழகி அவர்களது வாழ்க்கையின் இன்பதுன்பங்களில் இரண்டறக் கலந்து வாழ்ந்து வந்தார்கள்.
தங்களது ஆதி இனக் கொள்கைக்கு விரோதமாக, ஜார் மன்னன் ராணுவத்தில் சேர ஆணையிட்ட போது, “நாங்கள் வாளேந்த மாட்டோம், போராளிகள் அல்ல; அமைதியை வளர்ப்போர் என்று கூறிய தங்கள் கொள்கைக்கு மாறாக, நாளடைவில் அவ்வப்போது ஆயுதங்களைப் பயன்படுத்தி வந்தார்கள்.
இதைக் கேள்வியுற்ற மன்னன் ஜார், மறுபடியும் அந்த இனத்தை இராணுவப் படைகளில் சேர்க்க விரும்பினார். ஆனால், 1895-ஆம் ஆண்டின் போது, அந்த இனம் தங்களது தவறுகளை உணர்ந்து, அவர்களிடம் இருந்த எல்லா வகை ஆயுதங்களையும் ஓரிடத்தில் திரட்டிக் குவித்து, தீ வைத்து எரித்தார்கள்.
இதனைக் கண்ட கொடுங்கோலன் ஜார் கோபாவேசம் கொண்டு ஆண்டவனோடு போராடுவோர் என்ற அந்த இன மக்களைத் துன்புறுத்தினான். அவர்களை மனம் போனவாறு போலீசை ஏவி சித்ரவதை செய்தான்!
அந்தப் பழங்குடி இன மக்களின் தொடர் சோகக் கதையை அறிந்த மனிதநேய மகானான டால்ஸ்டாய், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும், சோதனைகளையும், அவர்கள் பொறுமையாக அவற்றைப் பொறுத்துக் கொண்ட வீரத்தையும் கேட்டு உள்ளம் உருகினார் மனம் நொந்தார். இது என்ன ஆட்சிதானா? என்று அறிக்கையும் விடுத்தார். அதனால் அவர்களுக்கு என்ன உதவிகளைச் செய்யலாம் என்று சிந்தித்தார்
இதற்குக் காரணம் என்னவெனில், ஆண்டவனோடு போராடுவோர் குழுவின் கொள்கையும், டால்ஸ்டாய் லட்சியமும் ஒத்திருந்தன. அதனால் அந்த இனத்தை எப்படியாவது காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். அதற்கான எல்லா நடவடிக்கைகளிலும் திட்டமிட்டபடியே இறங்கிப் பணியாற்றலானார்.
ருஷ்யக் காடுகளிலே இந்த ஆண்டவனோடு போராடும் இனம் வாழ வேண்டும் என்று ஜார் உத்தரவிட்டான். அந்த ஆணையை அவன் மீண்டும் வெளியிட்ட பிறகுதான் டால்ஸ்டாய் கிளர்ச்சியிலே ஈடுபட்டார்.
வேண்டுகோள் ஒன்றைப் பத்திரிகைகளுக்கு அவர் விடுத்தார். அதில் ருஷ்ய நாட்டின் கல்வியாளர்கள், பிரபுக்கள் போன்றோர் பலர் கையொப்பம் செய்தார்கள்.
யார்யார் டால்ஸ்டாய் அறிக்கையிலே கையொப்ப மிட்டார்களோ அவர்களை அரசு பயமுறுத்தியது; பலரை வலியப் பிடித்து இழுத்துவந்து நாடு கடத்தியது; வேறு சிலரை சித்ரவதை செய்தது. ஆனாலும், டால்ஸ்டாய் இக் கொடுமைகளைக் கண்டு சிறிதும் அச்சப்படாமல், தனது பணிகளைக் கைவிடாமல் தொடர்ந்து போராடினார்! அதனால் மக்கள் இடையே கிளர்ச்சி எழுந்தது; வலுத்தது; மக்களிடையே பரவியது. இம் மக்கள் கிளர்ச்சி ஒருவகையில் வெற்றிகரமாக முடிந்தது.
‘ஆண்டவனோடு போராடுவோர்’ வெளி நாடுகளுக்கும் குறிப்பாக கனடா நாட்டுக்கும் சென்று வாழ வேண்டும் என்று ருஷ்ய ஆட்சி ஆணையிட்டது; அதற்கு ஏற்றவாறு அனுமதியையும் வழங்கியது.
அவ்வளவு மக்களும் வழிச் செலவுப் பணத்துக்கு எங்கே போவார்கள்? ருஷ்ய ஆட்சி அதற்கு ஏதும் வழி செய்ய மறுத்து விட்டது. ஆனால், இதைக் கண்ட டால்ஸ்டாய், ஜார் மன்னன் ஒருகாசு கூடக் கொடுக்கமாட்டான் என்பதை உணர்ந்தார்.
உடனே, இங்கிலாந்து ஃபிரான்ஸ், ஜெர்மன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வாழும் மக்களுக் கெல்லாம் உண்மை நிலையைக் கூறி, பண உதவிகளைச் செய்ய வேண்டுமென்று டால்ஸ்டாய் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கும் மேலாக, தனது மனிதாபிமான மனத்தோடு, டால்ஸ்டாய் எழுதிய அதாவது ‘மறுபிறவி’ என்ற தம்முடைய நூலின் வருமானத்தை ‘ஆண்டவனோடு போராடுவோர்’ சங்கத்து மக்கள் இனம் கனடா நாடுக்குப் போக வழிப்பயணச் செலவுக்காகக் கொடுத்தார். அதனால் அவர்கள் கனடாவுக்குப் போனார்கள்.
ஓர் இனமக்களை மனிதாபிமானமற்று, குறிப்பாக வழிச் செலவுகளுக்குக் கூட பணம் தராமல் விரட்டியடித்த ஜார் மன்னனது கொடுங்கோலை உலக நாடுகள் எல்லாமே கண்டனம் செய்தன.
ஆனால் அந்த இன மக்களது வாழ்க்கை மேம்பட, டால்ஸ்டாய் செய்த கிளர்ச்சியால், அவர் செய்த உதவியால், அவரை ஐரோப்பிய நாடுகள் எல்லாம் போற்றிக் கொண்டடினார்கள். இந்த ஓர் அற்புதமான பேருதவியை எண்ணிப் பார்த்த மக்கள், டால்ஸ்டாயை உலக மனித நேய மகான்களிலே ஒருவர் என்று போற்றி மகிழ்ந்தார்கள்.
★
டால்ஸ்டாய் மதத்துரோகியா?
டால்ஸ்டாய் ஓர் உண்மையான கிறித்துவர். ஆனால், அவரை ஒரு கிறித்துவர் என்று எவரும் ஒப்புக் கொள்ளவில்லை. காரணம், கிறித்துவ மதத்தில் கலந்துவிட்ட குருட்டு நம்பிக்கைகளையும், தீமைகளையும் ஆஷாட பூதித் தன்மைகளையும் அவர் அடிக்கடி கண்டனம் செய்து கொண்டிருந்ததாலே அவரை ஓர் உண்மையான கிறித்துவராக எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லாரும் அவரை வெறுத்து மதத் துரோகி என்றார்கள்.
கிறித்துவர்கள் எனப்படுவோர் எல்லோரும் மத அளவில், பெயரளவில் கிறித்துவர்களாக இருந்தார்களே தவிர, உண்மையில் இயேசுநாதரின் போதனைகளைப் பின்பற்றுபவர்களாக இல்லை என்பதை அவ்வப் பொழுது டால்ஸ்டாய் சுட்டிக் காட்டியபடியே இருந்தார். ஓயாமல் குறை கூறி கொண்டிருந்த அவரது போக்கை அக்காலக் கிறித்துவர்கள் எதிர்த்துக் கொண்டே இருந்தார்கள்.
இதனால் ஆத்திரமும், கோபமும், வெறுப்பும் கொண்ட கிறித்துவ மதத் தலைவர்கள் அவரது மதத் துரோகச் செயல்களைக் கட்டுப் படுத்த ஜார் மன்னனுடைய ஆதரவை நாடினார்கள். ருஷ்ய மன்னன் அந்த எதிர்ப்பாளர்களது செயலுக்கும் சொல்லுக்கும் மதிப்புக் கொடுக்காமலே இருந்தார்.
மன்னனது இந்த அலட்சியப் போக்கை உணர்ந்த கிறித்துவ மத குருமார்கள், டால்ஸ்டாயிக்கு சமூகத் தண்டனை விதிப்பதென்று எண்ணி, அவரைக் கிறித்துவ மதத்துரோகி என்று புகார் கூறி, அவரை மதத்தை விட்டு விலக்கி வைத்தார்கள்.
மதத்தலைவர்கள் அவரை விலக்கி வைத்ததால் மக்கள் இடையே குழப்பமும் கிளர்ச்சிகளும் உருவானது. இந்த மதவிலக்குத் துஷ் பிரச்சாரம் மாஸ்கோ நகருக்கும் பரவியது. இதனால் மாணவர்களும், தொழிலாளர்களும் கலகம் செய்தார்கள். வீதிகள் தோறும் மக்கள் திரண்டு டால்ஸ்டாய் மதத்துரோகியா! என்று கொந்தளித்து ஊர்வலம் வந்தார்கள்.
லியோ டால்ஸ்டாய் வழக்கம்போல உலாவிட்டு வீடு திரும்பும் போது மக்கள் அவரைச் சுற்றி வளைத்து நின்று கொண்டு தங்களது மரியாதையைத் தெரிவித்தார்கள். பலர் பலவிதமாமக அவர்மீது அனுதாபம் கொண்டு ஆறுதல் கூறினார்கள்.
ஜெர்மன், பாரீஸ், சுவிட்சார்லாந்து, கனடா போன்ற நாடுகளிலே இருந்த டால்ஸ்டாய் வாசகர்களும் சான்றோர்களும், கல்விமான்களும் அவருக்கு ஆறுதல் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர் அந்த அன்புள்ளங்களுக்கு தேறுதல் கூறி எதற்கும் கவலைப்பட வேண்டாம், காலம் ஒருநாள் உண்மையை உணர்த்தும் என்று பதில் செய்திகளை அனுப்பி வைத்தார்.
★
டால்ஸ்டாயின் 80-வது ஆண்டு விழா
மனித நேய மகான் டால்ஸ்டாயிக்கு எண்பதாவது வயது பிறந்த நாளை ருஷ்ய மக்கள் மிகக் கோலாகலமாகக் கொண்டாட எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள். ஆனால் ஜார் மன்னனது ஆட்சி அந்த விழா நடைபெற விடாமல் தன்னால் இயன்ற தடைகளை எல்லாம் செய்தது. பொது மக்கள் அந்தத் தடைகளை மதிக்கவில்லை.
வயது முதிர்ந்து விட்ட ஒரு மூதறிஞர் விழாவுக்கு அரசு தடை செய்வதா? என்ற மன எரிச்சலோடு அந்த விழாவை முன்னிட்டு ஊர்வலங்களையும், பொதுக் கூட்டங்கயையும் ருஷ்ய நாடெங்கும் மக்கள் விமரிசையாக நடத்தினார்கள். வீதிக்கு வீதி டால்ஸ்டாயின் அரும் பெரும் சமூக சேவைகளை விளக்கிப் பேச விழாக்களை நடத்தினார்கள் அவரால் எழுதப்பட்ட “இன்ப ஒளி” நாடகத்தை நடத்தி அதன் பெருமையைப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.
ருஷ்ய நாட்டிலே மட்டுமல்ல, ஐரோப்பாவிலே உள்ள நாடு நகரங்கள் எல்லாம் டால்ஸ்டாயின் பிறந்த நாளைப் பெருமையாக நடத்திப் போற்றின. தொழிலாளர்கள், பொதுமக்கள், மாணவமணிகள், பிரபுக்கள், அறிஞர் பெருமக்கள் அனைவரும் இந்த விழாக்களிலே கலந்து பாராட்டினார்கள்.
டால்ஸ்டாய்க்கு எண்பது வயதாகிவிட்டது. ஆனாால், ஜார் மன்னன் ஆட்சிக்கு மக்கள் இடையே எதிர்ப்பு முதிர்ந்து வலுப்பெற்ற வந்ததனை அந்த விழா உணர்த்திற்று. ஏனென்றால், பல நூற்றாண்டுகளாக நடந்து வந்த ஜார் மன்னன் பரம்பரையினுடைய கொடுங்கோல் ஆட்சி இந்த விழாவிலும் பல முட்டுக்கட்டைகளை போட்டது. இந்த அநீதியான ஆட்சியின் அவலச் செயல்களைப் பார்த்து டால்ஸ்டாய் துன்புற்றார்.
பொது மக்களை ஜார் ஆட்சி திடீர் திடீரென்று கைது செய்து சிறையிலே அடைத்தது. மக்கள் சிலரைத் தூக்கு மேடைகளுக்கும் அனுப்பியது; சைபீரியக் குளிர் காடுகளுக்கு மக்களை நாடு கடத்தியது. இந்த அக்கிரமக் கொடுமைகள் ஜார் ஆட்சியில் வழக்கமாக நடைபெறும் சம்பவங்கள்தான். அந்த அநீதிச் செயல்கள் ஒரு மூதறிஞரது விழாக்களிலும் கூடவா நடத்தப்பட வேண்டும் என்ற கேள்விகளை கல்விமான்கள் அறிக்கைகள் மூலமாகக் கேட்டு எதிர்ப்புக்களை எழுப்பினார்கள். அதனால் டால்ஸ்டாயிக்கும் மனம் பொறுக்க முடியவில்லை.
ஐரோப்பிய நாடுகளிலே இருந்து வெளியான புகழ் பெற்ற பெரிய பத்திரிகைகள் எல்லாம் இந்தக் கண்டனங்களை எழுப்பின. டால்ஸ்டாயும் ஜார் ஆட்சியின் கொடுமைகளை, விழா நேரத்திலே விழாவின் பெயரால் அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விடுவதா என்று கடிதங்கள் மூலமாகக் கண்டித்தார். இதனால், ஐரோப்பிய நாடுகளிலே ஜார் ஆட்சிக்கும் துர்நடத்தைகளுக்கும் மேலும் இகழ்வுகளே உருவாகி, கெட்ட பெயரை ஏற்படுத்தின. எனவே, நாட்டிலே நடைபெறும் இந்தச்சம்பவங்கள் எல்லாம் கண்டு டால்ஸ்டாய் வேதனைகளை அடைந்தார்.
நாட்டின் நிலைதான் இவ்வாறு இருந்தது என்றால், தனது வீட்டின் சூழலாவது அமைதியாக இருந்ததா எனில் இல்லை. அவரது மனைவி பணத்தாசையால் அவர் மனதை நாள்தோறும் வருத்தி வந்தாள். இத்தனைக்கும் டால்ஸ்டாயின் மனைவி படித்தவள்; நாட்டுக்கு அவர் செய்து வந்த பணிகளில் சமபங்குடன் ஒத்துழைத்து வந்தாள். ஆனாலும், அவர் ஏன் மக்களுக்காக இப்படியெல்லாம் சேவை செய்கிறார் என்ற எண்ணத்தை அவளால் புரிந்து கொள்ள முடியாததால் அவரை இவ்வாறெல்லாம் வேதனைப் படுத்தி வந்தாள்.
டால்ஸ்டாய் பணத்தை மதிப்பவர் அல்லர்; மக்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதிலே நாட்டம் கொண்டவர் அவர். பண ஆசையும், வெறியும் அவர் மனைவிக்கு அளவுக்கு மீறி இருந்தது. அதனால் மக்களுக்கு அவர் செய்யும் தியாகத்தின் அருமை அவளுக்குத் தெரியவில்லை. அவருடைய இரக்க குணமும், மனிதாபிமானமும் அவளுக்கு மன எரிச்சலை உருவாக்கிவிட்டன.
தனது சொத்துக்களை எல்லாம் டால்ஸ்டாய் மக்கள் தொண்டு என்ற பெயரில் வீணாகச் செலவழித்து விடுவாரோ, பிறகும் தானும் தனது பிள்ளைகளும் அனாதையாக வாழும் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற கவலை அவளை நாள் தோறும் அரித்துக் கொண்டே வந்தது. ஆனால் அவருடைய மனைவியும் மக்களும் தங்களது பணத்தைக் கண்டபடி செலவு செய்து பாழ்படுத்தி வந்தார்கள். இவற்றைக் கண்ட அவர் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினார். வீட்டை விட்டு எங்காவது அவர்களுடைய பார்வையில் படாமல் போய்விடலாமா என்று அடிக்கடி யோசித்து வந்தார்.
வீட்டில் மனைவி மக்கள் நடந்து கொள்ளும் போக்கு அவருக்கு ஒத்துவரவில்லை. கணவன் தான் கூறுகின்றபடி நடக்க வேண்டும் என்பது அந்த அம்மையாரின் ஆசை. ஆனால், அவர் மனச் சாட்சி என்ன சொல்கின்றதோ அதற்கேற்ற படி நடந்து வந்தார். இதனாலே இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அடிக்கடி ஏசிப்பேசி மன எரிச்சல் அடைந்து வந்தார்கள்.
டால்ஸ்டாய் எழுதிய புத்தக விற்பனை உரிமைகள் எல்லாம், தனக்கும் - தனது மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அவரது மனைவி அவரைக் கேட்டுத் தினந்தோறும் நச்சரித்தாள். ஆனால், அவர், தனது நூல்களது விற்பனைப் பணமெல்லாம் நாட்டின் ஏழை மக்களுக்குப் பயன்பட வேண்டு என்று விரும்பினார்.
இதனால், கணவன் மனைவி இடையே சச்சரவுகள் வலுத்து. கலவரம், ரகளை, குடும்பப் போராட்டம், அக்கம் பக்கம் வாழ்வோர் பஞ்சாயத்து போன்ற அவல நிலைகள் உருவாகின.
தனது குடும்ப மானம் மற்றவர்களிடம் அடிபடுகின்றதே என்ற கோபம் டால்ஸ்டாயிக்கு மானம் போனாலும் பரவாயில்லை, பணம் தன்னிடமே இருக்கவேண்டும் என்ற பேராசைக் குணம் அவளிடம். ஆனாலும் மனைவியின் ஆணவத்துக்கும் ஆர்ப்பாட்ட ஆத்திரத்துக்கும் சண்டை சச்சரவுக்கும், அழுகுரல் ஒப்பாரிக்கும் டால்ஸ்டாய் அடிபணியவில்லை. இதனுடைய உச்சக்கட்டமாக அவள் பிள்ளைகளையும் சாகடித்து விட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினாள்; பயமுறுத்தினாள். ஆனாலும் அக்கம் பக்கத்தார் இருவருக்கும் புத்திமதியும் ஆறுதலும் கூறினார்கள். தனது குடும்ப கெளரவம் இவ்வளவு கேவலச் செயலுக்கு வந்த பிறகு, இதற்குமேல் இவளுடனும், பிள்ளைகளுடனும் இணைந்து வாழ வேண்டுமா? என்ற முடிவுக்கு வந்தார் டால்ஸ்டாய். அதனால், தனது தாய் நாட்டையும், குடும்பத்தையும் விட்டு விட்டு மனம் போனபடி எங்கேயாவது வெளியேறி விட வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.
★
டால்ஸ்டாயின் கடைசி நூல்
மனித நேய மகான் லியோ டால்ஸ்டாய், தனது எழுத்துப் பணிகளால், இலக்கியச் சேவைகளால் ருஷ்ய நாட்டில் மட்டுமன்று; உலகம் முழுவதுமே புகழ்பெற்றிருந்தார். பெற்ற பெருமைக்கு ஏற்றவாறு அவருக்கு வேறு பல சமுதாயத் தொண்டுகளும், நாட்டுப் பணிகளும் அதிகரித்து வந்தன.
இதற்கிடையில் உலகம் முழுவதுமுள்ள பேரறிஞர்கள், கல்விமான்கள், சமுதாய நற்பணியாளர்களும் நாள் தோறும் அவரைச் சந்தித்து ஆறுதலும், தேறுதலும், வாழ்த்துக்களும் நேரில் கூறினார்கள். வர இயலாத அவருடைய வாசகர் பெருமக்கள், கடிதங்களை எழுதிக் குவித்து அவரை உற்சாகப்படுத்தினார்கள். ஆனாலும், அவரது வயோதிகம் அவரைத் தளர வைத்த படியே நகர்ந்தது.
இத்தகைய வயோதிகப் பருவத்திலும், டால்ஸ்டாய் தனது இலக்கியப் பணியைக் கைவிடவில்லை. அவருடைய ஆன்மிக வலிமையும், இலக்கியப் பற்றின் வேகமும் அதிகரித்த படியே இருந்தது. இதன் காரணமாக, அவர் தனது இறுதி நூலான, “எ சைக்கின் இன் ரிடிங்” என்ற புத்தகத்தைப் பல தொல்லைகளுக்கு இடையே எழுதி முடித்தார்.
“இந்தப் புத்தகத்தில், சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளுக்கு என்ன காரணம்? சிலர் எல்லாவற்றையும் அனுபவித்து வாழும் நிலையை உருவாக்கிக் கொள்ளும் போது, பலர் உண்ண உணவின்றி, செய்ய வேலையின்றி, குடியிருக்க வீடின்றி வாடிக் கொண்டிருக்கும் நிலைகள் இருப்பது ஏன்? இந்த சமுதாயத் தேவைகளை எப்படித் தீர்ப்பது? என்ற கேள்விகளை எழுப்பி, அந்த வினாக்களுக்குரிய விடைகளையும் தெளிவு படுத்தியுள்ளார்.
வாழும் மக்கள் அனைவருக்கும் பசிக்கு உணவும், மானத்தைக் காத்துக் கொள்ள சாதாரண உடைகளும், இயற்கையின் சீற்றங்களுக்கப் பலியாகாமல் தங்களைக் காத்துக் கொள்ள படுக்க உறைவிடமும் பொதுவான வாழ்க்கை உரிமைகள். இந்தத் தேவைகளை எந்த அரசும் உடனடியாகச் செய்யாவிட்டால் அது கொடுங்கால் ஆட்சியே தவிர வேறு என்ன பெயரிடலாம்? என்றும் டால்ஸ்டாய் மக்கள் உரிமைகளுக்காக அந்தப் புத்தகத்திலே வாதாடியிருக்கிறார்!
டால்ஸ்டாய் தான் எழுதியுள்ள உலகம் போற்றும் புத்தகங்களான “போரும் அமைதியும், ஆன்ன கரீனா, க்ரூசர் சோனாடா” போன்ற மற்றும் பல நூல்களைப் பற்றி, என்றுமே தன்னைத்தானே புகழ்ந்து கொண்டதே இல்லை. நான் எழுதிய அவற்றையெல்லாம் மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால், “இந்தப் புத்தகம் எனக்குப் பிறகும் வாழும்”, என்று “ஏ சைக்கிள் இன் ரீடிங்” என்ற நூலினைப் பற்றி குறிப்பிடுகிறார். இந்த நூல் இயற்றியதைத் தவிர, வேறு நற்பணிகளைச் செய்ய அவர் உடல் இடந்தரவில்லை. தமது கொள்கையினைப் பற்றின சிந்தனையிலேயே அவர் லயித்தார்.
நாடெங்கிலும் இன்று இயேசு பிரானைப் பின்பற்றும் பாதிரிமார்கள் நடத்தும் பள்ளிகளையும் நாம் பார்க்கின்றோம். இயேசு சபைகள் தோன்றுவதற்கும், அதனைச் சார்ந்த மத குருமார்கள் ஆற்றிவரும் மதப் பணிகளுக்கும் காரணமாக இருப்பதும் ஒரு புத்தகம் தான்.
இந்த இயேசு சபைகளை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தவர் இஞ்ஞாசியார் என்பவராவார். அவர் ஒரு போர் முனை வீரர். உலகையே ஆட்சி புரிகிற ஓர் உயர்ந்த வீரனாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டவர் அவர்.
ஒரு முறை அவர் எதிரிகளோடு போர்முனையில் யுத்தத்தில் ஈடு பட்டிருந்தபோது காலில் குண்டு பாய்ந்து மருத்துவ மனையிலே சேர்க்கப்பட்டு தனது காலில் பாய்ந்த குண்டை வெளியே எடுப்பதற்கு அறுவைச்சிகிச்சை செய்து கொண்டார். அப்போது மருத்துவமனையில் பொழுது போக்குவது எப்படி என்று புரியாத நிலையில் அந்தப் புத்தகத்தை எழுதினார். அந்த நூல் தான் இயேசு மதத் தொண்டுகளை உலகிலே பரப்பிடக் காரணமாக அமைந்தது.
அது போலவே டால்ஸ்டாய் ஒரு போர் முனைவீரர்தான். ஆனால் இஞ்ஞாசியாருக்கும் அவருக்கும் ஒரே ஓர் வித்தியாசம் காணப்பட்டது. ஜார் மன்னனது ஆட்சிக் கொடுமைகளை எதிர்த்து தனது நாட்டு மக்களை எப்படி வாழவைப்பது என்று யோசித்தபோது, அவரது அனுபவத்தாலும், தாய் நாட்டுப் பற்றாலும், மக்களுடைய மானிதாபி மானத்தாலும் அவருக்குண்டான எழுச்சிதான் ‘எ சைக்கிள் இன் ரீடிங்’ என்ற புத்தகமாகும். அதனால்தான் அவர் எழுதிய இந்த நூல் அவருக்கு மன நிறைவைத் தந்ததுடன், இந்த நூல் எனக்குப் பிறகும் வாழும் என்று அவரே குறிப்பிட்டிருந்தார். அத்தகைய ஒரு சமுதாய மறுமலர்ச்சி நூலாக அது அமைந்தது எனலாம்.
இந்த அரும் பெரும் நூலை எழுதி முடித்த பின்பும் கூட, அவரது மனைவியும், பிள்ளைகளும் டால்ஸ்டாயின் கொள்கைக்கு நேர்விரோதமாக, மீண்டும் நடக்க ஆரம்பித்து விட்டார்கள். எனவே, வீட்டை விட்டு வெளியேறுவது என்ற தனது முடிவுக்கு மீண்டும் அவர் தள்ளப்பட்டார். இருந்தும் கூட, தாம் வீட்டை விட்டு வெளியேறி விட்டால் தனது குடும்பம் வீணாகிவிடுமே, மனைவியும் மக்களும் மனம் வருந்தும் நிலை ஏற்பட்டுவிடுமே என்று அஞ்சி அவர் தயங்கினார். வீட்டிலே மேலும் மேலும் நெருக்கடிகள் விளைந்தால், அதற்குப் பிறகு ஒரேயடியாக வெளியேறி விடுவது என்றும் தீர்மானித்தார்.
டால்ஸ்டாய் தனது மனைவிக்கு 1897-ஆம் ஆண்டிலே ஓர் அஞ்சல் எழுதினார். ஆனால் அக் கடிதம் அவருக்கு அனுப்பப்படவில்லை. “நான் இறந்து விட்ட பிறகு இக் கடிதத்தை அவளிடம் அனுப்புங்கள்” என்று அந்தக் கடிதத்தின் மேல் அவர் எழுதியிருந்தார்.
“அன்புள்ள சோன்யா,
எனது கொள்கைக்கும், என் வாழ்க்கைக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் எனக்கு வருத்தந்தான் அளிக்கின்றது. இந்த முரண்பாட்டிற்கு என்ன காரணம்? நீதான்! அதைக் கைவிடுமாறு நான் உன்னை இப்போது வற்புறுத்த முடியாது.
ஏனென்றால், இந்த மனப் போக்கில் உன்னைப் பழக்கப்படுத்தியவன் நான்தான். நம்முடைய பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தார்கள். அவர்களது போக்கை கட்டுப்படுத்த வேண்டும் விரும்பியதுண்டு. நானும் தலையிட விரும்பவில்லை. ஆனால், நான் தலையிட்டிருந்தால், உனக்கு வருத்தமாக இருக்குமே!
அந்த அச்சம் தான் எனக்குப் பதினாறு ஆண்டுகளாக உன்னோடு சண்டையையும், சச்சரவையும் உருவாக்கி விட்டது. உனக்குக் கோபத்தை மூட்டிக் கொண்டிருக்கும் இந்தக் குடும்ப வாழ்க்கையை, நான் நீண்ட காலம் ஏற்க முடியாது.
இப்போது நான், எனது நீண்ட நாளைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்து விட்டேன். உங்களை எல்லாம் விட்டு விட்டு, அதாவது துறவு பூண்டு செல்ல வேண்டும் என்பதே அந்த விருப்பமாகும்.
இதற்குக் காரணங்கள் பல உண்டு. வயத ஏற ஏற வாழ்க்கை எனக்கு மிகவும் வேதனையைத்தான் உண்டாக்கி வருகிறது என்பதே முதல் காரணம். தனிமையில் வாழ வேண்டும் என்ற விருப்பம் அதிகமாகி வருகிறது. நமது பிள்ளைகள் எல்லோரும் நன்றாக வளர்ந்து விட்டார்கள். இனி நான் அவர்களைக் கண்காணிக்க வேண்டிய அவசியமல்லை.
உங்களது உள்ளத்தைக் கவர எவ்வளவோ விஷயங்கள் தோன்றியுள்ளன என்பது இரண்டாவது காரணம். இவை போன்ற எண்ணங்களால் எனது துறவு உனக்குத் துன்பமாய் இராது.
இந்துக்கள் அறுபதாம் வயதில் காட்டுக்குச் சென்று, வயோதிக வயதில் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது கடைசி நாட்களைக் கடவுள் சிந்தனையில் கழிக்க ஆசைப்படுகிறார்கள். அவர்கள் அந்த நாட்களை விளையாட்டிலும், வம்படிப் பேச்சிலும் வீணாகக் கழிக்க விரும்புவதில்லை. ஆகையால் எழுபது வயதை அடைந்த நான் அமைதியையும் தனிமையையும் காண விரும்புகிறேன்.
“என் வாழ்க்கையை நான் எனது எண்ணத்தின் படி வாழ முடியாவிட்டாலும் கூட, நான் வாழும் முறைக்கும் எனது அறநெறிகளுக்கும் இடையில் அதிகமான வித்தியாசம் இருப்பதை நான் விரும்பவில்லை.
“என்னுடைய இந்த நோக்கத்தை நான் வெளிப்படையாகக் கூறினால் எல்லோரும் என்னிடம் கெஞ்சிக் கூத்தாடி, மன்றாடி எனது லட்சியத்தைத் தடை செய்ய நினைப்பார்கள். அந்தத் தடை எனது குறிக்கோளைப் பலவீனப் படுத்து வதாகவும் அமையலாம்.”
“எனவே, என்னுடைய இந்தச் செயல்களால் உங்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், நீங்கள், குறிப்பாக, நீ என்னை மன்னிக்க வேண்டும். நான் துறவு போவதை நீங்கள் சந்தோஷத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். எங்கும் என்னைத் தேட வேண்டாம், என் மேல் எந்த விதமான குற்றங்களையும் கூற வேண்டாம்.”
“நான் உங்களைத் துறந்து போவதால், உங்கள்மீது எனக்கு எந்தவிதக் கோபமும் இல்லை நான் எந்தக் குறிக்கோளோடு, கண்ணோட்டத்தோடு உலகத்தைப் பார்க்கிறேனோ, அந்தப் பார்வையோடு நீங்கள் உலகத்தைக் காண முடியாது; புரிந்து கொள்ள முடியாது என்று எனக்குத் தெரியும்.”
“இதே காரணத்தால், நீ உனது வாழ்க்கைப் போக்கை மாற்றிக் கொள்ள முடியாது. இதற்காக, நீ எந்தத் தியாகமும் செய்ய முடியாது; அதைப் பற்றி உன்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதற்காக நான் உன்னைக் குற்றம் சாட்டமாட்டேன். ஆனால், நாம் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து முப்பத்தைந்து ஆண்டுகளை நன்றியுணர்வோடும், அன்புணர்வோடும் நினைவு கூர்கிறேன்.”
“உனது வாழ்க்கையின் படி. நீ என்றுடன் உனது பணிகளை மிகவும் உறதியாக நிறைவேற்றிய வாழ்க்கையின் தொடக்கக் காலத்தையும் நான் மறக்க முடியாது. உன்னால் முடிந்ததை எல்லாம் நீ அப்போது என்னுடன் உலகத்துக்குச் செய்தாய். அதை எவ்வளவு புகழ்ந்தாலும், போற்றினாலும் தகும்.”
“ஆனால், வாழ்க்கையின் பிற்பகுதியில், கடந்த பதினைந்து ஆண்டுகளாய் நம் இருவருக்குள் அதிக வேற்றுமை ஏற்பட்டு விட்டது. அதற்குத் தவறு என்னுடையது என்று கூற முடியாது. ஏனெனில், நான் எனக்காகவோ, மற்றவர்களுக்காகவோ மாறவில்லை. எனது இயற்கை உணர்ச்சிகளில் ஏற்படும் மாறுதல்களை என்னால் தடுக்க முடியாது. நீ என்னோடு, என்னைப் போல மாறவில்லையே என்று உன்னைக் குறை கூறவும் விரும்பவில்லை நான்.”
அதற்குப் பதிலாக, நான் உனக்கு நன்றி கூறுகின்றேன். உன்னை அன்புடன் நினைவு கூருகின்றேன். நீ எனக்கு அன்போடு வழங்கியவற்றை நான் ஒரு போதும் மறக்கவோ, மறுக்கவோ மாட்டேன்.”
அன்புள்ள சோன்யா, இறுதி வணக்கம்.
உன் அன்புள்ள
லியோ டால்ஸ்டாய்
இதே போன்ற இன்னொரு கடிதத்தையும் 1910-ஆம் ஆண்டில் டால்ஸ்டாய் தனது இல்லத்தரசிக்கு எழுதினார். வீட்டைத் துறந்து வெளியேறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னால், அவர் தனது எண்ணத்தை அவரது நம்பிக்கைக்குரிய ஒரு குடியானவ நண்பருக்கும் தெரிவித்தார். அந்த நண்பரின் பெயர், மைக்கேல் நோவி கோப் என்பதாகும். அந்த நண்பருக்கும் கீழ்க் கண்டவாறு ஒரு கடிதம் எழுதினார்.
“அன்புள்ள நண்ப,
“அன்று நான் தங்களிடம் கூறியது குறித்து ஒரு வேண்டுகோள். உண்மையாகவே நான் உம்மிடம் வந்தால் எனக்குத் தவறாமல் ஒரு குடிசையைத் தங்கியிருக்கத் தருவாயா? அக் குடிசை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் தருவாயா நண்பா?”
இன்னொரு விஷயம், உனக்கு ஏதாவது நான் தந்தி அனுப்பும் நிலை வருமானால், என் பெயரை எழுதாமல், ‘டி, நிகோலீப்’ என்று குறிப்பிட்டே அனுப்புவேன். நினைவு வைத்துக் கொள். இந்த பெயர் நம் இருவருக்கு மட்டும் தெரியுமே தவிர, வேறு யாருக்கும் இது தெரியக்கூடாது.”
டால்ஸ்டாய் 1910-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பத்தாம் நாள் தனது வீட்டை விட்டு வெளியேறுவது என்று முடிவு செய்து விட்டார். அன்று விடியலில் எழுந்தார். பயணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவர் அவசரமாகச் செய்தார். முதலில் தனது மனைவிக்கு ஒரு கடிதத்தை வரைந்தார்.
“சோன்யா, நான் உன்னை விட்டுப் பிரிவதால் உனக்கு வேதனையாகவே இருக்கும்” என்பதை நினைக்க எனக்குக் கவலையாகவே இருக்கிறது. என் செய்ய? இதற்கு மாறாக என்னணவோ, நம்பவோ, செய்யவோ என்னால் ஏதும் முடியவில்லை. வீட்டில் எனது நிலை பொறுக்க முடியாததாகிவிட்டது.”
“இதுவரை வாழ்ந்து வந்த போக வாழ்க்கையை நான் இனியும் பின்பற்ற இயலாது. என்னை யொத்த வயதுடைய கிழவர்கள், சாதாரணமாகச் செய்யக் கூடிய அதே காரியத்தை நானும் செய்கிறேன். அதாவது, உலக வாழ்க்கையை விடுத்து நான் விலகிப் போகிறேன் எனது மீதி நாட்களை அமைதியாகக் கழிக்க எண்ணுகிறேன்.”
“அன்பு கூர்ந்து எனது கருத்தைத் தெளிவாகப் புரிந்து கொள். நான் இருக்கும் இடம் தெரிந்தாலும், நீ என்னிடம் எக் காரணம் கொண்டும் வர வேண்டாம். அப்படி நீ வந்தால், உனக்கும் எனக்கும் உள்ள ஒட்டும் உறவும் மிக இழிவானதாகி விடும். எனது லட்சியத்தை எவருக்காகவும் நான் விட்டுக் கொடுக்க இணங்கேன்.”
‘என்னோடு மனைவியாக, இல்லத்தரசியாக, முறையாக நாற்பத்தைந்து ஆண்டுகள் வாழ்க்கையை நடத்தியதற்காக நான் நன்றி கூறிக் கொள்கிறேன். ஏதாவது தவறுகள் இருந்தால் மன்னித்துவிடு. அதனைப் போலவே என்னிடம் குறைகள் ஏதாவது கண்டிருந்தால் அக்குறைகளை நீயும் மறந்து மன்னித்துவிடு. நானும் மறந்து மன்னித்து விடுகிறேன்.”
“என்னைப் பிரிந்த பின் ஏற்படுகின்ற சூழ்நிலைய மகிழ்ச்சியோடு ஏற்குமாறு நான் உனக்கு யோசனை கூறுகிறேன். எனக்குக் கடிதம் எழுத எண்ணினால் சேஷாவிடம் கூறு. நான் இருக்கும் இடம் அவளுக்குத் தெரியும். ஆனால்; அதை அவள் உன்னிடம் கூறமாட்டாள்.”
-டால்ஸ்டாய்
பின் குறிப்பு:
“என் கைப் பிரதிகளையும், மற்றப் பொருள்களையும் திரட்டி அனுப்பும்படி சேஷாவிடம் கூறியுள்ளேன்.
டால்ஸ்டாய் தான் எழுதியக் கடிதத்தை முடித்தார். பிறகு அவரது மகள் சேஷாவையும், நண்பர் டாக்டர் மெகோவிட்ஸ்கியையும் எழுப்பினார். மூவரும் துணி மூட்டைகளைக் கட்டிக் கொண்டார்கள். பிறகு, அவரும் டாக்டரும் ஒரு வண்டியில் ஏறினார்கள். சைகீனோ என்ற ரயில்வண்டி நிலையத்துக்குச் சென்றார்கள். தங்களைப் பின் தொடர்ந்து யாராவது வருகிறார்களோ என்ற அச்சத்துடன் ரயில் ஏறினார்கள்.
டால்ஸ்டாய் உள்ளம் இப்போதுதான் அமைதி பெற்றது. துறவு நியாயமான ஒரு செயலே என்பதை உணர்ந்தார். அதே நேரத்தில், அவருக்குத் தனது மனைவி மீது இரக்கம் சுரந்தது.
அன்று மாலை டால்ஸ்டாய் ஆஷ்டின் என்ற மடத்தைச் சேர்ந்தார். அங்கு அவருடைய தங்கை மேரி பெண்துறவியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தாள் தமையனை தங்கை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். பிறகு அங்கிருந்தும் அவர் புறப்பட்டு விட்டார்.
★
காந்தியடிகளின் வழிகாட்டி மறைந்தார்!
லியோ டால்ஸ்டாய், ஆஷ்டின் மடத்தை விட்டுப் புறப்பட்டார்! எங்கே போகிறோம் என்று தெரியாமல், ‘சித்தம் போக்கு சிவம் போக்கு’ என்பார்கள், அது போல மனம் போனவாறு ரயில் வண்டியில் ஏறிச் சென்று கொண்டிருந்தார்.
பயணம் போகும் போதே அவரது உடல் நிலை சீர்குலைத்து. மருத்துவ சிகிச்சைகள் பெறவும் ரயில் வண்டியில் வசதிகள் இல்லை. காற்றும் மழையும் கலந்து விஷக் காற்றாக வீசிக் கொண்டிருந்ததால், அவருக்குக் குளிரும், காய்ச்சலும் ஏற்பட்டது.
தந்தை படும் நோயின் முனகலையும், வேதனையையும் பார்த்த அவரது மகள் சேஷாவும் நண்பர் டாக்டர் மெகோவிட்ஸ்கியும் மனம் பொறாமல், ஏதாவது ஒரு நாட்டு மருத்துவமாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு சிறிய ரயில்வே நிலையத்திலே திடீரென்று இறங்கி விட்டார்கள். அந்த ரயில்வே நிலைய அதிகாரி டால்ஸ்டாயையும் மற்றவர்களையும் தனது அறையில் தங்குவதற்கு அனுமதி அளித்து வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்.
தனது குடும்பத்தை விட்டு வெளியேறிய மகான் டால்ஸ்டாயை, துறவு பூண்டு மக்கள் தொண்டாற்றப் புறப்பட்டு விட்ட ஓர் அரிய ஞானியை உலகப் பத்திரிக்கைகள் எல்லாமே பாராட்டியும் புகழ்ந்தும் வியந்தும் சில ஏடுகள் இகழ்ந்தும் கூட செய்திகளைப் பரபரப்புடன் வெளியிட்டன. மனைவி மக்களை நட்டாற்றில் நழுவ விட்டு வெளியேறிய பைத்தியக்காரன் டால்ஸ்டாய் என்று சில பத்திரிகைகள் விமரிசனம் செய்தன. ஆனால் அதே ஏடுகள் கூட, தம்மையுமறியாமல் வயது முதிர்ந்த ஒரு ஞானி, மக்கள் மீது அளவிலா அன்பு வைத்துள்ள ஒரு மனிதாபிமானி, நல்லதொரு இலக்கியச் சீமான், விலைமதிக்க முடியாத அறிவாபி மானத்தால் ஓர் அரக்க ஆட்சியை எதிர்த்த மாவீரன், உடல் நலிந்த நிலையில், தனது மகளுடனும், நண்பருடனும் துறவு பூண்டு விட்டதை எண்ணி அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்ததாகச் செய்திகளை வெளியிட்டிருந்தன. இந்த நிலையிலும், எந்தக் கொள்கைகளுக்காக தனது குடும்பத்தைத் துறந்தாரோ அக் கொள்கைகளை அந்தப் பத்திரிகைகள் பாராட்டிப் போற்றி வரவேற்று வாழ்த்தின.
போற்றுவார் போற்றுவர், புழுதி வாரித்துாற்றினும் தூற்றுவர் என்ற உலகியல் தன்மைகளுக்கு தகுந்தவாறு, அவர் எல்லாவற்றையும் மன நிறைவுடன் ஏற்றுக் கொண்டார்.
அவரது மகளும் நண்பரும் அவருடனிருந்து உடல் எல்லா வசதிகளையும் கவனமாகச் செய்வது மட்டுமன்று, அவரது உடல் நிலையின் தன்மைகளை உடனுக்குடன் கண்காணித்து வந்தார்கள்.
மூதறிஞர் டால்ஸ்டாய் தனது உடல் நிலை மோசமாகி வருவதை தன்னுடனிருக்கும் மகளுக்கும் நண்பருக்கும் வெளிப்படையாகக் கூறவில்லை. அதற்கு அடையாளமாக அவர் தனக்கிருந்த உணர்வுகளுக்கு ஏற்றவாறு மென்மையாகப் பேசிக் கொண்டே இருந்தார்.
உலக நாடுகளில் இருந்தும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் இருந்தும் நாள்தோறும் தனக்கு வந்து கொண்டிருந்த கடிதங்களைப் படிக்கச் சொல்லிக்கேட்டுக் கொண்டிருக்கும் அவரது பழக்கம் சில நாட்களாக இல்லாததால் மனவேதனையடைந்தார்.
ஞான மகான் லியோ டால்ஸ்டாய், தான் இறக்கும் வரை, ஏதோ ஒன்றிரண்டு அபாய, உணர்ச்சியற்ற நாட்கள் போக, மற்ற நாட்கள் வரை, தனது நாட் குறிப்பு எழுதும் பழக்கத்தை தவறாமல் செய்து வந்தார்.
“உலகில் இருப்பவையாவும், இயங்குபவை எல்லாமே நன்மைக்காகவே இருக்கின்றன. இதனால், எனக்கும் நன்மை, மற்ற எல்லாருக்கும் நன்மை” என்ற தத்துவச் சொற்றொடர்களைத் தனது நாட்குறிப்பின் இறுதி நாள் அவர் எழுதி வைத்துக் கொண்டு இருக்கும்போதே அவரது கை பற்றியிருந்த எழுதுகோல் ஒரு புறமும், நாட்குறிப்பு மற்றோர் புறமுமாக நழுவி விழுந்துகிடந்தன. ஆம்; ஞானி டால்ஸ்டாய் உயிர் அவரை அறியாமலேயே பிரிந்து சென்றுவிட்டது!
லியோ டால்ஸ்டாய் என்ற நிலா மறைந்து விட்டது. ஆனால் அவரது பொது மக்கள் தொண்டு என்ற ஒளி இன்றும் உலகில் பரவிக் கொண்டே இருளில் செல்லும் வாழ்க்கைப் பயணிக்கு வழிகாட்டிக் கொண்டே இருக்கின்றது.
‘நல்லவனாக இரு’, என்று அவரைக் காணவந்த எல்லாருக்கும் ஒரு வேத வாக்காக டால்ஸ்டாய் கூறினார்! ஊருக்கு உபதேசியாக இல்லாமல், தனது வாழ்க்கையில் மிக மிக நல்லவராகவே வாழ்ந்து காட்டிய ஞான சூரியனாக இன்றும் உலகிடையே அவர் பவனி வந்து கொண்டிருக்கின்றார்.
‘வல்லவனாக இரு’ என்று அவரைப் பார்க்க வந்த நல்லவர்களுக்கு எல்லாம் வேத மொழியாகச் சொன்னார்! அதற்கு எடுத்துக்காட்டாக டால்ஸ்டாய் போர்முனை வீரனாகப் படை செலுத்தும் தளபதியாக வாழ்ந்து காட்டி, போர் முனை ஊழல்களை, அதிகாரிகளது ஆணவப் போக்குகளை எதிர்த்ததோடு நிற்காமல், சிப்பாய்களது நியாயத்திற்கான புயல்போல உருவெடுத்து வாதாடி அக்ரமங்களை வீழ்த்தினார்!
ருஷ்ய நாட்டு ஜார் மன்னனது பரம்பரைக் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து கரை மீறா ஆற்றுப் பிரவாகம் போலப் பெருக்கெடுத்துப் போராடினார். வெள்ளத்தின் சக்தியை மன்னன் உணருமாறு செய்தாரே ஒழிய ஜார் ஆட்சியை எதிர்த்து மக்களையும் தன்னையும் அழித்துக் கொள்ளாமல், அகிம்சைத் தத்துவத்தோடும் அறவழிப் போராட்ட உணர்வோடும் போராடினார்!
ருஷ்யாவிலே இருவேறு பஞ்சங்கள் ஏற்பட்டபோது, ஓர் ஆட்சி செய்ய வேண்டிய பஞ்ச நிவாரணப் பணிகளை தானிய வகைகளைத் திரட்டியும், லட்சக் கணக்கான பணம் வசூலித்தும், தனது குடும்பத்தையும் அதில் ஈடுபட வைத்து செயற்கரிய பணிகளை எல்லாம் செய்து வெற்றி பெற்றார் டால்ஸ்டாய்!
உலகம் போற்றும் தனது நூல்களை, அதன் விற்பனைத் தொகைகளை தனது மனைவி மக்களுக்கே என்று சேர்த்து வைக்காமல், அவற்றின் மூலமாக வரும் வருமானம் அனைத்தையும் ஏழை மக்களின் எளிய வாழ்க்கையின் உயர்வுக்காகவே எழுதி வைத்தார்! இந்த அறவழி உணர்வுகளுக்குத் தனது குடும்பத்தையே பலி கொடுத்துவிட்டார். அத்தகைய ஏழை பங்காளர் மறைந்தார் என்றதும் உலக நாடுகள் எல்லாம் அறிவுக் கண்ணீர்த் துளிகளை உகுத்தன.
இந்திய விடுதலையின் தேசியத் தந்தை என்று இன்றும் உலகத்தவரால் போற்றப்படும் ஞான மகான் காந்தியண்ணல், டால்ஸ்டாய் என்ற மனித நேய ஞானியை, அகிம்சா அறத்தை முதன் முதல் உலகுக்கு ஈந்து அதற்கோர் மரியாதையை, மக்களிடையே உருவாக்கிக் காட்டி மதிப்பும் மரியாதையும் பெற்ற மாவீரன் டால்ஸ்டாயை, தனது குருநாதர் என்று கூறிப் போற்றி அவரது அறவுண்ர்ச்சிச் சுவடுகளிலே வழி நடந்து வெற்றியும் பெற்று வாழ்ந்து காட்டின அத்தகைய அகிம்சா மூர்த்தி காந்தியாரின் குருநாதரான டால்ஸ்டாய் மறைந்து விட்டார்.
உலகம் இன்றும் அவரை ஒரு பெரிய இலக்கிய ஆசிரியராக மதித்துப் போற்றி வருகின்றது. அவருடைய எழுத்துக்களாலான இலக்கியச் செல்வங்கள் அறிவுலகின் முடிகளாகச் சிறந்து விளங்குகின்றன. அவற்றுக்கு உலகம் வணக்கம் செலுத்துகிறது காலத்தையும் தாண்டி லியோ டால்ஸ்டாயிக்கு மதிப்பும் மரியாதையும் நிலைத்து நிற்கும்.
இலக்கியப் பணி அவரது புகழுக்குரிய சிறந்த படிக்கட்டுகளாக அமைந்தது! ஆனால், அந்த மகானின் மனித நேய ஞானத்தின் மக்கட் பணிதான் உலகப் புகழுக்குரிய வைர முடியாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.
டால்ஸ்டாய் கருத்துக்கள் வலியவர்களையும். வளமானவர்களையும், ஏழைகள் எளியவர்களையும், அபலைகள் ஆதரவற்றவர்களையும், அரசியல் அறிஞர்களையும் சமுதாயச் சீர்த்திருந்த வாதிகளையும், கற்றறிந்தவர்களையும் கல்லாதவர்களையும் கவர்ந்தது என்பதில் வியப்பில்லை. டால்ஸ்டாய் அகிம்சை வழிக்கு வலுவூட்டினார். மனிதகுலம் வாழும் வரை அவருடைய அகிம்சையின் அறவுணர்ச்சி வாழ்ந்து கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
★★★
கருத்துகள்
கருத்துரையிடுக