சங்ககிரிக் கோட்டையின் மர்மம்
சுட்டி கதைகள்
Back
சங்ககிரிக் கோட்டையின் மர்மம்
கவிஞர் பெரியசாமித்தூரன்
சங்ககிரிக் கோட்டையின் மர்மம்
பெ. தூரன்
M
THE MACMILLAN COMPANY OF INDIA LIMITED
Madras Bombay Calcutta Delhi
Associate companies throughout the world
Copyright © by P. Thooran, 1978
First printed 1978
Rs 3.75
PUBLISHED BY S G WASASNI FOR THE MACMILLAN COMPANY OF INDIA LTD AND PRINTED BY B S BALDREY at MACMILLAN INDIA PRESS, MADRAS 600002
முன்னுரை
இந்த நூலுக்கு முன்னுரை தேவையா? என்னையே நான் கேட்டுக்கொள்கின்றேன்.
சில உண்மைகளையும், நிகழ்ச்சிகளையும் புரிந்து கொள்வதற்கு முன்னுரை தேவைப்படுகிறது. அதனால் எழுதுகின்றேன்.
துணிச்சலும் செயல்திறனும் கொண்ட கதைகள் (Adventure Starties) நம் இளைஞர்களுக்கு நிறைய வேண்டும். நூற்றுக்கணக்காக வேண்டும்.
தங்கள் சொந்த அறிவுத் திறமையைப் பயன்படுத்தி அவர்களே பல அரிய செயல்கள் செய்வதை எடுத்துச் காட்டினால் இளம் வயதினர் உற்சாகங்கொண்டு அந்த வழியைத் தன்னம்பிக்கையோடு பின்பற்றுவார்கள்.
பன்னிரண்டு, பதிமூன்று வயதாகி இருக்கும். அப்பொழுதும் பெற்றோர்கள் “அவனுக்கு அல்லது அவளுக்கு என்ன தெரியும்? - குழந்தை” என்று சொல்லுவார்கள். தங்கள் முயற்சிகளிலும் யோசனைகளிலும் அவர்கள் பங்கெடுத்துக் கொள்வதை இவ்வாறு புறக்கணிப்பதால் இளைஞர்கள் தன்னம்பிக்கை பெறுகின்ற வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள்; தாழ்வு மனப்பான்மை மேலோங்க இது காரணமாகின்றது.
இந்த நிலைமை இக்காலத்திலே சிறிதுசிறிதாக மாறி வருகின்றது. இதற்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில் கதைகள் எழுத வேண்டுமென்பது என்னுடைய ஆவல். நான் கொண்டுள்ள ஆவலால் உந்தப்பட்டு எழுதும் நீண்ட கதைகளிலே இது இரண்டாவதாகும். கொல்லிமலைக் குள்ளன் என்ற முதற்கதையில் வருகின்ற அதே தங்கமணி, சுந்தரம், கண்ணகி ஆகிய மூவரும் இக்கதையிலும் முக்கிய பாத்திரங்களாக வருகின்றனர். தங்கமணி அன்புடன் வளர்த்து வருகின்ற ஜின்கா என்ற குரங்கும். இக்கதையிலும் வந்து பல சாகசங்களைச் செய்கின்றது. தங்கமணிக்கு ஜின்கா எப்படிக் கிடைத்தது? அதை அவன் எவ்வாறு வளர்த்தான்? இவற்றைப் பற்றியெல்லாம் முதற் கதையிலே விரிவாக எழுதியிருக்கிறேன். இணை பிரியாத இந்த நால்வரையும் வைத்து மேலும் பல கதைகள் எழுத எண்ணியுள்ளேன்.
திப்புசுல்தான் கட்டிய கோட்டையை இன்றும் சங்ககிரியில் கண்டு மகிழலாம். அவனுடைய தேசபக்திக்கும், வீரத்திற்கும், முன்யோசனைக்கும் இதுவும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
இனிக் கதையைப் படியுங்கள். இதற்குமேல் நீண்ட முன்னுரை என்றால் உங்களுக்கும் பிடிக்காது. ஜின்கா தன் திறமைகளைக் காட்டத் தயாராக இருக்கிறது. வேறு என்ன வேண்டும்?
கடைசியாக ஒரு வார்த்தை . இக்கதையை நூல் வடிவத்திலே அழகாக வெளிக்கொணர்ந்த மாக்மில்லன் கம்பெனியாருக்கு எனது நன்றி உரியது.
சென்னை
பெ. தூரன்
25-11-78
உள்ளடக்கம்
1. பகுதி 1
2. பகுதி 2
3. பகுதி 3
4. பகுதி 4
5. பகுதி 5
6. பகுதி 6
7. பகுதி 7
8. பகுதி 8
9. பகுதி 9
10. பகுதி 10
11. பகுதி 11
12. பகுதி 12
14. பகுதி 14
15. பகுதி 15
16. பகுதி 16
17. பகுதி 17
சங்ககிரிக் கோட்டையின்
மர்மம்
[1]
லீவு வந்தது!
'“இந்தத் தடவை நீங்கள் மூன்று பேரும் சங்ககிரியிலுள்ள பாட்டி வீட்டுக்குப் போகலாம்” என்றார் தங்கமணியின் தந்தையான வடிவேல். இவர் சென்னையிலே வேலை செய்யும் ஒரு தத்துவப் பேராசிரியர்.
“மாமா, வேண்டாம்” என்று வாய்விட்டுக் கத்திவிட்டான் சுந்தரம். இவன் கோடை விடுமுறையின் போது தன் மாமா வீட்டுக்கு வருவது வழக்கம். மதுரையில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறான்.
“ஆமாப்பா, பாட்டி வீடே வேண்டாம்” என்று சிணுங்கினாள் தங்கமணியின் தங்கை கண்ணகி. ஆறாம் வகுப்பில் படிக்கும் கண்ணகிக்கும் இப்பொழுது விடுமுறை.
தந்தை சிரித்துக் கொண்டே “ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?” என்று கேட்டார்.
“மாமா, உண்மையைச் சொல்லி விடுகிறேன். போன தடவை கோடை விடுமுறைக்குப் போனோமே அந்தப் பாட்டி படுபோர்” என்றான் சுந்தரம். “ஆமாப்பா, எங்களை எங்குமே பாட்டி தனியாகப் போக விடவே இல்லை. நாங்கள் என்ன சின்னக் குழந்தைகளா?” என்று தங்கமணி இடையிலே சொன்னான். தங்கமணிதான் எல்லாருக்கும் பெரியவன்; பத்தாம் வகுப்பில் படிக்கிறான்.
தந்தைக்கு விஷயம் விளங்கிவிட்டது, அவர், “அந்தப் பாட்டியைப் போல அல்ல இந்தப்பாட்டி. நீங்கள் கை கால்களை முரித்துக்கொண்டு வந்தாலும், ‘சின்னவயசிலே இப்படித்தான் இருக்கும்’ என்று சொல்லிவிட்டுக் கவலைப்பட மாட்டாள். ஆனால் வேண்டிய சிகிச்சையை உடனே கவனிப்பாள். இந்தப் பாட்டியின் போக்கே தனியாக இருக்கும்”. என்று அவர்களுக்கு உற்சாகம் வரும்படி பேசினார்.
“அப்பா, சங்ககிரியிலே என்னவெல்லாம் பார்க்கலாம்?” என்று ஆவலோடு கேட்டாள் கண்ணகி.
“அங்கே சங்ககிரி என்ற ஒரு மலை இருக்கிறது. அதிலே திப்புசுல்தான் கட்டிய கோட்டைச் சுவர்களும் உண்டு, அங்கே பல அதிசயங்களைக் காணலாம்” என்ற பதிலைக் கேட்டதும் மூவருக்கும் குஷி பிறந்து விட்டது.
“அப்பா, அங்கே கோட்டைக்குள் போக விடுவார்களா?” இது கண்ணகி.
“திப்புசுல்தான் கட்டிய கோட்டை என்றால் அங்கே சண்டை நடந்ததா?”-- இது தங்கமணி.
“அங்கே பீரங்கிகளெல்லாம் உண்டா?” --இது சுந்தரம்.
இப்படி மூவரும் பதிலுக்குக் காத்திராமல் ஒரே மூச்சில் பேசினார்கள்.
“மூன்று பேரும் ஒரே மூச்சில் கேட்டால் எப்படிப் பதில் சொல்வது? எல்லாம் அங்கே போய்த் தெரிந்து கொள்ளுங்கள்” என்று சுருக்கமாகப் பதில் கிடைத்தது. இவர்கள் இவ்வளவு உற்சாகமாகப் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜின்கா மேஜைமேல் தாவி நின்று ஜிங் ஜிங் என்று குதித்தது. அந்தக் குரங்கு அப்படிக் குதிப்பதால் தான் அதற்கு ஜின்கா என்ற பெயர் ஏற்பட்டது. தங்கமணி செல்லமாக வளர்த்து வருகின்ற குரங்கு அது. எத்தனையோ தீரச் செயல்களை அது புரியவல்லது.
பிறகு வழக்கம்போல தங்கமணியின் தோளில் ஏறி உட்கார்ந்துகொண்டு எல்லாரையும் கூர்ந்து கவனித்தது. தங்கமணி ஜின்காவை மிகுந்த பிரியத்தோடு தட்டிக் கொடுத்தான் அதற்கு அவன் பலவகையான உபயோகமான பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்திருந்தான். தங்கமணியின் குறிப்பறிந்து அதன்படி, நடப்பதில் ஜின்கா புகழ்பெற்றிருந்தது.
சங்ககிரிக்கு அடுத்த நாள் நீலகிரி எக்ஸ்பிரசில் போவதாக ஏற்பாடு ஆகியிருந்தது. அதற்கு வேண்டிய பயணச் சீட்டுகளும் முன்னாலே ரிசர்வ் செய்ததோடு சங்ககிரிப் பாட்டிக்கும் தகவல் எழுதிப் பதிலும் கிடைத்திருந்தது.
ஒரு மாதம் சங்ககிரியில் இருப்பதற்கான துணிமணிகளையும், சோப்பு, கண்ணாடி முதலியவற்றையும் எடுத்துப் பெட்டியிலே வைப்பதில் மூவரும் அடுத்த நாள் முழுவதும் ஈடுபட்டிருந்தார்கள்.
“கண்ணகி, உன்னுடைய பவுடர் டப்பாவை எடுத்து வைத்தாயா? அதில்லாமல் நீ வெளியே கிளம்ப மாட்டாயே?” என்று கேலியாகக் கேட்டான் சுந்தரம்.
“அதை வைக்க மறந்துவிட்டேன், நல்ல வேளை நீ ஞாபகப்படுத்தினாய்” என்று கூறிவிட்டு பவுடர் டப்பாவை எடுக்க ஓடினாள் கண்ணகி.
அவளையும் முந்திக் கொண்டு ஜின்கா தாவிக் குதித்து அந்த டப்பாவை எடுத்து வந்தது. வந்த அவசரத்தில் அது தடுக்கி விழுந்ததால் பவுடர் ஜின்காவின் முகத்திலும், உடம்பிலும் கொட்டிவிட்டது. பாதி டப்பா காலியாகிவிட்டது.
எல்லாம் ஜின்காவின் முகத்திலும் உடம்பிலும்தான் என்றால் கேட்கவேண்டுமா? அப்பொழுது ஜின்கா விநோதமாகக் காட்சி அளித்தது. அதைக் கண்டு மூவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
[2]
சங்ககிரிக்குப் பயணம்!
சென்னையிலிருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் சரியாக இரவு 8 மணிக்குக் கிளம்புகிறது. மூன்று பேரும் சரியாகக்கூட சாப்பிடவில்லை. “சாப்பிடக்கூட உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. இப்படிச் சரியாக சாப்பிடாமல் பாட்டி வீட்டில் இருக்கக்கூடாது. அங்கே சமத்தாக இருந்து நல்ல பெயர் வாங்கிவரவேணும்” என்று கண்ணகியின் தாய் அவர்கள் மூன்று பேரிடமும் சொன்னாள்.
“அத்தை, கண்ணகி அழாமல் இருந்தால் போதும். நல்ல பெயர் வாங்கி விடுவோம்” என்றான் சுந்தரம்.
“சரிதாண்டா, கோமாளி, நீ உன்னுடைய கோமாளிப் பேச்சையெல்லாம் பாட்டியிடம் காண்பிக்காமல் இருந்தால் போதும்” என்றாள் கண்ணகி.
கண்ணகியின் தாயார் இவர்கள் பேசுவதை ரசித்துக் கொண்டே தான் தயார் செய்து வைத்திருந்த தேன்குழல், முதலிய பலகாரங்களை ஒரு பெரிய டப்பாவில் போட்டுக் கொண்டிருந்தாள்.
“அத்தை, இந்த சங்ககிரிப் பாட்டிக்குப் பல் உண்டா?” என்று கேட்டாள் சுந்தரம்.
“முறுக்கெல்லாம் உங்களுக்குத்தான். பாட்டியை அந்தப் பலகாரம் பண்ணிக்கொடு, இந்தப் பலகாரம் பண்ணிக்கொடு என்று நீங்கள் தொந்தரவு செய்யக்கூடாது. அதற்காகத் தான் நானே நிறையச் செய்து வைத்திருக்கிறேன்” என்று பேச்சை முடிக்கு முன்னால் வெளியில் கார் சத்தம் கேட்டது. “மாமா, வந்துவிட்டார். உடனே புறப்பட வேண்டியதுதான்” என்றான் சுந்தரம்.
மூவரும் படுக்கை பெட்டி முதலிய சாமான்களைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். ஜின்கா பலகார டப்பாவை தூக்கிக் கொண்டு ஓடிற்று. தங்கமணி ஜின்காவை விட்டுப் பிரிய மாட்டான் ஆகையால், அதற்கும் பயணச்சீட்டு வாங்கி யிருந்தார்கள்.
மூவரும் ஜின்காவுடன் குதூகலமாகப் புறப்பட்டு அதிகாலையில் சங்ககிரியை அடைந்தார்கள். அங்கே அதிக நேரம் நீலகிரி எக்ஸ்பிரஸ் நிற்காதாகையால் வேகமாகச் சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டு ரயிலைவிட்டு இறங்கி னார்கள்.
பாட்டி வீட்டிலிருந்து ஒரு வேலையாள் ரயிலடிக்கு வந்து அவர்களைச் சந்தித்தான். மாட்டு வண்டியில் பாட்டி வீட்டுக்குச் சென்றது மூவருக்கும் புதிய அனுபவமாக இருந்தது.
“பெட்ரோல் இல்லை. டயர் இல்லை - கியர் இல்லை - எத்தனை செலவு மிச்சம்” என்று பாட்டுப் பாடத் தொடங்கினான் சுந்தரம்.
அதைக் கவனியாமல், “சுந்தரம் அங்கே பார் - எவ்வளவு பெரிய மலை - அதுதான் சங்ககிரியா?” என்று கூவினாள் கண்ணகி.
அது வரையிலும் அவர்கள் அந்த மலையைக் கவனிக்கவே இல்லை. மூவரும் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.
“பெரிய சங்கு போல இந்த மலை காட்சி அளிக்கிறது. அதனால்தான் இதற்குச் சங்ககிரி என்று பெயர் வந்ததோ?” என்று ஆலோசனையோடு கேட்டான் தங்கமணி. “சரி, சரி வந்தவுடன் உனது ஆராய்ச்சியிலே இறங்கிவிட்டாயா? உன்னுடைய ஜின்காவைக் கேட்டுப்பார். குரங்குக்குத்தான் மலையெல்லாம் தெரியும்” என்று சுந்தரம் கேலி செய்தான்.
“நீங்கள் இந்த ஊருக்கு இதுதான் முதல் தடவை வருகிறீர்களா? என்று வேலைக்காரன் வண்டியை ஓட்டிக் கொண்டே கேட்டான்.
“ஆமாம். உனக்கு இந்த மலைக்கு இப்படிப் பெயர் ஏற்பட்டதன் காரணம் தெரியுமா?” என்று தங்கமணி அவனைக் கேட்டான்.
“எனக்கும் தெரியாது. நான் புதிதாக வேலைக்கு வந்திருக்கிறேன்” என்றான் வண்டிக்காரன்.
மெதுவாக வண்டி பாட்டி வீட்டை அடைந்தது. பாட்டி வாசலிலேயே நின்று இவர்களை அன்புடன் வரவேற்றாள்.
[3]
பாட்டியின் வரவேற்பு!
அவர்கள் எதிர் பார்த்தது போல் பாட்டி தள்ளாத கிழவியாய் இருக்கவில்லை. விவசாயத்தில் பல ஆண்டுகள் ஈடுபட்டு உழைத்ததால் அவள் உடம்பு நல்ல வலிமையோடு இருந்தது. தலைமட்டும் நரைத்திருந்தது. வாயிலே பல் இல்லை. இருந்தாலும் அவள் ஆரோக்கியமாக இருந்தாள்.
“கண்ணுகளா, வாங்க” என்று கூறிக்கொண்டே அவள் அன்போடு எல்லாரையும் வரவேற்றாள். அவள் சிரிக்கும் போது அவளுடைய பொக்கை வாயைக் கண்டு மூவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். வந்தது முதற்கொண்டே அந்த வீட்டில் அவர்கள் விருப்பம்போலக் குஷியாக இருக்கலாம் என்று மூவரும் நினைக்கும்படி பாட்டி செய்துவிட்டாள்.“ கண்ணுகளா, முதல்லே பல்தேய்த்துக் கொண்டால் காப்பி தயாராக இருக்கிறது. காப்பி சாப்பிட்டுக் கொண்டே பேசுவோம்” என்றாள் பாட்டி. “கண்ணுகளா, அதோ அந்தக் கிணற்றில் வாளியை விட்டு ஜலம் இழுத்துக் கொள்ளுங்கள்” என்றாள் பாட்டி.
“கண்ணுப் பாட்டி, இங்கே குழாய் எல்லாம் இல்லையா” என்று கேட்டான் சுந்தரம்.
“அதென்னடா எனக்குக் கண்ணுப் பாட்டி என்று பெயர் போட்டு விட்டாய்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் பாட்டி.
“பாட்டி, நீங்கள் எங்களை அன்போடு கண்ணுகளா, கண்ணுகளா என்று இதற்குள் பலதடவை சொல்லிவிட்டீர்கள். நாங்களும் உங்களைக் கண்ணுப்பாட்டி என்றே அழைக்க ஆசைப்படுகிறோம்” என்றான் சுந்தரம்.
இதைக் கேட்டுப் பாட்டியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கிவிட்டது. “சரி அப்படியே கூப்பிடுங்கள்” என்று அவள் பதில் சொல்லிவிட்டு “குறும்புக்காரப் பயல்” என்று சுந்தரத்தின் கன்னத்தை மெதுவாகத் தட்டிக்கொடுத்தாள்.
“பாட்டி, உங்களுடைய பெயரை இங்கே வருகின்ற அவசரத்தில் அம்மாவிடம் கேட்க மறந்தே போனோம். இந்தக் கோமாளி வைத்த பெயர் எனக்கும் பிடிக்கிறது” என்றாள் கண்ணகி. தங்கமணி அங்குமிங்கும் ஆராயத் தொடங்கினன். சங்ககிரி அவனுடைய கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. திப்பு சுல்தான் கோட்டைச்சுவர்களைக் காணவேண்டும் என்று அவன் துடித்துக் கொண்டிருந்தான்.
ஜின்கா கிணற்றுச் சுவர் மேல் தாண்டிக் குதிப்பதும், பக்கத்தில் நின்றுகொண்டிருந்த எருமை மாட்டின்மேல் ஏறி விளையாடுவதுமாக இருந்தது.
எல்லாரும் காப்பி அருந்தத் தொடங்கினர். ஜின்காவும் தங்கமணி அருகில் அமர்ந்து கொண்டது.
“தங்கமணி, அந்தக் குரங்கு காப்பி குடிக்குமா?” என்று கேட்டாள் பாட்டி.
“இந்தக் குரங்கு என்னவெல்லாம் செய்யுமோ அவையெல்லாம் அந்த ஜின்கா குரங்கும் செய்யும்” என்று சுந்தரம் தங்கமணியைத் தொட்டுக் காட்டிக்கொண்டு பேசினான்.
எல்லாரும் கொல்லென்று சிரித்தார்கள். ஜின்கா மேஜை மேல் ஏறிநின்று ஜிங் ஜிங் என்று குதித்துத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது.
“நீங்கள் எல்லாம் வந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. இந்த வீட்டில் இப்படி சிரிப்பொலியைக் கேட்டு எத்தனையோ வருஷம் ஆகிவிட்டது. குழந்தைகள் எல்லாம் இப்படித் தான் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கவேணும்' என்றாள் பாட்டி.
[4]
தங்கமணியின் ஆர்வம் !
பாட்டிக்கு ஒரே மகன்தான் உண்டு. அந்த மகனும் உத்தியோகம் பார்ப்பதற்காக பம்பாய் சென்று விட்டார்.
அவர் தம் குடும்பத்தோடு இங்கு வந்து தங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது அவருக்கு விடுமுறையே கிடைப்பதில்லையாம். பாட்டி தனியாகவே விவசாயம் செய்து கொண்டிருக்கிறாள். அன்றும் அதற்கு அடுத்த ஐந்து நாளும் மூவரும் கண்ணுப் பாட்டியின் விவசாயப் பண்ணைக்குப் போய் அங்கு நடக்கின்ற வேலைகளையெல்லாம் ஆச்சரியத்தோடு கவனித்தார்கள், அதுவே அவர்களுக்குப் புதிய அனுபவமாக இருந்தது. விவசாயப் பண்ணையை அவர்கள் முன்பு பார்த்ததில்லை.
ஆனால் தங்கமணியின் ஆர்வமெல்லாம் சங்ககிரி மலையைப் பார்க்க வேண்டும் என்பதிலேயே இருந்தது. பண்ணையில் வேலை செய்யும் ஒவ்வொருவரையும் தங்கமணி அந்த மலையைப் பற்றியும் அங்குள்ள திப்புசுல்தான் கோட்டையைப் பற்றியும் பல கேள்விகள் கேட்டான்.
அவர்களிடமிருந்து அவன் தெரிந்து கொண்ட செய்திகள் அடுத்த பகுதியில் சுருக்கமாகச் சொல்லப்படுகின்றன.
[5]
திப்புசுல்தான் கோட்டை!
திப்புசுல்தான் கோட்டை என்பது திப்புவின் காலத்தில் கட்டியது. கோட்டையின் மதில் சுவர்களை இன்றும் போய்ப் பார்க்கலாம். அந்த மலையில் எந்தெந்த இடத்தில் பகைவர்கள் சுலபமாக ஏற முடியுமோ அங்கெல்லாம் பெரிய பெரிய மதில் சுவர்களை திப்புசுல்தான் கட்டி வைத்திருந்தான். பெரிய பெரிய கல்லுகளையெல்லாம் ஒழுங்காக அடுக்கி வைத்து அந்தக் கோட்டைச்சுவர்களைக் கட்டியதே ஓர் ஆச்சரியமாக இருக்கும். மேலே பீரங்கி வைத்துச் சுடும் படியான கொத்தளங்களும் உண்டு. ஆரஞ்சுப் பழம் அளவில் உள்ள பீரங்கிக் குண்டுகளை இன்றுகூட அங்கே காணலாம். மேலே தானியக் கிடங்குகளும் பகைவர்களை அடைத்து வைக்கும் இருட்டறைகளும் இருக்கின்றன. உச்சி வரையிலும் போவதற்கு வேண்டியவாறு அங்கங்கே படிகள் இருக்கின்றன. மலை ஏறும்போது பாதி வழியில் ஒரு பெரிய குகை உண்டு. அதற்குள் யாருமே போகப்பயப்படு வார்கள். உள்ளே ஒரே இருட்டாக இருப்பதோடு பெரிய பெரிய கருவண்டுகள் இருக்குமாம். அவை கொட்டினால் உயிருக்கே ஆபத்தாம். அந்தக் குகை எங்கு போய் முடிகின்றது என்பதை யாரும் இதுவரை ஆராய்ந்து பார்க்கவில்லை. ஆனால் அது வெகு தாரம் செல்லுகின்றதாம். பகைவர்கள் கோட்டையைத் தாக்கும் போது அவர்கள் வெற்றிபெற்று விடுவார்கள் என்று தோன்றினால் திப்புசுல்தானோ அல்லது அவனுடைய முக்கியமான தளபதிகளோ அந்தக் குகை வழியாக வெளியே தப்பிச் சென்று விடுவார்களாம். அந்தக் குகைக்குள்ளேதான் திப்புசுல்தான் ஏராளமான தங்கக் காசுகளையும் நகைகளையும் மறைத்து வைத்திருப்பதாக எல்லாரும் பேசிக் கொள்வார்கள். அந்தப் பக்கத்தில் யாராவது எதிர்த்து வந்தால் அவர்களோடு போர் செய்ய வீரர்களைத் திரட்டப் பணம் வேண்டுமல்லவா? அதற்காக சுல்தான் முன் ஜாக்கிரதையாக அங்கே வைத்திருக்கிறானாம்.. ஆனால் திப்புசுல்தான் மைசூரிலிருக்கும் ஸ்ரீரங்கபட்டணத்திலே ஆங்கிலேயர்களோடு சண்டையிட்டு அதிலே இறந்து! போன பிறகு இந்தக் கோட்டைக்கு இருந்த பெருமை யெல்லாம் போய் விட்டது. அவன் மறைத்து வைத்திருந்த புதையலைக் கண்டுபிடிக்க எத்தனையோபேர் முயற்சி செய்தும் யாருக்கும் அது கிடைக்கவில்லை.
இந்த விவரங்களையெல்லாம் ஒன்று விடாமல் தங்கமணி தன் நாட் குறிப்பில் எழுதி வைத்துக்கொண்டான். இவற்றைச் சேகரிக்கப் பலபேரிடமிருந்து அவன் கேட்கும் போது ஏதோ துப்பறியும் நிபுணனைப் போல ஜின்கா பக்கத்திலிருந்து கவனமாகக் கேட்கும். தங்கமணியின் முகத்தையும் அவனோடு பேசியவர்களுடைய முகத்தையும் மாறிமாறி அது
உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தது. அப்படி அது பார்ப்பதைத் தங்கமணி மனத்திற்குள்ளாகவே நன்கு ரசித்துக் கொண்டிருந்தான். ஆனால் அந்த வண்டிக்காரனும் எப்படியாவது கூடவே இருந்து இவற்றையெல்லாம் கேட்பதைத்தான் அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு இதில் ஏன் இவ்வளவு அக்கறை? ஒரு சமயம் கிராமப்புற மக்கள் இப்படித்தான் இருப்பார்களோ? “வண்டிக்காரா, நீ போய் உன் வேலையைக் கவனி” என்று தங்கமணி ஒரு சமயம் சொன்னான்.
“எனக்கு இன்றைக்கு வேலையில்லை - எனக்கும் கதை கேட்பதற்கு ஆசையாக இருக்கிறது” என்று அந்த வண்டிக்காரன் பணிவோடும் கெஞ்சுவது போலவும் பதில் அளித்தான்.
“ஏன், நீ இந்த ஊருக்குப் புதிதா? இந்த ஊர்க்காரனாக இருந்தால் முன்பே இந்த விவரமெல்லாம் தெரிந்திருக்குமே?” என்று தங்கமணி திடீரென்று கேட்டான்.
வண்டிக்காரன் பதில் சொல்வதற்கு முன்னால் யாரோ ஒருவன் “ஆமாம், அவன் புதியவன்தான். இந்தப் பக்கத்து ஆளே இல்லை. கொஞ்ச நாளுக்கு முன்புதான் இங்கு வேலைக்கு வந்திருக்கின்றான். கதை கேட்பதிலே அவனுக்கு ரொம்ப ஆசை. எல்லாருக்கும் அப்படித்தான்” என்று தெரிவித்தான்.
[6]
கலந்துரையாடல்!
“மலைமேல் ஏறுவதற்கு முன்னால் சங்ககிரியைச் சுற்றி ஆராய்வது நல்லது” என்று தங்கமணி ஒரு நாள் இரவு மற்றவர்களிடம் சொன்னான். “ஏன்? குகையின் ரகசியப் பாதையைப் பற்றி முதலில் தெரிய வேணுமோ?” என்று கேட்டான் சுந்தரம்.
“எனக்கென்னவோ அப்படி ஒரு ரகசியப் பாதை இருக்குமென்றே தோன்றவில்லை. இருந்தாலும் சுற்றிப்பார்ப்பது நல்லது” என்றான் தங்கமணி.
“சரி, ஷெர்லக் ஹோம்ஸ் வார்த்தைக்கு அப்பீல் இல்லை. நீ பிடித்தால் ஜின்கா பிடிதானே” என்றான் சுந்தரம்.
“என்னடா, குரங்குப் பிடி என்ற சொல்கிறாய்?” என்று கோபித்துக் கொண்டாள் கண்ணகி.
“அம்மா, கண்ணகி உனக்குக் கோபம் வந்தால் உலகமே தீப்பட்டு அழிந்து போகுமே - கொஞ்சம் கோபத்தைத் தணித்துக் கொள்” என்று கூறி நகைத்தான் சுந்தரம்.
இவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு ரசித்துக் கொண்டே கண்ணுப்பாட்டி அவர்களிடம் வந்தாள்.
“நாளைக்கு கிரிவலம் வரப் போகிறோம்” என்று முந்திக் கொண்டான் சுந்தரம்.
“அப்படியா? சங்ககிரி மலையைச் சுற்றி வருவதென்றால் ரொம்ப தூரம் நடக்க வேண்டுமே - வழியும் சரியாக இராது வேண்டுமானால் காட்டு மாரியம்மன் கோயில்வரை போய் வரலாம்” என்றாள் பாட்டி.
“காட்டு மாரியம்மனா? அங்கே ஏதாவது விசேஷம் உண்டா?” என்று ஆவலோடு கேட்டான் தங்கமணி.
“அந்தக் கோயிலைப் பற்றி என்ன வெல்லாமோ சொல்லுவார்கள். அதற்குள்ளே ஒரு குகை இருக்கிறதாம். அந்தக் குகைக்கும் சங்ககிரி மலைமேலுள்ள குகைக்கும் வழி இருக்கிறதாம். ஆனால் இதை யெல்லாம் யாரும் பார்த்ததில்லை” என்றாள் பாட்டி. உடனே தங்கமணிக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது. “கண்னுப்பாட்டி, நாளைக்கே அந்தக் கோயிலைப் பார்க்கவேனும்” என்று தங்கமணி உற்சாகத்தோடு சொன்ஞன்.
“ஆமாம் பாட்டி நாங்கள் மூன்று பேரும் போகவேனும்” என்று கூவினாள் கண்ணகி.
“ஜின்காவை மறந்துவிட்டாயா? அது இல்லாமல் உன் அண்ணன் அசையமாட்டானே?” என்றான் சுந்தரம்.
“சரிதாண்டா, கோமாளி, அண்ணன் வந்தால் . . . .” என்று அவள் முடிப்பதற்கு முன்பே “தம்பியும் வரும்” என்று நகைத்தான் சுந்தரம்.
[7]
காட்டு மாரியம்மன் கோயில்!
அடுத்த நாள் மாலையில் வெய்யில் சற்றுக் குறைந்ததும் காட்டு மாரியம்மன் கோவிலைப் பார்ப்பதென்று ஏற்பாடாயிற்று.
அதன்படி மறுநாள் மாலை மூன்று மணிக்கே கிளம்பி விட்டார்கள். “சிற்றுண்டியை அங்கேயே சாப்பிட்டுக் கொள்கிறோம். அங்கே சுத்தமான தண்ணிர் கிடைக்குமா?” என்று தங்கமணி பாட்டியிடம் கேட்டான்.
“அங்கே நல்ல ஒடை ஒன்று ஒடுகிறது. அதில் ஒடும் தண்ணிரைக் குடிப்பதால் கெடுதல் வராது” என்ருள் பாட்டி.
சிற்றுண்டி டப்பாக்களை ஒரு துணியில் வைத்துக் கட்டினார்கள். “அதை நான் சுமந்துகொண்டு வருகிறேன். எனக்
19 கும் அந்தக் காட்டு மாரியம்மன் கோயிலைக் காண ஆசையாக, இருக்கிறது” என்றான் வண்டிக்காரன்.
அதுவும் நல்லதுதான் என்று நால்வரும் புறப்பட்டனர். ஜின்கா கொஞ்ச தூரத்திற்குத் தங்கமணியின் தோளின்மீது அமர்ந்து சென்றது. பிறகு காட்டுத் தடம் வரவே மரங்களில் தாவித்தாவி அது முன்னால் போகலாயிற்று.
சுமார் 5 கிலோ மீட்டர் நடந்து காட்டு மாரியம்மன் கோயிலை அவர்கள் அடைத்தனர். “முதலில் சிற்றுண்டியைச் சாப்பிட்டு விடுங்கள்” என்றான் வண்டிக்காரன், அவனுக்குப் பசி எடுத்துவிட்டது போலும். மேலும் பாட்டி வீட்டுப் பலகாரங்கள் அவனுக்கு எப்பொழுதும் கிடைக்காதல்லவா?
பாட்டி கோதுமை ஹல்வா அவர்களுக்கென்று ஸ்பெஷலாகச் செய்து வைத்திருந்தாள், அத்துடன் முறுக்கு, வடை எல்லாம் இருந்தன.
ஜின்காவுக்கு ஹல்வா பிடிக்கவில்லை. ஆனால் வடையை வாயில் போட்டுக் குதப்பிக் குதப்பி நன்றாகச் சாப்பிட்டது.
வண்டிக்காரன் பாடுதான் கொண்டாட்டம். மற்ற மூவரும் அவசரம் அவசரமாக ஏதோ சாப்பிட்டார்கள். மீதி இருந்ததையெல்லாம் அவன் ஒரு கை பார்த்துவிட்டான்!
“பாவம், அவனாவது நன்றாகச் சாப்பிடட்டும்” என்று கண்ணகி அவனுக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருந்தான்.
ஓடையில் தண்ணீர் அருந்திவிட்டுக் கோயிலுக்குள் நுழைந்தார்கள்.
அங்கிருந்த பூசாரி இவர்களையெல்லாம் உற்சாகமாக வரவேற்றான். அம்மனுக்குப் பூஜை செய்துவிட்டுப் பிரசாதம் வழங்கினான். அதற்குமேல் அவன் அந்தக் காட்டு மாரியம்மன் கோயில் ரகசியத்தைப் பற்றியெல்லாம் எடுத்துரைத்தான்.
"அம்மனுக்குப் பின்னலே சுரங்கப் படிகள் இருக்கின்றன. அவை எங்கு போகின்றனவென்று யாருக்குமே தெரியாது. ஆனால் திப்புசுல்தான் கோட்டையில் உள்ள குகைக்கும் இதற்கும் வழியுண்டு என்று எங்கள் பாட்டனார் சொல்லிக் கேட்டிருக்கிறேன்” என்றான் பூசாரி. “நான் அங்கே இறங்கிப் பார்க்கலாமா?” என்று ஆவலோடு கேட்டான் தங்கமணி.
“ஐயோ வேண்டாம். அதற்குள்ளே கருவண்டுகள், பாம்புகள் எல்லாம் உண்டு” என்று பூசாரி சட்டென்று பதில் சொன்னான்.
“இந்தச் சுரங்க வழியில் தான் எங்கேயோ திப்புசுல்தான் புதையல் இருக்கிறதாமே?” என்று மேலும் கேட்டான் தங்கமணி.
“ஆமாம் - அதெல்லாம் ரொம்ப ரகசியம். காட்டு மாரியம்மன் அதற்குக் காவல் தெய்வம். அதனாலேதான் இந்த தேவதை சக்தியுள்ள தெய்வமாக இருக்கிறது” என்றான் பூசாரி.
பூசாரிக்கு அவன் எதிர்பார்த்ததற்கு மேல் தட்சிணை கொடுத்துவிட்டு எல்லாரும் பாட்டி வீட்டை நோக்கித் திரும்பினர்கள். ஜின்கா பூசாரி கொடுத்த வாழைப்பழத்தை இரண்டு கன்னத்திலும் அடக்கிக் கொண்டு புறப்பட்டது. பழம் கிடைத்ததுபற்றி அதற்கு அளவில்லாத மகிழ்ச்சி.
வரும்போதே இருட்டி விட்டது. நல்ல வேளை, சுந்தரம் தன்னுடைய டார்ச் விளக்கைக் கொண்டு வந்திருந்தான்.
[8]
சங்ககிரி மலை ஏற ஏற்பாடு!
இரவு படுக்கப்போகு முன்பு மூவரும் அன்றைய நிகழ்ச்சிகளைப் பற்றிக் குதூகலமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். குகையின் ரகசியப் பாதை எங்கு முடிகின்றதென்பதை முன்னதாகவே அறிந்து கொண்டது நல்லது என்றும் நினைத்தார்கள்.
மறுநாள் அதிகாலையிலேயே சங்ககிரி மலைமேல் ஏறிப் பார்க்க முடிவு செய்தார்கள். அதற்கு வேண்டியவாறு தங்களுக்கு உண்டி வகைகளைத் தயாரித்துக் கொடுக்கும்படி கண்ணுப் பாட்டியிடம் கேட்டுக் கொண்டார்கள்.
“பாட்டி, காலை உணவை இங்கேயே முடித்துக்கொண்டு புறப்படுகிறோம். அதனால் மத்தியான உணவை மட்டும் செய்து கொடுங்கள்” என்று தங்கமணி கூறினான்.
“உங்களுக்குச் சிரமம் வேண்டாம் பாட்டி, நானும் சமையல் வேலையில் உங்களுக்கு உதவுகிறேன்” என்று கண்ணகி உற்சாகமாக முன் வந்தாள்.
“சரி, இனி எல்லாம் உப்புமயமாக இருக்கும் - கண்ணகி கை வைத்தால் அவ்வளவுதான்” என்றான் சுந்தரம்.
கண்ணுப் பாட்டி சிரித்தாள், “கண்ணகி கை வைத்தால் எல்லாம் கல்கண்டாக இருக்கும். நாளைக்குப் பாருங்கள்.” என்று அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
“நானும் காய்கறி நறுக்கிக் கொடுக்கிறேன்” என்றான் தங்கமணி.
“உங்களுக்கு சிரமமே வேண்டாம். நானே எல்லாம் செய்கிறேன், சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம்” என்று அடுக்கிக் கொண்டே போனாள் கண்ணுப்பாட்டி.
“ஜின்காவுக்கு வடை, வாழைப்பழம்” என்றான் சுந்தரம்.
இந்தக் கோமாளிக்குத்தான் வடையும் வாழைப்பழமும் - ஜின்காவின் பேரைச் சொல்லி இவன் சாப்பிடுவான்” என்று கண்ணகி கேலி செய்தாள்.
சுந்தரம் சிரித்துக் கொண்டான். பதில் பேசவில்லை.
“பாட்டி, அந்த வண்டிக்காரன் எங்களோடு வரவேண்டாம். நாங்கள் தனியாகவே எல்லாம் பார்த்து வருகிறோம்” என்று தங்கமணி கேட்டுக் கொண்டான்.
காலையில் இட்லி, தோசை, அடை எல்லாம் பாட்டி தயார் செய்து வைத்திருந்தாள். சாப்பிட்டதும் மலைக்குப் புறப்பட்டார்கள். வண்டிக்காரன், “நானும் வந்தால் உணவு மூட்டையை எடுத்துக் கொள்ள வசதியாக இருக்குமே” என்று, தலையைச் சொரிந்தான். இன்றும் நல்ல உணவு வகைகள் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்த்தானோ என்னவோ?
“இல்லை, அவர்களே போய்ப் பார்த்து வரட்டும். நீ வேண்டுமானால் தனியாக ஒரு நாளைக்குப் போய் வரலாம்” என்று கண்ணுப்பாட்டி கண்டிப்பாகக் கூறிவிட்டாள். அது அவனுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது.
[9]
சங்ககிரிக் கோட்டை!
“அடே அப்பா எவ்வளவு பெரிய கோட்டைக் கதவு” என்று சுந்தரம் ஆச்சரியத்தோடு கூவினான். “பெரிய பெரிய பாராங்கல்லை யெல்லாம் வைத்து எப்படித்தான் இந்தச் சுவர்களைக் கட்டினார்களோ?” என்று கண்ணகி ஆச்சரியப்பட்டாள்.
“ஆங்கிலேயரை இந்த நாட்டிலிருந்து விரட்டி விடவேண்டும் என்று திப்புசுல்தான் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய துணிச்சலுக்கும் வீரத்திற்கும் எல்லையே இல்லை. இருந்தாலும், அவனுடைய எண்ணம் நிறைவேறாமல் போய்விட்டது” என்று தங்கமணி விளக்கினான்.
வேகமாக மலையில் ஏறி மலையின் மத்திய பாகத்தில் உள்ள குகையை அடைந்தார்கள். ஜின்காவுக்கு மலைமேல் ஏறுவதில் தனிப்பட்ட உற்சாகம்.
சுந்தரம் குகைக்குள் சில அடி தூரம் நுழைந்து பார்க்க முயன்றான்.
“சுந்தரம், முதலில் மலை உச்சிக்குப் போவோம். அங்குள்ளவற்றையெல்லாம் பார்த்து விட்டுத் திரும்பி வரும் போது இந்தக் குகையை ஆராய்வோம்” என்றான் தங்கமணி.
அவன் சொன்னபடியே எல்லாரும் சங்ககிரியின் சிகரத்தை நோக்கி விரைந்தார்கள், அங்கிருந்து பார்த்தால் ஒரு பெரிய மலைச் சரிவு தென்பட்டது. அங்கே கொத்தளங்களை அமைத்து அவற்றில் பீரங்கியை வைத்து சுடுவதற்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
“மலைச் சரிவின் வழியாக விரோதிகள் மேலே வரக்கூடும். அப்படி வந்தால் பீரங்கியைப் பயன்படுத்தலாம் என்று முன் யோசனையோடு செய்திருக்கிறார்கள்” என்று தங்கமணி விளக்கம் தந்தான்.
“அப்பா! இந்த இரும்பு குண்டு எத்தனை கனம்” என்று கண்ணகி கூவினாள். ஜின்கா அதை இரண்டு கைகளாலும் தூக்கிப் பார்த்து விட்டு தொப்பென்று கீழே போட்டது.
“பீரங்கியை எப்படியடா சுடுவார்கள்?” என்று சுந்தரம் கேட்டான்.
“இவையெல்லாம் அந்தக் காலத்து பீரங்கிகள், இவற்றை வைத்துக் கொண்டுதான் ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்றினார்கள். திப்புசுல்தான் பிரெஞ்சுக்காரருடைய உதவியைக் கொண்டு பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் வரவழைத்துத் தனது வீரர்களை அதில் பயிற்சியும் கொடுத்திருந்தான். இருந்தாலும் அவனால் ஆங்கிலேயரை நாட்டை விட்டு வெளியேற்ற முடியவில்லை!” என்றான் தங்கமணி.
அதற்குமேல் தானியக் கிடங்குகளைப் பார்வையிட்டார்கள், ஒரு பக்கத்திலே கைதிகளை அடைத்து வைக்கும் இருட்டறை இருந்தது. உள்ளே செல்லுவதற்கு வேண்டிய வழி மேல் பாகத்தில் இருந்தது. அதை ஒரு பெரிய மரக்காதவால் மூடியிருந்தார்கள்.
மூன்று பேரும் மிகவும் சிரமப்பட்டு அதைத் தூக்கினார்கள். உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. அதற்கு மேல் அதைப் பார்க்க அவர்கள் விரும்பவில்லை.
தானியக் கிடங்கில் அரிசி, பருப்பு போன்ற உணவுக்கு வேண்டிய பொருள்களையோ அவற்றில் சேமித்து வைப்பதற்கு ஏற்றவாறு அவைகள் அமைந்திருந்தன.
“கோட்டையை முற்றுகையிட்டாலும் ஆறு மாதத்திற்கு உள்ளே உணவுப் பஞ்சம் ஏற்படாது” என்றான் தங்கமணி.
“அந்தக் காலத்தில் நாம் பிறந்திருக்க வேண்டும். அப்பொழுது நேராக எல்லாவற்றையும் பார்த்திருக்கலாம்” என்றான் சுந்தரம். “வேண்டவே வேண்டாம். சண்டையென்றால் எத்தனையோ பேர் சாவார்கள். நமக்குச் சமாதானம்தான் வேண்டும். அப்பொழுதுதான் நமது நாடு” என்று கண்ணகி கூறி முடிப்பதற்குள்,
“சரி, ஆரம்பித்து விட்டாயா உன் பிரசங்கத்தை? நான் ஏதோ தமாஷாகச் சொன்னால்....” என்று இழுத்தான் சுந்தரம்.
“உனக்கு எல்லாம் தமாஷ்தான் - வேறு என்ன தெரியும்?” என்று குத்தலாகப் பேசினாள் கண்ணகி.
“உனக்கு நகைச்சுவை உணர்வே இல்லை என்று தெரியும்” என்று நகைத்தான் சுந்தரம்.
தங்கமணி இவர்கள் பேசுவதைக் கவனிக்கவே இல்லை. அவன் துருதுருவென்று சுற்றிலும் ஆராய்வதிலேயே நாட்டமாக இருந்தான்.
பிறகு அவர்கள் உச்சியில் இருந்த ஒரு சுனையைப் பார்த்தார்கள். அதன் மேல் ஒரு பாறை சுனையின் முக்கால் பாகத்தை மூடுவதுபோலக் கவிந்திருந்தது. அதனால் சுனையில் உள்ள சுத்தமான நீர் குளிர்ச்சியாக இருந்தது. குடிப்பதற்கும் நன்றாக இருந்தது.
அந்த சுனைக்குப் பக்கத்தில் அமர்ந்து அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவை அருந்தலானார்கள்.
“கண்ணுப் பாட்டி ரொம்ப ஜோர்; எல்லாம் நன்றாகத் தயார் செய்திருக்கிறாள்” என்றான் சுந்தரம்.
தங்கமணி உணவை வாயில் போட்டுக் கொண்டே ஏதோ ஆழ்ந்த யோசனையிலிருந்தான்.
“என்னடா, பெரிய யோசனை? கோட்டையைத்தான் பிடித்தாகி விட்டதே” என்று கேலி செய்தான் சுந்தரம். “கோட்டையைப் பார்த்து விட்டோம். ஆனால் புதையல் இருக்குமிடத்தை இன்னும் கண்டு பிடிக்க முயற்சி செய்யவில்லையே?” என்று தங்கமணி தனது யோசனையின் காரணத்தை விளக்கினான்.
“அதைத்தான் கோட்டை விட்டுவிட்டோம்” என்றான் சுந்தரம்.
“ஒரு வேளை புதையல் என்பதெல்லாம் வெறும் கற்பனையோ?” என்று சிந்தித்தான் தங்கமணி.
ஜின்கா வாயில் உணவைப் போட்டுக் கன்னத்தில் அடக்குவதும் பிறகு மெல்லுவதுமாக இருந்தது. அதற்கும் நல்ல பசி.
“காட்டு மாரியம்மன் கோவிலுக்குச் செல்லும் சுரங்க வழியில்தான் புதையல் இருக்க வேண்டும்” என்று கண்ணகி திடீரென்று சொன்னாள்.
“ஆகா இதோ ஒரு துப்பறியும் சாம்பு.-இல்லை சாம்பி. மிஸ் ஷெர்லக் ஹோம்ஸ்” என்று கூறி நகைத்தான் சுந்தரம்.
“ஆகா எத்தனை பெரிய ஜோக் அடித்து விட்டான், உனக்கு ஜோக் சுந்தரம் என்று பட்டம் கொடுக்கலாம்” என்று கண்ணகி சளைக்காமல் பதில் அம்பு தொடுத்தாள்.
“எதற்கும் சீக்கிரமாக அந்தக் குகையைப் போய்ப் பார்த்து விடுவோம். ஒரு வேளை கண்ணகி சொன்னதே உண்மையாக இருக்கலாம்” என்று தங்கமணி கூறிவிட்டுக் காலியான இலைகளையெல்லாம் சுருட்டி, ஒரு பக்கத்தில் வீசினான்.
[10]
குகையின் ரகசியம்!
எல்லாரும் குகையை நோக்கி ஆவலோடு புறப்பட்டனர். கீழே இறங்குவது அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. மேலும் குகையைக் காணவேண்டும் என்ற ஆர்வத்தால் சீக்கிரமாகவே அங்கு போய்ச் சேர்ந்தார்கள்.
வெளியில் நல்ல வெளிச்சம் இருந்தும் குகைக்குள்ளே ஒரே இருட்டாக இருந்தது. தங்கமணி டார்ச் விளக்கைப் போட்டுக் கொண்டே உள்ளே எச்சரிக்கையாக நடந்தான். ஜின்கா அவனைத் தொடர்ந்து சென்றது.
கண்ணகி அடுத்தபடியாகச் சென்றாள். சுந்தரம் “நான்தான் பின்னணி மெய்காப்பாளன்” என்று கூவிக் கொண்டே பின்னால் நடந்தான் அவன். கூவியதின் எதிரொலி குகையில் உள்பக்கத்திலிருந்து பயங்கரமாகக் கேட்டது.
சில இடங்களில் குனிந்து செல்ல வேண்டியிருந்தது. ஓரிடத்திலே தண்ணீர் சொட்டிற்று. அதனால் அந்த இடத்திலே ஏதோ நெஞ்சு கலங்கும்படியான ஓர் ஒலி கேட்டது.
“அண்ணா” என்று கண்ணகி தங்கமணியின் கையைப் பற்றினாள்.
“அது ஒன்றும் இல்லை. தண்ணீர் சொட்டுவதால் உண்டாகும் சத்தத்தின் எதிரொலிகள் மாறிமாறி உள்ளேயே சுற்றுவதால் இப்படி வினோதமான ஒலி கேட்கிறது” என்று தங்கமணி அவளுக்குத் தைரியம் ஊட்டினான். அவனுடைய பேச்சும் விநோதமாக எதிரொலித்து அவன் கூறியதை உண்மையென்று காட்டிற்று.
வௌவால்கள் உள்ளிருந்து திடீர் திடீர் என்று பறந்து வெளியே ஓடின. ஆனால் அவை யார் மேலும் மோதாமல் அந்த இருட்டில் பறந்தது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
அந்த ஊர்மக்கள் கூறியவாறு அங்கு கருவண்டுகள் ஒன்றுமே இல்லை. வௌவால்களைத்தான் அப்படி எண்ணினார்கள் போலிருக்கிறது.
குகைக்குள்ளே சுமார் 60 மீட்டர் சென்ற பிறகு ஒரு சிறிய திருப்பம் காணப்பட்டது. தங்கமணி ஆவலோடு அதில் நுழைந்தான், மற்றவர்களையெல்லாம் அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு அவன் மட்டும் ஜின்காவோடு அதில் கொஞ்ச தூரம் சென்றான்.
ஆனால் அந்தத் திருப்பத்திற்குமேலே ஒரு மீட்டர் வரைதான் வழி இருந்தது. அத்துடன் குகை முடிந்துவிட்டது. விளக்கைப் போட்டு அவன் துருவித் துருவிப் பார்த்தான். அதற்குமேல் வெறும் பாறைதான் தென்பட்டது.
அவன் திரும்பி வந்து அனைவருக்கும் அந்த உண்மையைத் சொன்னான். எல்லாருடைய உற்சாகமும் திடீரென்று மங்கிவிட்டது.
“அந்தப் பூசாரி எல்லாரையும் ஏமாற்றிப் பணம் பறிக்கிறான். சுரங்கப் பாதையென்று காட்டு மாரியம்மன் சிலைக்குப் பின்னால் இரண்டு மூன்று படிகளைக் காட்டிப் பணம் சம்பாதிக்கும் எத்தன் அவன்” என்றான் சுந்தரம்.
“நான் அப்பவே நினைத்தேன்” என்றாள் கண்ணகி.
“நினைத்து என்ன செய்கிறது? சொல்லியிருக்க வேண்டாமா?” என்று கோபித்துக் கொண்டான் சுந்தரம்.
“அவனுடைய கொடுவாள் மீசையைப் பார்த்து நான் பயந்து விட்டேன்” என்று விளக்கம் தந்தாள் கண்ணகி.
“சரி, குகைக்குள் இருந்துகொண்டே பேசினால் எதிரொலிக் குழப்பம்தான் காதில் விழுகிறது. முதலில் வெளியே போவோம். போகும்போது மற்றொரு தடவை குகையின் பாறைச் சுவர்களை நன்றாகப் பார்த்து விடுவோம்” என்று தங்கமணி கூறினான்.
“புதையல் எல்லாம் வெறும் கதை. கண்ணகிக்கு வைர மூக்குத்தி போச்சு” என்றான் சுந்தரம்.
“போடா அசடு - இந்தக் காலத்திலே யார் மூக்குத்தி போடுகிறார்கள்? அதிகமாக நகை அணிந்து கொள்வதே அநாகரிகம் - அதோடு புதையல் கிடைத்தால் அது அரசாங்கத்திற்குச் சேரவேண்டியது. நீயே வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே” என்று கண்ணகி முடிப்பதற்கு முன்னே “ஒரு குட்டிப் பிரசங்கமே செய்துவிட்டாய். புதுமைப் பெண் வாழ்க” என்றான் சுந்தரம்.
தங்கமணி இவர்களுடைய பேச்சையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அவன் டார்ச் விளக்கைப் போட்டு இரண்டு பக்கத்திலுமுள்ள குகையின் பாறைச் சுவர்களை கூர்ந்து கவனித்துக் கொண்டே வந்தான். சில இடங்களில் அங்கே கிடந்த சிறு கல்லைக் கொண்டு கீறிப் பார்த்தான்; தட்டித் தட்டியும் பார்த்தான்.
ஓரிடத்திலே பாறையிலே செங்கல் சுவர் வைத்திருந்தது. அதுவும் பாறையோடு பாறையாய் ஒரே கருப்பாகத் தோன்றினாலும் செங்கல் என்பதைத் தங்கமணி கண்டு கொண்டான்.
“இங்கே பார். இங்கே எதற்குச் செங்கல் சுவர் வைத்திருக்கிறார்கள்?” என்று தங்கமணி தன் உள்ளத்தில் தோன்றிய சந்தேகத்தை வெளிப்படையாகப் பேசினான்.
“திப்புசுல்தானைக் கேள்” என்றான் சுந்தரம்.
“அடடா இன்னும் ஒரு பெரிய ஜோக்” என்று கண்ணகி நகைத்தாள். தங்கமணி “சுந்தரம், கட்டப்பாறை இருக்கிறதா? இதை நாம் ஆராய்ந்து பார்க்க வேணும்” என்று ஏதோ ஆழ்ந்த யோசனையோடு கேட்டான்.
சுந்தரம் தன் கேலிப் பேச்சையெல்லாம் விட்டு விட்டுக் காரியத்தில் இறங்கினான். “கட்டப்பாறை இங்கு எப்படிக் கிடைக்கும்? நாம் ஊன்றி நடப்பதற்காகக் கொண்டுவந்த கெட்டிபான கல் மூங்கில் கழி இருக்கிறது. அது உபயோகப்படுமா என்று பார்ப்போம்” என்று கூறிவிட்டுத் தங்கமணி காட்டிய செங்கல் சுவரை இடிக்க முயன்றாள்.
“அண்ணா , இங்கே ஒரு கல் கிடக்கிறது. அதைக் கொண்டு சுவரை இடிக்கலாமா பார்” என்றாள் கண்ணகி.
தங்கமணி அந்தக் கல்லைக் கொண்டு சுவற்றின் மேல் ஓங்கி ஓங்கி போட்டான். சுந்தரம் மூங்கிற்கழியால் குத்தினான்.
இருவருடைய முயற்சியால் செங்கல் சுவரின் கொஞ்சங் கொஞ்சமாகப் பிளவு உண்டாயிற்று. அந்தப் பிளவுக்குள்ளே, மூன்று மூங்கில் குச்சிகளையும் ஒன்றாகப் புகுத்தி நெம்புகோல் போலப் பயன்படுத்தி மூவரும் சேர்ந்து நெம்பினார்கள்.
செங்கல் சுவர் சுமார் அரை மீட்டர் அகலமிருக்கும். அது பெயர்ந்து தடாலென்று கீழே விழுந்தது.
நல்ல வேளை, மூவரும் குகையின் உள் பக்கத்தில் இருந்தார்கள். அதனால் அவர்கள் மேல் அது விழவில்லை. ஜின்கா மட்டும் மறுபக்கத்தில் நின்று இவர்கள் செய்வதை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தது. சுவர் விழும்போது அது ஒரு தாவுத் தாவித் தப்பிக் கொண்டது.
“ஜின்கா, நீ சுவரின் அடியில் அகப்பட்டிருந்தால் சட்னி ஆகியிருப்பாய். தங்கமணி உயிரையே விட்டிடுவான்” என்று கூவினான் சுந்தரம். அதே வார்த்தைகளை குகை பல முறை எதிரொலித்தது.
மூவரும் சுவருக்குப் பின்னால் என்ன இருக்கிறது. என்று ஆவலோடு பார்த்தார்கள். அங்கே ஒரு சிறிய குகை தென்பட்டது. தங்கமணி டார்ச் விளக்கை உள்ளே காண்பித்தான்.
அதை ஒரு சிறிய குகைபோலக் குடைந்து வைத்திருக்கிறார்கள். அதற்குள்ளே பெட்டி ஒன்று காணப்பட்டது. அந்தக் குகைக்குள்ளே யாரும் நுழைய முடியாது. அவ்வளவு சிறியது அது.
“ஜின்கா” என்று கூப்பிட்டுத் தங்கமணி ஏதோ சமிக்ஞை செய்தான். உடனே ஜின்கா உள்ளே புகுந்து அந்தப் பெட்டியைத் தூக்கி வந்தது.
“இதில் ஏதோ ரகசியம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படிப் பாறையைக் குடைந்து அதற்குள் பெட்டியை வைத்துப் பிறகு எதற்காகச் செங்கல் சுவர் வைக்கிறார்கள்?” என்று தங்கமணி யோசனையோடு சொன்னான்.
“அதில்தான் புதையல் இருக்குமோ?” என்று சுந்தரம் கேட்டான்.
“புதையலாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் ஜின்காவால் அதை இவ்வளவு சுலபமாகத் தூக்கிக் கொண்டு வர முடியாது.” என்று தங்கமணி சொன்னான்.
பெட்டியைக் கண்டதும் மூவருக்கும் ஒரே உற்சாகம் ஏற்பட்டு விட்டது. அவர்கள் உற்சாகத்தைக் கண்டு ஜின்கா குதிக்கத் தொடங்கிற்று.
“நாம் பாட்டி வீட்டுக்குப் போய் இந்தப் பெட்டியைத் திறந்து பார்ப்போம்” என்று கூறிவிட்டுத் தங்கமணி அவசரம் அவசரமாகப் புறப்பட்டான்.
[11]
பெட்டியின் ரகசியம்!
பாட்டி வீடு சென்றதும் சிற்றுண்டி அருந்தக்கூட அவர்களுக்கு எண்ணமில்லை. பெட்டியைத் திறந்து பார்ப்பதையே முதல் வேலையாக வைத்துக் கொண்டார்கள்.
பாட்டியிடம் ஒரு சுத்தியல் கேட்டு வாங்கி தங்கமணி பெட்டியின் பூட்டை உடைத்தான். பல நூறு ஆண்டு களுக்கு முன்பு அந்தக் குகையில் மறைத்து வைத்ததால் அந்த இரும்புப் பூட்டு துருப்பிடித்திருந்தது. அதனால் அது எளிதில் திறந்து கொண்டது. ஆவலோடு மூவரும் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தார்கள்.
உள்ளே ஒரு வரைபடந்தான் இருந்தது. “பூ, இதுதானா? இதற்கா இத்தனை இரகசியம்?” என்றான் சுந்தரம்.
“முதலில் வரை படத்தை ஆராய்ந்து பார்ப்போம். அதில் ஏதாவது உண்மை கிடைக்கும்” என்று தங்கமணி கூறிவிட்டு அப்படத்தைக் கூர்ந்து கவனித்தான். மற்றவர்களும் அப்படியே ஆவலோடு பார்த்தார்கள்.
அவர்கள் கூர்ந்து பார்ப்பதைக் கண்ட ஜின்காவும் அருகில் வந்து படத்தை உற்றுப் பார்த்தது.
“இதோ, இது புதையல் இருக்கும் இடத்தைக் காட்டும் வரைபடம். சந்தேகமே இல்லை. புதையல் தானியக் கிடங்கின் ஒரு பகுதியில் இருக்கிறது. அந்த இடத்தை இது நன்றாகக் காட்டுகிறது. யாருக்கும் தெரியாதபடி அங்கே ஒரு ரகசிய அறை இருக்கிறது. அதற்குள் புதையலை வைத்து செங்கல் சுவர் வைத்திருக்கிறார்கள்” என்று தங்கமணி உற்சாகத்துடன் சொன்னான்.
“ஆமாம், எனக்கும் நன்றாக இப்போது விளங்குகிறது, பருப்புப் போட்டு வைக்கும் கிடங்கில் அந்த ரகசிய அறை
இருக்கிறது. நான் கண்டு பிடித்து விட்டேன்” என்று சுந்தரம் கத்தினான். “புதையலை அங்கே மறைத்துவிட்டு எதற்காக வரைபடத்தைக் குகையில் வைத்திருக்கிறான்?” என்று கேட்டாள் கண்ணகி.
'ஏதாவது காரணம் இருக்க வேண்டும். அதை நாம் உடனே விளங்கிக் கொள்ள முடியவில்லை” என்றான் தங்கமணி.
“புதையல் இருக்கும் இடத்தைக் காட்டும் வரை படம் நமக்குக் கிடைத்து விட்டது. அவ்வளவு தானே வேண்டியது?” என்றான் சுந்தரம்.
“ஏண்டா இப்படிக் கத்தினாய்? யார் காதிலாவது விழப் போகிறது” என்று கண்ணகி எச்சரித்து விட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
ஆனால் புதையல் இருக்கும் ரகசிய அறையைப் பற்றித் தெரிந்ததும் அவர்கள் உற்சாகம் மித மிஞ்சிவிட்டது. அதைப்பற்றி மாறிமாறிப் பேசிக் கொண்டே இருந்தார்கள்.
“இந்தக் கோடை விடுமுறை மிகுந்த குதூகலம் தருகிறது” என்று தங்கமணியும் உரத்துக் கூவினான்.
ஜின்கா ஜிங் ஜிங் என்று குதித்தது.
கண்ணுப்பாட்டி இரவு உணவு ஆறிப் போகிறது என்று அங்கு வந்து கூறாவிட்டால் அவர்கள் பேசிக் கொண்டே இருந்திருப்பார்கள். ஆனால் அவளிடத்தில் தாங்கள் கண்டு பிடித்த ரகசியத்தைப் பற்றிப் பேசவே இல்லை.
இரவு உணவு அருந்திவிட்டு, காலையிலிருந்து மலை ஏறி இறங்கிய அலுப்பால் மூவரும் உடனே தூங்கிவிட்டார்கள். ஜின்காவும் தங்கமணியின் கட்டிலில் படுத்துக் கொண்டு உறங்கலாயிற்று. இரவில் ஏதோ பட்டி நாய் குரைக்கும் சப்தம் உண்டாயிற்று. அவை யெல்லாம் அவர்கள் காதில் விழவே இல்லை. எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்கும் ஜின்காவும் நன்றாக நித்திரையில் ஆழ்ந்து விட்டது. அத்தனை அலுப்பு அதற்கு.
[12]
பெட்டி காணவில்லை!
அதிகாலையில் தங்கமணி திடீரென்று விழித்துக் கொண்டான். விழித்ததும் முதல் வேலையாக அந்தப் பெட்டியிருக்குமிடத்திற்குப் போனான். ஆனால், என்ன அதிசயம்! அந்தப் பெட்டியை அங்கே காணவில்லை. அதனுள் போட்டு வைத்திருந்த வரைபடமும் இல்லை.
அவன் திடுக்கிட்டான். இது யார் வேலையாக இருக்கும் என்று யோசித்தான். உடனே வண்டிக்காரன் இருக்குமிடத்திற்குப் போனான். அங்கே வண்டிக்காரன் இல்லை. “எங்கேயோ இரவோடு இரவாகப் போய் வருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான்” என்று அங்கிருந்த மற்ற பண்ணை ஆட்கள் தெரிவித்தார்கள்.
தங்கமணிக்கு சந்தேகம் வந்துவிட்டது. வண்டிக்காரன் புதிய ஆள். அவர்கள் உற்சாகத்தினால் சத்தமாகப் பேசியதை நினைத்து வருந்தினான். அவன் இருட்டிலே மறைவாக வந்து அவர்கள் பேசியதைக் கேட்டிருக்க வேண்டும். அத்துடன் அவன் புதையலைக் கண்டு பிடிக்க வந்த ஆளாகத்தான் இருக்க வேண்டும். அவனுடன் இன்னும் சிலரும் கூட்டுச் சேர்ந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கண்ணுப்பாட்டி தனியாக இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு அந்த இடத்தில் தங்கி மெதுவாகப் புதையலைப் பற்றித் துப்பு விசாரிக்கலாம் என்று அவனும் அவனுடைய கூட்டாளிகளும் தீர்மானித்திருக்க வேண்டும் என்று தங்கமணி இந்தத் திருட்டைப் பற்றி எண்ணமிட்டான்.
உடனே அவன் சுந்தரத்தையும் கண்ணகியையும் எழுப்பினான். “போடா, தொந்தரவு செய்யாதே - இந்த நாள் முழுவதும் தூங்கலாம் போலிருக்கிறது. காலெல்லாம் வலி” என்று கண்ணைத் திறக்காமலேயே சுந்தரம் பேசிவிட்டு மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
“டேய், பெட்டி திருட்டுப் போய்விட்டது” என்று தங்கமணி சொன்னானோ இல்லையோ சுந்தரம் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். தூக்கமெல்லாம் பஞ்சாய்ப் பறந்துவிட்டது.
இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கண்ணுப் பாட்டியின் கட்டிலில் படுத்திருந்த கண்ணகி அங்கே ஓடி வந்தாள்.
“அப்பவும் எனக்குத் தெரியும். இந்தக் கோமாளி சத்தம் போட்டுப் பேசுவதை யார் வேண்டுமானாலும் வெளியிலிருந்து கேட்டிருக்கலாம்” என்று கண்ணகி முகத்தைச் சுளித்தாள். ஏமாந்து போனதை எண்ணி வருந்துவதை அவள் முகம் நன்றாகக் காட்டிற்று.
“இப்பொழுது குற்றம் சாட்டிக் கொண்டிருக்க நேரமில்லை. காலை உணவு அருந்திவிட்டு உடனே சங்ககிரி மலை உச்சிக்குச் சென்றாக வேண்டும். தாமதம் செய்தால் நாம் ஏமாந்து போவோம்” என்றான் தங்கமணி.
மூவரும் அவசரம் அவசரமாகக் காலை உணவை முடித்துக் கொண்டார்கள். ஜின்காவுக்கும் அவர்கள் அவசரம் புரிந்து விட்டது. அது தோசையை வாயில் போட்டு வேகமாகக் குதப்பிக் கொண்டிருந்தது.
ஏன் இவ்வளவு அவசரம் என்று கண்ணுப் பாட்டிக்கு விளங்கவே இல்லை. எப்பொழுதும் உற்சாகமாக விகடம் பேசும் சுந்தரமும் பேசாதிருந்தான். “பாட்டி, நாங்கள் மறுபடியும் சங்ககிரி மலைக்குப் போகிறோம். மத்தியான்ன உணவெல்லாம் வேண்டியதில்லை. உங்களைத் தேடி இந்த ஜின்கா மட்டும் தனியாக வந்து ஒரு கடிதம் கொடுத்தால் அதில் உள்ளபடி உடனே வேகமாகக் காரியம் செய்யுங்கள். இது ரொம்ப முக்கியம்” என்று கூறிவிட்டுப் பாட்டியின் பதிலுக்குக் கூடக் காத்திராமல் தங்கமணி முன்னால் புறப்பட்டான். சுந்தரமும் கண்ணகியும் அவனைத் தொடர்ந்து வேகமாக நடந்தார்கள்.
“இதென்னடா, பெரிய மர்மமாக இருக்கிறதே” என்று கண்ணுப்பாட்டி ஆச்சரியப்பட்டாள்.
“ஏதோ, சிறு பிள்ளைகள் விளையாட்டாக இருக்கும், எதற்கும் இன்று வீட்டை விட்டுப் போகாமல் இருந்து பார்க்கலாம். அந்த வண்டிக்காரனையும் காணவில்லை. அவன் இருந்தாலாவது மத்தியான்ன உணவைக் கொடுத்தனுப்பலாம். பகல் ஒரு மணிக்குள்ளாகவே ஒரு வேளை வந்தாலும் வந்து விடுவார்கள்” என்று இப்படிப் பலவாறு எண்ணிக் கொண்டே கண்ணுப் பாட்டி சமையல் வேலையில் முனைந்தாள்.
மூவரும் ஜின்காவுடன் போவதற்கு முன்னாலேயே நான்கு பேர் வேகமாக மலையில் ஏறுவதைப் பார்த்தார்கள்.
உடனே தங்கமணிக்கு உண்மை புலப்பட்டுவிட்டது. அந்த நால்வரில் ஒருவன் பாட்டி வீட்டில் புதிதாக வேலைக்கமர்ந்த வண்டிக்காரன் என்பது நிச்சயமாகி விட்டது. அதனால் “நாம் மூவரும் பின்னாலேயே சென்று தடுத்தாலும் அந்த நான்கு முரடர்கள் நமக்குத் தீங்கு செய்ய அஞ்சமாட்டார்கள்” என்றான் தங்கமணி.
“அண்ணா, ஜின்காவிடம் பாட்டிக்குக் கடிதம் கொடுத்து அனுப்பு” என்று அவசரமாகப் பேசினாள் கண்ணகி. “ஆமாண்டா, அதுதான் நல்ல யோசனை. நீயும் பாட்டியிடம் சொல்லி வந்திருக்கிறாய்” என்று சுந்தரம் ஆமோதித்தான்.
“அதைத்தான் இப்பொழுது முதற் காரியமாகச் செய்யப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக ஒரு கடிதம் எழுதி ஒரு உருண்டையான சம்புடத்தில் போட்டு ஜின்காவிடம் கொடுத்தான்.
தங்களுக்கு ஆபத்து என்று தெரிந்தால் அவன் ஜின்காவுக்கு ஒரு சமிக்ஞை செய்வான். அது உடனே கண்ணுப் பாட்டியிடம் கொண்டுபோய் அதைக் கொடுக்கும். இவ்வாறு செய்யத் தங்கமணி ஜின்காவைப் பழக்கி வைத்திருந்தான். அவன் சைகை செய்யும் வரையிலும் ஜின்கா கூடவே இருக்கும். பிறகு அவன் சைகைப்படி நடக்கும்.
[14]
முரடர்களுடன் வாக்குவாதம்!
தானியக் கிடங்கில் அந்த நான்கு பேரும் இறங்கும் சமயத்தில் தங்கமணி, சுந்தரம், கண்ணகி ஆகிய மூவரும் அங்கு போய்ச் சேர்ந்தார்கள். அந்த நான்கு பேரில் ஒருவன் வண்டிக்காரன் என்பதும் தெரிந்துவிட்டது.
“ஏண்டா, வண்டிக்காரனாக நடித்து அந்தப் பெட்டியைத் திருடிக் கொண்டு வந்து விட்டாயா?” என்று சுந்தரம் கோபமாகக் கேட்டான்.
வண்டிக்காரன் மௌனமாக இருந்தான்.
“அதைக் கேட்க நீ யாரடா?” என்று மற்ற மூவரில் ஒருவன் அதட்டினான். “சும்மா மிரட்டப் பார்க்காதே. கடைசியில் கம்பி எண்ண வேண்டிவரும்” என்றான் சுந்தரம். தங்கமணியும் கண்ணகியும் அந்த நால்வரையும் திருடர்கள் என்று குற்றம் சாட்டினார்கள்.
வாக்கு வாதம் வளர்ந்தது. அந்த முரடர்கள் இவர்களைச் சுலபமாக கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். இவர்களால் அவர்கள் பிடியிலிருந்து தப்பவே முடியவில்லை.
நான்கு பேரும் ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டு பாதாளச் சிறையின் மேல் பக்கத்திலுள்ள மரக்கதவைத் திறந்து அவர்களை உள்ளே தள்ளி மறுபடியும் கதவை மூடி விட்டார்கள்.
நல்ல வேளையாக உள்ளே மணல் நிறையப் போட்டிருந்ததால் ஆறடி ஆழத்திற்கு விழுந்தாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தங்கமணியை உள்ளே தள்ளுவதற்கு முன்பு அவன் ஜின்காவுக்கு சைகை செய்துவிட்டான். அத்துடன் பின்னால் தள்ளப்பட்ட சுந்தரத்தையும், கண்ணகியையும் சாமர்த்தியமாகப் பிடித்து அவர்களுக்கு எவ்விதமான காயமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டான்.
இதுவரையிலும் நடந்த விஷயங்களை யெல்லாம் ஜின்கா, ஒரு மரத்தின் மீது அமர்ந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தது.
அந்த நான்கு முரடர்களும் தானியக் கிடங்கில் இறங்கி மறைந்தார்கள், அதுவரையிலும் பதுங்கியிருந்த ஜின்கா உடனே தங்கமணி கொடுத்த சம்புடத்தை வாயில் போட்டுக் கொண்டு தாவித் தாவி கீழே வேகமாக இறங்கியது. பாட்டியின் வீடு வந்ததும் அந்த சம்புடத்தில் இருந்த கடிதத்தைப் பாட்டியிடம் எடுத்துக் கொடுத்தது.
[15]
போலீஸுக்குத் தகவல்!
அந்தக் கடிதத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு உடனே தெரியப்படுத்தி நான்கைந்து ஜவான்களோடு சப்-இன்ஸ்பெக்டரையும் உடனே மலை உச்சிக்கு வரும்படி எழுதியிருந்தது. வரும்போது ஒரு நூலேணியும் கொண்டு வந்தால் நலம் என்றும், உடனே செய்யாவிட்டால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் எழுதியிருந்தது. பாட்டியை ஜின்காவும் அவசரப்படுத்தியது.
கண்ணுப் பாட்டிக்கு மனதில் கொஞ்சம் திகில் உண்டாகியது. அதனால் அந்த ஊரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு உடனே ஓடினாள். சப்-இன்ஸ்பெக்டரிடமும் விவரத்தைத் தெளிவாகச் சொன்னாள்.
சப்-இன்ஸ்பெக்டர் இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார். ஆகவே துப்பாக்கி தாங்கிய ஐந்து ஜவான்களோடு தாமும் மலை மீது வேகமாக ஏறினார். ஜின்கா அவர்களுக்கு வழி காட்டியாக முன்னால் நடந்தது. அவர்கள் மலை உச்சியை அடைவதற்கும் அந்த நான்கு. முரடர்களும் புதையலை எடுத்துக் கொண்டு மேலே வருவதற்கும் சரியாக இருந்தது. வரைபடத்தை சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் அவர்கள் பல இடங்களில் தோண்டிப் பார்த்திருக்கிறார்கள், அதனால் அவ்வளவு நேரம் ஆகிவிட்டது.
அந்த நால்வரையும் போலீசார் கைது செய்து அவர்கள் கையில் விலங்கிட்டார்கள். எப்படிப் போலீஸ் அங்கே வந்தது என்பது அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது.
[16]
நன்கே முடிந்தது!
“அந்த இரண்டு இளைஞர்களும், பெண்ணும் எங்கே?” என்று சப்-இன்ஸ்பெக்டர் அதட்டிக் கேட்டார். அந்த நால்வரும் திருதிரு என்று விழித்துக் கொண்டு தங்களுக்கு அவர்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று சாதித்தார்கள். ஒருவருமே உண்மையைச் சொல்லவில்லை. ஆனால் ஜின்கா இருட்டறைச் சிறைக்கூடம் இருக்குமிடத்தையும் அதற்குள்ளே அவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் பலவிதமான சத்தங்களைச் செய்து போலீஸ்காரர்களுக்கு உணர்த்திவிட்டது. உடனே போலீஸ்காரர்கள் சிறைக்கூடத்தின் மேலே இருந்த மூடியைத் தூக்கினார்கள். உள்ளே எந்த விதமான சத்தமும் கேட்கவில்லை. ஆனால் ஜின்கா உள்ளே குனிந்து பார்த்து அவர்கள் இங்கு இருப்பதாகத் தெரியப்படுத்தியது. சப்-இன்ஸ்பெக்டர் தாம் கொண்டு வந்திருந்த டார்ச் விளக்கை உள்ளே செலுத்திப் பார்த்தார். மூவரும் உயிரே இல்லாதது போலப் படுத்துக் கிடந்தார்கள். நல்ல வேளையாக நூல் ஏணி கொண்டுவரும்படி தங்கமணி எழுதியிருந்தான். உள்ளேயிருந்த ஒரு கொக்கியில் மாட்டி போலீஸ் ஜவான் ஒருவன் உள்ளே வேகமாக இறங்கினான். மூவரையும் ஒவ்வொருவராக மேலே கொண்டு வந்து மற்ற போலீஸ்காரர்கள் வசம் கொடுத்தான்.
உள்ளே நல்ல காற்று இல்லாததால் அவர்கள் மயங்கிக் கிடந்தார்கள். வெளியில் கொண்டு வந்து அவர்களைப் போட்டுவிட்டுப் பக்கத்திலிருந்த சுனையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்தார்கள். இவ்வாறு முதலுதவி செய்ததால் அவர்கள் மூவரும் உயிர் பிழைத்தார்கள்.
[17]
பாட்டியிடமிருந்து பிரிவு!
அந்த நான்கு முரடர்களுக்கும் புதையலைத் திருட முயன்றதற்கும், மூவரையும் கொலை செய்ய முயற்சி செய்ததற்கும் பல ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது நிச்சயம்.
தங்கமணியையும், சுந்தரத்தையும், கண்ணகியையும் போலீஸார் மிகவும் பாராட்டினார்கள். அவர்கள் முயற்சியால்தான் திப்புசுல்தான் காலத்துத் தங்கக் காசுகள் கிடைத்தன. ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கக் காசை சப்-இன்ஸ்பெக்டர் பரிசாகக் கொடுக்க முன்வந்தார். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
“இந்தப் புதையல் சட்டப்படி அரசாங்கத்திற்குச் சேர வேண்டியது. ஆகவே எங்களுக்கு அதில் ஒன்றுமே வேண்டியதில்லை” என்று தங்கமணி, சுந்தரம், கண்ணகி மூவரும் சேர்ந்து ஒரே மூச்சில் சொன்னார்கள். சப்-இன்ஸ்பெக்ட ருக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டது. “நானாகவே இதில் ஒன்றையும் உங்களுக்குக் கொடுக்க முடியாது என்பது மெய்தான். ஆனால் நீங்கள் செய்த உதவிக்காக இதில் ஒரு தங்க நாணயத்தைக் கொடுத்துவிட்டுப் பின்னால் அரசாங்கத்தின் அனுமதியைப் பெறலாம் என்று எண்ணினேன். ஆனால் நீங்களே இந்தப் பரிசை வாங்கிக் கொள்ள மறுத்ததைக் கண்டு எனக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்று கூறி அவர் வாழ்த்தினார். கோடை விடுமுறை இப்படி எதிர்பாராத அதிசய சம்பவங்கள் நிகழ்வதற்குக் காரணமாக இருந்ததை மூவரும் நன்கு ரசித்தார்கள்.
“கண்ணுப் பாட்டி, உங்கள் உதவியால்தான் நாங்கள் அந்தத் திருடர்களிடமிருந்து தப்பினோம். உங்களை எப்பொழுதும் மறக்க மாட்டோம்” என்று தம் நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்தார்கள். கண்ணுப் பாட்டி அந்தக் குழந்தைகளின் அன்பைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். ஜின்காவின் குதூகலம் சொல்லி முடியாது. அது குதித்துக் குதித்துத் தன் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தியது. சுந்தரம் அதனுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்துவிட்டான், மற்ற இருவரும் அவனைப் பின்தொடர்ந்து ஆடினார்கள்.
“கண்ணுகளா, நீங்கள் மூவரும் ஜின்காவோடு இங்கேயே இருந்து விடுங்கள்” என்று இன்ப மிகுதியால் கண்ணுப் பாட்டி தெரிவித்தாள்.
“அதெப்படி முடியும் பாட்டி? கோடை விடுமுறைக்குப் பின் நாங்கள் எங்கள் ஊருக்குச் சென்று படிக்க வேண்டாமா? ஆனால் நீங்கள் அன்போடு ‘கண்ணு’ என்று சொல்வதை நாங்கள் நினைத்துக் கொண்டேயிருப்போம்” என்று குழறிக் குழறி சுந்தரம் சொன்னான்.
“ஆமாம் பாட்டி, நீங்கள் ‘கண்ணு’ என்று சொல்வது எங்களுக்கு அமுதமாக இருக்கிறது. இந்தக் கோமாளி அதே வார்த்தையைச் சொன்னா எப்படியோ இருக்கிறது” என்று கண்ணகி கூறினாள்.
அனைவரும் வாய் விட்டுச் சிரித்தார்கள்.
“கண்ணுகளா, வாங்க உங்களுக்கு இன்றைக்குத் தனி விருந்து வைத்திருக்கிறேன்” என்று கூறிக் கண்ணுப் பாட்டி அவர்களை உள்ளே அழைத்துக் கொண்டு போனாள்.
இன்னும் விடுமுறையில் பலநாள் இருந்தன. ஆனால் “உடனே புறப்பட்டுப் போய் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இந்தச் சம்பவங்களையெல்லாம் நேரில் கூறவேண்டும்” என்றாள் கண்ணகி. தங்கமணியும் அதையே தெரிவித்தான்.
“பாட்டி, உங்களைப் பிரிய மனமில்லாவிட்டாலும் உடனே புறப்பட்டுப் போகத் துடிக்கிறோம்” என்றான் சுந்தரம். அவர்களுடைய உற்சாகத்தைக் கண்டு பாட்டில் இணங்க வேண்டியதாயிற்று.
உடனே தந்தி கொடுத்து விட்டு, அன்று இரவே சென்னையை நோக்கிப் புறப்பட்டார்கள். ஜின்கா ஜிங் ஜிங் என்று ஒருமுறை ஆடிக் காண்பித்து விட்டுக் கண்ணுப் பாட்டியிடம் விடை பெற்றுக்கொண்டது.
--------------------------- .:0:.-----------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக