திருமுறை முதற் பகுதி


பக்தி நூல்கள்

Back

திருமுறை முதற் பகுதி - பாசுரங்கள் 1-825
திருமூலர்



பதினோராந் திருமுறை (நம்பியாண்டார் நம்பி தொகுப்பு)
முதற் பகுதி - பாசுரங்கள் 1-825

பொருள் அடக்கம்
1. திரு ஆலவாய் உடையார் (1)
1.1 திருமுகப் பாசுரம் 1 1
2 காரைக்கால் அம்மையார் (2- 144)
2.1 திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1 11 ( 2 - 12
2.2 திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-2 11 (13 - 23)
2.3 திரு இரட்டை மணிமாலை 20 (24 - 43)
2.4 அற்புதத் திருவந்தாதி 101 (44 -144)
3. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (145 - 168)
3.1 திருக்கோயில் திருவெண்பா (க்ஷேத்திரத் திருவெண்பா) 24 (145-168)
4. சேரமான் பெருமாள் நாயனார் (169 - 301)
4.1 பொன்வண்ணத்தந்தாதி 101 (169 - 269)
4.2 திருவாரூர் மும்மணிக்கோவை 30 (270 - 299)
4.3 திருக்கயிலாய ஞான உலா 2 (300 -301)
5. நக்கீரதேவ நாயனார் (302 - 513)
5.1 கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி 100 (302- 401)
5.2 திருஈங்கோய்மலை எழுபது 70 (402- 471)
5.3 திருவலஞ்சுழி மும்மணிக்கோவை 15 (472- 486)
5.4 திருஎழு கூற்றிருக்கை 2 (487- 488)
5.5 பெருந்தேவ பாணி 2 (489- 490)
5.6 கோபப் பிரசாதம் 1 491
5.7 கார் எட்டு 8 (492- 499)
5.8 போற்றித் திருக்கலி வெண்பா 1 500
5.9 திருமுருகாற்றுப்படை 11 (501-511)
5.10 திருக்கண்ணப்பதேவர் திருமறம் 2 (512-513)
6. கல்லாடதேவ நாயனார் (514)
6.1 திருக்கண்ணப்பதேவர் திருமறம் 1 514
7. கபிலதேவ நாயனார் (515 - 671)
7.1 மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை 20 (515 - 534)
7.2 சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை 37 (535 - 571)
7.3 சிவபெருமான் திருவந்தாதி 100 (572 - 671)
8. பரணதேவ நாயனார் (672 - 772)
8.1 சிவபெருமான் திருவந்தாதி 101 (672 - 772)
9. இளம்பெருமான் அடிகள் (773 - 802)
9.1 சிவபெருமான் திருமும்மணிக்கோவை 30 (773 - 802)
10. அதிராவடிகள் (803 - 825)
10.1 மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை 23 (803 - 825)

1. திருஆலவாய் உடையார் பாசுரம் (1)

1.1 திரு ஆலவாய் உடையார் அருளிச் செய்த திருமுகப் பாசுரம்

1. மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆல வாயில்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்

பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் ( 5)
குரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்குஞ் சேரலன் காண்க
பண்பா லியாழ்பயில் பாண பத்திரன்

தன்போல் என்பால் அன்பன் தன்பால் (10)
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.
1

திருச்சிற்றம்பலம்

2. காரைக்கால் அம்மையார் பாசுரங்கள் (2 -144)

2.1 காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த

திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம் - 1 (பாசுரங்கள் 2-12)
2. கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள்நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர்பெண்பேய்
தங்கி அலறி உலறுகாட்டில் தாழ்சடை எட்டுத் திசையும்வீசி
அங்கங் குளிர்ந்தனல் ஆடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
1
3. கள்ளிக் கவட்டிடைக் காலைநீட்டிக் கடைக்கொள்ளி வாங்கி மசித்துமையை
விள்ள எழுதி வெடுவெடென்ன நக்கு வெருண்டு விலங்குபார்த்துத்
துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச் சுட்டிட முற்றுஞ் சுளிந்துபூழ்தி
அள்ளி அவிக்கநின் றாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
2
4. வாகை விரிந்துவெண் ணெற்றொலிப்ப மயங்கிருள் கூர்நடு நாளையாங்கே
கூகையொ டாண்டலை பாடஆந்தை கோடதன் மேற்குதித் தோடவீசி
ஈகை படர்தொடர் கள்ளிநீழல் ஈமம் இடுசுடு காட்டகத்தே
ஆகங் குளிர்ந்தனல் ஆடும் எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
3
5. குண்டிலோ மக்குழிச் சோற்றைவாங்கிக் குறுநரி தின்ன அதனைமுன்னே
கண்டிலோம் என்று கனன்றுபேய்கள் கையடித் தோடிடு காடரங்கா
மண்டலம் நின்றங் குளாளம்இட்டு வாதித்து வீசி எடுத்தபாதம்
அண்டம் உறநிமிர்ந் தாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
4
6. விழுது நிணத்தை விழுங்கியிட்டு வெண்தலை மாலை விரவப்பூட்டிக்
கழுதுதன் பிள்ளையைக் காளியென்று பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்
புழுதி துடைத்து முலைகொடுத்துப் போயின தாயை வரவுகாணா
தழுதுறங் கும்புறங் காட்டில்ஆடும் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
5
7. பட்டடி நெட்டுகிர்ப் பாறுகாற்பேய் பருந்தொடு கூகை பகண்டைஆந்தை
குட்டி யிடமுட்டை கூகைபேய்கள் குறுநரி சென்றணங் காடுகாட்டில்
பிட்டடித் துப்புறங் காட்டில்இட்ட பிணத்தினைப் பேரப் புரட்டிஆங்கே
அட்டமே பாயநின் றாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
6
8. சுழலும் அழல்விழிக் கொள்ளிவாய்ப்பேய் சூழ்ந்து துணங்கையிட் டோடிஆடித்
தழலுள் எரியும் பிணத்தைவாங்கித் தான்தடி தின்றணங் காடுகாட்டிற்
கழல்ஒலி ஓசைச் சிலம்பொலிப்பக் காலுயர் வட்டணை இட்டுநட்டம்
அழல்உமிழ்ந் தோரி கதிக்கஆடும் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
7
9. நாடும் நகரும் திரிந்துசென்று நன்னெறி நாடி நயந்தவரை
மூடி முதுபிணத் திட்டமாடே முன்னிய பேய்க்கணம் சூழச்சூழக்
காடுங் கடலும் மலையும் மண்ணும் விண்ணுஞ் சுழல அனல்கையேந்தி
ஆடும் அரவப் புயங்கன்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
8
10. துத்தங் கைக்கிள்ளை விளரிதாரம் உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச்
சச்சரி கொக்கரை தக்கையோடு தகுணிதம் துந்துபி தாளம்வீணை
மத்தளங் கரடிகை வன்கைமென்றோல் தமருகங் குடமுழா மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
9
11 புந்தி கலங்கி மதிமயங்கி இறந்தவ ரைப்புறங் காட்டில்இட்டுச்
சந்தியில் வைத்துக் கடமைசெய்து தக்கவர் இட்டசெந் தீவிளக்கா
முந்தி அமரர் முழவின்ஓசை திசைகது வச்சிலம் பார்க்கஆர்க்க
அந்தியில் மாநடம் ஆடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
10
12. ஒப்பினை இல்லவன் பேய்கள்கூடி ஒன்றினை ஒன்றடித் தொக்கலித்துப்
பப்பினை யிட்டுப் பகண்டை யாடப் பாடிருந் தந்நரி யாழ்அமைப்ப
அப்பனை அணிதிரு ஆலங்காட்டுள் அடிகளைச் செடிதலைக் காரைக்காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும்வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே.
11

திருச்சிற்றம்பலம்

2.2 காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த
திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம் - 2 (பாசுரங்கள் 13- 22)

13. எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும்
சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கௌவப்
பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய்
கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே.
1
14. நிணந்தான் உருகி நிலந்தான் நனைப்ப நெடும்பற் குழிகட்பேய்
துணங்கை யெறிந்து சூழும்நோக்கிச் சுடலை நவிழ்த்தெங்கும்
கணங்கள் கூடிப் பிணங்கள் மாந்திக் களித்த மனத்தவாய்
அணங்கு காட்டில் அனல்கை யேந்தி அழகன் ஆடுமே.
2
15. புட்கள் பொதுத்த புலால்வெண் தலையைப் புறமே நரிகவ்வ
அட்கென் றழைப்ப ஆந்தை வீச அருகே சிறுகூகை
உட்க விழிக்க ஊமன் வெருட்ட ஓரி கதித்தெங்கும்
பிட்க நட்டம் பேணும் இறைவன் பெயரும் பெருங்காடே.
3
16. செத்த பிணத்தைத் தௌியா தொருபேய் சென்று விரல்சுட்டிக்
கத்தி உறுமிக் கனல்விட் டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க மோதிப் பலபேய் இரிந்தோடப்
பித்த வேடங் கொண்டு நட்டம் பெருமான் ஆடுமே.
4
17. முள்ளி தீந்து முளரி கருகி மூளை சொரிந்துக்குக்
கள்ளி வற்றி வெள்ளில் பிறங்கு கடுவெங் காட்டுள்ளே
புள்ளி உழைமான் தோலொன் றுடுத்துப் புலித்தோல் பியற்கிட்டுப்
பள்ளி இடமும் அதுவே ஆகப் பரமன் ஆடுமே.
5
18. வாளைக் கிளர வளைவாள் எயிற்று வண்ணச் சிறுகூகை
மூளைத் தலையும் பிணமும் விழுங்கி முரலும் முதுகாட்டில்
தாளிப் பனையின் இலைபோல் மயிர்க்கட் டழல்வாய் அழல்கட்பேய்
கூளிக்கணங்கள் குழலோ டியம்பக் குழகன் ஆடுமே.
10
19. நொந்திக்கிடந்த சுடலை தடவி நுகரும் புழுக்கின்றிச்
சிந்தித் திருந்தங் குறங்குஞ் சிறுபேய் சிரமப் படுகாட்டின்
முந்தி அமரர் முழவின் ஓசை முறைமை வழுவாமே
அந்தி நிருத்தம் அனல்கை ஏந்தி அழகன் ஆடுமே.
10
20. வேய்கள் ஓங்கி வெண்முத் துதிர வெடிகொள் சுடலையுள்
ஓயும் உருவில் உலறு கூந்தல் அலறு பகுவாய
பேய்கள் கூடிப் பிணங்கள் மாந்தி அணங்கும் பெருங்காட்டின்
மாயன் ஆட மலையான் மகளும் மருண்டு நோக்குமே.
10
21. கடுவன் உகளுங் கழைசூழ் பொதும்பிற் கழுகும் பேயுமாய்
இடுவெண் டலையும் ஏமப் புகையும் எழுந்த பெருங்காட்டிற்
கொடுவெண் மழுவும் பிறையுந் ததும்பக் கொள்ளென் றிசைபாடப்
படுவெண் துடியும் பறையுங் கறங்கப் பரமன் ஆடுமே.
10
22. குண்டை வயிற்றுக் குறிய சிறிய நெடிய பிறங்கற்பேய்
இண்டு படர்ந்த இருள்சூழ் மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய்
கொண்டு குழவி தடவி வெருட்டிக் கொள்ளென் றிசைபாட
மிண்டி மிளிர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுமே.
10
23. சூடும் மதியம் சடைமேல் உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில் ஆர்த்த டிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய் எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி ஆடப் பாவம் நாசமே.
10

திருச்சிற்றம்பலம்

2.3 காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த
திருஇரட்டை மணிமாலை (பாசுரங்கள் 24- 43)

24. கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சம்என்பாய்த்
தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண் டாய்தள ராதுவந்தி
வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை
இளந்திங் களும்எருக் கும்மிருக் குஞ்சென்னி ஈசனுக்கே.
1
25. ஈசன் அவன்அல்லா தில்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமைக் காக்கும் பிரான்.
2
26. பிரானென்று தன்னைப்பன் னாள்பர வித்தொழு வார்இடர்கண்
டிரான்என்ன நிற்கின்ற ஈசன்கண் டீர்இன வண்டுகிண்டிப்
பொராநின்ற கொன்றைப் பொதும்பர்க் கிடந்துபொம் மென்றுறைவாய்
அராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொன் நீள்முடி அந்தணனே.
3
27. அந்தணனைத் தஞ்செமென் றாட்பட்டார் ஆழாமே
வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன் - கொந்தணைந்த
பொன்கண்டாற் பூணாதே கோள்நாகம் பூண்டானே
என்கண்டாய் நெஞ்சே இனி.
4
28. இனிவார் சடையினிற் கங்கையென் பாளைஅங் கத்திருந்த
கனிவாய் மலைமங்கை காணில்என் செய்திகை யிற்சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும்வெந் தன்றுசெந் தீயில்முழ்கத்
தனிவார் கணைஒன்றி னால்மிகக் கோத்தஎஞ் சங்கரனே.
5
29. சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாவென் றாழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஓவாது நெஞ்சே உரை.
6
30. உரைக்கப் படுவதும் ஒன்றுண்டு கேட்கிற்செவ் வான்தொடைமேல்
இரைக்கின்ற பாம்பினை என்றும் தொடேல்இழிந் தோட்டந்தெங்கும்
திரைக்கின்ற கங்கையும் தேன்நின்ற கொன்றையும் செஞ்சடைமேல்
விரைக்கின்ற வன்னியுஞ் சென்னித் தலைவைத்த வேதியனே.
7
31. வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்
காதியனை ஆதிரைநன் னாளானைச் - சோதிப்பான்
வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது
கில்லேன மாஎன்றான் கீழ்.
8
32. கீழா யினதுன்ப வெள்ளக் கடல்தள்ளி உள்ளுறப்போய்
வீழா திருந்தின்பம் வேண்டுமென் பீர்விர வார்புரங்கள்
பாழா யிடக்கண்ட கண்டன்எண் தோளன்பைம் பொற்கழலே
தாழா திறைஞ்சிப் பணிந்துபன் னாளும் தலைநின்மினே.
9
33. தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினஉணர்ந்தோர்காண்பர் - தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற் கழல்.
10
34. கழற்கொண்ட சேவடி காணலுற் றார்தம்மைப் பேணலுற்றார்
நிழற்கண்ட போழ்தத்து நில்லா வினைநிகர் ஏதுமின்றித்
தழற்கொண்ட சோதிச் செம் மேனிஎம் மானைக்கைம் மாமலர்தூய்த்
தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி நம்மடுந் தொல்வினையே.
11
35. தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே
ஒல்லை வணங்கி உமையென்னும்- மெல்லியல்ஓர்
கூற்றானைக் கூற்றுருவங் காய்ந்தானை வாய்ந்திலங்கு
நீற்றானை நெஞ்சே நினை.
12
36. நினையா தொழிதிகண் டாய்நெஞ்ச மேஇங்கோர் தஞ்சமென்று
மனையா ளையும்மக்கள் தம்மையும் தேறியோர் ஆறுபுக்கு
நனையாச் சடைமுடி நம்பன்நந் தாதைநொந் தாதசெந்தீ
அனையான் அமரர் பிரான்அண்ட வாணன் அடித்தலமே.
13
37. அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோளும்
முடித்தலமும் நீமுரித்த வாறென் - முடித்தலத்தில்
ஆறாடி ஆறா அனலாடி அவ்வனலின்
நீறாடி நெய்யாடி நீ.
14
38. நீநின்று தானவர் மாமதில் மூன்றும் நிரந்துடனே
தீநின்று வேவச் சிலைதொட்ட வாறென் றிரங்குவல்வாய்ப்
பேய்நின்று பாடப் பெருங்கா டரங்காப் பெயர்ந்துநட்டம்
போய்நின்று பூதந் தொழச்செய்யும் மொய்கழற் புண்ணியனே.
15
39. புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே
எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் - திண்ணிய
கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த
அம்மானுக் காட்பட்ட அன்பு.
16
40. அன்பால் அடைவதெவ் வாறுகொல் மேலதோர் ஆடரவம்
தன்பால் ஒருவரைச் சாரஒட் டாதது வேயும்அன்றி
முன்பா யினதலை யோடுகள் கோத்தவை ஆர்த்துவெள்ளை
என்பா யினவும் அணிந்தங்கோர் ஏறுகந் தேறுவதே.
17
41 ஏறலால் ஏறமற் றில்லையே எம்பெருமான்
ஆறெலாம் பாயும் அவிர்சடையார் - வேறோர்
படங்குலவு நாகமுமிழ் பண்டமரர் சூழ்ந்த
தடங்கடல்நஞ் சுண்டார் தமக்கு.
18
42 தமக்கென்றும் இன்பணி செய்திருப் பேமுக்குத் தாம்ஒருநாள்
எமக்கொன்று சொன்னால் அருளுங்கொ லாமிணை யாதுமின்றிச்
சுமக்கின்ற பிள்ளைவெள்ளேறொப்ப தொன்றுதொண் டைக்கனிவாய்
உமைக்கென்று தேடிப் பெறாதுட னேகொண்ட உத்தமரே.
19
43. உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரம்அடுக்கித் தீயாமுன் - உத்தமனாம்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து.
20

திருச்சிற்றம்பலம்

2.4 காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த
அற்புதத் திருவந்தாதி (பாசுரங்கள் 44- 144)

>
44. பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.
1
45 இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் -சுடர்உருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்னெஞ் சவர்க்கு.
2
46 அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தல்லாற் - பவர்ச்சடைமேற்
பாகப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.
3
47 ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற்
கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம்
செம்மையா னாகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மைஆட் கொண்ட இறை.
4
48. இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே
எந்தாய் எனஇரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அது மாற்றுவான்.
5
49 வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்
முன்நஞ்சத் தாலிருண்ட மெய்யொளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தானென்பன் யான்.
6
50. யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேயக்
கைம்மா உரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன்.
7
51 ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்
ஆயினேன் அஃதன்றே யாமாறு - தூய
புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்
அனற்கங்கை ஏற்றான் அருள்.
8
52 அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளு மாவ தெனக்கு.
9
53 எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனிக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே யெனக்கரிய தொன்று.
10
54. ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேஎன் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்
கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது.
11
55. அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும்
அதுவே இனியறிந்தோ மானால் - அதுவே
பனிக்கணங்கு கண்ணியா ரொண்ணுதலின் மேலோர்
தனிக்கணங்கு வைத்தார் தகவு.
12
56. தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப்
புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர
ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்
சார்ந்திடுமே லேபாவந் தான்.
13
57. தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான்
தானே பெருஞ்சேமஞ் செய்யுமால் - தானேயோர்
பூணாகத் தாற்பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
நீணாகத் தானை நினைந்து.
14
58. நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம்
புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து
மின்செய்வார் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்
கென்செய்வான் கொல்லோ இனி.
15
59. இனியோ நாம்உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோ ரிடரில்லோம் நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்.
16
60. காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்
காதியாய் நின்ற அரன்.
17
61 அரனென்கோ நான்முகன் என்கோ அரிய
பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழியத்
தானவனைப் பாதத் தணிவிரலாற் செற்றானை
யானவனை எம்மானை இன்று.
18
62 இன்று நமக்கௌிதே மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றுமோர்
மூவா மதியானை மூவே ழுலகங்கள்
ஆவானைக் காணும் அறிவு.
19
63 அறிவானுந் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்.
20
64. அவனே இருசுடர்தீ ஆகாசம் ஆவான்
அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே
இயமானனாய் அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து.
21
65. வந்திதனைக் கொள்வதே யொக்கும்இவ் வாளரவின்
சிந்தை யதுதெரிந்து காண்மினோ- வந்தோர்
இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்
பிரானீர்உம் சென்னிப் பிறை.
22
66. பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
எந்தையா உள்ள மிது.
23
67 இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா
றிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே
மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே
இன்னுஞ் சுழல்கின்ற திங்கு.
24
68 இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்
ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று.
25
69 ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும்
மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே
அக்கயலே வைத்த அரவு.
26
70. அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல்
பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் - முரணழிய
ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே
பொன்னாரம் மற்றொன்று பூண்.
27
71. பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம்
பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற்
கென்முடிவ தாக இவர்.
28
72. இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
இவரை இகழ்வதே கண்டீர் -இவர் தமது
பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த
பேய்க்கோலங் கண்டார் பிறர்.
29
73. பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே
பிறரறியும் பேருணர்வுந் தாமே - பிறருடைய
என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார்
வன்பேயும் தாமும் மகிழ்ந்து.
30
74. மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும்
திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே
யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே இன்னும் பெருக்கு.
31
75. பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்
ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின்
முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்.
32
76. நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுவந்த
தெக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத் தவ்வுருவே ஆம்.
33
77. ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே
நாமாளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமாறு
ஒருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி
அருகணையா தாரை அடும்.
34
78 அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி யிருள்போந்
திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள்
அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல
மணிமிடற்றின் உள்ள மறு.
35
79. மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம்
தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ - உறுவான்
தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி.
36
80. மதியா அடலவுணர் மாமதில்மூண் றட்ட
மதியார் வளர்சடையி னானை - மதியாலே
என்பாக்கை யாலிகழா தேத்துவரேல் இவ்வுலகில்
என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.
37
81 ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவம்
தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர்
தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு
கூரேறு காரேனக் கொம்பு.
38
82 கொம்பினைஓர் பாகத்துக் கொண்ட குழகன்தன்
அம்பவள மேனி அதுமுன்னஞ் - செம்பொன்
அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளி
மணிவரையே போலும் மறித்து.
39
83 மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக்
குறித்துத் தொழுதொண்டர் பாதம் - குறித்தொருவர்
கொள்ளாத திங்கள் குறுங்கண்ணி கொண்டார்மாட்
டுள்ளாதார் கூட்டம் ஒருவு.
40
84 ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து.
41
85 நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை
ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்து
வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ என்னோ
இளங்குழவித் திங்கள் இது.
42
86 திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றூர்திரியேல்
எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய
வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே
தானே அறிவான் தனக்கு.
43
87 தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
எனக்கே அருளாவா றென்கொல் - மனக்கினிய
சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்
பேராளன் வானோர் பிரான்.
44
88. பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனை
எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும்
இங்குற்றான் காண்பார்க் கௌிது.
45
89 எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும்
அளியீர் அறிவிலீர் ஆஆ - ஒளிகொள்மிடற்
றெந்தைஅராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த
சிந்தையராய் வாழுந் திறம்.
46
90 திறத்தான் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்
பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த
இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான்
திருவடிக்கட் சேருந் திரு.
47
91 திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
இதுமதியென் றொன்றாக இன்றளவுந் தேரா
ததுமதியொன் றில்லா அரா.
48
92 அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்
விராவு கதிர்விரியஓடி - விராவுதலால்
பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே
தன்னோடே யொப்பான் சடை.
49
93 சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து
புடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல்
வலப்பால்அக் கோல மதிவைத்தான்தன் பங்கின்
குலப்பாவை நீலக் குழல்.
50
94. குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்
தெழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப்
பேரிரவில் ஈமப் பெருங்காட்டில் பேயோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு.
51
95 அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்
தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண்
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர்.
52
96. சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி
நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப் - பேரார்ந்த
நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான்
காண்பார்க்குச் செவ்வேயோர் கார்.
53
97 காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய்
ஓருருவாய் நின்னோ டுழிதருவான் - நீருருவ
மேகத்தாற்செய்தனைய மேனியான் நின்னுடைய
பாகத்தான் காணாமே பண்டு.
54
98 பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு
கண்டங் கறுத்ததுவு மன்றியே - உண்டு
பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியி னுள்ளே
மணிமறுவாய்த் தோன்றும் வடு.
55
99 வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின்
சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண்
புலாற்றலையின் உள்ளுண் புறம்பேசக் கேட்டோ
நிலாத்தலையிற் சூடுவாய் நீ.
56
100 நீயுலகம் எல்லாம் இரப்பினும் நின்னுடைய
தீய அரவொழியச் செல்கண்டாய் - தூய
மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி
விடஅரவம் மேலாட மிக்கு.
57
101 மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும்
ஒக்க வுடனிருந்தால் ஒவ்வாதே - செக்கர்போல்
ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்தன் பொன்னுருவில்
பாகத்தாள் பூங்குழலும் பண்பு.
58
102 பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண்
கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும்
அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ
தெவ்வுருவோ நின்னுருவ மேல்.
59
103 மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே - மாலாய
கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ
தம்மான் திருமேனி அன்று.
60
104 அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வுருவோன் உம்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது.
61
105 ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா
தேதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால்
வில்வேட னாகி விசயனோ டேற்றநாள்
வல்வேட னான வடிவு.
62
106 வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே
நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ - கடியுலவு
சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால்
நின்முடிமேல் திங்கள் நிலா.
63
107 நிலாஇலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல்
உலாவி உழிதருமா கொல்லோ - நிலாஇருந்த
செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே
புக்கரவங் காலையே போன்று.
64
108 காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு.
65
109 மிடற்றில் விடமுடையீர் உம்மிடற்றை நக்கி
மிடற்றில் விடங்கொண்ட வாறோ - மிடற்றகத்து
மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ
பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு.
66
110 பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந்
தாம்பயின்று தாழருவி தூங்குதலால் - ஆம்பொன்
உருவடிவில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்
திருவடியின் மேய சிலம்பு.
67
111 சிலம்படியாள் ஊடலைத் தான்தவிர்ப்பான் வேண்டிச்
சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி - நலம்பெற்
றெதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான்
முதிரா மதியான் முடி.
68
112 முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல
அடிமேற் கொடுமதியோங் கூற்றைப் - படிமேற்
குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம்
இனிஅவலம் உண்டோ எமக்கு.
69
113 எமக்கிதுவோ பேராசை யென்றுந் தவிரா
தெமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் - அமைக்கவே
போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில்
ஏந்தெரிபாய்ந் தாடும் இடம்.
70
114 இடப்பால வானத் தெழுமதியை நீயோர்
மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப் பாகங்
கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண்
கண்டாயே முக்கண்ணாய் கண்.
71
115 கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர்
விண்ணாளுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்கும்
கண்ணாளா ஈதென் கருத்து.
72
116 கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே
திருத்தலஞ் சிக்கென நான்சொன்னேன் - பருத்தரங்க
வெள்ளநீ ரேற்றேன் அடிக்கமலம் நீவிரும்பி
உள்ளமே எப்போதும் ஓது.
73
117 ஓத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட
ஏது நிறைந்தில்லை என்பரால் - பேதையர்கள்
எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா
கண்ணார் கபாலக் கமலம்.
74
118 கலங்கு புனல்கங்கை ஊடால லாலும்
இலங்கு மதிஇயங்க லாலும் - நலங்கொள்
பரிசுடையான் நீண்முடிமேற் பாம்பியங்க லாலும்
விரிசடையாங் காணில் விசும்பு.
75
119 விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து
பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப - முசிந்தெங்கும்
எந்தாய் தழும்பேறி யேபாவம் பொல்லாவாம்
அந்தா மரைபோல் அடி.
76
120 அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள்
முடிபேரின் மாமுகடு பேரும் - கடகம்
மறிந்தாடு கைபேரின் வான்திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றா தரங்கு.
77
121 அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல்
என்னாக வையான்தான் எவ்வுலகம் ஈந்தளியான்
பன்னாள் இரந்தாற் பணிந்து.
78
122 பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்
அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும்
எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு.
79
123 செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்டோள்
அரக்கனையும் முன்னின் றடர்த்த - திருத்தக்க
மாலயனுங் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக்
காலனையும் வென்றுதைத்த கால்.
80
124 காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல
அரணார் அவிந்தழிய வெந்தீயம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து.
81
125 சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது
பேர்ந்தார்க்குத் தீக்கொடியின் பெற்றியதாம் - தேர்ந்துணரில்
தாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன்
வீழ்சடையே என்றுரைக்கும் மின்.
82
126 மின்போலும் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால்
என்போலுங் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும்
பொற்குன்றும் நீல மணிக்குன்றும் தாமுடனே
நிற்கின்ற போலும் நெடிது.
83
127 நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும் நேரே
கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக
விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினில்அழியக்
கண்டாலும் முக்கணான் கண்.
84
128 கண்ணாரக் கண்டும்என் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின்.
85
129 பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீ
துறினும் உறாதொழியு மேனும் - சிறிதுணர்த்தி
மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்தன் பேயாய
நற்கணத்தி லொன்றாய நாம்.
86
130 நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர்
அறிவினையே பற்றினால் எற்றே தடுமே
எறிவினையே என்னும் இருள்.
87
131 இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ
மருளின் மணிநீலம் என்கோ - அருளெமக்கு
நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்
ஒன்றுடையாய் கண்டத் தொளி.
88
132 ஒளிவி லிவன்மதனை ஒண்பொடியா நோக்கித்
தௌிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் - ஒளிநஞ்சம்
உண்டவா யஃதிருப்ப உன்னுடைய கண்டமிருள்
கொண்டவா றென்இதனைக் கூறு.
89
133 கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித் திட்
டேற மிகப்பெருகின் என்செய்தி - சீறி
விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத்
தெழித்தோடுங் கங்கைத் திரை.
90
134 திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்
உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே
எம்மைப் புறம்உரைப்ப தென்.
91
135 என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந்
தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச்
சுருளாகச் செய்தனைய தூச்சடையோன் வானோர்க்
கருளாக வைத்த அவன்.
92
136 அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்
அவன்கண்டாய் அம்பவள வண்ணன் - அவன் கண்டாய்
மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே
மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு.
93
137 விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா
இருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்பன்மகள்
மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க
அஞ்சுமோ சொல்லாய் அவள்.
94
138 அவளோர் குலமங்கை பாகத் தகலாள்
இவளோர் சலமகளும் ஈதே - தவளநீ
றென்பணிவீர் என்றும் பிரிந்தறியீர் ஈங்கிவருள்
அன்பணியார் சொல்லுமின்இங் கார்.
95
139 ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும்
போர்வை அதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து.
96
140 மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல்
உறைப்போடும் உன்கைக் கொண்டாயோ - நிறைத்திட்
டுளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக்
களைந்தெழுந்த செந்தீ யழல்.
97
141 அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப்
பேயாடு கானிற் பிறங்க அனலேந்தித்
தீயாடு வாயிதனைக் செப்பு.
98
142 செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட்
டப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பெனக்கொன்
றாகத்தான் அங்காந் தனலுமிழும் ஐவாய
நாகத்தா யாடுன் நடம்.
99
143 நடக்கிற் படிநடுங்கும் நோக்கிற் திசைவேம்
இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கற்
பொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்னே
றுருமேறோ ஒன்றா உரை.
100
144 உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
கரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார்
ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார்
பேராத காதல் பிறந்து.
101

திருச்சிற்றம்பலம்

3. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் பாசுரங்கள் (145 -168)

3.1 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அருளிச் செய்த
திருக்கோயில் திருவெண்பா (க்ஷேத்திரத் திருவெண்பா) (பாசுரங்கள் 145- 168)

145. ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று -நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.
1
146 கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று
நடுநடுத்து நாவடங்கா முன்னம் - பொடியடுத்த
பாழ்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்
கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.
2
147 குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.
3
148. காளை வடிவொழிந்து கையுறவோ டையுறவாய்
நாளும் அணுகி நலியாமுன் - பாளை
அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆருரற் காளாய்க்
கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.
4
149 வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்
குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து - கஞ்சி
அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே
திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.
5
150 காலைக் கலையிழையாற் கட்டித்தன் கையார்த்து
மாலை தலைக்கணிந்து மையெழுதி - மேலோர்
பருக்கோடி மூடிப் பலரழா முன்னம்
திருக்கோடி காஅடைநீ சென்று.
6
151. மாண்டுவாய் அங்காவா முன்னம் மடநெஞ்சே
வேண்டுவாய் ஆகி விரைந்தொல்லைப் - பாண்டவாய்த்
தென்னிடைவாய் மேய சிவனார் திருநாமம்
நின்னிடைவாய் வைத்து நினை.
7
152. தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை.
8
153 அழுகு திரிகுரம்பை ஆங்கதுவிட் டாவி
ஒழுகும் பொழுதறிய ஒண்ணா - கழுகு
கழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பால்
குழித்தண் டலையானைக் கூறு.
9
154 படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட
முடியரசர் செல்வத்து மும்மைக் - கடியிலங்கு
தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்
டோடேந்தி உண்ப துறும்.
10
155 குழீஇயிருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட
வழீஇயிருந்த அங்கங்கள் எல்லாம் - தழீஇயிருந்தும்
என்னானைக் காவா இதுதகா தென்னாமுன்
தென்னானைக்கா அடைநீ சென்று.
11
156 குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல்
பயிலப் புகாமுன்னம் நெஞ்சே - மயிலைத்
திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்
இருப்பின்னை யங்காந் திளைத்து.
12
157. காளையர்கள் ஈளையர்க ளாகிக் கருமயிரும்
பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து - சூளையர்கள்
ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனை
மாகாளங் கைதொழுது வாழ்த்து.
13
158. இல்லும் பொருளும் இருந்த மனையளவே
சொல்லும் அயலார் துடிப்பளவே - நல்ல
கிளைகுளத்து நீரளவே கிற்றியே நெஞ்சே
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.
14
159 அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்
குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் - நெஞ்சமே
போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.
15
160. இட்ட குடிநீர் இருநாழி ஓருழக்காச்
சட்டஒரு முட்டைநெய் தான்கலந் - தட்ட
அருவாச்சா றென்றங் கழாமுன்னம் பாச்சில்
திருவாச்சி ராமமே சேர்.
16
161 கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி
ஒழிந்த துடல்இரா வண்ணம் - அழிந்த
திராமலையா கொண்டுபோ என்னாமுன் நெஞ்சே
சிராமலையான் பாதமே சேர்.
17
162 இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி
விழவாடி ஆவிவிடா முன்னம் - மழபாடி
ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை
நீண்டானை நெஞ்சே நினை.
18
163 உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள்
கள்ளிடத்தான் வந்து கலவாமுன் - கொள்ளிடத்தின்
தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும்
தன்திருவாய்ப் பாடியான் தாள்.
19
164. என்னெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன்
கன்னஞ்செய் வாயாகிற் காலத்தால் - வன்னெஞ்சேய்
மாகம்பத் தானை உரித்தானை வண்கச்சி
ஏகம்பத் தானை இறைஞ்சு.
20
165 கரம்ஊன்றிக் கண்ணிடுங்கிக் கால்குலைய மற்றோர்
மரம்ஊன்றி வாய்குதட்டா முன்னம் - புரம்மூன்றுந்
தீச்சரத்தாற் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய
ஈச்சரத்தான் பாதமே ஏத்து.
21
166. தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்
டெஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் - நஞ்சங்
கரந்துண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி
இரந்துண் டிருக்கப் பெறின்.
22
167 நூற்றனைத்தோர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ்
வீற்றிருந்த செல்வம் விழையாதே - கூற்றுதைத்தான்
ஆடரவங் கச்சா அரைக்கசைத்த அம்மான்தன்
பாடரவங் கேட்ட பகல்.
23
168. உய்யும் மருந்திதனை உண்மின் எனஉற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் - பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.
24

திருச்சிற்றம்பலம்

4. சேரமான் பெருமாள் நாயனார் பாசுரங்கள் (169 - 301)

4.1 சேரமான் பெருமாள் நாயனார் அருளிச் செய்த
பொன்வண்ணத்தந்தாதி (பாசுரங்கள் 169- 269)

169. பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.
1
170 ஈசனைக் காணப் பலிகொடு செல்லஎற் றேஇவளோர்
பேயனைக் காமுறு பிச்சிகொ லாமென்று பேதையர்முன்
தாயெனை ஈர்ப்பத் தமியேன் தளரஅத் தாழ்சடையோன்
வாவெனைப் புல்லவென் றான்இமை விண்டன வாட்கண்களே.
2
171 கண்களங் கஞ்செய்யக் கைவளை சோரக் கலையுஞ்செல்ல
ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பஒண் கொன்றையந் தார்உருவப்
பெண்களங் கம்மிவள் பேதுறும் என்பதோர் பேதைநெஞ்சம்
பண்களங் கம்மிசை பாடநின் றாடும் பரமனையே.
3
172 பரமனை யேபலி தேர்ந்துநஞ் சுண்டது பன்மலர்சேர்
பிரமனை யேசிரங் கொண்டுங் கொடுப்பது பேரருளாம்
சரமனை யேஉடம் பட்டும் உடம்பொடு மாதிடமாம்
வரமனை யேகிளை யாகும்முக் கண்ணுடை மாதவனே.
4
173 தவனே உலகுக்குத் தானே முதல்தான் படைத்தவெல்லாம்
சிவனே முழுதும்என் பார்சிவ லோகம் பெறுவர்செய்ய
அவனே அடல்விடை ஊர்தி கடலிடை நஞ்சமுண்ட
பவனே எனச்சொல்லு வாரும் பெறுவர்இப் பாரிடமே.
5
174 இடமால் வலந்தான் இடப்பால் துழாய்வலப் பால்ஒண்கொன்றை
வடமால் இடந்துகில் தோல்வலம் ஆழி இடம்வலம்மான்
இடமால் கரிதால் வலஞ்சே திவனுக் கெழில்நலஞ்சேர்
குடமால் இடம்வலங் கொக்கரை யாம்எங்கள் கூத்தனுக்கே.
6
175 கூத்துக் கொலாம் இவர் ஆடித் திரிவது கோல்வளைகள்
பாத்துக் கொலாம்பலி தேர்வது மேனி பவளம்கொலாம்
ஏத்துக் கொலாம்இவர் ஆதரிக் கின்ற திமயவர்தம்
ஓத்துக் கொலாம்இவர் கண்டதிண் டைச்சடை உத்தமரே.
7
176 உத்தம ராய்அடி யார்உல காளத் தமக்குரிய
மத்தம் அராமதி மாடம் பதிநலம் சீர்மைகுன்றா
எத்தம ராயும் பணிகொள்ள வல்ல இறைவர்வந்தென்
சித்தம ராய்அக லாதுடன் ஆடித் திரிதவரே.
8
177 திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின் உள்ளும் திரிதரினும்
அரிதவர் தன்மை அறிவிப்ப தாயினும் ஆழிநஞ்சேய்
கரிதவர் கண்டம் வௌிதவர் சாந்தம்கண் மூன்றொடொன்றாம்
பரிதவர் தாமே அருள்செய்து கொள்வர்தம் பல்பணியே.
9
178 பணிபதம் பாடிசை ஆடிசை யாகப் பனிமலரால்
அணிபதங் கன்பற் கொளப்பனை அத்தவற் கேயடிமை
துணிபதங் காமுறு தோலொடு நீறுடல் தூர்த்துநல்ல
தணிபதங் காட்டிடுஞ் சஞ்சலம் நீஎன் தனிநெஞ்சமே.
10
179. நெஞ்சம் தளிர்விடக் கண்ணீர் ததும்ப முகம்மலர
அஞ்செங் கரதலம் கூம்பஅட் டாங்கம் அடிபணிந்து
தஞ்சொல் மலரால் அணியவல் லோர்கட்குத் தாழ்சடையான்
வஞ்சங் கடிந்து திருத்திவைத் தான்பெரு வானகமே.
11
180 வானகம் ஆண்டுமந் தாகினி ஆடிநந் தாவனம் சூழ்
தேனக மாமலர் சூடிச்செல் வோரும் சிதவல்சுற்றிக்
கானகந் தேயத் திரிந்திரப் போரும் கனகவண்ணப்
பால்நிற நீற்றற் கடியரும் அல்லாப் படிறருமே.
12
181 படிறா யினசொல்லிப் பாழுடல் ஓம்பிப் பலகடைச் சென்
றிடறா தொழிதும் எழுநெஞ்ச மேஎரி ஆடிஎம்மான்
கடல்தா யினநஞ்சம் உண்ட பிரான்கழல் சேர்தல்கண்டாய்
உடல்தான் உளபயன் ஆவசொன் னேன்இவ் வுலகினுள்ளே.
13
182 உலகா ளுறுவீர் தொழுமின்விண் ணாள்வீர் பணிமின்நித்தம்
பலகா முறுவீர் நினைமின் பரமனொ டொன்றலுற்றீர்
நலகா மலரால் அருச்சிமின் ஆள்நர கத்துநிற்கும்
அலகா முறுவீர் அரனடி யாரை அலைமின்களே.
14
183 அலையார் புனல்அனல் ஞாயி றவனி மதியம்விண்கால்
தொலையா உயிருடம் பாகிய சோதியைத் தொக்குமினோ
தலையாற் சுமந்துந் தடித்துங் கொடித்தேர் அரக்கன்என்னே
கலையான் ஒருவிரல் தாங்ககில் லான்விட்ட காரணமே.
15
184 காரணன் காமரம் பாடவோர் காமர்அம் பூடுறத்தன்
தாரணங் காகத் தளர்கின்ற தையலைத் தாங்குவர்யார்
போரணி வேற்கண் புனற்படம் போர்த்தன பூஞ்சுணங்கார்
ஏரணி கொங்கையும் பொற்படம் மூடி இருந்தனவே.
16
185 இருந்தனம் எய்தியும் நின்றுந் திரிந்துங் கிடந்தலைந்தும்
வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு போகநெஞ் சேமடவாள்
பொருந்திய பாகத்துப் புண்ணியன் புண்ணியல் சூலத்தெம்மான்
திருந்திய போதவன் தானே களையும்நம் தீவினையே.
17
186 தீவினை யேனைநின் றைவர் இராப்பகல் செத்தித்தின்ன
மேவினை வாழ்க்கை வெறுத்தேன் வெறுத்துவிட் டேன்வினையும்
ஓவின துள்ளந் தௌிந்தது கள்ளங் கடிந் தடைந்தேன்
பாவின செஞ்சடை முக்கணன் ஆரணன் பாதங்களே.
18
187 பாதம் புவனி சுடர்நய னம்புவ னம்உயிர்ப் போங்
கோதம் உடுக்கை உயர்வான் முடிவிசும் பேஉடம்பு
வேதம் முகம்திசை தோள்மிகு பன்மொழி கீதம்என்ன
போதம் இவற்கோர் மணிநிறம் தோற்பது பூங்கொடியே.
19
188 கொடிமேல் இடபமுங் கோவணக் கீளுமோர் கொக்கிறகும்
அடிமேற் கழலும் அகலத்தில் நீறும்ஐ வாயரவும்
முடிமேல் மதியும் முருகலர் கொன்றையும் மூவிலைய
வடிவேல் வடிவும்என் கண்ணுள்எப் போதும் வருகின்றவே.
20
189 வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம்வை கற்குவைகல்
பொருகின்ற போர்க்கொன்றும் ஆற்றகில் லேன்பொடி பூசிவந்துன்
அருகொன்றி நிற்க அருளுகண் டாய்அழல் வாய்அரவம்
வெருகொன்ற வெண்மதி செஞ்சடை மேல்வைத்த வேதியனே.
21
190 வேதியன் பாதம் பணிந்தேன் பணிந்துமெய்ஞ் ஞானமென்னும்
சோதியென் பால்கொள்ள உற்றுநின் றேற்கின்று தொட்டிதுதான்
நீதியென் றான்செல்வம் ஆவதென் றேன்மேல் நினைப்புவண்டேர்
ஓதிநின் போல்வகைத் தேயிரு பாலும் ஒழித்ததுவே.
22
191 ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன் உவகையை ஓங்கிற்றுள்ளம்
இழித்தேன் உடம்பினை ஏலேன் பிறரிடை இம்மனையும்
பழித்தேன் பழியே விளைக்கும்பஞ் சேந்தியக் குஞ்சரமும்
தெழித்தேன் சிவனடி சேர்ந்தேன் இனிமிகத் தெள்ளியனே.
23
192 தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன் தீங்கவி பாடலுற்றேன்
ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன் உரைத் தார்உரைத்த
கள்ளிய புக்காற் கவிகள்ஒட் டார்கடல் நஞ்சயின்றாய்
கொள்ளிய அல்லகண் டாய்புன்சொல் ஆயினும் கொண்டருளே.
24
193 அருளால் வருநஞ்சம் உண்டுநின் றாயை அமரர்குழாம்
பொருளார் கவிசொல்ல யானும்புன் சொற்கள் புணர்க்கலுற்றேன்
இருளா சறவெழில் மாமதி தோன்றவும் ஏன்றதென்ன
வெருளா தெதிர்சென்று மின்மினி தானும் விரிகின்றதே.
25
194 விரிகின்ற ஞாயிறு போன்றது மேனியஞ் ஞாயிறுசூழ்ந்
தெரிகின்ற வெங்கதிர் ஒத்தது செஞ்சடை அச்சடைக் கீழ்ச்
சரிகின்ற காரிருள் போன்றது கண்டம்அக் காரிருட்கீழ்ப்
புரிகின்ற வெண்முகில் போன்றுள தால்எந்தை ஒண்பொடியே.
26
195 பொடிக்கின் றிலமுலை போந்தில பல்சொற் பொருள்தெரியா
முடிக்கின் றிலகுழல் ஆயினும் கேண்மின்கள் மூரிவெள்ளம்
குடிக்கொண்ட செஞ்சடைக் கொண்டலங் கண்டன்மெய்க் கொண்டணிந்த
கடிக்கொன்றை நாறுகின் றாள்அறி யேன்பிறர் கட்டுரையே.
27
196 உரைவளர் நான்மறை ஓதி உலகம் எலாந் திரியும்
விரைவளர் கொன்றை மருவிய மார்பன் விரிசடைமேல்
திரைவளர் கங்கை நுரைவளர் தீர்த்தஞ் செறியச் செய்த
கரைவளர் ஒத்துள தாற்சிர மாலைஎம் கண்டனுக்கே.
28
197 கண்டங் கரியன் கரியீர் உரியன் விரிதருசீர்
அண்டங் கடந்த பெருமான் சிறுமான் தரித்தபிரான்
பண்டன் பரம சிவனோர் பிரமன் சிரம்அரிந்த
புண்தங் கயிலன் பயிலார மார்பன்எம் புண்ணியனே.
29
198 புண்ணியன் புண்ணியல் வேலையன் வேலைய நஞ்சன்அங்கக்
கண்ணியன் கண்ணியல் நெற்றியன் காரணன் கார்இயங்கும்
விண்ணியன் விண்ணியல் பாணியன் பாணி கொள உமையாள்
பண்ணியன் பண்ணியல் பாடலன் ஆடற் பசுபதியே.
30
199 பதியார் பலிக்கென்று வந்தார் ஒருவர்க்குப் பாவைநல்லீர்
கதியார் விடைஉண்டு கண்மூன் றுளகறைக் கண்டமுண்டு
கொதியார் மழுவுண்டு கொக்கரை உண்டிறை கூத்துமுண்டு
மதியார் சடைஉள மால்உள தீவது மங்கையர்க்கே.
31
200 மங்கைகொங் கைத்தடத் திங்குமக் குங்குமப் பங்கநுங்கி
அங்கமெங் கும்நெகச் சங்கமங் கைத்தலத் துங்கவர்வான்
கங்கைநங் கைத்திரைப் பொங்குசெங் கண்அர வங்கள்பொங்கிப்
பங்கிதங் கும்மலர்த் திங்கள்தங் கும்முடிப் பண்டங்கனே.
32
201 பண்டங்கன் வந்து பலிதாஎன்றான்பக லோற் கிடென்றேன்
அண்டங் கடந்தவன் அன்னம்என்றான்அயன் ஊர்தியென்றேன்
கொண்டிங் குன்ஐயம்பெய் என்றான் கொடித்தேர் அநங்கன்என்றேன்
உண்டிங் கமைந்ததென் றாற்கது சொல்ல உணர்வுற்றதே.
33
202 உற்றடி யார்உல காளஓர் ஊணும் உறக்கும் இன்றிப்
பெற்றம தாவதென் றேனும் பிரான்பெரு வேல்நெடுங்கண்
சிற்றடி யாய்வெண்பல் செவ்வாய் இவள்சிர மாலைக்கென்றும்
இற்றிடை யாம்படி யாகஎன் னுக்கு மெலிக்கின்றதே.
34
203 மெலிக்கின்ற வெந்தீ வெயில்வாய் இழுதழல் வாய்மெழுகு
கலிக்கின்ற காமம் கரதலம் எல்லி துறக்கம் வெங்கூற்
றொலிக்கின்ற நீருறு தீயொளி யார்முக்கண் அத்தர்மிக்க
பலிக்கென்று வந்தார் கடிக்கொன்றை சூடிய பல்லுயிரே.
35
204 பல்லுயிர் பாகம் உடல்தலை தோல்பக லோன்மறல்பெண்
வில்லிஓர் வேதியன் வேழம் நிரையே பறித்துதைத்துப்
புல்லியுஞ் சுட்டும் அறுத்தும் உரித்துங்கொண் டான் புகழே
சொல்லியும் பாடியும் ஏத்தக் கெடும்நங்கள் சூழ்துயரே.
36
205 துயருந் தொழும்அழும் சோரும் துகிலுங் கலையுஞ்செல்லப்
பெயரும் பிதற்றும் நகும்வெய் துயிர்க்கும் பெரும்பணிகூர்ந்
தயரும் அமர்விக்கும் மூரி நிமிர்க்கும்அந் தோஇங்ஙனே
மயரும் மறைக்காட் டிறையினுக் காட்பட்ட வாணுதலே.
37
206 வாணுதற் கெண்ணம்நன் றன்று வளர்சடை எந்தைவந்தால்
நாணுதற் கெண்ணாள் பலிகொடுசென்று நகும்நயந்து
பேணுதற் கெண்ணும் பிரமன் திருமால் அவர்க் கரிய
தாணுவுக் கென்னோ இராப்பகல் நைந்திவள் தாழ்கின்றதே.
38
207 தாழுஞ் சடைசடை மேலது கங்கையக் கங்கைநங்கை
வாமுஞ் சடைசடை மேலது திங்கள்அத் திங்கட்பிள்ளை
போழுஞ் சடைசடை மேலது பொங்கர வவ்வரவம்
வாழுஞ் சடைசடை மேலது கொன்றையெம் மாமுனிக்கே.
39
208 முனியே முருகலர் கொன்றையி னாய்என்னை மூப்பொழித்த
கனியே கழலடி அல்லாற் களைகண்மற் றொன்றுமிலேன்
இனியேல் இருந்தவம் செய்யேன் திருந்தஅஞ் சேநினைந்து
தனியேன் படுகின்ற சங்கடம் ஆர்க்கினிச் சாற்றுவனே.
40
209 சாற்றுவன் கோயில் தலையும் மனமும் தவம்இவற்றால்
ஆற்றுவன் அன்பெனும் நெய்சொரிந் தாற்றிஅஞ் சொல்மலரால்
ஏற்றுவன் ஈசன்வந் தென்மனத் தான்என் றெழுந்தலரே
தூற்றுவன் தோத்திரம் ஆயின வேயினிச் சொல்லுவனே.
41
210 சொல்லா தனகொழு நாவல்ல சோதியுட் சோதிதன்பேர்
செல்லாச் செவிமரம் தேறித் தொழாதகை மண்திணிந்த
கல்லாம் நினையா மனம்வணங்காத்தலை யும்பொறையாம்
அல்லா அவயவந் தானும் மனிதர்க் கசேதனமே.
42
211 தனக்குன்றம் மாவையம் சங்கரன் தன்னருள் அன்றிப்பெற்றால்
மனக்கென்றும் நஞ்சிற் கடையா நினைவன் மதுவிரியும்
புனக்கொன்றை யான்அரு ளால்புழுவாகிப் பிறந்திடினும்
எனக்கென்றும் வானவர் பொன்னுல கோடொக்க எண்ணுவனே.
43
212 எண்ணம் இறையே பிழைக்குங் கொலாம்இமை யோர்இறைஞ்சும்
தண்ணம் பிறைச்சடைச் சங்கரன் சங்கக் குழையன்வந்தென்
உள்நன் குறைவ தறிந்தும் ஒளிமா நிறங்கவர்வான்
கண்ணும் உறங்கா திராப்பகல் எய்கின்ற காமனுக்கே.
44
213 காமனை முன்செற்ற தென்றாள் அவள்இவள் காலன்என்னும்
தாமநன் மார்பனை முன்செற்ற தென்றுதன் கையெறிந்தாள்
நாம்முனஞ் செற்றதன் றாரைஎன் றேற்கிரு வர்க்கும் அஞ்சி
ஆமெனக் கிற்றிலர் அன்றெனக் கிற்றிலர் அந்தணரே.
45
214 அந்தணராம் இவர்ஆருர் உறைவதென் றேன்அதுவே
சந்தணை தோளியென் றார்தலை யாயசலவர் என்றேன்
பந்தணை கையாய் அதுவும்உண் டென்றார் உமையறியக்
கொந்தணை தாரீர் உரைமின்என் றேன்துடி கொட்டினரே.
46
215 கொட்டும் சிலபல சூழநின் றார்க்கும்குப் புற்றெழுந்து
நட்ட மறியும் கிரீடிக்கும் பாடும் நகும்வெருட்டும்
வட்டம் வரும்அருஞ் சாரணை செல்லும் மலர்தயங்கும்
புட்டங் கிரும்பொழில் சூழ்மறைக் காட்டரன் பூதங்களே.
47
216 பூதப் படையுடைப் புண்ணியரேபுறஞ் சொற்கள்நும்மேல்
ஏதப் படஎழு கின்றன வாலிளை யாளொடும்மைக்
காதற்படுப்பான் கணைதொட்ட காமனைக் கண்மலராற்
சேதப் படுத்திட்ட காரணம் நீரிறை செப்புமினே.
48
217 செப்பன கொங்கைக்குத் தேமலர்க் கொன்றை நிறம்பணித்தான்
மைப்புரை கண்ணுக்கு வார்புனல் கங்கைவைத் தான்மனத்துக்
கொப்பன இல்லா ஒளிகிளர் உன்மத்தமும் அமைத்தான்
அப்பனை அம்மனைநீயென் பெறாதுநின் றார்க்கின்றதே.
49
218 ஆர்க்கின்ற நீரும் அனலும் மதியும் ஐவாய்அரவும்
ஓர்க்கின்ற யோகும் உமையும் உருவும் அருவும்வென்றி
பார்க்கின்ற வேங்கையும் மானும் பகலும் இரவும்எல்லாம்
கார்க்கொன்றை மாலையி னார்க்குடன் ஆகிக் கலந்தனவே.
50
219 கலந்தனக் கென்பலர் கட்டவிழ் வார்கொன்றை கட்டரவார்
சலந்தனக் கண்ணிய கானகம் ஆடியோர் சாணகமும்
நிலந்தனக் கில்லா அகதியன் ஆகிய நீலகண்டத்
தலந்தலைக் கென்னே அலந்தலை யாகி அழிகின்றதே.
51
220 அழிகின்ற தாருயிர் ஆகின்ற தாகுலம் ஏறிடும்மால்
இழிகின்ற சங்கம் இருந்த முலைமேல் கிடந்தனபீர்
பொழிகின்ற கண்ணீர் புலர்ந்தது வாய்கலை போனவந்தார்
மொழிகின்ற தென்இனி நான்மறை முக்கண் முறைவனுக்கே.
52
221 முறைவனை மூப்புக்கு நான்மறைக் கும்முதல் ஏழ்கடலந்
துறைவனைச் சூழ்கயி லாயச் சிலம்பனைத் தொன்மைகுன்றா
இறைவனை எண்குணத் தீசனை ஏத்தினர் சித்தந்தம்பால்
உறைவனைப் பாம்பனை யாம்பின்னை என்சொல்லி ஓதுவதே.
53
222 ஓதவன் நாமம் உரையவன் பல்குணம் உன்னைவிட்டேன்
போதவன் பின்னே பொருந்தவன் வாழ்க்கை திருந்தச்சென்று
மாதவ மாகிடு மாதவ மாவளர் புன்சடையான்
யாதவன் சொன்னான் அதுகொண் டொழிஇனி ஆரணங்கே.
54
223 ஆரணங் கின்முகம் ஐங்கணை யான்அகம் அவ்வகத்தில்
தோரணந் தோள்அவன் தேரகல் அல்குல்தொன் மைக்கண்வந்த
பூரண கும்பம் முலைஇவை காணப் புரிசடைஎம்
காரணன் தாள்தொழும் அன்போ பகையோ கருதியதே.
55
224 கருதிய தொன்றில்லை ஆயினும் கேண்மின்கள் காரிகையாள்
ஒருதின மும்முள ளாகஒட் டாதொடுங் கார்ஒடுங்கப்
பொருதநன் மால்விடைப் புண்ணியன் பொங்கிளங் கொன்றைஇன்னே
தருதிர்நன் றாயிடும் தாரா விடிற்கொல்லுந் தாழ்இருளே.
56
225 இருளார் மிடற்றால் இராப்பகல் தன்னால் வரைமறையால்
பொருளார் கமழ்கொன்றை யால்முல்லை புற்றர வாடுதலால்
தெருளார் மதிவிசும் பால்பௌவந்தெண்புனல் தாங்குதலால்
அருளாற் பலபல வண்ணமு மால்அரன் ஆயினனே.
57
226 ஆயினஅந்தணர் வாய்மை அரைக்கலை கைவளைகள்
போயின வாள்நிகர் கண்ணுறு மைந்நீர் முலையிடையே
பாயின வேள்கைக் கரபத் திரத்துக்குச் சூத்திரம்போல்
ஆயின பல்சடை யார்க்கன்பு பட்டஎம் ஆயிழைக்கே.
58
227 இழையார் வனமுலை வீங்கி இடையிறு கின்ற திற்றால்
பிழையாள் நமக்கிவை கட்டுண்க என்பது பேச்சுக்கொலாம்
கழையார் கழுக்குன்ற வாணனைக் கண்டனைக் காதலித்தாள்
குழையார் செவியொடு கோலக் கயற்கண்கள் கூடியவே.
59
228 கூடிய தன்னிடத் தான்உமை யாளிடத் தானைஐயா
றீடிய பல்சடை மேற்றெரி வண்ணம் எனப்பணிமின்
பாடிய நான்மறை பாய்ந்தது கூற்றைப் படர்புரஞ்சுட்
டாடியநீறுசெஞ் சாந்திவை யாம்எம் அயன்எனவே.
60
229 அயமே பலிஇங்கு மாடுள தாணுவோர் குக்கிக்கிடப்
பயமே மொழியும் பசுபதி ஏறெம்மைப் பாய்ந்திடுமால்
புயமேய் குழலியர் புண்ணியர் போமின் இரத்தல்பொல்லா
நயமே மொழியினும் நக்காம் அம் மாஉம்மை நாணுதுமே.
61
230 நாணா நடக்க நலத்தார்க் கிடையில்லை நாம்எழுத
ஏணார் இருந்தமி ழால்மற வேனுந் நினைமின்என்றும்
பூணார் முலையீர் நிருத்தன் புரிசடை எந்தைவந்தால்
காணாவிடேன்கண்டி ரவா தொழியேன் கடிமலரே.
62
231 கடிமலர்க் கொன்றை தரினும்புல் லேன்கலை சாரஒட்டேன்
முடிமலர் தீண்டின் முனிவன் முலைதொடு மேற்கெடுவன்
அடிமலர் வானவர் ஏத்தநின் றாய்க்கழ கல்லஎன்பன்
தொடிமலர்த் தோள்தொடு மேல்திரு வாணை தொடங்குவனே.
63
232 தொடங்கிய வாழ்க்கையை வாளா துறப்பர் துறந்தவரே
அடங்கிய வேட்கை அரன்பால் இலர்அறு காற்பறவை
முடங்கிய செஞ்சடை முக்கண னார்க்கன்றி இங்கும்அன்றிக்
கிடங்கினிற் பட்ட கராஅனை யார்பல கேவலரே.
64
233 வலந்தான் கழல்இடம் பாடகம் பாம்பு வலம்இடமே
கலந்தான் வலம்நீ றிடம்சாந் தெரிவலம் பந்திடமென்
பலந்தார் வலம்இடம் ஆடகம் வேல்வலம் ஆழிஇடம்
சலந்தாழ் சடைவலம் தண்ணங் குழல்இடம் சங்கரற்கே.
65
234 சங்கரன் சங்கக் குழையன் சரணார விந்தந்தன்னை
அங்கரங் கூப்பித் தொழுதாட் படுமின்தொண் டீர்நமனார்
கிங்கரர் தாம்செய்யும் கீழா யினமிறை கேட்டலுமே
இங்கரம் ஆயிரம் ஈரஎன் நெஞ்சம் எரிகின்றதே.
66
235 எரிகின்ற தீயொத் துளசடை ஈசற்கத் தீக்கிமையோர்
சொரிகின்ற பாற்கடல் போன்றது சூழ்புனல் அப்புனலிற்
சரிகின்ற திங்களோர் தோணிஒக்கின்றதத் தோணிஉய்ப்பான்
தெரிகின்ற திண்கழை போன்றுள தால்அத்திறல் அரவே.
67
236 அரவம் உயிர்ப்ப அழலும்அங் கங்கை வளாய்க்குளிரும்
குரவங் குழல்உமை ஊடற்கு நைந்துறு கும்அடைந்தோர்
பரவும் புகழ்அண்ணல் தீண்டலும் பார்வா னவைவிளக்கும்
விரவும் இடர்இன்பம் எம்இறை சூடிய வெண்பிறையே.
68
237 பிறைத்துண்டம் சூடலுற் றோபிச்சை கொண்டனல் ஆடலுற்றோ
மறைக்கண்டம் பாடலுற் றோஎன்பும் நீறும் மருவலுற்றோ
கறைக்கண்டம் புல்லலுற் றோகடு வாய்அர வாடலுற்றோ
குறைக்கொண் டிவள்அரன் பின்செல்வ தென்னுக்குக் கூறுமினே.
69
238 கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற் றேவல் குளிர்மின்கண்கள்
தேறுமின் சித்தம் தௌிமின் சிவனைச் செறுமின்செற்றம்
ஆறுமின் வேட்கை அறுமின் அவலம் இவைநெறியா
ஏறுமின் வானத் திருமின் விருந்தாய் இமையவர்க்கே.
70
239 இமையோர் கொணர்ந்திங் கிழித்திட நீர்மைகெட் டேந்தல்பின்போய்
அமையா நெறிச்சென்றோர் ஆழ்ந்த சலமகளாய் அணைந்தே
எமையாளு டையான் தலைமக ளாஅங் கிருப்பஎன்னே
உமையா ளவள்கீழ் உறைவிடம் பெற்றோ உறைகின்றதே.
71
240 உறைகின் றனர்ஐவர் ஒன்பது வாயில்ஓர் மூன்றுளதால்
மறைகின்ற என்பு நரம்போ டிறைச்சி உதிரம்மச்சை
பறைகின்ற தோல்போர் குரம்பை பயன்இல்லை போய்அடைமின்
அறைகின்ற தெண்புனல் செஞ்சடைக் கொண்டோன் மலரடிக்கே.
72
241 அடிக்கண்ணி கைதொழு தார்க்ககன் ஞாலங் கொடுத்தடிநாய்
வடிக்கண்ணி நின்னைத் தொழவளை கொண்டனை வண்டுண்கொன்றைத்
கடிக்கண்ணி யாய்எமக் கோருர் இரண்டகங் காட்டினையால்
கொடிக்கண்ணி மேல்நல்ல கொல்லே றுயர்த்த குணக்குன்றமே.
73
242 குன்றெடுத் தான்செவி கண்வாய் சிரங்கள் நெரிந்தலற
அன்றடர்த் தற்றுகச் செற்றவன் நற்றவர்க் கற்றசிவன்
மன்றிடைத் தோன்றிய நெல்லிக் கனிநிற்ப மானுடர்போய்
ஒன்றெடுத் தோதிப் புகுவர் நரகத் துறுகுழியே.
74
243 குழிகட் கொடுநடைக் கூன்பற் கவட்டடி நெட்டிடைஊன்
உழுவைத் தழைசெவித் தோல்முலைச் சூறை மயிர்ப்பகுவாய்த்
தெழிகட் டிரைகுரல் தேம்பல் வயிற்றுத் திருக்குவிரற்
கழுதுக் குறைவிடம் போல்கண்டன் ஆடும் கடியரங்கே.
75
244 அரங்கா மணிஅன்றில் தென்றல்ஓர் கூற்றம் மதியம் அந்தீச்
சரங்காமன் எய்யஞ்சு சந்துட் பகையால் இவள்தளர்ந்தாள்
இரங்கா மனத்தவர் இல்லை இரங்கான் இமையவர்தம்
சிரங்கா முறுவான் எலும்புகொள் வான்என்றன் தேமொழிக்கே.
76
245 மொழியக்கண் டான்பழி மூளக்கண் டான்பிணி முன்கைச் சங்கம்
அழியக்கண் டான்அன்றில் ஈரக்கண் டான்தென்றல் என்உயிர்மேல்
சுழியக்கண் டான்துயர் கூரக்கண் டான்துகில் சூழ்கலையும்
கழியக்கண் டான்தில்லைக் கண்ணுத லான்கண்ட கள்ளங்களே.
77
246 கள்ள வளாகங் கடிந்தடி மைப்படக் கற்றவர்தம்
உள்ள வளாகத் துறுகின்ற உத்தமன் நீள்முடிமேல்
வெள்ள வளாகத்து வெண்ணுரை சூடி வியன்பிறையைக்
கொள்ள அளாய்கின்ற பாம்பொன் றுளது குறிக்கொண்மினே.
78
247 குறிக்கொண் டிவள்பெய்த கோல்வளை யேவந்து கோள்இழைத்தீர்
வெறிக்கொண்ட வெள்ளிலம் போதோ எலும்போ விரிசடைமேல்
உறைக்கொன்றை யோஉடைத் தோலோ பொடியோ உடைகலனோ
கறைக்கண்ட ரேநுமக் கென்னோ சிறுமி கடவியதே.
79
248 கடவிய தொன்றில்லை ஆயினுங் கேண்மின்கள் காரிகையாள்
மடவிய வாறுகண் டாம்பிறை வார்சடை எந்தைவந்தால்
கிடவிய நெஞ்சம் இடங்கொடுத் தாட் கவலங் கொடுத்தான்
தடவிய கொம்பதன் தாள்மேல் இருந்து தறிக்குறுமே.
80
249 தறித்தாய் அயன்தலை சாய்த்தாய் சலந்தர னைத்தழலாப்
பொறித்தாய் அனங்கனைச் சுட்டாய் புரம்புன லும்சடைமேற்
செறித்தாய்க் கிவைபுகழ் ஆகின்ற கண்டிவள் சில்வளையும்
பறித்தாய்க் கிதுபழி ஆகுங்கொ லாம்என்று பாவிப்பனே.
81
250 பாவிக்கும் பண்டையள் அல்லள் பரிசறி யாள்சிறுமி
ஆவிக்கும் குற்குலு நாறும் அகம்நெக அங்கம் எங்கும்
காவிக்கண் சோரும்பொச் சாப்புங் கறைமிடற் றானைக்கண்ணில்
தாவிக்கும் வெண்ணகை யாள்அம்மெல் லோதிக்குச் சந்தித்தவே.
82
251 சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம் பிணிக்குத் தனிமருந்தாம்
சிந்திக்கிற் சிந்தா மணியாகித் தித்தித் தமுதமுமாம்
வந்திக்கில் வந்தென்னை மால்செய்யும் வானோர் வணங்கநின்ற
அந்திக்கண் ஆடியி னான்அடி யார்களுக் காவனவே.
83
252 ஆவன யாரே அழிக்கவல் லார்அமை யாவுலகில்
போவன யாரே பொதியகிற் பார்புரம் மூன்றெரித்த
தேவனைத் தில்லைச் சிவனைத் திருந்தடி கைதொழுது
தீவினை யேன்இழந் தேன்கலை யோடு செறிவளையே.
84
253 செறிவளை யாய்நீ விரையல் குலநலம் கல்விமெய்யாம்
இறையவன் தாமரைச் சேவடிப் போதென்றெல் லோரும்ஏத்தும்
நிறையுடை நெஞ்சிது வேண்டிற்று வேண்டிய நீசர்தம்பால்
கறைவளர் கண்டனைக்காணப் பெரிதும் கலங்கியதே.
85
254 கலங்கின மால்கடல் வீழ்ந்தன கார்வரை ஆழ்ந்ததுமண்
மலங்கின நாகம் மருண்டன பல்கணம் வானங்கைபோய்
இலங்கின மின்னொடு நீண்ட சடைஇமை யோர்வியந்தார்
அலங்கல்நன் மாநடம் ஆர்க்கினி ஆடுவ தெம்மிறையே.
86
255 எம்மிறைவன் இமையோர் தலை வன்உமை யாள்கணவன்
மும்முறை யாலும் வணங்கப் படுகின்ற முக்கண்நக்கற்
கெம்முறை யாள்இவள் என்பிழைத் தாட்கிறை என்பிழைத்தான்
இம்முறை யாலே கவரக் கருதிற் றெழிற்கலையே.
87
256 கலைதலை சூலம் மழுக்கனல் கண்டைகட் டங்கம்கொடி
சிலைஇவை ஏந்திய எண்டோட் சிவற்கு மனஞ்சொற்செய்கை
நிலைபிழை யாதுகுற் றேவல்செய்தார்நின்ற மேருஎன்னும்
மலைபிழை யார்என்ப ரால் அறிந் தோர்கள்இம் மாநிலத்தே.
88
257 மாநிலத் தோர்கட்குத் தேவர் அனையஅத் தேவர்எல்லாம்
ஆனலத் தாற்றொழும் அஞ்சடை ஈசன் அவன்பெருமை
தேனலர்த் தாமரை யோன்திரு மாலவர் தேர்ந்துணரார்
பாநலத் தாற்கவி யாமெங்ங னேஇனிப் பாடுவதே.
89
258 பாடிய வண்டுறை கொன்றையி னான்படப் பாம்புயிர்ப்ப
ஓடிய தீயால் உருகிய திங்களின் ஊறல்ஒத்த
தாடிய நீறது கங்கையுந் தெண்ணீர் யமுனையுமே
கூடிய கோப்பொத்த தால்உமை பாகம்எம் கொற்றவற்கே.
90
259 கொற்றவ னேஎன்றும் கோவணத் தாய்என்றும் ஆவணத்தால்
நற்றவ னேஎன்றும் நஞ்சுண்டி யேஎன்றும் அஞ்சமைக்கப்
பெற்றவ னேஎன்றும் பிஞ்ஞக னேஎன்றும் மன்மதனைச்
செற்றவ னேஎன்றும் நாளும் பரவும்என் சிந்தனையே.
91
260 சிந்தனை செய்ய மனம்அமைத் தேன்செப்ப நாஅமைத்தேன்
வந்தனை செய்யத் தலைஅமைத் தேன்கை தொழஅமைத்தேன்
பந்தனை செய்வதற் கன்பமைத் தேன்மெய் அரும்பவைத்தேன்
வெந்தவெண் ணீறணி ஈசற் கிவையான் விதித்தனவே.
92
261 விதித்தன வாழ்நாள் பெரும்பிணி விச்சைகள் கொண்டுபண்டே
கொதிப்பினில் ஒன்றுங் குறைவில்லை குங்குமக் குன்றனைய
பதித்தனங் கண்டனம் குன்றம்வெண் சந்தனம் பட்டனைய
மதித்தனங் கண்டனம் நெஞ்சினி என்செய்யும் வஞ்சனையே.
93
262 வஞ்சனை யாலே வரிவளை கொண்டுள்ள மால்பனிப்பத்
துஞ்சும் பொழுதும் உறத்தொழுதேன் சொரி மால் அருவி
அஞ்சன மால்வரை வெண்பிறை கவ்விஅண் ணாந்தனைய
வெஞ்சின ஆனையின் ஈருரி மூடிய வீரனையே.
94
263 வீரன் அயன்அரி வெற்பலர் நீர்எரி பொன்எழிலார்
காரொண் கடுக்கை கமலம் துழாய்விடை தொல்பறவை
பேர்ஒண் பதிநிறம் தார்இவர் ஊர்திவெவ் வேறென் பரால்
யாரும் அறியா வகைஎங்கள் ஈசர் பரிசுகளே.
95
264 பரியா தனவந்த பாவமும் பற்றும்மற் றும்பணிந்தார்க்
குரியான் எனச்சொல்லி உன்னுட னாவன் எனஅடியார்க்
கரியான் இவன்என்று காட்டுவன் என்றென் றிவைஇவையே
பிரியா துறையும் சடையான் அடிக்கென்றும் பேசுதுமே.
96
265. பேசுவ தெல்லாம் அரன்திரு நாமம்அப் பேதை நல்லாள்
காய்சின வேட்கை அரன்பாலது அறு காற்பறவை
மூசின கொன்றை முடிமே லதுமுலை மேல்முயங்கப்
பூசின சாந்தம் தொழுமால் இவைஒன்றும் பொய்யலவே.
97
266. பொய்யா நரகம் புகினுந் துறக்கம் புகினும்புக்கிங்
குய்யா உடம்பினோ டூர்வ நடப்ப பறப்பஎன்று
நையா விளியினும் நானிலம் ஆளினும் நான்மறைசேர்
மையார் மிடற்றான் அடிமற வாவரம் வேண்டுவனே.
98
267. வேண்டிய நாள்களிற் பாதியும் கங்குல் மிகஅவற்றுள்
ஈண்டிய வெந்நோய் முதலது பிள்ளைமை மேலதுமூப்
பாண்டின அச்சம் வெகுளி அவாஅழுக் காறிங்ஙனே
மாண்டன சேர்தும் வளர்புன் சடைமுக்கண் மாயனையே.
99
268. மாயன்நன் மாமணி கண்டன் வளர்சடை யாற்கடிமை
ஆயின தொண்டர் துறக்கம் பெறுவது சொல்லுடைத்தே
காய்சின ஆனை வளரும் கனக மலையருகே
போயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே.
100
269 ஆக்கியோன் பெயர்
அன்றுவெள் ளானையின் மீதிமை யோர்சுற் றணுகுறச்செல்
வன்றொண்டர் பின்பரி மேற்கொண்டு வெள்ளி மலையரன்முன்
சென்றெழில் ஆதி உலாஅரங் கேற்றிய சேரர்பிரான்
மன்றிடை ஓதுபொன் வண்ணத்தந்தாதி வழங்கிதுவே.
101

திருச்சிற்றம்பலம்

4.2 சேரமான் பெருமாள் நாயனார் அருளிச் செய்த
திருவாரூர் மும்மணிக் கோவை

270. அகவல்
விரிகடல் பருகி அளறுபட் டன்ன
கருநிற மேகம் கல்முக டேறி
நுண்துளி பொழிய நோக்கி ஒண்தொடி
பொலங்குழை மின்னப் புருவ வில்லிட்டு
இலங்கெழிற் செவ்வாய்க் கோபம் ஊர்தரக் (5)
கைத்தலம் என்னும் காந்தள் மலர
முத்திலங் கெயிறெனும் முல்லை அரும்பக்
குழலுஞ் சுணங்குங் கொன்றை காட்ட
எழிலுடைச் சாயல் இளமயில் படைப்ப
உள்நிறை உயிர்ப்பெனும் ஊதை ஊர்தரக் (10)
கண்ணீர்ப் பெருமழை பொழிதலின் ஒண்ணிறத்
தஞ்சனக் கொழுஞ்சே றலம்பி எஞ்சா
மணியும் பொன்னும் மாசறு வயிரமும்
அணிகிளர் அகிலும் ஆரமும் உரிஞ்சிக்
கொங்கை என்னுங் குவட்டிடை இழிதரப் (15)
பொங்குபுனல் காட்டி யோளே கங்கை
வருவிசை தவிர்த்த வார்சடைக் கடவுள்
அரிவை பாகத் தண்ணல் ஆருர்
எல்லையில் இரும்பலி சொரியும்
கல்லோ சென்ற காதலர் மனமே. (20)
1
271. மனமால் உறாதே மற்றென்செய் யும்வாய்ந்த
கனமால் விடையுடையோன் கண்டத் - தினமாகித்
தோன்றினகார் தோன்றிலதேர் சோர்ந்தனசங் கூர்ந்தனபீர்
கான்றனநீர் எந்திழையாள் கண். <
2
272. கண்ணார் நுதல்எந்தை காமரு கண்டம் எனஇருண்ட
விண்ணால் உருமொடு மேலது கீழது கொண்டல்விண்ட
மண்ணார் மலைமேல் இளமயி லால்மட மான்அனைய
பெண்ணாம் இவள்இனி என்னாய்க் கழியும் பிரிந்துறைவே.
3
273. உறைகழி ஒள்வாள் மின்னி உருமெனும்
அறைகுரல் முரசம் ஆர்ப்பக் கைபோய்
வெஞ்சிலை கோலி விரிதுளி என்னும்
மின்சரந் துரந்தது வானே நிலனே
கடிய வாகிய களவநன் மலரொடு (5)
கொடிய வாகிய தளவமும் அந்தண்
குலைமேம் பட்ட கோடலும் கோபமோடு
அலைமேம் பட்ட காந்தளும் இவற்றொடு
காயா வெந்துயர் தருமேல் அவரே
பொங்கிரும் புரிசை போக்கற வளைஇக் (10)
கங்குலும் பகலும் காவில் மேவி
மாசறு வேந்தன் பாசறை யோரே
யானே இன்னே
அலகில் ஆற்றல் அருச்சுனற் கஞ்ஞான்று
உலவா நல்வரம் அருளிய உத்தமன் (15)
அந்தண் ஆருர் சிந்தித்து மகிழா
மயரிய மாக்களைப் போலத்
துயருழந் தழியக் கண்துயி லாவே.
4
274. வெண்பா
துயிலாநோய் யாம்தோன்றத் தோன்றித்தீத் தோன்ற
மயிலால வந்ததால் மாதோ - அயலாய
அண்டத்துக் கப்பாலான் அந்திங்கட் கண்ணியான்
கண்டத்துக் கொப்பாய கார் 5
6
275. கட்டளைக் கலித்துறை
காரும் முழக்கொடு மின்னொடு வந்தது காதலர்தம்
தேருந் தெருவுஞ் சிலம்பப் புகுந்தது சில்வளைகள்
சோருஞ் சிலபல அங்கே நெரிந்தன துன்னருநஞ்
சாரும் மிடற்றண்ணல் ஆருர் அனைய அணங்கினுக்கே.
6
276. அகவல்
அணங்குறை நெடுவரை அருமைபே ணாது
மணங்கமழ் தெரியல் சூடி வைகலும்
விடுசுடர் நெடுவேல் முன்னடி விளக்காக்
கடுவிசைக் கான்யாற்று நெடுநீர் நீந்தி
ஒருதனி பெயரும் பொழுதிற் புரிகுழல் (5)
வானர மகளிர்நின் மல்வழங் ககலத்
தானாக் காதல் ஆகுவர் என்று
புலவி உள்ளமொடு பொருந்தாக் கண்ணள்
கலைபிணை திரியக் கையற வெய்தி
மெல்விரல் நெரித்து விம்மி வெய்துயிர்த்து (10)
அல்லியங் கோதை அழலுற் றாஅங்கு
எல்லையில் இருந்துயர் எய்தினள் புல்லார்
திரிபுரம் எரிய ஒருகணை தெரிந்த
அரிவை பாகத் தண்ணல் ஆருர்
வளமலி கமல வாள்முகத்து (15)
இளமயிற் சாயல் ஏந்திழை தானே.
7
277. வெண்பா
இழையார் வனமுலை ஈர்ந்தண் புனத்தில்
உழையாகப் போந்ததொன் றுண்டே - பிழையாச்சீர்
அம்மான் அனலாடி ஆருர்க்கோன் அன்றுரித்த
கைம்மானேர் அன்ன களிறு.
8
278. கட்டளைக் கலித்துறை
களிறு வழங்க வழங்கா அதர்கதிர் வேல்துணையா
வௌிறு விரவ வருதிகண் டாய்விண்ணின் நின்றிழிந்த
பிளிறு குரற்கங்கை தாங்கிய பிஞ்சகன் பூங்கழல்மாட்
டொளிறு மணிக்கொடும் பூண்இமை யோர்செல்லும் ஓங்கிருளே.
9
279. அகவல்
இருள்புரி கூந்தலும் எழில்நலம் சிதைந்தது
மருள்புரி வண்டறை மாலையும் பரிந்தது
ஒண்ணுதல் திலகமும் அழிந்தது கண்ணும்
மைந்நிறம் ஒழிந்து செந்நிறம் எய்தி
உள்ளறி கொடுமை உரைப்ப போன்றன (5)
சேதகம் பரந்தது செவ்வாய் மேதகு
குழைகெழு திருமுகம் வியப்புள் ளுறுத்தி
இழைகெழு கொங்கையும் இன்சாந் தழீஇக்
கலையுந் துகிலும் நிலையிற் கலங்கி
என்னிது விளைந்த வாறென மற்றிஃது (10)
அன்னதும் அறிகிலம் யாமே செறிபொழில்
அருகுடை ஆருர் அமர்ந்துறை அமுதன்
முருகுவிரி தெரியல் முக்கண் மூர்த்தி
மராமரச் சோலைச் சிராமலைச் சாரற்
சுரும்பிவர் நறும்போது கொய்யப் (15)
பெருஞ்செறி வனத்தில்யான் பிரிந்ததிப் பொழுதே.
10
280 பொழுது கழிந்தாலும் பூம்புனங்காத் தெள்கி
எழுது கொடியிடையாய் ஏகான் - தொழுதமரர்
முன்னஞ்சேர் மொய்கழலான் முக்கணான் நான்மறையான்
மன்னுஞ்சேய் போலொருவன் வந்து.
11
281. வந்தார் எதிர்சென்று நின்றேன் கிடந்தவண் தார்தழைகள்
தந்தார் அவையொன்றும் மாற்றகில் லேன்தக்கன் வேள்விசெற்ற
செந்தா மரைவண்ணன் தீர்த்தச் சடையன் சிராமலைவாய்க்
கொந்தார் பொழிலணி நந்தா வனஞ்சூழ் குளிர்புனத்தே.
12
282. அகவல்
புனமயிற் சாயற் பூங்குழல் மடந்தை
மனைமலி செல்வம் மகிழா ளாகி
ஏதிலன் ஒருவன் காதல னாக
விடுசுடர் நடுவுநின் றடுதலின் நிழலும்
அடியகத் தொளிக்கும் ஆரழற் கானத்து (5)
வெவ்வினை வேடர் துடிக்குரல் வெரீஇ
மெய்விதிர் எறியுஞ் செவ்வித் தாகி
முள்ளிலை ஈந்தும் முளிதாள் இலவமும்
வெள்ளிலும் பரந்த வெள்ளிடை மருங்கில்
கடுங்குரற் கதநாய் நெடுந்தொடர் பிணித்துப் (10)
பாசந் தின்ற தேய்கால் உம்பர்
மரையதள் மேய்ந்த மயிர்ப்புன் குரம்பை
விரிநரைக் கூந்தல் வெள்வாய் மறத்தியர்
விருந்தா யினள்கொல் தானே திருந்தாக்
கூற்றெனப் பெயரிய கொடுந்தொழில் ஒருவன் (15)
ஆற்றல் செற்ற அண்ணல் ஆரூர்ச்
செய்வளர் கமலச் சீறடிக்
கொவ்வைச் செவ்வாய்க் குயில்மொழிக் கொடியே.
13
283. கொடியேர் நுடங்கிடையாள் கொய்தாரான் பின்னே
அடியால் நடந்தடைந்தா ளாக- பொடியாக
நண்ணார்ஊர் மூன்றெரித்த நாகஞ்சேர் திண்சிலையான்
தண்ஆரூர் சூழ்ந்த தடம்.
14
284. தடப்பாற் புனற்சடைச் சங்கரன் தண்மதி போல்முகத்து
மடப்பால் மடந்தை மலரணைச் சேக்கையிற் பாசம்பிரீஇ
இடப்பால் திரியில் வெருவும் இருஞ்சுரஞ் சென்றனளால்
படப்பா லனவல்ல வால்தமி யேன்தையல் பட்டனவே.
15
285. பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி
நட்ட கல்லும் மூதூர் நத்தமும்
பரம்முரம் பதரும் அல்லது படுமழை
வரன்முறை அறியா வல்வெயிற் கானத்துத்
தேனிவர் கோதை செல்ல மானினம் (5)
அஞ்சில் ஓதி நோக்கிற் கழிந்து
நெஞ்செரி வுடைமையின் விலக்காது விடுக
கொங்கைக் கழிந்து குன்றிடை அடைந்த
கொங்கிவர் கோங்கமும் செலவுடன் படுக
மென்றோட் குடைந்து வெயில்நிலை நின்ற 1(0)
குன்ற வேய்களும் கூற்றடைத் தொழிக
மாயிருங் கடற்றிடை வைகல் ஆயிரம்
பாவையை வளர்ப்போய் நீநனி பாவையை
விலக்காது பிழைத்தனை மாதோ நலத்தகும்
அலைபுனல் ஆருர் அமர்ந்துறை அமுதன் (15)
கலையமர் கையன் கண்ணுதல் எந்தை
தொங்கலஞ் சடைமுடிக் கணிந்த
கொங்கலர் கண்ணி ஆயின குரவே.
16
286. குரவங் கமழ்கோதை கோதைவே லோன்பின்
விரவுங் கடுங்கானம் வெவ்வாய் - அரவம்
சடைக்கணிந்த சங்கரன் தார்மதனன் தன்னைக்
கடைக்கணித்த தீயிற் கடிது.
17
287. கடிமலர்க் கொன்றையுந் திங்களுஞ் செங்கண் அரவும்அங்கே
முடிமல ராக்கிய முக்கண்நக் கன்மிக்க செக்கரொக்கும்
படிமலர் மேனிப் பரமன் அடிபர வாதவர்போல்
அடிமலர் நோவ நடந்தோ கடந்ததெம் அம்மனையே.
18
288. அகவல்
மனையுறை குருவி வளைவாய்ச் சேவல்
சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி
ஈனில் இழைக்க வேண்டி ஆனா
அன்புபொறை கூர மேன்மேல் முயங்கிக்
கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும் (5)
பெருவளந் தழீஇய பீடுசால் கிடக்கை
வருபுன லூரன் பார்வை யாகி
மடக்கொடி மாதர்க்கு வலையாய்த் தோன்றிப்
படிற்று வாய்மொழி பலபா ராட்டி
உள்ளத் துள்ளது தெள்ளிதிற் கரந்து (10)
கள்ள நோக்கமொடு கைதொழு திறைஞ்சி
எம்மி லோயே பாண அவனேல்
அமரரும் அறியா ஆதி முர்த்தி
குமரன் தாதை குளிர்சடை இறைவன்
அறைகழல் எந்தை ஆருர் ஆவணத் (15)
துறையில் தூக்கும் எழில்மென் காட்சிக்
கண்ணடி அணைய நீர்மைப்
பண்ணுடைச் சொல்லியர் தம்பா லோனே.
19
289. வெண்பா
பாலாய சொல்லியர்க்கே சொல்லுபோய்ப் பாண்மகனே
ஏலாஇங் கென்னுக் கிடுகின்றாய் - மேலாய
தேந்தன் கமழ்கொன்றைச் செஞ்சடையான் தாள்சூடும்
பூந்தண் புனலூரன் பொய்.
20
290 பொய்யால் தொழினும் அருளும் இறைகண்டம் போலிருண்ட
மையார் தடங்கண் மடந்தையர் கேட்கிற்பொல் லாதுவந்துன்
கையால் அடிதொடல் செல்லல்நில் புல்லல் கலைஅளையல்
ஐயா இவைநன்கு கற்றாய் பெரிதும் அழகியதே.
21
291. அகவல்
அழகுடைக் கிங்கணி அடிமிசை அரற்றத்
தொழிலுடைச் சிறுபறை பூண்டு தேர்ஈர்த்து
ஒருகளி றுருட்டி ஒண்பொடி ஆடிப்
பொருகளி றனைய பொக்கமொடு பிற்றாழ்ந்து
பூங்குழற் சிறாரொடு தூங்குநடை பயிற்றி (5)
அக்கரை உடுத்தி ஐம்படை கட்டி
ஒக்கரை இருக்கும் ஒளிர்புன் குஞ்சிக்
குதலையங் கிளவிப் புதல்வன் தன்னை
உள்ளச் சொரிந்த வெள்ளத் தீம்பால்
உடைய வாகிய தடமென் கொங்கை (10)
வேண்டாது பிரிந்த விரிபுனல் ஊரன்
பூண்தாங் ககலம் புல்குவன் எனப்போய்ப்
பெருமடம் உடையை வாழி வார்சடைக்
கொடுவெண் திங்கட் கொழுநில வேய்க்கும்
சுடுபொடி யணிந்த துளங்கொளி அகலத் (15)
தண்ணல் ஆரூர் திண்ணிதிற் செய்த
சிறைகெழு செம்புனல் போல
நிறையொடு நீங்காய் நெஞ்சம் நீயே.
22
292. வெண்பா
நீயிருந்திங் கென்போது நெஞ்சமே நீள்இருட்கண்
ஆயிரங்கை வட்டித் தனலாடித் - தீஅரங்கத்
தைவாய் அரவசைத்தான் நன்பணைத் தோட் கன்பமைத்த
செய்வான்நல் ஊரன் திறம்.
23
293. கட்டளைக் கலித்துறை
திறமலி சின்மொழிச் செந்துவர் வாயினர் எங்கையர்க்கே
மறமலி வேலோன் அருளுக வார்சடை யான்கடவூர்த்
துறைமலி ஆம்பல்பல் லாயிரத் துத்தமி யேஎழினும்
நறைமலி தாமரை தன்னதென் றேசொல்லும் நற்கயமே.
24
294. அகவல்
கயங்கெழு கருங்கடல் முதுகு தெருவுபட
இயங்குதிமில் கடவி எறியொளி நுளையர்
நெய்ம்மீன் கவரல் வேண்டிக் கைம்மிகுத்
தால வட்டம் ஏய்ப்ப மீமிசை
முடிகெழு தருவலை வீசி முந்நீர்க் (5)
குடரென வாங்கிக் கொள்ளை கொண்ட
சுரிமுகச் சங்கும் சுடர்விடு பவளமும்
எரிகதிர் நித்திலத் தொகுதியுங் கூடி
விரிகதிர் நிலவுஞ் செக்கருந் தாரகை
உருவது காட்டும் உலவாக் காட்சித் (10)
தண்ணந் துறைவன் தடவரை அகலம்
கண்ணுறக் கண்டது முதலா ஒண்ணிறக்
காள மாசுணங் கதிர்மதிக் குழவியைக்
கோளிழைத் திருக்கும் கொள்கை போல
மணிதிகழ் மிடற்று வானவன் மருவும் (15)
அணிதிகழ் அகலத் தண்ணல் ஆரூர்
ஆர்கலி விழவின் அன்னதோர்
பேரலர் சிறந்தது சிறுநல் லூரே.
25
295. ஊரெலாந் துஞ்சி உலகெலாம் நள்ளென்று
பாரெலாம் பாடவிந்தப் பாயிருட்கண் - சீருலாம்
மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைகாட்டுப்
பூந்துறைவாய் மேய்ந்துறங்கா புள்.
26
296 புள்ளுந் துயின்று பொழுதிறு மாந்து கழுதுறங்கி
நள்ளென்ற கங்குல் இருள்வாய்ப் பெருகிய வார்பனிநாள்
துள்ளுங் கலைக்கைச் சுடர்வண் ணனைத் தொழு வார்மனம்போன்
றுள்ளும் உருக ஒருவர்திண் தேர்வந் துலாத் தருமே.
27
297 உலாநீர்க் கங்கை ஒரு சடைக் கரந்து
புலால்நீர் ஓழுகப் பொருகளி றுரித்த
பூத நாதன் ஆதி மூர்த்தி
திருமட மலைமகட் கொருகூறு கொடுத்துத்தன்
அன்பின் அமைத்தவன் ஆரூர் நன்பகல் (5)
வலம்புரி அடுப்பா மாமுத் தரிசி
சலஞ்சலம் நிறைய ஏற்றி நலந்திகழ்
பவளச் செந்தீ மூட்டிப் பொலம்பட
இப்பியந் துடுப்பால் ஒப்பத் துழாவி
அடாஅ தட்ட அமுதம் வாய்மடுத்து (10)
இடாஅ ஆயமோ டுண்ணும் பொழுதில்
திருந்திழைப் பணைத்தோள் தேமொழி மாதே
விருந்தின் அடியேற் கருளுதி யோவென
முலைமுகம் நோக்கி முறுவலித் திறைஞ்சலின்
நறைகமழ் எண்ணெய்ச் சிறுநுண் துள்ளி (15)
பொங்குபுனல் உற்றது போலஎன்
அங்கம் எல்லாந் தானா யினளே.
28
298 ஆயினஅன் பாரே அழிப்பர் அனலாடி
பேயினவன் பாரோம்பும் பேரருளான் - தீயினவன்
கண்ணாளன் ஆருர்க் கடலார் மடப்பாவை
தண்ணாருங் கொங்கைக்கே தாழ்ந்து.
29
299 தாழ்ந்து கிடந்த சடைமுடிச் சங்கரன் தாள்பணியா
தாழ்ந்து கிடந்துநை வார்கிளை போலயர் வேற் கிரங்கிச்
சூழ்ந்து கிடந்த கரைமேல் திரையென்னும் கையெறிந்து
வீழ்ந்து கிடந்தல றித்துயி லாதிவ் விரிகடலே.
30

திருச்சிற்றம்பலம்

4. 3 சேரமான் பெருமாள் நாயனார் அருளிச் செய்த
திருக்கயிலாய ஞானவுலா

300. திருமாலும் நான்முகனுந் தேர்ந்துணரா தன்றங்
கருமால் உறஅழலாய் நின்ற - பெருமான்

பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்
துறவாதே யாக்கை துறந்தான் - முறைமையால்

ஆழாதே ஆழ்ந்தான் அகலா தகலியான்
ஊழால் உயராதே ஓங்கினான் - சூழொளிநூல்

ஓதா துணர்ந்தான் நுணுகாது நுண்ணியான்
யாதும் அணுகா தணுகியான் - ஆதி

அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
அரனாய் அழிப்பவனும் தானே ௭ பரனாய
(5)
. தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான்
மேவிய வாறே விதித்தமைத்தான் - ஓவாதே

எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் - எவ்வுருவும்

தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்
ஏனோர்க்குங் காண்பரிய எம்பெருமான் - ஆனாத

சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில்
ஏரார் திருக்கோயில் உள்ளிருப்ப - ஆராய்ந்து

செங்கண் அமரர் புறங்கடைக்கட் சென் றீண்டி
எங்கட்குக் காட்சியருள் என்றிரப்ப - அங்கொருநாள்
(10)
. பூமங்கை பொய்தீர் தரணி புகழ்மங்கை
நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த - சேமங்கொள்

ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை
தேன் மொய்த்த குஞ்சியின்மேற் சித்திரிப்ப - ஊனமில்சீர்

நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர்
செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் - நொந்தா

வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி
நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் - பயன்கொள்

குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு
நலமலிய ஆகந் தழீஇக் - கலைமலிந்த
(15)
. கற்பகம் ஈன்ற கமழ்பட் டினைஉடுத்துப்
பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து - விற்பகரும்

சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர்
வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் - தோளா

மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங்
கணிவயிரக் கண்டிகை பொன்னாண் - பணிபெரிய

ஆரம் அவைபூண் டணிதிக ழுஞ்சன்ன
வீரந் திருமார்பில் வில்லிலக - ஏருடைய

எண்டோட்கும் கேயூரம் பெய்துதர பந்தனமும்
கண்டோர் மனமகிழக் கட்டுறீஇக் - கொண்டு
(20)
. கடிசூத் திரம்புனைந்து கங்கணங்கைப் பெய்து
வடிவுடைய கோலம் புனைந்தாங் - கடிநிலை மேல்

நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து
வந்து வசுக்கள் இருக்குரைப்ப - அந்தமில்சீர்

எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும்
அண்ணல்மேல் ஆசிகள் தாமுணர்த்த - ஒண்ணிறத்த

பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப
மன்னும் அகத்தியன்யாழ் வாசிப்பப் பொன்னியலும்

அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து
மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் - செங்கண்
(25)
. நிருதி முதலோர் நிழற்கலன்கள் ஏந்த
வருணன் மணிக்கலசந் தாங்கத் -தெருவெலாம்

வாயு நனிவிளக்க மாமழை நீர்தௌிப்பத்
தூயசீர்ச் சோமன் குடையெடுப்ப - மேவியசீர்

ஈசானன் வந் தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள்
வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் - தூய

உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன்
திருத்தகு மாநிதியஞ் சிந்தக் - கருத்தமைந்த

கங்கா நதியமுனை உள்ளுருத்த தீர்த்தங்கள்
பொங்கு கவரி புரையிரட்டத் - தங்கிய
(30)
. பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண்
கைந்நாகம் எட்டும் கழல்வணங்க - மெய்ந்நாக

மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய்
மேகத் துருமு முரசறையப் - போகஞ்சேர்

தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும்
கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட - எம்பெருமான்

விண்ணோர் பணிய உயர்ந்த விளங்கொளிசேர்
வெண்ணோர் மழவிடையை மேற்கொண்டாங் - கெண்ணார்

கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத்
திருக்கடைகள் ஏழ்கழிந்த போதில் - செருக்குடைய
(35)
. சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல்
ஆனாப்போர் இந்திரன் பின்படர - ஆனாத

அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக்
கன்னவிலுந் திண்டோட் கருடன்மேல் ௭ மன்னிய

மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து
மேலிடப்பால் மென்கருப்பு வில்லிடப்பால் - ஏல்வுடைய

சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல் எய்வான்
கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த - ஐங்கணையான்

காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி
வாமன் புரவிமேல் வந்தணைய - நாமஞ்சேர்
(40)
. வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச்
சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டை ஒண்கண் - தாழ்கூந்தல்

மங்கை எழுவருஞ் சூழ மடநீலி
சிங்க அடலேற்றின் மேற்செல்லத் - தங்கிய

விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்
அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும்

சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம்
கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத்

தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை
கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும்
(45)
. குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்
இடமாந் தடாரி படகம் - இடவிய

மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்
எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே

மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் - தங்கிய

ஆறாம் இருதுவும் யோகும் அருந்தவமும்
மாறாத முத்திரையும் மந்திரமும் - ஈறார்ந்த

காலங்கள் மூன்றுங் கணமுங் குணங்களும்
வால கிலியரும் வந்தீண்டி - மேலை
(50)
. இமையோர் பெருமானே போற்றி எழில்சேர்
உமையாள் மணவாளா போற்றி - எமையாளும்

தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி
ஈசனே எந்தாய் இறைபோற்றி - தூயசீர்ச்

சங்கரனே போற்றி சடாமகுடத் தாய்போற்றி
பொங்கரவா பொன்னங் கழல்போற்றி - அங்கொருநாள்

ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி - தூய

மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர்
தலைமேலாய் போற்றிதாள் போற்றி - நிலைபோற்றி
(55)
. போற்றியெனப் பூமாரி பெய்து புலன்கலங்க
நாற்றிசையும் எங்கும் நலம்பெருக - ஏற்றுக்

கொடியும் பதாகையும் கொற்றக் குடையும்
வடிவுடைய தொங்கலுஞ் சூழக் -கடிகமழும்

பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான்
வாமான ஈசன் வரும்போழ்திற் - சேமேலே

குழாங்கள்

வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம்
கோமான் படைமுழக்கம் கேட்டலுமே -தூமாண்பில்

வானநீர் தாங்கி மறையோம்பி வான்பிறையோ
டூனமில் சூலம் உடையவாய் - ஈனமிலா
(60)
. வெள்ளை அணிதலால் வேழத் துரிபோர்த்த
வள்ளலே போலும் வடிவுடைய - ஒள்ளிய

மாட நடுவில் மலரார் அமளியே
கூடிய போர்க்கள மாக்குறித்துக் - கேடில்

சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா
விலங்கு கொடும்புருவம் வில்லா - நலந்திகழும்

கூழைபின் தாழ வளையார்ப்பக் கைபோந்து
கேழ்கிளரும் அல்குலாந் தேருந்திச் - சூழொளிய

கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனங்கவர
அங்கம் பொருதசைந்த ஆயிழையார் - செங்கேழற்
(65)
. பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகஞ்சேர்த்தி
நற்பெருங் கோலம் மிகப்புனைந்து - பொற்புடைய

பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக
மாதரவர் சேர மகிழ்ந்தீண்டிச் - சோதிசேர்

சூளிகையுஞ் சூட்டுஞ் சுளிகையுஞ் சுட்டிகையும்
வாளிகையும் பொற்றோடும் மின்விலக - மாளிகையின்

மேல்ஏறி நின்று தொழுவார் துயர்கொண்டு
மால்ஏறி நின்று மயங்குவார் - நூல்ஏறு

தாமமே தந்து சடாதாரி நல்கானேல்
யாமமேல் எம்மை அடுமென்பார் - காமவேள்
(70)
. ஆமென்பார் அன்றென்பார் ஐயறுவார் கையெறிவார்
தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார் - பூமன்னும்

பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு
துன்னரி மாலையாச் சூடுவார் - முன்னம்

ஒருகண் எழுதிவிட் டொன்றெழுதாதோடித்
தெருவம் புகுவார் திகைப்பார் - அருகிருந்த

கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளிஎன்று
பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார் - அண்ணல்மேற்

கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார்
திண்ண நிறைத்தாழ் திறந்திட்டார் - ஒண்ணிறத்த
(75)
.
பேதை

பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால்
தூதைச் சிறுசோ றடுதொழிலாள் - தீதில்

இடையாலும் ஏக்கழுத்த மாட்டாள் நலஞ்சேர்
உடையாலும் உள்ளுருக்க கில்லாள் - நடையாலும்

கௌவைநோய் காளையரைச் செய்யாள் கதிர்முலைகள்
எவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள் - செவ்வனேர்

நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள்தன் செவ்வாயின்
வாக்கும் பிறர்மனத்தை வஞ்சியாள் - பூக்குழலும்

பாடவந் தோன்ற முடியாள் இளவேய்த்தோள்
ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள் - நாடொறும்
(80)
. ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண்
சென்ற மனத்தினளாஞ் சேயிழையாள் - நன்றாகத்

தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி
நீல அறுவை விரித்துடுத்துக் - கோலஞ்சேர்

பந்தரிற் பாவை கொண்டாடும்இப் பாவைக்குத்
தந்தையார் என்றொருத்தி தான்வினவ - அந்தமில்சீர்

ஈசன் எரியாடி என்ன அவனையோர்
காய்சின மால்விடைமேற் கண்ணுற்றுத் - தாய்சொன்ன

இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமன்நூல்
நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள் - பொற்புடைய
(85)
.
பெதும்பை

பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்
காரொளிசேர் மஞ்ஞைக் கவின்இயலாள் - சீரொளிய

தாமரை ஒன்றின் இரண்டு குழையிரண்டு
காமருவி கெண்டையோர் செந்தொண்டை - தூமருவு

முத்த முரிவெஞ் சிலைசுட்டி செம்பவளம்
வைத்தது போலும் மதிமுகத்தாள் - ஒத்தமைந்த

கங்கணஞ் சேர்ந்திலங்கு கையாள் கதிர்மணியின்
கிங்கணி சேர்ந்த திருந்தடியாள் - ஒண்கேழல்

அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள் ஆய்பொதியிற்
சந்தனந் தோய்ந்த தடந்தோளாள் - வந்து
(90)
. திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள்
கடல்பட்ட இன்னமுதம் அன்னாள் - மடல்பட்ட

மாலை வளாய குழலாள் மணம்நாறு
சோலை இளங்கிளிபோல் தூமொழியாள் - சாலவும்

வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக்
கஞ்சனத்தை இட்டங் கழகாக்கி - எஞ்சா

மணியாரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி
அணியார் வளைதோள்மேல் மின்ன - மணியார்த்த

தூவெண் மணற்கொண்டு தோழியருந் தானுமாய்க்
காமன் உருவம் வரஎழுதிக் - காமன்
(95)
. கருப்புச் சிலையும் மலரம்புந் தேரும்
ஒருப்பட் டுடன் எழுதும் போழ்தில் - விருப்பூரும்

தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன்
வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் - தானமர

நன்றறிவார் சொன்ன நலந்தோற்று நாண்தோற்று
நின்றறிவு தோற்று நிறைதோற்று - நன்றாகக்

கைவண்டுங் கண்வண்டும் ஓடக் கலைஓட
நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் - மொய்கொண்ட

மங்கை

மங்கை யிடங்கடவா மாண்பினாள் வானிழிந்த
கங்கைச் சுழியனைய உந்தியாள் - தங்கிய
(100)
. அங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கி
கொங்கை கமலம் முகங்கமலம் - பொங்கெழிலார்

இட்டிடையும் வஞ்சி இரும்பணைத்தோள் வேயெழிலார்
பட்டுடைய அல்குலுந் தேர்த்தட்டு - மட்டுவிரி

கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில்
ஏய்ந்த மணி முறுவல் இன்முத்தம் - வாய்ந்தசீர்

வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக்
கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக் - குண்டலங்கள்

காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித்
தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து - மாதராள்
(105)
. பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும்
சொற்கோட்டி கொண்டிருந்த ஏல்வைக்கண் - நற்கோட்டு

வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல்
ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு - தெள்ளியநீர்

தாழுஞ் சடையான் சடாமகுடந் தோன்றுதலும்
வாழுமே மம்மர் மனத்தளாய்ச் - சூழொளியான்

தார்நோக்குந் தன்தாரும் நோக்கும் அவனுடைய
ஏர்நோக்குந் தன்ன தெழில் நோக்கும் - பேரருளான்

தோள்நோக்குந் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின்
நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து - நாண் நோக்கா
(110)
. துள்ளம் உருக ஒழியாத வேட்கையாம்
வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் - ஒள்ளிய

மடந்தை

தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர்
வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் - ஏய்ந்தசீர்

ஈசன் சிலையும் எழில்வான் பவளமும்
சேய்வலங்கை வேலுந் திரள்முத்தும் - பாசிலைய

வஞ்சியும் வேயும் வளர்தா மரைமொட்டும்
மஞ்சில்வரு மாமதிபோல் மண்டலமும் - எஞ்சாப்

புருவமுஞ் செவ்வாயும் கண்ணும் எயிறும்
உருவ நுசுப்பும்மென் தோளும் - மருவினிய
(115)
. கொங்கையும் வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர்
பங்கயப் போதனைய சேவடியாள் - ஒண்கேழல்

வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர்
ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள் - ஊழித்

திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தை
உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல் - பெருகொளிய

முத்தாரங் கண்டத் தணிந்தாள் அணிகலங்கள்
மொய்த்தார வாரம் மிகப் பெருகி -வித்தகத்தால்

கள்ளுங் கடாமுங் கலவையுங் கைபோந்திட்
டுள்ளும் புறமுஞ் செறிவமைத்துத் - தெள்ளொளிய
(120)
. காளிங்கஞ் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த
தாளிம்பத் தாமம் நுதல்சேர்த்தித் - தோளெங்கும்

தண்ணறுஞ் சந்தனம் கொண் டப்பிச் சதிர்சாந்தை
வண்ணம் பெறமிசையே மட்டித்தாங் - கொண்ணுதலாள்

தன்னமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப்
பின்னுமோர் காமரம் யாழ் அமைத்து - மன்னும்

விடவண்ணக் கண்டத்து வேதியன் மேல்இட்ட
மடல்வண்ணம் பாடும் பொழுதீண் - டடல்வல்ல

வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க் கெஞ்ஞான்றும்
மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் - கோல
(125)
மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால
அணியேறு தோளானைக் கண்டாங் - கணிஆர்ந்த

கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக்
கோட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி - நாட்டார்கள்

எல்லாருங் கண்டார் எனக் கடவுள் இங்காயம்
நல்லாய் படுமேற் படுமென்று -மெல்லவே

செல்ல லுறுஞ்சரணம் கம்பிக்குந் தன்னுறுநோய்
சொல்லலுறுஞ் சொல்லி உடைசெறிக்கும் - நல்லாகம்

காண லுறுங்கண்கள் நீர்மல்கும் காண்பார்முன்
நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது - பூணாகம்
(130)
. புல்லலுறும் அண்ணல்கை வாரான்என் றிவ்வகையே
அல்லலுறும் அழுந்தும் ஆழ்துயரால் - மெல்லியலாள்

தன்னுருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப்
பொன்னுருவங் கொண்டு புலம்புற்றாள் - பின்னொருத்தி

அரிவை

செங்கேழல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா
அங்கேழ் அரிவைப் பிராயத்தாள் -ஒண்கேழல்

திங்களுந் தாரகையும் வில்லுஞ் செழும்புயலும்
தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையாற் - பொங்கொளிசேர்

மின்னார்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே
தன்னாவார் இல்லாத் தகைமையாள் - எந்நாளும்
(135)
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாருஞ் செய்வர் சிறப்பென்னும் - சொல்லாலே

அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து - நல்கூர்

இடையிடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார்
நடைபெடை அன்னத்தை வென்றாள் - அடியிணைமேற்

பாடகங் கொண்டு பரிசமைத்தாள் பன்மணிசேர்
சூடகம் முன்கை தொடர்வித்தாள் - கேடில்சீர்ப்

பொன்னரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டு
மன்னுங் கழுத்தை மகிழ்வித்தாள் - பொன்னனாள்
(140)
இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம்
அண்ணல்மேல் தானிட்ட ஆசையால் - முன்னமே

பாடல் தொடங்கும் பொழுதிற் பரஞ்சோதி
கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் - கூடிய

இன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும்
மன்னிய வீணையுங் கைவிட்டுப் -பொன்னனையீர்

இன்றன்றே காண்ப தெழில் நலம் கொள்ளேனேல்
நன்றன்றே பெண்மை நமக்கென்று - சென்றவன்தன்

ஒண்களபம் ஆடும் ஒளிவாள் முகத்திரண்டு
கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் - ஒண்கேழற்
(145)
கூந்தல் அவிழ்க்கும் முடிக்கும் கலைதிருத்தும்
சாந்தந் திமிரும் முலைஆர்க்கும் - பூந்துகிலைச்

சூழும் அவிழ்க்கும் தொழும் அழும் சோர்துயருற்
றாழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் ௭ சூழொளிய

அங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள்
நங்கை இவளும் நலந்தோற்றாள் - அங்கொருத்தி

தெரிவை

ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய
சீரார் தெரிவைப் பிராயத்தாள் - ஓரா

மருளோசை இன்மழலை வாய்ச்சொலால் என்றும்
இருள்தீர் புலரியே ஒப்பாள் - அருளாலே
(150)
வெப்பம் இளையவர்கட் காக்குதலால் உச்சியோ
டொப்பமையக் கொள்ளும் உருவத்தாள் - வெப்பந்தீர்ந்து

அந்தளிர்போல் சேவடியும் அங்கையும் செம்மையால்
அந்திவான் காட்டும் அழகினாள் - அந்தமில்

சீரார் முகம்மதியம் ஆதலாற் சேயிழையாள்
ஏரார் இரவின் எழில்கொண்டாள் - சீராரும்

கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால்
தண்ணிளங் காரின் சவிகொண்டாள் -வண்ணஞ்சேர்

மாந்தளிர் மேனி முருக்கிதழ்வாய் ஆதலால்
வாய்ந்த இளவேனில் வண்மையாள் - மாந்தர்
(155)
அறிவுடையீர் நின்மின்கள் அல்லார்போம் என்று
பறையறைவ போலுஞ் சிலம்பு - முறைமையால்

சீரார் திருந்தடிமேற் சேர்த்தினாள் தேரல்குல்
ஓரா தகலல் உறாதென்று - சீராலே

அந்துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணிமுலைகள்
மைந்தர் மனங்கவரும் என்பதனால் - முந்துறவே

பூங்கச்சி னால்அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால்
காம்பொத்த தோளிணையைக் காப்பேவி - வாய்ந்தசீர்

நற்கழுத்தை நல்லாரத் தால்மறைத்துக் காதுக்கு
விற்பகருங் குண்டலங்கள் மேவுவித்து - மைப்பகரும்
(160)
காவியங் கண்ணைக் கதந்தணிப்பாள் போலத்தன்
தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி - யாவரையும்

ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும்
கோகிலமும் போலும் குணத்தினாள் - ஆகிப்

பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி
அலர்சுமந்து கூழைய ஆகிக் - கலைகரந்து

உள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்தாழ்ந்து
கள்ளாவி நாறுங் கருங்குழலாள் - தெள்ளொளிய

செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி
அங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப் - பொங்கெழிலார்
(165)
. பொற்கவற்றின் வெள்ளிப் பலகை மணிச்சூது
நற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில் - விற்பகிரும்

தோளான் நிலைபேறு தோற்றங்கே டாய்நின்ற
தாளான் சடாமகுடம் தோன்றுதலும் - கேளாய

நாணார் நடக்க நலத்தார்க் கிடைஇல்லை
ஏணார் ஒழிக எழில்ஒழிக - பேணும்

குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்மின்
நலத்தீர் நினைமினீர் என்று - சொலற்கரிய

தேவாதி தேவன் சிவனாயில் தேன்கொன்றைப்
பூவார் அலங்கல் அருளாது - போவானேல்
(170)
கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து
வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் - ஒண்டாய

பேரிளம்பெண்

பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்
பண்ணமரும் இன்சொல் பணிமொழியாள் - மண்ணின்மேல்

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உளவென்று - பண்டையோர்

கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல்
விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள் - கட்டரவம்

அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த
வஞ்சிக்கொடி நுடங்கும் நுண்ணிடையாள் - எஞ்சாத
(175)
பொற்செப் பிரண்டு முகடு மணியழுத்தி
வைத்தன போல வளர்ந்தேந்தி - ஒத்துச்

சுணங்கும் திதலையுஞ் சூழ்போந்து கண்டார்க்
கணங்கும் அமுதமுமாய்த் தோன்றி - இணங்கொத்த

கொங்கையாள் கோலங்கட் கெல்லாமோர் கோலமாம்
நங்கையாள் நாகிளவேய்த் தோளினாள் - அங்கையாற்

காந்தட் குலம்பழித்தாள் காமவேள் காதலாள்
சாந்தம் இலங்கும் அகலத்தாள் - வாய்ந்துடனே

ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால்
தேய்ந்து துடித்த செழும்பவளம் -காய்த்திலங்கி
(180)
முத்தமுந் தேனும் பொதிந்து முனிவரையும்
சித்தந் திறைகொள்ளும் செவ்வாயாள் - ஒத்து

வரிகிடந் தஞ்சனம் ஆடி மணிகள்
உருவம் நடுவுடைய வாகிப் - பெருகிய

தண்ணங் கயலும் சலஞ்சலமுந் தோன்றுதலால்
வண்ணங் கடலனைய வாட்கண்ணாள் - ஒண்ணிறத்த

குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய
மண்டலமே போலும் மதிமுகத்தாள் - வண்டலம்ப

யோசனை நாறு குழலாள் ஒளிநுதல்மேல்
வாசிகை கொண்டு வடிவமைத்தாள் - மாசீல்சீர்ப்
(185)
பாதாதி கேசம் பழிப்பிலாள் பாங்கமைந்த
சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள் - மாதார்ந்த

பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர்
வெண்கவரி வெள்ளத் திடையிருந்து - ஒண்கேழற்

கண்ணவனை அல்லாது காணா செவிஅவன
தெண்ணருஞ்சீர் அல்ல திசைகொள்ளா - அண்ணல்

கழலடி அல்லது கைதொழா அஃதான்று
அழலங்கைக் கொண்டான்மாட் டன்பென் - றெழிலுடைய

வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர்
கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் - விண்பால்
(190)
அரிஅரணஞ் செற்றாங் கலைபுனலும் பாம்பும்
புரிசடைமேல் வைத்த புராணன் - எரிஇரவில்

ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ
மாட மறுகில் வரக்கண்டு - கேடில்சீர்

வண்ணச் சிலம்படி மாதரார் தாமுண்ட
கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் - அண்ணலே

வந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும்
தந்தாய் இதுவோ தகவென்று - நொந்தாள்போற்

கட்டுரைத்துக் கைசோர்ந் தகமுருகி மெய்வெளுத்து
மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் - கொட்டிமைசேர்
(195)
. பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்
பெண்ணார வாரம் பெரிதன்றே - விண்ஓங்கி

மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த
செஞ்சடையான் போந்த தெரு.
1
காப்பு
301. பெண்ணீர்மை காமின் பெருந்தோள் இணைகாமின்
உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீரக்
காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன்
ஊரேறு போந்த துலா.
2

திருச்சிற்றம்பலம்

5. நக்கீரதேவ நாயனார் பாசுரங்கள் (302 - 513)

5.1 நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி

302. சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா
நல்லிடிஞ்சல் என்னுடைய நாவாகச் -சொல்லரிய
வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த
பெண்பாகர்க் கேற்றினேன் பெற்று.
1
303. பெற்ற பயனிதுவே அன்றே பிறந்தியான்
கற்றவர்கள் ஏத்துஞ்சீர்க் காளத்திக் - கொற்றவர்க்குத்
தோளாகத் தாடவரம் சூழ்ந்தணிந்த அம்மானுக்
காளாகப் பெற்றேன் அடைந்து.
2
304. அடைந்துய்ம்மின் அம்மானை உம்ஆவி தன்னைக்
குடைந்துண்ண எண்ணியவெங் கூற்றம் - குடைந்துநும்
கண்ணுளே பார்க்கும் பொழுது கயிலாயத்
தண்ணலே கண்டீர் அரண்.
3
305. அரணம் ஒருமூன்றும் ஆரழலாய் வீழ
முரணம்பு கோத்த முதல்வன் சரணமே
காணுமால் உற்றவன்றன் காளத்தி கைதொழுது
பேணுமால் உள்ளம் பெரிது.
4
306. பெரியவர்கா ணீர்என் உள்ளத்தின் பெற்றி
தெரிவரிய தேவாதி தேவன் - பெரிதும்
திருத்தக்கோர் ஏத்துந் திருக்கயிலைக் கோனை
இருத்தத்தான் போந்த திடம்.
5
307. இடப்பாகம் நீள்கோட் டிமவான் பயந்த
மடப்பாவை தன்வடிவே ஆனால் - விடப்பாற்
கருவடிசேர் கண்டத்தெங் காளத்தி ஆள்வார்க்
கொருவடிவே அன்றால் உரு.
6
308. உருவு பலகொண் டுணர்வரிதாய் நிற்கும்
ஒருவன் ஒருபால் இருக்கை - மருவினிய
பூக்கையிற் கொண் டெப்பொழுதும் புத்தேளிர் வந்திறைஞ்சு
மாக்கயிலை என்னும் மலை.
7
309. மலைவரும்போல் வானவருந் தானவரும் எல்லாம்
அலைகடல்வாய் நஞ்செழல்கண் டஞ்சி -நிலைதளரக்
கண்டமையால் நண்சாரல் காளத்தி ஆள்வார்நஞ்
சுண்டமையால் உண்டிவ் வுலகு.
8
310. உலகம் அனைத்தினுக்கும் ஒண்ணுதல்மேல் இட்ட
திலகம் எனப்பெறினுஞ் சீசீ - இலகியசீர்
ஈசா திருக்கயிலை எம்பெருமான் என்றென்றே
பேசா திருப்பார் பிறப்பு.
9
311. பிறப்புடையர் கற்றோர் பெருஞ்செல்வர் மற்றும்
சிறப்புடையர் ஆனாலுஞ் சீசீ - இறப்பில்
கடியார் நறுஞ்சோலைக் காளத்தி யாள்வார்
அடியாரைப் பேணா தவர்.
10
312. அவரும் பிறந்தவராய்ப் போவார்கொல் ஆவி
எவரும் தொழுதேத்தும் எந்தை - சிவமன்னு
தேக்குவார் சோலைத் திருக்கயிலை ஏத்தாதே
போக்குவார் வாளா பொழது.
11
313 வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்
கேளார்கொல் அந்தோ கிறிபட்டார் - கீளாடை
அண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுள்நின்ற
கண்ணப்ப ராவார் கதை.
12
314 கதையிலே கேளீர் கயிலாயம் நோக்கிப்
புதையிருட்கண் மாலோடும் போகிச் - சிதையாச்சீர்த்
தீர்த்தன்பால் பாசுபதம் பெற்றுச் செருக்களத்தில்
பார்த்தன்போர் வென்றிலனோ பண்டு.
13
315 பண்டு தொடங்கியும் பாவித்தும் நின்கழற்கே
தொண்டு படுவான் தொடர்வேனைக் - கண்டுகொண்டு
ஆளத் தயாவுண்டோ இல்லையோ சொல்லாயே
காளத்தி யாய்உன் கருத்து.
14
316 கருத்துக்குச் சேயையாய்க் காண்தக்கோர் காண
இருத்தி திருக்கயிலை என்றால் - ஒருத்தர்
அறிவான் உறுவார்க் கறியுமா றுண்டோ
நெறிவார் சடையாய் நிலை.
15
317 நிலையிற் பிறவி நெடுஞ்சுழியிற் பட்டுத்
தலைவ தடுமாறு கின்றேன் - தொலைவின்றிப்
போந்தேறக் கைதாராய் காளத்திப் புத்தேளிர்
வேந்தேஇப் பாசத்தை விட்டு.
16
318 பாசத்தை விட்டுநின் பாதத்தின் கீழேஎன்
நேசத்தை வைக்க நினைகண்டாய் - பாசத்தை
நீக்குமா வல்ல கயிலாயா நீஎன்னைக்
காக்குமா றித்தனையே காண்.
17
319 காணா தலக்கின்றார் வானோர்கள் காளத்திப்
பூணார மார்பன்தன் பொற்பாதம் - நாணாதே
கண்டிடுவான் யானிருந்தேன் காணீர் கடல்நஞ்சை
உண்டிடுவான் தன்னை ஒருங்கு.
18
320 ஒருங்கா துடனேநின் றோரைவர் எம்மை
நெருங்காமல் நித்தம் ஒருகால் -நெருங்கிக்
கருங்கலோங் கும்பல் கயிலாயம் மேயான்
வருங்கொலோ நம்பால் மதித்து.
19
321 நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதே
வம்பார் மலர்தூய் வணங்காதே - நம்பாநின்
சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன்
காலங்கள் போன கழிந்து.
20
322 கழிந்த கழிகிடாய் நெஞ்சே கழியா
தொழிந்தநாள் மேற்பட் டுயர்ந்தோர் - மொழிந்தசீர்க்
கண்ணுதலான் எந்தை கயிலாய மால்வரையை
நண்ணுதலாம் நன்மை நமக்கு.
21
323 நமக்கிசைந்த வாநாமும் ஏத்தினால் நம்பர்
தமக்கழகு தாமே அறிவர் -அமைப்பொதும்பிற்
கல்லவா நீடருவிக் காளத்தி ஆள்வாரை
வல்லவா நெஞ்சமே வாழ்த்து.
22
324 வாழ்த்துவாய் வாழ்த்தா தொழிவாய் மறுசுழியிட்
டாழ்த்துவாய் அஃதறிவாய் நீயன்றே - யாழ்த்தகைய
வண்டார் பொழிற்கயிலை வாழ்கென் றிருப்பதே
கண்டாய் அடியேன் கடன்.
23
325 கடநாகம் ஊடாடுங் காளத்திக் கோனைக்
கடனாகக் கைதொழுவார்க் கில்லை - இடம்நாடி
இந்நாட்டிற் கேவந்திங் கீண்டிற்றுக் கொண்டுபோய்
அந்நாட்டில் உண்டுழலு மாறு.
24
326 மாறிப் பிறந்து வழியிடை ஆற்றிடை
ஏறி இழியும் இதுவல்லால் -தேறித்
திருக்கயிலை ஏத்தீரேல் சேமத்தால் யார்க்கும்
இருக்கையிலை கண்டீர் இனிது.
25
327 இனிதே பிறவி இனமரங்கள் ஏறிக்
கனிதேர் கடுவன்கள் தம்மில் -முனிவாய்ப்
பிணங்கிவருந் தண்சாரற் காளத்தி பேணி
வணங்கவல்ல ராயின் மகிழ்ந்து.
26
328 மகிழந்தலரும் வன்கொன்றை மேலே மனமாய்
நெகிழ்ந்து நெகிழ்ந்துள்ளே நெக்குத் - திகழ்ந்திலங்கும்
விண்ணிறங்கா ஓங்கும் வியன்கயிலை மேயாய்என்
பெண்ணுறங்காள் என்செய்கேன் பேசு.
27
329 பேசும் பரிசறியாள் பேதை பிறர்க்கெல்லாம்
ஏசும் பரிசானாள் ஏபாவம் - மாசுனைநீர்க்
காம்பையலைத் தாலிக்குங் காளத்தி என்றென்று
பூம்பயலை மெய்ம்முழுதும் போர்த்து.
28
330 போர்த்த களிற்றுரியும் பூண்ட பொறியரவும்
தீர்த்த மகளிருந்த செஞ்சடையும் - மூர்த்தி
குயிலாய மென்மொழியாள் கூறாய வாறும்
கயிலாயா யான்காணக் காட்டு.
29
331 காட்டில் நடமாடிக் கங்காள ராகிப்போய்
நாட்டிற் பலிதிரிந்து நாடோறும் - ஓட்டுண்பார்
ஆனாலும் என்கொலோ காளத்தி ஆள்வாரை
வானோர் வணங்குமா வந்து.
30
332 வந்தமரர் ஏத்தும் மடைக்கூழும் வார்சடைமேல்
கொந்தவிழும் மாலை கொடுத்தார்கொல் - வந்தித்து
வாலுகுத்த வண்கயிலைக் கோனார்தம் மாமுடிமேல்
பாலுகுத்த மாணிக்குப் பண்டு.
31
333 பண்டிதுவே அன்றாயிற் கேளீர்கொல் பல்சருகு
கொண்டிலங்கத் தும்பிநூற் கூடிழைப்பக் - கண்டு
நலந்திக் கெலாம்ஏத்தும் காளத்தி நாதர்
சிலந்திக்குச் செய்த சிறப்பு.
32
334 செய்த சிறப்பெண்ணில் எங்குலக்குஞ் சென்றடைந்து
கைதொழுவார்க் கெங்கள் கயிலாயர் -நொய்தளவிற்
காலற்காய்ந் தார்அன்றே காணீர் கழல்தொழுத
பாலற்காய் அன்று பரிந்து.
33
335 பரிந்துரைப்பார் சொற்கேளாள் எம்பெருமான் பாதம்
பிரிந்திருக்க கில்லாமை பேசும் - புரிந்தமரர்
நாதாவா காளத்தி நம்பாவா என்றென்று
மாதாவா உற்ற மயல்.
34
336 மயலைத் தவிர்க்கநீ வாராய் ஒருமூன்
றெயிலைப் பொடியாக எய்தாய் - கயிலைப்
பருப்பதவா நின்னுடைய பாதத்தின் கீழே
இருப்பதவா உற்றாள் இவள்.
35
337 இவளுக்கு நல்லவா றெண்ணுதிரேல் இன்றே
தவளப் பொடிஇவள்மேற் சாத்தி - இவளுக்குக்
காட்டுமின்கள் காளத்தி காட்டிக் கமழ்கொன்றை
சூட்டுமின்கள் தீரும் துயர்.
36
338 துயர்க்கெலாம் கூடாய தோற்குரம்பை புக்கு
மயக்கில் வழிகாண மாட்டேன் - வியற்கொடும்போர்
ஏற்றானே வண்கயிலை எம்மானே என்கொலோ
மேற்றான் இதற்கு விளைவு.
37
339. விளையும் வினையரவின் வெய்ய விடத்தைக்
களைமினோ காளத்தி ஆள்வார்- வளைவில்
திருந்தியசீர் ஈசன் திருநாமம் என்னும்
மருந்தினைநீர் வாயிலே வைத்து.
38
340 வாயிலே வைக்கும் அளவில் மருந்தாகித்
தீய பிறவிநோய் தீர்க்குமே - தூயவே
கம்பெருமா தேவியொடு மன்னு கயிலாயத்
தெம்பெருமான் ஓரஞ் செழுத்து.
39
341 அஞ்செழுத்துங் கண்டீர் அருமறைகள் ஆவனவும்
அஞ்செழுத்துங் கற்க அணித்தாகும் - நஞ்சவித்த
காளத்தி யார்யார்க்குங் காண்டற் கரிதாய்ப்போய்
நீளத்தே நின்ற நெறி.
40
342 நெறிவார் சடையாய் நிலையின்மை நீயொன்
றறியாய் கொல் அந்தோ அயர்ந்தாள் - நெறியிற்
கனைத்தருவி தூங்குங் கயிலாயா நின்னை
நினைத்தருவி கண்சோர நின்று.
41
343 நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்யாம்
என்றும் நினைந்தாலும் என்கொலோ -சென்றுதன்
தாள்வா னவர்இறைஞ்சுந் தண்சாரற் காளத்தி
ஆள்வான் அருளாத வாறு.
42
344 அருளாத வாறுண்டே யார்க்கேனும் ஆக
இருளார் கறைமிடற்றெம் ஈசன் -பொருளாய்ந்து
மெய்ம்மையே உன்னில் வியன்கயிலை மேயான்வந்
திம்மையே தீர்க்கும் இடர்.
43
345 இடரீர் உமக்கோர் இடம்நாடிக் கொண்டு
நடவீரோ காலத்தால் நாங்கள் - கடல்வாய்க்
கருப்பட்டோங் கொண்முகில்சேர் காளத்தி காண
ஒருப்பட்டோம் கண்டீர் உணர்ந்து.
44
346 உணருங்கால் ஒன்றை உருத்தெரியக் காட்டாய்
புணருங்கால் ஆரமுதே போலும் - இணரிற்
கனியவாஞ் சோலைக் கயிலாயம் மேயாய்
இனியவா காண்நின் இயல்பு.
45
347 நின்னியல்பை யாரே அறிவார் நினையுங்கால்
மன்னியசீர்க் காளத்தி மன்னவனே - நின்னில்
வௌிப்படுவ தேழுலகும் மீண்டே ஒருகால்
ஒளிப்பதுவும் ஆனால் உரை.
46
348 உரையும் பொருளும் உடலும் உயிரும்
விரையும் மலரும்போல் விம்மிப் -புரையின்றிச்
சென்றவா றோங்குந் திருக்கயிலை எம்பெருமான்
நின்றவா றெங்கும் நிறைந்து.
47
349 நிறைந்தெங்கும் நீயேயாய் நின்றாலும் ஒன்றன்
மறைந்தைம் புலன்காண வாராய் - சிறந்த
கணியாருந் தண்சாரற் காளத்தி ஆள்வாய்
பணியாயால் என்முன் பரிசு.
48
350 பரிசறியேன் பற்றிலேன் கற்றிலேன் முற்றும்
கரியுரியாய் பாதமே கண்டாய் - திரியும்
புரம்மாளச் செற்றவனே பொற்கயிலை மன்னும்
பரமா அடியேற்குப் பற்று.
49
351 பற்றாவான் எவ்வுயிர்க்கும் எந்தை பசுபதியே
முற்றாவெண் திங்கள் முளைசூடி -வற்றாவாங்
கங்கைசேர் செஞ்சடையான் காளத்தி யுள்நின்ற
மங்கைசேர் பாகத்து மன்.
50
352. மன்னா கயிலாயா மாமுத்தம் மாணிக்கம்
பொன்னார மாக்கொண்டு பூணாதே - எந்நாளும்
மின்செய்வார் செஞ்சடையாய் வெள்ளெலும்பு பூண்கின்ற
தென்செய்வான் எந்தாய் இயல்பு.
50
353 இயம்பாய் மடநெஞ்சே ஏனோர்பால் என்ன
பயம்பார்த்துப் பற்றுவான் உற்றாய் - புயம்பாம்பால்
ஆர்த்தானே காளத்தி அம்மானே என்றென்றே
ஏத்தாதே வாளா இருந்து.
52
354 இருந்தவா காணீர் இதுவென்ன மாயம்
அருந்தண் கயிலாயத் தண்ணல் - வருந்திப்போய்த்
தான்நாளும் பிச்சை புகும்போலும் தன்னடியார்
வான்ஆள மண்ஆள வைத்து.
53
355 வைத்த இருநிதியே என்னுடைய வாழ்முதலே
நித்திலமே காளத்தி நீள்சுடரே - மொய்த்தொளிசேர்
அக்காலத் தாசை அடிநாயேன் காணுங்கால்
எக்காலத் தெப்பிறவி யான்.
54
356 யானென்று தானென் றிரண்டில்லை என்பதனை
யானென்றுங் கொண்டிருப்பன் ஆனாலும் - தேனுண்
டளிகள்தாம் பாடும் அகன்கயிலை மேயான்
தௌிகொடான் மாயங்கள் செய்து.
55
357 மாயங்கள் செய்தைவர் சொன்ன வழிநின்று
காயங்கொண் டாடல் கணக்கன்று -காயமே
நிற்பதன் றாதலாற் காளத்தி நின்மலன்சீர்
கற்பதே கண்டீர் கணக்கு.
56
358 கணக்கிட்டுக் கொண்டிருந்து காலனார் நம்மை
வணக்கி வலைப்படா முன்னம் - பிணக்கின்றிக்
காலத்தால் நெஞ்சே கயிலாயம் மேவியநற்
சூலத்தான் பாதந் தொழு.
57
359 தொழுவாள் பெறாளேதன் தோள்வளையுந் தோற்றாள்
மழுவாளன் காளத்தி வாழ்த்தி - எழுவாள்
நறுமா மலர்க்கொன்றை நம்முன்னே நாளைப்
பெறுமாறு காணீர்என் பெண்.
58
360 பெண்ணின் றயலார்முன் பேதை பிறைசூடி
கண்ணின்ற நெற்றிக் கயிலைக்கோன் - உண்ணின்ற
காமந்தான் மீதூர நைவாட்குன் கார்க்கொன்றைத்
தாமந்தா மற்றிவளைச் சார்ந்து.
50
361 சார்ந்தாரை எவ்விடத்துங் காப்பனவுஞ் சார்ந்தன்பு
கூர்ந்தார்க்கு முத்தி கொடுப்பனவும் -கூர்ந்துள்ளே
மூளத் தியானிப்பார் முன்வந்து நிற்பனவும்
காளத்தி யார்தம் கழல்.
60
362 தங்கழல்கள் ஆர்ப்ப விளக்குச் சலன்சலனென்
றங்கழல்கள் ஆர்ப்ப அனலேந்திப் - பொங்ககலத்
தார்த்தா டரவம் அகன்கயிலை மேயாய்நீ
கூத்தாடல் மேவியவா கூறு.
61
363 கூறாய்நின் பொன்வாயால் கோலச் சிறுகிளியே
வேறாக வந்திருந்து மெல்லனவே - நீல் தாவு
மஞ்சடையும் நீள்குடுமி வாளருவிக் காளத்திச்
செஞ்சடைஎம் ஈசன் திறம்.
62
364 ஈசன் திறமே நினைந்துருகும் எம்மைப்போல்
மாசில் நிறத்த மடக்குருகே - கூசி
இருத்தியால் நீயும் இருங்கயிலை மேயாற்
கருத்தியாய்க் காமுற்றா யாம்.
63
365 காமுற்றா யாம்அன்றே காளத்தி யான்கழற்கே
யாமுற்ற துற்றாய் இருங்கடலே - யாமத்து
ஞாலத் துயிரெல்லாங் கண்துஞ்சும் நள்ளிருள்கூர்
காலத்துந் துஞ்சாதுன் கண்.
64
366 கண்ணுங் கருத்துங் கயிலாய ரேஎமக்கென்
றெண்ணி இருப்பன்யான் எப்பொழுதும் - நண்ணும்
பொறியா டரவசைத்த பூதப் படையார்
அறியார்கொல் நெஞ்சே அவர்.
65
367 நெஞ்சே அவர்கண்டாய் நேரே நினைவாரை
அஞ்சேல்என் றாட்கொண் டருள் செய்வார் - நஞ்சேயும்
கண்டத்தார் காளத்தி ஆள்வார் கழல்கண்டீர்
அண்டத்தார் சூடும் அலர்.
66
368 அலரோன் நெடுமால் அமரர்கோன் மற்றும்
பலராய்ப் படைத்துக் காத் தாண்டு - புலர்காலத்
தொன்றாகி மீண்டு பலவாகி நிற்கின்றான்
குன்றாத சீர்க்கயிலைக் கோ.
67
369 கோத்த மலர்வாளி கொண் டநங்கன் காளத்திக்
கூத்தன்மேல் அன்று குறித்தெய்யப் - பார்த்தலுமே
பண்பொழியாக் கோபத்தீச் சுற்றுதலும் பற்றற்று
வெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து.
68
370 வெந்திறல்வேல் பார்த்தற் கருள்செய்வான் வேண்டிஓர்
செந்தறுகண் கேழல் திறம்புரிந்து -வந்தருளும்
கானவனாம் கோலம்யான் காணக் கயிலாயா
வானவர்தங் கோமானே வா.
69
371 வாமான்தேர் வல்ல வயப்போர் விசயனைப் போல்
தாமார் உலகில் தவமுடையார் - தாம்யார்க்குங்
காண்டாற் கரியராய்க் காளத்தி ஆள்வாரைத்
தீண்டத்தாம் பெற்றமையாற் சென்று.
70
372 சென்றிறைஞ்சும் வானோர்தம் சிந்தைக்குஞ் சேயராய்
என்றும் அடியார்க்கு முன்னிற்பர் - நன்று
கனியவாஞ் சோலைக் கயிலாயம் மேயார்
இனியவா பத்தர்க் கிவர்.
70
373 இவரே முதல்தேவர் எல்லார்க்கும் மிக்கார்
இவரல்லர் என்றிருக்க வேண்டா -கவராதே
காதலித்தின் றேத்துதிரேல் காளத்தி ஆள்வார்நீர்
ஆதரித்த தெய்வமே ஆம்.
71
374 ஆமென்று நாளை உளஎன்று வாழ்விலே
தாமின்று வீழ்கை தவமன்று - யாமென்றும்
இம்மாய வாழ்வினையே பேணா திருங்கயிலை
அம்மானைச் சேர்வ தறிவு.
73
375. அறியாம லேனும் அறிந்தேனுஞ் செய்து
செறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறிநின்று
நன்முகில்சேர் காளத்தி நாதன் அடிபணிந்து
பொன்முகிலி ஆடுதலும் போம்.
74
376 போகின்ற மாமுகிலே பொற்கயிலை வெற்பளவும்
ஏகின் றெமக்காக எம்பெருமான் - ஏகினால்
உண்ணப் படாநஞ்சம் உண்டாற்கென் உள்ளுறுநோய்
விண்ணப்பஞ் செய்கண்டாய் வேறு.
75
377 வேறேயுங் காக்கத் தகுவேனை மெல்லியலாள்
கூறேயும் காளத்திக் கொற்றவனே - ஏறேறும்
அன்பா அடியேற் கருளா தொழிகின்ற
தென்பாவ மேயன்றோ இன்று.
76
378 இன்று தொடங்கிப் பணிசெய்வேன் யானுனக்
கென்றும் இளமதியே எம்பெருமான் - என்றும்என்
உட்காதல் உண்மை உயர்கயிலை மேயாற்குத்
திட்காதே விண்ணப்பஞ் செய்.
77
379 செய்ய சடைமுடியென் செல்வனையான் கண்டெனது
கையறவும் உள்மெலிவும் யான்காட்டப் -பையவே
காரேறு பூஞ்சோலைக் காளத்தி ஆள்வார்தம்
போரேறே இத்தெருவே போது.
78
380 போது நெறியனவே பேசிநின் பொன்வாயால்
ஊதத் தருவன் ஒளிவண்டே - காதலால்
கண்டார் வணங்குங் கயிலாயத் தெம்பெருமான்
வண்தார்மோந் தென்குழற்கே வா.
79
381 வாவா மணிவாயால் மாவின் தளிர்கோதிக்
கூவா திருந்த குயிற்பிள்ளாய் - ஓவாதே
பூமாம் பொழிலுடுத்த பொன்மதில் சூழ் காளத்திக்
கோமான் வரவொருகாற் கூவு.
80
382 கூவுதலும் பாற்கடலே சென்றவனைக் கூடுகஎன்
றேவினான் பொற்கயிலை எம்பெருமான் - மேவியசீர்
அன்பாற் புலிக்காலன் பாலன்பால் ஆசையினால்
தன்பாற்பால் வேண்டுதலுந் தான்.
81
383 தானே உலகாள்வான் தான்கண்ட வாவழக்கம்
ஆனால்மற் றார்இதனை அன்றென்பார்- வானோர்
களைகண்தா னாய்நின்ற காளத்தி ஆள்வார்
வளைகொண்டார் மால்தந்தார் வந்து.
82
384 வந்தோர் அரக்கனார் வண்கயிலை மால்வரையைத்
தந்தோள் வலியினையே தாம்கருதி - அந்தோ
இடந்தார் இடந்திட் டிடார்க்கீழ் எலிபோற்
கிடந்தார் வலியெலாங் கெட்டு.
83
385 கெட்ட அரக்கரே வேதியரே கேளீர்கொல்
பட்டதுவும் ஓராது பண்டொருநாள் - ஒட்டக்
கலந்தரனார் காளத்தி ஆள்வார்மேற் சென்று
சலந்தரனார் பட்டதுவுந் தாம்.
84
386 தாம்பட்ட தொன்றும் அறியார்கொல் சார்வரே
காம்புற்ற செந்நெற் கயிலைக் கோன் - பாம்புற்ற
ஆரத்தான் பத்தர்க் கருகணையார் காலனார்
தூரத்தே போவார் தொழுது.
85
387 தொழுது நமனுந்தன் தூதுவர்க்குச் சொல்லும்
வழுவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப்
பத்தர்களைக் கண்டால் பணிந்தகலப் போமின்கள்
எத்தனையுஞ் சேய்த்தாக என்று.
86
388 வென்றைந்துங் காமாதி வேரறுத்து மெல்லவே
ஒன்ற நினைதிரேல் ஒன்றலாம் - சென்றங்கை
மானுடையான் என்னை உடையான் வடகயிலை
தானுடையான் தன்னுடைய தாள்.
87
389 தாளொன்றால் பாதாளம் ஊடுருவத் தண்விசும்பில்
தாளொன்றால் அண்டங் கடந்துருவித் -தோளொன்றால்
திக்கனைத்தும் போர்க்குந் திறற்காளி காளத்தி
நக்கனைத்தான் கண்ட நடம்.
88
390 நடமாடுஞ் சங்கரன்தாள் நான்முகனுங் காணான்
படமாடு பாம்பணையான் காணான் - விடமேவும்
காரேறு கண்டன் கயிலாயன் தன் உருவை
யாரே அறிவார் இசைந்து.
89
391 இசையுந்தன் கோலத்தை யான்காண வேண்டி
வசையில்சீர்க் காளத்தி மன்னன் - அசைவின்றிக்
காட்டுமேல் காட்டிக் கலந்தென்னைத் தன்னோடும்
கூட்டுமேல் கூடலே கூடு.
90
392 கூடி யிருந்து பிறர்செய்யுங் குற்றங்கள்
நாடித்தம் குற்றங்கள் நாடாதே - வாடி
வடகயிலை யேத்தாதே வாழ்ந்திடுவான் வேண்டில்
அடகயில ஆரமுதை விட்டு.
91
393 விட்டாவி போக உடல்கிடந்து வெந்தீயில்
பட்டாங்கு வேமாறு பார்த்திருந்தும் - ஒட்டாதாம்
கள்ளலைக்கும் பூஞ்சோலைக் காளத்தி யுள்நின்ற
வள்ளலைச்சென் றேத்த மனம்.
92
394 மனமுற்றும் மையலாய் மாதரார் தங்கள்
கனமுற்றுங் காமத்தே வீழ்வர் -புனமுற்
றினக்குறவர் ஏத்தும் இருங்கயிலை மேயான்
தனக்குறவு செய்கலார் தாழ்ந்து.
93
395 தாழ்ந்த சடையுந் தவளத் திருநீறும்
சூழ்ந்த புலியதளும் சூழ்அரவும் - சேர்ந்து
நெருக்கிவா னோர்இறைஞ்சுங் காளத்தி யாள்வார்க்
கிருக்குமா கோலங்கள் ஏற்று.
94
396 ஏற்றின் மணியே அமையாதோ ஈர்ஞ்சடைமேல்
வீற்றிருந்த வெண்மதியும் வேண்டுமோ - ஆற்றருவி
கன்மேற்பட் டார்க்குங் கயிலாயத் தெம்பெருமான்
என்மேற் படைவிடுப்பாற் கீங்கு.
95
397 ஈங்கேவா என்றருளி என்மனத்தில் எப்பொழுதும்
நீங்காமல் நீவந்து நின்றாலும் - தீங்கை
அடுகின்ற காளத்தி ஆள்வாய் நான்நல்ல
படுகின்ற வண்ணம் பணி.
96
398 பணியாது முன்னிவனைப் பாவியேன் வாளா
கணியாது காலங் கழித்தேன் - அணியும்
கருமா மிடற்றெங் கயிலாயத் தெங்கள்
பெருமான தில்லை பிழை.
97
399 பிழைப்புவாய்ப் பொன்றறியேன் பித்தேறி னாற்போல்
அழைப்பதே கண்டாய் அடியேன் - அழைத்தாலும்
என்னா தரவேகொண் டின்பொழில்சூழ் காளத்தி
மன்னா தருவாய் வரம்.
98
400 வரமாவ தெல்லாம் வடகயிலை மன்னும்
பரமாஉன் பாதார விந்தம் - சிரமார
ஏத்திடும்போ தாகவந் தென்மனத்தில் எப்பொழுதும்
வைத்திடுநீ வேண்டேன்யான் மற்று.
99
401 மற்றும் பலபிதற்ற வேண்டாம் மடநெஞ்சே
கற்றைச் சடைஅண்ணல் காளத்தி - நெற்றிக்கண்
ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும்
சோராமல் எப்பொழுதுஞ் சொல்.
100

திருச்சிற்றம்பலம்

5.2 நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த
திருஈங்கோய்மலை எழுபது

402. அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்
இன்ன தென அறியா ஈங்கோயே - ஓங்காரம்
அன்னதென நின்றான் மலை.
1
403 அந்தஇள மாக்குழவி ஆயம் பிரிந்ததற்குக்
கொந்தவிழ்தேன் தோய்த்துக் குறமகளிர் - சந்தின்
இலைவளைக்கை யாற்கொடுக்கும் ஈங்கோயே மேரு
மலைவளைக்கை வில்லி மலை.
2
404 அம்பள வாய்மகளிர் அம்மனைக்குத் தம்மனையைச்
செம்பவளந் தாவென்னச் சீர்க்குறத்தி - கொம்பின்
இறுதலையி னாற்கிளைக்கும் ஈங்கோயே நம்மேல்
மறுதலைநோய் தீர்ப்பான் மலை.
3
405 அரிகரியைக் கண்டவிடத் தச்சலிப்பாய் ஓடப்
பிரிவரிய தன்பிடியைப் பேணிக் - கரிபெரிதும்
கையெடுத்து நீட்டிக் கதஞ்சிறக்கும் ஈங்கோயே
மையடுத்த கண்டன் மலை.
4
406 அரியும் உழுவையும் ஆளியுமே ஈண்டிப்
பரியிட்டுப் பன்மலர்கொண் டேறிச் - சொரிய
எரியாடி கண்டுகக்கும் ஈங்கோயே கூற்றம்
திரியாமற் செற்றான் சிலம்பு.
5
407 ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே
வாளி கொடுதொடரும் மாக்குறவர் - கோளின்
இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே நம்மேற்
கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று.
6
408 இடுதினைதின் வேழங் கடியக் குறவர்
வெடிபடு வெங்கவண்கல் ஊன்ற - நெடுநெடென
நீண்டகழை முத்துதிர்க்கும் ஈங்கோயே ஏங்குமணி
பூண்டகழை யேறி பொருப்பு.
7
409 ஈன்ற குறமகளிர்க் கேழை முதுகுறத்தி
நான்றகறிக் கேறசலை நற்கிழங் - கூன்றவைத்
தென்னன்னை உண்ணென் றெடுத்துரைக்கும் ஈங்கோயே
மின்னன்ன செஞ்சடையான் வெற்பு.
8
410 ஈன்ற குழவிக்கு மந்தி இறுவரை மேல்
நான்ற நறவத்தைத் தான்நணுகித் - தோன்ற
விரலால்தேன் தோய்த்தூட்டும் ஈங்கோயே நம்மேல்
வரலாம்நோய் தீர்ப்பான் மலை.
9
411 உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப்போய்ப்
பண்டிருந்த யாழ்முரலப் பைம்பொழில்வாய்க் -கண்டிருந்த
மாமயில்கள் ஆடி மருங்குவரும் ஈங்கோயே
பூமயிலி தாதை பொருப்பு.
10
412 ஊடிப் பிடியுறங்க ஒண்கதலி வண்கனிகள்
நாடிக் களிறு நயந்தெடுத்துக் - கூடிக்
குணமருட்டிக் கொண்டாடும் ஈங்கோயே வானோர்
குணமருட்டுங் கோளரவன் குன்று.
11
413 எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் கேற்றதெனக்
கையிற் கணைகளைந்து கன்னிமான் - பையப்போ
என்கின்ற பாவனைசெய் ஈங்கோயே தூங்கெயில்கள்
சென்றன்று வென்றான் சிலம்பு.
12
414 ஏழை இளமாதே என்னொடுநீ போதென்று
கூழை முதுவேடன் கொண்டுபோய் - வேழ
இனைக்குவால் வீட்டுவிக்கும் ஈங்கோயே நந்தம்
வினைக்குவால் வீட்டுவிப்பான் வெற்பு.
13
415 ஏனம் உழுத புழுதி இனமணியைக்
கானவர்தம் மக்கள் கனலென்னக் - கூனல்
இறுக்கங் கதிர்வெதுப்பும் ஈங்கோயே நம்மேல்
மறுக்கங்கள் தீர்ப்பான் மலை.
14
416 ஏனங் கிளைத்த இனபவள மாமணிகள்
கானல் எரிபரப்பக் கண்டஞ்சி - யானை
இனம்இரிய முல்லைநகும் ஈங்கோயே நம்மேல்
வினைஇரியச் செற்றுகந்தான் வெற்பு.
15
417 ஒருகணையுங் கேழல் உயிர்செகுத்துக் கையில்
இருகணையும் ஆனைமேல் எய்ய - அருகணையும்
ஆளரிதான் ஓட அரிவெருவும் ஈங்கோயே
கோளரிக்கும் காண்பரியான் குன்று.
16
418 ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவத் தண்போதைத்
தூங்குவதோர் கொள்ளி எனக்கடுவன் - மூங்கில்
தழையிறுத்துக் கொண்டேச்சும் ஈங்கோயே சங்கக்
குழையிறுத்த காதுடையான் குன்று.
17
419 ஓடும் முகிலை உகிரால் இறஊன்றி
மாடுபுக வான்கை மிகமடுத்து - நீடருவி
மாச்சீயம் உண்டு மனங்களிக்கும் ஈங்கோயே
கோச்சீயம் காண்பரியான் குன்று.
18
420 கண்ட கனிநுகர்ந்த மந்தி கருஞ்சுனைநீர்
உண்டு குளிர்ந்திலஎன் றூடிப்போய்க் -கொண்டல்
இறைக்கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே நான்கு
மறைக்கீறு கண்டான் மலை.
19
421 கருங்களிற்றின் வெண்கொம்பால் கல்லுரல்வாய் நல்லார்
பெருந்தினைவெண் பிண்டி இடிப்ப - வருங்குறவன்
கைக்கொணருஞ் செந்தேன் கலந்துண்ணும் ஈங்கோயே
மைக்கொணருங் கண்டன் மலை.
20
422 கனைய பலாங்கனிகள் கல்லிலையர் தொக்க
நனைய கலத்துரத்தில் ஏந்தி - மனைகள்
வரவிரும்பி ஆய்பார்க்கும் ஈங்கோயே பாங்கார்
குரவரும்பு செஞ்சடையான் குன்று.
21
423 கடக்களிறு கண்வளரக் கார்நிறவண் டார்ப்பச்
சுடர்க்குழையார் பாட்டெழவு கேட்டு - மடக்கிளிகள்
கீதந் தெரிந்துரைக்கும் ஈங்கோயே ஆல்கீழ்நால்
வேதந் தெரிந்துரைப்பான் வெற்பு.
22
424 கறுத்தமுலைச் சூற்பிடிக்குக் கார்யானை சந்தம்
இறுத்துக்கை நீட்டும்ஈங் கோயே - செறுத்த
கடதடத்த தோலுரிவைக் காப்பமையப் போர்த்த
விடமிடற்றி னான்மருவும் வெற்பு.
23
425 கங்குல் இரைதேரும் காகோ தரங்கேழற்
கொம்பி னிடைக் கிடந்த கூர்மணியைப் - பொங்கி
உருமென்று புற்றடையும் ஈங்கோயே காமன்
வெருவொன்றக் கண்சிவந்தான் வெற்பு.
24
426 கலவிக் களிறசைந்த காற்றெங்குங் காணா
திலைகைக்கொண் டேந்திக்கால் வீச - உலவிச்சென்
றொண்பிடிகாற் றேற்றுகக்கும் ஈங்கோயே பாங்காய
வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு.
25
427 கன்னிப் பிடிமுதுகிற் கப்பருவ முட்பருகி
அன்னைக் குடிவர லாறஞ்சிப் - பின்னரே
ஏன்தருக்கி மாதவஞ்செய் ஈங்கோயே நீங்காத
மான்தரித்த கையான் மலை.
26
428 கள்ள முதுமறவர் காட்டகத்து மாவேட்டை
கொள்ளென் றழைத்த குரல்கேட்டுத் -துள்ளி
இனக்கவலை பாய்ந்தோடும் ஈங்கோயே நந்தம்
மனக்கவலை தீர்ப்பான் மலை.
27
429 கல்லைப் புனம்மேய்ந்து கார்க்கொன்றைத் தார்போர்த்துக்
கொல்லை எழுந்த கொழும்புறவின் - முல்லையங்கள்
பல்லரும்பு மொய்த்தீனும் ஈங்கோயே மூவெயிலும்
கொல்லரும்பக் கோல்கோத்தான் குன்று.
28
430 கல்லாக் குரங்கு பளிங்கிற் கனிகாட்ட
எல்லாக் குரங்கும் உடன்ஈண்டி - வல்லே
இருந்துகிராற் கற்கிளைக்கும் ஈங்கோயே மேனிப்
பொருந்தஅராப் பூண்டான் பொருப்பு.
29
431 கண்கொண் டவிர்மணியின் நாப்பண் கருங்கேழல்
வெண்கோடு வீழ்ந்த வியன்சாரல் -தண்கோ
டிளம்பிறைசேர் வான்கடுக்கும் ஈங்கோயே வேதம்
விளம்பிறைசேர் வான்கடுக்கும் வெற்பு.
30
432 காந்தளங் கைத்தளங்கள் காட்டக் களிமஞ்ஞை
கூந்தல் விரித்தடனே கூத்தாடச் - சாய்ந்திரங்கி
ஏர்க்கொன்றை பொன்கொடுக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
கார்க்கொன்றை ஏற்றான் கடறு.
31
433 குறமகளிர் கூடிக் கொழுந்தினைகள் குத்தி
நறவமாக் கஞ்சகங்கள் நாடிச் - சிறுகுறவர்
கைந்நீட்டி உண்ணக் களித்துவக்கும் ஈங்கோயே
மைந்நீட்டுங் கண்டன் மலை.
32
434 கூழை முதுமந்தி கோல்கொண்டு தேன்பாய
ஏழை இளமந்தி சென்றிருந்து - வாழை
இலையால்தேன் உண்டுவக்கும் ஈங்கோயே இஞ்சி
சிலையால்தான் செற்றான் சிலம்பு.
33
435 கொல்லை இளவேங்கைக் கொத்திறுத்துக் கொண்டுசுனை
மல்லைநீர் மஞ்சனமா நாட்டிக்கொண் - டொல்லை
இருங்கைக் களிறேறும் ஈங்கோயே மேல்நோய்
வருங்கைக் களைவான் மலை.
34
436 கொவ்வைக் கனிவாய்க் குறமகளிர் கூந்தல்சேர்
கவ்வைக் கடிபிடிக்கும் காதன்மையாற் -செவ்வை
எறித்தமலர் கொண்டுவிடும் ஈங்கோயே அன்பர்
குறித்தவரந் தான்கொடுப்பான் குன்று.
35
437 கொடுவிற் சிலைவேடர் கொல்லை புகாமல்
படுகுழிகள் கல்லுதல்பார்த் தஞ்சி - நெடுநாகம்
தண்டூன்றிச் செல்லுஞ்சீர் ஈங்கோயே தாழ்சடைமேல்
வண்டூன்றுந் தாரான் மலை.
36
438 கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர்
வேங்கைமணி நீழல் விளையாடி - வேங்கை
வரவதனைக் கண்டிரியும் ஈங்கோயே தீங்கு
வரவதனைக் காப்பான் மலை.
37
439 சந்தனப்பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்தியானை
மந்த மடப்பிடியின் வாய்க்கொடுப்ப - வந்ததன்
கண்களிக்கத் தான்களிக்கும் ஈங்கோயே தேங்காதே
விண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு.
38
440 சந்தின் இலையதனுள் தண்பிண்டி தேன்கலந்து
கொந்திஇனி துண்ணக் குறமகளிர் - மந்தி
இளமகளிர் வாய்க்கொடுத்துண் ஈங்கோயே வெற்பின்
வளமகளிர் பாகன் மலை.
39
441 சாரற் குறத்தியர்கள் தண்மருப்பால் வெண்பிண்டி
சேரத் தருக்கி மதுக்கலந்து - வீரத்
தமர்இனிதா உண்ணுஞ்சீர் ஈங்கோயே இன்பக்
குமரன்முது தாதையர் குன்று.
40
442 தாயோங்கித் தாமடருந் தண்சாரல் ஒண்கானம்
வேயோங்கி முத்தம் எதிர்பிதுங்கித் - தீயோங்கிக்
கண்கன்றித் தீவிளைக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
வண்கொன்றைத் தாரான் வரை.
41

443
செடிமுட்டச் சிங்கத்தின் சீற்றத்தீக் கஞ்சிப்
பிடியட்ட மாக்களிறு பேர்ந்து - கடம்முட்டி
என்னேசீ என்னுஞ்சீர் ஈங்கோயே ஏந்தழலிற்
பொன்னேர் அனையான் பொருப்பு.
42
444 சுனைநீடு தாமரையின் தாதளைந்து சோதிப்
புனைநீடு பொன்னிறத்த வண்டு - மனைநீடி
மன்னி மணம்புணரும் ஈங்கோயே மாமதியம்
சென்னி அணிந்தான் சிலம்பு.
43
445 செந்தினையின் வெண்பிண்டி பச்சைத்தே னாற்குழைத்து
வந்தவிருந் தூட்டும் மணிக்குறத்தி - பந்தியாத்
தேக்கிலைகள் இட்டுச் சிறப்புரைக்கும் ஈங்கோயே
மாக்கலைகள் வைத்தான் மலை.
44
446 தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள்
இடம்புகுந்தங் கின்நறவம் மாந்தி - உடன்கலந்து
மாக்குரவை ஆடி மகிழ்ந்துவரும் ஈங்கோயே
கோக்குரவை ஆடிகொழுங் குன்று.
45
447 தாமரையின் தாள்தகைத்த தாமரைகள் தாள்தகையத்
தாமரையிற் பாய்ந்துகளும் தண்புறவில் - தாமரையின்
ஈட்டம் புலிசிதறும் ஈங்கோயே எவ்வுயிர்க்கும்
வாட்டங்கள் தீர்ப்பான் மலை.
46
448 தெள்ளகட்ட பூஞ்சுனைய தாமரையின் தேமலர்வாய்
வள்ளவட்டப் பாழி மடலேறி -வெள்ளகட்ட
காராமை கண்படுக்கும் ஈங்கோயே வெங்கூற்றைச்
சேராமற் செற்றான் சிலம்பு.
47
449 தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்கு
தான்கொணர்ந்து மக்கள்கை யிற்கொடுத்து - வான்குணங்கள்
பாராட்டி யூட்டுஞ்சீர் ஈங்கோயே பாங்கமரர்
சீராட்ட நின்றான் சிலம்பு.
48
450 தேன்மருவு பூஞ்சுனைகள் புக்குச் செழுஞ்சந்தின்
கானமர்கற் பேரழகு கண்குளிர - மேனின்
றருவிகள்தாம் வந்திழியும் ஈங்கோயே வானோர்
வெருவுகடல் நஞ்சுண்டான் வெற்பு.
49
451 தோகை மயிலினங்கள் சூழ்ந்து மணிவரைமேல்
ஓகை செறியாயத் தோடாட - நாகம்
இனவளையிற் புக்கொளிக்கும் ஈங்கோயே நம்மேல்
வினைவளையச் செற்றுகந்தான் வெற்பு.
50
452 நறவம் நனிமாந்தி நள்ளிருட்கண் ஏனம்
இறவி லியங்குவான் பார்த்துக் - குறவர்
இரைத்துவலை தைத்திருக்கும் ஈங்கோயே நங்கை
விரைத்துவலைச் செஞ்சடையான் வெற்பு.
51
453 நாக முழைநுழைந்த நாகம்போய் நன்வனத்தில்
நாகம் விழுங்க நடுக்குற்று -நாகந்தான்
மாக்கையால் மஞ்சுரிக்கும் ஈங்கோயே ஓங்கியசெந்
தீக்கையால் ஏந்தி சிலம்பு.
52
454 நாகங் களிறுநு(ங்)க நல்லுழுவை தாமரையின்
ஆகந் தழுவி அசைவெய்த - மேகங்
கருவிடைக்க ணீர்சோரும் ஈங்கோயே ஓங்கு
பொருவிடைக்க ணூர்வான் பொருப்பு.
53
455 பணவநிலைப் புற்றின் பழஞ்சோற் றமலை
கணவ னிடந்திட்ட கட்டி - உணவேண்டி
எண்கங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
வண்கங்கை ஏற்றான் மலை.
54
456 பன்றி பருக்கோட்டாற் பாருழுத பைம்புழுதித்
தென்றி மணிகிடப்பத் தீயென்று - கன்றிக்
கரிவெருவிக் கான்படரும் ஈங்கோயே வானோர்
மருவரியான் மன்னும் மலை.
55
457 பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்று
சீறி மருப்பொசித்த செம்முகமாத் - தேறிக்கொண்
டெல்லே பிடியென்னும் ஈங்கோயே மூவெயிலும்
வில்லே கொடுவெகுண்டான் வெற்பு.
56
458 பிடிபிரிந்த வேழம் பெருந்திசைதான் கோடிப்
படிமுகிலைப் பல்காலும் பார்த்திட் - டிடரா
இருமருப்பைக் கைகாட்டும் ஈங்கோயே வானோர்
குருவருட்குன் றாய்நின்றான் குன்று.
57
459 பொருத கரியின் முரிமருப்பிற் போந்து
சொரிமுத்தைத் தூநீரென் றெண்ணிக் - கருமந்தி
முக்கிவிக்கி நக்கிருக்கும் ஈங்கோயே மூவெயிலும்
திக்குகக்கச் செற்றான் சிலம்பு.
58
460 மறவெங் களிற்றின் மருப்புகுத்த முத்தம்
குறவர் சிறார்குடங்கைக் கொண்டு - நறவம்
இளவெயில்தீ யட்டுண்ணும் ஈங்கோயே மூன்று
வளவெயில்தீ யிட்டான் மலை.
59
461 மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணர நோக்கிச்
சிலைநுதலி சீறிச் சிலைத்துக் - கலைபிரிய
இம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயே
மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு.
60
462 மரையதளும் ஆடு மயிலிறகும் வேய்ந்த
புரையிதணம் பூங்கொடியார் புக்கு -நுரைசிறந்த
இன்நறவுண் டாடி இசைமுரலும் ஈங்கோயே
பொன்நிறவெண் ணீற்றான் பொருப்பு.
61
463 மலையர் கிளிகடிய மற்றப் புறமே
கலைகள் வருவனகள் கண்டு -சிலையை
இருந்தெடுத்துக் கோல்தெரியும் ஈங்கோயே மாதைப்
புரிந்திடத்துக் கொண்டான் பொருப்பு.
62
464 மத்தக் கரிமுகத்தை வாளரிகள் பீறஒளிர்
முத்தம் பனிநிகர்க்கும் மொய்ம்பிற்றால் - அத்தகைய
ஏனற் புனம்நீடும் ஈங்கோயே தேங்குபுனல்
கூனற் பிறையணிந்தான் குன்று.
63
465 மந்தி இனங்கள் மணிவரையின் உச்சிமேல்
முந்தி இருந்து முறைமுறையே - நந்தி
அளைந்தாடி ஆலிக்கும் ஈங்கோயே கூற்றம்
வளைந்தோடச் செற்றான் மலை.
64
466 மந்தி மகவினங்கள் வண்பலவின் ஒண்சுளைக்கண்
முந்திப் பறித்த முறியதனுள் -சிந்திப்போய்த்
தேனாறு பாயுஞ்சீர் ஈங்கோயே செஞ்சடைமேல்
வானாறு வைத்தான் மலை.
65
467 முள்ளார்ந்த வெள்ளிலவம் ஏறி வெறியாது
கள்ளார்ந்த பூப்படியும் கார்மயில்தான் - ஒள்ளார்
எரிநடுவுட் பெண்கொடியார் ஏய்க்கும்ஈங் கோயே
புரிநெடுநூல் மார்பன் பொருப்பு.
66
468 வளர்ந்த இளங்கன்னி மாங்கொம்பின் கொங்கை
அளைந்து வடுப்படுப்பான் வேண்டி - இளந்தென்றல்
எல்லிப் புகநுழையும் ஈங்கோயே தீங்கருப்பு
வில்லிக்குக் கூற்றானான் வெற்பு.
67
469 வான மதிதடவல் உற்ற இளமந்தி
கான முதுவேயின் கண்ணேறித் - தானங்
கிருந்துயரக் கைநீட்டும் ஈங்கோயே நம்மேல்
வருந்துயரந் தீர்ப்பான் மலை.
68
470 வேய்வனத்துள் யானை தினைகவர வேறிருந்து
காய்வனத்தே வேடன் கணைவிசைப்ப - வேயணைத்து
மாப்பிடிமுன் ஓட்டும்ஈங் கோயே மறைபரவு
பூப்பிடிபொற் றாளான் பொருப்பு.
69
471 வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ
முழுகிய தென் றஞ்சிமுது மந்தி -பழகி
எழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே திங்கட்
கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று.
70

திருச்சிற்றம்பலம்

5.3 நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த
திருவலஞ்சுழி மும்மணிக்கோவை

472. (ஆசிரியப்பா )
வணங்குதும் வாழி நெஞ்சே புணர்ந்துடன்
பொருகடல் முகந்து கருமுகிற் கணம்நற்
படவர வொடுங்க மின்னிக் குடவரைப்
பொழிந்து கொழித்திழி அருவி குணகடல்
மடுக்குங் காவிரி மடந்தை வார்புனல்
உடுத்த மணிநீர் வலஞ்சுழி
அணிநீர்க் கொன்றை அண்ணல தடியே.
1
473 (வெண்பா)
அடிப்போது தந்தலைவைத் தவ்வடிகள் உன்னிக்
கடிப்போது கைக்கொண்டார் கண்டார் - முடிப்போதா
வாணாகஞ் சூடும் வலஞ்சுழியான் வானோரும்
காணாத செம்பொற் கழல்.
2
474 (கட்டளைக் கலித்துறை )
கழல்வண்ண மும்சடைக் கற்றையும் மற்றவர் காணகில்லார்
தழல்வண்ணம் கண்டே தளர்ந்தார் இருவரந் தாமரையின்
நிழல்வண்ணம் பொன்வண்ணம் நீர்நிற வண்ணம் நெடியவண்ணம்
அழல்வண்ண முந்நீர் வலஞ்சுழி ஆள்கின்ற அண்ணலையே.
3
475 (ஆசிரியப்பா )
அண்ணலது பெருமை கண்டனம் கண்ணுதற்
கடவுள் மன்னிய தடமல்கு வலஞ்சுழிப்
பனிப்பொருட் பயந்து பல்லவம் பழிக்கும்
திகழொளி முறுவல் தேமொழிச் செவ்வாய்த்
திருந்திருங் குழலியைக் கண்டு
வருந்திஎன் உள்ளம் வந்தஅப் போதே.
4
476 (வெண்பா)
போதெலாம் பூங்கொன்றை கொண்டிருந்த பூங்கொன்றைத்
தாதெலாம் தன்மேனி தைவருமால் -தீதில்
மறைக்கண்டான் வானோன் வலஞ்சுழியான் சென்னிப்
பிறைக்கண்டங் கண்டணைந்த பெண்.
5
477 (கட்டளைக் கலித்துறை )
பெண்கொண் டிருந்து வருந்துங்கொ லாம்பெரு மான்திருமால்
வண்கொண்ட சோலை வலஞ்சுழி யான்மதி சூடிநெற்றிக்
கண்கொண்ட கோபம் கலந்தன போல்மின்னிக் கார்ப்புனத்துப்
பண்கொண்டு வண்டினம் பாடநின் றார்த்தன பன்முகிலே.
6
478 (ஆசிரியப்பா)
முகிற்கணம் முழங்க முனிந்த வேழம்
எயிற்றிடை அடக்கிய வெகுளி ஆற்ற
அணிநடை மடப்பிடி அருகுவந் தணைதரும்
சாரல் தண்பொழில் அணைந்து சோரும்
தேனுகு தண்தழை செறிதரு வனத்தில்
சருவரி வாரல்எம் பெருமநீர் மல்கு
சடைமுடி ஒருவன் மருவிய வலஞ்சுழி
அணிதிகழ் தோற்றத் தங்கயத் தெழுந்த
மணிநீர்க் குவளை அன்ன
அணிநீர்க் கருங்கண் ஆயிழை பொருட்டே.
7
479 (வெண்பா)
பொருட்டக்கீர் சில்பலிக்கென் றில்புகுந்தீ ரேனும்
அருட்டக்கீர் யாதும்ஊர் என்றேன் ௭ மருட்டக்க
மாமறையம் என்றார் வலஞ்சுழிநம் வாழ்வென்றார்
தாம்மறைந்தார் காணேன்கைச் சங்கு.
8
480 (கட்டளைக் கலித்துறை)
சங்கம் புரளத் திரைசுமந் தேறுங் கழியருகே
வங்கம் மலியுந் துறையிடைக் காண்டிர் வலஞ்சுழியா
றங்கம் புலன்ஐந்தும் ஆகிய நான்மறை முக்கணக்கன்
பங்கன் றிருவர்க் கொருவடி வாகிய பாவையையே.
9
481 அகவல்
பாவை ஆடிய துறையும் பாவை
மருவொடு வளர்ந்த அன்னமும் மருவித்
திருவடி அடியேன் தீண்டிய திறனும்
கொடியேன் உள்ளங்கொண்ட சூழலும், கள்ளக்
கருங்கண் போன்ற காவியும் நெருங்கி
அவளே போன்ற தன்றே தவளச்
சாம்பல் அம்பொடி சாந்தெனத் தைவந்து
தேம்பல் வெண்பிறை சென்னிமிசை வைத்த
வெள்ளேற் றுழவன் வீங்குபுனல் வலஞ்சுழி
வண்டினம் பாடுஞ் சோலைக்
கண்ட அம்மஅக் கடிபொழில் தானே.
10
482 (வெண்பா)
தான்ஏறும் ஆனேறு கைதொழேன் தன்சடைமேல்
தேன்ஏறு கொன்றைத் திறம்பேசேன் - வான்ஏறு
மையாருஞ் சோலை வலஞ்சுழியான் என்கொல்என்
கையார் வளைகவர்ந்த வாறு.
11
483 (கட்டளைக் கலித்துறை)
ஆறுகற் றைச்சடைக் கொண்டொரொற் றைப்பிறை சூடிமற்றைக்
கூறுபெண் ணாயவன் கண்ணார் வலஞ்சுழிக் கொங்குதங்கு
நாறுதண் கொம்பரன் னீர்கள்இன் னேநடந் தேகடந்தார்
சீறுவென் றிச்சிலைக் கானவர் வாழ்கின்ற சேண்நெறியே.
12
484 (ஆசிரியப்பா)
நெறிதரு குழலி விறலியொடு புணர்ந்த
செறிதரு தமிழ்நூல் சீறியாழ்ப் பாண
பொய்கை யூரன் புதுமணம் புணர்தர
மூவோம் மூன்று பயன்பெற் றனவே நீஅவன்
புனைதார் மாலை பொருந்தப் பாடி
இல்லதும் உள்ளதும் சொல்லிக் கள்ள
வாசகம் வழாமல் பேச வண்மையில்
வானர மகளிர் வான்பொருள் பெற்றனை, அவரேல்
எங்கையர் கொங்கைக் குங்குமந் தழீஇ
விழையா இன்பம் பெற்றனர் யானேல்
அரன்அமர்ந் துறையும் அணிநீர் வலஞ்சுழிச்
சுரும்பிவர் நறவயற் சூழ்ந்தெழு கரும்பில்
தீநீர் அன்ன வாய்நீர் சோரும்
சிலம்புகுரற் சிறுபறை பூண்ட
அலம்புகுரற் கிண்கிணிக் களிறுபெற் றனனே.
13
485 (வெண்பா)
தனம்ஏறிப் பீர்பொங்கித் தன்அங்கம் வேறாய்
மனம்வேறு பட்டொழிந்தாள் மாதோ - இனம்ஏறிப்
பாடாலம் வண்டலம்பும் பாய்நீர் வலஞ்சுழியான்
கோடாலங் கண்டணைந்த கொம்பு.
14
486 (கட்டளைக் கலித்துறை)
கொம்பார் குளிர்மறைக் காடனை வானவர் கூடிநின்று
நம்பா எனவணங் கப்பெறு வானை நகர்எரிய
அம்பாய்ந் தவனை வலஞ்சுழி யானைஅண் ணாமலைமேல்
வம்பார் நறுங்கொன்றைத் தாருடை யானை வணங்குதுமே.
15

திருச்சிற்றம்பலம்

5.4 நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த
திருஎழுகூற்றிருக்கை

487. ஓருடம்பு ஈருரு ஆயினை ஒன்றுபுரிந்
தொன்றி னீரிதழ்க் கொன்றை சூடினை
மூவிலைச் சூலம் ஏந்தினை
சுடருஞ் சென்னி மீமிசை
இருகோட் டொருமதி எழில்பெற மிலைச்சினை
(5)
ஒருகணை இருதோள் செவியுற வாங்கி
மூவெயில் நாற்றிசை முரண்அரண் செகுத்தனை
ஆற்ற முன்னெறி பயந்தனை
செறிய இரண்டு நீக்கி
ஒன்று நினைவோர்க் குறுதி யாயினை
(10)
அந்நெறி ஒன்று
மனம்வைத் திரண்டும் நினைவி லோர்க்கு
முன்னெறி உலகங் காட்டினை அந்நெறி
நான்கென ஊழி தோற்றினை
சொல்லும் ஐந்தலை அரவசைத் தசைந்தனை
(15)
நான்முகன் மேன்முகம் கபாலம் ஏந்தினை
நூன்முக முப்புரி மார்பில்
இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்திய
ஒருவநின் ஆதி காணா திருவர்
மூவுல குழன்று நாற்றிசை உழிதர
(20)
ஐம்பெருங் குன்றத் தழலாய்த் தோன்றினை
ஆறுநின் சடையது ஐந்துநின் நிலையது
நான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணே
இரண்டு நின் குழையே ஒன்றுநின் ஏறே
ஒன்றிய காட்சி உமையவள் நடுங்க
(25)
இருங்களிற் றுரிவை போர்த்தனை நெருங்கி
முத்தீ நான்மறை ஐம்புலன் அடக்கிய
அறுதொழி லாளர்க் குறுதி பயந்தனை
ஏழில் இன்னரம் பிசைத்தனை
ஆறில் அமுதம் பயந்தனை ஐந்தில்
(30)
விறலியர் கொட்டு மழுத்த வேந்தினை
ஆல நீழல் அன்றிருந் தறநெறி
நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை
நன்றி இல்லா முந்நீர்ச் சூர்மாக்
கொன்றங் கிருவரை எறிந்த ஒருவன்
(35)
தாதை ஒருமிடற்று இருவடி வாயினை
தருமம் மூவகை உலகம் உணரக்
கூறுவை நால்வகை
இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை
ஐங்கணை அவனொடு காலனை அடர்த்தனை
(40)
அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை
ஏழின் ஓசை இராவணன் பாடத்
தாழ்வாய்க் கேட்டவன் தலையளி பொருத்தினை
ஆறிய சிந்தை யாகி ஐங்கதித்
தேரொடு திசைசெல விடுத்தோன்
(45)
நாற்றோள் நலனே நந்தியிங் கிருடியென்
றேற்ற பூதம் மூன்றுடன் பாட
இருகண் மொந்தை ஒருகணங் கொட்ட
மட்டுவிரி அலங்கல் மலைமகள் காண
நட்டம் ஆடிய நம்ப அதனால்
(50)
சிறியேன் சொன்ன அறிவில் வாசகம்
வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும்
வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து
கீதம் பாடிய அண்ணல்
பாதஞ் சென்னியிற் பரவுவன் பணிந்தே. ...55
1
488 (வெண்பா)
பணிந்தேன்நின் பாதம் பரமேட்டீ பால்நீ
றணிந்தால வாயில் அமர்ந்தாய் - தணிந்தென்மேல்
மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே
ஐயுறவொன் றின்றி அமர்ந்து.
2

திருச்சிற்றம்பலம்

5.5 நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த
பெருந்தேவபாணி

489. சூல பாணியை சுடர்தரு வடிவனை
நீல கண்டனை நெற்றியோர் கண்ணனை
பால்வெண் ணீற்றனை பரம யோகியை
காலனைக் காய்ந்த கறைமிடற் றண்ணலை
நூலணி மார்பனை நுண்ணிய கேள்வியை
(5)
கோல மேனியை கொக்கரைப் பாடலை
வேலுடைக் கையனை விண்தோய் முடியனை
ஞாலத் தீயினை நாதனைக் காய்ந்தனை
தேவ தேவனை திருமறு மார்பனை
கால மாகிய கடிகமழ் தாரனை
(10)
வேத கீதனை வெண்தலை ஏந்தியை
பாவ நாசனை பரமேச் சுவரனை
கீதம் பாடியை கிளர்பொறி அரவனை
போதணி கொன்றைஎம் புண்ணிய ஒருவனை
ஆதி மூர்த்தியை அமரர்கள் தலைவனை
(15)
சாதி வானவர் தம்பெரு மான்தனை
வேத விச்சையை விடையுடை அண்ணலை
ஓத வண்ணனை உலகத் தொருவனை
நாத னாகிய நன்னெறிப் பொருளினை
மாலை தானெரி மயானத் தாடியை
(20)
வேலை நஞ்சினை மிகஅமு தாக்கியை
வேத வேள்வியை விண்ணவர் தலைவனை
ஆதி மூர்த்தியை அருந்தவ முதல்வனை
ஆயிர நூறுக் கறிவரி யானை
பேயுருவு தந்த பிறையணி சடையனை
(25)
மாசறு சோதியை மலைமகள் கொழுநனை
கூரிய மழுவனை கொலற்கருங் காலனைச்
சீரிய அடியாற் செற்ற ருள் சிவனை
பூதிப் பையனை புண்ணிய மூர்த்தியை
பீடுடை யாற்றை பிராணி தலைவனை
(30)
நீடிய நிமலனை நிறைமறைப் பொருளினை
ஈசனை இறைவனை ஈறில் பெருமையை
நேசனை நினைப்பவர் நெஞ்சத் துள்ளனை
தாதணி மலரனை தருமனை பிரமனை
காதணி குழையனை களிற்றின் உரியனை
(35)
சூழ்சடைப் புனலனை சுந்தர விடங்கனை
தார்மலர்க் கொன்றை தயங்கு மார்பனை
வித்தக விதியனை
தீதமர் செய்கைத் திரிபுரம் எரித்தனை
பிரமன் பெருந்தலை நிறைய தாகக்
(40)
கருமன் செந்நீர் கபாலம் நிறைத்தனை
நிறைத்த கபாலச் செந்நீர் நின்றும்
உறைத்த உருவார் ஐயனைத் தோற்றினை
தேவரும் அசுரரும் திறம்படக் கடைந்த
ஆர்வமுண் நஞ்சம் அமுத மாக்கினை
(45)
ஈரமில் நெஞ்சத் திராவணன் தன்னை
வீரம் அழித்து விறல்வாள் கொடுத்தனை
திக்கமர் தேவருந் திருந்தாச் செய்கைத்
தக்கன் வேள்வியைத் தளரச் சாடினை
வேதமும் நீயே வேள்வியும் நீயே
(50)
நீதியும் நீயே நிமலன் நீயே
புண்ணியம் நீயே புனிதன் நீயே
பண்ணியல் நீயே பழம்பொருள் நீயே
ஊழியம் நீயே உலகமும் நீயே
வாழியும் நீயே வரதனும் நீயே
(55)
தேவரும் நீயே தீர்த்தமும் நீயே
மூவரும் நீயே முன்னெறி நீயே
மால்வரை நீயே மறிகடல் நீயே
இன்பமும் நீயே துன்பமும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே 60

விண்முதற் பூதம் ஐந்தவை நீயே
புத்தியும் நீயே முத்தியும் நீயே
சொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே, அதனால்
கூடல் அலவாய்க் குழகன் ஆவ
தறியா தருந்தமிழ் பழித்தனன் அடியேன்
(60)
ஈண்டிய சிறப்பின் இணையடிக் கீழ்நின்று
வேண்டு மதுவினி வேண்டுவன் விரைந்தே.
1
490 (வெண்பா)
விரைந்தேன்மற் றெம்பெருமான் வேண்டியது வேண்டா
திகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் - விரைந்தென்மேல்
சீற்றத்தைத் தீர்த்தருளும் தேவாதி தேவனே
ஆற்றவுநீ செய்யும் அருள்.
2

திருச்சிற்றம்பலம்

5.6 நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த
கோபப் பிரசாதம்

491. தவறுபெரி துடைத்தே தவறுபெரி துடைத்தே
வெண்திரைக் கருங்கடல் மேல்துயில் கொள்ளும்
அண்ட வாணனுக் காழியன் றருளியும்
உலகம் மூன்றும் ஒருங்குடன் படைத்த
மலரோன் தன்னை வான்சிரம் அரிந்தும்
(5)
கான வேடுவன் கண்பரிந் தப்ப
வான நாடு மற்றவற் கருளியும்
கடிபடு பூங்கணைக் காம னார் உடல்
பொடிபட விழித்தும் பூதலத் திசைந்த
மானுட னாகிய சண்டியை
(10)
வானவன் ஆக்கியும்
மறிகடல் உலகின் மன்னுயிர் கவரும்
கூற்றுவன் தனக்கோர் கூற்றுவ னாகியும்
கடல்படு நஞ்சம் கண்டத் தடக்கியும்
பருவரை சிலையாப் பாந்தள் நாணாத்
(15)
திரிபுரம் எரிய ஒருகணை துரந்தும்
கற்கொண் டெறிந்த சாக்கியன் அன்பு
தற்கொண் டின்னருள் தான்மிக அளித்தும்
கூற்றெனத் தோன்றியுங் கோளரி போன்றும்
தோற்றிய வாரணத் தீருரி போர்த்தும்
(20)
நெற்றிக் கண்ணும் நீள்புயம் நான்கும்
நற்றா நந்தீச் சுவரர்க் கருளியும்
அறிவின் ஓரா அரக்க னாருடல்
நெறநெற இறுதர ஒருவிரல் ஊன்றியும்
திருவுரு வத்தொடு செங்கண் ஏறும்
(25)
அரியன திண்திறள் அசுரனுக் கருளியும்
பல்கதிர் உரவோன் பற்கெடப் பாய்ந்து
மல்குபிருங் கிருடிக்கு மாவரம் ஈந்தும்
தக்கன் வேள்வி தகைகெடச் சிதைத்தும்
மிக்கவரம் நந்தி மாகாளர்க் கருளியும்
(30)
செந்தீக் கடவுள்தன் கரதலஞ் செற்றும்
பைந்தார் நெடும்படை பார்த்தற் கருளியும்
கதிர்மதி தனையோர் காற்பயன் கெடுத்தும்
நிதிபயில் குபேரற்கு நீள்நகர் ஈந்தும்
சலந்தரன் உடலந் தான்மிகத் தடிந்தும்
(35)
மறைபயில் மார்க்கண் டேயனுக் கருளியும்
தாருகற் கொல்லமுன் காளியைப் படைத்தும்
சீர்மலி சிலந்திக் கின்னர சளித்தும்
கார்மலி உருவக் கருடனைக் காய்ந்தும்
ஆலின் கீழிருந் தறநெறி அருளியும்
(40)
இன்னவை பிறவும் எங்கள் ஈசன்
கோபப் பிரசாதங் கூறுங் காலைக்
கடிமலர் இருந்தோன் கார்க்கடற் கிடந்தோன்
புடமுறு சோலைப் பொன்னகர் காப்போன்
உரைப்போ ராகிலும் ஒண்கடல் மாநீர்
(45)
அங்கைகொண் டிறைக்கும் ஆதர் போன்றுளர்
ஒடுங்காப் பெருமை உம்பர் கோனை
அடங்கா ஐம்புலத் தறிவில் சிந்தைக்
கிருமி நாவாற் கிளத்தும் பரமே, அதாஅன்று
ஒருவகைத் தேவரும் இருவகைத் திறமும்
(50)
மூவகைக் குணமும் நால்வகை வேதமும்
ஐவகைப் பூதமும் அறுவகை இரதமும்
எழுவகை ஓசையும் எண்வகை ஞானமும்
ஒன்பதின் வகையாம் ஒண்மலர்ச் சிறப்பும்
பத்தின் வகையும் ஆகிய பரமனை
(55)
இன்பனை நினைவோர்க் கென்னிடை அழுதினைச்
செம்பொனை மணியினைத் தேனினைப் பாலினைத்
தஞ்சமென் றொழுகுந் தன்னடி யார்தம்
நெஞ்சம் பிரியா நிமலனை நீடுயர்
செந்தழற் பவளச் சேணுறு வரையனை
(60)
முக்கட் செல்வனை முதல்வனை மூர்த்தியைக்
கள்ளங் கைவிட் டுள்ளம துருகிக்
கலந்து கசிந்துதன் கழலினை யவையே
நினைந்திட ஆங்கே தோன்றும் நிமலனைத்
தேவ தேவனைத் திகழ்சிவ லோகனைப்
(65)
பாவ நாசனைப் படரொளி உருவனை
வேயார் தோளி மெல்லியல் கூறனைத்
தாயாய் மன்னுயிர் தாங்குந் தந்தையைச்
சொல்லும் பொருளும் ஆகிய சோதியைக்
கல்லுங் கடலும் ஆகிய கண்டனைத்
(70)
தோற்றம் நிலைஈ றாகிய தொன்மையை
நீற்றிடைத் திகழும் நித்தனை முத்தனை
வாக்கும் மனமும் இறந்த மறையனைப்
பூக்கமழ் சடையனைப் புண்ணிய நாதனை
இனைய தன்மையன் என்றறி வரியவன்
(75)
தனைமுன் விட்டுத் தாம்மற்று நினைப்போர்
மாமுயல் விட்டுக்
காக்கைப் பின்போம் கலவர் போலவும்
விளக்கங் கிருப்ப மின்மினி கவரும்
அளப்பருஞ் சிறப்பில் ஆதர் போலவும்
(80)
கச்சங் கொண்டு கடுந்தொழில் முடியாக்
கொச்சைத் தேவரைத் தேவரென் றெண்ணிப்
பிச்சரைப் போலவோர்
ஆரியப் புத்தகப் பேய்கொண்டு புலம்புற்று
வட்டனை பேசுவர் மானுடம் போன்று
(85)
பெட்டினை உரைப்போர் பேதையர் நிலத்துன்
தலைமீன் தலைஎண் பலமென் றால்அதனை
அறுத்து நிறுப்போர் ஒருத்தர் இன்மையின்
மத்திர மாகுவர் மாநெறி கிடப்பஓர்
சித்திரம் பேசுவர் தேவ ராகில்
(90)
இன்னோர்க் காய்ந்தனர் இன்னோர்க் கருளினர்
என்றறிய உலகின்
முன்னே உரைப்ப தில்லை ஆகிலும்
ஆடு போலக் கூடிநின் றழைத்தும்
மாக்கள் போல வேட்கையீ டுண்டும்
(95)
இப்படி ஞானம் அப்படி அமைத்தும்
இன்ன தன்மையன் என்றிரு நிலத்து
முன்னே அறியா மூர்க்க மாக்களை
இன்னேகொண் டேகாக் கூற்றம்
தவறுபெரி துடைத்தே தவறுபெரி துடைத்தே.
(100)

திருச்சிற்றம்பலம்

5.7 நக்கீர தேவ நாயனார் அருளிச் செய்த கார் எட்டு

492. அரவம் அரைக்கசைத்த அண்ணல் சடைபோல்
விரவி எழுந்தெங்கும் மின்னி - அரவினங்கள்
அச்சங்கொண் டோடி அணைய அடைவுற்றே
கைச்சங்கம் போல்முழங்கும் கார்.
1
493 மையார் மணிமிடறு போற்கருகி மற்றவன்தன்
கையார் சிலை விலகிக் காட்டிற்றே - ஐவாய்
அழலரவம் பூண்டான் அவிர்சடைபோல் மின்னிக்
கழலரவம் காண்புற்ற கார்.
2
494 ஆலமர் கண்டத் தரன்தன் மணிமிடறும்
கோலக் குழற்சடையும் கொல்லேறும் - போல
இருண்டொன்று மின்தோன்றி அம்பொனவ் வானம்
கருண்டொன்று கூடுதலிற் கார்.
3
495 இருள்கொண்ட கண்டத் திறைவன்தன் சென்னிக்
குருள்கொண்ட செஞ்சடைமேல் மின்னிச் - சுருள்கொண்டு
பாம்பினங்கள் அஞ்சிப் படம்ஒடுங்க ஆர்த்ததே
காம்பினங்கள் தோள்ஈயக் கார்.
4
496 கோடரவங் கோடல் அரும்பக் குருமணிகான்
றாடரவம் எல்லாம் அளையடைய - நீடரவப்
பொற்பகலம் பூண்டான் புரிசடைபோல் மின்னிற்றே
கற்பகலம் காண்புற்ற கார்.
5
497 பாரும் பனிவிசும்பும் பாசுபதன் பல்சடையும்
ஆரும் இருள்கீண்டு மின்விலகி - ஊரும்
அரவஞ் செலவஞ்சும் அஞ்சொலார் காண்பார்
கரவிந்தம் என்பார்அக் கார்.
6
498 செழுந்தழல் வண்ணன் செழுஞ்சடைபோல் மின்னி
அழுந்தி அலர்போல் உயர - எழுந்தெங்கும்
ஆவிசோர் நெஞ்சினரை அன்பளக்க உற்றதே
காவிசேர் கண்ணாய்அக் கார்.
7
499 காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப்
பூந்தளவம் ஆரப் புகுந்தின்றே - ஏந்தொளிசேர்
அண்டம்போல் மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர்
கண்டம்போல் மீதிருண்ட கார்.
4

திருச்சிற்றம்பலம்

5.8 நக்கீர தேவ நாயனார் அருளிச் செய்த
போற்றித் திருக்கலிவெண்பா

500. திருத்தங்கு மார்பில் திருமால் வரைபோல்
எருத்தத் திலங்கியவெண் கோட்டுப் - பருத்த
குறுத்தாள் நெடுமூக்கிற் குன்றிக்கண் நீல
நிறத்தாற் பொலிந்து நிலமேழ் - உறத்தாழ்ந்து
பன்றித் திருவுருவாய்க் காணாத பாதங்கள்
நின்றவா நின்ற நிலைபோற்றி - அன்றியும்
புண்டரிகத் துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய்
அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் - பண்டொருநாள்
காணான் இழியக் கனக முடிகவித்துக்
கோணாது நின்ற குறிபோற்றி - நாணாளும்
(5)
பேணிக்கா லங்கள் பிரியாமை பூசித்த
மாணிக்கா அன்று மதிற்கடவூர்க் - காண
வரத்திற் பெரிய வலிதொலைத்த காலன்
உரத்தில் உதைத்தஉதை போற்றி - கரத்தாமே
வெற்பன் மடப்பாவை கொங்கைமேற் குங்குமத்தின்
கற்பழியும் வண்ணங் கசிவிப்பான் - பொற்புடைய
வாமன் மகனாய் மலர்க்கணையொன் றோட்டியஅக்
காமன் அழகழித்த கண்போற்றி - தூமப்
படமெடுத்த வாளரவம் பார்த்தடரப் பற்றி
விடமெடுத்த வேகத்தால் மிக்குச் - சடலம்
(10)
முடங்க வலிக்கும் முயலகன்தன் மொய்ம்பை
அடங்க மிதித்தஅடி போற்றி - நடுங்கத்
திருமால் முதலாய தேவா சுரர்கள்
கருமால் கடல்நாகம் பற்றிக் - குருமாற
நீலமுண்ட நீள்முகில்போல் நெஞ்சழல வந்தெழுந்த
ஆலமுண்ட கண்டம் அதுபோற்றி - சாலமண்டிப்
போருகந்த வானவர்கள் புக்கொடுங்க மிக்கடர்க்கும்
தாருகன்தன் மார்பில் தனிச்சூலம் - வீரம்
கொடுத்தெறியும் மாகாளி கோபந் தவிர
எடுத்த நடத்தியல்பு போற்றி - தடுத்து
(15)
வரையெடுத்த வாளரக்கன் வாயா றுதிரம்
நிரையெடுத்து நெக்குடலம் இற்றுப் - புரையெடுத்த
பத்தனைய பொன்முடியும் தோளிருப தும்நெரிய
மெத்தனவே வைத்த விரல்போற்றி - அத்தகைத்த
வானவர்கள் தாங்கூடி மந்திரித்த மந்திரத்தை
மேனவில ஓடி விதிர்விதிர்த்துத் - தானவருக்
கொட்டிக் குறளை உரைத்த அயன்சிரத்தை
வெட்டிச் சிரித்த விறல்போற்றி - மட்டித்து
வாலுகத்தால் நல்லிலிங்க மாவகுத்து மற்றதன்மேல்
பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி - மேலுதைத்தங்
(20)
கோட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரை
வீட்டிய சண்டிக்கு வேறாக - நாட்டின்கண்
பொற்கோயில் உள்ளிருத்திப் பூமாலை போனகமும்
நற்கோலம் ஈந்த நலம்போற்றி - நிற்க
வலந்தருமால் நான்முகனும் வானவரும் கூடி
அலந்தருமால் கொள்ள அடர்க்கும் - சலந்தரனைச்
சக்கரத்தால் ஈர்ந்தரிதன் தாமரைக்கண் சாத்துதலும்
மிக்கஅஃ தீந்த விறல்போற்றி - அக்கணமே
நக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம்
தொக்கிருந்த வண்ணம் துதிசெய்ய - மிக்கிருந்த
(25)
அங்கைத் தலத்தே அணிமானை ஆங்கணிந்த
செங்கைத் திறத்த திறல்போற்றி - திங்களைத்
தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேல் சேர்வித்து
வாய்த்திமையோர் தம்மைஎல்லாம் வான்சிறையில் - பாய்த்திப்
பிரமன் குறையிரப்பப் பின்னும் அவர்க்கு
வரமன் றளித்தவலி போற்றி - புரமெரித்த
அன்றுய்ந்த மூவர்க் கமர்ந்து வரமளித்து
நின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து - நன்று
நடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயில்
கடைகாவல் கொண்டவா போற்றி - விடைகாவல்
(30)
தானவர்கட் காற்றாது தன்னடைந்த நன்மைவிறல்
வானவர்கள் வேண்ட மயிலூரும் - கோனவனைக்
சேனா பதியாகச் செம்பொன் முடிகவித்து
வானாள வைத்த வரம்போற்றி - மேனாள்
அதிர்த்தெழுந்த அந்தகனை அண்டரண்டம் உய்யக்
கொதித்தெழுந்த சூலத்தாற் கோத்துத் -துதித்தங்
கவனிருக்கும் வண்ணம் அருள்கொடுத்தங் கேழேழ்
பவமறுத்த பாவனைகள் போற்றி - கவைமுகத்த
பொற்பா கரைப்பிளந்து கூறிரண்டாப் போகட்டும்
எற்பா சறைப்போக மேல்விலகி- நிற்பால
(35)
மும்மதத்து வெண்கோட்டுக் கார்நிறத்துப் பைந்தறுகண்
வெம்மதத்த வேகத்தால் மிக்கோடி - விம்மி
அடர்த்திரைத்துப் பாயும் அடுகளிற்றைப் போக
எடுத்துரித்துப் போர்த்த இறைபோற்றி - தொடுத்தமைத்த
நாண்மாலை கொண்டணிந்த நால்வர்க் கன் றால்நிழற்கீழ்
வாண்மாலை ஆகும் வகையருளித் - தோள்மாலை
விட்டிலங்கத் தக்கிணமே நோக்கி வியந்தகுணம்
எட்டிலங்க வைத்த இறைபோற்றி - ஒட்டி
விசையன் விசையளப்பான் வேடுருவம் ஆகி
அசைய உடல்திரியா நின்று - வசையினால்
(40)
பேசு பதப்பாற் பிழைபொறுத்து மற்றவற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி - நேசத்தால்
வாயில்நீர் கொண்டு மகுடத் துமிழ்ந்திறைச்சி
ஆயசீர் போனகமா அங்கமைத்து - தூயசீர்க்
கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து
விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி - மண்ணின்மேல்
காளத்தி போற்றி கயிலைமலை போற்றிஎன
நீளத்தி னால்நினைந்து நிற்பார்கள் - தாளத்தோ
டெத்திசையும் பன்முரசம் ஆர்த்திமையோர் போற்றிசைப்ப
அத்தனடி சேர்வார்கள் ஆங்கு.
(45)

திருச்சிற்றம்பலம்

5.9 நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த திருமுருகாற்றுப்படை

1. திருப்பரங்குன்றம்

501. (ஆசிரியப்பா)
உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாள்
செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை
(5)
மறுவில் கற்பின் வாணுதல் கணவன்
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பில் வள்உறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து
இருள்படப் பொதுளிய பராஅரை மராஅத்து
(10)
உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்
மால்வரை நிவந்த சேணுயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக்
கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோள்
கோபத் தன்ன தோயாப் பூந்துகில்
(15)
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்
கைபுணைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச்
சேண்இகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித்
துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச்
(20)
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு
பைந்தாள் குவளைத் தூஇதழ் கிள்ளித்
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத்
(25)
துவர முடித்த துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட்டு
உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக
(30)
வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்
நுண்புண் ஆகந் திளைப்பத் திண்காழ்
நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர்
(35)
வேங்கை நுண்தா தப்பிக் காண்வர
வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச்
(40)
சூரர மகளிர் ஆடும் சோலை
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
பார்முதிர் பனிக்கடல் கலங்கஉள் புக்குச்
(45)
சூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேல்
உலறிய கதுப்பிற் பிறழ்பல் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்
கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டு
(50
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரல்
கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா
(55)
நிணந்தின் வாயல் துணங்கை தூங்க
இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர்
மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து
(60)
எய்யா நல்லிசைச் செவ்வேல் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையும்
செலவுநீ நயந்தனை ஆயின் பலவுடன்
நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப
(65)
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே
செருப் புகன் றெடுத்த சேண்உயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போர்அரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து
(70)
மாடமலி மறுகில் கூடல் குடவயின்
இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல் ஊதி எல்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர்
(75)
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன் றமர்ந் துறைதலும் உரியன், அதா அன்று

2. திருச்சீரலைவாய்

வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வரப்
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக்
(80)
கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்
கால்கிளர்ந் தன்ன வேழமேல் கொண்டு
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப
(85)
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங் கியற்கை வாண்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்பத்
தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்
மனன்நேர் பெழுதரு வாள்நிற முகனே
(90)
மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
(95)
அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே ஒருமுகம்
(100)
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்குஅம்
மூவிரு முகனும் முறைநவின் றொழுகலின்
ஆரந் தாழ்ந்த அம்பகட்டு மார்பில்
செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு
(105)
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலல் மரபின் ஐயர்க் கேந்தியது
ஒருகை உக்கம் சேர்த்தியது ஒருகை
நலம்பெறு கலிங்கத்துக் குரங்கின்மிசை அசைஇயது ஒருகை
அங்குசம் கடாவ ஒருகை இருகை
(110)
ஐயிரு வட்டமொ டெஃகுவலம் திரிப்ப ஒருகை
மார்பொடு விளங்க ஒருகை
தாரொடு பொலிய ஒருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒருகை
பாடின் படுமணி இரட்ட ஒருகை
(115)
நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை
வான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட ஆங்குஅப்
பன்னிரு கையும் பாற்பட இயற்றி
அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிரெழுந் திசைப்ப வால்வளை நரல
(120)
உரம்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ
விசும் பாறாக விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே, அதா அன்று
(120)

3. திருவாவினன்குடி

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்பெழுந் தியங்கும் யாக்கையர் நன்பகல்
(130)
பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
(135)
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முன்புகப்
புகைமுகந் தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்
(140)
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னரம் புளர
நோயின் றியன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப்
(145)
பருமம் தாங்கிய பணிந்தேந் தல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக்
கடுவோ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்று
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
(150)
புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு
வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல்
(155)
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரண் டேந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய
(160)
உலகங் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவருந் தலைவர் ஆக
ஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப்
(165)
பகலில் தோன்றும் இகலில் காட்சி
நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு
ஒன்பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத்
(170)
தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட
உருமிடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
தாவில் கொள்கை மடந்தையொடு சில்நாள்
(175)
ஆவினன்குடி அசைதலும் உரியன், அதா அன்று

4. திருவேரகம்

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான் கிரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை
(180)
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
(185)
ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி
நாவியல் மருங்கின் நவிலப் பாடி,
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்து
ஏரகத் துறைதலும் உரியன், அதா அன்று

5. குன்றுதோறாடல்

பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் (190)
அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடுஅமை விளைந்த தேக்கள் தேறல்
(195)
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர
விரலுளர்ப்ப அவிழ்ந்த வேறுபடு நறுங்கால்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல்
(200)
முடித்த குல்லை இலையுடை நறும்பூச்
செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு
(205)
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்தளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் இயத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவல்அம்
(210)
கொடியன் நெடியன் தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி
(215)
மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே, அதாஅன்று

6. பழமுதிர்சோலை

சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்
(220)
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறிஅயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
(225)
மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்
மாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவர
நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச்
(230)
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தௌித்துப்
(235)
பெருந்தண் கணவீரம் நறுந்தண் மாலை
துணைஅற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியோடு இன்னியம் கறங்க
(240)
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியன்நகர்
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
(245)
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே
யாண்டாண் டாயினும் ஆகக் காண்தக
(250)
முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக்
கைதொழுஉப் பரவிக் கால்உற வணங்கி
நெடும்பெரும் சிமயத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ
(255)
ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி
வானோர் வணங்குவில் தானைத் தலைவ
(260)
மாலை மார்ப நூலறி புலவ
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ
(265)
குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே
அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக
நசையுநர்க் கார்த்தும் இசைபே ராள
(270)
அலர்ந்தோர்க் களிக்கும் பொலம்பூண் சேஎய்
மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்
சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி
(275)
போர்மிகு பொருந குரிசில் எனப்பல
யான்அறி அளவையின் ஏத்தி ஆனாது
நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உள்ளி வந்தனன் நின்னொடு
புரையுநர் இல்லாப் புலமையோய் எனக்
(280)
குறித்தது மொழியா அளவையில் குறித்துடன்
வேறுபல் உருவில் குறும்பல் கூளியர்
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி
அளியன் தானே முதுவாய் இரவலன்
வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென
(285)
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்
தெய்வம் சான்ற திறல்விளங் குருவின்
வான்தோய் நிவப்பின் தான்வந்து எய்தி
அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
மணம்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி
(290)
அஞ்சல் ஓம்புமதி அறிவல்நின் வரவென
அன்புடை நன்மொழி அளைஇ விளிவின்று
இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒருநீ ஆகத் தோன்ற விழுமிய
பெறலரும் பரிசில் நல்குமதி பலவுடன்
(295)
வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து
ஆரம் முழுமுதல் உருட்டி வேரல்
பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த
தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல
(300)
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர ஊகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று
(305)
நன்பொன் மணிநிறம் கிளரப் பொன்கொழியா
வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்சை பலவுடன் வெரீஇக்
(310)
கோழி வயப்பெடை இரியக் கேழலொடு
இரும்பனை வௌிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கைக் குடாஅடி உளியம்
பெருங்கல் விடர்அளைச் செறியக் கருங்கோட்டு
ஆமா நல்லேறு சிலைப்பச் சேண்நின்று
(315)
இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே.
502. (நேரிசைவெண்பா)
குன்றம் எறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய்
புன்தலைய பூதப் பொருபடையாய் - என்றும்
இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே
உளையாய்என் உள்ளத் துறை. 1
1
503 குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல்.
2
504 வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை.
3
505 இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குக்
கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா - முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும்.
4
506 உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ் வே.
5
507 அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும்
வெஞ்ச மரந்தோன்றில் வேல்தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன்.
6
508 முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.
7
509 காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி.
8
510 பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்தன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல்.
9
511 நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால் - முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தான்நினைத்த எல்லாம் தரும்.
10

திருச்சிற்றம்பலம்

5.10. நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த
திருக்கண்ணப்பதேவர் திருமறம்

512. திருக்கண் ணப்பன் செய்தவத் திறத்து
விருப்புடைத் தம்ம விரிகடல் உலகே, பிறந்தது
தேன்அழித்து ஊன்உண் கானவர் குலத்தே, திரிவது
பொருபுலி குமுறும் பொருப்பிடைக் காடே, வளர்ப்பது
செங்கண் நாயொடு தீவகம் பலவே, பயில்வது
(5)
வெந்திறற் சிலையொடு வேல்வாள் முதலிய
அந்தமில் படைக்கலம் அவையே, உறைவது
குறைதசை பயின்று குடம்பல நிரைத்துக்
கறைமலி படைக்கலங் கலந்த புல்லொடு
பீலி மேய்ந்தவை பிரிந்த வெள்ளிடை
(10)
வாலிய புலித்தோல் மறைப்ப வெள்வார்
இரவும் பகலும் இகழா முயற்றியொடு
மடைத்த தேனும் வல்நாய் விட்டும்
சிலைவிடு கணையிலும் திண்சுரி கையிலும்
பலகிளை யவையொடும் பதைப்பப் படுத்துத்
(15)
தொல்லுயிர் கொல்லும் தொழிலே, வடிவே
மறப்புலி கடித்த வன்திரள் முன்கை
திறற்படை கிழித்த திண்வரை அகலம்
எயிற்றெண்கு கவர்ந்த இருந்தண் நெற்றி
அயிற்கோட் டேனம் படுத்தெழு குறங்கு
(20)
செடித்தெழு குஞ்சி செந்நிறத் துறுகண்
கடுத்தெழும் வெவ்வுரை அவ்வாய்க் கருநிறத்து
அடுபடை பிரியாக் கொடுவிற லதுவே,மனமே
மிகக்கொலை புரியும் வேட்டையில் உயிர்கள்
அகப்படு துயருக்கு அகனமர்ந் ததுவே, இதுஅக்
(25)
கானத் தலைவன் தன்மை, கண்ணுதல்
வானத் தலைவன் மலைமகள் பங்கன்
எண்ணரும் பெருமை இமையவர் இறைஞ்சும்
புண்ணிய பாதப் பொற்பார் மலரிணை
தாய்க்கண் கன்றெனச் சென்றுகண் டல்லது
(30)
வாய்க்கிடும் உண்டி வழக்கறி யானே, அதாஅன்று
கட்டழல் விரித்த கனற்கதிர் உச்சியிற்
சுட்டடி இடுந்தொறும் சுறுக்கொளும் சுரத்து
முதுமரம் நிரந்த முட்பயில் வளாகத்து
எதிரினங் கடவிய வேட்டையில் விரும்பி
(35)
எழுப்பிய விருகத் தினங்களை மறுக்குறத்
தன்நாய் கடித்திரித் திடவடிக் கணைதொடுத்து
எய்து துணித்திடும் துணித்த விடக்கினை
விறகினிற் கடைந்த வெங்கனல் காய்ச்சி
நறுவிய இறைச்சி நல்லது சுவைகண்டு
(40)
அண்ணற்கு அமிர்தென்று அதுவேறு அமைத்துத்
தண்ணறுஞ் சுனைநீர் தன்வாய்க் குடத்தால்
மஞ்சன மாக முகந்து மலரெனக்
குஞ்சியில் துவர்க்குலை செருகிக் குனிசிலை
கடுங்கணை அதனொடும் ஏந்திக் கனல்விழிக்
(45)
கடுங்குரல் நாய்பின் தொடர யாவரும்
வெருக்கோ ளுற்ற வெங்கடும் பகலில்
திருக்கா ளத்தி எய்திய சிவற்கு
வழிபடக் கடவ மறையோன் முன்னம்
துகிலிடைச் சுற்றித் தூநீர் ஆட்டி
(50)
நல்லன விரைமலர் நறும்புகை விளக்கவி
சொல்லின பரிசிற் சுருங்கலன் பூவும்
பட்ட மாலையும் தூக்கமும் அலங்கரித்து
அருச்சனை செய்தாங்கு அவனடி இறைஞ்சித்
திருந்த முத்திரை சிறப்பொடுங் காட்டி
(55)
மந்திரம் எண்ணி வலமிடம் வந்து
விடைகொண் டேகின பின்தொழில்
பூசனை தன்னைப் புக்கொரு காலில்
தொடுசெருப் படியால் நீக்கி வாயில்
இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலைத்
(60)
தங்கிய துவர்ப்பூ ஏற்றி இறைச்சியில்
பெரிதும் போனகம் படைத்துப் பிரானைக்
கண்டுகண் டுள்ளங் கசிந்து காதலில்
கொண்டதோர் கூத்துமுன் ஆடிக் குரைகழல்
அன்பொடும் இறுக இறைஞ்சி ஆரா
(65)
அன்பொடு கானகம் அடையும் அடைந்த
அற்றை அயலினிற் கழித்தாங் கிரவியும்
உதித்த போழ்தத் துள்நீர் முழ்கி
ஆதரிக்கும் அந்தணன் வந்து
சீரார் சிவற்குத் தான்முன் செய்வதோர்
(70)
பொற்புடைப் பூசனை காணான் முடிமிசை
ஏற்றிய துவர்கண் டொழியான் மறித்தும்
இவ்வாறு அருச்சனை செய்பவர் யாவர்கொல் என்று
கரந்திருந் தவண்அக் கானவன் வரவினைப்
பரந்த காட்டிடைப் பார்த்து நடுக்குற்று
(75)
வந்தவன் செய்து போயின வண்ணம்
சிந்தையிற் பொறாது சேர்விடம் புக்கு
மற்றை நாளும்அவ் வழிப்பட்டு இறைவ
உற்றது கேட்டருள் உன்தனக்கு அழகா
நாடொறும் நான்செய் பூசனை தன்னை
(80)
ஈங்கொரு வேடுவன்
நாயொடும் புகுந்து மிதித்து உழக்கித்
தொடுசெருப் படியால் நீக்கி வாயில்
இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலை
தங்கிய சருகிலை உதிர்த்தோர் இறைச்சியை
(85)
நின்திருக் கோயிலில் இட்டுப் போமது
என்றும் உன்தனக் கினிதே எனைஉருக்
காணில் கொன்றிடும் யாவ ராலும்
விலக்குறுங் குணத்தன் அல்லன் என்றும்
திருக்குறிப்பு என்றவன் சென்ற அல்லிடைக்
(90)
கனவில்ஆ தரிக்கும் அந்தணன் தனக்குச்
சீரார் திருக்கா ளத்தியுள் அப்பன்
பிறையணி இலங்கு பின்னுபுன் சடைமுடிக்
கறையணி மிடற்றுக் கனல்மழுத் தடக்கை
நெற்றி நாட்டத்து நிறைநீற் றாக
(95)
ஒற்றை மால்விடை உமையொடு மருங்கில்
திருவுருக் காட்டி அருளிப்
புரிவொடு பூசனை செய்யும்
குணிசிலை வேடன் குணமவை ஆவன
உரிமையிற் சிறந்தநன் மாதவன் என்றுணர்
(100)
அவனுகந் தியங்கிய இடம்முனி வனம்அதுவே, அவன்
செருப்படி யாவன விருப்புறு துவலே
எழிலவன் வாயது தூய பொற்குடமே
அதனில் தங்குநீர் கங்கையின் புனலே
புனற்கிடு மாமணி அவன்நிரைப் பல்லே
(105)
அதற்கிடு தூமலர் அவனது நாவே
உப்புனல் விடும்பொழு துரிஞ்சிய மீசைப்
புன்மயிர் குசையினும் நம்முடிக் கினிதே, அவன்தலை
தங்கிய சருகிலை தருப்பையிற் பொதிந்த
அங்குலி கற்பகத் தலரே அவனுகந்து
(110)
இட்ட இறைச்சி எனக்குநன் மாதவர்
இட்ட நெய்பால் அவியே
இதுவெனக்கு உனக்கவன்
கலந்ததோர் அன்பு காட்டுவன் நாளை
நலந்திகழ் அருச்சனை செய்தாங் கிருவென்று
(115)
இறையவன் எழுந்த ருளினன்
அருளலும் மறையவன் அறிவுற் றெழுந்து
மனமிகக் கூசி வைகறைக் குளித்துத்
தான்முன் செய்வதோர்
பொற்புடைப் பூசனை புகழ்தரச் செய்து
(120)
தோன்றா வண்ணம் இருந்தன னாக இரவியும்
வான்தனி முகட்டில் வந்தழல் சிந்தக்
கடும்பகல் வேட்டையில் காதலித் தடித்த
உடும்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத்
தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும்
(125)
செல்வன் திருக்கா ளத்தியுள் அப்பன்
திருமேனியின் மூன்று கண்ணாய்
ஆங்கொரு கண்ணிலும் உதிரம்
ஒழியா தொழுக இருந்தன னாகப்
பார்த்து நடுக்குற்றுப் பதைத்து மனஞ்சுழன்று
(130)
வாய்ப்புனல் சிந்தக் கண்ணீர் அருவக்
கையில் ஊனொடு கணைசிலை சிந்த
நிலப்படப் புரண்டு நெடிதினில் தேறிச்
சிலைக்கொடும் படைகடி தெடுத்திது படுத்தவர்
அடுத்தஇவ் வனத்துளர் எனத்திரிந் தாஅங்கு
(135)
இன்மை கண்டு நன்மையில்
தக்கன மருந்துகள் பிழியவும் பிழிதொறும்
நெக்கிழி குருதியைக் கண்டுநிலை தளர்ந்தென்
அத்தனுக் கடுத்ததென் அத்தனுக் கடுத்ததென் என்று
அன்பொடுங் கனற்றி
(140)
இத்தனை தரிக்கிலன் இதுதனைக் கண்டஎன்
கண்தனை இடந்து கடவுள்தன் கண்ணுறு
புண்ணில் அப்பியும் காண்பன் என்றொரு கண்ணிடைக்
கணையது மடுத்துக் கையில் வாங்கி
அணைதர அப்பினன் அப்பலுங் குருதி
(145)
நிற்பதொத் துருப்பெறக் கண்டுநெஞ் சுகந்து
மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தலும்
நில்லுகண் ணப்ப நில்லு கண் ணப்பஎன்
அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்பஎன்று
இன்னுரை அதனொடும் எழிற்சிவ லிங்கம்
(150)
தன்னிடைப் பிறந்த தடமலர்க் கையால்
அன்னவன் தன்கை அம்பொடும் அகப்படப் பிடித்து
அருளினன் அருளலும்
விண்மிசை வானவர்
மலர்மழை பொழிந்தனர் வளையொலி படகம்
(155)
துந்துபி கறங்கின தொல்சீர் முனிவரும்
ஏத்தினர் இன்னிசை வல்லே
சிவகதி பெற்றனன் திருக்கண் ணப்பனே.
513 தத்தையாம் தாய்தந்தை நாகனாம் தன்பிறப்புப்
பொத்தப்பி நாட்டுடுப்பூர் வேடுவனாம் - தித்திக்கும்
திண்ணப்ப னாஞ்சிறுபேர் செய்தவத்தாற் காளத்திக்
கண்ணப்ப னாய்நின்றான் காண்.

திருச்சிற்றம்பலம்

6. கல்லாடதேவ நாயனார் பாசுரம் (514)

6.1 கல்லாடதேவ நாயனார் அருளிச் செய்த
திருக்கண்ணப்பதேவர் திருமறம்
514. பரிவின் தன்மை உருவுகொண் டனையவன்
போழ்வார் போர்த்த காழகச் செருப்பினன்
குருதி புலராச் சுரிகை எஃகம்
அரையிற் கட்டிய உடைதோற் கச்சையன்
தோல்நெடும் பையிற் குறுமயிர் திணித்து
(5)
வாரில் வீக்கிய வரிக்கைக் கட்டியன்
உழுவைக் கூனுகிர் கேழல்வெண் மருப்பு
மாறுபடத் தொடுத்த மாலைஉத் தரியன்
நீலப் பீலி நெற்றி சூழ்ந்த
கானக் குஞ்சிக் கவடி புல்லினன்
(10)
முடுகு நாறு குடிலை யாக்கையன்
வேங்கை வென்று வாகை சூடிய
சங்கரன் தன்னினத் தலைவன் ஓங்கிய
வில்லும் அம்பும் நல்லன தாங்கி
ஏற்றுக் கல்வனம் காற்றில் இயங்கிக்
(15)
கணையில் வீழ்த்துக் கருமா அறுத்துக்
கோலின் ஏற்றிக் கொழுந்தீக் காய்ச்சி
நாவில் வைத்த நாட்போ னகமும்
தன்தலைச் செருகிய தண்பள்ளித் தாமமும்
வாய்க்கல சத்து மஞ்சன நீரும்
(20)
கொண்டு கானப் பேருறை கண்ணுதல்
முடியிற் பூசை அடியால் நீக்கி
நீங்காக் குணத்துக்
கோசரிக்கு அன்றவன் நேசங் காட்ட
முக்கண் அப்பனுக்கு ஒருகணில் உதிரம்
(25)
தக்கி ணத்திடை இழிதர அக்கணம்
அழுது விழுந்து தொழுதெழுந் தரற்றிப்
புன்மருந் தாற்றப் போகா தென்று
தன்னை மருந்தென்று மலர்க்கண் அப்ப
ஒழிந்தது மற்றை ஒண்திரு நயனம்
(30)
பொழிந்த கண்ணீர்க் கலுழி பொங்க
அற்ற தென்று மற்றக் கண்ணையும்
பகழித் தலையால் அகழ ஆண்டகை
ஒருகை யாலும் இருகை பிடித்து
ஒல்லை நம்புண் ஒழிந்தது பாராய்
(35)
நல்லை நல்லை எனப்பெறும்
திருவேட் டுவர்தந் திருவடி கைதொழக்
கருவேட் டுழல்வினைக் காரியம் கெடுமே.

திருச்சிற்றம்பலம்

7. கபிலதேவ நாயனார் பாசுரங்கள் (515 - 671)

7.1 கபிலதேவ நாயனார் அருளிச் செய்த
மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

515. (வெண்பா)
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
1
516 (கட்டளைக் கலித்துறை)
கைக்கும் பிணியொடு காலன் தலைப்படும் ஏல்வையினில்
எய்க்கும் கவலைக் கிடைந்தடைந் தேன்வெம்மை நாவளைக்கும்
பைக்கும் அரவரை யான்தந்த பாய்மத யானைபத்துத்
திக்கும் பணிநுதற் கண்திரு வாளன் திருவடியே.
2
517 (வெண்பா)
அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம்
இடியவலோ டெள்ளுண்டை கன்னல் - வடிசுவையில்
தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்.
3
518 (கட்டளைக் கலித்துறை)
வாழைக் கனிபல வின்கனி மாங்கனி தாஞ்சிறந்த
கூழைச் சுருள்குழை அப்பம்எள் ளுண்டைஎல் லாந்துறுத்தும்
பேழைப் பெருவயிற் றோடும் புகுந்தென் உளம்பிரியான்
வேழத் திருமுகத் துச்செக்கர் மேனி விநாயகனே.
4
519 (வெண்பா)
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.
5
520 (கட்டளைக் கலித்துறை)
கனிய நினைவொடு நாடொறும் காதற் படும் அடியார்க்
கினியன் இனியொரு இன்னாங் கிலம்எவ ரும்வணங்கும்
பனிவெண் பிறைநறுங் கொன்றைச் சடைப்பலி தேரியற்கை
முனிவன் சிறுவன் பெருவெங்கொல் யானை முகத்தவனே.
6
521 (வெண்பா)
யானை முகத்தான் பொருவிடையான் சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் - மேல்நிகழும்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்.
7
522 (கட்டளைக் கலித்துறை)
உளதள வில்லதோர் காதலென் நெஞ்சில்வன் நஞ்சமுண்ட
வளரிள மாமணி கண்டன்வண் டாடுவண் கோதைபங்கத்
திளவளர் மாமதிக் கண்ணியெம் மான்மகன் கைம்முகத்துக்
களகள மாமதஞ் சேர்களி யானைக் கணபதியே.
8
523 (வெண்பா)
கணங்கொண்ட வல்வினைகள் கண்கொண்ட நெற்றிப்
பணங்கொண்ட பாந்தட் சடைமேல் - மணங்கொண்ட
தாதகத்த தேன்முரலும் கொன்றையான் தந்தளித்த
போதகத்தின் தாள்பணியப் போம்.
9
524 (கட்டளைக் கலித்துறை)
போகபந் தத்தந்தம் இன்றிநிற் பீர்புனை தார்முடிமேல்
நாகபந் தத்தந்த நாளம் பிறையிறை யான்பயந்த
மாகபந் தத்தந்த மாமழை போல்மதத் துக்கதப்போர்
ஏகதந் தத்தெந்தை செந்தாள் இணைபணிந் தேத்துமினே.
10
525 (வெண்பா)
ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனிவெண் கோட்டு மதமுகத்துத் - தூத்தழல்போல்
செக்கர்த் திருமேனிச் செம்பொற் கழலங்கை
முக்கட் கடாயானை முன்.
11
526 (கட்டளைக் கலித்துறை)
முன்னிளங் காலத்தி லேபற்றி னேன்வெற்றி மீனுயர்த்த
மன்னிளங் காமன்தன் மைத்துன னேமணி நீலகண்டத்
தென்னிளங் காய்களி றேஇமை யோர்சிங்க மேயுமையாள்
தன்னிளங் காதல னேசர ணாவுன் சரணங்களே.
12
527 (வெண்பா)
சரணுடை யேன்என்று தலைதொட் டிருக்க
முரணுடையேன் அல்லேன் நான்முன்னம் - திரள்நெடுங்கோட்
டண்டத்தான் அப்புறத்தான் ஆனைமுகத் தான்அமரர்
பண்டத்தான் தாள்பணியாப் பண்டு.
13
528 (கட்டளைக் கலித்துறை)
பண்டந்த மாதரத் தானென் றினியன வேபலவும்
கொண்டந்த நாள்குறு காமைக் குறுகுவர் கூருணர்வில்
கண்டந்த நீண்முடிக் கார்மத வார்சடைக் கற்றை யொற்றை
வெண்தந்த வேழ முகத்தெம் பிரானடி வேட்கையரே.
14
529 (வெண்பா)
வேட்கை வினைமுடித்து மெய்யடியார்க் கின்பஞ்செய்
தாட்கொண் டருளும் அரன்சேயை - வாட்கதிர்கொள்
காந்தார மார்பிற் கமழ்தார்க் கணபதியை
வேந்தா உடைத்தமரர் விண்.
15
530 ( கட்டளைக் கலித்துறை)
விண்ணுதல் நுங்கிய விண்ணுமண் ணுஞ்செய் வினைப்பயனும்
பண்ணுதல் நுங்கடன் என்பர்மெய் அன்பர்கள் பாய்மதமா
கண்ணுதல் நுங்கிய நஞ்சம்உண் டார்கரு மாமிடற்றுப்
பெண்ணுதல் நும்பிரி யாவொரு பாகன் பெருமகனே.
16
531 (வெண்பா)
பெருங்காதல் என்னோடு பொன்னோடை நெற்றி
மருங்கார வார்செவிகள் வீசி - ஒருங்கே
திருவார்ந்த செம்முகத்துக் கார்மதங்கள் சோர
வருவான்தன் நாமம் வரும்.
17
532 (கட்டளைக் கலித்துறை)
வருகோட் டருபெருந் தீமையும் காலன் தமரவர்கள்
அருகோட் டருமவ ராண்மையும் காய்பவன் கூர்ந்தஅன்பு
தருகோட் டருமர பிற்பத்தர் சித்தத் தறியணையும்
ஒருகோட் டிருசெவி முக்கட்செம் மேனிய ஒண்களிறே.
18
533 (வெண்பா)
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்.
19
534 (கட்டளைக் கலித்துறை)
நல்லார் பழிப்பில் எழிற்செம் பவளத்தை நாணநின்ற
பொல்லா முகத்தெங்கள் போதக மேபுரம் மூன்றெரித்த
வில்லான் அளித்த விநாயக னேஎன்று மெய்ம்மகிழ
வல்லார் மனத்தன்றி மாட்டாள் இருக்க மலர்த்திருவே.
20

திருச்சிற்றம்பலம்

7.2 கபிலதேவ நாயனார் அருளிச் செய்த
சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை

535. (வெண்பா)
அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான்
அந்தியே போலும் அவிர்சடையான் -அந்தியில்
தூங்கிருள்சேர் யாமமே போலும் சுடுநீற்றான்
வீங்கிருள்சேர் நீல மிடறு.
1
536 (கட்டளைக் கலித்துறை)
மிடற்றாழ் கடல்நெஞ்சம் வைக்கின்ற ஞான்றுமெல் லோதிநல்லாள்
மடற்றா மரைக்கைகள் காத்தில வேமழு வாளதனால்
அடற்றா தையைஅன்று தாளெறிந் தாற்கருள் செய்தகொள்கைக்
கடற்றாழ் வயற்செந்நெல் ஏறும்வெண் காட்டெங் கரும்பினையே.
2
537 (வெண்பா)
கருப்புச் சிலைஅநங்கன் கட்டழகு சுட்ட
நெருப்புத் திருநெற்றி நாட்டம் - திருச்சடையில்
திங்கள் புரையும் திரள்பொன் திருமேனி
எங்கள் இமையோர் இறைக்கு.
3
538 (கட்டளைக் கலித்துறை)
இறைக்கோ குறைவில்லை உண்டிறை யேஎழி லாரெருக்கு
நறைக்கோ மளக்கொன்றை துன்றும் சடைமுடி நக்கர் சென்னிப்
பிறைக்கோர் பிளவும் பெறுவிளிக் கொண்டெம் பிரான்உடுக்கும்
குறைக்கோ வணம்ஒழிந் தாற்பின்னை ஏதுங் குறைவில்லையே.
4
539 (வெண்பா)
இல்லை பிறவிக் கடலேறல் இன்புறவில்
முல்லை கமழும் முதுகுன்றில் - கொல்லை
விடையானை வேதியனை வெண்மதிசேர் செம்பொற்
சடையானைச் சாராதார் தாம்.
5
540 (கட்டளைக் கலித்துறை)
தாமரைக் கோவும்நன் மாலும் வணங்கத் தலையிடத்துத்
தாமரைக் கோவணத் தோடிரந் துண்ணினும் சார்ந்தவர்க்குத்
தாமரைக் கோமளத் தோடுல காளத் தருவர் கண்டீர்
தாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடிச் சங்கரரே.
6
541 (வெண்பா)
சங்குகோள் எண்ணுவரே பாவையரைத் தம்அங்கம்
பங்குபோய் நின்றாலும் பாய்கலுழிக் -கங்கை
வரியராப் போதும் வளர்சடையாய் நின்போல்
பெரியரா வாரோ பிறர்.
7
542 (கட்டளைக் கலித்துறை)
பிறப்பாழ் குழியிடை வீழ்ந்துநை வேற்குநின் பேரருளின்
சிறப்பார் திருக்கை தரக்கிற்றி யேதிரி யும்புரமூன்
றறப்பாய் எரியுற வான்வரை வில்வளைத் தாய்இரவாய்
மறப்பா வரியர நாண்இடைக் கோத்தகை வானவனே.
8
543 (வெண்பா)
வானம் மணிமுகடா மால்வரையே தூணாக
ஆன பெரும்பார் அரங்காகக் - கானகத்தில்
அம்மா முழவதிர ஆடும் பொழுதாரூர்
எம்மானுக் கெய்தா திடம்.
9
544 (கட்டளைக் கலித்துறை)
இடப்பா கமும்உடை யாள்வரை யீன்இள வஞ்சியன்ன
மடப்பால் மொழியென்பர் நின்வலப் பாகத்து மான்மழுவும்
விடப்பா சனக்கச்சும் இச்சைப் படநீ றணிந்துமிக்க
கடப்பார் களிற்றுரி கொண்டெங்கும் மூடும்எங் கண்ணுதலே.
10
545 (வெண்பா)
கண்ணி இளம்பிறையும் காய்சினத்த மாசுணமும்
நண்ணி இருந்தால் நலமில்லை- தண்ணலங்கல்
பூங்கொன்றை யின்தேன் பொதியுஞ் சடைப்புனிதா
வாங்கொன்றை இன்றே மதித்து.
11
546 (கட்டளைக் கலித்துறை)
மதிமயங் கப்பொங்கு கோழிருட் கண்டவ விண்டவர்தம்
பதிமயங் கச்செற்ற கொற்றவில் வானவ நற்றவர்சூழ்
அதிகைமங் கைத்திரு வீரட்ட வாரிட்ட தேனுமுண்டு
கதிமயங் கச்செல்வ தேசெல்வ மாகக் கருதுவதே.
12
547 (வெண்பா)
கருதுங் கருத்துடையேன் கையுடையேன் கூப்பப்
பெரிதும் பிறதிறத்துப் பேசேன் - அரிதன்றே
யாகப் பிறையான் இனியென் அகம்புகுந்து
போகப் பெறுமோ புறம்.
13
548 (கட்டளைக் கலித்துறை)
புறமறை யப்புரி புன்சடை விட்டெரி பொன்திகழும்
நிறமறை யத்திரு நீறு துதைந்தது நீள்கடல்நஞ்சு
உறமறை யக்கொண்ட கண்டமும் சால உறப்புடைத்தால்
அறமறை யச்சொல்லி வைத்தையம் வேண்டும் அடிகளுக்கே.
14
549 (வெண்பா)
அடியோமைத் தாங்கியோ ஆடை உடுத்தோ
குடியோம்ப மாநிதியங் கொண்டோ - பொடியாடு
நெற்றியூர் வாளரவ நீள்சடையாய் நின்னூரை
ஒற்றியூர் ஆக்கிற் றுரை.
15
550 (கட்டளைக் கலித்துறை)
உரைவந் துறும்பதத் தேஉரை மின்கள்அன் றாயின்இப்பால்
நரைவந் துறும்பின்னை வந்துறுங் காலன்நன் முத்திடறித்
திரைவந் துறுங்கரைக் கேகலம் வந்துறத் திண்கைவன்றாள்
வரைவந் துறுங்கடல் மாமறைக் காட்டெம் மணியினையே.
16
551 (வெண்பா)
மணியமரும் மாமாட வாய்மூரான் தன்னை
அணியமர ரோடயனும் மாலும்- துணிசினத்த
செஞ்சூட்ட சேவற் கொடியானு மாய்நின்று
நஞ்சூட்ட எண்ணியவா நன்று.
17
552 (கட்டளைக் கலித்துறை)
நன்றைக் குறும்இருமற்பெரு மூச்சுநண் ணாத முன்னம்
குன்றைக் குறுவது கொண்டழி யாதறி வீர்செறிமின்
கொன்றைக் குறுநறுங் கண்ணியி னான்றன்கொய் பூங்கயிலைக்
குன்றைக் குறுகரி தேனும்உள் ளத்திடைக் கொள்மின்களே.
18
553 (வெண்பா)
கொண்ட பலிநுமக்கும் கொய்தார் குமரர்க்கும்
புண்டரிக மாதினுக்கும் போதுமே- மண்டி
உயிரிழந்தார் சேர்புறங்காட் டோரிவாய் ஈர்ப்ப
மயிரிழந்த வெண்டலைவாய் வந்து.
19
554 (கட்டளைக் கலித்துறை)
வந்தா றலைக்கும் வலஞ்சுழி வானவ வானவர்தம்
அந்தார் மகுடத் தடுத்தபைம் போதில்அந் தேனுழக்கிச்
செந்தா மரைச்செவ்வி காட்டும் திருவடிக் குஞ்செல்லுமே
எந்தாய் அடித்தொண்டர் ஓடிப் பிடித்திட்ட இன்மலரே.
20
555 (வெண்பா)
மலர்ந்த மலர்தூவி மாமனத்தைக் கூப்பிப்
புலர்ந்தும் புலராத போதும் - கலந்திருந்து
கண்ணீர் அரும்பக் கசிவார்க்குக் காண்பௌியன்
தெண்ணீர் சடைக்கரந்த தே.
21
556 (கட்டளைக் கலித்துறை)
தேவனைப் பூதப் படையனைக் கோதைக் திருவிதழிப்
பூவனைக் காய்சினப் போர்விடை தன்னொடும் போற்றநின்ற
மூவனை ஈருரு வாயமுக் கண்ணனை முன்னுமறை
நாவனை நான்மற வேன்இவை நான்வல்ல ஞானங்களே.
22
557 (வெண்பா)
நானும்என் நல்குரவும் நல்காதார் பல்கடையில்
கானிமிர்த்து நின்றிரப்பக் கண்டிருக்கும் - வானவர்கள்
தம்பெருமான் மூவெயிலும் வேவச் சரந்தூர்த்த
எம்பெருமான் என்னா இயல்பு.
23
558 (கட்டளைக் கலித்துறை)
இயலிசை நாடக மாய்எழு வேலைக ளாய் வழுவாப்
புயலியல் விண்ணொடு மண்முழு தாய்ப்பொழு தாகிநின்ற
மயிலியல் மாமறைக் காடர்வெண் காடர்வெண் தில்லை மல்கு
கயலியல் கண்ணியங் கார்அன்பர் சித்தத் தடங்குவரே.
24
559 (வெண்பா)
அடங்காதார் ஆரொருவர் அங்கொன்றை துன்று
மடங்காதல் என்வளைகொள் வார்த்தை - நுடங்கிடையீர்
ஊருரன் சென்றக்கால் உண்பலிக்கென் றங்ஙனே
ஆருரன் செல்லுமா றங்கு.
25
560 (கட்டளைக் கலித்துறை)
அங்கை மறித்தவ ரால்அவி உண்ணும்அவ் வானவர்கள்
தங்கை மறித்தறி யார்தொழு தேநிற்பர் தாழ்சடையின்
கங்கை மறித்தண வப்பண மாசுணக் கங்கணத்தின்
செங்கை மறித்திர விற்சிவன் ஆடுந் திருநட்டமே.
26
561 (வெண்பா)
நட்டம்நீ ஆடும் பொழுதத்து நல்லிலயம்
கொட்டக் குழிந்தொழிந்த வாகொல்லோ - வட்டுக்
கடுங்குன்ற மால்யானைக் காருரிவை போர்த்த
கொடுங்குன்றப் பேயின் கொடிறு.
27
562 (கட்டளைக் கலித்துறை)
கொடிறு முரித்தன்ன கூன்தாள் அலவன் குருகினஞ்சென்
றிடறுங் கழனிப் பழனத் தரசை எழிலிமையோர்
படிறு மொழிந்து பருகக் கொடுத்துப் பரவை நஞ்சம்
மிடறு தடுத்தது வும்அடி யேங்கள் விதிவசமே.
28
563 (வெண்பா)
விதிகரந்த செய்வினையேன் மென்குழற்கே வாளா
மதுகரமே எத்துக்கு வந்தாய் - நதிகரந்த
கொட்டுக்காட் டான்சடைமேல் கொன்றைக்குறுந் தெரியல்
தொட்டுக்காட் டாய்சுழல்வாய் தொக்கு.
29
564 (கட்டளைக் கலித்துறை)
தொக்கு வருங்கணம் பாடத்தொல் நீறணிந் தேநிலவும்
நக்கு வருங்கண்ணி சூடிவந் தார்நறும் புன்னைமுன்னம்
அக்கு வருங்கழிக் கானல்ஐ யாறரைக் காணஅன்பு
மிக்கு வரும்வரும் போதவ ரைக்காண வெள்குவனே.
30
565 (வெண்பா)
வெள்காதே உண்பலிக்கு வெண்டலைகொண் டூர்திரிந்தால்
எள்காரே வானவர்கள் எம்பெருமான் -வள்கூர்
வடதிருவீ ரட்டானத் தென்அதிகை மங்கைக்
குடதிருவீ ரட்டானங் கூறு.
31
566 (கட்டளைக் கலித்துறை)
கூறு பெறுங்கண்ணி சேர்கருங் கூந்தல்சுண் ணந்துதைந்து
நீறு பெறுந்திரு மேனி நெருப்புப் புரைபொருப்பொத்
தாறு பெறுஞ்சடை அங்கொன்றை யந்தேன் துவலைசிந்த
வீறு பெறுஞ்சென்று சென்றெம் பிரானுக்கு வெண்ணிறமே.
32
567 (வெண்பா)
நிறம்பிறிதாய் உள்மெலிந்து நெஞ்சுருகி வாளா
புறம்புறமே நாள்போக்கு வாளோ - நறுந்தேன்
படுமுடியாப் பாய்நீர் பரந்தொழுகு பாண்டிக்
கொடிமுடியாய் என்றன் கொடி.
33
568 (கட்டளைக் கலித்துறை)
கொடிக்குல வும்மதிற் கோவலூர் வீரட்டக் கோளரவம்
பிடிக்கில அம்முடிப் பூணலை யத்தொடு மால்விடையின்
இடிக்குரல் கேட்டிடி என்றிறு கக்கடி வாளெயிற்றால்
கடிக்க லுறும்அஞ்சி நஞ்சம்இருந்தநின் கண்டத்தையே.
34
569 (வெண்பா)
கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக் கருங்கடல்நஞ்
சுண்டல் புரிந்துகந்த உத்தமற்குத் - தொண்டடைந்தார்
கூசுவரே கூற்றைக் குறுகுவரே தீக்கொடுமை
பேசுவரே மற்றொருவர் பேச்சு.
35
570 (கட்டளைக் கலித்துறை)
பேய்ச்சுற்றம் வந்திசை பாடப் பிணமிடு காட்டயலே
தீச்சுற்ற வந்துநின் றாடல் என் னாஞ்செப்பு முப்பொழுதும்
கோச்சுற்ற மாக்குடை வானவர் கோன்அயன் மால்முதலா
மாச்சுற்றம் வந்திறைஞ் சுந்திருப் பொற்சடை மன்னவனே.
36
571. (வெண்பா)
மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து வாள்அரக்கன்
துன்னுஞ் சுடர்முடிகள் தோள்நெரியத் -தன்னைத்
திருச்சத்தி முற்றத்தான் சித்தத்துள் வைத்தான்
திருச்சத்தி முற்றத்தான் தேசு.
37

திருச்சிற்றம்பலம்

7.3 கபிலதேவ நாயனார் அருளிச் செய்த
சிவபெருமான் திருவந்தாதி

572. 572. (வெண்பா)
ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்வாழ்ந்
தொன்றும் மனிதர் உயிரையுண் - டொன்றும்
மதியாத கூற்றுதைத்த சேவடியான் வாய்ந்த
மதியான் இடப்பக்கம் மால்.
1
573 மாலை ஒருபால் மகிழ்ந்தானை வண்கொன்றை
மாலை ஒருபால் முடியானை - மாலை
ஒளியானை உத்தமனை உண்ணாநஞ் சுண்டற்
கொளியானை ஏத்தி உளம்.
2
574 உளமால்கொண் டோடி ஒழியாது யாமும்
உளமாகில் ஏத்தவா றுண்டே - உளம்மாசற்
றங்கமலம் இல்லா அடல்வெள்ளே றூர்ந்துழலும்
அங்கமல வண்ணன் அடி.
3
575 அடியார்தம் ஆருயிரை அட்டழிக்குங் கூற்றை
அடியால் அருவாகச் செற்றான் - அடியார்தம்
அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பி
அந்தரத்தார் சூடும் அலர்.
4
576 அலராளுங் கொன்றை அணியலா ரூரற்
கலராகி யானும் அணிவன் - அலராகி
ஓதத்தான் ஒட்டினேன் ஓதுவான்யான் ஓங்கொலிநீர்
ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர்.
5
577 ஊரும தொற்றியூர் உண்கலனும் வெண்தலையே
ஊரும் விடையொன் றுடைதோலே - ஊரும்
படநாகம் மட்டார் பணமாலை ஈதோ
படநாகம் அட்டார் பரிசு.
6
578 பரியானை ஊராது பைங்கணே றூரும்
பரியானைப் பாவிக்க லாகா - பரியானைக்
கட்டங்கம் ஏந்தியாக் கண்டுவாழ் நன்னெஞ்சே
கட்டங்கம் ஏந்தியாக் கண்டு.
7
579 கண்டங் கரியன் உமைபாலுந் தன்பாலும்
கண்டங் கரியன் கரிகாடன் - கண்டங்கள்
பாடியாட் டாடும் பரஞ்சோதிக் கென்னுள்ளம்
பாடியாக் கொண்ட பதி.
8
580 பதியார் பழிதீராப் பைங்கொன்றை தாவென்
பதியான் பலநாள் இரக்கப் - பதியாய
அம்மானார் கையார் வளைகவர்ந்தார் அஃதேகொல்
அம்மானார் கையார் அறம்.
9
581 அறமானம் நோக்கா தநங்கனையும் செற்றங்
கறமாநஞ் சுண்ட அமுதன் - அறமான
ஓதியாள் பாகம் அமர்ந்தான் உயர்புகழே
ஓதியான் தோற்றேன் ஒளி.
10
582 ஒளியார் சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கோடற்
கொளியான் உலகெல்லாம் ஏத்தற் - கொளியாய
கள்ளேற்றான் கொன்றையான் காப்பிகந்தான் நன்னெஞ்சே
கள்ளேற்றான் கொன்றை கடிது.
11
583 கடியரவர் அக்கர் கரிதாடு கோயில்
கடியரவர் கையதுமோர் சூலம் - கடியரவர்
ஆனேற்றார்க் காட்பட்ட நெஞ்சமே அஞ்சல்நீ
ஆனேற்றார்க் காட்பட்டேம் யாம்.
12
584 யாமான நோக்கா தலர்கொன்றைத் தார்வேண்ட
யாமானங் கொண்டங் கலர்தந்தார் - யாமாவா
ஆவூரா ஊரும் அழகா அனலாடி
ஆவூரார்க் கென்னுரைக்கோம் யாம்.
13
585 யானென்றங் கண்ணா மலையான் அகம்புகுந்து
யானென்றங் கையறிவும் குன்றுவித்து - யானென்றங்
கார்த்தானே யாயிடினும் அம்பரன்மேல் அங்கொன்றை
ஆர்த்தானேல் உய்வ தரிது.
14
586 அரியாரும் பூம்பொழில் சூழ் ஆமாத்தூர் அம்மான்
அரியாரும் பாகத் தமுதன் - அரியாரும்
வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்
வேங்கடத்து நோயால் வியந்து.
15
587 வியந்தாழி நன்னெஞ்சே மெல்லியலார்க் காளாய்
வியந்தாசை யுள்மெலிய வேண்டா - வியந்தாய
கண்ணுதலான் எந்தைகா பாலி கழலடிப்பூக்
கண்ணுதலாம் நம்பாற் கடன்.
16
588 கடனாகம் ஊராத காரணமுங் கங்கை
கடனாக நீகவர்ந்த வாறும் - கடனாகப்
பாரிடந்தான் மேவிப் பயிலும் பரஞ்சோதி
பாரிடந்தான் மேயாய் பணி.
17
589 பணியாய் மடநெஞ்சே பல்சடையான் பாதம்
பணியாத பத்தர்க்குஞ் சேயன் - பணியாய
ஆகத்தான் செய்துமேல் நம்மை அமரர்கோ
னாகத்தான் செய்யும் அரன்.
18
590 அரன்காய நைவேற் கநங்கவேள் அம்பும்
அரன்காயும் அந்தியும்மற் றந்தோ - அரங்காய
வெள்ளில்சேர் காட்டாடி வேண்டான் களிறுண்ட
வெள்ளில்போன் றுள்ளம் வெறிது.
19
591 வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை
வெறியார்பூந் தாரான் விமலன் - வெறியார்தம்
அல்லல்நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆருர்க்கோன்
அல்லனோ நெஞ்சே அயன்.
20
592 அயமால்ஊண் ஆடரவம் நாண்அதள தாடை
அயமாவ தானேறூர் ஆரூர் - அயமாய
என்னக்கன் தாழ்சடையன் நீற்றன் எரியாடி
என்னக்கன் றாழும் இவள்.
21
593 ஆழும் இவளையும் கையகல ஆற்றேனென்
றாழும் இவளை அயராதே - ஆழும்
சலமுடியாய் சங்கரனே சங்கக் குழையாய்
சலமுடியா தின்றருளுன் தார்.
22
594 தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத்
தாராதே சங்கம் சரிவித்தான் - தாராவல்
ஆனைமேல் வைகும் அணிவயல்ஆ ரூர்க்கோன்நல்
ஆனையும் வானோர்க் கரசு.
23
595 அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க் கம்மான்
அரசுமாம் அங்கொன்று மாலுக் - கரசுமான்
ஊர்தி எரித்தான் உணருஞ் செவிக்கின்பன்
ஊர்தி எரித்தான் உறா.
24
596 உறாவேயென் சொற்கள் ஒளிவளைநின் உள்ளத்
துறாவேதீ உற்றனகள் எல்லாம் - உறாவேபோய்க்
காவாலி தார்நினைந்து கைசோர்ந்து மெய்மறந்தாள்
காவாலி தாநின் கலை.
25
597 கலைகாமின் ஏர்காமின் கைவளைகள் காமின்
கலைசேர் நுதலீர்நாண் காமின் - கலையாய
பான்மதியன் பண்டரங்கன் பாரோம்பு நான்மறையன்
பான்மதியன் போந்தான் பலிக்கு.
26
598 பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கன் சூழப்
பலிக்கு மனைப்புகுந்து பாவாய் - பலிக்குநீ
ஐயம்பெய் என்றானுக் கையம்பெய் கின்றேன்மேல்
ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து.
27
599 ஆயம் அழிய அலர்கொன்றைத் தார்வேண்டி
ஆயம் அழிய அயர்வேன்மேல் - ஆயன்வாய்த்
தீங்குழலும் தென்றலும் தேய்கோட் டிளம்பிறையும்
தீங்குழலும் என்னையே தேர்ந்து.
28
600 தேரோன் கதிரென்னுஞ் செந்தழலால் வெந்தெழுபேய்த்
தேரோன் கதிரென்னுஞ் செய்பொருள்நீ - தேராதே
கூடற்கா வாலி குரைகழற்கா நன்னெஞ்சே
கூடற்கா வாலிதரக் கூர்.
29
601 கூரால மேயாக் குருகோடு நைவேற்குக்
கூரார்வேற் கையார்க்காய்க் கொல்லாமே - கூரார்
பனிச்சங்காட் டார்சடைமேற் பால்மதியைப் பாம்பே
பனிச்சங்காட் டாய்கடிக்கப் பாய்ந்து.
30
602 பாயும் விடையூர்தி பாசுபதன் வந்தெனது
பாயிற் புகுதப் பணை முலைமேல் - பாயிலனற்
கொன்றாய் குளிர்சடையாற் கென்நிலைமை கூறாதே
கொன்றாய் இதுவோ குணம்.
31
603 குணக்கோடி கோடாக் குளிர்சடையான் வில்லின்
குணக்கோடி குன்றஞ்சூழ் போகிக் - குணக்கோடித்
தேரிரவில் வாரான் சிவற் காளாஞ் சிந்தனையே
தேரிரவில் வாழும் திறம்.
32
604 திறங்காட்டுஞ் சேயாள் சிறுகிளியைத் தான்தன்
திறங்காட்டுந் தீவண்ணன் என்னும் - திறங்காட்டின்
ஊரரவம் ஆர்த்தானோ டென்னை உடன்கூட்டின்
ஊரரவஞ் சால உடைத்து.
33
605 உடையோடு காடாடி ஊர்ஐயம் உண்ணி
உடையாடை தோல்பொடிசந் தென்னை - உடையானை
உன்மத் தகமுடிமேல் உய்த்தானை நன்னெஞ்சே
உன்மத் தகமுடிமேல் உய்.
34
606 உய்யாதென் ஆவி ஒளிவளையும் மேகலையும்
உய்யா துடம்பழிக்கும் ஒண்திதலை - உய்யாம்
இறையானே ஈசனே எம்மானே நின்னை
இறையானும் காண்கிடாய் இன்று.
35
607 இன்றியாம் உற்ற இடரும் இருந்துயரும்
இன்றியாம் தீர்தும் எழில்நெஞ்சே - இன்றியாம்
காட்டாநஞ் சேற்றாஅன் காமரு வெண்காட்டான்
காட்டான்அஞ் சேற்றான் கலந்து.
36
608 கலம்பெரியார்க் காஞ்சிரங்காய் வின்மேரு என்னும்
கலம்பெரிய ஆற்கீழ் இருக்கை - கலம்பிரியா
மாக்கடல்நஞ் சுண்டார் கழல்தொழார்க் குண்டாமோ
மாக்கடனஞ் சேரும் வகை.
37
609 கையா றவாவெகுளி அச்சங் கழிகாமம்
கையாறு செஞ்சடையான் காப்பென்னும் - கையாறு
மற்றிரண்ட தோளானைச் சேர்நெஞ்சே சேரப்போய்
மற்றிரண்ட தோளான் மனை.
38
610 மனையாய் பலிக்கென்று வந்தான்வண் காமன்
மனையா சறச்செற்ற வானோன் - மனையாய
என்பாவாய் என்றேனுக் கியானல்லேன் நீதிருவே
என்பாவாய் என்றான் இறை.
39
611 இறையாய வெண்சங் கிவைதருவேன் என்னும்
இறையாகம் இன்றருளாய் என்னும் - இறையாய்
மறைக்காட்டாய் மாதவனே நின்னுருவம் இங்கே
மறைக்காட்டாய் என்னும்இம் மாது.
40
612 மாதரங்கந் தன்னரங்கஞ் சேர்த்தி வளர்சடைமேல்
மாதரங்கக் கங்கைநீர் மன்னுவித்து - மாதரங்கத்
தேரானை யூரான் சிவற்காளாஞ் சிந்தனையே
தேரானை யூரானைத் தேர்.
41
613 தெருளிலார் என்னாவார் காவிரிவந் தேறும்
அருகில் சிராமலையெங் கோமான் - விரியுலகில்
செல்லுமதில் மூன்றெரித்தான் சேவடியே யாம்பரவிச்
செல்லும்எழில் நெஞ்சே தௌி.
42
614 தௌியாய் மடநெஞ்சே செஞ்சடையான் பாதம்
தௌியாதார் தீநெறிக்கட் செல்வர் - தௌியாய
பூவார் சடைமுடியான் பொன்னடிக்கே ஏத்துவன்நற்
பூவாய வாசம் புனைந்து.
43
615 புனைகடற்குப் பொன்கொடுக்கும் பூம்புகார் மேயான்
புனைகடுக்கை மாலைப் புராணன் - புனைகடத்து
நட்டங்கம் ஆட்டயரும் நம்பன் திருநாமம்
நட்டங்க மாட்டினேன் நக்கு.
44
616 நக்கரை சாளும் நடுநாளை நாரையூர்
நக்கரை வக்கரையோம் நாமென்ன - நக்குரையாம்
வண்டாழங் கொன்றையான் மால்பணித்தான் மற்றவர்க்காய்
வண்டாழங் கொண்டான் மதி.
45
617 மதியால் அடுகின்ற தென்னும்மால் கூரும்
மதியாதே வைதுரப்பர் என்னும் - மதியாதே
மாதெய்வம் ஏத்தும் மறைக்காடா ஈதேகொல்
மாதெய்வம் கொண்ட வனப்பு.
46
618 வனப்பார் நிறமும் வரிவளையும் நாணும்
வனப்பார் வளர்சடையான் கொள்ள - வனப்பாற்
கடற்றிரையு மீருமிக் கங்குல்வா யான்கட்
கடற்றிரையு மீருங் கனன்று.
47
619 கனன்றாழி நன்னெஞ்சே கண்ணுதலார்க் காளாய்க்
கனன்றார் களிற்றுரிமால் காட்டக் - கனன்றோர்
உடம்பட்ட நாட்டத்தர் என்னையுந்தன் ஆளா
உடம்பட்ட நாட்டன் உரு.
48
620 உருவியலுஞ் செம்பவளம் ஒன்னார் உடம்பில்
உருவியலுஞ் சூலம் உடையன் - உருவியலும்
மாலேற்றான் நான்முகனும் மண்ணோடு விண்ணும்போய்
மாலேற்றாற் கீதோ வடிவு.
49
621 வடிவார் அறப்பொங்கி வண்ணக்கச் சுந்தி
வடிவார் வடம்புனைந்தும் பொல்லா - வடிவார்மேல்
முக்கூடல் அம்மா முருகமருங் கொன்றையந்தார்
முக்கூட மாட்டா முலை.
50
622 முலைநலஞ்சேர் கானப்பேர் முக்கணான் என்னும்
முலைநலஞ்சேர் மொய்சடையான் என்னும் -முலைநலஞ்சேர்
மாதேவா என்று வளர்கொன்றை வாய்சோர
மாதேவா சோரல் வளை.
51
623 வளையாழி யோடகல மால்தந்தான் என்னும்
வளையாழி நன்னெஞ்சே காணில் - வளையாழி
வன்னஞ்சைக் கண்டமரர் வாய்சோர வந்தெதிர்ந்த
வன்னஞ்சக் கண்டன் வரில்.
52
624 வரிநீல வண்டலம்பு மாமறைக்காட் டங்கேழ்
வரிநீர் வலம்புரிகள் உந்தி - வரிநீர்
இடுமணல்மேல் அந்நலங்கொண் டின்னாநோய் செய்தான்
இடுமணல்மேல் ஈசன் எமக்கு.
53
625 அக்காரம் ஆடரவம் நாண்அறுவை தோல்பொடிசாந்
தக்காரம் தீர்ந்தேன் அடியேற்கு -வக்காரம்
பண்டரங்கன் எந்தை படுபிணஞ்சேர் வெங்காட்டுப்
பண்டரங்கன் எங்கள் பவன்.
54
626 பவனடிபார் விண்நீர் பகலோன் மதிதீப்
பவனஞ்சேர் ஆரமுதம் பெண்ஆண் -பவனஞ்சேர்
காலங்கள் ஊழி அவனே கரிகாட்டிற்
காலங்கை ஏந்தினான் காண்.
55
627 காணங்கை இன்மை கருதிக் கவலாதே
காணங்கை யாற்றொழுது நன்னெஞ்சே - காணங்கை
பாவனையாய் நின்றான் பயிலும் பரஞ்சோதி
பாவனையாய் நின்ற பதம்.
56
628 பதங்க வரையுயர்ந்தான் பான்மகிழ்ந்தான் பண்டு
பதங்கன் எயிறு பறித்தான் - பதங்கையால்
அஞ்சலிகள் அன்பாலும் ஆக்குதிகாண் நெஞ்சேகூர்ந்
தஞ்சலிகள் அன்பாலும் ஆக்கு.
57
629 ஆக்கூர் பனிவாடா ஆவிசோர்ந் தாழ்கின்றேன்
ஆக்கூர் அலர்தான் அழகிதா - ஆக்கூர்
மறையோம்பு மாடத்து மாமறையோ நான்கு
மறையோம்பு மாதவர்க்காய் வந்து.
58
630 வந்தியான் சீறினும் ஆழி மடநெஞ்சே
வந்தியா உள்ளத்து வைத்திராய் -வந்தியாய்
நம்பரனை யாடும் நளிர்புன் சடையானை
நம்பரனை நாள்தோறும் நட்டு.
59
631 நட்டமா கின்றன வொண்சங்கம் நானவன்பால்
நட்டமா நன்னீர்மை வாடினேன் - நட்டமா
டீயான் எரியாடி எம்மான் இருங்கொன்றை
ஈயானேல் உய்வ திலம்.
60
632 இலமலரஞ் சேவடியார் ஏகப் பெறாரே
இலமலரே ஆயினும் ஆக - இலமலரும்
ஆம்பல்சேர் செவ்வாயார்க் காடாதே ஆடினேன்
ஆம்பல்சேர் வெண்தலையர்க் காள்.
61
633 ஆளானம் சேர்களிறும் தேரும் அடல்மாவும்
ஆளானார் ஊரத்தான் ஏறூரும் - தாளான்பொய்
நாடகங்க ளாட்டயரும் நம்பன் திருநாமம்
நாடகங்கள் ஆடி நயந்து.
62
634 நயந்தநாள் யானிரப்ப நற்சடையான் கொன்றை
நயந்தநாள் நன்னீர்மை வாட - நயந்தநாள்
அம்பகலஞ் செற்றான் அருளான் அநங்கவேள்
அம்பகலம் பாயும் அலர்ந்து.
63
635 அலங்காரம் ஆடரவம் என்பதோல் ஆடை
அலங்கார வண்ணற் கழகார் - அலங்காரம்
மெய்காட்டு வார்குழலார் என்னாவார் வெள்ளேற்றான்
மெய்காட்டும் வீடாம் விரைந்து.
64
636 விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னார்
விரையார் பொழிலுறந்தை மேயான் - விரையாநீ
றென்பணிந்தான் ஈசன் இறையான் எரியாடி
என்பணிந்தான் ஈசன் எனக்கு.
65
637 எனக்குவளை நில்லா எழில்இழந்தேன் என்னும்
எனக்குவளை நில்லாநோய் செய்தான் - இனக்குவளைக்
கண்டத்தான் நால்வேதன் காரோணத் தெம்மானைக்
கண்டத்தான் நெஞ்சேகாக் கை.
66
638 காக்கைவளை என்பார்ப்பார்க் கன்பாப்பா னையாதே
காக்கைவளை யென்பார்ப்பான் ஊன்குரக்குக் - காக்கைவளை
ஆடானை ஈருரியன் ஆண்பெண் அவிர்சடையன்
ஆடானை யான தமைவு.
67
639 அமையாமென் தோள்மெலிவித் தம்மாமை கொண்டிங்
கமையாநோய் செய்தான் அணங்கே - எமையாளும்
சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன்
சாமத்தன் இந்நோய்செய் தான்.
68
640 தானக்கன் நக்க பிறையன் பிறைக்கோட்டுத்
தானக் களிற்றுரியன் தண்பழனன் - தானத்
தரையன் அரவரையன் ஆயிழைக்கும் மாற்கும்
அரையன் உடையான் அருள்.
69
641 அருள்நம்பாற் செஞ்சடையன் ஆமாத்தூர் அம்மான்
அருள்நம்பால் நல்கும் அமுதன் - அருள்நம்பால்
ஓராழித் தேரான் எயிறட்ட உத்தமனை
ஓராழி நெஞ்சே உவ.
70
642 உவவா நறுமலர்கொண் டுத்தமனை உள்கி
உவவா மனமகிழும் வேட்கை - உவவா
றெழுமதிபோல் வான்முகத் தீசனார்க் கென்னே
எழுமதிபோல் ஈசன் இடம்.
71
643 இடமால் வலமாலை வண்ணமே தம்பம்
இடமால் வலமானஞ் சேர்த்தி -இடமாய
மூளா மதிபுரையும் முன்னிலங்கு மொய்சடையான்
மூவா மதியான் முனி.
72
644 முனிவன்மால் செஞ்சடையான் முக்கணான் என்னும்
முனிவன்மால் செய்துமுன் நிற்கும் - முனிவன்மால்
போற்றார் புரமெரித்த புண்ணியன்தன் பொன்னடிகள்
போற்றாநாள் இன்று புலர்ந்து.
73
645 புலர்ந்தால்யான் ஆற்றேன் புறனுரையும் அஃதே
புலர்ந்தானூர் புன்கூரான் என்னும் - புலர்ந்தாய
மண்டளியன் அம்மான் அவர்தம் அடியார்தம்
மண்டளியன் பின்போம் மனம்.
74
646 மனமாய நோய்செய்தான் வண்கொன்றை தாரான்
மனமாய உள்ளார வாரான் -மனமாயப்
பொன்மாலை சேரப் புனைந்தான் புனைதருப்பைப்
பொன்மாலை சேர்சடையான் போந்து.
75
647 போந்தார் புகஅணைந்தார் பொன்னேர்ந்தார் பொன்னாமை
போந்தார் ஒழியார் புரமெரித்தார் - போந்தார்
இலங்கோல வாள்முகத் தீசனாற் கெல்லே
இலங்கோலந் தோற்ப தினி.
76
648 இனியாரும் ஆளாக எண்ணுவர்கொல் எண்ணார்
இனியானஞ் சூணிருக்கைக் குள்ளான் - இனியானைத்
தாளங்கை யாற்பாடித் தாழ்சடையான் தானுடைய
தாளங்கை யால்தொழுவார் தாம்.
77
649 தாமரைசேர் நான்முகற்கும் மாற்கும் அறிவரியார்
தாமரைசேர் பாம்பர் சடாமகுடர் - தாமரைசேர்
பாணியார் தீர்ந்தளிப்பர் பாரோம்பு நான்மறையார்
பாணியார் தீர்ந்தளிப்பர் பார்.
78
650 பார்கால்வான் நீர்தீப் பகலோன் பனிமதியோன்
பார்கோல மேனிப் பரனடிக்கே - பார்கோலக்
கோகரணத் தானறியக் கூறுதியே நன்னெஞ்சே
கோகரணத் தானாய கோ.
79
651 கோப்பாடி ஓடாதே நெஞ்சம் மொழி கூத்தன்
கோப்பாடிக் கோகரணங் குற்றாலம் -கோப்பாடிப்
பின்னைக்காய் நின்றார்க் கிடங்கொடுக்கும் பேரருளான்
பின்னைக்காம் எம்பெருமான் பேர்.
80
652 பேரானை ஈருரிவை போர்த்தானை ஆயிரத்தெண்
பேரானை ஈருருவம் பெற்றானைப் - பேராநஞ்
சுண்டானை உத்தமனை உள்காதார்க் கெஞ்ஞான்றும்
உண்டாம்நா ளல்ல உயிர்.
81
653 உயிராய மூன்றொடுக்கி ஐந்தடக்கி உள்ளத்
துயிராய ஒண்மலர்த்தாள் ஊடே - உயிரான்
பகர்மனத்தான் பாசுபதன் பாதம் பணியப்
பகர்மனமே ஆசைக்கட் பட்டு.
82
654 பட்டாரண் பட்டரங்கன் அம்மான் பரஞ்சோதி
பட்டார் எலும்பணியும் பாசுபதன் - பட்டார்ந்த
கோவணத்தான் கொல்லேற்றன் என்றென்று நெஞ்சமே
கோவணத்து நம்பனையே கூறு.
83
655 கூற்றும் பொருளும்போற் காட்டியென் கோல்வளையைக்
கூற்றின் பொருள்முயன்ற குற்றாலன் - கூற்றின்
செருக்கழியச் செற்ற சிவற்கடிமை நெஞ்சே
செருக்கழியா முன்னமே செய்.
84
656 செய்யான் கருமிடற்றான் செஞ்சடையான் தேன்பொழில்சூழ்
செய்யான் பழனத்தான் மூவுலகும் - செய்யாமுன்
நாட்டுணாய் நின்றானை நாடுதும்போய் நன்னெஞ்சே
நாட்டுணாய் நின்றானை நாம்.
85
657 நாவாய் அகத்துளதே நாமுளமே நம்மீசன்
நாவாய்போல் நன்னெறிக்கண் உய்க்குமே - நாவாயால்
துய்க்கப் படும்பொருளைக் கூட்டுதும் மற்றவர்க்காள்
துய்க்கப் படுவதாஞ் சூது.
86
658 சூதொன் றுனக்கறியச் சொல்லினேன் நன்னெஞ்சே
சூதன் சொலற்கரிய சோதியான் - சூதின்
கொழுந்தேன் கமழ்சோலைக் குற்றாலம் பாடிக்
கொழுந்தே இழந்தேன் குருகு.
87
659 குருகிளவேய்த் தோள்மெலியக் கொங்கைமார் புல்கிக்
குருகிளையார் கோடு கொடாமே - குருகிளரும்
போதார் கழனிப் புகலூர் அமர்ந்துறையும்
போதாநின் பொன்முடிக்கட் போது.
88
660 போதரங்க வார்குழலார் என்னாவார் நன்னெஞ்சே
போதரங்க நீர்கரந்த புண்ணியனைப் - போதரங்கக்
கானகஞ்சேர் சோதியே கைவிளக்கா நின்றாடும்
கானகஞ்சேர் வாற்கடிமை கல்.
89
661 கற்றான்அஞ் சாடுகா வாலி களந்தைக்கோன்
கற்றானைக் கல்லாத நாளெல்லாம் - கற்றான்
அமரர்க் கமரர் அரர்க்கடிமை பூண்டார்
அமரர்க் கமரரா வார்.
90
662 ஆவா மனிதர் அறிவிலரே யாதொன்றும்
ஆவார்போற் காட்டி அழிகின்றார் - ஆஆ
பகல்நாடிப் பாடிப் படர்சடைக்குப் பல்பூப்
பகல்நாடி ஏத்தார் பகர்ந்து.
91
663 பகனாட்டம் பாட்டயரும் பாட்டோ டாட் டெல்லி
பகனாட்டம் பாழ்படுக்கும் உச்சி - பகனாட்டம்
தாங்கால் தொழுதெழுவார் தாழ்சடையார் தம்முடைய
தாங்கால் தொழுதல் தலை.
92
664 தலையாலங் காட்டிற் பலிதிரிவர் என்னும்
தலையாலங் காடர்தாம் என்னும் -தலையாய
பாகீ ரதிவளரும் பல்சடையீர் வல்லிடையீர்
பாகீ ரதிவளரும் பண்பு.
93
665 பண்பாய நான்மறையான் சென்னிப் பலிதேர்ந்தான்
பண்பாய பைங்கொன்றைத் தார்அருளான் - பண்பால்
திருமாலு மங்கைச் சிவற் கடிமை செய்வான்
திருமாலு மங்கைச் சிவன்.
94
666 சிவன்மாட் டுகவெழுதும் நாணும் நகுமென்னும்
சிவன்மேய செங்குன்றூர் என்னும் -சிவன்மாட்டங்
காலிங் கனம்நினையும் ஆயிழையீர் அங்கொன்றை
யாலிங் கனம்நினையு மாறு.
95
667 ஆறாவெங் கூற்றுதைத் தானைத்தோல் போர்த்துகந்தங்
காறார் சடையீர்க் கமையாதே - ஆறாத
ஆனினித்தார் தாந்தம் அணியிழையி னார்க்கடிமை
ஆனினத்தார் தாந்தவிர்ந்த தாட்டு.
96
668 ஆட்டும் அரவர் அழிந்தார் எலும்பணிவார்
ஆட்டும் இடுபலிகொண் டார்அமரர் - ஆட்டுமோர்
போரேற்றான் கொன்றையான் போந்தான் பலிக்கென்று
போரேற்றான் போந்தான் புறம்.
97
669 புறந்தாழ் குழலார் புறனுரைஅஞ் சாதே
புறந்தாழ் புலிப்பொதுவுள் ஆடி - புறந்தாழ்பொன்
மேற்றளிக்கோன் வெண்பிறையான் வெண்சுடர்போல் மேனியான்
மேற்றளிக்கோன் என்றுரையான் மெய்.
98
670 மெய்யன் பகலாத வேதியன் வெண்புரிநூல்
மெய்யன் விரும்புவார்க் கெஞ்ஞான்றும் -வெய்ய
துணையகலா நோக்ககலா போற்றகலா நெஞ்சே
துணையிகலா கூறுவான் நூறு.
99
671 நூறான் பயன்ஆட்டி நூறு மலர்சொரிந்து
நூறா நொடிஅதனின் மிக்கதே - நூறா
உடையான் பரித்தஎரி உத்தமனை வெள்ளே
றுடையானைப் பாடலால் ஒன்று.
100

திருச்சிற்றம்பலம்

8. பரணதேவ நாயனார் பாசுரங்கள் (672 - 772)

8.1 பரணதேவ நாயனார் அருளிச் செய்த

சிவபெருமான் திருவந்தாதி

672. ஒன்றுரைப்பீர் போலப் பலஉரைத்திட் டோயாதே
ஒன்றுரைப்பீர் ஆயின் உறுதுணையாம் - ஒன்றுரைத்துப்
பேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுழலும்
பேரரவம் பூணும் பிரான்.
1
673 பிரானிடபம் மால்பெரிய மந்தாரம் வில்லுப்
பிரானிடபம் பேரொலிநா ணாகம் - பிரானிடபம்
பேணும் உமைபெரிய புன்சடையின் மேலமர்ந்து
பேணும் உமையிடவம் பெற்று.
2
674 பெற்றும் பிறவி பிறந்திட் டொழியாதே
பெற்றும் பிறவி பிறந்தொழிமின் - பெற்றும்
குழையணிந்த கோளரவக் கூற்றுைத்தான் தன்னைக்
குழையணிந்த கோளரவ நீ.
3
675 நீயேயா ளாவாயும் நின்மலற்கு நன்னெஞ்சே
நீயேயா ளாவாயும் நீள்வாளின் -நீயே
ஏறூர் புனற்சடையா எங்கள் இடைமருதா
ஏறூர் புனற்சடையா என்று.
4
676 என்றும் மலர்தூவி ஈசன் திருநாமம்
என்றும் அலர்தூற்றி யேயிருந்தும் - என்றும்
------ ------ ------ ------
புகலூரா புண்ணியனே என்.
5
677 என்னே இவளுற்ற மாலென்கொல் இன்கொன்றை
என்னே இவளொற்றி யூரென்னும் - என்னே
தவளப் பொடியணிந்த சங்கரனே என்னும்
தவளப் பொடியானைச் சார்ந்து.
6
678 சார்ந்துரைப்ப தொன்றுண்டு சாவாமூ வாப்பெருமை
சார்ந்துரைத்த தத்துவத்தின் உட்பொருளைச் - சார்ந்துரைத்த
ஆதியே அம்பலவா அண்டத்தை ஆட்கொள்ளும்
ஆதியேன் றென்பால் அருள்.
7
679 அருள்சேரா தாரூர்தீ ஆறாமல் எய்தாய்
அருள்சேரா தாரூர்தீ யாடி -அருள்சேரப்
பிச்சையேற் றுண்டு பிறர்கடையிற் கால்நிமிர்த்துப்
பிச்சையேற் றுண்டுழல்வாய் பேச்சு.
8
680 பேச்சுப் பெருகுவதென் பெண்ஆண் அலிஎன்று
பேச்சுக் கடந்த பெருவௌியைப் - பேச்சுக்
குரையானை ஊனுக் குயிரானை ஒன்றற்
குரியானை நன்னெஞ்சே உற்று.
9
681 உற்றுரையாய் நன்னெஞ்சே ஓதக் கடல்வண்ணன்
உற்றுரையா வண்ணம்ஒன் றானானை - உற்றுரையா
ஆனை உரித்தானை அப்பனை எப்பொழுது
மானையுரித் தானை அடைந்து.
10
682 அடைந்துன்பால் அன்பாய் அணிமணிகொண் டர்ச்சித்
தடைந்துன்பால் மேலுகுத்த மாணிக் -கடைந்துன்பால்
அவ்வமுதம் ஊட்டி அணிமலருஞ் சூழ்ந்தன்று
அவ்வமுதம் ஆக்கினாய் காண்.
11
683 காணாய் கபாலி கதிர்முடிமேற் கங்கைதனைக்
காணாயக் காருருவிற் சேருமையைக் - காணாய்
உடைதலைகொண் டூரூர் திரிவானை நச்சி
உடைதலைகொண் டூரூர் திரி.
12
684 திரியும் புரமெரித்த சேவகனார் செவ்வே
திரியும் புரமெரியச் செய்தார் -திரியும்
அரியான் திருக்கயிலை என்னாதார் மேனி
அரியான் திருக்கயிலை யாம்.
13
685 ------ ------ ------ ------
ஆம்பரிசே செய்தங் கழியாக்கை -ஆம்பரிசே
ஏத்தித் திரிந்தானை எம்மானை அம்மானை
ஏத்தித் திரிந்தானை ஏத்து.
14
686 ஏத்துற்றுப் பார்த்தன் எழில்வான் அடைவான்போல்
ஏத்துற்றுப் பார்த்தன் இறைஞ்சுதலும் - ஏத்துற்றுப்
பாசுபதம் அன்றளித்த பாசூரான் பால்நீற்றான்
பாசுபதம் இன்றளியென் பால்.
15
687 பாலார் புனல்வாய் சடையானுக் கன்பாகிப்
பாலார் புனல்வாய் சடையானாள் - பாலாடி
ஆடுவான் பைங்கண் அரவூர்வான் மேனிதீ
ஆடுவான் என்றென்றே ஆங்கு.
16
688 ஆங்குரைக்க லாம்பொன் மலர்ப்பாதம் அஃதன்றே
ஆங்குரைக்க லாம்பொன் அணிதில்லை - ஆங்குரைத்த
அம்பலத்தும் அண்டத்தும் அப்பாலு மாய்நின்ற
அம்பரத்தும் அண்டத்தும் ஆம்.
17
689 மாயனைஓர் பாகம் அமர்ந்தானை வானவரும்
மாயவரு மால்கடல்நஞ் சுண்டானை - மாய
வருவானை மாலை ஒளியானை வானின்
உருவானை ஏத்தி உணர்.
18
690 உணரா வளைகழலா உற்றுன்பாற் சங்கம்
உணரா வளைகழல ஒட்டி - உணரா
அளைந்தான மேனி அணிஆரூ ரேசென்
றளைந்தானை ஆமாறு கண்டு.
19
691 கண்திறந்து காயெரியின் வீழ்ந்து கடிதோடிக்
கண்டிறந்து காமன் பொடியாகக் - கண்டிறந்து
கானின் உகந்தாடும் கருத்தர்க்குக் காட்டினான்
கானினுகந் தாடுங் கருத்து.
20
692 கருத்துடைய ஆதி கறைமிடற்றெம் ஈசன்
கருத்துடைய கங்காள வேடன் - கருத்துடைய
ஆனேற்றான் நீற்றான் அனலாடி ஆமாத்தூர்
ஆனேற்றான் ஏற்றான் எரி.
21
693 எரியாடி ஏகம்பம் என்னாதார் மேனி
எரியாடி ஏகம்ப மாகும் - எரியாடி
ஈமத் திடுங்காடு தேரும் இறைபணிப்ப
ஈமத் திடுங்காடு தான்.
22
694 தானயன் மாலாகி நின்றான் தனித்துலகில்
தானயன் மாலாய தன்மையான் -தானக்
கரைப்டுத்தான் நான்மறையைக் காய்புலித்தோ லாடைக்
கரைப்படுத்தான் தன்பாதஞ் சார்.
23
695 சாராவார் தாமுளரேல் சங்கரன்தன் மேனிமேல்
சாராவார் கங்கை உமைநங்கை - சார்வாய்
அரவமது செஞ்சடைமேல் அக்கொன்றை ஒற்றி
அரவமது செஞ்சடையின் மேல்.
24
696 மேலாய தேவர் வெருவ எழுநஞ்சம்
மேலாயம் இன்றிவே றுண்பொழுதில் - மேலாய
மங்கை உமைவந் தடுத்திலளே வானாளும்
மங்கை உமைவந் தடுத்து.
25
697 அடுத்தபொன் அம்பலமே சார்வும் அதனுள்
அடுத்த திருநட்டம் அஃதே - அடுத்ததிரு
ஆனைக்கா ஆடுவதும் மேல்என்பு பூண்பதுவும்
ஆனைக்கா வான்தன் அமைவு.
26
698 அமைவும் பிறப்பும் இறப்புமாம் மற்றாங்
கமைவும் பரமான ஆதி -அமையும்
திருவால வாய்சென்று சேராது மாக்கள்
திருவால வாய்சென்று சேர்.
27
699 சென்றுசெருப் புக்காலாற் செல்ல மலர்நீக்கிச்
சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச் - சென்றுதன்
கண்ணிடந்தன் றப்பும் கருத்தற்குக் காட்டினான்
கண்ணிடந்தன் றப்பாமை பார்த்து.
28
700 பார்த்துப் பரியாதே பால்நீறு பூசாதே
பார்த்துப் பரிந்தங்கம் பூணாதே - பார்த்திட்
டுடையானஞ் சோதாதே ஊனாரைக் கைவிட்
டுடையானஞ் சோதாதார் ஊண்.
29
701 ஊணொன்றும் இல்லை உறக்கில்லை உன்மாலின்
ஊணென்று பேசவோர் சங்கிழந்தாள் - ஊணென்றும்
விட்டானே வேள்வி துரந்தானே வெள்ளநீர்
விட்டானே புன்சடைமேல் வேறு.
30
702 வேறுரைப்பன் கேட்டருளும் வேதம்நான் காறங்கம்
வேறுரைத்த மேனி விரிசடையான் - வேறுரைத்த
பாதத்தாய் பைங்கண் அரவூர்வாய் பாரூரும்
பாதத்தாய் என்னும் மலர்.
31
703 மலரணைந்து கொண்டு மகிழ்வாய்உன் பாத
மலரணைந்து மால்நயன மாகும் - மலரணைந்து
மன்சக் கரம்வேண்ட வாளா அளித்தனையால்
வன்சக்க ரம்பரனே வாய்த்து.
32
704 வாய்த்த அடியார் வணங்க மலரோன்மால்
வாய்த்த அடிமுடி யுங்காணார் - வாய்த்த
சலந்தரனைக் கொன்றிட்டுச் சங்கரனார் என்னோ
சலந்தரனாய் நின்றவா தாம்.
33
705 தாமென்ன நாமென்ன வேறில்லை தத்துறவில்
தாமென்னை வேறாத் தனித்திருந்து - தாமென்
கழிப்பாலை சேருங் கறைமிடற்றார் என்னோ
கழிப்பாலை சேருங் கடன்.
34
706 கடனாகக் கைதொழுமின் கைதொழவல் லீரேல்
கடல்நாகைக் காரோணம் மேயார் கடநாகம்
மாளஉரித் தாடுவார் நம்மேலை வல்வினைநோய்
மாளஇரித் தாடுமால் வந்து.
35
707 வந்தார் வளைகழல்வார் வாடித் துகில்சோர்வார்
வந்தார் முலைமெலிவார் வார்குழல்கள் - வந்தார்
சுரிதருவார் ஐங்கொன்றைத் தாராரைக் கண்டு
சுரிதருவார் ஐங்கொன்றைத் தார்.
36
708 தாரான் எனினுஞ் சடைமுடையான் சங்கரனந்
தாரான் தசமுகனைத் தோள்நெரித்துத் - தாராய
நாளுங் கொடுத்தந்த வானவர்கள் தம்முன்னே
வாளுங் கொடுத்தான் மதித்து.
37
709 மதியாரும் செஞ்சடையான் வண்கொன்றைத் தாரான்
மதியாரும் மாலுடைய பாகன் - மதியாரும்
அண்ணா மலைசேரார் ஆரோடுங் கூடாகி
அண்ணா மலைசேர்வ ரால்.
38
710 ஆலநிழற்கீழ் இருப்பதுவும் ஆய்வதறம்
ஆலம் அமுதுசெய்வ தாடுவதீ - ஆலந்
துறையுடையான் ஆனை உரியுடையான் சோற்றுத்
துறையுடையான் சோராத சொல்லு.
39
711 சொல்லாயம் இன்றித் தொலைவின்றித் தூநெறிக்கண்
சொல்லாய்ப் பெருத்த சுடரொளியாய்ச் - சொல்லாய
வீரட்டத் தானை விரவார் புரம்அட்ட
வீரட்டத் தானை விரை.
40
712 விரையாரும் மத்தம் விரகாகச் சூடி
விரையாரும் வெள்ளெலும்பு பூண்டு - விரையாரும்
நஞ்சுண்ட ஆதி நலங்கழல்கள் சேராதார்
நஞ்சுண்ட வாதி நலம்.
41
713 நலம்பாயும் ஆக்க நலங்கொண்டல் என்றல்
நலம்பாயும் மான்நன் குருவ - நலம்பாய்செய்
தார்த்தார்க்கும் அண்ணா மலையா னிடந்.. .. .. தார்த்தார்க்கும் அண்ணா மலை.
42
714 மலையார் கலையோட வாரோடக் கொங்கை
மலையார் கலைபோய்மால் ஆனாள்- மலையார்
கலையுடையான் வானின் மதியுடையான் காவாத்
தலையுடையான் என்றுதொழு தாள்.
43
715 தாளார் கமல மலரோடு தண்மலரும்
தாளார வேசொரிந்து தாமிருந்து - தாளார்
சிராமலையாய் சேமத் துணையேயென் றேத்தும்
சிராமலையார் சேமத் துளார்.
44
716 ஆர்துணையா ஆங்கிருப்ப தம்பலவா அஞ்சலுமை
ஆர்துணையா ஆனை உரிமூடி - ஆர்துணையாம்
பூவணத்தாய் பூதப் படையாளி பொங்கொளியாய்
பூவணத்தாய் என்னின் புகல்.
45
717 புகலூர் உடையாய் பொறியரவம் பூணி
புகலூர்ப் புனற்சடையெம் பொன்னே - புகலூராய்
வெண்காடா வேலை விடமுண்டாய் வெள்ளேற்றாய்
வெண்காடா என்பேனோ நான்.
46
718 நானுடைய மாடேஎன் ஞானச் சுடர்விளக்கே
நானுடைய குன்றமே நான்மறையாய் - நானுடைய
காடுடையாய் காலங்கள் ஆனாய் கனலாடும்
காடுடையாய் காலமா னாய்.
47
719 ஆயன் றமரர் அழியா வகைசெய்தாய்
ஆயன் றமரர் அழியாமை - ஆயன்
திருத்தினான் செங்கண் விடையூர்வான் மேனி
திருத்தினான் சேதுக் கரை.
48
720 கரையேனு மாதர் கருவான சேதுக்
கரையேனு மாது கரையாம் -கரையேனும்
கோளிலியெம் மாதி குறிபரவ வல்லையே
கோளிலியெம் மாதி குறி.
49
721 குறியார் மணிமிடற்றுக் கோலஞ்சேர் ஞானக்
குறியாகி நின்ற குணமே- குறியாகும்
ஆலங்கா டெய்தா அடைவேன்மேல் ஆடரவம்
ஆலங்கா டெய்தா அடை.
50
722 அடையும் படைமழுவும் சூலமிலம் பங்கி
அடையும் இறப்பறுப்ப தானால் - அடைய
மறைக்காடு சேரும் மணாளரென்பாற் சேரா
மறைக்காடு சேர்மக்கள் தாம்.
51
723 தாமேய ஆறு சமய முதற்பரமும்
தாமேய வாறு தழைக்கின்றார் - தாமேல்
தழலுருவர் சங்கரவர் பொங்கரவம் பூண்ட
தழலுருவர் சங்கரர்என் பார்.
52
724 பார்மேவு கின்ற பலருருவர் பண்டரங்கர்
பார்மேவு கின்ற படுதலையர் - பார்மேல்
வலஞ்சுழியைச் சேர்வர் மலரடிகள் சேர்வார்
வலஞ்சுழியைச் சேர்வாகு வார்.
53
725 வாரணிந்த கொங்கை உமையாள் மணவாளா
வாரணிந்த கொன்றை மலர்சூடி - வாரணிந்த
செஞ்சடையாய் சீர்கொள் சிவலோகா சேயொளியாய்
செஞ்சடையாய் செல்ல நினை.
54
726 நினைமால் கொண்டோடி நெறியான தேடி
நினைமாலே நெஞ்சம் நினைய - நினைமால் கொண்
டூர்தேடி உம்பரால் அம்பரமா காளாவென்
றூர்தேடி என்றுரைப்பான் ஊர்.
55
727 ஊர்வதுவும் ஆனே றுடைதலையில் உண்பதுவும்
ஊர்வதுவு மெல்லுரக மூடுவர்கொல் - ஊர்வதுவும்
ஏகம்ப மென்றும் இடைமருதை நேசித்தார்க்
கேகம்ப மாய்நின்ற ஏறு.
56
728 ஏறேய வாழ்முதலே ஏகம்பா எம்பெருமான்
ஏறேறி யூரும் எரியாடி - ஏறேய
ஆதிவிடங் காகாறை அண்டத்தாய் அம்மானே
ஆதிவிடங் காவுமைநன் மாட்டு.
57
729 மாட்டும் பொருளை உருவை வருகாலம்
வாட்டும் பொருளாய் மறையானை - வாட்டும்
உருவானைச் சோதி உமைபங்கா பங்காய்
உருவான சோதி உரை.
58
730 உரையா இருப்பதுவும் உன்னையே ஊனின்
உரையாய் உயிராய்ப் பொலிந்தாய் - உரையாய
அம்பொனே சோதி அணியாரூர் சேர்கின்ற
அம்பொனே சோதியே ஆய்ந்து.
59
731 ஆய்ந்துன்றன் பாதம் அடையவரும் என்மேல்
ஆய்ந்தென்றன் பாச மலமறுத் -தாய்ந்துன்றன்
பாலணையச் செய்த பரமா பரமேட்டி
பாலணையச் செய்த பரம்.
60
732 பரமாய பைங்கட் சிரமேயப் பூண்ட
பரமாய பைங்கட் சிரமே - பரமாய
ஆறடைந்த செஞ்சடையாய் ஐந்தடைந்த மேனியாய்
ஆறடைந்த செஞ்சடையாய் அன்பு.
61
733 அன்பே உடைய அரனே அணையாத
அன்பே உடைய அனலாடி - அன்பே
கழுமலத்து ளாடுங் கரியுரிபோர்த் தானே
கழுமலத்து ளாடுங் கரி.
62
734 கரியார்தாஞ் சேருங் கலைமறிகைக் கொண்டே
கரியார்தாஞ் சேருங் கவாலி - கரியாகி
நின்ற கழிப்பாலை சேரும் பிரான்நாமம்
நின்ற கழிப்பாலை சேர்.
63
735 சேரும் பிரான்நாமஞ் சிந்திக்க வல்லீரேல்
சேரும் பிரான்நாமஞ் சிந்திக்கச் - சேரும்
மலையான் மகளை மகிழ்ந்தாரூர் நின்றான்
மலையான் மகளை மகிழ்ந்து.
64
736 மகிழ்ந்தன்பர் மாகாளஞ் செய்யும் மகளிர்
மகிழ்ந்தம் பரமாகி நின்றார் - மகிழ்ந்தங்கம்
ஒன்றாகி நின்ற உமைபங்கன் ஒற்றியூர்
ஒன்றாகி நின்ற உமை.
65
737 உமைகங்கை என்றிருவர் உற்ற உணர்வும்
உமைகங்கை என்றிருவர் காணார் - உமைகங்கை
கார்மிடற்றம் மேனிக் கதிர்முடியான் கண்மூன்று
கார்மிடற்றம் மேனிக் கினி.
66
738 இனியவா காணீர்கள் இப்பிறவி எல்லாம்
இனியவா ஆகாமை யற்றும் - இனியவா
றாக்கை பலசெய்த ஆமாத்தூர் அம்மானை
ஆக்கை பலசெய்த அன்று.
67
739 அன்றமரர் உய்ய அமிர்தம் அவர்க்கருளி
அன்றவுணர் வீட அருள்செய்தோன் - அன்றவுணர்
சேராமல் நின்ற அடிகள் அடியார்க்குச்
சேராமல் நின்ற சிவம்.
68
740 சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்சேர்வ தாக்கும்
சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்ணாம் - சிவனந்தம்
சேரும் உருவுடையீர் செங்காஅட் டங்குடி மேல்
சேரும் உருவுடையீர் செல்.
69
741 செல்லு மளவும் சிதையாமற் சிந்திமின்
செல்லு மளவும் சிவனும்மைச் - செல்லும்
திருமீச்சூர்க் கேறவே செங்கணே றூரும்
திருமீச்சூர் ஈசன் திறம்.
70
742 திறமென்னுஞ் சிந்தை தெரிந்தும்மைக் காணும்
திறமென்னுஞ் சிந்தைக்கு மாமே - திறமென்னும்
சித்தத்தீர் செல்வத் திருக்கடவூர் சேர்கின்ற
சித்தத்தீ ரேசெல்லும் நீர்.
71
743 நீரே எருதேறும் நின்மலனார் ஆவீரும்
நீரே நெடுவானில் நின்றீரும் - நீரே
நெருப்பாய தோற்றத்து நீளாரும் பூண்டு
நெருப்பாய தோற்றம் நிலைத்து.
72
744 நிலைத்திவ் வுலகனைத்தும் நீரேயாய் நின்றீர்
நிலைத்திவ் வுலகனைத்தும் நீரே - நிலைத்தீரக்
கானப்பே ரீர்கங்கை சூடினீர் கங்காளீர்
கானப்பே ரீர்கங்கை யீர்.
73
745 ஈரம் உடைய இளமதியஞ் சூடினீர்
ஈரம் உடைய சடையினீர் - ஈர
வருங்காலம் ஆயினீர் இவ்வுலகம் எல்லாம்
வருங்கால மாயினீர் வாழ்வு.
74
746. வாழ்வார் மலரணைவார் வந்த வருநாகம்
வாழ்வார் மலரணைவார் வண்கங்கை - வாழ்வாய
தீயாட வானாள்வான் வான்கழல்கள் சேராதார்
தீயாட வானாளு மாறு.
75
747 மாறாத ஆனையின்தோல் போர்த்து வளர்சடைமேல்
மாறாத நீருடைய மாகாளர் - மாறா
இடுங்கையர் சேரும் எழிலவாய் முன்னே
இடுங்கையர் சேர்வாக ஈ. 7
76
748 ஈயும் பொருளே எமக்குச் சிவலோகம்
ஈயும் பொருளே இடுகாட்டில் - நீயும்
படநாகம் பூணும் பரலோகீர் என்னீர்
படநாகம் பூணும் படி.
77
749 படியேறும் பார்த்துப் பரத்தோடும் கூட்டிப்
படியேறும் பார்த்துப் பரனெப் - படியேனைப்
பாருடையாய் பைங்கண் புலியதளாய் பால்நீற்றாய்
பாருடையாய் யானுன் பரம்.
78
750 பரமாய விட்டுநின் பாதம் பணிந்தேன்
பரமாய ஆதிப் பரனே - பரமாய
நீதியே நின்மலனே நேரார் புரமூன்றும்
நீதியே செய்தாய் நினை.
79
751 நினையடைந்தேன் சித்தம் நிலையாகும் வண்ணம்
நினையடைந்தேன் சித்த நிமலா - நினையடைந்தேன்
கண்டத்தாய் காளத்தி யானே கனலாரும்
கண்டத்தாய் காவாலி கா.
80
752 காவார் பொழிற்கயிலை ஆதீ கருவேஎம்
காவாய்ப் பொலிந்த கடுவௌியே - காவாய
ஏறுடையாய் என்னை இடைமருதி லேயென்றும்
ஏறுடையாய் நீயே கரி.
81
753 கரியானும் நான்முகனு மாய்நின்ற கண்ணன்
கரியாருங் கூற்றங் கனியே - கரியாரும்
காடுடையாய் காலங்க ளானாய் கனலாடும்
காடுடையாய் காலமா னாய்.
82
754 ஆனாய னாய அடலேறே ஆருர்க்கோன்
ஆனாய னாஅமுத மேஆனாய் - ஆனாய்
கவரெலும்போ டேந்தி கதநாகம் பூணி
கவரெலும்பு தார்கை வளை.
83
755 வளைகொண்டாய் என்னை மடவார்கண் முன்னே
வளைகொண்டாய் மாசற்ற சோதி - வளைகொண்டாய்
மாற்றார் கதுவ மதிலாரூர் சேர்கின்ற
மாற்றாரூர் கின்ற மயல்.
84
756 மயலான தீரும் மருந்தாகும் மற்றும்
மயலானார் ஆருர் மயரார் - மயலான
கண்ணியர்தம் பாகா கனியே கடிக்கொன்றைக்
கண்ணியலான் பாதமே கல்.
85
757 கலைமான்கை ஏனப்பூண் காண்கயிலை மானின்
கலைமான் கறைகாண் கவாலி - கலைமானே
ஆடுவதும் பாடுவதும் காலனைப்பொன் அம்பலத்துள்
ஆடுவதும் ஆடான் அரன்.
86
758 அரனே அணியாரூர் மூலட்டத் தானே
அரனே அடைந்தார்தம் பாவம் - அரனே
அயனார்தம் அங்கம் அடையாகக் கொண்டாய்
அயனாக மாக அடை.
87
759 அடையுந் திசைஈசன் திண்டோள் ஆகாசம்
அடையுந் திருமேனி அண்டம் - அடையும்
திருமுடிகால் பாதாளம் ஆடைகடல் அங்கி
திருமுடிநீர் கண்கள்சுடர் மூன்று.
88
760 மூன்றரணம் எய்தானே மூலத் தனிச்சுடரே
மூன்றரண மாய்நின்ற முக்கணனே - மூன்றரண
மாய்நின்ற சோதி அணியாரூர் சேர்கின்ற
வாய்நின்ற சோதி அறம்.
89
761 அறமாய்வ ரேனும் அடுகாடு சேர
அறமானார் அங்கம் அணிவர் - அறமாய
வல்வினைகள் வாரா எனமருக லாரென்ன
வல்வினைகள் வாராத வாறு.
90
762 ஆறுடையர் நஞ்சுடையர் ஆடும் அரவுடையர்
ஆறுடையர் காலம் அமைவுடையர் - ஆறுடைய
சித்தத்தீர் செல்வத் திருக்கயிலை சேர்கின்ற
சித்தத்தீர் எல்லார்க்குஞ் சேர்வு.
91
763 சேர்வும் உடையர் செழுங்கொன்றைத் தாரார்நஞ்
சேர்வும் உடையர் அரவுடையர் - சேரும்
திருச்சாய்க்காட் டாடுவரேல் செய்தக்க என்றும்
திருச்சாய்க்காட் டேநின் உருவு.
92
764 உருவு பலகொண் டொருவராய் நின்றார்
உருவு பலவாம் ஒருவர் - உருவு
பலவல்ல ஒன்றல்ல பைஞ்ஞீலி மேயார்
பலவல்ல ஒன்றாப் பகர்.
93
765 பகரப் பரியானை மேலூரா தானைப்
பகரப் பரிசடைமேல் வைத்த - பகரப்
பரியானைச் சேருலகம் பல்லுயிர்கள் எல்லாம்
பரியானைச் சேருலகம் பண்.
94
766 பண்ணாகப் பாடிப் பலிகொண்டாய் பாரேழும்
பண்ணாகச் செய்த பரஞ்சோதீ -பண்ணா
எருதேறி யூர்வாய் எழில்வஞ்சி எங்கள்
எருதேறி யூர்வாய் இடம்.
95
767 இடமாய எவ்வுயிர்க்கும் ஏகம்பம் மேயார்
இடமானார்க் கீந்த இறைவர் - இடமாய
ஈங்கோய் மலையார் எழிலார் சிராமலையார்
ஈங்கோய் மலையார் எமை.
96
768 எமையாள வந்தார் இடரான தீர
எமையாளும் எம்மை இமையோர் - எமையாளும்
வீதிவிடங் கர்விடம துண்டகண் டர்விடையூர்
வீதிவிடங் கர்விடையூர் தீ.
97
769 தீயான மேனியனே செம்பவளக் குன்றமே
தீயான சேராமற் செய்வானே - தீயான
செம்பொற் புரிசைத் திருவாரூ ராயென்னைச்
செம்பொற் சிவலோகஞ் சேர்.
98
770 சேர்கின்ற சிந்தை சிதையாமற் செய்வானே
சேர்கின்ற சிந்தை சிதையாமற் - சேர்கின்றோம்
ஒற்றியூ ரானே உறவாரும் இல்லையினி
ஒற்றியூ ரானே உறும்.
99
771 உறுமுந்த முன்னே உடையாமல் இன்னம்
உறுமுந்த முன்னே உடையாமல் - உறுமுந்தம்
ஓரைந் துரைத்துற் றுணர்வோ டிருந்தொன்றை
ஓரைந் துரைக்கவல்லார்க் கொன்று.
100
772 ஒன்றைப் பரணர் உரைத்தஅந் தாதிபல
ஒன்றைப் பகரில் ஒருகோடி - ஒன்றைத்
தவிரா துரைப்பார் தளரார் உலகில்
தவிரார் சிவலோகந் தான்.
101

திருச்சிற்றம்பலம்

9. இளம்பெருமான் அடிகள் பாசுரங்கள் (773 - 802)

9.1 இளம்பெருமான் அடிகள் அருளிச் செய்த

சிவபெருமான் திருமும்மணிக்கோவை

773. (அகவல்)
முதல்வன் வகுத்த மதலை மாடத்து
இடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற்
பள்ளிச் செம்புய லுள்விழு துறீஇப்
புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர்
எறிவளி எடுப்பினுஞ் சிறுநடுக் குறாநின்
அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை
இலங்குவளைத் தனிப்போது விரித்த
அலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே.
1
774 (வெண்பா)
மாறு தடுத்த மணிக்கங்கை திங்களின்
கீறு தடுப்பக் கிடக்குமே - நீறடுத்த
செந்தாழ் வரையின் திரள்போல் திருமேனி
எந்தாய்நின் சென்னி இடை.
2
775 (கட்டளைக் கலித்துறை)
இடைதரில் யாமொன் றுணர்த்துவ துண்டிமை யோர்சிமையத்
தடைதரு மூரிமந் தாரம் விராய்நதி வெண்ணிலவின்
தொடைதரு துண்டங் கிடக்கினுந் தொண்டர் ஒதுக்கியிட்ட
புடைதரு புல்லெருக் குஞ்செல்லு மோநின் புரிசடைக்கே.
3
776 (அகவல்)
சடையே, நீரகந் ததும்பி நெருப்புக் கலிக்கும்மே
மிடறே, நஞ்சகந் துவன்றி அமிர்து பிலிற்றும்மே
வடிவே, முளிஎரி கவைஇத் தளிர்தயங் கும்மே
அடியே, மடங்கல்மதஞ் சீறி மலர்பழிக் கும்மே
அஃதான்று, இனையஎன் றறிகிலம் யாமே முனைதவத்
தலைமுன்று வகுத்த தனித்தாட்
கொலையூன்று குடுமி நெடுவே லோயே.
4
777 வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த
காலைநீர் எங்கே கரந்தனையால் -மாலைப்
பிறைக்கீறா கண்ணுதலா பெண்பாகா ஐயோ
இறைக்கூறாய் எங்கட் கிது.
5
778 இதுநீர் ஒழிமின் இடைதந் துமையிமை யத்தரசி
புதுநீர் மணத்தும் புலியத ளேஉடை பொங்குகங்கை
முதுநீர் கொழித்த இளமணல் முன்றில்மென் றோட்டதிங்கள்
செதுநீர் ததும்பத் திவளஞ்செய் செஞ்சடைத் தீவண்ணரே.
6
779 வண்ணம், ஐஞ்சுதலை கவைஇப் பவள மால்வரை
மஞ்சுமி விலகிப் பகல்செகுக் கும்மே
என்னைப், பழமுடைச் சிறுகலத் திடுபலி பெய்வோள்
நெஞ்சகம் பிணிக்கும் வஞ்சமோ உடைத்தே
அஃதான்று, முளையெயிற்றுக் குருளை இன்துயில் எடுப்ப
நடுங்குதலைச் சிறுநிலா விதிர்க்கும் கொடும்பிறைத்
தேமுறு முதிர்சடை இறைவ
மாமுறு கொள்கை மாயமோ உடைத்தே.
7
780 உடைதலையின் கோவை ஒருவடமோ கொங்கை
புடைமலிந்த வெள்ளெருக்கம் போதோ - சடைமுடிமேல்
முன்னநாள் பூத்த முகிழ்நிலவோ முக்கணா
இன்னநாள் கண்ட திவள்.
8
781 இவளப் பனிமால் இமையத் தணங்குகற் றைச்சடைமேல்
அவளப்புத் தேளிர் உலகிற் கரசி அதுகொண்டென்னை
எவளுக்கு நீநல்ல தியாரைமுன் எய்திற்றெற் றேயிதுகாண்
தவளப் பொடிச்செக்கர் மேனிமுக் கண்ணுடைச் சங்கரனே.
9
782 கரதலம் நுழைத்த மரகதக் கபாடத்து
அயில்வழங்கு குடுமிக் கயிலை நாடநின்
அணங்குதுயில் எடுப்பிற் பிணங்குநிலாப் பிணையல்
யாமே கண்டதும் இலமே தாமா
மூவா எஃகமும் முரணும்
ஓவாது பயிற்றும் உலகமால் உளதே.
10
783 உளரொளிய கங்கை ஒலிதிரைகள் மோத
வளரொளிதேய்ந் துள்வளைந்த தொக்கும் - கிளரொளிய
பேதைக் கருங்கட் பிணாவின் மணாளனார்
கோதைப் பிறையின் கொழுந்து.
11
784 கொழுந்திரள் தெண்ணில வஞ்சிநின் கூரிருள் வார்பளிங்கின்
செழுந்திரட் குன்றகஞ் சென்றடைந் தாலொக்குந் தெவ்வர்நெஞ்சத்
தழுந்திரள் கண்டத் தவளப் பொடிச்செக்கர் மேனிநின்றோர்
எழுந்திரட் சோதிப் பிழம்புமென் உள்ளத் திடங்கொண்டவே.
12
785 கொண்டற் கார்எயிற்றுச் செம்மருப் பிறாலின்
புண்படு சிமையத்துப் புலவுநாறு குடுமி
வரையோன் மருக புனலாள் கொழுந
இளையோன் தாதை முதுகாட்டுப் பொருநநின்
நீறாடு பொழங்கழல் பரவ
வேறாங்கு கவர்க்குமோ வீடுதரு நெறியே.
13
786 நெறிவிரவு கொன்றை நெடும்படற்கீழ்க் கங்கை
எறிதிரைகள் ஈர்த்தெற்ற ஏறிப் - பொறிபிதிர
ஈற்றராக் கண்படுக்கும் இண்டைச் சடைச்செங்கண்
ஏற்றரால் தீரும் இடர்.
14
787 இடர்தரு தீவினைக் கெள்கிநை வார்க்குநின் ஈரடியின்
புடைதரு தாமரைப் போதுகொ லாம்சரண் போழருவிப்
படர்தரு கொம்பைப் பவளவண் ணாபரு மாதைமுயங்
கடைதரு செஞ்சுடர்க் கற்றையொக் குஞ்சடை அந்தணனே.
15
788 அந்த ணாளர் செந்தொடை ஒழுக்கமும்
அடலோர் பயிற்றும்நின் சுடர்மொழி ஆண்மையும்
அவுணர் நன்னாட் டிறைவன் ஆகிக்
குறுநெடுந் தானை பரப்பித் தறுகண்
மால்விடை அடரத் தாள்நிமிர்ந் துக்க
காய்சின அரவுநாண் பற்றி நீயோர்
நெடுவரை நௌிய வாங்கிச்
சுடுகணை எரிநிமிர்த்துத் துரந்த ஞான்றே.
16
789 ஞான்ற புனமாலை தோளலைப்ப நாண்மதியம்
ஈன்ற நிலவோடும் இவ்வருவான் - மூன்றியங்கு
மூதூர் வியன்மாடம் முன்னொருகால் துன்னருந்தீ
மீதூரக் கண்சிவந்த வேந்து.
17
790 வேந்துக்க மாக்கடற் சூரன்முன் னாள்பட வென்றிகொண்ட
சேந்தற்குத் தாதையிவ் வையம் அளந்ததெய் வத்தகிரி
ஏந்தற்கு மைத்துனத் தோழன்இன் தேன்மொழி வள்ளியென்னும்
கூந்தற் கொடிச்சிதன் மாமன்வெம் மால்விடைக் கொற்றவனே.
18
791 கொற்றத் துப்பில் ஒன்றை ஈன்ற
துணங்கையஞ் செல்வத் தணங்குதரு முதுகாட்டுப்
பேய்முதிர் ஆயத்துப் பிணவின் கொழுநநின்
நேர்கழல் கவைஇ இலங்கிதழ்த் தாமம்
தவழ்தரு புனல்தலைப் படுநர்
அவல மாக்கடல் அழுந்தலோ இலரே.
19
792 இலர்கொலாம் என்றிளைஞர் ஏசப் பலிக்கென்
றுலகலொஞ் சென்றுழல்வ ரேனும் -மலர்குலாம்
திங்கட் குறுந்தெரியல் தேவர்க்காட் செய்வதே
எங்கட் குறுந்தெரியின் ஈண்டு.
20
793 ஈண்டுமுற் றத்தொற்றை மால்விடை ஏறியை அம்முனைநாள்
வேண்டிமுற் றத்திரிந் தெங்கும் பெறாது வெறுங்கைவந்தார்
பூண்டஒற் றைச்செங்கண் ஆரமும் கற்றைச் சடைப்புனலும்
நீண்டஒற் றைப் பிறைக் கீளும்எப் போதும்என் நெஞ்சத்தவே.
21
794 நெஞ்சிற் கொண்ட வஞ்சமோ உடைத்தே
மடவோர் விரும்புநின் விளையாட் டியல்போ
மருள்புரி கொள்கைநின் தெருளா மையோ
யாதா கியதோ எந்தை நீதியென்
றுடைதலை நெடுநிலா வெறியல்
கடைதலென் றருளிச் சூடிய பொருளே.
22
795 பொருளாக யானிரந்தால் புல்லெருக்கின் போதும்
அருளான்மற் றல்லாதார் வேண்டின் - தெருளாத
பான்மறா மான்மறிக்கைப் பைங்கட் பகட்டுரியான்
தான்மறான் பைங்கொன்றைத் தார்.
23
796 தாரிளங் கொன்றைநல் ஏறு கடாவித் தலைமைமிக்க
ஏரிய மென்முலைப் பொன்மலை யாட்டிக் கெற் றேயிவனோர்
பேரிளங் கொங்கைப் பிணாவொடுங் கூடிப் பிறைக்கொழுந்தின்
ஓரிளந் துண்டஞ் சுமந்தையம் வேண்டி உழிதருமே.
24
797 உழிதரல் மடிந்து கழுதுகண் படுக்கும்
இடருறு முதுகாட்டுச் சீரியல் பெரும
புகர்முகத் துளைக்கை உரவோன் தாதை
நெடியோன் பாகநின் சுடர்மொழி ஆண்மை
பயிற்று நாவலர்க்
கிடர்தரு தீவினை கெடுத்தலோ எளிதே.
25
798 எளியமென் றெள்கி இகழாது நாளும்
அளியம்ஆட் செய்தாலும் ஐயோ - தௌிவரிய
வள்கயிலை நீள்பொருப்ப வான்தோய் மதிச்சடையாய்
கொள்கையிலை எம்மாற் குறை.
26
799 குறையாப் பலிஇவை கொள்கஎன் கோல்வளை யுங்கலையும்
திறையாக்கொண் டாயினிச் செய்வதென் தெய்வக்கங் கைப்புனலில்
பொறைபாய் ஒருகடல் நஞ்சுண்ட கண்டா பொடியணிந்த
இறைவா இடுபிணக் காடசெம் மேனிஎம் வேதியனே.
27
800 வேதியர் பெரும விண்ணோர் தலைவ
ஆதி நான்முகத் தண்ட வாண
செக்கர் நான்மறைப் புத்தேள் நாட
காய்சின மழவிடைப் பாகநின்
மூவிலை நெடுவேல் பாடுதும்
நாவலம் பெருமை நல்குவோய் எனவே.
28
801 எனவே உலகெலாம் என்றிளைஞர் ஏச
நனவே பலிதிரிதி நாளும் - சினவேங்கைக்
கார்க்கயிலை நாட களிற்றீர் உரியலாற்
போர்க்கையிலை பேசல்நீ பொய்.
29
802 பொய்நீர் உரைசெய்தீர் பொய்யோம் பலியெனப் போனபின்னை
இந்நீள் கடைக்கென்று வந்தறி யீர்இனிச் செய்வதென்னே
செந்நீர் வளர்சடைத் திங்கட் பிளவொடு கங்கைவைத்த
முந்நீர்ப் பவளத் திரட்செக்கர் ஒக்கும் முதலவனே.
20

திருச்சிற்றம்பலம்

10. அதிரா அடிகள் பாசுரங்கள் (803 - 825)

10.1 அதிரா அடிகள் அருளிச் செய்த
மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை
803. ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர்
மும்முகச் செந்நுதி நாலிணர் வெள்நிணக்
குடற்புலவு கமழும் அடற்கழுப் படையவன்
மதலை மாமதந் துவன்றிய கதனுடைக்
கடதடக் கபோலத் தோரிட மருப்பிற்
கரண்டக உதரத்து முரண்தரு குழவிதன்
சேவடி யுகளம் அல்லது
யாவையும் இலமினி இருநிலத் திடையே.
1
804 நிலந்துளங்க மேருத் துளங்க நெடுவான்
தலந்துளங்கச் சப்பாணி கொட்டும் -கலந்துளங்கொள்
காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து
மாமாரி ஈன்ற மணி.
2
805 மணிசிந்து கங்கைதன் மானக் குருளையை வாள்அரக்கர்
அணிசிந்த வென்றஎம் ஐயர்க் கிளங்கன்றை அங்கரும்பின்
துணிசிந்த வாய்ப்பெய்த போதகத் தைத்தொடர்ந் தோர்பிறவிப்
பிணிசிந்து கார்முளை யைப்பிடித் தோர்க்கில்லை பேதுறவே.
3
806 பேதுறு தகையம் அல்லது தீதுறச்
செக்கர்க் குஞ்சிக் கருநிறத் தொக்கல் நாப்பண்
புக்கவண் இரும்பொறித் தடக்கையும்
முரணிய பெருந்தோட்
கொட்ட நாவி தேவிதன்
மட்டுகு தெரியல் அடிமணந் தனமே.
4
807 மேய கருமிடற்றர் வெள்ளெயிற்றர் திண்சேனை
ஓய மணியூசல் ஆடின்றே - பாய
மழைசெவிக்காற் றுந்திய வாளமர்க்கண் எந்தை
தழைசெவிக்காற் றுந்தத் தளர்ந்து.
5
808 உந்தத் தளரா வளைத்தனம் முன்னம்மின் ஓடைநெற்றிச்
சந்தத் தளரா ஒருதனித் தெவ்வர்தந் தாளிரியூர்
விந்தத் தளரா மருங்கிற் கிளிபெற்ற வேழக்கன்றின்
மந்தத் தளரா மலர்ச்சர ணங்கள் வழுத்துமின்னே.
6
809 மின்னெடுங் கொண்டல் அந்நெடு முழக்கத்து
ஓவற விளங்கிய துளைக்கைக் கடவுளை
யாம்மிக வழுத்துவ தெவனோ அவனேல்
பிறந்த திவ் வுலகின் பெருமூ தாதை
உரந்தரு சிரமரிந் தவற்கே வரைந்தது
மேருச் சிமையத்து மீமிசை
வாரிச் செல்வன் மகள்மகன் மொழியே.
7
810 மொழியின் மறைமுதலே முந்நயனத் தேறே
கழிய வருபொருளே கண்ணே -தெழிய
கலாலயனே எங்கள் கணபதியே நின்னை
அலாதையனே சூழாதென் அன்பு.
8
811 அன்பு தவச்சுற்று காரழல் கொண்டெயில் மூன்றெரிய
வன்புத வத்துந்தை மாட்டுகின் றாம்மதஞ் சூழ்மருப்பிற்
கன்பு தவக்கரத் தாளமிட் டோடிக் கடுநடையிட்
டின்பு தவச்சென்று நீயன்று காத்த தியம்புகவே.
9
812 கவவுமணிக் கேடகக் கங்கணக் கரவணா
அறைகழல் அவுணரொடு பொருத ஞான்றுநீள்
புழைக்கரம் உயிர்த்த அழற்பேர் ஊதை
விரைநனி கீறி மூரி
அஞ்சேறு புலர்த்தும் என்பர்
மஞ்சேறு கயிலை மலைகிழ வோயே.
10
813 மலைசூழ்ந் திழிகின்ற மாசுணப்பொற் பாறை
தலைசூழ்ந்து தானினைப்ப தொக்கும் - கலைசூழ்
திரண்டகங்கொள் பேரறிவன் திண்வயிற்றின் உம்பர்க்
கரண்டகங்கொள் காலுயிர்க்குங் கை.
11
814 காலது கையது கண்ணது தீயது கார்மதநீர்
மேலது கீழது நூலது வெற்பது பொற்பமைதீம்
பாலது தேனது தானது மென்மொழிப் பாவைமுப்பூண்
வேலது வாளது நான்மறைக் கீன்ற விடுசுடர்க்கே.
12
815 சுடர்ப்பிழம்பு தழைத்த அழற்றனி நெடுவேல்
சேய்மூ வுலகம் வலம்வர வேயக்
கொன்றையம் படலை துன்றுசடைக் கிடந்த
ஓங்கிருந் தாதையை வளாஅய் மாங்கனி
அள்ளல் தீஞ்சுவை அருந்திய
வள்ளற் கிங்கென் மனங்கனிந் திடுமே.
13
816 இக்கயங்கொள் மூவலயஞ் சூழேழ் தடவரைகள்
திக்கயங்கள் பேர்ந்தாடச் செங்கீரை - புக்கியங்கு
தேனாட வண்டாடச் செங்கீரை ஆடின்றே
வானாடன் பெற்ற வரை.
14
817 பெற்றமெல் லோதி சிலம்பின் மகள்பெறப் பிச்சுகந்த
மற்றவள் பிச்சன் மயங்கன்முன் னோன்பின் னிணைமைமிகக்
கற்றவன் ஐயன் புறங்காட் டிடைநடம் ஆட்டுகந்தோ
செற்றவெண் தந்தத் தவன்நம்மை ஆட்கொண்டு செய்தனவே.
15
818 செய்தரு பொலம்படை மொய்தரு பரூஉக்குருளை
வெள்ளெயிறு பொதிந்த வள்ளுகிர்த் திரள்வாய்ப்
பெருந்திரட் புழைக்கை
மண்முழை வழங்கும் திண்முரண் ஏற்றின்
பனையடர்ப் பாகன் றன திணையடி
நெடும்பொற் சரணம் ஏத்த
இடும்பைப் பௌவம் இனிநீங் கலமே.
16
819 அலங்கல் மணிகனகம் உந்தி அருவி
விலங்கல் மிசைஇழிவ தொக்கும் - பலங்கனிகள்
உண்டளைந்த கோன்மகுடத் தொண்கடுக்கைத் தாதளைந்து
வண்டணைந்து சோரும் மதம்.
17
820 மதந்தந்த மென்மொழி மாமலை யாட்டி மடங்கல்கொன்ற
மதந்தந்த முக்கண் ணரற்குமுன் ஈன்றவம் மாமலைபோல்
மதந்தந்த கும்பக் குழவிமந் தாரப்பொன் னாட்டிருந்து
மதந்தந்த செம்மலன் றோவையம் உய்ய வளர்கின்றதே.
18
821 வளர்தரு கவட்டின் கிளரொளிக் கற்பகப்
பொதும்பர்த் தும்பி ஒழிகின் றோச்சும்
பாரிடைக் குறுநடைத் தோடி ஞாங்கர்
இட்ட மாங்கனி
முழுவதும் விழுங்கிய முளைப்பனைத் தடக்கை
எந்தை அல்லது மற்று யாவுள
சிந்தை செய்யும் தேவதை நமக்கே.
19
822 கேளுற்றி யான்தளர ஒட்டுமே கிம்புரிப்பூண்
வாளுற்ற கேயூர வாளரக்கர் - தோளுற்
றறுத்தெறிந்து கொன்றழித்த அங்கயங்கண் மீண்டே
இறுத்தெறிந்து கொன்றழித்த ஏறு.
20
823 ஏறு தழீஇயவெம் புத்தேள் மருகஎங் குந்தவள
நீறு தழீஇயஎண் தோளவன் செல்வவண் டுண்ணநெக்க
ஆறு தழீஇய கரதலத் தையநின் றன்னைஅல்லால்
வேறு தழீஇத்தொழு மோவணங் காத வியன்சிரமே.
21
824 சிரமே, விசும்புபோத உயரி இரண்டசும்பு பொழியும்மே
கரமே, வரைத்திரண் முரணிய விரைத்து விழும்மே
புயமே, திசைவிளிம்பு கிழியச் சென்று செறிக்கும்மே
அடியே, இடுந்தொறும் இவ்வுலகம் பெயரும்மே
ஆயினும், அஞ்சுடர்ப் பிழம்பு தழீஇ
நெஞ்சகத் தொடுங்குமோ நெடும்பணைச் சூரே.
22
825 சூர்தந்த பொற்குவட்டின் சூளிகையின் வானயிர்த்து
வார்தந் தெழுமதியம் மன்னுமே - சீர்தந்த
மாமதலை வான்மதியங் கொம்பு வயிறுதித்த
கோமதலை வாண்மதியங் கொம்பு.
23
(பாசுரங்கள் 24-30 கிடைக்கப் பெறவில்லை)

திருச்சிற்றம்பலம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்