கொல்லிமலைக் குள்ளன்
சுட்டி கதைகள்
Back
கொல்லிமலைக் குள்ளன்
கவிஞர் பெரியசாமித்தூரன்
KOLLIMALAIK KULLAN
Subject : Novel for Children
Author : Periyasamy Thooran
Publishers : PALANAPPA BROS.
Madras - 14, Tiruchi - 2, Salem - 1 Coimbatore - 1, Madurai - 1, Erode - 1
Printers : ASIAN PRINTERS
14, Peters Road,
Madras - 600 014
Price : Rs. 5-50
First Edition : 14th November, 1973 (Children's Day)
Third Edition : 1983
உள்ளடக்கம்
வணக்கம்
1.கொல்லிமலைக் குள்ளன்
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
வணக்கம்
கரும்பு இனிக்கும்; கற்கண்டு சுவைக்கும் என்று யாரேனும் சொன்னால் அதில் புதுமை ஒன்றுமில்லை, அல்லவா? அதே போல், குழந்தை எழுத்தாளர் திரு. பெ. தூரன் அவர்களின் நாவலின் சிறப்பைப்பற்றிச் சொன்னால் அது ஒன்றும் புதிய செய்தி அல்லவே!
குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ற இனிய நடையில் எளிமையான சொற்களில், படிக்கப் படிக்கத் தெவிட்டாத வண்ணம், சுவை குன்றாமல் கதை சொல்வதில் வல்லவரான திரு. தூரன் அவர்கள், தமிழ்நாட்டுக் குழந்தைச் செல்வங்களுக்கு ஆக்கி அளித்திருக்கும் அருமையான நாவல் “கொல்லிமலைக் குள்ளன்.”
இதனைக் “குழந்தைகள் தின வெளியீடாக”க் கொண்டு வருவதில் நாங்கள் மிகுந்த பெருமிதம் அடைகிறோம். வழக்கம் போல் எங்கள் வெளியீடுகளை வாங்கி ஆதரவு நல்கும் தமிழ்ப்பெருமக்கள், இந்நூலையும் தங்கள் குழந்தைகட்கு வாங்கிக் கொடுத்து. அவர்கள் வல்லவர்களாக, நல்லவர்களாக வளர உதவ வேண்டுகிறோம்.
பழனியப்பா பிரதர்ஸ்
1.கொல்லிமலைக் குள்ளன்
"அந்தப் பஞ்சாப்காரர் எத்தனை வேகமாக நீந்தினார் பார்த்தாயா ? நீச்சல் போட்டிக்குச் சரியான ஆள்" என்றான் தங்கமணி.
"பனை மரத்திலே பாதி இருந்தால் நீகூட அப்படி நீந்தலாம்" என்றான் சுந்தரம்.
"போடா, உனக்கு எப்பொழுதும் கேலிதான். அந்த சிங் ரொம்ப உயரந்தான். இத்தனை உயரமான ஆளை நம்ம பக்கத்தில் கண்டு பிடிப்பது கடினம், நீச்சல் குளத்திலே மேல் தட்டிலிருந்து அவர் குதிக்கும்போது பார்க்க வேடிக்கையாக இருந்தது."
"மரீனா நீச்சல் குளத்தையே ஒரு கலக்குக் கலக்கி விட்டார்" என்று மேலும் என்னவோ சொல்லச் சுந்தரம் வாயெடுத்தான். அதற்குள்ளே கண்ணகி தொடங்கிவிட்டாள். "எனக்குத்தான் யாருமே நீந்தக் கற்றுக் கொடுப்பதில்லை போன கோடை விடுமுறையிலிருந்து கேட்டுக் கேட்டு அலுத்துவிட்டது."
"அம்மாவிடம் முதலிலே நீ அனுமதி வாங்கு; பிறகு நான் கற்றுக் கொடுக்கிறேன்" என்றான் தங்கமணி.
"கண்ணகி, உனக்குத்தான் தண்ணீரைக் கண்டாலே சளிப் பிடிக்குமே! அத்தை நிச்சயம் அனுமதி கொடுக்கமாட்டார்கள். முதலில் நீ நீந்தப் பழகிக்கொள்; அப்புறம் தண்ணீரில் இறங்கலாம்" என்று நகைத்தான் சுந்தரம்.
"இந்த விடுமுறையிலே எங்காவது ஆற்றுப்பக்கம் போனால் நன்றாக இருக்கும். ஆற்று மணலிலே விளையாடுவதும், ஆற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்துவதும் ஒரு குதூகலமாக இருக்கும்" என்று தங்கமணி தனது விருப்பத்தை தெரிவித்தான்.
மற்ற இருவரும் உற்சாகமாக அதை ஆமோதித்தார்கள் "எனக்குக்கூட ஒவ்வொரு விடுமுறையிலும் சென்னைக்கே வந்து அலுத்துப்போய்விட்டது. மதுரையை விட்டால் சென்னை; சென்னையை விட்டால் மதுரை. எங்காவது ஆற்றுப் பக்கத்திலே ஒரு கிராமத்திற்குப் போய்க் கொஞ்ச நாள் தங்கி வந்தால் நன்றாக இருக்கும். உன்னுடைய ஜின்காவிற்கும் மரங்களில் ஏறி விளையாடுவதற்கு ஒரு நல்ல சமயம் கிடைக்கும்.
"ஆமாம், அண்ணா! அதுதான் எனக்கும் ஆசையா இருக்கிறது. ஆனால், அப்பா என்ன சொல்லுவாரோ?" என்றாள் கண்ணகி.
"கண்ணகி, கிராமத்துப் புளியந்தோப்பிலே இரட்டைவால் பேயிருக்கும். தெரியுமா ?" --இப்படிச் சுந்தரம் பேயை பற்றிப் பேசத் தொடங்கினான்.
"பேயா! ஐயோ, நான் வரமாட்டேன்."
"இல்லை கண்ணகி, இவன் தான் இரட்டைவால் பேய் வேறே பேயெல்லாம் கிடையாது. அதெல்லாம் கட்டுக்கதை பயப்படாதே" என்று தங்கமணி தன் தங்கைக்குத் தைரியம் கூறினான்.
"மாமா வந்தவுடன் கேட்டுப் பார்க்கலாம்." சுந்தரம் இப்பொழுது தனது கேலியை மறந்துவிட்டான்.
"அப்பாவுக்கு எப்பவும் வேலை தான். வேலையை விட்டால் நாவல் படிப்பு" என்றான் தங்கமணி.
"அதிலும் துப்பறியும் கதை என்றால் மாமாவுக்குச் சோறுகூட வேண்டாம்." சுந்தரம் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போது. "அதோ, அப்பா வருகிறார்" என்று கண்ணகி மகிழ்ச்சியோடு கூவினாள்.
வடிவேல் ஆழ்ந்து எதையோ சிந்தித்துக்கொண்டு வீட்டிற்குள்ளே நுழைந்தார். திண்ணையிலே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மூவரையும் அவர் கவனிக்கவே இல்லை. அவர் முகத்தில் சிரிப்பே காணப்படாததைக் கண்டு, கண்ணகிக்கும் மற்ற இரண்டு சிறுவர்களுக்கும் அவரிடம் தங்கள் விருப்பத்தை உடனே தெரிவிக்கத் துணிச்சல் ஏற்படவில்லை.
வடிவேல் வழக்கம் போல இவர்கள் மூவரையும் உற்சாகமாகக் கூப்பிட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழையவில்லை. ஏதோ ஆழ்ந்த எண்ணத்தில் மூழ்கியவராக அவர் காணப்பட்டார். அதனால் இவர்கள் மூவரும் அவரைப் பின் தொடர்ந்து உள்ளே நுழையாமல் திண்ணையிலேயே தங்கி விட்டார்கள்.
அந்தச் சமயத்தில் சுந்தரத்திற்குத் திடீரென்று ஏதோ ஒன்று நினைவுக்கு வந்தது. “டேய் தங்கமணி, அந்த பஞ்சாப் காரர் நம்மிடம் சொன்னதை மறந்துவிட்டாயா? நம்மையெல்லாம் இன்றைக்குப் பொம்மைக்கூத்திற்கு அழைத்துக் கொண்டு போவதாகச் சொன்னாரே!" என்று சுந்தரம் நினைவு கூட்டினான்.
"போடா, அவர் எங்கே வரப்போகிறார்? முதலில் அவர் வந்து அப்பாவிடம் அனுமதி வாங்க வேண்டுமல்லவா?” என்று தங்கமணி சந்தேகத்தோடு சொன்னான்.
"எனக்கென்னவோ அவர் வருவார் என்று தான் தோன்றுகிறது. இல்லாவிட்டால் இந்த வீட்டு முகவரியை எதற்குக் கேட்கிறார்?"
"அவர் பேசியதைப் பார்த்தால் நமது வீட்டு முகவரி முன்னமேயே தெரிந்தவர் போல எனக்குப் பட்டது."
"சரி, உன் துப்பறியும் வேலையை ஆரம்பித்துவிட்டாயா? இன்னும் என்ன கண்டு பிடித்திருக்கிறாய்?
"அந்த சிங் தமிழ் பேசியது வேடிக்கையாக இருந்தது.”
இவ்வாறு தங்கமணியும் சுந்தரமும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த கண்ணகிக்கு மேலும் மௌனமாக இருக்க முடியவில்லை.
"சுந்தரம், யார் அந்த சிங்?" என்று அவள் கேட்டாள். "அவர் தான், அந்தப் பனைமரம்" என்றான் சுந்தரம்.
"அவர் ஒரு பஞ்சாப்காரர். பொம்மைக்கூத்து கோஷ்டி ஒன்றை இங்கே அழைத்து வந்திருக்கிறாராம். எழும்பூர் பொருட்காட்சி சாலை அரங்கத்திலே பொம்மைக்கூத்து நடக்கிறதாம். நமக்கெல்லாம் இலவசமாக அனுமதிச்சீட்டுக் கொடுப்பதாகச் சொன்னார்" என்று விளக்கினான் தங்கமணி.
"பொம்மைக்கூத்தா? எனக்கு ரொம்பப் பிடிக்கும் ; நானும் வரேன். அண்ணா " என்று கண்ணகி தன் ஆசையை வெளியிட்டாள்.
"அதோ, அவரே வந்துவிட்டார்" என்று கத்தினான் சுந்தரம்.
"அப்பா இருக்காங்கோ?" என்று கேட்டுக்கொண்டே அந்த நெட்டை மனிதர் வீட்டிற்குள்ளே நுழைந்தார். அவருடைய பெரிய தலைப்பாகையும், உடம்பெல்லாம் மறைக்கும் 'தொளதொள' ஜிப்பாவும் கால்சட்டையும் அவரை ஒரு பட்டாணியர் என்று நினைக்கும்படி செய்தது. ஆனால், நிறம் மட்டும் கொஞ்சம் கறுப்பு. இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரையில் அவர் நன்றாக மறைத்திருந்தார். சுந்தரம், கண்ணகி, தங்கமணி ஆகிய மூவரும் பின்னால் மெதுவாகச் செல்லத் தொடங்கினர். "ஜின்கா, வாடா! நீச்சல் குளத்திற்குக் கூட்டிக்கொண்டு போகவில்லை என்ற கோபம் இன்னும் உனக்குத் தீரவில்லையா? குளத்தில்தான் உன்னை விடமாட்டார்களே! பொம்மைக்கூத்துக்கு அழைத்துக்கொண்டு போகிறேன், வா” என்று கூப்பிட்டான் தங்கமணி.
அதுவரையிலும் அசையாமல் மௌனமாகத் திண்ணை மூலையில் படுத்திருந்த குரங்கு ஒன்று, தனது கோபத்தை மறந்துவிட்டு, ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து, தங்கமணியின் தோளில் ஏறிக்கொண்டது.
"கண்ணகி, 'ஜாடிமேலே குரங்கு' என்ற விடுகதை கேட்டிருக்கிறாயா? ஆனால், இங்கே குரங்குமேலே குரங்கு" என்று சுந்தரம் கேலி செய்துகொண்டே நடந்தான்.
தங்கமணிக்கும் கண்ணகிக்கும் தந்தையான வடிவேல் ஒரு தத்துவப் பேராசிரியர். சென்னையில் ஒரு கல்லூரியிலே பணி செய்தார். தங்கமணி பத்தாம் படிவத்திலும், கண்ணகி ஆறாம் படிவத்திலும் படித்தனர். சுந்தரம் வடிவேலுவின் தங்கை மகன் ; ஒன்பதாம் படிவத்தில் மதுரையில் படித்தான்.
அந்த பஞ்சாப்காரர் வடிவேலுடன் ஆங்கிலத்தில் பேசினார். தமது பெயர் வீர்சிங் என்றும், பொம்மைக்கூத்து கோஷ்டியோடு பஞ்சாபிலிருந்து சென்னைக்கு வந்திருப்பதாகவும், சிறுவர்களை மரீனா நீச்சல் குளத்தில் தற்செயலாகச் சந்தித்ததாகவும், அவர்களுக்கு இலவச அனுமதிச் சீட்டு அளித்துப் பொம்மைக்கூத்திற்கு அழைத்துச் செல்ல வடிவேலிடம் அனுமதி கேட்பதற்காக வந்திருப்பதாகவும் வினயமாகத் தெரிவித்துக்கொண்டார். வடிவேல் அவருக்கு ஏதோ சுருக்கமாகப் பதில் சொல்லி அனுப்பிவிட்டார். வீர்சிங் ஏமாற்றத்தோடு வெளியே நடந்தார்.
அவர் சென்றதும் வடிவேல் தங்கமணியைப் பார்த்து, “மணி, நீ எதற்காக அவரை இங்கு வரும்படி செய்தாய்?" என்று சற்று கடுமையாகவே கேட்டார்.
தங்கமணி பதில் சொல்வதற்கு முன்பாகவே சுந்தரம், "மாமா, நாங்கள் அவரை வரச்சொல்லவில்லை. அவரேதான் எங்களை அழைத்துப் போவதாகச் சொன்னார்" என்று உண்மையை விளக்கினான்.
"அவருக்கு எப்படி நமது வீடு இருக்குமிடம் தெரிந்தது?"
இந்தக் கேள்விக்குச் சிறுவர்களால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் கொஞ்ச நேரம் பேசாமல் நின்றார்கள்.
"பொம்மைக்கூத்தைப் பார்க்க ஆசையாக இருந்தால் நான் அழைத்துச் செல்லுகிறேன். இலவசமாக வேறொருவரிடம் எதையும் எதிர்பார்ப்பது நல்லதல்ல" என்று வடிவேல் அறிவுரை கூறினார். சிறுவர்கள் இருவரும் மௌனமாக வெவ்வேறு அறைக்குள் சென்றுவிட்டார்கள். தங்கமணியின் தோளிலிருந்து இறங்கி மேஜையின் மேல் உட்கார்ந்திருந்த ஜின்கா அவனை உற்றுப் பார்த்தது. அவன் அதைக் கூப்பிடாமலேயே சென்றுவிட்டான். ஜின்கா கொஞ்சம் நேரம் யோசனை செய்துவிட்டு, வடிவேலைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே தங்கமணி இருந்த அறைக்குள் நுழைந்தது. கண்ணகி மெதுவாகச் சமையல் அறைக்குள் நழுவிவிட்டாள்.
தங்கமணி ஒரு மூலையில் சோர்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தான். ஜின்கா அவன் கன்னத்தைத் தடவிக் கொடுத்து விட்டு, அவன் மடியில் பேசாமல் படுத்துக்கொண்டது.
நாய்க்குட்டி, முயற்குட்டி இப்படி ஏதாவது ஒன்றைத் தங்கமணி சிறுவயது முதற்கொண்டு பிரியமாக வளர்த்து வந்தான். அவன் தாயார் வள்ளிநாயகிக்கு இது சில சமயங்களில் தொந்தரவாக இருக்கும். இருந்தாலும் அவன் ஏதாவதொன்றைச் செல்லமாக வளர்ப்பதை விடவில்லை. ஒரு சமயம் அடையாற்றிலே பெரிய வெள்ளம் வந்தது. அதைப் பார்ப்பதற்காகத் தங்கமணி சென்றிருந்தான். அந்த வெள்ளத்திலே ஒரு குரங்குக்குட்டி அகப்பட்டுத் தத்தளித்து மிதந்து வந்து கொண்டிருந்தது. நல்ல வேளையாகத் தங்கமணி நிற்கும் இடத்திலே அது கரையோரமாக வரவே, அவன் இடுப்பளவு வெள்ளத்தில் இறங்கி, அதைக் காப்பாற்றி, வீட்டிற்கு எடுத்து வந்தான். அதுமுதல் தங்கமணி அந்தக் குரங்கு ஒன்றையே மிக அன்போடு வளர்க்கலானான். அது அவனுக்கு முன்னால் 'ஜிங் ஜிங்' என்று குதித்து விளையாடும். அதனால் அதற்கு ‘ஜின்கா' என்று அவன் பெயர் வைத்தான். அவன் சொல்லுவதையெல்லாம் கேட்டு அதன்படி நடக்கவும் அதைப் பழக்கி வைத்தான். ஜின்கா அவனிடத்தில் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தது. அவன்தானே அதன் உயிரைக் காப்பாற்றினான்? பள்ளிக்கூட நேரம் தவிர, அது மற்ற நேரங்களில் அவனோடேயே இருக்கும். இரவில் தூங்கும் போதும் அவனுடைய படுக்கையிலேயே படுத்திருக்கும்.
வடிவேல் தங்கமணியை ஏதோ கடிந்து சொல்லிவிட்டதாக அதற்குப் புலப்பட்டது, அதனால் அது இப்பொழுது தங்கமணிக்கு உற்சாகம் உண்டாக்க முயன்றது. இந்தச் சமயத்திலே தங்கமணியின் தங்கை கண்ணகி உள்ளே வந்து, "அண்ணா, அம்மா சாப்பிடக் கூப்பிடுகிறார்கள்" என்று தெரிவித்தாள். அவளுக்கும் பொம்மைக்கூத்திற்குப் போக முடியவில்லையே என்று ஏக்கந்தான். தங்கமணி எழுந்து தங்கையைப் பின்தொடர்ந்து சென்றான். ஜின்கா அவன் தோளின்மேல் ஏறிக்கொள்ள முயலாமல் மெதுவாகப் பக்கத்தில் நடந்து சென்றது.
சாப்பிடும்போது சிறுவர்கள் வழக்கத்திற்கு மாறாக மௌனம் சாதித்தார்கள். சுந்தரம் எப்பொழுதுமே நகைச்சுவையோடு பேசும் இயல்பு உடையவன். மேலும், அவனுக்கு மாமன் வீட்டிலே செல்லம் அதிகம். அவன் பெற்றோர்கள் மதுரையில் வாழ்ந்தனர். அங்கிருந்து கோடை விடுமுறைக்காகச் சென்னை வந்திருந்தான். அவன்கூட அன்றிரவு ஒன்றும் பேசாமல் உணவருந்திக்கொண்டிருந்தான். ஜின்கா தனது இயற்கையான சிறு குறும்புகளை விட்டுவிட்டுத் தட்டத்தில் அதற்கென்று தனியாக வைத்திருந்த பழத்தையும் வேர்க்கடலையுைம் தன் வாயில் போட்டுக் கன்னத்தில் அடக்கிக் கொண்டிருந்தது. கண்ணகியின் முகத்தில் புன்சிரிப்பைக்கூடக் காணமுடியவில்லை.
இவர்களுடைய சோர்வையும் ஏமாற்றத்தையும் வடிவேல் உணர்ந்துகொண்டார். "நாளைக்குப் பொம்மைக்கூத்திற்கு நான்கு டிக்கெட் வாங்கி, வருகிறேன். அம்மாவும் நீங்களும் போகலாம்" என்று அவர் கூறினார். சிறுவர்கள் முகத்தில் சிரிப்புப் பொங்க ஆரம்பித்துவிட்டது. "நீங்களும் வாங்கப்பா" என்று கண்ணகி கொஞ்சினாள்.
"நான் வர முடியாது, கண்ணகி. எனக்கு நிறைய வேலை இருக்கிறது" என்றார் வடிவேல்.
2
பொம்மைக்கூத்திற்குப் போனபோது வீர்சீங் இவர்களை அன்போடு வரவேற்று, வசதியான இடத்திலே அமரச் செய்தார். “அப்பா வரமாட்டாங்கோ?” என்று அவர் கொச்சைத் தமிழிலே கேட்டார். "அப்பாவுக்கு இந்தத் தேர்விலே மாணவர்கள் எழுதிய விடைகளைத் திருத்தும் வேலை இருக்கிறது என்றாள் கண்ணகி. வீர்சிங் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, பொம்மைக்கூத்தைத் தொடங்குவதற்குப் போய்விட்டார்.
"கண்ணகி, அப்பா நம்மிடம் சொல்லியிருப்பதை மறந்து விட்டாயா? அவர் செய்கின்ற வேலையை யாரிடமும் சொல்லக் கூடாது" என்று தங்கமணி கடிந்துகொண்டான்.
"இவரிடம் சொன்னால் என்ன? இவர் நம்ம ஊர்க்காரர் அல்லவே!" என்றாள் கண்ணகி.
"இதே பழக்கந்தான் எல்லாரிடமும் வரும். அதனால் தான் சொல்லக்கூடாது" என்று தங்கமணி எச்சரிக்கை செய்தான்.
இதுவரை சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரம், ஜின்காவின் முதுகிலே தட்டிக்கொடுத்து. “ஜின்கா, அதோ மேடையிலே பார், உன்னைப்போல ஒரு பொம்மைக்குரங்கு ஆட்டம் போட வந்திருக்கிறது என்று உற்சாகமாகக் கூவினான்.
பேச்சை விட்டுவிட்டு எல்லாரும் பொம்மைக்கூத்தின் தொடக்கக் காட்சியிலேயே கவனம் செலுத்தினார்கள். ஜின்காவிற்கு ஒரே உற்சாகம். பொம்மைக்குரங்கு ஆடுவதையும், மற்ற பொம்மைகள் ஆடுவதையும் பார்த்து அதுவும் ஆடத் தொடங்கிவிட்டது.
எல்லாருக்கும் பொம்மைக்கூத்து மிகவும் பிடித்திருந்தது. வீட்டிற்குத் திரும்பிய பிறகும் உறங்கச் செல்லாமல் மூன்று பேரும் அந்தக் கூத்தைப் பற்றியே உற்சாகத்தோடு வெகு நேரம்வரை பேசிக்கொண்டிருந்தார்கள். ஜின்கா அந்த பொம்மைகளின் ஆட்டங்களையெல்லாம் ஆடிக் காண்பித்துக் கொண்டிருந்தது.
பொம்மைக்கூத்தைப்பற்றிப் பேசுவதிலும், ஜின்கா ஆடுவதைக் கண்டு களிப்பதிலும் இரண்டு நாள்கள் இன்பமாகக் கழிந்தன.
மூன்றாம் நாள் காலையிலே வடிவேல் அன்றையச் செய்தித்தாளைப் புரட்டிக்கொண்டிருந்தார். சென்னைப் பொருட்காட்சி சாலைக்கு அருகிலிருக்கும் கலைக்கூடத்திலிருந்து வெண்கலச் சிலையொன்று இரவிலே களவு போய் விட்டதாம். திருடன் எப்படி உள்ளே நுழைந்தான், எப்படிக் களவாடினான் என்று ஒரு விவரமும் தெரிந்துகொள்ள முடிய வில்லையாம். அது போலீஸ் இலாகாவிற்கே பெரிய திகைப்பை உண்டாக்கிவிட்டது என்று கொட்டை எழுத்தில் காணப்பட்டது.
சில மாதங்களாக இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலே கோயில்களிலிருந்தும் கலைக்கூடங்களிலிருந்தும் இவ்வாறு சிலைகள் திருட்டுப் போய்க்கொண்டிருந்தன. இந்தச் சிலைகளை எப்படியோ அமெரிக்கா முதலிய வெளிநாடுகளுக்குக் கடத்திச் சென்று, அங்கு நல்ல விலைக்கு யாரோ விற்கிறார்கள் என்பது மட்டும் தெரிந்திருந்தது.
இந்தியாவின் கலைப்பொருள்களுக்கு உலகத்திலுள்ள எந்த நாட்டிலும் மதிப்புண்டு. அமெரிக்கர்கள் ஏராளமான பொருள் கொடுத்து நமது நாட்டுப் பழங்காலச் சிற்பங்களையும் சிலைகளையும் செப்புப் பதுமைகளையும் வாங்க ஆவலோடிருக்கிறார்கள். சென்னைக் கலைக்கூடத்தில் இப்பொழுது களவு போன சிலையோ, உலகப்புகழ் பெற்ற நடராஜர் சிலையாகும். உலகிலேயே அதற்கு இணையான சிலை இல்லையென்றும் கூறுவார்கள். அதற்கு விலையே மதிக்க முடியாது. அது இப்பொழுது எப்படியோ மாயமாக மறைந்துபோய்விட்டது. போலீஸ் நாய்களாலும் திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மிகத் திறமையாக இந்தத் திருட்டு நடந்திருக்கிறது. இப்படித் திருடக்கூடியவன் கொல்லிமலைக் குள்ளன் ஒருவனே என்று பொதுவாக அதிகாரிகளுக்குத் தெரியும். ஆனால், அவன் எங்கிருக்கிறான், எப்படி அவனைக் கண்டுபிடிப்பது, ஆளைக் கண்டுபிடித்தாலும் அவன்தான் திருடன் என்று எப்படி
ஐயத்திற்கிடமின்றிக் காட்டுவது என்பன போன்ற கேள்விகளுக்கு யாராலும் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை.
வடிவேல் கல்லூரியிலிருந்து வீடு திரும்பும்போது கண்ணகியும் சிறுவர்கள் இரண்டு பேரும் பாதி உறக்கத்தில் இருந்தார்கள். அவர்களைப் பார்த்து அவர், “நாளைக்குக் காலையிலே நாம் வஞ்சியூர் என்ற கிராமத்திற்குப் போகலாம். அங்கே அங்காளம்மன் திருவிழா நடந்துகொண்டிருக்கிறது” என்றார் வடிவேல்.
"கிராமத்துக்கா? நாளைக்கே போகலாமா?" என்று உற்சாகமாகத் தங்கமணியும் சுந்தரமும் கூவினார்கள். "இப்பவே போகலாம், அப்பா" என்று கத்தினாள் கண்ணகி. “எத்தனை நாளைக்குத் திருவிழா? அங்கேயே இந்த விடுமுறை முழுவதும் இருக்கலாமா?" என்று கேட்டான் சுந்தரம், "அப்பா, ஜின்காவையும் அழைத்து வருகிறேன்" என்றான் தங்கமணி. இவர்கள் போடுகின்ற சத்தத்தைக் கேட்டு வள்ளிநாயகி, அவர்கள் குதூகலத்திற்குக் காரணம் என்ன என்று அறிந்து கொள்ள அங்கே வந்து சேர்ந்தாள். எப்பொழுது புறப்படுவது, என்ன சாமான்கள் எல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் வடிவேல் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். வள்ளி நாயகியைக் கண்டதும், விடைத்தாள்களையெல்லாம் நேற்று இரவே திருத்தி முடிந்தது. எனக்குக் கொஞ்சம் ஓய்வு வேண்டும். குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்" என்று அவர் சொன்னார்.
“எத்தனை நாளைக்குத் திருவிழா?” இது வள்ளி நாயகியின் கேள்வி.
"திருவிழா பத்து நாள்கள் நடக்கும். வஞ்சியூர் என்ற கிராமம் கொல்லிமலைக்கு அருகிலே இருக்கிறது. அங்கேயே பத்து நாள்களும் தங்குவோம். இங்கிருந்தால் சென்ற ஆண்டைப் போல இப்பவும் மார்க்குக்கு அலையும் உத்தமர்கள் தொல்லை இருக்கும். நாம் போகும் இடமும் யாருக்கும் தெரியக்கூடாது" என்று தம் மனைவிக்கு அவர் விளக்கம் கூறினார்.
எதிர்பாராமல் இந்தப் பயணம் ஏற்பட்டதைக் கண்டு எல்லாருக்கும் பெருமகிழ்ச்சி. "டேய் ஜின்கா, உன்னுடைய குரங்குவேலையை அங்கே காண்பிக்கலாம். மரங்கள் ஏராளமாக இருக்கும்" என்று தட்டிக் கொடுத்தான் சுந்தரம். இரவில் அவர்களுக்கு உறக்கமே வரவில்லை. "அண்ணா , அங்கே ஆறு இருக்குமா? அதிலே எனக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பாயா?" என்று கேட்டாள் கண்ணகி. "நான் வட்டத் தோணியிலே துடுப்புப் போடப் போகிறேன்" என்று சுந்தரம், பரிசல் தள்ளத் தெரிந்தவன் போலக் கூறினான். "நான் அந்தக் குள்ளனைக் கண்டுபிடிக்கப் போகிறேன்" என்று தங்கமணி துப்பறியும் வேலையில் தனக்குள்ள ஆர்வத்தைக் காட்டினான். "மாமா, துப்பறியும் நாவல்தான் படிக்கிறார். நீ, துப்பறியும் சாம்புவே ஆகிவிட்டாய்" என்று கேலி செய்தான் சுந்தரம். இவர்களுடைய உற்சாகத்தைக் கண்டு ஜின்கா, எதையோ புரிந்துகொண்டது போலப் படுக்கையின் மேல் ஏறி 'ஜிங்ஜிங்' என்று குதிக்கத் தொடங்கிவிட்டது. வள்ளிநாயகி எழுந்து வந்து, “இப்படித் தூங்காமல் ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருந்தால், காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது. புறப்படுவதற்கு நேரமாகிவிடும்" என்று எச்சரிக்காவிட்டால் அவர்கள் தூங்கியேயிருக்க மாட்டார்கள். அத்தனை மகிழ்ச்சி அவர்களுக்கு.
3
அடுத்த நாள் காலையில் தத்துவப் பேராசிரியர் வடிவேலின் மாளிகையில் ஒரே பரபரப்பாக இருந்தது. வஞ்சியூர் அங்காளம்மன் திருவிழாவிற்குப் புறப்படுவதற்காக அவசரம் அவசரமாக ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எல்லாரும் பறந்து பறந்து ஒவ்வொரு வேலையையும் கவனித்தார்கள். பத்து நாள்களுக்கு வேண்டிய துணிமணிகளையும் மற்றச் சாமான்களையும் பெட்டிகளில் அடுக்கிவைப்பதில் தங்கமணி, சுந்தரம். கண்ணகி ஆகிய மூவரும் ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். ஜின்கா தங்கமணிக்குச் சட்டை, சீப்பு முதலியவைகளை ஓடிஓடி எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தது. கண்ணகி ஒரு சிறு கைப்பெட்டிக்குள்ளே தனக்கு வேண்டிய குங்குமம், பவுடர் முதலியவைகளை வைத்திருந்தாள். அந்தப் பெட்டியைத் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு ஜின்கா காரை நோக்கி ஓடிற்று. பெட்டியைக் காரில் வைத்துவிட்டு வருவதுதான் அதன் நோக்கம். ஆனால், அது போன அவசரத்தில் கைப்பெட்டி தானாகவே திறந்து, அதிலிருந்த பவுடர் டப்பா அதன் தலைமேல் விழுந்தது. ஜின்காவின் உடம்பு முழுவதும் டப்பாவிலிருந்த வாசனைப்பொடி சிதறி விழவே. அந்தக் குரங்கு விநோதமாகக் காட்சி அளித்தது. “அண்ணா , என் பவுடர் எல்லாம் போச்சு” என்று கண்ணகி அழாத குறையாகக் கூவினாள்.
"ஜின்காவிற்குத்தான் பவுடர் ஜோராக இருக்கிறது. இனிமேல் உனக்கு அது வேண்டாம்" என்று சுந்தரம் நகைத்தான்.
"போகும் வழியிலே வாங்கிக்கொள்ளலாம், கவலைப் படாதே” என்று தங்கமணி ஆறுதல் கூறிவிட்டு, டேய் சுந்தரம், உன் சாமான்களையெல்லாம் எடுத்துக்கொண்டாயா? உன் பேனாக்கத்தி எங்கே? அதை மறந்துவிட்டாயா? என்று சுந்தரத்தைப் பார்த்துக் கேட்டான்.
"அதை மறப்பேனா? நீ ஜின்காவை மறந்தாலும் நான் என் பேனாக்கத்தியை மறக்கமாட்டேன்" என்று சுந்தரம் தன் இடுப்பில் தொங்கிக்கொண்டிருந்த கத்தியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டு பதில் கூறினான்.
வஞ்சியூரில் தங்கியிருக்கும் நாள்களில் சமையல் செய்வதற்கு வேண்டிய உணவுப்பொருள்களையும், பாத்திரங்களையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்த வள்ளிநாயகி, "கண்ணகி, எல்லாரும் வாருங்கள். அப்பாவையும் கூப்பிடு. பலகாரம் சாப்பிட்டுவிட்டு விரைவில் புறப்படலாம்" என்று கூறினாள்.
உணவு முடிந்ததும் எல்லாரும் காரில் ஏறிக்கொண்டார்கள். சமையலுக்கு உதவியாக ஒரு சிறுவனும் வந்தான். பேராசிரியர் வடிவேல் காரை ஓட்டிக்கொண்டு சென்றார். சில வேளைகளில் அவருக்கு ஓய்வு தரும் பொருட்டு வள்ளிநாயகி கார் ஓட்டினாள்.
வழி நெடுகிலும் பல சிற்றூர்களையும் நாட்டுப்புறக் காட்சி களையும் கண்டு களித்துக்கொண்டே அவர்கள் அன்று மாலை பொழுது சாயும் நேரத்திற்கு வஞ்சியூர் போய்ச் சேர்ந்தனர்.
ஒரு சத்திரத்தில் வடிவேல் தங்குவதற்கு வசதியாக இடம் ஏற்பாடு செய்துகொண்டார். சமையல் செய்வதற்கும், சிறுவர்கள் தனியாக இருந்து இளைப்பாறுவதற்கும் அதில் சிறு அறைகள் இருந்தன.
வெளியிலே எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். அங்காளம்மன் திருவிழாவைப் பார்க்க வந்த மக்கள் வீதிகளிலும் திருவிழாக் கடைகளிலும் கோயில் பக்கத்திலும் திரண்டிருந்தார்கள். அன்றிரவு கோயிலுக்கு முன்னால் ஒயிலாட்டம் என்னும் நடனம் நடக்குமென்று தெரிந்தது. அதைப் போய்ப் பார்ப்பதென்று வடிவேலும் மற்றவர்களும் திட்டமிட்டார்கள்.
வள்ளி திருமணக் கதையையொட்டி ஒயிலாட்டம் இரவெல்லாம் நடந்தது. வெவ்வேறு வகையான சந்தங்களில் பாடிக் கொண்டு, எதிரெதிராக இரண்டு வரிசைகளில் இளைஞர்கள் நின்று பல விதமாக ஆடுவதைப் பார்ப்பதில் எல்லோருக்கும் முதலில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், நாள் முழுவதும் பயணம் செய்த அலுப்பினால் கண்ணகி முதலில் தூங்கி விழத் தொடங்கினாள். சிறுவர்களுக்கும் களைப்பேற்பட்டு விட்டது. ஜின்கா கொஞ்ச நேரம் கூடவே ஆடிக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு தங்கமணியின் மடியில் வந்து படுத்துக் கொண்டது. அதனால் வள்ளிநாயகி எல்லாரையும் அழைத்துக் கொண்டு சத்திரத்திற்குப் புறப்பட்டாள். வடிவேலுவும் பின் தொடர்ந்தார்.
4
மறுநாள் காலையில் எல்லாரும் அங்காளம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவந்தார்கள். பிறகு, காலை உணவை அதிவிரைவில் உண்டதும் தங்கமணி, சுந்தரம் ஆகிய இருவரும் கண்ணகியை அழைத்துக்கொண்டு திருவிழாக் கடைவீதிகளையும் மற்ற வேடிக்கைகளையும் பார்க்கச் சென்றார்கள். ஜின்கா தங்கமணி தோளின் மேல் அமர்ந்து கொண்டு கூட்டத்தில் வந்ததே அங்கு கூடியிருந்த மக்களுக்கு ஒரு விநோதக் காட்சியாக இருந்தது. அப்படி இவர்கள் சென்றுகொண்டிருந்த சமயத்தில்தான் வீர்சிங்கை எதிர்பாராத விதமாகச் சந்தித்தார்கள். வீர்சிங்கும் அவர்களைப் பார்த்துக் கொஞ்ச நேரம் திகைத்து நின்றுவிட்டார். பிறகு அவர் "தங்கமணி, நீங்க எங்கே வந்தாங்கோ? அப்பா எங்கே?" என்று கேட்டார். தங்கமணி உடனே, “நாங்கள் திருவிழாப் பார்க்க வந்தோம்" என்று பதில் சொன்னான். "கோடை விடுமுறையாதலால் எங்காவது கிராமத்துக்கு அழைத்துக்கொண்டு போகும்படி நான்தான் மாமாவைத் தொந்தரவு செய்தேன். இங்கு திருவிழா நடப்பதைக் கேள்விப் பட்டு எங்களை இங்கே அழைத்து வந்தார்" என்று கூறினான் சுந்தரம். "அச்சா அச்சா, உங்களுக்கு ஆத்திலே படகு சவாரி பண்றான் இல்லை? ரொம்ப ஜோர், வாங்கோ" என்றார் வீர்சிங்.
“அண்ணா, எனக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டும்" என்று கண்ணகி தன் ஆவலை மீண்டும் வெளியிட்டாள். தங்கமணியும் சுந்தரமும் ஆற்றிலே நீந்துவதற்குத் துடித்துக் கொண்டிருந்தார்கள். “இங்கே ஆறு எந்தப் பக்கத்திலே இருக்கிறது?" என்று இரண்டு பேரும் பரபரப்போடு கேட்டார்கள்.
“நம்மளுக்குத் தெரியும், வாங்கோ. ரொம்ப ஜோரான ஆறு. அதில் நீச்சல் போடலாம். படகு சவாரி செய்ராங்கோ. வாங்க, உங்க அப்பாவைப் பார்க்கலாம்" என்று கூறினார் வீர்சிங். சிறுவர்கள் அவரை ஆவலோடு சத்திரத்தில் இருந்த வடிவேலிடம் அழைத்துச் சென்றார்கள்.
வடிவேலிடம் வீர்சிங் ஆங்கிலத்திலே பேசினார். சென்னையிலே பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சேலத்திற்கு வந்திருப்பதாகவும், அங்கு வந்த பிறகுதான் வஞ்சியூரில் நடக்கும் திருவிழாவிலே ஒயிலாட்டம் மிகச்சிறப்பாக நடைபெறும் என்று கேள்விப்பட்டதாகவும், அதைப் பார்ப்பதற்காக அவர் தம் குழுவைச் சேர்ந்த சிலரோடு முதல் நாள் இரவு அங்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
"ஒயிலாட்டம் மிகக் கவர்ச்சியாக இருக்கிறது. இன்னும் சில நாள்கள் இங்கே தங்கி அந்த ஆட்டத்தைப் பார்க்கப் போகிறோம். முடியுமானால், இந்த ஒயிலாட்டக் கோஷ்டியை எங்கள் பஞ்சாபுக்கு அழைத்துச் செல்லலாமென்று இருக்கிறேன்" என்று அவர் ஆங்கிலத்திலே தாம் அங்கு வந்துள்ள காரணத்தைத் தெரிவித்தார்.
"நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்? இங்கே வசதியாக உங்களுக்குத் தங்க இடம் கிடைத்ததா? புதிய இடமாயிற்றே!" என்று வடிவேலும் ஆங்கிலத்திலேயே கேட்டார்.
சேலத்திலே உத்தியோகஸ்தர் ஒருவர் எங்களுக்குக் கடிதம் கொடுத்தார். அதனால் ஆற்றோரத்திலே தனியாக ஒரு தோட்டத்து வீட்டில் எங்களுக்குத் தங்க இடம் கிடைத்தது. குழந்தைகளெல்லாம் ஆற்றில் நீந்தவும், படகு சவாரி செய்யவும் ஆவலோடு இருக்கிறார்கள். நான் படகெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறேன். நீங்கள் அனுமதி தந்தால் ஒரு மணி நேரத்தில் இவர்களைத் திருப்பி அழைத்து வந்துவிடுகிறேன்” என்றார் வீர்சிங்.
"ஆமாம், மாமா, இந்த வீர்சிங் ரொம்ப நன்றாக நீந்துவார். நாங்கள் போகட்டுமா?" என்று கேட்டான் சுந்தரம்.
"எனக்கு நீந்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அவரிடத்திலே அதற்கு வேண்டிய ரப்பர் வளையம் இருக்கிறதாம். நானும் போகிறேன், அப்பா என்று கெஞ்சினாள் கண்ணகி.
"ஒன்றும் கவலை வேண்டாம். நான் எல்லாம் கவனித்துக் கொள்கிறேன்" என்று வீர்சிங் ஆங்கிலத்தில் தெரிவித்தார்.
குழந்தைகளின் ஆவலைக் குலைக்க வடிவேல் விரும்ப வில்லை. அதனால் அவர் இசைந்தார். எல்லாரும் உற்சாகத்தோடு நீந்துவதற்கு வேண்டிய ஆயத்தங்களோடு ஆற்றை நோக்கிப் புறப்பட்டார்கள். ஜின்காவிற்கு உற்சாகம் தாங்கவே முடியவில்லை. அது 'ஜிங்ஜிங்' என்று குதித்துக்கொண்டும் தங்கமணியைச் சுற்றி ஆடிக்கொண்டும் சென்றது.
வஞ்சியூர்ப் பக்கமாக ஓடுகின்ற அந்த ஆற்றுக்குக் கருவேட்டாறு என்று பெயர். ஆனால், பொதுவாக அதை வஞ்சியாறு என்றே கூறுவார்கள். அந்த ஆற்றில் தண்ணீர் தெளிவாக ஓடிற்று. அந்த ஆறு தூரத்திலே உயர்ந்து தோன்றும் இரண்டு மலைகளுக்கு நடுவே புகுந்து போவது போல் காட்சி அளித்தது. அந்தக் காட்சி பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தது. அந்த ஆற்று நீரிலே சுமார் இடுப்பளவு ஆழத்திற்குச் சென்று, ஆற்றின் ஓட்டத்தை எதிர்த்து நீந்துவது தங்கமணிக்கும் சுந்தரத்திற்கும் ஒரு புதிய இன்ப அனுபவம். இவ்வாறு அவர்கள் தங்கள் கைகள் சலிக்குமட்டும் ஆற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்தினார்கள். உற்சாகத்தினால் அவர்கள் அதிக ஆழமான பகுதிக்குப் போய்விடாமல் வீர்சிங் பார்த்துக்கொண்டார். அதே சமயத்தில் கண்ணகிக்கு நீச்சலும் பழக்கிக்கொண்டிருந்தார். காற்று அடித்த ரப்பர் வளையத்தை இடுப்பிலே கட்டிக்கொண்டு நீந்துவது கண்ணகிக்கு எளிதாக இருந்தது. கண்ணகி குதூகலமாகச் சிரித்துக்கொண்டும் கைகளையும் கால்களையும் வீசியடித்துக்கொண்டும் நீந்த முயன்றாள். அவளுக்கு நீச்சல் பழக்குவதால் விர்சிங் நீந்தவில்லை. சட்டைகளையும் கழற்றவில்லை. ஜின்கா தண்ணீரிலே முழுகுவதும், ஆழமான இடத்திற்கெல்லாம் சென்று பாய்ந்து பாய்ந்து நீந்துவதுமாக இருந்தது.
எல்லாரும் களைத்துப்போகும் வரையில் இவ்வாறு நீந்தினார்கள். பிறகு, கரையை நோக்கிப் புறப்படலானார்கள். கண்ணகி வீர்சிங்கின் இடக்கையைப் பற்றிக்கொண்டு கரையை நோக்கி நடந்தாள். தங்கமணியும் சுந்தரமும் வீர்சிங்கின் வலக்கைப் பக்கமாகத் தண்ணீரில் நடந்தனர். ஜின்கா மட்டும் இன்னும் நீந்திக்கொண்டே முன்னால் சென்றது. ஓரிடத்திலே தண்ணீருக்கடியிலே வழுவழுப்பான கூழாங்கற்கள் நிறையக் கிடந்தன. கூழாங்கற்களிலே பாசம் படிந்து அதிக வழுக்கலாக இருந்தது. வீர்சிங்கின் இடக்கையைப் பற்றிக்கொண்டு நடந்த கண்ணகி வழுக்கலைக் சமாளிக்க முடியாமல் ஓரிடத்திலே விழுந்துவிட்டாள். விழாமல் தப்பித்துக்கொள்ள அவள் வேகமாக வீர்சிங்கின் இடக்கையை மூடியிருந்த ஜிப்பாவைப் பற்றினாள். அதனால் ஜிப்பாவின் இடக்கை அப்படியே கிழிந்து வந்துவிட்டது. வீர்சிங்கின் இடக்கையில் 'குள்ளன்' என்று பெரியதாகப் - பச்சை குத்தியிருந்தது. அதைப் பார்த்த சுந்தரம், 'குள்ளனா!' என்று தன்னையும் மறந்து கத்திவிட்டான். தங்கமணி உடனே நிலையைச் சமாளிக்க விரும்பி,
"குள்ளக் குள்ளனைக்
குண்டு வயிறனை
வெள்ளிக் கொம்பனை
வினாயக னைத்தொழு"
என்று தான் குழந்தைப் பருவத்தில் கேட்டுப் பாடம் செய்திருந்த பாட்டைப் பாடினான். "யாருக்காவது தீங்கு நேரிட்டால் இந்த பாட்டைச் சொல்லுவது எங்களுக்கு வழக்கம். சுந்தரமும் அதைத்தான் சொல்லத் தொடங்கி, அதற்குள் கண்ணகி எழுந்துவிட்டதால் நிறுத்திவிட்டான்" என்று அவன் வீர்சிங்கிடம் விளக்கம் கூறினான்.
இருந்தாலும், அந்தக் குள்ளன் தன்னை யாரென்று இந்தச் சிறுவர்கள் அறிந்துகொண்டதை உணர்ந்துகொள்ளாமலிருக்கவில்லை. ஆனால், அவன் அதை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், “பரிசலிலே ஏறி ஆற்றிலே கொஞ்ச தூரம் சென்று வரலாமா, பரிசலில் போவது நன்றாக இருக்கும்" என்றான். அவன் கூறிய யோசனைக்கு இணங்காவிட்டால் சந்தேகம் உண்டாகுமென்று கருதி, தங்கமணி உடனே சம்மதம் தெரிவித்தான். குள்ளன் கொஞ்ச தூரத்துக்கப்பால் பரிசலோடு நின்றுகொண்டிருந்த ஒருவனைப் பார்த்துப் பேசப் போனான்.
"உடனே சத்திரத்திற்குப் போய் மாமாவிற்கு உண்மையைச் சொல்ல வேண்டாமா?" என்று ஆவலோடு கேட்டான் சுந்தரம். “இப்பொழுது போக முயன்றால், அவன் சந்தேகப்படுவான்; நம்மைப் போகவும் விடமாட்டான்; நமக்கு அவனை யாரென்று தெரியாதது போலவே இப்பொழுது நடிப்பதுதான் நல்லது. அப்படி நடித்தால்தான் அவனிடமிருந்து தப்ப முடியும்” என்று தங்கமணி பதில் சொன்னான்.
இதற்குள் குள்ளனும் பரிசல் ஓட்டியும் அருகில் வந்து விட்டார்கள். குள்ளன் தனது இடக்கையில் தனது கைக்குட்டையைச் சுற்றிக்கொண்டிருந்தான். "வந்து பரிசலில் ஏறுங்கள். அதோ அங்கே தெரிகிறதே, எதிர்க்கரையிலே உள்ள காட்டில் மரங்களும் பூக்களும் நிறைய உண்டு. பார்க்க அழகாக இருக்கும். அவற்றையும் பார்த்துவிட்டுப் பிறகு சத்திரத்துக்கு அழைத்துச் செல்வான் இவன்" என்று கூறினான் அவன். தங்கமணி, சுந்தரம், கண்ணகி ஆகிய மூவரும் பரிசில் ஏறினர். ஜின்காவும் தாவி ஏறிக்கொண்டது. பரிசலோட்டி துடுப்பைக்கொண்டு பரிசலை நீரில் வலிக்கத் தொடங்கினான்.
“நீங்களும் எங்களுடன் வரவில்லையா?" என்று கண்ணகி கேட்டாள்.
“தாழிவயிறா, ஜாக்கிரதையாகத் துடுப்புப் போடு. நான் சொன்னதை மறந்துவிடாதே" என்று குள்ளன் உரக்கச் சொன்னான். அதற்குள் பரிசலும் முப்பது கஜத்திற்குமேல் தண்ணீரில் சென்றுவிட்டது. தாழிவயிறன் வேகமாகத் துடுப்புப் போட்டு, எதிர்க்கரையில் உள்ள காட்டின் கரைக்குப் பரிசலைச் செலுத்த முயன்றான். தங்கமணியும் சுந்தரமும் திகைப்போடு உட்கார்ந்திருந்தனர். தாழிவயிறனையும் தங்க மணியையும் ஜின்கா மாறி மாறிக் கவனித்துக்கொண்டிருந்தது.
கொஞ்ச நேரத்தில் பரிசல் வஞ்சி ஆற்றின் மறுகரையை அடைந்தது. அதிலே உயர்ந்த மரங்களும் குற்றுச் செடிகளும் பூச்செடிகளும் வளர்ந்திருந்தன. அந்த இடத்திற்கு வந்ததும் தாழிவயிறன் கீழே இறங்கிப் பரிசலைக் கையில் பிடித்துக்கொண்டு எல்லாரையும் கீழே இறங்குமாறு சொன்னான்.
"இங்கே இறங்க வேண்டாம். திரும்பிப் போகலாம். வயிறு பசிக்கிறது” என்றாள் கண்ணகி.
"எனக்குந்தான் பசி. ஆனால், இந்தக் காட்டைப் பார்க்காமல் போகப்படாது. இறங்குங்கள்" என்றான் தாழிவயிறன்.
மூவரும் ஒருவரையொருவர் மௌனமாகப் பார்த்துக்கொண்டே தயங்கித் தயங்கி இறங்கினர். தாழிவயிறன் பரிசலை ஓர் இடத்தில் இழுத்துக் கட்டிவிட்டுப் பின்தொடர்ந்தான். ஜின்காவிற்கு அவன்மேல் எப்படியோ சந்தேகம் ஏற்பட்டு விட்டது. அவனை அது முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டே நடந்தது. நிழலான ஒரு பகுதியை அடைந்ததும் தாழிவயிறன் அங்கே படுத்துவிட்டான். மற்ற மூவரும் அந்தக் காட்டைப் பார்க்கப் போவது போல் பாசாங்கு செய்து கொண்டு சற்று எட்டி நடந்து போனார்கள்.
“நல்ல தாழியடா அவன் வயிறு. எத்தனை பெரிசு" என்று கவலைக்கிடமான நிலைமையிலும் சுந்தரம் கேலியாகப் பேசினான்.
"நாம் சந்தேகப்படுவதாகக் காட்டிக்கொள்ளக்கூடாது. இந்தக் காட்டைப் பார்த்ததும் இங்கிருந்து புறப்படலாமென்று அவனிடம் சொல்லலாம்” என்று தங்கமணி கூறிானன்.
"அண்ணா. அவன் தான் கொல்லிமலைக் குள்ளனா ? எனக்குப் பயமாக இருக்கிறது" என்று கண்ணகி குழறிக் குழறிப் பேசினாள்.
"நாம் கண்டுகொண்டதாக அவன் தெரிந்துகொண்டானா என்று தான் நான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்" என்று யோசனையோடு தங்கமணி கூறினான்.
"நல்ல வேளையாக அந்தப் பாட்டைச் சொன்னாய். நான் கொஞ்சம் ஏமாந்து போய்விட்டேன்" என்று வருத்தப் பட்டான் சுந்தரம்.
"நடந்து போனதற்கு வருத்தப்பட்டு என்னடா செய்வது? சத்திரத்திற்குத் திரும்புவதற்கு வழியைப் பார்க்கலாம்" என்று கூறிக்கொண்டே தங்கமணி வேகமாக நடந்தான். கொஞ்ச நேரத்தில் அவர்கள் தாழிவயிறனை நோக்கித் திரும்பி வந்தனர். "இனிப் புறப்படலாமா?" என்று கேட்டான் தங்கமணி.
"புறப்படுவதா?" என்று கூறி நகைத்துக்கொண்டே திரும்பிப் படுத்தான் தாழிவயிறன். "அவர் எப்போது உத்தரவு போடுவாரோ அதுவரையிலும் எல்லாரும் இங்குதான் இருக்க வேண்டும். சாப்பிடக்கூட அவர் என்னை விடவில்லை. ரொம்பப் பசிக்குது" என்று முணுமுணுத்தான் தாழிவயிறன்.
கண்ணகிக்கு அழுகையே வந்துவிட்டது. ஆனால், தங்கமணி அவளுக்குச் சைகை காட்டித் தைரியப்படுத்தினான். மூன்று பேரும் மறுபடியும் தாழிவயிறனை விட்டு எட்டிச் சென்றனர். என்ன செய்வதென்று தங்களுக்குள் பேசிக் கொள்ளவே அவ்வாறு செய்தனர். அவர்கள் தனித்துச் செல்வதைப்பற்றித் தாழிவயிறன் கவலைப்படவில்லை. "பசங்க எங்கே போயிடுவாங்க. இந்தக் காட்டுக்குள்ளேதானே போக வேணும்? போனால் அவ்வளவுதான்" என்று தனக்குத்தானே பேசிக்கொண்டே தாழிவயிறன் நிம்மதியாகப் படுத்திருந்தான்.
5
"அவனுக்கு நம்மேல் சந்தேகம் சிறிது ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கலக்கத்தில் அவன் வடநாட்டுக் காரனைப் போல் பேசுவதை விட்டுவிட்டு நம்மைப் போலப் பேசிவிட்டான்" என்றான் தங்கமணி.
"நாம் பரிசலில் ஏற மறுத்திருக்க வேண்டும்" என்று தனது கருத்தைத் தெரிவித்தான் சுந்தரம்.
“மறுத்திருந்தால் மட்டும் தப்ப முடியுமா? நாம் குளித்துக் கொண்டிருந்த இடத்தில் மக்கள் நடமாட்டமே இருக்கவில்லை. குள்ளனும் தாழிவயிறனுந்தான் இருந்தார்கள். அவர்கள் சுலபமாக நம்மைச் சத்திரத்திற்குப் போகவொட்டாமல் தடுத்திருக்க முடியும்.”
"இதையெல்லாம் நீ அப்பொழுதே நினைத்துப் பார்த்தாயா?"
"ஆமாம்; அது மட்டுமல்ல. குள்ளன் நம்மை அடித்து ஆற்றில் போடவும் தயங்கியிருக்கமாட்டான். இப்பொழுது நம்மீது அவனுக்குக் கொஞ்சம் சந்தேகம் மட்டும் இருக்கிறது. அதனால் சத்திரத்திற்குப் போக முடியாமல் செய்து வைத்திருக்கிறான். நிச்சயமாக நமக்கு அவன் கொல்லிமலைக் குள்ளன் என்று தெரிந்துவிட்டதாக இருந்தால் அவன் எதற்கும் துணிவான்!"
"டேய், நீதான் உண்மையான துப்பறியும் சாம்பு."
"அதிருக்கட்டும். இப்பொழுது தப்பிக்க வழி பார்ப்போம். இந்தத் தாழிவயிறனை எப்படியாவது ஏமாற்ற வேண்டும்" என்றான் தங்கமணி.
இந்தச் சமயத்திலே தாழிவயிறன் உரக்கக் கூவினான். “டேய் பசங்களா, வாங்கோ. சோறு வந்திருக்குது.”
"ஓகோ, அப்படியா! சரி, நம்மை இங்கேயே அடைத்து வைத்திருக்கக் குள்ளன் திட்டம் போட்டிருக்கிறான். அதுவும் ஒரு வகையில் நல்லதே" என்று தங்கமணி கூறிக்கொண்டே நடந்தான்.
“அண்ணா , இங்கேயே இருந்தால் இருட்டிலே பயமாய் இருக்குமே" என்று கண்ணகி தேம்பத் தொடங்கினாள்.
“இங்கே நம்மை வைத்திருக்க முயன்றால் மாமா தேடி வர மாட்டாரா?" என்று சுந்தரம் கொஞ்சம் நம்பிக்கையோடு சொன்னான்.
"குள்ளன் நம்மை இரவோடு இரவாக எங்காவது கடத்திச் செல்ல முயலுவான் என்று நினைக்கிறேன். அப்படிச் செய்துவிட்டு எங்காவது தப்பியோட நினைப்பான்," என்று தங்கமணி கருதினான். குள்ளன் என்ன செய்வானென்று அவனுக்கு நிச்சயமாகப் புலப்படவில்லை. எதற்கும் இரவில் தப்பிப்போக வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே தாழிவயிறனை அணுகினான். மற்றவர்களும் மௌனமாகப் பின்னால் வந்தனர்.
வேறொரு பரிசலில் யாரோ வந்து உணவு தந்துவிட்டுப் போனதாகத் தெரிந்தது. உணவு கிடைத்ததைப்பற்றி அனைவருக்கும் மகிழ்ச்சிதான். கவலையை மறந்துவிட்டு மூவரும் உணவில் நாட்டம் செலுத்தினர். ஜின்காவிற்கு வேண்டியதைக் கொடுக்கத் தங்கமணி மறந்துவிடவில்லை.
"இந்தச் சோறெல்லாம் ஒரு வேளைக்கு எனக்கே பத்தாது. இதையே ராத்திரிக்கும் உங்களுக்கு வைத்திருந்து கொடுக்க வேணுமாம்," என்று கடுகடுப்பாகப் பேசினான் தாழிவயிறன்.
தங்கமணிக்கு நல்ல சமயம் வாய்த்தது. “இந்தாப்பா, கவலைப்படாதே. இங்கே தேங்காய் நிறைய காய்த்துத் தொங்குகிறது. வேண்டிய மட்டும் சாப்பிடலாம்" என்று அன்போடு பேசினான்.
“அட போ, அந்த மரத்திலே என்னால் ஏற முடியாது. முன்னெல்லாம் ஒரு நொடியிலே ஏறிடுவேன். இப்போ மரத்தைக் கட்டிப் பிடிக்கவே முடியறதில்லை” என்று கவலைப் பட்டான் தாழிவயிறன்.
“ஆமாம், உன்னால் எப்படி ஏற முடியும்? வயிறு தடுக்குமே!" என்று சுந்தரம் கிண்டலாகப் பேசினான்.
"நீ ஒண்ணும் ஏற வேண்டாம். நான் உனக்குத் தேங்காய் போட்டுத் தருகிறேன்" என்று தங்கமணி சொல்லி விட்டு அவன் ஜின்காவிற்குச் சமிக்கை செய்தான்.
ஜின்கா அதிவிரைவில் மரத்தில் தாவியேறித் தேங்காய்களைப் பறித்துப் போட்டது. தாழிவயிறனுக்குச் சொல்ல முடியாத பூரிப்பு. பொழுது சாயும் வரையில் தேங்காய்களை உடைத்துத் தின்றுகொண்டே இருந்தான்.
தாழிவயிறன் தேங்காயிலே தனது முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்தபோது தங்கமணி தனது திட்டத்தை நிறை வேற்றுவதற்கான செயல்களில் ஈடுபட்டான். “சுந்தரம், உனது கத்தி எங்கே? அதைக் கொண்டு ரயில் கற்றாழையில் பெரிய மடலாக ஒன்றை வெட்டி வா" என்று அவன் சொன்னான். எதற்காகக் கற்றாழை மடல் என்று தெரியாவிட்டாலும் சுந்தரம் உடனே அதை வெட்டி எடுத்து வந்தான்.
கற்றாழைமடலில் இரண்டு ஓரங்களிலும் ரம்பம் போல முள் இருக்கும். அதன் நுனியிலே நீண்ட கூர்மையான பெரிய முள் ஒன்றும் இருக்கும். தங்கமணி அந்த நீண்ட முள்ளைத் தனியாக வெட்டி எடுத்து வைத்துக்கொண்டான். பிறகு, கற்றாழைமடலில் இரண்டு ஓரங்களிலுமுள்ள ரம்பமுட்களைக் கத்தியால் சீவிக் களைந்துவிட்டு, ஓலைச் சுவடியைப் போல அந்த மடலை இரண்டு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொண்டான். பழங்காலத்திலே எழுதுவதற்குப் பனை ஓலை பயன்பட்டது. எழுத்தாணியைக்கொண்டு அதில் எழுதினார்கள். தங்கமணி கற்றாழையில் நீண்ட முள்ளை எழுத்தாணி போலப் பயன்படுத்திக் கற்றாழை மடலில் கீழ்க்கண்ட கடிதம் எழுதலானான்.
அன்புள்ள அப்பாவிற்கும் அம்மாவிற்கும்,
எங்கள் வணக்கம். இக்கடிதம் உங்களுக்குக் கிடைக்கும்போது நாங்கள் மூவரும் பரிசலில் ஏறி
ஆற்றின் மறுகரை ஓரமாக வெள்ளத்தோடு போய்க் கொண்டிருப்போம். பிறகு, கரையில் இறங்கி, காட்டிற்குள் நுழைந்து போவோம். காடு எங்கு முடிகிறது என்று தெரியாது. வீர்சிங்தான் கொல்லி மலைக்குள்ளன். அதை நாங்கள் தெரிந்துகொண்டதால் எங்களை ஆற்றின் மறுகரையில் உள்ள காட்டில் அவன் வைத்திருக்கிறான். ஆனால், தாழிவயிறன் தூங்கும்போது தப்பிப் போக போகிறோம். அந்தக் குள்ளனைப்பற்றிப் போலீசுக்குத் தகவல் கொடுங்கள். எங்கள் உதவிக்குப் போலீஸ் படையுடன் ஒரு பரிசலில் வரக் கோருகிறோம். நாங்கள் தைரியமாய் இருக்கிறோம்.
தங்கள் அன்புள்ள,
தங்கமணி.
கற்றாழைமடல் நல்ல தடிப்பாக இருக்கும். அதனால் அதில் எழுவது எளிதாக இருந்தது. ஆனால் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டியிருந்ததால் சிறிய கடிதமானாலும் இரண்டு துண்டுகளில் எழுத வேண்டியதாயிற்று. அதை எழுதி முடித்து, ஒரு பக்கத்தில் மறைத்து வைத்தான் தங்கமணி.
மாலையில் சாப்பிடுவதற்காகவும், பரிசலில் தங்களோடு எடுத்துச் செல்வதற்காகவும் போதுமான தேங்காய்களைத் தயார் செய்து கொண்டான். "கண்ணகி, இரண்டு மூன்று நாள்களுக்கு இந்தத் தேங்காயே போதுமா?" என்று அவன் தன் தங்கையைப் பார்த்துக் கேட்டான்.
“எங்களுக்கென்ன தாழிவயிறா?" என்று நகைத்தான் சுந்தரம்.
"இரண்டு மூன்று நாள்களுக்கு இந்தத் தேங்காயைத் தவிர வேறு உணவே கிடைக்காமல் போய்விடலாம். அதற்கும் நாம் தயாராக இருக்கவேண்டும்" என்று யோசனையோடு தங்கமணி கூறினான்.
சுந்தரத்திற்கும் கண்ணகிக்கும் அவன் கூறுவது முற்றிலும் விளங்கவில்லை. அதனால் மௌனமாக இருந்தார்கள். ஜின்காமட்டும் தாழிவயிறனால் மட்டை உரிக்கப்பட்ட தேங்காய்களை ஓரிடத்தில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தது. அதற்குத் தங்கமணியின் யோசனைகள் புரிந்துவிட்டனவோ என்னவோ?
"வாடா சுந்தரம், தாழிவயிறன் இப்போது நம்மிடம் பிரியமாக இருப்பான். அவனைக்கொண்டு ஓரளவுக்கு நாம் பரிசல் தள்ளக் கற்றுக்கொள்ளலாம்" என்று கூறிக்கொண்டே தங்கமணி தாழிவயிறனை நோக்கி நடந்தான்.
அவன் எதிர்பார்த்தபடியே தாழிவயிறன் அவர்களுக்குப் பரிசலில் ஏறித் துடுப்புப் போட்டு அதைச் செலுத்தக் கற்றுக்கொடுக்க இணங்கினான். தின்பதற்குத் தேங்காய் கிடைத்துவிட்டதல்லவா? தங்கமணியும் சுந்தரமும் ஆர்வத்தோடு துடுப்புப் போட்டுப் பழகலானார்கள். ஆனால், அதிக ஆழமான இடத்திற்கு அவர்களால் பரிசலைச் செலுத்த முடியவில்லை. தாழிவயிறன் அவர்களுடைய விருப்பத்திற்கு இணங்கினாலும் அந்தக் காட்டை விட்டுப் பரிசல் அதிக தூரம் செல்லாதவாறு கவனித்துக்கொண்டான், தங்கமணியும் சுந்தரமும் துடுப்புப் போடுவதை ஓரளவுதான் கற்றுக்கொள்ள முடிந்தது. சிலமணி நேரங்களில் அந்த வித்தையைக் கற்றுக்கொள்ள முடியுமா? அதற்குப் பல நாள்கள் பழக வேண்டியிருக்கும். இருந்தாலும், ஓரளவாவது கற்றுக்கொண்டால் உபயோகமாக இருக்கும் என்றுதான் தங்கமணி எண்ணியிருந்தான்.
தேங்காயை வயிறு புடைக்கத் தின்றதாலும், இரண்டு மூன்று மணி நேரம் பரிசல் தள்ளக் கற்றுக் கொடுத்ததாலும் தாழிவயிறன் பொழுது சாய்ந்ததும் படுத்து நன்றாகத் தூங்கிவிட்டான்.
இதைத்தான் தங்கமணி எதிர்பார்த்திருந்தான். தாழிவயிறன் குறட்டை போடத் தொடங்கியதும் அவன் தேங்காய்களைப் பரிசலில் எடுத்து வைத்தான். உடனே சுந்தரமும் கண்ணகியும் ஜின்காவும் அதே வேலையில் ஈடுபட்டார்கள். தேங்காய்களை உடைப்பதற்கு உதவியாக ஒரு கல்லையும் பரிசலில் வைத்துக்கொண்டார்கள். தங்கமணி தான் எழுதிய கற்றாழைக் கடிதத்தை ஜின்காவின் அடிவயிற்றில் ஒன்றும், முதுகில் ஒன்றுமாக வைத்து, கற்றாழை நாரையே கிழித்து நன்றாகக் கட்டினான். ஜின்காவிற்கு ஒன்றும் புரியவில்லை. “ஜின்கா, பரிசலில் ஏறு. அப்புறம் நான் சொல்லுகிறேன்” என்று தங்கமணி அதன் காதில் மெதுவாகக் கூறிவிட்டுச் சுந்தரத்திற்கும் கண்ணகிக்கும் சமிக்கை செய்தான். அனைவரும் பரிசலில் ஏறிக்கொண்டனர். மரத்தோடு பரிசலைக் கட்டி வைத்திருந்த நீண்ட கயிற்றை அவிழ்த்துவிட்டு, அதனையும் சுருணையாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு தங்கமணி பரிசலில் தாவி ஏறினான். பரிசல் ஆற்று வெள்ளத்தோடே கரை ஓரமாக மெதுவாக மிதந்து செல்லலாயிற்று. இப்படிச் சுமார் நூறு கஜம் சென்றதும் தங்கமணி பேசத் தொடங்கினான். "சுந்தரம், இப்போதும் நாம் இரண்டு பேரும் மாறிமாறித் துடுப்புப் போடுவோம். ஒரே இருட்டாகவே இருந்தாலும் கரையில் உள்ள மரங்கள் தெரிகின்றன. கரை ஓரமாகவே ஆற்று வெள்ளம் போகிற திசையில் மெதுவாகப் பரிசலைச் செலுத்த முயலுவோம்” என்று அவன் கூறினான்.
"ஆற்றுவேகத்தை எதிர்த்து மறுகரைக்கு உங்களால் பரிசலைத் தள்ள முடியுமா?” என்று கண்ணகி கவலையோடு கேட்டாள். மறுகரைக்குப் போனால் சத்திரத்திற்கு ஓடிவிடலாம் என்பது அவள் ஆசை.
"நேருக்கு நேராக எதிர்க்கரையை நோக்கிப் போக முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆற்று வெள்ளத்தோடு பரிசலைப் போகவிடலாம். முதலில் தாழிவயிறனிடமிருந்து தப்பவேண்டும். பிறகுதான் மற்ற வேலை” என்றான் தங்கமணி.
"தேங்காய் தீர்ந்துவிட்டால் தாழிவயிறன் நம்மையே வாயில் போட்டுக்கொண்டாலும் ஆச்சரியமில்லை. அப்பா! எத்தனை தேங்காயைத் தின்று தீர்த்துவிட்டான்” என்றான் சுந்தரம்.
"எதிர்க்கரையைச் சேராவிட்டாலும் தாழி வயிறனுக்கும் குள்ளனுக்கும் தப்பி வந்துவிட்டோம். இது நமக்கு முதல் வெற்றி" என்று கூறிக்கொண்டே தங்கமணி ஜின்காவிற்கு ஏதேதோ சமிக்ஞைகள் செய்தான்.
"டேய் ஜின்கா, ஆற்றில் பாய்ந்து நேராகச் சத்திரத்திற்குப் போ; அப்பா இல்லாவிட்டாலும் அம்மாவிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டு உடனே வந்து சேர். ஆற்று ஓரமாகவே வந்து பரிசலுக்கு வந்துவிடு" என்று சொல்லிவிட்டு அதைத் தட்டிக் கொடுத்தான். ஜின்கா உற்சாகத்தோடு ஆற்றில் குதித்து வேகமாக நீந்திச் செல்லலாயிற்று.
"அம்மாவிடம் கொடுக்கச் சொன்னாயே, ஏன்?” என்று கண்ணகி கேட்டாள். "அந்தக் குள்ளன் நம்மை இந்தக் காட்டிலே சிறை செய்துவிட்டுச் சும்மா இருந்திருக்கமாட்டான். அவன் என்னவாவது சூழ்ச்சி செய்திருப்பான் என்று எனக்குத் தோன்றுகிறது" என்று தங்கமணி தனது கருத்தை வெளியிட்டான்.
"எப்படியும் நாம் தப்பிவிட்டால் அந்தக் குள்ளனைப் பிடிக்க வகை செய்துவிடலாம். நெட்டைக்குள்ளனைப் பிடித்தே தீருவோம்" என்று சுந்தரம் உற்சாகத்தோடு கூறினான்.
“அவன் எதற்குக் குள்ளன் என்று பெயர் வைத்துக் கொண்டானோ?” என்று கேட்டாள் கண்ணகி.
"அதுவும் உலகத்தை ஏமாற்றத்தான். இவன் சாதாரணப் பேர்வழி அல்ல."
"இல்லாவிட்டால் துப்பறியும் சாம்பு இருக்கின்ற வீட்டிலேயே பழக வருவானா?" --இது சுந்தரத்தின் பேச்சு.
"நம் வீடு கலைப்பொருட்காட்சி சாலைக்கு அருகிலே இருக்கிறதல்லவா! அதை முன்பே தெரிந்திருக்கிறான். நம் வீட்டில் மேல்மாடி காலியாயிருப்பதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள அப்பாவிடம் அவன் கேட்டதை நீங்கள் யாரும் கவனிக்கவில்லை. அருகில் இருந்துகொண்டே தன் திருட்டை நடத்த முயற்சி செய்திருக்கிறான். அதற்காகவே நம்முடன் வலிய வந்து பழகியிருக்கிறான்" என்று தங்கமணி விளக்கம் கூறிக்கொண்டே துடுப்பைப் போட்டான்.
பரிசல் கரை ஓரமாகவே ஆற்று வேகத்தோடு போய்க் கொண்டிருந்தது. தூரத்தில் எங்கோ 'தடதட' என்று தண்ணீர் வேகமாக விழுவது போலச் சத்தம் கேட்கலாயிற்று. நேரம் ஆக ஆக அது அதிகமாகக் கேட்டது. “நீர்வீழ்ச்சி ஏதாவது இருந்தால்...” என்று நடுங்கிக்கொண்டே கண்ணகி கேட்டாள்.
இதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. ஆனால், தங்கமணியும் சுந்தரமும் தைரியத்தை இழக்காமல் மாறிமாறித் துடுப்பு வலித்து, பரிசலைக் கரையின் ஓரமாகவே செலுத்த முயன்று கொண்டிருந்தனர். பேரிரைச்சல் அதிகப்பட்டுக்கொண்டேயிருந்தது.
6
தங்கமணி எண்ணியபடியே பேராசிரியர் வடிவேலைக் கொல்லிமலைக் குள்ளன் சும்மா விட்டுவைக்கவில்லை. தங்கமணி முதலியவர்களைப் பரிசலில் ஏற்றி அக்கரைக் காட்டிற்கு அனுப்பிவிட்டதும் அவன் நேராகச் சத்திரத்திற்குச் சென்றான். அங்கு ஏதோ ஒரு துப்பறியும் நாவலைப் படித்துக் கொண்டிருந்த வடிவேலைச் சந்தித்தான்.
"உங்களிடம் ஒரு சிறு விபத்தைப்பற்றித் தெரிவிக்க வத்தேன். அது ஒன்றும் பெரிதில்லை. சின்னக் காயந்தான். ஆற்றிலே சிறுவர்கள் இரண்டு பேரும் ஒரு பாறையின்மீது ஏறி ஏறித் தண்ணீரில் குதித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு தடவை அப்படிப் பாறையில் ஏறும் போது சுந்தரம் கால் வழுக்கி விழுந்துவிட்டான். நெற்றியிலே கொஞ்சம் காயம் ஏற்பட்டுவிட்டது" என்று ஆங்கிலத்திலே சொன்னான்.
சுந்தரத்திற்குக் காயமா? ஏதாவது பலமாக அடிபட்டு விட்டதா?" என்று வடிவேலு கொஞ்சம் பரபரப்புடன் கேட்டார்.
"அப்படியொன்றும் பெரிதாக இல்லை. அதைப்பற்றிக் கவலை வேண்டாம். நான் என்னுடைய ஜாகைக்குக் குழந்தைகளை உடனே அழைத்துக்கொண்டு போனேன். அங்கே என்னுடன் வந்திருக்கும் மருத்துவரைக் கொண்டு தகுந்த சிகிச்சை செய்திருக்கிறேன். எல்லோருக்கும் அங்கேயே உணவும் ஏற்பாடு செய்துவிட்டேன். நீங்கள் பார்க்க வருவதானால் என் காரிலேயே என்னுடன் வரலாம்" என்று விரைவாக மறுமொழி சொன்னான்.
இந்தப் பேச்சையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வள்ளிநாயகி சமையல் அறையிலிருந்து வேகமாக வந்து, "போய்ப் பார்த்துவிட்டு அப்படியே எல்லாரையும் அழைத்து வாருங்கள். காயம் பலமோ என்னவோ !" என்று கூறினாள்.
"அப்படியொன்றுமில்லை. உங்களுக்குக் கவலை வேண்டாம். எல்லாரும் இப்பொழுது உணவருந்திக்கொண்டிருக்கிறார்கள்" என்று குள்ளன் மீண்டும் ஆங்கிலத்தில் தெரிவித்தான்.
பேராசிரியர் குள்ளனோடு புறப்பட்டார். கார் கொஞ்ச தூரம் சென்றவுடன் மக்கள் நடமாட்டமில்லாத ஓர் இடத்திலே குள்ளனும் அவனுடன் காரிலே வந்திருந்த இரண்டு ஆள்களுமாகச் சேர்ந்து வடிவேலை ஒரு கயிற்றைக்கொண்டு கட்டிவிட்டார்கள். மூன்று பேர் திடீரென்று அவர் மீது பாய்ந்து பிடித்ததால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் சத்தம் போடாதபடி ஒருவன் அவர் வாயில் துணியால் கெட்டியாக மூடிப் பிடித்துக்கொண்டான். இவ்வாறு சற்றும் எதிர்பாராத விதமாக வடிவேல் குள்ளனிடம் அகப்பட்டுவிட்டார்.
குள்ளன் இதோடு நிற்கவில்லை. வள்ளிநாயகிக்குக் கவலை உண்டாகாதவாறு அவன் ஒரு சூழ்ச்சி செய்தான். வடிவேலைப் பத்திரமாக ஓர் இடத்திலே கொண்டுபோய்ச் சேர்க்கும்படி தன் ஆள்களிடம் ஏற்பாடு செய்துவிட்டுச் சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சத்திரத்திற்குத் திரும்பி வந்தான். வள்ளிநாயகி ஆவலோடு சுந்தரத்தைப்பற்றி விசாரித்தாள்.
"காயமெல்லாம் ஒன்றும் பிரமாதமில்லை. குழந்தைகள் எல்லாம் கொல்லிமலைக் காட்சிகளைக் காணப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பேராசிரியர் வடிவேல் அங்கே போய்ப் பார்க்க விரும்பினார். அவரை என் காரிலேயே அனுப்பி வைப்பதாகச் சொன்னேன். நீங்கள் எங்காவது வெளியிலே கோயிலுக்கோ மற்ற இடங்களுக்கோ செல்வதற்காக உங்கள் கார் இங்கேயே இருக்கட்டும் என்று அவர் தெரிவித்தார். குழந்தைகளும் அவரும் மாலை ஏழு எட்டு மணி சுமாருக்குத் திரும்பிவிடுவார்கள். இரவு உணவுக்கு இங்கேயே வருவதாகச் சொல்லச் சொன்னார்கள்" என்று ஆங்கிலத்திலேயே தெரிவித்துவிட்டு அவன் புறப்பட்டான்.
குள்ளனுடைய சூழ்ச்சி நல்ல பலன் அளித்தது. வள்ளிநாயகி அவன் கூறுவதை உண்மையென நம்பிக் கவலையின்றி இருந்தாள். கொல்லிமலைக் காட்சிகளைக் காணத் தன்னையும் ஏன் அழைத்துச் செல்லவில்லை என்ற ஐயம் அவளுக்கு அப்பொழுது ஏற்படவில்லை.
7
பரிசலிலிருந்து ஆற்று வெள்ளத்தில் குதித்த ஜின்கா உற்சாகமாகக் கரையை நோக்கி நீந்தியது. இருட்டாக இருந்தும் அது விரைவிலே மறு கரையை அடைந்துவிட்டது. பிறகு, அது சற்றும் நின்று பாராமல் சத்திரத்தை நோக்கித் தாவிச்சென்றது. வடிவேலையும் குழந்தைகளையும் எதிர் பார்த்த விதமாக வள்ளிநாயகி வெளித் திண்ணையிலே அமர்ந்திருந்தாள். ஜின்கா மட்டும் தனியாக அங்கே வருவதைக் கண்டு அவளுக்கு ஒருவகை அச்சமேற்பட்டது. அவள் அறைக்குள்ளே ஜின்காவை அழைத்துக்கொண்டு சென்றாள். கற்றாழை மடலில் எழுதியிருந்த கடிதத்தைக் கண்டாள். அவளுக்கு விஷயமெல்லாம் புரிந்துவிட்டது. கொல்லிமலைக் குள்ளன் பேராசிரியர் வடிவேலையும் சேர்த்து ஏமாற்றி விட்டதையும், அவரையும் குழந்தைகளையும் வஞ்சகமாகத் தன் வசப்படுத்தியிருப்பதையும் அறிந்து துடித்தாள்.
கொஞ்ச நேரம் என்ன செய்வதென்றே அவளுக்குப் புலப்படவில்லை. துக்கம் அப்படி அவளைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. அவள் கண்களிலே கண்ணீர் வழிந்தோடலாயிற்று.
ஆனால், சற்று நேரத்திலே அவளுக்கு ஒரு தெளிவு பிறந்தது. இவ்வாறு கவலைப்பட்டுக்கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பது நல்லதல்ல என்று அவளுக்குப் புலப்பட்டது. அதனால் அவள் உடனே செயலில் இறங்கினாள். தங்கமணிக்குக் கீழ்க்கண்டவாறு ஒரு கடிதம் முதலில் எழுதினாள்.
அருமைக் குழந்தைகளே,
நீங்கள் அனுப்பிய செய்தி கிடைத்தது. அந்தக் குள்ளன் அப்பாவையும் ஏமாற்றி எங்கோ அழைத்துக்கொண்டு போய்விட்டான். ஆனால் நீங்கள் தைரியமாய் இருங்கள். இப்பொழுதே ஒரு பரிசலில் சில போலீஸ் வீரர்களை உங்களுக்கு உதவி செய்ய அனுப்புகிறேன். அப்பாவைக் கண்டுபிடிக்கவும், குள்ளனைக் கைது செய்யவும் முயற்சி செய்கிறேன். போலீஸ் வீரரோடு காரிலேயே புறப்பட்டு, கொல்லி மலைக்கு மறுபக்கத்தில் உள்ள கூடல் பட்டணத்திற்கு நான் வந்து சேருவேன். அங்கே சந்திப்போம். கடவுளை நம்பி. தைரியத்தை விடாமல்
இருங்கள். உங்களுக்கு எவ்விதத் தீங்கும் நேராது. சுந்தரம் தன்னுடைய கேலிப் பேச்சினால் எல்லாருக்கும் தைரியமூட்டுவான் என்று நம்புகிறேன்.
உங்கள் அன்புள்ள,
வள்ளிநாயகி.
இவ்வாறு கடிதம் எழுதி, அதை மடித்து. ஓர் உருண்டையான சிமிழுக்குள் மடித்துப் போட்டு நன்றாக மூடினாள். ஜின்கா அதைத் தன் வாயில் போட்டு, கன்னத்தில் அடக்கிக் கொண்டு புறப்படத் தயாராயிற்று. ஆனால், அதைக் கொஞ்ச நேரம் தாமதிக்கும்படி வள்ளிநாயகி சைகை செய்தாள். ஒரு தட்டிலே அதற்கு வேண்டிய உணவுகளையெல்லாம் அவசரம் அவசரமாக எடுத்து வைத்தாள்.
"ஜின்கா, சாப்பிடாமல் நீ போகக்கூடாது. எத்தனை தூரம் நீ போக வேண்டியிருக்குமோ! ஆற்றில் நீந்தி நீந்திச் செல்லவும் வேண்டியிருக்கும். பசியோடு நீ போகக்கூடாது. நன்றாகச் சாப்பிடு" என்று அன்போடு கூறிக்கொண்டே அதைத் தட்டிக்கொடுத்தாள். ஜின்காவும் அவளுடைய எண்ணத்தைப் புரிந்துகொண்டது. உடனே அந்த உருண்டைச் சிமிழைக் கீழே வைத்துவிட்டு வேகமாக உணவருந்தலாயிற்று. வள்ளிநாயகி ஒரு தாயின் அன்போடு அதைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.
உணவு முடிந்ததும் உருண்டைச் சிமிழை வாயில் எடுத்துப் போட்டுக்கொண்டு, ஜின்கா ஆவலோடு வள்ளி நாயகியைப் பார்த்தது. வள்ளிநாயகி அதன் தலையைத் தன் கையால் வருடிக்கொண்டே, "ஜின்கா, இனி நீ போகலாம். உன்னால் தான் குழந்தைகளுக்குத் தைரியம் ஏற்பட வேண்டும்" என்று கூறினாள். ஜின்கா உற்சாகத்தோடு வெளியே பாய்ந்து புறப்பட்டது. வள்ளிநாயகி தானும் வேமாக உணவருந்திவிட்டு வெளியே புறப்படத் தயாரானாள். அப்பொழுது சமையற்காரப் பையனிடம், "யாராவது வந்து விசாரித்தால் நான் கோயிலுக்குப் போயிருப்பதாகச் சொல். கோயிலிலே அங்காளம்மனுக்கு இன்று விசேஷப் பூஜையெல்லாம் நடக்கிறது. அதைப் பார்த்துவிட்டு ரொம்ப நேரம் கழித்துத்தான்
கொ. ம. கு -3 திரும்புவேன் என்று சொல். நீ இங்கேயே இரு. எங்காவது வேடிக்கை பார்க்கப் போய்விடாதே" என்று கூறிவிட்டு, காரில் ஏறிக்கொண்டு புறப்பட்டாள். கார் ஓட்டத் தெரிந்திருந்தது இந்தச் சமயத்தில் அவளுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது.
முதலில் அவள் கோயிலுக்குச் சென்று அங்காளம்மனைத் தரிசித்துக்கொண்டாள். பிறகு, திருவிழா பந்தோபஸ்திற்காக வந்திருந்த போலீஸ் இலாகாவினர் தங்கியிருந்த முகாமிற்குச் சென்றாள். அங்கே ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இருந்தார். அவருடன் வள்ளிநாயகி தனித்துப் பேசி நிலைமையை விளக்கினாள். போலீஸ் இன்ஸ்பெக்டர் உடனே செயலில் இறங்கினார். முதலில் பரிசல் தள்ளுவதில் வல்லவர்களான இரண்டு பேரை ஏற்பாடு செய்து அவர்களோடு மூன்று போலீஸ் ஜவான்களையும் ஒரு பரிசலில் ஏற்றி அனுப்பினார். "அந்தக் குழந்தைகள் ஏறியுள்ள பரிசலைக் கண்டுபிடித்து அவர்களை உங்களுடைய பரிசலிலேயே அழைத்துக்கொண்டு கூடல் பட்டணம் போய்ச் சேருங்கள். அதற்குள் நாங்களும் தரை மார்க்கமாக அங்கு வந்து சேருவோம்" என்று கூறிவிட்டு அவர் பரிசலை வேகமாக விடுமாறு ஆணையிட்டார்.
பிறகு, வள்ளி நாயகியின் யோசனைப்படி சிலரைக் கொல்லிமலைக் குள்ளனைப்பற்றி அறிந்துகொள்ளவும் பேராசிரியர் வடிவேல் இருக்குமிடத்தை அறியவும் ஏவி விட்டார். அவரும் வள்ளிநாயகியோடு காரிலே புறப்பட்டார். நான்கு போலீஸ் ஜவான்களும் துப்பாக்கிகளுடன் உடன் சென்றனர்.
8
இரவு எட்டு மணி சுமாருக்கு வடிவேலும் குழந்தைகளும் திரும்பி வந்துவிடுவார்கள் என்று கொல்லிமலைக் குள்ளன் வள்ளிநாயகியிடம் தெரிவித்திருந்தானல்லவா? அதன்படி அவர்கள் வராததால் அவள் கவலைப்பட்டுப் போலீசுக்குத் தகவல் கொடுத்துவிடுவாளோ என்று குள்ளன் ஐயம் கொண்டான்.
வள்ளிநாயகியையும் சூழ்ச்சியால் கைப்பற்றி எங்காவது ஓர் இடத்திற்குக் கொண்டுபோய் வைத்துவிடலாமா என்றும் அவன் நினைத்துப் பார்த்தான். ஆனால், அவளை அப்படிப் பிடித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் அவனுக்குத் தோன்றியது. வடிவேலும் குழந்தைகளும் வராததற்கு ஏதாவது தகுந்த காரணம் ஒன்றைச் சொல்லிவிட்டால் அவன் திருப்தியடைந்துவிடுவாள். எதற்காக அவளையும் பிடித்து வைக்க வேண்டும்? அவளை நம்பும்படி செய்வது எளிது என்று குள்ளன் கருதினான். அதற்கான திட்டமொன்றை மனத்தில் உருவாக்கிக்கொண்டு சத்திரத்தை நோக்கிப் புறப்பட்டான். அங்கே வள்ளிநாயகி இல்லாதிருந்தது முதலில் அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. பிறகு, அவன் மனத்தைச் சமாதானப்படுத்திக்கொண்டு சமையற்காரப் பையனிடம், "பேராசிரியர் கொல்லிமலையின் இடையிலே ஓடும் வஞ்சியாற்றின் வழியாகப் பரிசலில் சென்று பார்க்க வேண்டுமென்று சொன்னார். அதற்கு நான் ஏற்பாடு செய்து கொடுத்தேன். மாலை நேரத்தில் புறப்படும் போது சுற்றியுள்ள காட்சி மிக அழகாக இருந்தது. அதையெல்லாம் பார்க்கவேண்டுமென்று குழந்தைகள் மிகவும் பிரியப்பட்டார்கள். அதனால் அவர்களையும் பேராசிரியர் கூடவே அழைத்துச் சென்றிருக்கிறார். ஆற்று வழியாகக் கூடல் பட்டணம் வரை சென்றுவிட்டு, வர மூன்று நாள்களாகுமாம். அதுவரை அம்மாளையும் உன்னையும் இங்கேயே இருக்கும்படி தெரிவிக்கும்படி என்னிடம் சொன்னார். கொல்லிமலைச் சாரலிலிருந்து திரும்பி இங்கு வந்துவிட்டுப் போக நேரமில்லை. இதை அம்மாளிடம் சொல்லிவிடு" என்று அவன் சொன்னான்.
இப்படிக் கூறியதோடு அவன் திரும்பிப் போய்விடவில்லை. "மூன்று நாளைக்கு எல்லோருக்கும் வேண்டிய துணி மணிகளை வாங்கி வரும்படி என்னிடம் சொன்னார். இப்பொழுது அவை வேண்டும். நான் மற்றொரு பரிசலிலே அவற்றை அனுப்ப வேண்டும்! மிகவும் அவசரம்" என்று அவன் சொன்னான். அவன் வார்த்தையை நம்பிச் சமையற்காரப் பையனும் வேண்டிய துணிமணிகளை ஒரு சிறிய தோல் பெட்டியில் வைத்துக் கொடுத்தான். அதை வாங்கிக்கொண்டு கொல்லிமலைக் குள்ளன் அவ்விடத்திலிருந்து வேகமாகப் புறப்பட்டான்.
தங்கமணி முதலியவர்களை வஞ்சியாற்றின் மறு கரையிலுள்ள காட்டிலிருந்து வேறு இடத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டுமென்பது அவனுடைய அடுத்த திட்டம். அவர்களையும் வேறு இடத்தில் இரண்டு மூன்று நாள்களுக்கு யாருக்கும் தெரியாமல் மறைத்துவிட்டால் அவனுடைய காரியம் வெற்றியோடு முடிந்துவிடும். அந்த இடத்திலிருந்து நடராஜ சிலையோடு அடுத்த நாளே பம்பாய்க்குப் போய், அங்கிருந்து எகிப்து, ரோம் வழியாக அமெரிக்கா செல்ல அவன் ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்தான். அதற்கு வேண்டிய விமானப் பிரயாணச் சீட்டுகளும் வாங்கியிருந்தான். அப்படி அவன் சென்றுவிட்டால் அவனை யாருமே பிடிக்க முடியாது. யார் அந்த நடராஜ சிலையைக் களவு செய்தார்கள் என்பதையும் கண்டுபிடிக்க முடியாது. இதுதான் அவனுடைய திட்டம்.
தனது ஜாகைக்குச் சென்றதும் இரண்டு ஆள்களை ஒரு பரிசலில் சென்று தாழிவயிறனையும் தங்கமணி முதலியவர்களையும் அழைத்து வரும்படி சொன்னான். அவர்கள் உடனே புறப்பட்டுச் சென்றனர். ஆனால், கொல்லிமலைக் குள்ளன் எதிர்பார்த்தபடி அவர்கள் மற்றவர்களோடு விரைவில் திரும்பவில்லை. "ஏன் இவ்வளவு நேரமாகிறது? அக்கரைக் காட்டிற்குப் போய்விட்டுவர முக்கால் மணிக்கு மேல் பிடிக்காதே?" என்று அவன் கொஞ்சம் பதட்டத்தோடு எண்ணிக்கொண்டு தன் ஜாகையின் முன்னால் உலாவிக் கொண்டிருந்தான்.
அந்தச் சமயத்தில் ஆள்கள் தாழிவயிறனோடு திரும்பி வந்தார்கள். தங்கமணி முதலியவர்களைக் காட்டில் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லையென்றும், பரிசலைக் காணாததால் அவர்கள் தாழிவயிறன் தூங்கிக்கொண்டிருக்கிற சமயம் பார்த்துப் பரிசலில் ஏறிக்கொண்டு ஆற்றின் வழியாகவே போயிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்கள். தாழிவயிறன் மேல் கொல்லிமலைக் குள்ளனுக்குக் கோபம் கோபமாக வந்தது. அவனை வாய்க்கு வந்தவாறெல்லாம் திட்டினான். தாழிவயிறனையும் மற்ற இருவரையும் உடனே ஒரு பரிசலில்
ஏறிப்போய்க் குழந்தைகளைத் தேடிப் பிடிக்க வேண்டுமென்றும் ஆணையிட்டான். "உடனே புறப்படுங்கள். பரிசலை வேகமாகச் செலுத்தி அந்தப் பயல்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களோடு கொல்லிமலைக்கு அப்பால் உள்ள நமது தச்சுப்பட்டறைக்கு வந்து சேருங்கள். அங்கேயே அவர்களைப் பத்திரமாக யார் கண்ணிலும் படாமல் வைத்திருங்கள். ஜாக்கிரதை” என்று சொல்லி அவர்களை விரட்டி அனுப்பினான்.
9
“ம்... துடுப்பை வேகமாகப் போடுடா! எப்படியாவது அந்தப் பசங்க செல்லும் பரிசலைப் பிடித்துவிட வேண்டும்" என்றான் ஒருவன்.
"இந்தத் தாழிவயிறனால் நமக்கு இந்தத் தொல்லை ஏற்பட்டிருக்கிறது. தாழிவயிறா, நீயும் துடுப்புப் போடடா!" என்றான் மற்றவன்.
"போடா ரங்கப்பா! எல்லாம் அந்தக் குரங்கு பண்ணின வேலை" என்றான் தாழிவயிறன்.
"குரங்கு என்ன பண்ணிச்சாம்?" என்று உறுமினான் ரங்கப்பன்.
"அந்தப் பசங்க ஒரு குரங்கை வைச்சிருந்தானுங்க. அது தேங்காயைப் பறிச்சுப் பறிச்சுப் போட்டுக்கிட்டேயிருந்தது. நான் உடைச்சு உடைச்சுத் தின்னுக்கிட்டேயிருந்தேன். அப்படியே தூக்கம் வந்திட்டுது.”
“சரி சரி. துடுப்பை வேகமாகப் போடு. எப்படியும் அவங்களைக் கண்டுபிடிச்சு எசமாங்கிட்டே நல்ல பேரு வாங்கணும், இல்லாவிட்டால் அவர் கோபத்தைத் தாங்க முடியாது” என்றான் ரங்கப்பன்.
"அதோ ஒரு பரிசல் தெரியுது. அதன் பக்கமா தள்ளுங்கடா வேகமா" என்றான் மற்றொருவனான சொக்கன். மூன்று பேரும் பரிசலை வேகமாகச் செலுத்தினர். முன்னால் சென்ற பரிசலை விரைந்து நெருங்கிப் பிடித்தனர்.
"அட பசங்களா ! ஏமாத்திட்டுப் போகவா பாத்தீங்க?" என்று கூறிக்கொண்டே தாழிவயிறன் முன்னால் சென்ற பரிசலை எட்டிப் பிடித்தான். அதிலிருந்த மூன்று போலீஸ் வீரர்கள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.
"யாரடா நீங்கள்? பிடியுங்கள் இவர்களை!” என்று அதட்டினான் ஒரு போலீஸ் வீரன், உடனே போலீஸ் வீரர்கள் தமது திறமையைக் காட்டலாயினர்.
"சாமி, நாங்க மீன் பிடிக்க வந்தவங்க, எங்களை விட்டு விடுங்க, சாமி" என்று கெஞ்சினான் தாழிவயிறன்.
"மீன் பிடிக்கவா வந்தீர்கள்? வலையெல்லாம் எங்கே? தூண்டிலைக்கூடக் காணோம்!"
தாழிவயிறனுக்குச் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. அவன் ஏதோ குளறிப் பேசலானான். "பசங்களா என்று பினாத்தினாயே, அந்தப் பசங்களைத் தேடியா வந்தீர்கள் ? சொல் உண்மையை” என்று அதட்டினான் ஒரு போலீஸ் வீரன்.
"இல்லை சாமி, அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க” என்று தாழிவயிறன் இழுத்து இழுத்துப் பேசலானான். ரங்கப்பனும்
சொக்கப்பனும் திகைத்துப் போய் மௌனமாக இருந்தார்கள். அவர்களால் ஒன்றுமே பேச முடியவில்லை.
"டேய் 712, அவன் தொப்பை வயித்திலே ரெண்டு கும்கா குத்து விடு. அப்பத்தான் உண்மை வெளிவரும்." இப்படி ஒரு போலீஸ்காரன் சொன்னதுதான் தாமதம், "கும்கும்" என்று தாழிவயிறனுடைய வயிற்றின் மேலே குத்து விழலாயிற்று.
“ஐயோ சாமி, எல்லாம் சொல்லிவிடுகிறேன். குத்தாதீங்க. தின்ன தேங்காயெல்லாம் வெளியே வந்திடும் போல இருக்குது” என்று கெஞ்சினான் தாழிவயிறன்.
"ம், ம், சொல்லு, சட்டென்று சொல்லு" என்று இன்னும் இரண்டு குத்துவிட்டான் போலீஸ் வீரன். தாழிவயிறன் உண்மையைச் சொல்லிவிட்டான். தங்கமணி முதலியவர்களைத் தேடிப்பிடிக்க அவர்களை அனுப்பியிருக்கிறார்கள் என்ற உண்மை போலீஸ் வீரர்களுக்குத் தெரிந்துவிட்டது.
"யார் உங்களை இப்படித் தேடிப்பிடிக்கச் சொன்னது? அந்தக் கொல்லிமலைக் குள்ளனா?” என்று பலத்த குரலில் கேட்டான் ஒரு போலீஸ்காரன்.
"கொல்லிமலைக் குள்ளனா ? அவனை எங்களுக்கு தெரியவே தெரியாது. எங்கள் எசமான் தான் அனுப்பினாரு" என்றான் தாழிவயிறன். “யார் உங்க எசமான் ?"
"எங்க எசமான் எசமான் தான். அவரைத் தவிரக் குள்ளனை எங்களுக்குத் தெரியவே தெரியாது" என்றான் தாழிவயிறன், மேலும் நாலு குத்து அவன் வயிற்றில் விழுந்தது. ஆனால், அதற்கு மேலே அவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அந்த எசமான் பெயர் இந்த ஆள்களுக்குத் தெரியாது என்பதைப் போலீஸ் வீரர்கள் புரிந்துகொண்டார்கள்.
“சரி, உங்களை எங்கே வரச் சொன்னான் அவன் ? அதைச் சொல்” என்று அதட்டினான் போலீஸ் வீரன்.
"அந்தப் பசங்களையும் பிடித்துக்கொண்டு கொல்லி மலைக்கு அந்தப் பக்கம் தச்சுப்பட்டறைக்கு வரச் சொன்னாங்க” என்று தாழி வயிறன் உண்மையைச் சொன்னான்.
தங்க மணி முதலியோர் எறியுள்ள படகைத் தேடிக் கொண்டே ஆற்றில் செல்லுவதென்றும், தாழிவயிறன் கூறிய தச்சுப்பட்டறைக்குச் சென்று, அங்கே பதுங்கியிருந்து, தாழி வயிறனின் எசமானைக் கைது செய்வதென்றும் போலீஸ் வீரர்கள் தங்களுக்குள்ளேயே முடிவு செய்துகொண்டார்கள். குழந்தைகளைக் காப்பாற்றுவதோடு திருடனையும் பிடித்து விடலாம் என்ற உற்சாகத்தோடு போலீஸ் வீரர்கள் இருந் தார்கள்.
இரண்டு பரிசல்களும் ஆற்றில் வேகமாகச் சென்றன. தாழிவயிறனும் மற்றவர்களும் துடுப்பைச் சுறுசுறுப்போடு போட்டார்கள். இல்லாவிட்டால் உதை கிடைக்கும் என்று அவர்களுக்குப் பயம். அதனால் போலீஸ்காரர்கள் விருப்பப்படியே அவர்கள் நடந்துகொண்டார்கள். அவர்கள் தப்பிப் போய்விடாதவாறு போலீஸ்காரர்கள் எச்சரிக்கையாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆற்று வெள்ளத்தோடு அந்த வெள்ளத்தின் வேகத்தை மீறிக்கொண்டு இரண்டு பரிசல்களும் சென்றன.
தாழிவயிறனையும் அவனுடன் வந்த இருவரையும் போலீஸ்காரர்கள் மாறிமாறிப் பல கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தனர். அவர்களுடைய எசமான் மரப் பொம்மைகள் செய்து அவற்றிற்கு வர்ண அலங்காரங்கள் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றவர் என்றும், திருட்டு வேலைக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லையென்றும் அவர்கள் கூறினார்கள். அவர்கள் பொய் பேசவில்லை யென்பதும் புலனாயிற்று. அதனால் போலீஸ்காரர்களுக்குக் கொல்லிமலைக் குள்ளன் திருடனே அல்லவென்று தோன்றிற்று.
10
"அண்ணா, வரவர ஆற்றின் இரைச்சல் அதிகமாகிறதே! முன்னால் ஏதாவது நீர் வீழ்ச்சி இருக்குமோ?" என்று கண்ணகி அச்சத்தோடு கேட்டாள். அவள் உடம்பெல்லாம் நடுங்கிற்று.
துடுப்பு வலித்துக்கொண்டே தங்கமணி அவளுக்குத் தைரியம் சொல்லலானான். "நீர்வீழ்ச்சியாக இருக்காது. இருந்தால் அதன் ஓசை வேறு விதமாக இருக்கும். பயப்பட வேண்டாம்" என்று அவன் அந்த ஆற்றின் பகுதியெல்லாம் நன்கு அறிந்தவன்போலச் சொன்னான்.
"ஆற்று வெள்ளம் பாறைகளின்மேல் மோதுவதால் இந்த இரைச்சல் உண்டாவது போலத் தோன்றுகிறது” என்று சுந்தரம் தன் கருத்தை வெளியிட்டான்.
பரிசலைக் கரையோரமாகச் செலுத்தும் முயற்சியில் இரண்டு பேரும் தீவிரமாக ஈடுபட்டார்கள். ஆற்றின் இரைச்சல் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.
ஓர் இடத்திலே ஆறு புதிதாகக் கரை புரண்டு கரைப் பகுதியிலும் புகுந்து மண்ணை அரித்துக்கொண்டு ஓடியிருப்பது போலத் தென்பட்டது. புதிய வெள்ளம் ஆற்றிலே வந்த போது இது ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் அங்கே பல மரங்கள் வேரோடு பறிக்கப்பட்டு வெள்ளத்தில் போயிருக்கலாமென்றும் தெரிந்தது. ஏனெனில், சுற்றிலும் கரையோரத்தில் மரங்கள் அடர்ந்து ஒரே இருட்டாக இருக்க, இந்தப் பகுதி மட்டும் மரங்களின்றி இருந்தது. அங்கே ஒரு மரம் மட்டும் இன்னும் வெள்ளத்தில் போகவில்லை; ஆனால், தலைசாய்ந்து பாதி விழுந்து சாய்ந்த நிலையிலே இருந்தது. அதன் கிளையொன்று ஆற்றிற்குள்ளே நீளமாக நீண்டிருந்தது. அதன் பக்கமாகப் பரிசல் செல்லவே தங்கமணிக்குத் திடீரென்று ஒரு யோசனை உண்டாயிற்று. பரிசலைக் கட்டி வைப்பதற்காகப் பயன்படும் கயிற்றை அவன் எடுத்து வந்திருந்தானல்லவா? அந்தக் கயிறு இப்போது பயன்படும் என்று கருதினான். அதை எடுத்து ஒரு நுனியை இடக்கையில் பிடித்துக்கொண்டு மற்றொரு நுனியை வலக்கையால் பற்றி ஆற்றுவெள்ளத்திற்கு மேலே தென்பட்ட மரக்கிளைக்கு மேலே போகுமாறு வேகமாக வீசிவிட்டான். கயிறு மரக் கிளைக்கு மேலாகச் சென்று, அதன் மறு பக்கத்திலே நீரில் விழலாயிற்று. அதற்குள் பரிசலும் மரக்கிளையின் அடியிலே புகுந்து மறுபக்கம் வந்தது. உடனே தங்கமணி தான் வீசிவிட்ட கயிற்று நுனியையும் எட்டிப் பிடித்துக்கொண்டான். இப்பொழுது கயிற்றின் இரு நுனிகளும் அவன் கையில் இருக்கவே, பரிசல் மேற்கொண்டு ஆற்றில் போகாமல் ஓரிடத்திலேயே நின்றுவிட்டது.
சுந்தரத்திற்கும் இப்பொழுது தங்கமணியின் எண்ணம் புரிந்துவிட்டது. துடுப்பைப் பரிசலுக்குள்ளே போட்டுவிட்டு அவனும் கயிற்றைக் கெட்டியாகப் பிடித்தான். அதனால் ஆற்றுவெள்ளம் இழுத்தபோதிலும் பரிசல் ஒரே இடத்தில் மிதக்கலாயிற்று. ஆனால், சாய்ந்து விழுந்திருந்த மரமும் அதன் கிளையும் ஆட்டம் கொடுக்கத் தொடங்கிற்று. ஆற்று வெள்ளம் அடிமரத்தின் கீழே மண்ணை ஆழமாகப் பறித்திருந்த படியால் மரம் உறுதியாக நிற்கவில்லை.
"சுந்தரம், இந்த மரம் எவ்வளவு நேரம் தாக்குப்பிடித்து நிற்கிறதோ அது வரையில் நமக்குக் கவலை இல்லை” என்று தங்கமணி சிறிது உற்சாகத்தோடு கூறினான்.
“மரம் பெயர்ந்து வந்துவிட்டால் என்ன செய்வது?" என்று தடுமாற்றத்தோடு கண்ணகி கேட்டாள்.
"விடிவதற்குள் அப்படி ஒன்றும் ஏற்பட்டுவிடாது. வெளிச்சம் வந்த பிறகு இந்த மரத்தின் உதவி இல்லாமலேயே நாம் சமாளித்துக்கொள்ளலாம்" என்று தைரியமூட்டினான் சுந்தரம்.
"விடிவதற்குள்ளே ஜின்காவும் வந்து சேர்ந்துவிடும்" என்று நம்பிக்கையுடன் தங்கமணி பேசினான்.
"பரிசல் இப்படி ஒரே இடத்தில் நின்றால் ஆபத்து இல்லையா, அண்ணா? இப்போது ஒரு முதலை வந்து, அதன் வாலால் வீசி அடித்தால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டாள் சிறுமி.
"முதலை வாலை வீசினால் தலையை வாங்கிவிட்டால் போச்சு" என்றான் சுந்தரம்.
"இங்கெல்லாம் முதலையே இருக்காது. பயப்படாதே" என்று ஆறுதல் கூறினான் தங்கமணி.
இருந்தாலும் கண்ணகிக்கு அச்சம் நீங்கவில்லை. எங்கும் இருள் சூழ்ந்திருக்கும்படியான நேரத்திலே ஆற்றுக்குள்ளே பரிசலில் அமர்ந்திருப்பது அச்சத்தை அதிகப்படுத்திற்று. மரங்களுக்கிடையே இருந்து கோட்டான் அலறுகின்ற சத்தமும், நரிகள் ஊளையிடுகின்ற குரலும் அடிக்கடி கேட்டன. சிறுத்தைப் புலி ஒன்று திடீரென்று உரத்த குரலில் கர்ஜனை செய்தது. அந்த ஓசை ஆற்றின் இரைச்சலையும் அடக்கி விட்டுத் தூரத்திலுள்ள மலைவரையிலும் சென்று, அங்கிருந்து மீண்டும் நெஞ்சு திடுக்கிடும்படி எதிரொலித்தது.
“தங்கமணி, அதோ, ஆற்றின் நடுவிலே இரண்டு பரிசல்கள் வேகமாகப் போகின்றன, பார்த்தாயா?" என்று சுந்தரம் பரபரப்புடன் கூறினான். இவர்கள் இருந்த பகுதி மிகவும் இருண்டு இருந்த போதிலும் ஆற்றின் மையப் பகுதியில் மரக்கூட்டம் இல்லாமையால் ஓரளவு இருள் குறைவாகவே இருந்தது. அதனால் அங்கு செல்கின்ற பரிசல்களை நன்றாகப் பார்க்க முடிந்தது.
"அண்ணா, அண்ணா, நமக்குத்தான் உதவி வந்திருக்கிறது" என்று உற்சாகத்தோடு கூறினாள் கண்ணகி.
நான் சத்தம் போட்டுக் கூப்பிடட்டுமா?" என்று சுந்தரம் ஆவலோடு கேட்டான்.
"அவர்கள் நமக்கு உதவிக்கு வருகிறார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. வஞ்சியூர் சத்திரத்திலிருந்து அப்பாவோ அம்மாவோ பரிசல் அனுப்பியிருந்தால் ஒன்று தான் வந்திருக்கும். இவை அந்தக் குள்ளன் அனுப்பிய பரிசல் என்று தான் நான் நினைக்கிறேன். அவன் நாம் தப்பி வந்திருப்பதை அறிந்துகொண்டிருக்க வேண்டும்." என்று ஆழ்ந்த யோசனையோடு தங்கமணி மொழிந்தான்.
"அப்படியானால் இப்பொழுது நாம் என்ன செய்யலாம் ?" என்று சுந்தரம் பதட்டத்தோடு கேட்டான்.
"அண்ணா, அந்தக் குள்ளன் கையிலே மறுபடியும் நாம் சிக்கக் கூடாது. அதற்கென்ன செய்யலாம்?” என்று கண்ணகியும் கேட்டாள்.
"அந்தப் பரிசல்கள் ஆற்றோடே போகட்டும். நல்ல வேளையாக இந்தப் பரிசல் அவர்கள் கண்ணில் படவில்லை" என்று நிதானமாகப் பதில் சொன்னான் தங்கமணி.
"ஒருவேளை நம்மைக் காப்பாற்றுவதற்கு மாமா அனுப்பிய பரிசலாக இருந்துவிட்டால்...........?"
"அப்படி நினைத்து நாம் ஏமாந்துவிடக்கூடாது. நமக்கு இப்பொழுது துணை எதிர்பார்ப்பதைவிட, ஆபத்தை வலியத் தேடிக்கொள்ளாமல் இருப்பதே நல்லது. நமக்குத் துணையாக வந்த பரிசல்களாக இருந்தாலும் விடிந்த பிறகு அவற்றைப் பற்றி யோசிப்போம். முதலில் ஜின்கா வந்து சேரட்டும். அதுவரையில் நாம் புதிய தொல்லையில் மாட்டிக்கொள்ளக் கூடாது.”
இவ்விதம் தங்கமணி தீர்மானமாகக் கூறிவிட்டான். அதனால் போலீஸ்காரர்களின் உதவியை அவர்கள் பெற முடியாமல் போய்விட்டது. தங்கமணியின் எண்ணமெல்லாம் இப்பொழுது ஜின்காவைப் பற்றியே இருந்தது. அது திரும்பி வருவதை அவன் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
சத்திரத்தை விட்டுப் புறப்பட்ட ஜின்கா வெகு வேசமாக வந்துகொண்டிருந்தது. முதலில் வஞ்சியாற்றின் கரையோரமாகவே தரையில் தாவித்தாவிப் பாய்ந்து ஓடிற்று. கரையோரத்திலேயே மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதி வந்ததும் கரையிலிருந்து ஆற்றில் குதித்து நீந்தலாயிற்று. இவ்வாறாக அது நிலத்திலும் நீரிலும் மாறிமாறிச் சென்றது. எப்படியாவது தங்கமணியிடம் விரைந்து செல்ல வேண்டுமென்று அதற்கு ஒரே ஆவல். ஆனால், நீண்ட நேரம் அது வேகமாக வந்தும் பரிசல் அதன் கண்ணுக்குத் தென்படவே இல்லை.
11
“தங்கமணி, இந்த மரம் ஒரே ஆட்டம் கொடுக்கிறதே, அதிக நேரம் தாங்காது போல் இருக்கிறது" என்று சுந்தரம் தெரிவித்தான். ஆற்றுவெள்ளத்திற்குள் நீட்டிக்கொண்டிருக்கும் மரக்கிளையைச் சுற்றிப் போடப்பட்ட கயிற்றில் இரண்டு நுனிகளையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டிருக்கும் முறை இப்பொழுது அவனுக்கு. அதனால் மரத்தின் நிலைமையை அவனால் உணர முடிந்தது.
"நல்லவேளை கண்ணகி தூங்குகிறாள். இல்லாவிட்டால் அவள் ரொம்பவும் பயப்படுவாள். மரம் அப்படி ஆட்டம் கொடுக்கிறது" என்று அவன் மேலும் கூறினான். தங்கமணி சட்டென்று கயிற்றின் நுனிகளைத் தன் கையில் வாங்கிக கொண்டு கவனித்தான். சுந்தரம் சொல்வது சரிதான் என்று அவனுக்குப் பட்டது. கயிறு கையில் இருக்கும்போதுதான் மரத்தின் நிலைமையை நன்றாக உணர முடிந்தது.
"அதோ, நிலாக் கிளம்புகிறது. இப்பொழுது மணி மூன்றிருக்கலாம்" என்றான் தங்கமணி.
"இந்த வெளிச்சம் நமக்கு உதவியாக இருக்கும்" என்று சுந்தரம் சற்று உற்சாகத்தோடு பேசினான்.
"அது மெய்தான். ஆனால், இந்த மரம் இன்னும் ஒருமணி நேரங்கூடத் தாங்காது போல இருக்கிறது" என்று தன் கவலையைத் தெரிவித்தான் தங்கமணி.
இப்படியாக இருவரும் விட்டுவிட்டு உரையாடிக்கொண்டே கயிற்றை மாறிமாறிப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். காடுகளுக்கும் மலைகளுக்குமிடையிலே இப்படி இரவு நேரத்தில் ஆற்றில் மிதந்துகொண்டிருப்பது அவர்களுக்குத் துணிகர உணர்ச்சியையும் அச்சத்தையும் கலந்து தந்துகொண்டிருந்தது ஆனால், அவர்கள் மனம் சோரவில்லை. அச்சத்தினால் செயலற்றுப் போய்விடவில்லை. தங்களால் இயன்றதை செய்வதில் சிறிதும் தளர்ச்சியடையாமல் இருந்தனர்.
மேலும் ஒரு மணி நேரம் இந்த நிலையில் கழிந்தது “மணி. இந்தக் கயிற்றைப் பிடித்துப்பார். எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கிறது" என்று பரபரப்புடன் கூவினான் சுந்தரம். தங்கமணி வேகமாகக் கயிற்றைப் பற்றியதும் சுந்தரம் சொல்வது சரிதான் என்று அவனுக்குப் புலப்பட்டு விட்டது.
“இனியும் நாம் இந்த மரத்தை நம்பக்கூடாது. பிறகு நமக்கு உதவி செய்த மரமே நம்மை மோதித் தீங்கு செய்தி விடும்" என்று தங்கமணி கூறிக்கொண்டே, தன் கைப்பிடியிலிருந்த கயிற்றின் நுனி ஒன்றைத் தளர்த்தி விட்டுவிட்டு, மற்ற நுனியைப் பிடித்து இழுக்கலானான். கயிற்றை விடாமல் உருவி எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது அவனுடைய எண்ணம்.
அந்த எண்ணம் தொந்தரவு இல்லாமல் நிறைவேறியது தான் தாமதம், பரிசலும் ஆற்றோடு செல்ல ஆரம்பித்துவிட்டது. மரமும் பின்னாலேயே நிலை பெயர்ந்து புரண்டு வீழ்ந்து வரலாயிற்று. அதன் கிளைகளில் அகப்படாமல் தப்பவேண்டுமானால் பரிசலைச்சற்று வேகமாக முன்னால் செலுத்துவது நல்லதென்று தங்கமணிக்குத் தோன்றிற்று. அதனால், அவன் வேகமாகத் துடுப்பை வலிக்கலானான். ஆனால், அந்த இடத்திலே ஆறு சுழித்துக்கொண்டு ஓடிற்று. இவர்கள் எதிர்பாராத விதமாக அந்தச் சுழிப்பு கரையை நோக்கியே சென்றதால் எல்லாம் அனுகூலமாக முடிந்தது.
"இனி மரத்தைப்பற்றிக் கவலையில்லை" என்றான் தங்கமணி.
"கரையில் காலெடுத்து வைக்க வேண்டும். அதற்குப் பரிசலை இன்னும் சற்று கரை அருகில் செலுத்த முயல வேண்டும். அது தான் இனி நமக்கு வேலை. ஒன்று போனால் மற்றொன்று வருகிறது. 'வால் போச்சு, கத்தி வந்தது, டும்டும்' என்று சுந்தரம் நகைத்தான். இந்தச் சமயத்திலே கண்ணகி விழித்துக்கொண்டாள். “அண்ணா, கோயிலிலே மத்தளம் அடிக்கிறதா ?" என்று கண்ணைப் பிசைந்து கொண்டே கேட்டாள். அவளுக்கு வஞ்சியூர்ச் சத்திரத்திலே படுத்திருப்பதாக நினைப்பு. “ஆமாம், தேர் புறப்பட்டுவிட்டது. அம்பாள் எழுந்தருள வேண்டியது தான் பாக்கி" என்று கேலி செய்தான் சுந்தரம். அப்பொழுது தான் கண்ணகிக்கு நிலைமை புலனாயிற்று.
"அண்ணா, இன்னும் கரைக்கு வந்து சேரவில்லையா? பொழுதுகூட விடிந்துவிடும் போலிருக்கிறதே!" என்று அவள் எழுந்து உட்கார்ந்து கவலையோடு கேட்டாள். கொட்டாவி விட்டுக்கொண்டு கிழக்குப் பக்கம் வெளுத்து வருவதை ஆவலோடு கவனித்தாள். அந்தச் சமயத்திலே சுந்தரம் திடீரென்று கை தட்டிக்கொண்டு உற்சாகத்தோடு, "அதோ, அதோ ஜின்கா!" என்று உரத்துக் கூவினான். தங்கமணியும் அவனோடு சேர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தான். ஜின்கா வந்து சேர்ந்தது அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஜின்காவிற்கும் ஒரே குதூகலம். அதுவும் பல
விதமாக மகிழ்ச்சிக் குரல் எழுப்பி ஆராவரம் செய்துகொண்டே பரிசலுக்குள் தாவிக் குதித்தது. தங்கமணி ஜின்காவின் உடம்பிலிருந்து வழியும் தண்ணீரிலே தனது சொக்காயெல்லாம் நனைவதைக்கூடப் பொருட்படுத்தாமல் அதைத் தன் உடம்போடு சேர்த்துக் கட்டி அணைத்துக்கொண்டான். ஜின்காவும் அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தன் மகிழ்ச்சியை வெளியிட்டது.
பிறகு, ஜின்கா தன் கன்னத்தில் அடக்கிவைத்திருந்த உருண்டைச் சிமிழை வெளியே எடுத்து, தங்கமணியிடம் கொடுத்தது.
“இதோ, அப்பா கடிதம்” என்று கூவினாள் கண்ணகி. “மாமா கடிதமா, அத்தை கடிதமா?" என்று சுந்தரம் சந்தேகத்தோடு கேட்டான்.
"யார் கடிதமென்றாலும் படிப்பதற்கு இன்னும் கொஞ்சம் வெளிச்சம் வர வேண்டும். அதற்குள்ளே கரையைச் சேருவதற்கு முயற்சி பண்ணுவோம்" என்று தங்கமணி கூறிவிட்டு, ஜின்காவைத் தட்டிக் கொடுத்தான்.
"ஜின்கா, நீ ரொம்ப களைத்துப் போயிருக்கிறாய், இருந்தாலும் உன்னுடைய உதவிதான் இப்பொழுது முதலில் வேண்டும்" என்று அவன் இரங்கிய குரலிலே ஜின்காவைப் பார்த்துக் கூறினான்.
“அண்ணா, ஒரு தேங்காயை உடைத்து ஜின்காவிற்குக் கொடுக்கட்டுமா? பாவம், ரொம்பக் களைத்துப்போயிருக்கிறது" என்று கண்ணகி பரிவோடு கேட்டாள். ஆனால், ஜின்கா உடனே செயலில் இறங்கத் துடித்துக்கொண்டிருந்தது.
"தங்கமணியைவிட ஜின்காவிற்குத்தான் பரிசலைக் கரைக்குச் சேர்க்க அவசரம். ஆனால் அதற்குத் துடுப்புப் போடத் தெரியுமா என்ன?" என்று சுந்தரம் புன்முறுவல் செய்தான்.
“துடுப்புப் போடத் தெரியாது. ஆனால், ஜின்கா பரிசலைக் கரைக்குச் சேர்க்கப்போகிறது பார்" என்று கூறிக் கொண்டே ஜின்காவின் கையிலே கயிற்றின் ஒரு நுனியை எடுத்துத் தங்கமணி கொடுத்தான். அது கயிற்றைப் பற்றிக் கொண்டே ஆற்றில் குதித்துக் கரையை நோக்கி நீந்தத் தொடங்கியது. "டேய் சுந்தரம்! நீ துடுப்பைப் போடு" என்று கூறிக்கொண்டே தங்கமணி தன் கையில் கயிற்றைப் பற்றிக் கொண்டு அதைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆற்று நீரில் தளர்த்திவிட்டுக்கொண்டிருந்தான். நல்லவேளையாகக் கயிறு போதுமான அளவு நீளமாக இருந்தது. அதனால் ஜின்கா ஆற்றின் கரைக்குக் கயிற்றோடு போய்ச் சேர முடிந்தது.
ஆனால் அதனால் பரிசலை இழுத்துப் பிடிக்க முடியாது. அது இழுத்துப் பிடிக்க முயன்றிருந்தால் ஆற்று வெள்ளத்தின் வேகம் அதையும் சேர்த்து இழுத்துக்கொண்டுதான் போயிருக்கும். ஜின்கா பரிசலோடு கூடவே கரையிலே கொஞ்ச தூரம் ஓடிற்று. தங்கமணி பல வகையாகக் குரலெழுப்பி அதற்குச் சமிக்கை செய்துகொண்டே இருந்தான். அதைப் புரிந்து கொண்டு ஜின்கா நடந்தது. கரையோரமாக ஒரு மரம் இருந்தால் போதும். அதை எதிர்பார்த்து ஜின்கா பரிசலுக்கு நேராகக் கரையில் ஓடலாயிற்று. ஓரிடத்திலே ஒரு பெரிய மரக் கூட்டம் கரையின் ஓரத்திலேயே இருந்தது. அதை நோக்கி ஆவலோடு ஜின்கா ஓடியது. ஒரு மரத்தின் அடிப்பாகத்திலே அது கயிற்றை இரண்டு மூன்று முறை சுற்றும்படியாக வேகமாகச் சுற்றி சுற்றி ஓடியது. இதைத்தான் தங்கமணி எதிர்பார்த்தான். சுந்தரமும் அவனுடைய யுக்தியைப் புரிந்து கொண்டு உற்சாகமாகப் 'பலே, பலே' என்று கூவினான்.
கயிற்றின் ஒரு நுனி அடி மரத்திலே கெட்டியாகச் சுற்றி யிருந்தது. மற்றொரு நுனியைத் தங்கமணி உறுதியாகப் பிடித்துக்கொண்டான். "அண்ணா, நானும் பிடிக்கட்டுமா? ...............சுந்தரம், நீ துடுப்புப் போடுவதை விடாதே” என்று கண்ணகி மகிழ்ச்சியோடு கூறினாள்.
"துடுப்புப் போடாவிட்டாலும் இனிப் பரிசல் கரையோரம் சேர்ந்துவிடும்” என்று கூறினான் சுந்தரம்.
சுந்தரம் கூறியது மெய்தான். இப்பொழுது பரிசல் ஆற்று வேகத்தினாலேயே தள்ளப்பட்டுக் கொஞ்சங் கொஞ்சமாகக் கரையை அணுகிற்று. ஆழம் முழங்கால் அளவுக்கு மேல் அதிகம் இல்லை என்று தெரிந்ததும் தங்கமணி ஆற்றில் குதித்தான். பரிசலின் விளிம்பைக் கையில் பிடித்து அதைக் கரைக்கு இழுத்துச் சென்றான். சுந்தரமும் அவனைப் பின்பற்றி நீரில் குதித்து அவனுக்கு உதவியாக இழுத்தான். கொஞ்ச நேரத்தில் அவர்கள் கரையை அடைந்துவிட்டனர். கண்ணகி குதூகலத்தோடு கீழே இறங்கினாள். பிறகு தங்கமணியும் சுந்தரமும் சேர்ந்து பரிசலைத் தண்ணீரை விட்டே மேலிழுத்துவிட்டார்கள். அதற்குள் ஜின்கா கயிற்றை இழுத்துக்கொண்டு ஓடிவந்து சேர்ந்தது. பொழுதும் விடியலாயிற்று.
எல்லோருக்கும் ஒரே உற்சாகம். "டேய், அந்தக் கடிதத்தைப் பாரடா" என்று சுந்தரம் உற்சாகமாகக் கூறினான்.
தங்கமணி அவசரம் அவசரமாகக் கடிதத்தைப் பிரித்துப் படித்தான். தந்தை வடிவேலை அந்தக் குள்ளன் சூழ்ச்சி செய்து எங்கேயோ கொண்டுபோய் விட்ட செய்தியும், உதவிக்காகப் போலீஸ்காரர்களை ஒரு பரிசலில் அனுப்பிவிட்டு வள்ளிநாயகி கூடல் பட்டணம் செல்லுகின்ற செய்தியும் அப்பொழுதுதான் அவர்களுக்குத் தெரியவந்தன.
"அந்தப் பரிசலைப் பார்த்தோமே,உடனே நாம் கூவி அழைத்திருக்க வேண்டும்" என்றான் சுந்தரம்.
“ஒரு பரிசல் தானே அம்மா அனுப்பியிருக்கிறார்கள்! இரண்டு பரிசல்கள் எப்படி ஜோடியாக வந்தன?" என்று ஐயத்தோடு தன்னைத்தானே கேட்டுக்கொண்டான் தங்கமணி.
இந்தக் கேள்விக்கு விடை உடனே கிடைக்கவில்லை. "ஏன் இரண்டு பரிசல்களை அனுப்பியிருக்கக்கூடாதோ?” என்று சுந்தரம் கேட்டான்.
“அம்மா ஒரு பரிசலில் போலீஸ் வீரர்களை அனுப்புவதாகத்தான் எழுதியிருக்கிறார்கள். மற்றொரு பரிசல் அந்தக் குள்ளனுடைய ஆள்கள் வந்ததாக இருக்க வேணும். நாம் தப்பி வந்ததைக் குள்ளன் தெரிந்துகொண்டு நம்மைப் பிடிக்க ஆள்களை அனுப்பியிருப்பான். அவர்கள் போலீஸ்காரர்களிடம் அகப்பட்டார்களோ அல்லது போலீசார் அவர்களிடம் அகப்பட்டார்களோ தெரியவில்லை. எப்படியிருந்தாலும் அவர்களைக் கூப்பிடாததே நல்லதாயிற்று. திருடர்களிடம் நாம் அகப்படாமலிருக்க வேண்டுமல்லவா?" என்றான் தங்கமணி.
சரி, இப்போது என்ன செய்யலாம்?" என்று கவலையோடு கேட்டாள் கண்ணகி.
"இனி நாம் ஆற்று வழியாகப் போகாமல் இந்தக் காட்டு வழியிலே போய் எப்படியாவது கூடல் பட்டணம் போக முயற்சி செய்யலாம். புறப்படுங்கள்" என்று தங்கமணி, ஆழ்ந்த யோசனையோடு சொன்னான்.
12
"ஆளுக்கொரு தேங்காயை எடுத்துக்கொள்ளுங்கள்; வழியில் பசித்தால் சாப்பிடலாம்” என்று சொல்லிக்கொண்டே தங்கமணி தன் கையில் தேங்காயை எடுக்கப் போனான். முன்னாலேயே அவன் நீண்ட பரிசல் கயிற்றைச் சுருட்டித் தன் தோளில் மாட்டிக்கொண்டிருந்தான்.
"நீ மட்டும் ரெண்டு தேங்காயை எடுத்துக்கொள்; உனக்கொன்று, உன் குரங்குக்கொன்று” என்றான் சுந்தரம்.
“ஜின்கா இதையும் கன்னத்தில் அடக்கிக்கொள்ளுமா?" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் கண்ணகி.
"நல்ல தமாஷாகப் பேசுகிறயே! பயமெல்லாம் நீங்கிப் போய்விட்டதா?" என்று சுந்தரம் கேட்டுக்கொண்டே தான் ஒரு தேங்காயை எடுத்துக்கொண்டு, கண்ணகியிடம் ஒன்றைக் கொடுத்தான்.
மூவரும் காட்டிற்குள் புகுந்து சென்றார்கள். ஜின்கா தங்கமணியின் பக்கத்திலே நடந்து வந்தது.
“வாடா ஜின்கா, இரவெல்லாம் ஓடோடி வந்தது உனக்குக் களைப்பாய் இருக்கும்” என்று சொல்லிவிட்டுத் தங்கமணி இடத்தோளைத் தட்டினான். ஜின்கா ஒரே பாய்ச்சலில் அவன் தோள் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டது.
மரங்களும் செடிகளும் புதர்களுமாக அந்தக் காட்டில் அடர்ந்திருந்தன. பலவகையான கொடிகள் மரங்களில் பற்றிப் படர்ந்து தொங்கிக்கொண்டிருந்தன. அவற்றிற்கிடையே வழி உண்டாக்கிக்கொண்டு போவதே சிரமமாக இருந்தது. ஆனால், அவர்கள் விடாமுயற்சியோடு காட்டிற்குள் புகுந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
“எங்காவது ஒரு ஒற்றையடிப்பாதை தென்பட்டால் பிறகு அதைப் பின்பற்றியே காட்டைக் கடந்து செல்ல முயலலாம். அப்படிப் பாதையைத்தான் நான் தேடிப் போகிறேன்” என்று தனது நோக்கத்தை மற்றவர்களுக்கு விளங்குமாறு செய்து கொண்டே தங்கமணி முன்னால் சென்றான். ஆனால், அவன் எதிர்பார்த்தபடி காட்டிற்குள் பாதையொன்றும் தென்படவில்லை. ஓரிடத்திலே மரங்களுக்கிடையே ஒரு சிறிய புல்வெளி இருந்தது. சுற்றிலும் மரங்கள் ஓங்கி நின்றன. அவற்றின் மத்தியில் இருந்த அந்தப் பசும்புல் தரையிலே நின்று, காலை நேரத்தில் ஒரு மயில் அழகாக ஆடிக் கொண்டிருந்தது. பக்கத்தில் மூன்று பெண்மயில்கள் இரை தேடி உலாவிக் கொண்டிருந்தன. மூன்று பேரும் அந்த ஆண்மயிலின் ஆட்டத்தைக் கண்டு, அதில் மனத்தைச் செலுத்தி, அப்படியே நின்றுவிட்டார்கள். ஜின்காவும் அசையாமல் தோளின்மேல் அமர்ந்திருந்தது.
“அண்ணா, எத்தனை அழகாக அந்த மயில் ஆடுகிறது. இந்தக் காடு எனக்குப் பிடித்திருக்கிறது” என்று கண்ணகி மெதுவாகத் தங்கமணியிடம் கூறினாள்.
“பேசாதே, மயில் ஓடிப்போய்விடும்” என்று தங்கமணி மெதுவாக எச்சரிக்கை செய்தான். இந்தச் சமயத்தில் சுந்தரம் இரண்டு மரக்கிளைகளுக்கு இடையே வளைந்து தொங்கிக்கொண்டிருந்த ஏதோ ஒன்றைப் பார்க்கும்படி சுட்டிக் காட்டினான்.
அது ஒரு பெரிய மலைப்பாம்பு. ஒரு மரத்தின் கிளையிலே அதன் தலைப்பக்கம் சுற்றிக்கொண்டிருந்தது. மற்றொரு மரத்தின் கிளையிலே அதன் வால் பகுதி சுற்றிக் கொண்டிருந்தது. அதன் நடுப்பாகம் மெதுவாக வளைந்து கீழ்நோக்கித் தொங்கிக்கொண்டிருந்தது. பார்த்தவுடன் அதை மலைப்பாம்பென்று சொல்லவே முடியாது. ஏதோ ஒரு பெரிய கொடி ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிச் சென்று படர்ந்திருப்பது போலத்தான் தோன்றிற்று. அதன் அடியிலே தரையின் மீது ஒரு முயல் புல்லை மேய்ந்துகொண்டு மெதுவாக வந்துகொண்டிருந்தது. அது மலைப்பாம்பு தொங்குமிடத்திற்கு வந்ததுதான் தாமதம், அந்தப் பாம்பு மின்னல் வேகத்திலே முயலின்மீது விழுந்து, அதைத் தன் நீண்ட உடம்பால் சுற்றிக்கொண்டது. அடுத்த கணத்திலே அந்தப் பாம்பின் தசைநார்களால் இறுக்கப்பட்டு, முயலின் எலும்புகள் ‘படபட’ என்று ஒடிந்தன. முயல் வீறிட்டுக் கத்தி மாண்டு போயிற்று. பிறகு, மலைப்பாம்பு தனது பெரிய வாயைத் திறந்து, அந்த முயலை விழுங்கத் தொடங்கிற்று. இந்தக் கொடிய காட்சியைக் கண்டு கண்ணகி பயத்தால் வீறிட்டுக் கத்திவிட்டாள். “அண்ணா, இந்தக் காடு வேண்டவே வேண்டாம். உடனே பரிசலுக்காவது போய் விடலாம்” என்று அவள் அலறினாள்.
“கண்ணகி, பயப்படாதே. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்தக் காட்டைவிட்டு நாம் வெளியேறிவிடலாம்” என்று தங்கமணி தைரியம் சொல்லிவிட்டு, மலைப்பாம்பு இருக்குமிடத்தைவிட்டு விலகி முன்னால் வேகமாக நடந்தான். சுந்தரமும் கண்ணகியும் அவனுக்குப் பக்கத்திலேயே சென்றார்கள்.
தங்கமணி எதிர்பார்த்தது போல ஒற்றையடிப் பாதையொன்றும் காணப்படவில்லை. ஆனால் ஓரிடத்திலே புதர்களையும் குற்றுச் செடிகளையும் இரண்டு பக்கங்களிலும் மடக்கிவிட்டுக்கொண்டு யாரோ புதிதாக வழி செய்துகொண்டு போயிருப்பதாகத் தெரிந்தது. அந்த வழியைப் பின்பற்றிக் கொண்டு மூவரும் நடந்தார்கள். இவ்வாறு சுமார் அரை மணி நேரம் சென்றிருப்பார்கள். அப்பொழுது யாரோ ஒருவர் ‘அப்பா! அப்பா! ஐயோ ! ஐயோ !’ என்று வேதனையோடு அனத்துவது போலக் கேட்டது. போகப்போக இந்த வேதனைக் குரல் நன்றாகக் கேட்கலாயிற்று. அந்தக் குரல் வரும் திசையை நோக்கித் தங்கமணி வேகமாக நடந்தான். மற்றவர்களும் சந்தேகத்தோடு அவனைத் தொடர்ந்தார்கள்.
ஓர் இடத்திலே மரக்கட்டைகளைக்கொண்டே ஒரு சிறிய வீடு போலக் கட்டப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு எந்தப் பக்கத்திலும் கதவு இருக்கவில்லை. அதன் மேல் பாகத்திலும் கூரை போலப் பெரிய பெரிய மரத்துண்டங்களைப் போட்டுக் கட்டியிருந்தார்கள்; அதற்குள்ளிருந்துதான் யாரோ ஒருவர் அனத்தும் குரல் வெளியே வந்தது. தங்கமணியும் சுந்தரமும் அதைச் சுற்றி ஓடோடிப் பார்த்தார்கள். உள்ளே நுழைய ஒருவழியும் தென்படவில்லை.
உடனே தங்கமணி ஜின்காவை மேலே ஏறும்படி சமிக்கை செய்தான். அதன் கையில் தான் கொண்டுவந்த கயிற்றின் ஒரு நுனியையும் கொடுத்தான். அது பக்கத்திலிருந்த ஒரு மரத்தின்மீது ஏறி, ஒரு கிளைவழியாக வந்து, அந்த மரவீட்டின் கூரைமேல் குதித்தது. குதிப்பதற்கு முன்னால் மரக்கிளையிலே கயிற்றின் நுனியை நாலைந்து தடவை நன்றாகச் சுற்றிவிட்டது. “டேய் சுந்தரம், உன் பேனாக் கத்தியைக் கொடுடா” என்று கூறி, சுந்தரத்திடமிருந்து தங்கமணி அதை வாங்கிக்கொண்டு, கயிற்றைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே வீட்டின் சுவர்களான மரக்கட்டைகளின் மேல் கால்களை மாற்றி மாற்றி வைத்து மேலே ஏறினான். கூரையை அடைந்தவுடன் பேனாக்கத்தியால் வீட்டுக் கூரைக் கட்டைகளில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அறுத்தெறிந்தான். இரண்டு மூன்று கட்டைகளைக் மெதுவாகக் கீழே தள்ளி விட்டுவிட்டு உள்ளே பார்த்தான். அங்கே சுமார் முப்பது வயதுள்ள ஒரு வாலிபன் கையும் காலும் கட்டுண்டு கிடந்தான், அவன் தான் பசிக்கொடுமையால் அனத்திக் கொண்டிருந்தவன். அவனுடைய முகத்தைப் பார்த்ததும் தங்கமணிக்கு அவனுடைய நிலைமை நன்றாகத் தெரிந்துவிட்டது.
“சுந்தரம், அந்தத் தேங்காய்களை என்கைக்குக் கிடைக்கும் படி கூரை மேல் வீசு” என்று சுந்தரத்தை நோக்கிக் கூவினான்.
“ஏண்டா, பசிக்குதா?” என்று கேட்டுக்கொண்டே சுந்தரம் மூன்று தேங்காய்களையும் மேலே வீசினான்.
கூரையிலிருந்து அறுத்து எடுத்த ஒரு சிறு கயிற்றுத் துண்டைக்கொண்டு அந்தத் தேங்காய்களின் குடுமிகளில் கத்தியால் ஓட்டை செய்து சேர்த்துக் கட்டினான். பிறகு, அந்தத் தேங்காய்களைத் தான் தொற்றி ஏறிய கயிற்றின் மற்றொரு நுனியில் கட்டி, வீட்டிற்குள் விட்டான். தானும் கயிற்றைப் பிடித்துக்கொண்டே உள்ளே இறங்கினான். அந்த வாலிபனைக் கட்டியிருந்த கயிற்றையெல்லாம் கத்தியால் அறுத்துவிட்டான். அந்த வாலிபன் பசி மயக்கத்தால் சோர்ந்து அப்படியே தரையில் படுத்திருந்தான். தங்கமணி ஒரு தேங்காயை உடைத்துத் தேங்காய்த் தண்ணீரை அந்த வாலிபன் வாயில் ஊற்றினான். பிறகு, தேங்காயை அவன் உண்ணுமாறு கத்தியால் கீறி எடுத்துக் கொடுத்தான். அந்த வாலிபன் இவ்வாறு மூன்று தேங்காய்களையும் தின்றான்.
அதன் பிறகுதான் அவனுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. “நீ யாரப்பா? எப்படி இங்கு வந்தாய்? நீதான் என் உயிரைக் காப்பாற்றினாய்” என்று அவன் ஆச்சரியத்தோடும் நன்றியோடும் கூறினான்.
“முதலில் நாம் வெளியே போகலாம். பிறகு எல்லாம் பேசுவோம். வெளியில் கண்ணகியும் சுந்தரமும் காத்திருக்கிறார்கள்” என்று தங்கமணி அவசரப்பட்டான்.
கயிற்றின் உதவியைக்கொண்டே இருவரும் வெளியே வந்தனர்.
13
அந்த வாலிபன் பெயர் மருதாசலம். தங்கமணியும் மற்றவர்களும் அந்தக் காட்டிற்குள் வந்தது அவனுக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. “எப்படி நீங்கள் தனியாக இங்கு வந்தீர்கள்? இது யாரும் நுழையாத காடாயிற்றே!” என்று அவன் மீண்டும் கேட்டான்.
“எல்லாம் அந்தக் கொல்லிமலைக் குள்ளனுடைய சூழ்ச்சி. ஆனால், அவனிடமிருந்து தப்பி வந்துவிட்டோம்” என்று தங்கமணி பதிலளித்தான்.
“கொல்லிமலைக் குள்ளனா! அது யார் அவன்? நான் கேள்விப்பட்டதே இல்லையே!” என்று சந்தேகத்தோடு மருதாசலம் கேட்டான்.
“அவன் தான் சிலைகளைத் திருடும் நெட்டைக்குள்ளன்— பெயர் குள்ளன்; ஆனால். ஆள் நெட்டை” என்று சுந்தரம் சொன்னான்.
“சிலை திருடுகிறானா இவன்? ஓகோ! எனக்கு இப்போது கொஞ்சம் விளங்குகிறது. உடனே நாம் என் தகப்பன் இருக்கும் இடத்திற்குப் போக வேண்டும்” என்று மருதாசலம் கூறிவிட்டு முன்னால் நடந்தான்.
“எங்கள் அப்பாவையும் நாங்கள் கண்டுபிடிக்க வேண்டுமே!” என்று தன் கருத்தை வெளியிட்டான் தங்கமணி.
“உங்கள் அப்பா யார்?”
“அவர் தான் பேராசிரியர் வடிவேல். இங்கே வந்து குள்ளன் கையிலே அகப்பட்டுக்கொண்டுவிட்டார்.”
“அவரைக் கண்டுபிடிப்பதற்கும் என் தகப்பனாரின் உதவி வேண்டியிருக்கும். முதலில் அவரைப் பார்த்து நடந்ததையெல்லாம் சொல்லுவோம். பரிசல் இருந்தால் சீக்கிரம் போக முடியும்” என்று கூறிவிட்டு மருதாசலம் வேகமாக நடந்தான்.
“நாங்கள் பரிசலில் தான் வந்தோம்” என்று சுந்தரம் உற்சாகமாகச் சொன்னான்.
“பரிசல்? வேண்டவே வேண்டாம். யாருக்கும் பரிசல்விடத் தெரியாது” என்று அச்சத்தோடு கண்ணகி சொன்னாள்.
“எனக்கு ரொம்ப நன்றாகத் தெரியும். அம்மா, உனக்குப் பயமே வேண்டியதில்லை. பரிசல் இருக்கும் இடத்திற்குப் போவோம்; வாருங்கள்” என்றான் மருதாசலம்.
தங்கமணி வேகமாக முன்னால் சென்று வழிகாட்டினான். ஜின்கா அவன் தோள்மேலே ‘ஜங்’ என்று தாவி ஏறி உட்கார்ந்து கொண்டது.
“இதென்னடா, குரங்கு!” என்று கூறிக்கொண்டே மருதாசலம் அதை விரட்டியடிக்கப் புறப்பட்டான்.
“வேண்டாம் வேண்டாம்; இது நம் ஜின்காதான். அவர்கள் இரண்டு பேரும் அண்ணன் தம்பிகள்” என்று சிரித்தான் சுந்தரம்.
இவ்வாறு பேசிக்கொண்டே பரிசல் இருக்குமிடத்தை அடைந்தார்கள்.
“அடடா! இந்தத் தேங்காய்தான் உங்களுக்குச் சாப்பாடா? பரிசலில் உட்கார்ந்துகொண்டு நீங்கள் தேங்காயை உடைத்துச் சாப்பிடுங்கள். நான் பரிசல் தள்ளுகிறேன்” என்று மருதாசலம் பரிசலை ஆற்றில் மிதக்க விட்டுக்கொண்டே சொன்னான்.
அனைவரும் பரிசலில் ஏறிக்கொண்டனர். மருதாசலம் துடுப்புப் போட்டான். வஞ்சியாறு அந்த இடத்திலிருந்து இரண்டு உயரமான மலைகளின் இடையிலே ஏதோ ஒரு குகைக்குள் நுழைவது போல நுழைந்து சென்றது. ஆறு வளைந்து சென்றதால் எதிரிலேயும் ஒரு மலையின் பகுதியே உயர்ந்து காட்சியளித்தது. சுற்றிலும் உயரமான மரங்கள் மலைச்சாரல்களிலே ஓங்கி வளர்த்து நின்றன. அவற்றிற்கிடையிலே அந்த நேரத்திலும் இருட்டாகத்தான் தோன்றியது.
மலைகளுக்கு இடையிலே ஆறு வளைந்து செல்வது பார்ப்பதற்கு அழகாகத்தான் இருந்தது. என்றாலும், மருதாசலத்தைத் தவிர மற்றவர் மனத்திலே பயங்கர உணர்ச்சிதான் அதிகமாக இருந்தது. அவர்களால் இயற்கை அழகை அந்த நிலையில் கண்டு களிக்க முடியவில்லை.
இப்படி சுமார் அரை மைல் தூரம் சென்றிருப்பார்கள். மருதாசலம் பரிசலை வலக்கைப் பக்கத்திலிருந்த மலையருகாகவே தள்ளி வந்தான். அங்கே ஓரிடத்தில் மலை செங்குத்தாக ஓங்கி நின்றது. அதன்கீழே ஆற்றின் கரையில் ஒரு பரிசலை மேட்டில் தள்ளி நிறுத்தக்கூடிய அளவுக்குத் தட்டையான பாறை ஒன்று இருந்தது. அதன் அருகிலே பரிசலை நிறுத்தி மருதாசலம் லாகவமாகப் பாறையின்மேல் குதித்தான். பிறகு, பரிசலைப் பாறையோடு சேர்ந்தாற்போல் நிற்குமாறு பிடித்துக்கொண்டு, “பாறை மேல் இறங்குங்கள்” என்று கூறினான்.
“இங்கே இறங்கி என்ன செய்வது? போவதற்கு வழியே இல்லையே!” என்று சுந்தரம் கேட்டான்.
“இதோ வழி கிடைக்கிறது பாருங்கள்” என்று உற்சாகமாகக் கூறிக்கொண்டே மருதாசலம் தன் வாயில் இரண்டு விரல்களை மடக்கி வைத்துக்கொண்டு வேகமாகச் சீழ்க்கையடித்தான். கண்ணகி கண்களை உருட்டி விழித்துக்கொண்டு நின்றாள். சுந்தரத்திற்கும் தங்கமணிக்கும் அது துணிகரச் செயலுக்கு அறிகுறியாக உற்சாகமளித்தது. ஜின்கா மருதாசலத்தைச் சந்தேகத்தோடு பார்த்துக்கொண்டு பாறையின் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தது.
மருதாசலம் மூன்று சீழ்க்கையடித்தான். ஆனால், பதில் ஒன்றும் கிடைக்கவில்லை. “ஏன் அப்பா இன்னும் பதில் கொடுக்கவில்லை? அவரையும் அந்தக் குள்ளன் ஏதாவது...” என்று அவன் சொல்லி முடிக்கு முன்பே, “எதற்காகச் சீழ்க்கையடிக்கிறாய்? யாராவது வர வேண்டுமா?” என்று தங்கமணி கேட்டான்.
“அதோ, மேலே பாருங்கள். நூறடிக்கும் மேலே ஒரு நூலேணி சுருட்டி வைத்திருக்கிறதல்லவா? அதைக் கீழே விடச் சொல்லித்தான் அப்பாவுக்குச் சீழ்க்கையடித்தேன்” என்று மருதாசலம் தெரிவித்தான்.
“அதற்கு வேறு யாரும் வேண்டாம். டேய் ஜின்கா இங்கே வா” என்றான் தங்கமணி.
தங்கமணியின் சமிக்கைகளைப் புரிந்துகொண்டு ஜின்கா மேலே நிமிர்ந்து அண்ணாந்து பார்த்தது. அந்த இடத்தில் மலை செங்குத்தாகவும், வெறும் பாறையாகவும் இருந்ததால் நேராக மேலே ஏறுவதற்கு முடியாது. அதனால் ஜின்கா ஆற்றில் குதித்துக் கரையோரமாகவே ஆற்றின் நீரோட்டத்தோடு கொஞ்ச தூரம் நீந்திச் சென்றது. எல்லாரும் அதையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஜின்கா மரங்கள் வளர்ந்துள்ள ஒரு பகுதியை அடைந்ததும் கரையை அடைந்து, ஒரு உயர்ந்த மரத்தின் மேலே தாவி ஏறிற்று. அந்த மரத்தின் உச்சியிலிருந்து மலையின் சாரலில் உள்ள மற்றொரு மரத்தின் கிளைக்குத் தாவிற்று. அங்கிருந்து மலையில் நீட்டிக் கொண்டிருந்த ஒரு பெரிய கல்லின்மீது குதித்தது; பிறகு,
மலையில் சரிவின் வழியாகவே போகத் தொடங்கியது. இப்படியாக மரத்தில் ஏறியும், குன்றுகளில் தாவியும், அது நூலேணி சுருட்டி வைத்திருந்த இடத்தை அடைந்துவிட்டது. நூலேணியை அங்கு முளையடித்துக் கட்டி வைத்திருந்தார்கள். அதன் கீழ்ப்பாகம் சுருளாக இருந்தது. அதை அவிழ்த்து ஜின்கா கீழே விட்டது. மருதாசலத்திற்கு அதன் செய்கை ஒரே ஆச்சரியமாக இருந்தது. “எல்லோரும் ஏணியின் வழியாக மேலே ஏறுங்கள். நான் கடைசியில் வருகிறேன்” என்று அவன் மகிழ்ச்சியோடு சொன்னான்.
“அண்ணா, நானெப்படி ஏறுவேன்?” என்று கண்ணகி கவலையோடு கேட்டாள்.
“நான் முதுகிலே சுமந்துகொண்டு போகிறேன். கவலைப்பட வேண்டாம்” என்று மருதாசலம் தெரிவித்தான். கண்ணகியை எப்படி மேலே கொண்டு சேர்ப்பது என்று எண்ணமிட்டுக்கொண்டிருந்த தங்கமணி, மகிழ்ச்சியோடு முதலில் நூலேணியில் ஏறிச் சென்றான். பிறகு, அவனைத் தொடர்ந்து சுந்தரம் ஏறினான். கடைசியாக, மருதாசலம் கண்ணகியைத் தூக்கிக்கொண்டு மேலே போய்ச் சேர்ந்தான்.
அவர்கள் ஏறிவந்த செங்குத்தான பகுதியிலே கொஞ்சம் இடைவெளி விட்டு வேறொரு செங்குத்தான பகுதி இருந்தது. அது மலையின் உயரத்தை இன்னும் அதிகப்படுத்திக் காண்பித்தது. அதன் ஒரு பகுதியிலே மரக் கூட்டங்களினிடையே இயற்கையாக அமைந்த ஒரு குகை இருந்தது. அதை நோக்கி மருதாசலம் வேகமாகச் சென்றான். குகையின் முன்பாகத்திலே செங்கல்லால் சிறிதளவு சுவர்கள் எழுப்பிக் குகைக்குக் கதவு அமைத்திருந்தார்கள். அந்தக் கதவு பூட்டப்பட்டிருந்தது.
‘அப்பா எங்கே போய்விட்டார்?’ என்று சந்தேகத்தோடு கேட்டுக்கொண்டே மரங்களையெல்லாம் கடந்து. வெறும் பாறையாக இருந்த இடத்திற்கு வந்து நின்றுகொண்டு, அவன் சுற்றிலும் பார்த்தான். அவனைப் பின்தொடர்ந்து வந்த தங்கமணி, “உங்களுடைய தகப்பனார் இங்கேதான் வசிக்கிறாரா?” என்று மருதாசலத்தைக் கேட்டான்.
“அந்தக் குள்ளன் தான் அவரை ஏமாற்றி இங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறான். அவனுடைய திருட்டுத் தொழிலைத் தெரிந்துகொள்ளாமல் இவர் அவனுக்கு உதவி செய்து வருகிறார்” என்று அவன் கூறிக்கொண்டிருக்கும் போது அவனுடைய தந்தை தில்லைநாயகம் ஒரு பெரிய மூட்டையைத் தலையில் சுமந்துகொண்டு அங்கே வந்து சேர்ந்தார்.
வந்ததும் அவர், “மருதாசலம், பட்டணத்திலிருந்து வந்தாச்சா! எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்தாய்?” என்று மூட்டையைக் கீழே இறக்கி வைத்துக்கொண்டே ஆச்சரியத்தோடு கேட்டார்.
“பட்டணத்துக்கா அந்தக் குள்ளன் கூட்டிக்கொண்டு போனான்? அந்தக் குள்ளன் என்னைக் கொல்லத்தான் கூட்டிக் கொண்டு போனான்” என்று ஆத்திரத்தோடு பேசினான் மருதாசலம்,
தில்லைநாயகத்திற்குத் தம் மகன் கூறுவது ஒன்றும் விளங்கவில்லை. “இவர்கள் எல்லாம் யார்? எப்படி இங்கே வந்தார்கள்?” என்று மேலும் வியப்போடு கேட்டார்.
“அப்பா, முதலில் குகைக்குப் போவோம், வாருங்கள், நாங்கள் எல்லாரும் பட்டினியாகக் கிடக்கிறோம். உடனே சாப்பாடு வேண்டும். சாப்பாடு தயாரித்துக்கொண்டே பேசுவோம்.”
எல்லாரும் குகையை நோக்கித் திரும்பிச் சென்றார்கள். தில்லைநாயகம் தம் மடிப்பையில் வைத்திருந்த சாவியை எடுத்துப் பூட்டைத் திறந்தார். “நீங்கள் எங்கேயப்பா போயிருந்தீர்கள்? நான் சீழ்க்கையடித்தது காதில் விழவில்லையா?” என்று மருதாசலம் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான்.
“அரிசி தீர்ந்துபோச்சு. வாங்கிவரக் கூடல் பட்டணம் போயிருந்தேன்” என்று தில்லை நாயகம் பதிலளித்தார்.
தந்தையும் மகனும் பேசிக்கொண்டே சமையல் வேலையில் ஈடுபட்டார்கள். அவர்களுடைய எஜமானன் ஒரு திருடன் என்பதையும், அவன்தான் கொல்லிமலைக் குள்ளன் என்பதையும் அவனுடைய ரகசியக் குகையையும் தான் தற்செயலாகக் கண்டு கொண்டதால் தன்னைக் கொல்ல அவன் சூழ்ச்சி செய்து அழைத்துப் போனதைப்பற்றியும் மருதாசலம் விவரமாகச் சொல்லிக்கொண்டிருந்தான். “அவன் என்னைப் பட்டணத்துக்குக் கூட்டிக்கொண்டு போவதாகச் சொன்னதெல்லாம் உங்களை ஏமாற்றத்தான். இந்தப் பையன் வந்திருக்காவிட்டால் நான் அந்த மர வீட்டிற்குள்ளேயே கிடந்து செத்திருப்பேன்” என்றான் மருதாசலம்.
இதையெல்லாம் கேட்டுத் தில்லைநாயகத்திற்குக் கோபம் கோபமாக வந்தது. “இந்தத் திருட்டுப்பயலுக்கா நான் இத்தனை நாளாய் உழைத்தேன்; எதற்காக அவன் இந்தப் பொம்மையெல்லாம் செய்கிறான்? திருடனுக்கு இவை எதற்காக வேண்டும்?” என்றார் தில்லைநாயகம் ஆத்திரத்தோடு.
“இந்த மரப்பொம்மைகள் தாம் அவன் திருட்டு வேலைக்கு உதவி” என்று மருதாசலம் கூறினான். அவன் கூறியது ஒருவருக்கும் விளங்கவில்லை. உடனே அவன் தன் தந்தைக்கும், தங்கமணி முதலியவர்களுக்கும் விளக்கமாகக் கூறத் தொடங்கினான்.
குகைக்குள்ளே 3, 4 மரப்பொம்மைகள் கிடந்தன. ஒவ்வொன்றும் சுமார் 4 அல்லது 5 அடி உயரம் இருக்கும். எல்லாம் பரத நாட்டியமாடும் பெண்களைப் போன்றவை. ஒவ்வொன்றையும் பெண் உருவத்தின் முன்பகுதி தனியாகவும், பின்பகுதி தனியாகவும் இருக்குமாறு நடுவிலே ரம்பத்தால் அறுத்திருந்தார்கள். அப்படி அறுத்த ஒரு பொம்மையின் அறுபட்ட உட்பகுதியிலே இருக்கும் மரக்கட்டையை உளியால் செதுக்கிக் குடைந்து எடுத்திருந்தார்கள்.
“அப்பா! நீங்கள் எதற்கு இப்படி உட்பகுதியைக் குடைந்து எடுக்கிறீர்கள் தெரியுமா?” என்று மருதாசலம் தன் தந்தையைக் கேட்டான்.
“உனக்கு அது தெரியாதா? பொம்மையின் உள் பகுதியை இப்படிக் குடைந்து எடுத்துவிட்டால் பொம்மையின் எடை குறைந்து போகும். அமெரிக்காவுக்கு அனுப்பும் போது கப்பல் கூலி அதிகமாக இருக்காது. தூக்கிச்செல்லவும் சுலபம்” என்று தில்லை நாயகம் தமக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொன்னார்.
“அந்தக் குள்ளன் இப்படிச் சொல்லித்தான் உங்களை ஏமாற்றியிருக்கிறான். நீங்களும் அவன் பேச்சை நம்பி இந்த வேலையைச் செய்து வந்திருக்கிறீர்கள். இப்படிக் குடைந்தெடுப்பது எடையைக் குறைப்பதற்காக அல்ல. ஒவ்வொரு பொம்மையிலும் ஒரு சிலையை மறைத்து வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பத்தான் அவன் இந்தத் தந்திரம் செய்திருக்கிறான்” என்று மருதாசலம் குள்ளனின் ரகசியத்தை வெளியிட்டான்.
“அப்படியா?” என்று திகைப்போடு தில்லை நாயகம் கூவினார். குள்ளன் திருடனென்று தெரிந்திருந்தால் அவனுக்கு வேலை செய்யத் தில்லைநாயகம் இசைந்திருக்கவே மாட்டார். கொல்லிமலைக்கும் கூடல் பட்டணத்துக்கும் மத்தியிலே வஞ்சியாற்றின் கரையில் ஒரு காட்டுக்குள் இருந்த தச்சுப் பட்டறையில் பல தச்சர்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் பெரிய பெரிய மரங்களின் அடிப்பாகத்தைக் கொண்டு பொம்மைகள் செய்தார்கள். பிறகு, ஒவ்வொரு பொம்மையையும் நீளவாட்டில் சரிபாதியாக இருக்குமாறு ரம்பத்தால் அறுத்து, உள்ளேயிருக்கும் மரத்தைக் குடைந்து எடுத்துவிட்டு, இரண்டு பகுதிகளையும் ஒன்றாக வைத்து நன்றாகப் பொருந்துமாறு உள்ளே மறைவாக மறையாணிகளை வைத்துப் பூட்டுவார்கள். இப்படி வேலை செய்து முடிக்கப்பட்ட பொம்மைகளைக் கொல்லிமலைக் குள்ளன் மலை மேல் இருந்த தில்லைநாயகத்திற்கு அனுப்புவான். தில்லை நாயகம் அந்தப் பொம்மைகளுக்குப் பல வகையாக வர்ணங்கள் பூசி அழகுபடுத்துவார். வர்ணம் கொடுத்து உயிருள்ள பெண்கள் போலவே பொம்மைகளைச் செய்வதில் அவர் மிகவும் திறமை வாய்ந்தவர். அப்படி அவர் செய்து முடித்த பொம்மைக்குள்தான் கொல்லிமலைக் குள்ளன் யாருக்கும் தெரியாதபடி தானாகவே தனது ரகசியக் குகையில் திருடி வைத்திருக்கும் சிலையை வைத்து மறையாணிகளைத் திருகிப் பூட்டிவிடுவான். மீண்டும் பொம்மையின் அறுபட்ட பாகம் தெரியாதவாறு வர்ணத்தைப் பூசிவிடுவான்.
“இப்படிச் செய்துமுடித்த பொம்மைகளை அமெரிக்காவில் விற்பதற்குக் கப்பலில் எடுத்துச் செல்வான். கொல்லிமலைக் குள்ளன் இவ்வாறு பொம்மைக்குள் மறைத்து எடுத்து வந்த சிலையை இருபதாயிரம், முப்பதாயிரம் டாலர் என்று விலைக்கு விற்றுப் பொருள் திரட்டி வந்தான். இதுவரை யாராலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மருதாசலம் கூறியவற்றிலிருந்து குள்ளனுடைய சூழ்ச்சி தங்கமணிக்கும், சுந்தரத்திற்கும் ஓரளவு விளங்கிற்று. அவர்கள் இரண்டு பேரும் மருதாசலத்தோடும் அவன் தந்தையோடும் பேசி, இந்த விவரங்களையெல்லாம் தெரிந்துகொண்டிருந்தார்கள்.
இப்படி இவர்கள் குகைக்குள்ளே பேசிக்கொண்டிருந்த சமயத்தில் கண்ணகி கொஞ்சநேரம் நின்று கவனித்துக் கொண்டிருந்தாள். பிறகு அவளுக்குச் சலிப்பேற்பட்டுவிட்டது. ஜின்காவுக்கும் குகைக்குள்ளேயே இருப்பது பிடிக்கவில்லை. அது மெதுவாக வெளியே நடக்கத் தொடங்கியது.
கண்ணகியும் அதைப் பின்பற்றி வெளியே வந்தாள். அவளும் ஜின்காவும் வெளியே சென்றதைத் தங்கமணியும், சுந்தரமும் கவனிக்கவில்லை . மருதாசலமும், அவன் தந்தையும் கூறியவற்றைக் கேட்பதிலேயே அவர்கள் ஆழ்ந்திருந்தார்கள். உச்சி வேளை சுமார் 12 மணிக்கு உணவு தயாராகிவிட்டது. சாப்பிடப் போகும் போதுதான் கண்ணகியைப்பற்றிய நினைவு வந்தது. ‘கண்ணகி!’ என்று கூப்பிட்டான் தங்கமணி. சுந்தரம் வெளியே சென்று பார்த்தான்.
“எங்கேடா உன் குரங்கையும் காணோம்?” என்று சுந்தரம் கூறிக்கொண்டு ‘கண்ணகி!’ என்று உரத்துக் கூவினான். ஆனால், கண்ணகி வரவில்லை. ஜின்காவும் குரல் கேட்டு ஓடி வரவில்லை. பக்கத்திலே அங்குமிங்குமாக அனைவரும் ஓடிப் பார்த்தார்கள். “கண்ணகி! ஜின்கா!” என்று தங்கமணி பலத்த குரலெடுத்துக் கூவினான். ஆனால், கண்ணகியையும் காணோம்; ஜின்காவையும் காணோம்!
14
தங்கமணியின் முகத்திலும், சுந்தரத்தின் முகத்திலும் கவலை படிந்திருந்தது. மருதாசலமும் தில்லைநாயகமும் தைரியங் கூற முயன்றார்கள். ஆனால், அவர்களால் சரியாகப் பேசக்கூட முடியவில்லை. “என் உயிரைக் காப்பாற்றிய இந்தப் பையனின் தங்கைக்கே ஆபத்து. வந்துவிட்டதே” என்று மருதாசலம் மனம் பதைத்தான்.
“இந்தப் பக்கத்திலே புலியெல்லாம் இருக்குமா?” என்று சுந்தரம் தயங்கித் தயங்கிக் கேட்டான். அவனுக்குத் தங்கமணியிடத்திலும், கண்ணகியிடத்திலும் எத்தனை அன்பு இருந்தது என்பது அப்போது வெளிப்பட்டது. அவன் கேலியாகப் பேசிக் கொண்டிருந்த காலத்திலெல்லாம் அந்த அன்பு அவ்வளவு நன்றாக வெளியில் தெரியவில்லை. சுந்தரத்தின் கண்கள் கலங்கின. அவன் ஏக்கத்தோடு தில்லைநாயகத்தின் பதிலை எதிர்பார்த்து நின்றான்.
“இங்கே சிறுத்தைப் புலிதான் உண்டு; அதுவும் பகல் நேரத்திலே வராது” என்று மருதாசலம் யோசனை செய்து கொண்டே பதிலளித்தான்.
“மணி, அத்தைக்கு என்னடா பதில் சொல்வது? இப்படி ஏமாந்து இருந்துவிட்டோமே!” என்று தொண்டை விக்க விக்கச் சுந்தரம் கூறினான்.
“சுந்தரம், நாம் சோர்வடையாமல் தேடிப் பார்ப்போம். மனம் கலங்கினால் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. அம்மாளும் அப்படித்தான் கடிதத்தில் எழுதியிருக்கிறார்கள்” என்று தங்கமணி தன்னைத்தானே தேற்றிக்கொள்ளும் வகை யில் சுந்தரத்தைப் பார்த்துச் சொன்னான். இந்தச் சமயத்தில் மருதாசலம் நாவல் மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்த பக்கமாக ஓடினான். அந்தப் பக்கத்தில் அதிக தூரம் போய் அவர்கள் தேடவில்லை. மருதாசலம் அங்கே இருந்த ஏதோ ஒரு இடத்தை நினைத்துக்கொண்டு ஓட்டமாகச் சென்றான்.
கொஞ்ச நேரத்தில் குதூகலமாக அவன் உரத்துக் கூவுகின்ற சத்தம் கேட்டது. “எல்லாரும் இங்கே வாருங்கள்” என்று அவன் கூவிக்கொண்டே திரும்பி ஓடி வந்தான். அவனை நோக்கி மற்ற மூவரும் பாய்ந்து சென்றனர். மருதாசலம் முன்னால் வழி காட்டிக்கொண்டே ஓட, மற்றவர்கள் பின்
பின்தொடர்ந்தனர். அங்கே ஓரிடத்திலே உயர்ந்திருந்த ஒரு மலைப்பகுதியினின்று சிறிய அருவியொன்று சலசலவென்று சத்தமிட்டுக் கொண்டு விழுந்துகொண்டிருந்தது. அதற்கு எதிரிலே ஒரு பாறை அருவியை நோக்கி நீட்டிக்கொண்டிருந்தது. அந்தப் பறையின் அடியிலே படுப்பதற்கு வசதியாக ஒதுக்கிடமும் நிழலும் இருந்தன. கண்ணகி அங்கே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். ஜின்காவும் பக்கத்திலே படுத்து நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தது. கண்ணகியின் தலைமாட்டிலே நாவற் பழங்கள் குவியலாகக் கிடந்தன.
உடனே எல்லாருக்கும் நிலைமை விளங்கிவிட்டது. குகையை விட்டு வெளியே வந்த கண்ணகிக்கு ஜின்கா ஒவ்வொரு நாவல் மரமாகத் தாவி நாவற்பழம் போட்டிருக் கிறது. அவற்றையெல்லாம் தின்றுகொண்டும், கைக்குட்டையிலே சேர்த்து வைத்துக்கொண்டும் கண்ணகி கொஞ்சம் கொஞ்சமாக அதுவரையிலும் வந்துவிட்டாள் பிறகு. நீர் வீழ்ச்சியைக் கண்டதும் அதைப் பார்த்துக்கொண்டே பாறையின் அடியில் உட்கார்ந்து பழங்களைத் தின்று கொண்டிருத்திருக்கிறாள். இரவெல்லாம் சரியாகத் தூங்காததால் அவளுக்கு நல்ல தூக்கம் வந்துவிட்டது. நீர்வீழ்ச்சியின் சலசலப்புச் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே அவள் படுத்துத் தூங்கி விட்டாள். ஜின்காவோ இரவெல்லாம் கண்மூடவேயில்லை. அதனால் அதுவும் கண்ணகியின் பக்கத்திலே படுத்துத் தூங்கிவிட்டது.
“கண்ணகி!” என்று சுந்தரம் சிரித்துக்கொண்டே கூவினான். “ஜின்கா! உனக்குமா தூக்கம்?” என்று தங்கமணி குதூகலமாக முழங்கினான். கண்ணகி திடுக்கிட்டெழுந்தாள். ஜின்காவும் எழுந்து, குற்றம் செய்துவிட்டதைப் போல எல்லாரையும் பார்த்துப் பார்த்து விழித்தது.
பிறகு, அனைவரும் உற்சாகமாகக் குகையை நோக்கிச் சென்றார்கள். ஒருவிதமான கவலையும் இல்லாமல் நன்றாக உணவருந்தினார்கள். தில்லைநாயகம் செய்த சமையல் அவர்களுக்கு அவ்வளவு சுவையாக இருக்கவில்லையென்றாலும் பசி மிகுதியால் சுவையை அவர்கள் கவனிக்கவில்லை. சாப்பிட்டு முடிந்ததும் மருதாசலம் குறிப்பிட்ட ரகசிய குகையைப் பார்க்க வேண்டுமென்று எல்லாரும் ஆவலோடு புறப்பட்டார்கள்.
“கையிலே ஊன்றுகோல் இல்லாமல் அந்த வழியிலே போக முடியாது. ஆளுக்கொரு தடி வெட்டிக் கொடுக்கிறேன்” என்று கூறிக்கொண்டே மருதாசலம், வழியிலிருந்த ஒரு மூங்கிற்பு தரில் மூங்கிற்கழிகளை வெட்டி எடுத்தான். அந்தக் கழிகளைப் பிடித்துக்கொண்டு மருதாசலம் முன்னே செல்ல, மற்றவர்கள் பின்தொடர்ந்தார்கள். கண்ணகிக்கு உதவியாக இருக்கத் தில்லைநாயகம் அவளுக்கு முன்னால் அவள் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தான். மலைச்சரிவிலே மலையை ஒட்டினாற்போல அந்த வழி சென்றது. மேலே உயர்ந்த மலையும், கீழே கிடுகிடு பள்ளத்தாக்கும் இருந்தன. கொஞ்சம் தவறினால் அப்பள்ளத்தாக்கில் விழுந்து மடியவேண்டியதுதான். அதனால் மருதாசலம் எச்சரிக்கை செய்துகொண்டே, மெதுவாக நடந்தான். சில இடங்களில் பாறைகளைப் பிடித்துக் கொண்டு ஆள் உயரத்திற்கு இறங்க வேண்டியிருந்தது. சில இடங்களில் அதைப் போலவே ஏற வேண்டியிருந்தது. மூங்கிற் கழியை ஊன்றிக்கொண்டு எல்லாரும் அடிமேல் அடி எடுத்து வைத்து நடத்தார்கள். இப்படி நடப்பதில் ஜின்காவிற்குத் தான் கொண்டாட்டம். ஏனென்றால், அதற்கு இப்படிப்பட்ட வழியெல்லாம் லட்சியமேயில்லை.
இவ்வாறு அவர்கள் சுமார் 500 கஜம் நடந்து சென்றார்கள். அங்கே ஓரிடத்தில் சற்று விசாலமான இடம் இருந்தது. அங்கே மலைப்பகுதியிலே ஒரு வளைவு இருந்தது. அதன் வலப்பக்கத்து மூலையிலே குகை தொடங்கிற்று. குகையின் வாயிலில் இழைத்து வழவழப்பாகாத காட்டு மரப்பலகைகளால் செய்த கதவொன்று இருந்தது. ஆனால், அது குகையோடு பொருத்தப்படவில்லை. அதைக்கொண்டு குகைக் கதவை மூடி, அதன் மத்தியிலே பொருத்தப்பட்ட குறுக்குச் சட்டத்தால் வெளிப் பக்கத்திலிருந்து குறுக்காக மாட்டிவிடலாம். அப்படி மாட்டிவிட்டால் கதவை உள்ளிருந்து திறக்க முடியாது. வெளியிலிருந்து வேண்டுமானால் குறுக்குச் சட்டத்தை நேராக நிமிர்த்திவிட்டுக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போகலாம். மற்றபடி அதில் பூட்டு ஒன்றும் இல்லை.
மருதாசலம் குறுக்குச் சட்டத்தை நிமிர்த்தி வைத்துக் கதவை ஒரு ஓரமாகத் தள்ளி வைத்தான், எல்லாரும் ஆவலோடும், சற்று அச்சத்தோடும் உள்ளே சென்றனர். உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. கொஞ்ச நேரமான பிறகு தான் அவர்களால் ஓரளவு உட்புறத்தைப் பார்க்க முடிந்தது.
அது ஒரு விசாலமான குகை. ஆனால், உட்பகுதி ஒழுங்கற்றதாக இருந்தது. பல இடங்களிலே பாறைகள் குறுக்கும் நெடுக்குமாக நீட்டிக்கொண்டிருந்தன. அடித்தளமும் சமனாக இல்லை. பல இடங்களிலே சிறு சிறு குண்டுக் கற்களும், வெவ்வேறு வடிவங்களில் உள்ள பாறைகளும் மேலே துறுத்திக் கொண்டு நின்றன. அந்த இடத்தை ஒழுங்கு செய்ய எவ்வித முயற்சியும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. மலைப்பகுதியிலே இயற்கையாக ஏற்பட்டிருந்த குகை அது. ஓரிடத்திலே சுமார் பத்து அடி உயரத்தில் பாறைக்கு இடையிலே சிறு சிறு பிளவுகள் இருந்தன. அவற்றின் வழியாகச் சூரிய கிரணங்கள் இலேசாக உள்ளே நுழைந்து, மேல்பகுதியில் வெளிச்சத்தை உண்டாக்கின. அந்தப் பிளவுள்ள பகுதி மலைபின் வெளிப்பகுதியாகும். உட்பகுதியிலே ஓரிடத்தில் குகை சற்றே உள்ளே செல்லுவது போல இருந்தது. அங்கு ஒரே இருட்டாக இருந்ததாலும், நீர் கசிந்துகொண்டிருந்ததாலும் இவர்கள் அதற்குள்ளே சென்று பார்க்க முடியவில்லை.
“மலை இடுக்கில் அறிக்கொண்டு எங்கிருந்தோ நீர் சொட்டுகிறது. அங்கே வேறொன்றும் இருக்க முடியாது. நானும் அங்கு போய்ப் பார்த்ததில்லை. ஆனால் இதோ, இந்தப் பக்கம் வாருங்கள். இங்கேதான் வேறொரு உட்குகை இருக்கிறது” என்று கூறிக்கொண்டே மருதாசலம் மலையின் உட்பகுதியில் வேறொரு இடத்திற்குச் சென்றான். அங்கே முன்னால் துறுத்திக்கொண்டிருந்த ஒரு கரடுமுரடான கல்லின் மீது லாந்தர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் தீப்பெட்டியும் தயாராக இருந்தது. மருதாசலம் அந்த லாந்தரை ஏற்றினான். அதன் உதவியால் பார்க்கும்போது பக்கத்திலேயே வேறொரு கதவு இருந்தது. இந்தக் கதவிற்கும் பூட்டில்லை. வெளிக்கதவைப் போலவே மத்தியிலே சங்கிலியைக்கொண்டு பிணைக்கப்பட்ட குறுக்குச் சட்டம் இருந்தது. எளிதாகக் கதவைத் திறக்கவும், மூடவும் முடியுமாறு கீல் வைக்கப் பட்டிருந்தது. மருதாசலம் குறுக்குச் சட்டத்தை நிமிர்த்திக் கதவைத் தள்ளினான். கதவு உட்பக்கமாகத் திறந்தது. எல்லாரும் அதற்குள் நுழைந்தனர். மருதாசலம் லாந்தரின் உதவியைக்கொண்டு அந்தக் குகையின் ஒவ்வொரு பகுதியையும் காட்டினான். அங்கேசிறியதும் பெரியதுமாகப் பல செப்புச் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன; அண்மையில் களவுபோன நடராஜர் சிலையும் இருப்பதைக் கண்டு தங்கமணியும் சுந்தரமும் மிகுந்த மகிழ்ச்சிபோடு துள்ளிக் குதித்தார்கள்.
“இது தான் அந்தச்சிலை” என்று சுந்தரம் குதூகலத்தோடு கூவினான். “இதையா கலைக்கூடத்திலிருந்து அந்தக் குள்ளன் திருடிக்கொண்டு வந்துவிட்டான்?” என்று கண்ணகி வியப்போடு கேட்டாள். “இதுவேதான் அந்த உலகப் புகழ்பெற்ற சிலை” என்று தங்கமணி அந்தச் சிலையின் அருகில் உட்கார்ந்து. அதை உற்றுப் பார்த்துக்கொண்டே பதிலளித்தான்.
ஜின்காவிற்குக் கொஞ்ச நேரத்திற்குமேல் அந்த இடம் உற்சாகமளிக்கவில்லை. சிலைகளைப் பார்ப்பதில் அதற்கு அத்தனை ஆவல் இருக்கவில்லை. அது மெதுவாக வெளிக் குகைக்கு வந்து, அங்கே வெளிச்சம் கொஞ்சமாக உள்ளே வரும் துவாரத்தின் பக்கத்திலே அங்குமிங்குமாகப் பறந்து கொண்டிருந்த துரிஞ்சில்களைப் பார்த்துக்கொண்டிருந்தது. இருட்டிலே குகைகளின் சுவர்களில் மோதாமல் பறக்கும் அவற்றை அது ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டே ஒரு உயரமான கல்லின்மேல் ஏறிப் படுத்துக்கொண்டது. சிலைகளை யெல்லாம் பார்க்கும் அதிசயத்திலே மற்றவர்கள் ஜின்கா வெளிக்குகைக்கு வந்ததைக் கவனிக்கவில்லை. அவர்கள் நாட்டமெல்லாம் சிலைகளின் மேலேயே இருந்தது.
எதிர்பாராத வகையிலே அந்த உட்குகையின் கதவின் அருகிருந்து கொல்லிமலைக் குள்ளனின் கோபச்சிரிப்புக் கேட்டது. “ஆகா, இங்கேயே வந்து அகப்பட்டுக்கொண்டீர்களா? கிடங்கள் உள்ளேயே” என்று கூறிவிட்டு, அவன் உட்குகையின் கதவை மூடிக் குறுக்குச் சட்டத்தை நன்றாகப் பொருத்தி வைத்தான்.
“அண்ணா, அண்ணா, ஏமாந்து போனோம்” என்று கண்ணகி அலறினாள்.
15
கொல்லிமலைக் குள்ளனுக்குத் தன் எண்ணமெல்லாம் எதிர்பாராத விதமாகப் பலித்துவிட்டதென்று பூரிப்பு உண்டாயிற்று. அவன் வாய்விட்டு உரக்கச் சிரித்தான். ஆனால், இந்தப் பூரிப்பும், சிரிப்பும் அடுத்த விநாடியிலேயே மறைந்து விட்டன. அவன் உட்குகையின் கதவை மூடிக் குறுக்குச் சட்டத்தைப் போட்டதை வெளிக்குகையின் ஒரு சுவரோரத்தில் பாறைமீது உட்கார்ந்து துரிஞ்சில்களைக் கவனித்துக் கொண்டிருந்த ஜின்கா பார்த்தது; கண்ணகி அலறியதும் கேட்டது. அதற்கு அடக்க முடியாத கோபம் உண்டாயிற்று. அது ஒரே தாவல் தாவி, குள்ளனின் நெஞ்சின்மீது ஏறி,
தலையை இறுக இருகைகளாலும் கட்டிப் பிடித்துக்கொண்டு, அவன் மூக்கைப் பிடித்துத் தன் கூர்மையான பற்களால் கடித்தது. அதே சமயத்தில் பயங்கரமாகக் கூச்சலிட்டது.
இப்படிப்பட்ட தாக்குதலைக் குள்ளன் எதிர்பார்க்கவே இல்லை. தன்னைத் தாக்கியதுகூட என்னவென்று அவனுக்குத் தெரியவில்லை. குகையில் வாசம் செய்த பேயோ, பூதமோ தன்னைத் தாக்குவதாக அவன் பயந்து வெலவெலத்துப் போனான். அவன் மூக்கிலிருந்து ரத்தம் பீரிட்டு வழிந்து சட்டையெல்லாம் நனைந்தது. அவன் இரண்டு கைகளாலும் ஜின்காவைப் பிடித்து உதறித் தள்ளினான். அப்படி உதறித் தள்ளும்போது அவன் தள்ளாடித் தடுமாறினான். அவன் கால்கள் நடுங்கின. அவனால் நிற்கமுடியவில்லை. அப்படியே அவன் முன்னால் சாய்ந்து விழுந்தான். முன்னால் நீட்டிக் கொண்டிருந்த கல்லிலே அவன் நெற்றி படீரென்று மோதிற்று. நெற்றியிலிருந்தும் ரத்தம் பீரிட்டுப் பொங்கத் தொடங்கியது. அடிபட்ட அதிர்ச்சியால் அவன் மூர்ச்சையடைந்து குகைக்குள்ளே தொப்பென்று விழுந்தான்.
ஜின்கா உடனே குறுக்குச் சட்டத்தை நேராக நிமிர்த்தி, உட்குகையின் கதவைத் திறந்தது. தங்கமணி முதலியவர்கள் பெருமகிழ்ச்சியோடு வெளியே வந்தார்கள். மருதாசலத்திற்கும், தில்லைநாயகத்திற்கும் அப்போதும் அச்சம் நீங்கவில்லை. கொல்லிமலைக் குள்ளன் கைகால்களை அசைக்காமல் கட்டைபோலக் கிடப்பதை லாந்தர் வெளிச்சத்தில் பார்த்தபிறகுதான் அவர்களுக்குக் கொஞ்சம் துணிச்சல் உண்டாயிற்று.
தங்கமணி எல்லாரையும் வெளியே வருமாறு சமிக்ஞை செய்தான். எல்லாரும் விரைவாக வெளியேறினர். வெளிக் குகையின் கதவைத் தங்கமணி நன்றாக மூடப்போனான். மருதாசலம் அவனுக்கு உதவியாக நின்று, கதவைக் குகையின் வாயிலில் ஒழுங்காகப் பொருத்தி வைத்தான். உடனே தங்கமணி அந்தக் குறுக்குச் சட்டத்தைக் குகையின் வாயிலில் உள்ள பாறைகளில் நன்றாகப் பொருந்தும்படி குறுக்காகத் திருப்பி வைத்தான். “இனி உள்ளேயிருந்து கதவைத் திறக்கவே முடியாது. நம்மையெல்லாம் சிறைப்பிடிக்க நினைத்த அந்தத் திருடன் உள்ளேயே கிடக்கட்டும். இனிமேல் நாம் அதிவிரைவாக எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். செல்லுங்கள்” என்று அவன் மற்றவர்களை நோக்கிக் கூறினான். அவர்கள் வந்த வழியாகவே திரும்பிச் செல்லலாயினர்.
மருதாசலம் நடந்தான். அவனுக்குப் பின்னால் தங்கமணியும், சுந்தரமும் சென்றனர். கண்ணகியின் கையைப் பிடித்தவாறு தில்லைநாயகம் கடைசியில் வந்தான். மூங்கிற் குச்சிகளைப் பழையபடி தரையில் ஊன்றிக்கொண்டு எல்லோரும் நடந்தனர். ஜின்கா இப்பொழுது தங்கமணியின் தோள்மேல் ஏறிக்கொண்டது.
“ஜின்கா, பலே பலே! பேஷ்டா! நீ தங்கமணிக்குச் சரியான ஜோடி” என்று சுந்தரம் குதூகலத்தோடு ஜின்காவைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே நடந்தான்.
“இந்தக் குரங்கு தான் நம்மையெல்லாம் காப்பாற்றியது. அதைத் தினமும் நான் நினைத்துக் கும்பிடுவேன்” என்று தில்லை நாயகம் தழுதழுத்த குரலில் மிகுந்த அன்போடு சொன்னார்.
“அம்மாவிடம் சொல்லி நான் ஜின்காவிற்குப் பிடித்த பலகாரமெல்லாம் செய்து போடுவேன்” என்று கண்ணகி உற்சாகத்தோடு தெரிவித்தாள்.
“முதலில் நாம் அப்பாவைக் கண்டுபிடிக்க வேண்டும். அவரிடத்திலே இந்தக் கொல்லிமலைக்குள்ளனை ஒப்படைக்க வேண்டும். பிறகு, கூடல் பட்டணம் போய், அம்மாவைச் சந்திக்க வேண்டும். அப்புறந்தான் பலகாரத்தைப் பற்றியெல்லாம் நினைக்க வேண்டும். இப்போது வேகமாக நடவுங்கள்” என்று துரிதப்படுத்தினான் தங்கமணி.
“உன்னுடைய அவசரத்திலே கால் தடுக்கிவிடப் போகிறது. அப்படித் தடுக்கிவிட்டால் பிறகு எந்தக் காரியமும் செய்ய முடியாது. எலும்பைப் பொறுக்கி எடுக்க வேண்டிய காரியந்தான் செய்ய வேண்டி வரும்” என்று எச்சரித்தான் சுந்தரம். ஆனால், அவனும் வேகமாகத்தான் காலெடுத்து வைத்தான். கொஞ்சநேரத்தில் அவர்கள் தில்லைநாயகத்தின் சமையல் குகைக்கு வந்து சேர்ந்தார்கள். அந்தக் குகையில் நுழையும்போதே குள்ளன் இங்கு எப்படித் திடீரென்று வந்தான்?” என்று யோசனையில் ஆழ்ந்தவாறே தங்கமணி கேட்டான்.
“அவன் நினைத்தால் வந்துவிடுவான். அதிலெல்லாம் அவன் பலே கெட்டிக்காரன்” என்று மருதாசலம் பதில் சொன்னான்.
“வஞ்சியாற்றின் வழியாக அவர் பரிசலில் வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த மலைக்குத் தெற்கில் உள்ள ஏரியில் பரிசல் போட்டு வந்திருக்கவேண்டும். இந்த இடத்திற்கு வர இந்த இரண்டு வழிகள் தாம் உண்டு. இரண்டும் ரகசியமான வழிகள் தாம். எங்களுக்குமட்டுத் தெரியும்” என் தில்லைநாயகம் தெரிவித்தார்.
“வஞ்சியாற்றின் வழியாக வந்திருந்தால் அவன் எப்படி மேலே ஏற முடியும்? நூலேணியைக் கீழே விட யாரு இல்லையே!” என்று சுந்தரம் கேட்டான்.
“நாம் வரும்போது கீழே விட்ட நூலேணியை மேலே இழுத்து வைக்க மறந்துவிட்டோம்” என்று மருதாசலம் கூறினான்.
இந்தச் சமயத்திலே யாரோ சீழ்க்கையடிக்கும் ஓர் கேட்டது. “பரிசலில் யாரோ வந்திருக்கிறார்கள். எங்கள் எஜமானரோடு வந்தவர்களாக இருக்கலாம்” என்று கவலையோடு தில்லைநாயகம் சொன்னார்.
இதையெல்லாம் கவனத்தோடு கேட்டுக்கொண்டிருத் தங்கமணி, “இங்கிருந்தபடியே யாருக்கும் தெரியாமல் அந்த பரிசலில் எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று பார்க்க முடியுமா?” என்று கேட்டான்.
“அதோ! அந்தக் குன்றின் மேலே ஏறினால் மறைவா நின்று நன்றாகப் பார்க்கலாம்” என்று தில்லைநாயகம் கூறவே உடனே தங்கமணி, “மருதாசலம், நீ ஓடிப்போய்ப் பார்த்த வா. அவர்கள் உன்னைப் பார்க்காமல் எச்சரிக்கையாக இரு” என்றான். மருதாசலம் ஒரே ஓட்டமாக ஓடிப்போய்ப் பார்த்து விட்டுத் திரும்பினான். “பரிசலைக் கரையில் இழுத்துவிட்டுவிட்டு அங்கே ஐந்துபேர் உட்கார்ந்து இருக்கிறார்கள்” என்று அவர் மூச்சு இரைக்க இரைக்கத் தெரிவித்தான். அந்தச் சமயத்தில் மறுபடியும் சீழ்க்கை ஒலி கேட்டது.
“மேலே வரலாமா? என்று அவர்கள் கேட்கிறார்கள் இந்தச் சீழ்க்கைக்கு இது தான் அர்த்தம்” என்று தில்லைநாயகம் பயந்த குரலில் சொன்னார்.
“அவர்களை மேலே வரும்படி நீ பதில் சீழ்க்கை அடி” என்று தங்கமணி கூறினான்.
“ஐயோ, வேண்டவே வேண்டாம். அந்த ஐந்து பேரும் வந்தால் அப்புறம் நம் பாடு திண்டாட்டந்தான்” என்று தில்லைநாயகம் அவசரமாகத் தெரிவித்தார்.
“எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது. அந்தப் பரிசலில் கட்டுண்டு கிடப்பவர் எங்கள் அப்பாவாகத்தான் இருக்க வேண்டும். அவரைக் கட்டி எடுத்துக்கொண்டு குள்ளன் தச்சுப் பட்டறைக்குப் போக ஆள்களோடு வந்திருக்கிறான். போகும் வழியிலே ஏதோ ஒன்றை மனத்தில் கொண்டு அவன் அந்த ரகசியக் குகைக்குச் செல்லத் தனியாக மேலே வந்திருக்கிறான், அவன் எதற்காக வந்தானென்பது நிச்சயமாகத் தெரியாவிட்டாலும் ரகசியக் குகையில் அவனுக்கு ஏதோ வேலை இருந்திருக்க வேண்டும். அதற்காகத்தான் அவன் யாரையும் துணைக்கு அழைக்காமல் வந்திருக்கிறான். கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்துவிடுவதாகவும் அந்த ஆள்களிடம் சொல்லி வந்திருக்க வேண்டும். அவன் இவ்வளவு நேரமாகியும் திரும்பாததனால் தான் அவர்கள் சீழ்க்கையடிக்கிறார்கள்” பன்று தங்கமணி தன் கருத்தை எல்லாருக்கும் தெரியுமாறு வெளியிட்டான்.
“ஆமாம். அதற்காக அந்தத் தடியர்களை இங்கு எதற்காக வரும்படி சொல்ல வேண்டும்?” என்று சுந்தரம் கேட்டான்.
“நாம் வரச்சொல்லாவிட்டாலும் இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, அவர்கள் மேலே வரத்தான் செய்வார்கள். அப்படி வந்தால் அவர்கள் சந்தேகத்தோடுதான் வருவார்கள். அப்படி அவர்கள் சந்தேகப்படுவது நமக்கு நல்லதல்ல” என்று தங்கமணி ஆழ்ந்த சிந்தனையோடு பதில் சொன்னான். ஆனால், அவனுடைய கருத்து ஒருவருக்கும் புரியவில்லை.
“நூலேணியை மேலே இழுத்துவிடுகிறேன். அப்போது அவர்கள் வர முடியாது” என்று மருதாசலம் உற்சாகத்தோடு சொல்லிக்கொண்டே குகையை விட்டுப் புறப்பட்டான்.
“வேண்டாம், வேண்டாம். அவர்களை மேலே வரும்படி செய்வது தான் நல்லது” என்று மருதாசலத்தைத் தடுத்துவிட்டு, தங்கமணி தில்லைநாயகத்தின் காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னான். அதைக் கேட்டதும் தில்லைநாயகத்தின் முகம் மலர்ந்தது. அவர் தங்கமணியைத் தட்டிக் கொடுத்துவிட்டு, குகையின் வெளியே வந்து, பரிசலில் உள்ளவர்களை மேலே வருமாறு சீழ்க்கையடித்தார்.
தில்லைநாயகத்தைத் தொடர்ந்து மற்றவர்களும் வெளியே வந்தார்கள். ஜின்கா தங்கமணியின் கருத்தை அறிந்துகொள்ள முடியாமல் திகைப்போடு அவன் தோள்மேல் ஏறிக்கொண்டு அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது.
16
“கண்ணகி, நீ படுத்துத் தூங்கிய இடத்திற்குத்தான் எல்லாரும் போக வேண்டும். இங்கு மருதாசலத்தின் தந்தை மட்டும் இருக்கட்டும். வாருங்கள், அங்கே ஓடி மறைந்து கொள்ளுவோம்” என்று கூறிக்கொண்டே தங்கமணி முன்னால் ஓடினான். தில்லைநாயகத்தைத் தவிர, மற்றவர்கள் அவனைத் தொடர்ந்து ஓடிப் பாறையின் திருப்பத்தில் ஒரு கணத்தில் மறைந்துவிட்டார்கள்.
நூலேணி வழியாக ஏறிவருகின்றவர்களைத் தில்லைநாயகம் பழைய வழக்கப்படி வரவேற்றார். ஐந்து பேரும் வந்தவுடன், “எஜமான் குகைக்குள்ளே இருக்கிறார். எங்கோ போய்விட்டு இப்பத்தான் வந்தார். உங்களை அங்கே கூப்பிடுகிறார்” என்று தில்லைநாயகம் சொன்னார். ஐவரும் வேகமாகக் குகைக்குள் நுழைந்தனர். உடனே தில்லைநாயகம் குகைக்கதவை இழுத்து வெளியே நன்றாகப் பூட்டி விட்டார்.
பிறகு, அவன் வெளியில் சிறிது தூரம் ஓடிச்சென்று சீழ்க்கையடித்தான். அதைக் கேட்டதும் தங்கமணி முதலியவர்கள் திரும்பி ஓடி வந்தனர்.
“மருதாசலம், வா. அந்தப் பரிசலில் கட்டுண்டு கிடப்பவர் யாரென்று பார்க்கலாம்” என்று கூறிக்கொண்டே தங்கமணி நூலேணியில் அவசரமாக இறங்கலானான். “இந்தாடா, இது கையிலிருக்கட்டும்” என்று சுந்தரம் ஓடிவந்து, பேனாக்கத்தியைக் கொடுத்தான். மருதாசலமும் கீழிறங்கினான்.
தங்கமணி தன்னைக் கூப்பிடுவானே என்று ஜின்கா எதிர்பார்த்து நின்றது. ஆனால், அந்தச் சமயத்தில் அவன் அதை
முற்றிலும் மறந்துவிட்டான். கீழே செல்ல வேண்டும் என்று அவனுக்கு ஒரே துடிப்பு.
பரிசலில் கட்டுண்டு கிடந்தவர் அவன் தந்தை பேராசிரியர் வடிவேலுதான். அவன் நினைத்தது சரியாகிவிட்டது. அவன் விரைவில் தந்தையின் கட்டை அவிழ்க்கலானான். “தங்கமணி, நீ எப்படி இங்கே வந்தாய்? இந்த ஆள் யார்?” என்று வடிவேலு வியப்போடும் மகிழ்ச்சியோடும் கேட்டார்.
“அப்பா அந்தக் குள்ளனையும் நாங்கள் பிடித்து விட்டோம். எல்லாம் ஒரு பெரிய கதை. வாருங்கள், மேலே போகலாம். கண்ணகியும் சுந்தரமும் அங்கே இருக்கிறார்கள்” என்று குதூகலத்தோடு தங்கமணி கூறிக்கொண்டே ஏணியிருக்குமிடத்தை நோக்கி ஓடினான்.
“இது யாரென்று சொல்லவில்லையே!” என்று கேட்டுக் கொண்டே வடிவேலு பின்னால் வந்தார்.
“என்னைத்தான் உங்கள் மகன் முதலில் காப்பாற்றினான், அந்தக் குள்ளன் என்னையும் கொல்லுவதற்கு முயற்சி செய்தான். ஆனால், நல்லவேளையாக தங்கமணி அங்கு வந்து சேர்ந்தான். என் பெயர் மருதாசலம்” என்றான் மருதாசலம்.
“குள்ளனுக்கு ஊழியம் செய்பவர் மருதாசலத்தின் தந்தை. அவர் பெயர் தில்லை நாயகம். மேலே இருக்கிறார்”
“எந்தக் குள்ளன்? நீங்கள் இரண்டு பேரும் யாரைச் சொல்லுகிறீர்கள்?” என்று வடிவேலு ஒன்றும் விளங்காமல் கேட்டார்.
“அவன்தான் அப்பா. உங்களைச் சூழ்ச்சி செய்து கட்டி வந்தவன். அவனே தான் கொல்லிமலைக் குள்ளன்!” என்று கண்களில் வெற்றி ஒளி வீசத் தங்கமணி கூறினான்
“அவனையா பிடித்துவிட்டீர்கள்?” என்று வடிவேலு ஆச்சரியப்பட்டுக்கொண்டே மேலே ஏறலானார். அவரைப் பின்தொடர்ந்து மருதாசலம் வந்தான்.
வடிவேலுவின் தலை, மேலே தெரிந்ததும், ‘அப்பா’ என்று கூவிக்கொண்டு கண்ணகி ஓடி வந்தாள். ‘மாமா’ என்று உற்சாகமாகச் சுந்தரம் கூவினான். எல்லோருடைய மகிழ்ச்சியையும் கண்டு ஜின்கா உற்சாகத்தோடு குரல் கொடுத்துக்கொண்டு குதித்தது.
“இந்தக் குரங்குதான் எங்களை யெல்லாம் காப்பாற்றியது” என்று கூறிக்கொண்டே தில்லைநாயகம் வந்து, வடிவேலுவுக்கு வணக்கம் செய்தார்.
“ஆமாம், அம்மா எங்கே?” என்று திடீரென்று தோன்றிய கலக்கத்தோடு வடிவேலு கேட்டார்.
“அம்மா போலீஸ் இன்ஸ்பெக்டரை அழைத்துக்கொண்டு கூடல் பட்டணம் போயிருக்கிறார்கள். முதலில் நாம் இந்தக் குள்ளனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு போக வேண்டும்” என்று அவசரப்பட்டான் தங்கமணி.
“முதலில் ஐயாவுக்குக் கொஞ்சம் தாகத்திற்கு ஏதாவது கொண்டுவரட்டுமா?” என்று தில்லைநாயகம் கேட்டார்.
“இப்போது யாருமே உன் குகைக்குள்ளே போக முடியாதே. அது தான் ஜெயிலாக மாறிவிட்டதே” என்று சுந்தரம் சொன்னான்.
“அதென்னடா ஜெயில்! எல்லாம் விந்தையாக இருக்கிறதே!” என்றார் வடிவேலு.
“அப்பா, அதற்குள்ளே உங்கள் கூடவந்த அந்த ஐந்து தடியர்களும் அடைபட்டுக் கிடக்கிறார்கள். எல்லாம் அண்ணாவின் தந்திரம்” என்று மகிழ்ச்சி பொங்கக் கண்ணகி கூறினாள்.
ஒருவர் பேசுவதற்குள் இன்னொருவர் பேசி, நடந்ததையெல்லாம் கூறத் துடித்துக் கொண்டிருந்தார்கள். வடிவேலுவுக்கு நடந்ததையெல்லாம் கோவையாக அறிந்து கொள்வதே சிரமமாக இருந்தது. இருந்தாலும் அவருக்கு ஒரே ஆனந்தம். தம் மகன் தங்கமணியைப்பற்றி மனத்திற்குள்ளேயே மிகுந்த பூரிப்பெய்தினார்.
நடந்ததையெல்லாம் ஒருவாறு புரிந்துகொண்டதும் வடிவேலு. மேற்கொண்டு நடக்கவேண்டியவற்றில் எண்ணம் செலுத்தலானார்.
“தங்கமணி, நாம் இப்போது அந்த ரகசியக் குகைக்குச் சென்று, கொல்லி மலைக் குள்ளனைப் பிடித்துக் கட்டவேண்டும். அது தான் முதல் வேலை. மருதாசலம், தில்லைநாயகம் இருவரும் கூட வரட்டும். நீயும் வா” என்று அவர் கூறினார்.
மருதாசலமும் தில்லைநாயகமும் சிறிது ஐயத்தோடு பார்த்தார்கள். அவர்கள் அப்படிப் பார்ப்பதன் பொருளை அறிந்து கொண்டு வடிவேலு, “பயப்படாதீர்கள், நாம் மூன்று பேரும் சேர்ந்தால் அவனை என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம். ஏமாந்த சமயத்தில் அவனும் அவனுடைய ஆள்களும் என்னைக் கட்டிப் பிடித்துவிட்டார்கள். இல்லாவிட்டால் நானே அவனை ஒரு கை பார்த்திருப்பேன்” என்று கூறினார். அவருடைய நம்பிக்கையூட்டும் பேச்சைக் கேட்டு அவர்கள் இருவரும் துணிச்சல் கொண்டார்கள். மருதாசலம் வழிகாட்டியாக முன்னால் நடந்தான். வடிவேலு இடயிலே வர, தில்லைநாயகம் கடைசியில் நடந்தார், தங்கமணி முதலியவர்கள் அங்கேயே குகைக்கு முன்னால் தங்கியிருந்தனர். ஜின்கா அவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தது.
ரகசியக் குகையை அணுகியதும் மருதாசலமும் தில்லை நாயகமும் தயங்கி நின்றார்கள். ஆனால் வடிவேலு, தாம் ஊன்றி நடப்பதற்காகக் கொண்டுவந்த நீண்ட மூங்கிற்கழியைக் கையில் எடுத்துக்கொண்டு, முன்னால் சென்று, கதவின் குறுக்குச் சட்டத்தை எடுத்தார். மூங்கிற்கழிகளை எடுத்துக் கொண்டு பின்னாலேயே வரும்படி மற்ற இருவருக்கும் சமிக்கை செய்துவிட்டு, அவர் கதவைத் தள்ளிவைத்து உள்ளே நுழைந்தார். அங்கே மருதாசலம் முன்னால் வைத்துவிட்டுத் திரும்பிய லாந்தர் எரிந்து கொண்டே இருந்தது. கொல்லிமலைக் குள்ளன் கீழே மூர்ச்சையுற்று விழுந்ததாக அவர்கள் கூறிய இடத்தை நோக்கி வடிவேலு பாய்ந்து சென்றார். மருதாசலமும் தில்லைநாயகமும் பின்னாலே எச்சரிக்கையாக வந்தனர். ஆனால், அங்கே குள்ளனைக் காணவில்லை. லாந்தரை எடுத்துக் கொண்டு வடிவேலு, குகையின் ஒவ்வொரு பாகத்திலும் வேகமாகத் தேடினார். உள் குகைக்குள்ளும் சென்று பார்த்தார். மனத்திலே கொஞ்சம் அச்சம் இருந்தாலும் மருதாசலமும் தில்லைநாயகமும் வடிவேலுக்கு உதவியாக அவர் பின்னாளேயே வந்து கொண்டிருந்தார்கள். குள்ளனை எங்குமே காணோம். அவன் மாயமாக மறைந்து விட்டான்.
“தண்ணீர் கசிந்து வழிகின்றதே அந்தப் பக்கத்திலுள்ள சுரங்கத்தை நன்றாகப் பார்த்தீர்களா? வாருங்கள், மறுபடியும் அங்கே போய்ப் பார்க்கலாம்” என்று கூறிக்கொண்டே, லாந்தரை ஒரு கையிலும் மூங்கிற்கழியை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு, வடிவேலு அந்தச் சுரங்கம் போன்ற பகுதியில் நடந்தார். தண்ணீர் எப்பொழுதும் கசிவதாலும் சொட்டிக் கொண்டிருப்பதாலும் அந்தப் பகுதி ஒரே வழுக்கலாக இருந்தது. இருந்தாலும் வடிவேலு, எச்சரிக்கையாக அடிமேல் அடிவைத்து முன்னால் சென்றார். மற்ற இருவரும் பின்னாலேயே வந்தனர். வளைந்து வளைந்து மூவரும் சென்றார்கள். சில இடங்களில் குனிந்துகொண்டு செல்ல வேண்டியிருந்தது. கடைசியில், ஒரு வளைவில் திரும்பிய உடனே வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. அது வழியாகத் தவழ்ந்துகொண்டுதான் போக முடிந்தது. அப்படிக் கொஞ்ச தூரம் வடிவேல் மட்டும் சென்று பார்த்தார். மலைப்பாறையின் கோடியிலே ஒரு பெரிய துவாரம் இருந்தது. அதன் வழியாக எட்டிப் பார்த்த போது கீழே வெகு ஆழத்திலே வஞ்சியாறு ஓடிக் கொண்டிருந்தது தெரிந்தது. ஆனால், மலை ஒரே செங்குத்தாக இருந்ததால் அந்தப் பக்கத்தில் இறங்குவதற்கு யாதொரு வழியும் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கு மேலே தேடுவதில் பயனில்லை என்று வடிவேலு, பின்புறமாகவே தவழ்ந்து, மற்றவர்கள் இருக்குமிடம் வந்து சேர்ந்தார்.
“எப்படியோ அந்தக் குள்ளன் ஏமாற்றிவிட்டான். ஆனால், நான் போலீசின் உதவியைக்கொண்டு அவனைப் பிடிக்காமல் விடப்போவதில்லை. திரும்பிப் போவோம் வாருங்கள்” என்று கூறிக்கொண்டே வடிவேலு நடந்தார்.
ரகசியக் குகையின் வெளிக்கதவை மூடி. குறுக்குச் சட்டத்தைப் பொருத்திவைத்துவிட்டு மூவரும் தங்கமணி முதலியவர்கள் இருக்குமிடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். கைதியாகக் குள்ளனைப் பிடித்துக்கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்த தங்கமணியும் சுந்தரமும் கண்ணகியும் பெரிதும் ஏமாற்றமடைந்தார்கள். அதுவரையில் உற்சாகமாக ஏதேதோ வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்த சுந்தரத்தின் முகம் வாடிப்போய்விட்டது.
“அப்பா, குள்ளனைப் பிடிக்காவிட்டால் போகிறது. அம்மாவிடம் போகலாம்” என்ற கவலை நிறைந்த குரலில் கண்ணகி கூறினாள்.
17
தங்கமணி, சுந்தரம், கண்ணகி ஆகிய மூவரும் ஆற்றின் மறுகரையில் உள்ள காட்டிலிருந்து தாழிவயிறன் தூங்குகிற சமயத்தில் பரிசலிலே தப்பிப்போன செய்தியறிந்ததும் தாழிவயிறனையும், மற்றொருவனையும் அவர்களைப் பிடிக்க மற்றொரு பரிசலில் குள்ளன் அனுப்பினானல்லவா? அன்றிரவு முழுவதும் அவன், இனிமேல் தான் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி யோசனை செய்து. திட்டமிட்டுக்கொண்டிருந்தான். தங்கமணி முதலியவர்களைத் தாழிவயிறன் மீண்டும் பிடித்துவிடுவான் என்று அவன் உறுதியாக நம்பினான். அடுத்த நாள் காலை நேரத்திற்குள் அவர்கள் பிடிபட்ட சேதி தனக்குக் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தான். அப்படிச் செய்தி கிடைத்திருந்தால் அந்த நிலைமையில் என்ன செய்வது என்று அவன் முடிவு செய்து வைத்திருந்தான்.
ஆனால், அவன் எதிர்பார்த்தபடி மறு நாள் காலை ஒன்பது மணிவரையிலும் யாதொரு தகவலும் கிடைக்கவில்லை. அதனால் அவன் தனது திட்டத்தையே மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. இனிமேலும் காலதாமதம் செய்தால் தனக்கு ஆபத்து நேரலாம் என்று அவனுக்குப் பட்டது. அதனால் அவன் வேகமாக எல்லாம் செய்யலானான். தான் கட்டிப்பிடித்து வைத்திருக்கும் பேராசிரியர் வடிவேலையும் பரிசலில் ஏற்றிக்கொண்டு முதலில் வஞ்சியாற்றின் வழியாகத் தச்சுப் பட்டறைக்குப் போக வேண்டுமென்பது அவனது திட்டம். வழியிலே தாழிவயிறனையும், அவன் பிடித்து வைத்திருக்கும் தங்கமணி முதலியவர்களையும் சந்திக்க முடிந்தாலும் அவர்களையும் தச்சுப்பட்டறைக்குக் கொண்டு செல்ல விரும்பினான். பேராசிரியரையும், சிறுவர்களையும் தச்சுப்பட்டறையில் ரகசியமாகப் பூட்டி வைத்துவிட்டு, கொல்லிமலையிலுள்ள ரகசியக் குகைக்குச் சென்று, தான் திருடிய நடராஜர் சிலையை எடுத்துக்கொண்டு முதலில் பஞ்சாபிற்குச் செல்வதென்றும், அங்கிருந்து தரை வழியாகக் காபூல் சென்று, அங்கிருந்து வெளிநாட்டுக்குச் செல்வதென்றும், அந்தச் சிலையை ஏராளமான பணத்திற்கு விற்று விட்டு ரகசியமாக எங்காவது வாழ்வதென்றும் அவன் முடிவு செய்துகொண்டான். தங்கமணி தன்னை யாரென்று கண்டு கொண்டது பெருந்தொல்லையாக இருந்தது. ஆனால், கொலைக் குற்றம் புரிய அவன் அப்பொழுது துணியவில்லை. தான் தப்பிப்போகும் வரையில் அவர்களையெல்லாம் பாதுகாவலில் வைப்பதென்றும், தப்பிய பிறகு இது போன்ற திருட்டுத் தொழிலை நடத்துவதில்லை என்றும் அவன் முடிவு செய்துகொண்டான். இப்போதே அவன் பணம் ஏராளமாக வெளிநாடுகளில் வைத்திருந்தான். நடராஜர் சிலை விற்பதிலும் நிறையப் பணம் கிடைக்கும். அவற்றை வைத்துக்கொண்டு எங்கேயாவது நிம்மதியாக வாழ்வதென்று அவன் எண்ணினான்.
அடுத்த நாள் காலை சுமார் ஒன்பது மணிக்கு மற்றொரு பரிசல் தயாராக, யாருமில்லாத இடத்திலே, வஞ்சியாற்றுக் கரையில் நின்றது. கொல்லிமலைக் குள்ளனின் ஆள்களில் ஐந்து பேர், பேராசிரியர் வடிவேலைப் பரிசலுக்குத் தூக்கி வந்தார்கள். அவருடைய கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. அவரை அவர்கள் பரிசலில் கிடத்திவிட்டுத் தாங்களும் ஏறிக் கொண்டனர். கொல்லிமலைக் குள்ளன் பிறகு வந்து பரிசலில் ஏறினான். பரிசல் உடனே வேகமாகச் செல்லத் தொடங்கிற்று. அந்த ஆள்கள் ஐந்து பேருக்கும் துடுப்புப் போட நன்கு தெரிந்திருந்தது. அவர்கள் மாறி மாறித் துடுப்புப் போட்டதால் பரிசல் வேகமாகச் சென்றது. குள்ளன் யாரிடமும் பேசவேயில்லை. ஆற்றின் பரப்பையும், கரைகளையும் மட்டும் கூர்ந்து கவனித்து வந்தான், தாழிவயிறனுடைய பரிசல் கண்ணுக்குப் படுமா என்று பார்த்துக்கொண்டிருந்தான். கரையிலே எங்காவது தங்கமணி முதலியவர்களைத் தாழிவயிறன் பிடித்து வைத்திருக்கிறானா என்று தெரிந்துகொள்வதே அவன் நோக்கமாயிருந்தது. ஆனால், அவன் எதிர்பார்த்தபடி அவர்களையோ, பரிசலையோ அங்குக் காண முடியவில்லை. பரிசல் வஞ்சியாற்றின் வழியாக மலைக்கணவாயில் நூலேணி
இருக்கும் இடத்திற்கு வந்தது. எதிர்பாராத விதமாக நூலேணி கீழே தொங்கிக்கொண்டிருப்பதைத் தொலைவில் வரும் போதே அவன் கண்டு திகைப்படைந்தான். அது வழக்கமாக மேலே இழுக்கப்பட்டுச் சுருட்டிவைக்கப்பட்டிருக்கும். அது எதற்காகத் தொங்கிக்கொண்டிருக்கிறது என்று அவன் மலைத்தான். அதற்குள் பரிசல் நூலேணிக்குச் சற்று அருகில் வந்துவிட்டது, அங்கே கரையில் ஒரு பரிசல் இழுக்கப்பட்டுக் கிடப்பதையும் கண்டு மேலும் அவன் திகைப்படைந்தான். உடனே அவன் பரிசலை அங்கு நிறுத்தும்படி கட்டளையிட்டான்.
பரிசல் நின்றதும் கொல்லிமலைக் குள்ளன் கீழே இறங்கி விரைந்து சென்று, அங்கே இருந்த பரிசலை உற்றுக் கவனித்தான். தாழிவயிறன் தங்கமணி முதலியவர்களைத் தேடிப் பிடிக்க அனுப்பப்பட்ட பரிசல் அதுவல்லவென்றும், அப்பரிசல் தங்கமணி முதலியவர்களைக் காட்டிற்கு ஏற்றிச் செல்ல உதவிய பரிசலென்றும் அவனுக்குத் தெரிந்தது; அது அவனுக்கு மேலும் ஆச்சரியத்தையும், திகைப்பையும் உண்டாக்கிற்று.
அதனால் தான் அவன் தன் ஆள்களை அங்கேயே இருக்கும்படி செய்துவிட்டு, நூலேணி வழியாக மலைக்கு மேலே வந்தான். தில்லை நாயகம் சமையல் செய்யும் குகையில் யாருமில்லாததைக் கண்டு அவன் தனது ரகசியக் குகையை நோக்கி வேகமாகப் புறப்பட்டான். அப்படிப் புறப்பட்டு வந்துதான் அவன் தங்கமணி முதலியவர்களை உட்குகையில் கண்டான். பின்பு அவன் மூர்ச்சையுற்று விழுந்ததுவரை நடந்த நிகழ்ச்சிகளை முன்னமேயே அறிவோம்.
18
கொல்லிமலைக் குள்ளன் நீண்ட நேரம் மூர்ச்சையுற்றுக் கிடக்கவில்லை. முகத்திலிருந்து வழிந்த ரத்தத்தாலும், அடிபட்ட அதிர்ச்சியாலும் அவன் சிறிது நேரந்தான் உணர்வற்றிருந்தான். பிறகு, அவனுக்கு மெதுவாகத் தன் நினைவு வந்தது. தரையில் படுத்துக்கொண்டே அவன் நெற்றியிலும் கன்னத்திலும் வழிந்து உறைந்து இருந்த ரத்தத்தைக் கையால் துடைத்துக்கொண்டான். அவனுடைய ஜிப்பாவின் கழுத்துப் பக்கத்திலெல்லாம் ரத்தம் படிந்து ஈரமாக இருப்பதை உணர்ந்தான். மூக்கின் இருபுறங்களிலும் நல்ல காயம் ஏற்பட்டிருந்தது. நெற்றியின் மேலே அவன் மெதுவாகத் தடவிப் பார்த்தான். அங்கேயும் காயம் இருந்தது. காயங்களிலிருந்து ஒருவகை வலி உண்டாயிற்று. அவன் அதைச் சமாளித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். அந்த இடத்திலிருந்து தப்பிப் போகவேண்டியது உடனடியாகச் செய்ய வேண்டிய வேலையென்று அவனுக்குப் பட்டது. உடனே அவன் குகையினுள் தண்ணீர் கசிந்து வருகின்ற சுரங்க வழியைத்தான் முதலில் நினைத்தான். கதவை நன்றாக வெளியில் சாத்திக் குறுக்குச் சட்டத்தைப் போட்டிருப்பார்களென்று அவனுக்குத் தெரியும். அதனால் கதவருகிலே போய் அதைத் திறக்க முயற்சி செய்து காலத்தை வீணாக்க முயலவில்லை.
அவன் சுரங்க வழியிற் புகுந்து குனிந்தும் தவழ்ந்தும் முன்னேறிச் செல்லலானான். சிறிது நேரத்தில் அவன் வஞ்சியாற்றின் பக்கத்திலிருந்த மலைத் துவாரத்திற்கே வந்துவிட்டான். பேராசிரியர் வடிவேலும் அந்த இடத்திற்கு வந்து பார்த்தாரல்லவா ? அந்தத் துவாரத்தின் வழியாகத் தப்பிப் போக முடியாது என்று அவர் நினைத்தார். எனென்றால், அது செங்குத்தான மலைப்பகுதியில் ஆற்றுமட்டத்திற்குமேல் சுமார் இரு நூறு அடி உயரத்திலிருந்தது. அங்கிருந்து ஆற்றில் குதித்தால் உயிர் பிழைக்க முடியாது. அதனால் அதன் வழியாகக் கொல்லிமலைக் குள்ளன் போயிருக்க முடியாது என்று அவருக்குத் தோன்றியது.
ஆனால், குள்ளன் தப்புவதற்கு அதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்திருந்தான். ஆகவே, எப்படியாவது அந்தத் துவாரத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று அவன் உறுதிகொண்டான். படுத்து ஊர்ந்துகொண்டிருக்கும் நிலையில்தான் அந்தத் துவாரத்தின் வழியாக எட்டிப் பார்க்க முடியும். பேராசிரியர் வடிவேல் அதன் வழியாகக் கீழே குனிந்து ஆற்றைத்தான் கவனித்தார். கீழிருக்கும் மலைப்பகுதியையும் கவனித்தார். ஆனால், அவர் மேலே நிமிர்ந்து பார்க்கவில்லை. குள்ளனோ எல்லாப் பக்கமும் பார்த்துவிட்டு மல்லாந்து படுத்து மேலேயும் பார்த்தான். அங்கே சுமார் பத்தடி உயரத்தில் பாறை இடுக்கில் எப்படியோ முளைத்து வளர்ந்த இச்சி மரத்தின் வேர்களில் ஒன்று, பாறையோடு ஒட்டினாற்போல அந்தத் துவாரத்திற்கு ஓரடி உயரத்திலே வந்து, வலப்புறமாகச் சென்றிருந்தது. குள்ளன் தனது வலக்கையை வெளியே நீட்டி அந்த வேரைப் பிடித்தான். வேர் கையின் அளவு பருமனுடையதாகவும். உறுதியாகவும் இருந்தது. இன்னும் கொஞ்சம் உயரத்திலே அது பாறையோடு ஒட்டாமல் பிடிக்க வசதி யாகவும் இருந்தது. அது ஒன்றுதான் தப்புவதற்கு வழி என்று குள்ளனுக்குத் தோன்றிற்று. ஆகவே, தனது இருகைகளாலும் மல்லாந்து படுத்தவாறே அந்த வேரைப் பிடித்துக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக மேலே எட்டி எட்டிப் பிடித்தான். அப்படிப் பிடித்து மெதுவாகத் தன் உடம்பையும் வெளியே இழுத்தான்.
பிறகு, அந்த வேரைப் பற்றிக்கொண்டே அந்தரத்தில் தொங்கினான். இப்பொழுது மேலே நன்றாகப் பார்க்க முடிந்தது. கொஞ்சங்கொஞ்சமாக அந்த வேரைப் பற்றிக்கொண்டு மேலே தொற்ற முடியுமானால் துவாரத்தின் அடிப்பகுதியில் காலை வைத்து நன்றாக நின்றுகொள்ளலாம். பிறகு நிதானமாக அங்கிருந்து மேலே ஏறவோ, கீழே இறங்கவோ வழி கண்டு பிடிக்கலாம். இந்த எண்ணம் வரவே குள்ளனுக்கு ஒரு புதிய உணர்ச்சி பிறந்தது. இயல்பாகவே அவன் நல்ல உடலுறுதியுள்ளவன். நீச்சலினாலும் வேறு தேகப்பயிற்சிகளாலும் அவன் தன் உடம்பை லாகவமாகப் பழக்கி வைத்திருந்தான். அதனால் அவன் மூச்சுப் பிடித்து, தன் முழு சக்தியையும் பயன்படுத்திக் கைகளை மாற்றிமாற்றி வைத்து மேலே தொற்றினான். கால்களையும் பாறை மேல் வைத்துப் பார்த்துப் பார்த்து ஏதாவது சிறிது துறுத்திக்கொண்டிருக்கிற பகுதியையும் தனக்கு உதவியாகப் பயன்படுத்திக்கொண்டான். பெருமுயற்சியால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கடைசியில் துவாரத்தின் அடிப்பகுதியிலே கால்களை ஊன்றி உறுதியாக நின்றுகொண்டான். அந்த நிலையிலே சற்று இளைப்பாறினான்.
பிறகு சுற்றிலும் உற்று நோக்கினான். அவன் வலக் கைப்புறமாக இச்சி மரத்தின் வேர் கீழ்நோக்கிப் பாறை இடுக்கிலே ஓடிக்கொண்டிருந்தது. சுமார் ஐந்தடி நீளத்திற்குப் பின் பாறையிலே இடுக்கில்லாமையால் வேர் கொஞ்ச தூரம் பாறைக்கு மேலாகவே சென்று, மீண்டும் ஒரு பாறை இடுக்கிலே உள் நுழைந்திருந்தது. பாறைக்கு மேலாகச் செல்லும் வேர்ப்பகுதியை எட்டிப் பிடித்துக் கீழே தொங்க முடியுமானால் காலுக்கும் கீழே ஆறடி ஆழத்தில் துறுத்திக் கொண்டிருந்த ஒரு சிறிய பாறையை அடையலாம். தொங்கியே அதன் மேலே குதித்துவிடலாம் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால், முதலில் அவ்வேரை எட்டிப் பிடிக்கவேண்டும். எப்படியும் தப்பவேண்டும் என்ற நிலை ஏற்பட்டதால் அவனுக்குப் பெரியதொரு துணிச்சல் ஏற்பட்டது. இடக்கையில் வேரைப் பிடித்துக்கொண்டு, வலப்பக்கமாக அப்படியே சாய்ந்து, காலை அழுத்தி ஊன்றி மேலெழும்பிக் குதித்தான். அந்த வேர் பிடிபட்டது. அங்கிருந்து கீழ்ப்பாறை மேலே குதிப்பது அவனுக்கு எளிதாக இருந்தது.
அந்த இடத்திலிருந்து மலையோரமாகவே வஞ்சியாற்றின் ஒட்டத்திற்கு எதிர்ப்புறமாகக் கொஞ்ச தூரம் போக முடிந்தது. அது அவனுக்கு மிக வசதியாக இருந்தது. ஏனென்றால், அங்கிருந்து அடுத்த திருப்பத்திலுள்ள வஞ்சியாற்றின் கரையைப் பார்க்க முடியும். அந்தக் கரையிலிருந்துதான் நூலேணி வழியாக மேலே ஏற வேண்டும். அங்கே பரிசல் அருகிலே தன் ஆள்கள் இருந்தால், பிறகு எல்லாம் எளிதாக முடிந்து விடும். அவர்களின் உதவியைக்கொண்டு தங்கமணி முதலியவர்களையும் பிடித்துவிடலாம். ரகசியக் குகையின் கதவையும் திறக்கச் செய்யலாம். அவர்கள் சுரங்க வழியாக வந்து ஒரு கயிறு வீசினால் அதைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறலாம் அல்லது ஆற்றில் இறங்கலாம். பரிசலை அந்த இடத்திற்குக் கொண்டுவரச் செய்து அதில் ஏறிக்கொள்ளவும் முடியும்.
இந்த எண்ணங்களோடு அவன் மலையில் உள்ள திருப்பத்தின் வழியாக எட்டிப் பார்த்தான். அங்கே இரு பரிசல்கள் தான் இருந்தன. ஆற்றில் யாரும் இல்லை. கட்டி வைக்கப் பட்டிருந்த வடிவேலையும் காணோம்.
'அந்தப் பயல் தங்கமணி என்னை முந்திக்கொண்டான்... ஆனால் அவன் என் ஆள்களை எப்படி ஏமாற்றினானோ தெரியவில்லையே! ஆள்களை ஏமாற்றாமல் அவன் வடிவேலைக் கட்டவிழ்த்து மேலே அழைத்துச் சென்றிருக்க முடியாது. எப்படியோ அவர்கள் ஏமாந்து போயிருக்க வேண்டும். அல்லது சிறைப்பட்டிருக்க வேண்டும் என்று அவன் எண்ணினான். அதே சமயத்தில் இனிமேல் என்ன செய்வது என்பதையும் வேகமாக நினைத்து முடிவு செய்துகொண்டான.
அந்த இடத்திலிருந்து மேலும் பத்தடி கீழே இறங்க முடிந்தது. இப்பொழுது அவன் ஆற்று நீர்மட்டத்திற்குமேலே சுமார் இருபது அடியில் இருந்தான். அங்கிருந்து அப்படியே ஆற்றில் குதித்தான்; உயரத்திலிருந்து குதிப்பதும், ஆற்றில் நீந்துவதும் அவனுக்கு எளிதான விளையாட்டு. நல்ல வேளையாக மலைகளுக்கு இடையில் செல்லும் ஆறு மிகவும் ஆழமாக இருந்தது. குள்ளன் ஆற்று வெள்ளத்தோடேயே மிதந்து சென்றான். அவன் அப்போது ஓட்டத்தை எதிர்த்து நீந்தித் தன் கைகால்கள் ஒயும்படி செய்யவில்லை. ஆற்றோட்டத் தோடேயே போவதில் மிதந்துகொண்டிருப்பதற்கு மட்டும் அவன் கைகால்களைச் சற்று அசைத்தான். இவ்வாறு அவன் சுமார் கால் மைல் தூரம் சென்றதும் மலைப்பகுதி முடிவடைந்தது. ஆறும் பரவலாக ஓடியது. அதன் வேகமும் சற்றுக் குறைந்தது. அப்பகுதியிலே அவன் நீந்திக் கரையை அடைந்தான்.
தாழிவயிறனையும், அவனுடன் இருந்த மற்றொரு ஆளையும் கைது செய்த போலீஸ்காரர்கள் அந்தப் பகுதியில் தான் கரைக்கு வந்து, இரவெல்லாம் தங்கியிருந்தார்கள். அந்த இடத்திலிருந்து கொஞ்ச தூரத்தில்தான் தச்சுப்பட்டறை இருந்தது. ஆற்று வழியாகக் கொல்லிமலைக் குள்ளன் அங்கு வருவான் என்பதைத் தாழிவயிறனிடம் பல கேள்விகள் கேட்டு அவர்கள் அறிந்திருந்தனர்; அவன் திருடனோ,திருடனல்லவோ எப்படியிருந்தாலும் அவனையும் கைது செய்வதென்று அவர்கள் தீர்மானித்தார்கள். அவனையும் பிடித்துவிட்டால் தங்களுக்கு நல்ல வெகுமதியும், உத்தியோக உயர்வும் கிடைக்குமென்று. அவர்கள் நம்பினார்கள்.
அவர்கள் காலை பத்து மணிவரை மறைந்திருந்து பார்த்தார்கள். குள்ளன் வருவதாகத் தெரியவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. மேலும், தாங்கள் மேற்கொண்டுவந்த வேலையை அவர்கள் செய்து முடிக்கவில்லை. தங்கமணி முதலியவர்களை அவர்கள் கண்டுபிடித்திருந்தால் அவர்கள் வேலை சரியாக முடிந்திருக்கும். அதுவும் செய்யாமல் வழியிலே அதிக கால தாமதம் செய்தால் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிப்பார் என்று தோன்றவே, அவர்கள் இரு பரிசல்களிலும் ஏறிக்கொண்டு, தாழிவயிறன் முதலியவர்களையும் எற்றிக்கொண்டு கூடல் பட்டணத்தை நோக்கிப் போய்விட்டனர்.
அது ஒரு வகையில் குள்ளனுக்கு நல்லதாயிற்று. அவன் 11 மணி அளவுக்குக் கரையில் நடந்து, தச்சுப்பட்டறையை அடைந்தான். தச்சுவேலை செய்யும் ஆள்களோடு அவனுடைய கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்த பதினைந்து ஆள்களும் அங்கு வந்து இருந்தனர். அவர்களுக்கு இவனுடைய முகத்திலிருந்த காயங்களைக் கண்டு ஆச்சரியம் உண்டாயிற்று. ஆனால் யாரும் அவனிடம் அதைப்பற்றிக் கேட்கத் துணியவில்லை. கொல்லி மலைக் குள்ளன் நேராகத் தன் அறைக்குள் நுழைந்தான்; உடைகளை மாற்றிக்கொண்டான். அப்படி மாற்றும்போதே உணவு கொண்டுவரும்படி ஆணையிட்டான். பிறகு, அவனும் வேகமாகத் தன் முகக்காயங்களுக்கு மருந்து பூசிக்கொண்டான். உணவு வந்ததும் அதைச் சாப்பிட்டுக் கொண்டே மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றைப்பற்றி எண்ணமிடத் தொடங்கினான். பேராசிரியர் வடிவேலும் மற்றவர்களும் மலைக் குகையை விட்டு உடனே கூடல் பட்டணத்தை நோக்கிப் புறப்பட முயல்வார்கள். அப்படிப் புறப்பட்டால் மேல் பக்கத்திலுள்ள ஏரி வழியாகப் பரிசலில் வந்து, தரைவழியாகப் கூடல் பட்டணம் போகலாம். வடிவேலுக்கு இவ்வழி தெரியாதென்றாலும் தில்லை நாயகமும், மருதாசலமும் கூறி விடுவார்கள். அந்த வழியில் வந்தால் தச்சுப்பட்டறையை அடையாமல் சென்றுவிடலாம். நூலேணி வழியாக வஞ்சியாற்றின் கரையில் இறங்கிப் பரிசலில் ஏறி, ஆற்று வழியாகவும் அவர்கள் அப்பட்டணத்திற்குப் போகலாம். ஆனால், அப்படிப் போனால் தச்சுப்பட்டறையில் இருப்பவர்களின் கண்ணில் படாமல் போக முடியாது. அதனால் வடிவேல் எரி வழியைத்தான் பயன்படுத்த நினைப்பார் என்று குள்ளன் கருதினான்.
உணவை மிக வேகமாக முடித்துக்கொண்டு அவன் தன் ஆள்களைப் பார்த்து, "ஏரிக்கரையிலே சங்கம் புதர்ப்பகுதிக்கு உடனே புறப்படுங்கள். கையிலே சிலம்பத் தடியை ஒவ்வொரு வரும் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கட்டளையிட்டான்.
தச்சு வேலை செய்த பதினைந்து பேரும் கையில்தடியோடு புறப்பட்டார்கள். எதற்காகத் தடி என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால், யாரும் அதுபற்றி அவனிடம் கேட்கத் துணியவில்லை. அவனிடத்திலே அவ்வளவு பயம். குள்ளனும் ஒரு தடியை எடுத்தவண்ணம் புறப்பட்டான். அவன் போக நினைத்த இடத்திலிருந்து ஏரிவழியாக வருபவர்களையும் பார்க்கலாம். ஆற்றின் வழியாக வருபவர்களையும் பார்க்கலாம். தனது கைத்துப்பாக்கியை இனிப் பயன்படுத்த வேண்டி நேரிடும் என்று அவனுக்குத் தோன்றியது. அதை எடுத்துக் கொண்டான். தனது உயிருக்கே ஆபத்து வரும்போது கொலை செய்யவும் அவன் தயாராக இருந்தான்.
19
கொல்லிமலைக் குள்ளனைப்பற்றியும், அதுவரையில் நடந்த சம்பவங்களைப்பற்றியும் நிதானமாகவும், விரிவாகவும் கேட்டுத் தெரிந்துகொள்ளப் பேராசிரியர் வடிவேலுவுக்கு ஒழிவு கிடைத்தது. அவற்றைத் தெரிந்துகொண்டதும் அவர் மேற்கொண்டு என்ன செய்வது என்பதைப்பற்றி எண்ணமிடலானார். முதலில் கூடல் பட்டணம் போய் வள்ளிநாயகியைச் சந்திக்க வேண்டும். பரிசலில் தனியாக வந்த குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடிக்க வள்ளிநாயகி மற்றொரு பரிசலில் மூன்று போலீசாரை அனுப்பினாள் அல்லவா ? அந்தப் பரிசலோடு மற்றொரு பரிசலும் சேர்ந்து ஆற்றில் சென்றதை இளைஞர்கள் பார்த்திருக்கிறார்கள்; மற்றொரு பரிசலில் வந்தவர்கள் கொல்லி மலைக்குள்ளனின் ஆள்களாகத்தான் இருக்க வேண்டும். சாதாரணமாக அந்த ஆற்றிலே இரவு நேரங்களில் யாரும் பரிசலில் செல்லமாட்டார்கள் என்று தில்லைநாயகம் உறுதியாகக் கூறினார். அதனால், வந்தவர்கள் குள்ளனுடைய ஆள்களாகத்தான் இருக்கவேண்டும். போலீஸார் அந்த ஆள்களைக் கைது செய்திருக்க வேண்டும். அப்படிப் பிடித்திருந்தால் இதற்குள் கூடல் பட்டணத்திற்குச் சென்று, போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அவர்களை ஒப்படைத்திருப்பார்கள். அதே சமயத்தில் தங்கமணி முதலியவர்கள், வந்த பரிசலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதையும் தெரிவித்திருப்பார்கள். அந்தச் செய்தி வள்ளி நாயகிக்கு மிகுந்த கவலையை உண்டுபண்ணும். அதனால் வள்ளிநாயகியைப் போய்ச் சந்திப்பது முதலில் செய்ய வேண்டிய வேலையாகும். கூடல் பட்டணத்திற்குப் போனால் போலீஸ் இன்ஸ்பெக்டரோடு கலந்து யோசனை செய்துகொண்டு, கொல்லி மலைக் குள்ளனைப் பிடிப்பதற்கு வேண்டிய முயற்சியையும் செய்யலாம். அவன் தப்பிவிட்டானே ஒழிய நடராஜர் சிலையை எடுத்துக்கொண்டு போகவில்லை. அதையும் மற்ற சிலைகளையும் எடுத்துச்செல்ல அவன் ரகசியமாக முயல்வான். அந்தச் சமயம் பார்த்து அவனைப் பிடித்துவிடலாம். அவனுடைய ரகசியக் குகையும் தெரிந்துவிட்டது. அதனால் அந்தப் பகுதியிலே மறைந்திருந்து அவனைப் பிடிக்க முயற்சி செய்யலாம். அவன் கிடைக்காவிட்டாலும் கடைசியில் அந்தச் சிலைகளையாவது எடுத்துச் சென்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம்.
இவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கும்போதே வடிவேலுவுக்கு வேறொரு வகையான எண்ணமும் பிறக்கலாயிற்று. ஒரு வேளை, பரிசலில் வந்த போலீசாரைக் குள்ளனின் ஆள்கள் பிடித்திருந்தால் ...... அப்பொழுது என்ன நடந்திருக்கும்? இவ்வாறு தம்மைத்தாமே கேட்டுக்கொண்டார். போலீசார் துப்பாக்கியுடன்தான் வந்திருப்பார்கன். அதனால் அவர்களைப் பிடித்திருப்பது நடைபெறக்கூடியதன்று. அப்படி அவர்களைப் பிடித்திருந்தாலும் குள்ளனின் ஆள்கள் அவர்களைத் தச்சுப் பட்டறைக்குத்தான் கொண்டு சென்றிருப்பார்கள். அப்பொழுது வள்ளிநாயகிக்கு ஒரு சேதியும் கிடைத்திருக்காது. போலீசாரையும் சந்திக்கமுடியாது. அவள் பலவாறு எண்ணமிட்டுக் கொண்டிருப்பாள். அப்படிப் பார்க்கும்போதும் கூடல் பட்டணம் போய் வள்ளிநாயகியைச் சந்திப்பதே முதல் வேலையாகத் தோன்றிற்று. பிறகு, போலீஸ் இன்ஸ்பெக்டரையும் வேறு பல போலீசாரையும் அழைத்துக்கொண்டு வந்து தச்சுப் பட்டறைக்கு வரமுடியும். போலீசார் பிடிபட்டிருந்தால் அவர்களையும் விடுவிக்கலாம். பின்பு, இந்த இடத்திற்கு வந்து இங்கே குகைக்குள் அடைபட்டுக் கிடக்கும் குள்ளனின் ஆள்கள் ஐவரையும் கைது செய்யலாம். அதுவரை இவர்கள் குகைக்குள்ளேயே கிடக்கட்டும்.
இவ்வாறு முடிவு செய்துகொண்டு அந்த இடத்திலிருந்து கூடல் பட்டணத்திற்கு எப்படிப் போகலாம் என்பதைப்பற்றித் தில்லை நாயகத்தோடு கலந்து சிந்திக்கக் தொடங்கினார். "கூடல் பட்டணத்திற்கு எப்படிப் போகலாம்?" என்று அவர் திடீரென்று தில்லைநாயகத்தை வினவினார்.
இவ்வாறு பேராசிரியர் ஆழ்ந்த யோசனையில் இருப்பதும், திடீரென்று கேள்வி கேட்பதும் தங்கமணிக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவன் அதுவரையில் மெளனமாக இருந்தான். சுந்தரத்திற்கும், கண்ணகிக்குந்தான் இப்படி மெளனமாக இருப்பது தொல்லையாக இருந்தது. ஜின்காவிற்கும் அது கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதற்கு நாவற்பழத்தின் மேலே ஆசை ஏற்பட்டுவிட்டது. கண்ணகி வரக் கொஞ்சம் விருப்பம் காட்டியிருந்தால் அது அவளை அழைத்துக்கொண்டு போயிருக்கும். ஆனால், அவள் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். மேலும், தங்கமணி ஏதேதோ எண்ணிக் கொண்டிருப்பதாகத் தோன்றிற்று. அதனால் முக்கியமான வேலை இருப்பதாக அது உணர்ந்துகொண்டது. அதனால் அது ஓரிடத்திலே படுத்துக்கொண்டது. சுந்தரம் அதனிடத்திலே வந்து அதைத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தான்.
இந்த நிலையில்தான் வடிவேல் திடீரென்று கேள்வி கேட்டார். தில்லைநாயகத்திற்கு என்ன பதிலளிப்பது என்று தோன்றவில்லை. அவர் சற்று திகைத்தார். அதைக் கண்டு வடிவேல் "தில்லைநாயகம், நாமெல்லோரும் உடனே கூடல் பட்டணம் போயாக வேண்டும். நூலேணிக்கும் கீழே ஆற்றின் கரையில் இரண்டு பரிசல்கள் இருப்பது எனக்குத் தெரியும். அவற்றைப் பயன்படுத்தி ஆற்று வழியாகவே கூடல் பட்டணம் போய்ச் சேரலாம். நீ ஒரு பரிசலையும், உன் மகன் மருதாசலம், ஒரு பரிசலையும் செலுத்த முடியும். ஆனால், அப்படிப் போகும் போது தச்சுப்பட்டறையில் உள்ள ஆள்களுக்குத் தெரியுமல்லவா ?" என்று கேட்டார்.
"ஆமாம், தச்சுப்பட்டறை ஆற்றின் கரையிலேயே உயரமான இடத்தில் இருக்கிறது. அங்கு இருப்பவர்களுக்கு ஆற்றில் செல்லும் பரிசல்கள் நன்றாகத் தெரியும்” என்று தில்லைநாயகம் பதிலளித்தார்.
"அதை நினைத்துத்தான் நான் வேறு வழி இருக்கிறதா என்று கேட்கிறேன்.”
"மலைக்கு மேற்புறத்திலே இறங்கி, அங்குள்ள ஏரி வழியாகப் பரிசலில் போகலாம். நான் வலிக்கும் பரிசலும் அங்கு இருக்கிறது.”
"எரி வழியாகப் போனால் தச்சுப்பட்டறையில் உள்ளவர் கண்ணிலும் படமாட்டோம். அதோடு அந்தப் பட்டறைப் பக்கம் போகாமலேயே கூடல் பட்டணம் போகும் வழியிருக்கிறது. அந்த வழியில் இரண்டு மைல் நடந்தால் கூடல் பட்டணம் போய்விடலாம்" என்று மருதாசலம் உற்சாகத்தோடு கூறினான்.
"தச்சுப்பட்டறைப் பக்கம் போகாமல் அதைக் கடப்பதுதான் நல்லது. குள்ளன் அங்கே போயிருந்தால் நம்மைப் பிடிக்க முயற்சி செய்யாமலிருக்கமாட்டான். அவனிடத்திலே ஆள்கள் நிறைய இருப்பார்கள். அதனால் நாம் எச்சரிக்கையாகப் போக வேண்டும். இங்கே காலதாமதம் செய்வது நல்லதல்ல. இப்பொழுதே மணி சுமார் நான்கு இருக்கலாம்" என்று சொல்லிக்கொண்டே வடிவேல் எழுந்தார்.
"அப்பா, அம்மாவிடம் போகலாமா?” என்று கேட்டுக் கொண்டே கண்ணகி அவர் பக்கத்தில் சென்றாள். குள்ளனையும் பிடித்துக்கொண்டு போனால் அத்தைக்கு மகிழ்ச்சியாக இருக்கும்” என்று சொல்லிக்கொண்டே சுந்தரம் எழுந்தான். தங்கமணி மட்டும் ஒன்றும் பேசாமல் புறப்படத் தயாரானான். அவன் உள்ளத்திலே பலவகையான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. முந்தைய நாளிலும், இன்றும் நடந்த நிகழ்ச்சிகள் அவனுக்கு ஒரு புதுவிதமான கிளர்ச்சியையும், பெரியதொரு துணிகரச் செயலில் ஈடுபட்ட உற்சாகத்தையும் தந்தன. அவற்றைப்பற்றி எண்ணிக்கொண்டே அவன் நடக்கலானான். ஜின்கா அவன் தோளின்மேல் எறாமல் அருகிலேயே நடந்து வந்தது.
“எவ்வளவு வேகமாக எரியை அடைய முடியுமோ அவ்வளவுக்கும் நல்லது. தில்லைநாயகம், குறுக்கு வழியாகக் கூட்டிக்கொண்டு போ" என்று கூறிக்கொண்டே வேகமாக நடந்தார் வடிவேல். தில்லைநாயகம் எல்லாருக்கும் முன்னால் நடந்தான். கண்ணகியைக் கையில் பிடித்துக்கொண்டு மருதாசலம் பின்னால் நடந்தான். மலைச்சாரலிலே ஒற்றையடிப் பாதைகூட சில இடங்களில் சரியாக இருக்கவில்லை. சிற்சில இடங்களில் உயரமான பாறைகளிலிருந்து ஐந்தடி, ஆறடி ஆழத்திற்குக் கீழே குதித்துச்செல்ல வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட இடங்களிலெல்லாம் மருதாசலம் கண்ணகியைத் தூக்கிக் கீழே விட்டான். தங்கமணியும் சுந்தரமும் விளையாட்டாகக் குதித்துக் குதித்துச் சென்றார்கள். யாராவது அந்தப் பக்கத்திலே தென்படுகிறார்களா என்று உற்றுப் பார்த்துக் கொண்டே பேராசிரியர் வடிவேல் எச்சரிக்கையாக நடந்தார். அவரிடத்திலே எந்த வகையான ஆயுதமும் இல்லை. அதனால்
அவர் குள்ளனுடைய கண்ணில் படாமல் கூடல் பட்டணம் போய்ச் சேருவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தார்.
அவர்கள் சுமார் 2 மணி நேரம் நடந்திருப்பார்கள். அப்பொழுது ஏரி கண்ணிலே தென்பட்டது. அது மிகவும் விசாலமான ஏரி. மழை பெய்யும்போது மலையில் இருந்து பல ஓடைகளின் வழியாக அதில் வெள்ளம் வந்து சேரும். வெள்ளம் அதிகமாக இருந்தால் அந்த ஏரியிலிருந்து நீர் வழிந்து வஞ்சியாற்றை அடையும். சாதாரணமாக அந்த ஏரி எப்பொழுதும் நீர் நிறைந்து இருக்கும். ஆனால், சுற்றிலுமுள்ள மலைக்காடுகளுக்கு இடையே இருப்பதால் அதை யாரும் எந்த வகையிலும் பயன்படுத்துவதில்லை. அந்தப் பக்கத்திலே நடமாட்டமே இராது. அதனால் அது குள்ளனுக்கு மிகவும் வசதியாக இருந்தது. தச்சுப்பட்டறையில் செய்த மரப்பொம்மைகளைப் பரிசலில் ஏற்றி, அதன் வழியாக மேலே இருக்கும் குகைக்கு எடுத்துச் செல்வதும், அங்கே பொம்மைகளுக்குள் திருடிய சிலைகளை வைத்து மறைத்துப் பிறகு வர்ணமடித்து எடுத்துக்கொண்டு வருவதும் அவனுக்கு எளிதாக இருந்தது. யாருக்கும் இந்த விவரம் தெரியாதபடி அவன் தன் திருட்டு வேலையைச் செய்து வந்தான். தச்சுப் பட்டறையில் வேலை செய்யும் தச்சர்களுக்குக்கூட அவனது திருட்டுத் தொழில் தெரியாது. திருட்டை நடத்த அவன் தனியாக வேறு ஆள்களை வைத்திருந்தான். அந்த ஆள்களே தச்சுப்பட்டறைக்கு வந்திருந்தனர். அவர்களைப் பற்றித் தச்சர்களுக்கு ஒன்றுமே தெரியாது.
குள்ளன் வர்ணம் பூசி முடித்த பொம்மைகளை எரியின் வழியாக மீண்டும் தச்சுப்பட்டறைக்குக் கொண்டுவந்து, அங்கிருந்து வஞ்சியாற்றின் வழியாக எடுத்துக் கூடல் பட்டணத்திற்குச் செல்வான். அங்கிருந்துதான் ரயிலிலோ லாரியிலோ அவன் பொம்மைகளைக் கொச்சித் துறை முகத்திற்கு எடுத்துச் செல்வான். அல்லது. ரயில் வழியாக வட நாட்டிற்கும் கொண்டுசென்று, அங்கிருந்து வெளிநாட்டிற்கும் அனுப்புவான்.
வடிவேல் முதலியோர் எரிக்கரையில் பரிசல் இருந்த இடத்திற்கு வந்ததும் உடனே அதில் ஏறிக்கொண்டனர். தில்லைநாயகம் பரிசலைத் துடுப்புப்போட்டு வேகமாகத் தள்ளினான். பரிசல், எரியின் மத்திய பாகத்திற்கு வந்த போதே கொல்லிமலைக் குள்ளனுக்கும் அவன் கூட்டத்தினருக்கும் தெரிந்துவிட்டது. குள்ளனுக்கு அந்தப் பரிசல் எங்கு போய் நிற்கும் என்பது நன்றாகத் தெரியும். அந்த இடத்தில் இறங்கித்தான் கூடல் பட்டணத்திற்குத் தரைவழியாகச் செல்ல முடியும். அதனால் அவன் தன் ஆள்களை மெதுவாகவும் ஒவ்வொருவராகவும் அந்த இடத்திற்குச் சென்று பதுங்கும்படி கட்டளையிட்டிருந்தான். அவனும் அவர்களுக்குப் பின்னாலேயே சென்று தயாராகக் காத்திருந்தான். அந்தச் சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவிய இருட்டும் அவர்களுக்கு உதவியாக இருந்தது. குள்ளன் எதிர்பார்த்த இடத்திலேயே பரிசல் வந்து நின்றது. வடிவேலும் மற்றவர்களும் பரிசலை விட்டிறங்கி, எரிக்கரையை நோக்கி வரத் தொடங்கியவுடனே, குள்ளன் தனது ஆள்களுக்குச் சமிக்கை செய்தான். அடுத்த கணத்தில், குள்ளனின் ஆள்கள் பதினைந்து பேரும், குள்ளனும் வடிவேல் முதலியவர்கள் மேல் பாய்ந்தார்கள். வடிவேலின் எச்சரிக்கையெல்லாம் பயன்படாமல் போய்விட்டது.
20
வள்ளிநாயகியும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் சில போலீஸ் வீரர்களை அழைத்துக்கொண்டு இரவு நேரத்திலே காரில் புறப்பட்டார்களல்லவா? அவர்களைப்பற்றி இதுவரையில் நாம் கவனிக்காமல் இருந்துவிட்டோம். இப்பொழுது அவர்களைப்பற்றிக் கவனிப்போம். கூடல் பட்டணத்திற்குச் சென்று, தங்கமணி முதலியவர்களைச் சந்திக்க வேண்டும் என்பது வள்ளிநாயகியின் நோக்கம். பரிசலில் தப்பிச் சென்ற தங்கமணி முதலியவர்களுக்கு உதவி செய்ய அனுப்பிய போலீஸ் வீரர்கள் மற்றொரு பரிசலிலே வேகமாகச் சென்று, அவர்கள் செல்லும் பரிசலைக் கண்டுபிடித்து, உடனழைத்து வருவார்கள் என்று அவள் நம்பினாள்.
வஞ்சியூரிலிருந்து கூடல் பட்டணத்திற்குச் செல்ல இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, சல்லிக்கல் போட்டுப் பாவிய நல்ல சாலை. ஆனால் அது வெகுதூரம் சுற்றி வளைத்துக்கொண்டு போகிறது. அதில் சென்றால் 180 மைல் ஆகும். மற்றொரு வழி, மலைக்கு அருகிலே செல்லுகின்றது. அதில் சென்றால் 80 மைல் தொலைவுதான். ஆனால், அது காட்டுப்பாதை. அது நன்றாகச் செப்பனிடப்பட்டதல்ல. இருந்தாலும், அதன் வழியாகச் சென்றால், வேகத்தைக் குறைத்துச் சென்ற போதிலும் கூடல் பட்டணத்தை விரைவாக அடைந்துவிடலாம். இதை எண்ணியே காட்டுப்பாதையில் செல்வதாக முடிவு செய்து கொண்டார்கள். அப்படி முடிவு செய்தது தொல்லையாக முடியுமென்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் சுமார் பாதி தூரம் சென்றிருப்பார்கள். அது வரையிலும் எவ்விதமான தொந்தரவும் ஏற்படவில்லை. வள்ளி நாயகி முதலில் கொஞ்ச தூரத்திற்குக் கார் ஓட்டினாள். பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டரும் போலீசாரில் ஒருவரும் மாறி மாறி ஓட்டி வந்தார்கள். சுமார் முப்பது மைல் சென்றவுடனேயே லேசாகத் தூறல் விழலாயிற்று. என்றாலும் அவர்களுடைய பயணம் தடைப்படவில்லை. பாதி தூரத்திற்கு வந்தபொழுது தான் அவர்கள் எதிர்பாராத தடங்கல் ஏற்பட்டது. அப்பொழுதும் தூறல் இருந்தது. அந்தத் தூறல் கொல்லிமலையின் ஒரு சாரலிலே பெய்துகொண்டிருந்த கனத்த மழையின் அறிகுறியாகும். அந்த மழையால் காட்டு வழியில் ஒடும் ஓடையொன்றிலே வெள்ளம் பெருக்கெடுத்து வேகமாக ஒடிக் கொண்டிருந்தது.
அந்த ஓடையைக் கடந்துதான் பாதை செல்லுகிறது. ஒடையின் மேலே உயரமான பாலம் எதுவும் இல்லை. தரையோடு கல் பாவித்தான் பாதை அமைத்திருந்தார்கள். இப்பொழுது வெள்ளம் அந்தக் கல்பாலத்திற்கு மேலேயே போய்க் கொண்டிருந்தது. அதனால் வெள்ளம் வடியும் வரையிலும் காரை அங்கே நிறுத்த வேண்டியிருந்தது.
இப்படிப்பட்ட காட்டு ஓடைகளிலே வெள்ளம் வந்தால் விரைவிலே வடிந்துபோகும். அதனால், அவர்கள் அங்கேயே காத்திருந்தார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் எதிர்பார்த்தபடி வெள்ளம் விரைவிலே வடியவில்லை. அடுத்த நாள் பொழுது விடிந்து ஒன்பது மணி ஆகியும் கல்பாலத்தின்மேலே சுமார் அரை அடி உயரத்திற்கு நீர் ஓடிக்கொண்டிருந்தது. அந்த அளவு நீரிலே காரைச் செலுத்த முடியுமென்று இன்ஸ்பெக்டர் கருதினார். வள்ளிநாயகிக்கும் அதுமுடியுமென்று தோன்றியது. அதனால் இன்ஸ்பெக்டர் காரை மெதுவாகச் செலுத்தினார் அடுத்த கரையை அடையப் பத்தடி தூரத்தான் இருந்தது. அதுவரையில் கார் யாதொரு விபத்துமில்லாமல் வந்துவிட்டது. ஆனால், அந்த இடத்திலே பாவியிருந்த கல்லொன்று வெள்ளத்தின் வேகத்தால் இடம் பெயர்ந்திருந்தது. வெள்ளம் ஒரே காவி நிறமாக இருந்ததால் இது கண்ணில் தென்படவில்லை. போலீஸ் இன்ஸ்பெக்டர் காரை மெதுவாகத்தான் செலுத்தினார். இருந்தாலும் காரின் முன்பக்கத்தில் உள்ள வலப்புறச் சக்கரம் அந்தக் கல் பெயர்ந்த இடத்திற்குள்ளே அழுந்தி மாட்டிக் கொண்டது. எவ்வளவு முயன்றும் காரை மேலே நகர்த்த முடியவில்லை. போலீஸாரும், இன்ஸ்பெக்டருமாகச் சேர்ந்து பலவகையாக முயற்சி செய்து பார்த்தனர். பயனொன்றும் ஏற்படவில்லை. வெள்ளம் ஓடிக்கொண்டிருந்ததால் சக்கரத்தை நன்றாகக் கவனித்து அதை மேலே தூக்குவதற்கு வேண்டியதைச் செய்யவும் சரியாக முடியவில்லை. சக்கரம் சேற்றில் மாட்டிக்கொண்டிருப்பதாகத்தான் அவர்களுக்குத் தோன்றிற்று.
உதவிக்கு இன்னும் சில ஆள்களை அழைத்து வருவதென்று இன்ஸ்பெக்டர் கருதினார். அதனால் அவர் ஒரு போலீஸ்காரரைப் பார்த்து, "அடுத்த கரைக்குச் சென்று, பக்கத்தில் எங்காவது ஆள்கள் இருந்தால் அழைத்து வா" என்று ஆணையிட்டார். போலீஸ்காரன் கழனிகளுக்கிடையே புகுந்து வேகமாகச் சென்றான். அந்தப் பக்கத்திலே ஊர்கள் அதிகமாயில்லை. அது பெரும்பாலும் மலைக்காட்டுப் பகுதி. போலீஸ்காரன் நெடுநேரம் சுற்றிவிட்டுக் கடைசியில் இரண்டு ஆள்களை அழைத்து வந்தான். ஒரு ஜோடி எருதும் வந்தது. வண்டியில் பாரம் போட்டுக் கட்டுவதற்கான நீண்ட வரிக்கயிறு ஒன்றையும், நுகத்தடி ஒன்றையும் அவர்கள் கொண்டுவந்தனர்.
நுகத்தடியில் எருதுகளைப் பூட்டி வரிக்கயிற்றை நுகத் தடியில் இணைத்து, காரின் முன்பகுதியில் நன்றாகக் கட்டினார்கள். வந்த ஆள்களில் ஒருவன் எருதுகளை ஒட்டினான். மற்ற ஆளும், போலீஸாரும் காரைத் தள்ளினார்கள். இன்ஸ்பெக்டர் காரைச் செலுத்தினார். அவர்களுடைய கூட்டு முயற்சியால் கார் மேலெழுந்து கரையை அடைந்துவிட்டது. ஆனால், எதிர்பாராதபடி அதிலே ஒரு பழுது ஏற்பட்டுவிட்டது. முன்சக்கரங்கள் இரண்டையும் இணைக்கும் அச்சு வலப்புறத்துச் சக்கரத்திற்குப் பக்கத்திலே வளைந்துவிட்டது.
ஆனால், நல்லவேளையாக அது முரியவில்லை. இருந்தாலும், காரை வேகமாகச் செலுத்துவதென்பது முடியாமற் போப்விட்டது. மணிக்குச் சுமார் எட்டு மைல் வேகத்தில்தான் அதைச் செலுத்த முடிந்தது. அப்படிச் செலுத்தும் போதே வலப்புறச் சக்கரம் ஆடி ஆடி வந்தது. அச்சை நேராக்க, அந்த இடத்தில் எவ்வகையிலும் முடியாது. நேர் செய்ய முயன்றால் அது ஒடிந்து போனாலும் போகலாம். அதனால் இன்ஸ்பெக்டர் தாமே எச்சரிக்கையாக ஓட்டலானார்.
இவ்வாறு எதிர்பாராத விபத்தால் அவர்கள் மாலை 3 மணிக்குத்தான் கூடல் பட்டணம் சேர முடிந்தது. இவர்கள் வருவதற்கு முன்னாலேயே தாழிவயிறனையும், மற்றொருவனையும் கைது செய்துவந்த போலீஸார் போலீஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அவர்கள் தங்கமணி முதலியவர்களைக் கண்டுபிடிக்க முடிய வில்லையென்பதைக் கேட்ட உடனேயே வள்ளிநாயகி மூர்ச்சையடைந்தாள். அவளுக்கு மயக்கம் தெளிவித்து ஆறுதல் கூறுவது, இன்ஸ்பெக்டருக்கு மிகுந்த சிரமமாகிவிட்டது. டாக்டர் ஒருவரை வரவழைத்து அவளுக்கு வேண்டிய சிகிச்சைகள் செய்தனர். இரவெல்லாம் தூக்கமில்லாமையாலும், அதுவரை உணவருந்தாமையாலும், குழந்தைகளுக்கு என்ன நேர்ந்து விட்டதோ என்ற கவலையாலும் வள்ளிவிநாயகி மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாள். போலீஸ் இன்ஸ்பெக்டர் அவளுக்குப் பல வகைகளில் ஆறுதல் கூறியதோடு அவர்கள் கவனிக்க வேண்டிய வேலைகளைப்பற்றியும் எடுத்துரைத்தார்.
"இங்கிருந்து சுமார் 8 மைல் தூரத்திலே வஞ்சியாற்றங் கரையில் உள்ள காட்டிலே தச்சுச்சுப்பட்டறையொன்று இருக்கிறதாம். அங்கேதான் குள்ளன் மரப்பொம்மைகள், செய்கிறானாம். அந்த இடத்திற்கு அவன் இன்று வந்து சேருவான் என்று தாழிவயிறனிடமிருந்து நமது ஜவான்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே நாம் போகவேண்டியது மிக முக்கியம். இந்தச் சமயத்திலே நீங்கள் தைரியத்தைக் கைவிடக்கூடாது" என்று கூறினார் போலீஸ் இன்ஸ்பெக்டர்.
"தங்கமணி, சுந்தரம், கண்ணகி இவர்கள் எறி வந்த பரிசல் என்ன ஆயிற்றோ தெரியவில்லை!" என்று கூறிக் கொண்டே அவள் கண்ணீர் வடித்தாள்.
"தங்கமணிக்கும், சுந்தரத்திற்கும் பரிசல் தள்ளத் தாழிவயிறன் கற்றுக்கொடுத்தானாம். அதனால் அவர்கள் எப்படியாவது சமாளித்துக்கொண்டு எங்காவது ஓரிடத்தில் கரை சேர்ந்திருப்பார்கள். நீங்கள் அவர்களைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாம் கரையோரமாகவே செல்ல வேண்டியிருப்பதால் அவர்களையும் கண்டு பிடித்துவிட முடியும்" என்று இன்ஸ்பெக்டர் நம்பிக்கையோடு தெரிவித்தார். இது வள்ளி நாயகிக்கு உற்சாகத்தை அளித்தது. உடனே அவள் எழுந்து புறப்படத் தயாரானாள். வள்ளிநாயகியை உடன் அழைத்துச் செல்லப் போலீஸ் இன்ஸ்பெக்டர் விரும்பவில்லையென்றாலும் தானுங் கூட வருவதாக அவள் பிடிவாதம் செய்தாள்.
"அப்படியானால் முதலில் சாப்பிடுங்கள். பாதித் தூரத்திற்குப் பிறகு நடக்கவேண்டியிருக்கும்" என்றார் இன்ஸ்பெக்டர். எல்லாரும் அதுவரை உணவருந்தவில்லையென்பதை அவள் உணர்ந்தாள். அவள் மூர்ச்சையுற்றதால் அவளுக்குச் சிகிக்சை செய்வதையே அவர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர்.
உணவு வரவழைத்து உண்டபின் எல்லாருக்கும் தெம்பு உண்டாயிற்று. போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தப் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவராதலால் வேண்டிய ஏற்பாடுகளை எளிதில் செய்தார். மேலும் ஒரு பதினைந்து போலீஸ்காரர்களைத் தம்முடன் வர ஏற்பாடு செய்தார். துப்பாக்கியும் கையுமாக அனைவரும் புறப்பட்டார்கள்.
இவ்வாறு பல இடையூறுகளுக்குப் பின் அவர்கள் புறப்பட்டாலும் அவர்கள் தக்க சமயத்திலே உதவி செய்ய முடிந்தது. முதலில் அவர்கள் தச்சுப்பட்டறையை அடைந்தார்கள். அங்கே தச்சர்கள் சிலர்தான் இருந்தனர். அவர்கள் போலீஸ்காரரைக் கண்டதும் பயந்தனர். "குள்ளன் எங்கேயிருக்கிறான்?" என்று இன்ஸ்பெக்டர் அவர்களை அதட்டிக் கேட்டார். பயத்தால் தச்சர்களுக்குப் பதில் அளிக்க முடியவில்லை. மேலும், கொல்லி மலைக் குள்ளன் என்ற பெயரையே அவர்கள் கேட்டதில்லை. அதனால் அவர்கள் பதிலேதும் அளிக்காமல் 'திருதிரு' என்று விழித்துக்கொண்டு நின்றார்கள். போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மேலும் அதட்டினார்.
கடைசியில், அவர்களுடைய எஜமானன் பதினைந்து ஆள்களோடு ஏரிக்கரையை நோக்கிப் போனதாகத் தெரியவந்தது. அந்தத் தச்சர்களை அங்கேயே இருக்கும்படி சொல்லி விட்டு, அவர்களைப் பார்த்துக்கொள்ள ஒரு போலீஸ்காரரையும் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, இன்ஸ்பெக்டர் வேகமாகப் புறப்பட்டார். மற்றவர்கள் பின்தொடர்ந்தனர். ஏரிக்கரையை அனைவரும் அடைந்தனர்.
அவர்கள் ஏரிக்கரையை அடையவும், கொல்லிமலைக் குள்ளனின் ஆள்கள் பேராசிரியர் வடிவேல் முதலியவர்களின் மேல் பாயவும் சரியாக இருந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர், "அவர்களைத் தொடாதே! தொட்டால் சுட்டுவிடுவேன்” என்று உரத்த குரலில் கர்ஜித்தார். அதே சமயத்தில் தம்முடைய கைத்துப்பாக்கியை வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டார்.
எதிர்பாராமல் போலீசார் வந்ததைக் கண்டு குள்ளனின் ஆள்கள் திகைத்து அப்படியே நின்றுவிட்டனர். அவர்களை யெல்லாம் போலீஸார் கைது செய்தனர். இனிமேல் தப்பிக்க முடியாது என்று குள்ளனுக்குத் தோன்றிவிட்டது. அதனால் அவன் போலீஸாரிடம் அகப்படுவதைவிட இறப்பதே நல்ல தென்று தனது துப்பாக்கியைச் சட்டென்று எடுத்து, தன்னையே சுட்டுக்கொள்ளப் போனான்.
அதுவரையிலும் ஜின்கா அவனையே கவனித்துக்கொண்டிருந்தது. அவன் துப்பாக்கியை எடுப்பதைப் பார்த்ததும், அதற்கு என்னவோ சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. சற்று தூரத்தில் இருந்த தங்கமணியை அவன் சுட்டுவிடுவானோ என்று நினைத்ததோ என்னவோ, அது சட்டென்று குள்ளனின் வலக் கையின் மேலே பாய்ந்து, பலமாகக் கடித்தது. குள்ளன் கையை வேகமாக உதறி ஜின்காவைத் தரையில் தள்ளினான். பிறகு, அதைத் தன் கைத்துப்பாக்கியால் சுட்டான்.
ஜின்கா வீறிட்டு அலறிக்கொண்டு தாவிப் பாய்ந்து ஓடிற்று. அதன் உடம்பெல்லாம் ஒரே ரத்த மயம்! தூரத்தில் சென்ற பிறகும் அலறல் ஓயவில்லை. குள்ளன் இரண்டாம் முறை சுடுவதற்கு முன்பே, போலீஸ் இன்ஸ்பெக்டரும், வடிவேலும் அவன் மேல் பாய்ந்துவிட்டனர். துப்பாக்கியை நீட்டியவாறு போலீஸார் இருவர் அவனை அணுகினர். இனிமேல் தான், செய்யக்கூடியது ஒன்றுமில்லை என்று குள்ளனுக்குத் தெரிந்துவிட்டது. தன்னையே சுட்டுக்கொள்ளவும் முடியாதபடி அவன் கையிலிருந்த துப்பாக்கியை போலீஸார் பிடுங்கிக் கொண்டனர். குள்ளன் கைது செய்யப்பட்டான்.
ஜின்காவிற்கு என்ன ஆயிற்றோ என்று தங்கமணி கதறிக் கொண்டு அதன் அருகில் ஓடினான். சுந்தரம். கண்ணகி, வள்ளி நாயகி முதலியோரும் ஓடினர். ஜின்காவின் மேலே படிந்திருந்த ரத்தத்தைத் துடைத்துவிட்டுத் தங்கமணி கவலையோடு பார்த்தான். மறு கணத்தில் அவன் முகம் மலர்ந்தது.
"இதெல்லாம் குள்ளனின் கையைக் கடித்ததால் பீரிட்ட ரத்தம். ஜின்காவிற்குக் காயம் இல்லை" என்று அவன் உற்சாகத்தோடு கூவினான். அப்படிக் கூவிக்கொண்டே அவன் ஜின்காவைத் தழுவினான்.
"இந்த வெற்றிக்கெல்லாம் ஜின்காதான் காரணம்" என்று தழுதழுத்த குரலில் வள்ளிநாயகி கூறினாள்.
"அத்தை, இன்னொரு குரங்கை மறந்துவிட்டீர்களே!" என்று சுந்தரம் சிரித்துக்கொண்டே சொன்னான். இதற்குள் எல்லாரும் தங்கமணியையும், ஜின்காவையும் சூழ்ந்து கொண்டனர். சுந்தரத்தின் கேலிப்பேச்சைக் கேட்டு அனை வரும் சிரித்தார்கள். கொல்லிமலைக் குள்ளன் மட்டும், "இந்தக் குரங்குகள் இத்தனை பண்ணுமென்று எதிர்பார்க்கவேயில்லை நான்," என்று முணுமுணுத்தான்.
"அம்மா! ஜின்காவுக்குப் பலகாரம் பண்ணிப் போட வேண்டும். மறந்து போகாதே. ஊருக்குப் போனதும் முதலில் உனக்கு இந்த வேலைதான்" என்று கண்ணகி உற்சாகமாகத் தான் முன்பே எடுத்துக்கொண்ட தீர்மானத்தை வெளியிட்டாள்.
"நீயும் அண்ணாக் குரங்கை மறந்துவிட்டாயா!" என்று சுந்தரம் கேட்டான்.
"கண்ணகியே செய்து கொடுத்தால்தான் நாங்கள் சாப்பிடு வோம்” என்று தன் சார்பிலும், ஜின்காவின் சார்பிலும்
தங்கமணியும் பதிலளித்தான். அவர்களுடைய பேச்சைக் கேட்டு அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
"எனக்கு ஒன்றுதான் விளங்கவில்லை- இத்தனை இரகசியமாகத் தனது ஆள்களுக்கும் தெரியாமல் திருட்டுத்தொழில் நடத்தியவன் எதற்காகத் தன் பெயரைப் பச்சை குத்திக் கொண்டான்?" என்று தங்கமணி ஆழ்ந்த யோசனையோடு தன் தந்தையைக் கேட்டான்.
"அதைச் சுலபமாக மற்றவருக்குத் தெரியாமலிருக்கும்படி செய்துவிடலாம் என்று அவன் நினைத்திருப்பான். ஜிப்பாவைப் போட்டாலே மறைந்துவிடுகிறதே" என்றார் வடிவேல்.
"இருந்தாலும் அவன் செய்கை எனக்குப் புதிராகவே தோன்றுகிறது."
"ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறைபாடு இருக்கும். பச்சை குத்திக்கொள்வதிலே அவனுக்கு ஆசை. அதுவே அவன் செய்த தவறு. இப்படித்தான் எதாவது ஒரு வகையில் குற்றம் புரிகிறவர்கள் மாட்டிக்கொள்வார்கள்" என்று மேலும் என்னவோ விளக்கம் கொடுக்கத் தொடங்கினார் வடிவேல்.
ஆனால் சுந்தரம் அதற்கு விடவில்லை. "மாமா, நீங்கள் துப்பறியும் கதைகள்தான் படிக்கிறீர்கள். தங்கமணியோ துப்பறியும் சாம்புவே ஆகிவிட்டான். அவன் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல முடியாது. பேசாமல் துப்பறியும் உத்தியோகத்திற்கு அவனை அனுப்பிவிடுங்கள். இந்தக் குரங்கும் அவனோடு போகட்டும்" என்றான் சுந்தரம்.
"அப்பா, சுந்தரத்தை சர்க்கசில் பபூன் வேடத்திற்கு அனுப்பலாம்" என்றாள் கண்ணகி.
அனைவரும் 'கொல்’ என்று சிரித்தார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக