எனது நண்பர்கள்
கட்டுரைகள்
Back
எனது நண்பர்கள்
கி. ஆ. பெ. விசுவநாதம்
முன்பதிப்பு : 1984
இரண்டாம் பதிப்பு : 1989
மூன்றாம் பதிப்பு : 1999
பதிப்பு : உரிமையுடையது
விலை: ரூ. 30-00
* * *
அச்சிட்டோர் : ஜீவோதயம் அச்சகம், சென்னை–5
பதிப்புரை
முத்தமிழ்க் காவலர் டாக்டர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள், தம்முடைய சில நண்பர்களை இந்நூலில் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்கள்.
‘பெரியோர் சிறப்புகளைப் பெரியோர்தான் அறியமுடியும்’ என்பது எவ்வளவு பொருள் பொதிந்த வாக்கு என்பதனை, இந்த நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் நமக்கு உணர்த்துகின்றது.
இத்தகைய பெரியோர்கள் வாழ்ந்த பெருமை நம் தமிழ் மண்ணுக்கு உரியது என்ற பெருமித உணர்வு; நமக்கும், வருங்கால மக்களுக்கும் ஒளியேற்றும்.
இந்நூலை வெளியிட இசைவு தந்த முத்தமிழ்க்காவலர் அவர்கட்கு எங்கள் நன்றி உரியதாகும். தமிழ்மக்கள் விரும்பிக் கற்றுப் பயன் காண்பார்கள் என்று நம்புகின்றோம்.
—பாரி நிலையத்தார்
பொருளடக்கம்
மறைமலையடிகள்
தமிழ்த்தென்றல்
நான் கண்ட வ.உ.சி
கா. சுப்பிரமணியப்பிள்ளை
சோ. சு. பாரதியார்
பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார்
கோவைப் பெருமகன் சி. கே. எஸ்
தமிழவேள் த.வே.உமாமகேசுரம் பிள்ளை
பண்டிதமணி மு. கதிரேசஞ் செட்டியார்
புரட்சிக் கவிஞர்
மூன்று தலைவர்கள்
நான்கு தலைவர்கள்
டபிள்யூ. பி. ஏ. செளந்திர பாண்டியன்
திரு. ஓ. பி. இராமசாமி செட்டியார்
டாக்டர் சர். ஏ. இராமசாமி முதலியார்
சர். ஏ. டி. பன்னீர்ச் செல்வம்
தலைவர் காமராஜர்
ஒப்பற்ற தலைவர் செல்வா!
நல்ல தமிழன் பேச்சுடன் கண்டேன்
வழக்கறிஞர் வன்னிய சிங்கம்
அரசரும் நானும்
கலைத்தந்தை
தொழிலதிபர் வி. சேஷசாயி
பிற நூல்கள்
...
முன்னுரை
இந்நூலிற் காணப்பெறுகின்ற பெருமக்களிற் சிலர்தான் என் நண்பர்கள். சிலர் என் ஆசிரியர்களும், சிலர் என் அரசியற் தலைவர்களும் ஆவர். என்றாலும், அவர்களில் எவரும் என்னை மாணவனாகவோ, தொண்டனாகவோ கருதாமல் நண்பனாகவே கருதிப் பழகி வந்தவர்கள்.
இவர்களில் எவருடைய வரலாற்றையும் நான் முழுமையாக எழுதிவிடவில்லை, எழுதவும் என்னால் இயலாது. அவர்கள் என்னுடன் பழகிய—தொடர்பு கொண்ட நிகழ்ச்சிகளிற் சிலவே இதில், இடம் பெற்றுள்ளன.
என் வரலாறு ஒன்றை நானே எழுதி வெளியிட வேண்டுமெனச் சிலர் விரும்பினர். நான் விரும்பவில்லை. காரணம் மேலைநாடுகளில் ஒருவருடைய வரலாறு ஒரு நாட்டின் வரலாற்று நூலாகவும், தமிழகத்தில் அது தற்புகழ்ச்சி நூலாகவும் கருதப்படுவதினாலேயாம். என்றாலும், அவர்களுக்கும் இந்நூல் சிறிது ஆறுதல் அளிப்பதாக இருக்கும்.
நாவலர் ந.மு.வே. நாட்டாரய்யா, பெரியார் ஈ. வே. ரா., மதுரை சர். பி.டி. இராஜன் ஆகிய மூவரின் வரலாற்றுச் செய்திகளையும் தனி நூலாக வெளியிட எண்ணியுள்ளேன். அதற்கு ஏற்ற சூழ்நிலையும் ஓய்வும் கிடைக்க இறைவன் துணை புரிய வேண்டும்.
என் வாழ்நாளில் இப்பேரறிஞர்களோடு பழகிய பேற்றை ஒரு பெரும்பேறாகவே கருதி மகிழ்கிறேன். அவர்களின் பண்பும், பழக்க வழக்கங்களும் வழி காட்டுதலும், அறிவுரைகளும் எனக்குப் பயன்பட்டன. அவைகளை நான் நன்கு பயன்படுத்திக் கொண்டேன். உங்களுக்கும் பயன்படுமா? என்று பாருங்கள். பயன்படுத்திக் கொண்டால் மகிழ்வேன்.
என் நூல்கள் அனைத்தையும் அச்சிட்டு வழங்கியதுபோலவே இந்நூலையும் அச்சிட்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கிய சென்னை பாரிநிலையத்தாருக்கும், ஜீவோதயம் அச்சகத்தாருக்கும், மதிப்புரை வழங்கிப் பாராட்டியுள்ள சென்னை உயர்நீதிமன்ற நடுவர் உயர் திரு. பு. ரா. கோகுலகிருஷ்ணன் எம்.ஏ.பி.எல்., அவர்கட்கும் என் நன்றியறிதலையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
திருச்சிராப்பள்ளி–8 தங்களன்பிற்குரிய,
27–3–84 கி. ஆ. பெ. விசுவநாதம்
மாண்புமிகு உயர்நீதி மன்ற
நீதிபதி பு. ரா. கோகுலகிருஷ்ணன் அவர்கள்
முன்னுரை
கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களுடைய “எனது நண்பர்கள்” புத்தகத்தைப் படித்துப் பார்த்தேன். கி.ஆ.பெ. அவர்களுக்கு போற்றுதற்குரிய நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். அதிர்ஷ்டசாலி. அவரைவிட நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். காரணம், நாவன்மையும், நாணயமும், எழுத்தாற்றலும், இன்பத் தமிழ்பால் மாறாத காதலும், அன்பும், பண்பும் நிலைத்த கி.ஆ.பெ. அவர்கள் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம்; அவருடைய ஆசிபெற்று வாழ்கிறோம். பல நுணுக்கமான விஷயங்கள், பெரியவர்களுடைய எண்ண அலைகள், கி. ஆ. பெ. அவர்களுடைய விளக்கங்கள் , ஆகியவைகளை எனது நண்பர்கள்’ புத்தகத்திலே நிரம்பப் பார்க்கிறேன்.
“பார்வதியின் உடம்பில் அழுக்கு இருக்குமா? இருந்தாலும் ஒரு பிள்ளையார் பிடிக்கும் அளவுக்கு இருக்குமா? இதைச் சிந்திக்கவேண்டாமா? இதை நம்பித்தான் ஆக வேண்டுமா? நம்பினால்தான் சைவனா?” என வினாக்களை அடுக்கிக்கொண்டே வந்து, “என் தாய் அழுக்கற்றவள், என் தாய் அழுக்கற்றவள்” எனச் சொல்லியவர் மறைமலை அடிகள். அவரைச் சைவர் அல்லர் என்று யாரும் சொல்ல முடியாது. இறையருள் பெற்றவரும், இறைவழிபாட்டில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவரும் ஆவார் மறைமலை அடிகள். அவர் மறைந்ததும், கி.ஆ.பெ. அவர்கள் நெக்குருகிப் பாடிய பாவைப் பாருங்கள்:
“மலையே! மறையே! மறைமலையே! சாய்ந்தனையோ!” அவர் உடல் எரிவதைப் பார்த்து,
“பெரியாரைப் போற்றும் பெருங்குணத்தை இழந்துவிட்டு
சிறியாரைப் போற்றிச் சீரழியும் தமிழ் மண்ணில்
.................
தமிழ் வாழ்வு வாழாமல் தமிழ் எரித்து வாழ்கின்றோம்”
கி ஆ.பெ. அவர்கள், திரு.வி.க.வினுடைய நன் மதிப்பை எவ்வளவு பெற்றிருக்கிறார் என்பதை திரு.வி.க. அவர்கள் தன்னுடைய அந்திமகாலத்தில், கி.ஆ.பெ. அவர்களைப் பார்த்து,
“நாடு இருக்கிறது...மொழி இருக்கிறது...மக்கள் இருக்கிறார்கள்...நீங்களும் இருக்கிறீர்கள்...பார்த்துக் கொள்ளுங்கள்”
என்று சொன்னதிலிருந்து, நன்கு புலப்படுகின்றது.
நம்மிலே பலருக்குத் தெரியாது. திருவள்ளுவர் திருநாள் என்று இப்போது நாம் கொண்டாடி வருகின்றோமே பொங்கல் நிகழ்ச்சிகளை ஒட்டி, இதைத் துவக்கி வைத்தவர் யாரென்று. பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் இதை ஆரம்பித்து வைத்தார் என்பதை அழகுற எழுதியிருக்கின்றார் கி.ஆ.பெ. அவர்கள். பேராசிரியர் நமச்சிவாய முதலியார், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் எவ்வளவு பெரிய பகுத்தறிவுத் தத்துவத்தை இனிமையாகத் தமிழிலே சொல்லிச் சென்றார்கள் என்பதை கி. ஆ. பெ., அவர்கள் எடுத்துத் தந்திருக்கின்றார்கள். பேராசிரியர் நமச்சிவாயர் முதலியார் அவர்கள் அந்தச் சொற்பொழிவில்,
“தமிழுக்குத் தெய்வத் தன்மை கற்பித்துப் பலர் சிறப்புக் கூறுகின்றனர். என் உள்ளம் அதை ஒப்புவதில்லை . தமிழுக்கு அதன் சொந்தத் தன்மையினாலேயே பல சிறப்புகள் உள்ளன.”
எனக் கூறியிருக்கின்றார்கள்.
இந்தக் காலத்தில் நம்மைப் பார்க்க யாராவது வருகின்றார்கள் என்றால் ஏதோ காரணத்திற்காக வருகின்றார்கள் என்பது தான் பெரும்பாலும் ஏற்படுகின்ற நிகழ்ச்சி, பண்டிதமணி மு. கதிரேசஞ் செட்டியார் அவர்கள், கி.ஆ.பெ, அவர்களைத் தமிழுக்காகப் பார்த்தார்; தனக்காகப் பார்க்கவில்லை. கி. ஆ. பெ. அவர்கள் இல்லத்திற்குச் சென்ற பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்களை. கி.ஆ.பெ. வந்த காரணமென்ன என்று கேட்டபோது, தங்களைப் பார்க்க வந்தேனே தவிர, வேறு காரியம் எதுவுமில்லை என்று சொல்லிச் சென்றாராம். இப்படி அன்பொழுகும், தமிழார்வம் ஒழுகும் கதிரேசஞ் செட்டியார் தன் இல்லத்திற்கு வந்ததை கி.ஆ.பெ. அவர்கள்,
“என் வாழ் நாட்களில் பெரும்பேறு பெற்று மகிழ்ச்சியடைந்த நாட்கள் சில, அவற்றில் பண்டிதமணி அவர்கள் ஒரு வேலையுமின்றி ஏன் இல்லத்திற்கு வந்த நாளும் ஒன்று”
என்று கூறியுள்ளார்.
தன்னுடைய நண்பர் டபிள்யு. பி.ஏ. செளந்திர பாண்டியன் நாடார் பற்றி எழுதுகின்றபோது, ஒரு மாபெரும் தத்துவத்தை நாடார் அவர்கள் சொல்லியதாக எளிமையாக விளக்கி இருக்கின்றார் கி.ஆ.பெ. அவர்கள். பொய் பேசுவதனை நாடார் அவர்கள் ஒருபோதும் மன்னித்ததே கிடையாது. இதற்குக் காரணம் கேட்ட போது,
“ஒருவனுக்குக் குடியும், சூதாடுதலும், நெறி தவறுதலும், திருட்டும் சந்தர்ப்பத்தாலும், சூழ்நிலையாலும் நேரிடுவன. பொய்’ பேசுவது ஒன்று மட்டும் ஒருவனுடைய அயோக்யத்தனத்தினாலேயே நேரிடுவது என்றும், அதனால் அதைத் தன்னால் சகிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்”
என்று குறிப்பிட்டுள்ளார் கி.ஆ.பெ. அவர்கள். தாய்ச்சொல்லிற்காக திராட்சைரசத் தொழிற்சாலை அமைப்பதையே விட்டுவிட்டவர் நாடார் அவர்கள். இந்த நிகழ்ச்சியை அறிந்த கி.ஆ.பெ. அவர்கள் தன்னுடைய புத்தகத்தில்,
“ஒரு வீரமகனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அவனது தாயின் சொல்லுக்கே உண்டு என்ற கருத்தை மனோகரன்’ நாடகத்தில் மட்டுமல்ல, பட்டிவீரன்பட்டியிலும் உண்டு என அறிய முடிந்தது” என விளக்கியுள்ளார்.
“சர்.ஏ.டி. பன்னிர்ச் செல்வம் அவர்களை உப்புக் கடல் ஒன்று விழுங்கிவிட்டதை அறிந்து உலகம் கண்ணிர் உகுத்தது. யார் யாருக்கு அனுதாபம் கூறுவது? மெல்ல நகர்ந்து செல்லும்
காலம்தான் நம் அனைவருக்கும் நல்லாறுதல் கூறமுடியும்”
என்று கசிந்துருகி எழுதியிருக்கின்றார், கி.ஆ.பெ.
பேரறிஞர் அண்ணாவினைத் தன் நண்பராகப் பெற்றவர் இந்நூலாசிரியர். அண்ணாவினுடைய ஆற்றலில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தவர்
“இன்னும் இரண்டாண்டுகள் இருந்திருந்தால் உலகத் தலைவர்களில் ஒருவராக விளங்கியிருப்பார். என் செய்வது? தமிழும், தமிழகமும் பெற்ற பேறு அவ்வளவுதான்”
என வெதும்பி எழுதியிருக்கிறார் கி. ஆ. பெ. அவர்கள்.
தமிழிசைக்குப் பெருமை சேர்த்த ராஜா சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் கி.ஆ.பெ. வினுடைய உள்ளத்தைக் கவர்ந்த நண்பர்களில் ஒருவர். தந்தையும், தனயனும், தமிழுக்கும், தமிழிசைக்கும் ஆற்றிவந்த, வருகின்ற தொண்டினைப் பாராட்டி இந்நூலாசிரியர், தமிழிசை இயக்கத்திற்கு சென்னையில் ராஜா. சர். அண்ணாமலை செட்டியார் தமிழிசை மன்றம் நிறுவினார்; மதுரை நகரில் தமிழிசை மன்றம் கட்டி மகிழ்பவர் ராஜா. சர். முத்தையா செட்டியார் அவர்கள் எனக் கூறியுள்ளார். இச்செயல்கள் கி.ஆ.பெ. அவர்களுக்கு சோழப் பரம்பரையின் சாதனையை நினைவூட்டி இருக்கின்றது. இவ்வாறு கட்டப்பட்ட தமிழிசைச் சங்கங்கள், ராஜராஜ சோழனால் தஞ்சையில் கட்டப்பட்ட பெருங்கோயிலைப் போன்றும், ராஜேந்திர சோழனால் கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டப் பெற்ற பெருங்கோயிலைப் போன்றும் அமைந்திருக்கிறதென்று எழுதியிருக்கின்றார்கள்.
இடமஞ்சி, பல அருமையான விளக்கங்களை, நிகழ்ச்சிகளை என்னால் இந்த முன்னுரையில் எடுத்துக் கூற இயலவில்லை. உன்னுடைய நண்பர்களைச் சொல், பிறகு நான் உன்னை மதிப்பிடுகிறேன்’ என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.
கி.ஆ.பெ. அவர்களுடைய நண்பர்களை இப்புத்தகத்தில் படித்தபிறகு, இந் நூலாசிரியர் எவ்வளவு பெரியபாரம்பரியத்திற்குச் சொந்தக்காரர் என்பது விளங்குகின்றது. சரித்திரப் புகழ்பெற்று, நம் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் தமிழகப் பெரியவர்கள் பலர், கி.ஆ.பெ. அவர்களுடைய நண்பர்கள். இப்பெரியவர்கள் வளர்த்த நட்பு எனும் அந்தப் பண்பை இக்காலத்தில் பலர் நன்றாகப் படித்துணர வேண்டும். உதட்டளவு பேசி, உதவாத, விஷயங்களுக்காக வாதிட்டு,நெஞ்சில் வஞ்சத்தை ஏந்திச் செல்லும், இனங் கண்டு கொள்ள முடியாத மனிதர்கள் உலவும் இவ்வேளைகளில், உற்ற நண்பர்கள் யார், எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள், கருத்து. வேறுபாடு இருப்பினும், காழ்ப்புணர்ச்சியற்று எப்படி அன்பு செலுத்தினார்கள் என்பன போன்ற உயரிய, பண்புகள் இப்புத்தகத்தில் நிரம்ப அடங்கியுள்ளன.
இதைப் படிப்போர் பயனுறுவார்கள். படித்து, பலருக்கு எடுத்து விளக்கினால், சமுதாயம் பயனுறும். இத்தகைய சீரிய நூலை எழுதிய முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. அவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன். வணங்குகிறேன்.
அன்புள்ள,
பு. ரா. கோகுலகிருஷ்ணன்
சென்னை,
1–1–84
மறைமலையடிகள்
சுவாமி வேதாசலம் என்கிற பல்லாவரம் உயர்திரு
மறைமலையடிகள் தமிழ்த்தாயின் தவமகன்.
பிறப்பு : 1876இல்
பிறந்த நாள் : ஜூலை 15
பிறந்த ஊர் : காடம்பாடி
வட்டம் : நாகப்பட்டினம்
தந்தையார் பெயர் : சொக்கநாதப்பிள்ளை
இளமைப் பெயர் : வேதாசலம்
படித்த கல்லூரி : நாகை வெஸ்லி மிஷன்”
சைவ ஆசிரியர் : சோமசுந்தர நாயக்கர்
முதல் தோற்றம் : இந்து மதாபிமான சங்கம்
திருமணம் : 17ஆம் ஆண்டில்
படிப்பு முடிவு : 1894இல்
நட்பு : பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
தமிழாசிரியர் வேலை : சென்னை கிறிஸ்துவக் கல்லூரி
ஆசிரியராக அமர்ந்தது : 1898இல்
ஞானசாகரம் தொடங்கியது : 1902இல்
சைவ சித்தாந்த சமாஜம்
தொடங்கியது : 1905இல்
கல்லூரியை விட்டது : 1911இல்
அப்போது : ஆண்மக்கள்
நால்வர்; பெண் மக்கள்
மூவர்
துறவு பூண்டது : 1911 ஆகஸ்ட்
பல்லாவரம் குடியேறியது : 1916இல்
பொதுநிலைக்கழகம்
தோற்றியது : 1917இல்
யாழ்ப்பாணம் சென்றது : 1921இல்
திருவாசகவுரை
வெளிவந்தது : 1926இல்
மாணிக்கவாசகர் வரலாறும்
காலமும் வெளிவந்தது : 1929இல்
புலமை : ஆங்கிலம், தமிழ்,
வடமொழி
பயிற்சி : மூச்சுப்பயிற்சி,
அறிதுயில் பயிற்சி
(யோகாப்பியாசம், இப்னாடிசம்)
கொள்கை : தமிழே சிவம்
தொண்டு : 60 ஆண்டுகள்
எழுதிய நூல்கள் : 50க்குமேற்பட்டன
இவை, அவரது வரலாற்றை அறிவிக்கப் போதுமானவை,
அவரது நூல்களிற் பல தமிழ்ப்பற்றையும் சமயப்பற்றையும் வளர்க்கக்கூடியவை. சில ஆராய்ச்சி அறிவை வளர்க்கக் கூடியவை. அவரது ஆழ்ந்த, அகன்ற நுண்ணறிவைப் பல நூல்களிலும் கண்டு மகிழலாம். அவற்றுள் சில அவரது அச்சகத்திலேயே அச்சிடப் பெற்றவை. சிலரது நூல்களிற் காணப்படுவது போன்ற அச்சுப்பிழைகள் எதையும் அவரது நூல்களிற் காணமுடியாது.
அவர் தலைமை வகிக்காத, சொற்பொழிவு நிகழ்த்தாத, தமிழ்க் கழகங்களோ, சைவ சபைகளோ தமிழகத்தில் ஒன்றுகூட இல்லை. 1614–இல் வடநாடுகளுக்கும், 1915 இல் இலங்கைக்கும் சென்று சமயச் சொற்பொழிவுகளும் தமிழ்ச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தி வந்தார்.
அவரது பேச்சும் எழுத்தும் இந்தியாவிலும் இலங்கையிலும் பல புலவர்களை உண்டு பண்ணியிருக்கின்றன. இதனால், அவர் புலவர்க்குப் புலவராக விளங்கி வந்திருக்கிறார்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, வடமொழியும் தமிழும் கலந்து பேசுகிற, எழுதுகிற மணிப்பிரவாள நடையே இருந்து வந்தது. அதை மாற்ற, தூய்மைப்படுத்த, அவர் எடுத்துக் கொண்ட முயற்சி, உழைத்த உழைப்பு முதலியவை எவராலும் செய்ய முடியாதவை. தமிழ் மொழியில் ஒரு தனித் தமிழ் நடையைப் புகுத்தித், தன் காலத்திலேயே வெற்றி கண்ட ஒரு பேரறிஞர். இதனாலேயே தமிழ் அறிஞர்கள் பலர் அவரைத் ‘தனித் தமிழின் தந்தை’ எனக் கடறுவதுண்டு.
எனக்கு அவரது நட்பு ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்தது. அதாவது 1921 இலேயே கிடைத்தது. திரிசிரபுரம் சைவ சிந்தாந்த சபையின் துணையமைச்சராய் நான் பணி புரிந்தபோது நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. அவரோடு சில மணித்துளிகள் பேசிவரும் பொழுதெல்லாம் ஒரு பெரிய நூலைப் படித்து முடித்த அளவுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
திரிசிரபுரம் சைவ சித்தாந்த சபையில் ஆண்டு விழாவொன்றை மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் நடத்தினேன். அதற்கு அவரைத் தலைமை வகிக்க அழைக்கப் பல்லாவரத்திற்குச் சென்றிருந்தேன். அவர், அச்சடித்து வைத்திருந்த பட்டியலொன்றை என்முன் நீட்டினார். அதைக் கண்டு பயந்து போனேன். அதில், அவர் தங்குமிடம் எப்படியிருக்க வேண்டும் என்பதும், படுக்கும் அறையில் இருக்க வேண்டிய பொருள்களும், காண வருவாரிடத்து இருக்க வேண்டிய பொருள்களும், இறை வழிபாட்டு அறையில் இருக்க வேண்டிய பொருள்களும், சமையலறையில் இருக்க வேண்டிய பொருள்களும் குறிக்கப் பெற்றிருந்தன. அவற்றுள்ளும் தண்ணீர் கலவாத ஆவின்பால் காலையில் காற்படி, மாலையில் அரைப்படி. நாலரை அங்குல சுற்றளவுள்ள எலுமிச்சம் பழம் நாள்தோறும் ஏழு. இரண்டடி நீளத்திற்கு மேற்படாத காய்ந்த வேம்பின் விறகு பன்னிரண்டு. முனை முறியாத பச்சரிசி, புளிப்பில்லாத தயிர், பச்சை மங்காத காய், அப்பொழுதே பிடுங்கிய கீரை என இவ்வாறு எழுதப்பெற்றிருந்ததோடு, இருக்கும் பலகையின் நீளமும், அகலமும், உயரமும், பூசைப் பொருள்களின் எண்ணிக்கையும், அவற்றின் அளவுகளும், கீழே விரிக்கும் விரிப்புக்களின் எண்ணிக்கையும், அகலமும், நீளமும் குறிக்கப்பெற்றிருந்தன.
இளமை முறுக்கினால் எதையும் செய்து முடித்துப் பழகிய பழக்கத்தினால் இவையனைத்தையும் தவறாது வழங்குவதாக வாக்களித்துவிட்டு, ‘வழிச் செலவுகளுக்கும் சேர்த்து இருநூறு வெண்பொற்காசுகள் கேட்கிறீர்களே? இவ்விதமானால் தங்களை அழைத்துத் தமிழ்த் தொண்டும் சைவத்தொண்டும் செய்ய என்னைப் போன்று எத்தனை பேர் முன் வருவார்கள்?’ என்று வருந்திக் கேட்டேன்.
அதற்கு அவர் “தாதை” என்று கூத்தாடுகிறவர்களிடம் இக்கேள்வியைக் கேட்பதில்லை. நான்கைந்து பாடல்களைப் பாடம் பண்ணி வைத்துப் பாடுகிறவர்களிடம் இக்கேள்வியைக் கேட்பதில்லை. அவர்களுக்கெல்லாம் ஆயிரக்கணக்கில் அள்ளிக் கொடுக்கின்ற தமிழகம் தமிழ்ப் புலவர்களிடத்தில் மட்டுமே இக்கேள்வியைக் கேட்கிறதே. இது ஏன் தமிழைப் படித்தீர்கள்? என்று கேட்பதுபோல் இருக்கிறது’ என்றார்.
அதையும் வழங்குவதாக ஒப்புக்கொண்டு வந்து, அவர் குறித்த அத்தனை பொருள்களையும், அகலம், நீளம், உயரம், அளவு, எண்ணிக்கை, எடை தவறாமல் வாங்கி வைத்து விட்டேன். இதற்கு எனக்கு ஆறு நாட்கள் பிடித்தன. அவர் இரண்டு நாள் தங்குவதற்காகக் கேட்டிருந்த அமைப்பில் திருச்சிராப்பள்ளியிலேயே விடுகள் இல்லை. இருந்த இரண்டொரு வீடுகளும் காலியாக இல்லை. அளவு கடந்த முயற்சி எடுத்து அதையும் கண்டு பிடித்து வழங்கி, ஒரு பெரிய போரில் வெற்றி பெற்றதைப் போன்று மகிழ்ந்தேன்.
குறித்த நாளில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் சைவ சித்தாந்த சபையின் ஆண்டு விழாத் தொடங்குகின்ற நேரம். எல்லோரும் வந்துவிட்டார்கள். 9–15 ஆகியும் தலைவர் வரவில்லை. கூட்டத்தில் ஒரு பெரிய சலசலப்பு. எல்லோர் கையிலும் துண்டு அறிக்கைகள். அதில் மறைமலையடிகள் ஒரு சைவரா: என்ற தலைப்பில் சில கேள்விகள் அச்சிடப் பெற்றிருந்தன. இது வந்திருந்தோர் உள்ளத்தில் ஒரு குழப்பத்தையும், தலைவர் உள்ளத்தில் ஒரு வருத்தத்தையும் உண்டாக்கிவிட்டது. தலைவர் வராமைக்குக் காரணம் அது தான் என அறிந்தேன். துண்டு அறிக்கையை வழங்கியவர் உறையூர் புலவர் பெரியசாமிப்பிள்ளை எனத் தெரியவந்தது. அவருக்கு ‘உறந்தைப் பெருந்தேவனார்’ என்ற பெயரும் உண்டு. சைவ மடங்கள் பலவற்றில் அவருக்குச் செல்வாக்குண்டு.
உடனே தலைவரிடஞ் சென்று கூட்டத்திற்கு வந்து தலைமை வகித்து விழாவை நடத்திக் கொடுக்க வேண்டுமென்று அழைத்தேன். அவர் “உறந்தைப் பெருந்தேவனாரை உங்களுக்குத் தெரியுமா? அவர் இங்கு வந்து துண்டறிக்கையை வெளியிட்டுக் குழப்பத்தை விளைவிக்கிறாரே? இது நல்லதா?’’ எனக் கேட்டார். கூட்டத்தில் எதுவும் நடவாது. நீங்கள் தாராளமாக வந்து பேசலாமென வாக்குறுதி அளித்தேன். அடிகளாரும் வநதாாகள்.
கடட்டம் தொடங்குமுன், “இந்த அறிக்கை என்னுடைய அனுமதியின்றி இங்கு வழங்கப் பெற்றிருக்கிறது. இதை வழங்கியவர் யாராயிருந்தாலும் மண்டபத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும்” எனக் கடுமையான கட்டளையிட்டேன். அவரும் தன் தவறை உணர்ந்து அமைதியாக இருந்துவிட்டார். இரண்டு நாட்களும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நான் சைவ சித்தாந்த சபையில் துணையமைச்சராய் இருக்குங் காலத்தில் சமயக் கூட்டம் நடத்தினால், என்னையும் தலைவரையும் தவிர ஏழெட்டுப்பேர் வந்திருப்பார்கள். நாட்டாரய்யா தலைமை வகிக்கும் கூட்டங்களில் இருபது பேருக்குள் வருவார்கள், சுண்டல் கடலை வழங்கும் கூட்டமாய் இருந்தால்தான் முப்பது, முப்பத்தைந்து பேர் வருவார்கள். அப்படியிருக்க மறை மலையடிகள் தலைமை வகித்த இந்த ஆண்டு விழாவிற்கு நானூறுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அடிகளார் தம் இனிய குரலில் தூய தமிழில் நிகழ்த்திய அந்தத் தலைமைச் சொற்பொழிவு அனைவர் உள்ளத்தையும் மகிழ்வித்தது. இத்தகைய சொற்பொழிவை எவரும் நிகழ்த்த முடியாது என்று அங்குக்கடடியிருந்த சைவப்பற்றும் தமிழ்ப்பற்றும் கொண்ட நல்லறிஞர்கள் பலர் சொல்லியது என் காதில் விழுந்தது. மகிழ்ந்தேன்.
அடிகளார் தம்முடிவுரையில் நான் சைவ சமயியா?” என்று சைவ சமயிகளே ஐயப்படுவது என் மனத்தைப் புண்படுத்துகிறது. பார்வதி குளிக்கச் செல்லும் பொழுது தன் அழுக்கைத் திரட்டி ஒரு பிள்ளையாரைப் பிடித்து வைத்து, யாரையும் உள்ளேவிட வேண்டாமென்று குளிக்கச் சென்றார். பரமசிவம் வந்தார். அவரை உள்ளே போகவேண்டாமென்று பிள்ளையார் தடுத்தார். அவர் மீறி அவர் தலையைக் கொய்துவிட்டு உள்ளே சென்றார். பார்வதி தேவி ‘நான் குளிக்கும் செய்தியைப் பிள்ளையார் சொல்லவில்லையா?” என்று பரமசிவத்திடம் கேட்டார். பரமசிவம் நடந்ததைச் சொல்லி நம்முடைய பிள்ளையா அது? என்று கேட்டார். பார்வதி கலங்கி அழுதார். பரமசிவம் வெளியே சென்று ஓர் இறந்துகிடந்த யானையின் தலையைக் கொண்டு வந்து பிள்ளையார் உடம்போடு இணைத்து உயிர்ப்பித்தார்’ என்று பிள்ளையார் பிறந்த வரலாறு சிவபுராணத்தில் ஒரு வகையாகவும், கந்தபுராணத்தில் ஒரு வகையாகவும், விநாயகர் புராணத்தில் ஒரு வகையாகவும் கூறப்பெற்றிருக்கிறது. இதுபற்றி நான் ஆராயத் தொடங்கினேன். பார்வதி அழுக்கைத் திரட்டிப் பிள்ளையார் பிடித்து வைத்த கதையை என்னால் நம்ப முடியவில்லை.”
“பார்வதியின் உடம்பில் அழுக்கு இருக்குமா? இருந்தாலும் ஒரு பிள்ளையார் பிடிக்கும் அளவுக்கு இருக்குமா? இதைச் சிந்திக்க வேண்டாமா? இதை நம்பித்தான் ஆக வேண்டுமா? நம்பினால்தான் சைவனா?” என வினாக்களை அடுக்கிக் கொண்டே வந்து, “என் தாய் அழுக்கற்றவள். என் தாய் அழுக்கற்றவள்” என இருமுறை கூறினார். அப்பொழுதுதான் எனக்குத் துண்டறிக்கையில் வந்த கேள்விக்குப் பொருள் விளங்கிற்று.
இதிலிருந்து அடிகளார் சைவ சமயத்திலும் ஒரு சீர்திருத்தக் கொள்கை உடையவர் என்பதையும். தன் உள்ளத்திற் பட்டதை ஒளிக்காது கூறுகிறவர் என்பதையும் நன்கறியலாம்.
45 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த ஜன சபையில் மறைமலையடிகளார் பேசுகின்றபொழுது கடவுள் நம்பிக்கை வரவரக் குறைந்து வருகிறது. கடவுள் இல்லை என்பவரும் உயிரோடுதான் இருந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்'’ என்று கூறினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிதம்பரம் என். தண்டபாணிப் பிள்ளையும், ஐே. எஸ். கண்ணப்பரும் பெரியாரைக் கொலை செய்யச் சொல்லி மறைமலையடிகள் மக்களைத் தூண்டுகிறார்'’ எனக் கோர்ட்டில் ஒரு வழக்கைப் போட்டுவிட்டார்கள். நான் அதுசமயம் பெரியாரோடு சேர்ந்து இருந்து, சீர்திருத்த இயக்கப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததனால், அடிக்கடி ஈரோடு செல்ல நேரிடுவதுண்டு. அப்பொழுது இந்தப் பேச்சைப் பற்றியும், மறைமலையடிகளின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் தாக்கி இரண்டு கட்டுரைகள் பெரியாரால் எழுதப்பெற்று அச்சும் கோர்த்துப் பிழைதிருத்தத்திற்காக என்னிடம் வந்தன. செய்திகள் என் உள்ளத்தை வருத்தின. அந்தக் கட்டுரைகளை இப்பொழுது வெளியிட வேண்டாம். அடுத்த வாரம் வெளியிடலாம். அதற்குள் நான் சென்னை போய் வந்துவிடுகிறேன்’ என்று பெரியார் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.
நான் சென்னைக்குச் சென்றதும் திரு. வி. க. அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர் என்னைக் கண்டதும் ‘இப்பொழுதுதான் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். உங்களுக்கு வயது நூறு, விடுதலை திராவிடர்கள் பத்திரிகையில் செய்திகளைப் பார்த்திர்களா? நீங்கள் மறைமலையடிகள் கட்சியா? பெரியார் கட்சியா? இருவரையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா? அல்லது நீங்கள் தலையிட்டுச் சமரசப்படுத்தப் போகிறீர்களா?'’ என்று கேட்டார். ‘'உங்களைப்பல்லாவரத்திற்கு (அடிகளாரிடம்) அழைத்துப் போகவந்தேன்’ என்றேன். இதைக் கேட்டதும், திரு.வி.க. அவர்கள், இதைவிட எனக்கு மகிழ்ச்சி தரும் வேலை வேறு இல்லை’’ என்று புறப்பட்டார்கள். இருவரும் பல்லாவரத்திற்குச் சென்று மறைமலையடிகளைக் கண்டோம். எங்களைக் கண்டதும் அடிகளார் ஏதோ துன்பத்திலிருந்து மீண்டவர்போலத் துள்ளி எழுந்து வந்து வரவேற்றார்கள். ‘‘அன்று பேசியது என்ன?’’ என்று வினவினேன். அவர் விளக்கிக் கூறி, ‘அதற்கு இப்படியொரு பொருளைக் கற்பித்து என்மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்களே’ என்று வருந்தினார்கள். உடனே திரு.வி.க. ‘‘அதற்காகவே என்னை கி.ஆ.பெ இங்கு அழைத்து வந்திருக்கிறார்’’ என்றார். அடிகளார் நான் என்ன செய்ய வேண்டுமென்றார் இந்தப் பொருள்படும்படி நான் பேசவில்லை என்பதை ஒரு தாளில் எழுதுங்கள் என்றேன். அடிகளார் என்னையே எழுதச் சொன்னார். நான் திரு.வி.க. அவர்களை எழுதச் சொன்னேன். அவர் அதை மறுத்து அடிகளாரையே எழுதச் சொன்னார்கள். ‘‘பெரியாரைக் கொலை செய்யத் துாண்டுவது என்ற பொருளில் நான் அன்று பேசவில்லை'’ என்று எழுதினார்கள். அதை நான் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு ஆறுதல் கூறி வெளியேறினேன். திரு.வி.க. அப்பொழுதே, “நீங்கள் தமிழிற்கு நல்ல வேலை செய்தீர்கள்” எனப் பாராட்டினார்கள்.
அக்கடிதத்தை ஜே.எஸ். கண்ணப்பரிடத்தும், எம். தண்டபாணிப் பிள்ளையிடத்தும் சென்னையிற் காண்பித்து இந்த வழக்கு இதோடு முடிவடைய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டேன். அவர்கள் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டதுடன், விடுதலைப் பத்திரிகையின் அன்றைய தலையங்கத்தில் ‘மறைமலையடிகளாரின் மன்னிப்பு’ என்ற ஒரு துணைத் தலையங்கம் எழுதி, இச்செய்தியை வெளியிட்டுவிட்டார்கள். இதைக் கண்டதும் பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் குடியரசுப் பத்திரிகையின் வெளியிட அச்சுக் கோத்து வைத்திருந்த செய்திகளையெல்லாம் போடாமற் கலைத்துவிடச் செய்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல ஜே.எஸ். கண்ணப்பர் “மறைமலையடிகளாரின் மன்னிப்பு” என்று விடுதலையில் தலையங்கமிட்டு எழுதியது தவறு என்றும், அவ்வாறு வெளியிட்டிருக்கக் கூடாது என்றும், அத்தவறுக்காக அடிகளாரிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்றும் ஒரு செய்தியை எழுதி குடியரசுப் பத்திரிகையில் வெளியிட்டார்கள். பெரியார் அவர்களின் இந்தப் பெருந்தன்மையைப் பாராட்டி மறைமலையடிகளார் எழுதிய கடிதம் இன்னும் என்னிடத்தில் இருக்கிறது. இந்நிகழ்ச்சிகளையெல்லாங் கண்டு அதிகமாக மகிழ்ந்தவர் திரு.வி.க. அவர்களே.
‘நூறாண்டு வாழ்வது எப்படி?’ என்று ஒரு நூலை எழுதி வெளியிட்ட அடிகளார் அவர்கள் 75 ஆண்டுகளில் இயற்கை எய்தினார்கள். அவர்களது உடலை எரியூட்ட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.
அவரது உடலை எரியூட்டாமல் அடக்கம் செய்து ஒரு நினைவுச் சின்னத்தை அங்கு எழுப்ப வேண்டும் என்று அவருடைய மகன்கள் மாணிக்கவாசகத்திடமும், திருநாவுக்கரசிடமும் தெரிவித்தேன். அதைக் கேட்டு அவர்கள் வருந்தி ‘அடிகளாரே தமது உடலைப் புதைக்காமல் எரியூட்ட வேண்டுமென்று கட்டளையிட்டிருக்கிறார்கள் அண்ணா” என்று கதறி அழுதார்கள். நானும் கண்ணிர் சிந்தி சென்னையிலிருந்து அங்கு வந்த டாக்டர் மு.வ. உட்பட ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள் கண்ணீர் சிந்திக்கதறி அழ, அழ, அவரது உடலுக்கு எரியூட்டப்பட்டது. நானும் கீழ்க்கண்டவாறு அழுதேன்:
என்று காண்போம்?
அன்பிற்கோர் நிலைக்களமே! ஆர்வலர்க்கோர்
ஆரமுதே! அடைந்தார் தம்மைத்
தன்பிறவி பெற்ற பயன் தம்மனோர் பெற
என்றும் தகவு கூறி
அன்புருவாய்த் திகழ்ந்துவந்த ஆன்ற பெரும்
மறைமலையே! மணியே! நின்றன்
இன்புருவத் திருபுருவைத் தமிழன்பை
இன் குரலை என்று காண்போம்?
பிறகு என்னுடைய தமிழர்நாடு இதழில் கீழ்க்கண்ட பாடல்களைப் பாடி வெளியிட்டேன்.
மலையே! மறையே! மறைமலையே! சாய்ந்தனையோ!
கலையே! அறிவே! கடலே மறைந்தனையோ!
தலையே! தமிழே! தவமே அழிந்தனையோ!
இலையே! என நாங்கள் ஏங்கியழப் போயினையோ!
தமிழும் அலறியழ! தமிழ்த்தாயும் குமுறி அழி!
தமிழிளைஞர் விழ்ந்து அமு தமிழ்ப்புலவர் புலமைஅழ
தமிழ்நாடு இழந்துஅமு தமிழ் நூல்கள் தனித்துஅழ
தமிழ்த்தலைவா போயினையே! தமிழஎங்கு போய்ச் சேரும்?
நீசாய்ந்தாய் என்றாலும் நினதுநெறி சாயவிலை
நீமறைந்தாய் என்றாலும் நின்தொண்டு மறையவிலை
நீ அழிந்தாய் என்றாலும் நின் நூல்கள் அழியவிலை
நீஒழிந்தாய் என்றாலும் நின்நாடு ஒழியவிலை!
அன்பும் அறமும் அறிவும் அருந்தமிழும்
என்பும் உருகும் இன்குரலும் நற்பண்பும்
இன்சொல்லும் ஏற்காது இழிந்த தமிழ்நாட்டில்
இன்றுவரை வாழ்ந்துவந்த தெண்ணுங்கால்வியப்பன்றோ?
பெரியாரைப் போற்றும் பெருங்குணத்தை இழந்துவிட்டு
சிறியாரைப் போற்றிச் சீரழியும் தமிழ்மண்ணில்
உரியார் புதைப்பர் என ஓர்ந்தும் அதற்கொப்பாமல்
எரிக்க உடலை, எலும்பெறிவிர் கடலினுக்கு என்றாய் அந்தோ!
தமிழ்ப்பகையை ஒழிக்காமல் தமிழ் அன்பையே ஒழித்தோம்
தமிழ்க்குறையை அழிக்காமல் தமிழ் நிறைவைத்தான் அழித்தோம்
தமிழ்மொழியை தமிழ் அறிவை தமிழ்க்கடலை வாழவைதது
தமிழ் வாழ்வு வாழாமல் தமிழ் எரித்து வாழ்கின்றோம்!
பல்லாவரத்திலுள்ள அவரது நூல் நிலையத்தை நான் பல முறை பார்த்திருக்கிறேன். நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் அவரது குறிப்புகள் இருக்கும். இதனால் அவர் அத்தனை நூல்களையும் படித்து நன்கு ஆராய்ந்திருக்கிறார் என்ப்து தெரியவரும். அவருக்குப்பின் அது ஒரு பெரிய நூல் நிலையமாக அமையவேண்டுமென்று விரும்பியவ்ர்களில் நானும் ஒருவன். அது இப்போது நிறைவேறி இருக்கிறது.
சென்னை லிங்கிச் செட்டித்தெரு 105 ஆவது எண் உள்ள கட்டிடத்தில் மறைமலையடிகளின் நூல்நிலையம் நன்கு அமைக்கப் பெற்றிருக்கிறது. வெளியூரிலிருந்து சென்னைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயம் கண்டு களிக்கக் கடடியதாக மிகப்பெரிய கட்டிடத்தில் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளது. இதற்காகப் பெரு முயற்சி எடுத்துக் கொண்ட திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்களைப் பெரிதும் பாராட்டுகிறேன்.
அடிகளாரின் பிறந்த ஊராகிய நாகப்பட்டினத்தில் மறைமலையடிகளின் உருவச் சிலையொன்று புலவர் கோவை இளஞ்சேரன் முயற்சியால் நல்லதோர் இடத்தில் அமைக்கப்பெற்றிருக்கிறது.இச் சிலைத் திறப்புவிழாவில் தமிழக முதல்வர் டாக்ட்ர் கலைஞர் மு. கருணாநிதி தலைமை வகித்தார். நான் சொற்பொழிவு நிகழ்த்தி மகிழ்ந்தேன். தமிழக அரசு சென்னையில் கட்டியுள்ள ஒரு பெரிய பாலத்திற்கு மறைமலையடிகள் பாலம் என்று: பெயரிட்டிருப்பது பாராட்டுதற்குரியது.
திருச்சிராப்பள்ளிப் பெரிய கடைவீதியில் வரதராசப் பெருமாள் கோவில் தெருவில் தமிழகப் புலவர் குழு தனக்கென ஒரு பெருங்கட்டிடத்தை வாங்கி, அக்கட்டிடத்தின் மன்றத்திற்கு மறைமலையடிகள் மன்றம் எனப்பெயரிட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
இவை போதாது. நாடு முழுவதும் அவரது பெயரால் மன்றங்களை நிறுவியும், நகரம் முழுவதும் அவரது சிலைகளை எழுப்பி வைத்தும் வணக்கம் செலுத்தியாக வேண்டும்.
வாழட்டும் அவரது புகழ்! வளரட்டும் அவரது தொண்டு!
தமிழ்த் தென்றல்
தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்கள் தமிழ்த் தொண்டு, தொழில் தொண்டு, சமயத்தொண்டு, அரசியல் தொண்டு, சமூகத் தொண்டு ஆகிய ஐவகைத் தொண்டும் தன்னலங் கருதாது செய்து வந்த தமிழகத்தின் தனிப் பெருந்தலைவர்.
பிற்காலத்தில் இத்தனையிலிருந்தும் ஓய்வு எடுத்துக் கொண்டு, இராயப்பேட்டையிலுள்ள அச்சகத்தில் தன் தமையனார் உலகநாதமுதலியார் அவர்களுடன் இருந்து: எழுத்துப்பணி புரிந்தபொழுது நான் அடிக்கடி அவர்களைச் சந்தித்துப் பேசி மகிழ்வதுண்டு.
மாறுபட்ட கட்சியினரிடத்தும், மாறுபட்ட கொள்கையுடையவர்களிடத்தும் சிறிதும் வெறுப்படையாமல் மனம் திறந்து பேசி மகிழ்ச்சியடையும் பெருங்குணத்தை, அவரிடம் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன்.
‘தேச பக்தன்’ என்ற ஒரு தினசரியை நடத்தி, அதன் ஆசிரியராக இருந்து, அதன் தலையங்கங்களில் சிக்கலான செய்திகளைக்கூட எளிய தமிழில் முதன் முதலாக எழுதி வெளியிட்ட பெருமை அவருக்கு உண்டு.
அக்காலத்தில் அரசியல் கூட்டங்களில் பல தலைவர்கள் ஆங்கிலத்திலேயே பேசுவது வழக்கம். அத்தகையோரை மீறி, நல்ல தமிழில் அரசியல் மேடைகளில் பேசி, பொது மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து பெரும்: பாராட்டுதலைப் பெற்றவர் திரு. வி. க. அவர்கள்.
புதுமையான கருத்துக்களைக் கொண்ட சிறந்த நூல்கள் பலவற்றை அழகிய தமிழ் மொழியில் எழுதி அவர் தமிழ் மக்களுக்கு வழங்கியிருப்பது பெரிதும் பாராட்டுதலுக்குரியது. அவற்றில் மிகச் சிறந்து விளங்குவது “பெண்ணின் பெருமையும்”, “காந்தியடிகள் வரலாறும்”.
அக்காலத்தில் தமிழகத்தை அரசாண்ட ஆங்கிலேயர்கள் திரு. வி. க. அவர்கள்மீது தேசத் துரோகக் குற்றத்தைச் சாட்டிச் சிறையில் அடைத்து விட்டனர். அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவர்கள் சர் P. தியாகராஜ செட்டியார் அவர்களும், சர் P. T. ராஜன் அவர்களும், கவர்னர் அவர்களிடம் தூது சென்று அவர்களை விடுவித்து மகிழ்ந்த செய்தி இன்னும் என் நினைவில் இருக்கிறது.
ஒரு முறை குற்லாலத்தில் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம். திரு. வி. க. அவர்கள் அருகிலுள்ள வ. வே. சு. ஐயரைப் பார்க்கச் சென்றபோது, என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியபோது, அவர் சொல்லிய, சொற்களைக் கண்டு நான் பெரிதும் வியந்தேன். அச்சொற்கள்:
‘‘இவர் திருச்சி இளைஞர். விசுவநாதம், ஈவேராவின் தொண்டர். நாயக்கருக்கு செல்லுமிடமெல்லாம் இப்படிப்பட்ட நல்ல இளைஞர்கள் கிடைத்து விடுகிறார்கள், நமக்குக் கிடைப்பதில்லை. என்ன செய்வது” என்பது தான.
பெரியாரைக்கொலை செய்யும்படி மறைமலையடிகள் தூண்டினார் என்று அடிகளார்மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அதைக் கண்டு பெரிதும் கவலைப்பட்டுப் பல்லாவரத்துக்கு என்னை அழைத்துக்கொண்டு போய் மறைமலையடிகளிடம் ஒரு கடிதத்தை வாங்கச் செய்து அதைப் பெரியாரிடம் காட்டி, அவ்வழக்கைத் திரும்பப் பெறச் செய்தற்கு முதற்காரனமாயிருந்து என்னைத் தூண்டியவரும் திரு. வி. க. அவர்களேயாவார்.
திரு. வி. க. அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள தன்னுடைய வரலாற்று நூலில் என்னைப்பற்றி நீண்டதொரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள். அது அவர் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல் அமைந்திருக்கிறது.
பிறகு வயது முதிர்ந்து, நடைதளர்ந்து, கண்பார்வை குறைந்து, செயல் இழந்து, அவரது இல்லத்தில் இருக்கும் பொழுது பலமுறை சென்று அவர்களைப் பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொரு தடவையும் அவரைப் பார்க்கும்பொழுது டாக்டர் மு. வ. அவர்களையும் அங்குக் கண்டு மகிழ்வேன். டாக்டர். மு. வ. தமிழ்த் தென்றலைத் தன் தலைவராகவும் தனது ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் கருதி வந்தவர். அதுமட்டுமல்ல; இறுதிக் காலத்தில் அவரருகில் இருந்து அவருக்குத் தொண்டும் புரிந்து வந்தவர்.
ஒரு தடவை நான் திரு. வி. க. அவர்களிடம் சென்ற பொழுது, டாக்டர் மு. வ. என்னிடம் கூறினார். “ஐயா அவர்கள் இப்பொழுதும் ஒரு நூல் எழுதியிருக்கிறார்கள் என்றும், அந்நூலுக்கு “படுக்கைப் பிதற்றல்” என்று பெயர் வைத்து ‘உலகை நோக்குமின்’ என்று தொடங்கப் பெற்றிருக்கிறது” என்றும் கூறினார்கள்.
தமிழ்ப் புலவர்கள் தமிழகத்திலிருந்து தமிழ் மக்களுக்கென எந்த இலக்கியங்களைச் செய்தாலும், அந்நூல்களுல் முதற் பாட்டில் முதலடியில் முதற் சொல்லாக உலகத்தை வைத்துச் செய்யும் ஒரு மரபை திரு. வி. க. அவர்களின் படுக்கைப் பிதற்றலிலும் கண்டு வியந்தேன்.
மற்றொரு முறை காணச் சென்றபொழுது கூனிக் குறுகித் தரையில் முடங்கிக் கிடந்தார்கள். அப்பொழுதும் டாக்டர் மு. வ. அவர்களை அங்குக் கண்டேன். ‘‘காலமெல்லாம் தமிழுக்குத் தொண்டு செய்துள்ள இந்தத் தமிழ் உடல் தங்கியிருக்க ஒரு சொந்த வீடு இல்லை. வாடகை வீடு. அதிலும் வீட்டைக் காலி செய்யும்படி விட்டுக்காரர் வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு விடுத்திருக்கிறார். என்ன செய்வதென்று தெரியவில்லை. நாமெல்லாம் சேர்ந்து நிதி திரட்டி ஒரு வீடு வாங்கி வைப்பது நலமாகும்” என்று டாக்டர் மு. வ. கூறினார்.
அப்படியே செய்வோமென்று செட்டி நாட்டரசருக்கும், மதுரை கருமுத்து தியாகராஜ செட்டியாருக்கும், சர். பி. டி. இராஜனுக்கும், W. P. A. செளந்திர பாண்டிய நாடார் அவர்களுக்கும் நான்கு கடிதங்களை அங்கிருந்து எழுதி அனுப்பி, திருச்சி வந்து சேர்ந்தேன்.
சில நாட்கள் கழித்து கருமுத்து அவர்களிடமிருந்து, ஒரு கடிதம் வந்தது. உடைத்துப் பார்த்தேன், அவர் திரு. வி. க. அவர்களுக்கு அனுப்பியிருந்த பெருந் தொகைக்குரிய காசோலை ஒன்றும், அவர் அதை ஏற்க மறுத்து திரு. செட்டியாருக்கே திருப்பி அனுப்பி எழுதியிருந்த கடிதத்தின்படியும் இருந்தன. திரு. வி. க. கடிதத்தில் குறிப்பிட்டிருந்த சொற்றொடர் என்ன தெரியுமா?
‘‘நான் வாழ்நாளெல்லாம் செய்யாத ஒரு தவறை இக்கடைசி நாளில் செய்யும்படி என்னை வற்புறுத்த மாட்டீர்களென நம்புகிறேன்’’ என்பதுதான். இதை, நான் டாக்டர் மு. வ. வுக்கு அறிவித்தேன். அவரும் என்னைப் போலவே இம்முயற்சியைக் கைவிட்டு விட்டார்.
கடைசியாக ஒரு முறை நான் கண்டபொழுது திரு. வி. க. அவர்கள் படுக்கையில் அசைவின்றிக் கிடந்தார். ‘‘கி. ஆ. பெ. வந்திருக்கிறார்’’ என்று டாக்டர் மு. வ. அவர்கள் காதருகில் சென்று உரக்கக் கூறினார். திரு. வி. க. கையை அசைத்து உட்காரச் சொன்னார். நான் அவரருகில் சென்று அவரது கையை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு,
"ஐயா! நாட்டுக்கு என்ன சொல்லுகிறீர்கள்?
மொழிக்கு என்ன சொல்லுகிறீர்கள்?
மக்களுக்கு என்ன சொல்லுகிறீர்கள்?"
என்று கேட்டேன்.
அதையே அவர் மிகவும் ஓசை குறைந்த சொற்களால் திரும்பக் குறிப்பிட்டு
“நாடு இருக்கிறது......மொழி இருக்கிறது...... மக்கள் இருக்கிறார்கள்... நீங்களும் இருக்கிறீர்கள். பார்த்துக்கொள்ளுங்கள்’’
என்று கூறினார்கள். நாங்கள் கண் கலங்கினோம்.
‘இப்போது இவ்வாறு சொல்ல யார் இருக்கிறார்கள்?’ என்று எண்ணும் பொழுது, உள்ளம் வேதனையையே அடைகிறது. என் செய்வது? செய்வது ஒன்றுமில்லையென்றாலும், வாய் திறந்து வாழ்த்தவாவது செய்யலாம் அல்லவா!
வாழட்டும் திரு.வி.க. புகழ்!
வளரட்டும் திரு.வி.க. மரபு!
நான் கண்ட வ. உ. சி.
திருவாளர் வ.உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் தமிழ் நாட்டுத்தேசபக்தர்களுள் ஒருவர். தேசபக்தர் என்றாலே திரு. பிள்ளை அவர்களைத்தான் குறிக்கும். நாட்டின் மீது அவருக்குள்ள பற்று உள்ளபடியே அளவைக் கடந்தது எனக் கூறலாம்.
பெரியார் காந்தியடிகளுக்கு முன்பே திரு. பிள்ளை இந்தியாவில் தேசபக்தராக விளங்கியவர். லோகமான்ய பால கங்காதர திலகர் அவர்களின் அரசியல் மாணவர் ஆவர். காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் தொண்டு செய்திருந்த காலத்திலேயே திரு. பிள்ளை அவர்கள் இந்தியாவில் தேசத்தொண்டு செய்தவர்கள்.
பலமுறை சிறை சென்றவர்கள். அவர் செய்த குற்றமெல்லாம், இந்நாட்டின்மீதும் மக்களின்மீதும் அன்பு கொண்ட ஒன்றுதான். இக்காலத்தில் சிறைக்குச் செல்ல விரும்புவோர் பலருக்கு நன்கு தெரியும், முதல் வகுப்பும் முந்திரிப்பருப்பும் அல்வாவும் ஆரஞ்சுப் பழமும் கிடைக்குமென்று. அந்தக் காலத்தில் அனைவருக்கும் தெரியும் செக்கிழுத்துச் சீரழியவேண்டுமென்பது. கற்கள் உடைபடச் செய்யவேண்டும்: இன்றேல் பற்கள் உடைப்பட்டு விடும். குத்துவதெல்லாம் நெல்லாக இருக்கும்; உண்பதெல்லாம் களியாக இருக்கும். இக்காலம் சிறைக்குச் சென்றவர்கள் போற்றுதலும் பூமாலையும் பெறுகிற காலம். அக்காலம் தூற்றுதலும், துயரமும் பெறுகின்ற காலம். முடிவாகக் கூற வேண்டுமானால், எல்லாச் சாதியினரும் சிறைக்குச் சென்றவர்களை வெறுத்துச் சமூகத்தில் ஒதுக்கி வைத்த காலமது எனக் கூறலாம். அப்படிப் பட்ட காலத்தில்தான், திரு. பிள்ளை அவர்கள் சிறை: புகுந்தார்கள்; செக்கும் இழுத்தார்கள். களைப்பு மிகுதியினால் குடிக்கத் தண்ணிர் கேட்டுத் தண்ணிர் பெறாமல் சவுக்கடியையே பெற்றார்கள். சில நாட்கள் அல்ல; பல ஆண்டுகள். நாட்டுப் பற்றுக் காரணமாக உயிர் போகும் வேதனையைப் பெற்று வாடிவதங்கி வருந்த உழைத்தவர்கள் திரு. பிள்ளை அவர்கள் ஆவர்.
படிப்பு இல்லாமல் தேசத்தொண்டு செய்யப்போனவரல்லவர் அவர்; அக்காலத்திலேயே கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்கள். தொழிலில்லாமல் தேசத்தொண்டு செய்யப் புறப்பட்டவர் அல்லர் அவர். வழக்குரைஞர் தொழில் செய்து கொண்டிருந்தவர். வருமானமில்லாமையால் தேசபக்திக்காட்டப் புறப்பட்ட வக்கீல்களைச் சேர்ந்தவர் அல்லர் அவர்; தொழிலில் நல்ல வருமானத்தைப் பெற்று வந்தவர். புகழுக்கும், பெருமைக்கும் ஆசைப்பட்டுப் பொதுத் தொண்டு செய்யப் புறப்பட்டவர் அல்லர் அவர். எவ்வளவு கத்திப் பேசினாலும் இந்துவும் சுதேசமித்திரனும் ஏழுஎட்டு வரிகூட எழுதா அக்காலத்தில் தேசத்தொண்டு செய்து வந்தவர். அவரது அருஞ்செயலையும், பெருங் குணத்தையும், உள்ளத் துய்மையையும், உழைப்பின் சிறப்பையும் விளக்க இதை விட வேறெதுவும் கூறவேண்டியதில்லை.
உயர்ந்த அறிவாளிகள் உயிரோடிருக்கும்போது, அவர்களைச் சிறிதும் மதியாமல், அறிவைப் போற்றாமல், செயலை வாழ்த்தாமல், நடத்தையைப் பின்பற்றாமல், வருந்தும்போது ஒருவேளை உணவுக்கும் வழி செய்யாமல், மாண்டபிறகு மணிமண்டபம் கட்டுவதும், காலடிபட்ட மண்ணை எடுத்துக் கண்களில் ஒத்துவதும் மாண்டாயோ மன்னவனே என மாரடித்து அழுவதும், படம் திறப்பதும், பாக்கள் பாடுவதும், பூமாலை சாற்றிப் போற்றிப் புகழ்வதும் ஆகிய பழக்கத்தைக் கொண்ட இப் பாழாய்ப்போன தமிழ்நாட்டில்தான் திரு. பிள்ளை அவர்களும் பிறந்தார்கள்; அதனாலேயே அவர்களும் இக் கூற்றுக்கு இலக்கானார்கள்.
இன்னும் ஒருபடி தாண்டி, வாழ்ந்தபோது வைது கொண்டிருந்தவர்கள் மாண்டபிறகு மாறி நாட்டிற்கு அவர் பெயரும், ஊருக்கு அவர் சிலையும் வேண்டுமென, ஊருக்கு முன்னே ஓடோடி ஆலோசனைகறும் மக்களுள்ள இத்தமிழ் நாட்டிலே திரு. பிள்ளை அவர்கள் பிறரால் வையப்பெறாமலும் வாழ்த்தப் பெறாமலும் வாழ்ந்துவந்தது ஒரு சிறப்பேயாகும்.
திரு. பிள்ளை அவர்களின் பேச்சு இரத்தக் கொதிப்பையும் நரம்புத் துடிப்பையும் மட்டும் அல்ல, எலும்புகளையும் உருகச் செய்யும். உணர்ச்சி கலந்த அரசியல் ஆவேசப் பேச்சுக்கள் திரு. பிள்ளை அவர்களோடு மறைந்து ஒழிந்தன.
வெள்ளையர் கப்பல்கள் துரத்துக்குடியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் கட்டணத்தை உயர்த்தித் தமிழ் நாட்டு வர்த்தகத்திற்கே கேடு விளைவித்தன. இதனையறிந்த பிள்ளை அவர்கள், அவர்களோடு போராடியும் நியாயத்திற்கு இணங்க மறுத்ததனால், அவர்களோடு போட்டியிட்டுத் தானே ஒரு கப்பலை ஒட்டித் தமிழ்நாட்டு வணிகத்திற்குத் தொண்டு செய்தார்கள்.
அவர் ஒரு தொழிலாளர் தலைவர். தொழிலாளர் போக்கைத் தொடர்ந்து போகும் தலைவராயில்லாமல் தொழிலாளரைத் தன் போக்கில் நடத்திச் செல்லும் தலைவராயிருந்தவர்.
அவர் ஒருமுறை சிறை சென்றபோது, தூத்துக்குடி இரயில்வே நிலையமும், சர்க்கார் கட்டடங்களும் தூள் தூளாக்கப்பட்டன. நெருப்புப் பொறிகளும் பறந்தன. அரசாங்கமே நடுங்கி அஞ்சுகின்ற அளவுக்கு அவர் ஓர் வீரமனிதராகக் கருதப்பட்டார்.
அவருடைய தமிழ்ப் பற்றுத் தமிழ்நாட்டிலே நன்கு மதிக்கப் பெற்றிருக்கிறது. அதுதான் “திருக்குறள் வ. உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு’’ என்பதாகும். இது இன்னும் நம்மிடையே இருந்து கொண்டு அவர்களையும் அவர்களது தமிழ்ப்பற்றையும் நினைப்பூட்டி வருகிறது.
திரு. பிள்ளை சிறையிலிருப்பார். வீட்டிலிருந்து செய்தி வரும். வருகின்ற செய்தி “குழந்தைக்குத் துணியில்லை; உணவுக்கு வழியில்லை” என்றிருக்கும். கண்கள் கலங்கும்; மனம் கலங்காது. இத்தகைய செய்திகள் பலவற்றை அரசாங்க அதிகாரிகள் அவரிடம் அனுப்பி வைப்பார்கள். காரணம் எந்த வகையிலானும் மன்னிப்பைப் பெற்று, விடுதலை பெற்று அவர் வெளியேற வேண்டும் என்பதுதான். இருமுறை ஆயுட்காலத் தண்டனை; அந்தமான் தீவுக்கு நாடு கடத்தும் தண்டனைகளைப் பெற்று, செக்கிழுத்து வாடி வதங்கி அடைத்துப்போன காதுகளுக்கு, இச்செய்திகள் எட்டும். மடிவதில் மனம் கொண்டாரேயன்றி மன்னிப்பில் மனம் கொள்ளவில்லை.
ஒரு நாட்டுத் தலைவன் மனைவியையும் மக்களையும் காப்பாற்றத் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாமையினால், அவர்கள் முன்வந்து உதவி செய்யவில்லை. அவர் வாழ வகையின்றி வருந்தினார். இப்படிப்பட்ட மக்களுக்காகச் சிறை புகுந்து, செக்கிழுத்து மடிவதும், தன்னை நம்பியுள்ள மனைவி மக்களை இப்படிப்பட்டவர்களிடம் உயிரோடு ஒப்புவித்து, அவர்களையும் மடியச் செய்வதும் நியாயமாகுமா?’ என்று சிறையில் பல ஆண்டுகள் எண்ணி எண்ணி வருந்தி நொந்தார். கடைசியாக ஒரு நாள் நீதிமன்றம் அவருக்கு விடுதலை அளித்தது. மீண்டும் வழக்கறிஞர் தொழிலை நடத்தினார்கள். திரு. பிள்ளை அவர்களோடு சேர்ந்து நான்கு கூட்டங்களில் பேசியிருக்கிறேன். நான் பேசும் சில ஊர்களுக்கும் அவர்கள் வந்திருக்கிறார்கள். தமிழுக்காக அவர்மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அதற்காகவே என்மீது அவருக்குப் பற்றுதல் உண்டு. தமிழ் ஒன்றே எங்களைப் பிணைத்தது.
அரசியலிலே நாங்கள் இருவரும் மாறுபட்ட கொள்கையுடையவர்கள்; மாறுபட்ட இயக்கங்களைச் சார்ந்தவர்கள். ஒருநாள் தட்டப்பாறையில் சந்தித்து “உங்களைப்போன்றவர்கள் ஜஸ்டிஸ் கட்சியை விட்டுக் காங்கிரஸ் கட்சிக்கு வந்து சேரவேண்டும்” எனக் கூறினார்கள். எனது இளமை முறுக்கினாலும், இரத்தத் திமிரினாலும் அவர்களைக் கடுமையாகத் தாக்கிக் கடுஞ்சொற்களைக் கூறிவிட்டேன். இன்றைக்கு நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆயின என்றாலும், இன்றைக்கும் அது என் உள்ளத்தைச் சுடுகின்றது. அச் சுடுசொல் :–
“தங்கள் அறிவும், திறமையும், உழைப்பும், தமிழர் நலனுக்குப் பயன்படாமல், அறியாமையின் காரணமாகப் பிறர் நலனுக்குப் பயன்படுகிறது. அத்தவற்றை நானும் செய்யவேண்டுமா?” என்பதுதான். இதற்காக அவர்கள் எனக்களித்த தண்டனை, அவர்களின் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று, பலமணி நேரம் நிலைமையை விளக்கி, எனது கருத்தை மாற்றி, அவர் தவறு செய்யவில்லை என மெய்ப்பித்ததுதான். பொதுவாக அவர் உள்ளத்தைத் திறந்து காட்டி, தம்முள்ளத்தே மறைத்து வைத்திருந்த பலசெய்திகளையும் கூறிக் கண் கலங்கினார்கள். வருந்தினேன். எனது வலக்கையால் அவரது கண்ணீரைத் துடைத்ததுதான் இன்றைக்கு ஆறுதலாக இருக்கிறது. அவர் கூறிய செய்திகளை வெளியிடும் காலம் இன்னும் வரவில்லை. அவரது மனைவியார் என் வயிற்றிற்கு ஒருவேளை உணவளித்தார்கள். அவரோ என் அறிவுக்குப் பலநாள் உணவையளித்தபின் மறைந்தார்கள். அவர் அளித்த உணவு “எவரையும் வையாதே; வைவது தமிழனின் பண்பல்ல—பிறரை வைவதுதான் முன்னேறும் வழி என்று எண்ணாதே. எவன் முன்னேறினாலும் வைபவன் முன்னேற முடியாது என்பதை நம்பு, தவறு என்று கண்டால் தீமையற்றச் சொற்களால் அச்சமற்றுக் கூறு” என்பதுதான்.
திரு. பிள்ளை அவர்களின் அறிவுரையும் அறவுரையுமாகிய இது எனக்குப் பயன்பட்டது. உங்களுக்கும் பயன்படுமா? முயலுங்கள்.
நான் சிலருடைய திருவடிகளை நினைத்து அடிக்கடி வணங்குவேன். திரு. பிள்ளை அவர்கள் திருவடிகளும் அதில் சேர்ந்ததுதான். காரணம் பொய் பேசுவதில்லை என்பதை வாழ்நாள் முழுவதும் ஒரு கொள்கையாகக் கொண்டு உண்மையையே பேசி வந்தார்கள். அதுமட்டுமல்ல, உயிர் போகும்வரை ஒழுக்கத்தைக் கையாண்டு வந்த ஒரே தலைவர் அவர் என்பதினாலுமே யாம்.
வாழ்க வ. உ. சி. புகழ்.
வாழ்க அவர் பிறந்த நாடு.
கா. சுப்பிரமணியப் பிள்ளை
பேராசிரியர் கா. சுப்பிரமணியப் பிள்ளை எம்.ஏ. எம்.எல். அவர்களை தமிழ் உலகம் நன்கறியும். தமிழறிஞர்கள் பலரும் இவரைத் ‘தமிழ்க் காசு’ என்று கூறுவதுண்டு.
அவர் முதன்முதல் எம்.எல். பட்டம் பெற்றதால், திருநெல்வேலிச் சீமையில் உள்ளவர்கள் அவரை “எம்.எல். பிள்ளை” என்றே கூறுவர். தமிழில் ஆழ்ந்த புலமையும் அழுத்தமான சைவப் பற்றும் உடையவர். இதனால் சென்னைப் பகுதியில் உள்ளவர்கள் அவரைத் ‘தமிழச் சைவர்’ எனக் குறிப்பிடுவர்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராயிருந்து புலவர் பெருமக்கள் பலரை உண்டாக்கித் தமிழகத்திற்கு உதவிய பேரறிஞர்.
1937 இல் தமிழகத்திலுள்ள நான்கு கோடி தமிழ் மக்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை இந்தியப் பேரரசுக்கு அறிவிப்பதற்கென்றே, திருச்சி தேவர்மன்றத்தில் சென்னை மாகாணத் தமிழர் மகாநாட்டை முதன் முதலாகக் கூட்டினேன். நாவலர் ச.சோமசுந்தர பாரதியார் எம்.ஏ.,பி.எல். அவர்கள் அம் மகாநாட்டிற்குத் தலைமை வகிக்க ஒப்புக் கொண்டார். அம் மகா நாட்டைத் தொடங்கி வைக்க அலைந்தும், இந்தி எதிர்ப்பு என்றிருந்ததால், ஆட்சிக்கு அஞ்சி ஒரு புலவரும் முன் வரவில்லை. பேராசிரியர் கா. சுப்பிரமணியப்பிள்ளை எம்.ஏ., எம்.எல். அவர்களுக்கு ஒரு தந்தி அடித்தேன். ஒப்புக்கொண்டு மிகத் துணிவோடு முன் வந்து அம் மகாநாட்டைத் தொடங்கி வைத்து, அவர் ஆற்றிய உணர்ச்சி கலந்த சொற்பொழிவு இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அவர் ஆற்றிய அந்தப் பேச்சினைக் கண்டு நடுநடுங்கிய புலவர்களும் அரசியல்வாதிகளும் மிகப் பலர். தலைமை வகித்த நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் முடிவுரை கூறுகிறபொழுது “திரு. பிள்ளை அவர்களின் பேச்சு உணர்ச்சியற்றவர்களுக்கெல்லாம் உணர்ச்சியூட்டியிருக்கும்.’’ என்றார். ‘தமிழ்க்காசு’ விற்கு ‘வீரமகன்’ என்ற பெயரும் வழங்கியது.
அதுவேபோல ‘தாகூர் சட்டத்தை’ விரித்து விளக்கி விரிவுரையாற்றத் தமிழகத்தில் எவரும் துணியாதபோது ‘எம். எல். பிள்ளை’ அவர்கள் அரசின் விருப்பத்தையேற்றுத் துணிந்து முன்வந்து அச்சட்டத்தை விளக்கி விரிவுரையாற்றிப் பெரும்புகழ் பெற்றார். இதனால் அவரை வழக்கறிஞர்களும் நீதிமன்றத் தலைவர்களும் ‘தாகூர் சட்ட விரிவுரையாளர்’ எனக் கூறுவதுண்டு.
திரு. பிள்ளை அவர்கள் தமிழர் சமயம்’ என்று ஒரு நூலை ஆராய்ந்து எழுதியிருந்தார். அதற்கு என்னுடைய மதிப்புரையை வேண்டினார். மறைமலையடிகள், நாவலர், பாரதியார், திரு. வி. க., நாட்டாரய்யா ஆகிய சமயப்பற்று நிறைந்த பேரறிஞர்கள் நால்வருடைய மதிப்புரையே போதுமானதென்றும், சீர்திருத்தப் பற்றுள்ள என்னுடைய மதிப்புரை தேவையில்லை என்றும் தெளிவாகக் கூறி மறுத்து விட்டேன். இது அவர் உள்ளத்தை எவ்வளவு தூரம் புண்படுத்தியிருக்கிறதென்பதை நான் பின்னால் அறிந்து வருந்தினேன்.
திரு. பிள்ளை அவர்கள் நான் பெங்களூரில் தங்கியிருக்கிறேன் என்பதை அறிந்ததும், தன்னிடம் புலவர் வகுப்பில் பயின்று கொண்டிருந்த மாணவர் ஒருவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து அங்கு அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது இது:—
“என் நூல் வெளிவருவது தங்களுக்கு விருப்பம் இல்லையானால் தயவு செய்து அதைத் தெரிவித்து விடுவது நல்லது. தங்களின் மதிப்புரையின்றி நூலை வெளியிட நான் விரும்பவில்லை.”
இது என் உள்ளத்தைச் சுட்டதால், மதிப்புரை எழுதுகிறேன் என அவரிடம் சொல்லியனுப்பிவிட்டு, அந் நூலை முழுதும் படித்து எனது கருத்தை விரிவாக எழுதி அனுப்பினேன். அதை அப்புலவர் பெருமகன் முதல் மதிப்புரையாகவும், மற்றப் பெரும் பேராசிரியர்கள் நால் வரின் மதிப்புரையைப் பின்னரும் அச்சிட்டுத் தமிழர் சமயம்’ என்ற அந்நூலை வெளியிட்டிருக்கிறார்கள்.
தன்னைத் தமிழன் எனச் சொல்லிக் கொள்கிற ஒவ்வொருவனும் அந்நூலையும், “கோடையிலே இளைப்பாறிக் கொள்ள வந்த எனக்கு இந்நூல் ஒரு குளிர் தருவாக இருந்தது” என்று தொடங்கியிருக்கும் என் முன்னுரையையும் கட்டாயம் படித்தாக வேண்டும்.
சுருக்கமாக இங்குக் கூறுவது. “இந்நூல் தமிழர் சமயத்தைப் புதுமுறையில் ஆய்ந்து, கண்டு விளக்குகிறது. இதுவரை எவரும் செய்யாத செய்யத் துணியாத ஒரு முயற்சி. தமிழர் சமயத்திற்கும், நூல் நிலையங்களுக்கும் இதுவரை இருந்த ஒரு பெருங்குறையை இந்நூல் போக்கிவிட்டது,” என்பதே.
தமிழக மக்கள் இதனையும் இது போன்ற அவரது பிற நூல்களையும் படித்துப் பயன்பெறுவது நல்லது.
தமிழிற்கும், சைவத்திற்கும், சட்டத்துறைக்கும், அவர் செய்த தொண்டுகள் மிகப் பல. அவ்விதமிருந்தும் இவ்வுலக வாழ்வில் நல்வாழ்வு வாழ முடியாமல் வறுமை வாய்ப்பட்டும் பல ஆண்டுகள் நோய்வாய்ப் பட்டுத் தனித்துக் கிடந்தும் வருந்தி மறைந்தார்கள். இதைக் கண்டு மனம் புண்பட்டபலரில் நானும் ஒருவன். என்றாலும், தமிழும் தமிழனும் உள்ள வரை அவர் புகழ். மறையாது.
சோ. சு. பாரதியார்
எட்டையாபுரத்து மண்
கட்டபொம்மன் வரலாற்றைப் படிக்கும் பொழு தெல்லாம், எட்டையாபுரத்து மண்ணின்மீது ஒரு வெறுப்புத் தோன்றும். “தமிழ் வாழ்க” என்று ஒலித்த தமிழர்களின் தலையில், அங்குள்ள தமிழர்களே கல்லாலடித்துக் செங்குருதியை வழியவிட்ட வரலாறும், அம் மண்ணை வெறுக்கச் செய்யும். என்றாலும் தமிழ் வளர்த்த மன்னர்களை தமிழ் வளர்த்த புலவர்களை, தமிழ் வளர்த்த பாரதிகளை வளர்த்த மண் என்ற எண்ணமும் உடனே வரும். மனம் மாறும்; புண் ஆறும்.
மணியும் முத்தும்
தந்தை சுப்பிரமணியம், தாய் முத்தம்மாள். இந்த மணியிலிருந்தும் முத்திலிருந்தும் பிறந்த தமிழ் ஒளியை நிலவொளி என நினைத்தோ, தந்தையின் நெருங்கிய உறவினரும் அக்காலப் பிரசங்க கேசரியுமாகிய திரு. சோமசுந்தரநாயகரை எண்ணியோ, இவ்வொளிக்குச் சோமசுந்தரம் எனப் பெயரிட்டனர். பிறந்த ஆண்டு 1879).
சோ. சு. பாரதி
இது சோமசுந்தர பாரதி என்றாகாது. சோமு பாரதி சுப்பு பாரதி என்ற இரட்டையர்களைக் குறிக்கத்தோன்றிய ஒரு சொற்றொடர். சோ. பாரதியின் விட்டிற்குப் பக்கத்து வீடே சுப்பிரமணிய பாரதியின் வீடு. சோ. பாரதிக்கு சு. பாரதி மூன்றாண்டுகளுக்கு இளையவர். இருவரும் தோழர்கள். இவ்விருவரின் பெற்றோரில் எவரும் தமிழ்ப் புலவரல்லர். இருந்தும், இவர்கள் இருவருக்கும் தமிழில் ஒரு வெறி தோன்றியது பெரிதும் வியப்பிற்குரியதாகும்.
சந்தேகப் பாரதி
மூன்று வயதில் சம்பந்தர் எப்படித் தேவாரம் பாடினார் என்ற சந்தேகம் சோ பாரதிக்கு இருந்தது. அத்தகைய சந்தேகப் பாரதியை ஏழு வயதில் வெண்பாவைப் பாடிக்காட்டி நம்ப வைத்தவர் சுப்பிரமணிய பாரதி.
பயங்கொள்ளிப் பாரதி
திண்ணைப் பள்ளிக்கூடத்திலோ, தமிழாசிரியர்களிடத்திலோ இவர்களிவரும் தமிழ் படித்ததில்லை. இவர்கள் இருவரும் தமிழ்படித்தவிடம் எட்டையாபுரத்துச் சிவன்கோயிலின் உட்பிரகாரத்து வாகன மண்டபம். அதிலும் பெற்றோர்கள் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், வாகனத்தின் மறைவிலிருந்து தமிழ் படித்தவர்கள். காரணம், ‘தமிழ் படித்தால் அடி உறுதி’ என்ற அச்சமேயாம். நீங்கள் எப்போதாவது எட்டையபுரத்துக்குச் சென்றால், தமிழ்த் தாய் இப்பிள்ளைகளுக்கு, அன்பால் தன்பால் கொடுத்து வளர்த்த அவ்விடத்தையும் அவர்கள் புத்தகங்களை மறைத்து வைத்திருந்த கோவில் வாகனங்களையும் பார்த்து மகிழுங்கள்.
பட்டம் பெற்ற பாரதி
ஆம், கடையம் என்ற ஊரில்தான் சுப்புவிற்குத் திருமணம் கூடியது. சோமு இல்லாமல் சுப்புவின் திருமணம் நடைபெறுமா? எல்லாரும் கடையம் சென்றனர். மணக்கோலத்திலிருந்த சுப்பிரமணியத்திற்கும், தோழமையாயிருந்த சோமசுந்தரத்திற்கும் அங்கு வந்திருந்த புலவர் பெருமக்களால் அளிக்கப்பெற்ற பட்டமே ‘பாரதி’ பட்டமாகும். அப்போது சோமுவுக்கு வயது பதினைந்து. சுப்புவுக்கு வயது பன்னிரண்டு. அதுமுதல் இருவரும் சோமசுந்தரபாரதி, சுப்பிரமணிய பாரதி என்றானார்கள். புலவர்கள் வழங்கிய பட்டம் இவ்விருவரின் புலமையை வியந்தேயாகும். பாரதி என்பதன் பொருள், சரசுவதி என்பது. அது கலைமகளை, அவளருளைக் குறிக்கும். எனினும் இவர்கள் அதற்குக் கூறும் விளக்கம் “பாரதத் தாயின் மக்கள் யாவரும் பாரதி” என்பதே.
மாணவ ஆசிரிய பாரதி
இருவரும் தமிழ் இலக்கணம் பயின்றார்கள். தாமாகவே படித்தார்கள். ஓய்வுள்ள போதெல்லாம் படித்தார்கள். சோமுவுக்குச் சுப்பும் சுப்புவுக்கு சோமுவுமே இலக்கண ஆசிரியர்களாகத் திகழ்ந்தார்கள். தமிழ்க்கலையும், அலையும் புரண்டுவரும் காவிரியை அரங்கம் தடுத்து அங்கேயே பிரித்து விட்டதைப் போல, அன்பு புரண்டு வரும் இவ்விருவரையும் ஆங்கிலப் படிப்பு தடுத்து அவ்விடத்திலேயே பிரித்துவிட்டது.
வழக்கறிஞன் பாரதி
சென்னைக் கிருத்துவக் கல்லூரியில் பயின்ற சோம. சுந்தர பாரதியார் பி.ஏ. பட்டத்தைப் பெற்றது 1902ஆம் ஆண்டில். அப்போது அவருக்கு வயது 23. அதன் பிறகு, சட்டக் கல்லூரியில் பயின்று பி.எல். பட்டமும் பெற்றார். அது 1905ஆம் ஆண்டில். அப்போது சட்டப்படிப்பின் காலம் மூன்று ஆண்டுகளாகும். வழக்கறிஞர் தொழிலை உடனே தொடங்கினார். தொடங்கியது துாத்துக்குடியில். அங்கு 15 ஆண்டுகள் நடத்தியபிறகு, மதுரைக்கு வந்து 10 ஆண்டுகள் வரை இத்தொழிலை நடத்தினார். அக். காலத்தில் இவரது தொழில் பலரது கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது வழக்கறிஞர் தொழிலைத் தொடர்ந்து நடத்திக் கொண்டுவந்து, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரியில் படிக்காமல் தாமாகவே தனித்துப் படித்து எம்.ஏ. பட்டம் பெற்றார். அது 1915 ஆம் ஆண்டில். இந்நிகழ்ச்சி அக்காலத்தில் பலருக்கு வியப்பை யளித்தது.
எழுத்தாளன் பாரதி
தமிழ் மொழியில் சிறந்த கருத்துக்களை உயர்ந்த நடையில் அழகு பெற அமைத்து, அழுத்தமாக எழுதும் ஆற்றல் ஒரு தனிப்பட்ட முறையாகப் பாரதியாரிடம் அமைந்திருந்தது. அவரது கட்டுரைகளை விரும்பிக் கேட்டு வாங்கி வெளியிட்டு வந்த அக்காலப் பத்திரிகைகள் மதுரைச் செந்தமிழ்”, கரந்தை தமிழ்ப் பொழில்,” சென்னைச் செந்தமிழ்ச் செல்வி முதலியன.
பேச்சாளன் பாரதி
வள்ளுவன் வரலாற்றை அறிய புலவர்கள் விரும்பினர். அதற்காக ஒரு பெருங்கடிட்டத்தைச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேராதரவோடு கூட்டினர். கட்டியவிடம் பச்சையப்பன் கல்லூரி மண்டபம். கட்டிய நாள் 1929ஆம் ஆண்டு, மார்ச்சுத் திங்கள், 11ஆம் நாளாகும். பேசியவர் சிலர். வெற்றி பெற்றது பாரதியின் பேச்சு. ஒப்பியவர்களில் தலைமை வகித்தவர் உ.வே. சாமிநாத ஐயர். இப்பேச்சு புத்தக வடிவில் வெளியிடப் பட்டிருக்கிறது.
கவிஞன் பாரதி
இவர் எழுதிய கவிதைகள் பல. அவற்றுள் முழுவதும் கவிதைகளாக வெளிவந்த நூல்கள் இரண்டு. ஒன்று “மாரிவாயில்”; மற்றொன்று “மங்கலக் குறிஞ்சி பொங்கல் நிகழ்ச்சி.” இக்கவிதைகட்கு என்றும் உயிர் உண்டு.
ஆராய்ச்சியாளன் பாரதி
“சேரர் தாயமுறை” “தசரதன் குறையும், கைகேயி ...நிறையும்,” “சேரர் பேரூர்” என்று தமிழ்மொழியில் இவர் மூன்று ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இம்மூன்று நூல்களும் தமிழ் அறிஞர்களுக்குப் பெருவிருந்தளிப்பன.
தொல்காப்பியப் பாரதி
தொல்காப்பியத்துள் பொருளதிகாரத்தை ஆராய்ந்து அகம், புறம், மெய்ப்பாடு ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் விளக்கம் எழுதித் தனித்தனி நூல்களாக வெளியிட்டிருக்கின்றனர். இன்னும் சில கருத்துக்கள் அச்சிடப்படாமல் இருக்கின்றன. தொல்காப்பியத்தில் ஏற்படும் ஐயப்பாடுகளை நீக்கும் ஒரே புலவன் பாரதி. இவர்களோடு தொல்காப்பியத்தின் பரம்பரைப் புலமை அற்றுப் போகாதிருக்க வேண்டுமே என்ற கவலை, இன்றைய தமிழறிஞர்களுக்கு உண்டாக வேண்டும் என்பதே என் கவலை.
நூலாசிரியர் பாரதி
“தமிழகமும் பழந்தமிழ் நூல்களும்” என்ற பெயரில் ஓர் அரிய நூலை ஆங்கில மொழியில் எழுதி உலக நூலாசிரியர் குழுவில் ஒருவராகத் திகழ்பவர் பாரதி. தமிழை, தமிழரை, தமிழகத்தை அறிய விரும்பும் பிற நாட்டினர்க்கு, இந்நூல் பெருந்துணையாக இருந்து வருகிறது.
சீர்திருத்த வீரன் பாரதி
சாதி வெறி தலைவிரித்து ஆடி நின்ற அக்காலத்திலேயே சாதிமுறை ஒழிந்தாக வேண்டும் என எழுதி, பேசி, நடந்து காட்டியவர் பாரதி. அக்காலத்தில் தம் திருமணத்தையே தமிழ்த் திருமணமாக நடத்திக்காட்டியவர்.
அரசியல் தலைவன் பாரதி
இளமையிலிருந்தே பாரதி சிறந்த தேச பக்தர்; வ.உ.சியுடன் இருந்து பெருந்தொண்டு செய்தவர். வர மறுத்துங்கூட காந்தியடிகளைக் கட்டாயப்படுத்தித் தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்று பேசச் செய்தவர் என்றும் பாரதியாருக்கு, காந்தியடிகள் மீது மாறாத அன்பு உண்டு.
நடுநாள் கண்ட பாரதி
ஆரியர்களுக்கு நாள் தொடக்கம் காலை 6 மணி. அராபியர்களுக்கு நாள் தொடக்கம் மாலை 6 மணி. ஐரோப்பியர்களுக்கு நாள் தொடக்கம் நள்ளிரவு 12 மணி. ஆனால் தமிழர்களின் நாள் தொடக்கம் நண்பகல் 12 மணி எனக்கண்டு கூறியவர் பாரதி. இக்கருத்தை அரண் செய்வது புறம் 280இல் ‘நடுநாள் வந்து’ என்ற. சொற்றொடர்.
சான்று காட்டும் பாரதி
பல சமயங்களில் பாரதியார் கூறும் முடிவைவிட அவர் காட்டும் சான்று சிறப்புடையதாகவிருக்கும். அவற்றுள் ஒன்று இது. ‘திருவள்ளுவ மாலை வள்ளுவர் காலத்திலேயே பாடப்பெற்றது அல்ல’ என்பது பாரதியின் முடிவு. அதற்கவர் காட்டும் சான்று உயிரோடிருக்கும் காலத்தில் ஒருவரை ஒருவர் பாராட்டுகின்ற வழக்கம் தமிழ்ப் புலவர்கள் தோன்றிய காலந்தொட்டு இன்றுவரையில்லை’ என்பதே.
பேராசிரியர் பாரதி
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அழைப்பை: ஏற்று, மதுரையில் தாம் நடத்தி வந்த வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டுச் சென்று, ஐந்து ஆண்டுக் காலம் பேராசிரியராக இருந்து தமிழ்ப்பணி செய்து வந்தவர். இது 1988 முதல் 1988 வரையாகும்.
பெரும் புலவன் பாரதி
பாரதியார் பழங்காலத்துப் பெரும் புலவர்களில் ஒருவராக விளங்கியவர். அவரோடு ஒத்த புலவர்கள் பலர். அவர்களிற் குறிப்பிடத் தகுந்தவர்கள்: வெள்ளக்கால் திரு வி.பி. சுப்பிரமணிய முதலியார். உ. வே. சாமிநாத ஐயர், அரசன் சண்முகனார், ரா.இராகவையங்கார், மு.ரா. கந்தசாமிக்கவிராயர், மு.ரா. அருணாசலக் கவிராயர், பா. வே. மாணிக்க நாயக்கர், சுவாமி விபுலானந்தர், நாட்டாரய்யா, நெல்லையப்பக் கவிராயர், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம்பிள்ளை, கா. சுப்பிர மணியப்பிள்ளை முதலியோர் ஆவர்.
புலவர் தலைவன் பாரதி
இவர்களிடம் பயின்ற மாணவர்களில் பலர் இன்று பெரும் புலவர்களாகவும், பேராசிரியர்களாகவும் திகழ்கின்றனர். அவர்களிற் சிலர் தமிழ்த்துறைக்குத் தலைமை வகித்துத் தனித்தனியாகப் பல கல்லூரிகளையும், பல்கலைக் கழகத்தையும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் எனக்குத் தெரிந்தவர்கள் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்கள், பூ. ஆலால சுந்தரம் செட்டியார் அ.ச. ஞானசம்பந்தன், வெள்ளை வாரணனார், இராசரத்தினம் அம்மையார், எஸ். இராசாமணி அம்மையார் முதலியோர்.
வாது புரியும் பாரதி
“தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்ற நூலைப்பற்றி, புலவர் சிலர் மனக்குறையடைந்த செய்தி, இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி அவர்கட்கு எட்டியது. அவர் தமது அவைப் புலவராகிய திரு.ரா. இராகவையங்கார் அவர்களை அழைத்து, இது பற்றிப் பாரதியாரோடு வாது புரியலாமா?’ என வினவினார். அய்யங்கார் விரிந்த மனப்பான்மையுடையவர். ஆதலின் அவர் கூறிய விளக்கத்தினால் அது நடைபெறாமற் போயிற்று.
உண்மை கண்ட பாரதி
சேரன் தலைநகராகிய வஞ்சி, திருச்சியை அடுத்துள்ள கரூரே என்று மு. இராகவையங்கார் அவர்கள் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்கள். பாரதியார் அதை மறுத்துத் திருச்சியில் உள்ள கரூரில் கடற்கரைப் பகுதி: இல்லையென்பதை எடுத்துக்காட்டிச் “சேரநாட்டுக் கடற்கரைப் பகுதியிலுள்ள பட்டினமே வஞ்சியும், கரூரும் ஆகும்” என நிலை நாட்டினார். காலப் போக்கில் உண்மை பாரதியாரையே தழுவியது.
நாவலர் பாரதி
சுவாமி விபுலானந்தர் அவர்களின் அழைப்பினை ஏற்றுப் பாரதியார் இலங்கைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் சென்று தமிழ்மழை பொழிந்தார். மனங்குளிர்ந்த அங்குள்ள புலவர் பெருமக்களால் வாழ்த்தி வழங்கப்பெற்ற பட்டமே “நாவலர்” பட்டமாகும். ஒல்லும் வகையெல்லாம் ஓயாமல் தொண்டுசெய்து மொழியை வளர்த்த மூதறிஞர் நாவலர்க்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினர், சென்னை மாநிலம் முழுவதையும் கூட்டி வைத்து வழங்கி மகிழ்ந்த பட்டமே ‘டாக்டர்’ பட்டமாகும்.
உணர்ச்சி வெள்ளம் பாரதி
சுப்பிரமணிய பாரதி புதுச்சேரி சென்று செயலிழந்து இருந்தபோது எவரும் எதுவும் பேசாதிருந்தனர். காரணம் அவரைப்பற்றிப் பேசினால், அது “'அரசத், துரோகக் குற்றம்’” ஆகும் என்பதே. அக்காலத்தில் சுப்பிரமணிய பாரதியைப் புதுச்சேரியில் விட்டு வைத்திருப்பது தமிழுக்கு ஓர் இழப்பு, தமிழனுக்கு ஓர் இழிவு. தமிழகத்திற்கு ஒரு மானக்கேடு என்று எழுதிப் பேசிக் கண்டித்துச் செய்தித்தாள்களில் வெளியிட்டுப் பயனை எதிர்பார்த்திருந்த உணர்ச்சிவெள்ளம் பாரதியின் உள்ளம். இதற்காக விடுதலை பெற்று வந்ததும் சு. பாரதி, சோ. பாரதியைக் கட்டித் தழுவிக் கண்ணீருகுத்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
இத்தகைய உயர்ந்த தமிழ் மகனாரது நூல்களைப் படித்துப் பயன்பெற வேண்டியது தமிழ் மக்களின் தலை சிறந்த கடமையாகும். வாழட்டும் பாரதியின் புகழ்! வளரட்டும் தமிழ்மொழி!
பேராசிரியர்
கா. நமச்சிவாய முதலியார்
“50 ஆண்டுகட்கு முன்பு எனது பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார் இல்லத்தில் ஒரு திருமணம். அத்திருமணத்தில் ஒடி ஆடி திருமண வேலைகளைச் செய்து கொண்டிருந்த ஒருவரை ‘யார்’ என்று விசாரித்தேன். ‘அவர்தான் கி. ஆ. பெ. விசுவநாதம் என்று ஒருவர் அறிவித்தார்” ஏன்று சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் ஒரு கூட்டத்தில் கூறியுள்ளார்.
அவ்வளவு தொடர்பு பேராசிரியர் நமச்சிவாய முதலியார் அவர்களிடத்தில் எனக்கு உண்டு. அவரது. தமிழ்ப்பற்றும், தமிழ்த்தொண்டும் என்னை அவர் பக்கம் இழுத்து இருக்கிறது.
திரு. நமச்சிவாயர் அவர்கள் சென்ற நூற்றாண்டுப் புலவர். 1876-இல் பிறந்தவர். இந்த ஆண்டு (1976) அவரது நூற்றாண்டு விழா ஆண்டு.
இவரது தந்தை திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர். தந்தையிடமே கல்வி பயின்று, பதினாறு வயதிலேயே ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக அமர்ந்தவர். மகாவித்வான் சண்முகம்பிள்ளை அவர்களிடம் பல ஆண்டுகள் தமிழ் நூல்களைக் கற்றுத் தமிழ்ப் புலவராகத் திகழ்ந்தார். பிறகு பல உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகத் திகழ்ந்து, 1914இல் மேரிராணி கல்லூரியில் ஆசிரியராகப் பணி புரிந்தவர். 1920 முதல் 14 ஆண்டுகள் அரசாங்கத் தமிழ்க் கல்விக்குழுவின் தலைவராகப் பணிபுரிந்தவர். அக்காலத்தில்தான் திரு. வி. க. அவர்களோடு சென்று முதல் முதலாக அவர்களைக் கண்டு பேசி மகிழ்ந்தேன்.
அவரது அமைதியான வாழ்க்கையும், அன்பு கலந்த இனிய சொல்லும், எவரையும் தன் வசம் இழுத்துவிடும். அவர் எழுதிய பாடப்புத்தகங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் நன்மதிப்பைப் பெற்று வந்தன. மாணவர்களுக்குத் தமிழ் உணர்வை ஊட்டி வந்தன.
இதுவன்றி, நூல்கள் பலவும் எழுதித் தமிழ்மக்களுக்கு வழங்கியவர். இவற்றுள் குறிப்பிடத் தக்கவை கீசகன், பிருதிவிராஜன், ஜனகன், தேசிங்குராஜன் என்னும் நூல்களாகும். எல்லாவற்றையும்விட ஐனவிநோதினி’ என்ற திங்கள் இதழில் அவர்கள் எழுதிவந்த கட்டுரைகள் பல தமிழ் மக்களைத் தட்டி எழுப்பின; அவ்வாறு உணர்ச்சி ஊட்டி எழுப்பப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
ஒழுக்கத்திற்கு மதிப்பளிக்கும் ஆத்திச்சூடி, வாக்குண்டாம் நல்வழி, நன்னெறி முதலிய நீதி நூல்களைப் பெரிதும் போற்றியவர். அவைகளுக்கு உரை எழுதி மக்களுக்கு வழங்கித் தமிழ் மக்களுடைய ஒழுக்கத்தை வற்புறுத்தி வளர்த்தவர். அவ்வுரைகள் எனக்குப் பெரிதும் பயன்பட்டன.
“தொல்காப்பியப் பொருளதிகாரம்'”, “தஞ்சை வாணன் கோவை”', “இறையனார் களவியல்” ஆகிய பெருநூல்களைப் பதிப்பித்து, அவர் காலத்தில் வாழ்ந்த பெரும் புலவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
தை முதல் நாளை தமிழ் மக்கள் தமிழ்த் திருநாளாக, திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்று கண்டு, தோற்றுவித்து. கட்டளையிட்டு நடத்திக் காட்டி நிலைநிறுத்தி மறைந்தவர். அப்பணியை அவர் வழியில் நான் இன்றளவும் நடத்தி வருகிறேன். நான் மட்டுமல்ல தமிழ்த் திருநாளையும் திருவள்ளுவர் திருநாளையும் கொண்டாடுகின்ற தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் அவரை நினைத்து போற்றி வணங்கியாக வேண்டும்.
அவர் ஒரு புலவர் மட்டுமல்ல; புரவலர் ஆகவும் திகழ்ந்தவர். பல புலவர்களுக்குப் பொருளுதவி செய்து மகிழ்ந்தவர். இவரது இல்லம் சென்னை சாந்தோம் கடற்கரையருகில், “கடலகம்” என்ற பெயரில் அழகுற அமைந்து, தமிழ் அன்பர்க்கும், தமிழ் பயில்பவர்க்கும் ஒரு கலைக் கூடமாகவே திகழ்ந்தது.
அவரிடம் வருகிறவர்களுக்கு அவர் சொல்லும் போதனைகளில் “சாதிச் சண்டைகளில், சமயப் பிணக்குகளில், அரசியல் கிளர்ச்சிகளில் தலையிட்டு வாழ்நாளை வீணாக்காதீர்கள்’’ என்பதும் ஒன்று. அதுவும் சும்மாவல்ல; காப்பி, தேநீர், பால் அல்லது மோருடன்.
மறைமலையடிகளும், திரு.வி.க. அவர்களும், நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களும், பொறியியல் வல்லுநர் பா. வே. மாணிக்க நாயகர் அவர்களும், திரு. முதலியார் அவர்களைப் பற்றி மிகப் பெருமையாகப் பேசுவதைப் பலமுறை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.
47 ஆண்டுகளுக்கு முன்பு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் நமசிவாய முதலியார் அவர்கள் நிகழ்த்திய தலைமை உரையில், “தமிழுக்குத் தெய்வத் தன்மை கற்பித்துப் பலர் சிறப்புக் கூறுகின்றனர். என் உள்ளம் அதை ஒப்புவதில்லை. தமிழுக்கு அதன் சொந்தத் தன்மையினாலேயே பல சிறப்புகள் உள்ளன” என்று கூறினார். இது அக்காலத்தில் உள்ள சைவத் தமிழ்ப் புலவர்கள் சிலருக்கு திரு. முதலியார் நாத்திகரோ என்ற ஐயத்தை உண்டாக்கிவிட்டது. இதையறிந்த பேராசிரியர் அவர்கள், சென்னையில் நடந்த தமிழ்த் திருநாள் கூட்டத்தில், ‘தமிழுக்குத் தெய்வத் தன்மையை வைத்துச் சிறப்புக் கூறுவது தெய்வத்திற்குச் சிறப்புக் கூறுவதாகுமே தவிர, தமிழுக்குச் சிறப்பு கூறுவதாக இராது. தமிழுக்கே உள்ள தனித் தன்மையை எடுத்துக் கூடறுவதே தமிழுக்குச் சிறப்பு கடறுவதாகும்” என விளக்கினார். இதை என் உள்ளம் ஒப்பியது மட்டுமல்ல, “தமிழின் சிறப்பு” என்னும் நூலை நான் எழுதுவதற்கு இது அடிப்படையாகவும் அமைந்து விட்டது.
திரு முதலியார் அவர்கள் ஒரு புலவர் மட்டுமல்ல, அவர் ஒர் பெருஞ் செல்வர் என்பதை நீலகிரி, உதக மண்டலத்திலுள்ள அவரது இரு மாளிகைகளும், அதில் மொய்த்துக் கொண்டிருந்த தமிழ்ப் புலவர்களின் கூட்டமும் காட்டும்.
பேராசிரியர் நமசிவாய முதலியார் அவர்கள் நல்லாசிரியராக இருந்து துணைவேந்தர் நெ. து. கந்தர வடிவேலு, நிதி அமைச்சர் சி. கப்பிரமணியம், தலைமை நீதிபதி பி. எஸ். கைலாசம், இந்தியப் பேரரசின் முன்னாள் அமைச்சர் ஒ. வி. அளகேசன் முதலியவர்களையெல்லாம் மாணவராக ஏற்று, தகுதியுடையவர்களாக ஆக்கித் தமிழகத்திற்கு உதவியவர்.
இத்தகைய ஒரு நல்லறிஞரைத் தமிழகம் இழந்து விட்டது. இது தமிழுக்கும் தமிழருக்குப் பேரிழப்பாகும். அவர் இன்று இல்லாவிட்டாலும் அவரது தொண்டு என் உள்ளத்தில் நிலைத்து நிற்கிறது. துணை வேந்தர் திரு. நெ. து. சுந்தரவடிவேலு, சென்னை நக்கீரர் கழகச் செயலாளர் திரு. சிறுவை மோகனசுந்தரம் போன்ற பல நல்லறிஞர்களின் உள்ளத்திலும், அவர் நின்று நிலவி வருகிறார். இது போதாது. தமிழும் தமிழரும் தமிழகமும் உள்ளவரை அவரது புகழ் நின்று நிலைத்திருக்க வேண்டும்.
கோவைப் பெருமகன் சி. கே. எஸ்.
உயர்திருவாளர் கோவை சி. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் தமிழகத்துப் பேரறிஞர்களில் ஒருவர். சைவப்பற்றும் தமிழ்ப்பற்றும் கொண்ட நல்லறிஞர். எழுத்தாலும் பேச்சாலும் இலக்கியப் பணி புரிந்த புலவர் பெருமகன். பி.ஏ. பட்டப் படிப்புக்குப் பாடநூலாகச் சேக்கிழார் என்னும் நூலை எழுதி உதவியவர். பெரியபுராணம் என்னும் நூலுக்கு உரை எழுதிச் சைவப் பெருமக்களுக்கு வழங்கிப் பெருமை பெற்றவர்.
எனது நண்பர்களாகிய கோவை ஜி. டி. நாயுடு, சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார், ஆர்.கே.சண்முகம் செட்டியார், பழையகோட்டைப் பட்டக்காரர் ஆகியவர்களின் உற்ற நண்பர்; கோவை நகராட்சி மன்றத்தில் பல தடவை உறுப்பினராக இருந்தும், ஒருமுறை துணைத் தலைவராக இருந்தும் பணி புரிந்தவர்.
சிறந்த வழக்கறிஞராக விளங்கி, கோவையில் பெரும் புகழ் பெற்றவர். இல்லறத்தை நல்லறமாக நடத்தி ‘சிவக்கவிமணி', ‘சைவப்பிதா’ என்ற பட்டங்களைப் பெற்றவர். தான் நல்ல வழியில் தேடிய செல்வங்களை எல்லாம் பல அறச் செயல்களுக்கு வழங்கித் துறவறத்தில் ஈடுபட்டு “சம்பந்த சரணாலயத் தம்பிரான் சுவாமிகள்”: என்ற பெயரையும் பெற்றுச் சிறந்து விளங்கி, சைவத் தமிழ் வாழ்வு வாழ்ந்து, தமது 83வது வயதில், இறைவனது திருவடியை அடைந்தவர்.
சுமார் 50 ஆண்டுகட்கு முன்பு நான் செயலாளனாக இருந்து நடத்திய திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்திற்கு வந்து அடிக்கடி சொற்பொழிவு நிகழ்த்தி மகிழ்வித்த பேரறிஞர். என்னிடம் நீங்காத அன்பு கொண்டவர்.
இவரது சிவந்த மேனியும், மெலிந்த உடலும், எளிமையான உடையும், அமைதியான தோற்றமும், கூர்மையான பார்வையும், இனிமையான சொல்லும் இன்றும் என் கண் முன்னே நிற்கின்றன.
இவரது அருஞ்செயல்களையும், பெருந்தொண்டுகளையும் பாராட்டி மகிழ, திரு எஸ். கந்தசாமி அவர்கள் தலைமையில் கோவைப் பெருமக்கள் ஒரு நினைவுக் குழு அமைத்து, மலர் ஒன்றையும் வெளியிட்டு விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இன்னும் நாம் என்னதான் செய்தாலும் திரு. முதலியார் அவர்கள் செய்த தொண்டுக்கு எதுவும் ஈடாகாது. அவருக்கு நன்றியும் வணக்கமும் செலுத்துவது ஒன்றே நாம் செய்ய வேண்டிய கடமையாக இருக்கும்.
அவர் உயிரோடு வாழ்ந்த காலத்தில், தமிழகம் முழுவதுமுள்ள புலவர் பெருமக்கள் அனைவரும் அவரை ஒரு பெரும் புலவராக மதித்து வணங்கி மகிழ்ந்த காட்சி, ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.
அவரது இழப்பு தமிழுக்கும் சைவத்திற்கும் ஒரு பேரிழப்பாகும். தமிழும், தமிழரும், தமிழகமும் உள்ள வரை அவரது புகழ் நீங்காது நிலைத்து நிற்கும்.
வாழட்டும் அவரது புகழ்!
வளரட்டும் அவரது தொண்டு!
தமிழவேள்
த. வே. உமாமகேசுவரம் பிள்ளை
தமிழவேள் என்று அன்போடு அழைக்கப்படுபவர் த. வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள். தாசில்தார் வேம்பப் பிள்ளையின் தலைமகன்; கரந்தை தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த ராதாகிருஷ்ணப் பிள்ளையின் தமையன். பெற்றோர் இருவரையும் மிக இளமையிலேயே இழந்ததால் அவருடைய சிறிய தந்தையாராலும், சிறிய தாயாராலும் வளர்க்கப் பெற்றவர்கள். தஞ்சைக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்று, மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து, பின் சட்டக் கல்லூரிக்குச் சென்று பி.எல். பட்டம் பெற்றுத் தஞ்சையில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து, நேர்மையாகத் தொழில் செய்து நற்பெயர் பெற்றவர் தமிழவேள். பொய்வழக்குகளை எடுத்து வாதாடுவதில்லை என்ற ஒரு கொள்கையுடையவர். ஆதலால் பல கட்சிக்காரர்கள் அவரிடம் நெருங்க அஞ்சி ஓடிவிடுவதைக் கண்ணாரக் கண்டிருக்கிறேன்.
அக்காலத்திய தாலுக்கா போர்டு, ஜில்லா போர்டு என்ற வட்டக் கழக, மாவட்டக் கழக உறுப்பினராக இருந்தும் தஞ்சை மாவட்ட நீதிக் கட்சித் தலைவராக இருந்தும், அவர் புரிந்த பொதுப் பணிகள் மிகப்பல.
அவர் எல்லோரிடத்தும் அன்புள்ளங் கொண்டு மிக அடக்கமாக இனியமொழி புகன்று நட்புப் பாராட்டுவதில் தலைசிறந்தவர். எனினும் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் திரு.ஐ. குமாரசாமிப்பிள்ளை ஆகியவரிடத்தும், என்னிடத்தும் அவர் கொண்ட நட்பு தனித்தன்மை வாய்ந்தது. அவர் தம்பி தோற்றுவித்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை மிகப்பெரிய அளவில் வளர்த்தும், சங்கத்தில் தமிழ்க் கல்லூரியை நிறுவியும், ஆண்டுதோறும் தமிழ்ப் பேரறிஞர்களை வரவழைத்து ஆண்டு விழா நடத்தியும் அவர் செய்த அருமையான தமித் தொண்டுகளே, என்னை அவர்பால் அன்பு கொள்ளச் செய்தன.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பு தமிழ் இன்றுள்ள நிலையில் இல்லை. மேடையிலும், வீதியிலும், வீட்டிலுங்கூட ஆங்கிலமே பேசுகின்ற காலம். சுருக்கமாகச் சொன்னால் தமிழில் பேச வெட்கப்படுகின்ற காலமெனக் கூறி விடலாம். அக்காலத்தில் தமிழ்த்தொண்டு செய்வது கடினமான ஒன்று. அதிலும் ஆங்கிலத்தில் பயின்று வழக்கறிஞர் பட்டம் பெற்ற அவர் செய்த தமிழ்ப்பணி என்னையே வியப்படையச் செய்தது.
அக்காலத்தில் ஆங்கிலக் கடல் நீந்தி தமிழ்க்கரையேறிய பெரியார்கள் மூவரில் இவர் ஒருவர். மற்ற இருவர், பசுமலை நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்களும் நெல்லை கா. சுப்ரமணியப்பிள்ளை எம்.ஏ., எம்.எல். அவர்களும் ஆவர்.
தமிழ்த்தொண்டு செய்வது எப்படி. என்பதையும், தமிழ்ப்பண்பாடு என்றால் என்ன என்பதையும், நாடு, மக்கள், மொழி, அரசு ஆகியவற்றிற்கு வழிகாட்டக் கூடியவர்கள் தமிழ்ப்புலவர் பெருமக்களே என்ற முடிவான கருத்தையும் நான் அவர்களிடந்தான் கற்றேன். அதுமட்டுமல்ல. விருந்தினர்களை உபசரிக்கும் முறையை நான் என் மனைவியாரிடம் புகுத்தியது தமிழவேள் அவர்களுடைய மனைவியாரிடம் நான் கற்ற பாடமே. இம்முறையில் அவரும் அவருடைய மனைவியாரும் என் ஆசிரியர்கள்.
சங்க உறுப்பினர்கள் யாராயிருந்தாலும், அவர்களது இல்லத்தில் இறந்தது சிறு குழந்தையாக இருந்தாலும், பல மைல்களுக்கப்பால் இருந்தாலும், தவறாமல் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறும் பண்பு அவரிடம் குடி கொண்டிருந்தது. தமிழுக்குத் தொண்டு செய்வதைவிட, சங்கத்தை வளர்ப்பதைவிட, வழக்கறிஞர் தொழிலைக் காப்பாற்றுவதைவிட, உண்மையையும், நேர்மையையும், ஒழுக்கத்தையும் காப்பாற்றுவதில் தலைசிறந்து விளங்கினார்.
கொடை
பிறருக்குத் தெரியாமல் கொடை வழங்கும் கொடையாளி அவர். அதிலும் பள்ளியில் பயிலும் பல குழந்தைகளுக்குச் சம்பளம், புத்தகம். உடை முதலியவைகளுக்கு வழங்கிவந்தது பாராட்டுதற்குரியது.
பயிற்று மொழி
தமிழகத்தில் ஆங்கில மொழி பயிற்று மொழியாக இருப்பதற்கு வருந்தித் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என முதன் முதலில் குரல் கொடுத்த பேரறிஞர் அவர்.
இறுதியாக அவரது உடல் இத்தமிழ் மண்ணில் கூடப் புதைக்கப்பட முடியாமல் வடநாட்டு மண்ணில் புதைக்கப்பட்டுப் போயிற்று. இதை எண்ணி ஒரு சொட்டுக் கண்ணிர் விட்டேன். வேறு என்ன செய்ய இயலும்?
தஞ்சை உள்ளவரை, கரந்தை உள்ளவரை, தமிழ்ச் சங்கம் உள்ளவரை, தமிழ்க் கல்லூரி உள்ளவரை, மட்டுமல்ல, தமிழர் உள்ளவரை, தமிழ் உள்ள வரை, தமிழகம் உள்ளவரை அவரது புகழும் மறையா.
1938-ல் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் பெரும் போரை நடத்த எனக்கு உற்ற துணையாக இருந்து பேருதவி புரிந்த தமிழவேள் அவர்களின் துணிவு என்னால் என்றும் மறக்கமுடியாதது. ‘காதல் என்றால் என்ன?’ என்பதை நான் புரிந்துகொண்ட அக்காலத்திலேயே தமிழ்க்காதல் என்று ஒன்று உண்டு; அது தலை சிறந்தது என்பதைப் புரிந்து கொண்டதும் அவரிடத்தில் தான்.
பெருமை என்பது பெருந்தன்மையே எனவும், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் எனவும் கூறிய வள்ளுவர் வாக்கிற்கிணங்க நடந்து காட்டி மறைந்த பேரறிஞர் தமிழவேள் உமாமகேசுவரர். அப்பெரியாரைப் பாராட்டி, தஞ்சை மக்கள் தமிழ்ச் சங்கத்தின் முன் சிலை எழுப்பி வைத்து வணங்கி நன்றி செலுத்தி வருகின்றனர்.
பண்டிதமணி
மு. கதிரேசஞ் செட்டியார்
“சைவமும் தமிழும் தழைத்தினிதோங்குக’’ என்பது. தமிழ்ச் சான்றோர் வாக்கு. இக்காலத்தில் இவ்வாறு: கூறுபவர்களைக் காண்பதே அரிதாயிருக்கிறது. அக்காலத்தில் இவ்வாறு கூறுவது மட்டுமல்ல செய்து கொண்டும் இருந்த சான்றோர்களில் பலர் நகரத்தார் சமூகத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் செய்துவந்த, கல்வித் தொண்டும், சமயத் தொண்டும் கணக்கிலடங்காதவை. அத்தகைய சமூகத்தில் பிறந்த பெருமகனே பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார்.
கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் பிறந்த தமிழ்ப் புலவர் பெருமக்களில் காரைக்குடி சொக்கலிங்க ஐயா அவர்களும் ஒருவர். அவர்களின் மாணாக்கர்களில் ஒருவரே பண்டிதமணி மு. கதிரேசஞ் செட்டியார் அவர்கள். செட்டியார் நாட்டில் பலவான்குடியில் ரா.ம.கு. ராம. இராமசாமிச் செட்டியார் என்ற சிவநேசச் செல்வம் ஒருவர் இருந்தார் சிவநேசன் என்ற பத்திரிக்கை ஒன்றை நடத்தி சிவநேசர் திருக்கூட்டம் ஒன்றையும் நடத்தி வந்தார். அதன் ஆண்டு விழா ஒன்றில் தலைமை வகித்தவர் கொரடாச்சேரி வாலையானந்த சுவாமிகள். அக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றியவர்கள் மூவர். அந்த மூவரில் இருவர் காரைக்குடி சொக்கலிங்க ஐயாவும் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியாரும் ஆவர். மூன்றாவது ஆள் நான் தான். ஆளுக்கு ஒரு மணி நேரப் பேச்சு.
காரைக்குடி சொக்கலிங்க ஐயாவுக்கு தலைப்பு “மணி வாசகர்”. பண்டிதமணி மு. கதிரேசஞ் செட்டியார் அவர்களுக்குத் தலைப்பு “திருவாசகம்”. எனக்குத் தலைப்பு “மணிவாசகரும் திருவாசகமும்”. ஏறத்தாழ மூவருக்கும் ஒரே தலைப்பு. இது நடந்த ஆண்டு குறிப்பாகக் கூற முடியவில்லை. என்றாலும், இது ஐம்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்பது மட்டும் உறுதி. அப்போதுதான் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்களை முதன் முதலாக ஒரே மேடையில் பேச்சோடு கண்டு மகிழும் பேறு எனக்குக் கிடைத்தது.விழா முடிந்த பிற்கு அவர்களின் நல்லாசியையும் பெற்று திரும்பினேன்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி உய்யக் கொண்டான் திருமலையில் திருக்கற்குடிச் சிவனடியார் திருக்கூட்டத்தின் ஆண்டு விழாவுக்கும் நாங்கள் இருவரும் அழைக்கப்பட்டிருந்தோம். தலைவர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரையா அவர்கள். மாலை ஆறு மணி. நானும் நாட்டாரையாவும் கோவில் திருக்குளத்தில் வழிபாடு (அனுட்டானம்) செய்து கொண்டிருந்தோம். பின்னால் பண்டிதமணி அவர்களும் வழிபாடு செய்வதற்காகக் கையில் கோலை ஊன்றித் தட்டுத் தடுமாறிக் குளத்தின் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர் நடந்து வந்து கொண்டிருந்த இடத்தில் ஒரு படி இல்லாததைக் கண்டு, நாட்டாரையா அவர்கள் செட்டியாரை நோக்கி, அங்கு “படியில்லை படியில்லை” என்று இரு முறை கூறி எச்சரித்தார்கள். அதற்குப் பண்டிதமணி மிகப் பொறுமையாக, “ஏனய்யா! இப்படி சிவன் கோவிலுக்கு வந்தும் படியில்லை என்று கூறுகிறீர்கள்” என்றார்கள். அந்தச் சிலேடைச் சொல்லைக் கேட்டு நாங்கள் இருவரும் பெருநகைப்பு நகைத்து மகிழ்ந்தோம்.
பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார் அவர்கள் பெரும் புலமை வாய்ந்த பேரறிஞர். அவரது ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் சைவ சமயப் புலமையும் கலந்த அவரது சொற்பொழிவு கேட்போர் உள்ளத்தைக் கிறுகிறுக்கச் செய்யும்.
அவர் ஒரு பரம்பரைத் தமிழ்ப் புலவர், கல்லூரியிற் பயிலாதவர். அவர் ஒரு பட்டதாரியும் அல்லர். இப்போது சிலருக்கு அரசு வழங்கியிருப்பதைப்போல அவருக்கு டாக்டர் பட்டத்தையும் அரசு வழங்கியதில்லை. என்றாலும் அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பெரும் பேராசிரியராக இருந்து தமிழ்ப் பணி புரிந்து வந்தார்.
இன்று தமிழில் டாக்டர் பட்டம் பெற்று தமிழ்ப் பணி புரிகின்ற புலவர்கள் பலர். இவர்களில் பெரும்பான்மையோர் பண்டிதமணி அவர்களிடம் பயின்ற மாணவர்களுடைய மாணவர்கள். அதாவது பேரன் மரபினர்.
அவரது சமயத் தொண்டைப் பற்றியும், தமிழ்த் தொண்டைப் பற்றியும் என்னிடம் பாராட்டிக் கூறிய பெருமக்கள் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரையா அவர்களும், பசுமலை நாவலர் டாக்டர் சோமசுந்தர பாரதியார் அவர்களும் ஆவர். பண்டிதமணி அவர்களைப்பற்றி நானாக அறிந்திருந்ததைவிட, இந்தப் பெருமக்கள் மூலம் அதிகமாக அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
எதிர்பாராவிதமாக ஒருநாள் திருச்சியில் கையில் கோலை ஊன்றித் தட்டுத் தடுமாறி என் இல்லத்தின் மெத்தைப் படிகளின் மீது ஏறி என்னைப் பார்க்க வந்த பண்டிதமணி அவர்களைக் கண்டு, ஒருபுறம் மகிழ்ச்சியும் மறுபுறம் அதிர்ச்சியும் அடைந்தேன். பிறகுவந்த செய்தி என்ன? நான் ஏதாவது செய்ய வேண்டுமா? என வினவினேன். அதற்கு அவர், “ஒன்றுமில்லை சும்மா பார்த்துப் போகலாம் என்று வந்தேன்” என்றார். பல முறை முயன்றும் அவர் வந்த செய்தியை என்னால் அறிய முடியல்லை. கடைசியாகக் கேட்ட பொழுது சும்மா பார்த்துப் போகலாம் என்றுதான் வந்தேன் என்ற விடையே கிடைத்தது; என்னால் அதை நம்ப முடியவில்லை.
‘ஏதாவது வந்த செய்தியிருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்’ என்று நான் கேட்டபொழுது, அவர் சிறிது அழுத்தமாக ஏதாவது வேலையிருந்தால்தான் வரவேண்டுமா? கம்மா வந்து பார்க்கக் கூடாதா?’ என்று என்னையே இரண்டு கேள்விகளைக் கேட்டு, “நான் வருகிறேன்” என்று நடக்கத் தொடங்கினார். எனக்கு இது பெரும் வியப்பைத் தந்தது.
பிறகு நானும் அவரோடு கீழே இறங்கி வந்து, “நீங்கள் இங்கேயே இருந்து, வந்த செய்தியை அறிவித்திருக்கலாமே! நான் கீழே வந்து பார்த்து மகிழ்ந்திருப்பேனே” எனக் கூறினேன். “அந்தத் தொந்தரவை உங்களுக்குக் கொடுக்க விரும்பவில்லை; நான் புறப்படுகிறேன். வேறு ஏதாவது வேலை இருக்கும்போது திரும்ப வருகிறேன்” என்று நடக்கத் தொடங்கினார். நான் பயந்து போய், அவரைக் கட்டாயப்படுத்தி உட்காரவைத்து, எனது மனைவி மக்களோடு அவரது திருவடிகளில் வணங்கி திருநீறு பெற்று மகிழ்ந்தோம். அந்த, நாள் என் கடைசி மகன் பிறந்த முப்பதாவது நாள்.
பண்டிதமணி அவர்கள் என் இல்லத்திற்கு வந்து சென்றதன் நினைவாக, அவரது திருப்பெயரை என் கடைசி மகனுக்கு வைத்து மகிழ்ந்தோம். இப்போது என் கடைசி மகன் கதிரேசனுக்கு வயது 42.
பண்டிதமணி அவர்கள் எங்களை அன்போடு வாழ்த்தி விட்டுத் திரும்பிச் செல்லுகிற நேரத்தில், இப்பொழுதாவது தாங்கள் வந்த செய்தியை நான் அறியலாமா?” என்று நான் வினவியபொழுது, பண்டிதமணி அவர்கள் ‘என் பேச்சில் உங்களுக்கு நம்பிக்கையில்லை என்று, தெரிகிறது நான் சும்மா பார்த்துப் போகலாம் என்று தான் வந்தேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் உங்களைப் பற்றியும் உங்களுடைய தொண்டுகளைப் பற்றியும் அடிக்கடி என்னிடம் கூறுவார்கள். நான் திருச்சிக்கு வேறு வேலையாக வந்தேன். தங்களைப் பார்க்காமல் போவது நல்லதல்ல என்று எண்ணியே பார்க்க வந்தேன். எனக்கு ஆகவேண்டிய வேலை ஒன்றும் உங்களிடமில்லை. அதற்காகத் தேடி வரவுமில்லை. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பார்த்ததில் எனக்கு அதிக மகிழ்ச்சி. உங்களைப் பார்த்து மகிழ்ந்த இச் செய்தியை நான் பசுமலை நாவலர் சோமசுந்தரம் அவர்களிடம் சொல்லி மகிழ்வேன்” எனக் கூறிச் சென்று விட்டார்கள்.
என் வாழ்நாட்களில் பெரும்பேறு பெற்று மகிழ்ச்சியடைந்த நாட்கள் சில. அவற்றில் ஒன்று பண்டிதமணி அவர்கள் ஒரு வேலையுமின்றி, என் இல்லத்திற்கு வந்த நாளும் ஒன்று.
அதன்பிறகு பண்டிதமணி அவர்களைப் பல்வேறு தடவைகளில் பல்வேறு இடங்களில் சந்தித்து உரையாடியும் மகிழ்ந்திருக்கின்றேன். இன்று என் போன்றவர்களிடம் தமிழ்ப்பற்றும் சமயப்பற்றும் சிறிதாவது காணப்படுமானால் அது பண்டிதமணி அவர்களின் அருந்தொண்டுகளினால் விளைந்தவையாக இருக்கும்.
வாழட்டும் பண்டிதமணியின் தொண்டு!
வளரட்டும் பண்டித மணியின் புகழ்!!
புரட்சிக் கவிஞர்
உலகத்தில் மதங்கள் பல. அவற்றுள் மிகப்பெரிய மதங்கள் ஒன்பது. இவை இந்து மதம், புத்தமதம், சமணமதம், இஸ்லாம் மதம், பார்லி மதம், சைவம், வைணவம், சன்மார்க்கம் எனப்பெறும். இவை ஒன்பதும் நாம் வாழ்கின்ற இதே ஆசியாக் கண்டத்தில் தோன்றியவை. இதனால், இக் கண்டத்தை ‘ஞானம் பிறந்த கண்டம்’, “ஞானம் பிறந்த கண்டமென நல்லறிஞர்கள் கூறுவதுண்டு. பிற கண்டங்களில் ஞானம் விளையாமல் உப்பே விளைவதனால் அவை உப்புக் கண்டங்களாகப் போய் விட்டன. இத்தனை சமயங்களுக்கும் இலக்கியங்களைச் செய்து, உலக மொழிகளில் உயர்ந்து நிற்கும் ஒரே மொழி நம் தமிழ் மொழி. பிற மொழிகளில் எதுவும் இப்பெருமையைப் பெறவில்லை.
ஒரு மனிதனும், ஒரு நாடும் வெவ்வேறல்ல. இரண்டும் ஒன்றே. இரண்டையும் ஓவியங்களாக வரைந்து பார்க்கின் இவ்வுண்மை புலப்படும். முடி – காடு, பேன் – விலங்கு, நெற்றி – சமயம், மூளை–மெய்ஞ்ஞானம் - விஞ்ஞானம், மூக்கு – சுகாதாரம், கன்னங்கள்–கலைகள், காதுகள் – ஒற்றர்கள், வாய் – பத்திரிகைகள், பற்கள் – ஆலைகள், கழுத்து – பாதுகாப்பு, கைகள் – தொழில்கள், கால்கள் – போக்குவரத்து, முதுகெலும்பு – வணிகம், வயிறு – விவசாயம். இவற்றுள் நெஞ்சுதான் பண்பாடு.
ஒரு நாட்டின் உறுப்புகளும் ஒரு மனிதனின் உறுப்புகளும் புறக்கண்களால் காணக்கூடியவை. ஒரு நாட்டின் பண்பாடும், ஒரு மனிதனின் பண்பாடும் அகக் கண்களால் காணக் கூடியவை. இப்பண்பாட்டை விளக்கி வற்புறுத்தித் செயல்படுத்துவதே நம் தமிழ் இலக்கியங்களின் உயிரோட்டமாகும். இத்தகைய பணியே. தமிழகத்துச்சான்றோர்களாகிய தமிழ்ப்பெரும் புலவர்கள் சங்க காலத்திலும் அதனைத் தொடர்ந்தும் நம் நாட்டில் செய்து கொண்டு வந்திருக்கின்றனர்.
அவர்களின் வழியில் கடந்த நூற்றாண்டிற் பிறந்தவர்களில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவவர், பூவை கல்யாணசுந்தர முதலியார், சோமசுந்தர நாயகர், பாம்பன் சுவாமிகள், நா. கதிரை வேல் பிள்ளை, மறைமலை அடிகள், திரு. வி.க., வ. உ. சிதம்பரனார், நாவலர் சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், தமிழ்க் காசு எம். எல். பிள்ளை நாட்டார் ஐயா முதலியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
இவர்களில் நாட்டுக்கும், மொழிக்கும் சமூகத்துக்கும் தொண்டு செய்யக் கருதிக் கவிதைகளைச்செய்து பெரும் பணி புரிந்தவர்கள். தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களும், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களும், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையும் ஆவர்.
இப்பரம்பரையில் இக்காலத்தில் தோன்றி மறைந்த ஒரே கவிஞர் கனக சுப்புரத்தினம் ஆவார். இவரது கவிதைகளில் நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும், சமூகப்பற்றையும் ஒருங்கே காணலாம்.
சமூக சீர்திருத்தத்தில் சாதிகள் ஒழிய, வறுமைகள் ஒழிய, தீண்டாமை அழிய, விதவை மணம் புரிய, பெண்னுரிமை பேண, கலப்பு மணம் செய்ய, பொருளாதாரம் வளர, தமிழ் மொழியைப் போற்ற புரட்சியைச் செய்த பெருமை இவரையே சாரும். இதனால் இவர் புரட்சிக் கவிஞர் என்ற பெயரைப் பெற்றார்.
தேசிய கவி சுப்பிரமணிய பாரதியாரிடம் இவருக்குப் பெருமதிப்பு உண்டு. அவருடைய தொண்டிலும், கவிதையிலும் பெரும்பற்றுக்கொண்டு அவரை ஆசிரியராகவும் கொண்டவர். இதனாலேயே அவர் பாரதிதாசன் என்ற பெயரும் பெற்றார்.
இவர் வாழ்ந்த காலத்தில் இவருக்கு ஈடு இணையான கவிதைகளை இயற்றுகின்ற ஆற்றலைப் பெற்ற புலவர்கள் எவரும் தோன்றவில்லை. இவரது பாடல்கள் பல்வேறு சுவைகளையும் ஒருங்கே தருவன.
45 ஆண்டுகளுக்கு முன்பு இவரது பாடல்களைத் திரட்டி ‘பாரதிதாசன் கவிதைகள்’ என நூலை வெளியிடும் தொண்டில் நான் பங்கு பெற்றேன். அதற்கு அவர் மதிப்புரை ஒன்றை வேண்டியபொழுது நான் எழுதித் தந்தது இது:
“கதைக்காக ஒரு முறை, கவிதைக்காக ஒரு முறை, கற்பனைக்காக ஒரு முறை, இன்பத்துக்காக ஒரு முறை, அதன் எழிலுக்காக ஒரு முறை, சுவைக்காக ஒரு முறை, சொல்லாட்சிக்காக ஒரு முறை படித்தேன். அது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படி–தேன் என ருசித்தது” என்பதே.
இவரது பரம்பரையாக இன்று தமிழகத்தில் பல இளம் புலவர்கள், கவிஞர்கள் தோன்றியிருக்கின்றனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் சுரதா என்பவர். சு-சுப்பு, ர-ரத்தினம், த-தாசன், எனத் தன் பெயரிலேயே புரட்சிக் கவிஞரின் பெயரையும் வைத்துக் கொண்டவர்.
இவரைப் போன்ற கவிஞர்கள் ஏராளமானவர்களைத் தமிழகம் பெற்றிருக்கிறது. இத்தகைய அறிஞர்கள் அனைவரையும் பாரதிதாசன் பரம்பரையே எனக்கூறலாம். இத்தகைய பரம்பரை தமிழகத்தில் இன்னும் அதிகமாக வளரவேண்டுமென்பதே என் விருப்பம். வளரும் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.
இக்காலத்திலும் எல்லோரும் கவிபாடலாம் என்றும், அதற்கு இலக்கணமே தேவையில்லை என்றும் ஒரு கருத்துப் பரவி வருகிறது. சில கவியரங்குகளில் பாடப்பெறுகின்ற கவிதைகளில் எதுகையும் மோனையுங்கூடத் தேவையில்லை எனக் கருதிகிறார்கள். இக்கருத்து அறிஞர்களால் ஏற்கக் கூடியதன்று. இத்தகையோர் பாரதிதாசன் கவிதைகளைப் பலமுறை படித்தறிவதன் மூலம் சிறந்த கவிதைகளை இயற்றும் ஆற்றலைப்பெற முடியும். இத்தகையோர்களால் நாடும் சிறக்கும்; மொழியும் வளரும்; மக்களும் நல்வாழ்வு வாழ்வர். பாரதிதாசன் பரம்பரையும் வளரும்.
“கோழியும் தன் குஞ்சுகளைக் கொத்தவரும் வான் பருந்தை சூழ்ந்து எதிர்க்க அஞ்சாத தொல் புலி” எனத் தமிழ் மண்ணின் வீரத்திற்கு உவமை கூறிய ஒரே கவிஞர் பாரதிதாசனார்.
இப்பெரும் புலவர் பெருமகனை நினைந்து தமிழக அரசு தான் நடத்தும் “தமிழரசு” இதழைத் தமிழ்ப் புத்தாண்டு இதழாக, தமிழ் வளர்ச்சி இதழாக, புரட்சிச் சிறப்பிதழாக கவிஞர் பாரதிதாசனார் சிறப்பிதழாக வெளியிட அவர் பெயரால் பல்கலை கழகம் அமைக்க முன் வந்திருப்பது கண்டு பெருமகிழ்ச்சியடைகிறேன்.
நாட்டுக்காக, மொழிக்காக, மக்களுக்காக, தமிழ்ப் பண்பாட்டிற்காக, தமிழக அரசினால் வெளிவந்து கொண்டிருக்கின்ற இத் “தமிழரசு” இதழும், தமிழக அரசும் இன்னும் இதுபோன்ற பல நல்ல தொண்டுகளைச் செய்து சிறப்புற்று விளங்க வேண்டுமென, இந்த நல்ல நாளில் முழுமனத்துடன் வாழ்த்துகிறேன்.
மூன்று தலைவர்கள்
சென்ற இதழ் நாட்டுத் தலைவர் நால்வரைத் தாங்கி வெளிவந்தது. இவ்விதழ் மொழித் தலைவர் மூவரைத் தாங்கி வெளிவருகிறது. ஆம். மொழியின் தலைவர் மூவர் மட்டுமே ஆவர்.
பெயர்
அவர்கள் உயர்திருவாளர்கள் மறைமலை அடிகளார். திரு. வி. கலியாணசுந்தர முதலியார், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் ஆகிய மூவருமே யாவர்.
குறிப்பு
இம்மூவரையும் முறையே அடிகள் என்றும், திரு. வி. க. என்றும், பாரதியார் என்றும் குறிப்பிடுவது வழக்கம்.
பிறந்த ஊர்
அடிகளுக்கு நாகப்பட்டினமும், திரு. வி. க. வுக்கு திருவாரூரும், பாரதியாருக்கு எட்டையபுரமும் ஆகும்.
வாழ்ந்த ஊர்
அடிகள் பல்லாவரத்தையும், திரு. வி. க. சென்னை இராயப்பேட்டையையும், பாரதியார் மதுரையை யடுத்த பசுமலையையும் தங்கள் வாழ்க்கைக்கேற்ற இடங்களாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
உரிமை
தமிழுக்கு உரிமையுடையவர்கள் இம் மூவருமேயாவர். இவர்களின் அனுமதியின்றித் தமிழ் மொழியில் கைவைக்க எவருக்கும் உரிமை இல்லை. அத்தகைய மக்களும் தமிழ் கூறும் நல்லுலகில் இன்றைக்கு இல்லை.
புலமை
திரு. வி. க. ஒரு தமிழ்ப் புலவர். பாரதியார் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிப் புலவர். அடிகளார் ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகிய மும்மொழிப் புலவர்.
வாழ்க்கை
அடிகளார் துறவி பூண்டு வாழ்பவர். பாரதியார் இல்வாழ்விலேயே இருப்பவர். திரு. வி. க. இரண்டிலும் கலந்து வாழ்பவர்.
வெறுப்பு
பாரதியார் வழக்கறிஞராயிருந்தும் அத் தொழிலை வெறுத்தவர். திரு. வி. க. மனைவியார் இறந்ததும் மனை வாழ்வை வெறுத்தவர். அடிகளார் துறவியாயிருந்தும் சந்நியாசத்தை வெறுத்தவர்.
அரசியல்
திரு. வி. க. அரசியலில் என்றைக்கும் தலையிடுபவர். பாரதியார் அரசியலில் தலையிட்டும், இடாமலும் இருப்பவர். அடிகள் அரசியலில் என்றைக்கும் தலையிடாதவர்.
தமிழ்
அடிகளின் தமிழ் சைவத் தமிழாகும். திரு. வி. க. வின் தமிழ் அரசியல் தமிழாகும். பாரதியாரின் தமிழ் இலக்கணத் தமிழாகும். எழுத்து
பாரதியார் அடித்தும், திருத்தியுமாவது தன் கையாலேயே எழுதும் ஆற்றலுள்ளவர். அடிகளார் அடித்தலும், திருத்தலும் இல்லாமல் அச்சுப்போல் எழுதும் ஆற்றல் படைத்தவர். திரு. வி. க. தன் கையாலெழுதும் எழுத்து வேலையை அடியோடு விட்டுவிட்டவர்.
பேச்சு
பாரதியாரின் பேச்சில் உணர்ச்சி கலந்திருக்கும். அடிகளின் பேச்சில் ஆராய்ச்சி கலந்திருக்கும். திரு. வி.க வின் பேச்சில் தீஞ்சுவை கலந்திருக்கும்.
பத்திரிகை
வாரப் பத்திரிகை நடத்தியவர் திரு. வி. க. மாதப் பத்திரிகை நடத்தியவர் அடிகளார். ஒரு பத்திரிகையும் நடத்தாதவர் பாரதியார்.
நூல்கள்
அதிக நூல்களை எழுதியவர் அடிகள். குறைந்த நூல்களை எழுதியவர் திரு. வி. க. சில நூல்களை மட்டுமே எழுதியவர் பாரதியார்.
பிள்ளைகள்
பெண்ணைப் பெற்று வளர்த்து காங்கிரசுக்கும், பிள்ளையைப் பெற்று வளர்த்து சுயமரியாதைக்கும் தந்தவர் பாரதியார். பிள்ளையைப் பெற்று வளர்த்தும் பெண்ணைப் பெற்று வளர்த்தும் தமிழுக்குத் தந்தவர் அடிகளார். எதையும் பெற்று எதற்கும் தராதவர் திரு. வி. க. தலைமை
இம் மூவரையும் தலைமை வகிப்பதற்கென்றே எல்லோரும் அழைப்பார்கள். அத்துடன் ஒரு சொற்பொழிவும் தனியாக இருக்கவேண்டும் என்று கேட்காத சங்கங்களோ சபைகளோ தமிழ் நாட்டில் இல்லை.
நிலை
பொருளும் வசதியும் பெற்றுப் பேசச்செல்லும் நிலையில் இருப்பவர் அடிகளார், வசதி மட்டும் பெற்று பேசச் செல்லும் உடல் நிலையில் இருப்பவர் பாரதியார். வசதி பெற்றாலும் பேசச் செல்ல இயலாத உடல் நிலையில் இருப்பவர் திரு.வி.க.
வம்பு
வம்புக்கு அஞ்சுபவர் அடிகளார். வம்புக்கு அஞ்சாதவர் பாரதியார். வம்புக்கே வராதவர் திரு.வி.க
கடவுள்
கடவுளைச் சிவமாகக் காண்பவர் அடிகளார். கடவுளை முருகனாகக் காண்பவர் திரு.வி.க. கடவுளை அருவமாகக் காண்பவர் பாரதியார்.
ஆரியர்
ஆரியரை ஆரியராகக் காண்பவர் பாரதியார். ஆரியரைத் தமிழராகக் காண்பவர் திரு.வி.க. ஆரியனாகவும் தமிழராகவும் இறைவனைக் காண்பவர் அடிகளார்.
வருந்துதல்
“சைவத்தைக் குறை கூறும் மக்கள் இன்னும் உயிரோடிருக்கிறார்களே” என்று வருந்தியவர் அடிகளார். “தமிழைக் குறை கூறும் மக்கள் இன்னும் உயிரோடிருக்கிறார்களே” என்று வருந்தியவர் பாரதியார். “இவர்கள் இருவரும் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறார்களே” என்று வருந்தியவர் திரு.வி.க.
ஒரே மேடை
இம் மூவரையும் ஒரே மேடையிற் காண்பது என்பது எவராலும் இயலாது. என் வாழ்நாளிலேயே ஒரு முறைதான் அத்தகைய வாய்ப்பு எனக்கு சென்னையில் கிடைத்தது.
ஒரே பெயர்
இத் திருமூர்த்திகளையும் ஒரு மூர்த்தியாக்கி திரு.வி.க. மறைமலைப் பாரதியார் என தமிழ் உலகிற் கூறுவதுண்டு. காரணம் இம் மூவரும் தமிழே ஆழ்ந்து, தமிழே பேசி, தமிழ் உருவம் பெற்ற ஒன்றினாலேயே ஆம்.
முதுமை
ஆண்டுகள் அறுபதை மூவரும் கடந்து, முதுமையைப் பெற்று, உடலும் தளர்ந்து, உணர்வும் தளர்ந்து, பொதுத் தொண்டுகளுக்கும் ஒருவாறு முடிவு கட்டிவிட்டனர் என்றும் கூறலாம்.
இளமை
என்றாலும், இன்றைக்கும்கூட தமிழுக்கு ஊறு என்று கேள்விப்படுவார்களானால், அவர்களின் உள்ளத் லும், உணர்ச்சியிலும், உடலிலுங்கூட- இளமையின் தோற்றத்தை எளிதிற் காணலாம்.
ஒத்த உள்ளம்
“தமிழ்மொழி தனிச் சிறப்புடையது. தனித்து இயங்கும் தன்மையுடையது. எந்த மொழியின் துணையும் அதற்கு எள்ளளவுந் தேவையில்லை. தமிழன் தமிழை முன்னிறுத்தி தமிழ் வாழ்வு வாழவேண்டும்” என்பதில் இம் மூவரும் ஒத்த உள்ளம் படைத்தவர்கள். பெருந்தவறு
இம்மூவரையும் தமிழ் மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை. இது தமிழ்நாடு செய்த பெருந்தவறேயாகும்.
தேவை
அடிகளின் தனித்தமிழ் உணர்ச்சியும், திரு. வி. க. வின் இலக்கிய உணர்ச்சியும், பாரதியார் அவர்களின் வீர உணர்ச்சியும் தமிழுக்கும் தமிழர்க்கும் தமிழகத்திற்கும் தேவை.
அரும் புதையல்
பணம் படைத்தவருள் எவரேனும் ஒருவர், நல்ல மனம் படைத்து, இம் மூவரிடத்தும் ஆறு புலவர்களை அனுப்பி, அவர்கள் தம் உள்ளத்தே ஆய்ந்து, தேடி, முடக்கி வைத்திருக்கும் அரும் புதையல்களை வெளிக் கிளப்பி, எழுதி, வெளியிட்டு, நாட்டிற்கு அளித்து நல்வாழ்வு வாழ வேண்டும் என்பது நமது ஆசை.
வாழ்க மூவர் வாழ்க தமிழ்மொழி!
—தமிழர்நாடு, 21—12—1947
நான்கு தலைவர்கள்
“சமயாச்சாரியர்கள் நால்வர்”, ‘சந்தானாச்சாரியார்கள் நால்வர்’ என்று கேள்விப்பட்ட உங்களுக்கு, தமிழ் நாட்டுத் தலைவர்கள் நால்வர் என்பது புதிதாகத் தோன்றலாம். ஆம்; தமிழ்நாட்டின் தலைவர்கள் நால்வர்கள்தாம்; ஐந்தாவது இல்லை.
மரியாதைச் சொற்கள்
அவர்கள் தேசபக்தர் வ. உ. சிதம்பரம்பிள்ளை, ஈ. வெ. இராமசாமி நாயக்கர், திரு. வி. கலியாணசுந்தர முதலியார், டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு ஆவர். இவர்கள் நால்வருக்கும் நாயுடு, நாயக்கர், முதலியார், பிள்ளை என்றே பெயர். அக்காலத்தில் பெயரைக் குறிப்பிடாமல் பட்டத்தைக் குறிப்பிட்டு அழைப்பதே மரியாதையாகக் கருதப்பெற்று வந்தது. இக்காலத்தில் இத்தகைய பட்டங்கள் அவ்வளவுக்கவ்வளவு வெறுக்கப் பெற்று வருகின்றன.
திசை
இந்நால்வரும் சாதியால் வெவ்வேறு கூட்டத்தைச் சார்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல, பிறந்த ஊர்களும், வளர்ந்த வாழ்ந்த விடங்களும் வெவ்வேறு ஆகும். சொல்ல வேண்டுமானால் பிள்ளை தெற்கு, நாயக்கர் மேற்கு. நாயுடு கிழக்கு, முதலியார் வடக்கு என்று சொல்லலாம் என்றாலும் பொதுத் தொண்டு செய்வதில் இந்நால்வரும் ஒருமைப்பட்டவர்கள் ஆவர்.
பயன் படுத்தல்
இந் நால்வரும் முதன் முதலில் தங்கள் பொதுநலத் தொண்டுகளை காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தே தொடங்கினார்கள். அக் காலத்தில் இவர்கள் நால்வரும் பிராமணர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்தார்கள். காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கமும் பத்திரிகையின் பலமும் பிராமணர்களின் கையிலேயே இருந்ததால், அவர்களும் இந்நால்வரை மட்டுமே விளம்பரம் செய்து, தங்களின் ஆதிக்கத்திற்குப் பயன்படுத்தி வந்தார்கள்.
ஒத்த உள்ளம்
காலம் செல்லச் செல்ல இந் நால்வரும் உண்மையை. உணர்ந்தார்கள். காலப்போக்கில் இந் நால்வரும் காங்கிரசை வெறுத்து வந்தார்கள். கடைசியாக இந் நால்வருமே காங்கிரசை விட்டு வெளியேறி விட்டார்கள். இதுதான் ஒத்த உள்ளம் என்பது!
பொதுத் தொண்டு
பிள்ளை காங்கிரசை விட்டு வெளியேறித் தமிழ்த், தொண்டு செய்தார். நாயக்கர் காங்கிரசைவிட்டு வெளியேறி சமூக சீர்திருத்தத் தொண்டுகளைச் செய்தார். முதலியார் காங்கிரசைவிட்டு வெளியேறித் தொழிலாளர்களுக்குத் தொண்டு செய்தார். நாயுடு காங்கிரசை விட்டு: வெளியே இந்து மகா சபைக்குத் தொண்டு செய்தார்.
பட்டம்
பிள்ளைக்குத் தேசபக்தர் பட்டம் கிடைத்தது. நாயக்கருக்கு வைக்கம் வீரர் பட்டம் கிடைத்தது. நாயுடுவுக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது. முதலியார்க்குத் தமிழ்த் தென்றல் பட்டம் கிடைத்தது.
ஆசிரியர்
நாயுடு, நாயக்கர், முதலியார் மூவரும் பத்திரிகாசிரியர்களாக விளங்கினார்கள். பிள்ளை நூலாசிரியராக விளங்கினார்.
ரசம்
பிள்ளையிடத்தில் சோக ரசமும், நாயக்கரிடத்தில் கார ரசமும், முதலியாரிடத்தில் சமரசமும், நாயுடுவிடத்தில் மின்சார ரசமும் குடிகொண்டிருந்தன. -
வாழ்க்கை
பொது வாழ்க்கையை, வியாபார விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டவர் நாயுடு. பொது வாழ்க்கையினால் தமது வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளாமலும், அழித்துக் கொள்ளாமலும் இருப்பவர் முதலியார். பொது வாழ்க்கையில் தன் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டவர் நாயக்கர். பொது வாழ்க்கையால் தன் வாழ்க்கையை அடியோடு அழித்துக் கொண்டவர் பிள்ளை.
ஒளி
இந்நால்வரும் காங்கிரசில் இருக்கும்போது மின்மினிப்பூச்சி ஒளியையும், வெளியேறிய பிறகு மின்சார ஒளி விளக்கு ஒளியையும் பெற்றவர்கள்.
குறை
இறந்த தமது நண்பர் பிள்ளையைப்பற்றி உயிரோடிருக்கும் நண்பர்கள் மூவரும் கவலைப்பட்டதாகவோ, அவர் குடும்பத்தைக் கவனித்ததாகவோ தெரியவில்லை. சொல்ல வேண்டுமானால், அவரை மறந்தே போனார்கள் எனவும் கூறலாம். இன்னும் கூறவேண்டுமானால் பிள்ளை அவர்களைப் பற்றிய இன்றைய தமிழ் நாட்டு விழிப்பு உணர்ச்சி அவர்களுக்கு வியப்பை அளிக்கும் என்றுகூட கூறலாம். இவர்களே முயன்றிருந்தால் கோவில்பட்டியில் ஒரு கோயிலும், குடும்பத்திற்கு சிறிது கூழும் கிடைத்திருக்கும்.
சிறை
பொது வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டு செய்ததின் பொருட்டு இந்நால்வரும் பலமுறை சிறை சென்றவர்கள். சிறையில் களைத்தவர் முதலியார். சிறையில் துன்புற்றவர் பிள்ளை. சிறைக்கு மகிழ்ந்தவர் நாயக்கர். சிறையில் செல்வாக்குப் பெற்றவர் நாயுடு.
பேச்சு
பிள்ளையின் பேச்சில் நாட்டுப் பற்றுச் சொட்டும். பெரியாரின் பேச்சில் உணர்ச்சி ஒளி தோன்றும். நாயுடுவின் பேச்சில் அரசியல் கலை மிளிரும். முதலியாரின் பேச்சில் தமிழ் மணங் கமழும்.
வழக்கம்
அறிவாளியின் வாழுங் காலத்தில் அவர்களை அறியாது வாழ்ந்து, மாண்டபிறகு மணிமண்டபங் கட்டுவது தமிழ் நாட்டின் இடைக்கால வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. மாண்டவர்களை மறந்து உயிரோடு இருப்பவர்களுக்கு விழாக் கொண்டாடுவது இன்றைய வழக்கமாக இருந்து வருகிறது. இருந்த போதும், இறந்த போதும் அறிஞர்களைப் போற்றி வாழ்வது பண்டைய வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இதுவே சிறப்பளிப்பதாக இருக்கும்.
40 ஆண்டுகள்
இந் நால்வருமே 60 ஆண்டுகளை கடந்தவர்கள்.40 ஆண்டுகளாக நற்றொண்டு செய்தவர்கள். இன்னும் சில ஆண்டுகளில் மறைந்த நண்பரைத் தேடிச்செல்லுங் காலத்தை, இருக்கும் மூவரும் தேடிக் கொண்டிருப்பவர்கள்.
பெறும்பேறு
இந்நால்வரைத் தமிழ்நாடு பெற்றது. அதனால் ஒரு பெரும்பேற்றைப் பெற்றது. நாட்டு அறிவு, அரசியல் அறிவு, இன அறிவு, மொழி அறிவு ஆகிய நான்கையும் தமிழ் நாட்டிற்கு இந்நால்வரும் தனித்தனியே தந்த, செல்வங்களாகும்.
எதிர்காலம்
தமிழ்நாடு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த நான்கு இளைஞர்களையே பெற்றது. இன்று நாற்பது. இளைஞர்களைப் பெற்றிருக்கிறது. எதிர் காலத்தில் நானூறு இளைஞர்களையும் பின் நாலாயிரம் இளைஞர்களையும் பெறும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. வாழ்க நால்வர்.
வாழ்க தமிழ் நாடு.
—தமிழர்நாடு, 7-12-1947
டபிள்யூ பி. ஏ. செளந்திர பாண்டியன் பாண்டியர் வரலாறு
தமிழக வரலாறு எழுதப்படும்பொழுது அதில் பாண்டிய நாட்டு வரலாறு முதலிடம் பெறும். பல பாண்டியர்களின் வரலாறு தமிழகத்தில் மங்கி மறைந்து கிடக்கின்றன. அவற்றுள் ஒன்று செளந்திர பாண்டியரின் வரலாறு.
மதுரை மாவட்டம் நிலக்கோட்டை சிறுவட்டம் வத்தலக்குண்டைச் சார்ந்த பட்டிவிரன்பட்டியில், 1893 இல் பிறந்தார், திரு. செளந்திரபாண்டியர். இவரது தந்தை திரு. ஊ. பு. அய்ய நாடார்; தாய் சின்னம்மாள். அக்காலத்தில் பொதிமாடுகளில் சரக்குகளைச் சுமந்து பல சிற்றுார்களுக்குச் சென்று, நாணயமாக வணிகம் நடத்திப் பெரும் புகழ்பெற்றவர் திரு. அய்ய நாடார்.
திரு. பாண்டியருடைய சகோதரர் திரு. ஊ. பு, அ ரெங்கசாமி நாடார். இவரது சகோதரிகள் மூவர்.
தனது 20 ஆவது வயதில் திருமதி பாலம்மாள் இவரது வாழ்கைத் துணைவியரானார். இவருக்கு ஆண்மக்கள் மூவர். ஒரே மகள் விஜயாம்பிகை.
கம்பீரமான தோற்றம்
திரு. செளந்திரபாண்டியன் கடினமான உழைப்பாளி , உயர்ந்த பயிர்த் தொழிலாளி; பெரிய தோட்டமுதலாளி; சிறந்த அறிவாளி; சிருக்கமான எழுத்தாளி’ அழுத்தமான பேச்சாளி; வாரி வழங்கும் கொடையாளி.
ஆறு அடி உயரம்: 180 பவுண்டு நிறை; கருத்த நிறம்; பளபளப்பான மேனி; எளிமையான நடை; பரந்த மார்பு; திரண்ட தோள்கள்; நீண்ட கைகள்; அடர்ந்த மயிர்; விரிந்த நெற்றி; அகன்ற கண்கள்; கூர்மையான பார்வை-இவை அத்தனையும் சேர்ந்து ஒருங்கே கண்டால், அது செளந்தர பாண்டியர் என்பது பொருள்.
ஒரு குடும்பத்தின் தலைவனாக, உறவினர் பலரின் பாதுகாவலராக, ஏழைகள் பலருக்கு ஆதரவாளராக, பயிர்த் தொழிலாளியாக, தோட்ட முதலாளியாக, வணிகராக, அரசியல் அறிஞராக, நீதிக்கட்சி உறுப்பினராக, சுயமரியாதை இயக்கத் தலைவராக, பகுத்தறிவுவாதியாக, ஜில்லா போர்டு தலைவராக, சென்னைச் சட்டசபை உறுப்பினராக, பெருங்கொடையாளியாக மட்டுமல்ல, ஒரு உயர்ந்த பேச்சாளியாகவும் வாழ்ந்து மறைந்தவர் நமது செளந்திர பாண்டியனார். மறைந்த ஆண்டு 1953. வாழ்ந்த ஆண்டுகள் 60.
தலைமைப் பேருரை
அன்று வரை-வரலாறு காணாத அளவில், முதலாவது சுயமரியாதை மாநாடு ஒன்று செங்கற்பட்டு நகரில் நடைபெற்றது. பனகல் அரசர் முதல் பல அமைச்சர்களும் பங்கு பெற்ற மாநாடு—அது. மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவர் சென்ற ஆண்டு அரசாங்கத் தலைமைவழக்குரைஞர். திரு.மோகன்குமாரமங்கலத்தின் தந்தையும், இன்றைய இந்திய நாட்டுத் தலைமை தளபதி திரு. குமாரமங்கலத்தின் தந்தையும் ஆகிய சேலம் குமாரமங்கலம் ஜமீன்தார் திரு. டாக்டர் சுப்பராயன் ஆவார். நாடு முழுதுமிருந்து பங்கு பெற்ற தோழர்கள் ஏறத்தாழ இருபதினாயிரம் பேர்கள். செங்கல்பட்டுப் புகைவண்டி நிலையத்தின் முன் உள்ள கடல் போன்ற ஏரிநீர் முழுதும், மகாநாட்டின் பிரதிநிதிகள் குளித்ததனால் சேறாகி விட்டது என்பது எதிர்க்கட்சியினர் கூறிய புகார். மாநாட்டின் சிறப்பைக் கூற இது ஒன்றே போதுமானது. வரலாறு காணாத பெருஞ்சிறப்புடன் நடைபெற்ற மாநாடு அது. அந்த மாநாட்டின் தலைவர்தான் நமது செளந்திரபாண்டியன். ஆண்டுகள் 40 ஆகியும் அவர் அம்மகாநாட்டில் ஆற்றிய தலைமை உரை இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
கொடைக்கானல் மோட்டார் யூனியன்
இன்று கோடைரோடு ரயில் நிலையத்திலிருந்து, கொடைக்கானல் மலைக்கு ‘கொடைக்கானல் மோட்டார் யூனியன், பஸ் போக்குவரத்து இருந்து கொண்டிருக்கிறது. அது தொடங்கியது திரு. செளந்திர பாண்டியர் ஜில்லா போர்டு தலைவராக இருந்தபோதுதான். கோடைமலைக்குப் பஸ் போகாதிருக்க வந்த எதிர்ப்புகள் இமய மலை அளவு. அதை நிலை நிறுத்தியவர் செளந்தர பாண்டியர். அந்த நிறுவனம் உள்ளவரை அவரது பெயரும் மறையாது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
திரு. பாண்டியனார் ஜில்லா போர்டு தலைவராக இருந்து போது, ஒரு உறுப்பினர் அவர்மீது நம்பிக்கையில்லாத் திர்மானம் போர்டு கூட்டத்தில் கொண்டு வரப்போவதாக அறிவித்திருந்தார். அன்று கூட்டத்திற்குத் தலைமை வகிக்க வந்த பாண்டியர், கூட்ட நிகழ்ச்சியைத் தொடங்காமல், முதலில் தன் இராஜினமாக் கடிதத்தைப் படித்து விட்டு விலகிக்கொண்டார்.
“தீர்மானம் கூட்டத்திற்கு வருகிறதா இல்லையா என்பதும், வந்தாலும் யாராவது ஆதரிப்பாரா என்பதும் தெரியவில்லை. அதற்குள் நீங்கள் இராஜினாமா செய்வது சரியல்ல” என்று ஒருவர் சொன்னார்.
அதற்கு திரு. பாண்டியர் கூறியதாவது, “இந்தப் போர்டில் ஒரு ஆளுக்கு என்மீது நம்பிக்கை இல்லாதிருந்தாலும் நான் தலைமைப்பதவி வகிப்பது சரியல்ல’ என்று கூறினார். எல்லோரும் சேர்ந்து வற்புறுத்தியும்கூட திரு. பாண்டியர் தலைமைப்பொறுப்பேற்க மறுத்து விலகிவிட்டார். அக்காலத்து பதவிகள் இம்மாதிரித் தலைவர்களைப் பெற்றிருந்தன.
சிறந்த நண்பர் சர். பி. டி. இராஜன்
திரு. செளந்திர பாண்டியனின் தலைசிறந்த நண்பர் சர். பி. டி. இராஜன். இவர்கள் இருவரும் இரட்டையர்கள் என்றே எல்லோரும் கூறுவதுண்டு. சிகரெட்டுப் புகைப்பதிலிருந்து சீட்டாடுவதுவரை, அரசாங்கத்தில் நிர்வாகம் செய்வதிலிருந்து பொதுமக்களுக்கு உதவி செய்வதுவரை இருவரும் இரட்டையர்களாகவே திகழ்ந்தனர். யார், எதை எவரிடம் வினவினாலும், பாண்டியரிடமிருந்து வரும் விடையெல்லாம் ‘'ராஜனைக் கேட்க வேண்டும்; ராஜனிடமிருந்து விடையெல்லாம் ‘'பாண்டியனைக் கேட்க வேண்டும்!” என்றுமே இருக்கும். ஆம். அவர்கள் உண்மையாகவே மதுரையின் இரட்டைத் தலைவர்களாகவே விளங்கினர்.அதனாலேயே செளந்திர பாண்டியனுடைய மூத்த பேரனுக்குப் பெயரிட அழைத்த போது, ‘பாண்டியராஜன்’ என நான் பெயர் வைத்தேன். அவர்கள் துவக்கிய ஆலை இருக்கும் இடத்திற்கும் ‘பாண்டியராஜபுரம்’ எனப் பெயரிடும்படியும் தெரிவித்தேன் -
‘கோபமுள்ள இடத்தில் குணமிருக்கும்’ என்பது தமிழகப் பழமொழி. இதற்கு இலக்கணமாக அமைந்தவர் பாண்டியர். அவரை முன்கோபி என்று பலரும், குணக்குன்று என்று பலரும் கூறுவர். இதனாலேயே எல்லாரும் அவரிடம் காட்டும் மரியாதையில் அச்சமும் கலந்திருக்கும். உண்மை நட்பு
ஒரு சமயம் சர். பி. டி. இராஜன் இல்லத்தில் பெரியாரும், நானும், பாண்டியனும், ராஜனும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது சென்னையில் மேயராகவிருந்த இராவ் சாகிப் திரு. சிவராஜ் பற்றி பெரியார் ராஜனிடம் குறை கூறினார். அவரும் பெரியாருடன் இணைந்து கூறினார். உடனே திரு. பாண்டியர் விரைந்து எழுந்து உரக்கக் கூறியது இது; “நாம் சிவராஜின் உண்மையான நண்பர்களல்ல. நாம் உண்மையான நண்பர்களாக இருந்தால், அவர் இல்லாத இடத்தில் அவரைப்பற்றிப் பேசியிருக்க மாட்டோம். அவரை வரவழைத்து அவரது எதிரில்தான் பேசுவோம். நீங்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருக்க எனக்கு விருப்பமில்லை.
இவ்வாறு கூறி, பாண்டியர் அவ்விடத்தை விட்டு அகன்றது கண்டு பேரதிர்ச்சியடைந்தேன். அவரது முகத்தில் ‘கோபக் கனலை’ கண்டது எனக்கு அதுவே முதல் தடவை. எவரும் எதுவும், பேசவில்லை. சில நிமிடங்கள் வரை. பின்னர் திரு. இராஜன் சமாதானம் கூறி, அவர் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தார். அவர் சமாதானமடைந்து என அருகில் அமர்ந்தாலும், அவர் விட்ட மூச்சு ஊது உலை போன்று அனல் இருந்தது. அன்றுதான் நான் நட்பின் தன்மை என்றால் என்ன என்ற முதல் பாடத்தைக் கற்றுக் கொண்டேன்.
மற்றொரு சமயம் தோட்டத்தில் ஒரு தொழிலாளி பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக ஒரு வழக்கும், சூதாடியதாக ஒரு வழக்கும், குடித்திருந்து வேலைக்கு வராதிருந்ததாக ஒரு வழக்கும், வாழைத் தாரை திருடிவிட்டதாக ஒரு வழக்கும் பட்டிவீரன் பட்டிக்கு வந்தன. நான் அப்போது அங்கு இருந்தேன். பாண்டியனார் விசாரிக்கத் தொடங்கினார். என்ன நடக்குமோ என எல்லோரும் அச்சமும் திகிலும் அடைந்திருந்தனர். சீட்டாடியது சூது அல்ல என்று அவனை விசாரிக்காமலேயே விரட்டி விட்டார். குடிகாரனை ஏதோ களைப்பினால் குடித்திருப்பான் என்று எண்ணி, இனி குடிக்காதே எனக்கண்டித்து விட்டு விட்டார். பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டால் உன் உயிர் போய்விடும் ஜாக்கிரதை என்று எச்சரித்து மன்னித்து அனுப்பிவிட்டார். வாழைத்தார் திருடியவனைத்தான் விசாரித்தார். அப்போது தம்பி ரெங்கசாமி அவன் திருடிய தாரையும் கொண்டுவந்து எதிரில் வைத்தார்.
“ஏன் இதைத் திருடினாய்?” என திருடியவனைக் கேட்டார். “எஜமான் நான் திருடியது தப்பு. பசியினாலே சாப்பிடத் திருடினேன். இனிமேல் திருடவில்லை” என்றான் அவன்.
“நீ இந்த ஒரு தார்தான் திருடினாயா? இதற்கு முன்னும் பல தார்களைத் திருடினாயா?” என பாண்டியர் கேட்டார்.
“இது ஒன்றுதான்” என்றான் அவன். “நீ எத்தனை தார் தூக்குவாய்?” என்றார். மூன்று தார் தூக்குவேன்’. என்றான். “எங்கே கிடங்கினுள் சென்று பெரிய தாராகப் பார்த்து ‘மூன்று தார்களைத் துக்கி வா, பார்க்கலாம்’ என்றார். அவனும் அவ்வாறே துக்கி வந்தான். நான்காவது தாராக திருடப்பட்ட தாரையும் தூக்கச் சொன்னார். திணறி முக்கித் தூக்கினான்.“போ, கொண்டு போய்ச் சாப்பிடு. இனித் திருடாதே” என்று பாண்டியர் கூறியது அனைவரையும் வியப்பிலாழ்த்தியது. அந்த நான்கு தார்களையும் அந்த ஆள் எடுத்துப் போகாமல் கீழே வைத்துவிட்டுக் கோவெனக் கதறி அழுது, “எஜமான், நான் ஜென்மத்துக்கும் திருடமாட்டேன்” என்று தரையில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். ‘போடா–போடா’ என்று விரட்டி விட்டார் அவனை. இவ்வாறாக விசாரணை தர்பார் முடிந்தது. அடுத்த நிமிடம் பண்ணையாள் ஒருவன் ஏதோ பேசினான். அவன் பேசியது ‘பொய்’ என்று தெரிந்ததும், பெரிதும் ஆத்திரப்பட்டு அவனை அடிக்கத் தன் வலது காலை மடக்கி ஓங்கினார். நான் தடுத்திராவிட்டால் அந்த வேலையாளின் பற்கள் உதிர்ந்திருக்கும். ஏனென்றால் பாண்டியனது வலது கால் எதிரிலுள்ளவனுடைய வலது கன்னத்தைத் தாக்கும் வலிமை படைத்தது. இக்கலையை அவரிடமின்றி நான் வேறு எவரிடமும் கண்டதில்லை.
வேறொரு சமயம் இதற்கு விளக்கம் கேட்டதற்கு ஒருவனுக்கு, குடியும், சூதாடுதலும், நெறி தவறுதலும், திருட்டும் சந்தர்ப்பத்தாலும் சூழ்நிலையாலும்நேரிடுவன. ‘பொய் பேசுவது ஒன்று மட்டும் ஒருவனுடையே அயோக்கியத்தனத்தினாலேயே நேரிடுவதும் என்றும், அதனால் அதைத் தன்னால் சகிக்க முடியவில்லையென்றும் அவர் கூறினார். அன்றிலிருந்துதான் நானும் பொய் பேசுகிறவர்களை வெறுக்கக் கற்றுக்கொண்டேன்.
வாரி வழங்கு வள்ளல்
இல்லையென்று வந்தவர்களுக்கு இல்லையென்னாது வழங்கிய வள்ளல் பாண்டியர். குடும்பச் செலவுக்கு எடுத்து வந்த பணத்தையும் கொடை கொடுத்து வந்தவர் பாண்டியர். வாட்டமடைந்த முகத்தைக் கண்டால் தோட்டத்திற்குக் கூலிக்காக அனுப்பவிருக்கும் தொகையும் கொடுத்துவிடுவார்.
அன்னையின் ஆனை
வருமானத்திற்கு மீறிய கொடைத்தன்மை அவரிடம் இருந்ததால் பண்ணைக்குச் சிறிது கடன் வந்தது. அதைப் போக்க ஒரு புதிய தொழிலைத் தொடங்க எண்ணினார். அது திராட்சைப் பழங்களிலிருந்து இரசம் இறக்கி பலநாள் கெடாமல் வைத்திருப்பது. அதற்கு வேண்டிய அறிஞர்களையெல்லாம் வரவழைத்து, பெருஞ் செலவில் ஆராய்ச்சியெல்லாம் செய்து முடித்துவிட்டார். அதற்கு வேண்டிய வெளி நாட்டுப் பொறிகள் எல்லாம் வரவழைக்கப் பெற்று விட்டன. அவர் தயாரித்த திராட்சை ரசத்திற்கு மிக நல்ல பெயர். சுவைத்துப் பார்த்தவர்களெல்லாம் நற்சான்று வழங்கத் தொடங்கி விட்டனர். பாதிரிமார்கள் சிலர் பட்டி வீரன்பட்டி திராட்சை ரசம் தங்களின் பூசைக்கு ஏற்றது என முடிவு கட்டி அதை வாங்க முன்வந்து விட்டனர். பாண்டியரின் நண்பர்களெல்லாம் அவர் திரட்டப்போகும் பெருஞ் செல்வத்கைக் கண்டு மகிழ்ச்சியடைந்திருந்தனர். பகைவர்களெல்லாம் பொறாமைப் பட்டனர். அந்நிலையில் நான் பட்டிவீரன் பட்டிக்குச் சென்றிருந்தேன். சாப்பிடும்போது பெரியம்மா என்னிடம், “தமிழ், திராட்சை ரசம் இறக்கும் வேலையை விட்டுவிடும்படி அண்ணனிடம் சொல்லு என்றார்கள். சொன்னேன். அவ்வளவுதான்; விரைந்து எழுந்து தாயிடம் போய், “அம்மா இதைவிட்டால் பெரும் பொருள் நட்டம் வருமே!” என்றார். அம்மா அவர்கள் வேறு எதுவும் கூறாமல், “இது நம் குடும்பத்தில் வேண்டாம்” என்றார்கள். அவ்வளவுதான், என்ஜின்கள் எங்கு போயிற்றோ? எஞ்சினியர்கள் போய்விட்டார்கள்.
மறுநாள் காலையில் நானும் பாண்டியரும் எங்கோ சென்று கொண்டிருக்கிறோம். மணப்பாறைக்கு அருகில் வரும்போது, பாண்டியனின் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணிர் வந்தது. ஏன் என வினவியபோது, அதைத் துடைத்துக் கொண்டு அவர் கூறியவை இவை:-
“எனக்கு அறிவு வந்த நாட்களாக நான் செய்யும் எந்தச் செயலையும் அம்மா வேண்டாம்” எனச் சொன்னதே இல்லை. நேற்றுத்தான் அவர்கள் முதல் தடவையாக வேண்டாம் என்று சொன்னார்கள். முன்னதாக அவர்களது கருத்தை அறியாமல் போனேன். அதை நினைக்கும்போது மனம் வேதனைப்படுகிறது.”
வீர மகன்
இதைக் கேட்ட போதுதான் ‘ஒரு வீரமகனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அவனது தாயின் சொல்லுக்கே உண்டு’ என்ற கருத்தை மனோகரன்’ நாடகத்தில் மட்டுமல்ல, பட்டிவீரன் பட்டியிலும் உண்டு என அறிய முடிந்தது.
உள்ளத்தால் உயர்ந்தவர்
திரு. ஏ. எஸ். எஸ். எஸ். சங்கரபாண்டிய நாடார் காங்கிரஸ் கட்சியின் தலைவர். திரு. ஊ. பு. அ. செளந்திர பாண்டியனார் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர். இருவரும் மைத்துனர்கள். ஒரு சமயம் அவர் விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று சிறையில் அடைக்கப் பெற்றிருந்தபோது பாண்டியனும் நானும் அவரைப் பார்க்கப் போயிருந்தோம். சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறிச் சலுகைகளைப் பெற அவரே மறுத்து விட்டது எனக்கு வியப்பையளித்தது. அன்று அவர்கள் இருவரும் அளவளாவிப் பேசிக் கொண்டதிலிருந்து, ‘நல்லவர்கள் உள்ளத்தில் கட்சிக் கடுப்பு இருப்பதில்லை என்ற உண்மையை உணர்ந்து மகிழ்ந்தேன்.
மாவீரர்
திரு. ஏ. எஸ். எஸ். எஸ் சங்கரபாண்டிய நாடார் முதலில் மைத்துனர், பிறகு தீனதயாளனுக்குப் பெண் எடுப்பது என்ற முடிவுக்கு வந்தபோது, சம்பந்தியும் ஆனார். திருமணம் விருதுநகரில்.
பதிவுத் திருமணம்; ரிஜிஸ்டிரார் மணப்பந்தலுக்கே வந்து நடத்தி வைத்தார். சாட்சிக் கையெழுத்து யாரைப் போடச் சொல்வது? என்ற சிக்கல் வந்தது. இது பெரும் பிரச்சினையாக வந்துவிடும்போல் தோன்றியது. இறுதியில் சம்பந்தி பெண்வீட்டார் சார்பில் கே. காமராஜ் கையெழுத்திடுவார்’ எனக் கூறினார். உடனே பாண்டியர் ‘மாப்பிள்ளை வீட்டார் சார்பில் கி. ஆ. பெ. விசுவநாதம் கையெழுத்திடுவார்’’ எனக் கூறினார். இருவரும் ஒப்ப, அதன்படி கையெழுத்திட்டுத் திருமணம் இனிது முடிந்தது. இத் திருமணத்தைப் போல் விறுவிறுப்யும், ஆனால் அதே நேரத்தில் அமைதியும் கலந்த திருமணம் ஒன்றை நான் இன்னும் கண்டதில்லை.
அஞ்சா நெஞ்சம் படைத்தவர்
விருதுநகரில் திரு. வி. வி. இராமசாமி ஜில்லாபோர்டு தேர்தலுக்கு நின்றார். போட்டி மிகக் கடுமையாக இருந்தது. ஒரு நாள் திரு. பாண்டியர் தலைமையில் நானும்; திரு. வி. வி. ஆரும் பேசுவதாகப் பெரிய கூட்டம் நடக்கும் என அறிவிக்கப் பெற்றிருந்தது. கூட்டத்தை நடக்கவொட்டாமல் கலகம் செய்ய எதிர்க் கட்சியினர் திட்டமிட்டிருந்தது, எங்களுக்குத் தெரிய வந்தது. பட்டிவீரன்பட்டிக்குச் செய்தி சென்றது. அங்கிருந்து ஒரு பெரும் படையே திரண்டு வந்தது. கூட்டம் துவங்கியது. பாண்டியர் தலைமையில் என்ன நேருமோ? வென்ற அச்சம் சூழ்ந்திருந்தது. பாண்டியரது தலைமை உரையில் ஏழு சொற்கள் வெளிவந்தன. அவை:—
“காலித்தனம் நடந்தால் அது காலித் தனத்தாலேயே அடக்கப்படும்” என்பதே, அந்த நெருப்புப் பொறி. அக்கூட்டத்தில் நானும் வி. வி. ஆரும் மட்டுமே மூன்று மணிநேரம் பேசினோம். பின் கூட்டம் அமைதியாக நடந்தது. மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்று.
மட்டப்பாறை வெங்கட்ராமைய்யர், நிலக்கோட்டைத் தொகுதியில் பாண்டியனுக்குப் போட்டியாக தேர்தலில் நின்றார். நாங்களெல்லாம் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தோம். ஒரு நாள் சத்தியமூர்த்தி ஐயா மட்டப் பாறைக்குத் தேர்தல் பிரசாரம் செய்ய வந்திருந்தார். பேசிவிட்டு அவர் ஊர் திரும்பியபோது கார் ஒரு திருப்பத்தில் திரும்பியது. அப்போது மலைக் குன்றிலிருந்து ஒரு பெரிய பாறாங்கல் உருண்டு வந்து காரின்மேல் பாய்ந்தது. ஒரு நொடியில் கார் தப்பியது. திரு. சத்தியமூர்த்தியும் உயிர் தப்பினார். மறுநாள் இச்செய்தி சென்னைப்பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் வெளியாயின. சென்னை கவர்னருக்குக் கூட எட்டிவிட்டது. திரு. பாண்டியன் மீது சிலர் குறை கூறினர். சிலர் என்ன இருந்தாலும் பாண்டியன் இப்படிச் செய்யக் கட்டாது” எனக் குறை கூறினர். இது குறித்துப் பாண்டியர் பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை விட்டார். அது:—
“நடந்த நிகழ்ச்சி வருத்தத்தைத்தருகின்றது. வதந்திகள் அதைவிட வருத்தத்தை அளிக்கின்றன. இக் கொடுமையை நான் செய்யவோ, செய்யத் துாண்டவோ இல்லை. அதற்கு ஒரே ஒரு சாட்சிதான் உண்டு. அதாவது—நான் செய்திருந்தால் சத்தியமூர்த்தியோ, காரோ பிழைத்திருக்க முடியாது. அவர்கள் உயிரோடிருக்கிறார்கள் என்பதே நான் செய்யவில்லை யென்பதற்குப் போதுமான சாட்சி” என்பதே. இவ்வளவு துணிச்சலான மனம் படைத்தவர் வேறு எவரையும் நான் கண்டதில்லை.
பண்பு மிக்கவர்
அசோகா பிளாண்டேசன்’ என ஒரு கம்பெனியைத் திரு. பாண்டியன் தொடங்கினார். அப்போது அது பற்றிய பொருளாதாரத்திற்கு ஒரு பாங்கின் உதவி தேவைப்பட்டது. பாண்டியன் திருச்சி, திருநிதி பாங்க் செயலாளரோடு எனது இல்லத்தில் நெடுநேரம் பேசினார். பின் பாங்க் செயலாளர் கூறியது :—
‘ஒருவரைப் பார்க்கும் முன் அவரைப்பற்றிக்கேள்விப் :பட்டதெல்லாம் அவரை நேரில் பார்க்கும்போது பொய்யாய்ப் போய்விடுகிறது” என்றார். இதிலிருந்து பாண்டியனைப்பற்றி அவர் எவ்வளவு பயந்திருந்தார் என்பது விளங்கிற்று. உண்மையில் அவரைப் போன்ற உள்ளம் படைத்தவர்கள் நாட்டில் மிகக் குறைவு.
சென்னை மாகாண ஐஸ்டிஸ் கட்சியின் பொதுக் காரியதரிசி பதவியிலிருந்து நான் விலகி ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைக் கண்டதும், பாண்டியன் ஆச்சரியப்பட்டும், ஆத்திரப்பட்டும், திருச்சிக்கு வந்து காரணம் கேட்டார். விளக்கினேன். மகிழ்ச்சியடைந்தார்.
அரசியல் வாழ்வு
கட்சியில் கருத்துவேற்றுமை ஏற்பட்டது. அதன் பிறகு ஜஸ்டிஸ் கட்சியைத் திராவிடக் கழகமாக மாற்றுகிற மகாநாடு சேலத்தில் 1946இல் நடந்தது. அம்மகாநாட்டை நான் திறந்து வைத்துச் சொற்பொழிவாற்றி விலகினேன். பாண்டியன் தன் கருத்தை விளக்கமாகப் பேசி விலக்கினார்.
அடுத்து, வி. வி. ஆர். பொன்னம்பலனார், ஜி. ஜி. நெட்டோ, சேலம் கணேச சங்கர் முதலியோரும் மற்றும் பல ஜஸ்டிஸ் கட்சியினரும் விலகினார்கள். எங்கள் அரசியல், வாழ்வு அதோடு முடிந்தது.
குடும்பத்தில் ஒருவன்
பாண்டியன் எனக்கு அண்ணன். ரெங்கசாமி எனக்குத் தம்பி. தன் பண்ணையாட்களில் தான் பலமுறை கண்டித்தும் திருந்தாதவர்களை ரெங்கசாமி, அண்ணனிடம் விசாரணைக்குக் கொண்டுவந்து விடுவார். ஆனால் அவரும் எதிர் நின்று பேச அஞ்சுவார். நான் இடையில் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகவே இருந்து வந்தவன். அவர்கள் குடும்பத்தினர் செய்திகள் கூட அவர்களுக்குள்ள அச்சத்தின் காரணமாக பாண்டியருடைய காதுக்கு என் மூலமாகவே போய்ச் சேருவதுண்டு. அத்தகைய இணைப்பு அவர்களின் மறைவோடு பெரும்பாகம் மறைந்து, எஞ்சியுள்ள சிறு பாகமும், ‘சித்தப்பா’ என்று ஓயாது அழைக்கும் மகள் விஜயாம்பிகையின் மறைவோடு போயிற்று. அனைத்தையும் இழந்தேன்
பாண்டியன் மறைந்தபோது அவர் பற்றிய செய்தியை திராவிட நாடு பத்திரிகைக்கு எழுதி அனுப்புமாறு நண்பர் சி. என். அண்ணாத்துரை கேட்டிருந்தார். நான் அனுப்பிய செய்தி இது:—
“தமிழகம்ஒரு அறிஞனை இழந்தது. மதுரை தன் தலைவனை இழந்தது. சர். பி. டி. ராஜன் தன் வலது கையை இழந்தார். சுயமரியாதை இயக்கம் தன் துணைத்தலைவரை இழந்தது. தோழர்கள் நண்பரை இழந்தனர். மக்கள் தந்தையை இழந்தனர். தம்பி ரங்கசாமி தன் தமையனை இழந்தார். என் அண்ணியார் தம் மாங்கல்யத்தை இழந்தார். நானோ அனைத்தையும் இழந்தேன்” என்பதே.
அவரது இருப்பிடத்தை நிரப்ப இதுவரை யாரும் தோன்றவில்லை. ஆகவே, அவரது இழப்பு தமிழகம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.
திரு. ஓ. பி. இராமசாமி ரெட்டியார்
ஓமாந்தூர் திரு ஒ. பி. இராமசாமி ரெட்டியார் அவர்களைத் தமிழகம் நன்கறியும். ஓமாந்துரிலுள்ள ஒரு பெருங் குடும்பத்தில் பிறந்தவர். இவருக்குத் தம்பிகள் இருவர் உண்டு. இவருக்குக் குழந்தைகள் இல்லை. இளமைப் பருவத்திலேயே மனைவியை இழந்திருந்தும் மறுமணம் செய்து கொள்ளவும் விரும்பவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இல்லறத்தில் வாழ்ந்த ஒரு துறவி என்றே சொல்லலாம்.
தமிழகத்துக் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவர், காந்தியடிகளிடத்தும் அவரது கொள்கைகளிடத்தும் நீங்காத பற்றுடையவர். காந்தியடிகளின் வழியில் தவறாது நடந்து, அவரது நிழல்போலக் காட்சியளித்தவர் திரு ரெட்டியார் அவர்கள்.
அவர் வாழ்நாளில் பொய்யே பேசியதில்லை. உண்மை பேசுகிறவன் அரசியல் வாதியாகவும் ஆகலாம் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர். தவறு செய்கிறவர்கள் யாராயிருந்தாலும், அவரைக் கண்ணெதிரிலேயே கண்டித்துத் திருத்தும் பழக்கம் அவருக்குண்டு. பொய்யர்களை அடியோடு வெறுத்துவிடுவார். அநீதியை எதிர்க்காதவன் ஆண்மகன் அல்ல’ என்பது அவரது வாக்கு. பொறுமையும் சகிப்புத் தன்மையும் கொண்டிருக்கும் அவரால், பிறர் செய்கின்ற தவறைச் சகிக்க முடிவ முடிவதில்லை. இதனால் அவரைச் சிலர் ‘முன்கோபி’ எனக் கூறுவதுண்டு.
உண்மை, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, நம்பிக்கை, நாணயம் ஆகியவைகளோடு எளிய வாழ்க்கை வாழ்ந்த பெருஞ்செல்வர் அவர். இதனால் இவருக்குக் காங்கிரஸ் கட்சியில் ஒரு தனிச் செல்வாக்கு ஏற்பட்டு, அனைவரும் அன்பும் மரியாதையும் காட்டி வந்தனர்.
1947இல் நமது மாநிலத்தின் முதலமைச்சர் பதவியைத் திரு. ரெட்டியார் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். பதவியை ஏற்கு முன்னே, ரெட்டியார் அவர்கள் பதவி ஏற்க மாட்டார் என்ற வதந்தியை உண்டு பண்ணி விட்டார்கள். பதவியை ஏற்ற பிறகு “ஆங்கிலம் தெரியாதே! என்ன செய்வார்?” என்ற கேள்வியைக் கிளப்பி விட்டார்கள். காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த உள் போராட்டத்தின் விளைவினால் முதலமைச்சர் பதவி தமிழ் நாட்டுக்கு அதிலும் ரெட்டியாருக்குக் கிடைத்தது. இதில் திரு. காமராஜர் அவர்களின் முயற்சி பெரிதும் போற்றற்குரியது.
ஆங்கிலம் அறியாதவர்களால் ஆட்சி நடத்த முடியாது என்று கூறுபவர்கள் வெட்கப்படும்படி ஆட்சி நடத்தினார்கள். இது, அவர்கள் நேர்மை என்ற ஒரே ஆயுதத்தைக் கையாண்டு வந்ததின் விளைவு. நேர்மை என்ற ஒன்று மட்டும் கலங்கா மனத்துடன் விடாப்பிடியாகக் கையாளப் படுமானால், மற்றெல்லாத் தகுதிகளும், திறமைகளும் அதன் முன் மங்கிப் போய் விடும். கட்சிப் பற்றாளர்களின் வம்புக்கும், இழுப்புக்குங்கூட இசைந்து கொடுக்கும் தன்மை நேர்மைக்கு வராது. இந்த ஆற்றல் அவர்களுக்கிருந்தது.
இப்படிப்பட்ட முதலமைச்சர் திரு. ரெட்டியார் அவர்கள் மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் காங்கிரஸ் கட்சியினரே கொண்டு வந்தனர். அதைக் கொண்டு வந்தவர்களில் தங்களுக்குக் “காண்ட்ராக்ட்” கிடைக்கவில்லை என்பவரும், தங்கள் உறவினருக்கு “டிபுடி சூப்பிரண்ட்” பதவி கிடைக்கவில்லை என்பவரும் இருந்தனர். இதைக் கண்டதும் திரு ரெட்டியார் அவர்கள் பதவியை உதறி எறிந்து வெளியேறினர்கள். உண்மைக்கும் நேர்மைக்கும் அரசியலில் இடமிராது என்பதை, திரு. ஒ. பி. ஆர். அவர்களின் வரலாறும் மெய்ப்பித்துக் காட்டியது.
கேள்வி
திரு ரெட்டியாரவர்களைப் பற்றி நான் எவ்வளவு கேள்விப்பட்டிருந்தேனோ அந்த அளவிற்குத்தான் என்னைப் பற்றியும் அவர் கேள்விப்பட்டிருக்கிறார். எனினும் நாங்களிருவரும் நேரில் சந்தித்ததோ பேசியதோ இல்லை. காரணம்; நாங்களிருவரும் நேர்மாறான அரசியல் கட்சிகளில் பணி புரிந்து கொண்டிருந்ததுதான்.
முதற் சந்திப்பு
செங்கற்பட்டு இரயில் நிலையத்தில் ஒரு நாள் காலை திருச்சியிலிருந்து சென்னைக்குச் செல்லும் விரைவு வண்டி நின்று கொண்டிருந்தது. காலை உணவுக்காக நான் வண்டியை விட்டிறங்கிச் சிற்றுண்டி நிலையத்தை, நோக்கி நடந்துகொண்டிருந்தேன், அப்பொழுது திரு. ரெட்டியார் வண்டியை விட்டிறங்கி உலவிக் கொண்டிருந்ததைப் பார்த்தும், விரைவாக நடந்து ஒதுங்கிச் சென்றேன். நான் அவருக்கு முன்னே விரைவாக நடந்து செல்வதைக் கண்டதும் கைதட்டிக் கூப்பிட்டு, “என்ன ஐயா! பார்த்தும் பாராமற் போவதும் ஒரு பண்பாடா?” எனக் கேட்டார். ஆம். பார்த்தேன். இதிற் பண்பாடு ஒன்றும் இல்லை; அச்சம்தான் காரணம்’ என்றேன். “என்ன அச்சம்” என்றார். “நீங்கள்,மாறுபட்ட கட்சியினர். அதிலும் முதலமைச்சர். நெருங்குவதற்கு ஒரு அச்சம். காலை உணவு கிடைக்குமோ? வண்டி புறப்பட்டு விடுமோ என்பது மற்றொரு அச்சம்” என்றேன். அவர் கலகலவெனச் சிரித்து “இரண்டச்சமும் வேண்டியதில்லை. நில்லுங்கள்” என்றார். அவருக்கு வந்த சிற்றுண்டியை நானிருக்கும் வண்டியில் வைக்கச் சொல்லிவிட்டுத் தனக்கு மற்றொரு சிற்றுண்டி கொண்டு வரச் சொன்னார். இரயில் நிலைய அதிகாரிகள் அருகில் இருந்ததால், வண்டி புறப்பட்டு விடாது என்ற தைரியத்தினால், அவர் அருகிலேயே நின்றேன். “நீங்கள் போய்ச் சிற்றுண்டி அருந்துங்கள். சென்னைக்கு வரும் போதெல்லாம் ஓய்வு நேரங்களில் என்னை வந்து சந்திக்கலாம்” என்று சொல்லியனுப்பிவிட்டு, வண்டியில் ஏறிக்கொண்டார். இந்த முதற் சந்திப்பு என்னை வியப்படையச் செய்தது.
நல்லவர்கள்
அவர் முதல் மைச்சராக இருக்கும் பொழுது நான் இருமுறை அவரைச் சந்தித்திருக்கிறேன்.ஒரு முறை சந்தித்த பொழுது, ‘உங்களைப் போன்று நல்லவர்கள் உங்கள் கட்சியில் யார் யார் இருக்கிறார்கள்?’ என்று கேட்பார். “என்னை நல்ல்வன் என்று நீங்கள் அறிந்து கொண்டது எப்படி?” என்று கேட்டேன். உங்கள் தமிழர் நாடு, பத்திரிக்கையில் நான் முதலமைச்சரானது பற்றி நீங்கள் எழுதிய தலையங்கத்தைப் பல நண்பர்கள் என்னிடம் கொண்டு வந்து காட்டினார்கள். அதில் நீங்கள் என்னைப் பற்றி எழுதியிருந்ததைவிட உண்மைக்கும் நேர்மைக்கும் மதிப்பளித்தெழுதியிருந்த தங்கள் குணமே போற்றற்குரியதாயிருந்தது. தங்கள் மேடைப் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் நான் கவனித்து வருகிறேன்” என்று கூறினார். அப்படி மதிப்பளிக்கிறவர்கள் என்னிலும் பலர் நீதிக்கட்சியிலிருக்கிறார்களென்று ஒரு பட்டியலையே போட்டுக் கொடுத்தேன். அதைக் கண்டு “அப்படியானால் அவர்களிலும் சிலரைக் கண்டு நான் பேசவேண்டு”மென்று தெரிவித்துவிட்டு, “வந்த வேலை என்ன?” என்று கேட்டார். “உங்களுக்கு வணக்கம் கூற வந்த வேலையைத் தவிர வேறு வேலையில்லை” என்று கூறி வெளியேறினேன்.
பற்றுதல்
காங்கிரஸ் கட்சியில் சட்டசபை உறுப்பினராக இருந்த என்பழைய நண்பரொருவரை நான் சந்திக்க நேர்ந்தபோது, அவர் முதலமைச்சர் தம்மிடம் “விகவநாதம் ஒரு வேடிக்கையான மனிதர். அவர் என்னிடம் மூன்று முறை வந்ததும் எதுவுமே கேளாமற் போயிருக்கிறார்” என்று கூறியதாகச் சொன்னார். இச்செய்தி என் உள்ளத்தில் அவர்மீது அதிகப் பற்றுக் கொள்ளும் படி செய்துவிட்டது.
துணிச்சல்
முதலமைச்சராய் இருந்தும், அவர் திருச்சிராப்பள்ளியைக் கடந்து செல்லுகின்ற ஒரு நாளில் என் இல்லத்திற்கு வந்துபோனது, எதற்குமஞ்சாத அவரது துணிச்சலையே காட்டிற்று; வியப்படைந்தேன்.
பரிமாறுதல்
நாங்களிருவரும் அரசியலைவிட்டு, வெளியேறுங்காலம் வந்துவிட்டது. அதனால் மாறுபட்ட கட்சியினராகிய நாங்களிருவரும் மிக நெருக்கமாக ஒன்றுபட நேர்ந்து விட்டது. அடிக்கடி சந்திப்போம். அப்பொழுதெல்லாம் நாங்கள் அரசியலில் பட்ட துன்பங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு மகிழ்வோம்.
ஓய்வு
திரு ரெட்டியார் அவர்கள் அரசியலிலிருந்து ஓய்வுபெற்ற காலத்தில், இராமலிங்க அடிகளாரிடத்தும் அவரது சன்மார்க்க நெறியினிடத்தும் அதிகப்பற்றுக் கொண்டும், பணிபுரிந்து கொண்டும் வாழ்ந்தார்கள். சென்னையிலுள்ள இராமகிருஷ்ண மிஷினின் தலைமைப் பொறுப்பேற்றதும், வடலூர் சுத்த சன்மார்க்க நிலையம் அமைத்ததும் இதை மெய்ப்பிக்கும். இத்துறையில் நாங்களிருவருமே மிக நெருங்கியிருந்து பணிபுரிந்தோம். புரோகிதர்
எனது அறுபதாம் ஆண்டு விழாவில் அவரே புரோகிதராக இருந்து எங்கள் திருமணத்தை நடத்தி வைத்த காட்சி எங்களால் மறக்க முடியாதது.
இறுதியாக அவரது சன்மார்க்கப் பணிகளுக்கு நான் உற்ற துணைவனானேன். சுத்த சன்மார்க்க நிலையத்திற்குச் செயலாளருமானேன். பொதுப் பணிக்குக் கணக்கெழுதும் வேலை, அவர் சொந்தச் சொத்திற்கு ‘உயில்’ எழுதும் வேலை மட்டுமல்ல, அவர் சொந்தத்திற்குக் கடிதம் எழுதும் வேலையையும் சேர்த்துச் செய்கின்ற ஒரு பணியாளனாகவே மாறிவிட்டேன்.
கடைசிக் காலத்தில் அவருக்குச் சொந்தமான பத்தரை லட்ச ரூபாய்ச் சொத்துக்களைச் சுத்த சன்மார்க்க நிலையத்திற்கும், வள்ளலார் உயர்நிலைப்பள்ளிக்கும், அனாதை மாணவரில்லத்திற்கும், சான்றோரில்லத்திற்கும் உயில் எழுதச் செய்து, பொள்ளாச்சி உயர்திரு நா. மகாலிங்கம் அவர்கள் தலைவராக உள்ள ஒரு குழுவையும் ஏற்படுத்தி, அக்குழுவினிடம் ஒப்படைத்துவிட்டு அமைதியாக உயிர் நீத்தார்கள்.
அவரது திருவுடலை வடலூரிலேயே வள்ளலார் உயர் நிலைப்பள்ளிக்கு முன்பு அடக்கஞ் செய்தோம். அவரை அடக்கம் செய்துள்ள இடம் ஒரு திருக்கோயிலாக விளங்கி வருகிறது. அவரை இழந்த இடத்தை நிரப்பத் தமிழகத்திற் சிலராவது தோன்றியாக வேண்டும்.
டாக்டர்
சர். ஏ. இராமசாமி முதலியார்
கல்வியிலும் அறிவிலும் செல்வத்திலும் தொழிலிலும் தொண்டிலும் உயர்ந்த ஒரு பெரும் குடும்பத்தில் பிறந்து, உள்ளத்தில் உயர்ந்து வாழ்ந்த ஒரு பேரறிஞர் சர். ஆற்காட்டு இராமசாமி முதலியார்.
வழக்கறிஞர், சட்டசபை உறுப்பினர், பார்லிமெண்ட் செக்ரட்டரி, பத்திரிகையாசிரியர், வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினர், வார் கவுன்சில் மெம்பர், வட்ட மேஜை மகாநாட்டுப் பிரதிநிதி, பல்கலைக்கழகத் துணைவேந்தர், சமஸ்தான திவான், விஞ்ஞானத்தொழில் ஆராய்ச்சிக் கழகத் தலைவர், இந்திய ஸ்டீம் கப்பல் கம்பெனித் தலைவர், சென்னை நகராட்சித் தலைவர், இந்தியப் பேரரசின் வர்த்தக அமைச்சம் ஆகிய எத்தனையோ பதவிகள் அவரை அடைந்து பெருமை பெற்றன.
ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய கண்டங்களிலும், நமது ஆசிய கண்டத்திலும் உள்ள பல நாடுகளுக்குப் பலமுறை சென்று வந்தவர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அவர் செல்லாத நாடுகள் உலகில் எதுவுமே இல்லை எனக்கூறி விடலாம்.
அரசு அவருக்கு வழங்கிய பட்டங்கள்: வழக்கறிஞர், டாக்டர், சர், திவான், ராஜமந்திர சிந்தாமணி, பத்மவிபூஷண், அமைச்சர் முதலியன. பொது மக்கள் அவருக்கு வழங்கிய பட்டம் உண்மையைப் பேசி,நேர்மையாய் நடந்து ஒழுக்கத்தைக் காத்த பெருமகன் என்பது. இத்தனையும் அமைந்த ஒருவர் இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.
டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியாரும், இவரும் இரட்டைப் பிள்ளைகளாகப் பிறந்தவர்கள். நெருங்கிப் பழகிய பலருக்குக்கூட இவர் ஏ. எல் முதலியாரா? ஏ.ஆர் முதலியாரா? என அடையாளம் காண முடிவதில்லை. எனக்குக்கட்ட இத்தகைய குழப்பம் பல தடவை வந்ததுண்டு.
ஏ.ஆர். முதலியார் என ஏ. எல் முதலியாரையும், எ. எல். முதலியார் என ஏ. ஆர். முதலியாரையும் நினைத்து ஒருவரிடம் கூறவேண்டிய செய்தியை மற்றவரிடம் கூறி ஏமாந்துபோன பலரை எனக்குத் தெரியும். ஆனால் அவர்களும்கூட இதை வெளியே காட்டிக்கொள்ளாமல், இச்செய்திகளைக் குறித்துக் கொண்டுபோய் ஒருவர் மற்றொருவரிடம் கூறி, பரிந்துரையும் செய்கின்ற ஒரு பழக்கத்தை இருவருமே வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த இருவருக்கும் மூத்தவர் ஒருவர் உண்டு. அவர் பெயர் துரைசாமி முதலியார். இந்த மூவருமே எனது நண்பர்கள்.
எனக்கும் அவருக்கும் உள்ள ஒற்றுமைகள் சில: (அ) கடந்த நூற்றாண்டில் பிறந்தவர்கள், (ஆ) 1917ல் இருவரும் நீதிக்கட்சியில் சேர்ந்தது. (இ) இருவருமே 1941-ல் விலகியது. (ஈ) இருவருமே அரசியலில் இருந்து விலகியதும் தொழில் துறையில் இறங்கியது.
அக்காலத்து அரசியலில் இருந்து தொண்டு செய்தவர்களில், பலர் மறைந்து நாங்கள் இருவருமே மீதியாக இருந்தோம். இன்று நான் மட்டுமே மீதியாக இருக்கிறேன். அவர் ஒரு எழுத்தாளர். நீதிக்கட்சியின் ‘‘ஜஸ்டிஸ்’’ பத்திரிகையின் ஆசிரியர், அப்பத்திரிகையின் தலையங்கத்தை அவரது ஆங்கில நடையழகைச் சுவைப்பதற்காகவே பலர் வாங்கிப் படிப்பதுண்டு.
அவர் ஒரு பேச்சாளர். அவர் ஆங்கிலத்தில் பேசுகின்ற முறையை, நடையை, அழகை ஐரோப்பியர் பலர் பாராட்டி மகிழ்வர். அவருடைய சகோதரர்களின், மகன்களின் ஆங்கிலப் பேச்சும் அவரது நடையைப் பின் பற்றியதாகவே இருக்கும்.
அக்காலத்துக் காங்கிரஸ் இயக்கத்தில் காமராஜ் அவர்களின் தலைவர் சத்தியமூர்த்தி ஒருவரே தலைசிறந்த பேச்சாளர், ஜஸ்டிஸ் கட்சியையும், ஜஸ்டிஸ் கட்சியினரையும் கடுமையாகத் தாக்கிப் பேசிப் பெயர் பெற்றவர் அவர் ஒருவரே. அவருடைய பேச்சுக்குப் பதில் கூறும் போதெல்லாம் திரு. ஏ. ஆர் முதலியார் “மை எக்ஸ்டீம்டு பிரண்டு” (எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்) என்று குறிப்பிட்டே பேசுவார். இந்த அவரது பெருந்தன்மையை அக்காலத்து அரசியல்வாதிகள் அனைவரும் பாராட்டிப் பேசுவதுண்டு.
கட்சியின் கொறடாவாகவும் சில ஆண்டுகள் பணி புரிந்தவர். கட்சியில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்த போது அவர் நடந்துகொண்ட முறையும், பேசிய பேச்சும் காட்டிய திறமையும் இன்றும் என் கண்முன்னே நிற்கின்றன.
திருச்சியில் நான் நடத்திய ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டில் இவருடைய ஆங்கிலப் பேச்சை மொழி பெயர்க்க ஒருவரை, ஏற்பாடு செய்யும்படி என்னிடம் முன்கூட்டியே தெரிவித்திருந்தார். நான் பலரை அணுகினேன். மறுத்து விட்டார்கள். கட்சியின் வழக்கறிஞர் பலரும் மொழி பெயர்க்க மறுத்து விட்டனர். இந்த நிலையில் ஒரு கல்லூரி மாணவர் நான் மொழிபெயர்க்கிறேன் என முன்வந்தார். ஊரும் பெயரும் கேட்டேன். “காஞ்சிபுரம், அண்ணாத்துரை” என்று சொன்னார். ஒரு பெரிய அரசியல்வாதியின் பேச்சை பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளை விட்டு மொழி பெயர்ப்பது நல்லதல்ல என்று எனக்குத் தோன்றியது. நான் ஒப்பவில்லை. வழியில்லாததால் அப்பையனையே விட்டு மொழிபெயர்க்கச் செய்தேன். அப்பேச்சு கொட்டகையை அதிர வைத்தது. மொழி பெயர்ப்பும் அதற்கு இணையாக இருந்தது. நான் ஒரு பெரிய நல்ல காரியத்தைச் செய்து விட்டதாக எண்ணி இறுமாப்புடன், திரு. ஏ. ஆர். முதலியாரை அணுகி பையனின் மொழி பெயர்ப்பு எப்படி?’ என்று கேட்டேன். அதற்கு அவர் பையன் நன்றாக மொழி பெயர்த்தான். மொழி பெயர்ப்பில் ஆங்காங்கே சிறிது ‘சன்னப் பொடியும்’ கலந்திருந்தது’ என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
1968–ல் சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழ் மகாநாட்டில் நான் துணைத் தலைவனாக இருந்து பணி புரிந்தேன். அப்போது மவுண்ட் ரோடில் திரு. சி. என். அண்ணாதுரையின் சிலையை வைப்பது என்ற முடிவுக்கு வந்தோம். அதைத் திறந்து வைக்க ஏ. ஆர். முதலியார் மவுண்ட்ரோடிற்கு வந்தபோது, எட்டஇருந்த என்னைக் கைதட்டிக் கூப்பிட்டார். திருச்சி ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் அண்ணாதுரை மொழி பெயர்த்த போது “அப்பையன், பின்னால் நமது நாட்டிற்குத் தலைமை அமைச்சராக வருவார் என்றோ, அவருடைய சிலையை நாம் இருவரும் திறந்து வைக்கப் போகிறோம் என்றோ, நாம் நினைத்தோமா?” எனக் கூறி மகிழ்ந்தார். அவரது நினைவாற்றலைக் கண்டு நான் மகிழ்ந்தேன்.
1981–ல் நாட்டின் எதிர்கால அரசியல் சட்ட அமைப்பை முடிவு செய்யக் கூட்டப்பட்ட வட்டமேஜை மாநாட்டில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.
டாக்டர் ஏ.ராமசாமி முதலியார் 1945–ல் சான்பிரான்விஸ்கோவில் நடந்த ஐ.நா. மகாநாட்டில் இந்திய தூது கோஷ்டித் தலைவராகச் சென்று உரை நிகழ்த்தினார். பின்னர் 46–47ல் ஐ.நா. பொருளாதார, சமூக கவுன்ஸிலில் முதல் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர். ஏ. ஆர். முதலியார் 1931–முதல் 34 வரை டில்லியில் வணிக மந்திரியாகப் பணிபுரிந்தார். அப்போது தமிழகத்தில் தோல் வாணிகம் பாழ்படும் நிலைமையை அடைந்தது. தோல் விலை குறைந்தது. மேல்நாட்டுக்கு அனுப்பப்படும் தோல்களுக்குப் பணம் ஓராண்டுக்குப் பிறகுதான் தமிழகத்துக்குக் கிடைத்து வந்தது. இது குறித்துக் கவலையடைந்த சென்னைத் தோல் வணிக சங்கத்தினர், என்னிடம் வத்து, ஏ. ஆர். முதலியாரை தில்லியில் சந்தித்து ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். உடன்பட்டேன். ஏழு பேர் ஒரு குழுவினராக தில்லிக்குச் சென்றோம். ஏ.ஆர். முதலியாரைச் சந்தித்தோம். அவர் வெகு பொறுமையாக ஒரு மணி நேரம் எங்களிடம் தோல் வணிகத்தின் குறைகளைக் கேட்டறிந்து ஆவன செய்வதாக வாக்களித்தார். நான் கட்டாயம் செய்யவேண்டுமென வற்புறுத்தினேன். அப்போது அவர் என்னிடம் சொன்னதாவது “இதை விட வேறு எனக்கென்ன வேலை? நான் இங்கு வந்த பிறகு பல மாநிலங்களிலிருந்து பலபேர்கள் பல குறைகளைக் கூறி பல மந்திரிகளைப் பேட்டி காண வருவதைக் கண்டு, நமது மாநிலத்திலிருந்து இப்படி ஒருவரும் வந்து குறைகளைச் சொல்லிக் கொள்ள வரவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்தேன். நீங்கள்தான் இப்போது முதல் தடவையாக வருந்திருக்கிறீர்கள். உட்காருங்கள்’’ என்று கூறி, தொலைபேசியை எடுத்து வர்த்தகத் துறைக் காரியதரிசியை அழைத்து இதற்கானவற்றை உடனே செய்யும்படி கட்டளையிட்டார். நன்றி கூறித் திரும்பினோம். எங்கோ போகிறீர்கள்?” என்று கேட்டார். “ஊருக்கு” என்றோம். “அதுதான் முடியாது; வீட்டிற்கு வந்து விருந்து அருந்தித்தான் போக வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள், அவர் அன்பை நினைந்து மனமுருகி ஒப்பினோம். அன்று இரவு அவரில்லத்தில் பெரிய அளவில் விருந்து நடந்தது. அதில் தில்லி நகரில் தமிழகத்திலிருந்து பணிபுரியச் சென்ற பெரிய அதிகாரிகள் பலரும் பங்கு பெற்றனர். பிரியா விடை பெற்றுப் பெரு மகிழ்வோடு திரும்பினோம். திரும்பும்போதே எங்களிடம் சொன்னார்கள், “மகிழ்ச்சியோடு செல்லுங்கள்” இனி தோல்களை கப்பலில் ஏற்றிய உடனேயே 100க்கு 80 வீதம் ரூபாய் உங்களுக்கு இங்கேயே கிடைக்கும்’ என்று.
“என் வாழ்நாளில் இப்படி ஒரு நன்மையை கேட்ட உடனேயே செய்த பேரன்பரை நான் கண்டதில்லை” என்று என்னுடன் வந்திருந்த தோல் வியாபாரிகளாகிய காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்களும், மலங்கு அகமது பாஷா அவர்களும், திருச்சி பாலக்கரை வி. எஸ். அவர்களும் பெரிதும் பாராட்டினார்கள். இது சர்.ஏ.ஆர். முதலியார் அவர்களின் தொண்டுக்கு எடுத்துக்காட்டான ஒனறு.
1887–ல் அக்டோபர் 14–ம் நாள் கர்னூலில் பிறந்த டாக்டர் சர். ஏ. இராமசாமி முதலியார் அவர்கள், 89 ஆண்டுகள் இந்நிலவுலகில் வாழ்ந்து, செயல் வீரராகத் திகழ்ந்து நம்மைவிட்டு மறைந்தார். அவர் உருவம் கறுப்பு; அவரது உள்ளம் வெளுப்பு. அவரது இழப்பு குறிப்பாகத் தமிழகத்திற்கும் பொதுவாக இந்தியாவிற்கும் ஒரு பேரிழப்பாகும்.
சர். ஏ. டி. பன்னீர்ச்செல்வம்
சர். ஏ. டி. பன்னிர்ச்செல்வம் அவர்கள் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவர். மற்றவர்கள் சர். பி. தியாகராயர், டாக்டர் நாயர், பனகல் அரசர், ஏ. பி. பாத்ரோ, சர் வெங்கடரெட்டி, சர். உஸ்மான் சாஹிப், பொப்பிலி அரசர், நெடும்பலம் சாமியப்ப முதலியார், சர். பி. டி. ராஜன், W. P. A. செளந்திர பாண்டிய நாடார் முதலானோர்.
நீதிக்கட்சி என்பதை ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் கட்சி என்றே கூறுவர். அது இன்றைய தி. மு. கழகத்திற்குப் பாட்டன் முறை. பெரியார் ஈ. வெ. ரா. அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் தந்தை முறை யாகும்.
அக்காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் பங்குபெற்று உழைத்த தலைவர்களில் பலர், தேசீயத்தின் பெயரால் பிராமணர்கள் தங்கள் நலத்திற்கு மட்டுமே காங்கிரஸைப் பயன்படுத்துகிறார்கள் என வெறுப்படைந்து வெளியேறிப் பார்ப்பனரல்லாதாரின் நன்மைக்கென்றே தோன்றிய கட்சி அக்கட்சி
ஏறத்தாழ 16 ஆண்டுகள் அக்கட்சி சென்னையில் அரசாங்கத்தை அமைத்து ஆட்சி புரிந்திருக்கிறது. அதில் பெரும் பங்கு பெற்றுத் தொண்டு புரிந்தவர், சர். ஏ. டி. பன்னிர்ச் செல்வம்.
அக்கட்சி செய்த நன்மைகளில், இந்துமத அற நிலையம் தோற்றுவித்தது; டாக்டர் பட்டத்திற்கு விண்ணப்பம் போடுகிறவர்கள், சமஸ்கிருதம் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கொடுமையை அழித்து ஒழித்தது; எல்லா வகுப்பினருக்கும் ஆட்சியில் உரிமை கிடைக்க வேண்டும் என்ற வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை சட்டமாக்கியது; தீண்டாமை ஒழியவேண்டுமென்ற கொள்கையை முதல் முதல் தமிழகத்தில் புகுத்தியது; நகராட்சி, ஜில்லா போர்டு, தாலுகா போர்டு, சட்டசபை முதலிய இடங்களில் பல சமூகத்தினருக்கும் பதவி கொடுத்து மகிழ்ந்தது முதலியன குறிப்பிடத்தக்கவை.
சர்.ஏ.டி.பி. 1888–ல் பிறந்தவர்கள். எனக்கு 10 ஆண்டுகட்கு மூப்பு. 1912–ல் இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று வந்து தமிழகத்தில் வழக்கறிஞர் தொழிலை நடத்தியவர். இருமுறை நகராட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பெற்றுப் பணிபுரிந்தவர். இப்போது தஞ்சையில் காணப்படுகின்ற மிகப் பெரிய கட்டிடமாகிய ‘பனகால் பில்டிங்’ என்பது அவர் 1925–ல் ஜில்லா போர்டு தலைவராக இருந்தபோது கட்டப் பெற்றது. அவரது தொண்டினைப் பாராட்டி ஆங்கிலேய அரசு சர் பட்டத்தையும், கட்சி ஹோம் மெம்பர் பதவியையும் அளித்துப் பாராட்டியது.
நீதிக்கட்சி சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த போது, சர்.ஏ.டி.பியும் சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்தார். அது குறித்து அவர் சிறிதும் கவலைப் படாமல் திருவாரூரை அடுத்துள்ள பெரும்பண்ணையூர் சென்று விவசாயப்பணி புரிந்து வந்தார். இப்போது அந்த ஊருக்கு செல்வம் நகர் என்று பெயர்.
ஒரு சமயம் பெரியார்மீது காங்கிரஸ் ஆட்சியில் வகுப்புத் துவேஷத் குற்றம் சாட்டிக் கைது செய்து கோவை செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்குக் கொண்டு சென்றனர். அப்போது நான் பெரும் பண்ணையூர் சென்று சர்.ஏ.டி. பன்னிர்ச்செல்வம் அவர்களிடம் இதை எடுத்துச் சொல்ல, அவர் தானே பெரியார் சார்பில் எதிர்வழக்காட கோவை வந்திருந்தார். நாங்கள் எல்லோருமே திரு.ஜி.டி. நாயுடு வீட்டில் தங்கியிருந்தோம். அப்போது கோவை செக்ஷன்ஸ் நீதிபதியாக வேலை பார்த்தவர் ஐஸ்டிஸ் “லோபோ” என்பவர். நீதி விசாரணையன்று காலையில் நாங்களனைவரும் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தபோது, நீதிபதி லோபாவின் காரியதரிசி ஒருவர் வந்து சர்.ஏ.டி.பி. இன்று கோர்ட்டுக்கு வரவேண்டாம் என்று ஐஸ்டிஸ் லோபோ கேட்டுக் கொண்டதாகக் கூறினார். எனக்கு இது வியப்பை அளித்தது. ஏ. டி.பி.யிடம் காரணம் கேட்டேன். “நான் ஹோம் மெம்பராயிருந்தபோதுதான், லோபோவிற்கு இந்த வேலையைக் கொடுத்தேன்; அதனால் நான் இன்று கோர்ட்டிற்குச் சென்று ‘யுவர் ஆனர்’ என்று அவரைக் குறிப்பிடுவதைக் கேட்க வெட்கப்படுகிறார் போலும்” என்று என்னிடம் கூறிவிட்டு, வந்த ஆளிடம் நான் இதற்காகவே வந்திருக்கிறேன். நான் கோர்ட்டுக்கு வராமலிருக்க முடியாது நீதிபதியிடம் சொல்லுங்கள்; என் கடமையை நான் செய்கிறேன். அவர் கடமையை அவர் தாராளமாகச் செய்யலாம்” என்று சொல்லி அனுப்பினார்.
இறுதியாக என்ன நடந்தது? நாங்கள் அனைவரும் கோர்ட்டுக்குச் சென்றிருந்தோம். பெரியாரையும் அங்கு கைதியாகக் கொண்டு வந்திருந்தார்கள். மணி அடித்ததும் ஜட்ஜ் லோபோ விடுமுறை எடுத்துக் கொண்டு சென்று விட்டார், கோர்ட்டுக்கு வரமாட்டாரென்று செய்திதான் கிடைத்தது.
மற்றொரு முறை, அதாவது 1938–ல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் போது பெரியாரைக் கைது செய்து அவர்மீது குற்றத்தைச் சாட்டித் தண்டித்து, பல்லாரிச் சிறையில் அடைக்க சென்னை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டது. அப்போது அவருக்காக எதிர் வழக்காடிய பாரிஸ்டர் பன்னிர்செல்வம் அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் பெரியாரைக்கட்டிப்பிடித்துக் கண்ணிர் உகுத்து அழஆரம்பித்து விட்டார். அவர்கள் இருவரையும் போலிசார் பெரும்பாடுபட்டேபிரித்தார்கள். பின் பல்லாரி சிறையில் நானும்அவரும் மட்டுமேபோய்ப் பெரியாரைப் பார்த்து வந்தோம். எங்களுக்குப் பல அரசியல் கருத்துக்களையும், நாட்டில் நாங்கள் செய்யவேண்டிய பணிகளையும் மிகத் தெளிவாகவும், பொறுமையாகவும் கடறி. எங்களைப் பெரியார்வழியனுப்பி வைத்தது எங்களைக் கலக்கமடையச் செய்தது.
அவர் பல்லாரி சிறையில் இருக்கும் போதுதான் சென்னை ஐலண்டு கிரவுண்டில் ஐஸ்டிஸ் கட்சி மகாநாடு நடந்தது. அவர் பல்லாரி சிறையில் இருந்ததால் அவர் படத்தையே தலைமையாக வைத்து மகாநாட்டை நடத்தினோம். அப்போது ஆந்திர, கேரள, கர்நாடக, தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் பொதுச் செயலாளராகப் பணி புரிந்தேன். தலைவர் பெரியார் பல்லாரி சிறையில் இருந்ததால் அவரது தலைமை உரையின் முற்பகுதியை சர்.ஏ.டி. பன்னீர்ச்செல்வமும், பிற்பகுதியை நானும் படிக்கும் வாய்ப்பைப் பெற்றோம். பெரியாருடைய கட்டளைப்படி அவரது பணிகளை சட்டசபைக்கு உள்ளே சர்.ஏ.டி. பன்னீர் செல்வமும், சட்டசபைக்கு வெளியே நானும் செய்து வந்தோம்.
இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பிரச்சாரக் கூட்டத்தை எட்டயபுரத்தில் நானும் டாக்டர் நாவலர் சோமசுந்தர பாரதியாரும் சென்று நடத்தினோம். அப்போது அங்குள்ள காங்கிரஸ்காரர்கள் கருங்கற்களைச் சரமாரியாக அள்ளி வீசி அடித்து எங்களைக் கூட்டத்தை நடத்த விடாதபடி செய்தார்கள். ஆறு கல்லடிகள் பட்டு இரத்தம் சொட்டியதும் நாவலர் பாரதியார் எழுந்து பக்கத்தில் உள்ள ஒரு விட்டிற்குள் புகுந்து கொண்டார்கள். நான் பேசிக் கொண்டேயிருந்தேன். கற்கள் என் மீதும் பாதுகாப்பிற்காக வந்திருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர்மீதும் சரமாரியாக வந்து விழுந்தன. “இனிப்பேச வேண்டாம், தயவு செய்து நிறுத்திவிடுங்கள்” என்று இன்ஸ்பெக்டர் கேட்டுக் கொண்டார். அப்போது மேடைமீது இரண்டு வண்டி கருங்கற்கள் வந்து விழுந்தன. என் உதடு கிழிந்து இரத்தம் சொட்டியது. இச் செய்தி கோவில்பட்டியில் உள்ள டிப்டி கலெக்டருக்குத் தெரிந்து, அவர் ஒரு படையோடு வந்து எங்கள் இருவரையும் காப்பாற்றி, கல் எறிந்தவர்களில் முப்பது பேர் மீது குற்றம் சாட்டி வழக்கும் தொடர்ந்திருந்தார். காலப்போக்கில் அவ்வழக்கை அப்போது முதலமைச்சராயிருந்த, C. ராஜகோபாலாச்சாரியார் நடத்தவேண்டாமென்றும், திரும்பப் பெற்றுக் கொள்ளும்படியும் அங்குள்ள அரசாங்க வழக்கறிஞர்களுக்குக் கட்டளையிட்டார்.
இந்த அநீதியைக் கண்டித்து சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் சட்டசபையில் முதலமைச்சர் சி. ஆரைத் தாக்கிப் பேசி, “இதுதான் காங்கிரஸ்காரருடைய தேசீயச் செயலா?” என்று கேட்டார். அப்போது முதலமைச்சர் சி.ஆர். அவர்கள், மிகவும் பொறுமையாக “பொது மக்கள் முன்பு வாய் திறந்து பேசுகிறவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகப் பேசவேண்டும்” என்று கூறினார். அப்போது சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் எழுந்து. “இந்தச் சட்டசபையிலுள்ள காங்கிரஸ் கட்சியினரில் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் மாதிரிப் பேசுகிறவர்கள் யாராவது உண்டா?” என்று ஆவேசத்தோடு ஒரு அறை கூவல் விடுத்தார். இது அன்றைய சட்டசபை நிகழ்ச்சியில் பதிவாகியிருக்கிறது. இதன்மூலம் சர்.ஏ.டி, பன்னிர்ச்செல்வம் அவர்கள் என் உள்ளத்தில் மட்டுமல்ல. தமிழக மக்கள் அனைவரின் உள்ளத்திலுமே குடி கொண்டுவிட்ட செய்தி நாட்டில் விரைவாகப் பரவியது.
பின்பு அவர் மத்திய அரசில், இந்திய அரசாங்க. ஆலோசகராகவும் பணிபுரிந்தார். இங்கிலாந்திலுள்ள இந்தியா மந்திரி சர். ஏ. டி. பன்னீர் செல்வத்தை தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும்படி விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டார். இது இந்தியாவிலுள்ள பலருக்குப் பொறாமையையும், மனக்கசப்பையும் உண்டாக்கி விட்டது. 1940–ல் அவருக்குப் பெருமளவில் வழியனுப்பு விழா நடத்தினோம். விமானத்தில் பறந்து சென்றார்கள். போய்ச் சேர்ந்த செய்தி மட்டும் வரவில்லை. புறப்பட்ட விமானமும் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.
ஒரு வாரத்திற்குப் பிறகு ஒமாங் கடலின் மேல் பெட்ரோல் எண்ணெய்கள் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவரது உடலையும் விமானத்தையும் ஒமாங் கடல் கொள்ளை கொண்டுவிட்டது என்ற செய்தி தெரியவந்தது. தமிழகமே கண்கலங்கியது. என் செய்வது?
தமிழ் நலனுக்கு, தமிழர் நலனுக்கு, தமிழகத்தின் நலனுக்குத் தொண்டு செய்து வந்த தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து இழந்து கொண்டே வருகிறோம். அவர்களில் ஆங்கிலக் கடல் நீந்தி தமிழ்க் கரையேறிய நண்பர் சர்.ஏ.டி. பன்னிர்ச் செல்வம் அவர்களை உப்புக் கடல் ஒன்று விழுங்கிவிட்டதை அறிந்து உலகம் கண்ணிர் உகுத்தது. யார் யாருக்கு அனுதாபம் கூறுவது? மெல்ல நகர்ந்து செல்லும் காலம்தான் நம் அனைவருக்கும் நல்லாறுதல் கூற முடியும்.
தலைவர் காமராஜர்
எழுபது ஆண்டுகளாக எனக்கும் விருதுநகருக்கும் தொடர்புண்டு. நட்பு, வணிகம், அரசியல், சமூக திருத்தம் ஆகிய பலதுறைகளில் பலமுறை அந்நகருக்குச் சென்று வந்திருக்கிறேன். இப்பெயர் உள்ள ஒருவர் அங்கு இருப்பதாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புகூட நான் அறிந்ததில்லை. அதன்பிறகுதான் அறிந்தேன், மிக அண்மைக் காலத்தில்தான் அவரைப் பார்க்கவும், பழகவும், பேசவும் எனக்கு வாய்ப்பு ஏற்பட்டது.
விருதுநகர் 1939க்கு முன்பு ஜஸ்டிஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. அங்குக் காங்கிரஸிற்கோ, பிற கட்சிகளுக்கோ இடமில்லை. 1924 அதாவது இன்றைக்கு அறுபதாண்டுகளுக்கு முன்பு என்று எண்ணுகிறேன். பஞ்சுத்தரகு வைத்தியலிங்க நாடார் என்ற ஒருவர் தனலட்சுமி ஸ்டோர் என்ற பெயரால் ஒரு சுருட்டுக் கிடங்கை விருதுநகரில் வைத்து நடத்தி வந்தார். அவர் காங்கிரஸின் மீதும் காந்தியடிகள் மீதும் அதிகப் பற்றுள்ளவர் என்பதை, அவர் என்னிடம் புகையிலை வாங்க வந்தபொழுது அறிந்து கொண்டேன். அவர்தான் முதன் முதலில் திரு. சத்திய மூர்த்தி ஐயர் அவர்களை விருதுநகருக்கு வரவழைத்துப் பேசச்செய்தவர். அன்று அதற்கு அவ்வூரில் இருந்த எதிர்ப்பை இன்றைக்கு நினைத்தாலும் காங்கிரஸ் கட்சியினர் பீதியடைவர். நான் நினைப்பது சரியாக இருந்தால், திரு. காமராஜ் நாடார் அவர்களும் அக்கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டராகப் பணிபுரிந்திருக்க வேண்டும். அதன்பிறகே, அவர் பெயரை , தொண்டை, சிலர் அறிய முடிந்தது.
இவர் பெயரைத்தமிழ்நாடு நன்கு தெரிந்துகொண்ட காலம், இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலமே ஆகும். அதற்கு. முன்பு இவருடைய பெயரையும், தொண்டையும், அக்கட்சியைச் சார்ந்த சிலரே அறிய வாய்ப்பிருந்தது.
காமராஜன் என்ற பெயர் மன்மதனுக்கு உரிய ஒன்று. இப்பெயரைத் தமிழ்நாட்டில் பலர் அப்போது வைத்திருப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை. இப்போது, இப்பெயரைப் பலர் வைத்திருக்கிறார்கள். அப்போது அவருக்கு மட்டுமே இப்பெயர் இருந்தது என்ற முடிவுக்கு வருவதானால், தமிழ்நாட்டில் ஒரே காமராஜர்தான் என்ற முடிவுக்கு வர வேண்டியதுதான். மிகவும் அழகாக இருந்ததினால் இப்பெயரை அவருக்கு இட்டிருக்க வேண்டும் என நான் நினைத்ததுண்டு. ஆனால், நேரில் பார்த்தவர்கள் அப்படி ஒன்றும் இல்லை எனக் கூறினார்கள்.
சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, மிகக் குறைந்த படிப்பைப் படித்து, ஏழு எட்டு ரூபாய் சம்பளத்தில் இருந்து எளிய வாழ்க்கை நடத்தி, சிறந்த குணத்தைப் பெற்று, மிகுந்த உணர்ச்சியால் பொதுத் தொண்டிற் புகுந்தவர் காமாாஜர் என்று துணிந்து கடறலாம்.
உயர்ந்த பேச்சாளி என்றோ, சிறந்த எழுத்தாளி என்றே பெயர் பெறாவிட்டாலும், மிகுந்த உழைப்பாளி என்ற பெயரை அவர் வெகு விரைவில் பெற்றுவிட்டார். 1940இல் நான் நீதிக் கட்சியின், ஆந்திரம், கேரளம், கன்னடம், தமிழகம் ஆகிய நான்ரு மாநிலங்களுக்கும் பொதுக்காரியதரிசியாக இருந்த பெரும்பதவியை, பெரியாருக்கும் எனக்கும் ஏற்பட்ட மாறுபட்ட கருத்தால் இராஜினாமா செய்து, அது பற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு, என் தொழில்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு சட்டசபை உறுப்பினர் என் இல்லத்திற்கு வந்தார். அவர்:
“நான் ஒரு காங்கிரஸ் கட்சியினன். சென்னையிலிருந்து வரும் வழியில் தங்களைப் பார்த்துப் போக வந்தேன். தலைவர் காமராஜரும் நானும் இப்பொழுது கூடத் தங்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம். தங்கள் மீது அவருக்கு அன்புண்டு. தங்களைப் போன்றவர்களெல்லாம் காங்கிரசில் இருக்க வேண்டுமென்பது அவரது எண்ணம். அவ்வாறு தாங்கள் விரும்பினால், அவர் தன்னுடைய பதவியைக் கூடக் காலி செய்து கொடுக்கத் தயங்க மாட்டார்” என்று கூறினார். நன்றி கலந்த வணக்கங் கூறி அனுப்பிவிட்டேன். அவர் கூறியது உண்மையாக இருக்குமானால், திரு. காமராஜர் அவர்களுக்குத் தம் கட்சியின் மீதுள்ள பற்றுதலின் அளவையும், பிற கட்சியைச் சார்ந்தவர்களின் மீது வைத்துள்ள மதிப்பின் உயர்வையும் எடுத்துக் காட்ட, இது போதுமானது என்றே கூறலாம்.
அடுத்தடுத்து அவரே தமிழ் நாட்டுக் காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த பொழுது, அவருக்ருக் கட்சியிலும் நாட்டிலும் செல்வாக்கும் மதிப்பும் உயர்ந்துகொண்டே வருவதை மக்களால் நன்கு அறிய முடிந்தது. நேர்மையும், ஒழுக்கமும், சட்டதிட்டங்களில் ஒழுங்கும், பண வரவு செலவுகளில் கண்டிப்பும் உடையவரென நான் கேள்விப்பட்ட பொழுது பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன்.
ஜஸ்டிஸ் கட்சிக்கு நாடார் சமூகத்தில் அசைக்க முடியாத செல்வாக்கு இருக்கிறதென்றும், அதற்குக் காரணம் செளந்திரபாண்டியனுக்குக் கட்சியில் செல்வாக்கு இருக்கிறதென்றும், அதை ஒழித்து அச்சமூகத்தில் காங்கிரசிற்குச் செல்வாக்கு ஏற்பட வேண்டுமானால், நாடார் சமூகத்திலிருந்தே காங்கிரசிற்குத் தலைவர்களைக் கொண்டுவர வேண்டுமென்றும் எண்ணியே திரு சத்தியமூர்த்தி ஐயர் அவர்கள் திரு. காமராஜ் அவர்களைக் கொண்டு வந்தாரென அப்போது கூறப்பட்டதுண்டு. ஆனால், அதே சத்தியமூர்த்தி ஐயர் அவர்கள் சமூகத்திற் பிறந்த என் நண்பர் ஒருவர், மதுரை நகரில் அப்போது கூறியது இதுதான்: “ஐஸ்டிஸ் கட்சியின் தலைமைப் பதவியும், செல்வாக்கும், காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியும் செல்வாக்கும் நாடார் சமூகத்துக்குள் புகுந்து கொண்டன. என்ன செய்வது?” என்பதே. எப்படி இந்தப் பெருமூச்சு.
திரு. காமராஜர் அவர்களின் தன்னலமற்ற சேவையை, திறமையை, நேர்மையை அறிய எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அது பெரியார் காந்தியடிகள் ‘கிளிக்’கென்ற சொல்லம்பை தமிழ்நாட்டில் எய்த காலம். அன்று அவ்வம்பு தன் மீது படாமல், பதவியை உதறித் தள்ளித் தடுத்து நின்றார் காமராஜர். அன்று என் கண்களுக்கு அவர் வீரராக விளங்கினார்; வாழ்த்தினேன்.
அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, அவர் தன்னுடைய தலைமைப் பிரசங்கத்தைத் தமிழ் மொழியில் நிகழ்த்தியதைக் கண்டு என் உள்ளம் குளிர்ந்தது. இந்தியா முழுவதிலுமுள்ள எல்லா மொழியினரும் அங்கு வந்து கூடி இருந்து, திரு காமராஜ் அவர்கள் தமிழில் பேசுவதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் என்றசெய்தி.என்னைப் பெருமகிழ்ச்சியடையச்செய்தது. அன்று தமிழகமே உயர்ந்து விட்டதாகக் கருதினேன். ஓர் உருண்டை உணவு அதிகமாக உண்டு மகிழ்ந்தேன். பிறகு, அவரது செல்வாக்கு இந்தியாவின் பிரதமமந்திரியை உருவாக்கும் அளவுக்கு உயர்ந்தது கண்டு. இந்நாடே பெருமைப்பட்டது.
ஒரு சிற்றுாரில் சிறு தொண்டராகத் தொடங்கி ஒரு நாட்டின் தலைமைப் பதவியை ஏற்கிற அளவுக்குத் திரு காமராஜர் அவர்கள் உயர்ந்தது, தொண்டு புரிவதன் அருமையையும், பெருமையையும் விளக்குவதாகும்.
அவர் எனக்கு மாறுபட்ட கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், அவரது தொண்டு மாசற்றது என்பது என் எண்ணம். அவர் மிகுந்த இளைஞராய் இருந்தபோதும், திருமணம் செய்து இல்லற வாழ்வு வாழும் எண்ணமே இல்லாது, இந்நாட்டையே தனது குடும்பமாக எண்ணிப் பொதுத் தொண்டையே இன்ப வாழ்வாகக் கருதியவர், பொது மக்களுக்காகவே பொதுவாழ்வு வாழ்ந்துவருபவர் அன்பர் திரு காமராஜர் எனக் கூறலாம். அவர் இன்னும் பன்னெடுங் காலம் நல் உடல் நலத்தோடு நல்வாழ்வு வாழவேண்டுமெனவும், அவரது தொண்டு பொதுவாக இந்தியாவிற்கும், சிறப்பாகத் தமிழகத்திற்கும், தமிழிற்கும் பயன்பட வேண்டுமெனவும் வாழ்த்தினேன். என்செய்வது என் எண்ணம் நிறைவேறவில்லையே!
ஒப்பற்ற தலைவர் செல்வா!
செல்வநாயகம் எனது நண்பர். அவரது அருந்தொண்டுகளை நான் பல்லாண்டுகளாக நன்கறிவேன். உழைப்பிலே கடுமை, தொண்டிலே தூய்மை, சொல்லிலே எளிமை, வாழ்விலே நேர்மை-என்றால், அது செல்வ நாயகம் என்று பொருள். அதனாலேயே, அவர் ஈழத்தின் தந்தை என அருமையாக அழைக்கப்பெற்று வருகிறார்.
அவரது எண்ணமெல்லாம் ஒன்றே ஒன்று. அது நாடு செழித்து, மொழி வளர்ந்து, மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே. இந்த ஒரே நோக்கத்திற்காக அவர் பல்லாண்டுகள் இராப்பகலாக உழைத்து வருகிறார்.
ஏறத்தாழ எங்கள் இருவருக்கும் ஒரே வயது என்றாலும், அவர் நாட்டிற்காக, மக்களுக்காக ஓயாது உழைத்து உருக்குலைந்து அதிக வயதினராகவே காணப்படுகிறார். இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களில் பலர் நாடு அழிகிறதே, மொழி அழிகிறதே, வாழ்வு பாழாகிறதே என்று எண்ணி எண்ணி, வருந்தி உடல் நலம் கெட்டு இளைத்துப் போயிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இளைத்துப்போன மக்கள் பலரைக் கண்டதனாலேயே திரு செல்வநாயகம் அவர்களின் உடலும் இளைத்துப் போய் விட்டதெனத் தெரிகிறது.
நான் இலங்கைக்கு ஏழு தடவைகள் சென்று வந்திருக்கிறேன். அவர் இல்லத்திற்கு நானும், என் இல்லத்திற்கு அவரும் வந்துபோனதுண்டு, அப்போதெல்லாம் அவரது அரிய தொண்டுகளைப் பார்த்தும் கேட்டும் அறிந்து வந்திருக்கிறேன். அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு சொற்றொடரிலேயே கூற வேண்டுமாயின் , அவர் ஒரு ஒப்பற்ற தலைவர் எனக் கூறிவிடலாம்.
இலங்கை அவரைப் பல முறை சிறைப்படுத்தியிருக்கிறது. அதில் ஒரு தடவை அரசின் அனுமதி பெற்றுப் பார்க்கச் சென்றிருந்தேன். அவரைச் சுற்றி இரும்புத் தொப்பிகளை அணிந்த பயங்கரமான காவலாளர்கள் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்போதும், அவர் என்னிடம் பேசிய பேச்சுக்கள் நாடு, மொழி, இனம் பற்றியதாகவே இருந்தது. இது எனக்குப் பெரு வியப்பை அளித்தது.
சென்ற தடவை நான் இலங்கைக்குச் சென்றிருந்த போது, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புவரை பல கூட்டங்களில் பேசி வர நேர்ந்தது. அப்போது நான் கூறி வந்த ஒன்று... “இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வு விரைவில் வளம் பெற வேண்டுமானால்—அதற்குரிய ஒரே வழி, செல்வநாயகம், தொண்டமான், ஜி. ஜி. பொன்னம்பலம் ஆகிய மூவரும் ஒன்று சேர்வதே” என்பது. அது இப்போது நடைபெறுவது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இனித் தமிழ் மக்களின் நல்வாழ்வு வெகுதூரத்தில் இல்லையென நினைத்தேன்.
அறிஞர் செல்வநாயகம் அவர்கள் இன்னும் பன்னெடுங்காலம் நல்ல உடல் நலத்துடனிருந்து நாட்டிற்கும் மொழிக்கும் மக்களுக்கும் நற்றொண்டு புரிந்து நல்வாழ்வு வாழ்ந்து சிறப்படைய வேண்டுமென முழு மனத்துடன் வாழ்த்தினேன். இதுவும் நிறைவேறவில்லை. வருந்தினேன்.
நல்ல தமிழன்
பேச்சுடன் கண்டேன்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள். ஊர் திருச்சி. இடம் நகர சபை நாடகக் கொட்டகை. நீதிக் கட்சி மாநாடு ஒன்று பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அம்மகாநாட்டிற்கு வந்திருந்த கட்சித் தலைவர்கள் தங்களின், “ஆங்கிலப் பேச்சுக்களை மொழி பெயர்த்துக் கூறச்செய்யுங்கள்” எனக் கேட்டுக்கொண்டனர். முன்னேற்பாடு இல்லாத இத்திடீர்த் திட்டத்தையும் நடத்திவிட முயன்றேன். ஆங்கிலம் தெரிந்த அனைவரையும் அணுகினேன். மறுத்து விட்டனர். வழக்கறிஞர் ஒருவரை நெருங்கினேன். மன்னிக்கும்படி வேணடினார். விட்டு விலகினேன். இவ்வளவு பெரிய கூட்டத்தில் மொழி ஆற்றல் உள்ள தமிழன் ஒருவனும் இல்லையே என வருந்தினேன். வருந்தியது அதிகமா? வெட்கப்பட்டது அதிகமா? தெரியவில்லை.
இந்த நிலையில் ஒருவர் என் அருகில் வந்து, “மொழி பெயர்க்க ஆள்வேண்டுமா?” என்றார். “வேண்டும், யார் அது?” என்றேன். “கல்லூரி மாணவர் ஒருவர் வந்திருக்கிறார்; மொழி பெயர்ப்பார்” என்றார். எனக்கு இன்னும் சிறிது அதிகமாகக் கோபம் வந்தது. பெரிய தலைவர்களின் அரசியல் பேச்சுக்களை பள்ளிக்கடத்துப் பிள்ளைகளைக் கொண்டு மொழி பெயர்ப்பதைவிட, ஆங்கிலப் பேச்சு ஒன்றே மகாநாட்டைச் சிறப்பித்து வைக்கும் என நம்பிச் சும்மா இருந்துவிட்டேன். “மொழி பெயர்க்க ஆள்வந்து விட்டதா?” என்ற கேள்வி தலைவர்களிடமிருந்து என்னிடம் வந்தது. வேறு வழியில்லாமல், அதே மாணவரிடமே சென்று, “தம்பீ, நன்றாக மொழி பெயர்ப்பாயா?” என்றேன். “ஏதோ கொஞ்சம் தெரியும்” எனக் கூறினார். அந்தப் பதிலிலேயே கொஞ்சம் குறும்பும் கலந்திருந்ததாக எனக்குத் தோன்றியதால், சிறிது நம்பிக்கை ஏற்பட்டது.
மொழி பெயர்ப்பு முடிந்து, அருகிற் சென்று பெயர் வினவினேன். ‘அண்ணாத்துரை’ என்றார். மகாநாட்டினர்க்கு மகிழ்ச்சியோடு அறிவித்தேன். வழக்கறிஞரிடஞ் சென்று, “மறுத்தீர்களே. பார்த்திர்களா?” என்று பெருமிதமாகக் கேட்டேன். “மறுத்ததினால்தான் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் கிடைத்தார்” எனக் கூறினேன். அவரும் ஒரு சிறு சிரிப்புச் சிரித்தார். சொற்பொழிவு செய்தவரைக் கண்டு “மொழி, பெயர்ப்பு எப்படி?” என வினவினேன். “அதில் சிறிது சன்னப் பொடியும் கலந்திருந்தது” எனக்கூறி புன்னகை புரிந்தார்.
இந்த வகையில் நண்பர் சி. என். அண்ணாத்துரை எம்.ஏ., அவர்களை, முதன் முதலாகப் பேச்சோடு கண்டு மகிழ்ச்சியடைந்தேன். தமிழகத்தின் எதிர்கால நலனுக்கு இத்தகைய கல்லூரி மாணவர்கள் பலர் தேவை என எண்ணினேன். எனது எண்ணம் அன்றும் வீணாக்வில்லை, இன்றும் வீணாகவில்லை, என்றும் வீணாகப் போவதுமில்லை. இது எனது நம்பிக்கை.
கலைத் தலைவன்
கல்லூரியில் வருந்திக் கற்று, “கலைத்தலைவன்” என்ற எம்.ஏ. பட்டமும் பெற்று, பிறகு ஆசிரியர் துறையிலோ வழக்கறிஞர் துறையிலோ, வணிகத் துறையிலோ புகாமல், பொதுவாழ்வுத் துறையில் புகுந்தவர்—தமிழ் நாட்டில் முதன் முதலாக அன்பர் அண்ணாத்துரை ஒருவரே ஆவர். சுருக்கமாகக் கூறவேண்டுமானால், தமிழ் மக்களின் வாழ்வுக்காகத் தன் வாழ்வைப் பாழ்படுத்திக் கொண்டவர் எனக் கூறலாம். இதற்காக நண்பர் அண்ணாத்துரை அவர்களுக்குத் தமிழ் மக்கள் நன்றி கூறவேண்டும். அதைவிட அதிகமாக அவரை வளர்த்து, ஊக்குவித்து, நாட்டின் பொதுவாழ்வுக்கு தந்துதவிய அவருடைய “தொத்தாவுக்கு” (சிறிய தாயார்) நன்றியும், வணக்கமும் செலுத்தத் தமிழ் மக்கள் என்றும் கடமைப்பட்டவர்களாவர்.
இந்தி எதிர்ப்பு
1938–இல் நமது மாகாணத்தில் இந்தி எதிர்ப்புப் போர் நடைபெற்றது. அதை நடத்தியவர்களின் தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே எனக் கூறலாம். அப் பேரை நடத்துவதற்கென்றே திருச்சியில் நடைபெற்ற தமிழர் மாநாட்டின் பொருட்டாகப் பெரும் பொறுப்புக்கள் சிலவற்றை நான் ஏற்றேன். பெரியார் சிறை சென்றதும், முழுப்பொறுப்பும் என்மீதே விழுந்தது. அப்பொழுதெல்லாம் அன்பர் அண்ணாத்துரை அவர்களைப் போன்ற பலருடைய ஒத்துழைப்பும், தொண்டும் இல்லாதிருக்குமானால், என்னால் ஒன்றும் செய்ய முடிந்திராது. இந்தியை எதிர்த்தும், அரசாங்கத்தின் கொள்கையைத் தாக்கியும் பேசிய குற்றத்திற்காக அவர் ஆறுமாதம் சிறைத்தண்டனையைப் பெற்றார். அப்போதுதான் தமிழ்நாட்டு மக்களிற் பலருக்கு அவரை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.
அறிமுகம்
தமிழ்நாட்டு மக்களுக்கு அன்பர் அண்ணாத்துரையை அறிமுகப்படுத்தி வைத்தது யார்? என்று யாரோ கேட்டதாகத் தெரிகிறது. அவருக்குப் பதில் கூறுவதாயிருந்தால் “கேள்வியே தவறு” என்றுதான் பதில் கூறவேண்டும். கேள்வி, “அறிமுகப்படுத்திவைத்தது எது?” என்று இருக்கவேண்டும். அவ்விதம் இருக்குமானால், அது “அவரது தாய்மொழிப் பற்றும்,சீர்திருத்த உணர்ச்சி கலந்த பேச்சும்” என்று பதில் கூறலாம். மொழிப்பற்று
ஆங்கிலம் கற்றவர்களிற் பலர் அம்மொழியிலேயே ஆழ்ந்து விடுகின்றனர். இரண்டொருவர் கரை ஏறினாலும் அவர்கள் ஏறியது தமிழ்நாட்டுக் கரையாக இருப்பதில்லை. ஆங்கிலக் கடல் நீந்தி தமிழ்க்கரை ஏறிய அறிஞர்களுள் அன்பர் அண்ணாத்துரையும் ஒருவராவர். இத்துறையில் இதற்கு முற்பட்டவர்கள் பா. வே. மாணிக்க நாயக்கர், ச.சோ. பாரதியார், கா சுப்பிர மணியப்பிள்ளை, கோவை சர்.ஆர்.கே. வு.ண்முகம், இன்ஸ்பெக்டர் பவானந்தம் பிள்ளை, சி. கே. சுப்பிரமணிய முதலியார், எஸ். சச்சிதானந்தம்பிள்ளை, கே.எம். பாலசுப்பிரமணியம் முதலியோர் ஆவார். பிற மொழியிற் கண்ட கலை அறிவை தாய்மொழி வளர்ச்சிக்குப் பயன் படுத்துவதே தலையாய மொழிப்பற்று ஆகும். இத் துறையில் அன்பர் அண்ணாத்துரையின் கலை அறிவும், மொழிப்பற்றும் எவராலும் போற்றற்குரியனவாம்.
முறை
பெரியார் ஈ.வெ.ரா அவர்களுடன் நெருங்கிப் பழகிய இயக்க அன்பர்களிற் பலர், வெளியேறிக் கொண்டே இருப்பது வழக்கம். இது முறையாக நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். பிரிந்தவர்களை வெறுத்தும்: பெரியாரை ஆதரித்தும் வந்தவர்களில் நானும் ஒருவன் தான். காலக்கிரமத்தில் நானும் நெருங்கிப் பழகியதால் என்னுடைய முறையும் வந்துவிட்டது. காலியான என் இடமும் உடனே நிரப்பப் பெற்றது. என்னுடைய பணிகளில் காரியதரிசி வேலைக்கு அண்ணாத்துரையும், பொருள் வசூலிக்கப் பொன்னம்பலனாரும், சமாதானம் சொல்ல சாமி சிதம்பரனாரும் அமர்த்தப்பட்டனர், பின்னர் அவர்கள் மூவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்ததால் வழக்கப்படி அவர்கள் வெளியேறும் முறையும் வந்து விட்டது. ஒரே அறிக்கையில் மூவரும் கையெழுத்திட்டு பெரியாரிடத்திலிருந்தும் ‘விடுதலை’யிலிருந்தும் விடுதலை பெற்றுக் கொண்டனர். தமிழர் நாடு
1941 இறுதியில் அன்பர் அண்ணாத்துரை அவர்கள் “திராவிட நாடு” என ஒரு இதழைத் தொடங்கப் போவதாக எழுதியிருந்தார். நான் அதைத் “தமிழர் நாடு” எனத் தொடங்கும்படி எழுதியிருந்தேன். பல முன்னேற்பாடுகள் நடைபெற்று விட்டதனால், இனிமேல் எதுவும் செய்வதற்கில்லையென அறிவிக்கப் பெற்றேன்.
இளைஞர் மாநாடு
1942 தொடக்கத்தில் சென்னை மாகாண ஜஸ்டிஸ் மாநாடு ஒன்றை சென்னையில் கூட்டுவதற்குப் பெரு முயற்சிகள் நடைபெற்றன. அம்மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் அன்பர் அண்ணாத்துரையே ஆவர். என்னைத் தலைமை வகிக்கும்படி மாநாட்டு அமைச்சர் எழுதியிருந்தார். தகுந்த காரணங்களைக் காட்டி மறுத்து விட்டேன். அக்கடிதத்தை அன்பர் அண்ணாத்துரை பார்வையிட்டு ஒரு வற்புறுத்தல் கடிதம் எழுதியிருந்தார். அது, இது :—
“அன்புள்ள தோழருக்கு,
வணக்கம்! தங்களை நேரில் காணவேண்டும் என ஆவல் எனக்கு அதிகம். என்றாலும், இது சமயம் வேலை மிகுதியினால் அங்குவர இயலவில்லை, என வருந்துகிறேன். தாங்கள் டில்லியிலிருந்து திரும்பியதும் தங்களுடன் ஒரு நாள் முழுதும் கலந்து பேசவேண்டும்.
சென்னை மாநாட்டிற்குத் தாங்களே தலைமை வகிக்கவேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறேன். மறுக்க வேண்டாம். திராவிட நாட்டுப்பிரிவினை பற்றிப் திருவாரூரில் தீர்மானம் நிறைவேறியிருப்பதால் அது குறித்து எதிர்ப்பது முறையாகாது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். தங்களுக்கு அது விருப்பமில்லாவிடில், தமிழ் நாடு தனி மாகாணம் ஆவதின் அவசியம் பற்றித் தலைமை உரையில் விளக்குங்கள். மற்றப்படி கட்சிகளின் ஆக்க வேலைகளைப் பற்றியும், கொள்கைகளைப் பற்றியும், நாம் இருவரும் ஒரு கருத்துக்கொண்டவர்களே.
திராவிட நாட்டுப் பிரிவினை என்பது, தமிழ்நாடு தமிழருக்கே என்பதற்கு முரண் அல்ல என்பதை இப்போதே கூறிவிடுகிறேன். மற்றவைகள் தாங்கள் டில்லி சென்று திரும்பியதும்.
கட்சி வேலை சம்பந்தமாகத் தோழர் செளந்தர பாண்டியன் அவர்களிடமும் பேசியுள்ளேன். தங்களுக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறேன். மகாநாட்டிற்குத் தலைமை வகிக்குமாறு மறுபடியும் கேட்டுக் கொள்கிறேன். .
தங்களன்புள்ள தோழன்,
சி என் அண்ணாதுரை.
மாறுபட்டார் வேறுபட்டார் எனக் கருதும்போதும், அவருடைய அன்பையும், பெருந்தன்மையையும் கட்சியின் மீதுள்ள பற்றையும் கொள்கையின் மீதுள்ள உணர்ச்சியையும் எடுத்துக் காட்ட இக்கடிதம் போதுமானது என்றே கருதுகிறேன்.
விட்ட இடத்திலிருந்து
1942 மார்ச் 15ஆம் நாளில் சென்னை செயிண்ட் மேரிஸ் ஹாலில் சென்னை மாகாண ஜஸ்டிஸ் இளைஞர் மாநாடு பெரிய அளவில் என் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புக் குழுத் தலைவர் அன்பர் அண்ணாத்துரை அவர்கள். இயக்கத்தின் வேலைகளைத்தொடர்ந்து நடத்த வேண்டும் எனத் தனது வரவேற்பு உரையில் குறிப்பிட்டார். இயக்கத்தின் வேலைகள் தடைப்பட்டு இரண்டு ஆண்டுகள் பாழாய்ப் போயினவே. இப்போது என் செய்வது? என எனது தலைமையுரையில் வருந்திக் கூறினேன். இதை அன்பர் அண்ணாத்துரை அவர்கள் மனதில் வைத்துக்கொண்டேயிருந்து, நன்றி கூறும் பொழுது விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடங்குங்கள்” எனக் குறித்துக் கூறினார்.இது அனைவராலும் கைதட்டி வரவேற்கப்பட்டது.
நாங்கள அல்ல
1944—ல் ஈரோட்டில் இரண்டாவது நாடகக் கலை மகாநாடு சர். ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பெரியாரைப் பின்பற்றுவோர்க்கும், சர். ஷண்முகத்தைப் பின்பற்றுவோர்க்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருந்து வந்ததினால், மாநாட்டில் கலவரம் ஏற்படும் என்ற வதந்தி உலவியது. பேசுவதற்காக என்று: நாங்கள் சென்றிருந்தோம் அன்பர் அண்ணாத்துரை பேசும் பொழுது,
“தலைவர் தங்கள் மீது வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் தயவுசெய்து அந்த எண்ணத்தை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். கம்ப இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று நாங்கள் கூறுவதெல்லாம், அந்த நூலின் மீது எங்களுக்குள்ள வெறுப்பைக் காட்டுவதற்கே ஒழிய, உள்ளபடியே கம்ப இராமாயணத்திற்குத் தீ வைக்கும் கயவர்கள் நாங்கள் அல்ல.”
என ஒரு விளக்கப் போடு போட்டார். தலைவர் சர். ஷண்முகம் அவர்கள் சிரித்தார். “என்ன என்றேன்?” “சரிதான்” என்றார்.
சொற்போர்
திருவாளர் ஆர்.பி.சேதுப்பிள்ளை அவர்களுடன் ஒரு முறையும், பேராசிரியர் ச.சோ. பாரதியார் அவர்களுடன் ஒரு முறையும் கம்ப இராமாயணம் பற்றிச் சொற்போர் நிகழ்த்த, சென்னையிலும் சேலத்திலும் சில அன்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இரண்டிலும் அன்பர் அண்ணாத்துரையே வெற்றி பெற்றாரா? மற்ற இருவரும் வெற்றி பெற்றார்களா? என்ற கேள்வி இங்கு வேண்டியதில்லை. அவர்கள் இருவரும் சொற்போர் நிகழ்த்த, ஒப்பியதே அண்ணாத்துரைக்கு ஒரு வெற்றியாக அமைந்து விட்டது. திராவிடக் கழகம்
திராவிடநாடு பிரிவினைப் பற்றிப் பேச்சுப் பிரசாரம் மட்டுமே நடைபெற்று வந்தது. அதன் பேரால் ஒரு கழகம் இருக்க வேண்டும் என்று எண்ணம், முதன் முதலாக அன்பர் அண்ணாத்துரைக்கே ஏற்பட்டது. அதன்படி காஞ்சிபுரத்திலேயே முதலில் திராவிடர் கழகத்தைத் தொடங்க எண்ணி முயற்சி செய்துவந்தார். பிறகு சேலம் நிர்வாகக் கூட்டத்தில் “தென்னித்திய நல உரிமைச் சங்கத்தையே திராவிடர் கழகம்” என மாற்ற வேண்டும்’ என்று தீர்மானம் செய்யப் பெற்றுத் திராவிடர் கழகத் தலைமை நிலையத்தின் உரிமையானது காஞ்சீபுரத்திலிருந்து ஈரோட்டிற்குச் சென்று விட்டது என்றாலும், அன்பர் அண்ணாதுரை அவர்கள் இதை வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை. இச்செய்தியைச் சிலரே அறிவர்.
பெரும பங்கு
தமிழ் நாட்டில் படிப்பில்லாத மக்களிற் பெரும்பான்மையோரைப் பேச்சின் மூலம் தட்டியெழுப்பிய பெருமையில் பெரும்பங்கு பெரியார் ஈ.வே.ரா அவர்களுக்கு உண்டு. அது போலவே, படித்த இளைஞர்களிற் பெரும்பான்மையோரைப் பேச்சின் மூலம் தட்டியெழுப்பிய பெருமையில் பெரும் பங்கு அன்பர் அண்ணாதுரைக்கு உண்டு என உறுதியாகக் கூறலாம்.
பேச்சாளர்
அன்பர் அண்ணாத்துரை ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்றாகப் பேசும் ஆற்றல் படைத்தவர். மேடை ஏறிப் பேசுகின்றவர்கள் பலராலும் பாராட்டப்படுபவர். இக்காலத்திய மேடைப் பேச்சுக்களில் பயனிலையை முன்னே வைத்துச் செயப்படு பொருளைப் பின்னே வைத்துப் பேசப்படுகிறது. அது “தூது அனுப்பினார், பதில் வந்தது” என்றிராமல், “அனுப்பினார் தூது, வந்தது பதில்” என்றிருக்கும். இம்முறையை நம்நாட்டில் முதலிற்புகுத்தியவர் அன்பர் அண்ணாத்துரையே ஆவர். இம் முறையானது மரபுக்கு மாறுபட்டது எனக் கூறினாலும், செவிச் சுவைக்கு வேறுபட்டது எனக் கடறிவிட முடியாது.
அவர் பேசும்பொழுது தன் குதிகாலை உயர்த்தி, உயர்த்திப் பேசுவது வழக்கம். பேச்சில் நகைச்சுவையும், வீரச் சுவையும் மாறி மாறிக் காட்சியளிக்கும். அடுக்குச் சொற்கள் அதிகமாக வந்து விழும். குறுகிய உருவமும், குறும்புப் பார்வையும், புருவ நெரிப்பும், இனிய குரலும், எடுப்பான ஒசையும், வெற்றிலை அடக்கிய வாயும்; வீராவேசப் பேச்சும், பற்றில்லாதவரையும் பற்றுக் கொள்ளச் செய்யும் பான்மையுடையனவாகும்.
சுருக்கமாகக் கடறவேண்டுமானால் தமிழ்நாட்டில் உயர்ந்த பேச்சாளர்களின் கூட்டத்தில் முதல் வரிசையில் விரல் விட்டு எண்ணக்கட்டிய சிலரில் அன்பர் அண்ணாத்துரையும் ஒருவர் என்றே கூறியாக வேண்டும்.
கலைஞர்
அன்பர் அண்ணாத்துரை பேச்சாளர் மட்டுமல்ல, எழுத்தாளருங்கூட. அவருடைய “திராவிட நாடு” பத்திரிகை தமிழ்நாட்டில் அதிகமாக வரவேற்கப்படுகிறது. அவர் பத்திரிகை ஆசிரியர் மட்டுமல்ல; நாடக நூல் ஆசிரியருங்கூட. அவரால் எழுதப் பெற்ற “வேலைக்காரியும்”, “ஓர் இரவும்” நாடகத்தின் மூலமும் திரைப்படத்தின் மூலமும், மக்களுக்குச் சீர்திருத்த உணர்ச்சியை உண்டாக்கி இருக்கின்றன. இவர் ஒரு பேச்சுப் புலவர் மட்டுமல்ல; நடிப்புப் புலவருங்கூட “சந்திரோதயம்” நாடகத்தில் அவர் உணர்ச்சியோடு நடிப்பது கண்ணுக்கு மட்டுமல்ல, சிந்தனைக்கும் சிறந்த விருந்தாக இருந்தது. ஆகவே, அன்பர் அண்ணாத்துரை அவர்கள் எழுத்து, பேச்சு, நடிப்பு ஆகிய முத்துறையிலும் சிறந்த கலைஞராக இருந்து வருகிறார்.
குற்றச் சாட்டுக்கள் .
1.“மூவர் சேர்ந்து ஒப்பந்தமாகக் கையெழுத்திட்டு அறிக்கை விட்டு வெளியேறிய பிறகு அண்ணாத்துரை திரும்பவும் பெரியாரோடு சேர்ந்த பொழுது, எங்களைக் கலந்திருக்க வேண்டும்.”
—இரு நண்பர்கள்.
2. “பாரதிதாசனுக்கு என்ன வந்தது? இரண்டு பாட்டுப் பாடிவிட்டால் ஒரு புலவர். அவனுக்கெல்லாம் பண முடிப்பு. இதற்கெல்லாம் அண்ணாத்துரை முயற்சி. எதுவும் கேட்டுச் செய்யவேண்டாமோ?
—தலைவர் பெரியார்.
3. சுவீகாரப் பிள்ளையாக நான் ஒருவன் இருக்கும் போது, இவனுக்கு என்ன இங்கு ஆதிக்கம்.
—தகப்பன் சாமி.
4. ‘ஒட்டிக் கொண்டிருந்தால் எட்டியிருந்து திட்டி எழுதுவேன். எட்டிப்போய் விட்டால் ஒட்டிக்,கொண்டு திட்டுவேன்.”
—மலைச் சாமி.
5. “கேட்டீர்களா செய்தியை. இப்பொழுது அண்ணாத் துரை இயக்கத்தைக் கவனிப்பதில்லை. நாடகம் எழுதிப் பணம் சம்பாதித்து, முதலாளி ஆகிவிட்டார்.
— கையாலாகாதவன்.
6. “கடிதம் எழுதினால் பதிலே எழுதுவதில்லை. என்ன இருந்தாலும் இப்படி இருக்கக் கூடாது.”
— எழுதிச் சலித்தவர்.
7. “பெரியார் கொள்கைக்கு விரோதமாகப் பெரிய தலையங்கம் ஒன்றை ஆகஸ்ட் 15–உ அநியாயமாக, எழுதலாமா?”
— திராவிட இளைஞர்கள்.
8. “தமிழ் மொழிக்கும், தமிழ் நாட்டுற்கும் தொண்டு செய்யத் தமிழர் கழகம் அழைத்தும் அண்ணாத்துரை மறுத்துவிட்டது பெருங் குற்றமாகும்.”
— தமிழ் இளைஞர்கள்.
9.4. “இந்தியை எதிர்த்து மறியல் செய்தவர்களுக்கு உடந்தையாயிருந்த குற்றவாளி அண்ணாத்துரைக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கிறேன்.” —நீதிபதி.
மேலே உள்ள குற்றச்சாட்டுக்களால் அன்பர் அண்ணாத்துரை தாக்கப்பட்டவர் என்றாலும் அவர் குற்றவாளியா? அல்லவா? என்பதை விளக்கிக் கூறியதில்லை. நீதிமன்றத்திலேயே அவர் கூறவில்லையென்றால், நாட்டிலும் ஏட்டிலும் அவர் ஏன் கூறுகிறார். ஆகவே, அவர் குற்றவாளியா? அல்லவா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ள வேண்டியதுதான்.
நான் அவர்மீது சாட்டுகிற குற்றச்சாட்டு ஒன்றுண்டு. அது பொய் பேசுவது என்பதுதான். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தவிடத்துக்கு ஒரு அன்பர் வந்தார். “ஒன்பதாம் தேதி கூட்டம் : வரவேண்டும்” என்றார். ஒப்பினேன். அன்பர் அண்ணாத்துரையை அழைத்தார். அவரும் ஒப்பினார். அழைத்தவர் மகிழ்ச்சியோடு சென்று விட்டார். அவர் சென்ற பிறகு “ஒன்பதாம் தேதி வேறு வேலை இருப்பதாகச் சொன்னீர்களே. எப்படி ஒப்பினர்கள்’’ எனக் கேட்டேன். “நான் போகப்போவதில்லை. சும்மா சொன்னேன்” என்றார். “இந்த உண்மையை அவரிடம் சொல்லியிருக்கலாமே?” என்றேன். சொன்னால், அவர் நம்மை விட்டுப் போயிருக்க மாட்டார். நம்மையும் பேசவிட்டிருக்க மாட்டார்’ என்றார். “இதற்காகப் பொய் சொல்லுவதா?” என்றேன். உண்மையைச் சொன்னால் ஒப்புக் கொள்ளுகிற குணம் உண்டாகிற வரையில் பொய்பேசுவதில் தவறு ஒன்றுமில்லை” என்றார். “அந்தக் குணத்தை நாம்தான் உண்டாக்க வேண்டும். அதற்காகச் சிறிது தியாகமும் செய்யலாம்” என்றேன். “உங்களால் இயலலாம்; என்னால் இயலாது” என்றார். “முயலுங்கள், இயலும்” என்றேன். நாட்டின் நலனைக் கருதி இக்குறை ஒன்று அவரை விட்டு விலக வேண்டும் என்பதே எனது ஆசையாகும்.
தொண்டு
அன்பர் சி. என். அண்ணாத்துரை எம், ஏ., அவர்கள் ஒரு சிறந்த அறிஞர், நல்ல எழுத்தாளி. உயர்ந்த பேச்சாளி. முனைந்த உழைப்பாளி. சீர்திருத்தவாதி, பத்திரிகை ஆசிரியர், நாடகக் கதாசிரியர், நடிகர் எனக் கூறலாம். இவ்வெல்லாத் துறையாலும், நாட்டுத் தொண்டு, மொழித் தொண்டு ஆகியவைகளைச் செய்து வருபவர். திட்டம் போட்டு உட்கார்ந்து, உடம்பு வணங்கி வேலை பார்க்கின்ற ஒரு தொல்லையைத் தவிர, மற்ற எல்லாத் தொல்லைகளையும் ஏற்றுத் தொண்டாற்றும் இயல்பு உடையவர்.
முடிவு
அன்பர் அண்ணாத்துரை அவர்களைத் தமிழ்நாட்டின் பல செல்வங்களில் ஒன்றாகக் கருதுதல் வேண்டும். அவர் ஒரு நல்ல தமிழர். இன்றைய இளைஞரும் எதிர்காலத் தலைவரும் ஆவர். அன்பர் அண்ணாத்துரையைப் போன்ற பலர் எதிர்காலத் தமிழ்நாட்டிற்குத் தேவை; மிகவும் தேவை. இப்போதே சிலர் தோன்றி வருகிறார்கள். இன்னும் பலராகப் பெருக வேண்டும் என்பது எனது எண்ணம். பண்டைப் பெருமையையும், பழம் புகழையும் பேசிக் கொண்டே எல்லாத் துறையிலும் அன்னியருக்கு அடிமைப்பட்டுத் தன் சிறப்பையும் மறந்து வாழுகின்ற தமிழ்நாட்டிற்கு, இத்தகைய அறிஞர்களும், தொண்டர்களும் தேவை.
மேலே குறித்த இக் கட்டுரை இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘அறிஞர் அண்ணாத்துரை’ என்ற நூலுக்கு நான் எழுதியது. இந்த என் எண்ணம் வீண்போகவில்லையென்பதை அவர் திராவிட முன்னேற்றக் கழகங்கண்டு, கட்சியை வளர்த்து, கழக ஆட்சியைத். தமிழகத்தில் முதலமைச்சராய் இருந்து நடத்தி, மக்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்றதைக் கண்டு நன்கறியலாம்.
அவர் முதலில் மாணவர், பின் தொண்டர்; அடுத்துப் பேச்சாளர்; எழுத்தாளர்; நடிகர்; நாடக ஆசிரியர் பத்திரிகை ஆசிரியர்; நூலாசிரியர்; சீர்திருத்தவாதி, அரசியல்வாதி; முதல் அமைச்சர் என ஆனார்.
இவற்றால் முதலில் அவர் காஞ்சித் தலைவன் ஆனார்; அடுத்துத் தமிழகத்தின் தலைவர் ஆனார். பின் டில்லிப் பாராளுமன்றத்திற் பேசி, இந்தியாவின் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். இன்னும் இரண்டாண்டுகள் இருந்திருந்தால் உலகத் தலைவர்களில் ஒருவராக விளங்கியிருப்பார். என் செய்வது? தமிழும் தமிழகமும் பெற்ற பேறு அவ்வளவுதான்.
வழக்கறிஞர் வன்னிய சிங்கம்
1911 –ஆவது ஆண்டை எவராலும் மறக்க இயலாது. ஏனெனில், அது ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்திக்குப்பட்டம் கட்டிய ஆண்டும். அறிஞர் திரு. கு. வன்னிய சிங்கம் அவர்கள் பிறந்த ஆண்டுமாகும், அவர்கள் பிறந்தநாள் அக்டோபர் மாதம் 18–ஆம் தேதி. திரு. வன்னியசிங்கம் அமரரான நாள் 1959–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17–ஆம் தேதி வியாழக்கிழமை. தமிழகத்தில் வாழ்ந்து, தமிழ்த் தொண்டும் அரசியற்றொண்டும் புரிந்த தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்களும் அமரரான தினம் செப்டம்பர் மாதம் 17–ஆம் தேதி வியாழக்கிழமையே யாகும். இதிலும் சிறப்பாகத் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் வேறு என்ன ஒற்றுமை தான் இருக்க முடியும்!
அவரது இவ்வுலக வாழ்வு 49 ஆண்டுகளே. அதிலும் அவர் அன்பு மனைவியுடன் வாழ்ந்த குடும்ப வாழ்வு 16 ஆண்டுகளே. அதிலும் அவருடைய அரசியல் வாழ்வு 12 ஆண்டுகள் மட்டுமே. அதிலும் அவருடன் எனது நட்பு ஆண்டுகள் 7 மட்டுமே. அதிலும் கடைசி முறையாக என்னிடம் அவர் பேசி மகிழ்ந்ததற்கும், அவருடைய வாழ்வு மறைந்ததற்கும் இடையில் உள்ள நாட்கள் 7 மட்டுமே.
அன்பர் திரு. வன்னியசிங்கம் அவர்கள் உயர்ந்த . அறிவாளி, சிறந்த எழுத்தாளி, நல்ல பேச்சாளி, அரிய கருத்தாளி, கடின உழைப்பாளி, சிறிய முதலாளி, பெரிய கொடையாளி என வாழ்ந்து வந்தவர். அவரது தன்னலமற்ற தொண்டு இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பரவியுள்ளது. அவரது நாட்டுப்பற்றும், இனப்பற்றும், மொழிப் பற்றும் பாராட்டக்கூடியது மட்டுமல்ல, ஒவ்வொருவராலும் பின்பற்றக் கூடியதும் ஆகும.
அன்னியராக ஆளவந்த போர்த்துக்கேசியருடன் அரசுரிமைக்குப் போராடிய பாழ்ப்பாணத்தின் கடைசித் தமிழ் மன்னன் சங்கிலியரசன் இராசதானி விற்றிருந்த நல்லூர் நகரம் கைப்பற்றப்பட்டதும், அம்மன்னன் இறுதியில் விரைந்து கோட்டை கட்டி ஆண்ட நகரமும் கோப்பாய். திரு வன்னிய சிங்கம் அவர்களை முதல் உறுப்பினராகத் தெரிந்தெடுத்ததும் கோப்பாய். அவருக்குப் பெண் வழங்கியதும் கோப்பாய். அதனால் அவர் இயல்பாகவே கோப்பாய் கோமகனானார்.
1947–இல் நடந்த முதல் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக முன்பு வெற்றி பெற்றதும் கோப்பாய் தொகுதியே. அந்த வெற்றி அவர் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து அவர் அமரராகும் வரைக்கும் 12 ஆண்டுகள் பாராளுமன்றத்தில், நாடு, மொழி, இன நலம் கருதி முழக்கிய உரிமை முழக்கம் இன்றும் நமது காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
1949ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் நாள் தமிழ் மக்களால் மறக்க முடியாத நாள். அன்றுதான் மாவிட்டபுரத்தில் தமிழ்க்கடவுளான முருகன் முன்னிலையில், மும்மூர்த்திகள், தலைவர் செல்வநாயம், அறிஞர் நாகநாதன், அன்பர் வன்னியசிங்கம் ஆகியோரால் நடாத்தப்பெற்ற ஒரு பொதுக் கூட்டமே, தமிழரசுக் கட்சி தோன்றுவதற்கு மூலமாக அமைந்தது. திரு வன்னியசிங்கம் இல்லாவிடில் தமிழரசுக்கட்சி தோன்றியிருக்கவும் முடியாது. இந்த அளவு வளர்ந்திருக்கவும் முடியாது” என்று கூறுவது நானல்ல, அது தலைவர் செல்வநாயம் அவர்களது வாய்மொழி. 1952ல் நடந்த தேர்தலில் வடமாகாணத்திலிருந்து தமிழரசுக் கட்சியின் ஒரே உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அன்பர் வன்னியசிங்கம் அவர்களே. சில காலம் தமிழரசுக் கட்சி யின் பொதுச் செயலாளராக இருந்து பணியாற்றிய அவர், கட்சியின் தனலவராக 1953 ஆம் ஆண்டு தொடங்கி 1958ஆம் ஆண்டுவரை இருந்ததாக என் நினைவு. சிங்களறு போராட்டத்தில் அவர் ஆற்றிய தொண்டும் மறக்க முடியாததாகும்.
சரித்திரப் பிரசித்தி பெற்ற மாவிட்டபுரத்தின் மேற்குப் பகுதியான கொல்லங்கலட்டியில், நல்ல முறையில் நல்வாழ்வு வாழ்ந்து வந்த பெரும் வழக்கறிஞர் குடும்பத்திற் பிறந்த அவர், பொது வாழ்வில் புகுந்து பிறர் வாழ்வுக்காகத் தொண்டு செய்து இரு முறை சிறை வாழ்வும் வாழ்ந்திருக்கிறார்.
1959ஆம் ஆண்டில் இடைக்காடு என்னுமிடத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் நாங்கள் இருவரும் பங்குபெற்றோம். மேடையில் பேசிய பேச்சின் அளவு சிறிது; அதற்கு முன்பும் பின்பும் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த பேச்சுக்கள் பெரிய அளவில் இருந்தன. அந்த உரையாடல் அவருக்குள்ள இலக்கிய அறிவை எனக்கு நன்கு விளக்கியது. இவரது கேள்விகளனைத்தும் குறளைப் பற்றியே இருந்ததுடன்,அவரது திருக்குறள் ஆராய்ச்சியையும் நன்கு விளக்கியது. அவரது அன்பும் பண்பும் எங்களது நட்பை மேலும் வளர்ததன.
யாழ்ப்பாண நகரிலிருந்து நான்கு மைல் தொலைவிலுள்ள உரும்பிராய் ஊரிலுள்ள வணிகரான திரு நடேசலிங்கம் எனது நீண்ட நாள் நண்பர். அவர் தமது இல்லத்தில் ஒரு நாள் எனக்கும் திரு வன்னியசிங்கம் அவர்களுக்கும் ஒருமித்து விருந்தளித்தார். அன்று திரு வன்னிய சிங்கம் அவர்களிடமிருந்து வந்த கேள்விகளனைத்தும் அரசியற் கட்சிப் போராட்டங்களை நடத்துவதுபற்றியும், 1938இல் தென்னகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றியுமே இருந்தன. அதிலிருந்து அவருடைய திட்டமிட்டு செயலாற்றும் ஆற்றல்கள் நன்கு விளங்கின.
ஒரு நாள் திரு வன்னியசிங்கம் அவர்களுடய இல்லத்தில் வெளிப்புறச் சுவரில் “தமிழ்த் துரோகி” என்று பெரிய எழுத்துக்களில் இரவில் எழுதப் பெற்றிருந்தது. நாமாக இருந்தால் வெட்கத்தினால் அதை உடனே அழித்திருப்போம். ஆனால் மறுநாட் காலை வெளி நாட்டிலிருந்து வந்த அவர், அதைக் கண்டதும் அழிக்காது பெருஞ்சிரிப்புச் சிரித்தார். அன்று மாலை அவர் பேசிய ஒர் பொதுக் கட்டத்தில் சொன்ன சொற்கள் இவை:—
“நான் ஊரில் இல்லாதபொழுது என்னைப் பார்க்க வருபவர்கள் தங்கள் பெயரைக் குறித்து வைக்கும் புத்தகம் ஒன்றை வீட்டில் வைத்துப் போவது வழக்கம். ஆனால் நேற்று நானும் இல்லை; என் மனைவியும் இல்லை. என்னை பார்க்க வந்தவர், பாவம்! தன் பெயரை என் விட்டில் வெளிப்புறச் சுவரில் எழுதிவிட்டுப் போயிருக்கிறார். அவர்தான் திருவாளர் ‘தமிழ் துரோகி.’ இது குறித்து நான் பெரிதும் வருந்துகிறேன்” என்பதே. இது அவரது அறிவுத் திறமையையும் பண்பாட்டையும் விளக்கப் போதுமானதாகும்.
ஓர் உயர்ந்த சைவ வேளாள குடும்பத்தில் பிறந்த நண்பர் வன்னியசிங்கம் அவர்கள். தமிழ் மக்களிடையே தாண்டவமாடும் சாதிப் பாகுபாட்டை ஒழித்துக் கட்டுவதிலும் முன்னணியில் நின்றவர். தாழ்ந்த சாதி எனப்படுவோருடன் கூட அமர்ந்து சமபந்தி போசனம் செய்பவர். மேலும் 1956 ஆம் ஆண்டளவில் நல்லூர் கந்தசாமி கோவில் கதவுகளைத் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களனைவருக்கும் யாழ்ப்பாணத்திலேயே முதலாவதாகத் திறந்துவிடுவதில் வெற்றியும் கண்டவர்.
உரும்பிராய் விருந்தில் உரையாடி மகிழ்ந்த எங்களிருவரையும் மறுநாள் கடல் பிரித்துவிட்டது. அவர் 7ஆம் நாள் மறைந்துவிட்டார் என்ற செய்தி திருச்சிக்கு வந்து திடுக்கிடச் செய்தது. அவர் உடல் மறைந்து விட்டது. எனினும், அவரது இன் சொல்லும், நன்முகமும் என் உள்ளத்தைவிட்டு மறையவேயில்லை.
7 ஆண்டுகள் அவருடன் கொண்டிருந்த நட்புறவினால், அமரர் அவர்களின் 7 ஆவது நினைவு தினவிழாவில் கலந்து கொண்டு, அவர் பிறந்த இடத்திலும், அவருடை கோப்பாய் தொகுதியிலும் நான் அவரைப் பற்றிப் பேசிமன அமைதியடைந்தேன்.
தமிழ் உள்ளவரை, தமிழ் மக்கள் உள்ளவரை, தமிழ் நிலம் உள்ளவரை, அமரர் வன்னியசிங்கம் அவர்களின் அரும்பெரும் தொண்டும் பெரும்புகழும் மறையாது. வண்டமிழ்ச் சிங்கம் வன்னியரின் புகழ் வானுள்ளவரைக்கும் வளர்ந்து கொண்டே போகும்.
இன்றுள்ள இலங்கை நிலையை அவர் காணாது போனது ஒரு வகையில் மகிழ்ச்சியையும், மற்றொரு வகையில் வருத்தத்தையும் தருகிறது. என் செய்வது?
அரசரும் நானும்
செட்டி நாட்டு அரசர் பெரியவர் ராஜா சர்.மு. அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் செட்டி நாட்டு அரசர் மட்டுமில்லை; தமிழகத்தின் மன்னராகவே திகழ்ந்தவர்.
இவர்களை நான் 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நன்கு அறிவேன். 1921இல் நீதிக் கட்சியின் திருச்சிக் கிளையின் செயற்குழுக் கூட்டத்தில் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்று தேவையென முடிவு செய்யப்பெற்றது. அச்செய்தி அக்காலத் திராவிடன் நாள் இதழில் வெளி வந்தது. அதன் தொடர்பாகவே அரசரது தொடர்பு ஏற்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அமையும் பொழுது, அது ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகமாக இல்லாவிட்டாலும், அதனை ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகமாகவே எண்ணி மகிழ்ந்த தமிழக மக்களில் நானும் ஒருவன்.
பேராசிரியர்கள் கா. சுப்பிரமணிய பிள்ளை, நாட்டார் ஐயா, நாவலர் சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி கதிரேசச் செட்டியார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் போன்ற தமிழ்ப் பேரறிஞர்கள் பலர் அப்பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்ததாலும், அப் பல்கலைக் கழகம் தமிழறிஞர்கள் பலரைத் தோற்றுவித்து உலகிற்கு உதவியதாலும், அப்பல்கலைப் கழகம் தமிழ்ப் பல்கலைக்கழகமாகவே காட்சியளித்ததில் வியப்பு ஒன்றுமில்லை. இந்தியாவின் வரலாற்றிலேயே காணமுடியாத ஒரு நிகழ்ச்சி அண்ணாமலைப் பல்கலைக் கழக அமைப்பு ஆகும். செட்டி நாட்டு அரசர் அவர்கள் தம் சொந்தப் பணத்தைக் கொண்டு இப் பல்கலைக் கழகத்தை நிறுவியதைக் கண்டு, தமிழக மக்கள் மட்டுமல்ல இந்தியாவின் பல பகுதிகளிலுமுள்ள மக்கள் பலர் பாராட்டினர். இதன் விளைவாகவே அவருக்குக் “கொடை வள்ளல்’’ என்ற பட்டம் வழங்கப் பெற்றது.
இப் பல்கலைக் கழகத்தில் ‘சாஸ்திரி ஹால்’ என்று ஒன்று உண்டு. அதில் எல்லாக் கூட்டங்களும் நடைபெறும். தமிழ்க் கூட்டம் ஒன்று மட்டும் நடைபெறாது. இச் செய்தியை அறிந்த நான் அரசரிடம் முறையிட்ட பொழுது அவர்கள் என்னையே அழைத்துத் தமிழ்க் கூட்டம் ஒன்றைத் தானே வந்திருந்து நடத்தி, நாவலர் டாக்டர் சோமசுந்தர பாரதியார் திருவுருவப் படத்தைத் திறந்து வைக்கும்படி செய்தும் மகிழ்ந்தார்கள். இது நான் பெற்ற பேறுகளில் ஒன்று.
அப் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் அரசியல் கட்சிக் கொடிகள் பலவற்றைக் பலவிடங்களில் தரையில் மட்டுமல்ல மரத்தின் மீதும் உயர உயரக் கட்டிப் பறக்க விட்டிருந்தனர். இதனைக் கண்ட அரசர் வருந்தி என்னை அங்கு வரவழைத்தார். ஒரு நாள் மாணவருடன் மாலையும் இரவும் பேசி அக்கொடிகள் அனைத்தும் அகற்றப் பெற்றன. அரசர் பெரிதும் மகிழ்ந்தார்கள.
சரியான ஆண்டு என் நினைவில் இல்லை. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி மகாநாடு தஞ்சை நகரில் நடந்தது. அம்மகாநாட்டின் பெரும்பணி அதற்கு ஒரு தலைவரைத் தேர்ந்து எடுப்பது. இதற்காகப் போட்டியிட்டவர் பொப்பிலி அரசரும், V. முனிசாமி நாயுடும் ஆகிய இருவர். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ஆந்திராவிலிருந்து ஏராளமான வாக்காளர்களைத் தஞ்சையில் கொண்டு வந்து குவித்தார்கள். இதற்காகத் தனி இரயில் வண்டிகளும் பல வந்தன. அக்காலத்தில் தஞ்சை நகர மக்களின் எண்ணிக்கை இப்பொழுது உள்ளதில் சரிபாதிதான். ஆனால் நகரம் முழுதும் ஆந்திரர்களின் எண்ணிக்கையும், அந்நகர மக்களின் எண்ணிக்கையோடு சம அளவில் இருந்து, தஞ்சை நகரமே ஒரு தெலுங்கு நாட்டின் நகரமாகவே காட்சியளித்தது. இத்தனை பேருக்கும் மனம் சலியாமல் பெருஞ்சோறு அளித்து மகிழ்ந்தவர் ராஜா சர் அவர்கள். இக்காட்சி கண்கொள்ளாக்காட்சியாக இருந்ததோடு, பாரதப் போரில் பெருஞ்சோறு அளித்த தமிழ் மன்னன் உதியன் சேரலாதனையும் நினைப்பூட்டியது.
செட்டி நாட்டு அரசர் தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழகத்துக் கோயில்களுக்கும் அளித்த கொடைகள் மிகப் பல. அவை சொல்ல முடியாதவை.
தமிழிசையானது தமிழகத்திலேயே அழிக்கப் பெற்று வரும் கொடுஞ் செயலைக் கண்டு மனம் புழுங்கி வருந்தி அதை மீண்டும் உயிர்ப்பிக்கப்பெரும்பணி புரிந்த மன்னர் செட்டி நாட்டு அரசர். அதற்காக ஒரு இயக்கத்தையே தொடங்கி, அவர் தலைவராக இருந்து, அதற்காக என்னையும் லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்களையும் கூட்டுச் செயலாளராக வைத்து, எங்களை ஒயவிடாமல் வேலை வாங்கிய பெருமை ராஜா சர் அவர்களைச் சாரும். கும்பகோணத்தில் ஒரு தமிழிசை மகா நாட்டைக் கூட்டி டைகர் வரதாச்சாரியார் அவர்களைத் தலைமை வகிக்கச் செய்து, ஒரு பெரும் புரட்சியைச் செய்தார். அன்று நான் பேசிய பேச்சை பல லட்சக்கணக்கில் அச்சிட்டு ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் ஆட்களை வைத்து மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தவர் ராஜா சர் அவர்கள். அன்றையப் பேச்சைக் கல்கி மிகவும் பாராட்டி எழுதி, தன் இதழில் வெளியிட்டிருந்ததும் என் நினைவில் இருக்கிறது. “தமிழ் மக்கள் தமிழிசையை வெறுக்க மாட்டார்கள். வெறுப்பவர்கள் தமிழர்களாக இருக்கமாட்டார்கள்” என்று நாங்கள் முழங்கிய முழக்கம் தமிழகம் முழுதும் பரவியது. எதிர்ப்பு அழிந்தது. தமிழிசை இயக்கம் வெற்றி பெற்றது. இது கண்டு தமிழகமே மகிழ்ச்சி அடைந்தது. அடையாறில் உள்ள அவர் அரண்மனை கவர்னர் மாளிகையைவிடப் பெரியது; அழகியது. தம் நண்பர்கள் பலரை அங்கு வரவழைத்து, அன்பும் பண்பும் கலந்து விருந்து அளிக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ராஜா சர் அவர்கள் காலை 5–00 மணிக்கெல்லாம் எழுந்து தன் அரண்மனைக்குள்ளாகவே ஒரு மணி நேரம் 2 மைல் தூரம் நடந்து உடல் நலம் பெறும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தவர்கள் பலரில் நானும் ஒருவன். தமிழகத்தில் எந்தக் கட்சியினர் அரசாங்கம் அமைத்தாலும், செட்டி நாட்டு அரசர் அவர்களின் உதவியைப் பெரிதும் விரும்புவர். அவர்களுடைய துணையின்றி எந்தக் கட்சியும் அக்காலத்தில் நாடு ஆண்டதில்லை. செட்டி நாட்டு அரசர் என்னைக் கட்சியின் தொண்டனாக மட்டும் கருதாமல், தன் குடும்பத்தில் ஒருவனாகவே கருதி நடத்தி வந்தவர். சுருக்கமாகச் சொன்னால், அண்ணன் தம்பி முறையிலேயே வாழ்ந்து வந்தோம் என்று கூறி விடலாம். அவர்கள் என் குடும்ப நலனைக் கருதியும் பொருளாதார யோசனை பலவற்றைக் கூறி என்னை நெறிப்படுத்தியவர். இச்செய்தியில் ஒன்றைக் குமுதம் இதழ் வெளியிட்டு மகிழ்ந்துள்ளது. என் பொருளாதாரம் நிலை குலைந்து அழியாமல் இருப்பதற்கு அவர்களது ஆலோசனை பெரும் காரணமாகும்.
ஒரு சமயம், நீதிக்கட்சித் தலைவர் ஒருவர் இரண்டு லட்ச ரூபாயை அரசரிடம் கடன் கேட்க என்னுடைய உதவியை நாடினார். நான் அவரை அழைத்துக் கொண்டு போய் அரசரிடம் பரிந்துரை செய்தேன். அதற்கு அவர்கள் எங்களைக் குளிக்கச் செய்து விருந்தளித்து, எங்கள் இருவர் தோளிலும் கையைப்போட்டு, “நம்முடைய நட்பு நிலைத்திருக்க வேண்டுமானால் நமக்குள் பொருள் ஊடாடக்ககூடாது. மன்னிக்கவும்” என்று கூறித் தன் வண்டியிலேயே ஏற்றி வழியனுப்பி வைத்த காட்சி இன்னும் என் கண்முன் நிற்கிறது. என் நண்பரும் வருந்தவில்லை; பிறர் மனம் புண்படாதவாறு நடந்து கொள்ளும் செயல் அரசரது பெருங் குணங்களுள் ஒன்று.
அவர் இன்றில்லை. அவரது திருமகன், அன்றைய குமாரராஜா இன்றைய செட்டி நாட்டு அரசர் தன் தந்தையின் இருப்பிடத்தில் எல்லாத் துறைகளிலும் பணி புரிந்து அவர் இல்லாத குறையைப் போக்கி வருகிறார். தமிழிசை இயக்கத்திற்காக சென்னையில் தன் தந்தையார் கட்டிய தமிழிசை மன்றம் போன்ற ஒன்றை மதுரை நகரிலும் கட்டி மகிழ்ந்தவர் இன்றைய செட்டிநாட்டு அரசர். இது ராஜராஜ சோழனால் தஞ்சையில் கட்டப் பெற்ற பெருங்கோயில் போன்று, ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டிய ஒரு பெருங்கோயிலையே நமக்கு நினைவூட்டி மகிழ்விக்கிறது.
தமிழ் உள்ளவரை, தமிழ்மக்கள் உள்ளவரை, தமிழகம் உள்ளவரை செட்டிநாட்டு அரசர் ராஜாசர் அண்ணாமலை செட்டியார் அவர்களுடைய தொண்டும் புகழும் மறையாது. அவ்வழியிலேயே தொடர்ந்து நின்று இன்றும் பணிபுரிந்து வருகின்றனர் செட்டிநாட்டு அரசர் ராஜாசர். முத்தையா செட்டியார் அவர்கள். தந்தை வழி மகன் பெற்ற பெயரும் புகழைப் பெற்று, பன்னெடுங்காலம் நல்ல உடல் நலத்துடன் இருந்து, நாட்டுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் தமிழிசைக்கும் சமயத்திற்கும் சமூகத்திற்கும் தொண்டுகள் பல செய்து சிறப்பெய்தி வாழவேண்டும் என இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன். வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழிசை வாழ்க. செட்டி நாட்டு அரசர் குடும்பம்!
கலைத் தந்தை
தமிழகத்தில் எத்தனையோ மக்கள் பிறந்தார்கள். வாழ்ந்தார்கள், மறைந்தார்கள். அவர்களுள் ‘கலைத் தந்தை’ என்று அன்போடு அனைவராலும் புகழ்பெற்று வாழ்ந்த ஒரே தமிழ் மகன் கருமுத்து.
கருமுத்து
கரு பாட்டனின் பெயர்; முத்து தந்தையின் பெயர். இவ்விருவர் பெயராலும் அழைக்கப் பெற்றவரே நம் தியாகராயர். அவர் பெயர் கருப்பு, நிறம் சிவப்பு, புகழ் வெளுப்பு, உள்ளம் பச்சைக் குழந்தை உள்ளம்.
நகரத்தார்
தமிழகத்தில் சைவத்தையும் தமிழையும் வளர்த்து கோவில் கட்டி குடமுழுக்குச் செய்து அறநிலையங்கள் வைத்து அறப்பணிகள் பல புரிந்த அருங்பெரும் சமூகம் நகரத்தார் சமூகம். இச்சமூகத்தை தாங்கி நின்ற தலைசிறந்த பெருஞ் செல்வர் மூவரில் ஒருவர் நம் தியாகராசர். மற்றைய இருவரும் செட்டிநாட்டரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களும், கோடி கொடுத்தும் குடியிருந்த வீடும் கொடுத்த கொடைவள்ளல் கோட்டையூர் அழகப்பச் செட்டியார் அவர்களும் ஆவர். இம்முப்பெருத் தலைவர்களையும் நகரத்தார் சமூகம் மட்டுமல்ல, தமிழகமே என்றும் மறவாது.
தியாகராசர்
ஆ. தெக்கூரில் பிறந்தார். பிறந்த ஆண்டு 1893. இன்று இருந்தால், அவருக்கு வயது 89 இருக்கும். எனக்கு ஐந்து வயது மூப்பு. எனக்கும் அவருக்கும் தொடர்பு ஏற்பட்டு 48 ஆண்டுகள் ஆயின. எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தவர், பசுமலை டாக்டர் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள்.
நூல் ஆலைகள்
தம் 27–வது வயதில் தொழில்துறையில் இறங்க எண்ணி மதுரைக்கு வந்தார். 29–வது வயதில் மீனாட்சி ஆலையைத் தொடங்கி நடத்தினார். தொடர்ந்து பல் நூற்பு ஆலைகளை பல ஊர்களில் நிறுவி உழைப்பால் உயர்ந்து வெற்றிகண்ட பெருமகன். தமிழகத்தில் 12 ஆலைகளைத் தோற்றுவித்து நடத்திப் பெருமை பெற்றவர் அவர் ஒருவரே.
பெருஞ்சிறப்பு
பல ஆலைகளைத் தொடங்கி நடத்தியதால் மட்டுமல்ல, பிற ஆலை அதிபர்களாலும், தமிழகத்தின் மிகப் பெரும் பஞ்சு வணிகர்களாலும், ஏழைத் தொழிலாளர்களாலும், அரசாங்க அதிகாரிகளாலும், அரசியல் தலைவர்களாலும், பொது மக்களாலும் போற்றும்படி வாழ்ந்ததே அவர் அடைந்த பெருஞ் சிறப்பாகும்.
நூல் நிலையம்
அவர் பஞ்சாலைகளைத் தோற்றுவித்தார். பருத்தி நூல்களை மட்டும் ஆராயவில்லை. பழந்தமிழ் நூல்களையும் ஆராய்ந்தார். அவர் படித்தறிந்த நூல்கள் அனைத்தையும் அவரது மதுரை நகர் மாளிகையில் கண்டு மலைத்து நின்றவர் பலர். அந்நூல் நிலையம் ஒரு பல்கலைக்கழகத்தின் நூல் நிலையம் போன்று. காட்சியளிக்கும். அந்நூல்கள் ஒழுங்காகவும் அழகாகவும் அடுக்கி வைக்கப் பெற்றிருப்பது மட்டுமல்ல, ஒவ்வொரு நூலிலும் அவர் எழுதிவைத்துள்ள அடிக்குறிப்பும் காணப்பெறும். இவற்றினைக் கண்டு வியப்படைந்தோரில் யானும் ஒருவன்.
தமிழறிஞர்கள்
பசுமலை டாக்டர் சோமசுந்தர பாரதியார் அவர்களே இவரது தமிழாசிரியர். சிறந்த இலக்கணங்களை சேலம் அ. வரத நஞ்சையபிள்ளை அவர்களிடத்திலும், சைவசமய உண்மைகளை, சித்தாந்தச் செல்வர் ஒளவை. துரைசாமி பிள்ளை அவர்களிடத்தும் கற்றறிந்தவர். மறைமலை அடிகள், திரு. வி. க., எம். எல். பிள்ளை, பண்டிதமணி ஆகியோரிடத்தும் பெரும் பற்றுக் கொண்டவர்.
உள்ளத் துணிவு
வெள்ளையர் ஆட்சியில் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து காந்தியடிகள் வழியில் நாட்டுப்பற்றுடன் நன்கு உழைத்தவர். அப்படியிருந்தும் 1938–ல் நான் திருச்சியில் நடத்திய தமிழக இந்தி எதிர்ப்பு மகாநாட்டில் முதல் முதலாக தமிழ்க்கொடியை ஏற்றிவைத்து, தமிழ் முழக்கம் செய்து இந்தியை மிகத் துணிச்சலோடு எதிர்த்து நின்றவர் தியாகராசர்.
தமிழ்ப்பற்று
தமிழ்நாடு என்ற ஒரு நாளிதழைத் தொடங்க எண்ணி என்னை அதற்கு ஆசிரியராக இருக்க வேண்டினார். நான் என் இயலாமையைத் தெரிவித்ததும், பேராசிரியர் இரத்தினசாமி அவர்களையும், திருவாசக மணி கே. எம். பாலசுப்ரமணியம் அவர்களையும் ஆசிரிபர்களாக வைத்து தமிழ்நாடு நாளிதழை மதுரையில் தொடங்கினார். முதல் தலையங்கம் என் பார்வைக்கு ஆறு நாட்களுக்கு முன்பு வந்தது. அதில் முப்பத்தேழு வடமொழிச் சொற்கள் இருந்தன. அவற்றைக் குறிப்பிட்டு அவற்றுக்குச் சரியான தமிழ்ச் சொற்களையும் குறித்து இருந்தேன். அதைப் பார்த்ததும், அங்கிருந்த ஆசிரியர்களுக்கும், துணை ஆசிரியர்களுக்கும் “தமிழ்நாடு நாளிதழில் தமிழ்சொற்களே இடம் பெறவேண்டும்” எனக் கட்டளையிட்டார். அதன் படியே அது நல்ல தமிழில் வெளிவந்தது. பின் சென்னையிலிருந்தும் மற்றொரு பதிப்பு வெளிவந்தது. மிகப்பெருஞ்செலவு. இத் துறையில் 47 இலட்ச ரூபாய்கள் இழப்பு. அவ்விதமிருந்தும் மன மகிழ்வாகத் தொடர்ந்து நாளிதழை நடத்தி வந்தார். நல்லறிஞர்கள், நாட்டு மக்கள் ஏற்க வில்லை.
உடைந்த உள்ளம்
‘கடைதிறந்தேன் கொள்வோர் இல்லை’ என்ற வள்ளலாரின் கருத்துப்படி நாளிதழ் வெளிவருவது நின்று விட்டது. ஒரு நாள் அவர் கண்கலங்கிச் சொல்லிய சொற்கள் இவை: “கலப்படத்தமிழிலும், கொச்சைத் தமிழிலும் வெளிவருகிற இதழ்களிலும், கவர்ச்சிப் படங்களோடும் நிழற்படச் செய்திகளோடும் வெளிவருகிற தமிழ் இதழ்களிலும் நாட்டம் கொள்ளுகின்ற நம் மக்களின் மனம், நல்ல தமிழில் வெளிவருகின்ற நாளிதழ்களில் சொல்லவில்லையே! இதற்கு என்ன செய்வது? தமிழும் தமிழகமும் எதிர்காலத்தில் என்னவாகும்” என்பதே.
புலவர் குழு
இருபத்திநான்கு ஆண்டுகட்கு முன்பு திருச்சியில் தொடங்கப்பெற்ற கடைச்சங்க காலத்திய புலவர்களைப் போன்ற நாற்பத்தொன்பது புலவர் பெருமக்களடங்கிய தமிழகப் புலவர்கள் குழுவை மதுரைக்கு அழைத்து, தன் இல்லத்தில் விருந்தளித்து, அனைவருக்கும் புத்தாடை கொடுத்து மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வைத்துத் தமிழ் ஆராயச் செய்து பெருமகிழ்ச்சி அடைந்தவர் அவர்.
கல்வி நிலையங்கள்
எவரிடத்தும் நன்கொடை பெறாமல் தன் வருவாயைக் கொண்டே கலைக்கல்லூரி, பொறியியற் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, சில உயர்நிலைப்பள்ளிகள், பல தொடக்கப் பள்ளிகள் முதலியவற்றைத் தொடங்கிப் பொதுமக்களுக்கு உதவிய பெருந்தகையாளர் கருமுத்து. சுருங்கக் கூறின் ஒரு அரசாங்கம் செய்யவேண்டிய பணிகளைத் தியாகராசர் தனி ஒருவராக செய்து முடித்திருக்கிறார் என்றே கூறவேண்டும்.
கலையழகு
கலைத்தந்தை அவர்கள் ஒரு கட்டடக் கலைஞர். கட்டடத்திலும் ஒரு கலையழகை, கலையழகிலும் ஒரு தனித் தன்மையைக் கண்டவர். சென்னை மதுரை, கொடைக்கானல், குற்றாலம் முதலிய இடங்களில் உள்ள அவரது மாளிகைகளில் அவரின் கைவண்ணத்தை, கலையழகின் தனித்தன்மையைக் கண்டு மகிழலாம்.
அரசியல்
1938–க்குப் பிறகு காங்கிரசில் இருந்து விலகினார். இந்தி எதிர்ப்புக் கட்சிக்குப் பிறகு எந்த அரசியல் கட்சியிலும் அவர் தலையிடவில்லை. நடு நிலைமை வகித்துத் தமிழ்ப்பணி மட்டும் புரிந்துவந்தார். என்றாலும் பல அரசியல் தலைவர்களுடன் நட்புக் கொண்டிருந்தார். அவர்களில் சர்.பி.டி. இராஜன், W.F.A. செளந்தர பாண்டியனார், பெரியார் ஈ.வே.ரா., விஞ்ஞானமேதை G.D.நாயுடு, சர் A. இராமசாமி முதலியார், A. T. பன்னீர் செல்வம், ராஜாஜி, 0.P.R, காமராஜ் முதலியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். தேர்தல்
ஒரு சாயம் அவர், அவரது மகன்கள் சுந்தரம், மாணிக்கவாசகம் ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் பல ஊர்களில் பல தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தலுக்கு நின்றார்கள். கருமுத்து அவர்களின் தொகுதியில் அவரோடு நான் மட்டுமே பேசவேண்டும் என்பது அவருடைய திட்டமும் கொள்கையும் ஆகும். அதன்படி நான் அவருடன் சென்று, தேர்தல் கூட்டங்களில் மதுரை, திருமங்கலம், சோழவந்தான், சிவகங்கை, காரைக்குடி, மேலுார் முதலிய பல ஊர்களில் பேசினேன். அவரது அருந்தொண்டுகளையும், பெருஞ்செயல்களையும் எடுத்து விளக்கினேன். பேசிப் பலன் என்ன? பயன் ஒன்றுமில்லை. மூவரில் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. இது தேர்தலில் நல்லவர்கள் நிற்கும் சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை என்பதையே காட்டிற்று.
சமயப்பற்று
சைவசமயத்தில் ஆழ்ந்த பற்று உடையவர். திருக்கோவில் வழிபாட்டில் சிறந்தவர். சைவ உணவையே உண்பவர். அவரது முகத்தைத் திருநீறு எப்போதும் அழகு செய்து கொண்டிருக்கும்.
விருந்து
கருமுத்து மாளிகையில் விருந்துகள் பலருக்கு நடை பெற்ற வண்ணமிருக்கும். அவ்விருந்தில் சுவையுள்ள பொருள்கள் பலவிருக்கும். அவற்றின் சுவையைவிட அவரது மனைவியார் இராதா அம்மையாரது இன்சொற்கனின் சுவை மிகையாக இருக்கும். அவர்கள் இருவரும் கடைசியாக அளித்த விருந்து எனக்கும் என் மனைவிக்குமே. அது அவரது சாவின் முதல் நாள் குற்றாலத்தில் இருத்த பொழுது.
மறைவு
மறுநாட் காலை 6 மணிக்குத் தன் மகன் கண்ணனை மதுரைக்கு அனுப்பிவிட்டு, மனைவியையும் அருவிக்கு அனுப்பிவிட்டு, தான் குளிப்பதற்காக எண்ணெயையும் துண்டையும் எடுத்துவர வேலையாளையும் அனுப்பிவிட்டு, அருவியை நோக்கித் திருவாசகத்தைப் பாடியபடி நடந்து கொண்டிருந்தார். ஐம்பதடி தூரம் நடந்ததும் கையை ஊன்றி உட்கார்ந்தார். தலை சாய்ந்தது. உடனே எல்லோரும் சேர்ந்து அவர்களை ஒரு துப்பட்டியில் கிடத்தித் தூக்கி வந்து படுக்கையில் கிடத்தி மருத்துவருக்கும் செய்தி அனுப்பி, மருத்துவரும் உடனே வந்துசேர்ந்தார். இவை அனைத்தும் செய்து முடிய ஏழு நிமிடங்களே பிடித்தன. மருத்துவர் அவரைப் பரிசோதித்து உயிர் பிரிந்து ஏழு நிமிடங்கள் ஆயின. எனக் கூறிவிட்டார். எல்லோரும் கதறி அழுதோம். அவரது பொன்னுடலுக்கு முதல் மாலையிடும் நிலை எனக்கு நேரிட்டது. பல இடங்களுக்கு தொலைபேசிச் செய்திகள் பறந்தன. மகன் கண்ணனையும் இராஜபாளையத்திற்குச் செய்தி அனுப்பி வழிமறித்துத் திருப்பி அழைத்துக் கொண்டோம். கார்கள் பலவந்தன. அவரது பொன்னுடலுடன் நானும், ராதா அம்மையாருடன் என் மனைவியுமாக அழுது கொண்டே மதுரை வந்து சேர்ந்தோம். மீனாட்சி ஆலையின் உள்ளும் புறமும், அவரது இல்லத்தின் உள்ளேயும் வெளியிலும், வீதியின் வழிநெடுகிலும் மக்கள் கூட்டம் கடல் அலைகள் போன்று பெருகி நின்று கதறி அழுது கொண்டிருந்த காட்சி எங்கள் துன்பத்தை மேலும் வளரச்செய்தது. பொன்னுடலைக் காணவந்த மக்கள் கூட்டம் வைகையில் கூடும் அழகர் திருவிழாக் கூட்டத்தையும் மிஞ்சியிருந்தது.
நினைவுச் சின்னம்
அவரது உடல் எரிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அவரது மாளிகையின் பின் புறத்திலேயே அடக்கம் செய்து, நினைவு சின்னம் ஒன்று அங்கு எழுப்ப வேண்டுமென்று எண்ணினேன். அதற்காகப் பெரிதும் முயன்றேன். தோல்வியையே அடைந்தேன். இறுதியில் அவரது பொன்மேனி எரிக்கப்பட்டுப் போயிற்று.
என்று காண்போம்
கருமுத்துவை, கலைத்தந்தையை, தொழிலதிபரை, பெருஞ்செல்வரை, கொடைவள்ளலை, தமிழறிஞரை, ஏழை பங்காளரை, எளிய வாழ்வினரை, எளிய உடையினரை, இனிய சொல்லினரை, அவரது இன்முகத்தை, புன்சிரிப்பை, நாம் இனி என்றும் எங்கும் காணப்போவதில்லை. அவரது இழப்பு தமிழுக்கு, தமிழர்க்கு, தமிழகத்திற்கு பேரிழப்பாக முடிந்தது. யார்? யாருக்கு ஆறுதல் கூறுவது?
மெல்ல நகர்ந்து செல்லும் காலம்தான் நம் அனைவர்க்கும் நல்லாறுதல் கூறவேண்டும்.
வாழ்க கருமுத்துவின் புகழ்!
வளர்க அவர் செய்த பணிகள்!
தொழிலதிபர் வி. சேஷசாயி தொழிலறிஞர்
திருச்சிராப்பள்ளி பல தமிழறிஞர்கனையும், இசைப் புலவர்களையும், உயர்ந்த நடிகர்களையும், சிறந்த வணிகர்களையும் பெற்று உதவியது மட்டுமல்ல, அது நல்ல தொழிலறிஞர்களையும் பெற்றுத்தந்து பெருமையடைந்திருக்கிறது. அத்தகைய தலைசிறந்த தொழிலறிஞர்களில் திரு. வி. சேஷசாயி அவர்களும் ஒருவர்.
பெருமகன்
தமிழகத்தின் பெருநகரங்களில் ஒன்றாகிய திருச்சியின் கடும் இருளைப்போக்க மின் விளக்கை ஏற்றிவைத்து ஒளிதந்த பெருமகன். இம்முயற்சியில் கொல்லி மலையிலிருந்து மின்சாரம் கொண்டுவர மேலைநாட்டு அறிஞர்கள் முயன்று தோல்வி அடைந்ததைக் கண்டும், பெரும் முயற்சி செய்து வெற்றிகண்ட பேரறிஞர் அவர்.
ஆலை அதிபர்
திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல், பிற மாவட்டங்கள் பலவற்றிலும் விஞ்ஞானத் துறையில் ஆலைகளை அமைத்து பல்வேறு பொருள்களை உண்டு பண்ணிக் கொடுத்து இந்நாட்டின் தேவைகளை நிரப்பிவந்த ஆலை அதிபர் அவர். ஏழை பங்காளர்
தமது நுண்ணறிவால், அருந்திறனால், ஏறக்குறைய 7000 பேர்களுக்கு உழைக்க வழிவகுத்து அவர்களின் உழைப்பின் மூலம் ஏறக்குறைய இருபதாயிரம் பேர்கள் பசியின்றி வாழ வகைசெய்து வாழ்ந்து மறைந்த ஏழை பங்காளர் அவர்.
தமிழ்ப் புலவர்
மிகக் குறைந்த நாட்களில் என்னிடம், திருக்குறளைப் படித்து ஆராயத் தொடங்கி, மிக விரைவில் குறள் முழுவதற்கும் பொருள் கூறும் அறிவையும் ஆற்றலையும் பெற்றுவிட்ட ஒரு சிறந்த தமிழ்ப்புலவர் அவர்.
சாஸ்திரிகள்
வால்மீகி இராமாயணத்தை எழுத்தெண்ணிப் படித்ததோடு, கம்பராமாயணத்தையும் நன்கு கற்று, இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் கற்பனை நயங்களையும் எடுத்துக் கூறும்பொழுது ஒரு சிறந்த சாஸ்திரியாகக் காட்சியளித்தவர் அவர்.
எளிய தோற்றம்
அவரது ஆடம்பரமற்ற எளிய தோற்றமும், அன்புகலந்த இன்சொல்லும் நண்பரை மட்டுமல்ல, பகைவரையும் பணியச் செய்யும் வலிமை வாய்ந்தவை.
உயர்ந்த பண்பு
பிறருடைய தேவையை உணரமறுப்பதும், பிறருடைய உரிமையை ஒப்பமறுப்பதும் ஆகிய இரண்டும் மட்டுமே நாட்டில் நடைபெறும் போராட்டங்களுக்குக் காரணம் என்பதை நன்குணர்ந்து, அதற்கேற்றபடி நடந்து காட்டிய உயர்ந்த பண்பாளர் அவர். பெருங்குணம்
ஏழை மக்களுக்கு இரக்கம் காட்டுதல், மாறுபட்ட கருத்துகளுக்கு மதிப்புக் கொடுத்தல், பிடிவாதக்காரர்களுக்கு விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை, தாராள மனப்பான்மை ஆகிய ஐம்பெருங் குணங்களையும் ஒருங்கே பெற்றிருந்த குணக்குன்று அவர்.
நல்லறிஞர்
குடும்பத்திலும் தொழிலிலும் பங்கு பெற்று, வாழ்விலும் தாழ்விலும் உற்ற துணையாகி, எப்போதும் உடனிருந்து உழைத்து மறைந்த மைத்துனர் திரு. ஆர். சேஷசாயி அவர்களை உள்ளத்தே வைத்து வாழ்ந்த நன்றி மறவா நல்லறிஞர் அவர்.
சீர்திருத்தவாதி
தான் தோற்றிய தென்சென்னை மின்வழங்கும் நிறுவனத்திற்ரு என்னைத் தலைவனாக்கி, அதை நடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்புவித்து மகிழ்ந்து, சாதி வேற்றுமை, சமய வேற்றுமை, நாட்டு வேற்றுமை, மொழி வேற்றுமை, கட்சி வேற்றுமை, நிற வேற்றுமை, உணவு வேற்றுமை ஆகிய அனைத்தையும் பாராது, எல்லோரையும் தம்மவராய்க் கொண்டு நடந்து காட்டிய ஓர் உயர்ந்த சீர்திருத்தவாதி அவர்.
பேச்சுக் கலைஞர்
அதிகாரிகளோடு பேசுவது எப்படி? அன்பர்களோடு பேசுவது எப்படி? நிர்வாகிகளோடு பேசுவது எப்படி? தொழிலாளிகளோடு பேசுவது எப்படி? மனைவியோடு பேசுவது எப்படி? மக்களோடு பேசுவது எப்படி? என்பதை நன்குணர்ந்து, அருமையாகப் பேசிப் பிறரையும் தம்மைப் பின்பற்றிப் பேசும்படி செய்த பேச்சுக் கலைஞர் அவர். கொடை வள்ளல்
சலியாமல் முயற்சித்து, ஓயாமல் உழைத்து, நேர்மையாக நடந்து, நல்லவழியில் பொருளைத் தேடி, சிக்கனமாகச் செலவிட்டு, எஞ்சிய பொருளை நல்ல அற நிலையங்கள் பலவற்றிற்கு வாரி வழங்கி மகிழ்ந்த கொடைவள்ளல் அவர்.
பேரிழப்பு
இத்தகைய உயர்ந்த தொழில் நிபுணரும், சிறந்த மொழி அறிஞரும், நிறைந்த பண்புடையவரும், கனிந்த சொல்லுடையவரும் ஆகிய சான்றோர் ஒருவரை இழந்தது, பொதுவாகத் தமிழகத்திற்கும், குறிப்பாகத் திருச்சி நகருக்கும் ஒரு பேரிழப்பு ஆகும்.
புகழுடம்பு
அவரது பொய்யுடல் மறைந்தாலும் புகழுடல் மறைவதற்கில்லை. அவர் கொடை வழங்கிவந்த பல அற நிலையங்களும், தொடங்கிவைந்த பல தொழில் நிலையங்களும், அரியமங்கலத்தில் தோற்றிவைத்த தொழில் நுணுக்கப் பள்ளியும் நிலைத்து நிற்கும்வரை, மேட்டுர் கெமிக்கல்ஸ் உள்ளவரை, ஈரோடு காகித ஆலை உள்ளவரை, அவரது புகழுடம்பு அழியாது. எனினும், அவரது பெயரால் ஒரு பொறிஇயற் கல்லூரியையும் தோற்றிவைக்க வேண்டியது தமிழக மக்களின் நீங்காக் கடமைகளில் ஒன்றாகும்.
ஆறுதல்
“இப்படிப்பட்ட ஒருவர் திருச்சியில் இருப்பதை நான் இவ்வளவு நாள் அறியாமற் போனேனே” என்று அவர் என்னைப்பற்றி பிறரிடம் கூறிய சொற்கள் என் காதில் விழுந்தபொழுதுதான், “இப்படிப்பட்ட ஒருவர் திருச்சியில் இருப்பதை நான் இவ்வளவு நாள் அறியாமற் போனேனே” என்று நானும் எண்ணினேன். எனது கண்கள் இன்பக் கண்ணீரை துளிர்த்தன. அடுத்து மிக விரைவில் நேர்ந்த அவரது பிரிவு துன்பக் கண்ணீரை உதிர்க்கும்படி செய்து விட்டது. நாடு கலங்கிற்று. நாமும் கலங்கினோம். யார் யாருக்கு ஆறுதல் கூறுவது? மெல்ல நகர்ந்து செல்லும் காலம்தான் நம் அனைவர்க்கும் நல் ஆறுதல் அளிக்கவேண்டும்.
தமிழ் மருந்துகள்
கி. ஆ. பெ. விசுவநாதம்
“ஆங்கில ஆட்சி வந்ததும் சித்த ஆயுர்வேத யூனாணி முதலிய நம் நாட்டுப் பரம்பரை வைத்தியங்கள் அழிந்தொழிந்தன. நம் நாட்டுப் பாட்டியின் வைத்தியமும் பார்த்துப் பார்த்து ஓடிவிட்டது. எடுத்ததற்கெல்லாம் ஊசி போட டாக்டரைத் தேடும் நிலைமையும் வந்தெய்தியது. அதனால், உடம்பு மட்டுமின்றி உயிரும் பாழாகியது. எல்லாம் பாழாகிய பின்னரே, தமிழ் மக்கள் தங்கள் பழைய செல்வங்களைத் தேட முற்பட்டுள்ளார்கள். நாடு விடுதலைபெற்றதும் இம்முயற்சி மிகவும் ஊக்கத்துடன் நடக்கிறது. இதற்கு உதவி அளிக்கும் வகையிலும், பழைய கைம்முறை வைத்தியங்கள் அழியாது, பாதுகாக்கப்படவேண்டும் என்னும் அவா மிகுதியினாலும் அறிஞர் விசுவநாதம் அவர்கள் தம் வீட்டுக் கைம்முறைகளில் பலவற்றை இந்நூலுள் தந்துள்ளார். இத்தகைய நூல்கள் இன்னும் வெளிவர வேண்டும். மூல நோய்க்கு ஒன்பது சிகிச்சைகள் கூறப்பட்டுள்ளன. இந்நூலில் ஒருவர் கையில் இருப்பதே ஒரு வைத்தியர் உடன் இருப்பதற்கு நிகர் என்று சொல்லலாம். அறிஞர் விசுவநாதம் அவர்கள் இன்னும் பல கைம்முறைகளை அரிதின் முயன்று பெற்று வெளியிடுவாரேல், தமிழ் மக்களுக்குப் பேருதவி செய்தவராவர்!’
‘தினகரன்’ மதிப்புரை
15–11–53
பாரி நிலையம்,
184, பிராட்வே, சென்னை–108.
ஐந்து செல்வங்கள்
கி. ஆ. பெ. விசுவநாதம்
The five different kinds of wealth, which the author discusses in this book are Mothor, Imagination, Old Age Health and Character. In the first essay he expatiaies the greatness of the mother who also expresses herself in the mother country and the mother tongue and drives home to the Reader on the necessity of paying his homage to everyone of them. In the second essay the learned author leads the student to imagine and find out for himself the several uses of the eye and the ear and by series of questions and answers arrives at the conclusion that everyone should see little, speak Hess, but hear more. In the next chapter entitled ‘Weakth of Old age’ the value of experience is mentioned and incidently, the virtue of truthfulness emphasised; it would have been better if the teaching intended to be brought forth by the chapter heading. is more boldly brought forth. The next chapter deals with the nesessity of Physical exercises and the last chapter is a story of two boys who after a long search for true Wealth come to the conclusion that only good character and good behaviour form true Wealth. The style of the book is simple and direct.
—The “HINDU”
19-4-'53
பாரி நிலையம்
184, பிராட்வே, சென்னை-108
முத்தமிழ்க் காவலர்
கி.ஆ.பெ. விசுவநாதம் நூல்கள்
தமிழ்ச் செல்வம்
தமிழின் சிறப்பு
அறிவுக் கதைகள்
எனது நண்பர்கள்
வள்ளுவரும் குறளும்
வள்ளுவர் உள்ளம்
திருக்குறள் கட்டுரைகள்
திருக்குறளில் செயல்திறன்
திருக்குறள் புதைபொருள்
மும்மணிகள்
நான்மணிகள்
ஐந்து செல்வங்கள்
ஆறு செல்வங்கள்
அறிவுக்கு உணவு
தமிழ் மருந்துகள்
மணமக்களுக்கு
இளங்கோவும் சிலம்பும்
நல்வாழ்வுக்கு வழி
எண்ணக்குவியல்
வள்ளலாரும் அருட்பாவும்
எது வியாபாரம்? எவர் வியாபாரி?
மாணவர்களுக்கு
திருச்சி விசுவநாதம் வரலாறு (மா. சு. சம்பந்தம்)
முத்தமிழ்க் காவலர் பற்றி 100 அறிஞர்கள்
பாரி நிலையம் 184, பிராட்வே, சென்னை-600 108.
* * *
எழில் ஆர்ட் பிரிண்டர்ஸ் சென்னை–5.
ෂ 85 47 228
கருத்துகள்
கருத்துரையிடுக