வாழ்க்கை விநோதம்
சுட்டி கதைகள்
Back
வாழ்க்கை விநோதம்
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
வாழ்க்கை விநோதம்
[நகைச்சுவைக் கட்டுரைகள்]
அழ. வள்ளியப்பா
பழனியப்பா பிரதர்ஸ்
சென்னை-14 திருச்சி-2 சேலம்-1
பதிப்புரை
நண்பர் வள்ளியப்பாவின் முதல் புத்தகம் 'மலரும் உள்ளம். இது குழந்தைகளுக்காக வெளியிடப்பட்டது: இதற்குத் தமிழ்நாட்டில் எங்கும் நல்ல ஆதரவும், வரவேற்பும் இருந்து வருகின்றது. "வாழ்க்கை விநோதம்' இவரது இரண்டாவது புத்தகம்.
சாதாரண வாழ்வில் கானும் விநோதங்களைத்தான், ஆசிரியர் இதில் நகைச்சுவை ததும்பச் சித்திரித்திருக்கிறார். இயற்கையாகவே நகைச்சுவை மிளிரப் பேசித் தம் நண்பர்களை மகிழ்விக்கும் இவர், இப்புத்தகத்தின் மூலமாகத் தமிழ் நாட்டு நண்பர்கள் அனை வரையுமே மகிழ்விக்க முன்வந்துள்ளார்.
இதை வெளியிட அனுமதி தந்த ஆசிரியர் அவர்கட்கும் நல்ல ஆதர வளித்துவரும் அன்பர்கட்கும் எங்கள் நன்றி.
—பழனியப்பா சகோதரர்கள்
முதற்பதிப்பின்
முன்னுரை
எனக்கு நீண்ட நாளாக ஒர் ஆசையிருந்தது. தமிழ்நாட்டின் பிரபல நகைச் சுவை எழுத்தாளர்கள் சிலர் இருக் கிறார்களே, அவர்களேப்போல் நாமும் எழுதவேண்டும் என்பதுதான் அந்த ஆசை.
“அடேயப்பா, இது நம்மால் முடிகிற காரியமா !” என்று நினைத்துக் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்து பார்த் தேன்.
ஆனால், ஆசை என்னை விடவில்லை. “என்ன ஐயா, புத்தர் பெருமானாலே என்னைத் துரத்த முடியவில்லையே ? ‘துன்பத்துக்குக் காரணம் ஆசை. ஆசையை அறவே ஒழிக்கவேண்டும்’ என்று எவ்வளவோ பிரசாரம் செய்து தான் பார்த்தார்; அவரால் முடிந்ததா? உம்மால் எப்படி முடியப் போகிறது? உம், கட்டிய கையைத் தளர்த்திப் பேனாவைக் கையில் எடுத்து, எழுத ஆரம்பியும். பயப்படாதீர்!” என்று அபயம் அளித்து அடிக்கடி தூண்டவும் ஆரம்பித்துவிட்டது.
நாள் ஆக ஆக, அந்த ஆசையின் சீடனாகிவிட்டேன் ! அப்புறம் நான் எழுதிய விஷயங்கள்தான் இதில் காட்சி அளிக்கின்றன.
‘சக்தி’யிலும், ‘தொழிலாளர் உலக’த்திலும், 1940-லிருந்து (யுத்த காலத்தில்) எழுதப்பட்டவைகளே இதில் பாதியை நிரப்புகின்றன, மற்றவை யெல்லாம் இதுவரை அச்சு வாகனம் ஏறாதவை.
இப்புத்தகம், பொழுது போக்குக்கு உபயோகமாகும் என்று நம்புகிறேன்.
இதை வெளியிட முன்வந்த நண்பர் செ. மெ. பழனியப்ப செட்டியாரவர்களுக்கு எனது நன்றி.
அழ. வள்ளியப்பா
இராயவரம்
26–7–’45
பொருளடக்கம்
சில்லறைக் கடன்
தலைக்கு வந்தது
உல்லாசப் பிரயாணம்
மறதியின் லீலை
சலவைத் தொழிலாளி
அன்பின் பெருக்கு
மேதாவிகள் பித்து
மேடைப் பேச்சு
கரிக்கார்
வரியில்லா வருமானம்
டெலிபோன் ஏமாற்றம்
பனப்பித்து
வெள்ளைக்காரரும்
வெள்ளிக்கிழமையும்
சில்லறைக் கடன்
* * *
கொஞ்ச நாளைக்கு முன், பெங்களூருக்குப் போகும் நண்பர் ஒருவரை வழியனுப்ப ஸ்டேஷனுக்குப் போயிருந்தேன். அப்போது என் நண்பருக்குத் தெரிந்த இன்னொருவரும் அங்கே வந்திருந்தார். அவரும் வழியனுப்பத்தான் வந்தார் போலிருக்கிறது. வண்டி நகர்ந்தது. நான் அவசரமாக வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேன்.
அச்சமயம், அந்தப் புதிய மனிதர் என்னைப் பார்த்து, “சார், உங்கள் பெயர்...?” என்று இழுத்தார். பெயரைத் தெரிவித்தேன்.
“உத்தியோகம்....?” என்றார். அதையும் சொன்னேன். பிறகு, அவர் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.
மறுநாள், நான் ஆபீஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, அதே மனிதர் அங்கே வந்துவிட்டார். பெங்களுர் சென்ற நண்பரைப் பற்றியும், சிறிது உலக விஷயங்களைப்பற்றியும் பேசிக்கொண்டே வந்தார். பின்பு, “போய் வருகிறேன்” என்று புறப்பட்டார். வந்த காரியத்தைச் சொல்லாமல் போகிறாரே என்று நினைத்து ‘என்ன காரியமாக வந்தார்’ எனக் கேட்டேன்.
“ஒன்றுமில்லை. தங்களையும் இந்த ஆபீஸையும் பார்த்துவிட்டுப் போகலாம் என்ற எண்ணம்தான்!” என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டார். சிறிது தூரம் போனதும் திரும்பி வந்து, “மிஸ்டர்....ஒரு விஷயமல்லவா? எனக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் ஒரு மணியார்டர் வரும். வந்ததும் தந்துவிடுகிறேன்.... ஐந்து ரூபாய் இருந்தால் தயவுசெய்து கொடுங்கள்” என்றார்.
இந்த மாதிரி கடன் வாங்க வருபவர், பேச்சிலே கடன் வாங்க வந்ததை மறந்தது போலவும், விடை பெற்றுச் சென்ற பிறகே அந்த ஞாபகம் வந்தது போலவும், பாவனை செய்து பேசுவது நல்ல சாமர்த்தியமல்லவா? இதுதான் ‘கடன் வாங்கும் கலை’ என நினைக்க வேண்டி யிருக்கிறது.
கையில் பணமில்லை என்று நான் எவ்வளவோ சொல்லியும், அந்த நண்பர் என்னை விட்டபாடில்லை. பெங்களுர் சென்ற நண்பர் தம்மிடம் எவ்வளவு சரசமாயிருந்தார் என்பதையும், எப்படி நாணயமாக ஒருவருக் கொருவர் தாங்கள் இருவரும் நூறு, ஐம்பது கைமாற்று வாங்கிக் கொடுத்துக்கொண்டார்கள் என்பதைப்பற்றி யெல்லாம் அளந்துகொண்டே யிருந்தார். தப்ப வழி யில்லாததால், ஐந்து ரூபாய் இல்லையென்றும், மூன்று ரூபாய் வேண்டுமானால் தரமுடியும் என்றும் அவரிடம் சொன்னேன். கிடைத்த வரையில் சரி என்று, அதை அவர் வாங்கிச் சென்றார். நாலைந்து நாட்களுக்குள் திருப்பித் தருவதாகவே, அவர் மிக்க உறுதியாகச் சொன்னார். வருஷம் இரண்டாகிவிட்டது. பணம் வந்தபாடில்லை.
இன்னொரு மனிதர், ஒருநாள் என்னைப் பார்க்க வந்தார். அவர் என் இளமைப் பருவ சிநேகிதர். சிறு வயதில் நடந்த சம்பவங்களைப்பற்றி நான் அவரிடம் பேசலாமென நினைத்தேன். ஆனால், அவர் எனது எண்ணத்தில் மண்ணைப் போட்டுவிட்டார்!
தம் சொந்த ஊருக்கு அவசரமாக மறுநாளே போக வேண்டுமென்றும், ரூபாய் இருபது வேண்டு மென்றும் சொன்னார். எல்லோரிடமும் சொல்வது போலவே ‘தற்சமயம் பணமில்லையே!’ என்ற பழைய பல்லவியைப் பாட ஆரம்பித்தேன். ஆனால், அவர் தமக்குப் பட்டணத்தில் யாரையும் தெரியாதென்றும், மறு மாதம் சம்பளம் வாங்கியவுடன் தருவதாகவும், ‘நீர் இரங்கீர் எனில் புகலேது?’ என்று ஆரம்பித்துவிட்டார். எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில், ஒரு வாறாக மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு, வழக்கப்படி தொகையில் பேரம் செய்யத் தொடங்கினேன். பத்து ரூபாய் தருவதாகச் சொன்னேன். வட்டி மிச்சம் பார்க்க வேண்டாமென்றும், வட்டி வேண்டுமானாலும் சேர்த்துத் தருவதாகவும் அவர் சொன்னார். ஒரு மணி நேரம் பேசினோம். முடிவில் பதினைந்து ரூபாய்க்கு இணங்கினார். அதைக் கொடுத்தனுப்பினேன். மாதம் ஒன்றல்ல; மூன்று போய்விட்டன. ஆளையோ, பணத்தையோ பார்க்க முடியவில்லை.
ஒருநாள் இதற்கென்றே புறப்பட்டு மாம்பலத்துக்குச் சென்றேன். அங்கேதான் அவர் வசிக்கிறார். ஆளைக் கண்டுபிடித்துவிட்டேன், அவருடைய வீட்டு வாசலில்.
உடனே பணத்தைப்பற்றி கேட்கத் தைரியமில்லை. அவரும் என்னுடன் வெகு கலகலப்பாகப் பல விஷயங்களைப்பற்றிப் (பணவிஷயம் தவிர) பேசிக் கொண்டே வந்தார். சிறிது தூரம் நடந்தோம். பக்கத்தி லிருந்த கிளப்பில் பலகாரம் சாப்பிடத்தான் அவர் அழைத்து வந்திருக்கிறார். இது எனக்குத் தெரியாது.
ஹோட்டலுக்குப் பக்கத்தில் வந்தவுடன், சாப்பிடக் கூப்பிட்டார். நான் “எனக்குப் பசிக்கவில்லை” என்று சொன்னேன். பலகாரத்தைக் கொடுத்து, பணத்துக்கு நாமம் போட்டுவிடுவாரோ என்று எனக்குப் பயம். அவர் என்னைப் பிடித்து இழுக்க, நான் வரமாட்டேன் என்று மறுக்க, இப்படியே ஐந்து நிமிஷ நேரம் மல்லுக் கட்டு நடந்துகொண்டிருந்தது.
“ஒஹோ, இவர் காபி சாப்பிட்டுவிட்டுப் பணம் கொடுக்காது வந்துவிட்டார் போலிருக்கு, அதுதான் கிளப்பிலுள்ள ஆள் வந்து இவரைப் பிடித்து இழுக்கிறான்,’ என்று பார்ப்பவர்கள் நினைத்துவிடுவார்களோ என்று எண்ணியே, கடைசியாக உள்ளே போய்ச் சேர்ந்தேன். சாப்பிடும் பொழுதெல்லாம் என் மனம் சரியான நிலைமையில் இல்லை; ‘பதினைந்து ரூபாய் ! பதினைந்து ரூபாய் !’ என்ற ஜபத்திலேயே ஈடுபட்டிருந்தது.
பில்லுக்குப் பணம் கொடுக்கும்போதுகூட, நான் முந்திக்கொள்ளப் பார்த்தேன். ஆனால், அவர் விட்ட பாடில்லை.
பிறகு, இருவரும் பக்கத்திலிருந்த ‘பார்க்’கில் புகுந்தோம். யுத்த விமரிசனம் செய்துகொண்டே வந்தார், நண்பர். எனக்கு ஒன்றும் ஏறவில்லை. நேரம் ஆகிக் கொண்டே யிருந்தது. வீடு திரும்ப வேண்டுமென்று தோன்றியது. ஆனால், வந்த காரியம்? கேட்டுவிடுவோம் என்ற எண்ணம்.
ஆனால், முன்பின் அறியாத ஒரு பெண்மணியைப் பார்த்து, ஒரு வாலிபன், “கரும்பே, உன்னை....உன்னை நான்....காதலிக்கிறேன்........” என்று தைரியமாகச் சொன்னாலும் சொல்லிவிடுவான் போலிருக்கிறது; பண விஷயமாக அவரிடம் கேட்க என்னால் முடியவில்லை. எப்படியிருந்தாலும் கேட்டுத்தானே ஆகவேண்டும்? தொண்டையைக் கனைத்துக்கொண்டு, கடைசியில் கேட்டேவிட்டேன்.
அவரோ துளியும் பதறாமல், “ஆமாம். அது விஷயமாகத்தான் சொல்லலா மென்றிருந்தேன். கையிலிருந்த பணமெல்லாம் ஒரு வழியாகச் செலவழிந்துவிட்டது. அடுத்த மாசம் நானே கொண்டுவந்து தருகிறேன். உங்களுக்குக் கவலையே வேண்டாம்” என்று பஞ்சப் பாட்டுப் பாடினார். என்ன செய்வது? ‘கடன் கொடுத்தோம், பொறுத்திருப்போம், கட்டாயம் வரும்’ என்று எண்ணிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். எத்த னையோ மாதங்கள் ஆயின. தவணைகள் சென்றன.
வேறொரு நண்பர், கடன் வாங்கிவிட்டு, ஆறு மாடிகள் உள்ள ஒரு கட்டடத்தில், ஆறாவது மாடியில் `ரூம்' எடுத்துக்கொண்டு இருந்துவிட்டார். அந்த வீதி வழியாகப் போக நேரும்போதெல்லாம், அவரைப் பார்த்துக் கொடுத்த பணத்தைக் கேட்க வேண்டும் என்று என் மனம் தூண்டும்.
ஆனால், எப்படி இந்த ஆறு மாடிகளையும் தாண்டிச் செல்வது ? அப்படிப் போனாலும் அவர் இருப்பாரோ, இருக்க மாட்டாரோ? இருந்தாலும் பணம் தருவாரோ, தவணை கூறுவாரோ ? என்றெல்லாம் சந்தேகங்கள் எழும்பும். நேராக நடந்துவிடுவேன்.
ஆனாலும், அவரை ஒருநாள் தற்செயலாக வீதியில் பார்த்துப் பிடித்துவிட்டேன். என்னைக் கண்டதும் அவர் ஒருவாறு சமாளிக்க எண்ணி, “என்ன சார், செளக்கியமா?” என்றார்-
“செளக்கிய மென்ன ? எல்லாம் கிராக்கிதான்.”
“இல்லை, ரொம்ப உடைந்து போனீர்களே என்று தான் கேட்டேன்”
“என்ன, கண்ணாடியா உடைந்து போவதற்கு?”
“அடடா, இளைத்துப் போனீர்களே என்றல்லவா கேட்கிறேன்”
“என்ன, மரமா இழைப்பதற்கு?" என்று கூறி விட்டு, “உம்மைப்போல் நாலு பேரிடம் கடன் கொடுத்தால் இளைத்தும் போவேன்; உடைந்துகூடப் போக வேண்டியதுதான்,” என்று சொல்ல எண்ணினேன். ஆனால், என்னவோ நேரே சொல்ல மனம் வரவில்லை.
இந்தச் சில்லறைக் கடன் விஷயமே இப்படித்தான். யாராரையோ சொல்வானேன்? என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். வாங்கின பணத்தைக் கொடுப்ப தென்றால், மிக்க கஷ்டமாகத்தானிருக்கிறது. வாங்கின பணமாவது! அவர்கள் கொடுத்த பணம்தான் அன்றே செலவழிந்துவிட்டதே! இன்று நம் கையிலுள்ள பணம் நாம் உழைத்துச் சம்பாதித்ததல்லவா? இதை எப்படிக் கொடுப்பது?
மாம்பலத்து நண்பரைப்பற்றிச் சொன்னேனே, அவர் பணம் இன்னமும் எனக்குத் திரும்பி வரவில்லை. நேற்று, மறுபடியும் அவரைப் பணம் கேட்கச் சென்றிருந்தேன். அவரோடு பேசிக்கொண்டே யிருக்கையில், இருவருக்கும் தெரிந்த மூன்றாவது நண்பர் ஒருவர் அங்கே வந்துகொண்டிருந்தார். அவர் தலையைக் கண்டதும், நண்பரைப் பணம் கேட்காமலே, நான் திரும்பி வந்து விட்டேன். காரணம், வேறு ஒன்றுமில்லை. அந்த மூன்றாவது நபர் எனக்கு ஒரு முப்பது ரூபாய் கைமாற்றுக்கொடுத்து இரண்டு வருஷங்கள்தாம் ஆகின்றன. அதை எங்கே கேட்டுவிடப்போகிறாரோ என்ற பயம் தான்.
மொத்தத்தில், இந்தச் சில்லறைக் கடனே வாங்கப்படாது; வாங்கினாலும் திருப்பிக் கொடுக்கப்படாது. என்னைக் கேட்டால், சில்லறைக் கடன் வாங்குபவனைவிட, கொடுப்பவன் பாடுதான் நிரம்பத் திண்டாட்டமாகும்.
“கடன் கொண்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று இராமாயணத்தில் இருக்கிறதே, அதில் ‘கொண்டான்’ என்பது இடைச் செருகலாயிருக்கும்; ‘கொடுத்தான்’ என்பதுதான் சரி என்றாலோ, அந்தப் பாட்டே இடைச் செருகல்தான், ஐயா” என்று மண்டையிலே அடிக்கிறார்கள். எது எப்படி யிருந்தால் என்ன, அந்தப் புலவர் மட்டும் இந்த அற்புத நாகரிக உலகில் இருந்தால்........ இருந்தால் என்ன? அவருடன் நான் சண்டைக்குப் போய்விடுவேன் என்று நினையாதீர்கள். இருந்தாரானல், கட்டாயம், ‘கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்றுதான் அவர் பாடியிருப்பார், அவர் பாடாவிட்டால், அவரிடம் ஓர் ஐந்து ரூபாய், நான் கடன் வாங்கியிருப்பேன். பிறகுமா அப்படிப் பாடாமல் போய்விடுவார் ?
தலைக்கு வந்தது
* * *
வீதியில் மேளச் சத்தம் கேட்டது. நானும் என் நண்பன் நாராயணனும் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தோம். சுவாமி ஊர்வலம் வந்ததுதான் அந்தச் சத்தத்துக்குக் காரணம்.
சுவாமி தரிசனம் செய்வதற்குமுன்னால் என் பார்வை மேளக்காரர்கள் மேல் விழுந்தது. அவர்களில் ஒருவர் நெற்றியில் அழகாகப் பட்டை அடித்து, கழுத்தில் சங்கிலியும், இடுப்பில் பட்டும், கையில் தவுலுமாகக் காட்சி அளித்தார். முகம் எங்கேயோ அடிக்கடி பார்த்த மாதிரியாக இருந்தது. ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
இதற்குள் நாராயணன், “என்னப்பா, என்ன யோசனை? அந்த ஆளையே எடுத்துவிடுவது போலப் பார்க்கிருயே!” என்று கேட்டான்.
“ஒன்றுமில்லை, இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரியாக இருக்கிறதே! அதுவும் அடிக்கடி........”
“ஓஹோ, அவர்தான் மிலிடரி ஹெயர்கட்டிங் ஸ்லூன்’ புரோப்ரைட்டர் ஆறுமுகம். தெரிந்ததா?”
இதைச் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அந்த ஆசாமி சாட்சாத் ஆறுமுகம்தான் என்பதை அறிந்து கொண்டேன். அவனது உடையும், அவன் புகுந்திருக்கும் வேலையுமே கொஞ்ச முன்பாக அவனை என்னால் அறிய முடியாதபடி செய்துவிட்டன.
“ஆமாம், ஆறுமுகத்திற்கும், இந்த வேலைக்கும் என்ன சம்மந்தம் ?” என்றேன்.
“அடடா, இது தெரியாதா? ஜார்ஜ் டவுனிலே பாதி நாவிதர்களுக்குமேல் மேளம் வாசிக்கிறார்கள். இது அவர்களுடைய ஸைட் பிசினஸ் (Side Business)” என்றான் நாராயணன்.
ஆறுமுகத்துக்கும், சங்கீத உலகத்துக்கும் நேரடி யான சம்மந்தம் உண்டு என்பதை அப்பொழுதுதான் கண்ணாரக் கண்டேன்.
ஆறுமுகம் ரொம்ப நல்லவன். மரியாதை காட்டுவதில் அவனுக்குச் சமானம் அவன்தான். ‘நீ’, ‘உனக்கு என்று யாராயிருந்தாலும் மரியாதை இல்லாமல் பேசும் பட்டணத்தில், ‘வாங்க’, ‘இருங்க’ என்று மரியாதை காட்டினால் யாருக்குத்தாம் அவன் மேல் பிரியம் இல்லாதிருக்கும்? அத்துடன், கண்ட இடத்திலெல்லாம் நமக்குச் சலாம் போடுவதும், ஸலூனுக்குச் சென்றால் மிகுந்த மரியாதையுடன் ஆசனம் தந்து உட்காரச் செய்வ தும், இடையிடையே தமாஷாகப் பேசுவதுமே அவனுக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்துவிட்டன.
அவனுடைய ஸலூனுக்குப் பெயர் ‘மிலிடெரி ஹெயர்கட்டிங் ஸலூன்’ என்றிருந்தாலும், யுத்த காலத் தில் கூட மிலிடரியைச் சேர்ந்தவர்கள் அங்கே விஜயம் செய்ததில்லை. காரணம், அது ஒர் ஒதுப்புறமாக இருப்பதுதான். இருந்தாலும் எப்போதும் அங்கே ஒரே கூட்டம்தான். எல்லோரும் வாடிக்கையாக வருபவர்கள். ஒதுப்புறமாக இருந்தாலும் எல்லோரையும் அங்கே அழைத்து வந்து வாடிக்கைக்காரர்கள் ஆக்கிவிடுவது, எது தெரியுமா? ஸலூன் ஆறுமுகம் நடந்துகொள்ளும் விதந்தான் ; அவனது எண்ணற்ற வாடிக்கைக்காரர்களில் நானும் ஒருவன் என்பது குறிப்பிடத் தக்கது.
பொதுவாக, கிராப் செய்துகொள்வது, எண்ணெய் தேய்த்துக்கொள்வது என்றால் எனக்கு வேப்பெண்ணெய் சாப்பிடுவது போலத்தான். இந்த இரண்டும் இல்லாவிட்டால் மனிதன் இந்த உலகில் நிம்மதியாக வாழலாம் என்பதுதான் என்னுடைய சித்தாந்தம்.
முன் காலத்தில், சில ராஜாக்கள் தூங்கும்போதே நாவிதன் வந்து வேலையை முடித்துவிடுவானாம். ராஜா எழுந்து எதிரே இருக்கும் கண்ணாடியைப் பார்த்தவுடன் தான், முகம் வழவழ என்றிருப்பது தெரியுமாம் ; சந்தோஷப்படுவாராம்.
ஏன் ? பட்டாளங்கள் கூடாரம் அடித்திருக்கும் சில இடங்களில்கூட இப்படி நடப்பதாகக் கதை சொல்லுகிறார்கள். கூடாரத்துக்கு வெளியே தலையை இழுத்து ஷவரம் செய்விட்டுப் பிறகு தலையை உள்ளே தள்ளி விடுவார்களாம், நாவிதர்கள்!
இவை உண்மையோ, பொய்யோ! எப்படி இருந்தாலும் இது மாதிரி தூங்கும்போது ஷவரம் செய்து விட்டால் நல்லதுதான். ஆனல் முகஷவரமாயிருந்தால் இப்படிச் செய்துகொண்டுவிடலாம். கிராப் எப்படிச் செய்துகொள்வது? முடியாத காரியம்தான். `தன் கையே தனக்குதவி’ என்ற பழமொழியைச் செய்கையாக முக ஷவரத்தில் வேண்டுமானால் காட்டலாம். ஆனல் கிராப் செய்துகொள்வதில் காட்ட முடியுமா?
“ கிராப் செய்துகொள்வதில் என்ன அவ்வளவு சிரமம் ?” என்று கேட்கிறீர்களா ?
அதைத்தான் சொல்லப் போகிறேன்.
ஆறுமுகம் ஸலூனில் எப்பொழுது பார்த்தாலும் ஒரே கூட்டம்தான். அங்கு இருக்கும் நெருக்கடியைப் பார்த்தாலே, உலக நெருக்கடியை ஒருவாறு உணர்ந்து கொண்டுவிடலாம்.
காலையில் 5½; மணிக்குப் போனால் ஒருவேளை இடம் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் அவ்வளவு சீக்கிரமாக எழுந்திருப்பது எப்படி ? பஸ்ஸிற்கும் ரயிலுக்கும் தான் எல்லோருடனும் போட்டி போடவேண்டி யிருக்கிறது. சூரியனுடனுமா எழுந்திருப்பதில் போட்டி போடுவது ? முன்னால் சூரியன்தான் எழுந்திருக்கட்டுமே என்று விட்டுவிடுவதுதான் என் சுபாவம். அப்படியிருக்க எப்படி ஸலூன் திறந்தவுடனேயே ஆஜராவது ?
நன்றாக விடிந்ததும்தான் எழுந்து செல்வேன். ஆனால் நேரே ஸலூனுக்குப் போய்விடுவது என் வழக்க மல்ல. எங்கேயோ அவசர வேலையாகப் போவது போல ஸலூனைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே நேராகப் போவேன். கூட்டம் அதிகமாக இருந்தால் நேராகவே சென்று வேறு வழியாக வீடு வந்து சேர்ந்து விடுவேன். குறைவாக இருந்தால்தான் நேராகவே உள்ளே நுழைவேன்.
ஸலூனுக்குப் பக்கத்தில் செல்லும்போது கொஞ்சம் தயங்கினாலும் போதும். ஆறுமுகம் சலாம் போட்டு உள்ளே அழைக்க ஆரம்பித்துவிடுவான். அவனுடைய அழைப்பைத் தட்டிக் கழிப்பது எப்படி?
நான் எவ்வளவுதான் முன்ஜாக்கிரைதயாகப் போனாலும் ஸலூனில் ஐந்து, ஆறு நபர்களுக்குக் குறைவாக இருப்பதே இல்லை. அங்கு உள்ளதே மூன்று ஸ்தானங்கள்தாம். இவற்றில் காலி ஏற்படும் ஸ்தானத்தை முன்னால் வந்தவர்கள்தாம் வரிசைப்படி நிரப்புவது வழக்கம்.
கடைவீதிகளில் உள்ள ஸலூன்களைப் போல ஆறு முகம் புதுப் பத்திரிகைகள் வாங்கிப் போடுவது கிடையாது. எல்லாம் நாலைந்து வருஷங்களுக்கு முன்பு வந்தவைகள்தாம். புதுப் பத்திரிகைகளையாவது, நாம் எங்கேனும் இலவச வாசகசாலைகளில் பார்த்துவிடலாம். ஆனால், பழைய பத்திரிகைகளைப் பார்ப்பது அவ்வளவு சுலபமா? அத்துடன், அந்தப் பழைய பத்திரிகைகளின் வளர்ச்சியையும் தாழ்ச்சியையும், ஏன், மறைவையும்கூட அறிந்துகொள்ளலாமல்லவா?
உள்ளே நுழையும்போது, “உட்காருங்க. இதோ ஐந்தே நிமிஷந்தான்” என்று ஆறுமுகம் சொல்லியிருந்தாலும், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு மேலாகக் காத்திருக்க வேண்டும், என்னுடைய முறை வருவதற்கு வேலையெல்லாம் கெட்டுவிடுவதோடு ஆபீஸ் மானேஜரின் முன் போய் ‘லேட்’ ஆகச் சென்றதற்கு விளக்கம் கூற வேண்டியதும் வரும்.
வேறு ஸ்லூன்களுக்காவது போய்விடலாம் என்றால் அங்கும் இந்த மாதிரிக் கஷ்டங்கள் இல்லாமலா இருக்கின்றன? அப்படியே வேறு இடங்களில் சென்று ஷவரம் செய்துகொண்டாலும் ஆறுமுகம் கடையைத் தாண்டித்தானே வீடு செல்ல வேண்டும்? அப்பொழுது அவனிடம் தலையைக் காட்டாது இருக்க முடியுமா ? அவன் நம்மேல் வைத்திருக்கும் மரியாதைக்குப் பங்கம் வந்துவிட்டால் என்ன செய்வது?
ஆறுமுகம் முதலாளியாகையால் ஒரு சிலருக்குத் தாம் அவனே நேராக ஷவரம் செய்வது வழக்கம். அந்த ஒரு சிலருள் நானும் ஒருவன்.
நமக்கு ஷவரம் செய்துகொண்டிருக்கும்போதே வீதியில் போகும் ஒவ்வொருவரையும் சலாம் செய்து உள்ளே அழைப்பதிலும், ஷவரம் செய்துகொண்டவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிப் பெட்டியில் போட்டு, பூட்டிச் சாவியைச் சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டு, அவர்களுக்குச் சலாம் போட்டு வழி அனுப்பு வதிலும், இடையிடையே நேரத்தைப் போக்கிவிடுவான். அத்துடன் பலகாரம், டீ முதலியவற்றை வேறு வாங்கி வரச் செய்து நமது அனுமதி பெற்றுச் சாப்பிட ஆரம்பித்துவிடுவான் !
ஷவரம் செய்யும்போது, குதிரை வண்டிக்காரர்களும், போட்டோக்காரர்களும், ட்ரில் மாஸ்டர்களும் படுத்தும் பாட்டைவிட அதிகப் பாடுபடுத்திவிடுவான்.
“சார், கொஞ்சம் தலையைக் குனிந்துகொள்ளுங்கள். சார், கொஞ்சம் இப்படித் திரும்புங்கோ. கொஞ்சம் மேலே, கொஞ்சம் கீழே” என்று, கழுத்தைத் திருகாமல் மற்றவற்றை எல்லாம் செய்துவிடுவான்.
கத்தியை எடுத்து மூக்குக்குக் கீழே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால் கண்ணிர் கலங்கும். அது நல்ல கத்தியாக இருந்தாலல்லவா ? பட்டாவைத் தீட்டியல்லவா நமது தோலைப் பதம் பார்க்கிருன் ?
ஒரு சமயம் இப்படித்தான் ஷவரம் செய்துகொண்டிருந்தான். அடுத்த வீட்டில் ஏதோ அழுகைக் குரல் கேட்டது.
ஆறுமுகம் என்னைப் பார்த்து, “சார், இங்கே அடுத்த வீட்டிலே இறந்து போனாங்களே, அவங்க உங்களுக்குச் சொந்தமா?” என்று கேட்டான்.
“ஏன் ? அப்படி ஒன்றும் இல்லையே!”
“அப்படின்ன நீங்க இன்னும் ரொம்பத் தங்கமான வங்க, சார்.”
“என்னப்பா அப்படிச் சொல்கிறாய் ?”
“இல்லை, அந்த அழுகைக் குரலைக் கேட்டவுட னேயே மளமளவென்று கண்ணிர் வந்துவிட்டதே!”
“அனுதாபத்தால் கண்ணீர் வரவில்லை. கத்தியின் செய்கையால்தான் கண் கலங்குகிறது” என்பதை நான் அவனிடம் சொல்லியிருப்பேன். ஆனாலும், என்னுடைய தங்கமான குணத்தைக் கெடுத்துக்கொள்ள விரும்பாது சும்மா இருந்துவிட்டேன்.
‘ஏன் சார், நீங்க ஏன் மீசை வச்சுக்கப்படாது?’ என்று ஒரு தடவை கேட்டான்.
எனக்கும் ஆசைதான், பாரதியாரைப் போல மீசை வைத்துக்கொள்ள. அத்துடன் மூக்குக்குக் கீழே ஆறு முகத்தின் கத்தி போகாது தடுத்தும் விடலாமல்லவா ?
“வைத்துக்கொள்ளலாம். ஆனாலும் வீரமும் இருக்க னும், மீசையும் இருக்கணும். என்னைப் போல ஆளுக் கெல்லாம் மீசை எதுக்கப்பா? வேண்டாம்” என்றேன்.
“ஆமாம் சார், வாஸ்தவந்தான். கரப்பாம்பூச்சி கூடத்தான் மீசை வச்சிருக்கு” என்றான் சிரித்துக் கொண்டே.
இவ்வளவு பிரியமாக இருந்தாலும் ஆறுமுகம் எனக்கு இப்பொழுது கொஞ்சம் பிடிக்காதவனாகி விட்டான்.
காரணம், ஒருநாள் எனக்கு கிராப் வெட்டிக் கொண்டிருந்தான். வீதியில் மேளச் சத்தம் கேட்டது. ஆறுமுகமும் மேளக்காரர் கூட்டத்தில் ஒருவனாதலால் மேளத்துக்குத் தக்க தாளம்போட ஆரம்பித்துவிட்டான். கையால் அல்ல ; கையில் வைத்திருந்த கத்திரிக் கோலால்! டக் டக் என்று சப்தம் உண்டாக்கி ஷவர வேலையோடு தாளம் போடும் வேலையையும் சேர்த்துக் கொண்டான் ; நானும் இதில் லயித்துவிட்டேன்.
கொஞ்ச நேரம் சென்று பார்த்தால், ஐயோ! என் தலைமயிர் சில இடங்களில் ரொம்பக் குட்டையாகவும், சில இடங்களில் அடியோடும் அலங்கோலமாக வெட்டப் பட்டிருப்பது கண்ணாடியில் தெரிந்தது.
இதைப் பார்த்ததும் எனக்குக் கோபம் அபாரமாக வந்துவிட்டது. வெளியில் தலைகாட்ட முடியாதே என் பதை நினைத்து வருந்தினேன்.
இருந்தாலும் ஆறுமுகம், “ சார், மன்னிச்சுடுங்க" சார், தெரியாமல் பண்ணிட்டேன். ‘சம்மர் கிராப்’ பண்ணிவிடலாம் சார்,” என்று யோசனை சொல்ல ஆரம்பித்தான்.
எப்படி? மழை காலத்தில் ‘சம்மர் கிராப்’ செய் கிறானாம் ! என்ன செய்வது ? இப்பொழுது அவன் யோசனைப்படியே சம்மர் கிராப் வைத்து விரைவாக வளர்த்து வருகிறேன்.
நல்ல வேளை, தாளம் போடும்போது மெய்மறந்து காது, மூக்கு இவைகளைக் கத்தரிக்காது, தலைக்கு வந்ததைத் தலைமயிரோடு விட்டுவிட்டானே !
உல்லாசப் பிரயாணம் !
* * *
நானும் என் நண்பர்களும் சிதம்பரம் செல்வது என்று தீர்மானித்தோம். இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே தேதி குறிப்பிட்டு, பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தோம். சிதம்பரத்தில் நடராஜரைத் தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தையும் காண்பது என்பதே எங்களது நிகழ்ச்சி முறை.
ஆனால், புறப்படும் தினம் வருவதற்குள் பல துன்பங்கள் வந்துவிட்டன. அப்பொழுது மார்கழி மாதமானதால், ரயில்வேயில் டிக்கெட் தரமாட்டோம் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர். “சிதம்பர தரிசனமா? அப்படியானால் டிக்கெட் கிடையாது” என்று நந்தனுக்கு வேதியர் குறுக்கே நின்றதுபோல, எங்கள் பயணத்துக்கு வேதியனாக நின்றனர். “என்னதான் கஷ்டம் வந்தாலும், சிதம்பரம் போகாமல் இருப்பதில்லை. இந்த ஜென்மத்தை வீனாகக் கழிப்பதில்லை” என்ற திடசித்தத்துடனேயே இருந்தோம்.
புறப்படும் நாள் வந்தது. என்னை நண்பர்கள் டிக்கெட் வாங்குவதற்கு எதிர்ப்பில்லாமலேயே தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். சீக்கிரமாகவே போய்விட்ட படியால், டிக்கெட்கொடுக்கும் ஜன்னல்பக்கமாகப் போய் நின்றுகொண்டேன். பின்னால் வந்தவர்கள் எல்லாம் என்னுடைய பலத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். டிக்கெட் கொடுத்த பாடாயில்லை. டிக்கெட் கொடுப்ப வரின் தரிசனம் கிட்டாதபடி ஜன்னல் கதவு நந்தியாக மறைத்திருந்தது. அநேகர் சத்தம் போட்டனர். கதவை உடைக்க முயன்றனர். என்ன செய்தாலும் சாவதான மாகத்தான் திறக்கப்பட்டது.
கதவு திறந்ததுதான் தாமதம். ஒருவர்மேல் ஒருவர் விழுந்து ஜன்னலை நோக்கிக் கையை நீட்டினர். ஆனால், எல்லாருடைய பலமும் என்மேல்தான் தாக்கிற்று. இந்தக் கூட்டத்துக்குள் என்னுடைய மிதியடியை அறுத்துவிடுவது என்று ரொம்பப் பேர் முயற்சி செய்தனர்; பலிக்கவில்லை.
சிதம்பரத்துக்கு டிக்கெட் கொடுக்காததால் மாயவரத் துக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டேன். வெளியே வருவ தற்குள் எனது குடல் வெளியே வந்துவிடும் போலாயிற்று. ஆனால், நடராஜர் கிருபையால் தப்பினேன்.
என் வெற்றியை எனது நண்பர்கள் மெச்சினர். எல்லோரும் ரயிலை நோக்கிச் சென்றோம். நாங்கள்தாம் முதலில் சென்றுவிட்டோம் என்று எண்ணினோம். ஆனால், அங்கே ஏராளமான கூட்டம் ஏற்கெனவே இருந்தது. சி.ஐ.டி. உத்தியோகஸ்தர் குற்றவாளியைத் தேடுவது போல ஒவ்வொரு வண்டிக்குள்ளும் தலையை விட்டுப் பார்த்தும் இடமில்லாது அலைந்துகொண்டிருந்தோம்.
கடைசியாக ஒரு வண்டி காலியாக இருந்தது என் கண்ணில் பட்டது. என் நண்பர்களைக் கூட்டிக் கொண்டு அங்கே ஒடினேன்.
“எவனுக்காவது இது தெரிந்ததா! எல்லாம் செம்மறி ஆட்டுக் கூட்டம்தான். இவ்வளவு இடம் இருக்கிறது. பஞ்சு மூட்டைபோல் போய் அடைகிறார்களே!” என்று கூறிக்கொண்டேயிருந்தேன்
என் நண்பர்களும், “உன் புத்திக்கு மெச்சினோம்” என்று தட்டிக்கொடுத்தனர். சாமான்களை இடம் பார்த்து அடுக்கிக்கொண்டே யிருந்தோம்.
அப்பொழுது அங்கே வந்த ஒரு ரயில்வே உத்தி யாகஸ்தர், “யாரது? நீங்க பொம்மனாட்டிகளா?” என்று கேட்டார். இருட்டாயிருப்பதால் தெரியவில்லை போலிருக்கிறது என்று நினைத்து, “இல்லை. நாங்கள் ஆண்கள்” என்றேன்.
“அப்படின்னா, பொம்மனாட்டிகள் வண்டியிலே உங்களுக்கு என்ன வேலை? போர்டு போட்டிருக்கிறது தெரியவில்லை?” என்றார்.
அவ்வளவுதான்; பேச்சு மூச்சு இல்லாது (மூச்சு இல்லாது என்பதை சும்மா எதுகைக்காகக் கூறினேனே தவிர, உண்மையில் அல்ல) கீழே இறங்கி வேறு இடம் பார்த்தோம்.
ரொம்ப நேரம் அலைந்தோம். கடைசியாக ஒரு வண்டியில், தவறுதலாக வண்டி மாறி உட்கார்ந்த ஐந்தாறு பேர் இறங்கினர். அந்த இடத்தை நாங்கள் வெற்றிகரமாகக் கைப்பற்றிக்கொண்டோம்.
வண்டியில் வந்து ஏற வருபவர்களை யெல்லாம், “அடடா, அந்தக் கம்பார்ட்மெண்டில் காலி இருக்கிறதே! கடைசி வண்டி காலியா யிருக்கிறதே! பின்னால் நாலு வண்டிகள் புதிதாகக் கோக்கிறானே!” என்றெல்லாம் சமாதானம் செய்து பார்த்தோம். அதற்கெல்லாம் மசியாத சில பேர் வழிகள் எங்கள் வண்டியில் ஏறிவிட்டால், “ஏன் சார், எங்கு போகிறீர்கள்?” என்று கேட்போம். பக்கத்து ஊராயிருந்தால் பரம சந்தோஷந்தான். எங்களுடனேயே முழுவதும் வருவதாகவோ, அல்லது அதற்கு மேலேயும் செல்வதாகவோ பதில் வந்தால், “ஏண்டா கேட்டோம்” என்று இருக்கும்.
ஒரு கிழவனார் எங்கள் வண்டியில் வந்து ஏறினார். அவருக்கு நிற்கக்கூட இடமில்லை. ரொம்பக் கஷ்டப் பட்டார். அப்பொழுது என் நண்பன் சோமு, “தாத்தா, நீங்கள் இந்த இடத்தில் உட்காருங்கள்" என்று எழுந்து கொண்டு தான் இருந்த இடத்தைக் காண்பித்தான்.
உடனே அந்தப் பெரியவர், “அடடா, அதெல்லாம் வேண்டாம் தம்பி. நீயே உட்கார்ந்திரு; பாவம் எதற்காக உனக்கு இந்தக் கஷ்டம்” என்றார்.
ஆனால் சோமு, அவரை விடவில்லை. தன் இடத்தில் அவரைப் பிடித்து உட்கார வைத்தான்.
அந்தக் கிழவனாருக்குப் பரம சந்தோஷம். பக்கத்தி லிருந்த ஒருவரிடம், “பார்த்தீர்களா! என்ன கருணை! அதுவும் இந்தக் கஷ்ட காலத்திலே, யாரப்பா இந்த மாதிரி இடம் கொடுக்கிறார்கள்!” என்று புகழ்ந்து கொண்டே சோமுவை ஆச்சரியத்துடன் பார்த்தார்.
ஆனால், சோமு ரயிலைவிட்டுக் கீழே இறங்கி, “சரி, இரண்டாவது மணியும் அடிச்சாச்சு. நான் போய் வரட்டுமா?” என்று எங்கள் விடையை எதிர்பார்த்து நின்ற போதுதான், சோமு, எங்களை வழியனுப்ப வந்த பேர்வழி என்பது கிழவனாருக்கு வெட்டவெளிச்சமா யிருக்கும். ஆச்சரியம் இருந்த இடத்தில் ஏமாற்றம் குடி கொண்டிருக்கும்.
சோமு சென்றதும் ரயிலும் நகர்ந்தது. நேரம் ஆக ஆக ஜனங்கள் உறங்க ஆரம்பித்தனர். சிலர் நின்று கொண்டும், சிலர் உட்கார்ந்துகொண்டும், சிலர் முழங்காலைக் கட்டிக்கொண்டும் உறங்கினர். சிலர் ஒருவர் மேல் ஒருவராகச் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர். குழந்தைகள் சீட்டுகளை மடக்கி, வரிசையாக நிற்க வைத்து, கடைசிச் சீட்டைத் தள்ளினதும், ஒன்றன் மேல் ஒன்றாய் எல்லாச் சீட்டுகளும் விழுந்து கிடக்கு மல்லவா? அதுபோல இருந்தது அந்தக் காட்சி.
எனக்குக் கீழே படுத்து உறங்கினால்தான் தூக்கம் வரும். ஆனால் படுப்பதற்கு இடம் ஏது?
மகாத்மா காந்தி, முன்பு ஒரு தடவை ரயிலில் மூன்றாவது வகுப்பில் பிரயாணம் செய்தாராம். கூட்டம் அதிகமில்லாததால், காலை முடக்கிக்கொண்டு நன்றாகத் தூங்கிக்கொண் டிருந்தாராம். ஒரு ஸ்டேஷனில் கூட்டம் வந்து ஏறியது. அந்தக் கூட்டத்தில் வந்த ஒரு பட்டிக்காட்டு ஆசாமி, காந்திஜியை எழுப்பி, “ஏனய்யா, இது என்ன உங்க அப்பன் வீட்டு வண்டின்னு நினைச்சிக்கிட்டியோ? ஏந்திருச்சு உக்காரய்யா,” என்றானாம்.
காந்திஜி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு உட்கார்ந்தாராம். அவர்தாம் காந்தி என்று அப்போது அவனுக்குத் தெரியாது. கொஞ்ச நேரத்தில், இவன் குஷி வந்து, “காந்தியோ பரம ஏழை சன்யாசி” என்று பாடுகிறோ மல்லவா, அந்த மாதிரி ஒரு பாட்டைப் பாட ஆரம்பித்து விட்டானாம். இது கட்டுக் கதையாகத்தானிருக்கும்.
என்னவாயிருந்தாலும், சாதாரண காலத்திலேயே யாராவது படுத்திருந்தால், “ஏனையா, எழுந்திருக்கிறீரா அல்லது எழுந்தருளப் பண்ணட்டுமா?” என்று கேட் பார்கள். நெருக்கடி காலத்தில் சொல்லவேண்டியதே இல்லை.
போட்டோவுக்கு உட்காருவதுபோலவே ஆடாமல் அசையாமல் உட்கார்ந்துகொண்டிருந்தேன். இந்த லட்சணத்தில் மழை வேறு ஆரம்பித்துவிட்டது. ரயிலில் ஒட்டை அதிகமானதால், எல்லோரும் எழுந்து நிற்க ஆரம்பித்தனர். “சாதாரணமாகவே, மாமியார் அக்கிலிப் பிக்கிலி (பிடாரி), கள்ளு குடித்தாளாம்; தேளும் கொட்டியதாம்” என்று சொல்லுவார்கள். அது போலவே உள்ள கஷ்டத்தோடு, இந்தக் கஷ்டமும் சேர்ந்துவிட்டது. ஆனாலும் என்ன செய்வது? பொறுத்தவர்தாமே பூமியாள முடியும் ?
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தோம். ஒரு வழியாகத் தில்லை மூதூரின் எல்லையும் வந்து சேர்ந்தது. சிறிது நேரத்தில், ஸ்டேஷனும் வந்துவிட்டது. அவசர அவசரமாகக் கீழே இறங்கி மூச்சுவிட ஆரம்பித்தோம்.
அடேயப்பா, நடராஜப் பெருமானைத் தரிசனம் செய்ய எவ்வளவு சிரமம்! எத்தனை இடையூறுகள்! இவ்வளவையும் நாங்கள் மீட்டு வந்துவிட்டோம். இதற்காகவாவது எங்களுக்கு நடராஜர் மோட்சம் அளிப்பார் என்பது நிச்சயம்
மறதியின் லீலை
* * *
“ஏண்டா சுந்தரம், எங்கே அந்த லெட்டரை வைத்தாய்?”
“ லெட்டரா? ஞாபகமில்லையே அப்பா. இங்கே தானே வைத்ததாக ஞாபகம்.”
“என்ன, எது கேட்டாலும் ஞாபகமில்லை என்றே சொல்லுகிறாய் ? உப்புப் போட்டுச் சோறு தின்றால் அல்லவா ஞாபகம் இருக்கும் ? ஏண்டா, இன்றைக்கு உப்புப் போட்டுக்கொண்டாயா சாதத்துக்கு ?”
“அதுவா ? ஞாபகமில்லையே அப்பா,”
சுந்தரம் என்ன, அநேகமாக எல்லோருக்குமே மறதி உண்டுதான். சிலருக்கு அதிகம்; சிலருக்குக் குறைவு.
“எனக்கு ஞாபக மறதிமட்டும் வந்துவிட்டால், உடனேயே உயிரை விட்டுவிடுவேன்" என்று ஒருவர் சொன்னாராம். அவர் போலவே எல்லோரும் சபதம் செய்துகொண்டு, அதைச் செயலிலும் காட்ட ஆரம்பித்துவிட்டால் ஆயிரத்துக்கு ஒருவர் இருப்பதுகூடக் கஷ்டம்தான். அணுக் குண்டுகளை இந்த உலகத்தில் எல்லா இடங்களிலும் போட்டுவிட்டால் எத்தனை பேர் இருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்ப்பதைப் போலத்தான் ஆகும்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களில் சிலர், பாடம் சம்பந்தமாகப் படிப்பவற்றையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு விடுகிறார்கள். ஆனால் சட்டையை எங்கே போட்டோம், வேஷ்டியை எங்கே வைத்தோம் என்பவற்றை மட்டும் மறந்துவிடுகிறார்கள்.
இரு நண்பர்கள், ஒரு விஷயம் பற்றி சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். நடுவில் வேறொருவர் வந்து ஏதாவது கேட்டுவிட்டுப் போய்விடுவார். அவர் போன பிறகு, பேச்சைத் திரும்ப ஆரம்பிப்பதற்காக முன்பு பேசியவர் முயல்வார். ஆனால், விஷயம் ஞாபகத் திற்கு வராது.
“எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்?” என்பார் எதிரே கேட்டுக்கொண்டிருந்தவரை.
“அதுவா, எதையோ பற்றியல்லவா பேசினோம்?” என்று அவரும் மேலே பார்ப்பார்.
ரொம்ப நேரம் ஞாபகப்படுத்தியும் விஷயம் வராது ! கடைசியில் வேறு ஒன்றைப்பற்றி ஆரம்பிப்பார்கள்.
ஒரு பத்திரிகை ஆபீஸிற்கு ஒருவர் சந்தாப் பணத்தை மணி ஆர் டரில் அனுப்பியிருந்தார். பத்திரிகை ஆபீஸ் குமஸ்தா, மணி ஆர்டர் பணத்தையும், கூப்பனையும் வாங்கிக்கொண்டார்.
ஆனால், சந்தாப் பதிவு புத்தகத்தில் பதிவு செய்யும் போது, பணம் அனுப்பியவரின் விலாசம் தெரியவில்லை. கூப்பனில் கையெழுத்து மட்டுந்தான் இருக்கிறது. விலாசம் முழுவதும் வேண்டுமானால், மணி ஆர்டர் பாரத்தைப் பார்த்து ஏற்கெனவேயே குறித்து வைத்துக்கொள்ள வேண்டாமா ? அதைத்தான் மறந்து போய் விட்டாரே, இந்தக் குமாஸ்தா! ஆனாலும் என்ன சந்தாக் கட்டியவர் பத்திரிகை வரவில்லை என்று புகார் எழுதமாட்டாரா? அப்பொழுது, அந்தக் கடிதத்திலுள்ள விலாசத்தைப் பார்த்துப் பத்திரிகையை அனுப்பி விட்டால் போகிறது!
உயர்ந்த பதவியில் இருக்கும் சர்க்கார் உத்தியோகஸ்தர் ஒருவரை, ஒரு நண்பர் பார்க்க வேண்டியதிருந்தது; கடிதம் எழுதினார். ஒரு நாள் குறித்து, அன்று வந்து பார்க்கும்படி பதில் வந்தது.
நண்பர் அப்படியே சென்றார். அந்த உத்தியோகஸ்தரின் அறைக்குள் நுழைவதற்கு வெகு நேரம் வெளியே காத்திருந்து, கடைசியாகப் பியூனின் தயவால் உள்ளே நுழைந்தார்.
விஷயம் என்னவென்று கேட்டார் உத்தியோகஸ்தர், நண்பர் பதில் சொன்னார்,
“சரி, நாங்கள் தந்த அனுமதிச் சீட்டைக்கொண்டு வந்தீரா? கொண்டுவரும்படி எழுதியிருந்தோமே ?” என்றார் உத்தியோகஸ்தர்.
நண்பருக்கு இதைக் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது. ஆனாலும் என்ன செய்வது? அவர்கள் எழுதியது உண்மைதான். ஆனால் மறந்துவிட்டாரே அந்த நண்பர்?
அவருடைய தயக்கத்தைக் கண்ட உத்தியோகஸ்தர், “என்ன, கொண்டுவர மறந்துவிட்டீரா? அது இல்லாமல் எப்படிக் காரியம் முடியும்? சரி, இன்னும் பத்து நாட்கள் சென்று வந்து பாரும். நான் இன்று பம்பாய்க்குப் போகிறேன்” என்று ஒரே போடாய்ப் போட்டுவிட்டார்.
நண்பர் ரயிலுக்குக் கொடுத்த பண நஷ்டத்தோடு காரியமும் வெற்றி பெறவில்லையே இந்த மறதியால்!
ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தர், தம் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் மறதியாக, ‘தங்கள் தாழ்மையுள்ள ஊழியன்’ என்று எழுதிக் கையெழுத்துப்போட்டு அனுப்பிவிட்டாராம். மனைவி அந்த வரியை ஒரு முறைக்குப் பலமுறையாகப் படித்துப் பார்த்தாள். அவள் முகத்தில், மெல்ல ஒரு புன்னகை அரும்பியது. “உம்: இதைத் தெரிந்துகொள்ள உங்களுக்கு இத்தனை நாட்களாயிற்றா ?” என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாளாம். எப்படியிருக்கிறது ஒரு மனிதனை, இந்த மறதி மனைவிக்கு அடிமையாக்கும் லீலை !
இந்த மறதி, சாதாரண மனிதர்களுடைய வாழ்வில் தான் காணப்படுகிறது என்று நினைக்காதீர்கள். பெரிய பெரிய மனிதர்களுடைய வாழ்விலே இது பங்கு கொண்டு விடுகிறது.
ஸர் வால்டர் ஸ்காட் என்ற பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஒரு சமயம், பத்திரிகையில் வெளிவந்த தம்முடைய பாட்டு ஒன்றைக் கண்டு, தாமே வியந்து போற்றி ஆனந்திக்கத் தொடங்கிவிட்டார். “அவர் எழுதிய பாட்டை அவர்கூடப் போற்றாமல் என்ன செய்வார்?” என்று எண்ணிவிடாதீர்கள். அந்தப் பாட்டு பைரன் என்ற கவிஞர் இயற்றியதாக்கும் என்று கருதியே ஸ்காட் போற்றி னாராம்! ஸ்காட்டின் ஞாபகசக்தி அவ்வளவு அபாரம்!
பிரபல விஞ்ஞானி ஒருவர், ஒரு தடவை, ஏதோ ஓர் ஆராய்ச்சியில் ஆழ்ந்திருந்தாராம். அவருக்கு எதிரே காப்பி கொண்டு வந்து வைக்கப்பட்டது. அவரைப் பார்க்க ஒரு நண்பர் வந்தார். விஞ்ஞானி ஆராய்ச்சி யில் இருந்ததால் அவரைக் கவனிக்கவில்லை. வந்தவர் காப்பியைக் குடித்துவிட்டுக் கோப்பையைக் காலி செய்துவிட்டுப் போய்விட்டார். விஞ்ஞானி ஆராய்ச்சி முடிந்து காலிக் கோப்பையைப் பார்த்துவிட்டு, “அடடா, அப்பொழுதே குடித்துவிட்டேன் போலிருக்கிறது. ஞாபகமில்லாமல் அல்லவா, இப்பொழுது கோப்பையை எடுக்கப்போனேன்!” என்று எண்ணிச் சிரித்தாராம். அவ்வளவு ஞாபகசக்தி அவருக்கு!
[1]நம் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இருக்கிறாரே, அவருடைய வாழ்க்கையில்கூட இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்துவிட்டது.
அவர் கல்லூரியில் படிக்கும்போது, எல்லாப் பாடங்களிலும் முதலாவதாகத் தேறிவிடுவார். ஆனல் கணக்குமட்டும்தான் வராது. இவர்தம் நெருங்கிய பள்ளித்தோழர் ஒருவர் இவருக்கு நேர் எதிரிடை: கணக்கில் புலி, ஆனால் மற்ற ஒரு பாடமும் வராது.
கணக்குப் பரீட்சையன்று நண்பர் சொன்னாராம்;
“டேய் இராமலிங்கம், எனக்குக் கணக்கு மட்டும் தான் வருகிறது. பாக்கி ஒன்றிலும் நான் தேறப் போவதில்லை. உனக்கோ கணக்குமட்டும்தான் வரவில்லை. ஒன்று செய்தாலென்ன ? நான் கணக்குப் பேப்பரை எழுதி உன் பெயர் போட்டு வைத்துவிடுகிறேன். அதேபோல், நீ உன் கணக்குப் பேப்பரில் என் பெயர் போட்டு வைத்துவிடேன். நீயாவது தேறுவாய்” என்று தியாகம் செய்ய முன் வந்தாராம்.
கவிஞர் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் கடைசியில் மேலே சொன்னவாறே, ஒரு கூட்டு ஒப்பந்தம் செய்துகொண்டு பரீட்சை எழுதிவிட்டார்கள்.
கொஞ்சநாள் சென்று கவிஞருடைய வீட்டுக்குக் கணக்கு வாத்தியார் வந்தார்.
“ஏண்டா இராமலிங்கம், என்னடா கணக்குப் பேப்பர் இரண்டு எழுதி வைத்திருக்கிருய்?” என்று கேட்டார்.
அப்பொழுதுதான் கவிஞருக்கு உண்மை புரிந்தது.
நண்பன், தன்னுடைய பெயரைக் கணக்குப் பேப்பரில் எழுதி, சத்தியத்தைக் காப்பாற்றி விட்டதையும், தான் நண்பன் பெயரை எழுத மறந்து, தன் பெயரையே எழுதிவிட்டதையும் உணர்ந்தார்.
ஆனால் இப்பொழுது என்ன செய்வது? வாத்தியாரிடம் சரணகதி அடைந்து, குற்றத்தை ஒப்புக்கொண்டார். இருவரும் மன்னிக்கப்பட்டனர்.
என்னைக்கூட இந்த மறதி எத்தனையோ தடவைகளில் படாதபாடு படுத்திவைத்துவிட்டது. ஆனால் ஒரு சமயம் என்னைக் காப்பாற்றியும்விட்டது! எப்படித் தெரியுமா ?
முக்கியமான ஒருவரின் விலாசத்தைக் குறித்துக் கொடுத்து, அந்த விலாசத்துக்கு ஒரு கடிதம் எழுதும் படி ஆபீஸ் மானேஜர் கட்டளையிட்டிருந்தார். அவர் தந்த சீட்டை எங்கேயோ வைத்து மறந்துவிட்டேன்.
மானேஜர், நான் கடிதம் எழுதவில்லை என்பதை அறிந்து கேட்டார். விஷயத்தைச் சொன்னேன். அபாரமாகக் கோபம் வந்துவிட்டது, அவருக்கு.
“ என்ன, உம்மிடம் எந்தக் காரியம் சொன்னாலும் இப்படித்தான். மறந்துபோச்சு, மறந்துபோச்சு என்று சொல்லியே வருகிறீர். மாதம் பிறந்தவுடன் சம்பளம் வாங்க மட்டும் மறந்துவிடுகிறீரா? “Thirty days have September, April, June & November’ என்று நாளைக் கணக்குப் பண்ணிக்கொண்டே இருக்கிறீரே !” என்று எரிந்து விழுந்தார்.
என்ன செய்வது? குற்றம் என்னுடையதுதான். இரண்டு நாட்களாகக் கஷ்டப்பட்டுக் கடைசியில், அந்த விலாசம் எழுதிய சீட்டைக் கண்டுபிடித்துவிட்டேன். அந்த விலாசத்துக்குக் கடிதமும் எழுதிவிட்டேன்.
நான்கு நாட்களில் கடிதம் திரும்பி வந்துவிட்டது. காரணம், அந்த விலாசத்தில் அந்த ஆசாமி இல்லையாம். மானேஜரிடம் விஷயத்தைச் சொன்னேன்.
“அடடா, அவர் வேறு இடத்திற்கு மாறிவிட்டதாகப் பத்து நாட்களுக்கு முன்னால் எழுதியிருந்தாரே! மறந்தே போய்விட்டேன், பார்த்தீரா!” என்று தலையைச் சொறிந்தார்.
“என்ன ஐயா, மானேஜரே, நீர் மட்டும் மாதம் பிறந்தவுடனே, சம்பளம் வாங்க மறந்துவிடுகிறீரா?” என்று கேட்க என் வாய் துடித்தது. ஆனாலும் என்ன செய்வது? வேலை போகாதிருக்க வேண்டுமே !
இப்படி ஏன், என்னுடைய வாழ்க்கையிலிருந்தும் ஒரு பகுதியை இங்கே எடுத்துவிட்டேன் என்றால், அநேக பெரிய மனிதர்கள் வாழ்விலும்கூட, இந்த மறதி தனது லீலையைச் செய்கிறது என்பதைக் காட்டவேதான்!
* * *
↑ இந்த நிகழ்ச்சி, கவிஞரின் “என் கதை” யில் இல்லை. ஆனால் சென்னையில் நடந்த கூட்டமொன்றில், கவிஞராலேயே வெளிப்படுத்தப்பட்டது.
சலவைத் தொழிலாளி
* * *
“என்னடா, இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. ஒரு இடத்துக்கும் போகல்லியா?”
“ போகத்தான் வேணும். ஆனல்...... ”
“என்ன, ஆனால் என்று இழுக்கிறாய்?"
“இன்றோடு 25 நாட்களாச்சு. இன்னும் வண்ணான் சலவை கொண்டுவந்த பாடில்லை.”
“ வண்ணான் வரவில்லையென்ருல் சும்மா இருந்தால் வந்துவிடுவானா ? நீ உரக்கப் பாட ஆரம்பியேன். வண்ணான் வந்துவிடுகிறான்!”
இந்த மாதிரி என்னைக் கழுதை என்று சொல்லாமல் சொல்லிவிட்டான் தியாகராஜன். இதைச் சொன்னதுமே எனக்கு ரொம்ப ஆத்திரம் வந்துவிட்டது. இருந்தாலும், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்துவைத்தேன். காரணம், வண்ணான் வராவிட்டால், அவனிடம் சட்டை வேஷ்டி ஒசி வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்ததுதான்.
என்னுடைய சலவைத் தொழிலாளி சண்முகம் இருக்கிறானே, அவன் வேஷ்டிகளையெல்லாம் ஒரு வாரத் தில் கொண்டு வருவதாகத்தான் சொல்லுவான். ஆனால் அவனுடைய காலண்டரில் ஒரு வாரம் என்பது 20 நாட்கள் கொண்டதா, 30 நாட்கள் கொண்டதா என்பதை இன்னும் யாராலுமே நிச்சயமாகக் கூற முடியவில்லை.
மூன்று வருஷ காலமாகவே எனக்கும் அவனுக்கும் தொடர்பு உண்டு. ஒரு தடவையாவது, 20 நாட்களுக்குக் குறைந்து, சலவை கொண்டு வந்தது இல்லை. ஆனாலும் நண்பர்களில் யாராவது புதிதாக அவனிடம் சலவைக்குப் போட நினைப்பவர்கள், “ஏனப்பா, எவ்வளவு நாளில் கொண்டு வருவாய்?” என்று கேட்டால், “ஒரு வாரம் ஆகும்” என்று என்னையும் வைத்துக்கொண்டே தைரியமாகப் பதில் சொல்லுவான்.
சலவையோ ரொம்பப் பிரமாதம்! யாரோ ஒரு புலவர், வண்ணான் ஒருவன் வெளுத்து வந்த வெள்ளையைப் பற்றிப் பாடினராம். அதிலே, அந்த வெள்ளையைப் பார்த்தவுடனேயே, விண்ணுலகத்திலுள்ள விஷ்ணு, தன் கையில் உள்ள சங்குதான் பூலோகம் சென்று இப்படி வெள்ளையாகத் தெரிகிறதோ என்று பிரமித்துவிட்டு, சங்கு கையில் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொண்டாராம்.
ஆனால், சண்முகத்தினுடைய சலவையைப் பார்த்தால் தன் உடம்பே பூலோகம் புகுந்துவிட்டதோ என்று மிரண்டு, திருமேனியைத் தொட்டுப் பார்க்க ஆரம்பித்துவிடுவார் விஷ்ணு. வேஷ்டிகள் எல்லாம் வெள்ளையாயிருந்தால், சங்கோ என்று நினைத்துச் சந்தேகப்படலாம். ஆனால் இவைகளெல்லாம்தாம் ஒரே நீலமயமாக இருக்கின்றனவே! விஷ்ணு இப்படி மிரளாது என்ன செய்வார்?
“என்னய்யா, நீலம் கிடைக்காத இந்தக் காலத்தில், எந்த வண்ணானாவது நீலத்தை அதிகம் உபயோகப் படுத்துவானா ? அவனுக்கென்ன பைத்தியமா?” என்றா கேட்கிறீர்கள்.
“ உண்மை. வெறும் இகழ்ச்சியில்லை. உயர்ந்த ரகமான நீலம் வாங்கினாலல்லவா, அவனுக்குக் கஷ்டம்? உபயோகப்படுத்துவதெல்லாம் `கட்டி நீலம்' என்னும் மட்டச் சரக்குத்தானே! அதனால்தான், அது வேட்டி சட்டைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு,போகவே மாட்டேன் என்று பிடிவாதம் செய்கிறது.
போன தடவை கொண்டுவந்த சலவையில் ஒரு வேட்டி, சில இடங்களில் இரும்புக்கறை படிந்து மிகவும் மோசமாக இருந்தது.
“என்னப்பா, இந்த வேட்டியிலே இது என்ன கறை?” என்றேன்.
“இல்லீங்களே, நான் ஒண்ணும் மாத்திக்கொண்டாரல்லியே. நீங்க போட்ட வேட்டிதானுங்க. போடயிலேயே நாலு பக்கமும் கறையிருந்திச்சுங்களே” என்று என்னையே திருப்பிக் கேட்க ஆரம்பித்துவிட்டான்.
இதைக் கேட்டு நான் கோபிப்பதா? சிரிப்பதா?
வேட்டிகளில் இந்த மாதிரி இரும்புக்கறை, நீல வர்ணம் இவைகள் இருப்பதோடு, இன்னொரு அழகும் உண்டாக்கிவிடுவான். அதுதான் அவன் விலாசம் போடும் அழகு.
கிராமாந்தரங்களில், ஏதாவது கோடு அல்லது புள்ளி வைத்துக் குறிபோடுவார்கள். ஆனல் இது பட்டணமல்லவா? அம்மாதிரி குறி போடலாமா?
இங்கிலீஷில் விலாசம்போட்டிருப்பான்.ஒரு எழுத்து இரண்டு எழுத்துக்களல்ல. (ஐந்து எழுத்துக்கள்) G.S.A.L.V-இவைதாம் அந்தப் பஞ்சாட்சரங்கள்.
இந்தக் கொட்டை எழுத்துக்களுக்கு அவனுடைய வியாக்யானம் என்ன தெரியுமா?
G என்பது ஜார்ஜ்டவுன்.
S என்பது அவனுடைய கடைப்பெயர்.
AL.V. என்பது எனது விலாசம்.
இவ்வளவையும் தெளிவாகப் போட்டால்தான், உருப்படிகள் மாறாது இருக்குமாம். ஆனால், இந்த எழுத்துக்களை ஒரு மூலையில் மட்டும் போடமாட்டான். சலவைக்கு ஒரு மூலையாகப் போட்டுவிடுவான். நாலாவது சலவைக்குப் பிறகுதான் விலாசம் போடுவதை நிறுத்துவான். ஏனென்றால், நாலுக்கு மேலாகத்தான் மூலைகள் இல்லையே!
காரணம் கேட்டால், ஒரு சமயம், உருப்படிகள் மாறா திருப்பதற்காகத்தான் என்கிறான். இன்னொரு சமயம் அதுதான் தங்கள் வழக்கம் என்கிறான். ஆனால் எனக்குத் தோன்றுவது, ஒரே ஒரு காரணம்தான். இது பேப்பர், பென்சில் கிடைக்காத காலமாதலால், அவனுடைய பையன், வேஷ்டிகளில், ஏ. பி.ஸி. டி. எழுதப் பழகுகிறானோ என்னவோ என்றுதான் எண்ண வேண்டியதிருக்கிறது.
ஆனால் போட்ட உருப்படிகளில், ஒன்றுகூடக் குறையாமல் கொண்டுவந்துவிடுவான். அந்த உருப்படிகள் எல்லாம் நம்முடைய சொந்தம்தானா என்று மட்டும் ஆராயப் புகுந்துவிடக்கூடாது. ஒன்றிரண்டு நம்முடைய வைகளில் காணாமற்போய், அந்த உருப்படிகளுக்குப் பதிலாக மற்றொருவருடையவை வந்திருக்கலாம். அவருக்கு இன்னொருவருடையவை, அந்த இன்னொருவருக்கு நாலாவது ஒருவருடையவை, இப்படியாக அவனது கெட்டிக்காரத்தனத்தால், காலச் சக்கரத்தை உருட்டிப் பெயரைக் காப்பாற்றி வருகிறான்.
சில சமயம், நம்முடைய உருப்படிகளில் சிலவற்றைக் கிழித்துக்கொண்டு வந்துவிடுவான்.
அப்பொழுது, “இந்த உருப்படிகளைத் தொலைத்து விட்டுக்கூட வந்திருக்கலாமே, இந்த மாதிரி சித்திரவதை செய்வதற்கு?” என்று தோன்றும்.
காலர், கை முதலியவைகளெல்லாம், சட்டையிலிருந்து விடைபெற்றுக்கொள்ளும் பரிதாபகரமான காட்சியைக் காண நேர்ந்தால், யாருக்குத்தாம் வயிற்றெரிச்சல் வராது? இந்த மாதிரிச் சட்டைகளையெல்லாம் கோட்டுப் போடும்போதுதான் உபயோகப்படுத்தலாமேயன்றி, வேறு சாதாரணமாக உபயோகப்படுத்த முடிகிறதா?
என்ன செய்வது? இப்படியெல்லாம் அவன் செய்தாலும், அவனுடைய தொடர்பை அறுத்துவிட முடிகிறதா? அதுதானே முடியவில்லை. காரணம் வேறொருவன் வந்தால் அவன் உருப்படிகளை, எண்ணிக்கையாவது குறையாமல் கொண்டுவருவானோ என்னவோ? அப்படியே கொண்டு வருவதாயிருந்தாலும், இனிமேல் அவன் விலாசம் போட வேண்டாமா!
அன்பின் பெருக்கு
* * *
‘இனிது, இனிது, ஏகாந்தம் இனிது’ என்பார்கள். ஆனால், என்னை வந்து ஒரு பத்திரிகை நிருபர் பேட்டி கண்டு, இது விஷயமாக அபிப்பிராயம் கேட்டால், நான் இதை முழுமனதுடன் மறுப்பேன் !
பாருங்களேன். சினிமா, பீச், கடைவீதி எந்த இடத்துக்குச் செல்லவேண்டுமானாலும் துணைவேண்டியதிருக்கிறது. அடுத்த வீடு, எதிர் வீடு செல்வதாய் இருந்தாற்கூடத் துணையில்லாமல் முடியவில்லை. இப்படியிருக்கும்போது, எப்படியையா, ‘இனிது, இனிது, ஏகாந்தம் இனிது,’ என்று நான் சொல்லமுடியும்? அப்படியே நான் ஏற்றுக்கொண்டாலும் அது, ‘சிந்தையில் கள் விரும்பிச் சிவ, சிவா’ என்பது போலல்லவா ஆகிவிடும்? ஏகாந்தம் என்பதெல்லாம் மூக்கைப் பிடிக்கும் முனிபுங்கவர்களுக்கே ஏற்றது.
ஒருநாள் சாயங்காலம், கற்பக விநாயகர் கோயிலில் சுந்தர சாஸ்திரிகள் ராமாயணம் படிப்பதாக யாரோ கூறியது ஞாபகத்திற்கு வந்தது. செல்வது என்று தீர்மானித்தேன். ஆனால் துணை வேண்டுமே? அடுத்த வீட்டு நாராயணனிடம் சொல்லி, அழைத்துச் செல்லலாமென்று புறப்பட்டேன். ஆனால் நாராயணனோ, எனக்கு நேர் விரோதம். ராமாயண விஷயத்தில்தான். புராணங்கள் என்றால் அவனுக்குக் கட்டோடு பிடிக்காது.
“என்னடா பாட்டிகளோடு போட்டி போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டாயே, ராமாயணம் கேட்கிறதற்கு?” என்று கேலி செய்தான்.
“அப்படியல்லடா, சுந்தர சாஸ்திரிகள் ராமாயணம் சொல்லி நீ கேட்டதே யில்லை, வந்து பாரேன், எவ்வளவு நன்றாயிருக்கிறதென்று. ஒரு தடவை அவர் கதைப் பிரசங்கத்தைக் கேட்டுவிட்டால் அப்புறம் நீ அவரை விடவே மாட்டாய்” என்றேன்.
“சரியப்பா, நல்லதாய்ப் போய்விட்டது. அவர் கதைப் பிரசங்கத்தைக் கேட்டால், அப்புறம் அவரை நான் விடமாட்டேன் என்கிறாயே! அப்படியே அவரை நான் விடாது பின்தொடர ஆரம்பித்துவிட்டால் அப்புறம் உனக்குத் திரும்பிவரத் துணை இருக்காதே! வேண்டாமப்பா வேண்டாம், இந்தத் தொந்தரவு” என்றான் நாராயணன.
ஒரு வழியாக, நான் அவனைச் சமாதானப்படுத்தி எனக்காகவாவது வரும்படி அழைத்துச் சென்றேன். கோயிலை அடைந்ததும் இருவரும் ஓர் ஒரமாக உட்கார்ந்தோம்.
சாஸ்திரிகள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும், நாராயணன் விபரீத வியாக்யானம் செய்துகொண்டே வந்தான். பக்கத்தில் சுவாரஸ்யமாக ராமாயணம் கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் `உஸ், உஸ்' என்று, எங்கள் பேச்சை நிறுத்தப் பெரும் பிரயத்தனம் செய்து பார்த்தார். நாராயணன் விட்டபாடில்லை. குற்றாலம் நீர்வீழ்ச்சி போலச் ‘சள, சள’ என்று பேசிக் கொட்டிக்கொண்டிருந் தான்.
அன்று, ராமர் காட்டுக்குப் போகும் கட்டம். காட்டிற்கு ராமர் வந்துவிட்டார். பரதன் அவரைத் திரும்ப அழைக்கிறான். ராமர் வரமாட்டேன் என்கிறார், பரதன் எவ்வளவோ மன்றாடியும் பயனில்லாததால், சரி அண்ணா, தங்களின் பாதுகைகளையாவது என்னிடம் கொடுங்கள். நான் அவைகளை வைத்துப் பூஜை செய்கிறேன்” என்கிறான். - அந்த இடம் மிகவும் சுவையாக இருந்தது. நாராயணன், என்னிடம், “பாரடா ராமாயண தர்மத்தை! இதனால்தான், புராணக் கதைகளை நான் நம்புகிறதேயில்லை. தாயார் இராமனைக் காட்டுக்கு விரட்டிவிட்டாள். மகனோ (பரதன்) காட்டில் கிடக்கும் முள்ளெல்லாம் காலில் ஏறட்டும் என்று பாதுகைகளையும் பறித்துக் கொண்டுவிட்டான். நன்றாயிருக்கிறது” என்று ஆரம்பித்துவிட்டான்.
நான் அவனிடம், “அப்படி யல்லடா. இதுதான் அன்பின் பெருக்கு, காலில் அணிகின்ற செருப்பைக் கூடத் தலைமேல் வைத்துப் பூசிக்கிற தென்றால், எவ்வளவு அன்பும் பக்தியும் கலந்திருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டுக் கேலி செய்கிறாயே!” என்று சமாதானப்படுத்த முயன்றேன்.
ஆனால், அவன் ஒத்துக்கொள்ளவில்லை. பேச்சு வளர ஆரம்பித்தது. அதற்குள் பக்கத்திலிருந்தவர், “எதுக்காக இப்படிச் சப்தம் போடுகிறீர்கள்? ராமாயணம் கேட்க வந்தீர்களா, பொம்மனாட்டிகள் போலச் சளசள என்று பேசிக்கொண்டிருக்க வந்தீர்களா ? ராமாயணம் கேட்பதாய் இருந்தால் கேளுங்கள். இல்லாவிட்டால்......” என்று இழுத்தார்.
“இதேதடா, கட்டுச் சோற்றில் வெருகு வைத்துக் கட்டிய கதையாய்ப் போய்விட்டதே!” என்று மரியாதையாய் நாரயணைனை அழைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டேன்.
கொஞ்சதூரம் சென்றோம். அப்பொழுதுதான், கோயில் வாசலில் எனது செருப்பை விட்டுவிட்டு வந்தது, ஞாபகத்திற்கு வந்தது. இருவரும் திரும்பினோம். ஆனால் கோயில் வாசலில் எனது மிதியடியைக் காணவில்லை !
நாராயணனைப் பார்த்து, “ எங்கேயடா போயிருக்கும் என் செருப்பு ?” என்று கேட்டேன்.
“எங்கே போயிருக்கும்? உன் மேலுள்ள அன்பின் பெருக்கால், யாராவது ஒரு பரதன் அடித்துக்கொண்டு போயிருப்பான்!” என்று சாவதானமாகக் கூறினான்.
மேதாவிகள் பித்து
* * *
பல மேதாவிகளின் வாழ்க்கையிலே, சில விநோதங்கள் காணப்படுகின்றன. அவர்கள் விசித்திரமான இரட்டை வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய மேதையைக் காட்டும் செயல்கள் மட்டில் அவர்களிடம் வெளிப்பட்டிராவிட்டால், அவர்களின் சில விசித்திர நடவடிக்கைகளைக் கண்டு, அவர்களை ஜனங்கள் அநேகமாய்ப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குத்தான் அனுப்பியிருப்பார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
டாக்டர் ஜான்சன் என்னும் ஆங்கிலப் பண்டிதரைப் பற்றி நண்பர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். ஆரம்ப காலத்தில் பிரசித்தமான ஆங்கில அகராதி ஒன்றைத் தயாரித்தவர். விகடமாய்ப் பேசுவதிலும், எழுதுவதிலும் திறமை மிகுந்தவர்.
அவர் வீதியில் செல்லும்பொழுது, ஒவ்வொரு லாந்தர்க் கம்பத்தையும் தொட்டுக்கொண்டே செல்லுவது வழக்கம். ஏதேனும் ஒரு கம்பத்தைத் தொடுவதற்கு விட்டுப்போனால், ஏதோ சாமானை மறந்து வைத்துவிட்டு வந்தவர் போல், அந்த வீதியின் துவக்கக் கோடிக்குத் திரும்பி ஓடுவார். மறுமுறையும், ஒவ்வொன்றாய் வழியிலுள்ள கம்பம் முழுவதையும் விடாது தொட்டுக் கொண்டே வருவார். லாந்தர்க் கம்பங்கள் இல்லாத வீதியில் செல்ல அவருக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்காது. அப்படிப்பட்ட வீதியில் செல்ல நேர்ந்தால் தாம் செத் துப் போய்விடுவோம் என்றுகூட அவருக்கு ஒரு பயம் உண்டு. லாந்தர்க் கம்பங்களையெல்லாம் தொட்டுவிட்டு வருவதால்தான் தாம் நலமாய் வாழ்வதாக அவர் நம்பினார்.
ஆங்கிலக் கவி ஷெல்லியின் பாக்கள் அற்புத மானவை என்று உலகமெங்கும் மெச்சப்படுகின்றன. பிற நாட்டு மக்களையெல்லாம் சீர்திருத்த வேண்டுமென்று அவருக்கு ஓர் ஆசையுண்டு. ஏதாவது ஒரு நாட்டு மக்களுக்குத் தாம் சொல்ல விரும்பும் புத்திமதிகளை ஷெல்லி சில காகிதங்களில் எழுதுவார். அவைகளைக் கண்ணாடிப் புட்டிக்குள் அடைப்பார். புட்டிக்கு மேலே, அந்த நாட் டின் பெயரை விலாசமாக எழுதுவார்; தபாலில் போடுவதற்காக அன்று ; கடலில் எறிவதற்காகத்தான் ! “கடலில் எறிந்தால், அது மிதந்துகொண்டே போய் யாருக்கு எழுதப்பட்டதோ அந்த நாட்டினர் கைக்குக் கிடைத்து விடும்” என்பது அவரது பூரண நம்பிக்கை !
முற்பிறவி ஒன்று உண்டு என்பதையும் அவர் மிகவும் நம்பியிருந்தார். ஒரு சமயம், ஒரு குழந்தையை அதன் தாயிடமிருந்து முரட்டுத்தனமாகப் பறித்து, தம் கையிலே வைத்துக்கொண்டு, “நீ எந்த உலகத்திலிருந்து வந்தாய் ? சொல், நிஜமாகச் சொல்” என்று கேள்வி கேட்க ஆரம்பிக்கவிட்டார். குழந்தைக்கு என்ன தெரியும்? பாவம்! அது கதறி அழ ஆரம்பித்துவிட்டது. “இது ஏதடா பெரிய சனியனாயிருக்கிறது! பதிலே சொல்லமாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே !” என்று முணுமுணுத்துவிட்டு அகன்றார். சிறு குழந்தைகளைப் போலக் காகிதக் கப்பல் செய்து தண்ணீரில் மிதக்க விட்டுப் பார்ப்பதிலே அவருக்கு ஒரு மகிழ்ச்சி. பையில் எந்தக் காகிதம் இருந்தாலும் சரிதான், அது என்ன காகிதம் என்று பார்க்காமலே கப்பல் செய்துவிடுவார். ஒரு சமயம் பத்துப் பவுன் கரன்ஸி நோட்டு ஒன்றையே காகிதக் கப்பலாய்ப் பண்ணிவிட்டாராம்!
அலெக்ஸாண்டர் டுமாஸ் என்ற பிரபல பிரெஞ்சு நாவலாசிரியர் ஓர் விசித்திரப் பழக்கம் கொண்டவர். நாவல்களை நீலக் காகிதங்களிலும், பாட்டுக்களை மஞ்சள் காகிதங்களிலும், கட்டுரைகளைச் சிவப்புக் காகிதங்களிலும்தாம் அவர் எழுதுவார். ஒன்றை மற்றொரு காகிதத்தில் எழுத ஆரம்பித்தால் சுகமாய் வராது என்று அவர் திடமாக நம்பினார்.
‘தீமையின் மலர்கள்’ (Flowers of Evil) என்ற அருமையான நூலை எழுதியுள்ள சார்ல்ஸ் பாடிலேர் என்பவர், தம்மை அனைவரும் கவனிக்கவேண்டும் என்ற ஆசை கொண்டவர். அதற்காக, அவர் தம் தலைமயிருக்குப் பச்சை வர்ணம் பூசிக்கொள்வார். அந்த அழகோடு, ஹோட்டலுக்குச் செ ல் வார் . அங்கே சாப்பிடும் பொழுது, “என்னுடைய தகப்பனை நான் இரவில் கொன்றேன், நீ குழந்தைகளைத் தின்றிருக்கிறாயா ? அவை என்ன ருசி தெரியுமா?” என்றெல்லாம் கூச்சலிடுவார். அக்கம் பக்கத்திலுள்ள எல்லோரும் இந்தச் சத்தத்தைக் கேட்டு, இவன் யாரடா ! என்று திரும்பிப் பார்த்து, இவரது அழகைக் கூர்ந்து கவனிப்பார்கள். அப்பொழுது அவர் பூரிப்புற்று, முதல் தரமான ஸெண்டுகளை யெல்லாம் உடைத்து, தம்மேலே விட்டுக்கொண்டு ‘கம கம’ வென்று வாசனை வீசும்படி செய்வார்.
இவரைப் போலவே பால்ஸாக் என்ற பிரபல ஆசிரியரும், பிறர் தம்மைக் கண்டு மகிழ்ச்சி யடையவேண்டும். என்பதற்காகச் சிவப்பு, கறுப்பு, பச்சை, மஞ்சள் முதலிய பலவித வர்ணங்களும் கலந்த உடைகளை அணிந்து கொள்வார். அவர் எழுத ஆரம்பிக்கும்போது, பாதிரிகள் போட்டுக்கொள்வது போல, வெள்ளை ஆடை அணிந்து கொள்வார். தலையில் கறுப்புக் குல்லாய் தரித்துக்கொள்வார். பரீட்சைக் காலங்களில் டீ, பொடி முதலிய சாதனங்களின் உதவியால் இரவு பூராவும் கண்விழித்துப் படிக்கும் சில பள்ளி மாணவர்களைப்போல, பானை நிறையக் காப்பியும், பத்துப் பன்னிரண்டு மெழுகு வர்த்திகளும் வைத்துக்கொண்டு இரவு முழுவதும் எழுதுவார்.
போலந்தின் மாஜி பிரதம மந்திரிகளில் ஒருவரும், பியானோ வாசிப்பதில் மகா கியாதி வாய்ந்தவருமான பாடே ரெவ்ஸ்கீ என்பவர், பியானோ வாசிக்க உட்காரு கையில் ஐந்து நிமிஷ நேரம் வரையில், தமது ஆசனத்தை ரொம்ப ஒழுங்கெல்லாம் பார்த்துத்தான் போட்டுக் கொள்வார். பிறகு, தமது சிறிய பீடத்துக்கு அருகே அந்தப் பெரிய பியானோவை இழுத்துப் போடச் சொல்வாரே யொழிய, தமது பீடத்தைச் சிறிதுகூட நகர்த்த மாட்டார்.
புலவர்கள்தாம் இவ்வாறென்ருல் அரசர்கள், பிரபுக்களின் வாழ்க்கையிலும் இம்மாதிரியான சில விநோதங்கள் இல்லாமலில்லை. ஒளரங்கசீப்பிற்குச் சங்கீதத்தைக் கேட்கப் பிடிக்காதது போலவே, இங்கிலாந்தை அரசாண்ட இரண்டாவது ஹென்றிக்கும், பூனைகளைக் கண்டால் பிடிக்கவே பிடிக்காது. பிடிக்காததோடல்ல, ஒரு பூனையைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் மூர்ச்சையடைந்து விழுந்துவிடுவார். இவ்வாறு பல தடவை அவர் மூர்ச்சை போட்டிருக்கிறார்.
பிரடரிக் என்னும் கீர்த்திபெற்ற மன்னர், இதற்கு நேர் விரோதமானவர். அவருக்குப் பூனையைக் கண் டால் மிகப் பிரியம். ஆனால், வெப்பம் சிறிதும் பிடிக்காது. இரவு நேரங்களில், கொஞ்சம் வெப்பமாகத் தோன்றினாலும் சரி, உடனே தமது வேலையாட்களை அழைத்து, தண்ணீர் கொண்டுவந்து, தமது தலையில் கொட்டும்படி கட்டளையிடுவார். இவ்வாறு செய்யாவிடில் அவருக்குத் தூக்கமே வராது.
நியூயார்க்கைச் சேர்ந்த வென்டல் என்பவர் ஒரு கோடீசுவரர். அவருக்குக் கறுப்பு உடைகள் போட்டுக் கொள்வதில்தான் பிரியம் அதிகம். அதுவும் ஸ்காட்லாந்து தேசத்திலுள்ள கறுப்பு ஆடுகளின் தோலால் செய்த உடைகளாகத்தாம் இருக்கவேண்டும். கோடை காலங்களில் தமது குல்லாய்களுக்கு ‘எனாமல்’ பூசிவிடுவார். அழைப்புக்கள் எல்லாவற்றையும் அவர் லத்தீன் பாஷையில்தான் எழுவது வழக்கம். நமது சமஸ்கிருதம் போல் வழக்கொழிந்தது லத்தீன் பாஷை என்றாலும் , அதைவிட்டு வேறு எந்தப் பாஷையிலும், எந்தக் காரணத்தைக் கொண்டும் அழைப்புக்களை அவர் எழுதவே மாட்டார். அவருடைய மிதியடியின் கீழே, ஓர் அங்குல கனமுள்ள தோல்வைத்துத் தைத்திருக்கும். உயர மாகத் தோன்றுவதற்காக அன்று. எல்லா வியாதிகளுமே கால்வழியாகத்தான், உ ட ம் பி ற்கு ள் நுழைகின்றன என்பது அவருடைய சித்தாந்தம். ஆகையால், அதைத் தடுக்கவே இந்த முன் ஜாக்கிரதையான ஓர் அங்குலத் தோல்.
இதை யெல்லாம் பார்க்கும்போது, எப்படி நோய் பிடித்த சிப்பியிலேயே நல்ல முத்துப் பிறக்கிறதோ அதேபோல, ஏதோ ஒரு மன நோயின் வேரினின்றே, மனித மேதையும் கிளைத்துத் தளிர்த்துப் பூக்கிறது என்று ஸ்டுவர்ட் ராபர்ட்ஸன் என்ற ஆங்கில எழுத்தாளர் வியப்பதில் உண்மை யிருக்குமென்றே தோன்றுகிறது
மேடைப் பேச்சு
* * *
மேடைமீது ஏறிப் பிரசங்க மாரி பொழிபவர்களைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு ஒர் ஆசை ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அவர்கள் மேலல்ல.! அவர்கள் மாதிரி நானும் மேடைமீது ஏறிப் பேச வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அந்த ஆசை ஏற்பட்டதோடு நின்றதா ? வளரவும் ஆரம்பித்து விட்டது! எவ்வளவோ அடக்கி அடக்கித்தான் பார்த்தேன். ஆனால் அந்த ஆசையை அடக்கவே முடியவில்லை. `ஸ்பிரிங்கை எவ்வளவுக் கெவ்வளவு கீழ் நோக்கி அழுத்துகிறோமோ, அவ்வளவுக் கவ்வளவு தானே மேலே தூக்கி அடிக்க ஆரம்பிக்கிறது ? அது போலவே பீரிக்கொண்டு வந்துவிடும்போல ஆகி விட்டது. இதற்கு ஒரு சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.
நல்லவேளையில், எங்கள் சங்கத்தின் ஆண்டு விழா வந்தது. அந்தச் சங்கத்தில் எனக்குக் காரியதரிசி உத்தியோகம். (கெளரவ உத்தியோகந்தான். சம்பளமில்லை.) ஆண்டு விழாவில் பெரிய பெரிய பிரசங்கிக ளெல்லாம் வந்து பேசும்படி ஏற்பாடு செய்தோம். அழைப்புக்கள் அச்சடிக்கப்பட்டன. ‘நிகழ்ச்சி முறை’யில் அந்தப் பிரசங்கிகள் பெயரோடு, என் பெயரையும் சேர்த்து அச்சடித்துவிட்டேன்!
ஆனால் இந்த நிகழ்ச்சி முறை, ஒரு கிளர்ச்சியை உண்டுபண்ணிவிட்டது. சங்கத்தின் தலைவர், உபதலைவர், பொக்கிஷதார் எல்லோரும் சேர்ந்து எனது செய்கையைக் கண்டிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் பெரியவர்களுடைய பக்கத்திலே, மேடைமீது ஏறிப் பேசியே அறியாத என் பெயரை அச்சடித்ததோடு அல்லாமல், மற்ற உத்தியோகஸ்தர்களின் அனுமதியையும் நான் பெறவில்லை என்பதுதான் அவர்களுடைய கோபத்துக்குக் காரணம்.
தலைவர், நிகழ்ச்சி முறையிலிருந்து என் பெயரை அடித்துவிடவேண்டும் என்றாராம். உபதலைவர், 'அப்படி அடித்தால் நன்றாக இராது. அழைப்புக் கெட்டுவிடும். வேறு அச்சடித்தால்தான் தேவலை' என்றாராம். பொக்கிஷதாரோ, வேறு அழைப்பு அச்சடிப்பது கூடாது; பொருளாதார நிலைமை சரியில்லை' என்றாராம். கடைசி யில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். தலைவரிடம் கொடுக்கும் நிகழ்ச்சி முறையில்மட்டும், எனது பெயரை மையால் அடித்துவிடுவது என்பதுதான் அவர்களின் முடிவு.
இது, எனக்கு மிகுந்த வருத்தத்தையும் ஆத்திரத்தையும், கோபத்தையும், ஏமாற்றத்தையும் ஒன்றாக உண்டாக்கிவிட்டது. அடுத்த வருஷம் காரியதரிசியாக இருக்கிறோமோ இல்லையோ, இந்த வருஷமே பேசி ஆசை யைத் தீர்த்துக்கொண்டு விடலாம் என்றல்லவா எண்ணி யிருந்தேன். இப்படிக் கெடுத்துவிட்டார்களே, என்ன செய்வது ?
ஆனாலும், ஆண்டு விழாவில் இதற்காகவா அழுது கொண்டேயிருப்பது? காரியதரிசியின் வேலையைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.
சிலர் பேசி முடித்தார்கள். கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர், திடீரென்று, என் பெயரைச் சொல்லி என்னைப் பேசும்படி பணித்தார்.
இதைக் கேட்டதும், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என் பெயரைத்தான் அடித்துவிடடதாகச் சொன்னார்களே! அப்புறம் எப்படி என்னைத் தலைவர் கூப்பிட்டார்?
ஆனாலும், இதைப் பற்றி அப்பொழுது யோசிப்பதில் பயனில்லை என்று தலைவர் கட்டளைப்படி பேச மேடைக்கு வந்துவிட்டேன். உடனே சங்கத் தலைவரும், கூட்டத் தலைவரின் பக்கத்தில் வந்து, “அடடா, இவர், பேச சந்தர்ப்பம் இல்லை என்றார். இவர் பெயரை அடிப்பதற்குப் பதில், மேலே உள்ளவரின் பெயரையல்லவா அடித்துவிட்டோம், அவசரத்தில்!” என்று சொன்னது காதில் விழுந்தது.
ஆனாலும், கூட்டத் தலைவர், “பரவாயில்லை. இவரே தாம் மேடைக்கு வந்துவிட்டாரே” என்று அவர் காதுக்குள் பதில் சொல்லிவிட்டார்.
நான் மேடைமீது ஏறியதும், சந்தர்ப்பம் கிடைத்ததை நினைத்துச் சந்தோஷப்பட்டேன் என்றா நினைக்கிறீர்கள்? அதுதானில்லை. சந்தோஷம் வரவேமாட்டேன் என்று மறுத்துவிட்டது. கைகள், கால்கள் எல்லாம், கையும் களவுமாக அகப்பட்ட திருடனுடை யவை போல ‘கிடு, கிடு’ என்று ஆட ஆரம்பித்துவிட்டன; மேலெல்லாம் வியர்த்துவிட்டது. இவ்வளவு சிரமப்பட்டும், வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வெளியே வர வில்லை. சோடாப் புட்டியில் குண்டு அடைத்துக்கொள் வதுபோல, தொண்டையை ஏதோ அடைத்துவிட்டது. தொண்டையைக் கனைத்துக் கனைத்துப் பார்த்தேன். கடைசியாக, கண்மூடி போட்ட குதிரையைப் போல நேரே பார்த்துக்கொண்டே நாலைந்து வார்த்தைகளைச் சிரமப்பட்டு, வெளியே கொண்டுவந்தேன். அவைகளிலும் சில பாதியோடு நின்றுவிட்டன; சில திருப்பித் திருப்பி வந்துவிட்டன.
ஒரு வழியாக எனது சிற்றுரையை முடித்துக் கொண்டேன். கீழே வந்து உட்கார்ந்துங்கூட விடாமல் சுமார் ஒரு மணி நேரம் வரை என் கை கால் ஆட்டம் நின்றபாடில்லை.
இந்த மாதிரி, நாலுபேருக்கு நடுவில் என்னை மேடைமீது நிற்கவைத்து அவமானம் செய்த தலைவர் மீது, எனக்குக் கோபம் வராமல் இருக்க முடியுமா? நிகழ்ச்சியில் முன் இருந்தபடியே இருந்திருந்தாலாவது தமிழ்ப் பண்டிதரிடம் ஏற்கெனவே எழுதி வாங்கி வைத்திருந்த விஷயத்தை, மனப்பாடம் செய்து தைரியமாக, கைகால் அசையாது, ஒப்பித்திருக்கமாட்டேனா? இப் படித் திடீரென்று பேசச் சொன்னால் எப்படிப் பேசுவது? இதுதான் என்னுடைய பேச்சு மட்டமாகப் போனதற்கு முதல் காரணம்; முக்கிய காரணமும் அது தான். இல்லாவிட்டால் அந்தத் தமிழ்ப் பண்டிதருடைய நடையும், கருத்தும் எப்படி இருக்கும் தெரியுமா!
இதிலிருந்து நான் எங்களூரில் பேசுவதே இல்லை. காரணம், என்னை யாரும் பேசுவதற்கு அழைக்கவில்லை என்பதுதான்.
இந்தச் சம்பவத்தால் நான் மனம் உடைந்துவிட்டேன் என்று நினைத்துவிடாதீர்கள். எல்லோரும் எடுத்த வுடனேயே ஜவாஹர்லாலைப்[ போல நன்றாகப் பேசிவிட முடியுமா? அப்படியே பேசிவிட்டாலும்தான் ஸர். சாப்ரு போன்ற ஒருவர் வந்து, நம்முடைய பேச்சைப் போற்றித் தட்டிக் கொடுத்து, முத்தமும் கொடுப்பார் என்று எதிர் பார்க்க முடியுமா?
சர்ச்சில் துரை, பார்லிமெண்டில் அங்கத்தினரான புதிது. அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தாராம். சர்ச்சிலின் அறை சாத்தப்பட்டிருந்தது. சர்ச்சில் வீட்டில் இல்லை என்று நினைத்து, நண்பர் திரும்பிப் போக ஆரம்பித்தார். அப்பொழுது சர்ச்சிலினுடைய அறையிலிருந்து ஒரு குரல் கிளம்பியது! அந்தக் குரல் இந்த நண்பரைக் கூப்பிடவில்லை. பின்னர் என்ன செய்தது தெரியுமா?
“நான், இந்தப் பார்லிமெண்டுக்குள் நுழையும் போது உங்கள் முன் பேசப்போகின்றேன் என்று நினைக்கவேயில்லை, ஆனால் ......” என்றுதான் ‘நெட்டுரு’ச் செய்துகொண்டிருந்ததாம்!
“சந்தேகமில்லை, இது சர்ச்சிலின் குரல்தான்” என்று நண்பர் கண்டுகொண்டாராம். அது ஒரு காலம். ஆனல், பிற்காலத்தில், பேச்சிலே பெரிய சூரர் எனப் பெயரெடுத்துவிட்டார்.
இந்த மாதிரி, பெரிய பேச்சாளர்களில் எத்தனை பேர் ஆரம்ப காலத்தில் இருந்திருப்பார்கள்! சிலர், கண்ணாடி முன்பாக நின்றுகொண்டு பேசிப் பழகி இருக்கலாம். சிலர் தாமே எழுதிப் படித்துவிட்டு, கூட்டத்தில் ஒப்பித்திருக்கலாம். இன்னும் சிலர், என்னைப்போல யாரிடமாவது எழுதி வாங்கி, மனப்பாடம் செய்திருக்கலாம். அல்லது, அந்தக் காலத்துப் பத்திரிகைகளில் வந்த, தலைவர்களின் பேச்சுக்களைப் படித்துவிட்டு, பேசும்போது அவைகளை வலிந்து புகுத்தியாவது தமது பிரசங்கத்தைப் பெருமைப்படுத்தியிருக்கலாம்.
சிலர், சாதாரணக் கூட்டத்தில், சண்டமாருதமாகப் பேசுவார்கள். ஆனல் பெரிய கூட்டத்தைக் கண்டால், பேசவரவே வராது. வேறு சிலர், சாதாரணத் தலைவராக இருந்தால் வெகு ஜோராக வெளுத்து வாங்குவார்கள். மிகப் பெரிய மனிதர் தலைவராக இருந்துவிட்டால், நாக்கு எழவே எழாது.
‘பேச்சுப் பேச்சென்னும், பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக் கீச்சென்னும் கிளி’
என்பார்களே, அது போலத்தான்!
ஊரில், கொஞ்சம் பெரிய மனிதராக இருப்பார் ஒருவர். அந்த ஊரிலே, `பாரதி விழா' கொண்டாடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவரைப் பேசும்படி கேட்டுக்கொண் டிருக்கமாட்டார்கள். இருந்தாலும், அவர் பாரதியாரைப் பற்றி, ஏதேதோ எழுதிச் சேர்த்துப் பாடம் செய்துகொண்டு கூட்டத்திலும் ஆஜராகிவிடுவார்.
“பெரிய மனிதர் வந்துவிட்டாரே, பேசச் சொல்லாமல் என்ன செய்வது?” என்று அவரைப் பேசும்படியாகத் தலைவர் கேட்டுக்கொள்வார். அவரும் எழுந்திருந்து, கூட்டத்தாரைப் பார்த்து, “நானும், உங்களைப் போலப் பிரசங்கம் கேட்டுவிட்டுப் போகத்தான் வந்தேன். ஆனால் தலைவரவர்கள் என்னைப் பேசும்படி கட்டளையிட்டுவிட்டார்கள்” என்று சொல்லிவிட்டு ஏற்கெனவே படித்து வைத்திருந்த `தயார்ப் பாடத்'தை நாசுக்காக ஒப்பிக்க ஆரம்பித்துவிடுவார்.
சிலர், பேசுவது கூட்டத்தாருக்குப் பிடிக்காது. இந்த அதிருப்தியை, அவர்கள் எழுந்துபோவதிலும் சத்தம் போடுவதிலும் காண்பிப்பார்கள். பிரசங்கியார், இதைப் புரிந்துகொள்ளாது, மேலும் பேச ஆரம்பித்து விடுவார். சிலர் உடனே கைதட்டுவார்கள். நல்லது, கெட்டது இரண்டுக்குமே கைதட்டுவதால், பிரசங்கியார், தம்மை உற்சாகப்படுத்துகிறார்களாக்கும் என்று நினைத்து, மேலும் விஸ்தாரமாகப் பேசிக்கொண்டேயிருப்பார். கடைசியில் ‘உஸ், உஸ்’ என்று கூட்டத்தில் சப்தம் எழுந்தவுடனேதான், பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்.
இந்தமாதிரி, இன்னும் எவ்வளவோ கஷ்டங்கள். இவைகளெல்லாம் சகஜந்தான். இதற்காகப் பயந்து என்னைப் போன்றவர்கள் பேசாமலேயே இருந்துவிட முடியுமா? பேசிப் பேசிப் பழகினால், தானாகவே பேச வந்துவிடுகிறது. ஏன், ஒரு காலத்தில் நான் பெரிய பிரசங்கியாகக்கூடாதா என்ன?
முதல்தடவை, கோர்ட்டில் ஆஜராகும்போது திணறிப்போன மகாத்மா காந்திதானே, பிற்காலத்தில் உலகக் கோர்ட்டில், இந்தியா தரப்பில் ஆஜராகி வாதாடி வெற்றியும் பெற்றார்!
கரிக்கார்
* * *
கரியால் வாழ்ந்து, ஜனங்களை ஏற்றிக்கொண்டு, நான்கு சக்கரங்களுடன் செல்லும் ஓர் உருவம் கரிக்கார் என்பது உலகறிந்த விஷயம். இந்தக் கார்கள் அதிக மாக உற்பத்தியானதற்குக் காரணம் ஹிட்லர்தான் என்றால் பொய்யாகாது.
“என்ன ஐயா, ஹிட்லர் கரிக்கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை வைத்து, அதில் இவைகளை உற்பத்தி செய்தாரா?” என்று யாரும் என்னிடம் கேட்கமாட்டார்கள் என்பது நிச்சயம். ஏனென்றால், கரிக் கார்கள் எதனால் பெருகின? யுத்தம் வந்ததனால். யுத்தம் எதனால் வந்தது? ஹிட்லரால்தானே? இதன் விளைவால் அழகிய கார்களும் கூட, பின்னல் கரி எரியும் குழாயுடனும், தலையில் கரி மூட்டைகளுடனும் காட்சி அளிக்க ஆரம்பித்தன.
கார்கள் நமது நாட்டிற்கு வந்த புதிதில் அவற்றை ஒட்டும் டிரைவர்களுக்கு அதிக மரியாதை இருந்ததாம். கமர்ஷியல் டாக்ஸ் ஆபீஸருக்குக்கூட யுத்தகாலத்தில் கடைக்காரர்கள் அவ்வளவு மதிப்புக் கொடுக்கமாட்டார்களாம். பல வீடுகளில், கார்களுக்குச் சொந்தக்காரர்கள் கூடப் பின்புதான் சாப்பிடுவார்களாம். ஆனால் டிரைவர்களுக்குத்தான் முதல் பந்தியாம்! பழைய காற்றைத் திறந்துவிட்டுப் புதுக் காற்று அடைக்கவேண்டும் என்று கூறி, முதலாளிகளிடம், சில டிரைவர்கள் பணம் பெற்றதாகக்கூடக் கேள்வி !
ஆனால், கரிக்காரால், அந்த டிரைவர்களும், கண்டக்டர்களும் படும்பாட்டைப் பார்த்தால், உண்மையிலேயே வருந்தாமல் இருக்க முடியவில்லை. அவர்கள், கரியைக் குழாயில் போடுவதையும், தீப்பற்ற வைப்பதையும், விளையாட்டுப் பொம்மைகளுக்குச் சாவி கொடுப்பது போல் பின்னால் இருக்கும் கைப்பிடியைச் சுற்றுவதையும் கண்டால், கண்ணிர் வருகிறது.
ஆனால், இந்தக் கார்கள் அவர்களுடைய பிராணனை வாங்குவதோடு நிற்கவில்லை. பிரயாணிகள் பிராணனையும் சேர்த்து வாங்குகின்றன.
பிரயாணம் செய்யும்போது, கணப்புச் சட்டிக்குப் பக்கத்தில் இருப்பதுபோல இருக்கிறது. மழைக்காலத்திலாவது பரவாயில்லை. ஆனால் வெய்யில் காலத்திலோ, உஷ்ணம் தாங்காது.
முன்பிருந்த பெட்ரோல் வண்டிகளில் சில புறப்படமாட்டா; புறப்பட்டால் நிற்கமாட்டா! ஆனால், இந்தக் கரிக்கார்களோ, நிற்க வேண்டிய இடங்களில் மட்டுமல்ல; எந்த இடத்திலும், எந்தச் சமயத்திலும் நின்று விடுகின்றன. “வேலை நிறுத்தம் செய்பவர்கள் முன்னதாகவே அறிவிக்கவேண்டும். இல்லையேல் பாதுகாப்புச் சட்டப்படி தண்டனைக்குள்ளாவார்கள்” என்ற சட்டத்தை இந்தக் கார்கள், பிரயாணிகள் பேசும்போதுகூடக் கேட்டதில்லை போலும் !
மேடுகளைக் கண்டால், மூச்சுத் திணற ஆரம்பித்து விடும். அப்பொழுதெல்லாம் பிரயாணிகளுக்கு அஸ்தியிலே ஜூரம்தான். எங்கேயாகிலும் இறங்கித் தள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிடுமோ என்ற பயம். வேகத்திலோ கேட்க வேண்டியதில்லை. எதிரே வரும் ஆட்கள், வண்டிகள் - ஏன்?--கார்களைக்கூட `ஸைடு' வாங்கிவிடுகின்றன என்றால் பாருங்களேன்! மண் குதிரையை நம்பி ஆற்றிலே போகிறவனையும் கரிக்காரை நம்பி அவசர வேலையாகப் போகிறவனையும் ஒரே ரகத்தில் சேர்க்கலாம்.
சென்னை மாநகரத்திலே, கரிக்காரால் கஷ்டப் பட்டவர் அநேகர். அநேகமாக, எல்லோரும் இந்தக் கரிக்கார் தள்ளும் வைபவத்திலே கலந்துகொண்டிருப்பார்கள். எல்லோருக்கும் இந்த அநுபவம் ஏற்பட்டிருப்பினும், எனது அநுபவத்தைக் கேட்க வேண்டாமா?
ஒரு நாள், கரிக்காரில் மைலாப்பூர் போவது என்று தீர்மானித்தேன். அங்கு ஒரு நண்பர் வீட்டில் விருந்து என்றால் அவசர வேலைதானே! ஆனால், வெகு நேரம் நான் நின்றும், காரில் இடம் கிடைக்கவில்லை. கூட்டம் அதிகம். அதில் முண்டியடித்து ஏற முடியவில்லை. சில பயில்வான்கள் மட்டும், எல்லோருக்கும் முன்னால் ஏறி விட்டனர். உடலில் பலம் இல்லாததால் அகிம்சையே நல்லது என்று சொல்லிக்கொள்ளும், என்னைப்போன்ற சில தீவிர அகிம்சா வசதிகள், இடம் கிடைக்காது தவித்து நின்றோம்.
இந்த அவசரத்தில் ஒருவர் காரில் ஏறுவதற்கு முன்னால், அவரது பூட்ஸ் காலை எனது கால்மேல் ஏற்றி விட்டார். வலி பொறுக்க முடியவில்லை. “சார் கால், கால்,” என்று கத்தினேன். உடனே அவர் காலை எடுத்துக் கொண்டு, “சாரி, சாரி (sorry)” என்றார். நானும், “பரவாயில்லை, பரவாயில்லை என்று சொல்லிக்கொண்டே, காலைத் தடவிக்கொண்டு, அந்தக் காரில் ஏறும் முயற் சியை விட்டுவிட்டு, கண்ணிர் கலங்கும் கண்களால், மறு காரை எதிர்பார்த்துக்கொண்டு நின்றேன்.
எத்தனையோ கார்கள் வந்தன; சென்றன. ஆளுல் நான்மட்டும், நின்ற இடத்திலேயே நின்றுகொண்டிருந்தேன். வெகுநேரத்துக்கு அப்புறம், ஒரு கார் வந்தது. பிரம்மப்பிரயத்தனப்பட்டு அதில் ஏறிவிட்டேன்! நிற்கத்தான் இடம் கிடைத்தது.
அந்தக் காரில் இருந்த கண்டக்டர், ஹாஸ்யமாகப் பேசும் சுபாவம் உடையவர் போலக் காணப்பட்டார். ஒவ் வொருவரிடமும், அவர் வேடிக்கையாகவே பேசிக் கொண்டு வந்தார்.
ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில் இறங்கு பவர், “ராயப்பேட்டை ஆஸ்பத்திரி” என்றும், போலீஸ் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இறங்குபவர், “போலீஸ் ஸ்டேஷன்” என்றும் கூறி டிக்கெட்டுக்குப் பணம் கொடுத்தனர். உடனே, அந்தக் கண்டக்டர், டிக்கெட் டைக் கொடுத்துவிட்டு, ஆஸ்பத்திரிக்கு என்றவரை, “ஏன் சார், யாராவது உடம்பு சரியில்லாது ஆஸ்பத்திரியில் இருக்கிறார்களா?” என்றும், போலீஸ் ஸ்டேஷனுக்கு என்றவரை, “என்ன சார், யார் மேலே கம்ப்ளயின்ட் கொடுக்கப் போறீங்க? இனிமேல் அதிகமாக ஏத்தலிங்க, மன்னிச்சுக்க மாட்டீங்களா?” என்றும் வேடிக்கையாகக் கேட்டார். “மைலாப்பூர் குளத்திற்கு” என்று சொல்லி, டிக்கெட் கேட்டார் வேறு ஒருவர். உடனே கண்டக்டர் ஏன் சார், குளத்திலேயா இறங்கிறீங்க?" என்று கேட்டார். யாவரும் சிரித்தோம்.
நானும் மைலாப்பூர் குளத்தின் அருகேயே இறங்க வேண்டி யிருந்தது. கார் போய்க் கடைசியாக நிற்கும் இடமும் குளமும் ஒன்றாக இருந்ததால், கண்டக்டரைப் பார்த்து, “அப்பா, இதுபோய், நிற்கும் இடத்துக்கு ஒரு டிக்கெட் கொடு' என்று, சாமார்த்தியமாகக் கூறிவிட்ட தாக நினைத்துப் பணத்தை நீட்டினேன். ஆனல் அந்தக் கண்டக்டரோ, சார், இது கரிக்காராக்கும். எந்த இடத்திலும், எந்தச் சமயத்திலும் நிற்கும்” என்று கூறி, ஆனால், சரியாகவே டிக்கெட்டைத் தந்தார்.
நின்றுகொண்டிருந்ததால், கால் வலிக்க ஆரம்பித்து விட்டது. சினிமாவில், கதாநாயகன் தூக்கு மேடையில் நிற்பது போல, இருபுறமும் இருக்கும் கைப்பிடி வாரைப் பிடித்தவாறே நின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. குறைந்த சார்ஜ் கொடுத்து, யார் டிக்கெட் வாங்கி இருக்கிறார்கள் என்று பார்த்து, அவர் பக்கம் போய் நின்று கொண்டேன். ஏனென்றால், அவர் சீக்கிரம் இறங்கிவிடுவார்; அந்த இடத்தை நான் கைப்பற்றிக்கொள்ளலா மல்லவா ?
சிறிது நேரத்திலேயே என் எண்ணம் பலித்தது. உட்கார்ந்துகொள்ளும் பாக்கியம் பெற்றேன். சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஆனால், அந்த மகிழ்ச்சிக்கு ஒர் எல்லே வந்துவிட்டது. அதுதான், அந்தக் கரிக்கார் நின்று கொண்ட இடம்; எனது சந்தோஷத்தைத் தாங்க முடியாதுதான் அது நின்றுவிட்டது என்று எண்ணுவதற்குப் போதிய ஆதாரம் இல்லை.
உடனே கண்டக்டர், “சார், கொஞ்சம் இறங்குங்க” என்றார். “தனனனன' என்று இழுப்பதுவே, பாடப் போவதற்கு அறிகுறிதானே. “சரி, இனித் தள்ளச்சொல்லத்தான் போகிறார்” என்று நினைத்தேன். அவரும் அப்படியே, “சார், எல்லோரும் கொஞ்சம் கை கொடுங்கோ” என்றார் சுற்றுமுற்றும் பார்த்தேன். இருட்டு நேரம்;
அத்துடன் யாரும் தெரிந்தவர்கள் இல்லை. எல்லோ ரோடும் சேர்ந்து பலமாகத் தள்ளினேன்.
கார் வெகு நேரத்துக்கு அப்பால்தான் புறப் பட்டது. சேரவேண்டிய இடத்தை அடைந்தேன். ஆனல் எல்லோரும் சாப்பிட்டுப் படுத்துத் தூங்கி, மூச்சுவிடும் சப்தம் கேட்டது. என்ன செய்வது ? அவர் களை எழுப்பி, வேறு இடத்தில் சாப்பிட்டுவிட்டதாகச் சமாதானம் கூறி, அவர்களுடன் தூக்கத்தில் கலந்து கொண்டேன். எல்லாம் கரிக்கார் செய்த வேலை யல்லவா ?
எடுத்ததற்கெல்லாம் கவிபாடும் காளமேகப்புலவர் மட்டும் இருந்திருந்தால், நிச்சயம் அவர் இந்தக் கரிக்கார் மேலே பாடாமல் இருக்கமாட்டார்.
"கார்என்று பேர்படைத்தாய்,
கரியாலே வாழ்கின்றாய்,
சேரிடம் அறிந்து சேர்க்காய்,
`சிக்கிரம்' உணர மாட்டாய்,
தார்ரோட்டில் நின்று கொண்டு,
தள்ளிட வழியும் வைத்தாய்.
பாரினில் யாரிடம் போய்ப்
பட்டஎன் அவஸ்தை சொல்வேன்!”
இதுமாதிரி அவர் பாடலாம். ஏன்? இதைவிட நன்றாககக் கூடப் பாடலாம். யுத்த காலத்தில் அவர் இருந்தால் இது ஒன்றைப் பற்றி மட்டுந்தான பாடுவார்? உலகில் நடக்கும் ஒவ்வொரு விபரீதத்தையும் பற்றி, ஒவ்வொரு பாட்டுப்பாடி எழுதிக் குவித்துத் தள்ளியிருக்க மாட்டாரா ?
ஆனால், ரேஷன் அரிசியைச் சாப்பிடுவதற்கும், மண்ணெண்ணெய்க் கடையில் புட்டியோடு நின்று இடிபடுவதற்கும், விறகுக் கடையில் விளக்கு வைக்கும் வரை காத்திருப்பதற்கும் கொடுத்துவைக்க வேண்டாமா?
வரியில்லா வருமானம்
* * *
‘இடது கைக்குத் தெரியாமல், வலது கையால் கொடுப்பது தர்மம்’ என்றார் இயேசுநாதர்.
ஆனால், இடது கைக்குத் தெரியாமல் வலது கையால் லஞ்சம் வாங்குவதில், இயேசுநாதரையும் மிஞ்சக் கூடியவர்கள் இன்று உலகத்தில் பெருகி வருகின்றனர்.
யுத்தத்தில், எல்லாவற்றிற்கும் பஞ்சம் வந்தது. ஆனால், லஞ்சம் வாங்குவது மட்டும், பஞ்சமில்லாது வளர்ந்து வருகிறது.
லஞ்சம் வாங்கும் சிலர், “நான் அவரிடம் வாங்கியதை, லஞ்சம் என்று எப்படிச் சொல்ல முடியும் ? நான் செய்த உதவிக்காக, அவர் எனக்கு அளித்த சன்மானம் இது” என்று கூறலாம். நேரான வழியில் காரியத்தைச் செய்து, பலபேர் அறியப் பெறுவது சன்மானம். அதற்கு மதிப்பு உண்டு. ஆனால், இரகசியமான வழியில், முறை தவறிக் காரியம் செய்து இரகசியமாகவே பணம் பெறுவதை, எப்படிச் சன்மானம் என்று சொல்ல முடியும்? “ஹோட்டல் மானேஜருக்கு நான் எட்டணாக் கொடுத்தேன். அவர் எனக்கு, இலவசமாகச் சாப்பாடு போட்டார்” என்பது போலத்தான் இது இருக்கிறது.
“உள்ளே அதிகாரியைப் பார்க்கவேண்டுமா? அப்படியானால் என் கையில் எட்டணாவை வை. சமயம் பார்த்து உள்ளே தள்ளி விடுகிறேன்' என்கிறான் டபேதார்.
அதிகாரியைப் பார்ப்பதற்குக்கூடப் பணம். சுவாமி தரிசனத்துக்குக் கூட, இரண்டணா நாலணாதான். ஆணால் அதிகாரியைப் பார்க்கவோ எட்டணா!
ஒரு பெரிய கம்பெனி. அங்கு இருக்கும் சாமான்களைச் சுலபமாகப் பெறுவது கடினம். ஆனல், சாமான்கள் வியாபாரம் ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன. நேரான வழியில் செல்பவர்களுக்கு அல்ல ; சுற்றுப் பாதையில் வருவோர்களுக்கே கிடைக்கின்றன.
அதன் மானேஜர் வீட்டின் முகப்பில், முன்பெல்லாம் பெரிய நாய் ஒன்று கட்டிக் கிடக்கும். கரடி போன்ற உருவம். நிறமும் அப்படியே. இப்பொழுது, அந்த நாயை அங்குக் காணோம்! காரணம், யுத்தத்துக்கு முன்னால், அவருக்குக் கடன் அதிகமாக இருந்ததாம். அதனால் கடன்காரர் தொந்தரவும் அதிகம். வீட்டுக்குள் யாராவது நுழைந்தால், நாய் குரைக்க ஆரம்பித்துவிடும். (சில சமயங்களில் கடித்துவிடுவதும் உண்டாம்!) ஆகையால் கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்குள் நுழைவதற்கே அஞ்சி, வந்த வழியே திரும்பிவிடுவார்களாம். ஆனால், யுத்தம் வந்த பிறகோ, அந்த நாய் அங்கே இருப்பது.தொந்தரவாய்ப்போய்விட்டதாம். ஏனென்றால், காகிதக் கூட்டுக்குள் ஐம்பது, நூறு என்று வைத்து, வீடு தேடி ரகசியமாகக் கொடுக்க வருபவர்களுக்கு, உபசரணை செய்ய வேண்டாமா? அதனால்தான், நாய்க்கு அங்கே வேலை இல்லை !
புதிதாக உத்தியோகம் பெற்ற ஒருவரிடம் லஞ்சம் கொடுக்க ஒருவன் வந்தான். அவர் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். வந்தவன் ஏமாற்றத்துடன் போய் விட்டான். அவன் தலை மறைந்தவுடன், அந்த ஆபீஸிலுள்ள சகோரக் குமாஸ்தாக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து
லஞ்சத்தை மறுத்த குமாஸ்தாவை `கிடுக்கித் தாக்குதல்' செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
‘என்னங்காணும், கொண்டுவந்து ஒரு மனுஷன் கொடுக்கிறான். வேண்டாம் என்று சொல்லிவிட்டீரே! ரொம்ப அழகாயிருக்கிறது. பரம்பரையாய் நடந்து வருவதை வீணாய்க் கெடுக்கப் பார்க்கிறீரே! எங்கள் பிழைப்பிலெல்லாம் மண்ணைப்போடத் தீர்மானித்துவிட்டீரோ ?’ என்று சரமாரியாகப் பொழிந் துவிட்டார்களாம்.
இந்த நிகழ்ச்சியை அந்த லஞ்சம் வாங்காதவர், தமது நண்பர் ஒருவரிடம் கூறினார்.
இதைக் கேட்ட அவரது நண்பர், “அப்படித்தானப்பா இருக்க வேண்டும். நீ ரொம்ப நல்லவனப்பா” என்று மெச்சினார்.
ஆனால், அதற்குள் அவர், “நான் என்ன செய்வது? உத்தியோகம் ஆகி இன்னும் ஒரு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள்ளேயா லஞ்சம் வாங்குவது? இன்னும் கொஞ்ச நாளாகட்டும் என்று இருந்தேன். அதற்குள்ளேயே இந்தப் பயல்கள், இப்படி எரிந்து விழுகிறான்களே!” என்று வருத்தப்பட்டாராம் !
***
ஒரு பத்திரிகை சம்மந்தமான வேலை ஒன்று, நடக்க வேண்டியதிருந்தது. பத்திரிகை மானேஜர், அந்த வேலையை முடிப்பதற்கு உதவி செய்யும்படியாக, அது சம்மந்தமான உத்தியோகஸ்தரைக் கேட்டுக்கொண்டார். அவரும் முடித்துத் தருவதாக வாயளவில் சொன்னாரே தவிர, செய்கையில் காட்டாதிருந்தார்.
வாய்ப் பேச்சில் மசியமாட்டார் போல் தோன்றியதால், பத்திரிகை மானேஜர், தம் கையில் வைத்திருந்த பத்திரிகையை, அவர் கண்ணுக்குத் தெரியும்படி புரட்டிக் கொண்டேயிருந்தார். உத்தியோகஸ்தரின் கண்பார்வை மானேஜர் செய்கையில் விழுந்தது. உடனே, “இதுதானா நீங்கள் வெளியிடும் பத்திரிகை? இங்கே கொண்டாரும். (புரட்டிப் பார்த்துவிட்டு) அடடா! நன்றாயிருக்கிறதே! நான் படித்துவிட்டுத் தரட்டுமா” என்றார். இவரும் ‘சரி’ என்ரறார்.
பத்திரிகை கை மாறியது; கண்சாடை நடந்தது; காரியம் முடிந்தது. பத்திரிகையா லஞ்சமாகக் கொடுக்கப் பட்டது? அதுதானில்லை. அதற்குள்ளே இருந்த ஒரு பச்சை நோட்டுத்தான் அப்படிச் செய்தது.
***
சாதாரண விஷயங்களில் கூட, இந்த ‘ரகசிய சன்மான’த்தைக் காணலாம்.
“மத்தியானப்பூசை ஆகி, கதவு திருக்காப்பிட்டாய் விட்டது. இனி, இப்பொழுது திறக்கமாட்டோம்” என்கிறார் கோயில் அர்ச்சகர்.
“அடடே, அப்படி யெல்லாம் சொல்லக் கூடாது. ரொம்பத் தூரத்திலிருந்து வந்திருக்கிறோம். அவசியம் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சாயங்கால வண்டியிலேயே ஊருக்குப் போக வேண்டும்" என்கிறார் குடும்ப சமேதராக வந்த அயலூர்வாசி. “அப்படியானால் மூன்று அர்ச்சனைகள் பண்ண வேண்டும். அர்ச்சனை ஒன்றுக்கு இரண்டணா” என்று நிபந்தனை போடுகிறார், வழக்கமாக ஒர் அணா வாங்கும் அர்ச்சகர்.
வந்தவர், “அதற்காக என்ன? இவ்வளவு தூரம் வந்து சுவாமி தரிசனம் செய்யாமலா போவது? சரி” என்று பணத்தைக் கொடுக்கிறார். கதவு திறக்கிறது. அர்ச்சகர் அன்பொழுகப் பேசி, கடைசியில் சன்மானமும் பெறுகிறார் !
ஓர் ஊரிலிருந்து, மற்றோர் ஊருக்கு இரவு நேரத்தில் சாமான்கள் ஏற்றிக்கொண்டு வண்டிக்காரர்கள் சென்றார்கள். நடுவே, ஓர் ஊரைத் தாண்டிப் போக வேண்டியதிருந்தது. அந்த ஊரில் பாதுகாப்பு அதிகம். ஊர்க்காப்பு சங்க அங்கத்தினர்கள் மும்முரமாக வேலை நடத்திவந்தனர்; அவர்கள் வண்டிக்காரர்களை, “நீங்கள் இரவில் வண்டிகளை இங்கேயே அவிழ்த்துப் போட்டு விட்டு, நாளைக் காலையில்தான் போகவேண்டும்” என்று தடுத்தனர்.
அங்கு, திருட்டு அதிகமாய் இருந்ததால், திருடின சாமான்களை, இரவில் வண்டிகளில் ஏற்றிச் சென்றுவிடுவார்கள் என்ற சந்தேகத்தாலேயே அப்படிச் செய்தனர். வண்டிக்காரர்கள் எவ்வளவோ மன்றாடினார்கள்; பயனில்லை. கடைசியில் ஒரு வண்டிக்காரன், “என்ன சாமி, நாங்கள் என்ன பண்ணுவது? இரவு பூராவும் விணாய்ப் போய்விடுகிறது. சம்பளத்துக்குக் காவல் காப்பவர்களாக இருந்தாலும் ஓரணா இரண்டணாக் கொடுத்துச் சரிக்கட்டிப்பிடலாம். உங்களுக்கு நாங்க என்னத்தைக் கொடுக்கிறது ? இல்லை, கொடுத்தாத்தான் வாங்குவீங்களா?” என்றானாம்.
***
உண்மையிலே , லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் ஆபத்தான சமாச்சாரந்தான். லஞ்சம் கொடுப்பவன், ‘இவர் வாங்குவாரா? அல்லது கோபித்துக்கொள்வாரா?’ என்று ஏங்குகிறான். வாங்குபவனோ, ‘மேலே தெரிந்து விட்டால் வேலை போய்விடுமே!’ என்று பயப்படுகிறான்.
ஆனால் என்ன பயமாயிருந்தாலும், லஞ்சம் பெருகி வளர்வதைப் பார்த்தால், தைரியசாலிகள் பெருகுகிறார்கள் என்றே எண்ண வேண்டியதிருக்கிறது!
குமாஸ்தாவாக இருந்தால், அந்த ஆபீஸிலுள்ள பியூனைக்கேட்டு லஞ்சம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. மானேஜராயிருந்தால், அவருடைய கார் டிரைவரைக் கேட்க வேண்டியதிருக்கிறது. பெரிய அதிகாரியாக விருந்தால், இதற்குமுன் அவர் லஞ்சம் வாங்கிய துண்டா என்று அவருடைய பூர்வ சரித்திரத்தை அறிய வேண்டியதிருக்கிறது.
***
எனக்குத் தெரிந்த ஒருவர், ஒரு கூட்டத்தில் லஞ்சத்தைப் பற்றிப் பிரமாதமாகப் பேசி, “லஞ்சம் வாங்குவது மிகவும் மோசமாகும். அது, அயோக்கியர்கள் செய்யும் வேலை” என்று முடித்தாராம். கூட்டம் முடிந்ததும் அநேகர் இவருடைய பேச்சுக்கு மெச்சி, மேடை மீது வந்து கை கொடுத்தனராம்.
“இப்படிக் கை கொடுத்தவர்கள் எல்லாம் இரண்டு கையாலும் லஞ்சம் வாங்கித் தின்று கொழுத்தவர்கள்” என்றார், எனது நண்பர்.
“ஏன், கை கொடுக்கும் போதே, அவர்கள் லஞ்சம் வாங்குபவர்கள் என்று, அவர்கள் கைகளே சொல்லி விட்டனவோ ?” என்று கேட்டேன்.
“இல்லை. இவர்களெல்லாம் லஞ்சம் வாங்காத பரம யோக்கியர்கள் என்று, கூட்டத்தில், இருந்தவர்கள் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இவர்களுடைய நோக்கம். அதனால்தான் இப்படி முந்திக் கொண்டு கை கொடுக்க மேடைக்கு வந்தனர். இவர்கள் முகத்தைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாமே !” என்றார்,
கை கொடுக்கும் போதே, என் நண்பர், இவர்களைக் கையோடு பிடித்துவிட்டார். ஆனாலும் , விட்டுவிட்டாரே! ஆமாம், அவரால் என்ன செய்யமுடியும், மனச்சாட்சியை விற்பவர்களுடன் ?
டெலிபோன் ஏமாற்றம்
* * *
“ட்ரிண், ட்ரிண், ட்ரிண்ண்......”
கடியாரமல்ல, டெலிபோன்தான் இப்படிச் சப்தம் போடுகிறது.
மத்தியானம் மணி ஒன்றரை யானதால், யாருமே ஆபீஸில் இல்லை. டிபனுக்குப் போய்விட்டார்கள். மானேஜருக்கு டிபன் கொண்டுவந்த துரைசாமிமட்டுமே நின்றுகொண்டிருந்தான். டெலிபோன் சத்தம் போடுவதைக் கண்டதும் சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் இல்லை. டெலிபோனில் பேசவேண்டுமென்ற நீண்ட நாள் ஆசையைத் தீர்த்துக்கொள்ள நினைத்தான். டெலி போனைப்பற்றிப் பூரணமாகத் தெரியாவிட்டாலும், தைரியமாக டெலிபோனை எடுத்தான்; பேச ஆரம்பித்து விட்டது.
“ஹல்லோ.”
“யாருங்க ?”
“ஹல்லோ, யார் பேசுகிறது ?”
“ஏங்க, நான்தானுங்க.”
“நான் என்றால் யார் ?”
“நான்தானுங்க, தெரியல்லியா ?”
“அட நான்தான், என்றால் யார்? பெயர் இல்லையா?”
“என்னங்க, இன்னம் தெரிஞ்சுக்கல்லீங்களா ? இவ்வளவு வருசமா, எங்க எசமாங்கிட்டே இருக்கேன். துரைசாமிதானுங்க.”
“நல்ல வேளை, உன் பெயரையும், உத்தியோகத்தையும் முதலிலேயே சொல்லப்படாதா? சரி, எங்கே மானேஜர்?"
“எங்க எசமாந்தானேங்க. அவரு எங்கோயோ போயிட்டாருங்க. பன்னெண்டு மணிக்கே டிபன்கொண்டாந்தேனுங்க, இன்னங் காணுமே! எங்கே போயிருப்பாக ?”
“சரி, சரி, வேறே யாரும் இல்லையா? இருந்தால், மர்க்கண்டைல் பேங்கிலிருந்து கூப்பிடுவதாகச் சொல்லு.”
துரைசாமி, ஆபீஸ் பூராவும் தேடுகிறான், யாரையும் காணோம். மாடியில் யாராவது இருக்கிறார்களா என்று மேலே செல்கிறான். அங்கே, ஏதோ பழைய குப்பைகளைக் கிளறிக்கொண்டிருக்கிருர், குமாஸ்தா ஒருவர். முக்கியமான கடிதம் ஒன்று காணாததால், மானேஜர் உத்தரவுப்படி, அதைத் தேடுவதில் முனைந்திருக்கிறார். அவரிடம் துரைசாமி சென்று, “ஐயா, யாரோ போனில் கூப்பிடுறாங்களே" என்றான்.
“யாரடா ? பெயர் தெரியுமா ?”
“சொன்னாங்க, ஏதோ மார்க்கண்டேயனோ என்ன வோவ்னாங்களே!”
“சரி, இதோ வந்தாச்சு.”
குமாஸ்தா, டிபன்கூடச் சாப்பிடாது வேலை பார்க்கிறார். இந்தமாதிரி குறுக்கே வந்தால் வயிற்றெரிச்சலாகத்தானே இருக்கும்? யாரும் இல்லையென்று சொல்லி விடும்படி துரைசாமியிடம் சொல்லி இருக்கலாம். ஆளுல் முக்கியமான விஷயமாக இருந்தால், என்ன செய்வது?
முகத்தைச் சுளித்துக்கொண்டே, குமாஸ்தா கீழே அவசர, அவசரமாக வருகிறார், போனிடம் செல்கிறார்.
போன் இருந்தபடியே இருக்கிறது ; அதாவது ‘ரிஸீவர்’ போன் மேலேயே இருக்கிறது. துரைசாமி அதைக் கீழே வைத்துவிட்டு வந்திருந்தாலல்லவா பேசலாம்? குமாஸ்தாவிற்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.
“என்னடா, என் வேலையையெல்லாம் குட்டிச் சுவராக்கிவிட்டாயே! போனை இப்படி வைத்துவிட்டு வந்து, என் கழுத்தை அறுக்கிறாயே” என்றார்.
“பின்னே என்னங்க பண்ணுவது! போனை எடுத்துக்கிட்டே வந்திருக்கணுமா? அதை ஆணி அடிச்சல்ல வச்சிருக்குப் போலேருக்கு” என்று களங்கம் இல்லாமல் பதில் சொன்னான்.
இதைக் கேட்டவுடனே, குமாஸ்தாவுக்குக் கோபம் வந்தாலும், சிரிப்புத் தடுத்துவிட்டது. பேசாமல் மாடிக்குப் போய்விட்டார்.
***
ஆபீஸ் மானேஜர் முதலாளி வீட்டுக்குப் போன் பண்ணினார்.
“ஹல்லோ......”
“ஹல்லோ......”
“ஹல்லோ. ஆபீஸிலிருந்து பரமானந்தம் பேசுகிறேன். நமஸ்காரம் சார். இன்றைக்கு அவசர வேலையாக வீட்டுக்குப் போகணும். அதான், உங்ககிட்டே சொல் லிட்டுப் போகலாம்ணு பார்த்தேன். மன்னிச்சுக்கணும். அவசர வேலை...அதான்......”
“ஹல்லோ, யார் முதலாளியா வேணும்? அவர் வெளியே போய்விட்டாரே.”
“பின்னே யார் பேசுகிறது ?”
“நான்தான், பியூன் வெங்கடாசலம், சார்”
இதைக் கேட்டதும் மானேஜருக்கு வெட்கமாகப் போய்விட்டது டபக்கென்று போனை வைத்துவிட்டார்.
***
தியாகராஜன், தன் நண்பன் சோமசுந்தரத்துக்கு, அவன் வேலைபார்க்கும் ஆபீஸிற்கு போன் பண்ணுகிறான். ஹெட்கிளார்க் போனை எடுத்து “யார் வேண்டும்?” என்கிறார்.
“சோமசுந்தரம் வேண்டும்” என்றதும் பியூனை அனுப்பி சோமசுந்தரத்தைக் கூப்பிடச் சொன்னார். ஆளுல், சோமசுந்தரம் இடத்தில் இல்லை. கானோம் என்று சொல்வதற்காக ஹெட்கிளார்க் போனை எடுத்து ‘ஹல்லோ’ என்கிறார். அவ்வளவுதான். தியாகராஜன் பேச ஆரம்பித்துவிடுகிறான்.
“என்னப்பா, சோமு, நேற்று சினிமாவுக்கு வருவதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டாயே! ஏன், உங்க ஹெட்கிளார்க் காலகண்டன் கொஞ்சங்கூட மசியவில்லையோ? தலைவலி என்று சொல்லி ‘டிமிக்கி’ கொடுப்பதாகச் சொன்னாயே;என் வேலையெல்லாம் கெட்டுப் போச்சு உன்னாலே" என்று ஒடும் வண்டிச் சக்கரத்தில் கோலைக் கொடுத்தது போல, சட சட என்று விளாசிவிட்டான், ஹெட்கிளார்க்கையும் சேர்த்து.
ஹெட்கிளார்க் என்ன செய்வார் ? போனை ஆத்திரத்தோடு வைத்துவிட்டார். வேறு அந்த போனில் என்ன செய்ய முடியும்? ஆனால், சாது போல நடிக்கும் சோமுவின் குட்டு, இதனால் வெளியாகிவிட்டதல்லவா ?
அவனுக்கு ஏதாவது வெடிவைக்க வழி வகுக்காமலா இருப்பார், அந்த ஹெட்கிளார்க் ?
***
அருணகிரி முதலியாருக்கு நவநீதன் கம்பெனியிலிருந்து டெலிபோன் வந்தது.
“ஹல்லோ, அருணகிரி முதலியாரா?”
“ஆமாம், யார் பேசுகிறது?”
“நவநீதன் கம்பெனியிலிருந்துதான் பேசுகிறோம். என்ன சார், இதான் உங்கள் நாணயமோ ? நாலு மணிக்கே பணத்தை அனுப்பிவிடுவதாகக் கூறினீர்களே?”
“என்ன! நவநீதன் கம்பெனியா ? பணமாவது, கொடுக்க வேண்டியதாவது ?”
“ஆமாம் சார், எங்களிடம் சரக்கு வாங்கியதற்குத் தரவேண்டிய, நாலுமாதக் கடன் தொகை. இப்பொழுது தெரிகிறதா ? கொடுக்க வேண்டியதிருந்தால் மறந்து தானே போகும் ?”
“என்ன, நானா உங்களிடம் சரக்கு வாங்கினேன் ? அருணகிரி முதலியாரா ?”
“ஆமாம் சார். அருணகிரி முதலியார்தான். நீர் தான்.”
“என்ன, இது ஒரு கதையாக இருக்கிறதே. வேறு யாராவது இருக்கும்.”
வேறு யாருமா ? தாங்கள், எம். அருணகிரி முதலியார் தானே?”.
“என்ன, எம். அருணகிரி முதலியாரா? என் பெயர் என். அருணகிரி முதலியார். டெலிபோன் நெம்பர் 66723.”
கொஞ்ச நேரம் நிசப்தம்.
பிறகு “அடடா. மன்னிச்சுக்கணும் சார், மன்னிச்சுக்கணும். டெலிபோன் டைரக்டரியில் கீழேயிருக்கும் நம்பரைக் கூப்பிடவேண்டியதற்குப் பதிலாகத் தங்களைக் கூப்பிட்டுவிட்டேன். மன்னிச்சுக்கணும் சார்” என்று பதில் வந்தது.
முதலியார் மன்னிக்காமல் என்ன செய்வது ? நாணயமாக உள்ள முதலியாரை, இந்தப் போன் கொஞ்சம் முன்னால் என்ன பாடு படுத்திவிட்டது ?
***
ஒரு நாள் , எங்கள் ஆபீஸ் டெலிபோன் மணி அடித்தது. அதை எடுத்து அதன் அழுகையை நிறுத்திப் பேச ஆரம்பித்தேன். ஆபீஸில் வேலை பார்க்கும், தெலுங்கு தேசத்தவர் ஒருவரைக் கூப்பிடும்படியாக அந்தக் குரல் வேண்டிற்று. தெலுங்கு தேசத்தவரைக் கூப்பிடப் போனேன். அவர் இடத்திலில்லை. காரணம் அவர் லீவில் இருக்கிறாராம். விஷயத்தைக் கூறலாம் என்று போனை எடுத்தேன். நான் பேசுவதற்குள் அந்தக் குரல் “ஏமுண்டி. நமஸ்காரண்டி......” என்று ஏதோ தெலுங்கில் பேச ஆரம்பித்துவிட்டது!
நானோ சுத்தத் தமிழன்; தெலுங்கு தெரியாது. ஆனால் இதை நான் தெரிவிக்காதபடி அந்தக் குரல் வெகுநேரம் பேசிவிட்டுப் பதிலை எதிர்பார்த்தது. அப்போதுதான் நான், “ஐயா, நீங்கள் கேட்ட ஆள் லீவில் இருக்கிறாராம். நாலைந்து நாள் செல்லுமாம் வருவதற்கு” என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன்.
இந்த மாதிரியே போனில் எத்தனையோ தமாஷ்கள் நடந்துவிடுகின்றன. சில ஆபத்தாக முடியும் ; சில ஏமாற்றமாக முடியும். ஆனால், இதைக் கேட்பவர்களுக்கோ எப்போதும் ரசமாகத்தான் இருக்கும்.
பணப்பித்து
* * *
பணத்திலே, மனிதனுக்கு ஆசை வேண்டியது தான். ஆனால், சிலருக்கு அளவு கடந்த பணப்பித்து இருக்கிறதே, அது மகா மோசம். பணத்திலே அப்படிப் பேராசை கொண்டிருப்பவனுக்குச் சந்தோஷமே கிடைப்பதில்லை. ஏனென்றால், சந்தோஷத்தை அவன் அடைய முடியாதபடி அவனுக்கும் சந்தோஷத்துக்கும் நடுவிலே, வேலியாக நின்று, அந்தப் பேராசை தடுக்கிறது. அவனுக்கு வயிறு பசிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கிளப்புக்குள் செல்கிறான். அங்கே பலகாரம் சாப்பிடும் பொழுது பலகாரத்தில் மனம் செல்வதில்லை. பணத்தைப்பற்றியே நினைப்பதனால், ‘ஐயோ’ இரண்டு இட்டிலிக்கு இரண்டணாப் போய் விடுமே!’ என்று கவலைப்பட்டுக்கொண்டே சாப்பிடுகிறான். இரண்டு அணாவுக்கு மேல் தின்னவே கூடாது என்று எல்லையும் கட்டிக்கொள்கிறான். ஆதலால், சாப்பிடுவதனால் உண்டாகும் ருசியின்பத்தை அவன் இழந்து விடுகிறான். அவனது பசியும் அடங்குவதில்லை. கிளப்பை விட்டு வெளிவந்தவுடனே, மறுபடியும் பசிதான்.
ரயில்வே ஸ்டேஷன், பிரயாணிகள் விடுதி முதலிய இடங்களெல்லாம், அவன் கண்ணுக்குக் கொள்ளையடிக்கும் இடங்களாகவே தோன்றுகின்றன. ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய பொருள்களைக் கொள்ளையடிக்கவே வந்திருப்பதாக அவனுக்குச் சதா நேரமும் ஒரு பயம் இருந்துகொண்டே யிருக்கிறது. இதெல்லாம் பண ஆசைப் பித்தின் விபரீதங்கள் !
பண ஆசை பிடித்தவர்களுக்கு, ஒவ்வொரு தம்பிடியைச் செலவழிக்கும்போதும் பரம வேதனை ஏற்படுகிறது. ஒரு சமயம், என்னோடு ஒரு நண்பர் ரயிலில் வந்தார். அவரது சாமான்கள், வண்டியில் பாதி இடத்தை அடைத்துக்கொண்டன. திருச்சி ஜங்ஷனில், வேறு வண்டியில் மாறுவதற்காக, நாங்கள் இருவருமே இறங்கினோம்.
நண்பர், தமது சாமான்களையும் என் சாமான்களுக்குப் பக்கத்திலே இறக்கி வைத்துவிட்டு, என்னை நோக்கி “கொஞ்சம் நம்ம சாமான்களையும், ஒரு கூலி பிடிச்சு அந்த வண்டிக்குக் கொண்டுவரச் செய்யிறீங்களா ? நான் இதோ வாரேன்" என்று எங்கேயோ அவசரமாகப் போய்விட்டு வரப்போகிறவர் போலக் கேட்டார். நானும், `சரி' என்று தலையை ஆட்டினேன். அவர் சிறிது தூரம் போய், யாரையோ எதிர்பார்ப்பவர் போல நின்றுகொண்டிருந்தார். நான், எங்கள் இரண்டு பேர் பெட்டி படுக்கைகளையும் இரண்டு கூலிகளிடம் கொடுத்து, மாற்று வண்டிக்குக் கொண்டு போகச் செய்தேன். கூலி தமது சாமான்களைத்தூக்கினானோ இல்லையோ, நண்பரும் பின்னா லேயே வந்துவிட்டார்.
அவர், சாமான்களைத் தூக்கிவந்த ஆளுக்குக் கூலி கொடுக்க வேண்டிய கட்டம் வந்தது. தாமே கொடுப்பதாகச் சொல்லி, என்னைத் தடுத்துவிட்டார். ஆனால் உடனே கொடுக்கவில்லை. வண்டியில் ஏறிக்கொண்டு, வெகுேநரம் வரையில் தம் சாமான்களை எல்லாம் சரி பார்த்துக்கொண்டிருந்தார். ஆள், சிறிதுநேரம் பொறுத்துப் பார்த்தான். அவர் கூலி கொடுக்கிற வழி யாய்த் தெரியவில்லே. கடைசியில் அவனே கேட்டு விட்டான். நண்பர் ஓர் இரண்டணாவை அவனிடம் வீசி யெறிந்தார். “இதென்ன சாமி, இது! என்ன பிச்சைக் காசா ?" என்று அவன், நண்பரிடம் அதைத் திருப்பி எறிந்தான். நண்பர் தகராறு செய்ய ஆரம்பித்தார். அவனை அமர்த்தியவர் அவரா ? நான்தானே. ஆகையால், அந்த விஷயத்தைத் தமது பேரத்துக்கு ஒரு வாதாக அவர் உபயோகிக்கத் தொடங்கினார்.
“ஏண்டா, நானாடா உன்னைக் கொண்டுவரச் சொன்னேன் ? என்ன கெட்டுப் போனாப்போல இருக்கு ? கொடுத்ததை மரியாதையாய் வாங்கிக்கிட்டுப் போ. இல்லே, சும்மாப் போகவேண்டியதுதான். ஒரு தம்பிடி கூடக் கொடுக்கமாட்டேன்" என்று கர்ஜித்து, மேலும் ஓரணாவைச் சேர்த்து, மூன்றணாவாக, அவனிடம் நண்பர் நீட்டினார். இதற்கெல்லாம் கூலியா மசிகிறவன் ? அவனும் மேலும் கூச்சல் போட்டான். இவரும் கத்தி னார். இவருக்குமேல் அவனும், அவனுக்குமேல் இவரும், மேலும் மேலும் சத்தம் போட்டுக்கொண்டே யிருந்தார்கள். வண்டி புறப்படும் சமயம் நெருங்கி விட்டது. நண்பரின் மேல் வேட்டியை, ஜன்னல் வழியாக அந்தக் கூலி எட்டிப் பிடித்துக்கொண்டு, “என்ன ஏமாற்றவா பார்க்கிறாய் ? பணத்தை வச்சிட்டு மறுவேலை பாரு” என்று மிரட்ட ஆரம்பித்தான். நண்பர் பயந்து விட்டார். பிறகு கசக்கிக் கசக்கி ஒவ்வொரு காலணாவா கப் பையிலிருந்து எடுத்துக் கொடுத்துக்கொண்டேயிருந்தார். அப்படி அவர் கொடுத்ததெல்லாங் கூடி மொத்தம் நாலணாத்தான். அதற்குள் வண்டியும் நகர்ந்து விடடது. பாவம் கூலியாள் அதற்குமேல் ஒன்றும் செய்ய முடியவில்லை. திட்டிக்கொண்டே நின்றான்.
இந்தப் பண ஆசை பிடித்த மனிதர் முதலில், “என்னடா காசு போயிற்றே !” என்று மிகவும் வருத்தப் பட்டார். ஆனால், “கொடுக்க வேண்டிய கூலி எட்டணாவில் நாலணா மிகுத்துவிட்டோம்” என்று பிறகு கொஞ்சம் மனத்திருப்தி அடைந்தார். ஆனாலும், அது சந்தோஷமில்லை. சந்தோஷ மென்பது, அவர் சம்மந்தப்பட்ட மட்டில் மலடியின் குழந்தை மாதிரிதான். அவரால் சந்தோஷப்படவே முடியாது.
இப்படிப் பணப்பித்துப் பிடித்து அலைகிறார்களே, இவர்கள் தாங்கள்தான் சுகப்படுவதில்லை; பிறரையாவது சும்மா விடலாகாதா ? அதுவுமில்லை. எல்லாருக்கும் அவர்களால் கஷ்டம்தான்.
பணத்தைச் சேகரிப்பதற்கு நூற்றுக்கணக்கான நல்ல வழிகள் இருக்கின்றன. பணத்தைச் சேகரிப்பது குற்றமல்ல. ஆனால், அந்தப் பணத்தின்மேல் அபார மோகம் கொண்டு, எப்பொழுதும் அதைச் சம்பாதிப்பதிலேயே கவனமாக இருப்பதுதான் குற்றமாகிறது. பணத்தை வெளியே ஒட விடாமல், பெட்டியில் பூட்டி வைத்திருப்பதனாலேயோ, அல்லது பாங்கியில் போட்டு வைத்திருப்பதனாலேயோ ஒருவித உபயோகமுமில்லை.
எப்பொழுதும் பணம் நல்ல வழியில் செலவாகிக் கொண்டே இருக்கவேண்டும். செலவழிப்பதைத் தவிர, பணத்தால் வேறே என்ன பிரயோசனம் ? உண்ணாமல், உடுக்காமல், உறங்காமல் பணத்தைச் சேமித்து வைத்தால், நமக்குப் பின் வருபவர் யாரோ ஒருவர் அதைச் செலவழித்துவிடத்தான் போகிறார். தகப்பன் தம்பிடி கூடச் செலவழிக்காமல் லட்சக் கணக்காய்ச் சேர்த்து வைத்திருப்பான். மகன் அதையெல்லாம் கெட்ட வழிகளிலேயே செலவழிப்பான். அதனால் அந்த லோபி யடைந்த புண்ணியந்தான் என்ன ?
பணத்தைத் தானே வைத்துக்கொண்டிருப்பதால் சந்தோஷம் வந்துவிடாது. பிறருக்குக் கொடுத்து அவர்கள் நன்மை பெறச் செய்தால்தான் தன்னை அவர்கள் போற்றிப் புகழ்வார்கள்; தனக்குப் பின்னும் தன் பெயர் நிலை நிற்கும். எச்சிற் கையாலும் காக்கை ஒட்டாதவனாக இருந்தால், யார்தான் மதிப்பார்கள் ? உடலுடன் பெயரும் புதைபட்டுத்தான் போகும்.
பள்ளிக்கூடப் பையன்களில் பலர், மேல் நாட்டாரைப் பார்த்து, வேடிக்கையாகத் தபால் தலைகள் சேகரிக்கிறார்களல்லவா ? அதுபோலத்தான் பண ஆசை கொண்டவனும் பணத்தைச் சேகரிக்கிறான். ஆனால், தபால் தலை சேகரிப்பது பொழுது போக்குக்காக ஓய்வு நேரத்தில் செய்யும் வேலை. பணம் சேர்ப்பதோ, வாழ்க்கை முழுவதையுமே ஈடுபடுத்திச் செய்யும் வேலையாக இருக்கிறது. தபால் தலை சேகரிப்பதில் உற்சாகம் இருக்கிறது. பணம் சேகரிப்பதிலோ, உற்சாகத்தின் வாசனைகூட இல்லை. ஒரு லட்ச ரூபாய் கையில் உள்ளவன் பத்து லட்ச ரூபாய் அடைய விரும்புகிறான். மீதி ஒன்பது லட்சத்தையும் சம்பாதிப்பதற்காக, அவன் தரித்திரனாகவே வாழ்ந்து வரவேண்டி யிருக்கிறது. அரை வயிற்றுக்குக்கூடச் சாப்பிட மனம் வருவதில்லை. எந்த வழியில், எப்படி, எவரிடமிருந்து பணத்தைப் பறிக்கலாம் என்றெல்லாம் சதா ஆலோசனை செய்ய வேண்டியிருக்கிறது. அவனது வாழ்க்கையில் சுகம் எப்படி ஏற்படும் ?
ஏராளமான லோபிகள் இருக்கிறார்கள். கையிலுள்ள பணத்தைக் குரங்குப் பிடியாய்ப் பிடித்துக் கொள்ளுவதுதான் அவர்கள் வழக்கம். எப்போதும் பரிதாபகமான நிலைமையிலேயே அவர்கள் வாழ்கிறார்கள். வீடுவாசல், நிலபுலம் எல்லாம் ஏராளமாக ஒரு லோபிக்கு இருக்கும். ஆனால், கிழிந்த வேஷ்டி, பிய்ந்த செருப்பு இவற்றைத்தான் அவன் எப்போதும் அணிந்துகொண்டு வீதியில் நடந்து செல்வான். இப்படி அவன் கஷ்டப் படுவது எதற்காக பணத்தை மிகுத்து வைப்பதற்காகத் தான்! சாகும்வரை மிகுத்து மிகுத்து வைத்துக் கானும் பலன்தான் என்ன?
இம்மாதிரி லோபிகளாவது, கையில் உள்ள பணத்தைச் செலவழிக்கமால் பூட்டி வைப்பதோடு நிற்கிறார்கள். ஆனால், இந்த லோபித்தனத்தைவிட மிகவும் மோசமாக வேறு ஒன்று இருக்கிறது. அதுதான் பணத்தை மேலும் மேலும் சேர்க்க வேண்டுமென்னும் ஆசை. பணம் கையை விட்டுப் போகாமல் அதைக் காப்பாற்ற ஒரு காரணமிருந்தால், பணத்தைச் சம்பாதிக்க ஒன்பது காரணங்கள் இருக்கின்றன.
டாக்டர் ஜான்சன் என்ற ஆங்கில ஆசிரியர் ஓரிடத்தில் “மனிதன் பணத்தைச் சம்பாதிப்பதைவிடக் குற்றமற்ற காரியம் வேறொன்றில்லை” என்கிறார், ஆளுல் சில மனிதர்கள் பணம் சம்பாதிப்பதைப் பார்த்தால், பயங்கரமாக இருக்கிறது. “நாம் பணம் சேகரிப்பதற்காகவே உலகில் ஜன்மம் எடுத்திருக்கிறோம்” என்று எண்ணிக் கொண்டு, பணம் பணம் என்று பேயாய் அலைகிறார்கள். நல்ல வழியோ கெட்ட வழியோ, அதைப்பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை. ஏழைகளிடமிருந்துகூடக் கொள்ளையடிக்கிறார்கள். செய்கையில் இப்படி இருந்தாலும் வெளியே மிகவும் நல்லவர்கள்போல் நடிக்கிறார்கள். அவர்களுடைய ஆடம்பரமும் வீண் பேச்சுகளுமே அவ்வாறு நடிப்பதற்கு அணிகளாக இருக்கின்றன.
இந்தப் பணப்பேய்களைவிட, அந்த லோபிகளே மேல் என்பது என் அபிப்பிராயம். கருமிகளால், பிறருக்கு உபகாரமில்லாவிட்டாலும் அபகாரமில்லை; இவர்களால் அதுவுமன்றோ விளைகிறது.
வெள்ளைக்காரரும்
வெள்ளிக்கிழமையும்
* * *
“இன்றைக்கு என்ன, திங்கட்கிழமையா? அடடா, 7 1/2 முதல் 9 வரை ராகுகாலம் அல்லவா? இந்த நேரத்திலே இந்த நல்ல காரியத்தை ஆரம்பிக்கப்படாது” என்று நம் நாட்டில் எத்தனையோ பேர் சொல்லுகிறார்கள் ராகு காலத்தைப் போலவே, எமகண்டம், கரிநாள் முதலியவைகளெல்லாம் அநேகருக்குப் பிடிப்பதில்லை.
இப்படிப்பட்டவர்களைப்பற்றிக் கூறும்பொழுது, “செச்சே, இவர்களெல்லாம் என்ன, இப்படிப் பத்தாம் பசலிகளாக இருக்கிறார்களே! மேல்நாட்டிலெல்லாம்.இது போலவா நாள் நட்சத்திரமெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிரறார்கள்? அதனால்தான் அவர்கள் இவ்வளவு முன்னுக்கு வந்திருக்கிறார்கள்” என்று சிலர் சொல்வதுண்டு.
ஆனால், அந்த மேல்நாடுகளிலுள்ள சில நம்பிக்கைகளைப்பற்றிக் கேள்விப்படும்போது, “அடடா, இந்த வெள்ளைக்காரர்களுக்கு நாம் எவ்வளவோ தேவலையே!” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!
அவர்களில் அநேகருக்கு வெள்ளிக்கிழமை என்றால் பிடிக்கவே பிடிக்காது. வெள்ளிக்கிழமையில் எந்தக் காரியத்தையுமே ஆரம்பிக்க மாட்டார்கள். திருடன்கூட வெள்ளிக்கிழமையன்று திருடமாட்டானாம்.
“டேய், நாளைக்கு கோர்ட்டிலே உன்னை விசாரிக்கப் போகிறார்கள்” என்று போலிஸ் அதிகாரி ஒரு திருடனிடம் கூறினால், “ஐயையோ! வேண்டாமைய்யா, இறைக்கே விசாரிக்கட்டும். அல்லது நாளை மறுநாள் விசாரிக்கட்டும். நாளைக்கு வெள்ளிக்கிழமை. வேண்டவே வேண்டாமய்யா” என்று கெஞ்சுவானாம். ஏன் தெரியுமா?
வெள்ளிக்கிழமை வரும் குற்றவாளிகளுக்கு, தண்டனை அநேகமாக இரண்டு மடங்குதான் இருக்குமாம். மூன்றுமாதம் சிறைவாசம் கொடுக்க வேண்டிய குற்றத் துக்கு ஆறுமாதம் கொடுத்துவிடுவார்களாம், அநேக நீதிபதிகள்.
வெள்ளிக்கிழமை கல்யாணம் செய்துகொள்வது கூடாதாம்! அப்படிச் செய்துகொண்டால், கணவனோ அல்லது மனைவியோ சீக்கிரத்தில் இறந்துவிடுவார்களாம் அல்லது கணவனுக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு விவாகரத்துச் செய்துகொள்ள வேண்டிய நிலை வந்துவிடுமாம்!
ஒருவருககு இரவில் தூக்கம் வரவில்லையாம். உடனே தம் மனைவியைக் கூப்பிட்டு, “நீ படுக்கையை என்று திருப்பிப் போட்டாய்? வெள்ளிக்கிழமைதானே! உண்மையைச் சொல்!” என்றாராம்.
“இல்லையே!” என்றாளாம் அவர் மனைவி.
“இல்லவே இல்லை; பொய் சொல்லுகிறாய். நீ வெள்ளிக்கிழமை படுக்கையைத் திருப்பிப் போட்டதால் தான் துக்கமே வரவில்லை” என்றாராம் அவர்!
ஒருவர் மற்ருெருவருக்குக் கடிதம் எழுதுகிறார். அது மிகவும் இரகசியமான கடிதம். அதைப் படித்து முடித்ததும், அதை நெருப்பில் கொளுத்தப் போகிறார், அவர். ஆணால், அன்று வெள்ளிக்கிழமையாக இருந்தால்,அதை நிச்சயம் கொளுத்தமாட்டார். மறுநாள்தான் கொளுத்துவார்.
ஏன் தெரியுமா? வெள்ளிக்கிழமை கொளுத்தினால் கடிதம் எழுதியவருக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமாம்.
வெள்ளிக்கிழமை இரவு ஒரு கனவு கண்டால் அது கட்டாயம் பலித்துவிடுமாம் பரீட்சையில் தோற்றுப் போவதாகக் கண்டாலும் சரி, கிரிக்கெட் ஆட்டத்தில் ஜெயிப்பது போலக் கண்டாலும் சரி, கழுத்தை யாராவது திருகுவது போலத் தோன்றினாலும் சரி-அது சீக்கிரத்தில் பலித்துவிடுமாம்!
இவை மட்டுமா? வெள்ளிக்கிழமை நகம் வெட்டுவது கூடாதாம். அப்படி வெட்டினால், அது மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடுமாம்! மிகவும் கஷ்டப்படுகிறவனை, ‘இவன் வெள்ளிக்கிழமை பிறந்திருக்கிறான் போலிருக்கிறது’ என்றும் சிலர் சொல்வதுண்டாம்!
இந்த வெள்ளிக்கிழமையைப் போலவே அவர்களுக்கு மிகவும் வேண்டாத எண் 13.
“டேய், மூன்று பேராகச் சேர்ந்து போகாதீர்கள். காரியம் குட்டிச்சுவராய்ப் போய்விடும்” என்று நம்மில் சிலர் சொல்வதில்லையா? அது போலவே, 13-ஆம் தேதி,
13 பேர்கள்-இதிலெல்லாம் அவர்களுக்கு ஒரு வெறுப்பு இருக்கிறது.
ஒரு விருந்து நடக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதற்கு 13 பேர்களே வந்திருந்தால் 14-ஆவதாக ஒருவரை வலிய இழுத்து வந்து எல்லோரும் சேர்ந்துதான் சாப்பிடுவார்கள். ஏனென்றால், 13 வேண்டாத எண் அல்லவா?
அதே விருந்துக்கு 12 பேர்களே வந்திருந்தால் கூட அங்கே நிம்மதி இராது. எல்லோரும் அவச், அவச் என்று அள்ளிப் போட்டுக்கொண்டு எழுந்து விடுவார்களாம். ஏனென்றால், யாராவது இன்னொருவர் அங்கே வந்துவிட்டால், 13 ஆகிவிடுமல்லவா ? அதனால்தான் !
சில இடங்களில் 13 பேர்கள் விருந்து சாப்பிடுவார்கள். ஆனால், ஒவ்வொருவரும் அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு முன்னால் எழுந்திருக்கப் பார்ப்பார்கள். ஏன் அவர்கள் இப்படி அவசரப்பட வேண்டும் ? கடைசியாக, அதாவது 13-ஆவதாக எழுந்திருப்பவர் அந்த வருஷத்துக்குள்ளே இறந்துபோய்விடுவாராம் ! எப்படி இந்த நம்பிக்கை !
இந்த 13 என்ற சொல்லைக் கேட்டதுமே, அதிகமாகப் பயப்படுகிறவர்கள், பிரெஞ்சுக்காரர்கள்தாம். பிரான்ஸ் தேசம் முழுவதுமே 13 என்ற எண் வெறுக்கப்படுகிறது !
அங்கே, 13 என்ற எண் உள்ள வீட்டில் யாருமே குடியிருக்கமாட்டார்களாம் ! 13-ஆவது எண் போட்ட வீடே அநேகமாக அங்கு இருப்பதில்லையாம்!
வீதியில், ஒவ்வொரு வீட்டு நம்பரையும் பார்த்துக் கொண்டே போனால் 12-ஆம் நம்பர் வீட்டுக்கு அடுத்தது
‘12A’ என்ற வீடு இருக்கும்; அதற்கு அடுத்தது 14-ஆம் நம்பர் வீடுதான்; 13-ஆம் நம்பர் வீடு இருக்காது ! அப்படி யிருந்தாலும், அந்த வீட்டுக்குக் குடிவருகிறவர்கள், அதை மாற்றி ‘12.A’ என்று எழுதிவிடுவார்களாம்!
பெரிய பெரிய மாலுமிகள், ஆகாய விமானிகளெல்லாம் 13-ஆம் தேதியன்று புறப்படமாட்டார்களாம். 13-ஆம் தேதியுடன் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து கொண்டால், நிச்சயம் புறப்படவே மாட்டார்கள்.13-ஆம் தேதி,வெள்ளிக்கிழமை, அதுவும் 13 பிரயாணிகளுடன் புறப்பட வேண்டியது வந்துவிட்டால், வேலையே போவதானாலும் சரிதான்; புறப்படமாட்டார்களாம்.
கிழமையிலே வெள்ளிக்கிழமையையும், தேதியிலே 13-ஆம் தேதியையும், அவர்கள் வெறுத்து விலக்குவது போலவே, மாதத்திலே மே மாதத்தையும் அவர்கள் வெறுக்கிறார்கள்.
இந்த நம்பிக்கைகளோடுமட்டும் வெள்ளைக்காரர்கள் நிற்கவில்லை. இன்னும் என்ன என்னவெல்லாமோ நம்பிக்கைகள் அவர்களிடம் இருக்கின்றன.
அறைக்குள்ளே குடையை விரிக்கக் கூடாது. மேஜைமீது இரண்டு கத்திகளை ஒன்றை ஒன்று குறுக்கிடும்படி வைக்கக்கூடாது. ரொட்டியைக் கத்தியில் குத்திக்கொண்டு வறுக்கக் கூடாது. 2 பேர் ஒரே கோப்பையில் கை கழுவக் கூடாது. (அப்படிக் கழுவினால், இருவருக்கும் சீக்கிரத்தில் சண்டை வந்துவிடுமாம்!) ஏணியைச் சுவரோடு சாய்த்து வைத்திருக்கும் போது, சுவருக்கும் ஏணிக்கும், இடையே போகக் கூடாது. இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ!
* * *
கருத்துகள்
கருத்துரையிடுக