திரும்பி வந்த மான் குட்டி
சுட்டி கதைகள்
Back
திரும்பி வந்த மான் குட்டி
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
பதிப்புரை
"ஏடு தூக்கிப் பள்ளியில்
இன்றும் பயிலும் சிறுவரே
நாடுகாக்கும் தலைவராய்
நாளை விளங்கப்போகிறார்"
என்று பாடியதோடல்லாமல், பிற்காலத்தில் நல்ல நாட்டை உருவாக்க, இன்றைய சிறுவர்களை நல்வழிப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் குழந்தைகளுக் காகவே கவிதை, கதை, கட்டுரைகளை எழுதியவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்கள். அவர் களுடைய எட்டுக் கதைகளைத் தேர்ந்தெடுத்து, இப் புத்தகமாக வெளியிட்டுள்ளோம். இதில் இடம்பெற்றுள்ள சில கதைகள் கோகுலம் மாத இதழில் வெளிவந்தவை. அந்தக் கதைகளை இப்புத்தகத்தின் மூலமாக வெளியிட அனுமதி தந்த பரதன் பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குழந்தைக் கவிஞரின் மற்ற நூல்களைப் போலவே இந்நூலையும், சிறுவர்கள் விரும்பிப் படித்துப் பயன்பெறுவார்கள் என நம்புகிறோம்.
-பதிப்பகத்தார்
பொருளடக்கம்
1. திரும்பி வந்த மான்குட்டி
2. முன்கோபி ராஜா
3. பொன்னனின் சுதந்தரம்
4. உண்டி வில்
5. உதவாத டெலிபோன்
6. குப்புவின் குல்லாய்
7. இரு காக்கைகள்
8. வித்தைக் குரங்கு
திரும்பி வந்த மான்குட்டி
ஒரு காடு. அந்த காட்டிலே ஒரு மரத்தடியில் இரண்டு புள்ளி மான்கள் படுத்திருந்தன. அவற்றிலே ஒன்று அம்மா மான், மற்றொன்று குட்டி மான்.
அம்மாமான் தன் குட்டியைப் பார்த்து, “நீ எப்போதும் என் கூடவே இருக்கணும். தனியாக எங்கேயும் போய்விடாதே!” என்றது.
“ஏம்மா, தனியாகப் போகப்படாதா?” என்று கேட்டது குட்டிமான்.
“நல்லவேளையாக இந்தக் காட்டிலே சிங்கம், புலியெல்லாம் இல்லை. இருந்தால், நம்மை அடித்துச் சாப்பிட்டுவிடும். ஆனாலும் வேட்டைக் காரர்களால் நமக்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம்.”
“வேட்டைக்காரர்களால் ஆபத்தா! எப்படி அம்மா?”
“உன்னைப்போல் சின்னக் குட்டியாக இருந்த போது, நான் ஒரு வேட்டைக்காரனிடம் சிக்கிக் கொண்டு, படாதபாடு பட்டேன். அது மாதிரி உனக்கும் வந்துவிடக் கூடாது. அதற்காகத்தான்....” அம்மா மான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, குட்டிமான் குறுக்கிட்டது.
“ஏனம்மா, உன்னை வேட்டைக்காரன் பிடித்துப் போய் விட்டானா? அப்புறம், எப்படித் தப்பி வந்தாய்?”
“குட்டியாக இருந்த போது, ஒருநாள், நான் துள்ளிக் குதித்துச் சென்று கொண்டிருந்தேன். ஒரு புதரைத் தாண்டி, அந்தப் பக்கமாக கால்களை வைத்தேன். என் கால்கள் அங்கு விரித்து வைத்திருந்த வலையில் சிக்கிக் கொண்டன. என்ன என்னவோ செய்து பார்த்தேன். கால்களை எடுக்க முடியவில்லை. சிறிது நேரத்தில், உடம்பு முழுவ தும் நன்றாக வலைக்குள் அகப்பட்டுக் கொண்டது. அந்தச் சமயம் பார்த்து வேடன் வந்தான். என்னை வலையிலிருந்து விடுவித்தான்; என் கால்களை நன்றாகக் கட்டித் தூக்கிக் கொண்டு போனான்.”
“தூக்கிக் கொண்டு போனானா? எங்கே அம்மா?” என்று பரபரப்புடன் கேட்டது குட்டி மான்.
“என்னைக் கொண்டு போய், அவன் ஒரு பெரிய பணக்காரரிடம் விற்று விட்டான். அந்தப் பணக்காரரின் வீடு ரொம்பப் பெரிய வீடு. வீட்டைச் சுற்றிப் பெரிய தோட்டமும் இருந்தது. அவர் வீட்டில் இருந்த ஒரு பையனும் பெண்ணும் என்னைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து வந்தார்கள். தோட்டத்திலேயிருந்த ஒரு பெரிய கூடத்தில் என்னைக் கட்டிப் போட்டார்கள். எனக்கு ஒரே வருத்தம். ‘இனிமேல் என் அப்பா அம்மாவைப் பார்க்கவே முடியாதே! மற்ற மான்களுடன் சேர்ந்து சுற்ற முடியாதே!’ என்றெல்லாம் நினைத்து நினைத்து ஏங்கினேன்.
“அந்தப் பிள்ளைகள் என்னிடம் மிகவும் பிரியமாகத்தான் இருந்தார்கள்; என்னைக் கட்டி அணைத்துக் கொண்டார்கள்; கன்னத்தில் முத்தம் கொடுத்தார்கள். முள்ளங்கி, காரட், முட்டைக் கோஸ், தக்காளி, வாழைப்பழம் எல்லாம் கொண்டு வந்து கொடுத்தார்கள். நான் எதையுமே சாப்பிடவில்லை. பட்டினி கிடந்தேன். தண்ணிர் கூடக் குடிக்கவில்லை. தோட்டத்துக்குள் என்னை அழைத்துச் சென்றார்கள். நான் துள்ளி ஓடவில்லை; சோர்ந்து சோர்ந்து நின்றேன்.
“தினமும் பள்ளிக்கூடம் போகும் நேரம் தவிர, மற்ற நேரங்களிலெல்லாம் அந்த இரண்டு குழந்தைகளும் என் பக்கத்திலே இருப்பார்கள். நான் எதுவுமே சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து அவர்கள் வருந்துவார்கள். தங்கள் அப்பாவிடம் என் நிலைமையை எடுத்துச் சொன்னார்கள்.
“அந்த அப்பாவும் யார் யாரையோ அழைத்து வந்து காட்டினார். என் வாய்க்குள் மூங்கில் குழாயை வைத்து அதன் வழியாகத் தண்ணிரை ஊற்றினார்கள். முள்ளங்கியையும், தக்காளியையும் நன்றாக அரைத்துத் தண்ணிரில் கலந்து பலவந்தமாக வாய்க்குள் செலுத்தினார்கள். அதனால், நான் சாகாமல் இருந்தேன். ஆனாலும், உடம்பு நாளுக்கு நாள் இளைத்தது. பத்து நாட்கள் இப்படிச் செய்து பார்த்தார்கள். பத்தாம் நாள் நான் சாய்ந்து படுத்து விட்டேன்.
“என் நிலைமையைப் பார்த்த அந்தப் பெண் குழந்தை, அவள் அப்பாவிடம், ‘அப்பா, அப்பா, நாங்கள் சந்தோஷமாக இருக்கத்தானே இதை வாங்கினீர்கள்? ஆனால் பாவம், வந்தது முதல் இதற்கு உடம்பு சரியில்லை. துள்ளிக் குதிக்கவும் இல்லை; சாப்பிடவும் இல்லை. செத்துப்போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது. பேசாமல் காட்டிலே கொண்டு போய் விட்டு விடலாம்’ என்றாள். ‘அது தான் சரி, அப்படியே செய்வோம்’ என்றார் அந்த அப்பா.
“அன்று மாலையே ஒரு வண்டியிலே என்னை ஏற்றி இந்தக் காட்டிலே கொண்டு வந்து விட்டு விட்டார்கள். நல்லவேளை, நான் திரும்பி வந்து சேர்ந்தேன்.”
அம்மா மான் சொன்னதைக் கேட்டதும், “ஏனம்மா, பெரிய பங்களா, பெரிய தோட்டம், அன்பான பிள்ளைகள், தின்பதற்கு நிறைய நிறையக் காய்கறி, பழங்கள். இவ்வளவு இருந்தும் இங்கே வந்து விட்டாயே?” என்று கேட்டது குட்டிமான்.
“என்ன இருந்தால் என்ன? என் அம்மா, அப்பா, சிநேகிதர்கள் எல்லாரையும் பிரிந்து இருக்க முடிய வில்லையே! எப்போதும் என்னை அங்கே கட்டிப் போட்டே வைத்தார்கள்; கழுத்து வலித்தது. சுதந்தர மாகத் துள்ளித் திரியவும் முடியவில்லை; இங்கே தேவையான நேரத்திலே தேவைப்பட்டதைத் தின்னலாம்; அங்கே அவர்கள் கொடுப்பதைக் கொடுக் கும் போதுதான் தின்ன வேண்டும். கேவலமான வாழ்க்கை.”
இப்படி அம்மா மானும் குட்டி மானும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தன.
‘நானாக இருந்தால், திரும்பியே வந்திருக்க மாட்டேன். இவ்வளவு வசதிகள் இருந்தும், இந்த அம்மா ஏன் தான் திரும்பி வந்ததோ!’ என்று குட்டி மான் அடிக்கடி நினைக்கும்.
ஒருநாள் இரவு நேரம். அம்மா மானும் கூடவே இருபது, இருபத்தைந்து மான்களும் ஓரிடத்தில் படுத்திருந்தன. யாருக்கும் தெரியாமல், அந்தக் குட்டி மான் மெதுவாகப் புறப்பட்டது; புதருக்குள் புகுந்து புகுந்து காட்டின் எல்லைக்கு வந்து விட்டது.
‘விடிவதற்குள் மனிதர்கள் வசிக்கும் ஓர் ஊருக்குள் போக வேண்டும். பெரிய பங்களா ஒன்றுக்குள் புகுந்து கொள்ள வேண்டும். விடிந்ததும், அந்த வீட்டுக் குழந்தைகள் என்னைப் பார்ப்பார்கள். ஆனந்தத்தில் துள்ளிக் குதிப்பார்கள், கட்டி அணைப்பார்கள். நிறைய நிறையத் தின்னத் தருவார்கள்’ என்று நினைத்து, எந்தப் பக்கம் போகலாம் என்று பார்த்தது.
அப்போது, திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஒரு முயல் ஓடி வந்து காட்டுக்குள் புகுந்தது. அதைப் பார்த்ததும் குட்டிமான், “முயலண்ணே, முயலண்ணே! எங்கிருந்து ஓடிவருகிறீர்கள்?” என்று கேட்டது.
“வா சொல்கிறேன்” என்று கூறிச் சிறிது தூரம் காட்டுக்குள் குட்டி மானை அழைத்துச் சென்றது முயல்.
“நான் இப்போது எங்கிருந்து வருகிறேன், தெரியுமா? சிறிது தூரத்திலேயுள்ள நகரத்திலிருந்து தான். என்னையும் இன்னொரு முயலையும் ஒரு வேடன் பிடித்துச் சென்று, அந்த நகரிலே ஒரு பெரிய பணக்காரர் விட்டிலே விற்று விட்டான். அந்தப் பணக்காரர் வீட்டிலே ஒரு மாதம் சந்தோஷமாக வளர்ந்தோம். அந்தப் பணக்காரர் வீட்டுப் பெண் குழந்தை என்னிடம் மிகவும் அன்பாக இருந்தாள். அவள் பெயர் உமா.
“ஒரு நாள் அந்தப் பணக்காரர் வீட்டுக்கு வெளியூரிலிருந்து அவருடைய மாப்பிள்ளையும் அவருடைய உறவினரும் இரண்டு மூன்று கார்களிலே வந்து இறங்கினார்கள். அவர்களுக்குத் தடபுடலாக விருந்து வைக்க ஏற்பாடுகள் நடந்தன. சாயங்கால நேரத்திலே அவர்கள் வீட்டுச் சமையல்காரன் எங்கள் அருகே வந்தான். என்னைப் பிடித்துத் தூக்கிப் பார்த்தான். பிறகு என்னோடு இருந்ததே, அந்த முயலையும் தூக்கிப் பார்த்தான். என்னைவிட அது கனமாக இருக்கிறது என்று சொல்லி, அதைத் தூக்கிக் கொண்டு சிறிது தூரம் சென்றான். சென்றவன், சட்டென்று அதன் கழுத்தைப் பிடித்துத் திருகினான். விழி பிதுங்கி அது உடனேயே இறந்து விட்டது! பிறகு, அதன் தோலை உரித்தான். கறி சமைக்கக் கொண்டு போனான். அதைப் பார்த்து என் உடம்பு நடுநடுங்கியது. உடனே தப்பித்து ஓடி வர நினைத்தேன். ஆனாலும், அந்தச் சிறு பெண் உமாவை விட்டுப் பிரிய மனம் வரவில்லை. அவ்வளவுதூரம் அவள் என்னிடம் பிரியமாக இருந்தாள். நம்மை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று நினைத்துத் தொடர்ந்து அங்கேயே இருந்தேன்.
“இன்று அதிகாலையில், அந்த வீட்டுக்கு நாலைந்து பேர் ஒரு காரிலே வந்து இறங்கினார்கள். ‘இவர்களுக்கு இங்கே விருந்து நடக்குமே! விருந்து என்றால் நமக்கல்லவா ஆபத்து’ என்று நினைத்தேன். இப்படி நான் நினைத்த சிறிது நேரத்தில், உமா என்னிடம் ஓடி வந்தாள்; சுற்றும் முற்றும் பார்த்தாள். பிறகு என்னைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்; வேகமாக நடந்தாள்; வெகு தூரம் நடந்தாள். இந்தக் காடு தெரிந்ததும், உமா என்னைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தாள். உமாவுக்கு என்னை விட்டுப்பிரிய மனமே இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். ஆயினும், நான் உயிர் தப்பினால் போதும் என்று அவள் நினைத் திருக்கிறாள். என்னை உயிரோடு காப்பாற்றத்தான் அவள் இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறாள்!
“கலங்கிய கண்களுடன் அவள் இந்தக் காட்டுப் பக்கத்தைக் காட்டி, “ஒடு, ஒடு. உம். சீக்கிரம்” என்று கண் கலங்கக் கூறினாள். எனக்கு அந்த அன்பான உமாவைப் பிரிய மனம் இல்லை; உயிரைக் கொடுக்கவும் மனம் இல்லை. என்ன செய்வது? ஓடி வந்தேன். வரும்போதுதான் உன்னைப் பார்த்தேன்.”
முயல் கூறியதைக் கவனமாகக் கேட்ட குட்டி மான், “என்ன இது சிங்கம், புலிதான் நம்மை அடித்துத் தின்னும் என்று என் அம்மா சொல்லி யிருக்கிறாள். மனிதர்கள்கூடக் கொன்று தின்பார்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்டது.
“பின்னே, நான் பொய்யா சொல்கிறேன்? நம்மைப் போன்ற, பிராணிகளை அவர்களிலே பலர் பிரியமாகவும் வளர்ப்பார்கள், மிகப் பிரியமாகவும் சாப்பிடுவார்கள்.”
“அடடே, அப்படியா!” என்று கேட்டுவிட்டு ‘அம்மா பேச்சை மீறிச் சென்றிருந்தால், நம் உயிருக்கும் ஆபத்துத்தான்!’ என்று நினைத்துக் கொண்டே ஓட்டம் பிடித்தது குட்டி மான்.
எங்கே?
பணக்காரர் வீட்டைத் தேடியா? இல்லை, பாசமுள்ள அம்மாவைத் தேடித்தான்!
(படம்)
வெங்காயபுரம் ராஜாவுக்கு எப்போதுமே முன் கோபம் அதிகம். அதனாலே அவரை எல்லோருமே ‘முன் கோபி ராஜா’, ‘முன்கோபி ராஜா’ என்றே அழைப்பார்கள். அவருடைய உண்மையான பெயர் என்ன என்பது எவருக்குமே தெரியவில்லை. ஆகையால், நாமும் அவரை ‘முன் கோபி ராஜா’ என்றே அழைப்போமா? சரி.
முன்கோபம் மிக அதிகமாக இருந்தாலும், அவருக்கு மூளை மிகக் கொஞ்சமாகவே இருந்தது.
அவருக்கு ஒரு மந்திரி இருந்தார். அவர் பெயர் அறிவொளி. பெயருக்கு ஏற்றபடி நல்ல அறிவாளியாக இருந்தார்; மிகவும் நல்லவர்.
முன்கோபி ராஜா திடும்திடுமென்று ஏதாவது முடிவு செய்வார். அது கெட்ட முடிவு என்றால், பட்டென்று சொல்லிவிடுவார் அந்த மந்திரி.
உடனே முன்கோபி ராஜாவுக்கு மூக்குக்குமேல் கோபம் வந்துவிடும். “நான் ராஜாவா? நீர் ராஜாவா? நான் சொல்கிறபடிதான் நீர் நடக்க வேண்டும்” என்று சீறுவார்.
“நல்லது எது? கெட்டது எது? என்று எடுத்துச் சொல்லி, நல்லதைச் செய்யச் சொல்வதுதானே மந்திரியுடைய வேலை?” என்று மந்திரி சமாதானமாகச் சொல்வார்.
“ஆமாம், பெரிய்ய வேலை!” என்று அலட்சியமாய்க் கூறுவார் முன்கோபி ராஜா.
ஒருநாள் அரண்மனை ஜோசியரிடத்திலே “ஏனய்யா, வரவர நம்ம நாட்டிலே பஞ்சம் அதிகமாயிருக்கிறதே! இதற்கு என்ன செய்யலாம்?” என்று ராஜா கேட்டார்.
ஜோசியர் பஞ்சாங்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு ஏதேதோ கணக்கெல்லாம் போட்டுப் பார்த்தார். பிறகு, “நம்ம காளி கோயிலில் 51 சேவல்களைப் பலி கொடுத்தால் பஞ்சம் பஞ்சாய்ப் பறந்து விடும்” என்றார்.
அப்போது பக்கத்திலிருந்த மந்திரி சொன்னார்:
“அரசே, பஞ்சம் தீர வேண்டுமானால், விவசாயத்தைப் பெருக்க வேண்டும்; நெல் விளைச்சலுக்கு நல்ல உரம் போடவேண்டும். குளம் குட்டைகளிலே தண்ணீர் தங்குகிற மாதிரி ஆழமாக வெட்ட வேண்டும்...”
மந்திரி சொல்லி முடிக்கவில்லை.
“அட சட், வாயை மூடும். இல்லாத போனால், பிளாஸ்திரி போட்டு வாயை மூடிவிடுவேன்... எனக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டுமென்று. நீர் என்ன, என்னைவிட அறிவாளியா? உமது தலையும் என் தலையும் ஒரே அளவுதானே இருக்கின்றன. உமக்கு மட்டும் எப்படி அறிவு அதிகமாக இருக்க முடியும்?” என்று மிக மிகக் கோபமாகக் கேட்டார் ராஜா,
மந்திரி மிகவும் பொறுமைசாலிதான். இருந்தாலும் எத்தனை நாளைக்குத்தான் இப்படிப் பொறுத்துப் பொறுத்துப் பார்ப்பார்? பொறுமை இழந்த அவர், “அரசே, இனியும் நான் தங்களிடம் மந்திரியாக இருக்க விரும்பவில்லை. இன்றே என் பதவியை ராஜிநாமா செய்கிறேன்” என்று கூறி, அன்றைக்கே மந்திரி வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு வீடு போய்ச் சேர்ந்தார்.
“இவர் போனால் என்ன? இவரை விட மிக மிக மூளையுள்ளவரை விரைவிலே நியமித்துக் காட்டுகிறேன்” என்று அலட்சியமாகக் கூறினார் ராஜா.
பிறகு, வெகுநேரம் யோசனையில் மூழ்கினார். திடீரென்று, ‘அதுதான் சரி. பெரிய மண்டையிருக்கிற ஒருவரை மந்திரியாக்கிவிடலாம். மண்டை பெரிதாக இருந்தால், நிச்சயம் மூளையும் அதிகமாக இருக்கும். மூளை அதிகமாக இருந்தால் நிச்சயம் அறிவும் நிறைய இருக்கும்” என்ற முடிவுக்கு வந்தார்.
மறுநாள் நாடு முழுவதும் தண்டோரா போடச் சொன்னார்.
‘டமர டமர டம் டமர டமர டம். இதனால்
அறிவிப்பது என்னவென்றால், யார் யாருக்கு
மண்டை பெரிதாயிருக்கிறதோ, அவர்களெல்லாம்
வருகிற வெள்ளிக்கிழமை 10 மணிக்கு
அரண்மனை மண்டபத்திற்கு வந்துவிட
வேண்டும். அவர்களிலே ஒருவரை நம் ராஜா,
மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப் போகிறார்...
தேர்ந்தெடுக்கப் போகிறார்... டும், டும், டும்;
டும், டும், டும்.’
இந்த அறிவிப்பைக் கேட்டதும், தலை பெரிதாயிருக்கிறவர்களெல்லாம் அரண்மனை நோக்கி வெள்ளிக்கிழமை காலையில் வந்து சேர்ந்தார்கள். மொத்தம் 43 பேர் இருந்தார்கள்!
ராஜா நிறையச் சணல் கயிறு கொண்டு வரச் சொன்னார். ஒவ்வொருவர் தலையையும் சணல் கயிற்றால் சுற்றளவு பார்த்து அந்த அளவுக்குச் சனல் கயிற்றைத் தனித்தனியாக வெட்ட வேண்டு மென்பது அவரது திட்டம்!
அப்போது அவர் அருகிலிருந்த மெய்க்காப்பாளன், “மகாராஜா இஞ்ச் டேப்பும், தாளும், பென்சிலும் கொண்டு வரட்டுமா? அளவைப் பார்த்துத் தாளிலே குறித்துக் கொள்ளலாம்” எனறான.
உடனே ராஜாவுக்குச் ‘சுர்’னு கோபம் வந்து விட்டது. “நீராஜாவா? நான் ராஜாவா? எனக்கா புத்தி சொல்கிறாய்! அதிகப் பிரசங்கி. இன்றிலிருந்து நீ என் மெய்க்காப்பாளன் இல்லை! வாயில் காப்பாளன்தான்! நேராக அரண்மனை வாசலுக்குப் போய் அங்கே நில்!” என்று அவனை அடித்து விரட்டினார்.
அப்புறம் ஒவ்வொருவர் தலையையும் சணலால் அளந்து அந்த அளவுக்குச் சணலைத் தனித் தனியாக வெட்டினார். வெட்டிய துண்டுகளை அங்கேயிருந்த ஒரு நீண்ட மேஜைமேல் வைத்தார். பிறகு, எது மிகவும் நீளமானது என்று பார்த்தார். எல்லாவற்றையும்விட ஒன்று மிக நீளமாக இருந்தது.
“ஆ! இந்த அளவு தலைக்காரர்தான் இனி என்னுடைய மந்திரி” என்று குதித்தார். ஆனால் அந்த அளவு யாருடையது? அதுதான் தெரியவில்லை. அதில்தான் எந்த அடையாளமும் இல்லையே! அதனால் அவர் அந்தச் சணலை எடுத்துப் போய், ஒவ்வொருவர் தலையிலேயும் வைத்து வைத்துப் பார்த்தார். 41-வது ஆளுக்குத்தான் அது சரியாக இருந்தது. உடனே அவரையே மந்திரி யாக்கிவிட்டார். மற்றவர்களையெல்லாம் திருப்பி அனுப்பி விட்டார்!
அந்த மண்டை பருத்த மந்திரியிடம், “மந்திரி, நம் நாட்டு மக்களிலே பெரும்பாலோர் எலும்பும் தோலுமாக இருக்கிறார்கள். அவர்களெல்லாம் நன்றாகக் கொழு கொழு என்று ஆக வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்? உங்களுக்குத்தான் அதிகமான மூளை இருக்கிறதே! அதை உபயோகித்து ஒரு நல்ல யோசனையாகக் கூறுங்கள். அதன்படி செய்யலாம்” என்றார் ராஜா. உடனே அந்த மண்டை பருத்த மந்திரி சிறிதுகூடத் தயங்கவில்லை. “இது ரொம்பச் சுலபங்க. நல்லாக் கொழு கொழுன்னு இருக்கிறவங்களையெல்லாம் தண்டோராப் போட்டு வரவழைப்போம். அவர்களிலே ரொம்பக் கொழு கொழுன்னு இருக்கிற சில பேரைத் தேர்ந்தெடுப்போம். அவங்க எப்படிக் கொழு கொழுன்னு ஆனாங்க, அப்படி ஆகணும்னா என்ன என்ன செய்யனும்னு அவங்க ஒருத்தரை ஒருத்தர் கலந்து ஆலோசிச்சு முடிவு சொல்லட்டும்” என்றார்.
“அப்படியா! சரி, இதோ இன்றைக்கே தண்டோராப் போடச் சொல்கிறேன்” என்றார் முன்கோபி ராஜா.
அந்த நாட்டிலேதான் பஞ்சமாயிற்றே! தொந்தி பருத்த ஆள் எங்கே கிடைப்பார்கள்? இருந்தாலும், இந்தச் செய்தி அண்டை அயலில் உள்ள நாடுகளுக்கு எட்டவே, குறிப்பிட்ட நாளில் நன்றாகத் தொந்தி பருத்த 17 பேர் நடக்க முடியாமல் நடந்து அரண்மனைக்கு வந்தார்கள்.
“மந்திரி, சணல் கயிறு எங்கே? கொண்டு வரச் சொல்லுங்கள். இவர்களது தொந்திகளை அளந்து பார்ப்போம்” என்றார் ராஜா.
“அரசே, அதெல்லாம் வேண்டாம். இதோ இப்படிச் செய்தே தேர்ந்தெடுத்து விடலாம்” என்று சொல்லி விட்டு அந்த மண்டை பருத்த மந்திரி என்ன செய்தார் தெரியுமா?
முதலிலே ஒருவரின் பின்புறமாகப் போய் நின்றார். தம் இரு கைகளாலும் அந்த மனிதரின் தொந்தியை வளைத்துப் பிடித்தார். மந்திரியுடைய முன் கைகள் இரண்டும் ஒன்றை ஒன்று தொட்டு விட்டன.
உடனே அவரை இடப்பக்கமாக நிற்கச் சொன்னார்.
இன்னொருவரின் தொந்தியை வளைத்துப் பிடித்தார். அவருடைய முன் கைகள் இரண்டும் ஒன்றை ஒன்று தொடவில்லை.
உடனே அவரை வலப்பக்கமாக நிற்க வைத்தார். இப்படி ஒவ்வொருவராய்ப் பார்த்தார். இடப்பக்கத்தில் 12 சின்னத் தொந்திக்காரர்களும், வலப்பக்கத்திலே 5 பெரிய தொந்திக்காரர்களும் நின்றார்கள்.
பெரிய தொந்திக்காரர் ஐவரையும் தேர்ந்தெடுத்து அரண்மனையிலேயே ஒரு மண்டபத்தில் தங்கச் சொன்னார் முன்கோபி ராஜா. எப்படி நாட்டிலே உள்ள மக்கள் அனைவரையும் கொழுகொழு வென்று ஆக்குவது என அவர்கள் கலந்து பேசி விரைவிலே தக்க ஆலோசனைகள் கூறவேண்டும் என்று உத்தரவு போட்டார்.
பெரிய தொந்திக்காரர்கள் ஐவரும் நன்றாகச் சாப்பிடுவார்கள், சாப்பிட்டவுடனே தூங்குவார்கள்; துங்கி எழுந்தவுடனே சாப்பிடுவார்கள். இப்படியே காலங்கடத்தி வந்தார்கள். முன்கோபி ராஜா ஆள் அனுப்பிக் கேட்கிற போதெல்லாம், கலந்து பேசிச் சீக்கிரம் முடிவு செய்வதாகத் தகவல் அனுப்பினார்கள்
இப்படி ஒரு வாரம் ஓடிவிட்டது. ஒரு நாள் ராஜா அந்தப்புரத்திலே இருக்கிறபோது, அரண்மனைத் தலைமைச் சமையல்காரர் கையில் கரண்டியுடன் ஓடிவந்து,“மகாராஜா, மகாராஜா, அரிசி, பருப்பெல்லாம் தீர்ந்து போச்சு. ஒரு மாசத்துக்கு வாங்கி வச்சதை ஒரே வாரத்திலே அந்த அஞ்சு பேரும் தீர்த்துட்டாங்க மகாராஜா” என்று முறையிட்டார்.
உடனே ராஜாவுக்கு அபாரமான கோபம் வந்து விட்டது. அதைவிட அவருடைய பட்டத்து அரசிக்குக் கோபம் பீறிட்டது. “நாட்டிலேதான் பஞ்சம் என்றால், நம் அரண்மனையிலுமா பஞ்சம்?” என்று அலறினாள். . ராஜா, ராணியைச் சமாதானப் படுத்திவிட்டு நேராக அந்த ஐவரும் இருந்த மண்டபத்திற்கு வேக வேகமாகச் சென்றார். குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த அவர்களை மிகுந்த சிரமப்பட்டு எழுப்பி, “என்ன இது! இப்படி ஒரு வாரமாக வயிறு முட்டத் தின்றுவிட்டுத் தூங்குகிறீர்களே! என்ன முடிவு செய்தீர்கள்?” என்று ஆவேசமாகக் கேட்டார்.
அவர்கள் எழ முடியாமல் எழுந்தார்கள். நடுநடுங்கியபடி நின்றார்கள். என்ன சொல்வதென்று புரியாமல் விழி விழி என்று விழித்தார்கள்.ராஜாவின் கோபம் மேலும் அதிகமாகிவிட்டது.
“தண்ட சோற்றுத் தடியன்கள். உங்கள் தொந்திகளைக் கலக்குகிறேன் பாருங்கள்” என்று கூறிக் கொண்டே முன்கோபி ராஜா இரண்டு கைகளில் உள்ள விரல்களையும் மடக்கிக் கொண்டு, இருவரின் அருகிலே சென்றார். உடனே அவர்கள், “ஐயோ! அப்பா” என்று அலறிக் கொண்டு ஓட முடியாமல் ஓடினார்கள். அவர்களைத் தொடர்ந்து மற்ற மூவரும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடினார்கள்.
“தொலைந்தார்கள். இனியும் இவர்களை வைத்துச் சோறு போட்டால், பஞ்சம், கடும் பஞ்ச மாகிவிடும்” என்று ஆறுதல் அடைந்தார் ராஜா.
உடனே அவர் மண்டை பருத்த மந்திரியை அழைத்து வரச் சொன்னார்.
“ஓய், உமது யோசனையைக் கேட்டால் உருப்பட்டாற் போலத்தான். பஞ்சம் போக வழி கேட்டால், பஞ்சம் அதிகமாக வழி சொல்லிவிட்டீரே! அந்த ஐந்து தூங்குமூஞ்சித் தடியன்களும் சேர்ந்து அரண்மனைச் சமையல் சாமான்களையே ஏப்பம் விட்டு விட்டார்கள். அவர்களிடமிருந்து ஒரு யோச னையும் வரவில்லை. நான் மிரட்டிக் கேட்டதும் அவர்கள் திருட்டு விழி விழித்தபடி திரும்பி ஓடி விட்டார்கள். இப்படிப்பட்ட யோசனையைச் சொல்லவா உம்மை மந்திரி ஆக்கினேன்! உமது மண்டைதான் பெரிதாயிருக்கிறது. உள்ளே இருப்பதெல்லாம் களிமண். வெறும் களிமண்!” என்று கூறிக் கொண்டே, அந்த மந்திரியின் மண்டையை இரண்டு கைகளாலும் பிடித்துப் பலங்கொண்ட மட்டும் அமுக்கினார் முன்கோபி ராஜா.
“ஐயோ! எனக்கு என்னங்க தெரியும்? பிச்சை எடுத்துக்கிட்டிருந்த என்னை நீங்கதானே மந்திரி
யாகத் தேர்ந்தெடுத்தீங்க? இப்போ என்னைச் சும்மா விட்டிடுங்கோ. எனக்கு மந்திரி பதவியும் வேண்டாம்; மண்ணாங்கட்டியும் வேண்டாம்” என்று அழாக் குறையாகக் கெஞ்சினார் அந்த மனிதர்.
அப்புறம்...?
அவர் ஓடிப் போய்விட்டார். முன்கோபி ராஜாவுக்குப் புத்தி வந்தது. பழைய மந்திரி அறிவொளியை அழைத்து வரச் சொல்லி அவரையே மீண்டும் மந்திரியாக்கிவிட்டார்.
அப்பொழுது மந்திரி அறிவொளி சொன்னார்:
“அரசே, கோபம் குடியைக் கெடுக்கும் என்பார்கள். சாதாரண ஒரு மனிதனுடைய கோபம் அவனுடைய மனைவி, மக்கள், அக்கம் பக்கத்திலுள்ள வர்களைத் தான் கெடுக்கும். ஆனால், தாங்களோ ஒரு ராஜா. இந்த ராஜ்யத்திலுள்ள எல்லாக் குடி மக்களும் உங்கள் குடும்பம் போல். ஆகையால், கோபம் கூடாது” என்றார்.
“மந்திரி, இனி உம்முடைய யோசனையைக் கேட்டுத்தான் எதுவும் செய்வேன்” என்று கூறி மந்திரியைக் கட்டிப்பிடித்து, அவர் முதுகிலே தட்டிக் கொடுத்தார். அன்று முதல் அவருடைய முன் கோபமும் மெல்ல மெல்லப்பறக்கத் தொடங்கியது!
பொன்னனின் சுதந்திரம்
பொன்னன் அப்போது ஐந்தாவது வகுப்பிலே படித்துக் கொண்டிருந்தான்.
வழக்கமாக, பொன்னன் காலையில் 6 மணிக்கு எழுந்திருப்பான். ஆனால் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி காலையில் எட்டு மணி ஆகியும் எழுந்திருக்கவில்லை.
அவனுக்கு ஏதாவது காய்ச்சலா? இல்லை, தலை வலியா? அதெல்லாம் இல்லை. நன்றாகப் போர் வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.
அவன் அம்மா அவனை நாலைந்து தடவைகள் எழுப்பிப் பார்த்தும் பயனில்லை.
“ஒ பொன்னா, எழுந்திருடா. ஊரெல்லாம் சுதந்தர தினம் கொண்டாடுது. எதிர் வீட்டு இனியன், பக்கத்து வீட்டுப் பழனி எல்லாரும் குளிச்சு முழுகி, அழகாய் உடை உடுத்தி, கொடி ஏத்துகிறதிலே கலந்துக்கப் போயிட்டாங்க. நீ மட்டும் இப்படி எட்டு மணி வரை தூங்கிறியே!” என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்.
“சும்மா போம்மா. இன்னிக்கு சுதந்தர தினம். சுதந்தர தினத்திலே சுகமாகத் தூங்கக்கூட எனக்குச் சுதந்தரம் இல்லையா? அதுக்குத்தானே ஸ்கூலிலே லீவு விட்டிருக்காங்க?” என்று சொல்லி விட்டுப் போர்வையை நன்றாக இழுத்து முகத்தையும் மூடிக் கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தான்.
“சரி நல்லாத் தூங்கு. ஒரு வழியா நாளைக் காலையிலே எழுந்திருச்சு பள்ளிக்கூடம் போனாப் போதும்.”
அம்மா அலுப்புடன் கூறிவிட்டு, சமையலைக் கவனிக்கப் போய்விட்டாள்.
பொன்னனின் அப்பா அதிகாலையில் குளித்து விட்டு, அவருடைய அலுவலகத்தில் கொடி ஏற்றப் போய்விட்டார். அவர் வீட்டிலே இருந்தால், பொன்னனை இவ்வளவு நேரத்துக்குத் தூங்க விட்டிருப்பாரா?
சரியாக ‘டாண், டாண்’ என்று மணிக் கூண்டுக் கடிகாரத்திலே மணி பத்து அடித்தது. அதைத் தொடர்ந்து ‘தொப்’, ‘தொப்’பென்று நாலைந்து அடிகள் தொடர்ந்து விழுகிற சத்தமும் கேட்டது.
“டேய் பொன்னா, மணி பத்தடிச்சுடுத்து. இன்னுமா தூக்கம்? ம்... எழுந்திருடா” என்று சொல்லி, பொன்னனின் அப்பா அவனுடைய முதுகிலே அடித்த சத்தம்தான் அது!
‘சுதந்தர தினமாம் சுதந்தர தினம். இந்த வீட்டிலே தூங்கிறதுக்குக் கூட சுதந்தரம் இல்லை’ என்று முனு முணுத்தபடி, முதுகைத் தடவிக் கொண்டு, முகத்தைக் கோண வைத்துக் கொண்டு எழுந்தான் பொன்னன். பாயைச் சுருட்டி மூலையிலே வைத்தான். அடுக்களையை நோக்கி வேகமாக நடந்தான்.
“அம்மா, அம்மா, எனக்கு ரொம்பப் பசிக்குது. மணி பத்தாயிடுச்சு. பலகாரம் தாம்மா” என்று அவசரப் படுத்தினான்.
“பலகாரம் தாரேன். பல் துலக்கிட்டு வா.”
“என்னம்மா இது? ஆடு மாடெல்லாம் பல் துலக்கிட்டா சாப்பிடுது?”
“அப்படியானால், நீ உடனே தோட்டத்துக்குப் போ.”
"தோட்டத்துக்கா?”
“ஆமா, அங்கே நிறையப் புல் இருக்கு இலை தழையெல்லாம் இருக்கு. பல் துலக்காமே, ஆடு மாடு மாதிரி சாப்பிடலாம்.”
பொன்னனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
“சேச்சே! பல் துலக்காம பலகாரம் சாப்பிடக் கூடாதாம். சுதந்தர தினத்திலே சுதந்தரமா எதுவும் செய்ய முடியல்லியே! அப்புறம் எதுக்கு இதை சுதந்தர தினம்கிறது? இன்னிக்குக்கூட என்னை இப்படி அம்மாவும், அப்பாவும் அடிமை போலே நடத்துறாங்களே!”
மிகுந்த சலிப்போடு, பல்லைத் துலக்கினான்; பல காரம் சாப்பிட்டான், பிறகு ஊருக்குள் நடந்து சென்றான். வழியிலே ஒரு நாயைப் பார்த்தான். உடனே தெரு ஓரமாகக் கிடந்த ஒரு கல்லை எடுத்தான்; நாயைக் குறி பார்த்து எறிந்தான். நாயின் காலிலே கல் பட்டுவிட்டது. உடனே, அந்த நாய் ‘வள்’, ‘வள்’ என்று குரைத்துக் கொண்டே பொன்னன் மேலே பாய்வதற்கு ஓடி வந்தது.
“ஐயோ! அப்பா” என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினான் பொன்னன். பக்கத்துத் தெரு முனையிலிருந்த ஒரு வீட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டான்.
‘சே, என்ன கதந்தரம் ஒரு நாய் மேலே கல் எறியக்கூட சுதந்தரம் இல்லையே!’ என்று அலுத்துக் கொண்டான்.
அரை மணி நேரம் ஆனது. தெருவிலே அந்த நாயினுடைய தலை தெரிகிறதா என்று சுவர் ஓரமாக நின்று எட்டி எட்டிப் பார்த்தான். தெரியவில்லை. மெதுவாக வெளியிலே வந்தான்.
கடைத் தெரு வழியாக நடந்து போனான். அப்போது, அவன் பின்னாலே ஒரு கார் வந்ததது.
‘பாம், பாம்... பாம், பாம்’ என்று ஒலி எழுப்பினார் அந்தக் கார் டிரைவர். பொன்னன் நடுத் தெருவிலே நடந்து போய்க் கொண்டிருந்தான். காருக்கு வழி விடவில்லை. டிரைவருக்கு இந்தப் பக்கமோ, அந்தப் பக்கமோ ஒதுங்கிப் போகவும் வழியில்லை. திரும்பத் திரும்ப ஒலி எழுப்பினார். பொன்னன் கவலைப்படாமல், மிகவும் கம்பீரமாக நடுத்தெருவில் மெதுவாக நடந்து போய்க் கொண்டிருந்தான். அந்தக் கார் மெதுவாக ஊர்ந்து வந்ததால், அதற்குப் பின்னாலே வந்த கார்களும் ஊர்ந்தே வந்தன. இதனால், கடைத்தெருவில் நெருக்கடி ஏற்பட்டது.
“ஏ பையா, என்ன, வீட்டிலே சொல்லிட்டு வந்திட் டியா? எருமை மாட்டை விட மெதுவா, நடுத் தெருவில் நடக்கிறியே!”
டிரைவர் என்ன சொல்லியும் பொன்னன் ஒதுங்க வில்லை. “இன்றைக்கு சுதந்தர தினம். என் விருப்பம் போல் சுதந்தரமா நடுத் தெருவிலே நடப்பேன்; நகராமலே நிற்பேன். என்னை யாரு கேட்கிறது?” என்று சொல்லிவிட்டு, வேண்டுமென்றே மிக மிக மெதுவாக நடந்தான்; இல்லை, நகர்ந்தான்.
பொன்னனைப் பயமுறுத்துவதற்காக அந்த டிரைவர், காரை அவன் அருகிலே கொண்டுபோய், அவன் முதுகிலே மெல்ல ஓர் இடி இடித்தார். முதுகிலே கார் இடித்ததும், பொன்னன் பயந்து போனான். அப்படியே ஒரு துள்ளுத்துள்ளிப் பக்கத்திலே தாவினான். அப்போது அவன் கால் சறுக்கிக் கீழே விழுந்துவிட்டான். விழுந்த இடத்திலே கிடந்த கல்லிலே அடிபட்டு இரத்தம் குபுகுபுவென்று வெளியே வந்தது.
உடனே, கூட்டம் கூடிவிட்டது.
“நல்லா வேணும் இந்தப் பையனுக்கு. எவ்வளவு நேரமா ஹாரன் அடிச்சாரு! வழியை மறைச்சுக் கிட்டு நகரவே இல்லியே” என்று அங்கேயிருந்த கடைக்காரர்கள் பேசிக்கொண்டார்கள்.
அடிபட்ட பொன்னனைக் காரிலே தூக்கிப் போட் டுக்கொண்டு, அந்தக் கார் டிரைவரும் அதன் உள்ளேயிருந்த இருவரும் பக்கத்திலேயிருந்த ஓர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள்.
“நல்லவேளை, தலையிலே ஒண்ணும் அடியில்லை. நெத்தியிலேதான் கல் குத்தியிருக்கு” என்று சொல்லி டாக்டர் ஊசி போட்டு, மருந்து கொடுத்தார். தலையைச் சுற்றி ஒரு கட்டும் போட்டு விட்டார்.
வீட்டிலே பொன்னனைக் கொண்டு வந்து சேர்த்ததும், அவன் அம்மாவும், அப்பாவும் அலறித் துடித்தார்கள். நடந்ததைக் கேட்டு, “நல்ல நாளிலே இப்படியா நடக்கணும்” என்று வேதனை அடைந்தார்கள்.
அன்று மாலை பொன்னனுடைய அப்பா அவன் அருகிலே வந்து அமர்ந்து கொண்டு, “பொன்னா, இப்ப வலி எப்படி இருக்குது” என்று கேட்டார்.
“வலி தெரியல்லே. நல்லவேளை நெத்தியிலே பட்டுது. தலையிலே பட்டிருந்தால்...?”
“ஆபத்துத்தான்... நல்ல காலம். ஆனாலும் பொன்னா, நீ சுதந்தரம்னா என்ன அர்த்தம்னு சரியாப் புரிஞ்சுக்கல்லே. சுதந்தரநாளிலே ஒவ்வொருத்தரும், தான் நினைக்கிறதைச் செய்தால் என்ன ஆகும்? நீ உன் இஷ்டம் போலே நாயைக் கல்லாலே அடிச்சாய். அதே மாதிரி இன்னொருத்தர் தடியை எடுத்துக்கிட்டு வந்து, தெருவிலே சும்மா போகிற உன்னை அடிக்கிறார்னு வச்சுக்கோ, அதுக்குப் பேர் சுதந்தரமா? கடைத் தெருவிலே நீ ஒரு காரை வேகமாகப் போக விடாமத் தடுத்தியே, அதனாலே எத்தனை கார்கள், வண்டிகளுக்குத் தொல்லை! அதிலே இருந்தவங்களெல்லாம் எவ்வளவு சங்கடப் பட்டிருப்பாங்க? எத்தனை பேரு வேலை கெட்டுப் போயிருக்கும்? இப்படிச் செய்யறதுதான் சுதந்தரமா?”
“நான் செய்தது தப்புத்தாம்பா.”
“சுதந்தரம்னா என்னன்னு தலைவருங்க சொல்லி யிருக்காங்க. விளக்கமாச் சொல்றேன். கேள்:
சோம்பி யிருப்பது சுதந்தரமில்லை
தொல்லை கொடுப்பதும் சுதந்தரமில்லை
வீம்பு செய்வதும் சுதந்தரமில்லை
வேறே எதுதான் சுதந்தரமாகும்?
மற்றவங்களை மதிக்கிறது சுதந்தரம். பேசுகிற பேச்சிலே, செய்கிற செயலிலே சுத்தமாயிருக்கிறது சுதந்தரம். உரிமைகள், கடமைகள்னு சொல்றோமே, அந்த ரெண்டையும் நல்லா உணர்ந்து நடந்தால், அதுதான் சுதந்தரம். பெரியவனானதும் உனக்கு இதெல்லாம் நல்லாப் புரியும்...”
அப்பா, சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் பொன்னன்,“இப்பவே எனக்கு நல்லாப் புரியுதப்பா. இனிமேல் வீண் வம்புக்குப் போகாமே நல்லதையே செய்கிறேனப்பா" என்று அப்பாவின் இரு கைகளை யும் பிடித்துக்கொண்டு கண் கலங்கக் கூறிக் கொண்டே மெல்ல எழுந்தான்.
“பொன்னா, பேசாமப் படுத்துக்கோ. நாளைக் காலையிலே பூரண குணமாயிடும். அப்புறம் எழுந்து நடக்கலாம், ஓடலாம்; விளையாடலாம்” என்றாள் அம்மா.
பொன்னன் எதுவும் பேசாமல், மெல்ல நடந்து, அருகில் இருந்த மகாத்மா காந்தி படத்தின் எதிரே சென்றான். இரு கைகளையும் சேர்த்து, கண்களை மூடி வணங்கினான்.
மகனின் மனம் திருந்தியதைக் கண்டு அம்மாவும் அப்பாவும் ஆனந்தம் அடைந்தார்கள்.
உண்டி வில்
சோமு படிப்பிலே கெட்டிக்காரன். குணத்திலேயும் தங்கக் கம்பியாகத் தான் முன்பு இருந்தான். ஆனால், இப்போது?
சோமுவின் தெருக்கோடியில் வாசு என்று ஒரு பையன். அவன் தினமும் பள்ளிக்கூடத் திற்குப் புறப்படுவான். ஆனால், அங்கு போய்ச் சேர மாட்டான். வழியில் எங்காவது ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்குவான்; அல்லது, பள்ளிக் கூடம் போகாத பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவான். ஆனால், சாயங்காலம் பள்ளி விடும் நேரத்திற்குச் சரியாக வீட்டுக்கு வந்து விடுவான்! இப்படி எத்தனை நாட்களுக்குத்தான் ஏமாற்ற முடியும்? அவன் அப்பாவுக்கு இது தெரிந்ததும், அவர் அவனை அடி அடி என்று அடித்தார். அடி அதிகமாக ஆக அவன் பள்ளிக்கூடம் போவதையே நிறுத்திவிட்டான், ஊர் சுற்றியானான்.
அந்த வாசு, சோமுவை எப்படியோ சிநேகம் பிடித்துவிட்டான். மாலையில் மணி ஐந்தடித்தால் போதும்; அவன் சோமு வீட்டுக்குச் சிறிது துரத்திலுள்ள அரச மரத்தடியில் வந்து நிற்பான். சோமு அவன் நிற்பதைப் பார்த்ததும், வீட்டிலிருந்து மெதுவாக நழுவி அவன் அருகிலே போவான். இருவரும் ஊருக்குக் கடைசியிலுள்ள மாந்தோப்புக்குப் போய்விடுவார்கள்.
அங்கு போய் மாம்பழங்களைத் திருடித்தின்பார்கள். அத்துடன் அந்தப் பக்கமாகப் பறந்து வரும் பறவைகளையும் குறி பார்த்து அடிப்பான் வாசு. சும்மா அடிக்க மாட்டான். உண்டிவில்லால் அடிப்பான். ஒரு நாளுக்கு ஒன்றிரண்டு பறவைகளையாவது அடிக்காமல் வீடு திரும்பமாட்டான். இந்த வித்தையை அவன் சோமுவுக்கும் கற்றுக் கொடுக்காமல் இருப்பானா? சோமுவுக்கும், ஓர் உண்டிவில் தயாரித்துக் கொடுத்து, அவனையும் நன்றாகப் பழக்கிவிட்டான்.
காக்கை, குருவி, மைனா, கிளி, கொக்கு இவைகளில் தினமும் இரண்டு மூன்று பறவைகளையாவது அடிக்காமல் அவர்கள் வீடு திரும்ப மாட்டார்கள். இது அவர்களுக்குக் கொண்டாட்டம். ஆனால், பறவைகளுக்கோ? திண்டாட்டம்!
இது எப்படியோ சோமுவின் அப்பாவுக்குத் தெரிந்து விட்டது. "சோமு, நீ நல்லாப் படிக்கிறாய். படிப்பு மட்டும் போதுமா? நல்ல குணமும் வேண்டாமா? அந்த வாசுவோ கெட்ட பையன். படிப்பிலே அக்கறையில்லாதவன். ஊர் சுற்றி. அவனோடே சேர்ந்து பறவைகளை அடிக்கலாமா? உனக்கு அந்தப் பறவைகள் ஒரு கெடுதலும் செய்யாத போது, அவைகளுக்குத் தொல்லை கொடுக்க லாமா? இனி, வாசுவோடு சேராதே. பறவைகளை அடிக்காதே" என்று அடிக்கடி புத்திமதி கூறுவார். அப்பா பேச்சைக் கேட்ட சோமு, அடுத்த இரண்டு மூன்று நாட்கள் நல்ல பிள்ளையாக நடந்து கொள்வான்; அப்புறம்?
வாசுவின் பேச்சில் மயங்கி, அவனுடன் மாந்தோப்புக்கு உண்டிவில்லுடன் புறப்பட்டுவிடுவான்!
கோடை விடுமுறை வந்தது. சோமு அந்தக் கிராமத்திலே இருந்தால் கெட்டுப் போய்விடுவான் என்று அவன் அப்பா பயந்தார். ஆகையால், விடு முறையைக் கழிக்கச் சென்னையிலுள்ள தம்முடைய தம்பி வீட்டுக்கு அவனை அனுப்பி வைத்தார்.
சோமுவின் சித்தப்பா வீடு சென்னை அண்ணா நகரில் இருந்தது. நல்ல பெரிய வீடு. எல்லா வசதிகளும் அங்கே உண்டு.
சோமு சென்னை வருவதை முன்னதாகவே எழுதியிருந்ததால், அவன் சித்தப்பா ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து, அவனை வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டின் முன்புறம் இருந்த பெரிய வரவேற்பு அறையில் அவனை உட்கார வைத்தார். உடனே, அவனுடைய சித்தி வந்து, அவனை வரவேற்று, காப்பி கொடுத்தாள்.
சோமு காப்பி சாப்பிட்டதும் உடம்பு வியர்த்தது. மேலே நிமிர்ந்து பார்த்தான். அங்கிருந்த மின் விசிறி யைக் காணோம்! “சித்தப்பா, இந்த ஹாலிலே ஒரு ஃபேன் இருக்குமே! எங்கே காணோம்?” என்று கேட்டான்.
“நீ குளிச்சு சாப்பிடு. அப்புறம் சொல்றேன்” என்றார்.
சோமு குளித்து, சாப்பிட்டு முடிந்ததும், மின் விசிறியைப் பற்றி மீண்டும் கேட்டான்.
சித்தப்பா ஒரு பெருமூச்சுடன் சொல்ல ஆரம்பித்தார்.
“அதோ பார். அந்த முருகன் படத்துக்குப் பின்னாலே ஒரு குருவி போன மாதம் கூடு கட்டியிருந்துச்சு. கொஞ்ச நாளிலே, அது முட்டையிட்டுக் குஞ்சு பொரிச்சுது. குஞ்சுகளுக்கு அது தினமும் இரை கொண்டு வந்து கொடுக்கும்.
ஒருநாள் நானும் உன் சித்தியும் இந்த ஹாலிலே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது
மேலே ‘டம்’னு ஒரு சத்தம் கேட்டது. மறுவிநாடி கீழே தொப்னு ஓர் ஓசை கேட்டது.
என்னன்னு பார்த்தோம். குஞ்சுகளுக்கு இரை எடுத்துக்கிட்டு வந்த அம்மாக் குருவிதான் மேலே சுழன்று கொண்டிருந்த விசிறியிலே அடிபட்டுக் கீழே விழுந்து கிடந்துச்சு! அதைப் பார்த்து நாங்கள் திடுக்கிட்டோம். உடனே நான் ஓடிப்போய் அதைக் கையிலே எடுத்தேன். உற்றுப் பார்த்தோம். கொஞ்சம் உயிர் இருக்கிற மாதிரி தெரிஞ்சுது. உன் சித்தி உடனே ஓடிப் போய்த் தண்ணீர் கொண்டு வந்து, அதன் வாயிலே ஊத்தினாள்; முகத்திலேயும் தெளித்தாள், என்ன செய்தும் அது பிழைக்கல்லே. செத்துப் போச்சு! அப்போதே நான் விசிறியை நிறுத்திவிட்டேன்.
தாய்ப் பறவையைக் காணாமே, குஞ்சுகளெல்லாம் அன்னிக்கு இரவு முழுவதும் ‘கீச் கீச்’னு கத்திக்கிட்டே இருந்தன. அது பரிதாபமாய்க்கத்துறதைக் கேட்கக் கேட்க எங்களுக்கு ரொம்ப வருத்தமாயிருந்துச்சு.
‘நம்ம ஃபேன் அடிச்சுத்தானே தாய்ப் பறவை செத்துப் போச்சு? இந்தப் பாவமெல்லாம் நமக்குத் தானே’ன்னு துக்கப்பட்டோம். அன்றைக்கு நானும் சாப்பிடல்லே. உன் சித்தியும் சாப்பிடல்லே. ராத்திரி வெகு நேரம் விழிச்சிருந்தோம். அப்புறம் அப்படியே ஹாலிலே தூங்கிட்டோம்.
அதிகாலையிலே முழிச்சுப் பார்த்தோம். சத்தத் தைக் கானோம். குருவிக் குஞ்சுகள் கத்திக் கத்தி ஓய்ந்து போச்சோன்னு நினைச்சோம்.
அப்போ, ஒரு பெரிய பறவை படத்துக்குப்பின்னா லேயிருந்து பறந்து வந்ததைப் பார்த்தோம். குஞ்சுகள் கத்துறதைக் கேட்டு, வேறே ஒரு தாய்ப் பறவை இரை கொண்டு வந்து கொடுத்திருக்கணும்னு நினைச்சோம். இரையைத்தான் அது கொடுத்திச்சு: செத்துப் போன அம்மாவைக் கொடுக்க முடியுமா?
தினமும் அந்தப் பெரிய பறவை வந்து குஞ்சுகளுக்கு இரை கொடுத்திச்சு. கொஞ்ச நாளிலே குஞ்சுகளுக்கு இறக்கை முளைச்சுப் பறந்து போயிடுச்சு,
அம்மாக் குருவி செத்ததிலேயிருந்து நாங்க ஃபேனைப் போடாமலே இருந்தோம். அந்தக் குஞ்சுகள் பறந்து போனதுக்கப்புறம், வேறொரு குருவி அடிக்கடி வந்து அதே படத்துக்குப் பின்னாலே உட்காருது. அதுவும் அங்கே முட்டை யிட்டுக் குஞ்சு பொரிக்கப் போகுதுன்னு தெரிஞ்சுக்கிட்டோம்.
நாங்க ஃபேனைப் போட மாட்டோம். ஆனால், யாரும் புதுசா வருகிறவங்க ஃபேனைப் போட்டுட்டால்...? இந்தக் குருவிக்கும் ஆபத்தாயிடுமே! அதுனாலே ஃபேனைக் கழற்றி உள் அறைக் குள்ளே வச்சுட்டோம்.”
சித்தப்பா சொன்னதைக் கேட்கக் கேட்க, சோமுவுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. ‘தாய்ப் பறவை இறந்ததும், அந்தக் குஞ்சுகளெல்லாம் என்ன பாடுபட்டிருக்கும்? எப்படிப் பசியாலே, துடி துடிச்சிருக்கும்? அதுகளுக்காக நம்ம சித்தப்பாவும் சித்தியும் எவ்வளவு கவலைப்பட்டிருக்காங்க! அடுத்த குருவி அடிபடக்கூடாதேன்னு ஃபேனையே கழற்றி வச்சிட்டாங்களே!’ என்று நினைத்துப் பார்த்தான் கண்கள் கலங்கின.
சித்தப்பாவின் வீட்டிலே இருந்த இருபது நாட்களும் சோமு, தான் செய்த தப்பை நினைத்து நினைத்து வருத்தப்பட்டான்.
ஊருக்குத் திரும்பினானோ இல்லையோ, முதல் வேலையாக அந்த உண்டி வில்லை எடுத்துக் கொண்டு நேராக வாசு வீட்டுக்கு எதிரிலேயே போய் நின்றான். சோமுவைக் கண்டதும், வாசு அவனைக் குதுகலமாக வரவேற்றான்.
“சீ, பன்றியோடு சேர்ந்த கன்றும் கெடும்னு என் அப்பா அடிக்கடி சொல்லுவாங்க. உன்னோட சேர்ந்து நானும் புத்தி கெட்டுப் போனேன். ஐயோ! எத்தனை பறவைகளைத் துடிதுடிக்கக் கொன்னுட்டேன்! அதுகளுடைய குஞ்சுகள், என்ன பாடுபட்டிருக்கும்? இனிமேல், இந்த உண்டி வில்லுக்கு வேலையில்லை” என்று ஆவேசம் வந்தவன் போல் பேசிவிட்டு அந்த உண்டி வில்லை அங்கே கிடந்த ஒரு கல்லின் மேலே வைத்தான். இன்னொரு கல்லாலே அதைத் தூள் தூளாக உடைத்தான்.
“உண்டிவில் முறிஞ்ச மாதிரி நம்ம சிநேகமும் இன்னியோடு முறிஞ்சுது” என்று சொல்லிவிட்டு வேக வேகமாக வீட்டுக்குத் திரும்பினான். பிறகு தான், அவன் மனம் ஓரளவு நிம்மதி அடைந்தது.
உதவாத டெலிபோன்
அந்த வட்டாரத்திலே கார்த்திகேயர்தான் பெரிய பணக்காரர். அவருடைய மாளிகை மிக மிகப் பெரிதாயிருக்கும். ஏராளமான செலவில் அவர் அதைக் கட்டி வைத்திருந்தார். அதன் உள்ளே எல்லாவிதமான வசதிகளும் இருந்தன. டெலிவிஷன், ரேடியோ, டெலிபோன், பனிப்பெட்டி, மெத்தை போட்ட நாற்காலிகள், மின்சார விசிறிகள், அலங்காரப் பொம்மைகள் யாவும் இருந்தன.
அவருடைய மாளிகையில் இவ்வளவெல்லாம் இருந்தும் அவருடைய நெஞ்சிலே கொஞ்சமேனும் ஈரம் இல்லை. ஏழைகள் என்றாலே மனித இனத்தைச் சேர்ந்தவர்களில்லை என்பது அவருடைய நினைப்பு. மறந்தும் அவர் பிறருக்கு உதவ மாட்டார். தம்மைப் பொறுத்தவரையில் நன்றாக உண்பார்; உடுப்பார், உறங்குவார்.
ஒருநாள் இரவு மணி ஏழு இருக்கும். அந்தத் தெருக்கோடி வீட்டிலிருந்து ஒருவர் வேகமாகக் கார்த்திகேயரின் மாளிகையை நோக்கி வந்தார். மாளிகை வாசலுக்கு வந்ததும் ஒரு நிமிஷம் நின்றார். பிறகு, தயங்கித் தயங்கி உள்ளே சென்றார். அப்போத “யாரது?” என்ற குரல் மிகவும் அதிகாரத்துடன் கேட்டது. அது வேறு யாருடையதுமல்ல; கார்த்திகேயருடையதுதான்!
“ஐயா! என் குழந்தைக்கு இரண்டு நாளாக ஜூரம். இப்போது உடம்பு அனலாய்க் கொதிக்கிறது. குழந்தை கண் திறக்கவில்லை”. வந்தவர் முழுவதையும் கூறுவதற்குள், “அதற்கென்ன? இங்கே யாசகம் கேட்க வந்து விட்டாயா? போ, போ. வேறு வேலை இல்லை” என்று எரிந்து விழுந்தார் கார்த்திகேயர்.
“யாசகம் கேட்க வரவில்லை. தயவு செய்து என் பேச்சைக் கேளுங்கள். எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் இருக்கிறார். அவரிடம் டெலிபோனில் தகவலைச் சொன்னால் உடனே வந்துவிடுவார். அதனால் கொஞ்சம் டெலிபோன்...”
“சரிதான். டெலிபோனில் பேச வேண்டுமா? அதெல்லாம் முடியாது. இன்று உனக்குக் கொடுத்தால் நாளைக்கு இன்னொருவன் வந்து கேட்பான். அதெல்லாம் கெட்ட பழக்கம். முடியாது. இது என்ன, பொது டெலிபோனா கண்டவனெல்லாம் உபயோகப்படுத்த?”
“அப்படிச் சொல்லக்கூடாது. ஆபத்துச் சமயம். குழந்தை இருக்கிற நிலையிலே, இந்த நேரத்திலே வெளியிலே எடுத்துப் போக யோசனையாயிருக்கிறது. தயவுசெய்து...”
“தயவாவது செய்றதாவது? குயவன் பானை சட்டி செய்கிறானே, அதைப் போலே என்னைத் தயவு செய்யச் சொல்கிறாயா? முடியாது. வீணாகத் தொந்தரவு செய்யாதே. அப்படி அவசரமாயிருந்தால் மூணாவது தெருவிலே இருக்கிறதே பொது டெலிபோன், அங்கே போய்ப் பேசு” என்று கூறி வெளியில் அனுப்பிவிட்டார் கார்த்திகேயர்.
பாவம், பக்கத்திலே வேறு டெலிபோன் எதுவும் இல்லாததால், அந்த மனிதர் மூன்றாவது தெருவுக்கு ஓடினார். அங்குள்ள பொது டெலிபோன் உதவியால் டாக்டரை வரவழைத்துக் குழந்தையைக் காட்டினார். நல்லகாலம், கார்த்திகேயர் தயவு இல்லாமலே குழந்தை பிழைத்துக் கொண்டது!
அன்று நடு இரவு,
பின் தெருவிலிருந்து ஒரு சிறுவன் வியர்க்க விறு விறுக்க ஓடோடி வந்தான். கார்த்திகேயரின் மாளி கையை அடைந்தான். “ஐயா, ஐயா” என்று கத்தினான். பலமாகக் கதவைத் தட்டினான். முன் அறையில் தூங்கிக் கொண்டிருந்த கார்த்திகேயர் பரபரப்புடன் எழுந்தார். விளக்கைப் போட்டு, கம்பிக் கதவுகளின் இடைவெளி வழியாக அந்தச் சிறுவனைப் பார்த்தார்!
"ஐயா! கொஞ்சம் கதவைத் திறவுங்கள், டெலிபோன் செய்ய வேண்டும். அவசரம்” என்று துடித்துடித்துக் கொண்டே கூறினான்.
“உனக்கு அவசரமாக இருந்தால் எனக்கென்னடா? போ, போ. ஊரிலே இருக்கிறவனுக்கெல்லாம் இந்த டெலிபோன்தான் அகப்பட்டதாக்கும்? பேசாமல் மூணாவது தெருவுக்குப் போய் அங்கே இருக்கிற பொது டெலிபோனில் பேசு” என்று உபதேசம் செய்தார் கார்த்திகேயர்.
“ஐயோ, அடுத்த தெருவிலே ஒரு வீட்டில் தீப் பிடித்துக் கொண்டது. உடனே தீயணைக்கும் படைக்குப் போன் பண்ண வேண்டும். என்னை அனுமதிக்காது போனாலும், நீங்களாவது சீக்கிரம் தகவல் கொடுத்தால் உபகாரமாயிருக்கும். ஐயா, உங்களுக்குக் கோடி புண்ணியம்” என்று கெஞ்சினான் சிறுவன்.
“டேய், வீணாக என்னை இந்த நேரத்தில் தொந்தரவு செய்யாதே. நீ சொன்னபடி செய்வதற்கு நான் என்ன, நீ வைத்த ஆளா? அடுத்த தெருவிலே நெருப்புப் பிடித்தால் எனக்கென்ன? போ, போ. இங்கே நிற்காதே” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார் கார்த்திகேயர்.
சிறுவன் சிறிது நேரம் கெஞ்சிப் பார்த்தான். அவர் மனம் இளகவில்லை. சிறுவனுக்கு அதற்கு மேலும் அங்கு நிற்க மனமில்லை. காலதாமதம் ஆகக் கூடாதே என்று மூன்றாவது தெருவுக்கு ஓடினான்.
இதற்குள் தீப்பிடித்த வீட்டிலிருந்து நெருப்பு வேகமாகப் பரவ ஆரம்பித்தது. அந்த வரிசையிலிருந்த நான்கைந்து வீடுகளிலும் நெருப்புப் பற்றிக் கொண்டது. அந்த வீடுகளிலிருந்தவர்களெல்லாம் ‘குய்யோ முறையோ’ என்று கத்திக் கொண்டு, குழந்தைகளையும் முக்கியமான சாமான்களையும் தூக்கிக் கொண்டு வெளியேறினார்கள். நெருப்பணைக்கும் படை வராததனால் அவர்களே கிணற்றிலிருந்தும், குழாயிலிருந்தும் குடம் குடமாகத் தண்ணீரை எடுத்துவந்து நெருப்பை அணைக்க முயன்றார்கள். நிலைமை முற்றிவிட்டதால், சுலபமாக அணைக்க முடியவில்லை.
அதேசமயம், கார்த்திகேயரது வீட்டின் பின்பகுதி யிலிருந்து “ஐயோ, தீ தீ!” என்ற அலறல் கேட்டது. கார்த்திகேயர் திடுக்கிட்டு எழுந்தார். பின்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி, மக்கள், வேலைக்காரர்கள் எல்லாரும் ஓடி வருவது கண்டு “என்ன? தீயா” என்று திகிலுடன் கேட்டார்.
“ஆமாம். பின் தெருவிலே பற்றிக் கொண்டது போலிருக்கிறது. நம் வீட்டு வைக்கோல் போரில் பிடித்து வீட்டுக்குள்ளேயும் வந்துவிட்டது. ஐயோ மாளிகை பற்றி எரிகிறதே!” என்று கூச்சலிட்டார்கள் அவர்கள்.
உடனே கார்த்திகேயருக்கு அந்தச் சிறுவன் சொன்னது நினைவுக்கு வந்தது. டெலிபோனில் நெருப்பணைக்கும் படையினரைக் கூப்பிட நினைத்தார். அதற்குள் இரும்புப் பெட்டி நினைவு வந்து விட்டது. உடனே இரும்புப் பெட்டி இருந்த அறையை நோக்கி ஓடினார். ஆனால், அறைக்குள் நுழையப் போகும் சமயம் ‘சடசட’வென்று நெருப்புப் பொறிகள் கிளம்பும் சத்தம் கேட்டது. ‘குபீர், குபீர்’ என்று பயங்கரமாக நெருப்புச் சுடர்கள் பற்றி எரிவது தெரிந்தது. பின்பகுதியின் ஒரு பாகம் மடேர் என்று இடிந்து விழுந்தது. அறைக்குள் நுழைந்தால் உயிருக்கே ஆபத்து என்று நினைத்து மனைவி மக்களுடன் அவரும் வெளியேறிவிட்டார்.
மூன்றாவது தெருவுக்கு ஓடிய சிறுவன் பொது டெலிபோனில் தகவலை அறிவிக்க முயன்றான். அந்த டெலிபோனில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருந்ததால் அது சரியாக வேலை செய்யவில்லை. இதயம் உள்ள மனிதனுக்கே அவசரத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லையே, அது எப்படிப்புரிந்துகொள்ளும்?
‘சரி, இதையும் நம்பிப் பயனில்லை,’ என்று அந்தச் சிறுவன் எண்ணினான். நேராகக் குடல் தெறிக்க நெருப்பணைக்கும் படை இருக்கும் இடத்தை நோக்கி ஓடினான். தகவல் அறிவித்தான். உடனே அந்தப் படை புறப்பட்டது.
மணியை அடித்துக் கொண்டு வெகு வேகமாக நெருப்பணைக்கும் படையினர் அங்கு வந்தனர். அவர்கள் வந்து சேருவதற்கும், கார்த்திகேயரின் மாளிகை முழுவதும் பற்றி எரிவதற்கும் சரியாக இருந்தது!
குப்புவின் குல்லாய்
பல சரக்குக் கடைப் பழனிச்சாமிக்கு ஒரே ஒரு பையன். அவன் பெயர் குப்புசாமி. ‘குப்பு’ என்றே அவனுடைய நண்பர்கள் அழைப்பார்கள்.
குப்பு சென்ற மாதம் திருப்பதிக்குப் போய் வந்தான். திருப்பதிக்குப் போனபோது அவன் தலையிலே கருகரு என்று அடர்த்தியாக முடி இருந்தது. திரும்பி வரும்போது...? ஒலையிலே செய்த குல்லாதான் அவன் தலைமேலே உட்கார்ந்திருந்தது.
குப்புவின் தலைமுடிக்கு என்ன ஆயிற்று?
சென்ற வருடம் அவனுக்கு விஷ சுரம் வந்தது. உடனே அவன் பாட்டி, “திருப்பதி வெங்கடாசலபதியே, என் பேரனைக் காப்பாத்து. அவனுக்கு முடி வளர்த்து, உன் சன்னதியிலே கொண்டு வந்து இறக்குகிறேன்” என்று வேண்டிக் கொண்டாள். சொன்னபடி செய்தாயிற்று. இப்பொழுது, அவன் தலை மொட்டை! மொட்டைத் தலைமேலே ஓலைக்குல்லா!
குப்பு எட்டாவது படிக்கிறான். அவன் வகுப்பில் மொத்தம் நாற்பத்தி இரண்டு மாணவர்கள். குப்பு படிப்பிலே ரொம்ப சுமார். ரொம்ப ரொம்ப சுமார்! 40-வது ராங்க்! அப்படியென்றால், எவ்வளவு புத்தி சாலியாக இருக்க வேண்டும்?
குப்பு எப்போதும் கடைசி பெஞ்சியிலேதான் உட் காருவான். அவனுக்கு இடப் பக்கம் கோபு, கோவிந்து, வலப்பக்கம் சரவணன், சங்கர் உட்காருவார்கள். அவர்களும் குப்பு மாதிரிதான் படிப்பிலே!
குப்பு திருப்பதிக்குப் போய் வருவதற்கு முன்பு, அப்பாவின் கட்டளைப்படி தினமும் காலை 8 மணிக்கு அவர்களுடைய பலசரக்குக் கடைக்குச் செல்வான். 9 மணிவரை கடையில் இருந்து விட்டுப் பிறகுதான் பள்ளிக்கூடத்திற்குப் புறப்படுவான். கடை வேலைகளை அவன் தெரிந்து கொள்ள வேண்டுமென்பது, அவனுடைய அப்பாவின் ஆசை. ஆனால் அவன் கடையிலே செய்யும் வேலை அவன் அப்பாவுக்குத் தெரியாது.
கடையில் இருக்கும் அந்த ஒரு மணி நேரத்திற்குள், அப்பாவுக்குத் தெரியாமல் கற்கண்டு, வெல்லக்கட்டி, முந்திரிப் பருப்பு. இப்படிச் சில பண்டங்களில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொள்வான். பள்ளிக்கூடம் வந்ததும், தன் கடைசிப் பெஞ்சு நண்பர்களுக்குக் கொடுத்துத் தானும் தின்பான், பாடத்தைக் கவனிக்காமல். இந்தப் பண்டங்களைத் தின்பதிலே அவர்கள் பொழுதைப் போக்குவார்கள்.
இப்போது திருப்பதிக்குப் போய் வந்த பிறகு, குப்பு தினமும் நிறைய நிறையக் கற்கண்டுக் கட்டிகளையும், வெல்ல அச்சுக்களையும், முந்திரிப் பருப்புகளையும் கொண்டுவர ஆரம்பித்துவிட்டான். முன்பெல்லாம் மடியிலும், சட்டைப் பையிலும் அவைகளைப் போட்டுக்கொண்டு போவான். இப்போது, அப்பா பார்க்காதபோது அவற்றைக் குல்லாக்குள்ளே ஒளித்து ஒளித்து வைத்துக் கொண்டு வர ஆரம்பித்துவிட்டான். அவனுடைய நண்பர்களுக்கு ஏக குஷி!
அன்றைக்கும் வழக்கம்போல் இந்தப் பண்டங்களைக் குல்லாய்க்குள்ளே வைத்து எடுத்துக் கொண்டு போனான். கடையை விட்டுக் கால் கிலோமீட்டர் தூரம்கூடப் போயிருக்கமாட்டான்.
அப்போது மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்த இரண்டு காக்கைகள் மேலேயிருந்தபடி குப்புவின் தலைமேலிருந்த ஒலைக் குல்லாவைப் பார்த்து விட்டன.
உடனே, ஒரு காக்கை மற்றொரு காக்கையைப் பார்த்து, “அதோ கீழே பாரு, ஒரு ஒலை மூடி தெரியுது. எதையோ வச்சு மூடி ஒரு ஆள் எடுத்து போறான். நிச்சயம் அந்த மூடிக்குக் கீழே ஒரு பாத்திரம் இருக்கும். அந்தப் பாத்திரத்திலே நமக் குப்பிடிச்ச நல்ல நல்ல பண்டமெல்லாம் இருக்கும். நமக்கு அது கிடைக்கணும்னா, நான் சொல்றபடி செய்யனும்” என்றது.
குப்புவுடைய குல்லாதான் அது என்று அந்தக் காக்கைக்குத் தெரியவில்லை!
உடனே இன்னொரு காக்கை “ஓ! நீ சொல்றபடி நான் செய்கிறேன். என்ன செய்யணும்?” என்று கேட்டது.
“நீ மெதுவாக் கீழே போ. விருட்டுனு அந்த ஒலை மூடியைத் தூக்கிக்கிட்டுப் பறந்து போய், அதோ தெரியுதே, அந்தத் தென்னை மரத்திலே உட்கார்ந்திரு. நான் அந்தப் பாத்திரத்திலேயிருக்கிற பண்டத்திலே பெரிசாப் பார்த்து ஒண்ணு எடுத்து வர்றேன். ரெண்டு பேரும் பங்கு போட்டுத் தின்னலாம்” என்றது முதல் காக்கை. “நல்ல யோசனை. நீ சொன்னபடியே நான் செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு அந்தக் காக்கை மெதுவாகக் கீழ் நோக்கிச் சென்று, விருட்டென்று ஒலைக் குல்லாயைக் கொத்திக் கொண்டு பறந்து போய்த் தென்னைமரத்தில் உட்கார்ந்து கொண்டது.
மறுவிநாடியே குப்புவின் தலையிலிருந்த கற்கண்டு, வெல்லம், முந்திரிப் பருப்பு எல்லாம் உருண்டு தரையில் விழுந்தன. அடடே, எல்லாமே தரையில் விழுந்து விட்டதாகச் சொன்னேனா? இல்லை, இல்லை ஒரே ஒரு பெரிய கற்கண்டுக் கட்டி மட்டும் தலை நடுவே தனியாக நின்றது!
கண்மூடிக் கண் திறப்பதற்குள் முதலில் யோசனை சொன்ன காக்கை வேகமாகப் பாய்ந்து அவன் தலை அருகே வந்தது. அங்கே பாத்திரம் எதையும் காணாத போனாலும், அதற்கு ஒரு பெரிய கற்கண்டுக் கட்டி போதாதா? வேகமாகப் பாய்ந்து அந்தக் கற்கண்டுக் கட்டியைக் கொத்திக் கொண்டு உயரப் பறந்தது.
அது பாய்ந்த வேகத்தில் அதனுடைய கூர்மையான அலகு குப்புவின் மொட்டைத் தலையைப் பதம் பார்த்துவிட்டது!
அதிர்ச்சிக்கு உள்ளான குப்பு தலையைத் தடவிப் பார்த்தான். கையெல்லாம் இரத்தம்!“ஐயோ!”, “அம்மா” என்று அலறியபடி அங்கேயே தரையில் உட்கார்ந்து விட்டான்!
சத்தத்தைக் கேட்டு அந்தப் பக்கமாக வந்தவர், போனவரெல்லாம் ஓடிவந்து பார்த்தார்கள். ஒலைக் குல்லாவைக் காணோம்! தரையிலே கற்கண்டுக் கட்டிகள், வெல்ல அச்சுகள், முந்திரிப் பருப்புகள் எல்லாம் விழுந்து கிடந்தன. இக்காட்சியைக் கண்ட பலசரக்குக் கடை பழனிச்சாமியின் நண்பர் ஒருவர் உடனே பழனிச் சாமிக்குத் தகவல் சொல்லி அனுப்பினார். ஒடோடி வந்த பழனிச்சாமி,“எப்படிடா இது நடந்தது?” என்று கேட்டார்.
மகன் நடந்ததையெல்லாம் சொல்லி, “அப்பா, உங்களுக்குத் தெரியாமலே தினசரி இப்படிப் பண்டங்களைக் கொண்டு போனேனப்பா. அது தப்புத் தானப்பா. இப்போ நல்லா உணருகிறேன் அப்பா. இனிமேல் இதுமாதிரி செய்ய மாட்டேனப்பா” என்று மன்னிப்புக் கேட்டான்.
இதைக் கேட்டு சுற்றி நின்றவர்களெல்லாம் சிரித்தார்கள்.
“சரி, சரி, வா. கடைக்குப் போகலாம். தலைக்கு மருந்து போடுறேன்” என்று சொல்லி, குப்புவைக் கடைப் பக்கமாக அழைத்துச் சென்றார் பழனிச்சாமி.
இரு காக்கைகள்
அந்தக் காட்டிலே நிறைய நிறைய மரங்களும் செடிகளும், கொடிகளுமாக இருந்தன. அந்த அடர்த்தியான காட்டிலே ஒரு மரத்திலே இரண்டு காக்கைகள் வசித்து வந்தன. ஒரு கிளையிலே ஒரு காகம் கூடுகட்டியிருந்தது. இன்னொரு கிளையிலே மற்றொரு காகம் கூடு கட்டியிருந்தது.
இரண்டும் அதிகாலையிலே காட்டை விட்டுப் புறப்படும். மூன்று கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு கிராமத்திற்குப் பறந்து போகும். அங்கே அவைகளுக்கு வேண்டிய தின்பண்டங்களெல்லாம் கிடைக்கும். திருமண நாட்களிலே அல்வா, ஜாங்கிரி, வடை, போண்டா, முறுக்கு எல்லாம் கூடக் கிடைக்கும். அந்த ஊர் மக்களும் சாப்பிடுவதற்கு முன்பு காகா என்று கூவி அழைத்துச் சோற்றை ஓரிடத்தில் வைப்பார்கள். இந்த இரண்டு காக்கை களும், மற்ற காக்கைளையும் காகா என்று கத்தி அழைத்துக் கொண்டுபோய், அவர்கள் வைத்த சோற்றைப் பங்கு போட்டுத் தின்னும்.
ஒருநாள் இந்த இரு காக்கைகளும் ஒன்றாகப் பறந்து வந்து குளத்தங்கரையில் தனியாக இருந்த ஒரு மரத்தின் கிளையிலே உட்கார்ந்தன. அவை எடுத்து வந்த திண்பண்டங்களைக் காலடியில் வைத்து சிறிது சிறிதாகச் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன.
அப்போது ஒரு காக்கை இன்னொரு காக்கையைப் பார்த்து, “நாம் தினந்தோறும் காட்டிலே யிருந்து இந்த ஊருக்குப் பறந்து வருகிறோம். இந்த ஊரிலேதான் நமக்கு வேண்டிய உணவெல்லாம் கிடைக்குது. இவ்வளவு தூரம் தினமும் பறந்து வரணுமா? இதோ இப்போ நாம் இருக்கிற மரத்திலே நீ ஒரு பக்கமும், நான் ஒரு பக்கமுமாகக் கூடு
கட்டிக்கிட்டு இருக்கலாமே! வீணா அலைய வேண்டாமே” என்றது.
அதற்கு இன்னொரு காக்கை, “இது ஒரு தனி மரம். நெட்டையாக ஒல்லியாக இருக்குது. பார்த்தால் ரொம்ப வயசானது போலத் தோணுது. இதிலே கூடு கட்டுறது ஆபத்து! அத்தோட நாம கூடுகட்டி, அதிலே முட்டையிட்டு, அடைகாக்கிற காலத்திலே ஜாக்கிரதையா இருக்கணும்! இந்த ஊர்ப் பசங்களிலே சிலர் பொல்லாதவங்களா இருப்பாங்க. நாம் இரை தேடப்போற சமயம் பார்த்து, அவங்க மரத்து மேலே ஏறுவாங்க. நம்ம கூட்டிலேயிருக்கிற நீல நிற முட்டைகளைப் பார்த்ததும், அதுகளை எடுத்துப் போனாலும் போயிடுவாங்க காடுதான் நமக்குச் சரி. இந்தத் தனிமரம் சரிப்படாது” என்று விவரமாகச் சொன்னது.
ஆனால் முதலில் சொன்ன காக்கை கேட்க வில்லை. நாம ரெண்டு பேரும் இந்த மரத்திலே தங்கலாம். ஏன் நாம ஒவ்வொரு நாளும் காலையிலே எழுந்திருச்சு, காட்டிலேயிருந்து இங்கே பறந்து வரணும்? அப்புறம் இருட்டுறப்போ திரும்பிப் பறந்து காட்டுக்குப் போகணும்? இது வீண் வேலை” என்று திரும்பத் திரும்பச் சொன்னது.
“நான் காட்டிலேதான் இருப்பேன். இந்த மரத்திலே வசிக்கமாட்டேன்.”
“சரி, அப்படின்னா நீ காட்டுக்குப் போய் அங்கே இரு நான் இந்த மரத்திலேயே கூடு கட்டுறேன்.”
“உன் மனசைமாத்தவே முடியாது. நீ இங்கேயே இரு நான் காட்டுக்குப் போறேன்” என்று கூறிவிட்டு, காட்டுக்குச் சென்ற காக்கை, தினமும் அதிகாலையில் காட்டிலிருந்து பறந்து, கிராமத்திலுள்ள குளக்கரை மரத்துக்கு நேராக வரும். பிறகு, இரண்டும் சேர்ந்து ஊருக்குள் இரை தேடப் போகும்.
இப்படியே மூன்று மாதங்கள் ஓடிவிட்டன.
காட்டிலேயிருந்த காக்கையும் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்திருந்தது. குளக்கரை மரத்திலேயிருந்த காக்கையும் முட்டையிட்டுக் குஞ்சு பொரித் திருந்தது. இரண்டு காக்கைகளின் குஞ்சுகளும் ஓரளவு வளர்ந்துவிட்டன. இன்னும் நாலைந்து நாட்களிலே பறக்க ஆரம்பித்து விடும்.
அன்றைக்கு அதிகாலை, மூன்று அல்லது மூன்றரை மணி இருக்கும். ‘மட, மட’ வென்று இடி இடித்தது. ‘பளிச், பளிச்’சென்று மின்னல் மின்னியது. ‘விர், விர்’ரென்று புயல் காற்று வீசியது. தொடர்ந்து பலத்த மழையும் பெய்தது. சுழற்றிச் சுழற்றி அடித்த புயல் காற்றிலே, குளக்கரையிலிருந்த மரம் தடால்' என்று தரையிலே விழுந்துவிட்டது. அப்போது அதிலிருந்த காக்கைக் கூடும், கூட்டுக்குள்ளிருந்த குஞ்சுகளும், பாவம், கீழே விழுந்து நசுங்கிப் போயின. தாய்ப் பறவை மட்டும் தப்பிவிட்டது.
தப்பிப் பிழைத்த தாய்ப் பறவை குளக்கரையிலிருந்த ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து அழுது கொண்டேயிருந்தது. அப்போது காட்டிலிருந்து வந்த காக்கை, தூரத்தில் வரும்போதே மரத்தைக் காணாமல் திடுக்கிட்டது. அருகிலே வந்ததும், மரம் சாய்ந்து கிடப்பதையும், கல்லின் மீது அந்த மரத்தில் வசித்த காக்கை அமர்ந்து அழுது கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தது. உடனே கல்லின் மீது இருந்த காக்கையின் அருகிலே சென்று விசாரித்தது. விவரம் தெரிந்ததும் மிகவும் வருந்தியது. அதற்கு ஆறுதல் கூறித் தேற்றியது.
“காட்டிலேயும் புயல் வீசியிருக்குமே! நீ இருந்த மரத்துக்கு எந்த ஆபத்தும் இல்லையே!” என்று கேட்டது, அழுகையை நிறுத்திய காகம்.
“நான் இருந்த காட்டிலேயும் புயல் பலமாகத்தான் விசிற்று. ஆனால், பக்கத்திலே பக்கத்திலே மரங்க ளும், செடி கொடிகளும் இருந்ததால், புயலின் வேகத்தை அவைகள் தடுத்துவிட்டன. ஒரு மரம் கூட விழல்லை. இங்கே நீ இருந்த மரம் தனி மரமா இருந்ததாலே புயல் அதை சுலபமாய்ச் சாய்ச் சிடுச்சு.”
“ஆமா, நீ சொல்றது சரிதான். கூடி இருந்தால், கோடி நன்மை என்பாங்க. மரங்களெல்லாம் சேர்ந்திருந்த காரணத்தினாலே, புயலாலே ஒண்னும் செய்ய முடியல்லே. அன்னிக்கு நீ சொன்னதைக் கேட்டு, அதன்படி நடந்திருந்தால், என் குழந்தை களை நான் பறி கொடுத்திருப்பேனா? இன்னிக்கு ராத்திரியே நான் உன்னோடே காட்டுக்கு வந்துடுறேன். உன்னோடே அந்த மரத்திலே நானும் முன் போலக் கூடு கட்டி வசிக்க முடிவு பண்ணிட்டேன்.”
“சரி, அப்படியே செய்யலாம்.”
அன்று பொழுது சாயும் நேரத்தில் இரண்டு காக்கைகளும் ஒன்றாகச் சேர்ந்து காட்டை நோக்கிப் பறந்து சென்றன.
வித்தைக்குரங்கு
சிவப்புத் துணியிலே மேல்சட்டை, நீலத் துணியிலே கால் சட்டை, பச்சைத் துணியிலே குல்லா-இப்படி வண்ண வண்ண உடையுடன் காட்சியளித்த அந்தக் குரங்கு, கோவிந்தசாமி சொன்னபடி யெல்லாம் செய்யும்.
கோலை நீட்டினால் தாவும், குட்டிக் கரணம் போடும்; மாடு மேய்ப்பவரைப் போலப் பிடரியிலே கோலை வைத்துக் கொண்டு நிற்கும்; தாத்தா மாதிரி தடியை ஊன்றித் தள்ளாடித் தள்ளாடி நடக்கும். பெரியவர்கள் சின்னவர்கள் எல்லோரும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.
வித்தை முடியப் போகிற சமயம், “ரங்கா, சுத்தி நிற்கிற புண்ணியவான்களெல்லாம் உன் வித்தையைப் பார்த்துட்டுச் சும்மா போக மாட்டாங்க. தாராளமாகக் காசு கொடுப்பாங்க, அவங்க தரதைச் சலாம் போட்டு வாங்குடா ரங்கா” என்பார் கோவிந்த சாமி.
உடனே ரங்கன் தகரக் குவளையை எடுத்துக் கொண்டு சலாம் போட்டபடி சுற்றிச் சுற்றி வரும். ‘ஆஹா! ஒஹோ’ என்று வேடிக்கை பார்த்தவர்களில் பலர், மெல்ல நழுவி விடுவார்கள்; சில பேர் தான் காசு போடுவார்கள். அதுவும் பெரும்பாலும் ஐந்து பைசாவாகத்தான் இருக்கும்.
ஒரு நாளைக்கு குவளையிலே விழுகிற சில்லறைகளையெல்லாம் சேர்த்து எண்ணிப் பார்த்தால், இரண்டு ரூபாய், மூன்று ரூபாய்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் எவ்வளவு பணம் கிடைக்குமோ, அதிலே சரிபாதிக்குப் பொரி, கடலை, தேங்காய்க் கீற்று, வாழைப் பழம். இப்படி ரங்கனுக்குப் பிடித்ததாகப் பார்த்து வாங்கிக் கொடுத்திடுவார் கோவிந்தசாமி. இன்னொரு பாதிப் பணத்திலே அவருக்குத் தேவையான சோறு, பலகாரம், டீ, வெற்றிலை பாக்கு வாங்கிக் கொள்வார். தமக்கென்று அதிகமாக எடுத்துக்கொள்ளவே மாட்டார்!
ரங்கனை அவர் சொந்தப் பிள்ளை மாதிரியே வளர்த்து வந்தார். சில சமயம் அதை இடுப்பிலே தூக்கி வைத்துக்கொண்டு, “ரங்கா, இந்த வயசான காலத்திலே எனக்கு யாரு இருக்கிறாங்க? நீதான் நான் பெத்த பிள்ளை மாதிரி சம்பாதிச்சு என்னைக் காப்பாத்தறாய்” என்று பாசத்தோடு கூறுவார்.
ரங்கனுக்கும் கோவிந்தசாமியிடத்திலே மிகுந்த பிரியம்தான். ஆனாலும் நடுநடுவே அதற்கு ஓர் ஆசை வந்து விடும்!
தினமும் கடைவீதி வழியாகப் போகும்போது அங்கே கடைகளில் குவியல் குவியலாக இருக்கிற பொரி, பட்டாணிக் கடலை, பொட்டுக் கடலை, வேர்க்கடலை, தேங்காய், சீப்புச் சீப்பாகத் தொங்குகிற வாழைப்பழங்கள் முதலியவற்றையெல்லாம் பார்க்கும். உடனே நாக்கிலே எச்சில் ஊறும்.
‘சே, என்ன பொழைப்பு? நான் தினமும்தான் வித்தை செய்கிறேன். குவளை நிறையக் காசு விழுந்தாலும், நான் ஆசைப்படுகிற பொருளை நினைச்ச நேரத்திலே நினைச்ச அளவு தின்ன முடிகிறதா? இவருகிட்டே இருக்கிற வரை இப்படியே இருக்க வேண்டியதுதான். இஷ்டம் போலச் சாப்பிட முடியாது’ என்று அடிக்கடி நினைக்கும்.
அன்று அமாவாசை. நல்ல இருட்டு. கோவிந்த சாமி, பிள்ளையார் கோயில் மண்டபத்திலே குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். பக்கத்திலே படுத்திருந்த ரங்கனுக்குத் தூக்கம் வரவில்லை. மெதுவாக இடத்தை விட்டு எழுந்தது. சந்தடியில்லாமல் காலை எட்டிப் போட்டது. கொஞ்ச துரம் போனதும், குடுகுடு என்று ஓட்டம் பிடித்தது. அந்த ஊரைவிட்டே ஓடிவிட்டது!
நடுவிலே இருந்த சின்னச் சின்ன ஊர்களைத் தாண்டி ஒரு நகரத்துக்கு வந்தது. அப்போது விடிந்துவிட்டது. காலையிலேயே வெயில் மிகக் கடுமையாக இருந்ததால், கால் சட்டைப் பைக்குள் ளிருந்த குல்லாயை எடுத்துத் தலையிலே மாட்டிக் கொண்டது ரங்கன்.
நகரத்துக்குள்ளே நுழைகிற போது, அங்கே ஒரு பெரிய மாமரம் இருந்தது. அதிலே காய்களும், பழங்களும் ஏராளமாகத் தொங்கின. அத்துடன், அந்த மரத்திலே ஏழெட்டுக் குரங்குகள், குட்டிகளோடு இருந்தன. உடனே ரங்கனுக்குக் குஷி பிறந்து விட்டது.
ஒரே தாவாகத் தாவி, அந்த மரத்திலே ஏறியது. சட்டையும், குல்லாயுமாக வந்த ரங்கனைக் கண்டதும், அதை யாரோ என்று நினைத்துவிட்டன அந்தக் குரங்குகள்!‘உர். உர். உர்” என்று கத்தி, அதை அடித்து விரட்டி விட்டன.
‘நானும் குரங்கு. அதுகளும் குரங்குகள். என்னைப் பார்த்ததும் ஏன் இப்படிக் கத்தனும்? ஓட ஒட விரட்டனும்?. ஓ! புரியுது, புரியுது. என் உடையைப் பார்த்துத்தான் விரட்டியிருக்கணும் என்று நினைத்தது. உடனே குல்லா, மேல் சட்டை, கால் சட்டையெல்லாவற்றையும் கழற்றி அங்கேயிருந்த ஒரு கால்வாயிலே தூக்கி எறிந்தது.“இந்த உடுப்பும் வேண்டாம். நம்ம குரங்கு இனமும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டு ஊருக்குள்ளே ஓடியது.
வழியிலே ஒரு கடைவீதி இருந்தது. அங்கே ஒரு பொரிகடலைக்கடை இருந்தது. கடையிலே யாருமே இல்லை. போன வேகத்திலே, அந்தக் கடைக் குள்ளே புகுந்தது. அங்கே கோபுரம் போல், கொட்டி வைத்திருந்த பொரியை இரண்டு கைகளாலும் அள்ளி வாயிலே திணிக்கப் பார்த்தது. அப்போது, சற்றுத் தூரத்திலிருந்து குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த கடைக்காரர் பார்த்துவிட்டார். சும்மா இருப்பாரா? ‘பிடி! பிடி!’ என்று கத்திக் கொண்டே கடையை நோக்கிப்பாய்ந்தோடி வந்தார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை! பொரியைக் கீழே எறிந்துவிட்டு ரங்கன் தலைதெறிக்க ஓடியது. கடைக்காரர். அப்போதும் சும்மா இருக்க வில்லை. தெருவிலே கிடந்த ஒரு கல்லை எடுத்துக் ரங்கனைக் குறிபார்த்து எறிந்தார். கல், ரங்கன் முதுகிலே பட்டதும், வலி தாங்காமல் ‘கீ, கீ’ என்று கதறிக்கொண்டே ஓடிவிட்டது.
அன்று முழுவதும் ரங்கன் வெளியில் தலை காட்டவே இல்லை. சிறிது தூரத்தில் இருந்த மரத்தில் ஏறி, இரண்டு கிளைகளுக்கு நடுவே உட்கார்ந்து முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது. பாவம், அன்று முழுவதும் பட்டினி!
மறுநாள் காலையிலே மரத்துக்கு மரம் தாவி, சுவர்கள் மீது ஏறி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே வந்தது. ஒரு கிழவி, ஒருமரப்பலகையில் தேங்காய்க் கீற்றுகளை அழகாக அடுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்ததைக் கண்டது.
ரங்கன் சுவரிலிருந்து ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தது. தேங்காய்க் கீற்றை எட்டி எடுக்கப் போனது. மறுவிநாடிடங்கென்றுதலையில் பலமாக ஓர் அடி விழுந்தது! அந்தப் பொல்லாத கிழவிதான் காக்கை விரட்டுவதற்காகப் பக்கத்திலே வைத்திருந்த தடியாலே ஓங்கி அடித்து விட்டாள். வலி தாங்காமல், கத்திக்கொண்டே ரங்கன் வெறுங்கையோடு ஓடி மீண்டும் சுவரிலே ஏறிக் கொண்டது. அன்றைக்கும் பட்டினிதான்!
மூன்றாம் நாள் கோயில் பக்கமாகப் போய், மதில் சுவரிலே உட்கார்ந்து கூர்ந்து, கூர்ந்து பார்த்தது. கொஞ்சதுரத்திலே ஒரு பழக்கடை தெரிந்தது. அங்கே ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் எல்லாம் இருந்தன. சிப்புச் சீப்பாய் வாழைப்பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. கடைக்காரர் அசந்த சமயம் பார்த்து ஒரு சீப்பு வாழைப்பழத்தைக் கொண்டு வந்து விடலாமென்று நினைத்தது ரங்கன்.
கடைக்காரர் பின்புறமாகத் திரும்பி, கூடையிலிருந்த பழங்களை எண்ணிக் கொண்டிருந்தார். அப்பொழுது பார்த்து ரங்கன் ஒரே தாவாகத் தாவிப் பழக்கடைக்குள் புகுந்தது. ஒரு சிப்பு வாழைப்பழத்தைப் பிடித்து இழுத்தது.
அந்தச் சமயம், தெருவிலே நடந்து போன ஒருவர் சும்மா போகக் கூடாதா? “ஐயோ! குரங்கு! குரங்கு!” என்று கத்தினார். உடனே பழக் கடைக்காரர் சட்டென்று திரும்பிப் பார்த்தார். ரங்கன் பழத்தைப் போட்டுவிட்டு ஓடியது, ஆத்திரத்திலே பக்கத்தில் கிடந்த பழம் நறுக்குகிற கத்தியை எடுத்து ரங்கனைப் பார்த்து எறிந்தார். ரங்கனின் வால் நுனியிலே கத்தி பட்டு, ஓர் அங்குல நீளம் துண்டிக்கப்பட்டது!
ரங்கன் கதறிக்கொண்டே, நாலுகால் பாய்ச்சலில் ஓடியது. வலி பொறுக்காமல் துடியாய்த் துடித்தது. வெகு தூரம் சென்று ஓர் ஆலமரத்தில் ஏறி வாலைப் பார்த்தது. வால் வெட்டுப்பட்டு இரத்தம் கொடகொட வென்று கொட்டுவதைக் கண்டு மிகவும் கலங்கி விட்டது. இரத்தம் மேலும் வழியாமல், வெட்டுப்பட்ட இடத்திலே கையை வைத்து, அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தது. வெகு நேரம் சென்று பார்த்தது. இரத்தம் கசிவது நின்று விட்டது.
ஆலமரக் கிளையில் அமர்ந்திருந்த ரங்கனுக்கு அப்போதுதான் கோவிந்தசாமி நினைப்பு வந்தது.
‘அவர் என்னிடத்திலே எவ்வளவு பிரியமாயிருந்தாரு! எப்படிப் பாசத்தைக் காட்டினாரு நான் இந்த மூணு நாளாப் பட்டினி கிடக்கிறேன். அவர் ஒரு வேளையாவது என்னைப்பட்டினி கிடக்க விட்டிருப் பாரா? ஒருத்தர் என் முதுகிலே கல்லால் அடிச்சாரு. ஒரு பாட்டி என் தலையிலே தடியால அடிச்சாள். கடைசியிலே, பழக்கடைக்காரர் என் வாலையே வெட்டிட்டாரே! என் எஜமான் என்னை ஒரு நாளாவது அடிச்சிருப்பாரா? திட்டினதுகூட இல்லையே! பிள்ளை மாதிரி வளர்த்தாரே! அவருக்குத் தெரியாமல் ஓடிவந்திட்டேனே! என்னைக் காணாமே அவர் துடிதுடிச்சிருப்பாரே! இந்தத் தள்ளாத வயசிலே அவர் எப்படி இருக்கிறாரோ? இனி ஒரு நிமிஷம்கூட இங்கே இருக்கப்படாது.”
மறுவிநாடி ரங்கன் மரத்திலிருந்து கீழே குதித்தது. குடுகுடுவென்று ஓடியது. முன்பு இருந்த கொட்டாம் பட்டிக்கு வந்து, கோவிந்தசாமி வழக்க மாயிருக்கிற மண்டபத்திலே பார்த்தது. அங்கே கோவிந்தசாமியைக் காணோம்! ஊரெல்லாம் தேடிப் பார்த்தது.
ஊருக்குக் கடைசியிலேயிருந்த ஓர் அரச மரத்தடியிலே கோவிந்தசாமி தூங்குவதைப் பார்த்து விட்டது அதற்கு ஒரே ஆனந்தம்! மெதுவாக அவர் பக்கத்திலே போய் உட்கார்ந்தது.
‘பாவம், நல்லாத் தூங்கறாரு எழுப்பக் கூடாது’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டது.
அரைமணி நேரம் அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே, அருகிலே அமைதியாக இருந்தது. படுத்திருந்த கோவிந்தசாமி "ரங்கா!ரங்கா" என்று கத்திக்கொண்டே எழுந்தார். எதிரிலே ரங்கனைக் கண்டதும், “ஆ! இப்பத்தானேடா உன்னைக் கனவிலே கண்டேன்! நேரிலே வந்துட்டியே!” என்று கூறி அதைக் கட்டிப்பிடித்து மடியிலே தூக்கி வைத்துக் கொண்டு இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தம் கொடுத்தார்.
‘எங்கேடா போனாய். என்னைத் தனியா விட்டுட்டு? உன்னைக் காணாமே எங்கெங்கே தேடினேன்? யாரை, யாரையெல்லாம் விசாரிச்சேன்! நல்லவேளை, நீயே திரும்பி வந்...” கூறிக் கொண்டிருக்கும்போதே, ரங்கனின் வால் அவர் கண்களில் பட்டது.
“ஐயோ! இது என்ன? என் ரங்கனின் வாலை எந்தப்படுபாவியோ வெட்டிட்டான்?” என்று ஆத்திரமும், கோபமும் கலந்த குரலில் கூறி, வாலைப் பிடித்து மெல்லத் தடவிக் கொடுத்தார்.
பிறகு, ரங்கனைத் தூக்கிக்கொண்டு பக்கத்திலே இருந்த ஒரு கடைக்குப் போனார். இரண்டு நாளாக மூட்டை தூக்கிச் சம்பாதித்து வேட்டியிலே முடிந்து வைத்திருந்த பணத்தை எடுத்தார். ஒரு டஜன்
வாழைப்பழம் வாங்கி ரங்கனுக்கு அன்போடு ஊட்டி விட்டார். பக்கத்திலே கடலை விற்ற அம்மாளிடம், அரைப்படி கடலை வாங்கி ஆசையாகக் கொடுத்தார். ரங்கன் சாப்பிடுவதைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டார்.
மறுநாளே கோவிந்தசாமி ரங்கனைத் தனக்குத் தெரிந்த ஒரு தையற்காரரிடம் அழைத்துச் சென்றார். துண்டு துண்டாக வெட்டிப் போட்டிருந்த வண்ண வண்ணத் துணிகளிலே உடை தைத்து ரங்கனுக்குப் போட்டுவிட்டார் அந்தத் தையற்காரர். அழகாக ஒரு குல்லாயும் தைத்துத் தலையிலே மாட்டினார்.
இப்போது ரங்கன் முன்னைவிட அருமையாக வித்தைகளெல்லாம் காட்டுகிறது. கூட்டமும் நிறையக் கூடுகிறது. பணமும் அதிகம் சேருகிறது!
கருத்துகள்
கருத்துரையிடுக