தெளிவு பிறந்தது
சுட்டி கதைகள்
Back
தெளிவு பிறந்தது
மணவை முஸ்தபா
ΤΗΕLΙVU ΡΙRΑΝΤΗΑΤΗU
(ENLIGHTENMENT)
Author:
MANAVAİ MUSTAFA
Price Rs. 4/-
MEERAA PUBLICATION
AE - 103, ANNA NAGAR
MADRAS-6000 40
முன்னுரை
மாணவர்கள் தம் துள்ளித் திரியும் பருவத்தில் தங்களையும் அறியாமல் சில தீய உணர்வுகட்கும் செயல்களுக்கும் இடந்தந்து விடுகின்றனர். இவற்றை உரிய முறையில் எடுத்துச் சொல்லும்போது தங்கள் தவறை உணர்ந்து திருந்த வழியேற்படுகிறது..
அத்தகைய சூழலுக்கு ஆட்பட்ட முரளி தன் குறையை ஒரு விபத்து நிகழ்ச்சியின் மூலம் தானாக உணர்ந்து தெளிகிறான். அதற்கு உறுதுணையாக அவன் மாமாவும் சேகரும் அமைகின்றனர். அவன் முற்றாகத் திருந்த இரு உருவகக் கதைகள் துணை செய்கின்றன.
இளைய தலைமுறைக்கு மிகுந்த பயன் அளிக்க வல்ல இந்நூலை மாணவ சமுதாயம் பெற்றுப் பயனுற வேண்டு மென விழைகிறேன்.
அன்பன்
மணவைமுஸ்தபா
நூலாசிரியர்
BIBLIOGRAPHICAL DATA
Title of the book : Thelivu Piranthathu
Author : MANAVAI MUSTAFA
Language : Tamil
First Edition : 1989
Re - Edition : 1993
Copyright holder :Manavai Mustafa
Paper used : 16kg. White cream wove
Size of the book : Crown octavo
Printing points used : 12 points
No. of pages : 32 + 2 = 34 pages
Printer : Meeraa Press
AE 103, Annanagar,
Madras - 600 040,
Binding : Paper back
Price : Rs.4/-
Publishing place : Meeraa Publication
AE 103, Annanagar,
Madras-600 040.
தெளிவு பிறந்தது!
* * *
சேகர் மிகுந்த கவலையுடன் மருத்துவ மனையுள் புகுந்தான். அங்குமிங்கும் அவன் கண்கள் எதையோ தேடின. ஆபரேசன் தியேட்டர் அருகே கவலையுடன் நின்று கொண் டிருந்த சிறு கூட்டத்தின் மீது அவனது பார்வை நிலைகுத்தி நின்றது. அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து இன்னும் முரளியை ஆபரேசன் தியேட்டரிலிருந்து வெளிக்கொண்டு வரவில்லை என்பது புரிந்தது.
மிகுந்த மனத்தளர்வுடன் அங்கிருந்து நகர்ந்து வாசற்படியை நோக்கி நடந்தான். ஏதோ இனம் புரியாத கவலைகள் அவன் மனதைக் கவ்விக் கொண்டிருந்தன. வாசற்படியை அடைந்தும் கூட வெளியேற மனமில்லாதவனாக அருகே கிடந்த பெஞ்சியில் சிறிதுநேரம் அமர்ந்தான்.
அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கால் முறிந்து ஆபரேசன் தியேட்டரில் கிடக்கும் முரளியைப் பார்க்காமல் செல்ல அவன் மனம் இடந்தரவில்லை. எப்படியாவது பார்த்துவிட்டே செல்வது என்ற உறுதியுடன் எழுந்தான். மீண்டும் ஆபரேசன் தியேட்டரை நோக்கி நடந்தான்.
அங்கே கவலை தோய்ந்த முகத்துடன் முரளியின் அப்பா, அம்மா, தங்கை அமலா, பள்ளித் தலைமையாசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியோர் ஒரு சிறு கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். தங்கள் கவலையையும் மன ஆதங்கத்தையும் ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொண்டனர்.
சேகர் அவர்களை நெருங்கி நின்ற போதிலும் யாரும் அவனைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அவனுக்கும் தொடர்ந்து அங்கே நிற்க மனமில்லை. சற்று தூரத்தில் கிடந்த பெஞ்சியின் முனையில் சென்று அமர்ந் தான். அப்பெஞ்சியின் மறு முனையில் முரளியின் மாமா அமர்ந்திருந்தார். அங்கிருந்த கும்பலோடு சேராமல் அவர் மட்டும் ஏன் இங்கே தனித்து அமர்ந்திருக்கிறார்? சேகரின் மனதுள் எங்கோ ஒரு மூலையில் இப்படியொரு கேள்வி தலைதூக்கவே செய்தது.
சேகரின் மனத் தவிப்பை மற்றவர்கள் பொருட்படுத்தாவிட்டாலும் மாமாவால் அவ்வாறு இருக்க அவர் மனம் இடம் தரவில்லை. கவலைச் சூழலிலும் சேகரைக் கனிவாக நோக்கினார். அது அவனுக்குச் சற்று ஆறுதலாகவே இருந்தது.
முரளியின் கால் உடைந்ததற்கு நிச்சயம் சேகர் காரணமில்லை என்பது மாமாவுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால் அந்தச் சம்பவம் நடக்கும் போது உன்னிப்பாகக் கவனித்தவர்களில் அவரும் ஒருவர்.
முரளியின் மாமா அவன் மீது அளவு கடந்த அன்பு காட்டியவர். படிப்பில் ஒகோ என்று இல்லாவிட்டாலும் நல்ல விளையாட்டு வீரனாக விளங்கியது அவருக்குப் பெரும் மகிழ்ச்சி அளித்தது. அதற்கு அவனுக்கு வாய்த்திருந்த நல்ல உடல்கட்டும் ஒரு காரணமாகும்.
முரளி விளையாட்டில் மேலும் மேலும் வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்பதில் அவனைவிட ஆர்வம் உடையவராக இருந்தார் இதற்காக அவன் விரும்பிக் கேட்ட விளையாட்டுக் கருவிகளையெல்லாம் வாங்கிக் கொடுத்திருந்தார். விளையாட்டைப் பொருத்தவரை முரளியிடமிருந்த ஒரு கெட்ட பழக்கத்தை மட்டும் அவர் அறவே வெறுத்தார். அதுதான் அவன் விளையாட்டில் தோற்போம் என்று தெரிந்தால் எதிரிகளிடம் முரட்டுத்தனமாக நடந்து, குறுக்கு வழியில் வெற்றி பெற முயல்வது. இதைப்பற்றி மாமா எத்தனையோ தடவை எடுத்துக் கூறியும் எச்சரித்தும் பயன் இல்லை. அவன் கடைப்பிடித்த அந்த முரட்டுத்தனம் தான் இன்றைக்கு முரளியை ஆபரேசன் தியேட்டர் வரை கொண்டு வந்து சேர்த்துள்ளது.
அங்கு நிசப்தம் நிலவியது. சேகரின் மனம் மீண்டும் ஒரு முறை அந்தச் சம்பவத்தை அசை போடத் தொடங்கியது.
***
பள்ளியின் பல்வேறு விளையாட்டுகளில் முரளி பங்கேற்றாலும், பள்ளி கால்பந்துக் குழுவின் `கேப்டன்’ என்ற பெருமையைத் தான் அதிகம் விரும்பினான். இது சேகருக்கும் தெரிந்தது தான்.
சேகர் வேறொரு பள்ளியின் கால்பந்துக் குழுவின் கேப்டன். பல போட்டிகளில் முரளியுடன் விளையாடிய அனுபவம் உண்டு.
வழக்கம்போல ‘சுதந்திர தின’ விளை யாட்டுப் போட்டிகள் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் தொடங்கின. அன்று காலையில் இறுதியாகத் தேர்வு பெற்ற கால்பந்தாட்டக் குழுவின் இரு அணிகளும் மோதின. ஒரு அணிக்கு முரளி கேப்டன். மற்றொரு அணிக்கு சேகர் கேப்டன். பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் ஆர்வமுள்ள பெற்றோர்களும் மைதானத்தைச் சுற்றிலும் குழுமியிருந்தனர். முரளியின் வெற்றியை எதிர்நோக்கியவராக அவன் மாமா கழுகு போல் விளையாட்டைக் கூர்ந்து கவனித்து, கொண் டிருந்தார்.
முரளி அணியினர் மிகுந்த துடிப்புடன் விளையாடத் தொடங்கினர். ஆனால், போகப் போக சேகர் அணியின் கையே ஓங்கிக் கொண் டிருந்தது. முதலாவது கோலை சேகர் போட்டான். குழுமியிருந்தோர் அனைவரும் ஆரவார ஒலியோடு கைதட்டி உற்சாகமூட்டினர்.
இரண்டாவது ஆட்டம் தொடங்கியது. பந்தை லாவகமாகவும் தந்திரமாகவும் போக்குக் காட்டி நகர்த்திக் கொண்டிருந்தனர் சேகர் அணியினர். மீண்டும் மீண்டும் கைதட்டல்களும் உற்சாக ஒலிகளும் பார்வையாளர் பகுதியிலிருந்து ஒலித்துக் கொண்டே இருந்தன. இதைச் சிறிதும் பொருட்படுத்தாதவன்போல் சேகர் சுறுசுறுப்பாகவும் விதிமுறையோடும் விளையாடிக் கொண்டிருந்தான்.
ஆனால், முரளியின் மனநிலையில் மாறுதல் ஏற்பட்டது. ‘இம்முறையும் சேகர் கோல் போட்டுவிட்டால்’ நினைக்கும்போதே முரளியின் நெஞ்சு படபடத்தது. அத்தோல்வியைத் தன்னால் தாங்க முடியாது என உறுதியாக நம்பினான். அது வரை முறையாக ஆடி வந்த முரளி எப்படியாவது பந்து தன் பகுதி கோலை நோக்கிப் போகாமல் தடுக்க தாறுமாறாக ஒடித் தடுக்கலானான். இதைக் கண்ட பார்வையாளர்கள் கூச்சலிட்டு ஆட்சேபிக்கத் தொடங்கினர். இது மேலும் முரளிக்கு எரிச்சலூட்டியது.
முரளியின் ஆட்டப் போக்கு அவன் மாமாவுக்குப் பிடிக்கவில்லை. அவனை நன்றாகத் தெரிந்தவர் ஆதலால் அடுத்து என்ன நடக்கு மோ என்ற கவலையுடன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
பார்வையாளர் பகுதியிலிருந்து வந்த எதிர்ப்புக் குரல்கள் முரளியை மேலும் மேலும் தவறு செய்யத் தூண்டின. அவனுள் உறங்கிக் கொண்டிருந்த முரட்டுத்தனம் தலைதூக்கியது. அவன் மனதில் மட்டுமல்ல; ஆட்டத்திலும் தடுமாற்றம் ஏற்பட்டிருந்தது.
அதே சமயம் சேகர் பொறுமையாகவும் முறையாகவும் விதிமுறை பிறழாமல் விளையாடிக் கொண்டிருந்தான். லாவகமாக அவன் காலுக்குப் பந்து கிடைத்தது. அவன் சாதுரியமாகப் பந்தை கோலை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்
தான். இரண்டாவது கோலையும் சேகரே போட்டு விடுவானோ என்ற அச்சத்துடன் முரளி அவனை நெருங்கிப் பந்தைத் தன் வசமாக்க வெறித்தனமாக முயற்சி , மேற்கொண்டான். முரட்டுத்தனமாகப் பந்தை இழுக்க முயன்றான். முரளியின் முரட்டுத் தாக்குதலிலிருந்து இரு முறை பந்தைக் `கட்' செய்து நகர்த்திச் சென்றான் சேகர். இதே போக்கில் இன்னும் சில விநாடிகள், பந்தை நகர்த்திச் சென்று பந்தை ஓங்கி உதைத்தால் அது கோலுக்குள் சென்று விடும். கூட்டம் பரபரப்போடு அந்தக் காட்சியைக் காணத் துடித்துக் கொண்டிருந்தது. இன்னுமொரு வெற்றி சேகருக்குக் கிடைப்பதை முரளியால் நினைத்தே பார்க்க முடியாவில்லை.
முரளி திடீரென ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனைப்போல் சேகரை நெருங்கினான். தொடர்ந்து பந்தை மட்டுமல்ல. சேகரையே முன்னேற விடாமல் தடுக்கும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபடலானான். பந்தைத் தன் பால் இழுப்பதற்கு மாறாக சேகரின் காலை ஓங்கி உதைத்து, தன் காலை கொக்கிபோல் மாட்டி இழுத்துவிட முயன்றான். தன் காலை சேகர் லாவகமாக உதறி இழுத்துக் கொண்டான். இதைச் சிறிதும் , எதிர்பாராத முரளி நிலை குலைந்து சமநிலை பெற முடியாமல் தடுமாறி, மடக்கிய காலோடு கீழே விழுந்தான். சேகரின் பந்தைக் கவர்ந்து இழுக்க முனைப்போடு ஓடி
வந்த இருவர் வேகமாக முரளி மீது தடுமாறி விழுந்தனர். விழுந்த இருவரும் கனத்த சரீர முடையவர்கள். அவர்கள் இருவரின் உடல் பாரமும் ஒரே சமயத்தில் மடக்கிய கால் எலும்பின் மீதே விழுந்தது. அவன் கால் எலும்பு நொறுங்கவே வலி தாளாமல் முரளி கத்தினான். விழுந்தவர்கள் அதிர்ந்து போய் எழுந்தனர். சேகர் ஓடி வந்து முரளியைத் தூக்கினான். எல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டன.
ஆம்புலன்ஸ் வண்டி முரளியை மருத்துவமனை கொண்டு வந்து சேர்த்தது.
இந்தக் காட்சி சேகரின் மனத்திரையில் படமாக ஓடி மறைந்தது.
***
நீண்ட சிந்தனையிலிருந்த சேகரின் கவனத்தைத் திரும்பியது ஆபரேசன் தியேட்டரிலிருந்து வெளிவந்த டாக்டரின் வருகை. அவரை நோக்கி எல்லோரும் விரைந்தார்கள், கவலை தோய்ந்த முகத்துடன் காத்திருந்தவர்களை நோக்கி லேசாக புன்னகை புரிந்தார் டாக்டர். டாக்டரின் அந்தப் புன்முறுவலும் இளநகையும் அங்குள்ளோர்க்குப் பால் வார்த்தது போல் இருந்தது. நம்பிக்கையோடு டாக்டர் கூறப் போகும் வார்த்தைகளைச் செவிமடுத்தனர்.
மெதுவாகக் கனைத்துக்கொண்டு டாக்டர் பேசத் தொடங்கினார்:
"முரளிக்கு இனி எந்த ஆபத்தும் இல்லை. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’ம் பாங்களே அதுபோல அவனுக்கு ஏற்பட இருந்த ஆபத்து வெறும் கால் எலும்பு முறிவோடு நின்னுடுச்சு. எலும்பு முறிவைச் சரிப்படுத்தி மாவுக்கட்டுப் போட்டிருக்கோம். மயக்கம் தெளிய இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். வேண்டுமானால் சற்று தூரத்தில் நின்று பார்த்துவிட்டுச்செல்லுங்கள். யாராவது ஓரிருவர் பக்கத்தில் இருந்தால் போதும். மற்றவர்கள் போகலாம்.
டாக்டர் கூறியதை ஏற்றவர்களாக முரளியைச் சற்று தூரத்தில் பார்த்துவிட்டு அவன் குடும்பத்தார் வெளியேறினார்கள். அவன் மாமா மட்டும் அங்கேயே தங்கிவிட்டார். சேகரும் தயங்கியபடியே அங்கே பெஞ்சியில் அமர்ந்திருந்தான். முரளியின் மயக்கம் தீர்ந்த பின்னர், அவனை நேரில் பார்த்த பிறகே செல்வது எனத் தீர்மான மாக இருந்தான்.
நேரம் செல்லச் செல்ல லேசாக உடல் அசைவு ஏற்பட்டது. பெரிதாக மாவுகட்டுப்
போடப்பட்ட காலைத் தவிர மற்ற அவயவங்கள் அசைந்தன. இதைக்கண்டபோது மாமாவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அவர் முகத்தில் பிரதிபலித்தது. அவர் முரளியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவன் கண் திறந்து தன்னைப் பார்ப்பதையும் பேசுவதையும் ஆவலுடன் காணத் துடித்துக் கொண்டிருந்தார். நர்சும் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தாள்.
முரளி மெதுவாகக் கண்களைத் திறந்த போது மாமா லேசாகச் சிரித்தார். அவரது சிரித்த முகம் முரளிக்கு ஆறுதலாக இருந்தது.
தன் காலில் ஒன்றை அசைக்க முடியாமலிருப்பதை விரைவிலேயே உணர்ந்தான். தன் கையைக் கொண்டு தடவிப் பார்த்தபோது கட்டுப் போடப்பட்டிருந்ததை அறிந்தான். அவன் கண்கள் நீரைச் சொறிந்தன. துக்கத்தில் அவன் தொண்டை அடைத்துக் கொண்டது. அவனால் பேச முடியவில்லை. அவன் நிலையைக் குறிப்பாக உணர்ந்த அவன் மாமா மெதுவாக அவன் தலையைக் கோதிவிட்டார். கனிவோடு நோக்கி அன்பாகப் பேசினார்.
“முரளி! நீ பயப்படுவதுபோல் எதுவும் நடந்துவிடவில்லை. லேசான எலும்பு முறிவு தான், கட்டுப்போட்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் எல்லாமே சரியாகிவிடும். தெம்
பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். நீ ஒரு விளையாட்டு வீரன் என்பதை மறந்து விடாதே!”
இவ்வாறு அவன் மாமா ஆறுதல் கூறி அன்போடு தட்டிக்கொடுத்தார். இதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சேகர் மெதுவாக அந்த அறைக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்தபோது முரளிக்கு மனக் கூச்சம் ஏற்பட்டிருக்க வேண்டும். சேகரின் வருகையை முரளி எதிர்பார்க்கவே இல்லை என்பது அவன் பார்த்த பார்வையிலிருந்து தெரிந்தது. அதிர்ந்த மனத்துடன் சேகரை ஏறிட்டு நோக்கினான் முரளி. தன்னால் சேகருக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய தீங்கு தனக்கே ஏற்பட்டுள்ளதை முரளியால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
மாமா சைகை காட்டி சேகரை அழைத்தார். படுக்கையருகே வந்த சேகர், கனிவோடும் பரிவோடும் முரளியை நோக்கி புன்முறுவல் பூத்தான். தன் கைகளை நீட்டினான். நீட்டிய சேகரின் கரங்களை முரளி, இறுகப் பற்றினான். அவன் பேச நாவெடுத்தான். குரல் தழதழத்தது. ‘என்னை மன்னித்துவிடு சேகர்!" என்று அரைகுறையாகப் பேசி முடித்தான் முரளி. தன் கைகளால் முரளியின் வாயை லேசாகப் பொத்தியபடி "முரளி! நீ எந்தத் தவறும் செய்ய
வில்லை. எதேச்சையாக நடந்து விட்ட விபத்துக்கு யாரும் பொறுப்பில்லை. பேரபாயம் ஏதும் ஏற்படாமல் காத்த கடவுளுக்குத் தான் நாம் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும்” என ஆறுதல் வார்த்தைகளைப் பேசினான்.
சேகருக்கு இதே விதமான விபத்தை ஏற்படுத்த முனைந்த ரகசியம் முரளிக்கும், ஆட்டத்தின் போக்கை கூர்ந்து கவனித்துக் கொண் டிருந்த அவன் மாமாவுக்கும் மட்டுமே தெரியும். விளையாட்டு வேகத்தில் சேகருக்கு அது சரியாகப் புரியாததில் வியப்பில்லை. தன் முரட்டுத்தனமான போக்கும் தவறான எண்ணமும் தனக்கே தண்டனையாக அமைந்து விட்டதை முரளி உணரவே செய்தான். 'நினைக்கும் கெடுதி தனக்கே’ என்பது எவ்வளவு பெரிய உண்மை என்பது மின்னல் வெட்டுப் போல் அவன் மனதில் பளிச்சிட்டு மறைந்தது.
தன் தவறுக்காக வருந்தும் மனநிலையிலிருந்த முரளியின் மனதில்சில நல்ல உணர்வுகளையும் நெறிகளையும் நிலை நிறுத்த இது தான் சரியான தருணம் எனக் கருதினார் மாமா. அதன் மூலம் முரளியின் உள்ளத்தில் குடி கொண்டுள்ள முரட்டுச் சுபாவத்தைப் போக்க விரும்பினார். ஆத்திரமும் அடாவடித்தனமும்
முன்னேற்றத்தின் மாபெரும் முட்டுக்கட்டைகள் என உணரச் செய்ய இதுவே தக்க சமயம் என முடிவு செய்தார்.
“பொதுவாக ஒரு உண்மையை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும், அது போட்டியாகவே இருந்தாலும்கூட முறைப்படி, பொறுமையாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் முழுமையான வெற்றி கிடைக்கும். அவசரப்பட்டோ முறை பிசகியோ செயல்பட்டால் வெற்றி கிடைக்காதது மட்டுமல்ல தோல்வியுடன் பெரும் இழப்பும் ஏற்பட்டே தீரும்"கிறதை விளக்கக்கூடிய ஒரு உருவகக் கதையைச் சொல்றேன்.”
இவ்வாறு மாமா கூறியவுடன் கால் வேதனையை மறக்கவும் நல்ல செய்திகளைக் கேட்கவும் கிடைத்த வாய்ப்பாக முரளி கருதினான். வாழ்க்கையில் பெரும் பெரும் அனுபவங்களைப் பெற்றுள்ள மாமா கூறும் உருவகக் கதை நிச்சயமாகப் பயனுள்ளதாகவே இருக்கும் என நம்பி சேகரும் தன்காதுகளைத் தீட்டிக்கொண்டு கதை கேட்கத் தயாரானான். பக்கத்தில் இருந்த நாற்காலியை அவர் அருகே இழுத்துப்போட்டு அதன் மீது அமர்ந்தான். அந்த நேரத்தில் நர்சும் அந்த அறையில் இல்லை.
2
மாமா அந்த உருவகக் கதையைச் சொல்லத் தொடங்கினார்.
***
இரண்டு உழவர்கள் பக்கத்துப் பக்கத்து வயல்களை உழுது கொண்டிருந்தார்கள். ஒரு உழவன் மிகவும் பொறுமையாகக் காட்சியளித்தான். அன்புணர்வு மிக்கவன்; மிகுந்த நிதானப் பொக்குள்ளவன்; எதையும் முறையாகச் செய்ய வேண்டும், அப்போதுதான் வெற்றியும் முறையானதாக இருக்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவன்.
பக்கத்து வயலை உழுது கொண்டிருந்த உழவனோ இதற்கெல்லாம் நேர்மாறான தன்மையுள்ளவன். இப்படித்தான் செய்ய வேண்டும்' என்பதெல்லாம் அவனுக்குப் பிடிக்காத ஒன்று. ‘எப்படியாவது வெற்றிபெற வேண்டும்’ எனும் கொள்கையுடையவன். இதற்காக பொறுமை அது இது என்று எந்த முறையையும் கடைப் பிடிக்க விரும்பாதவன் இன்னும் சொல்லப் போனால் பொறுமை உணர்ச்சி அறவே இல்லாதவன்.
இந்த நிலையில் காலை நேரத்தில் இருவரும் ஏர்பூட்டி நிலத்தை உழத் தொடங்கினர். வெயில் ஏறிக்கொண்டே வந்தது, மதியம் ஆகியது.
முதல் உழவன் பொறுமையாக நிலத்தை உழுதான். தான் செய்யும் காரியத்தில் மிகுந்த அக்கரையும் ஆர்வமும் கொண்டிருந்தான். அவ்வப்போது தன் ஏரை நிறுத்தி மாடுகளுக்கு ஒய்வு கொடுத்தான். அன்போடு தட்டிக் கொடுத்து அவைகளை ஆசுவாசப்படுத்தினான் அவைகளும் உற்சாகத்துடன் நிலத்தை உழுதன.
அதே சமயம் அடுத்த வயலை உழுது கொண்டிருந்த உழவன் அவசரப்பட்டான். விரைந்து நிலத்தை உழுது முடிக்கவேண்டும் என்பதற்காக ஏர்மாடுகளை அடித்து விரட்டினான். அவை ஒடி ஒடிக் களைத்தன. வெயிலின் கொடுமையும் எசமானின் அடியும் மாடு களை வேகமாகத் தொடர்ந்து நடக்க விடவில்லை. அவனுக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. தன் நரம்புகள் புடைக்க மேழியைப் பிடித்து அழுத்தி உழுதான். மாடுகள் களைப்புடன் தொடர்ந்து நடக்க முடியாமல் கீழே விழுந்துவிட்டன. அவைகளை அடி அடி என்று அடித்துப் பார்த்தான். அம்மாடுகள் எழுந்து நடப்பதாகத் தெரியவில்லை. அடுத்தவன் வயலைப் பார்த்தான். அவன் மாடுகள் முறையாக உழுது கொண்டிருந்தன. அதிக நிலப்பரப்பை உழுது முடித்திருந்தன. அந்த மாடுகளைப்போல் தனக்கு வாய்க்கவில்லையே என ஏங்கினான்; மனம் புழுங்கினான்; அவன்
உழுததில் நான்கில் ஒரு பங்கு கூட தன்னால் உழ முடியவில்லையே என கவலை மிகக் கொண்டான்.
பொறாமை அவன் மன அமைதியைக் குலைத்தது. கடுகடுத்த முகத்தோடு இருந்த அவன் மனம் அலுப்பும் சலிப்பும் அடைந்தது. தான் கால் பங்குகூட உழாத நிலையில் பக்கத்து உழவன் உழவையே முடிக்கப் போவதைப் பார்த்து மனம் வெதும்பினான் இதை அவனால் தாள முடியவில்லை. அவனுக்கு மிகுந்த ஆக்ரோஷம் ஏற்பட்டது. உழுவதை நிறுத்தி விட்டு, ஒரு கல்லைத் தூக்கிக்கொண்டு ஆத்திரமாகக் கத்தியபடி அடுத்தவன் வயலுக்குள் ஒடினான். வரப்புத் தடுக்கியது, ஒடிய வேகத்தில், பொறுமையாக உழுது கொண்டிருந்த இரண்டாவது உழவன் அருகே கல்லோடு குப்புற விழுந்தான். அக்கல்லே அவன் தலையைத் தாக்கியது. இரத்தம் கொட்டியது. அப்போதே அவன் உயிரும் பிரிந்துவிட்டது. சாகும் போது அவன் கை அந்தக் கல்லைப் பிடித்தபடியே இருந்தது.
பொறுமையாக உழுது கொண்டிருந்த உழவனுக்கு எதுவுமே விளங்கவில்லை. கல்லைத் தூக்கிக்கொண்டு எதற்காக தன் அருகில் ஓடி வந்தான்? ஏன் கீழே விழுந்தான்? எப்படி உயிரைவிட்டான்? ஆகிய எதுவுமே அவனுக்குப் புலப்படவில்லை.
"இந்தக் கதையிலிருந்து நமக்கு என்ன புரிகிறது?” மாமா வினயமாகக் கேட்டார்.
"அடுத்தவன் நல்வாழ்வை, வெற்றியைக் கண்டு பொறாமைப்பட்டு துன்பம் செய்ய நினைத்தால் நினைத்தவனே அழிவான்’கிறது தான் இக்கதையின் நீதி." பளிச்சென பதில் அளித்தான் சேகர்.
தான் மேற்கொண்ட தவறான செயலையே மாமா உருவகக் கதையாகக் கூறிக்கொண்டிருப்பதை முரளி உணராமல் இல்லை. இக்கதையைக் கேட்டபோது தனக்கு இந்தத் தண்டணை போதாது என அவன் உள்மனம் கூறுவதுபோல் தோன்றியது. முரளியின் கண்களில் தேங்கியிருந்த கண்ணிர் இதை உறுதிப்படுத்தியது.
இததயெல்லாம் ஒரக்கண்ணால் மெளனமாகக் கவனித்துக் கொண்டிருந்த மாமாவின் மனம் மகிழ்ச்சியால் பொங்கியது. தன் தவறை உணர்ந்து. மனம் வருந்தி. தனக்குத் தானே கண்ணிர்விட்டு வருந்தும் முரளி இனி திருந்தி விடுவான் என்ற நம்பிக்கை அவருக்கு வலுவாக ஏற்பட்டது.
சேகர் கூறிய பதில் மாமாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் மேலும் விளக்கம் தந்து பேசலானார்.
"இந்தக் கதையில் வரும் உழவர்கள் ரெண்டு பேருமே தனித்தனி மனப்போக்கு உள்ளவங்க. ரெண்டு பேர்லே முறையாகவும் பொறுமையாகவும் மன அமைதியோடும் உழுதவன் சிறந்தவன்; மனிதத் தன்மை மிகுந்தவன்; அவனுக்கு மதிப்பு அதிகம்; வெற்றியும் உறுதி. இத்தகையவர்களே எப்பவும் எதிலும் வெற்றி பெறுவார்கள்; புகழை நிலைநிறுத்துவார்கள்: மற்றவர்களின் போற்றுதலுக்கும் உரியவர்கள் ஆவார்கள்.”
மாமா கூரிய விளக்கம் சேகருக்கு மட்டுமல்ல, முரளிக்கு இதய நோய்க்கு ஏற்ற மாமருந்தாக அமைந்தது. இனி எந்த நிலையிலும் பொறாமையோ ஆத்திரமோ முரட்டுத்தனமோ கொள்வதில்லை என உள்ளத்தில் உறுதி செய்து கொண்டான். அவன் உறுதியை முகக் குறிப்பால் உணர்ந்து கொண்ட மாமா அவன் சிந்தனையை வேறு வழியில் செலுத்த முயற்சி மேற்கொண்டார்.
"எல்லாவித எண்ணங்களுக்கும் உறைவிடமாக உள்ளம் அமைந்திருப்பதால் அதை வளர்க்க, வளப்படுத்த ஒவ்வொருவரும் முயற்சி செய்யனும். நல்ல உள்ளங்கள் கூட தீயவர்களின் உறவால் கெட்டுவிட முடியும். இதனால் தங்களுக்கு மட்டுமல்லாமல் தங்களைச் சார்ந்த மற்றவர்களுக்கும் பெருந்தீங்கு ஏற்பட ஏதுவாகி
விடும். உயிருக்குயிரான நட்பையே நாசப் படுத்திவிடும். இதை விளங்கிக் கொள்ள ஒரு சின்ன கதை சொல்கிறேன். உங்கள் ரெண்டு பேருக்குமே பயன்படும்” எனச் சொல்லி கதை கூறத் தொடங்கினார்.
மாமா மீண்டும் கதைகூற முனைவதை இருவருமே வரவேற்றனர். தன் கால் வேதனையை மறப்பதோடு மனப்புண்ணுக்கு மருந்தாகவும் மாமா கூறும் கதை அமையும் என முரளி நம்பி னான். மாமாவின் அனுபவப்பூர்வமான, அறிவு சார்ந்த கதைகள் மூலம் பல புதிய புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளும் வேட்கையுடன் சேகரும் கதை கேட்கத் தயாரானான். மாமா கதையைத் தொடங்கினார்.
***
அடுத்தடுத்து இருந்த இரண்டு கிராமத் தலைவர்கள் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஒருவரையொருவர் உயிருக்குயிராக நேசித்தனர். ஈருடல் ஒருயிர் என வாழ்ந்தனர். வேதனையிலும் சோதனையிலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொண்டனர். இதனால் இரண்டு கிராம மக்களும் குறை ஏதும் இல்லாமல் நிறைவாக வாழ்ந்தார்கள்.
இந்த நண்பர்களில் ஒருவர் கருத்த மயிரை உடையவராக இருந்ததால் கருந்தலையர் என அழைக்கப்பட்டார். மற்றொருவர் தலைமுடி செம்பட்டையாக இருந்ததால் ‘செந்தலையர்’ என அழைக்கப்பட்டனர். இருவருக்குமே இயற்பெயர் இருப்பினும் இப்பட்டப் பெயராலேயே மக்கள் அழைத்துவந்தனர். நாளடைவில் இதுவே இவர்களின் பெயராகவும் அமைந்து விட்டது.
ஒருநாள் கருந்தலையரின் கிராமத்தில் சுழற்காற்று சூறாவளிக் காற்றாக சுழன்று சுழன்று அடித்தது, இதனால் சில மரங்களும் பல மரக் கிளைகளும் ஒடிந்து விழுந்துவிட்டன. விழுந்து விட்ட இம்மரங்களை என்ன செய்வது என்று கருந்தலையர் ஆலோசித்தார். அவரது வேலையாட்களில் ஒருவன் முறிந்து விழுந்துள்ள மரங்களைக் கழிகளாக வெட்டி எடுத்து கோழிக் கூண்டு செய்யலாம் என்றும், கோழி வளர்க்க உதவும் என்று ஆலோசனை கூறினான். இந்த யோசனை மிகவும் பிடித்துப்போய்விட்டதால், அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டார்.
வேலையாட்கள் விரைந்து சென்று புயலில் விழுந்து கிடந்த மரங்களையெல்லாம் சேகரித்தார்கள். அவைகளை கழிகளாக வெட்டிக் குவித்தார்கள்.பின், கட்டுகளாகக் கட்டினார்கள்.
வேலையாட்கள் கழிக் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு செல்வதை செந்தலையரின் வேலையாட்களில் ஒருவன் பார்த்தான். வெட்டிக் கட்டப்பட்டிருந்த கழிக் கட்டுகளைப் பார்த்த போது அவனுக்கு ஏதோ ஒரு வித அச்ச உணர்ச்சி ஏற்பட்டது. குறையறிவு கொண்ட அவன் அதைப்பற்றி மேலும் மேலும் சிந்திக்கும் போது அவனுக்கு ஏதேதோ விபரீத எண்ணமெல்லாம் உண்டாகியது.
அவன் வேகமாகத் தன் எஜமானனாகிய செந்தலையர் வீட்டை அடைந்தான். தன் அச்ச உணர்வையும் விபரீத எண்ணத்தையும் வெளிப் படுத்தினான். கருந்தலையர் ஆட்கள் நம்மைத் தாக்குவதற்காகத் தங்கள் காடுகளில் உள்ள மரங்களையெல்லாம் இரகசியமாக வெட்டி கழிகளாக்கிச் சேகரித்து வைக்கிறார்கள். இதைத் தன் கண்ணால் பார்த்ததாகவும் கூறினான். சுற்றியிருந்தவர்களும் இது உண்மையாக இருக்கலாம் என்றும், தங்களுக்கும் இப்படி ஒரு சந்தேகம் கொஞ்ச நாளாக உண்டு என்றும் ஒத்துப்பாடி தூபமிட்டார்கள்.
தன் வேலையாளும் தன்னைச் சுற்றியுள்ள பலரும் கருந்தலையர் தாக்குவதற்கு தயாராகி வருகிறார் என்ற கருத்தை அனைவரும் ஒரே மாதிரி சொன்னதால், செந்தலையரால் அதை நம்பாமல் இருக்க முடியவில்லை. அவர்
கள் கூறியதில் உண்மை இருக்கலாம் என்று நம்பினார். அதோடு, எதிரி தாக்கினால் அதை முறியடிக்கத் தானும் தயாராக இருக்கவேண்டும் எனக் கருதினார். எனவே, தன் கிராமத்திலுள்ள மரங்களையெல்லாம் வெட்டி, கழிகளைச் சேகரிக்குமாறு உத்திரவிட்டார்.
செந்தலையரின் கிராமத்திலுள்ள மரங்களெல்லாம் வெட்டி வீழ்த்தப்பட்டன. அவை கழிகளாக வெட்டிச் சேகரிக்கப்பட்டன. கட்டுகளாகக் கட்டப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன.
இதைக் கண்ட கருந்தலையருக்கு வியப்பாக இருந்தது. 'தன் கிராமத்து மரங்கள் புயலால் விழுந்ததால் கோழிக் கூண்டு கட்ட கழிகளாக்கினோம். புயலேதும் அடிக்காதபோது, நல்ல மரங்களையெல்லாம் வெட்டி செந்தலையர் ஏன் கழிகளாக்கிச் சேமிக்க வேண்டும்’ என்று எண்ணினார். தன்னோடு இருந்தவர்களிடம் இதைப்பற்றி கருந்தலையர் ஆலோசித்தார். செந்தலையரின் ஆட்களுக்கு ஏற்பட்ட அதே ஐயம், பயம் கருந்தலையர் ஆட்களுக்கும் ஏற்பட்டது. கழிகளைச் சேகரித்துப் போருக்குத் தயாராகி வரும் செந்தலையரின் தாக்குதலை எதிர்த்து முறியடிக்க நாமும் வேண்டிய அளவு கழிகளை உடனடியாகச் சேகரித்தே தீரவேண்டும் எனக் கூறி, போர் உணர்ச்சியைத் தூண்டி விட்டனர். உடனே கருந்தலையர் தன் கிராமத்
திலுள்ள எல்லா மரங்களையும் உடனடியாக வெட்டி கழிகளாகச் சேகரிக்கப் பணித்தார். எந்த நேரமும் செந்தலையர் தாக்க முனையலாம் என்றும அதனை எதிர்க்கத் தன் கிராம்த்து ஆட்கள் எப்போதும் தயாராக இருக்கவேண்டும் என்றும் ஆணையிட்டார்.
ஒருசில நாட்களுக்குள் இரண்டு ஊர்களிலுமுள்ள மரங்கள் அனைத்தும் வெட்டி வீழ்த்தப் பட்டன. அவை கழிகளாக உருமாற்றி, கட்டுகளாகக் கட்டி அடுக்கி வைக்கப்பட்டன. எந்த நேரமும் சண்டை மூளலாம் என்ற அச்ச உணர்வு இரு கிராமத்து மக்களையும் கவ்விக் கொண்டது. பல்வேறு வகையான போர் ஆயுதங்களையும் வாங்கிச் சேகரிக்கலாயினர்.
இரு கிராமத்துத் தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் வசமிருந்த பொருள்களையெல்லாம் விற்று, பணமாக்கி ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தனர். இரண்டு கிராமங்களும் கடும் பகையாளி கிராமங்களாக உருவெடுத்து நின்றன.
மரங்களெல்லாம் வெட்டப்பட்டதால் பசுமையே இல்லாத வரட்சி நிலை ஏற்பட்டது. மழை அடியோடு பொய்த்துவிட்டது. அதனால் உணவுப் பொருள் விளைச்சல் நாளடைவில் குறைந்து கொண்டே வந்தது. இறுதியில் எது
வுமே விளையாத பாலை நிலங்களாக உருமாறிக் கிடந்தன. ஆடு மாடுகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. பஞ்சம் தாண்டவமாடத் தொடங்கியது. வேலை இல்லாத மக்கள் வேலை தேடி வேறிடங்களுக்குக் குடிபெயர ஆரம்பித்தார்கள். இதனால், செல்வச் செழிப்போடு பசுமையாகத் தோற்றமளித்த இரண்டு கிராமங்களும் மக்களில்லாத வெற்றிடங்களாகச் வெறிச்சோடிக் கிடந்தன.
நாட்கள் மாதங்களாயின. மாதங்கள் வருடங்களாயின. வருடங்கள் பலவாகியும் இரு கிராமங்களிடையேயும் பகை உணர்ச்சியும் வளர்ந்தே வந்தது.
கருந்தலையரும் செந்தலையரும் மூப்பின் எல்லைக்குச் சென்றனர், இரண்டு பேரின் தலையும் முதுமையின் காரணமாக வெண் தலை களாகிவிட்டன. நடை தளர்ந்தவர்களாக கூன் விழுந்த முதுகோடு தடியூன்றி நடக்கும் நிலை ஏற்பட்டது.
ஒருநாள் மாலையில் முதுமையான வெண் தலையர்களாகிவிட்ட கருந்தலையரும் செந்தலையருமாகிய இரு கிராமத் தலைவர்களும் உலாவச் சென்றார்கள். இரு கிராமத்தையும் இணைத்து நிற்கும் சிறிய குன்றின்மீது பக்கத்து ஒருவராக ஏறி நின்றார்கள். ஒருவரை யொருவர் ஏறிட்டுப் பார்த்தனர். தாங்கள்
ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு முதுமை தங்களை உரு மாற்றிவிட்டதை உணர்ந்தார்கள். தாங்கள் நண்பர்களாக விளங்கிய பசுமையான நாட்களை ஒரு கணம் நினைத்துக் கொண்டார்கள். தாங்கள் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு, ஒருவர் மீது ஒருவர் சந்தேகமும் அச்சமும் கொண்டதால் தாங்கள் அறியாமலே ஏற்பட்ட பகைமையையும் நினைத்துப் பார்த்தார்க்ள். தங்கள் கிராம மக்களை வறுமையிலிருந்தும் துன்பத்திலிருந்தும் காப்பது தங்கள் கடமை என்பதை அறவே மறந்து, தங்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் கிராமங்களையும் கிராம மக்களையும் சீரழித்துவிட்டதை உணர்ந்து வருந்தினார்கள். இளமை தொட்டுத் தங்களுக்கிடையே நிலவிய அன்பும் பாசமும் நேசமும் அவர்கள் மனதில் மீண்டும் தலைதுாக்கின. தங்களுக்கிடையே எப்படி பகை வளர்ந்தது? வளர்க்கப்பட்டது? மாற்றாரின் கைப் பாவையாகத் தாங்கள் மாறியதால் எப்படி தம் மக்களின் வாழ்வு சிதைந்தது? அவநம்பிக்கையும் குரோதமும் அழிவுக்கு வழியாய் அமைந் திருப்பதை எல்லாம் ஒரு கணம் எண்ணிப் பார்த்தார்கள். அவர்கள் மனம் வேதனையால் துடித்தது. இறுதியில் அவர்களின் அடிமனத்தில் உறங்கிக் கொண்டிருந்த பாசமும் நேசமும் தலைதுாக்கியது. இருவரும் ஓடி வந்து ஒருவரை
யொருவர் தழுவிக்கொண்டனர். அவர்கள் கண்கள் நீரைச் சொரிந்தன.
காரணம் இல்லாமல் ஏற்படும் சந்தேகமும் அச்சமும் எப்படியெல்லாம் மனிதர்களை ஆட்டி வைக்கிறது என்பதற்கு இந்தக் கதையே சான்றாகும். தாங்கள் மட்டுமல்லாது தங்களைச் சார்ந்தவர்களும் எப்படியெல்லாம் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்பதற்கு பாழ்பட்டுப் போன இரு கிராம மக்களின் வாழ்க்கையே உதாரணம். எனவே, வாழ்க்கையாகட்டும், விளையாட்டு ஆகட்டும் ஒருவர் மற்றவர் மீது வீண் சந்தேகமும் அச்சமும் கொள்ளுதல் கூடாது. மாற்றாரின் திறமையைப் பாராட்டும் பண்பு வளரவேண்டும், முறையாகவும் பொறுமையாகவும் செயல்பட்டால் வெற்றி தானே காலடியை வந்து சேரும். இல்லையேல் இன்னலும் துயரும் தொடரவே செய்யும் எனச் சொல்லி முடித்தார் மாமா.
***
அமைதியாகக் கதையைக் கேட்டுவந்த முரளியும் சேகரும் ஆழ்ந்த சிந்தனைக்கு ஆளானார்கள். பொறுமை இல்லாது, முறையாக உழாது, பொறாமை கொண்டு மற்றவனைக் கொல்ல முனைந்து, தன்னையே பலியாக்கிக் கொண்ட உழவன் முரளியின் கண்முன்னே காட்சி தந்தான். தன் நிலைக்காக வேதனைப்
பட்டான். அவன் வேதனை கண்ணிராகப் பெருக்கெடுத்தது.
காரணம் இல்லாமல் சேகர் விளையாட்டில் ஜெயித்து விடுவானோ என்ற சந்தேகமும் அச்சமும் ஏற்பட, தான் முரட்டுத்தனமாக சேகருக்குத் தீங்கு செய்யப் போக, அதனால் தான் மட்டுமல்லாது தன்னைச் சேர்ந்தவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளதை ஒரு கணம் நினைத்தபோது அவன் நெஞ்சம் வேதனையால் விம்பித் துடித்தது. இனி, ஒருக்காலும் இத்தகைய இழி நிலைக்கு ஆளாகமாட்டேன் எனத் தனக்குள் முரளி உறுதி செய்து கொள்வதை அவன் முக உணர்ச்சிப் புலப்படுத்திக் கொண்டிருந்தது.
இதையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர் போல் மாமா முரளியை புன்முறுவலோடு கனிவாகப் பார்த்தார். இருவர் முகத்திலும் ஏற்படும் மலர்ச்சியை மாறிமாறிப் பார்த்து மகிழ்ந்தவனாக சேகர் நின்று கொண்டிருந்தான்.
மூவரிடையே நிலவிய அமைதியைக் குலைத்தது நர்சும் வருகை. வந்ததும் வராததுமாக முரளியைச் `செக்அப்' செய்ய டாக்டர் வருகிறார். நீங்கள் இருவரும் சற்றே அறையை விட்டு வெளியேறுங்கள்' என்று அறிவிப்புச்செய்தாள். மாமா வெளியே செல்ல எழுந்தார். சேகர்
வாஞ்சையோடு முரளியின் கைகளைப் பற்றினான். எந்த சேகருக்கு தீங்கிழைக்க முயன்றானோ அதே சேகர் தான் நலமடைய காலை முதல் காத்திருந்து அன்பு காட்டிய தகைமையை எண்ணியபோது முரளியின் மனம் வெட்கத்தாலும் வேதனையாலும் துடித்தது. சேகர் நீட்டிய கரங்களை இறுகப்பற்றி முத்தமிட்டான். முத்தமிட்ட சேகரின் கரங்கள் முரளியின் கண்ணீரால் நனைந்தன. அதில் முரளியின் உள்ளத்தில் குடிகொண்டிருந்த முரட்டுத்தனம், மூர்க்க குணம், "தான்’ என்ற அகந்தை ஆகிய எல்லாமே கரைந்தன.
-----------
நூலாசிரியர்
வளர் தமிழ்ச் செல்வர்,
கலைமாமணி
ஹாஜி மணவை முஸ்தபா
சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற வளர் தமிழ்ச் செல்வர், கலைமாமரிை ஹாஜி மணவை முஸ்தபா, சர்வதேசத் தமிழ்த் திங்களிதழான 'யுனெஸ்கோ கூரியர்’ ஆசிரியராவார்.
'காலம் தேடும் தமிழ்’ இன்றையத் கென்னக இலக்கியப் போக்கு, `இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் உட்பட இருபத்தியாறு தமிழ் நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலிருந்து எட்டு நூல்களையும் மலையாளகத்திலிருந்து ஏழு நூல்களையும் பெயர்த்துள்ளார். எட்டு தொகுப்பு நூல்களும் வெளிவந்துள்ளன, ஐந்து சிறுவர் இலக்கியங்களையும் படைத்துள்ளார், முப்பதுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்களையும், ஐந்து தொலைக் காட்சி நாடகங்களையும் எழுதியுள்ளார். எட்டு ஆண்டுகள் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். சர்வதேச தமிழ் ஆராய்ச்சிப் பேரவையின் இந்தியக் கிளையின் இணைச் செயலாளர்.
இவரது கலை, இலக்கியப் பணியைப் பாராட்டி தமிழ் நாடு அரசின் இயல் , இசை, நாடக மன்றம் 1986 -இல் கலைமாமணி விருதளித்துப் பாராட்டியது. இவரது அறிவியல் தமிழ்ப் பணியைப் போற்றி தமிழ்நாடு அரசு 'திரு.வி.க. விருதை 1989இல் வழங்கியது. இவரது உலகளாவிய தமிழ்ப் பணியைப் பாராட்டி தமிழ் நாடு மாநில கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மன்றம் தமிழ்த் தூதுவர்' பட்டம் தந்து பாராட்டியது. இவரது அயரா தமிழ்ப் பணியைப் பாராட்டி இளையான்குடி டாக்டர் ஜாகீர் ஹசைன் கல்லூரி அறிவியல் மன்றம் வளர்தமிழ்ச் செல் வர்' விருதளித்துப் பாராட்டியது. சிந்தனையாளர் பேரவை அறிவியல் தமிழ்ச்சிற்பி பட்டம் வழங்கியது. இவர் மும்முறை உலகை வலம் வந்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக