உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
கட்டுரைகள்
Back
உலக அறிஞர்களின்
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
என். வி. கலைமணி
உலக அறிஞர்களின்
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
மெய்யம்மை நிலையம்
புதிய எண். 36, தியாகிகள் ரோடு,
தேவகோட்டை
உள்ளடக்கம்
1. அன்பு
2. அறம்
3. மறம்
4. வாய்மை
5. கடவுள்
6. வழிபாடு
7. மோட்சம்
8. நரகம்
9. மதம்
10. தத்துவ ஞானம்
11. ஆன்மா
12. இலட்சியம்
13. நன்மை-தீமை
14. அறிவு
15. அறிவீனம்
16. மூட நம்பிக்கை
17. கடமை
18. துறவு
19. தனிமை
20. சான்றோர்
21. கருணை
22. வணக்கம்
23. குற்றம் காணல்
24. வஞ்சகம்
25. பழிவாங்குதல்
26. அனுதாபம்
27. கொள்கை நம்பிக்கை
28. வாழ்க்கைக்கு நம்பிக்கை
29. நன்றியறிதல்
30. இனிய சொல்
31. சொல்
32. உரையாடல்
33. நா' அடக்கம்
34. போற்றுதல்
35. முகஸ்துதி
36. பழி
37. சிரிப்பு
38. நாகரீகம்
39. செல்வம்
40. வறுமை
41. அதிர்ஷ்டம்
42. அடக்கம்
43. கர்வம்
44. சிக்கனம்
45. கஞ்சன்
46. தருமம்
47. மனத்திருப்தி
48. உதவி செய்க
49. இரத்தல்
50. தியாகம்
51. கல்வி
52. கேள்வி
53. இசை
54. கவிதை
55. புத்தகங்கள்
56. படித்தல்
57. நூல் நிலையம்
58. புத்தக சுவை
59. புத்தகம் எழுதுதல்
60. புத்தகத்தால் பெறும் புகழ்
61. உரைநடை
62. வாழ்க்கை வரலாறு
62. சரித்திர உண்மை
உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
1. அன்பு
அழுது கொண்டே பிறக்கின்ற உலகக் குழந்தைகள், இறுதியில் சிரித்துக் கொண்டே இறக்கும் வரைக்கும் வாழ்வியல் அறம் வகுத்துத் தந்துள்ள உலகப் பொதுமறையாளர் திருவள்ளுவர் பெருமான் அன்பு என்ற சுக உணர்வை எவ்வாறு புறம் காட்டுகிறார் என்று நோக்கலாமா? இதோ அவரது குறட்பாவின் பொழிவு!
அன்புள்ள உடல்தான் உயிருள்ளது; அதன் வழியில் நடந்து கொள்கிறவர்களது உடல்தான் உயிருள்ளது; அன்பில்லாத உடல் வெறும் தோலால் போர்த்தப்பட்ட எலும்புகளே. இவருடைய காலம் கி.மு. மறுபேச்சுக்கு உண்டா இடம்?
இப்சன் என்பவர் நார்வே நாட்டில் வாழ்ந்த ஒரு நாடக ஆசிரியர். அவர் பல நாடகங்கள் எழுதிப் புகழ்பெற்ற ஒரு புதுமைப் புரட்சியாளர். இவர் கி.பி. 1826-ஆம் ஆண்டில் பிறந்தார். 1906-ஆம் ஆண்டின் இடையில் இறந்தார். இவர், அன்பு என்ற தத்துவத்தைப் பற்றி என்ன எழுதியுள்ளார் தெரியுமா? இதோ: "அன்பு என்பதைப் போல, பொய்யும் புலையும் நிறைந்த மொழி, வேறு எதுவும் கிடையாது” என்கிறார்.
அதே அன்பு பற்றி எழுதுகின்ற அந்தோனி என்ற அறிஞர் ஒருவர் இப்சன் கருத்துக்கு சற்று முரணாக, “உலகத்தின் மக்களிடம் எவன் ஒருவன் உண்மையான அன்பைக் காட்டி மதிக்கிறானோ, அவனே உண்மையில் வாழ்ந்து காட்டிய மனித நேயன் என்று மதிக்கப் படுபவனாகிறான்” என்கிறார்.
அதே அன்பை, ஆங்கில மகா கவிஞரான 'போப்' என்பவன் எந்த நோக்கத்தில் பார்க்கிறான் பாருங்கள்.
‘வாழ்க்கையின் வறுமையிலே துன்பப்படுவோர்களுக்காக இரங்குக! இன்புறுவோர் துன்புறும் மக்களுக்குக் காட்டும் இரக்கம் மட்டுமல்ல அது; கடன், கடமை, மனிதநேயம் என்று கூறும் இந்த கவிஞர், இங்கிலாந்து நாட்டில் கி.பி.1688-ஆம் ஆண்டு தோன்றி கி.பி. 1744-ஆம் ஆண்டில் மறைந்தவர். அதாவது தனது 56 ஆண்டு காலத்தில் அவர் கண்ட அனுபவ அன்பு அது.
சுவீடிஷ் நாட்டின் அறிஞரான மேட்டர் லிங்க் என்பவர், அன்பு குறித்து கூறும்போது, 'அன்பு மூலமே எதையும் காண முடியும். அன்பு இல்லாமல் எதையும் காண்பவன் இருட்டில் தனது கண்களை இடுக்கிக் கஷ்டப்பட்டுக் காண முயலுகிறவனுக்குச் சமம் அல்லவா? என்று கேட்கிறார் உலகைப் பார்த்து.
இதே 'அன்பை' போர்ன் எப்படி அளவிடுகிறான் பாருங்கள்; வியப்பு புகழும், அன்பு ஊமையாய் இருக்கும் என்கிறார்! ஆனால், மாவீரன் நெப்போலியன், தனது போராட்டக் குணத்தையும் மீறி, 'உண்மையான மனிதன் யாரையும் துவேஷிக்க மாட்டானாம்.'
அவன், பிரெஞ்சு சக்கரவர்த்தி அல்லவா? போர் வெறியன் என்றல்லவா உலகம் அவனைக் கணிக்கிறது. ஆனாலும் அவன் காட்டும் மனித அன்பைப் பாருங்கள்!
சிறந்த ஆங்கில இலக்கிய மேதையான ரஸ்கின், கி.பி.1819ஆம் ஆண்டு தோன்றி கி.பி.1900-மாவது வருடத்தில் மறைந்து, ஏறக்குறைய 81 ஆண்டுகளாக வைர வாழ்வு வாழ்ந்து காட்டிய அவர், அன்பு பற்றி என்ன பேசுகிறார்?
பெருந்தன்மையைக் காண்பதிலே, மற்றவர்களுக்கு அன்பு காட்டுவதிலே அதற்கேற்ப மன நெகிழ்வூட்டும் செயல்களைச் செய்து காட்டி மகிழ்ச்சி காண்பதே அன்பு என்ற கருணையின் அழகாகும் என்று நமக்குக் கூறி நமது வாழ்வை மேம்படுத்துகிறான். இல்லையா?
இந்த பேரறிஞனைப் போல அதே காலத்தில் வாழ்ந்த பெய்லி என்ற ஐரிஷ்காரன், அன்பு செய்பவர், பெரிய உண்மைகளை உணர்ந்து கூறுபவர், இவர்கள் எல்லாரும் கவிஞர்களே. எனவே, உண்மைகளில் எல்லாம் தலை சிறந்த உண்மை அன்பு தான்.
அறிவை எத்தனையோ பேர் விலைக்கு வாங்கி விடுகிறார்கள். ஆனால், உணர்ச்சி, அன்பு ஒரு நாளும் நான் தான் அன்பு வருகிறேன் என்று முரசு கொட்டிக் கொண்டு மக்கள் சந்தைக்கு வருவ்து கிடையாது என்கிறார் ஜே.ஆர்.லல்லி என்ற பேரறிஞர். ஆனால், கி.பி.1564-ஆம் ஆண்டில் தோன்றி 1616 - ஆம் ஆண்டில் மறைந்த உலகம் புகழும் பிரபல நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியர் என்ற மாபெரும் கவிஞர், "மாறுதல் கண்ட உடன் மாறிடும் அன்பு உண்மையிலேயே அன்பாகாது" என்று அழுத்தமாக உலகுக்கு அறிவிக்கிறார்.
ஆனால், அறிவியல் தத்துவங்களின் தந்தையான ஆங்கில எழுத்தாளர் பேக்கன் என்பவர், கி.பி.1561-ஆம் ஆண்டில் பிறந்து கி.பி. 1616-ஆம் ஆண்டில் மறைந்தவரான அவர், அன்பு பற்றி என்ன சொல்கிறார்? “அன்பை ஆன்மாவின் பெருந்தன்மை என்கிறார். அந்த பெருந்தன்மையை நாம் என்னென்ன வேளைகளில் எத்தனை முறை எதிரொலிக்கின்றோம் என்ற அளவைப் பொறுத்து உணர்ச்சியின் பெருக்கம் தான் அன்பு" என்கிறார்.
அன்பு பற்றி அடிக்கடி பேசும் சிறந்த ஆங்கில இலக்கிய வித்தகரான ரஸ்கின் ஓரிடத்தில், அன்பும், நம்பிக்கையுமே ஓர் ஆன்மாவுக்குரிய தாய்ப்பால் என்கிறார்! புட்டிப் பால் அன்பை அவர் ஓர் அன்பின் அணு அளவாகக் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அன்பும், நம்பிக்கையும் பெற்றிராவிட்டால் அவனது ஆற்றல் அனைத்துமே கூட அழிந்து போய்விடலாம்" என்று கூறுகிறார்.
சிறந்த ஆங்கில கலை விமர்சகராக விளங்கிய இதே ரஸ்கின் என்ற மேதை கி.பி.1819-ஆம் ஆண்டு தோன்றி கி.பி. 1900-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 81 ஆண்டுகள் வாழ்ந்த இந்த இங்கிலாந்து நாட்டுக் கலை, இலக்கிய ஞானியான இவர், அன்பு பற்றி மற்றோரிடத்தில் குறிப்பிடும்போது, 'அன்பு முக்கியமாக வளர்வது ஒருவருக்கு ஒருவர் வழங்கிடும் ஈகை என்ற தத்துவ உணர்விலேதான்' என்கிறார். அவ்வாறு ஈகையைச் செய்யும் போது என்ன பயன் உண்டாகிறது என்பதை அவர், "நன்மை செய்யவோ, இன்பம் அளிக்கவோ இருக்கின்ற மன ஆசைதான், அதன் பொழிவு அதாவது சாறு, அதாவது சாரம் என்பது மட்டும் உறுதி' என்று அற்புதமாகச் சுட்டுகின்றார்.
கி.பி.1631-ஆம் ஆண்டில் பிறந்து கி.பி. 1700 ஆவது வருடத்தில் தனது வாழ்நாளை முடித்து மாண்ட ஆங்கில நாட்டின் சிறந்த கவிஞரான 'டிரைடன்' என்பவர், அதே அன்பைப் பற்றிக் குறிப்பிடும்போது, "அன்பு உண்டு, இரக்கம் இல்லை என்று கண்கட்டுவித்தைக் காட்டமுடியுமா? ஏனென்றால், அன்பும், இரக்கமும் இரட்டைக் குழந்தைகளே” என்று சுட்டிக் காட்டுகின்றார்.
நான் எழுதுகின்ற ஒவ்வொரு சொல்லும் விலை மதிப்பற்றது என்பதையே பெயராகக் கொண்ட மாபெரும் ஆங்கில நாட்டுப் பெருங்கவிஞரான வோர்ட்ஸ் வொர்த் கி.பி.1770-ஆம் வருடம் பிறந்தவர் கி.பி.1850-ஆம் ஆண்டு விலை மதிப்பற்ற தனது எண்பதாண்டு கால உலக வாழ்வுடன் மறைந்தார்.
'அன்பு' என்ற தத்துவம் பற்றி அவர் என்ன கூறுகிறார்? "மனித வாழ்வின் புனிதமான பாகம் அன்பு மறந்து போன அருள்நிறைந்த சிறு அக உணர்வின்செயல்கள் என்று விலை மதிப்பே அற்ற உணர்வை மனிதனுக்குள் சுரக்கச் செய்கிறார்.
ஆங்கில நாட்டின் மாபெரும் எழுத்துலக மேதை என்று அழைக்கப்பட்டவர் மார்லி என்பவர். அவர் கி.பி.1838-ஆம் ஆண்டில் தோன்றி கி.பி.1923-ல் புகழ் எய்தியவர். ஏறக்குறைய 85 ஆண்டுகள் இந்த வையத்தில் வாழ்ந்த அந்த வாழ்வியல் வழிகாட்டியான அவர், "மக்கள் இடையே கருணையும், உடன்பிறப்பு உணர்வுமே மனித வாழ்வில் பெறுவதற்காக முயற்சிக்க வேண்டிய பேருணர்ச்சி அதுதான் அன்பு எனப்படும் பண்பு' என்று அவர் அடையாளம் காட்டியுள்ளார்.
"நாம் அறியாதவரிடம் காட்டும் அன்பு, அறிந்தவரிடம் காட்டிடும் அன்பைப் போலவே ஓர் அழியாத உணர்ச்சியின் ஊற்றுக் கண்" என்று, கி.பி.1874ல் தோன்றி, கி.பி. 1936ல் மறைந்த ஆங்கிலப் பேரறிஞரான செஸ்டர்டன் கூறுகிறார் . ஜார்ஜ் எலியட் என்பவர் ஓர் எழுத்துலகப் பெண்ணரசி! சிறந்த ஆங்கிலப் பெருங்கவிஞரான இந்த அம்மையார் கி.பி.1819ஆம் ஆண்டில் பிறந்து கி.பி.1880-ல் ஏறக்குறைய 61 ஆண்டுகாலம் வாழ்ந்த ஒரு நாவலாசிரியை. அவர் என்ன சொல்கிறார் 'அன்பு' என்ற மனித உணர்வைப் பற்றி! பார்ப்போமே!
'அடக்கமும், அன்பும் துன்பங்களால் கற்றுக் கொள்ள வேண்டிய தத்துவ உணர்வுகளாம்! எவ்வளவு சுருக்கமாக அந்தப் பெண்மணி கூறுகிறார் பார்த்தீர்களா?
பர்ன்ஸ் என்ற இந்த கவிஞர், ஸ்காட்லாந்து நாட்டிலே கி.பி.1759-ஆம் ஆண்டு பிறந்து கி.பி. 1796ல் மறைந்த மகாகவி. இவர் 'அன்பு' பற்றி விளக்கும் போது,
'தவறு தெரிந்து செய்தாலும், உனது உடன் பிறப்பு என்பதற்காக விட்டுவிடாதே, ஆராய்வாயாக! அதைவிட, உனது உடன் பிறந்தான் உன்னிடம் உன்னதமான பாசத்தோடும், உயர்வான பண்போடும் நடந்தாலும் கூட. தவறு செய்தான் எனப்படும்போதும் ஆராய்வாயாக! ஏன் தெரியுமா? நெறி பிறழ்வது மனித இயல்பு தானே என்று சிந்தனை செய்!
ஆங்கிலப் பேரறிஞர் கார்லைல்; அவர் கி.பி.1795ஆம் ஆண்டு பிறந்து கி.பி.1881ல் மறைந்த புகழாளர். ஏறக்குறைய 86 ஆண்டுகள் வாழ்ந்து காட்டிய அறிவு வைரம் அவர் என்ன கூறுகிறார் அன்பு பற்றி.
கண்டிக்க அறியாதவன், தெரியாதவன், எப்படி கருணை காட்டுவான்? கண்டிப்பாக முடியவே முடியாது என்று வினா தொடுத்து விடையை விளக்கிய வித்தகர் அவர்!
ஒருவன் அன்பு செய்தும் கூட அவனால் அந்த அன்பை பெறமுடியாமல் இருப்பது துக்ககரமான ஒரு செயல்! ஆனால், ஒருவனால் அன்பு செய்ய இயலாதிருப்பது அதனினும் அதிகத் துக்கமானதாகும்.
இவ்வாறு கூறியவர் ஒரு நாடக ஆசிரியர். ஐரோப்பிய கண்டத்துள்ளே உள்ள பெல்ஜியம் என்ற நாட்டில் கி.பி.1852-ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் நாடகக் கலை திறமைக்காக நோபல் பரிசு பெற்றவர். இந்த அறிவாளர்க்கு அறிவாளியான இவருடைய பெயர் மாட்டர் லிங்க். இவர்தான் அன்பு பற்றிய தனது உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளவராவார்!
உலகப் புகழ் பெற்ற டால்ஸ்டாய் என்ற நாவலாசிரியரைப் பற்றி அதிகம் கூற வேண்டியது இல்லை அல்லவா? இவர் ருஷ்ய நாட்டிலே கி.பி.1828-ஆம் ஆண்டு பிறந்தார். கி.பி. 1910-ஆம் ஆண்டு புகழ் பெற்று மறைந்த மாபெரும் எழுத்துலக ஞானி இவர்தான். காந்தியடிகளாருக்கும் வழிகாட்டியாக விளங்கியவர். இவரது போரும் சமாதானமும் என்ற நாவல் உலகப் புகழ் பெற்ற பெருநூல்! இவர் என்ன கூறுகிறார் அன்பு என்ற ஞானம் பற்றி?
"யாருக்கு நாம் அன்பு செய்கிறோமோ, அவரை நேசிக்கிறோம். யாருக்குத் தீமை செய்கிறோமோ அவரை வெறுக்கிறோம் என்று உணர்ச்சியின் பாவங்களை உருவகப்படுத்தி உரைத்துள்ளார்:
இவர் ஓர் ஆங்கில ஆசிரியர்; அறிவியல் துறை அறிஞர். கி.பி.1561-ஆம் ஆண்டு பிறந்து கி.பி.1626ல் மறைந்தார்! ஏறக்குறைய 65 ஆண்டு காலம் வாழ்ந்த இந்த மாமனிதர் 'அன்பு பற்றிக் கூறும்போது, மனிதருக்கும் பல்கள் சங்கமம் அல்ல; எந்த இடத்தில் அன்பு இல்லையோ, அந்த இடத்தில் கூடியுள்ள முகங்கள் எல்லாம் வெறும் படங்கள்தான்! அங்கே பேசப்படும் பேச்சொலிகள் வெறும் கிண்கிணி ஓசைகளே!, என்று கூறிய அவரது பொருள் எவ்வளவு இன்றைய கூட்டங்களுக்கு, அதுவும் அரசியல் கூட்டங்களுக்குப் பொருந்துகிறது பார்த்தீர்களா?
இதோ மறுபடியும் ஆங்கில மகாகவி பேசுவதைக் கேளுங்கள்: "பிறர் நலம் கண்டு மகிழமாட்டார்கள் யார்? பிறர் துன்பங்களைக் கண்டு மனம் வருந்தி இரங்கமாட்டார்கள்! யார்? அவர்கள்தான் அன்பிலார்! அவர்கள் எல்லாரும் இறந்து படுக" என்று சாபம் கொடுத்துவிட்டார் போப் என்ற இந்த ஆங்கிலப் பெருங்கவிஞன்!
★ ★ ★
2. அறம்
அறமே ஆற்றல்! அதை நாம் நம்புவோம்! அந்த நம்பிக்கையால் நாம் அறிந்த கடமைகளைச் செய்யத் துணிக!
அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த ஆப்ரஹாம் லிங்கன் அறம் என்ற தத்துவத்தை நோக்கும் பார்வை இது!
மனத்தில் குற்றமான நோக்கமே இல்லாமல் செய்கின்ற நல்ல செயல்கள் தான் அறம் அந்த அறம் தன்னலம் உடையதாக இருந்தால், அது வெறும் ஆடம்பரம், அறமன்று
-உலகப் பொதுமறை திருக்குறள்
அறத்தின் வழி நில்! அஞ்சவேண்டாம்! உன் லட்சியமெல்லாம் உன் தேசத்தை-உன் கடவுளை - உண்மையைப் பற்றியதாகவே இருக்கட்டும். அங்ஙனமாயின் நீ வீழ்ந்து விட்டாலும் பாக்கியம் பெற்றுத் தியாகியாகவே வீழ்வாய்.
-ஷேக்ஸ்பியர்
அறத்தின் இலட்சணம் அறியாதவரே, 'அறம் செய்தோம், கூலி எங்கே?' என்று இரைந்து கொண்டிருப்பர்.
-மேட்டாலிங்க்
அதர்மம் அணியும் ஆடை ஐஸ்வரியம்; தர்மம் தரிப்பது தரித்திரம்.
-தியோக்னீஸ்
பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக்கொள்கிறான்.
-ஸெனீக்கா
குளிர் மிகுதிதான். கந்தை உடைதான்! ஆனால் என் ஒழுக்கம் எனக்கு உஷ்ணம் தரும்.
-ட்ரைடன்
அறிவு மட்டும் கூறும் வழியில் செல்லற்க. ஆன்மா முழுவதும் ஆணையிடும் வழியில் செல்க. -டால்ஸ்டாய்
அறத்திற்குத் தலைசிறந்த வெகுமதி அதனிடத்திலேயே கிடைக்கும்; மறத்திற்குத் தலைசிறந்த தண்டனையும் அதனிடத்திலேயே கிடைக்கும்.
-பழமொழி
அறம் தன்னில் தானே அடையும் வெகுமதியை விட அதிகமான வெகுமதியை வெளியில் பெற முடியாது. அதுபோல் மறமும் தன்னில் தானே அடையும் தண்டனையைவிட அதிகமான தண்டனையை வெளியில் பெற முடியாது.
-பேக்கன்
பேரின்ப வீட்டை அடையும் நெறி துறவறம் அன்று; அனவரதமும் அறச்செயல் ஆற்றுவதேயாகும்.
-ஸ்வீடன் பர்க்
மனிதர் கவனமாய் வடித்து எடுப்பின், தீமையிலும் நன்மை தெளியலாம்.
-ஷேக்ஸ்பியர்
ஒருபொழுதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு; நாம் செய்யும் நற்செயலே அது.
-மேட்டாலிங்க்
நல்ல விஷயங்கள் தீய விஷயங்கள் என்று பிரிக்க முடியாது. நாம் அவற்றின் வசப்படாமல், அவை நம் வசம் வந்துவிட்டால் எல்லாம் நல்ல விஷயங்களே.
-எட்வர்டு கார்ப்பெண்டர்
எல்லா நல்ல காரியமும் பேச்சும் பணம் பெறாமல் செய்யப்பட வேண்டும் என்பதே இறைவன் திருவுளம் என்பது தெளிவு. -ரஸ்கின்
என்ன செய்யலாம் என்று வக்கீல் கூறுவது விஷயம் அன்று; என்ன செய்யவேண்டும் என்று அறிவும், அறமும், அன்பும் கூறுவதே விஷயம்.
-பர்க்
அற வாழ்வின் அளவுகோல் விசேஷ முயற்சிகள் அல்ல; தினசரி வாழ்க்கையேயாகும்.
-பாஸ்கல்
மனத்தைத் தவிர குறையுள்ளது இயற்கையில் வேறு கிடையாது. அன்பில்லாதவரே அங்கவீனர். அறமே அழகு. அழகான மறம் முலாம் பூசிய சூனியப் பேழையாகும்.
-ஷேக்ஸ்பியர்
விரும்ப வேண்டியவற்றை விரும்பவும், வெறுக்கத் தகுந்தவற்றை வெறுக்கவும் செய்யுமாறு நன்னெறியில் செலுத்தப்படும் அன்பே அறமாகும்.
-ஸெயின்ட் அகஸ்டைன்
நாம் அறநெறியில் நிற்கும் ஒவ்வொரு சமயத்திலும் ஏதேனும் இன்பம் அதிகரியாவிட்டால், ஏதேனும் துன்பம் குறைந்திருக்கும் என்பது உறுதி.
-பென்தம்
அறம் இதுவென்று அறியாமலும், விரும்பியதைச் செய்ய முடியாமலும் இருந்தாலும், அறத்தில் ஆசை கொள்வதால் தீமையை எதிர்க்கும் தெய்வீக சக்தியில் நாமும் ஓர் அம்சமாவோம்.
-ஜார்ஜ் எலியட்
நம்மை நாம் வெல்லாதவரை அறம் எதுவும் இல்லை உழைப்பு வேண்டாத செயல் எதுவும் மதித்தற்கு உரியதன்று
- டிமெஸ்டர்
கடவுள் ஆன்மாவைப் புழுதியில் புதைத்திருப்பதெல்லாம் அதன் மூலம் தவறினூடே உண்மைக்கும், குற்றத்தினூடே அறத்திற்கும், துன்பத்தினூடே இன்பத்திற்கும் வழி திறந்து செல்வதற்காகவே யாகும்.
- எங்கல்
தீய நெறியில் செல்லாதிருக்க எப்பொழுதும் எச்சரிக்கையாயிருப்பதை விட, நல்ல விஷயங்களில் மனதை ஈடுபடுத்தி அதன் மூலம் தீய நெறியின் நினைவே எழாதிருக்கச் செய்வதே நலம்.
-பித்தாகோரஸ்
நமது உணர்ச்சியின் தன்மை, விசாலம் ஆகிய இரண்டின் அளவே நமது ஒழுக்கமாகும்.
-ஜார்ஜ் எலியட்
அற வாழ்வில் ஆசையுள்ளவன் சத்தியத்தைச் சார்ந்து நிற்கும் பொழுதுதான் அவன் துக்கம் தொலைகிறது; அதற்கு முன்னால் அன்று.
-ப்ளேட்டோ
நன்மை ஒரு நல்ல வைத்தியன். ஆனால், தீமை சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன்.
-எமர்ஸன்
நம்மில் உயர்ந்தோரிடமும் எவ்வளவோ தீமை இருக்கின்றது; நம்மில் தாழ்ந்தோரிடமும் எவ்வளவோ நன்மை இருக்கின்றது. ஆகையால் பிறரைப் பற்றிப் பேச நம்மில் எவர்க்கும் தகுதி இருப்பது அரிது.
-ராக்பெல்லர்க்கு உகந்த கவி
படம் - ஆப்ரகாம் லிங்கன் இருதயத்தைப் பெருக்கி அலங்கரித்துக் காலியாக வைத்திருப்பது என்பது நாம் விரும்பினாலும் கூட முடியாத காரியம். நாம் தயாராக்குவது நன்மை குடிபுகவா, தீமை குடிபுகவா என்பதே கேள்வி. - கிப்சன்
நமது நன்மையை அடையத் தவறிவிட்டாலும் பிறர் நன்மை இருக்கவே செய்கின்றது. அதற்காக முயலுதல் தக்கதே.
- ஜார்ஜ் எலியட்
மனிதனால் இயல்வதெல்லாம் இயற்றத் துணிவேன்; அதற்கு அதிகம் செய்யத் துணிபவன் மனிதன் அல்லன்.
-ஷேக்ஸ்பியர்
நமது செயலின் விளைவுகளை நாம் ஏற்றுக்கொள்ளும் முறையே நமது ஆன்மாவின் உயர்வை அளக்குங் கோலாகும்.
- மார்லி
பல துன்பங்களுக்குப் பிறப்பிடமென்று நான் நகரத்தின் களியாட்டிடங்களை விட்டுவிட்டாலும், இன்னும் என்னை விட்டுவிட மட்டும் கற்றுக்கொள்ளவில்லை.
- செயின்ட் பேஸில்
ஒரு புல் முளைத்த இடத்தில் இரண்டு புல் முளைக்கவும், ஒரு கதிர் விளைந்த இடத்தில் இரண்டு கதிர் விளையவும் செய்பவனே இராஜீயவாதிகள் அனைவரிலும் தேசத்திற்கு அதிக உபயோகமான ஊழியம் செய்தவனாவான். அவனே மனித வர்க்கத்தால் அதிகமாகப் போற்றப்படத் தகுந்தவனுமாவான்.
-ஸ்விப்ட்
தான் அறத்தில் நிற்பதால் பிறர் அடையும் சாந்தியும் சந்தோஷமும் இவ்வளவென்று கணித்தல் அநேகமாக இயலாத காரியமாகும். -அக்கம்பிஸ்
தன்னெறி அதிகக் கரடு முரடென்றாவது, அதிக கஷ்டமென்றாவது கூறப்படக் காணோம். கூறப்பட்டிருப்ப தெல்லாம் அது குறுகியது என்றும், கண்டு பிடிக்கக் கடினமானது என்றுமே.
-ஆவ்பரி
ஒருவனுக்கு ஆகாரம் அளிப்பதைவிட அதை அவனே தேடிக்கொள்ள வழி காட்டுவதே முக்கியம். ஒருவனுக்கு உதவி செய்வதைவிட அவன் பிறர்க்கு உதவி செய்யக் கற்றுக்கொடுப்பதே நலம்.
-ஆவ்பரி
குற்றமான காரியம் செய்யக் கூசவேண்டியது அவசியமே; ஆனால், பிறர் குறை கூறுவாரோ என்று அளவுகடந்த ஜாக்கிரதை அமைத்துக்கொள்பவன் அன்புடையவனாக இருக்கலாம்; உயர்ந்தோனாகமட்டும் இருக்க முடியாது.
-ப்ளூட்டார்க்
நன்றாய் எழுதப்பட்ட ஜீவிய சரிதம் நன்றாய் வாழப்பட்ட ஜீவியத்தைப் போலவே அரியதாகும்.
-கார்லைல்
மனிதனைப் பூரணமாக்க வேண்டிய குணங்கள் எவை? கலங்காத அறிவு, அன்பு நிறைந்த நெஞ்சு, நீதியான தீர்மானம், ஆரோக்கிய உடல், கலங்காத அறிவு இல்லாவிடில் அவசரமாய் முடிவு செய்துவிடுவோம். அன்பு நிறைந்த நெஞ்சு இல்லாவிடில் சுயநலமுள்ளவராயிருப்போம். நல்லெண்ணம் இருப்பினும் நீதியான தீர்மானம் இல்லாவிடில் நன்மை உண்டாவதினும் தீமையே உண்டாகும். உடற்சுகம் இல்லாவிடில் ஒன்றும் செய்யமுடியாது.
-ஆவ்பரி
நான் எனக்காக மட்டுமே உள்ள ஆசைகளை வைத்துக்கொள்ளாதிருக்க முயலுகின்றேன். ஏனெனில், அவை பிறருக்கு பயவா திருக்கலாம். தவிர இப்போழுதே அவை என்னிடம் அதிகமாக இருக்கின்றன.
-ஜார்ஜ் எலியட்
★ ★ ★
3. மறம்
வாழ்வு என்ற ஆடையில் எப்பொழுதும் இரண்டு வகை நூல்கள் இருந்தே தீரும். அவை நன்மை, தீமையே!
-ஷேக்ஸ்பியர்
“அறத்திற்கே அன்புசார்பு என்ப
அறியார் மறத்திற்கும் அஃதே துணை.”
-உலகப்பொதுமறை திருக்குறள்
மனிதன் செய்யக்கூடிய தீய செயல்களில் எல்லாம் முற்றிலும் தீயதும், சற்றும் மன்னிக்க முடியாததும் களவு ஒன்றே.
-ரஸ்கின்
தீயொழுக்கத்திற்குக் கட்டுப்பாடில்லை என்று நினைப்பது தவறு. தீயவனே எஜமானர்கள் அனைவரிலும் கொடிய எஜமானனுக்கு அடிமையாயிருக்கிறான். அக்கொடிய எஜமானன் யார்? அவனுடைய சொந்தத் தீய உணர்ச்சிகளே.
-ஆவ்பரி
மருந்து பல சமயங்களில் பலிக்காமல் இருக்கக் கூடும். ஆனால், விஷமோ ஒருபோதும் பலிக்காமல் போகாது. -ரஸ்கின்
பாவம் செய்பவன் மனிதன் பாவத்துக்காக வருந்துபவன் ஞானி; பாவத்துக்காகப் பெருமை கொள்பவன் சாத்தான்.
-புல்லர்
சாத்தானுடைய பந்துக்களில் ஒருவரை வீட்டுக்குக் கூட்டிச் சென்றால் போதும், அவன் குடும்பம் முழுவதுமே குடிபுகுந்துவிடும்.
-ஆவ்பரி
ஒருவன் தன் ஒளியில் தான் நிற்கும்பொழுது உண்டாக்கும் நிழலே அவன் வாழ்வில் அதிக இருள் உடையதாகும்.
-ஆவ்பரி
தீச் செயல் நம்மைத் துன்புறுத்துவது, செய்த காலத்தில் அன்று. வெகு காலம் சென்று அது ஞாபகத்திற்கு வரும்பொழுதுதான். அதற்குக் காரணம் அதன் ஞாபகத்தை ஒருபொழுதும் அகற்ற முடியாததே.
-ரூஸோ
மனிதன் பிறர்க்குக் கேடு சூழ்வதில் தனக்கே கேடு சூழ்ந்துகொள்கிறான்.
-ஹேஸியாட்
அறத்திற்குப் போலவே மறத்திற்கும் பிராணத் தியாகிகள் உண்டு.
-கோல்டன்
தீய செயல் குறித்துத் தெய்வத்தின் முன் நாணாமல், மனிதன் முன் நாணக் கற்றுக்கொள். அப்பொழுதே விமோசனம் ஆரம்பமாகும்.
-ரஸ்கின்
ஓடைகள் சேர்ந்து நதிகள், நதிகள் சேர்ந்து கடல். அதுபோலவே தீய வழக்கங்கள் அறியா அளவாகக் கூடி வளர்ந்துவிடும். - ட்ரைடன்
உடல் துன்பம், மனச்சான்றின் பச்சர்த்தாபம் இவ்விரண்டும் தவிர இதர துன்பங்கள் எல்லாம் வெறுங்கற்பனைகளே, உண்மையானவை அல்ல.
-ரூஸோ
நல்ல சேவை செய்வதற்கு உரிய ஆற்றலைக் கெட்ட மனிதனிடம் ஒருநாளும் காண முடியாது.
-பர்க்
அநேகர் தங்கள் காலத்தில் பெரும் பாகத்தைப் பிறரை அவலத்திற்கு உள்ளாக்குவதிலேயே கழிக்கின்றனர்.
-லாபுரூயர்
கயவர் முட்டாள்களின் நாட்டில் பட்டினியாய் இருப்பதில்லை.
-சர்ச்சில்
★★★
4. வாய்மை
உண்மையே ஞானத்தின் உறைவிடம்.
-பழமொழி
உண்மை உரைத்துச் சாத்தானை நாணமடையச் செய்க.
-ராபிலே
கடவுள் சிருஷ்டிகளின் தலைசிறந்தது சத்திய வந்தனே,
-போப்
உயர்ந்த உண்மை மலர்வது ஆழ்ந்த அன்பிலேயே.
-ஹீன்
உண்மையை நாம் அறிவினால் மட்டும் காண்பதில்லை, அன்பினாலும் காண்கிறோம். -பாஸ்கல்
உலோபியைப் போல், உள்ளம் நிறைந்த உண்மையும் ஒலைக் குடிசையிலேயே வாழ்கின்றது.
-ஷேக்ஸ்பியர்
உண்மையின் முகம் அவ்வளவு அழகு தோற்றம், அவ்வளவு கம்பீரம்:-அதைப் பார்த்தால் போதும் நேசியாமல் இருக்க முடியாது.
-ட்ரைடன்
உலகத்தார் நாடும் பெருமைகள் வேண்டேன். உண்மை அறிவதொன்றே என் விருப்பம்.
-லாக்ரடீஸ்
கடவுள் வலது கையில் முழு உண்மையையும், இடது கையில் உண்மையைத் தேடுவதில் அழியா ஆசையையும் வைத்துக்கொண்டு, எது வேண்டும் என்று என்னைக் கோட்டால்-இடது கையில் உள்ளதை விரும்பினால் என்றும் இருட்டிலேயே இருக்க வேண்டியிருப்பினும்- நான் இடது கை முன் தலையைத் தாழ்த்தி, 'தந்தையே தாரும்; உண்மை உமக்கே உரியது' என்று கூறுவேன். ஏனெனில், மனிதன் உண்மையை அடைவதாலன்றி உண்மையைத் தேடுவதாலேயே பரிபூரணத்துவத்தைத் தன்னிடம் இடைவிடாது வளர்த்துக் கொள்வதற்குரிய தன் சக்திகளை விருத்தி செய்துகொள்கிறான்.
-லெஸ்ஸிங்
உண்மையை நேசி. ஆனால், பிழையை மன்னித்து விடு.
-வால்டேர்
அன்பு சில குறைகளையும், அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்தா. ஆனால், உண்மை எந்த அவமானத்தையும் மன்னிக்காது; எந்தக் குறையையும் பொறுக்காது.
-ரஸ்கின்
உண்மை நாடவே நமக்கு உரிமை ஆண்டவனுக்கே அது உடைமையாகும். - மான்டெய்ன்
உண்மையை அடைய விரும்பினால் உண்மைக்குரிய வழியில் சிறுகச் சிறுக முன்னேறிச் செல்க.
-டாலர்
மனிதன் பிறந்துள்ளது உண்மையைத் தேடவே. ஆனால் அதை அடையும் பாக்கியம் வேறொரு பெரிய சக்திக்கே உண்டு.
-மான்டெய்ன்
உண்மை பேசல் அழகாய் எழுதுவதை ஒக்கும். பழகப் பழகவே கைகூடும். ஆசையைவிடப் பழக்கத்தையே பொறுத்ததாகும்.
-ரஸ்கின்
உண்மையைக் கண்டுபிடிப்பதே மனிதனுடைய மகோன்னதமான லட்சியம், உண்மையைத் தேடுவதே பரமோத்தமமான தொழில். அது அவனுடைய கடமையும் ஆகும்.
-எட்வர்ட் போப்ஸ்
நம்பக்கம் உண்மையிருப்பது வேறு. நாம் உண்மையின் பக்கத்தில் இருக்க விரும்புவது வேறு.
-லிட்வா
எல்லா அம்சங்களிலும் உண்மையான உபதேச மொழிகள் சிலவே.
-வாவனார் கூஸ்
ஒன்றே உள்ளது. பல மாறி மறையும். விண்ணின் வெளிச்சம் என்றும் ஒளி தரும். மண்ணின் நிழல்கள் பறந்தோடிவிடும்.
-ஷெல்லி
உண்மை உரைப்பதற்குச் சாத்தியமான ஒரே வழி கலைதான், அதுதான் கலையின் புகழும் நன்மையும் ஆகும்.
-ராபர்ட் பிரெளணிங்
பொருள் சேர்ப்பதில் மட்டுமன்று புகழ் தேடுவதிலுங்கூட நாம் மரிக்கும் மனிதரே. ஆனால், உண்மையை நாடுவதில் நகம் அமரர். அழிவுக்கும் மாறுதலுக்கும் அஞ்ச வேண்டுவதில்லை. - தோரோ
பெரிய விஷயங்களைப் போலவே சிறிய விஷயங்களையும் கவனிக்கக்கூடிய மனமே உண்மையும் உரமும் பொருந்திய மனமாகும்
-டாக்டர் ஜான்ஸன்
ஒவ்வொன்றிலும் நன்மையைக் காணவும் போற்றவும் அறிவதே உண்மையிடம் ஆசை உண்டு என்பதற்கு அடையாளம்.
-கதே
உண்மை மனிதனுக்குச் சொந்தம்; பிழை அவனுடைய காலத்துக்குச் சொந்தம்.
-கதே
உண்மை ஒரு பெரிய தீவர்த்தி. அருகில் செல்ல பயந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டே அதைக் கடந்து செல்கிறோம்.
-கதே
தரையோடு தரையாய் நசுக்கப்பட்டாலும், சத்தியம் மறுபடியும் எழுந்து நிற்கவே செய்யும். ஆண்டவனுடைய அந்தமில்லா ஆண்டுகள் அதற்கும் உண்டு.
-பிரையண்ட்
ஏன் உண்மையாய் நடக்க வேண்டும்?- இந்தக் கேள்வி மூலமே இகழ் தேடிவிட்டாய்- 'மனிதனாயிருப்பதால்' என்பதே அதற்கு மறுமொழி.
-ரஸ்கின்
சத்திய நெஞ்சுக்குள்ள ஒரே ஓர் அசெளகரியம் யாதெனில், எளிதாய் நம்பிக்கொள்ளும் தன்மையே.
-ஸ்ர் பிலிப் லிட்னி
எப்பொழுதும் சமர்க்களத்தில் அல்லது செயக் கொண்டாட்டத்தில் இருப்பவன் சத்தியத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருத்தல் துர்லபம். -கெளலி
நமக்கு ஆனந்தம் அளிக்கக் காரணமாய் இருப்பது எதையும் மாயை என்று கூற நியாயமே கிடையாது.
-கதே
உண்மையே தெய்வீகம் பொருந்தியது. சுதந்திரம் இரண்டாவது ஸ்தானம் பெறும். உண்மை உணர்வதற்குச் சுதந்திரம் அவசியமானாலும் சுதந்திரத்தோடு உண்மை சேராவிடில், சுதந்திரத்தால் ஒரு பயனும் உண்டாகாது.
-மார்லி
முரணில்லாதிருக்க முயல்க. உண்மையாயிருக்க மட்டுமே உழைத்திடுக.
-ஹோம்ஸ்
அதிகமான ஜனங்கள் நம்புகிறார்களா? அப்படியானால் அவ்வளவுக் கவ்வளவு அதிக ஜாக்கிரதையாக அந்த விஷயத்தை ஆராய்தல் அவசியம்.
-டால்ஸ்டாய்
உயிரளிக்கும் உண்மையினின்று நம்மைப் பிறழச் செய்யும் சகப் பொய்கள் நாசமாய் ஒழிக!
-டெனிலன்
ஏதேனும் ஓர் உண்மையைத் தள்ளி மிதித்து விட்டால், அது சமாதான மொழியாயிருப்பதற்குப் பதிலாகச் சமர் தொடுக்கும் வாளாய் மாறிவிடும்.
-ஹென்றி ஜார்ஜ்
'சடங்கு' -அதன் அடியார் குழாங்கள் உபயோகமற்ற நிழல்களுக்காக உயில் துறக்க எப்பொழுதும் தயார் 'உண்மை' - அழியா விஷயங்களின் அன்னை. ஆயினும் அதற்கு ஒரு நண்பனைக் காண்பது அரிது.
-கூப்பர்
உண்மையாக இருக்கத் துணிக. ஒன்றிற்கும் பொய் வேண்டியதில்லை. பொய்யை விரும்பும் குற்றம் அதனாலேயே இரண்டு குற்றமாய்விடும். -ஹெர்பர்ட்
சுருதிக்காக அறிவை அகற்றுபவன் இரண்டின் ஒளியையும் அவிப்பவனாவான். அவன் செயல், க்ண்ணுக்கு எட்டா நட்சத்திரத்தைத் தூர திருஷ்டிபக் கண்ணாடி வழியாய்த் தெளிவாய்ப் பார்ப்பதற்கு என்று கண்களை அவித்துக் கொண்டது போலாகும்.
-லாக்
தவறு ஒன்றுதான் சர்க்கார் தயவை வேண்டும். உண்மைக்கு அது வேண்டியதில்லை.
-தாமஸ் ஜெவ்வர்ஸன்
எந்தப் பொய்யும் வயோதிகம் அடையும் வரை வாழ்ந்ததில்லை.
-லோபோகிளீஸ்
மனிதனுடைய முதல் மொழி 'ஆம்' இரண்டாவது 'அன்று'; மூன்றாவதும் இறுதியானதும் 'ஆம்'. பலர் முதலாவதோடு நின்று விடுவர்; வெகு சிலரே இறுதி மொழிவரை செல்வர்.
-பழமொழி
முதலில் தூசியைக் கிளப்பி விடுகிறோம். பின்னால் பார்க்க முடியவில்லை என்று முறையிடுகிறோம்.
-பிஷப் பார்க்லி
மெய்யும் பொய்யும் கை கலக்கட்டும். பகிரங்கமாகக் கை கலந்து போர் புரியின், என்றேனும் மெய் தோல்வியடைந்ததைக் கண்டவர் உளரோ?
- மில்டன்
பாவத்திற்குப் பல கருவிகள் உண்டு. ஆனால் அவற்றிற்கெல்லாம் பொருத்தமான கைபிடி பொய்.
-ஹோம்ஸ்
பொய்யானவற்றால் கவரப்படும் மனம் நல்ல விஷயங்களில் சுவை காணாது. -ஹொரேஸ்
முதலில் ஒரு குற்றம் செய்தவன் அதை மறைக்கப் பொய்யுரைக்கும் பொழுது இரண்டு குற்றங்கள் செய்தவனாகிறான்.
-வாட்ஸ்
முதலில் பொய்யாய்த் தோன்றுவது எல்லாம் பொய்யாகி விடா.
-கதே
பிழை செய்தால் பிறர் கண்டுகொள்ள முடியும். ஆனால் பொய்கூறினால் பிறர் கண்டுகொள்ள முடியாது.
-கதே
பலவீனத்தின் அளவே பொய்மையின் அளவும். பலம் நேரிய வழியில் செல்லும் குழிகள் அல்லது துளைகள் உள்ள ஒவ்வொரு பீரங்கிக் குண்டும் கோணியே செல்லும், பலமற்றவர் பொய் சொல்லியே தீரவேண்டும்.
-ரிக்டர்
முழுப் பொய்யோடு முழு வல்லமையுடன் போர்புரிய முடியும். ஆனால் மெய் கலந்த பொய்யோடு போர்புரிதல் கஷ்டமான காரியம்.
-டெனிஸ்ன்
மெய் கலந்த தவறுகளே அபாயகரமானவை. மெய்க் கலப்பாலேயே அவைகள் எங்கும் பரவச் சாத்தியமாகின்றது.
-ஸிட்னி ஸ்மித்
சுத்தப் பொய்யால் ஒரு நாளும் தொந்தரவு உண்டாவதில்லை.
-ஸிட்னி ஸ்மித்
★ ★ ★
5. கடவுள்
கடவுளைத் தன்னில் காணாதவனுக்குக் கடவுள் இல்லை.
-டால்ஸ்டாய்
மக்களிடையே கடவுளை நாடுக.
-நோவாலிஸ்
நானில்லையானால் கடவுளும் இருக்க முடியாது.
-எக்கார்ட்
கோவிலில் வைத்துக் கும்பிடும் கடவுளை மனிதனே சிருஷ்டித்தான். அதனால் மனிதன் தன்னைப் போலவே கடவுளையும் படைத்திருக்கிறான்.
-ஹெர்மீஸ்
கடவுள் கோவில் கட்டும் இடத்தில் எல்லாம் சாத்தானும் ஒரு கோவில் கட்டிவிடுகிறான். அதுமட்டுமா? அவன் கோவிலுக்கே அடியார்களும் அதிகம்.
-டீபோ
மனிதனுக்கு எத்துணைப் பைத்தியம்! ஒரு புழுவைச் சிருஷ்டிக்க முடியாது. ஆயினும் கணக்கில்லாத கடவுளரைச் சிருஷ்டித்துக் கொண்டேயிருக்கிறான்.
- மான்டெய்ன்
கடவுள் தகுதியுடையவர்க்குத் தாட்சண்யம் காட்டுவார். தகுதியற்றவர்களே நியாயத்தை மட்டும் வழங்குவர்.
-பிளாட்டஸ்
தெய்வபக்தி லட்சியமன்று, சாதனமே. அந்தச் சாதனத்தால் ஆன்ம விருத்தி அடையலாம். வேஷதாரிகளேதெய்வ பக்தியை லட்சியமாகச் செய்து கொள்வர்.
- கதே
பரிபூரண நிலையில் ஆன்மாவுக்கு ஏற்படும் சொற்ப அவாவை வைத்தே கடவுள் இருப்பதைக் கணித சாஸ்திர முறையைக் காட்டிலும் அதிகமாய் நிரூபித்துக் காட்டலாம்.
-ஹெம்ஸ்டர் ஹூஸ்
'அவன்' என்னும் மொழி அவனைக் குறைத்து விடுகிறது.
-டால்ஸ்டாய்
ஆண்டவன் இலன் எனினும் அறநெறி நிற்போம் என்பவரே அவன் அடியராவர்.
-ராபர்ட் பிரெளனிங்
ஒருவன் கடவுள் பக்கம் இருப்பின், அவன் ஒருவனே பெரும்பான்மைக் கட்சி ஆகிவிடுவான்.
-வெண்டெல் பிலிப்ஸ்
ஆன்மாவுக்கு வெளியே கடவுளைத் தேடினால் கடவுளின் விக்கிரகங்களை மட்டுமே காண்பாய். ஆன்மாவை ஆராய்ந்தால் அங்குள்ள உணர்ச்சிகளும் எண்ணங்களும் ஆண்டவனை அறிவிக்கும். அயலார்க்கு நன்மை செய்யும்பொழுதுதான் ஆண்டவனைத் துதிப்பதாகக் கூறமுடியும்.
-ஸ்வனரோலா
தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைவோம்.
-ஸாக்ரடீஸ்
பரிபூரணமே தேவரை அளக்கும் கோல். பரிபூரணத்தில் பற்றே மனிதரை அளக்கும் கோல்.
-கதே
ஆன்ம எளிமை கண்டே ஆண்டவன் மகிழ்கிறான். எளிமைக் குணத்தைக் கண்டுதான் மகிழ்கிறான்; இறக்கும் குணத்தைக் கண்டன்று.
-கதே
குழந்தை இயல்புடையவர்-அதாவது எளிதில் மகிழ்பவர், அன்பு செய்பவர், பிறர்க்கும் மகிழ்வூட்டுபவர். இவர்க்கே கடவுள் ராஜ்யம். -ஆர். எல். ஸ்டீவன்ஸன்
கடவுள் பார்ப்பதைப் போல் எண்ணி மனிதரோடு வாழ்க மனிதர் கேட்பதைப் போல் எண்ணிக் கடவுளோடு பேசுக.
-ஸெனீகா
மனிதர் அறிய விரும்பாதது எதையும் கடவுளிடம் கேட்காதே. கடவுள் அறிய நீ விரும்பாதது எதையும் மனிதனிடம் கேட்காதே.
-ஸெனீகா
வட்டத்தில் எந்தவிடத்திருந்தும் மத்திக்குச் செல்ல வழியுண்டு. எவ்வளவு பெருந் தவறானாலும் இறைவனிடம் செல்ல வழியுண்டு.
-ரூக்கர்ட்
கடவுளை அறிதல், கடவுளிடம் அன்பு செலுத்துதல் இரண்டிற்கும் இடையிலுள்ள தூரம் எவராலும் இவ்வளவு என்று சொல்ல முடியாது.
-பாஸ்கல்
கடவுளை அறிந்துவிடுவோமென்று எதிர்பார்க்க இயலாது. ஆனால், கடவுளை அறியாமல் வேறு எதையும் அறியவும் எதிர்பார்க்க இயலாது.
-பூடின்
மனிதர்க்குப் பேருணர்ச்சி தந்து போருக்கு நடத்திச் செல்லும் மூன்று மொழிகள் கடவுள், நித்யத்வம், கடமை என்பன. முதல் விஷயம் அறிவுக்கு அப்பாற்பட்டது. இரண்டாவது நம்ப முடியாதது, மூன்றாவது ஒரு காலும் அலட்சியம் செய்ய முடியாதது. -மையர்ஸ்
ஏதேனும் பழுதிலாத ஒன்றை இயற்ற முயல்வதைப்போல் ஆன்மாவைப் புனிதமாக்குவதும் சமயவாழ்வு வாழச் செய்வதுமானது வேறெதுவும் இல்லை. ஏனெனில் பரிபூரணமே கடவுள். அதனால் பூரணத்தை நாட முயல்பவன் கடவுள் தன்மையை நாடுபவனாவான்.
-மைக்கேல் எஞ்சலோ
கடவுளின் நீதி மெதுவாகத்தான் நகரும். ஆனால் ஒருபொழுதும் வழியில் தங்குவதில்லை. தவறு செய்தவனைச் சேர்ந்தேவிடும்.
-ராபர்ட் பிரெளனிங்
★ ★ ★
6. வழிபாடு
கடவுளை நோக்கி நிற்கும் ஆசையே பிரார்த்தனையின் தெளிவான லட்சியம் ஆகும்.
-பிலிப்ஸ் புரூக்ஸ்
கடவுளிடம், இது 'வேண்டும்' என்று குறிப்பிடாமல் பொதுவாகப் பிரார்த்திப்பதே முறை. நமக்கு நன்மை எது என்பதைக் கடவுள் நன்கு அறிவார்.
-ஸாக்ரடீஸ்
மனிதனுடைய இதயம் ஊமையாய் இருந்தாலன்றி கடவுள் ஒருநாளும் செவிடாய் இருப்பதில்லை.
-குவார்ல்ஸ்
கடவுளிடம் மக்கள் பிரார்த்திப்பது எல்லாம் இரண்டும் இரண்டும் நான்கு ஆகாமலிருக்க வேண்டும் என்பதே.
-ருஷ்யப் பழமொழி
நாம் கடவுளிடம் எதை வேண்டுகிறோமோ அதையே கடவுள் நம்மிடம் வேண்டுகிறார்.
-ஜெரிமி டெய்லர்
நமக்குத் தேவையான எல்லாம் கடவுளிடம் வேண்டலாம். ஆனால், வேண்டுவதற்கெல்லாம் நாம் கவனமாய் உழைத்தல் அவசியம். -ஜெரிமி டெய்லர்
'கடவுளே! தைரியம் அருளும்' என்று பிரார்த்தித்தால், துன்பத் தீயில் தள்ளுவதே அவர் அருளும் வழி.
-ஸெஸி
என் பிரார்த்தனைகளுக்கு எல்லாம் கடவுள் அருளவில்லை என்பதற்காக அவருக்கு வந்தனம் அளிக்குமாறு வாழ்ந்துவிட்டேன்.
-ஜீன் இன்ஜெலோ
அறியாமலே எம் எண்ணங்களில் சில கடவுள் பிரார்த்தனையாக இருப்பதுண்டு.
-விக்டர் ஹகோ
ஒவ்வொரு புனிதமான ஆசையும் கடவுள் பிரார்த்தனையே ஆகும்.
-ஹூக்கர்
சுவர்க்கம்தான் கேட்காமலே கிடைக்கும்; கடவுளோ கேட்டால்தான் கிட்டுவர்.
-லவல்
கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டிய மூன்று வரங்கள்: முதலாவதாக நல்ல மனச்சான்று, இரண்டவாதாக மன ஆரோக்கியம், மூன்றாவதாகத் தேக ஆரோக்கியம்.
-ஸெனீகா
பிரார்த்தித்தால் கேட்டதைப் பெறுவோம், அல்லது கேட்டிருக்க வேண்டியதைப் பெறுவோம். -லெய்ட்டன்
★ ★ ★
7. மோட்சம்
அன்பும் அறமும் எவ்வளவோ, சுவர்க்கமும் அவ்வளவே.
-பார்க்கர்
சுவர்க்கத்தின் ஆசை ஒருவனைச் சுவர்க்க மயமாய் ஆக்கிவிடும்.
-ஷேக்ஸ்பியர்
அறம் விரும்பு; அதுவே வீடு.
-மில்டன்
மனிதனுடைய மனம் அன்பில் இயங்குமானால், உண்மையில் சுழலுமானால், கடவுளிடம் ஓய்வு காணுமானால், அப்பொழுது சுவர்க்கத்தை இப்பூமியிலேயே கண்டு விடலாம்.
-பேக்கன்
நான் சுவர்க்கத்தில் இருக்கவேண்டுமானால், முதலில் சுவர்க்கம் என்னிடம் காணப்பட வேண்டும்.
-ஸ்டான்போர்டு
ஆன்மாவுக்கு விமோசனம் சுவர்க்கத்திலேயே என்று நடப்பவன் விமோசனம் பெறுவதில்லை. ஆனால், அன்பு நெறியில் நிற்பவனை ஆண்டவன் தானே தன் சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்வான்.
-வான் டைக்
சுவர்க்கத்துக்கு வெகு தூரத்தில் உள்ளது பூமி, பூமிக்கு வெகு சமீபத்தில் உள்ளது சுவர்க்கம்.
-ஹேர்
வாழ்வில் கற்க வேண்டிய கடின பாடங்களில் ஒன்றுண்டு. அதைப் பெரும்பாலோர் கற்பதில்லை. இங்கேயே நம்மைக் சூழ்ந்தே சுவர்க்கம் உளது என்பதே அந்தப் பாடம்.
-ஜான் பரோஸ்
அறநெறி பற்றிப் பேசுவதன்று, அறநெறியில் நடப்பதுவே கவர்க்கத்தில் கொண்டு சேர்க்கும். -எம். ஹென்றி
உயிரோடு இருக்கும்பொழுது தன் இதயத்தை சுவர்க்கத்துக்கு அனுப்பாதவன், உயிர் போனபின் சுவர்க்கத்துக்குப் போக முடியாது.
-பிஷப் வில்ஸன்
எப்பொழுதும் நியாயம் வழங்கும் வள்ளல்கள், எப்பொழுதும் வண்மை உடைய நீதிமான்கள், இவர்கள் முன்கூட்டி அறிவியாமலே கடவுள் சன்னிதானத்துக்குப் போகலாம்.
-பழமொழி
சுவர்க்கத்தை நன்கு போற்ற வேண்டுமானால் பதினைந்து நிமிஷமாவது நரக அனுபவம் தேவை.
-கார்ல்டன்
★ ★ ★
8. நரகம்
நரகத்திற்குச் செல்ல மனிதர் எவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கின்றனர். அதில் நேர்பாதி போதுமே சுவர்க்கத்திற்குச் செல்ல - அதை நல்வழியில் எடுத்துக் கொள்ளும் துணிவுமட்டுமே தேவை.
-பென் ஜான்ஸன்
நரகம் என்பது வேறெங்குமில்லை. நன்றாய் ஆராய்ந்தால், அது பாவமே யாகும். கடவுளினின்று பிரிந்திருப்பதே நரகம்.
-பாஸ்ட்
நரகம் என்பது யாது? காலங் கடந்து கண்ட உண்மை; பருவம் கடந்து செய்த கடமை.
-எட்வார்ட்ஸ்
நரகத்திற்குள்ள வழி எளிது, கண்களை மூடிக்கொண்டே போகலாம். -பியன்
நான் நரகம் உண்டென்று நம்ப மட்டும் செய்யவில்லை. நரகம் உண்டென்று அறியவும் செய்பவன். அது மட்டுமா? நரகத்துக்கு அஞ்சி அறநெறி நிற்பவர் யாவரும் நரகத்தில் கால் வைத்துவிட்டவரே என்பதையும் அறிவேன்.
-ரஸ்கின்
சாஸ்திரிகளும், சாவோரும் நரகத்தைப்பற்றிப் பேசட்டும். ஆனால் நரக வேதனைகள் எல்லாம் என் இதயத்திலேயே உள்ளவை.
-ஷேக்ஸ்பியர்
9. மதம்
நூறு விதமாய்க் கூறினாலும் மதம் ஒன்று தான் உண்டு.
-பெர்னார்ட் ஷா
உலகமே என் தேசம், நன்மை செய்வதே என் சமயம்.
-தாமஸ் பெய்ன்
மனிதர் அனைவருக்கும் மதமாகிய கடிவாளம் தேவை. 'மரணத்திற்குப்பின் யாதோ?’ என்னும் பயமே மதம்.
-ஜார்ஜ் எலியட்
அவனியிலுள்ள சமயங்களில் அறத்தாறு உய்ப்பது ஒன்றே உண்மைச் சமயம்.
-ஸவனரோலா
நம்மிடம் பகைப்பதற்குப் போதுமான சமய உணர்ச்சி உளது. ஆனால் அன்பு செய்வதற்குப் போதுமான அளவு இல்லை.
-ஸ்விப்ட்
ஞானிகள் அனைவர்க்கும் ஒரே மதமே. அவர்கள் தத்தம் மதத்தை வெளியே கூறுவதில்லை. -லார்ட் ஷாப்ட்ஸ்பரி
பண விஷமாய் நம்பத் துணியாத இடத்தில் ஆன்ம விஷயமாய் நம்பத்துணிவது எவ்வளவு விபரீதம்! மதாசாரியர் காலணா கொடுத்தால் அது செல்லுமோ செல்லாதோ என்று சந்தேகிப்போம். ஆனால் அவர்கள் கூறும் மதத்தை ஆராயாது சரி என்று அங்கீகரித்து விடுகிறோம். என்னே மனிதர் மடமை!
- பென்
சரியாக அறியாத சமயமே நம்மை அழகுக்கு அந்நியமாக்கும். சமயம் அழகைக் கண்டு ஆனந்திக்கும்படி செய்யுமானால், அப்பொழுது சமயம் உண்மை, சரியாக அறிந்திருக்கிறோம் என்று தெரிந்துகொள்ளலாம்.
-லெஸ்ஸிங்
எல்லாச் சமயங்களுக்கும் ஒரே நோக்கம்தான். விலக்க முடியாததை ஏற்றுக் கொள்ளச் செய்வதே அந்த நோக்கம்.
-கதே
எந்தக் காலமும் எனக்குத் துணையாய் நிற்க இறைவனிடம் ஏற்பதாயிருந்தால், முதலில் வேண்டுவது சமய சாந்தி, இரண்டாவது கல்வியில் சுவை.
-ஹெர்ஷல்
சமய அனுஷ்டானத்துக்கு இன்றியமையாது வேண்டப்படுவது மனித ஜாதியிடம் அன்பும் மரியாதையும் செய்தலே.
- அனடோல் பிரான்ஸ்
சமயத்தைப் பற்றிச் சிந்தியாதவன், தான் பிறந்த சமயமே உண்மைச் சமயம் என்று எண்ணிக் கொள்கிறான்.
- டால்ஸ்டாய்
மனிதர்கள், இம்மைக்காக மறுமையையும், மறுமைக்காக இம்மையையும், ஒருபொழுதும் முழுவதும் வேண்டாம் என்று விட்டுவிட மாட்டார்கள். -ஸாமுவேல் பட்லர்
சமயம் மாறுபவன் தலை போன பின் இன்ன தெனத்திரும்பிப் பார்க்கும் ஈயை ஒப்பான்.
-பட்லர்
அற உணர்ச்சி அளிக்காத சடங்குகள் அனைத்தும் அழிக்கத் தக்கவைகளே.
-ஸவனரோலா
கிறிஸ்து, மதநூல் எதுவும் எழுதவில்லை. நன்மையான காரியங்களைச் செய்வதிலேயே கருத்தாயிருந்தார்.
-ஹொரேஸ் மான்
கிறிஸ்து தர்க்க சாஸ்திரம் எதுவும் தந்து போகவில்லை. அவர் தந்திருப்பது சில எளிய உண்மைகளே.
-ஹெடன்
கிறிஸ்துவ மதம் அயலானுக்கு அன்பு செய்யப்போதிக்கும், ஆனால் தற்கால சமூகமோ அயலான் ஒருவன் உண்டு என்பதையே ஒப்புக்கொள்வதில்லை.
-டிஸ்ரேலி
தன் மதம் அடிமைத்தனம் என்று உணர்பவன் அதை இன்னும் அறிய ஆரம்பியாதவன். -ஜே.ஈ. ஹாலண்டு
அறிவில்லாத சமயவாதிகள் சமயக் கொள்கைகளுக்காகச் சண்டையிடட்டும். ஆனால் தர்ம வழியில் நடப்பவன் ஒருநாளும் தவறியவனாகான்.
-போப்
புனிதமான விஷயங்களை உணர்ச்சியின்றிக் கையாளும் வேஷதாரிகளே பெரிய நாஸ்திகர். அவர்களுக்கு இறுதியில் சூடு போடுதல் அவசியம்.
-பேக்கன்
தொல்லையில்லாமல் இருப்பதற்காகவே ஜனங்கள், 'நாங்கள் எல்லோரும் ஒரே மதத்தினர்' என்று கூறிக் கொள்கின்றனர். ஆனால் விஷயத்தை நன்கு ஆராய்ந்தால், எல்லா விஷயங்களிலும் ஒரே மதத்தையுடைய மூன்று பேரைக்கூட எங்கும் காண முடியாது. - ஸெல்டன்
மதப் பிடிவாதி, ஆப்பிரிக்க எருமை போல் இருப்பவன். நேரேதான் பார்ப்பான்- பக்கங்களில் திரும்பான்.
-பாஸ்டர்
ஜனங்கள் சமயத்திற்காகச் சண்டையிடுவர், வாதம் புரிவர், வசை பகர்வர், அயலாரைத் துன்புறுத்துவர், அனலிலும் இடுவர், உயிரைத் துறக்கவும் செய்வர்- சமயத்திற்காக எல்லாம் செய்வர். ஆனால், சமய வாழ்வு வாழ மட்டும் செய்யார். சிலரேனும் வாழ முயலவாவது வேண்டாமோ? அதுகூடக் கிடையாது.
-பிரிஸ்வெல்
விக்கிரகங்கள் சந்தேகத்திற்கு இடமாயும், வணங்குவோர் இதயத்திற்கு எல்லாவித நல்லுணர்ச்சியும் தரச் சக்தியற்ற சர்வ சூனியமாயும் ஆகும்பொழுது தான் விக்கிரக ஆராதனை தவறாகும்.
-கார்லைல்
நட்பு விஷயத்திற் போலவே மத விஷயத்திலும் யார் அதிகப் பற்றுடையவர்களாகக் கூறிக் கொள்கிறார்களோ, அவர்களே அந்த அளவிற்கு உண்மை நம்பிக்கை குறைந்தவர்களாவர்.
-ஷெரிடன்
மதப்பிடிவாதமுடையவர் அவர்கள் வாழ்நாளில் மட்டுமே மதியுடையவராய் மதிக்கப்படுவர்.
-தாமஸ் வில்ஸன்
நாம் உண்மை என்று நம்புவதை ஒப்புக்கொள்ள மறுப்பவரை நாஸ்திகர் என்று கருதுவது பெருந்தவறு. இழிவான நோக்கங்கொண்டு உண்மைக்குச் செவிசாய்க்க மறுப்பவரே நாஸ்திகர். சமயக் கோட்பாடுகளை எல்லாம் நம்புவதாய்க் கூறிக்கொண்டு சமய ஒழுக்கம் இல்லாதவன் நாஸ்திகரில் நாஸ்திகன்.
-ஹெச்.ஏ.
மதப் பிடிவாதியின் மனம் கண்ணை ஒக்கும், அதிக ஒளி பட்டால் அதிகமாக இடுக்கும்.
-ஹோம்ஸ்
மதப் பிடிவாதம், மதத்தைக் கொன்று, அதன் ஆவியைக் காட்டி மூடர்களைப் பயமுறுத்தும்.
-கோல்டன்
மதப் பிடிவாதத்துக்கு மூளையில்லை, அதனால் யோசிக்க முடியாது; இதயமில்லை, அதனால் உணர முடியாது.
-ஒகானல்
10. தத்துவ ஞானம்
தத்துவ ஞானம் எல்லாம் ஆச்சரியத்தில் ஆரம்பித்து, ஆச்சரியத்தில் முடிவடையும். முதல் ஆச்சரியம் அறியாமையின் குழந்தை; மற்ற ஆச்சரியம் வணக்கத்தின் தாய். முன்னது நமது அறிவின் பிரசவக் கஷ்டம் இறுதியானது அதன் சுகமரணம்.
-கோல்ரிட்ஜ்
நுண்ணிய கருத்துக்கள் உடைமை மட்டுமே தத்துவ ஞானம் ஆகிவிடாது. அறிவு கூறும் வழி நிற்க ஆசை உடைமையே அதன் இலட்சணம்.
-தோரோ
வாழும் முறையைக் கற்பிக்கும் வித்தையே தத்துவ ஞானத்தின் இரண்டு முக்கிய லட்சியங்கள் ஆகும்.
-வால்டேர்
உண்மையான தத்துவ ஞானம், இல்லாததைச் சிருஷ்டிக்காது, உள்ளதையே நிரூபித்து உறுதி செய்யும். -கலின்
தவறான அபிப்பிராயத்தை ஒழிப்பதும், அறிவைத் துய்மை செய்வதும், நமது அறியாமையின் ஆழத்தை உறுதி செய்வதுமே தத்துவ ஞானத்தின் தொழில்.
-ஹாமில்டன்
தத்துவ ஞானத்தின் லட்சியம் அறம்.
- பீட்டர் பெயின்
அறிவின் உதவியின்றி உணர்ச்சி மூலம் நம்பப்படு அவைகளுக்குத் தவறான காரணம் கண்டுபிடிப்பதே தத்துவ சாஸ்திரம். ஆனால் அக்காரணம் காண்பதும் ஓர் உணர்ச்சியே.
- ப்ராட்லி
தத்துவ ஞானத்தை 'அறிவை அறியும் அறிவு' என்பர். ஆனால் உண்மையில் அது அறியாமையை அறியும் அறிவே ஆகும். அல்லது கான்ட் கூறுவதுபோல் அது அறிவின் எல்லையை அறியும் அறிவே ஆகும்.
-மாக்ஸ்முல்லர்
தத்துவ ஞானிபோல் பேசுவதும் எழுதுவதும் எளிது; ஆனால் அறிவோடு நடப்பது - அங்குதான் கஷ்டம்
-ரைவ ரோல்
தத்துவ ஞானிக்குப் பிறர் யோசனைகளைக் கேட்க விருப்பமும், அவற்றைத் தானே ஆராய்ந்து முடிவு கட்ட மன உறுதியும் வேண்டும். உழைப்பும் இருந்து விட்டால் இயற்கையின் ஆலயத்திலுள்ள இரகசிய மண்டபத்தினுள் நுழையவும் எதிர்பார்க்கலாம்.
-பாரடே
தத்துவ ஞானம் கற்பது என்பது, 'தான்' சாகத் தயராக்குவதேயன்றி வேறன்று. -ஸிஸரோ
தத்துவ சாஸ்திரிகள் உலக விவகாரங்களைப் பற்றித் தர்க்கித்துக்கொண்டிருப்பர். ஆனால் அதற்கிடையில் உலகை நடத்திச் செல்வன பசியும் காதலுமேயாம்.
-ஷில்லர்
நமது தத்துவ சாஸ்திரத்தில் நாம் கனவு கண்டும் அறியாத பல விஷயங்கள் விண்ணிலும் மண்ணிலும் உண்டு.
-ஷேக்ஸ்பியர்
ஒருவன் யாரிடம் பேசுகின்றானோ அவனுக்குப் பொருள் விளங்காமலும், பேசுகின்ற தனக்குப் பொருள் விளங்காமலும் இருந்தால், பேசுவது தத்துவ சாஸ்திரமாகும்.
-வால்டேர்
★ ★ ★
11. ஆன்மா
உடல்-அது மண்ணேயன்றி வேறன்று ஆன்மா-அது நித்தியத்தின் முகை ஆகும்.
-கல்வெர்வெல்
மனிதனையும் அவன் செயல்களையும் அடக்கியாள்வது ஜட சக்தி அன்று, ஆன்மா சக்தியேயாகும்.
-கார்லைல்
ஆன்மாவின் கதவை ஒரு விருந்தாளிக்கு ஒருமுறை திறந்து விட்டால், பின் யாரெல்லாம் உள்ளே வந்து புகுவர் என்று கூறிவிட முடியாது.
-ஹோம்ஸ்
அறிவு கண்ணில் விளங்கும்-அன்பு முகத்தில் விளங்கும்-ஆனால் ஆன்மா விளங்குவது மனத்தில் கேட்கும் அந்தச் சிறு குரலிலேயே.
-லாங்பெலோ
மனத்தில் உயர்ந்த எண்ணங்களும் இலட்சியங்களும் இருக்குமானால், ஆன்மா உடம்பில் இருக்கும் பொழுதே ஆண்டவன் சன்னிதானத்தில் இருப்பதாகும். -ஸெனீகா
ஆன்மா சூரியனை ஒக்கும். இரவில் அஸ்தமித்து விடுகிறது. கண்ணுக்குப் புலனாவதில்லை. ஆனால் வேறிடத்தில் வெளிச்சம் பரப்புவதற்காகவே சென்றுளது என்பதே உண்மை.
-கதே
ஆன்மாவின் செல்வம் அது எவ்வளவு அதிகமாக உணரும் என்பதைக் கொண்டு அறியப்படும்; ஆன்மாவின் வறுமை எவ்வளவு குறைவாக உணரும் என்பதைக் கொண்டு அறியப்படும்.
-ஆல்ஜர்
நாகரிக முன்னேற்றத்திற்கு வகுக்கப்பட்டுள்ள கருவிகளில் எந்தக் காலத்திலும் சான்றோரின் ஆன்மசக்தியே தலைசிறந்ததாகும்.
- ஹாரிஸன்
உழைப்பை மட்டுமே விற்கலாம். ஒருநாளும் ஆன்மாவை விற்கலாகாது.
-ரஸ்கின்
ஆன்மா ஆளவில்லையானால், அது தோழனாயிருக்க முடியாது. அது ஆளவேண்டும், அல்லது அடிமையா யிருக்கவேண்டும்-அவ்வளவே. வேறெதுவாயும் இருக்க முடியாது.
-ஜெரிமி டெய்லர்
ஆன்மாவைப் பற்றிய முக்கிய பிரச்சினை அது எங்கிருந்து வந்தது என்பதன்று; அது எங்கே போகிறது என்பதாகும். அதை அறிய வாழ்நாள் முழுவதும் தேவை.
-ஸதே
ஆன்ம அபிவிருத்தி- மனிதனைப் பரிபூரண மாக்குவதே அதன் லட்சியம். அதனால் அது சரீர வாழ்வை யெல்லாம் சாதனமாகத் தாழ்த்திவிடும். -எமர்ஸன்
★ ★ ★
12. இலட்சியம்
இலட்சியம் இல்லாத மனிதன் திசையறி கருவி இல்லாத கப்பலை யொப்பான்.
- ஆவ்பரி
மேல் நோக்காதவன் கீழேயே நோக்குவான். உயரப் பறக்கத் துணியாத ஆன்மா ஒருவேளை தரையில் புரளவே விதிக்கப்பட்டிருக்கும்.
-பீக்கன்ஸ்பீல்டு
தாழ்ந்த இலட்சியத்தில் ஜெயம் பெறுவதைவிட உயர்ந்த இலட்சியத்தில் தோல்வியுறுவதே சிலாக்கியம்.
- ராபர்ட் பிரெளணிங்
எவ்விதம் இறந்தான் என்பதன்று கேள்வி- எவ்விதம் வாழ்ந்தான் என்பதே கேள்வி. -டாக்டர் ஜான்ஸன்
தன் சக்திகளிலிருந்து சாத்தியமான அளவு சாறு பிழியவே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை இலட்சியமாயிருத்தல் அவசியம்.
-ரிக்டர்
உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி-இம்மூன்றையும் மனிதன் அநுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றுமில்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.
-பழமொழி
மானிட உள்ளத்தின் தலைசிறந்த சிருஷ்டிகள் கூடப் பரிபூரணத்தில் மிகக் குறைந்தவை என்பது முற்றிலும் நியாயம்.
-வாவனார்கூஸ்
ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால், பின் அவனைப் பற்றி அறிந்துகொள்ளுதல் கஷ்டமான காரியம் அன்று. -ஹோம்ஸ்
எந்த மனிதனையும் முற்றச் சோதிப்பது, இவனுக்கு எது பிரியம்? என்னும் கேள்வியே. - ரஸ்கின்
ஆட்டு மந்தை போல் நடவாமையே அனைத்திலும் முக்கியமான விஷயம். பிறர்போகும் இடத்தைவிட்டு நாம் போகவேண்டிய இடத்தை அறிவதே கடன்.
-ஸெனீகா
வாழ்வின் இலட்சியத்தை அடைய முயல்வோனுடைய வாழ்வே நீண்டதாகும். யங் இறுதியில் லட்சியத்தை அடைவிக்குங் காரியங்களைச் செய்தால் மட்டும் போதாது. செய்யும் ஒவ்வொரு காரியமுமே ஒரு இலட்சியமாயிருத்தல் வேண்டும்.
-கதே
மனிதனுடைய உயர்ந்த விஷயங்கள் அவன் அருகிலேயே உள. அவன் பாதங்களின் அடியிலேயே அமையும்.
-ஹாட்டன் பிரபு
இன்பங்களைப்பெற முயல்வதிலும் இலட்சியங்களைப் பெருக்க முயல்வதே நலம். -ஆவ்பரி
லெளகீக வாழ்வினின்று விடுதலை பெற இரண்டு வழிகள் உள. ஒன்று இலட்சிய வாழ்விலும், மற்றொன்று மரணத்திலும் சேர்க்கும்.
-ஷில்லர்
முடிவில் பிரதானமானது நாம் எண்ணுவது எது, அறிவது எது, நம்புவது எது என்பதல்ல. நாம் செய்வது எது என்பதொன்றே பிரதானமான தாகும்.
-ரஸ்கின்
ஒருவன் பிறர் லட்சியத்திற்காக இறக்க முடியும். ஆனால் அவன் வாழ்வதானால் தன் லட்சியத்திற்காகவே வாழ வேண்டும். -இப்ஸன்
தன் சக்தி எவ்வளவு உயர்ந்ததாயும் எவ்வளவு அளவொத்ததாயும் அபிவிருத்தியடைய முடியுமோ அவ்வளவு அபிவிருத்தியும் அடைவதே ஒவ்வொருவனுடைய லட்சியமாயிருக்கவேண்டும்.
-ஹம்போல்ட்
மனிதர் அவசியம் கவனிக்க வேண்டிய உண்மையான, நியாயமான, கெளரவமான விஷயம் தங்களைச் சுற்றியுள்ளவர், தங்களுக்குப் பின் வாழப் போகிறவர் இவர்களுடைய நன்மையை நாடுவதே.
-ஹாரியட் மார்ட்டினோ
இவ்வுலகத்தை நன்கு பயன்படுத்தியே அவ்வுலகத்தை அடைதல் இயலும் நம் இயல்பைப் பூரணமாக்கும் வழி அதை அழித்து விடுவதன்று. அதற்கு அதிகமாக அதோடு சேர்ப்பதும், அதன் லட்சியத்திலும் உயர்ந்த லட்சியத்தை நாடச் செய்வதுமே. -நியூமன்
வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களைக் குறைக்க ஒருவெருக்கொருவர் உதவி செய்துகொள்வதற்கன்றி வேறெதற்காக நாம் உயிர் வாழ்கின்றோம்?
-ஜார்ஜ் எலியட்
நீண்ட காலம் வாழவேண்டுமென்பது அநேகமாக ஒவ்வொருவருடைய ஆசையுமாகும். ஆனால் நன்றாய் வாழ விரும்புபவர் வெகுசிலரே.
-ஹீஜிஸ்
நாளுக்கு நாள் ஏற்றம் பெற்றுவரும் லட்சியம் ஒன்று ஊழிகளை ஊடுருவி ஓடுகின்றதென்பதும், வருஷங்கள் ஆக ஆக மனிதர் கருத்துக்களும் விரிவடைகின்றன என்பதும் மெய். -டெனிஸன்
★ ★ ★
13. நன்மை-தீமை
நன்மை யென்றும் தீமை யென்றும் இல்லை; அவ்விதம் ஆக்குவது மனமே.
-ஷேக்ஸ்பியர்
'நன்மை, தீமை'- நம் அறியாமையால் எழும் இரு பெயர்கள்.
நம் மனத்திற்கு உகந்ததை நன்மை என்கிறோம், பிறர் மனத்திற்கு உகந்ததைத் தீமை என்கிறோம்.
'தீமை' - நமக்குத் தீங்கிழைப்பது. 'நன்மை' அநேகமாய்ப் பிறர்க்குத் தீங்கிழைப்பது.
- பால் ரிச்சர்டு
நேர் வழியில் அடைய முடியாததை ஒருநாளும் நேரல்லாத வழியில் அடைந்துவிட முடியாது.
-கதே
அற்ப விஷயங்கள் மனத்தைக் கலக்கினால் அதிரிஷ்டசாலி என்று அர்த்தம். துரதிர்ஷ்ட காலத்தில் அற்ப விஷயங்கள் உணர்ச்சிக்கு எட்டுவதில்லை.
-ஷோப்பனார்
எப்பொழுதும் நமது சூரிய ஒளியில் ஒரு கறுப்புப் புள்ளி உண்டு, நமது நிழலே அது. -கார்லைல்
ஐயோ பேயை அடக்குவதினும் எழுப்புவது எளிது.
-காரிக்
நன்மை தீமையினின்று பிறவாவிடினும் அது தீமையை எதிர்ப்பதிலேயே அடையக்கூடிய அபிவிருத்தி அனைத்தை யும் அடையும். -ரஸ்கின்
செல்வர், வறிஞர் காரியத்தில் சிரத்தைகாட்டும் பொழுது, அது தர்மம் எனப்படும்.
வறிஞர், செல்வர் காரியத்தில் சிரத்தை காட்டும் பொழுது, அது ஒழுங்கீனம் எனப்படும்.
-பால் ரிச்சர்டு
தண்டனை பெறுவதைவிட வெகுமதி பெறுவது இழிவில் குறைந்தது அன்று.
உன் நற்செய்கைகளுக்காக உனக்கு வெகுமதி அளிப்பார் என்று நீ எதிர்பார்க்கும் பொழுது, அவைகளுக்காகச் சாத்தான் உன்னைத் தண்டிக்கக் கூடும் என்பதை மறவாதே. ஆயினும் நற்செய்கைகளையே செய்வாயாக.
அநேக ஜனங்கள் நன்மை செய்வதை விட்டுத் தீமை செய்வதன் காரணம், கடவுள் தண்டித்தாலும் தண்டிக்கட்டும், சாத்தான் தண்டனையை மட்டும் தாங்க முடியாதென்று கருதுவதே என்பதற்குச் சந்தேகமில்லை.
-பால் ரிச்சர்டு
ஒளி நிறைந்த இடத்தில் நிழல் இருண்டிருக்கும்.
-கதே
தந்திரமும் ஏமாற்றமும் அறநெறி நிற்கப் போதுமான அறிவில்லாத மூடர் செயல்.
-பிராங்க்லின்
பாத்திரம் நிறைந்திருப்பின் வெளியே ஊற்றாமல் உள்ளே ஊற்ற முடியாது.
-அர்னால்ட் பென்னெட்
அதைரியப்படாதே. ஒன்று தான் அச்சம் அளிப்பது: பாபமே அது.
-லெயிண்ட் கிறிஸாஸ்டம்
தீமை செய்வதினும் தீமை பெறுதலே நலம். -ஸிஸரோ
ரோஜா முள்ளின்றி மலர்வதில்லை, உண்மையே. ஆனால் மலர் இறக்க முள் இருக்கலாகாதன்றோ?
-ரிக்டர்
அநேக சந்தர்ப்பங்களில் நாம் தீமை யென்று கூறுவது, தவறியோ அல்லது மிதமிஞ்சியோ ஏற்பட்ட நன்மையாகும். மனோதைரியம் மிதமிஞ்சினால் மடமையாகும். பட்சம் மிதமிஞ்சினால் பலவீனமாகும். சிக்கனம் மிதமிஞ்சினால் லோபமாகும்.
-ஆவ்பரி
மனிதர் தற்சமய நிலைமையில் காணும் தீமைகளுக்காக வருந்தும்பொழுது, வேண்டுமென்று விரும்பும் நிலையில் ஏற்படக்கூடிய தீமைகளைப்பற்றிச் சிறிதும் சிந்திப்பதில்லை.
-பிராங்க்லின்
பையில் துவாரமிருந்தால் அதில் பணத்தை நிரப்பிப் பலனில்லை.
-ஜார்ஜ் எலியட்
அழுகிய பழங்களில் அது கொள்ளுவோம் இது தள்ளுவோம் என்று தேர்வது எப்படி? -ஷேக்ஸ்பியர்
★ ★ ★
14. அறிவு
'அறிவு'-ஆம், அது நாம் வானுலகு ஏறுதற்குரிய வன் சிறகு.
-ஷேக்ஸ்பியர்
கடவுள் ஆலோசிப்பவன் ஒருவனை உலகிற்கு அனுப்பினால், ஜாக்கிரதை அப்பொழுது அனைத்தும் அபாய நிலை அடையும்!
-எமர்ஸன்
எல்லா உடைமைகளிலும் ஞானமே அழியாததாகும். - ஸாக்ரடீஸ்
சாத்தானுக்குச் சிந்தனை செய்பவனைப் போன்ற கொடிய சத்துரு கிடையான்.
-கார்லைல்
நூலறிவு பேசும் - மெய்யறிவு கேட்கும்.
-ஹோம்ஸ்
ஞானத்தின் முதல் வேலை தன்னை அறிதல்; அன்பின் முதல் வேலை தனக்குத் தான் போதுமானதாயிருத்தல்.
-ரஸ்கின்
நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் அவனியில் கிடையாது.
-கதே
மனோ விகாரங்களே வாழ்வாகிய கப்பலைச் செலுத்தும் காற்று. அறிவே அதை நடத்தும் சுக்கான். காற்றின்றேல் கப்பல் நின்றுவிடும். சுக்கானின்றேல் தரை தட்டிவிடும்.
-ஷூல்ஜ்
வாழ்வு யோசிப்பவனுக்கு இன்ப நாடகம், உணர்பவனுக்குத் துன்ப நாடகம்.
-வால்ப்போல்
நீ எண்ணுவது எல்லோருக்கும் சொந்தம், நீ உணர்வதே உனக்குச் சொந்தம்.
-ஷில்லர்
மனிதனுடைய உடைமையா யிருக்கக் கூடியது அறிவு ஒன்றே. ஆகையால் அறிவை விருத்தி செய்வதே ஆசைப்பட்டு அடைய முயலத்தக்க ஒரே வெற்றியாகும்.
-பழமொழி
உண்மை ஞானம் கண் முன் இருப்பதைக் காண்பதன்று, பின் வருவதை முன் அறிவதாகும்.
-டெரன்ஸ்
எதை நாம் அறியவில்லையோ அது நம்முடைய தன்று. -கதே
ஒரு விஷயத்தைப் பல வாயிலாகப் பார்க்க முடியாத புத்தி குறுகியதாகும்.
-ஜார்ஜ் எலியட்
தான் தானாகவே இருக்க அறிவதே உலகில் பெரிய விஷயம்.
-மான்டெய்ன்
அறிவின் முதல் பாடம் ஐஸ்வரியத்தை வெறுப்பது; அன்பின் முதல் பாடம் ஐஸ்வரியத்தை அனைவருக்குமாகச் செய்வது.
-ரஸ்கின்
உண்மை அறிவு அன்பில் கொண்டு சேர்க்கும்.
-வோர்ட்ஸ்வொர்த்
உண்மையின் பெருங்கடல் நம்மால் அறியப்படாமல் பரந்து கிடக்கின்றது. நாமோ, கடற்கரையில் விளையாடி, அங்குமிங்கும் ஓடி, அழகான ஒரு சிப்பியையும் மெல்லிய ஒரு கடற் பாசியையும் கண்டு மகிழ்ந்து நிற்கும் சிறு குழந்தைகளைப் போல் இருக்கிறோம்.
-ஆவ்பரி
சாஸ்திரிகளைப் போல் சாமர்த்தியமாய் அஞ்ஞானம் பேசுவதைவிட, சான்றோர்களைப்போல் சாமர்த்தியமின்றி ஞானம் பேசுதலே சாலச் சிறந்ததாகும்.
- செஸ்டர்டன்
கூடிய மட்டும் துன்பம் விளையாமல் தடுத்துக் கொள்வதும், தடுக்கமுடியாத துன்பத்தைக் கூடிய மட்டும் பயன்படுத்திக் கொள்வதுமே அறிவு ஆகும்.
- ரஸ்கின்
என்னை நகைக்கச் செய்வன நம் அறியாமைகள் அல்ல-நம் அறிவுகளேயாகும். -மான்டெய்ன்
ஜீவனத்துக்கான சாதனமாக மட்டுமன்று, ஜீவிதத்துக்கான சாதனமாகவும் மனிதனுக்கு அறிவு தேவை.
-ஆவ்பரி
நூலறிவு பெற்றவன் குளத்தை யொப்பான்; மெய்யறிவு உடையவன் சனையை யொப்பான்.
-ஆல்ஜெர்
பகுத்தறிவு என்பது உண்மையை அறியக் கடவுள் நமக்குத் தந்துள்ள ஒரே புனிதமான சாதனம். நம் அனைவரையும் ஒன்றாய் இயக்கத்தக்கது அதுவே. ஆனால், ஐயோ, நாம் அதைத்தான் நம்புவதில்லையே!
-டால்ஸ்டாய்
நூலறிவு வந்துவிடும், மெய்ஞ்ஞானம் வரத் தயங்குகின்றது.
-டெனிலன்
பிறர் வாசித்திருந்த அளவு நானும் வாசித்திருந்தால் அவர்களைப் போலவே நானும் அறிவில்லாத வனாயிருப்டிேன்.
-ஹாப்ஸ்
அறிவாளி தன்னை மட்டும் உடையவனாயிருந்தால் போதும், அவன் ஒருபொழுதும் எதையும் இழப்பதில்லை.
-மான்டெய்ன்
தெரியாது என்று உணர்வது அறிவை அடைவதற்குப் பெரிய வழி.
-டிஸ்ரேலி
கற்றதை எல்லாம் முழுதும் மறக்க முடிந்த பொழுதே நாம் உண்மையில் அறிய ஆரம்பிக்கிறோம்.
-தோரோ
தன்னலமின்மையும் நாணமுமே மெய்ஞ்ஞானத்தின் இலட்சணம். -ரஸ்கின்
தன்னைப் பூரணமாய் அறியாதவன் ஒரு நாளும் பிறரைச் சரியாக அறிய முடியாது. -நோவாலிஸ்
பயபக்தியில்லாத அறிவு அறிவாகாது. அது மூளை அபிவிருத்தியாயிருக்கலாம் அல்லது கைத்தொழில் அறிவாயிருக்கலாம். ஆனால் ஆன்ம அபிவிருத்தியாக மட்டும் இருக்காது.
-கார்லைல்
அறிஞர் பகைவரிடமிருந்தும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்வர்.
-அரிஸ்டோபீனிஸ்
அறிவு பெற ஆற்றலுடைய ஒருவன் அறிவிலியாயிருப்பதைப் போன்ற துக்ககரமான விஷயம் வேறு எதுவுமில்லை.
-கார்லைல்
ஆறாத மரத்தை வேலைக்கு அதிகமாக உபயோகிக்கக் கூடாது - அதுபோல்தான் பண்படாத அறிவையும்.
-ஹோம்ஸ்
அறிய முடியாததையும் அறிய முடியும் என்று நம்புவதை ஒருநாளும் கைவிடற்க. இன்றேல் அதைத் தேடப் போவதில்லை.
-கதே
நாம் அறிவதின் அளவு சுருங்குவதே நாம் அறிவில் முன்னேற்றம் அடைவதைக் காட்டும்-இப்படிக் கூறுவது முரணாகத் தோன்றலாம், ஆனால் உண்மையே ஆகும்.
-ஹாமில்டன்
பக்தர் 'தன்'னைத் துறத்தல் போலவே அறிஞரும் 'தன்'னைத் துறத்தல் அவசியமானதே. -எமர்ஸன்
அறிவிலிகள் அறிவாளிகள் மூலம் பயன்பெறுவதைக் காட்டிலும் அறிவாளிகள் அறிவிலிகள் மூலம் அதிகமாகப் பயன்பெறுவர்.
-கேடோ
முடியுமானால் பிறரைவிட அறிவாளியாயிரு. ஆனால் அதை அவர்களிடம் கூறாதே. -செஸ்டர்பீல்டு
வித்தையில் விருப்பமுடையவன், தன்னை முழுவதும் அதற்குத் தத்தம் செய்யவும், அதிலேயே தன் வெகுமதியைக் காணவும் திருப்தியுடையவனாயிருக்க வேண்டும்.
-டிக்கன்ஸ்
பிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது. அறிந்துள்ளதை எவ்வாறு அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்கவேண்டும்.
-பிரெஞ்சுப் பழமொழி
ஒரு பிராணி வாழ்வதைக் கண்டு நீ ஆனந்திக்கும் அளவே நீ அதை அறிய முடியும். வேறு வழியில் முடியாது.
-ரஸ்கின்
ஜலக் குமிழி தங்கக் கட்டிக்குச் சமானமாகுமானால் உயர்ந்த மூளையும் உண்மையான உள்ளத்திற்குச் சமானமாகும்.
- ஹோம்ஸ்
நூலறிவு அதிகம் கற்று விட்டதாக அகத்தில் கர்வம் கொள்ளும். மெய்ஞ்ஞானம் இன்னும் அறிய வேண்டியது அதிகம் என்று தாழ்ச்சி சொல்லும். -கெளப்பர்
சாக்கடை நீரில் குப்பையைக் காண்பதா, அல்லது வானத்தைக் காண்பதா? -உன் இஷ்டம்.
-ரஸ்கின்
மெய்ஞ்ஞானம் கடவுளிடம் அடக்கத்தையும், ஜீவர்களிடம் அன்பையும், தன்னிடம் அறிவையும் உண்டாக்கும்.
-ரஸ்கின்
அறிவுள்ள பிராணியாயிருப்பதில் அதிக செளகரியமே. அதைக்கொண்டு விரும்பியது எதற்கும் காரணம் சிருஷ்டித்துவிடலாம் அல்லவா?
-பிராங்க்லின்
தன் உபயோகத்திற்கும் அவசியத்திற்கும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளாதவன் வேறு எவற்றை அறிந்திருந்தாலும் அறிவில்லாதவனே ஆவான்.
-டிலட்ஸன்
யோசனை செய்யாதிருக்கக்கூடிய இடம் மரண சயனம் ஒன்றே. ஆனால் யோசனை செய்வதை அந்த இடத்திற்காக ஒருபொழுதும் விட்டுவைக்கக் கூடாது.
- ரஸ்கின்
அறிவின் முன்னணியில் போர் புரிவோர்க்குப் பெரும்பான்மையோர் ஆதரவு ஒரு நாளும் கிடைப்பதில்லை.
-இப்ஸன்
ஒன்றும் அறியாதவன் தான் கற்றுக்கொண்டதைப் பிறர்க்குக் கற்றுக் கொடுப்பதாய் நம்பிக்கொள்கிறான். அதிகம் அறிந்தவன் தான் கூறுவது பிறர் அறிந்திருக்க முடியாது என்று நினைப்பதில்லை.
-லா புரூயர்
குறைந்தபட்சத் தீமையும், கூடிய பட்ச நன்மையும் விளையும்படி வாழ்வதே உலகில் தலை சிறந்த ஞானமாகும்.
-ரொமெய்ன் ரோலண்டு
குறுகிய புத்தியுள்ள மனிதர் குறுகிய கழுத்துள்ள பாட்டில்களை ஒப்பர். அகத்தில் அற்பமாயிருந்தால் புறத்தில் ஊற்றும்பொழுது அதிகச் சப்தம் செய்யும்.
-ஸ்விப்ட்
தீயவன் ஒருநாளும் மெய்யறிவு பெற்றதில்லை. ஆம், ஒருநாளும் மெய்யறிவு பெற்றதில்லை. இது முக்காலும் உண்மை.
-போப்
அறியாமை ஆண்டவன் சாபம், அறிவு தேவர் உலகத்திற்குக் கொண்டு செல்லும் சிறகு.
-ஷேக்ஸ்பியர்
'அறியாமை'யால் நமக்குச் செளகரியங்கள் கிடையாமல்போகும் என்பது மட்டுமன்று-நமது கேட்டிற்கு நம்மையே வேலை செய்யத் துண்டுவதும் அதுவே. அது அறிவு 'இன்மை' என்பது மட்டும் அன்று-சதா காலமும் துன்பம் தந்துகொண்டிருக்கும் தவறுகளின் 'நிறைவு'ம் ஆகும்.
-ஸாமுவேல் பெய்லி
பார்க்க மாட்டோம் என்று சாதிக்கும் அளவுக்குக் குருடாயுள்ளவர் உலகில் கிடையார்.
-ஸ்விப்ட்
ஒருவனுக்கு அறிவிருந்தும் ஆற்றல் இல்லையாகில் அவன் வாழ்வு பாழே.
-ஷாம்பர்ட்
கண் குருடு என்று இரங்குவதுபோலவே அறிவு சூனியம் என்பதற்கும் இரங்க வேண்டும். - செஸ்டர்பீஸ்டு
மூளையின் முன்புறம் (அறிவு) பின்புறத்தை (உணர்ச்சியை) உறிஞ்சி உலர்த்திவிடுமானால் கேடே. அறிவினால் மட்டுமே நம்மை பெற்றுவிட முடியாது. விசாலமான நெற்றிக்கே எப்பொழுதும் இறுதியில் வெற்றி. ஆனால் வெற்றி கிடைப்பது தலையின் பின்புறம் மிகப்பருமனாயுள்ள பொழுதே.
-ஜே.ஆர்.லவல்
அறிஞனுக்கு அனைத்துலகும் தாய்நாடே. சாந்தமான மனத்திற்கு எந்த இடமும் அரண்மனையே.
-லில்லி
அறிவிலி இடத்தையும் காலத்தையும் குறுக்க விரும்புகிறான். அறிஞனோ அவற்றை நீட்டவே விரும்புகிறான்.
-ரஸ்கின்
தனக்குத்தானே வழிகாட்டி என்னும் வண்ணம் போதுமான அறிவுடையார் யாருமிலர். -அக்கம்பிஸ்
வாழ்விடமிருந்தோ மக்களிடமிருந்தோ அதிகமாக எதிர் பாராதிருத்தலே மெய்யறிவின் ஜீவ அம்சமாகும்.
-மார்லி
ஏறிக்கொள்ள அசுரனுடைய தோள்கள் கிடைக்குமானால் குள்ளன் அசுரனைவிட அதிகத் துரம் பார்க்க முடியும்.
-கோல்ரிட்ஜ்
ஷேக்ஸ்பியர் என்னைவிட அதிக உயரமுள்ளவரே. எனினும் நான் அவரைவிட அதிகத் தூரம் பார்க்க முடியும். நான் அவருடைய தோள்களின் மேல் அல்லவோ நிற்கின்றேன்!
- பெர்னார்டு ஷா
ஒன்றுமே அறியாதவன் வாழ்பவன் ஆகமாட்டான். - கிரேஸியன்
அறிவை எதிர்ப்பவர் நெருப்பைக் கிளறுபவர் ஆவார். நெருப்புப் பொறி பறந்து எரிக்க வேண்டாதவற்றையும் எரித்துவிடும்.
-கதே
ஒருவனுடைய அறிவை அபகரித்துவிட்டால் அவனைச் சிசு நிலைமையில் வைப்பதாகாது. விலங்கு நிலைமையில்-அதுவும் விலங்குகளில் எல்லாம் அதிகத் துஷ்டத்தனமான விலங்கின் நிலைமையில் வைப்பதேயாகும்.
-அர்னால்டு
அற்ப அறிவு அபாயகரம் என்றால், அபாயம் நேராத அளவு அதிக அறிவு அடைந்துள்ளவன் எவன்?
-ஹக்ஸ்லி
★ ★ ★
15. அறிவீனம்
மூடன் தன்னை அறிவாளி என்று மதித்துக் கொள்கிறான். ஆனால் அறிவாளியோ தன்னை முட்டாள் என்று அறிவான்.
-ஷேக்ஸ்பியர்
தேவர்கள் செல்ல அஞ்சும் இடத்திற்கு மூடர்கள் பாய்ந்து விடுவர்.
-போப்
முட்டாள்கள் தவறு செய்தால் அதனால் அவர்க்கு விளையும் தீமையினின்று அவர்களைக் காப்பாற்றிவிட்டால், உலகத்தை முட்டாள்களால் நிரப்பியவர்களாவோம்.
-ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்
ஒவ்வொருவனும் பிழை செய்யக் கூடியவனே. ஆனால் மூடனைத் தவிர வேறு யாரும் பிழையை விடாமல் பிடித்துக்கொள்ளார். - ஸிஸரோ
உண்டென்றோ அல்லது இல்லையென்றோ பகுத்தறியாது பகர்வோரே மூடர்கள், அனைவரிலும் தாழ்ந்தவர்.
-தாந்தே
மூடன் பிறரைக் குறை கூறுவான்; அரைகுறை அறிவாளி தன்னைக் குறைகூறிக் கொள்வான். அறிவு முற்றியவன் தன்னையும் குறைகூறான், பிறரையும் குறை கூறான்.
-ஹெர்டர்
தங்கள் அபிப்பிராயத்தை ஒரு பொழுதும் மாற்றிக்கொள்ளாதவர் மூடரும் இறந்தவருமே.
-லவல்
போக்கிரி என்பவன் தலையைச்சுற்றி மூக்கைத் தொடும் முட்டாள்.
-கோல்ரிட்ஜ்
தவறு-அதில் எவ்வளவு உண்மையுளதோ அவ்வளவு அது அபாயகரமானதாகும். -அமீல்
தன் திருப்தியை நாடாது, உலகத்தின் மதிப்பை நாடி, தன் விருப்பத்திற்கு மாறாகப் பொருளும் புகழும் தேடச் சிரமம் எடுத்துக்கொள்பவன் என் அபிப்பிராயத்தில் முழு மூடன் ஆவான்.
-கதே
பிறர் நம்மை அறிந்துகொள்ள முடியாதபடி நடந்து கொள்வது நம் வழக்கம். அதன் முடிவு யாதெனில் நாமே நம்மை அறிந்து கொள்ள முடியாதபடி நடக்கப் பயின்று விடுகிறோம் என்பதே.
- பிரெஞ்சுப் பழமொழி
மாந்தர் மூடராக வாழலாம், ஆனால் மூடராக இறக்க முடியாது. -யங்
★ ★ ★
16. மூட நம்பிக்கை
மூட நம்பிக்கை மனித அமைப்பிலேயே ஓர் அம்சம். அதை ஓட்டிவிட்டோம் என்று மனோராஜ்யம் செய்யும்பொழுது அது நம் மனத்தில் ஒரு மூலையில் பதுங்கியிருக்கும். தனக்கு அபாயம் வராது என்ற நிலைமையில் திடீரென்று வெளியேறும்.
-கதே
மூட நம்பிக்கை பயந்து பதுங்கும்; அதனிடம் அதர்ம நினைவே அதிகம்; கடவுளிடம் நம்பிக்கை கிடையாது துர்த் தேவதைகளை அஞ்சி நடுங்கும்.
- நியூமன்
★ ★ ★
17. கடமை
கடமையைச் செய்துவிட்டேன்; அதற்காகக் கடவுளைத் துதிக்கிறேன்.
-செல்ஸன்
உன் கடமையைச்செய்ய முயல்க; அப்பொழுது உன் தகுதியை உடனே அறிந்துகொள்வாய்.
-கதே
கடமையை நிறைவேற்ற அன்பு, தைரியம் என்று இரண்டு வழிக்காட்டிகள் உள. இரண்டும் ஒன்று கூடிவிட்டால் ஒருநாளும் வழி தவறுவதில்லை.
-அனடோல் பிரான்ஸ்
சாந்தம், குதூகலம்-இவையே அறங்களின் முன்னணியில் நிற்பன. இவையே பரிபூர்ணமான கடமைகள் ஆவன. -ஆர். எல். ஸ்டீவன்ஸன்
நல்லவனும் ஞானியும் சில சமயங்களில் உலகத்தைக் கோபிக்கலாம், சில சமயங்களில் அதற்காக வருந்தலாம். ஆனால் உலகில் தன் கடமையைச் செய்பவன் எவனும் அதனிடம் ஒருபொழுதும் அதிருப்தி கொள்வதில்லை என்பது மட்டும் நிச்சயம்.
-ஸதே
பிறர்க்கு நான் செய்ய வேண்டிய கடமை யாது? அவரை நல்லவராக்குவதா? நான் ஒருவனைத்தான் நல்லவனாக்க வேண்டும். அவன் நானே. பிறர்க்குச் சந்தோஷம் அளிப்பதே அவர்க்கு நான் செய்யக்கூடிய கடமையாகும்.
-ஆர்.எல். ஸ்டீவன்ஸன்
செய்ய இயலாததில் சினங்கொள்வது ஏன்? செய்ய இயன்றதைச் செய்வோமாக.
-ரொமெய்ன் ரோலண்டு
உலக அரங்கில், 'இன்ன வேஷதாரியாகத்தான் நடிப்போம்' என்று கூற இயலாது. கொடுத்தவேலையைத் திறம்படச்செய்து முடிப்பதே நமது கடன்.
-எபிக்டெட்டஸ்
செய்ய வேண்டியதைச் செய்ய முயல்க; முயன்றால் செய்யவேண்டியது இது என்பதில் சந்தேகம் ஏற்படாது.
-ஆவ்பரி
கெட்ட காலம் வந்தால் எப்படிச் சகிப்பது என்பது குறித்து, நல்ல காலத்தில் சிந்தனை செய்வது மாந்தர் கடன்.
-டெரன்ஸ்
இன்று உன்னால் கூடியமட்டும் நன்றாய்ச் செய், நாளை அதனினும் நன்றாய்ச் செய்யும் ஆற்றல் நீ பெறக் கூடும். -நியூட்டன்
அறமே ஆற்றல் என்று நம்புவோமாக. அந்த நம்பிக்கையுடன் நாம் அறிந்த கடமையை ஆற்றத் துணிவோமாக.
-ஆப்ரகாம் லிங்கன்
உன் கடமையைத் தைரியமாய்ச் செய்துவிட்டால் நீ அடையும் பலன் யாது? அதைச் செய்ததையே பலனாய் அடைவாய். செயலே பலனாகும்.
-ஸெனீக்கா
சுயநலத்திலுள்ள நன்மை யாது? மனிதர் கடமையைக் கடனாகவும், உரிமையை வரவாகவும் ஆக்கிவிட்டனர்; வியாபாரம் என்றும் வியாபாரமே!
கடனின்றி வாழ விரும்பினால் உரிமைகளைத் துறக்க வேண்டும்.
-பால் ரிச்சர்டு
ஒருபொழுதும் தவறு செய்யாதவன் ஒன்றும் செய்யமாட்டான்.
-ஆவ்பரி
ஒன்றும் செய்யாது காத்திருப்பவரும் ஊழியம் செய்பவரே
-மீல்டன்
உனக்குத் தெரிந்தவற்றை யெல்லாம் நன்றாக அனுஷ்டிக்க முயல்க. அங்ங்ணம் செய்தால் நீ அறிய விரும்பும் மறைபொருள்களை யெல்லாம் சரியான காலத்தில் தெரிந்து கொள்வாய்.
-செம்பிராண்ட்
தானே செய்யக்கூடியது எதையும் பிறர் செய்ய விடலாகாது. -இப்ஸன்
★ ★ ★
18. துறவு
இந்த உலகில் மூன்று விதத் துறவுகள்:- அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தால் சமயத்துறவு; அதிகாரத்துக்காக வெறுத்தால் போர்த்துறவு பணத்துக்காக வெறுத்தால் பணத்துறவு. இக்காலத்தில் காணப்படும் துறவு மூன்றாவதே.
-ரஸ்கின்
எனக்குத் துறவறத்தில் நம்பிக்கை இல்லை. ரோஜாச்செடியில் முட்களைப் போல் மலரும் அவசியமானதே. கடவுள் உடலை உண்டாக்கிய பொழுது அனாவசியமானது எதையும் அமைத்து விடவில்லை.
-பார்க்கர்
★ ★ ★
19. தனிமை
உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒருபொழுதும் தன்னித்தவராகார்.
-ஸ்ர்பிலிப் ஸிட்னி
கொள்கை உறுதியாயிருப்பின் தனிமையாயிருப்பது தனிமையாகாது.
-அனர்பாஷ்
தன்னந் தனியாய் நிற்பவனைவிட அதிகச் சக்தி வாய்ந்தவன் உலகில் கிடையாது. -இப்ஸன்
உயர்ந்த எண்ணங்களின் தோழமை உடையோர் ஒருநாளும் தனிமை காண்பதிலர். -பிலிப்
தனிமையாயிருக்கச் சக்தி இல்லாததினாலேயே சகல துன்பங்களும் விளைகின்றன.
-லா புரூயர்
தனிமையாய் வாழ ஏன் நாம் அஞ்ச வேண்டும்? நாம் தன்னந் தனியாய் இறக்கத்தானே சர்வேச்வரனுடைய திருவுள்ளம்?
-கெபிள்
தர்ம நெறி தவறியவரே தனியாயிருப்பவர்.
-டைடெரெட்
எந்தக் காலத்திலும் அறிஞர்கள் ஏழைகளினும் அதிகமான எளிய வாழ்க்கையே வாழ்ந்துளர்.
-தோரோ
உலகத்தில் வெகு சிலரே தனியாக வாழத் தகுதியுடையவர். அவர்களுக்கு உலகத்தின் மாயையை அறியப் போதுமான லெளகிக ஞானமும், சகல மாயையையும் வெறுத்துத் தள்ளப்போதுமான அறவொழுக்கமும் இருக்கவேண்டும்.
-கெளலி
★ ★ ★
20. சான்றோர்
பிறர்க்கு இன்பம் அளிப்போரே பாக்கியவான்கள். பிறரிடம் சச்சரவை நீக்கி சாந்தியை விளைவிப்போரே பாக்கியவான்கள்.
-பீச்சர்
இவர் அனைத்தையும் தியாகம் செய்தார்; அவ்வளவு அதிகமாக அதைச் செய்தார்; அதிகமாக மன்னிக்கவும் இரங்கவும் செய்தார். யாரையும் துவேசித்ததில்லை. -மாஜினி கல்லறைமீது
சால்பின் சாரம் அறத்தைச் செய்வதற்கு அறமாகிய காரணமே போதும் என்பதே.
-எமர்ஸன்
சான்றோர் என்பவர் குறைகளை அறியாதவர் அல்லர்; குறைகள் இருந்தும் அவைகளைத் திருத்திக் குணங்களை உண்டாக்கிக் கொண்டவரே சான்றோர் ஆவர்.
- ஷேக்ஸ்பியர்
எனக்குத் தெரிந்தவற்றில் சிறந்ததையும் என்னால் செய்யக் கூடியதில் தலைசிறந்ததையுமே செய்கின்றேன். இறுதிவரை அப்படியே செய்துகொண்டிருப்பேன். இறுதியில் நான் செய்தது நியாயமாகுமானால் இப்பொழுது எனக்கு விரோதமாகச் சொல்வதெல்லாம் எள்ளளவும் நிற்காது போகும். இறுதியில் நான் செய்தது தவறாய் முடியுமானால் இவர் செய்தாலும் தவறு சரி ஆய்விடாது.
-லிங்கன்
பணம் படிப்பு பதவி முதலியவைகளில் பிறரைப்போல் இருப்பதே சுகம் என்று எண்ணுகிறோம். ஆனால் கடவுளோ துன்பத்தையும் தோல்வியையும் தந்து நமக்கு உயர்ந்த அன்பையும் உண்மையையும் அறிவித்துச் சான்றோனாக்க முயல்கிறார்.
-எமர்ஸன்
சான்றோர் சரிதையை அரை குறையாகவே கற்றாலும் அதனால் நன்மை அடையாமல் இருக்க முடியாது.
-கார்லைல்
பெரியோர் எப்பொழுதும் வானிலிருந்து இறங்கும் மின்னலே ஆவர்; மக்கள் எல்லோரும் அவர் வருகைக்காகக் காத்திருப்பர், வந்ததும் அவர்களும் ஜோதியாவர். -கார்லைல்
உயர்ந்த விஷயங்களை எளிய முறையில் கூறுவதே சால்பின் லட்சணம்.
-எமர்ஸன்
சங்கடங்களே சான்றோரை நீட்டி அளக்கும் கோல்.
-பர்க்
பேருண்மைகள் எளியன. அதுபோல் பெரியோரும் எளியர்.
சான்றோர் கெட்டாலும் சால்பு அழியாது.
-லாங்பெல்லோ
தமது உயர்வை அறியாதவரே சான்றோர்.
-கார்லைல்
உன்னத லட்சியம் உடைமையும் அதற்காகவே உயிர் வாழ்வதுமே சால்பின் லட்சணம். -ஜார்ஜ் லாங்
★ ★ ★
21. கருணை
கருணையானது பிழியப்படுவதன்று. மழைபோல் பொழிவதாகும். அது அளிப்போனையும் பெறுவோனையும் ஆசிர்வதிக்கும். அதுவே ஆற்றல்களில் தலைசிறந்த ஆற்றல். அதுவே கடவுளின் இலட்சணம். நீதியின் கடுமையைத் தணிக்கும் கருணையுடன் கூடிய மனித சக்தியே கடவுள் சக்தியை ஒக்கும்.
-ஷேக்ஸ்பியர்
கருணை காட்டுபவன் எப்போதும் வெற்றி காண்பான். - ஷெரிடன்
தீயோர் கருணையையும், பேராசைக்காரர் வண்மையையும், கர்விகள் பணிவையும் விரும்புவர் - பிறரிடத்தில்.
-கோல்டன்
கடவுளின் பிரதம லட்சணம் கருணையே.
-பிளச்சர்
கோழைகள் குரூரமாய் நடப்பர் வீரர்கள் கருணை உடையவர்.
-ஜான்கே
இனிய கருணையே பெருந்தன்மையின் அடையாளமாகும்.
-ஷேக்ஸ்பியர்
★ ★ ★
22. வணக்கம்
உயர்ந்ததினிடம் உண்டாகும் பக்தியிலும் உயர்ந்த உணர்ச்சி கிடையாது.
-கார்லைல்
வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம்.
-கோல்ரிட்ஜ்
மக்கள் அனைவரும் பக்தர்களே. சிலர் புகழையும் பலர் பெரும்பாலோர் சுகத்தையும் வணங்குவர்.
- கிரீஷியன்
அன்பும் நம்பிக்கையும் உடையவரே ஆண்டவனை வணங்குபவர்.
-அகஸ்டைன் ஞானி
★ ★ ★
23. குற்றம் காணல்
தன்னைக் காண்பதுவே மிகக் கடினமான காரியம். பிறர் செயல்களில் குற்றம் காண்பதுவே மிக எளிதான காரியம்.
-தேல்ஸ்
தீயோர் தம் குற்றங்களைத் தாமே மன்னித்து விடுவர்; நல்லோர் இனிமேல் அத்தகைய குற்றங்கள் செய்யாதிருப்பர்; முதற் குற்றத்தைச் சரியென்று சாதிப்பவன் மூன்றாவது குற்றம் செய்தவனாகின்றான்.
-பென் ஜாண்ஸன்
பிறர் குற்றம் காண்பதும் தன் குற்றம் மறப்பதுமே மடைமையின் விசேஷ லட்சணம்.
-ஸிஸரோ
பிறர் குற்றங்களை நம் கண் முன் வைத்துக் கொள்கிறோம். நம் குற்றங்களை நம் பின்புறம் வைத்துக் கொள்கிறோம்.
-ஸெனிக்கா
ஒருவனிடம் குறைகாண்பது கடவுளிடம் குறை காண்டதாகும். கடவுள் அவனிடம் விளங்க விரும்பாத பொழுது நாம் ஏன் மனிதனைக் குறை கூற வேண்டும்?
-பால் ரிச்சர்ட்
நாம் பிறரிடம் கண்டு பரிகாசம் செய்யுங் குற்றங்கள் நமக்குள் நம்மையே பரிகாசம் செய்யும்.
-ப்ரெளண்
எல்லா விஷயங்களிலும் நல்ல அம்சத்தைக் காணவே எப்பொழுதும் முயல்க. அநேகமாக ஒவ்வொரு விஷயத்திலும் நல்ல அம்சம் உண்டு.
-ஆவ்பரி
பிறர் குற்றம் கூறினால் அதை எதிர்க்கவும் முடியாது. காப்பாற்றிக் கொள்ளவும் முடியாது. அதை அலட்சியம் செய்ய முடியும். அப்படிச் செய்தால் அது தானாக வந்து அடிபணிந்து விடும். -கதே
யாரேனும் குறை கூறினால் அது உண்மையாயின் திருந்திக்கொள். பொய்யாயின் நகைத்துவிடு.
-எபிக்டெட்டஸ்
அனாமதேயமாய்ப் பிறரைப் பழிப்பவன் ஒருவரும் அறியாத தன் சொந்தப் பெயரை ஒவ்வொருவரும் சூட்டும் 'கோழை' என்னும் பெயராய் மாற்றிக் கொள்கிறான்.
-பெடிட்-லென்
ஏளனம் என்பது சிறியோர் இதயத்தில் எழுகின்ற நச்சுப்புகையாகும்.
-டெனிஸன்
குறை கூறுவது பிறர் மூலம் நம்மைச் சிறுமை என்பது செய்து கொள்வதேயாகும். -பால்ரிச்சர்ட்
உரோமம் ஒன்றாகயிருந்தாலும் அதற்கும் நிழல் உண்டு.
-பப்ளியஸ் ஸைரஸ்
உபகாரத்தைவிட அனுதாபமே அதிக உதவி செய்வதாகும்.
-ஆவ்பரி
என்னைப்ப்ற்றி அவதூறு பேசுபவன் என்னுடைய சிறந்த நண்பன். ஏனெனில் அவன் என்னைக் கீழானவனிடமிருந்து விலகச் செய்யும் சல்லடையை ஒப்பான்.
-பால் ரிச்சர்ட்
கண்ணாடி வீட்டில் வாழ்பவர் கற்களை எறியக் கூடாது. -ஆங்கிலப் பழமொழி
ஒரு குற்றம் செய்து விட்டு அதை மறைக்கப் பொய் கூறுகிறவன் குற்றங்கள் ஒன்றுக்கு இரண்டு செய்தவனாகி விடுகிறான்.
-வாட்ஸ்
குழந்தைகள் கற்கும்பொழுது கடினமான மொழிகளைக் கவனியாமல் கடந்து செல்வதுபோல் சிலர் தம்முடைய குறைகளைக் கவனியாதிருந்து விடுகின்றனர்.
-லெய்ட்டன்
சில தோஷங்கள் குணங்களுடன் உறவுகொண்டவை; அதனால் மறத்தைக் களையும் பொழுது அறத்தையும் அழிக்க நேரிட்டு விடலாம்.
-கோல்ட்ஸ்மித்
குறைகளைக் கண்டு மகிழ்ந்தால் குணங்களைக் கண்டு பெறும் நன்மையை இழந்து விடுவோம்.
-லா புரூயர்
தான் பரிகசிப்பதைத் திரித்துக் கூறுபவன் தான் திரித்துக் கூறுவதைப் பரிகசிப்பதில்லை.
-ஹாட்ஜஸன்
பொய்யும் சூதும் முளையாத தேசமில்லை. அவற்றிற்கு எந்த சீதோஷ்ண ஸ்திதியும் ஆகும்.
- அடிஸன்
குறை காண்போர் அநேக சமயங்களில் புழுக்களைக் களையும் பொழுது பூக்களையும் களைந்து விடுகின்றனர்.
- ரிக்டர்
★ ★ ★
24.வஞ்சகம்
மனிதர் பிறப்பது மெய்யராக, ஆனால் இறப்பதோ வஞ்சகராகவே.
-வாவனால்கூஸ்
அற உடை அணிந்த மறத்தைப்போல அபாயகரமான்து கிடையாது.
-பப்ளியஸ் ஸைரஸ்
நயனம் ஒன்று சொல்ல நாவொன்று சொல்லின், விஷயம் அறிந்தவன் நயன மொழிகளையே நம்புவான்.
-எமர்ஸன்
சூதிற்கும் அறிவிற்குமுள்ள வேறுபாடு குரங்கிற்கும் மனிதனுக்குமுள்ள வேறுபாடு போலாகும்.
- பென்
வஞ்சக நடை என்பது மறம் அறத்திற்குச் செய்யும் மரியாதையே யாகும்.
-ரோஷிவக்கல்டு
நம்மிட முள்ளதாக நாம் பாசாங்கு செய்யும் குணங்களைப் போல், நம்மிடம் உண்மையாகவேயுள்ள குணங்கள் ஒரு பொழுதும் நம்மை நகைப்பிற் கிடமாக்குவதில்லை.
-ரோஷிவக்கல்டு
உலகில் யாரும் அறியாதபடி உலவும் தீமை வஞ்சக நடை ஒன்றே. அதை ஆண்டவன் மட்டுமே அறிவான்.
-மில்ட்டன்
வேஷம் போட்டு வெகு காலத்துக்கு ஏமாற்ற முடியாது. உண்மை இல்லாத இடத்தில் இயற்கை தலை காட்ட முயன்று கொண்டிருக்கும். என்றேனும் ஒருநாள் வெளிப்படுத்தியே விடும்.
-பிஷப் ஹால்
எல்லோரிலும் யாரை எளிதாக ஏமாற்ற முடியும்? தன்னைத்தான். -புல்வெல் லிட்டன்
உயர்ந்தோர் தோஷங்களாலேயே உருப்பெற்றவர் என்பர்.
-ஷேக்ஸ்பியர்
ஏமாற்றிப் பழக ஆரம்பிக்கும்பொழுது எவ்வளவு தூரம் நம்பக்கூடிய பொய்களைச் சொல்லத் தெரியாமல் திண்டாடுகிறோம்!
-ஸ்காட்
தீயொழுக்கம் நல்லொழுக்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு நாம் அறியாமலே நம்மிடம் குடி புகுந்துவிடும்.
-ஸெனீக்கா
என்ன அழகான பழம்-இதனுள்ளே அழுகல்-பொய் எவ்வளவு அழகாய் வேஷம் போட்டுக் கொள்கிறது
-ஷேக்ஸ்பியர்
வஞ்சக நடையுள்ளவன் இயற்கையான அயோக்கியத் தனம், செயற்கையான ஏமாற்றுக்குணம் ஆகிய இரண்டு சரக்குகளைக் கொண்டு செய்து தங்க நிறம் கொடுத்த மாத்திரை யாவான்.
-ஓவர்பரி
★ ★ ★
25. பழி வாங்குதல்
பழிவாங்குதல் ஆரம்பத்தில் இனிக்கும். ஆனால், சிறிது போதில் கசப்பாக மாறிவிடும். அது எய்தவனையே திரும்பிவந்து கொல்லும் அம்பாகும்.
-மில்டன்
ஒருவன் கேடு சூழ்ந்தால் அதைப் பொறுப்பதினும் பழிவாங்குதலே அதிகக் கஷ்டமான காரியம். -பிஷப் வில்ஸன்
பழிவாங்குதல் என்னும் கடனைத் தீர்ப்பதில் அயோக்கியர்கள் யோக்கியர்களாயுமிருப்பார்கள், காலமும் தவறமாட்டார்கள்.
-கோல்ட்டன்
பழிவாங்குவதில் கருத்துள்ளவன் பிறர் தந்த புண்ணை ஆறவிடுவதில்லை.
-பேக்கன்
பழிவாங்குதல் என்பது மனிதப் பண்புக்கு விரோத மானதோர் மொழியாகும்.
- ஸெனீக்கா
பழி வாங்குதல் என்பது அற்பர்கள் அற்ப ஆனந்தம் காணும் செயலே யாகும். -ஜூவெனல்
பிறர் செய்த தீங்கைக் கொல்வதற்குள்ள ஆற்றல் பழி வாங்குதலுக்குள்ளதைவிட அலட்சியத்துக்கே அதிகம்.
- பெல்தாம்
பழிவாங்கேன், அது எதிரிக்குச் செய்ய வேண்டிய கடமையாகும். மறவேன், அது எனக்குச் செய்யவேண்டிய கடமையாகும்.
-கோல்ட்டன்
பழி கூறாவண்ணம் வாழ்தலே தலைசிறந்த பழி வாங்குதலாகும்.
-ஹெர்பர்ட்
பழி வாங்கினால் எதிரிக்கு நிகராவோம். அலட்சியம் செய்தால் எதிரியைவிட உயர்ந்தவராவோம்.
-தாமஸ் புல்லர்
26. அனுதாபம்
எதை நான் இதய பூர்வமாக நம்புகிறேனே. அதையே வேறொரு ஆன்மாவும் நம்புமேல் அப்பொழுது நம்பிக்கை அளவு கடந்து ஆற்றல் பெறும்.
- நொவாலிஸ்
எவ்வளவு தாழ்ந்தோருடைய அன்பு கிடைத்தாலும் போதும். எந்தக்காலத்திலும் மனிதன் அன்பின்றி மட்டும் வாழ முடியாது.
-ரொமெய்ன் ரோலண்டு
அருட்கண்ணீர் தோய்ந்த முகத்தினும் உண்மை காட்டும் முகம் கிடையாது. கண்ணிர்விட்டு வருந்துவதைக் கண்டு மகிழ்வதினும் கண்ணிர்விட்டு இரங்குவது எத்துணைச் சிறப்பாகும்!
-ஷேக்ஸ்பியர்
அன்பால் விடுதலை பெறுபவன் அதிர்ஷ்டசாலி. அதன்பின் அவனுக்குப் பாபமுமில்லை, பாடுமில்லை.
-கார்ப்பெண்டர்
மனிதன் அடையக் கூடிய உயர்ந்த பொருள் அறிவன்று, அறிவுடன் கூடிய அனுதாபமேயாகும்.
-தோரோ
முகமது நபியின் அழகிற் சிறந்த இரண்டாம் மனைவி அயேஷா ஒருநாள் 'முதல் மனைவி கதீஜாவிடமுள்ளதை விட என்னிடந்தானே தங்கட்கு அதிகப் பிரியம்?' என்று கேட்டபொழுது அவர் 'இல்லை இல்லை அல்லா சாட்சியாக இல்லை. என்னைப் பிறர் நம்பாத காலத்தில் ஆதியில் அவள்தான் நம்பினாள். அப்பொழுது அவள் ஒருத்தியே என் நண்பர்” என்று பதிலுரைத்தார்.
-கார்லைல்
அனுதாபம் காட்டுமளவே அறநெறியில் முன்னேறுவதாகக் கூற முடியும். -ஜார்ஜ் எலியட்
துன்புறுவோர் அனைவரும் சகோதரர். துன்பம் துடைப்போனும் சகோதரனே. அவன் ஒருவன் கிடைத்து விட்டால் அந்த இன்பத்துக்கு இணையேது?
-பர்ன்ஸ்
பிறரிடம் துக்கத்தைச் சொன்னால் அவர் அதைக் கேட்டு இறுதியில் பெருமூச்சு விடுவரேல் அப்பொழுது துக்கம் ஆறும் என்பதில் ஐயமில்லை.
-டானியல்
அனுதாபத்தோடு பார்த்தால் தெளிவு ஏற்படாமல் போனாலும் போகலாம். அனுதாபம் இல்லாவிட்டாலோ ஒன்றுமே தெரியாமல் போய்விடும்.
-இஸிடோர்
★ ★ ★
27. கொள்கை நம்பிக்கை
கொள்கையில் பரிபூரணமான நம்பிக்கை வேண்டியது தான். ஆனால் அது குருட்டுத்தனமானதாய் இருந்து விடக்கூடாது.
-ஆவ்பரி
காதால் உபதேசம் கேட்பினும் கருத்தில் நம்பிக்கை உண்டாகாவிடில் கடுகளவு நன்மையும் ஏற்படாது.
-கதே
ஒருவன் அநேக விஷயங்களில் வைதீகமாயிருக்க வேண்டும். இல்லையெனில் அவனுக்குத் தன் சொந்த அவைதீகக் கொள்கையைப் போதிக்க ஒருபொழுதும் நேரமிராது.
-செஸ்டர்டன்
(Upload an image to replace this placeholder.)
நாம் அரைகுறையாக அறிவதையே அதிக உறுதியாக நம்பிவிடுகிறோம். -மான்டெய்ன்
உண்மையைக் காண அறிவை அழக்கச் சொல்லுதல் பகலொளியைக் காணக் கண்களை அவித்துக் கொள்ளச் சொல்லுதல் போலாம். அறிவை அழிக்கச் சொல்வது சமயத்தின் சூழ்ச்சி அன்று, மூட நம்பிக்கையினதே.
- தாமஸ் வில்ஸன்
சரியான நம்பிக்கை இகத்திலிருந்து பரத்துக்குப் பாலம் அமைக்கும்.
- யங்
சமயவெறி கொண்டார். கொள்கை முறைகள் குறித்துச் சண்டையிடட்டும். வாழ்வைச் சரியாக நடத்தினால் கொள்கை தவறாய்விட முடியாது.
-போப்
கொள்கையைக் கூறுவதில் காணப்படும் நம்பிக்கையைவிட அதிகமான நம்பிக்கை, கொள்கையைக் குறித்து சந்தேகம் கூறுவதில் காணப்படும்.
-டெனிஸன்
பிடிவாதமான மூட நம்பிக்கை தனக்குப் பிரியமான ஒரு பொய்யை மணந்துகொண்டால் அதை விட்டுப் பிரியாமல் இறுதிவரை அணைத்துக்கொள்ளும்.
-மூர்
★ ★ ★
28. வாழ்க்கைக்கு நம்பிக்கை
ரோஜா மலரும்போதே அழகு மிகுந்திருக்கும்; அச்சம் அகலும்போது அரும்பும் நம்பிக்கையே அதிக உள்சானம் அளிப்பதாகும்.
- ஸ்காட்
மனிதனை அழிக்கக்கூடிய ஒரே விஷயம் அழிவில் நம்பிக்கை வைப்பதே. - மார்ட்டின் பூபெர்
நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை தவிர நலிவோர்க்கு வேறு மருந்து கிடையாது. -ஷேக்ஸ்பியர்
காருக்குப்பின் வேனில், இரவுக்குப் பின் பகல்; புயலுக்குப் பின் அமைதி.
-அக்கம்பிஸ்
நம்பிக்கையே மனிதனுக்கு நேரும் சகல நோய்களுக்கும் ஒரே மலிவான சஞ்சீவி.
- கெளலி
இரவில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அநேக சமயங்களில் காலையில் எல்லாம் சரிப்பட்டுப்போகும்.
-ஆவ்பரி
நம்பிக்கையே துக்கத்தால் ஏற்பட்ட கறையைப் போக்கும்.
-மூர்
எல்லாமொழிகளிலும் அதிக துக்ககரமானவை- அப்படிச் செய்திருந்தால்'- என்னும் மொழிகளே.
-விட்டியர்
ஆகாயத்தில் கட்டும் அரண்மனைகளை அழியாது வைத்திருக்க அதிகமான பொருள் தேவை
-புல்வெர் லிட்டன்
நம்பிக்கை என்பது விழித்திருக்கும் நிலைமையில் காணும் கனவு.
-பிளினி
நம்பிக்கை என்பது ஒருநாளும் இதயத்திலிருந்து அழிந்து போவதில்லை. மனிதன் என்றும் ஆசீர்வதிக்கப்பட வேண்டியவனே யன்றி ஆசீர்வாதம் தருபவனல்லன்.
-போப்
நம்பிக்கை நடத்தும் விருந்துக்குச் செல்ல விரும்பாதவர் கிடையார்.
-காஸ்காயின்
நம்பிக்கை எதிர் காலத்துக்கு ஒளி தரும்; ஞாபகம் இறந்தகாலத்துக்கு முலாம் பூசும்.
-மூர்
நம்பிக்கை என்பது அதிர்ஷ்ட தேவதை நடத்தும் ஏமாற்று லாட்டரியாகும். அதில் நூற்றுக்கு ஒருவர்க்கே பரிசு உண்டு.
-கெளலி
உயிருள்ளவரை நம்பிக்கையும் இருந்துகொண்டிருக்கும்.
-கே
சாத்தியம் என்று நம்புவோர்க்கே எதுவும் சாத்தியமாகும்.
-வெரிஜில்
★ ★ ★
29. நன்றியறிதல்
நன்மை செய்தவர்க்கு நன்மை செய்யாதிருப்பது மனித குணத்திற்கு விரோதம். நன்மை செய்தவர்க்குத் தீமை செய்வது பேய்க் குணமாகும்.
-ஸெனீக்கா
செய்நன்றி செலுத்த அதிகமாய் ஆத்திரப்படுவதும் செய்நன்றியைக் கொலை செய்வதில் ஒருவகையாகும்.
-ரோஷிவக்கல்டு
நன்றி செய்தாயா-அதைப்பற்றிப் பேசற்க. நன்றி பெற்றாயா- அதைப்பற்றிப் பேசுக. -ஸெனீக்கா
பெற்ற நன்றியை மறப்பவனும், பிறரிடம் மறைப்பவனும், கைம்மாறு செய்யாதவனும் செய்நன்றி கொல்லும் பாதகர்கள் இவர்களில் பெரிய பாதகன் நன்றியை மறப்பவன்.
- ஸிஸரோ
நன்றியறியாமையில் சகல இழிதகைமைகளும் அடங்கும். இதர துர்க் குணங்களோடன்றி அது ஒரு பொழுதும் தனியாகக் காணப்படுவதுமில்லை.
- புல்லர்
நன்றியறியாமை ஒருவித பலவீனமே. பல முடையவர் நன்றியறியாதிருக்க நான் பார்த்ததில்லை.
- கதே
நன்றியறிதலைப் போன்ற இன்பகரமான மனோதர்மம் வேறொன்றுமில்லை. இதர அறங்களை அனுஷ்டிப்பதில் கஷ்டம் உண்டு. இதிலோ அணுவளவு கஷ்டமும் கிடையாது.
-அடிஸன்
நண்பர்களின் உதவியை நாம் மிகைப்படுத்திக் கூறுவதற்குக் காரணம் நம்முடைய நன்றியறிவுடைமையன்று. நம்முடைய தகுதியைப் பிறர்க்கு அறிவிக்க வேண்டுமென்ற ஆசையேயாகும்.
-ரோஷிவக்கல்டு
நன்றியறிதல் அறங்களில் குறைந்தது. நன்றியறியாமை மறங்களில் கொடியது. -பழமொழி
சரியாய் மெச்சக் கற்றுக்கொள். வாழ்வின் பேரின்பம் அதுவே. பெரியோர் மெச்சுபவைகளைக்கவனி; அவர்கள் பெரிய விஷயங்களையே மெச்சுவர் தாழ்ந்தோரே இழிவான விஷயங்களை மெச்சவும் வணங்கவும் செய்வர்.
-தாக்கரே
வீசு, குளிர்காற்றே! வீசு. மனிதனுடைய நன்றியறியாமைப் போல நீ அவ்வளவு அன்பற்றவன் அல்ல; உன் மூச்சு சீறினாலும் உன் பற்கள் கூரியதாயில்லை.
-ஷேக்ஸ்பியர்
நன்றியறிதல் என்பது அதிக கவனமாய் உண்டாக்க வேண்டிய பயிராகும். அதைக் கீழோரிடைக் காண முடியாது.
-ஜான்சன்
★ ★ ★
30. இனிய சொல்
இன்சொல் வழங்குவதால் நாக்கு காயமுறுவதில்லை.
-ஹேவுட்
இன்சொற்களின் விலை அற்பம், ஆனால் அதன் மதிப்போ அதிகம்.
-ஹெர்பர்ட்
பானை கீறலா அன்றா? ஒலியால் அறியலாம். அறிவாளியா, அறிவிலியா? பேச்சால் அறியலாம்,
-டெமாஸ்தனீஸ்
ரூபன்ஸ் என்னும் ஓவியன் ஒரு கோடு கிழித்தால் போதும், அழும்முகம் நகைமுகம் ஆகிவிடும். அதுபோல் நாமும் செய்ய முடியும், நமக்கு ஒரு மொழி போதும்.
-ஆவ்பரி
ஜனங்கள் இறந்தோரைப் பேசுவது போலவே இருப்போரையும் பேசுவார்களானால் எவ்வளவு நன்மையாய் இருக்கும்? -ஆவ்பரி
மொழிகள் மண்ணுலகின் புத்திரிகள்; செயல்கள் விண்ணுலகின் புத்திரர்கள்.
- ஜாண்சன்
எண்ணங்களுக்கு மொழிகள் எப்படியோ அப்படியே நற்குணத்துக்கு உபசாரம்.
- ஜூபர்ட்
இருட்டறையில் மின்மினி வந்தால் எப்படி அறையில் இருளை மறந்து பூச்சியின் அழகைப் பருகுகிறோமோ, அப்படியே நமக்குத் துன்பம் வந்த சமயம் யாரேனும் இனிய மொழி பகர்ந்தால் நம் துன்பங்களை மறந்து அந்த மொழியின் இனிமையை உணர்கின்றோம்.
-ஆர்தர் ஹெல்ப்ஸ்
★ ★ ★
31. சொல்
சூரிய கிரணங்கள் போன்றவையே சொற்கள்; அதிகமாக ஒருமுகப்பட்டால் அக்கினியாய்ச் சுடும்.
-ஸதே
நன்றாய்ப் பேசும் ஆற்றல் இன்மையும், நாவை அடக்கும் ஆற்றல் இன்மையும் பெரிய துர் அதிர்ஷ்டங்களாகும்
-லா புரூயர்
சபையில் பேசாத காரணம் என்ன? முட்டாளாய் இருப்பதா, மொழிகள் கிடைக்கவில்லையா? -முட்டாள் ஒருநாளும் நாவை அடக்க முடியாது.
-டிமாரட்டஸ்
பேச வேண்டிய காலம் அறியாதவன் பேச வேண்டாத காலமும் அறியான். -பப்ளியஸ் ஸைரஸ்
மனிதனுக்கு மட்டுமே பேசும்சக்தி உளது; அதன் முதல் உபயோகமும் இறுதி உபயோகமும் கேள்விகள் கேட்பதே.
-அர்னால்ட் பென்னட்
இந்த வாக்கியத்தின் பின்னால் ஒரு மனிதன் உள்ளனரா. இல்லையா? இது ஒரு ஆன்மாவைப் பிரதிபலிக்கின்றதா, இல்லையா? இதைப் பொறுத்ததே அதன் ஆற்றல்.
-எமர்ஸன்
மொழிகள் இலைகளை ஒக்கும்; தழை நிறைந்த மரத்தில் சத்துள்ள பழங்கள் இரா.
-போப்
நன் மொழி கூறலும், ஒருவித நற்செயலே ஆயினும் மொழிகள் செயல்கள் ஆகா.
-ஷேக்ஸ்பியர்
மொழிகள் என்பவை அறிவு உபயோகிக்கும் நாணயங்களே யாகும். சர்க்காரிடம் பொருளில்லை யெனில் நாணயங்கள் செலாவணியாகா, அதுபோல் பொருளில்லாத மொழிகளும் பயன்படா.
-கோல்ட்டன்
மொழிகள் சாதனமேயன்றி லட்சியமன்று. கருத்தைக் கூறுவதே நம் நோக்கம். அதற்குரிய ஆயுதமே பாஷை,
-ரெய்னால்ட்ஸ்
நாவன்மை என்பது ஆன்மாவின் இடையீடில்லாத இயக்கமே யாகும். அலங்காரமாய்ப் பேசுவோர் நாவலர் அல்லர். பல சொல் அடுக்கிப் பாமரரை மயக்கப் பழக்கப் படுத்தப்பட்ட நாவினரேயாவர்.
-ஸிஸரோ
கருத்து பழையதாயுமிருக்கலாம். பலர் கூறியதாயுமிருக்கலாம். ஆயினும் அது உயர்ந்த முறையில் அழகாய்க் கூறுபவனுக்கே உரியதாகும். - லவெல்
நமக்கு ஆண்டவன் நா அளித்திருப்பது இன்சொல் இயம்புவதற்கே.
- ஹீன்
சிலேடை உபயோகிப்பவர் இருப்புப் பாதையில் கற்களை வைத்து மகிழும் விஷமச் சிறுவர்களை ஒப்பர்.
- ஹோம்ஸ்
வீண்சொற்கள் விஷயங்களை வியர்ந்த மாக்குகின்றன.
-பிஷப் ஆண்ட்ரூஸ்
★ ★ ★
32. உரையாடல்
மனித வாழ்வில் கிடைக்கக்கூடிய மகத்தான இன்பங்களில் நல்ல சம்பாஷணையும் ஒன்று. இன்பகரமாய்க் கழிந்த மாலைநேரத்தை வர்ணிக்கப் புகுந்த ஜாண்ஸன் இன்று நன்கு சம்பாஷித்தோம்” என்று கூறி முடித்தார்.
-ஆவ்பரி
பிறரைப் பேசவிடாமல் பேசிக்கொண்டிருப்பவர் தம் குரல் தொனியைக் கேட்க விரும்புபவர், தம் குரல் தொனி இப்படியிருக்கும் என்று அறியாதவர் என இருவகையர்.
-செஸ்டர்ட்டன்
சுமுகமாயிருத்தல் என்பது விலையின்றிக் கிடைக்கும். ஆனால் அதைக்கொண்டு அனைத்தையும் வாங்க முடியும்.
-பிராங்க்ளின்
அறிவைவிட அந்தரங்க விசுவாசமே சம்பாஷணையை அதிகச் சோபிதமாக்கும். -ரோஷிவக்கல்டு
யாரேனும் தவறாகப் பேசினால் கண்டிக்க வசதியுண்டேல் உடனே கண்டித்துவிடு. கண்டிக்க வசதியின்றேல் பார்வையாலும் மெளனத்தாலும் அதிருப்தியைத் தெரிவித்துவிடு.
- எபிக்டெட்டஸ்
பிறர் மனம் புண்ணாகாமல் பேசுவது அவசியமாவது போலவே பிறர் பேச இடங்கொடுத்து மரியாதையாகச் செவிசாய்ப்பதும் அவசியமாகும்.
- ஹெச்.ஏ.
சாமர்த்தியத்தை விடத் தன்னம்பிக்கையே சம்பாஷணையில் ஜெயம் தரும்.
-ரோஷிவக்கல்டு
எவர் பேசுவதையும் கேட்டுக்கொள்; ஆனால் சிலரிடமே பேச்சுக்கொடு. எவர் கஷ்டத்தையும் தெரிந்து கொள்; ஆனால் உன் கருத்தைக் கூறிவிடாதே.
-ஷேக்ஸ்பியர்
★ ★ ★
33. நா அடக்கம்
பேசாத மொழி உறையிலுள்ள வாள். பேசிவிட்டால் வாளைப் பிறன் கையில் கொடுத்து விடுகிறாய்.
-குவார்ல்ஸ்
வாள் தரும் புண்ணினும் நா தரும் புண்ணே கொடியது. வாள் தரும் புண் உடலை மட்டுமே பாதிக்கும், நா தரும் புண்ணோ ஆன்மாவையும் பாதித்துவிடும்.
-பித்தகோரஸ்
இதயமே தீயனவற்றின் உற்பத்திசாலை, தீயனவற்றை விற்குமிடம் நா.
-லெய்ட்டன்
உபயோகிக்க உபயோகிக்க அதிகக் கூர்மை பெறும் ஆயுதம் தீய நா ஒன்றே. -இர்விங்
அறிவு பெற விரும்பினால் நாவை அடக்கும் அறிவைப் பெறுவாய்.
-லவாட்டர்
நாவைப் பரிசோதித்து வைத்தியர் உடல் நோயை அறிவர். அறிஞர் ஆன்ம நோயை அறிவர்.
-ஜஸ்ட்டின்
பிறர் நாவை தாம் அடக்கமுடியாது; ஆனால் பிறர் மொழிகளை நாம் அலட்சியம் செய்யமுடியும்.
-கேட்டோ
மூடனுக்கு 'மேளனமாயிரு' என்பதைவிட உயர்ந்த உபதேசம் கிடையாது. அதன் நன்மையை அறிந்து விட்டால் அவன் மூடனாயிரான்.
-ஸா அதி
மெளனம் என்பது மூடர்கள் பெற வேண்டிய அறிவு. அறிஞர் குணங்களில் ஒன்று. -பாய்லோ
சகல குணங்களிலும் மெளனம் சிறந்ததாகும். அதன் மூலம் பிறர் குறைகளை அறியவும் நம் குறைகளை மறைக்கவும் முடியும்.
-ஜீனோ
ஒருவனைச் சந்தித்தால் அவன் வாய் திறவாதிருந்தால் அவனை அறிவுமிகுந்தவன் என்று எண்ணுவேன். இரண்டாம் முறையும் பேசாதிருந்தால் ஜாக்கிரதை உடையவன் என்று கருதுவேன். ஆனால் மூன்றாம் முறையும் மெளனம் சாதித்தால் அறிவு சூன்யம் என்று சந்தேகிப்பேன்.
-கோல்ட்டன்
இரண்டு காதிருந்தும் ஒரு நாவே இருப்பதால் பேசுவதைவிடக் கேட்பதே அதிகமாயிருக்க வேண்டும்.
-பழமொழி
இன்சொல் கூறுதல் எளிதே. ஆனால் தீயசொல் கூறாதிருக்க மெளனம் ஒன்றே தேவை. அதற்கு விலையொன்றும் தரவேண்டியதில்லை. -டிலட்ஸன்
அறிவு,மெளனம் கற்பிக்கும்; அன்பு பேசக் கற்பிக்கும்.
-ரிக்டர்
முட்டாளின் உயர்ந்த ஞானம் மெளனம். அறிஞனின் பெரிய சோதனை பேச்சு. -குவார்ல்ஸ்
அறிவுள்ளவனே நாவைக் காக்கும் ஆற்றலுள்ளவன்.
-லுக்காஸ்
மொழியாத மொழி ஒருநாளும் தீங்கு செய்வதில்லை.
-காஸத்
காலமறிந்து மெளனமாயிருத்தல் கடினமான பாடமே. ஆனால், வாழ்வில் அறியவேண்டிய பாடங்களில் அதுவும் ஒன்றாகும்.
-செஸ்ட்டர்பீல்டு
மெளனமாய் இருக்க முடியாதவன் பேசுவது எப்படி என்பதை அறியான். செய்வது எப்படி என்பதையோ, அதை அறியவே மாட்டான்.
-லவாட்டர்
அறிஞர் சில மொழிகளில் பல கூறிவிடுவர். மூடர் பலமொழிகளில் சிலவே கூறுவர்.
-ரோஷிவக்கல்டு
விஷயமில்லாத பொழுது விஷயமில்லை என்பதை வெளிக் காட்டாதவன் பாக்கியவான்.
- ஜார்ஜ் எலியட்
எறும்பைப்போல் உபதேசிப்பவர் யாருமில்லை; ஆனால் எறும்போ பேசுவதே இல்லை.
-பிராங்க்ளின்
பயனில் சொல்லுக்குப் பொறுப்பாவதுபோல் பயனில் மெளனத்துக்கும் பொறுப்பாவோம்.
-பிராங்க்ளின்
நா தான் மனிதனிடமுள்ள நல்ல அம்சம் கெட்ட அம்சமும் அதுவேதான். அது நம் வசமானால் அதைவிட உயர்ந்த பொருளில்லை. நாம் அதன் வசமானால் அதைவிடத் தீய பொருளில்லை.
-அனார்காரிஸ்
பேச்சு பெரியதே. ஆனால் மெளனம் அதனினும் பெரியதாகும்.
-கார்லைல்
★ ★ ★
34. போற்றுதல்
நம்மை மெச்சுவாரையேயன்றி நாம் மெச்சுவாரை நாம் ஒருபொழுதும் நேசிப்பதில்லை.
-ரோஷிவக்கல்டு
பிறன் ஒருவனை அவன் விரும்பும் வண்ணம் மதித்தல் கடினமான காரியம்.
- வாவனார்கூஸ்
யாரையேனும் மதித்துத்தான் தீரவேண்டுமானால், அவர் பிழையின் சுமையைத் தாங்கும் விதத்தை வைத்து மதிக்க வேண்டுமேயன்றி, அவர் அச்சுமையை ஏற்படுத்திக்கொண்ட காரியத்தை வைத்து மதிக்கலாகாது.
-மார்லி
உன் தகுதி பிறர்க்குத் தெரிய வேண்டுமானால் பிறர் தகுதியை நீ அங்கீகாரம் செய்க. -பழமொழி
பிறருடைய உத்தமச் செயல்களை மனமுவந்து போற்றுதல் அவைகளை ஒரளவு நமக்கும் சொந்தமாக்கிக் கொள்வதாகும். -ரோஷிவக்கல்டு
★ ★ ★
35. மு.கஸ்துதி
அநேகமாகப் பிரமுகர்களைப் புகழ்வது அவர்களுடன் பழக்கம் உண்டு என்று காட்டிக் கொள்வதற்காகவே.
-லா புரூயர்
இல்லாத குணங்களைக் கூறி வேந்தர்களைப் புகழ்வது தண்டனைக்கு ஆளாகாமல் அவர்களைப் பழிக்கும் முறையாகும்.
-ரோஷிவக்கல்டு
மூடன் தனக்கே முகஸ்துதி செய்துகொள்வான். அறிஞனோ மூடனுக்கே முகஸ்துதி செய்வான்.
-புல்வெல்
அன்பு செய்ய முடியாவிட்டால் முகஸ்துதியேனும் செய்யக் கற்றுக் கொள். அதுவுமில்லையானால் அபஜெயம்தான்.
-கதே
ஐயனே அந்தப் பாழாய்ப்போன துதி மோகத்தை என் நெஞ்சிலிருந்து நீக்கிவிடும். -போப்
எவ்வளவுதான் மறைத்து வைத்தாலும் எல்லோருடைய நெஞ்சிலும் புகழ் ஆசை எப்பொழுதும் ஆட்சிசெய்து கொண்டேதான் இருக்கிறது.
- யங்
தங்கத்தால் வாங்க முடியாததைத் தருகிறேன். அதுதான் உண்மை கூறும் கவிஞனுடைய புகழுரை. -பர்ன்ஸ்
அநேகர் தம்மைப் பிறர் புகழவேண்டும் என்பதற்காகவே தம்மை இழிவாகக் கூறிக்கொள்கிறார்கள்.
-ரோஷிவக்கல்டு
அனைவரையும் ஒன்றுபோல் புகழ்வது யாரையும் புகழாதிருப்பதே யாகும்
-கே
சிறு பொறியேயாயினும் துருத்திகொண்டு ஊதினால் பெருநெருப்பாவதுபோல் சிறிய தீமை செய்தவனேயாயினும் முகஸ்துதி பெறப் பெற அதிகக் கொடியவன் ஆகிவிடுகின்றான்.
-ஷேக்ஸ்பியர்
ஆண்மகனை ஏதேனும் ஒருவித முகஸ்துதியால் மட்டும் வசப்படுத்தலாம். ஆனால் பெண்மகளையோ எந்த வித முகஸ்துதியாலும் வசப்படுத்திவிட முடியும்.
-செஸ்ட்டர்பீல்டு
முட்டாளை அறிஞன் என்றும், பொய்யனை யோக்கியன் என்றும் துதித்து விட்டால் அப்புறம் அவன் உன் அடிமையே ஆகிவிடுவான்.
-பீல்டிங்
முகஸ்துதியை முட்டாள்களின் உணவு என்று கூறுவர். ஆனால், அறிஞரும் சில சமயங்களில் அதில் சிறிது உண்பதுண்டு.
-ஸ்விப்ட்
முகஸ்துதி என்பது பரஸ்பரம் நடக்கும் ஒரு இழிதொழில். ஒருவரையொருவர் ஏமாற்ற விரும்பினாலும் ஒருவரும் ஏமாந்து போவதில்லை.
-கோல்ட்டன்
உண்மையான நண்பன் முகஸ்துதி செய்தால் அதைப் போன்ற அசம்பாவிதம் காண முடியாது. -போர்டு
குணங்களை முன்னால் கூறாமலும் குறைகளைப் புறத்தே கூறாமலும் இருந்து விட்டால் முகஸ்துதியும் அவதூறும் உலகில் இருக்கமாட்டா.
-பிஷப் ஹார்ன்
முகஸ்துதி என்னும் கள்ளநாணயம் தற்பெருமை இருப்பதாலேயே செலாவணியாகின்றது.
-ரோஷிவக்கல்டு
நாம் முகஸ்துதியை வெறுப்பதாகச் சில சமயங்களில் எண்ணிக் கொள்கிறோம். ஆனால், நாம் உண்மையில் வெறுப்பது நம்மைப் பிறர் முகஸ்துதி செய்யும் விதத்தையே.
-ரோஷிவக்கல்டு
புகழில் பேராசையுடைமை புகழுக்குத் தகுதியில்லை என்பதையே காட்டும்.
-ப்ளூட்டார்க்
தகுதியில்லாப் புகழுரை மாறுவேஷம் பூண்ட பழியேயாகும்.
- போப்
புகழுரையின் மதிப்பு அதை உரைப்போன் கையாளும் முறையைப் பொறுத்ததாகும். ஒருவன் கூறினால் புகழுரையாகத் தோன்றுவது மற்றொருவன் கூறும் பொழுது இகழுரையாகத் தோன்றும்.
-மாஸன்
இகழ்வதற்கு வேண்டிய அறிவைவிட அதிகமான அறிவு, சரியான முறையில் புகழ்வதற்கு வேண்டியதாகும்.
-டிலட்ஸன்
மனமுவந்து புகழாதவர் மட்டமான அறிவுடையவர் ஆவர்.
-வாவனார்கூஸ்
★ ★ ★
36. பழி
'இகழ்தல்' -அதனோடு விளையாடினால் ஆபத்து; அதனோடு வாழ்ந்தாலோ அழிவேதான்.
-கார்லைல்
நிந்தைமொழிகள் நெருப்புப் பொறிகளை ஒக்கும்; ஊதிவிடாவிட்டால் தாமாக அவிந்து போகும்.
-போயர்ஹீன்
எந்த ஆழ்ந்த புண்ணேனும், வடுவின்றி ஆறியதுண்டோ?
-பைரன்
தற்புகழ்ச்சி முடைநாறும் என்பர்; அப்படியானால் அவர்க்கு அனியாயமாய்க் கூறும் அவதூற்றின் நாற்றம் தெரியாது போலும்!
-கதே
'அவதூறு' சொல்லும் வண்டிக்கு மைபோட ஆள்பஞ்சம் உண்டாவதில்லை.
-ஊய்டா
உலகத்தில் ஒருபாதிக்கு அவதூறு சொல்லுவதில் ஆனந்தம் மற்றப் பாதிக்கு அதை நம்புவதில் ஆனந்தம்.
-பழமொழி
தன்னைப் பற்றிப் புறங்கூறுவது ஒவ்வொருவனுக்கும் தெரியுமானால், அதன்பின் உலகில் நான்கு நண்பர்களைக் கூடக் காண முடியாது.
- பாஸ்கல்
தெய்வமே பெண்ணாக வந்தாலும் அவதூறு என்னும் நாய் அவளைப் பார்த்துக் குரையாமல் இராது. -ஹோம்
அடுத்த வீட்டுக் காரனுடைய குறைகளை அம்பலப்படுத்த ஆசையாயுள்ள தினவுக்கு மருந்துமில்லை, மந்திரமுமில்லை.
-ஹார்வி
அவதூறு வாளினும் அதிகமான கூர்மையும், நாகத்தினும் அதிகமான விஷமும் உடையது. அது மூச்சு விட்டால் போதும், அரைக்கணத்தில் அகிலலோகமும் பரவிடும்.
-ஷேக்ஸ்பியர்
ஒரு மணி நேரம்கூட நாம் ஒருவர்க்கொருவர் அன்பாயிருக்க முடியவில்லை. சகோதரன் தவறு கண்டால் அதைப் பிறரிடம் ஊதுகிறோம், சாடை காட்டுகிறோம், நகைக்கிறோம், இளிக்கிறோம்-எவ்வளவுதான் நாம் நம் பெருமையைத் தூக்கி நிறுத்தினாலும் நாம் மனிதர்கள் ஒரு அற்பமான ஜாதியே.
-டெனிஸன்
★ ★ ★
37.சிரிப்பு
எதைக் குறித்து நாம் நகைக்கிறோமோ, அதைத் தவிர வேறெதுவும் நம்முடைய இயல்பைத் தெளிவாகக் காட்டமுடியாது.
-கதே
அதிகமான சிரிப்பு அறிவு சூன்யத்தையே காட்டும்.
-கோல்ட்ஸ்மித்
எத்தனை விஷயங்கள் சிரிப்பில் அடங்கியுள! நெஞ்சைத் திறந்து அறிவதற்கேற்ற திறவுகோல் அதுவே. நகைக்க முடியாதவன் துரோகம், தந்திரம், திருட்டு முதலியன செய்யத் தகுந்தவன். -கார்லைல்
வீணாக்கிய நாட்களுள் அதிகமாக வீணாக்கிய நாட்கள் நகையாத நாட்களே.
-ஷாம்பர்ட்
ஆண்டுக்குப் பதினாயிரம் தரும் ஆஸ்தியைவிட அல்லும் பகலும் சந்தோஷமாயிருக்கும் இயல்பு கிடைத்தால் போதும்.
-ஜோஸப் ஹ்யூம்
மகிழ்ச்சி பொங்கும் முகத்துடையவர் வந்தால் போதும், உடனே வீட்டில் புதியதோர் ஜோதி உதயமாகி விடும்.
-ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்
உன் நோக்கத்தை வாளால் சாதித்துக் கொள்வதைவிட நகை முகத்தால் சாதித்துக் கொள்வதே சாலச் சிறந்த தாகும்.
-ஷேக்ஸ்பியர்
அறிவுடையோர் சிரித்தற் கஞ்சார்.
- மார்ஷியல்
சிரிப்பே மனிதனை மற்றப் பிராணிகளினின்றும் வேறுபடத்திக்காட்டும் செயலாகும். -அடிஸன்
மூடன் அதிகமாகச் சிரிப்பான்; வஞ்சகன் சிரிக்கவே செய்யான்.
-புல்லர்
சான்றோர் புன்னகையைக் காணலாம். சிரிப்பைக் கேட்க முடியாது.
-செஸ்டர்பீல்டு
நகையாடுபவன் அநேகமாக எல்லாவற்றையும் நகையாடற்குரிய விஷயமாகக் கருதுவான். ஆனால் அறிஞனோ எதையும் அவ்விதம் கருத மாட்டான். -கதே
நகைக்கப்படக் கூடிய குறை எதுவுமில்லாதவன் அன்பு செய்யப்படக் கூடியவனாகான். -ஹேர்
அதிகமாக நகையாதே. ரஸிகன் மிகவும் குறைவாகவே நகைப்பான்.
-ஹெர்பர்ட்
★ ★ ★
38. நாகரிகம்
ஒரு தேசத்தின் நாகரிகத்தை அளக்குங்கோல் அதன் ஜனத்தொகையோ நகரங்களின் விசாலமோ செல்வத்தின் மிகுதியோ அன்று. அதில் பிறக்கும் மனிதரின் குணமேயாகும்.
- எமர்ஸன்
நாகரிகம் உடையவர் யார்? தமக்கு உடை செய்யவும் வயிறு நிரப்பவும் உடலை அலங்கரிக்கவும் அடிமைகள் உடையார் நாகரிகம் இல்லாதவர். தம் அத்யாவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்யமட்டும் சேவகர் வைத்துக் கொண்டு அவர்க்கும் சுகவாழ்வு அளிப்பவரே நாகரிகம் உடையவர்.
-ரஸ்கின்
நம்மிடையிலும் இன்னும் நாகரிக தசையடையாத காட்டுமிராண்டிகள் பலர் இருக்கவே செய்கின்றனர்.
-ஹாவ்லக் எல்லிஸ்
மனிதர் இருதயத்தின் குணாதிசயங்களை எள்ளளவும் மதிப்பதில்லை. அறிவு, உடல்-இரண்டிலொன்றின் ஏற்றத்தையே போற்றுகின்றனர். -லா புரூயர்
ஜன சமூகங்கள் வாழலாம், அல்லது வாழாமல் மடியலாம். ஆனால் நாகரிகம் மட்டும் ஒருநாளும் மறைந்து விடாது.
-மாஜினி
ஒருவனை நாகரிகமாக்க விரும்பினால் அவனுடைய பாட்டியை நாகரிகமாக்க ஆரம்பிக்கவேண்டும்.
-விக்டர் ஹூகோ
நாகரிகம் உண்டாக்கத் தக்க நிச்சயமான வழி பெண்களின் செல்வாக்கே.
-எமர்ஸன்
நாகரிகத்தின் உச்சிப் பொழுது வந்துவிட்டதாக எண்ணுகிறோம். ஆனால் இப்பொழுதுதான் கோழி கூவும் சமயம்.
-எமர்ஸன்
காட்டு மிருகமாயிருக்கும் மனிதன் வீட்டு மிருகமாக ஆக்குவதே நாகரிகத்தின் பயன். -நீட்சே
சமூகத்தின் நாகரிகம் சமூகத்தை வைத்தன்றிச் சான்றோரை வைத்தே மதிக்கப்பெறும். சான்றோர் இல்லையெனில் நாகரிகமும் இல்லை.
-பழமொழி
★ ★ ★
39. செல்வம்
செல்வம் என்பது நம்மை வறுமை என்னும் ஒரே ஒரு தீமையினின்று தான் காப்பாற்ற இயலும்.
-ஜாண்ஸன்
பணமே வாழ்வின் லட்சியமானால் அது தீய வழியிலேயே தேடவும் செலவிடவும் படும். இருவிதத்திலும் வாழ்வு பாழே. -ரஸ்கின்
கடவுள் செல்வத்தை உயர்ந்த பொருளாக மதித்திருந்தால் அதை அயோக்கியர்க்கு அளித்திருக்க மாட்டார்.
-ஸ்பிப்ட்
செல்வம் இன்பம் தராது; சீதேவி அருள அருளச் சிந்தை அதிகமாக ஆசைப் பட்டுக்கொண்டே இருக்கும்.
-யங்
பணத்தை வீணாக அழிப்பதைவிட பணத்தில் பேராசை வைப்பதே மனிதனை நாசமாகச் செய்யும்.
-கோல்டன்
பணத்தை மட்டும் தரும் தொழில்களைச் செய்தால், உண்மையில் சோம்பலாயிருத்தல் அல்லது அதற்குங்கீழாயிருத்தலேயாகும்.
-தோரோ
தாழ்ந்த விஷயங்களுக்குச சிந்தனையைப் பறிகொடுக்காமலிருப்பதன் மூலம், பணமில்லாமலே பணக்காரனாயிருப்பேன்.
-காலிங்வுட்
செல்வனுக்கு வாரிசாகப் பிறப்பது உயிருடன் பிறப்பதன்று, இறந்து பிறப்பதே யாகும். -தோரோ
நான் கண்டு களிப்பவைகள் எல்லாவற்றிற்கும் நானே அதிபன். என் உரிமையை மறுக்க யாராலும் இயலாது.
-தோரோ
கவிஞன் ஒரு சோலையின் சிறந்த பயன்களை எல்லாம் நுகர்ந்து விடுகிறான். சோலையின் சொந்தக் காரனோ பழங்களையும் மட்டைகளையுமே வீட்டுக்குக் கொண்டு போகிறான்.
-தோரோ
பெருமைப்படுத்திக் கொள்வதற்குச் செல்வத்தில் பிரமாதமாக ஒன்றுமில்லை.
-ஆவ்பரி
செல்வமுள்ளவனா அல்லனா என்று தீர்மானிப்பது எது? தேடுவது எது என்பதன்று, செலவு செய்வது எது என்பதேயாகும்.
-ஒரு ஞானி
செல்வம் சன்மார்க்கத்தில் அடையப்படவில்லை என்று அடிக்கடி கேள்விப் படுகிறோம். ஆனால் உண்மையாதெனில் வறுமையும் சன்மார்க்கத்தில் அடையப்படுவது அபூர்வம் என்பதே.
-ஆவ்பரி
நான் சேர்த்ததை இழந்தேன், செலவு செய்ததைப் பெற்றேன், கொடுத்ததை உடையேன். -டெவன்ஷேர்
பணம் தேடுவது ஒரு பெரிய காரியந்தான். ஆனால், அதைவிடப் பெரிய காரியம் ஒன்று உளது. அது யாதெனில் தேடிய பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதே.
-டிஸ்ரேலி
செல்வத்தை இகழ்பவனுக்குப் போல வேறெவர்க்கும் செல்வம் அவ்வளவு அதிகமாகத் தேவையாயிருப்பதில்லை.
-ரிக்டர்
நான் லட்சுமி தேவியிடம் பிரார்த்திப்பதெல்லாம் நான் செலவு செய்யவேண்டியதை விடச் சிறிது அதிகமாக அளித்தருள வேண்டும் என்பதே.
- ஹோம்ஸ்
கற்றோரும், அறிஞரும், வீரரும் பணத்தை வாழ்வின் லட்சியமாகக் கொள்ளுதல் என்பது ஒருநாளும் முடியாத காரியம். -ரஸ்கின்
பணத்தைத் தீயவழியில் இழப்பது குற்றம். ஆனால் தீயவழியில் தேடுவது அதைவிடப் பெரிய குற்றம். தீயவழியில் செலவிடுவதோ எல்லாவற்றிலும் பெரிய குற்றம்.
-ரஸ்கின்
தவறான வழியில் லாபம் பெறாதே தவறான வழியில் பெறும் லாபம் நஷ்டமேயாகும். -ஹீலியாட்
உண்மையான செல்வம் பணமன்று, குணமேயாகும்.
- ஆவ்பரி
ஒருவனுக்குத் தன்னைத் தவிர வேறு எது சொந்தம்? அவன் வேறு எதை அனுபவித்து ஆனந்தம் காண முடியும்?
-ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்
செல்வனாயிருக்க முதலாவதாக வேண்டியது நிறைந்த உள்ளம்; இரண்டாவதாகவே பொருள்.
-ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்
எதை உடையவன் என்பதன்று, எத்தகையவன் என்பதே வாழ்வின் பிரதான பிரச்னை. -ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்
நம்பவும் மகிழவும் உள்ள குணமே உண்மையான செல்வம். அஞ்சவும் வருந்தவும் உள்ள குணமே உண்மையான வறுமை.
-ஹயூம்
வேண்டாதிருக்கக் கற்று கொள்வதே உடையவனாயிருப்பதாகும். -ரெக்கார்ட்
இழிஞன் ஏராளமாய்ப் பணம் படைத்திருப்பது இறைவன் ஒழுங்குமுறைக்கு இழுக்கன்றோ? இம்மியும் இழுக்கன்று. இழிஞன் அந்த லட்சியத்துக்காகவே தன்னை இழிஞன் ஆக்கிக்கொண்டான். அவன் அதற்காகவே ஆரோக்கியம், மனச்சான்று, சுதந்திரம் எல்லாம் இழந்துளான். அவற்றைக் கொடுத்துப் பணம் ல்ாங்கிக் கொண்டதற்காக நாம் பொறாமைப்படலாமோ?
-பார்பால்ட்
பிரபுவர்க்கம் எது? உண்டாக்காமல் உண்பவர், உழையாமல் வாழ்பவர், உத்யோகங்களை வகிக்கத் திறமையின்றி வகிப்பவர், கெளரவங்களைத் தகுதியின்றி அபகரித்துக் கொள்பவர்- இவரே பிரபுக்கள்.
- ஜெனலல் பாய்
செல்வத்தை உண்டாக்காமல் நுகர உரிமை கிடையாது. அது போலவே இன்பத்தையும் உண்டாக்காமல் நுகர உரிமை கிடையாது.
-பெர்னார்ட்ஷா
செல்வத்தோடு பிறப்பதில் பெருமை பேசிக் கொள்வதற்கு யாதொன்றும் இல்லாததுபோலவே, சாமர்த்தியத்தோடு பிறப்பதிலும் பெருமை பேசிக் கொள்வதற்கு யாதொன்றும் கிடையாது. செல்வமும் சரி சாமர்த்தியமும் சரி, நன்றாய் உபயோகித்தால் மட்டுமே பெருமை தரும்.
-ஆவ்பரி
அறிவிலார் செல்வம் பெற அரும்பாடுபடுவர்; அறிஞர்க்கோ அது மாயவலையாக இல்லாவிடினும் பெரும் பாரமாகவே இருக்கும்.
-மில்ட்டன்
செல்வம் வேண்டுமா? செல்வத்திலுள்ள ஆசையை விட்டு விடு. அதுதான் செல்வத்தைப் பெருக்கும் வழி. -அகஸ்ட்டைன்
மண்ணுலகில் மனிதருக்கு வேண்டுவது வெகு சொற்பம். அதுவும் சின்னாட்களுக்கே. - கோல்ட்ஸ்மித்
செல்வம் என்பது ஆன்மா எரிந்து மிகுந்த சாம்பலே யாகும்.
-பால் ரிச்சர்ட் துர்
அதிர்ஷ்டத்தைத் தாங்குவதைவிட அதிர்ஷ்டத்தைத் தாங்குவதே அதிகக் கஷ்டமான காரியம். பால் ரிச்சர்ட் செல்வம் என்பது சாத்தான் மனிதனை அடிமையாக்கும் சாதனம். -பால் ரிச்சர்ட்
அசத்தியத்தை மறைக்கச் சத்தியத்தை நாடுவதுபோல், அசெளக்கியத்துக்கு வசதி செய்யவே செளக்யத்தைத் தேடுகிறோம்.
-செஸ்ட்டர்டன்
தனவந்தன் ஆரோக்கியமாயிருக்க வேண்டுமானால் தரித்திரனைப் போல் வாழவேண்டும்.
-டெம்பிள்
ஒருவன் பணத்தைத் தன் தேவைக்கு அதிகமாகத் தேடவும் தனவந்தன் என்ற பெயரோடு சாகவும் விரும்பினால், அது அவனுக்கும் அவன் சந்ததியார்க்கும் சாபமாகவே முடியும்.
- ரஸ்கின்
செல்வம் போதுமான அளவாயிருந்தால் உன்னை அது துக்கிச் செல்லும், அதிகமான அளவாய் விட்டால் நீ தான் அதைத் துக்கிச் செல்லவேண்டும்.
-ஸாதி
பணம் தேடுவது முட்டாளுக்கு முடியும். ஆனால், அதைச் செலவு செய்வது அறிஞருக்குத்தான் தெரியும். அநேகர் கையிலுள்ள பணம் தீரப்போகும் பொழுதுதான் அதைச் சிக்கனமாகச் செலவு செய்ய ஆரம்பிப்பர். அது போல் தான் அநேகர் நேரத்தைச் செலவு செய்வதிலும்.
-கதே
பணத்தை விட உயர்ந்தவை பலவுள. ஆனால் அவற்றைப் பெறப் பணமே தேவை. -பழமொழி
தனவந்தனாகச் சாவதைவிடச் சான்றோனாக வாழ்வதே சிறப்பு.
-ஜாண்ஸன்
உள்ளத்தில் லாப ஆசை இருக்கும் வரை கடவுள் ராஜ்யத்தைப் பற்றிய உண்மையான அறிவு உண்டாக முடியாது.
-ரஸ்கின்
சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தையே.
-கோல்ட்டன்
பட்டுப்பூச்சி ஆடி ஓடிக் களிப்பதாகத் தோன்றும். ஆனால், அதே சமயத்தில் அது தன் உதரத்திலிருந்து நூல் நூற்றுத் தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கும். அது போலவே தான் செல்வர்கள் சந்தோஷமாய் வாழ்வதாகத் தோன்றுவதும்.
-ஐஸக் வால்டன்
ஊசித்துவாரத்தில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம். பணக்காரன் மட்டும் ஒருநாளும் கடவுள் ராஜ்யத்துக்குள் நுழைய முடியாது.
-விவிலியம்
அளவுக்கு மிஞ்சியதே அடிமைத்தளையாகும்.
-பால் ரிச்சர்ட்
எந்த மனிதனும் யோக்கியமான முறையில் வாழ்வதற்கு வேண்டிய பணத்தைத் தேடமுடியுமே யன்றி ஏராளமான பணத்தைக் குவித்து விட முடியாது. -ரஸ்கின்
கடலில் நீர் பெருகும் சமயத்தில் சென்றால் நினைத்தயிடம் போய்ச் சேரலாம். அதுபோல வாழ்விலும் தக்க சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டால் லட்சுமியின் அருளைப் பெறலாம்.
-ஷேக்ஸ்பியர்
அதிர்ஷ்ட தேவதையை நழுவ விட்டுவிட்டால் அவளை மறுபடியும் ஒருநாளும் காண முடியாமற் போய்விடும்.
-கெளலி
அதிர்ஷ்டதேவதை அநேகர்க்கு அளவுக்கு அதிகமாக அருள்வதாகக் கூறுவர். ஆனால் அவளோ யார்க்கும் போதுமான அளவுகூட ஒருபொழுதும் அளிப்பதில்லை.
-பழமொழி
பணம் வாழ்வின் லட்சியமாக ஆகிவிட்டால் அது தவறான வழியிலேதான் தேடப்படும்; தவறான வழியிலே தான் செலவழிக்கப்படும். அது தேடும்பொழுதும் செலவு செய்யும்பொழுதும் தீமையே பயக்கும்.
- ரஸ்கின்
தேவைக்குப் போதுமான பணமிருந்தும் செல்வன் என்ற பெயருடன் சாக விரும்பிப் பணத்தைத் தேடுபவன் பணத்தையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டவன் ஆவான்.
-ரஸ்கின்
அதிர்ஷ்டதேவதை அதிகமாக அருள் செய்யப்போகும் பொழுது பார்த்தால் அதிக பயங்கரமாகத் தோன்றுவாள்.
-ஷேக்ஸ்பியர்
40. வறுமை
தான் செல்வன் என்று அறியாதவனே வறிஞன்.
-பால் ரிச்சர்ட்
உலக உடைமைகளை ஒரு பொருளாக மதியாதவரே உண்மையான செல்வர்.
-பால் ரிச்சர்ட்
வறிஞர் என்பவர் கொஞ்சமாக உடையவர் அல்லர். அதிகமாக ஆசைப்படுபவரே யாவர்.
-ஆவ்பரி
வறுமையினும் பெருங்கேடுமில்லை; செல்வத்தினும் உயர்ந்த நன்மையுமில்லை.
-கதே
வறுமையே தீமையிற் தீமையும், குற்றத்திற் கொடியதுமாகும்.
-பெர்னார்ட்ஷா
வறுமையை நீக்க சதாகாலமும் பாடுபடுகிறவன் சன்மார்க்க அபிவிருத்தி காண முடியாது.
-மாஜினி
எவன் பாக்கியசாலி? மண் குடிசையில் இருந்து கொண்டு மாளிகையைக் கண்டுலயித்து நிற்பவனே. மாளிகையில் வாழ்ந்தும் அதைக் கண்டுலயித்து நிற்க கொடுத்து வைக்காதவன் பாக்கியசாலி அல்லன்.
- ரஸ்கின்
யோக்கியமான வறிஞர் சில சமயமேனும் வறுமையை மறந்திருக்க முடியும். ஆனால் யோக்கியமான செல்வரோ வறுமையை ஒரு நாள் கூட மறந்திருக்க முடியாது.
-செஸ்டர்ட்டன்
செல்வமே வறுமைக்குக்காரணம், குவியல் உயர உயர குழி ஆழமாகிக்கொண்டே போகும். ஒருவனுடைய மிதமிஞ்சிய ஊண் மற்றொருவனுடைய பட்டினியாகும்.
-பால் ரிச்சர்ட்
கிறிஸ்து வறுமையை ஒரு அறமாக வகுத்தார். கிறிஸ்தவர் அதை ஒரு குற்றமாகக் கருதுகின்றனர்; ஆனால் வருங்காலத்தவரோ செல்வத்தையே ஒரு குற்றமாக இகழ்வர். -பால் ரிச்சர்ட்
இயேசு கூறும் அதர்மச் செல்வம் எது? அனைவர்க்கும் சொந்தமாயிராத சகல செல்வமும் அதர்மச் செல்வமேயாகும்.
-பால் ரிச்சர்ட்
குறையாத செல்வமும் குலையாத சமாதானமும் கோழைகளைக் கோடிக்கணக்காய்ப் பெற்றுத்தள்ளும். வறுமையே என்றும் மனவுறுதியின் தாய்.
-ஷேக்ஸ்பியர்
வறுமைதான் கலாதேவியின் பிதிரார்ஜிதம்.
- பர்ட்டன்
வறுமை என்பது அஞ்சியவரை அடிக்கவரும் போக்கிரியாகும். ஆனால் அஞ்சாமல் எதிர்த்து நின்றால் அது நல்ல குணமுடையதே.
- தாக்கரே
வறிஞரே பாக்கியசாலிகள். ஏனெனில் அவரோடுதான் வறிஞர் எப்பொழுதும் வதிந்து கொண்டிருப்பதிலர்.
-செஸ்டர்ட்டன்
நாணங்கொள்ள வேண்டிய விஷயம் . வறிஞனாயிருப்பதன்று, வறிஞனாயிருக்க நாணங்கொள்வதே.
-பழமொழி
அனேக சமயங்களில் வறுமை ஆடம்பரங்களிலும் அளவுகடநத செலவுகளிலும் ஒளித்து வைக்கப்படும்.
-ஜாண்ஸன்
41. அதிர்ஷ்டம்
துர் அதிர்ஷ்டத்தைத் தாங்குவதைவிட நல்ல அதிர்ஷ்டத்தைத் தாங்கவே அதிக ஆற்றல் தேவை.
- ரோஷிவக்கல்டு
குற்றங்குறைகளை நீக்கிக் கொள்வதே நமக்கு ஏற்படக் கூடிய பெரிய அதிர்ஷ்டமாகும். - கதே
துர் அதிர்ஷ்டம் சிறியோரைப் புறங் கண்டுவிடும். ஆனால் பெரியோர் அதை வென்று விடுவர்.
-வாஷிங்க்டன் இர்விங்
எப்பொழுது நாம் 'அதிர்ஷ்டம்' எனும் தேவதையை அதிகமாக விரும்புகின்றோமோ, அப்பொழுது அவள் நம்மை அதிகமாக அதட்டிப் பார்க்கின்றாள்.
-ஷேக்ஸ்பியர்
'வினைப்பயன்' என்பதை நாம் பிறர் விஷயத்தில் நம்பியும், நம் விஷயத்தில் நம்பாமலும் இருக்கக் கூடுமானால் அது ஒரு பெரும் பாக்கியமாகும்.
-மில்
அதிர்ஷ்டம் அடையும்வரை என்னை அறிவிலி என்று அழையற்க.
-ஷேக்ஸ்பியர்
பலவீனர் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைக்கின்றனர். பல முடையவரோ காரணகாரியத் தொடர்பிலேயே நம்பிக்கை வைக்கின்றனர்.
-எமர்ஸன்
அதிர்ஷ்டதேவி யாரையேனும் அழிக்க விரும்பினால் அவரை வெறியராக்குவதே அவளுடைய ஆரம்பவேலை.
-பப்ளியஸ் ஸைரஸ்
அதிர்ஷ்டத்தை வார்க்கும் அச்சு அவனவன் கையிலேயே இருந்துகொண்டிருக்கிறது. -பேக்கன்
அதிர்ஷ்டதேவி அருள் செய்தால் அறிவிலிகளைத் தவிர வேறு யாரும் அவளுடன் கொஞ்சிக் குலாவமாட்டார்கள்.
-ட்ரைடன்
கெட்டகாலத்தைத் தாங்குவது கஷ்டம்தான். ஆனால் நல்லகாலத்தைத் தாங்கக் கூடியவர் ஒருவர் இருந்தால் கெட்டகாலத்தைத் தாங்கக் கூடியவர் நூறுபேர் இருப்பர்.
- கார்லைல்
அதிர்ஷ்டதேவி சபலபுத்தியுடையவள் என்று கூறுவர். ஆனால் சிலசமயங்களில் அவள் பாத்திரம் அறிந்து வழங்கும் சற்குணமுடையவளாயிருப்பது முண்டு.
-ஜார்ஜ் எலியட்
அதிர்ஷ்ட தேவியின் குன்றின்மேல் இறக்கிவிடப்படுவதில் என்ன பெருமை உண்டு? சகல பெருமையும் அதில் ஏறிச் செல்வதிலேயே.
-நெளல்ஸ்
அதிர்ஷ்டம் ஒரு சந்தையை ஒக்கும். அங்கே பலசமயங்களில் சிறிதுநேரம் காத்திருந்தால் விலைகள் இறங்குவதுண்டு.
-பேக்கன்
அதிர்ஷ்டக் குறைவால் ஆனந்தம் கிடையாமல் இருக்கலாம். ஆனால், அவனவனேதான் தன்னை இழிஞனாக ஆக்கிக் கொள்கிறான்.
-கார்லைல்
அதிர்ஷ்டதேவி சிலசமயங்களில் சுக்கானல்லாத தோனிகளும் கொண்டு வருவதுண்டு.
-ஷேக்ஸ்பியர்
★ ★ ★
42. அடக்கம்
கதிர் நிறைந்தால் பயிர் தரையில் தொங்கும்.
-பிஷப் ரெய்னால்ட்ஸ்
இறைவனே! என்னிடம் தாழ்மையை வேண்டுகிறீர். ஆனால் நான் இன்னும் அந்த உயர்ந்த பொருளை எட்டவில்லை.
-டால்ஸ்டாய்
எல்லோர்க்கும் பிறர்க்கு எஜமானாயிருக்க ஆசை. ஆனால் எவனும் தனக்கு எஜமானனாயில்லை.
-கதே
எஜமானனா? சில வேளைகளில் குருடாயிருக்கவேண்டும். ஊழியனா? சில வேளைகளில் செவிடாயிருக்கவேண்டும்.
- புல்லர்
மனித ஜாதியின் திறமைக்குள் அடங்கும் நன்மைகள் எல்லாம், 'கீழ்ப்படிதல்' என்பதில் அடங்கும்.
-மில்
நெஞ்சில் போர் நிகழ்த்தும்பொழுதுதான் நாம் கொஞ்சமேனும் பெறுமதி அடைகின்றோம்.
- ராபர்ட் ப்ரெளணிங்
தன்னைத்தானே உயர்த்திக்கொள்பவன் தாழ்த்தப்படுவான். தன்னைத்தானே தாழ்த்திக்கொள்பவன் உயர்த்தப்படுவான்.
-விவிலியம்
வாஞ்சையும் தாழ்மையும் துன்பங்களைச் சகித்துக் கொள்வதன் மூலமே கற்றுக்கொள்ள முடியும்.
-ஜார்ஜ் எலியட்
தாழ்மையே அறிவுடைமையின் உத்தம அடையாளம். -ஜெரிமி காலியர்
★ ★ ★
43. கர்வம்
கண்களுக்கு அருகிலுள்ள சிறு தூசி உலக முழுவதையும் மறைத்துவிட்டுத் தன்னை மட்டுமே காண இடங்கொடுக்கும். நான்' என்பதைப்போல எனக்குத் தொந்தரவு கொடுக்கும் தூசி வேறு அறியேன்.
-ஜார்ஜ் எலியட்
குறைகளில் எல்லாம் பெரிய குறை யாது? குறையிருந்தும் குறையிருப்பதாக உணராததே.
-கார்லைல்
கர்வமானது பிறருக்குத் தீங்கிழைக்கத் தூண்டாமல் நமக்கு நேர்ந்த தீங்கை மறைப்பதற்கு மட்டுமே நம்மைத் துண்டுமானால் தீயதன்று.
-ஜார்ஜ் எலியட்
கர்வங்கொண்டவர்கள் சம்பந்தமான கஷ்டமெல்லாம் அவர்கள் தாங்கள் வீண் பெருமை பாராட்டுகிறவர்கள் என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதே.
-செஸ்ட்டர்ட்
பிறர் கர்வத்தை மாற்ற நாம் உபயோகிக்கக் கூடிய மருந்து அன்பு ஒன்றே.
-கதே
கர்வமானது குதிரையின் மேல் கம்பீரமாகச் சவாரி செய்துகொண்டு போகும். ஆனால் கால் நடையாகத்தான் திரும்பி வரும். வழி நெடுகப் பிச்சை எடுக்கவும் செய்யும்.
-லாங்பெல்லோ
கர்வம்-அதுதான் முட்டாள்களை விட்டு ஒரு பொழுதும் நீங்காத துர்க்குணம். -போப்
சாத்தான் இளித்தான்- அவனுடைய மனதிற்குகந்த பாபம் தாழ்மைபோல் நடிக்கும் கர்வமே.
-கோல்ரிட்ஜ்
உலகத்தில் எத்தனையோ விதமான கர்வங்கள் உள. ஆனால் அவற்றில் பெரியது ஞானி என்று ஒருவன் தன்னைத்தானே பிதற்றும் கர்வமே.
-ஹூட்
நம்மைப்பற்றி நாம் கொள்ளும் அபிப்பிராயத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பொது ஜனங்கள் நம்மைப் பற்றிக் கொள்ளும் அபிப்பிராயம் அவ்வளவு பெரிய கொடுங்கோன்மை அன்று.
-தோரோ
★ ★ ★
44. சிக்கனம்
சிக்கனமாயிருத்தல் வாழ்வாகிய போர்க்களத்தில் பாதி வெற்றி பெற்றது போலாகும். சாம்பாதிப்பது என்பது செலவு செய்வதைப்போல அவ்வளவு கடினமான காரியமன்று.
-ஸதே
சிக்கனம் இல்லையேல் யாரும் செல்வராக முடியாது. சிக்கனம் இருந்தாலோ வெகு சிலர் கூடத்தரித்திரர் ஆகார்.
-ஜாண்ஸன்
தாராளம் சேருமானால் சிக்கனம் நல்லதே. சிக்கனம் என்பது அனாவசியச் செலவுகளை ஒழித்தலாகும். தாராளம் என்பது அவைகளைத் தேவையுள்ளவர்க்கு அனுகூலமாக உபயோகிப்பதாகும். தாராளமிலாச்சிக்கனம் பிறர் பொருளில் ஆசையைப் பிறப்பிக்கும். சிக்கனமிலாத் தாராளம் வீண் பொருள் விரயத்தை விளைவிக்கும்.
-பென்
சிக்கனம்-அதுவும் ஒரு வித வருமானமே.
-லெனிக்கா
வருமானத்தைவிடக் குறைவாகச் செலவு செய்ய அறிந்துவிட்டால் ரசவாத ரகசியத்தை அடைந்து விட்டவர் ஆவோம்.
-பிராங்க்லின்
தந்தை மகற் காற்றும் உதவி அதிகம் வைத்துப் போவதன்று குறைவானதைக் கொண்டு சரியாக வாழக் கற்பிப்பதே.
-பென்
வேண்டாத வஸ்து ஒரு நாளும் மலிவான தன்று. அது காசுக்கு ஒன்றானாலும் கிராக்கியே.
-ப்ளுட்டார்க்
சிக்கனம் என்பது வருவாய்க்குத் தக்க செலவு செய்தல். அது ஒரு அறமன்று, அதற்கு அறிவும் திறமையும் தேவையில்லை.
-பழமொழி
செலவு செய்தாலும் சிக்கனமாக இருப்பவனே இன்ப வாழ்வினன். அவனே இரண்டுவித இன்பமும் துய்ப்பவன்.
-ஜாண்ஸன்
★ ★ ★
45. கஞ்சன்
செலவாளி தன் வாரிசைக் கொள்ளையடிக்கிறான். ஆனால் உலோபியோ தன்னையே கொள்ளையடித்து விடுகிறான்.
-லா புரூயர்
உலோபியிடம் எது உண்டு? எது இல்லை? அவனிடம் உள்ளவைகளும் கிடையா, இல்லாதவைகளும் கிடையா -பப்ளியஸ் ஸைரஸ்
உலோபி தன்னை இழந்து தன் ஊழியனுக்கு அடிமையாகி அவனையே தெய்வமாக அங்கீகரித்து விடுகிறான்.
-பென்
உயர்ந்த நன்மைகள்- அவைகளைப் பணத்தால் பெற முடியாது. பெரிய தீமைகள்- அவைகளைப் பணத்தால் பெற முடியாது. இதை உணர்ந்துவிட்டால் பணஆசை என்னும் நோய் எளிதில் நிவர்த்தியாய்விடும்.
-கோல்ட்டன்
திருடரில் திருடன் இங்கே உளன், அவன் தன்னையே கொள்ளையிட்டவன்.
-உலோபியின் கல்லறை எழுத்து
உலோபிகள் உறவினருமாகார், நண்பருமாகார், -மனிதப் பிறவிகளுங்கூட ஆகார்.
-லா புரூயர்
உலோபிகள் நல்லவர்கள், தங்கள் மரணத்தை விரும்புவோர்க்குத் தனம் சேர்த்து வைப்பவர்.
- லெஸ் ஜெனஸ்கி
சாத்தானுடைய வாசஸ்தலம் உலோபியின் நெஞ்சமாகும்.
-புல்லர்
★ ★ ★
46. தருமம்
பணம் தன்னிடம் ஆசையைப் பிறப்பிக்கும் முன் அதைப் பிறர்க்கு உதவ ஆரம்பித்துவிடு.
- ப்ரெளண்
பிறர் துன்பம் கண்டு இரங்குதல் மனித குணம் அதை நீக்குதல் தெய்வ குணம்.
-மான்
'ஈதல்' -இதிலேயே மனிதன் கடவுளை ஒப்பான்.
- ஸிஸரோ
என்னிடம் உதவி பெற்றவன் அதை மறந்தால் அது அவன் குற்றம். ஆனால் நான் உதவி செய்யாவிட்டால் அது என் குற்றம்.
-
ஸெனீக்கா ஈத்துவக்கும் இன்பத்தையே பரிபூரணமாக அனுபவிக்க முடியும். மற்ற இன்பங்களையெல்லாம் அரை குறையாகவே.
- டூமாஸ்
த்தனையோ இன்பங்களைத் துய்க்கலாம், ஆனால் ஈத்துவக்கும் இன்பத்தைப்போன்றது எதுவுங்கிடையாது.
- கே
நாம் கொடுக்கும்பொழுதுதான் நம் பணம் நம்முடையதாகும்.
-மாக்கன்ஜி
பரிபூரண மனிதருக்கும் இன்றியமையாத இரண்டு குணங்கள் அன்பும் கொடையுமே ஆகும்.
-புல்வெர்
உடைமை என்பது கடனே செல்வமே சிந்தையின் உரைகல், பொருள் வைத்திருப்பது பாவம், அதை வழங்கிய அளவே மன்னிப்பு.
-பால் ரிச்சர்ட்
பெறுவது போலவே கொடுக்கவும் வெண்டும் சந்தோஷமாய், விரைவாய், தயக்கமின்றிக், கையைவிட்டுக் கிளம்பாத கொடையால் பயனில்லை. -ஸெனீக்கா
பிறர்க்கு வழங்கியதை மறத்தல் பெருந்தன்மை பேசும்.
-காங்க்ரீவ்
ஈதலாகிய ஆடம்பரத்தை அறிய ஏழையாயிருத்தல் வேண்டும்.
-ஜார்ஜ் எலியட்
கையில் வைத்துக்கொண்டே இன்று போய் நாளைவா என்று கூறாதே.
-விவிலியம்
பெரிய கொடையேயாகிலும் அன்பின்றிக் கொடுத்தால் கொடையாகாமல் தேய்ந்து போகும்.
-ஷேக்ஸ்பியர்
★ ★ ★
47. மனத்திருப்தி
ரோஜாச் செடியில் முள் இருப்பதற்கு வருந்தாதே. முட்செடியில் மலர் இருப்பதற்கு மகிழ்வாய்.
-ஆவ்பரி
மனம் கொண்டது மாளிகை, நரகத்தைச் சொர்க்க மாக்குவதும் சொர்க்கத்தை நரகமாக்குவதும் அதுவே.
-மில்டன்
விருப்பத்திற்குக் குறைவாய்ப் பெறுபவன் தகுதிக்கு அதிகமாய்ப் பெறுவதாக அறியக் கடவன்.
-ஷோபனார்
உயர்ந்த சிலரோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதினும் தாழ்ந்த பலரோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதே நலம்.
-ஜாண்ஸன்
வருந்துவோர் அருகிருப்பது மகிழ்வோருக்குப் பாசக வேயிருக்கும். ஆனால் மகிழ்வோர் அருகிருப்பது வருந்துவோர்க்கு அதனிலும் அதிகப் பாரமாக இருக்கும். -கதே
பெற்றது சிறிதேனும் திருப்தியுற முடியாதவன் முடிவிலாத் தண்டனை அனுபவிப்பவனாவான்.
-காரிக்
அதிர்ஷ்டம் அதிகமாக அளிக்கக் கூடும், ஆயினும் அதிகத்தைப் போதுமானதாக்குவது மனமே.
-பாயில்
விரும்புவதைப் பெற முடியாதாகையால் பெற முடிவதை விரும்புவோமாக.
-ஸ்பானிஷ் பழமொழி
ஈயே! போ, உனக்கேன் துன்பம் இழைக்க வேண்டும்? இருவர்க்கும் உலகில் இடம் உளதே.
-ஸ்டோன்
திருப்தியுள்ள பன்றியாயிருப்பதினும் திருப்தியில்லா மனிதனாயிருப்பதே நலம். திருப்தியுள்ள மூடனாயிருப்பதினும் திருப்தியில்லா ஞானியாயிருப்பதே நலம். பன்றியும் மூடனும் வேறாக நினைத்தால் அதற்குக் காரணம் அவர்களுக்குத் தங்கள் கட்சி மட்டுமே தெரியும்; இரண்டு கட்சியையும் பிறரே அறிவர்.
-மில்
அனுபவித்துத் தீரவேண்டியதற்கு எதிராக வாதமிட்டுப் பயனில்லை. வாடைக் காற்றுக்கு ஏற்ற வாதம் இறுகப் போர்த்திக் கொள்வது ஒன்றே.
-லவல்
திருப்தியுள்ள மனமே தீராத விருந்து.
- ஆங்கிலப் பழமொழி
எதிர் பார்ப்பவன் ஏமாந்து போகலாம், அதனால் எதிர் பாராதவனே பாக்கியசாலி. -போப்
வறுமையேயாயினும் மனத்தில் திருப்தி உண்டேல் அதுவும் போதிய செல்வம் உடைமையே ஆகும்.
-ஷேக்ஸ்பியர்
ஒன்றுமில்லாமை எப்பொழுதும் சுகம், சில சமயங்களில் சந்தோஷமும் கூட வறுமையுற்றாலும் திருப்தியுள்ளவனே பொறாமைப்படத் தகுந்தவன்.
-பிஷப் ஹால்
அதிர்ஷ்டம் தராததை யெல்லாம் திருப்தியிடமிருந்து பெறுவோமாக.
-கோல்ட்ஸ்மித்
குதுகலமும் திருப்தியும் சிறந்த அழுகுண்டாக்கும் மருந்துகள். இளமைத் தோற்றத்தைப் பாதுகாப்பதில் கீர்த்தி பெற்றவை.
-டிக்கன்ஸ்
★ ★ ★
48. உதவி செய்க
'உதவி செய்க' என்பதே உலகின் உயர்ந்த ஆதி விதி. அதுவே வாழ்வுக்கு மறுபெயர். மரணத்துக்கு மறுபெயர் 'பிரிந்திரு' என்பதே.
-ரஸ்கின்
விளக்கு ஏற்றுவது விளக்குக்கு வெளிச்சம் தருவதற்காகவன்று. அதுபோல் ஆண்டவன் அருளிய நம் நற்குணங்கள் பிறர்க்கு நன்மை தராவிடில் இருந்தும் இல்லாதனபோல் தான்.
-ஷேக்ஸ்பியர்
(Upload an image to replace this placeholder.)
பிறர் பாரத்தைத் தாங்கிக் கைகொடுத்தால் நம் பாரம் கனம் குறையும். -ஆவ்பரி
உபகாரமானது செய்த சேவையில் அடங்காது. செய்தவனுடைய நோக்கத்திலேயே அடங்கும்.
-ஸெனீக்கா
உண்மையாளர்க்கு உதவியின் மதிப்பு உதவுவார் மதிப்பளவே யாகும்.
-டெனிஸன்
பிறர் செய்த உபகாரம் அதிகமாக உன் கையில் தங்கவிடாமல் பார்த்துக்கொள், ஜாக்கிரதை.
-எமர்ஸன்
நம் விளக்கை ஏற்ற பிறன் விளக்குக்குச் செல்லுதல் நலமே. ஆனால் நம் விளக்கை ஏற்றாமல் அவன் விளக்கருகே அதிக நேரம் தாமதித்தல் நலமேயன்று.
-ப்ளுட்டார்க்
பெறுபவன் மதிக்குமளவே பெறுகின்ற உதவியின் மதிப்பாகும்.
-பப்ளியஸ் ஸைரஸ்
கெட்டவன் கொடை நன்மை கொடுப்பதில்லை.
-யுரிப்பிடீஸ்
பிறர் உன் விளக்கை உபயோகித்துக் கொள்ளட்டும். ஆனால் உன் விளக்கு சிறிதேயாயினும் அதிலுள்ள நெய்யைக் கொடுத்துவிட மட்டும் சம்மதிக்காதே.
- மேட்டர்லிங்க்
அதிகமாக நேசிப்பவன் அதிகமாக உதவி செய்பவன்.
-அக்கம்பிஸ்
★ ★ ★
49. இரத்தல்
இரப்போரைக் குதிரைமேல் ஏற்றி வைத்தால் குதிரை இறக்கும்வரை சவாரி செய்து கொண்டிருப்பர்.
-ஷேக்ஸ்பியர்
உண்மையான இரவலனே உண்மையான அரசனாவான்.
-லெஸ்லிங்
இரவலனாய் வாழ்பவன் இறைவனாயிருக்க விரும்புகின்றான். இறைவனாய் வாழ்ந்தவன் இரவலனாய் வாழவில்லை என்று வருந்துகின்றான்.
- ஹால்
இரவலரை இல்லாமல் செய்யவேண்டும், அவர்க்குக் கொடுப்பதும் வேதனை தருகிறது, கொடுக்காமலிருப்பதும் வேதனை தருகிறது.
-நீட்சே
இரப்போருக்கு ஈபவர் இரப்போர் ஆக்குபவர்.
-ஹேவோர்ட்
★ ★ ★
50. தியாகம்
மனிதன் இறப்பதற்குத் தகுந்த இடம் மனிதனுக்காக இறக்குமிடமே.
-எம்.ஜே.பாரி
முள் தைக்கா வண்ணம் ரோஜா பறிப்பது எப்படி?
-பில்பே
நல்ல காரியங்களுக்காகக் கஷ்டப்பட வேண்டியிருக்கும் பொழுதுதான் அவை அதிகப் பிரியமானவை ஆகின்றன. - வாவனார்கூஸ்
நெருப்பு வழிச் செல்பவன் புகைக்கு அஞ்ச மாட்டான்.
-டெனிஸன்
திராட்சைக் கொடி கனி தருவதாக எண்ணாமல் கனி தந்துகொண்டிருப்பதுபோல், தியாகம் செய்வதாக எண்ணாமல் தியாகம் செய்வதே மனிதனுடைய உண்மையான இயல்பாகும்.
-மார்க்க ஒளரேலியன்
தன்னைப் பிறர்க்காகத் தியாகம் செய்தல் சகல சமயங்களுக்கும் அழியாத அஸ்திவாரம்- அது ஒன்றே சாஸ்வதமான உண்மையறம்.
-மாஜினி
உங்களில் தலைவனாக இருக்க விரும்புபவன் உங்களுக்கு ஊழியனாக இருக்கக் கடவன்.
-கிறிஸ்து
இலட்சியம் சீக்கிரமாகப் பழுத்துப் பயன் தருவது, தியாகம் செய்வோருடைய இரத்தம் பாய்ந்து போஷிக்கப்படும் பொழுதுதான்.
-மாஜினி
தன்னை ஒடுக்கும் தியாகம்- இதுவே இறைவன் மனிதனுக்கு அருளியுள்ள தலை சிறந்த ஞானமாகும்.
-கார்லைல்
பெரிய விஷயங்களில் தியாகம் செய்தல் எளிது, சிறிய விஷயங்களில் தியாகம் செய்வதே கடினமாகும்.
-கதே
எவ்வித தியாகமுமின்றி எவ்வித நன்மையும் பெற முடியாது. -ஹெல்ப்ஸ்
★ ★ ★
51. கல்வி
கல்வியே ஆன்மாவின் உணவு, அஃதின்றேல் நம் சக்திகள் எல்லாம் ஸ்தம்பித்து நின்றுவிடும், பயன்தரா.
- மாஜினி
கல்விச்சாலையொன்று திறப்பவன் சிறைச்சாலையொன்று மூடுபவன்.
-விக்டர் ஹூகோ
மனத்தில் நோயில்லையானால் கல்வி அவசியமில்லை.
-அந்தோனி
சலவைக்கல் தேய்ந்து கொண்டே போகும், சிலை வளர்ந்து கொண்டே வரும். -மைக்கேல் ஆஞ்சலோ
கல்வியும் வாளுமே ஒரு தேசம் புத்துயில் பெறுவதற்கும் விடுதலை பெறுவதற்குமான இரண்டு சாதனங்கள் ஆகும்.
-மாஜினி
அறிவு தரும் கல்விக்கு ஆகும் செலவை விட அறியாமைக்கு ஆகும் செலவே அதிகம். -ஆவ்பரி
கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று; ஒழுக்கத்தை ஒழுக செய்வதே யாகும்.
-ரஸ்கின்
பிறர் உவக்கும் வண்ணம் நடந்து கொள்வதற்கான ஆசையும் அறிவும் ஏற்படுத்துவதே குழந்தைகளை கெளரவமானவராக வளர்ப்பதன் சாரமாகும்.
-ஹோம்ஸ்
கல்வி எதற்காக? நல்ல தொழிலாளி ஆக்குவதற்கே. -ஆவ்பரி
மிருதுவாக மரம் இழைக்க, நேரான கோடு கிழிக்க, கோணாத சுவர் எழுப்பக் கற்றுக் கொள்ளட்டும். அப்படியானால் எந்த மனிதனும் எந்தக் காலத்திலும் கற்பிக்க இயலாத அத்தனை விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும்.
-ரஸ்கின்
எண்ணையும் எழுத்தையும் கற்றுக் கொடுத்து, எண்ணை மறத்துக்கும் எழுத்தைக் காமத்துக்கும் உபயோகிக்க விட்டுவிடுவது கல்வி யாகாது. ஆக்கைக்கும் ஆன்மாவுக்கும் பரிபூரணமான பயிற்சி தந்து அவற்றை அடக்கியாளக் கற்பிப்பதே கல்வி.
-ரஸ்கின்
கல்வியின் லட்சியம் நல்ல காரியங்களைச் செய்யக் கற்றுக் கொடுப்பதன்று; நல்ல காரியங்களைச் செய்வதில் ஆசையும் ஆநந்தமும் உண்டாக்குவதேயாகும்.
-ரஸ்கின்
எந்தக் கல்வி தேவை? ஒரு மூட்டை நூல்களை வாசித்தலா? அன்று. அடக்கம், ஒழுங்கு அறம், நீதி இவற்றின் முன்மாதிரிகளே தேவை.
- பர்க்
கல்வியின் லட்சியம் விஷயங்களை அறிவது அன்று, வேலைக்கு அடிகோலுவது மன்று சான்றோனாகவும் அறிஞனாகவும் செய்வதேயாகும்.
-ரஸ்கின்
கல்வி கற்பிக்க ஒவ்வொருவனிடம் ஒரு மாணவனாவது இருக்கவே செய்கிறான். -ஆவ்பரி
ஜீவராசிகள் அனைத்திடமும் அன்பு செய்யத் துண்டுவதே உண்மையான கல்வி. ஆனந்தம் அளிப்பதும் அதுவே. -ரஸ்கின்
சரியான வழியில் சந்தோஷம் அடையச் செய்யாத கல்வி எல்லாம் வீணேயாகும்.
-ரஸ்கின்
நடை எழுதவும் இசை பாடவும் உருவந்தீட்டவும் முழு வல்லமை பெற்றபொழுதே கல்வி முற்றுப் பெறும்.
-ரஸ்கின்
சொந்தக் காரியம் பொதுக் காரியம் எல்லாவற்றையும் நியாயமாயும் சாமர்த்தியமாயும் பெருந்தன்மையாயும் செய்யக் கற்றுக் கொடுப்பதே பரிபூரணமான கல்வியாகும்.
- மில்டன்
இளஞ்சிறார் செவிமடுக்க வேண்டிய மொழிகள் இவையே 'உனக்குவேண்டியதை நீயே உண்டாக்கிக் கொள்ளலாம். நீ பட்டினி இருப்பதும் இல்லாததும் உன் முயற்சியைப் பெறுத்ததேயாகும்.'
- மெல்போர்ன்
இளமையில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால விஷயத்தில் இறந்தவன்.
-யுரீப்பிடீஸ்
குழந்தைகளை முதலில் 'மனிதர்' ஆக்குங்கள். பின்னால் 'மதானுஷ்டானிகள்' ஆக்காலம்.
-ரஸ்கின்
குழந்தையை எத்தகைய வழ்விற்குத் தயார் செய்ய வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளா விட்டால் ஆசிரியன் எவனும் கல்வி அபிவிருத்தி செய்ய முடியாது.
-ரஸ்கின்
மாணவனிடம் செய்ய முடியாததைச் செய்யச் சொல்லாதவரை, அவன் செய்ய முடிந்ததையெல்லாம் ஒரு பொழுதும் செய்யப் போவதில்லை.
-மில்
சிறுவர்க்கான பிரதமக் கல்வி, அறிவு ஊட்டுவதன்று. நல்ல வழக்கங்கள் அமைப்பதேயாகும்.
-போனால்டு
மாணவர் அறிவதற்கு உத்தேசிக்கப்பட்டதை மட்டுமே அறியும் ஆசானைவிட பயங்கரமான பொருள் ஒன்றும் உலகில் கிடையாது.
-கதே
பொய்க் கல்வி பெருமை பேசும் மெய்க் கல்வி தாழ்ச்சி சொல்லும்.
-ரஸ்கின்
மூடர்முன் முற்றக் கற்றவனாகக் காட்சிக் கொள்ள விரும்புகிறவன் முற்றக் கற்றவர்முன் மூடனாக்க் காட்டிக் கொள்கிறான்.
-குன்றிலியன்
அதிகம் கற்றவரே அற்பமாகவே தெரியும் என்று அறிந்து கொள்ளக் கூடியவர்.
- ஆவ்பரி
இரண்டுவிதக் கல்விப்பயிற்சி உண்டு-பிறரிடம் பெறுவது, ஒன்று தன்னிடமே பெறுவது ஒன்று. இரண்டிலும் இதுவே ஏற்ற முடையது.
-கிப்பன்
யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார்.
-கதே
கல்வியில்லாத ஆன்மா பணி செய்யாத சலவைக் கல்.
-அடிஸன்
நம் மனத்தைக் கல்வியிடம் ஈடுபடுத்தற்கு ஆசிரியரிடம் இருக்க வேண்டிய இரண்டு முக்கிய சக்திகள் புதியதை அறிந்ததாகச் செய்வதும், அறிந்ததைப் புதியதாகச் செய்வதுமாகும். -தாக்கரே
அதிகம் படிப்பவன் அகந்தை உடையான், கல்வியைக் காட்டுவதில் கருத்துடையான், அதிகம் பார்ப்பவன் அறிவு உடையான், அயலாருடன் வாழ்வான், அவர்க்கு உதவுவான்.
-லிச்சென்பரி
அவன் கலாசாலை வழியாகச் சொன்றானா என்று கேளாதே. கலாசாலை அவன் வழியாகச் சென்றதா என்று மட்டுமே கேள்.
-காட்லின்
வாழ்வில் வெகு முக்கியமாய்க் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் எங்ஙனம் வாழ்வது என்பதே.
-ஆவ்பரி
கற்பது கடினம், ஆனால் அதை விடக் கடினம் கற்பதை மறப்பது.
-ஆவ்பரி
கல்வி கற்பிக்கும் ஆசிரியன் நூலறிவைப் புகட்டும் பொழுது மெய்யறிவை மறந்து விடலாகாது. டெம்பிள் ஆராய்ச்சி முறையை ஒட்டிய கல்வி முறையே இணையற்றதாகும்.
-பர்க்
வாழக் கற்பிப்பவன் மரிக்கவும் கற்பிக்கக் கட்வன்.
-யங்
செடியின் மூட்டில் மண்ணை அணைத்து வை. ஆனால் மலருக்குள் விழுந்து விடாமற் பார்த்துக் கொள். உலக விஷயங்களை எல்லாம் கற்றுக் கொள். ஆனால் அவைகளிடம் ஆன்மாவைப் பறிகொடுத்து விடாதே.
-ரிக்டர்
நாம் பெறும் கல்வியில் அதிகச் சிறப்பான பாகம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்வதுதான்.
-ஸ்காட்
சான்றோனாக்காத கல்வி சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலே யாகும். அதனால் பெறும் அறிவும் தன்னைப் பிறர் மெச்சும்படி செய்ய மட்டும் கற்றுக் கொண்ட ஒருவித மடமையேயன்றி வேறன்று.
-போலிங்புரூக்
★ ★ ★
52. கேள்வி
பிறர் கூறுவதற்குச் செவி சாய்க்கக் கற்றுக் கொள். தவறாய்ப் பேசுவோரிடமிருந்து கூட அறிவு பெறுவாய்.
-ப்ளூட்டார்க்
பிறர் மூளையோடு நம் மூளையைத் தேய்த்து ஒளி பெறச் செய்தல் நலம்.
-மாண்டேய்ன்
ஒருமுறை அறிவாளியுடன் சம்பாஷிப்பது ஒரு மாதம் நூல்களைப் படிப்பதைவிட அதிக நன்மை தருவதாகும்.
-சீனப் பழமொழி
காது நல்லதைத் தவிர வேறெதையும் அறிவிற் சேர்க்கா வண்ணம் எல்லாவித விஷயங்களையும் கேட்கப் பழகிக் கொள்ளல் நலம்.
-ஏராஸ்மஸ்
★ ★ ★
53. இசை
இசையுணர்ச்சி இல்லாதவனும், இன்னிசையால் இதயம் இளகாதவனும் துரோகம், தந்திரம், திருட்டு முதலியன செய்யத் தகுந்தவர்.
-ஷேக்ஸ்பியர்
அளவு கடந்து அனுபவித்தாலும் சன்மார்க்க உணர்ச்சிக்கும் சமய உணர்ச்சிக்கும் கேடு உண்டாக்காத புலனுகர்ச்சி இசையொன்றே.
-அடிஸன்
அழகான உடையும் சத்தான உணவும் நல்ல இசையும் வாழ்வின் ஊற்றாகவும் அறத்தின் சாதனமாகவும் ஆக்கப் பெற்றவை. ஆனால் சாத்தான் அவற்றைக் குற்றம், அலங்கோலம், மரணம் ஆகியவற்றின் சாதனங்களாகச் செய்துவிடுகிறான்.
-ரஸ்கின்
இசை மக்கள் அறிந்த மகத்தான நன்மை. உலகில் காணும் சார்க்கம் முழுவதும் அதுவே.
-அடிஸன்
மனிதனுக்கும் மற்ற மிருகங்களுக்கும் பொது உடைமையாகவுள்ள கலை இசையே.
- ரிக்டர்
இசையே ஏழைகளின் கலா சொர்க்கம்.
-எமர்ஸன்
இசையே ஏதேதோ பேசுகிறாய். இதுவரை நான் கண்டதுமில்லை, இனிமேல் காணப்போவதுமில்லை.
- ரிக்டர்
★ ★ ★
54. கவிதை
பெரிய கவிஞன் ஒவ்வொருவனும் ஒரு ஆச்சாரியனே. அவ்விதம் கருதப்படவே நானும் விரும்புகின்றேன்.
-வோர்ட்ஸ்வொர்த்
ஆராய்ச்சி என்பது மரத்திலிருந்து அடிக்கடி பூக்களுடன் புழுக்களையும் எடுத்துக் கொள்ளும்.
-ரிக்டர்
கூறியது யார் என்று அறிவதற்குக் கூறியதை மட்டுமே ஆராய்க.
-ஆக்கம்பிஸ்
ஆறுதலளிக்கும் தோத்திரப் பாடல்கள் மனத்தைச் சந்தோஷமும் சாந்தியும் உள்ள நிலைமையில் வைக்கும்.
-பேஸில்
நம்மை அறியாமலே நம்முடைய மனத்திற்குள் புகும் போதனையே நாம் கவி மூலம் பெறும் போதனை.
-லாம்
இதயத்தில் நல்லுணர்ச்சிகளை ஏற்படுத்துவதைத் தவிர ஏனையவெல்லாம் பேதமை என்று கருதுவதே கவிஞனின் நோக்கமும் தொழிலுமாகும்.
-ஸ்காட்
உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
-வோர்ட்ஸ்வொர்த்
கவிச்சுவையும் உணர்ச்சியும் பொருந்திய இலக்கியங்களே தினசரி உபயோகத்திற்குத் தேவை.
-ஹாரிஸன்
உயர்ந்த லட்சியங்களுக்காக உத்தம புருஷர்கள் அனுபவிக்கும் இன்பத்தையேனும் துன்பத்தையேனும் உணர்ச்சி உண்டாக்கும் சிறந்த முறையில் வெளியிடுவதே உண்மையான கவிகள்.
-ரஸ்கின்
இலக்கிய ஊழியர் மட்டுமல்ல, எந்தப் பொது ஜன ஊழியரும் எளிய முறையிலேயே வாழவேண்டும் என்பது என் அபிப்பபிராயம்.
-வோர்ட்ஸ்வொர்த்
தன் வாழ்வில் ஒருமுறையேனும் கவிஞனாய் இருந்திராதவன் துர் அதிர்ஷ்டசாலியே.
-லாமார்ட்டைன்
அனாவசியமாக அதிகமாயிருப்பவற்றை அகற்றுவதே அழகு எனப்படுவதாகும்,
-மைக்கேல் ஆஞ்சலோ
அழகுடைய பொருள் அந்தமில் ஆநந்தம் ஆகும்.
-கீட்ஸ்
நாம் செய்ய வேண்டியதைக் காட்டுபவர் தீர்க்கதரிசி; நாம் நேசிக்க வேண்டியதைக் காட்டுபவர் கவிஞர்.
-கார்லைல்
அனைவரிடத்திலும் கவிதையம்சம் உண்டு. முற்றிலும் கவிதையம்சமாக உள்ளவர் யாருமிலர். கவிதையைச் சரியாக வாசிக்கக் கூடியவர் அனைவரும் கவிஞரே.
-கார்லைல்
கவிதை துக்கத்தின் சகோதரி. துக்கம் அறிந்தவன் கவிஞன். ஒவ்வொரு கண்ணீர்த்துளியும் ஒருகவி, ஒவ்வொரு இதயமும் ஒருகீதம்.
-ஆண்ட்ரே
கவிதையின் லட்சியம் நன்றாய் யோசிக்கச் செய்வதன்று, உண்மையை உணரச் செய்வதேயாகும்.
- ராபர்ட்ஸன்
உன்னிடம் கொஞ்சமாவது கவிதையில்லாவிட்டால் நீ எங்கும் கவிதையைக் காணமாட்டாய்.
-ஜூபெர்ட்
கவிதை என்பது கருத்தின் இசையைப் பாஷையின் இசையில் தெரிவிப்பதாகும். -சாட்பீல்ட்
கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே யாவான்.
-இப்ஸன்
கவிதை வெற்றி பெறுவது அழுவதை மாற்றுவதிலும் மனத்திற்குத் திருப்தி அளிப்பதிலுமில்லை. அடைய முடியாததை அடைவதற்காக மறுபடியும் முயற்சி செய்யும்படி நம்மை எழுப்பி விடுவதிலேயே உண்டு.
-எமர்ஸன்
கண்ணுள்ளவன் கவிஞன்.
-இப்ஸன்
எனக்கு தேசத்துக்கு வேண்டிய பாடங்களைப் பாடும் பாக்கியம் கிடைத்தால் போதும் யார் வேண்டுமானாலும் சட்டங்கள் செய்யும் அதிகாரத்தை வகித்துக் கொள்ளட்டும்.
-பிளச்சர்
உயர்ந்த கவிதையை சிருஷ்டிக்க விரும்புபவன் தன் வாழ்வு முழுவதையுமே ஒரு உன்னதக் கவிதையாக ஆக்கிக்கொள்ளக் கடவன்.
-மில்டன்
★ ★ ★
55. புத்தகங்கள்
ஒரு பொழுது கூடத் திறக்காவிடினும் சரி, ஒரு மொழிகூடப் படிக்காவிடினும் சரி, நூல்களைப் போல வீட்டை அலங்கரிக்கும் அழகான பொருள்கள் வேறு கிடையா.
-ஸிட்னி ஸ்மித்
நூலை உண்டாக்கியவருடைய ஆன்மாவைப் போலவே நூலும் உயிராற்றல் உடையதாகும்.
-மில்டன்
நல்ல புஸ்தகமே தலை சிறந்த நண்பன் இன்று போலவே என்றும்.
- மார்டின் டப்பர்
உண்மையிலேயே நல்ல நூல்கள் காட்டில் மலரும் பூக்களைப்போல இயற்கையானதும், எதிர்பாராத அழகானதும், காரணம் கூற முடியாத பூரணமானதுமான வஸ்துக்கள் ஆகும்.
- தோரோ
தன் பெயரை அச்சில் காண்பது சகலர்க்கும் சந்தோஷமே. புஸ்தகத்தில் விஷயம் ஒன்றுமில்லாவிடினும் புஸ்தகத்தைப் புஸ்தகமில்லை என்று யார் கூறுவர்!
-பைரன்
வாசிக்கத் தகுந்த நூல் வாங்கவும் தகுந்ததே.
-ரஸ்கின்
மருந்தைப் போலவே நூல்களையும் விஷயமறிந்தோர் யோசனை கேட்டு உபயோகிக்க வேண்டுமேயன்றி விளம்பரத்தைப் பார்த்தன்று.
-ஸ்கிரன்
எந்தச் சந்தர்ப்பத்திலும் உதவியாயும், எப்பொழுதும் இன்பம் தருவதாயும், இன்னல்களுக்கு ஒரு கேடயமாயும் உள்ள ஒரு சுவையை வேண்டிப் பிரார்த்திப்பதானால்- "நூல் கற்கும் சுவை" யையே வேண்டுவேன். இந்தச் சுவையும் அதை அனுபவிப்பதற்கு வேண்டிய சாதனங்களும் பெற்றுவிட்டால் ஆனந்தத்திற்கு ஒரு நாளும் குறை வராது.
-ஹெர்ஷல்
இக்காலத்தும் அற்புதங்கள் நிகழ்வதில்லையோ? நூல்கள் மக்கள் மனத்தை வயப்படுத்துகின்றனவே.
-கார்லைல்
என்னையா ஏழை என்று கூறுகிறாய்? என்னிடமுள்ள நூல்கள் இராஜ்யத்திலும் உயர்ந்தன அல்லவோ? -ஷேக்ஸ்பியர்
தான் படிக்கக்கூடிய அளவு நூல்களை வாங்க முடியாதவன் தரித்திரம் மிஞ்சியவனாகவே இருக்க வேண்டும்.
-ஆவ்பரி
இதயத்திலிருந்து உதிக்கும் நூலே இதர இதயங்களையும் கவர வல்லது. அது முடியுமானால் வேறு கலைத்திறமை எதுவும் அவசியமில்லை.
-கார்லைல்
ஒருமுறை படிக்கத் தகுந்த அநேக நூல்கள் இருமுறை படிக்கத் தகுந்தவைகளாகவும் இருக்கும்.
-மார்லி
தீமையோடு நம்மைப் பழக்கப்படுத்தும் நூல்கள் எல்லாம் தீயவைகளே.
-ஆவ்பரி
சாத்தானுடைய நட்பைத் தரும் நூல்களைப் படிக்காதிருப்பது சாலவும் நன்று.
-நீபூர்
நண்பரைப் போலவே நூல்களும் தேர்ந்தெடுத்த சிலவே தேவை.
-ஜயினரியான
சாதாரணமாக நூல்கள் என்பன நம்முடைய தவறுகளுக்குப் பெயரிடுவதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை.
- கதே
புஸ்தகங்கள் எவ்வளவு நல்லவையாயினும் எப்பொழுதுமே சந்தோஷம் தந்து கொண்டிரா. அறிவு எப்பொழுதும் ஆகாரத்தில் தேடக் கூடியதாக இருப்பதில்லை.
-க்ராப்
சில நூல்களைச் சுவைத்தால் போதும், சில நூல்கள் விழுங்கவும் வேண்டும். ஆனால், வெகு சில நூல்களே மென்று ஜீரணிக்கத் தகுந்தவை. -பேக்கன்
அறிஞனாகவும் சான்றோனாகவும் செய்வது பல நூல்களைப் படிப்பதன்று, சில நூல்களை முறையாகக் கற்பதே யாகும்.
-பாக்ஸ்டர்
மனிதனைக் கொல்பவன் அறிவுள்ள பிராணியை ஆண்டவன் பிம்பத்தைக் கொல்கிறான். ஆனால் புஸ்தகத்தைக் கொல்பவனே அறிவை- ஆண்டவன் பிம்பத்தின் கண்ணைக் குத்திக் கொல்பவனாகிறான்.
-மில்டன்
அவன் சாமர்த்தியசாலியாக இருக்கலாம் ஆனால் நான் அறிந்தமட்டில் அவன் மூளை வேலை செய்ய முடியாத அளவு அநேக புஸ்தகங்களைத் தலையில் ஏற்றிவிட்டான்.
-ராபர்ட் ஹால்
என் மனத்துக்குகந்த நூல்களை மட்டும் கொடுத்து என்னை என் வாழ்வு முழுவதும் சிறையிட்டாலும் நான் கஷ்டப்படமாட்டேன்.
-மாஜினி
சான்றோர்களுடைய நூல்களுடனேயே பழகு, சால்பின்றி சாமர்த்தியம் மட்டும் உடையவர்களுடைய நூல்களைக் கையால் தொடக்கூடச் செய்யாதே.
-மெல்வில்
ஆண்டவனுக்கு வந்தனம் உணவு உண்ணுமுன் கூறுவதினும், புது நூலொன்று வெளிவந்ததும் கூறுவதே பொருந்தும்.
-லாம்
படிப்பில் பிரியமில்லாத அரசனாயிருப்பதைவிட ஏராளமான நூல்களுடைய ஏழையாயிருப்பதையே விரும்புவேன். -மக்காலே
★ ★ ★
56. படித்தல்
நூல் கற்பவன் - அவனுக்காகவே உலகம் ஆக்கப்பட்டுள்ளது. அவன் எந்த தேசத்திலும் இருப்பான், எல்லாக் காலங்களிலும் வாழ்வான்.
-ஹெர்ஷல்
படித்துக்கொண்டே இருந்தால் அறிவு பெருகும் என்று எண்ணுவது, உண்டுகொண்டே இருந்தால் பலம் பெருகும் என்பதை ஒக்கும்.
-புல்லர்
படிப்பானது அறிவு தரவேண்டிய விஷயங்களையே தரும். படித்தவற்றைச் சிந்தித்தலே படித்தவற்றை நமக்குச் சொந்தமாகச் செய்யும்.
-லாக்
மற்றவர்களைப் போலவே நானும் படித்திருந்தால் அவர்களைப் போலவே நானும் முட்டாளாய் இருந்திருப்பேன்.
- ஹாப்ஸ்
நூல்களை முறையாகக் கற்றல் நன்மை தரும். ஆனால் இன்பம் அளிப்பது முறையின்றிக் கற்றலே.
-ஸெனீக்கா
நூல்களைப் படிப்பது ஒன்றிலேயே காலம் முழுவதையும் செலவுசெய்வோர் சோம்பேறிகளில் பெரிய சோம்பேறிகள்.
-ஸிட்னி ஸ்மித்
சிந்தியாது படிப்பது சீரணியாது உண்பதை ஒக்கும்.
- பர்க்
படித்தல் விஷயங்கள் நிறைந்த மனிதனாகச் செய்யும். சம்பாஷித்த்ல் எந்தச் சமயத்திலும் பேசத்தக்க மனிதனாகச் செய்யும். எழுதுதல் எதிலும் திட்டமான கருத்துக்கள் உள்ள மனிதனாகச் செய்யும். -பேக்கன்
சிந்தியாது படித்தல் மூளையைச் செழிப்புள்ளதாகச் செய்யுமே யன்றி ஒருநாளும் தெளிவுள்ளதாகச் செய்யாது.
-நாரிஸ்
எவ்வளவு படித்தாலும் பலதிறப்பட்ட நூல்களைப் படிப்பதே நல்லது. ஒரே வகை நூல்களை மட்டுமே படிப்பவன் தவறான அபிப்பிராயங்கள் உடையவனாவான். அறிவு வளர்ச்சி சம்பந்தமாய் எனக்குள்ள திடமான அபிப்பிராயம் இது.
-டாக்டர் அர்னால்டு
படிப்பின் நோக்கம் ஆட்சேபம் செய்தலும், ஆராயாது நம்பிக்கை கொள்ளுதலும், வாதம் செய்தலும் அல்ல. ஆய்ந்து சீர்துக்கித் தீர்மானித்தலே.
-பேக்கன்
வண்டுக்கு ஏழை முற்றத்திலுள்ள ஒரே செடியில் கூடத் தேன் கிடைக்கும். வண்ணாத்திப் பூச்சிக்கோ அரசர் தோட்டத்தில் கூட அணுவளவு தேனும் அகப்படமாட்டாது.
-எட்வர்ட் புல்லக்
படிப்பு அறிவிற்கான உபகரணங்களாக மட்டுமே உதவும்: படிப்பதை நமதாக்குவது சிந்தனையே. நாம் அசைபோடும் இனத்தைச் சேர்ந்தவர். விஷயப் பெரும் சுமையை நம்மிடம் திணித்துக் கொண்டால் மட்டும் போதாது. அதை மறுபடியும் சுவைத்தாலன்றி போஷணையும் பலமும் உண்டாகா.
-லாக்
சிலர் வாழ்நாள் முழுவதும் படிக்கிறார்கள். இறப்பதற்குள் எல்லாவற்றையும் படித்துத் தீர்த்தும் விடுகிறார்கள்-யோசனை செய்வதைத் தவிர. - டோமேர்கு
கற்றவற்றையும் கற்க வேண்டியவற்றையும் கருத்தில் வைப்பவனே கல்வியில் விருப்பமுடையவன்.
-கன்பூஷியஸ்
முட்டாள்களுக்கு அர்த்தமாவதேயில்லை. சாதாரணமான அறிவுடையவர் சந்தேகமற அறிந்து விட்டதாக எண்ணிக்கொள்வர். பேரறிஞர்க்கு விளங்காத பகுதிகள் இருந்தாலும் இருக்கும். சாமர்த்தியம் காட்ட விரும்புவோர் தெளிந்தவற்றைத் தெளிவாயில்லை என்பர், தெளிவாயில்லாதவற்றை அர்த்தமாக்கிக் கொள்ள முயல்வர்.
-லா புரூயர்
கற்பவை கற்கவும், அஞ்சுவதஞ்சவும், நிச்சயமாக நன்மை வரும் என்று நம்பவும், நன்மை அருளும்படி பிரார்த்திக்கவும், நன்மை செய்ய முனையவும் கொடுத்து வைத்தவரே பேரின்பம் துய்ப்பவர். தர்க்கம் செய்யவேண்டும் என்பதற்காகவோ ஏளனம் செய்ய வேண்டும் என்பதற் காகவோ கற்பவர் பிறவாமலே இருந்தால் எத்துணை நன்மையாயிருக்கும்!
-ஸ்காட்
படிக்கத் தெரியாதவனைப் போலவே படிக்கத் தகாதவைகளைப் படிப்பவனும் நிரட்சர குட்சியே ஆவன்.
-தோரோ
★ ★ ★
57. நூல் நிலையம்
நல்ல நண்பர்க்கு அடுத்த படியில் ஸ்தானம் வகிப்பவை நல்ல நூல்களே.
-கோல்ட்டன்
நூல்கள் இல்லாத மாளிகைகளில் வசிக்கும் தரித்திரமான தனவந்தர்க்கு இரங்குவோமாக.
-பீச்சர்
நூல் நிலையம் என்பது மனித வாழ்வில் ஒரு ஆடம்பரமன்று. அவசியமேயாகும்.
-பீச்சர்
நூல் நிலையம் பெரியோர் ஆன்மாக்கள் வாழும் புண்ணியஸ்தலம். அங்கே எப்பொழுதும் அறிவு மணம் கமழ்ந்து கொண்டிருக்கும்.
-லாம்
என் நூல் நிலையம் எனக்கு ராஜ்யத்திலும் பெரியதாகும்.
-ஷேக்ஸ்பியர்
நூல் நிலையமே இக்காலத்தில் உண்மையான சர்வகலாசாலை.
-கார்லைல்
★ ★ ★
58. புத்தகச் சுவை
நல்ல மேற்கோள் அறிவாளி கை வைர மோதிரம், அறிவிலி கைக் கூழாங்கல்.
-ஜே.ரூ.
ஒரு கருத்தை ஆயிரம் முறை கூறினாலும் அது அநேக சமயம் புதிய தாகவே இருக்கும்.
- ஹோம்ஸ்
(Upload an image to replace this placeholder.)
சுவையின் தூய்மைக்கு உரைகல் எதுவெனில் தூய விஷயங்கள் சிலவற்றிலன்றி அனைத்திலும் சுவை காண்பதுவே. -ரஸ்கின்
நற்சுவை கற்பிப்பதே நல்லொழுக்கம் அமையச் செய்வதாகும்.
- ரஸ்கின்
நூற்சுவை அறிவு என்பது யாது? நூல்களின் குணங்களைச் சந்தோஷத்தோடும், குற்றங்களை வருத்தத்தோடும் காணும் மனப்பான்மையே ஆகும்.
-அடிஸன்
நல்ல சுவையறிவு குறைகளைப் பாராது, நியாயமான சுவையறிவு குணங்களைத் தேடும். நல்ல சுவையறிவு குறைந்தோ கெட்டோ போகலாம். நியாயமான சுவையறிவு நாளுக்கு நாள் அதிகமாக வளரும்.
-ஜேமிஸன்
சுவையறிவு இல்லாத கற்பனை சக்தியைப்போல பயங்கரமான தொன்றும் கிடையாது.
-கதே
நல்ல சுவையறிவு குணங்களைக் காணும், நியாயமான சுவையறிவு அவற்றின் அளவைக் கணிக்கும்.
-பழமொழி
★ ★ ★
59. புத்தகம் எழுதுதல்
எந்த நூல், ஆக்கியோன் இரத்தத்தால் ஆக்கப் பட்டிருக்கிறதோ அந்த நூலே எனக்குப் பிரியம்.
-நீட்சே
ஆசிரியன் தன் நூலில் தன் ஆன்மாவைக் காட்டும் அளவே அவன் நமக்கு அவசியம் ஆவான்.
-டால்ஸ்டாய்
கலைஞன் பேசுவது நம் அறிவோடன்று, மனத்தில், நாம் தேடாமல் கிடைத்த அம்சமொன்றுண்டு. அதனாலேயே அது அழியாதது. அந்த அம்சத்தோடு தான் கலைஞன் பேசுவான். அன்பு அழகு அச்சரியம் ஆநந்தம் இந்த உணர்ச்சியே அது. -கோன்ராட்
நல்ல விஷயம் என்று எண்ணி நான் பாடுவதில்லை. என் மனோநிலைமை அல்லது என் வாழ்வில் ஏற்பட்ட சம்பவம், அதுவே என் பாடல்களுக்கு உற்பத்தி மூலம்.
-இப்ஸன்
அறிஞன் சமாதானப் பிரியர், ஆயுதம் பூண்பதில்லை. ஆனால் அவர் நாவோ கூடிவரக் கத்தியிலும் அதிகக் கூர்மையானது. அவர் பேனாவோ அதைவிட அதிகக் கூர்மை உடையது.
-ப்ரெளண்
ஒரு எளிய அழகான வாக்கியம் எழுதப் பல வருஷங்கள் ஒரு முகமாக உழைத்தால் முடியும் என்பதை அறிவேன்.
-டங்கன்
உண்மையான ஆசிரியனை உலகக் கஷ்டம் எதுவும் அடக்கிவிட முடியாது. ஒய்ந்துபோன ஆசிரியனை எவ்வித அதிர்ஷ்டமும் தூக்கி நிறுத்திவிட முடியாது.
-நாரிஸ்
படிப்போருடைய காலத்தை வீணாக்காமல் அதிகமான அறிவைக் கொடுக்கும் நூலை இயற்றும் ஆசிரியனே அதிகப் பயன் தருபவன் ஆவான்.
-ஸிட்னி ஸ்மித்
வாலிப ஆசிரியர்கள் தம் மூளைக்கு அதிகப் பயிற்சி கொடுக்கிறார்களேயன்றி போதுமான உணவு கொடுப்பதில்லை.
-ஜூபர்ட்
தெரிந்தவற்றைப் புதியனவாகவும் புதியனவற்றைத் தெரிந்தனவாகவும் செய்யக்கூடிய சக்தியே ஆசிரியனிடத்தில் நம்மை ஈடுபடுத்தும். -தாக்கரே
இதுவரை யாரும் கூறாததைக் கூறுவதொன்றே சிறப்பு என்று எண்ணற்க, இதற்கு முன் இதுவரை யாரும் கூறவில்லை என்று எண்ணுமாறு அதைக் கூறுவதும் சிறப்பே யாகும்.
-கதே
★ ★ ★
60. புத்தகத்தால் பெறும் புகழ்
பண்டிதர் என்பவர் படித்துப் படித்துக் காலத்தைக் கொல்லும் சோம்பேறிகளாவர்.
-பெர்னார்ட் ஷா
அயல் பாஷை எதுவும் அறியாதவன் தாய் பாஷையையும் அறியாதவனே.
-ஸெபயின்ட் பூவ்
பாண்டித்தியம் தலைக்குள் பல பொருள்களை நிரப்பும். ஆனால் அப்படிச் செய்வதற்காக அது மூளையை எடுத்து வெளியே எறிந்துவிடவும் செய்யும்.
-கோல்ட்டன்
பாண்டியத்தியமின்றி பாவனாசக்தி மட்டும் உடையவருக்குச் சிறகுகள் உண்டு. கால்கள் கிடையா.
-ஜூபெர்ட்
★ ★ ★
61. உரைநடை
ஆசிரியனுடைய உரை நடை அவனுடைய மனத்திற்குச் சரியான நகலாகும்.
-கதே
இயற்கையான உரைநடையைக் கண்டால் ஆச்சரியமும் ஆநந்தமும் உண்டாகின்றன. அதற்குக் காரணம் அதில் எதிர்பார்க்கும் வண்ணம் ஆசிரியன் ஒருவனைக் காணாமல் மனிதன் ஒருவனைக் காண்பதே யாகும்.
-பாஸ்கல்
ஆசிரியன் எதை எழுதாமல் விடுக்கின்றானோ அதைக்கொண்டே அவன் திறமையை நிர்ணயிக்க முடியும்.
-ஷில்லர்
உரைநடையின் மொழிகள் கவனத்தைக் கவருமானால் அந்த உரைநடை தவறானது. பெரியோர் நூலில் எத்தனை பக்கங்கள் படித்தாலும் உரைநடையின் மொழிகளில் கவனம் செல்லாதிருக்கும்.
-கோல்ரிட்ஜ்
உரைநடை எழுத விரும்பினால் உரைப்பதற்கு ஏதேனும் விஷயமிருத்தல் இன்றியமையாததாகும். ஆனால் விஷயம் ஒன்றுமில்லாதவனும் செய்யுள் செய்து விட முடியும்.
-கதே
சிறந்த எழுத்தாளர் பிறர் எழுதும் வண்ணம் எழுதாமல் தாம் எழுதும் வண்ணமே எழுதுவர்.
-மாண்டெஸ்க்யூ
இவர் எழுதுவதில் தெளிவில்லை என்று கூறுவோர் அப்படிக் கூறுமுன் தம் இதயத்தில் தெளிவுண்டா என்று ஆராய்தல் அவசியம். எழுத்து எழுத்தாகப் பிரித்து எழுதியிருந்தாலும் கண்ணுக்கு இருட்டில் ஒன்றும் புலனாகாது.
-கதே
தெளிவில்லாத உரைநடை படிப்போர்க்கு விளங்காத நடை எனவும், எழுதியவனுக்கு விளங்காத நடை எனவும் இருவகைப்படும். -மாரி
★ ★ ★
62. வாழ்க்கை வரலாறு
சரியாக ஆராய்ந்து பார்த்தால் சரித்திரம்" என்று ஒன்று இல்லை; உள்ளது ஜீவிய சரிதமே.
- லாண்டார்
சகல நூல்களிலும் அதிகமான சந்தோஷம் அளிப்பதும் உபயோகமானதும் ஜீவிய சரிதமே.
-லாண்டார்
உண்மையாக எழுதும் ஜீவிய சரிதம் எப்பொழுதும் உபயோகமே செய்யும்.
-ஜாண்ஸன்
எல்லா நூல்களிலும் ஜீவிய சரிதைகளே எல்லோர்க்கும் இனியன, பயன் அளிப்பன.
-கார்லைல்
நல்ல முறையில் நடத்திய ஜீவியத்தைப் போலவே நல்ல முறையில் எழுதிய ஜீவிய சரிதமும் அபூர்வமானதாகும்.
-கார்லைல்
★ ★ ★
53. சரித்திர உண்மை
முன்னாளில் நடந்தவற்றை அறியாவிடில் நாம் என்னாளும் குழந்தைகளே.
-ஸிஸரோ
எதைப்பற்றி எழுதினாலும் பெரிய எழுத்தாளர் எல்லாரும் சரித்திர ஆசிரியர்களே.
-லாண்டார்
சகலரும் ஏற்றுக்கொள்ளும் கட்டுக்கதை தானே சரித்திரம் என்பது?
-நெப்போலியன்
சரித்திரம் என்பது முன்மாதிரி மூலம் கற்பிக்கும் தத்துவ சாஸ்திரமே யன்றி வேறன்று,
-போலிங்புரோக்
சரித்திரம் என்பது மனித ஜாதியின் குற்றங்கள் குறைகள் அதிர்ஷ்டங்கள் அறிவீனங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் நூலேயன்றி வேறன்று.
-கிப்பன்
★ ★ ★
கருத்துகள்
கருத்துரையிடுக