திரு இலஞ்சி முருகன் உலா


பக்தி நூல்கள்

Back

திரு இலஞ்சி முருகன் உலா
பண்டாரக்கவிராயர்



திரு இலஞ்சி முருகன் உலா
ஆசிரியர்: பண்டாரக்கவிராயர்

      இப்புத்தகத்திலடங்கியவை
      1. முகவுரை ; காப்பு; திரு இலஞ்சி முருகன் உலா -மூலமும் குறிப்புரையும்
      1-முருகக்கடவுள் திருவவதாரம்; 2- தலப்பெருமை;
      3 -ஆறு படைவீடுகள்; 4 -அகத்தியர் தென்பால் வருதல்;
      5- அவர் இலஞ்சியில் இருவாலுகேசரைப்பிரதிட்டை செய்து பூசித்தல்
      6- அவர் திருக்குற்றமைடைந்து திருமாலைச் சிவபிரானாக்கல்;
      7- அகத்தியமுனிவர் துதிசெய்தல் (திருக்குற்றாலப்பெருமை)
      8- முருகக்கடவுள் பெருமை
      9.திருவிழா; 10- ஆறுநாளும் கொண்டருளும் திருக்கோலங்கள் ;
      11- அபிடேகம் முதலியன ; 12-திருவாபரணம் புனைதல்;
      13.உடன்வருவோர்; 14- வாத்தியங்கள் ;
      15.திருச்சின்னம்; 16-குழாங்கள்;
      17.குழாங்களின் கூற்று; 18.பேதை ;
      19-பெதும்பை: 20-மங்கை;
      21-மடந்தை; 22-அரிவை;
      23-தெரிவை ; 24.பேரிளம்பெண்.

    கணபதி துணை

    முகவுரை

    விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கண் மெய்ம்மைகுன்றா
    மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கண் முன்புசெய்த
    பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
    வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.
          -கந்தரலங்காரம்

    பாட்டுடைத்தலைவன் வீதியிற் பவனிவருகையில் ஏழுபருவத்தை யுடைய பொதுமகளிர் அவனைக் கண்டு மயங்கியதாகப் புலவராற் புனைந்து கலிவெண்பாவாற் பாடப்பெறும் தமிழ்ப்பிரபந்தம் உலாவாகும். இஃது உலாப்புறமெனவும் வழங்கும்; புறவுலாவென்பது அங்ஙனம் மாறிவந்ததென்பர் சங்கரநமச்சிவாயர்; நன்னூல், சூ. 267, உரை.

    தலைவன் பவனிவருதல் காப்பியங்களிலும் சிறப்பித்துப் பாராட்டப்பெறும். பெருங்கதையில், 'நகர்வலங்கொண்டது' என்னும் பகுதியிலும், சீவகசிந்தாமணியிலும், கம்பராமாயணத்தில் உலாவியற்படலத்திலும் அவ்வக் காப்பியத் தலைவர்களுடைய பவனிச்சிறப்புக்கள் கூறப்பட்டுள்ளன.

    உலாவிற் கூறப்படும் ஏழுபருவமகளிரும் பொதுமகளிரென்பதை, 'பக்குநின்ற காமம் ஊரிற் பொதுமகளிரொடு கூடிவந்த விளக்கமும் பாடாண்டிணைக்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர். அது பின்னுள்ளோர் ஏழுபருவமாகப் பகுத்துக் கலிவெண்பாட்டாகச் செய்கின்ற உலாச்செய்யுளாம்'. 'இனிஊரொடு தோற்றமும்பரத்தையர்க்கன்றிக் குலமகளிர்க்குக் கூறப்படாது' (தொல். புறத். சூ. 30-31, உரை) என்னும் பகுதிகளால் நச்சினார்க்கினியர் வற்புறுத்தியிருக்கின்றனர். கற்புடையமகளிர் பிறரைக்கண்டு காமுறுதல் அறமன்றாதலின் இவ்வரையறை அமைந்ததென்று தோற்றுகின்றது. உதயணன் உலாவந்தகாலத்தில் கற்புடையமகளிரல்லாத ஏனையோர் அவனைக் கண்டு காமுற்றனரென்பதைப் புலப்படுத்தி,

      "ஞாலந் திரியா நன்னிறைத் திண்கோள்
      உத்தம மகளி ரொழிய மற்றைக்
      கன்னிய ரெல்லாங் காமன் றுரந்த
      கணையுளங் கழியக் கவினழி வெய்தி
      இறைவளை நில்லார் நிறைவளை நெகிழ" (பெருங்கதை, உ. 7:53-7)

    எனக் கவிஞர் பெருமானாகிய கொங்குவேளிர் அமைந்திருக்கும் பகுதியும், சீவகன் உலாவருகையில் ஆசி கூறிய மாதரைக் கற்புடை மகளிரென்றும் மயங்கிய மாதரைக் கற்புடைய மகளிரொழிந்தோரென்றும் (சீவகசிந்தாமணி, 456-7) நச்சினார்க்கினியர் விளக்கி எழுதியிருக்கும் உரையும் இவ்வரையறையைப் புலப்படுத்தி நிற்றல் இங்கே அறிதற்குரியது.

    $$ உலாப் பிரபந்தத்தில் ஏழுமகளிருடைய பருவங்களுக்கேற்ற செயல்களாகிய சிற்றிலிழைத்தல், சிறுசோறடுதல், கழங்கு பந்து அம்மானையாடுதல், கிளி பூவைமுதலியவற்றோடு குலவுதல், யாழ் வாசித்தல், பொழிலாட்டு, புனல்விளையாட்டு, மலர்விழாவெடுத்தல், ஊசல் முதலியனவும் பாட்டுடைத்தலைவனது சிறப்புக்களும் தசாங்கமுதலியனவுமாகியவற்றிற் சில குறைந்தும் குறையாமலும் வரும்.

    ---------
    $$ உலாக்களின் இலக்கணங்களும் பிறவும் இதற்குமுன் என்னாற் பதிப்பிக்கப்பெற்ற உலாக்களின் முகவுரைகளால் அறியலாகும்.

    திரு இலஞ்சி முருகனுலாவென்பது இலஞ்சியென்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள முருகக்கடவுளைப் பட்டுடைத்தலைவராகக் கொண்டு பாடப்பெற்றது. இலஞ்சியென்பது திருநெல்வேலியைச் சார்ந்த திருக்குற்றாலத்துக்கு வடக்கே உள்ளதாகிய பழைய சுப்பிரமணியஸ்தலம்; திருக்குற்றாலத்துக்குரிய பரிவாரஸ்தலங்களுள் ஒன்றாக விளங்குவது. இங்கே அகத்தியமுனிவராற் பிரதிஷ்டை செய்யப்பட்ட இருவாலுகேசரென்னும் திருநாமத்தையுடைய சிவலிங்கப் பெருமான் எழுந்தருளியிருக்கின்றனர்; இங்கே பிரமதேவர் முதலியோர் பூசித்துப் பேறுபெற்றுள்ளார். இதற்குரிய ஸ்தலவிருட்சம் மகிழ் (இலஞ்சி-மகிழ்) இத்தல விஷயமாக ஸ்ரீ அருணகிரிநாதரால் இயற்றப்பெற்ற திருப்புகழ் சில உண்டு.

    இந்நூலாசிரியர் திருக்குற்றாலத் தலபுராணம் முதலியவற்றை இயற்றிய கவிஞர்பெருமானாகிய மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயருடைய முதற்புதல்வராகிய பண்டாரக்கவிராய ரென்பவர்.
    பண்டாரமென்பது முருகக்கடவுள் திருநாமங்களுள் ஒன்று. இந்நூலில், ‘’செய்யதிரு நாமஞ் சீரடியேற் கன்றளித்த, மெய்யன்றிருமலைமேல் வீற்றிருப்போன்"(400) என்று உள்ள குறிப்பால் இந்நூலாசிரியர் முருகக்கடவுளுக்குரிய திருநாமங்களுள் ஒன்றை யுடையவரென்பது தெரிகிறது. இவர் செய்தனவாக வேறுநூல் ஒன்றும் காணப்படவில்லை. இந்நூலினால், இவர் முருகவேளிடத்துப் பேரன்புடையாரென்பதும் திருக்குற்றாலத்தலத்தில் ஈடுபாடுடையவரென்பதும்தெரியவருகின்றன. பிற உலாக்களிற் புலவர் பலர் அமைத்துள்ள பலவகைமரபுகளை அறிந்து அவற்றிற் சிலவற்றை இதில் அங்கங்கே அமைத்திருக்கின்றார். இதன் நடையைப் பார்க்கும்போது இளமைப்பிராயத்தில் இந்நூல் இவரால் இயற்றப் பெற்றிருக்கவேண்டுமென்று தோற்றுகின்றது. இந் நூலில்உள்ள கண்ணிகள் 460; காப்புச்செய்யுள்-2; வாழ்த்துச்செய்யுள்-1.

    இந்நூலால், இத்தலம் மிகப்பழமையுடையது என்பதும் (9,14), முருகவேளாற்படைக்கப்பட்ட தென்பதும் (18-25), பிரம தேவர் (11) இந்திரன் (12) முதலியவர்கள் இங்கே பூசித்துப் பேறுபெற்றனரென்பதும், அகத்தியர் திருக்குற்றாலத்துக்குப் போகும்வழியில் இங்கே முருக்கடவுளை வழிபட்டு இருவாலு கேசமூர்த்தியைப் பிரதிஷ்டை செய்தனரென்பதும் (37-48), இத்தலம் தென்னாரியநாட்டைச் சார்ந்ததென்பதும் (387), சித்திராநதி இதற்குமுரியதென்பதும் (389), இங்கே கந்த ஷஷ்டியில் திருத்தேர்விழா நடைபெறுமென்பதும் (83) தெரியவருகின்றன. இங்கே திருக்கோயிலில் சரவணமண்டபம் (91) என்னும் பெயரையுடைய மண்டபம் ஒன்று உண்டு; இங்குள்ள நந்தவனம், "உய்யானம் பாடி"(317), "உய்யானஞ்சென்றே"(424) என்பவற்றிற் கூறப்பட்டுள்ளது. இந்நூலாசிரியருடைய காலத்தில் திருத்தேர்விழா தொண்டைவேளாளரும் வண்டூரென்னும் ஊரினருமாகிய சாமிநாதர் என்பவரால் நடத்தப்பெற்றது (81-2). இக்கோயிற்பணிக்கொத்தைச் சார்ந்த புன்னைவனக்குருக்கள், மண்டலிகன்ஆண்டான், ஸ்தானீகன்முத்தையன் என்பார் இதிற் கூறப்படுகின்றனர். திருவிழாக்காலத்தில் முருகக்கடவுள், முதல்நாள் பிரமதேவராகவும் இரண்டாம்நாள் திருமாலாகவும் மூன்றாம்நாள் உருத்திர மூர்த்தியாகவும் நான்காம்நாள் மகேசுவரராகவும் ஐந்தாம்நாள் சதாசிவமூர்த்தியாகவும் ஆறாம்நாள் வெள்ளிமயில் வாகானாரூடராகவும் திருக்கோலங்கொண்டு உலாவந்து ஏழாம்நாள் திருத்தேரிற் பவனிவருவது வழக்கம்(84-8).

    அகத்திய முனிவர் இத்தலத்தில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்து வழிபட்டபின்னர்த் திருக்குற்றாலஞ்சென்று திருமாலைச் சிவபிரானாகச் செய்து வழிபட்டுத் துதித்ததாக உள்ள பகுதியில் திருக்குற்றாலப்புராணத்திலுள்ள வரலாறுகள் பல சுருக்கிக் கூறப்பட்டுள்ளன. இந்தத்தலம் திருக்குற்றாலத்தோடு தொடர்புடைய தென்பது இப்பகுதியால் விளங்குவதோடு, "சித்திரமா மன்றத் திருநடனத் தானருள்வி,சித்திரமா மன்"(198), "திரிகூடத்தோன்றலொரு மகனை"(284), "திரிகூடத் தைம்முகனார் வேண்ட வரும், ஆறுமுகன்" (401-2), திரிகூடத்தேவன்-நயமாகத் தந்தபிள்ளை"(419-20), "வற்றா வடவருவி யான் மாந்தன்"(436) என்பவற்றாலும் புலப்படுகின்றது. கந்தபுராணத்திலுள்ள செய்திகளாகிய முருகக்கடவுள் திருவவதாரம் முதலியன இந்நூலின் முதலிலும், அரிவைப்பருவத்தில் அரிவை சித்திரமெழுதிக்காட்டுவதாக அமைந்துள்ள பகுதியிலும் சொல்லப் பட்டுள்ளன. இதிற் கூறப்பட்டுள்ள சுப்பிரமணியஸ்தலங்கள்: கதிர்காமம், கந்தமாதனம், குன்றுதோறாடல், சோலைமலை, திருச்செந்தூர், திருத்தணிகை, திருப்பரங்குன்று, திருமலை, திருவாவினன்குடி, திருவேரகம், வள்ளியூர், வேள்விமலை என்பன.

    முருகக்கடவுளே திருஞானசம்பந்த மூர்த்திநாயனாராக அவதரித்தாரென்னுங்கொள்கையினர் இவ்வாசிரியரென்பது, "பாவ"னைத்தும், வாசிதீர் காசுபெற மண்டலத்திற் சொன்னவனை" (151-2), "பெண்ணைப்பெண் ணாக்கிவிடப் பேதலித்த தாகாமல்"(167), "கோலுசமண், ஆற்றை யொழியவைத்தா யல்லையோ" (168-9), "வாசிபெறக் காசுமுன்னாள் வாங்கினோன்"(237) என்பவற்றால் அறியப்படுகிறது." திருமுருகாற்றுப்படையைச் செப்பிய நக்கீரன், வெருவு பயந்தவிர்த்த வீரன்"(66), "அற்புறு நக்கீரன் புகண்மாலை யேந்தினீர்"(165-6), "கீரன் மெய்யாமொழி"(227) என்பவற்றில் நக்கீரதேவரையும், "பாடுந் திருப்புகழைப் பன்னிரண்டு நற்புயமும், சூடுங் கருணைச் சுவாமி"(68),"திருப்புகழும், சேந்தசெவிக் கொண்டருளிச் செய்தபின்னர்"(113) என்பவற்றில் திருப்புகழையும்,"ஆசிலாப், பாவி லருணகிரி பைந்தமிழின் மாரிபெய்ய,நாவிற் றிருப்பெயரை நட்டோனை"(152-3), "கந்த ரனுபூதி சொன்னகிளி"(205), "போத வருணகிரி"(227) என்பவற்றில் அருணகிரிநாதரையும், 113-ஆம் கண்ணியில் கந்த புராணத்தையும், 227-ஆம் கண்ணியில் பொய்யாமொழிப்புலவரையும் பற்றிய செய்திகள் வந்துள்ளன. முருகவேளுக்குரிய கார்த்திகைத்திருநாளும்(427) கந்த ஷஷ்டி விரதமும்(437) இதிற் கூறப்படுகின்றன.

    இந்நூலாசிரியர் பேதையைப்பற்றிக்கூறுகையில் அப்பருவத்திற்குரிய சிற்றிலிழைக்கும் செய்தியை அமைக்கின்றார். அவள் குதலைச் சொல்லை, "பன்னியுரைக்கும் பதினெட்டுப் பாஷையன்றி, இன்னுமொரு பாஷை யெனுமொழியாள்"(178) என்று வருணித்திருத்தல் இன்பத்தை ஊட்டுகிறது. "குஞ்சரத்தை யிந்தக் குடத்தடைத்துத் தாருமென்றே, பஞ்சரிக்கு மந்தப் பருவத்தாள்", (183) என்பதில் பேதைபருவ மனப்பான்மையைத் தெளிவாகப் புலப்படுத்துகிறார்.

    பெதிம்பைப்பருவத்தில் அப்பருவத்துக்குரிய கழங்காடலும் மங்கைப்பருவத்தில் மங்கை பந்தாடுதலும் சொல்லப்படுகின்றன. பந்தாட்டத்தைப்பற்றிக் கூறியுள்ள பகுதியில் அமைந்துள்ள சந்தம் இடத்துக்கு ஏற்றதாக விளங்குகின்றது.

    மடந்தைப்பருவத்தில் மடந்தை முருகவேளைத் துதித்து யாழ்வாசித்தாளென்ற செய்தி காணப்படுகிறது. அப்பகுதியில் இசை நூற்செய்திகள் சிலவும், காந்தாரி, காம்போதி, கல்யாணி, தேவகாந்தாரி, மாளவி, தோடி, வராளி, மலகரி, வராடி, நாட்டை, பயிரவி, பூபாளம், மோகனம், முகாரி, செயசாட்சி என்னும் இராகப்பெயர்களும் சொல்லப்படுகின்றன.

    அரிவைப்பருவத்தில் அரிவை முருகவேள் திருவிளையாடல்களை ஓவியத்தில் எழுதிப் பிறருக்கு எடுத்துக் கூறுவதாக ஒரு செய்தி உள்ளது. தெரிவைப்பருவத்தில் முருகவேளுக்குரிய தசாங்கங்கள் கூறப்படுகின்றன. அவை வருமாறு:- (1) மலை: கந்தமாதனம், (2) நாடு: தென்னாரியநாடு, (3) நகர்: இலஞ்சி, (4) ஆறு:சித்திராநதி, (5) யானை: ஐராவணம், (6) படை: வேல், (7) கொடி: சேவல், (8) முரசு: மும்முரசு, (9) மாலை: கடம்பு, (10) ஆணை: குமரன்றுணையென்னும் ஆணை.

    பேரிளம்பெண்பருவத்தில் பேரிளம்பெண் யாவரினும் இளமையுடையவர் யாரென்று வேதியர்களைக் கேட்க, அவர்கள் ஒவ்வொருவராக எடுத்துக் கூறிப் பிறகு முருகவேளே என்றும் இளமையுடையவரென்னும் முடிவுக்கு வருவதாக ஒருசெய்தி கூறப்படுகிறது. அன்றி இப்பருவத்தினள் ஒரு கடப்பங்கன்றைக் கொண்டு அதற்கு முருகக்கடவுள் திருநாமத்தை இட்டு வளர்த்து அது மலர்ந்தகாலத்தில் அதன் மலரை முருகவேளுக்கு அணிய எண்ணினாளென்ற வரலாறு காணப்படுகிறது. திருவாரூருலாவில், பெதும்பைப்பருவப்பெண் ஏழு செவ்வந்திச் செடிகளை ஆதிவிடங்கர் முதலிய ஸப்தவிடங்கருடைய திருநாமமிட்டு வளர்த்துவந்து வீதிவிடங்கரென்னும் பெயரையுடைய செடி மலர அதன்மலரைத் திருவாரூர்த் தியாகராசப்பெருமானுக்குச் சூட்ட எண்ணினாளென்றுள்ள பகுதியைப் பின்பற்றி இஃது அமைக்கப்பெற்றது போலும்.

    யமகம், திரிபு, சந்தம், மடக்கு, சிலேடை, உவமை முதலியவற்றை இந்நூலில் அங்கங்கே காணலாம். "பாந்தத் தயலென்றும் பாரவவ்வில் ரண்டென்றும், மாந்தர்களை யேவு மதர்விழியாள்" (372), "ஒற்றின், தொடையாம் பதினெட்டிற் சொன்னபதின் மூன்றே, இடையா யுடைய விடையாள்" (375-6) என்பவற்றில் நெடுங்கணக்கைப்பற்றிய செய்திகளாற் சில பொருள்களை இந் நூலாசிரியர் அமைக்கின்றார். பச்சம் (179), குமிந்து (266), ரண்டு (306), போச்சுது, வாச்சுது (443) முதலிய மரூஉ மொழிகளும், "உனதுசித்தம்" (16), "காரியமோ வீரியமோ" (453) என்னும் உலகவழக்குக்களும்: அளகை (132), கொஞ்சம் (449, 451), கதம்பு (269), கோரித்து (299), சரப்பளி (268), சாலுவை (422), செக்கணி (270), சொம்பு (371), பஞ்சரித்தல் (183), பாந்தம் (113), பிசிப்பு (265), பெண்டுவைதல் (365, 451), பேதலித்தல், (167) மூப்பியர் (211), வங்கணம் (455) முதலிய பதங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

    இந்நூலின் ஏட்டுப்பிரதியொன்று பலவருஷங்களுக்கு முன் திருவாவடுதுறையாதீனத்தில் திருமுகப்பணிவிடை இயற்றிவந்த ஸ்ரீமுத்துக்குமாரசாமி பிள்ளையவர்களிடமிருந்து கிடைத்தது. இஃது எளிய நடையில் அமைந்திருத்தலின் மிகச்சுருக்கமாகவே குறிப்புரை எழுதப்பட்டது.

    இதனைக் கலைமகளில் வெளியிடுவித்த இப்பத்திரிகையின் அதிபரும் நிர்வாகப்பத்திரிகாசிரியருமான ஸ்ரீமான் ரா. நாராயணஸாமி ஐயர், பி.ஏ., பி.எல். அவர்களுக்கு இதன்முகமாக எனது நன்றியறிவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    'தியாகராஜவிலாஸம்'
    திருவேட்டீசுவரன் பேட்டை,
    இங்ஙனம்,
    12-1.35. வே. சாமிநாதையர்.


    கணபதி துணை

    திரு இலஞ்சி முருகன் உலா

    காப்பு
    (வெண்பா)
    1 ஏர்கொண்ட தென்னிலஞ்சி யீசன் குருபரன்மேற்
    சீர்கொண் டுலாமாலை சேர்க்கவே-நார்தருமால்
    ஐந்துகர நால்வாய்மூன் றானவிழி யோரிருதாள்
    எந்தை யொருமருப்ப னே.
    2 ஒண்டா மரைமலர்த்தாள் வேல னுலாத்தமிழ்க்குத்
    தண்டா மரையாள் தமிழ்முனிவன்-பண்டருமோர்
    அப்பன் முதன்மூவ ரான் திரு வாசகத்தேன்
    அப்பனுமே காப்ப ரடுத்து.

    நூல்
    (கலி வெண்பா)

    [1. முருகக்கடவுள் திரு அவதாரம்]
    1 சீர்கொண்ட மாலுந் திசைமுகனுந் தேவர்களும்
    கார்கொண்ட கந்தரனை கைகுவித்தே-ஏர்கொண்ட
    2 நாடெங்கே யெங்கடிரு நங்கைமா ரெங்கேயெம்
    வீடெங்கே யென்று மெலிவுரைப்ப-வாடுமுங்கள்
    3 வாட்டங்க ளெல்லா மதலை தவிர்ப்பனென்று
    நாட்டமிசை யோராறு நற்பொறிகள்-ஈட்டியே
    4 அக்கினிநல் வாயு கங்கை யாம்வா கனமீதில்
    உய்க்கச் சரவணத்தி னுள்ளுருவாய்த்-தக்கபுகழ்
    5 ஆராறு மீன்முலைப்பா லாரவுண்டு வாழுங்காற்
    சீரார் சிவபெருமான் றேவியுடன்-பேரான
    6 பொய்கைக் கரையிற் புகுதுங்கான் மைந்தரைக்கண்
    டைய னனுக்கிரகத் தாலெடுத்தே-மெய்யுமையாள்
    7 ஈராறு காலை யிருகாலாத் தானிருவிப்
    பேராத வன்பாற் பிரியமுற்றாள்-சீராளன்
    8 அஞ்சுமுகம் போதவென் றாறுமுகத் தோடெழுந்து
    வஞ்சச்சூர் மாய்க்கவந்த வான்பொருளான்-தஞ்சமுற்ற

    [2. தலப்பெருமை]
    9 பின்னவர்க ளோடே பிரியமுறு மந்நாளும்
    தென்னிலஞ்சி யாகச் செழித்ததலம்-மின்னயிலான்
    10 வெள்ளிக் கயிலை விளையாடு மப்பொழுதும்
    உள்ளக் களிப்பா லுகந்ததலம்-தெள்ளுமறைப்
    11 பூமேவு நான்முகத்தோன் பொன்னிலஞ்சி யென்றுதிரு
    நாமேவு வாக்கா னவின்றதலம்-காமேவு
    12 கற்பகநா டாளி கருதி யிணைமலர்த்தாள்
    அற்பகலு நாடி யருச்சித்துப்-பொற்புடனே
    13 போற்றாரை யெங்கோன் பொருதுவெல்லப் பொன்னாட்டை
    மாற்றா தடிவணங்கி வாழ்ந்திருந்தான்-ஏற்றார்வாழ்
    14 குற்றால மிந்தக் குவலயத்துண் டாகுமுன்னே
    பற்றா யிருந்த பழையபதி-கற்றாரோ
    15 டந்நாட் கயிலைக் கயன்வருங்கால் வேதத்தின்
    முன்னாம் பொருளை மொழிகென்ன-என்னாலே
    16 ஊகமில்லை யையா வுனதுசித்த மென்றுரைக்கச்
    சேகரத்திற் குட்டிச் சிறைப்படுத்தி-வாகயிலான்
    17 அண்டபகி ரண்ட மசரஞ் சரங்களெல்லாம்
    உண்டுபண்ணு முன்னே யுகந்துகந்து-பண்டதும்பு
    18 கோயில் படைத்துக் குலவு மதில்படைத்து
    வாயிலொரு நான்கு வகைபடைத்துத்-தாயினிலும்
    19 அன்பு படைத்த வரிய குடிபடைத்தே
    இன்பம் படைத்த வெழில்படைத்து-முன்பெல்லாம்
    20 வாழை பலாப்படைத்து மாங்கனிகள் தேன்பிலிற்றப்
    பாளைக் கமுகு பலபடைத்து-வேளையே
    21 நேராம் புருடரெலா நேரிழையா ரேயிரதி
    யாநா மெனவே யருள்படைத்துச்-சீரான
    22 நீதிமன்னர் செங்கோ னெறிபடைத்துப் பைந்தொடிமார்
    காதலறுங் கற்புக் கதிபடைத்து-மாதங்கள்
    23 மும்மழைகள் பெய்யு முறைபடைத்துப் பைங்கூழ்கள்
    செம்மைபெற வோங்குந் திருப்படைத்து-மும்மைபெறத்<
    24 தங்கையினா லள்ளியிடா தார்பிச்சை பிச்சையென்ன
    எங்கோ னிருந்து படைத்தவிடம்-மங்காத
    25 தென்னிலஞ்சி யென்றாற் செழிக்கும்வள மத்தனையும்.
    என்னி லியம்ப வெளியதோ-மன்னு

    [3. ஆறு படைவீடுகள்]
    26 திருப்பரங் குன்றாமற் சேரடியார் போற்றும்
    திருப்பரங் குன்றாருஞ் செவ்வேள்-விருப்பான
    27 சீரலைவா யாகாமற் சிந்தை நினைப்பருளும்
    சீரலைவா யாளுந் திருக்குமரன்-ஆரத்
    28 திருவாவி னன்குடியா மென்னச் சிறந்த
    திருவாவி னன்குடிவாழ் தேவன்-பெருவாய்மை
    29 ஏரகத்தா ரிவ்விடத்தா ரென்றிமையோர் தாம்புகழும்
    ஏரகத் தார்வா னெழிலயிலான்-பாரகத்தில்
    30 குன்றுதோ றாடுங் குலமஞ்ஞை வாகனத்தான்
    குன்றுதோ றாடுங் குகப்பெருமான்-மன்றல்சேர்
    31 வண்டானஞ்சோலை மலைசூ ழுலகின்மிக்க
    வண்டானஞ் சோலை மலைக்கிழவன்-கண்காதங்
    32 கோராறு மோராறு மோராறு மோராறும்
    ஈராறு கையு மினிதுடையான்-ஏராரும்
    33 வள்ளிக் கொடிபடர வாய்த்த தனிக்கொம்பு
    தெள்ளமுதத் தெய்வச் செழுங்கொடிக்கு - மெள்ளவே
    34 ஏறுங் குமரா விளங்கொம்பு மேற்குடைய
    ஆறுடைய தென்னிலஞ்சி யாறுமுகன் - வீறியதோர்

    [4. அகத்தியர் தென்பால் வருதல்]
    35 தெக்கணபாற் கும்பன் றிரும்பி வரும்வழியில்
    அக்கணமே விந்தா சலமடக்கி-மிக்கதொரு
    36 வில்வலன்வா தாவியையும் வென்றுபுவி மீதினிலே
    சொல்லரிய காவேரி தோற்றுவித்து - நல்லதொரு

    [5. அவர் இலஞ்சியில் இருவாலுகேசரைப் பிரதிட்டை செய்து பூசித்தல்]
    37 தென்னிலஞ்சி மேவிச் சிவகுருவைப் பூசித்தே
    மன்னுதிரு வெண்மணலை வாணித்துச் - சென்னி
    38 வணங்கிச் சிவபூசை வாய்ததெனப் போற்றிக்
    குணங்குறிகள் காணாக் கொழுந்தை - இணங்கியே
    39 பின்னு மகிழ்ந்து பிரியமுட னப்படியே
    துன்னுசிவ பூசை தொடுத்தியற்றி - இந்நிலத்தில்
    40 என்று மழியா தொழுபுவிக்குங் கீழ்வோராய்
    நின்றநிலை கண்டு நிலைகலங்கி - அன்று
    41 பெருமை யிருவரையும் பேரன்பு மொன்றா
    இருவாலு கேசனென வேத்தி-அருமையாய்
    42 நாதமாய் விந்துவாய் நாதவிந்து வுங்கடந்த
    போதமாய் வேதப் பொருளாகிச்-சோதிபெறு
    43 சுத்தவித்தை யீசுரமாய்ச் சொல்லுஞ்சா தாக்கியமாய்ச்
    சத்திசிவ மானசிவ தத்துவமாய்-வித்தியா
    44 தத்துவங்க ளேழுமாய்ச் சாருமறு நான்கான
    சித்திபெறு மான்மதத்வச் செய்தியாய்-முத்திபெறு
    45 பஞ்ச கலையாய்ப் பகர்மூல மந்திரமாய்
    விஞ்சு கலாதிகளாய் மேவியே-செஞ்சொல்
    46 அயனா யரியா யரியயனுங் காணா
    இயலா ரிருவாலு கேசன்-நயமாய்
    47 அவனவளு மல்லா லதுவுமா மெங்கோன்
    இவனா மிருவாலு கேசன்-சிவமணமே
    48 வீசும் படிக்கு விளங்கியதன் னான்மார்த்த
    ஈசுரனை யங்க ணிருத்தியே-தேசுபெறு

    [6. அவர் திருக்குற்றாலமடைந்து திருமாலைச் சிவபிரானாக்கல்]
    37 49.தென்பாலே குற்றாலஞ் சென்றுதிரு மாலையவன்
    அன்பாலே யென்பாலே யாகவென-முன்பாலே
    50 போற்றிமகு டாகமமே பூண்டபரார்த் தப்பூசை
    ஏற்றி லிருப்பவனே யென்றுதான்-சாற்றியே

    [7. அகத்தியமுனிவர் துதிசெய்தல்] (திருக்குற்றாலப் பெருமை)
    51 சத்தா யசத்துமாய்ச் சத்தசத்து மாகியொரு
    சித்தாய் விலையாடுஞ் சீர்மழுவோய்-நித்தமாய்
    52 மண்ணாகி நீராய் வசுவாகி வாயுவாய்
    விண்ணாகி யோங்கும் விளக்கொளியாய்ப்-பெண்ணாகி
    53 ஆணா யலியா யசரஞ் சரமாகி
    ஊணாகி யுண்ணு முடலுயிராய்க்-காணாத
    54 ஆதியாய்ச் சோதியா யாதியந்த மில்லாத
    பூதியா யைம்முகத்துப் புத்தேளாம்-நீதி
    55 வடவருவித் தீர்த்த மகிமையாய் போற்றி
    திடமுடைமும் மூர்த்திசீர் போற்றி-அடலுடைய
    56 தென்றலங்கால் கொண்டுபவத் தீயமறை யோன்பாவம்
    அன்றுதான் போக்கு மருள் போற்றி-குன்றுசூழ்
    57 வானோர் சிவத்ரோக மாய்த்தவர்கள் வீடுபெறத்
    தானே யருட்கமைத்த தாள்போற்றி-கானார்
    58 நரிவேட னோர்வலத்தா னாதாந்த வீடு
    புரிவா யளித்த புகழ்போற்றி-கரிவிருப்பாம்
    59 பூசைக்கு வீடளித்த புண்ணியா போற்றியொரு
    பேசு கவிப்பன் பிழை பொறுத்துத்-தேசுபெறு
    60 வீடளித்தாய் வேதியன்றன் மெய்த்தாதைக் காநரகக்
    காடொழித்தாய் போற்றி கழல்போற்றி-சாடுநற
    61 வுண்ட மறையோன்ற னுட்சிறந்த பாவமெலாம்
    கண்டறுக்குந் தீர்த்தக் கரையானே-வண்டணுகாச்
    62 சோலையாய் போற்றி துணருடைய பொன்னிதழி
    மாலையாய் சித்ரசபை வாணனே-சாலப்
    63 பொறுமை யருட்கடலே போற்றியென வேத்திக்
    குறுமுனிவன் போற்றியகுற் றாலம்-திறமாக

    [8. முருகக்கடவுள் பெருமை]
    64 ஏர்வலப்பால் வாழ விருவாலு கேசுரனார்
    சீரிடப்பால் வாழ்வு சிறக்கவே-ஓரிலஞ்சி
    65 தன்னில் நடுவாழுஞ் சண்முகசிந் தாமணிநீள்
    தென்னிலஞ்சி மேவுந் திறற்கடம்பன்-பன்னித்
    66 திருமுருகாற் றுப்படையைச் செப்பியநக் கீரன்
    வெருவு பயந்தவிர்த்த வீரன்-மருவாத
    67 சிங்கமுக னானைமுகன் றீயவொரு சூரபன்மன்
    அங்கவரை மாய்த்த வறுமுகவன்-துங்கமுறப்
    68 பாடுந் திருப்புகழைப் பன்னிரண்டு நற்புயமும்
    சூடுங் கருணைச் சுவாமிமிக-வாடியவப்
    69 புத்தேளி ருக்கும் புரந்தரற்கும் விண்ணுலகில்
    தத்தம் பதிநிலைமை தானளித்தோன்-சித்தமகிழ்ந்
    70 திந்திரனார் தம்மகளை யேய்ந்துமணங் கொண்டருளிச்
    சுந்தரஞ்சேர் மான்மகளாந் தோகைக்காச்-சந்திரனேர்
    71 ஆறு கருணை யழகுமுகங் காட்டாமற்
    கூறுமொரு வேங்கைக் குலமரமாய்-வீறியே
    72 நின்று வருந்தி நெடுங்குறவர் வந்தாட
    அன்று வலிய வணைந்தகுகன்-சென்றுபுரி
    73 தாகமார் நாரதனார் தாம்செயும்யா கத்தகரை
    வாகனமாக் கொண்ட வடிவேலன்-பூகஞ்சூழ்
    74 மன்னிலஞ்சி சூழு மலரிலஞ்சி யுஞ்சூழ்ந்த
    தென்னிலஞ்சி வாழுந் திருக்குமரன்-என்னையே
    75 ஏழு பிறப்பு மினிப்பிறவா தாளவந்து
    வாழு மிலஞ்சி வடிவேலன்-ஊழிக்கும்
    76 காய்த்த கருப்பிணிக்குக் கான்மருந்தா யென்றனக்கு
    வாய்த்த விலஞ்சி வடிவேலன்-ஆய்ப்பாகர்
    77 முன்னுங் குருவெனக்கு முக்கால முங்குருவா
    மன்னு மிலஞ்சி வடிவேலன்-பொன்னுலகோர்

    9. திருவிழா
    78 பூவுலகோ ரெண்டிசையோர் பொன்மா லயனுடனே
    ஏவருங் காட்சி யெமக்கென்ன-மேவியே
    79 வீறுகொண்டு விண்ணேறி மேய வருவதெனக்
    கூறுகொண்ட சேவற் கொடியேற்றிச்-சாறுகண்டே
    80 ஆலயத்துண் மேவா வணிவிலங்கு புண்மரங்கள்
    வேலையற்றுப் போற்றும் விழாவிலே-சீலத்துத்
    81 . தென்னனோ சோழனுடன் சேரனுமே வந்தேத்தப்
    பொன்னிலத்தோர் போற்றிப் புகழ்விழவில்-மன்னுதொண்டை
    82 மண்டலத்தில் வண்டூரில் வாழ்சாமி நாதனெனும்
    தெண்ட னடாத்துந் திருநாளில்-எண்டிசையும்
    83 கந்தசட்டி யென்று கருதுகின்ற வைப்பசியிற்
    செந்தமிழோர் போற்றுந் திருநாளிற்-பந்தமற
    10. ஆறுநாளும் கொண்டருளும் திருக்கோலங்கள்
    84 வந்தொருநாள் போற்றினரை வாழரம்பை மார்தேவர்
    சிந்தையொடு போன்றுந் திருநாளில்-முந்தொருநாள்
    85 பங்கயத்தோ னாகிப் பருதி யணிந்தருளும்
    செங்கையன்போல் நாளிரண்டிற் சேர்ந்தருளித்-திங்களணி
    86 தேவ வுருத்திரனாச் சீர்மூன்றி னாலாநாள்
    ஏவ லுறுதகரி லீசுரனா-ஆவலுடன்
    87 விள்ளுஞ் சதாசிவமா வெள்ளிமயில் வாகனத்தில்
    தெள்ளு மனுக்கிரகஞ் செய்வனெனத்-துள்ளலைபோல்
    88 வாத்தியமெங் குந்தொனிப்ப வல்ளியம்மை தெய்வானை
    ஏத்துதிருப் பள்ளி யெழுந்தருளி-நீத்தம்போற்

    11. அபிடேகம் முதலியன
    89 பாலாடித் தேனாடிப் பைங்கருபஞ் சாறாடிச்
    சேலாருங் கங்கை திளைத்தாடிச்-சாலவே
    90 வீறுடைய வுட்சாத்து மேற்சாத்துங் கொண்டிருக்குக்
    கூறு திருப்பூசை கொண்டருளி-ஆறுதிரு
    91 முண்டத்து நீறணிந்து முத்திச் சரவணமா
    மண்டபத்தி லாசனத்தில் வந்திருந்தே-அண்டரெல்லாம்
    92 போற்றுந் திருவாசற் பொன்னின் மணிக்கதவம்
    ஏற்ற திருக்காப் பியலணிந்து-சாற்றரிய

    [12. திருவாபரணம் புனைதல்]
    93 பன்னிரண்டு வெய்யோர் பணிந்துசெவி சாற்றுதல்போற்
    பன்னிரண்டு குண்டலமும் பார்த்தணிந்து-துன்னவே
    94 கட்டுவடங் கட்டிக் காண்சன்ன வீரமிடாச்
    சட்டமாக் கண்ட சரம்பூட்டி-இட்டமாப்<
    95 பொன்மலைக்குப் பொன்மௌலி பூட்டுதல்போ லோராறு
    நன்முடிக்குப் பொன்முடிக ணன்கியற்றித்-தொன்மைபெறு
    96 பாற்கடலிற் றெள்ளமுதைப் பையத் திரட்சிசெய்து
    கோக்கல்போற் றண்டரளக் கோவையிட்டுத்-தீர்க்கமாத்
    97 தொண்டரிடத் தன்புந் தொடர்கருணை யும்பெருகி
    மண்டிய மார்பில் வழிவந்தவோ-மிண்டுபுரி
    98 வன்சூரை மாய்த்தவந்த மாசீர்த்தி யும்விறலும்
    இன்சீரோ டெய்தியவோ வீங்கென்னத்-தென்மலயம்
    99 வாய்த்தவகிற் கட்டை வழங்குபனி நீர்தோய்த்துத்
    தேய்த்தநறுஞ் செஞ்சாந்தின் சேறணிந்து-ஆர்த்தெழுந்த
    100 சூரன் றனைச்சயித்தே தோகையெனக் கொண்டவெற்றி
    வீரமெனுந் தொங்கல் விசயமோ-வாரமதா
    101 வானக் குலக்கொடிதான் வைத்தமண மாலையோ
    கானக் குறத்திதருங் கண்ணியோ-தேன்மொழியார்
    102 பெண்கடப்ப வோமதவேள் பேதலிக்க வோவென்ன
    வண்கடப்ப மாகம் வனைந்தருளித்-திண்பொன்னின்
    103 மேருவினில் வெய்யோன்றான் வீற்றிருந்த தேய்பவே
    ஆரும் பதக்க வணிபூண்டு-சீருடனே
    104 மின்னங் கொருவடிடாய் வீற்றிருந்த தொப்பவே
    பொன்னகல முப்புரி நூல் பூணுவித்துத்-தன்னிகரில்
    105 நல்லதரு வென்னவளர் நான்மூன்று கைகளிலும்
    சொல்லரிய கங்கணங்கள் சூழ்வித்தே-எல்லவிர
    106 மன்னு நவமணியால் வண்ணமுறச் செய்ததொரு
    மின்னுதர பந்தனமும் வீக்கியே-சொன்னமதாற்
    107 கம்மியனாற் செய்யக் கருத்தில்லா வித்தாரச்
    செம்மையுறு பொன்னரைநாண் சேர்வித்து-விம்மவே
    108 இட்டவிழை யாயிரம்பொ னேற்றவிலை யாமறியாப்
    பட்டுடையோ டுத்தரியம் பாங்கமைத்து-மட்டிலாப்
    109 பொற்சிலம்பிற் றாழ்வரையிற் பொற்றைகளை யிட்டதெனப்
    பொற்சிலம்பு பொற்காலிற் பூட்டியே-நற்புகழ்சேர்
    110 ஓராறு நன்முடிமே லோங்கியவான் வில்லென்னச்
    சீரார் திருவா சிகைசேர்த்துப்-பேரான
    111 ஆதவனோர் காற்றவிசா வன்றுநின்ற தேய்க்குமெழிற்
    சீதநிலைக் கண்ணாடிச் சீர்பார்த்து-வேதமொழி
    112 ஒருந் தமிழு மொருவன்மொழி வாசகமும்
    பாரிற் றிருவிசைப்பா பல்லாண்டும்-சீர்சிறந்த
    113 காந்தப் புராணக் கவியுந் திருப்புகழும்
    சேந்தசெவிக் கொண்டருளிச் செய்தபின்னர்-பாந்தமாய்ச்

    [13. உடன்வருவோர்]
    114 சொன்னநிலத் தோர்களுக்காத் தூதுசென்ற தம்பியெனும்
    மன்னன் றனிவீர வாகுவுடன்-பின்னவரும்
    115 மற்றைய வீரர்களு மாபூதச் சேனைகளும்
    கொற்றமுசு குந்தக் குரிசிலுடன்-பற்றுமனத்
    116 தொண்டருடன் பத்தசனர் சொல்லரிய சீர்த்திபெறும்
    அண்டருட னல்ல வடியாரும்-மண்டிவரத்
    117 தென்னிலஞ்சி யாற்குச் சிவார்ச்சனைபோற் பத்திசெயும்
    பொன்னுடைய புன்னைவனம் போற்றிவரத்-துன்னுகுகன்
    118 தொண்டு விரும்பியவன் றெண்டருக்கே தொண்டுசெய்யும்
    மண்டலிக னாண்டான் வணங்கிவரத்-தொண்டுசெயும்
    119 தானீக னாகித் தலத்தைப் பிரபலஞ்செய்
    மானபரன் முத்தையன் வாழ்த்திவரத்-தீனமில்லாத்
    120 தானத்தார் நல்ல தவத்தார்க டானத்தார்
    ஆன புவியோ ரனைவோரும்-வானில்வரும்
    121 இந்துவைச்சூழ் தாரகைபோ லெண்புவியு மோர்காலம்
    அந்த முறுங்கடல்க ளார்த்தென்ன - முந்தி
    122 இரைப்பப் புரந்தரனா ரேந்திழையா ளாறு
    தரத்தின் முகவழகைத் தான்கண்-டுரைப்பதற்கும்
    123 எட்டாத வின்பவெள்ள மேன்றமட்டும் வாரியுண்டு
    மட்டாருங் கொங்கை மலைவளரக்-கட்டார்கொள்
    124 மான்மகளார் முன்செய்த வன்கண்மைக் குள்ளுருகி
    மீன்விழியா லானந்த மெய்யொழுக்கத்-தேன்மொழியாள்
    125 ஆன திலோத்தமையு மாடரம்பை மேனகையும்
    மானி னுருப்பசியு மற்றோரும்-பானல்சேர்

    14. வாத்தியங்கள்
    126 கண்ணி னிருவரையுங் கைகூப்பிச் சூழ்ந்துவரப்
    பண்ணின் முறையே பதலைதுடி - தண்ணுமை
    127 ஓர்காளம் பம்பை யொருகட் பறைதவில்
    சீர்முழவம் பேரி திடிமமொலி - ஆர்தக்கை
    128 கல்லவடந் தேர்கரடி கைபடக மொண்டிமிலை
    சல்லரிநன் மாமுருடு தாமுழங்க - நல்லசந்துத்

    [15. திருச்சின்னம்]
    129 தூகந்த மாதனத்தோர் தோகை யிருவர்புணர்
    தூகந்த மாதனத் தோன்வந்தான்-பாகமதிற்
    130 பானலைவாய்ப் பைங்குயிலார் பாவை யிருவர்விருப்
    பானலைவாய்ச் சூரன் பகைவந்தான்-தானம்வளர்
    131 வேள்விமலை யான்மகளை வேட்டோன் குறத்தியணை
    வேள்விமலை யான்வித் தகன்வந்தான்-தாழ்வில்
    132 அளகைவள்ளி யூருடையா னைம்முகத்தோன் மைந்தன்
    அளகைவள்ளி யூருடையான் வந்தான்-வளகுபெறு
    133 பண்மைத் திருமலையும் பஞ்சா யுதன்மருகன்
    பண்பைத் திருமலையப் பன்வந்தான்-நண்பாம்
    134 பழநி மலைப்பாலன் பால்வந்தான் சீராம்
    பழநி மலைப்பாலன் வந்தான்-சளமாம்
    135 கதிர்காமத் தோனாங் கடுஞ்சூரை வென்ற
    கதிர்காமத் தோன்காளை வந்தான்-பதமாம்
    136 திருவே ரகத்தினட்டான் சீரடியார்க் கென்றும்
    திருவே ரகத்தினட்டான் வந்தான்-உரியார்
    137 திருப்பரங் குன்றத் திருந்தான் விருப்பாய்த்
    திருப்பரங்குன் றத்திருந்தான் வந்தான்-தரிப்பாய்வாழ்
    138 சீதத் திருவிலஞ்சிச் சேவகன்வந் தானெனவே
    ஓதுதிருச் சின்ன மொலியெழுப்ப-பூதலத்திற்

    16. குழாங்கள்
    139 பேதை பெதும்பையுடன் பேசுமங்கை சீர்மடந்தை
    காத லரிவை கமழ்தெரிவை-வாதைதவிர்
    140 பேரிளம்பெண் ணாரும் பிலத்திலுள்ள கன்னியரும்
    சீரிளம்பெண் ணாயத் திரளுடனே-நேரில்
    141 அரமகளிர் கூட்டமுமே யாகி நிரையாய்த்
    திரமுடைய மாடஞ்செய் குன்றும்-தரமுடைய
    142 மாளிகையுங் கோபுரமு மண்டபமுந் தெற்றியுடன்
    சூளிகையும் மேடைகளுஞ் சூழ்மறுகும்-ஆளிபோல்
    143 அம்பொன் மடப்பிடிபோ லஞ்சொற் கிளிமயில்போற்
    செம்பொனின் மான்போற் றிகழனம்போற்-கொம்பிலுறை
    144 கோகிலம்போற் பூவைபோற் கோவைபோல் வாய்திகழ
    வாகிலஞ்சி வீதியெலாம் வந்தீண்டி-வேகமுடன்
    145 தேருடனே தேருடையார் சேர்ந்து பொருவதற்கு
    நேருடைய வேளை நிகழுமட்டும்-சேரலர்கள்
    146 ஈடுபெறத் தேரொளித்த தென்னவல்குற் பொற்றேர்கள்
    ஓடிக் கலிங்க மொளித்திருப்ப-நாடியே
    147 ஆறிரண்டு தோளு மழகுமுக மோராறும்
    ஏறுங் கருணைவிழி யீராறும்-கூறுதிருக்
    148 கையிலொரு வேலுங் கதிர்த்தபுரி முந்நூலும்
    சைய நிகருந் தடமார்பும்-துய்யதிருக்
    149 கந்தரமுங் காதுங் கனகமணிக் குண்டலமும்
    அந்த முறுங்கருணை யார்மொழியும்-சிந்துரஞ்சேர்
    150 நெற்றியுஞ் சேவ னெடுங்கொடியு நல்லடியார்
    பற்றியிடு பாதப் பரிபுரமும்-உற்றுவளர்
    151 தேவனைச் செந்தூர்வாழ் தேசிகனைச் சோலைமலைக்
    காவனை வேள்விமலைக் காங்கெயனைப்-பாவனைத்தும்
    152 வாசிதீர் காசுபெற மண்டலத்திற் சொன்னவனை
    வீசுதிரு வேரகத்தின் மெய்ப்பொருளை-ஆசிலாப்
    153 பாவி லருணகிரி பைந்தமிழின் மாரிபெய்ய
    நாவிற் றிருப்பெயரை நட்டோனைக்-காவிலொரு
    154 வள்ளிக் கொடிக்கு மரமாத் தவமிருந்து
    கள்ள மணத்தாற் களித்தோனைக்-தெள்ளுதமிழ்த்
    155 தென்னிலஞ்சி யானைச் சிவபிரான் றேசிகனை
    உன்னி வணங்கி யுவந்தேத்திக்-கன்மிதப்பில்
    156 அன்றுவந்த நாவுக் கரசன் றிருவுளம்போல்
    ஒன்றிவந்து மாத ரெழிலுற்றுத்-துன்றவே

    17. குழாங்களின் கூற்று
    157 வெண்கடம்பு சூடும் விளக்கொளிசென் றேறிவரும்
    திண்கடம்பு சூடுதிருத் தேர்பாரீர்-விண்புகழும்
    158 பொன்னிலஞ்சி பாரீர் புகழிலஞச்சிச் சீர்பாரீர்
    தென்னிலஞ்சி பாரீர் திருப்பாரீர்-மின்னனையீர்
    159 தேன்வழியும் வீதிவரு தேரழகோ வவ்வீதி
    தானழகோ வீதுணர்ந்து சாற்றுமென்பார்-வானிரவி
    160 தேசெல்லாங் கூடித் திரண்டதுவோ நம்முடைய
    ஆசையெல்லா மோருருவ மானதோ-தேசிகனை
    161 எம்மை யணையவொட்டா தீர்புறமுஞ் சேர்ந்திருக்கும்
    உம்முடையார் யாவ ருரையுமென்பார்-செம்மைபெறு
    162 தெய்வக் கொடியுஞ் சிலைக்குறவர் மின்கொடியும்
    பையப் படருமொரு பண்மலையே-உய்யும்வகை
    163 எத்தித் திருக்கறுத்தே யேழை யடியரையாள்
    சத்தித் திருக்கரத்துச் சண்முகா-நித்தமுமே
    164 நித்திரையு நீங்காம னெஞ்சி னினைப்பவர்க்கு
    முத்தித் திருவா முருகோனே-சத்துருவின்
    165 வெற்புக் கயிற்றொட்டாய் வீதிவரு மெங்கண்முலை
    வெற்புக் கயிற்றொட வேண்டாவோ-அற்புறுநக்
    166 கீரன் புகண்மாலை யேந்தினீர் கேளுமெங்கட்
    கீரன் புகண்மாலை யீந்திலீர்-வாரமுடன்
    167 பெண்ணைப்பெண் ணாக்கிவிடப் பேதலித்த தாகாமற்
    பெண்ணைப்பெண்ணாக்கிவிட்டாற் பேதமோ-மண்ணுக்குள்
    168 வேலைக் கடம்பா விரும்புமெளி யேங்களுக்கோர்
    வேலைக் கடம்பகர வேண்டாவோ-கோலுசமண்
    169 ஆற்றை யொழியவைத்தா யல்லையோ வெங்கள்கண்ணீர்
    ஆற்றை யொழியவைத்தா லாகாதோ-போற்றினர்க்குத்
    170 தொங்க லணிந்தாய் சுவாமியுனைப் போற்றெமக்குத்
    தொங்கலணிந் தாலதற்குத் தோடமுண்டோ-துங்கமுற
    171 ஆலிங் கனம்வயிறே யாகுமென் றீர்கூடி
    ஆலிங் கனஞ்செய் தணைகிலீர்-மேலுமென்றே
    172 சென்றீர்ப்பத் தென்னிலஞ்சிச் செட்டிப் பெருமான்றேர்
    நன்றுதிரு வீதி நடாவினான்-அன்றுதான்

    18. பேதை
    173 மேவுமொழி பேதைமொழி விள்ளு மொழிப்பேதை
    கூவ வறியாக் குயிற்குழவி-தாவுவிழி
    174 மான்போலு மென்னினந்ந மான்போற் றொழிலறியா
    மீன்போற் பிறழா விழியினாள்-யான்போற்றும்
    175 ஆறுமுகத் தாறெழுத்தா னாரிலஞ்சிப் பூங்கொம்பில்
    ஏறிவிளை யாடா விளந்தோகை - தேறியே
    176 ஈன்றாளைக் காணா திருக்கவறி யாளழகார்
    மூன்றாம் பிறைபோலு முண்டத்தாள்-ஆன்றுமே
    177 வீடாதி வேண்டின் விளங்குந் திருவிலஞ்சி
    கூடார்போற் கூடாக் குழலினாள்-நாடாரும்
    178 பன்னி யுரைக்கும் பதினெட்டுப் பாஷையன்றி
    இன்னமொரு பாஷை யெனுமொழியாள்-தென்மதுரைப்
    179 பொய்ச்சமணுக் குள்ளாகிப் போனசைவந் தான்முளைக்க
    மெய்ச்சம்பந் தர்பார்த்த வேளைபோற்-பச்சம்
    180 தளைக்குமுடற் குள்ளிருந்து தப்பா தெழும்பி
    முளைக்கநாட் பார்க்கு முலையாள்-பிழைக்க
    181 மறந்து மிலஞ்சி வணங்காரைப் போல
    இறந்து பிறக்கு மெயிற்றாள்-சிறந்ததொரு
    182 வைக்கோற் பழுதையைப்போல் வாழுகின்ற பாம்பையொரு
    கைக்கே பிடிக்குங் கருத்தினாள்-மிக்கமலைக்
    183 குஞ்சரத்தை யிந்தக் குடத்தடைத்துத் தாருமென்றே
    பஞ்சரிக்கு மந்தப் பருவத்தாள்-மிஞ்சனையைப்
    184 பேச்சுமரப் பாவை பிதற்றுதற்கு மென்னைப்போல்
    ஏச்சுப் பயிற்றுவிப்பா யின்றென்பாள்-வாச்சவில்லின்
    185 முன்றிலிடைச் சிற்றிலின்வாய் மொய்மணற்சோ றாக்கியதைத்
    தின்றிடுமி னென்றென்று செப்புவாள்-அன்றயிலாப்
    186 பண்புதனைப் பார்த்துப் பயந்தாண்முன் கூட்டமிடக்
    கண்பிசைந்து நின்று கதறுவாள்-பெண்பிள்ளாய்
    187 மங்கைப் பருவம் வருங்கா லயில்வரென்று
    நங்கைமார் கூட்டி நடந்துசெல்லச்-சங்கையிலாத்
    188 தென்னிலஞ்சி தன்னிற் றிருவீதி யோர்மருங்கிற்
    தன்னிகரில் பொய்கைச் சரவணமும்-மின்னிகராம்
    189 வள்ளியம்மை தெய்வானை வாய்த்த நடுவதனில்
    வெள்ளிமயில் வாகனனை மேலமைத்தே - ஒள்ளிழையீர்
    190 சேவியுமின் சேவியுமி னென்றென்று செப்பியே
    பாவையுந்தா னின்று பகருங்கால்-ஆவிநிகர்
    191 பாத சரமும் பரிபுரமுங் கிண்கிணியும்
    சீதப் புரிநூற் றிருமார்பும்-ஆதவர்கள்
    192 எல்லா முதித்ததென்ன வீராறு குண்டலமும்
    சொல்லா லடங்காச் சுடர்முடியும்-சல்லாபம்
    193 சேரு மழகுஞ் சிறப்பு மதற்கிசைந்த
    சீரு முடைய திருவுடையான்-கூருடைய
    194 வேலுடையான் றேகை விடையுடையான் வீரகண்டைக்
    காலுடையா னாறிரண்டு கண்ணுடையான்-மேலும்வளர்
    195 செந்தூ ருடையான் றிருப்பரங் குன்றுடையான்
    நந்தூர் திருவாவி னன்குடியான்-சந்தூரும்
    196 ஏரகத்தான் சோலைமலை யென்றும் விருப்புடையார்
    சீரகத்தான் காவித் திருமலையான்-பாரகத்தில்
    197 குன்றுதொறு மாடல்புரி கோமா னடியர்மனம்
    குன்றுதொறு மாடல்புரி கோமான்-மன்றுகளில்
    198 சித்திரமா மன்றத் திருநடனத் தானருள்வி
    சித்திரமா மன்றப்பாத் தேசுடையான்-நத்தரியை
    199 அம்மா னெனவுரைப்போ னம்மான் மருகனெனும்
    பெம்மா னிலஞ்சிப் பெருமையான்-எம்மான்
    200 திருவருள்போ லெத்திசையுந் தெய்வமுர சார்ப்ப
    அருமைத்தே ரேறி யணையத்-தெரிவையர்கள்
    201 ஒரானந் தக்கடலி லோயாமன் மூழ்கியந்தச்
    சீரானந் தக்கடலைச் சேவிப்பக்-காராரும்
    202 கோதையரு மன்னையருங் கூறுமுயிர்த் தோழியரும்
    பேதையரும் போற்றுதல்போற் பின்போற்றித்-தாதியரும்
    203 சென்னி வணங்கித் திருக்குமரன் கைப்பிடித்த
    வன்னி தனைப்பிடித்து வாருமென்றாள்-கன்னிக்
    204 குயிலே மடக்கொடியே கோடரத்தி லாடும்
    மயிலே பிடியே வளர்மானே-கையிலே
    205 யார்பிடிப்பார் கந்த ரனுபூதி சொன்னகிளி
    ஏர்பிடிக்கு நீபிடிக்க வெய்துமோ-பார்பிடிக்க
    206 என்றுகனி வாய்ச்சியர்க ளெல்லோருந் தான்கூற
    நின்று நிலஞ்சுரண்டி நிற்பவே-வென்றிவடி
    207 வேல னுலாவி விளையாடி மேற்சென்றான்
    சேலனுமங் கோடியே செல்கின்றான்-சாலப்

    [19. பெதும்பை]
    208 பெதும்பை யவளொருத்தி பேதைமகள் சற்றே
    பதுங்கி யொதுங்கும் படியாள்-ததும்புகொங்கை
    209 ஏரார் திலோத்தமைக்கோ விந்திரைக்கோ மேனகைக்கோ
    தாரா ருருப்பசிக்கோ தங்கையாள்-பாராரும்
    210 வெய்ய கதிர்க்கு வெளிவரா துண்ணெகிழும்
    துய்ய கமலமுகைச் சொர்க்கத்தாள்-பையவே
    211 மிக்க குழைநெகிழ மேன்மேலு மூப்பியர்க்கைத்
    தக்கை தவிர்ந்த தனிக்குழையாள்-புக்கவொரு
    212 பம்பரத்தி னன்முளைபோற் பற்றிக் கடைந்தறுத்த
    அம்பரத்தி னன்முளைபோ லாமுலையாள்-நம்பும்
    213 அருட்பார்வை யல்லாம லாடவரை வாட்டும்
    மருட்பார்வை யான வலையும்-தரிப்பாக
    214 மூலந்தான் பார்த்து முதன்மைபெறக் கற்பதற்குக்
    காலந்தான் பார்க்குமிரு கண்னினாள்-மேலுந்தான்
    215 தென்னிலஞ்சி யெங்கோன் றிருத்தொண்ட ரானவர்கள்
    தந்நிலைமைத் தொண்டு தலைக்கொண்டே-உன்னும்
    216 அடிமையாற் செய்கரும மல்லலின்றாம் போல
    நெடிமையாய்க் கூடுகுழ லாணேர்-துடியிடையிற்
    217 பட்டாடை சுற்றப் பணிபூண வாசையல்லால்
    கட்டாக வேறோர் கருத்தில்லாள்-தட்டாமல்
    218 இல்லத் திருந்துமன்ற லென்றவிளை யாட்டயர்ந்து
    மெல்லத் திருந்தும் விருப்பினாள்-நல்ல
    219 மகிழம்பூஞ் சோலைநிழல் மௌவல்படர் பந்தல்
    மகிழுங் கனகமலர் முன்றில்-மகிழும்
    220 குயில்பேடை செம்போத்துக் கோழி புறவம்
    மயில்பூவை பின்னே வரவே - ஒயிலாக
    222 வல்லியருங் கிள்ளைகளு மான்களுமே முன்செல்ல
    மெல்லியர்கள் மெல்லென்ன மெல்லென்ன - நல்லசங்கைச்
    222 சங்கினமுந் தண்மதியைத் தாரகையுஞ் சூழ்வதென்ன
    மங்கைமார் சூழ்ந்துவர வந்திருந்து - கங்கைமுதற்
    223 சத்தநதி முத்தோ தடங்கடலேழ் முத்தமோ
    சித்ரநதி முத்தோ தெரிந்தெடுத்துப்-பத்தியாய்க்
    224 கொங்கைக் குவட்டிற் குலவுமுத்த மாவமெனச்
    செங்கைமேற் கூத்தாடுஞ் சீர்காட்ட - அங்கியிலே
    225 வந்த தகர்க்கு மருண்டமர ரோடியநாட்
    சிந்தையுடன் காத்த செயலொன்றும்-முந்துசூர்
    226 கூறிரண்டே யாக்கிக் கொடிமயில் வாகனமா
    ஏறிப் பிடித்த வெழி லிரண்டும்-தேறியசீர்ப்
    227 பொய்யா மொழிகீரன் போத வருணகிரி
    மெய்யா மொழிகள் விதமூன்றும்-நையாத
    228 கும்பன் முசுகுந்தன் கோவீர வாகுவுக்கும்
    உம்பருக்குஞ் சொன்ன வுரைரநான்கும்-அம்பதுமம்
    229 துன்றயனார் வேடருடன் சூரரொரு மூவரையும்
    அன்றுபங்கஞ் செய்த வவையைந்தும்-வென்றிசேர்
    230 கின்றபரங் குன்றுங் கிளர்செந்தூ ரேரகமும்
    குன்தொ றாடல்குளிர் சோலைமலை - என்றுமே
    231 காந்த மணியிற் கதிருரிமை தானிருந்தும்
    வேய்ந்தவொளி யெங்கும் விளங்குதல்போல்-வாய்ந்ததிருத்
    232 தென்னிலஞ்சி தன்னிற் றிருவருணீங் காதிருந்தும்
    தன்னிலைமை யான தலமாறும்-பன்னியே
    233 விண்ணமுத முண்டுவந்தோர் மீறிவள ரேழிசையின்
    பண்ணமுத முண்டுவப்பப் பாடியே - நண்ணுகழங்
    234 கன்றெடுத்துக் கொண்டுவிளை யாடும் பொழுதெளியோர்
    மன்றுணையாய் மேவி வளர்குமரன்-குன்றுதனைத்
    235 தூளாக்கு மெம்பெருமான் றொண்டருட னென்னையுமோர்
    ஆளாக்கு மெம்பெருமா னென்னையன்-தாளாரும்
    236 மூவருக்கு மேலா முதற்பொருளா யோங்குகுகன்
    தேவருக்குச் சேனா பதித்தலைவன்-யாவருக்கும்
    237 தேசிகன்வே தாந்தன் றிறற்கடம்ப னற்புலவோன்
    வாசிபெறக் காசுமுன்னாள் வாங்கினேன்-வீசுபகழ்
    238 ஆறுமுக னைந்துமுகத் தான்மைந்தன் வள்ளியூர்
    ஏறி மலைகுடைந்த வெந்தையான்-வீறுமயில்
    239 வாகனத்தன் வாகனத்தன் வன்சிரத்தி லேபுடைத்த
    வாகனத்தன் மாகனத்தன் வள்ளியோன்-கூறுதிரு
    240 மான்மருகன் மான்மருகன் மான்மருகன் வேன்முருகன்
    மான்மருகன் மாதுமையாண் மாமதலை - ஞாலமெல்லாம்
    241 வந்து முழவொலிக்க வாழ்கோடி சூரியர்கள்
    சுந்தரமு மோருருவாய்த் தோன்றியசேய்-முந்து
    242 புறக்கடலின் றேயெழுந்து போந்ததென்னுஞ் சேனை
    திறற் கடம்பன் றேர்மீதிற் செல்ல - உறக்கழங்கு
    243 பாதியிலே யாடல் பலமறந்து விட்டகன்றாள்
    வீதயிலே பாவையைப்போன் மேவினாள்-நீதிபெறு
    244 திங்களைநேர் கண்ட திருமால்சீர்க் கொப்பூழ்போல்
    அங்கை குவித்தே யடிபணிந்தாள்-மங்கலநாண்
    245 பூண்டிருவர் வாழும் புதுமைகண்டாள் கண்டவுடன்
    வேண்டியவ ரோடிருக்க விண்டிசைத்தாள்-பாண்டதும்பு
    246 காவிடத்துக் கோகிலமே கண்மணியே யுன்றனக்கென்
    கோவிடத்திற் போயிருக்கக் கூடுமோ - தேவமயில்
    247 வள்ளி மயிலின் மலரடியைப் பூண்டாலும்
    ஒள்ளிழையா யுன்றனக்கு மொண்ணுமோ - தெள்ளமுதே
    248 பொன்னேவா வென்றாயும் போந்தழைக்கச் சேவகன்பால்
    தன்னேச மும்பொறியுஞ் சார்த்தியே - மின்னாவாள்
    249 கூடத் தொடர்ந்தேகிக் கோமான்றே ரெங்கென்று
    தேடத் திருத்தேர் செலவிட்டான்-வேடன்
    250 தனுப்பார்த்து நாண்பார்த்துச் சத்தியுடன் மங்கை
    தனுப்பார்த்துத் தானு நடந்தான்-இனிப்பான

    (20. மங்கை)
    251 மங்கைப் பருவ வரிக்குயில்மிக் காய்வளர்க்கும்
    செங்கைக் கிளிபதுமஞ் சேரன்னம்-சங்கையின்றி
    252 அண்டரையும் வெல்லு மனங்கனுடன் வாதாடும்
    கெண்டையையும் வெல்லுங் கிளர்கண்ணாள்-கண்டுமொழிக்
    253 காரிகைமார் யார்யார்க்குங் காம னிரதிக்கும்
    வேரிதா னூற விரும்பிதழாள்-வாரிவிளை
    254 முத்தமோ வன்றியிள முல்லையோ நேரென்னச்
    சித்த நிலைப்பரிய சீரெயிற்றாள்-நித்தமுமே
    255 தென்னிலஞ்சி யேத்தாருந் தென்னிலஞ்சி யேத்தினரும்
    என்ன விளம்பு மிடைமுகத்தாள்-சொன்னமலை
    256 இங்கிரண்டு தானுண்டே லீடுசொல்லக் கூடுமென்னப்
    பொங்கிரண்டு மேருப் புணர்முலையாள்-சங்கையின்றிச்
    257 சானுக்கு ஞெண்டு தனுவினுக்கு நற்புருவம்
    தேனுக்கு நேராந் தெரிமொழியாள்-வானுக்குள்<
    258 உம்ப ருவக்கு முவட்டாத தெள்ளமுதம்
    செம்பதுமக் கோயிற் றிருவனையாள்-அம்பரத்தைத்
    259 தொட்டுலவு மேடையையுந் தோகையர்க டங்களையும்
    விட்டுத் தனியே வெளிவராள்-உட்டினமாம்
    260 வெப்பந் தவிர்ந்திடவே வீசுதென்றன் மேடையின்மேல்
    துப்பிதழி யார்சூழத் தோகைபோல்-செப்பமுடன்
    261 கந்துகங்கொண் டாடுதொறுங் கானமயி லாடவங்கே
    வந்தொளித்து நின்றே மதனாடச்-சந்ததமும்
    262 கண்ணும் பிறழக் கடைக்கண் சிவப்பேறப்
    பண்ணுடனே செங்கனிவாய் பாட்டயர - நண்ணுமிரு
    263 காதிற் குழையாடக் கண்ணின் மணியாடச்
    சோதிக் கலன்கள் துவண்டாடச்-சூதில்
    264 நயங்கண் மிகுந்து நலங்கள் சிறந்த
    குயங்க ளிரண்டுங் குலுங்கத்-தியங்கி
    265 நுசுப்பு மொசிந்து நுடங்கி மடங்கிப்
    பிசிப்பின் வருந்திப் பெயர்ந்து - வசிப்பின்
    266 நிமிர்ந்து குனிந்து நெருங்கி விரைந்து
    குமிந்து மயர்ந்து குலைந்தே - அமிழ்ந்தே
    267 எழுந்து மிருந்து மிடங்கை பரிந்து
    செழுங்கை வலங்கை திரிந்து - விழுந்தும்
    268 உரத்தின் மிகுத்த வொளித்திரண் மொய்த்த
    சரப்பளி பொற்பணி தத்த - நிரப்பிய
    269 கந்த சுகந்த கதம்பொடு குங்கும
    சந்தன முங்கு தனங்களில்-வந்திடு
    270 கட்டு ரவிக்கை கதித்திட மெய்க்கலை
    மட்டறு செக்கணி வைத்திட-இட்டமாய்ப்
    271 பாதச் சிலம்பு பயப்பயவென் றோலச்
    சீதக் கரவளைகள் சேர்ந்தொலிப்ப- நீதியாய்க்
    272 கந்தருவ தேசத்துக் கன்னியருங் கைவிதிர்ப்ப
    சுந்தரியு மேனழயுந் தோளசைப்பப்-பந்துபிடித்
    273 தானடி ளாடுதொறு மாறுமுகத் தான்புகழே
    பாடினாள் பூவாளி பாக்கியமே-தேடிய
    274 ஓடி யரனா ருருவுவக்கு மோகினியே
    ஆடிநிகர் கன்னத் தருங்கிளியே-ஓடைவளர்
    275 அஞ்சமே கஞ்சமே அம்பொன் மடப்பிடியே
    மஞ்சமே மாதங்க மாமயிலே-தஞ்சமே
    276 எங்கள் குயிலே யெனமடவார் போற்றிசைப்பப்
    பங்கயமான் பந்து பயிறல்விட்டு-மங்கையுமே
    277 தென்னிலஞ்சி வாழ்க்ருணைச் செவ்வேளைத் தேடுதலு
    மன்னு புதையல் வறிஞனுக்குத்-தன்னிலே
    278 வந்ததுவே போல வதனமதி யோராறும்
    கந்தரமு முந்நாலுங் கட்கடம்பும்-எந்தமையாள்
    279 வேலு மயிலும் விளங்குத் திருமுடியும்
    காலுந் திருச்சிலம்புங் கண்டுதான்-சீலமுறும்
    280 அன்பர்களுக் கன்பானை யன்பகத்தி லில்லாத
    வன்பருக்கு வன்புடைய வானவனை -இன்பமாய்
    281 ஏரகத்தில் வாழு மெளியேங்கட் காரமுதைச்
    சூரகத்தைக் கீறுஞ் சுடர்க்கொழுந்தைப்-பாரகத்தில்
    282 வெண்ணையுடைய வாயாலே மேதினியெல்லாமுண்ட
    கண்ணனுக்கு நன்மருக் காங்கெயனை-விண்ணினுக்கு
    283 மெய்ப்பா மொருமணியை வேத விழுப்பொருளைத்
    துய்ப்பார்க்கு நல்குஞ் சுடர்க்கொழுந்தைப்-பைப்பாந்தாள்
    284 சூடுந் திரிகூடத் தோன்ற லொருமகனை
    நாடுந் திருவிலஞ்சி நாயகனைத்-தேடியே
    285 உள்ளங் களிப்ப வுரோமமெலாந் தான்சிலிர்ப்ப
    வள்ளற் குருபரனை வந்தித்தாள்- தெள்ளுதமிழ்ச்
    286 சீரானந் தக்கடலைச் சேரவெதிர் நோக்கினாள்
    பேரானந் தத்தின் பெருங்கரையை-ஆராய்ந்தும்
    287 காணாள் புனக்குறத்தி காதலனா னீரவளும்
    காணாதென் காதலனாக் கைகலவீர்-நாணாளும்
    288 பக்கத் திருந்து பணிவிடைசெய் யும்மவர்க்குப்
    பக்கப் பணியேனும் பாலிப்பீர்-செக்கர்நிறத்
    289 தேவரீ ரென்றுரைப்பச் சேயிழையைப் பாரான்போல்
    தேவனுந்தான் வேறோர் தெருவணைந்தான்-பாவைக்குச்
    290 செவ்வேள் வடிவமெலாஞ் சிந்தையுணீங் காதிருக்கும்
    அவ்வேளை யெய்வதுவு மல்லென்று-மெய்வேளும்
    291 மைத்துனனே யாகையால் மாதவளுந் தங்கையென்று
    சித்தசனுந் தேரைச் செலவிட்டான்-நித்தமுமே
    292 வேண்முரசும் வேளிருதும் வேளுடைய சின்னமுடன்
    வேளுடைய தேரும் விகாதமென்றும்-வேள்குடையாம்
    293 இந்துவும்வெப் பன்றிமுத்து மீரப் புழுகுடனே
    சந்தனம்வெப் பென்றுமன்று தானறிந்தாள்-விந்தைபெறு

    22. மடந்தை
    294 294. சீரார் மடந்தை தெரிவையர்க்கெல் லாமரசி
    பேரா ரநங்கன் பெருங்குருவே-நீரார்
    295 குமிழிக் குழுவைக் குலவுங் கனகச்
    சிமிழைத் தெருவிற் சிதறி-அமிழ்திற்
    296 பழகிப் பழகித் தடித்துப் பணைத்தே
    அழகைப் பிடித்தங் கடைத்து-விழையக்
    297 குடத்திற் பருத்துக் குதித்துக் குதித்துத்
    திடத்தைக் கனத்தைச் செலுத்தி-அடர்த்துத்
    298 தவத்தர் மனத்தைத் தவிக்க வடித்துச்
    சிவத்தைத் தரிப்பர் திறத்தைக்-கவர்த்துமேற்
    299 கோரித்துப் பூரித்துக் கோடொத்துப் பூணிட்டு
    வீரத்திண் சீரொத்துவீரத்துப்-போரிட்ட
    300 வாரற்று மீறிட்டு வாகொத்து மோகத்துத்
    தார்சுற்று போகத் தடமுலையாள்-கார்சுற்றும்
    301 தண்டலையிற் சென்றிலஞ்சித் தாமரைவா ழன்னமென
    மண்டபத்தி லாசனமேல் வந்திருந்தே-ஒண்டொடிமார்
    302 சூழு முடுப்போலத் தோகையொரு சந்திரன்போல்
    வீழி யிதழ்மடந்தை வீற்றிருந்தே-ஏழிசைக்
    303 கின்னரிகண் மீட்டிக் கிளர்யாழுங் கைப்பிடித்து
    மன்னுசுர மண்டலமும் வாழ்த்தெடுத்துப்-பன்னி
    304 மகரயாழ் வீக்கியதின்மாடகமே றிட்டுச்
    சகரமுத லேழெழுத்துந் தாக்கி- அகரத்தின்
    305 சாரி யெழுப்பியே சத்தசுர மாக்கியே
    ஆருமோ ரேழிசையு மன்றிசைத்துச்-சேரவே
    306 வாழோசை ரண்டுடனே மந்தரமத் யந்தாரம்
    ஏழோசை யுந்திவ்வி லேற்றியே-நாளுமே
    307 வாயு மிடறும் வழங்கு மிடமுமலால்
    ஆயவுறுப் பெல்லா மசையாமல்-மேயதிறற்
    308 காந்தாரி காம்போதி கல்யாணி யுந்தேவ
    காந்தாரி மாளவியுங் காவடி-சேர்ந்தாடும்
    309 தோடி வராளி துலங்கு மலகிரியும்
    நேடி வராடி நிசநாட்டை-நாடும்
    310 வயிரவி பூபாள மாமோ கனமும்
    செயிரறுமு காரியுடன் சேர்ந்த - உயிரான
    311 வல்ல செயசாட்சி மற்றுமுள்ள ராகமெல்லாம்
    சொல்லரிய தாளங்கள் சோர்வின்றி - அல்லற்
    312 கருப்பையுடன் பூஞையுந்தங் காதுவந்து கேட்பப்
    பருத்த கருடனுடன் பாந்தள்-விருப்பமாய்
    313 ஓவியமுந் தாவரமு மொக்கவே நின்றுருக
    ஆவலுட னும்ப ரமுதென்னச்-சீவனுண்டாய்ப்
    314 பட்டமா முந்தளிர்க்கப் பண்டிருவர் கொண்டாட
    இட்டமுடன் பாடி யியற்றினாள்-மட்டவிழும்
    315 தாரைக் குழலமைத்த சஞ்சீவி யாரமுது
    காரைக் குழலமைத்த கற்கண்டு - சீர்மிகுத்த
    316 எங்கள் குடிதனக்கு மிவ்வூர்க்கு நாயகமென்
    றங்கை வளையா ரதிசயிப்ப - மங்கலவாழ்த்
    317 துய்யானம் பாடி யுயரிலஞ்சி யூர்பாடி
    வையார் வடிவேல் வளம்பாடிப்-பொய்யாத
    318 வாக்கு மனமு மலர்ப்பதத்தி லேயிருத்தித்
    தேக்குந் திருவழகின் சீர்பாடி - ஆக்கமாம்
    319 கானக் குறத்திதன்மேற் காதலெலாம் பாடுங்கால்
    தானை சரியவளை தான்சரிய - மானவேற்
    320 கொற்றவனார் மீதே குலாவுமயல் கொண்டதால்
    அற்றமாய் வீணை யய்ர்க்கின்றாள்-பொற்றெடிமார்
    321 ஏதென் றெடுப்பளவி லீராறு செங்கைபெறு
    நாத னறுமுகத்து நாதாந்தன்-வேதன்
    322 சிரத்திற் புடைத்த திறற்செந்தி லாரும்.
    தரத்த னிலஞ்சித் தலத்தான்-திரத்துடனே
    323 வந்தான்வந் தானெனவே மாதினுக்கு நற்செவியிற்
    சிந்தாமற் சின்னஞ் சிறப்பிக்கச்-சந்தாப
    324 மோகமய றீர்ந்தெழுந்து முத்தனையார் தற்சூழத்
    தாக முடனெழுந்து தானணுகி - நாகம்வரு
    325 செம்மேகம் போன்று சிவந்த திருவடிவும்
    அம்மேகம் போன்றிருண்ட வம்மயிலும்-எம்மேலும்
    326 ஊன்று பதமு முபய பரிபுரமும்
    தோன்றுமுடி யோராறுந் தோட்கடம்பும்-ஆன்றுதான்
    327 மான்மகளார் கொங்கையுடன் வானரசி கொங்கையணி
    நானம் வழிந்தொழுகு நன்மார்பும்-தேன்மொழியாள்
    328 வெற்பரசி யான விமலைகுழல் வாய்மொழிமான்
    அற்புடனே யீன்ற வறுமுகனைப்-பொற்புடைய
    329 வேள்வி மலையானை வீர மயிலானைக்
    காவி மலையானைக் காங்கெயனைத்-தாழ்வில்
    330 திருவிலஞ்சி யானையெதிர் சேவித்தாள் சேவித்
    துருவிலஞ்சிப் பொன்னையுரம் பெற்றாள்-மருவியே
    331 சேவித்த நற்பலன்கைச் சிக்கிற்றென் றேயவன்றேர்த்
    தாவிநடந் தாள்சிறிது சாற்றுவாள்-கோவியப்ப
    332 மேக முடையாய் வெட்டிவளர் கண்ணுடையாய்
    மோக முடையாய் முகமுடையாய்-தாகமுடை
    333 மாலை யுடையாய் வனையு மரையுடையாய்
    சேலை யுடையாய் திருவுடையாய்-கோலமுடன்
    334 தால மிகவுடையாய் சண்முகனை யுள்ளுடையாய்
    வேலை யுடையாய் விருப்புடையாய்-நீலமுடன்
    335 கோங்குடனே காந்தள் குமிழுடனே தாமரைப்பூத்
    தாங்கியெனைப் போலுமிந்தத் தன்மைபெற்றும்-ஓங்கும்
    336 கடப்பனையென் கண்ணெதிரே காட்டாமல் வீதி
    கடப்பதுவு நீதிகொல்காற் றேரே - கடப்பனையே
    337 வைத்திருக்கு முன்போனான் வைத்திருக்க வேண்டுமென்பால்
    உய்த்திருநீ யென்றுரைத்து மோடுமதை - மொய்த்து
    338 மறிப்பவள்போற் செல்வாளை மாதரெல்லாங் கூடிக்
    குறித்து வணங்கிக்கொண் டேகச்-சிறப்புநகை
    339 மான்மருக னீந்தந்த மான்மகனோ டேயுலவி
    மான்மருவும் வேறோர் மறுகணைந்தான்-மேன்மை

    23. அரிவை
    340 அரிவை யொருத்தி யரிவையர்க்கு மேலாம்
    தெரிவைக்கு நேரிளைய செல்வி - வரியரவின்
    341 பையோநற் றேர்த்தட்டோ பார மதனிருப்போ
    சையோகஞ் செய்யுந் தடநிதம்பம்-மெய்யான
    342 பைந்தமிழைக் கேட்டுப் பலனுதவார் பாக்கியம்போல்
    நைந்த விடையுடைய நங்கையாள்-செந்தமிழின்
    343 கல்வி மழைக்குக் கனக மழைபொழிவோர்
    செல்வம்போல் வீறுந் திருமுலையாள்-நல்லதொரு
    344 வித்துரும மேடையின்மேன் மெல்லியலார் சூழந்துநிற்பக்
    கைத்துரும்பொன் றேந்தியெதிர் கந்தனார்-சித்துவிளை
    345 யாடினதெ லாமுதியோ ராய்ந்தெடுத்துக் கூறவே
    நாடி யவையெழுது நாளின்கண்-கூடியே
    346 பாவைமா ரெல்லாம் படிப்படிநீ தானெழுதும்
    தேவர்களை யொன்றொன்றாச் செப்புகெனப்-பூவையீர்
    347 சூரனிடந் தூதுசென்று சொல்லித் திரும்பிவந்து
    வீர னுரைக்கும் விதம்பாரீர்-சாரமாய்த்
    348 தேவகுரு வந்துகுரு தேசிகர்க்குச் சொல்லுவார்
    மூவர் பிறப்பை மொழிகுதலும்-ஆவலுடன்
    349 வெள்ளியா லண்டமெல்லாம் வேண்டியது மற்றுமெலாம்
    வள்ளல்பாற் கூறு வதும்பாரீர்-உள்ளமுடன்
    350 சென்னி வணங்காத் திசைமுகனைக் காவல்வைத்து
    மன்னி யிருந்த வகைபாரீர்-துன்னியே
    351 இந்திரன்வந் தெய்தி யிடருரைப்பக் கேட்டுவந்து
    சிந்தை மகிழ்ந்திருக்குஞ் சீர்பாரீர்-அந்தமுனி
    352 மீறு மகத்தில் வெகுண்டு வருந்தகரை
    ஏறி நடத்து மெழில்பாரீர்-சீறியே
    353 அண்டம் புரந்திருந்த வாண்மயிலை வாகனமாக்
    கொண்டு நடத்துங் கொலுப்பாரீர்-தொண்டுபுரி
    354 அண்டரெல்லாங் கூடி யடிவணங்கிப் போற்றிசெய்து
    தெண்டனிட்டு நிற்குஞ் செயல்பாரீர்-கண்டமறு
    355 உள்ளவன்றான் வேண்டியே யுண்மைப் பொருள்கேட்ப
    விள்ளவவன் வீற்றிருக்கு மெய்பாரீர்-உள்ளும்
    356 அகத்தியன்வாய் பொத்தி யடிபோற்ற வுண்மை
    மகத்துவத்தைக் கூறுமறைபாரீர்-மிகக்குறத்தி
    358 துன்றுதினை நற்றேனுஞ் சொற்றேனுங் கூட்டியே
    தின்று ருசித்திருக்குஞ் சீர்பாரீர்-என்றுரைப்ப
    354 முத்தர்களும் பக்தர்களு மோன முனிவர்களும்
    சித்தர்களு மாழிபோற் சேர்ந்தொலிப்ப-நித்திலத்தின்
    359 தொங்கலார் தேர்மீதிற் சோலைமலை செந்தூரில்
    தங்குந் திருவிலஞ்சிச் சண்முகனார்-புங்கமுடன்
    360 இங்குவந்தா ரென்றியங்க ளீரொன் பதுமொலிப்ப
    மங்கைமார் கூட மடமயில்போய்-அங்கைகுவித்
    361 தாசைகொண்ட பித்தருட னானசித்தர் தஞ்செயலும்
    பேசி னிவர்கடொழில் பேதமோ-பாசிழையாள்
    362 அப்படியே மாலி லழுந்தினா ளேரகத்திற்
    செப்பு திருமலைவாழ் செவ்வேளே - முப்புரிநூல்
    363 வாணனே வள்ளியூர் வானவனே பொற்பணியின்
    பூணனே தென்னிலஞ்சிப் புண்ணியனே-நீணிலத்திற்
    364 சேரத் திருவுளமோ சிந்தையில்லை யோவிந்த
    வேரிக்குழ றாழு மெல்லியலை-ஆரமுடல்
    365 காயுமோ வென்பளினிக் காதல்கொண்டு பெண்டுவைப்ப
    தோயுமோ வெங்கள்குடிக் கொண்ணாதோ-நீயுந்தான்
    366 சொந்தமுடன் பெண்டாயெந் தோகைதனைக் கொள்ளாயேல்
    இந்த வழக்குவிடோ மென்பார்முன்-சிந்தையுடன்
    367 தம்மிடத்தி லன்புவைப்போர் தங்களுக்கு வேண்டுவன
    செம்மைதருஞ் செவ்வேளுஞ் சேயிழைக்கு-வெம்மைவந்து
    368 காயாமற் சற்றே கடைக்கட் கிருபைவைத்துக்
    சேயோனும் வேறோர் தெருச்சென்றான்-காயாப்

    24. தெரிவை
    369 பெரிய தெரிவையிவள் பேரிளம்பெண் டங்கை
    தெரிவையர்க்குள் ளேராச செல்வம்-பரிவினரன்
    370 உண்ணஞ்ச மென்றே யுவமித்தோ மாயினிவள்
    கண்ணஞ்சி னாரழைப்பார் காசியினியில் -நண்ணுநுதி
    371 அம்புமுறையி லடங்கி யொடுங்கிவிடும்
    வெம்பும் விழிக்கணைக்கு வெள்கியே - சொம்புபெறும்
    372 பாந்தத் தயலென்றும் பாரவவ்வில் ரண்டென்றும்
    மாந்தர்களை யேவு மதர்விழியாள்-சாந்தணியும்
    373 கொங்கைக் கிணையாக் குலாவவிள நீர்தாளில்
    தொங்கித் தலைகீழாய்த் தூங்குமே-பொங்கிவளர்
    374 விந்தம் புவியினுக்குண் மேருவரன் வில்லாகும்
    எந்தமலை யிந்தமுலைக் கீடாகும்-சந்திரனேர்
    375 வத்திரத்துக் கொப்பாக வாரிச நான்முகனை
    நித்தியமுந் தாங்கிநிற்கு நீரினுக்குள்-ஒற்றின்
    376 தொடையாம் பதினெட்டிற் சொன்னபதின் மூன்றே
    இடையா யுடைய விடையாள்-இடைமேல்
    377 வரைமேல் வரைகளின்மேல் வான்கமுகி னீலம்
    நிரையாகப் பூத்தநெடுங் கொம்மபு-விதியாரம்
    378 மாதவரை முன்னாண் மயக்கவந்த மாதரசி
    மாதரைவிட் டேகாத மாணிக்கம்-மாதரெல்லாம்.
    379 சூழ்ந்து வணங்கித் தொழுதுநிற்ப வாசனமேல்
    வாழ்ந்து கொலுவாய் மகிழ்ந்திருப்ப-வீழ்ந்து
    380 சதங்கை தண்டை பாடகமுந் தாம்பாடப் பாடும்
    மதங்கி யொருவனிதை வந்தாள்-இதம்பெறவே
    381 மின்னேபொன் னாட்டரசு விட்டகன்று மண்ணுலகில்
    அன்னேநீ வந்த ததியசமே-துன்னுமுலை
    382 விண்டுக் குடையினைப்போல் வீண்குற்றங் கூந்தலுக்கு
    வண்டுதான் செய்ததுண்டோ மாங்குயிலே-வண்டைக்
    383 களங்கமறப் பாடிக் கருதிவெல்வ னென்றே
    விளங்குமிசை பாடினியும் விள்ள-வளம்பெருகு
    384 செந்தூர் திருமலையான் சீர்வேள்வி நன்மலையான்
    நந்தூர் திருவாவி னன்குடியான்-சந்தூரும்
    385 தென்னிலஞ்சி வீற்றிருக்குஞ் செவ்வேள் தசாங்கமெல்லாம்
    உன்னி யுரையென் றுரைத்தலுமே-மன்னிவளர்
    386 பாரார் பெருமை பகர்கந்த மாதனமாம்
    சீரார் வரையின் செழுமைகளும்-பேரான
    387 முன்னா ரியநாடு மோன முனிவர்புகழ்
    தென்னா ரியநாட்டின் செல்வமும்-எந்நாளும்
    388 பன்னிலஞ்சித் தாதியரும் பார்த்துமகிழ் வெய்துமிந்தத்
    தென்னிலஞ்சித் தானச் சிறப்பும்-இந்நிலத்தில்
    389 குத்திரம் வெண் குட்டமுடன் கோடி வினையறுக்கும்
    சித்திர மாநதியின் சித்திரமும்-நித்தியமும்
    390 நாடிரண்டைஞ் ஞூறு நரவரியும் போயுலவும்
    கோடிரண் டாயிரமார் குஞ்சரமும்-நாடியே
    391 வேலா யுதம்படைத்த மீளித் திருக்கரமும்
    காலா யுதம்படைத்த கைக்கொடியும்-மேலான
    392 வெற்றியுடன் வீரம் விளங்குமன்ற லம்முரசே
    உற்று முழங்கு முயர்முரசும்-பற்றித்
    393 திடம்பலரும் போற்றத் திருமார்பிற் சூடும்
    கடம்ல்பலர்ப்பூங் கொத்துக் கணியும்-அடங்கிக்
    394 குமரன் றுணையெனவே கோவுலகங் கூறி
    அமருந் திருவாணை யன்பும்-குமரவேள்
    395 வென்றித் தசாங்கத்தின் மெய்ம்மைபெறும் பாட்டமுதம்
    ஒன்றிச் செவிவாயி னுட்புகுத-மன்றல்சேர்
    396 கூந்தற் பிணையாசை கோடிகொண்டாள் காமவெள்ளம்
    நீந்தப் புணைகாணாள் நின்றயர்ந்தாள்-சாந்தகுண
    397 வல்லி விறலிதனை வாவென் றருகழைத்துச்
    சொல்லியே காமத் துயர் செறித்தாள்-வல்லதெல்லாம்
    398 பேசுவன பேசிப் பிதற்றுவன தான்பிதற்றி
    ஆசையுடன் சேருமென்றே யன்றிசைப்ப-நேசமுடன்
    399 சங்கந் திமிலை சமுத்திரம்போ லேமுழங்கப்
    பொங்கடியார் சீரோசை போந்திசைப்பத்-தங்கவே
    400 செய்ய திருநாமஞ் சீரடியேற் கன்றளித்த
    மெய்யன் றிருமலைமேல் வீற்றிருப்போன்-பையரவம்
    401 பூண்டார் புகழ்பூண்டார் போற்று மடியவரை
    ஆண்டார் திரிகூடத் தைம்முகனார்-வேண்டவரும்
    402 ஆறு முகனிலஞ்சி யைய னெழுந்தருளி
    ஏறிவரும் வைய மெதிர்தோன்றக்-கூறியதோர்
    403 மூவர்க்கு ளேயொருவன் மொய்தமிழ்க்கு நீர்க்குளத்தில்
    ஆவற் பொருள்கைக்கு ளானதுபோல்-தாவியே
    404 இன்பவெள்ள மேற்கொண் டிருகைசிர மேற்கூப்பி
    அன்பினுடன் பாதத்தி னம்புயமும்-துன்பமற
    405 மார்பழகுந் தோளழகும் வத்திரத்தி னல்லழகும்
    தேரழகுங் கண்டாள் திகைப்புற்றாள்-பேரழகின்
    406 மன்மதனே யுன்றன் வளர்குடையு முன்றேரும்
    என்மதியை யுண்டே யிடர்செயுமோ-நின்மதத்தாற்
    407 சூர்மதத்தைச் செற்றோன் றொடர்பெனக்கு முண்டாகிற்
    சீர்மதியுந் தென்றலுந்தாஞ் சீறுமோ-ஓரென்று
    408 பன்னிப் பிதற்றுதலும் பன்னிரண்டு கையோனும்
    சின்னக் குயிலோனுந் தேருமாய்-மன்னித்
    409 திருமறுகிற் சென்றேகச் சேயிழைசெவ் வேளை
    உருவெளியிற் கூடி யுகந்தாள்-பெருமைசேர்

    25. பேரிளம்பெண்
    410 பேரிளம் பெண்ணொருத்தி பேருலகங் கட்கெல்லாம்
    சீரிளம்பெண் ணான திருவினாள்-பார்பிளந்து
    411 பொன்னாட்டை யெல்லாம் பொருதுவென்று பொன்மலையை
    இந்நாட்டை வெல்லு மிருதனத்தாள்-நன்னாட்டில்
    412 வேளையம்புக் கம்பேவி மேலு மவனைவெல்ல
    வாளும்புக் கேவு மதர்விழியாள்-நாளும்புக்
    413 காலுக்கு நேருதர மம்மலைக்கு நேருமுலை
    நூலுக்கு நேரான நுண்ணிடையாள்-பாலுக்கு
    414 நேர்மொழியார் சூழ நெடுவேள் ரதிபணியத்
    தாருலவு சிங்கா சனத்திருந்தே-ஏருலவு
    415 பண்டுமின்று மென்றும் பகரிளையான் யாவனென்று
    கண்டின்று சொல்லுமென்று கட்டுரைப்ப-மண்டலத்தில்
    416 அன்ன நடையா ரவனி புரந்திருக்கும்
    மன்னவரைச் சொல்ல மடமயிலும்-இன்னவரில்
    417 மிக்கவர்கள் யாவரென்று வேதியரைத் தான்வினவத்
    தக்கபதி னெண்கணமுஞ் சாற்றியே-திக்கரசர்
    418 ஆதி முனிவருக்கு ளானமார்க் கண்டனுடன்
    நீதிமக வானை நிகழ்த்தியே-போத
    419 அயன்மாலைச் சொல்லி யவர்களுக்குண் மேலாம்
    செயமாந் திரிகூடத் தேவன்-நயமாகத்
    420 தந்தபிள்ளை யோரிருவர் தந்திமுகன் முன்னோனென்
    றிந்தவகை யெல்லா மியம்பியே-கந்தனே
    421 என்று மிளையா னெவர்களுக்குந் தானிளையான்
    துன்றிளையான் றென்னிலஞ்சிச் சோதியென்றார்-நன்றென்றே
    422 சொன்னவர்கள் வாய்நிரம்பச் சொன்னஞ் சொரிவித்துப்
    பொன்னரைநாண் சாலுவைகள் பொற்கடுக்கன்-மின்னுமொரு
    423 கண்டசரங் கட்டுவர்க்கங் கற்கட்டு வட்டமனம்
    கொண்டதுவாய் கொள்ளாமற் கூர்ந்தளித்துத்-தண்டலையில்
    424 உய்யானஞ் சென்றே யொருகடப்பங் கன்றெடுத்துச்
    செய்யோன்பே ரிட்டுநட்டுச் செப்பியே-மெய்யாகக்
    425 கட்டினாள் போற்றுங் கடப்பமலர் பூத்தவுடன்
    மட்டிலா நல்ல மகிழ்ச்சிபெற்றே-இட்டமுடன்
    426 அங்கனையார் கூடி யழகு குரவையிட்டுப்
    பொங்கு பதலைபம்பை புக்கியம்ப-இங்கெவரும்
    427 காண்டி ரெனத் திங்கடொறுங் கார்மயிலின் மேற்பவனி
    வேண்டியே யாரால் விழாவெடுத்தே-ஈண்டுபொன்னும்
    428 ஓதனமு நல்கி யுயரடியார் தங்களுக்குச்
    சாதனமா முத்திநிலை சாற்றியே-போதக்
    429 கடப்ப மலரெடுத்து கண்ணிகட்டி செவ்வேள்
    தடப்புயத்திற் சாத்துவமோ வென்னத்-திடப்படவே
    430 பென்ணா ரமுதம் பிரியமுட னேயுரைப்பத்
    தண்னா ரமுதே தனிமயிலே-கண்ணேகேள்
    431 இந்திரனார் பத்தர்மல ரேழை யடியர்மலர்
    சந்தவரைக் கும்பன் றனிமலர்கள்-அந்தமுற
    432 முந்நூன் மணிமார்பர் முப்போதுஞ் சாத்துமலர்
    எந்நேரஞ் சூடு மிணையடிக்குப்-பொன்னேநீ
    433 யேயெடுத்துச் சாத்துமல ரேறா தெனமறுப்பப்
    போயெடுத்து வல்லி புலம்புதலும்-வாயெடுத்துப்
    434 பாடு மடியார் பகர்ந்த படிதிருக்கூத்
    தாடும் பெருமா னறுமுகவன்-நீடும்
    435 கொடியார் தமைச்சாடுங் கொற்றவைக்கு மைந்தன்
    அடியார்க் கெளியனலை வாயான்-பொடியாரும்
    436 குற்றாலத் தண்ணல் குழல்வாய் மொழியுமைசேர்
    வற்றா வடவருவி யான்மைந்தன்-கற்றாய்ந்து
    437 சட்டி விரதஞ் சகத்திருந்த பேர்க்குமன
    திட்டவ பீட்டமெல்லா மீந்திடுவோன்-கெட்டியாய்த்
    438 தென்னிலஞ்சி வீற்றிருப்போன் செண்பகவி நாயகர்க்குத்
    தன்னிகரில் லாததுணைச் சண்முகத்தோன் / முன்னரெல்லாம்
    439 பூத கணநடப்பப் பொய்ம்மையில்லா மெய்யடியார்
    ஏதமறப் பின்னே யிசைந்துவரப் / போதமுறும்
    440 கும்பன் முதன்முனிவர் கொண்டாடிப் போற்றிவர
    இம்பரிலே யைந்தருவு மீந்துவரத் தம்பமாம்
    441 தேவர்சே னாபதியாஞ் செட்டிப் பெருமான்றேர்
    தேவியே யவ்வேளை தானெய்த / ஆவலுடன்
    442 காணாமற் போனபொருள் கண்டவர்போ லுண்மகிழ்ந்து
    நாணாம லங்கே நடந்துசென்றாள் / வீணாளாய்ப்
    443 போச்சுதே நேற்றுவரை பூங்குயிலா ரேயெனக்கும்
    வாச்சுதின்றே யென்று வணங்கினாள் / பேச்சுதனால்
    444 வேதியர்கள் சொன்னதெல்லா மெய்யே குமரனென்றே
    ஓதி யுணர்ந்தா ளூவப்புற்றாள் / வீதியிலே
    445 வந்தானைப் போற்றி மகிழ்ந்தெடுத்த புட்பமெல்லாம்
    சந்தாபந் தீரவே சாத்தினாள் / கொந்தாரும்
    447 446 missing?? 447. கோதை சரியமலர்க் கோதைபோ லேபணிந்தாள்
    போத விரண்டுகுடம் பொன்பெற்றாள் / ஊதைக்கான்
    448 மான்மகளைக் கூட மயங்கித் தியங்கினீர்
    மான்மகளைக் கூட மயங்கிலிர் / மான்மகளைக்
    449 கொள்ளாத கோட்டாலை கொண்டீ ரெனைமதனும்
    கொள்ளாத கோட்டாலை கொள்வானேன் / வள்ளியென்னும்
    450 வள்ளிக் கொடிச்சி வளர்கொடிச்சி வன்கொடிச்சி
    வள்ளற் கொடிச்சியும் நான் வாய்ப்புக்கால் / எள்ளலறப்
    451 பெண்டுவைத்துக் கொள்வீர் பெருமையுண்டா மான்மகளைக்
    கொண்டதுபோற் கொஞ்சங்கள் கூறாரே / மண்டலத்தில்
    452 அங்கவளு மானைமக ளல்லவோ நாயடியேன்
    பொங்கவனி வேந்தர் புதல்விகாண் / மங்கையவள்
    453 பேரிளம்பெண் ணேடியேன் பேர்பெரிய தேர்வேந்தர்
    காரியமோ வீரியமோ கைக்கொள்வார் / நீரும்
    454 மணந்தான் மயக்கமறும் வாய்முத்தந் தந்தே
    அணைந்தாலென் னாசையறு மென்றாட்-கிணங்கிருவர்
    455 தங்கள்முகம் பார்த்துத் தனிக்கிருபை மூரலே
    புங்கமுடன் செய்தான் புகழ்வேலன் / வங்கணாமாய்ச்
    456 சொன்ன வெழுவருக்குஞ் சொல்லரிய மாலேறப்
    பொன்னக்கரும் பன்னகரும் பூவுலகும் / நன்னகரும்
    457 மீறி நெறியேற மிக்கசைவந் தானேற
    மாறிலாச் செங்கோல் வளர்ந்தேற / ஈறிலாக்
    458 குற்றாலம் வாழக் குழல்வாய் மொழிவாழ
    வற்றா வடவருவி வாழவே / பற்றாக
    459 மாதங்கண் மும்மழைகண் மங்காமல் வாழவே
    வேதங்கண் மெய்ப்பொருள்கண் மெய்வாழ / நீதங்கள்
    460 சீருடையார் வாழத் திருவாழத் தென்னிலஞ்சி
    ஊருடையான் போந்தா னுலா.

    வாழ்த்து
    ஊரிவாழி வாழி யுலா.
    461 முத்திதருங் குற்றால முற்றுமே வாழிவெற்றிச்
    சத்தியணி வேன்முருகா தாம் வாழி / எத்திசையும்
    சீர்வாழி பக்தர் செயம்வாழி தென்னிலஞ்சி

    திரு இலஞ்சி முருகன் உலா முற்றிற்று.
    ----------------------------

    குறிப்புகள்
    காப்பு: 1. நார்-அன்பு. மாலை சேர்க்க என்பதற்கேற்ப நார்தருமால் என்றது ஒரு நயம்; நார்-மாலை கட்டும் நார்.
    காப்பு: 2. தண்டாமரையாள்-கலைமகள். தமிழ் முனிவன்-அகத்தியர். அப்பன் முதல்மூவர்-அப்பர், சம்பந்தர், சுந்தரர். திருவாசகத்தேனப்பன்- மாணிக்கவாசகர். திருவாசகத்தேன்: "திருவாசகமென்னுந் தேன்"
    பழம்பாடல்.
    கண்ணி, 1. கார்கொண்ட கந்தரன்-சிவபெருமான்.
    2. எங்கே எங்கேயென்றது இழந்தோம் இழந்தோமென்றபடி.
    3. நாட்டம்-நெற்றிக்கண்.
    5. மீன்-நட்சத்திரம்; கார்த்திகைப் பெண்கள்.
    6. பொய்கை-மானிடராக்காத நீர் நிலை.
    7. இருவி-இருத்தி. பிரியமுற்று ஆள்.
    6-7. "நையா நின்ற சிறுமருங்கு னங்கை யுமையாள் பரமனொடு-நறு நீர்ப் பொய்கைத் தடங்கரைவாய் நண்ணி முகமா றினுக்கேற்பக், கையா றிரண்டு புரிந்ததுபோற் காலா றிரண்டு செய்யாது -கருதி யிரண்டே செய்தனண்முற் கடையேஞ் செய்த நல்வினையால்" திருவிடைக்கழி முருகன் பிள்ளைத்தமிழ், சிற்றிற். 9
    8. "சூரர்பெருங் குலத்தை மாய்ப்ப, அஞ்சுமுக மமையாவென் றாறு முக மாகவெழுந் தருளி னானே" திருக்குற்றாலத் தலபுராணம், திருமால் சிவபிரானான. 106.
    9. பின்னவர்கள்-வீரவாகுமுதலிய நவவீரர்களாகிய தம்பிமார்கள்.
    12. கற்பகநாடாளி-இந்திரன். 13. பொன்னாட்டை வெல்ல.
    16. ஊகம்-அறியும் ஆற்றல். சேகரத்தில்-தலையில். வாகு-அழகு.
    20. வேளை-காமனை
    22-3. மன்னர் செங்கோல்நெறியும் மகளிர் கற்பும் மழை பெய்தற்குரிய காரணங்களாதலின் அவற்றை முறையே கூறினர்; மழைபெய்யாமைக்குக் காரணங்களைக் கூறுகின்றபொழுது, "செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ, கொங்கவிழ் குழலார் கற்புக்குறை பட்டோ, நலத்தகை நல்லாய் நன்னா டெல்லாம், அலத்தற் காலை யாகியது" (மணி.28:188-91) என்று சொல்லும் பகுதியால் இது புலப்படும்.
    23. கூழ்கள்-பயிர்கள்.
    24. முன்பிறப்பில் தங்கள் கையினால் அள்ளி, இரப்பவர்களுக்குப் பிச்சையிடாதவர்கள் இந்தப் பிறப்பில் பிச்சை பிச்சையென்று இத்தலத்தில் வந்து கூறும் வண்ணம் படைத்த இடம்; என்பது பிற இடங்களிலுள்ள இரவலர்கள் இவ்விடத்திற்கு வந்து பிச்சை பெறுதற்குரிய செல்வமுடையது இத்தலமென்று குறித்தபடி; "மாசித் திங்கண் மாசின சின்னத் துணிமுள்ளின், ஊசித் துன்ன மூசிய வாடை யுடையாகப், பேசிப் பாவாய் பிச்சையெனக்கை யகலேந்திக், கூசிக் கூசி நிற்பர் கொடுத்துண்டறியாதார்' (சீவக.929) என்னும் அருமைச்செய்யுள் இங்கே கருதற்குரியது.
    26. திரு பரம் குன்றாமல் சேர்-செல்வத்தின் மிகுதி குறையாமல் சேர்ந்துள்ள; பரம்-பாரம்; "உரியார், திருப்பரங்குன் றத்திருந்தான்" (136-7) என்பர் பின்.
    27. சிறப்புக்கெடாதபடி மனத்திலுள்ள எண்ணங்களை நிறைவேற்றும். சீரலைவாய்-திருச்செந்தூர். ஆர-இருப்பதற்கு.
    28. திரு வாவி நன்குடியாம் என்ன-திருமகள் தாவிவந்து இதுவே நமக்கு நல்ல வாழிடமாமென எண்ணும்படி.
    28-9. பெரு வாய்மை ஏர் அகத்தார்-பெரிய சத்தியத்தையும் அழகையும் உடைய நெஞ்சினர்.
    31. வள் தானம்-வளவிய இடங்களும். வண்டு ஆல் நம் சோலைமலை; ஆல்-ஒலிக்கின்ற.
    31-2. கண் ஓராறும் ஓராறும் காது ஓராறும் ஓராறும் என முறையே கூட்டுக.
    33. தெய்வச் செழுங்கொடி - தெய்வயானையம்மையார்.
    35. கும்பன் - அகத்தியமுனிவர். இக்கண்ணி முதலியவற்றிற் கூறப்பட்ட செய்திகளின் விரிவைத் திருக்குற்றாலப் புராணம், திருமால் சிவபிரானான சுருக்கத்திற் காணலாம்
    37. சிவகுரு - முருகக்கடவுள். வாணித்து - அமைத்து; பாணித்தென்பதன் திரிபு.
    37- 41. "குருவாங் குகவே ளருள்பற்றுக் கும்ப முனியன் றிரவிலொரு, திருவா லுகத்தாற் சிவபூசை செய்து மறுநாட் சிறுகாலை, ஒருவாலுகத்தாற் பூசனைசெய் துபய வடிவு மொன்றாக்கி, இருவா லுகநா யகனெனவே யியற்றி யாரா தனை புரிந்தான்" திருக்குற்றாலப்புராணம், திருமால் சிவபிரானான. 124
    42. "நாதமுநாதாந்த முடிவு நவைதீர்ந்த, போதமுங் காணாத போதமாய்" கந்தர் கலி. 2
    43. சுத்தவித்யாதத்துவம், ஈசுவரதத்துவம், சாதாக்கிய தத்துவம், சிவதத்துவமென்னும் ஐந்தும் சிவதத்துவமாகும்.
    43-4. வித்தியாதத்துவமேழாவன, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை. ஆத்துமதத்துவம் இருபத்துநான்கு; அந்தக்கரணம் நான்கு, ஞானேந்திரியம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, பூதம் ஐந்து.
    45. பஞ்சகலையாவன: நிவர்த்தி, பிரதிஷ்டை, வித்தியை, சாந்தி, சாந்தியாதீதமென்பன. மூலமந்திரம்-பிரணவம், கலாதிகள்-கலை முதலிய ஆறு அத்துவாக்கள்; அவை மந்திரம், பதம், புவனம், தத்துவம், கலை என்பன.
    48-9. என்பாலே ஆக-என் பங்கிலே ஆக; என்றது சிவபிரானாக வேண்டு மென்று விண்ணப்பித்ததைக் குறிப்பித்தது.
    50. மகுடாகமம் திருக்குற்றாலத்துக்குரியது; "கூறுமவர் கோலமொடு கோயிலிடை யேகி, வீறுதமி ழாலரியை வேதமனு வாலே, ஆறுபுனை வேணியர னாதல்புரி பூசை, ஏறுமகு டாகமெ னாவருள்செய் தானால் "திருக்குற்றாலப். திருமால். 115.
    52. வசு-அக்கினி.
    54. பூதி-செல்வம்.
    55. வடவருவித் தீர்த்தம்-இது திருக்குற்றாலத்திலுள்ள தீர்த்தங்களுள் ஒன்று. இதன் வரலாற்றைத் திருக்குற்றாலத்தலப்புராணத்திலுள்ள வடவருவிச் சருக்கத்தாலுணரலாம். "வடவருவி யானே மலப்பாழுஞ் சேற்றில், நடவருவி யானே நமை" (திருக்குற். சிலேடை)மும்மூர்த்தி: திருக்குற்றால நாதர் பிரமாவாகவும் திருமாலாகவும் சிவபிரானாகவும் ஆயினமையின் மும்மூர்த்தியென வழங்கப் படுவார்; நிமலனே யத்தலத்து மூவராய் முத்தொழிலு நியமித் தானே" திருக்குற்றாலப். மூர்த்தி 12.
    56. தென்றலங்கால்-தென்றற்காற்று. தீயமறையோ னென்றது ஆத்திரேயனென்னு மந்தணனை. இதிற் கூறப்பட்ட வராலாற்றின் விரிவைத் திருக்குற்றாலப்புராணம், மந்தமாருதச் சருக்கத்தாலறிக. குன்று-திரிகூடமலையை. சூழ்-வலஞ்செய்த.
    57. வானோர் சிவத்துரோகமென்றது, சிவபிரானையவமதித்த தக்கன் செய்த வேள்விக்குச் சென்ற துரோகத்தை; திருக்குற்றாலப்புராணம், தேவர்கள் சிவத்துரோகந் தீர்ந்த சருக்கம் பார்க்க.
    58. நரியும் வேடனும். இதிற் கூறப்பட்ட வரலாறு திருக்குற்றாலப் புராணம், வேடன் வலம்வந்த சருக்கத்தாலுணரப்படும்.
    58-9 மேற்படி புராணம் யானைபூசித்த சருக்கம் பார்க்க. "தந்த வாரணம் போன் முத்திவீடு புரக்க நெஞ்சே" (திருக்குற். அந்தாதி)கவிப்பன்- கண்டக சேதனென்பவன்; இவன் பிழையைப் பொறுத்து வீடளித்து மேற்படி புராணத்துள்ள கண்டகசேதனச் சருக்கத்தால் விளங்கும்.
    60. வேதியன்-சுகுற்சன்; அவன் தாதை கவுற்சன். இவ்வரலாற்றை மேற்படி புராணத்துள்ள கவுற்சனச்சருக்கத்தால் உணர்க.
    60-61. நறவுண்ட மறையோன்-தருமசாமியென்பவன். தீர்த்தம்-வடவருவிவந்து வீழுந்தடாகம்; தருமசாமிச்சருக்கம் பார்க்க.
    61-2. வண்டணுகாச்சோலை-சண்பச்கச்சோலை. இதழி-கொன்றை. சித்ரசபை-திருக்குற்றாலத்துள்ள சபை; இஃது இரத்தினசபை முதலிய ஐந்தனுள் ஒன்று;
    "ஆதியாம் பரையலது நன்னகர்ச்சிற் பொதுநடனமாருங் காணார், காதலாற் சுரர்முனிவர் பலகாலந் தவம்புரிந்து கண்டவற்றாற், போதினான் முகன்மூலப் பரைபரம னியந்திரங்கள் பொறித்தா னன்றே, வாதரா யணன்முதலோர் சித்ததிரமன் றெனுநாமம் வழங்கி னாரால்" திருக்குற்றாலப். திருநடச். 39.
    65. சண்முகசிந்தாமணி: "பெண்கொடியா மிருநிதிக்கு நடுவளர்சிந்தாமணி" திருக்குறாலப். திருமால். 100.
    67. ஆனைமுகன்-தாருகாசுரன்.
    70. மான்மகள்-வல்ளியம்மையார். 72. ஆட-போர்புரிய.
    73. தகர்-ஆடு; "நெருப்பிலுதித், தங்கட் புவன மனைத்து மழித்துலவும், செங்கட் கிடாயதனைச் சென்றுகொணர்ந்-தெங்கோன், விடுக்குதியென்றுய்பவதன் மீதவர்ந்தெண் டிக்கும், நடத்தி விளையாடு நாதா" (கந்தர்கலி. 58-60) பூகம்-கமுகமரம்.
    74. இலஞ்சி-குளம். மலரிலஞ்சி-மலரையுடைய மகிழமரம். தென்இலஞ்சி-அழகிய இலஞ்சியென்னும் தலத்தில்.
    75. ஊழிக்கும்-ஊழியளவும்.
    76. கருப்பிணிக்கு-பிறவியாகியநோய்க்கு. கான்மருந்தாய்-தன்னுடைய திருத்தாளே மருந்தாக; வனமூலிகையாக எனலுமாம். ஆய்ப்பாகர்- உமாதேவியாருடைய பாகத்தையுடையவர்; விரித்தல் விகாரம்.
    77. பொன்னுலகோர்-தேவர்.
    78. பொன் மால்-திருமகளையுடைய திருமால்.
    79. சாறு-திருவிழா.
    82. தெண்டன்-வணக்கத்தையுடையவன்.
    85. பருதி-சக்கராயுதம்.
    86. தகர்-ஆட்டுக்கிடாய் வாகனம்.
    84-7 முதல்நாளில் பிரமதேவராகவும் இரண்டாம்நாள் திருமாலாகவும் மூன்றாநாள் உருத்திரமூர்த்தியாகவும் நான்காநாள் ஈசுவரனாகவும் ஐந்தாநாள் சதாசிவமூர்த்தியாகவும் ஆறாநாள் வெள்ளிமயில் வாகனாரூடராகவும் திருக்கோலங்கொண்டு உலாவருவார் என்பது கருத்து.
    87-8. எனத் தொனிப்ப. நீத்தம்-வெள்ளம்.
    89. கங்கையென்றது சுத்த தீர்த்தத்தை.
    90. உட்சாத்து-உள்ளே உடுக்கும் உடை. மேற்சாத்து-புறவுடை. இருக்கு கூறு-வேதம் கூறுகின்ற.
    91. முண்டம்-நெற்றி. அண்டர்-தேவர். 93. வெய்யோர்-சூரியர்.
    94. கட்டுவடம்-கழுத்திற்கட்டும் ஆபரணம். சன்னவீரம்-மார்பிலிடும் வீரசங்கிலி; தக்க. 341, உரை. இடா-இட்டு. சட்டமா-முறையாக.
    101. வானக் குலக்கொடி-தெய்வயானையம்மையார். கானக்குறத்தி-வள்ளியம்மையார்.
    102. பெண்கள் தப்பவோ; தப்பல்-நிறையழிதல். மதவேள்-காமன். பேதலிக்க-வேறுபட. ஆகம்-மார்பில்.
    105. தரு-கற்பகம். எல் அவிர-ஒளி விளங்கும்படி.
    106. வீக்கி-கட்டி.
    109. தாழ்வரை-அடிவாரம். பொற்றைகள்-சிறுகுன்றுகள்.
    111. தவிசா-ஆதனமாக.
    111-2. வேதமொழியாகிய தமிழ்-தேவாரம். வாசகம்-திருவாசகம்.
    113. சேந்தசெவி-அணிகலனாற் சிவந்தசெவி. பாந்தமாய்-பொருத்தமாக; "பாந்தம தாயெற் கருள்வோன்" சிரகிரிக்கோவை, 104.
    114. சொன்னநிலத்தோர்-தேவர்.
    119. தீனம்-எளிமை
    120. தானத்தார்-தானம் செய்பவர்கள், தலத்தில் இருப்பவர்கள்.
    122. புரந்தரனார் ஏந்திழையாள்-இந்திரன் புதல்வியாகிய தெய்வயானை அம்மையார்.
    123. ஏன்றமட்டும்-இயன்றமட்டும்.
    125. பானல்சேர்-கருங்குவளையைப்போன்ற.
    128-9. சந்துத் தூ கந்த மாதனத்தோர் இருவர்-சந்தனத்தின் சுத்தமாகிய வாசனையையுடைய பெரிய ஸ்தனத்தினராகிய வள்ளி தெய்வயானையம் மையார். தோகை - மயில்; உவமை. தூ கந்தமாதனத்தோன்-பற்றுக் கோடாகிய கந்தமாதன பருவதத்தில் எழுந்தருளி இருப்பவன்; இதுகயிலை யைச் சார்ந்தவிடத்தில் முருகக்கடவுளுக்கிருப்பிடமாக இருப்பது.
    130. பானல் ஐ வாய்-குமுதம்போன்ற அழகிய வாயையுடைய இருவர் விருப்பான். அலைவாய்-திருச்செந்தூர். தானம்-தேவலோகம்.
    131. வேள்வி மலையான்-யாகம் செய்ய மயங்காதவன்; இந்திரன். வேட்டோன்-மணந்தவன். வேள்வி மலை-நாஞ்சில் நாட்டிலுள்ள தலம்; "நாஞ்சினாட்டு வேள்விமலையம்மே" குற்றாலக்குறவஞ்சி.
    132. அளகை-கூந்தலையுடையாள். வள்ளி ஊரு உடையான்; ஊரு-துடை. ஐம்முகத்தான்-சிவபிரான். அளகாபுரியைப்போன்ற வள்ளி யூரையுடையவன்; வள்ளியூர் : தென்பாண்டிநாட்டில் உள்ள சுப்பிரமணிய ஸ்தலங்களுள் ஒன்று; திருப்புகழ் உடையது. வளகு-வளம்.
    133. பண்பு ஐ திரு மலையும்-நற்குணத்தையும் அழகையும் உடைய திருமகளை அணிந்த; ஐ-அழகு. பஞ்சாயுதன்-திருமால். பண்பைத் திருமலை-பண்புளிப்பட்டினத்தைச் சார்ந்த திருமலை; இது திருக்குற்றாலத் திற்கு அருகேயுள்ள ஸ்தலம்.
    134. பழ நிமலைப்பால் அன்பால் வந்தான்- பழமையும் தூய்மையும் உடைய உமாதேவியாரிடத்தில் அன்பினால் அவதரித்தான்; "இழையணி சிறப்பிற் பழையோள் குழவி" என்றார் திருமுருகாற்றுப்படையிலும். சளம்-வஞ்சனை.
    135. கதிர் காமத்தோனாம்-கதிர்க்கின்ற ஆசையுடையவனாகிய. சூர்-சூரபன்மன். கதிர்காமத்தோன்-கதிர்காமமென்னும் தலத்தில் எழுந் தருளியுள்ளவன்.
    135.-6. பதமாம் திரு சீரடியார்க்கு ஏர் அகத்தில் நட்டான்; அகம்- மனம்; நட்டான்-பதித்தவன். என்றும் திருவேரகத்தில் நட்டான்; திரு வேரகம் மலைநாட்டகத்துள்ளதொரு திருப்பதி;-சுவாமிமலையுமாம்; நட்டான்-விரும்பியவன். உரியார்-உரிமையையுடைய அன்பர்களது.
    137. திரு பரம் குன்ற திருந்தான்-செல்வமிகுதி குறைவுபடச் சம்மதி யாதவன்; மேன்மேலும் வளர்பவனென்றபடி.
    140. பிலம்-நாகலோகம். ஆயத்திரள்-பாங்கியர் கூட்டம்.
    141. அரமகளிர்-தெய்வப்பெண்கள். நிரையாய்-வரிசையாய். திரம்-நிலை.
    142. தெற்றி-திண்ணை. சூளிகை-மாடத்தின் உச்சிக்கட்டிடம். ஆளிபோல்-இடையால் சிங்கம்போல்.
    143. நடையாற் பிடிபோலவும் சொல்லாற் கிளிபோலவும் கண்ணால் மான்போலவும் நடையால் அன்னம்போலவும்.
    144. குரலாற் குயில்போலவும் சொல்லாற் பூவைபோலவும்; பூவை- நாகணவாய்ப்புள். கோவை-கொவ்வைக் கனி.
    145. சேரலர்கள்-பகைவர்கள்
    146. ஈடு-எளிவரவு. கலிங்கம்-ஆடை; கலிங்கதேசமென்பது வேறு பொருள்.
    148. சையம்-ஒரு மலை
    149. கந்தரம்-கழுத்து, அந்தம்-அழகு, சிந்துரம்-குங்குமதிலகம்.
    150. பரிபுரம்-சிலம்பு
    152. வாசி-வேறுபாடு, சொன்னவனை-திருஞான சம்பந்நமூர்த்தியை; முருகக் கடவுளே திருஞானசம்பந்தராக வந்தாரென்னுங் கொள்கையுடைய வர் இவ்வாசிரியர். இங்கே குறிப்பிட்டது திருவீழிமிழலையிற் படிக்காசு பெற்ற வரலாற்றை.
    154. மரமென்றது வேங்கைமரத்தை.
    158. இலஞசி-மகிழ மரம், பொய்கை, இலஞ்சி யென்னும் தலம்.
    160. தேசு-ஒளி
    162. தெய்வக்கொடி-தெய்வயானை யம்மையார், குறவர் மின்கொடி- வள்ளி நாயகி
    163. சத்தி-வேல்
    165. வெற்புக்கு அயில் தொட்டாய்-கிரவுஞ்ச மலையை அழிப்பதற்கு வேலை விட்டாய், கயிற்றொட-கையில்தொட
    166. புகழ் மாலை. ஈர் அன்பு உகள் மாலை. 167. பெண்ணைப் பெண்-பெண் பனை. பெண்ணைப் பெண்ணாக்கி விட்டால்-பெண்களாகிய எங்களைப் பெண் தன்மையுடையவர்களாகச் செய்துவிட்டால்.
    168-9. வேல் ஐ கடம்பா - வேலையும் அழகிய கடப்ப மாலையையும் உடையாய். வேலை கடம் பகர - தொழிலாகிய கடமையைச் சொல்ல. சமண் ஆற்றை - சமணர்களது மார்க்கத்தை.
    171. ஆல் இங்ஙனம் வயிறே ஆகும் ; ஆல்-ஆலிலை.
    176. முண்டம்-நெற்றி. ஆன்று - அடங்கி.
    179. பச்சம்-பட்சம்.
    183. பஞ்சரிக்கும்-தொந்தரவு செய்யும்; "பஞ்சரித்து நின்னைப் பலகா லிரந்ததெலாம்" தாயுமானவர்.
    184. மரப்பாவை பேச்சுப் பிதற்றுதற்கு. ஏச்சு - ஏய்த்து, வாச்ச - வாய்த்த.
    186. பயந்தாள்-பெற்றதாய்.
    192. சல்லாபம்-இன்பம்
    194. விடை - ஆட்டுக்கிடாய் ; "மதவலி நிலைஇய மாத்தாட் கொழு விடை" முருகு. 232
    195. நந்து ஊர்; நந்து-சங்கு, சந்து ஊரும்-சந்தன மரங்கள் பரந்து வளரும்.
    196. சோலை மலையிலும் எப்பொழுதும் அன்புடையவர்களுடைய சிறப்புப் பொருந்திய நெஞ்சிலும் இருப்பவர். காவித் திருமலை-திருத் தணிகை; திருக்குற்றாலத்துக் கருகிலுள்ள திருமலையுமாம்.
    197. அடியர் மனம் குன்று தொறும் ஆள்தல் புரி-அடியவர்களுடைய நெஞ்சம் சோரும்பொழுதுகளில் ஆண்டருளும்.
    198. சித்திரமா மன்றம்-திருக்குற்றாலத்திலுள்ள சித்திர சபை. விசித்திர மா மன்-விசித்திரத்தையும் பெருமையையும் உடைய தலைவன். நந்து அரியை-சங்கினை உடைய திருமாலை.
    199. அம்மான் என-மாமன் என்று. அம் மான் மருகன்-அழகிய மானுக்கு மாப்பிள்ளை.
    203. வன்னி-கிளி. 204. கோடரம்-மரக்கிளை.
    205. அருணகிரிநாதர் கிளிவடிவமாக முருகன் திருக்கரத்திலிருந்து கந்தரனுபூதியை அருளினாரென்பது கர்ணபரம்பரைச் செய்தி.
    203-5 திருத்தணிகையுலா.
    207. சேலன்-சேல்மீன் கொடியையுடைய மன்மதன்.
    210. சொர்க்கம்-ஸ்தனம்.
    211. மூப்பியர்-செவிலியர். தக்கை-மகளிர் காதை வளர்க்கும் ஒரு வகைக் கருவி; வழக்கு.
    212. அம்பரம்-மஞ்சள்.
    219. மௌவல்-முல்லை.
    220. ஒயில்-ஒய்யாரம் ; வழக்கு.
    221. நல்ல சங்கு - (இங்கே) வலம்புரி.
    223. சித்திரநதி - திருக்குற்றாலத்தைச் சார்ந்த ஒரு நதி; இத்தலத்திற்கும் உரியது.
    224. அங்கியில்-நாரதர் செய்த வேள்வித் தீயில்.
    225. தகர்-ஆட்டுக் கிடாய். சூர்-சூரனாகிய மாமரத்தை.
    226. மயில்வாகனமாக ஏறிக் கொடியாகப் பிடித்தத ; எதிர் நிரனிறை.
    227. பொய்யாமொழி - பொய்யா மெமாழிப்புலவர். கீரன்-நக்கீரர்.
    228. கும்பன்-அகத்தியர்.
    229. வேடர்-வள்ளியினுடைய சுற்றத்தார். சூரர் ஒரு மூவர்-சூரபன்மன், சிங்கமுகன், தாருகன்.
    231. காந்தமணி-சூரியகாந்தக் கல், கதிர்-சூரியன்.
    237. தேசிகன்-குரு. நற்புலவோன்: "நூலறி புலவ" (முருகு) வாங் கினோன்-திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.
    238. ஐந்து முகத்தான்-சிவபெருமான்.
    239. வாகனத்தன்-வாகனமாக உடையவன். வாகு அனத்தன் வன்சிரத்திலே புடைத்த வாகன் அத்தன்; வாகு - அழகு; வாகன்-திருக்கரத்தையுடையவன். மா கனத்தன்-மிக்க மேன்மையை யுடையவன்.
    240. மான் மருகன்-திருமாலுக்கு மருகன், மானுக்கு மாப்பிள்ளை, இந்திரனுக்கு மாப்பிள்ளை. மால் மரு கல் மாது உமையாள்-பெருமை மருவிய இமயமலையின் திருமகளாகிய உமாதேவியாருடைய.
    244. திருமால் சீர் கொப்பூழ்-தாமரை.
    245. இருவர்-தெய்வயானை, வள்ளி. அவரோடு வேண்டி இருக்க.
    246. தேவமயில்-தேவயானை அம்மையார்.
    248. வா என்று ஆயும் ; ஆய்-தாய். பொறி- அறிவு.
    249. வேள்-தன்
    250. தனு - வில், உடல்
    251. மிக்கு ஆய் வளர்க்கும் ; ஆய்-தாய்.
    252. வாதாடும் கண்ணாள்-வெல்லும் கண்ணாளென்க. கண்டு - கற்கண்டு.
    253. வேரி - தேன்.
    255. ஏத்தார் தேய்தலும் ஏத்தினர் விளக்கம்பெறுதலும் இங்கே அறிதற்குரியன.
    256. ஈடு - ஒப்பு.
    257. சானு - முழந்தாள். 258. அம்பரம்-ஆகாசம்
    261. கந்துகம்-பந்து. 263. சூதில்-சூதாடு கருவிகளைப்போல்
    264. குயங்கள்-கொங்கைகள்.
    265. நுசுப்பு-இடை. வசிப்பு - வசீகரத் தன்மை.
    266. குமிந்து - குவிந்து ; வழக்கு. 267. பரிந்து -நீங்கி.
    268. உரத்தில்-மார்பில். சுரப்பளி - ஒருவகைக் கழுத்தணி. 269. கதம்பு - கதம்பம் ; கந்தப்பொடி. முங்கு - முழுகும்.
    270. செக்கணி - ஒருவகைக் கூத்து.
    290. மெய்வேள்-முருகக் கடவுள்
    291. மைத்துனன்-அத்தைமகன். சித்தசன்-மன்மதன்.
    292. வேள் முரசு: கடல், வேள் இருது: வஸந்தகாலம், வேளுடைய சின்னம்: குயில். அவன் தேர்: தென்றல். விகாதம்-பகை.
    295. குழுவை-கூட்டத்தை
    299. கோரித்து-கொடுமையுற்று. கோடு-யானைக்கொம்பு, சீர்-கனம்
    301. இலஞ்சி-தடாகம்.மண்டபத்துக்கு இலஞ்சியும், ஆசனத் துக்குத் தாமரையும் மடந்தைக்கு அன்னமும் உவமைகள்.
    303. கின்னரி, யாழ், சுரமண்டலம் : இவை இசைக்கருவிகள்.
    304. மாடகம்-முறுக்காணி. சகரமுதலேழெழுத்து-சரிகமபதநி யென்பன.
    304-5 அகரத்தின்சாரி-ஹகார சஞ்சாரம்.
    306. ஓசை ரண்டு ஆரோகண அவரோகணங்கள்; "ஆரோசை யமரோசை களினமைத்தார்" (பெரிய. ஆனாய 24.) மந்தரம்-மெல் லோசை; மத்யம்-மத்தியமம்-சமன்; தாரம்-வல்லோசை ; "மந்தரத்து மத்திமத்துந் தாரத்தும் வரன்முறையாற், றந்திரிகண் மெலிவித்துஞ் சமங் கொண்டும் வலிவித்தும்" (பெரிய. ஆனாய். 27) திவவு-நரம்புக்கட்டு.
    312. கருப்பை - எலி
    312-3. "நலிவாரு மெலிவாரு முணர்வொன்றா நயத்தலினால், மலிவாய் வெள் ளெயிற்றரவ மயின்மீது மருண்டுவிழும், சலியாத நிலையுரிந் தடங் கரியு முடன்சாரும், புவிவாயின் மருங்கணையும் புல்வாய புல்வாயும் " பெரிய. ஆனாய 34.
    314. இருவர்-தும்புரு நாரதர்
    319. தானை - ஆடை.
    320. அற்றம்-சோர்வு.
    323. சந்தாபம்-வெம்மை.
    324. நாகம்வரு - மலையின்மேல் வருகின்ற 325. எமது சிரத்தும்.
    326. உபய பரிபுரம்-இரண்டு சிலம்பு.
    327. வானரசி - தேவயானை
    329. வேள்விமலை: 131-ஆம் கண்ணியைப் பாரக்க. காவிமலை: கண்ணி, 196.
    330. அஞ்சிப் பொன்னை உருவில் உரத்திற்பெற்றாள்; பொன்-பசலை; உரம்-மார்பு.
    331. தேரை அடைதற்கு என ஒரு சொல் வருவிக்க.
    332. இது முதல் தனக்கும் தேருக்கும் உள்ள ஒப்புமையை மடந்தை கூறுகின்றாள். கண்-மூங்கிற்கணு.
    333. அரை-இடை. சேலை - தேர்ச்சீலை. 334. தாலம்-பனை.
    332-5. தலைவிக்குப் பொருள் பொருத்துகையிற் கீழ்க்கண்டவாறு கொள்க:- முடி - தலை, கண்-விழி, தாலம்-நாக்கு, வேலை - காரியம், நீலம் - கண், கோங்கு: நகில், காந்தள்: கை, குமிழ்: நாசி, தாமரைப்பூ: முகம்.
    338-9. நகை ஈந்து. மானின் மருகன்-முருகன். மால்மகன்-காமன். மால் மருவும்-பெருமை மருவிய.
    340. தெரிவையை, "பெரிய தெரிவையிவள் பேரிளம்பெண்டங்கை" (369) என்பர் பின்.
    344. வித்துருமம்-பவழம். 347. வீரன்-வீரவாகு.
    348. மூவர்பிறப்பு-சூரன் முதலிய மூவருடைய பிறப்பை. குரு தேசிகர்-முருகக் கடவுள்
    349. வெள்ளி-சுக்கிரன்
    351. முனி-நாரதர்
    352. மகத்தில்-யாகத்தில். தகரை-ஆட்டுக்கிடாயை
    353. அண்டங்களை ஆண்டிருந்த சூரபன்மனாகிய ஆண்மயிலை முட்டையைக் காத்திருந்த ஆண்மயிலையென ஒரு பொருள் தொனிக்கின்றது.
    354-5. கண்டத்தில் மறு உள்ளவன் சிவபெருமான்
    357. சொற்றேன் "குறப்பெண் ......... தேனூறு கிளவிக்கு வாயூறி நின்றவன்" ழத்துக். பிள்ளை.15
    358. ஆழி-கடல் 360. இயங்கள்-வாத்தியங்கள்
    362. மால்-காமமயக்கம்.
    363. வள்ளியூர்: 23 - ஆம் கண்ணியைப் பார்க்க.
    364. வேரிக்குழல்-வாசனையையுடைய கூந்தல். ஆரம்-சந்தனம்.
    368. காயா - பிறரைக் கோபியாத.
    370. நுதி - நுனி.
    371. அம்பும் உறையில்; உறை - அம்பறாத்தூணி. சொம்பு - அழகு.
    372. பாந்தத்து அயல் : ‘ப’ என்ற எழுத்து வரிசையின் ஈற்றயல் ; என்றது ‘போ’ என்பதை. வவ்வில்ரண்டு: வா. போவென்றும் வாவென்றும் ஏவும்.
    374. விந்தம்-விந்தமலை. புவியினுக்குள்ளாகும் என்று ‘ஆகும்' என்பதை முன்னுங்கூட்டுக. ஈடு-ஒப்பு.
    375. வத்திரம்-முகம்; இது வக்த்ரம் என்பதன் திரிபு. ஒற்று - மெய்யெழுத்து.
    376. தொடை-வரிசை. பதின்மூன்று: லகரஒற்று; அதனை இடை யெழுத்தாக உடையது இல்லையென்றசொல்; இடை இல்லையென்றபடி.
    377. வரையென்றது வயிற்றிலுள்ள மடிப்புக்களை. வரைகளென்றது நகில்களை. கமுகென்றது கழுத்தை. நீலமென்றது கண்களை. விதி - நூலின் விதி.
    378. மா தரைவிட்டு-பெரிய பூமியைவிட்டு.
    379. கொலு வாய்-கொலுவில்.
    381-2. முலைவிண்டுக்கு-நகிலாகிய மலைக்கு. உடை-ஆடை. நகிலுக்கு ஆடை குற்றஞ்செய்ததாவது-மேல்மூடியிருத்தல். கூந்தலுக்கு வண்டு குற்றஞ்செய்தலாவது மொய்த்தல்.
    384. நந்து-சங்கு.
    386. கந்தமாதனம்-கைலையைச்சார்ந்த ஒருமலை; இது முருகக் கடவுளுக்குரியது; செந்தூருமாகும்.
    387. முன் ஆர் இயம் நாடும். தென்னாரியநாடு-திருவிலஞ்சியுள்ள நாடு.
    388. பன்னில் அம் சித்தாதியரும்; சித்தாதியர்-சித்தர் முதலியோர்.
    389. குத்திரம்-க்ஷூத்ரம்; "குமரகண்டங்குத் திரம்பேய் கயரோகன் சார் பிரேதம், இவைபிறவு முடற்குட்ட முதற்பிணியுந் தீர்த்து" (சேது. துராசார. 29) சித்திரம்-அழகு.
    390. நரவரி-நரசிங்கம். ஆயிரம் நரசிங்க அவதாரமாயினும் உலாவு கின்ற குஞ்சரம்; அயிராவணம்.
    391. காலாயுதம்-கோழிச்சேவல்.
    392. மன்றல்-கலியாணம்
    393. கணி-கண்ணி.
    423. கூர்ந்தளித்து-மிகுதியாக அளித்து
    427. ஆரல்விழா-கிருத்திகைத்திருவிழா.
    428. ஓதனம்-அன்னம்.
    431. சந்தவரை-சந்தனமரத்தையுடையமலை; பொதிகைமலை; கும்பன்-அகத்திய முனிவர்.
    432. முந்நூல் மணிமார்பர்-அந்தணர்
    435. கொற்றவை-துர்க்கை. அலைவாய்-திருச்செந்தூர்.
    திரு இலஞ்சி முருகன் உலா முற்றிற்று.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்