மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்
சுட்டி கதைகள்
Back
மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்
முல்லை முத்தையா
முன்னுரை
புறநானூறு மாபெரும் வரலாற்று ஏடு. தமிழர் வாழ்க்கைக் கணக்குப் பொறிக்கப் பெற்றுள்ள பேரேடு, பாடல்கள் நானுறே. படிக்கத் தொடங்கி விட்டாலோ, பெறும் அனுபவங்கள் பலகோடி. மனக் கோணலை நிமிர்க்கும் ஒரு பாடல். வளைந்த முதுகை நேராக்கும் மற்றொரு பாடல். சிந்தனை வளர்க்கும் புறப் பாடல். செயலனாக்கும் அப்பாடல். அறம் வளர்க்கும். அறிவைப் பெருக்கும். வீரம் ஊட்டும். அன்பை விளைவிக்கும். ஊக்கம் நிரப்பும். உணர்ச்சியூட்டும். கடமை உணர்த்தும். வீறு பெற்றெழச் செய்யும் வரலாறுகள், கண்ணில் கனல் எழுப்பும் காட்சிகள், மார்பை விம்மச் செய்யும் வீரச் செய்திகள்; இப்படி எத்தனையோ வியத்தகு செய்திகளைப் புறப் பாடல்களில் பார்க்கலாம்.
இதுவரை, புலவர்களே இப் பேரேட்டிற்குத் தனி உரிமை பாராட்டி வந்தனர். இந்நிலை மாற வேண்டும். புற நானூறு பொது உடைமை - பொதுச் சொத்தாக வேண்டும். எழுத்துக் கூட்டிப் படிப்பவருங்கூடப் புறநானூற்றைப்படித்துப்பயன் துய்க்கவேண்டும். இதற்காக எழுந்த சிறு முயற்சியின் விளைவே இந்நூல். புறநானூற்றுப்பாடல்கள் 400 உள்ளது. அதில் மாணவர்களுக்கு புரியும் வண்ணம் 113 பாடல்கள் கதை வடிவில் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
முல்லை பிஎல். முத்தையா
பொருளடக்கம்
1. தாயில்லாக் குழந்தை
2. காவலனே மேலானவன்
3. கொடையாளன் பண்பு
4. புலி கிளம்பிவிட்டது
5. குறைப் பிறவிகள்
6. புறாவும் புதல்வரும்
7. ஞாயிறும் திங்களும்
8. இரந்தும் உயிர் வாழ்வதோ?
9. எதிர்த்து நிற்போர் யார்?
10. தலைவனின் வலிமை
11. இரவலர் யார்? புரவலர் யார்?
12. அளவிட முடியாத அளவு!
13. பரிசில் வாழ்க்கை!
14. என்னென்று சொல்வதோ?
15. கவரி வீசிய காவலன்
16. மனத்தின் வேகம்
17. அதியமான் அஞ்சுகிறானா?
18. தண்புனலும் தறுகண் யானையும்
19. என்ன வாழ்க்கை!
20. அவரவர் பங்கு
21. பகைவர்களின் நடுக்கம்
22. “நல்லறத்தை நம்பு”
23. துன்பம் இடைக்கும் குடை
24. புறப்படு போர்க்களத்திற்கு!
25. வீரனுக்கு அழகு!
26. யாருடைய புகழ் உயர்ந்தது!
27. அன்னச் சேவலே கேள்!
28. தமிழின் ஆட்சி!
29. கொடுத்து நீண்ட கைகள்!
30. தமிழ்க் குலம்
31. என்றும் குதூகலம்
33. சுமையும் வறுமையும்
34. பாரியும் மாரியும்
35. பஞ்சாங்கம் எதற்கு!
36. போர்க்கலை தெரிந்தோர் உண்டோ?
37. பார், பார் படைக்கருவி பார்!
38. ஒளவை கண்ட காட்சி
39. முதலை வாய் யானை
40. எது உடைமை
41. ஆய் நாடும் தாய் நாடும்
42. எண்ண முடியாத யானைகள்
43. காடும் பாடியதோ
44. வடக்கும் தெற்கும்
45. ஆடு! பாடு! அதோ ... அவன் நாடு!
46. “உன் திரு உருவம்”
47. கிளிக்கூட்டமும் தினைக்கதிரும்
48. மலை போன்ற மனம்
49. பேகனின் பெருமை
50. மாரிக் கொடை
51. மலையைப் பாடினோம் மங்கை அழுதாள்!
52. யாம் வேண்டுவது பரிசில் அல்ல!
53. குதிரையை தேரிலே பூட்டு
54. “நகை அணிந்தனர்”
55. ஊரும் பேரும் உரைக்கமாட்டான்
56. வில்லாளன் ஓரி
57. அரிது எது? எளிது எது?
58. பாணனே கேள்!
59. கானங் கிழான் குன்றம்
60. ஏறைக் கோன் குணம் எவருக்கு வரும்?
61. குமணன் புகழ், குரங்குக்கும் தெரியும்
62. புகழ் கேட்டு ஓடி வந்தேன்
63. எல்லோர்க்கும் கொடு!
64. இளங்குமணா, என் செய்தாய்
65. மதிப்பு யாருக்கு?
66. பிட்டங் கொற்றனின் பெரும்புகழ்!
67. இன்று போல் என்றும் வாழ்க
68. ஏற்றுக உலை! ஆக்குக சோறு!
69. பண்ணன் வாழ்க!
70. நெஞ்சம் திறப்பவர் நின்னைக் காண்பர்!
71. கீரஞ்சாத்தன் வீரம் பெரிது
72. “நீயும் வா”
73. உலகம் இருக்கின்றது!
74. கற்றல் நன்றே!
75. முறையாகத் திறை கொள்க!
76. ஒட்டுவோன் ஒட்ட வண்டி ஒடும்!
77. உலகிற்கு உயிர் எது?
78. நல்ல நாடு
79. “மயக்கும் மக்கள்”
80. உண்பது ஒரு நாழி!
81. பல்லாண்டு வாழ்வது எப்படி?
82. யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
83. தனி வாழ்வும் குடும்ப வாழ்வும்!
84. “துன்ப உலகம்”
85. நரைத்து மூத்தவர்களே! கேளிர்!
86. வேம்பும் அமுதம்
87. கடல் மேல் எழும் கதிரவன் நீ!
88. புகழ் என்றால் இதுவன்றோ புகழ்
89. “அறப்போர்”
90. இளஞ் சேட் சென்னி
91. பாட்டுக்குப் பரிசு
92. அறனோ திறனோ?
93. “கையை காட்டு”
94. மதம் பிடித்த யானை
95. “"அண்ணனும் தம்பியும்”
96. “மரம்படுகிறுதி”
97. “கைவேல்”
98. இரந்து, உயிர் கொண்டான் எமன்
99. புகழ் மூடும் தாழி!
100. “சுட்டுக் குவி”
101. “பிந்தி வந்தார்”
102. “காதல் நன் மரம்”
103. கணவன் ஊர்ந்த குதிரை
104. “உறை மோர்த் துளி”
105. கொள்கை மறவாத குமரன்
106. அருவிலை நல்லணி
107. “கயல் மீன் கொடி”
108. கன்றை நோக்கிய கறவைப் பசு
109. ஆனந்தக் கண்ணிர்
110. பெற்ற நாளினும் பெரிது மகிழ்ந்தாள்
111. ஒரே மகன்
112. கேடயம் தா
113. வீரத்தாய் கூறினாள்
****
1. “தாயில்லாக் குழந்தை”
குழந்தை பிறந்ததைக் கண்ட தாய் கொள்ளை இன்பம் கொள்கிறாள். பெற்றால் மட்டும் போதுமா? தான் பெற்ற கண்மணியை ஓய்வு ஒழிவு இன்றிப் பேணுகிறாள். பெற்றவளுக்கு உறக்கம் ஏது? உள்ளத்தில் அமைதி ஏது?
பெற்ற குழந்தைக்கு வேளா வேளை பால் ஊட்டுகிறாள். காற்று, துளசு படாதபடி கருத்துடன் பாதுகாக்கிறாள். தொட்டிலில் இட்டுத் தாலாட்டித் தூங்கவைக்கிறாள். ஈ, எறும்பு அருகே செல்லாதபடி பார்த்துக் கொள்கிறாள்.
இப்படிக் கோடிப் பணிவிடைகள் செய்து குழந்தையைக் காப்பாற்றுகிறாள். தாய்க்குக் குழந்தையின் கதைதான் தலைவனுக்குக் குடும்பத்தின் கதையாகும். மன்னனுக்கு நாட்டின் கதையாகும்.
நாட்டிற்குத்தான் நல்ல அரண் இருக்கிறதே என்று அரசன் சும்மா இருக்க முடியுமா? பகைவர் புகமுடியாத நாட்டில் பசி புகுந்து விடலாம். வஞ்சகர் கொள்ளை கொள்ள முடியாத நாட்டைப் பஞ்சம் கொள்ளை கொண்டு விடலாம். நோய், நொடிகள்-இன்னும் எத்தனையோ தீமைகள் புகலாம்.
அரசன்,குழந்தையைக் காக்கும் தாய் போன்று கண்ணும் கருத்துமாய் இருந்து நாட்டைக் காக்க வேண்டும்.
அத்தகைய அரசனின் காவலே ஆட்சியாம், இளஞ்சேட்சென்னியின் நாடு தாயுடைய குழந்தை. அவன் பகைவர் நாடோ தாயில்லாக் குழந்தை.
2. காவலனே மேலானவன்
கதிரவன் காலையில் கிழக்கே உதிக்கிறான். மாலையில் மேற்கே சென்று மறைகிறான். பகல் வேளையில் உச்சி வானத்தில் ஒளி செய்கின்றான். இரவில் அவன் எங்கே? அவன் ஒளி எங்கே? மேற்கு மலைக்கப்பால் மறைந்து கிடக்கிறான். ஏன்?
அதோ நிலா வருகின்றதே அதனிடம் கேட்டோம் நிலவே, நிலவே. கதிரவன் ஏன் ஓடி விட்டான்? உனக்குத்தோற்று விட்டானா? உனக்கு அஞ்சி மறைந்து கொண்டானா? கதிரவனும் ஒரு வீரனா? பெரிய கோழை சீச்சீ. ஒரு நாளும் ஒப்பற்றவன் ஆகமாட்டான்.
ஆனால், ஒப்பற்றவனாகக் கூறும் சிறப்புடையவன் யார்? அவன்தான் மக்கள் நலங் காக்கும் மாண்பு மிக்க அரசன்.
அவன் புகழ்இரவிலும் ஒளி வீசும் பகலிலும் ஒளி வீசும்!
அவன் பெயர் நான்கு திசைகளிலும் பொறிக்கப் பட்டிருக்கும் இல்லையென்பதற்கு நடுங்கும் அவனுடைய கைகள், எதிரியைக் கண்டபோது நடுங்குவதில்லை. அவனன்றோ ஒப்பற்றவன்? மேலானவன் கதிரவனே, உன் தோல்வியை நீ ஒப்புக் கொள்!
3. கொடையாளன் பண்பு
பண்டைத் தமிழகம். அப்பப்பா! பொறி பறக்கும் பாலை நிலம்; போக முடியாத நீண்ட வழி கடக்கமுடியாத பெருங் காடுகள்.
அக்காடுகளின் இடையே, வில்லேர் உழவர் வாழ்கின்றனர். அவர்கள் யாருக்கும் அஞ்சாத மறவர்கள். ஆறலைகள்வர். வழிப்பறி செய்வதே அவர்கள் தொழில். மக்கள் பொருள் தேடும் பொருட்டு, அயல்நாடு செல்வது உண்டு. அவர்கள் அப்பாலை நிலத்தைக் கடந்து செல்ல வேண்டும். பரற்கற்கள் பாதத்தைப் புண்ணாக்கும்; உடலைக் கிழிக்கும் முட்புதர்கள் நிறைந்த இத்தகைய நீண்ட வழிகளைக் கடந்து சென்றுதான் பொருள்தேட வேண்டும்.
வணிகக் கும்பல் ஒன்று அவ்வழியே சென்றது. கோடை கடுமையாக எரித்துக் கொண்டிருந்தது. பாலை நிலம் கொதித்துக் கொண்டிருந்தது.
ஆனால், அவ்வெம் பாலையைக் கடந்து சென்ற வணிகர்கள் பட்டபாட்டை என்னென்பது. திடீரென்று அக்கும்பலின் மேல், அம்புகள் பாய்ந்தன. அவர்கள் அய்யோ அம்மா என்று அலறினார்கள். அம்புபட்ட வணிகர்கள் கீழே வீழ்ந்தனர். கதறித் துடிதுடித்து இறந்தனர்.
மறைந்திருந்து அம்பெய்திய மறவர்கள், விற்களுடன் ஓடிவந்தனர். வீழ்ந்தோரிடமிருந்த பொருட்களைக் கவர்ந்தனர், பிணங்களின் மேல் கற்களை அடுக்கி, மறைத்து விட்டுச் சென்றனர். ஆனால், "யாரும் பிணங்களைப் பார்க்கக் கூடாது" என்பது அவர்கள் எண்ணம். ஆனால், பிணங்கள் அழுகி நாற்றம் எடுக்கத் தொடங்கினதும், கழுகும் பருந்தும் சூழ்ந்து கொண்டன. ஆயினும், கற்குவியல்களின் மேலே அமர்ந்து குரலெடுத்துக் கூவி வருந்தின.
பாலைநிலக் கொடிய வழிகளின் காட்சியைப் பார்த்தீர்களா? என்ன கொடுமை, எவ்வளவு துன்பம்!
இத்தகைய கொடிய வழிகளைக் கடந்து உயிரோடு வந்தனர் சிலர். எதற்காக வந்தனர்? அரசனைக் காண்பதற்காக அவர்கள் யார்? இரவலர்கள்! மனக்குறிப்பை முகத்தைக் கண்டமாத்திரத்திலேயே, அறிந்து கொடுத்து மகிழும் கொடையாளனாகிய வழுதியின் அருளை எண்ணியே புலவர்கள் இத்தகைய கொடிய வழியிலும் நடந்து வந்துள்ளனர்.
அவர்கள் கூறும் பாலையின் கதை, அப்பப்பா, எவ்வளவு பயங்கரம், பாலையில் படுகொலை.
4. புலி கிளம்பிவிட்டது
ஒரு வரிப்புலி, வேட்டைக்குக் கிளம்பியது. மிருகங்களை அடித்துத் தின்றது; பசிதீர்ந்தபின், குகைக்கு ஒடி வந்தது.
குகையினுள்ளே கல்லிடுக்கில் புலிபடுத்தது. உண்ட மயக்கம்-நன்கு உறங்கி விட்டது.
மாலை வந்தது.நிலா எழுந்தது-ஒளியைச் சொரிந்தது. காடெங்கும் ஒரே வெளிச்சம்!
குகையினுள்ளும் நிலவின் ஒளி புகுந்தது!
புலியிருந்த இடமல்லவோ இது. இப்பொழுது, வெற்றிடமாய்க் காட்சியளிக்கிறதே.
புலி எங்கே?
எங்கே போயிருக்கும்?
அதோ, காட்டில் கேட்கும் அரவம், அக் கேள்விக்கு விடை கூறுகிறது. அது, மீண்டும் வேட்டைக்குக் கிளம்பி விட்டது. காடே நடுங்குகிறது..
குகையில், புலியைக் காணவில்லை என்றால், மீண்டும் வேட்டைக்குப் போய்விட்டது என்பதே பொருள். இது புலியின் கதை!
புலியைப் போன்றவன் வீரன். புலியின் கதைதான் வீரன் கதையும்.
வீரனை ஈன்றெடுத்த அன்னை அதனை நன்கறிவாள். அவ்வீரப் புலியைச் சுமந்தது அவள் வயிறுதானே? அப்புலி உறங்கிய குகையும் அதுதானே?
அத்தகைய வீரத்தாய் ஒருத்தியை ‘உன் மகன் எங்கே?’ என்று கேட்டாள் பக்கத்து வீட்டுக்காரி. அவள் என்ன சொல்வாள்?
“குகையினின்றும் புலி கிளம்பி விட்டது. அது பகைவர்களை வேட்டையாடும் போர்க்களத்திற்குப் போயிருக்கிறது” என்றுதான் கூறினாள்.
5. குறைப்பிறவிகள்
ஒரு குழந்தை பிறந்தது. அது, குருடு அழகிய காட்சியைப் பார்க்க முடியாது. மற்றொரு குழந்தை பிறந்தது! அது உருவமற்ற பிண்டம். கை இல்லை. கால் இல்லை. கண் இல்லை. வாயும் கூட இல்லை. மற்றும் சில குழந்தைகள் பிறந்தன. அவை, கூன், குருடு, ஊமை, செவிடு, மா, மருள்...
எட்டுக் குழந்தைகளும் குறைப் பிறவிகள். அவை வாழ்ந்தும் பயன் என்ன? உலகில் உள்ள மனித உயிர்களுக்கு கை, கால், உண்டு. கண், வாய், மூக்கு, செவி வாய் வயிறு எல்லாம் பெற்ற நிறை பிறவிகள்தாம் அவை. ஆனால் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் நாடாத பிறவிகள் அவை. எட்டுக் குறைகளுடைய எச்சப் பிறவிகளிலும், கொச்சைப் பிறவிகள் அவை.
6. புறாவும் புதல்வரும்
கிள்ளி வளவனுக்குக் கோபம் வந்தது. தன் பகைவனான மலய மானுடைய மக்களை, கொலையானைக் கால்களில் இடறவைத்துக் கொல்ல முயன்றான்:
நிறுத்து!, என்ற ஒரு குரல் கேட்டது! நிமிர்ந்து வாளுடன் திரும்பினான்.
கோவூர் கிழார் நின்றிருந்தார்.
“உன் மரபு எது?” என்று கேட்டார், கிழார்.
“கிள்ளிக்கு ஒன்றும் விளங்கவில்லை! புறாவுக்காகத் தன்னையே கொடுத்த சிபிச் சக்கர வர்த்தியின் மரபிற் பிறந்தவன் நீ”
இந்தச் சிறுவர்கள் யார்?
கிள்ளிவளவன் புலவரைப் பார்த்தான்.
புறாவைப் போன்றவர்கள்...இல்லையா?
வளவன் தலை குனிந்தான்.
மலையமான் உனக்குப் ப்கைவன் அல்லன். புலவர்களை வருத்தும் வறுமைக்குப் பகைவன் அவன். பகுத்துண்ணும் பண்பாளன் அவன். வறுமை என்ற கொலையானையைக் கண்டு கதறும் புலவர்களை அவன் கை தழுவியது. அவன் புதல்வர்கள், இதோ, உன்னுடைய கொலையானை முன் நின்று கதறுகின்றனர்...
வளவன் வாய்விட்டுக் கதறினான்.
“புலவரே, பொறுத்தருளும் புதல்வர்காள், அழாதீர்!” என்று அவர்களைத் தழுவிக் கொண்டான்.
யானை நின்ற இடத்திலே புகழ் நின்றது!
7. ஞாயிறும் திங்களும்...
கதிரவன் எழுகின்றான், வெம்மையைச் சொரிகிறான், சுடுகின்றான். கோடை நாளல்லவா? அவன் கொடுமையைக் கேட்கவா வேண்டும்.
அரசே, நீயும் அத்தகையவன்... கோடைக் கதிரவன் போல் சுடுகின்றாய்...
ஆனால் ஒன்று-குடிகளை அல்ல. கொடும் பகையை!
உன் கொடிய கைகளை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம். ஏனெனில், எங்களிடம் இரவில் எழும் திங்கள் போல் வருகின்றாய்!
சுட்ட கைகள், குளிர்கின்றன, வெம்மை சொரிந்த கண்கள், அருள் சொரிகின்றன...
ஆதலின், ஞாயிறும் நீ, திங்களும் நீ.
8. இரந்தும் உயிர் வாழ்வதோ?
இறந்துப் பிறந்தது குழந்தை. இல்லை, இல்லை. தசைப் பிண்டமாய்ப் பிறந்து விட்டது. வீரமன்னர் அதை என் செய்வர்? வாளால் அரிந்து புதைப்பர். ஏன்? மறக்குடியிற் பிறக்கும் எவ்வுயிரும் விழுப்புண் பட்டு மடிதல் வேண்டும். உயிர் வாழ விரும்பி உடல் கொண்டு திரிந்தால் மட்டும் போதாது. உண்டு கொழுத்த உடலை தமிழ்க் குடி விரும்பாது. மனிதனாய் இருக்க வேண்டும். மறவனாய் வாழ வேண்டும்.
அத்தகைய மறக்குடியில் பிறந்தேன் நான். நாய் போல் இழுத்தனர். பகைவர்-சிறைப் படுத்தினர். கட்டி வைத்தனர், அவர்களுக்கு அடங்கி, நடந்தேன். தண்ணீர் கொடும் என்று தாழ்ந்து கேட்டேன். இப்படி வாங்கிக் குடித்து வாழும் கோழையைப் பெறுமோ மறக்குடி பெறாது
9. எதிர்த்து நிற்போர் யார்?
போர்ப் படை புறப்பட்டு விட்டது. நற்கிளி தலைமை தாங்குகிறான்...
ஊழிக் காலம் போல், வானம் இருள்கின்றது. கொடிகள், திசைகளை மூடுகின்றன...
ஏழு கடல்களும் அடி பெயர்ந்து செல்வது போற் படை முழங்குகின்றது. வேல்கள், விண்முகட்டைக் கிழிப்பது போன்று நீண்டு மின்னி வெட்டுகின்றன...யானைகள் முழங்குகின்றன. இடிமுழக்கம் கேட்கிறது...
இப்படையை எதிர்ப்போர் யார்? ஊழிப் புயல் முன் நிற்போர் யார்? பாவம், அவர்கள் இரங்குதற்குரியர்
10. தலைவனின் வலிமை
பகைவர் அதியமானை எதிர்க்கத் துணிந்து விட்டனர். அவ்வையாருக்கு அவர்கள் மீது இரக்கம் பிறந்தது. ஆதலால் இந்த எச்சரிக்கை விடுத்தார்.
“பகைவர்களே! போருக்கு வராதொழிவிர்! வந்தால், ஒழிவீர் என்பது உறுதி!
எங்கள் படையில் உள்ள ஒரு மறவனுக்கு நீங்கள் ஈடாக மாட்டீர்.
அம்மறவனைப் பற்றி ஒரு வார்த்தை ஒரே நாளில் எட்டுத் தேர்களைச் செய்யும் தச்சன், ஒரு மாதம் முயன்று ஒரு தேர்க்காலைச் செய்தான் என்றால், அத் தேர்க்கால் எப்படிப் பட்டதாயிருக்கும்?
இருநூற்று நாற்பது தேர்க்காலின் பலத்தைக் கொண்டதாயிருக்கும். அப்படிப்பட்ட தேர்க்கால் உங்கள் மீது பாய்ந்து வந்தால் நீங்கள் என்ன செய்வீர்?
அந்தத் தேர்க்கால், போன்றவன் எங்கள் படைத் தலைவன். போரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். போர்க்கு விருப்பமாயின், வருக!”
11. இரவலர் யார்? புரவலர் யார்?
“வெளிமான், உன்னிடம் பரிசில் பெற வந்தேன்!” என்றார் பெருஞ்சித்திரனார்.
“தம்பி, இவர்க்குப் பரிசில் தருக” என்று தன் தம்பியை நோக்கிக் கூறினான் வெளிமான்.
இளவெளிமான், புலவர் திறம் உணரா இளையன். எனவே, அவன் தன் கைக்குக் கிட்டிய பொருளைக் கொண்டு வந்து பரிசெனக் கொடுத்தான். பெருஞ்சித்திரனார் பரிசைப் பார்த்தார். இளவெளிமான், முகத்தைப் பார்த்தார். பின்னர் சென்று விட்டார்.
அவர் அம்பென விரைந்து குமணனை அடைந்தார். குமணன் புலவர் முகத்தைப் பார்த்தான்; அவர் கண்களில் பனிக்கும் நீர்த் துளியைக் கண்டான். அவன் கைகள், நீண்டன. புலவர் பாடினார்; குமணன், பெருஞ்சித்திரனாருக்குக் கை நிறையப் பரிசு கொடுக்கவில்லை, அவர், கண் நிறையப் பரிசு கொடுத்தான்!
என்ன பரிசு என்று நினைக்கிறீர்கள்? ஒரு பெரிய யானை!
சித்திரனார் உள்ளத்தில் ஒரு கணம் மின் வெட்டிற்று.
அவர் யானையை ஒட்டிக் கொண்டு, தன் இல்லத்திற்கா போனார்? இல்லை. இல்லை. நேரே இளவெளிமானிடம் சென்றார். அவன், காவல் மரத்தில், யானையைக் கட்டினார்.
“அரசே, அதோ, உன் காவல் மரத்தில் கட்டியிருக்கும் யானையைப் பார் அது புரவலன் தந்த பரிசில். இப்போது இதனை இரவலன் உனக்கு அளிக்கிறான். நின்னிடத்து விட்டுச் செல்லுகிறேன். ஏற்றுக் கொள் இதனை. சென்றுவருகிறேன்.”
“புரவலர் உண்டு என்பதையும் தெரிந்து கொள், அவ்வாறே இரவலர் உண்டு என்பதையும் தெரிந்து கொள்”, “காவல் மரமும் கட்டப் பெற்றிருக்கும் யானை”யும் கதை கூறின.
12. அளவிட முடியாத அளவு!
வானவீதியைப் பார். பெரிய வீதி. அதில் ஏழு குதிரை பூட்டிய தேர் ஒடுகிறதே. தேரில் கதிரவன்தான் உட்கார்ந்திருக்கிறான். அப்ப்பா எவ்வளவு வேகமாய்த் தேரைச் செலுத்துகிறான்.
அதோ மலர்க் கொடி பார். அதனை ஆட்டுவது யார்? வடக்கே சாய்கிறதே கொடி; யாரேனும் தெற்கே நின்று தள்ளுகிறார்களோ? கண்ணுக்குத் தெரியாத அக்கள்வன் யார்? அவன் பெயர் காற்று. அவன்தான் தென்றல்!
மேலே தெரிகிற பந்தலைப் போட்டவர் யார்? அதில் நிலாவையும் வீண் மீனையும் பதித்தது எப்படி? பந்தலுக்குக் கால்கள் இல்லையே காலில்லாப் பந்தல் அற்புதமான பந்தல். இவைகள் எல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறாயா? இருந்த இடத்தில் கொண்டே எல்லாவற்றையும் அளக்கும் அறிஞர்கள் சொன்னார்கள்.
ஆனால், வானத்தை அளந்தவர்கள் எம் மன்னன் ஆற்றலை அறியும் திறன் பெறவில்லை.
யானை தன் கதுப்பிலே, அடக்கி வைத்து எறியும் கல்லைப் போன்று, சோழன் நலங்கிள்ளியின் ஆற்றலும் கண்காணாத் திறன் கொண்டது.
புலவர் அதனை எவ்வாறு பாடுவர்!
13. பரிசில் வாழ்க்கை!
அரசனுடைய ஏவலாளர்க்கு ஐயம் தோன்றியது. அதன் முடிவு என்ன தெரியுமா? கிள்ளியின் ஏவலாளர்கள் அயலூரான் ஒருவனைக் கைது செய்து காவலில் வைத்தனர். அவன் ஒற்றன் என்பதாக அவர்கள் கருதினர். கொற்றவனும் அக்கருத்தை ஏற்றான். இச்செய்தி கோவூர் கிழாருக்கு எட்டியது அவர் ஒடோடியும் வந்தார்.
என்ன இது? இளந்தத்தன் ஒற்றனா? என்று கேட்டார் கொற்றவன் திகைத்தான்!
கிழார் கூறினார்:
அரசே! பறவை எங்கும் பறந்து செல்கிறதே, அதனை ஒற்றன் என்று யாரும் கைது செய்வரோ? ஆனால், வேடர் அதனை அம்பெறிந்து கொல்வதுண்டு! கண்ணி வைத்துப் பிடிப்பதும் உண்டு.ஆனால், பழுமரம் அப்பறவையை வா, வா என்று வரவேற்கும்...
வள்ளன்மை பூண்ட பழுத்த மரங்களை நாடிப் பரிசில் பெறப் பறந்து செல்லும் புலவர்...ஆ...எத்தகைய இன்னல்களுக்கு ஆளாகின்றனர்....வேடர்கள் வில்லோடு திரியும் கொடிய காடுகளைக் கடந்து, அதன் நெடிய வழிகளை நீந்தி, ஆர்வச் சிறகு விரித்துப் பறந்து செல்கின்றனர்....ஏன்? புரவலாற் பெறும் சிறப்புக்காகவே அவ்வாறு செய்கின்றனர்.
பெறும் பரிசில்களை, அவர்கள் என்ன செய்கின்றனர்?
பறவைகள் போன்றே சுற்றத்துடன் கூடி, நாளைக்கு என்றில்லாது, உள்ளம் களித்து உண்டு தீர்க்கின்றனர்.
சுதந்திரமான இவ்வாழ்க்கைக்காக வருந்தும் புலவர்களைப்-பழு மரம் தேடும் பறவைகளைக் கண்ணியிட்டுப் பிடிப்போர் வேடரோ, அன்றி நாடரோ? என்று கேட்டார்.
நெடுங்கிள்ளியின் கண்கள் சிவந்தன....
புலவரே, நான் பழுமரம் என்றிருந்தேன்....இன்று பட்ட மரம் ஆனேன். என்று புலம்பினான்.
14. என்னென்று சொல்வதோ?
வானளாவியது அம்மலை. அருவிகள் குதிக்கின்றன. சுனைகள் பொங்குகின்றன. மரங்கள் நிற்கின்றன. குறிஞ்சி நிலத்தின் அழகே அழகு. இந்த மலை நாட்டிற்கு உரியவன் யார்? அவனை நாடன் என்று அழைப்போமா? வெள்ளம் பொங்கி வரும் ஆறு. இரண்டு பக்கமும் வயல்கள். கரும்பும், நெல்லும், வாழையும் கண் கொள்ளாக் காட்சி. வானளாவிய மருதமரம் அதில் வண்ணக் குருகு, வயலருகே, ஊர்-மாடமாளிகை. இந்த ஊரும் அவனுக்கு உரியது. அவனை ஊரன் என்று அழைப்போமா?
அதோ பரதவர் மீன் வேட்டையாடும் கடல். எவ்வளவு பெரிய மணல் மேடு, அலைகள் மோதும் காட்சியை என்னென்போம். ஆங்காங்கே உப்பங்கழிகள். மீனைத் தின்னும் நாரை சுரபுன்னைக்கு ஒடுகின்றன. இந்தக் கடற்கரையும் அவனுக்காமே. அவனைச் சேர்ப்பன் என்று அழைப்போமா?
கடற்கரை நாரையும் கழனிக் குருகும் “அவன் நாடன், ஊரன், சேர்ப்பன்” என்று பாடிக் கொண்டே பறந்தன.
15. கவரி வீசிய காவலன்
இரும்பொறையின் அரண்மனை. மணங்கமழும் மென்மலர் பரப்பிய முரசு கட்டில் இருக்கும் இடம்.
பலவர் மோசிகீரனார், இரும்பொறையைக் காண நெடுந் தொலைவிலிருந்து வந்தார்.
நடந்த களைப்பு. முரசு கட்டிலைக் கண்டார். அது, மனிதர் உறங்கும் கட்டிலாகவே அவருக்குத் தோன்றியது.
புலவர் கட்டிலில் அமர்ந்தார், அயர்வு நீங்கப் படுத்தார். உறங்கி விட்டார். முரசை நீராட்ட எடுத்துச் சென்ற வீரர் திரும்பி வந்தனர். முரசு கட்டிலில் யாரோ உறங்குவதைக் கண்டனர்.
என்ன ஆணவம்?
பதறியவாறு, அரசனிடம் ஒடினர். செய்தியைக் கூறினர்.
அவன் உடல் கூறுபடும் என்பதை அறியானோ? என்று ஓடி வந்தான் அரசன். ஆனால் கட்டிலருகே வந்ததும், அவன் கை வாளை நழுவ விட்டது.விரைந்து, அருகிலிருந்த மயிற்பீலியை எடுத்துக் கட்டிலில் உறங்கிய புலவர்க்கு விசிறினான்.
வீரர்கள் செய்வதறியாது திரு திரு, வென்று விழித்தனர் புலவர்க்கும் உறக்கங் கலைந்தது! அரசன் இரும்பொறை தனக்கு மயிற்பீலி கொண்டு விசிறுவதைக் கண்டார். நீராட்டப் பெற்ற முரசும், தரையில் கிடந்தது. புலவர் துள்ளி எழுந்து, அரசன் கைகளைப் பற்றிக் கொண்டு, பதறினார்; அவர் கண்களில் நீர் நிறைந்தது.
‘அரசே! முரசு கட்டிலிற் படுத்ததற்காகவே என் உடலைக் கூறுபடுத்தலாம். அது செய்யாது விடுத்தது நின் முத்தமிழ் அறிவை உணர்த்துவது. மயிற்பீலி கொண்டு விசிறுகின்றாயே அச் செயல் எதை உணர்த்துவது?
வெற்றி வீர இந்த உலகில் புகழ் இல்லாதவர்க்கு உயர் நிலை உலகில் இடம் என்று அறிந்ததால் இப்படிச் செய்தாயோ?
16. மனத்தின் வேகம்
ஒரு தையற்காரர், கட்டிலில் உட்கார்ந்து தைத்துக்கொண்டிருக்கிறார்... அவர் மனம் விரைகிறது...
ஊரிலே திருவிழா வந்து விட்டது... அதனைச் சென்று காண வேண்டும். அவர் மனக்கண் முன் திருவிழாக் கூட்டம் நின்றது.
மனைவியோ, தன் தாய் வீட்டில் குழந்தை பெற்றிருக்கிறாள். அவளையும் பார்த்தாக வேண்டும்!
குழந்தை வீறிட்டு அழும் குரல் அவர் காதுகளில்கேட்டது.
தையற்காரர் உள்ளம் விம்மி யெழுந்தது. அப்புறம் என்ன?
இரு கைகளும் நூலைக் கோத்து வாங்குகின்றன. வலது கையிலுள்ள ஊசி ஏறி இறங்குவதைப் பார்க்க முடிய வில்லை... அவ்வளவு வேகம்!
சோழன் நற்கிள்ளியை வென்று வாகைகொள்ள வந்தான் ஒரு மல்லன்.
மற்போர் மன்றத்தில் போர் தொடங்கி விட்டது! மற்போர்! மற்போர்!
நற்கிள்ளியின் கைகள், தையற்காரனின் ஊசிபோல் விரைகின்றன...
அப்புறம்?- மல்லன் மண்ணைக் கவ்வினான்!
17. அதியமான் அஞ்சுகின்றானா?
அதியமான் போர்க்களம் புக அஞ்சினான். அவ்வை அவனை நோக்கிக் கூறினாள்:
மறப்புலி சீறி எழுந்தால் அதனை எதிர்க்கும் மான் கூட்டம் உண்டோ? வானத்தில் கதிரவன் எழுந்தால் அதனை எதிர் நிற்கும் இருள் உண்டோ? பாரம் ஏற்றிய வண்டியை ஆழ் மணலிலும், பாழ் நெறியிலும் இழுக்கும் பகட்டுக்குப் போகமுடியா இடம் உளதோ?...
வீரர் தலைவ! நீ போர்க்களம் சென்றால் உனை எதிர்த்துப் போரிடும் போர் வீரர் உண்டோ.
நின் வீரக் கைகள், வெற்றியை நோக்கி உயர்கின்றன.நின் மலைத் தோள்கள், வெற்றிச் சிகரம்போல் நிமிர்கின்றன.
நெடுமான் தன் தோளைப் பார்த்தான்; இடையிற்கட்டிய, வாளைப் பார்த்தான்; அவன் மனக் கண்முன் பகைவர் தலைகள் உருண்டன!
18. தண்புனலும் தறுகண் யானையும்.
யானை ஒன்று ஊர்க்குளத்திற்கு குளிக்கச் சென்றது. சிறுவர்களும் அதன் பின்னால் திரண்டு சென்றனர்.
யானை, குளத்தில் இறங்கிக் குளித்தது. சிறுவர்களும் குளத்தில் இறங்கிக் குளித்தனர். யானை, அவர்கள் மேல் நீரை வாரி இறைத்தது.சிறுவர்களும் அதன் மேல் நீரை வாரி இறைத்தனர்... யானை அவர்களைத் துதிக் கையால் தொட்டது. அவர்களும் அதன் துதிக்கையைப் பற்றி இழுத்தனர்.
இவ்வாறு பெரிய அமளி நடந்தது. யானை குளித்து விட்டுக் கரையேறியது. சிறுவர்களும் கரையேறினர். யானையை பாகன் அழைத்துச் சென்றான். சிறுவர்கள் யானையைப் பறிகொடுத்தவர்போல் வீடு சென்றனர்.
ஒரு நாள், தெருவிலே மதம் பிடித்து ஓடிவந்தது ஒர் யானை, அது மரங்களை வேரோடு பிடுங்கி, வீசியெறிந்தது. வேலேந்திய மறவர்களையும் ஒட ஒட விரட்டியடித்தது. அந்த யானையை வீட்டினுள்ளிருந்த ஒரு சிறுவன் கண்டான். தன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை.
...அன்று குளத்தில் நம்மோடு குளித்த யானையா இப்படிச் செய்கிறது? அதன் துதிக்கை, மரத்தையே பிடுங்குகிறதே! அந்தத் துதிக்கையைத்தானே அன்று குளத்தில் என் கைகளால் பற்றி இழுத்தேன்!
சிறுவன் இருகைகளாலும், தன் கண்களை மூடிக்கொண்டான்.
இக்காட்சியைக் கண்டாள் ஒளவை. அதியமான் செயலையும் கண்டாள்.
தமிழ்ப் புனலில் எம்மொடு குளிக்கும் தறு கண்யானையே! நீ மதங்கொண்டு மறக்களம் சென்றால் அங்கு மலைகள் உருள்கின்றனவே...பகைகள் வெருள்கின்றனவே... என்று வியந்தாள்.
19. என்ன வாழ்க்கை!
வறுமையுற்ற பாணன் அவன். பாவம், உடல் மெலிந்திருந்தான்.
அவன் சுற்றத்தாரோ, தோலுரிக்கப் பட்ட உடும்பு போன்று, விலாப் புறந் தெரிய இளைத்துக் களைத்திருந்தனர். பாணன் வெறுப்புடன் கூறினான்:
என்ன வாழ்க்கை யாழை மீட்டிப் பாடினால், அதனைக் கேட்போர் பலராயினும், அதன் அருமையை அறிவோர் சிலரே.
அவர்கள் தரும் பரிசு, பலரைக் காப்பதற்குப் போதுமோ? மேலும், மேலும், அது பல நாட்களுக்குக் கானுமோ?
பிழைப்புக்கு யாழை முதலாய்க் கொண்ட பாண சாதி பிழையுடையது என்று வருந்தி நின்றான்.
சோழன் நலங்கிள்ளியிடம் பரிசு பெற்றுச் சென்ற கோவூர்கிழார், வருந்தும் அப்பாணனைக் கண்டார். அவர், உள்ளம் நைந்தது...பாண! நான் சொல்வதைக் கேள்! நேரே உறந்தைக்குச் செல்! சோழன் நலங்கிள்ளியைப் பார்! அவன் நாடு, உயிர்கட்குத் தாய்ப் பால் போன்று சுரந்துTட்டும் காவிரியால் வளம் பெற்றது!
கள் வழிந்தோடும் உறந்தையின் தெருக்களில் எச்சரிக்கையாய் நட! கால் வழுக்கி விழ நேரும்...வழியிலே யானைகள் தென்படும்! அவற்றைக் கண்டு அஞ்சி விடாதே. அவை, பகைமேற் செல்லும் விருப்புடையவை வீரர் அதட்டுவர். அதற்கும் அஞ்சாதே அவர்களும் போர்க்களம் போகும் விருப்புடையர்! நேரே அரசனைச் சென்று பார். அவனும் போர்க்களம் போகும் விருப்புடையவன்தான். எனினும், இரவலர்க்குக் கொடுத்த பின்னரே, அவன் கை வாளையேந்தும். அவன் கையால் நீ ஒரு முறை பரிசு பெற்றால் போதும்-பின்னர் செவிட்டுச் செவியினர் வாயில்களைத் தேடி செல்ல நேராது அத்தகைய பெரும் பொருள் அளிக்கும் அண்ணல் அவன் என்றார் கோவூர் கிழார், இருவரும் சற்று நேரம் பெருமூச்செறிந்து நின்றனர்.
பாணன் மனக்கண் முன் உறையூர் தோன்றியது. அவனது யாழினுக்கு மயங்கும் யானை தெரிந்தது. வீரர் தெரிந்தனர். அரண்மனை தெரிந்தது. அரசன் கை பாணனை நோக்கி நீண்டது. பாணன் கண்கள் பனித்தன. அவன், திடீரென்று தன் முன் நின்ற புலவரைத் தழுவியவாறு அழுதான்.
20. அவரவர் பங்கு!
சேரமான் இரும்பொறையைக் கண்டு பாட இளங்கீரனார் சென்றார். அவன் புலவர் முகத்தைப் பார்த்தான். ஏனோ அவனுக்குக் கபிலர் நினைவு வந்து விட்டது:
தமிழ்ப்புலம் உழுத கபிலன் இன்று இருப்பின் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று தன் ஆற்றாமையை வெளியிட்டான்.
இளங்கீரனார் கூறினார்: அரசே! சிறப்புற்ற பெரியோர் பிறந்த உலகில், சிறப்பற்றோர் வாழோம் என்று சொல்வரோ? சொல்லார் கபிலர் போன்றார் பாடிய பின், என் போன்றார் பாடோம் என்று சொல்வரோ? சொல்லார்!
உலகியற்கை அது அன்று! ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமுடையவர் உன் முன்னோர் வெற்றி கண்ட பின்னரும் நீ ஒய்ந்திருக்க வில்லை! நீயும் போர் செய்து, உன் பங்கிற்கு வெற்றியை புனைகின்றாய்! நீ எய்திய வெற்றியை என் பங்கிற்கு நானும் பாடுவேன், கேள் என்றார்.
இளங்கீரனார் பாடினார். அப்பாடலில், யானைப் படைகளும் குதிரைப் படைகளும் செல்லும் மிடுக்கைக் கண்டான் இரும் பொறை!
அரசன்-புலவர் யாருக்கு யார் தாழ்ந்தவர்?
21. பகைவர்களின் நடுக்கம்
இடையன் ஆடுகளை ஒட்டுகிறான். குகையொன்று குறுக்கிடுகிறது. குகையைக் கண்டதும் ஆடுகளை வேறு பக்கம் திருப்புகிறான். அவன் நெஞ்சம் படபடக்கிறது. ஆடுகளை வேகமாக விரட்டுகிறானே, ஏன்? புலியின் குகை அது. புலிக்கு அஞ்சி பயந்தோடுகிறான். பாவம் புலி கண்டால் அவன் ஆடுகளின் கதி என்ன?
குட்டுவன் கோதை பகைவர்க்குப் புலிபோன்றவன் அவன் அரண்மனையைக் கண்டாலே பகைவர் நடுங்குவர். அவர்கள் எல்லாம் செம்மறியாட்டுக் கூட்டம் தானே. அவன் இருக்கும் திசையை திரும்பிப் பாராமல் ஒடி ஒளிவர்.
அவனுக்கு அஞ்சாதவரும் உண்டு. அஞ்சாமல் அவன் அவைக்குள் புகுந்து நிமிர்ந்து சிங்க நடைபோடும் அச்செம்மல்கள் யார்? அவர்கள் தமிழ்ப் புலவர்களே ஆவர்!
22. “நல்லறத்தை நம்பு”
மருதன் இளநாகனார் நன்மாறனைப் பார்க்கச் சென்றார். வரவேற்றான் மன்னன். நல்ல விருந்தளித்தான். உள்ளம் மகிழ்ந்தார் புலவர். அரசனுக்குச் சிறந்த உறுதிப்பொருளைக் கூறத் தொடங்கினார்.
அரசே, சினங்கொண்ட கொலை யானை உன் நாட்டைக் காக்காது. திக்கைக் கடக்கும் குதிரைப் படை உன் அரசை நிலை நிறுத்தாது. நெடுங்கொடி பூண்ட தேர், நெஞ்சம் உன் ஆட்சிக்குப் பெருமை அளிக்காது. அழியா மறவர் நல்ல தற்காப்பு அளிக்கமாட்டார். நாற்படையை நம்பாதே மன்னா. நல்லறத்தை நம்பு. அந்த அறமே உன் அரசை நிலைநிறுத்தும்.
ஆகையால், கதிரவன் போல் வீறு கொள்க. திங்கள் போல் அருள் பொழிக. மழையைப் போல் கொடை தருக. மன்னா நீ மங்காத நல்லற வாழ்வு வாழ வேண்டும். உன் வாழ் நாட்கள், திருச்செந்தூர் கடற்கரை மணலினும் பலவாகுக!
23. துன்பம் துடைக்கும் குடை!
“உச்சி வானத்தில் முழு நிலவு ஊர்கிறது. பாணன் காண்கிறான். விறலிக்கு காட்டுகிறான். விறலியோ களிப்பு மிகுதியால் காட்டு மயில்போல் ஆடுகிறாள். ஆகா என்ன அழகு. நீலக் கடல் நடுவே நெருப்புப் பந்து மிதப்பதுபோல் காட்சியளிக்கிறதே
பாணனும் ஆனந்தக் கூத்தாடுகிறான்.
ஒருகணம் கழிகிறது. இருவரும் முழு நிலவை கை தொழுகின்றனர். ஏன்?
வண்ண நிலவல்ல அது, மாவளவன் வெண் கொற்றக் குடை. துன்பம் துடைக்கும் குடை. துயர் நீக்கும் நற்குடை. எல்லையிலா இன்பம் பயக்கும் எழில் குடை என்று வாழ்த்துகின்றனர்.
24. புறப்படு போர்க் களத்திற்கு!
“விறலியே புறப்படு” என்றான் பாணன்.
“எங்கே? என்றாள் விறலி.
“போர்க்களத்திற்கு”
“ஐயோ நான் மாட்டேன், பயமாயிருக்கிறது”
“போர் செய்யவல்ல, பொருள் வாங்க”
“செத்த வீட்டில் தருமமா? போர்க்களத்தில் பரிசா?”
சாதாரண போர்க்களம் அல்ல விறலி, பெருவழுதியின் போர்க்க்ளம். கிழப் பருந்திற்கும் விருந்தளிக்கும் பெரு வழுதி நம்மையா சும்மா விடுவான். தயங்காதே. விரைவில் புறப்படு. அமுதம் கிடைக்கும். அழகிய பட்டாடை கிடைக்கும் விதவித நகைகளும் கிடைக்கும்.
துள்ளிழெந்தாள் விறலி.
25. வீரனுக்கு அழகு!
சேரன் சேரலாதனுக்கும் சோழன் பெருவளத் தானுக்கு மிடையே போர் நிகழ்ந்தது. பெருவளத்தான் எய்த கணை, சேரலாதன் மார்பிற் புகுந்து கிழித்து, முதுகில் ஊடுருவிச் சென்றது.
அம்பு பட்டதற்குத் துடிக்காத சேரலாதன் அது முதுகில் ஊடுருவியதற்குத் துடித்தான்.
மார்பிற் புண்படுதல் வீரர்க்கு அழகு முதுகிற்புண் பட்டால்...
வெட்கம், வெட்கம் சேரனால் அதை நினைத்துப் பார்க்கவே முடிய வில்லை.
அவன் வடக்கு நோக்கி அமர்ந்து, உண்ணா நோன்பு இருந்து, உயிர் துடிக்கத் துணிந்தான். அதுதானே வீரனுக்கு அழகு?
நாடே அவனைப் பார்க்கத் திரண்டது. 'இதற்காகவா உயிர் துறக்கப் போகிறான் மன்னன்' என்று மருண்டது.
கழாத்தலையார் எனும் புலவர், செய்தி கேட்டு விரைந்தார். சென்று சேரலாதனைக் கண்டார். அவன் வடக்கிருந்தான்!
புலவர் உள்ளம் பதைத்தது. அவர் பாடினார்:
இனி சேர நாட்டில் முழவு குளிப்பை இழக்கும்; யாழ் பண் இழக்கும்! பாற் குடங்கள் கவிழ்ந்து தயிர் கடைவதை இழக்கும்; சுற்றம் கள்ளுண்ணாது களியை இழக்கும்! அகன்ற தெருக்கள் விழாவை இழந்து நிற்கும்! ஞாயிறும் திங்களும் போன்று இரு திறல் மன்னர் நேர் நின்று போரிட்டனர்! திங்கள் தோன்ற, மேற்கில் மறையும் ஞாயிறு போன்று, எம்மன்னன் புறப் புண்பட்டு, வடக்கிருந்தான். இனி, அஞ்ஞாயிறு அடியோடே மறைந்து விடும் சேர நாடும் இருண்டு விடும்!
“பகல் போயிற்றே! இரவு வந்ததே என் தாய் நாடே என் செய்வேன்” என்று அழுதார்! கழாத்தலையார்.
26. யாருடைய புகழ் உயர்ந்தது!
சேரலாதன், புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து மாண்டான். ஆன்றோர் பலர், அவனுடன் உயிர் துறந்தனர்.
குயத்தியார் எனும் பெண் புலவர், சேரலாதனின் சிறப்பைக் கண்டு வியந்தார். அவனை வென்ற பெருவளத்தானைத் தேடிச் சென்றார். அவன் குயத்தியாரை வரவேற்றான்.
“அரசே! நின்னைப் பாடுதற்கு வந்துள்ளேன்” என்றார் குயத்தியார்.
“பாடலாம்” என்றான் அரசன்.
“நின்னைப் பாடினால், அது, சேரனையும் பாடியதாகும். நின்னைப் புகழ்ந்தால், அது சேரனையும் புகழ்ந்ததாகும்” என்று குயத்தியார் கூறினார்.
வடக்கிருந்து மாண்ட சேரலாதன் முகம், சோழன் மனக்கண் முன் பளிச்சிட்டது.
நின் கணை செய்த புறப் புண்ணுக்கு வெட்கப்பட்டு, வடக்கிருந்து மாண்ட சேரன், நின்னினும் புகழ் உடையவன் தானே! என்று கேட்டார் குயத்தியார்.
பெருவளத்தான் “விம்மி விம்மி” அழுதான்.
27 அன்னச் சேவலே கேள்!
அன்னச் சேவலே! அன்னச் சேவலே ஒன்று கேள்! நீ, நின் மனைவியோடு, அதிகாலைப் பொழுதில் இருபுறமும் சுடர் தோன்றும் குமரியில் விருந்தருந்தி, வடதிசைக் கண்ணுள்ள இமய மலைக்குச் சென்றால், வழியிலே சோழ நாடு தெரியும். அதனைக் கண்டதும், அங்கே இறங்கிக் களைப்ப்ாறு நேரே உறையூருக்குப் பறந்து போ! வானோங்கும் கிள்ளியின் மாளிகை உன்னைத் தடுத்து நிறுத்தும். வாயில் காப்போர்க்கு அஞ்சாமல் உள்ளே செல். அங்கே, பெருங் கோக்கிள்ளியின் காதிற் கேட்கும்படி, யான் ஆந்தைப் புலவன் “அடிமை” என்று கூறு!
அப்புறம் நடக்கும் சிறப்பை நீயே தெரிந்து கொள்!
பட்டும் பீதாம்பரமும் பாலும் பழமும் அளித்துக் கொட்டு மேளத்துடன் உனக்கும் உன் மனைவிக்கும் திருமணம் நடத்தி வைப்பான்!
28. தமிழின் ஆட்சி!
பாணனே! நின் கையில் இலக்கணம் நிறைந்த யாழ்கொண்டாய். ஆனால் கொடுக்கும் இயல்பினர் இலாமையால் பசியைக் கொண்டனை சுற்றி அலைந்தும் வறுமை தீர்ப்பார் எவருமிலையே என்று சோர்வுற்று நிற்கிறாய்.
நின் நிலையை நான் அறிவேன்..நீ நேரே கிள்ளி வளவனைச் சென்று பார்! அவன் வாயிலில், காத்து நிற்கவேண்டி இராது. அப்படிக் காத்து நிற்பதும், ஒருகால் நிகழலாம். ஆனால், அரசன் உன்னைப் பார்த்து விட்டானோ, பொன்னாற் செய்த தாமரைப் பூவை, உனக்கு அளிக்க மட்டும் தவறான்... “போ... உறையூருக்குப் போ என்று ஆலத்தூர் கிழார் கத்தினார்...
கந்தல் உடை தரித்த நான் எங்கே? பொன்னாற் செய்த தாமரை எங்கே என்று கேட்டான் பாணன்.
“தமிழ் ஆண்டு கொண்டிருக்கும் போது, இசைமாண்டு கொண்டிருக்குமோ? என்று திருப்பிக் கேட்டார் கிழார்.
29. கொடுத்து நீண்ட கைகள்!
கோவூர் கிழார் ஊர்ப்பயணம் சென்றார். நீண்ட வழி. நடந்தார், நடந்தார், வழி மாளவில்லை. இருள் வந்துவிட்டது. எங்கே தங்குவது? என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அருகிலே, பாணன் ஒருவன் குடியிருந்தான். அவன் புலவரைக் கண்டதும் ஒடோடி வந்தான்...
புலவரே! வாரும், என் சிறு குடிலில் தங்கி இளைப்பாறலாம் என்று அழைத்தான். புலவர் அவன் அழைப்பை மறுக்காது சென்றார். குடிசையில், விறலி, உடுக்கையடித்து இனிய ஒசையை எழுப்பிக் கொண்டிருந்தாள். அவ்வுடுக்கை, ஆமையைக் கொம்பில் கோத்துப் பிடித்தது போன்ற உருவத்துடன் காட்சியளித்தது...
‘திறமையுடைய கலைஞர்கள்’ என்று வியந்தார் புலவர்.
உடனே அவர் உள்ளம் கிள்ளிவளவனை நினைத்துக் கொண்டது. வளவன் இருக்கும் போது, வண்டமிழ்க் கலைஞர் ஏன் வருந்த வேண்டும்?
அவர் பாணைனை அருகில் அழைத்தார். மிகவும் அக்கறையோடு அவனிடம் பேசினார்.
‘பானா! உன் மனைவி விறலியுடன் புறப்பட்டு நேரே சோழநாட்டுக்குப் போ... பொறுமையாகவே போகலாம். வழியில், பாதிரி பூத்துச் சொரியும் பண்ணன் என்னும் வள்ளல் ஊர் இருக்கின்றது. அவ்வூரில் தங்கியிருந்து, பொறுமையாகவே செல், போனால், பரிசு கிடைக்குமோ, கிடைக்காதோ என்று ஐயுறாதே! விறகு பொறுக்குவோர்க்குத்தான் அவ்விதம் ஐயம் எழும்! ஏனெனில், விறகு பொறுக்கும் போது, எப்போதாவது தவறிப் பொன் கிடைப்பதும் உண்டு. ஆனால் அவர்கள் அதையே நினைத்துக்கொண்டு நாள் தோறும் சென்றால், “இன்றும் கிடைக்குமோ இல்லையோ?” என்ற ஐயம் எழுந்து கொண்டே யிருக்கும்! கிள்ளிவளவனிடம் செல்வோர், ஐயத்தை அறவே கிள்ளி எறிந்துவிட வேண்டும் சென்று அவன் முன் நின்று பார், கைகள், கொடுத்துக் கொடுத்து நீண்ட கைகள்! கொடுக்கக் கொடுக்க நீளுங் கைகள் என்று தெரிந்து கொள்வாய்!
30. தமிழ்க் குலம்!
ஒரு பழைய மலை. அதன் புதர்காட்டில் ஒரு நெல்லி மரம். அது, பல்லாண்டுகளுக்கு ஒரு முறையே பழுக்கும். அதன் கனியைத் தின்பார், காயகற்பம் உண்பவர் போன்று நீண்ட நாள் வாழ்வர்.
அத்தகைய நெல்லிக்கனி அதியமானுக்குக் கிடைத்தது. அதனைச் சாப்பிடலாம் என்று கருதி ஆசையோடு வைத்திருந்தான் அதியமான்.
அப்போது, ஒளவை அவனைக் காண வந்தாள். ஒளவையைக் கண்டதும் அதியமானுக்கு நெல்லிக்கனியின் நினைவு வந்து விட்டது!
தான் வைத்திருந்த நெல்லிக்கனியை அதியமான் ஒளவையிடம் கொடுத்தான். ஒளவை அதனை வாங்கி உண்டாள்.
“என்ன இனிமை, அமுதம் அமுதம்!” என்றாள்.
“நான் மலையினின்று கொண்டு வந்தேன். அமுதம் போன்றது. அதனை உண்டால் நீண்ட நாட்கள் வாழ்வர்” என்றான் அதியமான்.
ஒளவை, வியப்பால் அதியமான் முகத்தைப் பார்த்தாள். அமுதம் உண்ட களை, அவன் முகத்தில் தெறித்தது.
“அரசே, அதனை நீ உண்டு நீண்ட நாட்கள் வாழின் இரவலர் வாழ்வரே” என்றாள் ஒளவை.
தமிழை வாழ்விக்கும் புலவரே நீண்ட நாள் வாழ்தற்கு உரியர். நான் அரசன் ஆயினும் எளியன்” என்றான் அதியமான்.
ஒளவை பேச முயன்றாள். நா தழுதழுத்தது. கண்களில் நீர் திரையிட்டது...
“தமிழ்க் குலம், தமிழ்க் குலம்” என்றாள்.
31. என்றும் குதூகலம்!
ஒருநாள், இரண்டு நாட்கள் அல்ல. பல நாட்கள் சென்றோம். ஒவ்வொரு நாளும் முதல் நாள் போன்ற குதுாகலத்தோடு வரவேற்றான் அதியமான்.
அவன் பரிசில் கொடுப்பதும் அப்படித்தான். நேரம் நீண்டாலும் சரி, குறுகினாலும் சரி, பரிசு கிடைப்பது என்னவோ உறுதி!
யானைக் கோட்டில் வைத்த கவளம், அதன் வாயிற்சென்று வீழ்வது தவறாதது போன்று, அதியமான் கைகளிலுள்ள பரிசில், எங்கள் கைகளை அடையத் தவறுவதில்லை.
பரிசுக்கு ஏங்கும் நெஞ்சப் பறவையே, பறந்து போ! அதோ, அதியமான் உன்னை எதிர்பார்த்து நிற்கிறான்.
33. சுமையும் வறுமையும்
ஒரு காவடித் தண்டு.அதன் ஒரு முனையில் பதலை தொங்குகிறது. மற்றொரு முனையில் குடமுழா தொங்குகிறது.
அந்தக் காவடித் தண்டைத் தூக்கிக் கொண்டு, தன் சுற்றத்தாரோடு, புரவலரை நாடிப் பரிசு பெறச் சென்ற விறலி, வெயில் காரணமாய் ஒரு காட்டிடையே தங்கியிருந்தாள்.
அதியமானிடம் பரிசில் பெற்றுத் திரும்பிய ஒளவையும் அக்காட்டிடையே வந்து தங்கினாள். விறலியும் ஒளவையும் ஒருவரை யொருவர் கண்டு அளவிளாவினர். விறலியோ மிகவும் வருந்தினாள்.
“ஒளவை என் காவடித் தண்டிற்கு இருபுறமும் சுமை. அது போன்றே எனக்கும் இருபுறமும் சுமை. ஒன்று என் சுற்றம். மற்றொன்று, வறுமை. என் மட்பானை வறண்டு கிடப்பதைப் பார், என்று காட்டினாள் விறலி.
ஒளவைக்கு உள்ளம் பதைத்தது.
“விறலி! நான் சொல்வதைக் கேள்! அதியமான் தூரத்தில் இருக்கிறான் என்று கருதி விடாதே!
அதோ பார் பகைவர் குடியிருப்பைச் சுடுவதால் எழும் புகையை. அதுதான் போர்க்களம். யானைகள் நிற்பது கூட நம் கண்களுக்குத் தெரியும். மலையைச் குழும் மேகம் போல், யானைகளைப் புகை சூழ்ந்து கொள்கின்றது. அதனால் நம் கண்களுக்குத் தெரிவதில்லை போ, போர்க்களத்திலும் அதியமான் புரவலனாகவே காட்சி தருவான். உன் மட்பானை என்றும் நிறைந்து வழிய அவன் அருள் புரிவான்.
உலகத்தின் வறுமையைத் தீர்க்கும் செல்வம் படைத்த அவனுக்கு, உன் வறுமையைத் தீர்ப்பதா கடினம்?
மகனே, உன்னை வாழ்த்துகிறேன், போ என்றாள் ஒளவை.
விறலி, காவடித் தண்டைத் தூக்கினாள் அவள் கை வளைகள் கிளு கிளுத்தன, ஒளவையின் உள்ளம் குளுகுளுத்தது.
34. பாரியும் மாரியும்
“வாரும் புலவரே, வாரும்” என்றார் கபிலர். வந்த புலவரோ “புலவர் திலகமே வணக்கம்” என்றார்.
“வந்த காரியம் யாது?”
“பாரெல்லாம் புகழும் பறம்புமலை வள்ளலைப் பார்க்க வேண்டும். பாரி பாரி என்று நாவார வாழ்த்த வேண்டும்.
“பாரிதானா வள்ளல்?”
“கபிலர் கூற்றா இது?”
“இவன் ஒருவன்” தானா வள்ளல், உலகில் வேறு கொடையாளியே இல்லையா?
“இல்லை இல்லையென்று எண்ணாயிரம் தடவை சொல்வேன். முடி சூடிய வேந்தரும் நம் பாரிக்கு இணையாகார்.
“பாரியைப் போன்று கைம்மாறு கருதாமல் வாரி வழங்கும் வள்ளல் ஒருவன் இருக்கிறான்.”
“எங்கே? யார் அவன்?”
“வையம் காக்கும் மாரி - மழை” என்றார், கபிலர்.
35. பஞ்சாங்கம் எதற்கு?
“வள்ளி, நான் மன்னனைப் பார்க்கப் போகிறேன்’ “கொஞ்சம் பொறுங்கள் அத்தான். இதோ வந்து விட்டேன்.”
புலவரின் மனைவி கையில் பஞ்சாங்கத்துடன் வந்தாள். “பஞ்சாங்கம் எதற்கு?”
“நல்லநாளா என்று பாருங்கள் அத்தான்”
“ஏன் வள்ளி”
“எமகண்டம் இராகுகாலம் இல்லாமல் பார்த்துப் போங்கள்.”
“சூலை பார்க்கவும் சொல்வாயோ?”
சூலைக்கு எதிரே போகக் கூடாது என்பார்கள் “மறக்கமாமல் சூலை பார்த்துச் செல்லுங்கள்.
“அட பயித்தியக்காரி, நான் காரியைப் பார்க்கப் போகிறேன். காரியைப் பார்க்க பஞ்சாங்கம் எதற்கு?
நாளும் நல்ல நாள். நிமித்தமும் நல்லதே. வார சூலையும் நமக்கு ஆதரவே.
36. போர்க் கலை தெரிந்தோர் உண்டோ?
“விறலியே, உன் நாட்டியக்கலை சிறந்தது என்பதை அறிந்தோம். ஆனால், உங்கள் நாட்டில் போர்க் கலை தெரிந்தோர் இருக்கின்றனரா? என்று அரசன் கேட்டார்,
அதற்கு விறலி, “கேளும் எங்க நாட்டிலே திணவெடுத்த தோளுடைய வீரர் பலர். அவர்கள் அடிபட்ட பாம்பு போல் சீறி எதிர்க்கும் ஆற்றலுடையோர். அவர்கள் மட்டுமா?
பொது இடத்தில் கட்டி தொங்கவிடப் பட்டிருக்கின்ற மணியில் காற்றானது மோதியடிக்க, அதனால் எழுகின்ற ஒலியைப் போர் ஒலி என்று, பூரித்துப் போருக்குப் புறப்படும் எங்கள் மன்னனும் இருக்கிறான்.
போதுமா?” என்றார் விறலி.
37. பார், பார் படைக் கருவி பார்!
தொண்டைமான் ஒளவையாரிடம் தன் படைக் கலன்களைக் காட்டி, அவற்றின் பெருமையை எடுத்துரைத்தான். அதியமானுக்குத் தூதாகச் சென்ற ஒளவை கூறினாள்:
“அரசே! நின் படைக் கலன்களைக் கண்டேன். இவை மாலை சூடிய மணமங்கை போல் காட்சியளிக்கின்றன.
ஆனால், அதியமான் படைக்கலன்களைப் பார்த்தேன். அவை எப்படியிருக்கின்றன தெரியுமா?
விடாது பகைவர்களைக் குத்தித் துரத்தியதால், அவற்றின்முகைகள் முறிந்துள்ளன. அதனால், அவை கொல்லன் உலைக்களத்தில் கொலு விருக்கின்றன. என்றாள் ஒளவை.
தொண்டைமான் மனக்கண் முன் கொல்லன் உலைக்களத்திற் கொழுந்து விட்டெரியும் தீ நாக்குகள் நீண்டு நிமிர்ந்தன.
திறை இன்றேல் இரை!
அதியமான் நெடுமாறனுக்கு வரி செலுத்தாது போர்க்கு வரும் மன்னரே கேளிர்: பகைவர் அரணையழித்து, அவர் தம் உடலிற் பாய்ந்து கூர் இழந்தன. வாட்கள் பகைவர் தம் அரண்களையழித்து, நாடழித்த ஆற்றலால், ஆணி கழன்று, நிலை கெட்டன. வாட்கள் மதிற் கதவைக் கோட்டாற் குத்திப் பிளந்ததால், கிம்புறி கழன்றனவாயாயின. யானைகள் பகைவர்தம் குருதிக்கறை படிந்து, சிவந்த குளம்புகளைக் கொண்டன. குதிரைகள் கடல் எனப் பொங்கிக் குமறி வந்த படையுடன் போரிட்டு அம்பு பட்டுத் துளைத்த மார்பை உடையவன் அதியமான். அவன் சினந்து எழுந்தால் எதிர் நிற்பவர் யார்?
பகைவர்களே, திறை கொடுங்கள். இன்றேரல் உங்கள் உயிரைக் கூற்றுக்கு இரை கொடுங்கள்.
38. ஒளவை கண்ட காட்சி
ஒளவை கண்ட காட்சி அத்துடன் அழியாத சொல் ஒவியம். “பிறந்த சேயைத் தாதியர் ஏந்தி நிற்கின்றனர். மகவினைப் பார்க்க ஓடோடி வருகிறான் மன்னன். போர்க்களத்திலிருந்து அப்படியே வருகிறான். கையிலே வேல், காலிலோ வீரக்கழல், மெய்யிலே வியர்வை, கழுத்திலே புதுப்போர்ப்புண் தலையிலே பனம் பூ மாலை, வெண் மலர் மாலையும் வேங்கை மலர் மாலையும் கலந்து கிடக்கின்றன தலையில். புலிபோல் சீறி வருகிறான். இன்னுமா சீற்றம் தணியவில்லை. புலியைக் குத்தி வீழ்த்திக் கோபம் அடங்காது நடக்கும் யானைபோலல்லவா வருகிறான். இன்னும் கோபம் தணியவில்லையே. ஐயோ பாவம் இவனிடம் அகப்பட்டவர் யாரோ, பெற்ற மகனைப் பார்த்தும் சினந் தணியவில்லையே, கண் சிவப்பு நீங்க வில்லையே. உன்னை எதிர்த்தவன் உயிரோடு இருக்கமாட்டான்” என்று பெருமூச்சு விட்டு இரங்கினாள் ஒளவைப்பாட்டி
39. முதலை வாய் யானை
“பாட்டி, பாட்டி” என்றார்கள் விரைக்க விரைக்க ஒடி வந்த சிறுவர்கள்.
“தம்பிமாரே ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள்?” என்றாள் ஒளவை. ஆற்றுக்குக் குளிக்கப் போனோம். அதிக ஆழம் இல்லை பாட்டி”
“என்ன, யாராவது மூழ்கி விட்டார்களா?”
“ஆள் ஆல்ல. யானை, பெரிய யானை”
“யானையா?”
“முதலை இழுத்துக் கொண்டு போய் விட்டது.”
“சிறிய அளவு நீர் என்றால் என்ன? நீருள் இருக்கும் போது யாரே முதலையை வெல்ல முடியும். இது போன்ற நம் மன்னன் அதியமான் ஆற்றலை உணராமல் இளையன் என்று இகழ்கிறார்கள் பகைவர்கள். அவர்கள் எண்ணம் ஒருநாளும் ஈடாது. முதலைவாய்ப்பட்ட யானை போல் மாள்வர்.”
40. எது உடைமை?
மலையமான் திருமுடிக்காரி வரையாது கொடுக்கும் வள்ளல். அவனைக் காணச் சென்றார் கபிலர். நெஞ்சம் நெகிழ்ந்து வாழ்த்தினார்:
“திருமுடிக்காரியே! நாட்டில் உனக்கு உடைமையானது எது?
பண்டு தொட்டு நின் நாட்டைக் கடல் கவர்ந்து கொள்ளவுமில்லை.... பகைவர் கைப்பற்றவுமில்லை... ஆனால், பாடி வரும் பரிசிலர் உன் நாட்டைக் கைப்பற்றினார்கள்...
உனக்கு உடைமை எது?
உன் மனைவியின் மெல்லிய தோள்...
உன் நாடு?-அது பொதுவுடமை!
41. ஆய்நாடும் தாய் நாடும்
பாடிவந்த பரிசிலர்க்கு யானைகள் தரப்பட்டன. இப்போது கட்டுத் தறிகளில் யானைகள் இல்லை. அங்கு காட்டு மயில்கள் குடி புகுந்தன...
ஆய் அரண்மனையைப் பாருங்கள்.அது பொருளிழந்து பொலிவற்றுக் காட்சி தருகின்றது. அவன் மனைவிமாரைப் பாருங்கள். அவர்களும் மங்கல நாண் மட்டுமே அணிந்து, மற்றைய அணிகளை இழந்தனர்.
மற்றவர்களுக்குக் கொடாத மன்னர் தம் அரண்மனைகளிலே அணிகலன்கள் நிறைந்திருக்கின்றன. ஆய் நாட்டில் அவை குறைந்தன...
கொடுக்கப் பிறந்த கைகளைப் பெற்றுள்ள ஆய்; கொடுக்கப் பிறந்தார்போற் பொருள் சேர்க்கக் கருதவில்லை அவன்.
42. எண்ண முடியாத யானைகள்!
“அண்ணே, காலையிலிருந்து இவ்வழியில் யானைகள் போனவண்ணமாய் இருக்கின்றன” என்றான் கந்தன்.
“போருக்குப் போகின்றனவா?” என்று கேட்டான் முகுந்தன்.
“போ அண்ணே போ. புலவர்கள் கொண்டு போகிறார்கள். நம் மன்னன் ஆய் பரிசளித்த யானைகள்?”
“எண்ணினாயா? எத்தனை யானைகள்?”
“எண்ணத் தொலையாத யானைகள்!” கொங்கரை மேலைக்கடல் ஒரம் தோற்கடித்த நாளில் அவர்கள் போட்டுவிட்டுச் சென்ற வேல்களை எண்ணியிருக்கிறாயா?
“அதை எப்படி எண்ண முடியும்”
“ஆய் பரிசளித்த யானைகளை எப்படி அண்ணே எண்ண முடியும்?” வேல்கள் எத்தனை-யானைகள் அத்தனை!
43. காடும் பாடியதோ?
அழகிய காடு. வானளாவிய மரங்கள் தண்ணிர்த் கடாகங்கள். ஆடும் மயில்கள். பாடும் குயில்கள். பற்பல விலங்குகள் எங்கும் எழில் தவழ்கிறது. குன்று போன்ற யானைகள் உலவுகின்றன. எங்குப் பார்த்தாலும் யானைக் கூட்டம். இந்தக் காட்டில் இத்தனை யானைகளா? அற்புதம்தான். எங்கிருந்து வந்தன இத்தனை யானைகள். இந்தக் காடு ஆய் வள்ளலின் மலையைப் பாடியிருக்குமோ? ஆயின் மலை தந்த பரிசிலாகத் தான் இருக்க வேண்டும் இந்த யானைகள்!
44. வடக்கும் தெற்கும்
வடக்கே இமயமலை. விண்ணைத் தொடும் வண்ண மலை அது. அங்குள்ள சுனையிலுள்ள குவளை மணக்கும். மான்கள் நரந்தம் புல்லை மேயும். சுனையில் நீர் பருகும். பெண் மானோடு விளையாடும்.
அதற்கு இணையாக தெற்கே இருப்பது ஆய் நாடு. வடக்கே இமயமும் தெற்கே ஆய்நாடும் இல்லாவிடில் உலகமே நிலை கலங்கிவிடும்.
அத்தகைய நாட்டின் மன்னன்தான் ஆய். கொடையில் முதலிடம் அவனுக்கு. அவனைத்தான் முன்னர் நினைக்க வேண்டும் அப்படிச் செய்யாத உள்ளம் ஆழ்ந்து போக வேண்டும். அவனையே பாடாத நாக்கு பிளக்கப்பட வேண்டும். அவன் புகழ் கேளாத காது துர்க்கப்பட வேண்டும்.
45. ஆடு! பாடு! அதோ...அவன் நாடு!
முடமோசி விறலி ஆய் என்று வாய் மணக்க மக்கள் கூறுகின்றனர். அவன் பெயரை நீகேட்டிருக்கின்றாய் ஆனால் அவனை நீ பார்த்ததில்லை!
விறலி: “நான் பார்க்க வேண்டும்!”
முடமோசி: அப்படியானால் நேரே நடந்து போ. அதோ ஒரு மலை தெரிகிறது பார். அதன் வழியாக நடந்து போ...
மலைக் காற்று வந்து நின் கூந்தலை (மயிரை)க் கோதி விடும். உன் செவியில் ஆய் பெயரை ஒதிவிடும்...
அணிமயில் போன்று அடி பெயர்த்து நடந்து செல். போ... ஆயைப் பார்... ஆடு... பாடு.... அதோ அவன் நாடு!
46. “உன்திரு உருவம்”
வெகு தொலைவிலிருந்து வருகிறான் பாணன். யாழைத் தன் மார்போடு அணைத்தபடியே நடந்து வருகிறான். விறலியோ பின்னால் மெல்ல நடந்து வருகிறாள். ஆய் வள்ளல் முன் நின்று யாழை மீட்டி இன்னிசை எழுப்பினான். விறலியோ கான மயிலெனக் களிநடனம் ஆடினள்.
மகிழ்ந்தான் வள்ளல் ஆய். யானை, குதிரை, தேர்களைக் கொண்டு வந்து நிறுத்தினான். “வேண்டாம்” என்றான் பாணன். வியந்து நோக்கினான் ஆய். “பாணரும், புலவரும், கூத்தரும் உன் பொருளைத் தம் பொருளெனக் கொண்டனர். நான் உன் திரு உருவைக் காணவே வந்தேன். வாழ்க பல்லாண்டு. வாழ்க எம் தலைவன்’ பாணன் அன்புக்கு இணையேது உலகில்!
47. கிளிக்கூட்டமும் தினைக்கதிரும்
பாணன் வழிநடக்கிறான் முல்லைக்காடு ஆநிரைகள் மேய்கின்றன. அம்மா என்று கத்துகின்றன. வழி தொலையவில்லை. மலை வந்து விட்டது. எங்கும் மான் கூட்டம். அவை ஆளைக்கண்டாலே அஞ்சியோடும். பாணனைக்கண்டு பயந்து ஓடின. பெரிய ஆற்றைக் கடக்கவேண்டுமே பாவம். பாணன் என்ன செய்வான். படகோட்டி கடத்தி விட்டான். நடந்து நடந்து கால்கள் ஒய்ந்து விட்டன. வழிப் போக்கன் ஒருவன் வருகிறான்.
“ஐயா ஆய்வேள் எங்கே இருக்கிறார்?” பாணனே! ரொம்பத் தூரத்திலிருந்து வந்திருக்கிறாய் போலும். சீக்கிரம் நடந்துபோ, ஆய்வேளைப் பார். அவன் கிளிக்கூட்டத்து இடையே உள்ள தினைக்கதிர் போல் தோன்றுவான். குழ்ந்திருந்து கதிரைக் கொத்தும் கிளிகள் போல் பரிசிலர் அவனைச் சூழ்ந்திருப்பர்.
48. மலை போன்ற மனம்
“வாரும் புலவரே உட்காரும்” என்றாள் அவ்வை.
“ஏதேனும் செய்தி உண்டா?” என்றார் புலவர்.
“நாஞ்சில் மலைக்குப் போயிருந்தோம்”
“பலா மரங்கள் நிறைய நிற்குமே. பலாப் பழங்கள் கிடைத்திருக்கும்”
“நாஞ்சில் ഖள்ளுவனைப் பார்த்தோம்”
“நல்லவன்”
“நல்லவனா? முழு மடையன்”
“என்ன?”
“கேளும் ஐயா கேளும், கீரைக்கறிக்கு மேலே துவக் கொஞ்சம் அரிசி கேட்டோம்”
“கொடுக்காமலா போனான்”
“மலை போன்ற யானையைக் கொடுத்தான். பிடி அரிசி கேட்டவர்க்கு பெரிய யானை அறியாமையல்லவா இது”
“மலை போன்ற மனம் உடையவன் என்பதைக் காட்டுகிறது”
49. பேகனின் பெருமை
பரிசில் பெற்றுத் திரும்பிய பரணர், ஒரு பாணனைக் கண்டார். பேகன் சிறப்பைப் பாணனுக்குக் கூறினார்.
“விறலி சூடும் மாலையும் பாணன் சூடும் பொற்றாமரையும் மார்பில் புரளக் கடுந் தேரை நிறுத்திக் காட்டிடை இளைப்பாறுகின்ற நீங்கள் யார்?” என்று கேட்கும் இரவலனே, சொல்லுகின்றேன் கேள்:
பேகனைக் காண்பதற்கு முன் நான் ஏழையாய் இருந்தேன். நான் பேகனைக் கண்ட பின்னரோ, எனக்குத் தேரும் கிடைத்தது. சீரும் கிடைத்தது.
பேகன் எப்படிப்பட்டவன் என்று கேள்:
ஒரு நாள் மயில் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்தான் பேகன். அதன் ஆட்டத்தில் மனதைப் பறிகொடுத்தான். தன் பொன்னாடையை எடுத்து, மயிலின் மேனியைப் போர்த்தினான்.மயில் உடுத்தாது என்று தெரிந்தும் பரிசு கொடுத்த பேகன், உடுக்கவும் உண்ணவும் ஏங்கும் உனக்குப் பரிசு தராமல் இருக்க மாட்டான். எனெனில் அவன் மறுமையை நோக்கிக் கொடுப்பவன் அல்லன், இரவலர் வறுமையை நோக்கிக் கொடுப்பவன் என்றார் பரணர் பேகனின் பெருமையை நோக்கிச் சென்றான் பாணன்.
50. மாரிக் கொடை
பேகன் இருக்கின்றானே, அவன் யாரைப் போன்றவன் என்று கேளுங்கள். மழையைப் போன்றவன் என்று நான் சொல்கிறேன் என்றார் பரணர்.
மழை சில பேருக்கு மட்டும் பெய்யுமோ? பெய்யாது அது வற்றிய குளத்தில், வயலில், உவர் நிலத்தில் எங்கும் பெய்யும் அது போன்றே, பேகன் கேட்போர்க்கெல்லாம் கேட்டபடி தருவான்.அது கொடைத்திறம் அல்ல வென்பீர்.ஆனால் அவன் படைத்திறம் தெரியுமோ? கால் முடப்பட்டோர், கண்ணற்றோர், கிழவர், அஞ்சும் பேடியர் ஆகியோரிடம் போர்க்குச் செல்லான். கூற்றிடம், பகையிடம் போர் செய்யக் குதித்தோடுவான்.
கொடைத் திறன் அது படைத் திறன் இது!
51. மலையைப் பாடினோம், மங்கை அழுதாள்!
“வாருங்கள் புலவரே” என்று கை கூப்பி வரவேற்றான் பேகன்.
“பேகனே, இது கேள்” என்று தொடங்கினார் கபிலர்.
“வழியே நடந்து வந்தோம். வருத்தம் மிகுந்தது பசி வாட்டிற்று. சிற்றுார்க்குச் சென்றோம். ஒரு வீட்டில் தலை வாசலில் நின்று உன்னைப் புகழ்ந்தோம். உன் மலையைப் பாடினோம். அப் பாடலைக் கேட்டு கொண்டிருந்தாள் மங்கை ஒருத்தி. அவள் கண்களிலிருந்து நீர் பொங்கியது நில்லாமல் அருவி போல் ஓடியது.
52. யாம் வேண்டுவது பரிசில் அல்ல!
குளிரால் நடுங்கிய தென்று கருதி கோல மயிலுக்குத் போர்வை அளித்த மன்னவா, நாங்கள் உன்னை வேண்டி வந்தது பரிசில் அல்ல!
களாக் கனி போன்ற கரிய யாழை நாங்கள் மீட்டினோம். அது கேட்டு நீ தலையாட்டினாய், இனிய இரையை சுவைத்தாய். எங்கள் இசையின்பத்தைப் பருகிய பின் நாங்கள் கேட்கும் வரம் கொடுக்க வேண்டியதும் நியதியேயாகும். "மறுக்காதே மன்னா. இன்று இரவோடே தேர் பூட்டிச் செல், துன்புறும் உன் மனைவியின் கண்ணிரைத் துடை! அவ்வரத்தையே யாம் வேண்டினோம்... மறுக்காமல் தந்தருள்க” பேகனுக்குப் பரணர் விடுத்த வேண்டுகோள் இது.
53. குதிரையைத் தேரிலே பூட்டு
பெரிய பொன் தட்டு. அதில் முத்துக்களும் நவமணிகளும் வகை வகையான ஆபரணங்களும் அடுக்கிவைக்கப் பட்டிருக்கின்றன. பேகன் அத்தட்டை எடுக்கிறான். புலவர் கையில் கொடுக்கிறான். புலவர் அரசில் கிழார் அதனை ஏற்க மறுக்கிறார்.
“பேகனே அளவிலாத செல்வம் அளிக்கிறாய். அது எனக்கு வேண்டாம்”
“புலவரே, தயங்க வேண்டாம் வேண்டியதைக் கேளுங்கள்.”
“மன்னவரே நான் விரும்பும் பரிசில் இது. உன் மனைவிக்கு நீ அருள்காட்டவில்லை. வாடி வதங்கிவிட்டாள். அவள் கூந்தலில் மறுபடியும் நறும் புகை ஊட்டுக. மலர் சூட்டுக. அவள் வருத்தம் தீர்க்க வேண்டி நேரில் குதிரையைப் பூட்டுக. நான் வேண்டும் ஒரே பரிசில் இதுதான்.”
54. “நகை அணிந்தனர்”
இளஞ்சேட் சென்னி ஆற்றல் மிகுந்த அரசன். தென்பாதவரைத் தோற்கடித்தான். வட வடுகரைவாட்டி ஒட்டினான்.
பொருநன் போய் கிணயை இயக்கி அவன் புகழ் பாடினான். விலையுயர்ந்த அணிகளைக் குவித்தான் அம்மன்னன். அவ்வணிகளை சுமந்து வந்து சுற்றத்தார்க்கு அளித்தான் பொருநன் அவர்களோ அத்தகைய அணிகலன்களைப் பார்த்ததே இல்லை. எப்படி அணிவதென்று அறியாது திகைத்தனர். விரலில் அணியவேண்டியதை செவியில் அணிந்தார்கள். காதில் அணியவேண்டியதை கைவிரலில் அணிந்தார்கள். அரைக்குரியதை கழுத்திலும் கழுத்திற்குரியதை அரையிலுமாக அணிந்தனர். கண்டவரெல்லாம் கைகொட்டிச் சிரித்தனர். சீதை விட்டெறிந்த அணிகலன்களைக் கண்டெடுத்த குரங்குகள் அணிந்து அழகு பார்த்த காட்சிபோல் இருந்தது.
பொருநன் முகத்தில் புன்னகை அரும்பியது. சுற்றத்தினர் வறுமைகுயர் அடியோடு தொலைந்தது.
55. ஊரும் பேரும் உரைக்கமாட்டான்!
நல்ல வெய்யில். நான் நெடுந்துாரம் நடந்து களைத்துவிட்டேன். மழையில் நனைந்த பருந்தின் சிறகு போன்ற அழுக்குத் துணி, வேர்வையில் என் உடலில் ஒட்டிக்கிடந்தது.
ஒரு பலா மரத்தின் அடியில் இளைப்பாறு வதற்காக அமர்ந்தேன். அப்பொழுது வில்லேந்திய வேட்டுவர் தலைவன் ஒருவன் என்முன் தோன்றினான். அவன் காலிலே வீரக்கழல் ஒலித்தது. அவன் முடியிலே நீலமணி ஒளிர்ந்தது... நான் அவனைக் கண்டதும் எழுந்து வணங்கினேன். அவன், கைகுவித்து, என்னை “அமர்க” என்றான். தன் கையிலிருந்த நிணத்தடி'யை கடைந்த நெருப்பிலிட்டுச் சுட்டுப் பக்குவப் படுத்தினான். பின்னர், அவ்வூனைத் “தின்னும்’ என்று எனக்குக் கொடுத்தான். நான் அதனை அமுதம் என்று எண்ணி விரைந்து தின்றேன். பசி தீர்ந்தது.
அருவி நீரைக் குளிரக் குடித்தபின், வேட்டுவர் தலைவனிடம் விடைபெறத் தொடங்கினேன்.
அவன் விடை தருவதற்குத் தயங்கினான். திடீரென்று. தன் மார்பிற் கிடந்த முத்து மாலையைக் கழற்றி என் கழுத்திற் போட்டான்.
“நான் காட்டில் திரிபவன், கொடுப்பதற்கு என்னிடம் வோென்றுமில்லை” என்று குரல் அடைக்கக் கூறினான்.
“உன் பெயர் என்ன?” வென்று கேட்டேன். அவன் பேசவில்லை.
“உன் ஊரென்ன?” என்று கேட்டேன். அதற்கும் அவன் ஒன்றும் உரைக்கவில்லை.
பின்னர் கல்ங்கிய கண்களுடன் அவனை விட்டு பிரிந்தேன்.
வழியில் சிலரைக் கண்டேன்...அவர்களிடம் நடந்ததைக் கூறினேன். அவர்கள் என்னிடம் கூறியது இது:
“அதோ தெரிகிறதே மலை, அதுதான் தோட்டிமலை. அம் மலைத்தலைவன் தான் உனக்கு பரிசளித்த வள்ளல். மிக்க புகழும் பெருநாடும் உடையவன்”
56. வில்லாளன் ஓரி
ஒரு வேடன், காட்டிலே ஒர் யானையைக் கண்டான். அது, அவனைக் கொல்ல ஓடிவந்தது. அவன் அதன் எதிர் நின்று தன் வில்லை வளைத்து, ஒர் அம்பை யெறிந்தான். அது, யானையின் வயிற்றிற் புகுந்து சென்றது. அம்பு அத்துடன் வேகம் அடங்காது யானையைக் கொல்லக் காத்திருந்த புலியின் மேற் பாய்ந்து ஊடுருவியது. அதற்குமேல் அவ்வழியில் ஓடிவந்த புள்ளிமானைக் கொன்று, அதன் உடலையும் கிழித்துக்கொண்டு சென்று கடைசியில் உடும்புப் புற்றிற் பாய்ந்து உடும்பைக் கொன்று சினம் தணிந்தது.
அத்தகைய வில் வித்தையைக் கற்ற அவன் யார் அவன்தான் ஒரியோ?
ஆம், அவனாகத்தான் இருக்க முடியும்.
பாணர்களே, முழவுக்கு மண் அமையுங்கள். யாழிலே பண் அமையுங்கள். பெரும் வங்கியத்தை வாசியுங்கள். கல்லியை எடுங்கள். சிறு பறையை அறையுங்கள். பதலையின் ஒரு முகத்தை மெல்லக் கொட்டுங்கள். கரிய கோலைக் கையிலே தாருங்கள். யான்பாடுவேன். என்றார் வன்பரணர்.
ஒரி இசை வெள்ளத்தில் மிதந்தான். பாணர் குழாம். பொருள் வெள்ளத்திலே மிதந்தது
57. அரிது எது? எளிது எது?
“நீர் வேட்கையுடையோர், கடற்கரையில் நிற்பினும் தனக்குத் தெரிந்தவரிடம்தான் தண்ணிர் கேட்பர். அவ்வாறே பெருஞ் செல்வமுடையோர் எத்தனையோ பேர் இருக்கலாம் ஆயினும் இரவலர் தெரிந்த வள்ளல்களையே நாடி வருவர். அவ்வாறு, உன்னைக் காண வந்தேன்” என்று கானங்கிழானிடம் மோசி கீரனார் கூறினார்.
“கொடு என்று கேட்பதுதான் அரிய செயல். நீ கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் சரி. உன் பேராண்மையைப் பாடுவேன். உன் மலையைப் பாடுவேன். பொங்கி விழும் அருவியைப் பாடுவேன். உன் நாட்டைப் பாடுதல் எனக்கு எளிய செயல்.”
58. பாணனே கேள்!
பாணனே, ஏனப்பா, கவலைப் படுகிறாய். யாழை அனைத்துக் கொண்டு நிற்கிறாயே, யாழிசை கேட்க ஆள் இல்லை என்று நினைக்கிறாயா? இந்த யாழ் நமக்குச் சோறு போடவில்லை என்று எண்ணுகிறாயா வருந்தாதே. என் சொல்லைக் கேள்.
உடனே செல். கொண்கானங் கிழானிடம் போ. பாணனே, நெருஞ்சிப் பூவைப் பார்த்திருப்பாய். கதிரவன் கதிர் ஒளியை எதிர்கொண்டு மலர்ந்து நிற்கும் காட்சியை மறந்திருக்க மாட்டாய். அவ்வாறே அவனும் எதிரே வந்து மகிழ்வான். வறுமையால் வாடும் பாணரின் உண்கலத்தை நிரப்புபவன் அவனே. அவனைச் சென்று காண்க.
59. கானங் கிழான் குன்றம்
பாரத மலைகள் எல்லாம் பார்த்து விட்டேன் சோலை, அருவி, சுனை நிறைந்து தினை விளையும் வளமான மலைகளைப் பார்த்திருக்கிறேன். உயர்ந்து ஓங்கிப் பகை நெருங்க முடியாத பெரிய வன்மை வாய்ந்த மலைகளுக்கும் போயிருக்கிறேன். வளம் இருக்கும் மலையில் வலிமை இருக்காது. வலிமை உடைய மலை வளங் கொண்டிராது.
ஆனால் கானங் கிழான் குன்றோ இதற்கு விதிவிலக்கு. அங்கு வளமும் உண்டு. வலிமையும் உண்டு. இரு பண்புகளையும் கொண்ட இணையிலாக் குன்றம் அது.
நாடிவரும் புலவர் எல்லாம் தமது தமது என்று பங்கு வைத்து உண்டு மிகுந்த உணவு நிறைந்து கிடக்கும். அத்துடன் பகை வேந்தரை வென்று திறைப் பொருளும் கொண்டு வரும்.
இவ்வாறு மோசிகீரனார் காணங்கிழான் மலையின் அழகைப் பாடிகிறார்.
60. ஏறைக் கோன் குணம் எவர்க்கு வரும்?
குற்றம் புரிந்த நண்பரைப் பொருத்தருள்வான் பிறருடைய வறுமையைக் கண்டு, நாணம் அடைவான் மூவேந்தர் அவைக்களத்தில் மேம்பட்டு நடப்பான்!
அவன் பெயர் ஏறைக்கோன்! அவன் எங்கட்குத் தலைவன்... உங்கட்கும் தலைவர்கள் உண்டல்லவா? அவர்களின் பண்புகளைக் கூறுங்கள் பார்க்கலாம். அவர்களுக்கு இத்தகுதி இல்லை என்பதை நன்கு அறிவேன்.
எங்கள் தலைவனைப் பற்றி இன்னும் கேளுங்கள். எங்கள் தலைவன் வில் தொழிலில் வல்லவன். அகன்ற மார்பினன். கொல்லும் வேலினன். காந்தள் கண்ணியன். அவன் மலையில் மேகம் தங்கும். கலைமான் பெண் மானை அழைக்கும். இதனை ஆண் புலி செவி தாழ்த்திக் கேட்கும். அம்மலை நாட்டுத் தலைவனுக்கு எல்லாம் தகும்.
இவ்வாறு இளவெயினி என்னும் குறமகள் குறவர் தலைவனான ஏறைக்கோனைப் பாடினாள்.
61. குமணன் புகழ், குரங்குக்கும் தெரியும்
“முரசும், சங்கமும், முழங்கும்படி மூவேந்தருடன் போரிட்டான், பறம்பு மலைத் தலைவன் பாரி வெற்றித்தார் பூண்டு வில்லேந்திய ஒரி கொல்லி மலையை ஆண்டான். காரி என்ற கருங்குதிரையைச் செலுத்திப் போர் வென்றான் மலையன். குதிரை மலைத் தலைவன் அதியமான். பேகன் பெரிய மலை நாட்டு மன்னன். மோசி பாடப்பட்டான். ஆய் தேடி வந்தவர் வறுமையை போக்கினான். அவர்கள் எழு பெரும் புரவலர்கள் மாய்ந்த பின்னரும், அவர்தம் மரபைக் காக்க வல்லோன் என்றுரைக்கும் மாண்புடைய குமணனே, உன்னை நான் நாடி வந்தேன், நின் புகழ் பாடி வந்தேன்” என்றான் பாணன்.
அப்பொழுது, பலாமரத்தில் இருந்த ஒரு குரங்கு தான் பறித்த பலாப் பழத்தைக் காட்டி, மற்றொரு குரங்கை அழைத்தது.
குமணன் அதைப் பாணனுக்குக் காட்டிச் சிரித்தான்!
62. புகழ் கேட்டு ஓடி வந்தேன்
குமணனே, உன்னை நாடி வந்த கதையைக் கேள்! என்றார் பெருஞ் சித்திரனார். அவன் கேட்க வில்லை, அவர் சொல்லத் தொடங்கினார்.
காடு வெயிலால் வறண்டு கிடக்கின்றது. அப்பொழுது மழை பொழிந்தால் என்னாகும்? “பசேல்” என்று தழைக்கும்!
அது போல, வாடிக்கிடக்கும் இரவலர், குடிலில், பால் வார்த்துப் பசுமையூட்டும் பண்புடையாளன் என்றனர். பொற் கிண்ணங்களில் அமுதிட்டுப் பாணர்க்கு ஊட்டும் பரிசிலாளன், முதிரமலைக் குமணன் என்று சொல்லக் கேட்டு விரைந்து ஓடி வந்தேன். இங்கு வந்தபின் யாவும் மெய்யென்று கண்டேன். வயிறு புடைக்க உண்டேன். ஆனால் எனக்கு அமைதியில்லை அரசே என் இல்லத்திலே வறுமையால் வாடும் என் மனைவிக்குப் பால் வற்றி விட்டது...
பால் பெறாத புதல்வன், வெறும் பானையைத் திறந்து பார்த்து அழும் காட்சி என் மனக் கண் முன் தோன்றுகின்றது.
என் மனைவியோ, புலி புலி என்று பயமுறுத்துகின்றாள். அம்புலி காட்டி ஆசையூட்டுகின்றாள்.
ஆனால் பிள்ளையின் பசித் தீயை அவளால் அணைக்க முடியுமோ? என்று தேம்பி அழுதார் சித்திரனார்.
அவர் திரும்பு முன், தேரும் பொருட்களும் பிறவும் அவர்முன் காட்சியளித்தன.
குமணன் புகழ், தேர்க் கொடியிற் பறந்தது.
63. எல்லோர்க்கும் கொடு!
பெருஞ்சித்திரனார் இல்லம். வண்டியிலிருந்து பொன் மணிகளை இறக்கி வீட்டிற்குள் கொண்டுவந்து வைக்கின்றனர். பட்டாடை அணிந்து பல வகைப் பொன் அணிகளைப் பூட்டிய கோலத்தோடு பெருஞ்சித்திரனார் வீட்டிற்குள் நுழைகிறார். அவர் மனைவி மலர்ந்த முகத்தோடு வரவேற்கிறாள். பெருஞ்சித்திரனார் கூறுகிறார்:
“ஆருயிரே அனைவர்க்கும் பகுந்து கொடு. கடன் கொடுத்தவர்க்குக் கொடு. உன் தோழியருக்குக் கொடு. இனத்தவரை அழைத்து வந்து அள்ளிக் கொடு. யாருக்குக் கொடுக்க வேண்டும், யாருக்குக் கொடுக்கக் கூடாது என்று நினைக்காதே. எல்லார்க்கும் கொடு முதிரமலைத் தலைவன் குமணன் தந்த பொருளைப் பெட்டியில் பூட்டி வையாதே. மனம் போல் அள்ளி வழங்கு”.
64. இளங்குமணா, என் செய்தாய்?
இளங் குமணன் தன் அண்ணன் குமணனை விரட்டி விட்டு, அரசுகட்டில் ஏறினான். கொடை வள்ளலாகிய குமணன் காட்டிற் சென்று, தலை மறைவாய் வாழ்ந்து வந்தான்.
பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் காட்டிற்குச் சென்றார். குமணனைக் கண்டு பாடினார். அப்பொழுது குமணன் கையிற் பொருள் இல்லை! அவன் தன் வாளை உருவி புலவரிடம் கொடுத்துத் தன் தலையை அரிந்து எடுத்துக்கொள்ளுமாறு கூறினான்.
“என் தலையை எடுத்துக்கொண்டு போய் என் தம்பியிடம் கொடுத்தால் அவன் பொன் கொடுப்பான்என் தலைக்கு, அவன் விலை கூறியுள்ளான்” என்றான் குமணன்.
புலவர், கை நடுங்க வாளை எடுத்துக் கொண்டு ஓடினார். இளங் குமணனைக் கண்டார்.
“நிலையற்ற உலகின் தன்மையை அறிந்து, புகழால் தன்மையை நிலைநிறுத்திக் கொண்டோருள், குமணனே உயர்ந்தவன். அவனைப் பாடி நின்றேன். அவன் தலை கொய்ய வாள் கொடுத்தான் உவகையுடன் ஒடி வருகிறேன்” என்றார்.
இளங்குமணனை இரத்த பாசம் பற்றியது. பதை பதைத்தான். மயங்கினான். மயக்கம் தெளிந்தபின் உண்மை உணர்ந்தான். அண்ணன் காலடியில் விழவேண்டிக் காட்டிற்கு ஓடினான்.
65. மதிப்பு யாருக்கு?
திருக்கிள்ளியே! உன் உடல் முழுதும், வாள் உழுது வடுப்பட்டுள்ளது. அதனால் நீ அழகு குறைந்தவன். “கண்ணுக்கு இனியன் அல்லன். ஆனால் காதிற்கு இனியன். ஆனால் உன் புகழ் பெரிது. ஏனெனில் உன் பகைவரோ, உன்னைக் கண்டால் அஞ்சிப் புறங்காட்டி ஒடுவர். ஆதலால் உடலில் புண் இல்லை. கண்ணுக்கு இனிய காட்சியளிப்பான். ஆனால் அவர்கள் செவிக்கு இன்னாதவர். நீயும் ஒன்றிலே இனியன். அவர்களும் ஒன்றிலே இனியர். ஆயினும் உன்னை மட்டும் தானே உலகம் மதிக்கிறது.
66. பிட்டங் கொற்றணின் பெரும் புகழ்!
பிட்டங் கொற்றன் சேரனின் படைத் தலைவன். குதிரை மலைத் தலைவன். அவன் நாட்டில் பன்றி உழுத நிலத்தில் தினை விதைப்பர். முற்றிய கதிரை அறுத்து அடித்துத் தினையைக் குற்றுவர். மான் கறி வாசனை வீசும் பானையைக் கழுவாமல் காட்டுப் பசுவின் பாலை ஊற்றுவர். தினை அரிசியைப் போட்டுச் சந்தன விறகால் எரித்து சோறு ஆக்குவர். வடித்து எடுத்து வாழை இலையில் போட்டுக் கூடி இருந்து உண்பர்.
இத்தகைய வளம் உடைய நாட்டு மன்னனான பிட்டன் கூரிய வேலன். வேங்கை மாலையன். வேகமாகச் செல்லும் குதிரையை உடையவன். பெருங்கொடை வள்ளல். ஆனால் பரிசிலர் நாவைத் துன்புறுத்தியவன் ஆவன். ஏனெனில் புலவர் அவனைப் பாடாமல் இருக்க முடியாது.
67. இன்று போல் என்றும் வாழ்க!
காரிக் கண்ணர் பிட்டனைப் பார்க்கச் சென்றார். இரவலர் பிட்டனை நாள்தோறும் வந்து மொய்த்தனர். சலிப்பின்றிப் பொருள் வழங்கினார். அவன் பேராண்மை வாய்ந்தவன். தன் தலைவன் விருப்பப்படியே போர் செய்து வெற்றி பெற்றான். அவன் வழங்கும் பரிசுகளுக்கு அளவே இல்லை. தொழுப் பசுவையே கேட்டாலும் கொடுத்து விடுகிறான். களத்தில் குவித்த நெல்லைக் கேட்டால் அவ்வளவையும் அள்ளிக் கொடுத்து விடுகிறான். அணிகலனோ, யானையோ எது கேட்டாலும் கொடுக்கிறான். அவனது கொடைக் குணத்தைக் கண்ட புலவர் “அவன் காலில் சிறு முள்ளும் குத்தக் கூடாது” என்று இறைவனை வேண்டினர்.
68. ஏற்றுக உலை ஆக்குக சோறு!
“ஏடீ விறலி” என்று பாணன் ஆசையுடன் கூப்பிட்டு கொண்டு வந்தான். ஒடி வந்தாள் விறலி.
உலையை யேற்று. சோற்றை ஆக்கு. விறலியே, கோதைகளைப் புனைந்து கொள்”
பிட்டங் கொற்றனா இவ்வளவையும் கொடுத்தார்?”
“பிட்டன் வெற்றி பெற்று விட்டான் அவன் வாழ்க! அவனது மன்னன் வாழ்க. அவன் மட்டும் என்ன? அவன் பகையும் வாழ்க!
பகையின்றேல் வெற்றி ஏது? நாம் பாடும் பெற்றி ஏது?
69. பண்ணன் வாழ்க!
கிள்ளி வளவன் பண்ணன் வீட்டை நோக்கி நடந்தான். அவன் கொடையின் பெருமையைத் தெரிந்தான். உள்ளம் மகிழ்ந்தான். வாழ்த்தினான்.
“நான் வாழும் நாள் வரை பண்ணன் வாழ்க! பழுத்த மரத்தில் பறவை கட்டி ஒலிப்பது போல் உண்பவர் ஆரவாரம் கேட்கிறது. அதோ செல்கின்ற அந்தக் கூட்டத்தை பார்ப்போம். முட்டை எடுத்துத் திக்கை நோக்கி ஏறும் எறும்புக் கூட்டம்போல், சிறுவர்கள் சோற்றுத் திரள்களை ஏந்தி வரிசையாய்ச் செல்கின்றனர். பண்ணன் கொடுத்தான் என்று அவர்கள் வாய் பாடுகின்றது.
பசிப் பிணி மருத்துவன் என்று பெரியவர்கள் அவனைப் புகழ்கின்றனர்.
அவன் இல்லம் அருகிலோ? தூரத்திலோ?”
70. நெஞ்சம் திறப்பவர் நின்னைக் காண்பர்!
ஆதனுங்கன் வேங்கடமலைத் தலைவன். ஞாயிறு மண்டலத்தைப் போன்றவன். யாவரையும் காப்பதையே தன் கடமையாகக் கொண்டவன்.
அவனைத் தந்தையாகக் கொண்டு வாழ்ந்தார் ஆத்திரையன் என்னும் புலவர். அவனையே நினைத்தார். அவன் புகழையே பாடினார். அவர் நெஞ்சில் வேறு யாருக்கும் இடமில்லை. “ஆதனே, எந்தையே நீ வாழ்க! என் நெஞ்சைப் பிளப்பவர் அங்கே உன்னைத்தான் காண்பர். உன்னை நான் மறவேன். அப்படியே மறப்பதாயின் மறக்கும் நாள் நான் இறக்கும் நாளாக இருக்கும்”
71. கீரஞ்சாத்தன் வீரம் பெரிது!
கீரஞ் சாத்தன் ஒரு குறுநில மன்னன். அவனைப் பார்க்கச் சென்றார் ஆவூர் மூலங்கிழார். சாத்தன் பண்பு அவர் நெஞ்சைக் கவர்ந்தது.
கீரஞ்சாத்தன் உண்ணும் போது யாரேனும் போனால் இழுத்து உட்கார வைப்பான். இலை போடுவான். சோறு வைப்பான். உண்ணும்படி வற்புறுத்துவான். வந்தவர் உண்ட பின்னரே தான் உண்டான்.
போர்க் களத்தில் முன் நிற்பான். வீரர் சிலர் கள் குடிக்கும் போது வீரம் பேசி விட்டு களத்தில் புறங்காட்டி ஒட முயல்வர். கீரஞ்சாத்தன் அவர்களுக்கும் அரணாக நிற்பான். பகைவரையும் வெல்வான்.
72. “நீயும் வா”
தோயமான் மாறன் மாளிகை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருந்தார் மதுரைக்குமரனார். வழியில் பாணன் ஒருவன் எதிர்ப்பட்டான். புலவர் நெஞ்சம் நெகிழ்ந்தது.
“பாணனே! நீ எம்மோடு வருக! தோயமான் மாறன் வரையாது கொடுக்கும் பெருமை உடையவனுமல்ல; இல்லை யென்று மறுக்கும் சிறுமையுடையவனும் அல்லன்.
நாம் அவனைக் கொண்ட கேட்கப் போவோம்! அவன் உலைக் களத்திற்குப் படைக் கருவி கேட்கப் போவான். அவன் உடலெங்கும் போர்ப்புண் பட்டவடுக்கள் மருந்து கொள்ளப்பட்ட மரம்போல் தோன்றுவான் வடுக்கள் அவனுக்கு வசை இல்லை. அவையே அவனுக்கு அழகு.”
73. உலகம் இருக்கின்றது!
அமுதமே கிடைத்தாலும், அதனைத் தனியே இருந்து உண்ணார். சினங்கொள்ளார். யாரையும் ஏளனம் பண்ணார். சோம்பல் அற்றவர்.
பிறர்அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சுவர்; புகழ் கிடைப்பின் உயிரும் கொடுப்பர்! பழியெனின், உலகமே கிடைத்தாலும் விடுப்பர் அயர்வு அற்றவர்.
தாம் வாழ வாழாது, பிறர் வாழ வாழும் பெருந்தகையாளர் அவர்!
அவராலன்றோ, உலகம் நிலை பெற்று வாழ்கின்றது!
74. கற்றல் நன்றே!
ஆசிரியனுக்கு ஏற்படும் துன்பத்தைத் துடைக்க வேண்டும். வேண்டும் பொருளை விரைந்து கொடுக்க வேண்டும் அடங்கிக் கல்வி கற்றல் நல்லது. ஏன்? தாய் தன் வயிற்றிற் பிறந்த மக்களுள் கற்ற மகனையே விரும்புவாள்!
ஒரு குடியிற் பிறந்தவர்களுள், மூத்தவன் வருக என்று அழைக்காமல், கல்வி கற்றவன் வருக என்றே அவையினர் அழைப்பர் அறிவுடையோன் சென்ற வழியே அரசனும் செல்வான்.
நால்வகை சாதியாரில் மேல்சாதிக்காரர், கற்றிலராயின் தாழ்ந்தவராகி கெடுவர் கீழ்ப்பட்ட ஒருவன் கல்விகற்றிருப்பின், அவனை மேல் சாதிக்காரனும் வணங்குவான்.
75. முறையாகத் திறை கொள்க!
காய்ந்த நெல்லை யறுத்து அடித்து, குற்றிச் சமைத்துக் கவளங் கவளமாய்த் திரட்டி யானைக்கு உணவு அளித்தால் சிறு நிலத்தில் விளைந்த நெல்லும் பல நாள் உணவாகும்!
நூறு காணி நிலமாயினும், யானையை மேய விட்டால், அது தின்பது குறைவாகவும், அதன் கால்கள் அழித்து மிதிப்பது அதிகமாகவும் இருக்கும்.
ஆகையால் அரசனும் முறையறிந்து திறை கொண்டால் நாடு நிறைவு கொண்டு வாழும் இன்றேல் குறைவு கொண்டு விழும்!
76. ஒட்டுவோன் ஒட்ட வண்டி ஒடும்!
அழகிய சக்கரங்கள். உருண்டு திரண்ட அச்சு. வளைவில்லாத வண்டி. இளம் எருதுகள் பூட்டப் பட்டுள்ளன. வண்டியை இழுத்துச் செல்லத் துடித்துக் கொண்டிருக்கின்றன. வண்டி யோட்டி இல்லையே. வண்டியின் கதி? பள்ளத்தில் விழுந்து விடுமே. எல்லாம் நொறுங்கி விடுமே. ஆகா, அதோ வண்டிக்காரன் வந்துவிட்டான் தூள் துள்ளிக் குதித்து வண்டியில் ஏறுகிறான். வண்டி பறக்கப் பாய்ந்து ஓடுகிறது. அனால் இப்போது கவலை இல்லை.
உலகம் பெரிய வண்டி. அதனை ஒட்ட நல்ல வண்டிக்காரன் வேண்டும். அவன்தான் அரசன்-தலைவன். தலைவன் இல்லாவிடில் நாடு அழிவை நோக்கிச் செல்லும்.
77. உலகிற்கு உயிர் எது?
“ஒளவையே” காலையில் உன்னைத் தேடினேன் காணவில்லை. எங்கே போயிருந்தாய்” என்றான் மன்னன் அதிகமான்.
“ஆற்றில் புது வெள்ளம் வந்திருக்கிறது”
“வயல்களுக்குத் தண்ணிர் திறந்து விட்டிருக்கிறார்களா?”
“ஆமாம் வயலில் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்”
“அப்படியானால் அச்சமில்லை. நெல்லும் நீருமே நம் நாட்டிற்கு உயிர்.”
“இல்லை அரசே இல்லை. நெல்லும் உயிரல்ல; நீரும் உயிரல்ல; மன்னனே நாட்டிற்கு உயிர் நீ தான். இந்நாட்டிற்கு உயிர். இதனை உணர்ந்து நடப்பதே உன் கடன்.”
78. நல்ல நாடு
“அரசே ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுவாயா?” என்றாள் ஒளவை.
“கேள், பார்க்கலாம்” என்றான் அதிகமான்.”
“நல்ல நாடு எது?”
“ப்பூ இதுதானா கேள்வி. அழகான ஊர்கள், நகரங்கள் இருக்கவேண்டும். வானளாவிய மாளிகைகள் இருக்க வேண்டும்.”
“இல்லை” இல்லை”
“பெரிய காடுகள் நிறைந்திருக்க வேண்டும். காடுகள் நாட்டிற்கு நல்ல அரணாக விளங்கும்".
“அதுவும் இல்லை”
“இப்பொழுது சொல்லி விடுகிறேன். நாடு, மேட்டு நிலமாக இருக்க வேண்டும். அப்படியானால் மழையாலோ வெள்ளத்தாலோ பாதிக்கப்படாது”
“மழை பெய்யா விட்டால்”
“உண்மை விளங்கி விட்டது. நாட்டில் பள்ளத்தாக்குகள் நிறைய இருக்கவேண்டும். எங்கும் வளம் கொழிக்கும்”
“அரசே கேள். ஊர் நிறைந்திருந்தாலும் நாடல்ல. காடு மிகுந்திருந்தாலும் நாடாகாது. மேடோ பள்ளமோ நாடாகி விடாது. நல்ல ஆடவர் நிறைந்திருக்கும் நாடே நல்ல நாடு.”
அதிகமான் அதிசயத்தில் ஆழ்ந்தான்.
79. “மயக்கும் மக்கள்”
பாண்டியன் அறிவுடைய நம்பி தன் ஆருயிர் நண்பர் வீட்டிற்குச் சென்றார். அன்று அங்கு அரசனுக்கு விருந்து. அழகான வீடு. ஏழடுக்கு மாளிகை. பொன் மணிகள் எல்லாம் நிறைந்திருக்கின்றன.
அரசனோடு விருந்துண்ணப் பலர் வந்திருக்கிறார்கள். உணவு பரிமாறப்படுகிறது. அரசன் உண்ட பின்னரே பிறர் உண்ண வேண்டும். எல்லாரும் அரசனையே பார்க்கிறார்கள். அரசனோ ஆழ்ந்த சிநதனையிலிருக்கிறான்.
“மன்னர் பிரானே” என்றார் நண்பர்.
“ஆருயிர் நண்ப உனது வீட்டில் மகிழ்ச்சி இல்லை.”
“ஆ ஆ”
“ஆம், உண்மையாகவே மகிழ்ச்சி இல்லை. தளர் நடை நடந்து, சிறு கை நீட்டி, வட்டிலில் கையிட்டு சோற்றைத் தொட்டு, அளைந்து, அள்ளி மேனியெங்கும் வீசும் மக்கள் இல்லை. மயக்கும் மக்கள் இல்லை.
“நண்பர் மனைவியை நோக்க, அனைவரும் அவனையே நோக்கினர். அவளோ நாணத்தால் தலை கவிழ்ந்தாள்.
“மன்னர் பிரானே, அவள் வயிற்றுனுள் ஒருவன் உருவாகிறான். அவனுக்காகத்தான் இவ் விருந்து”
வெள்ளம் மகிழ்ச்சி வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
80. உண்பது ஒரு நாழி!
நக்கீரர் குளித்து காலைக் கடன்களை முடித்து விட்டு வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். அவரது மாணவன் வந்தான். வணங்கி விட்டு உட்கார்ந்தான். “குருவே” என்றான் மாணவன்.
“நேற்றைய பாடத்தில் ஐயம் ஏதேனும் உண்டா?”
“ஒரு சந்தேகம். பொருளைப் பெருக்க வேண்டும் என்றீர்கள். உண்மை விளங்கியது. ஆயினும் பலர் குங்குமம் சுமக்கும் கழுதையாக இருக்கிறார்கள். பொருளைத்திரட்டி வைத்துப் பார்த்து மகிழ்வதுதான் குறிக்கோளாக இருக்க வேண்டுமா?”
நக்கீரர் விளக்கம் கூறத் தொடங்கினார்:
“உலகத்தையெல்லாம் ஒரு குடையின் கீழ் வைத்து ஆளும் மன்னனைப் பார்த்திருக்கிறாய். தனக்கென எதுவும் இல்லாமல் இரவும் பகலும் வேட்டை யாட விரையும் வேடனையும் பார்த்திருக்கிறாய், இருவருமே உண்பது நாழி. உடுப்பதோ மேலாடை கீழாடை என்னும் இரண்டு. பிற தேவைகளிலும் ஒன்றாகவே, விளங்குகிறார்கள். செல்வத்தைச் சேர்த்து வைப்பதாலும் பயன் இல்லை. செலவழிப்பதிலும் பயன் இல்லை. கொடுத்தலில்தான் பயன் இருக்கிறது. செல்வத்துப்பயன் ஈதலே.”
81. பல்லாண்டு வாழ்வது எப்படி?
பல்லாண்டுகளாக நரையின்றி வாழ்தல் எப்படி? என்று கேட்கின்றீர்கள் சொல்கிறேன், கேளுங்கள்:
மனைவி நற்பண்பு நிறைந்தவளாய் இருக்க வேண்டும். அவளுக்குப் பிறந்த பிள்ளைகளும் அப்படியே விளங்க வேண்டும். ஏவலாளரோ, தான் எண்ணுவது போன்றே எண்ணிப் பணிபுரிய வேண்டும். காவலாளனாகிய வேந்தனும், நாம் வீட்டைக் காப்பது போன்றே நாட்டைக் காக்கவேண்டும்.
அது மட்டுமா?
ஊரில் வாழும் சான்றோர், அடங்கிய கொள்கையுடைய ஆன்றோராய்த் திகழ வேண்டும்.
அப்புறம் நரை ஏன் வரும், திரை ஏன் வரும், குறை ஏன் வரும்?
82. யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
பூங்குன்றனாரைப் பார்க்க வந்தார் ஒரு நண்பர். சிட்டுக் குருவி போல் கவலையற்ற வாழ்வு வாழ வழி கூறும்படி கேட்டார். புலவர் தம் பொன்னுரையைத் தொடங்கினார்.
“எல்லா ஊரும் நம் ஊரே! எல்லோரும்: நம் உறவினர்!
தீமையும் நன்மையும் பிறர் கொடுக்க வருவதில்லை நம்மால் ஏற்படுவன! துன்பம் வருவதும் அதைத் துடைத்துக் கொள்வதும் நம் செயலால் ஏற்படுவது
வெள்ளம் ஒடுகின்ற திசையில் மிதந்து செல்லும் தெப்பம் போல, இறைவன் எண்ணம் ஒடும் திசையில் உயிர்ப்புணை மிதந்தோடும்!
திறந்தெரிந்த நூலோரின் நற்காட்சியால் இவற்றைத் தெளிந்தோம்!
ஆதலால், இவர் பெரியர் என்று புகழமாட்டோம். இவர் சிறியர் என்று இகழவும் மாட்டோம்!
இப்படி வாழ்ந்தால் நெஞ்சத்தில் பாரம் இருக்காது. சிட்டுக் குருவிபோல் எட்டுத் திக்கும் ஒடிக்களிக்கலாம்.
83. தனி வாழ்வும் குடும்ப வாழ்வும்!
கன்றுகளும் பெண்மானும் சூழ்ந்து நிற்கக் கலைமான் நிற்கிறது. வேடன் வருகிறான். கலைமான் நடுக்கம் கொள்கிறது. தான் மட்டுமே நின்றால் விரைவாக ஒடிவிடலாம். தன் கன்றுகள் தப்ப வேண்டுமே, தன் காதலி பிழைக்க வேண்டுமே என்று அஞ்சி ஒடுகின்றது. இந்தக் காட்சி புலவர் கண்ணை விட்டு மறையவே இல்லை. சிறிது தொலைவு சென்றார். மான் ஒன்று தனியாக நின்று மேய்ந்துக் கொண்டிருந்தது. வேடன் வில்லுடன் ஒடி வந்தான் மானோ பாய்ந்து ஓடி மறைந்து விட்டது.
புலவர் சிந்தனை விரிந்தது. குடும்பத்தால் ஏற்படும் தொல்லையை நினைத்தார். தனியாக இருந்தால் எப்படியேனும் வாழ்ந்து தொலைத்து விடலாமே என்று எண்ணினார். குடும்பம், கால் விலங்காய் இருக்கிறதே என்று ஏங்கினார்.
அப்படியே தளர்ந்து விடவில்லை. அவர் மனந்தேறினார். தன்னை நம்பி வாழ்வோரை நினைத்தார். கலைமான் கடமையை எண்ணினார். தன் கடமையை ஆற்றக் கால்கள் விரைந்தன.
84. “துன்ப உலகம்"
தெரு வழியே நடந்து சென்ற பக்குடுக்கை நன் கணியார் புதுப்பது அனுபவங்கள் அடைந்தார். என்னே வாழ்க்கை. என்னே உலகம்.
ஒரு வீட்டிலே சாப்பறை கேட்கிறது மற்றொரு வீட்டிலே முழவு முழங்குகிறது.
ஒரு வீட்டில் திருமணம்!
அடுத்த வீட்டிலே பிணம்!
மணமாகிய பெண்டிர் மகிழ்கின்றனர்; பிணமாகிய கணவனைப் பிரிந்த பெண்டிர் அழுகின்றனர்!
இவ்வுலகின் தன்மையோ மிகுந்த துன்பம் செறிந்தது.
இவற்றை உணர்ந்தோர் அழ வேண்டுமா?
உலகின் உண்மை இயல்பை உணர்ந்தவர், துன்பத்தை நீக்கிவிட்டு இன்பத்தை மட்டுமே கண்டு நன்னெறிக்கண் ஈடுபட்டு மகிழ் வேண்டும்.
85. நரைத்து மூத்தவர்களே, கேளிர்!
நரிவெரூஉத்தலையார் தாம் கண்ட அனுபவங்களை உலகோர்க்கு, உரைக்க விரும்பினார்:
“பற்பல கொள்கைகள் பேசும் பெரியோர்களே!
மீன் முள் போன்று, நரை மயிர் நீண்டு நிற்கக் கண்களைச் சுறுக்கிப் பார்க்கும் பயனற்ற முதுமையை ஏற்றுக் குனிந்தோர்களே! கேளுங்கள்!
மழுவை ஏந்தி வரும் எமன், பாசக் கயிற்றால் உம்மைக் கட்டிக் கதறக் கதற இழுக்கும்போது வருந்துவீர்களே.
ஒன்று சொல்வேன் கேளுங்கள். நீங்கள் உலகிற்கு நன்மை எதுவும் செய்ய வேண்டாம் தீமை எதுவும் செய்யாமல் இருந்தால் போதும்!
அப்பொழுது, எல்லோர்க்கும் மனங் குளிரும்; அது மட்டுமின்றி, எமன் இழுப்பதற்குப் பதில் உம்மை, நல்லறம் வரவேற்று வாழ்த்துக் கூறும்!”
86. வேம்பும் அமுதமும்
பெருந்திருமாவளவன் அவையில் அமர்ந்திருந்தான். மாடலன் மதுரைக் குமரனார் வந்தார்.
“போய் வருகிறேன் மன்னா”. என்றார்.
“புலவரே, பரிசில் பெறாமல் போகிறீர்” என்றான் வளவன்.
“புறப்பட்டு விட்டேன். பக்கத்து நாட்டிற்குச் செல்கிறேன். அவன் ஒரு சிற்றரசன்தான். வறுமையால் வாடுகிறான். வரகஞ் சோறுதான் கொடுப்பான் அதுவே அமுதம் மாவேந்தரேயாயினும், மதியாதாரை நாங்கள் மதிப்பதில்லை. அவர் செல்வத்தை மதிப்பதில்லை. அது வேம்பு” என்றார் புலவர்.
புலவரைத் தேற்றிப் பரிசளித்து அனுப்பினான் வளவன்.
87. கடல் மேல் எழும் கதிரவன் நீ
வெற்றிக்குக் கட்டியங் கூறி, குருதிக் கறை படிந்த வாட்கள் ஆயிரம் அவை, செவ்வானத்தின் வனப்புப் போன்றன!
கால்கள் ஒடுவதாலே கழல்கள் அறுந்து விழ்ந்தன... அவை, கொல்லேற்றின் கொம்பு போன்றன...
அம்பு பட்டதால் மார்புக் கவசங்களில் துளைகள் தோன்றின... அவை, இறந்து பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் இலக்கம் போன்றன...
பரிகள், வலமும் இடமும் பாய்ந்து, வாய்களிற் குருதி படிந்து, எருதைக் கவ்விய புலி போன்றன...
களிறுகள், கோட்டைக் கதவம் பிளந்து, கோடு முறிந்து, உயிர் உண்ணும் கூற்றுவன் போன்றன...
ஆனால் அவனோ தாவும் குதிரையொடு தகதகக்கும் தேர் ஏறிக் கருங்கடலில் ஞாயிறுபோற் காட்சி தருகிறான்.
அவன் தேரோடு போராடும் பகைவர் வேரோடு பெயர்ந்து விழுவர்... தாயற்ற குழந்தை போற்கதறி அழுவர்
88. புகழ் என்றால் இதுவன்றோ புகழ்!
பல்யாகசாலை முகுகுடுமிப் பெருவழுதியைப் பாடினார் காளிகிழார். அது, புகழ்ப்பாட்டு. அதன் பொருள் இதோ...
“வடக்கே, பணி குளிக்கும் இமயம்; தெற்கே, திரைகொண்டு கரை மோதும் குமரி;
கிழக்கே, பண்டு சகரரால் தோண்டப் பட்ட கீழ்க் கடல்;
மேற்கே, முத்து முதிர்ந்த மேற்கடல்! இந் நான்கு எல்லைகளுள்ளும் அடங்காத உன்புகழ் இரு கூறாய் பிரிந்தது;
ஒரு கூறு, மண் பிளந்து கீழ் சென்றது. மற்றொன்று, விண் பிளந்து மேற் சென்றது. இவ்வாறு வளர்ந்த உன் புகழ்க்குக் காரணம் ஆற்றல்! அது கோணாது, கொள்கை பிறழாது, வெற்றிக் கொடி போல் விண்ணுயர்ந்த ஆற்றல்!
உன் ஆற்றல் அறியாது, பகைவர் போருக்கு வரின் அவர் அரண்வென்று, முறியடித்துப் பொருட்களை பரிசிலர்க்கு வழங்குக!
உன் கொற்றக் குடை வாழ்க, அது முக்கணான் கோயில் முன் தாழ்க!
அந்தணர் உன்னை வாழ்த்த, அவர்க்கு உன் சென்னி வணங்குக!
உனது மாலை, பகைவர் நாட்டிற் புகுந்த தீப் புகையால் வாடுக!
உன் சினம், முத்தாரம் தவழ, முறுவல் ஒளிர நிற்கும் உன் மனையாள் முன் தணிக
குளிர் மதி போன்றும், கொடுங் கதிர் போன்றும், நாட்டார்க்குத் தண்மையும், ஒட்டார்க்கு வெம்மையும் வழங்கி உன் திறம் ஓங்குக!
முதுகுடுமிப் பெருவழுதியே, சாலை தோறும் புகழப்படும் நின் பெயர், காலையிற் கதிர் மாலையில் மதி!
89. “அறப் போர்”
பழங்கால மன்னர் அறப்போர் செய்தனர். போருக்கு முன்னர் விடுக்கும் எச்சரிக்கை இது:
“எம் அம்பு புறப்படுகிறது, எச்சரிக்கை!
பசுவையும், பசுவைப் போன்ற பிராமணரும் பெண்டிரும், பிணியாளரும், பொன் போன்ற புதல்வரைப் பெறாதவரும், விரைந்து அரண் சேர்க!” என்று அறஞ்சாற்றி மறம் போற்றும் முதுகுடுமிப் பெருவழுதி வாழ்க!
அவன் படை யானைகள் மேற் பறக்கும் கொடிகள் விண்ணை மூடுகின்றன, கதிரவன் கண்ணையும் மூடுகின்றன!
கூத்தர்க்குப் பொன் வழங்கிக் கடல் தெய்வத்திற்கு விழாக் கண்ட நெடியோன் யார்? அவன் முதுகுடுமியின் முன்னோன்! அவன் வெட்டிய பஃறுளி யாற்று மணற் பரப்பைப் பாரும்!
அம்மணலிலும் பற்பலவாய்க் குடுமியின் வாழ்நாட்கள் பெருகுக!
90. இளஞ் சேட் சென்னி
இளஞ்சேட் சென்னி சிறந்த மன்னன். எதையும் செம்மையாகச் செய்வான். ஒன்றைச் செய்து பின் வருத்தப்படமாட்டான். பார்த்தவுடன் எவரையும் தெரிந்து கொள்வான். கோள் சொல்லைக் கேட்க மாட்டான். புகழ் பாடுவோரை நம்பான். அவன் பிறர் செய்யும் குற்றத்தை நன்கு ஆராய்வான். நடு நிலை தவறாமல் தண்டனை அளிப்பான். தவறு செய்தவன், காலடியில் வீழ்ந்து மன்னிப்புக்-கேட்டால் தண்டனையைக் குறைப்பான்; அவனிடம் முன்னிலும் அதிகமாக அன்பு காட்டுவான். புலவரெல்லாம் அவன் புகழ் பாடினர்.
91. பாட்டுக்குப் பரிசு!
பெருங் கடுங்கோ சேரவேந்தன். அவன் ஆறு வளம் மிக்கது. அவ்வூர்ச் சிறுமியர் ஆற்றில் நீராடுவர். ஆற்று மணலில் சிற்றில் கட்டுவர். பாவை செய்து அதற்கு மாலை சூட்டுவர். மக்கள் உள்ளத்தில் கலை வாழ்ந்தது. மகிழ்ச்சி தவழ்ந்தது.
பாணனும் பாடினியும் அவனைப் பார்க்கச் சென்றனர். அவன் வீரத்தைப் புகழ்ந்து பாடினாள் பாடினி. பாணன் ஒத்துப் பாடினான். பாடினி பல கழஞ்சுப் பொன்னால் ஆன பொற்கொடியைப் பரிசாகப் பெற்றாள். பாணனோ வெள்ளிநாரில் தொடுக்கப் பெற்ற பொற்றாமரைப் பூ மாலை பெற்றான்.
இதனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் இளவெயினி.
“எனக்கேன் பரிசளிக்கவில்லை” என்றாள். பரிசுப் பொருள்கள் வந்து குவிந்து கிடந்தன.
92. அறனோ? திறனோ?
நெட்டிமையார் முதுகுடுமிப் பெருவழுதியைப் பார்க்கச் சென்றார். இன்முகத்தோடு வரவேற்றான். மகிழ்ந்து உரையாடத் தொடங்கினார். “அரசே உன்னிடம் ஒரு குறை இருக்கிறது. உன்னிடம் வருவோர் அனைவரையும் ஒரே தன்மையாக வரவேற்பதில்லை நீ”
“எல்லோரையும் நன்கு வரவேற்கிறேனே. இப்போது தானே உங்கள் கண்முன் பாணர்களுக்குப் பரிசளித்தேன்”
“ஆம், பாணர்களுக்குப் பொற்றாமரைப் பூவைச் சூடுகிறாய். புலவர்களுக்கு யானையும் தேரும் அளிக்கிறாய். ஆனால் உன்னிடம் வரும் பகைவர் மண்ணைப் பறித்துக் கொள்கிறாயே, புலவரிடம் இனிக்கப் பேசும் நீ பகைவரை சினந்து நோக்குகிறாயே!”
93. “கையைக் காட்டு”
கபிலர், செல்வங் கடுங்கோ வாழியாதனைப் பார்க்கச் சென்றார். “கையைக் காட்டு” என்றார் புலவர். புலவர் கை ரேகை பார்க்கப் போகிறாரோ என்று கையைக் காட்டி நின்றான். கையைப் பிடித்துப் பார்த்துக் கொண்டே,
“கொலையானைகளை இழுத்துப் பிடிக்கிறது உன் கை. குதிரைகளை அடக்குகிறது உன் கை. வில்லை வளைக்கிறது உன் கை வந்தவர்க்குப் பரிசுகளை வாரி வாரி வழங்குகிறது உன் கை. இதனால் உன் கை உரம் பெற்றிருக்கிறது. இது உலக இயல்புதான்
மன்னன் கையை விடுத்தார். தன் கையைக் காட்டினார். “என் கையைப் பார். ஊனும் கறியும் சோறும் துவையலும் எடுத்து உண்பதைத் தவிர வேறு இல்லை. இதனால் தான் என்னைப் போன்றவர் கைகள் மென்மையாய் இருக்கின்றன. இதுவும் உலகத்து இயல்புதானே” என்றார்.
94. மதம் பிடித்த யானை!
யானைக்கு மதம் பிடித்தது. அது, கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு பிளிறியவாறு, ஒட்டம் எடுத்தது.
பெருநற் கிள்ளி அதனைப் பார்த்தான். அதன் மதத்தை அடக்குவேன் என்று எழுந்தான். யானையை எதிர் கொண்டான்; அதன் மேற் பாய்ந்தான் முதுகில் மேல் அமர்ந்து காதுகளைப் பற்றித் திருகினான்; கால்களைக் கொண்டு, வயிற்றில் இடித்தான்.
யானை, அடிபட்டதும் மேலும் விரைந்தது; புயல் போல் பறந்தது.
மக்கள் மருண்டனர். “ஐயோ, யானைக்கு மதம் பிடித்து விட்டதே, அதன்மேல் அமர்ந்திருப்போன் எவன்?” என்று கேட்டனர். புலவர் கூறினார்:
“அவன் பெயர் மறலி! புலி நிறக் கவசத்தில் கணைகள் பாய்ந்து கிழித்த மார்பைக் கொண்டவன்.
யானையைப் பாருங்கள், அது புயலிற் சிக்கிய நாவாய் போன்றும், மீன்களுக்கிடையே திங்கள் போன்றும் ஒடுகின்றது.
சுறாமீனைப் போன்ற வாள் மறவர் அதனைத் தொடர்கின்றனர். ஆயினும், அது காற்றுப் போல் கடுகி விரைகின்றது. பாருங்கள், அதன் கால்கள் நிலத்தில் இல்லை...
கள்ளொழுகும் வளஞ்சார்ந்த நாட்டையுடையவன் கிள்ளி, கள்ளுண்டு மதம் கொண்டது அவன் யானை.
அவனுக்கு ஒரு சிறு துன்பமும் நேராது, பார்த்துக் கொள்க யானையே! இல்லையென்றால் உன் வயிறு, உடைந்த பானையே!
95. “அண்ணனும் தம்பியும்”
போர்க் கோலம் பூண்டு எதிரெதிரே நின்றனர் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும். புலவர் கோவூர் கிழார் ஓடோடி வந்தார். முதலாவது நலங்கிள்ளியை நாடினார். நலங்கிள்ளியின் இருகரங்களையும் பிடித்துக் கொண்டு ‘அரசே நான் கேட்கும் கேள்விகட்குப் பொறுமையுடன் பதில் கூறுக’ என்றார்.
“உன் கண்ணி?”
“ஆத்தி”
“உன் குலம்?”
“சோழர் குலம்"
“மன்னா கேள். நீ பனம் பூ மாலையோ வேப்பந் தாரோ அணியவில்லை. ஆத்திமாலை அணிந்திருக்கிறாய். உன்னை எதிர்ப்பவன் கண்ணியும் அதுவே. இருவர் வெல்லுதல் இயல்பு அல்ல. ஒருவர் தோற்பது உறுதி. அவனும் சோழனே. உங்கள் செயலால் குடி பெருமையடையாது. பிறர் கண்டு எள்ளி நகையாடுவர்” என்று கூறிக் கொண்டே மன்னனை இழுத்துச் சென்றார். ஆட்டுக் குட்டிபோல் பின் தொடர்ந்தான். நெடுங்கிள்ளியிடம் வந்தனர். பகை முறிந்தது. உறவு நிலைத்தது.
96. “மரம்படு சிறு தீ”
வேல் முனையால் நெற்றி வியர்வையைத் துடைத்து நின்று வெஞ்சினங் கூறினான் வேந்தன். பெண் கேட்க வந்தவன் அவன்.
மகட் கொடை மறுக்கும் தந்தையும் மறச் சொற்கள் கிளத்தினான்!
இது, போர் வரும் என்பதற்கு அறிகுறி! மன்னன் மகள் ஒடி வந்தாள்.
“அப்பா என்னால்தானே இவ்வளவு கேடு” என்றாள்
மன்னன், “பெண்ணே, பெரிய மரத்தில் பட்ட சிறு தீ, மரம் முழுவதையும் சுட்டெரிக்கும்! அதுபோல், இவ்வூரிற் பிறந்த சிறுமி நீ உன்னைத் துணைகொண்டு போர்த் தீ புகைகின்றது. அது, ஊரையே சுட்டெரிக்கப் போகின்றது” என்றான்.
97. “கை வேல்”
பாண்டியன் சிறுவன் என்றனர். சினமிகுந்து எழுந்தான் நெடுஞ்செழியன். சிற்றரசர் ஐவரோடு சேரனும் சோழனும் கூடித் தலையாலங்கானத்தில் எதிர்த்தனர். பகைவர் வீழ்ந்தனர். இருபெருவேந்தரும் போர்க்களத்தில் மடிந்தனர். அவருடைய முரசம் நெடுஞ்செழியன் கைக்கு வந்துவிட்டது.
அவர்களுடைய மனைவியர் அழுது கொண்டு ஓடிவந்தனர். இறந்த கணவரை எண்ணிக் கதறித் துடித்தனர். கைம்மைக் கோலம் பூண்பதற்காகக் கூந்தலைக் களைந்தனர். இக்காட்சியைக் கண்டன செழியன் கண்கள். நெஞ்சத்துள் இரக்கம் புகுந்தது. கைவேல் போரிடுதலைத் தானாகவே நிறுத்திற்று.
98. இரந்து, உயிர் கொண்டான் எமன்
சோழன் கிள்ளி வளவன், குள முற்றத்து அரண்மனையில் இறந்தான் என்ற செய்தி நாடெங்கும் பரவியது. நப்பசலையார் அதனை நம்பவில்லை.
“நமன் வந்துதானே கொண்டுபோயிருப்பான்? வளவன் முன் நமன் எம்மாத்திரம்?
“போர் செய்திருந்தால் அப் புல்லன் நொறுங்கியிருப்பான். விற்போராயினும் சரி, மற்போராயினும் சரி. எப்போரிலும் வளவன் வென்றேயிருப்பான். ஆயின் நமன், பாணரைப்போல் வந்து பாடித் தொழுது, வளவன் உயிரையே பரிசிலாய்க் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். ஆம் வேறு எதுவும் நடந்திருக்காது.” என்றார் நப்பசலையார்.
99. புகழ் மூடும் தாழி
வளவன் இறந்துபட்டான் அவன் பூதவுடலைத் தாழியுள் வைத்து மூடினர். ஐயூர் முடவனார் இதை நேரிற் கண்டார். அவர், தாழி செய்து கொடுத்த குயவனைக் கூப்பிட்டார்.
“கலஞ் செய்வோனே! வளவன் பூதவுடம்பை மறைக்கும் தாழியைச் செய்துவிட்டாய். ஆனால், அவன் புகழ்உம்பை மூடும் தாழியைச் செய்ய உன்னால் இயலுமோ?
அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
உலகையே திகிரியாக்கி, களிமண்ணாக்கி குழைத்து, ஒரு தாழி செய்ய வேண்டும். முடியுமா உன்னால்” என்று கேட்டார் ஐயூர் முடவனார்.
100. “சுட்டுக் குவி”
வாரிவழங்கும் வள்ளல் ஆய்அண்டிரன். யானை, குதிரை, தேரோடு பொருள் பல பாடுவோர்க்கு அளிப்பவன்.
அந்தோ! ஆய் உயிர் துறந்தான். அருமை மனைவியரும் உயிர் நீத்தனர். “சுட்டுக் குவி” என்பது போல் ஆந்தை அலறியது. சுடுகாட்டில் ஈம விறகு அடுக்கி அவனையும் அவன் துணைவியரையும் தீ வைத்துச் சுட்டுச் சாம்பலாக்கினர். கண்கலங்கினர் புலவர். கண்ணிர் விட்டுக் கதறினர். பசி வாட்டவே வேறு நாடுகளை நோக்கி நடந்தனர். புலவர் நிலை பேரிரக்கத்திற்குரியது.
101. “பிந்தி வந்தார்”
ஆற்றின் நடுவே ஒரு மணல் திட்டு. இலையற்ற பெரிய மரம் நிற்கிறது. அம்மரத்தடியில் அமர்ந்தான் கோப்பெருஞ் சோழன். வடக்குத் திசை நோக்கி உண்ணா விரதமிருக்கத் தொடங்கினான். நண்பர் சிலர் வந்து அருகே அமர்ந்தனர். பூதநாதனார் ஓடோடி வந்தார். அருகில் அமரப் போனார். மன்னன் உடன்படவில்லை. மன்றாடினார் புலவர். மறுத்துக் கூறினான் மன்னன்.
“மன்னா உன்னோடு சான்றோர் வடக்கிருக்கின்றனர். நானும் அவர்களைப்போல் உடனே வராமல் சிறிது தாமதமாக வந்தேன் என்பதற்காக அனுமதி அளிக்க மறுக்கிறாயோ” என்று வருந்தினார்.
102. “காதல் நன் மரம்”
புலவர் மோசிசாத்தனார் தன் வழியே சென்று கொண்டிருந்தார். வழியின் இருமருங்கும நொச்சி மரங்கள். கொஞ்ச தூரம்தான் போயிருப்பார். இளமங்கை யொருத்தி ஓடிவந்து நொச்சிப் பூவைக் காதலுடன் பறிப்பதைக் கண்டார். பறித்து இடையில் சொருகிக் கொண்டு சிட்டுப்போல் பறந்து விட்டாள்.
மேலும் சிறிது தூரம்தான் சென்றிருப்பார். வீரன் ஒருவன் தலைதெறிக்க ஓடிவந்தான். ஆவலோடு நொச்சிப்பூவைப் பறித்து கண்ணியாகக் கட்டித் தலையில் சூடினான். கச்சை கட்டி யிருந்தான். கையில் வில்லும் இருந்தது கோட்டைக் காவலை மேற்கொண்ட வீரன். பகைவர் தன் நகரைப் பற்றாதபடி நகரைக் காக்கும் பணியில் ஈடுபட்டவன். “நொச்சியே, மங்கையர் மட்டுமல்ல மாபெரும் வீரரும் காதலிக்கும் காதல் நன் மரமானாய்” என்று வாழ்த்திக் கொண்டே சென்றார்.
103. “கணவன் ஊர்ந்த குதிரை”
மறக்குல மங்கை. ஒரே புதல்வன். அவனும் கைக்குழந்தை போர் முரசு முழங்கியது. கணவன் விடை பெற்றுப் போய்விட்டான்.
போர் முடிந்தது. சிலர் திரும்பினர். யானை, பரி, தேர் மீது வந்தனர். கைக்குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு வரும் குதிரைகளை யெல்லாம் பார்க்கிறாள்.
தன் கணவன் ஏறிச் சென்ற பரியைக் காணவில்லை. கணவனையும் காணவில்லை. கவலை பற்றியது.
“குதிரை வரவில்லை. எல்லோருடைய குதிரைகளும் வந்து விட்டனவே. என் கணவர் ஊர்ந்து சென்ற குதிரை வரக்காணோமே. இரு பேராறு கூடும் இடத்தில் அகப்பட்ட பெரு மரம்போல், இரு பெரும் படைக்கு இடையே அகப்பட்டு அலைப்புண்டு அழிந்ததோ?” என்று புலம்பினாள்.
104. “உறை மோர்த் துளி”
ஒரு முது மகள் அவள் தோற்றம் எப்படி இருக்கிறது?
மணப் பொருள் மறந்த கூந்தல், நரைத்த தலை, பஞ்சடைந்த கண்கள், சுருக்கம் விழுந்த தோல். அவள் வற்றி உலர்ந்த கள்ளிபோல் தோன்றுகின்றாள். ஆனால் அவள் பெற்றெடுத்த மகன் யார் தெரியுமோ? அவன் ஒரு கொள்ளை நோய். குடப் பாலைக் கெடுக்கும் சிறு மோர்த் துளி அவன். அவ்வீரன் தனித்துச் செல்கின்றான்.
பகைவர்கள் பட்டாளம் பட்டாளமாய் அப்படி அப்படியே வீழ்ந்து மடிகின்றனர் அவன் வீரம் என்னே!
105. கொள்கை மறவாத குமரன்
‘போய் வருகிறேன்.அம்மா’ என்றான் வீரன். 'போய் வா, ஆனால், கொள்கையை மறந்துவிடாதே” என்று சொல்லிக் கொண்டே வழி கூட்டி அனுப்பினாள் தாய்.
கூரிய வேலை கைப்பிடித்தான். புலி போன்று போர்க்களம் புகுந்தான். பகை வீரர் பெருங்கடல் போல் சூழ்ந்தனர். முன்னணிப் படையைப் பிளந்து ஊடறுத்துச் சென்றான். பகைக் கூட்டம் பிணக் குவியல் ஆனது. ஐயோ, அந்த மறவனும் பட்டு வீழ்ந்தான். பகைவரால் சிதைக்கப்பட்டான்.
போர்க்களம் சென்றாள் மறத்தி. சிதைந்து கிடந்த மகன் உடலைக் கண்டாள். தன் கொள்கை தவறாத குமரனுடைய தாய் என்பதாலே பெருமிதம் கொண்டாள். மகிழ்ச்சிப் பெருக்கால், வற்றிய மார்பில் பால் சுரந்தது.
106. அருவிலை நல்லணி
வடக்கிருந்தான் சோழன். பிசிராந்தையாரும் வந்து அருகே அமர்ந்து விட்டார். இதனைக் கண்டு விட்டுத்தான் வீட்டிற்குத் திரும்பினார் புலவர் கண்ணகனார்.
வீடு அடைந்த புலவர் தன் எதிரே வந்து நின்ற மனைவியையே பார்த்தார். அவள் கழுத்தில் கிடந்த பொன்னணி மீது கண்கள் பதிந்து விட்டன.
புலவர் முகத்தில் நிலவிய சோகத்தைக் கண்டாள் மனைவி. கையில் பொருள் இல்லாமையே கவலைக்குக் காரணமோ என்று நினைத்தாள். கழற்றிக் கொடுக்கப் போனாள். அடகு வைத்துப் பெறலாமல்லவா? “கழற்றாதே காதலி, சோழன் தந்த பரிசு அது. பொன், பவளம், முத்து மணி ஆகியவற்றால் ஆன பொன்னகை. எங்கோ சுரங்கத்தில் பிறந்தது பொன். ஆழ்கடல் அடியில் தோன்றியது முத்து. கீழ்க்கடல் பொருள் பவளம். மலையில் பிறந்த பொருள் மணி. இவற்றை ஒன்றாய்ச் சேர்த்துக் கோவையாக்கியதால் அழகிய அணியாகியது. இதைப்போல் சான்றோர் சான்றோரோடு கூடுவர். பிசிராந்தையார் இதற்கு எடுத்துக்காட்டு” என்று கூறி முடிப்பதற்குள் போல பொல வென்று நீர்த்துளிகள் உதிர்ந்தன.
107. “கயல் மீன் கொடி”
வாரி வழங்கும் வள்ளல் எவ்வி. அவனது வள நாட்டில் ஆற்றின் இரு புறமும் மதகுகள். ஆற்று நீர் சல சலவென்று ஓடிக் கொண்டிருக்கும். கொடு வெயிலில் உழவர் நெல்லறுப்பர். பரதவர் மதுவுண்டு கடல் வேட்டையாடுவர். நிலாவில் மங்கையரோடு கூத்தாடுவர். பரதவ மகளிர் நுங்குடன் கருப்பஞ் சாற்றையும் இளநீரையும் கலந்து குடித்து மகிழ்வர்; கடலாடுவர்.
கடற்கரை வயலில் கயல் மீன் பாயும் நெற் போரில் நாரை உறங்கும் இத்தகைய நாட்டை பாண்டியன் நெடுஞ்செழியன் வென்றான். அந்தக் கயல் மீன் கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது.
108. “கன்றை நோக்கிய கறவைப் பசு.”
தலையில் மாலை இல்லை. மேனியில் மெல்லிய ஆடை கிடையாது. முகமன் பேசும் வழக்கம் அவனுக்குத் தெரியாது. இத்தகைய மறவன்தான் போர்க்களம் புகுந்தான்.
போர் நடந்து கொண்டிருக்கிறது. முன்னணிப் படையிலே, தன்தோழனைப் பகைவர் சூழ்ந்து கொண்டனர். இதனைக் கண்டான் அம் மறவன்.
அவ்வளவுதான் அவன் கண்களில் தீப்பொறி பறந்தது. குதிரையின் கடிவாளத்தைப் பிடித்ததும் பாய்ந்தது முன்னணிப் படை மேல். ஈட்டிமுனை பகைவரைக் குத்திக் குடல்களைச் சரித்தது. அக் குடல்கள் நழுவி வீழ்ந்து குதிரையின் கால்களைச் சுற்றிக் கொண்டன.
சங்கிலித் தொடர் ப்ோல் தொடர்ந்து செல்லும் யானை வரிசை போல் குடர்கள் அவன் குதிரையின் கால்க்ளைச் சுற்றிக் கொண்டன. அதனைப் பொருட்படுத்தவில்லை. கன்றை நோக்கி விரையும் கறவைப் பசுவைப் போல் பாய்ந்தான்.
109. ஆனந்தக் கண்ணிர்
போர்ப்பறை கேட்டு போருக்கென எழுந்தான் போர் வீரன். கச்சை கட்டி கையில் வேல் பற்றிப் பெற்ற தாய் முன் சென்று நின்றான். மகன் மார்பைத் தடவிப் பார்த்தாள். “மகனே வெற்றி பெறுக!” என்று வாழ்த்தினாள். அவளுக்கு வயது நூறு இருக்கும். தள்ளாடும் பருவம் கொக்கின் இறகைப் போல் வெளுத்த தலைமயிர்
போர் முடிந்து பலர் திரும்பி வந்தனர். தன் மகன் யானையைக் கொன்று விட்டுத்தான் இறந்தான் என்று கேள்விப்பட்டாள். கண்ணிர்த் துளிகள் சிந்தின. மழை பெய்த மலை மூங்கிலிருந்து மழைத் துளிகள் வீழ்வன போல் மிகுதியான துளிகள் வீழ்ந்தன. ஆனந்தக் கண்ணிர் அது. மகனை பெற்றெடுத்த போது மகிழ்ந்ததை விடப் பெருமகிழ்ச்சி கொண்டாள்.
110. பெற்ற நாளினும் பெரிது மகிழ்ந்தாள்
வயதான மறத்தி, நரம்பு புடைத்துத் தோன்றியது தோள் மெலிந்திருந்தது. தாமரை இலை போல் அடி வயிறு ஒட்டியிருந்தது. போருக்கு சென்ற புதல்வனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
“போர்க்களத்தில் உன் மகன் புறங் கொடுத்தான்” என்று கூறினர் பலர். அது கேட்டு ஆர்த்தெழுந்தாள் அம் முது மகள்.
“என் மகன் புறங் கொடுத்திருப்பின் அவனுக்குப் பாலூட்டிய என் மார்பை அறுத்தெறிவேன் என்று வஞ்சினங் கூறி, வாளேந்திப் போர்க்களம் நோக்கி ஓடினாள்.
போர்க்களம் புகுந்தாள். எங்கும் பிணக் குவியல். பிணங்களை நீக்கி விட்டுத் தன் மகனைத் தேடினாள். செங்குருதி நடுவே சிதைந்து கிடந்தான் மகன். பெற்ற நாளினும் பெருமகிழ்ச்சி கொண்டாள் அம் முது மறத்தி.
111. ஒரே மகன்
முதல் நாள் போரிலே, பகைவர் தம் யானையைக் கொன்று, தந்தை மடிந்தான், இரண்டாம் நாள் போரிலே, நிரைகவர்ந்த பகைவரை மறித்துக் கொன்று மடிந்தான் கொழுநன்!
மூன்றாம் நாளும் போர்ப் பறை ஒலித்தது...
கணவனும் தந்தையும் மடிந்த பின்னரும், தன் ஒரே மகனையும் போர்க்கு அனுப்பப் புறப்பட்டாள் அம்மறத்தி
தன் மகனுக்குப் புத்தாடை உடுத்தினாள்; அவன் தலையில் எண்ணெயிட்டு வாரினாள்;
வேல் ஒன்றை எடுத்துக் கையில் கொடுத்தாள்.
“போ, மகனே, போ...
“போர்க்களம் அழைக்கிறது, போ” என்று அனுப்பினாள்.
112. கேடயம் தா
மறவன் போருக்குச் சென்று திரும்பி வந்தான். போரில் பகைவன் ஒருவனைக் கொன்ற செய்தியை ஊரெல்லாம் சொல்லிப் பொருமை யடித்தான். “கேடயத்தைத் தருக” என்று துடிதுடித்துக் கொண்டிருந்தான்.
புலவர் அரிசில் கிழர் அவ்வழியே வந்தார். நேற்று கொல்லப்பட்ட மறவனையும் அவன் தம்பியையும் நன்கு அறிந்திருந்தார். இங்கே துள்ளிக் கொண்டிருக்கும் மறவனைக் கண்டதும் அவருக்குச் சிரிப்பு வந்தது. ஏன் தம்பி வீணாகக் கத்துகிறாய். நீ கேடயத்தோடு போய் கல்மறைவில் நின்றாலும் தப்பமாட்டாய். நீ போரில் கொன்றாயே, அவன் தம்பி கண் சிவந்து அலைகிறான். உன்னைத் தேடி அலைகிறான். போரிட எண்ணாதே. ஒடி ஒளிந்துகொள்” என்றார். வீண் பெருமை அடித்த மறவன் விக்கிப் போனான்.
113. வீரத்தாய் கூறினாள்
“அம்மா” என்று அழைத்து கூப்பிட்டுக் கொண்டே வந்தான் போர் உடை அணிந்த மகன்.
“கண்மணி, உட்கார்” என்றாள் தாய். “சொல்வதைக் கவனமாகக் கேள். மகனைப் பெற்றெடுத்து வளர்ப்பது தாயின் கடன். அதனைச் செம்மையாகச் செய்து விட்டேன். கல்வி அளித்துச் சான்றோன் ஆக்குதல் தந்தை கடன். உன் தந்தையும் தன் கடமையைச் செய்துள்ளார். கொல்லன் கடமை வேல் வடித்தல் உன் கைவேல் அதனைக் காட்டுகிறது. மன்னனும் உனக்கு நல்வாழ்வ. அளிக்கத் தவறவில்லை.
“தாயே, நான் என் கடமையைச் செய்யப் புறப்பட்டுவிட்டேன். வாழ்த்தி விடை கொடுங்கள்” என்றான்.
“போருக்குப் போய்வா. களிறு எறிந்து பெயர்தல் உன் கடன்”
★
கருத்துகள்
கருத்துரையிடுக