தமிழர் பண்பாடு
கட்டுரைகள்
Back
தமிழர் பண்பாடு
ந.சி. கந்தையா
1. தமிழர் பண்பாடு
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. தமிழர் பண்பாடு
தமிழர் பண்பாடு
ந.சி. கந்தையா
நூற்குறிப்பு
நூற்பெயர் : தமிழர் பண்பாடு
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 20 + 164 = 184
படிகள் : 2000
விலை : உரு. 80
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை,
கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
தமிழர் பண்பாடு
முன்னுரை
ஐந்து ஆண்டுகளின் முன் “இந்து சாதனம்” எனும் வார இதழில் தமிழர் பண்பாடு தொடர் புள்ள பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தோம். அக் கட்டுரைகளின் தொகுப்பு “தமிழர் பண்பாடு” என்னும் நூலாக இப்பொழுது வெளி வந்துள்ளது. தமிழர் பண்பாடு இந்திய நாட்டில் மாத்திரமல்லாமல் உலகின் பலபாகங்களிலும் பரவியிருந்தது. இது சம்பந்தமாகப் பற்பல நூல் களிற் காணப்படும் கருத்துக்களிற் சிறந்தவற்றைத் தொகுத்து இந் நூலகத்துக் கூறியுள்ளோம். இந் நூலிற் காணப்படும் கருத்துக்கள் ஆராய்ச்சி யாளர் கொண்டுள்ள முடிவுகளைத் தழுவியனவாகும்.
யாழ்ப்பாணம்
15.3.66 ந.சி. கந்தையா
தமிழர் பண்பாடு
தோற்றுவாய்
தமிழகம் மிகப் பழமை வாய்ந்த நாடு. தமிழகத்தைப் பற்றிய பழைய வரலாறுகள் மறக்கப்பட்டுவிட்டன. பழங்கதைகள் போன்ற சில செய்திகளே வரலாறாக இருந்து வருகின்றன. மேல்நாட்டறிஞர் சிலரது அயரா உழைப்பினால் தமிழகத்தைப் பற்றிய உண்மை வரலாறுகள் சிறிது சிறிதாக வெளிவந்து கொண்டிருந்தன. அகழ்பொருள் ஆராய்ச்சி, தொல்பொருள் ஆராய்ச்சிகளும் பல உண்மைகளை வெளியிட்டன. தமிழக வரலாறு கழிந்த நூறாண்டுகளாகப் படிப்படியே வளர்ந்து கொண்டு வந்திருக்கின்றது. கால்டுவெல் ஐயரின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், திரு. வி. கனகசபைப் பிள்ளை அவர்களின் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முந்திய தமிழர், எம். சீனிவாச ஐயங்கார் அவர்களின் தமிழாராய்ச்சி ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை அவர்களின் தென் மொழி வரலாறு, சேஷ ஐயங்கார் எழுதிய திராவிட இந்தியா, பி.தி. சீனிவாச ஐயங்காரின் “ஆரியருக்கு முந்திய தமிழர் பண்பாடு”, “தமிழர் வரலாறு”, “இந்தியாவிற் கற்காலம்”, சர் ஜாண் மார்சலின் “மொகஞ்ச தாரோ அரப்பா நாகரிகம்” முதலிய நூல்களை நோக்கினால் தமிழக வரலாறு எவ்வாறு படிப்படியே வளர்ச்சி அடைந்துள்ளது என்பது நன்கு புலனாகும்.
1. பண்டைக் காலத் தமிழகம்
தமிழ் மக்கள் இந்திய நாட்டில் ஆதிமுதல் வாழ்ந்து வருகிறார் களா? அல்லது பிற நாடுகளிலிருந்து வந்து இந்திய நாட்டில் குடியேறி னார்களா? என்னும் கேள்விகள் நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வரு கின்றன. அவர்கள் ஆதிமுதல் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்களென ஒரு சாரார் கூறினர்: இன்னொரு சாரார் அவர்கள் அயல் நாடுகளினின் றும் வந்து இந்தியாவில் குடியேறினர் என மொழிந்தனர். இக் கருத்துக் கள் பற்றிய ஆராய்ச்சிகள் பல, ஆங்கில மொழியில் எழுதப்பட்டு வெளி வந்துள்ளன. தமிழ் மக்கள் அயல் நாடுகளினின்றும் வந்து இந்திய நாட்டை அடைந்தார்கள் என்னும் கொள்கை அரை நூற்றாண்டின் முன் பெரிதுங் கைக்கொள்ளப்பட்டது. இவ்வரலாற்று ஆராய்ச்சிகளை நடத்தினோர் மேல்நாட்டுக் கிறித்தவர்களாக இருந்தனர். ஆதித் தாய் தந்தையர் தோன்றி வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஏதேன் தோட்டம் மேற்கு ஆசியாவிலுள்ளதாக அவர்கள் நம்பினார்கள். ஆகவே அவர் களில் பலர், ஆதித்தாய் தந்தையரினின்றும் தோன்றிய மக்கள் மேற்கு ஆசியாவில் பெருகிப்பின் பிறநாடுகளைச் சென்றடைந்தார்கள் என்னும் கொள்கைகளைத் தழுவி எழுதி வந்தார்கள். அக்காலத்தில் எகிப்திய, பாபிலோனிய, அசீரிய நாகரிகங்களே மிகப் பழமை பெற்றவை எனக் கொள்ளப்பட்டன. மக்கள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்று பரவினார்கள் என்னும் கொள்கை ஆதரவு பெறுவதற்கு இஃதும் ஒரு காரணமாக இருந்தது.
1921ஆம் ஆண்டு முதல் 1922ஆம் ஆண்டு வரை சிந்துவெளியில் நடத்தப்பட்ட அகழ்வு ஆராய்ச்சியின் பின் சிந்து நாகரிகம் மேற்கு ஆசிய எகிப்திய நாகரிகங்களிலும் பழமையுடையது என்று அறியப்பட்டது. இதன்பின் மேற்கு ஆசிய, எகிப்திய மக்கள் இந்தியாவினின்றும் சென்ற வர்களாகக் காணப்படுகிறார்கள் எனக் கீழ்நாட்டு மேல்நாட்டு அறிஞர் பலர் எழுதியிருக்கின்றனர். மிக மிகப் பழைய காலத்தில் இந்தியா முதல் மேற்கு ஆசியா எகிப்து வரை ஒரே இன மக்கள் வாழ்ந்தார்களென்றும், மக்கள் அங்கு நின்று இங்கும், இங்கு நின்று அங்கும் பல தடவைகள் சென்று கொண்டிருந்தார்களென்றும், ஆகவே இந்திய மக்களுக்கும் மேற்கு ஆசிய எகிப்திய மக்களுக்குமிடையில் நாகரிகம் வழிபாடுகளில் ஒற்றுமை காணப்படுகின்றதென்றும் சிலர் கூறுகின்றனர்.
தமிழ் மக்களின் தாயகம் தென்னிந்தியா. மிக மிகப் பழங்காலத்தில் கன்னியாகுமரிக்குத் தெற்கில் பெரிய நிலப்பரப்பு நீண்டு விரிந்து கிடந்தது. தென்னிந்தியா அதன் பகுதியாக இருந்தது. அந்நிலப்பரப்பு இலங்கைத் தீவை உட்படுத்திக்கொண்டு இந்தியக் கடலுள் வெகுதூரம் பரந்து கிடந்தது. அதன் பரப்பு தெற்கே நியுசீலந்து வரையும், கிழக்கே தென் சீனா வரையும் மேற்கே கிழக்கு ஆப்பிரிக்கா வரையும் பரவிக் கிடந்தது. அப்பொழுது இமயமலை எழவில்லை; கங்கை, சிந்து என்னும் பேராறுகளும் தோன்றவில்லை. விந்திய மலைக்கு வடக்கே கடல் கிடந்தது. அதனைப் புவியியலார் ‘இரெதே’ (Rethey) கடல் எனக் கூறுவர். பிற்காலத்தில் இமயமலை கடலினின்று எழுந்தது. அம்மலையினின்றும் ஊற்றெடுத்துச் சிந்து கங்கை முதலிய ஆறுகள் ஓடின. அவ்வாறுகள் மலையினின்று வாரிக்கொண்டு வந்த வண்டலினால் சிந்து கங்கைச் சமவெளிகள் தோன்றின. சிந்து கங்கைச் சமவெளிகள் தோன்றிய பின்பும் விந்திய மலைக்கு வடக்கில் ஒடுங்கிய கடல் கிடந்தது. புவி இயலார் அதனை இராச புத்தானாக் கடல் எனக் கூறினர்.
2. கடல்கோள்
கன்னியாகுமரிக்குத் தெற்கே குமரி, பஃறுளி என்னும் ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தன. தமிழகத்தின் பெரும்பகுதி இவ்வாறுகளுக் கிடையில் கிடந்தது. கன்னியாகுமரிக்குத் தெற்கில் நாற்பத்தொன்பது தமிழ்நாடுகள் கிடந்தன. இவற்றைக் குறித்துச் சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரை கூறுகின்றது.
இந்தியக் கடலில் கிடந்த பெரிய நிலப்பரப்பில் ஆதி மக்கள் தோன்றிப் பெருகினார்கள். மேல்நாட்டுப் பௌதிக நூலார் இப் பூகண்டத்துக்கு இலெமூரியா எனப் பெயரிட்டனர். இலெமூர் என்னுஞ் சொல்லுக்குத் தேவாங்கு என்பது பொருள். அங்கு தேவாங்கு போன்ற உயிர்கள் வாழ்ந்தன எனக்கொண்டு அவர்கள் அந்நிலப்பரப்புக்கு இலெமூரியா எனப் பெயரிட்டார்கள். புராணங்கள் அப்பூகண்டத்தைக் குமரிகண்டம் எனக் குறிப்பிடுகின்றன.
கடல் பெருக்கெடுத்தல் எரிமலை குமுறுதல் போன்ற இயற்கைக் குழப்பங்கள் இடை இடையே நேர்ந்தன. இக் குழப்பங்களால் பெரிய நிலப்பரப்பின் பகுதிகள் கடலுள் மறைந்து போயின. அங்கு வானுற ஓங்கி நின்ற மலைகளின் சிகரங்களே இந்தியக் கடலுள் கிடக்கும் தீவுக் கூட்டங்கள் எனக் கருதப்படுகின்றன.
இலெமூரியாக் கண்டம் மிக அகன்று பரந்துகிடந்தது. ஆகவே அதன் பகுதிகளின் வெப்பதட்ப நிலைகள் மாறுபட்டிருந்தன. வெப்ப தட்ப நிலைகளுக்கேற்ப, நிறம் மயிரின் தன்மை, உடற் கூறுகளால் மாறு பட்ட மக்கள் ஆங்காங்கு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களே பிற்காலத்தில் மங்கோலியர், நிகிரோக்கள், ஆஸ்திரலோயிட்டுகள், ஆரியர் போன்று நிறத்தாலும் உடற் கூற்றாலும் மாறுபட்ட மக்களாகப் பிரிந்தார்கள்.
இலெமூரியாக் கண்டம் இயற்கைக் குழப்பங்களால் அழிவெய் திற்று. அப்பொழுது அங்கு வாழ்ந்துகொண்டிருந்த மக்களில் பலர் உயிர் பிழைத்தனர். அவர்கள் சிதறி நாலா திசைகளையும் நோக்கிச் சென்று பற்பல நாடுகளில் குடியேறினார்கள்; ஒரு கூட்டத்தாரோடு இன்னொரு கூட்டத்தார் தொடர்பின்றி நீண்டகாலம் வாழ்ந்தனர். காலப்போக்கில் இவர்கள் வெவ்வேறு தொடக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லும் படியாக மாறுபட்டார்கள். இவ்வாறு மாறுபட்டுப் பெருகிய பல கூட்டத்தினரின் நாகரிகம், சமயம், மொழி, பழங்கதைகள் முதலியன அவர்கள் ஒரு மையத்தினின்றும் பிரிந்து சென்றவர்கள் என்பதை அறிவிக்கின்றன.
உலக மக்கள் எல்லோரிடையும் கடல்கோள் ஒன்றைப் பற்றிய பழங்கதை நினைவிலிருந்தது. அப்பழங்கதையின் முக்கியப் பகுதிகள் ஒரே வகையாக உள்ளன. பல்வேறு கூட்டத்தினரிடையே வழங்கும் இப் பழங்கதையும் அவர்கள் ஒரு மையத்தினின்றும் பிரிந்து சென்றவர்கள் என்பதைத் தெரிவிக்கின்றது.
இலெமூரியாக் கண்டம் இருந்த காலத்தில் விந்திய மலைக்கு வடக்கே கடலிருந்தது. இலெமூரியாக் கண்டம் அழிவெய்தியபோது இமயமலை கடலாழத்திலிருந்து எழுந்தது. அதன் சிகரங்களில் கடல் வாழ் உயிர்களின் படிவங்கள் (fossils) காணப்படுகின்றன. அவை இம் மலைத் தொடர் கடலாழத்தினின்றும் எழுந்ததென்பதைத் தெரிவிக் கின்றன.
1“நிலைபெற் றோங்குந் தமிழகத்
தாற்றி வுடைமைப் பேறுறுமக்கள்
முன்னர்த் தோன்றி மன்னிக் கெழுமி
இமிழிய லொலிசேர் தமிழ்மொழி பேசி
மண்ணிற் பலவிட நண்ணிக் குடியிருந்
தவ்வவ் விடத்துக் கொவ்விய வண்ணம்
கூற்று நடையுடை வேற்றுமை யெய்திப்
பற்பல வினப்பெயர் பெற்றுப் பெருகினர்”
3. மக்கள் வடக்கு நோக்கிச் சென்று குடியேறுதல்
இலெமூரியாக் கண்டத்தின் அழிவின் பின்னரும் கன்னியா குமரிக்குத் தெற்கில் இலங்கையை உட்படுத்திய நிலப்பரப்புக் கிடந்தது. இந் நிலப்பரப்பின் தெற்கில் பஃறுளியாறும், வடக்கில் குமரியாறும் ஓடிக்கொண்டிருந்தன. குமரியாறு இப்போதுள்ள கன்னியாகுமரியை அடுத்துச் சிறிது தெற்கில் இருந்ததாகலாம். தாமிரபரணி (பொருநை) ஒரு காலத்தில் இலங்கைக் கூடாக ஓடிக் கொண்டிருந்தமையின் இலங்கை தாமிரபரணி நாடு என அறியப்பட்டதென்றும், தாமிரபரணி என்பதே தபிரபேன் எனச் சிதைந்து வழங்கியதென்றும் சிலர் கூறுவர். கன்னியா குமரிக்குத் தெற்கே கிடந்த நாடுகளைக் கடல் கொண்டது. இதனைப் “பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங் கடல் கொள்ள” எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. கடல்கோளுக் குப் பிழைத்தோர் வடக்கு நோக்கிச் சென்று குடியேறினர். காலச் செலவில் மக்கட் பெருக்கம் அதிகப்பட்டது. மக்கள் மேலும் மேலும் வடக்கு நோக்கிச் சென்று தங்கினர். வடக்கில் தண்டகம் என்னும் இருண்டு அடர்ந்த பெருங்காடும் விந்தம் என்னும் நீண்டு உயர்ந்த மலைத் தொடரும் கிடந்தன. தண்டகம் என அறியப்பட்ட பெரிய காடு இன்றைய ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிசா முதலிய நாடு களை அடக்கியிருந்தது. இம்மூன்று நாடுகளின் பரப்பு ஏறத்தாழ எண் பதினாயிரம் சதுரமைல். பெரிய காட்டையும் மலைத்தொடரையும் தாண்டி மேலும் வடக்கு நோக்கிச் சென்று குடியேற அவர்களால் முடிய வில்லை. கடற்கரையை அடுத்து வாழ்ந்த மக்கள் கட்டு மரங்களிலும் ஓடங்களிலும் கடலில் செல்லும் பழக்கம் பெற்றிருந்தார்கள். அவர்களில் சிலர் மேற்குக் கடற்கரை வழியாகக் கடலில் சென்று செழிப்பு மிக்க சிந்து நதிச் சமவெளிகளிற் குடியேறினார்கள். இவர்கள் அங்கு நின்று கங்கைச் சமவெளி வரை சென்று தங்கினார்கள்.
வடக்கிலும் தெற்கிலும் தமிழ் மொழியைப் பேசும் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வடக்கில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களில் ஒரு கூட்டத்தினர் பலுச்சித்தானம் வழியாக மேற்கு ஆசியாவை அடைந்தார்கள். பலுச்சித்தானத்தில் பிராகூய் என்னும் மக்கள் வாழ் கிறார்கள். அவர்கள் குல முறையில் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வழங்கும் பிராகூய் மொழி தமிழ் இனத்தைச் சேர்ந்தது. அம்மொழிக்குரிய பல சொற்கள் தமிழ்ச் சொற்களாகவுமிருக்கின்றன. ஒரு காலத்தில் வடக்கில் தமிழ் வழங்கியதென்பதற்குச் சான்றாகப் பிராகூய் மொழி இருக்கின்றது. பிராகூய் மக்கள் இந்தியாவின்றும் வெளியே சென்றவர்களில் பின் தங்கியவர்கள் எனக் கருதப்படுவார்கள்.
ஆரியர் மத்திய ஆசியாவினின்றும் புறப்பட்டு இந்தியாவிலும், பாரசீகத்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் நுழைவதன் முன், பாரசீகம், இஸ்பெயின், இத்தாலி, ஐசியன் தீவுகள், மேற்கு ஆசியா, ஆசியாமைனர் முதலிய நாடுகளிலெல்லாம் தமிழினத்தைச் சேர்ந்த மக்களே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அபிசீனியர், பிரிட்டனில் கெல்த் மக்கள், எகிப்தியர் முதலானோரும் இந்திய நாட்டினின்றும் சென்றவர்களாகப் பழஞ் சரித்தர வல்லார் கூறுவர். நருமதைப் பள்ளத்தாக்கில் உலோதால் என்னுமிடத்தில் அகழ்வு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அங்கு அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்தை ஒத்த பழைய நாகரிகமிருந்ததாக அறிய வந்துள்ளது. இதனால் தமிழ் மக்கள் வட இந்தியாவின் பெரும்பகுதியில் பரவி வாழ்ந்து பழைய சிந்து நாகரிகத்தைத் தோற்றுவித்தார்களெனத் தெரிகிறது.
“மீன்கொடி படைத்த மேன்மை மனுக்கள்
ஆன்ற பாண்டிய ரனைவருந் தமிழர்
தெற்கட் பஃறுளி யாறு சீர்சால்
நற்புகழ் வடக்கண் நளிரிமை யார்மலை
உரைதமிழ் நாடா வயங்கிய முற்கால்”1
4. கற்காலம்
தொடக்கத்தில் மக்கள் உலோகங்களைப் பற்றி அறிந்திருக்க வில்லை. அக்காலத்தில் அவர்கள் முரடான கற்களையும் தடிகளையும் ஆயுதங்களாகப் பயன்படுத்திய காலப்பகுதி பழங்கற்காலம் எனப் பெயர் பெறும். தென்னிந்தியாவில் பல இடங்களிலும் வட இந்தியாவில் சில இடங்களிலும் கல்லாயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கல்லாயுதங் கள் காணப்பட்ட இடங்கள் கற்கால மக்களின் குடியிருப்புகள் எனக் கருதப்படுகின்றன. கன்னியாகுமரிக்குத் தெற்கே கிடந்து கடற்கோட் பட்ட நிலப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த பழங்கால மக்களே வடக்கு நோக்கிச் சென்று குடியேறினார்கள். அக்கால மக்கள் ஆடு மாடுகளைப் பழக்கி வளர்க்கவும் பயிரிடவும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் வேட்டையாடுவோராகவும் உணவின் பொருட்டு இடம் விட்டு இடம் பெயர்ந்து திரிவோராகவுமிருந்தார்கள்.
முரடான கல்லாயுதங்களைப் பயன்படுத்திய மக்கள் படிப்படியே திருந்திய ஆயுதங்களைச் செய்யும் பழக்கம் பெற்றார்கள். அவர்கள் கல்லாயுதங்களைப் பாறைகளில் தீட்டி அழுத்தஞ் செய்தார்கள். அவை பார்வைக்கு அழகும் வேலை செய்யும் திறனும் பெற்றிருந்தன. இவ்வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட காலப்பகுதி புதிய கற்காலம் என அறியப்படும். தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் புதிய கற்காலக் குடியிருப்புகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கற்கால மக்கள் மர நிழல்களிலும் மலைத் தாழ்வாரங்களிலும் குகைகளிலும் வாழ்ந்தார்கள். குகைகளில் வாழ்ந்த மக்கள் குகைச் சுவர்களில் அழகிய ஓவியங்களை எழுதினார்கள். ஓவியம் தீட்டும் மை நிற மண்களைக் கல்லிலிட்டரைத்து நீர் விட்டுக் கரைத்துச் செய்யப் பட்டது. ஓவியங்கள், விலங்குகளை மக்கள் வேட்டையாடும் காட்சி களாக அமைந்துள்ளன. இவ்வகை ஓவியங்கள் இந்தியாவில் விந்திய மலைக் குகைகளிலும் மிர்சாப்பூர் பகுதிகளிலும் காணப்படுகின்றன.
சில ஓவியங்களில் கங்காரு, ஒட்டைச்சிவிங்கி முதலிய விலங்குகள் காணப்படுகின்றன. கங்காரு ஆஸ்திரேலியாவில் வாழும் விலங்கு. ஒட்டைச்சிவிங்கி ஆப்பிரிக்காவில் காணப்படுவது. இந்தியா ஆஸ்திரே லியா ஆப்பிரிக்கா முதலிய நாடுகளுக்கிடையில் தரை இணைப்பு இருந்த காலத்தில் ஆஸ்திரேலியாவிலும் ஆப்பிரிக்காவிலுமிருந்து வந்த மக்கள் அவ்வோவியங்களை வரைந்திருத்தல் கூடும். ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா முதலிய பூகண்டங்கள் ஒரு காலத்தில் ஒன்று சேர்ந்திருந்தனவென்றும் பூமியின் கீழிருக்கும் நெருப்புக் குழம்புப் படலத்தை அடுத்த மேலோட்டின் அடியில் வெடிப்பு உண்டானமை யால் இக்கண்டங்கள் நெருப்பில் மிதந்து விலகிச் சென்றன என்றும் 1வெசினர் என்னும் ஜெர்மன் விஞ்ஞானி கூறியுள்ளார். இக்கருத்தைப் பலர் ஆதரித்திருக்கின்றனர்.
நீகிரோ மக்கட் சார்பும், ஆஸ்திரேலியர்களின் சார்புமுடைய மக்களில் ஒரு சிலர் ஆதிக் குடிகளாக இந்தியாவில் வாழ்கின்றனர். முதற் காலத்தில் ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா முதலிய கண்டங்கள் இந்தியா வோடு தொடர்பு பெற்றிருந்தமையே அவ்வகை மக்கள் இந்தியாவில் காணப்படுவதற்கு ஏதுவாகலாம். கடல் கோட்பட்ட இலெமூரியாக் கண்டம் மிக விசாலமுடையதாகவிருந்தது. அக்கண்டத்தின் பல்வே றிடங்கள் பல்வேறு வெப்பதட்ப நிலையுடையனவாக இருந்தன. இடங் களின் வெப்பதட்ப நிலைகளுக்கேற்ப மக்கள் நிறத்தால் வேறுபட்டிருந் தார்கள். கடல்கோளின்போது பிழைத்திருந்து இந்தியாவில் குடியேறிய மக்களே இந்தியாவில் காணப்படும் நீக்கிரோயிட்டு, ஆஸ்திரலோயிட்டு மக்களென ஒரு சாரார் கூறுவர்.
புதிய கற்கால மக்கள் புல்லாலும் வைக்கோலாலும் வேய்ந்த சிறு குடிசைகளில் வாழ்ந்தார்கள்; நாய், வெள்ளாடு, செம்மறியாடு, மாடு, எருமை முதலிய விலங்குகளை வளர்த்தார்கள்; பிணங்களை ஈமத்தாழி களில் வைத்துப் புதைத்தார்கள்; மரவுரி, தோல், பஞ்சு ஆடை முதலிய வற்றை உடுத்தார்கள்; மணிகள், சங்குவளைகள், எலும்புகள், சோகிகளை அணிந்தார்கள். மிகப் பழங்காலம் முதல் நெருப்பின் பயன் அறியப்பட் டிருந்தது. தீக்கடை கோல்களைக் கடைந்து தீ உண்டாக்கப்பட்டது. வாணிகம் பண்டமாற்று முறையாக இருந்தது.
5. சிந்துவெளி நாகரிகம்
சிந்து ஆற்றுவெளியில் மண்மேடுகள் பல காணப்படுகின்றன. அவை பழங்காலத்திலிருந்த நகரங்களின் இடிபாடுகள். 1921-க்கும் 1922
-க்குமிடையில் மொகஞ்சதாரோ அரப்பா என்னுமிடங்களில் இரு மண்மேடுகள் அகழ்ந்து ஆராயப்பட்டன. அவை அழிந்து போன பழைய நகரங்களாகக் காட்சியளித்தன. இவ்விரு நகரங்களுக்கும் இடையிலுள்ள தொலைவு நானூறு மைல். அந்நகரங்கள் ஆற்றுக்கு அண்மையிலிருந்தன. காலத்துக்குக் காலம் ஆற்றின் படுகை உயர்ந்துகொண்டு சென்றது. நகரங்களில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் வீடுகளையும் பிற கட்டிடங் களையும் அழித்து மேடு செய்து அம்மேட்டில் புதிய கட்டிடங்களை எழுப்பி வந்தார்கள். இரு நகரங்களிலும் இவ்வாறமைந்த ஏழு அடுக்குகள் வெட்டி ஆராயப்பட்டன. ஏழாவது படைக்குக் கீழ் நிரூற்று வந்தமை யால் மேலும் அகழ்ந்து பார்க்க முடியவில்லை. அகழ்வு ஆராய்ச்சியில் கிடைத்த தொல்பொருள்களை ஆதாரமாகக்கொண்டு அந் நகரங்களின் நாகரிக வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. இரு நகரங்களும் ஒரே வகை யாக இருந்தன. இந்நாகரிகம் நருமதை ஆற்றுப் பள்ளத்தாக்கு வரையில் பரவியிருந்ததென்பது உலோதல் அகழ்வு ஆராய்ச்சியால் தெரியவந்தது.
மைசூரில் சித்தல்தக் அங்கில்மத் என்னுமிடத்தில் நடத்தப்பட்ட அகழ்வு ஆராய்ச்சியில் மொகஞ்சதாரோ அரப்பா நாகரிகத்தை ஒத்த பழைய நாகரிகமென்று அங்கு இருந்ததாகத் தெரியவருகின்றது. ஐதராபாத்திலும் திருநெல்வேலிப் பகுதியிலும் சமாதிக் குழிகளில் கிடைத்த மட்பாண்டங்களில் மொகஞ்சதாரோ முத்திரைகளில் வெட்டப்பட்டுள்ள எழுத்துகள் போன்றவை காணப்பட்டன. இலங்கை யில் கேகாலையிலுள்ள பாறை ஒன்றிலும் இவ்வகை எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மொகஞ்சதாரோ எழுத்துக்கள் பொறிக்கப் பட்ட மரக்கட்டைகள் பசிபிக்கடலிலுள்ள ஈஸ்டர் தீவிற் காணப்பட்டன. மொகஞ்சதாரோ மக்களின் சமயம் ஆபரணவகை முதலியன இன்னும் தென்னிந்தியாவில் வழங்குகின்றன. மொகஞ்சதாரோ நாகரிகத்தை ஒத்த நாகரிகம் இந்தியா முழுமையிலும் மேற்கு ஆசியா, ஆசியாமைனர், எகிப்து, ஐசியன் கடல் தீவுகளிலும் பரவியிருந்ததெனத் தெரிகிறது. இவை போன்ற சில அடிநிலைகளை அநுமானமாகக் கொண்டே உலகம் முழுமையிலும் தமிழ் வழங்கியதெனச் சிலர் கூறியிருக்கின்றனர்.
“சதுமறை ஆரியம்வருமும் சகமுழுதும் நினதாயின்
முதுமொழி நீயனாதியென மொழிகுவதும் வியப்பாமே” (மனோன்மணீயம்)
மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிக காலத்தின் மேலெல்லை கி.மு. 3300; கீழ் எல்லை கி.மு. 2500. சிந்து நாகரிகத்தின் இறுதிக் காலத்தில் ஆரியரென்னும் சாதியார் இந்தியாவை அடைந்தனர். சிந்துவெளி நாகரிகத்தின் அழிவுக்கு ஏதுவாக இருந்தவர்கள் ஆரியராகலாமென்றும், வேதங்களில் ஆரியருக்கும் தாசுக்களுக்கும் இடையே நடந்தனவாகச் சொல்லப்படும் போர்கள் மொகஞ்சதாரோ மக்களுக்கும் ஆரியருக்கும் இடையில் நடந்த போர்களாகலாமென்றும் சிலர் கருதுகின்றனர்.
முற்காலத்தில் நாகரிகமடைந்த சாதியாரை நாகரிகம் எய்தாத முரட்டுச் சாதியினர் வெற்றிகொண்டனர். மொகஞ்சதாரோ மக்கள் குதிரையைப் பற்றி அறியாதிருந்தார்கள். ஆரியரின் குதிரைப் படையே அவர்கள் வெற்றிக்குக் காரணமெனச் சிலர் கூறியுள்ளனர். இஸ்பானியப் போர்வீரர், நாகரிகத்தில் உயர்ந்த மெக்சிக்கரை வெற்றிகொள்வதற்குக் காரணமாக இருந்ததும் குதிரைப் படையே. நாகரிகமெய்திய மக்கள் உல்லாச வாழ்க்கையில் அமர்ந்து போர் செய்யும் திறமையை இழந்தவர் களாக மாறிவிடுகிறார்கள். அக்காலப் போர்முறையில் முரட்டுச் சாதி யினருக்கு நாகரிக சாதியினரை வெற்றிகொள்வது எளிதாக இருந்தது.
6. ஆரியர் வருகை
இந்துமாக் கடலுள் கிடந்த பெரிய நிலப்பரப்பு அழிவு எய்திய போது உயிர் பிழைத்திருந்த மக்களில் ஒரு கூட்டத்தினர் வடதுருவ நாடுகளில் சென்று குடியேறி வாழ்ந்தார்கள். குளிர் மிகுந்த நாடுகளில் நீண்டகாலம் வாழ்ந்தமையால் அவர்களின் நிறம் வெண்மையடைந்தது. துருவ நாடுகளில் ஆறுமாத காலம் பகலும் ஆறுமாத காலம் இரவும் உண்டு. வேதங்கள் தேவருக்குப் பகல் ஆறு மாதம் என்றும், இரவு ஆறு மாதம் என்றும் குறிப்பிடுகின்றன. இஃது ஆரியர் வடதுருவ நாடுகளில் வாழ்ந்ததைக் குறிப்பிடுகின்றதெனப் பாலகங்காதர திலகர் தமது “வேதங்களில் வடதுருவ உறைவிடம்”1 என்னும் நூலில் குறிப்பிட்டுள் ளார். வடதுருவ நாடுகளில் சில இயற்கை வேறுபாடுகள் தோன்றின. ஆகவே அவை மக்கள் வாழ்க்கைக்குத் தகுதியற்றனவாக மாறின. இயற்கை மாறுபாடுகளால் மக்கள் வாழும் இடங்கள் அவர்கள் உயிர் வாழ முடியாத இடங்களாகவும், மக்கள் வாழ்வதற்கு ஏற்றனவாகாத இடங்கள் அவர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடங்களாகவும் மாறுவதுண்டு. கோபி வனாந்தரம், சகாரா வனாந்தரம்1 முதலியன முன்னொரு காலத்தில் செழிப்பு மிக்கனவாயும் மக்கள் உறைவிடங்களாகவும் இருந்தனவென்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். வடதுருவ நாடு மக்கள் வாழ்ந்துகொண் டிருந்த மக்கள் தெற்கு நோக்கிச் சென்று காஸ்பியன் கடலுக்கும் கருங் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் மந்தை மேய்ப்பவர்களாகவும், மந்தைகள் மேய்வதற்குப் புல் வெளிகளைத்தேடி அலைபவர்களாகவும் இருந்தார்கள்.
ஒரு காலத்தில் கடும் வறட்சி உண்டாயிற்று. அப்போது அவர் களில் ஒரு கூட்டத்தினர் மத்திய கூட்டத்தினின்றும் பிரிந்து சென்று பாரசீகத்தில் தங்கினர். அவர்களின் வருகைக்கு முன் இந்தியா முதல் மேற்கு ஆசியா வரை ஒரே இன மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். சில காலத்தின் பின் அவர்களில் ஒரு கூட்டத்தினர் பாரசீகத்தினின்றும் பெயர்ந்து கைபர் கணவாய் வழியாக இந்தியாவின் வட மேற்குப் பகுதியை அடைந்தார்கள். காஸ்பியன் கடலுக்கும் கருங்கடலுக்குமிடை யில் வாழ்ந்துகொண்டிருந்த பழைய குழுவினர் பல கிளைகளாகப் பிரிந்து ஐரோப்பாக் கண்டத்தின் பல பகுதிகளை அடைந்தார்கள். காலப் போக்கில் அவர்கள் உள்நாட்டு மக்களோடு கலந்து ஒன்றுபட்டார்கள்.
இந்தியாவை அடைந்த புதிய மக்கள் ஆரியர் என அறியப்பட் டார்கள். இவர்கள் இந்தியாவை அடைந்தது கி.மு. 1,500க்கும் கி.மு. 1,000க் கும் இடையிலெனப் பெரும்பாலும் கொள்ளப்படுகிறது. ஆரியரின் வருகையின்போது இந்திய நாட்டில் உயர்ந்த நாகரிகமடைந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். புதிய மக்கள் சிறிது காலம் தனிமையாக வாழ்ந்தார்கள். அவருட் போர்க்குணமுடைய சிலர் உள்நாட்டு மக்க ளோடு போர் தொடுத்தார்கள். ஆரியருக்கும் உள்நாட்டு மக்களுக்கு மிடையில் நடந்த போர்களைப் பற்றி வேத பாடல்கள் குறிப்பிடுகின்றன. உள்நாட்டு மக்கள் மதில் சூழ்ந்த கோட்டைகளில் வாழ்வோராகவும், செல்வச் சிறப்புடைவர்களாகவும் இருந்தார்கள். காலப்போக்கில் இருசார் மக்களும் கலந்து ஒன்றுபட்டார்கள். உள்நாட்டு மொழிகளில் ஆரியச் சொற்கள் சில கலந்தன. உள்நாட்டு மொழிகளோடு ஆரியச் சொற்கள் கலந்த பேச்சுமொழிகள் பிராகிருதங்கள் எனப்பட்டன. பௌத்தரும் சமணரும் தொடக்கத்தில் பிராகிருத மொழிகளையே பயன்படுத்தினர். அக்காலத்து வழங்கிய மொழிகளுள் ஒன்று பாளி. விந்தத்துக்கு வடக்கில் வாழ்ந்த மக்கள், மொழி அளவில் ஓரளவு ஆரிய ராக்கப்பட்டார்கள். விந்தத்துக்கு வடக்கிலுள்ள நாடுகள் ஆரியாவர்த்தம் என அறியப்பட்டன. அங்கு வழங்கிய மொழிகள் பிராகிருத மொழி களாக மாறுபட்டன. பிராகிருதங்கள் இக்காலத்தில் வட நாட்டில் வழங்கும் மொழிகளாக உருவாயின. இம்மாற்றம் கி.பி. பத்தாம் நூற் றாண்டளவில் நேர்ந்தது.
1சேர். எர்பேர்ட் இரிஸ்லி என்னும் இந்திய மேல்நாட்டறிஞர் 2“இந்திய மக்கள்” என்னும் இந்திய மக்களின நூல் ஒன்று எழுதியுள்ளார். அப்பெரு நூலில் இந்தியாவில் ஆதியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்றும், அயல் நாடுகளினின்றும் வந்த சிறுபான்மை மக்கள் தமிழர் களோடு கலந்தமையால் திராவிட ஆரியர், திராவிட மங்கோலியர், திராவிட சித்தியர் முதலிய பல சாதியினர் இந்தியாவில் தோன்றினார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் இவ்வகை மக்கள் வாழும் இடங் களைப் படம் வரைந்து காட்டியிருக்கின்றார். அவர் கூற்றினையே “என் சைகிளோ பீடியா பிரித்தானிக்கா” என்னும் ஆங்கிலக் கலைக்களஞ்சி யம் மேற்கோளாக எடுத்து ஆண்டிருக்கின்றது.
7. இதிகாசங்களும் தமிழ் நாடும்
பாரதமும் இராமாயணமும் இதிகாசங்கள் என வழங்குகின்றன. இவை வீரரின் வரலாறுகளைக் கூறும் ஒருவகைப் புராணங்கள். இவை தொடக்கத்தில் சிறியவாக இருந்து காலந்தோறும் பின்சேர்ப்புகள் சேர்க்கப்பட்டு வளர்ச்சியடைந்தவை. ஆகவே இதிகாசங்களைக் கொண்டு வரலாற்று உண்மைகளை அறியமுடியாது. இராமாயணக் கதை நிகழ்ச்சி பாரதக் கதை நிகழ்ச்சிக்கு முற்பட்டதென நம்பப்பட்டு வருகின்றது.
இராமர் காலத்தில் இராவணன் இலங்கையை ஆண்டான். கோதாவரி ஆற்றுக்குக் கீழே ஞானத்தானம் என்னும் பகுதி இருந்தது. அஃது இராவணனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. தண்டகாரணியத்தில் விராதன், கவந்தன், துந்துபி, கரன் முதலியவர்களின் தலைமையில் இராக்கதர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இராமரும், இலக்குமணரும், இலங்கைக்குச் சென்ற வழியில் சேர, சோழ, பாண்டிய இராச்சியங்களை எதிர்ப்பட்டதாக இராமாயணம் கூறவில்லை. சீதாபிராட்டியைத் தேடும் படி சுக்கிரீவன் வானர வீரருக்குச் சொல்லும் பகுதியில் சேர, சோழ, பாண்டிய இராச்சியங்களும், பாண்டியர் தலைநகராகிய கவாடபுரமும் குறிக்கப்பட்டுள்ளன. இராமாயண காலத்தில் விந்திய மலைக்குத் தெற்கில் மக்கள் குடியேறாத பெருங்காடுகள் கிடந்தன. அவற்றின் இடைஇடையே நாகரிகமற்ற சிறு சிறு மக்கட் கூட்டத்தினர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
இராமாயணத்தில் காடடர்ந்தனவாகக் கூறப்படும் இடங்கள் பாரத காலத்தில் மக்கள் குடியேறி வாழும் இடங்களாக மாறியுள்ளன. அருச்சுனன் மலையத்துவச பாண்டியனது மகளாகிய சித்திராங்கதையை மணந்ததாகப் பாரதங் கூறுகின்றது. துரௌபதியின் சுயம் வரத்துக்குச் சென்றிருந்தவர்களுள் பாண்டிய அரசனும் ஒருவனாவன். உதியன் சேரலாதன் என்னும் சேர அரசன் பாரதப்போரில் கலந்துகொண்ட பாண்டவ, கௌரவ படைகளுக்குப் பெருஞ்சோறு வழங்கியதாகப் புறநானூறு கூறுகின்றது. பாரதப்போர் கி.மு. 1400இல் நிகழ்ந்ததாகக் காலக்கணிப்புச் செய்யப்பட்டுள்ளது. பாரத காலத்தும் இராமாயண காலத்தும் சிவவழிபாடு உயர்வு பெற்றிருந்தது. அசுரர், இராக்கதர், வானரர் எனப்பட்டோர் சிவ வழிபாட்டினராகவிருந்தார்கள்.
8. புராணங்களும் தமிழ் நாடும்
பழங்காலத்தில் நாகரிகமடைந்த மக்கள் தமது அரசரின் வரலாறு களை எழுதி வைத்தார்கள். இவ்வரலாறுகளை எழுதியவர்கள் கோயில் பூசகர்களாக இருந்தார்கள். அவர்கள் கோவில்களை எழுப்பியவர்கள், கோவில்களுக்கு மானியம் வழங்கியவர்கள், சமயத்தை ஆதரித்தவர்கள் என்போரைப் புகழ்ந்தும், தம்மோடு மாறுபட்டவர்களை இகழ்ந்தும் எழுதிவைத்தார்கள். இதற்கு எடுத்துக்காட்டு இலங்கைப் பௌத்த பிக்குகள் எழுதிவைத்த மகாவம்சமாகும். இவ்வகை வரலாறுகள் புராணங்கள் எனப்பட்டன. புராணங்கள் சிலவற்றில் கூறப்படும் அரசர் காலங்கள் மிகப் பொருத்தமாகவுள்ளன. புராணங்களில் உண்மை வரலாறு களோடு உண்மையல்லாத கற்பனைகளும் விரவியுள்ளன. பழைய புராணங்கள் இறந்து போயினவென்றும் குப்தர் காலத்தில் இப்போதுள்ள புராணங்கள் தொகுத்து எழுதப்பட்டனவென்றும் வரலாற்றாசிரி யர்கள் கூறுவர்.
அரச அவையில் அரசனைப் புகழ்ந்து பாடும் புலவர்களும் இருந்தார்கள். அவர்கள் அரசனோடு போர்க்களஞ்சென்று அவனது வீரம், வெற்றி, புகழ், கொடை முதலியவற்றையும் புகழ்ந்து பாடினார்கள். அரண்மனைப் புலவர் இவ்வகைப் பாடல்களையும் அரசனது முன் னோர் புகழ்களையும் சிறப்புக் காலங்களில் அரண்மனையில் பாடினார் கள். இவ்வகைப் பாடல்கள் சமய சம்பந்தம் பெறாதனவாக இருந்தன.
அரசரின் அரண்மனைகளிலிருந்து அரசனின் புகழ்களைப் பாடி னோர் சூதர் என அறியப்பட்டனர். சூத முனிவர் புராணங்களைச் சொன்னார் என வரும் ஐதீகம் இது பற்றியதேயாகும். சூதர் தேரோட்டு வோராகவும் இருந்தார்கள்.
தமிழ் நாட்டில் புரோகிதரும், அரண்மனையிலிருந்து அரசனைப் புகழ்ந்து பாடும் புலவர்களுமிருந்தார்கள். அவர்கள் அரசர் வரலாறு களையும் அவர் புரிந்த புகழ்ச்சிக்குரிய செயல்களையும் எழுதிவைத் தார்கள். அவை நமக்குக் கிடைக்காதவாறு மறைந்து போயின. மெகஸ் தனீஸ் என்னும் கிரேக்கர் மௌரிய சந்திரகுப்தனின் அரண்மனையில் தூதராக இருந்தார். சிவன் முதல் அலெக்சாந்தரின் படையெடுப்பு வரை ஆட்சி புரிந்த பாண்டியரின் எண் 154 என்றும் அவர்களின் மொத்த ஆட்சிக்காலம் 6431 ஆண்டு மூன்று திங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மதுரைத் தலபுராணம் குலசேகர பாண்டியன் முதல் மதுரேலவர பாண்டியன் இறுதியாக எழுபத்து நான்கு பாண்டிய அரசரைக் குறிப்பிடு கின்றது. அக்காலத்தில் தமிழ் அரசர்கள் வரலாறுகளைக் கூறும் புராணங்கள் இருந்தன என்பதற்கு இது சான்றாகவுள்ளது. பிற்காலங் களில் நேர்ந்த சாதிச் சண்டை, சமயச் சண்டை, படை எடுப்புகளாலும், நெருப்பு, நீர், செல்லு என்பவற்றாலும் மாண்டுபோன தமிழ் நூல் களோடு அவையும் மறைந்து போயினவாகலாம்.
9. தமிழ் நாட்டெல்லை
இமயம் முதல் கன்னியாகுமரி வரை தமிழ் வழங்கியதென்றும் ஆரியர் வருகைக்குப் பின் வடக்கே வழங்கிய தமிழ் பிராகிருத மொழி களாக மாறுபட்டதென்றும் முன் கூறினோம். ஆரியரின்பழைய பாடற் றிரட்டு எனப்படும் வேதத்தில் அச்சு, ஆணி, உலக்கை, ஊசி, கச்சை, ஓடம், கலம், கணக்கன், குடி, முத்து முதலிய பல சொற்கள் காணப்படு வதை ஆராய்ச்சியாளர் காட்டியிருக்கின்றனர்.1 வடக்கில் தமிழ் பேசும் மக்களும், தமிழும் இருக்கவில்லையாயின் வேத பாடல்களில் தமிழ்ச் சொற்கள் புகுதல் எவ்வாறியலும்?
ஆரியரின் வருகைக்குப் பின் பாரசீகர், பாரசீக கிரேக்கர், கிரேக்கர், மங்கோலியர் முதலிய பல சாதியினர் இந்தியா மீது படை எடுத்து வந்தனர். அவர்கள் வடநாட்டின் சில பகுதிகளை ஆட்சி புரிந்தார்கள். சில காலத்தில் அவர்கள் உள்நாட்டு மக்களின் சமயம் ஒழுக்கம் என்ப வற்றைத் தழுவி இந்திய மக்களாகவே வாழ்ந்தார்கள். இக் காரணத் தினாலும் வடக்கில் வழங்கிய மொழிகள் பெரிதும் திரிபடைந்தன.
அசோகச் சக்கரவர்த்திக்குப்பின் கலிங்கம் தனி இராச்சியமாகப் பிரிந்தது. மௌரிய ஆட்சிக்குப் பின் ஆந்திர அரசு எழுந்தது. கலிங்க நாட்டை ஆண்ட சேதி அரசரும் ஆந்திர நாட்டை ஆண்ட சாதவாகன ரும் வடநாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். பிராமணர்களாகிய சாதவாகன அரசர் காலத்தில் ஆந்திர நாடு ஆரிய மயமாயிற்று. கலிங்கம், ஆந்திரம் முதலிய நாடுகளில் வழங்கிய மொழி தெலுங்காக மாறுபட் டது. பழைய தெலுங்கும் கன்னடமும் முன் ஒன்றாக இருந்தனவென்றும், பழந்தமிழுக்கும் பழங்கன்னடத்துக்கும் நெருங்கிய உறவு உண்டென்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். ஆந்திர இராச்சியம் வீழ்ச்சியடைந்தபோது பல்லவர், சாளுக்கியர், இராட்டிரகூடர், கங்கர், கதம்பர், பாணர், காகதீயர் முதலிய தமிழையறியாத பல அயல் நாட்டினர் தமிழ்நாட்டின் பகுதிகளை ஆண்டார்கள். இதனால் தமிழ் மொழி வடக்கினின்றும் தெற்கு நோக்கி மாறுபட்டுக்கொண்டு வந்தது. தமிழிற் பிறமொழிச் சொற்கள் பல நுழைந்தன.
தொல்காப்பியம் செய்யப்படுகின்ற காலத்தில் தெற்கே குமரியும், வடக்கே திருப்பதியும் கிழக்கும் மேற்கும் கடலும் தமிழ்நாட்டெல்லை களாக இருந்தன. குமரி என்பதற்குக் குமரி ஆறு என்று உரை ஆசிரியர்கள் உரை எழுதியுள்ளார்கள். தொல்காப்பியம் செய்யப்பட்டது சிறிது ஏறக்குறைய கி.மு. 350இல் எனக் கொள்ளப்படுகின்றது. வட வேங்கடம் தென்குமரி என்ற எல்லைக்குள் சேர, சோழ, பாண்டிய நாடுகளும் பதின் மூன்று குறுநில நாடுகளும் இருந்தன. பாண்டியர் தலைநகராகிய மதுரையைச் சூழ்ந்த நாடு செந்தமிழ்நாடு என அறியப்பட்டது. தென் பாண்டி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழி நாடு, பன்றி நாடு, அருவா நாடு, அருவா வட தலைநாடு, சீதநாடு, மலாடு (மலை நாடு), புனல் நாடு என்பன ஏனைய நாடுகள்.
10. தமிழ் நாட்டின் இயற்கை அமைப்பு
தமிழ்நாடு மலையும் காடும் கடற்கரையும் வயலுமாகிய இயற்கை அமைப்புகளுடையது. ஆகவே மக்களின் வாழ்க்கை முறைகள் அவரவர் வாழும் இடங்களுக்கேற்ப மாறுபட்டிருந்தன.
மக்கள் தொடக்கத்தில் மலையும் மலைசார்ந்த இடங்களிலும் குடியேறி வாழ்ந்தார்கள். அவர்கள் காட்டில் கிடைக்கும் காய் கனிகள், கிழங்கு வகைகள், தேன் முதலியவற்றையும் வேட்டையாடுவதாற் கிடைக்கும் விலங்குகள், பறவைகளின் இறைச்சியையும் உண்டார்கள்; சாமை, மலை நெல் முதலியவற்றைப் பயிரிட்டார்கள். விலங்குகளின் தோலையும், மரவுரியையும், இலைகளால் தொடுத்த உடைகளையும் உடுத்தார்கள்.
காடு சார்ந்த நிலங்களில் வாழ்ந்தோர் ஆடு, மாடு, எருமை முதலிய வற்றை வளர்த்தார்கள். அவை கொடுக்கும் பால், தயிர், நெய், இறைச்சி முதலியவற்றையும், அவற்றின் விலைக்குப் பண்டமாற்றாகக் கிடைக்கும் நெல்லையும், பிற உணவுப் பொருள்களையும் பெற்றார்கள். காடு சார்ந்த நிலங்களில் வரகு பயிரிடப்பட்டது.
கடலோரங்களில் வாழ்ந்தோர் கட்டுமரங்களில் கடல் மீது சென்று மீன் பிடித்தார்கள்; உவர் நிலத்தில் பாத்திகட்டி உப்பு விளைவித் தார்கள். கழுதைகள் மீதும், மாடு பூட்டிய வண்டிகளிலும் உப்பை ஏற்றிச் சென்று அதனை நெல்லுக்கு விலையாக விற்றார்கள். கடலோரங்களில் பனை செழித்து வளர்ந்தது. பனைச் செறிவுகளில் கட்டப்பட்ட குடிசை களில் மக்கள் வாழ்ந்தார்கள்; பனையிலிருந்து கள் எடுத்தார்கள்.
ஆற்றோரங்களில் வாழ்ந்தோர்கள் வயல்களுக்கு ஆற்று நீரைப் பாய்ச்சி நெல் விளைவித்தார்கள். ஆற்றுக்குத் தொலைவில் வாழ்ந்தோர் மழை நீரைக் குளங்களில் தேக்கி வைத்து அதனை வயலுக்குப் பாய்ச் சினார்கள். பருவ காலத்தை அறிந்து மழை நீரைப் பயன்படுத்தி நெல் விளைவிக்கவும் அவர்கள் அறிந்தார்கள். வெள்ளத்தை ஆள அறிந்தமை யால் அவர்கள் வெள்ளாளர் எனப்பட்டார்கள். பருவ காலத்தை அறிந்து மழை நீரைப் பயன்படுத்த அறிந்தவர்கள் காராளர் என அறியப்பட் டார்கள். வெள்ளாளர் பிறருக்கு உபகாரம் செய்யும் இயல்பினர். ஆகவே அவர்கள் வேளாளர் எனவும் அறியப்பட்டார்கள். வேள்வி என்பதற்கு உபகாரம் என்னும் பொருளுமுண்டு. வேள் என்பதற்கு மண் என்னும் பொருளுமுண்டு. குயவனுக்கு வேளான், வேட்கோ என்னும் பெயர் களும் வழங்கும். வேளான் என்பதற்கு மண்ணில் வேலை செய்பவன் என்பது பொருள். வேளாளன் என்பதற்கு மண்ணை ஆள்பவன் என்னும் பொருளும் கூறலாம்.
மலை ஒதுக்குகளிலும் காட்டு ஒதுக்குகளிலும் பாலை நிலம் போன்று ஆங்காங்கு புதர்கள் அடர்ந்த சில பகுதிகளிருந்தன. அங்கு வேட்டை யாடியும் வழிச் செல்வோரைக் கொள்ளையடித்தும் எறும்புகள் புற்றுகளில் சேர்த்து வைத்திருக்கும் புல்லரிசியைச் சேகரித்தும் உண்டு வாழும் மக்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் எயினர் என அறியப்பட் டார்கள்.
11. பாண்டி நாடு
வரலாற்றுக் கெட்டாத பழங்காலம் முதல் தமிழ்நாடு சேரர், சோழர், பாண்டியர் என்னும் மரபுகளிலுள்ள அரசர்களால் ஆளப்பட்டு வந்தது. இம்மூன்று மரபுகளுள் பாண்டியர் மரபே மிகப் பழமை யுடையது. “பாண்டி நாடே பழம்பதி” எனத் திருவாசகம் கூறுகின்றது. பின்னர் பாண்டிய மரபின் கிளைகளாக மற்றிரு மரபுகள் தோன்றின. பாண்டியர் மரபு பழமையுடையதாதலின் அம்மரபில் வந்தோர் பண்டையர் என அறியப்பட்டனர். பண்டையர் என்னும் பெயர் திரிந்து பாண்டியராயிற்று. எகிப்தியர் தாம் பண்டு நாட்டினின்றும் சென்று நீல ஆற்றங்கரையில் குடியேறினார்கள் என நம்பி வந்தார்கள் அவர்கள் பண்டு நாடெனக் குறிப்பிட்டது பாண்டி நாடு எனக் கருதப்படுகின்றது.
மெகஸ்தீனஸ் என்பவர் எழுதிய இந்திய வரலாறு என்னும் நூல் பக்கஸ் (சிவன்) தொடக்கம் அலெக்சாந்தரின் படையெடுப்பு வரை ஆட்சி புரிந்த பாண்டியர் 154 பேர் என்றும் அவர்களின் ஆட்சிக்காலம் 6431 ஆண்டு மூன்று திங்கள் என்றும் கூறுகின்றது. இதனாலும் பாண்டியர் மரபு மிகப் பழமையுடையதெனத் தெரிகிறது. மதுரைத் தல புராணம் எழுபதுக்கு மேற்பட்ட பாண்டியரைப் பற்றிக் கூறுகின்றது.
பாண்டு என்பதிலிருந்து பாண்டியர் என்னும் பெயர் வந்ததெனச் சிலர் கூறியிருக்கின்றனர். பாண்டுவுக்கு முன் பாண்டியர் ஆட்சியிருந்தது. பாரதப்போரில் கலந்து கொண்ட பாண்டவர், கௌரவர் படைகளுக்குத் தமிழரசர் பெருஞ்சோறு வழங்கியதாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. பாண்டவர் காலத்தில் பாண்டிய இராச்சியம் இருந்ததாகப் பாரதமும் இராமாயணமும் கூறுகின்றன.
கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் தமிழ் நாட்டின் வடக்கு எல்லை திருப்பதி மலையாகவிருந்தது. திருப்பதிக்குத் தெற்கில் உள்ள நாடுகள் சேர சோழ பாண்டியர்களாலும் குறுநில மன்னராலும் ஆளப் பட்டன. பாண்டி நாடு இக்கால இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி முதலிய நாட்டின் எல்லைகள் வடக்குத் தெள்ளாறும், மேற்குப் பெருவெளியும், தெற்குக் குமரிமுனையும், கிழக்குக் கடலும் என்றும் அதன் பரப்பு ஐம்பத்தாறு காதம் என்றும் இடைக்காலத் தனிப்பாடல் கூறுகின்றது.
“வெள்ளாறது வடக்காம் மேற்குப் பெருவெளியாந்
தெள்ளாறாம் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல்கிழக்கா மைம்பத்தறு காதம்
பாண்டி நாட்டெல்லைப் பதி”
பாண்டி நாட்டின் தலைநகர் மதுரை. பொருநை (தாமிரபரணி) முகத்துவாரத்திலிருந்த கொற்கை என்னும் துறைமுகம் அதன் தலைமைப் பட்டினமாகவிருந்தது.
“சந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவனும்
சௌந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனும்
சங்கப் புலவரும் தழைத்தினி திருக்கும்
மங்கலப் பாண்டி வளநா டென்ப.”
12. சேர நாடு
இக்காலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, மலையாளம் கோயம்புத் தூர் என்று வழங்கும் பகுதிகளும் சேலத்தின் ஒரு பகுதியும் சேர்ந்த நாடு பழங்காலச் சேர நாடாக இருந்தது. கொடுந் தமிழ்நாடு எனப்பட்டவற் றுள் குட்டம், குடம், கற்கா, பூழி எனப்பட்டவை சேர நாட்டைச் சேர்ந்தவை. இந் நாட்டின் எல்லைகள் வடக்குப் பழநியும், கிழக்குத் தென்காசியும், மேற்குக் கள்ளிக்கோட்டையும், தெற்குக் கடலுமென மத்திய காலத் தனிப்பாடல் கூறுகின்றது.
“வடக்குத் திசைபழநி வான்கீழ் தென்காசி
குடக்குத்திசை கோழிக் கோடாம் - கடற்கரையின்
ஓரமே தெற்கு(ம்) உள்ளேண் பதின்காதம்
சேரநாட் டெல்லையெனச் செப்பு”
இதன் தலைநகர் வஞ்சி. வஞ்சி என்பது கருவூரென்று சிலரும், கொடுங்கோளூரென வழங்கும் திருவஞ்சைக்கள மென்று சிலரும் கருதுவர். முசிறி, தொண்டி முதலியன இதன் முக்கிய துறைமுகப் பட்டினங்களாகவிருந்தன.
சேர என்னும் பெயர் எப்படி வந்ததெனக் கூற முடியவில்லை. சேர நாட்டில் நாக வழிபாடு பண்டுதொட்டுப் பெருவழக்கிலிருந்து வருகிறது. வேதங்களுக்கு உரை எழுதிய சாயணர் (14-ஆம் நூ.) சாரை என்பதி லிருந்து சேர என்னும் பெயர் வந்ததாகக் கூறியுள்ளார்.
13. சோழ நாடு
தமிழ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ளது சோழ நாடு. இது கிழக்கே கடலையும், தெற்கே வெள்ளாற்றையும், மேற்கே கோட்டைக் கரையையும், வடக்கே ஏணாட்டுப் பண்ணையையும் எல்லையாகக் கொண்டிருந்ததெனத் தனிப் பாடலொன்று கூறுகின்றது.
“கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு
குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏணாட்டுப் பண்ணை யிருபது நாற்காதம்
சோணாட்டுக் கெல்லையெனச் சொல்”
இது பெருக்கொழியாத காவிரியாற்றாலும் அதன் துணை ஆறு களாலும் நீர்வளம் பெறும் செழித்த நாடு. சோழ நாடு சோறுடைத்து” என ஒளவையார் சோழ நாட்டைப் புகழ்ந்துள்ளார். காவிரிப்பூம்பட்டி னம், உறையூர், தஞ்சாவூர், குடமூக்கு (கும்பகோணம்), கங்கைகொண்ட சோழபுரம் முதலியவை இதன் சிறந்த நகரங்களாக இருந்தன. இவற்றுள் காவிரிப்பூம்பட்டினமும் உறையூரும் சங்ககாலச் சோழ அரசரின் தலைநகர்களாக இருந்தன. தஞ்சாவூரும், கங்கை கொண்ட சோழபுரமும் பிற்காலச் சோழ அரசர்களுக்குத் தலைநகர்களாகும்.
14. தொண்டை நாடு
தொண்டை நாடு சோழ நாட்டின் பகுதியாக இருந்தது. இது தொண்டையர் எனப்பட்ட சோழ அரசரால் ஆளப்பட்டது. பல்லவர் இராச்சியம் தொண்டை நாட்டிலிருந்தது. சோழ அரசன் ஒருவன் நாக கன்னிகையை மணந்து ஒரு புதல்வனைப் பெற்றானென்றும், நாககன்னி தொண்டைக் (கொவ்வை) கொடியை அடையாளமாகக் கட்டிப் புதல் வனைக் கடல் வழியே அனுப்பினாளென்றும், அரசன் அப்புதல்வ னுக்குத் தொண்டையன் என்றும் திரையன் என்றும் பெயரிட்டானென் றும் பழங்கதை இருந்து வருகிறது. தொண்டை நாட்டின் எல்லைகள் மேற்குப் பவழமலை, வடக்கு வேங்கடம், கிழக்குக் கடல், தெற்குப் பெண்ணையாறு என்பன. இதன் பரப்பு இருபது காதம்.
“மேற்குப் பவளமலை வேங்கடநேர் வடக்கா(ம்)
ஆர்க்கு முவரி யணிகிழக்கு - பார்க்குளுயர்
தெற்கு பினாகி திகழிரு பதின்காத
நற்றொண்டை நாடெனவே நாட்டு”
15. கொங்கு நாடு
இஃது இன்றைய கோயம்புத்தூர் சேலம் மாவட்டங்கள் அடங்கிய நிலவெளிகள். கொங்கு நாடு சேர நாட்டில் அடங்கியிருந்தது. இதன் எல்லைகள் வடக்குத் தலைமலை, தெற்குப் பழநிலை, மேற்கு வெள்ளியங்கிரி மலை, வடக்கு காவிரி நீர் பாய்ச்சும் குழித்தலை.
“வடக்குத்தலை மலையாம் 1வையாவூர் தெற்கு
குடக்கு வெள்ளிப் பொருப்புக்-குன்று
குழித்தண்டலை சூழும் காவிரி நன்னாடாம்
குழித்தண்டலை யளவுங் கொங்கு”
16. ஈழ நாடு
மிக முற்காலத்தில் இலங்கைத் தீவு தென்னிந்தியாவோடு இணைந் திருந்தது. மௌரிய சந்திரகுப்தனின் அரண்மனையில் மெகஸ்தீனஸ் என்னும் கிரேக்கர் தூதராக விருந்தார். அவர் இந்தியாவைப் பற்றி ஒரு நூல் எழுதினார். அது இறந்து போயிற்று. அதன் பகுதிகள் கிடைத் துள்ளன. அப் பகுதிகள் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அச்சிடப்பட்டுள்ளன. அக்காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் ஒடுங்கிய ஆறு பிரிக்கிறதென மெகஸ்தீனஸ் குறிப்பிட்டுள்ளார். அனுமார் கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றது, இராமரணை கட்டப்பட்டது முதலிய செய்திகள் இராமாயணத்தில் கூறப்படுகின்றன. இவை இந்தியா வுக்கும் இலங்கைக்கும் இடையில் சிறிய நீரிணையிருந்ததென்பதைத் தெரிவிக்கின்றன. இராமரணை இந்தியாவையும் இலங்கையையும் பிரித்துக்கொண்டிருந்தது. 1480இல் இவ்விணைப்பில் உடைப்புக் கண்ட தாகக் கோயிற் சாசனங்கள் கூறுகின்றன. இலங்கைத்தீவு தென்னிந்தியா வுக்கு அண்மையில் இருந்தமையால் அங்கு தென்னிந்திய மக்களே குடியேறியிருந்தார்கள்.
புதுக்கோட்டைப் பகுதியிலும் பிற சில இடங்களிலும் ஈமத்தாழிப் புதையல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவ்வகை ஈமத்தாழிப் பிணப் புதை யல்கள் இலங்கையில் புத்தளத்துக்கு அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டன. இவ்வீமத்தாழிகள் வரலாற்றுக்கு முற்பட்டவை. வரலாற்றுக்கு முன் தென்னிந்தியப் பண்பாடுடைய மக்களே இலங்கையிலும் வாழ்ந்தார்கள் என்பதை இவ்வீமத்தாழிப் புதையல்கள் அறிவிக்கின்றன.
பழந்தமிழ் இலக்கியங்கள் இலங்கைத்தீவை ஈழநாடு எனக் குறிப் பிடுகின்றன. சிங்களம் என்னும் பெயர் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கு முன் எந்த இலக்கியங்களிலும் காணப்படவில்லை. ஈழநாட்டின் வடக் கிலும் மேற்கிலும் நாகர் என்னும் மக்கள் வாழ்ந்தார்கள். ஏனைய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இயக்கர் எனப்பட்டார்கள். இயக்கர் என்பது இராக்கதரைக் குறிக்க வழங்கிய இன்னொரு பெயர். இயக்கர், நாகர் என்னும் இரு பிரிவினரும் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். தேவ நம்பியதிசன் காலத்தில் பௌத்த மதம் இலங்கைக்கு வந்தது பௌத்த மதத்தின் சமயமொழி பாளியாக விருந்தது பௌத்த மதத்தைத் தழுவிய மக்கள் வழங்கிய மொழியில் பாளிச்சொற்கள் கலந்தன. பௌத்த நூல்கள் சமக்கிருதத்திலும் எழுதப்பட்டன. பாளி, சமக்கிருதம் என்னும் இரு மொழிகளையும் பயின்ற பௌத்த குருமார் வழியாக பௌத்த மக்கள் வழங்கிய மொழி சமக்கிருதப்போக்கை எய்திற்று. சிங்கள மொழி யில் முதன் முதல் இலக்கியம் தோன்றியது கி.பி. 10ஆம் நூற்றாண்டில் என்று சொல்லப்படுகிறது. சிங்கள மொழியைப்பற்றி ஆராய்ந்த மேல் நாட்டறிஞரும் சிங்கள அறிஞரும் சிங்களம் தென்னிந்திய மொழிக் கூட்டத்தைச் சேர்ந்ததெனக் கூறியிருக்கின்றனர்.
கிறித்துவுக்குப் பல நூற்றாண்டுகள் முன்னிருந்து இலங்கைத் தீவு ஆங்கிலர் கைக்கு மாறும்வரை தமிழரசர் பலர் இலங்கையை ஆண் டார்கள். இலங்கை அரசர் பெரும்பாலும் தென்னிந்திய அரச குடும்பப் பெண்களை மணந்தார்கள். இவ்வாறு தென்னிந்திய அரச குடும்பங் களுக்குமிடையில் நெருங்கிய உறவு இருந்து வந்தது. இலங்கையில் அரசாங்க மதம் பௌத்தமாக இருந்த போதும் அரசரின் மதம் சைவ மாகவும் அரண்மனை மொழி தமிழாகவும் இருந்தனவென்று ஆராய்ச்சி வல்ல சேர். பொ. அருணாசலமவர்கள் கூறியுள்ளார்கள். இலங்கை அரச அவையில் பிராமணப் புரோகிதர் இருந்தார். தாம் சத்திரியர் என்னும் நம்பிக்கையினால் இலங்கை அரசர் பூணூலணிந்தனர். இலங்கையை ஆண்ட முதல் அரசனாகிய விசயன் தமிழ் பேசிய சைவ சமயத்தவ னென்பது தமிழரின் ஐதீகம்.
17. மீனோவர் நாடும் தமிழகமும்
பண்டைக்காலத் தமிழர் இந்தியாவில் மாத்திரம் அடைப்பட்டு இருக்கவில்லை. அவர்கள் கிழக்கே பிலிப்பைன் தீவுகள் வரையும் மேற்கே இங்கிலாந்து வரையும் கடல் வழியாகச் சென்று வாணிகம் நடத்தி னார்கள். வாணிகத்தின் பொருட்டுச் சென்ற மக்கள் அந்நாடுகளில் குடி யேறி அங்கு தமது பண்பாடுகளைப் பரப்பினார்கள்; சில சமயங்களில் தாம் குடியேறிய நாடுகளுக்குத் தாமே அதிபதிகளுமானார்கள்.
மத்தியதரைக் கடலின் ஒரு பகுதி ஐசியன் கடல் என வழங்கும். அக்கடலில் கிரீஸ் நாட்டுக்குத் தெற்கில் கிரேத்தா (Crete) என்னும் தீவுளது. அங்கு வாழ்ந்த பழைய மக்கள் மீனோவர் (மீனோஸ்) என அறியப்பட்டார்கள். ஆகவே அவர்கள் வாழ்ந்த நாடு மீனோஸ் நாடு எனவும் அறியப்பட்டது. அங்கு அரப்பா மொகஞ்சதாரோ நாகரிகத்தை ஒத்த நாகரிகம் பெற்ற மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சிந்துவெளி நாகரிகம் மறைந்து போயிற்று. தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அங்குக் கிடந்த மண்மேடுகளை அகழ்ந்து பார்த்தார்கள். மீனோவ அரசரின் அரண்மனைகளும், கட்டடங்களும், தொல்பொருள்களும் அங்குக் காணப்பட்டன. அவற்றைத் துணைக்கொண்டு அங்கு வாழ்ந்த மக்களின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. மொகஞ்சதாரோ எழுத்துக்களின் தோற்றத்தில் ஒத்த எழுத்துகளும் அங்கு காணப்பட்டன. அவ்வெழுத் துகள் இன்னும் வாசிக்கப்படவில்லை. கிரேத்தா மக்களின் நாகரிகத்துக் கும் தென்னிந்திய மக்களின் நாகரிகத்துக்கும் நெருங்கிய உறவு காணப் படுகின்றது. ஆகவே மீனோவர் நாட்டினின்றும் வந்து தென்னிந்தி யாவில் குடியேறியவர்களே தமிழராவர் எனப் பழஞ்சாத்திரக்காரர் சிலர் கருதினர். உண்மை இதற்கு நேர்மாறானது.
கிரீஸ் நாட்டில் எரதோதஸ் (கி.மு. 470) என்னும் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் வாழ்ந்தார். அவர் பல நாடுகளுக்குப் பயணஞ்செய்து அந்நாடுகளின் பழைய வரலாறுகளைத் திரட்டினார்; அவற்றையும் தாம் நேரில் கண்டவற்றையும் ஆதாரமாகக்கொண்டு வரலாற்று நூல் ஒன்றை எழுதினார். அந்நூலில் அவர் மீனோவரைப் பற்றியும் கூறியிருக்கின்றார். அவர் கூறியிருக்கும் ஒரு பகுதியின் சுருக்கம் வருமாறு: “இங்கு வாழும் மக்கள் சூழல்களில் வாழும் சாதியினரிலும் வேறுபட்ட பழக்க வழக்க முடையவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்குத் தந்தை வழியிலும் பார்க்கத் தாய்வழியே முதன்மையுடையது. பிள்ளைகள் தந்தை வழியால் அறியப்படாது தாய் வழியால் அறியப்படுகிறார்கள். இவர்கள் ‘தமிலே’ என அறியப்படுகிறார்கள்”. ‘தமிலே’ என்பது தமிழ் என்பதன் திரிபு என ஆராய்ச்சியாளர் துணிந்திருக்கின்றனர். மலையாளத்தில் மருமக்கள் தாயம் என்னும் தாய்வழிச் சொத்துரிமை இருந்துவருகிறது. தாயம் என்பது தாய் வழியிலிருந்து வருவதென்பதைக் குறிக்கும் சொல். மெகஸ் தீனஸ் என்பவர் பாண்டி நாடு பெண்ணால் ஆளப்படுகிறது எனக் கூறியிருப்பது பழைய நாளில் தமிழ்நாட்டில் தாய்வழியே சொத்துரிமை செல்லும் வழக்கிருந்ததென்பதைக் தெரிவிக்கின்றது. இன்றும் மலைகளி லும், குன்றுகளிலும், காடுகளிலும் வாழும் ஆதிக்குடிகள் சிலரிடையும் இவ்வழக்கு இருந்து வருகிறது.
மீனோவர் ஆசியா மைனரிலுள்ள இலைசியா நாட்டில் சென்று குடியேறினார்கள். அந்நாட்டுக் கல்வெட்டுச் சாசனங்களிலும் ‘தமிலி’ என்னும் பெயர் காணப்படுகிறது. இலைசியாவில் குடியேறியவர்களில் ஒரு பகுதியினர் இத்தாலியில் குடியேறி எத்ருஸ் கானியர் என அறியப் பட்டார்கள். இஸ்பேயின் நாட்டில் வாழ்ந்த பாஸ்க்கு மக்கள் தமிழினத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். பாஸ்க்குகள் மொழியாலும் இரத்தத் தாலும் இந்திய திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என எச்.ஜி. வெல்ஸ் போன்ற அறிஞர் கூறியிருக்கின்றனர்.
கிரேத்தா மக்களின் வழிபாடுகளில் சங்கு வாத்தியம் ஒலிக்கப்பட் டது. சிங்கவாகனத்தோடு சம்பந்தப்பட்டதாய்க் கடவுளும் (காளியும்) பாம்பும் வழிபடப்பட்டன. சங்க இலக்கியங்களில் முல்லைநில மக்களின் விளையாட்டாகச் சொல்லப்படும் ஏறுதழுவுதலை ஒத்த விளையாட்டு கிரேத்தாவில் நடத்தப்பட்டது. அவர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை வரலாற்றுக்கு முந்திய தென்னிந்திய ஈமத்தாழிப் பிணப் புதையல்களை ஒத்துள்ளது. அங்கு அகழ்வு ஆராய்ச்சி நடத்தப்பட்ட ஓரிடத்தின் பெயர் சிவன். அங்கு தூபக்கால் போன்ற சில தொல் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவ்விடம் சிவன் கோயில் ஒன்று இருந்த இடமாகலாம். ஆசியா மைனரில் அனோரேலியா என்னும் மாகாணத்திலுள்ள ஒரு இடத்துக்கும் சிவன் என்னும் பெயரிருந்தது. தென்னிந்தியாவினின்றும் சென்ற கிராதர், கிரீத் தீவில் குடியேறினார்கள் என்றும் கிராதர் என்பதிலிருந்து கிரேத்தா என்னும் பெயர் வந்ததென் றும் சிலர்1 கூறுவர். ஆசியா மைனரில் காரியா (Caria) என்னும் பழைய நாடு ஒன்றிருந்தது. சேரர் அங்கு குடியேறினார்களென்றும் ஆராய்ச்சி யாளர்1 கூறுகின்றனர். பாறையில் குடைந்து செய்யப்பட்ட பழங்காலப் பிண அடக்கம் மலையானத்தல் குழி என அறியப்படும். இவ்வகைப் பழங் காலப் பிண அடக்கம் கரேத்தாவிலும் குழி என அறியப்பட்டது1.
18. ஈழமும், தமிழகமும்
ஐபிராத்து தைகிரஸ் ஆறுகள் ஒன்று சேர்ந்து பாரசீகக் குடாக் கடலுள் விழுகின்றன. முற்காலத்தில் இவ்வாறுகளின் கழிமுகம் ஏறக் குறைய இருநூறு மைல் தொலைவு மேலே இருந்தது. இக் கழிமுகத் துக்குத் தென்கிழக்கில் ஈழம் என்னும் பழைய நாடு இருந்தது. அங்கு பழைய நாகரிகமொன்றிருந்து மறைந்து போயிற்று. அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் மொழி தமிழைப்போல் ஒட்டுச் சொற்களுடை யது. எழுத்து மொகஞ்சதாரோ எழுத்தைப் போன்றது. இவ்வெழுத்துப் பொறிக்கப்பட்ட சாசனங்கள் இன்னும் வாசிக்கப்படவில்லை. அந்நாக ரிகத்துக்கும் தென்னிந்திய பழைய நாகரிகத்திற்கும் ஒற்றுமை காணப்படு கின்றது. தென்னிந்திய மக்களே வட இந்தியா வழியாகச் சென்று ஈழத் தில் தங்கிப் பின் பிற இடங்களுக்குச் சென்றார்கள் என இலண்டன் நூதன பொருட்காட்சிச் சாலையில் தலைவராகவிருந்த டாக்டர் ஹால் தமது ‘கிட்டிய கிழக்கு நாடுகளின் வரலாறு’ என்னும் நூலில் எழுதியிருக் கின்றார் காலஞ்சென்ற கௌரவ பாலசிங்கமவர்கள் “பழைய உலக நாகரிகத்தில் தமிழர் பகுதி” என்னும் தமது விரிவுரையில் இலங்கை (ஈழம்) மக்களே ஈழம் நாட்டில் சென்று குடியேறினார்களெனக் காரணங் காட்டிக் கூறினர். பேராசிரியர் ஆர்.வி. இராமச்சந்திர தீட்சிதரவர்களும் இக் கருத்தைத் “தமிழரின் தொடக்கமும் அவர்கள் பரவுதலும்” என்னும் தமது நூலில் வெளியிட்டிருக்கிறார். ஈழம் நாட்டு மக்கள் இந்திய நாட்டினின்றும் சென்றவர்களெனப் பலர் எழுதியிருக்கின்றனர். ஈழம் மிகப் பழங்காலத்தில் உயர்ந்த நாகரிகம் பெற்றிருந்ததென்பது கந்த புராணம், இராமாயணம் முதலிய நூல்களால் நன்கு அறியக் கிடக்கிறது. புராணங்களில் சொல்லப்படும் இளாவிருதம் இலங்கை என்பது சிலர் கருத்து.
பேராசிரியர் ஆர்.வி. இராமச்சந்திர தீட்சிதர் கூறியிருப்பது வருமாறு: “ஈழம் என்னும் பெயர் மெசபெத்தேமியாவில் காணப்படு கிறது. இலங்கையினின்றும் சென்றவர்கள் அப் பட்டினம் வளர்ச்சியடை வதற்கு ஏதுவாக இருந்தார்களா? சாசனங்களிலும், இலக்கியங்களிலும் இலங்கைக்கு ஈழம் என்னும் பெயர் காணப்படுகிறது. வட ஈழம் மக்கள் அரேபியரைச் சேர்ந்தவர்களாக இருக்கவில்லை, சுமேரியரின் பண்பா டுடையவர்களாக இருந்தார்கள். வட ஈழம் மொழி சுமேரியத்தைப் போல அலாரோடியன் (Alarodian) என்னும் கூட்டத்தைச் சேர்ந்ததன்று. சுமேரிய மொழிக்கும் தமிழுக்கும், நெருங்கிய உறவு காணப்படுகிறது கவனிக்கத்தக்கது. பழைய திராவிடர் உலகப் பண்பாட்டுக்குத் தமது மொழியைக் கொடுத்து உதவினார்களா?”
ஈழத்துக்கு மேற்கே கழிமுகத்தின் மறுகரையில் குடியேறி வாழ்ந்த மக்கள் சுமேரியர் என அறியப்பட்டார்கள். அங்குக் காணப்பட்ட உருவச் சிலைகளிலும் படைப்புச் சிற்பங்களிலும் காணப்படும் மனித வடிவங் களின் முகவெட்டு தோற்றத்தில் தமிழரின் முகத்தை ஒத்திருக்கின்றது. அம்மக்கள் வழங்கிய மொழிக்கும் தமிழுக்கும் நெருங்கிய உறவு காணப் படுகின்றது. தமிழ்ச் சொற்கள் பல சுமேரிய மொழியில் காணப்படு கின்றன. சுமேரியர் தென்னிந்தியாவினின்று சென்றவர்களென வரலாற் றாசிரியர்கள் பலர் எழுதியிருக்கின்றார்கள். சுமேரியா நாட்டின் முக்கிய நகர்கள் சூசா, இலகாஷ் என்பவை. இவ்விடங்களில் நடத்தப்பட்ட புதை பொருள் ஆராய்ச்சியில் மொகஞ்சதாரோ முத்திரைகள் சில கிடைத்தன. சுமேரியா பாபிலோனிய இராச்சியத்தில் சேர்ந்து விட்டது. பாபிலோனி யர் காலத்தில் சுமேரிய மொழி உலக வழக்கிலில்லாது போய்விட்டது. அது இலக்கிய மொழியாகப் பயிலப்பட்டது. அது சமய மொழியாகவும் இருந்தது. சட்டங்கள் அம் மொழியில் எழுதப்பட்டிருந்தன.
அக்காட் நகரைத் தலைநகராகக் கொண்டு சுமேரிய இராச்சியத் தின் ஒரு பகுதியை ஓர் அரச பரம்பரை ஆண்டு வந்தது. அவ்விராச்சியம் அக்கேடியா என அறியப்பட்டது. அக்கேடியரும் சுமேரியரும் ஒரே மொழியைப் பேசினர். ஊர்ப் பட்டினத்தைத் தலைநகராகக் கொண்ட பாபிலோனியாவின் பகுதியைப் பிறிதோர் அரச பரம்பரை ஆண்டது. அவ்விராச்சியம் சால்தியா எனப்பட்டது. சால்தியா என்பது சோழ தேசம் என்பதன் திரிவு என அபினஸ்சந்திஸ்தாஸ் என்னும் வரலாற் றறிஞர் ‘இருக்கு வேத இந்தியா’ (Rigvedic india) என்னும் நூலில் கூறியுள் ளார். இக் கூற்றினைப் பலர் வழிமொழிந்திருக்கின்றனர்.
அசீரியா, பாபிலோனியாவுக்கு வடக்கில் தைகிரஸ் ஆற்றுக்குக் கிழக்கிலிருந்தது. அதன் தலைநகர் நினேவே. அசீரியா பாபிலோனியா வின் குடியேற்ற நாடாகவிருந்தது. அது கி.மு. 1450இல் விடுதலை பெற்றுத் தனி நாடாகப் பிரிந்தது. அது பாபிலோனியா, சிரியா, எகிப்து, யூதேயா முதலிய நாடுகள் அடங்கிய பேரரசாக விளங்கிற்று. கி.மு. 606இல் அசீரியப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. அப்போது பாபிலோனியர் விடுதலை அடைந்தனர். இரண்டாவது பாபிலோனியப் பேரரசு கி.மு. 538இல் முடிவடைந்தது. அப்போது அது பாரசீகத்தின் ஒரு பகுதியாக அடங்கிற்று. அது மறுபடியும் அலெக்சாந்தரால் கி.மு. 324இல் வெற்றி கொள்ளப்பட்டது. அசுர்பானிப்பால் என்னும் அசீரிய அரசன் நாட்டிய கற்றூண் ஒன்றில் இந்திய யானைகளும் குரங்குகளும் காணப்படுகின்றது.
சுமேரிய, பாபிலோனிய, அக்கேடிய, சால்திய, அசீரிய நாகரிகங் களுக்கும், தென்னிந்திய நாகரிகத்துக்கும் நெருங்கிய உறவிருப்பதை வரலாற்றாசிரியர்கள் காட்டுவர். தமிழர் வரலாற்று ஆராய்ச்சிக்கு இந்நாடுகளின் பழைய வரலாறுகள் உதவியளிக்கின்றன.
19. பினீசிய நாடும் தமிழகமும்
பாலஸ்தீனத்துக்கு வடக்கே மத்தியதரைக் கடலோரத்திலிருந்த நாடு முற்காலத்தில் பினீசியா என அறியப்பட்டது. வேதங்கள் பாணிகள் என்னும் மக்களைப் பற்றிக் கூறுகின்றன. பாணிகள் என்பது வணிகர் எனும் சொல்லின் உச்சரிப்பு வேறுபாடு என்றும் இவர்கள் தமிழ் வகுப்பினரென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவர்கள் சென்று குடியேறிய நாடு பினீசியா எனப்பட்டது. பினீசியா என்பதற்குப் பனை (ஈந்து) நாடு என்னும் பொருள் கூறப்படுகிறது. அப்பகுதியில் பல்மைரா என்னும் புராதன நகரும் உண்டு. பினீசியர் புகழ்பெற்ற மாலுமிகளாக வும், வணிகராகவும் இருந்தார்கள். விவிலிய வேதத்தில் கூறப்படும் சாலமன் அரசன் (கி.மு. 900) ஹிரம் என்னும் பினீசிய அரசனைத் துணைக்கொண்டு அவனுடைய மாலுமிகள் மூலம் மரக்கலங்களை ஒபிர் என்னும் இந்தியத் துறைமுகத்துக்குப் போக்கித் தந்தம், பொன், மயில், அகிற்கட்டை, குரங்கு முதலிய அரும் பண்டங்களைப் பெற்றான். ஒபிரென்னும் துறைமுகம் மலையாளக் கரையிலிருந்ததாகக் கருதப்படு கின்றது. ஒபிரினின்றும் பண்டங்களின் தமிழ்ப் பெயர்கள் எபிரேய மொழியில் காணப்படுகின்றன.
பினீசியாவில் மோப் (Moab) நாட்டு அரசனாகிய மெசு (Meshu - கி.மு. 850) நாட்டிய கல்தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத் தூணில் சாசனம் ஒன்று வெட்டப்பட்டுள்ளது. அச் சாசனத்தில் காணப் படும் எழுத்துக்கும் பிராமி எழுத்துக்கும் உறவு காணப்படுகிறது. இதனால், பினீசியரிடம் எழுத்தெழுதும் முறையைப் பயின்ற திராவிட வணிகர் இந்தியாவில் எழுத்தெழுதும் முறையைப் பரப்பினார்கள் என வரலாற்றாசிரியர்கள் எழுதி வந்தார்கள். மொகஞ்சதாரோ புதை பொருளாராய்ச்சிக்குப் பின் இந்தியாவினின்றே எழுத்தெழுதும் முறை பினீசியாவுக்குச் சென்றதெனக் கருதப்படுகிறது.
பினீசிய மக்கள் முற்காலத்தில் பரதர் என அறியப்பட்டார்களென் றும், இவர்கள் பாரத நாட்டினின்றும் சென்றவர்களென்றும், பினீசியர் அல்பியன் எனப்பட்ட பிரிட்டன் தீவில் குடியேறினார்களென்றும், பரதர் குடியேறினமையால் அல்பியன் தீவு பிரிட்டன் எனப்பட்டதென் றும் வடல் (Waddell) என்னும் ஆராய்ச்சி அறிஞர் எழுதியுள்ளார். பினீசியர் ஞாயிற்றுக் கடவுளை பால் (பகல்?) (Baal) என்னும் பெயரால் வழிபட்டார்கள். பினீசிய நாட்டின் முக்கிய பட்டினங்கள் தயர், சிடோன் என்பன. தயர்ப் பட்டினத்தில் பெரிய பகலவன் கோயிலிருந்தது. அங்கு இரு இலிங்கங்கள் நாட்டப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்று பொன்னி னாலும், மற்றது மரகதத்தினாலும் செய்யப்பட்டிருந்தன. இவ்விலிங்கங் கள் பின் சிபிரால்டரில் நாட்டப்பட்டமையால் அவ்விடம் எர்குலிசின் தூண்கள்1 எனப் பெயர் பெற்றது. பினீசியர் இலிங்கங்களையும், இடபத் தையும் வழிபட்டார்கள்.
கி.மு. 13ஆம் நூற்றாண்டளவில் பினீசியர் அக்காலத்தில் அறியப்பட்டிருந்த எல்லா நாடுகளுக்கும் வாணிகத்தின் பொருட்டுச் சென்றார்கள். அவர்களின் பட்டினங்களாகிய தயர் சிடோன் என்பவை அழியாப் புகழ் பெற்றிருந்தன. சுதேச் என்பது பினீசியரின் ஆப்பிரிக்கக் குடியேற்ற நாடு. இங்கு அனிபால் (Hannibal) என்னும் புகழ்பெற்ற வீரன் தோன்றினான். இவன் உலக அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்று கொண் டிருந்தான். உரோமர் கடும்போர் செய்து அவனைத் தோற்கடித்தனர். பினீசியர் இந்தியாவுக்குக் கொண்டு சென்று விற்ற சிவப்புச் சாயமூட்டிய துணி பச்சவடம் என வழங்கிற்று. பச்சவடம் என்பது பினீசிய மொழியில் வழங்கிய பப்புரா (Paupra) என்னும் சொல்லின் திரிபெனக் கருதப்படுகிறது. பப்புரா என்பதிலிருந்து கருஞ்சிவப்பை உணர்த்தும் பேர்ப்பிள் (Purple) என்னும் ஆங்கிலச் சொல் தோன்றிற்று. பினீசியர் எழுத்தெழுதும் முறையை இந்தியாவினின்றும் கொண்டு சென்றார்கள். இவர்கள் கிரேக்கருக்கு எழுத்தெழுதும் முறையைக் கற்பித்தார்கள். கிரேக்கர் அதனை உரோமருக்குக் கற்பித்தனர் இவ்வெழுத்திலிருந்து ஐரோப்பிய மொழிகளின் எழுத்துகள் தோன்றின.
20. ஆசியா மைனரும் தமிழ் நாடும்
ஓமர் காவியத்தில் கூறப்படும் திராய் நகரில் நடத்தப்பட்ட புதை பொருள் ஆராய்ச்சியில் இலிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இல்லி யாட், ஒடிசி என்னும் கிரேக்க காவியங்களில் கூறப்படும் கதைகள் இந்திய புராணக் கதைகள்போலவே இருக்கின்றன. பஞ்சதந்திரக் கதைகள் தென்னிந்தியாவில் தோன்றியவை எனக் கருதப்படுகின்றன. இவை கி.மு. 600 வரையில் ஆசியா மைனரில் வழங்கின. இக்கதைகள் இலைடியா நாட்டு அரசனாகிய குரோசசின் அரண்மனையிலிருந்த ஈசோப் என்பவ ரால் கிரேக்க மொழியில் மொழிபெயர்த்து எழுதப்பட்டன. எரதோ தஸின் (கி.மு. 500) நூலிலும் இக் கதைகளுள் சில காணப்படுகின்றன. கிரேத்தாத் தீவில் வாழ்ந்த மீனோவரே ஆசியா மைனரிலுள்ள இலைசியா வில் குடியேறியிருந்தார்கள். இவர்களும் ‘தமிலே’ என அறியப்பட்டார் கள். தமிலே என்பது தமிழ் என்பதன் உச்சரிப்பு வேறுபாடு. ஆசியா மைனரின் ஒரு பகுதி ஹிதைதி என்னும் பெயரால் அறியப்பட்டது. இவ் விடத்திலும் சிரியாவிலும் சிவ வழிபாட்டு, இடப வழிபாட்டுச் சின்னங் கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிறித்துவுக்கு முன் இரண்டாம் மூன் றாம் நூற்றாண்டுகளில் ஆர்மேனியாவில் கிருட்டிண பலதேவ வழிபாடு களிருந்தன. வான் ஏரிக்கு அயலில் பெரிய கிருட்டிணன் கோவிலிருந்தது. இது கிறித்தவர்களால் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. கி.பி. 4ஆம் நூற்றாண்டில் அங்கு ஐயாயிரம் கிருட்டிண வழிபாட்டினர் இருந்தனர் என்று செனோப் (Zenob) என்னும் சிரிய நாட்டுச் சரித்திர ஆசிரியர் கூறி யுள்ளார். ஆர்மேனிய மொழிக்கும் தமிழுக்கும் ஒற்றுமை காணப்படுகின் றது. இவை போன்ற சில காரணங்களால் ஐபிராத்து தைரிகிரசுக் கழி முகத்திலிருந்து ஆசியா மைனர் வரையும், ஆசியா மைனரிலிருந்து இந்தியா வரையும் ஒரே மொழி வழங்கிய ஓரின மக்கள் மிகப் பழங் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்களென்று பழஞ் சரித்திரக்காரர் கருதுகின்றனர்.
ஹெரஸ் பாதிரியார் கூறியிருப்பது வருமாறு: 1“பழங்காலத்தில் திராவிடக் கூட்டத்தினர் உவண்ணா, ஓடக்கோன் என்பவர்களின் தலைமையில் அயல்நாடுகளுக்குச் சென்றார்கள். இப்பெயர்களை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரோசஸ் என்னும் பாபிலோனிய கோயில் குரு குறிப்பிட்டிருக்கின்றார். பாரசீக வளைகுடாவை அடுத்த நாடுகளில் குடியேறிய தமிழர் சுமேரியர் என அறியப்பட்டார்கள். ஆதியாகமத்தில் காணப்படுகின்றபடி இவர்கள் மொகஞ்சதாரோ அல்லது இந்தியாவின் வேறு நகரங்களில் காணப்பட்டவை போன்ற வீடுகளை அமைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். இக்குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் சிரியா நாட்டில் குடியேறிப் பெரிய ஹிதைதிச் சக்கராதி பத்தியத்துக்குத் தளமிட்டார்கள். இவர்கள் அங்கு நின்று மத்தியதரைக் கடற்கரைகளை அடைந்து பினீசியர் என்னும் பெயர் பெற்றார்கள். அவர்கள் பெரிய கடலோடிகளாகவிருந்து முற்காலத்தில் வாணிகம் நடத்தினார்கள். மற்றவர்கள் கிரீசிலும், ஐசியன் கடல் தீவுகளிலும், இத்தாலி நாட்டிலும் குடியேறினார்கள். இவர்கள் இத்தாலியில் எத்துருஸ்கானியர் எனப்பெயர் பெற்றார்கள். இந்தியாவினின்று வேறு கூட்டத்தினரும் கடல் வழியாகச் சென்று அரேபியாவில் ஏமெனில் குடியேறினார்கள். ஏமனிலிருந்து இவர்கள் நீலஆறு நீர் பாய்ச்சும் நாட்டை அடைந்து வியப்புமிக்க எகிப்திய நாகரிகத்தைத் தோற்றுவித் தார்கள். பின் இவர்கள் ஆப்பிரிக்காவின் வடகரை வழியாகச் சென்று அங்கு குடியேறி நுகர்மெதியர் பேர்பேரியர் எனப் பெயர் பெற்றார்கள். அவர்கள் ஐபீரியக்குடா நாட்டில் சென்று வாழ்ந்த போது, உரோமர் அவர்களைச் சந்தித்து அவர்களை ஐபீரியர் என அழைத்தனர். இறுதி யில் ஐபீரியர் சிலர் வடக்கு நோக்கிச் சென்று மத்திய ஐரோப்பாவிலும் பிரிட்டனிலும் குடியேறினார்கள். பிரிட்டனில் இவர்கள் துரீயிட்ஸ் என அறியப்பட்டார்கள். இந் நாகரிகங்களெல்லாம் ஒரு இடத்தினின்றும் சென்றமையால் அவைகளுக்கிடையில் இணைப்புக் காணப்படுகின்றது.1
21. சீனாவும் இந்தியாவும்
அசோகச் சக்கரவர்த்தி பௌத்த சமய போதகர்களைச் சீனாவுக்கு அனுப்பினார். அக்காலம் முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை மிகப் பல யாத்திரிகர்களும், அறிஞர்களும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போக்கு வரத்துச் செய்தார்கள். அவர்கள் இமயமலையையும் மத்திய ஆசியாவி லுள்ள மலைகளையும் தாண்டி கோபிவனாந்தரத்துக்கு ஊடாகப் பயணம் செய்தார்கள். இப் பயணங்களில் பெரும்பாலான யாத்திரிகர்கள் இறந்தார்கள். ஒரு அந்தத்திலிருந்து மறு அந்தத்தை அடைந்தவர்கள் மறுபடி தமது நாட்டுக்குத் திரும்பிச் செல்லவில்லை; தாம் சென்ற நாட்டிலேயே தங்கி வாழ்ந்தார்கள். இந்துச்சீனம், சாவகம், சுமத்திரா, மலாயா முதலிய நாடுகள் வழியாகக் கடல் வழி ஒன்றும் இருந்தது. தரை வழியாகச் சென்ற பிரயாணிகள் சில சமயங்களில் கடல் வழியாக மீண்டார்கள். மத்திய ஆசியாவிலும் இந்தோனேசியாவிலும் இந்தியப் பண்பாடும் பௌத்த மதமும் சைவ, வைணவ மதங்களும் பரவியிருந்தன. அவ்விடங்களில் பல பௌத்த மடங்களும் போதனா சாலைகளும் நிறுவப்பட்டிருந்தன. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் பயணம் செய்வோர் இம்மடங்களில் தங்கிச் சென்றார்கள்.
இந்தியாவினின்றும் சீனாவுக்குச் சென்ற காசியப்ப மதங்கர் என்னும் இந்தியர் கி.பி. 67இல் சீனாவை அடைந்து உலோயாங் என்னுமிடத்தில் வாழ்ந்தார். இருவருக்குப் பின் பல இந்திய அறிஞர் சீனாவுக்குச் சென்றனர். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் சீனாவிலே உலோயான் மாகாணத்தில் 3,000 இந்திய பௌத்த குருமாரும் 1,000 இந்தியக் குடும்பத்தினரும் இருந்தார்கள்.
சீனாவுக்குச் சென்ற இந்திய அறிஞர் சமக்கிருதத்தில் எழுதப்பட்ட பல பௌத்த நூல்களைத் தம்முடன் கொண்டு சென்று அவற்றைச் சீனத்தில் மொழி பெயர்த்தனர். புதிய நூல்களையும் அவர்கள் சீன மொழியில் எழுதினார்கள். கி.பி. 401-இல் சீனாவுக்குச் சென்ற குமார விசயர் என்னும் இந்தியர் 47 நூல்களைச் சீன மொழியில் எழுதினார். இவை இன்றும் உள்ளன. அவர் நாகார்ச்சுனர் வரலாற்றையும் சீனத்தில் மொழி பெயர்த்து எழுதியுள்ளார். சீன குப்தர் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 37 சமக்கிருத நூல்களைச் சீனத்தில் மொழி பெயர்த்தார்.
சில சீன யாத்திரிகர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள். இவர்களில் மிகப் புகழ் பெற்றவர்கள் பாகியன், ஹ]வான் சுவாங், இத்சிங் (I-tsing) என்போர். பாகியன் ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த குமாரசிவா என்பவரின் மாணவன். பாகியன் பாடலிபுத்திரப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றான்.
ஹூவான் சுவாங் என்னும் சீன யாத்திரிகன் ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தான். அக்காலத்தில் ஹர்சவர்தனன் என்னும் அரசன் வட இந்தியாவில் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தான். ஹூவான் சுவாங் கோபிவனாந்தரம் வழியாக வந்து இமயமலையைக் கடந்து இந்தியாவை அடைந்தான். இவன் இந்தியா முழுமையிலும் யாத்திரை செய்தான். இவன் நாளந்தாப் பல்கலைக் கழகத்தில் ஏழு ஆண்டுகள் கல்வி பயின்று சட்டக் கல்வி பயின்று சட்டக் கல்வியில் தேறி அக்கலாசாலையிலேயே சில காலம் துணைத் தலைவராகக் கடமையாற்றினான். நாட்டின் பல பாகங்களிலிருந்து பலர் இக்கலாசாலையில் கல்வி பயில்வதற்குச் சென்றனர். அவன் காலத்தில் மாணவரும் குருமாருமாக ஏறக்குறைய ஆயிரவர் அங்கு தங்கியிருந்து கல்வி பயின்றனர். நாளந்தாக் கலாசாலை யில் நுண்கலைகள், கைத்தொழில், மருந்து, தர்க்கம், தத்துவ ஞானம் முதலிய கல்விகள் கற்பிக்கப்பட்டன. துறவிகளும் குருமாரும் ஆசிரியர் களாக இருந்து கடமையாற்றினர்.
ஹூவான் சுவாங் பல கையெழுத்து நூல்களை எடுத்துக் கொண்டு தான் வந்த பாதை வழியாக மீண்டும் சென்றான்; சென்றதும் தான் கொண்டு சென்ற நூல்களில் பலவற்றைச் சீனத்தில் மொழி பெயர்த்தான். அவன் மரணமடைந்த பின் இத்சிங் என்னும் சீன யாத்திரிகன் இந்தியா வுக்கு வந்தான். இவன் கி.பி. 671இல் பயணத்தைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளின் பின் இந்தியாவை அடைந்தான். சமக்கிருதம் பயிலும் பொருட்டுச் சில காலம் சுமத்திராவில் தங்கியிருந்த பின்பே அவன் இந்தியாவை அடைந்தான். அக் காலத்தில் சுமத்திரா, மலாயா, இந்தியா, பாரசீகம் முதலிய நாடுகளுக்கிடையில் ஒழுங்காக மரக்கலப் போக்கு வரத்து நடைபெற்றது. இத்சிங்கும் நாளந்தாப் பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகள் கல்வி பயின்றான். அவன் செல்லும்போது தன்னுடன் பல நூல்களைக் கொண்டு சென்றான்.
இந்தியாவில் பௌத்த மதம் வீழ்ச்சியடைந்ததும் இந்திய அறிஞர் சீனாவுக்குச் செல்லுதல் நின்று போயிற்று. பௌத்த தலங்களைத் தரிசிப்பதற்குச் சீன யாத்திரிகர் இடையிடையே இந்தியாவுக்கு வந்தனர். 10ஆம் நூற்றாண்டு முதல் இந்தியாவில் தோன்றிய அரசியல் புரட்சிகள் காரணமாகப் பௌத்த பிக்குகள் தம்மிடமிருந்த கையெழுத்து நூல் களை எடுத்துக் கொண்டு நேபாளம், திபெத்து முதலிய நாடுகளுக்குச் சென்றார்கள். சீனாவில் இந்தியாவினின்றும் கொண்டு போகப்பட்ட 8000 கையெழுத்து நூல்கள் வரை காப்பாற்றப் பட்டுள்ளன. கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் சீனாவில் மரக்கட்டை யில் வெட்டிய எழுத்துக்களால் அச்சிடப்பட்ட சமக்கிருத நூலொன்று காணப் படுகிறது. இத்சிங் என்னும் யாத்திரிகன் கூறியிருப்பது வருமாறு:
“விருந்தளிப்பவர்கள் பௌத்த குருமாரை வணங்கி அவர்களை வீட்டுக்கு வரும்படி அழைக்கிறார்கள். விருந்தில் பெரும்பாலும் செப்புப் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை சாம்பலிட்டுச் சுத்தம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு பௌத்த குருவுக்கும் ஒவ்வொரு மணை இடப்படுகிறது. ஒருவர் மற்றவரோடு முட்டாமல் இருக்கும்படி மணைகள் இடப்படுகின்றன. மண் பாத்திரங்கள் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தப்படுவதில்லை. ஒரு முறை பயன்படுத்தப்பட்ட மட்பாத்தி ரங்கள் குழியில் எறியப்படுகின்றன. பயன்படுத்தப்பட்ட மட்பாத்திரங் களை ஒருபோதும் வைத்திருத்தல் கூடாது. பிச்சையிடும் இடங்களில் இவ்வாறு வீசப்பட்ட பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. சீனாவில் செய்யப்படுவன போன்ற உயர்ந்த மட்பாண்டங்கள், பயன்படுத்தப்பட்ட பின் சுத்தம் செய்து வைக்கப்படுகின்றன. விருந்தினர் உண்ணும் இடம் பசுவின் சாணியால் மெழுகப்படுகின்றது. விருந்தினர் சம தூரத்தில் இடப்பட்ட மணைகளில் இருப்பார்கள். பெரிய பானைகளில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தமது மேலுடைகளைக் கழற்றுவார்கள். தண்ணீரில் பூச்சிகள் அல்லது புழுக்கள் இருக்கின்றனவோ என்று பார்த்து அவை இல்லாவிடில் அந்நீரில் கைகளைக் கழுவுவார்கள். பின்பு சிறிது இளைப்பாறி இருப்பார்கள். குருமார் தமது கைகளைப் பயற்றை மாவு அல்லது மண்ணைத் தேய்த்துக் கழுவுவார்கள். குருமார் குண்டிகையி லிருக்கும் நீரைப் பயன்படுத்துவர் அல்லது விருந்துக்கு அழைத்தவர் வார்க்கும் நீரைப் பயன்படுத்துவர். பின் அவர்கள் பீடங்களில் அமர் வார்கள். உண்ணும் தட்டுகள் அவர்களிடம் கொடுக்கப்படும். உண்ணு முன் கடவுளைத் துதித்தல் வழக்கமன்று. விருந்துக்கழைத்தவர் உணவைப் பரிமாறுவர். உணவைப் பரிமாற முன்முதலில் பெருவிரற் பருமையுள்ள இஞ்சித்துண்டும் ஒரு கரண்டி நிறைந்த உப்பும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகின்றன. உணவைக் கொடுப்பவர் தலைமைக் குருவின் முன் கைகட்டி முழங்கால் மடித்து நின்று அவருக்கு வணக்கம் கூறுவார். குரு, “உணவை எல்லோருக்கும் ஒரே வகையாகப் பரிமாறு” என்று கூறுவார். உணவு படைக்கப்பட்டதும் விருந்தினர் உணவை உண்பர். எல்லோருக்கும் உணவு படைத்த பின் உண்ண வேண்டுமென்று பொறுத்திருக்கவேண்டியதில்லை.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மிகப் பழங்காலம் முதல் உறவு இருந்து வந்தது. பட்டைப்பற்றி மாபாரதம் குறிப்பிடுகின்றது. சீனம் என்பது பட்டுக்கு மற்றொரு பெயர். கீசகம் (மூங்கில்) சிந்தூரம், (செங்காவி) முதலிய சொற்கள் சீன மொழிக்குரியனவாகச் சொல்லப்படு கின்றன. வெள்ளைச் சர்க்கரை முற்காலத்தில் சீனாவிலிருந்து வந்தமை யால் அது சீனி எனப் பெயர் பெற்றது.
22. தென்னிந்தியர் குடியேறிய நாடுகள்
இந்தியக் கடற்கரைகளில் வாழ்ந்த மக்கள் பெருங் கடலோடி களாக இருந்தார்கள். அவர்கள் பழங்காலத்தில் மேற்கு நாடுகளோடு கடல் வழியாக வாணிகம் செய்தார்கள். வட இந்தியர்களிலும் பார்க்கத் தென்னிந்திய மக்களே கடல் வாணிகத்தில் அதிக பங்கு பற்றினார்கள். யவன நாட்டு வாணிகப் பண்டங்களைப் பற்றிச் சங்க காலத் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. கிழக்கிலுள்ள தீவுக் கூட்டங்களில் சென்று குடியேறுவதில் தென்னிந்தியர் அதிகப் பங்கு எடுத்தனர். தொடக்கத்தில் நாடு கண்டுபிடிக்கும் பொருட்டுப் பலர் தென்னிந்தியாவினின்றும் அங்குச் சென்றார்கள். வாணிகம் வளர்ச்சியடைந்த பின் பல குடும் பங்கள் அவர்கள் வாணிகம் நடத்திய நாடுகளுக்குச் சென்றன. குடியேறிய மக்கள் பெரும்பாலும் கலிங்க நாட்டிலும் கிழக்குக் கடலோரங்களிலும் வாழ்ந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். பல்லவ நாட்டினின்றும் பலர் சென்றனர். இக்குடியேற்றம் கி.பி. முதலாம் நூற்றாண்டில் தொடங்கிச் சில காலம் நடைபெற்றது. பர்மா, சீயம், இந்துச் சீனம் முதலிய நாடு களினின்றும் சுமத்திரா, யாவா, போர்ணியோ, செலிபிஸ், பிலிப்பைன் முதலிய தீவுக் கூட்டங்களிலும் அவர்கள் குடியேறினார்கள்; தாம் குடியேறி வாழ்ந்த இடங்களுக்கு இந்தியப் பெயர்களை இட்டார்கள். இந்நாடுகளிலும் தீவுக் கூட்டங்களிலும் குடியேறிய மக்கள் உள்நாட்டு மக்களோடு கலவாது சில காலம் தனித்து வாழ்ந்தார்கள்; சிறிது காலத் தின் பின் சிறிது சிறிதாக உள்நாட்டு மக்களோடு கலந்தார்கள். ஆகவே அவர்கள் இந்தியாவோடு தொடர்பு கொள்வதை மறந்தார்கள். இந்தியர் குடியேறி வாழ்ந்த தீவுக் கூட்டங்களிலும் நாடுகளிலும் இந்து இராச்சி யங்கள் எழுந்தன. இவற்றை அடுத்துப் பௌத்த இராச்சியங்களும் தோன்றின. பௌத்தரும் இந்துக்களும் அதிகாரத்துக்காகப் போராடி னார்கள். குடியேறிய மக்கள் கட்டி எழுப்பிய பட்டினங்கள் கோயில் களின் இடிபாடுகள் அந்நாடுகளில் காணப்படுகின்றன. ஆயிரத்து நானூறு ஆண்டுகள் இந்து பௌத்த மதங்கள் இந்நாடுகளில் நிலை பெற்றன. பதினைந்தாம் நூற்றாண்டில் முசுலிம்கள் இந்நாடுகளில் தலைமை எய்தினர். இவர்களை அடுத்து இஸ்பானியரும், ஒல்லாந்தரும், ஆங்கிலரும், அமெரிக்கரும் ஒருவர் பின் ஒருவராக வந்தனர்.
23. பர்மா
கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியர் பர்மாவில் குடியேறி இருந் தார்களென்பது எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இதற்கு மிகப் பழங்காலம் முதல் இந்தியர் பர்மாவில் குடியேறியிருந்தார் களெனப் பழங்கதைகள் கூறுகின்றன. பர்மாவின் பல இடங்களில் பல சாசனங்கள் கிடைத்தன. அச் சாசனங்களால் அங்கு சைவ, வைணவ மதங்களையும், மகாயான, ஹீனயான, பௌத்த மதங்களையும் மேற் கொண்ட மக்கள் வாழ்ந்தார்கள் என்பது புலனாகின்றது. புரோம் என் னும் ஊர் அப்பொழுது சிறீ சேத்திரம் என்னும் பெயர் பெற்றிருந்தது. ஆற்றிடைக்குறைகளை அடுத்து வாழ்ந்த மக்கள் பெரிதும் கலிங்கம் ஆந்திரம் முதலிய நாடுகளினின்றும் சென்றவர்களாக இருந்தனர். காசியினின்றும் சென்ற அரச குமாரனொருவன் அக்காலத்தில் வைசாலி என அறியப்பட்ட அரக்கனில் தனது இராச்சியத்தைக் கோலினான். பர்மாவை ஆண்ட அரசர் பலர் தமது பட்டினங்களுக்கு இந்தியப் பட்டினப் பெயர்களைச் சூட்டினர். பல்லவர் கதம்பர் கல்வெட்டுகளும் தென்னிந்திய எழுத்துப் பொறிக்கப்பட்ட தொல்பொருள்கள் சிலவும் பர்மாவில் கிடைத்துள்ளன. பகான் என்னுமிடத்தில் தமிழில் பொறிக்கப் பட்ட கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அக் கல்வெட்டால் அங்குத் திருமால் கோயில் இருந்ததென்றும் அங்குத் தமிழர் வாழ்ந்தனர் என்றும் தெரியவருகின்றன. பெகு என்னுமிடத்திலுள்ள ஆனந்தா என்னும் கோயில் தென்னிந்திய சிற்பிகளால் அமைக்கப்பட்டதெனச் சிற்ப வல்லார் கருதுகின்றனர்.
24. மலாயா
தென்னிந்தியர் மலாயாவில் நீண்ட காலத்தின் முன் குடியேறி யிருந்தார்கள். சங்கத் தொகை நூல்களில் வெற்றிலையைப் பற்றிய குறிப்புக் காணப்படவில்லை. பிற்கால நூல்களில் வெற்றிலையைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மலாய தீபகற்பத்திலிருந்தோ மலாய்த் தீவுகளிலிருந்தோ வெற்றிலை தமிழ் நாட்டுக்கு முதன்முதல் கொண்டு வரப்பட்டதெனக் கருதப்படுகின்றது. மலாயாவிற் கிடைத்த கல்வெட்டுக்கள் தென்னிந்திய எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. மலாயாவில் வாழ்ந்த இந்திய மக்கள் கிளிங் என அறியப்பட்டார்கள். கிளிங் என்பது கலிங்கம் என்பதன் திரிபு. சிங்கப்பூர் என்பது சாவக நாட்டிற் குடியேறி அங்கு நின்றும் வெளியேறிய மக்களால் மலாய்த் தீபகற்பத்தைச் சேர்ந்த தீவுக்கு இடப்பட்ட பெயர். கலிங்க நாட்டில் சிங்கபுரமென்னும் பட்டினமிருந்தது. மலாயாவில் கோபுரா இசுவம் (Hopura-Isuom) என்னுமிடத்தல் விநாயகர் சிலை ஒன்றும் காணப்பட்டது. அதன்மீது தென்னிந்திய எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அங்கு நடராசத் திருவுருவம் ஒன்றும் கிடைத்தது. வியோங்ஸ்நா என்னுமிடத்தி லுள்ள கோயிலில் திருமாலின் திருவடிவமும் வயிரவக் கடவுளின் திருவடிவங்களும் காணப்படுகின்றன. கெடா என்னுமிடத்தில் நடத்தப் பட்ட புதைபொருள் ஆராய்ச்சியில் பழைய சிவன் கோயிலின் பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இக் கட்டிடம் பல்லவர் காலத்துத் தென்னிந்திய கோயிலமைப்பை ஒத்திருக்கின்றது. அதன் அண்மையில் காணப்படும் மற்றொரு கோயிலின் கூரை மாமல்லபுரத்து இரதங்களின் கூரைகளைப் போல அமைந்திருக்கின்து. தாதுகோபுரமொன்றில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கிடைத்தது. நந்திவர்மன் பெயரால் (கி.பி. 826-50) நாங்கூர் தலைவர் ஒருவர் ஆவணி நாரணம் என்னும் ஏரி ஒன்றை அமைத்ததாக அக் கல்வெட்டு கூறுகின் றது. மலாய் மக்களின் வாழ்க்கை முறைகள் தென்னிந்திய மக்களின் வாழ்க்கை முறைகளை ஒத்திருக்கின்றன. மலாய் மொழியில் பல சமக் கிருதச் சொற்களும் தமிழ்ச் சொற்களும் காணப்படுகின்றன. தென்னிந் திய பண்பாடுகள் அதிகம் காணப்படும் கெடா (Kedah) என்னுமிடமும் சோழர் சாசனங்களில் காணப்படும் கடாரமும், சமக்கிருத இலக்கியங் களில் காணப்படும் கடாரமும் ஒன்று என்று சிலர் துணிகின்றனர்.
25. சுமத்திராவும் சாவகமும்
மணிமேகலை என்னும் நூல் ஆயிரத்து எண்ணூறு ஆண்டு களுக்கு முற்பட்டது. அந் நூல் சாகவ நாட்டைப் பற்றியும் அதன் முக்கிய நகரமான நாகபுரத்தைப் பற்றியும் அந்நாட்டு அரசர்களாக இருந்த பூமிச்சந்திரன் புண்ணியராசன் என்பவர்களைப் பற்றியும் கூறுகின்றது. அக்காலத்தில் சுமத்திரா சாவகம் என்னும் தீவுகளுக்கும் தமிழகத்துக்கும் இடையில் மரக்கலப் போக்குவரத்தும் வாணிகமும் இருந்தன. முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளில் தென்னிந்திய மக்கள் சுமத்திராவில் குடியேறி இருந்தார்கள். இக் காலத்திலும் சுமத்திராவில் வாழும் சுரோ, படக் என்னும் நாகரிகமற்ற மக்களிடையே சோழிய, பாண்டிய, மெலியாள, பெலவி (பல்லவ) தெகங் (தெலுங்க?) முதலிய பெயர்கள் வழங்குகின்றன. அப் பெயர்கள் அம்மக்களுக்கும் தென்னிந்தியாவுக்கு முள்ள தொடர்பைக் காட்டுகின்றன. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் சுமத்திராவில் இந்து சமயம் பரவியிருந்தது. சுமத்திராவில் சிறீவிசயா என்ற அரசு கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் உயர்நிலை எய்தியிருந்தது. மலாயா, போர்ணியோ, பிலிப்பைன், செலிபிசி, யாவாவின் பாதி, பர்மோ சாவின் பாதி என்பன இவ் விராச்சியத்தில்அடங்கியிருந்தன. இன்று பெரிய பட்டினமாகக் காட்சியளிக்கும் சிங்கப்பூர் சுமத்தரா மக்களின் குடியேற்றத் தீவாகவிருந்தது. சிறீவிசயா என்னும் பேரரசு 8-ஆம் நூற் றாண்டில் சைலேந்திரப் பேரரசு எனப் பெயர் பெற்றிருந்தது. சைலேந்திர அரசருக்கும் சோழ அரசருக்குமிடையில் நட்பு இருந்துவந்தது. மாற விசயோத்துங்கவர்மன் என்னும் சைலேந்திர அரசன் 1007-இல் தமிழ் நாட்டில் ஒரு பௌத்த ஆச்சிரமம் கட்டிவைத்தான்.
தமிழர் குடியேறிய இடங்களில் பெரிய கட்டிடங்கள் எழுந்து கொண்டிருந்தன. இந்தியாவினின்றும் சென்ற சிற்பிகள் கட்டிடங்களைத் திறமையாக அமைத்தார்கள். கட்டிடங்கள் எடுப்பதில் போட்டிகள் உண்டாயின. ஆகவே உயர்ந்த அமைப்புடைய கட்டடங்கள் எடுக்கப் பட்டன. சுமத்திராவில் இலாரா யோங்ராங் (Lara Yongrang) என்னுமிடத் தில் பல ஆலயங்கள் கூட்டமாக அழிந்து கிடக்கின்றன. இக் கோயில்கள் சிவன், பிரமன், திருமால், நந்தி முதலிய கடவுளருக்குரியவை. இங்கு விநாயகக் கடவுளின் திருவடிவங்களும் பாதி சிவனும் பாதி அம்மனுமாக அமைந்த உருவமும் காணப்படுகின்றன.
“ஜாவகத் தீவில் அகப்பட்டுள்ள சிவன், விட்டுணு, பிரமன் ஆகிய திருமூர்த்திகளின் கற்சிலைகளின் முக்கிய அமிசங்களை ஆராயும்போது அவை தென்னிந்தியாவைச் சேர்ந்த பல்லவர்கள் அல்லது சாளுக்கியர் களின் சிற்ப சாத்திரத்துடன் தொடர்புள்ளனவாக இருத்தல் வேண்டு மெனச் சிற்ப சாத்திர நிபுணர்கள் கருதுகிறார்கள். இதனால் அகத்திய கோத்திரத்தினரோ அவரது கூட்டத்தைச் சேர்ந்தவர்களோ ஜாவகத் தீவிற் குடியேறி இந்தியக் கலாசாரத்தைப் பரப்பினார்கள் எனத் தோன்றுகிறது.
கலிங்க நாட்டினின்றும் 20,000 இந்தியக் குடும்பங்கள் சாவகத்திற் குடியேறினார்களென்று இடைக் காலச் செய்திகள் கூறுகின்றன. அங்கு கிடைத்த கல்வெட்டுகளின் எழுத்து பல்லவ கால எழுத்தாகக் காணப்படு கிறது. சாவக மக்களின் மொழி, இலக்கியம், அரசியல் சமூக அமைப்பு என்பன இந்தியக் கருத்துக்களைப் பின்பற்றியவை. சாவக மக்களின் நுண் கலை வளர்ச்சிக்கு மாபாரதமும் இராமாயணமும் உதவியளித்தன. இந்துக்களின் இதிகாசங்களும், புராணங்கள் சிலவும் இன்று பாலி மொழியில் உள்ளன.
சாவக மக்கள் சிவனையே மேலான கடவுளாகக் கொண்டு வழி பட்டார்கள். அவ்வாறே அம்மனையும் வழிபட்டார்கள். விநாயகர், முருகக் கடவுளரின் திருவுருவங்களும் அங்கு காணப்பட்டன. கருட வாகனத்திலிருக்கும் திருமாலும் அவருடைய பத்து அவதாரங் களும் சிற்பங்களிற் காணப்படுகின்றன. இடி எவ்க்கில் (Dievvg plateau) கட்டப் பட்டுள்ள கோயில்களின் அமைப்பு குப்தர் காலக் கட்டிடச் சிற்பக் கலையைச் சேர்ந்தது. போராபுதூர் என்னுமிடத்தில் பெரிய பௌத்த கோயிலின் அழிபாடு காணப்படுகிறது. இக்கோயிற் சிற்பங்கள் புத்தரின் செயல்களையும் சாதகக் கதைகளையும் விளக்குகின்றன.
பாகியன் கி.பி. 414இல் சாவகத்துக்குச் சென்றபோது அங்கு இந்து மதம் ஓங்கியிருந்ததைக் கண்டான். கிழக்கு ஜாவாவில் ஐந்நூறு கோயில் களுக்குமேல் இருந்தன. அவை ஏழாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற் றாண்டுக்குமிடையிற் கட்டப்பட்டவை.
26. போர்ணியோவும் பாலியும்
போர்ணியோவில் இந்தியப் பண்பாடு பரவியிருந்தது என்பதை அங்குக் கிடைத்த சாசனங்கள் வெளியிடுகின்றன. இவை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் சமக்கிருதத்தில் பொறிக்கப்பட்டவை. பிராமணருக்குப் பசுக்களும் பொன்னும் தானமாக வழங்கப்பட்டதை இவை குறிப்பிடு கின்றன. பிராமணர் போர்ணியோவில் முதன்மை பெற்றிருந்தார்கள். அரண்மனையில் இவர்களின் கிரியைகள் முக்கியம் பெற்றிருந்தன. போர்ணியோவில் கல்லிற் செதுக்கப்பட்ட உருவச் சிலைகள் பல அகழ்ந்து எடுக்கப்பட்டன. அவை சிவன், கணேசர், நந்தி, அகத்தியர், பிரமா, மகா காலர் முதலியவர்களின் திருவுருவங்களாக உள்ளன. மேற்குப் போர்ணி யோவில் புத்தரின் ஏழு உருவங்களும் பல போதி சத்துவரின் உருவங் களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை இந்தியச் சிற்பிகளின் வேலைப் பாடுகளாக உள்ளன. கிழக்குப் போர்ணியோவில் மரத்தினால் எடுக்கப் பட்ட பழைய கோவிலில் சிவ பெருமான், புத்தர் பெருமான் ஆகியோ ரின் அழகிய சிலைகள் உள்ளன. அவை கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என ஆராய்ச்சியாளர் துணிகின்றனர். போர்ணியோ மக்கள் பல்லவர்களிடமிருந்து எழுத்தெழுதும் முறையைப் பயின்றனர். “போர்ணி யோவின் கூட்டை (Koetai) பிராந்தியத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களின் எழுத்து பல்லவ மன்னரான மகேந்திரவர்மனின் மகேந்திரவாடி தளவனூர் சாசனங்களின் எழுத்தை ஒத்திருப்பது இங்கு நோக்கத்தக்கது. பல்லவ சாசனங்களில் வழங்கி வந்த கிரந்த எழுத்து போர்ணியோ, ஜாவகத் தீவுகளில் பழங் கல்வெட்டுகளில் வழங்கிவந்த கிரந்த எழுத்துகளுடன் நெருங்கிய தொடர்புள்ளதாக இருக்கவேண்டும் என்று ஹாலந்து நாட்டு வரலாற்றுச் சாசன ஆராய்ச்சி நிபுணரான டாக்டர் வோகெல் (Dr. Vogal) கருதுகிறார்.”1
பாலித்தீவு இன்றும் இந்தியப் பண்பாட்டையும் நாகரிகத்தையும் காப்பாற்றி வருகின்றது. பாலி மக்களில் ஆடவரும் மகளிரும் மாலைக் காலத்து இராமாயணம் பாரதம் என்னும் நூல்களைப் படிப்பதைக் கேட்பதற்குக் கோயில்களுக்குச் செல்கிறார்கள். இலக்குமியும் சத்திய பாமையும் இரு பக்கங்களில் நிற்கும் திருமாலின் திருவடிவமொன்றும் பாலித் தீவிற் கண்டுபிடிக்கப்பட்டன.
27. பிலிப்பைன் தீவுகள்
பிலிப்பைன் தீவுகளில் குடியேறியவர்கள் தென்னிந்திய மக்கள் என்பதைச் சான்றுபடுத்தும் ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. பிலிப்பைன்தீவு எழுத்துக்கும் தென்னிந்திய எழுத்துக்கும் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகின்றது. உரோமு வால்டேஸ் என்னும் புகழ்பெற்ற பிலிப்பைன் நாட்டு ஆராய்ச்சியாளர், “எங்கள் எழுத்து திராவிட இனத்தைச் சேர்ந்தது” என்று கூறியுள்ளார். உலூசன், மின்டானோ என்னும் மலைகளில் வாழும் மக்கள் இந்தியக் கடவுளராகிய மும் மூர்த்தி களை வழிபடுகிறார்கள். அட்டின்னோ டி மனிலா என்னுமிடத்தில் பழம் பொருளாராய்ச்சியாளர் ஒருவர் கணேச உருவச்சிலை ஒன்றை வைத் திருக்கிறார். பிலிப்பைன் மக்களின் நாட்டுக் கதைகள் பெரும்பாலும் இந்தியாவுக்கு உரியவை. பொருள்களின் கைவேலைப்பாடுகளும், அங்கு வழங்கிய நாணயங்களும், பழைய பெயர்களும் இந்தியச் செல்வாக்கைப் புலப்படுத்துகின்றன.
செலிபிஸ் தீவில் சிவ வழிபாட்டைக் குறிக்கும் பல அடையாளங்கள் காணப்படுகின்றன. செலிபிஸ் மக்களின் பழங்கதைகளில் சிவன் பாரத குரு என வழங்கப்படுகிறார். நியூகினியில் நடைபெறும் சமயக் கிரியைகள் சிவவழிபாட்டின் சிதைவுகள் என குரோபேட் என்னும் ஆராய்ச்சி அறிஞர் கூறியுள்ளார்.
பசிபிக் கடலிலுள்ள பொலினீசியத் தீவுகளிலும் இந்தியப் பண்பாடு பரவியுள்ளது. பொலினீசியரின் மொழி முண்டர், சந்தால் என்னும் மக்கள் பேசும் மொழிக்கு இனமுடையது. அவர்களின் சங்கு வாத்தியம் மூக்கால் ஊதும் குழல் முதலியன இந்தியாவினின்றும் சென்றவை. ஹாவேத்தீவாரின் குலா ஆட்டமும் சாமோத்தீவாரின் சிவன் ஆட்டமும் வங்காள நாட்டு ஆடல்கள் போன்றவை. பொலினீசியரின் சோடிப்பு வகைகளை இந்தியாவிலும் கம்போடியாவிலும் காணலாம். பொலினீசிய மக்களின் முக்கிய உணவுப் பொருள்கள் சிலவும் அவர்கள் வளர்க்கும் விலங்குகளும் இந்திய நாட்டுக்குரியன. அவர்களின் கோயில்களும் கிரியைகளும் பிறவும் அவர்களுக்கும் இந்தியாவுக்கு முள்ள தொடர்பை விளக்குகின்றன.
“கி.மு. ஏழாம் நூற்றாண்டில் சீன வணிகர் இந்தியப் பண்டங் களைக் கடல்வழியாகச் சீனாவுக்குக் கொண்டு சென்றார்கள் என்பதற்குச் சீன நூல்களில் ஆதாரங் காணப்படுகின்றது. கிறித்துவுக்குமுன் முதல் ஆயிரம் ஆண்டுகளைச் சேர்ந்த இரும்புக் காலப்பொருள்கள் பல பிலிப்பைன் தீவுகளிற் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அதே காலத்தைச் சேர்ந்த தமிழக இரும்புக் காலப் பொருள்களை ஒத்திருக் கின்றன. அங்கு கிடைத்த பொருள்கள் கத்திகள், கோடரிகள், குத்து வாள்கள், ஈட்டி முனைகள், கண்ணாடி மணிகள், கண்ணாடிக் காப்புகள், சூதுபவளம், போலி இரத்தினக் கற்கள், பளிங்குகள் என்பவற்றால் செய்யப்பட்ட மணிகள் என்பன. இவ் வகைப் பொருள்கள் மலாயாவி லும் வடக்குப் போர்ணியோவிலும், சாவகம் முதலிய இடங்களிலும் காணப்பட்டன. இதனால் கிறித்துவ ஆண்டு ஆரம்பிப்பதற்கு நீண்ட காலத்தின் முன்னரே தென்னிந்திய மக்கள் மலாயாவுக்கும் கிழக்கிந்தியத் தீவுகளுக்கும் சென்றிருந்தார்களென்பது நன்கு புலனாகின்றது. கிறித்துவ ஆண்டுத் தொடக்கத்தின் பின் கூறப்பட்ட நிகழ்ச்சிகள் தென்னிந்திய மக்களின் இரண்டாவது தொடர்புகளைக் குறிக்கின்றன.”.1
28. சீயம் (தாய்லாந்து)
கி.மு. ஏழாம் நூற்றாண்டில் தென்னிந்திய மக்கள் சீயம் நாட்டில் குடியேறியிருந்தார்கள். குப்தர் காலக் கட்டடக் கலை அமைப்பிற் கட்டப் பட்ட பிராமண மத, பௌத்த மதக் கோயில்கள் நாடு முழுமையிலும் காணப்பட்டன. மங்சிதெப் என்னுமிடத்தில் சிவன், விட்டுணு உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றோடு சமக்கிருதத்தில் எழுதப்பட்ட சாசனமொன்று காணப்பட்டது. இவை நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தனவாகக் கருதப்படுகின்றன. சீயத்தில் எடுக்கப்பட்ட கோயில்கள் வடஇந்திய தென்னிந்திய சிற்பக் கலைக் கலப்புடையன. நன்சோ என்னும் பகுதியை ஆண்ட அரசன் மகாராசா என்னும் பட்டப்பெயர் பெற்றிருந்தான். சீயம் மக்களின் சமய நூல்களிலும் ஓவியங்களிலும் மாமேரு உலகுக்கு மையமாகவுள்ளது என்னும் கொள்கை காணப்படு கிறது. பாங்காக்கிலுள்ள அரசனின் கோவிற் சுவர்களில் இராமாயணக் கதை சித்திரிக்கப்பட்டுள்ளது. அங்கு வசந்த காலத்தில் இன்றும் ஊஞ்சல் விழா கொண்டாடப்படுகிறது. அரசர்களுக்குப் புரோகிதர் இருந்து வந்தனர்.
“பிராமணர்கள் சீயம் நாட்டில் முதன் முதல் குடியேறிய காலமாக நம்பப்படுகின்ற கி.பி. 18ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே, இராமேஸ்வரத்தி லிருந்து கி.பி.15ஆம் நூற்றாண்டிலேயே சிலர் அந்நாட்டுக்குச் சென் றிருக்கக் கூடும் என்று நூற்று இருபது ஆண்டுகளுக்கு முன் கிராபர்ட்டு என்னுமறிஞர் ஒரு குறிப்பு எழுதியிருக்கின்றார். இவ்வாறு வந்த பிராமணர் தமது குடும்பங்களோடு வராமல் குடியேறிய நாட்டிலுள்ள பெண்களை மணந்து கொண்டனர். அவர்கள் சைவ சமயத்தைச் சேர்ந்த வர்கள். அவர்களிற் சிலர் குருமாராகவும், சிலர் போர் வீரர்களாகவும் மற்றும் சிலர் அரசாங்க சோதிடர்களாகவும் சேவை செய்து வந்தனர். கோயில்களில் பூசைக் காலங்களில் ஓதுவதற்கான மந்திரங்கள் சமக் கிருதத்திலும் தமிழிலும் இப்பொழுதும் வழங்கிவருகின்றன. ஆனால் இம் மந்திரங்களின் பொருளை அறியாமலே அவர்கள் அவற்றைச் செபித்து வருகின்றனர். இந்தப் பிராமணர் பூசை வேளைகளிலும் அரசாங்க விழாக்களிலும் இம்மந்திரங்களை ஓதியும் பிராமண மதச் சடங்குகளை அனுசரித்தும் வருகின்றனர்.
“சீயம் மன்னரின் முடிசூட்டு விழாவில் தமிழ்ப் பாடல் ஒன்று பாடப்படுகிறது. பாங்காக் கோயில்களில் மாணிக்கவாசகரின் திருவெம் பாவைப் பாடல்களைப் புரோகிதர் இன்றும் பாடி வருகின்றனர். சீயம் கோயில்களில் நடக்கும் கிரியைகள் தென்னிந்திய கோயில்களில் நடப்பன போலவே இருக்கின்றன. தென்னிந்தியாவில் நடப்பது போலவே மார்கழி மாதத்தில் கோயில்களில் திருவெம்பாவை விழா நடைபெறுகிறது”.2
29. கம்போடியா
இப்பொழுது கம்போடியா என வழங்கும் நாடு முற்காலத்தில் கம்போசம் என அறியப்பட்டது. தென்னிந்தியாவினின்றும் சென்ற கௌண்டியனியன் என்னும் பிராமணர் நாகினி சோமா என்னும் பெண்ணை மணந்து கி.பி. முதல் நூற்றாண்டில் அந்நாட்டின் அரசனா னார் எனப் பழங்கதை வழங்குகிறது. கி.பி. முதல் நூற்றாண்டு முதல் தென்னிந்திய மக்கள் கம்போடியாவில் குடியேறினர். பல்லவ எழுத்தில் பொறிக்கப்பட்ட பல சாசனங்கள் அங்குக் கிடைத்துள்ளன. வைணவம், பௌத்தம் என்னும் மதங்களிலும் பார்க்கச் சைவ மதமே அங்கு முதன்மை பெற்றிருந்தது. கோயில்களில் காணப்படும் சிற்பங்கள், இதிகாசங்கள் சம்பந்தமானவை. பாலவர்மனென்னும் அரசன் நான்கு சிவாலயங் களைப் பிரதிட்டை செய்தான். கம்போடிய அரசர் வர்மன் என்னும் பெயர் புனைந்து முடிசூடினார். பல்லவ அரசரும் வர்மன் என்னும் பெயர் பெற்றிருந்தனர். பவ வர்மன் 616இல் கம்பீரவர்ணர் என்னும் சிவலிங்கத்தை நாட்டி வழிபட்டான். பிசார், சினெங், கராபி முதலிய இடங்களில் உமையோடு இடபத்தில் வீற்றிருக்கும் சிவன் உருவங்கள் காணப்படுகின்றன. இடபத்தில் வீற்றிருக்கும் சிவ வடிவத்திலும் பார்க்க நடராச வடிவமே மக்களால் பெரிதும் வழிபட்டது. சூரியவர்மன் என்னும் அரசன் பன்னிரண்டாம் நூற்றாண்டில் அங்கோர்வாடி என்னும் சிறந்த திருமால் கோயிலைத் தென்னிந்திய சிற்ப முறையிற் கட்டினான்.
30. அங்கோர்வாடி
கம்போடியாவில் அங்கோர்வாடி என்னும் ஓர் இடமுண்டு. அங்கு பெரிய இடிபாடுகள் காணப்படுகின்றன. அக் கட்டிடங்கள் பழைய இந்திய மக்களால் இந்தியக் கட்டிட அமைப்பு முறையிற் கட்டப் பட்டவை. அவ்வகை அழிபாடுகள் யாவாவிலும் காணப்படுகின்றன. இந்திய மக்களின் சமயம் இந்தியாவில் மாத்திரம் உண்டு என எண்ணி யிருக்கும் இந்தியன் ஒருவனுக்கு இவைகளைப் பார்க்கும்போது வியப்பு உண்டாகும்.
அங்குக் காணப்படும் இடிபாட்டின் கட்டிடங்கள் இந்திய நாகரிகம் உயர்நிலையில் இருந்த காலத்தில் தோன்றியவை அவ்வழிபாட் டின் வரலாறு அங்கு காணப்படும் பொருள்களைக் கொண்டு ஆராய வேண்டியவை. பிரெஞ்சுக்காரர் பலர் இவ்வாராய்ச்சியை நடத்தியுள் ளார்கள். அவைகளைப் பற்றி நம்மவரிற் சிலரே அறிவர்.
கம்போடியாவில் எப்பொழுது இந்தியர் போய்க் குடியேறி னார்கள் என்பதற்குச் சரித்திரத் தொடர்பான ஆதாரம் கிட்டவில்லை. எத்தனை இந்தியர் அலை அலையாகச் சென்றனர் என்பதும் தெரியாது. செவி வழிச் செய்தியின்படி கிறித்துவ ஆண்டுத் தொடக்கத்தில் இந்தியர் அங்குச் சென்றார்கள். மெங்கொங் ஆற்றுக்குக் கீழ்ப் பகுதியிலுள்ள வோனான் என்னுமிடத்தில் கௌண்டினியன் என்னும் பிராமண னொருவன் ஓர் இராச்சியத்தை ஆரம்பித்தான். அவன் அந்நாட்டு இராசகுமாரியை மணந்தான். கௌண்டினியனின் பரம்பரையில் பல அரசர் தோன்றினர். வோனானுக்கு வடக்கே கம்பு என்னும் இந்திய அரசன் இன்னொரு இராச்சியத்தைத் தொடங்கினான். இவன் வோனான் இராச்சியத்தை வென்று கைப்பற்றும் வரை கௌண்டினிய பரம்பரை யினரின் வரலாறு யாதும் அறியப்படவில்லை. கம்பு என்பவன் கம்பு சுவாயம்பு என அறியப்பட்டான். கம்பு, தேவ கன்னியாகிய மேராவை மணந்தான். கம்புயா என்பதிலிருந்து கம்போடியா என்னும் பெயர் உண்டாயிற்று. கம்போடியாவை முதலில் ஆண்ட சரித்திர சம்பந்தப் பட்ட அரசன் உருத்திரவர்மன்.
அங்கோரின் அழிபாடுகளை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். அவற்றுள் முதன்மையுடையது அங்கோர் நாட்டிலுள்ள பெரிய திருமால் கோயில். இஃது அங்கர்தோம் என்னுமிடத்திலுள்ளது. இவ் விடத்துக்கு அயலில் பதினைந்து மைல் சுற்றில் அங்குமிங்குமாகப் பல அழிபாடுகள் காணப்படுகின்றன. கோயிலிலிருந்து ஒரு கல் தொலைவில் அங்கர்தோம் என்னும் பழைய நகர் இருக்கின்றது.
திருமால் கோயிலின் நாற்புறங்களிலும் உள்ளே செல்லும் வழிகள் இருக்கின்றன. அங்கோர் என்பதற்கு நகரம் என்பது பொருள். கோயிலைச் சுற்றி வெட்டு வாய்க்காலிருக்கிறது. கோயில் மேற்கு முகமாக இருக்கிறது. நகரின் பெரிய வீதி தெற்கிலிருந்து வடக்கே செல்வதாலும் கோயில் வீதியை நோக்கியிருக்க வேண்டியிருந்தமையாலும் அது அவ்வாறு அமைக்கப்பட்டது. கோவிலின் வெளி வீதியின் நீளம் 1716 அடி; அகலம் 1386 அடி. மதிலுக்கு உட்பட்ட அதன் விசாலம் மதுரைக் கோவிலை விட இருமடி. கோபுரங்களிலும், சுவர்களிலும் தேவரும், அசுரரும் அமுதங் கடைவதுபோல் புராண வரலாறுகளும் பிறவும் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. பாண்டவர் கௌரவர்களின் போர்களும் காணப்படுகின்றன. தேவரும் அசுரரும் வேறு வேறு வகையான பாகைகள் தரித்திருக்கின்றனர். கோபுரங்களின் உயரம் 213 அடி மதுரைக் கோயிற் கோபுரத்தின் உயரம் 152 அடி. அங்கோர்வாட் கோயில் கருங்கல்லா லெடுக்கப்பட்ட தென்னிந்திய கோயில்களைப் போல அழகிய அமைப் புடையது.
அங்கர்தோமின் நான்கு வாயில்களிலுள்ள கட்டிடங்களிலும் பெரிய மனித முகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகத்தின் உயரம் ஒன்பது அடி. இவ்வாறு 160 முகங்கள் கூட்டங்களாகக் காணப்படு கின்றன. வாயிலின் இரு புறங்களிலும் இரண்டு நாகங்கள் கல்லில் வெட்டப்பட்டுள்ளன. நாகத்தை இராக்கதர் பிடித்திருக்கின்றனர். நாகத்தின் நீளம் 100 அடி.
31. சம்பா
இப்பொழுது அன்னாம் என வழங்கும் மாநிலம் முற்காலத்தில் சம்பா எனப்பட்டது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் இந்து சமயமும் இந்தியப் பண்பாடும் சம்பாவில் பரவின. வர்மன் என்பது பல நூற்றாண்டுகளாக நாட்டை ஆண்ட அரசர்களின் பெயராகவுள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட சமக்கிருத சாசனங்கள் அங்குக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. பத்திர வர்மன், இந்திரவர்மன், இந்திரவர்மதேவன் முதலிய அரசர் சமக்கிருத இலக்கியங்களிற் புலமை பெற்றிருந்தனர். சம்பாவில் சிவ வழிபாடு முதன்மை பெற்றிருந்தது. பத்திரேசுவரர் என்னும் பெயரில் சிவன் நாட்டுக்குரிய கடவுளாகக் கொள்ளப்பட்டார். மகாதேவி என்னும் பெயரில் மக்கள் அம்மனை வழிபட்டார்கள். விட்டுணுவை வழிபடும் மக்களும் அங்கு இருந்தார்கள். அவரில் சிலர் தாம் விட்டுணுவின் அவதாரம் எனக் கூறினர். சம்பாவில் பௌத்த மதமும் ஓங்கியிருந்தது. சீனத் தளபதி ஒருவன் சம்பாவிலிருந்து 1350 பௌத்த நூல்களை எடுத்துச் சென்றான். சம்பாவிலிருந்த கோயில்கள் மாமல்லபுரத் தேர்களையும் காஞ்சிபுரக் கோயில்களையும் பார்த்து அமைக்கப்பட்டவை. சம்பாவிற் கிடைத்த மிகப் பழைய கல்வெட்டு தென்னிந்திய எழுத்தில் பொறிக்கப் பட்டுள்ளது. பழைய கல்வெட்டுகளிற் காணப்படும் எழுத்தும் இலக்கண மும் தெலுங்கு மொழியிலுள்ளவை போன்றிருத்தலால் ஆதியிற் சம்பா விற் குடியேறியவர்கள் ஆந்திரராக இருக்கலாம்.
“பொன்னாகரிலுள்ள உமாபகவதி ஆலயம் பற்பல மாற்றங் களுக்கு உட்பட்ட போதிலும் அது இன்றும் தழைத்திருப்பது காணலாம். முற்காலம் தொட்டே ‘சமஸ்’ என்ற கம்பா நாட்டு மக்கள் விழாக் கொண்டாட்டங்களில் சந்தனத்தை மிகுதியாகப் பயன்படுத்தி வந்தனர். தென்னிந்தியாவைப் போலவே ஆங்கும் சமய நூல்கள் யாவையும் பனை ஓலையில் வரைந்து பாதுகாத்தனர். சம்பாவிலுள்ள கோயில்களின் சிற்ப வேலை திராவிட முறையை ஒட்டியதென்பதற்கு ஐயமில்லை. உயரப் போகப்போக அகலம் குறைந்து ஒன்றின்மேல் ஒன்றாக மாடி போல் அமைக்கப்பெற்றிருக்கும் மாடங்களும், கோயில்களும், அடிப்படைக் கொத்தளங்களும் காஞ்சீபுரம், வாதாபி முதலிய ஊர்களிற் காணப்படுப வற்றை ஒத்திருக்கின்றன”.1
32. ஊர்
மக்கள் இடங்கள்தோறும் வீடுகள் அமைத்துக்கொண்டு கூட்டங் களாக வாழ்ந்தார்கள். பல வீடுகள் கொண்ட இடம் குடியிருப்பு அல்லது கிராமம் என அறியப்பட்டது. ஊர் என்னுஞ் சொல் கிராமத்தையும் பட்டினத்தையும் குறிக்கும். ஓர் ஊரில் நூறு முதல் ஐந்நூறு பயிரிடும் குடும்பங்களிருந்தன. ஒரு கிராமத்துக்கும் அடுத்த கிராமத்துக்கும் இடையில் அல்லது அவற்றைச் சூழ்ந்து குறுங்காடு இருந்தது. காடு சார்ந்த நிலங்களிலுள்ள குடியிருப்பு பாடி, சேரி எனவும், வயல் சார்ந்த இடங்களின் குடியிருப்பு ஊர் எனவும், கடற்கரைக் குடியிருப்பு சிறு குடி எனவும், பாலை நிலக்குடியிருப்புப் பறந்தலை எனவும் அறியப்பட்டன. ஆறு இருப்பது ஊருக்கு அழகாகக் கொள்ளப்பட்டது. “ஆறில்லா ஊருக்கழகு பாழ்” என்பது முதுமொழி.
ஊரின்முன் அல்லது நடுவில் பெரிய ஆலமரம் அல்லது வேறு நிழல் மரம் நின்றது. அதனைச் சூழ்ந்து திண்ணை இடப்பட்டிருந்தது. பொதுமக்கள் ஓய்வு நேரங்களில் அவ்விடத்தில் கூடி ஒருவரோடு ஒருவர் அளவளாவிப் பொழுதுபோக்கினார்கள்; ஊர் நலனுக்கு வேண்டிய கருமங்களை ஆராய்ந்தார்கள். அவ்விடம் மன்றம் எனப்பட்டது. சிறுவர் மன்றத்தே சென்று கல்வி பயின்றார்கள். முதியோர் அவ்விடத்தில் கூடி வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளித்தார்கள். கடவுளைக் குறிக்கும் அருள்வடிவாக மன்றத்தே கற்றூண் நடப்பட்டிருந்தது. அதனைச் சுற்றி மெழுக்கிடப்பட்டது. மக்கள் பூவையும் பலியையும் தூவிக் கடவுளை வழிபட்டார்கள். கந்துக் கடவுளுக்கு விளக்கு ஏற்றப்பட்டது. கோயி லிருப்பது ஊருக்கு இன்றியமையாததாகக் கருதப்பட்டது.
“திருக்கோயிலில்லாத திருவிலூரும்” எனத் திருநாவுக்கரசு சுவாமி களும், “கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம்” என உலகநாத னாரும் கூறியிருக்கின்றார்கள். கோயிலைச் சுற்றிக் கிராமம் வளர்ந்தது. கிராம நிகழ்ச்சிகள் எல்லாவற்றுக்கும் மன்றமே மத்திய இடமாக இருந்தது.
கிராமத்தில் பலவகைத்தொழில் புரிவோரிருந்தனர். ஒவ்வொரு தொழில் புரிவோரும் தனித்தனி வீதியில் வாழ்ந்தனர். கிராம மக்களின் வாழ்க்கைக்கு வேண்டிய உணவு, உடை முதலிய பொருள்களெல்லாம் கிராமத்திலேயே கிடைத்தன. ஊர்க் கருமங்கள் ஒழுங்காக நடைபெறு வதை ஊர்ச்சபை மேற்பார்த்தது. கிராமம் சிறிய அளவில் ஒரு இராச்சி யம் போலிருந்தது. இவ்வாறு அமைந்த கிராம ஆட்சியிலிருந்தே பெரிய நகர் ஆட்சிமுறை வளர்ச்சியடைந்தது கிராம ஆட்சிக்கு கிராமச்சபை பொறுப்பாக இருந்தது. கிராமச் சபைகளுக்கு மேல் அரசன் ஆணை இருந்தது.
செல்வர் வீடுகளைச் செங்கல்லாலும் மரங்களாலும் கட்டி னார்கள்; வறியவர் மண்ணினாலும் தடிகளாலும் அவற்றை அமைத் தார்கள். செங்கல் வீடுகள் ஓடுகளாலும், மண் குடிசைகள் பனை ஓலை, தென்னங்கீற்று, வைக்கோல், புல் என்பவற்றாலும் வேயப்பட்டன. வீடு களுக்கு முக்கோண வடிவான மாடங்களிருந்தன. மாடங்களில் மண் விளக்கு அல்லது உலோக விளக்கு வைத்து எரிக்கப்பட்டது. வீட்டுக்கு முன் திண்ணையும், திண்ணைக்கு முன் ஒட்டுத் திண்ணையுமிருந்தன. வீட்டுக்குப் பின்புறத்தில் கிணறும் கிணற்றுக்கு அப்பால் கொல்லையில் மாட்டுத் தொழுவமும் அப்பால் வயலுமிருந்தன.
கிராமங்கள் பல சேர்ந்தது கூற்றம் எனவும், கூற்றம் பல சேர்ந்தது நாடு எனவும், நாடு பல சேர்ந்தது கோட்டம் எனவும், கோட்டம் பல சேர்ந்தது மண்டலமெனவும் அறியப்பட்டன.
33. சிறுகுடி
மலையும் மலை சார்ந்த இடங்களிலுமுள்ள ஊர் சிறுகுடி என அறியப்பட்டது. சிறுகுடியில் வாழும் ஆடவர் குறவரெனவும் மகளிர் குறத்தியர் எனவும் பெயர் பெற்றிருந்தனர். மலை இடங்களில் பலா மரங்கள் செழித்து வளர்ந்தன. அவை மீது மிளகுக் கொடிகள் கிழங்குகளை வீழ்த்தின. மலை முகடுகளில் தேன் கூடுகள் தொங்கின. காட்டில் பன்றி, மான், கரடி முதலிய விலங்குகள் திரிந்தன. குறவர் வேட்டை நாய்களை வளர்த்தார்கள். அவர்கள் நாய் பின் தொடர வில்லையும் அம்பையும் கொண்டு காட்டிற் சென்று மான் பன்றி முதலிய விலங்குகளை வேட்டையாடினார்கள்; வேட்டையாடிக் கொன்ற விலங்குகளின் இறைச்சியைச் சிறுகுடியிலுள்ளவர்களுக்குப் பகிர்ந் தளித்துத் தாமுமுண்டார்கள்; மூங்கிலை வெட்டி உயர்ந்த ஏணிகள் செய்து அவற்றை நேர்குத்தான மலைகளில் சார்த்தித் தேன்கூடுகளை அழித்துத் தேன் சேகரித்தார்கள்; பலா மரங்களில் பழுத்துத் தொங்கும் குடம்போன்ற பழங்களைப் பறித்துப் பலாச் சுளைகளைத் தேனில் தொட்டு உண்டார்கள்; கொடிகள் வீழ்த்திய கிழங்குகளை அகழ்ந் தெடுத்து அவித்து உண்டார்கள்; மலைப் பக்கங்களை உழுது தினை விதைத்தார்கள். தினை கதிர்வந்து முற்றியபோது கதிர்களைக் கவரப் பறவைகள் வந்தன. குறச் சிறுமியர்கட்டுப் பரண் மீதிருந்து தழல், தட்டை என்னும் கிளிகடி கருவிகளைச் சுழற்றியும் தட்டியும் ஆயோ எனச் சத்தமிட்டும் பறவைகளை ஓட்டினார்கள். தினை அறுத்தபின் அவரை விதைக்கப்பட்டது. மலையிடத்தே சுனை நீர் பாய்ச்சி ஐவன நெல்லும் விளைவிக்கப்பட்டது. குறவரின் சிறந்த உணவு தேனும் தினைமாவுமாக இருந்தது.
மலையிடத்தே வேங்கை, கொன்றை, பலா முதலிய மரங்கள் செழித்து வளர்ந்தன. குறவர் அம் மரங்களின் கீழ் சிறு குடிசைகள் கட்டி வாழ்ந்தார்கள்; குடிசைகளைப் புல்லினால் வேய்ந்தார்கள். தினை, தேன் முதலியவற்றில் மது வடிக்கப்பட்டது. மது மூங்கிற் குழாய்களிலிட்டுக் காரமேறும்படி வைக்கப்பட்டது. நாட்பட்ட மது தேள் கடுப்புப் போன்று காரமுடையதாக இருந்தது. குறவரும் குறத்தியரும் முற்றத்தி லிருந்து கள்ளை வார்த்துப் பருகி, நெருப்பில் இறைச்சியைச் சுட்டு உண்டார்கள். பின் இருபாலினரும் ஒருவரோடு ஒருவர் கைகோத்து நின்று குரவை ஆடினார்கள்.
புலித்தோலும் மான்தோலும் பாயாகப் பயன்படுத்தப்பட்டன. தந்தத்திற்காக ஆண் யானைகள் வேட்டையாடப்பட்டன. வீட்டைச் சுற்றி நொச்சி வேலியிருந்தது. நொச்சி வேலியில் மல்லிகைக் கொடி படர்ந்து பூத்தது. குறச்சிறுமியர் முன் கையில் சங்கு வளை அணிந்தனர்; கூந்தலை ஐந்து வகையாகப் பின்னிமுடிந்தனர். அசோகு, வேங்கை முதலியவற்றில் கட்டிய ஊஞ்சல்களில் ஆடினர்; சுனை நீராடினர்; தழைகளைக் கொய்து உடையாக உடுத்தனர்.
34. பாடி
காட்டிலும் காடு சார்ந்த நிலத்திலுமுள்ள ஊர் பாடி அல்லது சேரி என அறியப்பட்டது. அங்கு வாழும் மக்கள், ஆயர், இடையர், கோவலர், அண்டர் முதலிய பெயர்கள் பெற்றிருந்தனர். இவர்கள் தடி களாற் கட்டி மண்ணினாற் சுவரெடுத்துப் புல்லால் வேய்ந்த கொட்டில் களில் வாழ்ந்தார்கள். முற்றத்தே ஆடுகளையும் மாடுகளையும் கட்டும் முளைகள் நாட்டப்பட்டிருந்தன. இடையர் ஆட்டிடையர், மாட்டிடை யர் என இரு பிரிவினராக இருந்தனர். மாட்டிடையர் எருமைகளையும் வளர்த்தனர். இடையனுடைய கையில் தலைவளைந்த கோல் அல்லது கொளுவுதடி இருந்தது. ஆட்டிடையன் வளைவு தடியில் பறியைக் கொளுவி முதுகுப் புறத்தே தொங்கும்படி விட்டுச் சென்றான். இடையர் காலையில் ஆடுகளையும், மாடுகளையும் மேய்ச்சல் நிலத்துக்கு ஓட்டிச் சென்றார்கள்; அவை மேயும்போது அவர்கள் மர நிழல்களிலிருந்து வேய்ங்குழல், கொன்றைப் பழத்தைக் கோதிச் செய்த குழல், ஆம்பற் றண்டுக் கழல் என்பவற்றில் இனிய இராகங்களைப் பாடினார்கள். மாலைக் காலத்தில் ஆடுகள் பட்டியில் அடைக்கப்பட்டன. பாற் பசுக்கள் வீட்டுக்கு ஓட்டிச் செல்லப்பட்டன. மாடுகளின் கழுத்தில் மணிகள் ‘தெள்’ என்று ஓசை செய்தன. இடையர் பசுக்களின் பின்னே வேய்ங் குழல் ஊதிச் சென்றனர். மாடுகள் தொழுவங்களிற் கட்டப்பட்டன அல்லது மன்றங்களில் அடைக்கப்பட்டன.
பசுக்களில் கறக்கப்பட்ட பால் பிரையிட்டுத் தயிராக்கப்பட்டது. இடைச்சி தாழியிலுறைந்த தயிரை மத்தால் கயிறு பூட்டிக் கடைந்தாள்; வெண்ணெயை எடுத்தபின் மோரைப் பானையில் ஊற்றி அதனைத் தலையில் சும்மாட்டின் மீது வைத்துச் சுமந்து அயலிடங்களிற் சென்று நெல்லுக்கு விலையாக விற்றாள்.
இடையன் நிலத்தை உழுது வரகு விதைத்தான். இடையரின் குடியிருப்பைச் சுற்றி முள்வேலியிடப்பட்டிருந்தது.
35. பாக்கம்
கடற்கரை ஊர் பாக்கம் என அறியப்பட்டது. அங்கு வாழ்ந்தோர் பரதவர் என அறியப்பட்டனர். மணல் செறிந்த கடலோரங்களில் பனை மரங்கள் செழித்து வளர்ந்தன. குடிசைகள் புல், தாழை ஓலை, அல்லது பனை ஓலையால் வேயப்பட்டன. வீட்டைச் சுற்றித் தாழை வேலியிருந் தது. முற்றத்தில் மீன் பிடிக்கும் வலைகள் காயவிடப்பட்டிருந்தன. பரதவர் கட்டுமரம், திமில் என்பவற்றில் மீன் பிடிக்கக் கடலில் சென் றார்கள். வலை, எறி, உளி என்பனவற்றை அவர்கள் எடுத்துச் சென் றார்கள்; காலையில் தாம் பிடித்த மீன்களுடன் கரையை அடைந்தார்கள். அவர்களின் மனைவியர் அவற்றைக் கூடைகளில் இட்டு எடுத்துச் சென்று அயலிடங்களில் நெல்லுக்கு விலையாக விற்றார்கள்; மீனுக்கு விலையாகக் கிடைத்த நெல்லைக் குற்றிய அரிசியை உலையிட்டுச் சோறட்டுத் தமது சுற்றத்தோடு இருந்து உண்டார்கள்.
கடற்கரைகளில் புன்னை மரங்கள் ஓங்கி வளர்ந்தன. அவற்றின் அயலில் மீன், இறால் முதலியன காய விடப்பட்டன. பரதவச் சிறுமியர் புன்னை நிழலிலிருந்து அவற்றைக் கவரவரும் புட்களை ஓட்டினார்கள்.
உப்பளங்களில் பாத்தி கட்டி உப்பு விளைவிக்கப்பட்டது. உப்பு வாணிகர் உப்பை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு தொலைவிடங் களுக்குச் சென்றார்கள். அவர்களோடு வீட்டில் வளர்க்கப்படும் குரங்கும் சென்றது. தொலைவிடங்களுக்குக் கொண்டு சென்ற உப்பை அவர்கள் நெல்லுக்கு விலையாகக் கூவி விற்றார்கள். உப்பு வணிகரோடு சென்ற குரங்கு வீடுகளில் விளையாடும் சிறுவரின் கிலுகிலுப்பையை எடுத்து விளையாடும். வண்டியிற் பூட்டிய எருதுகள் இளைத்தால் மாற்றிப் பூட்டுதற்கு உப்பு வாணிகர் எருதுகளை வண்டியின் பக்கத்தே ஓட்டிச் சென்றனர். அவர்கள் வெளியிடத்தே தங்கி அடுப்பு மூட்டிச் சமையல் செய்து உணவு கொண்ட பின் மறுபடியும் பயணஞ் செய்தனர். உப்பு வாணிகர் கழுதைகள் மீதும் உப்பு மூட்டைகளை ஏற்றிச் சென்றனர். பெண்கள் கூடைகளில் உப்பை எடுத்துச் சென்று நெல்லுக்கு விலையாக விற்றனர்.
பரதவச் சிறுமியர் கடற்கரை மணலில் பாவை செய்தும் சிறு வீடு கட்டியும், சிறு சோறட்டும் விளையாடினர். மரக்கலங்கள் திசையறிந்து துறை பிடிக்கும் பொருட்டு கடற்கரையில் உயர்ந்த கலங்கரை விளக்கங் களிருந்தன. பரதவர் தமது குடிசைகளில் மண் விளக்கில் அல்லது சிப்பி விளக்கில் மீனெண்ணெயைவிட்டு எரித்தார்கள்.
36. மருத நிலத்து ஊர்
வயலும் வயல்சார்ந்த நிலத்திலுமுள்ள கிராமம் ஊர் என அறியப் பட்டது. ஊரில் வாழும் மக்களுக்கு உழவுத்தொழில் முக்கியமுடையதாக விருந்தது. வயல்களின் இடையிடையே தோட்டங்களிருந்தன. தோட்டங் களில் பழ மரங்கள் நட்டு உண்டாக்கப்பட்டன; கரும்பும் பயிரிடப் பட்டது. ஏர்த் தொழிலுக்குத் துணையாக மாடுகளும் எருமைகளும் வளர்க்கப்பட்டன. வயல்களில் பருத்தியும் பயிரிடப்பட்டது.
உழவரில் உழுவோர் உழுவித்துண்போர் என இரு பிரிவினர் இருந்தனர். உழுவித்துண்போர் காணியாளராகிய செல்வராகவிருந்தனர். வயலில் வேலை செய்வோர் களமர் எனப்பட்டார்கள். இவர்கள் உழுதல், நாற்றுநடுதல், களைகட்டல், நெல்லரிதல், சூடடுக்குதல், கதிர் மிதித்தல் போன்ற வயல் வேலைகளைச் செய்தார்கள். நாற்று நடுதல் முதலிய வேலைகளைச் செய்யும் இருபாலாரும் பாடல்களைப் பாடினார்கள். வயல் செய் எனப்பட்டது. நெல் விளையும் நிலம் நன்செய் எனவும், பிற பயிர்களிடப்படும் நிலம் புன்செய் எனவும், பயிரிடப்படாத நிலம் தரிசு எனவும் அறியப்பட்டன. வயல், அகணி, கம்பலை, கழனி, கைதை, கோட்டம், செறு, தடி, பண்ணை, பழனம், பானல், புலம் முதலியன வயலின் பெயர்கள். பயிர்ச் செய்கை வேளாண்மை எனப்பட்டது. வேள் = நிலம்; ஆண்மை = அரசு அல்லது ஆளுந்தன்மை. தானியங்களைச் சேர்த்து வைப்பதற்கு வீட்டு முற்றத்தில் பெரிய நெற்குதிர்கள் கிடந்தன. ஊரில் நன்கு அமைக்கப்பட்ட வீடுகளிருந்தன. வீடுகளின் சுவர்கள் சுண்ணாம்பு தீட்டப் பட்டிருந்தன. சில வீடுகளின் சுவர் செம்மண்ணால் மெழுகப் பட்டிருந்தது. இங்கு பல கைத்தொழில் புரிவோரும் வாழ்ந் தனர். விதைப்புக் காலத்தின் பின்னும் அறுப்புக் காலத்தின் பின்னும் மக்களுக்கு அதிக ஓய்வு இருந்தது. அக்காலங்களில் அவர்கள் பலவகை களில் பொழுது போக்கினார்கள்.
உரல், உலக்கை, அம்மி, குழவி, திரிகை, ஆட்டுக் கல், முறம், சல்லடை, சட்டி, பானை, அகப்பை, மணை, கட்டுப் பெட்டி, கட்டில், தொட்டில், ஊஞ்சல், (வீசுபலகை), உறி (சுமை தூக்கு), காவடி, சும்மாடு, கணப்பு (தீச்சட்டி), பரண், நிறைகோல், கவண், பாய் முதலியன வீட்டுப் பொருள்களுட் சில.
37. பறந்தலை
பாலை நிலத்து ஊர் பறந்தலை எனவும் சீறூர் எனவும் அறியப் பட்டது. வெயில் வெப்பத்தால் மரங்கள் கருகி நீரும் நிழலுமில்லாதிருந்த இடங்கள் பாலை நிலம் எனப்பட்டன. பறந்தலையில் வாழ்வோர் எயினர் எனப்பட்டனர். இவர்கள் வாழும் குடிசைகள் ஈந்தின் ஓலைகளால் வேயப்பட்டவை. இவர்கள் தானியங்களை விளைவிக்கவில்லை. பெண்கள் வெளியே சென்று எறும்புகள் புற்றுக்களில் சேர்த்து வைத்திருக்கும் புல்லரிசியைச் சேகரித்தார்கள்; அதனை முற்றத்திலிருக்கும் நில உரலி லிட்டு உலக்கையாற் குற்றி உமியைப் போக்கினார்கள். கிணற்றிலே நீரெடுத்துப் பாலையில் உலை வார்த்து வைத்து ஆக்கிய சோற்றைத் தேக்கிலையிலிட்டு உப்புக் கண்டத்தோடு உண்டார்கள். ஆடவரின் மீசை ஆட்டுக் கடாவின் கொம்புபோல் முறுக்கியிருந்தது. அவர்கள் காலிற் செருப்புத் தரித்து, சோகி சிப்பி முதலியவற்றைக் கோத்த மாலையை மார்பில் அணிந்திருந்தார்கள்; இரும்புமுனை இறுக்கிய அம்புகளால் விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடினார்கள்.
எயினரின் குடியிருப்பைச் சுற்றி மண்மதிலிருந்தது. மதில் புல்லினால் வேயப்பட்டிருந்தது. அம்புக்கட்டும் பறையும் தொங்கும். எயினர் தலைவனின் வீட்டு வாயிலில் நாய் சங்கிலியிற் கட்டி நின்றது. எயினர் முல்லை நிலத்திலுள்ள பசுக்களைக் கொள்ளையிடச் செல்லும் போது ஏறுகோட் பறையை முழக்கினர். பறை ஒலியைக் கேட்ட எயினர் வந்து கூடினர். அவர்கள் தாம் கவர்ந்து சென்ற பசுக்களைக் கள்ளுக்கு விலையாகக் கொடுத்தனர்.
38. நாடும் நகரும்
ஆற்றோரங்கள் நீர்வளம் பெற்றுச் செழிப்படைந்திருந்தன. மக்கள் பலர் அவ்விடங்களிற் குடியேறிப் பயிரிட்டுத் தானியங்களை விளை வித்தனர். அதிக தானியம் வைத்திருப்போன் செல்வனாக மதிக்கப்பட் டான். ஒரு பருவ காலத்தில் ஒருவன் விளைவிக்கும் தானியம் பலருக்குப் பல கால உணவுக்குப் போதுமானதாகவிருந்தது. அக்காலச் செல்வம் உணவு வகைகளாக விருந்தது. வயல் சார்ந்த இடங்களில் செல்வம் திரண்டது. மக்கள் அறுவடைக் காலத்தின் பின் ஓய்ந்திருந்தார்கள். அக் காலத்தில் அவர்கள் ஆடல் பாடல், விளையாட்டுகள், விழாக்கள் என்ப வற்றில் பொழுது போக்கினார்கள். பொழுதுபோக்குக் கலையில் தேர்ந்த நடிகரும், பாடகர்களும், பலவகைக் கைத்தொழில் புரிவோரும் அங்கு வந்து சேர்ந்தார்கள். ஒவ்வொரு தொழில் புரிவோரும் வெவ்வேறு வீதி களில் வாழ்ந்தார்கள். தொழிலாளர் தாம் செய்துதரும் தொழில்களுக்குக் கூலியாகத் தானியத்தைப் பெற்றார்கள். ஒரு கிராமத்தில் வாழும் மக்கள் ஒரு முன்னோரிலிருந்து பெருகிய கூட்டத்தினராகக் கருதப்பட்டனர். பின் வந்து குடியேறியவர்கள் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவராகக் கொள்ளப்பட்டனர்.
அயலிடங்களிலுள்ளவர்கள் இங்கு திரண்டுள்ள செல்வத்தைப் பற்றி அறிந்தார்கள். அதனைக் கவர்தற்கு அவர்கள் திரண்டு வந்தார்கள். இடையன் தனது செல்வமாகிய ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டும், கூடாரத்தைப் பெயர்த்துக் கொண்டும், இன்னொரு இடத்தை நோக்கிச் சென்றுவிடலாம். வேளாளர் தமது வீடுகளோடும், தானியக் களஞ்சியங் களோடும், தமது செல்வத்தைக் கொள்ளையிட வருவோரை எதிர்த்து போர் செய்ய உடல் வலிமிக்க பலர் திரண்டார்கள். அவர்களை வீரமும் திறமையுமுடைய ஒருவன் போருக்கு நடத்திச் சென்றான். பகைவரை எதிர்த்து வெற்றிபெற்ற படைத் தலைவன் அரசனானான். தந்தைக்குப் பின் மகன் என்னும் முறையில் வழிமுறையாக அரசுரிமை வந்த காலத் தும், பொதுமக்கள் அரசனைத் தெரிந்தெடுப்பது போன்ற உபசார வழக்கு பல நாடுகளில் இருந்து வந்தது. இஃது இலங்கையில் கடைசிக் கண்டி அரசன் காலம் வரையிலிருந்து வந்தது.
குடியிருப்பைச் சுற்றிப் பாதுகாப்பாக முள்வேலி இடப்பட் டிருந்தது. பின் இவ் வேலி கொள்ளக்காரர் எளிதில் நுழைய முடியாத மண் மதில் அல்லது செங்கல் மதிலாக மாறிற்று. பகைவர் மதிலை எளிதில் அடைய முடியாதபடி மதிலைச் சுற்றி ஆழ்ந்த அகழி வெட்டப் பட்டது. அகழுக்கு வெளியே முள் மரங்கள் நட்டு உண்டாக்கப்பட்டன. மதிலினுள் உள்ள குடியிருப்பு இடம் நகர் என அறியப்பட்டது. நகர் பெரும்பாலும் செவ்வக வடிவிலிருந்தது. மௌரிய சந்திரகுப்தன் காலத்தில் வட இந்தியாவிலிருந்த பாடலிபுத்திரா (பாட்னா) என்னும் நகர் பத்து மைல் நீளமும் இரண்டு மைல் அகலமுமுடையதாக இருந்தது.
நகரைச் சூழ்ந்து நாடு இருந்தது. பல ஊர்கள் சேர்ந்தது நாடு எனப்பட்டது. நாடு என்பது நடு என்னும் அடியாகப் பிறந்து நட்டு உண்டாக்கப்பட்டதென்னும் பொருள் தருவது. நாடு என்பதற்கு எதிர்ச் சொல் காடு. காடு என்பதற்குக் கடத்தற்கரியது என்பது பொருள். இதற்கு அடி கட. நாட்டின் பெரும் பகுதி நெல் வயல்களாகவிருந்தது. கரும்பும் ஆங்காங்கு பயிரிடப்பட்டது. தெங்கு, மா, பலா முதலியவும் உணவுக்கு வேண்டிய காய் கனிகளை உதவும் செடி கொடிகளும் வயல்களில் நட்டு உண்டாக்கப்பட்டன.
நாட்டின் செழிப்பும் விளைவும் அரசனுடைய செல்வத்துக்கு ஏதுவாகவிருந்தன. முற்கால அரசர் வேளாண்மை உயரும் பொருட்டுக் குளங்கள் தொட்டும் ஆற்று நீரை மறித்து அணைக்கட்டுகள் கட்டியும் வந்தார்கள். உழவர் உழுதல், நாற்று நடுதல், களை கட்டல், நெல்லறுத்தல், சூட்டுக்குதல் போன்ற செயல்களைப் பிற்கால இலக்கியங்கள் சிறப்பித்துப் பாடியிருக்கின்றன. பாரதம், இராமாயணம், பிற்காலப் புராணங்கள் என்பவை நாட்டுவளம் நகர்வளங்களைப் பற்றிச் சிறப்பாகக் கூறுகின் றன. நாட்டின் எல்லையில் அல்லது இயற்கை அரண் உள்ள இடத்தில் நகர் இருந்தது. ஊர்கள் அல்லது கிராமங்கள் வளர்ந்து நகரங்களாக மாறின. மெசபெதேமியாவின் பழைய நகரமொன்றின் பெயர் ஊர். இது தொடக்கத்தில் ஊர் அல்லது கிராமமாகவிருந்து பின் நகரமாக மாறிய தெனக் கருதப்படுகிறது.
1225இல் சௌ-யு-குவா என்னும் சீனப் பிரயாணி தமிழ்நாட்டுக்கு வந்தான். அவன் சோழர் தலைநகரைப் பற்றி எழுதியிருப்பது வருமாறு: “இங்கு ஏழு சுற்று மதில்களுடைய நகரமுண்டு. சுவர்களின் உயரம் ஏழு அடி. வெளிச்சுவர் வடக்கிலிருந்து தெற்கே பன்னிரண்டு ‘லி’1யும் கிழக்கிலிருந்து மேற்கே ஏழு ‘லி’1யும் செல்கின்றது. ஒவ்வொரு சுற்று மதிலுக்குமிடையில் நூறடி வெளியிருக்கிறது. இவற்றில் நான்கு சுவர்கள் செங்கல்லால் எழுப்பப்பட்டவை; இரண்டு களிமண்ணாலானவை. மத்தியிலுள்ள ஒன்று மரத்தினால் கட்டப்பட்டது. அங்கு பழ மரங்களும் பிற மரங்களும் நடப்பட்டுள்ளன. முதலிரண்டு சுவர்களுக்கிடையிலுள்ள வெளியில் மக்கள் வாழும் வீடுகள் இருக்கின்றன. மூன்றாம் நான்காம் சுவர்களுக்கிடையிலுள்ள வெளியில் அரசனுடைய அதிகாரிகள் வாழ் கின்றனர். ஆறாவது சுற்றுக்குள் கோயில்களும் பூசகர்களின் இல்லங்களு மிருக்கின்றன. ஏழாவது சுற்றுக்குள் நானூறு வீடுகளடங்கிய அரசன் வாழும் மாளிகை இருக்கின்றது.
39. பட்டினம்
பண்டங்கள் வாணிகத்தின் பொருட்டு ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. மாடுபூட்டிய வண்டிகளிலேற்றியும், கழுதைகளிலும் பொதிமாடுகளிலும் சுமத்தியும் பண்டங்கள் தரைவழியே கொண்டு செல்லப்பட்டன. வாணிகம் வளர வளரப் பாதைகளும் வளர்ந்து கொண்டு சென்றன. பண்டங்களை விற்பதற்கும் வாங்குதற்கும் சந்தைகள் கூடின. சந்தை கூடுமிடங்களில் கடைகளும் கடைத்தெருக்களும் எழுந்தன. மக்கட்பெருக்கமும் வாணிக மும் அதிகப்பட்டன. அவ்விடங்கள் பட்டினங்களாக மாறின.
பட்டினங்கள் தொடக்கத்தில் கடற்கரைகளில் எழுந்தன. கடற்கரை ஊர்கள் பாக்கம் என்றும் பட்டினம் என்றும் அறியப்பட்டன. உள் நாட்டுக்கு வேண்டிய உப்பு கடற்கரைகளிலிருந்து கொண்டு போகப் பட்டது. உப்பு வணிகர் உப்பை வண்டிகளில் ஏற்றிக் கொண்டும், கழுதை களிற் சுமத்திக் கொண்டும் செல்வதைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
வயலும் வயல்சார்ந்த இடங்களிலும் நெல்லை வாங்கும் பொருட்டு வணிகர் சென்றனர்; நெல்லுக்கு விலையாகத் தாம் கொண்டு சென்ற பண்டங்களைக் கொடுத்தார்கள். இவ்வாறு வணிகர் பண்டங்களை விற்கவும் வாங்கவும் கூடிய இடங்கள் பட்டினங்களாக மாறின.
மக்கள் பண்டங்களை மரக்கலங்களில் கடல்வழியே பிற நாடு களுக்குக் கொண்டு சென்று வணிகம் நடத்தினார்கள். அப்பொழுது அயல் நாட்டுப் பண்டங்களும் உள்நாட்டுப் பண்டங்களும் கடற்கரையிற் குவிந்தன. அப் பண்டங்களை விற்கவும் வாங்கவும் அயல்நாட்டவரும் உள்நாட்டவரும் கடற்கரைகளிற் கூடினார்கள். அவ்வகை இடங்களும் பட்டினங்களாக மாறின.
முசிறி, கொற்கை, தொண்டி, புகார் என்பன முற்காலத் துறைப் பட்டினங்களுட் சில. கருவூர், உறையூர், மதுரை முதலியன சேர சோழ பாண்டிய அரசரின் தலைநகர்கள். இவை பெரிய உள்நாட்டுப் பட்டினங் களாகவிருந்தன.
“பட்டினம் நீண்ட சதுர வடிவுடையதாக விருந்தது. அது எண்பத் தொரு நீண்ட சதுரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றை எல்லாம் சுற்றி வீதி சென்றது. பொது இடங்கள் மரங்கள் நாட்டப்பட்டும் விளக்குத் தூண்கள் நாட்டப் பட்டுமிருந்தன. முக்கிய கோயில் சிறு பட்டினமாகவிருந்தது. வீதிகள் பரற்கற்களிடப்பட்டிருந்தன. அவற்றின் அகலம் நான்கு முதல் இருபது முழமுடையதாக விருந்தது. பூங்காக்கள், விளையாட்டு வெளிகள், இடுகாடு, சுடுகாடு, முதலியவை பட்டினத்துக்கு வெளியேயிருந்தன. அங்கு சண்டாளர் முதலிய இழிந்தோர் வாழ்ந்தனர். புதிய பட்டினம் பெரும்பாலும் ஆற்றின் வலது புறத்தில் கட்டப்பட்டது. கிழக்கு நோக்கிச் சரிந்திருக்கும் நிலம் பொதுவாக விரும்பப்பட்டது. திசை சூரியநிழலைக் கொண்டு அறியப்பட்டது. கிராமம் நூறு முதல் ஐந்நூறு வேளாண்மை செய்யும் குடும்பங்களுடையதாக விருந்தது”.1
40. மக்கட் பாகுபாடு
பழங்காலத்தில் மக்கள் தாம் வாழும் இடங்களுக்கேற்ப வெவ்வேறு பெயர்களாலறியப்பட்டார்கள். ஒவ்வொரு நிலத்திலும் வாழ்வோர் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவராகக் கொள்ளப்பட்டார்கள். அவர்களிடையே உயர்வு - தாழ்வு, செல்வமும் அதிகாரமும் காரணமாக உண்டாயிருந்தன. ஒவ்வொரு சமுதாயத்தினரும் ஒரு குலத்தவராகவும் ஒரு மூதாதையரினின்று பெருகியவர்களாகவும் கொள்ளப்பட்டார்கள்.
மலைநாட்டுத் தலைவன் சிலம்பன், வெற்பன் எனவும், தலைவி கொடிச்சி, குறத்தி எனவும், ஏனையோர் குறவர், இறவுளர், குன்றவர், வேட்டுவர் எனவும் அறியப்பட்டார்கள். முல்லை நிலத் தலைவன் அண்ணல், தோன்றல், குறும்பொறை நாடன் எனவும் தலைவி கிழத்தி எனவும், ஏனையோர் இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் எனவும் பெயர் பெற்றிருந்தார்கள். மருத நிலத் தலைவன் ஊரன், மகிழ்நன் எனவும், தலைவி கிழத்தி எனவும் ஏனையோர் கடையர் உழவர், உழத்தியரெனவும் அறியப்பட்டனர். நெய்தல் நிலத் தலைவன் துறைவன், கொண்கன், சேர்ப்பன், மெல்லம் புலம்பன் எனவும் தலைவி நுளைத்தி, பரத்தி எனவும் ஏனையோர் பரதர், பரத்தியர், நுளையர், நுளைச்சியர் எனவும் பெயர் பெற்றனர். பாலை நிலத்தலைவன் மீளி, விடலை, காளை எனவும் தலைவி எயிற்றி, பேதை எனவும் பொது மக்கள் எயினர், மறவர், மறத்தியர் எனவும் அறியப்பட்டனர். இவர்கள் திணை மக்கள் எனப்பட்டார்கள். திணை என்பது நிலம்.
ஒரு நிலத்தில் வாழ்வோர் இன்னொரு நிலத்திற் சென்று குடியேறி வாழ்ந்தால் அவர்கள் தாம் வாழும் இடத்துக்குரிய திணைப் பெயரைப் பெற்றார்கள். மக்கள் பட்டினங்களிலும் நகரங்களிலும் சென்று குடியேறி வாழ்ந்து நாகரிகம் தோன்றிய போது பார்ப்பார். அரசர், வணிகர், வேளாளர் எனத் தொழில் பற்றிய சாதிப் பிரிவினராயினர். கோயில்களை மேற்பார்த்தோர் பார்ப்பார் எனப்பட்டனர். நாட்டை ஆள்வோர் அரசர் எனவும், பண்டங்களை வாங்கி விற்போர் வணிகரெனவும், உழுதுண் போரும், உழுவித் துண்போரும் வேளாளரெனவும் அறியப்பட்டார்கள். இவர்களேயன்றிப் பலவகைக் கைத்தொழில் புரிவோரும், பிறர் ஏவிய தொழில்களைப் புரிவோரும் வாழ்ந்தார்கள். தொழில் புரிவோர் தொடக் கத்தில் வேளாண் மக்களுக்கு வேண்டியவற்றைச் செய்து உதவிக் கொண் டிருந்தார்கள். ஆகவே பதினெண் குடி மக்கள் என்னும் பிரிவில் கைத் தொழில் புரிவோர் அடங்கினர்.
தந்தை செய்த தொழிலை மகன் புரிதல் என்னும் வகையில் குடும்பங்கள் பெருகின. ஒவ்வொரு தொழில் புரியும் கூட்டத்தினரும் தனித்தனிச் சாதியினராகப் பிரிந்து வாழ்ந்தனர். தொடக்கத்தில் உயர்வு தாழ்வு என்னும் கொள்கையில் சாதி எழவில்லை; தொழில் பற்றி எழுந்தது. “பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா - செய் தொழில் வேற்றுமையால்” எனத் திருக்குறள் கூறுகின்றது.
வருணமென்பது வடநாட்டில் தோன்றியது. வருணமென்பதற்கு நிறம் என்பது பொருள். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என வருணங்கள் நான்கு. சூத்திரரென்போர் முதல் மூன்று குலத்தினருக்கும் ஏவல் பூண்டொழுகுவோர். வருணங்களுக்கேற்ப ஒழுக்கங்கள் வகுக்கப் பட்டிருந்தன. வடநாட்டுச் செல்வாக்கு தென்னாட்டில் இடம் பெற் றிருந்த போது வருணம் வருணாச்சிரம தருமம் என்னும் கொள்கைகள் தென்னாட்டை அடைந்தன. இவை கொள்கையளவிலிருந்தனவே யன்றிச் செயலளவிலிருக்கவில்லை. வேளாளர் சூத்திரராகக் கொள்ளப் பட்டார்கள். இவ்வவமானத்திலிருந்து தப்புவதற்கு வேளாளர் தம்மைப் பூவைசியர் எனக் கூறினர்.
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை முதலிய ஐவகை நிலங் களிலும் இயற்கை அமைப்புகளுக்கேற்பப் பண்பாடுகள் வேறுபட் டிருந்தன. இப் பண்பாடுகளைப் பெற்ற மக்கள் நகர்களில் சென்று தங்கி வாழ்ந்தபோது ஐவகை நிலங்களின் பண்பாடுகளும் கலப்புற்றுத் திருந்திய நிலையை அடைந்தன. இவ்வாறு தோன்றிய வாழ்க்கை முறைகள், கலைகள் என்பது நாகரிகம் எனப்பட்டன. பண்பாடு என்பது சமூகத்தில் உயர்ந்தோரின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், சமய ஒழுக்கங்களைக் குறிக்கும்.1
41. அரசன்
எல்லா நாடுகளிலும் போலவே அரசன் வீரம் பொருந்தியவனாக வும் பெரிய ஆடம்பரங்களுடையவனாகவும் இருந்தான். அவனுடைய அதிகாரம் வரம்புபடாததாக விருந்தது. அவன், தலையில் மணிகளழுத்திய முடியையும், கையில் மணிகள் பதித்த கடகத்தையும் காதிற்குழையையும், மார்பில் முத்து அல்லது பவழ மாலையையும், காலில் வீர தண்டையை யும், விரலில் பெயர் பொறித்த மோதிரத்தையும் அணிந்திருந்தான். அவனும் பெருமக்களும் முகத்தை மழித்திருந்தார்கள். அவனைச் சூழ்ந்து அமைச்சர், சேனாதிபதியர், புலவர், புரோகிதர் முதலானோர் இருந்தனர்; பரிசனர், இருந்தேத்துவோர், நின்றேத்துவோர் சூழ்ந்து நின்றனர். பெண்கள் இரு பக்கங்களிலும் நின்று கவரி வீசினர். நறும் புகை இடப்பட்டது.
அரசன் வீற்றிருக்கும் ஆசனம் கட்டில் எனப்பட்டது. அது சிங்கம் சுமப்பது போன்ற கால்களையுடையதாக இருந்தது. ஆகவே அது அரி ஆசனம் எனப்பட்டது. அவன் சாய்வதற்கு அணை இருந்தது. அது அரி அணை எனப்பட்டது. அரசு கட்டில் பொன்னாலும் யானைத் தந்தத் தாலும் மணிகளழுத்திச் செய்யப்பட்டிருந்தது. அவன் அரசிருக்கும் மண்டபம் ஓலக்கம், நாளவை, நாளிருக்கை, கொலுவிருக்கை, அர சிருக்கை என அறியப்பட்டது. அது துகில், தோகை, பூ, இலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சிறப்புக் காலங்களில் அரசன் வீதியிற் பவனி சென்றான். அப் பொழுது சிற்றாலவட்டம், பேரால வட்டம், விதானம், வெண் கொற்றக் குடை முதலியன பிடிக்கப்பட்டன. விருது முன்னே சென்றது. சிற்றரசரும் பெருமக்களும் அவனைச் சூழ்ந்து சென்றார்கள். சங்கு, கொம்பு, எக்காளம் முதலிய வாத்தியங்களும் மேளங்களும் ஆர்த்தன. விழாக் காலங்களில் அரசி அவனுடன் இருந்தாள். அவள் முடிசூடிக் கொள்ளவில்லை. அரசனது பிறந்த நாள் விழா வெள்ளணி நாள் எனப்பட்டது. அக்காலத்தில் அவன் சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்தான். அவன் அரண்மனையில் மாத்திரமிருக்கவில்லை. போர்க் காலங்களில் அவனே படையை நடத்திச் சென்று பாசறையில் தங்கினான். அவன் வேட்டை ஆடவுஞ் சென்றான். அக் காலத்தில் மெய்க்காவலர் அவனைக் காத்து நின்றனர். அரசனுக்கு எதிரில் செய்யவேண்டிய உபசாரங்களைச் செய்யாமல் விடுவது சிறு குற்றமாகக் கருதப்பட்டது. அரண்மனையில் அரசியும் பெண்களும் தனி இடத்தில் வாழ்ந்தார்கள். அரசனுடைய வெற்றிக்காகவும், நீண்ட வாழ்நாளுக்காகவும் துதிகள் செலுத்தப்பட்டன. அரசன் தங்கியிருக்கும் மாளிகைகள் நாட்டின் பல இடங்களிலிருந்தன. சமாதான காலத்தில் அரசன் பெருமக்களோடு நாடு முழுமையும் சுற்றி வந்தான். ஆட்சி தன் னதிகாரமாக இருந்தபோதும் நாட்டில் ஒழுங்கும் நீதியும் நிலவின. பதின் மூன்றாம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த சௌ-யு-குவா என்னும் சீனப் பிரயாணி இலங்கை அரசனைப் பற்றிக் கூறியிருப்பது வருமாறு: “இலங்கை அரசனின் நிறம் கறுப்பு. அவன் தலை மயிரை வாரி முடிவதில்லை. அவன் பலவகை நிறங்களுடைய ஆடையை உடுக்கிறான்; சிவப்புத் தோலினாற் செய்து பொன் வாரிட்ட செருப்பை அணிகிறான். அவன் யானை மீது அல்லது பல்லக்கின் மீது செல்கிறான். நாள் முழுதும் அவன் வெற்றிலையையும் பாக்கையும் முத்தைச் சுட்ட சுண்ணாம்பையும் மெல்கிறான். அவனுடைய அரண்மனை வைடூரியம், நீலம், சிவப்பு முதலிய இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கிழக்கிலும் மேற்கிலும் அரண்மனைகளிருக்கின்றன. இரண்டு அரண்மனைகளிலும் பொன்னாற் செய்யப்பட்ட மரங்கள் இருக்கின்றன. மரத்தின் அடியும் கொம்புகளும் பொன்மயமானவை. அதன் பூக்களும் இலைகளும் காய்களும் நீலம், சிவப்பு, வைடூரியம் முதலியவற்றால் அமைக்கப்பட்டிருக் கின்றன. அரசன் நடக்கும் தரையும் நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மரங்களின் அடியில் பொன்னாற் செய்யப்பட்ட சிங்காசனங்களிருக் கின்றன. அவற்றுக்கு ஒளிபுகக் கூடிய கண்ணாடி மறைப்பு உண்டு. அரசன் காலையில் கிழக்கு அரண்மனையிலும், மாலையில் மேற்கு அரண்மனையிலும் கொலுவிருப்பான். கொலுவிருக்கும்போது அலங் காரங்கள் வெளியே மின்னும். பொன் மரங்களும் அலங்காரங்களும் கண்ணாடி மறைப்புகளும் ஒன்றில் ஒன்று பிரதிபலித்து விளங்கிச் சூரிய உதயம் போல் தோன்றும்.
“இரண்டு வேலையாட்கள் அரசன் வெற்றிலையை மென்று உமிழும் எச்சிலை ஏந்துவதற்குப் பொன் காளாஞ்சிகளை ஏந்திக் கொண்டு எப்பொழு தும் இரண்டு பக்கங்களிலும் நிற்பார்கள். அரசன் ஐந்து அங்குலக் குறுக்களவுள்ள ஒரு ஆபரணத்தைக் கையில் வைத்திருக் கின்றான். அதை நெருப்பினால் எரிக்க முடியாது. அது இரவில் சூள் போல் மின்னுகிறது. அரசன் தனது முகத்தை அதனால் தினமும் தடவு கிறான். அப்படிச் செய்வதால் தொண்ணூறு வயதடைந்தாலும் அவன் வாலிபத் தோற்றத்தோடிருப்பான்.”
கோன், ஏந்தல், மன்னன், குரிசில், இறைவன், அண்ணல், குறுநில மன்னன் முதலிய பெயர்களால் மிகப் பழங்காலம் முதல் அரசனின் ஆட்சி தமிழ் நாட்டில் இருந்து வருகின்றதென்பதை அறிய முடிகிறது.
42. ஆட்சி
அரசன் குடிகளைக் காப்பது ஆட்சி எனப்பட்டது. நீதி ஆட்சி செங்கோல் எனவும், கொடிய ஆட்சி கொடுங்கோல் எனவும் அறியப் பட்டன. நல்லாட்சியைப் பெற்ற நாட்டில் வானம் பொய்யாது மழை பெய்யும் என மக்கள் நம்பினார்கள். அரசன் வரம்பில்லா அதிகார முடையவனாக இருந்தபோதும் ஆட்சி சம்பந்தப்பட்டவற்றை அவன் அமைச்சரோடும் பெரு மக்களோடும் கலந்து ஆலோசித்தான். அரசனுக்கு ஆலோசனை கூறுவதற்கு 1ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்னும் சபைகளிருந்தன. மாசனம், பார்ப்பார், மருத்துவர், நிமித்திகர், அமைச்சர் என்போர் ஐம்பெருங் குழுவில் அடங்குவர். மாசனம் என்போர் மக்கள் சார்பாக அங்கம் வகிப்போர். இவர்கள் மக்களின் சுதந்திரத்துக்குப் பங்கம் நேராமற் பார்த்தனர். பார்ப்பார் சமய சம்பந்தப்பட்ட கிரியை களை மேற்பார்த்தனர். மருத்துவர் அரசனதும் நாட்டு மக்களதும் உடல் நலத்தைக் கவனித்தனர். நிமித்திகர் விழாக்களுக்கு முகூர்த்தமறிந்து கூறினர். அமைச்சர் நாட்டின் வரவு செலவுகளையும் நீதி ஆட்சி நடை பெறுவதையும் கவனித்தனர்.
எண்பேராயம் என்னும் சபையில் கரணத்தியலவர் (செயலாற்று வோர்), கரும விதிகள் (புரோகிதர்), கனகச் சுற்றம் (பொருளறைக்குப் பொறுப்பாளர்), கடை காப்பாளர் (அரண்மனையைக் காப்போர்), நகர மாந்தர், படைத் தலைவர், யானை வீரர், குதிரை வீரர் முதலியோ ரிருந்தனர். அரசனுடைய ஆட்சிக்குட்பட்ட நிலம், கிராமம், கூற்றம், நாடு, கோட்டம், மண்டலம் எனப் பிரிக்கப்பட்டிருந்தது. பல கிராமங்கள் ஒன்று சேர்ந்தது கூற்றம்; கூற்றம் பல சேர்ந்தது நாடு; நாடு பல சேர்ந்தது கோட்டம்; கோட்டம் பல சேர்ந்தது மண்டலம்; மண்டலத்தை அரச குமாரன் அல்லது அரச குடும்பத்திலுள்ள ஒருவன் ஆட்சி புரிந்தான். விளைவில் ஆறிலொரு பகுதி வரியாக அரசனுக்குக் கொடுக்கப்பட்டது.
கிராம சபைகளுக்கு உறுப்பினர் குடஓலையால் தெரியப்பட்டனர். ஒவ்வொரு குடும்பு அல்லது வட்டத்திலும் உறுப்பினராகத் தேர்வுக்கு நிற்கத் தகுதியுடையவர்களின் பெயர்கள் ஓலை நறுக்குகளில் எழுதி ஒரு குடத்துள் போடப்பட்டன. கோயில் மண்டபத்தில் அல்லது மரத்தடியில் சபை கூடிற்று. அப்போது விபரமறியாத சிறுவனொருவனை ஓலை நறுக்கில் ஒன்றை எடுக்கச் செய்து அதில் எழுதப்பட்டுள்ள பெயர் சபையோர் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. இவ்வாறு உறுப்பினர் தெரியப்பட்டனர்.
ஊர்ப் பெருமக்கள் ஓரிடத்தில் கூடி ஊர் நலனுக்கு வேண்டிய கருமங்களைப் பற்றி ஆராய்ந்தார்கள். மக்களுக்கிடையில் நேரும் பிணக்குகளைக் கேட்டுத் தீர்ப்பளிக்கும் சபைகளிருந்தன. அவை அறங்கூறு அவை என அறியப்பட்டன.
சுங்கம் நிலவரி முதலியன அரசனுடைய வருவாயில் பெரும்பகுதி யாக இருந்தன. ஏற்றுமதி, இறக்குமதிப் பண்டங்கள் மீது வரி விதிக்கப் பட்டது. குற்றங்களுக்குத் தண்டனை கடுமையாக இருந்தது. திருடிய பொருட்களுடன் கண்டு பிடிக்கப்பட்டவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நாட்டில் வழங்கும் சமூக வழக்கங்கள் சட்டங்களாக இருந்தன. மா, வேலி என்னும் அளவுகள் அறியப்பட்டிருந்தன. வரி செலுத்தாமல் கொண்டு செல்லும் பண்டங்களைத் தடுப்பதற்குப் பாதைகள் கிளை விட்டுச் செல்லும் இடங்களில் போர் வீரர் நிறுத்தப்பட்டிருந்தனர். தலைநகரின் வீதிகளை இராக் காலத்தில் நகர் காவலர் வெளிச்சங்களைக் கொண்டு திரிந்து காவல் காத்தனர்.
43. உணவு
மக்கள் வாழும் இடங்களுக்கேற்ப அவர்கள் கொள்ளும் உணவுகள் மாறுபட்டன. அவ்வாறிருந்தபோதும் மக்கள் உண்ணும் உணவு வகைகள் ஓரளவில் ஒரு தன்மையுடையனவாக இருந்தன. நெல் புழுக்கி உலர்த்தி உரலிலிட்டு அரிசியாக்கப் பட்டது. சோற்றைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் வழங்கின. அடிசில், அமலை, அமுது, அயினி, அவி, அவிழ், அழும்பு, உணா, ஊண், சதி, சாதம், சொன்றி, சோறு, துப்பு, தோரி, பருக்கை, பாத்து, பிசி, புகர்வு, புழுக்கு, புற்கை, பொம்மல், பொருகு, மடை, மிசை, மிதவை, மூரல், வல்சி முதலியன சோற்றைக் குறிக்கும் பெயர்களுட் சில. இவை வெவ்வேறு வகையாக அடப்பட்ட சோற்றைக் குறிப்பானவாகலாம். பால், மோர் என்பவற்றை உலை வார்த்தும் சோறு அடப்பட்டது. புழுக்காத நெல்லைக் குற்றிய அரிசியோடு பருப்பு இட்டுச் சமைக்கப்பட்ட சோறு பொங்கல் எனப்பட்டது.
அப்பம், பிட்டு, தோசை, வடை, அஃகுல்லி முதலிய பலவகைப் பணி காரங்கள் செய்யப்பட்டன. கறிகள் மிளகுத் தூளிட்டு ஆக்கப்பட்டன. ஆகவே மிளகுக்குக் கறி என்னும் பெயர் வழங்கிற்று. மிளகாய் ஐரோப் பிய சாதியாரால் அண்மையில் கொண்டு வரப்பட்டது. மிளகாய்ச் செடி தென்னமெரிக்காவுக்குரியது. அதன்காய் மிளகு போலக் காரமாகவிருந் தமையால் அது மிளகாய் (மிளகுகாய்) என அறியப்பட்டது. உடல் நலத்தைக் காக்கக் கூடியவும், உணவைச் செரிக்கச் செய்யக்கூடியவும் கொத்து மல்லி, சீரகம், மிளகு, புளி போன்ற சரக்குகள் அளவறிந்து இட்டுக் கறிகள் ஆக்கப்பட்டன. இஃது அக்காலத்தில் மக்கள் மருத்துவத் துறையில் பெற்றிருந்த அனுபவத்தைக் காட்டுகின்றது. முற்காலத்தில் அரண்மனைகளில் மருத்துவர் இருந்தனர். அவர்கள் தினமும் அரச னுடைய உடல் நிலையை அறிந்து ஏற்ற சரக்கு வகைகளைக் சேர்த்து உணவுகளைச் சமைக்கும்படி பட்டோலை எழுதிக் கொடுத்தார்கள். இன்று நாம் உண்ணும் கறி வகைகள் ஒருவகை மருந்தாகவும் இருக் கின்றன.
காய், கனி, கிழங்கு, பூ, பிஞ்சு, கீரை வகைகளிலிருந்து அறுசுவைக் கறிகள் ஆக்கப்பட்டன. வறை, துவட்டல், துவை, புளிங்கறி, காடி, ஊறுகாய், பொரிக்கறி முதலியன கறி வகைகளுட் சில. கருவேப்பிலை, கடுகு முதலியவற்றையிட்டுக் கறிகளுக்குத் தாளிதம் செய்யப்பட்டது.
1தாவர உணவு கொள்வோர், தாவர உணவும் ஊன் உணவும் கலந்து உண்போர் என மக்கள் இரு வகையினராக இருந்தார்கள். இவ்வாறு இரு வகை உணவுகளைக் கொள்ளும் பழக்கம் சூழல் காரணமாகவும், பழக்கம் காரணமாகவும் உண்டாயிற்று. சில விலங்குகள் தாவரங்களை உண்கின்றன. சில தாவர உணவையும் ஊண் உணவையும் கலந்து உண்கின்றன. கலப்பு உணவைக் கொள்ளும் விலங்குகள் தாவர உணவையோ, ஊன் உணவையோ கொண்டு வாழவும் பழக்கம் பெறு கின்றன. சமயத் தொடர்பில் அல்லாது இம் முறையில் இரு வகை உணவு களைக் கொள்வோராகவும் மக்கள் வாழ்ந்தனர். மேல்நாட்டவர் பலர் முற்காலத்தில் தாவர உணவு கொள்வோராக இருந்தனர்; இக்காலத்தும் பலர் இருக்கின்றனர். பிதகோரஸ் என்னும் கிரேக்க அறிஞர் தாவர உணவையே கொண்டார். போர் வீரர், அரசர், பாணர், வயல் வேலை செய்யும் தொழிலாளர், மீன் பிடிப்போர் இருவகை உணவுகளையும் கலந்து உண்டனர். சமய அடிப்படையில் ஊன் உணவு கொள்ளாத வழக்கம் பௌத்தர் சமணர் காலத்துக்குப்பின் உண்டானதெனக் கருதப்படுகிறது.
44. உடை
மிகப் பழங்காலத்தில் மக்கள் மரவுரி, தோல் என்பவற்றையும் இலைகளால் தொடுத்த உடைகளையும் உடுத்தார்கள். இலைகளால் தொடுத்த உடைகளைப் பற்றிப் பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. பஞ்சு ஆடையும் கம்பளி ஆடையும் பழக்கத்துக்கு வந்தபோது தோலுடையும் மரவுரியும் முனிவருக்குரிய பரிசுத்த உடையாகக் கொள்ளப்பட்டன. புலித்தோல் மான்தோல் என்பவை இன்றும் புனிதமுடையனவாகக் கொள்ளப்படுகின்றன. புலித்தோலை உடுத்திருப்பவராகச் சிவபெரு மான் பாவனை செய்யப்படுகிறார்.
மொகஞ்சதாரோவிற் கிடைத்த மனித சிற்பம் ஒன்று வேலைப் பாடுடைய மேலாடையைப் போர்த்தி இருக்கின்றது. தலையைச் சுற்றி ஒரு நாடாவைக் கட்டியிருக்கின்றது. தலையில் கட்டப்பட்ட நாடா (மயிர்க்கட்டு) பாகையாக வளர்ச்சியடைந்தது.
ஆடவர் அரையில் நான்கு முழ ஆடை உடுத்தனர். ஆடை நாபிக்குக் கீழ் உடுக்கப்பட்டது. பொதுமக்கள் முழங்காலுக்குச் சிறிது கீழ் நீண்டிருக்கும்படி ஆடையை உடுத்தார்கள்; அரசரும் பெருமக்களும் கெண்டைக்கால் வரை நீண்டிருக்கும்படி உடுத்தனர். அரையிலொன்றும் தலையிலொன்றும் தோளிலொன்றுமாக மூன்று உடைகள் அணியப் பட்டன.
முற்காலத்தில் உயர்ந்தோர் சட்டை தரிக்கவில்லை. சட்டை தரித்துக் கொள்வது ஊழியம் புரிவோர் என்பதற்கு அடையாளமாக விருந்தது. பழைய கோவில் சிற்பங்கள்; ஆடவரும் மகளிரும் எவ்வாறு உடை அணிந்தார்கள் என்பதை விளக்குகின்றன. போர் வீரர் வட்டுடை என்னும் ஒருவகை உடை அணிந்தனர். பெண்கள் இறவுக்கை அணிய வில்லை. கச்சு அணிந்தார்கள்.
45. நெசவு
பருத்தி இந்திய நாட்டுக்குரிய செடி. தமிழ் மக்கள் கற்காலத்தி லேயே பஞ்சிலிருந்து நூல் நூற்கவும், நூலிலிருந்து ஆடை நெய்யவும் அறிந்திருந்தார்கள். அக்காலத்தில் மற்றைய நாடுகளில் மக்கள் உடை யின்றியிருந்தார்கள், அல்லது தோலை உடுத்தார்கள். மொகஞ்சதாரோ அழிபாடுகளில் நூல் நூற்கும் கதிர்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக்கால மக்கள் வேலைப்பாடுடைய அழகிய ஆடைகளை நெய்து உடுத் தார்கள். மிகப் பழங்காலத்திலேயே ஆடைகள் எகிப்து, பாபிலோன் முதலிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. கி.மு. 1800இல் வாழ்ந்த எகிப்திய அரசனின் பாடஞ் செய்யப்பட்ட சடலம் இந்திய சல்லாத் துணியினால் போர்க்கப்பட்டிருந்தது. இந்தியாவினின்றும் சென்ற பஞ்சு ஆடை பாபிலோனில் சிந்து என அறியப்பட்டது. சிந்து என்பது கன்னட மொழியில் ஆடைத் துண்டையும் தமிழில் கொடியையும் குறிக்கின்றது.
கடைந்து கொட்டை நீக்கப்பட்ட சுகிர்ந்த பருத்திப் பஞ்சினின் றும் பெண்கள் கதிர்களால் நூல் நூற்றார்கள். “பருத்திப் பெண்டின் பனுவலன்ன” எனப் புறநானூறு குறிப்பிடுகின்றது. மகளிர் நூற்ற நூலை ஆடவர் பாவோடி ஆடை நெய்தனர். இவ்வேலையில் பெண்களும் பங்கு பற்றினர். ஆடை நெய்யும் ஆடவர் காருகரெனவும், மகளிர் காருக மடந்தையர் எனவும் அறியப்பட்டார்கள். முற்காலத்தில் ஆடையைக் குறிக்க ஐம்பதுக்கு மேற்பட்ட சொற்கள் வழங்கின. இச் சொற்கள் அக்காலத்து வழங்கிய வெவ்வேறு வகை ஆடைகளைக் குறிப்பனவாக விருந்தன. ஆடைகள் நீளமாக நெய்யப்பட்டுப் பின் துண்டுகளாகக் கிழிக்கப்பட்டன. ஆகவே துண்டு, துணி, அறுவை என்னும் சொற்கள் ஆடையின் பெயர்களாக வழங்கின. மணிமேகலை என்னும் சிறந்த தமிழ் நூலைச் செய்த சீத்தலைச் சாத்தனார் அறுவை வாணிகன் என அறியப் பட்டார். திருவள்ளுவர் ஆடை நெய்யும் தொழிலை மேற்கொண்டிருந்தா ரென்னும் செவி வழிச் செய்தி நிலவுகிறது. பாம்புரி, மூங்கிலுரி போன்று நூல் சென்ற இடம் அறிய முடியாதனவும் பாலாவி, புகை போன்று நுண்ணியனவும் பூத்தொழில் போன்ற வேலைப்பாடுடையனவுமாகிய அழகிய ஆடைகளைப் பற்றிச் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன.
முல்லை நிலங்களில் வாழும் குறும்பர் குறும்பு ஆடுகளை வளர்த் தார்கள். இவ்வாடுகளின் மயிரிலிருந்து அழகிய ஆடைகள் நெய்யப் பட்டன. ஆட்டு மயிரில் நெய்யப்படட ஆடை கம்பளி எனப்பட்டது.
பட்டு சீன நாட்டுக்குரியது. பட்டுகளாக மடித்துத் தோளிலணியப் பட்டமையின் அது பட்டு எனப் பெயர் பெற்றது. பட்டுக்குச் சீனம் என்னும் பெயரும் வழங்கிற்று. சங்க காலத்தில் பருத்தி, மயில், பட்டு என்பவற்றில் நெசவுத் தொழில் நடைபெற்றது. “பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் - கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும்” எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. கரம்பு, பணி, பரணம், பாளிதம் முதலியன பட்டாடையைக் குறிக்கும் பெயர்களுட் சில. பிற்காலத்தில் சௌராட்டிரர் தென்னாட்டையடைந்து பட்டு நெசவுத் தொழிலை அதிகப்படுத்தினர்.
கிரேக்கரும், உரோமரும், அரேபியரும் தமிழ் நாட்டினின்றும் ஆடைகளை வாங்கிச் சென்றனர். கொரநாடு, உறையூர், காஞ்சி, ஆரணி முதலியவிடங்கள் நெசவுக்குப் பேர்போன இடங்களாக இருந்தன.
46. உழவு
புதிய கற்காலத்தில் மக்கள் உழவுத்தொழிலைத் தொடங்கி னார்கள். கற்கால இறுதியில் உழவு தொழில் நன்கு வளர்ச்சியடைந் திருந்தது. மக்களில் பெரும்பாலினர் உழவுத் தொழிலையே மேற்கொண் டிருந்தனர். சிலர் பெரிய வயல் நிலமுடையவராக இருந்தனர். அவர் களின் கீழ் நிலத்தை உழுது பயிரிடும் குடிகளிருந்தார்கள். அவர்களுக்குக் கூலி தானியமாகக் கொடுக்கப்பட்டது. நாற்றுநடுதல்,களைகட்டல் போன்ற வேலைகளைப் பெரும்பாலும் பெண்கள் செய்தார்கள். வயல் வேலை செய்வோர் களைப்புத் தோன்றாதிருக்கும் பாடல்கள் பிற்காலத் தில் பள்ளு எனப்பட்டன. பள்ளுப் பாடல்கள் உழவரின் வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டுகின்றன.
உழவுத்தொழிலுக்கு அதிக மதப்பு இருந்து வந்தது. “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்றும் “உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை” எனவும் வள்ளுவரும், ஒளவையாரும் கூறியிருக்கின்றனர். பயிரிடும் நிலத் துக்கு எரு இடப்பட்டது. நிலத்தை உழுது வெயிலும் காற்றும் பட்டு மண் உலரும்படி விடுதல் எரு விடுதலிலும் சிறந்ததெனக் கொள்ளப்பட்டது.
உழவர் விருந்தினரை ஓம்பியும் இரப்போர்க்கிட்டும் உபகாரி களாக இருந்தார்கள். காணியாளராகிய வேளாளருக்கு அரசர் காவிதி, அரசு முதலிய பட்டங்கள் வழங்கினார்கள்.
“வீட்டு வேலைக்காரரைத் தவிரக் காணியாளராலும் அமர்த்தப் பட்ட வேலையாளரிருந்தார்கள். அவர்கள் தலைவனின் வீட்டுக்கு வெளியே குடியிருத்தப்பட்டார்கள். அவர்களுக்கு உணவுக்கும் உடைக்கும் வேண்டிய கூலி தலைவனால் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஒரே தலைவ னுடைய வழியில் தலைமுறையாக வந்தார்கள். ஆடுமாடு களை மேய்ப்ப வர்களுக்குப் பத்துப் பால் மாடுகளில் ஒன்றின் பாலைப் பெற்றுக் கொள்வது போன்ற கூலி கொடுக்கப்பட்டது. வயல் வேலை செய்வோர்க்கு விளைவின் பகுதி கூலியாகக் கொடுக்கப்பட்டது. உணவும் உடையும் கொடுக்கப்பட்டால் விளைவில் ஐந்திலொன்றும் அல்லாவிடில் மூன்றி லொரு பங்கும் கொடுக்கப்பட்டது.
47. வாணிகம்
வாணிகம் பெரும்பாலும் பண்டமாற்றாகவிருந்தது. மக்கள் தமது தேவைகளுக்கு அதிகமாகவிருந்த பண்டங்களைப் பிற பொருள்களுக்கு மாற்றினார்கள். நாணயம், புழக்கத்தில் வந்தபோது வாணிகம் பண்ட மாற்று, நாணயம் என்னும் இருவகைகளில் நடைபெற்றது. கா, வண்டி, பொதிமாடு என்பவற்றில் உள்நாட்டுப் பண்டங்கள் எடுத்துச் செல்லப் பட்டன. வாணிகம் வளர்ந்தபோது பாதைகளும் வளர்ந்தன.
உள்நாட்டுப் பண்டங்கள் அயல்நாடுகளுக்கு மரக்கலங்களில் கொண்டு செல்லப்பட்டன. அயல்நாட்டுப் பண்டங்கள் மரக்கலங்களில் வந்து இறங்கின. “திரைகடல் ஓடியுந் திரவியந் தேடு” என்பது தமிழ் நாட்டுப் பழமொழி. “முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை” என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் முற்காலத்தில் அயல்நாடுகளுக்குக் கடல் வழியாகச் சென்ற தமிழர் தம்மோடு மகளிரைக் கொண்டு செல்ல வில்லை எனத் தெரிகிறது.
எகிப்திய அரசர் பண்டு நாட்டுக்கு மரக்கலங்களைப் போக்கி அரும் பண்டங்களைப் பெற்றார்கள். பண்டை எகிப்தியரின் பாடஞ் செய்யப்பட்ட பிணங்கள் இந்திய அவுரிச்சாய மூட்டப்பட்ட சல்லாத் துணிகளால் போர்க்கப்பட்டிருந்தன. அப்பிணங்களின் காலம் ஏறக் குறைய கி.மு. 1700 வரையில்.
பைபிளிற் கூறப்படும் சாலமன் அரசன் ஹிரம் என்னும் பினீசிய அரசனைத் துணைக்கொண்டு தனது மரக்கலங்களை இந்தியாவுக்கு விடுத்து அகில், சந்தனக்கட்டை, யானைத் தந்தம், பொன், குரங்கு முதலியவற்றைப் பெற்றான். இப் பண்டங்கள் தம்மோடு தமது தமிழ்ப் பெயர்களையும் கொண்டு சென்றன. எபிரேய மொழியில் வழங்கிய அல்கம், கபிம், துகிம் என்னும் சொற்கள் அகில், கவி, தோகை என்னும் தமிழ்ச் சொற்களிள் திரிபுகளாகும். கிரேக்க மொழியில் வழங்கிய சிஞ்சிபெர், பிப்பிலி, கபிரியொன் என்னும் சொற்கள் இஞ்சிவேர், திப்பிலி, கருவா என்னும் சொற்களின் திரிபுகளாகும். சாலமன் அரசனின் காலம் கி.மு. 900 வரையில் இந்திய மரக்கலங்கள் பண்டங்களையும் வணிகரையும் ஏற்றிக் கொண்டு தொலைவிடங்களுக்குச் சென்றன. கம்போடியாவிலும், யாவாவிலும் காணப்படும் இந்துக் கோயில்களின் அழிபாடுகளில் இந்திய மரக்கலங்களைக் காட்டும் சிற்பங்களும், ஓவியங்களும் காணப்படுகின்றன.
கிரேக்கர் ஆடி மாதத்தில் புறப்பட்டு நாற்பது நாளில் முசிறிப் பட்டினத்தை அடைந்தார்கள். மலையாளக் கரைகளில் மூன்று மாதங்கள் தங்கிய பின் அவர்கள் மார்கழி அல்லது தை மாதத்தில் புறப்பட்டார்கள். இந்தியக் கரைகளில் கடற்கொள்ளைக் கூட்டத்தினர் நடமாடினமையின் அவர்கள் தமது மரக் கலங்களில் வில் வீரரைக் கொண்டு சென்றனர். உரோமர் தமிழகத்தோடு பெருமளவில் வாணிகம் புரிந்தனர். மது, பித்தளை, ஈயம், கண்ணாடி முதலிய பண்டங்களை அவர்கள் முசிறி, வக்கறை முதலிய இந்தியத் துறைமுகங்களுக்குக் கொண்டு வந்து விற்றார்கள். மிளகு, தந்தம், முத்து, சல்லாத் துணி, இரத்தினக் கற்கள், வாசனைச் சரக்குகள் என்பனவற்றை வாங்கிச் சென் றார்கள். பாண்டிய அரசன் ஒருவன் ஒருமுறை ஆகஸ்தஸ்சீசரிடம் தூதரை அனுப்பினான். பாண்டிய அரசரும் பிற அரசரும் உரோமைப் போர் வீரரைத் தமது படையில் சேர்த்திருந்தனர். மதுரையில் கோட்டைக் கோபுரவாயிற் கதவுகளை உரோமப் போர் வீரர் காவல் புரிந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. யவனர் செய்த பேழைகளும், அன்ன விளக்கு களும், பாவை விளக்குகளும், அணிகலச் செப்புகளும் தமிழ்நாட்டில் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. யவனர் செய்த மதிற் பொறிகள் கோட்டை மதில்களில் வைக்கப்பட்டிருந்தன. காவிரிப்பூம்பட்டினத்தில் யவன வணிகர் வாழும் யவனச் சேரி ஒன்றிருந்தது. உரோமை நாடு ஆண்டில் 986,979 தங்க நாணயம் பெறுமதியுள்ள இந்தியப் பண்டங் களை இந்திய நாட்டினின்று வாங்கிச் சென்றது. இப் பண்டங்கள் உரோமை நாட்டில் நூறு மடங்கு விலைக்கு விற்கப்பட்டன.
48. வழிபாடு
தமிழ்நாடு முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என ஐவகை இயற்கைப் பிரிவுகளுடையது. அந் நிலங்களில் வாழும் மக்கள் முறையே திருமால், முருகன், வேந்தன், வருணன், காளி என்னும் தெய்வங்களை வழிபட்டார்கள். மக்களின் நாகரிக வளர்ச்சி பண்பாடுகளுக்கேற்ப வழிபாட்டு முறைகள் வேறுபட்டிருந்தன. காளி அல்லது கொற்றவைக்கு உயிர்ப்பலி கொடுத்து வழிபடப்பட்டது. முருக வழிபாடு வெறி ஆடி, மறி அறுத்துச் செய்யப்பட்டது. திருமால் வழிபாடு பாற் பொங்கல் படைத்து ஆடவரும் மகளிரும் கை கோத்துக் குரவை ஆடி நடத்தப்பட்டது. வேந்தன் வழிபாட்டினர் பொங்கிப் படைத்து விழா எடுத்து வழிபட்ட னர். நெய்தல் நில மக்கள் தாழை நிழலில் சுறாக் கோடு நட்டு ஆடிப்பாடி வருணனை வழிபட்டனர்.
நீதி அரசனின் ஆட்சியில் மழை பெய்து நாடு செழிக்கிறது என மக்கள் நம்பினார்கள். ஆகவே அவர்கள் அரசனைத் தெய்வமாக வழி பட்டார்கள். அரசன் கடவுளின் சார்பாளனாக நாட்டை ஆளுகிறான் என்னும் நம்பிக்கை ஏறக்குறைய உலகில் எல்லா மக்களிடையும் இருந்து வந்தது. தெற்கே பௌத்த மதம் பரவிற்று. பௌத்தர் வழிபட்ட சக்கரக் கடவுள் வழிபாடு தெற்கே வந்தது. சக்கரக் கடவுள் என்பது இந்திரனைக் குறிப்பதாக இருந்தது. சக்கரக் கடவுள் வழிபாடும், வேந்தன் வழிபாடும் ஒன்றுபட்டு இந்திர வழிபாடு ஆயின.
மரங்கள், தூண்கள், ஆறுகள், காடுகள், மலைகளில் தெய்வங்கள் உறைவதாகக் கொண்டு அவைகளை மக்கள் வணங்கினர். வீடுகளில் தெய்வங்களின் திருவுருவங்கள் வைத்து வழிபடப்பட்டன. மாலைக் காலத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி இல்லுறை தெய்வங்களுக்குப் பலி தூவி வழிபட்டார்கள். வீரருக்கு நாட்டப்பட்ட நடுகற்கள் வழிபடப் பட்டன. அவற்றுக்கு ஆடும் மதுவும் பலியாகக் கொடுக்கப்பட்டன. காத்தவராயன், மதுரைவீரன், கறுப்பண்ணன், பாவாடை ராயன் போன்ற வழிபாடுகள் இவ் வகையில் வந்த வீரர் வணக்கங்களே.
ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் நகர்களிலும், பட்டினங் களிலும் சென்று குடியேறி வாழ்ந்தார்கள். அப்பொழுது பலவகை வழிபாடுகள் நகரங்களிலும் பட்டினங்களிலும் ஒன்று சேர்ந்தன. இவ்வழிபாடுகள் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வழிபாடுகளாக வளர்ச்சியடைந்தன. இக் கடவுளருக்குக் கோயில்கள் எடுக்கப்பட்டன; குளங்களும் தொடப்பட்டன.
எல்லா நிலங்களுக்கும் எல்லா மக்களுக்கும் பொதுவாகிய இன்னொரு வழிபாடு இருந்தது. அது சிவ வழிபாடு. அஃது ஒரு நிலத் துக்கு உரியதன்றாயிருந்தமையாலும் எல்லா மக்களுக்கும் பொதுவாக இருந்தமையாலும், அது தொல்காப்பியத்தில் கூறப்படவில்லை. சிவன் என்பதற்குச் சிவந்தவன் என்னும் பொருள் உண்டு என அறிஞர் கூறுவர். கடவுள் ஒளி வடிவினன் எனக் கொண்ட மக்கள் ஒளியின் குறியாக அடி நிமிர்ந்து நுனி ஒடுங்கிய கற்றூண்களை நட்டு வழிபட்டார்கள். இஃது ஒளி வடிவினதாகிய தீயின் சின்னம் என அறிஞர் கூறுவர். திருவண்ணா மலையில் கடவுள் சோதி வடிவாக நின்று பின் இலிங்க வடிவமானார் என்னும் பழங்கதை இக்கூற்றை வலியுறுத்துகின்றது. கற்றூண்கள் மர நிழல்களில் நிறுத்தப்பட்டிருந்தன. இம்மரங்கள் பிற்காலத்தில் தல விருட்சங்கள் என அறியப்பட்டன. திருவானைக்காவில் நாவலும், சிதம்பரத்தில் தில்லையும், திருவொற்றியூரில் மகிழும், குத்தாலத்தில் பலாவும், ஆலும், மதுரையில் கடம்பும், திருநெல்வேலியில் மூங்கிலும், தல விருட்சங்களாக உள்ளன. மர நிழலில் நடப்பட்டிருந்த கற்றூண் சிவலிங்கமென அறியப்பட்டது. சிலலிங்கங்கள் பெரும்பாலும் ஆல நிழலில் நடப்பட்டிருந்தன. ஆகவே பழைய இலக்கியங்கள் சிவபெரு மானை ஆலமர் செல்வன் எனக் குறிப்பிடுகின்றன.
நகரங்களிலும் பட்டினங்களிலும் சிவலிங்கத்தைச் சுற்றிக் கோவில் எடுக்கப்பட்டது. ஏனைய இடங்களில் மக்கள் மர நிழலிற் சென்று சிவ லிங்கத்தை வழிபட்டார்கள். வழிபாட்டில் சாதி உயர்வு தாழ்வு என்னும் கொள்கைகள் நுழையவில்லை. தென்னிந்தியாவில் பழைய கோயில் களின் அழிபாடுகள் காணப்படவில்லை. முற்காலத் தென்னிந்திய மக்கள் கோயில்களையும் வீடுகளையும் மரங்களினாற் கட்டினார்கள்; ஆகவே அவற்றின் அழிபாடுகள் காணப்படவில்லை எனச் சிலர் கூறியுள்ளனர். சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய நூல் களிலும் செங்கல்லால் எடுக்கப்பட்ட உயர்நிலை மாடங்களைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. மொகஞ்சதாரோவில் கோயிலெனக் கருதப்படும் பெரிய கட்டிடமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முற்கால மக்கள் கடவுள் வழிபாட்டுக்குப் பெரிய கட்டிட அமைப்பு வேண்டியதில்லை எனக் கருதினார்கள். சோழ எழுச்சிக் காலத்திலேயே பெரிய கோயில்கள் எடுக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.
49. கோயில்
கோயில், வணக்கத்துக்குரிய இடமாக இருந்ததல்லாமல் பொருளா தாரம் பண்பாடு என்பவற்றோடு தொடர்பும் பெற்றிருந்தது. கோயில் எடுக்கத் தொடங்கியபோது, கோயில் அமைப்பு முறைகளை அறிந் தோரும், சிற்பிகளும் தொழிலாளரும் தத்தம் திறமைகளைக் காட்டுவதில் போட்டியிட்டார்கள். கடவுள் உருவங்கள் தொடக்கத்தில் மரத்தில் செய்யப்பட்டன. பின் கல்லிற் செதுக்கப்பட்டன; பிற்காலத்தில் அவை வெண்கலத்தில் வார்க்கப்பட்டன. சோழ அரசர் காலத்து வார்க்கப்பட்ட உருவங்கள் அழகும் சிற்ப நுட்பமும் பொலிந்தவை. பெரிய கோயில் களில் மிகப் பலர் கடமை ஆற்றினர். கல்லெழுத்துக்களில் கோயிலிற் கடமை ஆற்றுவோரின் விபரம் காணப்படுகிறது. கோவிலருச்சகர் நீங்கலாக அவர்கள், “நட்டுவன், அண்ணாவி, (நடனங் கற்றுக் கொடுப் போன்) ஆடுவார், கனபாடி, முகவீணைக்காரர், உடுக்கை வாசிக்கிறவர், வீணை வாசிப்போர், ஆரியம் பாடுவோர், தமிழ் பாடுவோர், கொட்டி மத்தளக்காரர், முத்திரைச் சங்கு ஊதுவோர், பக்க வாத்தியக்காரர், கட்டியங் கூறுவோர், மேளம் வாசிப்பவர், காந்தருவர், விளக்குப் போடுகிறவர், நீர் தெளிப்பவர், எடுபிடி சாமான் தூக்குகிறவர்கள், வண்ணான், நாவிதன், கொல்லன், தையான், பாடுகிறவன், சோதிடன், கன்னான், ஓச்சன், தட்டான், பாணன், கணக்கன்” என்போர். மடைப் பள்ளியில் பலர் ஏவல் புரிந்தனர்.
விழாக் காலங்களில் கோயில் கடைத்தெருவாகக் காட்சியளித்தது. கல்வி சம்பந்தமான போட்டிகள், மற்போர் முதலியன காட்சிகளாக விருந்தன. கோயில் எல்லைக்குள் பள்ளிக்கூடமும் மருத்துவமனையு மிருந்தன. பொது மக்கள் நாட்டுக் கருமங்களைப் பற்றி ஆலோசிக்கக் கோயிலிற் கூடினார்கள். புராணம் படித்தல், சமய சம்பந்தப்பட்ட நூல் களுக்குப் பொருள் கூறுதல் முதலிய நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற்றன. பத்தர்கள் கோவிலுக்குத் தலைமுறை தலைமுறையாக நிலங்களையும் பொருள்களையும் தானம் செய்து வந்தார்கள். நிலமும் பணமும் சேர்ந்தன. பணம் வட்டிக்குக் கொடுக்கப்பட்டது. நிலம் பயிர்ச் செய்கைக்கு விடப்பட்டது.
கடவுளுருவங்களை ஆபரணங்களால் அலங்கரிப்பது வழக்கி லிருந்தது. ஆபரணங்கள் இரத்தினக் கற்கள் அழுத்திச் செய்யப்பட்டவை. பொற்கொல்லர் ஆபரணங்கள் செய்வதில் தமது திறமையைக் காட்டினர். இராசராசன் என்னும் சோழ மன்னன் கட்டிய தஞ்சாவூர்ப் பெரிய கோயிலைப் பற்றிய பல கல்லெழுத்துக்கள் இருக்கின்றன. போரில் கிடைத்த கொள்ளைப் பொருள்களில் பெரும்பகுதியை அவன் கோவிலுக்குக் கொடுத்தான். 4150 கழஞ்சு அல்லது 500 இராத்தல் எடையுள்ள தங்கத்தையும் 5065 கழஞ்சு அல்லது 600 இராத்தல் எடை யுள்ள வெள்ளியையும் அவன் கோவிலுக்குக் கொடுத்தான். கோவிலிற் சேவிப்பதற்கு 400 தேவதாசிகளை நியமித்தான். ஒவ்வொரு தேவதாசிக் கும் ஒரு வீடும் ஒரு வேலி நிலமும் விடப்பட்டது. ஒரு வேலி நிலத்தில் நூறு கலம் நெல் விளைந்தது. 212 நட்டுவர், வாத்தியக்காரர், பொற் கொல்லர் என்பவர்களின் ஊதியத்துக்குத் தேவதாசிகளுக்கு விடப் பட்டது போல 180 வீடுகளும் நிலமும் விடப்பட்டிருந்தன. வாத்தியங்க ளோடு திருப்பதிகம் ஓதுதற்கு ஐம்பது பேர் இருந்தார்கள். கோயிற் பணம் கிராம சபைகளுக்கு வட்டிக்குக் கொடுக்கப்பட்டது. கோயிலமைப்பு அரண்மனை அமைப்பைப் போலிருந்தது. அது ஒரு கோட்டையைப் போலவுமிருந்தது.
50. பார்ப்பார்
தென்னிந்திய ஊர்கள் கோவிலைச் சுற்றியிருந்தன. பெரும்பாலும் ஊர்களின் பெயர்கள் கோவில்களின் பெயர்களாகவே அமைந்துள்ளன. எல்லா நாடுகளிலும் போலவே இங்கும் கோயில்களை மேற்பார்ப்போர் இருந்தனர். கோயிலை மேற்பார்த்தமையின் அவர்கள் பார்ப்பார் என அறியப்பட்டார்கள். இவர்கள் வேளாண் மரபைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். பிற்காலத்தில் இவர்கள் ஆதிசைவர் என அறியப்பட்டார்கள். இவர்கள் சோதிடம், மருத்துவம், மாந்திரீகம் முதலியன அறிந்தவர்களாக இருந்தார்கள். அவர்களின் செல்வாக்கு பொது மக்களிடையே அதிகம் இருந்து வந்தது. அவர்கள் அரசனின் மதிப்புக்குரியவர்களாகவும் இருந்தார்கள். பார்ப்பனருள் சிறந்தவர் அரசனது உறுதிச் சுற்றம் என்னும் குழுவில் ஒருவராக இருந்தார்.
“அடுத்த நட்பாளரும் அந்த ணாளரும்
படைத் தொழி லாளரும் மருத்துவக் கலைஞரும்
நிமித்த காரரும் நீணில வேந்தர்க்
குரைத்த வைம்பெயர் உறுதிச்சுற்றம்”
அரசனுடைய முடிசூட்டின்போது பார்ப்பானே முடியை எடுத்து அவனுக்குச் சூட்டினான். இவ்வாறு முடிசூட்டிக் கொள்ளாத அரசன் முறையான அரசன் எனக் கொள்ளப்படமாட்டான்.
பார்ப்பார் மக்களைத் தீமைகளினின்றும் நீக்கி நல்வழியில் செலுத்துவோர் எனப் பொதுமக்கள் நம்பினார்கள். ஆகவே பார்ப்பார் புரோகிதர் எனவும் அறியப்பட்டனர். புரோகிதன் என்னும் சொல் காத்தல் என்னும் பொருள்படும் புர என்னும் அடியாகப் பிறந்தது.
ஒருவன் செய்து வந்த தொழிலை அவன் கால் வழியினர் செய்து வருதல் என்னும் முறையில் குடும்பங்கள் பெருகிச் சாதிகள் பலவாயின. இதனை ஒப்பப் பார்ப்பன வகுப்பும் தனிக் குலமாக வளர்ந்தது. சாதிகள் பிறப்பினால் உண்டானவை எனப் பொது மக்கள் நம்பத் தலைப் பட்டார்கள். இவ்வகை நம்பிக்கை திருவள்ளுவர் காலத்தில் இருந்தது. “பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்” என்னும் திருக்குறளால் இது விளங்குகின்றது.
புத்தகக்கட்டு, மணை, முக்கோல், தூக்கு (உறி) என்பவற்றைக் கொண்டு இடமிருந்து இடம் செல்லும் ஒரு வகைத் துறவிகள் வாழ்ந் தார்கள். அவர்கள் காவி தோய்த்த உடை அணிந்தார்கள். அவர்கள் சமணத் துறவிகளைப் போன்று எல்லா உயிர்களிடத்தும் இரக்கமுடைய வர்களாக இருந்தார்கள். அவர்கள் அந்தணர் என அறியப்பட்டார்கள். அந்தணர் என்பதற்கு எல்லா உயிர்களிடத்தும் அருளுடையவர் என்பது பொருள். பிற்காலங்களில் அந்தணர் என்னும் சொல் பார்ப்பனரையும் குறிப்பதாக இருந்தது.
பிற்காலத்தில் பிராமணர் என்னும் ஒரு கூட்டத்தினர் வடக்கினின் றும் தெற்கே வந்தனர். இவர்கள் வேதங்களின் பகுதிகளாகிய பிராமணங் களைப் பயின்று கிரியைகளைப் புரிபவர்களாக இருந்தார்கள். பல்லவர், சாளுக்கியர், ஹோய்சளர் முதலிய பல வடநாட்டினர் தென்னிந்தியா மீது படை எடுத்து வந்து நாட்டின் சில பகுதிகளைச் சிற்சில காலம் ஆண்டனர். அக்காலத்தில் பிராமண மதத்தினருக்கு அரசரின் ஆதரவு கிடைத்தது. கோயில்கள் பார்ப்பனரிலிருந்து பிராமணர் கைக்கு மாறின. தமிழுக்குப் பதில் வடமொழி ஆலயங்களில் வழங்கத் தலைப்பட்டது. இவ்வாறான குழப்பங்களால் பிராமணர், பார்ப்பார், அந்தணர் என்னும் பெயர்கள் ஒரே பொருளில் வழங்கி வருகின்றன. உண்மையில் இம் மூன்று பெயர்களும் குறிப்பிடுவோர் வெவ்வேறு தொழிலுடையவர் களாக இருந்தவர்களாவர். தமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிற்காலத்து ஆதி சைவர் என அறியப்பட்டனர்.
51. தத்துவ ஞானம்
மக்களில் ஒரு சிலர் கடவுள், உயிர், உலகம், இறப்பு, பிறப்பு, வினை இவைகளுக்குள்ள தொடர்பு போன்ற நுண் கருத்துக்களை ஆராய்ந்து வந்தார்கள். இவ்வாராய்ச்சிகளின் முடிபே தமிழர் கண்ட தத்துவ ஞானமாகும். உயிர், மெய், உயிர்மெய், வேற்றுமை போன்ற சொற்கள் மிகப் பழங்காலம் முதல் தமிழ் இலக்கணத்தில் ஆளப்பட்டு வருகின்றன. இதனால் மிகப் பழங் காலத்திலேயே தத்துவஞானம் தமிழர்களிடையே வளர்ச்சியடைந்திருந்ததெனத் தெரிகிறது. தமிழர் கண்ட தத்துவ ஞானம் ஒரு நாட்டினருக்கு அல்லது ஒரு சாதியினருக்கு மாத்திரம் உரியதன்று; அது உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவானது. தொல்காப்பியர், திருவள்ளுவர் என்னும் பண்டைய ஆசிரியர்கள் எச் சமயத்தைச் சேர்ந்த வர்களென்று அறிய முடியாமலிருக்கின்றது. இதற்குக் காரணம் தமிழரின் தத்துவஞானம் உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவாக இருப்பதா லாகும்.
தத்துவ ஞானம் மிகப் பழங்காலம் முதல் குருமாணாக்க முறையில் உபதேசிக்கப்பட்டு வந்தது. அது இரகசியம் அல்லது உபதேசம் எனப்பட்டது. வீடு பேற்றுக்குரிய ஞானங்களை எழுதி வைப்பது தமிழ் மரபன்று. இறைவன் தென்முகக் கடவுளாக அமர்ந்து முனிவர்களுக்கு ஞானத்தை மௌனமாகவிருந்து உபதேசித்தார் எனச் சொல்லப்படு கிறது. வீட்டு நூல்கள் எழுதி வைக்கப்படுவதில்லை என்பதைத் தொல் காப்பியம் குறிப்பிடுகின்றது. பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரியர்களும் இதனைக் குறிப்பிட்டிருக்கின்றனர். குரு மாணாக்க முறையில் வந்த தத்துவஞான நூல்கள் வட நாட்டில் உபநிடதங்கள் என வழங்கின. உபநிடதங்களிற் சொல்லப்படும் தத்துவ ஞானத்துக்கும் ஆகமங்களிற் சொல்லப்படும் தத்துவ ஞானத்துக்கும் நெருங்கிய ஒற்றுமையுண்டு என அறிஞர் கூறுவர். ஆகம ஞானக் கருத்துக்கள் தமிழ ரிடையே மிகப் பழங்காலம் முதல் இருந்து வருவன. உபநிடத ஞானங் களை அடிநிலையாகக் கொண்டு சாங்கியம், பௌத்தம், யோகம், சமணம் முதலிய தத்துவ ஞானங்கள் எழுந்தன. கபிலர், புத்தர், மகாவீரர் முதலியோர் திராவிடமரபைச் சேர்ந்தவர்களென்பது ஆராய்ச்சியாளர் கருத்து. உபநிடதக் கருத்துக்களைத் தெளிவுப்படுத்துவதற்கு வேதாந்த சூத்திரங்கள் செய்யப்பட்டன. பிற்காலத்தவர் இச்சூத்திரங்களுக்குத் தத்தம் கொள்கைகளைப் புகுத்தி உரை கண்டனர். பௌத்தம் சமணம் முதலிய தத்துவ ஞானங்கள் வடக்கினின்றும் தெற்கு நோக்கிப் பரவிக் கொண்டிருந்தன. அதனால் தெற்கில் பரவியிருந்த தத்துவ ஞானக் கருத்துக்களில் தடுமாற்றங்கள் எழுந்தன. அக் காலத்தில் திருமூலர், தமிழர் தத்துவ ஞானக் கருத்துக்களை விளக்கித் திருமந்திரம் என்னும் ஞான நூலைச் செய்தார்: சமயகுரவர்களும், ஆழ்வார்களும் தமிழரது தத்துவ ஞானக் கருத்துக்களைத் தமது பாடல்களில் இடைஇடையே எடுத்துக் கூறியிருக்கின்றனர். சங்கராச்சாரியார் வேதாந்த சூத்திரங்களுக்கு உரை செய்தார். அவர் தமது உரையில் கடவுள் ஒன்றே உள்பொருள்; மற்றவை பொய்த் தோற்றங்கள் எனக் கூறினார். இக்கொள்கை கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருள்களை உள் பொருள்களெனவும், இறைவனையும், உயிரையும் ஆண்டான் அடிமை எனவும் கொள்ளும் தமிழர் ஞானமாகிய சைவ சிந்தாந்தக் கொள்கைக்கு முரணாக விருந்தது. ஆகவே மெய்கண்டார், உமாபதி சிவம், அருணந்தி சிவாச்சாரியார் முதலிய அறிஞர் சைவ சித்தாந்த ஞானங்களை விளக்கித் தமிழில் நூல்கள் செய்தனர். சைவ சித்தாந்தக் கருத்துக்கள் தோத்திர வடிவான சைவத் திருமுறைகளிலும், நாலாயிரப் பிரபந்தத்திலும் இடையிடையே கூறப்பட்டுள்ளன.
52. கல்வி
மரத்தடி, கோயிலின் பத்தி அல்லது ஆசிரியனின் வீட்டுத் திண்ணை என்பவை பள்ளிகளாக இருந்தன. கல்வி ஐந்து வயதில் தொடங்கியது. நாட்டுப்புறங்களில் காணப்படுவது போலச் சிறுவர் மணலில் எழுத்தெழுதப் பயின்றார்கள். ஆசிரியனின் முதல் மாணவன் மாணவருக்குக் கல்வி பயிற்றுவதில் உதவியாக இருந்தான். ஒரு மாணவன் சொல்ல மற்ற மாணவர்கள் கேட்டுச் சொல்லும் முறையில் நெடுங் கணக்குப் பயிலப்பட்டது. மாணவர் ஆசிரியனுக்குப் பணிவும் மரியாதை யும் காட்டினர். “எழுத்தறி வித்தவன் இறைவனாவான்” என்பது தமிழ் நாட்டுப் பழமொழி. மாணவர் பாடங்களைப் பனை ஓலை ஏடுகளில் எழுதிப் பயின்றார்கள். எழுதுவதற்குப் பனை ஓலையும் எழுத்தாணியும் பயன்படுத்தப்பட்டன. பழங்காலச் சாசனங்கள் அக்காலத்தில் எழுத்து முறையான கல்வி எவ்வளவு திருத்தம் பெற்றிருந்ததென்பதைக் காட்டு கின்றன. கோவில்களிலும், மரத்தடிகளிலும் அல்லாமல் சமண மடங்களி லும், பௌத்த விகாரைகளிலும் மாணவர் கல்வி பயின்றார்கள். கல்வி கற்பிக்கப்படும் இடங்களுக்குப் பள்ளி என்னும் பெயர் வழங்கு கின்றது. இது பௌத்த மதம் சம்பந்தப்பட்ட பெயர். பள்ளியில் மாணவர் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதைப் பற்றி நன்னூல் கூறுகின் றது. மாணவர் ஆசிரியருக்கு ஊதியமாக வயல்களில் விளையும் பொருள் களை ஆண்டில் ஒரு முறை அல்லது பல முறைகளில் கொடுத்தார்கள். பிற்காலத்தில் ஊர் ஆசிரியனுக்கு ஊதியமாக மானியங்கள் விடப்பட் டிருந்தன. கோயில்களில் துதிப்பாடல்கள் பாடுவதற்கு மாணவர் பயிற்றப் பட்டார்கள். மடங்கள் தோன்றியபோது மடங்களும் கல்விச் சாலை களாக விளங்கின.
உயர்ந்த கல்வி கற்க விரும்பினோர் நாட்டில் ஆங்காங்கு புகழ் பெற்று விளங்கிய ஆசிரியர்களை அடைந்து அவர்களுடன் தங்கியிருந்து கல்வி பயின்றார்கள். ஆசிரியர்கள் மாணவருக்கு எளிதில் கல்வி பயிற் றற்கு உதவியாகப் புதிய நூல்களைச் செய்வதும் வழக்கமாக இருந்தது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவருக்காகச் செய்யப்பட்டவை. ஆசிரியனுடன் தங்கி யிருந்து கல்வி பயிலும் மாணவர் அவனுடைய வீட்டுப் பணிகளைச் செய்து அவனுக்கு உதவியாக இருந்தனர். அரச குமாரர் ஆட்சிக்குரிய கல்வியையும், போர்க் கல்வியையும் வெவ்வேறு ஆசிரியர்களிடம் பயின்றார்கள். முற்கால மாணவர் இலக்கியங்களையும், இலக்கணங் களையும் மாத்திரமல்லாமல் இசை, கூத்து, ஓவியம் போன்ற பல வகைக் கல்விகளையும் பயின்றனர். அரசர், அரசியர் முதலானோர் இசை, நடனம் முதலியவற்றில் சிறந்து விளங்கினார்கள் என இலக்கியங்கள் கூறுகின்றன. பெண்களில் சில வகுப்பினர் அறுபத்து நான்கு வகைக் கல்வி பயின்றனர். அவை “எண்ணென் கலை” அல்லது அறுபத்து நான்கு கலைகள் எனப்பட்டன.
கைத்தொழில் பற்றிய கலைகள் தனித்தனி வகுப்பினரிடையே எழுதாக்கலையாக இருந்து வந்தன.
தொழில் சம்பந்தப்பட்ட கல்வி பயில்வோர் அவ்வத் தொழிலில் திறமை பெற்றவர்களிடம் பயின்றார்கள். பெரும்பாலும் தந்தையே தனது மகனுக்குத் தொழிற்கல்வி கற்பித்தான்.
53. கைத்தொழில்கள்
“நெசவு குடிசைத் தொழிலாக இருந்தது. நெசவு வேலை செய்வோர் பெரும்பாலும் பெண்களாக இருந்தார்கள். கம்பளி, பஞ்சு, மரப்பட்டை, சணல், இலவம் பஞ்சு முதலியவற்றில் நூற்கப்பட்ட நூலால் துணிகள் நெய்யப்பட்டன. பலவகைச் சணல் நார், பட்டு, இரலை மான் மயிர் என்பவற்றிலிருந்தும் ஆடைகள் செய்யப்பட்டன. கயிறுகள், கவசங்கள், வார்கள் செய்வோரும் இருந்தனர்.
“தச்சர், கம்மியர், குயவர், மதுவடிப்போர், வாத்தியக்காரர், கூத்தர் முதலிய பல தொழில் புரிவோரிருந்தனர். வண்டிகள், தேர்கள் போன்ற வற்றைச் தச்சர் செய்தனர். பொற்கொல்லர் முக்கிய தொழிலாளராக இருந்தார்கள். இராச நிகண்டு என்னும் வட மொழி நூல் 42 வகைப் பொன்னைப் பற்றிக் கூறுகின்றது. ஆபரணங்களும் நாணயங்கள் சிலவும் பொன்னாற் செய்யப்பட்டன. பொன்னோடு வேறு உலோகங்களைக் கலந்து வேலை செய்தல், முலாம் பூசுதல், பொன்னில் இரத்தினக் கற் களைப் பதித்தல், உரை கல்லைக் கொண்டு பொன்னைச் சோதித்தல் முதலியன அறியப்பட்டிருந்தன. இரும்பு, செம்பு, ஈயம், தகரம் முதலியவை கீழான உலோகங்களாகக் கொள்ளப்பட்டன. தில்லியில் சந்திரகுப்த னால் (கி.பி. 5ஆம் நூ.) நாட்டப்பட்ட இரும்புத்தூண், அக்காலத்தில் உலோகங்களை உருக்கிவார்க்கும் தொழில் நன்கு அறியப்பட்டிருந்தது என்பதைத் தெரிவிக்கின்றது. பொதுவாக வீட்டில் பயன்படுத்தும் பொருள்கள் மரத்தினால் செய்யப்பட்டன. பழைய வாகடங்களில் பாதரசம் கூறப்படவில்லை. அது கௌடலியர் காலத்திலும் அறியப்பட வில்லை. சுசுருதர் காலத்தில் அது அறியப்பட்டிருந்தது. நிலக்கீல், மலையிலிருக்கும் நான்கு உலோகங்களை வெயில் சூடேறச் செய்வதால் வடியும் களிம்பு எனக் கருதப்பட்டது. முத்து, பவழம், இரத்தினக்கற்கள் என்பன மிகப் பழங்காலம் முதல் அறியப்பட்டிருந்தன. வைரங்கள் வெட்டிச் சாணை பிடித்துச் சுத்தஞ் செய்யப்பட்டன. போலி இரத்தினக் கற்களும், இரசக் கலவையைக் கொண்டு செய்யப்படும் போலி முத்துக் களும் அறியப்பட்டிருந்தன”.1
உலோக வேலை செய்வோர் அக்கசாலையர், கம்மாளர், அறிவர், ஓவர், கண்ணாளர், கண்வினைஞர், கம்மியர், கொல்லர், கருமார், தட்டார், துவட்டர், புலவர், புனையர், வித்தகர், வித்தியர் முதலிய பெயர் களால் அறியப்பட்டனர். உலோகத் துண்டை அடித்துச் செய்த தகடு அடர் எனப்பட்டது. அடரினால் பெரிய ஏனங்கள் செய்யப்பட்டன. சங்குகள் அறுத்து வளைகளாகச் செய்யப்பட்டன. இரத்தினக் கற்களில் துளையிடுவோர் என அறியப்பட்டனர்.
ஒவ்வொரு கூட்டத்தினரும் பரம்பரைத் தொழிலையே செய்து வந்தார்கள். தொழில்களில் மாற்றமுண்டாகவில்லை. கூத்தர், மேளமடிப் போர், சங்கு ஊதுவோர், கம்பங் கூத்தாடிகள், யானை பழக்குவோர் என்பவர்களைப் பற்றி நூல்கள் குறிப்பிடுகின்றன. மனிதருக்கும் விலங்கு களுக்கும் வைத்தியம் செய்யும் மருத்துவரும் இருந்தனர்.
54. ஆபரண அலங்காரங்கள்
ஆடவரும் மகளிரும் பலவகை ஆபரணங்களால் தம்மை அலங் கரித்தார்கள். அவர்கள் தம்மை அலங்கரித்து கொண்டதல்லாமல் தாம் பயன்படுத்தும் எல்லாப் பொருள்களையும் அலங்கரித்தார்கள். வீடு களின் கதவுகள், நிலைகள், முற்றங்கள் என்பனவும் பல வேலைப்பாடு களால் அலங்கரிக்கப்பட்டன. கத்தி, வாள் போன்வற்றின் பிடிகளும் பலவாறு அலங்கரிக்கப்பட்டிருந்தன. மகளிர் முற்றத்திலும், வீட்டு வாயிலிலும் வியக்கத்தக்க அழகிய கோலங்களை இட்டார்கள். வீட்டின் சுவர்களிலும் கோயில் சுவர்களிலும் மனத்தையும் கண்ணையும் கவரும் அழகிய ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தன. கோயில் கட்டடங்களிலும் தேர்களிலும் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.
மணமாகாத மகளிர் தமது கூந்தலை ஐந்து வகையாகக் கோதி முடித்தார்கள். பெண்கள் நெற்றியில் திலகமிட்டார்கள்; தலையில் பல வகைப் பூக்களைச் சூடினார்கள்; சுறாமீன், வலம்புரிச் சங்கு, பிறை போன்ற அணிகலன்களை அணிந்தார்கள்; கொண்டையிலும் கழுத்தி லும் பூ மாலைகள் அணிந்தார்கள்; சந்தனம் குங்குமம் முதலிய நிறப் பொடிகளைப் பயன்படுத்தி மேனியை அலங்கரித்தார்கள்; உதடுகளுக்கு அரக்கினால் செய்யப்பட்ட சாயம் ஊட்டினார்கள், மார்பிலும் தோளி லும் தொய்யிலென்னும் ஒருவகைக் குழம்பு பூசினார்கள்; அதன் மீது கரும்பு, பூங்கொடி என்பவற்றை அழகுபெற எழுதினார்கள்; காதில் தோடு அணிந்தார்கள்; காலில் சிலம்பும், கை விரலில் மோதிரமும் அரையில் மேகலையும் அணிந்தார்கள். ஆடவரும் குழை, கடகம், தண்டை முதலிய பலவகை அணிகளை அணிந்தார்கள். பெண்கள் அணிந்த அணிகள் மிகப் பல. சங்க இலக்கியங்களிலும் பிற்கால இலக் கியங்களிலும் பலவகை அணிவகைகள் கூறப்படுகின்றன. அணிதல் அழகு செய்தலை உணர்த்த ஆர், சூடு, புனை, பூண், மிலைவேய், முதலிய பல சொற்கள் காணப்படுகின்றன. பழைய சிற்பங்களில் முற்கால ஆடவர் மகளிர் அணிந்த அணிவகைகள் காணப்படுகின்றன.
பிற்காலத்தும் முற்காலத்தும் வழங்கிய அணிவகைகளுள் சில பின் வருவன: தோடு, காரோலை, முத்துமாலை, பவழ மாலை, சங்கிலி, குறங்கு செறி, பட்டிகை, சதங்கை, கிண்கிணி, சிலம்பு, கழல், வளை, மோதிரம், மேகலை, திருப்பதம், திருமுடி, பள்ளித் தொங்கல், கொற்றக்குடை, தவள சத்திரம், பொற்பூ, திரள்மணி வடம், காறை, அடிக்காறை, அன்னம், கிளி, சோனகச் சிடுக்கு, சோனகச் சிடுக்கின் கூடு, மகுடம், வாளி, வடுகவாளி, கண்மலர் (நயனம்), பொட்டு, பதக்கம், ஏகவலி, கால்வடம், கமலம், வாகு வலயம், துடர், திருப்பட்டி, திருமணி வடம், கைக்காறை (புயவளை), பாதசாலம், பத்திரம், கண்டதுடர் (மாலை), கொக்குவாய் (கழுத்து ஆபரணங்களை எல்லாம் சேர்த்துப் பிடிக்கும்படி அணியும் சங்கிலி), கட்டகம் (பவளம் பதித்த கைவளை), இரத்தின வளையல், சிறு சந்தம், பாசமாலை, சப்தசாரி, பதக்கம், கலாவம் (பதக்கத்தின் பகுதி), பிரபை, கமலம், செடி, சரப்பள்ளி, தெய்வவுத்தி, வலம்புரிச் சங்கு, பூப்பாளை, தென்பல்லி, கடுக்கன், கடகம், சன்னவீரம், உதரபந்தம்.
55. பொழுதுபோக்கு
அரசர் பெரும்பாலும் வேட்டையாடுவதிலும் ஆயுதப்பயிற்சி போர்ப் பயிற்சிகளிலும் பொழுது போக்கினர்; யானை ஏற்றம் குதிரை ஏற்றம் என்பனவும் அவர்களின் பொழுதுபோக்காக இருந்தன. போர் வீரர் மற்போர், குத்துச் சண்டை, சிலம்பம், வாட்போர், விற்போர் முதலியன புரிந்து பொழுது போக்கினர். மகளிர் அம்மானை, பந்து, கழங்கு முதலிய விளையாட்டுகளிலும், தெள்ளேணம், சாழல், கோலாட் டம், குரவை, கும்மி முதலிய ஆடல்களிலும் யாழ் வாசித்தல் பாடுதல் முதலியவற்றிலும் பொழுதுபோக்கினர். பொது மக்கள் காடைப் போர், கௌதாரிப் போர், ஆட்டுப் போர், யாiனை ஓட்டம், குதிரை ஓட்டம், தேரோட்டம், நாட்டுக் கூத்து, கழைக் கூத்து என்பவற்றைப் பார்த்துப் பொழுது போக்கினர். சிறுவரும் சிறுமியரும் சிறு தேரோட்டியும், சிறு பறை அறைந்தும், சிற்றில் புனைந்தும், ஊசலாடியும், வில் கொண்டு அம்பு எய்தும் பொழுது போக்கினர். ஊசலாடுதல் வளர்ந்தவர்களின் பொழுதுபோக்காகவும் இருந்ததது. ஆயர்குல வாலிபர் ஏறு தழுவிப் பொழுது போக்கினர். ஏறு தழுவுதல் என்பது சல்லிக்கட்டு என்பது போன்றது. முதியோர் தாயம் ஆடினர்.
விழாக்கள், உண்டாட்டுகள், களியாட்டுகள், என்பனவும் சிறந்த பொழுது போக்குகளாக இருந்தன. பெண்கள் செல்லும் தேரையும் யானையையும் பெண்கள் ஓட்டிச் செல்வதும் அக்கால வழக்காக இருந்தது. ஆற்றில் புது வெள்ளம் வரும் போது நீராட்டு விழா எடுக்கப் பட்டது. அப்பொழுது ஆடவரும் மகளிரும் தேர்கள், வண்டிகள், யானைகளை ஊர்ந்து சென்று பலவகை ஆடம்பரங்களோடு நீராடுவர்; ஆற்றங்கரைகளில் இடப்பட்டுள்ள கூடாரங்களுள் தங்கும் போது மதுவுண்டும், நறும் பண்டங்களைச் சுவைத்தும், ஆடியும் பாடியும் களிப்பர். கார்த்திகை விழாவில் வீட்டுக்கு விளக்கேற்றப் பட்டது. தைமாதப் பிறப்பில் மகளிர் விடியற் காலையில் நீராடி விரதமிருந்தனர்.
சிறுவர் நெல்லிக்காயை வைத்து வட்டாடுதல், கிணற்றுள் குதித்து நீர் அடியிலிருக்கும் கல்லை எடுத்து வருதல் போன்ற பொழுது போக்குகள் இலக்கியங்களில் கூறப்படுகின்றன. விழாக் காலங்களில் புலவர்கள் பட்டி மண்டபத்திலேறித் தத்தம் புலமையைக் காட்டும் சொற்பொழிவாற்றினர். விசய நகர அரசர் காலத்தில் அரண்மனைக்குள் பொழுதுபோக்கு அரங்கு இருந்தது. அரசனதும் அரண்மனையிலுள்ள வர்களதும் பொழுதுபோக்குக்காக விலங்குகள் போர் செய்யும்படி விடப்பட்டன; மற்போர் நடத்தப்பட்டன. மற்போரில் பெண்களும் கலந்து கொண்டார்கள்.
56. இசை
ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய இசைகளிருந்தன. குறிஞ்சி நில மக்கள் குறிஞ்சிப் பண்பாடினார்கள்1. முல்லை நில மக்கள் முல்லைப் பண் பாடினார்கள். அஃது இன்று மத்தியமாவதி என அறியப்படுகின் றது. மருதநில மக்கள் மருதப் பண் பாடினார்கள். அது இன்று கேதாரம் என அறியப் படுகின்றது. நெய்தல் நிலத்துக்குரிய பண் இன்று புன்னாகவ ராளி என அறியப்படுகின்றது. பாடி ஆடும்போது கொட்டப்படும் மேளங்கள் இருந்தன. வெவ்வேறு ஓசைகளை எழுப்பும் பறைகள் வெவ்வேறு செயல் புரியும் காலங்களில் கொட்டப்பட்டன. நிரை கவரும்போது கொட்டப்படுவது ஏறு கோட் பறை. வெறியாடும்போது ஒலிக்கப்படும் பறை முருகியம். மணக் காலத்தில் முழக்கப்படுவது மணமுழவு. தேரிழுக்கும் போது கொட்டப்படுவது தேரோட்டுப் பறை. நெல்லறுக்கும் போது அறையில் பாடுவது நெல்லரிகிணை. அரசன் வெளியே புறப்படும் போது தட்டப்படுவது புறப்பாட்டுப் பறை. மீன் பிடிக்கச் செல்லும்போது கொட்டப்படுவது மீன் கோட் பறை. சூறையாடும் போது கொட்டப்படுவது சூறை கோட்பறை.
போர்க்காலத்து யானை குதிரை காலாட் படைகளுக்கு ஊக்க மூட்டும் பொருட்டுப் பல்வகை வாத்தியங்கள் ஒலிக்கப்பட்டன. அவை இயம், இசைக் கருவி, வாத்தியம், வாச்சியம் எனப்பட்டன. இவை தோற் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி என நால்வகைப் பட்டன. தமிழுக்குரிய ஏழிசைகள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. இவைக்குரிய எழுத்துக்கள் ஆ முதலிய நெடில் ஏழும். ச, ரி, க, ம, ப, த, நி என்னும் எழுத்துக்கள் பிற்காலத்தில் வழக்குக்கு வந்தன. மூங்கில், கொன்றைப் பழத்தனி கோது, ஆம்பற் றண்டு, மரம் முதலியவற்றில் செய்யப்பட்ட குழல்களிருந்தன. எக்காள வகைகளில் தாரை, காளம், காகளம், அம்மியம், சின்னம் என்பனவும் கொம்பு வகைகளில் கோடு, இரலை, வயிர் முதலியனவும் இருந்தன.
நரம்புக் கருவிகளில் சிறப்புடையது யாழ். அவைகளுக்கு ஏழு, இருபத்தொன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்புகள் இருந்தன. பறை, முரசு, பேரிகை, மத்தளம், ஆகுளி, எல்லரி, சல்லிகை, கிணை முதலியன மேள வகைகளுள் சில. இன்று, இலங்கைத் தீவில் எழுபதுக்கு மேற்பட்ட மேள வகைகள் வழங்குகின்றன. இதனால் அக்காலத்தில் பலவகை மேளங்கள் இருந்தனவென்று அறிய வருகிறது. பாணர் கையில் கொண்டு திரிந்து அடித்துப் பாடும் சிறிய மேளங்கள் தாரை, உடுக்கை முதலியன.
தமிழர் நூல்களைப் பாடல் வடிவில் செய்து இசையோடு பாடி வந்தனர். ஆடல்களோடு பாடல்களும் பாடப்பட்டன. பெண்கள், இழவுக் காலத்தில் தமது துக்கத்தை ஒப்பாரி என்னும் பாடல்களாகப் பாடினர்.
“பந்தாடுவதிலும் பாட்டு, ஊசலாடுவதிலும் பாட்டு, நெற்குற்று வதிலும் பாட்டு, உழவிலும் பாட்டு, போரிலும் பாட்டு தமிழரிடையே மலிந்து காணப் படும். தமிழர்க்கு அழுகையும் பாட்டாய் வரும். மணமும் பாட்டாய் நிகழும். தொழுகையும் பாட்டால் விளங்கும். தமிழர் தெய் வத்தைப்பாட்டும் இசையும் பயிலவே வணங்குவர். ஏற்றப் பாட்டு, கப்பற் பாட்டு, இறவைப்பாட்டு, பள்ளி யெழுச்சிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, பாவைப்பாட்டு, மறத்தியர்பாட்டு, குறத்தியர்பாட்டு, இரேகைப்பாட்டு, குறிப்பாட்டு, பள்ளுப்பாட்டு, பறைப்பாட்டு, வள்ளுவர்பாட்டு, வண்டிப் பாட்டு, அம்மானைப்பாட்டு, கழங்குப் பாட்டு, பல்லாங்குழிப்பாட்டு, தோழிப்பாட்டு, பாண்டிப்பாட்டு, கடை திறப்புப்பாட்டு, சிந்துப்பாட்டு, சந்தப்பாட்டு, பிள்ளைப்பாட்டு, கொள்ளைப்பாட்டு, கள்ளர்பாட்டு, வெற்றிப்பாட்டு, வாழ்த்துப்பாட்டு, மங்கலப்பாட்டு, மணப்பாட்டு, காதற்பாட்டு, காவடிப்பாட்டு, பகடுரப்பற்பாட்டு, இடையர்பாட்டு, வேடுவர்பாட்டு, நடைப்பாட்டு, கும்மிப்பாட்டு, குரவைப்பாட்டு, கைவீசற்பாட்டு, சப்பாணிப்பாட்டு, கீரைப்பாட்டு, கோலப்பாட்டு, கோலடிப்பாட்டு, சிலம்பப்பாட்டு, வில்லுப்பாட்டு, தல்லுப்பாட்டு (ஒருவர்ப் பாட எதிர்த்துப் பாடும் பாட்டு - மலை நாட்டு வழக்கு), கோயில் பாட்டு, குழற்பாட்டு, கூத்திற் பாட்டு முதலிய இசைப் பாட்டுகள் எல்லாம் தமிழருடையவை”.
முற்காலத்தில் இசை வளர்த்த குடும்பத்தார் பாணர் என அறியப் பட்டனர். அக்காலத்திலிருந்த இசை அறிஞர் துளைக் கருவிவாசிப் போர், தோற்கருவி வாசிப்போர், நரம்புக் கருவி வாசிப்போர், கண்டத் தாற் பாடுவோர் என நால்வகைப் பிரிவினராக அமைந்து இசை வளர்த் தார்கள். திருநீலகண்ட யாழ்ப்பாணர் வாசித்த யாழ் சகோட யாழ். தேவார திருவாசகங்கள் அக்காலத்தில் சிறந்த இசைப்பாடல்களாக விளங்கின. சோழ நாட்டில் உறையூரில் தோன்றிய திருப்பண்ணாழ்வார் திருவரங்கக் கடவுளுக்கு இசைத் தமிழ்த் தொண்டு செய்து பெரும்பேறு பெற்றார். திருத்தொண்டர் புராணத்தில் கூறப்படும் ஆனாயனார் வேய்ங்குழலில் இறைவனின் ஐந்தெழுத்தை இசைச் சுரங்களாகக் கொண்டு வாசித்து இறைவனருள் பெற்றார். அருணகிரி நாதர் பாடிய பாக்கள் சந்த இசை யில் சிறந்தவை. திருமுறை கண்ட சோழன், திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த பாடினியாரைக் கொண்டு தேவாரங்களுக்குப் பண்ணமைதி யினை வகுத்தமைத்தான். சேந்தனார் முதலிய ஒன்பதின்மராற் பாடப் பெற்ற பாடல்கள் தேவாரத்தை ஒப்பப் பண்ணடைவு பெற்றுள்ளன. இராசராச சோழன் தேவாரத் திருப்பதிகம் பாடுதற்கும் இசை பாடுதற் கும் பலரைத் தஞ்சைப் பெரிய கோயிலில் நியமித்தான். முத்துத் தாண்ட வர் கீர்த்தனை, இராம நாடகக் கீர்த்தனை முதலியன பிற்கால இசைப் பாடல்களாகும். யாழும் வீணையும் இருவேறு இசைக் கருவிகள்.
இசையின் காலத்தை அளப்பதற்குத் தாளம் வழக்கில் இருந்தது. தாளத்தைப் பற்றிக் கூறும் தாள ஓத்து, தாள சமுத்திரம் முதலிய நூல்கள் இருந்தன. இசையைப் பற்றிக் கூறும் இசை நுணுக்கம், முது நாரை, முது குருகு, இந்திர காளியம், பஞ்சமரபு, பரத சேனாபதியம் முதலிய பல நூல்கள் இருந்தன. இவை இப்பொழுது இறந்து விட்டன.
57. போர்
தமிழரசர் பெரும்பாலும் தமது ஆணையைப் பிற அரசர் மீது செலுத்தும் பொருட்டுப் போர் செய்தனர். போர் பெரும்பாலும் அறுப்புக் காலத்தின் பின் நிகழ்ந்தது. மேற்கொள்ளப்பட்ட போர்களின் தன்மை நோக்கி அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை எனப் பெயர் பெற்றன. போர் வீரர் அவ்வக் காலத்தில் முடியில் சூடிக் கொண்ட பூக்கள் காரணமாக அப்பெயர்கள் தோன்றின. தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தருக்கும் வெவ்வேறு பூக்கள் இருந்தன. பாண்டியனுக்கு வேப்பம் பூவும், சோழனுக்கு ஆத்திப் பூவும் சேரனுக்குப் பனங்குருத்தும் அடையாளப் பூக்களாகும். இவ் வரசர்களின் படை வீரர் தம்மரசரின் பூவைச் சூடுதல் மரபு. சில சமயங்களில் அவர்கள் அப் பூக்களைப் பொன்னினால் செய்து சூடினர். வெட்சி என்பது ஒரு அரசன் மாற்றானுடைய பசுக் கூட்டங் களைக் கவர்தல். பசுக்களை மீட்டல் கரந்தை என அறியப்படும். வஞ்சி, மாற்றான் மீது படை எடுத்துச் செல்லுதல். உழிஞை, ஓர் அரசன் இன் னொரு அரசனின் கோட்டையை முற்றுகையிடுதல். தும்பை, இரு படை களும் ஒன்றை ஒன்று எதிர்த்துப் பொருதல். வாகை, வெற்றியைக் குறிக்கும். காஞ்சி, உலக நிலையாமையைக் கூறுவது. பாடாண், அரசர் பெரு மக்களின் வெற்றியையும் புகழையும் புலவர்கள் பாடுவது. முற்காலப் போர்கள் வீரம், திறமை, வலிமை முதலியவற்றைக் காட்டுதற்குச் செய்யப் பட்டமையால் அவை அரசரின் பொழுது போக்குகளாகவும் இருந்தன.
போர்க்களம், களரி, பறந்தலை, முதுநிலம் என அறியப்பட்டது. படைகள் அணி, உண்டை, ஒட்டு முதலிய பல பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முன்னணி, ஆக்கம், கொடிப்படை, தார், தூசி, நிரைப் படை எனப்பட்டது. பின் படை கூழை எனப்பட்டது. யானை, தேர், குதிரை, காலாள் எனப் படை நால்வகைப் பட்டிருந்தது. யானை வீரன் புலித்தோல் கவசம் அணிந்து சென்றான். அவனைச் சூழ்ந்து சில வீரர் சென்றனர். யானை பாகனால் நன்கு பழக்கப்பட்டிருந்தது. அது கந்து அல்லது தறியில் கட்டப்பட்டது. அதற்கு அரிசியும் சர்க்கரையும் கலந்த சோற்றுக் கவளம் கொடுக்கப்பட்டது. அதற்கு நீராட்டிக் குங்குமம் பூசி நெற்றிப்பட்டங் கட்டப்பட்டது. சூழி, ஓடை என்பன நெற்றிப் பட்டத்தைக் குறிக்கும் பெயர்கள்.
தேர்கள் நிறமூட்டிய துணிகளாலும், பூமாலைகள், இலைகளா லும் அலங்கரிக்கப்பட்டன. அவை நிரை நிரையாகப் போர்க்களத்துக்குச் சென்றன. போரில் வில், அம்பு, வளைதடி, ஈட்டி, வேல், வாள் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. தடி, தண்டு, எறுழ், குணில் முதலியன தண்டு வகைகளில் சில. வில், கொக்கரை, சிலை, தடி, தவர், முனி, கொடு மரம் முதலியன வில் வகைகளில் சில. வாள், உவணி, ஏறி, கடுத்தலை, துவட்டி, நவிர், நாட்டம், வஞ்சம், சுறும்பிடி, சுரிகை, முதலியன ஈட்டி வகையில் சில. வேல், எயில், அரணம், எஃகம், குந்தம், ஞாங்கர், உடம்பிடி, விட்டேறு முதலியன வேல்வகையுள் சில. அம்பு, கணை, கதிரம், கோ, கோல், தொடை, தோணி, பகழி, பள்ளம், புடை, வண்டு, வாளி முதலியன அம்பு வகையுள் சில. நாணி, நாண், பூரம், ஆவம், கொடை, நாரி, நரம்பு, பூட்டு, உடு முதலியன வில் நாணின் பெயர்கள். கேடகம், கிடுகு, கடகம், தட்டு, பரிசை, பலகை, மறை, வட்டணம், வட்டம், தோல், தோற்பரம் முதலியன பரிசை வகையுள் சில. மேலகம், அரணி, ஆசு, கந்தளம், மெய் யுறை என்பன கவச வகைகளுள் சில. கைக் கவசம் கைப்புடை எனப் பட்டது. அரசனிடத்தில் போர் முரசு இருந்தது. அது நீராட்டி, நெற்கதி ரால் அலங்கரித்து உயிர்ப் பலியிட்டு வழிபடப்பட்டது. மாற்றரசனின் காவல் மரத்தை வெட்டித் துண்டாடி அதனால் போர் முரசு செய்யப் பட்டது.
போரில் இறப்போர் வீர சொர்க்கம் செல்கிறார்கள் என மக்கள் நம்பினார்கள். போரில் இறவாது முதுமை அடைந்து அல்லது நோய் வாய்ப்பட்டு இறக்கும் அரசரின் உடலைத் தருப்பையில் கிடத்திவாளால் போழ்ந்து பின் சுடுவது அல்லது நல்லடக்கம் செய்வது அக்கால வழக் காக இருந்தது. போர் தொடங்கும் முன் அந்தணர், பெண்கள், நோயா ளர், வயோதிகர், சிறுவர் என்போரை அப்புறப்படுத்தும்படி பகைவர் முன்னறிவிப்புச் செய்வர்.
ஒத்த படைக் கலங்களில்லாதவனுடன் போர் செய்வது, தோற் றோடுவோன், குடுமி குலைந்தோன், தூதர் முதலானோரைக் கொல்வது நீதிக்கு மாறு எனக் கொள்ளப்பட்டது. போரில் காயம்பட்டவர்கள் பலகையில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டார்கள். காயங்கள் ஊசியி னால் தைக்கப்பட்டன. அவ்வூசி நெடு வெள்ளூசி என அறியப்பட்டது. போரில் வீரம் காட்டியவர்களுக்கு அரசன் பட்டங்கள் வழங்கினான். படைத் தலைவன் ஏனாதிப் பட்டத்துக்கு அடையாளமாக மோதிரம் வழங்கப்பட்டது. வென்ற அரசன் தோற்ற அரசனின் முடியை உருக்கிய பொன்னால் வீர தண்டை அல்லது மாலை செய்து அணிந்தான். வெற்றி பெற்ற அரசன் மாலை செய்து அணிந்தான். வெற்றி பெற்ற அரசன் தோற்ற அரசனின் நீர்த் துறையில் தனது கொற்றக் குடையை நீராட்டு தலும் அவனுடைய காவல் மரத்தில் தனது யானையைக் கட்டுதலும் சிறந்த செயல்களாகக் கருதப்பட்டன.
58. படை
மூலப் படை, கூலிப் படை, நட்புப் படை, பகைப் படை, நாட்டுப் படை, வேட்டுவப் படை எனப் படைகள் அறு வகையின. தலைமுறை யாக அரசனிடமிருந்து வருவதும், போர்ப் பயிற்சியில் தலை சிறந்தது மாகிய படை மூலப்படை எனப்பட்டது. திருக்குறள் இதனைத் தொல் படை எனக் கூறுகின்றது. அரசன் இவர்களை எப்பொழுதும் போருக்கு ஆயத்தமாக வைத்திருந்தான். தனக்கு உதவியாகவுள்ள நட்பு அரசர் உதவிய படை நட்புப் படை எனப்பட்டது. இப்படையினர் நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்களோ என்பதில் சந்தேகம் இருந்தது. ஆகவே இப்படையினர் முன் எச்சரிக்கையோடு பயன்படுத்தப்பட்டார்கள். எதிரிகளிடமிருந்து அகப்படுத்தப்பட்டார்கள் அல்லது எதிரியின் படையை விட்டு விலகி வந்தவர்கள் பகைப்படையினர் எனப்பட் டார்கள். நாட்டுப் படையோடு இவர்களைச் சேர்த்துப் போருக்கு அனுப்பு வதில் கவனம் செலுத்தப்பட்டது. வேட்டுவப் படையினர் போரில் கிடைக்கும் கொள்ளைப் பொருள்களுக்காகப் போர் செய்தனர். போர்க் காலத்தில் நாட்டிலிருந்து திரட்டப்பட்டவர்கள் அடங்கிய படை நாட்டுப் படை எனப்பட்டது. கூலியின் பொருட்டுப் போர் செய்வோர் கூலிப் படையினர் என அறியப்பட்டனர்.
படை அலகு பத்தி எனப்பட்டது. இஃது ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரை, ஐந்து காலாள் கொண்டது.
59. யானைப் படை
யானைகள் போர்முனையில் நின்று போர் செய்யும்படியும், அணியை விட்டு விலகிக் குழப்பம் செய்யாதிருக்கும் படியும் பயிற்றப் பட்டன. அவற்றின் உடல் தோல் போர்வையால் காக்கப்பட்டது. யானை களை வெப்ப காலத்தில் பயன்படுத்தாமல் விடுவது விரும்பப்பட்டது. அவை எதிரியின் படையைத் தாக்கி அணியைக் குலைத்தது மாத்திர மல்லாமல் வேலிகளையும், கூடாரங்களையும், அரண் செய்யப்பட்ட இடங்களையும் அழித்தன. போர் யானைகளின் கொம்புகளில் இரும்பி னால் செய்யப்பட்ட பூண்கள் இறுக்கப்பட்டன. பூண்கள் கிம்புரி எனப் பட்டன. சில சமயங்களில் கொம்புகளில் கூரிய வாள்கள் கட்டப்பட்டன. மதில் கதவின் மீது பாய்ந்து அதனை உடைத்தற்குப் பூண்கள் உதவியாக இருந்தன. பாகனைத் தவிர இருவர் அல்லது மூவர் அதன் மீதிருந்தார்கள். ஒவ்வொரு யானையும் சிறு காலாட் படையால் பாதுகாக்கப்பட்டது. போர் செய்யாதவர்கள் வண்டிகளுடன் பின்னே சென்றார்கள். யானைகள் மிக அரிய உடைமைகளாகக் கருதப்பட்டன. அரசனுடைய வெற்றி யானைப் படையின் திறமையைப் பொறுத்ததாக இருந்தது. கோபங் கொண்ட ஒரு யானை ஆயிரம் குதிரைகளுக்குச் சமம் எனக் கருதப் பட்டது. அரச வகுப்பினர் யானையைப் பயன்படுத்தினர். போர் தொடங் குவதற்கு முன் யானைக்கு மது ஊட்டுதலும் வழக்காக இருந்தது. யானை மீது கொடி நாட்டப்பட்டிருந்தது.
13ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த சீனப் பிரயாணி ஒருவன் எழுதியிருப்பது வருமாறு:
“சோழ அரசனிடத்தில் அறுபதினாயிரம் போர் யானைகள் நிற்கின்றன. ஒவ்வொன்றும் ஏழு அல்லது எட்டடி உயரமுடையது. போர் செய்யும் போது யானைகள் முதுகின் மேல் வீடு1களைக் கொண்டு செல்கின்றன. அவற்றுள் போர் வீரர் இருந்து தொலைவில் நிற்பவர்கள் மீது அம்பு எய்தும், அண்மையில் நிற்பவர்களை ஈட்டியால் குத்தியும் போர் செய்வர்”.
60. குதிரைப் படை
குதிரைகள் இரும்புக் கவசமிட்டுக் காக்கப்பட்டன. வீரர், வில், ஈட்டி, வாள் என்பவற்றைத் தாங்கியிருந்தனர். குதிரைகளுக்குக் கடிவாள மிடப்பட்டது என்றும், சேணம் இடப்படவில்லை என்றும் கிரேக்கர் கூறியிருக்கின் றனர். வேவு பார்ப்பதற்கும் எதிரியின் படையை ஊடுருவிச் செல்வதற்கும் குதிரைப் படை பயன்படுத்தப்பட்டது. குதிரைப் படையில் குதிரைகளைப் பழக்குவோரும் வேலைக்காரரும் இருந்தனர். கௌட லியர் குதிரைகளின் பதினாறு சாரியைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். பதினாறு வகைக் கடி வாளங்களும் ஆறு வகை முட்களும் குறிப்பிடப் பட்டுள்ளன. ஒட்டகங்கள் பிற்காலங்களில் பயன்படுத்தப்பட்டன.
61. தேர்ப் படை
தேர்களில் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டன. அவற்றில் போர் செய்பவனும் தேர்ப்பாகனும் நிற்கக் கூடியதாக இருந்தது. போர் செய்பவன் இடப்புறத்தில் நின்றான். தேர்களின் வடிவம் இக்காலம் தென்னிந்திய கோயில்களில் காணப்படும் தேர்களின் வடிவை ஒத்திருந்தது. அவை விரைவில் செல்லக் கூடியன. கலிங்கத்துப் பரணி முதலிய இலக் கியங்களிற் கூறப்படுவன கொண்டு இதனை அறிய முடிகிறது. தேர்கள் சம நிலங்களில் மாத்திரம் பயன்படுத்தப்பட்டன. தேரில் சாரதியைத் தவிர இரண்டு போர் செய்யும் வீரர் இருந்தனர் என்று மெகஸ்தீனஸ் கூறியுள்ளனர். தேர்ப்பாகன் கவசமணிந்து கையில் வில்லைப் பிடித் திருந்தான். வடநாட்டில் தேர் செலுத்துவோன் சூதன் என அறியப் பட்டான். அவன் போர்க்களத்தில் கண்ட காட்சிகளையும், வெற்றி களையும் பாடல்களாகப் பாடினான். அவன் அரசரின் வரலாற் றாசிரியனாகவும் பெருமை அடைந்தான்.
62. காலாட் படை
காலாட் படையினர் பவனி செல்லவும் அகழ் வெட்டவும், மதில்கள் எழுப்பவும், இராக்காலத் தாக்குதல்களைச் சமாளிக்கவும், எக்காலத்தும் எவ்வகை இடத்தும் போர் செய்யவும் ஆயத்தமாக இருக்கும்படி பழக்கப்பட்டிருந்தார்கள். கட்டாய வேலைக்காகத் திரட்டப்பட்டோர் பண்டங்களையும், போர்க் கருவிகளையும், காயப்பட்டோரையும் எடுத்துச் சென்றனர்.
63. போர்க் கட்டளைகள்
பத்து, நூறு, ஆயிரம் என்னும் கூட்டங்களாகப் படை பிரிக்கப்பட் டிருந்தது. யானைகள், குதிரைகள், தேர்களுக்குப் பொறுப்பான அதி காரிகள் இருந்தார்கள். சேனாதிபதி படைகளின் தலைவனாக இருந்தான். இப்பெயர் பத்துப் பேரடங்கிய படைப் பிரிவின் தலைவனைக் குறிப்ப தாவும் இருந்தது. மகா சேனாதிபதி, நாயகன் என்னும் தலைவர் முடிக் குரிய இராச குமாரனை ஒத்த உயர்ந்த நிலையிலுள்ளவர்களாக இருந்தனர். அரசன் பெயரளவில் எல்லாரிலும் மேலான தளபதியாக இருந்தான்.
கட்டளைகள் சமிக்கைகளாலும், வாத்தியங்களை வேறுபட ஒலிக்கும் ஒலிகளாலும் அறிவிக்கப்பட்டன. எழுதப்பட்ட ஓலைச் சுருளை அம்பில் கட்டி எய்து செய்திகள் அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு சிறிய இராணுவ அலகுக்கும் அதன் கொடி இருந்தது. முதன்மையான வீரர் தனித்தனி அடையாளமுள்ள கொடியை வைத்திருந்தனர் என்று மாபாரதம் கூறுகின்றது. சகுனங் கூறுவோரும் புலவர்களும் எதிரியைத் தாக்குவதற்கு ஏற்ற நேரத்தைக் கூறினார்கள். அப்போது அவர்கள் போர் வீரருக்கு உற்சாகம் ஊட்டினார்கள். போர் தொடங்கு முன் படைக்குமுன் வெளிச்சம் காட்டப்பட்டது. படை, நாளொன்றுக்கு இரண்டு யோசனை தூரம் சென்றது. யோசனை என்பது 32,000 முழம் கொண்ட தூரம். சங்கு, கொம்பு முதலிய வாத்தியங்களும் பலவகைப் பறைகளும் போரில் ஒலிக்கப்பட்டன.
64. அணிவகுப்பு
சாதாரண அணிவகுப்பு சமவியூகம் எனப்பட்டது. அதற்கு மத்தி, இரு சிறகுகள், இரு சிறகுகளையும் அடுத்த இரு பக்கங்கள் என ஐந்து பகுதிகளுண்டு. இவற்றில் மொத்தம் 45 தேர், 45 யானை, 225 குதிரை, 675 காலாட்கள் உண்டு. இவற்றோடு காவற் படை துணைப் படை அடங்கிய 4,050 வீரர்கள் கொண்ட சேனையை ஒரு படை எனலாம்.
ஒவ்வொரு வரிசைக்கும் இடையில் ஐந்து முழத்தூரமும், ஒரு வீரனுக்கும் மற்ற வீரனுக்கும் இடையில் பத்து அங்குல வெளியுமிருந்தன. யானைகள் மத்தியின் முன் நிறுத்தப்பட்டன. தேர்கள் இரண்டு சிறகு களின் முன் அல்லது பின் நின்றன. தேர்களில்லாவிடில் குதிரைப் படை அணியின் பக்கங்களைக் காத்தது. யானைப் படையினொரு பகுதி சேமப் படையாக நிறுத்தப்பட்டிருந்தது. கவசமணிந்தவர்கள் முன்னணியிலும், மற்றவர்கள் பக்க அணிகளிலும், வில்லாளர் இரண்டாம் அணியிலும் நின்றார்கள்.
கம்ப அணி எதிரியை நேர் வரிசையாகத் தாக்குவது. கழுகு அணி, கழுகு போல் இரண்டு பக்க அணிகளுடன் சென்று தாக்குவது. ஊசி முனை அணி பக்க அணிகளையும், விலா அணிகளையும் உள்ளுக் கிழுத்துக் கொண்டு தன்னிலும் அதிக எண்ணுள்ள எதிரியின் படையைத் தாக்குவது. பாம்பு வளைவு அணி, பாம்பு போல வளைந்து சென்று பகை வரைத் தாக்குவது. வட்ட அணி எங்கும் படைமுகம் இருப்பது போலத் தோன்றும்படி வட்டமாக அமைக்கப்படுவது. இவ்வாறு பல அணி வகுப்புக்களிருந்தன.
எதிரியின் தலைவர்களைக் கொல்வதற்கு வெகுமதிகள் வழங்கப் பட்டன. அரசனைக் கொல்பவனுக்கு 100,000 பணமும், படைத்தலை வனைக் கொல்பவனுக்கு 50,000 பணமும், யானையைக் கொல்பவனுக்கு 5,000 பணமும், குதிரையைக் கொல்பவனுக்கு 1000 பணமும், சிறு அதிகாரிகளைக் கொல்பவனுக்கு 100 பணமும், காவலர்களைக் கொல் பவனுக்கு 20 பணமும் வழங்கப்பட்டன. படையின் பின் மருந்து உதவும் படை இருந்ததென்றும், பணி செய்யும் பெண்கள் பின்னே நின்று உற்சாகம் ஊட்டினார்கள் என்றும் கௌடலியர் கூறியுள்ளார். தனிப்பட்ட படை, படைக்கு வேண்டிய பொருளை முன்னமே கொண்டு சென்று சேர்த்தது.1
65. போர் ஆயுதங்கள்
பலவகைப் பேராயுதங்கள் இருந்தன. முன்னால் எந்திரக் கருவிகள் சென்றன. சக்கரங்கள் சுழலும்போது கவணில் கற்களை எறிந்தன. முள் இரும்புத் தண்டாயுதங்கள் (நூற்று வரைக்கொல்லி) இதிகாச காலத்தில் அறியப்பட்டிருந்தன. கோட்டை மதில்களில் கல் எறியும் எந்திரங்கள் நாட்டப் பட்டிருந்தன. நெருப்புப் படைக்கலங்கள் பயன்படுத்தப் பட்டன. நெருப்புப் படைக் கலங்கள் என்பன நெருப்பைப் கொண்டு செல்லும் அம்புகள். ஈட்டிகளில் பலவகைகள் இருந்தன. பொதுவான ஈட்டி முற்றிலும் உலோகத்தினால் செய்யப்பட்டிருந்தது. அதன் நீளம் ஐந்தடி எட்டு அங்குலம். சில மரக்கைப் பிடியும் உலோகமுனையும் உடையவை. தோமரம் என்பது யானைப் படையின் முக்கிய ஆயுதம்; அது நீண்ட ஈட்டி. திரிசூலம், சக்கரம், கவண், தண்டு, சம்மட்டி, மூன்று முனைகளுடைய கண்ட கோடாரி முதலிய ஆயுதங்களும் பயன்படுத்தப் பட்டன. வச்சிரமென்பது எறிபடை. வாள்களில் பல வகைகள் இருந்தன. அவை நீண்டும் ஒடுங்கியும் இருந்தன. கைப்பிடிகள் கொம்பு, தந்தம், மரம், மூங்கில் என்பவைகளாலிடப்பட்டன. வில் உயர் வகுப்பினரால் பயன் படுத்தப்பட்டது. அது பனை, பிரம்பு, வயிரமரம், கொம்பு என்பவற்றால் செய்யப்பட்டது. நல்ல வில் ஐந்தடி எட்டு எங்குல நீளமுடையது. நாண், சணல், மூங்கில் நார், விலங்குகளின் நரம்புகளாக இருந்தன. அம்பை விடுமுன் அது நாணில் வைத்துக் காது வரை இழுக்கப்பட்டது. சுயம்வரத்தில் அம்பெய்வது முதலிடம் பெற்றிருந்தது. தற்காப்புக்குரிய கருவிகள் பல பயன்படுத்தப்பட்டன. தலை, தோள், உடல், முழங்கால் களைக் காக்கும் கவசங்கள் இருந்தன..
66. கோட்டையும் பாசறையும்
கோட்டைகளின் அமைப்பு இடங்களுக்கேற்ப வேறுபட்டிருந்தன. கோட்டையை அகழ் அல்லது மலை அரண் செய்தது. சிற்பநூல் பத் தொன்பது வகைக் கோட்டைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. கோட்டை பெரும்பாலும் நாட்டின் எல்லையில் கட்டப்பட்டிருந்தது. அதற்கு மூன்று அகழ்களிருந்தன. அவை முறையே 56, 48, 40 முழ அகலமுடை யவை. ஒவ்வொரு அகழிக்குமிடையில் நான்கு முழ வெளியிருந்தது. அகழ்களின் ஆழம் அகலத்திலும் பாதி அளவினதாக இருந்தது. உள் அகழின் பின் 24 முழம் உயர்ந்த மேடை இருந்தது. இதுபோல் இருமடி அகலத்தில் நஞ்சு முள் மரங்களும் செடிகளும் நடப்பட்டிருந்தன. அதன் பின் 24 முழ உயரமும், 12 அடி அகலமுள்ள மதில் கட்டப்பட்டிருந்தன. கோபுரங்களினிடையே இரண்டு மாடிகளுடைய கட்டிடங்கள் இருந்தன. அவற்றின் மேல் மாடியில் மூன்று வில்லாட்கள் மறைந்து நிற்கக் கூடியதாக இருந்தது. மதிலைச் சுற்றி உட்புறத்தில் வீதி சென்றது. பகைவர் முற்றுகை இடுங்காலங்களில் சடுதியில் சென்று அவரைத் தாக்குதற்கு வெளியே செல்லும் இடங்கள் இருந்தன. கோட்டை வாயிற்கதவுகள் பல மரங்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்துப் பொருத்திச் செய்யப்பட் டிருந்தன. அவை இரண்டு சிறகுகளாக அமைக்கப் பட்டிருந்தன. அவை இரும்புச் சலாகைகளால் தாழிடப்பட்டன. கோட்டையுள் சுருங்கை வழிகளிருந்தன.
பாசறை என்பது படங்குகளாலிடப்பட்ட அரண் செய்யப்பட்ட கூடாரம். இது சோதிடரின் ஆலோசனையோடு சிற்பிகளால் கருத்தோடு வகுக்கப்பட்டது. இஃது இடங்களுக்கேற்ப வட்டமாக, நீண்ட சதுரமாக அல்லது சதுரமாக அமைக்கப்பட்டது. இதற்கு நான்கு வாயில்களும் பின்னே இலேசான அரண்களுமிருந்தன. இஃது ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அரசனுறையுமிடம் முதலிரண்டு அறைகளாக இருந்தது. அதிகாரிகள் தெற்கில் இருந்தார்கள். யானைகளும் குதிரை களும் கட்டுமிடம் வடக்கிலிருந்தது. அது ஒரு சிறிய பட்டினமாக இருந்தது. வாத்தியக்காரரும், வேட்டுவரும் கூடாரத்துக்கு வெளியில் தங்கினார்கள்.
67. நம்பிக்கைகள்
சோதிடத்திலும் சகுனத்திலும் நம்பிக்கை இருந்தது. எரி கொள்ளி விழுவது நாட்டிலுள்ள பெரியவரின் மரணத்துக்கு அறிகுறி எனக் கருதப் பட்டது. கூந்தல் விரித்திருக்கும் பெண்ணைப் பார்த்தல் தீது எனக் கருதப் பட்டது. சிறுவரைத் தீமைகளிலிருந்து காப்பதற்காக ஐம்படைத்தாலி கட்டப்பட்டது. பேய்களை ஓட்டுதற்கு வெண்கடுகு புகைக்கப்பட்டது. ஆலமரத்திலும் வேறு சில மரங்களிலும் பேயுறைவதாகக் கருதப்பட்டது. பாம்பு சந்திர சூரியரை விழுங்குவதால் கிரகண முண்டாகிறதெனக் கருதப்பட்டது. காகம் கரைவது விருந்தினர் வருவதற்கு அறிகுறி என நம்பப்பட்டது. தொலைவிடத்திலுள்ள ஒருவர் ஒருவரை நினைப்பதால் தும்மலுண்டாகிறதெனக் கருதப்பட்டது. நாகத்தின் தலையில் இரத்தினம் இருக்கிறதென நம்பப்பட்டது. பல்லி சொல்வது நற்சகுன மாகவோ தீய சகுனமாகவோ கொள்ளப்பட்டது. உன்னமரம் (இலவு) வாடுவது தீய சகுனமாகக் கருதப்பட்டது. போர்க்களத்தில் பேய் திரிவ தாகவும், பேய்கள் பிணம் தின்பதாகவும் நம்பிக்கை இருந்தது. வேப்பிலை சிறுவரைப் பேய்களிலிருந்து காக்கும் என நம்பப்பட்டது. போரில் இறந்தவர் வீர சொர்க்கமடைவர் என்னும் நம்பிக்கை இருந்தது. வலக் கண் துடிப்பது நற்சகுனமாகவும். இடக்கண் துடிப்பது தீய சகுனமாகவும் கொள்ளப்பட்டன. சிறுவருக்குக் கண்ணூறு படாமல் அவர் தலை மயிரில் நெய்யும் வெண் சிறு கடுகும் பூசப்பட்டன.
68. போக்குவரத்து
பெரும்பாலும் மக்கள் கால் நடையாகப் போக்குவரத்துச் செய் தார்கள். பலவகை வண்டிகள், பல்லக்கு, தேர், கழுதை, எருது, யானை முதலியனவும் முற்காலப் போக்குவரத்துச் சாதனங்களாக இருந்தன. ஊர்தி, ஒழுகை, சகடு, சாகாடு, வையம் முதலியன வண்டியைக் குறிக்கும் பெயர்கள். வண்டிகளும் கழுதைகளும் பொதிமாடுகளும் பண்டங்களை ஓரிடத்திலிருந்து ஓரிடத்துக்கு எடுத்துச்செல்லப் பயன்படுத்தப்பட்டன. அரசரும் பெருமக்களும் தேர், யானை, பல்லக்கு முதலியவைகளில் சென்றார்கள். நீரில் செல்வோர் ஓடங்களில் சென்றனர். ஓடங்களில் பல வகைகள் இருந்தன. ஓடம், அம்பி, தோணி, தெப்பம், படகு, கலம், பஃறி, சதா, போதம், தொள்ளம், பகடு, பட்டிகை, பாட்டிமார், படுவை, புணை, மிதவை, வள்ளம், திமில் முதலியன ஓடங்களைக் குறிக்கும் பெயர்கள். இவை வெவ்வேறு வகை ஓடங்களைக் குறிப்பனவாகலாம். மரக்கலங் களின் முன்புறம் யானை முகம், குதிரை முகம், அரிமுகம் போன்று செய்யப்பட்டிருந்தது. மரக்கலங்களுக்குப் பாய் மரங்களும் படங்கும் (பாயும்) இருந்தன.
69. ஓவியம்
மிக முற்காலம் முதல் ஓவியக் கலையில் திறமை பெற்று விளங் கினார்கள். முற்கால எழுத்து முறை ஓவிய வடிவிலேயே அமைந்திருந்தது. கற்கால வாழ்க்கையிலிருந்த மக்கள் குகைச் சுவர்களில் தீட்டிய ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை திறமையாக எழுதப்பட்டுள்ளன. மொகஞ்சதாரோ மக்களின் முத்திரைகளில் அழகிய ஓவியங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவை இக்காலம் வரையப்படும் சிறந்த ஓவியங் களோடு ஒத்த கலைத்திறமை உடையனவாக இருக்கின்றன. அசந்தாக் குகை ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. சங்ககால நூல்களில் ஓவியக் கலையைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அரண்மனைச் சுவர் களிலும், கோயில் சுவர்களிலும், செல்வரின் மாளிகைச் சுவர்களிலும் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அக்காலக் கோயில்களில் எழுத்து நிலை மண்டபம் என ஒரு பகுதி இருந்தது. அங்கு பெரும்பாலும் புராண சம்பந்தமான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
இதனை,
“இந்திரன் பூசை யிவளகலிகை யிவள்
சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு
வொன்றிய படியிதென் றுரைசெய் வோரு
மின்னம் பலபல வெழுத்து நிலைமண்டபம்”
எனப் பரிபாடல் அடிகள் குறிப்பிடுகின்றன.
“சுடும ணோங்கிய நெடுநிலை மனைதொறு
மையறு படிவத்து வானவர் முனிவர்
எவ்வகை யுயிர்களு வுவமங் காட்டி
கண்கல ரோவியங் கண்டு நிற்குநரும்”
என்னும் மணிமேகலை அடிகள் அக்கால மனைகளில் ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தமையை நன்கு விளக்குகின்றன. பழந்தமிழ் இலக்கியங் களில் மடலேறுதல் என்னும் ஒரு வழக்கம் கூறப்படுகின்றது. ஒருவன் தான் காதலித்த பெண்ணைப் பெறமுடியாத போது அவன் அவளைப் போன்ற படமொன்றை எழுதி, உயர்த்திக் கொண்டு பனை மட்டையால் செய்த குதிரையிலேறி வீதியில் வருவான். இதனால் அவன் காதலிக்கும் பெண் யாரென அறியக் கூடியதாக இருந்தது. இதனால் பொதுமக்களும் ஓவியம் வரையும் திறமை பெற்றிருந்தார்கள் எனத் தெரிகிறது.
70. சிற்பம்
சிற்பக் கலை இந்தியாவில் மிகப் பழைய காலத்தில் வளர்ச்சி யடைந்திருந்தது. மொகஞ்சதாரோவில் பல அழகிய சுடுமண் பாவை களும், கல்லில் செதுக்கப்பட்ட மனித உருவங்களும், உலோகத்தில் வார்க்கப்பட்ட நாட்டியப் பெண்ணின் உருவமும் கண்டுபிடிக்கப் பட்டன. கல்லில் செதுக்கப்பட்ட சிலை ஒன்று கைகளும் தலையும் இல்லாமல் காணப்பட்டது. இது கிரேக்க சிற்பக் கலையை ஒத்த கலைத் திறமை பெற்றதாக அறிஞர் புகழ்ந்துள்ளார்கள். உலோகத்தில் வார்க்கப் பட்ட நடனமாது உருவத்தைப் பலர் புகழ்ந்து எழுதியுள்ளார்கள். ஏறத்தாழ கி.மு. 3000-இல் இந்திய மக்கள் சிற்பக் கலையில் மிக முன்னேற் றம் பெற்றிருந்தார்கள். தமிழர் பெற்றிருந்த திறமையைக் குறித்துச் சங்க இலக்கியங்களில் காண்கின்றோம்.
“கல்லு முலோகமும் செங்கலு மரமும்
மண்ணுஞ் சுதையுந் தந்தமும் வண்ணமும்
கண்டசர்க் கரையு மெழுகு மென்றிவை
பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாவன”
எனத் திவாகரம் கூறுகின்றது.
தென்னிந்தியக் கோயில்களில் கருவறையிலிருக்கும் திருவுருவங் கள் கல்லில் செதுக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் செம்பும் பிற உலோ கங்களும் சேர்த்து உருக்கி வார்க்கப்பட்டன. உலோகத்தில் வார்க்கப் பட்ட உருவங்கள் திருவிழாக் காலங்களில் வெளியே கொண்டு செல்லப் பட்டன. இவ்வகை உருவங்களும் நடராசத் திருவுருவமும் உலக மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. இன்று தென்னிந்தியா இலங்கை முதலிய நாடுகளில் நூதன பொருட்காட்சி சாலைகளில் வைக்கப்பட் டிருக்கும் பழங்காலச் சிற்பங்கள் சம்பந்தப்பட்ட பொருள்கள் தமிழரின் சிற்பத் திறமையை வெளியிடுகின்றன. சோழர், பல்லவர் காலங்களில் எடுக்கப்பட்ட கற்கோயில்களும், மலைக்குடைவுக் கோயில்களும் கற் களில் செதுக்கப்பட்டிருக்கும் விலங்கு, மனிதர், பறவைகள், மரஞ் செடிகளின் வடிவங்களும் தமிழரின் சிற்பத் திறனை என்றும் காட்டிக் கொண்டிருக்கும் அழியாச் சின்னங்களாகும்
71. மருந்து
மருத்துவக்கலை நோய்களைத் தீர்க்கும் மூலிகைகளைக் கண்டு பிடிப்பதிலிருந்து தொடங்குகிறது. மூலிகைகளின் குணங்கள் நன்கு அறியப்பட்டிருந்தன. வாதமடக்கி, வண்டு கொல்லி, கிரந்திநாயன், பொன்னாங்கண்ணி போன்று அவ்வம் மூலிகைகளுக்குள்ள குணங்களே அவற்றுக்குப் பெயர்களாக வழங்கின. மூலிகை அகராதிகளில் மிகப் பல மூலிகைகளின் பெயர்கள் காணப்படுகின்றன. பதார்த்தகுண சிந்தாமணி என்னும் நூல் பிற்காலத்திற் செய்யப்பட்டதாயினும், அது மக்கள் மூலிகைகளைப் பற்றி முன்னமே அறிந்திருந்தவற்றைத் தழுவிச் செய்யப் பட்ட நூலாகும். கியாழம், குளிகை, சூரணம், இலேகியம், தைலம், செந்தூரம் என்னும் பல வகைகளில் மருந்தாகப் பயன்படுத்தப்பட் டுள்ளது. அசோகச் சக்கரவர்த்தி விலங்குகளுக்கும் மக்களுக்கும் மருத்துவ நிலையங்களை நிறுவினார் எனச் சரித்திரம் கூறுகின்றது. இவ்வகை நிலையங்கள் இலங்கையிலும் நிறுவப்பட்டிருந்தனவென்று மகாவமிசம் கூறுகின்றது. அசோகர் காலத்துக்குப் பல நூற்றாண்டுகளின் முன் மருத்துவக்கலை இந்தியாவில் வளர்ச்சியடைந்திருந்தது. அலெக்சாந்தர் இந்தியாவிலிருந்து பாம்புக்கடி வைத்தியர்களைக் கிரேக்க நாட்டுக்குக் கொண்டு சென்றார் எனக் கிரேக்க ஆசிரியர்கள் கூறியிருக்கின்றனர். கிப்பகிரிட்டஸ் என்னும் கிரேக்கர் இந்தியரின் மருத்துவ முறைகளைக் கற்று அவற்றைக் கையாண்டார் எனச் சொல்லப்படுவதுண்டு.
தமிழர் கையாண்ட வைத்திய முறை பிற்காலத்தில் சித்த முறை என வழங்குகிறது. இராசயன முறையான தமிழரின் மருத்துவக்கலை பழைமையானதும், பயனளிக்கக் கூடியதும், தமிழ்நாட்டின் பொருளா தார நிலை, கால நிலைகளுக்கு ஏற்றதுமாகும். அது சித்த வைத்தியம் எனப்படும். அதன் நோக்கம், தடுப்பு, குணப்படுத்துவது, இழந்து போன வலிமையைத் திரும்பப் பெறுவது என்னும் மூன்று கூறுகளை உடையது. திடமான உடலில் திடமான மனம் என்னும் கொள்கை உறுதிப்பட் டிருந்தது. உடல் இல்லாவிடில் ஒரு பேறும் கிட்டாது; உடலில்லா விட்டால் வீடு கிட்டாது எனச் சித்தர் கூறினர்.
“தேகமிருதா லல்லோ தித்தெல்லா மாடலாம்
தேகமிருந் தாக்காற் சேரலாம் பூரணம்
தேகமிருந் தாக்காற் செயலெல்லாம் பார்க்கலாம்
தேகமிருந் தாக்காற் சேரலாம் முத்தியே” (திருமூலர் கருக்கிடை வைத்தியம்)
ஆதியிலே சித்தனாராகிய சிவனார் செய்த மருத்துவ நூல் ஏழு லட்சம் பாடல்களுடையது. பின் நந்தி, சனகர், சனாதர், சனாந்தனர், சனற்குமாரர், திருமூலர், பதஞ்சலி, அகத்தியர், புலத்தியர், புசுண்டர், கருவூரர், தன்வந்திரி, சட்டைமுனி, தேரையர், யூகிமுனி முதலிய பலர் நூல் செய்தனர். இவை மணி (இரசமணி), மந்திரம், மருந்து முதலிய வற்றைக் கூறுகின்றன. மூலிகை, உப்பு, தீநீர்1, உபவாசம், 2உடற்பொருள், பாடாணம், உலோகம், சத்து3, இரசக்குளிகை, யோகம் என்னும் பத்துச் சிகிச்சை முறைகளைத் திருமூலர் கூறியிருக்கின்றார். மந்திரமென்பது யோகத்திலும் மணி என்பது இரசக் குளிகைகளிலும் அடங்கும். மூலிகைகள் சூரணம், இழகியம் (இலேகியம்), மெழுகு என்பன. இவை மக்களுறை எனப்படும். கட்டிகளுக்கு மருந்தாகும் தைலம், சாராயத்தில் ஊற விடப்பட்ட மருந்துகள் அறுவை சம்பந்தமானவை; செந்தூரம், சுண்ணம், செய்நீர், தீநீர், சத்து, மணி முதலியன, பஸ்பம் (சாம்பல்) என்பதில் அடங்கும். இம்முறை சித்த மருத்துவத்தில் மாத்திரமுண்டு.
ஒப்புறை (ஓமியோபதி போன்றது), எதிருறை (அலோபதி), கலப் புறை என மூன்று வகை மருந்து முறைகள் உண்டு. உப்பு வகைகள் 25, பாடாணம் 64, உலோகம் 9, உலோகச் சத்துகள் 120, மருந்து மூலிகைகள் 1008. நாடி பார்த்து வைத்தியம் செய்தல் சித்தமுறை. இடகலை, பிங்கலை, சுழி முனை என நாடி மூன்று. மருத்துவன் நாடியைப் பார்த்து வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றும் இயல்பாய் இருக்கின்றனவா அல்லது இயல்புக்கு மாறாக இருக்கின்றனவா என அறிகிறான். அடுத்த படியில் கண், நாக்கு, உடல், மலம், மூத்திரம், சத்தம் முதலியவற்றைப் பார்த்தலோடு உடலைத் தொட்டுப் பார்த்தும் அறியப்படும். சித்த வைத்தியத்தைப் பின்பற்றும் திருவள்ளுவர், நோயைக் கண்டுபிடி, அதற்குக் காரணத்தை அறி, அதற்கு மருந்தை ஆராய்ந்து பார், கால நிலையைக் கவனி, மிகப் பயனளிப்பவற்றைச் செய் எனக் கூறுகின்றார். மருந்துக் கலை, நோயாளி, மருத்துவன், மருந்துகளை அரைத்தோ இடித்தோ பிழிந்தோ கலந்து செய்பவன் என்னும் நான்கு பகுதிகளை உடையது. மருத்துவசாலை நிறுவுவது முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்றாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆன்ம சக்தியினால் அல்லது மனோசக்தியினால் மாற்றுவது இன்னொரு முறை. இது சமயகுரவர்கள் முனிவர்களால் கையாளப்பட்ட முறை. பார்வை பார்த்தல், நீரோதிக் கொடுத்தல், மந்திரம் செபித்தல் போன்றவை ஆன்ம சத்தியால் நோயை ஆற்றும் முறையில் அடங்கும்.
சாரகம், சுசுரருதம், தன்வந்திரி நிகண்டு என்பன வட நாட்டாரின் மருத்துவ நூல்கள். இவற்றில் முன் கூறப்பட்ட மூன்று உறைகளையும் காண முடியாது. ஆயுர்வேதம் என்பது சித்த வைத்தியமாகும். ஆயுர்வேதம் என்னும் பெயருடைய நூல் ஆரிய மொழியில் இல்லை. தன்வந்திரி கி.பி. 500இல் விக்கிரமாதித்தனின் அரச சபையிலிருந்தவர். சுசுருதர் அவர் காலத்தவர். சாரகர் அவருக்கு முன் விளங்கியவர். அட்டாங்க இருதயம் வாக்பாதரால் 9ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. பிற்கால மருத்துவ நூலார் சித்தர் நூல்களைப் பயின்றும் பஸ்பம், நாடி, புடம் போடுதல் முதலிய முறைகளை மொழி பெயர்த்துத் தமது நூலில் சேர்த்தனர். சாரங்கதரரின் சங்கிதை 13ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. இந்நூல், அது சித்த வைத்தியத்துக்குக் கடமைப்பட்டிருப்பதைக் கூறுகின்றது. சென்னையில் பண்டிதர் கோபாலாச்சாரியரின் தலைமையில் கூடிய ஆயுர்வேத மாநாட்டில் அவரும் இது போன்ற கருத்தைத் தெரிவிக்கின் றார். கண்ணால் பார்த்தல், தொட்டுப் பார்த்தல், சத்தத்தைக் கேட்டுப் பார்த்தல் என்னும் மூன்று சோதனைகளைச் செய்வதே வடநாட்டு முறை. அதர்வண வேதத்தைத் தொகுத்து முடித்தபின் ஆயுர், அர்த்த, தனுர், காந்தர்வ வேதங்களை எழுதுவதற்கும் திட்டமிடப்பட்டது. ஆயுர் வேதமென்னும் நூல் ஒருபோதும் எழுதப்படவில்லை.
தமிழரசரின் விழுகைக்குப் பின் சித்த வைத்தியம் வீழ்ச்சி யடைந்தது (தமிழ் இந்தியா - மு.சி.பூ.).
72. இரேகை நூல்
அகத்தியரின் இரேகை நூல் சாமுத்திரிகம் எனப்படும். இந்நூலின் முழுப் பெயரும் புருட சாமுத்திரிக இலட்சணம். இது சுப்பிரமணியக் கடவுள் அகத்தியருக்குக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இது உள்ளங் கை மணிக்கட்டுகளிலுள்ள இரேகைகள், வரைகள், மச்சம், ஆளின் உயரம், நெடுப்பம், கைகள், கால்களின் நீளங்களைப் பார்த்து மனிதரின் குணா குணங்களை அறியும்படியான விதிகளைக் கூறுகின்றது. ஒருவனது உள்ளங்கை சிவப்பேறியும், சிறிதாகவும் இருந்தால் அவனுக்குச் செல்வமும் நீண்ட ஆயுளும் உண்டு; தடிப்பாக இருந்தால் அவன் கவலை உடையவனாவான். சங்கைப் போலும், சக்கரத்தைப் போலும் இரேகைகள் இருந்தால் அவன் அதிக வருவாய் உடையவனாயும், தருமம் செய்பவனாயும், தன்னை அடைந்தவர்களிடத்தில் தயாளம் உடையவ னாகவும் இருப் பான். ஒருவனுடைய கையில் மச்ச இரேகை அல்லது மீன் போன்ற அடையாளம் இருந்தால் அவன் தயாளமுடையவனாக இருப்பான். மூச்சுக்குழாய் போன்ற இரேகை இருந்தால் புகழ் அடை வான். அரிவாள் போன்ற இரேகை இருந்தால் அவன் தைரியமும் ஊக்கமும் உடையவ னாவான். சாடிபோல இருந்தால் சாந்தமானவனாக இருப்பான். சந்திரனைப் போல இருந்தால் கல்விமானாவான். இவ்வாறு அந்நூல் பல செய்திகளைக் கூறுகின்றது. இக்கலை பாண்டி நாட்டி லிருந்து அரேபியாவுக்குச் சென்று அங்கு நின்றும் ஐரோப்பாவுக்குச் சென்றது. (மு.சி.பூ.)
73. வானாராய்ச்சி
தமிழர் பெரிய கடல் பயணக்காரராக இருந்தனர். அவர்கள் தமது பயணங்களில் இராக்காலத்தில் சந்திரனும் நட்சத்திரங்களும் நிற்கும் இடங்களைப் பார்ப்பது அவர்களுக்கு உதவியாக இருந்தது. அவர்கள் மாதம் தேதிகளைக் காட்டும் குறிப்புகளை எழுதி வைத்தபோது சூரியனும் சந்திரனும் பெரியனவாகத் தோன்றும்படி குறிப்பிடப்பட்ட னர். வெளிச்சமான கிரகங்கள் ஒன்றுக்கொன்று எவ்வளவு தூரத்தில் நிற்கின்றனவென்பதும் குறிப்பிடப்பட்டது. மாதத்துக்குத் திங்கள் எனப் பெயரிடப்பட்டதும் 28 நட்சத்திரக் கூட்டங்கள் கொள்ளப்படுவதும் தமிழரின் மாதம் தேதிக் கணக்கு சந்திரமான அளவையாக இருந்ததெனத் தெரிவிக்கிறது. பழைய வடநாட்டு இலக்கியங்களில் நாட்களை வாரமாகக் கொண்டு குறிப்பிடும் முறை காணப்படவில்லை. வாரமுறை யான கணித முறை தமிழருடையது. தமிழர் மேற்கு நோக்கிச் சென்ற போது யூப்ரிட்டிசு தைகிரீசு ஆற்றோரங்களில் குடியேறினார்கள். ஆகவே வார முறையான கணித முறையை இவர்கள் அந்நாட்டில் பரப்பி னார்கள்.
கிரகங்களும் நட்சத்திரக் கூட்டங்களும் மனிதனுடைய பலாபலன் களில் ஆட்சி செலுத்துகின்றன என்பது மிகப் பழங்காலத்தில் அறியப் பட்டிருந்தது. சூரியனுடைய செல்வாக்கு இயற்கைப் பொருள்களிலும் சந்திரனுடைய செல்வாக்கு கடல்வற்றுப் பெருக்குகளிலும் இருந்து வருவதை விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவ்வடிப்படையில் வரலாற் றுக்கு முன் சோதிடக் கலை தொடங்கிற்று. எரிகொள்ளி எரிந்து விழுவது வரவிருக்கும் தீமையைக் காட்டுவதாகவும், சந்திர, சூரிய கிரகணங்கள் கெடுதலானவை என்றும் கருதப்பட்டன. கருப்பமான பெண் எவளாவது கிரகணத்தைப் பார்க்கமாட்டாள்.
பழந்தமிழர் பருவ காலத்தைக் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இள வேனில், முதுவேனில் என ஆறு பிரிவுகளாகப் பிரித்திருந்தார்கள். சூரியன் சிங்க ராசியில் செல்லும் காலம் ஆவணியாக இருந்தது. முற் காலத்தில் ஆவணி ஆண்டு தொடங்கும் மாதமாகவும், ஆடி ஆண்டின் இறுதி மாதமாகவும் இருந்தன. ஆவணி மாதத்தில் சூரியனை முகில்கள் மறைப்பதால் மந்தாரமுண்டாகத் தொடங்குகிறது. குளிர் காலம் கழிந்து வெயில் காயத் தொடங்கும் காலமாகிய தைத் தொடக்கத்தில் தமிழர் பொங்கல் விழாவைக் கொண்டாடினார்கள்.
சங்க இலக்கியங்களில் கணிகள் என்போரால் கலியாணங்களுக்கு நாள் குறித்தல் குறிப்பிடப்பட்டுள்ளது. “மூவகைக் காலமும் நெறியிலாற்று வதாவது பகலுமிரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும், மின்னும், ஊர்க்கோளும், தூமமும், மின் வீழ்வும், கோள் நிலையும், மழை நிலையும் பிறவும் பார்த்துக் கூறுதல்” என இவர்களைக் குறித்து இளம்பூரணர் கூறியுள்ளார். கட்டிலுக்கு மேலே யுள்ள மேற்கட்டியில் பன்னிரண்டு இராசிகளும் எழுதப்பட்டிருந்தன வென்று நெடுநல்வாடை கூறுகிறது. குறிஞ்சி நில மக்கள் சந்திரன் பரிவட்டங்கொள்ளும் காலத்தில் மணம் செய்வார்கள். பரிபாடல், சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு முதலிய நூல்களில் ஆங்காங்கு வான நூற் குறிப்புகள் காணப்படுகின்றன.
74. செல்வன் வாழும் மாளிகை
1செல்வன் வாழும் மாளிகை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முன் புறத்தில் ஆடவரும் பின்பறத்தில் மகளிரும் வாழ்ந்தனர். வீட்டுத் தலைவன் தனது கருமங்களைக் கவனித்துக் கொண்டு மீள்வோரை உபசரித்தான். வீட்டில் ஒவ்வொரு தேவைக்கும் வேண்டிய பல அறைக ளிருந்தன. வீட்டை அடுத்து விசாலமான தோட்டமிருந்தது. தோட்டத் தில் பூஞ்செடிகளும் பழமரங்களும் உணவுக்கு வேண்டிய காய் பிஞ்சுகள் கொடுக்கும் செடி கொடிகளும் உண்டாக்கப்பட்டிருந்தன. அதன் மத்தியில் கிணறிருந்தது. தோட்டம் வீட்டின் பின் புறத்தில் இருந்தமை யின் வீட்டின் தலைவியே அதனைக் கவனித்தாள். பூந்தோட்டத்தில் நறுமண மலர்களைப் பூக்கும் மல்லிகை முல்லை முதலிய கொடிகள் படர்ந்திருந்தன. அவைகளினிடையே அமைக்கப்பட்டிருந்த மேடை மீதிருந்து அவள் உல்லாசமாகப் பொழுது போக்கினாள். வீடு மிகச் சுத்தமாக இருந்தது. வீட்டில் தெய்வங்கள் வைத்து வழிபடப்பட்டன. கணவனும் மனைவியும் நிலா முற்றத்தில் இருந்து வெண் மதியையும் விண்மீன்களையும் நோக்கி மகிழ்ந்தார்கள். வீட்டுச் சுவர்கள் ஆளினுரு வம் பிரதிபலிக்கும்படி மினுக்கஞ் செய்யப்பட்டிருந்தன. வீட்டுக் கூரை களை அழகிய தூண்கள் தாங்கி நின்றன. தோட்டத்தில் நீரால் சூழப் பட்ட நீராழி மண்டபம் இருந்தது. அது கோடைகாலத்தில் உறைவதற்கு ஏற்றது. பெண்கள் தங்கும் பகுதியின் நாற்புறங்களிலும் அறைகள் இருந்தன.
தலைவன் உறையும் அறையில் பஞ்சு மெத்தைகள் இடப்பட்ட இரண்டு கட்டில்கள் இருந்தன. மெத்தையின் நாற்பக்கங்களிலும் அணைகள் இடப்பட்டிருந்தன. தலைப் பக்கத்துக்கு அண்மையில் உலர்ந்த மரத்தட்டு இருந்தது. காலையில் அலங்கரித்துக் கொள்வதற்கு வேண்டிய சந்தனம், வாசனைத் தைலம், பூமாலை முதலியன அதன்மீது வைக்கப்பட்டிருந்தன. தரையில் எச்சில் உமிழும் காளாஞ்சி இருந்தது. அறைக்கு வெளியே வளர்க்கும் கிளிகள் கூடுகளில் இருந்தன.
தலைவன் காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்தபின் தன்னை அலங்கரித்தான். அலங்காரப் பொருள்களில் சிறந்தவை சந்தனம், வாசனைத் திரவியங்கள் என்பன. அவன் வாசனைப் புகை ஊட்டப்பட்ட ஆடையை உடுத்துப் பூமாலையை அணிந்தான். கண்ணுக்கு மை தீட்டினான்; தாம்பூலமிட்டுச் சிவந்த இதழ்களுக்கு அரக்குக் கூட்டிச் செய்த சாயம் பூசினான். தலையை வாரினான். விரல்களுக்கு மோதிரங் களை அணிந்தான். மேலே உத்தரிகம் தரித்தான்.
காலையில் பார்க்கும் கடமைகள் முடிந்ததும் அவன் தினமும் நீராடினான். ஒவ்வொரு இரண்டாவது நாளும் அவன் உடம்பு பிடித்துக் கொண்டான். ஒவ்வொரு மூன்றாவது நாளும் ஒருவகைப் பொருளைப் பூசி நீராடினான். நகங்கள் மினுக்கமாக இருக்கும்படி அவன் அவற்றை அழகு செய்து கொண்டான். வியர்வையைத் துடைப்பதற்கு அவன் எப்பொழுதும் ஒரு சிறிய துணியை வைத்திருந்தான். முன் பொழுதில் ஒன்றும் பின்பொழுதில் ஒன்றுமாக நாளிருமுறை உணவு கொண்டான். இறைச்சி பொரித்தும், சமைத்தும், அவித்த நீராகவும் கொள்ளப்பட்டது. நண்பகல் உணவுக்குப் பின் அவன் நண்பர்களோடு அளவளாவினான். மாலை நேரத்தில் கோழிப் போர், கௌதாரிப் போர், ஆட்டுப் போர் களைக் கண்டு பொழுது போக்கினான். கூடுகளில் வளர்க்கும் சிங்கங் களும் புலிகளும் நின்றன. இரவின் முற்பகுதியில் அவன் இசையைக் கேட்டும் நடனங்களைப் பார்த்தும் மகிழ்ந்தான். அறைகளில் நறுமணம் கமழ்ந்தது.
செல்வனின் மனைவி உரத்துச் சிரிக்கவும் உரத்துப் பேசவும் மாட்டாள். கணவனின் பெற்றோர் குறை கூறினால் அவள் எதிர்த்துப் பேச மாட்டாள்; பெரிய செல்வத்திலும் உல்லாச வாழ்க்கையிலும் திளைத்தபோதும் அகந்தை கொள்ளமாட்டாள்; விழாக்களுக்குச் செல்லும்போது ஆடம்பரமாகச் செல்வாள். சில அணிகலன்களை அணிந்து கொள்வாள். கணவன் தூரதேசம் சென்றிருந்தால் அவள் சங்கு வளைகளையும் தாலியையும்தவிரப் பிற அணிகலன்களை அணியமாட் டாள். அவள் காலை, நண்பகல், மாலை என்னும் மூன்று நேரங்களிலும் இல்லுறை தெய்வங்களுக்குப் பலி தூவுவாள்.
75. கூத்து
ஆதிகால மக்கள் தம்மிடம் தோன்றும் உணர்ச்சிகளை ஆடிக் காட்டினார்கள். பிற்போக்கிலுள்ள மக்களிடையே இன்றும் இவ்வாட் டங்கள் காணப்படுகின்றன. இவ்வகை ஆட்டங்களிலிருந்து கூத்துக் கலை வளர்ச்சியடைந்தது. அது இன்று நடைபெறும் நாடகம் போலல் லாது, ஒரு கருத்தினை, உடல்நிலை, பார்வை, அபிநயங்களால் நடித்துக் காட்டும் கலையாக இருந்தது. அது பிற்காலத்தில் பரத நாட்டியம் எனவும் சதிராட்டம் எனவும் பெயர் பெற்றது. சிந்துவெளி நாகரிக காலத்தில் இது நன்கு வளர்ச்சியடைந்திருந்தது. சிந்துவெளியில் கிடைத்த தொல்பொருள்களில் நடராசரைப் போன்று நடனமாடும் மூன்று கொம்புகளுடைய ஒரு கடவுள் உருவமும், நட்டமாடும் நிலையில் நிற்கும் பெண் தெய்வத்தின் உருவமும், நாட்டியமாடும் நிலையில் நிற்கும் ஒரு நாட்டியப் பெண்ணின் உருவமும் காணப்பட்டன1. நாட்டியக் கலையை பௌத்தரும், சமணரும், பிராமணரும் வெறுத்தார்கள். இக்கலை தென்னிந்தியாவிலேயே வளர்ச்சியடைந்தது. பரதநாட்டிய நூலைச் செய்த பரதர் திராவிட வகுப்பினராவர்2. பரதர் செய்த நூல் வடமொழியிலிருப்பதால் கூத்துக்கலை ஆரியநாட்டினின்று தெற்கே வந்ததெனப் பலர் தவறாகக் கருதுவர்.
கருத்துகள்
கருத்துரையிடுக