சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்
கட்டுரைகள்
Back
சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்
குன்றக்குடி அடிகளார்
சமுதாய மறுமலர்ச்சி
இலக்கியங்கள்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
கலைவாணி புத்தகாலயம்
நல்ல நூல் வெளியீட்டாளர்கள்
16/2, ராஜாபாதர் தெரு, பாண்டிபஜார்,
தியாகராயநகர். சென்னை-600 017.
கலைவாணி வெளியீடு K 483
முதற்பதிப்பு : டிசம்பர், 1993
விலை: ரூ. 25.00
PRICE : Rs. ரூ 25.00
SAMUTHAYA MARUMALARCH ILAKKHIANGAL– A collection of essays in literature on improvement of social reforms by Thavathiru KUNDRAKUDI ADIGALAR
First Edition : December, 1993. Published by : KAVINGER SEENI. THRUNAAVUKKARASU, KALAIVAANI PUTHAKALAYAM, 16/2, Rajabathar street, Pondy Bazaar, T.Nagar, Madras - 600 017.
Printed at: ALEX Printers, Madras - 600 094.
முன்னுரை
மனித சமுதாயம் வளர்ச்சிக்குரியது; மாற்றத்திற்குரியது. வளர்ச்சி. மாற்றத்திற்கு அடிப்படை. மாற்றம். வளர்ச்சியின் அளவுகோல். ஒரே வழி வளர்ச்சி இல்லாத மாற்றங்களும் நிகழ்வதுண்டு. இவை, புற நிலை மாற்றங்களேயாம் ; அகநிலை மாற்றங்கள் அல்ல.
மானுடத்தின் வாழ்நிலையில், அகநிலையில் ஏற்படும் மாற்றங்களே மானுடத்தின் குறிக்கோள்களை இனம் காட்டும்; நாகரிகத்தை நல்கும்; பண்பாட்டைத் தோற்றுவிக்கும்.
தமிழினம் காலந்தோறும் வளர்ந்து வந்துள்ள இனம். தமிழிலக்கியங்கள் காலந்தோறும் தமிழினத்திற்குச் சிறந்த குறிக்கோள்களை வழங்கி வந்துள்ளன. தமிழினம் ஓரினமாக வாழ்ந்து வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.
தமிழினத்தில் இனமானம், குடிசெயற்பண்பு மிகவும் குறைவு என்பதைத் திருக்குறள் வாயிலாக அறிய முடிகிறது. ஆதலால், தமிழினம் சமுதாயக் கூட்டு வாழ்வில் சாதனைகள் செய்ய இயலாது போனாலும் தனிமனித வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் தமிழினம் சிறந்து விளங்கியது; விளங்கிக் கொண்டிருக்கிறது. இது மறுக்க முடியாத உண்மை.
ஆயினும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இனமான உணர்வு தலையெடுத்து வளர்ந்தது; சங்க காலத்தில்:
“ஒரு வீரர் தோற்பினும் தோற்பதுங் குடியே!” என்று கோவூர் கிழார் இன உணர்வை அறிமுகப்படுத்தினார். அடுத்து, காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் சோழனும் பாண்டியனும் ஒருங்கிருந்த காட்சியைக் கண்டு பெருமிதமுற்று’
“இன்றே போல்க, நும் புணர்ச்சி!”
என்று வாழ்த்தினார். தமிழ்ச் சமுதாயக் கட்டமைப்புக்குத் தடையாக இருந்த சாதி, குல, வேற்றுமைகளை அப்பரடிகள் சாடினார். ஒருகுலம் காண முயன்றார். இங்ஙனம் முறையாக வளர்ந்து வந்த சமுதாய உணர்வு தலைவர் பெரியார் காலத்தில் எழுச்சி பெற்றது.
இந்த வரிசையில் நமது தலைமுறையில் வாழும் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், கவிஞர்களின் படைப்புகளைப் பற்றி எழுதப்பெற்ற நூல் இது.
நம்மிடம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய கவிஞர் குலோத்துங்கன், தொ.மு.சி.ரகுநாதன் புரட்சிக்கவி பாரதி, முற்போக்குச் சிந்தனையாளர் ஜெயகாந்தன் ஆகியோரின் படைப்புக்களைப் படித்த அனுபவத்தின் விளைவு இந்த நூல்.
இவர்களுடைய முற்போக்குச் சிந்தனைகளைத் தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்ற ஆர்வத் துடிப்புடன் எழுந்தது இந்நூல்.
ஆயிரம்தான், முற்போக்குச் சிந்தனை இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் தமிழினத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் இனமான உணர்வு தேவை என்பதையும் உணர்ந்து பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் பற்றியும் எழுதப் பெற்றுள்ளது.
பேரறிஞர் அண்ணா காலத்தில் தமிழர்களுக்கிடையில் இன உணர்வு வளர்ந்தது; உறுதிப்பட்டது. பேரறிஞர் அண்ணாவைப் போல் தமிழின உணர்வுக்குத் தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னும் யாரும் இல்லை. இனிமேலும் தோன்றுவார்களா என்பது ஐயப்பாடே! இங்ஙனம் தமிழ்ச் சமுதாய அமைப்புக்கு உரமூட்டும் வகையில் எழுதப்பெற்றுள்ளது.
வழக்கம்போல் நமது நூல்களை வெளியிடுவதில் குடும்பப் பாங்குணர்வுடன் நோன்பெனக் கருதிச் செய்யும் இனிய அன்பர் கலைவாணி புத்தகாலய உரிமையாளர் கவிஞர், கெழுதகை நட்புக்குரிய திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்களுக்கு நன்றி பாராட்டு வாழ்த்துக்கள்!
பலரும் புத்தகத்தை வாங்கிப் படிப்பார்கள், பயனடைவார்கள். தமிழினம் ஓரினமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அடிகளார்.
குன்றக்குடி
27-12-93
அணிந்துரை
கலைமாமணி, தமிழ்மறைக் காவலர்,
திருக்குறளார், வீ. முனிசாமி,
தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்கள் வானொலியில் ஆற்றிய இலக்கியப் பேருரைகளே “சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்” என்னும் அழகான நூலாக கலைவாணி வெளியிட்டுள்ளது.
சமுதாய மறுமலர்ச்சி என்றால் என்ன என்பதை தவத்திரு. அடிகளார் அவர்கள். சங்கப் பாடல்களையும், திருக்குறளையும் எடுத்துக்காட்டி விளக்கும் திறன் மிகவும் அருமையானது.
திருக்குறள் முழுக்க முழுக்க மறுமலர்ச்சி இயக்க படைப்புக் கருவியாகும் (பக் 12) அடிகளார் அவர்களின் எண்ணவோட்டம் பாராட்டத்தக்கது. சமுதாய மறுமலர்ச்சிக்குப் பாடுபட்ட, கவிஞர்கள், புதின ஆசிரியர்கள் சிலரை நினைவு கூர்ந்து விளக்கும் திறன், பரந்து விரிந்த நூலறிவாற்றலை தெற்றென காட்டுகிறது.
ஆன்மிகம், சமுதாயம், இலக்கியம், அரசியல் இன்ன பிற துறைகளிளெல்லாம் புரட்சிகரமான அறிவியல் கருத்துக்கள் பயன் தரும் வகையில் செயலாற்றி அருளும் தமிழ் மாமுனிவர் தவந்திரு. குன்றகுடி அடிகளார் அவர்களுக்கு மக்கட் சமுதாயம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.
பாரத ஒருமைப்பாட்டிற்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் புகழ்சேர்க்கும் படைப்புகளை மட்டுமே வெளியிட்டு வரும் நமது நண்பர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர்கள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதற்கு இலக்கணமாகத் திகழும் தவத்திரு அடிகளார் அவர்களுக்கு எனது வணக்கங்கள்.
திருக்குறளார்.
சென்னை.
28-32-93
பதிப்புரை
உலக வரலாற்றின் மாற்றங்களுக்கும், மேன்மைகளுக்கும் வழிகாட்டுவன சமுதாய மறுலர்ச்சி இலக்கியங்களே. போர்வாளினும் வலிமை மிக்கது பேனா மன்னர்கள் இயற்றிய சிறந்த இலக்கியங்கள்.
உலக ஒருமைப்பாட்டிற்கும். பண்பாட்டிற்கும் புகழ் சேர்ப்பன, தீர்க்கதரிசனமாக மகான்களும் அறிஞர்களும் அருளிய இலக்கியங்களே. உலக மக்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழவும், வழிகாட்டுவன.
அறிவியல் முன்னேற்றத்திற்கும். சமுதாய மறுமலர்ச்சிக்கும் இலக்கியங்கள் வழிநடத்தும் தன்மைகளை, தவத்திரு அடிகளார் அவர்கள் விளக்கி செயலாற்றும் பாங்கினை எண்ணிஎண்ணி மகிழ்கிறேன்.
உலகம் போற்றும் குன்றக்குடி பசுமைப் புரட்சி திட்டத்தை உருவ்ரிக்கி வெற்றிகர்மாக செயலாற்றி அருள்வதும் தமிழகத்தின் தவப்பியனே யாகும்.
அறிவியல் துறையில் பல முன்னேற்றங்களை கொண்டுள்ள நாம், ஆன்ம நேய ஒருமைப்பாட்டிலும், பண்பாட்டிலும், போதிய கவனம் செலுத்தின், உலகம் முழுவதும் சமுதாய மறுமலர்ச்சியைக் கண்டு மகிழலாம்.
தவத்திரு, அடிகளார். அவர்களின் சமுதாயப்பணி நாளும் சிறந்த பயனளித்து வருவது கண்கூடு, தவத்திரு. அடிகளார் அவர்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு, திருக்குறள் நெறிவழி சமுதாயும் தழைக்க இலக்கியங்கள் காட்டும் நெறிவழி ஒழுகி மகிழ்வதே.
அணியென அணிந்துரை அளித்தருளும் கலைமாமணி, திருக்குறளார் அவர்களுக்கும் உழுவலன்புக் கவிஞர். மரு. பரமகுரு அவர்களுக்கும் அரும் பணியாற்றும் அன்பர்களுக்கும் இதய நன்றி.
அனைவருக்கும் இந்நூல் பயன் கூட்டிட கலைவாணியின் திருவருளை வேண்டுகிறேன்.
சீனி. திருநாவுக்கரசு
பதிப்பாசிரியர்.
சென்னை 17
28-12-1993
பொருளடக்கம்
1. சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்
2. பாரதி தடத்தில் பாரதம்
3. அண்ணாவும் இலக்கியப் படைப்பும்
1. சமுதாய மறுமலர்ச்சி
இலக்கியங்கள்
* * *
சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் பற்றி ஒரு சிந்தனை! நமது சமுதாய மறுமலர்ச்சி பற்றி எத்தனையோ தடவை சிந்தனை செய்தாகி விட்டது. உலக மொழிகளில் உள்ள சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் பல. இவ்வளவு சமுதாய மறுமலர்ச்சி எண்ணப் போக்குகள் தோன்றிய பிறகும் ஏன் சமுதாய மறுமலர்ச்சி தோன்றவில்லை?
சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டுவிடாத வண்ணம் பிற்போக்காளர்கள் தடை செய்து வருகின்றனர். ஆயினும், கதிரவனைக் கையது கொண்டு பொத்தி மறைக்க முடியுமா? அதுபோலச் சமுதாயத்தையும் அதனுடைய முற்போக்குத் திசையிலிருந்து திருப்ப இயலாது; முடியாது சமுதாயம் மெள்ளத்தான் நகரும்! நகரும் என்பது உறுதி!
சமுதாய மறுமலர்ச்சி என்பது என்ன? இன்று சமுதாய அமைப்பு, கால்கொண்டிருக்கிறதா? காடுகளில் மரங்கள் வளர்ந்து அடர்த்தியாக இருக்கும். ஆனால், மரங்கள் ஒழுங்குபட அமைந்திருக்கா. தான்தோன்றித் தனமாக – தன்னிச்சையாக வளர்ந்திருக்கும் மரங்களுக்கிடையில் ஆரோக்கியமில்லாத போட்டி இருக்கும்!
ச—1
வல்லாண்மை மிக்க தாவரங்கள், வல்லாண்மையில்லாத தாவரங்களை அழித்து வாழும். “வல்லாண்மையே வாழும்” என்ற நியதி தாவரங்களுக்கும் உண்டு! இன்றைய சமுதாயம் காடு போலத்தான் விளங்குகின்றது! பழத்தோட்டம் போல் அல்ல!
வைத்த பழத்தோட்டத்தில் ஒழுங்கு இருக்கும்! எல்லாம் வாழும்! அழிப்பு இல்லை! பழத்தோட்டம் போன்ற சமுதாய அமைப்பே, மறுமலர்ச்சி இலக்கியப் படைப்பாளிகளின் நோக்கம்!
மானிட சமுதாயம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன! மானிட சாதியின் வரலாறு, வற்றாத ஜீவநதியாக ஓடிக் கொண்டே யிருக்கிறது! இனிமேலும் ஓடும்!
இந்த வரலாற்று ஆற்றில் அருமையான தெள்ளிய நீரும், சில சமயங்களில் செங்குருதியும், சில சமயங்களில் சாக்கடையும் ஓடும்! ஏன்? சில சமயங்களில் ஓடும் சாக்கடையில் குப்பையும் கூளங்களும் சேரும்பொழுது ஓடமுடியாமல் தேங்கி நிற்பதும் உண்டு இந்த மாதிரியான சூழ்நிலைகளில் வரலாற்றை, அதன் தேக்கத் தன்மை அறிந்து மாற்றி இயக்குவதை “மறுமலர்ச்சி” என்று வரலாற்றாசிரியர்கள் புகழ்வர்.
மானிட சமுதாயம் பழக்கங்களுக்கும் வழக்கங்களுக்கும் கட்டுப்படும் இயல்பினது. அதன் காரணமாக ஒரு கட்டத்தில் திரும்பத் திரும்பச் சுற்றுவது தேக்கம். இத்தேக்கத்தை உடைத்து மானிடம் சுற்றும் வட்டத்தை விரிவாக்குவது மறுமலர்ச்சி இலக்கியத்தின் தன்மை!
வளைவுகள், வட்டங்கள் அனைத்தையும் தயவு தாட்சண்யமின்றி உடைக்கத் தூண்டுவது புரட்சித் தன்மை வாய்ந்த இலக்கியம்! வெறும் அப்பட்டமான ரசனை, காம விகாரங்கள் உள்ள இலக்கியங்கள் படிக்கத்தக்கன அல்ல. அதுபோலவே, இருக்கும் நிலைமைகளை - அவலங்களை நினைந்து அழுது புலம்பி ஓய்வனவும் படிக்கத் தக்க இலக்கியங்கள் அல்ல. மானுடத்தை உறக்கத்தினின்று எழுப்பி முன்னேற்றத் திசையில் உசுப்பிவிடுவனவே மறுமலர்ச்சி இலக்கியங்கள்!
பழைமையை வெறுத்துப் புதுமையை நாடும் உணர்வு மானிடத்திற்கு இயல்பாகவே உண்டு இந்தப் புதுமையை நாடும் வேட்கையினால்தான் மானிடன் தனது உணவில், உடையில், வழிபாட்டில் புதியன பலவற்றைக் கண்டிருக்கின்றான்!
யுகந்தோறும் கடவுளைக்கூட மாற்றும் மனப் போக்குடையவன் மானிடன்! ஆனால், கடவுளை மாற்ற அவனால் முடியவில்லை. அதனால், பெயர்களையும் உருவங்களையும் மாற்றிக் கொண்டான் ஆதலால், மறுமலர்ச்சி இலக்கியங்களுக்கு வயது இல்லை! சங்க காலத்திலேயே மறுமலர்ச்சி வேகம் வந்துவிட்டது!
“ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்த்தன் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பணிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்!
இன்னா தம்ம இவ் வுலகம்!
இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே!”
(புறம்-194)
என்ற சங்ககாலப் பாடலும், “........................ மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
(புறம் - 192)
என்ற பாடலும் சங்ககாலத்தில் மறுமலர்ச்சிக்கு துணையாய் அமைந்த பாடல்கள்! முடியரசுகள் செல்வாக்காக இருந்த நூற்றாண்டில், அரசனது ஆணை தெய்வீக ஆணை என்றிருந்த காலத்தில் அப்பரடிகள் அரசனின் ஆணையை எதிர்த்து முழங்கினார்.
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்!
நரகத்தில் இடர்ப்படோம் நடிலை யல்லோம்
ஏமாப்போம் பிணியறிவோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளும் துன்ப மில்லை!
தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச் சேவடிஇணையே குறுகி னோமே!”
(ஆறாம் திருமுறை 901)
என்ற பாடல், முடியாட்சியை எதிர்த்து குடியாட்சிக்கு வரவேற்புக் கூறிய பாடல் அன்றோ? திருக்குறள் முழுக்க முழுக்க மறுமலர்ச்சி இயக்க படைப்புக் கருவியாகும்!
இந்த நூற்றாண்டின் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு தமது படைப்புக்கள் மூலம் உயிரளித்து வருபவர்களில் முன்னோடியாக விளங்குபவர் கவிஞர், எழுத்தாளர் குலோத்துங்கன் ஆவார். அறிவியல் மேதை வா. செ. குழந்தைசாமியின் புனை பெயர்தான் குலோத்துங்கன் என்பது. நமது வாழ்க்கையில் மிகவும் அருமையாக – உயர்வானதாகக் காக்கப்பெற வேண்டியது, காலம்! இன்று, நம் மக்களிடத்தில் காலத்தின் அருமைப்பாடு உணரப் பெறவில்லை! இன்று நம்நாட்டில் மலிவாகச் செலவழிக்கப்படுவது – களவாடல் செய்யப்படுவது காலமேயாம்! கவிஞர் குலோத்துங்கனின், காலத்தின் அருமையை உணர்த்தும் கவிதை அருமையானது. இந்த காலத்தில் வாழும் நாள்கள் சில. இந்தச் சிறிய கால எல்லைக்குள் அறிந்துணர வேண்டிய உண்மைகள் பல உள்ளன. சலிப்பின்றி உழைக்கின்ற வேளையில் வயிறு உணவு கேட்டுத் தொந்தரவு செய்கிறதாம்! வயிற்றுக்கு உணவு தேடுவதா என் தொழில்? குலோத்துங்கன் கவிதையைக் கேளுங்கள்!
“கால மோவிரை கின்ற தோர்சிறு
கணமும் மீளுமோ? ஏழை இப்பெரும்
ஞாலம் மீதுறை நாட்க ளோ, சில!
நான் தெளிந்திட வேண்டும் உண்மைகள்
சால வுள்ளன! ஓய்வ றிந்திலன்
சலிப்பி றந்துழைக் கின்ற வேளையில்
ஓலம் இட்டெனை உணவு தேடென
உரற்று வாய்வயி றே!இஃ தென்தொழில்?”
(குலோத்துங்கன் கவிதைகள் பக். 30)
காலத்தைக் காத்துப் பயன்படுத்துவோம்! வாரீர்! காலத்தை முறையாகப் பயன்படுத்துவோர் வாழும் நாடு வளரும்!
மறுமலர்ச்சி என்பது புதியன வேட்டல்! பழைய தலைமுறையைச் சேர்ந்தவன் குறிசொல்லும் கோணங்கி! பாரதி மறுமலர்ச்சிக் கவிதையில் முடிசூடா மன்னன்! ஏன். அவன் தன் வட்டங்களையும்கூடத் தாக்கியவன்! புரட்சிச் சிந்தனையாளன்! பாரதி, புதிய கோணங்கியாக நின்று, நமது நாட்டின் மறுமலர்ச்சிக்குக் கட்டியம் கூறி வரவேற்கின்றான்!
மறுமலர்ச்சிக்கு முதல் தேவை படிப்பு. அதனால், “படிப்பு வளருது! பாவம் தொலையுது!” என்று பாடினான் பாரதி. ஆனால், கடந்தகால வரலாற்றில் படித்தவர்களில் ஒரு சிலராலேயே மறுமலர்ச்சி இயக்கம் பயன்பெற்றது.
பலர் மானிடத்தின் வட்டத்தைச் சுருக்கிவிட்டனர்! தந்திரமாகச் சாதி, ஊழ் முதலியனவற்றைப் படைத்து, வளரும் சமுதாயத்திற்குத் தீங்கிழைத்து விட்டனர். இவர்கள் மெத்தப்படித்தவர்கள்; சாத்திரங்கள் செய்து சதி செய்தவர்கள் ஆதலால், கவிஞன் பாரதி, புதிய கோணங்கியில்,
“படிப்பு வளருது; பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான், போவான் ஐயோவென்று போவான்!”
— என்கிறான். (பாரதியார் கவிதைகள் பக். 221 புதிய கோணங்கி)
படித்தவர்களை மக்கள் நம்புகின்றனர். ஆதலால், படித்தவர்கள் சூது பண்ணக்கூடாது. சென்ற காலத்திலும் சரி, இன்றும் சரி படித்தவர்களில் பலர் — சாதாரண மக்களுக்கு எதிராகச் சூது செய்து கொண்டு தான் வருகின்றனர்! என்று இந்தச் சூது ஒழியும்!
கல்வி என்பது ஆன்மாவில் ஏற்றப்படும் ஒரு ஒளி! அணையாது ஒளிவிடும் ஒளி! கல்வி, மனிதனின் பொறி, புலன்களுக்கு அர்த்தம் கற்பிப்பது; படைப்பாற்றலை வழங்குவது; அறிவியல் ஆளுமையை வழங்கி, மனிதனை முழுமைப்படுத்துவது; மானிடம் வெற்றி பெறத் துணையாய் அமைவது.
இன்றைய கல்வி இப்படியா இருக்கிறது? மூளையில் செய்திகளைத் திணிக்கிறார்கள். வினா — விடைகளாக உருப்போட வைக்கிறார்கள்; நினைவாற்றலைச் சோதிக்கிறார்கள். மதிப்பெண் வழங்குவதிலும் “தர்மம்” புகுந்திருக்கிறது. தன்னம்பிக்கையும், திறமையும், ஆளுமையும் இம்மியும் இல்லை! ஆதலால், எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் சான்றிதழ்களைத் தூக்கிக் கொண்டு “வேலையோ வேலை” என்று அலைகின்றார்கள்.
இதற்காகவா பட்டம் என்று, கவிஞர் குலோத்துங்கன் கேட்கின்றார். “பட்டம் என்பது வருந்தப் பாடுபடாமல் உண்பதற்குரிய உரிமமா?” என்று கேட்கின்றார். ஏன்? எதனால்? என்று ஆழ்ந்துணரும் இயல்பாவது இருக்கிறதா? அதுவும் இல்லை.
“தினை தின்ற கோழி தினையாகக் கழியும்” என்ற பழமொழியைப் போலக் கற்றதை ஒப்புவித்தல்! அவ்வளவுதான் இன்றைய படிப்பு!
“பட்டமெலாம் மெய்வருந்திப் பாடுபடா
வாழ்வுக்குப் பாதை காணும்
திட்டமென முடிந்ததுவோ! தெளிவில்லேன்
ஆழ்ந்துணரும் திறமை காணேன்!”
(குலோத்துங்கன் கவிதைகள் பக். 26)
என்பது கவிஞர் குலோத்துங்கனின் கவிதை.
கல்வி என்னென்ன தரவேண்டும்? கல்வி பெருமையைத் தரவேண்டும் புகழைத் தரவேண்டும்! நாளைய வாழ்க்கையை நல்வாழ்க்கையாக அமைக்க வேண்டும். இத்தகைய கல்வி அறிவாண்மையைத் தரும். ஆய்வுப் படைவீடு அமைக்கப் பெறுதல் வேண்டும் என்பது கவிஞர் குலோத்துங்கனின் ஆசை. இதோ பாடல்,
“பெருமையும் புகழும் நாளைப்
பெற்றியும் உயர்ந்த கல்வி
தரும்எனத் தெளிவோம் ஆய்வுச்
சாலைநம் படைவீ டென்போம்”
(குலோத்துங்கன் கவிதைகள் 80)
இந்தக் கவிதை என்று நடைமுறையாகும்? நமது மக்களும் அரசும் ஆசிரியப் பெருமக்களும் இந்தக் கவிதையை உணர்ந்து நல்ல ஆளுமைத் தன்மையுடைய கல்வியை வழங்க முன்வருதல் வேண்டும். இது தவிர்க்க இயலாத அவசர அவசியக் கடமையாகும்.
வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்தல் வேறு! பிழைத்தல் வேறு. “வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே!” என்ற திருவாசகத்தின் நுண்பொருள் தெளிக! “சீச்சி நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” என்ற பாரதியின் திட்டுதலையும் நினைவிற் கொள்க!
ஆதலால், வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்க்கை அகநிலையிலும் புறநிலையிலும ஓயாது போராடும் தன்மையுடையதாக நிகழின், வாழ்வு செம்மையாக அமையும்!
“எந்தப் பொருளுக்கும் அழிவு உண்டு. எவர் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் உண்டு. பிரச்சனைகளைக் கண்டு பயப்படக் கூடாது.
பிரச்சனைகளைக் கண்டு பயந்தால், அந்தப் பிரச்சனைகள் நம் தோளின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு நம்மை ஏவல் கொள்ளும்! நாம் அந்தப் பிரச்சனைகளைப் பிடித்து அமுக்கி நமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் பிரச்சனைகள் தீரும்; வாழ்க்கையும் இயங்கும். இத்தகைய வாழ்க்கைப் பிரச்சனையைச் சந்திக்கத் தெரியாத ஒருவனின் அவலம் பற்றி, தொ. மு. சி. ரகுநாதனின் “பஞ்சும் பசியும்” நாவல் விவரிக்கிறது.
“வாழ்க்கைப் பிரச்சனைகள் தன்னை நாலாபுறத்திலும் சூழ்ந்துகொண்டு பயமுறுத்துவதுபோல், அவனுக்குத் தோன்றியது. அடிவானத்தில் மின்னிய மின்னலைப் பார்க்கக் கூசும் கண்களைப் போல் அந்த பிரச்சனைகளை ஏறிட்டுப் பார்க்கவே அவன் மனம் கூசியது. ஏறிட்டுப் பார்க்காவிட்டாலோ பாரம் தாங்க முடியாத இருள் மண்டலம் தன்மீது விழுந்து தன்னை அமுக்குவது போல் அவனுக்குத் தோன்றியது” என்று விவரிக்கிறது.
(பஞ்சும் பசியும் பக். 195)
ஏன் இந்த அவலம்? பிரச்சனைகள் நம்மைவிட ஆற்றல் வாய்ந்தவை அல்ல! பிரச்சனைகளை சந்திக்கத் தயாராகுங்கள்!
பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கையில் நின்று, நீந்திக் கரையேறி, வெற்றி வாகை சூடவேண்டும். இப்படிக் கரையேறினால்தான் “மானிடப் பிறவி உயர்ந்தது” என்ற சித்தாந்தத்திற்குப் பொருள் கிடைக்கும் என்று கன்னட இலக்கியங்கள் வழி நடத்துகின்றன.
ஆம்! நாளும் வாழ்க்கை தளிர்த்தல் வேண்டும்! வாழ்க்கை பட்ட மரம் போலானால் என்ன பயன்? நாளும் வாழ்க்கையில் வளர்ச்சி வேண்டும்! வளர்ச்சிக்குத் தேவையான மாற்றங்கள் வேண்டும்! நாளும் வளராத வாழ்வும் — ஒரு வாழ்வா? இது கவிஞர் குலோத்துங்கனின் வினா!
“வாழப் பிறந்தவர்கள் சாகக் கூடாது! செத்துக் கொண்டே நடைப்பிணங்களாக வாழ்வதில் பயனில்லை! வாழ்க்கை ஒரு போர்க்களம்! நன்றே நடக்கும் போர்க்களம்” —இது, தொ. மு. சி. ரகுநாதன் தந்துள்ள பஞ்சும் பசியும் புதினத்தின் ஊக்க உரைகளாகும்.
இந்த நூற்றாண்டில் அறிவுப் புரட்சி பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஆனால், நடைமுறையில் அறிவுப்புரட்சி ஏற்பட்டால் மட்டும் போதாதென்பது உண்மையாகி வருகிறது.
உயிர்க்குலம் அனைத்துக்குமே அறிவு உண்டு. விலங்குகள், தாவரங்கள் ஆகியவைகளுக்கும் அறிவு உண்டு. இவைகளுக்கும் மனித குலத்துக்குமிடையே அறிவில் இடைவெளி கூடுதல் குறைவாக இருக்கலாம். ஆனாலும் மானிடன் தான் பெற்ற கூடுதல் அறிவைக் கொண்டு அப்படியொன்றும் பிரமாதமாகச் சாதித்து விட வில்லை. மாறாகத் தீங்கைத்தான் செய்து வருகிறான்.
இந்த அறிவியல் அளவுக்குச் சான்றோர்களும் மாமேதைகளும் விதி விலக்காவர். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடியே உள்ள தகுதி வேறுபாட்டை அறிவினால் மட்டும் நிர்ணயித்தல் கூடாது.
மனிதன் கடைப்பிடிக்கும் நடைமுறை, செயல்முறைகளே மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவனவாகும், இந்த அளவைக்கு ஈடுகொடுக்கும் மாந்தர் எங்குளர்? யார் அவர்? ‘பஞ்சும் பசியும்’ ஆசிரியர் தொ.மு.சி. ரகுநாதன், அறிவுப் புரட்சி பற்றி விவரிக்கிறார் கேளுங்கள்.
அறிவுப் புரட்சி, அறிவுப் புரட்சி என்று அடித்துக் கொள்கிறாயே, அறிவில் மட்டும் புரட்சி ஏற்பட்டால் போதுமா? இப்போது என்னை எடுத்துக்கொள், எனக்கு இந்த மூட நம்பிக்கைகளில் ஒன்றும் நம்பிக்கை இல்லை. மனிதனை மனிதனாகத்தான் நேசிக்கிறேன். இதனால், என் வாழ்க்கை மேம்பட்டு விட்டதா?
சொர்க்கத்தில் இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்வதால் மட்டும் ஒருவன் சொர்க்கத்துக்குப் போய்விட முடியுமா? அறிவு வேண்டும்; அந்த அறிவின் கொள்கை வெற்றி பெற நடைமுறைப் போராட்டம் வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது என்று ஓர் உரையாடலில் கூறுகிறார். இது நமது கவனத்திற்குரியது.
அறிவு, உணர்வைத்தான் தரமுடியும். ஆனால், வாழ்வியல் நடைமுறைதான் வெற்றியைத் தரமுடியும். கொள்கைபும் நடைமுறையும், சிந்தையும் செயலும் ஒன்றுபட்டால்தான் காரியங்கள் நிறைவேறும் துன்பம் அகலும் இன்பம் வந்தடையும்! அறிவை, உணர்வை நடைமுறைக்குக் கொண்டு வரும்பொழுது மானிடத்திற்கு உழைப்பு அறிமுகமாகிறது.
ஆம்! உலகத்தை இயற்றும் உன்னதமான ஆற்றல் உழைப்பிற்கு உண்டு. உழைப்புக்கு ஈடாக உலகத்தில் பிறிதொன்றில்லை! உழைப்பே உலக வரலாற்றில் உயிர்ப்பு! “கைவருந்தி உழைப்பவர் தெய்வம்” என்றான் பாரதி எங்கே உழைப்பிருக்கிறதோ, அங்கே மனத்திற்கு ஊசலாட்டமில்லை!
உழைப்புள்ள இடத்தில் மனம் தூய்மையாக இருக்கும். உழைப்பாளர் மனம், இறைவனின் சந்நிதியாகும். உழைப்பாளிகள் வாழ்வர்; வாழ்வித்து வாழ்வர், உழைப்பாளிகள் யாரொருவருக்கும் தீங்கு செய்யார். இக் கருத்துக்களை அழகுற விளக்கும் பாடல் ஒன்று இதோ;
“உழைக்கின்ற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது - மனம்
கீழும் மேலும் புரளாது”
இது பட்டுக்கோட்டையின் பாடல், உழைப்பு ஆற்றல் வாய்ந்தது. நல்ல ஆற்றல் வாய்ந்த உழைப்பாளி வாய்ப்புக்களை எதிர்பார்த்துக் காத்திருக்க மாட்டான். அவனே வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வான்.
உழைக்கும் உள்ளம் பெற்ற ஒருவன் தனக்கு வாய்த்திருக்கிற கருவிகள், களங்கள், வசதிகள் ஆகியவை பற்றிக்கூடக் கவலைப்பட மாட்டான்! “பொறியின்மை யார்க்கும் பழியன்று” என்ற வள்ளுவம், இவன் வாழ்க்கையின் விளக்கம். ஏன், உடலில் ஊனம் இருந்தால்கூட அவன் அஞ்சுவதில்லை. திடமான மனத்துடன் திறமை சான்ற உழைப்பைச் சாதனமாகக் கொண்டு உலகில் வெற்றி பெறுகின்றான்.
ஜெயகாந்தனின் “நான் இருக்கிறேன்” என்ற சிறுகதையில் சில வரிகள் இந்த உணர்வுகளை நமக்கு ஊட்டுகின்றன.
“காலு இல்லாட்டிப் போனா என்னாய்யா! கையாலே இந்த உலகத்தையே வளைக்கலாமே! வாழறதுக்குக் காலும் கையும் வேணாமய்யா, நல்ல மனசு வேணும் அறிவு வேணும்! மனுசனோட அறிவு யானையைக் காட்டிலும், சிங்கத்தைக் காட்டிலும் வலுவானது. இல்லேங்கறதுக்காகச் செத்து இருந்தா மனுச சாதியே பூண்டத்துப் போயிருக்கும். காலு இல்லாட்டி அது இல்லாத கொறையை மாத்திக்கிட்டு எப்படி இருக்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்னா காலு இருக்கிறவங்களைக் காட்டிலும் நீ வேகமா ஓடிட மாட்டியா?” என்று வியாதிக்காரன் மூலம் நொண்டியை ஊக்கப்படுத்தும் ஜெயகாந்தனின் அறிவுரை கொள்ளத்தக்கது.
ஆம்! உடலில் ஊனம் என்பது வாழ்க்கையை கெடுக்கக் கூடியதன்று ஆனால், உடலில் ஊனம் என்ற நினைப்பு இருக்கிறதே, அது ஆளை அரித்து கொன்று விடும் உடல் ஊனங்கள் அலட்சியப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை இன்பமாக அமையும். மீண்டும் ஜெயகாந்தனின் “நான் இருக்கிறேன்” என்ற சிறுகதையின் வரிகளைக் கேளுங்கள்.
“இந்தாய்யா, நீ சாகப்படாது...... சொல்லிட்டேன். ஒனக்குக் காலு இல்லேங்கிற நெனப்பினாலேதான் நீ கஷ்டப்படறே. மத்தவங்களையும் கஷ்டப்படுத்தறே!” என்பவை அந்த வரிகள்!
மனித உலகம் சிந்திக்கத் தொடங்கிய காலந்தொட்டு உழைப்பு, உழைப்பின் உயர்வு பற்றி ஆயிரம் பேசப் பட்டுள்ளது. “உழைத்தால் உயரலாம்” என்று பல்லவி, அனுபல்லவியாகத் தலைமுறை தலைமுறையாகச் சொல்லி வந்திருக்கிறார்கள்!
ஆனால், உழைத்தவர்கள் முன்னேறியிருக்கிறார்களா? கழனியில் உழும் உழவன், உழைப்பாளி அவன் நியாயவிலைக் கடைக்கு அரிசி வாங்கப் போகாமல் இருக்கிறானா? இலவச அரிசி வாங்காமல் இருக்கின்றானா?
மாடுகள் வளர்த்துப் பாலினைக் கறந்து உலகுக்கு வழங்கும் தொழிலாளியின் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பால் அறிமுகம் உண்டா? “கொக்குபோல் பால்” என்ற கதையைக் கேட்டிருப்பீர்கள் அதுபோலத்தான் அவன் பிள்ளைகளின் நிலை!
நில உலகம் முழுதும் ஓங்கி உயர்ந்திருக்கும் மாளிகைகளைக் கட்டித் தந்த கொத்தனார்களுக்கு வீடு உண்டா? ஏன் இந்த அவலம்!
அறிஞர் அண்ணா, இந்தத் துன்பம் நிறைந்த உழைப்பாளிகளின் வரலாற்றை “செவ்வாழை” என்ற கதையில் விளக்கும் பாங்கு, நினைக்கத்தக்கது உணரத்தக்கது. இதயமிருந்தால் இத்தகைய கொடிய நிகழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைவீர்!
இதோ, அண்ணாவின் படைப்பு! “செவ்வாழை”யின் ஒரு பகுதி:
“நம்ம கொல்லையிலே நாம் வளர்த்ததல்லவா!” —என்று அழுகுரலுடன் கேட்கும் குழந்தைகளும், குழந்தைகளைத் தவிக்கச் செய்கிறாயே, நியாயமா என்று கோபத்துடன் கேட்கும் மனைவியும் அவன் மனக்கண்களுக்குத் தெரிந்தனர் எதிரே நின்றவரோ, பண்ணைக் கணக்கப்பிள்ளை! அரிவாள் இருக்குமிடம் சென்றான்.
‘அப்பா, குலையை வெட்டப் போறாரு — செவ்வாழைக்குலை’ — என்று ஆனந்தக் கூச்சலிட்டுக் கொண்டு, குழந்தைகள் கூத்தாடின. செங்கோடனின் கண்களிலே நீர்த்துளிகள் கிளம்பின! குலையை வெட்டினான்! உள்ளே கொண்டு வந்தான்! அரிவாளைக் கீழே போட்டான்!
“குலையைக் கீழே வை அப்பா, தொட்டுப் பார்க்கலாம்” என்று குதித்தன குழந்தைகள்! கரியனின் முதுகைத் தடவினான் செங்கோடன். “கண்ணு! இந்தக் குலை, நம்ம ஆண்டைக்கு வேணுமாம் கொண்டு போகிறேன் — அழாதீங்க — இன்னும் ஒரு மாசத்திலே பக்கத்துக் கண்ணு மரமாகி குலைத் தள்ளும், அதை உங்களுக்குக் கட்டாயமாகக் கொடுத்துவிடறேன்” என்று கூறிக்கொண்டே, வீட்டைவிட்டுக் கிளம்பினான், குழந்தையின் அழுகுரல் மனதைப் பிளப்பதற்குள்.”
இந்தப் பகுதி நம் உள்ளத்தை உருக்குகிறதல்லவா?
உழைப்பு—வேலை, அதாவது உழைக்கும் ஆற்றலைக் கருவியாகக் கொண்டு செய்யப்படுவது வேலை! உழைப்பின் ஆக்கமே வேலை!
இந்த நிலவுலகில் உழைத்து உண்ணவேண்டும் என்ற ஆர்வலர்களுக்கு எங்கும் வேலையுண்டு அவர்களே தங்களுக்குரிய வேலையை உருவாக்கிக் கொள்வர். தாமே வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்பவர்கள், தகுதி மிகுதியும் உடையவர்கள்! உழைப்பால் மட்டுமே அவர்கள் வாழ விரும்புவார்கள்!
இத்தகைய ஆர்வம் இன்று பலரிடம் இல்லை! இன்று வேலை தேடுகிறார்கள்! வருகைப் பதிவேட்டோடும் ஊதியத்தோடும் தொடர்புடைய வேலையையே விரும்புகிறார்கள்! இவர்களுக்குக் கடின உழைப்பில் நாட்டமில்லை; இத்தகையோர் வேலை தேடு படலத்தில் ஈடுபடுகின்றனர்; உண்மையாக அல்ல — ஒப்புக்காகவே!
சிறுகதை ஆசிரியர் வல்லிக் கண்ணனின் “வாழ விரும்பியவன்” என்ற படைப்பில் ஒரு பகுதி.
“அவர்களுக்கு ‘வேலை’ என்று எதுவுமில்லை. தேடிவந்து சேராத — எங்கே எப்படிக் கிடைக்கும் என்றே தெரியாத — ஏதாவது ஒரு வேலையைத் தேடிக் கொண்டிருப்பதாகத்தான் பாஸ்கரனும் அவனைப் போன்ற நண்பர்களும் சொல்லித் திரிந்தார்கள்” என்று வேலை தேடுவோரின் நிலையை சித்திரித்துக் காட்டுகின்றார் வல்லிக்கண்ணன்.
இத்தகையோரால் நாடு வளருமா? நாட்டு அரசுகள், வேலைவாய்ப்பை உண்டாக்குவதற்கு தமது திட்டங்களில் முன்னுரிமை திந்து வழங்க வேண்டும். அதே நேரத்தில், இளைஞர்களும் காத்துக்கொண்டு இராமல் சுயவேலை வாய்ப்புகளில் ஈடுபட வேண்டும். முன்னுக்கு வரவேண்டும் என்ற துடிப்பு இருந்தால் இன்று எதையும் செய்யலாம். அவ்வளவு வாயில்கள் இன்று அமைந்துள்ளன.
“வாழ்க்கை சிறப்புற அமைய, போர்க்குணம் தேவை” என்றான் மாமேதை லெனின், அறியாமை, வறுமை, ஏழ்மை இவற்றை எதிர்த்துப் போராடும் போர்க்குணம் வேண்டும். போர்க்குணம் இல்லாத வாழ்க்கை பிண வாழ்க்கை. தொ. மு. சி. ரகுநாதன் தமது ‘பஞ்சும் பசியும்’ நாவலில்,
“போாடுவோம்! வெற்றி பெறுவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!”
என்று, முழங்குவதைக் கேளுங்கள்!
ஒரு சமுதாயத்தில் எவை எவை மதிக்கப்படுகின்றனவோ, அவற்றைப் பொறுத்தே அந்தச் சமுதாயத்தின் நடைமுறை அமையும்; வரலாறு நிகழும்!
பொதுவாக, மனித மதிப்பீடு - “நீதி சார்ந்த மதிப்பீடு!” ,“ஒழுக்கச் சார்பான மதிப்பீடு!” , “பண மதிப்பீடு” என்றெல்லாம் அமையும் .
இன்று, நமது நாட்டை வருத்துவதெல்லாம் பண மதிப்பீட்டுச் சமுதாயமேயாகும். எங்குப் பார்த்தாலும் பணத்திற்கே மதிப்பு கல்விக் கோயிலா? அங்கும் பணம் தான்! கடவுள் சந்நிதியா? ஐயய்யோ, சொல்லவே வேண்டாம்! அங்கும் பணத்திற்கே கொள்ளை மதிப்பீடு
கணவன் மனைவி உறவா? அங்கும் ஊடே பணமே விளையாடுகிறது! இந்தப் பண மதிப்பீட்டுச் சமுதாயம் அன்பைக் கெடுக்கிறது; உறவைக் கெடுக்கிறது: வாணிகப் புத்தியை வளர்க்கிறது; இலாப வேட்டையை கடத்துகிறது. இன்று நாட்டுடைமை யாக்கப்பட்டுள்ள
ச—2 கையூட்டு, பண மதிப்பீட்டுச் சமுதாயத்தின் விளைவேயாகும்.
“எப்பாடு பட்டேனும் பணத்தைச் சம்பாதித்துவிடு! அதற்கு அப்புறம் நீ, நீயேதான்” என்கிறது இந்தப் பண மதிப்பீட்டு சமுதாயம்! இப்படிப்பட்ட சமுதாய வளர்ச்சியில் மனிதநேயம் மறக்கப்பட்டு வருகிறது.
பணம் இல்லையானால் இன்று சராசரி வாழ்க்கைகூட வாழ இயலாது. பணம் படைத்தவர்கள் வாழும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைப் பார்த்துப் பலர், அத்தகைய வாழ்க்கையை விரும்புகின்றனர். அவர்களைப் போலவே, தாமும் வாழ ஆசைப்படுகின்றனர்.
அதன் காரணமாக ஜோதிடரை நாடுகின்றனர்; குறிசொல்லுபவனை நாடுகின்றனர்; பரிசுச்சீட்டை நாடுகின்றனர். ஆயினும் முன்னேற்றமில்லை! நேரத்தைக் கழித்ததே மிச்சம்; இதனால், இனம் தெரியாத விலங்கியல் வாழ்க்கை கால்கொள்கிறது. இதோ, முற்போக்குச் சிந்தனையாளர் வல்லிக்கண்ணனின் படைப்பில் ஒரு பகுதி:
“பணமே முக்கியம். பணத்துக்கே மதிப்பு அதிகம் என்ற நிலை ஏற்பட்டுவிட்ட சமுதாய அமைப்பில், ஆசையும் அரிப்பும் பெற்றுள்ள அனைவரும் பணம் தேடுவதிலும், மேலும் மேலும் தேடிக் குவிப்பதிலும் தீவிர வேகம் காட்டுவது இயல்பாகி விட்டது.
பணம் இருந்தால் எதையும் செய்ய முடியும். இஷ்டம்போல் அனுபவித்து வாழ முடியும் என்று வாழ்க்கை கண்முன்னே வெளிச்சமிட்டு மினுக்குகிற போது, துணிச்சல் பெற்றவர்களும், தேவை மிகுந்தவர்களும் எப்படியும் பணம் பண்ணுவது என்று வெறி உணர்வோடு மும்முரமாக முனைவது சகஜமாகியுள்ளது கால ஓட்டத்திலே.
“பணம் இல்லாமல் இருப்பதுதான் பாவம். இன்றைய சமுதாயத்தில் பணம் பண்ணத் தெரியாமல் இருப்பதுதான் குற்றம். நானும் வாழ வேண்டும். சுகமாக, வசதியாக, வெற்றிகரமாக வாழ்கிற பலரையும்போல் வாழவகை செய்யவேண்டும் என்று பாஸ்கரனும் ஆசைப்பட்டான்” என்று வல்லிக்கண்ணன் தன் பாத்திரத்தின் மூலம் இன்றைய பண மதிப்பீட்டுச் சமுதாயத்தின் நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
தனி மனிதன், சமூகம் இவர்களில் யார், யாருக்கு ஆதாரம்? சமூகத்தைத் துறந்து காட்டுக்கு ஓடிப்போவது தான் பெருமைக்குரிய விஷயமா? மனச்சாட்சி என்பது என்ன? அதற்குரிய மதிப்பு என்ன? என்றெல்லாம் ஆராய்ந்தறிவது அவசியம். தனிமனிதன் கணக்களவில் - எண்ணிக்கை அளவில், ஒரே ஒரு மனிதன்தான்! ஆயினும், அவன் பிறந்து வளர்ந்து வாழும் சமூகம் - சமூகத்தின் நிகழ்வு அவனிடத்தில் ஏராளமான தாக்கங்களை - பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
“மனித உலகத்தைத் துறந்து ஓடுவது துறவறமன்று. மனித சமூகத்திற்குள்ளேயே வாழ்ந்து கொண்டு, மனித சமூகத்தைப் புரிந்துகொண்டு, மனித சமூகத்தின் துன்ப நீக்கத்துக்காகப் பாடுபடுபவர்களே ஞானிகள்” என்றான் கதே என்ற தத்துவஞானி!
இந்த கருத்தை, ஜெயகாந்தனின் “கருங்காலி” என்ற சிறுகதையில் வரும் கோவிந்தன், ராகவனிடம் கூறும் பாங்கில் கேட்டுத்தான் பாருங்களேன்!
மகரிஷிகள், ஞானிகள் எல்லாம் காட்டுக்குப் போய், காட்டோடு அவர்கள் போயிருந்தால் அவர்களுக்கு என்ன பெருமை? உலகத்தைத் துறந்துபோன ஞானிகள் தங்கள் ஞானம் வாழனும்னா மனுஷ சமூகத்துக்குத் திரும்பி வந்து, அவர்கள் மத்தியில்தான் வாழனும். காட்டுக்குப் போனதாலே மட்டும் இல்லே; திரும்பி வந்ததனாலேதான் அவர்களுக்குப் பெருமை இருக்கு” என்ற ஜெயகாந்தனின் கோவிந்தன் கூறுவது நினைந்து போற்றத்தக்கது!
அடுத்து, மனசாட்சி! கவியரசு கண்ணதாசன்
கண்ணில் வருவது காட்சி! அந்தக்
காட்சிக்கு சாட்சி மனம்!
காட்சியை மறந்தன கண்கள் - மனச்
சாட்சியை மறைத்தது உள்ளம்!
என்று அழகுறப் பாடுவார்.
ஒரு பொருளை ஒருவன் பார்க்கிற பார்வையில், எந்த நோக்கத்தோடு அவன் பார்க்கிறான் என்பது யாருக்குத் தெரியும்? பார்ப்பவன் மனச்சாட்சியே இதற்குச் சாட்சி! அவனோ, அவனுடைய மனச்சாட்சியை மூடி மறைத்து விடுகின்றான். மனச்சாட்சி என்பதைப் பற்றி மாவீரன் மாஜினி சொல்லும் செய்திகள் கவனத்திற்கு உரியன.
இன்று நம்மில் பலர், எடுத்ததற்கெல்லாம் “மனச் சாட்சிப்படி நான் பொய் சொல்லவில்லை” என்று கூறுவர். அவருடைய மனம் நடுநிலையில் நின்றதா? நீதியைச் சார்ந்திருந்ததா? என்றெல்லாம் ஆய்வு செய்து அறிவது கடினம். ஆதலால், அவருடைய மனச்சாட்சி மட்டுமே ஆய்வு அளவையில் எடுத்துகொள்ளக் கூடியது. தனிமனித மனச்சாட்சி என்பது சமூகத்தின் மனச்சாட்சியோடு ஒத்திருக்க வேண்டும். அதாவது, “ஒருவர் கூறுவது, சமூகம் ஏற்றுக்கொள்ள தக்கதாக இருக்க வேண்டும்” என்பது மாவீரன் மாஜினியின் கருத்து.
ஜெயகாந்தனின் படைப்பாகிய ‘கருங்காலி’யில் ஒருசில வரிகள்,
“தனிமனித மனச்சாட்சி, சமூக மனச்சாட்சிக்குக் கொஞ்ச காலமாவது கட்டுப்பட்டுத்தான் ஆகணும். அந்த தனிமனிதனின் நியாய வாதம் உண்மையிலேயே தர்மமா இருந்தா அதை நிச்சயம் சமூகம் கொஞ்சம் பொறுத்து ஏற்றுக் கொள்ளும். அப்படியும் சமூகம் ஏற்றுக் கொள்ளலேன்னா அது தர்மம் அல்ல; ஆமாம், தர்மத்துக்கு அதுதான் இலக்கணம்”
ஜெயகாந்தனின் இந்தக் கருத்திற்கேற்ப நாம் சமூகத்தின் மனச்சாட்சிக்கு மதிப்புக் கொடுப்போமா?
சமூகம் என்ற சொல், இன்று கிட்டத்தட்ட சமுதாயத்தின் ஒரு பகுதியை, ஒரு சிறு ஜாதி வழிப்பட்ட கூட்டத்தைக் குறிக்கும் சொல்லாகவே வழங்கப்படுகிறது. ஆனால், இலக்கியங்களில் சமூகம் என்பது மனிதகுலம் என்ற பொருளில்தான் வழங்கப்படுகிறது. பாவேந்தன் பாரதிதாசன்,
“ஒன்றே சமூகம் என்றெண்ணார்க்கே இறுதி! உறுதி!
உறவினர் ஆவார் ஒருநாட்டார் - எனல் உறுதி!
பிறவியில் உயர்வும் தாழ்வும் செய்தல் மடமை! இந்தப்
பிழை நீக்குவதே உயிருள்ளாரின் கடமை!”
என்று பாடுவான்!
பாவேந்தன் கருத்துப்படி சமூகம் என்பது நாடு, மொழி, சமயம் கடந்தது. சமூகம் என்பது மாந்தர் கூட்டமேயாம். ஆனால், நமது நாட்டின் சமூக வரலாறு கூறுவது என்ன? மாந்தரிடையே தீண்டாமை, உயர்வு, தாழ்வு என்ற வேற்றுமைகள்! இந்த அடிப்படையிலான பேதா ஓபேதங்கள் பிரிவினைகள்! இன்று நம் கண்முன் காட்சியளிக்கும் சமுதாயம் ஓருருவும், ஓருணர்வும் உடையதன்று. இதனை மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,
“உச்சி மலையிலே ஊறும் அருவிகள்
ஒரே வழியிலே கலக்குது!
ஒற்றுமை யில்லா மனிதகுலம்
உயர்வும் தாழ்வும் வளர்க்குது!”
(பட்டுக்கோட்டை பாடல்கள் பக். 18)
என்று மிகவும் அழகாக உணர்த்துகின்றார். மானிட சமுதாயத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்து, ஒட்டி உறவாடி வாழ்ந்தால்தான் வளரலாம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒதுக்குதல் - ஒதுங்குதல் என்ற கொள்கை அறவே கூடாது. மானிடத்தோடு ஒட்டி வளர்ந்தாலே உயரலாம்; உயர முடியும். இந்த அழகிய கருத்தினை மூங்கில்கள் மூலம், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை விளக்கிக் கூறும் பாடல் இதோ: “ஓங்கி வளரும் மூங்கில் மரம்
ஒன்னை ஒன்னு புடிச்சிருக்கு!
ஒழுங்காகக் குருத்து விட்டு
கொள்ளை கொள்ளையா வெடிச்சிருக்கு!
ஒட்டாமே ஒதுங்கி நின்னால்
உயர முடியுமா? - எதிலும்
ஒத்துமை கலைஞ்சுதுன்னா
வளர முடியுமா?”
(பட்டுக்கோட்டை பாடல்கள் பக். 19)
இனிய அன்பர்களே! பட்டுக்கோட்டையின் பாடல். அனுபல்லவி போன்ற பாடலாகும். ஏனெனில், இதற்கு முன்பு, இதுபற்றி நமக்கு எடுத்துக் கூறியவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள்! அவர்கள் கூறியவற்றை நாம் செவிமடுக்கவே இல்லை! இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குச் சாதியை, சாதிக் கலவரங்களைக் காப்பாற்றப் போகிறீர்கள்! இது என்ன நாம் செய்த ஊழா? அல்லது மற்றவர்கள் செய்த கர்ம வினைதான் இவ்விதம் வந்து மூண்டிருக்கிறதா?
ஆறு! வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் ஆறு! ஆற்றோட்டத்தின் ஒதுக்குப்புறத்தில் சிறு குழிகள்! அச்சிறிய குழிகளில் ஆற்று வெள்ளத்தோடு வரும் மாசுகள் அடையும்! இந்த உவமை, பாரதியின் உவமை. பாஞ்சாலி சபதத்தில் பாரதி எடுத்தாளும் உவமை.
ஆம்! பாண்டவர்களின் துன்பத்திற்கு அவர்களின் ஊழ் காரணமன்று. சகுனி, துரியோதனன் முதலியோருடைய கர்மப்பயன் பாண்டவர்களை வந்து வருத்துகிறது. காரணம், ஒரு நாடு, ஒரு சமூகம் ஆகிய அமைதியேயாம்! இன்றும் நம்மில் பலரை - ஏன்? கோடானுகோடி மக்களை ஏழ்மையிலும் அறியாமையிலும் கிடத்தித் துன்புறுத்துவது அவர்களுடைய ஊழ் அன்று.
இந்த நாட்டை ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கின்ற அரசுகள், முதலாளித்துவத்திற்குக் கட்டியம் கூறும் மதத் தலைவர்கள் முதலியோர் செய்த தீயூழே இன்றைய ஏழை மக்களை வருத்துகிறது. இதற்குப் பெயர் “சமூக ஊழ்.”
அன்று சிலப்பதிகாரக் கண்ணகியை வருத்தியது. பூம்புகார்ச் சமுதாயத்தின் சமூக ஊழ். பாரதியின் “பாஞ்சாலி சபத”த்தில் ஒரு பாடல். கேளுங்கள்!
“.................................
வைய மீதுள வாகும் அவற்றுள்
விதியினும் பெரிய தோர்பொரு ளுண்டோ?
மேலை நாம் செய்யும் கர்மம்அல் லாதே
நதியில் உள்ள சிறுகுழி தன்னில்
நான்கு திக்கி லிருந்தும் பல்மாசு
பதியு மாறு பிறர் செய்யும் கர்மப்
பயனும் நம்மை அடைவதுண் டன்றோ?”
(பாஞ்சாலி சபதம் பக். 407)
ஆதலால், தனித்து வாழ்ந்தால் உயர்ந்துவிடலாம் என்று எண்ணாதீர்கள்! நீங்கள் வாழும் சமுதாயத்தையும் - உங்களை உருவாக்கும் சமுதாயத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! சமூகத்தைப் பாதுகாப்பது என்றால் என்ன? கழனியில் பயிரைப் பாதுகாப்பது போன்றது. அது. கழனியில் பயிரைப் பாதுகாப்பது என்றால் என்ன? பயன் தரும் பயிர்களை, பயன்தரா களைகள் அழித்து விடாமல் பாதுகாப்பதுதானே, பயிர்ப் பாதுகாப்பு? அதுபோல, சமூகத்தின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் தடையாக இருக்கிற சமூகத் தீய சக்திகளை எதிர்க்க வேண்டும். களையெடுக்காமல் பயிர் வளர்க்க முடியாது. சமூகத்தின் தீய சக்திகளை வெற்றி கொள்ளாமல் நல்ல மனித சமூகத்தைக் காண முடியாது.
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதியும்கூட நமக்கும். நம்முடைய பாப்பாக்களுக்கும்,
“பாதகம் செய்பவரைக் கண்டர்ல் - நீ
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!”
என்று சொல்லிக் கொடுத்தது என்னவோ உண்மை! ஆயிரம் பாரதி வந்துதான் சொல்லட்டுமே! நமக்கு எங்கே அந்தத் துணிவு வரப்போகிறது? பாண்டவர்களுக்கே கண்ணன் வந்ததால்தானே துணிவு பிறந்தது! நமக்குக் கண்ணன் வருவானா? அந்த விஷயத்திலும் - கடவுள் விஷயத்திலும் நமக்குப் போதிய நம்பிக்கை யில்லையே! நடப்பது நடக்கட்டும்!
நமக்கு எவ்வளவு தயக்கம்? இன்று நாம் அஞ்ச வேண்டியவைகளுக்கா அஞ்சுகிறோம்! அஞ்ச வேண்டாத வைகளுக்கே அஞ்சுகின்றோம்! இன்று மீண்டும் துரியோதனாதியர்கள்! சூரபதுமன்கள்! எங்குப் பார்த்தாலும் அவர்களே வெற்றி உலாப் போகின்றனர்! இந்த அச்சம் நமக்கு என்று தொலையுமோ, அன்றுதான் நாட்டில் நல்லவர்கள் வாழ்வார்கள்! நல்லன நடக்கும்!
இதனை, புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் ஜைனேந்திரகுமார் எழுதிய ‘தியாக பாத்திரம்’ என்ற கம்பீரமான குறுநாவல் உணர்த்துகிறது. காந்திய தத்துவமாகிய சாத்வீக எதிர்ப்பை அவர் தத்துவார்த்த ரீதியுல் உருவாக்கியுள்ளார்.
தனி மனிதனை, சமூகம் வளர்க்க கடமைப்பட்டுள்ளது. தனிமனிதன் அறியாமல் அல்லற்படுவதற்குச் சமூகம் பொறுப்பேற்க வேண்டும் என்பது பாவேந்தனின் கருத்து.
“கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்
கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டு”
என்பன, பாவேந்தன் பாடல் வரிகள். அதுபோலவே, ஒரு தனிமனிதன் உணவில்லாமல் இறந்து படுவானா பின், அவன் வாழ்ந்த சமுதாயத்தை அழித்தொழிக்க வேண்டும் என்பது பாரதியின் சூளுரை!
“தனியொருவனுக்கு உணவில்லை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!”
என்பது பாரதியின் கவிதை. தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்கள்,
“அண்டையன் பசியில் வாட
அணங்கொடு மாடி வாழ்தல்
மண்டையின் குற்ற மன்று
மன்னிடும் ஆட்சிக் குற்றம்”
என்றார். இங்ஙணம் வழிவழியாக அவலங்களுக்கும் துன்பங்களுக்கும் காரணம். சமூகமும் ஆட்சியும்தான் என்று நூறாயிரம் தடவை சொல்லியும் என்ன நடந்திருக்கிறது? இன்று நமது நாட்டில் 77 விழுக்காட்டு மக்கள் எழுத்தறிவில்லாதவர்கள். 58.9 விழுக்காட்டு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். இந்த இழிநிலை என்று மாறும்? இந்நிலையை “கனவோ நனவோ” என்ற கதையில் சக்திப் பெருமாள் விவரிப்பதைக் கேளுங்கள்.
“வாய் திறக்க வழியின்றி அலுவலகத்தை நோக்கி நகர்ந்தேன், ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம்” என்று என்னையறியாமலேயே என் வாய் முணுமுணுத்தது. பாரதியின் உள்ளக் குமுறல் - குருதிக் கொதிப்பு இப்படி எத்தனை காட்சிகளைக் கண்டதோ? தனியொருவன்கூட உணவின்றி நலியாத சமுதாயம் என்றுதான் உருவாகுமோ? கனல் தெறிக்கப் பறந்த அவனது வார்த்தைகள் இவ்வுலகை புடமிட்டுப் பொன்னாக்காதோ? அவனது கனவு நனவாகும் நாள் எந்நாளோ? எழுந்த வினாக்கள் அலுவலகத்துக்குள் நுழைந்தவுடன் உள்ளத்தையே புதைத்து விட்டன.”
(வெள்ளையங்கி பக்.96)
என்கிறார் சக்திப் பெருமாள்.
இத்தனை பேர் எச்சரித்த பிறகு, ஏன் சமூகத்தில் இந்த அவலம் தொடர்கதையாக இருக்கிறது? சமூக நீதி ஏன் உருவாகவில்லை? ஆசைதான் காரணம். அப்பட்டமான - நிர்வாணத் தன்மையுடைய- தன்னலம் சார்ந்த ஆசை, நீதியை, சமூக நீதியை பலி கொடுத்து செல்வத்தைக் குவிக்கத் துணை செய்கிறது. இந்தக் கொள்ளைக்கு அதிகாரமும் துணையாக நிற்கிறது. இந்த இழிநிலையை பட்டுக்கோட்டையின் வார்த்தைகளிலேயே கேளுங்கள்.
“ஆசைக்கு நீதி இரையாகுதடா! அன்பை
அதிகார வெள்ளம் கொண்டு போகுதடா”
இன்றைய சமூகப் போக்கு நியாயங்களை எடுத்துச் சொல்லுவது மாதிரியும் இல்லை! இன்று எங்கு பார்த்தாலும் காசும் உழைப்பும், காசும் கண்ணியமும் என்று காசுடன் இணைத்துத்தான் எதுவும் மதிப்பிடப்படுகிறது! இது பெரும் பிழை!
மந்திரங்களைக்கூடி காசுக்கு ஏற்றவாறு குறைவாகக் கொடுத்தால் சுருக்கியும், நிறைய கொடுத்தால் நீட்டி முழக்கியும் சொல்லும் புரோகிதர்கள் இருக்கிறார்கள்! இது தவறு என்று விளக்க, சொல் விளங்கும் பெருமாள் “வெள்ளையங்கி”யில் முயற்சி செய்கிறார். .
‘பெரிய வாத்தியார்’ காசுக்கேற்றவாறு மந்திரத்தைக் கூட்டியும் குறைத்தும் சொல்ல இணங்கியதை இராமையர் நினைந்து சொல்லுவதாக, சொல்விளங்கும் பெருமாள் எழுதுகிறார்.
“நீங்கள் நியாயமாக நடங்கள் என்று சொன்னால், மற்றவர்கள் நியாயமாக நடக்கவில்லை என்று கூறுவது அதற்குப் பதிலாகிவிடாது” என்பது இராமையர் பெரிய வாத்தியாரைப் பற்றி நினைந்து சொல்வதாகும். இன்று நாம் நம்முடைய சமூகத்தில் அடிக்கடி கேட்பது இத்தகைய வாதத்தைதான்.
ஒருவர் செய்த தவறுகளை எடுத்துக்காட்டினால் “நீங்கள் செய்யவில்லையா?” என்று மிக்குயர்ந்த இடத்தில் இருப்பவர்கள்கூட கேட்டுவிடுகிறார்கள். இதனைத் திறமை என்று வேறு பலர் மதிக்கின்றனர். இது ஒன்றும் திறமை இல்லை. வீண் பகடித்தனம். எடுத்துக்கூறும் நியாயங்களை எடுத்துக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும். அன்றுதான் நியாயத்தை நோக்கி, சமுதாயம் நடைபோடும்.
விவாதத்திலும் ஒரு சரியான நடைமுறை கையாளப் பெறவேண்டும். கிளர்ச்சி நோக்கத்தோடு விவாதித்தல் கூடாது. விவாதம் செய்தவரை மடக்கி, மண்டையில் அடித்து உட்கார வைக்கும் இழி மனப்பான்மையுடனும் விவாதிக்கக் கூடாது. விவாதத்தில் ஈடுபடுவோரிடையே நம்பிக்கையும் நல்லெண்ணமும் நிலவ வேண்டும்.
விவாதத்தின் நடைமுறை விதிகளைப் பின்பற்ற வேண்டும்: ஒவ்வொரு மனிதனுக்கும் மூளை — சிந்தனைப் புலன்கள் இருக்கின்றன. இவை நிச்சயமாக எல்லாருக்கும் ஒன்றுபோல இல்லை. விவாதங்களில் கலந்து கொள்ளுபவர்கள் இயற்கையில் உள்ள இந்த வேற்றுமைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உடையவர்களாக இருக்க வேண்டும்.
எவனொருவன், தான் பேசுவதுதான் நியாயம் என்று வரையறுத்துக்கொண்டு, முரட்டுத்தனமாகப் பேசுகின்றானோ, அவன் நியாயத்தை மீறுகிறவன். அவன் நியாயத்தை மீறுகிறவன் மட்டுமல்ல; அவன் உலகத்தில் பல அநியாயங்களை அரசியலிலும் சில்லறை கிளர்ச்சிகளிலும் தோற்றுவிப்பான் என்று வங்கத்துக் கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் கூறுகின்றார். இதைத் தமது ‘நல்லவரன்’ என்னும் கதை வரிகளில் விளக்குவதைக் கேளுங்கள்.
“மனிதனுக்கு மனிதன் வேற்றுமை உண்டு. ஒருவன் யுக்தி மற்றவனுக்குச் சரிப்படாது. ஒருவன் தான் பேசுவதுதான் நியாயம் என்றால், அவன் நியாயத்தை மீறினவனாகிறான். இதனால் அநியாயங்கள் உலகத்தில் தலைவிரித்தாடும். அரசியல் அல்லது சில்லறைக் கிளர்ச்சியில் பற்றுடையவர்கள் இதைக் கவனித்தல் நலம்”. (நல்லவரன் — தாகூர் பக். 81)
அடுத்து, மனித உலகத்தை அலைக்கழிக்கும் மிகப்பெரிய சிக்கல் வெற்றி - தோல்வி என்பவைகளாகும். நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. வெற்றி - தொடர் வெற்றிகளாக ஒருபோதும் இருப்பதில்லை. தோல்விகளும் அவ்வாறே.
ஆதலால், வெற்றி — தோல்விகளைப் பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் எது நடக்க வேண்டுமோ அது நடக்கத் தக்க வகையில் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அந்த இனிய நல்ல முயற்சி தோல்வியடிையு. மென்று அச்சப்பட்டுக் காரியத்தை விட்டுவிடக் கூடாது.
தோல்விகளும்கூடி எதிர்பார்த்து நிகழ்ந்தால் வெற்றிகளைப் போல கருதிக் கொள்ள முடியும். “தோல்விகள் வெற்றிகளின் படிகள்” என்ற பழமொழியை எண்ணிக் கொள்ள வேண்டும். இந்தக் கருத்தினை ஜெயகாந்தன் தமது ‘யுகசந்தி’யில் விளக்குகிறார்.
“வெற்றி என்ற வார்த்தைக்குப் பொருளில்லை. நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம். தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால், அந்தத் தோல்வியே வெற்றிதான்”.
(யுகசந்தி — ‘தர்க்கத்திற்கு அப்பால்’
ஜெயகாந்தன் பக், 99)
ஆனாலும் ஒருசிலர் வெற்றிபெற்ற சூழ்நிலையில், போதைக்கும், மமதைக்கும் ஆளாகிவிடாமல், பெற்ற முயற்சிப்பர்; துணிந்து புதிய முயற்சிகளில் அடி எடுத்து வைப்பர். இவர்கள் வெற்றி மேல் வெற்றியும் பெறுவர். இக்கருத்தை வல்லிக்கண்ணன் தமது கதை மூலம் கூறுவதைக் கேளுங்கள்.
“வாழ்க்கைப் பாதையில் துணிந்து அடி எடுத்து வைத்து வெற்றி கண்டவனே அடுத்து அடுத்து வெற்றிகளைச் சந்திக்க முடிகிறது. முதல் வெற்றி மேலும் பல வெற்றிகளைக் கொண்டு சேர்க்கிறது. அதனாலேயே “வெற்றிபோல் எதுவும் வெற்றி பெறுவதில்லை” என்ற ஆங்கில வசனம் ஏற்பட்டுள்ளது.”
— (வாழ விரும்பியவன் — வல்லிக்கண்ணன் பக் 38)
மனித சமூகத்தில், புராணங்களில், இதிகாசங்களில் மகளிர்க்குத் தனி இடம் — உயர்ந்த இடம் உண்டு. மதங்களிலும் அப்படித்தான். ஆனால் நடைமுறையில் நாம் நம்முடைய சமூகத்தில் பெண்களை நடத்தும் முறை வெட்கித் தலைகுனிய வேண்டிய அளவிற்குள்ளது. நமது சமூகத்தில், மகளிர் விடுதலைக்கென்று முதற்குரல் கொடுத்தவன் பாரதி, அவனைத் தொடர்ந்து பாவேந்தனும் மகளிர் விடுதலைக்காகப் பாடுகிறான். நமது சமூகத்தில் மகளிர் நிலை, நேற்றைக்கு இன்று பரவாயில்லை. சற்றே மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், மகளிர்க்கு இழைக்கும் கொடுமைகள் ஓய்ந்து விட்டன என்று சொல்ல முடியாது. மகளிர் விடுதலை குறித்துப் புதுமைப்பித்தன் ஆழமாகச் சிந்தித்தார்; மகளிர் நலத்திற்கென எழுதினார்.
புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ என்ற, படைப்பில் வைரவன் பிள்ளை வருகிறார். அவருடைய மனைவி வள்ளியம்மை ஆச்சி, 50 ஆண்டுக் காலம் இல்லறத்தில் வாழ்ந்திருக்கின்றார். ஆயினும் வைரவன் பிள்ளை, வள்ளியம்மை ஆச்சியைப் பற்றிப் பிரமாதமாக நினைத்தது கிடைத்தது. இதனைப் புதுமைப்பித்தன் கேலி செய்வதைக் கேளுங்கள்!
“மனைவி என்பது நூதன வஸ்துவாக இருந்து, பழகிய பொருளாகி, உடலோடு ஒட்டின உறுப்பாகிவிட்டது. ஒவ்வொருவரும் தமக்கு ஐந்துவிரல் இருப்பதை ஒவ்வொரு நிமிஷமும் நினைத்துக் கொண்டா இருக்கிறார்கள்?”
—(புதுமைப்பித்தன் சிறுகதைகள் பக். 408)
பகை என்பது ஒருவர் பிறிதொருவரிடத்தில் மனம் மாறாத நிலையில் காட்டுகின்ற வெறுப்புணர்ச்சியைக் குறிப்பது. இந்தப் பகையுணர்ச்சி ஒரு பொழுதும் தனி மனிதனுக்கும் நன்மை செய்யாது; சமூகத்திற்கும் நன்மை செய்யாது.
அதனாலேயே வள்ளுவம், ‘பாழ் செய்யும் உட்பகை’ என்கிறது. கம்பன் ‘யாரோடும் பகை கொள்ளலன்’ என்றான். ஆம்! நம்முடைய பகைவன், நம்மாட்டுப் பகை கொண்டிருக்கலாம். ஆனால், நாம் அப் பகைவன் மீது பகை கொள்ளக்கூடாது. இது வாழ்க்கை நியதி.
இந்தப் பொல்லாத பகை இன்று வீட்டிலும் புகுந்து விளையாடுகிறது; நட்புக் களங்களிலும் புகுந்து விளையாடுகிறது. அரசியலிலோ சொல்ல வேண்டாம். எழுத்தாளர் அய்க்கண் தமது ‘வேர்’ என்ற கதையில், கணவன் - மனைவி தகராறைத் தீர்த்து வைத்த கருப்பையா அம்பலகாரர், ‘தாம் தகராறைத்தான் தீர்க்க முடிந்தது; பகைமையைத் தீர்க்க முடியவில்லை’ என்று கூறுவது சிந்திக்க வேண்டியது.
“அந்தத் தகராறைத்தான் என்னாலே தீர்க்க முடிஞ்சுது. அவங்க பகைமையைத் தீர்க்க முடியலே!”
(வேர் — அய்க்கன் — பக். 18)
பகைமையை மாற்றிக் கொள்ளாதவர்களுக்குக் கணவன், மனைவி என்ற உறவு என்ன வேண்டியிருக்கிறது?
ஒரு சமுதாயம் சிறப்புற இயங்க, பொதுப்பணிகள் நடைபெறவேண்டும். பாரதிதாசன், ‘பொது நாட்டம் உடையார் வேண்டும்’ என்றான். இன்று, பொது நாட்டம் உடையார் நம்மிடையில் உளரோ? பொதுப்பணியில் நினைவுமிருக்கிறதோ? பொருளும் புகழும் சேர்ப்பதைப் பற்றியே கவலை.
யாராவது ஒருவருக்குப் பொதுப் பணியில் நாட்டமிருந்து திட்டம் தீட்டினால் அதை நிறைவேற்ற முடியாத நிலை! ஏன்? கூட்டாளிகள் சரியில்லை.
ஆம். பல நூறாண்டுகளாகவே தீண்டாமையை ஒழிக்கத் திட்டம்; நடந்ததா? ஏழ்மையை ஒழிக்க ஐந்தாண்டுத் திட்டங்கள் ஒன்றா, இரண்டா? ஏழு ஐந்தாண்டுத் திட்டங்கள் ஏழ்மை அகன்றதா? ஏன்? கூட்டாளிகள் சரியில்லை! நாம் கூறவில்லை. மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை பாடுகிறான்.
“போதுமான பொருளும், வந்து
பொதுப் பணியில் நினைவு வந்தால்
போட்ட திட்டம் நிறைவேறக்
கூட்டாளிகள் சரியில்லை”.
(—பட்டுக்கோட்டை பாடல்கள் பக். 24)
ச—3
இன்று இந்திய சமூகம், மக்களாட்சி முறையை ஏற்றுக் கொண்டிருக்கிறது. மக்களாட்சி என்றால் என்ன? மக்களின் அதிகாரம்; மக்களுக்கு நன்மை செய்வதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் அதிகாரம் - ஆட்சி ஒப்படைக்கப்படுகிறது. பிரதிநிதிகளிடமும் அமைச்சர்களிடமும் உள்ள அதிகாரம் அவர்களுக்கு உரிமை உடையதல்ல; பொது மக்களுடையது.
மக்கள் தங்களுடைய செல்வத்தை — நிதியை — தங்களுக்கு நன்மை செய்து கொள்வதற்காக, தங்களால் தனித்தனியே நன்மை செய்து கொள்ள இயலாமையால் மக்கள், பொது நன்மையைச் செய்வதற்காக நிதியை அரசிடம் குவிக்கிறார்கள். அது மக்களுடைய நிதி. மக்கள் நலனுக்கு மட்டுமே செலவழிக்க வேண்டிய நிதி. இதுதான் மக்களாட்சி.
இந்த மக்களாட்சியில் மனித நேயம் இருக்க வேண்டும்; மக்களை மதிக்க வேண்டும்; மக்களின் உரிமையை மதிக்கவேண்டும்.
மக்களை மூடர்களாக — குடிகாரர்களாக — கெட்டவர்களாக ஆக்கும் வழியில் அரசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒருபொழுதும் துணை போகக் கூடாது. மக்களாட்சிக்கு சாமர்த்தியம் தேவைதான். ஆனால், சாமர்த்தியத்தைக் காட்டிலும் விவேகம் தேவை.
நெடிய பார்வையில் நெடிய நோக்கத்தோடு தமது மக்களுக்கு ஆக்கப் பணிகளைச் செய்யும் விவேகம் வேண்டும். கன்னட எழுத்தாளர் பேந்தரே விவேக மில்லாத மக்களாட்சி பயனற்றது என்று கூறுகிறார்.
வரி கொடுப்போரது வளர்ச்சிக்கும் நலனுக்கும் உத்தரவாதம் தராது, அவர்களை நெறியல்லா நெறிகளில் திருப்திப்படுத்துவதும் தாஜா செய்வதும் மக்களாட்சியன்று, என்றும் பேந்தரே கூறுகிறார், கேளுங்கள்!
விவேகம் இல்லாத ஜனநாயகத்தைச் சாடுகிறார். முனிசிபல் கவுன்சிலர்களுக்காக அவர் தயாரித்துள்ள விதிகள் வருமாறு:
“தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இரண்டு கவுன்சிலர்கள் ஒரே பேட்டையில் ஒரே தெருவில் இருக்கக் கூடாது. அப்போதுதான் எத்தனை கவுன்சிலர்கள் இருக்கிறார்களோ அத்தனை தெருக்களாவது நமது நகரில் சுத்தமாக இருக்கும் என்ற உத்தரவாதமாவது, வரி கொடுப்போருக்கு இருக்கும்.”
(—இன்றைய இந்திய இலக்கியம் பக். 125)
நம்முடைய நாட்டு மக்களுக்கு வறுமையும் ஏழ்மையும், இழிவும் அவமானமும் இயல்பாகப் போய்விட்டன. அவர்கள் இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை. உண்மையாகச் சொன்னால் இப்போது நம்மிலே பலருக்குச் சூடும் இல்லை; சுரனையும் இல்லை,
நம்முடைய அவமானங்களையும் இழிவுகளையும் தாங்கியே ஆகவேண்டும் என்று மருட்டுகின்ற மதத் தலைவர் விதித்த தலைவிதித் தத்துவத்தினின்றும் இன்னும் நாம் விடுதலை பெற்ற பாடில்லை. இன்னமும் நம்முடைய மூளைபை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது பழைய பஞ்சாங்கம்தான்.
கொடுமைகளை எதிர்க்கும் துணிவு நமக்கு என்று வரும்? நாம் இந்தத் தலைமுறையில் புரட்சியாளர்களாக ஆகமுடியுமா? ஒருநாலும் முடியாது. ஏனென்றால் நாம் புரட்சி என்ற சொல்லையே பொருள் புரியாமல் கொச்சைப்படுத்தி விட்டோம். “கொடுமையை எதிர்த்துப் போராடு” என்று மக்களுக்குப் பாடம் புகட்டி, இதனை உணர்த்த நாம் வணங்கும் தெய்வங்களின் கைகளில் கருவிகளைத் தந்தனர்.
ஆனால், இன்று நாம் செய்வதென்ன? அத்தெய்வங்களின் கைகளில் இருக்கும் கருவிகளிலும்கூட எலுமிச்சம் பழத்தைச் செருகி, முனையை மழுங்கச் செய்து கொண்டிருக்கிறோம். பாரதி நமது மூடத் தனத்தைப் பார்த்தான். ருஷ்ய நாட்டுப் புரட்சியை நமது கவனத்திற்குக் கொண்டு வருகிறான்.
சோவியத் ரஷ்யாவில் புரட்சி செய்து வெற்றி கண்டது போல்ஷ்விக் படைதான். ஆனாலும் பாரதி, “மகாகாளி பராசக்தி கடைக்கண் வைத்த”தால் நிகழ்ந்தது புரட்சி என்று பாடுகிறான். ஏன் இங்ஙனம் பாடுகிறான்? மாகாளியே புரட்சி செய்தாள் என்றால், இந்தியரும் எழுந்து நின்று புரட்சி செய்வார்கள் என்று நம்பினான்.
ஆனால் நம்நாட்டு மக்களோ மிகவும் கெட்டிக் காரர்கள்! கடவுளைக் கும்பிடுவார்கள்; காணிக்கை செலுத்துவார்கள்; அப்பமும் அவல் பொரியும் படைப் பார்கள். ஆனால், கடவுள் சொன்னதை சத்தியமாகச் செய்வதில்லை என்று விரதம் பூண்டிருக்கிறார்கள். பாரதி,
“மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தாள், அங்கே
ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி”
(பாரதியார் கவிதைகள் பக். 90)
என்று பாடுகிறான்.
நம்முடைய நாட்டில், கலியுகம் எப்போது போகும்: கிருதயுகம் எப்போது வரும்? இனிய அன்புடையீர்! எதுவும் தானாக நடக்காது. கலியுகத்தைக் கொன்று கிருதயுகத்தைக் காண எழுமின்! எழுமின்!
சமுதாய வாழ்க்கையில் வளர்ச்சி இருக்கவேண்டும். வளர்ச்சிக்கு வாயில் மாற்றங்கள். எங்கு மாற்றமில்லையோ அங்கு வளர்ச்சியில்லை. அதுபோலவே எங்கு வளர்ச்சியில்லையோ அங்கு மாற்றமில்லை.
நம்முடைய சமுதாயம் நீண்ட நெடு நாட்களாகவே மூடத்தனத்தில் முடங்கிக் கிடக்கிறது. எந்தவொரு மூடத்தனத்தினின்றும் நாம் விடுதலை பெற்றோமில்லை. விடுதலை பெற முடியாத நிலையில் பொய்மைச் சாத்திரங்களும் மதங்களும் தடை செய்கின்றன. காதலிருந்து கடவுள் சந்நிதி வரை சாதிகள் ஆட்சி செய்கின்றன. நாளும் தன்னம்பிக்கையைக் கொல்லும் மூட நம்பிக்கைகள் ஏராளம்! ஏராளம்! எனவேதான் பாவேந்தன் பாரதிதாசன்,
“மூடத்தனத்தை முடுக்கும் மதத்தை நிர்
மூலப்படுத்தக் கை ஓங்குவீர்!”
(பாரதிதாசன் பா. 50 பக். 160.)
என்று முழங்குகிறான்.
இன்று கோயில்களில் கூடி காசுகளின் ஆதிக்கம்: மேலும் களவு நடைபெறும் இடங்களாகவும் கோயில்கள் ஆகிவிட்டன. அன்னை பராசக்தி, அருள்புரிய எழுந் தருளியுள்ளாள். ஏழை எளியவர்கள் படும் பாட்டைக் காண முடியாமல் அவளுக்குச் சாத்தும் வெள்ளிக் கண் மலர்கள் அவள் கண்களை மறைக்கின்றன.
மக்கள் அழுது அரற்றும் மொழியை அவள் கேட்க முடியாமல் மணியோசை ஒலித்துத் தடுக்கிறது. இல்லங்கள் தோறும் அவள் எழுந்தருளி, தம்மைத் தொழும் மக்களுக்கு இன்ப நலம் வழங்கலாம் என்று எண்ணினால், அதுவும் இயலாத நிலையில் பூசாரி பூட்டைப் போட்டு பூட்டி விடுகிறான்.
மானுடத்தை வாழ்விக்கும் மிக உயர்ந்த கடவும் கொள்கை தகாதார் வயப்பட்டுக் கெட்ட கேட்டினைப் பாருங்கள்! இதனைப் பட்டுக்கோட்டை,
“காசு தந்தால்தான் உன்னைக்
காணும் வழி காட்டுவதாய்
கதவு போட்டு பூட்டு வைத்துக்
கட்டாயம் பண்ணுவதைப் பார்த்தாயா?”
(பட்டுக்கோட்டை பாடல்கள் பக். 23.)
என்று சாடுவதை எண்ணுங்கள்.
நமது சமுதாயத்தில் ஒரு காலத்தில் கடவுளும் கடவுளின் திருக்கோயில்களும் அதாவது, ஆலயங்களும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தன. சமுதாயத் தின் மையமாகவே ஆலயங்கள் விளங்கின. குடிகளுக்கு நலம் செய்யும் மையங்களாக ஆலயங்கள் விளங்கின. ஆலயங்களைத் தழுவி மக்கள் வாழ்ந்தனர். இது நமது பழைய வரலாறு; பழைய நாகரிகம். கறையான் புற்றில் கருநாகம் புகுந்ததுபோல நமது திருக்கோயில்களில் — நாமெடுத்த திருக்கோயில்களில், இடைக் காலத்தில் சாதி ஆதிக்கம் புகுந்தது; சன்மார்க்கம் வெளியேற்றப்பட்டது. உயர்சாதி மனப்பான்மை உடையோர் உள்ளே புகுந்தனர். சாமானியர்கள் வெளியே தள்ளப்பட்டனர்.
ஆலயங்களின் அகன்ற மண்டபங்களில் நடந்த பள்ளிகள், மருத்துவமனைகள் அகற்றப்பட்டன. அந்த மண்டபங்கள் தூங்குமூஞ்சிகளின் மண்டபங்களாக - வெளவால்களின் மாளிகைகளாக மாறின.
ஒரு சிறந்த பழந்தமிழ் நாகரிகத்தின் வீழ்ச்சியை எண்ணுங்கள் இந்தச் சிந்தனையை அறிஞர் அண்ணா நம்மிடத்தில் தோற்றுவிக்கிறார். ஆலயங்களைப் பற்றிப் பேரறிஞர் அண்ணா சொன்னதைக் கேளுங்கள்.
“ஆலயங்கள் கட்ட வேண்டியதுதான் அப்பா! ஆனால், அதன் அமைப்பிலே சில மாறுதல்கள் செய்துவிடவேண்டும். ஆயிரம்கால் மண்டபத்துக்கு ஆரம்ப ஏற்பாடாகிவிட்டது. அது கட்டி முடிக்க இன்னும் கொஞ்சம் வேலைதான் பாக்கி. முடிந்த பிறகு, அதனை வெளவால்கள் வாழுமிடமாக்கி விடாமல், சிறுவர்களுக்கு அதனைப் பள்ளிக் கூடமாக்கி விடலாம். .................. குளம் இங்கே வாழும் மக்கள் குளிக்குமிடமாகும்.” (அண்ணாவின் சிறுகதைகள் பக். 94)
மீண்டும் நமது ஆலயங்கள் இழந்த பழம் பெருமையை அடைவது எந்நாளோ?
இனிய அன்புடையீர், சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் சிலவற்றைப்பற்றிச் சிந்தித்தோம். இந்த இலக்கியங்கள் ஆற்றல் வாய்ந்தன. சமுதாயத்தை உந்தி, முன்னோக்கிச் செலுத்தும் தன்மையுடையன.
ஆயினும் நம்மிடத்தில் இந்தச் சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் உருவாக்கும் கிளர்ச்சியை நடைமுறைப்படுத்தும் வாழ்வு அமையாமல் போனால் எங்ஙனம் மறுமலர்ச்சி தோன்றும்?
அன்புகூர்ந்து வளைந்து வளைந்து வராதீர்கள்! நேரிய நெடிய பார்வையொடு பயணத்தைத் தொடர்க! துணிந்து தெகடர்க! எல்லாரும் கல்வி கற்றவர்களாக - எல்லாரும் எல்லாமும் உடையவர்களாக ஆகவேண்டும்.
இத்தகைய சிறந்ததொரு சமுதாயத்தை அமைக்க, கவிஞர் குலோத்துங்கன் சூளுரைத்து முன் செல்கின்றார். நாம் மட்டும் ஏன் தயங்கி நிற்கவேண்டும்? இளைஞர்களே, ஏன் தயக்கம்? எழுமின் குலோத்துங்கனின் சூளுரையைக் கேண்மின்!
“மாணச் சிறந்ததொரு வாழ்க்கைச் சமுதாயம்
படைக்கத் துணிந்தேன் நான் பாதையிலே காணும்
தடைக்கற்கள் யாவும் தகர்க்கும் வலியுடையேன்.”
(குலோத்துங்கன் கவிதைகள் பக். 11)
என்று புதிய சமுதாயம் படைப்போம்?
口口口
* * *
口 சென்னை வானொலி இலக்கியப் பேருரை
2. பாரதி தடத்தில் பாரதம்!★
* * *
தமிழ் மொழி காலந்தொறும் வளர்ந்து வந்திருக்கிறது. நாம் குறிப்பிடுவது மொழியின் வளர்ச்சியை மட்டுமல்ல; கருத்து வளர்ச்சியையும் கூட. தமிழிலக்கியங்கள் தோன்றி வளர்ந்த வரலாற்றை நோக்கின் இந்த உண்மை புலனாகும்.
தமிழ், இலக்கிய வளம் நிறைந்த மொழி; அற நூல்களும் நீதி நூல்களும் நிறைந்த மொழி; தத்துவ ஞான நூல்களும் தமிழில் நிறைய உண்டு. ஆதலால், தமிழர்கள் வளர்ந்து வந்துள்ளனர். தமிழ் மொழியும் வளர்ந்து வந்துள்ளது.
ஆயினும் இடைக்காலத்தில் ஒரு தேக்கம்! தமிழர்கள் பீடு இழந்தனர்; அரசுகளை இழந்தனர்; அடிமை களாயினர்.
இருள் நிறைந்த நிலையில் ஓர் எழுஞாயிறு தோன்றுகிறது; பலர் புகழ் ஞாயிறு தோன்றுகின்றது. அதுதான் பாரதி பாரதி, வரலாற்றில் இடம்பெற்ற கவிஞன் அல்ல - வரலாற்றை எழுதிய கவிஞன்!
பாரதி, உப்புக்கும் கூழுக்கும் பாடியவன் அல்ல! செத்த பிறகு கிடைக்கும் சொர்க்கத்துக்கும் பாடியவன் அல்ல. பாரதி, வாழும் மாந்தருக்குப் பாடினான். பாரதியின் பேச்சும் மூச்சும் பரத நாடு, பாரத நாட்டின் சுதந்திரம், பாரத சமுதாயத்தின் வாழ்க்கை
பாரதி பேசினான்; எழுதினான்; கவிதைகள் இயற்றினான்; சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பங்குபெற்றான். பாரதி, வாழ்வாங்கு வாழ்ந்த மனிதன்! இந்த மண்ணை, விண்ணகமாக்க வந்த கவிஞன்!
பாரதி, காலம் தந்த கவிஞன். இல்லை, இல்லை! காலத்தை உருவாக்கிய கவிஞன்! ஆம்! பாரதி, அடிமையாகவே பிறந்தான்; அடிமையாவே செத்தான்! அவன் சடலத்தின்மீது பாரதத் தாயின் மணிக்கொடியை போர்த்த முடியாமலே செத்துப் போனான்.
ஆயினும் பாரதி. நாடு சுதந்திரம் பெறும் என்று நம்பினான்! சுதந்திரப் பள்ளு பாடினான்! பாரதி, சுதந்திரக் காற்றைச் சுவாசித்தான்! பாரதியின் ஆன்மா விடுதலை பெற்றுவிட்டது! பாரதியின் கவிதைகளில் எழுச்சி இருக்கும்; ஏற்றம் பிறக்கும்! பாரதியின் கவிதை பற்றி கவிமணி,
“சொல்லுக்குச் சொல்லழகு ஏறுமே அடா - கவி
துள்ளும் மறிவைப் போலே துள்ளுமே, அடா!
கல்லும் கனிந்துகனி யாகுமே, அடாl - பசுங்
கன்றும்பால் உண்டிடாது கேட்குமே, அடா!”
என்று பாடினார்! பாரதியின் கவிதைகளில் சொல்புதிது! பொருள் புதிது!
“தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்”
என்று பாரதியால் தமிழ் ஏற்றம் பெற்றது என்று பாரதிதாசன் பாராட்டினான்! பாரதியின் கவிதைகளில் கவித்துவம் உண்டு: உணர்ச்சி உண்டு. பாரதி, உரைநடையில் கதைகள், கட்டுரைகள் நிறைய எழுதியுள்ளான்.
பாரதியின் உரைநடை இலக்கியங்களில் தெளிவான சிந்தனை, கொள்கை, கோட்பாடுகள் இடம்பெற்றுள்ளன. பாரதியின் நெடிய கதைகள் சுவைத்துப் படிக்கத்தக்கன. அவற்றுள் சில பகுதிகள் கிடைக்காதது ஒரு பெரிய குறை!
பாரதியின் கவிதைகளிலும் சரி, உரைநடைகளிலும் சரி ஷெல்லி, விவேகானந்தர், தாயுமானார் போன்றவர்களின் தாக்கங்கள் நிறைய உள்ளன. அவர்களை ஆதரித்தும் எதிர்த்தும் பாரதி எழுதுகிறான்.
ஆனாலும் பாரதிக்கு அவர்கள்பால் உள்ள ஈடுபாடு மிகுதி. அளப்பரிய மதிப்புணர்வும் உடையவனாகவே வளர்ந்திருக்கிறான். தாயுமானார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்துகிறான்.
பாரதி, இந்தியா, பாரததேசம் என்றெல்லாம் கூறி மகிழ்கிறான். ‘இந்தியா’ - என்றே ஒரு பத்திரிகையும் நடத்தினான். பாரதி நடத்திய பத்திரிகைகள் பல. ஆனால், போதிய அதரவு இல்லாமல் அல்லற்பட்டான்!
ஆயினும் கடைசி வரையில் ஊனில் உயிரும், உயிரில் உணர்வும் சுதந்திர வேட்கையுடையவனாகவே இருந்தான்! “எல்லோரும் இந்தியா” என்று பெருமை யோடு எண்ணுவதில், எழுதுவதில் பாரதி அனுபவித்த இன்பம் சொல்லிக்காட்டி ஒண்ணாதது.
இந்தியா, இந்தியர் - என்ற உணர்வுகளினூடே பாரதிக்கு, “பாரத ஜாதி”யை உருவாக்குவதில் இருந்த ஆர்வம் போற்றத்தக்கது. ஆம்! பாரத நாட்டில் வாழ்வோர் பாரத ஜாதி!
பாரதி காலத்தில் இந்தியா ஒரு பெரிய நாடு! பிரிவினைக்கு ஆளாகாத அகண்ட பாரதம் இருந்தது! பாரதத்தில் இந்துக்கள் வாழ்ந்தனர். பாரத ஜாதி, ஒரு மொழிக்கும் ஒரு மதத்திற்கும் உரியதல்ல! இது கலப்பு ஜாதி! குருநானக் இந்து - இஸ்லாமிய இணைப்பில் ஒரு புதிய மதமே உருவாக்கினார். அதுதான் சீக்கிய மதம்!
இந்தக்கள், முகம்மதியர்கள் ஜாதியில் நம்மவர்களே என்பது பாரதியின் கருத்து. அதுமட்டுமல்ல, இந்துக்களுக்கும் முகம்மதியர்களுக்கும் குருதிக் கலப்பு உண்டு என்றும் எழுதுகிறான்.
“பாரத ஜாதி ஒன்று” - என்ற கொள்கை பாரதியின் கொள்கை; உறுதியான நம்பிக்கை. பாரத ஜாதி ஒன்றுபட்டு நிற்கவேண்டும், பாரத ஜாதியினர் தமக்குள் இருக்கும் வேற்றுமைகளை முரசுபோல் பிரசங்கம் செய்து கொண்டிருக்கக் கூடாது என்று. பாரதி அறிவுறுத்துகிறான்.
பாரத தேசத்தில் விடுதலை உணர்ச்சி வளர்ந்து வருவதை, பாரதி விளக்கி, “பாரத நாட்டின் நவீன உணர்ச்சி” என்ற கட்டுரையில் எழுதுகிறான். இந்தக் கட்டுரை “இந்தியா” இதழில் வெளியான உப தலையங்கம். பாரதத்தில் ஒரு நவசக்தி தோன்றியிருக்கிறது என்பது பாரதியின் கருத்து. அந்நிய ஆட்சியை, கொடுங்கோலர்களை எதிர்த்துப் போராடும் போராட்டத்தை கம்சன், காளிங்கன் ஆகியோருடன் கண்ணன் நடத்திய போராட்டத்துடன் ஒப்புமைப் படுத்துகிறான்.
“கண்ணன் சுயநலம் கருதி ஒரு காரியமும் செய்யவில்லை. கொடுங்கோலர்களுடைய கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதே குறிக்கோள்! அதுவும் கம்சன், காளிங்கன் திருந்துவதற்குப் போதிய காலம் கொடுத்தும் திருந்தாத நிலையிலேயே கொடுங்கோலர் களை அழிக்க வேண்டியதாயிற்று” என்று பாரதி விளக்கி எழுதுவது அறிவறிந்த விவாதம்!
இந்தியாவில் மக்களாட்சி வேண்டும். இது பாரதியின் குறிக்கோள்! ஆனால், ஆதிக்க அரசோ, மக்களின் விருப்பார்வங்களைப் புரிந்து கொண்டு ஆட்சியை ஒப்படைப்பதற்குப் பதில் பல துன்பங்களையே செய்து வருகிறது என்று பாரதி வருந்துகிறான்.
பல புதிய அவசரச் சட்டங்களைப் பிறப்பித்து, பாரத சுதந்திரப் போர் வீரர்களைச் சிறையில் பிடித்து வைக்கின்றனர். ஆயினும், பாரதப் புதல்வர்கள் பயப்படாமல் தைரியமாகத் துன்பத்தை ஏற்று அனுபவித்து வருகிறார்கள்.
சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளைத் துன்புறுத்துவதும் காலப் போக்கில் கதிரவனை நோக்கி வீசிய கல், வீசியவர் தலையில் வீழ்வது போல் ஆள்வோருக்கே துன்பமாக முடியும் என்று பாரதி எச்சரிக்கை செய்கிறான். பாரத நாட்டின் சுதந்திர மீட்சி பாரத நாட்டின் சராசரி மனிதக் கூட்டத்தினாலேயே நடைபெறும் என்பதும் பாரதியின் கருத்து; நம்பிக்கை பாரத நாட்டின் விடுதலைப் போருக்கு, பரம்பொருளின் ஆதரவுண்டு என்றும் நம்பிக்கை ஊட்டுகிறான் பாரதி!
ஆனால், பரம்பொருளின் ஆதரவு பெற ஒரு நிபந்தனையையும் பாரதி விதிக்கத் தவறவில்லை. அது என்ன நிபந்தனை? “பாரத புத்திரர்கள் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் வித்தியாசங்களைக் கட்டிச் சுருட்டி வீட்டிற்குள் வைத்துவிட்டு, தேச மாதாவின் சேவையில் தொண்டு பூண்டு வந்தால் கட்டாயமாக பகவான் அருள் தருவான்” என்பதே அந்த நிபந்தனை: நம்பிக்கை!
பாரத நாட்டு மக்களிடம் வேற்றுமைகள் பெருகி வளர்ந்தமையை, திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டுவதை நமது நாட்டு மக்கள் சென்ற காலத்தில் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏன்? இன்று வரையிலும் உணர்ந்து ஒழுக முன்வரவில்லை என்பது உண்மை.
ஆயினும் வேற்றுமைகள் மறக்கப்படுதல் வேண்டும்; ஒன்றுபடுதல் வேண்டும், அனைவரும் நாட்டுக்கு உழைக்க வேண்டும் என்று வளர்ந்து வந்த உணர்வை “நவீன உணர்ச்சி” என்று வியந்து பாராட்டி வரவேற்கிறான் பாரதி!
பாரதி வாழ்ந்த காலத்தில் - சுதந்திரப் போராட்டிக் காலத்தில் தேசபக்தி வளர்ந்து வந்தது! பாரதி, கடவுள் பக்தியையே மடைமாற்றி, தேச பக்தியாக்க விரும்பினான்.
பிரகலாதன், துருவன் ஆகியோர் விஷ்ணுவினிடத்தில் காட்டிய பக்தியைப் போல் நாம் நமது தேசத்தினிடத்தில் பக்தியைக் காட்டவேண்டும் என்று பாரதி. அறிவுரை கூறுகிறான்.
தேச பத்தி வளர “சுதேசியம்” என்ற தர்மத்தை அனுசரிக்க வேண்டும் என்றும் பாரதி வலியுறுத்துகிறான்.பாரதி தனது அறிவுரைக்கு அரணாக விவேகானந்தரின் உபதேசத்தைக் காட்டுகிறான்!
“எனது பாரத புத்திரர்களே! இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு நீங்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் யாதெனில், பாரத தேசத்தின் முப்பது கோடி ஜனங்களே!
மக்கள் எல்லாம் மகாசக்தியின் ஆவிர்ப் பாவங்கள்! இவர்களை நீங்கள் ஆராதனை செய்ய வேண்டும்! இவர்களுக்கே தொண்டு செய்ய வேண்டும்! இதைக் காட்டிலும் சிறந்த மதம் வேறு கிடையாது” என்பது விவேகானந்தரின் அருள்வாக்கு!
பாரதி, தேச பக்தர்களைத் தேவர்கள் என்றும், தேச பக்தியில்லாத தேசத் துரோகிகளை அசுரர்கள் என்றும் கூறுகிறான்.
தாய் நாட்டின் நன்மைக்காக அறவழியில் அமைதியாக நாடெங்கும் நல்வழிகளைக் கண்டு அமைத்தும் தொண்டு செய்வதைத் தேசத் துரோகிகள் - அசுரர்கள் தடுக்க முயல்கிறார்கள்.
தேச பக்தர்கள் தக்க தலைமையின் கீழ்க் கட்டுப்பட்டு நாட்டுக்கு உழைத்தலையே தவமெனக் கொண்டு பணி செய்து வருகின்றனர். சில சமயங்களில் அசுரர்கள் - தேச பக்தர்களாக நடிக்கலாம். ஆனால், நீண்ட காலத்திற்கு நடவாது.
அசுரர்களைப் பற்றி, கவலைப்படாமல் - சிந்திக்காமல் தேச பக்தர்களின் தொண்டு நடைபெற வேண்டும். தேச பக்தர்கள் இடர்களையும் துன்பங்களையும் கடந்து தேச பக்தியில் நிலைப்பட்டு நிற்கிறார்கள். தேச பக்தர்களுக்கு வெற்றி உறுதி. இது பாரதியின் முடிபு.
நாம் சுதந்திரம் கேட்பது எந்தச் சாதியினருக்கும் மதத்தினருக்கும் அல்ல! பாரத தேவிக்காகவே சுதந்திரம் கேட்கப்படுகிறது.
பாரத தேவியின் பாரதம் பிரிவினைப்படாத பாரதம்! அகண்ட பாரதம் நாட்டு மக்களின் எதிர்கால மகத்தான இலட்சியம். பாரத நாட்டை மக்கள்தான் ஆள வேண்டும். இதுவே, பாரதியின் சிந்தனை; செயல்!
பாரதி, பழைமையில் காலூன்றி நின்றவன். அதே போழ்து, பின்னே வரும் புதுமையை வரவேற்றவன். பழைய மரத்தில்தானே புதிய புதிய தளிர்கள் துளிர்க்க வேண்டும்!
மரத்தில் துளிர்க்கும் ஒவ்வொரு துளிருக்கும் ஒரு மரம் இயல்பா? அல்லது சாத்தியமா? இல்லை, இல்லை! அதுபோலப் பழைமை வாய்ந்த புகழ்மிக்க இந்து சம்பிரதாயத்தை பாரதி நம்புகிறான். அதே போழ்து பின்னைப் புதுமைகளையும் வரவேற்கிறான்.
இந்து நாகரிகம் என்று பாரதி போற்றுவது பண்பு நலம் சார்ந்த பழைய மரபினையே! அதே போழ்து நடைமுறைக்கு இசைந்து வாராதவற்றையும் சமுதாய விரோதமானவற்றையும் வெறுக்கிறான். புதிய மதம் உருவாக்க முயலுகிறான்; புதுவிதிகள் செய்கிறான்.
பாரதி, தன் காலத்தில் நிலவிய இந்து நாகரிகம் கெட்டுவிட்டது என்று எழுதுகிறான்; உண்மையை ஒப்புக்கொள்கிறான். பாரதி ஒப்புக் கொண்ட உண்மையை ஹிந்து மடாதிபதிகள் ஒத்துக்கொண்டிருந்தால் வரலாறு மாறியிருக்கும்.
கெட்டுவிட்டி இந்து நாகரிகத்தை சீர் செய்ய ஹிந்து மடாதிபதிகள் என்றுமே முன்வர மாட்டார்கள் போலத் தெரிகிறது. உண்மையில் கூறப்போனால் ஹிந்து மடாதிபதிகள் பலராகப் போனதாலும் அவர்களுக்குள்ளேயே செல்வாக்குப் போட்டிகள் நிலவுவதாலும் யார் ஹிந்து மதக் காவலர் என்பதே புலனாகவில்லை.
இதனைப் பாரதி, “ஹிந்து சம்பிரதாயமாகிற குளத்துக்கு தர்மகர்த்தா இன்னாரென்பதே வெளிப்படையாகத் தெரியவில்லை. அடியார்கள் கூடித் தர்மகர்த்தா இன்னாரென்பதை முதலாவது நிச்சயப்படுத்த வேண்டும். பிறகு, தெய்வ சந்நிதியில் அவர்களுடைய குணம் திருந்தி நடிக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும் ஒத்து எழுதுகிறான். பாரதி காலத்திலும் இது நடக்கவில்லை. இதுவரையிலும் நடக்கவில்லை. இனிமேலும் நடக்குமா? வரலாறுதான் கூறவேண்டும்.
பாதி ஹிந்து தர்மத்தைச் சுத்தப்படுத்தி ஆதரிக்கத்தக்கது எது என்றும் இந்த விஷயத்தில் மக்கள்,
ச-4 அஜாக்கிரதை காட்டக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறான்.
ஹிந்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், தேவையான அளவு இல்லை. இதனை, பாரதி “விழித்தால் நன்றாக விழித்துவிட வேண்டும். நடிந்துகொண்டு தூங்குவோர் உண்மை அறிய மாட்டார்கள்” என்று எழுதியுள்ளபடி ஹிந்து சமுதாயம் விழித்தெழ வேண்டும். இது நமது பிரார்த்தனை; வேண்டுகோள்!
ஹிந்து சம்பிரதாயத்தில் நிலவிய தீண்டாமையை பாரதி கடுமையாகச் சாடுகிறான். “பஞ்ச கோனக் கோட்டை” என்ற தத்துவார்த்தக் கதை மூலம் தெளிவாக விளக்குகிறான். அந்த கதையைக் கேளுங்கள்!
பாரத தேசத்தவராகிய நாம் பஞ்சகோணக் கோட்டை. கற்சுவர்கள் நாலும் மேலான சாதிகள்! மண்சுவரே பஞ்சமர் என்ற ஐந்தாம் சாதி. கோட்டையைச் சுற்றியுள்ள அகழி சுதேசி அபிமானம்! பஞ்சமர்களை அநாதரவும் கொடுமையும் நிறைந்த முறையில் நாம் நடித்தி வரவில்லையா? இது நியாயமா? இந்த ஒடுக்குமுறை சுதந்திரப் போராட்டித்துக்கு அனுசரணையாக அமையுமா? என்றெல்லாம் வேதனைப் பட்டு எழுதுகிறான்.
“கடவுள் எல்லோரையும் சமமாகவே படைத்தான். கடவுள் முன்னிலையில் சாதி வித்தியாசம் நிற்குமா? பஞ்சமர்களை நாம் நடத்திய கொடுமைகளுக்கு ஈடாக நம்மை ஆங்கிலேயர்கள் துன்புறுத்துகின்றனர். நாம் பஞ்சமரை ஆதரித்து அவர்களுக்கு கல்வி புகட்டி, சுசீலமான வழக்கங்களை அனுசரிக்கும்படி செய்து அவர்களையும் நமக்கு சமமாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து நாம் எல்லோரும் ஒற்றுமைப்பட்டால் நம்மை வெல்ல வல்லவர்கள் இவ்வுலகத்தில் யாரேனும் இருப்பார்களா?” என்று பாரதி கேட்கிறான்!
பாரதியின் இந்த வினாவுக்குரிய விடையை சுதந்திர அரசு தந்தது. ஆனால், இந்து சமூகம் தரவில்லை. இந்து சமூகம் பஞ்சமர்களை அணைப்பதன் மூலமே வளரும்; வாழும்!
பாரதி, சாதிகளை வெறுப்பவன். ஒன்றுபட்ட பாரத சமுதாயம் பாரதியின் இலம்சியம். இந்தக் கொள்கையினை “ஆவணி அவிட்டம்” என்ற கட்டுரையில் விளக்குகிறான்! நெஞ்சினைத் திறந்து வீரப்ப முதலியார் மூலம் பேசுகிறான். “பூணூலை எடுத்துப் போடுங்கள்! இந்தியா முழுவதும் ஒரே ஜாதி! ஒரே ஆசாரம்” என்று செய்துவிடி வேண்டும் என்கிறான்.
பிராமண சபை, ரெட்டி சபை, வன்னியர் சபை என்று இருக்கும்வரை இந்த இழிவெல்லாம் தீராது. ஒரே கூட்டம் என்று பேசு! பூணூல் என்ன? கீணூல் என்ன? வீண் கதை” என்று பேசுகிறான்!
இன்றைய பாரதம் - தமிழ்நாடு எங்கு போய்க் கொண்டிருக்கிறது? பாரதியின் தடத்திலா? இல்லை, இல்லை! எங்குப் பார்த்தாலும் சாதிச் சங்கங்கள்! எனதருமை நாடே! என்று விழித்தெழுவாய்?
மேலும் பாரதி எழுதுவதைக் கேளுங்கள்!” எல்லோரையும் சமமாக்கு ஐரோப்பியர்களைப் போல, ஜப்பானியர்களைப் போல நடப்போம்! இது பாரதியின் ஆசை!
பாரதி சாதிகளின் சங்கமத்தை மட்டும் விரும்பவில்லை! மதங்களின் சங்கமத்தையும் விரும்புகிறான்! 1906 - லேயே நாடுமுழுதும் சிவாஜி திருவிழாவும் அக்பர் திருவிழாவும் கொண்டாட வேண்டும் என்று எழுதியுள்ளான்.
பாரதி பாரத சமுதாயத்தில் சமத்துவம் நிலவ உழைத்தவன். சமத்துவமே பாரதியின் கொள்கை, கோட்பாடு இந்திய நாட்டில் சாதி, வகுப்பு வேறுபாடு களின்றிப் பணிகளில் அமர்த்த, ‘சுக்கிர நீதி’ வழி வகுத்திருக்கிறது என்ற ஆதாரத்தை எடுத்துக்காட்டுகிறான்.
“எல்லா மனிதரும் சமம் என்ற கொள்கையை, சமூக வாழ்க்கையில் ஸ்தாபனம் செய்யும் வரை மானிட ருக்குள்ளோ பொறாமை, பகைமை, இகல், வஞ்சனை, போர் முதலியவை நீங்கள்” - என்று பாரதி அறிவுறுத்துகிறான்.
பாரதி அறிவுறுத்துவதை நாம் ஏற்போமா? நடை முறைப்படுத்துவோமா? சமத்துவ கொள்கைக்கு, கோட்பாட்டுக்கு பாரத மாதாவே லோக குருவாக இருக்க வேண்டும் என்பது பாரதியின் ஆசை!
மனிதனை மனிதனாக மதிக்காமல் சமத்துவமாக நடத்தாமல் கொடுமைகள் பல இயற்றுவதை பல கோணங்களில் பாரதி, கண்டிக்கிறான். சங்கரன் பிள்ளை உரையாடல் உயர்சாதி மனப்பான்மையைச் சாடும். சாடலுக்கு ஒரு எடுத்துக்காட்டு! சங்கரன் பிள்ளை. தோப்புப் பெருத்து விளைநிலம்
பாழ்த்தது; தொண்டர்இறு
மாப்புப் பெருத்து மனநலம்
பாழ்த்தது; மாதர்களின்
மூப்புப் பெருத்து மலையாளம்
பாழ்த்தது; முப்புரிநூல்
பாப்புப் பெருத்து மதுரைத்
துரைத்தனம் பாழ்த்ததுவே!
என்ற பாடலைக் கூறுகிறார். இந்தப் பாடலைக் கூறுவதன் மூலம் பார்ப்பன வீட்டுப் பிள்ளைகள் நாடார் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு வர மறுப்பதை விளக்குகிறார்.
இந்தக் கட்டுரையை முடிக்கும்பொழுது, கிரீஸ் என்ற யவன தேசத்தைப் பற்றி, பைரன் என்னும் ஆங்கிலக் கவிஞன், “ஆகா! இந்த நாட்டின் இயற்கை காட்சிகள் எல்லாம் எவ்வளவு அற்புதமாகவும் அழகாகவும் இருக்கின்றன” என்று கூறியதை எடுத்துக்காட்டுகிறான்.
“கிரீஸ் தேசம் போல, ஆகம புரத்திலும் இயற்கை காட்சிகள் - மலையும், தோப்பும், நதியும், வானும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாதபடி அவ்வளவு சுதந்திரமாகவும் இனிமையாகவும் இருக்கின்றன. மனிதர் மாத்திரம் பரஸ்பரம் நாய்களைப் போலச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதிலும் இப்படித்தான் இருக்கிறது! தெய்வமே! இதற்கெல்லாம் விமோசனம் எப்போது வரும்?” என்று. கேட்கிறான்! நமது நாடு இன்று போய்க் கொண்டிருக்கிற நிலையைப் பார்த்தால் விமோசனம் வருவதற்கே வாய்ப்பில்லை என்பதுபோலத் தெரிகிறது! கடவுளே! எனதருமை நாட்டை விழித்தெழச் செய்யக் கூடாதா? பாரதியின் தடத்தில் உய்த்துச் செலுத்தக் கூடாதா?
பாரதி, மானுடம் வளர, இந்த வையகம் பயனுற அன்பே ஆதாரம் என்று வலியுறுத்துகிறான். மனித குலம் இன்பத்தை அடைய வேண்டுமானால் அதற்குத் “தான்” ஆகிற கதவைத் திறந்து அன்பு வடிவமாக நிற்பதே உபாயம் அன்பு, காதல் என்னும் பெயர் பெறும்!
“ஓங்காரமாவது காதல் ஆணும் பெண்னும் காதலித்து வாழ்வது கடவும் கொடை இயற்கை: இந்த உலகை காதல் படைக்கிறது. இந்த காதலைச் சராசரி மனிதன் வணிகமாக்குகிறான்! மிருக இச்சையுடன் கூடிக் கலைவோர் மிருகங்கள்!
காதலால் ஆன்மத் தொடர்பு கொண்டு உயிரும் உயிரும் கலப்பவர் மனிதரில் சிறந்தோர், மாமனிதர் இந்த அறிவே ஞானம்! அன்பைத் தவிர வேறு ஞானம் கிடையாது! ஏசுவின் பிறப்பு, அன்பின் பிறப்பு. விடுதலைக்கு அன்பு என்ற கதவு திறந்தாக வேண்டும்” - என்று பாரதி எழுதி அன்பின் அருமையை விளக்கியுள்ளான்,
பாரதி, அன்பினாலேயே பெரிய சமுதாய மாற்றங்களைச் செய்ய எண்ணுகிறான். அன்பு என்பது பேசிப் பழகுவதுடன் அமையாது . அமையக் கூடாது. விருந்துக்குப் பின் அன்புக்கு விடை கொடுப்பதை பாரதி விரும்பவில்லை. பாரதி, சமுதாய மாற்றங்களுக்கெல்லாம் அன்பு உந்து சக்தியாக விளங்க வேண்டும் என்று கருதுகிறான். அன்பு, ஆற்றல்மிக்க கருவி என்பது பாரதியின் கருத்து. பாரதி, சாவைப் பற்றி எண்ணுகிறான். பயத்தோடு அல்ல!
“இந்த உலகில் வாழும் சில நாட்கள் அன்போடு வாழ்ந்துவிட்டுப் போகக் கூடாதா? பல கோடி இன்பங்கள் அமைந்த இந்த உலகில் வாழ்கிறோமே! இதற்கு, குடிக்கூலியாக - வாடகையாக அன்பைத் தரக்கூடாதா? பிறருக்கென முயலும் நோன்பு செய்யக் கூடாதா? என்றெல்லாம் கேட்கிறான்!
பாரதி, தனது கேள்விகளுக்கு விடையில்லாமல் போகவே, இந்த உலகத்தைக் கூர்ந்து நோக்குகிறான்! அடடா மனித உயிருக்கு எத்தனை எத்தனை கஷ்டம்? கொலை, துரோகம்! ஐயகோ, எத்தனை அநியாயம்? ஐயோ, பாவம்!” என்று சொல்லிவிட்டு, மனிதர்களுக்கு வாழும் நெறிகள் சிலவற்றை அறிமுகப்படுத்துகிறன்.
“மனிதர்களே! நமக்குள் ஒரு கட்டுப்பாடு செய்து கொள்வோமே! அந்தக் கட்டுப்பாடு யாதெனில், ஒருவனுக்கு ஒருவன் மனத்தாலும் தீங்கு நினைப்பதில்லை, பயப்படுத்துவதும் இல்லை; பயப்படுவதும் இல்லை.
மனிதர்களே! இந்த விரதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! இதுவே, பிழைக்கும் வழி வாழும் நாட்கள் சிலவே! இந்த நாட்கள் சிலவற்றுக்குள்ளும் கலகம் செய்து வாழ்வானேன்? இதனால் யாருக்கு என்ன பயன்? மனம் விட்டுப் பேசுங்கள்! கலந்து பழகுங்கள்! பரஸ் பரம் நல்லெண்ணத்தை - நம்பிக்கையை பரிவர்த்தனை செய்து கொள்ளுங்கள்! அன்பு செய்யுங்கள்! அன்பைப் பெறுங்கள் குற்றங்களைப் பார்க்காதீர்! குணங்களையே கண்டு பாராட்டுங்கள்! குற்றங்கள் தாமே மறையும்!
மனிதனுக்கு மனிதன் பகை என்பது மூடத்தனமானது. இயற்கை நியதிகளுக்கு முரணானது. மனித நாகரிகத்தின் மூலம், அன்பே இன்பத்தின் வைப்பு. அன்பேயாம் என்கிறான்.
அன்பு! - மனித உலகத்தில் அன்பு எளிதாகத் தோன்றிவிடாது. நிலத்தில் பயிர் எளிதில் வளருமா? அதுபோலத்தான்! அன்புக்குப் பகை அழுக்காறு - பொறாமை பொறாமைக்கு களம் வளமை - வறுமை. இருவேறு நிலைக்களன்கள்!
வெறும் சோற்றுக்கே கூடப் பஞ்சம் நிலவுமாயின் அன்பு தோன்றுமா? ஒரு சிலர் உண்டு மகிழ்ந்திடலாம்! பலர், பசியால் வாடித் துன்புறுவதாக அமைந்துள்ள சமுதாயத்தில் அன்பு பயிலுதல் - அன்பு வளருதல் இயலாது. சோற்றுப் பஞ்சத்தை நீக்கி, இங்கு வாழும் மாந்தருக்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடுவதை முதல் இலட்சியமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்று மானிடம், சுவர் - வேலி இவற்றுக்கிடையே சொத்துக்களை முடக்கி சிறை வைத்துள்ளது. செல்வர்கள், அன்பு கருதியும், அறம் கருதியும் ஏழைகளுக்கு வாழ்வளிக்க முன்வர வேண்டும். அப்படி அவர்கள் வர வில்லையெனில், “நிலத்தை சகலருக்கும் பொது என்று அறிவிக்க வேண்டும்” என்று பாரதி முடிவு செய்கிறான்! அது மட்டுமா? உடையவர்களுக்கு ஓர் அறிவுரையும் கூறுகிறான். “ஏழைகள் வருந்தினால் தனக்கென்ன என்று நினைப்பவர் மூடர். பலர் அசெளகரியப்படும் வகையில் சிலர் செளகரியம் அடைதல் இந்த உலகத்தில் சாத்திய மில்லை” என்று பாரதி தெளிவுபடுத்துகிறான்!
ஏழை - பணக்காரர்களுக்கிடையில் பரஸ்பரம் அருவருப்பும் அவமரியாதையும் வளர்ந்து பகை முற்றி வருகிறது. இதன் விளைவே காவல் முறை வளர்தல், பூட்டுக்களின் பெருக்கம்! சட்டங்கள் இயற்றப்படுதல், சிறைச் சாலைகள் அமைத்தல் முதலியன. இவையெல்லாம் துன்பத்தை மிகுதிப்படுத்துமே தவிர, தீர்வு சொல்லாது; தீர்வு செய்யாது.
ஆங்கிலக் கவிஞன் பைரன், மனிதர்களை “நாய்களே!” என்று அழைத்தான். பிறகு பைரன், தான் செய்த தவற்றை திருத்திக் கொள்கிறான். அதாவது, மனிதர்களை நோக்க நாய்கள் பரவாயில்லை. ஆதலால் மீண்டும் “மனிதர்களே!” என்று கூறுகிறான்.
மனித குலத்தை பற்றியுள்ள துன்பங்களுக்கெல்லாம் ஒரே ஒரு தீர்வுதான் உண்டு. அதுதான் அன்பு! அன்பே தீர்ப்பு! சகோதர உணர்ச்சியே தீர்ப்பு! ஆனால் சகோதர உணர்ச்சியைப்பற்றி எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள்; முழங்குகிறார்கள்! பயன் என்ன?
அன்பு செய்தல் நடைமுறைக்கு வந்தாக வேண்டும். அன்பு செய்தல் ஒழுகலாறாக அமைதல் வேண்டும். இன்பம் வேண்டுமா? அன்பு வேண்டும். அன்பில்லாவிடில் இன்பமில்லை.
அன்பை மறந்துவிட்டு, துறந்து விட்டு சொத்து பணம், பதவி, அகந்தை, மரியாதை - இவைகளில் ஆசைப்பட்டு மூழ்கி அல்லற்பட்டு ஆற்றாது அழும் மாந்தர்களே! கேளுங்கள்! இவையெல்லாம் உங்களுக்கு வேண்டுமா? அடையலாம், அடைய முடியும்!
அதற்கு ஒரே ஒரு வழி! இவையெல்லாம் மற்றவர்களுக்கும் வேண்டும் என்று ஆசைப்படுங்கள். மற்றவர்கள் அடையத் துணை செய்யுங்கள்! வாழ்வித்து வாழ ஆசைப்படுங்கள்! மகிழ்வித்து மகிழ ஆசைப்படுங்கள்! நீங்கள் விரும்பியது எல்லாம் கிடைக்கும். ஐயமில்லை! இது சத்தியம்!
அன்புண்டானால் இன்பம் உண்டென்று புத்த பகவான் கூறினார். அன்பு, தத்துவம் அல்ல! கொள்கையல்ல! கோட்பாடல்ல! அன்பு, செயல்! அன்பு செயல் வழிப்பட்டது!
அன்பென்னும் தவம் வளர, உயிர்க் குலம் ஆண் - பெண் என்று இருபாலாகப் படைக்கப் பெற்று இயங்குகிறது. ஒன்றின்பால் பிறிதொன்றினுக்கு ஈர்ப்பு, கவர்ச்சி தேவை. எல்லாம் அமைவாகப் பொருந்திக் கிடக்கின்றன. ஆனால், மனிதன் இந்த இயற்கையோடு இசைந்த அன்பு வாழ்க்கையையும் கெடுத்துவிட்டான்! கெடுத்துக் கொண்டிருக்கிறான்.
மனிதன் வாழ்க்கையில் பங்கேற்றுத் தியாகங்கள் செய்யும் மகளிரை வாழவிடுகிறானா, என்ன? பாரதி. மகளிரின் உரிமை நலன்களுக்காக எழுதினான்; பேசினான்; போராடினான்!
ஏன்? ஒருபடி மேலே போய் விவேகானந்தர் சந்நியாசியாகப் போகாமல் இல்லற வாழ்க்கையை ஏற்றிருப்பாரானால் மனித குலத்தைப் பற்றியிருந்த கலி வேரோடும், வேரடி மண்ணோடும், கல்லி எறியப் பட்டிருக்கும் என்பது பாரதியின் நம்பிக்கை. “தவத்தாலும் பரிபூர்ணத் துறவாலும் ஏற்படும் அசையாத மனோ தைரியத்தையும் எல்லையற்ற அன்பையும், எல்லா உயிர்களிடத்தும் ஆன்ம புத்தியையும் வைத்துக் கொண்டு இல்வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே இந்து மதத்தின் முடிவான தீர்மானம்” - என்று பாரதி எழுதுவதுடன், தனது வாதத்துக்கு அரணாக சந்நியாசிகளின் பரமநாதனாகிய சிவன். பார்வதியை இடப் பாகத்தில் கொண்டருளியதையும் தவமுனிவர் விசிஷ்டர் அருந்ததியு கடி வாழ்ந்த வாழ்க்கையையும் எடுத்துக்காட்டுகிறான்.
துறவை, “விலங்கு” என்று பாரதி வர்ணிக்கிறான். “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று கவிதையில் அறைகூவல் விடுத்த பாரதி, உரைநடையில், மகளிருக்கு எதிரான சமூகத்தை நையப் புடைக்கிறான்.
நமது மகளிருக்கு கல்வி போதிக்க வேண்டும், என்று வலியுறுத்துகிறான். அதுமட்டுமா? வருங்கால மேதைகளை உருவாக்கும் தகுதி மகளிருக்கே உண்டு. என்பது பாரதியின் கருத்து; நம்பிக்கை!
நாட்டில் நல்லன நடக்க வேண்டுமா? பெரிய பெரிய காரியங்கள் நடக்க வேண்டுமா? எடுக்கும் காரியங்கள் யாவும் கை கூடிவர வேண்டுமா? மகளிரின் மனோ நிலை வளர்ந்து அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் ஒன்றும் நடவாது; வெற்றியும் கிடைக்காது.
பாரதி, நிவேதிதா தேவி கூறியதாக எடுத்துக்காட்டி எழுதுவது, “ஐயோ, மாதர்களை இருட்டிலே தள்ளிவிட்டு அவர்கள் அறியாமல் நீங்கள் மேலான நிலைமைக்கு வந்துவிட முயல்வது வீண் முயற்சி! அது ஒருபோதும் நடக்க மாட்டாது” என்று நிவேதிதா தேவி கூறியபடி தேசாபிமானிகள் ஒழுகினால் நாட்டுக்கு நல்லது ஏற்படும்” என்று எழுதுகிறான்.
இந்தியா ஆழ்ந்த உறக்கத்தில் கிடப்பதற்கு மிகுதியும் காரணம் விதி வாதமே! பாரதி, விதி கொள்கைக்கு உடன்பட்டான்; ஆயினும்: நடைமுறை வாழ்க்கையில் மாறுபடுகிறான்!
விதி, விதி என்று சும்மா கை கட்டி கீழ்நிலையில் வாழ்வாரைக் கடுமையாய்க் கண்டிக்கிறான்.
“விதி என்பது உண்டு. ஆனால், கடவுளால் எனக்கு அருளப்பெற்ற சுய இச்சை விதி வாதத்தை மறுக்கவில்லை” என்பது பாரதியின் கொள்கை.
தனது இச்சை, சுயேச்சையானது. அதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை என்பது பாரதியின் கோட்பாடு. பாரதி, விதியை விவேகத்தால் மாற்றலாம் என்றே நம்புகிறான்; நம்மையும் நம்பச் சொல்லி முயற்சி மேற்கொள்கிறான்.
மானிடம் சிறப்புடன் வாழ, விவேகத்துடன் வாழ்ந்து வெற்றிகளைப் பெற்று குவித்திட கல்வி தேவை. பாரதி, இன்றையக் கல்விமுறை இளைஞர்களை கிழவர்களாக்கும் கல்விமுறை என்று சாடுகிறான்! அதுமட்டுமா? இன்றையக் கல்வியை எண்ணி அவமானப்படுகிறான்.
பாரதி, வாழ்ந்த காலத்தில் இருந்த கல்விமுறை, நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் ஒன்றும் மாறிவிடவில்லை. இன்றைய கல்விமுறையில் இளைஞர்கள் ஆளுமையையும் படைப்பாற்றலையும் பெறுதற்குரிய கூறுகள் இல்லை! ஏன்? இன்றைய இளைஞர்கள் ஆபத்துக்களையும் பொறுப்புக்களையும் ஏற்க அஞ்சுகின்றனர். எல்லாம் நல்லவிதமாக, சுகம் தரக்கூடியதாக அமைய, வேண்டும் என்று விரும்புகின்றனர்,
இன்றைய இளைஞர்கள் கடின உழைப்பைப் பற்றிக் கனவிலும்கூட எண்ணுவதில்லை. ஏன் தாய் மொழியாகிய தமிழில் கூட இன்றைய இளைஞர்களுக்கு விருப்பம் இல்லை.
வீட்டு மொழியை கற்பதை விட்டுவிட்டு வேறு வேறு மொழிகளையெல்லாம் கற்கும் இழிநிலையை எண்ணி எண்ணிப் பொருமுகிறான் பாரதி.
தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வந்த வரலாற்றின் சிறப்புக்களையும் அந்த சிறப்புக்கு காரணமாக இருந்த பெரியோர்களின் வரலாறுகளையும் ஞானிகள், மகான்களைப் பற்றியும் கல்வி நிலையங்களில் போதிக்க வேண்டும் .
இன்றைய கல்வியில், பகுத்தறிவு என்ற பெயரில் தாயுமானார் அருளிச் செய்த கவிதைகளை நமது கல்லூரி மாணவர்கள் கற்கும் வாய்ப்புப் பெறவில்லையே என்று கவலைப்படுகிறான் பாரதி!
அதுமட்டுமல்ல, ஒரு தவறான - பைத்தியக்காரத் தனமான கருத்தும் இளைஞர்களிடம் பரப்பப்படுகிறது. அதாவது, யாக்ஞவல்யர். சங்கரர் முதலிய அவதார புருஷர்களைப் பற்றியும் அர்ஜுனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மகாவீரர்களைப் பற்றியும். இன்றைய இளைஞர்கள் கேள்விப்பட்டது கூட இல்லை!
ஒரோ வழி கேள்விப்பட்டாலும் அவர்கள் நவீன காலத்து, புதுமைகளைப் பற்றி அறியாதவர்கள் என்று கருதி அலட்சியப்படுத்துகிறார்கள். பழங்காலத்துப் பெரியவர்கள் அந்தக் காலத்தில் கண்ட கடுமையான செய்திகளின் அடிப்படையில்தான் பின்னைப் புதுமைகள் தோன்றி வளர்ந்து வருகின்றன என்பதை மறுத்தல் இயலாது.
பாரதி, பாரத ஜாதியினர் ஆண்மையுடன் விளங்க வேண்டும் என வற்புறுத்துகிறான். புதிய ஆத்திசூடியில் “அச்சம் தவிர்” என்றும் “ஆண்மை தவறேல்” என்றும் அருளியுள்ள உபதேசங்கள் என்றைக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்துவன.
அச்சம் நீங்கினாலே ஆண்மை விளங்கும். பயம், மிகப்பெரிய தீமை. உலக மாந்தரைப் பயத்திலிருந்து மீட்பதே முதற்கடமை. நமது நாடு புகழ்பூத்து விளங்கிய காலம் ஒன்று இருந்தது. இந்திய நாடு அடிக்கடி ஏற்பட்ட அந்நியர்களின் படையெடுப்புகளோடு போராடி, போராடிக் களைப்படைந்து விட்டது.
அதுமட்டுமா? கல்வி, கலை முதலிய சாஸ்திரங்களை இழந்து நாளுக்கு நாள் பின்னடைவு பெற்று வருகிறது. மேலும், நமது மக்களிடத்தில் வீரியமும் தைரியமும் தர்ம குணமும் பிரம்ம ஞானமும் போய், அவர்கள் பொறாமை, வயிற்றெரிச்சல் முதலிய அற்ப குணங்களுக்கு இரையாகி இழிநிலையை அடைந்துவிட்டனர். எழுமின்! எழுமின்! ஆட்டு மந்தையில் பழகிய சிம்மமாகி விடாதீர்கள்!” இது பாரத மக்களுக்கு பாரதியின் வேண்டுகோள்!
நமது நாட்டுக்குப் பயமற்றவர்கள் தேவை, அறிவாளிகள் தேவை: பலசாலிகள் தேவை என்று பாரதி உணர்கிறான்; உணர்த்துகிறான்! இளைஞர்கள் வலிமை பெற சிலம்பு, கஸ்ரத், கர்லா முதலியன - பாட சாலை அமைத்து, கற்றுக் கொடுக்கும்படி கிராம சபையினரை வேண்டி கேட்டுக் கொள்கிறான்.
அதற்கு கைமாறாக ஓர் ஆண்டுக்குப் பத்திரிகை இலவசமாக அனுப்புவதாகவும் எழுதுகிறான். கேடு களுக்கெல்லாம் காரணமான பயத்திலிருந்து விடுதலை பெற்று வலிவும் பொலிவும் பெற்று விளங்கும்படி இளைஞர்களுக்கு அறிவுரை கூறுகிறான்.
சரீர வாதனை, இழப்பு, பசி, துன்பம் முதலியனபற்றி, கவலைப்படாமல் துணிவுடன் வாழ்க்கை நடத்தும் பயிற்சியும் முயற்சியும் இளைஞர்களுக்குத் தேவை என்பது பாரதியின் கருத்து. இந்தக் கருத்தினைப் பல நடைமுறை உதாரணங்களுடன் விளக்குகிறான்.
“மனத் துணிவற்ற சாதியினர் மண் சுமக்கக் கூட, தகுதியாக மாட்டார்கள்” என்பது பாரதியின் வாக்கு சோதனைகளும் துன்பங்களும் துயரங்களும் மனிதனை வளர்ப்பனவேயாம்! நிலத்தில் அடிக்கப்படும் பந்து எழுவதைப் போல மனிதன் எழுந்து அயர்வில்லாமல் உழைத்தால் உயரலாம். இது உறுதி. இதுவே பாரதியின் தடம்! பாரத தேச மக்கள் வீரியத்துடன் வளர வேண்டும். வாழ வேண்டும். இது பாரதியின் ஆசை. பாரதி, பழைய வீரர்களின் பட்டியலைத் தருகிறான். அஃது ஒரு நீண்ட பட்டியல். அர்ஜுனன், இராமன், இராவணன், காந்திஜி பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
பாரதி, வீரத்துக்குத் தரும் விளக்கம் என்ன? எடுத்த காரியத்தை இடையீடுகளையும் இடர்ப்பாடுகளையும் கடந்து முடிப்பது வீரத்தின் இலக்கணம். இது பாரதியின் கருத்து.
பாரதி காலத்தில் இந்த இலக்கணத்திற்கு பொருந்தியவர்கள் பலர் வாழ்ந்தனர். அதனாலேயே நாடு விடுதலை பெற முடிந்தது. இன்று நாட்டில் இத்தகைய வீரர்கள் வாழ்கிறார்களா?
இடரே இல்லை; உயிரைத் தரவேண்டியது. இல்லை. முறையாக வேலை செய்தாலே போதும். அதையே செய்யாமல் சோம்பலில் திளைத்துச் சிறு சிறு சுகங்களில் நாட்டங்கொண்டு அற்பத்தனமான ஆதாயங்களை எண்ணி கடமையைச் செய்யாமல் புறக்கணித்துப் பொழுது போக்குகிறவர்கள் ஏராளம்! ஏராளம்!
வீரர்களை ஞான வீரர், கர்ம வீரர் என்று பிரிக்கிறான் பாரதி. வசிஷ்டர், புத்தர், கிறிஸ்து ஞான வீரர்கள். சிவாஜிர் நெப்போலியன், காந்திஜி கர்ம வீரர்கள்.
சிவாஜிக்குப் பிறகு, நமது நாட்டில் வீரர்கள் தோன்றவில்லை என்று பாரதி வருந்துகிறான். ஆனந்தரங்கம் பிள்ளை போன்ற நிர்வாகிகள், துணைவர்கள்கூட கிடைப்பதில்லை என்று வருந்துகிறான். ஆனந்தரங்கம் பிள்ளை, பிரான்சு நாட்டுத் தலைவன் டூப்ளேக்கு, விளக்கு போலவும், ஊன்றுகோல் போலவும் விளங்கினார்.
பாரதி, துறவைப் பல இடங்களில் கண்டிக்கிறான். துறவு வாழ்க்கையை மறுதலிக்கிறான். ஏன்? வாழ்க்கையை மாயை என்று கூறுவதையும் பாரதி மறுக்கிறான். ஆன்மாவின் வாழ்க்கை நிலையானது; சாசுவதமானது என்று பாரதி போதிக்கிறான்.
நமது பாரத நாட்டில் சில நூற்றாண்டு காலமாகவே துறவைப் பற்றி அதிகமாகப் பேசுகிறார்கள். கண்டவன் எல்லாம் ஞானம் பற்றிப் பேசுகிறான். வயிற்றுப் பிழைப்புக்காக - சில காசுகளுக்காக உடலையும் ஆவியையும் விற்கத் துணிபவன் கூட ஞானம் பேசுகிறான்.
வாழ்க்கை மாயை என்கிறான். “எல்லாம் மாயை, இவ்வுலகமே பொய், கூடிணத்தில் அழிவது இவ் வாழ்க்கை” என்று தனக்குத் தெரியாதவைகளைக்கூட கிளிப்பிள்ளை போல் திரும்பத் திரும்பக் கூறுகிறான்.”
இந்த பொய்யை பாரதி நம்ப மறுக்கிறான்; ஏற்க மறுக்கிறான். வாழ்தலைப் பற்றிய வேட்கையைத் தூண்டி வளர்க்க முயற்சி செய்கிறான். இந்த உலகம் நிலையானது என்று நம்பி வாழ்ந்து இந்த மண்ணையே சொர்க்கமாக்க, பாரதி நம்மை அழைக்கிறான்.
இந்த உலகம் நிலையானது. இங்கு பாங்குற வாழ்தலே சிறப்பு. செத்த பிறகு சிவலோகம் யாருக்கு
ச-5 வேண்டும்? இங்கு அமரர் சுகம் வேண்டும் இது பாரதியின் ஆசை.
பாரதி, திருவள்ளுவரைப் பின்பற்றிச் “செய்க பொருளை” என்று நெறிப்படுத்துகிறான். நாடு நலம் பெற நல்ல கல்விச்சாலைகள் தேவை; தொழிற்சாலைகள் தேவை.
நிதி முட்டுப்பாடு இருப்பின் இடத்துக்கு இடம் தட்டுப்பாடுண்டாகும். கண்ட கண்ட இடங்களில் எல்லாம் முட்டுப்பாடுண்டாகும். செல்வம் உணவைப் போன்றது என்று கூறி ஒரு புதிய கொள்கையை உருவாக்கினான்.
அதாவது உண்ட உணவு செரிமானம் ஆவதைப் போல் ஈட்டிய செல்வமும் செலவழிக்கப் பெறுதல் வேண்டும். பணம் காத்த பூதமாகிவிடக் கூடாது.
நமது நாட்டில் செல்வர்கள் அதிகமில்லை. ஊருக்கு ஒருவர் இருந்தால் பெரிய காரியம். ஆயினும், அதைரியப்படிக் கூடாது. பொருள் செய்யும் முயற்சியைத் தொடங்கிவிட்டால் வளரும். பெருகி வளரும். இது பாரதியின் நம்பிக்கை.
இந்த முயற்சியில் பாரதி, மடாதிபதிகளையும் சம்பந்தப்படுத்துகிறான். மடாதிபதிகள் தங்களுடைய சிஷ்யர்களுக்கு ஆத்ம விசாரத்தில் பக்தி ஏற்படும்படி செய்ய வேண்டும்.
ஆத்ம விசாரத்திற்கு இரண்டு சத்ருக்கள் உண்டு. ஒன்று செல்வப் பெருக்கினால் உண்டாவது. அதாவது இந்திரிய போகம்; சுகம். மற்றொன்று வறுமை. இவ்விரண்டுமே இல்லாமல் சமரச நிலைக்கு மக்கள் வந்தால் ஆத்ம ஞானத்தை ஏற்பார்கள்.
இந்நிலைக்கு ஜனங்களைக் கொண்டு வருவது மடாதிபதிகளின் கடமை. ஒவ்வொரு மடாதிபதியும் இக்கடமையை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
நமது நாட்டில் கொடிய தரித்திரத்தால் வருந்துகிறவர்கள் ஏராளம்! ஏழைகளுக்கு எவ்வாறு உதவி செய்வது? வறுமையிலிருந்தும் பயத்திலிருந்தும் எப்படி மீட்பது?
மடாதிபதிகள் அன்னதானம்; செய்வதனால் வறுமை நீங்கிவிடாது. தரித்திரம் நிலையான ஏற்பாடுகளாலேயே அகலும். நிலையான ஏற்பாடு என்ன? ஒரே ஒரு வழிதான் உண்டு. ஜனங்களிடம் தொழில் முயற்சியை ஊக்குவிக்க வேண்டும்.
குருடனுக்கு கோல் பிடித்துவிடுவது என்றால் ஆயும் காலம் முழுதும் செய்ய வேண்டும். அதற்குப் பதிலாகக் கண்ணைத் திறந்துவிடுதல் மேலான உதவி. இதையே வேறு மொழியில் “நாள்தோறும் மீன் தருதலைவிட மீனைப் பிடிக்கக் கற்றுத் தருவதே மேல்” என்று கூறுவர்.
“மடாதிபதிகள் மடத்தின் மூலதனத்தில் ஒரு பகுதியைக் கொண்டும், பாதகாணிக்கையைக் கொண்டும் முதல் சேர்த்துத் தொழிற்சாலைகள் ஏற்படுத்தலாம். இதனால் மக்கள் பயனுறுவர். மடங்களின் நிதியும் அபிவிருத்தி அடையும். தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள கப்பற் சங்கத்திற்கு மடாதிபதிகள் பொருளுதவி செய்யலாகாதா?” என்று கேட்கிறான் பாரதி.
மேலும் “அன்னதானம் சுவர்ணதானத்தில் செலவேயல்லாது வரவு இல்லை. தொழில்களில், வர்த்தகத்தில் முதலீடு செய்தால் வரவும் உண்டு. தரித்திரமும் ஜனங்களை விட்டு நீங்கும்.
கொடிய வறுமை நீங்கின பொழுதே ஜனங்கள் ஆத்ம ஞானத்தில் நாட்டம் கொள்வார்கள். இந்தப் புண்ணியத்தை அந்த மடாதிபதியான ஞான சிரேஷ்டர் கட்டிக் கொள்வாரோ?” என்று பாரதி அன்று கேட்டான். இது நடைபெற வேண்டும்.
பாரதி, தமிழ் ஆர்வலன். பாரதி, ஆங்கிலக் கல்வியை எதிர்த்தவன். தமிழ் வழிக் கல்வியை ஆதரித்தவன். பாரதி, “சக்திதாசன்” என்ற புனைப் பெயரில் சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயர் சொன்னதாகச் சில செய்திகளை தொகுத்துத் தந்துள்ளான்.
அவற்றுள் முதன்மையானது, தமிழ் நாட்டார் எப்போதும் தமிழே பேசவும், எழுதவும் வேண்டும். கற்கும் கலைகள் எல்லாம் தமிழ் வழியிலேயே கற்க வேண்டும்” என்பதாகும்.
பாரதி, தாம் எழுதிய ‘பாஞ்சாலி சபத’த்தைத் தமது எழுத்துக்கள் மூலமே அறிமுகப்படுத்துகிறான்.
பாரதி, “பொன் வால் நரி” என்றொரு கட்டுக்கதையை ஆங்கிலத்தில் எழுதினான். இதற்கு நிறையப் பாராட்டுக்கள் கிடைத்தன. ஆனால், இந்தப் பாராட்டில் பாரதி மகிழவில்லை. ஏன்? “தமிழில் - சொந்த மொழியில், சொந்த மூளையை கசக்கிப் பிழிந்து “பாஞ்சாலி சபதம்” என்ற புத்தகம் எழுதி இருக்கிறேன். அது நன்றாக இருக்கிறது என்று ஒருவனும் ஒரு கடிதமும் எனக்கு எழுதவில்லை” என்கிறான்.
தாய் மொழி தமிழில் எழுதிய நூல்களைத் தமிழ் நாட்டார் படித்துப் போற்றவில்லை என்று பாரதி மனம் நொந்தான்; வருந்தினான். இன்று வரையிலும் கூட இது நீடிக்கிறது.
பாரதி, கடவுள் நம்பிக்கை உடையவன். மதங்களில் நம்பிக்கை உடையவன். ஆயினும், பாரதி, இத்துறையில் தீவிரமாகச் சிந்தித்தான்; மாற்றங்களைக் காண விரும்பினான்.
பாரதி, கடவுள் வழிபாட்டுக் கொள்கையில் விவேகானந்தரை அப்படியே ஆதரிக்கிறான். விவேகானந்தர் “விடுதலையே என் மதம்” என்று கூறியவர். அவர் எழுதிய கடிதம் ஒன்றை எடுத்துத் தருகிறான்.
“முத்தி அல்லது விடுதலையே என் மதம்! இதை கட்டுப்படுத்த முயல்வது யாதாயினும் அதனை நான் போர் செய்தேனும், புறங்கொடுத்து ஒடியேனும் அகற்றிவிடுவேன்.
என் வேலை முடிந்து போய்விட்டது என்ற உணர்ச்சி உண்டாகிறது. மிஞ்சிவந்தால் நான் இன்னும் மூன்று. அல்லது நான்கு வருஷந்தான் உயிரோடிருப்பேன். அதற்கப்பால் என்ன நேரும் என்பதை நான் பொருட்டாக்கவில்லை. எனினும் நான் மீட்டும் மீட்டும் ஜன்மமெடுத்து ஆயிரக்கணக்கான துன்பங்களில் உழன்றேனும் என் ஒரே கடவுள், ஒரே உண்மைக் கடவுள், நான் நம்புகிற தனித் தெய்வம் - அதாவது எல்லா ஜீவர்களின் தொகுதி, என் கடவுளாகிய தீயோர், என் கடவுளாகிய எல்லாச் சாதிகளிலும், எல்லா இனங்களிலும் என் கடவுளாகிய ஏழைகள் - இக் கடவுளை நான் தொழுதற்குரிய பறு பெறுவேனாக!”
இவர்களே என் இஷ்ட தெய்வம்! ஆ! மூடர்களே! உயிருடைய கடவுளையும் உலகம் எங்கும் நிரம்பிக் கிடக்கும் அவனுடைய பிரதி பிம்பங்களையும் புறக்கணித்து விட்டு கற்பனையாகிய நிழல்களைத் தேடி, ஓடி ஒருவருக்கொருவர் சண்டையும் சச்சரவும் நடத்துவதென்ன! கண்ணுக்குப் புலப்படும் கடவுளைத் தொழுங்கள்! மற்ற சிலைகளையெல்லாம் உடைத்தெறிந்து விடுங்கள்!” - இது விவேகானந்தரின் கடித வாசகம்.
இந்த கருத்தை அப்படியே பாரதி ஏற்று கொண்டான்! விவேகானந்தர் கண்டு, பாரதி வழி மொழிந்த இந்த உயிர்க்குல வழிபாட்டில் நமது நாட்டின் வளர்ச்சி என்று வந்து பொருந்தும்?
பாரதி - பிரகலாதன் வரலாற்றை கருவியாகக் கொண்டு நம்மனோரிடம் நம்பிக்கையை வளர்க்க முற்படுகிறான். ஒருவர் ஒரு பணியில் வெற்றி பெற வேண்டுமாயின் அதற்கேற்ற அளவுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். பாரதி, பக்தியையும் நம்பிக்கையையும் நோன்பு” என்ற பொருளிலேயே காண்கிறான்.
பாரதி, ஞானிகளைப் போற்றுகிறான். நாட்டின் நலங் காக்க ஞானிகள் தேவை என்பதையும் உணர்கிறான். சுதந்திரப் போராட்டத்தில் கணக்கற்ற சந்நியாசிகள், ஞானிகள் ஈடுபட்டிருந்தனர்.
பாரதி, சுப்பிரமணிய சிவாவின் தியாகத்தைப் போற்றுகிறான். “சந்நியாசிகள், ஞானிகள் லெளகீக முயற்சியில் பிரவேசித்து விபத்துக்குள்ளாவதன் முகாந்திரம் என்ன என்று பலர் ஆச்சரியமடைகின்றனர். அப்படி வியப்படைபவர்கள் கிருஷ்ணபகவான், வேத வியாசர், இராமதாஸ் முதலியவர்களின் சேவைகளைக் கவனிக்க வேண்டும்.
ஞானி, தனது சொந்த நலனைக் கருதி உழைக்கக் கூடாதே ஒழிய, உலக கர்மங்களை முற்றிலும் விட்டு விட வேண்டும் என்பது சாத்திரக் கருத்தன்று.
தன்மட்டில் யாதொரு பலனையும் கருதாமல் ஈசனுக்கும், ஈசுவர வடிவமாகிய மனித சமூகத்திற்கும் தனது செயல்களின் பலன்களை ஸ்மர்ப்பணம் செய்துவிட்டு. தான் எப்போதும் உழைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே சித்தாந்தம்” - என்று எழுதுகிறான் பாரதி.
இத்தகைய சந்நியாசிகள், ஞானிகள் போற்றத் தக்கவர்கள். இவர்களால் நாட்டின் வரலாறு நனி சிறக்கும்.
பாரதி ஆண்மை, வீர்யம், போராட்டம், யுகப் புரட்சி என்றெல்லாம் எழுதினாலும் மெளனத்தையும் வரவேற்கிறான். ஆனால் பாரதி வரவேற்கும் மெளனம், வலிமை சார்ந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஊக்கம் இல்லாதவர்களே சப்தம் போடுவார்கள்; இரைச்சல் செய்வார்கள். ஆழமில்லாத கடற்பகுதியே அலைகளால் ஆர்ப்பரிக்கும். ஆழ்கடல் மோனத் தவம் செய்து முத்தைக் கொழிக்கும்.
நல்ல முன்னேற்றம் நிறைந்த வாழ்க்கைக்குத் தங்களைத் தாங்களே ஆராய்ந்து நிறை - குறை கண்டு, திருத்தங்கள் காண்பது அவசியம். ஆனால், ஒருவழிப்படாத அசுத்தமான மனமுடையவர்கள் தமக்குத் தாமே விமர்சனம் செய்து கொள்ள ஒருப்படுவதில்லை.
மற்றவர்களுடைய விமர்சனத்தையும் ஏற்க மாட்டார்கள். மாறாக எரிச்சல் கொள்வார்கள். இத்தகையோர் சுகபோகங்களையே விரும்பி அலைபவர்கள்.
நல்ல நியதிகளுக்குக் கட்டுப்பட்ட தூய மனமுடையவர்கள் தாங்கள் தங்களுடைய மனத்தை எதிரெதிராய் பார்த்துப் பக்குவப்படுத்தி அந்த மனத்தை ஞானத்திற்கு அடிப்படையாக்கி நல்ல காரியங்களில் ஈடுபடுத்துகிறார்கள்.
விவேகியானவன் தன் சத்துருக்கள் தன்னை வைது திட்டினாலும் மெளனமாகவே இருப்பான். வாயினால் மட்டும் அல்ல. மனத்தினாலும் மெளனமே சாதிப்பான். ஏன்? அவரவர்களுடைய உணர்ச்சிகளுக்கு ஏற்ப, குணங்களும் செயற்பாடுகளும் அமையும். வருந்தி என்ன பயன்?
இதற்கு எடுத்துக்காட்டாக வால்ட் விம்மன் தனது கவிதைகளை இகழ்ந்தவர்களைப் பற்றி, “அவர்களுடைய சுபாவத்திற்கு அதுதான் சரி” என்று. சொன்னதை மேற்கோள் காட்டுகிறான் பாரதி. ஞானியானவன் தன் கருத்தை, சரி என்றும், அதை உலகத்தவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் சண்டை போடமாட்டான். வாக்குவாதம், சண்டை, மனஸ்தாபம் இவைகளை உண்டுபண்ணும் சுபாவம் தன் சத்துருக்களோடு மட்டுமல்ல, சிநேகிதர்களையும் சத்துருக்களாகச் செய்து வருகிறது.
விவேகியோ தான் அன்போடு காட்டிய மெளனத்தால், சிநேகிதர்களின் வாத்சல்யத்தைப் பலப்படுத்துகிறதோடு விரோதிகளையும் சிநேகிதர்களாக்கிக் கொள்கிறான்.
இத்துறையில் வெற்றி பெற்று விளங்கியவர் சீன நாட்டுத் தத்துவ ஞானி கன்பூவியஸ். நமது நாட்டில் புத்த பகவான். ஏன்? ஏசுவின் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு. அன்பும் ஞானமும் கூடிப் பிறந்த மெளனம் இம்மையிலும் வெற்றிகளைத் தரும். இன்ப அன்பு கலந்த அமைதியையும் தரும்.
பாரதி, பக்தி நெறியில் நம்பிக்கை உடையவன். ஒருவனுக்கு மெய் பக்தி உதயமானதும் அவன் எவருக்கும் எளியவனாய் எவற்றையும் நேசிக்கிறான்.
ஆகவே, அவன் எவருக்கும் அன்பு, தியாகம் அடிப்படையில் அடிமையாகிறான். அவன் எந்த உயிருக்கும் தொண்டு செய்தலை ஆர்வ விருப்புடன் செய்வான். தனக்கெனச் சிறிதும் பெருமை தேடாது எவருக்கும் பெருமை உண்டுபண்ணுகிறவன் எவனோ, அவனே எல்லோரும் ஏத்திப் புகழும் ஈசுவரன், பெயருக்கு தகுதியானவன். விருக்ஷம் தனது சுபாவத்தை காட்டியே வருகிறது. நாம் எப்படி நடத்திய போதிலும் அது கவனிக்கிறதும் இல்லை; கவலைப்படுவதும் இல்லை. கிளைகளை வெட்டினாலும் கிளைத்து வளர்ந்து நமக்கு நிழல் கொடுக்கும் சுபாவத்தை விடுகிறதில்லை. இதுவே, பக்தியின் இலக்கணம்.
இந்த மாதிரிப் பக்தியின் வளர்ச்சி நாட்டுக்கு நல்லது. இன்று பக்தி, யாத்திரைகளாகவும் திருவிழாக்களாகவும் தண்ணிர் தெளிக்கும் விழாக்களாகவுமே (கும்பாபிஷேகம்) அமைந்து வருகின்றன. பாரதியின் தடத்தில் பக்தி நெறி வளர்ந்தால் பாரதம் சிறக்கும்.
நம்முடைய தேசமானது இன்று பல அல்லல்களுக்கு ஆளாகியுள்ளது. இந்த நிலையில் நாம் வாளா இருக்கலாமா? “கிராமத்திற்குக் கஷ்டம் வந்தால் குலத்தையும் விட்டுவிடு” என்று சொல்லியிருக்கவில்லையா?
நமது பாரத ஜாதிக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஒரு பிரிவு இது நீதியா? இந்தத் தாழ்த்தப் பட்டவர்களை நாமே நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டாமா?
தாழ்ந்த எரு, குப்பைகளைத் தள்ளிவிட்டால் நல்ல புஷ்பங்களும் பயிர்களும் விளையுமா? கரியைத் தள்ளி விட்டால் நெருப்பு உண்டாகுமா?
ஆதலால், பெற்றோர்களே! பாரதியின் தடத்தில் உங்கள் பிள்ளைகள் யாவரையும் தேசத்திற்கு நன்மை செய்ய அனுப்புங்கள்! பாரதி, காலத்தை உருவாக்கிய கவிஞன்! பாரதி ஒரு சகாப்தம் பாரதியின் சிந்தனைகள் உரைநடையில் சிறந்து விளங்குகின்றன. பாரதி, ஒன்றுபட்ட இந்தியாவை - பிரிக்கப்படாத இந்தியாவை தரிசனம் செய்கிறான்! நம்மையும் தரிசனம் செய்யுமாறு செய்கிறான்.
பாரதத்தில் வாழும் மக்கள் அனைவரும் ஒரு ஜாதி! அதுதான் பாரத ஜாதி என்று கூறுகிறான். பாரதம் ஒரு பழைய நாடு பாரத நாட்டில் ஒரு நவீன உணர்ச்சி வளர்ந்து வருவதை பாரத உணர்ந்து வரவேற்கிறான். தேச பக்தியின் அவசியத்தை உணர்த்துகிறான். பாரதி, இந்து சம்பிரதாயத்தை நம்பி வரவேற்கிறான். ஆனால் சமத்துவத்திற்கும் - சமரசத்திற்கும் உடன் படாதவையை மறுக்கிறான்.
பாரதியின் பேச்சும் மூச்சும் சமத்துவம், சமரசம் ஆகிய கொள்கைகளாகும். சமத்துவம், சமரசம் பாரதியின் தடம்! பாரதி தடத்தில் நாம் அனைவரும் செல்ல வேண்டும்!
பாரதியின் தடம் அன்பு, அறம், ஆண்மை, வீர்யம், சமத்துவம்! இந்தத் தடத்தில் அடிமாறாது நாம் சென்றால் நாடு வளரும்!
3. அண்ணாவும்
இலக்கியப் படைப்பும்
* * *
இந்திய நாட்டு வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பொற்காலமாகும். இந்த நாடு விடுதலை பெற்றதும் இந்த நூற்றாண்டே இணையற்ற மனித குலச் சிற்பிகளான அமரர் அண்ணல் காந்தியடிகளும், அமரர் நேருஜியும் வாழ்ந்தது இந்த நூற்றாண்டேயாம்.
தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வரும் நம்முடைய நாட்டுக்கு அண்ணல் காந்தியடிகளும், அமரர் நேருஜியும் ஓருருவம் கொண்டாற்போல திகழ்ந்த ஈடு இணையற்றவராக விளங்கும் அருமை அண்ணா தோன்றியதும் இந்த நூற்றாண்டேயாம்.
இந்த நாட்டு வரலாற்றில் அறிஞர் அண்ணா ஒரு மையம்; ஒரு திருப்புமுனை, அவர் ஒரு புதிய தலைமுறையைத் தோற்றுவித்து இருக்கிறார். அவர் கண்ட தலைமுறை - தம்பியருலகு - தமிழுலகு இணையற்ற உலகு, அன்பில் விளைந்த உலகு, ஆர்வம் நிறைந்த உலகு, நண்பென்னும் நாடாச் சிறப்பு நிறைந்து நிலவும் உலகு. இத் தலைமுறை தாழாது. உயர்வதாக! தமிழுலகு சிறப்பதாக! அறிஞர் அண்ணா இயல்பிலேயே சிந்தனையாளர்; நுண்மாண் நுழைபுலம் மிக்கவர். மணம் வீசும் மலர்; தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் பாசறையில் புடம்போடப்பட்டவர். அதனால் அந்த மலர் பொன் மலராயிற்று.
பொன் மலரில் புதுமை மணமும், பொதுமை மணமும் கமழ்ந்து வீசுகிறது. உலகியல் முறைப்படி தந்தையினும் தனயன் சிறந்து விளங்குகிறார்; தந்தைக்குப் பெரு மகிழ்வு ஊட்டுகிறார்; பொது மக்களின் புகழ்மாலையை வாங்கிச் சூடுகிறார்.
அறிஞர் அண்ணா புதுமையில் வேணவா உடையவர். ஆயினும் பழைமையை வெறுப்பவரல்லர். இங்ஙணம் கூறுவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? அண்ணாதுரைக்கா பழைமையில் வெறுப்பில்லை; இது புனைந்துரை! பொய்! என்று கருதுகிறீர்களா? நீங்கள் அப்படிக் கருதுவதில் தவறில்லை. ஏன்? இந்த நாட்டிலேயே பலர் அப்படித்தான் கருதுகின்றனர்.
ஆனால் நாம் கூறுவது உண்மை! சத்தியம்! வெறும் புகழ்ச்சியில்லை! அவர் பழைமையின் வெறுப்பாளர் அல்லர். ஆனால், உதவாப் பழைமைகளை ஒதுக்குகிறார்; நம்மையும் ஒதுக்கத் துரண்டுகிறார். உடைந்த பானையை, கிழிந்த பாயை, உயிரற்ற பிணத்தை யார்தான் பேணுவர்? அவை பயன்படா. அவற்றை ஒதுக்குவதே வாழ்க்கைக்குச் சிறப்பு.
அதுபோலவே நமது வாழ்க்கையின் வளத்திற்கும் ஏற்றத்திற்கும் பயன்படாத பழைமையை ஒதுக்குகிறார். “இறந்தது விலக்கல்” ஆன்றோர் மரபுதானே! புலவர்கள் போற்றும் புறநானூறு, கற்றவர்கள் போற்றும் கலித்தொகை, வையகம் போற்றும் வள்ளுவன் தந்த திருக்குறள் முதலியன இன்று தோன்றியனவா? நேற்று தோன்றியனவா? பல நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பழைமையான நூல்கள் அல்லவா? அந்த நூல்களை அறிஞர் அண்ணா பாராட்டவில்லையா? இந்த வகையில் தந்கைக்கும் தனயனுக்கும்கூடி முரண் பாடில்லையா?
தமிழினத்தை, தமிழ் சமுதாயத்தை வளர்த்து வாழ வைக்கும் எந்த ஒரு கருத்தையும் அது எப்பொழுது தோன்றியதாயினும், எங்கே பிறந்ததாயினும் எத ன் பெயரில் பிறந்ததாயினும் அறிஞர் அண்ணா தாராள மாக ஏற்றுக் கொள்கிறார்.
நம்முடைய சமுதாயத்துக்குத் துணை செய்யாததும், துணை செய்யாததோடு மட்டுமன்றி, ஊரும் கறையான் மரத்தை அரிப்பது போலவும், என்புருக்கி போலவும் நம்முடைய சமுதாய முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள எந்த ஒரு கருத்தையும் காலம், களம், இடம் பாராமல் உறுதியுடன் எதிர்க்கின்றார்,
சமூக அநீதிகளோடு அவர் சமரசம் செய்துகொள்ள விரும்பாதவர். ஆதலால் வாழ்க்கைக்கு உதவாத, பழமைக்கு, அவர் பகைவரேயாம். வாழ்க்கையை அறிவாலும் ஆர்வத்தாலும் திறனறிந்த உழைப்பாலும் தூண்டி வளர்க்கும் எந்த ஒரு கருத்துக்கும் அறிஞர் அண்ணா ஒரு கொழு கொம்பாவார்.
அறிஞர் அண்ணா ஒரு சிந்தனையாளர்; சொற்பொழிவாளர்; எழுத்தாளர்; செயல் தொண்டர் . அவருடைய இலக்கியப் படைப்பு மரத்துப்போன பழைமைக்கு கல்லறையாகும்; பூத்து வரும் புதுமைக்கு பூங்காவாகும்.
அவர் இலக்கியத் துறையிலும் சாதாரண மக்கள் பக்கத்திலேயே நின்றார். அவர் காப்பியங்கள் செய்யவில்லை; தோத்திரங்கள் செய்யவில்லை; துதி நூல்கள் செய்யவில்லை.
எளிய நடையில் அன்றாடப் பிரச்சனைகளை எழுதுகிறார்; கதையாக எழுதுகிறார்; கடிதமாக எழுதுகிறார்: கட்டுரையாக எழுதுகிறார்.
அண்ணாவின் படைப்பில் அன்றாடப் பிரச்சனைதானா? அன்றாடம் என்பது தனித்து நிற்பதில்லையே! அன்றாடத்திலேயே நேற்றும் உண்டு, நாளையும் உண்டு. அவர் தம் மனோ நிகழ்ச்சிகளை - அதாவது நேற்று, இன்று பலாபலன்களை, மனப் போராட்டத்தைக் ‘குமாஸ்தாவின் பெண்’ என்ற கதையில் காந்தா என்னும் பாத்திரத்தில் காண முடிகிறது.
அறிஞர் அண்ணாவின் படைப்புக்கள் பக்கங்கள் நிறைந்த புத்தகங்களாக வரவில்லை. பக்கம் பக்கமாக எழுதி, படிப்பவர்களுக்கு அலுப்பை உண்டாக்காமல், சுருக்கமாகவும் நேரிடையாகவும் எடுத்துக்கொண்ட கருத்துக்களைச் சொல்லும் கதை நூல்கள் அருமையேயாகும். அதை அண்ணாவின் கதைகளில் காணலாம்.
அறிஞர் அண்ணா, உலகம் மிகச் சிறந்த பல்கலைக் கழகம் என்ற மூத்த கருத்தின் முதல்வராகத் திகழ்கின்றார். அவர் நிறைய உலகத்திலிருந்து படித்துக் கொள்கிறார். நம்மையும் படிக்கத் தூண்டுகிறார். ‘குமாஸ்தா வின் பெண்’ணில் இராகவன் மூலம் ‘உலகத்தைவிட உன்னதமான புத்தகம் இருக்கிறதா?’ என்று நம்மைக் கேட்கிறார்.
அண்ணா அவர்கள் சமூகத்தின் மனப் போக்குகளை ஓரளவு தெளிவாகவே புரிந்து கொண்டிருக்கிறார். “சமூகத்தினர் கடலின் ஆழத்தைக் கண்டுபிடிக்க விரும்புவதில்லை; அலைகளையே எண்ணி அலமருகின்றனர்; நெஞ்சினோடு நெஞ்சு உற்று நோக்கும் உணர்வின்றி முலாம் பூசிய முகத்தோடு மோதுகின்றனர்.
மனித சமூகத்தை ஏமாற்றி விடுவதென்பது கெட்டிக்காரத்தனமான காரியமல்ல. ஏனெனில் அவர்கள் எளிதில் ஏமாறக்கூடியவர்களாக இருக்கிறார்கள். உயர்வுக்குப் பயன்படாத உதட்டில்,உலாவும் இரக்க உணர்ச்சிகளே உள்ளன.
கண்டும் கேட்டும் போடும் பிச்சைகளில் மகிழும் மக்கள் மனப்போக்கு மாறாத வரையில் சமூகத்தில் நிலையான வளமான பொருளாதாரப் புரட்சியைத் தோற்றுவிக்க முடியுமா?” என்று பார்வதி பி.ஏ. யின் மூலம், நம்மைக் கேட்கிறார்.
“ஆடம்பரத்திலும் வெளி வேஷத்திலும் இவ்வளவு சுலபத்திலே ஏமாந்து போகும் இந்த மக்களைக் கொண்டு எப்படி சமூகப் பொருளாதாரப் புரட்சியை உண்டாக்க முடியும்?” என்று பார்வதி ஏக்கம் கொண்டாள்.
சமூகத்தில் பல வேடிக்கை மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தொழில் இல்லை. அவர்களுடைய வயிறு வளர்வது பலருடைய அறியாமையிலேயே. ஆனாலும் ஆர்ப்பாட்டத்திற்கு பஞ்சமில்லை. அவர்கள் மரியாதைக்கு மரியாதை தரமாட்டார்கள். அவர்கள் மரியாதைக்கு மிரட்டையும், மிரட்டுக்கு மரியாதையும் தருவார்கள்.
ஐயோ, பாவம் இப்படி நாம் அன்றாடம் பலரைச் சந்திக்கிறோம். இத்தகையவர்களைச் சந்தித்தவுடன், அண்ணாவின் படைப்பாகிய ‘பெங்களுர் அம்பக் ஆறுமுகம்’ இவர்தானோ என்று கருதும்படி இருக்கிறது. அவ்வளவு அற்புதமாகச் சித்தரிக்கிறார்.
சென்ற பல நூற்றாண்டுகளைவிட இந்த நூற்றாண்டு பெருமையும் புகழும் பெற வேண்டுமென்ற வேட்கை மலிந்து வளர்ந்துள்ள காலம். பலர் பஞ்சாங்கம் பார்ப்பதை மறந்துவிட்டனர்.
ஆனால், பத்திரிகைகளில் பெயர் வருகிறதா? என்று பார்க்கத் தொடங்கிவிட்டனர். வரவில்லையானால் ஏக்கம்! பெருமூச்சு! அத்தகையவர்களுக்கு ‘பெங்களூர் அம்பக் ஆறுமுகம்’ போன்றவர்களின் விளம்பர கமிஷன் ஏஜெண்டுகளின் மாநாடுகள் கூடுகின்றன.
யார் பெயரால்? தொழிலாளர்களின் பெயரால்! கூடுவது யார்? மச்சு வீட்டுக்காரர்கள்! பேசுவது யார்? “எல்லோருக்கும் கஷ்டமிருக்கிறது; சகித்துக் கொள்ளுங்கள்” என்று புது கார் வாங்க முடியாததை பிலாக் கணமாகப் பாடும் செல்வர்கள்!
இவர்களுக்குத் தாராளமாக ‘அம்பக் ஆறுமுகம்’ என்பவர் ‘இரட்சகன்’ என்ற பட்டத்தை வாரி வழங்குகிறார். ஆமாம், அவர் பிழைப்பு ஓடுகிறதல்லவா? அவர் வரையில் இரட்சகன்தானே!
ச-6 இத்தகைய போலி விளம்பரப் போக்குகளை பார்வதி பி.ஏ.,யில் அண்ணா சித்தரிப்பதைப் பார்த்தால் வயிறு குலுங்கச் சிரிக்க வேண்டியதிருக்கிறது. விரசமில்லாமல் இத்தகு வேடிக்கை மனப்போக்குகளைச் சித்தரிப்பதில் அண்ணா வல்லவராக விளங்குகிறார்.
இனம், இனத்தைச் சாரும். போலி மனிதர்கள் போலி மனிதர்களையே சார்வார்கள். இது ஆச்சரியப்படத் தக்கதல்ல. இருவருக்கும் வியாபாரம் ‘புளுகு’ தானே ஒருவர் செல்வத்தோடு, ‘புளுகு’ வியாபாரம் செய்கிறார்: புகழ் வேட்டையாடுகிறார். .
இவர் அண்ணாவின் படைப்பாகிய ஆலாலசுந்தரர். பிறிதொருவர் ஆலால சுந்தரரின் வாரிசாகத் துடிக்கும். பார்த்திபன். ஆலாலசுந்தரர், பழைய மாதிரி மோசடிக்காரர்; பார்த்திபன் நவீன மாதிரி மோசடிக்காரர்.காரணம் இவர் ஒரு பத்திரிகை ஆசிரியரும் கூட. பத்திரிகை ஆசிரியர் மட்டுமா? சொற்பொழிவாளர்; கலா ரசிகர்; நவீன ஆயுதங்களைக் கையாளுபவர்.
இவர்களுக்கு பெங்களுர் அம்பக் ஆறுமுகத்தைப், போன்றவர்கள் தானே உறவாக முடியும் அம்பக் ஆறுமுகமோ வெறும் வாயால், படி படியாக அளப்பவர்; விளம்பரப் பிரியர்; ஆனால் கொஞ்சம் யோக்கியர்; பிறருக்கு விளம்பரம் செய்து தனக்கும் விளம்பரம் தேடுபவர். இவர்களின் கூட்டுறவை அண்ணா சிரிக்கச் சிரிக்கப் படைத்திருக்கிறார்.
அழகான உவமை ஒன்றும் எடுத்துக்காட்டுகிறார். “சேற்றிலே தானே தவளை இருக்கும் தவளைக்கும் சேறுதானே கிடைக்கும்! அது போலத்தான் அம்பக் ஆறுமுகத்துக்கு ஏற்ற ஆள்தான் பார்த்திபன். பார்த்திபனுக்கு ஏற்ற ஆள்தான் ஆறுமுகம்” என்று எழுதிச் சிரிக்க வைக்கிறார்; சிந்தனை செய்யத் தூண்டுகிறார். இச்சையுணர்ச்சிகளுக்கு ஏற்ற சேர்க்கையைத் தேடாமல் உயர்வு பொருந்திய - வளர்ச்சிக்குரிய சேர்க்கையை நாடிச் செல்ல வழி நடத்துகிறார்.
சமூகத்தின் வளர்ச்சிக்காகப் பல உயர்ந்த கருத்துக்களைப் பலர் தந்திருந்தாலும் அவை முறையாக வளரவில்லை. செயல்படுத்தப் பெறவில்லை, என்று அண்ணா கருதுகிறார். புராணங்களே ஆனாலும் அவற்றிலுள்ள கருத்துக்கள் பல நாளாவட்டத்திலே பொது அறிவு பரவப் பரவ மறைந்து விடுவதாகவும், சில மறைக்கப்பட்டு விடுவதாகவும் கூறி, சில கருத்துக்கள் உரம் குறையாமல் உள்ளன, ஏன்? என்றும் கேட்கிறார்.
இவற்றிற்குச் சிலர் உரம் தருகிறார்கள் என்று கூறி ஏனென்றும் காரணம் காட்டுகிறார். அப்படி உரமிட்டு வளர்க்கப்படும் கருத்துக்கள் எவை என்றும் எடுத்துக்காட்டுகிறார்.
ஒரு சிறு கூட்டத்தின் சுகபோக வாழ்க்கைக்கு வழி செய்கின்றனவும், ஆடாமல் அசையாமல், ஓடாமல் உழைக்காமல் எக் கவலையுமின்றி வாழ வழி வகுக்கின்றனவும் ஆகிய கருத்துக்களை எந்தப் புதுமையும் தாக்காமல், வளரும் காலத்தினாலும் மாற்ற முடியாமல் அவை இம்மியும் கெடாதபடி ஓயாது உழைத்து கண்ணும் கருத்துமாக இருந்து பாதுகாத்துக் கொள்கின்றனர்.
நல்லூழ் இன்மையின் காரணமாக, பிரச்சா எந்திர மும் இந்தச் சிறு கூட்டத்தினரின் ஏகபோக இயக்கமாக இருக்கிறது என்று எடுத்துக் காட்டியுள்ளார். இந்தக் கூற்றுக்களின்படி புராணங்களின் மீது நேரிடையாக அண்ணாவுக்கு வெறுப்பில்லை யென்பதையும், அவை காலத்திற்குக் காலம் சமூக வளர்ச்சிக்குத் துணை செய்யாமல், சமூக அநீதிகளுக்கு அரண் செய்து இருப்பதால், அவற்றை எதிர்க்க வேண்டிய அவசியத்தில் அண்ணா இருக்க வேண்டியதிருக்கிறது என்று உணர முடிகிறது. இதை, “புராண மதங்கள்” என்ற புத்தகத்தை ஆழப் படித்தால் தெளிவாக உணர முடியும்.
இந்திய சமூகத்தில் குறிப்பாக இந்து சமய சமூகத்தில் மண்டிக் கிடக்கும் ஜாதீய மனப் போக்குகளுக்கு அறிஞர் அண்ணா ஒரு சவுக்கு, ஒரு வெடிகுண்டு. அவர் உண்மையிலேயே ஜாதிக் கொடுமைகளை எண்ணும்பொழுது கொதிப்படைகிறார்; குமுறுகிறார் என்பதை அவருடைய கதாபாத்திரங்கள் மூலம் உணர முடிகிறது.
ஜாதியில் கீழ் ஜாதியாகவும், பணத்தில் ஏழையாகவும் மனிதன் இருந்துவிட்டால், அவனுடைய சிறு தவறுகளுக்கும் கூட ஏச்சும் கண்டனமும் கிடைக்கின்றன. ஏன்? முடிந்தால் தண்டனைகளும் கூடக்கிடைக்கின்றன.
ஆனால் ஜாதியால் உயர்ந்தவனோ, பணத்தால் உயர்ந்தவனோ பழிபாவங்களும் படுகொலையும் செய்தாலும் கூட சமூகம் மூடி மறைக்கிறது; பாராட்டியும் பேசுகிறது. ஏழைகள் பால் - கீழ் ஜாதியினர் பால் இரக்கம் என்று ஒன்றுகூட காட்ட மாட்டார்களென்று ஜாதிக் கொடுமைக்கு ஆளான உத்தமியை பார்வதி தேற்றுமிடம் நினைந்து நிலைந்து உருகத் தக்கதாக அமைந்திருக்கிறது.
உயர் ஜாதிக்காரர்கள், கீழ் ஜாதியை முற்றிலும் ஒதுக்கினாலும் பரவாயில்லை. தேவைப்படும்பொழுது இச்சிக்கிறார்கள். சுவைத்து அனுபவிக்கிறார்கள்! எச்சில் ஆக்குகிறார்கள். பலியான பிறகு உயர் ஜாதித் துடுக்கை காட்டி ஒதுங்கிக் கொள்ளும் கொடுமையை அண்ணா நாடி நரம்புகளும் இரத்தமும் கொதிக்கும்படி கண்டிக்கிறார்.
“பழி வருகிறதே என்று பதறித் துடித்துக் கேட்டால் சுவைத்து அனுபவித்த பிறகு மதம் காட்டுகிறான். மதம் மாற உடன்பட்டால், மாறி வந்தால் முன்னுள்ள கீழ் ஜாதியிலேயே சேர வேண்டுமாம்! இது என்ன நியாயமோ? இந்த அநீதியை தில்லை நடராஜனும், சீரங்க நாதனும் தாங்கிக் கொண்டிருப்பது எதனாலோ நமக்குப் புரியவில்லை” என்று கனல் கக்கக் கண்டிக்கிறார்.
‘பார்வதி பி. ஏ.’யில் இடுக்கண் உற்ற நிலையிலும் கூட, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கூட ஒரு தமிழ்க் குழந்தையை - ஜாதி, இனம், மொழி, எண்ணம் படியாத பச்சைக் குழந்தையை ஏற்று வளர்க்க பெங்களுர் பார்ப்பனச் சேரி ஆண்டாள் அம்மாளுக்கு மனம் துணியாத ஜாதி வெறியை அண்ணா சுவையாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
தமிழ்க் குழந்தையை வளர்ப்பது பாவமாகவும், பொய் சொல்லிக் கணவனை ஏமாற்றுவது புண்ணியமாகவும் தெரிகிறது. அந்தப் புண்ணியவதிக்கு, “சூத்திரர் வீட்டுக் குழந்தையை என் குழந்தேன்னு கூறி எங்க ஆத்திலே வளக்கிறது மகாபாவ காரியம்னு நேக்கு பயமாயிடுத்து. அதுக்காகத்தான் அவரிடம் சொப்பனம்னு கதை சொன்னேன்” என்று ஆண்டாளைப் பேச வைத்து ஜாதி அமைப்பின் இறுகிய நிலையைப் புலப்படுத்துகிறார். “உயர் ஜாதிக் குடியினரும் சிறப்பாக சமரச ஞானம் பேசுவார்கள். அதில் கைதேர்ந்தவர்கள் அவர்கள். ஆனால், எல்லாம் பேச்சளவில்தான். செயலில் இம்மியும் இல்லை. காரணம், இந்த பாகுபாட்டு முறைகள்தான் சிலரை வாழ்விக்கிறது. அதை எப்படி இழப்பார்கள்?” என்று கேட்கிறார்.
அண்ணா சமுதாயத்தில் நிலவும் ஜாதி வேறுபாட்டு முறைகளை மாற்றியமைக்க விரும்புகிறார். ஆனால், பொருளியல் சமத்துவ சமநிலைச் சமுதாயம் அமையாத வரை ஜாதி வேறுபாடுகளை முற்றிலும் நீக்க முடியாது என்பதையும் உணர்கிறார்.
ஆதலால் அவர் தமது இணையற்ற இலட்சியமாக சமதர்ம சமுதாய அமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதை அவருடைய படைப்புகள் தெளிவாகப் பேசுகின்றன.
மனித சுபாவம் என்பது இயற்கையுமல்ல; தெய்வமுமல்ல. அது சூழ்நிலையால் உருவாகி வளர்வதேயாகும். இதனைத் திருவள்ளுவரும் “இனத்துள்ளதாகும் அறிவு” எனறார்.
குமாரைப்பற்றி அவன் ஏழை - அவன் நிதியை எடுத்து ஏப்பம் விட்டுவிடுவான் என்றும், அது ஏழைகள் சுபாவம் என்றும் செல்வச் சீமான் பார்த்திபன் சொல்லுகின்றான். அறிஞர் அண்ணா தமது அருமையான படைப்பாகிய பார்வதியின் மூலம் உயிரோட்டமுள்ள உணர்வுடன், குபேரபுரியின் வாதத்தை எதிர்த்து, வாதாடுகிறார்.
“அந்தச் சுபாவம், பணக்காரத் தன்மை ஒருபுறமும் வறுமை மற்றோர்புறமும் இருப்பதால்தான் உண்டாகும். பனியிலே குளிருண்டாகும். வெய்யில் உடல் எரிச்சலைத் தருகிறது. வறுமையும் அப்படித்தான். அதை அனுபவிப்பவர்களுக்கு வேதனையூட்டி அவர்களின் சுபாவத்தை மாற்றுகிறது.
தர்ம பிரபுக்கள் என்று சிலரும், தரித்திர பூச்சிகள் என்று பலரும் இருக்கும் வரையில் சுபாவமும் அந்தப் பொருளாதார நிலைக்கு ஏற்றபடிதான் அமையும். அது குமாரின் குற்றமல்ல. மேலும் குமாரின் சமதர்ம பற்று ஆழமானது” என்று வழக்காடுகிறாள் பார்வதி.
அண்ணாவின் படைப்பில் உத்தமி மிதவாதப் போக்குடையவள். அவள் விதியை நொந்து கொள்கிறாள். அவள் உலகத்தின் போக்குக் கண்டு சமாதானம் செய்து கொள்கிறாள். “மழை பெய்யும் போது ஊருக்கெல்லாம் குடை பிடிக்க முடியுமா?” என்று அறியாமையின் வடிவமாக - ஆனால் வாதத் திறமை போலப் பேசுகிறாள்.
ஆனால், பார்வதியின் வாயிலாக அறிஞர் அண்ணா பேசுகிறார்; சமதர்மத்துக்காக வழக்காடுகிறார்; வாதாடுகிறார். “மானைத் தின்று புலி கொழுப்பது. போல் ஏழையின் உழைப்பை உறிஞ்சி முதலாளி கொழுக்கிறது யாருக்குத் தெரியும்? ஈவு இரக்கம் தயவு தாட்சண்யம் என்பவைகளை படுபாதாளத்திலே போட்டு விடுபவர்கள் தான் நாலடுக்கு, ஐந்தடுக்கு மாளிகையிலே உலாவுகிறார்கள்.
நமக்கு என்ன என்றிருக்க இந்த உண்மையை உணர்ந்த பிறகு மனம் எப்படி இடம் கொடுக்கும். தொட்டிலிலே தூங்கும் பாலகனை, கொட்டிடத் தேள் போனால், தேளை அடிக்காதிருப்பது நியாயமா?” என்று பார்வதியின் மூலம் நியாயம் கோருகிறார். குபேர உலகத்தைச் சார்ந்த மனிதர்களைப் பார்த்து. அறிஞர் அண்ணா!
அரசியல் வானில் காரல்மார்க்ஸின் சிந்தனையும், வள்ளுவத்தின் சிந்தனையும் பிரஞ்சு புரட்சியும், சமதர்மச் சிந்தனையைத் தூண்டி விட்டிருக்கின்றன . இன்று எங்கும் அந்தப் பேச்சு செல்வச் சீமான்களும் சமரசம், சன்மார்க்கம், சமதர்மம் இவைபற்றி ஓயாது பேசுகின்றனர். இஃது உண்மையான ஆர்வமா? இல்லை என்றார் அறிஞர் அண்ணா.
சில சொற்களால் இதைக் கேலி செய்கிறார். “சீமானின் சமதர்மப் பிரச்சாரம் ஓய்வு நேர உல்லாசம்” என்கிறார். அதே நேரத்தில் ஏழைகளைப் பார்த்து எச்சரிக்கை செய்கிறார். அவர் எச்சரிக்கை சமதர்மம் ஒன்றே ஏழைகளின் வாழ்க்கைத் தோணி என்பதாகும்.
புதுதில்லியில் 1947 - ல் அண்ணல் காந்தியடிகள் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் சமூகத்தைப் பிடித்திருக்கின்ற ரோகத்தைப் பற்றிப் பேசினார். அதே கருத்தை அறிஞர் அண்ணா அவர்கள் லாவகமாக பிரதிபலிப் பதைப் பார்க்கிறோம். “செல்வம் சமூகத்தில் சிலரிடத்தே. குவிவது காசநோய் போன்றது. காசநோய் பரவிய உடல் இளைக்கத்தானே செய்யும்?” என்று வினாவை எழுப்புகிறார்.
அமரர் நேருஜி “எல்லோருக்கும் ஒரு வாக்கு” என்பதினாலேயே பூரண மக்களாட்சியும் சமதர்ம சமுதாயமும், சமூக ஒருமைப்பாடுடைய சமுதாயமும் அமைந்துவிடாது” என்று தெளிவாகக் கறியுள்ளார். அறிஞர் அண்ணாவும் இந்தக் கருத்தில் தெளிவாகவே இருக்கிறார்; உறுதியாகவும் இருக்கிறார்.
அதனால்தான் போலும் அவர் கட்சி, நிறைய. நன்கொடைகள் வாங்கவில்லை. “குடியரசு முறையையும் வைத்துக்கொண்டு சமூகத்திலேயும், தொழில் உலகிலேயும் ஆதிக்கக்காரர்களுக்குப் பிடி இருக்கும் படியும் அனுமதித்துவிட்டால் புத்தியுள்ள ஒரு மன்னனே கூட குடியரசுக் கோட்பாடு பேசும் அமைச்சர்களை ஆட்டிப் படைக்க முடியும்” என்று இரண்டுபட்ட கருத்துக்கு இடமின்றி “எல்லோரும் இந்நாட்டு, மன்னர்” என்ற நூலில் எழுதியுள்ளார்.
அறிஞர் அண்ணா கசப்பு மருந்தை கருப்பட்டியுடன் கலந்து கொடுப்பதைப் போல தனது சீர்திருத்தக் கருத்துக்களை நகைச்சுவையுடன் கலந்து படைத்துக் காட்டுகிறார். பெண்கள் முன்னேற்றத்தில் அறிஞர் அண்ணாவுக்குத் தனி ஈடுபாடு உண்டு.
‘ரோமாபுரி ராணிகள்’ என்ற அறிஞர் அண்ணாவின் படைப்பு விரச உணர்ச்சிகள் நிறைந்தது என்ற கருத்து உண்டு. அது உண்மையும் கூட. ஒரு எதார்த்த: நிலைமையை எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்படும் பொழுது எழுத்தாளன் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறான்.
அறிஞர் அண்ணாவின் நிலைமையும் இதுவே என்று கருதுகிறோம். ஆயினும் தனது படைப்புத் திறனில் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளார். இந்த வித்தியாசத்தை “ரோமாபுரி ராணி”யைப் படிப்பவர்களும் “பார்வதி பி.ஏ.”யைப் படிப்பவர்களும் தெளிவாக உணர முடியும்.
முன்னையதைப் படைக்கும் காலத்தில் அவர், தீமையை மட்டும் கண்டு தீமையை மட்டும் விமர்சித்து அழிக்கும் முகாமில் இருந்தார். பின்னர் அவர் தீமையை அழிப்பதோடின்றி நன்மையை உருவாக்க வேண்டுமென்ற கருத்தில் ஈடுபட்டார். இந்த வளர்ச்சி மனப்போக்கை ‘பார்வதி பி.ஏ.’ என்ற கதையில் நாம் தெளிவாகக் காண்கிறோம். ‘பார்வதி பி.ஏ.’யில் விரச உணர்ச்சியே இல்லை. அறிவு உணர்வுகளே தலைதூக்கி நிற்கின்றன. சமூகப் போராட்டங்களே வேரூன்றி உள்ளன. இஃது அவருடைய தலையாய படைப்பு. தமிழர்கள் தவறாது படிக்க வேண்டிய படைப்பு.
“ரோமாபுரி ராணிகள்” படைப்பிலும் மிகச் சிறந்த இனிய தத்துவங்களை எடுத்துக்காட்டத் தவறிவிட வில்லை. நோயை மட்டும் எடுத்துக் காட்டவில்லை. மருந்தையும் எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் வெறுப்பு என்ற நோய் பிடித்த விமர்சகர்கள் அவர் மருந்தைக் கண்டு காட்டியதை எடுத்துக்காட்டத் தவறி விட்டார்கள்.
“பெண்களுக்கு சரியான சமத்துவமும், சுதந்திரமும் வாய்ப்பும், வசதியும் கிடைக்கும் வரை அவர்களுடைய அழகு ஆபத்தாகவே முடிகிறது. ஆனாலும் ஏழை அபலைகளாக இருக்கிற பெண்கள் இந்த ஆயுதத்தை உபயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் தவிக் கின்றார்கள்” என்று எழுதிக் காட்டியுள்ளார்.
“ரோமாபுரி ராணி”களில், பெண்களைச் சம உரிமையுடன் கருதாமல் இன்பத்துக்குரிய எண்ணரிய பொருள்களோடு கருவி போலக் கருதுகிற மனப் போக்கை அண்ணா, பார்வதி பி.ஏ.,யில் இடித்துரைக்கின்றார்.
அறிஞர் அண்ணா சமயத்துறையில் புரியாத புதிராக இருக்கிறார். இறைவனைப் போலவே அவரும் கேள்விக் குறியாகவே திகழ்கிறார். இறைவனை எப்படி ‘இப்படியன் இவ் வண்ணத்தன்’ என்று எழுதிக் காட்ட முடியாது என்று சொன்னார்களோ, அதுபோலவே அறிஞர் அண்ணாவும் விளங்குகிறார்.
இஃது ஒரு பொதுவான உண்மையே. ஆனால் உண்மை அப்படியல்ல. அண்மைக் காலமாக அவரி அதனைத் தெளிவாக வெளிப்படுத்தி வருகிறார். “சமயம் வேண்டுமா, வேண்டாமா என்பது அல்ல எங்கள் கேள்வி. அது எப்படியிருக்க வேண்டும் என்பதே எங்கள் கேள்வி” என்று உரத்த குரலில் கூறி வருகிறார்.
அண்மைக் காலமாக என்பதால் வாக்குகளுக்காகவும் ஆட்சிக்காகவும் என்று சிலர் கருதக்கூடும். இது அல்ல. பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய ‘புராண - மதங்கள்’ என்ற புத்தகத்தை உய்த்துணர்ந்து படிப்பவர்கள் இதனை உணர முடியும். புத்தரைப் பற்றி ‘பார்வதி பி.ஏ.’யில் குறிப்பிடும் இடத்தில் அடியிற் கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“இன்பத்தை மதிக்க மறுத்ததுடன் போகப்படு குழியின் இலாபச் சுழலும் தாம் செல்லும் வழியிலே காணப்பட்ட காலை அவைகளிலே இடறி விழாமல் இன்பம் - நிரந்தர இன்பம் - துன்பத்துடன் பிணைத் திருக்கும் இன்பமல்ல - இணையற்ற - எல்லையற்ற - இன்பம் எது? எங்கேயிருக்கிறது? எங்கனம் பெற முடியும்? என்று கண்டுபிடிப்பதிலே காலத்தைச் செல விட்டார்.”
என்று எழுதியுள்ள பகுதிகள் தெளிந்த சமயத் தத்துவத்தை விளக்குவனவாகவில்லையா? ‘ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே’ என்ற மணிவாசகரின் வாக்கு இதனை நமக்கு நினைவுக்குக் கொண்டு வரவில்லையா? நாத்திகம் என்ற தத்துவம் இயல்பிலேயே இல்லை. அதை ஆத்தீக உலகமே உருவாக்கியது என்பது அறிஞர் அண்ணாவின் கருத்து. இந்தக் கருத்தினை “குமாஸ்தாவின் பெண்” என்ற கதையில் சீமானாகிய சோமுவுக்கும் ஏழையாகிய இராகவனுக்கும் நிகழும் உரையாடலில் சித்தரித்துக் காட்டுகிறார். அந்தப் பகுதியை அப்படியே தருகிறோம். படித்துப் பாருங்கள்.
இராகவன் : உம்மை இலட்சாதிபதியாக வைத்திருப்பது அவன் செயல். என்னை பிட்சாதி காரியாக வைத்திருப்பதும் அவன் செயல்; மிக நல்லவன்!
சோமு : இராகவா, நீ நாத்திகம் பேசுகிறாய்.நாக்கு கூசவில்லையா?
எங்கே நாத்திகம் காட்டுகிறது? மீண்டும் ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்! இந்தப் பார்வையில் தான் காரல்மார்க்ஸாம் நாத்திகரானார். தலைவர் பெரியாரும் நாத்திகரானார். அறிஞர் அண்ணாவும் நாத்திகரானார். சமய நம்பிக்கை உடையவர்கள் அருள் கூர்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கடவுளை நம்புகிற துணிவைவிட, கடவுள் தத்துவத்தைச் செயல்படுத்தி எல்லோரும் இன்புற்று வாழ வழிவகை செய்யவேண்டும். அதை செய்யத் தவறினால் மன்பதைக்கும், மன்பதையின் மன சாட்சியாகிய கடவுளுக்கும் போலி ஆத்திகர்கள் பகைவர்கள் ஆவார்கள்.
நாத்திக உலகம் நலவிருந்தாகிவிடும். உத்தரவாதம் எது? அண்ணாவின் கருத்து “மடாதிபதிகள் மடத்தை ஆள்வதைக் காண்கிறோம். மக்களிடை ஆள்வதில்லை;மக்களிடிை வருவதுமில்லை” என்பது. இதனை மனச் சாட்சியுடையோர் மறுக்கமாட்டார்கள். காலத்தின் தேவையை அறிந்த அறிவுடைய பெருமக்கள் மறுக்கமாட்டார்கள்.
ஏன்? உண்மையான அருளாளர்களும் மறுக்க மாட்டார்கள். உறுதியான சிந்தனை, உலகத்தில் நடை முறைக்கு வந்தே தீரும்; மாறுதலை ஏற்படுத்தியே தீரும். இது மக்கள் மன்றத்தின் சென்ற காலத் தீர்ப்பு. இந்த வரலாற்றுத் திருப்பம் நம்முடைய தமிழகத் திருமடங்களில் - தமிழர் திருமடங்களில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ளது.
அவர்கள் மக்களை நாடி வரத் தொடங்கிவிட்டனர்; பேரவை கண்டுள்ளனர்; மக்கள் நலங்கருதிப் பேரறங்களைச் செய்ய முன்வந்துள்ளனர். இது தமிழகச் சமய வரலாற்றில் புதிய அத்தியாயம்.
இந்த அத்தியாயத்தை இடையீடின்றி இன்பமே சூழ, எல்லோரும் வாழும் வகையில் எழுதி முடிக்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தமிழக அரசு இருப்பது சமய சீர்த்திருத்த உலகத்துக்குப் ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என விளங்குகிறது.
ஆறமலை அடிகள் அவர்களும் தமிழ்த் தந்தை திரு வி. க. அவர்களும் இன்ன பிற சான்றோரும் பக்தி நெறியை, கண் மூடிப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க முயன்று சூழலைச் சீராக்கியுள்ளதால் பகுத்தறிவு இதுக்கத்தினரும் பகுத்தறிவு இயக்கத்தைச் சார்ந்த தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் வாழ்வுக்கு ஆவாத வறண்ட பழைமையைத் தாக்கி வலுவிழக்கச் செய்துள்ளனர்.
இக்க இருமுனைத் தாக்குதலால் வறண்ட பழைமை, கல்லறையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இது இருதும் கருத்துக்களையும் ஒன்றாக்கி எழுதிச் செயல்படுத்தித் தமிழ்ச் சமயததையும், சமுதாயத்தையும் காப்பாற்ற முடியும்.
மாணிக்கவாசகப் பெருமான் எடுத்துக் கூறியதைப் போல “முன்னைப் பழைமைக்கும் பழைமையதாய், பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியதாய்” என்ற நிலையில் நமது சமயத்தினை விளங்கச் செய்ய வேண்டும்.
அறிஞர் அண்ணா “துன்பம், சுடச்சுட நோற்கிற் பவர்” என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்கத் துன்பத்தில் வளர்ந்தவர்; நெறியில் நீங்கியோரின் ஏச்சில் வளர்ந்தவர்; பெருநெறி விலகிய பேதையர் பேச்சைக் கடந்து வந்தவர்.
பொது வாழ்க்கையை அறிஞர் அண்ணா மலராலாய மஞ்சம் எனக் கருதவில்லை. அது துன்பம் நிறைந்தது; இடையூறுகள் நிறைந்தது என்று எடுத்துக்காட்டிப் பொது வாழ்க்கையின் வெற்றிக்குரிய சக்தியைப் பெறத் தூண்டுகிறார்; ஓடாது நிற்கச் சொல்லுகிறார்; எதிர்த்துச் செல்ல தூண்டுகிறார்; போராடி வெற்றி பெற வற்புறுத்துகிறார்.
தேனிக்களைப் போல பிறருக்கென சுற்றித் திரிந்து உழைக்கச் சொல்லுகிறார். பொது வாழ்க்கைக்குத் தன்னலம் - தன்னலச் சபலம் கேடு என்று சொல்லுகிறார். சபலத்தைக் கடந்து, சஞ்சலத்தைக் கடந்து, பொது வாழ்க்கையில் ஈடுபட கற்றுத் தருகிறார்.
அறிஞர் அண்ணா சிறந்த இலக்கியப் படைப்பாளர். மிகச் சிறந்த மனிதப் பண்புகனை இலக்கியத்தில் படைத்துக் காட்டுகிறார். ஆனால் அதே காலத்தில் அவர் தன்னுடைய இலட்சியங்களையே. இலக்கியங்களாகப் படைக்கிறார் என்பதையும் அவருடைய ஆர்வ உணர்வுகளே அன்னை மொழியாம் அமுதத் தமிழில் எழில் உருவம் பெற்று வெளிவருகின்றன என்பதையும் மறந்துவிடக் கூடாது.
அவர் தமது இலட்சியங்களை, தனது இலக்கியத்தில் மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், தனது தம்பிகளின் வாழ்க்கையிலும் தனது ஈடு இணையற்ற தமிழ்ப் பெருங்குடி மக்கள் வாழ்க்கையிலும் உருவாக்கத் துடிதுடிக்கிறார்; உருவாக்குகிறார். ஏன்? உருவாக்கியும் உள்ளார், என்பதை எண்ணிப் பார்க்கும்போது, திருவள்ளுவரின் படிைப்புக்குத் தனது வாழ்க்கையின் மூலம் உரை காண வந்த தோன்றலோ அறிஞர் அண்ணா என்று கருத வேண்டியுள்ளது.
அறிஞர் அண்ணா “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற புத்தகத்தில் “ஜனநாயக முறையில் ஈடுபட்ட தலைவர்களாக - அமைச்சர்களாக உயர்ந்து விடுவதாலேயே மண்டிைக்கனம் கொண்டுவிடாதீர்கள்” என்று கூறியுள்ளார்.
அறிஞர் அண்ணா 1967 பொதுத் தேர்தலில் ஆட்சிக்குரிய தகுதியுடையவராக வெற்றி பெற்ற போது, மிடுக்காகப் பேசாமல், அடங்கிப் பேசிய பண்பும், தமிழகத்தில் சிறந்த அரசியல் தலைவர்களை மதித்து அவர்கள் வீடு தேடிச் சென்று ஒத்துழைப்புத்தர வேண்டிக் கேட்டுக் கொண்டமையும் இந்திய நாட்டு வரலாற்றிலேயே இதற்கு முன் நிகழ்ந்ததில்லை. இந்தப் பண்பு மூலம் அவரது படைப்புக்கு, அவருடைய இலக்கியத்துக்கு, அவரே இலக்கியமாக இருப்பது நெகிழ்ந்து பாராட்டக்கூடியது.
அண்ணல் காந்தியடிகளிடத்தில் அறிஞர் அண்ணாவுக்கு நிறைந்த ஈடுபாடு உண்டு. இந்த ஈடுபாடு காலத்திற்குக் காலம் மாறியும் வந்திருக்கிறது என்பதிலே உண்மையுண்டு. ஆனால், ஈடுபாட்டையாரும் மறுக்க முடியாது.
‘உலகப் பெரியார் காந்தி’என்ற நூலில் நமது தலைமுறையின் வேலை, ‘இந்த நாட்டை - காந்தி நாடாக்குவது’ என்று தெளிவாகவும் உறுதியாகவும் கூறுகிறார். அண்ணாவின் வார்த்தைகள் இதோ! அப்படியே படித்துப் பாருங்கள்.
“ஏழை ஈடேறி ஏழை உரிமை பெற்று விளங்கும் நாடு மக்களில் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற நிலையில்லாத நாடு எல்லோரும் தோழமையுடன் வாழும் நாடு - இந்த நாடு; காந்தி நாடு - காண்பது தான் நமது தலைமுறைக்கு உள்ள வேலை” என்பது அவர் வாக்கு. இதனை உணர்ந்து, ஓயாது உழைப்பது அண்ணாவின் - நாண்மங்கல விழாப் பரிசு!
口口口
கருத்துகள்
கருத்துரையிடுக