சிறுவர் மலர் சிறுவர் நாடகங்கள்
சுட்டி கதைகள்
Backசிறுவர் மலர்
சிறுவர் நாடகங்கள்
2000 ஆம் ஆண்டுக்கான
வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விழாவில்
சிறுவர் இலக்கியத் துறைக்கான
சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற நூல்.
ஆசிரியர்
வி.என்.எஸ். உதயசந்திரன்
B.A(Cey), B.Ed (Hons), Dip. in. Ed
M.A (Journalism and Mass Communcation)
இலங்கையின் முதலாவது
வானொலிச் சிறுவர் நாடக நூல்.
வெளியீடு
பூபாலசிங்கம் புத்தகசாலை
202, செட்டியார் தெரு,
கொழும்பு - 11.
++++++++++++++++++++++++++
மின்மவியல் ஊடகம் வலுவானதும் வாழ்வற்றதுமான ஊடகமாகும். ஏனெனில் மின்மவியல் ஊடகவியலாளர்கள் ஒலியிலும் ஒளியிலும் மறைந்து விடும் கலைகளின் சொந்தக்காரர்கள். இப்போது எழுபத்தைந்து ஆண்டு களைக் கடந்துவிட்ட இலங்கை வானொலி காற்றேறிக் கலைபடைத்த எத்தனையோ விற்பன்னர்களை மறந்து விட்டது. அவர்களும் காற்றோடு மறைந்து போனார்கள். இக்கலைஞர்களின் படைப்புக்கள் அவர்களாலும் பதிவு செய்யப்படவில்லை. எங்களாலும் பேணப்படவில்லை.
வானொலியூடாக வான் அலைகளில் ஒலித்த ஆக்கங்கள் பல தற்போது நூலுருவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வி.என்.எஸ். உதயசந்திரன் வானொலியில் ஒலித்த தனது சிறுவர் நாடகங்கள் சிலவற்றைப் படங்களுடன் தனக்கே உரித்தான பாணியில் நூலுருவாக்கியுள்ளார். தனது பதினைந்து வருட கால ஆரம்பக்கல்வி ஆசிரிய அனுபவத்தில் தான் கண்ணுற்ற நிகழ்வு களை மாணவர்களுக்கு நல்லறிவு ஊட்டக்கூடிய முறையில் நாடகங் களாக்கியுள்ளார். இவர் வானொலி நாடக நடிகராக இருப்பதால் வானொலி நாடகங்கள் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதை அனுபவரீதியாக அறிந்தவர். அவர் பெற்ற அனுபவங்கள் சிறுவர் நாடகங்களைச் சிறப்பாகப் படைக்க உதவியுள்ளன எனலாம்.
வி.என்.எஸ். உதயசந்திரனை நிகழ்ச்சித் தொகுப்பாளராக வானொலிக்கு இனங்காட்டிய பெருமை திரு. ஜோர்ஜ் சந்திரசேகரன் அவர்களுக்கே உரியதாகும். பெரும்பெரும் ஜம்பவான்கள் நடத்திய கலைக்கோலத்தை கலைப்பூங்காவாக மாற்றி அந்நிகழ்ச்சிக்கு ஒரு புதுப் பரிமாணத்தை ஜோர்ஜ்-உதயசந்திரன் கூட்டு ஏற்படுத்தியது. கலைப்பூங்காவில், தனது தொகுப்புக் காலத்தில் வாசித்தளிக்கப்பட்ட உரைகள் இருபத்தொன்றை கலைக் குரல்கள் என்ற பெயரில் 1999 ஆம் ஆண்டு உதயசந்திரன் வெளிக்கொணர்ந்தார். அவர் மீண்டும் கலைமகள் மகேந்திரனின் தயாரிப்பில் கலைப்பூங்காவைத் தொகுத்தளித்து வருவது மகிழ்ச்சிக்குரியது.
கலைப்பூங்காவை தொகுத்தளித்து வரும் இவர் 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாந் திகதி முதல் சிறுவர் மலரின் வானொலி மாமாவாகச் செயற்படத் தொடங்கினார். இன்றைய வானொலி நிகழ்ச்சிகளில் மிக நீண்ட வரலாறு கொண்ட நிகழ்ச்சி சிறுவர் மலராகும். எமது ஆரம்பகால ஒலிபரப்பு களில் மிகப் பெரும்பகுதி சிறுவர்களுக்காகவே இருந்திருக்கிறது. அன்றைய ஸ்கூல் சேர்விஸ் (ளுஉhழழட ளுநசஎiஉந) தான் ஒலிபரப்பின் முன்னோடி என்று கூடச்சொல்லலாம். இந்தச் சிறுவர்மலர் எத்தனையோ ஒலிபரப்பாளர்களை உருவாக்கிய நிகழ்ச்சியாகும். சிறுவர்மலரால் உருவாக்கப்பட்டவர்களின் வரிசையில் மிகப் பணிவோடு எனது பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுவர்மலரில் அவ்வப்போது எத்தகையோ அம்சங்கள் மாறிமாறி வந்திருக்கின்றன. ஆனால் மிக நீண்ட காலமாக இடம்பெற்று வருவது நாடகங்களே. சொல்வது போல எழுத வேண்டுமென்றான் பாரதி. செந்தமிழில் கூறப்படுகின்ற விடயங்களை விடப் பேச்சோசையிலும் அன்றாடப் பேச்சுத் தமிழிலும் வருகின்ற நாடகங்களின் ஊடாக நல்ல கருத்துக்களை சிறுவர்களின் மனதில் விதைக்க முடியும். கிராமப்புறங்களின் கதைப்பாடல்கள் போல சிறுவர் நாடகங்களுக்கும் தனி இடமுண்டு. ஆனால் ஏனோ தெரியவில்லை. சிறுவர் நாடகத் தொகுப்புக்களைக் காணவே முடியாதிருக்கின்றது. எனது அனுமானம் சரியானால் உங்கள் கையில் தவளுகின்ற இந்த சிறுவர் நாடகத் தொகுப்பே இலங்கையின் முதலாவது நாடகத் தொகுப்பு நூலாகும்.
எட்டு நாடகங்களைக் கொண்ட இந்தத் தொகுப்பு எல்லா எல்லைகளையும் எட்டும் என்று நம்புகின்றேன். இத் தொகுப்பில் பின்புலத்தில் எமது வானொலியின் "சிறுவர் மலர்" இருக்கிறது என்பதையிட்டு மகிழ்ச்சி யடைகின்றேன். எவருக்கும் பயன்படக்கூடிய இத்தகைய ஆக்கங்கள் உதயசந்திரனிடம் இருந்து மேலும் மேலும் உருவாக வேண்டுமென்று வாழ்த்து கின்றேன்.
கலாசூரி திருமதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன்
பணிப்பாளர் - தமிழ்ச்சேவை.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,
சுதந்திரச் சதுக்கம்,
கொழும்பு 07.
01.03.2000
+++++++++++++++++++++++++++
மதிப்புரை
சிறுவர்களுக்கு மனநிறைவு தரும் நூல்
சிறுவர் நாடகங்கள் நூலைப் பார்த்தேன். பார்க்காமல், புரட்டவும் செய்யாமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டே இருந்தேன். அப்படிக் கவர்ந்திழுக்கும் அருமையான அட்டைப்படம்- புகைப்படமும் கார்ட்டூனும் கலந்த அட்டைப்படம். மிகவும் இயல்பாகவும் அமைந்துள்ளன.
பொதுவாகத் தமிழில் நாடக நூல்கள் குறைவு. இந்தச் சிறுவர் நாடக நூல் சிறுவர்க்கு மனநிறைவு தரும் தன்மையது. எட்டு நாடகங்கள் உள்ளன. அவை சிறுவர் மனதினை எட்டிப் பிடிக்கின்றன. அவர்தம் குணநலனை எட்டாத உயரத்துக்கு உயர்த்தி விடுகின்றன. சிறுவர் மனதில் பதிய வேண்டிய எட்டு நல்ல பண்புகளை இந்த எட்டு நாடகங்களும் விளக்குகின்றன.
எளிய தமிழில், இலங்கைத் தமிழில் எழுதப்பட்ட இவை படிக்கவும் நடிக்கவும் ஏற்றவை. எட்டிலும் நல்ல மனம் நாடகம் எவரெஸ்ட்டாகவே உயர்ந்து நிற்கின்றது. நாடகாசிரியர் வி.என்.எஸ். உதயசந்திரனை இந்நூலிற்காக மனதாரப் பாராட்டலாம்.
அன்புடன்
பூவண்ணன்
மழலைக் கவிஞர் டொக்டர்
பூவண்ணன்
தமிழக அரசின் சங்கப் பலகையின் குறள்பீடம் உறுப்பினர். ஆட்சிப் பேரவை, பாரதிதாசன் பல்கலைக்கழகம். அமைப்பாளர், வள்ளியப்பா இலக்கியவட்டம். ஆலோசகர், குழந்தை எழுத்தாளர் சங்கம், தலைவர், கோவை அனைத்தந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம். 1991இல் டில்லியின் தேசிய சிறுவர் கல்விக் கழகத்தால் இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசும் பெற்றவர்.
சாயிபாபா காலணி
கோவை - 641011
இந்தியா
++++++++++++++++++++++++++
என்னுரை
தமிழில் முதலாவது
வானொலிச் சிறுவர் நாடக நூல்
சிறுவர் மலர் சிறுவர் நாடகங்கள் என்ற தலைப்பிலான இந்நாடக நூல் மீள் பதிப்பாக மீண்டும் வெளிவருகின்றது. இது இந்நூலிற்குக் கிடைத்த வெற்றியாகும். இலங்கை வானொலியில் நான் மலரை ஐந்து வருடங்கள் நடத்திய போது நான் எழுதிய நாடகங்களில் எட்டை மட்டும் தெரிவு செய்து நூலாக்கியுள்ளேன். தமிழில் முதன்முதலில் வெளி வரும் வானொலிச் சிறுவர் நாடகநூல் இதுவாகும்.
இந்நூலில் உள்ள நாடகங்களை எழுதுவதற்கு எனது பதினைந்து வருட கால ஆரம்பக் கல்வி ஆசிரிய அனுப வம் துணை புரிந்துள்ளது. சிறுவர்களுடன் வாழ்ந்து சிறுவர் களைப் புரிந்துகொண்டே நாடகங்களை எழுதியுள்ளேன். சிறுவர்களைச் சிந்திக்க வைத்து அவர்களை இந்நாடகங் களினூடாக நல்வழிப்படுத்த முயன்றுள்ளேன்.
சிறுவர் மனதில் மூடநம்பிக்கைகளையோ, வன்முறைக் கருத்துக்களையோ விதைக்க முற்படவில்லை. அதன் விளைவுகளை அனுபவரீதியாக உணர்ந்தவன். கள்ளங்க படமில்லாத சிறுவர்களிடம் நல்ல விதைகளையே விதைத் துள்ளேன். அதன் அறுவடை நல்லதாகவே அமையும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
எனது நூலிற்கு அணிந்துரை வழங்கிய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழிச் சேவைப் பணிப்பாளர் திருமதி. அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அவர்களுக்கும், மதிப்புரை வழங்கிய இந்தியாவின் மிகச் சிறந்த மழலைக் கவிஞர் பூவண்ணன் அவர்களுக்கும், ஆர். வினோதினி, சுதத் விஜயசிங்க, ப.மேனகா, ஓவியர் சந்ரா, அழகிய முறையில் அச்சமைப்புச் செய்த நண்பர் எஸ்.ரஞ்சகுமார் ஆகியோருக்கும், திரைமறைவில் இருந்து என்னை ஊக்குவிக்கும் ஆர். பி. ஸ்ரீதரசிங் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
அன்புடன்
வி.என்.எஸ். உதயசந்திரன்
மின்னஞ்சல் முகவரி :
vnsudayan@yahoo.com
48, பொன்னம்பலம் றோட்
அரியாலை
யாழ்ப்பாணம்
+++++++++++++++++++++++++
உள்ளே .....
புது வாழ்வு 01
கறுப்பு வெள்ளை 10
மனமாற்றம் 18
சுத்தம் சுகம் தரும் 30
நல்ல மனம் 38
அவன்தான் மனிதன் 49
மனித நேயம் 62
பிறந்த நாள் 72
+++++++++++++++++++++++++
ஆரம்பக் குறியிசை
நாடகம்
புது வாழ்வு
பாத்திரங்கள் : அம்மா, கபில், குணா, அதிபர்
காட்சி-1
(வீட்டில் தாயும் மகனும் உரையாடுகின்றனர்.)
அம்மா : கபில்....கபில்
கபில் : என்ன அம்மா?
அம்மா : எனக்கு தலை சுற்றுகிற மாதிரி இருக்கிறது.
கபில் : அம்மா வாங்கோ ஆஸ்பத்திரிக்குப் போவம்.
அம்மா : வேண்டாம். நான் கொஞ்ச நேரம் பாயில படுத்திருக்கிறன் நீ இந்த அடுப்பப் பார்.
அடுப்பில் இடியப்பம் வைச்சிருக்கிறன.
கபில் : சரியம்மா......
அம்மா : இடியப்பம் அவிஞ்ச உடனே இறக்கிப் போடு. பானையைப் பிடிக்கிறது கவனம். கையைச் சுட்டுப் போடாத.
கபில் : அம்மா...... நீங்கள் போய்ப் படுங்கோ. நான் செய்யிறன்.
அம்மா : (மெதுவாகப் பேசுதல்) எப்பதான் எங்கட கஷ்ரம் தீரப் போகுதோ. இவனப் படிப்பிச்சு ஒரு மனிசனாக்கிப் போட்டால் என்ர கஷ்ரம் எல்லாம் தீந்திடும்.
கபில் : என்னம்மா, நீங்கள் உங்கட பாட்டிலேயே கதைக்கிறியள். ஒண்டும் யோசிக்காமப்
போய்ப் படுங்கோ.
அம்மா : புதுவருசம் வரப்போகுது. உனக்கு உடுப்பு வாங்கித் தரக்கூட என்னட்ட காசு இல்ல. இடியப்பம் விற்ற காசும் வந்து சேரயில்ல.
கபில் : அம்மாஇ எனக்குப் புது உடுப்புத் தேவை யில்லை. நீங்கள் கவலைப்படாமல் இருந் தாலே போதும்.
அம்மா : கடவுள் ஏன் எங்கள இப்படிச் சோதிக் கிறானோ. உன்ர அப்பா உயிரோட இருந் திருந்தால்...... உனக்கு புதுவருசத்துக்கு நல்ல உடுப்புக்கள் வாங்கித் தந்திருப்பார்.
நான் என்ன செய்யிறது. எங்கட சாப் பாட்டுக்கே நான் இடியப்பம் அவிச்சு விற்கிற காசு காணாது (விம்மி அழுதல்)
கபில் : அம்மா. அழாதையுங்கோ. நான் உங் களட்ட புது உடுப்பு வாங்கித் தரச் சொல்லிக் கேட்டனானா?.
அம்மா : நீ என்னட்ட எப்பவாவது எதையும் கேட்டுக் கரச்சல் தாறதில்லையே. எனக்கு என்ர பிள்ள புதுவருசத்துக்கு புது உடுப்புப் போட வேணும் எண்டு ஆசை இருக்கும் தானே. (அழுதல்)
கபில் : அம்மா நான் படிச்சு பெரியவனா வந்த பிறகு நாங்கள் புது வருடத்தைக் கொண் டாடுவம். எங்கள ஒருநாளும் கடவுள் கைவிடமாட்டார். அம்மா நீங்கள் அழாதையுங்கோ.
அம்மா : கபில் உனக்கு பள்ளிக்கூடத்துக்குப் போக நேரமாகுது. கடவுள கும்பிட்டிட்டு வெளிக்கிடு.
கபில் : அம்மா உங்களுக்குத்தான் உடல்நிலை நல்லா இல்லையே. இந்த நிலையில என்னைப் பள்ளிக்கூடத்துக்குப் போகச் சொல்லுறீங்களே.
அம்மா : எனக்கு இப்பிடி அடிக்கடி வாற தலைச் சுற்றுத்தானே. நான் கொஞ்ச நேரம் படுத்துட்டு பிறகு எழும்பி வேலை செய் யிறன். நீ பள்ளிக்கூடத்துக்குப் போ. பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் மட்டும் நிண்டுடாத.
கபில் : சரி அம்மா........
காட்சி - 2
(பாடசாலையில் குணாவும் கபிலும் உரையாடுகின்றனர்.)
குணா : கபில். ஏன் திடீரென காலைக் கூட்டம் நடக்கிது.
கபில் : எனக்கும் தெரியேல்ல. போய்ப் பாப்பம்.
குணா : வா போவம்.
(பாடசாலைக் கூட்ட மண்டபத்தில் மாணவர் மத்தியில்
கல்லூரி அதிபர் உரையாற்றுகின்றார்.)
அதிபர் : ஆசிரியர்கள். மாணவர்கள் அனைவருக் கும் வணக்கம். இன்று நான் இந்த விசேட
காலைக் கூட்டத்தை ஏன் கூட்டியிருக் கின்றேன் எனப் பலருக்கும் புரியாமல் இருக்கலாம்.
(மாணவர் தங்களுக்குள் குசுகுசுத்தல்.)
குணா : என்னத்துக்கு அதிபர் காலைக் கூட்டத் தைக் கூட்டியிருப்பார்.
கபில் : ஏன் அதிபர் பேசும் போது குறுக்க கதைக் கிறாய். இப்ப அதிபர் சொல்லுவார்தானே.
அதிபர் : எமது பாடசாலைக்குப் பெருமை தேடித் தந்த மாணவனைப் பாராட்டுவதற்காகவே
இந்தக் காலைக் கூட்டத்தைக் கூட்டி யிருக்கின்றேன். "சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாத்தல்" என்ற தலைப்பில் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர் களுக்கிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் எமது பாடசாலைக்கு முதற் பரிசு கிடைத்திருக்கிறது. (மாண வரிடையே சலசலப்பு)
அதிபர் : எமது பாடசாலைக்குப் பெருமை தேடித் தந்த மாணவனைப் பாராட்ட வேண்டியது எமது கடமை அல்லவா?
குணா : (மெதுவான குரலில்) யார் அந்த மாண வன்?
கபில் : எனக்கு எப்பிடித் தெரியும்?
அதிபர் : அகில இலங்கை ரீதியில் கல்வி உயர் கல்வி அமைச்சால் நடாத்தப்பட்ட "சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாத்தல்" தொடர்பான கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற மாணவன் கபிலை மேடைக்கு அழைக் கின்றேன்.
குணா : கபில் உன்னைத்தான் அதிபர் கூப்பிடுறார். போ...
அதிபர் : முதற்பரிசுக்குரிய ஐம்பதாயிரம் ரூபாய் காசோலையையும் சான்றிதழையும் கையளிக்கின்றேன். (கை தட்டுதல்)
பாடசாலைக்கு பெருமை தேடித் தந்த இந்த மாணவனுக்கு புத்தாண்டில் அணிவதற்குரிய உடைகளைப் பரிசாக வழங்குகின்றேன். அத்தோடு எமது பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினர் கபில் உயர்தர வகுப்பு வரை கற்பதற்கான கல்விச் செலவுக்காக 50,000 ரூபாவை வங்கியில் வைப்புச் செய்து சேமிப்புப் புத்தகத்தையும் தந்துள்ளார்கள். கபிலிடம் அந்தச் சேமிப்புப் புத்தகத்தையும் கையளிக்கின்றேன்.
(எல்லோரும் கைதட்டுதல்)
கபிலைப் போன்று நீங்களும் சாதனைகள் படைத்துப் பாடசாலைக்குப் பெருமை தேடித் தரவேண்டும் என வாழ்த்தி விடை பெறுகின்றேன்.
.....நன்றி .....வணக்கம்.
(எல்லோரும் கைதட்டுதல்)
குணா : கபில் உனக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
கபில் : நன்றி குணா.
குணா : நான் உன்னை நண்பனா அடைந்ததை யிட்டு மகிழ்ச்சியடையிறன். கபில் இந்தச்
செய்தியை உன்ர அம்மா கேட்டால் எவ் வளவு சந்தோசப்படுவா.
கபில் : ஓம் குணா.
குணா : அதிபரிடம் சொல்லிவிட்டு உடன போய் உன்ர அம்மாவிடம் சொல்லு.
காட்சி - 3
(வீட்டில் கபிலும் தாயாரும் உரையாடுகின்றனர்.)
கபில் : (ஓடி வருதல்) அம்மா...அம்மா....
அம்மா : கபில்..... ஏன் வேர்த்து விறுவிறுக்க ஓடிவாறாய்.
கபில் : அம்மா எனக்கு.....
அம்மா : என்ன நடந்தது எண்டு பதட்டப்படாமல் சொல்லு ராசா.
கபில் : எனக்கு..... எனக்கு.... கட்டுரைப்போட்டி யில்.....
அம்மா : (மகிழ்ச்சியுடன்) கட்டுரைப்போட்டியில......
கபில் : முதற்பரிசு கிடைச்சிருக்கு.
அம்மா : (ஆச்சரியமாக) கபில் உண்மையாவா சொல்லுறாய்!
கபில் : (மகிழ்ச்சியுடன்) உண்மையாத்தான் செல்லு றன். அம்மா. பரிசுக்காசு எவ்வளவு தெரி யுமா?
அம்மா : சொன்னாத்தானே தெரியும். புதிர் போடா மல் சொல்லு ராசா.
கபில் : ஐம்பதாயிரம் ரூபாய்.
அம்மா : ஐம்பதாயிரமா !
கபில் : ஓம் அம்மா. அது மட்டுமல்ல அதிபரும் ஆசிரியர்களும் எனக்கு புத்தாண்டுப் பரிசா உடைகளும் வாங்கித் தந்திருக்கிறார்கள். அதோட பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினர் என்ர படிப்புக்காக 50,000 ரூபாவை வங்கியில் வைப்புச் செய்து சேமிப்புப் புத்தகத்தையும் தந்திருக்கினம்.
அம்மா : கபில் என்னால் நம்பவே முடியேல்ல ராசா.
கபில் : அம்மா கடவுள் எங்கள கைவிட மாட்டார் எண்டு அடிக்கடி சொல்லுவன்.... பாத்தீங்களா..... எங்களுக்கு புது வாழ்வு கிடைச்சிருக்க.
அம்மா : உண்மைதான் கபில், கடவுள் எங்களைக் கைவிடயில்லயே கபில், நீ இன்னும் நல்லாப் படிச்சு பேரும் புகழும் பெற வேணும் அதுதான் என்னுடைய ஆசை.
கபில் : அம்மா உங்கட ஆசையைக் கட்டாயம் நிறைவேற்றி வைப்பன். என்னில உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
அம்மா : என்ர பிள்ளையில எனக்கு நம்பிக்கை இருக்குது.
கபில் : அம்மா வெளிக்கிடுங்கோ. ஆஸ்பத்திரிக்குப் போய் மருந்து எடுத்துக் கொண்டு அப்படியே போய் உங்களுக்கு புது உடு ப்பும் வாங்கிக் கொண்டு வருவம்.
அம்மா : கபில் என்ன ராசா சொல்லுறாய்.
கபில் : அம்மா நான் இண்டைக்கு உங்களுக்குப் புது உடுப்பு வாங்கித் தரப் போறன்.
நிறைவுக்குறியிசை
இலங்கை வானொலி - சிறுவர்மலர்
ஒலிபரப்பான திகதி - 01.12.1996
சிந்தனை முத்து....
நாம் வெற்றி பெற வேண்டும் என விரும்பும் எந்தவொரு செயலையும் நாம் தான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மாற்றத்தை உண்டாக்குவது தன்னம்பிக்கையே.
-சிரிஸ் எவர்ட்
+++++++++++++++++++++++++
ஆரம்பக் குறியிசை
நாடகம்
கறுப்பு வெள்ளை
பாத்திரங்கள் : தாய், சதீஸ், ரகு, தீபன், ஆசிரியர்
காட்சி-1
(வீட்டின் சமையலறையில் தாயும் மகனும் உரையாடுகின்றனர்.)
சதீஸ் : அம்மா எனக்குப் பள்ளிக்கூடத்துக்குப் போக நேரமாச்சு கெதியாச் சாப்பாட்டைத் தாங்கோ.
அம்மா : கொஞ்சம் பொறு, சதீஸ் இன்னும் நேரம் இருக்குத்தானே.
சதீஸ் : அம்மா இண்டைக்கு என்னுடைய கூட்டு முறை. நேரத்தோட போய் வகுப்புக் கூட்டித் துப்பரவாக்க வேணும்.
அம்மா : சரி சரி, இந்தா சாப்பிடு.
சதீஸ் : குடிக்க தண்ணீர் தாங்கோ.
அம்மா : சாப்பிட்ட பிறகுதான் தண்ணீ குடிக்க வேணும். தண்ணீ குடிச்சுக் குடிச்சு சாப்பிடக் கூடாது. நீ சாப்பிடு, நான் தண் ணீ கொண்டு வாரன்.
சதீஸ் : சரியம்மா.
அம்மா : சதீஸ் அதுக்கிடையில சாப்பிட்டு முடிச்சிட்டியா அவசரப்பட்டு சாப்பிட்டால் செமிக்கா தெல்லோ.
சதீஸ் : அம்மா எனக்கு நேரமாச்சு நான் போட்டு வாறன்.
காட்சி - 2
(பாடசாலையில் ரகுவும்இ தீபனும் சதீசைக் கேலி செய்கின்றனர்.)
ரகு : தீபன்..... கறுப்பன் வாறாண்டா.
தீபன் : இண்டைக்கு நேரத்துக்கு வாறான்.
ரகு : அது தான் எனக்கு விளங்கயில்லை.
தீபன் : இண்டைக்கு அவனுடைய கூட்டு முறை யாக்கும்.
ரகு : கறுப்பன், என்ன இண்டைக்கு நேரத் தோட பள்ளிக்கூடம் வந்திருக்கிறாய். ஆச்சரியமாக்கிடக்கு.
சதீஸ் : என்ர பெயர் கறுப்பன் இல்லை. சதீஸ்.
ரகு : உனக்கு நாங்கள் வைச்ச பெயர் கறுப்பன்.
தீபன் : நாங்கள் வைச்ச பெயராலதான் நாங்கள் கூப்பிடுவம்.
சதீஸ் : நீங்கள் அப்பிடிக் கூப்பிட்டால் வகுப்பு ஆசிரியரிடம் சொல்லுவன்.
ரகு : அந்த அளவுக்கு வந்திட்டீரோ.....!
தீபன் : எங்களைப் பற்றி உனக்குத் தெரியாது. வகுப்பு ஆசிரியரிடம் சொன்னால் நடக்கி றதே வேற.
ரகு : அவரின்ர வடிவில அவருக்குக் கோப மும் பொத்துக்கொண்டு வருகிது.
சதீஸ் : என்னுடைய வடிவு என்னோடை யெல்லோ இருக்கிது. அது உங்களுக்கு என்ன செய்யிது.
தீபன் : எங்களுக்கு உன்னைப் பார்க்க விருப்ப மில்லாமல் இருக்குது.
சதீஸ் : எனக்கு உங்கட கதயைக் கேக்கவிருப்ப மில்லாமல் இருக்குது.
தீபன் : என்னடா சொன்னாய். (கோபமாக அடிக் கப் போதல்.)
ரகு : தீபன் அவனை ஒண்டும் செய்யாத. அவன்ர உடம்பில தொட்டால் அவன்ர கறுப்பு உன்னிலும் ஒட்டிக் கொள்ளும் (சிரித்தல்)
சதீஸ் : கடைசியாகச் சொல்லுறன். என்ன இனி யும் கறுப்பன் கறுப்பன் எண்டு கேலி செய்தால் வகுப்பு ஆசிரியரிடம் சொல்லு வன். உங்களோட கதைச்சுக் கொண்டி ருக்க எனக்கு நேரமில்ல. நான் வகுப்புக் கூட்டப் போறன்.
காட்சி - 3
(சதீஸ் அழுதவாறு தாயாருடன் உரையாடுகின்றான்.)
சதீஸ் : அம்மா.... அம்மா...... (விக்கி விக்கி அழுதல்)
அம்மா : ஏன் சதீஸ் அழுகிறாய்.
சதீஸ் : என்னை ஏன் அம்மா கறுப்பாப் பெத்தனீங்கள்.
அம்மா : நீகறுப்பாய் இருந்தாலும் அழகாகத்தானே இருக்கிறாய்.
சதீஸ் : என்ர வகுப்பில் உள்ள எல்லாரும் "கறுப் பன் கறுப்பன்" எண்டு கேலி செய்யிறாங் கள். (விக்கி விக்கி அழுதல்)
எனக்குப் பள்ளிக்கூடம் போகவே விருப்பமில்லை அம்மா.
அம்மா : சதீஸ் அப்பிடிச் சொல்லாதை. நான் வந்து அதிபரிடம் சொல்லட்டா.
சதீஸ் : வேண்டாம் அம்மா. நீங்கள் அங்க வந்து சொன்னால் இன்னும் கூடச் சொல்லு வாங்கள்.
அம்மா : அப்ப அவங்கள் சொல்லுறதை காதில விழுத்தாமல் நீ நல்லாப்படி. படிப்பில் நீ அவங்கள விட உயர்ந்தவன் என்று காட்டு. படிப்பும் பண்பும் தான் மனிதனை உயர்த்தும். அழகு இண்டைக்கு இருக் கும். நாளைக்கு இல்லாமப் போயிடும். படிப்பு அப்பிடி இல்ல. நல்லாப் படிச்ச வனையும், நல்ல குணம் உள்ளவனையும் உலகம் எண்டைக்கும் மதிக்கும்.
சதீஸ் : சரியம்மா. நான் நல்லாப் படிச்சு எல்லாருக் கும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுறன். (உற்சாகமாக)
அம்மா : இப்பதான் நீ என்ர பிள்ளை.
காட்சி - 4
(வகுப்பறையில் மாணவர்களுடன் ஆசிரியர் உரையாடுகின்றார். அதன் பின் அறிவுரை கூறுகின்றார்.)
மாணவர் : (எல்லோரும் சேர்ந்து) குட்மோணிங்சேர்.
ஆசிரியர் : குட்மோணிங். எல்லாரும் இருங்கோ.. ஒரு கிழமையா ரகுவையும் தீபனையும் காணயில்லை. என்ன நடந்தது?
சதீஸ் : சேர் அவங்கள் ரெண்டு பேருக்கும் கொப்பளிப்பான் சேர். அதனால்தான் வர யில்லை சேர்.
ஆசிரியர் : சரி, நாங்கள் இண்றைக்கு நல்ல மனி தனுக்கு இருக்க வேண்டிய பண்புகளைப் பற்றிப் பார்ப்போம். ஒரு மனிதன் நல்ல சிந்தனை உள்ளவனாக இருக்க வேண் டும். அவனுக்கு எல்லோரையும் மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சாதி, சமயம் என்ற வேறுபாட்டிற்குள் உட்படக்கூடாது. துன்பப்படும்போது மற்றவர்களுக்கு உதவ வேண்டும். மற்றவர்கள் மனதைப் புண்படுத்தாத வகையில் நடக்க வேண் டும். ஒரு மனிதனுக்கு இப்படியான பண்புகள் இருந்தால் அவன் சமுதாயத் தில் உயர்ந்தவனாகக் கணிக்கப் படுவான். மாணவர்களே நீங்களும் நல்ல பண் புள்ளவர்களாக இருக்க வேண்டும். இருப் பீர்களா?............
காட்சி - 5
(சில நாட்களின் பின்னர் வகுப்பறைக்கு வெளியில் சதீசும் ரகுவும் உரையாடகின்றனர்.)
சதீஸ் : என்னாட ரகு உன்ர முகம் எல்லாம் கறுப்புப் புள்ளி புள்ளியா இருக்குது. அதோடை முகத்தில் சில இடங்களில பள்ளம் விழுந்த மாதிரி இருக்குது.
ரகு : (கவலையுடன்) கொப்பளிப்பான் முகத்தில வந்ததால தளும்புகள் வந்திட்டுது. அதால தான் என்ர முகம் இப்பிடி இருக்குது (அழுதல்)
சதீஸ் : அழாத ரகு கொஞ்ச நாளில சுகமாயிடும். எதுக்கும் ஒலிவொயில் வாங்கிப் பூசு. முகத்தில் இருக்கிற தளும்புகள் மறைஞ்சு போயிடும்...
ரகு : சதீஸ் நானும் தீபனும் உன்ன கறுப்பன் கறுப்பன் எண்டு சொல்லிக் கேலி செய் தம். அதுக்கு எங்களுக்குக் கிடைச்ச தண்டனை தான் இது.
சதீஸ் : அப்பிடிச் சொல்லாரகு. அது பழைய கதை. அதைவிடு, வா வகுப்புக்குப் போவம்.
ரகு : சதீஸ் என்னில உனக்கு கோபம் இல்லையா? நான் உன்ன கறுப்பன் கறுப்பன் எண்டு கேலி செய்யேக்க எவ் வளவு வேதனைப்பட்டிருப்பாய். இப்ப தான் எனக்குப் புரியிது.
சதீஸ் : நீங்கள் கேலி செய்ததை நான் பெரிசா எடுத்திருந்தால் இப்ப நான் கதைப் பேனோ.
ரகு : நீ கறுப்பு நிறமானவன் உன்னோடை பழகாம இருந்தன். நிறத்தைப் பார்த்து ஒருவனை. நல்லவன் கெட்டவன் எண்டு சொல்லமுடியாது குணத்தைப் பார்த்துத் தான் சொல்லமுடியும் எண்டத. இப்ப உணர்ந்திட்டன். சதீஸ் என்னை மன்னிச் சிடு......
சதீஸ் : ரகு இனிமேல் நீ தான் என்னுடைய உற்ற நண்பன்.
நிறைவுக்குறியிசை
இலங்கை வானொலி - சிறுவர்மலர்
ஒலிபரப்பான திகதி - 30.03.1997
நீங்கள் அறிவாளியா?
ஆறுவகையில் ஒரு மனிதனை முட்டாள் எனத் தீர்மானிக்கலாம்.
காரணம் இல்லாமல் கோபம் கொள்ளுதல்.
இலாபமில்லாத பேச்சு.
முன்னேற்றம் இல்லாத மாற்றம்.
அர்த்தமில்லாத கேள்விகள்.
பிறர் மீது அபார நம்பிக்கை.
விரோதிகளை நண்பர்கள் என உரையாடுதல்.
+++++++++++++++++++++++++
ஆரம்பக் குறியிசை
நாடகம்
மனமாற்றம்
பாத்திரங்கள் : ரமேஷ், தினேஸ், நாதன், கமலா, டொக்டர்
காட்சி - 1
(சங்கரும் தினேசும் வகுப்பறைக்கு வெளியில் நின்று உரையாடுகின்றனர்.)
பாலன் : தினேஸ் இண்டைக்கு புதுசா ஒருவன் எங்கட வகுப்புக்கு வாறானாம்.
தினேஸ் : பாலன் உனக்கு எப்பிடித் தெரியும்?
பாலன் : நான் பாடசாலைக்கு வரேக்க வாசலில நிண்டவன். பள்ளிக் கூடத்துக்கு புதிசோ எண்டு கேட்டன். ஓம் எண்டு சொல்லி வகுப்பையும் சொன்னான். அவன் சொல் லித்தான் எங்களுடைய வகுப்புக்கு வாற விசயம் எனக்கு தெரியும்.
தினேஸ் : அப்ப நாங்கள் இண்டைக்கு அவனை நல்ல முறையில வரவேற்க வேணும். (சிரிப்பு)
பாலன் : ஓம் ஓம் நல்ல முறையில வரவேற்பம். (சிரிப்பு)
தினேஸ் : என்ன பெயர் எண்டு கேட்டனியே.
பாலன் : கேட்டனான். ரமேஷ் எண்டு சொன்னான். தினேஸ் இன்னொரு விஷயம்....... (கேலியாக) அவன் கண்ணாடி போட்டி ருக்கிறான். அதுவும் சோடாபுட்டிக் கண் ணாடி மாதிரி பெரிய கண்ணாடி.
தினேஸ் : நல்லதாப் போச்சு அவனுக்குப் பட்டப் பெயர் வைக்கக் கஷ்ரப்படத் தேவை யில்லை. கண்ணாடி விரியன் எண்டு வைப்பம்.
பாலன் : அவனப் பார்த்தா கிழவன் மாதிரி இரு க்கு.... கண்ணாடித்தாத்தா எண்டு கூப் பிடுவம்.
தினேஸ் : முதலில வகுப்புக்குள்ள வரட்டும். ஆளு க்கு ஒரு பெயர் வைச்சுக் கூப்பிடுவம்.
பாலன் : இடைவேளை வரைக்கும் பாடம் நடக் கும். சேர்மார் வருவினம். அவனோட பகிடி விடேலாது. இடைவேளைக்குத் தான் எங்கடை விளையாட்டைக் காட்ட வேணும்.
தினேஸ் : ஓம் பாலன். இடைவேளை வரை பொறுத் திருப்பம்.
காட்சி - 2
(இடைவேளை நேரத்தில் சங்கரும் தினேசும் ரமேசைமிரட்டி உரையாடுகின்றனர்.)
பாலன் : டேய் இங்க வா....... உன்ர பெயர் என்ன?
ரமேஷ்; : (மௌனம்)
தினேஸ் : டேய் கேக்கிறமல்லோ சொல்லனடா.....
ரமேஷ்; : (மௌனம்)
பாலன் : சரியான திமிர் பிடிச்சவன் போல இருக்கு. இப்ப சொல்லப் போறியோ இல்லையோ
சொல்லனடா..... உன்ர பெயர் என்ன?
ரமேஷ்; : முதலில் உமக்குச் சொன்னன்தானே. (சற்று உரத்த குரலில்)
பாலன் : ஓகோ! அப்ப திரும்ப ஒருமுறை சொல்ல மாட்டீரோ.... டேய் சொல்லடா, உன்ர பெயர் என்ன?
ரமேஷ்; : (தடுமாற்றத்துடன்) ரமேஷ்
தினேஸ் : ரமேஷோ..... வெறும் ரமேஷோ........ அப்பா இல்லையா?
ரமேஷ்; : இருக்கிறார்.
பாலன் : அப்பாவின்ர பெயர் என்ன?
ரமேஷ்; : சிவராசா
தினேஸ் : அப்ப வடிவா, முழுப் பேரையும் சொல்லு.
ரமேஷ்; : சிவராசா ரமேஷ்.
பாலன் : எங்க வடிவா தெளிவா முழுப் பேரையும் மறுபடி சொல்லு பாப்பம்.
ரமேஷ்; : சிவராசா ரமேஷ்.
தினேஸ் : வெரிகுட். யாராவது உன்ர பெயரைக் கேட்டால் முழுப் பெயரையும் சொல்ல வேணும். நான் சொல்லுறது விளங்குதோ?
ரமேஷ்; : ஓம்.....
பாலன் : என்ன ஓம்.... உன்ர பெயர் பள்ளிக்கூட இடாப்பில எப்படி இருந்தாலும் பரவா யில்ல நாங்கள் உனக்கு வேற பெயர் வைப்பம்.
தினேஸ் : உனக்கு என்ன பெயர் வைச்சிருக்கிறம் தெரியுமே?
ரமேஷ்; : தெரியாது.
பாலன் : ‘கண்ணாடி விரியன்’ எண்டு இவன் தினேஸ் வைச்சிருக்கிறான். நான் என்ன பெயர் வைச்சிருக்கிறன். தெரியுமா? கண்ணாடித்தாத்தா..... (சிரித்தல்)
தினேஸ் : இதுமட்டுமல்ல இன்னும் வேறு பெயர் களும் ஆட்டுவோம் தான். ம்......... நட கன்டீனுக்கு....... எங்கள் ரெண்டுபேருக்கும் சாப்பாடு வாங்கித் தரவேணும்....... உம்........ நட.........
ரமேஷ்; : (சோகமாக) என்னட்டக் காசு இல்லை
பாலன் : வீட்டில இருந்து காசு கொண்டு வர யில்லையா?
ரமேஷ்; : இல்ல....
தினேஸ் : சரி. நாளைக்கு மறக்காமல் கொண்டு வர வேணும்.
எங்களட்ட காசு இல்ல
பாலன் : போய் வகுப்பில இரு.
காட்சி - 3
(வீட்டின் வரவேற்பு அறையில் பாலனின் தாய் தந்தையர் உரையாடுகின்றனர்)
கமலா : (உரத்த குரலில்) இங்க பாருங்கோ. பாலன் எவ்வளவு சொன்னாலும் கேட்கிறானில்ல.
நாதன் : கமலா அவனுக்கு என்ன சொன்னனீர்.
கமலா : (உரத்து) காலையில எழும்பினதில இருந்து ரீ. விக்கு முன்னாலதான்....... லீவு நாள் எண்டா இவனுக்கு இதுதான் வேலை. ரீ.விக்கு கிட்ட இருந்துபாக்கிறது. கண்ணுக்குக் கூடாது எண்டு சொன்னா லும் கேக்கிறானில்ல.
நாதன் : அதுக்கேன் இப்பிடிக் கத்துறீர். அவன் கிரிக்கெட் மச்தானே பாக்கிறான்...... பாலன் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி இருந்து பார்.
கமலா : நீங்கள் குடுக்கிற செல்லத்தால அவன் படிக்கிறதும் இல்ல. எந்த நேரமும் ரிவிக்கு முன்னாலதான். கண்டறியாத கிரிக்கெட் விளையாட்டு.
நாதன் : விசர்க்கதை கதைக்காதையும். அவன் அங்கை இங்கை எண்டு திரியாமல் வீட்டில் இருக்கிறது பெரிய விசயம்தானே. வீட்டில இருந்து ரீ.வி பாக்கிறது பிழை யா...... அவனை ரீ.வி பார்க்கவிடும்.
கமலா : நீங்களாச்சு, உங்கட பிள்ளையாச்சு என்ன வெண்டாலும் செய்யுங்கோ.
காட்சி - 4
(பாடசாலையில் பாலனும் தினேசும் ரமேஸை வம்புக்கிழுத்து அவனது மூக்குக்கண்ணாடியை உடைக்கின்றனர்)
தினேஸ் : பாலன் உனக்கு விஷயம் தெரியுமே?
பாலன் : என்ன தினேஸ்......
தினேஸ் : புதுக்க வந்த ரமேசுக்குத்தான் இந்தமுறை தவணைப் பரீட்சையில் எல்லாப் பாடத் திலையும் கூடப் புள்ளிகள் கிடைச் சிருக்காம்.
பாலன் : ஆ....! அப்படியே...... முந்தி எனக்குத் தானே கூடப் புள்ளிகள் கிடைக்கும் எப்பவும் நான்தானே முதலாம் பிள்ளை... ம்... இந்த முறை இவன் வந்து என்ர இடத்தப் பிடிச்சிட்டானே!...... (கோபமாக)
தினேஸ்; : இப்ப என்ன செய்யப் போறாய்......
பாலன் : ம்....... உப்பிடியே இவன விட்டுடுவன் எண்டு நினைச்சியே...... என்ன செய்யிறது எண்டு எனக்குத் தெரியும்.
தினேஸ் : ஆ! அந்தா ரமேஷ் வாறான். ரமேசை கூப்பிடட்டா.
பாலன் : கூப்பிடு கூப்பிடு. இண்டைக்கு நான் அவனுக்கு நல்ல பாடம் படிப்பிக்கிறன்.
தினேஸ் : (கோபமாக உரத்த குரலில்) டேய் ரமேஷ்..... இங்க வா....
ரமேஷ்; : (வந்து கொண்டு) எ........ என்ன தினேஸ்.........
பாலன் : இந்த முறை தவணைப் பரீட்சையில் நீ கொப்பி அடிச்சனி எல்லோ?
ரமேஷ்; : இ.....இல்லை..... நா......நான் உண்மையாய் படிச்சுக்........
பாலன் : (குறுக்கிட்டு) கிழிச்சனியோ...... கொப்பி அடிச்சு எல்லாப் பாடங்களிலையும் என்ன விடக் கூடப் புள்ளிகள் எடுத்துப் போட்டாய். உனக்கு...... உனக்கு இந்தக் கண்ணாடி இருந்தாத் தானே என்னை படிப்பில முந்துவாய்.......
ரமேஷ்; : ஐயோ! கண்ணாடியைப் பறிக்காதை பிளீஸ்......... கண்ணாடி இல்லாட்டி எனக்கு வாசிக்க இயலாது. பிளீஸ் அதைத் தந்திடு பாலன்.
பாலன் : தரமாட்டேன். இங்கபார் (நிலத்தில் போட்டு மிதித்து) இங்கபார்........ கண்ணாடி யின்ர கதை சரி
ரமேஷ்; : ஐயோ! என்ர கண்ணாடிய உடைச்சுப் போட்டியே...... (அழுதல்)
தினேஸ் : பாலன் வா போவம்....... இதில நிண்டா இவன் எங்களைக் காட்டிக் குடுத்திடு வான்.
பாலன் : டேய் ரமேஷ், நான் தான் கண்ணாடியை உடைச்சதெண்டு யாரிட்டையும் சொன்னால் பிறகு தெரியும் நான் யார் எண்டு.... வா..... தினேஸ்...... போவம்.
காட்சி - 5
(சில நாட்களின் பின்...... பாலன் கட்டிலில் படுத்திருந்தவாறு தாயாருடன் உரையாடுகின்றான்.)
கமலா : பாலன்...... பாலன்..... இன்னும் எழும் பேல்லையே. பள்ளிக்கூடம் போக நேர மாகுதெல்லோ.
பாலன் : (கண்களை மூடிக்கொண்டு) அம்மா கண்களைத் திறக்க முடியாமல் இருக்கு தம்மா. ஒரே தலையிடியாக் கிடக்கு.
கமலா : இராத்திரி ஒரு மணி மட்டும் ரீ.விக்கு முன்னால இருந்தா, இப்படித்தான். நான் சொல்லுற புத்திமதிய நீ கேட்டாத்தானே......
நாதன் : (வந்து கொண்டே) என்ன கமலா பாலனோட சண்டை பிடிக்கிறீர்.
கமலா : இஞ்ச பாலனை வந்து பாருங்கோ. அவனுக்கு கண் திறக்க முடியாமல் இருக்காம்..... தலையிடிக்குதாம்... எல்லாம் அந்த ரீ.வியால வந்த வினைதான்.
நாதன் : தம்பி பாலன் என்ன செய்யுது.
பாலன் : (அழுதுகொண்டு) கண் திறக்க முடியாமல் ஒரே தலை யிடியாய் இருக்கப்பா. என்னை டொக் டரிட்ட கூட்டிக் கொண்டு போங்கோ.
நாதன் : சரி..... நான் ஓட்டோ பிடிச்சுக்கொண்டு வாறன். பிள்ளைய வெளிக்கிடுத்திவிடும்.
காட்சி - 6
(வைத்தியசாலையில் டொக்டர் பாலனின் தந்தையுடன் உரையாடுகிறார்.)
டொக்டர் : மிஸ்டர் நாதன், உங்கட மகனின் கண் நல்லாப் பாதிக்கப்பட்டிருக்கு.......
நாதன் : (அதிர்ச்சியடைதல்) என்ன டொக்டர் சொல்லுறீங்கள்!....... டொக்டர். எப்பிடியும் என்ர பிள்ளையின்ர கண்ணைச் சுகப் படுத்திப் போடுங்கோ.
டொக்டர் : நான் முயற்சி பண்ணுறன். என்ன மருந்து கொடுத்தாலும் மூக்குக் கண்ணாடி போட
வேண்டித்தான் வரும். நல்ல தடித்த கண்ணாடி தான் போட வேண்டியிருக் கும். தொடர்ந்து. ரீவிக்கு கிட்ட இருந்து பார்த்தால் இப்படியான நிலைதான் வரும்.
நாதன் : மூக்குக் கண்ணாடி போட்டாலும் பறவா யில்லை. என்ர பிள்ளையின்ர கண் சுகமானாச் சரி டொக்டர்.
டொக்டர் : பிள்ளையள கிட்ட இருந்து தொடர்ந்து ரீ.வி பார்க்க அனுமதிக்கக்கூடாது. நீங்கள்
உங்களின்ர பிள்ளையை தொடர்ந்து ரீ.வி பார்க்க விட்டிருக்கிறியள். நடந்தது நடந்திட்டுது...... இனியாவது கவனமாக இருங்கோ.....
நாதன் : இனி கவனமாக இருக்கிறன் டொக்டர்.
பாலன் : (மனதுக்குள்) நான் ரமேசை “கண்ணாடித் தாத்தா” என்று பட்டப் பெயர் வைச்சு கேலி செய்தன். அவன்ர கண்ணாடிய உடைச்சன். இப்ப நானே கண்ணாடி போட வேண்டிய நிலைக்கு வந்திட்டன். அவன் கண்ணாடி இல்லாமல் எவ்வளவு கஷ்ரப்பட்டிருப்பான். நான் இனி எவருக் கும் எந்தத் தீங்கும் செய்யமாட்டான். வீட்ட போன உடன, ரமேசின்ர வீட்ட போய் முதலில் மன்னிப்புக் கேட்க வேணும்.
அப்பா : பாலன் என்ன யோசிக்கிறாய்.
பாலன் : அப்பா! நான் ஒரு பெரிய பிழை செய்திட் டன்.
அப்பா : என்ன பிழை செய்தனி.
பாலன் : என்னோட படிக்கிற ரமேசின்ர மூக்கு கண்ணாடிய ஆத்திரத்தில உடைச்சுப் போட்டன். அவனுக்கு புதுக்கண்ணாடி வாங்கிக் கொடுப்பீர்களா....?
அப்பா : இனி மேல் நீ எந்தத் தவறும் செய்யாமல் இருந்தால் தான் வாங்கிக் கொடுப்பன்.
பாலன் : சத்தியமாக இனிமேல் எந்தத் தவறும் செய்ய மாட்டேன் அப்பா, நான் என்னு டைய தவறை உணர்ந்திட்டன்.
அப்பா : இப்பதான் நீ என்ர பிள்ளை. இப்பவே ரமேசினுடைய வீட்டுக்குப் போய் ரமேசைக் கூட்டிக் கொண்டு வந்து டொக்ரரிடம் காட்டி கண்ணைப் பரிசோதி த்து மூக்குக் கண்ணாடி வாங்கிக் கொடுக் கிறன்.
நிறைவுக்குறியிசை
இலங்கை வானொலி - சிறுவர்மலர்
ஒலிபரப்பான திகதி - 15.06.1997
நீங்கள் மறக்க வேண்டிய சில சொற்கள்
எனக்குச் சலிப்பாக உள்ளது.
நான் முன்கோபி.
எனக்கு எரிச்சல் வருகிறது.
நீங்கள் சொல்ல வேண்டிய சொற்கள்
சுலபமாக இதைச் செய்யலாம்.
மன மகிழ்ச்சியாக உள்ளது.
இது என்னால் முடியும்.
என்னால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
+++++++++++++++++++++++++
ஆரம்பக் குறியிசை
நாடகம்
சுத்தம் சுகம் தரும்
பாத்திரங்கள் : தாய், சுதா, பாமா, டொக்டர்
காட்சி - 1
(சுதா பாடசாலைக்குச் செல்வதற்கு ஆயத்தமாகியவாறு தாயாருடன் வீட்டிலே உரையாடுகின்றாள்.)
அம்மா : சுதா, கொதிச்சு ஆறின தண்ணி கூசா வுக்க இருக்கு. தண்ணி போத்தலுக்க ஊத்திக் கொண்டு போ பிள்ள......
சுதா : (சிணுங்கியவாறு) அம்மா.... என்னால டிறிங்ஸ் போத்தலத் தூக்கிக் கொண்டு போக ஏலாது.
அம்மா : சுதா.......பைப் தண்ணி குடிக்காத பிள்ளை அதில கிருமிகள் இருக்கும் எண்டு உனக்கு எத்தனை முறை சொல்லுறது.
சுதா : எல்லாரும் கொதித்து ஆறின தண்ணியக் குடிக்கீனம். பைப் தண்ணீரைத் தானே குடிக்கீனம்.
அம்மா : நோய் எதிர்ப்புச் சக்தி உள்ள ஆக் களுக்கு நோய் இலேசில வராது. மற்ற வைக்கு நோய் உடன வரும்.
சுதா : எனக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இருந்தா நோய் வராதுதானே.
அம்மா : உனக்குத்தானே எதுக்கெடுத்தாலும் அடிக்கடி நோய் வருகுதே..... அதனால தான் கொதிச்சு ஆறிய தண்ணியக்; கொண்டு போய்க் குடி எண்டு சொல்லு றன்.
சுதா : (செல்லமாக) அம்மா! நீங்கள் பயப்படுற மாதிரி எனக்கு ஒரு நோயும் வராது.
அம்மா : நாங்கள் சுத்தமாக, சுகாதார முறைப்படி வாழ்ந்தால் எங்களுக்கு எந்த நோயும் வராது. அதுக்காகத் தான் கொதித்தாறின தண்ணியக் கொண்டு போ எண்டு சொல்லுறன்.
சுதா : அம்மா! எனக்கு எந்த நோயும் வராது. கவலைப்படாதையுங்கோ. பள்ளிக் கூடத்துக்குப் போக நேரமாகுது அம்மா...... நான் போட்டு வாறன்.
அம்மா : கவனமாலிப் போட்டு வா பிள்ள.
காட்சி - 2
(பாடசாலை இடைவேளை நேரத்தில் சுதாவும் பாமாவும் உரையாடுகின்றனர்)
சுதா : பாமா பைப்பில தண்ணி வரயில்ல..... நீ வீட்டில இருந்து தண்ணீர் கொண்டு வந்தனியா?
பாமா : ஓம் கொண்டு வந்தனான்.
சுதா : எனக்கு குடிக்க கொஞ்சம் தண்ணீர் தாறியா?
பாமா : நான் தரமாட்டன். என்னுடைய தண்ணி போத்தலுக்க இருக்கிற தண்ணி எனக்கு மட்டும் தான் காணும். நான் சாப்பிட்ட பிறகு குடிக்கிறதுக்கு வைச்சிருக்கிறன்.
சுதா : பாமா எனக்குத் தாகமாக இருக்கிறது. உன்ர தண்ணி போத்தலுக்க இருக்கிற தண்ணியக் குடிச்சிட்டு...... பைப்பில தண்ணி வந்த உடன் எடுத்துத் தாறன்.
பாமா : சுதா நான் பைப் தண்ணி குடிக்கமாட்டன். வீட்டில் அம்மா கொதிக்க வைச்சு, ஆறவைச்சு போத்தலுக்க ஊற்றித் தாற தண்ணியத் தான் குடிக்கிறனான். அத னால நான் தர மாட்டன்.
சுதா : பாமா பைப்பில தண்ணி வராததால தானே உன்னட்டக் கேட்கிறன்.
பாமா : ஏன் பைப்பில தண்ணி வரயில்ல.
சுதா : கரண்ட் இல்லையாம். அதனால மோட்டர் வேலை செய்யயில்லயாம்...... இன்னும் கொஞ்ச நேரத்தால கரண்ட் வந்திடுமாம்.
பாமா : சுதா உனக்குத் தண்ணியத் தந்திட்டு நான் குடிக்கிறதுக்கு எங்க போறது. நான் பைப்பில வாற தண்ணியக் குடிச்சன் எண்டு அம்மா கேள்விப்பட்டால் வீட்டில என க்கு அடிதான் கிடைக்கும். அதனால குறை நினைக்காத..... நான் தரமாட்டன்.
சுதா : (வேண்டாவெறுப்பாக) போயும் போயும் உன்னட்ட தண்ணீரைக் கேட்டனே. நான் வெளிப்பைப்பில போய்த் தண்ணியக் குடிக்கிறன். உன்ர தண்ணிய நீயே வைச்சுக் குடி.
காட்சி - 3
(சுதாவின் வகுப்பு மாணவி பாமா சுதாவின் தாயை சந்திக்கிறாள்)
பாமா : அன்ரி...... அன்ரி
அம்மா : யார் அது........ வாறன்..... வாறன்......
பாமா : அன்ரி நான்தான் பாமா வந்திருக்கிறன்.
அம்மா : வா பிள்ள.
பாமா : எங்க அன்ரி சுதா
அம்மா : (சோகத்துடன்) பிள்ள உனக்குத் தெரி யாதே.
பாமா : (ஆச்சரியத்துடன்) அன்ரி சுதாவுக்கு என்ன நடந்தது!
அம்மா : (சோகத்துடன்) சுதாவ ஆஸ்பத்திரி வாட்டில நிப்பாட்டியிருக்கிறம்.
பாமா : (ஆச்சரியத்துடன்) ஏன் அன்ரி?
அம்மா : சுதாக்கு வயிற்றோட்ட நோய் பிள்ள.
பாமா : (அதிர்ச்சியுடன்) உண்மையாகவா சொல்லு றீங்கள் அன்ரி.
அம்மா : ஓம் பிள்ள.
பாமா : (சோகமாக) அன்ரி நான் சுதாவைப் பார்க்கவேணும். நீங்கள் ஆஸ்பத்திரிக்குப் போகேக்க நானும் வரட்டுமா அன்ரி.
அம்மா : பிள்ள நான் இன்னும் கொஞ்ச நேரத்தில போகப் போறன். வரவிருப்பமெண்டால் வா பிள்ள.
பாமா : நானும் உங்களோடயே வாறன் அன்ரி.
அம்மா : கொஞ்சம் பொறு பிள்ள. வெளிக்கிட்டுக் கொண்டு வாறன்.
பாமா : சரி அன்ரி.
காட்சி - 4
(சுதாவின் தாயாரும் பாமாவும் வைத்தியசாலைக்குச் செல்கின்றனர். வைத்தியசாலையில் பாமா சுதாவுடனும், சுதாவின் தாயாருடனும் உரையாடுகிறாள். அப்போது டொக்டர் வருகின்றார்.)
சுதா : (சலிப்புடன்) பாமா..... வந்திட்டியா....
பாமா : (கண்கலங்கியவாறு) சுதா என்ன மன்னிச் சிடு. உனக்கு குடிக்க தண்ணி குடுத்தி ருந்தால் இந்த நிலைமை உனக்கு வந்தி ருக்காது தானே.
சுதா : பாமா அப்பிடிச் சொல்லாத. நீ வீட்டில இருந்து கொண்டு வந்த தண்ணிய நான் வாங்கிக் குடிச்சிருந்தால், நீ பைப் தண்ணிய தானே குடிச்சிருப்பாய். உனக்கு இந்த வயிற்றோட்ட நோய் வந்திருக்கும் தானே.
பாமா : எனக்கு எவ்வளவுதான் தண்ணீர்த்தாகம் எடுத்தாலும் நான் பைப் தண்ணியக் குடிக்கவே மாட்டன். நீதான் என்னை மன்னிக்க வேணும்.
அம்மா : (இடையில் குறுக்கிட்டு) இல்லப் பிள்ள. என்னுடைய மகளுக்கு இது ஒரு படிப் பினையாக இருக்கட்டும். நான் வீட்டில தண்ணியக் கொதிக்க வைச்சு தண்ணி போத்தலுக்க ஊற்றிக் கொடுத்தால் இவள் கொண்டு போகமாட்டாள். இப்ப தான் இவளுக்குப் புத்தி வந்திருக்குது.
பாமா : அன்ரி டொக்டர் வாறார்.
டொக்டர் : (சிரித்தவாறு) சுதா இப்ப வயிற்றோட்டம் நிண்டிட்டுதோ.
சுதா : (சிரித்தவாறு) ஓம் நிண்டிட்டுது.
டொக்டர் : சுதா, நான் சொல்லுறத கவனமாகக் கேளும். நாங்கள் நல்ல சுகாதாரப் பழக்க வழக்கங்களைக் கடைபிடிக்க வேணும். அப்பிடிக் கடைப்பிடித்தால் எங்களை எந்த நோயும் அணுகாது. நாங்கள் சின்ன வயசில இருந்தே கொதித்து ஆறிய நீரைக் குடிக்கப் பழக வேண்டும். சுத்த மில்லாத தண்ணீரைக் குடிக்கிறதால பல நோய்கள் வரும். சிலவேளைகளில் உயி ருக்கே ஆபத்தாகி விடும். இனியாவது அம்மாவின்ர சொல்லக் கேட்டு நடவும்.
பாமா : அன்ரி, இனி சுதா உங்களின்ர சொல்லை மீற மாட்டா.
டொக்டர் : சுதா எங்க நான் சொல்லுறதை சொல்லும் இனிமேல் என்னசெய்வீர்?
சுதா : கொதித்தாறிய நீரையே பருகுவேன் டொக்டர்.
(எல்லோரும் சிரித்தல்)
நிறைவுக்குறியிசை
இலங்கை வானொலி - சிறுவர்மலர்
ஒலிபரப்பான திகதி - 11.01.1998
சிந்தனை முத்து....
புத்தகங்கள் மனத்தோடு பேசுகின்றன்
நண்பர்கள் நம் இதயத்தோடு பேசுகின்றனர்;
இறைவன் நம் ஆன்மாவோடு பேசுகின்றார்;
மற்றைய அனைவரும் நம் செவியுடன்
பேசுகின்றனர்.
-சீனப் பழமொழி
+++++++++++++++++++++++++
ஆரம்பக் குறியிசை
நாடகம்
நல்ல மனம்
பாத்திரங்கள் : வதனி, குகன், பாலன், கமலன், மூர்த்தி
காட்சி - 1
(வதனி தன் வீட்டின் முன்வாசலில் நின்று குகனுடன் உரையாடுகின்றாள்.)
வதனி : குகன்.... என்ன ஒவ்வொரு நாளும் இந்தப் பக்கமா விடியற் காலையில போறாய்.
குகன் : விளையாட்டுப் போட்டியில ஓடுறதுக்கு பயிற்சி செய்யிறன்.
வதனி : அப்ப இந்த முறை உனக்குத்தான் முதற் பரிசும் 'சிறந்த ஓட்டவீரன்' கேடயமும் கிடைக்கும்.... (சிரித்தல்)
குகன் : அதைச் சொல்ல முடியாது.....
வதனி : ஏன் அப்பிடிச் சொல்லுறாய்.
குகன் : பாலன் எனக்கு போட்டியாக ஓட இருக்கிறானே.
வதனி : நீதானே ஒவ்வொரு நாளும் ஓடிப் பயிற்சி செய்யிறியே... பாலன் ஓடிப் பயிற்சி செய்யிறத நான் காணயில்லையே. பிற கேன் பயப்படுறாய்.
குகன் : நான் எப்பிடித்தான் ஓடிப் பயிற்சி செய் தாலும் பாலன் முதலாவதா வந்திடுவான்... போன முறையும் அவனுக்குத்தான் சிறந்த ஓட்ட வீரனுக்கான கேடயம் கிடைச்சிது..... அதுதான் பயப்படுறன். (கவலையாக)
வதனி : இந்த முறை உனக்குத்தான் சிறந்த வீரனுக்கான கேடயம் நிச்சயம் கிடைக் கும்.
குகன் : எப்படி திட்டவட்டமாச் சொல்லுறாய்.
வதனி : நீ ஒவ்வொரு நாளும் அதிகாலையில எழும்பி ஓடிப் பயிற்சி செய்யிறதப் பார்க்க..... இந்த முறை திறமைதான் உனக்கு இருக்கெண்டு நம்புறன்.
குகன் : நீ சொல்லுறபடி நடந்தால் எனக்கும் சந்தோசம் தானே. விளையாட்டுப் போட்டியில எதையும் திடமாகச் சொல்ல முடியாதே.
காட்சி - 2
(சில நாட்களின் பின் பாடசாலையில் கமலனும் குகனும் உரையாடுகின்றனர். அப்போது பாலன் வருகின்றான்.)
கமலன் : குகன்.... இந்த முறையும் நூறு மீற்றர் ஓட்டத்தில உன்ன பாலன் முந்தியிட் டான்..... நீ எப்பிடிப் பயிற்சி செய்தும் பிரியோசனமில்லையே.....
குகன் : 200 மீற்றர் ஓட்டம் நாளைக்கு இருக்குது.... நாளைக்கு நான் முதலாவதாக வருவன்.... அப்பிடி நான் வராட்டால் ....................................
கமலன் : குகன் அந்தா..... பாலன் வாறான். (தூரத்தில் நடந்து வருதல்)
குகன் : அவன் வந்தா.... வரட்டுமே.
கமலன் : பாலன்.... இங்க வா...... குகன் சொல்லூறான்... 200 மீற்றர் ஓட்டத்தில உன்ன நாளைக்கு குகன் வெல்லப் போறானாம்..... நீ என்ன செய்யப்போறாய் (சிரித்துக் கொண்டு)
பாலன் : நாளைக்கு நடக்கப் போறதைப் பற்றி இப்ப கதைச்சு என்ன பயன் வரப் போகுது..... கற்பனைக் கோட்டை கட்டி அது இடிஞ்சு போனால்....!
குகன் : என்ன பகிடியா விடுறாய். இருந்து பார் நாளைக்கு உன்ன முந்தி முதலாவதாக வந்து காட்டுறன்.
பாலன் : யார் உன்னை முதலாவதாக வர வேண் டாம் எண்டு சொன்னது..... நீ முதலாவதாக வந்தால் நான் ரெண்டாவதா வருவன். அதுக்கென்ன.... எனக்கு நேரமாகுது. நான் போட்டுவாறன்.
காட்சி - 3
(பாடசாலை மைதானத்தில் அமைந்துள்ள இல்லக் கூடாரத்திற்குள் நின்றவாறு வதனியும் குகனும் உரையாடுகின்றனர். கமலன் இவர்களை நோக்கி வருகின்றான்.)
வதனி : குகன் பார்த்தியா..... நான் சொன்ன மாதிரி நீ முதலாவதாக வந்திட்டாய்தானே.... எனது வாழ்த்துக்கள்.
குகன் : நன்றி வதனி..... நான் மைதானத்தில ஓடேக்க வந்து பாத்தனியா....?
வதனி : இல்ல குகன்... 200 மீற்றர் ஓட்டப்போட்டி நடக்கேக்க நான் இல்ல. வேலையா வெளியில போயிட்டன்.... குகன் அங்கபார் கமலன் வேகமாக வாறான்......
கமலன் : (பதற்றத்துடன்) குகன், பாலன் கண்டனியா.
குகன் : நா...ன் காணயில்ல.
வதனி : ஏன் கமலன் பாலனைத் தேடுறாய்......
கமலன் : வதனி, இண்டைக்கு 200 மீற்றர் ஓட்டப் போட்டி நடந்ததெல்லோ.
வதனி : ஓம். அதுக்கு என்ன?
கமலன் : பாலன் 200 மீற்றர் ஓட்டப்போட்டியில கலந்து கொள்ளயில்ல. அதுதான் தேடு றன்..................
வதனி : (ஆச்சரியமாக) உண்மையாகவா சொல்லு றாய்! கமலன். அப்ப..... பாலன் 200 மீற்றர் ஓட்டப்போட்டியில கலந்து கொள்ள யில்லயா?
கமலன் : இல்லை வதனி. அதனாலதானே..... குகன் 200 மீற்றர் ஓட்டப்போட்டியில முதலவதா வரமுடிஞ்சுது.
வதனி : பாலன் எங்க!.....................
கமலன் : அதுதான் எனக்கும் தெரியேல்ல
வதனி : வீட்ட போய்ப் பார்த்தனிய.....
கமலன் : வீட்ட போய் அவன்ர அம்மாட்டக் கேட்டனான். பள்ளிக்கூடம் போயிட்டான். எண்டு சொன்னா. ஆனால் அவன் பள்ளிக்கூடத்துக்கு வந்ததாத் தெரியேல்ல. அதுதான் அவனுக்கு என்ன நடந்ததது எண்டு தெரியாமக் கிடக்கிது.
வதனி : குகன், என்ன எதுவுமே கதைக்காமல் நிக்கிறாய்.
கமலன் : பாலன் எங்க போனான் எண்டு போய் விசாரிச்சிப் பாப்பம்......
வதனி : குகன் நீயும் வாறியா.....
குகன் : எனக்கு வேலையிருக்கு. நான் வரயில்ல. நீங்கள் போய் விசாரிச்சுப் பாருங்கோ.
கமலன் : வதனி, அவன விட்டிட்டு நீ வா. நாங்கள் விசாரிச்சுப் பாப்பம்......
காட்சி - 4
(வதனியும் கமலனும் மைதானத்தில் இருந்து நடந்து வரும் போது பாலன் அவர்களை நோக்கி வருகின்றான்.)
கமலன் : பாலன் இவ்வளவு நேரமும் எங்க போயிருந்தனி.
பாலன் : குகன்ர வீட்;ட போயிட்டு வாறன்.
வதனி : ஏன் குகனின்ர வீட்ட போட்டு வாறாய்.
பாலன் : குகனின்ர தம்பி பள்ளிக்கூடப் படியில ஏறேக்க படியில கிடந்த வாழைப்பழத் தோலில சறுக்கி கீழ விழுந்திட்டான். அவன்ர தலையிலயும் கையிலயும் காயம்.
கமலன் : (பதற்றத்துடன்) பிறகு.....
பாலன் : அவனை ஆஸ்பத் திரிக்கு கூட்டிக் கொண்டு போக அவன்ர வகுப்பு சேர் என்னையும் கூட வரச் சொன்னார்.
வதனி : ஏன் உன்னை வரச் சொன்னார்.
பாலன் : குகனை தேடி ஆள் அனுப்பினார். அவனைக் காணயில்ல. குகனின்ர வீடு தெரியுமோ எண்டு என்னட்ட கேட்டார்.
கமலன் : அதுக்கு நீ என்ன சொன்னனி?
பாலன் : தெரியும் எண்டு சொன்னன்.
வதனி : உனக்கு இண்டைக்கு 200 மீற்றர் ஓட்டப் போட்டி இருக்கு எண்டு சேரிட்ட சொல்ல யில்லயா.
பாலன் : குகனின்ர தம்பியின்ர தலையில இருந்து நிறைய இரத்தம் வெளியேறியிட்டுது....... இந்த நேரத்தில உதவி செய்யிறது முக்கி யமோ? ஓட்டப்போட்டி முக்கியமோ?
கமலன் : நீ சொல்லுறது சரிதான். வேறை யாரையும் ஆசிரியரோட அனுப்பியிருக்கலாமே.
பாலன் : குகனின்ர தம்பியை ஆஸ்பத்திரியில நிப்பாட்ட வேண்டி வரும். அதனால குகனின்ர அப்பா அம்மாவிடம் சொல்ல வேணும் தானே. குகனின்ர தம்பியும் அதிகம் இரத்தம் போனதால மயங்கிப் போயிட்டான். யாரிட்ட கேட்டு வீட்டைக் கண்டு பிடிக்கிறது. அதுதான் என்னைக் கூட்டிக் கொண்டு போனவர்.
கமலன் : இப்ப குகனின்ர தம்பிய ஆஸ்பத்திரியில நிப்பாட்டிப் போட்டினமா?
பாலன் : ஓம்
கமலன் : நடந்த சம்பவத்தை குகனின்ர வீட்டில் போய் சொல்லியிட்டியா?
பாலன் : சொல்லியிட்டுத்தான் வந்தனாங்கள்.
கமலன் : குகனுக்கு இந்த விசயம் தெரியுமா?
பாலன் : தெரியாது. நான் எங்கட மூர்த்தியிட்ட சொல்லி விட்டனான். அவன் போய்ச்
சொல்லியிருப்பான்.
கமலன் : அப்ப சரி. நான் உன்னைக் காணயில்ல எண்ட உடன் பயந்திட்டன். அதுதான் நானும் வதனியும் நீ எங்க போனனீ எண்டு விசாரிச்சுக் கொண்டிருந்தனாங்கள்.
வதனி : அங்க குகன் ஓடி வாறன்.
குகன் : (களைத்தவாறு) பாலன் என்ர தம்பிக்கு என்ன நடந்தது.......
பாலன் : பயப்படாத......... உன்ர தம்பிக்கு பயப்படும் படியாக ஒண்டும் இல்லை. உன்ர அப்பாவும் அம்மாவும் ஆஸ்பத்திரியில நிக்கினம்.
குகன் : நீ செய்த உதவிய எண்டைக்கும் மறக்க மாட்டன். பாலன்.
பாலன் : இது என்னடா பெரிய உதவி.
குகன் : 200 மீற்றர் ஓட்டப்போட்டி இருக்கு எண்டு தெரிஞ்சும் யாருக்கும் அதைப் பற்றிச் சொல்லாமல் என்ர தம்பிய ஆஸ் பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போனியே. இந்த நல்ல மனம் வேற யாருக்கு வரும்.
பாலன் : அப்படிச் சொல்லாத குகன்.
குகன் : 200 மீற்றர் ஓட்டப்போட்டியில நீ ஓடி யிருந்தால் நீதான் முதலாவதாக வந்தி ருப்பாய்............ அந்த வாய்ப்பு போயிட் டுதே.......
பாலன் : அதனால என்ன..... நீ முதலாவதாக வந்திருக்கிறியே. அது எனக்கு சந்தோசம் தானே........
வதனி : பாலன் உனக்கு ஓட்டப்போட்டியில கலந்து கொள்ளயில்ல எண்டு கவலை யில்லயா?
பாலன் : எனக்குக் கவலை இல்லை......
கமலன் : ஏன்....?
பாலன் : நான் அந்த நேரத்தில நல்ல காரியம் தானே செய்திருக்கிறன்......
கமலன் : உன்னைக் கூட்டிக் கொண்டு போன ஆசிரியருக்கு நீ ஓட்டப்போட்டியில கலந்து கொள்ள வேணும் எண்ட விசயம் தெரியுமா?
பாலன் : கூட்டிக் கொண்டு போகேக்க தெரியாது..... திரும்பி வரயிக்க நான்தான் சொன்ன னான்.
குகன் : அதுக்கு ஆசிரியர் என்ன சொன்னவர்.
பாலன் : ஏன் சொல்லயில்ல எண்டு கேட்டல் நான் செய்த இந்த உதவியைப் பற்றி அதிபரிடம் சொல்லப் போறதாகச் சொன்னார்.
கமலன் : நீ செய்த மிகப் பெரிய தியாகத்தைப் பற்றி கட்டாயம் அதிபரிடம் சொல்லத்தான் வேணும்.
குகன் : உன்ர நல்ல மனத்தை எல்லாரும் தெரிஞ்சு கொள்ள வேணும். அதுமட்டும் இல்ல நீ எங்களுக்கு எல்லாம் ஒரு வழிகாட்டி.......
வதனி : அங்க மூர்த்தி ஓடி வாறான்.
கமலன் : மூர்த்தி ஏன் ஓடி வாறாய்.
மூர்த்தி : (களைத்தவாறு) அதிபர் பாலனை அலுவலகத்துக்கு வரச் சொல்லிக் கூப்பிடுறார்.....
பாலன் : என்யா அதிபர் கூப்பிடுறார்.
கமலன் : அதிபர் வேற யாரைக் கூப்பிடுவார். உன்னைத்தான் கூப்பிடுறார்.
பாலன் : என்னை ஏன் கூப்பிடுறார்?
வதனி : நீ செய்த தியாகத்தைப் பற்றி ஆசிரியர் அதிபரிடம் சொல்லியிருப்பார். அதிபர் உன்னைப் பாராட்டத்தான் கூப்பிடுறார்.
கமலன்; : ஏன் பாலன் பயப்படுறாய்.
வதனி : உன்ர நல்ல மனதுக்கு நல்லதுதான் நடக்கும். பயப்படாமல் போயிட்டுவா.
நிறைவுக்குறியிசை
இலங்கை வானொலி - சிறுவர்மலர்
ஒலிபரப்பான திகதி - 31.05.1998
சிந்தனை முத்து....
நமது கனவுகளே நமது பண்பை உருவாக்கும் மூலைக் கற்களாக ஆகின்றன.
-ஹென்றி டேவிட் தோரா
சொற்கள் பூவைப் போன்றவை;
அதைத் தொடுக்கும் விதத்தில்
தொடுத்தால் தான் மதிப்புப் பெற முடியும்!
-சாமிபெல்
+++++++++++++++++++++++++
ஆரம்பக் குறியிசை
நாடகம்
அவன்தான் மனிதன்
பாத்திரங்கள் : தாய், தினேஸ், ராமு, டொக்டர்
காட்சி - 1
(தினேஸ் வேலைக்காரச் சிறுவனான ராமுவுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறான். அவ்வேளையில்
தினேசின் தாயார் வருகிறார்.)
அம்மா : தினேஸ் பள்ளிக்கூடத்துக்கு வெளிக் கிடேலயா.
தினேஸ் : வெளிக்கிடுறன் அம்மா.
அம்மா : ராமுவோட என்ன குசுகுசுக்கிறாய்.
தினேஸ் : (தடுமாற்றத்துடன்) ஒண்டுமில்லையம்மா
அம்மா : என்ன தினேஸ் ஒண்டுமில்ல எண்டு பொய் சொல்லுறாய்
தினேஸ் : அம்மா..... அது....... வந்து.......
அம்மா : என்னடா வந்தும் போயும்...... (வருதல்) ராமு நீ ஏன் கொப்பியும் பேனையும்
வைச்சிருக்கிறாய்.
தினேஸ் : அது வந்து ........ அம்மா.......
அம்மா : ராமு உண்மையைச் சொல்லு....... உண்மை யைச் சொல்லாட்டி சாப்பாடு தராமப் பட்டினிதான் போடுவன்.
தினேஸ் : அம்மா...... நான் உண்மையைச் சொல்லு றன். என்னை பட்டினி போட்டிடாதை யுங்கோ.
தினேஸ் : ராமு...... (இடைமறித்தல்)
அம்மா : (கோபமாக) தினேஸ் ராமுவைச் சொல்ல விடு.....
தினேஸ் : அம்மா நான் உண்மையைச் சொல்லுறன்.
அம்மா : அதை முன்னமே சொல்லியிருக்க லாமே.......
தினேஸ் : அம்மா...... நீங்கள் ராமுவுக்கு அடிப்பியள் எண்டுதான் நான் சொல்லயில்ல.
அம்மா : ராமு பிழை செய்தால் அடிக்கத்தானே வேணும்.
தினேஸ் : ராமு பிழை செய்யேல்ல... நான் தான் பிழை செய்தனான்.
அம்மா : நீயோ! (ஆச்சரியமாக) என்ன சொல்லு றாய் தினேஸ்.
தினேஸ் : அம்மா...... ராமுவுக்கும் என்ர வயசு தானே.
அம்மா : ஓம் அதுக்கு இப்ப என்ன........
தினேஸ் : வசதி இல்லாததால தானே ராமு தொடர் ந்து படிக்கையில்ல. அதுதான்...... ராமு வுக்குப் பாடஞ் சொல்லிக் குடுத்தனான்.
அம்மா : எங்கட வீட்டுக்கு வேலைக்காரனாத்தான் ராமு வந்திருக்கிறான். அவனுக்கு நீ பாடஞ் சொல்லிக் குடுக்கப் போறியோ......
தினேஸ் : ராமு பாவம் தானே அம்மா.
அம்மா : எனக்குப் பாவ புண்ணியத்தைப் பற்றித் தெரியாது. நீயும் இனிமேல் ராமுவுக்குப் பாடஞ்
சொல்லிக் குடுக்கக்கூடாது. ராமு இங்க வா.......(கோபமாக)
ராமு : என்ன அம்மா.....
அம்மா : குசினிக்குள்ள போய் பாத்திரங்கள எடுத்து நல்லாக் கழுவு......
ராமு : சரியம்மா
அம்மா : தினேஸ் இஞ்ச வா.....
தினேஸ் : என்னம்மா.......
ராமு : இனிமேல் நீ ராமுவுக்குப் பாடஞ் சொல் லிக் குடுக்கக்கூடாது.
தினேஸ் : ஏனம்மா.....
அம்மா : இங்க உள்ள வீட்டு வேலைகளை யார் செய்யிறது. என்னால தனியச் செய்ய முடியுமா?.
தினேஸ் : எங்கட நலனுக்காக ராமுவின்ர வாழ்க் கையப் பாழாக்க வேணுமா அம்மா.
அம்மா : தினேஸ் எனக்குப் புத்தி சொல்ல வர வேண்டாம். நான் சொல்லுறத நீ செய்...... பள்ளிக்கூடம் போக நேரமாகுது....... வெளிக்கிடு....... எல்லாம் உனக்கு அப்பா குடுத்த செல்லம் தான்.
அம்மா : ராமு..... ராமு......
ராமு : என்னம்மா.....
அம்மா : இஞ்ச வா.... ராமு..... இனி நீ தினேசோட கதைக்கக்கூடாது. அவன் கூப்பிட்டாலும் நீ கிட்டப் போகக்கூடாது.
ராமு : சரியம்மா.....
அம்மா : தினேஸ் உன்ன படிக்க வரச் சொன்னால் நீ படிக்கப் போகக்கூடாது. உன்ர கையில பேனையோ கொப்பியோ இருந்தால்..... நான் பொல்லாதவளா மாறியிடுவன் (கோபமாக)
ராமு : சரிம்மா... இனி தினேஸ் ஐயா கூப் பிட்டாலும் போகமாட்டன் அம்மா.
அம்மா : நான் சொல்லுறபடி நடந்தா உனக்கு இந்த வீட்டில எந்தப் பிரச்சினையும் இருக் காது....... இல்லாட்டி...... சாப்பாடு தராமல் பட்டினிதான் போடுவன்.
ராமு : அம்மா எனக்கு சாப்பாடு தராமல் பட்டினி போட்டிடாதையுங்கோ..... நான் நீங்கள் சொல்லுறபடி கேட்டு நடப்பன் அம்மா.......
அம்மா : சரி.......சரி தினேசின்ர ஊத்த உடுப்புக்களை எடுத்துக் கொண்டு போய் அதுகளை நல்லாத் தோய்த்துப் போடு.
காட்சி - 2
(தினேசும் ராமுவும் வீட்டில் உரையாடுகின்றனர்)
தினேஸ் : ராமு...... ராமு....... (உரத்துக் கூப்பிடுதல்) (சிறிது மௌனம்)
தினேஸ் : ராமு..... நான் தொண்டை கிழியக் கத்திறன். நீ காது கேளாதவன் மாதிரி இருக்கிறாய்.....
ராமு : தினேஸ் ஐயா, உங்களோட கதைக்கக் கூடாது எண்டு அம்மா சொல்லியிருக் கிறா......
தினேஸ் : அம்மா சொன்னால் சொல்லிப் போட்டுப் போகட்டும். நீ...... வா படிக்க......
ராமு : தினேஸ் ஐயா..... நான் வரமாட்டன்...... அம்மா... கண்டால் அடிப்பா... அது மட்டுமல்ல... சாப்பாடு தராமல் பட்டினி போட்டிடுவா.
தினேஸ் : அம்மா சாப்பாடு தராட்டி நான் என்ர சாப் பாட்டத் தாறன். ராமு நீ கவலைப்படாத.... வா படிக்க......
ராமு : என்னால நீங்கள் ஏன் பட்டினி கிடக்க வேணும்..... வேண்டாம் ஐயா.... நான் படிக்க வரயில்ல......
தினேஸ் : ராமு.... இப்ப நான் சொல்லுறதக் கேள்..... உனக்கு நான் தந்த கொப்பியையும், பேனையையும் எடுத்துக் கொண்டுவா......
ராமு : எனக்கு பயமாக்கிடக்கிது...... படிப்பு எனக்கு வேண்டாம் ஐயா.......
தினேஸ் : நீ அப்பிடிச் சொல்லக்கூடாது. நீ படிக்கத் தான் வேணும்.... பள்ளிக்கூடம் போகத் தான் உன்னால முடியேல்ல...... பறவா யில்ல..... நான் சொல்லித்தாறதப் படி, அது உனக்குப் போதும்.
ராமு : ஐயா..... அம்மா....... வந்திட்டால்..... எனக்குப் பயமாக்கிடக்கிது...... வேண்டாம் ஐயா.... (பயத்துடன்)
தினேஸ் : அம்மா சந்தைக்குப் போயிட்டா.... வர நேரமாகும்..... அதுக்கிடையில கொஞ்ச நேரம் படிச்சிடலாம்.....
ராமு : ஐயா.... எனக்கு பயமாக்கிடக்கிது...... வேண்டாம் ஐயா.
தினேஸ் : ஐயா எண்டு என்ன கூப்பிட வேண்டாம் எண்டு எத்தின முறை சொல்லிப் போட்டன். எனக்கும் உனக்கும் ஒரே வயசுதானே..... பிறகு ஏன் ஐயா எண்டு சொல்லுறாய்.
ராமு : நான் உங்கட வீட்டுவேலைக்காரன் தானே.....
தினேஸ் : நான் உன்ன வேலைக்காரன் எண்டு சொல்லயில்லயே.....
ராமு : நீங்கள் சொன்னாலும் சொல்லாட்டியும் நான் உங்கட வீட்டு வேலைக்காரன் தானே....
தினேஸ் : உன்ன திருத்த ஏலாது..... நீ இனிமேல் என்னை தினேஸ் எண்டு மட்டும்தான் கூப்பிட வேணும்... இல்லாட்டி உன்னோட கதைக்க மாட்டன்.... (மௌனம்) எடு கொப்பிய.... நான் சொல்லுறத சொல்லிச் சொல்லி கொப்பியில எழுது..... "அன்னை யும் பிதாவும் முன்னறி தெய்வம்"
ராமு : அன்னையும்..... பிதாவும்..... முன்னறி..... தெய்வம் (சொல்லிச் சொல்லி எழுதுதல்)
தினேஸ் : "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்."
ராமு : எழுத்தறிவித்தவன்...... இறைவன்..... ஆவான்.... (சொல்லிச்சொல்லி எழுதுதல்) அம்மா (வருதல்)
அம்மா : ராமு......ராமு (உரத்துக் கூப்பிடுதல்)
ராமு : (தடுமாற்றத்துடன்) வாறன்.... அம்மா......
அம்மா : உங்க என்ன செய்யிறாய்.....
ராமு : அது..... வந்து.....வந்து......அ.....ம்மா....... (தடுமாறுதல்)
அம்மா : உனக்கு எத்தனை முறை சொன்னனான். தினேசோட சேர வேண்டாம்.... அவனட் டப் போய் பாடம் கேட்டு படிக்க வேண் டாம் எண்டு (கோபமாக)
ராமு : அது..... வந்து..... அம்மா....
அம்மா : தினேஸ்..... நீ போய்ப்படி.... ராமுவுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிற நேரத்துக்கு நீ படிச்சிடலாம்.
தினேஸ் : ஊரார் பிள்ளைய ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானா வளரும்.....
ராமு : (கோபமாக) தினேஸ்..... நீ எனக்கு புத்தி சொல்லத் தேவையில்லை. நீ போய்ப் படி.... ராமு இங்க வா.
ராமு : (பயத்துடன்) அம்மா
அம்மா : நான் சொல்லுறதா கேக்கிறாயில்ல உன்ன இரண்டு நாளைக்கு பட்டினி போட்டாத் தான் திருந்துவாய்..... இல்லாட்டிடித் நீ திருந்தமாட்டாய்.......
காட்சி - 3
(தாயும் மகனும் வீட்டிலே உரையாடுகின்றனர்.)
அம்மா : (உரத்துக் கூப்பிடுதல்) தினேஸ்..... தினேஸ்.....
தினேஸ் : என்னம்மா.....
அம்மா : சாப்பிட வா....
தினேஸ் : எனக்குப் பசிக்கேல்ல....... சாப்பாடு வேண்டாம்.
அம்மா : தினேஸ் இரவில சாப்பிடாம படுத்தா உடம்புக்குக் கூடாது..... சாப்பிட வா.....
தினேஸ் : எனக்கு வேண்டாம்..... என்ன நிம்மதியா படுக்கவிட்டால் போதும் எனக்குப் பசிக்கேயில்ல......
காட்சி - 4
(காலையில் தாயும் மகனும் உரையாடுகின்றனர்.)
அம்மா : தினேஸ் பள்ளிக்கூடத்துக்கு போக யில்லயா.
தினேஸ் : போகப் போறன் அம்மா.....
அம்மா : பள்ளிக்கூடத்துக்கு போகிறதுக்கு நேரமா குது. சாப்பிடு.
தினேஸ் : எனக்கு பசிக்கேயில்ல.... சாப்பாடு வேண் டாம்.
அம்மா : தினேஸ் பிடிவாதம் பிடிக்காத..... சாப்பிடு.....
தினேஸ் : எனக்கு பள்ளிக்கூடம் போக நேரமாகிது... எனக்குப் பசிக்கேல்ல.... நான் போட்டு வாறன்.
அம்மா : தினேஸ் சாப்பிட்டிட்டுப் போ.
தினேஸ் : எனக்கு வேண்டாம். ராமு..... நான் போட்டு வாறன்.
காட்சி - 5
(கடைக்குப் போன ராமு வீட்டிற்கு ஓடி வருகின்றான்.)
ராமு : (களைத்தவாறு) அம்மா..... அம்மா.....
அம்மா : ராமு.... ராமு.... ஏன் பதறிக் கொண்டு ஓடி வாறாய்.....
ராமு : தினேஸ் ஐயா..... தினேஸ் ஐயா பள்ளிக் கூடத்தில் இருந்து வீட்டுக்கு வரேயிக்க வழியில மயங்கி விழுந்திட்டாராம்....
அம்மா : (பதற்றத்துடன்) பிறகு என்ன நடந்தது....
ராமு : பள்ளிக்கூட ஆசிரியர்மார் பெரியாஸ் பத்திரிக்குக் கொண்டு போட்டினமாம் எண்டு சந்திக் கடைக்காரன் சொன்னான் அம்மா....
அம்மா : ஐயோ! கடவுள்.... என்ர பிள்ளைக்கு ஒண்டும் நடக்கக்கூடாது..... ராமு.....
ராமு : என்னம்மா....
அம்மா : ரோட்டால போற ஓட்டோவ நிற்பாட்டு. உடன பெரியாஸ்பத்திரிக்குப் போவம்.....
காட்சி - 6
(தினேசின் தாயார் வைத்தியசாலையில் டொக்ரருடன் உரையாடுகின்றார்.)
அம்மா : (அழுதவாறு) டொக்ரர்..... என்ர பிள்ளை க்கு என்ன நடந்தது...... என்ர பிள்ளை யைக் காப்பாற்றுங்கோ டொக்ரர்.....
டொக்ரர் : அம்மா.... உங்கட பிள்ளைக்கு ஒண்டும் இல்ல.... மன உளைச்சல் தான்...... ஒழுங் காகச் சாப்பிடாததால வந்த பிரச்சினை தான் இது. சாப்பாட்டை ஒழுங்கா நேரத்து க்கு நேரம் கொடுத்தால் எந்த பிரச்சினை யும் இல்ல. விட்டமின் ரொனிக் எழுதித் தாறன். அதை வாங்கிக் கொடுங்கோ.....
அம்மா : தினேஸ்...... அம்மா வந்திருக்கிறன்..... என்ர ராசா எல்லோ! கண்ணத் திறந்துபார்.....
தினேஸ் : அ.....ம்மா...... ராமு எங்க.
அம்மா : இந்தா பக்கத்தில நிக்கிறான்.
தினேஸ் : அம்மா..... ராமுவுக்கு சாப்பாடு கொடுத் தனீங்களா....?
அம்மா : (மௌனம்)
தினேஸ் : என்னம்மா..... பேசாமல் நிக்கிறீங்கள்..... ராமு..... நீ சாப்பிட்டிட்டியா.....?
ராமு : தினேஸ் ஐயா நான் சாப்பிட்டிட்டனான்.....
தினேஸ்; : ராமு நீ பொய் சொல்லுறாய்..... நீ சாப் பிடயில்ல.... அம்மா..... சாப்பிடாட்டி ராமு வுக்கும் இந்த நிலைமைதானே வரும். அப்பிடி வந்தால்.... ராமுவைக் கவனிக்க யாரும் இல்லதானே அம்மா....
அம்மா : (அழுதவாறு) போதும் தினேஸ்.... என்னைச் சொல்லாலயே கொல்லாத.... நான் இனி....... ராமுவைப் பட்டினி போட மாட்டன்.... என்ர பிழைய நான் உணர்ந் திட்டன். இனி இப்படியான பிழையைச் நான் செய்யமாட்டன்.
தினேஸ் : அம்மா.... என்ர ஆசையை நிறைவேற்றி வைப்பீங்களா.....?
அம்மா : சொல்லு தினேஸ்... கட்டாயம் நிறைவேற்றி வைக்கிறன்.
தினேஸ் : ராமுவைப் பள்ளிக்கூடத்தில சேர்த்து விடுவீங்களா?
அம்மா : தினேஸ், நாளைக்கே ராமுவ பள்ளிக் கூடத்தில சேர்த்து விடுறன்..... இனி ராமு வேலைக்காரன் இல்ல. அவனும் என்ர மகன்தான்.
நிறைவுக்குறியிசை
இலங்கை வானொலி - சிறுவர்மலர்
ஒலிபரப்பான திகதி - 21.11.1999
சிந்தனை முத்து....
மன்னித்தல் தண்டித்தலை விடச் சிறந்தது; ஏனெனில், தண்டித்தல் விலங்குகளின் குணம், மன்னித்தல் மனித குணம்.
-எமிச் டெட்ஸ்
+++++++++++++++++++++++++
ஆரம்பக் குறியிசை
நாடகம்
மனித நேயம்
பாத்திரங்கள் : சங்கர், வரதன், குமார், கீதா
காட்சி - 1
சங்கரும் வரதனும் வகுப்பறைக்கு வெளியில் நின்று உரையாடுகின்றனர்.)
சங்கர் : வரதன்..... குமார் பாடசாலைக்கு வரேல்லையா.
வரதன் : வரேயில்ல
சங்கர் : வரதன்.... குமார் நேற்றும் வரேல்லயே.
வரதன் : அவன் அகதி முகாமில இருந்துதானே பள்ளிக்கூடத்துக்கு வாறான்.
சங்கர் : பள்ளிக்கூடத்துக்கு வாறதுக்கும் அகதி முகாமுக்கும் என்ன சம்பந்தம்.
வரதன் : அகதி முகாமில இருந்து பள்ளிக்கூடத் துக்கு வந்தால் மரியாதை இல்லைத்தானே.
சங்கர் : அவன் எங்க இருந்து வந்தா எங்களுக்கு என்ன? எங்கட காசிலயா அவன் படிக் கிறான்.
வரதன் : உனக்குப் பக்கத்தில அவன் இருக்கிறது இல்லையே.... எனக்குப் பக்கத்தில தான் இருக்கிறான்..... எனக்குத்தான் அவமானம்.
சங்கர் : உனக்குப் பக்கத்தில அவன் இருக்கிறது கௌரவக் குறைச்சல் எண்டா.... நீ என்ர இடத்தில போய் இரு.... நான் உன்ர இடத்தில் இருக்கிறன்.
வரதன் : நான் ஏன் இடம் மாறவேணும்..... நீ வேணும் எண்டா உன்ர இடத்தக் கொடுத் திட்டு அவன்ர இடத்தில வந்து இரு.
சங்கர் : எனக்கு யாருக்கும் பக்கத்தில இருக்கிற தில பிரச்சினை இல்லை. யாரோட கதைக் கிறதிலேயும் பிரச்சினை இல்ல.
வரதன் : நான் அகதி முகாமில இருந்து வாறவங் களுக்குப் பக்கத்தில இருக்கவும் மாட்டன்,
அவங்களோட பழகவும் மாட்டன். அவங் களுக்கு நாகரிகம் தெரியாது.
சங்கர் : உனக்கு மட்டும் நாகரிகம் தெரியுமா?...... இல்லையே.
வரதன் : (கோபமாக) சங்கர் வார்த்தையை அளந்து பேசு. அந்த அகதி முகாம் குமாருக்காக
வக்காலத்து வாங்காத.....
சங்கர் : நான் யாருக்காகவும் வக்காலத்து வாங்க யில்ல. உள்ளதை உள்ளபடி சொல்லுறன்.
வரதன் : நீ குமாரோட சேர்ந்தால் என்னோட கதைக்க வேண்டாம்.
சங்கர் : எனக்கு என்ர வகுப்பில படிக்கிற எல்லா ருமே நண்பர்கள் தான். நான் எல்லா ரோடையும் கதைப்பன். அதை யாராலும் தடுக்க முடியாது. அப்பிடி யாராவது தடுத்தால்..... அவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொள்ள மாட்டன்.
வரதன் : என்னோட கதைக்க உனக்கு விருப்ப மில்லை. அதுதான் சொல்லாமல் சொல் லிக் காட்டுறியா.
சங்கர் : உனக்குப் புரிஞ்சாச் சரி.
வரதன் : இனிமேல் எனக்கும் உனக்கும் எந்த உறவும் இல்ல.
சங்கர் : நான் அப்பிடிச் சொல்ல இல்லையே.
வரதன் : நான் இனிக் கதைக்கமாட்டன்..... நான் சொன்னால் சொன்னதுதான்.
சங்கர் : அது உன்னுடைய விருப்பம்....
காட்சி - 2
(அண்ணனும் தங்கையும் வீட்டின் வரவேற்புக் கூடத்தில் அமர்ந்திருந்து உரையாடுகின்றனர்.)
கீதா : என்ன சங்கர் யோசித்துக் கொண்டு இருக் கிறாய்.
சங்கர் : (சலிப்புடன்) ஒண்டும் இல்ல கீதா.
கீதா : ஒண்டுமில்ல எண்டு சொல்லுறாய்..... உன்ர முகத்தைப் பார்த்தால் அப்பிடித் தெரிய வில்லையே......
சங்கர் : உனக்கு எப்பிடித் தெரியிது.
கீதா : எதையோ பறி கொடுத்தவன் மாதிரி யெல்லோ இருக்கிறாய்.
சங்கர் : உண்மைதான் கீதா.... நான் இந்த உலகத் தில வாழுற மனிதர்களைப் பற்றி நினைச் சன்....
கீதா : நீ ஏதாவது ஆராய்ச்சி செய்யப் போறியா?
சங்கர் : இனிமேல், தான் ஆராய்ச்சி செய்யப் போறன்.
கீதா : ஏன்?
சங்கர் : எனக்கு நண்பர்கள் பல பேர் இருக் கிறார்கள். ஆனால் வரதனை போல ஒருத்தனை நண்பனாக அடைந்ததை எண்ணிக் கவலைப்படுறன்.
கீதா : ஏன் கவலைப்படுறாய்.
சங்கர் : குமாரை உனக்குத் தெரியும் தானே.
கீதா : ஓம்
சங்கர் : அவன் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த வன். யுத்தத்தில தாய் தகப்பனை இழந்து சகோதரங்களோட அகதி முகாமில வாழு றான்.
கீதா : அதுக்கு என்ன இப்ப.
சங்கர் : அகதி முகாமில இருந்து பள்ளிக்கூடத்து க்கு வாறது வரதனுக்கு பிடிக்கயில்ல யாம்...... தனக்கு பக்கத்தில இருக்கிறதே அவமானமாம்...... எண்டு சொல்லுறான்.
கீதா : இப்பிடிக் கதைக்கிறவன நண்பன் எண்டு சொல்ல உனக்கு வெட்கமாக இல்லயா?
சங்கர் : நான் வரதனட்ட இப்பிடிக் கதைக்கக் கூடாது எண்டு சொன்னன்......
கீதா : அதுக்கு அவன் என்ன சொன்னவன்.
சங்கர் : நான் சொன்னதைக் காதில வாங்கிக் கொள்ளவே இல்ல..... இனிமேல் கதைக்க மாட்டன் எண்டு சொல்லிப் போட்டுப் போயிட்டான்..... அதை நினைத்துத்தான் கவலைப்படுறன்.
கீதா : இதுக்குப் போய் யாரும் கவலைப்படு வினமா.... ஒரு பிரச்சினை முடிஞ்சுது எண்டிட்டு இரு.
சங்கர் : அப்பிடி இருக்க முடியேவில்லையே......
கீதா : இனிமேல் என்ன செய்யப் போறாய்.
சங்கர் : அவனை எப்பிடித் திருத்தலாம் எண்டு தான் யோசிக்கிறன்.
கீதா : அவன் உன்ர நல்ல மனதைப் புரிஞ்சு...... கொள்ளேல்லையே...... பிறகு ஏன் அவனைப் பற்றிக் கவலைப்படுறாய்.
சங்கர் : கீதா...... பிழையான வழியில போற ஒரு வனைத் திருத்திறவன்தான் நண்பன். இதை நீ மறந்திடாத.......
கீதா : அது எனக்குத் தெரியும்......
சங்கர் : பிறகு ஏன் கேட்கிறாய்.......
கீதா : ஏற்றத்தாழ்வு பார்க்கிறவன் ஒருநாளும் திருந்தமாட்டான். அனுபவப்பட்டாத்தான்
திருந்துவான். நீ வரதனை திருத்திறது நாய் வாலை நிமித்திற கதையாத்தான் முடியும்.
சங்கர் : முயற்சி செய்துதான் பார்ப்பமே......
கீதா : உன்ர முயற்சி வெற்றி பெற என்ர வாழ்த் துக்கள்.....
காட்சி - 3
(பாடசாலையில் சங்கரை குமார் சந்திக்கிறான்.)
சங்கர் : (பதற்றத்துடன்) குமார்...... ஏன் மூச்சு வாங்க ஓடி வாறாய்..... என்ன நடந்தது
குமார் : (களைப்புடன்) சங்கர்.... வரதன் பள்ளிக் கூடத்துக்கு வாறபோது..... ரோட்டால வந்த கார்..... அவன மோதிப்போட்டு நிக்காமல் போயிட்டுது.... ரோட்டில நிண்ட ஆக்கள் அவன ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போச்சினம். நான் அவனோட தான் படிக் கிறன் எண்டு சொன்ன உடன என்னை யும் கூட்டிக் கொண்டு போச்சினம். ஆஸ்பத்திரியில இருந்து வரதன்ர வீட்டு க்குப் போய், அவனின்ர தாய் தகப் பனையும் கூட்டிக் கொண்டு ஆஸ்பத்திக் குப் போயிட்டு வாறன்.
சங்கர் : இப்ப வரதனுக்கு எப்பிடி இருக்கிது.
குமார் : வரதனுக்கு இன்னும் மயக்கம் தெளிய வேயில்ல. நிறைய இரத்தம் வெளியில போட்டுது எண்டு டொக்டர் சொல்லிப் போட்டார்...... இப்ப இரத்தம் ஏற்ற வேணு மாம்.
சங்கர் : இரத்தம் ஏற்றேல்லயா?
குமார் : இரத்தம் ஆஸ்பத்திரியில இல்லையாம்.
சங்கர் : என்ன குறூப் இரத்தம் வேணுமாம்.
குமார் : ‘ழு’ குறூப் இரத்தம் வேணுமாம்.
சங்கர் : தாய்தகப்பன் இரத்தம் குடுக்கலாம்தானே.
குமார் : தாய்தகப்பன்ர இரத்தம் ‘ழு’ குறூப்பாக இருக்க வேணுமே.
சங்கர் : இப்ப என்ன செய்யிறது.
குமார் : என்ர அண்ணாவின்ர இரத்தம் குறூப் ‘ழு’ தான் அண்ணாவிடம் கேட்டுப் பாப்பம்.....
சங்கர் : உன்னுடைய அண்ணா இரக்கம் கொடுக்க சம்மதிப்பாரா......?
குமார் : என்ர அண்ணா...... இரக்கம் உள்ளவர்...... நிச்சயம் சம்மதிப்பார்....
சங்கர் : அப்ப வா உன்னுடைய அண்ணாவிடம் போய்க் கேட்டுப் பாப்பம்.......
குமார் : வா......... போவம்........
காட்சி - 4
(மறுநாள் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் வரதனை சங்கரும் சந்தித்தல்.)
சங்கர் : வரதன்...... எப்படி...... இருக்கிறாய்.....
வரதன் : சங்கர்....... என்ன மன்னிச்சிடு..... நான் குமாரப் பற்றி எப்பிடி எல்லாம் கதைச் சன்..... ஆனால்..... என்ர உயிர குமார்தான் காப்பாற்றியிருக்கிறான்....
சங்கர் : ஆஸ்பத்திரியில் இரத்தம் இல்லாத நேரத்தில தன்ர அண்ணாவை கூட்டிக் கொண்டு வந்து உனக்கு இரத்தம் குடுப் பிச்சானே..... அவன்ர மனிதநேயத்துக்கு முன்னால......
வரதன் : ஏன் சங்கர் நிறுத்தியிட்டாய்..... சொல்ல வந்ததைச் சொல்லு.......
சங்கர் : நாங்கள் எல்லாம் அவன்ர தியாகத்துக்கு முன்னால நிற்க முடியாது..... அவன் அகதி
முகாமில வாழ்ந்தாலும் அவன்ர மனம் கள்ளங்கபடமில்லாதது...... நீ...... குமாருக் குத் தான் நன்றி கூற வேணும்......
வரதன் : ஓம் சங்கர்..... நான் குமாருக்கு நன்றி கூற வேணும்......
சங்கர் : குமாருக்கு நூறு வயசு...... அவன்ர பெயரச் சொன்னவுடனேயே...... வாறான்.
குமார் : சங்கர் இப்ப வரதனுக்கு எப்படி இருக் கிது.
சங்கர் : குமார்...... வரதன் உன்னைத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறான்......
வரதன் : ஓம்..... குமார். உன்னத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறன்...... குமார்...... நீ செய்த இந்த உதவிய என்ர வாழ்நாளில மறக்க மாட்டன்...... உன்ன நான் எவ்வளவு கேவலமாப் பேசியிருக்கிறன். அப்பிடி இருந்தும் என்ர உயிரக் காப்பாற்றியிருக்கி றாய்...... உன்ர மனித நேயத்த நினைக்கிற போது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது குமார்...... என்ன மன்னிச்சிடுடா........
குமார் : வரதன்...... உன்னை மன்னிக்கிறதுக்கு நான் கடவுள் இல்ல....... நீ உன்னுடைய தவறுகளை உணர்ந்தால் அதுவே எனக்குப் போதும்.......
சங்கர் : வரதன்..... நீ இனிமேலாவது மற்றவர் களிடம் மனித நேயத்தோட நடந்து கொள்...... அதுதான் நீ குமாருக்குச் செய்ய வேண்டிய நன்றிக்கடன்.
நிறைவுக்குறியிசை
இலங்கை வானொலி - சிறுவர்மலர்
ஒலிபரப்பான திகதி - 12.12.1999
சிந்தனை முத்து....
மகிழ்ச்சியைத் தனக்காகத் தேட முயலுகின்ற வனிடம் அது சிக்குவதில்லை; பிறருக்காகத் தேடுகின்றவனை அது தேடி வருகிறது.
-நீல் ஸ்ட்ரெயட்
+++++++++++++++++++++++++
ஆரம்பக் குறியிசை
நாடகம்
பிறந்த நாள்
பாத்திரங்கள் : தீபா, சாந்தி, வாணி, தாய், தந்தை
காட்சி - 1
(பாடசாலையில் வகுப்பறைக்கு வெளியே தீபாவும் சாந்தியும் உரையாடுகின்றனர்.)
தீபா : என்ன சாந்தி இண்டைக்கு வழமையை விடச் சந்தோசமாக இருக்கிறாய்.
சாந்தி : நாளைக்கு என்னுடைய பிறந்த நாள் அதுதான்.
தீபா : அப்பிடியா..... நாளைக்கு வீட்டில பிறந்த நாளை கொண்டாடுறியா?
சாந்தி : ஓம் தீபா. நாளைக்குப் பின்னேரம் எங்கட வீட்டில் பிறந்த நாளைக் கொண்டாடுறம். நீ கட்டாயம் வர வேணும்.
தீபா : என்ன மட்டும் தான் அழைக்கிறியா?
சாந்தி : இல்லை. வகுப்பில படிக்கிற எல்லாருக் கும் தான்.
தீபா : அப்ப பெரிய கொண்டாட்டம் எண்டு சொல்லன்.
சாந்தி : பெரிய கொண்டாட்டம் தான். எங்கட அப்பா அம்மாவுக்கு நான்தான் ஒரே பிள்ளை.
தீபா : (இடைமறித்து) அதனால
சாந்தி : என்ர பிறந்த நாளப் பெரிசாக் கொண் டாடுகினம்.
தீபா : உனக்கென்ன நீ பணக்கார வீட்டுப் பிள்ளை. நீ பெரிசாப் பிறந்தநாளைக் கொண்டாடுவாய்.
சாந்தி : உனக்கு பிறந்த நாளைக் கொண்டாட விருப்பமில்லையா?
தீபா : கொண்டாட விருப்பம்தான். ஆனால் ஆடம்பரமாகக் கொண்டாட விருப்ப மில்லை.
சாந்தி : வருசத்துக்கு ஒருமுறைதான் கொண் டாடுறது. அதை பெரிசாக் கொண்டாடத் தானே வேணும்.
தீபா : வீண் செலவுதானே.
சாந்தி : பிறந்த நாளைக் கொண்டாடுறது வீண் செலவோ!
தீபா : ஓம் வீண் செலவுதான்.
சாந்தி : தாய்தகப்பன் தன்னுடைய பிள்ளையின்ர பிறந்தநாளைச் சிறப்பாக் கொண்டாடத் தானே விரும்புவினம். அதில கஞ்சத்தன மாக நடக்க மாட்டினம் தானே.
தீபா : நான் கஞ்சத்தனமாக பிறந்தநாளைக் கொண்டாடச் சொல்லலேல்லையே. வீண் செலவு செய்யாமல் பிறந்தநாளைக் கொண்டாடுறதுதாதே நல்லது எண்டு சொல்லுறன்.
சாந்தி : நீ சொல்லுறது ஒண்டும் எனக்குப் புரி யேல்ல. நீ உன்ர பிறந்த நாளை எப்பிடிக் கொண்டாடுறாய் எண்டு பாப்பமே.
தீபா : என்ர பிறந்த நாளுக்கு உனக்குக் கட்டா யம் சொல்லுவன் (சிரித்தல்)
சாந்தி : அதிபர் வாறார். வெளியில நிண்டதக் கண்டால் போச்சு. வா வகுப்பில போய் இருப்பம்.
காட்சி - 2
(தீபாவும் வாணியும் வகுப்பறையில் தமது இருக்கைகளில் அமர்ந்திருந்தவாறு உரையாடுகின்றனர்.)
வாணி : தீபா.... இண்டைக்கு சாந்தி வரேல்லயா?
தீபா : இண்டைக்கு சாந்திக்குப் பிறந்தநாள் அது தான் அவள் பாடசாலைக்கு வரேல்ல. இண்டைக்குப் பின்னேரம் எங்களை பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வரச் சொல்லியிருக்கிறாள்.
வாணி : நான் நேற்று வரேல்லைத்தானே.....
தீபா : சாந்தி உன்னையும் வரச் சொல்லிச் சொன்னவள்.
வாணி : உண்மையாகவா!
தீபா : ஓம். நேற்று உன்னைத் தேடினவள். நீதான் வரேல்லயே.
வாணி : அம்மாவுக்குக் காய்ச்சல்.... அம்மாவோட ஆஸ்பத்திரிக்குப் போனனான். அதுதான் வரேல்ல.
தீபா : இப்ப அம்மாவுக்கு காய்ச்சல் சுகமா?
வாணி : இப்ப அம்மாவுக்கு காய்ச்சல் குறைஞ் சிருக்கிது.
தீபா : நீ சாந்தியின்ர பிறந்தநாள் கொண்டாட் டத்துக்கு வரமாட்டியா?
வாணி : நான் வரமாட்டன்.
தீபா : ஏன் வரமாட்டாய்.
வாணி : பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குப் போற தெண்டால் நல்ல உடைகள் வேணும். நல்ல உடைகள் என்னட்ட இல்லையே.
தீபா : என்ன வாணி சொல்லுறாய்.
வாணி : தீபா, சாந்தியின்ர பிறந்தநாள் கொண்டாட் டத்திற்கு வெறுங்கையோட போனால் சாந்தியின்ர தாய்தகப்பன் என்ன நினைப் பினம். எங்கட குடும்பம் ஏழை விவசாயக் குடும்பம். நாங்கள் பணக்காரர் இல் லையே.
தீபா : நான் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு உன்னை வேதனைப்படுத்திப் போட்டன். வாணி என்னை மன்னிச்சிடு.
வாணி : தீபா நீ என்னை வேதனைப் படுத்தேல்லையே. நான் ஏன் உன்னை மன்னிக்கவேணும். தீபா நீ சாந்தியின்ர பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் போறியா.
தீபா : என்னை சாந்தி கட்டாயமா வரச்சொல்லி யிருக்கிறாள். போகாமல் இருக்க முடி யுமா? போகத்தானே வேணும்.
வாணி : நீ போனால் என்னுடைய நிலையை சாந்தியிட்ட மறக்காமச் சொல்லு.
தீபா : நீ கவலைப்படாத வாணி. நான் மறக்கா மல் உன்னுடைய பிரச்சினையைச் சொல் லுறன்.
காட்சி - 3
(வீட்டின் வரவேற்பு அறையில் தீபாவுடன் தாயார் உரையாடுகிறார். சிறிது நேரத்தில் தீபாவின் தந்தை வருகிறார்.)
அம்மா : என்ன தீபா. யோசிச்சுக் கொண்டிருக்கி றாய். சாந்தியின்ர பிறந்தநாள் கொண் டாட்டத்திற்குப் போகேல்லையா?
தீபா : போகப் போறன் அம்மா.
அம்மா : பிறந்தநாள் கொண்டாட்டம் முடிஞ்ச பிறகா போகப் போறாய். இண்டைக்கு உனக்கு பள்ளிக்கூடத்தில ஏதோ நடந்தி ருக்கிது. என்ன நடந்ததெண்டு சொல்லு பிள்ளை.
தீபா : என்ர வகுப்பில என்னோட படிக்கிற வாணியை உங்களுக்குத் தெரியும்தானே.
அம்மா : தெரியும் அவளுக்கென்ன?
தீபா : சாந்தியின்ர பிறந்தநாள் கொண்டாட்டத்து க்கு வாறியா எண்டு அவளிட்டக் கேட்டான்.
அம்மா : அதுக்கு வாணி என்ன சொன்னவள்.
தீபா : பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு வர நல்ல உடைகள் இல்லையாம். அதனால
வரேல்லை எண்டு சொன்னாள். அவளை நினைக்கேக்க கவலையாக இருக்குதம்மா.
அம்மா : கடவுள் ஏழைகளையும் படைச்சிருக் கிறான். பணக்காரர்களையும் படைச் சிருக்கிறான். இதெல்லாம் இறைவனின் திருவிளையாடல்கள் எண்டுதான் சொல்ல வேணும். தீபா நீ யோசிச்சுக் கொண்டி ருக்காமல் வெளிக்கிடு பிள்ளை.
தீபா : அம்மா என்ர பிறந்த நாள் அடுத்த மாதம் வருகுதெல்லோ.
அம்மா : அதுக்கு இப்ப என்ன அவசரம்.
தீபா : என்னுடைய பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடப் போறன். அம்மா நான் சொல்லுறபடி என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவீங்களா?
அம்மா : என்ர செல்ல மகளுக்கு என்ன விருப் பமோ அதை நான் செய்யிறன். என்ன செய்ய வேணும் எண்டு சொல்லு பிள்ளை.
தீபா : அம்மா! என்ர பிறந்த நாள் அண்டைக்குக் கோயிலுக்குப் போவம்.
அம்மா : பிறந்த நாள் அண்டைக்கு உன்னைக் கோயிலுக்கு கூட்டிக் கொண்டு போவன் தானே.
தீபா : கோயிலுக்குப் போயிட்டு வந்து அநா தைச் சிறுவர் இல்லத்துக்குப் போவம்.
அம்மா : அங்க என்னத்துக்கு.................
தீபா : அங்க போய் தாய் தகப்பனை இழந்து வாழுற பிள்ளையளுக்கு பலகாரங்களும்... புதுத்துணிகளும் வாங்கிக் குடுப்பம். பிறந்த நாள் கொண்டாட்டம் எண்டு சொல்லி வீணாக் காசை செலவு செய்யா மல் அநாதைப் பிள்ளையளுக்கு உடை கள வாங்கிக் கொடுத்தால் எவ்வளவு புண்ணியம். பிறந்த நாள் கொண் டாட்டத்தை அர்த்தமுள்ளதாக கொண் டாடியிருக்கிறன் என்ற மனநிறைவும் கிடைக்கும்தானே அம்மா!
அம்மா : வாணி, சாந்தியின்ர பிறந்தநாளுக்கு போகாததுக்குச் சொன்ன காரணம் உன்னச் சிந்திக்க வைச்சிருக்குது. நீ உன்ர பிறந்த நாளை எப்பிடிக் கொண்டாட விரும்புகிறாயோ அப்பிடியே கொண் டாடு.
(தீபாவின் தந்தையார் வீட்டிற்குள் வரு தல்)
அப்பா : தாயும் மகளுமா என்ன திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறியள்.
தீபா : (மகிழ்ச்சியுடன்) அப்பா வந்திட்டீங்களா.
அம்மா : தீபா தன்னுடைய பிறந்த நாளை அநாதைச் சிறுவர் இல்லத்தில வாழுற பிள்ளையளோட கொண்டாடப் போறா ளாம். (சிரிப்பு) உங்களுக்கு நிறையச் செலவு வரப்போகுது.
அப்பா : (மகிழ்ச்சியாக) என்ர பிள்ளை இந்த வயசில இப்படிச் சிந்திப்பாள் எண்டு நான்
கனவில கூட நினைக்கேல்ல.
அம்மா : அவள் உங்கட பிள்ளையெல்லோ வேறெப்படிச் சிந்திப்பாள்.
அப்பா : தீபா! நீ எங்கட மகளாப் பிறந்ததுக்கு நாங்கள் குடுத்து வைச்சிருக்க வேணும். வீண் செலவு செய்து ஆடம்பரமாகப் பிறந்த நாளைக் கொண்டாடுற இந்தக் காலத்தில நல்ல முறையில தன்னுடைய பிள்ளை பிறந்த நாளைக் கொண்டாட நினைக்கிறது எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கிது தெரியுமா?
அம்மா : தீபா உன்னுடைய ஆசையை நானும் அப்பாவும் கட்டாயம் நிறைவேற்றி வைப் பம். உன்ரபிறந்த நாளுக்கு வாணியையும் சாந்தியையும் கூப்பிட மறந்திடாத (சிரித்தல்)
தீபா : சாந்தியை மறந்தாலும் வாணியை மறக்க மாட்டன் அம்மா.
அம்மா : இப்ப நீ சாந்தியின்ர பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் போட்டு வா.
இலங்கை வானொலி - சிறுவர்மலர்
ஒலிபரப்பான திகதி - 12.12.1999
+++++++++++++++++++++++++
இந்தியாவில் இருந்து வெளிவரும் 'கோகுலம்" சிறுவர் சஞ்சிகை சிறுவர் மலர் சிறுவர் நாடகங்கள் என்ற நூலைப் பற்றி (டிசம்பர் 2003. கோகுலம் சஞ்சிகையில்) உங்கள் நூலகம் பகுதியில் இவ்வாறு அறிமுகம் செய்தது.
சிறுவர் மலர் சிறுவர் நாடகங்கள் - வி.என்.எஸ். உதயசந்திரன், பக்கம் 82 ரூபாய் நூறு - பூபால சிங்கம் புத்தக சாலை, இல. 202, செட்டியார் தெரு, கொழும்பு.
இலங்கை வானொலியின் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் ஒளி பரப்பான எட்டு அருமையான நாடகங்களின் தொகுப்பு. ஒவ் வொன்றும் ஓர் அவசியமான பண்பை வலியுறுத்தும் கதைக் களத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரின் பேச்சுத் தமிழழகை நன்கு சுவைக்க முடிகிறது. (புகைப்) படங்களும் நூலுக்கு மெருகூட்டுகின்றது. அயல் நாட்டுத் தயாரிப்புகளுக் குச் சவால் விடும் படைப்பு, சிறுவர் இலக்கிய முன்னோடி டாக்டர் பூவண்ணனின் அணிந் துரை, நூலுக்கு மகுடமிடுகிறது.
- ரே
-----------
இந் நாடகங்களில்
பங்குபற்றிய சிறுவர்கள்
³ சுபாஷினி பாலகிருஷ்ணன்
³ சுப்பிரமணியம் உமாசுதன்
³ பாலஸ்ரீதரன் திருச்செந்தூரன்
³ கார்த்திகா பரமசாமி
³ விஜயபாமா ஞானமணி
³ விஜயவானி ஞானமணி
³ கார்த்திகா சிவகுருநாதன்
³ அருட்பாவை சிவகுருநாதன்
³ சுவர்ணராஜா நிமல்ஷன்
³ தயாளின p தயாபரன்
³ கௌசலா ஜெகதீஸ்வரன்
³ சுமதி தயாபரன்
³ சிவானுஜா சிவநாதன்
³ அபிராமி சிவப்பிரகாசம்
³ தர்சினி பொன்னம்பலம்
³ இராசு சத்தியானந்தன்
³ இரட்ணம் சியாமளன்
³ சிவராஜா தக்கீசன்
****
கருத்துகள்
கருத்துரையிடுக