பாட்டுப் பாடுவோம்
சுட்டி கதைகள்
Back
பாட்டுப் பாடுவோம்
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
PATTU-P_PADUVOM (Tamil Nursery Rhymes)
Author :Kulanthai Kavingar AL. VALLIAPPA
Illustrator : KALA
Publisher : KULANTHAI PUTHAKA NILAYAM
AL-183, 11th Main Road, Anna Nagar Chennai - 600 040
Printer : RAVI RAJA OFFSET
2, S.P.S. 3rd Street Royapettah, Chennai - 600 014 Ph: 2835 1295
First Edition : APRIL 1998
Second Edition: MARCH 2001
Third Edition : AUGUST 2007
Price : Rs. 20/-
(c) Author
வெளியிட்டோர்:
குழந்தைப் புத்தக நிலையம்
AL- 183, 11வது மெயின் ரோடு,
அண்ணா நகர், சென்னை - 600 040
விற்பனை உரிமை:
பாரி நிலையம்
90, பிராட்வே, சென்னை - 108
வண்டி வருகுது
கடகடா கடகடா வண்டி வருகுது
காளைமாடு இரண்டுபூட்டி வண்டி வருகுது.
டக்டக் டக்டக் வண்டி வருகுது
தாவித்தாவி ஓடும்குதிரை வண்டிவருகுது
ட்ரிங்ட்ரிங் ட்ரிங்ட்ரிங் வண்டி வருகுது
சீனுஎறி ஓட்டும்சைக்கிள் வண்டி வருகுது.
பாம்பாம் பாம்பாம் வண்டி வருகுது
பாய்ந்துவேக மாகமோட்டார் வண்டி வருகுது.
குப்குப் குப்குப் வண்டி வருகுது
கும்பகோண மிருந்துரயில் வண்டி வருகுது
நாய்க்குட்டி
தோ. தோ...நாய்க்குட்டி.
துள்ளி வாவா நாய்க்குட்டி.
உன்னைத் தானே நாய்க்குட்டி.
ஒடி வாவா நாய்க்குட்டி.
கோபம் ஏனோ நாய்க்குட்டி ?
குதித்து வாவா நாய்க்குட்டி
* * *
கழுத்தில் மணியைக் கட்டுவேன்;
கறியும் சோறும் போடுவேன்.
இரவில் இங்கே தங்கிடு.
எங்கள் வீட்டைக் காத்திடு !
துட்டுத் தந்தால் லட்டு
வெங்கு, வெங்கு, வெங்கு
வெங்கு ஊதினான் சங்கு.
நுங்கு, நுங்கு, நுங்கு
நுங்கில் எனக்குப் பங்கு.
வள்ளி, வள்ளி, வள்ளி
வள்ளி கொலுசு வெள்ளி.
பள்ளி, பள்ளி, பள்ளி
பள்ளி செல்வோம் துள்ளி.
பட்டு, பட்டு, பட்டு
பட்டு வாயில் பிட்டு.
துட்டு, துட்டு, துட்டு
துட்டுத் தந்தால் லட்டு. எங்களுடைய அப்பா
எங்களுடைய அப்பா - அவர்
என்றும் அணிவார் ஜிப்பா.
எங்க்ளுடைய அம்மா - அவள்
எதுவும் தருவாள் சும்மா.
எங்களுடைய தங்கை - அவள்
இனிய பெயரே மங்கை
எங்களுடைய தம்பி - அவன்
என்றும் தங்கக் கம்பி.
எங்களுடைய பாட்டி - அவள்
எவர்க்கும் தருவாள் பேட்டி !
நத்தையம்மா
நத்தை யம்மா, நத்தை யம்மா,
எங்கே போகிறாய் ?
அத்தை குளிக்கத் தண்ணீர்க் குடம்
கொண்டு போகிறேன்.
எத்தனைநாள் ஆகும் அத்தை
வீடு செல்லவே ?
பத்தே நாள்தான்; வேணு மானால்
பார்த்துக் கொண்டிரு.
மாம்பழம்
மாம்பழமாம் மாம்பழம்.
மல்கோவா மாம்பழம்.
சேலத்து மாம்பழம்.
தித்திக்கும் மாம்பழம்.
அழகான மாம்பழம்.
அல்வாபோல் மாம்பழம்.
தங்கநிற மாம்பழம்.
உங்களுக்கு வேண்டுமா?
இங்குஓடி வாருங்கள்;
பங்குபோட்டுத் தின்னலாம். அருமை நேரு
அருமை நேரு பிறந்தது
அலகா பாத்து நகரிலே.
இளைஞர் நேரு படித்தது
இங்கி லாந்து நாட்டிலே.
தீரர் நேரு வாழ்ந்தது
தில்லி நகரம் தன்னிலே.
இன்று நேரு வாழ்வது
எங்கள் பிஞ்சு நெஞ்சிலே! பாப்பா அழாதே !
பாப்பா, பாப்பா, அழாதே !
பலுான் தாரேன்; அழாதே !
கண்ணே பாப்பா, அழாதே !
காசு தாரேன்; அழாதே !
பொன்னே பாப்பா, அழாதே !
பொம்மை தாரேன்; அழாதே !
முத்துப் பாப்பா, அழாதே !
மிட்டாய் தாரேன் அழாதே !
என்ன வேண்டும் ? சொல் பாப்பா.
எல்லாம் வேண்டுமா ? சொல் பாப்பா.
சரி சரி பாப்பா, தருகின்றேன்.
சிரி சிரி கொஞ்சம் சிரி, பாப்பா. அணில்
அணிலே அணிலே ஒடிவா.
அழகு அணிலே ஒடிவா.
கொய்யா மரம் ஏறிவா.
குண்டுப் பழம் கொண்டுவா.
பாதிப் பழம் உன்னிடம்;
பாதிப் பழம் என்னிடம்;
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம். பத்துப் பைசா பலுான்
பத்துப் பைசா விலையிலே
பலுான் ஒன்று வாங்கினேன்.
பலுான் ஒன்று வாங்கினேன்,
பையப் பைய ஊதினேன்.
பையப் பைய ஊதவே,
பந்து போல ஆனது.
பந்து போல ஆனபின்
பலமாய் நானும் ஊதினேன்.
பலமாய் ஊத ஊதவே,
பானை போல ஆனது.
பானை போல ஆனதைக்
கான ஒடி வாருங்கள்.
விரைவில் வந்தால் பார்க்கலாம் அல்லது.
வெடிக்கும் சத்தம் கேட்கலாம்! மரம் ஏறலாம்
தென்னைமரத்தில் ஏறலாம்.
தேங்காயைப் பறிக்கலாம்.
மாமரத்தில் ஏறலாம்.
மாங்காயைப் பறிக்கலாம்.
புளியமரத்தில் ஏறலாம்.
புளியங்காயைப் பறிக்கலாம்.
நெல்லிமரத்தில் ஏறலாம்.
நெல்லிக்காயைப் பறிக்கலாம்.
வாழைமரத்தில் ஏறினால்,
வழுக்கிவழுக்கி விழுகலாம் ! பார் பார் !
தரையின் மேலே
தொட்டி பார்.
தொட்டி மேலே
செடியைப் பார்.
செடியின் மேலே
பூவைப் பார்.
பூவின் மேலே
வண்டைப் பார்.
வண்டின் மேலே
பளபளக்கும்
வர்ணம் உண்டு;
அதையும் பார் !
கருத்துகள்
கருத்துரையிடுக