திருக்குறள் கட்டுரைகள்
கட்டுரைகள்
Back
திருக்குறள் கட்டுரைகள்
கி. ஆ. பெ. விசுவநாதம்
முதற்பதிப்பு : நவம்பர், 1958
இரண்டாம் பதிப்பு : ஜூன், 1961
மூன்றாம் பதிப்பு : பிப்ரவரி, 1964
நான்காம் பதிப்பு : செப்., 1967
ஐந்தாம் பதிப்பு : பிப்ரவரி, 1973
ஆறாம் பதிப்பு : மார்ச், 1977
ஏழாம் பதிப்பு : ஆகஸ்டு, 1981
எட்டாம் பதிப்பு : டிசம்பர், 1985
ஒன்பதாம் பதிப்பு : ஜனவரி, 1990
பத்தாம் பதிப்பு : பிப்ரவரி, 1997
பதினோராம் பதிப்பு : டிசம்பர், 1999
விலை ரு. 15-00
அச்சிட்டோர் :
ஸ்ரீ ராஜேஸ்வரி பிரிண்டிங் ஒர்க்ஸ்,
12, கஜபதி தெரு, சென்னை-5
பதிப்புரை
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களுக்கு 60-ஆம் ஆண்டு இன்று பிறக்கிறது. இந்த அறுபது ஆண்டுகளில் தமிழர்க்கும் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் அவர்கள் செய்துள்ள பணிகள் மிகப்பல இந்தி எதிர்ப்புப் போரில் அவர்களின் பேராற்றலையும் பேச்சுவன்மையையும் கண்டு தமிழகம் முழுவதும் வியந்தது; போற்றியது.
தமிழரின் பாதுகாவலர் திரு. விசுவநாதம் அவர்கள். இதை நன்கு உணர்ந்து, ‘முத்தமிழ்க் காவலர்’ என அவருக்குப் பட்டம் வழங்கிப் பாராட்டிய திருச்சி தமிழ்ச் சங்கத்தார் தமிழ் மக்கள் அனைவரின் பாராட்டுதலுக்கும் உரியவர்கள். தமிழுக்குத் தீங்கு என்றால், தமிழ் மக்களுக்குத் துன்பம் என்றால், தமிழ்நாட்டின் பெருமைக்கு இழுக்கென்றால், கி.ஆ.பெ.வி.யின் உள்ளம் துள்ளி எழும். தீமை செய்வோர் எத்தனை உயர்ந்த பெரியவர்களாயினும், எத்தனை பெரிய தலைவர்களாயினும், அஞ்சாது, அவர்களின் தவறை எடுத்துக் காட்டுவார். இந்தப் பணியை எழுத்து, பேச்சு, நாடகம் என்ற பல துறைகளிலும் அவர்கள் செய்து வருகிறார்கள்.
அவர் இயற்றிய பல நாடகங்கள், நூற்றுக்கணக்கான மேடைகளில் நடிக்கப்பட்டுள்ளன. இந்திய வானொலி நிலையத்தின் வாயிலாகக் கன்னடம் முதலிய பிறமொழிகளிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளன. டெல்லியிலிருந்து வெளிநாட்டு மக்களுக்கும் ஒலிபரப்பப்பட்டு, தமிழரின் பெருமையை உலகெங்கும் உணரச் செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய பேச்சுக்கள் தமிழகத்திலும், மலேயா, இலங்கை போன்ற கடல் கடந்த நாடுகளிலும், பல ஆயிரக் கணக்கான மேடைகளில் ஒலித்துள்ளன. அவர்கள் எழுதிய நூல்கள் இலட்சக் கணக்கான தமிழர் இல்லங்களில் மகிழ்வூட்டிக் கொண்டிருக்கின்றன.
இதுவரை அவர்கள், தமிழ்ச் செல்வம், எண்ண குவியல், தமிழ் மருந்துகள், வள்ளுவரும் குறளும், தி குறள் புதைபொருள், ஐந்து செல்வங்கள், மும்மணிகள், நான்மணிகள், அறிவுக்கு உணவு, வானொலியிலே ஆகிய பத்து நூல்கள் எழுதியுள்ளார்கள். திருக்குறள் கட்டுரைகள் பதினோராவது நூல். ‘வள்ளுவர் உள்ளம்’ விரைவில் வெளிவர இருக்கிறது.
கி. ஆ. பெ. வி. யின் நூல்கள் அனைத்தையும் தமிழ் மக்களுக்கு வழங்கும் வாய்ப்பைப் பாரி நிலையம் பெற்றிருக்கிறது. இதை நாங்கள் பெறுதற்கரிய பெரும் பேறாகக் கருதுகிறோம். எங்கள் பால் அன்பு பூண்டு தமது நூல்கள் அனைத்தையும் எங்கள் நிலைய வாயிலாகத் தந்துதவுவதற்காக திரு. விசுவநாதன் அவர்களுக்கு எங்கள் வணக்கமும் நன்றியும் உரியன.
திரு. விசுவநாதன் அவர்களின் குடும்பம் பெருங்குடும்பம். அங்கு திருமணங்களும் பிற விழாக்களும் அடிக்கடி நிகழ்வதுண்டு. அப்போது எல்லாம் அழைப்பிதழ்கள் வரும். ஒவ்வொரு அழைப்பிதழிலும் அடியில் ஒரு குறிப்பு இருக்கும். “சீர், மொய் பரிசு பணமுடிப்பு முதலியன விலக்கப்பட்டிருக்கின்றன” என்பதே அக் குறிப்பு. விசுவநாதன் அவர்கள் தமிழ்ப் பெருமக்களிடமிருந்து, பொன்பொருள் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் உயிர் என மதிப்பது ஒழுக்கம், கடமை, பணியாற்றல் முதலிய சிறந்த பண்புகளை. அவர்கள் உள்ளம் ஒவ்வொரு கணமும் நினைந்து எதிர்பார்ப்பது உறங்கிக் கிடக்கும் தமிழகம் விழித்தெழுகின்ற நன் நாளை. அவர்களுடன் சேர்ந்து ‘தமிழ் நாட்டின் பொற்காலம் மீண்டும் தோன்ற உழைப்போம்’ என்று உறுதி கொள்வோம். அவர்களின் பேச்சுக்களைக் கேட்டும் நூல்களைப் படித்தும் அவற்றின் வழி நடப்போமாக!
வாழ்க தமிழ்!
12-11-58
தங்கள் அன்புள்ள,
சென்னை-108
பாரி நிலையத்தார்
மதிப்புரை
வித்துவான், டாக்டர்,
திரு. மொ. அ. துரை அரங்கனார் அவர்கள்
எம்.ஏ., எம்.ஓ. எல்., பிஎச்.டி.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்,
மதுரை.
முத்தமிழ்க் காவலர், ஆண்டிலும் முதியவர், பல பல குழுக்களில் தலைமையும் உறுப்பும் உடையவர், உலகறி உத்தமர். உயர்திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் எழுதிய “திருக்குறள் கட்டுரைகள்” என்னும் சுவடிக்கு மதிப்புரை வழங்க யான் பெற்றுள்ள தகுதி என்கொலோ? அறியேன்.
திருக்குறளே விசுவநாதர் வலம் வரும் கோயில்; திருவள்ளுவரே அவர் வழிபடும் கடவுள். திருவள்ளுவர் வகுத்துள்ள நெறியே அவர் கடைப்பிடிக்கும் நெறி. திருக்குறட் கருத்துக்களே அவர் உண்ணும் சோறும், பருகும் நீரும். அக்கருத்துக்களை ஆர அமரத் தம் இயற்கை மதி நுட்பத்தாலும், நுண்மாண் நுழைபுல அறிவாலும் கடைந்து அமிழ்தமாக்கித் துய்த்து, அமர வாழ்வு எய்தி விட்டார் முத்தமிழ்க் காவலர் எனில், அது மிகையே ஆகாது.
யானும் திருக்குறள் வாழ்வே வாழ அவாக் கொண்டவன். திருக்குறள் வாழ்வே வாழ்ந்து வருகின்றேன் என்று பணிவோடு கூறுகிறேன். ஆனால், அவ்வாழ்வால் அடைந்துவரும் பயன்...?
திருக்குறளை உலகமறை என்பார் தமிழகத்தார். ஏனைய மொழியினரும் திருக்குறளை மொழிபெயர்த்துப் போற்றிக் கொள்கின்றனர் எனத் தமிழகத்தார் கூறிப் பெருமதிப்புப் பெற்றவர்போல் களிப்புறுவர். எம்மொழிக்குரியவரும் கைக்கூலி வாங்குதலோ கொடுத்தலோ தவறென்றே கொள்வர். ஆனால், கைக்கூலி கொடுத்தாலன்றி ஒரு சிறு தொழிலையும் இக்காலத்தில் சாதித்தல் இயலாததாகின்றது. “முகநக நட்பது நட்பன்று” எனத் திருக்குறள் கூறுகின்றது. ‘முகநக நட்பதே’ இக்காலத்திற் சிறப்பாகக் கொள்ளும் நட்பாக இலங்குகின்றது பொய் சொல்லாமல் ஒரு நாளும் வாழ்க்கையை இனிதாக நடத்த முடியாது என்னும் அளவிற்கு உலகம் இன்று மாறி நிற்கிறது பெருவேகத்தோடு இவ்வகையில் மாறி நின்றுள்ள இவ்வுலகில், ஆயிரவர்க்கொருவராதல் திருக்குறள் நெறியைப் பின்பற்றித் தாம் பெறும் பயனை மற்றவர் பெற உணர்த்தும் செயலில் முனைந்து நின்று வருகின்றனர். அத்தன்கையாராலேயே இன்னும் உலகம் அழியாமல் இருக்கின்றது என்று அறநெறி நிற்போர் அறைகுவர். உண்மை அதுவாயின், நம் முத்தமிழ்க் காவலர், உலகம் அழியா திருக்குமாறு அதைப் பாதுகாக்கும் காவலரும் ஆகின்றனர் எனலாம்.
சான்றாண்மையைக் குறிக்கோளாகக் கொண்டு, கயமையின் நீங்கி, அறிவறிந்து, கூத்தாட்டவைக் குழாத்தற்றே பெருஞ் செல்வம் என்பதால் அளவாகச் செல்வம் ஈட்டி, இரத்திலை இகழ்ந்து, குடி முதலிய தீய பழக்கங்களுக்காளாகாமல், அளவாக உழைத்து, ஊக்கத்துடனிருந்து, வீரங்குன்றாமல்,சொல்வதுபோலச் செயலாற்றி, மறைமொழியாம் திருக்குறளை மறவாமல் நினைவிற் கொண்டு வாழ்வதால் அமர வாழ்வு எய்தலாம் என்ற திரண்டு கருத்தைப் பத்துக் கட்டுரைகளாக, அழகிய, இனிய, ஆழ்ந்த, நுண்ணிய, செவ்விய நடையில் முத்தமிழ்த் காவலர் நமக்கு வகுத்து வழங்கியிருக்கிறார். ஏற்கென்வே “திருக்குறள் புதைபொருள்” என்ற அவருடைய நூலைப் பயின்றவர்க்கு, அவருடைய ஆராய்ச்சித் திறன், பொருளாழம் கண்டுணர்த்தும் ஆற்றல் முதலியன்வெல்லாம் தெரியுமாதலால், இச்சுவடியில் அவற்றை எடுத்தியம்புதல் மிகையாகும் என் அஞ்சி விடுத்தேன்.
எல்லாக் கட்டுரைகளிலும், இறுதியாக அமைந்துள்ள “மறைமொழி” என்னும் கட்டுரை பொன்னேபோல் போற்றத்தக்கதாதலின் அதை முதற்கண் படித்து இன்புறுமாறு நண்பர்களை வேண்டிக் கொள்ளுகிறேன்.
திருக்குறள் வாழ்வால் அமர வாழ்வு எய்தி நிற்கும் முத்தமிழ்க் காவலர் உலகம் அழியாமைக்காக என்றும் வாழ்ந்த இத்தகைய சுவடிகள் பல ஆக்கித்தருவார்களர்க. வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்க் காவலர்!
பொருளடக்கம்
சான்றாண்மை
கயமை
எது அறிவு!
கூத்தாட்டு அவைக்குழாம்
இரந்து வாழும் வாழ்வு
குடியும் குறளும்
பீலிபெய் சாகாடு
உடையர் எனப்படுவது?
மெய்வேல் பறியா நகும்
சொல்லும் செயலும்
மறைமொழி
திருக்குறள் கட்டுரைகள்
சான்றாண்மை
* * *
இன்னா செய்தார்க்கும் இனியேவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு?
திருக்குறள் ஒரு வாழ்வு நூல். அது தமிழகத்தின் செல்வம். அதன் திரண்ட கருத்தெல்லாம் ஒன்றே ஒன்று. அது மக்களாய்ப் பிறந்தவர்கள் அனைவரும் மக்கட் பண்போடு வாழவேண்டும் என்பது. அத்தகைய பண்பு.களில் ஒன்றே சான்றாண்மை. அதனையுடையவரே சான்றோர்.
தமிழகம் சான்றோரைத் தனது நாட்டுச் செல்வமாக கொண்டிருக்கிறது. சேரநாடு வேழமுடைத்து, பாண்டி நாடு முத்துடைத்து, சோழநாடு சோறுடைத்து, தொண்டை நாடு சான்றோருடைத்து என்பது ஒளவையின் வாக்கு. இதிலிருந்து நிலவளமாகிய நெல்லும், மலை வளமாகிய யானையும், கடல் வளமாகிய முத்தும், மக்கள் வளமாகிய சான்றோரும், தமிழகத்தின் செல்வங்கள் என்ற உண்மையை நன்கு உணரலாம்.
சான்றாண்மை என்ற சொல் தமிழ்மொழி ஒன்றுக்கே உரியது.சான்றாண்மைத் தன்மை, தமிழ் மக்களின் கலை. சான்றாண்மைப் பண்பு, தமிழகத்தின் தனிப்பட்ட சொத்து. சான்றாண்மை என்ற சொல்லைக்கூடப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க முடியாது. மொழி பெயர்த்துக் கூறினாலும் அச்சொல்லில் தமிழ் கூறும் பொருள் இராது.
ஆண்மை, ஆண் தன்மை; பெண்மை, பெண் தன்மை, ஆண்மையை வீரத்திற்கும், பெண்மையை அன்பிற்கும் ஒப்புக் கூறுவது உலக வழக்கு. என்றாலும், ஆண்மை என்பது வீரத்திற்கும் வலிமைக்கும் மட்டும் வேண்டுவதன்று; அஃது அன்புக்குஞ் சகிப்புத் தன்மைக்குங்கூட வேண்டப்படும் ஒன்று. அப்போதுதான் அந்த ஆண்மை சான்றாண்மையாக மாறுகிறது.
ஆண்மை என்ற சொல்லுக்கு ஆளுந் தன்மை என்பது பொருள். வாளாண்மை வாளை ஆள்வதும். தாளாண்மை தாளை ஆள்வது, வேளாண்மை (வேளை) மண்ணை ஆள்வதும், சான்றாண்மை தன்னை ஆள்வதுமாகும். ஒழுக்கத்தை உயிரினும் பெரிதாகக் கருதுவது நற்குணங்களில் ஒன்று. நற்குணங்கள் பலவற்றைப் படைத்தோர் நல்லோர்! அக்குணங்களை ஆள்பவர் ஆண்மையுடையோர். அக் குணங்களில் எதுவுந் தன்னை விட்டுப் பிரிந்து போய்விடாமல் அடக்கி ஆண்டு வருபவர் சான்றாண்மையுடையோர். சான்றாண்மை உள்ளவரே சான்றோர். சான்றோர் என்பவர் உயர்ந்தோர். உயர்ந்தோரையே உலகம் என்பர்.
உலகின் பிற நாடுகள் யாவும் (மெஜாரிடிக்கு) மிக்க எண்ணிக்கைக்கு உயர்வு தருகின்றன. தமிழகம் மட்டும் (மைனாரிடிக்கு) குறைந்த எண்ணிக்கைக்கு உயர்வு தருகிறது. இந்த உண்மையை, “உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே” என்று தமிழ்த் திருமறையும், “சீலம் இனிதுடையான் ஞாலம் எனப்படுவான்” என்று திரிகடுகமும் கூறி மெய்ப்பிக்கின்றன. இந்தக் கருத்து, இன்றைய ஜனநாயகக் கொள்கையுடைய நாடுகளை நடுங்க வைத்து விடும்.
சான்றாண்மை என்பது, மற்றவர் பின்பற்றும்படி நடந்து காட்டிய ஆண்மை என்றும், சான்றோர் என்பவர் பிறருக்குச் சான்றாக வாழ்ந்தோர் என்றும் பொருள் கூறினாலும் தவறாகாது. என்றாலும், சான்ற என்ற சொல் “சிறந்த” என்ற பொருள்களிலேயே கையாளப் பெற்றிருக்கின்றது. இவ்வுண்மையை “தகை சான்ற சொல்”, “உரை சான்ற நூல்”, “வாய் சான்ற பொருள்” என்ற சொற்களால் நன்கறியலாம்.
சான்றாண்மைக்குத் தமிழகம் தந்த பெருமை மிகப் பெரியதாகும், “தோல்வற்றிச் சாயினுஞ் சான்றாண்மை குன்றாதே” -என்பது அறிஞர் நல்லாதனார் கொடுத்த அடி “நல்ல மகனாய்ப் பிறந்தும் சும்மா திரியாதே; சான்றோன் எனத்திரி” என்பது ஒளவையின் வாக்கு. “ஆண்டு பலவாகியும் என் தலையில் ஏன் நரையில்லை தெரியுமா? நான் வாழும் ஊரில் சான்றோர் பலர் வாழ் கின்றனர்” என்பது புறநானூறு காட்டும் புதுமை. பெருமையில் அடங்காதவை பலசான்றாண்மையில் அடங்கியிருக்கின்றன என்பது வள்ளுவர்பெருமான்கருத்து.
பிற நூல்களைக் காட்டிலுந் திருக்குறளில் சான்றாண்மைக்கு உயர்ந்த இடம் கொடுக்கப் பெற்றிருக்கிறது. இது வள்ளுவரது உள்ளத்தில் சான்றாண்மை பெற்றிருந்த தனி இடத்தையே நமக்கு அறிவிக்கிறது. திருக்குறளில் 100 ஆம் அதிகாரமாகப் பண்புடைமை கூறப்பெற்றிருக்கிறது. இது “முழு மனிதன் நூறாண்டு வாழ்வான்:முழு மனிதன் பண்போடு வாழ்வான்” என்று கூறுவதுபோல இருக்கிறது. இதற்கு முன்னே 99 ஆம் அதிகாரமாகச் சான்றாண்மை கூறப் பெற்றிருக்கிறது. இது சான்றாண்மை இன்றேல் மனிதப் பண்பே இல்லையென்று கூறுவதுபோல இருக்கிறது. அதுவும் 90, 91,92, 93, 94, ஆம் அதிகாரங்களில் பெரியாரைப் பிழையாதே; பெண் வழி மயங்காதே; பொருட் பெண்டிர்த் தழுவாதே; கள்ளை உண்ணாதே; சூதை விரும்பாதே என அறிவுறுத்தி, 96 ல் குடிப்பெருமை எடுத்துக்காட்டி 97, 98ல் மானத்தையும், பெருமையையுங் கூறிப் பிறகு 99ல் சான்றாண்மையை விளக்குஞ் சிறப்பு எண்ணி மகிழக் கூடியதாகும்.
சான்றாண்மைக்குப் பிற புலவர்கள் தருகின்ற விளக்கத்தைவிட வள்ளுவர் நல்கும் விளக்கம் மாசு அற்றதாகக் காணப்படுகிறது. சான்றாண்மைக்கு மட்டுமல்ல, முத்தியடைவதற்குங்கூட மூன்று வழிகளை விளக்கினார் ஒரு புலவர் அது, “வாயின் அடங்குதல் துப்புரவாம், மாசற்ற செய்கை அடங்குதல் திப்பியமாம், பொய்யின்றி நெஞ்சமடங்குதல் வீடாகும்” என்பது. இதன் பொருள்! “உள்ளத்தால் தீமைதனை ஒரு பொழுதும் எண்ணாதே, வாயால் தீமைதனை ஒரு பொழுதுஞ் சொல்லாதே! உடலால் தீமைதனை ஒரு போதுஞ் செய்யாதே!” என்பதாகும். வள்ளுவர் விளக்கத்தில், ‘தீமை’ என்ற சொல்லுக்கே இடமில்லாது போயிற்று. அவர், ‘கடன் என்ப நல்லவை எல்லாம்’ எனக்கூறிப் போனார். ‘யாருக்கு?’ ‘சான்றாண்மை மேற்கொள்பவர்க்குக் கடன் என்ப நல்லவை எல்லாம்’ என்பது அவரது வாக்கு. இது கேட்போரது உள்ளத்தையும் மிக உயர்த்தி மகிழ்விக்கிறது.
சான்றோரை நமக்குக் காட்டுவது அவரது குணநலனே. பிற நலன்கள் அல்ல. கல்வி, கேள்வி, செல்வம் அழகு, வண்டி, வாகனம், ஆடை அணிகலன், பட்டம், பதவி முதலிய நலன்களையெல்லாம் அடக்கி, அதன்மேல் உயர்ந்து நிற்பது குணநலன் ஒன்றேயாகும். குணநலன் இன்றேல், ஒருவன் சான்றோன் ஆகான். அவன் அடைந்த பிறநலன்களால் அவனுக்குச் சிறப்புச் சிறிதுமில்லை என்பது வள்ளுவருடைய முடிவு.
சான்றாண்மைக்குப் பல நற்குணங்கள் வேண்டும். இன்றேல் ஐந்து குணங்களேனும் வேண்டும். அவை எல்லோரிடத்தும் அன்பாயிருத்தல், பழி பாவங்களுக்கு அஞ்சி வாழ்தல், எவரையும் உற்ற உறவாய்க் கொள்ளுதல். இயன்றவரையில் எளியவர்க்குதவுதல், எப்போதும் உண்மையே பேசி மகிழ்தல் என்பன. இவை ஐந்தையும் துண்களாக நிறுத்தி, மேலே சால்பைப் பரப்பி வள்ளுவர் கட்டித் தந்த கட்டடமே மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சான்றாண்மைக் கட்டடமாகும்.
‘இவை ஐந்தையும் பின்பற்ற முடியாவிட்டாலும், இரண்டு குணங்களையாவது கைக்கொள்ளுங்கள்; அது போதும் சான்றாண்மைக்கு என்று வள்ளுவர் கூறுகிறார் ஒன்று; உயிர்களைக் கொல்லாதே; மற்றொன்று; பிறர் தீமை சொல்லாதே என்பன. முன்னதை நோன்பு என்றும், பின்னதை சால்பு என்றும் அவர் கூறுகிறார். இதிலிருந்து கொல்லர் நலத்தைவிடப் பிறர் தீமை சொல்லா நலமே சிறந்தது என்றுந் தெரிகிறது. வாள் இல்லாத ஒருவன் கொல்லாது இருந்துவிடக்கூடும். நா இருந்தும் தீமை சொல்லாதிருப்பதே ஆண்மையாகும். வாள்முனை கண்டவரை மட்டுமே கொல்லும்; நா முனை கோட்டை கட்டி வாழ்பவரையும் கொன்று குவித்துவிடும். அத்தகைய வலிமையுடைய நாவை அடக்கி ஆள்வதும், எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணி வாழ்வதுமாகிய இரு குணங்களேனும் சான்றாண்மைக்கு வேண்டாமா? என வள்ளுவர் சலுகைகாட்டி வேண்டுகிறார்.
இந்த இரண்டையுங்கூடச் செய்ய முடியாவிட்டால் ஒன்றையாவது செய்யுங்கள் என்று, வள்ளுவர் இரக்கங் காட்டி வேண்டுகிறார் அது, தீமை செய்தவனுக்கு நன்மை செய்துவிடு என்பதே இஃது அவனுக்குப் பெரிய தண்டனை என்றும் அவர் கூறுகிறார். அது மட்டுமன்று; வேறு தண்டனைகளால் அவனைத் திருத்த முடியாது; இத்தண்டனையால் அவன் கட்டாயம் திருந்தியே விடுவான் என்றும் நம்புகிறார். அவனால் உனக்கு நன்மை; உன்னால் அவனுக்கு நன்மை; இருவரால் நாட்டிற்கும் நன்மை.இந்தப் பண்பு ஒன்று மட்டும் உன்னிடந்தோன்றி விட்டால், நீ வறுமையிற் கிடந்து உழன்றாலும் உனக்கு இழிவு வராது; மாறாக சிறப்பேமிகும். “இந்த ஒன்றுகூட உன்னாற் செய்ய முடியாமற் போகுமானால், நீ மனித னாய்ப் பிறந்து தான் என்ன?” என்று அவர் வருந்திக் கேட்பது உள்ளத்தையே உருக்கும் தன்மை வாய்ந்ததாகும்.
கனவு என்பது பெரும்பாலும் நடவாததையும்,நடக்க முடியாததையுந் தழுவியிருக்கும். நனவு என்பது பெரும்பாலும் நடந்ததாகவும் நடக்கக்கூடியதாகவும் இருக்கும். வள்ளுவர் காண்பதில் எதுவுங் கனவு இல்லை; யாவும் நனவே எனத்துணிந்து கூறப் பலர் முன் வருவார்கள். ஆனால் வள்ளுவர் கண்ட கனவை அவர்கள் அறிவார்களா?
“நாற்புறமும் கடல் நடுவே ஒரு தீவு அதில் ஆயிரக்கனக்கான மக்களின் கூட்டம் அவருள் ஆண்மையுடையோர் சிலர். அவருள்ளும் சான்றாண்மையுடையோர் இரண்டொருவர். அவர்களும் தங்கள் பண்பின் மாறு நீட்டு, சால்பிற் குறைந்து, சான்றாண்மையில் சிறிது குன்றிப்போய் விட்டவர்கள். அவ்வளவுதான்; அங்கு நடந்தது என்ன தெரியுமா? உடனே அத்தீவு அங்குள்ள மக்களைத் தாங்க முடியாமல் தடதடத்துத் தவித்தது மறுவிநாடியே அந்நிலம் பிளந்து கடலிலேயே ஆழ்ந்து போய்விட்டது” என்பதே அவர் கண்ட கனவு. அவரது கனவை அவரது வாயாலேயே கேளுங்கள். “சான்றவர் முன்றாண்மை குன்றின் இரு நிலத்தான் தாங்காது முன்னோ பொறை” என்பது சான்றாண்மை அதிகாரத்தில் இறுதியாகக் கூறிய குறள். எப்படி வள்ளுவர் கண்ட கனவு?
ஊழிக்காலம் வந்து, கடலும் மலையும் தம் நிலை பெயர்ந்தாலும், நற்குணம் படைத்த சான்றோர்கள் தங்கள் நிலை தவறுவதில்லை. அப்படித் தவறினால், உலகம் பொறுப்பதுமில்லை என்று வள்ளுவர் பெருமான் சான்றாண்மையை அதன் பண்போடு கூறி முடிக்குத் தன்மை சான்றாண்மைக்கே ஒரு தனிச்சிறப்பை அளிக்கின்றது.
திருக்குறளில் சான்றாண்மையானது, அவ்வதிகாரத்தில் மட்டுங் கூறப்பட்டில்லை; அந்நூல் முழுவதுமே சான்றாண்மையாகக் காட்சியளிக்கிறது சான்ற, சான்று, சான்றவர், சான்றோர், சான்றோரான் என்ற சொற்களைப் பலவிடங்களிற் காணலாம். நாட்டாண்மை, நகராண்மை, ஊராண்மை, வாளாண்மை, வேளாண்மை, போராண்மை யெல்லாங் கண்ட வள்ளுவர், அவற்றைச் சிறிதாக்கிப் பிறர்மனை நோக்காத பேராண்மை என்று ஒரு பெரிய ஆண்மையைக் கூறியிருப்பது ஆணுக்கு அறமும், ஆண்மைக்கு இலத்கணமும் ஆகும். எந்த குற்றஞ் செய்தாலும் பொறுக்கின்ற தாய் முன்பு கூடக் குடிகாரன் வெறுக்கப்படுவானெனில், ஒரு சிறு குற்றமும் பொறாத சான்றோர் முன்னே அவன் என்னாவான்? என்று வள்ளுவர் நம்மிடம் வந்து கேட்கிறார். அது மட்டுமன்று? குடிகாரனிடஞ் சென்று, ‘தம்பி நீ சான்றோரால் வெறுக்கப்பட வேண்டுமானால் குடி!’ என்றுங் கூறுகிறார். எத்தனையோ விளக்குகளைக் கண்டும், அவன் சிறந்த ஒளிகளைப் பார்த்தும் வள்ளுவர் அவற்றைப் போற்றாமல், சான்றோர் உள்ளத்தே தோன்றும் பொய்யா விளக்கே விளக்கு என வியந்து கூறுகிறார். தன் மகனை ஈன்ற பொழுதைவிடச் ‘சான்றோன்’ எனப் பிறருங் கூறக் கேட்ட பொழுதுதான், ஒரு தாய் பெருமகிழ்ச்சியடைவாளாம். இதைக் கூறும்பொழுது தாயின் மகிழ்ச்சியைவிட வள்ளுவர் அடையும் மகிழ்ச்சியே நமக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.
இதுகாறும் கூறியவாற்றால், சாள்றாண்மையின் தன்மை, அதற்கு தமிழகத்தில் உள்ள சிறப்பு, அதற்கு வள்ளுவர் கூறும் இலக்கணம், இதற்குரிய இடம், அதை அடையும் வழி, அதனாற் பெறும் பேறு ஆகிவைகளை ஒருவாறு அறியலாம். உலகம் முழுவதும் உள்ள மக்கட் குலத்திற்கு வள்ளுவர் தந்த பெருஞ் செல்வமே நமது திருக்குறள். மக்கள் அதனைப் படித்துப் பயன் பெற வேண்டுமென்பது எனது விருப்பம். அதனைச் செய்து தந்து உதவிய வள்ளுவரை வாயார வாழ்த்த வேண்டும். என்பது எனது வேண்டுகோள். பழந்தமிழகத்தில்நிலைத்து நின்ற சான்றாண்மை இன்றும் நின்று நிலவி, எதிர்காலத்தும் வளர்ச்சி பெற்று, சான்றோர் வாழும் நாடாகத் தமிழகத்தை உருவாக்க வேண்டுமென்பது எனது ஆசை.
வாழட்டும் தமிழகம்!
வளரட்டும் சான்றாண்மை!
கயமை
* * *
உடுப்பதூஉம் உண்பது உம் காணிற் பிறர்மேல்
வடுக்காண வற்றாகுங் கீழ்
என்பது திருக்குறளில் ஒரு குறள். இது கயமை என்ற அதிகாரத்தின் கீழ் வந்த ஒன்று.
பிற மொழிகளால் மொழி பெயர்க்க முடியாத தமிழ்ச் சொற்கள் பல. அவற்றுள் மகளின் இயல்பைக் குறிப்பிடும் சொற்கள் சில. அவற்றுள் ஒன்று ‘சான்றாண்மை’ என்று முன் கூறினோம்: மற்றொன்று ‘கயமை’.
‘சான்றாண்மை’ என்பது உயர்ந்த தன்மையின் முடிவான எல்லையையும், ‘கயமை’ என்பது இழிந்த தன்மையின் கடையான எல்லையையும் காட்டும். இதனைத் தமிழ் மக்கள் கண்ட அளவிற்குப் பிற மக்கள் காணவில்லை. தமிழ் கண்ட அளவிற்குப் பிற மொழிகள் காணவில்லை. அதனால் இவற்றை மொழிபெயர்க்கும் ஆற்றலை அவை இழந்து நிற்கின்றன. இது தமிழ் மக்களுக்கு, தமிழ் மொழிக்கு உள்ள ஒரு தனிச் சிறப்பாகும்.
இழிந்த குணத்திலும் ஓர் இழிந்த தன்மையையே வள்ளுவர் ‘கயமை’ என்று கூறுகிறார். கயமைக் குணம் உடைய மக்களையே அவர் கயவர் எனக் குறிப்பிடுகிறார். சயவர் யார்? என்பதை இக் குறள் காட்டுகிறது, காணுங்கள்.
கீழ் என்பது இரண்டே எழுத்துள்ள ஒரு சொல்! அஃது இக் குறளின் இறுதியிலிருந்து ஒரு தனியாட்சி செய்து கொண்டிருக்கிறது. இதன் வெளிப்படையான பொருள் கீழானவன், தாழ்ந்தவன், இழிந்தவன் கயவன் என்பன. இச் சொற்களால் கூறினாற் கயவனை ‘மனிதன்’ என ஒப்புக்கொண்டதாக ஆகிவிடுமாம். ஆகவே, அவ்வாறு கூற விரும்பாமல், வள்ளுவர் அதனைக் கீழ் என்று அஃறிணைப் படுத்தியே கூறிவிட்டார். பாவம்! இஃது இரங்கத்தக்க ஒன்றாகும்.
கயவனைக் ‘கீழ்’ என்றது இக்குறளில் மட்டுமன்று. இதனொடு தொடர்புடைய மற்றிரு குறள்களிலும் “கீழ்” வருகிறது. ஒரு கீழ், குறைந்த தீமை விளைவிக்கும் மக்களைக் கண்டதுமே அவர்களைவிடத் தீமை விளைவிப்பதில், ‘தான் உயர்ந்தது’ என எண்ணி இறுமாப்புக் கொள்ளுமாம். மற்றொரு கீழ் தன்னிடம் வந்து அழுது கெஞ்சி, உதவி கோரும் எவர்க்கும் எதுவும் கொடாமல் அடித்து உதைக்கவரும் முரடர்கட்கு நிறையக் கொடுத்து உதவுமாம். ஆனால் இக் குறளில் உள்ள கீழோ, பிறர் வாழ்வதைக் கண்டதுமே மனம் பொறுக்காமல் துடிக்குமாம். எப்படி இக்கீழின் இழிநிலை?
கயவனைக் “கீழ்” என்று ஒருமையில் மட்டும் குறிப்பிடவில்லை. பன்மையிலும் அவர்களைக் “கீழ்கள்” என்று மற்றொரு குறளிற் குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து கீழ்கள் ஒரு கூட்டமாகச் சேர்ந்து வாழும் என நம்ப வேண்டியிருக்கிறது. இதுகளிடத்தில் ஒழுக்கம் என்பது அடியோடு இராது. எப்போதாவது சிறிது காணப்பெற்றால் அது அடி விழும் தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தினாலோ பொருள் முதலிய எதுவும் கிடைக்கும் என்ற ஆசையினாலோ இருக்குமேயன்றி அதன் இயல்பாக இராது” என்று கீழ்களுக்கு கூறும் இலக்கணமே ஒரு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. .
ஏறக்குறைய 4300 சொற்களுள்ள குறளில் கீழ் என்ற சொல் 10இடங்களில் மட்டுமே வருகிறது. அவற்றில் இழி குணம் என்ற பொருளில் வந்த சொற்கள் நான்கே. இந்த நான்கிலும் எந்த ஒன்றையும் மக்களின் வேறு எந்தக் குணத்திற்கும் வழங்காமல், கயமைக் குணத்திற்கே வள்ளுவர் வழங்கிவிட்டது எண்ணி எண்ணி வியக்கக் கூடியதாகும்.
கயவர் வேறு, தீயவர் வேறு என்பது வள்ளுவர் கருத்து. தீயோர்கள், நல்லதோ கெட்டதோ ஒன்றைச் செய்யும் ஆற்றுல் படைத்தவர். கயவர்கட்கு அந்த ஆற்றலும் இராது. தீமையைச் செய்ய எண்ணுவார்கள். சொல்வார்கள். அவ்வளவுதான். அவர்களால் எதுவுஞ் செய்ய இயலாது. இவ்வுண்மையை “எற்றிற்கு உரியர் கயவர்?” என்பதனால் நன்கறியலாம். இதனால் இக் கீழ்களைத் “தீயோர்க்கும் கீழ்” என்று கூறியதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது.
எதற்கும் உதவாத இக்கீழினிடத்தில் ஒரு வலிமை மட்டுங் காணப்படுமாம். இதனை “வற்றாகும் கீழ்” என்ற சொற்கள் அறிவிக்கின்றன. வற்று-வலிமை! என்ன வலிமை? ஒருவர்மீது மற்றவரிடம் குறைகூறி, அதை அவர் நம்பும்படி செய்துவிடுவது. எப்படி இக்கீழின் வலிமை?
ஒருவர்மீது குறை கூறுவதற்கு அவர்கள் உண்மையாகவே தவறு செய்திருக்கவேண்டும் என்பதில்லை. ஏனெனில், பழிபாவங்களுக்கு அஞ்சி நடக்கவேண்டுமே என்ற கவலை எப்போதும் கீழுக்கு இராது. ஆகவே, அக்கீழ் ‘இல்லாத குறையைக்கூடக் கற்பனை செய்து கூறி, எவரையும் நம்பவைத்துவிடும்’ என்பது வள்ளுவர் கருத்து. இதனை இக்குறளிலுள்ள ‘வடு, காண’ என்ற இரு சொற்களும் அறிவித்துக் கொண்டிருக்கின்றன.
கயமை வேறு, பொறாமை வேறு. பொறாமைக்காரர்களுக்கு மற்றவர் எவரும் வண்டி, வாகனம், நீர், நிலம், பொன், பொருள் முதலியவைகளை வைத்து வாழ்வது பிடிக்காது. ஒன்றுமில்லாவிட்டாலும் பெருமூச்சு விட்டுப் பொறாமை அடைவதற்குப் பட்டாடையும், பாலுணவு மாவது கண்டாக வேண்டும். ஆனால் கயத்திற்கு அதுவுந்தேவையில்லை. வெள்ளைத்துணியை உடுத்தி, வெறுஞ்சோற்றை உண்பதைக் காண்பதே போதுமானதாம். உடனே குறை கூறத் தொடங்கி விடுமாம். இவ்வுண்மையை, ‘உடுப்பதுவும் உண்பதுவும் காணில்’ என்ற சொற்றொடர் அறிவிக்கின்றது. இதனால் இக்கீழ்களைப் பொறாமைக்காரர்களுக்கும் ‘கீழ் என்று கூறியிருப்பதாகவே கொள்ளவேண்டியிருக்கிறது.
உடுத்திய துணி உடற்புண்ணை மறைப்பதற்காக இருந்தாலும், உண்டது உணவாக இல்லாமல் மருந்தாக இருந்தாலும், அதைக் காணுகின்ற கயவர்கள் அவற்றை உணவும் உடையும் என்றே எண்ணி மனம் பொறுக்கார்களாம். இப்பொருளை இக்குறளிலுள்ள திருக்குறளிலுள்ள “காணின்” என்ற சொல்லே காட்டும். இன்றேல் அஃது “அறியின்” என்று இருந்திருக்கும். இதிலிருந்து இக்கீழ்களை அறியா மைக்கும் ‘கீழ்’ என்று கூறியதாகவே கொள்ளவேண்டியிருக்கிறது!
கொடியவர்கள் தங்கட்குப் பிடிக்காதவர்களிடம் நேரிற் சென்று வைதோ, அடித்தோ, வருத்தித் தமது வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்வார்கள். ஆனால் கயவர்கள் தங்கட்குப் பிடிக்காத மக்களிடம் நேரிற்செல்ல அஞ்சிப் பிறரிடஞ் சென்று குறைகூறிக் கொண்டேயிருப்பார்களாம். இதனால் இக் கீழ்களைக் கொடியர்க்கும் கீழ் என்று கூறியிருப்பதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது.
கருமித்தனம் வேறு: கயமைத்தனம் வேறு. கருமிகளுக்கு இலக்கணம் “எச்சில் கையாலுங் காகம் ஒட்ட மாட்டார்கள்” என்பதே. ஆனால் கயவர்களோ-உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட இரப்போர்முன் உதறமாட்களாம். காரணம், உதறினால் கையிலுள்ள தண்ணீர் இரப்போர்முன் சென்றுவிழும் என்பதே. இதனால் இக் கீழ்களைக் கருமிகளுக்கும் ‘கீழ்’ என்று கூறியிருப்பதாகவே கொள்ளவேண்டியிருக்கிறது. “ஈர்ங்கை விதிரார் கயவர்” என்பது வள்ளுவர் வாக்கு.
கொம்புளதற்கு ஐந்து முழம், குதிரைக்குப் பத்து முழம், யானைக்கு ஆயிரம் முழம் எட்டியிருக்க வேண்டும் என்பது ஒரு புலவரின் கருத்து. “காணின் துன்புறுத்துவர்” என்று இக் குறள் கூறுவதால், ‘கயவர்களின் கண் காணாத் தூரத்திலேயே வாழவேண்டும்’ என்பது வள்ளுவர் கருத்து என்று தெரிகிறது. இதிலிருந்த இக் கீழ்களை விலங்குகளுக்கும் “கீழ்” என்று கூறியிருப்பதாகவே கொள்ளவேண்டியிருக்கிறது.
கயவர்கள் யார்? அவர்கள் எப்படி இருப்பார்கள்? என்பதை நமக்கு விளக்கவந்த வள்ளுவர், அவர்கன் மனிதர்களைப் போலவே இருப்பார்கள் என்று கூறியிருப்பதிலிருந்து, ‘கயவர்கள் மனிதர்கள் அல்லர்’ என்பது வள்ளுவரது முடிந்த முடிவு என்பது நன்கு விளங்குகிறது. காரணம் அவர்கள் உருவத்தால் மக்களாகக் காணப்பட்டாலும், மக்கட்பண்பு அவர்களிடம் காணப்படாமையே யாகும்.
“பழிக்கு அஞ்சி நடக்க வேண்டும்” என்ற கவலையே நெஞ்சத்திலில்லாது வாழ்வதால், கயவர்கள் “புண்ணியர்”களைப் போலவும், ஏவுவார் அடக்குவார் எவருமின்றித் தம் மனம் போனபடியெல்லாஞ் செய்வதால் கயவர்கள் “தேவர்”களைப் போலவுங் காணப்படுவார்கள் என்று, வள்ளுவர் இக்கீழ்களைக் குறிப்பிடுவது நகைச்சுவையிலும் ஒரு புதிய சுவையை உண்டுபண்ணிக் காட்டுகிறது.
“காணின், காண,” என்ற இரு சொற்களும். இக் குறளிலிருந்து ஒரு விரைவைக் காட்டுகின்றன. “கயவர்கள் நலம் கண்டதுமே குறைகாண விரைவார்கள்” என்பது இதன் பொருள். கயவர்களின் விரைவை வள்ளுவரும் விரைந்து காட்டியிருப்பது நம் உள்ளத்தை யெல்லாம் மகிழ்விக்கிறது.
“உடையைக் கண்டு, உணவைக் கண்டு” என்று கூறாமல், உடுப்பதைக் கண்டு, உண்பதைக் கண்டு என்று வள்ளுவர் கூறியிருப்பது பொருள் அமைதியுடையதாகும், பின்னதற்குப் பெயர் ஆசையாகாமல், கயமையாகவே அமைவதைக் கண்டு களியுங்கள்.
“மக்கள் என்பவர் தம்மிடத்து உள்ள குறைகளையே காணத் துடிப்பவர். ‘கயவர்’ என்பவர் அவ்வாறு இல்லாமல், சும்மாவும் இராமற் பிறரிடத்து இல்லாத குறைகளையுங்காணத் துடிப்பவர்” என்பது இக் குறளின் கருத்து. இவ்வுண்மையை இக் குறளிலுள்ள “பிறர்மேல் வடுக்காண” என்பது நன்கு விளக்கிக் கொண்டிருக்கிறது.
பொறாமை, புறங்கூறல் தீமை முதலிய பல தீச் செயல்களை வெறுத்து ஒதுக்கக்கூடிய அறத்துப்பாலிலும் கயமையைப் பற்றிக் கூற வள்ளுவர்க்கு மனமில்லை யென்று தெரிகிறது. பொருட்பாலிலுங்கூட முதலில் இடையிற் கூறாமல் கடைசி அதிகாரமாகவே கூறியிருப்பதிலிருந்து, கயவர்களை வள்ளுவர் கீழ்களுக்கெல்லாம் மிக்க கீழாகக் கருதியிருக்கிறார் என்பது நன்கு விளங்குகிறது.
கயமைக்குணம் ஆண்களிடத்தில் மட்டுமின்றி பெண்களிடத்துங் காணப்படும். அவர்கள் கயவர்களல்லர்; கயத்திகள். கயவன், கயத்தி ஆகிய இருபாலரையுஞ் சேர்த்து வள்ளுவர் ‘கீழ்’ என்றார். நாலடி நூல் மிக நயமாக ‘கயம்’ என்கிறது. எங்கள் வீட்டுக் குழந்தை இதுகளை “108” என்கின்றனர். காரணம் இவ்வதிகாரத்தின் எண் “108” என்பதே.
கயத்தை எவ்வாறு தண்டிப்பது என்பதை ஆசிரியர் நல்லாதனார் ஆராய்ந்து கூறியிருக்கிறார் அஃது ‘இரும் பிற் பிணிப்பர் கயத்தைச் சான்றோரை நயத்திற்பிணித்து விடல்” என்பதே. இது கயத்தையும், நயத்தையுங் காட்டுவதோடு நமக்குள் ஒரு பயத்தையும் உண்டு பண்ணி விடுகிறது.
நூற்றியெட்டை மறவாதீர்கள். எப்போதும் விழிப்பாயிருங்கள். உங்கள் உள்ளத்தில் அதுகளை துழைய விடாதீர்கள். உங்கள் உள்ளத்தில் மட்டுமல்ல, வீட்டில், வீதியில், நாட்டில், நகரில் உள்ள எவ்விடத்திலுமே இக் கீழ்களை நுழையவிடாதீர்கள். எங்கேனும் கண்டு விட்டால் உடனே விலகுங்கள்.
கயமைக் குணம் உடையவரை வெறுக்கக் கற்றுக் கொள்ளுவதும், நம் உள்ளத்திலேயே அக் குணம் தோன்றுவதாக நமக்குத் தோன்றினால் வெட்கித் தலைகுனிவதும் ஒரு பண்பு ஆகும். நாடு நலம் பெற மக்கள் நல்வாழ்வு வாழ, நாம் அனைவரும் இந்நற்றொண்டைச் செய்தாக வேண்டும். இன்றேல் இவ்விரண்டுமே கீழ் ஆகிவிடும்.
கயம் நுழையும் உள்ளத்தில்
கயம் நுழையாது;
கீழ் வாழும் இல்லத்தில்
மேல் வாழாது!
எது அறிவு?
* * *
“அறிவு” என்பது எது? எது அறிவு? என்னென்னவோ எவராலோ ஆராயப்பெற்று வருகிற இக் காலத்தில், நாம் இதையாவது இப்போதாவது ஆராய வேண்டாமா? ஆராய்வோம். இன்றேல், “நாம் அறிவைப் பெற்றிருக்கிறோம்” என்று எவ்வாறு கூறுவது?
அறிவு கண்களாற் காணக்கூடிய ஒரு பொருளன்று; என்றாலும், மக்களின் செயல்களைக் கொண்டு அதை ஆராய்ந்து அறியவேண்டியிருக்கிறது. அறிவுடையவர்கள் நல்லவர்கள் என்றும், அறிவற்றவர்கள் பொல்லாதவர்கள் என்றும் சொல்லப்பெற்று வருகிறது.
இஃது உணைமையானால் எதை அறிவு என்று கூறுவது என்பது விளங்கவில்லை. இதனை ஆராயும் பொழுது நமக்கும் பல ஐயப்பாடுகள் தோன்றுகின்றன.
அறிவைக் காண வேண்டுமானால், உண்டு, உறங்கி ஓய்ந்து கிடக்கும் நல்ல பிள்ளைகளிடஞ் சென்று பயனில்லை; ஓயாது சேட்டை செய்து, விரைவாகத் துன்பத்தை விளைவிக்கும் பொல்லாத பிள்ளைகளிடத்துத்தான் அதைக் காண முடிகிறது.
பணத்தை முடிந்து தோளிற் போட்டுக்கொண்டு. நடந்து செல்லும் நல்ல மனிதர்களைவிட, அதனை அவிழ்த்து எடுக்கின்ற முடிச்சவிழ்க்கிகள் அறிவை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.
உயர்ந்த பொருளை வைத்து, உள்ள விலை கூறி விற்கின்ற நல்ல வியாபாரிகளைவிட, மட்ட பொருளை அதிக விலைக்கு விற்றுப் பொய்கூறிப் பொருள் தேடும் பொல்லாத வியாபாரிகள் அதிக அறிவுடையவர்களாகக் காணப்படுகிறார்கள்.
நேர்மையாகத் தொழில் செய்கிற உத்தியோகத்தர்களைவிட, இலஞ்சம் வாங்கித் தொழில் செய்யும் உத்தியோகத்தர்களுக்கு மிக்க அறிவு வேண்டியிருக்கிறது.
உடலை வருத்தி, உழைத்துழைத்து உண்ணுகின்ற கிராம மக்களைவிட, உழைக்காது உண்டு வாழ்கின்ற நகர மக்கள் மிகவும் அறிவுடையார்களாகத் தோன்றுகிறார்கள்.
பொதுநலங் கருதித் தொண்டு செய்து வருகின்ற உண்மையான உழைப்பாளிகளைவிட, தந்நலங் கருதி பொதுத் தொண்டு செய்வதாக நடிக்கின்ற தீய மக்களிடத்து அதிக அறிவு காணப்படுகின்றது.
நெறி தவறாது வாழ்க்கை நடத்திவரும் பெண்களைவிட, நெறி தவறி வாழ்வை நடத்தும் பெண்கள் மிக அறிவுடையவர்களாகத் தோன்றுகிறார்கள்.
முடிவாகக் கூறுமிடத்து, “யோக்கியர்களைவிட அயோக்கியர்களே மிக்க அறிவுடையவர்களாகக் காணப் படுகிறார்கள்” எனக் கூறலாம். “நல்ல மனிதன்” என்றால், “பாவம்! ஒன்றும் தெரியாதவன்” என்றும் “பொல்லாத மனிதன்” என்றால், எவராலும் ஏமாற்ற முடியாதவன் என்றும் பொதுவாக நம்மிடையே வழங்கி வருகிற ஒரு வழக்கும் இதனை மெய்ப்பிக்கும்.
அவ்விதமாயின், “எது அறிவு? எவரிடத்துக் காண்பது அறிவு? பொல்லாத மக்களிடத்திலிருந்துதான் அறிவு ஒளி வீசுமா? நல்ல மக்களிடத்திலிருந்து அஃது ஒளி வீசாதா?” என்ற கேள்விகள் நம்மிடையே எழும்.
இக்கேள்விகளைப் பலரிடத்தும் கேளுங்கள். வருகின்ற விடை உங்கள் அறிவுப்பசிக்கு ஏற்ற உணவாக இருக் கிறதா? என்று சுவைத்துப் பாருங்கள். பிறகு இதே கேள்வியைத் திருவள்ளுவரிடம் போய்க் கேளுங்கள், ஏனெனில், இவர் தாம் “எது அறிவு?” என்பதைக் காட்டகூடியவர். அவர் ஒருவரே ‘அறிவு எது?’ என்பதைக் காட்டியிருக்கிறார். அது எது?
மண்ணை, பெண்ணை, பொன்னை, பொருளைக் கண்டால் மனம் அவற்றையடையத் தாவுமாம். தவறான வழியிலும் அடைய எண்ணுமாம். மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து, தீய எண்ணங்கள் தீய செயல்களிடத்திலிருந்து விலக்கிக் காப்பாற்றி, நல்ல எண்ணங்கள், நல்ல செயல்களிடத்து அதைச் செலுத்துவது எதுவோ, அதுவே அறிவு என்று வள்ளுவர் கூறுகிறார்.
இக் கருத்துக்களடங்கிய வள்ளுவருடைய சொற்களை அவருடைய வாக்கினாலேயே கேளுங்கள்.
சென்ற விடத்தாற் செலவிடாது தீதுஒரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.
என்பதே அவரது வாக்கு.
“மனம் சென்றவிடமெல்லாம் அதனைச் செல்ல விடாது தடுத்து, அதைத் தீமைகளிலிருந்து விலக்கி: நல்லவைகளிடத்துச் செலுத்துவது எதுவோ, அதுவே அறிவு” என்பது இதன் பொருள்.
“மனமே அறிவு” என மயங்கியிருப்பதனாலும், மனத்தின் செயல்களனைத்தும் அறிவின் செயல்களெனக் கருதியிருப்பதனாலுமே, மேலே கண்ட ஐயப்பாடுகள் நமக்குத் தோன்றின.
மனம் வேறு அறிவுவேறு என்றும், மனத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்றே அறிவு என்றும், மனத்தை அடக்கி ஆள்வதே அறிவு என்றும் திருவள்ளுவர் வகுத்துக் காட்டுவதிலிருந்து நம் ஐயப்பாடுகள் அனைத்தும் அழிந்து ஒழிகின்றன.
மனம் செல்லும் வழிகளைத் “தவறு” என எடுத்துக் காட்டித்திருத்தி நல்வழிசெல்ல அறிவு அறிவுறுத்தினாலும் அதனையும் மீறிச் செயலாற்றும் வலிமை மனதிற்கு உண்டு என்பதை வள்ளுவர், “நன்றின்பா லுய்ப்பது அறிவு” என்ற சொற்களால் கூறாமற் கூறுகிறார்.
திருடனுடைய மனம் திருட எண்ணுகிறது. திருடத் துணிகிறான்; பிறகு திருடுகிறான். திருடும்போது அஞ்சி நடுங்குகிறான், ஏன்? அது தவறு என்று அவனுடைய மனதுக்கு அறிவுறுத்துகிறது. அறிவு உணர்த்தியும், தான் உணர்ந்தும், அறிவின்வழிச் சொல்லாமல், ஆசையால் தூண்டப்பட்ட மனதின் வழிச்சென்று திருடிவிடுகிறான். அறிவையும் மீறி மனம் செயலாற்றும் முறையை விளக்க இஃது ஒன்றே போதுமானதாகும்.
திருடுவது, பொய்சொல்லுவது, இலஞ்சம் வாங்குவது ஏமாற்றுவது, நெறி தவறுவது ஆகியவை எவ்வளவு திறமையாகச் செய்யப்பட்டாலும்; அது அறிவின் செயல் அன்று, ஆசையின் வயப்பட்ட மனதின் செயல் என்றும்: அதன் தவறுகளை உணர்த்தி நல்ல வழியில் செல்லத் தூண்டும் செயலே அறிவின் செயல் என்றும், திருவள்ளுவரின் திருக்குறள் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது.
கண்டவிடமெல்லாம் கருத்தைச் செலுத்தி ஓடி அலையும் மக்களுக்கு உண்மையை உணர்த்தி, நல்வழி நடத்தும் பெற்றோர்கள் அறிவின் உரு ஆவார்கள். துள்ளித் திரியும் இளங்காளைகளை அடக்கி உழவுக்குப் பயன்படுத்தி வரும் உழவன் அறிவுருவாளன் திமிர் பிடித்த குதிரைகளை அடக்கி வண்டியிற் பூட்டி ஒழுங்காகச் செல்லும்படி நடத்துகின்ற வண்டிக்காரனும் அறிவின் உரு மதங்கொண்ட யானையை அடக்கித் தீமை செய்வதினின்றும் விலக்கி நேரான வழியில் நடத்துகின்ற பாகனும் அறிவுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவன் என்று இக் குறளால் அறிய முடிகிறது.
இதிலிருந்து அறிவின் வழிச்செல்லும் மக்கள் அறிவைப் பெற்றவர்கள் என்றும், மனதின்வழிச் செல்லும் மக்கள் அறிவை இழந்தவர்கள் என்றும் நன்கறிகிறோம்.
ஆகவே, தம்பிகளே, தங்கைகளே, உங்களுடைய ஐயப்பாடு என்னாயிற்று? வள்ளுவர் கூறுகிற விடை எப்படி இருக்கிறது? எது அறிவு? என்பது இப்போது விளங்குகிறதா? வள்ளுவர் காட்டும் அறிவு உங்கள் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறதா?
எடுங்கள் திருக்குறளை, படியுங்கள் நன்றாக. மனம், செல்லும் வழியெல்லாம் செல்லாமல், அறிவு செலுத்தும் வழியில் செல்லுங்கள். செய்வன செய்து சிறப்பெய்தி வாழுங்கள்.
வாழட்டும் தமிழகம்!
கூத்தாட்டு அவைக்குழாம்
* * *
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிங் தற்று.
என்பது திருக்குறளில் ஒரு குறள். “செல்வம் நிலையாது; அஃது அழிந்துவிடும்” என்பது இதன் கருத்து!
இது நிலையாமை என்ற தலைப்பில் வந்த ஒன்று. இவ்வுலகில் தோன்றும் பொருள்கள் அனைத்துமே ‘அழியக் கூடியன’ என்பதே நிலையாமை என்பதன் பொருள்.
”நிலையில்லாதவைகளை நிலைத்து நிற்கக் கூடியவை என எண்ணுவது அறிவுடையவர்க்கு இழிவு” என்று முதற் குறளிற் கூறிய வள்ளுவர், அடுத்து, ”நிலைத்து நில்லாதவைகளில் செல்வமும் ஒன்று” என்று இக்குறளிற் கூறுகிறார்.
”குறைந்த செல்வம் ஒருகால் அழியலாம். நிறைந்த செல்வம் எப்படி அழியும்?” என்று நினைப்பவரை நோக்கியே எச்சரிக்கை செய்கிறது இக்குறள். ”அஃது எவ்வளவு பெரிய செல்வமாயினும் அழிந்து போய்விடும்” என்று.இதை இக்குறளில் உள்ள பெருஞ்செல்வம் என்பது மெய்ப்பிக்கும்.
ஒரு பெருஞ்செல்வம் எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு வள்ளுவர் ‘நாடகக் கொட்டகைகளில் மக்கள் திரண்டு வந்திருப்பது போல’ என்று விடை கூறியிருப்பது பெரிதும் வியக்கக் கூடியதாகும்.
எங்கெங்கோ மக்கள் பெருங்கூட்டமாகக் கூடியிருக்க, அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, நடிப்பதைக் கண்டு மகிழக் கூடியிருக்கும் கலைஞர்களின் கூட்டத்தை மட்டும். பெருஞ் செல்வத்திற்கு உவமையாகக் காட்டியிருப்பது அவரது கலையுள்ளத்தையே நமக்குக் காட்டுவதாக இருக்கிறது
எப்படி நாடகக் கொட்டகைக்கு மக்கள் ஒவ்வொருவராக வந்து, பின் பெருங்கூடட்டமாகக் காணப்படுகிறார்களோ, அப்படியே ஒருவனுக்கு செல்வமும் சிறிது சிறிதாக வந்து பின் பெருஞ்செல்வமாகத் திரண்டு காட்சியளிக்கும் என்ற கருத்தையும் இக் குறளிற் கண்டு மகிழுங்கள்.
நாடகத்திற்கு வரும்போது தனித்தனியாக வந்த மக்கள் நாடகம் முடிந்த பிறகு ஒன்றுசேர்ந்து ஒரேயடியாய் போய் விடுவதைப் போல, வருங்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் வந்த செல்வம், போகுங்காலத்தில் ஒரேயடியாய்ப் போய் விடும் என்ற உண்மையையும், இக்குறள் வெகு அருமையாக விளக்கிக் கொண்டிருக்கிறது.
நாடகக் கொட்டைக்கு மக்கள் வரும்போது ஒரு வழியில் மட்டுமே வந்து, போகும்போது பல வழிகளிலும் போய்விடுவது போலச் செல்வமும் வரும்போது ஒரு வழியில் வந்து, போகும்போது பல வழிகளிலும் போய்விடும் என்ற கருத்தையும் இக்குறள் அழுத்தமாகக் கூறிக் கொண்டிருக்கிறது.
செல்வம் வரும்போது மகிழ்வும், போகும்போது சோர்வும் ஒருவனுக்கு எப்படி உண்டாகும்? என்பதைக் காட்ட, நாடகத்தைக் காணவரும் மக்களிடம் வரும் போது காணப்படும் மகிழ்வையும், போகும்போது காணப்படும் சோர்வையும் உவமையாகக் காட்டியிருப்பது பெரிதும் நயமுடையதாகக் காணப்படுகிறது.
‘நாடகத்தை முன் வைத்து மக்கள் கூடுவதும் பிறகு கலைவதும்போல, ஒருவனது செயலை முன்வைத்து செல்வம் சேர்வதும் பிறகு அழிவதும் ஏற்படும்’ என்ற கருத்தும் இக்குறளிற் புதைந்து காணப்படுகிறது.
இக்குறளில் உள்ள ‘போக்கும்’ என்ற சொல்லில் ‘உம்’ ஒன்றிருந்து போவதும் அப்படியே! என்று கூறுவதால், வருவதும் அப்படியே இருப்பதும் அப்படியே! என்று கூறாமற் கூறுவதைக் கண்டு மகிழுங்கள்.
நாடகம் காண வரும்போது மகிழ்வு, காணும்போது இன்பம், கலையும்போது சோர்வு உண்டாவது போல ஒருவனுக்குச் செல்வம் வரும்போது மகிழ்வும், துய்க்கும் போது இன்பமும், தொலையும்போது துன்பமும் ஏற்படும் என்ற இக்கருத்தும் இக்குறளிற் இல்லாமலில்லை.
ஒரே கூத்தாட்டு அவையை, மக்கள் நிறைந்து காணப்படும்போது நிறைந்த செல்வத்திற்கும், குறைந்து காணப்படும்போது குறைந்த செல்வத்திற்கும், கலைந்து போய் விட்டது பிறகு வறுமையின் இருப்பிடத்திற்கும் உவமை காட்டுவது, எண்ணி எண்ணி வியக்கக் கூடியதாகும்.
கூத்தாட்டு அவைக்குழாம் என்பது ஒன்றல்ல, இரண்டு, ஒன்று கூத்தாட்டரங்கில் ஆடுகின்ற குழாம். மற்றொன்று கூத்தாட்டு அவையில் கூடுகின்ற குழாம். ஆகவே, நடிகர்களின் நடை, உடை, நடிப்பு, வேடம், கதை, காட்சி, அனைத்தும் பொய்; நிலையற்றவை. நாடகம் முடிந்ததும் அவை அனைத்தும் அழிந்து ஒழிந்து ஒன்றுமேயில்லாமல் போய்விடும். அதுபோலவே உனது செல்வத்தின் தோற்றமும் இருப்பும் அழிவும் என்பதை வற்புறுத்தவே, இக் குறள் தோன்றியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
செல்வம் வருகின்ற வேகத்தைவிட, அஃது அழிகின்ற வேகம் அதிகமாக இருக்கும் என்பது கலைஞர்களைப் பொறுத்தவரையில் 100-க்கு 95 பங்கு உண்மையாக இருக்கும் என்பதை எண்ணியே வள்ளுவர் கூத்தாட்டு அவைக்குழுவை உவமையாகக் கொண்டாரோ? என்றும் எண்ண வேண்டியிருக்கிறது.
செல்வம் நிலையாது! அஃது என்றும் உன்னிடம் நிலைத்து நிற்கும் என்றெண்ணி ஏமாற்றம் அடையாதே! கூத்து நடைபெறும் அவையில் கூடிக்கலையும் குழுவினரைப் போல என்றோ ஒருநாள் அஃது உன்னைவிட்டு ஒழிந்து போய்விடும். ஆதலின் அறஞ்செய்! அது நல்லது! என்பது இக்குறளின் திரண்ட கருத்து.
சிலப்பதிகாரத்தின் காலத்திற்கு முன்னுள்ள வள்ளுவர் காலத்திலும் நாடகக் கலை இருந்திருக்கிறது. நாடகங்கள் பல வள்ளுவர் காலத்தில் நடைபெற்றிருக்கின்றன. நாடகம் பார்ப்பதில் வள்ளுவருக்கும் விருப்பம் உண்டு. நாடகத்தைக்கண்டு களித்திருக்கிறார். அதுவும் எல்லோருக்கும் முன்னே சென்று அமர்ந்து பார்த்திருக்கின்றார். முன்புறத்தில் மட்டுமல்ல; பின்புறத்திலும் திரும்பிப்பார்த்து கூட்டத்தின் பெருக்கைக் கணக்கிட்டு மகிழ்ந்திருக்கிறார். நாடகம் முடிந்தபிறகு நெருக்கடியில் அகப்படாமல் இருந்து, வெற்றிடத்தைக்கண்டு கடைசியாகவே வெளி வந்திருக்கிறார். நாடக அவையை, நாடகக்கலையை, நாடகக் கலைஞர்களைச் செல்வமாகக் கருதியிருக்கிறார். வெறுஞ் செல்வமாக அல்ல; பெருஞ் செல்வமாகவே கருதியிருக்கிறார் என்ற இதுவும், இது போன்ற பிறவும், இக்குறளால் அறியக் கூடியவை.
வாழட்டும் குறள்நெறி!
இரந்து வாழும் வாழ்வு
* * *
உலகிற்கு நாகரிகத்தை வழங்கியது தமிழ்நாடு. உலகிற்கு ஒழுக்கத்தைப் போதித்தது தமிழ் மொழி. ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதி வாழ்ந்தவர்கள் தமிழ் மக்கள். இம் மூன்றும் முடிந்த முடிவுகள்.
ஒழுக்கத்தில் தலை சிறந்தவை பொய் கூறாமையும், இரந்துண்ணாமையும் ஆகும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்பதைப் “பொய் கூறு வாய் புழு உண்ணும்” என்ற பழமொழி நன்கு விளக்கிக் காட்டுகிறது.
உண்மையைக் கூறுவதும், ‘உழைத்து உண்பதுமே தமிழ் மக்களின் ஒழுக்கத்தில் தலையாயவை. இவ்வொழுக்கத்தில் தவறியவர்கள் உயிரோடு இருப்பினும் இறந்தோருள் வைத்து எண்ணப்படுவதும், தவறாதவர்கள் இறந்து போயிருப்பினும் வாழ்வோருள் வைத்து எண்ணப்படுவதும் தமிழ் வழக்கு.
ஆசிரியர் திருவள்ளுவர் தமது திருக்குறளில் ‘இரவச்சம்’ என ஒரு தனி அதிகாரத்தையே வகுத்துப் பத்துப் பொன்மணிகளைக் கோத்திருக்கிறார். மனிதன் இரந்து வாழ்வதற்கு அஞ்சவேண்டும் என்பது அவரது கருத்து.
கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்.
என்பது ஒரு குறள்.
உள்ளத்தே ஒளிவில்லாமல் மகிழ்வோடு கொடை கொடுக்கும் நண்பர்களிடத்தும் இரந்து பொருள் பெறுவதைவிட, இரவாது வறுமையடைதல் கோடிப்பங்கு நன்மையுடையதாகும் என்பது பொருள். இரந்து பெற்ற செல்வத்திற்குப் பெருமை இல்லையாதலின், வேறு முயற்சி செய்து பொருள் தேடுவதே சிறப்பு என்பது கருத்து.
ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்
கிரவி னிழிவந்த தில்
என்பது மற்றொரு குறள். தனக்காக என்று இரவாதிருக்கும் ஒருவன் நீர் வேட்கையால் இறக்கப்போகும் பசுவைக் கண்டு இரங்கி, “பசுவிற்கு நீர் கொடுங்கள்” என்று பிறரிடத்தில் இரப்பானாயின், அவனுடைய நாவிற்கு அதைவிட இழிவு தருவது வேறொன்றுமில்லை என்பது பொருள். அறஞ்செய்ய வேண்டின் தன் முயற்சியால் ஈட்டிய பொருளைக் கொண்டு செய்யவேண்டுமேயன்றிப் பிறரிடத்து இரந்து பெற்றுச் செய்யலாகாது என்பது கருத்து. இரப்பது இழிவு என்றதால், இரந்து வாழ எண்ணுவது மனதிற்கு இழிவு; இரக்க நடப்பது காலிற்கு இழிவு: ஏந்திப் பெறுவது கைக்கு இழிவு; பெற்று உண்பது வாய்க்கு இழிவு; பெறக் கேட்பது நாவிற்கு இழிவு-என்பதும் அறியப்பெறும்.
இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக உலகியற்றி யான்
என்பது மற்றும் ஒரு குறள். இவ்வுலகத்தைப் படைத் தவன், இரந்துண்டு உயிர் வாழ வேண்டும் என்றெண்ணிச் சிலரைப் படைத்திருப்பானானால், அவன் இரந்து உண்டு உயிர் வாழ்கின்ற மக்களைப் போலவே எங்கும் திரிந்து அலைந்து துன்பப்பட்டுக் கெடுவானாக என்பது பொருள். எவரையும் அவ்வாறு எண்ணிப் படைப்பதில்லை என்பது கருத்து. இதனால் இரந்துவாழும் தொழிலானது மக்கள் முயற்சியின்மையால் தாமே தேடிக்கொள்ளும் இழி தொழில் என நன்கறியலாம்.
ஆசிரியர் திருவள்ளுவர், பிச்சைகேட்கும் மக்களிடம் சென்று அவரே பிச்சை கேட்பதாக அமைந்திருக்கிறது அடியிற் கண்ட குறள்:
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
கரப்பா ரிரவன்மின் என்று
‘வைத்துக்கொண்டே மறைப்பவர்களிடத்துச் சென்று பிச்சை கேட்க வேண்டாமென்று, பிச்சை எடுத்து வாழ்பவரிடத்து நானொரு பிச்சை கேட்கிறேன்’ என்பது பொருள் இரந்து வாழும் வாழ்வுக்கும் ஒரு சிறப்பு இருக்குமானால், இது அதையும் கெடுத்துவிடும் என்பது குறிப்பு.
‘அவரவர் கடமையைச் செய்ய எல்லா இழிதொழிலாளாராலும் இயலும். இரந்துண்போருக்கு மட்டும் இயலாது’ என்றெண்ணிய கொன்றைவேந்தன் ஆசிரியர்
ஐயம் புகினும் செய்வன செய்
எனக் கூறினார், ‘கல்வியைக் கற்க எல்லோராலும் இயலும் இரந்து வாழ்பவர்க்கு இயலாது’ என்று எண்ணிய அதிவீர ராமபாண்டிய மன்னன்,
பிச்சை புகினும் கற்கை கன்றே
எனக் கூறினார்.
இரந்துண்ணுவது மட்டும் இழிவன்று ஒருவன் மகிழ்வோடு கொடுப்பதைப் பெறுவதும் இழிவு எனறு எண்ணிய ஒளவையார்,
ஏற்ப திகழ்ச்சி எனக் கூறியுள்ளார்.
இதுகாறுங் கூறியவற்றால், இரத்தலும் அதன் துன்பமும், இரந்து வாழும் வாழ்வும் அதன் இழிவும், இது போன்ற பிறவும் இனிது புலனாகும்.
உழைக்க முடியவில்லை, உழைப்பதற் கிடமில்லை, உடலுக்கு நலமில்லை, உணவுக்கு வழியில்லை என்பதாக உண்மையைக்கூறி இரந்துண்பதே இத்தகைய இழிந்த செயலாகக் கருதப்படுமானால், பணமுடிப்பு என்றும், உண்டியல் என்றும், திருப்பதிக்கு என்றும், தேசபக்திக்கு என்றும், சமூகத்திற்கு என்றும், சீர்திருத்தத்திற்கு என்றும் பொய்யாகக் கூறி இரந்துவாழ்வது, எத்தகைய கடுமையும் கொடுமையுமான இழிசெயலாகும் என்பதை எண்ணிப் பார்த்தே உணரவேண்டி இருக்கிறது.
இரப்பது இரப்பவர்க்கு மட்டும் இழிவல்லை; அவர்களைச் சார்ந்து இருக்கும் உறவினர்க்கும் இழிவு; அவர்கள் வாழும் நாட்டிற்கும் இழிவு; நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கும் இழிவு என்பதே நமது கருத்து. இரப்பதற்காக இரப்போர் வெட்கப்படுவதைவிட, கொடுப்பதற்காகக் கொடுப்போர் அதிகமாக வெட்கப்படவேண்டும். ஒருவன் எழுநூறு பேருக்குச் சோறு கொடுத்ததைப் பெருமையாகக் கொள்வதைவிட மானக்கேடாகக் கொள்வது மிகவும் நல்லது. உண்மையான பெருமை அவன் வாழ்கின்ற நாட்டில் இரந்துவாழ எவரும் இல்லாதிருப்பதேயாகும்
இரப்போரை நோக்கி ‘இரப்பது இழிவு’ என்று சொல்லிக் கொண்டிருப்பதைவிட இரப்போரில்லாதிருப்பதற்கு அடிப்படையைக் காண்பதே அறிவுடைமையாகும். இத்தகைய தொண்டினை ஒருவன் ஒருநாள் செய்யினும், இது வாழ்நாள் முழுவதும் பல்லாயிரம் பேருக்கு மன மகிழ்வாய்க் கொடுக்கும் கொடையைவிட மிகப் பெருங்கொடையாகக் கருதப்பெறும் என்பது அறிஞர்களின் முடிவு.
“இரவு” என்று ஓர் அதிகாரமும், “இரவச்சம்” என்று மற்றோர் அதிகாரமும் வகுத்து, இரத்தலின் தன்மையையும் அதன் இழிவையும் கூறிய ஆசிரியர் திருவள்ளுவர், பொய் கூறிப் பொருள்தேடி வாழும் மக்களைப்பற்றியும் ‘கரவிரவு, என, ஒரு தனி அதிகாரம் வகுத்துக் கூறியிருந்தால், இன்று நன்றாக இருந்திருக்கும்.
கரவிரவில் வாழும் மக்கள் அக்காலத்து இல்லாமையே வள்ளுவர் கூறாமைக்குக் காரணம் எனத் தெரிகிறது. கரவிரவில் வாழும் மக்கள் அக்காலத்தும் வாழ்ந்தனர். எனக்கருதினால், அத்தகைய மக்களைக் குறித்து, “மக்களே போல்வர் கயவர்” என, அவரும் கரந்து கூறியிருக்கிறார் என்றே கருதுதல் வேண்டும். இரப்பதன் இழிவைவிடக்கரந்திரந்து வாழும் வாழ்வின் இழிவு கடுமையானதென நன்கு தெரிகிறது.
உண்மையைச் சொல்லியோ, பொய்யைச் சொல்லியோ இரந்து வாழும் மக்கள் பெருகுவதற்கு வறுமையே பெரிதும் அடிப்படையாகும். அதை ஒழிக்க வழி காண்பவனே அறிஞன். அதைக் கொல்லத் திட்டம் போடுபவனே படைத் தலைவன். அதைக் கொள்பவனே வீரன். அதை ஒழித்த மக்களே மக்கள். அஃது ஒழிந்த நாடே நாடு!
கடும் போரிட்டே இரப்போரை ஒழிக்க வேண்டும். இரப்போர் ஒழிந்த நாட்டிற்குள் எப்போரும் தலை காட்டாது.
பொய்யாக இரத்தல், உண்மையாக இரத்தல் என இரப்பில் இருவகை இருப்பது போல, இரந்து வாழும் மக்களிலும் இருவகை உண்டு. வறுமைப் பிணி உள்ளோர் ஒரு வகை; உடற் பிணியுள்ளோர் மற்றொரு வகை. அரசாங்கமும், செல்வருங் கூடினால் இந்த இருவகைப் பிணியையும் ஒழித்துவிடலாம்.
பிச்சை எடுத்து உண்டு வாழும் இருநிலையானது அடிமை நாடுகளில் இருக்கலாம்; தன்னுரிமை பெற்ற ஒரு சுதந்திர நாட்டில் இருப்பதற்கில்லை. இருந்தால், அது சுதந்திரம் என்ற சொல்லுக்கே இழிவைத் தரும். ஆகவே இதனைச் சட்டம் செய்வதன் மூலமும், குடிசைத் தொழில் ஆலைத்தொழில்களைப் பெருக்குவதின் மூலமும், உணர்ச்சியுள்ள தொண்டர்களின் சிறந்த பணிகளின் மூலமும் ஒழித்தாக வேண்டும். இது இன்றைய தமிழ் மக்களின் நீங்காத கடமைகளில் ஒன்று.
வாழட்டும் குறள் நெறி!
குடியும் குறளும்
* * *
குடி என்பது இரு பொருள்களைத் தருகின்ற ஒரு சொல் “பெருங்குடிமகன்” என்பதும் அப்படியே ஒரு பொருள் உயர்வும், மறு பொருள் இழியும் ஆகும். உயர்வையும் இழிவையும் ஒரே சொல்லிற் கொண்ட சொற்கள் பலவற்றைத் தமிழிற் காணலாம். அவற்றில் இதுவும் ஒன்று. இங்கு நாம் கூறவந்த குடி, குடிக்கும் வழக்கத்தை ஒழித்துக் குடியின் பெருமையை உயர்த்த வேண்டும் என்பதேயாம்.
“குடியன்” “குடித்தான்” என்று சொல்லுகிற பொழுது “கள்” என்ற சொல்லையும் சோத்துச் சொல்லுவதில்லை. ஏனெனில், அச்சொல்லைச் சொல்லுவதும் சொல்லக் கேட்பதும் எழுதுவதும் படிப்பதும் நினைப்பதும் கூடத் தவறு என்பது தமிழ் மக்களின் கொள்கை. அதனாலேயே அச்சொல்லைத் தமிழ் அறிஞர்கள் உலக வழக்கிலிருந்தே ஒழித்துவிட்டார்கள் என்று தெரிகிறது.
உலகில் தோன்றி அழிந்த, தோன்றி இருக்கின்ற எல்லாச் சமயங்களும் குடியை வெறுத்துள்ளன.
வெறிக்கக் குடிக்காதே
என்பது ஏசு பெருமான் வாக்கு.
குடிப் பழக்கம் ஆண்டவனை
அணுக விடாது
என்பது நபிகள் நாயகம் வாக்கு,
குடிப்பது அறச்செயல் அல்ல;
மறச் செயல்
என்பது புத்தர் பெருமான் வாக்கு.
வயிற்றுள் கள்ளிருந்து அறிவில் வெறி
யிருந்தால், உடல் கோயிலில் இருந்தாலும்
உள்ளம் கடவுளுக்கு வெகு தூரத்தில் இருக்கும்
என்பது குருநானக் வாக்கு.
ஐம்பெரும் பாவங்களில் ஒன்று குடிப்
பழக்கம்
என்பது தமிழ்ச் சான்றோர்களின் கருத்து.
இந்தியா குடியினாற் பாழ்படுகிறது
என்பது காந்தியடிகளின் வாக்கு.
குடி அறிவாளிகளால் வெறுக்கப்படுவது எதன் பொருட்டு? எனின், அது அறிவை இழக்கச் செய்கின்ற ஒரு பொருள் என்பதன் பொருட்டு எனக் கூறலாம். குடி மனிதனை மனிதத் தன்மையிலிருந்து விலக்கி வைத்துவிடுகிறது. குடித்ததும் அவன் பேயாகவோ, பிசாசாகவோ, குரங்காகவோ, வேறு விலங்காகவோ காணப்படுகிறான். குடிகாரனை அறிஞர்கள் வெறுப்பதற்குக் காரணம். அவன் சமூகத்திற்குப் பயன்படாமல் அழிந்து போய் விட்டான் என்பதனால் மட்டுமல்ல; அவன் தீமைகளைச் செய்யப் புதிதாகத் தோன்றியிருக்கிறான் என்பதனாலும் ஆகும்.
பாவச் செயல்களில் சூதாடுதலும் ஒன்று எனினும் தமிழறிஞர்களால் குறிக்கப் பெற்றுள்ள பெரும்பாவம் ஐந்தில் குடியிருக்கக் குடிக்கு உரிமை கிடைத்திருக்கிறது. பாவம், சூது அங்கும் வெற்றி பெறாமல் தோல்வியடைந்து விட்டது.
‘பொய், கொலை, கள், களவு, காமம் என்பவைகளே தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ள ஐம்பெருந் தீமைகளாகும். அதிலும் ‘கள்’ வலதுபுறம் இரண்டையும், இடதுபுறம் இரண்டையும் கொண்டு, பெரும் பாவங்களுக்கு எல்லாம் நடுநாயகமாய் விளங்கிக் கொண்டிருப்பது வியப்புக்குரியது.
‘பொய், கொலை, களவு, காமத்தைவிடக் கள் அருந்துவது அவ்வளவு கொடியதா?’ என்ற ஐயம் சிலருக்கு உண்டாகலாம். அவர்கள் அறிய வேண்டியது இது, மற்ற நான்கு பெரும் பாவச் செயல்களையும் செய்யப் பிறர் எவராவது துணை இருந்து தீரவேண்டும். பிறர் சேராமல் அவை நான்கும் நடவாது. ஆனால் குடி ஒன்றுமட்டும் தனித்து நடக்கக் கூடியது.
மற்றொன்று; பொய் அச்சத்தாலும், கொலை ஆத்திரத்தாலும், களவு வறுமையாலும், காமம் பருவத்தாலும் நேரிட்டு விடலாம். ஆனால் கள் அருந்துவது இதில் எதனாலுமின்றி நிகழக்கூடியது.
இன்னுமொன்று : ஐம்பெரும் பாவச் செயல்களில் எதையும் செய்ய விரும்பாத ஒருவன் அறிவிழந்து குடிக்கப் பழகி விடுவானானால், காலப்போக்கில் பிறபாவச்செயல்களைச் செய்யும் பழக்கமும் அவனுக்கு மிக எளிதாக வந்து விடும். “உலகில் நடைபெற்ற குற்றங்களில் 100க்கு 81 வீதம் குடிகாரர்களாலேயே நடைபெற்றிருக்கின்றன” என்ற உலகப் புள்ளி விவரங்களால் இவ்வுண்மையை நன்கு அறியலாம்.
குடி, ஏன் இவ்வாறு அதிகமாக வெறுக்கப்படுகிறது? என்பது ஒரு கேள்வி. ‘குடிகாரன் குடித்ததும் முதலில் தன் அறிவை இழந்து விடுகிறான்; அடுத்து அறச்செயல்களை இழந்து விடுகிறான்; அதனால் அவன் குடும்பப் பொறுப்புக்களை இழந்து விடுகிறான்; பிறகு குடும்பம் அவனை இழந்து விடுகிறது. கடைசியாக நாடும் இழந்து நல்லவர்களும் அவனை இழந்து விடுகிறார்கள். இவற்றால் வாழப் பிறந்த அவன் தன் வாழ்வையே இழந்துவிடுகிறான்’ என்பவைகளே அதற்கு விடை. கள் மணத்திற்காக விரும்பிப் பருகக் கூடிய ஒரு பொருளும் அல்ல. அதன் வாடை வெறுப்புக்குரியது. அது சுவைக்காக விரும்பி உண்ணப்படும் பொருளும் அல்ல. அது மிகவும் புளிப்புடையது. கள்ளோ, சாராயமோ, பிறவோ, பசும்பாலைப் போல உடல் நலத்திற்கேற்ற ஒரு பொருளும் அல்ல. குடிப்போரின் குடலைப் புண்ணாக்கி, உணவைக் குறைத்து, உடலைக் குறைத்து, வாழ்நாளையுங் குறைத்து, விண்ணுக்கும் மண்ணுக்கும் விரைவில் அனுப்பி வைக்கக் கூடிய தீய பொருளே அது. அவ்விதம் இருந்தும் மக்கள் அதனை விரும்புவது ஏன்?
“குடிப்பது கடினமாக உழைக்கத் துணை செய்கிறது” என்று தொழிலாளர் சிலர் கூறுகின்றனர், இன்னும் சிலர், “உழைப்பின் களைப்பைப் போக்குகின்றது” என்று கூறுகின்றனர். மற்றும் சிலர் குடித்து உழைத்தால் உழைப்பதற்கு அதிக உற்சாகம் உண்டாகிறது” எனக் கூறுகின்றனர். இவை உண்மையா? ஆராய்வோம்.
கள்ளும் சாராயமும் மட்டுமல்ல; கஞ்சாவும் அபினும் இதன் தம்பி தங்கைகள். காபியும் டீயும் அதன் பிள்ளைகள். பீடி, சுருட்டு, சிகரெட், பொடி, புகையிலை முதலியவைகள் அதன் பேரப்பிள்ளைகள் இவை அனைத்துமே சோர்வைப் போக்கி உற்சாகத்தை அளிக்கின்றன என்று கருதப்பட்டு வருகின்றது.
உண்மை என்னவெனில், இவற்றில் எதையும் பயன்படுத்தாதவர்களுடைய நரம்புத் துடிப்பு இயற்கையாகவே இருந்து எப்போதும் ஒரே அளவாகத் துடித்துவரும். இந்த இயற்கைத் துடிப்பு நீண்டநாள் உயிர்வாழத்துணை செய்யும். இதைவிட்டு மேற்கூறியவைகளில் எதையேனும் ஒன்றைப் பயன்படுத்தினால், அது தன்னை விழுங்கியவனுடைய நாடியை, நரம்பை அதிகமாக அளவுக்குமேல் துடிக்கச் செய்கிறது. இந்தக் கெட்ட துடிப்பையே உற்சாகம் என்று பலர் தவறாகக் கருதி வருகின்றனர். இது மக்களின் இயற்கையான வலிமையை அதிகமாகத் துடிக்கச் செய்து வெகு விரைவில் பாழாக்கிவிடுகிறது. போதை குறைந்துவிட்டால் உடனே வலிமை குறைந்துவிடும். மறுபடியும் வேலை செய்ய வேண்டுமானால் அதே பொருளைத் திரும்பவும் பயன்படுத்தியாகவேண்டும். காலப் போக்கில் தான் பழகிய பொருளைப் பயன்படுத்தாமல் தன்னால் எதுவுஞ் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடுகிறது.
இவ் உண்மையைப் பீடிக் குடியரிடத்தும் பொடி அறிஞரிடத்துங் காணலாம். இதனாலேயே நல்லறிஞர் பலர் இவற்றைக் கெட்ட பழக்கங்கள் எனக் கூறியிருக்கின்றனர் பேரப்பிள்ளைகளின் தீங்குகளே இவ்வளவு பெரிதாக இருக்குமானால், இவைகளின் அப்பன் பாட்டன்களின் தீமைகளை யாரிடம் போய்க் கூறுவது? இவ்வுண்மையைத் தொழிலாளர் தோழர்களே நன்குணர்வது, நாட்டிற்கு நலமாக இருக்கும்.
நல்ல பழக்கம், தீய பழக்கம் என பழக்கங்கள் இரு வகைப்படும் பழக முடியாததாகவும், செய்யக் கடினமானதாகவும், நினைத்தால் எளிதில் கைவிடக் கூடியதாகவும் இருக்கும் பழக்கங்கள் பெரும்பாலும் நற்பழக்கங்களாகவே இருக்கும். பழக முடிவதாகவும், நடக்க எளிதாகவும், கைவிட எப்போதும் முடியாததாகவும் இருக்கின்ற பழக்கங்கள் பெரும்பாலும் கெட்ட பழக்கங்களாகவே இருக்கும். இதில் குடிப்பழக்கம் இரண்டாவதைச் சார்ந்தது. குடித்தவன் தன் தவறை நினைத்துத் திருந்திக் குடிக்காது வாழ முயற்சித்தாலும், அது முடியாத ஒன்றாக முடிந்துவிடும். அவர்களின் வாழ்வு அதோடுதான். தேனில் விழுந்து குடித்த ஈயும் எறும்பும் திரும்பிவந்தா உயிர் வாழ்கின்றன? பாவம், ஈயும் எறும்புமாவது கேனின் சுவைக்காக உயிர் விடுகின்றன. இவன் எதற்காக...? ? ?
இவை அனைத்தையும் எண்ணித்தான் நமது முன்னோர்கள், “குடிக்காதே குடிப்பது அறமல்ல; அது பாவச் செயல்களில் ஒன்று” எனக் கூறி இருக்கின்றனர். இன்றுங் கூடப் பேரறிஞர்கள் பலர் கூறி வருகின்றனர். குடிப் பழக்கம் உடைய ஒருவனைச் சமூகத்தில் இருந்தும் கூட்டங்களிலிருந்தும் நீக்கிவைக்கும் பழக்கம் ஒன்று தமிழ் நாட்டில் உள்ள பெரும்பான்மையான சிற்றுார்களில் இருந்து வந்திருக்கிறது. இதிலிருந்து குடியைத் தமிழ்ப் பெருமக்கள் எவ்வளவு தூரம் வெறுத்து வந்திருக்கின்றனர் என்பது நன்கு விளங்கும்.
1998 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிப் தமிழ்ப் பேரறிஞர் ஆகிய திருவள்ளுவர் இது குறித்து என்ன கூறியிருக்கிறார் என்பதைப் பாருங்கள். எல்லோரையும் நோக்கி நீதி கூறிய வள்ளுவர் குடிகாரனை நோக்கி நீதி கூறவில்லை. கூற விரும்பவும் இல்லை. ஏனெனில், “கள்ளுண்டு வெறித்த ஒருவனிடம் போய் அவனது செயல் தவறு எனக் காரணங்களை எடுத்துக்கூறி அவனைத் திருத்தி விடலாம் என எவரேனும் நினைப்பார்களானால் அது தண்ணிரில் மூழ்கிய ஒருவனை விளக்குக்கொண்டு தேடிக்கண்டு பிடிக்கும் வீண் செயலுக்கு ஒப்பாக இருக்கும்” என்பது அவரது கருத்து.
களித்தானைக் காரணங் காட்டுதல் நீருட்
குளித்தானைத் தீத்துரீ யற்று.
என்பது அவர் வாக்கு.
இவ்வாறு முடிவுகட்டியிருக்கின்ற பெரியார்கூட இரக்க மனங்கொண்டு, குடிகாரர்களுக்கு சில நீதிகளைக் கூறியிருக்கிறார். ஆனால், அவர் குடிகாரர்களிடம் போய்க் கூறவில்லை. நம்மிடம் வந்துதான் கூறுகிறார். அதுவுங் கேள்விகளாக, அவர் நம்மை நோக்கிக் கேட்குங் கேள்விகள் மூன்று: முதற் கேள்வி:
கள்ளுண்டவனுடைய தோற்றம், தள்ளாடும் நடை விலகும் உடை, உளறும் பேச்சு, குழறும் நா ஆகியவைகளைக் கண்டு பிறர் கைகொட்டிச் சிரித்து ஏளனம் பண்ணுகின்ற காட்சியைக்கண்ட ஒரு குடியன், ‘நாமும் கள்ளுண்டபோது இப்படித்தானே இருப்போம்’ என்று எண்ண மாட்டானா? எண்ணினால், அவன் திரும்பவுங் குடிப்பானா?
கள்ளுண்ணாப் போதில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொள் உண்டதன் சோர்வு?
என்பது அவரது முதற்கேள்வி.
இரண்டாவது கேள்வி :
எவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்தாலும் பெற்ற தாய் பொறுத்துக் கொள்ளுவாளாம். பெரியவர்கள் எவ்வளவு சிறிய குற்றமாக இருந்தாலும் பொறுக்கமாட்டார்களாம். இது பெற்ற தாய்க்கும் பெரியோர்க்கு வள்ளுவர் கூறும் இலக்கணமாகும்.
‘பெற்ற தாயின் முன்புகூடக் குடிகாரன் வெறுக்கப்படுவானானால், அறிவாளிகளாகிய பெரியோர்கள் முன் குடிகாரன் என்ன ஆவான்?’ என்று நம்மைக் கேட்கிறார்.
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுக்
சான்றோர் முகத்துக் களி?
இது இரண்டாவது கேள்வி:
இதற்கு நாம் என்ன விடை கூறுவது? இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவெனில், எந்தக் குற்றஞ் செய்தாலும் பொறுத்துக்கொள்ளும் தாய்கூட, தன் மகன் குடிகாரனாய்ப் போனான் என்று அறிந்தால் வெறுத்து விடுவாள் என்பதே. பெற்ற தாய் தன் மகனை ஏன் வெறுக்கிறாள்? எதற்காக வெறுக்கிறாள்? இவற்றை வள்ளுவர் வாக்கினாலேயே கேளுங்கள்:
“ஐயோ, நான் பெற்ற மகன் குடிகாரன் ஆனானே. அவன் அறிவிழந்து போனானே. அவனை எவரும் ஒரு பொருளாக மதிக்க மாட்டார்களே, குடும்பத்தின் புகழும் பெருமையும் அவனால் அழிந்து போகுமே.”
“ஐயோ, கள் குடிக்குந் தீயபழக்கம் விலங்குகளிடத்துங்கூட இல்லையே. இவன் குடிக்கப் பழகிக் கொண்டானே, அறிவாளிகள் இவனை விலங்குகளோடு கூட ஒன்றாக வைத்து எண்ண மாட்டார்களே.”
“ஐயோ, மானம் என்னும் ஒரு உயர்ந்த செல்வம் இவனைவிட்டு நீங்கிவிடுமே. இனி என் மகன் கள்ளருந்தி, மானத்தை இழந்து, உயிர்ப்பிணமாகத்தான் நடந்து திரிவானா?”
“ஐயோ. இத் தீய பொருளையும் விலையைத் கொடுத்தா வாங்கி உண்டு திரியவேண்டும்? இவனுடைய அறியாமையை நான் என்னவென்று கூறுவது?”
“ஐயோ உறங்குகின்றவரும் செத்துப்போனவரும் அறிவை இழந்திருத்தவினாலே ஒன்றுபடுதல்போல, கள்ளுண்டவரும் நஞ்சுண்டவரும் அறிவிழத்தவினாலே ஒன்றுபடுகிறார்களே. “கள்” என்று எண்ணி, என் மகன் நஞ்சை உண்ணுகிறானே.”
“ஐயோ, ஊராரெல்லாராலும் என் மகன் நகைக்கப் படுகிறானே. அவன் குடித்து வந்தும், “குடிக்கவில்லை அம்மா” என என்னிடத்துங்கூட உளறி உளறிப் பொய் கூறுகிறானே. அவனைப் பெற்ற என் வயிறு பற்றி எரிகிறதே, நான் என்ன செய்வேன்?”
எப்படித் தாயின் உள்ளத்துடிப்பு? இப்பொழுது தெரிகிறதா, அவள் தன் குடிகாரப் பிள்ளையை அடியோடு வெறுப்பதன் காரணம்?
மூன்றாவது கேள்வியும் பாருங்கள்!
காதல் வேறு; காமம் வேறு. காதலால் பெறுவது இன்பம்; காமத்தால் பெறுவது துன்பம் காதல் மக்களிடத்தும், காமம் மாக்களிடத்தும் தோன்றுவது. மாக்களிடத்துத் தோன்றும் காமம் மக்களிடத்துத் தோன்றுமாயின் மக்களும் மாக்களாகி விடுவர். ஆகவே, காதல் விரும்பத் தக்கதும், காமம் வெறுக்கத் தகுந்ததுமாகும். “காமம் கொடியது?” என்று கூறவந்த திருவள்ளுவர், “அது எவ்வளவு கொடியது?” என்று விளக்க, ஒரு உவமையும் கூற முன் வந்தார்.
உள்ள பொருளைக் கொண்டுதானே இல்லாத பொருளை விளக்கியாக வேண்டும் இதற்காக அவர் உலகப் பொருள்கள் அனைத்தையும் தேடினார். கிடைக்க வில்லையோ, பொருந்தவில்லையோ, ஒப்பவில்லையோ தெரியவில்லை. கடைசியாக அவர் ஒரு உவமைப் பொருளைக் கண்டுபிடித்து வெற்றி பெற்றார். அந்த ஒரே உவமைப் பொருள் என்ன தெரியுமா? “கள்”.இந்தக் காணும் பொருள் கிடைத்த உடனே அந்தக் காணாப் பொருளை விளக்க எண்ணி, “கள்ளினுங் காமம் கொடியது” எனக் கூறிவிட்டார்.
கள் மிகவுங் கொடியது என்பதை மேலே கூறியவைகளால் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், காமம் அதை விடக் கொடியதுதானா? என்பது எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்று. “கள்” என நினைத்துக் கொண்டால் போதை வருவதில்லை. கள்ளின் அருகிலிருந்து அதைப் பார்த்துக்கொண்டேயிருந்தாலும் போதைவருவதில்லை. ஆனால், காமம் அப்படியில்லை. நினைத்தாலும் போதை வந்துவிடும். பார்த்தாலும் போதை வந்துவிடும். ஆகவே தான், “கள்ளினுங் கொடிது காமம்” என்பது வள்ளுவர் வாக்கில் வந்தது போலும். எப்படி அகப்பொருளை விளக்கப் புறப்பொருளைக் காட்டிய அவரது பேரறிவு? இதிலிருந்து வள்ளுவர் நம்மைக் கேளாமற் கேட்கும் இந்த மூன்றாவது கேள்வி என்ன தெரியுமா?
கொடுமைகளுக்கெல்லாம் தலைசிறந்த ஒரு கொடுமைக்கு உவமையாகக் கூறவந்த “கள்” எவ்வளவு கொடியது? என்பதுதான். எவர் இதற்கு விடை கூறுவது?
குடிப் பழக்கத்தில் தவறாக வழுக்கி வீழ்ந்துவிட்ட அன்பர்கள்தாம் இவற்றிற்கு விடை கூறியாக வேண்டும்.
இப்போது சட்டத்தின் மூலம், நம் நாட்டில் குடி தடுத்து ஒழிக்கப் பெற்று விட்டது. இதற்கும் பெரும் தொண்டு செய்தவர் பெரியார் காந்தியடிகளே! அவரை நாம் என்றென்றும் மறக்க இயலாது.
குடி சட்டத்தின் மூலம் விலக்கப் பெற்றிருக்கிறது, இது போதாது மக்கள் உள்ளத்திலிருந்தும் அது விலக்கப் பெற்றாகவேண்டும். அப்போதுதான் இந்த நல்ல முயற்சி முழுவதும் வெற்றி பெறும். இதற்கு மக்கள் பலவகை யிலும் துணை புரிந்தாக வேண்டும்.
அமெரிக்கா, முன்பு ஒருமுறை குடியை ஒழித்தது. ஆனால்,அங்கு விரைவில் அது திரும்பவும் வந்துவிட்டது. அம்மாதிரி நம் நாட்டிலும் நடைபெறும் எனச் சிலர் நம்பிக் கொண்டும் எதிர்பார்த்துக்கொண்டும் இருக்கின்றனர். பாவம், அவர்கள் அனைவரும் குடியை விடமுடியாதவர்களும், குடியால் பொருள் திரட்டுபவர்களுமே ஆவார்கள். இப்பெருங் குடியர்களின் எண்ணத்தை நிறை வேறவொட்டாமல் அழித்து ஒழிக்கவேண்டியது, தமிழ் நாட்டுப் பெருங்குடி மக்களின் நீங்காத கடமைகளில் ஒன்றாகும்.
வாழ்க நல்லறம்!
பீலிபெய் சாகாடு
* * *
திருவள்ளுவர் ஒருநாள் சாலை வழியே நடந்து கொண்டிருந்தார் ஒரு வண்டிக்காரன் மயில் தோகைகளைச் சுமைகமையாகக் கட்டி வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தான். வள்ளுவர் கண்களை மயில் தோகையின் கண்கள் கவர்ந்தன. அருகில் சென்று தொட்டுப் பார்வையிட்டார். அது பட்டினும் பளபளப்பாய், பஞ்சினும் மென்மையதாய், எடையிலும் மிக எளிதாய்த் தோன்றியது என்றாலும் அதைக்கொண்டு இரும்புத் துணையும் முறிக்கலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டது.
என்னே அவரது துணிவு.! உங்களால் அந்த முடிவுக்கு வர முடியுமா? எண்ணிப் பாருங்கள்.
வள்ளுவர் என்ன செய்தார் தெரியுமா? உடனே வண்டிக்காரனைக் கூப்பிட்டார். “தம்பி, மயில் தோகையாயிருந்தாலும் அளவுக்கு மீறி வண்டியில் ஏற்றாதே; ஏற்றினால் அச்சு முறிந்துவிடும்” என வெகு அருமையாகக் கூறினார் அக்குறள்தான் இது:
பீலியெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்
பீலி என்பது மயில் தோகையையும், சகடு என்பது வண்டியையும் குறிக்கும்.
எப்படி மயில் தோகையைக் கொண்டு வள்ளுவர் இரும்பு அச்சை முறித்துக் காட்டியது நூற்றுக்கு நூறு உண்மையான செய்தி.என்னே அவரது அறிவுத் திறன்!
இக்குறளின் பொருள் மயில் தோகையையும் வண்டியையும் பற்றியதாக மட்டுமில்லை. வாழ்க்கையின் பல
திரு-4
துறைகளிலும் அது அடங்கியிருப்பதைக் கண்டு மகிழுங்கள்.
‘அளவுக்கு மீறினால் அச்சு முறிந்துவிடும்’ என்பதில் வண்டியும் சுமையும்தானா அடங்கியிருக்கின்றன. வாயும் உணவும்கூட அடங்கியிருக்கின்றன. சுவை மிகுதியினால் உணவை அதிகமாக உண்டுவிட்டால், அச்சு முறிவதைப் போல இவ்வுலக வாழ்வும் முறிந்துவிடும்’ என்ற கருத்தும் இதில் அடங்கியிருக்கிறது.
நட்புக்கும் அளவுண்டு. அளவுக்கு மீறி விடுமானால், அது நட்புக் கொண்ட உள்ளத்தையே முறித்துவிடும் என்ற கருத்தும் இதில் அடங்கியிருக்கிறது.
தன் நிலைமையை அறிந்து, வருவாயை உணர்ந்து, பொருளை எண்ணிச் செலவு செய்ய வேண்டும்.அளவுக்கு மீறிவிடுமானால், அச்சு முறிவதைப்போல அச்செல்வமும் முறிந்துவிடும் என்பதையும் அவர் கூறாமற் கூறியிருக்கிறார்.
அவைகளில் நிகழ்த்துகின்ற சொற்பொழிவும் ஒரு அளவோடு இருக்க வேண்டும். அது அளவுக்கு மீறி நீண்டுவிடுமானால், அச்சு முறிவதைப்போல அவையோர் உள்ளத்தை முறித்துவிடும் என்பதும் அக்குறளில் பொதிந்தே கிடக்கிறது.
மனைவியை, மக்களை, தம்பியை, தங்கையை அடக்கி வளர்க்க வேண்டியது தன் கடமை எனக் குடும்பத்தின் தலைவன் கருதுகிறான்.உண்மைதான்! என்றாலும், அது அளவுக்கு மீறிவிடுமானால், அச்சு முறிவதைப்போல, அது குடும்பத்தையே முறித்துவிடும் என்ற கருத்தும் இக் குறளில் இல்லாமலில்லை.
மாடிமீது கட்டப்படும் கட்டடங்களுக்கும் ஒரு அளவு இருக்க வேண்டும். அளவுக்கு மீறிவிடுமானால், அச்சு முறிவதைப்போல அவ்வீடும் முறிந்துவிடும் என்பதையும் அக்குறளில் அடக்கித்தான் வைத்திருக்கிறார்.
வேலை செய்யும் ஆட்களிடத்தில் தமது அதிகாரத்தைக் காட்டி மிரட்டுவதற்கும் ஒரு அளவு உண்டு. அளவுக்கு மீறி விடுமானால் அச்சு முறிவதுபோல அதிகாரமும் முறிந்துவிடும் என்ற கருத்தும், அதில் மறைந்துதான் காணப்படுகிறது.
தொழிலாளிகளின் உழைப்பிலிருந்து வருகின்ற வருமானத்தை அடைவதற்கும் ஒரு எல்லையிருக்க வேண்டும் அது அளவுக்கு மீறிவிடுமானால், மயில் தோகைகளின் கட்டுப்பாட்டினால் இரும்பு அச்சும் முறிந்து போவதுபோல “தொழிலாளர்களின் ஒற்றுமையினால் முதலாளித்துவமும் முறிந்துவிடும்” என்ற சமதர்மக் கொள்கையும் இதில் சார்ந்துதான் இருக்கிறது. அரசன் தன் குடிமக்களின் மீது செலுத்தும் ஆதிக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கவேண்டும். அளவுக்கு மீறி விடுமானால் “சடசடவென்று” அச்சு முறிவதைப்போல, “ஜார் ஆட்சியாயிருந்தாலும் முறிந்துவிடும்” என்ற பொதுவுடைமைக் கொள்கையும், இக் குறளில் புகுந்து கொண்டுதான் இருக்கிறது.
கட்டுரை எழுதுவதற்கும் ஒரு அளவு இருக்கவேண்டும். அளவுக்குமீறி நீண்டுவிடுமானால், அச்சு முறிவது போல அது படிப்போரின் மனதையும் முறித்துவிடும் என்ற கருத்தும் இக் குறளில் அடங்கித்தான் இருக்கிறது.
வள்ளுவர் எப்படி? அவர் செய்த திருக்குறள் எப்படி? இக்குறள் எப்படி? இதில் கூறியுள்ள கருத்துக்கள் எப்படி? மயில் தோகை மற்றவர்களுக்குப் பயன்பட்டது எப்படி? திருவள்ளுவருக்குப் பயன்பட்டது எப்படி? இத்தகைய திருக்குறளைப் படிக்காமல் இருக்கிறோமே நாம் எப்படி?
“நமது நாடு தமிழ்நாடு. நமது மொழி தமிழ்மொழி. நமது வாழ்வும் வளமும் உரிமையும் உயிரும் தமிழ். நாம் தமிழர்கள். வள்ளுவர் நமது முன்னோரில் ஒருவர். குறள் நமது திருமறை” என்ற உணர்ச்சி நம் ஒவ்வொருவருக்கும் உண்டாகவேண்டும். இதற்காகத் தமிழ் நூல்கள் அனைத்தையும் படித்தாக வேண்டும். இன்றேல் திருக்குறள ஒன்றைாவது படித்துத் தீரவேண்டும். அதுவும் முடியாவிடில், திருக்குறளைப் படிக்கவேண்டும் என்ற ஆசையாவது இப்போது உண்டாக வேண்டும்.
வாழட்டும் தமிழ் நாடு!
வளரட்டும் தமிழ் மொழி!
உடையர் எனப்படுவது...!
* * *
உடை-ஆடை, உடைமை-அணிகலன், உடையவர் -உடையவனாம் தன்மை என்றாகும். இதைப் பொருளின் மேல் ஏற்றிச் செல்வம் என்றும், அதனையுடையவர் செல்வர் என்று கூறுவதுண்டு.
வாழ்வுக்கு ஏற்றது பொருளுடைமை என்றும், அதுவும் தனியுடைமை நல்லதா? பொதுவுடைமை நல்லதா? என்றும் மக்கள் ஆராய்ந்து வருகின்றனர். “வாழ்வுக்கு வேண்டியது பொருளே” அல்ல” என்பது வள்ளுவர் கருத்து என்று தெரிகிறது.
நாட்டுக்கு என்று சில உடைமைகளும், வீட்டுக்கு என்று சில உடைமைகளும் உள்ளனபோல, வாழ்வுக்கு என்று சில உடைமைகளும் உள்ளன என்று வள்ளுவர் கருதுகிறார். அவர் அவைகளைத் துருவித்தேடிக் கண்டுபிடித்து எடுத்து, முறைப்படுத்தி, வகைப்படுத்தி, தொகைப்படுத்தி நமக்குத் தந்துள்ளார். அவை அன்புடைமை, அருளுடைமை, அடக்கமுடைமை, ஆள்வினையுடைமை, ஊக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நாணுடைமை, பொறையுடைமை, பண்புடைமை என்பன. இவ்வுடைமைகளிற் பொருளுடைமை சேராமை காண்க. நிறைந்த செல்வத்தைப் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வாழ்கின்ற வாழ்வு எதுவும் நல்வாழ்வாகாது என்பதும், மேற்கண்ட உடைமைகள் பத்தும் பெற்று வாழ்கின்ற வாழ்வே நல்வாழ்வு ஆகும் என்பதும் வள்ளுவரதுமுடிவு.
இவ்வுடைமைகள் ஒவ்வொன்றுக்கும் பத்துப் பத்துப் புள்ளிகள் வைத்தால், முழு மனிதப்பண்பு நூறு புள்ளி களாக முடியும். இதில் எந்த ஒன்று குறைந்தாலும் அவனுக்குப் பத்துப் புள்ளிகளைக் குறைத்து விடவேண்டியதுதான். ஒன்பது உடைமைகள் உள்ளவன் 90 புள்ளி உடைய மனிதன். ஐந்து உடைமைகள் உள்ளவன் ஐம்பது புள்ளி மனிதன். மூன்று உடைமைகளை உடையவன் முப்பது புள்ளி மனிதன். ஒரே உடைமை உள்ளவன் பத்துப்புள்ளி மனிதன். அதுவும் அற்றவன் மனிதனே அல்லன். அவன் வெறும் கூடு என்பது வள்ளுவரது கருத்து.
இப்பத்து உடைமைகளையும் பத்து அதிகாரங்களாக்கி ஒவ்வொன்றுக்கும் பத்துக் குறள்கள் வீதம் இவ்வுடைமைகளை ஆசிரியர் திருள்ளுவர் நன்கு விளக்கிக் கூறியுள்ளார். இதில் பண்புடைமையை நூறாவது அதிகரமாக வைத்திருப்பது வியப்பிற்குரியதொன்றாகும். இதிலிருந்து முழு மனிதன் பண்போடு வாழ்வான் என்று தெரிகிறது.
999 குறள்களைக் கூறி, 1000ம் என்ற எண்ணிக்கையிட்டுக் கூறியுள்ள குறள் ஒன்று மக்கள் உள்ளத்தையெல்லாம் ஊடுருவிப் பாய்வதுபோல் காணப்படுகிறது.
பால் உடலுக்கு நலம் தரும் ஒரு பொருள். இதில் மாறுபட்ட கருத்து எவருக்கும் இருக்கக் காரணமில்லை. என்றாலும் நல்ல பாலைக் கெட்ட பாத்திரத்தில் வைத்தால் என்ன ஆகும்? பண்பில்லாத மக்களிடத்தில் உள்ள செல்வம் கெட்ட பாத்திரத்தில் ஊற்றிய பாலைப்போல் திரிந்து கெடும் என்பது வள்ளுவர் கருத்து.
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் கன்யால்
கலந்தீமை யாற்றிரிங் தற்று
என்பதே அக்குறள் இக்குறளிற் பெருஞ்செல்வம் என்று ஆசிரியர் குறிப்பிடுவது, பெரும்பயன் விளைக்கும் திரண்ட செல்வத்தையே. பண்பில்லா மக்களிடத்துச் சேர்ந்துள்ள பெருஞ்செல்வமே கெடும் எனின், சிறு செல்வத்தைப் பற்றிக் கூறவேண்டுவதில்லை.
இக்குறளில் உள்ள “திரிந்த” என்ற ஒரு சொல், “பாலும் திரிந்து கெடும்; வாழ்வும் திரிந்து கெடும்” என்ற பொருளைக்குறித்து நிற்பதைக் கண்டுகளியுங்கள். இதிலிருந்து நலவாழ்வுக்கு வேண்டியது பொருள் அல்ல. பண்பு என்று நன்கு விளங்குகிறது.
இப்பத்து உடைமைகளிலும் சிறந்து உயர்ந்து நிற்பது ஊக்கமுடைமையேயாகும். இதனை,
உடையர் எனப்படுவது ஊக்கம்; அஃதிலார்
உடையது உடையரோ மற்று
என்பதனால் நன்கறியலாம்.
இது ஊக்கமுடைமையிற் கூறப்பெற்றுள்ள முதற் குறள் உடைமை என்பது ஊக்கமுடைமை என்பதும், உடையவர் எனப்படுபவர் ஊக்கமுடையவர் என்பதுவும் அஃதில்லாது வேறு எதை உடையவரும் உடையவராகார் என்பதும் இக்குறளின் கருத்து. நிறைந்த செல்வத்தைப் பெற்றிருந்தாலும் ஊக்கம் இல்லாதவருக்கு அதனைக் காக்கும் ஆற்றல் இராது. ஆதலின், அதனை அவர் இழந்துவிடுவர் என்பது குறிப்பு, இதனை,
உள்ளம் உடைமை உடைமை; பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
என்ற குறளால் நன்கு விளக்கிக் காட்டுகிறார்.
ஊக்கமுடைய மக்கள் தம்மிடத்து உள்ள பொருளை இழப்பினும் வருந்துவதில்லை. ஏனெனில், அவர் அதனை விரைவில் முயன்று பெற்றுவிடுவர்.
ஊக்கமுடையவன் செல்வத்தைத் தேடித்திரிய வேண்டியதில்லை. ஏனெனில், செல்வமானது ஊக்கமுடைய மக்களின் இருப்பிடத்தைத் தானே தேடிப் போய்ச் சேரும் தன்மை வாய்ந்தது.
குளத்தில் உள்ள நீர் உயர உயர, அதில் உள்ள கொடிப் பூக்களும் உயர்ந்து காணப்படுவதுபோல, மக்களின் ஊக்கம் உயர உயர, அவர்களது வாழ்வும் உயர்ந்து காணப்பெறும்.
தீமை தம்மை நெருங்கி வந்தாலும், அழிவு தம்மை அடைய வந்தாலும், துன்பம் தம்மைத் தாக்கவந்தாலும், ஊக்கமுள்ள மக்கள் ஒருபோதும் தளர்ச்சியடைவதில்லை. உடல் முழுவதும் அம்புகளால் தாக்கப்பட்ட போதிலும் கூட, யானையானது பெருமித நடைபோடுவதில் தவறுவதில்லை.
மக்கள் என்போர் ஊக்கமுடையவர் அஃதில்லாதவர் ‘மக்கள்’ ஆகார், மக்களுக்கும் மரப்பொம்மைகளுக்கும் எவ்வளவு வேறுபாடு உண்டோ, அவ்வளவு வேறுபாடு ஊக்கம் உள்ளவர்க்கும் அற்றவர்க்கும் உண்டு.
ஊக்கமுள்ள மக்கள் நல்லதை, உயர்வை, பெரியதை எண்ணி, அவைகளை அடைய முயற்சிப்பர். ஒருக்கால் தோல்வி அடையினும், அவற்றைப் பெற மீண்டும் மீண்டும் முயற்சிப்பர்.
பகைவன் அதிக வலிமையுடையவனாயினும், மிகப் பெரியவனாயினும், ஊக்கமுள்ளவனைக் கண்டால் அஞ்சியே தீர்வான் அதிக வலிமையும் பெருமித நடையும் உள்ள யானையும், ஊக்கமுள்ள புவியின் தாக்குதலால் நிலை குலைந்துவிடும்.
“மற்றவர்களைவிட நாம் உயர்ந்தவர்கள்” என்று பெருமை கொள்ளும் சிறப்பு ஊக்கமில்லாதவர்க்கு இல்லை. இவை வள்ளுவரது கருத்துக்கள்,
உள்ளத்தில் ஊக்கமில்லாதவர்க்குச் சுற்றுப்புறச் சூழ்நிலை நன்கு அமைந்திருந்தாலும், வாய்ப்பும் வசதியும் மிகுந்திருந்தாலும் பயனில்லை. வாழ்வில் ஒளி தோன்ற வேண்டுமானால், உள்ளத்தில் ஊக்கம் தோன்றியாக வேண்டும்.
ஆகவே, எண்ணுங்கள். நன்றாக எண்ணுங்கள். நல்லதை எண்ணுங்கள். பெரியதை எண்ணுங்கள். ஊக்கத்தோடு எண்ணுங்கள். “ஏன்?” எனில், “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்” என்பது பொய்யா மொழி. “எப்போது?” எனில் எண்ணியவர் திண்ணியராகும் போது தான்.
படியுங்கள் மற்றொருமுறை இக்குறளை.
உடையர் எனப்படுவது ஊக்கம்; அஃதிலார்
உடையது உடையரோ மற்று?
எப்படி இக்குறள்? பிற குறள்களையும் படியுங்கள். அவற்றின் ஆழ்ந்த கருத்துக்களை யெல்லாம் உங்கள் உள்ளத்தே பதித்து வையுங்கள். சிந்திப்பதைச் சிந்தித்து, செய்வதை ஊக்கத்தோடு செய்து, சிறப்பெய்தி வாழுங்கள்.
வாழட்டும் தமிழகம்!
வளரட்டும் குறள்நெறி!
மெய்வேல் பறியா நகும்!
* * *
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்
என்பது திருக்குறளில் உள்ள ஒரு குறள். “தன்னைக் கொல்லவந்த யானையின் மீது கைவேலை எறிந்து போக்கி விட்டுப் பகைவன் தன் மார்பின்மீது எறிந்த வேலைப் பறித்து மகிழ்ந்தான்” என்பது குறளின் பொருள்.
இக்குறள் ‘படைச்செருக்கு’ என்ற அதிகாரத்தில் வந்துள்ளது. படைச்செருக்கு என்பது படையின் தன்மை, வீரனின் திறம், வீரனின் சிறப்பு என்றாகும்.
உலக மக்கள் பலரிடமும் காணப்படுகின்ற வீரத்திற்கும் தமிழகத்திற் காணப்பெறும் வீரத்திற்கும் வேறுபாடு உண்டு. தமிழகத்தின் வீரம் ஒரு தனிப் பண்பு வாய்ந்தது. இதனைத் தமிழ் வீரம் என்றும், தமிழர் வீரம் என்றும் கூறுவதுண்டு.
பழங்காலத்துத் தமிழ் மக்களில் ஆண், பெண் ஆகிய இரு பாலரிடத்துங் காணப்பெற்ற சிறந்த வீரச் செயல்களைப் புறநானூற்றுப் பாடல்கள் அறிவிக்கின்றன. எனினும் வள்ளுவரது குறள் அதனை இன்னும் தெளிவாக்கிக் காட்டுகிறது.
தமிழர் முயல் வேட்டைக்குச் செல்லுவதைவிட யானை வேட்டைக்குச் செல்லுவதையே பெரிதும் விரும்புவர்; அவரது எண்ணம் அத்தகையது.
முயலைக் கொன்று வெற்றிபெறுவதைவிட, யானையை எய்து தோல்வியடைவதையே பெருமையாகக் கொள்வர்; அவரது கொள்கை அத்தகையது.
தம்மின் வலிமைகுறைந்த எவரையும் தமிழர் தாக்குவதில்லை. மெலியோர் தம்மைத் தாக்க முன்வந்தபோதும் வலியோர் அவர்களைத் தாக்காது, அவர்களை நோக்கி, “போர் எண்ணங்கொண்டு என்முன் நில்லாதே, நின்றால் மடிந்து மண்ணிற் புதையுண்டு நடுகல்லாக நிற்பாய்” என வழிகூறி அனுப்பிடுவர். அவரது அறம் அத்தகையது.
தம்மோடு ஒத்த, அல்லது உயர்ந்த வலிமையுடையவரோடு மட்டுமே போரிடுவர். அப்போதுங்கூடப் பகை வரது வலிமை குறைந்துவிட்டால், மேலும் தாக்காமல் “இன்று போய் நாளை வா” என்று அவர்களை அனுப்பி வைப்பர். அவரது போராண்மை அத்தகையது.
போர்க்களத்தில் பகைவரை வெகுண்டு நோக்குவர். விழித்துப் பார்க்கும் அக்கண்களை நோக்கி வேல்கள் பறத்துவரும். அப்பொழுதுங்கூட, அவர்கள் விழித்த கண்களை இமைப்பதே இல்லை. அவரது போர் ஆண்மை அத்தகையது.
இவைபோன்ற பழந்தமிழ் வீரர்களின் பண்பாட்டினை திருக்குறள் நிலைத்து நின்று, இன்றும் நமக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது.
இக்கட்டுரையின் தலைப்பில் இருக்கும் குறள் ஒரு போர் வீரனின் சிறந்த வலிமையைக் காட்டும் உயர்ந்த ஓவியமாகும்.
வீரன் போர்க்களம் புகுந்தான், அவனுக்கு வேல் ஒன்றே படைக் கருவியாக இருந்தது. பகைவனது யானை ஒன்று அவனைக் கொல்லவந்தது. அதன்மீது குறிபார்த்து வேலை எறிந்தான். யானையொடு வேலும் போய் விட்டது. வெறுங்கையனானான். அப்போது பகைவனால் எறியப் பெற்ற வேல் ஒன்று அவன் மார்பின் மீது பாய்ந்தது. வீரன் அதனைப் பிடுங்கிக் கொண்டு நகைத்தான் என்பதே இக் குறள் கூறும் வரலாறு.
“கைவேல் களிற்றொடு போக்கி” என்பது வேலின் தாக்குதலால் புண்பட்டு வீறிட்டுப் பின்வாங்கி ஓடும் யானையினது உடலோடு வேலும் போய்விட்டது என்பதா? அன்றி களிற்றினது உடலில் புகுந்து அதன் உயிரைப் போக்கித் தானும் அதன் உடலில் அழுந்தி மறைந்துபோயிற்று என்பதா? புலப்படவில்லை. எனினும் இவை இரண்டுமே வீரனுக்கு வெற்றி தருவனவாகும்.
வெற்றிபெற்ற இவன் தன் கை வெறுமையாயிருப்பதைக் கண்டு மறுபடியும் ஒரு கருவியைப் பெறப் போர்க் களத்திலிருந்து திரும்புகிறான். வீரன் திரும்பி வரும் செய்தியைக் குறளில் உள்ள “வருபவன்” என்ற சொல்லால் அறிய முடிகிறது. அப்போது மாற்றான் குறி வைத்து எறிந்த வேல் ஒன்று இவன் மார்பின் மீது வந்து பாய்கிறது. அதைத் தன் கைகளிற் பற்றிப் பறித்துக் கொண்டே நகைக்கிறான்.
நகும் என்பது நகுதல் என்றாகிறது. இது நகைத்தல், சிரித்தல், களித்தல், மகிழ்தல் என்பவைகளைக் குறிக்கும். வீரன் ஏன் நகைத்தான்? எதன்பொருட்டு நகைக்கிறான்? என்று எண்ணும் பொழுதே, நமக்கு ஒரு வியப்பு உண்டா கிறது.
தேடிச்சென்ற கருவி வழியிலேயே தானே வலிய வந்து அகப்பட்டுவிட்டதே என எண்ணி நகைக்கிறானோ? அவ்விதமாயின் இது மகிழ்ச்சிச் சிரிப்பாகும்.
மார்பில் தைத்த வேல் ஊடுருவிச் சென்று தன்னை வீழ்த்திவிடாமல் கையாற் பறித்து எடுக்கும் அளவில் மட்டும் தைத்ததேயென்று நகைக்கிறானோ? அவ்விதமாயின் இது வெற்றிச் சிரிப்பு ஆகும்.
கைவேலை எறிந்து விடுவது வீரர்களுக்கு அழகல்லவே! களிற்றின் மீது மட்டுமே எறிய வேண்டிய வேலை என் மீது எட்டியிருந்து ஏன் எறிந்தான்? ஒரு கால் இவன் மதயானையை ஒழித்த என்னையும் ஒரு மதயானை எனக் கருகிவிட்டானே என எண்ணி நகைக்கிறானோ? அவ்விதமாயின் அது ஏளனச் சிரிப்பு ஆகும்.
என் கை வேலோ யானையின் உடலையும் ஊடுருவித் துளைத்தது, இவ்வேலோ என் உடலையும் துளைக்கவில்லை இது எதற்குப் பயன்படப் போகிறது என்று எண்ணிச் சிரித்தானோ? அவ்விதமாயின் இது மனக் குறைச் சிரிப்பு ஆகும்.
வேலைப் பறித்துக் கையிற் பற்றிக்கொண்டு, வேல் எறிந்த வீரன் தன் முன் இல்லாமை கண்டு, மறைந்திருந்து தாக்கும் இழிந்த மக்களும் தமிழகத்தில் உள்ளார்களே? என எண்ணிப் புண்பட்ட மனத்தோடு நகைத் திருப்பானோ? அவ்விதமாயின், இது துன்பச் சிரிப்பு ஆகும்.
தன் கை வலிமைக்கு முன் மதயானையும் நிற்க ஆற்றாமல் போயிற்று. எதிரிகள் நமக்கு எம்மாத்திரம் என் எண்ணி நகைத்திருப்பானோ? அவ்விதமாயின் இது பெருமிதச் சிரிப்பு ஆகும்.
தன் மார்பு வேலால் தாக்கப்பெற்ற போதும் அதை எண்ணி வருந்துவதைவிட்டு, தன் கைவேலால் தாக்கப் பெற்ற மதயானை ஒன்று அஞ்சி அலறி ஒடுவதைக் கண்டு அகமகிழ்ந்து நகைத்திருப்பானோ? அவ்விதமாயின் இது வீரச் சிரிப்பாகும்.
யானையோடு போரிட்ட களைப்பையுங் கருதாது. மாற்றாரின் வேலால் உடல் துளைக்கப்பெற்ற துன்பத்தையும் நினையாது, மீண்டும் போரில் விருப்பங்கொண்டு தன் மெய்யில் அழுந்திய வேலையே பறித்துக் கொண்டு பகைவரை அணுகிச் சிரிக்கிறானோ? அவ்விதமாயின் அது பயங்கரச் சிரிப்பு ஆகும்.
இச்சிரிப்பில் அடங்கியிருக்கின்ற பொருள்கள் இவ்வளவுதானோ? இன்னும் என்னனென்னவோ? யாரால் அறிந்து கூற முடியும்? எத்தனையோ சிரிப்புகளைக்கண்டு சிரிப்பாய்ச் சிரிக்கின்ற நமக்கு, இவ் வீரனது சிரிப்பு ஒரு திகைப்பை உண்டாக்கி விடுகிறது.
“மெய் வேல் பறியா நகும்” என்ற நான்கு சொற்களுக்குள்ளாகவே இவ்வாறு கருத்துக்களையும் அடக்கிக் காட்டுகின்ற வள்ளுவரது புலமையும், திறமையும் பாராட்டுதலுக்குரியவையாகும்.
இக்குறளுக்கு உரை கண்ட ஆசிரியர் பரிமேலழகர், ‘தன் கைவேலைக் களிற்றொடு போக்கிய பிறகு. தன்னைக் கொல்ல வரும் மற்றொரு யானையைக் கண்டு தன் மெய்வேலைப் பறித்து நகைத்தான்’ என்று கூறுகிறார். மற்றொரு யானையை அவர் வருவித்துக் காட்டுகின்ற காட்சி குறளைத் தழுவாவிட்டாலும், வீரத்தைத் தழுவி நிற்பதால் வரவேற்கக் கூடியதே யாகும்.
வேல், அம்பு முதலியவைகளைத் தம் உடம்பில் வாங்கித் திருகி எடுத்துத் திருப்பி எறியும் போர்ச் சிறப்பை,
கையில் வாளி தெளித்தபின் காய்ந்துதம்
மெய்யில் வாளிகள் வாங்கி வில் வாங்கினார்.
என்ற வில்லிபாரதத்தினாலும்,
எய்தவன் பகடி யெல்லாம்
பறித்தவன் என்மேல் எய்யும்.
என்ற கம்பராமாயணச் செய்யுளாலும் அறிய முடிகிறது. இதிலிருந்து தமிழ் மக்களின் பேராண்மையும்,போராண்கையும் நன்கு அறியலாம்.
அவை அனைத்தும் பழம்பெருமைகள் என்று வெறுத்து ஒதுக்கிவிடக்கூடியவையல்ல பழம் பெருமைகளை எண்ணி நடப்பது புதிய வாழ்வுக்கு வழி வகுப்பதாகும் என்பதையும் நாம் உறுதியாக நம்ப வேண்டும்.
நாட்டின் செழிப்பை, மொழியின் வளர்ச்சியை, மக்களின் வீரத்தை உணரவும், மறைந்திருந்து தாக்கும் இன்றைய வஞ்சக மக்களை ஒழிக்கவும், பகைவர்கள் என்ன செய்தாலும் உறங்கிக் கிடக்கும் இன்றைய தமிழ் மக்களை விழிப்படையச் செய்யவும், இதுபோன்ற பழந் தமிழ் வீரர்களின் வரலாறு பெரிதும் துணை செய்யும் என்பது எனது எண்ணம்.
வளரட்டும் தமிழரின் வீரம்!
சொல்லும் செயலும்
* * *
இன்னாசிமுத்து உபதேசியார் என்றால் ஈச்சம்பட்டி மக்கள் அனைவர்க்கும் நன்கு தெரியும். அவருக்கு பைபிள் மனப்பாடம்; எந்த வசனத்தையும் அவர் பாராமல் ஒப்புவிக்கும் ஆற்றல் படைத்தவர். சிற்றூர்களுக்குச் சென்று பாமர மக்களுக்கு பைபிளைப் போதித்து வர ஒரு உபதேசியார் தேவை என்று சாண்டகிரின் பாதிரியார் அந்த வட்டத்து ‘நாட்டய்யர்’ அவர்களிடம் கூறியிருந்தார். ஆதலால் அவருடைய பரிந்துரையின்பேரில் அந்த வேலை இன்னாசி முத்து உபதேசியாருக்கே கிடைத்து விட்டது.
அவர் ஒரு நல்ல பேச்சாளி; அவருடைய உணர்ச்சி கலந்த பேச்சு எவருடைய உள்ளத்தையும் உருக்கிவிடும். அவரது அருமையான தொண்டு காரணமாக ஊர்மக்கள் பலரும் கிறிஸ்து சமயத்தைப் பற்றி நன்கறிந்து கொண்டார்கள். சிலர் கிறிஸ்தவராகவும் மதம் மாறினர். சிலர் மதம் மாறும் நிலையிலும் இருந்து வந்தனர்.
இந்த நிகழ்ச்சி பனைமரத்துப்பட்டியிலுள்ள பரம சிவம் பிள்ளைக்கு ஒரு கலக்கத்தை உண்டு பண்ணி விட்டது. அவர் சிவபக்தியுள்ள ஒரு பெரிய நிலக்கிழார். இன்னாசிமுத்து உபதேசியாரின் பேச்சால், பிரசாரத்தால், இந்து மதமே அழிந்து போய்விடும் என்ற பயமும் அவருக்கு வந்து விட்டது. ‘இதற்காக என்ன செய்ய லாம்?’ என ஆலோசித்தார். கூட்டினார் ஊர்க் கூட்டத்தை.
இறுதியாக சென்னையிலிருந்து ஒரு நல்ல பேச்சாளியை வரவழைப்பதென்றும், அவரைக் கொண்டு எல்லாக் கிராமங்களிலும் திருக்குறள் பிரசாரம் செய்வது என்றும், அவருக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தைப் பனைமரத்துப் பட்டி பரமசிவம்பிள்ளையே கொடுப்பது என்றும் முடிவு செய்யப் பட்டது-அடுத்த நாளே யாவும் திட்டப்படி நடை பெறத் தொடங்கிவிட்டன.
பட்டினத்திலிருந்து வந்த பழனியப்ப முதலியாருக்கு ‘திருக்குறள் பிரசங்கியார்’ என்ற மறு பெயரும் உண்டு எல்லாப் புலவர்களையும்போல அவரும் வறுமை வாய்ப்பட்டு வாடி வருந்தி வந்தவர். இருந்தாலும் பரமசிவம் பிள்ளையின் ஆக்கமும் ஊக்கமும், அவருக்கு ஆறுதலும் தேறுதலும் அளித்தன அவர் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று, தனது வேலைகளை மிகத் திறமையாகச் செய்து வந்தார்.
ஈச்சம்பட்டியைவிட்டு இன்னாசிமுத்து உபதேசியார் ஏழெட்டு ஊர்களுக்குச் சென்று வந்தால், பனைமரத்துப் பட்டியைவிட்டு பழனியப்ப முதலியார் பத்துப்பதி னைந்து ஊர்களுக்குப் போய் வருவார் உபதேசியார் பைபிளைப் பற்றியும் பிரசங்கியார் திருக்குறளைப் பற்றியும் தகுந்த மேற்கோள்களுடன் அழுத்தந் திருத்தமாய்ப் பேசி, கிராம மக்கள் மனதில் நன்கு பதியவைத்து வந்தனர்.
காலப் போக்கில் பிரசாரம் போட்டிப் பிரசாரமாக மாறிவிட்டதால், ஒருவர் பேச்சை மற்றொருவர் கண்டித்துப் பேசுவது இயல்பாகவே நடைபெறத் தொடங்கிவிட்டது. இதற்காகப் பிரசங்கியார் பைபிளையும், உபதேசியார் திருக்குறளையும் ஆழ்ந்து படித்து ஆராயத் தொடங்கினர். அந்த ஆராய்ச்சி அவர்களின் பேச்சுக்குப் பெருந்துணையாக இருந்து வந்தது.
“இரு பேச்சர்ளிகளும் எந்த ஊரிலும் நேருக்கு நேராகச் சந்திக்கவில்லை. வாது புரியவுமில்லை. ஒருவரை ஒருவர் அறியார்” என்பது தான் ஊராரின் நம்பிக்கை. உண்மையில் உபதேசியாரின் பேச்சுமுறை எப்படி? என்பதைப் பிரசங்கி யாரும், பிரசங்கியாரின் பேச்சுப்போக்கு எத்தகையது? என்பதை உபதேசியாரும் ஒளிந்திருந்து பலமுறை கேட்டிருக்கிறார்கள் என்பதை ஊரார்கள் எப்படி அறிவார்கள்?
ஒருவர் பேச்சை ஒருவர் கேட்டப்பிறகு பேசத் தொடங்கியதால், அவர்களின் பேச்சு முறையிலேயே ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டுவிட்டது. திருக்குறள் பிரசங்கியார் தமது பேச்சில் திருவள்ளுவர் கூறிய நீதிநெறிகளையே அதிகமாகப் பேசுவார் என்று தெரிந்ததும், இன்னாசிமுத்து உபதேசியார் ஏசுபெருமான் கூறிய நீதிநெறிகளை ஏராளமாகக் கூறத் தொடங்கி விட்டார். இதனால், கிராமங்களிலுள்ள பொதுமக்கள் இவர்கள் இருவரையும் நன்கு வரவேற்று வந்தார்கள். “எந்த மதமானால்தான் என்ன? எந்தப் பிரசங்கமானால் தான் என்ன? கிராமத்தில் உண்மையும், ஒழுக்கமும், நிதியும், அன்பும் நிலைபெற்றாற் போதும்” என்பதே பொதுமக்களின் எண்ணமாக இருந்துவந்தது. சில கிராமத்தினருக்கு இப்பேச்சுகளைக் கேட்பது ஒரு பொழுது போக்காகவுங்கூட இருந்து வந்தது அதற்காக ஒவ்வொரு கிராமத்தினரும் தங்கள் ஊருக்கு எந்தப் பிரசங்கியார் வந்தாலும் மகிழ்வோடு வரவேற்று அன்போடு உபசரித்து அனுப்புவார்கள் அதிகமாகக் கூறுவானேன்? அடுத்த ஊருக்குப் போய்ச் சேர்வதற்கு என்று கட்டுச் சோறு கட்டிக் கொடுத்தனுப்புவது கூட, சில கிராமத்தினரின் வழக்கமாய்ப் போய்விட்டது.
பட்டப்பகல் 12 மணி, பங்குனி வெயில், நடந்த களைப்பு, பசி மயக்கம் இத்தனையும் சேர்ந்து வாட்டியது இன்னாசிமுத்து உபதேசியாரை. ஈச்சம்பட்டி போய்ச் சேர இன்னும் 3 கல் நடந்தாக வேண்டும் நடக்கவும் முடியவில்லை. நாவறட்சி வேறு என்ன செய்வார்? பாவம் கண்ணுக்கு எட்டிய தொலைவில் தினைச் செடிகளையும், தென்னை மரங்களையும் கண்டார். அங்குக் கட்டாயம் கிணறு இருக்கும் என நம்பித் தள்ளாடிச் சென்றார். அவர் எண்ணம் வீண்போகவில்லை கிணறும் இருந்தது. கிணற்று மேட்டில் திருக்குறள் பிரசங்கியார் தமது கட்டுச் சோற்றை அவிழ்த்து வைத்து உண்டு கொண்டிருந்தார். சோற்றையும், திருக்குறள் பிரசங்கியாரையும் கண்டதும் கட்டாயம் தமக்குச் சோறு கிடைக்கும், களைப்பும் ஒழிந்து விடும் என்று இன்னாசிமுத்து உபதேசியார் நம்பி, ஒருவாறு ஆறுதல் அடைந்தார். காரணம் தான் ஒளிந்திருந்து கேட்ட பிரசங்கத்தில் திருக்குறள் பிரசங்கியார் விருந்தின் பெருமையை எடுத்து விரிவாக விளக்கிப் பேசியிருந்தார் என்பதேயாகும்.
கட்டுச்சோறு கரைந்து கொண்டேயிருந்தது. திருக்குறள் பிரசங்கியார் இன்னாசிமுத்து உபதேசியாரை உணவு உண்ண அழைக்காதது மட்டுமல்ல, பாராமற்கூட உண்டு கொண்டேயிருந்தார். தான் வந்திருப்பது ஒரு வேளை அவருக்குத் தெரியாதோ? என எண்ணி அருகிற் போய் நின்றார். ஒரு கனைப்பும் கனைத்துப் பார்த்தார். என்ன செய்வது? இன்னும் ஐந்தாறு உருண்டைகளே எஞ்சியிருந்தன.
அதாவது கிடைத்தால் களைப்பு நீங்குமே என்றெண்ணிக் கட்டுச் சோற்றுக்கு எதிரிற் போய் உட்கார்ந்து பார்த்தார். இரண்டே உருண்டைகள் தானிருந்தன, இதுவும் போய்விட்டால். எப்படி ஊர்போய்ச் சேர்வது? என்ற கவலை இன்னாசிமுத்து உபதேசியாரை வாட்டி வதக்கியது. அறிமுகம் இல்லை. பேசவும் நாவெழவில்லை. கேட்கவும் வெட்கம் பசி மயக்கமும் மற்றொரு பக்கம். என்ன செய்வார்? திருக்குறளையாவது ஞாபகப்படுத்திப் பார்க்கலாம் என்று நினைத்து.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று
என மெதுவாகக் கூறினார். “கிடைத்தற்கரிய அமுதமாயினும் விருந்தினர் அருகிலிருந்தால், தனித்து உண்ணாதே” என்பது அக்குறளின் கருத்து திருக்குறட் பிரசங்கியார் குறளையுங் கேட்டுக்கொண்டு கடைசி உருண்டையையும் வாயிற் போட்டுக்கொண்டார். உதறினார் சோறு இருந்த துணியை எடுத்தார் ஒரு அரைச்சோற்றை அதை ஒரு சிறிய இலையில் வைத்து இருகைகளாலும் தாங்கிப் பிடித்து, எழுந்து நின்று, உடலை வளைத்து வணங்கி, தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் றெரிவார்
எனக் கூறி நீட்டினார்.
எதிர்பாராத இச்செயலைக் கண்ட உபதேசியார் வெட்கிப் போனார். கிணற்றில் தட்டுத்தடுமாறி இறங்கி நீரருந்திக் களைப்பை மாற்றிக்கொண்டு, எவ்வாறோ ஈச்சம்பட்டிக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார்.
எண்ணி இருபத்தெட்டாம்நாள் திருக்குறள் பிரசங்கி பட்டினம் பழனியப்ப முதலியார் எங்கெங்கோ சுற்றி விட்டு, பகல் 1 மணிக்குப் பசிக்கு உணவு கிடைக்கும் என எண்ணிப் பயற்றம்பாறைக் கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். அன்று அவ்வூரில் திருவிழா ஆதலின், தேர் நிலைக்குப் போய் நின்ற பிறகுதான் அவ்வூரார்கள் சோறுண்டார்கள் என்றும், அது மாலை 4 மணி ஆகும் என்றும் தெரிந்ததனால், அங்கும் சிறிதும் நிற்காமல், மணல்மேடு கிராமத்திற்குப் போய்விடலாம் எனப் புறப்பட்டுவிட்டார். வழியில் களைப்பும், மயக்கமும் கலந்து கால்களைத் தள்ளாடச் செய்தன; “இன்னும் கால்மைல் தூரம் சென்றாலும் ஒரு காட்டாறு வரும்: அதில் ஊற்று இறைத்தேனும் நீரருந்தலாம்” என நம்பி, உயிரைப் பிடித்துக்கொண்டு உருண்டும் எழுந்ததும் ஒருவாறு போய்ச் சேர்ந்தார். கடைசியாக ஒரு ஆள் காட்டாற்றில் ஊற்று இறைத்துவைத்து அதனருகில் உணவு உண்பதையும் கண்டுவிட்டார். ‘உயிர் பிழைத்தோம்’ என எண்ணி. அவ்விடத்திற்கு மகிழ்ச்சியோடு ஓடிச் சென்று பார்த்தார்.
ஆம். அவர் இன்னாசிமுத்து உபதேசியார்தான். அவர் கட்டுச்சோற்றை அவிழ்த்துத் தமது வேலையைச் செய்து கொண்டிருந்தார். கதை எதற்கு? கடைசிலாவது தமக்குக் கொஞ்சம் சோறு கிடைக்கும் என நம்பி அந்தச் சுடுமணலிற் சுருண்டும், தவித்தும், துடித்தும், கிடந்தும், பார்த்தார். திருக்குறளாரைப் பார்த்தும் பாராதது போலப் பைபிளார் சோற்றை உண்டுகொண்டேயிருந்தார். ஒரே ஒரு உருண்டைதான் மீதியிருந்தது.
அதுவும் போய்விட்டால் ஆபத்தாகிவிடுமே! எனப் பயத்த பழனியப்பர், இன்னாசியாரின் எதிரில் உட்கார்ந்து,
தன்னைப்போல் பிறரையும் நேசிப்பாயாக!
என்று கூறி, ஏசு பெருமான் கட்டளையை நினைவூட்டினார். என்ன செய்வார் இன்னாசியார்? அந்தச் சோற்றையும் அள்ளி வாயிற் போட்டுக்கொண்டு,
பிறர்பொருளை இச்சியா திருப்பாயாக!
என்று கூறிவிட்டு, துண்டை உதறித் தோளிற் போட்டுக் கொண்டு போய்விட்டார்.
தனது சொல்லுக்கும் செயலுக்கும் திருக்குறளில் ஆதாரம் தேடி வைத்திருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த திருக்குறளார். இன்னாசிமுத்து உபதேசியாரும் அப்படிப் பைபிளில் தேடி வைத்திருக்கிறார் என்பதைக் கண்டதும், வெட்கப்பட்டு விரைந்து சென்றார்.
கதை எப்படி? ‘நல்ல கதை? நகைச்சுவைக் கதை’ அப்படித்தானே? உங்களுக்குச் சிரிப்புக்கூட வந்திருக்கும் ஆம். கதை எழுதுவதும் சிரிக்கத்தான்! படிப்பதும் சிரிக்கத்தான்! ஏன் பத்திரிகைகளைச் சிலர் நடத்துவதுங் கூடச் சிரிக்கந்தான்! நம் நாட்டில் இருக்கிற துன்பங்களை, துயரங்களைச் சிரித்து ஆற்றுவது என்பது ஒரு வழி. அதைத்தவிர வேறு வழியில்லை என்பதைக் கண்ட பிறகுதான், சில பத்திரிகாசிரியர்கள் சிரிப்பாய்ச் சிரிக்கிற கதைகள் பலவற்றை எழுதி வெளியிட்டு வருகிறார்கள்.
கதையை அல்ல; கருத்தை உணருங்கள். கதையை நினைத்தால் சிரிப்புத்தான் வரும். கருத்தை நினைத்தால் கண்ணீரே வரும். இந்த உபதேசியாரைப் போலவும், பிரசங்கியாரைப் போலவும் எத்தனை மக்கள் இன்று நம் நாட்டில் இருந்து வருகின்றனர்! இத்தகைய மக்களின் வாழ்வு நமது நாட்டின் நலனுக்குக் கேடு தரும் அல்லவா அதனை எண்ணியே திருவள்ளுவர்,
கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்று கட்டளையிட்டிருக்கிறார்.
“படி! நன்றாகப்படி? படிக்க வேண்டியவைகளைப் படி? பிழையறப் படி படித்தபின் அதன்படி நடந்து ஒழுகு!” என்பதே இதன் கருத்து. எல்லாவற்றையும் கற்ற இந்த இருவரும் இதைக் கற்றவர்களா? கற்றிருந்தால் பிறருக்குப் போதிப்பவைகளில் சிலவற்றையாவது தங்கள் செயலில் காட்டியிருப்பார்கள் அல்லவா வள்ளுவர் இம்மட்டோடு நிற்கவில்வை. இத்தகைய இழிந்த மக்களைக்கண்டு வருந்திச் சிறிது அதிகமாகக் கடிந்துங் கூறி, நம்மை எச்சரிக்கையும் செய்கிறார்.
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
என்று, “சொல் வேறு செயல் வேறுபட்டவர்களோடு தொடர்பு கொள்ளாதே! கொண்டிருந்தால் விழித் திருக்கும் போது மட்டுமல்ல; உறங்கும்போது மட்டுமல்ல; கனவிலுங் கூட அது உன்னைத் துன்புறுத்தும்” என்பது இதன் கருத்து.
பனைமரத்துப்பட்டிப் பரமசிவம் பிள்ளைக்கு இந்தக் கதை தெரிந்தது இன்னாசிமுத்து உபதேசியார் தன்னைக் காப்பாற்றாமல் காட்டாற்றில் தவிக்கவிட்ட செய்தியைப் பரவசிவம் பிள்ளையிடம் திருக்குறளார் கூறிவிட்டார். பரமசிவம் பிள்ளை மிகவும் வருந்தி, இச்செய்தியை ஈச்சம்பட்டிப் பாதிரியாருக்குத் தெரிவித்தார். ஈச்சம்பட்டிப் பாதிரியார் இன்னாசிமுத்து உபதேசியாருடன் பனைமரத்துப்பட்டி பரமசிவம் பிள்ளையிடம் வந்து நடந்ததை விசாரிக்கச் சொன்னார். அவர் தென்னை மரத்தடியில் பனைமரத்தளவு சோறு தந்த திருக்குறள் பிரசங்கியாரின் செயலைத் தெளிவாக எடுத்துக் கூறினார் உண்மைகள் விளங்கி விட்டன.
பரமசிவம் பிள்ளையும், பாதிரியாரும் ஒன்றுபட்டுத் தனித்தும் பேசினார்கள். இத்தகைய திருக்குறள் சொற்பொழிவாளர்களைக் கிராம மக்களிடம் தலைகாட்டவிடுவது நாட்டிற்கே கேடாகும் என்றார் பரமசிவம் பிள்ளை. இத்தகைய உபதேசியார்களை ஏசுபெருமான் மன்னிக்கவே மாட்டார் என்றார் பாதிரியார். கடைசியாக இருவரும் அவரவர்க்குரிய சம்பளத் தொகைகளை அவரவர்களிடம் கொடுத்து "மக்களைச் சீர்திருத்தியது போதும், இனி நீங்கள் உங்களையே சீர்திருத்திக் கொள்ளுங்கள்" என்று கூறி அனுப்பிவிட்டார்கள். கருத்தக் கலங்கினார் திருக்குறளார்: கண்கலங்கினார் இன்னாசியார் இருவரும் ஒன்றுகூடி வழி நடந்தார்கள். வரும் வழியில், “அண்ணே திருக்குறளில் எல்லாம் இருக்கிறது என்று அன்று கூறினீர்களே! நம்முடைய இந்த நிலைபற்றியும் அதில் ஏதும் இருக்கிறதா?” என்றார். உபதேசியார்.
“ஆம்” படித்தும், அறிந்தும், பிறர்க்கு உபதேசம் செய்தும், தான்மட்டும் அதன்படி நடந்தொழுகாத மூடனை விடச் சிறந்த மூடன் உலகத்தில் ஒருவனுமில்லை யென்று நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது அண்ணே” என்றார் திருக்குறளார்.
“குறளைச் சொல்லமாட்டீர்களா?” என்றார் இன்னாசியார்.
“ஓதி உணர்ந்தும், பிறர்க் குரைத்தும், தானடங்காம் பேதையிற் பேதையாரில்” என்றார் பழனியப்பர்.
“அண்ணே! இதைக் காட்டாற்றங்கரையிலேயே நினைவூட்டக்கூடாதா?” என்றார் உபதேசியார்.
“தென்னைமரத்து நிழலிற்கூட, இது என் நினைவிற்கு வரவில்லையே! என் செய்வது?” என்றார் பிரசங்கியார்.
தம்பி! கட்டுரையைப் படித்தாயா? எப்படி இருக்கிறது? நன்றாயிருக்கிறது என்று நினைத்தாயா? இன்னும் நன்றாக எழுதலாமே என்று நினைக்கிறாயா? அதுதான் கூடாது. படிப்பது எழுதுவதற்காக என்றும், பேசுவதற்காக என்றும் நினைக்கிற நினைப்புத்தான் நம் நாட்டு மக்களைக் குட்டிச்சுவராக்கிவிட்டது. படிப்பது நடப்பதற்காக என்ற எண்ணம் நம் நாட்டில் வளர வேண்டும்! இன்றைக்கு நீயும் அந்த முடிவுக்குத்தான் வரவேண்டும்.
படி! நன்றாகப் படி பிழையறப் படி! எது நல்லது? என்று ஆராய்ந்து உணர்! நல்ல முடிவுக்கு வா! உடனே செய்! பிறரையும் செய்யச் சொல்! தீர ஆராய்ந்து சொல்! செய்வதற்காகச் செய்ய வேண்டியதைச் சொல். செய்து கொண்டே சொல்!
சொல்வேறு செயல்வேறு பட்டவர்களுடைய கூட்டுறவி லிருந்து விலகு; உடனே விலகு! ஏனெனில் அது நல்வாழ்விற்கு ஏறறதொரு நல்ல வழி!
மறைமொழி
* * *
‘மறைமொழி’ என்பது மறைக்கப்பெற்ற மொழி எனப் பொருள் பெறும். இதை ‘மந்திரம்’ என்றும் ‘வேத பாஷை’ என்றும் வடமொழியாளர் கூறுவர். திருக்குறள் தமிழ் மறை ஆதலின், அது கூறும் மொழிகள் யாவும் நமக்கு மறை மொழிகளேயாம். என்றாலும், நான் இங்கு கூறவந்தது அப்பொருளில் அல்ல. ‘மறைமொழி’ (பரி பாஷை) என்ற பொருளில் ஆகும்.
நகை வியாபாரிகள், மாட்டு வியாபாரிகள், நகை, செய்பவர்கள், தரகுத் தொழில் செய்பவர்கள், தோல் வியாபாரிகள், மார்வாடிகள் ஆகிய பலரிடமும், கேட்போர் அறிய முடியாத மறைமொழிகளை அவர்கள் தங்களுக்குள்ளாகவே வழங்கி வருவதை இன்றும் காணலாம்.
அதுபோலவே, தமிழ் அறிஞர்களுக்குள்ளே-தமிழ் கற்றமக்களுக்குள்ளே ஒரு மறைமொழி வழங்கவேண்டும் என்பது எனது ஆசை. இது மொழிப் பற்றுக்கும், கல்விப் பெருக்குக்கும், அறிவு வளர்ச்சிக்கும், நாட்டு நலனுக்கும் ஏற்ற துணை செய்யும் என்பது எனது எண்ணம். இந்த மறைமொழியைப் பாருங்கள்
அ: நன்பரே வரவேண்டும்! வரவேண்டும்! அந்தப் பையன் 13-ல் எப்படி? .
ஆ : அதைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. நிரம்ப உடையவன்.
இ : நேற்று நாம் போய்க் கேட்டுக் கொண்டிருந்தோமே; அவருக்கு 73 எவ்வளவு இருக்கிறது, பார்த்தீர்களா?
ஈ.: ஆம் 73 இருந்து என்ன செய்ய? 65 சிறிதும் இல்லையே.
உ : பையனுடைய 40 எப்படி?
ஊ : 40 நிறைய உண்டு. என்றாலும் 42 இல்லாமல் 41 மாதிரி இருக்கிறான், .
எ : தாங்கள் ஏன் இப்போது இராமனிடம் 79 வைப்பதில்லை,
ஏ : அவன் இருந்தாப் போலிருந்து 92, 93, 94துக்குப் போய்விட்டான். நான் 82 என எண்ணிச் சும்மா இருந்து விட்டேன். இல்லாவிட்டால் நம்முடைய 97 போய் விடாதா?
எப்படி இந்த மறைமொழி? இது உங்களுக்கு விளங்குகிறதா? நீங்கள் திருக்குறள் படித்திருந்தால் இது உங்களுக்கு விளங்கியிருக்கும். இல்லையானால் அதைப் படியுங்கள். அதிலுள்ள அதிகாரங்கள்தாம் இவை.
திருக்குறள் அதிகாரம்
13. அடக்கம்.
73. அவை அஞ்சாமை.
65. சொல் வன்மை.
40. கல்வி.
41. கல்லாமை.
42. கேள்வி.
79. நட்பு.
92. பொருட்பெண்டிர்.
93. கள்.
94. சூது.
82. தீ நட்பு.
97. மானம்
‘திருக்குறள்’ தமிழனுடைய தனிச் சொத்து. அது தமிழ்நாட்டுக் கருவூலமும் ஆகும். திருக்குறளில் கூறப்படாதது எதுவும் இல்லை. அதை ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ்மகளும் படித்துத் தீரவேண்டும். அதன் 1330 குறளையும் படிப்பதற்குக் குறுக்குவழி ஒன்று உண்டு. அது 133 அதிகாரத்தையும் முதலில் மனப்பாடம் பண்ணுவதுதான். அதிகாரங்களை முதலில் மனப்பாடம் பண்ணுகிறவர்கள், திருக்குறளை எளிதாகப் படிப்பதிலும், மறைமொழியை விரைவாகப் பேசுவதிலும் வெற்றி பெறுவார்கள்.
முதல் பயிற்சியாக, 10 அதிகாரங்களுக்குள் பழகராம்
அ: குப்புசாமிக்கு 1 நிறைய இருக்கும்போல் இருக்கே!
ஆ: இருந்து என்ன செய்வது? 14 இல்லையே அப்பா!
அ: உங்கள் ஊரில் 2 எப்படி?
ஆ: சிறிதும் இல்லை. அதனால் 104-ம் நடைபெறவில்லை.
அ: நமது நாயுடு 3-ல் இருப்பதுபோல 4-ஐப்பேசிக் கொண்டிருந்தாரே! இன்னும் அப்படித்தானா?
ஆ: இல்லை! இல்லை! அவர் 5-ல் புகுந்துவிட்டார்.
அ: உங்கள் பையனுக்கு 6 ஆயிற்றோ!
ஆ. ஆயிற்று.
அ: 7 எத்தனை?
ஆ: ஒன்றுமில்லை.
அ: உங்கள் மனைவி 8-ல் எப்படி?
ஆ. அவளுக்கு அது இருந்தால், எனக்கு ஏன் 31 வருகிறது.
அ: உங்களுக்கு இன்றைக்கு 9 சரிதானா?
ஆ: ஐயோ முடியாது. மன்னிக்கவும், நான் 95 அருந்துகிறேன்.
அ: அவர் ஏன் அப்படிப் பேசுகிறார்?
ஆ: அவரா? அவருக்கு 10 தெரியாது.
திருக்குறள் அதிகாரம்
1. கடவுள் வாழ்த்து
14. ஒழுக்கம்.
2. மழை.
104. உழவு.
3. துறவு.
4. அறம்.
5. இல்வாழ்க்கை.
6. வாழ்க்கைத் துணைநலம்.
7. புதல்வரைப் பெறுதல்.
8. அன்புடைமை.
31. சினம்.
9 விருந்து.
95. மருந்து.
10. இன்சொல்.
நாள் ஒன்றுக்கு இவ்வாறு பத்துப் பத்து அதிகாரங்களாகப் பயில்வது நல்லது. பதின்மூன்றே நாட்களில் உங்கள் உள்ளத்தில் திருக்குறளின் அதிகாரத் தலைப்புகள் முழுவதும் பதிந்து விடும். பிறகு உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் திருவள்ளுவர் எந்தத் தலைப்பில் எது எதைச் சொல்லியிருக்கிறார் என்று ஒவ்வொரு குறளாக அந்தந்த அதிகாரத்தின் கீழ்ப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ளலாம். இது குறளைப் படிக்கும் குறுக்கு வழியாகும்.
தம்பி! உனக்குக் கூறுவது இது ஒன்றுதான். எல்லா உறுப்புக்களும் நன்கு அமைந்ததுதான் உடல். அதுபோல எல்லாத் துறைகளிலும் ஒளிவீசுவதுதான் அறிவு. முன்னதற்கு முழு உடல் என்றும், பின்னதற்கு முழு அறிவு என்றும் பெயர். முழு உடலைப் பெற்றதனாலேயே ஒருவன் முழு மனிதனாகிவிட முடியாது. அவன் முழு அறிவையும் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அவன் முழு மனிதனாகிறான்.நீயும் ஒரு முழு மனிதனாகத் தோன்ற விரும்புகிறாயா? அப்படியானால், திருக்குறளைப் படி உடனே எடுத்துப் படி! ஏனெனில், அது உலகத்தின் அறிவுக் களஞ்சியங்களில் ஒன்று.
(முற்றுப் பெற்றது)
முத்தமிழ்க் காவலர்
கி. ஆ. பெ. விசுவநாதம் நூல்கள்
தமிழ்ச் செல்வம்
தமிழின் சிறப்பு
அறிவுக் கதைகள்
எனது நண்பர்கள்
வள்ளுவரும் குறளும்
வள்ளுவர் உள்ளம்
திருக்குறள் கட்டுரைகள்
திருக்குறளில் செயல்திறன்
திருக்குறள் புதைபொருள்
மும்மணிகள்
நான்மணிகள்
ஐந்து செல்வங்கள்
ஆறு செல்வங்கள்
அறிவுக்கு உணவு
தமிழ் மருந்துகள்
மணமக்களுக்கு
இளங்கோவும் சிலம்பும்
நல்வாழ்வுக்கு வழி
எண்ணக்குவியல்
வள்ளலாரும் அருட்பாவும்
எது வியாபாரம்? எவர் வியாபாரி?
மாணவர்களுக்கு திருச்சி விசுவநாதம் வரலாறு (மா. சு. சம்பந்தம்)
முத்தமிழ்க் காவலர் பற்றி 100
அறிஞர்கள்
பாரி நிலையம்
184, பிராட்வே, சென்னை-600 108.
கருத்துகள்
கருத்துரையிடுக