அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
கட்டுரைகள்
Back
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
முல்லை முத்தையா
அயல்நாட்டு
அறிஞர்கள் உதிர்த்த
முத்துக்கள்
சுவைமிகுந்த 104 நிகழ்ச்சிகளின் குவியல்
முல்லை பிஎல். முத்தையா
முல்லை
பதிப்பகம்
323/10, கதிரவன் காலனி,
அண்ணா நகர் மேற்கு,
சென்னை - 600 040
நூல் பற்றிய விவரம்
* * *
நூலின் பெயர் : அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துகள்
ஆசிரியர் : முல்லை. பி.எல். முத்தையா
மொழி : தமிழ்
வெளியீட்டு நாள் : செப்டம்பர் 2002
பதிப்புரிமை : ஆசிரியருக்கு
தாள் : 11.6 கி.கி. வெள்ளைத்தாள்
நூலின் அளவு : 18.5 செ.மீ. ஓ 12.5 செ.மீ.
பக்கங்கள் : 96
வெளியிடுவோர் : முல்லை பதிப்பகம்
323/10, கதிரவன் காலனி,
அண்ணா நகர் மேற்கு,
சென்னை - 40
நூல் கட்டு தாள் அட்டை
பொருள் சுவையான நிகழ்ச்சிகள்
அச்சிட்டோர் : ஜியான் பிரிண்டர்ஸ்
சென்னை - 28.
* * *
விலை : ரூ . 20.00
* * *
உள்ளடக்கம்
1. விஞ்ஞானியின் பேச்சு
2. தொடக்கமும் முடிவும்
3. நானும் உங்களைப்போலவேதான்
4. இரண்டும் சொல்லக்கூடியதா?
5. முழுப் பொய்!
6. படம் பார்த்ததற்குக் கூலியா?
7. எழுதிக்கொண்டே இருந்தவர்
8. பேசியது எந்த மொழி?
9. எனக்கும்கூட பயம்தான்
10. ஒரு சொல்லுக்குப் பொருள்
11. ஆங்கிலம் தெரியாத மன்னர்
12. அவர் ஒருவரே புத்திசாலி
13. பெருந்தன்மையாளர்
14. பொறுப்பற்றவர்களின் போக்கு
15. இராணுவமேதைகளின் தகுதி
16. அதிசயமான விஞ்ஞானி
17. விலை மதிப்பற்ற சிறப்புடையது
18. புகழ் விளம்பரம்
19. கண்டு களிப்புறும் ஆசை
20. விருந்தை மறந்தவர்
21. நண்பர் அளித்த உதவி
22. பூச் செருகும் பழக்கம்
23. தந்தை செய்த உதவி
24. பணமா? குழந்தையா?
25. புரட்சியால் பெற்ற பதவி
26. தேசிய கீதம் பாடிய நடிகர்
27. எதிர்பாராத பரிசுத்தொகை
28. புதுமையான மூங்கில் திரை
29. சர்வாதிகாரியின் ரசனை
30. பிடித்தமானவை
31. போலிசுக்கு உதவும் கள்ள பாங்க்
32. கிழவி சொன்ன யோசனை
33. அந்த டாக்டர் இல்லையே!
34. பேசுவதில் என்ன பயன்
35. அடக்கமான பெருந்தன்மை
36. இரவல் கொடுக்கலாமா?
37. நோயைப் பரப்பியவர்
38. பெரிய மனிதன் யார்?
39. மறுபடியும் தொடங்கலாமா?
40. தமிழில் பேசி வெற்றி பெற்றார்
41. வரியும் வர்ண விளக்கமும்
42. கொள்கைப்படி நடந்தார்
43. அதைப்பிறகு பார்த்துக்கொள்ளலாம்
44. வகுப்பு வேற்றுமை எங்கே?
45. லட்சங்களுக்கு மத்தியில் சலசலப்பு
46. தோற்றமும் தகுதியும்
47. புத்தகங்களினால் உண்டாகும் நன்மை
48. அங்கே போகலாமா?
49. மகிழ்ச்சியால் சாவதே மேல்
50. திருமணத்தை மறந்தவர்
51. விடாக் கண்டரான கவிஞர்
52. உயர்ந்து விட்டார்
53. பொறுக்கி எடுத்த மாணவர்கள்
54. பதில் எழுதாத காரணம்
55. சோதிடரின் நடுக்கம்
56. சிரிக்கவைப்பவர் அழுகிறார்
57. கவிஞரின் போக்கு
58. பதிப்பாளரின் குழப்பம்
59. அவர் எங்கே போகிறார்?
60. பசு காட்டிய பாதை
61.மூன்று நாட்கள் வேலை செய்தார்
62. குதிரையிலே போய் விட்டாராம் !
63. குழந்தைகளின் குழப்பம்
64. வருமானம் ஏன் குறைகிறது?
65. புதிய பதவியின் அலுவல்
66. மணி என்ன ஆனால் என்ன?
67. அதுவும் ரப்பர் பொம்மையா?
68. படிக்கும் ஆர்வம்
69. இசையா? மொழியா?
70. போர் முனையில் பிரார்த்தனையா?
71. பெரிய சாதனை தான்!
72. உங்கள் சந்ததியார் கொடுப்பார்கள்
73. இப்படி ஒரு விளம்பரமா?
74. ஒருநாள் வருமானம் போதும்
75. மளிகைக் கடைக்காரரின் பேருதவி
76. பேசாமல் கருத்து வேற்றுமையா?
77. அவர்களிடமும் சொல்லுங்கள்
78. உழைப்பாளிக்குப் பதவி உயர்வு
79. கவிஞர் கட்டிய அணை
80. அவர் ஒருவரே
81. வறுமையிலும் கைகொடுத்தது
82. அவர் நேரில் கண்டார்
83. அரக்கர்களா?
84. பதிலுக்கு பதில்
85. திருட்டுக் கதை
86. மற்றொருவர் எங்கே?
87. டாக்டரின் எச்சரிக்கை
88. விஞ்ஞானிகளை நம்பலாமா?
89. தளராத முயற்சி
90. முயற்சியே திருவினை
91. தாராள மனப்பான்மை
92. விலை மதிப்பற்ற அம்சம்
93. நினைவுச் சின்னம் யாருக்கு?
94. எத்தகைய எச்சரிக்கை
95. சாதுர்யமான பதில்
96. புத்திசாலி நடிகர்
97. புத்தகம் எழுதத் தகுதி
98. அவருக்கே புரியாத மர்மம்
99. விஞ்ஞானிகளின் விளையாட்டு
100. சமயோசித புத்தி
101. சதுரங்க மூளையா?
102. புத்திசாலிகளின் தூக்கம்
103. நடந்து செல்வதில் நன்மை
104. பசி அறியாத விஞ்ஞானி
(1) விஞ்ஞானியின் பேச்சு
* * *
கொலம்பியாவில், சிறப்பு வாய்ந்த இலக்கிய அறிஞர் டாக்டர் பிராங்க், பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனைக் கெளரவிப்பதற்காக தேநீர் விருந்து அளித்தார்.
விருந்துக்குப் பிறகு எல்லோரும் பிரதம விருந்தினர் ஐன்ஸ்டீனை பேசும்படி கேட்டுக்கொண்டார்கள்.
அவர் எழுந்து நின்றார். -
“நண்பர்களே! உங்களிடம் பேசுவதற்கு இப்பொழுது என்னிடம் ஒரு விஷயமும் இல்லையே” என்றார்.
இப்படிக் கூறிவிட்டு அவர் உட்கார்ந்ததும் எல்லோருக்கும் அதிருப்தியா இருந்தது. அதைக் கவனித்தார் ஐன்ஸ்டீன். மறுபடியும் எழுந்து நின்றார். -
“நண்பர்களே, என்னை மன்னிக்க வேண்டும். பேசுவதற்கு விஷயம் கிடைத்து விட்டால், நானே உங்களிடம் வந்து விடுவேன்” என்றார்.
ஆறு ஆண்டுகள் கழிந்தன. டாக்டர் பிராங்குக்கு, ஐன்ஸ்டீனிடமிருந்து தந்தி வந்தது. “தம்பி, இப்பொழுது எனக்கு பேசுவதற்கு விஷயம் கிடைத்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
விரைவில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடாயிற்று . ஐன்ஸ்டீன் மளமளவென்று தம்முடைய க்வாண்டம் தியரியைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்றார்.
ஆனால், அதில் ஒரு வார்த்தை கூட அங்கிருந்தோர் யாருக்குமே விளங்கவில்லை.
(2) தொடக்கமும் முடிவும்
* * *
பிரசித்தி பெற்ற கதாசிரியர் அலெக்ஸாண்டர் டூமாஸை, ஒருவர் சந்தித்தார். அவர் தலைக்கனம் கொண்டவர், டூமாஸை மட்டம் தட்ட வேண்டும் என்பது அவருடைய எண்ணம்.
“உங்கள் மூதாதையரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் கீழ்த்தர வகுப்பமாமே!” என்றார் தலைக்கனம் கொண்டவர்.
அமைதியாக, "ஆமாம்” என்றார் டுமாஸ்.
“உங்கள் தந்தை?”- வந்தவர் கேட்டார்.
“மலை ஜாதியினர்” என்றார் டுமாஸ்.
“உங்கள் தாத்தா?” வந்தவர் கேட்டார்
"நீக்ரோ” என்றார் டுமாஸ்.
“தாத்தாவுக்குத் தாத்தா?’ வந்தவர் கேட்டார்.
பொறுமை இழந்து விட்டார் டுமாஸ். “அவர் ஒரு வால் இல்லாக் குரங்கு! ஆனால் ஒன்று என் வம்சம் தொடங்கிய இடத்தில், உங்கள் வம்சம் முடிந்து விட்டது. அது தெரியுமோ உங்களுக்கு?” என்றார்
வந்தவர் தலைகுனிந்தார்.
(3) நானும் உங்களைப்போலவேதான்
* * *
பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ரயிலில் பிரின்ஸ்டன் என்ற ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார்.
இடைவேளையில் உணவு வண்டியில் உணவு கொள்ளச் சென்றார்.
அவரிடம் உணவுப் பண்டங்களின் பட்டியல் ஒன்றைக் கொடுத்தான் உணவு பரிமாறுகிறவன். மூக்குக் கண்ணாடியை மறந்து வேறு வண்டியில் வைத்து விட்டு வந்ததால், பட்டியலில் குறிப்பிட்டிருப்பதை அந்த ஆளையே படித்துச் சொல்லும்படி கேட்டார் ஐன்ஸ்டீன்.
அவனோ பட்டியலை அப்படியும் இப்படியும் பார்த்துவிட்டு, தெரியல்லீங்களே, ஐயா! உங்களைப் போலவே எனக்கும் படிக்கத் தெரியாதுங்க” என்று கூறினான்.
தங்களைப் போலவே பிறரையும் கருதுவது சிலருடைய இயல்பு.
(4) இரண்டும் சொல்லக்கூடியதா?
* * *
பிரபல காதல் நடிகையான அவா கார்டனர் ஒரு சமயம் வானொலி நிகழ்ச்சிக்காக வந்திருந்தபோது, ரசாயனப் பேராசிரியர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது ரசாயனப் பேராசிரியரிடம், "அறிவியலைப் பற்றி எனக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்" என்று கேட்டார் நடிகை கார்டனர்.
அதற்குப் பேராசிரியர், “எனக்குக் காதலைப் பற்றிச் சொல்லேன்" என்று பதிலுக்குக் கேட்டாராம்.
(5) முழுப் பொய்!
* * *
பிரபல விஞ்ஞானி டார்வின் பிராணிகளைப் பற்றி ஆராய்ந்தவர்.
ஒரு சமயம், சில குறும்பான சிறுவர்கள் நீல வண்டு ஒன்றைப்பிடித்து அதன் இறகுகளைப் பிய்த்துவிட்டு, அதற்குப் பதிலாக, வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளையும் இன்னும் வெட்டுக்கிளி, கருவண்டு ஆகியவற்றின் உறுப்புகளையும் அதோடு ஒட்டிக் கொண்டு வந்து டார்வினிடம், “இதோ பார்த்தீர்களா? புது வகையான பூச்சி” என்று காண்பித்தனர்.
டார்வின் அதை வாங்கி நன்றாகப் பார்த்தபின் “இதைக் கொல்வதற்கு முன்னால், இது ரீங்காரம் செய்ததா? இல்லையா? என்று கேட்டார்.
"ஆமாம்” என்றனர் சிறுவர்கள். "பலே இதுதான் அசல் ஹம்பக்" என்றார் டார்வின். ஆங்கிலத்தில் ஹம் என்றால் ரீfங்காரம் என்றும் பக்' என்றால் பூச்சி என்றும் அர்த்தம். -
ஆனால், 'ஹம்பக்' என்று இரண்டையும் சேர்த்து ஒரே சொல்லாகச் சொன்னால் "முழுப்பொய்" என்று அர்த்தம்.
ஏமாற்றப்பார்த்தவர்கள் ஏமாந்தார்கள்.
((6) படம் பார்த்ததற்குக் கூலியா?
* * *
பிரபல நடிகர் வில்ஸன் பாரட் தம்முடைய வீட்டைப் புதுப்பித்து, அலங்கரித்தார்.
தொழிலாளர்கள் அங்கே வேலை செய்தனர். அவர்களை உற்சாகப்படுத்த எண்ணினார் நடிகர்.
தொழிலாளர்களுக்கெல்லாம் தான் நடித்த "லண்டன் தீபங்கள்" என்ற படத்துக்கு இலவச டிக்கெட்டுகள் கொடுக்கத் தீர்மானித்தார் நடிகர். .
“சனிக்கிழமை இரவு படம் பார்க்க உங்களுக்கு விருப்பமா? டிக்கட் தருகிறேன்” என்றார்.
சரி என்ற கூறி, அவர்கள் அனைவரும் போய்ப் படம் பார்த்தார்கள். -
வாரக் கடைசியில் அவர்களுடைய சம்பளப் பட்டியலை நடிகர் பார்த்தபோது அவர் திடுக்கிடும் படியான ஒர் இனம் குறிப்பிடப்பட்டிருப்பதை அவர் கண்டார். அது என்ன?
ஒவ்வொரு தொழிலாளியின் பெயருக்கும் எதிரே 'சனிக்கிழமை பிரின்ஸெஸ் திரைஅரங்கில் நான்கு மணிநேரம் -எட்டுஷில்லிங் கூலி' என்று போட்டிருந்தது.
படம் பார்த்தது கூட தாங்கள் பார்த்த வேலை என்று தொழிலாளர்கள் கருதினார்கள் போலும்!
(7) எழுதிக்கொண்டே இருந்தவர்
* * *
தன்னுடைய 13-வது வயதில் இறகு பேனாவினால் எழுதி,
எழுத்தர் அலுவல் பார்த்த பிரெஞ்சுக்காரருக்கு, நாவல் எழுதும் ஆர்வம் உண்டானது ஆச்சரியம் அல்லவா? -
'அந்த வயதில், சிந்தித்துச் சுயமாக எழுதினால், மற்றவர் மதிப்பார்களா? என்று எண்ணவில்லை. ஊக்கம் பிறந்தது; எண்ணம் வளர்ந்தது; எழுத்துப் பிறந்தது!
அவர் யார்? அவரே அலெக்ஸாண்டர் டூமாஸ்! டூமாஸ் எழுதுவதில் சலிப்பதில்லை. கை வலித்தபோதிலும் விடுவதில்லை. பல மணி நேரங்கள் - ஏன் பல நாட்கள் கூட எழுதிக் கொண்டே இருந்தவர். தன்னுடைய எண்ண அலைகளுக்குத் தடையாக உணவு உறக்கம் எதுவும் தடையாக இருந்து விடக் கூடாதே என்று அவற்றை மறந்து எழுதியவர்.
ஒரு தடவை 72 மணி நேரம் உட்கார்ந்து ஒரு நாவலை எழுதி முடித்து விட்டார்.
(8) பேசியது எந்த மொழி?
* * *
ஐரோப்பியத் தலைநகருக்கு, அமெரிக்க ராஜதந்திரி கார்டல் ஹல் என்பவர் போயிருந்தார்.
அவர் பேசிய வார்த்தைகள் சில ஐரோப்பியர்களுக்கு சில சமயம் ஆங்கிலம் மாதிரியும், சில சமயம் பிரெஞ்சு மாதிரியும் தோன்றின.
அவர்கள் திகைத்துப் போனார்கள். 'ஆங்கிலம்' தான் என சிலரும், 'பிரெஞ்சு' தான் என வேறு சிலரும் சொன்னார்கள். இதனால் பிரச்னை வளர்ந்தது. -
இறுதியில் ஒருவர்,' கொஞ்சம் பொறுங்கள்' அவருடைய பேச்சை, செயலாளர் பிரெஞ்சுமொழியில் மொழிபெயர்க்கிறாரா என்று பார்ப்போம். அவ்வாறு மொழி பெயர்த்தால், அவர் பேசியது ஆங்கிலம்தான் என்பது நிச்சயமாகிவிடும்” என்றார்.
(9) எனக்கும்கூட பயம்தான்
* * *
ஐஸன்ஹோவர், அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு முன், கொலம்பியா பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்தார்.
அப்பொழுது, பேராசிரியர் ஒருவர் ஐஸன்ஹோவரிடம் சென்று. “தளபதி அவர்களே! நீங்கள் இங்கே வருவதற்குமுன், நாங்கள் எவ்வளவு பயந்து கொண்டிருந்தோம் தெரியுமா” என்று வெட்கத்தோடு சொன்னார்.
ஐஸன்ஹோவர் சிரித்துக் கொண்டே, 'அப்படியா! இங்கே வருவதற்குமுன் உங்களைப் பற்றி நான் என்ன பயம் பயந்து கொண்டிருந்தேன் தெரியுமா? அதைக் கேட்டால் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும்” என்றார்.
பழகாததால் ஏற்படும் குறையே பயத்துக்குக் காரணம்!
(10) ஒரு சொல்லுக்குப் பொருள்
* * *
ஹம்ப்ரீ பொகார்ட் என்ற நடிகர், அவருடைய மனைவி, நடிகை லாரென்பகால் ஆகிய மூவரும் ஒரு விளையாட்டுக் கழகத்தில், இனிமையாக உரையாடிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது கொலம்பியா பட நிறுவனத்தின் தலைவர் ஹாரிகோஹன் அந்தப் பக்கமாய் வந்து நடிகர் பொகார்ட்டிடம் ஏதோ கிசு கிசுத்து விட்டுப் போனார்.
உடனே நடிகர் பொகார்ட், தன் மனைவியிடம், "நான் நடித்திருக்கும் படம் நல்ல வெற்றியைத் தரும்” என்று சொன்னார்.
"அதெப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டாள் நடிகை பகால், - -
"பட அதிபர் கோஹன்,' நமது படம்' என்று அதை இப்பொழுது என்னிடம் குறிப்பிட்டார். அது வெற்றிகரமான படம் அல்லவென்றால், இப்படிக் குறிப்பிடாமல் உன் படம் என்று அல்லவா குறிப்பிட்டிருப்பார் என்றார் நடிகர்.
(11) ஆங்கிலம் தெரியாத மன்னர்
* * *
இங்கிலாந்து மன்னராக இருந்த முதலாம் ஜார்ஜ் மன்னருக்கு ஆங்கிலமே தெரியாது. அவர் ஜெர்மனியில் பிறந்தவர். ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைகூட அவருக்குப் பேசத் தெரியாது. -
(12) அவர் ஒருவரே புத்திசாலி
* * *
பிரிட்டிஷ் பிரதம மந்திரியாயிருந்த வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு ஒரு மருமகன் இருந்தார். அவர் ஒரு நடிகர். அவரோடு ஏதோ மனவருத்தம் காரணமாக சர்ச்சில் முகம் கொடுத்துப் பேசுவது இல்லை.
ஆனால், மருமகனுக்கோ தன் மாமனாரோடு நெருங்கிப் பழகிப் பேசவேண்டும் என்ற ஆவல் உண்டு.
ஒரு விருந்தில், மருமகன், சர்ச்சிலைப் பார்த்து, உலகத்திலேயே பெரிய ராஜதந்திரி எனப் பெயர் பெற்றவர் யார்? என்று கேட்டார்.
அதற்கு சர்ச்சில் உடனே, இத்தாலியின் சர்வாதிகாரி முஸ்ஸோலினி என்று பதில் அளித்தார்.
அதைக் கேட்டதும், விருந்தில் இருந்தோருக்கு எல்லாம் வியப்பாக இருந்தது.
“வெறுமனே வேடிக்கைக்காகச் சொல்லுகிறீர்கள். முஸ்ஸோலினி அப்படி என்ன பிரமாத ராஜதந்திரியா? என்று கேட்டார் மருமகன்.
ஆற அமர, சுருட்டுப் புகையை விட்டுக் கொண்டே, சந்தேகம் இல்லாமல். எங்களுக்குள் அவர் ஒருவர் தான் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டார். மருமகனைச் சுட்டுத் தள்ளிவிட்டார்! என்றார்.
(13) பெருந்தன்மையாளர்
* * *
'மிக உயர்வான கார். அதை ஒட்டி வந்த டிரைவரோ மிகவும் மிடுக்காக இருந்தார். நன்றாக உடை அணிந்து கண்ணியமிக்கவராகத் திகழ்ந்தார்.'
அதனால் நான் வீடு சேர்ந்ததும் அந்த டிரைவருக்ககு எவ்வளவு கட்டணம் கொடுப்பது என்று திகைத்து விட்டேன். சாதாரண டாக்ஸி டிரைவர்களுக்குக் கொடுக்கும் வழக்கமான கட்டணமான ஆறு பென்சுக்கு அதிகமாகவே இவருக்குக் கொடுத்தாக வேண்டும் என்று எண்ணி, ஐந்து ஷில்லிங் அளித்தேன். அவர் அதை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டது எனக்குப் பெரிதும் வியப்பாகத்தான் இருந்தது.
மறுநாள் அந்த மனிதர் என்னைப் பார்க்க வந்தார். அவர் பெயர் அச்சிட்ட சீட்டைக் கண்டதும் எனது வியப்பு அதிகமாயிற்று. பல லட்சங்களுக்கு அதிபதியான ராஜா அவர் என்பது தெரிந்தது” என்று குறிப்பிடுகிறார் பெர்னாட் ஷா.
(14) பொறுப்பற்றவர்களின் போக்கு
* * *
தீனபந்து ஆண்டட்ரூஸின் தந்தை, ஒரு சமயம் ரயில் நிலையத்தில் வாழைப் பழத் தோலால் சறுக்கி விழுந்தார். அதன் விளைவாகப் படுத்த படுக்கையாகி, பின்னர் மரணம் அடைந்து விட்டார். .
அது முதல், அவர் வாழைப் பழத்தோலை எங்கே கண்டாலும் அதை எடுத்து அப்பால் எறிந்துவிட்டுச் செல்வதே அவருடைய வழக்கம்
வாழைப் பழத்தைத் தின்று விட்டு, தோலை தெருவின் மத்தியில் எறியும் பொறுப்பற்றவர்களை இன்றும், எங்கேயும் காணலாம்.
(15) இராணுவமேதைகளின் தகுதி
* * *
இராணுவத்துக்கு ஆள் சேர்த்துக் கொள்வது என்றால், உடல் நலம், உயரம், கனம் முதலான எத்தனையோ சோதனைகளைச் செய்கிறார்கள். -
உலகத்தின் சிறந்த இராணுவ மேதைகளுக்கு மட்டும் அம்மாதிரிதேர்வுகளில் அவர்கள் தேறியிருக்கவே மாட்டார்கள். அளவுக்கு அதிகமான உடல் நிறையுடையவர் பிஸ்மார்க். பொய்ப் பற்கள் கட்டிக் கொண்டிருந்தார் ஜார்ஜ் வாஷிங்டன். - வயிற்றிலே புண் இருந்தது நெப்போலியனுக்கு. காக்கை வலிப்பு உடையவர் ஜூலியஸ் ஸீஸர். ஒற்றைக் கண், ஒற்றைக் கையர் நெல்சன். சூம்பிய கைகளை உடையவர் வில்லியம் கெய்ஸர். உடல் எடைகுறைவாக இருந்தவர் வெல்லிங்டன்.
(16) அதிசயமான விஞ்ஞானி
* * *
ஹென்றி காவெண்டிஷ் என்ற விஞ்ஞானியின் பெயரை மாணவர்கள் அனைவரும் அறிவார்கள்.
பிராண வாயுவை முதன் முதலில் கண்டுபிடித்தவர் அவரே. ஹைட்ரஜனும் பிராணவாயுவும் சேர்ந்த சேர்க்கைப் பொருள்தான் தண்ணீர் என நிரூபித்துக் காட்டியவர்.
மிகப் பெரிய செல்வந்தர்; திருமணம் செய்து கொள்ளாதவர்; சிறந்த எழுத்தாளரும் கூட. என்றாலும், தம்முடைய தொழில் பற்றிய காரியங்களைத் தவிர மற்றவற்றில் அவருடைய ஞாபகசக்தி பூஜ்யமே, இக்குறை காரணமாக அவரால் பிறருடன் நெருங்கிப்பழக இயலாமல் போயிற்று.
சமுதாயத்தின் வாழ்வுக்கு அஞ்சி, தம்முடைய வீட்டுக்குள்ளேயே பதினான்கு ஆண்டுகள் சிறைவாசம் போல் வாழ்ந்து வந்தார்.
அவருடைய உருவத்தை ஒவியர் தீட்டிக் கொண்டிருக்கும் போதே ஞாபக மறதியாய் அவர் வேறு பக்கமாகத் திரும்பிக் கொண்டார். ஆகவே, அதே பாவனையில்தான் ஓவியர் சித்திரத்தை வரைந்து முடிக்க வேண்டியதாயிற்று.
(17) விலை மதிப்பற்ற சிறப்புடையது
* * *
'இழந்த சொர்க்கம்' என்னும் உலகப் புகழ்பெற்ற காவியத்தை இயற்றிய கவிஞர் மில்டன், அந்தக் காவியத்துக்குப் பதிப்பாளரிடமிருந்து பெற்றுக்கொண்ட சன்மானம் எவ்வளவு என்று நினைக்கிறீர்கள்?
பத்தே பத்துப் பவுன்கள் மட்டுமே.
அதைப் பற்றி மார்க் பட்டிசன் என்பவர் கூறுகிறார்:
'அதனால் பரவாயில்லை!. ஆங்கிலத்தின் மகுடம் போன்ற இந்தக் காவியம் ஒருவரிக்கு ஒரு பவுன் பெறுமானம் உடையது. (அட்சர லட்சம்) என்று சொல்லப் படுவதைவிட அதற்கு விலையே கிடையாது. (விலைமதிப்பற்றது) என்ற புகழ் இருப்பதே மேல்”. -
தங்களுடைய படைப்புகளை மிகக் குறைந்த சன்மானத்துக்கு விற்று விட்டு, வருந்திக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் இதனால் ஆறுதல் பெறலாம் போலும்! -
(18) புகழ் விளம்பரம்
* * *
செவ்வாய்க் கிரகத்தைத் தவிர வேறு புதிய கிரகத்தைக் கண்டு பிடிப்பவர்களுக்கு ஐயாயிரம் டாலர்கள் பரிசு அளிப்பதாக பிரான்சு தேசத்தின் விஞ்ஞானக் கழகம் அறிக்கை வெளியிட்டது.
அதேபோல், அன்னா கஜ்மன் என்ற அம்மையாரும் இருபதினாயிரம் டாலர்கள் பரிசு அளிப்பதாக அறிவித்திருந்தார்.
பல விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். ஆனால், பரிசு அளிப்பதாகச் சொன்னவர்கள் மெளனமாக இருந்து விட்டனர்.
இவ்வாறு பலர் பொது, மேடையில் அறிவித்து பத்திரிகையில் விளம்பரம், புகழ் தேடிக் கொள்வார்கள். பிறகு பேச்சே இருக்காது.
(19) கண்டு களிப்புறும் ஆசை
* * *
பல வண்ணங்கள் மிளிர, அற்புதமான, சூரியன் மறையும் காட்சியைச் சித்திரம் தீட்டியிருந்தார் ஓவியர் டர்னர்.
அந்தச் சித்திரக் காட்சியைக் கண்ட ஒரு சீமாட்டி, "ஓவியக் கலைஞரே, இம்மாதிரி வண்ணங்களில், கதிரவன் மறையும் காட்சியை நான் கண்டதில்லையே” என்றார்.
“சீமாட்டி அவர்களே, நீங்கள் கண்டிருக்க வேண்டியதில்லை; அப்படிக் கண்டுகளிக்க வேண்டும் என்று உங்களுக்கு ஆசையாக இல்லையா?” என்று பதில் அளித்தார் அந்த ஓவியக் கலைஞர். .
(20) விருந்தை மறந்தவர்
* * *
பிரிட்டிஷ் கண்காட்சிசாலையின் பொறுப்பாளர் ஒருவர், தம்முடைய நண்பர்களுக்கெல்லாம் விருந்து அளிக்க வேண்டும் என்று விரும்பினார்.
குறிப்பிட்ட நாளில், ஒரு உணவு விடுதிக்கு வந்து சேருமாறு எல்லோருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த விடுதியில் தகுந்த ஏற்பாடுகளை முன்னதாகவே செய்திருந்தார்.
ஆனால், நண்பர்களை வரவேற்பதற்கு, குறிப்பிட்ட நாளுக்கு மறுநாள் அவர் போய்ச்சேர்ந்தார். ஞாபகமறதி. அவர் என்ன செய்வார், பாவம் !
(21) நண்பர் அளித்த உதவி
* * *
பிரெஞ்சு நாவலாசிரியர் அலெக்ஸாண்டர் டூமாஸ், நாவல் எழுதுவதில் புது முறையைக் கையாண்டவர்.
அவருக்கு மோக்வெட் என்ற நண்பர் ஒருவர் இருந்தார். அவர் நாவலின் அடிப்படை அமைப்பை டூமாஸிடம் கூறுவார். டூமாஸ் அதை விரிவுபடுத்தி எழுதிக் கொண்டே போவார்.
“நண்பர் மோக்வெட்டின் உதவியோடுதான் என் இலக்கியம் வளர்ந்தது”என்று டூமாஸ் நன்றியோடுகூறுகிறார். “என் நண்பர் கதை கூறினார்; நான் எழுதினேன்” என்று பெருமை கொள்கிறார் அந்தப் பிரபல ஆசிரியர்.
பிறருடைய கூட்டுறவில் தன் நாவல் பிறந்ததை, டூமாஸ் கண்ணியக் குறைவாகக் கருதவே இல்லை.
(22) பூச் செருகும் பழக்கம்
* * *
இளவரசர் ஆல்பர்ட், விக்டோரியா மகாராணியை மணந்து கொள்வதற்காக முதன் முதலில் பிரிட்டனுக்கு வந்து சேர்ந்ததும், அவருக்கு மகாராணி பூச் செண்டு ஒன்றைக் கொடுத்தார். -
ஆல்பர்ட் மிகவும் இங்கிதம் தெரிந்தவர். பூச் செண்டிலிருந்து ஒரு பூவை எடுத்து தன்னுடைய கோட்டின் காலரின் மடிப்பில் துவாரம் இட்டு அந்தப் பூவைச் செருகிக் கொண்டார்.
அதிலிருந்து எல்லோருமே தங்கள் கோட்டில் பூச் செருகும் துவாரம் போட்டுக் கொள்ளத் தொடங்கிவிட்டனர்.
(23) தந்தை செய்த உதவி
* * *
ஆல்பர்ட் ஹிச்காக், 'சஸ்பென்ஸ்' வைத்துப் படம் எடுப்பதில் நிபுணர் என்பது உலகம் அறியும்.
அவருடைய ஏழாவது வயதிலே, அவருடைய தந்தை, அவருக்கு ஏற்படுத்திய பெரிய சஸ்பென்ஸ்' மறக்க முடியாதது.
அவர் கூறுகிறார்:
“எனக்கு வயது அப்பொழுது ஏழு. என் தந்தை என்னிடம் ஒரு நாள் ஒரு கடிதத்தைக் கொடுத்துப் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விட்டு
வருமாறு பணித்தார். அரை நிஜார் அணிந்தபடி, அப்பாவின் கடிதத்தோடு போலீஸ் நிலையத்துக்கு ஒடினேன்.
நான் கொடுத்த கடிதத்தை வாங்கிப் பார்த்த சப் இன்ஸ்பெக்டர் அங்கே உள்ள அறையில் லாக்கப்பில் தள்ளினார். பூட்டி விட்டார். கிட இங்கே” என்று சொல்லி விட்டு அவர் வெளியே போய்விட்டார். எனக்கு எதுவுமே புரியவில்லை. சிறையில் அடைபடுவதற்கு நான் என்ன குற்றம் செய்தேன் என்று எண்ணித் தவித்தேன்.
இரண்டு மணி நேரம் கழித்து அந்தச் சிறையிலிருந்து எனக்கு விடுதலை கிடைத்தது.
அழுகையும் ஆத்திரமும் மேலிட வீட்டுக்கு ஒடி வந்தேன். அப்பாவைக் காரணம் கேட்பதற்குள் அவரே முந்திக் கொண்டார். -
“ஆல்பர்ட், உன் உள்ளமும் உதடுகளும் என்னவோ போலிருக்கின்றன என்று எனக்கு தெரியும். நீ சிறையில் இருந்த நிகழ்ச்சியானது எப்பொழுதும் என் உள்ளத்தை விட்டு நீங்காது. அந்த அருவருப்பை நீ நினைக்கும் போதெல்லாம், அத்தகைய அனுபவம் இனி எப்பொழுதும் நேராமல் இருக்க, நீ கவனமாக இருக்க வேண்டும்” என்று அறிவுரை கூறினார்.
நான் அப்படியே சிலை போல் நின்றேன்!
'அந்த அனுபவமானது என்னை, விழிப்போடு வாழக் கற்றுக் கொடுத்துவிட்டது',.
(24) பணமா? குழந்தையா?
* * *
சினிமா நடிகை ஜெனி டீர்னியிடம் அவருடைய தோழி, "உனக்குப் பத்தாயிரம் டாலர்கள் பணம் அல்லது பத்துக் குழந்தைகள் கிடைக்கும் என்றால், இரண்டில் நீ எதை விருமபுவாய்?” என்று கேட்டார்.
பத்து குழந்தைகளைத்தான்!” என்று உடனே பதில் அளித்தார் நடிகை. "ஏனென்றால் பத்தாயிரம் டாலரைப் பெற்ற பின்ன்ரும் மேலும் மேலும் பண ஆசை அதிகரித்துக் கொண்டே போகும் பத்துக் குழந்தைகளைப் பெற்றாலோ போதும் போதும் என்றாகிவிடும்” என்ற காரணமும் கூறினார் நடிகை.
பெரும்பாலோர் பணத்தையே விரும்புவார்கள்!
(25) புரட்சியால் பெற்ற பதவி
* * *
அயர்லாந்து நாட்டிலே 1848ம் ஆண்டில், பெரும் புரட்சி செய்த இளைஞர்கள் மீது ராஜத்துரோக வழக்கு நடைபெற்றது.
அவர்கள் ஒன்பது இளைஞர்கள், அவர்களின் தலைவனின் பெயர் சார்லஸ் டபி.
அந்த ஒன்பது பேர்களுடைய வழக்கை விசாரணை செய்த நீதிபதி, தண்டனை அளிப்பதற்கு முன், குற்றவாளிகளைப் பார்த்து, “நீங்கள் ஏதாவது சொல்லிக் கொள்ள விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்.
அவர்களில் ஒருவர், “நீதிபதி அவர்களே! இதுவே எங்களுடைய முதல் குற்றம். அடுத்த தடவை இதை விடக் கொஞ்சம் மேலாகவே நடந்து கொள்ளுகிறோம். நிச்சயமாகச் சொல்லுகிறோம், இன்னொரு முறை குற்றம் புரியும்போது பிடிபடாமல் தப்பி விடுவோம்” என்று கூறினான்.
அவனுடைய பேச்சில் காணப்பட்ட திமிரானது நீதிபதியைச் சினம் கொள்ளச் செய்தது. ஆத்திரம் அடைந்த நீதிபதி அந்த ஒன்பது இளுைஞர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்தார்.
தீர்ப்பைக் கண்டு உலகம் முழுதும் கண்டனம் எழுந்தது. கொடுரமான தண்டனை என்ற கூக்குரல் எங்கும் கிளம்பியது.
அப்பொழுது, ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றினார்.
அந்த ஒன்பது பேர்களையும் காட்டுமிராண்டிகள் நிறைந்த ஒரு தீவுக்கு அனுப்பி வைத்தார்கள்.
பதினைந்து ஆண்டுகளுக்குப்பிறகு, விக்டோரியா ராணி ஆட்சிக்காலத்திலேயே, அந்த ஒன்பது பேர்களின் தலைவரான சார்லஸ் டபி தேர்தலில் வெற்றி பெற்று, அதே அயர்லாந்து நாட்டிற்கு முதல் அமைச்சர் ஆகிவிட்டார்.
அதை அறிந்து ஆச்சரியம் அடைந்த விக்டோரியா ராணி, “மற்றவர்கள் என்ன ஆனார்கள்?’ என்று கேட்டார்.
அதற்கு முதல் அமைச்சரான சார்லஸ் டபி அளித்த பதில்.
ஒருவர் கவர்னர்; இரண்டு பேர் ராணுவத் தளபதிகள்; இன்னொருவர் கவர்னர் ஜெனரல்; மற்றொருவர் அட்டர்னி ஜெனரல்; வேறெருவர் சபைத் தலைவர்; மீதி இருவரில் ஒருவர் நகர மேயர்; இன்னொவர் பிரபல அரசியல்வாதி.”
புரட்சிக்காரர்களுக்குத் தண்டனையும் காத்திருக்கிறது; பதவியும் தயாராக இருக்கிறது. வரலற்றில் கண்ட உண்மை!
.(26) தேசிய கீதம் பாடிய நடிகர்
* * *
“என்னை முத்தமிடு', என்ற படத்தில், ஜாக் டயமண்ட் என்பவர் நடித்திருக்கிறார்.
அந்தப் படத்தில் நடிப்பதற்காக முதலில் அவர் விண்ணப்பம் அனுப்பியிருந்தார். டைரக்டரைப் பேட்டி காணச் சென்றார் டயமண்ட்.
“உமக்குப் பாடத் தெரியுமா?” என்று கேட்டார், டைரக்டர்.
“தெரியும்; பாடிக் காட்டுகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை! என்னுடைய பாடல் உங்களுக்குப் பிடித்தால், ஒன்றும் சொல்லாமல் எழுந்து நின்றால் போதும்' என்றார் டயமண்ட்.
'நட்சத்திர புள்ளி போட்ட கொடியே என்ற அமெரிக்க தேசீய கீதத்தைப் பாடினார் டயமண்ட். -
நிபந்தனைப்படியும், தேசீய கீதத்தின் மரியாதைக்காகவும் டைரக்டர் எழுந்து நின்றுவிட்டார்.
டயமண்டுக்கு நடிக்கச் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது.
புத்திசாலித்தனம் எப்பொழுதும் வெற்றி பெறும்.
(27) எதிர்பாராத பரிசுத்தொகை
* * *
நியூயார்க் குதிரைப் பந்தயத்தில் ஒருவன் இரண்டு டிக்கட்டுகள் வாங்கியிருந்தான்.
அந்தப் பந்தயம் முடிந்ததும் தான் கட்டிய நம்பருக்குள்ள குதிரை வெற்றி பெறவில்லை. ஆகையால், தன் பையிலிருந்த டிக்கட்டுகளை வெறுப்போடு கிழித்து எறியப் போனான். அதற்குள் அந்த டிக்கட்டுகளை ஒரு முறை பார்த்தான்.
அவை தான் நினைத்து வாங்கிய நம்பர்கள் இல்லை என்றும், தவறுதலாக தனக்கு வேறு நம்பர்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், தெரிய வந்தது. அந்த நம்பர்களை ஒரு முறை ஞாபகப்படுத்திப் பார்த்தபோது, அவை வெற்றி பெற்ற கரைகளுக்கான நம்பர்களாக இருந்தன. அவற்றைக் கொண்டு போய்க் கொடுத்த போது அன்றையப் பந்தயத்தில் அடித்த பெரிய பரிசு 5000 பவுன்கள் அவனுக்குக் கிடைத்தன.
(28) புதுமையான மூங்கில் திரை
* * *
ரஷ்யா என்றதும் 'இரும்புத் திரை' என்ற சொல் நமக்கு, இயல்பாகத் தெரியும்.
ஆனால்,'மூங்கில் திரை' என்றும் ஒரு திரை இருப்பதாக யாருமே கேள்விப்பட்டதில்லை. அந்த மூங்கில் திரையோ அரசியல் தொடர்புடையது அல்ல.
இந்த மூங்கில் திரையானது சீனா தேசத்தில் ஒவ்வொரு சைனாக்காரர் வீட்டிலும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது.
இந்தத் திரை எதற்காகத் தெரியுமா? வீட்டில் ஆண்கள் இருக்கும் இடத்தையும் பெண்கள் இருக்கும் இடத்தையும் பிரித்துக் காட்டுவதற்காகவே.
அந்த இடத்தை ஆண்கள் எட்டிப்பார்த்தது கூட இல்லை. அந்த வீட்டின் குடும்பத் தலைவன் கூட தன் மனைவி இருக்கும் அறைக்குள் தலையை நீட்டிப்பார்க்கலாமே தவிர, வீட்டில் மற்ற பெண்கள் இருக்கின்ற இடத்தைப் பார்க்கவே முடியாது.
ஒரு சமயம், ஒரு பெண் நோயுற்று விட்டாள். மருத்துவர் அழைத்துவரப்பட்டார். ஆனால் அந்த மருத்துவரோ நோயுற்ற பெண் இருக்கும் இடத்துக்கு அனுமதிக்கப் படவில்லை. மூங்கில் திரைக்கு அப்பால் நிற்க வேண்டியதாயிற்று.
ஆனால், அந்தத் திரையின் வழியாக ஒரு கை நீண்டது. அந்தக் கையில் தந்தத்தினால் செய்த ஒரு சிறிய பொம்மை இருந்தது. அதன் ஒரு பகுதியில் ஒரு அடையாளம் வைக்கப்பட்டிருந்தது. அந்த அடையாளமிட்ட இடம் மாதிரி அந்த நோயாளிப் பெண்ணின் உடலின் பகுதியில் வேதனை இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகவாம். .
மருத்துவர் அந்தப் பொம்மை மீது அடையாளம் இட்ட இடத்தைப் பார்த்துப் பரிசோதனை செய்துவிட்டு, அந்த நோயாளியைப் பார்க்காமலும், தொடாமலும் நோயை யூகித்துக் கொண்டு மருந்து தருவாராம். அந்த மருந்தைச் சாப்பிட்டு விட்டு அந்த நோயாளிப் பெண் குணமடைந்து விட்டாள்!
(29) சர்வாதிகாரியின் ரசனை
* * *
ரஷ்யத் தலைவராயிருந்த ஸ்டாலினுக்கு இசை என்றால் பகையாம். முதல் முறையாக, புதிய பாடல்கள் அரங்கேற்றப்படும் இசை விழாவுக்கு ஒரு முறை வருகைபுரிய நேர்ந்த அவர் ஆத்திரத்தோடு எழுந்து வெளியேறி விட்டாராம்.
காரணம் என்ன? ஒரு ட்யூனைக் கூட விசில் அடிப்பதற்காக நினைவு வைத்துக் கொள்ள இயலவில்லையே' என்றாராம்.
ஸ்டாலின் ரசனையே தனிப்போக்கு உடையது.
பெரிய கிரம்லின் மாளிகையில் அவருக்காக மூன்று அறைகள் தான் உபயோகத்திற்காக ஒதுக்கியிருந்ததாம்.
புலால் உணவில் அவருக்கு விருப்பம் அதிகம். அதிகமான புகைக் குடியர், நாள் ஒன்றுக்கு நாற்பது சுங்கான் காரமான புகையிலையைப் புகைத்து ஊதுவாராம்.
சிகரெட் பிடிப்பது அரிது. ஆனால், சுருட்டு அறவே பிடிக்காது.
சர்ச்சில் அவருக்கு ஒரு சுருட்டைக் கொடுத்த போது அவர் வந்தனத்தோடு மறுத்துவிட்டார்.
(30) பிடித்தமானவை
* * *
புகழ்மிக்க ஆங்கிலக் கவிஞர் பைரனுக்கு புகையிலையை வாயில் போட்டு, மணிக்கணக்காக குதப்பிக் கொண்டிருப்பதில் பிரியம் அதிகமாம்.
மற்றும் இளைஞரைப் போல் நகத்தைக் கடித்துக் கொண்டே இருப்பாராம்.
(31) போலிசுக்கு உதவும் கள்ள பாங்க்
* * *
இரண்டாவது போருக்குப் பிறகு பிளாக் மார்க்கெட் கறுப்புச் சந்தை' என்ற சொல் உலக மக்களிடையே பிரபலமாகி விட்டது! -
அதேமாதிரி பிளாக் பாங்க் ஒன்று இருப்பதாகக் கேள்விப்பட்டால் வியப்பாக இருக்கும் அல்லவா?
மேலும், அந்த பிளாக் பாங்க் இயங்கி வர போலிஸாரே அனுமதித்திருக்கிறார்கள் என்றால் அதைப் பற்றி என்ன சொல்லுவது? இது பிரான்ஸ் தேசத்தில் நடைபெற்று வந்தது.
ஒரு சமயம், சுதர்லண்ட் சீமாட்டி தன் கணவருடன் பாரிஸிலிருந்து லண்டனுக்குப் பிரயாணம் செய்தபோது
டோவருக்குப் புறப்பட்ட படகு ரயிலில் அவருடைய விலையுயர்ந்த நகைகள் அடங்கிய பெட்டியை அவர்களுடைய வேலைக்காரன் திருடிக் கொண்டு போய் விட்டான்.
பயணத்தை முடித்துக் கொண்டு சீமாட்டி பாரிஸ் நகரத்துக்குத் திரும்பி வந்தார். போலீஸாரிடம் புகார் செய்தார். அதைக் காதில் வாங்கிக் கொண்ட போலீஸ் கமிஷனர், "அப்படியா, சரிதான். இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அந்த நகைகள் உங்களுக்குத் திரும்பக் கிடைக்க வழி இருக்கிறது. பிளாக் பாங்க் மூலமாக அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். நீங்கள் போய் அவர்களைக் கேளுங்கள்” என்றார்.
"பிளாக் பாங்கா?” என்று கேட்டார் சீமாட்டி
ஆமாம் உங்களைப்போலவே ஒருவர் அண்மையில் சுமார் 40,000 பவுன்கள் பெறுமதியுடைய பங்குப் பத்திரங்களை இழந்து விட்டார். 8,000 பிராங்குகள் அந்த பிளாக் பாங்கியில் அவர் கட்டிய பிறகு அந்தப் பத்திரங்கள் அவருக்குத் திரும்பக் கிடைத்துவிட்டன. நீங்களும் அவர்களை அணுகிக் கேட்டுப் பாருங்கள்” என்றார்.
“என்ன இப்படி ஒரு பாங்கா? இம்மாதிரி திருட்டு நடவடிக்கை நிகழ்வதற்கு நீங்கள் அனுமதித்து இருக்கிறீர்களா?” என்று போலிஸ் கமிஷனரைக் கேட்டார் சீமாட்டி.
“சீமாட்டியாரே, அந்த பாங்க் நடப்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்களுடைய அனுமதியோடுதான் அது
இயங்குகிறது. ஏனென்றால், அதனால் எங்களுக்குச் சில உதவிகள் கிடைக்கின்றன. மேலும், எங்கள் வேலையும் எளிதாகி விடுகிறது” என்றார் கமிஷனர் மிகவும் அமைதியோடு.
(32) கிழவி சொன்ன யோசனை
* * *
அந்தச் சிடுமூஞ்சிக் கிழவி அன்பாகப் பேசி எவரும் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை.
அக்பர் சக்கரவர்த்தி கிழவியைப்பற்றி கேள்வியுற்றார். கிழவியின் கிடுமூஞ்சித் தனத்தை மாற்றக் கருதி, மாறுவேடத்தில் கிழவியைக் காணச் சென்றார்.
கிழவியோ ஆற்றைக் கடப்பதற்காகக் கரையிலே காத்திருந்தாள். படகு இருந்தது; ஆனால், படகோட்டியைத் தான் காணவில்லை. கிழவி சுற்று முற்றும் பார்த்துவிட்டுச் சிடுசிடு வென்று முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள்.
மாறுவேடத்தோடு தன் அருகில் வந்த அக்பரைக் கிழவி, "நீ எங்கே போக வேண்டும்? என்று கடுகடுப்போடு கேட்டாள்.
"அக்கரைக்கு” என்றார் மாறுவேட அக்பர்.
"உனக்குப் படகு ஒட்டத் தெரியுமா?” என்று கிழவி கேட்டாள்.
“தெரியுமே”என்றார் அக்பர்.
‘தெரியும் என்றால், நீயே படகை ஒட்டித் தொலை; பாவிப் படகுக்காரனைக் காணவில்லையே” என்றாள் கிழவி.
அக்பர் படகைச் செலுத்த, கிழவி அதிலே உட்கார்ந்திருந்தாள். -
படகு ஆற்றில் போய்க் கொண்டிருந்தபோது, "இந்த நாட்டை ஆட்சி புரிகின்ற மன்னனுக்குப் புத்தியே இல்லை. இருந்தால், ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டச் சொல்லி இருக்க மாட்டாரா?” என்று கடுகடுத்தாள் கிழவி.
உடனே, மாறுவேடத்தைக் களைந்துவிட்டு, "அம்மையே நான்தான் இந்த நாட்டின் அரசன்! இப்பொழுதே பாலம் கட்டுவதற்கு உத்தரவிடுகிறேன்” என்றார்.
அந்த வினாடி முதல் கிழவியின் சிடுமூஞ்சித்தனம் போன இடம் தெரியவில்லை.
(33) அந்த டாக்டர் இல்லையே!
* * *
இத்தாலியின் பிரபல நூலாசிரியர் பிராண்டல்லோ, ஸிஸிலி என்னும் கிராமத்தில் ஒரு சமயம் நோயுற்றிருந்தார்.
உள்ளூர் டாக்டர் ஒருவர், ஆசிரியருக்கு மருந்து கொடுத்து, ஆறுதல் கூற முற்பட்டார்.
'ஐயா, ஒன்றுக்கும் பயப்படாதீர்கள்; சில ஆண்டுகளுக்கு முன் எனக்குக் கூட இந்த மாதிரிதான் ஆபத்தான நோய் உண்டாயிற்று. ஆனால், நான் முற்றிலும் குணம் பெற்று, பிழைத்துவிட்டேன்” என்றார் டாக்டர்.
“அது சரிதான் டாக்டர். ஆனால், உங்களுக்கு வாய்த்த அதே டாக்டர் இல்லையே எனக்கு வாய்த்திருப்பவர்? என்றார் ஆசிரியர்.
(34) பேசுவதில் என்ன பயன்
* * *
விமானத்தை முதன் முதல் தயாரித்துப் பறந்த ரைட் சகோதரர்களுள் மூத்தவரான ஆர்வில் ரைட்டுக்கு ஒரு விருந்து அளிக்கப்ப்பட்டது. -
அந்த விருந்துக்கு வந்திருந்த ஒருவர், “முதலில் பறந்தவர் பேராசிரியர் லாங்லி என்பவர்தான், நீங்கள் அல்ல என்று ஒருவர் கூறுகிறாரே! அதை நீங்கள் கம்மா விடக்கூடாது, பதில் சொல்ல வேண்டும்; நீங்கள் பேசாம்ல் இருந்து விடுகிறீர்களே. உங்களை விளம்பரம் செய்து கொள்வதில்லை. பேசுங்கள். பலமாக அடித்துப் பேசுங்கள்” என்று வற்புறுத்தினார்.
“நண்பரே, உங்களுக்கு ஒன்று தெரியுமா? பறவைகளைப் பாருங்கள்! அவற்றினுள் கிளிதான் பேச்சிலே சிறந்தது. ஆனால், பறப்பதிலே தாழ்ந்தது” என்றார் ஆர்வில் ரைட்
அதிகம் பேசுபவர்கள் செயல்படுவதில்லை.
(35) அடக்கமான பெருந்தன்மை
* * *
பெல்ஜிய நாட்டின் கவிஞரும் நாடக ஆசிரியருமான மாரிஸ் மேட்டர்லிங்கின் எண்பதாவது பிறந்த நாளை மிகச் சிறப்பாக நடத்தி விருந்து வைக்க வேண்டும் என்று நண்பர்கள் மிகவும் ஆசைப்பட்டார்கள்.
மேட்டர்லிங்க் அதை மறுத்து விட்டார்.
"உங்களைப் பாராட்டி நாங்கள் விருந்து வைக்கக் கூடாது என்று ஏன் தடுக்கிறீர்கள்”என்று நண்பர்கள் அவரைக் கேட்டனர்.
"ஏனா? எத்தனையோ இளைஞர்கள் மரணம் அடையும் இந்தக் காலத்தில், எண்பது வயதுக் கிழவனைப் பற்றி உலகம் கவலைப்படுவது நியாயம் அல்ல” என்றார் மேட்டர்லிங்க்.
இப்பொழுது, இவ்வாறு கூறுபவர்கள் யார்?
(36) இரவல் கொடுக்கலாமா?
* * *
ஆங்கில நூல் ஆசிரியரான டி. குவின்ஸி, இரவல் வாங்கிய புத்தகத்தை திருப்பிக் கொடுப்பதே கிடையாது. கவனமாகப் பாதுகாக்கவும் மாட்டார்.
தனக்கு வேண்டிய விஷயங்கள் ஏதேனும் இருக்கக் கண்டால் அந்தப் பக்கங்களை வெட்டி எடுத்துக் கொள்வார்.
எவ்வளவு விலை உயர்ந்த புத்தகமானாலும் சரி, அந்த இரவல் புத்தகங்களிலிருந்து பக்கங்களை கிழித்துக் கொள்வாரேயன்றி வேறு தாளில் நகல் செய்து கொள்ள மாட்டார். . . -
நூலகங்களில் இப்படிச் செய்வோர் இன்றும் இருக்கின்றனர். .
(37) நோயைப் பரப்பியவர்
* * *
அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் அப்டன் ஸிங்க்ளேர் சிறு வயதில் கக்குவான் இருமலால் சிரமப்பட்டார்.
அதனால் மற்ற சிறுவர்கள் அவரை அணுகாமல் அவர்களுடைய பெற்றோர்கள் தடுத்துவிட்டார்கள்.
தனியே இருக்க விரும்பாத ஸிங்க்ளேர், கோபம் கொண்டு அடுத்த வீட்டு, எதிர் வீட்டுப் பையன்களையெல்லாம் கட்டிப் பிடித்து, அவர்களுடைய முகங்களுக்கு எதிரே பலமாக இருமி, இருமி எல்லோருக்கும் இருமல் உண்டாகும்படி செய்து விட்டாராம்.
தன்னுடைய இளமைப் பருவத்து சின்னப் புத்தியைப் பற்றி அவர் வருந்திக் கூறகிறார்.
தற்காலத்தில் 'முதலாளித் தனம்' என்ற நோய், உலகில் இவ்வாறுதான் பரவுவதாக அவர் உதாரணம் கூறுவது உண்டு.
(38) பெரிய மனிதன் யார்?
* * *
ஆங்கில எழுத்தாளர் ஜி. கே. செஸ்டர்டன் ஆறடி உயரமும் முந்நூறு பவுண்டு கனமும் உள்ள பெரிய மனிதர்!
“எல்லோரும் அறிந்திருக்கும்படி பிரமுகராகப் பெயர் பெற்றிருப்பது மிகவும் சிறப்பு அல்லவா?”என்று கேட்டாள் ஒரு இளம் பெண்.
"ஆமாம், என்னை எல்லோருக்கும் தெரியும். தெரியாதவர்கள் இந்தப் பெரிய மனிதர் யார் என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்” என்று பெருமையாகச் சொன்னாராம் செஸ்டர்டன்.
(39) மறுபடியும் தொடங்கலாமா?
* * *
ஐரோப்பாவில், பதினெட்டாம் நூற்றாண்டில் ராஸினி என்ற நாடக நடிகர் ஒருவர் இருந்தார்.
அவருடைய நண்பர் ஒருவர் தன் விட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார்.
விருந்திலே பரிமாறப் பட்டிருந்த பண்டங்கள் கால் வயிற்றுக்குக் கூடப் போதாமல் வைக்கப்பட்டிருந்தன.
விருந்து முடிந்து எழுந்தபோது, நடிகரிடம் உபசாரமாக, “நண்பரே, தாங்கள் மறுபடியும் கூடிய சீக்கிரம் என் வீட்டிற்கு விருந்து உண்ண வரவேண்டும்” என்று கூறினார் நண்பர்.
“ஆகா, அதற்கு என்ன? தடையின்றி உண்ண வருகிறேன். ஏன்? இப்பொழுதே அதைத் தொடங்கி விடுகிறேனே" என்றார் நடிகர்.
பல விருந்துகளிலே, வயிறு நிறைவதே இல்லை!
(40) தமிழில் பேசி வெற்றி பெற்றார்
* * *
அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்கு இந்தியப் பிரதிநிதியாகச் சென்ற 'ஹிதவாதா' பத்திரிகை ஆசிரியர் ஏ.டி.மணி, அந்த மாகாணத்திலுள்ள அட்லாண்டா நகருக்குப் போயிருந்தார். அங்கே தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி எழுதுகிறார்:
வெள்ளையர் ஹோட்டல்களில் கருப்பர்களை அனுமதிக்க மாட்டார்கள் என்று முன்னரே எனக்குச் சிலர் எச்சரித்திருந்தார்கள்.
“நான் அட்லாண்டா நகருக்கு மாலைவேளையில் போய்ச் சேர்ந்தேன். எந்த ஹோட்டலுக்குப் போனாலும் வெள்ளையருக்கு மட்டும் என்ற பலகை வெளியே தொங்க விடப்பட்டிருப்பதைக் கண்டேன். ஆகவே, அன்று இரவு நான் பட்டினி கிடக்கும்படி நேரிட்டது.
“பசி காரணமாக என் மூளை தீவிரமாக வேலை செய்தது. ஒரு வழி தோன்றியது. மறுநாள் காலை, வெள்ளையர் ஹோட்டலுக்குள் சென்று, "எனக்கு ஏதாவது சாப்பிடத் தாருங்கள்” என்று தமிழிலே கேட்டேன். - -
நான் சொன்னது அங்கே இருந்த எவருக்குமே புரியவில்லை. ஆகவே, என்னை அயல்நாட்டார் என்று தெரிந்து கொண்டனர். என்னை வெளியே போகச் சொல்லாமல் உணவு பரிமாறினார்கள். அந்த நகரில், அந்த ஹோட்டலிலேயே தங்கினேன்.” .
(41) வரியும் வர்ண விளக்கமும்
* * *
அமெரிக்கர் ஒருவர், ஹாலந்து நாட்டிலிருந்து வந்திருந்த ஒருவரிடம், “உங்கள் நாட்டு தேசியக் கொடி எப்படி இருக்கும்?” என்று கேட்டார்.
“அதில் சிவப்பு வெள்ளை, நீலம் ஆகிய மூன்று நிறப் பட்டைகள் இருக்கும். எங்கள் நாட்டின் வரிகளைக் குறிப்பிடவே அந்த நிறங்களை ஏற்படுத்தியுள்ளனர்” என்று எண்ணுகிறேன்.
அதாவது வரி அறிவிப்பு வந்ததும், எங்கள் முகம் சிவந்து விடும் வரியைச் செலுத்தத் தொடங்கினால் எங்கள் உடல் வெளுத்து விடும்; வரி முழுவதையும் செலுத்தி முடித்தோமானால், நாங்கள் செத்துச் சவமாகி நீலம் பாரித்து விடுவோம்” என்று விளக்கிக் கூறினார் ஹாலந்து நாட்டுக்காரர்.
‘எங்கள் நாட்டுக் கொடி விஷயமும் இதே கதை தான்! ஆனால், அதை நோக்கி, அண்ணாந்து நட்சத்திரங்களைப் பார்த்து வாயைப் பிளந்து கொண்டு நிற்கிறோம்” என்றார் அமெரிக்கர். .
உலகில் எங்கே பார்த்தாலும் அரசு விதிக்கும் பல வகை வரிகளால் பொதுமக்கள் பெரிதும் சலிப்புக்கு ஆளாகிறார்கள் என்பது தெரியவருகிறது.
(42) கொள்கைப்படி நடந்தார்
* * *
கிரீஸ் நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன், பெரிய தத்துவ அறிஞர் ஒருவர் இருந்தார்.
“ஒரு காரியத்தை விட, இன்னொரு காரியம் சிறந்தது என உறுதியாகக் கூறுவதற்கு ஏற்றபடி அறிவை யாரும் அடைந்து விட முடியாது' என்ற 'ஐயக் கொள்கை”, அவருடைய கொள்கையாகும்.
இந்தக் கொள்கையைக் கற்றுக் கொடுத்த இவருடைய ஆசிரியர் ஒரு நாள் வழியில் போய்க் கொண்டிருக்கும்போது எதிர்பாராமல் ஒரு குழியில் விழுந்து விட்டார். அவரால் வெளியே வர இயலவில்லை. -
அந்தச் சமயத்தில் அவ்வழியாக வந்த சீடர் தத்துவ அறிஞரின் நிலைமையைப் பார்த்தார். “இந்தக் கிழவரை வெளியே தூக்கி விடுவதால் ஏதேனும் நன்மை உண்டாகும் என்று எண்ணுவதற்குப் போதுமான காரணம் இல்லை” என
முடிவு செய்து, அவரை வெளியே தூக்கி விடாமலேயே போய்விட்டார்.
சிறிது நேரத்தில், அவ்வழியே சென்ற பொது மக்களில் சிலர் கிழவரை வெளியே தூக்கி விட்டதோடு, இரக்கம் இல்லாமல் நடந்து கொண்ட சீடரான தத்துவ அறிஞரை கண்டித்தனர்.
ஆனால், குழியில் விழுந்த கிழ ஆசிரியரோ, தாம் கற்றுக் கொடுத்த கொள்கைப்படியே தம்முடைய சீடர் நடந்து கொண்டதற்காக அவன்ரப் பாராட்டி மகிழ்ந்தார்.
(43) அதைப்பிறகு பார்த்துக்கொள்ளலாம்
* * *
பல அற்புதங்களைக் கண்டுபிடித்தவர் அமெரிக்க மேதை தாமஸ் எடிசன்.
அவருடைய 55வது வயது பிறந்த நாளைக் கொண்டாடப் பல பிரமுகர்கள் விருந்து உபசாரம் நடத்தினார்கள்.
அப்பொழுதுஎடிசனைப்பார்த்து,
இனிமேல், நீங்கள் என்ன செய்வதாக உத்தேசித்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
'75வது வயது வரை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பேன். 80வது வயதில் பெண்களோடு ஏதாவது வம்பளந்து கொண்டிருப்பேன்; 85 வது வயதில் கோல்ப் விளையாடக் கற்றுக் கொள்ளப்போகிறேன்” என்று கூறினார் எடிசன்.
'90 வது வயதில்?’ என்று கேட்டார்கள்.
எடிசன் ஒருவிதமாக தலையை அசைத்து விட்டு, “30 ஆண்டுகளுக்குப்பிறகு நடக்கப் போகிற விஷயங்களைப்பற்றி யெல்லாம் நான் திட்டமிட்டுக் கொண்டிருப்பதில்லை”என்றார்.
(44) வகுப்பு வேற்றுமை எங்கே?
* * *
அகில இந்திய காங்கிரஸின் முதல் தலைவர் W.C. பானர்ஜி என்ற கிறிஸ்தவர். இரண்டாவது காங்கிரஸ் தலைவர் தாதாபாய் நெளரோஜி என்னும் பார்ஸி. மூன்றாவது காங்கிரஸ் தலைவர் பக்ருதின் தயாப்ஜி என்ற முஸ்லீம். நான்காவது காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ்யூல் என்ற ஆங்கிலேயர்.
(45) லட்சங்களுக்கு மத்தியில் சலசலப்பு
* * *
ஜிம்மி டியூராண்டியில் சட்ட மன்றம் கூடிய போது, பரபரப்பான விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
“நான், நம் கடற்படைக்கு 15 லட்சம் டாலர் வாக்கு அளிக்கிறேன்” என்றார்.
மற்றொரு உறுப்பினர் துள்ளி எழுந்து "நான் நம் தரைப்படைக்கு 25 லட்சம் டாலர் வாக்கு அளிக்கிறேன் என்றார்.
இன்னொரு உறுப்பினர், "இரவல்-குத்தகை இனத்துக்கு 60 லட்சம் டாலர் வாக்கு அளிக்கிறேன்” என்றார்.
அந்தச் சமயத்தில் சபையில் ஏதோ கலவரம் திடீரென்று உண்டாயிற்று.
அது என்ன? உறுப்பினர் ஒருவர் போட்ட கூச்சல் காதில் விழுந்தது.
“என்னுடைய நிக்கல் நாணயம் ஒன்று கீழே விழுந்து விட்டது. அது என் கைக்கு அகப்படுகிறவரைக்கும், எவருமே இந்த மன்றத்தை விட்டு நகரக் கூடாது" என்பதே அந்தக் கூச்சல்!
(46) தோற்றமும் தகுதியும்
* * *
இளம் ஓவியர் ஒருவர் மாவீரன் நெப்போலியனைப் பேட்டி காணச் சென்றார். - -
ஏழ்மையில் வாடி, கந்தலும் கிழிசலுமான உடை அணிந்திருந்த அந்த ஒவியருக்கு சிறிது அருவருப்புடனேயே நெப்போலியன் பேட்டி அளித்தார். ஆனால் ஒவியர் அறிவும், பண்பும், கலைத்திறனும் உடைய சிறந்த கலைஞர் என்பதைப் பேசிக் கொண்டிருக்கையிலேயே புரிந்து கொண்டார் நெப்போலியன்.
பேட்டி முடிந்து ஒவியர் எழுந்தார். நெப்போலியனும் அவருடனேயே எழுந்தார். ஒவியர் விடைபெற்றுக் கொண்டு
வாயிலை நோக்கிச் சென்றார். நெப்போலியனும் அவருடன் வாசல் வரை சென்று வழியனுப்பினார். -
முதலில் அருவருப்புக் காட்டியவர், பிறகு இவ்வளவு பரிவு காட்டியதைக் கண்ட ஒவியர் வியப்புற்றதோடு அதை நெப்போலியனிடமே கூறியும் விட்டார்.
மாவீரர் அமைதியாக, "ஓவியக் கலைஞரே, முன்பின் தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய வெளித் தோற்றத்துக்கு ஏற்ற வரவேற்பு, ஆனால், பழகிப் பிரியும்போது அவரவர் தகுதிக்கு ஏற்ப விடை கொடுக்கிறோம்” என்று கூறினார்.
(47) புத்தகங்களினால் உண்டாகும் நன்மை
* * *
பிரபல நகைச் சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் வீட்டுக்குக் கிறிஸ்துமஸ் விழா சமயத்தில் நண்பர் ஒருவர் வந்தார். அவரும் ஒரு நூல் ஆசிரியரே. -
ட்வைனின் புத்தக அறைக்குள் நுழைந்தபோது, தரையில் ஏராளமான புத்தகங்கள் அடுக்கடுக்காக வைத்திருப்பதைக் கண்டார். -
“இவை எல்லாம் உங்களுக்கு வந்த கிறிஸ்துமஸ் பரிசுகளா?"என்று நண்பர் கேட்டார்.
"ஆமாம்” என்று தலையசைத்தார் ட்வைன்.
"நமக்குப் புத்தகங்களையே பரிசு அளிக்கிறார்களே, ஏன்? புத்தகங்களைத் தவிர வேறு ஒன்றும் நமக்குத் தேவை இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா?" என்று நண்பர் கேட்டார். .
"இருக்கலாம்; அதனால் என்ன? புத்தகங்கள் என்றாலே எனக்குப் பிரியம் அதிகம். உதாரணமாக, இதோ இந்தக் கனமான புத்தகங்களைப் பாருங்கள்! பூனைகள் மீது விட்டெறிய இவற்றை விடச் சிறந்த பொருள் வேறு கிடைக்காது. சிறிய புத்தகங்களை மேஜை, நாற்காலிகளின் கால்களுக்கு அடியில் வைத்தால் அவை ஆடி அசையாமல் இருக்கும். இதோ இருக்கிறதே தோல் பைண்டு செய்த புத்தகம், இதிலே சவரக் கத்தியைச் சுகமாகத் தீட்டலாம். ஆகையால்,புத்தகம் அருமையான பொருள். அவற்றையாரும் எனக்கு நிறையத் தாமாட்டேன் என்கிறார்களே. அது தான் என் மனக்குறை” என்றார் ட்வைன்.
(48) அங்கே போகலாமா?
* * *
அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நிகழ்வதற்கு முன்பு, வெண்டல் பிலிப்ஸ் என்ற சீர்திருத்தவாதி ஒருவர் இருந்தார்.
அவர் நாடெங்கும் சுற்றி நீக்ரோக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டு சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார்.
ஒகியோ மாநிலத்தில் பாதிரிகள் சிலர் வந்து சீர்திருத்தவாதியைச் சந்தித்தனர். "ஐயா, நீங்கள் தானே வெண்டல் பிலிப்ஸ்?" என்று கேட்டார்.ஒரு பாதிரி.
"ஆமாம்” என்று பதில் அளித்தார் பிலிப்ஸ். "நீக்ரோக்களின் விடுதலைக்காகப் பாடுபடுவதோடு, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே உங்கள் கருத்து அல்லவா?” என்று கேட்டார் பாதிரியார்.
"ஆமாம்.அதுவே என் கருத்து” என்றார் பிலிப்ஸ். "அப்படியானால், நீங்கள் ஏன் இங்கே வந்து சொற்பொழிவு செய்கிறீர்கள்? நீக்ரோக்கள் மிகுந்த மாநிலத்தில் போய்ச் சொற்பொழிவு நிகழ்த்துவதுதானே” என்றார் பாதிரி. -
"மன்னிக்க வேண்டும் நீங்கள் ஒரு பாதிரியா?" என்று கேட்டார் பிலிப்ஸ்.
"ஆமாம்” என்றார் பாதிரி.
நரகத்தில் அவதியுறாதபடி பாவிகளை எல்லாம் ரட்சிக்க முயற்சிப்பது உங்கள் வேலை இல்லையா?” என்று கேட்டார் பிலிப்ஸ்.
"ஆமாம் ஐயா, அதுவே என் வேலை" என்றார் பாதிரி.
"அப்படியானால்,நீங்கள் என் இங்கே இருந்துகொண்டு காலத்தை வீணடிக்கிறீர்கள்? நரகத்துக்குப் போய் உழைக்கலாமே” என்றார் பிலிப்ஸ்.
பாதிரி வாயடைத்துப் போனார்.
(49) மகிழ்ச்சியால் சாவதே மேல்
* * *
அமெரிக்க நடிகர் வில்லியம் கில்லெட் இளவயதில் ஒரு நாடகக் குழுவில் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். ஒரு சமயம், அவர் நடிக்கும் நாடகத்தில், மரணம் அடையும் பாத்திரத்தின் ஒரு காட்சி! அந்தக் காட்சியில் கில்லெட் நடித்த முறையானது நாடகக் குழு நிர்வாகிக்குத் திருப்தி அளிக்கவில்லை. அவர்,
"என்ன ஐயா, மரணம் அடையப் போகிறவராக நடிக்கின்ற நீங்கள், அந்தச் சமயத்தில் சிரித்துத் தொலைக்கிறீர்களே சுத்த மோசம்” என்று சீறி விழுந்தார்.
அதற்கு, "நீங்கள் கொடுக்கும் சம்பளத்தைப் பார்த்தால், அதை வாங்கிப்பிழைப்பதைக் காட்டிலும் இப்படி மகிழ்ச்சியாகச் சாவதே மேல் இல்லையா?” என்று சுடச்சுடப்பதில் அளித்தார் நடிகர்.
(50) திருமணத்தை மறந்தவர்
* * *
திருமண நாள்! அழகான ஆடை அலங்காத்தோடு மணமகள் காட்சி அளித்தாள்.
உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோர் ஆலயத்தில் வந்து குழுமியிருந்தனர்.
ஆனால், மணமகனைக் காணவில்லை.
பொறுமை இழந்து, கிசுகிசுக்கத் தொடங்கினார்கள். மணமகளோ தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறாள். மணமகனை அழைத்து வருவதற்கு நண்பன் ஒருவன் விரைந்து சென்றான். -
மணமகனோ தமது ரசாயன சோதனைக் கூடத்தில், திரவங்களை ஊற்றிக் கொண்டும் வடித்துக் கொண்டும் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்.
உடுத்தியிருந்த உடையோடு, அவசரம் அவசரமாக ஆலயத்துக்கு அழைத்துவரப்பட்டார் மணமகன். திருமணம் இனிதாக நிறைவேறியது. தன்னுடைய திருமணத்தை மறந்து, எல்லோரையும் வியப்படையும்படி செய்தவர் யார்?
அவர்தான் லூயி பாஸ்டியூர்! வெறிநாய் கடிக்கு மருந்து கண்டு பிடித்து, மனித குலத்துக்கு அளித்த சிறப்பு மிக்க விஞ்ஞான நிபுணர்.
பாலைக் கெட்டுப் போகாமல் வைப்பதற்கு வழி வகைகளை வகுத்துக் கொடுத்தவரும் அவரே!
(51) விடாக் கண்டரான கவிஞர்
* * *
தத்துவ மேதை ஜேம்ஸ் டூவர்ட் மில்லும் கவிஞர் கோல்ரிட்ஜும் ஒரு சமயம் வெகு நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.
கவிஞரோ தமது வழக்கப்படிதத்துவ மேதையின் சட்டைப் பொத்தானை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, கவனத்தை எல்லாம் அருகில் நின்ற விளக்குத் தூணில் செலுத்தியபடி மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால் தத்துவ மேதையோ அவசரமாகப் போக வேண்டியதிருந்தது. தமது சட்டைப் பையிலிருந்த சிறு கத்தியை எடுத்து பொத்தானுக்கும் தமக்கும் இருந்த தொடர்பை அறுத்து விட்டு, தப்பித்தது போதும் என்று விரைந்து ஓடிவிட்டார்.
தமது அலுவலை முடித்து விட்டு, வெகுநேரம் கழித்து திரும்பி, அந்த இடத்துக்கு வந்தார் தத்துவமேதை.
கையில் ஒரு பொத்தானைப் பிடித்தவாறு, விளக்குத் தூணைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தார் கவிஞர்.
(52) உயர்ந்து விட்டார்
* * *
ஸிங்க்ளேர் லூயிஸ் என்ற ஆசிரியர் நோபல் பரிசு பெற்றவர்.
இளமையில் அவர், பெரிய புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் விளம்பரத் துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு வாரச் சம்பளம் 23 டாலர்.
இரண்டாவது ஆண்டில், “இன்னும் இரண்டு டாலர் சம்பள உயர்வு வேண்டும்” என்றுதுணிவோடு கேட்டுவிட்டார் லூயிஸ்.
உரிமையாளரும் அவ்வாறு சம்பள உயர்வு அளித்தார். ஆனால், கொடுக்கும்போது, "லூயிஸ்,நீ நல்ல புத்திசாலியான இளைஞன்தான். ஆனாலும் அடிக்கடி சம்பள உயர்வு கேட்கிறாயே; அது சரியல்ல. இப்பொழுது, நீ பார்க்கும் வேலைக்கு இதுவே மிக உயர்ந்த சம்பளம், தெரிந்ததா?” என்று கூறினார்.
அதற்கு பிறகு, பதினைந்து ஆண்டுகள் ஆகவில்லை
நிறுவனத்தின் உரிமையாளர், அதே லூயிஸுக்கு, புதிய நாவல் ஒன்றுக்கு, அதன் கையெழுத்துப் பிரதியைக்கூடப் படித்துப்பார்க்காமல், நம்பிக்கையாக 75,000 டாலர் முன்பணம் கொடுக்க முன்வந்தார் என்றார் ஆச்சரியமாக இல்லையா?
(53) பொறுக்கி எடுத்த மாணவர்கள்
* * *
பிரபல ஆசிரியர் ஜான் ரஸ்கின் நடத்தும் சொற்பொழிவு வகுப்புக்கு மாணவர்கள் பலர் வந்து கூடினார்கள்.
ஆனால், சொற்பொழிவை இன்னொரு நாளைக்கு ஒத்திப்போடப்பட்டிருப்பதாக அறிவிப்பு ஒட்டியிருந்தது. அதைப் பார்த்து விட்டு, மாணவர்கள் எல்லோரும் போய்விட்டனர்.
அடுத்த முறை, முன்னிலும் பாதி மாணவர்களே வந்து கூடினார்கள். அன்றும், இன்னொரு நாளைக்கு ஒத்திப் போடப்பட்டிருப்பதாக அறிவிப்பைக் கண்டு மாணவர்கள் திரும்பிப் போய்விட்டார்கள்.
மூன்றாவது முறை, மிகச் சில மாணவர்களே வந்தனர்.
பொறுமையோ, உண்மையாக உழைப்பில் ஆர்வமோ இல்லாதவர்களை, தாங்களாகவே உற்சாகம் குன்றச் செய்வதற்காகவே அந்தப் பிரபல ஆசிரியர் இந்தத் தந்திரத்தைக் கடைபிடித்தார்.
அதன் பின்னர், எஞ்சிய மாணவர்களிடம், "வகுப்பை இப்பொழுது சலித்தாயிற்று. இனி, வேலையைத் தொடங்குவோம்” என்று கூறினார் அவர்.
(54) பதில் எழுதாத காரணம்
* * *
பிரபல ஆங்கில எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் வீட்டில் வளர்த்து வந்த மரத்தின் மீது லண்டனில் ஒடிக்கொண்டிருந்த பஸ் ஒன்று மோதியது.
கிப்ளிங்குக்குக் கோபம் தாங்க இயலவில்லை. பஸ் முதலாளிக்கு டிரைவர் மீது குறை கூறி, கடுமையாகக் கடிதம் எழுதினார் கிப்ளிங். அந்தப் பஸ் முதலாளி ஒரு சிற்றுண்டிச்சாலை முதலாளியும்கூட.
கிப்ளிங் எழுதிய கடிதத்தை, அந்தச் சிற்றுண்டிச் சாலையில் எல்லோருடைய கண்களுக்கும் தெரியும்படியாக வைத்தார் முதலாளி.
அதைப் பார்த்த ஒருவர், நல்ல விலை கொடுத்து அந்தக் கடிதத்தை வாங்கிக் கொண்டார்.
தம்முடைய கடிதத்துக்குப் பஸ் முதலாளியிடமிருந்து பதில் வராததால், மறுபடியும் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து கடிதம் எழுதினார் கிப்ளிங், ஆனால், அதற்கும் பதில் வரவில்லை.
மறுநாள் கிப்ளிங், மிகுந்த கோபத்தோடு சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று, மன்னிப்புக் கடிதம் எழுதாமைக்காக முதலாளியைக் கடிந்து கொண்டார்.
முதலாளி கிப்ளிங்கிடம் மன்னிப்புக் கேட்டபடியே “நான் வேண்டும் என்றேதான் உங்கள் கடிதத்துக்குப் பதில் எழுதவில்லை. ஏனென்றால், நான் உங்கள் கடிதத்துக்குப் பதில் எழுதாவிடில் நீங்கள் எனக்குக் கடிதம் எழுதிக் கொண்டே இருப்பீர்கள். அந்தக் கடிதங்களை எல்லாம், பிரமுகர்களின் கையெழுத்து வேட்டைக்காரர்களுக்கு விற்றால் எனக்கு நல்ல வருமானம் கிடைக்கிறதே" என்றார்.
(55) சோதிடரின் நடுக்கம்
* * *
இந்த உலகையே ஒரு சமயம் பரபரப்பு அடையச் செய்த நாஜித் தலைவர் ஹிட்லர் ஒரு நாள் சோதிடரிடம் நான் எப்போது இறப்பேன்!" என்ற விசித்திரமான கேள்வி ஒன்றைக் கேட்டார்.
திடீரென ஹிட்லர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டவுடன் சோதிடர் கொதிப்படைந்தார். ஏறுமாறாக ஏதேனும் சொல்லி வைத்தால், ஹிட்லரின் சினத்துக்கு ஆளாக நேரிடுமே என
அஞ்சினார் சோதிடர். ஆனால், அவர் கேட்ட கேள்விக்கு விடைகூறாமல் இருந்தால், அவர் விடவும் மாட்டார்.
சில சோதிட நூல்களைப் புரட்டியபடி, “நீங்கள் ஒரு யூதர் விடுமுறை நாளில் மரணம் அடைவீர்கள்” என்றார் சோதிடர்.
ஹிட்லரோ சோதிடரை விடவில்லை. “அது எந்த நாள்?” என்று மறுபடியும் கேட்டார். - .
“அது....அது.”.. என்று சோதிடர் திணறி, திக்கு முக்காடி, 'எனக்குத் தெரியாது.” என்று கூறினார் நடுக்கத்தோடு.
(56) சிரிக்கவைப்பவர் அழுகிறார்
* * *
டாக்டரிடம் ஒருவர் வந்தார். "எனக்கு என்னவோ மனசே சரியில்லை; தூக்கமும் வருவதில்லை; தற்கொலை செய்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது” என்று புலம்பினார்.
வந்தவரை நன்றாகப் பரிசோதித்தார் டாக்டர். “நீங்கள் ஏதாவது வேடிக்கை நகைச்சுவை முதலானவற்றைப் பார்த்தால் நல்லது. நகைச்சுவை நடிகர் க்ரிமால்டி எங்கேயாவது நடித்தால் போய்ப் பாருங்கள். அதுதான் நல்லது. வேறு எந்த மருந்தும் உபயோகமில்லை” என்றார் டாக்டர்.
வந்தவர்,"ஐயோ! நான்தானே ஐயா, அந்தக் க்ரிமால்டி!" என்றார்.
மற்றவர்களைச் சிரிக்க வைப்பவர்கள் தங்க்ளுடைய சொந்த வாழ்க்கையில் அழுவதோடு, கஷ்டப்படுவார்கள் போலும்!
(57) கவிஞரின் போக்கு
* * *
இத்தாலியின் பிரபல கவிஞர் தாந்தே ஒரு நாள் தெருவில் உட்கார்ந்தபடியே மூன்று மணி நேரம் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். அன்றைய தினம் திருவிழா நடந்து கொண்டிருந்தது. விழா முடிந்ததைச் சில நண்பர்கள் கவிஞர்களிடம் கூறினார்கள். ஆனால், விழா முடிந்ததாக அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை.
(58) பதிப்பாளரின் குழப்பம்
* * *
பிரசித்தி பெற்ற புத்தகப் பதிப்பாளர் ஒருவர், தினமும் தாம் சந்தித்து, உரையாடல்களில் கேட்ட சிறப்பான கருத்துக்கள் ஆலோசனைகள், பதிப்பின் தந்திரங்கள் எல்லாவற்றையும் அவ்வப்போது துண்டு துண்டாக எழுதி தம்முடைய சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டே இருப்பார். இரவில் தனியே உட்கார்ந்து, நினைவுக் குறிப்புக்கள் அனைத்தையும் கவனமாக ஆராய்ந்து, விளக்கமாக எழுதி, ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டே தூங்கச் செல்வார்.
ஒரு நாள், பிரபல கதாசிரியர் ஒருவர், சிறு காகிதத் துண்டில் 'டிங்கிள்ஸ் பீல்' என்ற ஒரே வார்த்தையை எழுதி, அந்தப் பதிப்பாளரின் சட்டைப் பைக்குள், அவருக்குத் தெரியாமல் போட்டு விட்டார்.
அன்று இரவு, வழக்கம் போல் பதிப்பாளர் நினைவுக்குறிப்புகளை எல்லாம் எடுத்து ஆராய்ந்த போது, 'டிங்கிள்ஸ் பீல்' துணுக்குக் காணப்பட்டது. இதை எதற்காகக் குறித்தோம் என்று வெகுநேரம் யோசித்து யோசித்துப் பார்த்தார். எவ்வளவு நேரம் கண் விழித்தும் ஒன்றும் புரியவில்லை. தூக்கமும் பிடிக்கவில்லை. அந்த வாரம் முழுவதும் இதே சிந்தனைதான்.
அலுவலகத்துக்குப் போனால் அங்கேயும் ஆழ்ந்த சிந்தனையோடு டிங்கிள்ஸ் பீல்' என்று தனக்குள் உருப்போட்டுக் கொண்டே அங்கும் இங்கும் உலாவுவார். 'டிங்கிள்ஸ் பீல்' தலைவலி தீர்ந்த பாடில்லை. -
ஒரு வாரம் ஓடியது. இனி, 'இந்த ஞானத்துணுக்கு நமக்கு வேண்டாம். எக்கேடும் கெட்டுப் போகட்டும். இதனால் பைத்தியம் பிடிக்காமல் தப்பித்துக் கொண்டால் போதும்' என்று தீர்மானித்து 'டிங்கிள்ஸ் பீல்' அடியோடு விட்டு ஒழித்தார் பதிப்பாளர்.
(59) அவர் எங்கே போகிறார்?
* * *
ட்வைட் மாரோ என்பவர் அமெரிக்காவில் பிரபலமான சட்ட நிபுணர். ஆனால், அவருக்கு ஞாபகமறதி சற்று அதிகம்.
ஒரு நாள், சட்ட நிபுணர் ரயிலில் அமர்ந்து, புத்தகத்தைப் படிப்பதில் ஆழ்ந்து விட்டார்.
டிக்கட் பரிசோதகர் வந்து டிக்கட் கேட்டபோது தான் சட்ட நிபுணர் பரபரப்போடு சட்டைப் பையில் டிக்கட்டைத் துழாவினார். ஆனால் அகப்படவில்லை.
அவரைப் பரிசோதகர் அறிந்தவராகையால் "பரவாயில்லை; டிக்கட் கிடைத்ததும் பிறகு அதை தபாலில் அனுப்பினால் போதும்” என்று கூறினார்.
டிக்கட் வாங்கினேன், அது எனக்கு நன்றாக நினைவு. இருக்கிறது. ஆனால், நான் எங்கே போகிறேன் என்பதுதான் இப்போது மறந்துபோய்விட்டது. டிக்கெட் அகப்பட்டால்தானே இதை நான் தெரிந்து கொள்ள முடியும்” என்றாராம் அந்தச் சட்ட நிபுணர்.
(60) பசு காட்டிய பாதை
* * *
அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் என்னும் தீவில், ஹட்ஸன் நதிக்கரையில் குன்று ஒன்றில், பெரிய மாளிகை ஒன்றைக் கட்டினார் கோடீசுவரர் ஒருவர்.
செங்குத்தான அந்தக் குன்று கரடுமுரடானது. உச்சியில் இருக்கும் மாளிகைக்கு எந்த வழியாகப் பாதை அமைப்பது என்று புரியாமல் திகைப்புற்றார் கோடீசுவரர். அதற்கு தம் நண்பர் ஒருவரிடம் யோசனை கேட்டார்.
“அது என்ன பிரமாதம்! ஒரு பசுவைப் பிடியுங்கள் அது உதவி செய்யும்” என்றார் நண்பர்.
“பசுவா? அது எப்படி உதவி செய்யும்? சற்று விளக்கமாகக் கூறுங்கள்” என்று கேட்டார் கோடீசுவரர்.
"குன்றின் உச்சியில் ஒரு தொழுவம் அமைத்து அதில் ஒரு பசுவைக் கட்டுங்கள். தினமும் பசுவைக் குன்றின் அடிவாரத்துக்குக் கொண்டு வந்து விட்டு விடுங்கள். அது மேய்ந்து விட்டு தானாகவே குன்றின் உச்சிக்கு வழி கண்டு பிடித்துச் செல்லும், சில நாட்களில், மிகவும் சுலபமான வசதியுடன் கூடிய பாதை ஒன்றைப் பசு வகுத்து விடும்”என்று விளக்கினார் நண்பர்.
கோடீசுவரரும் நண்பர் கூறிய யோசனைப்படியே செய்யலானார்.
வளைந்து, வளைந்து குன்றின் உச்சிக்குச் செல்லும் சொகுசான வழி ஒன்றைப் பசு வகுத்து விட்டது.
அப்படியே தார் போட்டு அழகான சாலை அமைத்து விட்டார் கோடீசுவரர்.
(61) மூன்று நாட்கள் வேலை செய்தார்
* * *
அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டனுடைய வாழ்க்கை வரலாற்றை ஒரு செல்வந்தரிடமிருந்து இரவல் வாங்கி வந்து படித்தான் ஒரு இளைஞன்.
புத்தகத்தை வீட்டில் வைத்துவிட்டுப் படுத்தான் இளைஞன். இரவில் பெய்த மழையால் புத்தகம் நனைந்து கொஞ்சம் கெட்டுப் போயிற்று.
மறுநாள் புத்தகத்தை செல்வந்தரிடம் கொண்டுபோய்க் கொடுத்தான். ஆனால், அவரோ இளைஞனைக் கடிந்து, புத்தகத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.
பிறகு, ஒரு வழியாக, தம்முடைய தோட்டத்தில் மூன்று. நாட்கள் உழைக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். இளைஞனும் அவ்வாறே மூன்று நாட்கள் உழைத்தான்.
புத்தகப் பிரியனான அந்த இளைஞன் யார்?
அவரே புகழ் பெற்ற ஆபிரகாம் லிங்கன்!
(62) குதிரையிலே போய் விட்டாராம் !
* * *
கர்னல் டேவிஸ் என்பவர் எதைச் சொன்னாலும் சற்று மிகைப்படுத்தியே கூறுவது அவருடைய வழக்கம்.
ஒரு நாள் சில நண்பர்களிடம், “எனக்கு இந்த எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியோடு போட்டியிடுவது என்றால் மிகவும் பிரியம். தினந்தோறும் குதிரைப் பந்தய மைதானத்தில் என்னுடைய குதிரைமீது சவாரி செய்தபடியே, வடகோடியிலிருந்து தென்கோடி வரைக்கும் எக்ஸ்பிரஸ் வண்டியோடு ஒடுவேன். இந்தப் பந்தயத்தில் ஒவ்வொரு தடவையும் என் குதிரையே வெற்றிபெறுகிறது” என்று கர்னல் கூறினார்.
ஒரு நண்பர் அதை நம்பவில்லை. “உங்கள் குதிரையால் அது முடியவே முடியாது; நிரூபிப்பீர்களா? நூறு டாலர் பந்தயம் கட்டுகிறேன்” என்று சவால் விட்டார்.
'அதற்கு நான் சாட்சி' என்றார் மற்றொரு நண்பர்.
கர்னல் ஒரு கனவான் அல்லவா? பந்தயத்துக்கு ஒப்புக் கொண்டார்.
மறுநாள் காலையில், பந்தயம் கட்டியவரும் சாட்சியும் கர்னல் வீட்டுக்குச் சென்று, கர்னல் இருக்கிறாரா?” என்று கேட்டனர்.
"இல்லீங்களே, அவர் இப்பத்தான் வாஷிங்டன் நகரிலிருந்து டெலிபோன் செய்தார். ஏதோ அரசு அலுவலாக அங்கே போயிருக்கிறார்” என்றான் வேலையாள்.
“என்ன? இதற்குள் அங்கே போயிருக்க முடியாது, எந்த ரயிலும் இவ்வளவு விரைவில் போயிருக்க முடியாதே" என்றார் பந்தயம் கட்டியவர்.
"இல்லிங்க, அவர் ரயிலில் போகவில்லையாம், குதிரையிலே சவாரி செய்தபடியே போய்விட்டாராம்” என்று அமைதியாகப் பதில் சொன்னான் வேலையாள்.
பந்தயம் என்ன ஆயிற்று?
(63) குழந்தைகளின் குழப்பம்
* * *
நியூயார்க் நகரில் சின்னஞ்சிறு குழந்தைகள் படிக்கும் ஒரு நர்சரிப் பள்ளிக்கூடம். பள்ளி நேரம் முடிந்தபின்னர், மாலை வேளையில், சில பஸ்கள் வந்து நிற்கும்.
குழந்தைகளோ எந்தப் பஸ்ஸில் ஏறுவது என்று புரியாமல் தவித்தனர்.
அதை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர், ஒரு பஸ்ஸுக்கு முயல், மற்றொன்றுக்குக் கோழிக் குஞ்சு இன்னொன்றுக்குக் கரடி, இவ்வாறு பல சித்திரங்களை வரைந்து பஸ்ஸில் பொருத்தி விட்டனர். அதன்பின்னர் குழந்தைகள் குழப்பம் இல்லாமல் பஸ்ஸில் ஏறிச் சென்றனர்.
(64) வருமானம் ஏன் குறைகிறது?
* * *
ஜெர்மனியின் பெரும்பகுதிக்கு பிரஷ்யா என்பது அக்காலத்தில் பெயராக இருந்தது. அதற்கு அரசராக இருந்தவர் மகா பிரெடரிக் என்பவர்.
அரசர் பிரெடரிக், ஒரு சமயம் தம்முடைய அமைச்சர்களையும், பிரபுக்களையும், தளபதிகளையும் அழைத்து விருந்து அளித்தார். :
விருந்து முடிந்தபின், அரசர், பல வகையான வரிகளை விதித்து வசூலிக்கிறோம். அவ்வாறு இருந்தும் வருமானம் ஏன் குறைந்து கொண்டே போகிறது? அதன் காரணம் என்ன?” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
அனுபவம் மிக்க தளபதி எழுந்து "மேன்மை பொருந்திய மன்னர்பிரானே, அது எப்படி என்பதை இதோ உங்களுக்குக் காட்டுகிறேன்” என்று கூறி விட்டு, பெரிய பனிக்கட்டி ஒன்றை தம் கையில் எடுத்துச் சிறிது திருப்பிப் பார்த்தார்; பிறகு
அடுத்தவரிடம் கொடுத்தார். "அப்படியே ஒருவர் பின் ஒருவராக மாறி கடைசியில் மன்னரிடம் போய்ச் சேரட்டும்” என்றார்.
அந்தப் பனிக்கட்டி, மன்னரிடம் போய்ச் சேர்ந்த போது அது ஒரு பட்டாணிக் கடலை அளவாகச் சிறிதாகியது.
வருமானம் ஏன் குறைந்து கொண்டு போகிறது என்ற காரணத்தை மன்னர் உணர்ந்தார்.
(65) புதிய பதவியின் அலுவல்
* * *
எலியட்பால் என்பவர் பிரபல ஆசிரியர், அவருடைய புகழ் காரணமாக அரசாங்கத்தில் அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. “போர் முனையிலிருந்து திரும்பிய வீரர்களைக் கவனிக்கும் இயக்குநர்" என்று அந்தப் பதவிக்குப் பெயர்.
சுருக்கெழுத்தும் தட்டச்சும் தெரிந்த ஒரு பெண்ணைச் செயலாளராக நியமித்துக் கொண்டார் இயக்குனர். ஆனால், அந்தச் செயலாளருக்கு வேலை எதுவும் இல்லை.
போர் முனையிலிருந்து திரும்பிய 2,50,000 வீரர்களின் பட்டியல் ஒன்று புழுதி அடைந்து ஆவணக் காப்பகத்தில் கிடந்தது. அதை எடுத்து அந்தச் செயலாளரிடம் கொடுத்து, அதற்கு நான்கு பிரதிகள் டைப்செய்து கொண்டு வரும்படி கூறினார் இயக்குநர்.
அதன்பின் அவரும் மூன்றுமாதங்கள் உல்லாசப் பயணம் சென்று விட்டார்.
பட்டியல்களின் பிரதிகள் தயாராகி விட்டன. வரப்போகும் தேர்தல் பற்றிய பேச்சு அந்தச் சமயத்தில் தீவிரமாக எழுந்தது.
பட்டியலின் பிரதி ஒன்றை குடியரசுக் கட்சிக்கு 350 டாலருக்கு விற்றார்.
பாரபட்சம் இல்லாமல் ஜனநாயகக் கட்சிக்கும் பட்டியலின் ஒரு பிரதியை 500 டாலருக்கு விற்றார்.
மீதி இரண்டு பிரதிகளையும் ஒரு வண்டியில் போட்டு, அரசு ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பி விட்டார் இயக்குநர்.
“இன்னும் அவை அங்கேதான் இருக்கும். யார் கேட்டாலும் விலைக்குக் கிடைக்கும். இலக்கியச் சங்கத்தாருக்கு விருப்பமானால் வாங்கிக் கொள்ளலாமே” என்றார் அந்த இயக்குநர்.
(66) மணி என்ன ஆனால் என்ன?
* * *
பிரபல விஞ்ஞானி தாமஸ் எடிசன் புதிதாகத் தொழிற்சாலை ஒன்றை அமைத்தார்.
சுவர்க் கடிகாரம் ஒன்று வாங்கி தொழிற்சாலையில் பொருத்தினார். தொழிலாளர்கள் எல்லோரும் அந்தக் கடிகாரத்தையே ஓயாமல் பார்க்கத் தொடங்கினார்கள். ஆதனால் வேலை தாமதமாயிற்று. எடிசனும் நல்ல உழைப்பாளி.
அவருக்குத் தொழிலாளர்களின் போக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை.
ஒரு நாள், பல கடிகாரங்களை வாங்கி வந்து, தொழிற்சாலையின் பல மூலைகளிலும் பொருத்திவிட்டார். அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான மணி காட்டியது.
இந்தக் கடிகாரக் குழப்பத்தைக் கண்ட தொழிலாளர்களுக்கு மணி பார்ப்பதில் உள்ள ஆர்வமே போய் விட்டது. நேரம் என்ன ஆனால் என்ன? என்று எண்ணிபடி தங்களுடைய வேலைகளிலே கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார்கள்.
(67) அதுவும் ரப்பர் பொம்மையா?
* * *
இளம் தாய் ஒருத்தி, தன் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள்.
பக்கத்து வீட்டுச் சிறுமி, அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். சிறுமியின் இடுப்பிலே ரப்பர் பொம்மை ஒன்று இருந்தது. அந்தப் பொம்மைக்கு ஒரு காலும் இல்லை; ஒரு கையும் இல்லை. உடலும் நசுங்கிப் போயிருந்தது. -
இளந் தாயைப்பார்த்து, ‘மாமி இந்தப்பாப்பா உங்ககிட்ட வந்து எத்தனை நாள் ஆச்சு?” என்று கேட்டாள் சிறுமி ஆவலோடு.
மூன்று மாதம் என்றாள் தாய்.
"அம்மாடியோ, மூன்று மாதங்களாக, அதை இவ்வளவு பத்திரமாக வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, எப்படி?” என்று வியப்போடு கேட்டாள் சிறுமி.
(68) படிக்கும் ஆர்வம்
* * *
பிரசித்தி பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி மிக அதிகமாகப் படிப்பார். ஒரு நாளில் 16 மணி நேரம் கூடப் படிப்பார்.
நின்றும், உட்கார்ந்தும், படுத்தும் பல வித தொல்லைகளோடு வாசித்து முடிப்பார்.
பெர்னார்ட்ஷாவும் அப்படியேதான்!
(69) இசையா? மொழியா?
* * *
நேபாளத்து மன்னர் ராணா 1853ல் இங்கிலாந்துக்குப் போயிருந்தார்.
விக்டோரியா மகாராணி, ராணாவை வரவேற்பதற்காக ஒரு பால்டான்ஸை ஏற்பாடு செய்திருந்தார் ராணியும் கூட அதில் கலந்து கொண்டார்.
நடனம் முடிந்ததும் ராணாவிடம் மொழி பெயர்ப்பாளர் மூலமாக, "நடனம் எப்படி இருந்தது?" எனக் கேட்டார் ராணி.
“ரொம்பப் பிரமாதம்! வெகு இனிமை!” என்றார் ராணா.
"எங்கள் மொழி, உங்களுக்குத் தெரியாதே. அப்படியிருக்கும்போது 'ரொம்பப்பிரமாதம்; வெகு இனிமை' என எப்படிச் சொல்லுகிறீர்கள்?” என்றார் ராணி.
“பறவைகளுடைய மொழி யாருக்காவது தெரியுமா? ஆயினும், அவற்றின் குரல் எல்லோருக்கும் இனிமையாகத்தான் இருக்கிறது!” என்றார் ராணா.
(70) போர் முனையில் பிரார்த்தனையா?
* * *
கடுமையான குண்டு வீச்சக்கு இலக்காகியது ஒரு நகரம்.
கர்னல் ஒருவர் பெரிய புதருக்குள் போய் ஒளிந்து கொண்டு உரத்த குரலில் கடவுளைப் பிரார்த்தனை செய்யலானார்.
ஆனால், அவருக்கு முன்னே, அங்கே ஒரு சார்ஜெண்ட் நுழைந்து கர்னலுக்கு சமமாய் சத்தம் போட்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.
குண்டு வீச்சு நின்றது. கர்னல், சார்ஜெண்டைப் பார்த்து, “என்ன சார்ஜெண்ட்! ஏதோ பிரார்த்தனை செய்து கொண்டிருந்தீர் போல் இருக்கிறதே!" என்று கேட்டார்.
"கர்னல் அவர்களே, புதருக்குள் நாஸ்திகரே கிடையாது” என்றார் சார்ஜெண்ட்.
(71) பெரிய சாதனை தான்!
* * *
அலெக்ஸாண்டர் டூமாஸ் என்னும் பிரெஞ்சு எழுத்தாளர் 'மாண்டி கிறிஸ்டோ' என்ற புகழ்பெற்ற நாவலை எழுதியவர்.
அவர் எழுதியுள்ள நூல்கள் ஆயிரத்து இருநூறுக்கு மேல் இருக்குமாம்.
தமக்குக் கீழ் பலரை வைத்துக் கொண்டு, பலவற்றிலிருந்தும் தகவல்களைச் சேகரிக்கும்படி செய்வாராம் டூமாஸ்.
(72) உங்கள் சந்ததியார் கொடுப்பார்கள்
* * *
டாக்டர் பெரன் என்பவர் ஹங்கேரியில் பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணர்.
அவர் கேட்கும் தொகையைக் கொடுத்தால்தான், அவர் அறுவை சிகிச்சை செய்வார். அவர் கேட்கும் தொகையோ அதிகம்தான். அவர் வெடுக்கு வெடுக்கென்று பேசக் கூடியவர். உலகில் பெரிய நிபுணர்களுக்கெல்லாம் இந்தக் குணம் இயல்பானது போலும்!
பெரிய ஆலை முதலாளி ஒருவர் டாக்டர் பெரனிடம் சென்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்பினார்.
“ரு 2500 கட்டணம் தர வேண்டும்"என்றார் டாக்டர்."
“அவ்வளவு தொகையா? மிக அதிகமாக இருக்கிறதே!” என்றார் ஆலை முதலாளி தயக்கத்தோடு.
"அப்படியானால், (மற்றொரு டாக்டரின் பெயரைக் குறிப்பிட்டு) அவரிடம் போனால், குறைந்த தொகைக்கு அறுவை சிகிச்சை செய்வார். தவிர, அந்தத் தொகையையும் கூட நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் வராது. ஏனெனில், உங்கள் சந்ததியினர் அதைக் கொடுத்து விடுவார்கள்” என்றார் டாக்டர் பெரன்.
(73) இப்படி ஒரு விளம்பரமா?
* * *
ஆப்பிரிக்கக் காடுகளிலே, பிரிட்டிஷ் இராணுவப் படைகளோடு யுத்த நிருபர் ஒருவர் சுற்றிக் கொண்டே இருந்தார்.
அவர் அடிக்கடி பல செய்திகளை வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார். .
அவர் அனுப்பிய ஒவ்வொரு செய்தியிலும் போர்ச் செய்தியோடு ஏதாவது தேநீரைப் பற்றிய விளம்பரம் இல்லாமல் போகாது.
"தேயிலை வண்டிகள் எல்லாவிதத்திலும் சிறப்பாய் அமைந்திருந்தது”
'இராணுவ வீரர்கள் மிகவும் கடுமையாக வேலை செய்ய வேண்டியதிருந்தது. அப்பொழுது வேறு எதையும் விட ஒரு கோப்பை தேநீரே அவர்களுக்கு ஆனந்தம் அளித்தது.”
“எங்குமே பரவியிருந்த தேயிலைப் பானம் தயாரிப்பதற்காக அங்கே ஒரு கெட்டில் தயாராகக் கிடந்தது.”
இப்படியாக, ஒவ்வொரு செய்திக்கு, ஏதாவது ஒரு வசனம் பரவலாகக் காணப்பட்டது.
இதைக் கண்டு தணிக்கை அதிகாரிகள் இதன் மர்மம் என்னவோ என்று மலைத்துப் போனார்கள். -
தீர விசாரித்து அறிந்த பின்னர், அந்த நிருபர், சர்வதேச தேயிலைச் சங்கத்தின் பிரதிநிதி என்பது பிறகு தெரியவந்தது.
(74) ஒருநாள் வருமானம் போதும்
* * *
போர்க் கருவி உற்பத்தியாளரான நோபெள் பிரபுவிடம் ஒரு வேலைக்காரி இருந்தாள்.
ஒரு நாள் அந்த வேலைக்காரி பிரபுவை அணுகி, தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்தாள்.
உடனே அவளிடம், "என்னிடமிருந்து என்ன சன்மானத்தை நீ விரும்புகிறாய்?” எனக் கேட்டார்.
“உங்களிடமிருந்து நான் விரும்புவது எனக்குக் கைக்கெட்டாததாகத் தோன்றுகிறது” என அச்சத்தோடு கூறலானாள்.
"தைரியமாகக் கேள், நீ கேட்பதைத் தருகிறேன்” என்று ஊக்கமூட்டினார் அவர்.
"பிரபுவே, உங்களிடமிருந்து நான் விரும்புவது... உங்களுடைய ஒரு நாள் வருமானத்தையே” என தயக்கத்தோடு கூறினாள் அந்த வேலைக்காரி.
சிறிதும் தாமதியாமல், வேலைக்காரி பெயருக்கு ஒரு செக் எழுதிக் கொடுத்தார் பிரபு.
செக் தொகை எவ்வளவு?
ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய்!
(75) மளிகைக் கடைக்காரரின் பேருதவி
* * *
நாடகம் எழுதும் ஆவல் உள்ளத்திலே சுரந்தது. அதை இலட்சியமாக, வாழ்க்கையின் பலனாக, பொழுது போக்காக அவர் இரவு பகலாக பல நாடகங்களை எழுதிக் குவித்தார்.
ஒவ்வொரு நாடகமும் அவருக்கு இனிமையாகவும், படிக்கப் படிக்கச் சுவையாகவும் இருந்தது. ஆனால், எல்லாம் அவருக்குத்தான்.
அவர் படைத்த கதாநாயகர்களுடன் அவர் மனதாலும் வாயாலும் பேசிக்கொண்டார்.
அந்த நாடகாசிரியருக்குப் புகழ் அப்போது கிடைக்கவில்லை. அதனால் அவர் நெஞ்சம் புண்ணாகியது. வருத்தத்தில் தோய்ந்தார்.
வீட்டிலிருந்த அறையினுள் அவர் இயற்றிய நாடகங்கள் குவிந்து கிடந்தன. அவற்றின் மத்தியில் பசியாலும் பட்டினியாலும் தவித்தார். வேறு வழி இல்லை.
பாழாய்ப் போன எந்தப் பிரசுரகர்த்தரும் பிரசுரிக்க முன்வரவில்லை. . .
ஒரு நாள் நாடகங்கள் அனைத்தையும் மூட்டையாகக் கட்டிச் சுமந்து சென்று ஒரு மளிகைக் கடைக்காரனிடம் எடை போட்டு பழைய காகித விலைக்கு விற்று விட்டார்.
மளிகைக் கடைக்காரர், நாடகங்களை ஒவ்வொரு ஏடாகக் கிழித்துப் பொட்டலம் கட்டும்போது, ஒன்றை எடுத்துப் படித்துப் பார்த்தார். ஆச்சரியப் பட்டார். ஆகா! அற்புதமான படைப்பு” என வியந்தார்.
அதன்பின் ஒரு பதிப்பாளரிடம் சிபார்சு செய்தார் மளிகைக் கடைக்காரர்.
கிழித்துப் பொட்டலம் கட்டப்படாத பல நாடகங்கள் அச்சாகி வெளிவந்தன.
நாடக ஆசிரியருக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டது. ஒவ்வொரு பிரதியும் 500 பவுன் வரையில் கிராக்கி யோடு விற்பனை ஆயின.
நாடகம் எழுதியவர் பெரும் பயனை அடைந்தார்!
அவர் யார்? அவரே பிரபல நாடகாசிரியர் இப்ஸன்!
(76) பேசாமல் கருத்து வேற்றுமையா?
* * *
ருஷ்யாவின் பிரபல நடிகர் போரிஸ் மார்ஷலாவ் என்பவர் ஒரு சமயம், அமெரிக்கா சென்றிருந்தபோது மக்கள் பிரதிநிதி சபையான காங்கிரஸைக் காணச் சென்றார்.
அதைப் பார்த்த பிறகு அவர் கூறியதாவது.
"இந்தக் காங்கிரஸ் சபை மிகவும் அதிசயமாயிருக்கிறது. அதிலே ஒருவர் பேச எழுந்திருக்கிறார். ஆனால், அவர் ஒன்றும் பேசுவதில்லை. எவரும் செவிசாய்த்துக் கேட்பதும் இல்லை. பிறகு, அத்தனை பேரும் கருத்து வேற்றுமை கொண்டு விடுகிறார்கள்” என்றார்.
(77) அவர்களிடமும் சொல்லுங்கள்
* * *
அமெரிக்க அரசின் வீரர்களும் புரட்சிக்காரர்களும் ஒரு சமயம் ஞாயிற்றுக் கிழமைகளிலும் கூட போரிட்டுக் கொண்டிருந்தனர்.
மதப்பற்று மிக்க பிரபல பாதிரியாருக்கு அது மிகுந்த வருத்தத்தை அளித்தது. அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் அவர்களிடம் சென்று,
“நம் கர்த்தரின் ஒய்வுநாளில் கூட இவ்வாறு போர் புரியலாமா?” என முறையிட்டார் பாதிரியார்.
நீங்கள் கூறுவதை என்னுடைய அரசு அப்படியே ஏற்றுக் கொள்கிறது” என்றார் லிங்கன்.
“இதைக் கேட்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது”என்று கூறிவிட்டு பெருமிதத்தோடு திரும்பினார் பாதிரியார்.
“பாதிரியார் அவர்களே'! கொஞ்சம் பொறுங்கள்; ஒரு விஷயம். ஞாயிற்றுக் கிழமை போரிடும் இந்த அக்கிரமத்தை ஒழிப்பதற்கு உங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, இன்னும் ஒரு காரியத்தை நீங்கள் செய்யவேண்டும்” என்றார் லிங்கன்.
“ஜனாதிபதி அவர்களே! அது என்ன?” என்று கேட்டார் பாதிரியார். -
"அது ஒன்றும் பிரமாதம் இல்லை. புரட்சித் தளபதிகள் இந்த ஞாயிற்றுக் கிழமைகளில், நம்முடைய போர் வீரர்களைச் சும்மா இருக்கும்படி விட்டு விடச் செய்யுங்கள். அவ்வளவுதான்” எனறார் லிங்கன்.
(78) உழைப்பாளிக்குப் பதவி உயர்வு
* * *
அமெரிக்காவில், மிகப் பெரிய படத் தயாரிப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான பிரம்மாண்டமான திரை அரங்கைப் பார்வையிடச் சென்றார் உரிமையாளர்.
திரை அரங்கோ மிகுந்த நஷ்டத்தில் ஒடிக் கொண்டிருந்தது.
உரிமையாளர் பார்வையிடப் போன நேரம் பகல் 11 மணி.
அப்பொழுது, காவலாளி மட்டுமே அங்கே இருந்தான். வேறு யாரையும் அங்கே காணவில்லை.
“மானேஜர் எங்கே?" என்று கேட்டார் உரிமையாளர்.
"அவர் வர நேரமாகும்” என்றான் காவலாளி.
“உதவி மேனேஜர் எங்கே?" என்றார்.
"அவரும் வர நேரமாகும்" என்றான் காவலாளி.
“மானேஜரும், உதவி மானேஜரும் இல்லாதபோது, திரை அரங்கை பார்த்துக் கொள்வது யார்?" என்று கேட்டார்.
"நான்தான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் காவலாளி.
"அப்படியானால், இந்த நிமிடம் முதல், இந்தத் திரை அரங்குக்கு நீயே மானேஜராக இரு. உன்னை நியமனம் செய்து விட்டேன்” என்றார் உரிமையாளர்.
(79) கவிஞர் கட்டிய அணை
* * *
பாரசீக நாடு கவிஞர் பெர்தெளசியின் கவிதையால் பெருமை அடைந்தது.
கவிஞர், பாரசீக வரலாற்றை ஈரடியாக ஆயிரம் செய்யுளாக எழுதும் பணியை மேற்கொண்டார்.
பாரசீக மன்னன், அந்த ஆயிரம் கவிதைகளுக்கும் ஆயிரம் பொன் பரிசு அளிக்குமாறு கட்டளையிட்டான்.
மன்னனின் பரிசைக் கொண்டு, தாம் வாழ்ந்துவந்த நகரத்திலே அணை ஒன்றைக் கட்டி விடுவது என்பது கவிஞரின் திட்டம்.
'பாரசீக வரலாறு' பாக்களாக இயற்றப்பட்டது.
பரிசு அளிக்கும் தருணத்தில் அமைச்சரின் துர்ப்போதனையால் மன்னனின் மனம் மாறியது. ஆயிரம் பொன்னுக்குப் பதிலாகக் கவிஞருக்கு ஆயிரம் வெள்ளி நாணயங்களை அனுப்பச் சொன்னான் மன்னன்.
மன்னன் சொன்ன சொல்லைத் தவற விட்டானே என்று கவிஞரின் மனம் குமுறியது. அரசன் அனுப்பிய பரிசை தாம் ஏற்றுக் கொள்ளாமல், அரண்மனைச் சிப்பந்திகளையே அவற்றைப் எடுத்துக் கொள்ளும்படி கொடுத்து விட்டார் கவிஞர்.
அதை அறிந்த மன்னன், சினம் கொண்டான். 'கவிஞரின் தலையைக் கொண்டு வா” என்று ஆணையிட்டான். - -
ஆனால், கவிஞரின் தலை கொய்யப் படுவதற்குள் என்னவோ, மன்னன் மனம் மாறி தன் தவற்றை உணர்ந்தான்.
முன்னர், அறிவித்தது போல இன்னும் ஒரு மடங்கு சேர்த்து இரண்டாயிரம் பொன்னைக் கொடுத்துக் கவிஞரை அழைத்துவருமாறு பணித்தான்.
ஆனால், மன்னனின் இரண்டு மடங்கு பரிசைப் பெறக் கவிஞர் உயிரோடில்லை. .
என்றாலும், கவிஞரின் சகோதரி, மன்னன் அளித்த பொன்னைப் பெற்றுக் கவிஞர் திட்டமிட்டிருந்த அணையைக் கட்டி முடித்தார். கவிஞரின் விருப்பம் நிறைவேறியது.
'கவிஞர் கட்டிய அணை' என்று பாரசீகம் அதைக் கொண்டாடியது.
(80) அவர் ஒருவரே
* * *
"நீங்கள் இதுவரை நடத்திய குத்துச் சண்டைகளில், உங்களை அதிகச் சிரமப்படுத்தியவர் யார்?" என்று ஒரு நிருபர் ஜோலூயியிடம் கேட்டார்.
"வருமான வரி அதிகாரி!” என்று உடனே பதில் அளித்தார் ஜோலுயி.
(81) வறுமையிலும் கைகொடுத்தது
* * *
உலகின் தலைசிறந்த தத்துவ மேதை கார்ல் மார்க்ஸ். அவருடைய பொருளாதார நூலைப் படித்தே தம்முடைய
அறிவை வளர்த்துக் கொண்டதாக, புகழ் பெற்ற மேதை பெர்னார்ட்ஷா கூறுகிறார்.
இன்று மனிதகுலம் தலை நிமிர்ந்து வாழ வழி வகுத்துக் கொடுத்த மாபெரும் மேதை கார்ல் மார்க்ஸ். எத்தனையோ இன்னல்களிடையே சிக்கித் தவித்தார். வறுமை அவரை வாட்டி வதைத்தது. இல்லாமை என்னும் கொடுமை அவரைப் பிழிந்து எடுத்தது.
1862ம் ஆண்டில் ரஷ்ய நாட்டிலே பிரசித்தி பெற்ற வழக்கு ஒன்று நடைபெற்றது. அதில் நடந்த வாதப் பிரதி வாதங்களையும், சட்டப் பிரச்சனைகளையும் எழுதி நூலாக வெளியிட மார்க்ஸ் விரும்பினார். அந்த வழக்கை உள்ளது உள்ளபடியே தொகுத்துத் தருவது தான் மக்களுக்குப் பயன் தரும் என்பது அவர் கருத்து.
ஆனால், மார்க்ஸின் அன்றுள்ள நிலைமையில் காகிதம் வாங்கக்கூட அவரிடம் காசு இல்லை!
உள்ளமோ அவரை எழுதத் தூண்டியது. ஆனால், பொருளாதாரமோ கையைக் கடித்தது. என்ன செய்வது என்ற சிந்தனை. -
உடனே, தம்மிடமிருந்த மழைக் கோட்டை விற்றார். காகிதம் வாங்கினார். இரவும் பகலுமாக உட்கார்ந்து எழுதி முடித்தார்.
வறுமை வாட்டிய போதும் அந்த அரிய நூலை எழுதத் தம்மிடம் இருந்த மழைக்கோட்டு உதவியதே என்று எண்ணிப் பெருமிதம் கொண்டார் அறிஞர் கார்ல் மார்க்ஸ்.
(82) அவர் நேரில் கண்டார்
* * *
மாமன்னர் மகா அலெக்ஸாண்டருக்கு தளபதி ஒருவர் இருந்தார். தளபதி, தன் மகன் நோய்வாய்ப்பட்டிருப்பதாகக் கேள்வியுற்று, அவனைக் காண்பதற்காக, அவன் படுத்திருந்த அறைக்குச் சென்றார்.
அறைக்குள் அவர் நுழையும் போது அழகான இளம் பெண் உள்ளே இருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.
அறையினுள் சென்று மகனைப் பார்த்த போது, நோய் எதுவும் இல்லாமல் அவன் உடல் நலத்தோடு இருப்பதைக் கண்டார் தளபதி.
"அப்பா என்னுடைய நோய் போய் விட்டது!” என்றான் மகன்.
"ஆமாம், ஆமாம். நான் உள்ளே நுழையும் போது அது வெளியே போனதை நானே பார்த்தேன்” என்றார் தளபதி புன்முறுவலோடு.
(83) அரக்கர்களா?
* * *
வீர சிவாஜியின் முடிசூட்டு விழாவைக் கண்டு களிப்பதற்கு 1674ம் ஆண்டு வெள்ளையர் தூதுக் குழுவினர் ராயகட்டத்துக்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களுக்குப் புலால் உணவு வழங்கும்படி ஒரு கசாப்புக் கடைக்காரருக்கு சிவாஜி உத்தரவிட்டிருந்தார்.
ஒரு மாதத்துக்குப் பிறகு தூதுக் குழுவினர் திரும்பிச் செல்லத் தயாரானார்கள். அப்பொழுது அவர்களைக் காண்பதற்கு அனுமதி கோரினார் கசாப்புக் கடைக்காரர். அனுமதியும் கிடைத்தது.
கசாப்புக் கடைக்காரர் தங்களைவந்து கண்டபோது, வெள்ளையர் மிகவும் மரியாதையோடு, "என்ன அலுவலாக வந்தீர்கள்?" என்று விசாரித்தனர்.
கசாப்புக் கடைக்காரர் சிறிது நேரம் அவர்களை உற்றுப் பார்த்துவிட்டு,
“வேறு ஒன்றும் இல்லை. என்னுடைய மற்ற வாடிக்கையாளர்கள் அனைவரும் சேர்ந்து பல ஆண்டுகள் புசித்த மொத்த மாமிசம் அவ்வளவையும் விட, அதிக அளவு மாமிசத்தை ஒரே மாதத்தில் புசித்திருக்கிறார்களே; அத்தகைய மனிதர்கள் யார் என்று பார்க்கவே வந்தேன்” என்றார்.
(84) பதிலுக்கு பதில்
* * *
பிரபல நாவலாசிரியர் ஜார்ஜ் மூர் கவிதையிலும் கற்பனையிலும் திளைத்த மேதை. அவருக்குக்கூட இளமைக் காலத்தில் கர்வம் மிகுதியாயிருந்தது.
டப்ளின் நகர ஆர்ச் பிஷப் டாக்டர் வால்ஷ் என்பவருக்கு ஒரு நாள் ஜார்ஜ் மூர் கீழ்க்கண்டவாறு கடிதம் ஒன்றை எழுதினார்.
"அன்பார்ந்த ஆர்ச் பிஷப் அவர்களே, உங்களுக்கு விஷயம் தெரியுமோ? கிறிஸ்துவ மதத்தை நான் விட்டு விட்டேன். இப்படிக்கு, ஜார்ஜ் மூர்.”
அதற்கு உடனே பதில் கடிதமும் அவருக்கு வந்தது.
"அன்புள்ள ஜார்ஜ் மூர், ஒரு பசுவின் வால் நுனியில் ஈ உட்கார்ந்த கதை உங்களுக்குத் தெரியுமா? பசுவே, நான் போய் வருகிறேன் என்று கூறியதாம் ஈ; அப்பொழுது, பசு தன் வால் பக்கம் திரும்பி, நீ இவ்வளவு நேரம் இங்கே இருந்தது எனக்குத் தெரியாதே என்று பதில் சொல்லியதாம்.”இப்படிக்கு டப்ளின் நகர ஆர்ச் பிஷப்.
(85) திருட்டுக் கதை
* * *
அமெரிக்கக் கதாசிரியர் சார்லஸ் வான் லோன் பல ஆண்டுகளாக சிறிய பத்திரிகைகளுக்கே எழுதி வந்தார்.
பெரிய பத்திரிகைகள், அவருடைய கதைகளைப் பிரசுரிக்கவே இல்லை.
ஒரு சமயம், அவருடைய கதையை, வேறு ஒருவர் திருடி, 'தி ஸாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட்' என்ற பிரபல பத்திரிகைக்கு அனுப்பி விட்டார். அந்தக் கதையும் பிரமாதமாக வெளிவந்து விட்டது.
கதாசிரியர் வான் லோனின் நண்பர் 'போஸ்ட்' பத்திரிகாசிரியருக்கும் பழக்கமானவர். அவர் அந்தக் கதையைப் 'போஸ்டில்' பார்த்ததும், பத்திரிகாசிரியருக்கு ஒரு கடிதம் எழுத, "அது சரி, அந்தக் கதையை நீங்கள் வான் லோனிடம் நேரடியாகவே வாங்கியிருக்கலாமே, இப்படி ஏன் செய்தீர்கள்?" என்று கேட்டிருந்தார்.
அது முதல் கதாசிரியர் வான் லோனின் கதைகளை 'போஸ்ட்' ஆசிரியர் நேரடியாகவே அவரிடமிருந்து வாங்கிக் கொள்ளத் தொடங்கி விட்டார்.
'போஸ்ட்' பத்திரிகைக்கும் வான் லோனுக்கும் நீண்ட காலத் தொடர்பும் ஏற்பட்டது.
(86) மற்றொருவர் எங்கே?
* * *
பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒரு நாள் குதிரைப் பந்தயத்துக்குப் போயிருந்தார். .
அங்கே அவருடைய நண்பர் ஒருவரைச் சந்தித்தார். நண்பர் அவரைப் பார்த்ததும், பரபரப்போடு, “கையில் இருந்ததையெல்லாம் தோற்றுவிட்டேன். ஊருக்குத் திரும்பிப் போக ஒரு டிக்கெட் வாங்கித் தர இயலுமா?” என்று கேட்டார்.
"நான் கூடத்தான் இன்று எவ்வளவோ தோற்று விட்டேன். எனக்கும் உனக்குமாக இரண்டு டிக்கெட் வாங்க இயலாது. ஒன்று செய்யலாம். நான் உட்கார்ந்திருக்கும் இடத்துக்குக் கீழே நீ மறைந்து கொள்; என் காலால் உன்னை
மறைத்துக் கொள்கிறேன். சம்மதமா?” என்றார் மார்க் ட்வைன்.
நண்பர் அதற்கு இணங்கினார். அவருக்குத் தெரியாமல் மார்க் ட்வைன் ரயில் நிலையத்துக்குப்போய், இரண்டு டிக்கெட் வாங்கிக் கொண்டார். -
ரயில் வந்தது. நண்பர் மார்க் ட்வைன் இருக்கைக்குக் கீழே புகுந்து கொண்டார்.
சிறிது நேரம் கழித்து, டிக்கெட் பரிசோதகர் வந்தார்.
மார்க் ட்வைன் அவரிடம் இரண்டு டிக்கெட்டுகளைக் காண்பித்தார்.
'இன்னொருவர் எங்கே?" என்று கேட்டார் பரிசோதகர்.
மார்க் ட்வைன் தலையை அசைத்தவாறு, "இது என் நண்பருடைய டிக்கெட்! அவர் கொஞ்சம் ஒரு மாதிரி! இருக்கைக்கு அடியில் உட்கார்ந்து வருவதே அவர் வழக்கம்” என்று கிண்டலாகக் கூறினார்.
(87) டாக்டரின் எச்சரிக்கை
* * *
டாக்டர் ஒருவர், மளிகைக் கடைக்கு வெகு நாட்களாக பாக்கி வைத்திருந்தார்.
"அந்த டாக்டரிடம் போய், அவரை நான் வரச் சொன்னதாகத் தெரிவி” என தன்னுடைய வேலையாளை அனுப்பினார் மளிகைக் கடைக்காரர்.
வேலையாள் டாக்டரிடம் போய்விட்டு முகவாட்டத்தோடு திரும்பி வந்தான்.
“டாக்டர் என்ன சொன்னார்?' என்று கேட்டார் மளிகைக் கடைக்காரர்.
வேலையாள் சலிப்போடு, "அவர் என்னத்தைச் சொன்னார்? எனக்கு உடல்நலம் இல்லையாம்; என் நாக்கை நீட்டச் சொன்னார். நாலைந்து வாரம் ஒடியாடி வேலை செய்யாதே; ஒய்வாக வீட்டிலே படுத்திரு, அப்போதுதான் உன் உடல் நலம் அடையும் என்று எச்சரித்தார்” என்று கூறி முடித்தான் வேலையாள்.
(88) விஞ்ஞானிகளை நம்பலாமா?
* * *
"பெண்கள் முகத்தில் பூசிக் கொள்ளும் கிரீம், தசையைத் தின்று முகத்தில் குழி விழச் செய்கிறது” இப்படி ஒரு வதந்தி அமெரிக்காவில் ஒரு சமயம் பரவியது.
அதை அறிந்த விஞ்ஞானிகள் சிலர் உட்னே பரிசோதனை செய்யலானார்கள்.
சோதனைக்காக ஏழு முயல்களைக் கொண்டு.அவற்றின் முகத்தில் சோப்பைத் தடவி, தாடியைச் சிரைத்து, பிறகு, உயர்ந்த ரக கிரீமை முகத்தில் நன்றாகப் பூசினர்.
சில மணி நேரத்துக்குப் பிறகு, முயல்களின் முகத்தை நன்றாகக் கழுவிச் சோதித்தனர். கிரீமால் முயல்களுக்கு ஒரு கெடுதியும் உண்டாகவில்லை என்பது தெரியவந்தது.
ஆனால், சோதனை நடத்தி விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையில் என்ன கூறினார்கள்? -
"நாங்கள் நடத்திய சோதனையில் கிரீமால் ஒரு தீங்கும் ஏற்படவில்லை என்று தெரிகிறது. ஆனால், நாங்கள் பயன்படுத்திய கிரீம் உயர்ந்த ரகமாக இருக்கலாம். மற்றவை ஒரு வேளை கெடுதல் செய்யக் கூடியதாகவும் இருக்கலாம்” என்று கூறி மழுப்பி விட்டனர்.
(89) தளராத முயற்சி
* * *
அவனோ ஏழை; அதிலும் அனாதை. பள்ளியில் நான்கு ஆண்டுகள் மட்டுமே படித்தான். அதற்கு மேல் படிக்க வசதி இல்லை. ஆனால், கதை, கட்டுரை எழுதுவதிலே ஆர்வம் உண்டாயிற்று.
அவனை எழுத விட்டால்தானே! அவன் எழுத உட்கார்ந்தால், கிண்டல் செய்வோர், கேலி செய்வோர் பலர். 'கதை எழுதுகிறானாம் கதை என்று கை கொட்டிச் சிரித்தவர் சிலர்.
தெரு ஓரத்தில் மூலை முடுக்குகளைத் தேடிச் சென்று அவன் எழுத உட்கார்ந்தால் போதும் உடனே விரட்டி அடிப்பார்கள்.
அவர்களுடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் அஞ்சி, இரவு நேரங்களிலே எழுதுவான். யாருக்கும் தெரியாமல், இரவு வேலைகளில் அவனுடைய கற்பனை வலுவடைந்தது.
அவ்வளவு பாடுபட்டு அவன் எழுதியும் பல ஆண்டுகள் எந்தப் பத்திரிகையும் அவனைச் சீந்தவில்லை.
அதற்காக அவன் தளர்ந்தானா? எழுதிக் குவித்துக் கொண்டிருந்தான். தபாலில் அனுப்பிக் கொண்டே இருந்தான். திரும்பி வந்து கொண்டே இருந்தது.
எப்படியோ, ஒரு பத்திரிகை ஆசிரியர் கருணை கூர்ந்து அவனுடைய படைப்பு ஒன்றைப் பிரசுரித்து விட்டார்.
அதன் பின்னர், அவனுடைய எழுத்தை உணர்ந்த பத்திரிகாசிரியர்கள் விரும்பிப் பிரசுரிக்கத் தொடங்கிவிட்டனர்.
அடித்தது யோகம்! அவனுடைய கதைகளுக்கு ஏகக் கிராக்கி. பிரசுரிக்காத பத்திரிகைகளே இல்லை.
பின்னர், வார்த்தைக்கு மூன்று பவுன் கொடுத்து, அவனுடைய கதைகளைப் பிரசுரிக்கும் உரிமை பெற்றனர் பலர்.
அந்த எழுத்தாளர் யார்?
ஆங்கில இலக்கிய வானிலே ஒளியாகத் திகழ்ந்தவர் சார்லஸ் டிக்கன்ஸ்!
(90) முயற்சியே திருவினை
* * *
ஹென்றி எவ்பர்க் என்பவன் வாலிப ஓவியக் கலைஞன்.
அவனுக்குத் திடீரென நரம்பு வியாதியால் கைகளும் கால்களும் முடங்கிச் செயலற்று விட்டன.
மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பல நாட்கள் மருத்துவம் பார்த்தும் அவன் குணம் பெறவில்லை.
கையும் காலும் செயலற்று அவன் சித்திர வேலையை எப்படிச் செய்வது என்று சிந்தித்தான்.
வாயினாலேயே சித்திரம் வரையலாம் என்ற முடிவுக்கு வந்தான் அவன்.
அவன் படுத்திருக்கும் கட்டிலில் அவன் வாய்க்கு நேராக ஒரு பலகையின் மீது காகிதத்தைப் பொருத்திக் கொடுத்து விட வேண்டும். அவன் வாய்க்கு எட்டும் படியாக பிரஷையும், வர்ணங்களையும் வைத்துவிட வேண்டும். அதன்பின் அவன் பிரஷை வாயில் பிடித்துக் கொண்டே சித்திரம் வரையத் தொடங்கினான்.
அவ்வாறு, அவன் வரைந்த சித்திரங்கள் மிக அற்புதமானவை என்று புகழ் பரவியது.
(91) தாராள மனப்பான்மை
* * *
எந்தக் காரணத்திலாவது, ஒரு பத்திரிகையைப் படிக்காத சந்தாதாரர்கள், அந்தப் பத்திரிகையை நிறுத்தி விடுமாறு, பத்திரிகை அலுவலகத்துக்கு கடிதம் எழுதும் வழக்கம் அமெரிக்காவில் அதிகம். பெரும்பாலும் ஒவ்வொரு பத்திரிகைக்குமே அம்மாதிரிக் கடிதங்கள் வருவது உண்டாம்.
'கிறிஸ்தியன் ஸயின்ஸ் மானிட்டர்' என்ற பத்திரிகைக்கும் சந்தாதாரர் ஒருவரிடமிருந்து கடிதம் வந்தது.
"அன்புள்ள ஐயா,
ஒரு வருடத்துக்கு முன், தங்கள் பத்திரிகைக்கு நான் சந்தா செலுத்தினேன், ஒரு வருட முடிவில் எனக்குத் திருப்தி ஏற்படாவிட்டால், என்னுடைய சந்தாத் தொகையைத் திருப்பி விடுவதாக அப்போது நீங்கள் வாக்களித்தீர்கள், இப்பொழுது, அப்படியே அதைத் திரும்பப் பெற விரும்புகிறேன்.
"ஆனால், சற்று யோசித்துப் பார்த்த போது, உங்களுக்கு வீண் சிரமம் கொடுப்பானேன் என்று தோன்றியது. ஆகவே, அந்தத் தொகையை அடுத்த ஆண்டுச் சந்தாவுக்கு ஈடு செய்துகொள்வீர்களாக" என்று எனக்கு குறிப்பிட்டிருந்தார், அந்தக் கடிதத்தில்.
(92) விலை மதிப்பற்ற அம்சம்
* * *
பாக்தாத் நகரில் ஞானி ஒருவர் இருந்தார். பலர் அவரிடம் போய் ஆலோசனை கேட்பார்கள். -
எவருக்கும் மறுக்காமல், அவரவர்களுக்கு ஏற்ற அறிவுரைகளை வழங்குவார்.ஞானி. ஆனால் யாரிடமும் வெகுமதி எதையும் பெற்றுக் கொள்ள மாட்டார்.
இளைஞன் ஒருவன். ஏராளமாகச் செலவழித்தவன். அதனால் ஒரு பயனும் அடையாதவன்.
ஒரு நாள் அந்த இளைஞன், ஞானியிடம் வந்து, “ஞானியாரே, நான் இவ்வளவு செலவழித்திருக்கிறேனே, இதற்கெல்லாம் பதிலாக நான் என்ன பொருளைப் பெறலாம்?” என்று கேட்டான். -
வாங்கி விற்கும் எந்தப் பொருளிலும், வாங்கிவிற்க இயலாத ஒர் அம்சம் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனால், அந்தப்பொருளுக்கு ஒரு மதிப்பும் இல்லை” என்று கூறினார் ஞானி. -
"அப்படியானால் அந்த விலை மதிப்பற்ற அம்சம் என்னவோ?" என்று கேட்டான் இளைஞன்.
"மகனே! சந்தைக்கு வரும் ஒவ்வொரு பொருளிலும் அதை உற்பத்தி செய்தவனின் கண்ணியமும் நாணயமும் அடங்கியிருக்கும். அதுவே அதன் விலைமதிப்பற்ற அம்சம் ஆகும். எனவே, நீ ஒரு பொருளை வாங்குமுன், அதை உற்பத்தி செய்தவனின் பெயரைக் கவனி” என்றார் ஞானி.
(93) நினைவுச் சின்னம் யாருக்கு?
* * *
ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரசபை மண்டபத்தில் பலருடைய வெண்கலச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
அவை யாருடைய சிலைகள் என்று நினைக்கிறீர்கள்?
அடிப்படைக் கல் நாட்டியவர், திறப்புவிழா நடத்தியவர்
போன்ற செல்வாக்கு மிக்கவர்களுடையவையாக இருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லவே இல்லை.
கட்டிடத்துக்கு முதல் கல்லை வைத்த கொத்தனார் எல்லோரையும் விட அதிக நாட்கள் உழைத்த தொழிலாளி, மிகத் திறமையாய் வேலை செய்த கொல்லர் முதலான பற்பல தொழிலாளர்களின் சிலைகளே அவை! ஆச்சரியமாக இல்லையா?
(94) எத்தகைய எச்சரிக்கை
* * *
அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில், பஸ் கார்களுக்காக நடப்பட்டிருந்த சாலை எச்சரிக்கையில்,
“பள்ளிக்கூடம் -- குழந்தைகளைக் கொல்லாதே" என்று முதல் வரியில் எழுதப்பட்டிருந்தது. அடுத்த வரியில், “ஆசிரியருக்காகக் காத்திரு” என எழுதப்பட்டிருந்தது.
(95) சாதுர்யமான பதில்
* * *
மார்க் ட்வைன் என்பவர் அமெரிக்காவின் நகைச்சுவை எழுத்தாளர்; பத்திரிகாசிரியர்.
ஒருமுறை, வியாபாரியான சந்தாதாரர் ஒருவரிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது.
“இன்று தபாலில் வந்த தங்கள் பத்திரிகையை வாங்கிப் பிரித்துப் பார்த்தவுடன் அதன் மத்தியில் சிலந்தி வலை
பின்னியிருப்பதையும் ஒட்டடை ஒட்டியிருப்பதையும் கண்டேன். இது நல்ல அதிர்ஷ்டமா? அல்லது அபசகுனமா?” என்று கேட்டிருந்தார்.
அதற்கு மார்க் ட்வைன் எழுதிய பதில்:
“நமது பத்திரிகையில் யார் யார் விளம்பரம் செய்கிறார்கள்; யார் யார் செய்யவில்லை என்பதை அந்தச் சிலந்தி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது. யார் விளம்பரம் செய்யாத வியாபாரியோ அவருடைய கடைக்குப் போனால் கொஞ்சமும் கவலையின்றி தான் வாழலாம் என்பது சிலந்தியின் எண்ணம்”.
(96) புத்திசாலி நடிகர்
* * *
ரோகர்ஸ் என்னும் நடிகர் நடிப்பதற்காக, கிராய் என்னும் கதாசிரியரைக் கதை எழுத ஏற்பாடு செய்திருந்தனர், படத் தயாரிப்பாளர்.
ஆசிரியர் கிராயிடம் வந்து "நான் நடிப்பதற்காக அருமையான கதை ஒன்றை நீங்கள் எழுதி வைத்திருக்கிறீர்களாமே; எங்கே அந்தக் கதை?” என்று கேட்டார் நடிகர் ரோகர்ஸ்.
சிறு துண்டுக் காகிதம் ஒன்றை அவர் முன் போட்டார் கதாசிரியர்.
நடிகர் அதைப் பார்த்துப் புன்முறுவலோடு, “சரி, நான் இதில் நடிக்கத் தயார்!” என்றார்.
ரோகர்ஸ் நடித்தது அதுவே முதல் படம்!
பின்னர், அவர் நடித்த படங்கள் அனைத்துக்கும் கிராயே கதை எழுதினார்.
முதன் முதலில் துண்டுக் காகிதத்தில் கிராய் என்ன எழுதிக் காண்பித்தார் நடிகர் ரோகர்ஸிடம்?
"பஞ்சத்திலே பணத்தை இழந்தான் பைச்பீட்டர்ஸ்; நிலைமைக்கு ஏற்றபடி, தன் வாழ்க்கையைத் திருத்திக் கொண்டான்” என்று குறிப்பிட்டிருந்தார் கதாசிரியர் கிராய்.
(97) புத்தகம் எழுதத் தகுதி
* * *
தான் எழுத்தாளராகி, புத்தகம் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டான் இளைஞன் ஒருவன்.
மிகவும் உற்சாகத்தோடு, புகழ்பெற்ற பத்திரிகை அதிபர் நார்த் கிளிப்பிடம் சென்று, -
"ஆரம்ப நூலாசிரியனுக்கு வேண்டிய முக்கியமான தகுதி என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
அவர் மிகவும் அமைதியாக,
"கொஞ்சம் பசி வேண்டும்!" என்றார்
(98) அவருக்கே புரியாத மர்மம்
* * *
வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனி தம்முடைய ஆய்வுக் கூடத்திலே, நண்பர் ஒருவருடன் வானொலியின் நுட்பங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். பேச்சில், வானொலியின் மிக நுட்பமான விஷயங்கள் யாவும் கூறப்பட்டன.
வெகு நேரத்துக்குப் பிறகு, மார்க்கோனியும் அவருடைய நண்பரும் வீட்டுக்குப் புறப்படத் தயாரானார்கள்.
மார்க்கோனி ஆய்வுக் கூடத்திலிருந்து புறப்படும் முன், ஒரு முறை திரும்பிப் பார்த்தார். பிறகு, "என் வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்த வானொலியைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலேயே கழித்திருக்கிறேன். ஆனால், அதைப் பற்றி இன்னும் சில எனக்குப் புரியவே இல்லை” என்றார் மார்க்கோனி.
நண்பர் மிகுந்த வியப்போடு, "வானொலியின் விஷயங்களை இன்னும் நீங்கள் புரிந்து கொள்ள வில்லையா? அப்படி புரியாதது என்ன?” என்று கேட்டார்.
“வானொலி ஏன் வேலை செய்கிறது என்பது தான்!” என்றார் மார்க்கோனி.
(99) விஞ்ஞானிகளின் விளையாட்டு
* * *
அமெரிக்காவில் ஒரு நாடக அரங்கில் அம்மையார் ஒரு நாடகம் பார்ப்பதற்குப் போயிருந்தார்.
அவருக்கு அடுத்த இருக்கையில் பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனும் மற்றொரு பிரமுகரும் அமர்ந்து இருப்பதைக் காணவே அம்மையாருக்கு மிகவும் மகிழ்ச்சி உண்டாயிற்று.
இடைவேளை மணி ஒலித்தது. ஐன்ஸ்டீனும் அவருடைய நண்பரும் எழுந்து வெளியே போகவில்லை.
அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் மெதுவாக ஏதோ பேசிக்கொாண்டனர். பிறகு ஒரு கவரின் பின்புறம் எதையோ குறித்து நண்பரிடம் காண்பித்தார் ஐன்ஸ்டீன். அவர் அதைப் பார்த்து விட்டு, எதையோ அதில் குறித்து ஐன்ஸ்டீனிடம் கொடுத்தார்.
“ஏதோ புதிய விஞ்ஞான அற்புதத்தை இவர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள்; அது என்னவென்று பார்க்கலாம்” என அந்த அம்மையாருக்கு ஆவல். அவர்களை நெருங்கிக் கூர்ந்து கவனித்தார்.
வேறு எதுவும் இல்லை. அவர்கள் இருவரும் மாறி, மாறி 'டிக்-டாக்-டோ' என்ற கோட்டு விளையாட்டு ஒன்றை ஆடிக் கொண்டிருந்தார்கள்.
விஞ்ஞானிகள் ஆனாலும் அவர்களுக்கும் பொழுது போக்கு உண்டல்லவா?
(100) சமயோசித புத்தி
* * *
பிரிட்டனின் எட்டாவது படை ஆப்பிரிக்காவில் போரிட்டுக் கொண்டிருக்கும்போது புதுமையான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
பிரிட்டிஷ் ரைபிள் படை ஒன்று சிதறிப் பிரிந்து, முப்பத்து நான்கு மணி நேரம் தன்னந்தனியே ஜெர்மானியருடன் போரிட்டபிறகுதான் தப்பி ஓடமுடிந்தது.
அந்த ரைபிள் படையிடம் இடையில் ஒரு சமயம், துப்பாக்கி ரவைகள் கொஞ்சம் கூட இல்லாமல் தீர்ந்துபோய்விட்டன.
எதிரிகளோ சரமாரியாகச் சுட்டுக் கொண்டிருக் கின்றனர். என்ன செய்வது? இந்தக் குண்டு மழைக்கு மத்தியில், சிறிய ராணுவக் கை வண்டி ஒன்றை அனுப்பி துப்பாக்கி ரவைகளை வரவழைக்கத் துணிந்தர் அதிகாரி ஒருவர்.
கைவண்டியும் வெற்றிகரமாகத் துப்பாக்கி ரவைகளோடு திரும்பி வந்ததது. ஆனால், வண்டி வரும் போதே தீப்பற்றி எரிந்து கொண்டே வந்தது.
தீ பரவுமுன் துணிவோடும் அவசர அவசரமாகவும் துப்பாக்கிரவைகளை இறக்கிவிட்டார்கள். என்றாலும், எரிந்து, கொண்டிருக்கும் கை வண்டியை என்ன செய்வது?
அதற்கும் ஓர் உபயோகத்தைக் கண்டுபிடித்தனர். எரியும் வண்டிமீது தேயிலைப் பானையை ஏற்றி, சுகமான தேநீர் தயாரித்துக் குடித்து மகிழ்ந்தார்கள் வீரர்கள்.
(101) சதுரங்க மூளையா?
* * *
சதுரங்க விளையாட்டில், உலகப் புகழ் பெற்ற ரிச்சர்டு ராக்வுட் என்பவரைத் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள்.
ஆட்டத்தில் எவரையும் வெற்றி கொண்டு விடுவார். ஆட்டத்தின் போது அவருடைய கண்களைக் கட்டி விடுவது உண்டு. அப்பொழுதும் கூட காய்களைச் சரியாக நகர்த்தி ஆடுவாராம்.
திறமைசாலியான அவருடைய மூளையை, விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து பார்க்க விரும்பினார்கள்.
அவருடைய இறப்புக்குப் பின் அவருடைய மூளையைப் பரிசோதனை செய்து பார்க்க அவரிடம் அனுமதி கோரினர். அவரும் அனுமதித்துவிட்டார்.
சிறிது காலத்தில், அவர் இறந்ததும், விஞ்ஞானிகள் அவரது மூளையை ஆராய்ந்து பார்த்தார்கள். மூளையின் அமைப்பானது, விஞ்ஞானிகள் பிரமிக்கத்தக்கதாக இருந்தது. - மூளையின் ஒரு பகுதியில் அணுக்கள், சதுரங்கப் பலகையில் எவ்வாறு கட்டங்கள் இருக்கின்றதோ அதேபோல் சதுரக் கட்டங்களாக சேர்ந்து இருந்ததாம். அதாவது அந்த மூளைப் பகுதியே ஒரு சதுரங்கப் பலகை மாதிரி இருந்தது.
அவர் இறப்பதற்கு முன்னர், கடைசியாக கண்களைக் கட்டிக் கொண்டு விளையாடிய பன்னிரண்டு சதுரங்க ஆட்டங்களில் எவ்வாறு அவர் காய்களை நகர்த்தினாரோ,
அந்தக் காய்கள் இருந்த இடத்தைப் போலவே அவை அமைந்திருந்தனவாம்.
(102) புத்திசாலிகளின் தூக்கம்
* * *
துருக்கியின் சர்வாதிகாரியாயிருந்த கமால் பாட்சா அயராத உழைப்பாளி.
தினமும் ஓய்வின்றி பல மணி நேரங்கள் வேலை செய்வாராம்.
தொடர்ந்து 30 மணி நேரங்கள் வேலை செய்ததும் உண்டாம்.
இடையிடையே தேநீர் அருந்தும் வழக்கம் உண்டாம்.
ஒரு நாள் 120 கோப்பைகள் தேநீர் பருகியிருக்கிறாராம்.
கடுமையான உழைப்புக்குப் பின்னர், படுக்கைக்குப் போனால், தொடர்ந்து 24 மணி நேரம் கூடத் தூங்குவாராம்.
குதிரைமீது இருந்தபடியே, நெப்போலியன் சில நிமிஷங்கள் தூங்கி விழிப்பாராம். -
'இத்தனை நிமிடங்கள் தூங்கப் போகிறேன்' என்று கூறிவிட்டு காந்தியடிகள் அத்தனை நிமிடங்கள் தூங்குவ வழக்கம்.
சித்தர்கள், ஞானிகள், அறிதுயில் கொள்வார்கள்.
அதாவது நினைவோடு தூங்குவார்கள்.
மனவலிமை மிக்கவர்களுக்கு அதெல்லாம் சாத்தியமே!
(103) நடந்து செல்வதில் நன்மை
* * *
உடற்பயிற்சி அல்லது யோகாசனம் செய்வது உடலுக்கு நன்மை தரக் கூடியது.
அதை விரும்பாதவர்கள், வயதானவர்கள் சிறிது தூரம் நடப்பதை வழக்கமாகக் கொள்வார்கள்.
அதுவும் ஒருவகைப் பயிற்சியே ஆகும்.
வயதான காலத்திலும் கூட பெர்னார்ட்ஷா, தம்முடைய வீட்டுத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருப்பாராம். -
தமிழ்நாட்டின் முதல் அமைச்சராயிருந்த ஒமந்துார் இராமசாமி ரெட்டியார் காலையிலும் மாலையிலும் கடற்கரையில் நடந்து செல்லும் வழக்கம் உடையவராம்.
அவ்வாறு பலர் நடப்பது உண்டு.
சார்லஸ் டிக்கன்ஸ் என்னும் ஆங்கில நாவல் ஆசிரியர் தினமும் வெகு தொலைவு நடப்பாராம். பன்னிரண்டு, பதினைந்து மைல்கள், சில சமயங்களில் இருபது மைல்கள் கூட நடப்பாராம்.
ப்ரெளனிங் என்னும் கவிஞர் எழுபது வயதிலும் கூட வெகுதூரம் நடப்பாராம்.
குவின்ஸி என்னும் ஆசிரியர் தினமும் பதினான்கு மைல்களுக்குக் குறையாமல் நடந்தால்தான் அவர் உடல் நலத்தோடு இருப்பாராம்.
நடப்பது என்பது அவரவர் விருப்பத்தையும், உடலையும் பொறுத்த விஷயம்.
(104) பசி அறியாத விஞ்ஞானி
* * *
உலகம் முழுதும் அறிந்த விஞ்ஞானி நியூட்டன், பல நாட்கள் உணவை மறந்து ஆராய்ச்சியில் மூழ்கிக் கிடப்பார்.
ஒரு நாள் நியூட்டனின் நண்பர் ஒருவர் அறையில் நுழைந்து, நியூட்டனுக்காக வைக்கப்பட்டிருந்த உணவைச் சாப்பிட்டுப் போய் விட்டார்.
சிறிது நேரம் கழித்து சாப்பிடவந்தார் நியூட்டன். தட்டுகள் காலியாகக் கிடந்தன. அதைப் பார்த்துவிட்டு, “நான் ஒரு முட்டாள், சாப்பிட்டதை மறந்துவிட்டு, மறுபடியும் இங்கே சாப்பிட வந்திருக்கிறேனே" என்றார்.
பின்னர், நியூட்டனின் நண்பர் கூறிய பிறகே அவருக்கு விஷயம் தெரிய வந்ததாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக