பூவும் கனியும்
கட்டுரைகள்
Back
பூவும் கனியும்
டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு
பதிப்புரை
கல்வித் துறையின் எல்லா நிலை களையும் தரங்களையும்பற்றி எண்ணிப் பார்த்துப் பேசிய பேச்சுக்கள் இங்கே வரிவடிவம் பெற்றுள்ளன. பூத்து, காய்த்து, கனியாக வாய்ப்புக் கொடுத்தால் நம் நாட்டுச் செல்வம் செழிக்கும்; சிறக்கும். இந்தத் துறையில் நாங்களும் ஒரு பணிசெய்ய உதவிய மாநிலக் கல்வி நெறியாளர் (Director of Public Instruction) அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.
ஜி. ஆர். தாமோதரன்
முன்னுரை
'மேடைப் பேச்சு' என் அலுவலின் ஒரு பகுதியாகிவிட்டது. அங்கும் இங்கும் சில அன்பர்கள் அப் பேச்சுக்களில் சிலவற்றை ஒலிப்பதிவு செய்து காப்பாற்றி வைத்துள்ளனர். அவர்களுக்கு என் நன்றி.
அவற்றை நேரில் கேட்க முடியாதவர்கள், படிப்பது பயனுடைய தாகும் என்று நண்பர்கள் கருதினார்கள். என்னை நானே எப்படி எடைபோட முடியும் ? ஆகவே, நண்பர்களின் தீர்ப்புக்குக் கட்டுப் பட்டு, அவற்றில் சிலவற்றைப் 'பூவும் கனியும்' என்ற நூலாக வெளியிட இசைந்தேன். 'அடித்தா? அணைத்தா?' என்ற நூலை ஆதரித்து ஊக்கியதைப்போல் இதையும் ஏற்று, மேலும் ஊக்குவிக்க வேண்டிக்கொள்ளுகிறேன்.
இந் நூலை வெளியிட அனுமதித்த சென்னை அரசியலாருக்கு என் நன்றி உரியதாகும். ஒல்லும் வகையெல்லாம் தமிழ்த் தொண்டாற்றும் கலைக்கதிர் ஆசிரியர், நல்லார் நண்பர், திரு. ஜி.ஆர். தாமோதரன் அவர்கள் இந்நூலை வெளியிட முன் வந்தமைக்கு நன்றியுடையேன்.
இந் நூலில் வரும் கருத்துக்களும் கொள்கைகளும் என் சொந்தக் கருத்துக்களும் கொள்கைகளுமே. ஆகவே, அவற்றிலுள்ள குற்றங்களுக்கு நானே பொறுப்பு. அரசியலாரை அவை எவ்விதத்திலும் சம்பந்தப்படுத்தா; குற்றத்தை நீக்கி, குணமிருப்பின் அதை மட்டும் கொள்ளும்படி கோருகிறேன்.
நெ து. சுந்தரவடிவேலு
26 —–1 —– '58
இரண்டாம் பதிப்பு :
இந் நூலைக் கனிவோடு ஏற்று, இரண்டாம் பதிப்பு வெளியிடும் தேவையை உண்டாக்கிய அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. இவ்விரண்டாம் பதிப்பை வெளியிடும் கலைக்கதிருக்கும் என் நன்றி. இப் பதிப்பையும் விரைந்து பெற்று, பூக்கள் பல கனியாகுமாறு துணைபுரியும்படி தமிழ்ப் பெருமக்களைக் கோருகிறேன்.
நெ. து. சுந்தரவடிவேலு
27—–5—–59
காணிக்கை
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்
என்பது பொதுமறை. அவ்வழி தம்முடைய அரசியல் ஆர்வமும் ஈடுபாடும் என்னையோ, என் உடன்பிறந்தோர் களையோ கல்வியில் பாதிக்காத வகையில் கட்டிக்காத்து, நற் கல்வி பெறச்செய்த என் தந்தையாருக்கு நன்றியறிதலோடும், வணக்கத்தோடும் இச் சிறு நூலைக் காணிக்கை யாக்குகிறேன்.
நெ. து. சுந்தரவடிவேலு
உள்ளடக்கம்
I. எதிர்கால மன்னர்கள்
II. இளைஞர்களுக்கு அறிவுரை
III. கல்லூரி மாணவர்கள் நிலையும் வழியும்
IV. முதியோர் கல்வி—வழியும் வகையும்
V. கல்விப் பயன்
VI. பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புக
I
எதிர்கால மன்னர்கள்
பெரியோர்களே ! தங்கைகளே ! தம்பிகளே!
இன்று நீங்கள் எல்லோரும் வெற்றி கண்டு விட்டீர்கள். நான் தோற்றுவிட்டேன். நீங்கள் எல்லோரும் உற்சாகமான வரவேற்புக் கொடுத்ததீர்கள். அது வெறும் சொல் வரவேற்பன்று.
ஒத்துழைப்பு - செம்மைக்கு வழி
நூற்றுக் கணக்கான மாலை உருவிலே, செண்டு உருவிலே எனக்கு வரவேற்புக் கொடுத்து என்னைத் திக்குமுக்காடச் செய்ததீர்கள். அத்தனை மாலைகளை யும் ஒரே சமயத்திலே நான் தூக்கியிருந்தால் தூக்க முடியாமல் மயங்கியிருப்பேன். ஆனல் நல்ல வேளையாகப் பல தோழர்கள் உடன் இருந்து கைகொடுத்தார்கள். அதைப் போலத்தான் என் வேலைகூட என் வேலை பெரிய வேலை; சிறிய வேலை அன்று பெருமைக்காக நான் இப்படிச் சொல்லவில்லை. ஒரு இலட்சம் இரண்டு இலட்சம் குழந்தைகளையல்ல. சென்னை இராச்சியத்தில் உள்ள 63 இலட்சம் குழந்தைகளையும் பள்ளிக்கூடத்திற்குக் கொண்டுவர வேண்டும். நல்ல படிப்புச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுதான் என் வேலை. பெரிய வேலை தானே!
இதனை ஒருவனால் செய்ய முடியுமா? முடியாது இன்றைக்குப் பல தோழர்கள் என் மலர்ச் சுமையைப பங்கிட்டுக் கொண்டார்கள். இதைப்போல நீங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு, ஒத்துழைத்து, என் வேலையின் பளுவையும் பங்கிட்டு வாங்கிக்கொண்டால்தான் என் வேலை செம்மையாக முடியும்.
இன்று குழந்தைகள் - நாளை ஆளப் பிறந்தவர்கள்
ஏன் இந்த வேலை செம்மையாக முடிய வேண்டும் ? நீங்கள் இன்றைக்குக் குழந்தைகள், பையன்கள், பெண்கள்; ஆனால், நாளை இன்றைய குழந்தைகள்தாம்-இந்த நாட்டின் இளவரசர்கள், இளவரசி கள்தாம் - இந்த நாட்டின் எல்லாப் பொறுப்புகளையும் ஏற்று நடத்தப் போகிறவர்கள். இந்த நாடு நல்ல நிலைக்குப் போக, பெரிய நிலையை அடைய, பெரியவர்களாக உள்ளவர்கள் காலாகாலத்தில் அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்ய வேண்டும்; கல்வியைக் கொடுக்கவேண்டும். அதனை ஒழுங்கானபடி கொடுத்தால், உற்சாகத்தோடு கொடுத்தால், துணிவு குறையாதபடி கொடுத்தால் அவர்கள் நல்லவர்கள் ஆவார்கள்.
பல்லுயிர் ஒம்புதல்
நீங்கள் இன்று அளவு கடந்த வரவேற்புக் கொடுத்தீர்கள். இவ்வளவு பணம் செலவு செய்து இத்தனை மாலை வாங்கி யிருக்கிறீர்களே என்று நினைத்தேன். செலவு செய்வது என்றால் எனக்கு விருப்பமிருப்பதில்லை. நான் கருமி அல்லன். ஆனால் தனி மனிதனுக்கு அதிகம் செலவு செய்யக்கூடாது என்பது என் கொள்கை. ஆகவே எனக்காகச் செலவு பண்ணினதில் எனக்கு வருத்தம் இருந்தது.
வருத்தம் சிந்தனையாக மாறினால்தான் பயன். வருத்தம் வெகுளியாக மாறினால் ஒன்றுக்கும் பயன் இல்லை.
இந்த மாலைகள் எல்லாம் பயன்பட வேண்டும் என எண்ணினேன். ஆகையால் `பங்கிட்டுக் குழந்தைகட்குக் கொடுங்கள்' என்றேன். நான் ஒரு தூதன். எதற்குத் தூதன் ? ஒரு பள்ளிக்கூடத்தில் கொடுத்த அன்பை வாரி இன்னொரு பள்ளிக்குத் தரும் தூதன். நம் வாழ்க்கையும் அப்படித்தான் பெருஞ் செல்வம் உள்ளவர்களும் இருக்கிறார்கள், சிறு செல்வம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். ஆனல் எல்லோரும் தூதர்கள்தாம். இங்கே வாங்கி அங்கே கொடுப்பவர்கள்தாம். அதனால்தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது பெரியவர்
'பகுத்துண்டு பல்லுயிர்
ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம்
தலை'
என்று சொன்னர். ஆகையால் நாம் என்ன செய்ய வேண்டும்? அவரவர் தங்களுக்குக் கிடைத்த சுகத்தை, தங்களுக்குக் கிடைத்த பொருளை, சொத்து சுதந்திரங்களையெல்லாம் மற்றவர்க்குப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். தனக்காக மாத்திரம் வைத்துக் கொள்ளக் கூடாது. ஒருவர் கைக்கு வருவது மற்றவர் கைக்குப் போனால்தான் பலன் உண்டு.
இதற்குப் பள்ளிப் பிள்ளைகள் நல்ல வழி காட்டினார்கள். தஞ்சைப் புயல் நிவாரண நிதிக்குச் சிறு குழந்தைகள் காலணா காலணாவாகச் சேர்த்து என் கையிலே கொடுத்தார்கள். எவ்வளவு பெரிய மனம், பாருங்கள்; எவ்வளவு நல்ல குணம், பாருங்கள். குழந்தைகளிடம் இல்லாத நல்ல குணம் இல்லை. பார்த்தால் நமக்கு மண்ணாங்கட்டி போலத் தோன்றும்; ஆனால் உண்மையில் மண்ணாங்கட்டிக ளல்ல; அவைகள் மாணிக்கங்கள். குழந்தைகள் மாணிக்கங்கள்.
அந்த மாணிக்கம் வெளியே கிடக்காது. ஆழத்திலே இருக்கும். மிக மிக ஆழத்திலே இருக்கும். எல்லோருக்கும் தெரியாத ஆழத்திலே இருக்கும். அதனைக் கண்டுபிடிப்பதுதான் நமது வேலை. யாருடைய வேலை ஆசிரியருடைய வேலை. ஒவ்வொரு குழந்தையும் ஒரு மாணிக்கம்; அறிவுடையது. ஒவ்வொரு குழந்தைக்கும் என்ன என்ன திறமை இருக்கிறது என்பதனைத் தெரிந்து உற்சாகப்படுத்த, ஊக்கப்படுத்த, வளர்க்கப் பாடுபடவேண்டும்.
குழந்தைகள் இன்றைக்கு எவ்ளவு மகிழ்ச்சியாக இருக்கின்றன! ஒன்றாவது சோர்ந்து காணப்படுகிறதா ? இரண்டு மணி நேரத்துக்கு மேலாக வீட்டிலிருந்து நடந்து வந்து, இங்கே காத்திருந்தும் இவ்வளவு உற்சாகமாகத் தோன்றுகின்றனவே. இந்த உற்சாகம் என்றைக்கும் நிலைக்கவேண்டும். ஏன் நிலைக்கவேண்டும்? குழந்தைகள், வளரும் பெண்கள்- வளரும் பையன்கள். அவைகள் காட்டுச் செடிகள் அல்ல. கனகாம்பரப் பூக்கூட அல்ல. குழந்தைகள் அனிச்ச மலர்கள்; குழந்தைகள் நுட்பமான அனிச்ச மலர்கள்; முரட்டுத்தனமாகத் தொட்டால் வாடி வதங்கிப் போகும் மலர்கள். அந்தக் குழந்தைகளை நாம் தட்டிக்கொடுத்து வளர்த்தால்தான், நல்ல குழந்தைகளாக, அறிவுள்ள குழந்தைகளாக நன்றாக வளர்வார்கள், தைரியமாக வாழ்வார்கள்; திறமையோடு வாழ்வார்கள். அதை விட்டுவிட்டு `உங்களுக்கு எங்கே படிப்பு வரும்’ `ஏன் சனியனே தொல்லை கொடுக்கிறாய்ய்?’ `ஏன் என் உயிரை வாங்குகிறாய்?’ மண்டே, மக்கே’ என்று சொன்னால் மாணிக்கமும் மக்காகப் போகும். நம் வாயில் அத்தகைய சொற்கள் வரக்கூடாது. யார் பேரில் வெகுளி இருந்தாலும் அச்சொற்கள் வரக்கூடாது குழந்தைகள் நடுவிலே அவைகளே மறந்துகூடச் சொல்லாதீர்கள். ஏன் என்றால் குழந்தைகள் நம்மைப் பார்த்துத்தான் தூற்றக் கற்றுக்கொள்கிறார்கள்.
பெரியவர்களே வழிகாட்டிகள்
குழந்தைகள் வரவேற்பிலே கேட்டார்கள். வெளி நாட்டிற்குப் போனீர்களே, அங்கே பார்த்தவைகளைச் சொல்லுங்கள்’ என்று கேட்டார்கள். அத்தனையும் சொல்ல நேரம் இல்லை. ஒன்றுமட்டும் சொல்கிறேன். இங்கிலாந்திலே குழந்தைகள் மணி மணியாக இருந்தன; நல்ல பழக்கத்தோடு இருந்தன. பச்சைக் குழந்தைகள்கூட ஒன்றுக்கு இரண்டுக்கு தெருவில் இருப்பது இல்லை. ஏன் இருப்பது இல்லை? அவைகள் மட்டும் அதிசயமான குழந்தைகளா? ஒன்றுக்கு இரண்டுக்கு வராதா ? அவைகளுக்குத் தெருவில் இருக்கக் கூடாது என்று எப்படித் தெரியும் பெரியவர்கள் யாரும் செய்வதில்லை, குழந்தைகளும் செய்வதில்லை. பெரியவர் களைப் பார்த்துத்தானே குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன ! அப்பா அம்மா செய்வது இல்லை; ஆகவே பிள்ளைகளும் செய்வது இல்லை .
திட்டாதீர்கள், வாழ்த்துங்கள்
பெரியவர்களே ! என்ன குறை இருந்தாலும் குழந்தைகளைத் திட்டாதீர்கள். ஆனால் வாழ்த்துங்கள். வாழ்த்த வாழ்த்த நல்ல வளர்ச்சி அடைவார்கள். அதன்மூலம் நாட்டிலே நல்ல மக்கள் ஏற்படுவர். எதிர்கால அரசிகளையும் , அரசர்களையும் இன்று விட்டுவிட்டு, 21 வயது ஆனபிறகு 'உரிமை வந்து விட்டது; அறிவோடு பணி செய்யுங்கள்' என்று சொன்னால், திடீர் என்று அறிவு வருமா ? ஆற்றல் வருமா ? சாமர்த்தியம் வருமா ? துணிச்சல் வருமா ? நிதானம் வருமா ? நாலுபேரைச் சேர்த்துக் காரியம் செய்கின்ற குணம் வருமா ? இவையெல்லாம் பருவத்தே பயிர் செய்ய வேண்டுவன. சிறு பிள்ளைகளாக இருக்கும்போதே துணிவு வரும்படி வளர்க்க வேண்டும். இன்றைக்குக் குழந்தைகள் காட்டிய விளையாட்டுக்க ளெல்லாம் மிகச் சிறப்பாக இருந்தன. ஆடல் பாடல் மிகச் சிறப்பாக இருந்தன; துணிச்சலாக இருந்தன. இவைகள் வளர வாழ்த்துங்கள். இந்தக் குழந்தைக ளெல்லாம் எவ்வளவு மகிழ்சி சியாக ஆடினார்கள்! நான் முன்பே சொன்னது போல இவர்கள் பூக்கள். கடினமாகத் தொட்டால் வாடிவிடுவார்கள்; கொஞ்சம் கோபமாகச் சொன்னால் வாடிவிடுவார்கள். ஆகையால் கோபமாகக் சொல்லாதீர்கள். பள்ளிக்கூடத்திற்கும் மகிழ்ச்சியாக வரும்படி செய்யுங்கள். பள்ளிக்கூடத்திலே மலர்ந்த முகத்தோடு இருக்கும்படி செய்யுங்கள்.
இன்றுபோல் என்றும்
இன்றைக்கு ஒவ்வொருவரும் - குழந்தைகளும் பெரியவர்களும்-உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் இருக்கிறீர்கள். உங்களால் இன்றைக்குச் செய்ய முடிந்தது நாள்தோறும் செய்யமுடியாதா? இந்த முயற்சி, இந்த ஆர்வம், இந்த உற்சாகம், இந்த அன்பு ஆகியவற்றைப் பள்ளிக்கூடத்தில் செலுத்துங்கள். எனக்கு அதுதான் மனநிறைவு கொடுக்கும். இதைக் காணவும் மன நிறைவு ஏற்படுகின்றது. மேலும் மிகுதியாக மனநிறைவு அளிப்பது அதுதான்.
நான் உங்களைக் கேட்டுக்கொள்வ தெல்லாம் உங்கள் பள்ளிக்கூடத்தை எப்போதும் ஒட்டடை இல்லாத பள்ளிக்கூடமாக, " அழுக்கில்லாத பள்ளிக்கூடமாக, அணி செய்யப்பட்ட பள்ளிக்கூடமாக வைத்துக்கொள்ளுங்கள் என்பதே. குழந்தை கள் இருக்கும் இடம் தெய்வம் இருக்கும் இடம் என்று சொல்வார்கள். இந்த நடமாடும் தெய்வங்கள் அறிவாளிகளாகப் போகும் தெய்வங்கள் இருக்கும் பள்ளிக்கூடங்கள் அழகாக இருக்கட்டும். அங்கே அன்பு தவழட்டும். அப்போதுதான் நீங்கள் படும் பாட்டுக்குப் பலன் உண்டு.
படிப்பு எல்லோருக்கும் வரும்
எல்லாக் குழந்தைகளும் தேற முடியும். அது நம் கையில் இருக்கிறது. அதற்கு முதல் வேலையாக அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். இரண்டாவது அவர்களுக்குப் படிப்பு வராது என்று சொல்லக்கூடாது. துணிவு கொடுக்கவேண்டும். இங்கிலாந்திலே அறுபது எழுபது பள்ளிகளுக்குச் சென்று பார்த்தேன். சிறு பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிகள்வரை பார்த்தேன். வெகுளி கொள்ளும் ஓர் ஆசிரியரைக்கூடக் காணமுடியவில்லை. அப்படிப்பட்ட ஆசிரியராக நம்மாலும் இருக்கமுடியும். அன்போடு தட்டிக் கொடுத்து, அணைத்துத்தான் திருத்தமுடியுமே தவிர, அடித்துத் திருத்தவே முடியாது. ஆகவே குழந்தைகளை அணைத்து உற்சாகப்படுத்தித் திருத்துங்கள்.
இங்கிலாந்திலே ஆசிரியர் ஒருவர்கூடப் பிள்ளைகளைப் பார்த்து 'உனக்குப் படிப்பு வராது' என்று சொல்வதில்லை. ஆகவே எல்லோரும் வளர்ந்து கொண்டே உள்ளனர். பள்ளிக்கூடத்தை விட்ட பிறகும் படிக்கின்றனர். துணிவோடு படித்து அறிவை வளர்க்கின்றனர். நம் நாட்டிலும் அந்நல்ல பழக்கம் வரவேண்டுமென்றால் நம் குழந்தைகளே நல்ல உற்சாகத்தோடு கற்கும்படி செய்யவேண்டும். துணிவு ஊட்டி நல்ல பழக்க வழக்கங்கள், பிறருக்கு உதவும் பழக்க வழக்கங்கள் உண்டாகும்படி செய்யவேண்டும். அப்படிச் செய்வதால் நல்லறிவு பெற்று, நற்செயல் செய்கிற தென்பு பெற்று நன்மக்களாக வளருவார்கள். தமக்கென வாழாதவர்களாக வளருவார்கள்.
புதிய சமுதாயம் உருவாக
நம்முடைய நாட்டிலே புதிய சமுதாயத்தை நாம் உண்டாக்க வேண்டும். இதுவரை எத்தனையோ சண்டை; இன்றுகூடப் பல சண்டைகள் உண்டு. அந்தச் சண்டைகளுக் கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
இப்போது, உச்சிக் குடுமி வைத்தவரை எங்காவது ஒருவரைத்தான் பார்க்க முடியும். அநேகமாக எல்லோரும் கிராப் வைத்துக்கொண்டோம். இதற்காகச் சண்டை பிடிக்கவில்லை. சண்டை பிடித்திருந்தால் கிராப் ஆகியிருக்குமா ? சண்டைதான் நடந்து இருக்கும். நமக்குக் கிராப் பிடித்தது. `திட்டுகிற வர்கள் திட்டிக்கொண்டே இருக்கட்டும் என உடனே சென்று கிராப் வைத்துக்கொண்டோம். இதைப்போலத்தான் வேண்டாத பழைய வழக்கங்களும் எப்படியோ தொலையட்டும். அதற்காகச் சண்டை போடக் கூடாது. அவர்கள் அறிவற்றவர்கள் என்று சொல்லக் கூடாது. அவர்கட்கு ஒன்றும் தெரியாது என எண்ணக்கூடாது. சண்டையிலே காலம் கழியக்கூடாது. நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் வீடும், ஊரும் நன்றாக இருக்கும்; நாடும் நன்றாக இருக்கும். 'இவன் இன்னான், நான் இன்னான்' என்று சொல்லாமல் எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற நிலை வரப் பாடுபடுவோம். நாம் எல்லாம் இந்நாட்டு மன்னர்தாம். குடிசையிலே இருந்தாலும் மாட மாளிகையிலே இருந்தாலும் எல்லோரும் மன்னர்கள்தாம்.
இந்த நிலைமையை நினைவுபடுத்திக்கொண்டு, நமக்குள் வேறு எவ்விதமான வேற்றுமை இருந்தாலும், அவற்றைத் தனிப்பட்ட காரியமென விட்டு விட்டு நாட்டுக் காரியத்துக்காக, பொதுச் செயல்களுக்காக நல்ல குழந்தைகள் வளரவேண்டும் எனப்பாடுபட வேண்டும். உங்களுக்குத் தனிப்பட்ட கொள்கை வேற்றுமைகள் இருக்கலாம். அவை பள்ளிக்கூடத்திற்கு வெளியே. பள்ளிக்கு உள்ளே அவற்றிற்கு இடமில்லை. அங்கே படிப்புச்சொல்லிக் கொடுக்க வேண்டும். உற்சாகமாகச் சொல்லிக் கொடுக்கவேண்டும். ஒரு குழந்தையைத் தட்டிக் கொடுத்து, மற்றெரு குழந்தையை `முட்டாள்.' என்று சொல்லக்கூடாது. இந்த நாட்டிலே அறிவுள்ள குடிகள், ஆண்மையுள்ள குடிகள், 'தொல் லுலக மக்களெல்லாம் ஒன்றே’ என்று எண்ணும் குடிகள் அப்போதுதான் ஏற்பட முடியும். அம்மாதிரியான உலகத்திற்கு வழி காட்டும் குடிகளை உண்டாக்குமாறு உங்களை வேண்டிக்கொண்டு; என் நன்றியைக் கூறி, மக்களுக்கு மெய்யாகப் பயன்படுகிற வகையில் என் பணிகளே ஆற்றுவேன் எனச் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.
***
(குழந்தைகள் அணிவகுத்து வரவேற்புக் கொடுத்தபோது ஆற்றிய சொற்பொழிவு)
II
இளைஞர்களுக்கு அறிவுரை
------------
மாணவ மாணவியர்களே !
உங்கள் பருவம் மீண்டும் கிடைக்காத பருவம்; பொன்போற் போற்றிப் பயன்படுத்தப்பட வேண்டிய பருவம். வாய்ப்போ கிடைத்தற்கரிய வாய்ப்பு. தொடக்கப் பள்ளிக்கூடங்களே இல்லாத ஆயிரக் கணக்கான சிற்றூர்களும், படிக்க வாய்ப்பில்லாத பல இலட்சம் மக்களும் உள்ள இந்நாட்டில், உங்களுக்காவது ஏதோ படிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறதென்றால், அதை எளிதானதாகவோ அலட்சியப்படுத்தக் கூடியதாகவோ கருதாதீர்கள்; இப்பருவத் தையும், வாய்ப்பையும் நன்றாக முழுதும் பயன் படுத்திக்கொள்ளுங்கள்; மாணவப் பருவத்தில் கற்க வேண்டுவன வெல்லாம்'கற்றுக்கொள்ளுங்கள்; பெற வேண்டிய திறமைகளை யெல்லாம் பெற்றுக்கொள்ளுங்கள், தேடிக்கொள்ள வேண்டுவன வெல்லாம் தேடிக்கொள்ளுங்கள்.
கல்வி கரையற்றது
கற்க வேண்டுபவை உங்கள் பாட நூல்களோடு முடிந்துவிட்டனவாக எண்ணாதீர்கள். கற்கவேண்டு பவைகளை அறிமுகப்படுத்துபவைகளே அவை. பாட நூல்களுக்கு அப்பால் - பரீட்சைகளுக்குத் தொடர்பில்லாத-பலவற்றை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; படிப்பை முடித்தபின், அவைகளைக் கற்கலாம் என்றுமட்டும் காலங் தாழ்த்தாதீர்கள்.
வெறும் ஏட்டுப் படிப்பு தகவல்களைத்தான் கொடுக்கும்; அறிவொளியைத்தான் வீசும். அவற்றை வாழ்க்கையோடு இணைத்துப் பயன் பெறும் திறமையை நீங்கள் பெற முயலவேண்டும். வாழ்க்கைக்கு ஊக்கம், உறுதி, உழைப்பு, தன்னம்பிக்கை இன்றியமையாதவை. அவற்றை யெல்லாம் நீங்கள் இடை விடாத பயிற்சியாற் பெறலாம்; அப்படிப் பெறத் தவறவேண்டா.
பிஞ்சிற் பழுக்கவேண்டா
இளம்பருவத்தே உங்களை மயக்கக் கூடியவை பற்பல.
` எப்பொருள் எத்தன்மைத்
தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப
தறிவு''
" என்ற அறவுரையை மனத்திற் கொண்டு கல்வியிலே உங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துங்கள். கல்வியின் பகுதியாகத்தான் நீங்கள் சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றைப் படித்துச் சிந்தித்துத் தெளிவுபெற வேண்டும். மாணவர்களாக இருக்கும்போதே அரசியல்வாதிக ளாகிவிட வேண்டா என்றுமட்டும் அறிவுறுத்த விரும்புகிறேன். எதற்கும் காலமுண்டு. காலம் வரும்போது கருத்தோடு செயலாற்ற ஆயத்தம் செய்துகொள்ள வேண்டுவதே மாணவர் கடமை, மாணவர்களாக இருக்கையிலேயே அரசியல்வாதிகளாவது பிஞ்சிற் பழுப்பதாகும். அப்பழத்தின் சுவையும் பயனும் எப்படி இருக்குமென்பது நீங்கள் அறியாத தன்று.
உடலோம்பல்
உடலோம்பலின் இன்றியமையாமையை நான் அதிகம் வற்புறுத்தத் தேவை இல்லை. அதன் தேவையையும் சிறப்பையும் உணர்ந்திருந்தாலும், வசதிக் குறைவும் வேறு பொழுதுபோக்குக் கவர்ச்சிகளும் உடற்பயிற்சியை மறக்கச்செய்து வருகின்றன. இது பெருந் தீங்கு. " உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்பது பொருள் நிறைந்த பொன் மொழி. உடல் வலிமை இல்லாதவன் எல்லா வசதிகளும் பெற்றிருந்தாலும் தனக்கும் பிறருக்கும் முழுப்பயன் அற்றவனாகத்தான் இருக்க நேரிடும். எனவே எப்படியும் ஒழுங்காக உடற்பயிற்சி செய்ய வழி வகை செய்துகொள்ளுங்கள்.
ஒப்புரவு
'ஒழுக்கம் விழுப்பம்
தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப்
படும்'
என்ற பொய்யாமொழியையும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.ஏட்டுப் படிப்பு அல்லது தொழிலறிவு ஆகியவற்றை ஊட்டுவதோடு கல்வி நிற்கக் கூடாது. அது நமக்குக் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் கற்பிக்க வேண்டும். ஒழுக்கம் என்னும் போது வழக்கமாகக் கூறும் ஐம்பெருங் குற்றங்களை நீக்குவதைமட்டும் நான் குறிக்கவில்லை; மக்களோடு மக்கள் எப்படிப் பழகுவது, எங்கெங்கு எப்படி நடப்பது, பொது இடங்களில் எப்படி நடப்பது என்பவைகளையும் சேர்த்துத்தான் குறிக்கிறேன். கட்டுப் பாடும் ஒழுங்கும் அற்ற அறிவாளி, கூடிய இடமெல்லாம் புரண்டோடிக் கண்டதையெல்லாம் பாழாக்கும் காட்டாறு போன்று தீமை பயப்பவன் ஆவான். எனவே கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் இளமையிலேயே கற்றுக்கொள்க.
கற்றதனால் ஆய பயன்
நல்ல உறுதியான உடலும், கூரிய மதியும், கட்டுப்பாடும், ஒழுங்கும் எதற்குப் பயன்பட வேண்டும்? யாருக்குப் பயன்பட வேண்டும்? ஆக்கத்திற்கா? அழிவிற்கா? தனக்கா ? பிறருக்கா?
அணுவைப் பிளந்து ஆற்றல் மிக்க சக்தியைக் கண்ட மனித சமுதாயம், அச் சக்தியால் உலகம் என்று அழிக்கப்படுமோ என அஞ்சி அஞ்சி அல்லலுறுகின்ற தன்றோ? காரணம் என்ன? ஆக்க வேலைக்கு அவற்றைப் பயன்படுத்தத் தவறியதேயாகும். அறிவும் வலிவும் வளர்ந்த அளவுக்கு மக்களின் உள்ளம் வளர்ந்தபாடில்லை. ஆகவே வலிமை யெல்லாம்-அறிவெல்லாம்-இதுவரை `தான்' என்கிற சிறையிலிருந்து வெளிப்படவில்லை. தன் பெண்டு, தன் பிள்ளை என்கிற தன்னலம், பொதுநலத்திற்கு ஊறாக நிற்கிறது. `தான்' என்பதைக் குறைத்து 'நாம்' என்பதைப் பெருக்கப் பெருக்கத்தான், நாம் மக்கள். நிலையை எய்துவோம். தனி உணர்ச்சி குறைந்து, சமூக வளர்ச்சி வளர வளரத்தான் நம் துன்பங்கள் தொலையும்.
மக்கட் பண்பு
பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ள குறள்,
'அரம்போலும் கூர்மைய
ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில் லா
தவர் '
என்று இடித்துரைப்பதை மறந்துவிடாதீர்கள். கல்வியின் நோக்கம் மக்கட் பண்பைப் பெறுவதே. எது மக்கட்பண்பு என்று சிறிது சிந்திப்போம். மக்கட் பண்பாவது, பிறிதினோய் தந்நோய்போல் நோக்குதலாகும். எனவே, மக்கள் துன்பத்தைத் தன் துன்பமாக எவன் கருதுகிறானோ, அவனே கல்விமான். மற்றவர்கள் எவ்வளவு அறிந்திருந்தாலும், எத்துணைப் பட்டங்கள் பெற்றிருந்தாலும், எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் மக்கள் நிலையை அடையாதவர்களே. மக்கள் நிலையை அடையவே நாம் எல்லோரும் விரும்புவோம் என்பது உறுதி. எனவே, நம்மைச் சூழ்ந்துள்ளோர் அடைகிற துன்பங்கள் எவை எவை, அவற்றை நீக்க வழிகள் எவை எவை? என்று கவனிப்போம்.
துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும்
வறுமை, அதன் விளைவான பட்டினி; அறியாமை, அதன் விளைவான மூட நம்பிக்கைகள், மூடப் பழக்க வழக்கங்கள்; சாதி ஏற்றத் தாழ்வு, அதன் விளைவான சாதிச் சண்டை; சமய வெறி, அதன் விளைவான சமயப் போராட்டங்கள்; இவற்றின் கட்டு விளைவான அமைதியின்மை-ஆகிய துன்பங்களை நாம் அனுபவித்துவருகிறோம். இத்துன்பங்களை நீக்க முடியுமா? இப்படியே விட்டுவைக்கலாமா ? நீக்க முடியும், நீக்கவேண்டும் என்பதே என் முடிவு. பிற நாடுகள் செய்துகாட்டிய முடிவுமாகும்
நல்குரவு
வறுமை ஒரு சமூகத் தொற்று நோய். அதைப் போக்குவது சமூகத்தின் முதற் கடமை. அதனை எவ்வழியிற் போக்குவது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். உழைப்பைப் பெருக்கி உற்பத்தியைப் பெருக்கினால் எல்லோரும் வறுமையின்றி வாழலாம் என்பது உண்மையா? பெற்ற பொருள்களை இப் போதுள்ள முறைக்கு மாறாக விநியோகிப்பது வாயிலாக வறுமையைப் போக்குவதா? என்ற கேள்விகளுக்குப் பதில் என்னிடத்திலிருந்து எதிர்பார்க்காதீர்கள். இரண்டில் எதைக் கொண்டாலும், இரண்டும் மறந்துவிட்ட மற்றொன்றை நான் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். அது எது ? செலவு முறை; நம் மக்களின் செலவு முறையைக் குறிப்பிடுகிறேன். மயக்கத்திற்கோ, வீண் பெருமைக்கோ ஆனவற்றிற்கு நாம் ஏராளமான செல்வத்தைப் பாழாக்கு கிறோம். அவற்றைத் தடுத்து வாழ்க்கையை நிரந்தரமாக நல்வழிப்படுத்தும் துறைகளுக்கு மிகுதியாகச் செலவிடக் கற்றுக்கொள்ள வேண்டும். அளவறிந்து செலவிடத் தெரியாத மக்களை எம்முறையும் காப்பாற்றாது என்பதை மறவாதீர்கள்.
அறியாமை
தற்குறித்தன்மை நமக்குள்ள அடுத்த துன்பம். மக்கட் பெருக்கத்திற்குப் பெயர்போனதைப் போன்றே தற்குறித்தன்மைக்கும் நம் நாடு உலகறிந்ததாய் இருக்கிறது. அறியாமையின் விளைவாய் நம்மிடையே உள்ள மூட நம்பிக்கைகளும் கண்மூடி வழக்கங்களும் எண்ணிறந்தன. நாம் மக்கள் தன்மையை முழுதும் அடைவதற்குக் குறுக்கே நிற்கும் இவற்றையெல்லாம் விரைவில் குழி தோண்டிப் புதைக்கவேண் டும். மன்னர்களாகிவிட்டவர்களை மண்ணாங்கட்டி நிலையில் விட்டுவைப்பது இழிவுமட்டு மன்று, பெரும் தீங்குமாகும். எனவே, இத் தலைமுறையின் முழு கவனமும் முயற்சியும்
'எல்லோரும் கல்வி கற்றுப்
பன்னரும் கலைஞா னத்தால்,
பராக்கிர மத்தால், அன்பால்,
உன்னத இமமலை போல்'
கீர்த்தி ஓங்கிடுவதற்கான பணிகளில் திருப்பப்பட வேண்டும். இதற்கான பொறுப்பையும் உழைப்பை யும் நாட்டு அரசிற்குமட்டுமே விட்டுவிடாமல் பொது மக்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும்; விரைவில் பகிர்ந்துகொண்டு வேகமாகப் பணிபுரியவேண்டும். அப்படிப் பகிர்ந்துகொள்ள முடியுமா? என்ற ஐயம் எழலாம். முடியும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. இன்றும் நாட்டில் நடக்கும் 'தர்மங்களை'ப் பார்த்தவர் களுக்கு ஐயமிராது. நாட்டில் நடக்கும் அறங்களை யெல்லாம் கல்விக்கூடங்கள் மூலமாக நடக்கும்படி செய்வது நம்முடைய கடமை.
'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்'
என்ற காலத்திற் கேற்ற நல்லுரையை எடுத்துக் காட்டி, கல்விப்பணிக்கான எல்லா உதவிகளையும் செய்யக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
சாதி வேற்றுமை
சாதி உயர்வு தாழ்வு நம்மைப் பிடித்துள்ள மற்றொரு பெரு நோய்; தமிழர்கள் நல்ல நிலையில் இருந்த காலத்தே இல்லாத நோய்; இடையிலே பெற்ற நோய்; விரைவில் ஒழிக்கப்பட வேண்டிய நோய். `உயர்வு தாழ்வு எங்கு இல்லை ? ஒவ்வோர் இடத்தில் ஒவ்வோர் உருவில் இருக்கிறது' என்கிற முடக்கு வாதம் நம்மை முன்னேறவொட்டாமல் தடுக்கும். அவ்வாதத்திற்குச் செவி கொடுத்தால் நீங்கள் மககள் தன்மையை எட்ட முடியாது.
'எல்லோரும் ஒர் குலம்
எல்லோரும் ஓர் இனம்'
'யாதும் ஊரே யாவரும் கேளிர்'
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'
என்ற நல்லுரைகளை நாம் பல்லாண்டுகளாகப் பலப்பல மேடைகளிலும் கேட்டுத்தான் வருகிறோம், இவற்றைத் தமிழனின் உயர்விற்கு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம். ஆனால் நாம் உண்மையிலே சாதிகளை விட்டு மக்களாகும் வழியில் நடக்கிறோமா? தேர்தல்களில் ஆதரவு தேடும் முறையைக் கவனித்தாலே போதுமே, நம்மை விட்டுச் சாதி வெறி போகவில்லை என்பதற்கு. காரணம் என்ன? சாதிகளை வைத்துக்கொண்டே பேச்சளவில் சாதிப்பற்று வேண்டாமென்று கூறி, வெறும் பொழுதுபோக்காக வேலை செய்துகொண்டிருக்கிறோம். எனவே, இடமும் காலமும் கிடைத்தபோது சாதிவெறி முழு ஆட்டம் ஆடுகிறது. மக்கட் பண்பை மறைக்கும் சாதிப்பற்று ஒழியவேண்டு மென்றால், சாதிகள் இல்லாத நிலை ஏற்படவேண்டாமா? அதற்கான வழியை இனித்தான அறிந்துகொள்ளப் போகிறீர்கள்? அந்நிலை வெறும் விறுவிறுப்பான பேச்சால் மட்டும் கிட்டுமா? கூட்டத்திற் கூடி நின்று கூவிப் பிதற்றிவிட்டு நாட்டத்திற் கொள்ளாவிட்டால் ஏற்படுமா ? நெஞ்சில் உரத்தோடு, நேர்மைத் திறனேடு எல்லாச் செயல்களிலும் சாதியை நீக்கினால் அன்றோ முடியும்? அந்த நேர்மையும் உரமும் உங்களிடம் எதிர்பார்ப்பது அதிகமா?
சமய வெறி
சமயப் பற்றும் சமய வெறியாக மாறி அடிக்கடி நம்மை அலைக்கழிக்கிறது. சமயம் மனிதனுடைய தனி கூட்டு வெளிச்சத்திற்காக அதைப் பொது விவகாரமாக்கி, பகையை வளர்க்கும் வெறியாக மாற்றுவது ந ல் ல த ன் று. சமயம் மக்களை ஒழுங்குபடுத்திப் பண்படுத்தாமல் சண்டையை வளர்ப்பதா? சமயத்தின் மதிப்பு அதைப் பின்பற்றுபவர்களின் கோலத்தில் இல்லை; சீலத்தில் இருக்கிறது என்பதை நினைந்து, அதற்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள்.
முடிவுரை
உருவால் மக்களாய்ப் பிறந்த நாம், நிலையால் மக்க ளாகாமல் இருப்பதற்கான காரணங்கள் சிலவற்றை உங்களிடம் காட்டினேன். அவற்றைச் சிந்தித்துப் பார்ப்பீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதன். விளைவாக உங்களுக்குத் தெளிவு ஏற்படும் என்பதிலும் எனக்கு ஐயமில்லை. உங்கள் தெளிவில் பிறக்கும் நேரிய வழியில் நடக்க உரமும். உறுதியும், இருக்குமா என்பதைக் காலந்தான் காட்ட வேண்டும் அத்தகைய உரமும் உறுதியும் பெருகி உங்களுக்குத் துணையாக நிற்கும்படி நாட்டின் நலத்தில் நாட்டமுடைய பெரியோர்களை வணக்கத்துடன் வேண்டிக்கொள்கிறேன்.
`கற்க கசடறக்
கற்பவை: கற்றபின்
நிற்க அதற்குத்
தக’
என்று வள்ளுவர் காட்டிய வழியை நினைவூட்டுவதோடு என் உரையை முடித்துக்கொள்கிறேன்.
III
கல்லூரி மாணவர்கள் நிலையும் வழியும்
_______
தாய்மார்களே ! தோழர்களே !
இன்று நல்ல அற நிலையத்தாரால் நடத்தப்படும் ஒரு சிறந்த கல்லூரியின் பெரிய விழாவிலே கலந்து கொள்வதில் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். இந்த வாய்ப்பு அளித்ததற்காக உங்களுக்கு என் நன்றியும் வணக்கமும். அறிக்கை வாசிக்கக் கேட்டேன்; நீங்களும் கேட்டீர்கள். சென்ற ஆண்டு இக் கல்லூரி நல்ல பணி ஆற்றி இருக்கிறது என்று கண்டோம்.
பாரதியார் கனவு நனவாயிற்று
அறிக்கை படிக்கக் கேட்பதற்கு முன்பே உங்கள் இராணுவ அணிவகுப்பைப் பார்வையிட்டேன்; பூரித்துப்போனேன்.
'ஒளி படைத்த கண்ணிணாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா'
என்று பாரதி, அவர்கள் இல்லாத இடத்திலே பாடினார். இன்றிருந்தால் ஒளிபடைத்த கண்ணினராய், ஏறு நடையினராய் இன்று இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று அவர் பூரித்துப்போவார் அவர் கண்ட கனவு இன்று நனவானது கண்டு நானும் பூரித்துப்போனேன். மிக நல்ல நடை நடந்தீர்கள்; பெருமிதத்தோடு நடந்தீர்கள். இரண்டாண்டுகளாகத்தான் இப்படை இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். இரண்டாண்டுகளில் நல்ல நடை நடக்கப் பயிற்சி கொடுத்த உங்கள் ஆசிரியர்கட்கும் உங்களுக்கும் என் வணக்கம்.
வெற்றிக்குத் தடை - அசட்டுத் துணிவு
அறிக்கையைப் படித்தேன். சாதாரணமாக அறிக்கையில் எதிர்பார்ப்பது எது? தேர்ச்சியைப் பற்றி. தேர்ச்சியில் நீங்கள் பின்னடைய வில்லை. நிறைய-கிட்டத் தட்ட 70 சதவிகிதத்திற்கு மேலும்-தேறியிருக்கிறீர்கள். பிரிவு பிரிவாகப் பார்த்தால் 98 சதவிகிதத்திற்குக்கூடப் போயிருக்கிறீர்கள். ஆனாலும் அதனோடு மன நிறைவு கொள்ளக்கூடாது. ஏன் அப்படிச் சொல்கிறேன்? என்னுடைய நோக்கம் என்னுடைய எண்ணம்-என்னுடைய ஆழ்ந்த முடிவு எல்லோரும், 100-க்கு 100 பேரும், தேறவேண்டும் என்பது. உங்கள் கல்லூரித் தலைவர் அவர்கள் ஆற்றல் மிக்க தலைவர்; எடுத்த காரியத்தை மிகத் திறமையாகச் செய்யக்கூடிய தலைவர் என்று எனக்குத் தெரியும். உங்கள் ஆசிரியர்களைப் பார்க்கிறேன். அவர்கள் இளைஞர்கள். எனக்கு இளைஞர்களிடத்திலே நம்பிக்கை யுண்டு. அப்படிப்பட்ட இளைஞர்களைக் கொண்டுள்ள கல்லூரி நல்ல பணியாற்றும். இதில் ஐயமில்லை. ஆயினும் இன்னும் 80 சதவிகிதம் தவறியிருக்கிறீர்கள் என்றால், அதில் ஆசிரியர்கள் தவறு இல்லை; வசதியில் தவறில்லை; கொஞ்சம் எங்கோ அலட்சியம் இருந்திருக்கிறது. உங்கள் தலைவர் சற்றே சாடை காட்டினார். குறிப்புக்கூடக் காட்டினார், வேறு இடத்திலே. எங்கே? “கால்பந்துப் போட்டியிலே மூன்று ஆண்டுகள் வெற்றி பெற்று நிரந்தரமாக அந்தப் பரிசைப் பெற்றுவிட்டோம்; இவ்வாண்டில் பெறவில்லை; கண்ணேறு பட்டுவிட்டது" என்றார். இல்லை இல்லை; கண்ணேறு பட வில்லை. நமக்குக் கொஞ்சம் அலட்சியம் வந்துவிட்டது. வெற்றி என்பது விரும்பத் தக்கதுதான். அதே நேரத்திலே கொஞ்சம் அதற்கு முக்கணாங் கயிறு போடவேண்டும். ஒரு எழுத்துத் தவறிவிட்டால் வேறுவிதமாக மாறிவிடும். வெற்றி வெறியாக மாறி விடும். நம்மைவிடத் திறமை உடையார் யார் இருககிறார்’ என்ற நினைப்பு அரும்பிவிட்டால் எவ்வளவு பெரிய அறிஞனும் சறுக்கி விழுந்துவிடுவான். அப்படித்தான் அந்தக் கோப்பையை இழந்திருக்கிறீர்கள். கண்ணேறு பட்டு அன்று. அதே போன்று நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள்; வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறுகிறோம்; நமக்கு என்ன குறை: என்று இருந்திருப்பீர்கள். அப்படி எண்ணியவர்களே தவறியிருக்கிறார்கள்.
100-க்கு 100 மதிப்பெண்கள் வாங்கித் தேற வேண்டும் என்று சொல்வோரில்லை; 100-க்கு 60 மதிப் பெண்கள் வாங்கித் தேறவேண்டும் என்று சொல்வோர்களுமில்லை. 100-க்கு 40,35 வாங்கினாலே மேல் வகுப்புக்குப் போகமுடியும் என்று வைத்திருக்கிறார்கள். அதுகூட வாங்க முடியாத மாணவர்கள் உங்களிலே இருக்கிறீர்களா? நீங்கள் அப்படி நம்பினால் அதை இன்றோடு மறந்துவிடுங்கள். நீங்கள் எல்லோரும் தேற முடியும். எப்போது முடியும்? உங்களிடம் உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். நாம் தவறுவதற்காகப் பள்ளிக்கு வரவில்லை, கல்லூரிக்கு வரவில்லை. பல்கலைக் கழகத் தேர்வில் வடிகட்டித் தான ஆகவேண்டும் என்பதற்காகத் தேர்வு நடத்துவதில்லை. நீங்கள் வடிகட்டும்படி விட்டுவிடுகிறீர்கள்; அலட்சியம் செய்து ஏமாந்துவிடுகிறீர்கள்.
ஆகவே, நீங்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்யவேண்டும். அசட்டுத் துணிவு வாழ்க்கைக்குப் பயன்படாது. நல்ல கவனம் செலுத்தி முயற்சியை மேற்கொள்ள வேண்டும். எந்த நேரத்தில் முயற்சி வேண்டுமோ அந்த நேரத்தில் முயலவேண்டும். இதைத்தான் வள்ளுவர்
ஞாலம் கருதினும்
கை கூடும் காலம்
கருதி இடத்தாற்
செயின்
என்று கூறுகிறார். ஆகவே நூற்றுக்கு நூறுபேர் தேர்வதில் எப்படித் தவறு ஆகமுடியும்? காலத்தாலே செய்ய வேண்டும். இடம் கருதிச் செய்ய வேண்டும். அப்படி நீங்கள் படித்துப் படித்து இரண்டொரு ஆண்டுகளுக்குள் எல்லோரும் தேறும் நிலை வர வேண்டும். தேற வேண்டும் என்பது என் அவா.
அந்த இரண்டாண்டிலே இன்னொன்றும் ஆகி விடவேண்டும். என்ன? இது அன்று இரண்டாந்தரக் கல்லூரியாக இருக்கக்கூடாது. முதல்தரக் கல்லூரி யாக பட்டப் படிப்புக்கு ஆயத்தம் செய்யும் கல்லூரியாக இருக்கவேண்டும். இந்த அறநிலையத்தார் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. பல அறநிலையங்களை நடத்துகிறார்கள், வளர்ந்துகொண்டே வருகின்றன. ஆகவே இன்னொரு படி வளர்வது முடியாத அன்று. எனவே அப்படி வளர்ந்து முதல்தரக் கல்லூரியாக-நிலையிலேமட்டு மல்லாமல் தகுதியிலேகூட நூற்றுக்கு நூறு மாணவர்கள் தேறுகிறார்கள் என்ற உயர்நிலையுடைய சிறந்த கல்லூரியாக இருக்க வேண்டும்.
போட்டியும் துணிச்சலும் வேண்டும்
விளையாட்டிலும் நீங்கள் புலிகளாக இருக்கிறீர்கள் பல போட்டிகளில் வெற்றி பெற்றீர்கள். சில போட்டிகளில் தவறிவிட்டீர்கள். தவறியதற்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது. நான் போட்டிகளியே வெற்றி பெறாதவன். ஆனால் வருத்தப்படாமல் இருக்கவும் கற்றுக்கொண்டவன். மேலும், ஓர் இளைஞன், முதல் தமிழன், தமிழ் நாட்டிலே கல்வித்துறை தலைவனாக இளம்வயதிலே வந்துவிட்டானே' என்று பலர் வியப்படைகிறார்கள். பலர் பலவித மாகக் கூறுவார்கள். காரணம் ஒன்று சொல்வேன். துணிச்சல் வேண்டும். பெரிய நிலைக்கு வர யார் முயற்சி செய்தாலும் துணிச்சல் வரவேண்டும். ஆகவே போட்டிகள் பலவற்றிலும் கலந்துகொள்ள வேண்டும். தோற்றுவிடுவோமோ, வெற்றி பெறாவிடின் ஊரார் கிண்டல் செய்வார்களோ, ஏளனம் செய்வார்களோ என்று அச்சப் பட் டு க் கலந்து கொள்ளாமல் பின்னடைந்து போகிற மக்கள் என்றும் முன்னேற முடியாது. `வெற்றியோ தோல்வியோ நமக்குக் கவலை இல்லை. முயற்சிக்குத்தான் நாம் பொறுப்பாளர். பலனு க்கு நாம் பொறுப்பாளர் அல்லர்’ என உழைக்க வேண்டும் போட்டியில் ஈடுபடுகிறவர்கள் வெற்றி பெற்றாலும், தோல்வி யடைந்தாலும் அந்தப் பயிற்சி காரணமாகப் பின்னர் வெற்றியே பெறுவர். எ ன க் குக் காத்திருந்தது போன்ற வெற்றிகள் பல உங்களுக்கும் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே, அந்த வெற்றிகளை அடைய உங்களே ஆயத்த மாக்கிக்கொள்ளுங்கள். தவறிவிடுவோமோ என்று அச்சப்படாமல் ஊக்கத் தோடு நல்ல பெயர் எடுங்கள்..
கல்வியின் முடிந்த பயன் - மனிதப் பண்பு
அறிவு பெறுகிறீர்கள், நல்ல ஆற்றல் பெறுகிறீர்கள். போதுமா? கல்வி என்பது அறிவைமட்டும் 'வளர்ப்பது அன்று; ஆற்றலைமட்டும் வளர்ப்பது அன்று; கல்வி மனிதனிடத்திலே மற்றொன்றையும் வளர்க்கவேண்டும். அது மிகச் சிறப்பான ஒன்று. சிறப்பான ஒன்று என்னும்போது நமக்கு - ஆறாவது அறிவு-பகுத்தறிவு நினைவுக்கு வருகிறது. ஆம், அத னையும் வளர்க்கவேண்டும். நமது சிந்தனை-ஆறாவது அறிவு-வளர்ந்து கொண்டே இருக்கவேண்டும் யாரோ சொன்னார்கள் என்பதற்காக எதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. சிறப்பான ஒன்று என்று நான் குறிப்பிடுவது அந்த ஆறாவது அறிவை மட்டுமன்று. அதைவிடச் சிறந்தது ஒன்று இருக்கிறது. அதுதான் மனிதனை மனிதன் என்ற பெயருக்கு உரியவனாக ஆக்குகின்றது. அஃது எது? அதைத்தான் மனம் என்று சொல்வார்கள்- ஆத்மா என்று சொல்வார்கள் - உள்ளம் என்று சொல்வார்கள். அந்த உள்ளத்தை உருவாக்குவது மிகவும் முக்கியம். கல்வியின் நோக்கம் உள்ளத்தை உருவாக்குவது; மனத்தைச் செம்மைப்படுத்துவது; சீலத்தைக் கொடுப்பது; சான்றாண்மையைத் தருவது. சான்றோன் ஆக்குவதே கல்வியின் குறிக்கோள். சான்றாண்மை இல்லாத கல்வி பயனற்ற கல்வி; கேடான கல்வி. இந்தக் கல்லூரியிலே அந்தச் சான்றாண்மையை ஆக்கும் நல்ல செயல்களும், நிகழ்ச்சிகளும் நடந்து வருவதனை அறிய மகிழ்கின்றேன்; பாராட்டுகின்றேன்.
நம்மால் என்ன செய்ய முடியும்? நம்மால் ஆன உதவியை மற்றவருக்குச் செய்யவேண்டும். `யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று எண்ணி நம்மால் ஆன தொண்டினை ஆற்றவேண்டும். ஆகவே உங்களுக்காகமட்டும் நீங்கள் அறிவு பெறாமல், ஆற்றல் பெறாமல், மற்றவர்க்குத் தொண்டு செய்ய ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். அதுதான் நல்ல மனிதத் தன்மை அந்த மனிதத் தன்மை உங்களோடு மட்டும் இருக்கக்கூடாது. அது நாளும் பலரிடம் பரவும்படியாகச் செய்யவேண்டும்.
மாநிலம் பயனுற வாழ்வதற்கே சுடர்மிகும் அறிவு
இந்த நேரத்திலே பாரதி பாட்டு ஒன்று நினைவுக்கு வருகிறது. அவர் கேட்கிறார்; என்ன என்று கேட்கிறார் ?
'தேடிச் சோறு நிதம்தின்று
சின்னம் சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பம் மிக உழன்று
பிறர்வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின்மாயும்-பல வேடிக்கை மனிதரைப் போல
நான் வீழ்வேன் என்று நினைத் தாயோ?'
என்று கேட்கிறார். அந்தப் பாடலை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இந்தப் பாடலைப்பற்றி இதுவரை சிந்தி க்காமல் இருந்தால் இப்போது சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் வேடிக்கை மனிதரல்லர்; இந்நாட்டு மன்னர்மட்டு மல்லர், எதிர் காலத்திலே உலக மன்னராகப் போகிறீர்கள்! ஆகவே அந்த நிலைக்கு உங்களை ஆயத்தம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். அந்த நிலைக்கு இன்றுமுதல் ஆயத்தம் பண்ணிக்கொள்ளுங்கள். இந்த நாட்டின் மன்னர்களாக இருக்க உலகத்தின் குடியாக இருக்க-உலகத்துக்கு வழி காட்டக்கூடிய உத்தமர்களாய், அறிவாளிகளாய், திறமைசாலிகளாய் வாழக்கூடிய நிலைக்கு உங்களை ஆயத்தப் படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்ல ஆசைப்படுகிறேன். அதே பாரதியார்,
நல்லதோர் விணைசெய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி எனைச் -
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி ! நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ ?'
என்று கேட்கிறார். வீணை; நல்ல வீணை. எல்லோரும் செய்யக்கூடிய வீணையன்று; பெரு முயற்சியோடு, பெரும் ஆய்வோடு செய்யப்படுகிற வீணே. அப்படிப்பட்ட வீணை செய்தபிறகு அதை நலங்கெட வீணாக எறிந்துவிடுவார்களா? புழுதியிலே எறிந்து விடுவார்களா? எறிந்துவிட மாட்டார்கள். அதைப் பயன்படுத்துவார்கள். யாருக்குப் பயன் வீணையை மீட்டுகிறவருக்கு மாத்திரம் மகிழ்ச்சியா? கேட்கிறவர் களுக்கெல்லாம் மகிழ்ச்சியை அந்த வீணை கொடுக்கிறது. முயற்சியை மேற்கொள்கிறார் வீணையைச் செய்தவர்; நல்ல வீணையை வாங்கியவரும் முயற்சியை மேற்கொள்கிறார். அதுபோல் அறிவு பெற்றிருக்கிறோம். அது மாநிலம் பயனுற வாழ்வதற்கு. நம் முடைய நாடு மட்டும் பயனுறுவதற்கு அன்று. ஆகவே நீங்கள் பெற்ற அறிவால் நீங்களும், உங்கள் நாடும் உலகமும் பயனுற வாழ வழி செய்துகொண்டு நல்ல நிலையில் வாழ்க என வாழ்த்துகிறேன்.
O
(பீளமேடு, பூ. சா. கோ. கலைக் கல்லூரி ஆண்டு விழாவில் தலைமை தாங்கி ஆற்றிய சொற்பொழிவு.)
IV
முதியோர் கல்வி - வழியும் வகையும்
மதிப்பிற்குரிய கனம் அமைச்சர் அவர்களே
பெரியோர்களே, தோழர்களே !
இன்று இந்த இலக்கியப் பண்ணையின் கண்காட்சியைத் திறந்து வைக்கும்படி என்னை அழைத்துப் பெருமைப்படுத்தி யிருக்கிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த இலக்கியப் பண்ணே கோவை மாநகரிலே நடந்தது பொருத்தம் என்று. அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். ஏன் ? கோவை நகரம் தொழிலுக்குமட்டு மன்று, உழவுக்குக்கூடப் பேர்போனது. பாதாளத்தில் உள்ள தண்ணிரைக் கொண்டுவரும் உழவர்களையும் இந்தக் கோவை மாவட்டத்திலே காணலாம். நிலம் ஈயாது என்று சொல்லி விட்டுவிடாத உணர்ச்சியும் ஊக்கமும் பெற்று, முயற்சியில் தளராத மக்களை இங்கே பார்க்கலாம். இவ்வாறு தொழில் திறமை மிக்க மக்கள் நிறைந்த இடத்தில் கொண்டாடப்படும் இவ்விழாவும் பொருத்தமான முறையிலே கனம் அமைச்சர் அவர்கள் தலைமையில் கொண்டாடப்படுகிறது. கனம் அமைச்சர் அவர்களை உழவு அமைச்சர் என்றுமட்டும் அழைப்பித ழிலே குறிப்பிட்டுள்ளீர்கள்; ஒன்று மறந்துவிட்டீர்கள். அவர் உழவு அமைச்சர்மட்டுமல்லர், தொழில்துறை அமைச்சருங்கூட; பாரதி யார் சொன்னதுபோன்று உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்கின்ற முறையிலே, இரண்டு துறையையும் ஒரு முகமாக நடத்துகிற அமைச்சர். 'இலக்கியத் தொழிற்சாலை’(Literary Workshop) என ஆங்கிலத்திலே சொல்ல, `இலக்கியப் பண்ணை' என்று நாம் சொல்ல, இரண்டுமே பொருந்துகின்ற வகையிலே, நல்ல பணியாற்றிய இந்தக் கூட்டத்திற்கு அமைச்சர் அவர்கள் தலைமை தாங்கியது மிகப் மிகப் பொருத்தமே.
முயற்சியால் முடியாதது ஒன்றுமில்லை
இந்தக் கண்காட்சியை நான் திறந்துவைக்கப் போகிறேன். நீங்கள் நன்முயற்சி எடுத்து, நல்ல முறையிலே மடல்கள், சுவடிகள், நூல்கள் முதலியன ஆக்கியுள்ளீர்கள். இந்தப் பண்ணையின் முயற்சி முதல் முயற்சி; தமிழிலே முதல் முயற்சி. உங்களில் ஒருவரைத் தவிர, மற்றவ ரெல்லாம் இந்த முயற்சியிலே முதன்முதலாகப் பங்குகொள்கிறீர்கள் என்று சொல்வேன். இது முதல் முயற்சிமட்டு மன்று; பலருக்கு முதற்பயிற்சியுங்கூட. இதுவரையில் முதியோர் கல்வியில் ஈடுபடாத பலர், பல துறையில் ஆடிக் கொண்டிருந்த பலர், இது முடியுமா முடியாதா என அரை மனத்தோடு உள்ள பலர் இதனைத் தொடங்கினீர்கள். ஆனால், எனக்குமட்டில் ஒரு மன உறுதியுண்டு. பல பேர்க்குத் தங்கள் திறமை தெரிவதில்லை. நெருக்கடி வரும்போதுதான் அந்த ஆற்றல் வெளி வருகிறதே ஒழிய முன்கூட்டித் தெரிவது இல்லை. இதுதான் மனிதனிடம் உள்ள தனிப் பெருஞ்சிறப்பு. இந்தப் பெருஞ் சிறப்பைப் பற்றிய நம்பிக்கை எனக்கு உண்டு. ஆதலால் பண்ணையில் தொழில் புரிய நீங்கள் இறங்கியபின், நல்ல பலன் கிடைக்கும் என்றே நான் உறுதிகொண் டிருந்தேன்.
நீங்கள் எல்லாம் இந்தத் துறைக்குப் புதியவர்கள். ஆதலால் உங்களைத் தேர்ந்தெடுத்த சிறப்போ இழிவோ என்னையே சாரும். துணிவாகத் தேர்ந்தெடுத்தேன். நீங்கள் எல்லாம் ஒற்றுமையாக வாழ்ந்ததுமட்டு மன்றி, நல்ல முறையிலே பலனுள்ள பணியாற்றி நல்ல பலனை அறுவடை செய்திருக்கிறீர்கள். அதைக் காண எனக்குப் பூரிப்பு ஏற்படுகிறது. அதற்காக உங்களைப் பாராட்டுவதற்கு முன்பு என்னைப் பாராட்டிக்கொள்கிறேன். யாரும் குறை பட்டுக்கொள்ள முடியாத அளவு ஒவ்வொருவரும் நற்பணியாற்றி யுள்ளளீர்கள். அப்படி அமைந்ததைக் கண்டு என்னையே பாராட்டிக்கொள்கிறேன். உங்கள் செயல் கண்டு மகிழ்கிறேன்.
முழு வளர்ச்சி பெற்ற மனிதன் யார்?
42 நாட்கள் வேறு வேலேயின்றி உழைத்துள்ளீர்கள்; சிறப்புத்தான். அதைவிடப் பெரிய சிறப்பு ஒன்று உண்டு. மனிதன் - அதற்காக நியமிக்கப் பட்டபோது - ஒரு பணியினை ஆற்றுவது பெரி தன்று. ஆனால், பல வேலைகட் கிடையிலும் ஏதாவது ஒரு பொதுத் தொண்டு செய்தால்தான் அதற்குத் தனிச் சிறப்பு உண்டு. அதுதான் பெருஞ் சிறப்பு. நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறைகளிலே, கல்லூரிகளிலே, பள்ளிகளிலே, மேற்பார்க்கும் வேலைகளிலே வஞ்சனையற்ற நிலையில் ஈடுபட்டு, விரும்பத் தக்க முறையில் பணியாற்றினால் போதும் என்றுமட்டும் மனநிறைவு பட்டுவிடக்கூடாது. ஒவ்வொருவரும் தங்கள் சம்பளத்திற்காகமட்டும் செயலாற்றக் கூடாது. ஒவ்வொருவரும் ஏதாவது ஊதியம் அற்ற, ஆனால் தேவையான ஒரு பொதுநலத் தொண்டினையும் செய்ய முற்படவேண்டும். அத்தகைய தொண்டினைச் செய்யமுற்படாத மனிதன், எவ்வளவு திறமையுடைய அலுவலனாக இருப்பினும், எவ்வளவு திறமையுடைய நிபுணணாக இருப்பினும் அவன் முழு வளர்ச்சி பெற்ற மனிதன் அல்லன் என்று தா ன் கருதுகிறேன். எனவே, ஒவ்வொருவரும் பொதுநலச் சேவையிலே ஈடுபட வேண்டும்.
ஓய்வு எல்லோருக்கும் உண்டு
உங்களுக்கு நிறைய ஓய்வு நேரம் உண்டு. இல்லை என்று நீங்கள் சொன்னால், உங்கள் நேரத்தை ஒழுங்குபடுத்திக்கொள்ள வில்லை என்றுதான் சொல்வேன். வேலை மிகுதி என்று சொல்லிவிட முடியாது. காலத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டால், அதிலும் கொஞ்சம் பிடிவாதம் ஏற்பட்டுவிட்டால், கண்டிப்பாக ஒய்வு உண்டு. அந்த ஓய்வு நேரத்தை எதிலே செலவு செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும். நமது தொழில் ஆசிரியத் தொழில்; கல்வி கற்பிக்கின்ற தொழில்; இந்தத் தொழிலின் தொடர்பாக நாம் செய்யவேண்டிய வேலைகள்-சேவைகள்-பள்ளிக் கூடத்திற்கும் கல்லூரிக்கும் அப்பாலும் உண்டு. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், நம் நாட்டில் தற்குறிகள் மிகுதி. இது உங்களுக்குத் தெரியும். அந்த நிலையைப் போக்கப் பாடுபடவேண்டும்.
படிப்பும் அறிவும்
படித்தவர்கள் எல்லாம் அ றி வாளி கள் என எண்ணிக்கொண் டிருக்கிறோம். இல்லை, இல்லை. படிக்காதவர்களிலும் அறிவாளிகள் உண்டு. அவர்களில் பலர் நம்மைவிடச் சிறந்த அறிவாளிகள் என்பதை நான் உங்களுக்கு முன்னொரு சமயம் சொன்னேன். நீங்கள் முதியோர்களிடம் செல்லும்போது இதனை உணர்வீர்கள் என்றும் கூறினேன். உங்களுக்குப் புது அறிவும் ஏற்படப்போகிறது என்றும் சொன்னேன். அப்படியே கண்டீர்கள் என உங்கள் தலைவர் அறிக்கையில் படித்தார்கள். அது எனக்கு வியப்பாக இல்லை; உங்களுக்கு வேண்டுமானால் வியப்பாக இருந்திருக்கலாம்.
அவர்கள் படிக்காதவராக இருக்கலாம்; ஆனல் அறிவாளிகள். அதை மறந்துவிடக்கூடாது. அவர்கள் முதியோராக இருக்கலாம்; ஆனால், அனுபவம் உடையவர்கள். ஆகவே, அவர்களுக்கு அறிவும் அனுபவமும் நிறைய இருக்கின்றன. ஆனால் ஒரு வித்தைமட்டும் அவர்களுக்குத் தெரியாது. என்ன வித்தை எழுத்தைப் புரிந்துகொள்கிற வித்தை. அதுதான் அவர்களுக்குத் தெரியாது. நாம் அவர்களுக்கு அதில் ஊக்கம் அளித்துவிட்டால், விழிப்பு ஏற்படுத்திவிட்டால், அவர்கள் கண்களைத் திறந்து-விட்டால் அவர்களால் பெருங்காரியங்களைச் செய்ய முடியும்.
முதியோர் கல்வி எதற்கு ?
ஏன் இதனைச் செய்யவேண்டும் என்ற கேள்வி கூட அடுத்து ஏற்படுகிறது. பலர் முதியோர் கல்வியைப்பற்றி ஐயுறுகிறார்கள். அது, பன்னிரண்டு மணிக்குமேல் திரும்பவும் சூரியனை உச்சிக்குக் கொண்டுவர முயல்வதுபோல் வீணான முயற்சி என்றுகூடச் சொல்கிறார்கள். `அவர்கள் தலைமுறையில் எப்படியோ தொலைந்து போகிறது' என்று இருபது வருடமாகச் சொல்லிவரும் வாதமும் எனக்குத் தெரியும். படிக்கும் வயது வந்த குழந்தைகளைப் பார்த்துக்கொண்டால் போதும், முதியோர் கல்வி யைப்பற்றிக் கவலேயே வேண்டாம், அவர்களைத் திருத்த முடியாது. நாய் வாலைத் திருத்திய மாதிரி தான் ஆகும். இன்னும் 16 பேரையே சரியாகப் படிக்கவைக்க முடியாத நிலையில், 84 பேரைப் படிக்க வைப்பது எங்கே? ஆகவே முடிந்த காரியத்தில் ஈடுபடுவோம்' என்று சொல்வ தெல்லாம் சரியாகாது. முதியோர் கல்வியும் நடைபெற வேண்டும்; இளைஞர் கல்வியும் நடைபெற வேண்டும். எந்த வேகத்தில் நடைபெறவேண்டும் என்றால், மக்கள் ஆதரவு எந்த வேகத்தில் இருக்கிறதோ, அந்த வேகத்தில் அதனைச் செய்தல்வேண்டும். முதியோர் கல்வி மெல்ல நடந்திருக்கிறது என்றால், இன்னும் அவர்களுக்கு விழிப்பு வரவில்லை, கல்வியின் இன்றியமையாமையை அவர்கள் தெரிந்துகொள்ள வில்லை என்பதுதான் பொருள்.
இளைஞர்களுடைய கல்வியைமட்டும் கவனித்துக்கொண்டு ஓரிரு தலைமுறையிலே, கல்லாத முதியோர் இறந்த பிறகு, எல்லோரும் கல்வி கற்ற ஒரு நல்ல தமிழ்நாடு இந்தியாவிலே ஏற்பட்டுவிடும் என்று எண்ணினால், அது அலை ஒய்ந்த பிறகு கடலில் தலை முழுகலாம் என்று எண்ணுவது போலாகும். ஆகையால் முதியோர் கல்வி வளரவேண்டும்; வளர்ந்துகொண்டே யிருக்க வேண்டும். ஏன் என்றால், நம் நாட்டு மக்களை மன்ன ராக்கிவிட்டோம்; மன்னருக்குப் படிப்பு வேண்டும்.
நம் நாட்டு மக்கள். அறிவுடையவர்கள்; ஆதலால்தான் இந்த அளவிற்காவது குடியாட்சி ஒழுங்காக நடைபெற்று வருகிறது. மற்றப்படி எப்படி இருந்தபோதிலும் தமிழ் நாட்டிலே நல்ல அறி வுடைய மக்கள் மட்டுமல்ல, வாழையடி வாழையாக நிதானத்திலே சிறந்த மக்கள், சிந்தனையோடு கூடி வாழுகின்ற மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிறைய அறிவுபெற்று, நிதானத்தோடு நிறைய உணர்ச்சியும் உற்சாகமும் பெற்றுத் தாங்களே முன் னுக்கு வந்து, பொறுப்பினை ஏற்றுக்கொள்ளும் காலம் வந்தால்தான் மெய்யான குடியாட்சி ஏற்பட முடியும்.
குடியாட்சி பெற்றது நம்மில் பலருக்குப் பெரிய பெரிய அலுவல்கள் கிடைப்பதற்கன்று. வெள்ளைக்கார னிடத்தில் இருந்த பெரிய அலுவல்கள் எல்லாம் நமக்குக் கிடைக்கிற தென்றால் , அது போதாது. குடியாட்சி நமக்குப் பயன்படவேண்டும். மூலை முடுக்குகளி லெல்லாம் - குடிசை குப்பை மேடுகளிலெல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் குந்திக் கிடக்கிறானே, அவனுக்குப் பயன்படவேண்டும். எப்படிப் பயன்பட வேண்டும் என்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. நீங்கள் என்னைக் காட்டிலும் நன்கு அறிவீர்கள். என்னைவிட அறிவு நிறைந்த ஒருவர், உண்மையைத் துணிச்சலாகப் பேசுகின்ற ஒருவர் பாரதியாராவார்; அவர்,
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கவிப்பெருக்கும்
கலைப் பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்.
என்று கூறுகிறார். அந்தக் குருடரெல்லாம் விழி பெற்றுப் பதவி பெறுவதுதான் குடியாட்சியின் இலட்சியம். அதற்காகத்தான் நம் அருந்தலைவர்க ளெல்லாம் அரும்பாடு பட்டுப் பல ஆண்டுகள் தியாகம் செய் தார்கள். அந்தத் தியாகம் பலன் பெறவேண்டு மென்றால், நாம் அவ்வளவு பெரிய தியாகம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் சேவை செய்ய வேண்டும். பிடிவாதமான சேவை, பல நாள் செய்ய வேண்டும். முதியோர் கல்வியில் நாம் எல்லோரும் ஈடுபடவேண் டும். உங்களுக்குக் காசு கொடுக்க முடிகிறதோ இல் லேயோ, உழைப்பைக் கொடுக்க முடியும். ஒவ்வொரு வரும் சிலருக்காவது கல்வி கற்பிக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் நம் பங்குக்கு என்ன செய்திருக்கிறோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
நம்மில் யாரும் தங்கள் பொருளாலேயே படித்து விடவில்லை. ஊரார் வரிப் பணத்தையும் சேர்த்துத் தான் பள்ளிகள், கல்லூரிகள் நடைபெறுகின்றன. நாம் கட்டும் சம்பளம், கல்விக்காக நாட்டில் ஏற்படும் செலவில் ஒரு பகுதிதான். யார் வரிப் பணம் கொடுத்தார்களோ, அவர்கள் இன்னும் படிக்காமல் இருக்கிறார்கள், கண் விழிக்கா திருக்கிறார்கள். அவர்களின் கண்ணைத் திறந்துவிடுவது நம்முடைய கடமையாகும்.
பயிற்சியின் பயன் துருப்பிடிக்கக் கூடாது
நல்ல பயிற்சியைப் பெற்றுள்ள நீங்கள் அதனைத் துருப் பிடிக்கவிடாமல்-'ஓய்வு இல்லை’ என்று சொல்லாமல்-உங்கள் பணிகளையும் செய்துவிட்டு, அதற்கு மேலும் ஓய்வு இருப்பதனை உணர்ந்து, புதுப் புதுச் சுவடிகளையும் நூல்களையும் வெளிக் கொணர வேண் டும். பயிற்சி பெற்று அதனைப் பாழாக்கிவிட்டால் என்ன பயன்? எங்கள் முயற்சி வீண், உங்களுடைய காலம் விண்; பணம் வீண்; அப்படி இல்லாமல் மேலும் மேலும் நூல்களை உருவாக்க வேண்டும்.
முதியோர் கல்வி பரவ வழி
நூல்கள் வெளியிடுவதுமட்டும் போதாது. முதியோர் கல்வியும் பரவுதல் வேண்டும். 'இளைஞருக்கே படிப்புச் சொல்லிக்கொடுக்க முடியவில்லையே, முதி யோர் கல்விக்குப் பணத்துக்கு எங்கே போவது, எத்தனை கோடி சம்பாதிப்பது' என்று கணக்குப் போட்டால், அப்படித்தான் கணக்குப் போட முடியும். ரூபாய்க் கணக்குத் தேவையில்லை. ஏதோ 15 நாள் 20 நாள் கிராமப்புறங்களிலோ அல்லது நகரங்களிலோ தங்கியிருந்து ஓய்வுக் காலங்களிலே 4 பேருக்காவது சொல்லிக்கொடுக்கின்ற முயற்சியில் ஈடுபட்டால்தான் நாம் முன்னேற முடியும். எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள்' என்று எதிர்பார்ப்பது தலைகீழ்ப் பாடமாகத்தான் முடியும்.
முதியோர் கல்வி மற்ற நாடுகளில் எப்படிப் பரவியது என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். முதியோர் கல்வியில் முன்னணியில் நிற்பதாக ஸ்காண்டிநேவியன் நாடுகளைத்தான் கூறுவார்கள். இவற்றில்தான் `மக்கள்’ பள்ளி (Folk High School) என்று சொல்லுகிற பெரியோர் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. அவைகளை யார் ஆரம்பித்தார்கள், அரசியலார் எவ்வளவு செலவு செய்தார்கள் என்பவைகளைப் பற்றிய அறிக்கைகளைக் கொண்டு பார்த்தால், ஒன்று தோன்றும். ஏதோ ஒருசில வெறியர்-முதியோர் கல்வி பரவவேண்டும் என்று உணர்ச்சி முறுக்குக்கொண்டவர்கள்-தம்மோடு பிறந்த எவரும் படிக்காமல் இருக்கக் கூடாது என்ற உணர்ச்சி உடையவர்கள்-தாங்கள் சாவதற்கு முன்பே எல்லோரும் படித்துவிட வேண்டும் என்று எண்ணியவர்கள்-இவர்களது முயற்சியால்தான் அவைகள் உருவாயின. நாட்டு மக்கள் அவர்களுக்கு இயன்ற வகை யிலே அளித்த பொருளுதவியைக் கொண்டு, அரசியலார் கொடுத்த சிறு உதவியையும் பெற்று அந்நாடுகளி லெல்லாம் முதியோர் கல்வி பரவி வந்திருக்கிறது. காலம் சென்ற சத்தியமூர்த்தி அவர்கள் "இந்தியா பெரிய நாடு, 30 கோடி மக்களும் ஒரே சமயத்தில் ஒருமுகமாக எச்சில் துப்பினால் ஒரு கடலாகி வெள்ளைக்காரரை மிதக்கச் செய்துவிடும்" என்று அடிக்கடி கூறுவார்கள். அதாவது அவ்வளவு பெருங் கூட்டமாக வுள்ள மக்கள், கூட்டாகச் சிறு எச்சிலைத் துப்பினால்கூட அது பெரும் .வெள்ளமாகும். என்பதை யன்றோ அது காட்டுகிறது? மேலும், நமது இந்தியா தருமத்திற்குப் பெயர்போன நாடு. ஏதாவது தருமம் செய்துகொண்டே இருக்கும் நாடு. ஆனால் புதிய முறையிலே, காலத்திற்குத் தேவையான வகையிலே, தேசத்திற்கு இன்றியமையாத நிலையிலே, அறம்செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த முதியோர் கல்வித் தானத்திற்காகத் தங்கள் பொருளை, உழைப்பை, முயற்சியைத் திருப்பிவிட்டால், வெற்றி விரைவிலே கிடைக்கும். ஸ்காண்டிநேவியன் நாட்டிலேமட்டு மன்று, இங்கிலாந்திலும் முதியோர் கல்வி பரவிய முறையும் இதுபோலத் தான். இங்கிலாந்தில் உள்ள முதியோர் பள்ளிகள் ஆட்சியாளரால் - அரசியலாரால் ஏற்படுத்தப்பட்டவை யல்ல. எந்த நாட்டிலும்-எங்த ஆட்சியிலும் புது முயற்சிகள் எல்லாம் நம்பிக்கையுடைய, பிடிவாதம் உடைய ஒரு சிலரால்தான் தொடங்கப்பெற்று நடைபெற்றன.
இந்த இலக்கியப் பண்ணையிலே இவ்வளவு விளையும் என்று தெரிந்து, அரசியலாரும் பொதுப் பணத்துக்குப் பொறுப்பாக உள்ளவரும் ஓரளவுக்குச் செலவு செய்யமுடியுமே தவிரப் புது முயற்சியிலேயே ஏராளமாகப் பொதுப் பணத்தை எடுத்து விருப்பப்படி செலவு செய்துவிட முடியாது. இங்கிலாந்திலே சட்டத்தாலோ, அரசியலாரின் செலவினாலோ முதியோர் கல்வி பரவவில்லை. ஆனால் தெளிவான அறிவு படைத்த ஒரு சிலரின் விடாமுயற் சியாலே-உழைப்பினாலே அங்கு முதியோர் கல்வி பரவியது. அது போலத்தான் இங்கும் பரவவேண்டும் என்பது என் அவா. 1952-ஆம் ஆண்டில் தென் கிழக்கு ஆசியக் கல்வி மாநாடு பம்பாயில் நடந்தது. ஐந்து வார காலம் அங்குத் தங்கி, அதில் பங்கு கொண்டேன். அப்போது பம்பாயில் முதியோர் கல்வி எப்படி நடக்கின்றது என்று கணக்கிட்டுப் பார்த்தேன். அவர்கள் நம்மைவிட மிகுதியாகத்தான் செய்கிறார்கள். நாம் எல்லாவற்றிற்கும் அரசியலாரைக் கேட்கின்றோம். முழுக்க முழுக்க அரசியலார் உதவி பெற்று, நாம் அதில் வெளிச்சம் போட்டுக் கொள்ளுகிறோம். "நாங்கள் எவ்வளவு சேவை செய்கிறோ பாருங்கள்’ என்று பறை சாற்றுகிறோம். அங்கே அரசியலார் உதவி 80 சத விகிதத்திற்கும் குறைவுதான். மற்றப் பொருள், நாட்டு மக்களிடம் இருந்து நன்கொடையாக வருகின்றது. அதைக் கொண்டுதான் இங்கும் நடைபெற வேண்டும். நாம் தருமம் செய்பவர்கள்; எது தேவை என்று உணர்ந்து செய்ய வேண்டும்.
ஆகவே, நீங்கள் பயின்று, சுவடிகளையும், நூல்களையும் ஆக்கியதோடுகூட முயன்று கற்றுக்கொடுக்கவும் வேண்டும். மற்றவர்களை இத்துறையின் வளர்ச்சிக்காக நன்கொடை அளிக்கத் தூண்டவேண் டும். இப்படிப் பலரும் கை கொடுத்து, பலரும் பல முயற்சியில் ஈடுபட்டால்தான் முதியோர் க ல் வி நன்றாய பரவ முடியும்.
எதிர்காலத்தில்
முதியோர் கல்வி விரைவிலே பரவ வேண்டும் என்பதுதான் என் ஆவல். அது ஐந்து ஆண்டிலா பத்து ஆண்டிலா என்று கணக்குப் போட்டால், ஓர் ஆண்டிலும் நடக்காது, ஒரு தலைமுறையிலும் நடக் காது. நான் 1940-ஆம் ஆண்டில் இந்தத் துறைக்கு வந்தேன். அப்போதெல்லாம்.'பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புங்கள்' என்று வீடு விடாய்ச் சென்று கேட்டோம்; பெற்றோர் கூட்டம் கூட்டிக் கேட்டோம். ஆயினும் அதிகப் பலன் இல்லை. இப்போதோ நிலை தலைகீழாய் உள்ளது. பிள்ளைகள் வருகிறார்கள், பள்ளிகளில் இடம் இல்லை. எவ்வளவு மாறுதல்! முன்பு `பலாப் பழம் உண்ண வாரீர்’ என்று அழைத்தோம்; இன்று பழம் இருப்பதனை உணர்ந்துவிட்டனர். ஈ மொய்ப்பதனைப் போன்று நிறைய வருகின்றனர். அதுபோன்று 2 வருடம் 4 வருடம் உணர்த்தி வந்தால் இந்தப் புதிய முயற்சி கிராமப் புறங்களிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ள இந்த நேரத்திலே நல்ல பலனைத் தரும். இன்று போய் விட்டால் நாளை இந்த மலர்ச்சி வராது, உற்சாகம் காணப்படாது, ஊக்கம் இருக்காது. எனவே, இந்த நேரத்தில் எவ்வளவுக் கெவ்வளவு குழப்பம் இல்லாமல், சந்தடி இல்லாமல், ஆரவாரம் இன்றி, மிகுதியான விளம்பரம் இன்றி முதியோர் கல்வியினைப் பரப்ப முடியுமோ அவ்வளவு மிகுதியாகப் பரப்ப வேண்டும். சந்தடி இல்லாமல் நடக்கின்ற காரியம்தான் நிலையான காரியமாக இருக்கும்; பெரிய காரியமாக அமையும். அதிக விளம்பரம் இல்லாமல் இத்துறையில் ஈடுபட்டு, இந்நாட்டில் `எல்லோரும் கல்வி கற்றுப் பன்னருங்கலை ஞானத்தால், பராக்கிரமத்தால் அன்பால் உன்னத இமமலைபோல் ஓங்கிடும் கீர்த்தி எய்திடும்’ அந்த நல்ல நாள் நம் காலத்திலே வருவதற்கு நாம் பாடு படுவோமாக. உங்கள் பயிற்சியின் பயணாகப் பல நல்ல சுவடிகளை, நூல்களை இடைவிடாது ஆக்கிக் கொண்டே இருப்பீர்களாக எனக் கூறி அமைகின்றேன். வணக்கம்.
O
(முதலாவது முதியோர் இலக்கியப் பண்ணையின் நிறைவு விழா 13-12-66-இல் நடந்தபோது, கண்காட்சியைத் திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு)
V
கல்விப் பயன்
--oo--
பி. எஸ். ஜி. கலைக் கல்லூரிச் சமூகப்பணித் தொண்டர்களே!
தாய்மார்களே! பெரியோர்களே!
தங்கைகளே! தம்பிகளே!
இன்று இந்த ஊருக்கு வரவும், உங்கள் எல்லோரையும் பார்க்கவும், உங்களுக்குத் துணிமணிகளை வழங்கவும் வாய்ப்புக் கொடுத்த உங்கள் எல்லோருக்கும் நன்றியும் வணக்கமும்.
மெய்யான அறிவு
பி. எஸ். ஜி. கலைக் கல்லூரி மாணவர்கள் நல்ல சமூகத் தொண்டர்கள் என்பது முன்னமே எனக்குத் தெரியும். முன்னர் ஒரு தடவை அவர்கள் சமூகப் பணியைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். அன்று கண்டு மகிழ்ந்ததைவிட இன்று பெரு மகிழ்ச்சியடைகிறேன்; அவர்களைப் பாராட்டுகிறேன். ஏன் எனில் கல்வியின் நோக்கம் நல்ல மக்களை-சான்றோர்களை- நல்ல தொண்டர்களை ஆக்குவதே ஒழிய, வெறும் அறி வாளிகளைமட்டும் உண்டாக்குவது அன்று; திறமை சாலிகளைமட்டும் உண்டாக்குவது அன்று. படித்தவன் யார், கற்றவன் யார், மெய்யான அறிவுடையவன் யார் என்றால், எவன் பிறருக்காகப் பாடுபடுகின்றானோ அவன்தான் மெய்யாகப் படித்தவன். அவன்தான் அறிவாளி என்பதனை நான் சொல்லவில்லை; வெகு காலத்திற்கு முன்னே இருந்த வள்ளுவர் கூறுகின்றார். அம் முறையிலே இக்கல்லூரி மாணவர்கள் வெறும் ஏட்டுப் படிப்போடு நிற்காமல், தங்களுக்குத் திறமையைத் தேடிக்கொள்வதோடுமட்டும் நிற்காமல் தொண்டுப் பண்பையும், சேவை முறையினையும் கற்கிறார்கள். அவற்றைக் கற்பதோடுமட்டு மன்றி, நடைமுறையிலும் கொண்டுவருகின்ற இவர்களே மனமாரப் பாராட்டுகின்றேன், வாழ்த்துகின்றேன். இதேபோல மேலும் என்றும் செய்யவேண்டுமாய் வணக்கத்தோடு கேட்டுக்கொள்கிறேன்.
கேட்டுப் பயனடைக
இன்று இரண்டு நல்ல நிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்று தலைவர் வானொலிப் பெட்டியைத் திறந்து வைத்த நிகழ்ச்சி. இதன்மூலம் நல்ல பாட்டுக்களைக் கேட்கலாம். பாட்டு, பொழுது போக்குவதற்கு மகிழ்ச்சியாக இருப்பதற்கு. அதுமட்டு மன்று; நல்ல பேச்சினைச் சில நேரமாவது கேட்கலாம். வள்ளுவர், 'கற்றிலனாயினும் கேட்க என்று சொல்கின்றார் இந்தக் கிராமத்தில் உள்ளவர்களில் பலர் பெரியவர்கள்; அந்தக் காலத்தில் படிக்க வாய்ப்புப் பெறாதவர்கள். இப்போதுகூட முதியோர் பள்ளிக்குச் சிலர் வருவீர்கள்; பலர் வரமாட்டீர்கள். பள்ளிக்கூடத்திற்கு வராவிட்டாலும் இந்த வானொலிப் பெட்டியைக் கேட்கவந்து, கேட்டு, புத்திசாலிகளாக, திறமைசாலிகளாக, கேள்வி அறிவு பெற்றுக்கொள்ளுங்கள். அப்படிப் பெறும் அறிவால் யாருக்கும் ஏமாறதவர்களாக இருக்க உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
பிறருக்கு உதவுக
இன்னொரு நல்ல நிகழ்ச்சி என்ன என்று கேட்டால், நான் பல குழந்தைகட்கு, சிறுவர் சிறுமியர்களுக்குப் பரிசுகள் வழங்கியது; துணி, சட்டை, பாவாடைகளை வழங்கினேன். அவற்றை எல்லாம் வாங்கக் கல்லூரி மாணவர்கள் பணம் திரட்டிக் கொடுத்திருக்கிறார்கள்; அவர்களுக்கு என் நன்றியும் வணக்கமும். சேவையி ல் உடல் உழைப்பைக் கொடுக்கப் பல மாணவர்கள் ஆயத்தமாயிருப்பர். பணம் கொடுப்பது என்றால் கொஞ்சம் கடினம். சினிமா இருக்கிறது; வேடிக்கை இருக்கிறது; இவற்றுக் கெல்லாம்போக மிச்சப்படுத்தி, உங்களைப்போல 'ஏழை பாழை’களுக்கும், நீங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று, உழைப்போடு, பணமும் உதவிய மாணவரைப் பாராட்டுகின்றேன். இப்படியே 'பகுத் துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' என்ற வள்ளுவர் குறள்வழி நின்று, உங்களால் ஆன உதவியை மற்றவர்க்குச் செய்ய வேண்டும், உடலுழைப்புத் தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
எப்படியும் குழந்தைகளைப் படிக்கவையுங்கள்
எனக்குப் பேரவா உண்டு. பேரவா தன்னைப் பொறுத்தவரை இருப்பது தவறு; மற்றவரைப் பொறுத்து-தேசத்தைப் பொறுத்து-இருக்கலாம். ஒன்று நடக்க வேண்டும்; இந்த நாட்டில் நடக்க வேண்டும்; மற்ற இடத்தில் நடக்கிறதோ இல்லையோ, தமிழ் நாட்டில் நடக்கவேண்டும். நடக்கக்கூடியது தமிழ்நாட்டில்தான் என்பது என் எண்ணம். இந்தத் தேசத்தில் அரிசனம், மற்றவர் என்று இல்லாமல் எல்லோரும் ஒரே சனம் என்ற நிலை ஏற்பட வேண்டும். மனிதர்களே இத் தமிழ்நாட்டில் இருக்கி றார்களே ஒழிய, அரிசனமோ அறியாத சனமோ! ஐயரோ ஐயர் அல்லாதவரோ, முதலியாரோ, பிள்ளையோ இல்லை என்று சொல்லும் நிலை வரவேண்டும். எல்லா மனிதரும் ஒரே இனம், ஒரே நிறை, எல்லோரும் ஒரு குலம் என்ற காலம் வரவேண்டும் என்பது என் அவா.'உழைக்கத் துணிபவர் அதற்கு உழைக்க வேண்டும். நெஞ்சு உரம் இருக்கின்றவர்கள் அதற்கு வழி காட்டவேண்டும். ஆனால் ஒரு சிலர் காட்டினால் மட்டும் போதாது. நீங்கள் இன்று 'ஏழைபாழை'களாக இருந்தாலும், அரிசனங்களாக இருந்தாலும், நாளை அந்த அரி என்பதனை நீக்கிவிட்டு மக்கள் ஆதல் வேண்டும். அதற்கு உங்கள் கடமையைச் செய்ய வேண்டும். என்ன கடமை? நாங்கள் என்ன ஆலையிலே, வயலிலே உழைக்கவில்லையா என்று கேட்கலாம். நீங்கள் உழைக்கிறீர்கள்; உண்மைதான். ஆனால், நீங்கள் உழைப்பதோடு இன்னொன்றும் செய்ய வேண்டும்? உங்கள் குழந்தை குட்டிகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும். எவ்வளவு துன்பம் இருந்தாலும், வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டிப் பள்ளிக்கூடம் அனுப்பவேண்டும். அங்கே சம்பளம் கொடுக்கவேண்டிய தில்லை. புத்தகம் வாங்கப் பணம் கொடுக்கவேண்டியது இல்லை. உடைக்கும், இப்படி மாணவர்கள் வந்து ஒத்தாசை செய்கிறார்கள். இந்த ஒத்தாசை வீணாகக்கூடாது. ஒரு கட்டுத்திட்டம் பண்ணிப் பள்ளிக்கு இந்தக் குழந்தைகளை யெல்லாம் அனுப்ப வேண்டும். எவ்வளவு காலம்? ஒரு வருடம் 2, 3, 4, 5 வருடம் அனுப்பினால் போதுமா? போதவே போதாது. உயர்நிலைப்பள்ளி வகுப்புகளில் வெற்றி பெற்றால் போதுமா? அதுவும் போதாது. உங்கள் பையன்கள் எல்லாம் கல்லூரியில் படிக்கிறவரை தாக்குப் பிடித்துத் துணிவாக, உற்சாகமாகத் தட் டிக்கொடுங்கள். உங்கள் துன்பம் உங்களோடே தொலையட்டும். அவர்கள் வாழ்வாவது நன்றாக இருக்கப் படிக்க வைக்கவேண்டும்.
இழிவு நம் தலைமுறையோடு தொலையட்டும்
"எல்லோரும் கல்லூரியில் படித்தால் மற்றவர்கள் என்ன ஆவது? அத்தனே பேருக்கும் வேலை எங்கே? என்றெல்லாம் கேட்பார்கள். எனக்கே நான் பதில் சொல்லிக்கொள்கிறேன். அதாவது நாங்கள் உயர்ந்த அலுவல் பார்க்கிறோம். எங்கள் அடுத்த தலைமுறை உங்கள் வேலையைச் செய்யட்டும்; அப்போது நீங்கள் அந்த அலுவல் பாருங்கள்; மாற்றிக்கொள்வோம். அலுவல்கள் கொஞ்சம்தான் என்றால், ஏன் பார்த்தவனே பார்க்க வேண்டும்? ஏன்? உயர் கல்வி ஒன்றால் எல்லோரும் சமமாய்ப் போகவேண்டும். சட்டத்தால் சொல்லால் சமமாகலாம். ஆனால் மெய்யான சமத்துவத்தை ஏற்படுத்தக் கல்விதான் துணைசெய்யும். ஆகையால் உங்கள் பிள்ளைகள் நிறையப் படிக்கவேண்டும். இவர்கள் கொடுக்கும் உதவியையும் பெற்றுப் பயன்படுத்தி, நல்ல காலத்தையும் நல்ல சூழ்நிலையையும் வீணாக்காமல், சண்டை சச்சரவில் போக்காமல் நம்மையெல்லாம் யார் இந்த நிலைக்குத் தள்ளினார் என்ற சவப் பரிசோதனையில் ஈடுபடாமல், `கீழே இருக்கிறோம் . மேலே போகவேண்டும்; விரைவில் போகவேண்டும்; நம் தலைமுறையிலேயே மேலுக்கு வர வேண்டும்' என்று பிடிவாதமாக முன்னேறவேண்டும். கைகொடுக்க இப்படிப் பலர் இருக்கும்போதே அவர்கள் கொடுக்கும் கையைப் பிடித்துக்கொண்டு நாம் முன்னேறவேண்டும். எனக்குப் பல விருப்பங்கள் உண்டு. பலவற்றைச் செய்ய எண்ணுகிறேன். என்னைப் போன்றவர்கள்மட்டும் நினைத்தால் போதாது. செல்வரும் செல்வாக்கு உள்ளவரும் ஆதரவு தரவேண்டும்.
இன்றைய மாணவர்கள் எதிர்காலத்திலும்
வழிகாட்டிகளாய் வாழவேண்டும்
மாணவத் தோழர்கள் இங்கே எப்படி எடுத்துக்காட்டாக இருக்கிறார்களோ, அதைப்போலவே, மெய்யாக, ஓரினம், ஓர் நிறை ஏற்பட- பேச்சிலேமட்டும் அல்லாமல், காரியத்திலே செய்ய-முற்படவேண்டும். இந்த மாணவர்கள், ‘எப்படி மாற்ற முடியும்' என்று சொல்லாதவர்கள்; 'பல காலப் பழக்கமாயிற்றே’ என்று சொல்லாதவர்கள். அப்பா, அம்மா பார்க்காத சினிமாவையெல்லாம் பார்க்கிறோமே, அதற்குமட்டும் அப்பா அம்மாவுக்குப் பயப்படுவதில்லையே! ஆனால் ஒரே இனமாக இருக்கமட்டும் சாக்குப் போக்குச் சொல்லலாமா? மற்றவர்கள் எப்படிச் சொன்னாலும், மாணவர்கள் சொல்லக்கூடாது. இங்கே இப்போது வழிகாட்டிகளாய் இருப்பதுபோல, ஒரே சமுதாயம் ஏற்படுவதற்கு வாழ்க்கையிலும் வழிகாட்டவேண்டும் என்று இளைஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
எது உத்தியோகம் ?
`நீங்கள் படிக்கவேண்டும். படித்தவர்கள் எல்லோரும் அரசியலில் அலுவல் பார்க்கவேண்டும்' என்றால், எழுதுவதுதான் உத்தியோகம் என்றும், அதிகாரம் பண்ணுவதுதான் உத்தியோகம் என்றும் எண்ணிவிடாதீர்கள். அந்த மாதிரி உத்தியோகம் விரைவில் குலைந்துபோகும். தொழில் செய்வதும் உத்தியோகம்தான்; பாடுபடுவதும் உத்தியோகம் தான். இயந்திரம் ஒட்டுவதும் உத்தியோகம்தான்.
பசியும் படிப்பும்
நம் நாட்டில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் மட்டும் போதாது. கட்டுப்பாடு பண்ணியோ நல்லதனமாகவோ, உற்சாகம் ஊட்டியோ பள்ளிக்குக் கொண்டுவந்து விட்டால்மட்டும் என்ன பயன்? பள்ளிக்குப் போகும் பிள்ளைக்குப் பசி இல்லாமல் இருந்தால்தானே படிப்பு வரும்? பசி வந்திடப் பத்தும் பறந்துபோம். எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள். படித்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதே படித்தவர்கள் ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். அதாவது பிள்ளைகளுக்குப் பசித்தாலும் படிப்புச் சொல்லிக்கொடுக்க முடியும் என்று. அவர்கள் படித்த பாடத்தை அவர்களே மறந்துவிட்டார்கள். பசித்த பிள்ளைகளுக்கு எப்படிப் பாடம் சொல்லிக்கொடுப்பது? நாம் வேண்டுமானல் கிராமபோன் மாதிரி சொல்லிக்கொண்டே யிருக்கலாம். ஆனால் பசித்த பிள்ளைக்கு ஏறுமா? பயந்து வேண்டுமானால் கேட்டுக்கொண்டிருக்கும். மூளையில் ஏறுமா? ஏறவே ஏறாது. ஆதலால் அது தவறிப் போகிறது. தரம் குறைந்து போகிறது. '`இதெல்லாம் படிக்குமா? உருப்படுமா?" என்று பின்னால் சொல்கி றார்கள், நிரம்பப் பெரியவர்கள். நம்மால் அப்படிச் சொல்ல முடிவது இல்லை. எல்லோரும் முன்னுக்கு வருவார்கள். எப்பொழுது பசி இல்லாமல் குழந்தைகள் வயிறாரச் சாப்பிட்டால்; அப்போதுதான் ஆசிரியர் சொல்லும் படிப்பு ஏறும்; பயன் விளையும்; மேல் வகுப்புக்குப் போகும். ஆதலால் இல்லாத குழந்தைகட்குச் சோறு போடவேண்டும். எதற்காக?
பசியும் பாடும்
படிபபதறகுமட்டும் அன்று. இன்றைக்குப் பச்சைக் குழந்தை; 15 வருடத்திலே இந்தத் தேசத்து ராசா. குடித்தலைவனும் இங்கேதான் இருக்கிறான்; படைத்தலைவனும் இங்கேதான் இருக்கின்றான். அன்றைக்கு நல்ல முரட்டு ஆளாகப் பட்டாளத்திற்கு வேண்டுமென்றால்-சின்ன வயதிலே பட்டினி போட்டு விட்டு, இருபத்தைந்து வயதிலே பட்டாளத்திற்கு ஆள் தேடினால் -எங்கே கிடைப்பார்கள்? படிப்பு வரநல்ல உடல் வலிமை இருக்க-குழந்தைகளுக்கு உணவு போடவேண்டும். இதுபற்றி அரசு எண்ணிவருகிறது. செய்வதற்கு நாமும் கை கொடுக்கவேண்டும். ஒரு கை தட்டினால் ஒலி வருமா? இரண்டு கை தட்டினால்தானே ஒலி? அதைப்போல அரசினர் செய்தாலும், ஒத்துழைப்பும், உடல் உழைப்பும் கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கிற உதவியைப் பெற்று, நமது நாட்டில் எல்லாக் குழந்தைகளும் படித்துப் பட்டினி இல்லாமல் இருக்கப் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு.
நல்ல பழக்கமும் ஒழுக்கமும்
பிள்ளைகள் நன்றாகப் படித்தால்மட்டும் போதுமா? தொழிலைக் கற்றுக்கொண்டால் மட்டும் போதுமா? மனிதனை மனிதன் ஆக்குவது எது? மனிதனுக்கும், ஆடுமாடுகளுக்கும் வேறுபாடு என்ன? ஆடுமாடுகள் நினைத்த இடத்தில் நினைத்த செயலைச் செய்யும். மனிதன் நாகரிகமானவன். மெய்யான நாகரிக மனிதன், அது அதை அந்த
– 61 —
அந்த இடத்தில்தான் செய்வான். ஆடுமாடு மாதிரி நினைத்த இடத்தில் மலம் இருக்கவோ, சிறுநீர் கழிக்கவோ மாட்டான். அதுதான் வேறுபாடு. அது எப்படி வரும்? இந்தக் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் வரவேண்டும். என்ன பழக்கம்? சுத்தமான பழக்கம், சுகாதாரமான பழக்கம். இதையும் பார்த்துக்கொள்ள வேண்டும். படிப்புச் சொல்லிக்கொடுத்தால்மட்டும் போதாது; இங்கே வருகிற மாணவர்கள் இவற்றையெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும். பாடம்மட்டும் அன்று; விளையாட்டு மட்டும் அன்று; நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கம் வரவேண்டும். படித்த வன் என்றால், பார்த்த இடத்திலே சொல்லும்படி இருக்கவேண்டும். மறைவான இடத்திலே, யாருக்கும் ஒட்டாத இடத்திலே எவன் இருக்கிறானோ' அவன் படித்தவன். அக்கம் பக்கம் பார்த்துவிட்டு ”யார் நம்மைக் கேட்கிறார்கள்” என்று சாலை ஓரமாக இருக்கிறானே அவன் அறிவில்லாதவன். அவனை மனிதன் என்று நினைக்காதீர்கள். இந்த நல்ல பழக்கம் குழந்தைகளுக்கு வந்துவிட்டால் பத்து வருடத் தில் நம் நாட்டில் இருக்கும் கெட்ட பழக்கங்கள்-கேவலமான பழக்கங்கள் தொலைந்துவிடும். இந்தத் திருத்தம் குழந்தைகளிடத்தில் வரப் பாடுபடவேண்டும். மாணவத் தோழர்கள் அதற்கும் பாடுபட வேண்டும்.
சுயமுயற்சி வேண்டும்
'கொடுக்கிறவர்கள் கொடுத்துக்கொண்டே யிருப்பார்கள்; நாம் பெற்றுக்கொண்டே யிருப்போம் என்றுமட்டும் எண்ணவே கூடாது. நாமும் நம்முடைய முயற்சியில் ஈடுபடவேண்டும். நம் தலைமுறையிலே நம் பெரியவர்கள் கையேந்தி நின்றால்கூட, வருகிற தலைமுறையிலே நம் குழந்தைகள் கையேந்தி நிற்கக் கூடாது. தங்கள் காலிலேயே நிற்க வேண்டும். சின்னக் குழந்தை தவழ்கிறது. நடக்க ஆரம்பிக்கும்பொழுது என்ன பண்ணுகிறோம்? நடைவண்டி பண்ணிக் கொடுக்கிறோம். அதைப் பிடித்து நடக்கி றது. காலமெல்லாம் நடைவண்டியையே பிடித்து நடந்தால் என்ன சொல்வோம்? "ஐயோ என் குழந்தை சப்பாணியாகப் போனது, நன்றாய் வளரவில்லை” என்று சொல்வோம்; திருப்தியடைவ தில்லை. அது போல, நடைவண்டிமாதிரி மாணவர்களும், மற்றவர்களும் உங்கட்கு ஒத்தாசை செய்தால் ஒரு தலை முறைக்கு ஒத்தாசை செய்யலாம். அடுத்த தலை முறைக்கும் இந்தமாதிரி யாராவது கொடுப்பார்களா என்று கை ஏந்திக்கொண்டிருந்தால், அது தேய்ந்து போன சமூகம், சப்பாணிச் சமூகம் என்றுதானே பொருள்? அப்படி ஆகக்கூடாது நீங்கள். உங்களிடம் உறுதி இருக்கிறது; ஊக்கம் இருக்கிறது. அறிவு சொல்லப் பலர் வருகிறார்கள். அவர்கள் சொல் வதைக் கேட்டுப் பிடிவாதமாக உழைத்து, வம்பு துன்புக்குப் போகாமல் நல்லபடியாக நீங்கள் முன்னேற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இங்கு வர வாய்ப்பளித்த உங்கள் எல்லோருக்கும் என் நன்றியும் வணக்கமும்.
O
(பி. எஸ். ஜி. கலைக் கல்லூரியின் சமூகப் பணி சங்கத்தின் பணிக் களமாகிய கிருஷ்ணராயபுரத்தில் ஆற்றிய சொற்பொழிவு.)
VI பகுத்துண்டு
பல்லுயிர் ஒம்புக
பெரியோர்களே! தாய்மார்களே!
அன்பிற்குரிய தம்பிகளே! தங்கைகளே !
'மனம் சேர்ந்ததன் வண்ணமாகும்' என்று பெரியோர் சொல்கின்றனர். உண்மை தான் அது என்பதனை இன்று அனுபவத்தால் அறிகிறேன். இளமையும் எழிலும், ஊக்கமும் உறுதியும், வலிமையும் வாய்ப்பும் கொண்ட இளைஞர்களாகிய உங்களைக் கண்டு நானும் அத்தகைய நிலைகளை அடைந்துள்ள எண்ணத்தில் மகிழ்கிறேன். இந்த மகிழ்ச்சியைப் பெற நல்ல வாய்ப்பளித்த அனைவர்க்கும் என் நன்றி.
நான் வருகையில் உங்கள் தேசிய இராணுவப் படை அணிவகுப்பைக் கண்டு உளம் மகிழ்ந்தேன். ஆண்கள் மட்டுமா அணிவகுத்து நின்றனர்? பெண்களுடைய உதவிப் படையும் அணிவகுத்து, ஆண்மை பெற்று - நின்றதைக் கண்டேன். அப்போது பாரதியார் கனவு கண்ட புதிய சமுதாயம் என் நினைவிற்கு வந்தது. ஏறுபோல் நடையினராய் வாழவேண்டும் என்று பாரதி கண்ட கனவு செயலானதைக் கண்டு உளம் பூரித்தேன். எதிர் காலத்தில் அமையப் போகும் சமுதாயத்தில் எனக்குப் பெரியதொரு நம்பிக்கையும் ஏற்பட்டது.நம்பிக்கையால் விளைவது என்ன? இன்பம் அல்லவா? நம்பிக்கை கொண்டு இன்பம் அடைந்தேன்.
சரிநிகர் சமானம்
அணிவகுப்பிலே, ஆண்களும் பெண்களும் கச்சிதமாக உடுத்தி, மிடுக்காக நடந்து, ஒழுங்காகச் சென்று, அமைதியாகச் செயலாற்றினீர்கள். இந்தக் கச்சிதமும் மிடுக்கும் ஒழுங்கும் அமைதியும் என்றும் உங்களிடம் இருக்கவேண்டும். ' மிடுக்கான நடை ஏறு போன்ற நடை பெண்களுக்கு ஏன், ஆண்களுக்குத்தானே” என்று இங்கே சிலர் எண்ணலாம். அது கடந்த கால எண்ணம். இப்போது ஆண்கள் போன்று ஏறு போன்ற நடையினைப் பெண்களும் பெற வேண்டும். இதனை நான்மட்டும் சொல்லவில்லை. எதிர்காலத்தை நன்குணர்ந்த பாரதியார்
“நிமிர்ந்த நன்னடை,
நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும்
அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்
செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர்
திறம்புவ தில்லையாம்”
என்று அறிவுறுத்திச் சென்றுள்ளார். பெண்கள் பல அறிவு பெற்று, நேரிய நெறி பெற்று, நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும் பெற்று ஒழுகுவதால் எத்தகைய தவறும் வராது என்பது உண்மை. இதனை உணர்ந்து நம் நாட்டுப் பெண் மணிகள் நல்வாழ்வு, உரிமை பெற்ற வாழ்வு, ஒத்த வாழ்வு வாழ வேண்டும்.
போட்டி வேண்டும்
உங்கள் விளையாட்டுப் போட்டிகளைக் கண்டேன் பலரும் பரிசு பெற்றிருக்கிறீர்கள். வெற்றி பெற்றதற்குரியதான பல கோப்பைகளைக் காணுகின்றேன். மற்றத் தலைமையாசிரியர்களும் இவைகளைப் பார்க்க வேண்டும். தங்கள் பள்ளிகளும் இத்தகைய சிறந்த நிலையினை அடையப் பாடுபடவேண்டும். பாடுபட்டால் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறுவார்கள். சத்தியமங்கலம் மேலும் போட்டி போட்டு முன்னேற்றம் அடையும். சில நேரத்தில் போட்டி போடுவது மூலம் பொறாமை, காய்ச்சல், அவதூறு ஏற்படுவதுண்டு. அது விரும்பத்தகாத போட்டி, தாழ்வான போட்டி. ஆனால் உயர்வுக்குப் போடும் போட்டியில் காய்ச்சலுக்கு இடம் இல்லை. திறமையின் வளர்ச்சிக்குத்தான் இடம் உண்டு. வளர்ச்சிக்குத் தூண்டும் நல்ல போட்டி வேண்டும்.
அன்றைக்கு, ஒரு விளையாட்டு விழாவிற்குப் போயிருந்தேன். அங்கே ஒரு மாணவன் உயரத் தாண்டலில் 9’ 4” தாண்டினான் . `அவனோடு யாரால் போட்டிபோட முடியும்’ எனச் சளைத்துவிடவில்லை; பலர் போட்டி போட்டார்கள். அவனும் விடா முயற்சியோடு போட்டி போட்டான். இறுதியில் 9’ 10" தாண்டி வெற்றிபெற்றான். அவனோடு போட்டிபோட யாரும் முன்வந்திராவிடில், `நானே ராசா’ என்று இறுமாந்து அமர்ந்திருப்பான். 9’ 4" தாண்டிய அவனே அடுத்த ஆண்டு 9’ 2" தாண்டும் நிலைக்கு வந்திருந்தாலும் வந்திருப்பான். இப்படியே தேய்ந்து கொண்டு போனாலும் போவான். போட்டி இருப்பது நல்லது. நல்ல முறையிலே ஒழுங்கான முறையிலே போட்டியிருந்தால் மனிதனுடைய ஆற்றல்கள் வளர்வதற்குத் தூண்டுகோலாக இருக்கும். அந்த வகையில் நல்ல முறையிலே போட்டியை வளர்த்திருக்கிறீர்கள்.
வெற்றியும் வெறியும்
'வெற்றி பெற்றுவிட்டோம்’ என்று மட்டும் ஏமாந்து இருந்துவிடாதீர்கள். வெற்றி என்ற சொல்லிலே இடையிலிருக்கும் வல்லின மெய் போய்விட் டால் என்னவாகும்? வெறியாக மாறிவிடும். ஏமாந்து தன்னடக்கம்விட்டு, நிதானத்தை இழந்துவிட்டால் மனிதன் வெறிகொண்டவனாகி விடுகிறான். அந்த வெறி அவனுக்குத் தோல்வியை உண்டாக்கும்.
நெற்பயிரும் நல்வாழ்வும்
நீங்கள் பள்ளிக்கூடத்திலே பெறுகிற வெற்றி வாழ்க்கை முழுவதற்கும் வெற்றியாகவே இருக்கவேண்டும். உங்கட்கு வெற்றி ஏற்பட ஏற்பட அமைதியும் அடக்கமும் வளரவேண்டும். நாற்று நடும் போது "நெற்பயிர் நிமிர்ந்து நிற்கவேண்டும். குத்திட்டு வளரவேண்டும்" என்று எதிர்பார்க்கிறோம். குத்திட்டு நிமிர்ந்து வரவில்லையானால் "நல்ல வளர்ச்சி யில்லையே” என்று கவல்கின்றன் உழவன். அதே பயிர் வளர்ந்து பால்கட்டி, நல்ல கதிர்விட்ட பிறகு பழுத்துப் படுக்க வேண்டும். நன்றாக விளைந்த கதிர்களையுடைய பயிர், நிறைய மணி பிடித்த கதிர்களை. யுடைய நெற்பயிர் அப்படித்தான் படுக்கும். அதன் படியேதான் நம் வாழ்வும். அறிவு வளர வளர வெற்றி வர வர, அடக்கமும் அமைதியும், தாழ்வு, பணிவும் ஏற்பட வேண்டும். இந்தக் கருத்தினைச் சிந்தாமணிச் செய்யுள் தெளிவாக விளக்குகின்றது
சொல்லருஞ் சூற்பசும்
பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கருவிருந்து
ஈன்று மேலலார்
செல்வமே போல்தலை
நிறுவித் தேர்ந்தநூற்
கல்விசேர் மாந்தரின்
இறைஞ்சிக் காய்த்தவே
ஆம், தேர்ந்த கல்வி பெற்றவர்க்கு அடக்கம் இயற்கையானதுதான். அடக்கம் ஏற்படவில்லை யென்றால் அறிவு பெற்றும் பயனில்லை; வெற்றி பெற்றும் பயனில்லை. செருக்குக்கு இடம் கொடுத்தால் இறுதியில் அறியாமையும் தோல்வியுமே ஏற்படும் என்பதனை உங்கட்கு நினைவூட்டுகிறேன். வள்ளுவரும் இதனையே,
‘அடக்கம் அமரருள்
உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து
விடும்’
என்று தம் குறட்பாவில் கூறி வலியுறுத்துகிறார். ஒழுக்கமும் கட்டுப்பாடும் தமிழின் தனிச் சொத்து. அதனைப் போற்றிப் பாதுகாத்துப் பெருமை தாருங்கள். அப்போதுதான் கல்வியின் பயன் பெருகும்.
அரசியலாரின் பங்கும் நம் கடமையும்
நமது அரசியலார் நம்முடைய கல்வி வளர்ச்சிக்குப் போதிய ஆத ரவு கொடுத்துவருகிறார்கள். தொடக்கப்பள்ளி இல்லாத ஊரே இனி இருக்காது. 500-க்கு மேற்பட்ட மக்கட் தொகையுள்ள ஊர் தோறும் பள்ளிகள் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டுப்புறங்களில் 140 உயர் நிலைப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட் டுள்ளன. இவைகளைப் பயன்படுத்தி எல்லோரும் நல்ல கல்வி பெற்று, ஆழ்ந்த கல்வி பெற்று, முழுக் கல்வி பெற்று, இந்நாட்டு மன்னர்களாக வளர வேண்டும். அப்போது தான் அரசியலாரின் முயற்சி பயனளித்த தாகும்.
உடலுக்குச் சோறு, உயிருக்குக் கல்வி
பள்ளிக்கூடங்கள் பலதுறைக் கல்விக்கு இட மளிக்க வேண்டும். வரப்போகும் ஒன்றை முன் கூட்டியே அறியும் அறிவு பெற்றவர்கள் கவிஞர்கள். அவர்களுள் ஒருவரே பாரதியார். அவர்,
'வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்:
பயிற்றிப் பல கல்வி தங்து-இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்'
என்று கூறிச் சென்றுள்ளார். `பள்ளிகளில் பல துறைக் கல்விமட்டும் தந்தால் போதாது. கல்வி கற்கும் குழந்தைகளின் வயிற்றுக் கவலை போகச் சோறிட வேண்டும் என்கிறார். ஏன்? சோற்றுக் கவலை வந்துவிட்டால் எதனையும் செய்யமுடியாது. ஆகவே, 'சோறிட்டுப் பல கல்வி தரவேண்டும்' என்கிறார்.
பல கல்வி
பிள்ளைகள் திறமையும் அறிவும் பல திறப்பட் டவை. அவர்கள் ஆற்றலுக்கும் திறமைக்கும் ஏற்ற கல்வி தரவேண்டும். ஏட்டுப் படிப்புமட்டும் படிப் பாகாது. தொழிற்படிப்பும் படிப்பாகும். ஏட்டுப்படிப்புக்கு எவ்வளவு அறிவு வேண்டுமோ, அவ்வளவு அறிவு தொழிற் படிப்புக்கும் வேண்டும். அந்த அறிவையும் திறனையும் ஐம்பதில் பெற முடியாது. இளமையிலேதான் பெற முடியும். ஐந்திலேயே குழந்தைகளின் அறிவுக்கும், ஊக்கத்திற்கும், ஆர்வத்திற்கும் ஏற்ற கல்வியைத் தரவேண்டும். அப்படிச் செய்யத் தவறும் கல்வியமைப்பு சிறந்த அமைப்பு ஆகாது. 'உழுகிற காலத்தே ஊர் சுற்றிவிட்டு, அறுவடை காலத்தில் அரிவாள்கொண்டு வந்தால் என்ன கிடைக்கும்?' என்ற பழமொழியை இங்கே எண்ணிப் பார்த்தால் 'பருவத்தே பயிர் செய்யும்’ பண்பு ஏற்பட்டுவிடும். எதிர்காலத்தில் நல்ல செல்வம் உடையதாக இந்திய நாட்டை அமைக்க ஏட்டுப்படிப்பும் வேண்டும்; தொழிற் படிப்பும் வேண்டும். இவைகளைத்தான் பாரதியார் பல கல்வி என்று பாடுகிறா.ர்.
உள்ளத்தில் உறுதி
ஆகவே இந்தக் குழந்தைகளெல்லாம் எதிர்கால அரசர்க ளாகவும், அரசிகளாகவும் திகழ்வதற்குப் பல துறைக் கல்வி மிகவும் வேண்டப்படுவது ஒன்றாகும். அப்போதுதான் எல்லோரும் தங்கள் `காலிலே நின்று’ செயலாற்ற முடியும். அவர்களை அம்முறையிலே பயிற்றுவிக்கப் பெற்றோரும், ஆசிரியரும், மற்றோரும் பாடுபட வேண்டும். அதற்கு வேண்டுவது உள்ளத்தே உறுதிதான்.
'எண்ணிய எண்ணி யாங்
கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப்
பெறின்'
என்ற வள்ளுவர் வாக்கை நோக்குங்கள். நல்ல முறையில் நல்லனவற்றை எண்ணுங்கள்; எண்ணம் செயலாக வே ண் டு ம் என்ற உறுதிப்பாட்டினைக் கொள்ளுங்கள்; வெற்றி கிடைக்கும். எண்ணிச் செயலாற்றும் உறுதி பெற்று, இடன் அறிந்து, உரிய அறிவையும் காலத்தில் முயற்சியையும் செலுத்தினால் உலகத்தையே பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டாலும் வெற்றி பெறலாம். இதனைத்தான் நம் செந்நாப்போதார்,
‘ஞாலம் கருதினும்
கைகூடும், காலம்
கருதி இடத்தால்
செயின்'
என்று கூறினர்.
கல்விப் பயன்
ஏட்டுப்படிப்பும் தொழிற் படிப்பும் படிப்பதால் உயர்ந்த ஒரு பயன் ஏற்பட வேண்டும். என்ன பயன்? நல்ல பண்பாடு வந்தடைய வேண்டும். இல்லையென்றால் கல்வியால் பயனில்லை. பண்பற்ற கல்வி கல்வியாகாது. பண்பில்லாத அறிவு அறிவும் ஆகாது. படித்தவனிடம் வேற்றுமை தோன்றாது. ‘இவன் கரியன்; இவன் வெள்ளையன்' என்ற வேறுபாடு இருக்காது. ‘இவன் தாழ்ந்தவன், இவன் உயர்ந்தவன்' என்ற எண்ணமும் வராது. பிறர் வாழத்தான் வாழவேண்டும். தான் பெற்ற பொருளால் பிறரை வாழச் செய்ய வேண்டும். பிறர் துன்பம் கண்டவிடத்து அவர்கள் துன்பம் போக்கப் பாடுபட வேண்டும்.
'யாதானும் நாடா மால்
ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத
வாறு'
'பகுத்துண்டு பல்லுயிர்
ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம்
தலை'
'அறிவினால் ஆகுவ
துண்டோ பிறி தினோய்
தன்னோய்போல் போற்றாக்
கடை'
என்ற பொய்யாமொழிகள் மேற்கூறிய கருத்துக்களை வலியுறுத்தும்.
பசியே வெறுப்புக்கும் பொறாமைக்கும் வித்து
கற்றவர்க ளாகிய நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். எண்ணிப்பார்க்க வேண்டும். எதனை? பள்ளிக் கூடத்திற்கு வந்து செல்லும் குழந்தைகளைப் பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும். பள்ளிக்கு வரும் குழந்தைகள் பல பட்டினியோடு ப.ள்ளிக்கு வந்து போகின்றன. பசியோடு படித்தால் பாடம் ஏறுமா? 'பசி வந்திடப் பத்தும் பறந்து போம்’ என்பதனை அறியாதவர் யார்! கல்வியின் தரம் குறைந்துவிட்டது என்று அங்கலாய்ப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். பட்டினியோடு படிக்கும் குழந்தைகள் நல்ல தரம் உடைய கல்வி பெற முடியுமா? முடியவே முடியாது. பசியைப் போக்கப் பாடுபட வேண்டும்.
அதுமட்டுமா? தரம் குறைந்தாலும் குறையட்டும். கல்வியற்றோர் எண்ணிக்கை வளர்ந்தாலும் வளரட்டும். பட்டினியால் அவற்றைவிடக் கொடிய ஒரு விளைவு உண்டு. 5, 10, 15 வயதிலேயே குழந்தைகள் உள்ளத்திலே வெறுப்புணர்ச்சி தோன்றிவிடுகிறது; பொறாமை வளர்கிறது. பொறாமையையும், வெறுப்பு உணர்ச்சியையும் வளரவிட்டால் எதிர் காலம் எப்படி அமையும்? 40 பிள்ளைகள் படிக்கும் இடத்தில் 20 பிள்ளைகள் பட்டினி என்றால், அவர்கள் என்ன எண்ணுவார்கள்? அவர்களிடையே வெறுப்பும் பகையும் ஏற்படுவது இயல்புதானே? அன்பும், நட்பும், உறவும் ஏற்பட்டு மகிழ்வாக வாழவேண்டிய இளம் பருவத்திலேயே அவைகள் வாழ வழியில்லா\மல் போய்விடுகின்றது. ஆகையால் அவ்வகை வேற்று மைகளைத் தொலைக்க-பசிக்கொடுமையைப் போக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும். அம்முயற்சி பள்ளிக்கூடத்திலேயிருந்து தொடங்கட்டும். நல்ல சமுதாயம் உருவாகப் பாடுபடுங்கள். பள்ளிகளிலே பட்டினியோடு படிக்கும் குழந்தைகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்துங்கள்.
நம் நாட்டு மக்கள் நல்ல மக்கள். வருபவர்க் கெல்லாம் வாரி வழங்கும் பண்புடையவர்கள். செல்வர்கள் மட்டு மல்லாமல் நம் நாட்டு ஏழைகளும் தங்களிடத்தே உள்ளதனைப் பகிர்ந்துகொடுத்து மகிழும் பண்புடையவர்கள். உண்ணும் நேரத்திலே ஏழை யொருவனின் குடிசையிலே நுழைந்துவிட்டால் தன் னிடம் உள்ள கஞ்சியினைப் பகிர்ந்து உண்ணும் பான்மையினை இன்றும் நாம் பார்க்கிறோம். இந்தப் பண்பு படித்தவர்களிடமும் பணக்காரர்களிடமும் நாட்டுமக்கள் அனைவரிடமும் பரவ வேண்டும்; வளர வேண்டும். பள்ளிகளிலே சோறு போடுவது என்றால் யாருக்கும் பாரம் இல்லை. பகுத்துண்ணும் பண்பே வேண்டும்.
செல்வர்கள் நிறையத் தரட்டும். ஏழை எளியவர்கள் தங்களால் இயன்றவரை கொடுக்கட்டும். பல துளிகள் சேர்ந்துதான் பெருவெள்ள மாகிறது. இப்படிச் சேர்த்துச் சேர்த்து, வளம் உடைய எதிர்கால மன்னர்களை உருவாக்கும் பணிக்கு உதவுங்கள்; பசியறியாப் பாலகர்கள் பள்ளிகள்தோறும் நிறைஙந்திருக்கும் நிலையினை ஏற்படுத்துங்கள். அப்போது தான் கல்வியின் தரம் உயரும். நல்ல அறிஞர்கள் தோன்றுவார்கள். போட்டி ஒழியும். பகைமை அழியும்.
"என்னரும் தமிழ்நாட் டின் கண்
எல்லோரும் கல்வி கற்றுப்
பன்னரும் கலைஞா னத்தால்,
பராக்கிர மத்தால், அன்பால்
உன்னத இமமலை போல் ஓங்கிடும்
கீர்த்தி யெய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக்கேட் டிடல்எஙந் நாளோ"
என்று தமிழர் நலம் பேணிக் கவிபாடும் கவிஞர் கேட்கிறார். அப்பாடலுக்குப் பெருமிதத்தோடு விடை தருவோமாக. பகுத்துண்டு பல்லுயிர் ஒம்பும் உறுதி பெற்று உழையுங்கள் என உங்களைக் கேட்டுக் கொண்டு எ ன து உரையினே முடித்துக்கொள்கிறேன்.
(14-2-57ல் சத்தியமங்கலம் நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில் பேசியது.)
கருத்துகள்
கருத்துரையிடுக