சான்றோர்கள் பார்வையில் பண்டாரத்தார்
கட்டுரைகள்
Back
சான்றோர்கள் பார்வையில் பண்டாரத்தார்
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார்
சான்றோர்கள் பார்வையில் பண்டாரத்தார்
1. சான்றோர்கள் பார்வையில் பண்டாரத்தார்
1. மின்னூல் உரிமம்
2. மூலநூற்குறிப்பு
3. நுழைவுரை
4. பதிப்புரை
2. சதாசிவப் பண்டாரத்தாரின் கல்வெட்டாய்வு
3. பிற்காலச் சோழர் வரலாறு - ஓர் ஆய்வு
4. பண்டாரத்தாரின் இலக்கியப் பணி
5. பண்டாரத்தாரின் இலக்கணப் பணி
6. பண்டாரத்தாரின் இலக்கியப் புலமை
7. சமகாலத்து அறிஞர்கள் பார்வையில் பண்டாரத்தார்
8. பண்டாரத்தாரின் ஆய்வுக் கட்டுரைகள்
9. அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் - பாண்டியர் வரலாறு
10. பண்டாரத்தாரின் சமயப்பணி
11. வரலாற்று அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார்
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : சான்றோர்கள் பார்வையில் பண்டாரத்தார்
தொகுப்பாசிரியர் : அ.ம.சத்தியமூர்த்தி
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதற்பதிப்பு : 2007
தாள் : 18.6 கி. என்.எ.மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 12 புள்ளி
பக்கம் : 16 + 104 = 120
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 110/-
படிகள் : 1000
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : செல்வி வ. மலர்
அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர், இராயப்பேட்டை, சென்னை - 14.
வெளியீடு : தமிழ்மண் அறக்கட்டளை, பெரியார் குடில், பி.11. குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030
ஆராய்ச்சிப் பேரறிஞர்
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்
116 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு
தோற்றம் : 15.08.1892 - மறைவு : 02.01.1960
தொன்மைச் செம்மொழித் தமிழுக்கு
உலக அரங்கில் உயர்வும் பெருமையும்
ஏற்படுத்தித் தந்த தமிழக முதல்வருக்கு…
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அறிவித்து
உவப்பை உருவாக்கித் தந்த தமிழக முதல்வருக்கு…
ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்
அருந்தமிழ்ச் செல்வங்களை நாட்டுடைமையாக்கி
பெருமை சேர்த்த தமிழக முதல்வருக்கு…
பத்தாம் வகுப்பு வரை
தாய்மொழித் தமிழைக் கட்டாயப் பாடமாக்கிய
முத்தமிழறிஞர் தமிழக முதல்வருக்கு….
தலைமைச் செயலக ஆணைகள்
தமிழில் மட்டுமே வரவேண்டும்
என்று கட்டளையிட்ட தமிழக முதல்வருக்கு…
தமிழ்மண் அறக்கட்டளை
நெஞ்சம் நிறைந்த
நன்றியைத் தெரிவிக்கிறது.
நுழைவுரை
முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி
தமிழ் இணைப் பேராசிரியர்
அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)
கும்பகோணம்
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள திருப்புறம்பயம் என்னும் ஊரில் திரு.வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும் திருமதி மீனாட்சி அம்மையாருக்கும் 15.8.1892 அன்று ஒரேமகனாராகப் பிறந்தவர் சதாசிவப் பண்டாரத்தார்.
பள்ளிப் படிப்பு மட்டுமே பயின்ற இவருக்கு இவருடைய ஆசிரியரான பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் வகுப்பறைகளில் கல்வெட்டுகள் பற்றிக் கூறிய செய்திகள் கல்வெட்டாய்வின்மீது ஈடுபாட்டை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் வரலாற்றறிஞர் து.அ.கோபிநாதராயர் எழுதிய சோழ வமிச சரித்திரச் சுருக்கம் என்ற நூலைக் கண்ணுற்ற பண்டாரத்தார், சோழர் வரலாற்றை விரிவாக எழுத வேண்டுமென எண்ணினார்.
இதன் காரணமாகப் பண்டாரத்தார் அவர்கள் தம்முடைய 22ஆம் வயது முதற்கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட ஆரம்பித்தார். 1914 - செந்தமிழ் இதழில் இவரெழுதிய சோழன் கரிகாலன் என்னும் கட்டுரை இவருடைய முதல் கட்டுரையாகும். அதன்பிறகு அறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. நாட்டார் அவர்களின் பரிந்துரைக் கடிதத்தோடு கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை அவர்களைச் சந்தித்த பண்டாரத்தாருக்குத் தமிழ்ச் சங்கத்தோடு தொடர்பு ஏற்பட்டது. அதனால் சங்கத்தின் தமிழ்ப்பொழில் இதழில் இவர் தொடர்ந்து எழுதி வந்தார்.
இதற்கிடையில் 1914ல் தையல்முத்து அம்மையார் என்னும் பெண்மணியைப் பண்டாரத்தார் மணந்து கொண்டார். சில ஆண்டுகளில் அவ்வம்மையார் இயற்கை எய்தவே சின்னம்மாள் என்னும் பெண்மணியை இரண்டாந் தாரமாக ஏற்றார். இவ்விணையர் திருஞானசம்மந்தம் என்னும் ஆண்மகவை ஈன்றெடுத்தனர்.
அறிஞர் பண்டாரத்தார் தம்முடைய தொடக்கக் காலத்தில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகவும், குடந்தை நகர உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் ஒரு சில மாதங்கள் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 1917 முதல் 1942 வரை 25 ஆண்டுகள் குடந்தை வாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் மற்றும் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், 1942 முதல் 2.1.1960 இல் தாம் இயற்கை எய்தும் வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.
குடந்தையில் இவர் பணியாற்றியபோது, அந்நகரச் சூழல் இவருடைய கல்வெட்டாய்விற்குப் பெருந்துணையாக அமைந்தது. குடந்தையைச் சுற்றியுள்ள கோயில்களையும் குடந்தை அரசினர் ஆடவர் கல்லூரி நூலகத்தையும் தம் ஆய்விற்கு இவர் நன்கு பயன் படுத்திக் கொண்டார். தமிழ் இலக்கிய, இலக்கணங்களைத் தனியாகக் கற்றறிந்த அறிஞர் பண்டாரத்தார் 1930இல் முதற் குலோத்துங்க சோழன் என்ற நூலை எழுதி வெளியிட்டார். இஃது இவரெழுதிய முதல் நூலாகும். பலருடைய பாராட்டையும் பெற்ற இந்த நூல், அந்தக் காலத்தில் சென்னைப் பல்கலைக் கழக இண்டர்மீடியேட் வகுப்பிற்குப் பாட நூலாக வைக்கப்பட்டிருந்தப் பெருமைக்குரியதாகும்.
இந்த நூல் வெளிவருவதற்கு முன்பாகத் தம்முடைய ஆசிரியர் வலம்புரி அ.பாலசுப்பிரமணிய பிள்ளை அவர்களுடன் இணைந்து சைவ சிகாமணிகள் இருவர் என்ற நூலை இவரே எழுதியிருக்கிறார். அதுபோன்றே இவர் தனியாக எழுதியதாகக் குறிப்பிடப் பெறும் பிறிதொரு நூல், தொல்காப்பியப் பாயிரவுரை என்பதாகும். இவ்விரண்டு நூல்களும் இவருடைய மகனாருக்கே கிடைக்கவில்லை. இவர் குடந்தையில் இருக்கும் போது 1940இல் பாண்டியர் வரலாறு என்ற நூலை எழுதினார்.
அறிஞர் பண்டாரத்தார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் இவருடைய ஆய்வுகள் பல வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தன. அவ்வகையில் இவருடைய தலைசிறந்த ஆய்வாக அமைந்த பிற்காலச் சோழர் சரித்திரம் மூன்று பகுதிகளாக முறையே 1949, 1951, 1961 ஆகிய ஆண்டுகளில் பல்கலைக் கழக வெளியீடுகளாக வெளிவந்தன. அதுபோன்றே இவருடைய தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600), தமிழ் இலக்கிய வரலாறு (13,14,15 ஆம் நூற்றாண்டுகள்) என்னும் இரண்டு நூல்களையும் 1955இல் அப்பல்கலைக் கழகம் வெளியிட்டு இவரைப் பெருமைப்படுத்தியது.
தாம் பிறந்த மண்ணின் பெருமைகள் பற்றித் திருப்புறம்பயத் தலவரலாறு (1946) என்னும் நூலை இவரெழுதினார். இவருடைய செம்பியன்மாதேவித் தல வரலாறு (1959) என்ற நூலும் இங்குக் கருதத் தக்க ஒன்றாகும். பூம்புகார் மாதவி மன்றத்தினரின் வேண்டுகோளை ஏற்று இவரெழுதிய காவிரிப்பூம்பட்டினம் (1959) என்ற நூல் அம் மாநகர் பற்றிய முதல் வரலாற்று ஆய்வு நூல் என்னும் பெருமைக்குரியதாகும்.
அறிஞர் பண்டாரத்தார் தம் வாழ்நாள் முழுமையும் உழைத்துத் திரட்டிய குறிப்புகளின் அடிப்படையில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் பலவாகும். அவற்றுள் சிலவற்றைத் தொகுத்து அவர் இயற்கையெய்திய பிறகு அவருடைய மகனார் பேராசிரியர் ச.திருஞானசம்மந்தம் இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும், கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள் என்னும் தலைப்புகளில் 1961இல் நூல்களாக வெளிவர வழிவகை செய்தார்.
பின்னர், இந்த நூல்களில் இடம்பெறாத அரிய கட்டுரைகள் பலவற்றைப் பண்டாரத்தார் அவர்களின் நூற்றாண்டு விழா நேரத்தில் காணும் வாய்ப்பைப் பெற்ற நான், அவற்றைத் தொகுத்து அதன் தொகுப்பாசிரியராக இருந்து 1998இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள் என்னும் பெயரில் நூலாக வெளிவருவதற்கு உதவியாக இருந்தேன். மிக்க மகிழ்ச்சியோடு அந்த நூலை வெளியிட்ட அந்த நிறுவனத்தின் அப்போதைய இயக்குநர் முனைவர் ச.சு.இராமர் இளங்கோ அவர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
பண்டாரத்தார் அவர்களின் பிற்காலச் சோழர் சரித்திரம் என்ற நூல் சோழர் வரலாறு குறித்துத் தமிழில் முறையாக எழுதப்பட்ட முதல் நூல் என்ற பெருமைக்குரியதாகும். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு கல்கி, சாண்டில்யன் போன்றோர் தங்களுடைய வரலாற்று நாவல்களைப் படைத்தனர். உத்தம சோழனின் சூழ்ச்சியால் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டான் என்ற திரு.கே.ஏ.நீலகண்ட சாத்திரி யாரின் கருத்தை அறிஞர் பண்டாரத்தார் உடையார்குடி கல்வெட்டுச் சான்றின் மூலம் மறுத்துரைத்ததோடு அவனது கொலைக்குக் காரணமாக அமைந்தவர்கள் சில பார்ப்பன அதிகாரிகளே என இந்த நூலில் ஆய்ந்து உரைக்கிறார். இந்த ஆய்வுத் திறத்தைக் கண்ட தந்தை பெரியார் இவரைப் பாராட்டியதோடு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தார்.
அறிஞர் பண்டாரத்தார், தானுண்டு தன் வேலை உண்டு என்ற கருத்தோடு மிகவும் அடக்கமாகவும் அமைதியாகவும் பணியாற்றியவர்; விளம்பர நாட்டம் இல்லாதவர். எனவேதான், இவரால் இவ்வளவு பெரிய வேலைகளைச் செய்ய முடிந்தது. தம் வயது முதிர்ந்த நிலையில் செய்தியாளர் ஒருவருக்கு அளித்த நேர்காணலில், தமிழ் நாட்டிற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் நான் செய்ய வேண்டியன நிறைய இருப்பதாகவே நினைக்கிறேன். அந்தத் தொண்டு என்னை மகிழ்வித்தும், அதுவே பெருந்துணையாகவும் நிற்பதால் அதினின்றும் விலக விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட பெருமைக்குரியவர் பண்டாரத்தார். இப்படிப்பட்ட காரணங்களால்தான் தமிழுலகம் அவரை ஆராய்ச்சிப் பேரறிஞர், வரலாற்றுப் பேரறிஞர், சரித்திரப் புலி, கல்வெட்டுப் பேரறிஞர் எனப் பலவாறாகப் பாராட்டி மகிழ்ந்தது.
இன்றைய தலைமுறையினருக்குப் பண்டாரத்தாரின் நூல்கள் பல அறிமுகங்கூட ஆகாமல் மறைந்து கொண்டிருந்தன. இச்சூழலில்தான் மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் பண்டாரத்தார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், வரலாற்றறிஞர் வெ. சாமிநாதசர்மா, நுண்கலைச் செல்வர் சாத்தன் குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலான பெருமக்களின் நூல்களையெல்லாம் மறுபதிப்புகளாக வெளிக் கொண்டாந்ததன் மூலம் அரிய தமிழ்த் தொண்டு ஆற்றிக் கொண்டிருக்கும் தமிழ்மொழிக் காவலர் ஐயா கோ.இளவழகனார் அவர்கள் வரலாற்றுப் பேரறிஞர் தி.வை சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் நூல்களைத் தமிழ்மண் அறக்கட்டளை வழி மறு பதிப்பாக வெளிக்கொணர்வது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
அறிஞர் பண்டாரத்தாரின் நூல்கள் அனைத்தையும் வரலாறு, இலக்கியம், கட்டுரைகள் என்னும் அடிப்படையில் பொருள்வாரியாகப் பிரித்து எட்டுத் தொகுதிகளாகவும், அவரைப்பற்றிய சான்றோர்கள் மதிப்பீடுகள் அடங்கிய இரண்டு தொகுதிகள் சேர்த்து பத்துத் தொகுதிகளாகவும் வடிவமைக்கப்பட்டு தமிழ் உலகிற்கு தமிழ்மண் அறக்கட்டளை வழங்கியுள்ளனர்.
தொகுதி 1
1. முதற் குலோத்துங்க சோழன் 1930
2. திருப்புறம்பயத் தல வரலாறு 1946
3. காவிரிப் பூம்பட்டினம் 1959
4. செம்பியன் மாதேவித் தல வரலாறு 1959
தொகுதி 2
5. பாண்டியர் வரலாறு 1940
தொகுதி 3
6. பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 1 1949
தொகுதி 4
7. பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 2 1951
தொகுதி 5
8. பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 3 1961
தொகுதி 6
9. தமிழ் இலக்கிய வரலாறு ( கி.பி.250-600) 1955
10. தமிழ் இலக்கிய வரலாறு ( 13,14,15 ஆம் நூற்றாண்டுகள்) 1955
தொகுதி 7
11. இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் 1961
12. கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள் 1961
தொகுதி 8
13. தொல்காப்பியமும் பாயிரவுரையும் 1923
14. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள் 1998
தொகுதி 9
15. தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் வாழ்க்கை வரலாறு 2007
தொகுதி 10
16. சான்றோர்கள் பார்வையில் பண்டாரத்தார் 2007
அறிஞர் பண்டாரத்தார் அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், நூல்களை மறுபதிப்பாக வெளிக் கொணர்ந்து தமிழுலகில் வலம் வரச் செய்திருக்கும் தமிழ்மண் அறக்கட்டளை நிறுவனர் ஐயா கோ.இளவழகனார் அவர்களுக்கும், தமிழ்கூறு நல்லுலகம் என்றும் நன்றியுடையதாக இருக்கும் என்பதில் எள்முனை அளவும் ஐயமில்லை. தமிழ்மண் அறக்கட்டளையின் இந்த அரிய வெளியீட்டைத் தமிழ் நெஞ்சங்கள் அனைத்தும் வாழ்த்தி வரவேற்கும் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் உண்டு.
பதிப்புரை
கோ. இளவழகன்
நிறுவனர் தமிழ்மண் அறக்கட்டளை
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருப்புறம்பயம் எனும் சிற்றூரில் 15.8.1892 இல் பிறந்தார். இவர் 68 ஆண்டுகள் வாழ்ந்து 02.1.1960ல் மறைந்தார். பண்டாரம் என்னும் சொல்லுக்குத் கருவூலம் என்பது பொருள். புலமையின் கருவூலமாகத் திகழ்ந்த இம்முதுபெரும் தமிழாசான் இலக்கியத்தையும் வரலாற்றையும் இருகண்களெனக் கொண்டும், கல்வெட்டு ஆராய்ச்சியை உயிராகக் கொண்டும், அருந்தமிழ் நூல்களைச் செந்தமிழ் உலகத்திற்கு வழங்கியவர். இவர் எழுதிய நூல்களையும், கட்டுரைகளையும் ஒருசேரத் தொகுத்து 10 தொகுதி களாக தமிழ் கூறும் உலகிற்கு வைரமாலையாகக் கொடுக்க முன்வந்துள்ளோம். இதில் 10ஆவது தொகுதியே இந்நூல்.
பண்டாரத்தார் அவர்கள் சங்கத் தமிழ் நூல்களின் எல்லை களையும், அதன் ஆழ அகலங்களையும் கண்ட பெருந்தமிழறிஞர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரிடம் தமிழ்ப்பாலைக் குடித்தவர்; தமிழவேள் உமாமகேசுவரனாரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்; பண்டிதமணி கதிரேசன் செட்டியார் தலைமையில் தமிழ்ப்பணி ஆற்றியவர்; நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அய்யா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்.
திருப்புறம்பயம் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிற்றூர்; திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குரவர் நால்வராலும், திருத்தொண்டர் புராணம் படைத்தளித்த சேக்கிழாராலும், தேவாரப் பதிகத்தாலும் பாடப்பெற்ற பெருமை மிக்க ஊர்; கல்வி, கேள்விகளில் சிறந்த பெருமக்கள் வாழ்ந்த ஊர். நிலவளமும், நீர்வளமும் நிறைந்த வளம் மிக்க ஊர்; சோழப் பேரரசு அமைவதற்கு அடித்தளமாய் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்.
அறிஞர் சதாசிவப் பண்டாரத்தாரின் ஆய்வுகளுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது அவரது கல்வெட்டாய்வாகும். அவ்வாய்வின் தனிச் சிறப்புக்களை எடுத்துரைப்பது கல்வெட்டியல் அறிஞர் பேராசிரியர் செ.இராசுவின் சதாசிவப் பண்டாரத்தாரின் கல்வெட்டாய்வு என்னும் முதலாம் கட்டுரை.
சோழர் வரலாற்றின் மீது அறிஞர் பெருமானாருக்கு இயற்கையாகவே ஈடுபாடு உண்டு. அவரது முதற்கட்டுரையே சோழன் கரிகாலன் (செந்தமிழ் 12-2-1914) என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பணிகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போன்று அமைந்தது அவர் எழுதிய பிற்காலச் சோழர்சரித்திரமாகும். அந்த நூலைப் பற்றிச் சோழர் வரலாற்று ஆய்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட திரு.குடவாயில் பாலசுப்பிரமணியன் ஆய்ந்து உரைத்திருப்பது பிற்காலச் சோழர் வரலாறு-ஓர் ஆய்வு என்னும் இரண்டாம் கட்டுரை.
கல்வெட்டுக்களைப் பற்றி ஆய்வு செய்வதைக் கல்வெட்டுப் பணி என்று குறிப்பிட்டால் இலக்கியங்களைப் பற்றிய ஆராய்ச்சியை இலக்கியப் பணி என்று குறிப்பிடுவது பொருத்தமுடையதாகும். பண்டாரத்தார் அவர்கள் இலக்கிய ஆய்வு செய்ததோடு இலக்கிய வரலாற்றை இலக்கியம் போன்று கதை கூறும் நடையில் எழுதிய பெருமைக்குரியவராகவும் காட்சியளிக்கிறார். இதுபோன்ற சிறப்புக் கூறுகளையெல்லாம் எடுத்துரைப்பதுதான் பேராசிரியர் இரா. சுந்தரமூர்த்தியின் பண்டாரத்தாரின் இலக்கியப் பணி என்னும் மூன்றாம் கட்டுரை.
அறிஞர் பண்டாரத்தார் தமிழ் இலக்கணப் பயிற்சியில் வல்லவர். அவர் தொல்காப்பியப் பாயிரத்திற்கு உரை எழுதியுள்ளார். கல்வெட்டுக் களில் காணப்படும் அரிய தொடர்கள், சில தமிழ்ச் சொற்கள் ஆகிய வற்றிற்கு அவர் சிறந்த முறையில் விளக்கங்களும் எழுதியுள்ளார். கல்வெட்டுக்களில் காணப்படும் பெருவழி (Road), பணிமகன் (Servant), புதுக்குப்புறம் (Cost of repairing), திருவாளன் (Mr.) முதலான செந்தமிழ்த் தொடர் மொழிகள் பலவற்றைப் பண்டாரத்தார் அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளமை எண்ணி வியத்தற்குரியதாகும். இவை போன்ற செய்திகள் பலவற்றை ஆராய்ந்துரைக்கிறது பேராசிரியர் மருத. சுந்தரமூர்த்தியின் பண்டாரத்தாரின் இலக்கணப் பணி என்னும் நான்காம் கட்டுரை.
கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் இணைத்து ஆய்வு செய்தமையே பண்டாரத்தார் அவர்களின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. அவரது இலக்கியப் பயிற்சிக்கு அவரது ஆசிரியரான வலம்புரி அ.பாலசுப்பிரமணியப் பிள்ளை பேருதவியாக அமைந்தார். பண்டாரத்தார் அவர்கள் தமது 22ஆம் வயதில் எழுதிய திருவிளையாடற் புராணம் 64-ஆவது படல ஆராய்ச்சி (செந்தமிழ் 12-7-1914) என்ற கட்டுரை ஒன்றே அவரது ஆழ்ந்த இலக்கியப் புலமைக்குத்தகுந்த எடுத்துக் காட்டாக அமையும். அவரது பரந்துப்பட்ட, ஆழமான இலக்கியப் புலமையை எடுத்துக்காட்டுவதுதான் தி.அ.இரா. பாகரனின் பண்டாரத் தாரின் இலக்கியப் புலமை என்னும் ஐந்தாம் கட்டுரை.
அறிஞர் பண்டாரத்தார் அவர்கள் ஆரவாரமின்றி அமைதியாக ஆற்றிய தமிழ்ப் பணிகள் ஏராளம். ஆய்வுலகில் அவருக்கு நிகர் அவரேதான் என்பதை ஆய்வுலகம் ஒப்புக் கொண்டிருந்தது. அறிஞர்கள் மத்தியில் அவரது பணிகளுக்கிருந்த நன்மதிப்புக்களை எடுத்துக் காட்டுவதே திருமதி.பானுமதி சத்தியமூர்த்தியின் சமகாலத்து அறிஞர்கள் பார்வையில் பண்டாரத்தார் என்னும் ஆறாம் கட்டுரை.
அறிஞர் பெருமகனார் ஆராய்ந்து கண்ட உண்மைகள் பல இன்னும் வெளியுலகிற்குத் தெரியாமலேயே உள்ளன. பல்வேறு இதழ்களில் அவரெழுதிய ஆய்வுக் கட்டுரைகள் பல இதுநாள் வரை நூல்வடிவம் பெறாமல் மெல்ல மெல்ல மறைந்து கொண்டே இருக்கின்றன. அத்தகைய கட்டுரைகளைத் தேடித் தொகுத்து அவற்றின் உயிர்நாடியாக அமைந்துள்ள செய்திகளையெல்லாம் ஆய்ந்து உரைப்பதுதான் முனைவர் அ.ம.சத்தியமூர்த்தியின் பண்டாரத்தாரின் ஆய்வுக் கட்டுரைகள் என்னும் ஏழாம் கட்டுரை.
பாண்டியர் வரலாற்றை ஆராய்ந்து தெளிவாக எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் ஆவார். அவர் எழுதிய பாண்டியர் வரலாற்றைப் பற்றி ஆராய்வதுதான் டாக்டர் ஜி.சுப்பராயலுவின் அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் பாண்டியர் வரலாறு என்னும் எட்டாம் கட்டுரை.
அறிஞர் பண்டாரத்தாரோடு இரண்டறக் கலந்து அமைந்தது அவரது சமயப்பற்று. தலைசிறந்த சைவப் பற்றாளராகிய இவர், பிற மதத்தினரைப் பெரிதும் மதித்துப் போற்றிய பெருந்தகையாளர். சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் நின்று இவர் ஆற்றிய சமயப் பணிகளை எடுத்துரைப்பதுதான் பேராசிரியர் சிவ.திருச்சிற்றம்பலம் அவர்கள் எழுதிய பண்டாரத்தாரின் சமயப்பணி என்னும் ஒன்பதாம் கட்டுரை.
அறிஞர் சதாசிவப் பண்டாரத்தாரின் இடையறாத உழைப்பால் தமிழ்நாட்டு வரலாறு பெரிதும் விளக்கமுற்றது. அதனால், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் உரிய வரலாற்றறிவும், ஆராய்ச்சித் திறனும், மொழிப்புலமையும் பெற்றனர் என்றால் மிகையல்ல. மற்றும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளும் அடங்கிய செய்திக்குறிப்பு பி.தயாளன் அவர்கள் எழுதி 16.11.2007இல் தமிழ் ஓசை நாளிதழில் வெளி வந்தவற்றை வரலாற்று அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் என்னும் தலைப்பில் பத்தாம் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
பயன் கருதாது பணி செய்த ஆய்வறிஞர் சதாசிவப் பண்டாரத்தாரின் உழைப்பை வணங்குவோம். வரும் தலைமுறைக்கு இப்பெருந்தமிழறிஞரின் அரும்பணியை நாம் அனைவரும் கொண்டு சேர்ப்போம் என்பதை உறுதி கொள்வோம்.
நன்றிக்குரியவர்கள்
_முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள் எழுதிய ஆய்வுலகில் பண்டாரத்தார் பணிகள் எனும் நூலின் பதிப்புரைப் பகுதியில் 1 முதல் 9 வரை உள்ள குறிப்புகளை அப்படியே எம் பதிப்புரையில் கையாண்டுள்ளோம். முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி-பானுமதி சத்திய மூர்த்தி இணையருக்கு எம் நன்றி._
வரலாற்று அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் என்னும் 10ஆம் கட்டுரை பி.தயாளன் அவர்கள் எழுதி தமிழ் ஓசை சென்னைப்பதிப்பில் 16.11.2007 இல் வெளிவந்த கட்டுரையாகும். அதை அப்படியே எடுத்து வெளியிட்டுள்ளோம். தமிழ் ஓசை நாளிதழுக்கு எம் நன்றி.*
ஆராய்ச்சிப் பேரறிஞர்
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்
ஆய்வு நூல்களுக்கு மதிப்புரை அளித்து மணம் கமழச் செய்த தமிழ்ச் சான்றோர்கள்
பெரும்புலவர் இரா. இளங்குமரனார்
கோ. விசயவேணுகோபால்
பி. இராமநாதன்
முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி
க.குழந்தைவேலன்
ஆகிய பெருமக்கள் எம் அருந்தமிழ்ப்பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து பெருமைப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு எம் நன்றி என்றும் உரியது.
நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்
_நூல் கொடுத்து உதவியோர்_ பெரும்புலவர் இரா. இளங்குமரனார், முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி
_நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு - மேலட்டை வடிவமைப்பு_ செல்வி வ.மலர்
_அச்சுக்கோப்பு_ _முனைவர்_ கி. செயக்குமார், ச.அனுராதா, மு.ந.இராமசுப்ரமணிய ராசா
_மெய்ப்பு_ க.குழந்தைவேலன், சுப.இராமநாதன், புலவர் மு. இராசவேலு, அரு.அபிராமி
_உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், ரெ. விசயக்குமார், இல.தருமராசு,
_எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)
_அச்சு மற்றும் கட்டமைப்பு_ ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்
இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .
சதாசிவப் பண்டாரத்தாரின் கல்வெட்டாய்வு
புலவர் செ.இராசு
வரலாற்றாசிரியர்களும் கல்வெட்டாய்வும்
வரலாற்றாய்வுக்கு இன்றியமையாது வேண்டப்படும் கருவிகளுள் கல்வெட்டும் அதனோடு ஒத்த செப்பேடுகளும் மிகவும் இன்றியமை யாதனவாகும். வரலாற்றாசிரியர்கள் பலர் தம் முன்னோர் எழுதிய வரலாற்று நூல்களை மட்டுமே மூலங்களாகக் கொண்டு வரலாறு எழுதுகின்றனர். அச்சிட்ட கல்வெட்டுப் பாடங்களைப் படித்துணர்ந்து வரலாறு எழுதுவோர் சிலரேயாவர். புதிய கல்வெட்டுக்களையே நேரில் சென்று பழந்தமிழ் எழுத்துக்களைப் படித்துணர்ந்து வரலாறு எழுதுவோர் மிகமிகச் சிலர். அவர்களுள் மிகச் சிறந்தவர் பண்டாரத்தார் ஆவார்.
இளமையில் ஆர்வம்
தமக்கு ஏற்பட்ட கல்வெட்டு ஆர்வம் பற்றிப் பிற்காலச் சோழர் வரலாற்று முன்னுரையில் பண்டாரத்தாரே பின் வருமாறு கூறுகிறார்:
இளமையில் யான் ஆங்கிலக் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எனக்குத் தமிழாசிரியராயிருந்த நற்றிணை உரையாசிரியர் காலஞ்சென்ற பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் அவர்கள் தாம் சில கல்வெட்டுக்களையும் அவற்றால் அறியப்பெறும் சோழ மன்னர்கள், அரசியல் தலைவர்கள், தமிழ்ப் புலவர் வரலாறு களையும் அடிக்கடித் தமிழ் வகுப்புக்களில் எடுத்துக்கூறி அக் கல்வெட்டுக் களின் அருமை பெருமைகளையும் உணர்த்திச் சொல்வ துண்டு. அக்காலமுதல் கோயில்களிலுள்ள கல்வெட்டுக்களைப் படித்தறிய வேண்டும் என்ற விருப்பமும், தமிழ் வேந்தர் வரலாறுகளை உணரவேண்டும் என்ற ஆர்வமும் என் உள்ளத்தில் மிகுந்து கொண்டே வந்தன. (14.8.1949).
களத்தில் கல்வெட்டாய்வு
சில ஊர்களுக்குச் சென்று கல்வெட்டுக்களைப் படியெடுத்து வந்தேன், சில ஊர்களுக்குச் சென்று கல்வெட்டுக்களைப் படித்தறிந்து வந்தேன், நேரிற் சென்று பார்த்தபோது இவ்வுண்மை புலப்பட்டது என்று சில கட்டுரைகளிலும், நூல் முன்னுரைகளிலும் பண்டாரத்தார் கூறுவதால் அவர் கள ஆய்வு மேற்கொண்டு கல்வெட்டுக்களைப் படித்ததும், படி எடுத்ததும் புலப்படும்.
வரலாற்று ஆதாரங்கள்
தமிழ்நாட்டின் பழைய வரலாற்றை எழுதுவதற்குத் தக்க சாதனங்கள் இல்லை என்னும் கூற்றைப் பண்டாரத்தார் ஒப்புக்கொள்ள வில்லை. தாய்நாட்டுப் பற்றும், ஊக்கமும், உழைப்பும் இல்லாதவரே அவ்வாறு கூறுவர்; அவ்வாறு கூறுவது எவ்வாற்றானும் ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று என்பது பண்டாரத்தார் கருத்தாகும்.
திருக்கோயில்களில் காணப்படும் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுக்கள், அரசர் வழங்கிய செப்பேடுகள், கோயில்களின் சிற்ப அமைதி, பண்டைய நாளில் வழங்கிய நாணயங்கள், அரசர் பேராதரவில் வந்துள்ள தமிழ் நூல்கள், பிற நாட்டு யாத்திரிகர் குறிப்புக்கள், தமிழகத்தோடு வாணிபத் தொடர்பு கொண்டு விளங்கிய பிற நாட்டு வரலாறு, அகழ்வாராய்ச்சிப் புதை பொருள்கள் ஆகியவை பண்டைய சரித்திரங்களை ஆராய்ந்தெழுதுவதற்குப் பெரிதும் பயன்படுவன என்று அவர் சுட்டிக் காட்டிஉள்ளார்.
கல்வெட்டுக்கள்
கல்வெட்டுக்களைப் பற்றிப் பண்டாரத்தார் கருத்துக்களை அவர் வாக்கிலேயே காண்போம்.
கல்வெட்டுக்கள் என்பன, கோயில் சுவர்கள், கற்பாறைகள், மலைக்குகைகள், வெற்றித் தூண்கள், மண்டபங்கள், படிமங்கள், நடுகற்கள் முதலானவற்றில் வரையப் பெற்றிருக்கும் கல்லெழுத்துக்களேயாகும். செப்பேடுகளையும் கல்வெட்டுக்கள் என்ற தலைப்பின்கீழ் ஈண்டு அடக்கிக் கொள்வது பொருந்தும்.
இலக்கியச் செய்திகள் எல்லாம் புனைந்துரை சிறிது கலந்த நூல்வழக்கில் அமைந்தவை. கல்வெட்டுக்களில் காணப்படும் செய்திகள் எல்லாம் வெறும் கற்பனைச் செய்திகள் அல்ல. அவையனைத்தும் நம் முன்னோர்களுடைய உண்மை வரலாறுகளையுணர்த்தும் பழைய வெளியீடுகளே.
பேரரசர்களும, குறுநில மன்னர்களும், பிற தலைவர்களும் புரிந்த அறச்செயல்கள், வீரச் செயல்கள், உடன் படிக்கைகள், அரசியல் முறை, போர் நிகழ்ச்சி, புலவர்களைப் பற்றிய செய்தி, மண்டலம், வளநாடு, கோட்டம், நாடு, கூற்றம் என்பவற்றின் வரலாறு, ஊர்களின் உண்மைப் பெயர்கள், முற்கால வழக்கங்கள், சமயநிலை, பிற அரிய நிகழ்ச்சிகள் ஆகியவை நம் நாட்டுக் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் நன்கறியக் கிடக்கின்றன. சுருங்கச் சொல்லுமிடத்து நம் நாட்டின் பழைய சரிதங்களை உள்ளவாறு உணர்ந்து கொள்வதற்குத் தக்க கருவி
களாயிருப்பன கல்வெட்டுக்களும் செப்பேடுகளுமேயாகும்.
பண்டாரத்தாரின் கல்வெட்டாய்வு முறை
தம் 22-ஆம் வயதிலேயே கல்வெட்டுக் கட்டுரைகளைப் பண்டாரத்தார் அவர்கள் எழுதத் தொடங்கிவிட்டார். முதலில் தம் ஆய்வுகளை மதுரைச் செந்தமிழில் வெளியிட்ட பண்டாரத்தார் பின் கரந்தைத் தமிழ்ப் பொழிலிலும் கட்டுரைகளை வெளியிட்டார்.
பேரரறிஞர் கே.ஏ.நீலகண்ட சாத்திரியாரின் சோழர் வரலாறு ஆங்கில நூலையும், து.அ.கோபிநாதராயர் எழுதிய சோழ வம்சச் சரித்திரச் சுருக்கம் போன்ற நூல்களையும், கல்வெட்டுத் தொடர்பான பிற எல்லா மூல நூல்களையும், அறிக்கைகளையும் தேடித் தொகுத்துப் படித்துள்ளார்.
பல்வேறு தமிழ் இலக்கியங்களை நுண்ணிதின் ஆராய்ந்து கல்வெட்டுச் செய்திகளோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். கல்வெட்டில் காணும் பல்வேறு இலக்கியங்கள், புலவர்கள் பற்றிய செய்திகளை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வகையில் பண்டாரத்தார் அவர்கள் ஆற்றியுள்ள பெரும்பணி ஈடு இணையற்றதாகும். வேறு எவரும் செய்யாத அரும்பணியாகும்.
கல்வெட்டுக்களைப் பொருளுக்கு ஏற்றவாறு (குறிப்பாக ஏகார, ஓகார) நெடில்களை (அவை குறில் வடிவங்களாக இருப்பினும்) நெடில்களாகவே பதிப்பித்துள்ளார். கல்வெட்டுக்களில் உள்ளவாறு வரிவரியாகப் பதிப்பித்துள்ளார். உரைநடை வடிவில் தொடர்ச்சியாக அச்சிட்டாலும் இடையில் வரிகளுக்குரிய எண்கள் இட்டுப் பதிப்பித்தார். கிரந்த எழுத்துக்களுக்குரிய நேரான தமிழ் எழுத்தையே பயன் படுத்தியுள்ளார். குறியீடுகளையும், சுருக்க எழுத்துக்களையும் விரித்துச் சொற்களாக எழுதி யுள்ளார். அவருடைய ஆழ்ந்த தமிழறிவால் மெய்க்கீர்த்திகளையும், கல்வெட்டுப் பாடல்களையும் யாப்புச் சிதையாமல் முறைப்படிப் பதிப்பித்துள்ளார். கல்வெட்டுக்களில் பிழைகள் கண்டவிடத்து அவற்றைத் திருத்தாமல் அடிக்குறிப்பில் சரியான பாடத்தைத் தந்துள்ளார். மிகை எழுத்துக்களை நீக்கப் பிறைக்குறியும், எழுத்துக்களைச் சேர்க்கப் பகரக் குறியும் தவறாது அமைத்துள்ளார்.
செப்பேடுகளிலும் கல்வெட்டுக்களிலும் காணப்படும் கிரந்த எழுத்துக்களில் உள்ள வடமொழிச் சுலோகங்களைச் செய்யுள் வடிவிலேயே தந்துள்ளார். சிறந்த தமிழ் இலக்கிய இலக்கணப் பயிற்சியும், வடமொழி, ஆங்கிலப் புலமையும் நிரம்பப் பெற்றுப் பண்டாரத்தார் தம் கல்வெட்டு ஆய்வினை நிகழ்த்தியுள்ளார்.
அரிய கல்வெட்டுச் சொற்களுக்குப் பொருள் கூறல்
முதுகண்: இச்சுந்தரப் பட்டனையே முதுகண்ணாகவுடைய இப்பொன்னார் மேனிப்பட்டன் மாதா உமையாண்டாள் என்பது கல்வெட்டுத் தொடர். உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற பெயரைப் புறநானூற்றிலும் காணுகிறோம். இச்சொல்லுக்கு, தமது நெருங்கிய கிளைஞராயுள்ள இளைஞர்க்கும் பெண்டிர்க்கும், அவர்கள் பொருள்களுக்கும் பாதுகாவலராக நிலவிய ஆண்டில் முதிர்ந்த ஆண் மக்களுக்குரிய பெயர் என்று பொருள் எழுதியுள்ளார்.
கொட்டகாரம்: அரசன் தன் நாட்டைச் சுற்றிப் பார்த்து வருங்கால் அரண்மனை இல்லாத ஊர்களில் தங்குவதற்கு அமைக்கப் பெற்றிருந்த மண்டபங்கள் அந்நாளில் கொட்டகாரங்கள் என்று வழங்கப்பெற்றன.
மாராயம்: பண்டைத் தமிழ் வேந்தர்கள் தம் அரசியல் அதிகாரி களுள் தக்கார்க்கு மாராயன் எனப் பட்டம் வழங்கிப் பாராட்டுவது பழைய வழக்கம் என்பது மாராயம் பெற்ற நெடுமொழி என்னும் வஞ்சித் திணைக்குரிய துறையொன்றால் அறியப்படுகிறது.
மாற்பிடுகு: பல்லவர்கட்கு முற்காலத்தில் வழங்கிய ஒரு சிறந்த பட்டமாகும். மால்பிடுகு என்னும் இத்தொடரின் பொருள் பேரிடி என்பதேயாம்.
இவ்வாறு அரிய கல்வெட்டுச் சொற்களுக்கு இலக்கிய, இலக்கண மேற்கோள் காட்டித் தம் நுண்மாண் நுழை புலத்தோடு பொருள் காண்பதில் பண்டாரத்தார் சிறந்து விளங்கினார்கள்.
ஊர்ப்பெயர் விளக்கம்
வரலாற்றில் ஓர் ஊர் குறிக்கப்பெறும்போது தவறாமல் கல்வெட்டால் அறியப்பெறும் அதன் பண்டைய வடிவைச் சான்றுடன் காட்டிச் செல்லல் பண்டாரத்தார் வழக்கமாகும்.
ஐம்பை: சோழமன்னர் ஆட்சிக் காலங்களில் சண்பை என்ற பெயருடையதாயிருந்தது என்று கல்வெட்டுக்களால் தெரிகிறது.
எலவானாசூர்: அது முற்காலத்தில் இறையானரையூர் (இலக்கியத்தில் இறைசை) என்று பெயருடையதாயிருந்தது என்பது அவ்வூர்க் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது
செங்கம்: திருவண்ணாமலைக்கு மேற்றிசையில் உள்ள செங்கைமா என்பது வேள் நன்னன் தலைநகர். இவ்வூரின் பெயர் செங்கைமா என்பது கல்வெட்டுக்களால் புலப்படுகிறது. செங்கண்மா என்பது தவறு.
சேங்கனூர்: சேய் நல்லூர், சேய்ஞலூர் எனவும் முற்காலத்து வழங்கப் பெற்றுள்ளது. மூன்றாம் இராசராசன் காலத்துக் கல்வெட்டொன்று மிழலை நாட்டுச் சேய்ஞலூர் எனக் கூறுகிறது.
மகிபாலன்பட்டி: இராமநாதபுரம் மாவட்டம் திருப்புத்தூர் தாலுக்காவில் உள்ள மகிபாலன்பட்டியே சங்ககாலத்துப் பூங்குன்றம் ஆகும். இது அங்குள்ள குகைக் கோயில் கல்வெட்டால் தெரிகிறது.
ஆய்வைத் தூண்டுதல்
முடிநாகராயர்: சேரமான் பெருஞ்சோற்றுதியனைப் பாடிய புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் என்பது புற நானூற்றால் அறியப்படுவது.
பிற்காலச் சோழர் காலத்துக் கல்வெட்டுக்களில் காணப்படும் கச்சிராயர், காலிங்கராயர், சம்புவராயர், காடவராயர், சேதிராயர் போன்ற தொடர்கள் சங்க நாளில் வழக்கில் இல்லை. அன்றியும் ராயர் என ரகரத்தை மொழி முதலாகக் கொண்ட சொல் சங்க காலத்தில் வழங்கவில்லை என்பது கற்றார் அறிந்ததே. ஆகவே முடிநாகராயர் என்பது முடிநாகனார் என்றிருந்திருக்குமோ என்ற ஐயப்பாடு உண்டாகிறது. இதனை அறிஞர்கள் ஆய்ந்து விளக்குவார்களாக.
மாற்பிடுகு பெருங்கிணறு: திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே பன்னிரண்டு கல் தூரத்தில் உள்ள திருவெள்ளறையில் உள்ள பல்லவ தந்திவர்மன் காலக் கல்வெட்டுப் பாடல் ஒன்று கீழ்வருமாறு காணப்படுகிறது.
கண்டார் காணா உலகத்தில் காதல் செய்து நில்லாதேய்
பண்டேய் பரமன் படைத்தநாள் பார்த்து நின்று நையாதேய்
தண்டார் மூப்பு வந்துன்னைத் தளரச்செய்து நில்லாமுன்
உண்டே லுண்டு மிக்கது உலகம் அறிய வைம்மினேய்
இப்பாடலில் மொழியிறுதியில் வரும் ஏகாரத்திற்குப் பிறகு யகரமெய் வந்திருத்தல் காண்க. இங்ஙனமே கல்வெட்டுக்களில் காணப்படுவதால் இஃது ஆராய்தற்குரிய ஒன்றாகும்.
இவ்வாறு ஆய்வைத் தூண்டுகின்ற வகையில் பண்டாரத்தார் அவர்கள் பல இடங்களில் எழுதியுள்ளார்கள்.
பிறர் தவறாகக் கொண்ட பாடத்தைத் திருத்தமாக வெளியிடல்
முதல் குலோத்துங்கன், விக்ரமன் ஆகிய இரு சோழப்பெருவேந்தர் காலத்தும் இருந்த படைத்தலைவர்களுள் ஒருவன் திருவிந்தளூர் நாட்டுக் கஞ்சாறன் பஞ்சநதி முடிகொண்டானான வத்தராயன் என்பவன். இவன் ஆந்திர மாநிலத்துக் கோதாவரி மாவட்டம் இராமச் சந்திரபுரம் வட்டத்தில் உள்ள திராட்சாராமம் என்னும் ஊரிலுள்ள பீமேசுவரமுடைய மகாதேவர்க்கு முதல் குலோத்துங்கனின் 25-ஆம் ஆட்சியாண்டில் ஒரு நுந்தாவிளக்கு வைத்தான்.
இதனைக் குறிக்கும் பாடல் கல்வெட்டு தென்னிந்தியக் கோயில் கல்வெட்டுக்கள் தொகுதி நான்கில் (1338)
புயன்மேவு பொழிற் தஞ்சை
முதல்பஞ்ச நதிவாணன் புதல்வன்பூண்ட
வயமேவு களியானை முடிகொண்டான்
மாநெடுவேல் வத்தர் வேந்தன்
என அச்சாகியுள்ளது. கஞ்சாறு என்னும் ஊர் கஞ்சை ஆகுமே தவிரத் தஞ்சையாகாது எனச் சுட்டி அடுத்த கல்வெட்டு மூலத்தைக் காட்டி அதனைக் கஞ்சை எனக் குறித்துள்ளார் பண்டாரத்தார்.
கல்வெட்டின் மெய்ப்பொருள் காணல்
கல்வெட்டில் கண்ட எல்லாச் செய்திகளையும் உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு சில கல்வெட்டுக்களில் கண்ட செய்திகளைப் பிற கல்வெட்டுக்கள், செப்பேடுகள் கொண்டும், பிற வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டும் பண்டாரத்தார் மறுத்துள்ளார்.
1. கன்னியாகுமரிக் கல்வெட்டில் தஞ்சையை விசயாலயன் புதியதாக நிர்மானித்தான் என்று கூறப்பட்டு உள்ளது. இதைத் திருவாலங்காட்டுச் செப்பேட்டைக் கொண்டும், தஞ்சையைக் குறிப்பிடும் பழைய கல்வெட்டுக்களைக் கொண்டும் மறுத்துத் தஞ்சாவூரில் முத்தரையர் ஆட்சி புரிந்தனர். முத்தரையரிடமிருந்து விசயாலயன் தஞ்சையைக் கைப்பற்றினான் என்று கூறி யுள்ளார்.
2. முதலாம் பராந்தகன் மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பர கேசரி என அழைக்கப்பட்டாலும் அவன் ஈழம் சென்று போரிடவில்லை.வெள்ளூரில் பாண்டியனுக்குத் துணையாக வந்த ஈழப்படைகளையே வென்றான் என்று மகாவம்சம் துணைக்கொண்டும், வரலாற்றாய்வு மூலமும் பண்டாரத்தார் நிறுவியுள்ளார்.
கல்வெட்டாய்வில் கண்ட சில முடிவுகள்
பதிற்றுப்பத்துப் பதிகங்களே மெய்க்கீர்த்திகட்கு வழிகாட்டி. சேரன் வஞ்சி மேற்குக் கடற்கரையில் உள்ளது. இன்றைய பிரான்மலையே பறம்புமலை. விநாயகர் வழிபாடு ஏழாம் நூற்றாண்டின் இடையில்தான் தமிழ் நாட்டுக்கு வந்தது. மாணிக்கவாசகர் தேவாரம் பாடிய மூவருக்கும் பிற்பட்டவர். ஆனால் எட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர். நம்பியாண்டார் நம்பிகள் இராசராசன் காலத்துக்கு முற்பட்டவர். கம்பர் உத்தம சோழன் காலத்தவர். கொல்லம் நகர் தோன்றிய ஆண்டே கொல்லம் ஆண்டின் தொடக்கம். இரட்டபாடி ஏழரையிலக்கம் போல எண்கள் குடிமதிப்பு அல்ல; நில அளவே. கண்ணெழுத்தே வட்டெழுத்து; வட்டெழுத்தி லிருந்தே தமிழ் எழுத்துத் தோன்றியது. இராசராசன் தஞ்சைத் தளிக்குளத்துக் கோயிலையே பெரிதாக்கினான் என்பன போன்ற ஆய்வு முடிவுகளை அவர் தக்க கல்வெட்டுச் சான்றுகள் மூலம் வெளியிட்டார்.
இவ்வாறு பல்வேறு வகையில் பண்டாரத்தார் அவர்கள் இந்த நூற்றாண்டின் தலைசிறந்த கல்வெட்டாய்வாளராகத் திகழ்ந்தார். அவர் நூற்றாண்டில் நாமும் தமிழ்க் கல்வெட்டுக்களைப் படித்து, அதன் மூலம் வரலாற்று ஆய்வு செய்வதில் முனைவோமாக.
பிற்காலச் சோழர் வரலாறு - ஓர் ஆய்வு
சரித்திரத் தேர்ச்சி கொள் - இது மகாகவி பாரதியின் வாக்கு. அறிஞர்கள் மட்டுமே ஒரு நாட்டின் வரலாற்றை அறிந்திருப்பார் களாயின் அதனால் பயன் ஒன்றும் இல்லை. பாமரரும் அறிதல் வேண்டும். இரு திறத்தார்க்கும் செம்மாந்த புலமை ஏற்பட வேண்டு மெனின், அப்படைப்பு தாய்மொழியில் அமைந்தாலன்றி, கைகூட வாய்ப்பிருக்காது. இதனை நன்குணர்ந்த காரணத்தால் தான், தமிழ்கூறு நல்லுலகறியும் மாமேதை திருப்புறம்பயம் வை.சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் பிற்காலச் சோழர் வரலாறு என்னும் நூலினைப் படைத்தார். வரலாற்று நூல்களை நம் தாய்மொழியில் ஆராய்ந்து வெளியிடுவது எல்லா மக்கட்கும் நலம் புரியும் நற்றொண்டாகும் எனக் கூறியே இந்நூலினை அவர் தொடங்குகிறார். இந்நூல் அவரது தமிழ்ப்பற்றுக்கும் வரலாற்றின்பால் கொண்ட ஈடுபாட்டிற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
1949-ஆம் ஆண்டு இந்நூல் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைக் கொண்டு, கி.பி.846 முதல் கி.பி.1279 முடிய தமிழகத்தை அரசோச்சிய சோழமன்னர்களின் வரலாற்றைப் பிற்காலச் சோழர் வரலாறு முதல்பாகம், இரண்டாம் பாகம், சோழர் அரசியல் என்ற தலைப்புக்களில் பல பதிப்புக்களாக வெளியிட்டார்.
பண்டாரத்தாரின் பண்பு நலம்
பிற்காலச் சோழர் வரலாறு என்னும் இந்நூலில் பண்டாரத்தார் அவர்கள் எழுதியுள்ள நூலாசிரியர் முகவுரை ஒன்றே அவர்தம் தகை சான்ற பண்பு, தன்னடக்கம், நன்றி உணர்வு ஆகியவற்றை அறியப் போதுமானதாகும். அந்நியர் வரவால் நாட்டிற்குப் பல தீமைகள் ஏற்பட்டதைச் சுட்டும் பாங்கால் அவரது நாட்டுப் பற்று தெள்ளிதின் விளங்கும் அதே நேரத்தில் அவர்களது வரவால் கிடைத்த சில நன்மைகளுள் கல்வெட்டிலாகா தோன்றியதும் ஒன்று எனக் குறிப்பிட்டுத் தம் வரலாற்றார்வத்தைக் காட்டுகின்றார்.
திருப்பணிகள் என்ற பெயரால் நகரத்தார்கள் சோழர்களது கல்வெட்டுக்களை அழித்ததோடு அங்கிருந்த பல நூற்றுக்
கணக்கான கல்வெட்டுக்களையும் சிதைத்தனர். உதாரணத்திற்கு நமது திருவிடைமருதூர்த் திருக்கோயிலில் இருந்த பல நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்களைக் கல்வெட்டுத் துறையினர் பதிவு செய்து படி எடுத்துள்ளனர். பின்னாளில் ஏற்பட்ட நகரத்தார் திருப்பணியில் ஒரு கல்வெட்டுக் கூட விடப்படாமல் அனைத்தும் அழிக்கப்பட்டன. இவற்றை எல்லாம் கண்டதால்தான் நமது பண்டாரத்தார் அவர்களுக்கு அந்நியர் வரவால் கிடைத்த சில நன்மைகளுள் தலையாயதாகத் தோன்றியது கல்வெட்டிலாகா செய்த அன்றைய பெரும் பணியாகும். இது நாட்டின்பால் நமது கலாச்சாரத்தின் பால் உண்மையான பக்தி கொண்ட ஒரு தனி மனிதனின் உள்ளத்து வெளிப்பாடாகும்.
பின்னாளில் இதே இலாகாவினர் கல்வெட்டு ஆண்டறிக்கைகளை வெளியிடாமல் நிறுத்திய போது, இச்செயல் பெரிதும் வருந்துதற் குரியது, எனத் தமது மனவேதனையை இந்நூலின் முகவுரையிலேயே குறிப்பிடுகின்றார். வரலாறு அறிவதிலும், அதனைப் போற்றுவதிலும், எடுத்துக் கூறுவதிலும், அவருக்கிருந்த பேரார்வத்தின் வெளிப்பாடுகளே இக்குறிப்புக்களாகும்.
தற்காலத்தில் வரலாற்றில் ஏதேனும் ஒரு புதிய செய்தியைக் கண்டுகொண்ட ஆய்வாளர்கள் சிலர் தங்கள் கட்டுரைகளில், முன்னாளில் இது பற்றி எழுதியவர்களின் கருத்துக்களைச் சாடுதல், அவற்றைப் பூதாகரமாகப் பெரிது படுத்திக்காட்டி, தாங்கள் அவ்வறிஞர்களை விடப் பெரியவர்கள் என்ற மாயையான கருத்தை நிறுவுவதிலேயே முனைந்து விடுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆனால் பண்டாரத்தார் அவர்கள் தமது நூலில், தாம் மற்றவர்களின் கருத்துக்களிலிருந்து மாறுபடும்போதும், புதிய செய்திகளைக் காணும்போதும், இவற்றால் முந்தைய ஆய்வாளர்களின் கருத்துக்கள் பிழைபட நேரும் இடங்களில், அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுத் தம்மை உயர்வு படுத்திக்கொள்ள விழையவே இல்லை. மிகப் பண்பாக முந்தைய அறிஞர்கள் என்ற சொல்லால் மட்டுமே கூறுகிறார். அடிக்குறிப்பில் கூட அவர்கள் தம் நூலைக் குறிப்பிடுகிறாரேயன்றிப் பெயரைக் குறிப்பிடுவது இல்லை. பண்டாரத்தார் அவர்களின் தகைசான்ற பண்பிற்கு இவை எடுத்துக் காட்டுகளாகும்.
பிற்காலச் சோழர் சரித்திரம் என்னும் இவ்வரலாற்று நூலின் முன்னுரையில் சரித்திர நூல்களில் சில இடங்களில் கருத்து வேறு பாடுகள் உண்டாதலும், எதிர் காலத்தில் புதியனவாகக் கிடைக்கும் ஆதாரங்களால் சில செய்திகள் மாறுபட்டுப் போதலும், சில நிகழ்ச்சி களின் காலக்குறிப்புக்கள் வேறுபடுதலும் இயல்பேயாம் எனக் குறிக் கின்றார். தமது நூலில் கூடப் பிற்காலத்தில் ஏற்படும் மாறுதல்களையும், புதிய கண்டுபிடிப்புக்களால் நிகழப் போகும் வேறுபாடுகளையும் அவர் மனதார ஏற்கத்தயாராக இருந்தார் என்பதைச் சுட்டும் இக்குறிப்பு, பண்டாரத்தார் ஒரு பண்பட்ட மாமேதை என்பதைக் காட்டுகின்றது.
தமக்குத் தமிழ் மட்டுமின்றி, கல்வெட்டு, சோழர் வரலாறு போதித்து, வரலாறு அறிவதில் விருப்பமும் ஆர்வமும் ஊட்டிய ஆசானாகத் திகழ்ந்தவர் நற்றிணைக்கு உரையெழுதிய பெருமகனார், அமரர் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் அவர்களால் ஏற்பட்ட ஆர்வ உந்துதல்; கோபிநாதராயரின் சோழ வம்ச சரித்திரம் என்னும் மதுரைத் தமிழ்ச் சங்கத்து நூலால் மேலும் வளர்ச்சி அடைந்ததை நன்றியோடு நினைவு கூறுவதோடு; கல்வெட்டிலாகா அறிக்கைகளும், தாமே படி எடுத்த கல்வெட்டுக்களும் இந்நூல் மலர்வதற்குக் காரணமாய்த் திகழ்ந்தவை என்பதையும் தெளிவு படுத்துகின்றார்.
மிகுந்த புலமையும், அதனால் பல புதிய கருத்துச் செறிவும் கொண்ட மாமேதைகளாக இருந்தால் கூட, அவர்களுடைய கருத்துக் களும் கண்டுபிடிப்புக்களும் அச்சில் வந்து உலகறியவில்லை என்றால், அவர்களுடைய மேதா விலாசம் குடத்திலிட்ட விளக்குப் போன்றதே யாகும். பண்டாரத்தார் என்னும் திருவிளக்கின் ஒளியை உலகுக்குக் காட்டியது மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் செந்தமிழ் இதழ்களும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பொழிலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் நூல்களுமேயாகும். இம்மூன்று நிறுவனங்களையும் பண்டாரத்தார் நன்றியோடு நினைவு கூர்கிறார்.
அறிவின் பெட்டகமாய்த் திகழ்ந்த பண்டாரத்தார் போன்ற பெரியவர்களுக்குப் பெரு நூல்கள் எழுத வாய்ப்பு, ஓய்வு, பொருளாதார உதவிகள் போன்றவை கிடைக்காதபோது அவர்கள் முயற்சி தளர்ந்து வேதனையுற்ற காலங்கள் உண்டு. பண்டாரத்தார் அவர்கள் இவ்வாறு தளர்ந்த நிலையில் வேதனையுற்ற போது அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நேசக்கரம் நீட்டியதால்தான் இந்நூல் மலர முடிந்தது.
தம்முடைய பிற்காலச் சோழர் வரலாறு மலர்வதற்கு ஆதாரமாகத் திகழ்ந்த கல்வெட்டிலாக்கா நூல்கள், திரு கே.ஏ.நீலகண்ட சாத்திரி யாரின் சோழர் வரலாறு (The Cholas) மற்றைய அறிஞர்களின் கட்டுரைகள் ஆகியவைதாம் என்பதை நன்றியோடு குறிப்பிடும் பண்டாரத்தாரின் பண்பு இமயமென உயர்ந்ததாகும்.
நூலும் -மூன்று அடிப்படைகளும்
பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் வரலாற்றை ஆராயும் போது மூன்று தலைப்புக்களில் அவரது ஆய்வைப் பிரித்துக் கொள்ளலாம்.
1. ஆண்டுக்குறிப்புக்களும் வரலாற்று நிகழ்வுகளும்
2. மன்னர்களின் சமகாலத்தில் வாழ்ந்த பெரியவர்கள்
3. சோழர் அரசியல் - மக்கள் நிலை
இம்மூன்று தலைப்புக்களில் பண்டாரத்தார் அவர்களின் அணுகு முறையை ஆழ்ந்து நோக்கும்போது முதல் தலைப்பை விட மற்ற இரு தலைப்புக்களில் மட்டுமே மிகுந்த வெற்றி பெற்றுள்ளார் என்பது புலனாகின்றது.
ஆண்டுக்குறிப்புக்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் என்பது மன்னர்கள் முடிசூடல், நிகழ்த்தும் போர்கள், மன்னர்தம் இறப்பின் காலம் ஆகியவை சாசனங்களில் கிடைக்கும் பஞ்சாங்கக் குறிப்புக்களின் அடிப்படையில் கணித அறிவியல் துணைக்கொண்டு நிறுவுவதாகும். திருவாளர்கள் ஹில்ஷ், கீல்ஹோர்ன், L.D. சுவாமிக் கண்ணுப்பிள்ளை போன்ற குறிப்பிட்ட சில அறிஞர்கள் மட்டுமே வானவியல் கணித அடிப்படையில் நாட்களையும், நிகழ்வுகளையும் குறித்தனர். இவர்களது குறிப்புக்களை மட்டுமே துணையாகக் கொண்டு பண்டாரத்தார் அவர்கள் சோழர் வரலாற்று நூலைப் படைத்தார். பண்டாரத்தார் அவர்கள் தாமே கணித இயல் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளவில்லை. மேலும் அவரது காலத்தில் கல்வெட்டு ஆண்டறிக்கைகளோ, தென்னிந்தியச் சாசன நூல்களோ முழுமையாக வெளிவரவில்லை. 1992-இல் கூட முழுமை பெறாதபோது, 1949-இல் நூல் எழுத முற்பட்டவருக்கு, காலக்கணிப்பில் துல்லியம் பெற வாய்ப்பே இல்லை. காலக்கணக்
கீட்டிலும் நிகழ்வுகளிலும் நிச்சயம் எதிர்காலத்தில் மாறுதல் நிகழும் என்பதை உறுதியாகப் பண்டாரத்தார் அவர்கள் நம்பினார். அதனால்தான் முகவுரையில் இத்தகைய மாறுதல்களைச் செய்வதில் எதிர்கால ஆய்வாளர்கள் முனைதல் வேண்டும் என விரும்புகிறார்.
தமிழ் இலக்கியத்தில் பட்டறிவு மிகுந்திருந்த காரணத்தால் தமிழ் இலக்கிய நூல்களைத் தம் வரலாற்று ஆய்வுக்குத் துணையாகக் கொண்டு வரலாற்றின் இருள் அடைந்த பகுதிகளுக்கு ஒளி கூட்டு கின்றார். இவர் நூலின் கண் இடும் பட்டியல்களில் அரசியர், மன்னனது புதல்வர், புதல்வியர், அரசு உயர்நிலை அலுவலர்கள், புலவர் பெரு மக்கள் மட்டுமின்றி மலர்ந்த தமிழ், சமகிருத நூல்களையும் குறிப்பிடும் பாங்கால் பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாதிரியாரையும் விஞ்சுகிறார்.
இந்நூலின் மூன்றாம் பகுதியாகத் திகழும் சோழர் அரசியல் என்ற பிரிவில் சோழர்காலச் சமுதாய நிலையைக் கூறுகளிட்டு விரிவாக நம் முன் கொணர்கிறார். அரசு அமைப்பு, கிராம நிர்வாகம், வரிமுறை, குடவோலைத் தேர்வுகள், அறங்கூறு அவையம், வாரியங்கள், கோவில் நிர்வாகம், சிற்பங்கள், ஓவியங்கள், நாணயங்கள், அடிமைமுறை போன்ற பல்வேறு தலைப்புக்களில் நுண்ணிதின் ஆராய்கிறார். இப்பகுதி யாலும் இதுவரை சோழர் வரலாறு ஆராய்ந்த பெருமக்கள் அனைவரது படைப்புக்களையும் விஞ்சி நிற்கிறார் பண்டாரத்தார் அவர்கள்.
கணிப்புக்களிலும், சில கருத்துக்களிலும் சில தவறுகள் இருப்பினும் அவரது சாதனை இமயமே ஆண்டுக் கணிப்புக்களில் ஏற்பட்ட தவறுகளும், கருத்துப் பிழைகளும், அவருக்குக் கிடைக்
காமற் போன அடிப்படை ஆதாரங்களே (Source materials) என்பதை நாம் நன்குணர்தல் வேண்டும். அப்போதுதான் அம் மாமேதையின் சாதனையின் பலம் நமக்குத் தெள்ளிதின் புலப்படும்.
இடவை பற்றிய குறிப்பு
கி.பி.880-இல் வரகுண பாண்டியன் சோழ நாட்டைத் தாக்கிய இடமான இடவைஎன்ற ஊர் எவ்வூர்? என்பது இதுகாறும் வரலாற்று ஆய்வாளர்களால் உறுதி செய்ய முடிய வில்லை. Journal of Sri Venkatesvara Oriental Institute Vol IV-P 168-ïš வெளிவந்துள்ள கட்டுரையில் இடவை என்பது திருவிடைமருதூர் என அழைக்கப்படும் இடைமருதுதான் என வெளிவந்துள்ள செய்தியை மறுத்து; அப்பர் திருத்தாண்டகத்தில் உள்ள இடைமருது, ஈங்கோய், இராமேச்சுரம், இன்னம்பர், ஏர் இடவை என்ற வரிகளை மேற்கோள் காட்டி மறுப்பதோடு; சாசனங்கள் துணைக் கொண்டு இடவை மண்ணி நாட்டு ஊர் என்பதைப் பழம் சான்றுகள் கொண்டு உரைக்கும் போது திரைமூர் நாட்டில் உள்ள இடைமருது இடவை ஆகாது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார். இவ்வாறு குறிப்பிடும் இடத்தில் இடைமருதுதான் இடவை எனக் கட்டுரை எழுதிய ஆசிரியர் பெயரைக் குறிப்பிடாமல் அதுவெளிவந்த ஆய்வு, இதழின் பெயர் மட்டும் குறிப்பிடுவது நோக்குதற்குரியதாகும்.
மேற்கெழுந்தருளிய தேவர்
கண்டராதித்தர் பற்றி ஆராயும்போது மேற்கெழுந்தருளிய தேவர் என்று அவரைக் குறிப்பிடும் சொல்லின் பொருள் யாது என்பது தெரிய வில்லை என்பதை முதலில் குறிப்பிடுகிறார். பின்பு மேற்றிசையில் பகைவரோடு போர் நிகழ்த்தி அதில் இறந்ததால்தான் இப்பெயர் என்ற சில அறிஞர்களின் கொள்கை அவருக்கு ஏற்புடையதாக இல்லை. சங்க இலக்கியங்களிலும் சாசனங்களிலும் காணப்பெறும் துஞ்சிய என்ற அடைமொழியுடன் இச்சொல் இல்லாமல் இருப்பதைக் கூறி, மேற் கெழுந்தருளி என்ற அடைமொழி அவற்றைப் போல் இறந்த செய்தியை உணர்த்தவில்லை என்றும், இவ்வேந்தன் இறந்த செய்தி கூறப் பட்டிருந்தால் அதற்குரிய அடைமொழி அக்கால ஒழுக லாற்றின்படி அமைந்திருக்கும் என்பது திண்ணம். எனவே மேற் கெழுந்தருளி என்ற தொடருக்கு வேறு பொருள் இருத்தல் வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார்.
பகை மேற்செல்லாமல், சிவஞானச் செம்மலாய்த் திகழ்ந்த அவர் தலயாத்திரை சென்றவர் திரும்பி வாராமையை ஒருக்கால் குறிப்பினுங் குறிக்கலாம் என்னும் கருத்தினைத் தெரிவிக்கின்றார். பண்டாரத்தார் அவர்கள் காலத்திற்குப் பின்பு; அண்மையில் ஜம்பை என்னும் ஊரில் ஒரு கல்வெட்டு காணப்பெற்றது. அதில் கண்டராதித்ததேவருக்காக எடுக்கப் பெற்ற அதீத கிருஹம் பற்றிய செய்திகள் சிவயோகியாய்ச் சென்றவர் சோழநாடு திரும்பாமல் ஐம்பையில் மறைந்தார் என்பது உறுதி பெறுகின்றது. பண்டாரத்தார் அவர்களின் கருத்து மெய்ம்மை பெற்றது.
ஆதித்தன் படுகொலையும் உத்தமன் பேரில் பழியும்
ஆதித்த கரிகாலனின் படுகொலையை ஆராய்ந்த பல அறிஞர்கள் இக்கொலைக்கு அரசாள்வதில் விருப்பம் கொண்டிருந்த உத்தம சோழனின் சதியே காரணம் எனக் கருதினர். மேலும் உடையார்குடிக் கல்வெட்டைக் கொண்டு இராஜராஜனின் மூன்றாம் ஆட்சியாண்டில் தான் கொலையாளிகளின் மேல் நடவடிக்கை எடுக்கப் பெற்றது என்று கூறி, உத்தம சோழனின் 16 ஆண்டுக் கால ஆட்சியில் இவ்வுண்மை மறைக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டுகின்றனர். சிலர் சதிகாரர்கள் பிராமணர்களாய் இருந்ததால் மரண தண்டனை விதிக்காமல் நிலங்கள் மட்டுமே அரசால் எடுக்கப் பெற்றன என்றும் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் பண்டாரத்தார் அவர்களுக்கு இவை எவையுமே ஏற்புடையனவாக இல்லை.
சதிக்குக் காரணமாய் இருந்தவர்களுள் ஒருவன் பஞ்சவன் பிரமாதி ராஜன் என்று உடையார்குடிக் கல்வெட்டு குறிப்பிடுவதால் அவன் பாண்டி நாட்டு அரசியல் அதிகாரி என்றும், பகைவர்களான பாண்டியர் களின் தூண்டுதல்களால் அவன் தன் உடன் பிறந்தார் (சோழ நாட்டு உயர் அதிகாரிகள்) உதவியோடு இதனைச் செய்திருக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக நம்புகிறார். இதனைக் கூறுமிடத்துப் பண்டாரத்தார் அவர்கள், உத்தம சோழன் மீது குற்றங் காண்டல் எங்ஙனம் பொருந்தும்? மறைவில் நிகழ்ந்த அக்கொலையில் தொடர்புடையவர் யாவர் என்பதை ஆராய்ந்து பார்த்து அனைவர்க்கும் தண்டனை விதிப்பதற்குள் சில ஆண்டுகள் கழிந்திருத்தல் கூடும். அதற்குள் உத்தமசோழன் ஆட்சியும் முடிவெய்தியிருக்கலாம். அதனால் இராசராச சோழன் ஆட்சியில் எஞ்சியோர்க்குத் தண்டனை விதிக்கும்படி நேர்ந்தமை இயல்பேயாம். ஆதலால் அக்கொலை பற்றி உத்தமசோழன் ஒருவருக்கும் தண்டனை விதிக்கவில்லை என்று எத்தகைய ஆதாரமும் இன்றி எவ்வாறு கூறமுடியும்? என்று வினவுகிறார்.
வீரபாண்டியன் தலை கொண்டவன் என்ற விருதினைப் பெற்றவன் ஆதித்த கரிகாலன். இவன் வீரபாண்டியனுடன் செவ்வூரில் நிகழ்த்திய போரில் அவனை வென்றதால் அப்பெயர் பூண்டிருக்க வேண்டும் என்று திரு.கே.ஏ.என். சாதிரியார் கருதுகிறார். அவன் வீர பாண்டியனின் தலையைக் கொய்திருக்க மாட்டான் என்றும் பெற்ற வெற்றியைச் சிறப்பித்துக் கூறவே இப்பட்டம் பூண்டனன் என்றும் குறிப்பிடுகிறார். ஆனால் அண்மையில் விழுப்புரத்திற்கு அருகில் உள்ள எசாலம் என்னும் ஊரில் கிடைத்த இராஜேந்திர சோழரின் செப்பேட்டுத் தொகுதியில் சமகிருதப் பகுதியில், வீரபாண்டியனைப் போரில் கொன்று, அவன் தலையைக் கொய்து, பின்னர்த் தஞ்சைக்கு எடுத்துச் சென்று மூங்கில் கம்பொன்றில் சொருகி அரண்மனை வாயிலில் வைத்ததாகக் குறிப்பிடுகிறது.
தத்ப்ராதா கரிகால சோள ந்ருபதி:
வீரச்சிரியா லிங்கிதோ
ஹத்வா பாண்ட்ய நரேந்த்ரம்-
ஆஹவமுகே-ச் சிந்வா ததீயம் சிர:
தஞ்ஜாத்வார கதோரு தாரு சிரஸி
ந்யயோத்த மாங்கம் ரிபோ:
ஸப்தாம் போநிதி மேகலாம் வஸீமதீம்
பாலோ ப்யர க்ஷத் சிரம்
எனவே இவ்வளவு வன்மையான, கோரமான செயலை ஆதித்த கரிகாலன் செய்ததால்தான், அவனை வீழ்த்தப் பாண்டியர்கள் முடிவு எடுத்திருக்கலாம். இதற்குச் சோழநாட்டில் பிறந்து பாண்டிய நாட்டில் பணிபுரியும் பஞ்சவன் பிரமாதிராஜனைப் பயன்படுத்தி இருக்கலாம். அவனும் தன் உடன் பிறந்தார்கள் சோழ நாட்டு அரசு அதிகாரிகளாய் இருப்பதால் காரியத்தை எளிதில் முடித்திருக்கலாம் என்பதை வலிமையான இக் காரணங்களால் உறுதி செய்து கொள்ள முடிகிறது.
அடுத்து உடையார்குடிக் கல்வெட்டில் கொலைச் சதிக்குக் காரணமானவர்களின் நிலங்கள் கோயிலுக்காகக் கையகப்படுத்தப் பெற்ற விபரங்கள் உள்ளனவே அன்றி அவ்வாண்டில் (இராஜராஜனின் மூன்றாம் ஆண்டில்) தான் அச்சதி கண்டுபிடிக்கப் பெற்றதாக அல்லது நிலங்கள் கையகப்படுத்தப் பெற்றதாகக் கூறப்பெறவில்லை. அக்கல்வெட்டில் குறிக்கப்படும் அறச்செயல் ஒன்றுக்காகக் (முன்னர்) கையகப்படுத்தப் பெற்றுக் கோயில் உடைமையாக உள்ள நிலங்களைப் பயன்படுத்தப்பெற்ற செய்திகளே கூறப்பெற்றுள்ளன. எனவே இக்கல்வெட்டுக் கொண்டு இராஜராஜனின் 3-ஆம் ஆண்டில்தான் கொலைச்சதி கண்டுபிடிக்கப் பெற்றது எனக் கொள்ள முடியாது. உத்தம சோழன் காலத்திலேயே குற்றங்களுக்குத் தண்டனை தரப்பட்டதோடு கோயிலுக்கு நிலங்களைக் கையகப்படுத்தி இருக்க வேண்டும். எனவே பண்டாரத்தார் அவர்களின் ஊகங்களான பாண்டி நாட்டுச் சதியென்பதும், உத்தம சோழனுக்கும் சதிக்கும் தொடர்பு கிடையாது என்பதும் உறுதி பெறுகின்றன.
சுந்தரசோழர்
சுந்தரசோழர் பற்றி எழுதும் போது,
போதிய திருநிழற் புனிதநிற் பரவுதும்
மேதரு நந்திபுரி மன்னர் சுந்தர
சோழர் வண்மையும் வனப்பும்
திண்மையும் உலகிற் சிறந்து வாழ்கெனவே
(வீரசோழியம் - யாப்பு 11)
என்பதை மேற்கோள் காட்டி அம்மன்னன் நந்திபுரத்தில் வாழ்ந்தவன் என்பதை இலக்கியச் சான்றுகளோடு வரலாறு எழுதுகின்றார். வரலாறு எழுதத் தமிழ் இலக்கிய அறிவு மிகமிக அவசியமானது என்பதை அவர்தம் நூலில் பல்வேறு இடங்களில் காணமுடிகின்றது. நந்திபுரம்-ஆயிரத்தளி அரண்மனைகள் பழையாற்றில் இருந்தவை என்பது பண்டாரத்தார் அவர்களின் கருத்து. முந்தைய பல்லவ, சோழர் வரலாறு எழுதிய அறிஞர்களும் இதனையே கொண்டிருந்தனர். ஆனால் அண்மையில் இக்கட்டுரையாளரால் மேற்கொள்ளப் பெற்ற ஆய்வில் தஞ்சைக்கு அண்மையில் உள்ள (கண்டியூரினை அடுத்து) வீரசிங்கம்பேட்டை-செங்கமேடு, ஆவிக்கரை, நாலுசாமிமேடு, இரட்டைக் கோயில் ஆகிய பகுதிகளைத் தன்னகத்துக் கொண்ட நிலப்பகுதியே பண்டைய நந்திபுரத்து ஆயிரத்தளி என நிறுவ முடிந்தது. இதனைச் சாசனங்கள் கிழார் கூற்றத்து நந்திபுரமான ஆயிரத்தளி எனக் குறிக்கும்.
உத்தம சோழன்
உத்தம சோழன் கி.பி.969-இன் இறுதியிலாவது கி.பி.970-இன் தொடக்கத்திலாவது முடிசூடிக் கி.பி.985 ஆம் ஆண்டில் இறந்தான் என்றும் பண்டாரத்தார் கூறுவார். ஆனால் கல்வெட்டுக்கள், வானவியல், கணித இயல் அடிப்படையில் ஆராய்ந்த குடந்தை என்.சேதுராமன் அவர்கள் கி.பி.971-இல் ஏப்ரல் 21-இலிருந்து ஜுன் 6-க்குள் முடிசூடிய தாகவும், இராஜராஜனுக்குக் கி.பி. 985இல் முடிசூட்டிவிட்டு, பின்பு அவனுடன் இணைந்து இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்ததாகவும், பின்பே அவனது இறப்பு நேர்வதாகச் சான்றுகள் கொண்டு நிறுவி யுள்ளார். (Early Chola)
இவ்வாறு பண்டாரத்தார் அவர்கள் குறிப்பிடும் ஆட்சியாண்டுகள், வரலாற்று நிகழ்வுகள், போன்றவை சில இடங்களில் தவறாகின்றன. இது காலக்கணக்கீடு அடிப்படையில் நோக்காதது, தேவையான சாசனச் சான்றுகள் அவர்கள் காலத்தில் கிடைக்காமல் போனது. அவர் ஆய்வுகள் சிறப்புற நிகழ்த்தப் போதிய வாய்ப்புகள் கிடைக்காமை போன்ற பல்வேறு காரணங்களால்தான் என்பதை நன்குணர முடிகின்றது.
சூரிய வழிபாடு
சூரிய தேவனுக்குத் தனிக்கோயில் எடுப்பித்து வழிபடும் வழக்கம் முதற் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில்தான் முதலில் தொடங்கி இருக்கவேண்டும் என்றும், அதுவும் வடபுலத்துக் கண்ணோசி வேந்தர் தொடர்பால் விளைந்தது என்றும் குறிப்பிடும் முந்தைய அறிஞர்களின் கூற்றுக்கள் பண்டாரத்தார் அவர்களுக்கு ஏற்புடையனவாக இல்லை. அவர் கடைச்சங்க காலத் தமிழர்கள் சூரிய வழிபாட்டிற்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டுத் தமிழகத்தின் தொன்மை நெறியை நிறுவுகிறார்.
கும்பகோணம் கீழ்கோட்டம் (நாகேசுவரன் திருக்கோயில்) என்னும் ஆலயத்தில் சூரியனுக்குத் தனித்த கற்றளி எடுக்கப் பெற்று, இன்று வரை வழிபாடு நிகழ்வதும், அத்தலம் பாகர ஷேத்திரம் என்ற பெயரால் அழைக்கப் படுவதும், பராந்தக சோழன் காலத்துச் சாசனங் களில் அத்தனிக் கோயிலின் வழிபாடு பற்றிய குறிப்புக்கள் காணப்படு வதும், பண்டாரத்தாரின் கருத்துக்களுக்கு மேலும் வலுவூட்டு பவையாகும்.
இராசராசபுரி
தக்கயாகப் பரணியின் பதிப்பாசிரியர் இராசராசபுரி என்பதைத் தஞ்சை மாநகரம் என்றும், இராசராசீச்சரம் என்பதைத் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி; தாராசுரம் எனத் தற்போது அமைக்கப் பெறும் இராசராசபுரம்தான் இராசராசபுரியென்றும், அங்குள்ள சிவாலயமே இராசராசீச்சரம் என்றும் தெளிவாக எடுத்துரைக்கின்றார். இங்கும் தக்கயாகப் பரணியின் பதிப்பாசிரியர் பெயரைக் குறிப்பிடாமல் நூல் பெயர் மட்டும் குறிப்பிடும் பண்பு போற்றுதற்குரியதாகும்.
கோயிலொழுகு
தக்கயாகப் பரணித் தாழிசை 777-இல், இரண்டாம் குலோத்துங்கன் தில்லைத் திருப்பணி செய்தபோது அதற்கு வைணவர்கள் இடையூறு செய்ததை ஒரு பொருட்படுத்திக் கூற விரும்பாத ஆசிரியர், இவண் மன்றிற்கு இடம் காணவேண்டித் திருமாலை அவருக்குரிய பழைய கடலுக்கே அனுப்பிவிட்டான் என்று கூறியுள்ளதை எடுத்துக் காட்டிப் பின்னர்த் திவ்ய சூரி சரிதம், கோயிலொழுகு போன்றவை இம்மன்னன் மீது அடாத பழிகள் சுமத்தி இழித்துரைப்பதை, கற்பனை என்று கடுமையாகக் கூறுகின்றார் பண்டாரத்தார் அவர்கள்.
கோயிலொழுகு போன்ற நூல்கள் பண்டாரத்தார் கூறுமாறு போல இத்தகைய செய்திகளை வரலாற்றில் திரித்தன என்பதை அண்மையில் கோனேரிராயன் என்ற 15-ஆம் நூற்றாண்டு மன்னன் பற்றிய ஆய்வில் உணர முடிந்தது. நாள்தோறும் தன் பெயரால் திருமலையிலும் திருவரங்கத்திலும் அமுதுபடி செய்ய நிவந்தங்கள் விட்ட அம் மன்னனை வைணவ எதிரியாகவே கோயிலொழுகு சித்திரிக் கின்றது. நுணுகி ஆராயும்போது ஒரு பிரிவு வைணவர்களுக்கும், இம் மன்னனுக்கும் அரசியல் காரணமாய் (சமயப்பூசல் அல்லாது) ஏற்பட்ட காழ்ப்புணர்வுகளே இதற்குக் காரணம் என்பது சாசனச் சான்றுகளால் தெரியவந்தது. இதனை ஒப்பிட்டு நோக்குமிடத்துப் பண்டாரத்தாரின் கூற்றுக்கள் உண்மையே என உறுதி பெற முடிகின்றது.
சேக்கிழார்
பண்டாரத்தார் அவர்களின் பிற்காலச் சோழர் வரலாற்று நூலில் மகத்தான பிழையென ஆய்வாளர்கள் கருதுவது சேக்கிழார் பெரு மானார் 3-ஆம் குலோத்துங்கன் காலத்தில்தான் பெரியபுராணம் எழுதியதாகக் குறிப்பிடுவதாகும். பண்டாரத்தார் அவர்களது வரிகளைப் படிக்கும் போது, அவர் ஒட்டக்கூத்தர் மீது கொண்ட பெரும் பற்றுக் காரணமாகவே அவ்வாறு கூறியுள்ளார் எனக் கருதவேண்டியுள்ளது. 4.4.1139-இல் தொடங்கி 22.4.1140இல் பெரியபுராண அரங்கேற்றத்தை (இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில்) சேக்கிழார் முடித்தார் என்பதைக் குடந்தை என்.சேதுராமன் அவர்கள் பல சான்றுகள் கொண்டு தெளிவாக நிறுவியுள்ளார். திருவாளர்கள் மா.இராசமாணிக்கனார், மு.இராகவ அய்யங்கார் போன்றவர்கள் இரண்டாம் குலோத்துங்கன் காலமே என்பதை மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர்.
நிறைவுப் பகுதி
சோழர் அரசியல் என்ற இந்நூலின் மூன்றாம் பகுதி மிகத் தெளிவாக, ஆழமாக எழுதப்பெற்ற பகுதியாகும். சோழர்களின் ஆட்சி முறை, மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை மிகத் துல்லியமாக இப்பகுதியில் விவரிக்கின்றார். மிகச் சிறந்த நிர்வாக முறை, மன்னர் ஆட்சியில் நிகழ்ந்த மக்களாட்சி போன்றவை தெளிவாகக் காட்டப் பெற்றுள்ளன. சோழர் ஆட்சியின் குறை நிறைகளை நடுவுநிலையில் இருந்து அலசுகிறார். அடிமை முறை பற்றிய சான்றுகளைக் குறிப்பிடுகின்றார். மெய்க்கீர்த்திகளையும் தனிப் பாடல்களையும் பின் இணைப்பாகத் தந்து நூலினை முழுமை பெறச் செய்துள்ளார்.
பல அறிஞர் பெருமக்களோடு, தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் என்னும் மாமேதை கட்டுவித்த எழுநிலைக் கோபுரமாகத் திகழும் பிற்காலச்சோழர் வரலாறு என்னும் இந்நூலினை நமது புதிய ஆய்வு களால் மேலும் வண்ணங்கள் தீட்டிப் புத்தொளியோடு என்றென்றும் நிலவச் செய்வோமாக.
பண்டாரத்தாரின் இலக்கியப் பணி
இரா.சுந்தரமூர்த்தி
வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தாரின் தமிழ்ப் பணிகள் வரையறையற்றன. அப்பணிகளுள் இலக்கியப் பணியும், இலக்கணப் பணியும், சமயப் பணியும், கல்வெட்டு ஆய்வுப் பணியும் சிறந்தன. இக்கட்டுரை, அவரின் இலக்கியப் பணியை விளக்குகிறது. பண்டாரத்தார் அவர்களின் இலக்கியப் புலமை, இலக்கிய ஆராய்ச்சித் திறம், இலக்கியம் கூறும் செய்திகளை வரலாற்றுக்கண் கொண்டு பார்க்கும் பண்பு, இலக்கிய வரலாற்றுச் செய்திகளையும் கதைபோன்று கூறும் இயல்பு, இலக்கிய வரலாறு படைத்த பணி ஆகிய கூறுகளை உள்ளடக்கியதுதான் இலக்கியப்பணி என்னும் இக்கட்டுரை.
இலக்கியச் சான்றுகள்
14.7.1924 நாளிட்ட கரந்தைத் தமிழ்ச் சங்க தலைவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்கள் பண்டாரத்தார் அவர்கள் எழுதிய பாண்டியர் வரலாற்றுக்கு எழுதிய தம் அணிந்துரையில், பாண்டியர் வரலாறு என்னும் ஆராய்ச்சி நூலைப் படித்தேன். பண்டை இலக்கியங் களின் சான்றுகளையும் கல்வெட்டுக்களின் உண்மைகளையும் ஒப்பு நோக்கிப் பாண்டிய மன்னரின் மெய்ச்சரிதையைத் தமிழ் மக்கள் அறிந்து கோடற்கு ஏற்ற கருவி நூல் இதுவேயாகும் என்று கூறியுள்ளார்.
பாண்டியர் வரலாற்றில் இடம் பெற்றுள்ள, கடைச் சங்க காலத்திற்கு முந்திய பாண்டியர்கள் என்னும் கட்டுரையில் வடிம்பலம்ப நின்ற பாண்டியன், பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி ஆகி யோரைப் பற்றிய வரலாற்றை இலக்கியச் சான்றுகளோடு பண்டாரத்தார் விளக்குகிறார். சங்க இலக்கியப் புலவர்கள் வடிம்பலம்ப நின்ற பாண்டியனை நெடியோன் (மதுரைக் காஞ்சி; 60-61; புறநானூறு:9) என்று குறித்துள்ளனர். பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரி கிழார், நெட்டிமையார், நெடும்பல்லியத்தனார் ஆகியோர் பாடியுள்ளனர். மதுரைக் காஞ்சி (759:61-62) இவனைப் பாராட்டுகிறது. கடைச்சங்க காலத்துப் பாண்டியர் என்னும் கட்டுரையில் பாண்டிய மன்னர்களின் வரலாற்றுக் குறிப்புக்களைப் பண்டாரத்தார் எழுதியுள்ளார்.
பிற்காலச் சோழர் வரலாறு என்னும் நூலில் பண்டாரத்தார் சோழரின் தொன்மையை இலக்கியச் சான்றுகளோடு விளக்குகிறார். அச்செய்தி பின்வருமாறு,
தமிழ்நாட்டைக் குடபுலம், குணபுலம், தென்புலம் என்ற மூன்று பகுதிகளாகப் (சிறுபாணாற்றுப்படை: அடிகள்-47,63,79) பிரித்துப் பண்டைக் கால முதல் ஆட்சி புரிந்து வந்தோர் சேர சோழபாண்டியர் என்னும் தமிழ் வேந்தரே யாவார். இப்பகுதிக்கு விளக்கமாகப் பரிமேலழகர் உரைக்குறிப்பை, இவர்கள் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வரும் தொல்குடியினர். என்று பண்டாரத்தார் மேற்கோளாகக் காட்டுகிறார். இவ்வாறு அவர் சோழர் குடியின் தொன்மையை இலக்கியச் சான்று களோடு விளக்குகிறார். சங்ககாலச் சோழ மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.
செந்தமிழில் கட்டுரைகள்
அதிகமான் நெடுமானஞ்சி, சோழன் கரிகாலன், சோழன் செங்கணான், துடிக்குறி (12ஆம் தொகுதி), இளங்கோவடிகள் குறித்துள்ள பழைய சரிதங்கள் (13ஆம் தொகுதி), திருவள்ளுவரும் ஞானவெட்டியும் (14ஆம் தொகுதி), கல்லாடமும் அதன் காலமும்(15ஆம் தொகுதி) ஆகிய கட்டுரைகளைப் பண்டாரத்தார் இலக்கியச் சான்றுகளின் துணைக் கொண்டு விளக்கியுள்ளார்.
அதிகமான் நெடுமானஞ்சி என்னும் கட்டுரையில் அதிகமான் நெடுமானஞ்சியின் தலைமை நகராகிய தகடூர் மைசூர் இராச்சியத்தி லிருக்கிறதாகத் தெரிகிறது… வடமொழியில் தகடா என்பது தமிழில் தகடூர் என்று வழங்கி வந்தது போலும். இப்பொழுது தென் கன்னடம் ஜில்லாவிலுள்ள குதிரை மூக்கு மலையே, இவனுடைய குதிரை மலையாயிருக்காலாமென்று கருத இடமுண்டு என்று பண்டாரத்தார் ஆய்வுத் திறனொடு கூறியுள்ளார். தருமபுரி அன்று என்பது இதனால் தெரியவருகிறது. ப.326)
கல்லாடமும் அதன் காலமும் என்னும் கட்டுரையில் இதுகாறுங் கூறியவற்றால், கல்லாடரென்னும் பெயர் பூண்ட புலவர்கள் இருவரிருந் துள்ளார்களென்பதும், அவர்களுள் இரண்டாம் கல்லாடனாரே கல்லாட மென்ற நூலியற்றியவரென்பதும், இவர் கி.பி.13-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே, இத்தமிழகத்தில் வாழ்ந்தவராவரென்பதும் பிறவும் நன்கு விளங்கி நிற்றல் காண்க (செந்தமிழ், 14-ஆம் தொகுதி -ப.114) என்று கூறியுள்ளார். பண்டாரத்தார், காலவாராய்ச்சியில் கவனம் செலுத்திக் கல்லாடத்தின் காலத்தைக் குறிப்பிடுகிறார் என்பதே இப்பகுதியால் புலனாகின்றது.
தமிழ்ப்பொழிலில் கட்டுரைகள்
ஓரி- (துணர்-1), மழவர் வரலாறு (துணர்-1), கூத்தராற் குறிக்கப் பெற்ற சில தலைவர்கள்(துணர்-14), திருச்சிராப்பள்ளி (துணர்-24), தூங்கானை மாடம் (துணர்-34), இருபெரும் புலவர்கள் (துணர்-34) ஆகிய கட்டுரைகளில் பண்டாரத்தார் இலக்கியச் சான்றுகளோடு வரலாற்றுச் செய்திகளை விளக்கியுள்ளார்.
கூத்தராற் குறிக்கப் பெற்ற சில தலைவர்கள் என்னும் கட்டுரை யில் விக்கிரமசோழன், படைத் தலைவர், அமைச்சர், குறுநில மன்னர், மண்டலிகர் முதலானோர் இரு மருங்கும் சூழ்ந்து வர உலாப் போந்தான் என்னும் ஒட்டக்கூத்தர் கூறிய விக்கிரம சோழன் உலாச் செய்தியைப் பண்டாரத்தார் விளக்குகிறார். அங்ஙனம் கூறுமிடத்து அரசியல் தலைவர்களின் பெயர்களை நிரல்பட வைத்து அன்னோரது வீரச் செயல் களையும், பெருமைகளையும் ஒட்டக்கூத்தர் மிகப் பாராட்டிச் செல் கின்றார். அவர்கள் கலிங்கம் வென்ற தொண்டைமான், சோழர்கோன், மறையோர் கண்ணன், வாணன், காலிங்காகோன், செஞ்சியர்கோன் காடவன், வேணாடர்வேந்து, அநந்த பாலன், வத்தவன், சேதிநாடன், காரனைக் காவலன், அதிகன், வல்லவன், திரிகர்த்தன்- (தமிழ்ப்பொழில், துணர்-14 பக்.300-301) என்று பண்டாரத்தார் விக்கிரமன் சோழன் உலாவைச் சான்று காட்டி விளக்குகிறார்.
இருபெரும் புலவர்கள் என்னும் கட்டுரையில் (தமிழ்ப்பொழில், துணர்-34) விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளய்யர் ஆகியோர் வாழ்க்கை வரலாற்றைப் பண்டாரத்தார் விளக்குகிறார். இவர்களின் தந்தையார் வரலாற்றையும் சிறப்பாக விளக்குகிறார். செவிவழிச் செய்தி கொண்டு பண்டாரத்தார் இக்கட்டுரையை நாடக உரையாடலாகவும், கட்டுரையாகவும் கொண்டு விளக்குகின்றார்.
பண்டாரத்தாரின் தமிழ் இலக்கிய வரலாறு (13,14,15-ஆம் நூற்றாண்டு கள்)
தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் காலவாராய்ச்சியைக் குறிப்பாக இலக்கிய வரலாற்று நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆராய்ச்சிப் பேரறிஞர் பண்டாரத்தார் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலின் முதற்பதிப்பு முகவுரையில், இலக்கிய வரலாறு சிறந்த முறையில் அமைய வேண்டுமாயின், முதலில் நூலாசிரியர்கள் நிலவிய காலங்களைச் சமயச் சார்பு பற்றி நடுவுநிலை திறம்பாமல் உண்மையை உணரும் உயர்ந்த குறிக்கோளுடன் ஆராய்ந்து வரையறை செய்வது இன்றியமையாததாகும் என்று தெளிவுறுத்துகிறார். புகழேந்தி யாரின் காலம் கி.பி.13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, மெய்கண்டாரின் காலம் கி.பி.1232 சேனாவரையரின் காலம் கி.பி. 1268-1311 பரிமேலழகரின் காலம் கி.பி.13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பன பண்டாரத்தாரின் குறிப்பிடத் தகுந்த கால ஆராய்ச்சி முடிவுகளாகும். பண்டாரத்தார் கால வாராய்ச்சியை நிறுவுவதற்கு இலக்கியச் சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் தம் கட்டுரைகளில் எடுத்துக் காட்டி யுள்ளார்.
பண்டாரத்தாரின் இந்நூலில் வெளியிடும் முடிவுகள்
ஒரு நாட்டில் சிறந்த இலக்கியங்கள் தோன்றுங்காலம் அரிய தொரு பொற்காலமேயாகும். அத்தகைய காலம் எப்போதேனும் தோன்றும் என்று பண்டாரத்தார் பொற்காலத்தின் தன்மையையும் நன்மையையும் எடுத்துக் கூறுகின்றார். உள்நாட்டுக் குழப்பம் இல்லாமலும் படையெழுச்சியுமின்றியும் நாடு அமைதியாக இருந்தால் புலவர்கள் சிறந்த நூல்களைப் படைப்பர் என்னும் கருத்தைப் பண்டாரத்தார் வெளியிடுகிறார். அமைதி, ஆக்கத்துக்கு வழிகாட்டும் என்பது பண்டாரத்தாரின் கருத்தாம்.
பரிமேலழகர் உரையைப் பண்டாரத்தார் பின் வருமாறு பாராட்டு கிறார்.
இவ்வுரை சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் ஆகிய இயல்பினையுடையதாய்த் தூய தமிழில் அமைந்திருப்பதேயாம் என்று பண்டாரத்தார் கூறும் போது, பரிமேலழகரின் தூய தமிழ் நடையைப் பாராட்டுகிறார்.
பரிமேலழகர் தம் உரையில் பழைய செய்யுட் பகுதிகளைத் தம் உரைநடையில் அமைத்த உரையாசிரியர்களுள் இவரே முதன்மை வாய்ந்தவர் என்பது அறிஞர்கள் கருத்து எனப் பண்டாரத்தார் கூறுகிறார்.
கி.பி.பதினான்காம் நூற்றாண்டு என்னும் கட்டுரையில், பிற சமயத்தினரும் பிற மொழியினருமான முகமதியர்களும் கன்னட மொழியினரான விசயநகர வேந்தர்களும் தம் தம் மொழிகளை அரசாங்க மொழியாகக் கொண்டு, தமிழகத்தின் தாய்மொழியைப் புறக்கணித்துத் தமிழ்நாட்டில் ஆட்சிபுரியத் தொடங்கிய காலமே பதினான்காம் நூற்றாண்டேயாகும் என்று அயலாரின் கொடுமையைப் பண்டாரத்தார் கூறுகின்றார். அவர் பதினான்காம் நூற்றாண்டில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது; தமிழர் புறக்கணிக்கப்பட்டனர் என மன வருத்தத்தோடு கூறுகிறார்.
வடசொற் கலப்பு
வில்லிபுத்தூரார் கால முதல் தமிழ்ச் செய்யுள் நடை வடசொற்கள் விரவி மாறுதலடையத் தொடங்கியது எனலாம், என்னும் இப்பகுதியில் பண்டாரத்தார் வடசொற் கலப்பை விளக்குகிறார். தமிழ்மொழியின் தூய்மையும் பண்பும் பிற மொழிக் கலப்பால் கெட்டுவிடும் என்பதை அன்னோர் அறியார் போலும் என்று பண்டாரததார் கூறும்போது, பிறமொழிக் கலப்பினால் வரும் தீமையைச் சுட்டுகிறார். மேற்காணும் சான்றுகளால் பண்டாரத்தார் தூய தமிழையே நாடி நின்றார் என்பது விளங்கும். தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் நோக்கமும் இஃதேயாம்.
தில்லைக் கலம்பகம்
தில்லைக் கலம்பகம் இயற்றிய இரட்டைப் புலவர்களின் வரலாற்றில் சான்று அற்ற செய்திகள் கலந்து உள்ளன என்று பண்டாரத்தார் உரைக்கிறார்.
இவ்விரட்டைப் புலவர்களுள் ஒருவர் முடவராகவும் மற்றொருவர் குருடராகவும் இருந்தனர். முடவரைக் குருடர் தம் தோள்களில் சுமந்து சென்றனர் என்பதற்கும் சான்றுகள் காணப்படவில்லை என்று பண்டாரத்தார் உறுதியாக உரைக்கிறார்.
இரட்டைப் புலவர்கள் சோழ நாட்டிலுள்ள சிற்றூர்கள் சில வற்றைத் தில்லைக் கலம்பகத்தில எடுத்துக் கூறியிருத்தலால் இவர் களுடைய நாடு சோழ நாடாக இருத்தல் கூடும் எனப் பண்டாரத்தார் ஆய்வு முடிவொடு கூறுகிறார்.
இப்புலவர் பெருமக்கள் வென்று மண்கொண்ட சம்புவராயன் ஆட்சிக் காலமாகிய கி.பி.1327-க்கும் கி.பி. 1339-க்கும் இடையில் வாழ்ந்தவர்கள் என்பது தேற்றம் என்று குறிக்கிறார்.
திருமுறை என்னும் பெயர் வழக்கு
ஏகாம்பர நாதர் உலா என்னும் கட்டுரையில் பெரிய புராணம் கணநாத நாயனார் புராணத்தில் ஓரிடத்தில் தான் திருமுறை(பா-3) என்ற பெயர் வழக்கு அருகிக் காணப்படுகிறது என்று பண்டாரத்தார் கூறுகின்றார்.
கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் இடையில் இரட்டைப் புலவர் களால் இயற்றப்பெற்ற இவ்வேகாம்பரநாதர் உலாவில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் ஆகிய மூவர்களின் திருப் பாடல்களும் மணிவாசகப் பெருமானது திருவாசகமும் திருமுறை என்ற பெயரோடு கூறப்பட்டிருத்தல் அறியத்தக்கது என்னும் திருமுறைப்பெயர் வழக்கைச் சான்று காட்டி விளக்குகிறார். இவ்விலக்கிய வரலாற்று நூலில் தம் முடிவுகளைப் பலவாற்றானும் விளக்குகிறார். தமிழ் இலக்கிய வரலாறு, இவரின் இலக்கியப் பணியை எடுத்துக் கூறும் சிறந்த நூலாகும்.
பாண்டியர் வரலாறு, பிற்காலச் சோழர் வரலாறு, தமிழ்ப்பொழிலில் வெளியிடப் பெற்ற கட்டுரைகள், செந்தமிழில் வெளியிடப் பெற்ற கட்டுரைகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ் இலக்கிய வரலாறு ஆகியன ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் இலக்கியப் பணிகளை எடுத்துக் கூறுவனவாம்.
பண்டாரத்தாரின் இலக்கணப் பணி
மருத.சுந்தரமூர்த்தி
இக்கட்டுரையில் பண்டாரத்தாரின் இலக்கணப் பணி என்னும் அமைப்பில் அவர் தமிழ் எழுத்துக்களைப் பற்றிச் செய்த ஆய்வுகளும், தமிழ்ச் சொற்களைப் பற்றிச் செய்த ஆய்வுகளும் மட்டுமே தொகுத்து, வகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் குறிக்கப்படும் - வெளிப்படுத்தப்படும் செய்திகள் மட்டுமே முடிந்த முடிபானவை என்று கொள்ள வேண்டாம் என்றும், இக்கட்டுரை அவர் தம் இலக்கணப் பணி பற்றிய ஆய்வுக்கு ஒரு தூண்டுதல் முயற்சியாக அமைவது என்றும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் எழுத்துக்களின் வரலாற்றாய்வு
மொழி இல்லாவிட்டால் மனித சமுதாயம் இல்லை. நாகரிகம் இல்லை என்றே கூறிவிடலாம். காரணம் மொழியின் மூலமே சமுதாயத்தில் எல்லாவகையான செய்திப் பரிமாற்றங்களும் ஏதாவது ஒரு வகையில் நடைபெற்ற வண்ணம் உள்ளன. சமுதாயத்தில் மொழி அவ்வப்போது ஆங்காங்கே ஏற்படும் சமுதாயச்சூழலுக்கு ஏற்றவாறு அதனுடைய அமைப்பு, இயக்கம் ஆகியவற்றிலிருந்து மாறுபட்டு வழங்கப்படுவதை நம்மால் காண முடிகிறது. இம்மாற்றங்களுக்குச் சூழ்நிலை மட்டுமல்லாதுஅம்மொழிபேசும்சமூகத்தின்பின்னணி (Social Background),மொழிப்பின்னணி (Language Backgound), சமுதாயக் கட்டுக் கோப்பு, சமுதாயப்பழக்க வழக்கங்கள்,நாகரிகம் போன்றபல சமூக மொழியியல் அங்கங்கள் காரணமாக அமைகின்றன…..ïnj போன்று நம் இந்திய நாட்டுச் சமுதாய நிலைக்கேற்ப தம் பேச்சு வழக்குகளிலும், எழுத்து வழக்குகளிலும் மொழியமைப்புகளும் மொழிப் பரிமாற்றமும் மாற்றம் பெற்று வருவதை நம்மால் காணமுடிகிறது.
இவ்வாறே, நம் செந்தமிழ் மொழியும் பழைய வடிவ அமைப்பி லிருந்து மெல்ல மெல்லப் புதிய வடிவமைப்பைப் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. இவ்வுண்மையை நமது ஆராய்ச்சிப் பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் அவர்களும் தமது இலக்கணப் பணியின் மூலம் வெளிப்படுத்திக் காட்டுகின்றார். இதனை, தமிழ் நூல்கள் அச்சிடத் தொடங்கப் பெற்ற காலத்தேதான் தமிழ் எழுத்துக்கள் எல்லாம் இப்போது காணப்படும் நிலையான வரிவடிவங்களைப் பெற்றன. ஆகவே சற்றேறக் குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள வரிவடிவ அமைப்பை அடைந்தன என்று கூறலாம். அதற்குமுன் ஒவ்வொரு நூற்றாண்டிலும் இவ்வெழுத்துக் களின் வரிவடிவங்கள் சில மாறுதல்களுக்கு உள்ளாகி வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றன2 என்று எடுத்துக் காட்டுவதால் நன்கு உணர முடிகின்றது.
தமிழின் வடிவ ஆராய்ச்சி
பண்டாரத்தார், கோயில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும் வரையப்பெற்ற பழைய தமிழ்ச் சாசனங் தமிழ் எழுத்து என்பது தற்போது வழங்கிவரும் தமிழ் எழுத்துக் களின் பழைய வரிவடிவங்களே ஆகும் என்றும் இத்தகு எழுத்துக்களால் அமையப் பெற்ற தமிழ்ச் சாசனங்கள் தொண்டை மண்டலம், சோழ மண்டலம் ஆகிய நாடுகளில் பல்லவர்களின் ஆட்சிக் காலமுதல் காணப்படுகின்றன என்றும் கூறுகிறார். பாண்டி மண்டலத்தை வென்று தன் ஆட்சிக்கு உட்படுத்திய முதல் இராசராசசோழன், அதற்குமுன் அந்நாட்டில் வழங்கி வந்த வட்டெழுத்துக்களை நீக்கித் தொண்டை மண்டலம், சோழமண்டலம் ஆகியவற்றில் வழங்கிய தமிழ் எழுத்துக்
களையே பயன்படுத்துமாறு செய்தனன் என்பதோடு, இச்செய்தி திருநெல்வேலி திருக்குற்றாலத்தில் காணப்படும் இரண்டு கல்வெட்டி னால் புலனாகிறது என்பதால் கி.பி. 11-ஆம் நூற்றாண்டு முதல் பாண்டி நாட்டில் இப்போதுள்ள தமிழ் எழுத்துக்கள் வழங்கி வருகின்றன என்ற வரலாற்று ஆதாரத்தையும் எடுத்து விளக்குகின்றார். இதன் மூலம் தமிழ்மொழியில் காணப்பட்ட இரண்டு வரி வடிவங்களில் ஒன்றான தமிழ் எழுத்து வழக்கத்தை மெய்ப்பித்துக் காட்டுவதை உணர முடிகின்றது.
வட்டெழுத்து
தமிழ்மொழியின் வரிவடிவங்களில் ஒன்றானதாகக் கூறப்பட்ட வட்டெழுத்து வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்தாகும். இவ்வட்டெழுத்துக்கள் வழக்கில் இருந்தமையையும், அவை வெளிப்படும் காலத்தையும், வழங்கப்பட்ட பகுதிகளையும் அறிஞர் பண்டாரத்தார் தம் ஆய்வில் மிகத் தெளிவாகக் காட்டுகின்றார்.
இதனை இவ்வட்டெழுத்தால் பொறிக்கப்பெற்ற தமிழ்ச் சாசனங்கள் எல்லாம் பாண்டி மண்டலம், சேரமண்டலங்களில் 8-முதல் 11-ஆம் நூற்றாண்டு வரையில் வெளிப்படுகின்றன என்பதோடு, பாண்டியரது முதற் பேரரசில் பாண்டிய மண்டலத்திலும், சேர மண்டலத்திலும் வழங்கி வந்த எழுத்துக்கள் வட்டெழுத்துக்களே என்பதை அவ்வேந்தர்களின் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் அறிவுறுத்துகின்றன என்ற எடுத்துக்காட்டால் உணரலாம்.
தமிழ் எழுத்துக்களைப் பல்லவர்கள் கிரந்த எழுத்துக்களிலிருந்து அமைத்துக் கொண்டு, தம் ஆட்சிக்குட்பட்ட தொண்டை மண்டலம், சோழ மண்டலங்களில் வழங்கி வருமாறு செய்தனர் என்ற பிற ஆராய்ச்சியாளர்களின் கருத்தை, பல்லவர்கள் அமைத்த தமிழ் எழுத்துக்கள் வழக்கிற்கு வருமுன் அந்நாடுகளில் வழங்கி வந்த எழுத்துக்கள் வட்டெழுத்துக்களே என மறுக்கின்றார். இவ்வளவில் அமையாமல் பண்டைக் காலத்தில் தமிழ்நாடு முழுதும் வட்டெழுத் துக்களே வழங்கியுள்ளன என்று உறுதிபடக் கூறுகின்றார். இவரின் இக்கருத்து இன்றைக்குக் கல்வெட்டுத் துறையினருக்குக் கிடைத்துள்ள பெருமளவு சான்றுகளால் மாறியுள்ளது என்பதையும் இங்கு நினைவு கொள்ள வேண்டும்.
கண்ணெழுத்துக்கள் வட்டெழுத்துக்களே
கடைச் சங்க காலத்தில் சேர மண்டலத்திலும், சோழ மண்டலத் திலும் வழங்கி வந்த தமிழ் எழுத்துக்களே கண்ணெழுத்துக்கள் என்பதை,
கண்ணெழுத் தாளர் காவல் வேந்தன்
மண்ணுடைய முடங்கலம் மன்னவர்க் களித்து
(சிலப்.கா.26 அடிகள் 170-171)
எனவும்,
வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி
(சிலப்-கா-5.அடிகள் 11-12)
எனவும்,
…..கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்.
(சிலம்.கா.26 வரிகள் 135-136)
எனவும் வரும் சிலப்பதிகார அடிகளால் உணர்த்தி இவ்வடிகள் குறிக்கும் கண்ணெழுத்துக்கள் முற்காலத் தமிழகத்தில் முழுமையாக வழங்கி வந்த வட்டெழுத்துக்களே என்றும், இவ்வெழுத்துக்கள் கண்போன்று இருத்தலால் கண்ணெழுத்துக்கள் எனப்பட்டன என்றும், இவ் வட் டெழுத்துக்களில் இருந்துதான் பல்லவர்கள் கிரந்த எழுத்துக் களையும், இக்காலத்திலுள்ள தமிழ் எழுத்துக்களுக்கு அடிப்படையா யுள்ள தமிழ் எழுத்துக்களையும் அமைத்துக் கொண்டதாகவும் எடுத்துக் காட்டிக் கண்ணெழுத்துக்கள் வட்டெழுத்துக்களே என நிலை நாட்டுகின்றார்.
வட்டெழுத்தின் தனித்துவம்
வட்டெழுத்துக்கள் அசோகச் சக்ரவர்த்தியின் பிராமி எழுத்து களிலிருந்து தோன்றி வளர்ச்சியடைந்தவை என்று டாக்டர் பூலர் கூறுகின்றார். இவ்வாறன்றிப் பிராமி எழுத்துக்களுக்கு ஆதாரமாகக் கருதப்படும் பினீஷிய எழுத்துக்களிலிருந்து பண்டைக்காலத் தமிழ் மக்கள் இவ்வட்டெழுத்துக்களை அமைத்துக் கொண்டிருத்தல் வேண்டும் என்று டாக்டர் பர்னல் என்பார் கூறுகின்றார்.
இவ்விரு அறிஞர்களின் கருத்துக்களை நன்கு ஆராய்ந்த நமது பேரறிஞர் அசோகச் சக்ரவர்த்தியின் பிராமி எழுத்துக்கள் கி.மு. முதல் நூற்றாண்டில்தான் சமண முனிவர்களின் மூலமாகத் தமிழ்நாட்டில் தோன்றி பரவியிருத்தல் வேண்டும். ஆகவே, பிராமி எழுத்துக்கள் தமிழகத்தில் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ் மொழிக்குரிய தனி எழுத்துக்கள் இருந்தன என்று தொல்காப்பியச் சூத்திரங்களால் பெறப்படுகின்றன. அவ்வெழுத்துக்கள் வட்டெழுத்துக் களே என்பது தேற்றம். எனவே பிராமி எழுத்துக்களிலிருந்து வட்டெழுத்துக்கள் தோன்றியிருத்தல் வேண்டும் என்று கூறுவது சிறிதும் பொருந்தாது. வலக்கைப் புறத்திலிருந்து இடக்கைப் புறமாக எழுதப்பட்ட வட்டெழுத்துக்கள் தோன்றியிருக்க முடியாது என்பது திண்ணம். ஆகவே, பண்டைத் தமிழ் எழுத்துக்களாகிய வட்டெழுத்துக்கள், தமிழ் மக்களாலேயே முற்காலத்தில் அமைக்கப் பெற்றவை என்பதும், அவ்வட்டெழுத்தின் திருந்திய வடிவங்களே இப்போதுள்ள தமிழ் எழுத்துக்கள் என்பதும் உணரற்பாலவாம். (இக்கருத்தில் ஆய்வாளர்களுக்கு மாறுபாடு உண்டு). எனவே தமிழ் எழுத்துக்கள் தமிழ்நாட்டிலேயே தோன்றிய தனி எழுத்துக்கள் ஆகும். என்கிறார்.
இந்த அளவில் தமிழ் எழுத்துக்களின் வடிவ வரலாற்றை எடுத் துரைத்து அவற்றின் தொன்மை, தனித் தன்மை ஆகியவற்றையும் தம் இலக்கண ஆய்வின் மூலம் நிலை நிறுத்துகின்றார்.
சொல் வரலாற்று ஆய்வு
எழுத்துக்களின் வடிவ ஆய்வைச் சிறப்பாகச் செய்த பேரறிஞர் அவ்வெழுத்துக்களில் அடங்கியுள்ள சொற்களைப் பற்றிய ஆய்வையும் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். இதற்குக் கீழ்வரும் செய்திகள் விளக்கமாக அமைவதைக் காணலாம்.
தொல்காப்பியத்தின் குறை
தொல்காப்பியத்தில் நன்கு பயிற்சியுள்ள நம் பேரறிஞர், அத்தொல்காப்பியத்தின் சொல்லதிகாரம் சொற்கள் எவ்வாறு பிறந்தன என்பதை ஆராய்ந்து அவற்றைப் பகுதிகளில் அடக்கிக் காட்டவில்லை என்ற அதன் சிறு குறையைச் சுட்டிக் காட்டுகின்றார். இதனைச் சொல்லானது தன்னை உணர்த்தலும், பொருளை உணர்த்தலும் ஆகிய இருவகை இயல்பினை உடையது என்பார் தொல்காப்பியர். ஆனால் தம் நூலின் சொல்லதிகாரத்தில் தமிழ்ச் சொற்களுக்குரிய இலக்கணங்கள் எல்லாவற்றையும் கூறியுள்ளாராயினும் அச்சொற்கள் எவ்வாறு பிறந்தன என்பதை ஆராய்ந்து அவற்றையெல்லாம் பகுத்துப் பகுதிகளில் அடக்கிக் காட்டி விளக்கவில்லை என எடுத்துக் காட்டுவதன் மூலம் அறிய முடிகிறது.
சொல்லின் அடிப்படை - காரணமே
மொழிப் பொருட் காரணம் விளிப்பத் தோன்றா என்பது தொல்-சொல்-சூத்திரம். இதனால் சொற்கள் காரணம் பற்றியே தோன்றியுள்ளன என்பதும், அது அறிவுள்ளோர்க்கு மட்டுமே புலப்படும என்பதும் கருத்து. இதனை விளக்கும் நம் பேரறிஞர் சொற்கள் காரணத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டே பொருள்களை உணர்த்துகின்றன என்பதும், ஆகவே எல்லாச் சொற்களும் காரணப் பெயர்களே என்பதும் அக் காரணங்கள் அறிய மாட்டாதார் இடுகுறிப் பெயர்களும், மரபுப் பெயர்களும் கொள்ள நேர்ந்தது என்பதும் நன்கு புலப்படுதல் காண்க என விளக்குகின்றார்.
வீரசோழியம் - நன்னூல் காட்டும் சொல் வரலாற்று நிலை
கி.பி.11-ஆம் நூற்றாண்டில் பொன் பற்றிக் காவலன் புத்தமித்திரன் இயற்றிய வீரசோழியம் என்னும் தமிழ் இலக்கண நூலிலும் பவணந்தியின் நன்னூலிலும் அமைந்த சொல் வரலாற்றை ஆராய்ந்த நம் பேரறிஞர் இவ்விரு இலக்கண நூல்களும் சொற்களுக்கு முழுமை யான வரலாற்றை எடுத்துப் பேசவில்லை என்று குறிப்பிடுகின்றார். இதனை, வீரசோழியம் என்னும் தமிழ் இலக்கண நூலில் வடமொழி வியாகரணத்தைப்பின் பற்றித் தாதுப்படலம், கிரியாப்படலம் அமைத்துச் சொல் வரலாற்றைக் கூற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதில் அவ்வாசிரியர் வெற்றி பெறவில்லை என்றே சொல்ல வேண்டும் என்பதாகவும், நன்னூலில் சொற்களைப் பகுதி விகுதிகளாகப் பகுத்துச் சொல் வரலாற்றை ஓரளவு விளக்கியுள்ளார். ஆனால் அவரது நூல் தமிழ் மொழியில் உள்ள பல்லாயிரக் கணக்கான சொற்களுக்கு வரலாறு கூறாமல் சிலவற்றிற்கு மாத்திரம் வரலாறு உரைத்து அவ்வளவில் அமைந்து விடுகிறது என்றும் எடுத்துக் காட்டியுள்ளதால் அறியலாம்.
வீரசோழியம், நன்னூல் ஆகியவற்றிற்குப் பின் வந்த இலக்கண நூல்களும் கூறியது கூறியதன்றி வேறு ஒன்றையும் விளக்கவில்லை என்பதைக் கூறி, மேனாட்டாரில் பிஷப் கால்டுவெல், கிரையர்சன் போன்றோரே தமது பேருழைப்பால் பல அரிய செய்திகளை வெளிப்படுத்தியதையும் பாராட்டுகின்றார்.
சொற்கள் காரணம் பற்றி வழங்குவதற்கு விளக்கம்
சமுதாயமாகக் கூடிவாழத் தொடங்கிய மனிதக் கூட்டம் தன் எண்ணப் பரிமாற்றத்தைச் சைகை, மற்றும் ஒலிக்குறிப்புக்களினாலும் செய்துகொண்ட நிலையில் இருந்து மாறிக் காரணம் பற்றிச் சொற்களை வழங்கத் தொடங்கியது. அச்சொற்களுள் சுவைகளைப் பற்றுக் கோடாகக் கொண்டு தோன்றிய சில குறிப்புச் சொற்களும், முறைச் சொற்களும், எண்களை உணர்த்தும் சொற்களும், தன்மை முன்னிலைப் பெயர்களும் முதலில் தோன்றிப் பின் அதனடிப் படையிலேயே பற்பல சொற்கள் தோன்றி வழங்கின என்பது மொழி நூல் வல்லுநர்களின் கருத்து. இம் முடிவை ஏற்றுக் கொண்ட பேரறிஞர் அதற்கான விளக்கத்தை மிக நுணுக்கமாக விளக்குவது சிறப்பாக அமைகின்றது.
சுவைகளைப் பற்றுக் கோடாகக் கொண்டு தோன்றிய சில குறிப்புச் சொற்கள்
சுவைகளின் அடிப்படையில் சொற்கள் தோன்றுகின்றன என்பதை ஏற்ற அறிஞர் தொல்காப்பியத்தின் அடியொற்றிச் சில குறிப்புச் சொற்களைக் காட்டுகின்றார். இதனை, வெறுப்புச் சுவையில் சீ என்ற சொல்லும் வெகுளிச் சுவையில் போ என்ற சொல்லும், உவகைச் சுவையில் வா என்ற சொல்லும் எழுந்தன எனலாம். அங்ஙனமே, ஐ என்பது வியப்பினாலும், ஓ என்பது அவலத்தினாலும், ஐயோ என்பது அச்சத்தினாலும் தோன்றியவை என்றுணர்க என விளக்குகின்றார்.
முறையை உணர்த்தும் சில குறிப்புச் சொற்கள்:
முறையை உணர்த்தும் சொற்களை விளக்க வந்த அறிஞர் இன்று வழக்கிலும், இலக்கியத்திலும் அரிதாகக் கையாளப்பட்டுக் காணப்படும் தந்தையைக் குறிக்கும் அத்தன் என்ற சொல்லை எடுத்துக் கொண்டு விளக்குகின்றார். தமிழிலிருந்து பிரிந்த வழிமொழியாகிய மலையாளத்தில் தந்தை என்ற பொருளிலேயே இச்சொல் அச்சன் என்று இந்நாளில் வழங்கி வருகின்றது. அன்றியும், இவ்வொரு சொல்லே தமிழ்மொழியில் வெவ்வேறு முறைச் சொற்கள் தோன்றுவதற்குக் காரணமாக நிற்றல் அறியற்பாலது. அத்தன் என்பது தந்தையை உணர்த்தும் பழந்தமிழ்ச் சொல் என்பது முன்னர்க் கூறப்பட்டது. அத்தனுடைய மனைவி ஆத்தாள் எனப்பட்டாள். தாயை ஆத்தாள் என வழங்குவதை இந்நாளிலும் காணலாம்.
அத்தனுடைய உடன் பிறந்தாள் அத்தை என்று வழங்கப் பெற்றாள். அத்தையின் மகன் அத்தான் எனப்பட்டான். அவ்வத்தையின் கணவர் அத்தையன்பர் ஆயினார். அத்தையன்பர் என்ற சொல்லே இக்காலத்தில் அத்திம்பேர் என்று சிதைந்து வழங்குகின்றது. அத்தையின் மகளும் அத்தாச்சி என்று கூறப்பட்டனள் என்று இவ்வாறு அத்தன் என்ற ஒரு சொல்லடியாகப் பிறந்த சொற்களின் வரலாற்றை விளக்குகின்றார்.
அம்மை
அத்தன் என்ற சொல் போன்றே இன்று அரிதாக வழங்கப்படும் அம்மை என்ற சொல்லை வைத்துக் கொண்டு அதனடிப்படையாகத் தோன்றிய முறைப் பெயர்களை விளக்குகையில் அம்மையின் உடன்பிறந்தான் அம்மான் என்று கூறப்பெற்றனன். அம்மானுடைய மனைவி அம்மாமி என்று வழங்கப் பெற்றனள். அம்மானுடைய மகன் அம்மான்சேய் என்று சொல்லப்பட்டனன். அம்மான் சேய் என்ற இந்தச் சொல் இந்நாளில் அம்மாஞ்சி என்று சிதைந்து இடுகுறிப் பெயர் போல் வழங்குகின்றது.
அம்மாமி என்ற சொல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தில் அம்மாமி தன் லீவுங் கேட்டாயோ தோழி என்ற அடியில் பயின்று வருதல் காண்க என்பதாகக் காட்டுகின்றார்.
தகப்பன் -தாய்
இந்நாளில் மிகுதியாக வழக்கில் வழங்கும் சொற்கள் தகப்பன்-தாய் என்பன. இச்சொற்களின் தோற்றத்தைக் கூறவந்த அறிஞர் தம் அப்பன் என்ற இரு சொற்கள் சேர்ந்து தமப்பன் என்றாகி… இது நாளடைவில் தகப்பன் ஆகி நூலேறியது என்கின்றார். இவ்வாறே தம் ஆய் என்பது தாய் என்று மருவி வழங்குகின்றது. தமக்கு முன்பிறந்தாளைத் தமக்கை என்றும் அக்காள் என்றும் வழங்குவர். தம்+அக்கை என்பதே இப்பொழுது தமக்கை என்று வழங்குவது உணரற்பாலது எனத் தாய்,தமக்கை என்ற சொல் வரலாற்றையும் விளக்குகின்றார். இதுபோன்றே ஐயன், அண்ணன், தம்பி போன்ற சொல் வரலாற்றைக் கூறுவதும் சிறப்பாக அமைகிறது.
தாம் குறிக்கும் பொருள்களின் பழைய வரலாற்றை உணர்த்தும் சொற்களின் ஆய்வு
இன்று வழக்கில் நாம் பயன்படுத்தும் பல சொற்களின் பொருள் களை மேலோட்டமாக எண்ணிப் பார்த்தால் பொருள் தொடர்பற்றதாகக் காணப்படுகின்றன. ஆனால் அவற்றையே சற்று நுணுகி ஆராய்ந்தால் சொற்கள் தாம் குறிக்கும் பொருளின் வரலாற்றை உணர்த்துவனவாய் அமைந்துள்ளதை உணரலாம். இத்தகைய சொல்லாய்வைத் திறம்படச் செய்த நம் பேரறிஞர் ஒரு சில சொற்களின் மூலம் அவற்றை எடுத்துக் காட்டுகின்றார்.
குறுணி
இதனைக் குறுணிஎன்ற அளவினைக் கொண்ட கருவி. முற்காலத்தில மரத்தால் செய்யப்பட்டிருந்தமையால் அது மரக்கால் என்னும் பெயர் பெற்றது. இரும்புத் தகட்டினாலும் பித்தளைத் தகட்டினாலும் செய்யப்பெற்று, இக்காலத்தில் மக்களால் கையாளப் படும் குறுணியளவுக் கருவியும் மரக்கால் என்றே சொல்லப்பட்டு வருதல் குறிப்பிடத்தக்கது. எனினும், மரக்கால் என்ற சொல் அக்கருவியின் பழைய நிலையை அறிவித்தல் காண்க என்கின்றார்.
ஓலை, தோடு
இதன் வரலாற்றை, ஓலை, தோடு என்ற சொற்கள் தமிழ்நாட்டு மகளிர் அணிந்து கொள்ளும் காதணிகளாகும். அவர்கள் பனையோலைச் சுருளையும் தென்னையோலைச் சுருளையும் முன்னாளில் காதணி களாகக் கொண்டிருந்த காரணம் பற்றி அவை ஓலை எனவும், தோடு எனவும் சொல்லப்பட்டன. இக்காலத்தில் பொன்னாலும், மணி யாலும் செய்யப்பெற்ற காதணிகளும் ஓலை என்றும், தோடு என்றும் கூறப்படு கின்றன. ஆகவே, ஓலை, தோடு என்னுஞ் சொற்கள் அவ்வணிகளின் பழைய வரலாற்றை உணர்த்துதல் உணரத்தக்கது என்றளவில் எடுத்துக் காட்டுகின்றார்.
பிறமொழிச் சொற்களின் கலப்பறிதல்
காலச் சூழலாலும் தவிர்க்க இயலாத காரணங்களாலும் நம் செந்தமிழ் மொழியில் ஏராளமான பிற மொழிச் சொற்கள் குறிப்பாக முகமதியர்களால் உருதும், ஆங்கிலமும் பேச்சு, எழுத்து ஆகிய நிலைகளில் கலந்து போயின. இதனையும் நன்குணர்ந்த நம் பேரறிஞர் கி.பி.15ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரும், 17ஆம் நூற்றாண்டில் குமரகுருபரரும் தம் இலக்கியங்களில் கையாண்ட சபாஷ், சலாம் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றார். இதனை சபாஷ், சலாம் என்ற உருதுமொழிச் சொற்கள் புலவர் பெருமக்கள் மூலமாக இற்றைக்கு 300, 400 ஆண்டுகட்கு முன்னரே சிறந்த தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றமை உணரற்பாலதாம் எனக் கூறுகிறார்.
புதியன புகுதலை விரும்புதல்
தமிழ் மொழியில் பல்வேறு புதிய சொற்களின் தேவையை அறிந்த நமது பேரறிஞர் அத்தகைய புதுச் சொற்கள் மேலும் மேலும் பெருகவேண்டும் என விரும்பினார். எனவேதான் தொல்காப்பியமும், நன்னூலாரும் காட்டிய மேற்கோள்களை நமக்கு எடுத்துக் காட்டித் தமது விரிந்த எண்ணத்தைக் காட்டி நம்மை வியக்க வைக்கின்றார்.
இந்த அளவில் இக்கட்டுரையானது பேரறிஞரின், சொல் வரலாற்று ஆய்வு குறித்தும், சொல் வளர்ச்சி ஆய்வு குறித்தும், சொல்லின் பழைய வரலாற்று ஆய்வு குறித்தும் எதிர்கால நோக்கில் புதிய சொல் படைக்கும் தேவையை அறிவிப்பது குறித்தும் எடுத்துக்கூறி நிறைவு பெறுகிறது.
பண்டாரத்தாரின் இலக்கியப் புலமை
அ.இரா.பாகரன்
முகவுரை
இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்று ஆய்வறிஞர்களுள் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் குறிப்பிடத் தக்க வராய்த் திகழ்ந்துள்ளார். தமது வாழ்நாள் முழுமையும் இத்துறை யிலேயே உழைத்திட்ட அறிஞர் இவரெனலாம். இவரை நினைவுகூரும் சாதனங்களும், இவரின் நுண்ணறிவைப் பறைசாற்றும் ஆதாரங்களு மாய்த் திகழ்வன செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பொழில் போன்ற கருத்துப் பொருண்மை சான்ற பண்டைய இதழ்களும், அண்ணா மலைப் பல்கலைக்கழகமும், மணிவாசகர் நூலகமும் வெளியிட்ட ஆராய்ச்சி நூல்களுமேயாம்.
சிறப்புகள்
பண்டாரம் என்னும் சொல் வழக்கு, பொதுவாகச் செல்வம் என்னும் பொருள் தருவதாயினும், அஃது கல்விச் செல்வத்தையே குறிக்கும். பண்டைய காலத்தில் ஆதீனங்களில் விளங்கிய நூலகத்திற்குச் சரவதி பண்டாரம் என வழங்கியது இதற்குச் சான்றாம். இயல்பாகவே பண்டாரத்தார் எனச் சிறப்புப் பெயர் பெற்றிருந்த இவர் பெயருக்கேற்ப அறிவுச் செல்வராய் விளங்கியுள்ளார்.
இவரது பிறந்தகமே, வரலாற்றுச் சிறப்பும், பாடல் பெற்ற தலமுமாய் விளங்கும் திருப்புறம்பயம் என்னும் சிற்றூர்.
கொடிமாட நீடெருவு கூடல் கோட்டூர் கொடுங்கோளூர்
தண்வளவி கண்டியூரும்
நடமாடு நன்மருகல் வைகி நாளும் நலமாகும்
ஒற்றியூர் ஒற்றியாகப்
படுமாலை வண்டறையும் பழனம், பாசூர் பழையாறும்
பாற்குளமும் கைவிட்டிந்நாள்
பொடியேறு மேனியராய்ப் பூதம் சூழப் புறம்பயம்நம்
ஊரென்று போயினாரே
எனவரும் அப்பரடிகளது திருவாக்கால், இறைவன் ஏனைய திருத்தலங் களைப் புறம்பென்று தள்ளிப் புறம் பயத்தையே இருப்பிடமாய்க் கொண்டருளியுள்ளார் என்பது விளங்கும் இத்தகு சிற்றூரில் பிறந்த பண்டாரத்தார் அவர்களது ஆசிரியப்பணியும், ஆய்வுப்பணியும் குடந்தை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இனிதே நடந்தேறின.
இவரது நூல்கள் யாவிலும் காணும் தனிச்சிறப்பு ஏனையோரின் கருத்துக்களை மறுக்குமிடத்து, அவர்கள் கையாண்ட ஆதாரங்களுடன் மறுப்பதும், தம்கருத்தை நிறுவுமிடத்து ஏற்புடைய வலிய சான்று களுடன் அழுத்தமாய்ச் சொல்வதுமாகிய தர்க்க நெறிகளைப் பின் பற்றியதே, கருத்து வளமையும், அதனை எடுத்துச் சொல்லும் எளிமையும் பண்டாரத்தாரின் தனிச் சிறப்பெனலாம்.
வரலாற்று உண்மைகளை அகச்சான்றுகளான தமிழிலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு நிறுவத் தலைப்பட்டவர்களுள் பண்டாரத்தார் அவர்களே முதன்மையராய்த் திகழ்கிறார். டாக்டர் மா.இராசமாணிக்கனார், வை.சுந்தரேச வாண்டையார் போன்றோர் அவரின் வழியைப் பின்பற்றினர் எனலாம்.
இலக்கிய வரலாறு எழுதுதல்:
இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வறிஞராய்ப் பணியாற்றியபோது, தமிழிலக்கிய வரலாற்றை எழுதும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. துறைத்தலைவர் (அ.சிதம்பரநாத செட்டியார்) இவருக்கு எழுதப் பணித்த காலப்பிரிவு இருண்டகாலம் ஆகும். ஆதாரங்களே அற்றுப் போய்த் தமிழிலக்கிய வரலாற்றில் குழப்பம் விளைவிக்கும் இவ்விருண்ட காலத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள மற்றையோராயின் மயங்கி இருப்பர். நம் பண்டாரத்தார் அவர்களோ, எடுத்த பணியில் சிறிதும் தொய்வுறாது இவ்வாய்ப்பை நிகழ்த்தியதன் மூலம் தமது அளவற்ற ஈடுபாட்டையும், அறிவுத் திறனையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழிலக்கிய வரலாற்றின் அப்பகுதி, பல்கலைக்கழகத்தால் 1955-இல் வெளியிடப்பட்டுள்ளது. கடைச்சங்கத்தின் இறுதிக்காலம் முதல் தொடங்கி, காரைக்கால் அம்மையார், அப்பரடிகள், ஞானசம்பந்தர் காலத்திற்குச் சற்றுமுன்வரை அமைந்தது இருண்ட காலம் என்று பண்டாரத்தார் அந்நூலில் கால வரையறை செய்துள்ளார்.
கடைச்சங்கத்தின் இறுதிக்காலம் பற்றி மு.இராகவையங்கார் அவர்கள், அது கி.பி.5-ஆம் நூற்றாண்டு என்றே கூற வந்த இடத்தில், அகநானூற்றுப் பாடல் ஒன்றை உதாரணம் காட்டுகிறார்.
’பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதல் கரந்த நிதியங் கொல்லோ?
என்னும் அப்பாடலின் பொருளாக, கங்கைக் கரையிலுள்ள பாடலிபுத்திர நகரம் வெள்ளப் பெருக்கால் அழிவுற்றது என்கிறார். இந்நிகழ்ச்சி ஐந்தாம் நூற்றாண்டளவில் நிகழ்ந்துள்ளது எனவும், இக்குறிப்பு சங்கநூலான அகநானூற்றில் காணக் கிடப்பதால் கடைச்சங்க காலம் ஐந்தாம் நூற்றாண்டு வரையில் விளங்கிற்று எனவும் கூறுகிறார்.
பண்டாரத்தார் அவர்கள் அப்பாடலின் பொருள், பாடலிபுத்திர நகரில் ஆட்சி புரிந்த நந்தர் என்பார், மாற்றாரின் தாக்குதலில் அழியாவண்ணம், கங்கையாற்றின் அடியில் மறைத்து வைத்த செல்வம் எனக் கொண்டு, பாடலிபுத்திரம் கங்கையால் அழிந்த செய்தியன்று அது என்கிறார்.
அகநானூற்றுக்குப் பொருள்கண்ட வேங்கடசாமி நாட்டாரின் உரையும் இதற்குச் சான்றாய் அமைந்திருக்கிறது. அப்பாடலின் பொருள் தலைவியே! இனிய குரலையும், அறல்போலும் கூந்தலையும் உடைய உன்னைப் பிரிந்து, எருதினை மாய்த்து ஊனுண்டும், கள்ளுண்டும், இடையறாது கோட்டான்போல ஒலித்துக்கொண்டும் இருக்கின்ற வேடர் கூட்டமும், யானைக் கூட்டமும் நிறைந்த வேங்கடமலை தழுவிய பாலையைக் கடந்து சென்ற உனது தலைவன் பெறும் செல்வம் இமயமலையினும் பெரிதோ? அன்றி, நந்தர் சீர்மிகும் பாடலியில் கங்கைக் கரையில் மறைத்த செல்வத்தினும் பெரிதோ? என்கிறார் பாடலாசிரியர் மாமூலனார்.
அகநானூற்றின் மற்றைய பாடல் ஒன்றிலும், இப்புலவரே, நந்தன் என்பான் தொகுத்து வைத்த செல்வத்தையே எய்துவதாயினும், உன் தலைவன் நீண்ட நாட்கள் உன்னைப் பிரிந்திருக்க மாட்டான் என்கிறார்.
நந்த்ன் வெறுக்கை எய்தினும், மற்று அவன் தங்கலர்.
என்பது அப்பாடல். நாட்டார் உரையில் பாசுபுத்திரம் ஆண்ட நந்த அரசருள் ஒருவன், மகாபதுமம் என்னும் பெருஞ்செல்வம் அடைந்த வனாதலின், மகாபதும நந்தன் எனப் பெயர் பெற்றான் என்பது, வடநூல்களில் அறியப்படுதலின் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
எனவே, இராகவையங்கார் அவர்கள் அகநானூற்றுப் பாடலுக்குக் கண்ட மருளான பொருளை மறுத்தும், அதனால் நந்தர்களது ஆட்சிக் காலம், கி.மு.413-க்கும், கி.மு.322-க்கும் இடைப்பட்டதாதலின், அஃது 5-ஆம் நூற்றாண்டு எனக் கொண்ட கடைச்சங்க காலத்தைக் குறிப்பதன்று என வன்மையாய்ப் பண்டாரத்தார் மறுத்துள்ளார்.
இதனால் இவர்தமது இணையற்ற இலக்கிய ஈடுபாடும், சான்று காட்டும் திறனும் தெளிவாய் விளங்குகின்றன. இதுபோன்றே, சோதிடக் குறிப்புகளின் துணைக்கொண்டு சிலப்பதிகாரத்தில் வரும் காலக் குறிப்பிற்கேற்ப மதுரைமாநகர் எரியுண்டது கி.பி.756-ஆம் ஆண்டு எனவும், கடைச்சங்கத்து இறுதிக்காலமும் அதுவே எனவும் கூறிய திவான்பகதூர் எல்.டி.சாமிக் கண்ணுப் பிள்ளையின் கணிப்பும் தவறானது எனப் பண்டாரத்தார் முடிவாய்த் தமிழ் இலக்கிய வரலாற்றில் உணர்த்துகின்றார்.
சுந்தரர் காலம்
இனி, சைவக் குரவருள் ஒருவரும், ஏழாம் திருமுறைப் பதிகங்களை அருளியவருமாகிய சுந்தரமூர்த்தி நாயனாரின் காலத்தைப் பண்டாரத்தார் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கின்றார். இதனிலும் இவர் தமது இலக்கியப் புலமை சுடர்கின்றது. சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையில், தனியடியார் அறுபத்து மூவரையும், தொகையடியார் ஒன்பதின்மரையும் சிறு குறிப்புத் தோன்ற மட்டுமே பாடியுள்ளார். அதனிலும் பொதிந்து கிடக்கும் உண்மையைப் பண்டாரத்தார் வெளிக்கொணர்கின்றார். கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற காடவர்கோன் சுழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் என்று காடவர்கோனை விளிக்கின்றார்.
ஏனைய நாயன்மார்களைக் குறித்த இடத்தில் இறந்த காலப் பெயரெச்சங்களைப் பயன்படுத்திய சுந்தரர், சுழற்சிங்க நாயனாரைக் குறிக்கும்போது மட்டும் நிகழ்காலப் பெயரெச்சத்தைக் கைக்கொண்டார். இந்தக் காக்கின்ற என்னும் சொல்லே சுந்தரர் சுழற்சிங்கன் காலத்தவர் என்பதைப் புலப்படுத்தும் என்கிறார்.
பெரியபுராணம் இவரை,
காடவர் குரிசிலராம் கழற்பெருஞ் சிங்கனார்
எனவும்,
கச்சிக் கற்றளி எடுத்த காடவர் கோமான்
எனவும்,
விளிக்கிறது. இம்மன்னர், இறைவர்பால் கொண்ட ஈடற்ற அன்பால், காதல் மாதேவி தனது செய்ய கையினைத் தடிந்த சிங்கராய்க் கடிமதில் மூன்றும் செற்ற கங்கைவார் சடையார், செய்ய அடிமலர் அன்றி வேறொன்றும் குறியா நீர்மைக் கொடிநெடுந் தானை மன்னராய்த் திகழ்ந்துள்ளார்.
இப்பாடல் வரிகளின்மூலம், இப்பல்லவ மன்னன், தமிழகத்தின் மூத்த கற்றளியாம் காஞ்சிக் கயிலாயநாதர் ஆலயத்தைக் கட்டினவன் என்றும், இறைவன் மேனியில் சாத்த இருந்த மலரை மோந்த காரணத் தால், தன் பட்டத்தரசியின் கைகளைச் செருத்துணையார் துணித்ததைப் போற்றியதோடன்றி, அவள் தன் மூக்கையும் அறுத்தெறிந்த வன் செயலால் தனது ஈடற்ற இறையன்பை வெளிப்படுத்தினன் என்றும் சேக்கிழார் உணர்த்துகின்றார்.
சுந்தரரும் நரசிங்கவர்மனும் சமகாலத்தவர் என்பதைச் சுந்தரர் திருவாக்கினாலேயே சுட்டிய திறம் வியப்பிற்குரியது.
நம்பியாண்டார் நம்பி காலம்
இதைப்போன்றே, சைவத் திருமுறைகளைத் தொகுத்தளித்த
வரும், திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவருமாகிய நம்பியாண்டார் நம்பிகள் முதலாம் ஆதித்த சோழன் காலத்தவர் என்பதைப் பண்டாரத்தார் நிறுவுகிறார்.
புலமன்னிய மன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்த
குலமன்னிய புகழ்க்கோ கனநாதன் குலமுதலோன்
சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன் குலமுதலோன்
எனவரும் திருத்தொண்டர் திருவந்தாதிப் பாடல்களில் குறிக்கப்படும் சோழமன்னன், சோழப் பேரரசை நிறுவிய விஜயாலயனின் மகனான முதலாம் ஆதித்தனே எனவும், இவனது காலமான கி.பி.870 முதல் 907-வரையிலான காலத்தில் நம்பியாண்டார் நம்பிகள் இருந்துள்ளார் எனவும் பண்டாரத்தார் ஆய்ந்துள்ளார்.
பிற ஆய்வுரைகள்
இஞ்ஞனம் கருத்து வளமையும், துறைபோகிய புலமையும் சான்ற நம் முன்னோர் திருவாக்கினாலேயே வரலாற்றுண்மைகளுக்கு விளக்கம் கண்டது பண்டாரத்தாரின் இலக்கியப் புலமைக்குச் சான்று தருவதாகும். கோயில் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் வரலாற்று ஆய்வுக்குச் சாலவும் பொருந்துவன என்று மேலை நாட்டவர் உணர்த்தியபின், நம்மவர்கள் பேரார்வத்துடன் இத்துறையில் தமது பேருழைப்பை நல்கியுள்ளனர். முதற்கட்டமாக மு.இராகவையங்கார், கோபிநாதராயர், வெங்கய்யா, இலக்கண விளக்கம் சோமசுந்தர தேசிகர் போன்றோர் மூவேந்தர்கள், பல்லவர்கள் தமது ஆட்சி உண்மையை வெளிப்படுத்தும் ஆதாரங்களாய்க் கல்வெட்டுச் செய்திகளை மேற் கொண்டனர். அதனையடுத்து அகச்சான்றுகளாகிய இலக்கியத்தையும் துணையாய்க் கொண்டு, இரண்டையும் ஒப்புநோக்கி, வரலாற்று முடிவுகளைத் தெளிவாய் வரையறுத்துச் சொன்னது கல்வெட்டியலின் இரண்டாம் கட்ட வளர்ச்சியாகும். சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் இக்கலையில் நன்கு தேர்ந்தவர் என்பதை அவர்தமது எழுத்துக்கள் பறைசாற்றுகின்றன.
தொல்காப்பியத்திற்கு உரைகண்ட இளம்பூரணரும், குறளுக்கு உரைசெய்த மணக்குடவரும் ஒருவரே என இதுகாறும் இலக்கிய உலகம் காணாப் புதிய உண்மையைப் பண்டாரத்தார் கண்டறிந்துள்ளார். இரு உரைகளிலும் காணும் சொற்பிரயோகம், பொருளமைப்பு, தொல்காப்பிய உரைப்பாயிரச் செய்யுள் போன்றவற்றை ஆதாரமாய்க் கொண்டு இவ்வுண்மையைக் கண்டுள்ளார்.
அவ்வாறே மூவர் முதலிகளின் திருமுறைப் பாடல்களைத் தேவாரம் என முதன்முதலாய் அழைத்தவர்கள் இரட்டைப் புலவர்களே ஆவர் என்கிறார்.
மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும்
தேவாரம் செய்த திருப்பாட்டும் என்பது
இரட்டையர் பாடல். இவர்களுக்கு முன்பு இச்சொல், வழிபாடு என்னும் பொருளில் வழங்கியது என்றும் கூறியுள்ளார்.
சொல்லாய்வு
எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே என்னும் தொல் காப்பியர் கணிப்பினால், தமிழ்ச் சொற்கள் யாவும் ஆழ்ந்த பொருட் சிறப்பினை உடையன என்பது விளங்கும். சங்க இலக்கியங்களில் நம் முன்னோர் பெய்துள்ள சொற்களின் பொருட்சிறப்பைச் சிந்திப்பின் வியப்பளிப்பதோடு, அவர்கள் கையாண்ட உவமைப் பொருள் தரும் சொற்களே அவர்கட்குப் பெயராய் அமைந்ததும் வியப்பளிப்பனவாம். செம்புலப் பெயல் நீரார், விட்ட குதிரையார், மீனெறி தூண்டிலார், கல்பொரு சிறுநுரையார், காக்கை பாடினியார் போன்றவை சான்று களாம்.
அவற்றுள், புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களை எழுதிய புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்பவர். இவரது இயற் பெயர் சாத்தனார் ஆகவும், பிறந்தகம் உறையூராகவும் இருக்க முதுகண்ணன் என்னும் சிறப்புப் பெயர் எஞ்ஞனம் வழங்கிற்று என்பதைப் பண்டாரத்தார் விளக்குகிறார். முதுகண்ணன் என்னும் சொல்லின் பொருள், தமக்கு மிக நெருங்கியவர்களான ஆண் பெண் மக்களையும் அவர் தமது பொருள்களையும் பாதுகாக்கும் பொறுப்புடைய வயது முதிர்ந்த பெரியவர்களைக் குறிக்கும் என்கிறார். வடமொழியில் போஷகர் எனவும், ஆங்கிலத்தில் கார்டியன் எனவும் வழங்குவதன் சரியான தமிழ்ச்சொல் இதுவே என்பதைக் கல்வெட்டின் துணைக்கொண்டு விளக்குகிறார்.
இச் சுந்தரபட்டனையே முதுகண்ணாக உடைய
இப்பொன்னார் மேனி பட்டன் மாதா உமையாண்டாளும்
என்னும் கல்வெட்டுத் தொடரைச் சான்று காட்டியதன் மூலம், நல்ல தமிழ்ச்சொல் ஒன்றின் பயன்பாட்டை வெளிப்படுத்திஉள்ளார்.
வேர்ச்சொல் ஆய்வறிஞரும், செந்தமிழச் சொற்பிறப்பியல் அகராதியின் தந்தையுமாகிய தேவநேயப் பாவாணர் அவர்களும், இத்தகு சொல்லாய்வில் வல்லமை பெற்றிருந்ததைத் தமிழுலகம் நன்கறியும்.
பிற நூல்கள்
காவிரிப்பூம்பட்டினம் என்னும் நூலில் அந்நகரின் பண்டைய அமைப்பையும், சிறப்பையும், பண்டாரத்தார் மிக எளிமையாய் எழுதி யுள்ளார். அந்நூல் மேலப்பெரும்பள்ளம் மாதவி மன்றத்தாரால் 1959-இல் வெளியிடப்பட்டுள்ளது. ஊர்ப்பெயர்கள் காலப்போக்கில் சிதைந்தும், திரிந்தும் வழங்கிவரும் உண்மையை, அந்நூலில் காணலாம். புகார் நகரத்தின் காவல் தெய்வமான சம்பாபதிக் கோயில் திருச்சாய்க் காட்டிற்கு அண்மையில் உள்ளது எனவும், இதன் அண்மையில் உள்ள பூவணமே மணிமேகலையில் வரும் உவவனம் ஆகும் எனவும் குறித்துள்ளார்.
செந்தமிழ் 29-ஆம் தொகுதியில் இவருடைய உலாக் கொண்ட மூன்று சோழ மன்னர்கள் என்னும் கட்டுரை ஒட்டக்கூத்தரை அரசியல் ஆசானாய்க் கொண்டு கோலோச்சிய விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், ராஜராஜேவரம் எடுப்பித்த இரண்டாம் இராசராசன் ஆகிய மூவரின் பெருமை களையும் மூவேந்தர் உலா, தக்கயாகப்பரணி, கலிங்கத்துப் பரணி போன்ற நூல்களின் துணைக்கொண்டு விரிவாக ஆய்ந்தெழுதியுள்ளார்.
முடிபு
இதுகாறும் கூறியவற்றால் சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் தம் வாழ்நாள் முழுமையும், இலக்கியம், வரலாறு, கல்வெட்டாய்வு இவற்றிலேயே தமது முழுஈடுபாட்டையும், உழைப்பையும் ஈந்துள்ளார் என்பது விளங்கும். தமிழிலக்கியம் பரந்துபட்டது. முழுமையும் வெளிச் சத்திற்கு வராத உண்மைகளைத் தன்னகத்தே கொண்டது. இவ் விலக்கியத்துள்ளும், தமது நோக்கம் சிதையா வண்ணம் புகுந்து ஆய்ந்து, கற்பித்துப் புலமைத் திறங்காட்டியவர் பண்டாரத்தார் ஒருவரேயாம்.
சமகாலத்து அறிஞர்கள் பார்வையில் பண்டாரத்தார்
பானுமதி சத்தியமூர்த்தி
முன்னுரை
இன்று நம்மால் ஆராய்ச்சிப் பேரறிஞர் என்றும், வரலாற்றுப் பேரறிஞர் என்றும், சரித்திரப் புலி என்றும் அழைக்கப்பெறும் அறிஞர் பண்டாரத்தார், தமது காலத்து அறிஞர்கள் பார்வையில் எவ்வாறு காட்சியளித்தார் என்பதனை ஆய்ந்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
குணநலன்கள்
அறிஞர் பண்டாரத்தாரின் குண நலன்களாகப் பலர் பல கருத்துக் களை வெளியிட்டுள்ளனர். பண்டாரத்தார் அடக்கமும், அமைதியும், எளிமையும் உடையவர். பேரறிஞராக விளங்கிய இவர், தம்மைப் பற்றித் தாமே சுய விளம்பரம் செய்து கொள்ளாத பெருந்தகையாளர். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் அவரை. "ஒதுங்கி வாழ்ந்தவர்; கூட்டங்களில் கலந்து கொள்ளாதவர்; அரசியல் சார்பில்லாதவர்; சிபாரிசுக்கு ஆள் பிடிக்காதவர்…. எனப் பிறர் சுட்டும் நிலையினை எடுத்துக்காட்டலாம். அவர் இயல்பாகவே பயந்த சுபாவம் உடையவர் ஆவார். பிறரிடம் குறைகாணாப் பெருந்தகையாளர் அவர்.
இவை அனைத்தும் பண்டாரத்தாரது குணநலன்களை எடுத்துக் காட்டும் பகுதிகளாகும். அறிஞர் மத்தியில் அவரது ஆய்வுகள் பெற்ற இடத்தினைத் தொடர்ந்து நோக்கலாம். பள்ளிப் படிப்பு வரையே படித்த பண்டாரத்தாருக்கு அவரது ஆசிரியரான வலம்புரி அ.பாலசுப்பிரமணிய பிள்ளை என்பவர் நெருங்கிய நண்பராக அமைந்தார். அதன் விளைவாக, அவ்விருவரும் இணைந்து சைவ சிகாமணிகள் இருவர் என்ற நூலை எழுதினர்.
பண்டாரத்தார் தமது திருமணத்திற்கு முன்பாக 1914-இல் இருந்தே மதுரையில் இருந்து வெளிவரும் செந்தமிழ் என்னும் இதழில் எழுதத் தொடங்கினார். அவரது அந்த ஆய்வுகள் அறிஞர் பலரது கவனத்தை ஈர்த்தன. பண்டாரத்தாரை நேரில் பார்த்து அறியாத நேரத்திலேயே அவரது எழுத்தின் மூலம் அவர்மீது நன்மதிப்பு வைத்திருந்தவர் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆவார்.
எனவேதான் நாட்டாரைச் சந்திப்பதற்குப் பண்டாரத்தார் சென்றபோது, அவரது பணி தொடரும் வகையில் தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை அவர்களுக்குச் சிபாரிசு கடிதம் தந்து, பண்டாரத்தாருக்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் நாட்டார்.
நாட்டாரைப் போன்றே அறிஞர் பி.ஸ்ரீயும் பண்டாரத்தார் செந்தமிழில் எழுதியதைக் கண்டு, தமிழ்ப் பண்டிதர்களில் ஒருவர் வரலாற்றுப் பேரறிஞராகி ஆராய்ச்சி உலகில் மைல் கற்கள் நாட்டப் போகிறாரே என்ற அதிசயமும் ஆனந்தமும் ஒருங்கே அடைந் திருக்கிறார். அந்த அளவிற்குப் பண்டாரத்தாரின் தொடக்கக் கால ஆய்வுகளே வரலாற்று ஆய்வுகளாக அமைந்தன.
மேலும் தமிழறிஞர்கள் வரலாற்று ஆய்வில் ஈடுபடுவது மிகக் குறைவு. இச்சூழலில் இலக்கியங்களையும், கல்வெட்டுக்கள், அயல் நாட்டார் எழுதிவைத்த குறிப்புக்கள் போன்ற வரலாற்று மூலங்களையும் அடிப்படையாகக் கொண்டு தமது ஆய்வுகளை நிகழ்த்தினார் பண்டாரத்தார். எனவேதான், பலரது கவனத்தையும்அவரால் ஈர்க்க முடிந்தது.
நாட்டாரின் பரிந்துரையின் பேரில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் எல்.டி.சாமிக்கண்ணுப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற நான்காம் ஆண்டு நிறைவு விழாவில் கல்லாடமும் அதன் காலமும் என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரையானது அறிஞர்கள் மத்தியில் இவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட அறிஞர் பா.வே.மாணிக்க நாயக்கர், கி.வி.கனகசபை பிள்ளை ஆகியோர் இவரது ஆய்வை வெகுவாகப் பாராட்டி உரைத்தனர்.
இந்த நேரத்தில்தான் பண்டாரத்தாரின் திறமையைக் கண்டு கரந்தைத் தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை அவருக்கு அடிக்கடிக் கடிதம் எழுதித் தமிழ்ப் பொழிலுக்குத் தொடர்ந்து கட்டுரைகள் எழுது மாறு தூண்டினார். மேலும் அவர், அடிக்கடிக் கடிதம் எழுதித் தொந்தரவு தருகிறேன் என்பது பற்றிச் சினவாதிருக்க என்றெல்லாம் எழுதிப் பண்டாரத்தாரை ஊக்கப்படுத்தியதாகவும் அறிய முடிகிறது.
பண்டாரத்தாரது முதல் நூலான முதற்குலோத்துங்க சோழன் அறிஞர்கள் பலராலும் பாராட்டப் பெற்றது. தமிழறிஞரான பண்டாரத் தாரின் குலோத்துங்க சோழனைக் கண்ட சாமிநாதையர், அவரது கல்வெட்டுப் பயிற்சி, சங்க இலக்கியப் புலமை ஆகியவற்றை வெகுவாகப் பாராட்டுகிறார். மேலும், தமிழ்மொழி இக்காலத்தில் பல துறைகளிலும் வளர்ச்சியுற்று வருகிறதென்பதற்கு இந்நூலாசிரியரது கல்வி முறையையே ஓர் இலக்காகக் கூறலாம். இந்தச் சரித்திரத்தி லுள்ள விஷயங்கள் விளங்கும்படி நன்றாக முறைப்படுததி எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடுகிறார். மேலும் ஹிந்து, நவசக்தி, செந்தமிழ் முதலான இதழ்களும் அவரது முதல் நூலையே தலைசிறந்த நூலாகப் பாராட்டி உரைத்தன.
பண்டாரத்தாரின் முதற் குலோத்துங்கன் என்னும் நூலைக் கண்ட செந்தமிழ் இதழானது சரித ஆராய்ச்சியில் தமிழ்ப் புலவர்கள் அதிகமாகத் தலையிடவில்லை என்ற குறையைப் பண்டாரத்தார் போக்கிவிட்டார் என்று கூறி மகிழ்கிறது. இத்தகைய சிறப்புகளைப் பெற்றிருந்த காரணத்தினாலேயே அந்த நூலைச் சென்னைப் பல்கலைக் கழகத்தார் இண்டர்மீடியேட்டிற்குப் பாடநூல்களுள் ஒன்றாக வைத்துப் பண்டாரத்தாரைச் சிறப்பித்தனர்.
பின்னர் அவரெழுதிய பாண்டியர் வரலாறு (1940) என்ற நூல் பலராலும் பாராட்டப்பட்டது. அந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய த.வே.உமாமகேசுவரன்,பண்டாரத்தாரதுபணியைக் கட்டுரை வன்மை யும் கலை பயில் தெளிவுமுடைய இத்தமிழ்ப் புலவர் இந்நூலை இயற்றி உதவியது யாம் நன்றியுடன் போற்றத் தகும் செயல் எனக் குறிப்பிடு கிறார். இந்த நூலும் சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் அண்ணா மலைப் பல்கலைக் கழகம் ஆகிய இரண்டிலும் புலவர் தேர்விற்குரிய பாட நூல்களுள் ஒன்றாக வைக்கப் பெற்றது.
பிற்காலச் சோழர் வரலாற்றைத் தெளிவாகத் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் பண்டாரத்தார் ஆவார். இவருக்கு முன்பு கே.ஏ.நீலகண்ட சாதிரி ஆங்கிலத்திலும், டி.ஏ. கோபிநாத ராயர் தமிழிலும் சோழர் வரலாற்றை எழுதியுள்ள போதும் இவரது பிற்காலச் சோழர் சரித்திரம் (மூன்று பாகங்கள் - 1949, 1951, 1961) தமிழக வரலாற்று நூல்கள் வரிசையில் ஒரு மைல் கல்லாக அமைகிறது. சோழர் வரலாற்றில் அந்நூலால் விளக்கம் பெற்ற பகுதிகள் பலவாகும். அந்நூலின் சிறப்புக்களுள் சிலவற்றைப் பட்டியலிட்டும் காட்டுகிறார் அறிஞர் கோ.சுப்பிரமணிய பிள்ளை.
பண்டாரத்தாரது சோழர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கல்கி, சாண்டில்யன் போன்றோர் தங்களது வரலாற்று நாவல்களைப் படைத்தனர்.
கல்கியில் பொன்னியின் செல்வன் வெளிவந்த பொழுது அத்தொடரில் இடம் பெற்ற பெயர்கள் பல, பலருக்கு மருட்சியை ஏற்படுத்தின. அந்த நேரத்தில் தமது நாவல் சரித்திர ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதென்றும், அதற்குரிய மூல நூல்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது பண்டாரத் தாரின் சோழர் சரித்திரம் என்றும் நன்றியோடு குறிப்பிடுகிறார் கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி.
பண்டாரத்தாரைப் பாராட்டும் வகையில் அவருக்கு ஒரு விழா எடுக்க வேண்டும் என்றும் எண்ணியிருந்தார் கல்கி. ஆயினும் தமது எண்ணம் நிறைவேறுவதற்கு முன்பாகவே கல்கி காலமாகிவிட்டார் என்று வருத்தத்தோடு குறிப்பிடுகிறார் சோமலே.
பண்டாரத்தாரின் சோழர் வரலாறு சிலருக்குப் பொறாமை உணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத்தான் அறிஞர் சோமலே, பிறர் குறைகாணாப் பெருந்தகையராக அவர் வாழ்ந்தார். அவரிடம் தமிழன்பர்கள் கண்ட ஒரே குறை, சோழர்களின் புகழை உச்சிமேல் ஏற்றி விட்டாரே என்பதுதான் என்று குறிப்பிடுகிறார்.
பண்டாரத்தார் தல வரலாறு என்னும் வகையில் திருப்புறம்பயத் தல வரலாறு, செம்பியன் மாதேவித் தல வரலாறு ஆகிய இரண்டு நூல்களை எழுதியுள்ளார். தல வரலாறுகள் பெரும்பாலும் புராணங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டு வந்த காலத்தில், கல்வெட்டுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு தல வரலாற்றை எழுதிய பெருமைக்குரியவர் பண்டாரத்தார்.
அவரது செம்பியன் மாதேவித் தல வரலாறு, அவர் தமது இறுதிக் காலத்தில் எழுதிய நூலாகும். அந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய சா.கணேசன் என்பவர் பண்டாரத்தாரைப் பற்றி வரலாற்று நூலறிவும், கல்வெட்டு ஆராய்ச்சியும், இலக்கியப் புலமையும், சரித்திரத் தேர்ச்சியும் சமய ஒழுக்கமும், சீரிய பண்பாடும் நிரம்பிய நுண்மாண் நுழைபுலம் கொண்டவர். பன்னூல் எழுதிப் பழுத்தவர். இப்பணியை நிறைவேற்ற அவர்களைத் தேர்ந்தெடுத்த ஒன்றே போதும்… என்று குறிப்பிடுவது நம் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும். எனவே தான் அவரது செம்பியன் மாதேவித் தல வரலாற்றை, இதுவரை வெளிவராத பல அரிய செய்திகளை அவர் அந்நூலில் கொடுத்துள்ளார் என்று அறிஞருலகம் நன்றியோடு நினைவு கூர்கிறது.
நடை
கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டுமானால், அவற்றின் நடை மிக எளிமையாக இருக்க வேண்டும். பண்டாரத்தாரின் நடை யானது அறிஞர்கள் பலரையும் கவர்ந்திருக்கிறது. பொழிற்றொண்டர் ஒருவர் அவரது நடையைப் பற்றி எழுதுமிடத்து, வரலாறு எழுதுவார் கையாளும் உரைநடை படிக்கச் சலிப்பாக இருக்கும். அய்யா அவர்களின் நடை கதை சொல்லுவது போலத் தொடர்புபட்டு இழுமெனச் செல்லும் இயல்புடையது. இதற்குக் காரணம், அய்யா அவர்கள் தாம் எழுதுவதற்கு மூலமாக அறிந்த செய்திகளைத் தம்முடையதாக்கிக் கொண்டு தாம் கூறுவது போலக் கூறும் வளஞ்சான்ற புலமைத் திறமாகும் எனக் குறிப்பிடுகிறார்.
பண்டாரத்தார் தென்னக வரலாற்றை எழுதுவதற்கு முன்பு, இந்திய வரலாற்றை எழுதியவர்களெல்லாம் தென்னக வரலாற்றை ஒதுக்கி வந்தனர் என்ற ஆதங்கம் பலருக்கு உண்டு. இச்சூழலில்தான், தென்னக வரலாற்றின் சிறப்புக்களையெல்லாம் எடுத்துரைத்து, தென்னக வரலாறு இந்திய வரலாற்றுக்கு அடிப்படையானதென முதற்குரல் கொடுக்கிறார் பண்டாரத்தார். இதனை நன்றியுணர்வோடு அறிஞர்கள் பேசியுள்ளனர்.
இவ்வாறு பண்டாரத்தாரின் பெருமைகளாக அறிஞர்கள் பார்வையில் பட்ட செய்திகளை ஏராளமாக நாம் எடுத்துக்காட்டலாம். ஆயினும், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் அவரிடம் குறை காணவும் வாய்ப்பு உண்டு. அவர்களுக்கும் பண்டாரத்தார் தமது முதல் நூலிலேயே பதில் கூறிவிட்டார். அவர், இத்தகைய ஆராய்ச்சி நூல்களில் சில இடங்களில் கருத்து வேறுபாடு நிகழ்தலும், இனிக் கிடைக்கும் கருவிகளால் சில செய்திகள் மாறுபடுதலும் இயல்பு என்பது நன்கு அறிந்ததேயாகும் எனக் குறிப்பிடுவதை இங்கு எடுத்துக்காட்டுவது மிகப் பொருத்தமுடையதாக அமையும்.
தமிழுலகில் மிகப்பெரும் பணிகள் ஆற்றிய உ.வே.சாமிநாதையர், மு.இராகவையங்கார், பாரதியார், பாரதிதாசன் முதலான பெரு மக்களெல்லாம் விமர்சனங்களுக்கு உட்பட்டமை கண்கூடு. அவ்வரிசை யில் பண்டாரத்தாரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்தான்.
எத்தகைய விமர்சனங்கள் எழுந்தாலும் அவரது அயராத உழைப்பு, வரலாற்றில் உண்மை காணவேண்டும் என்ற ஆர்வம், உண்மையைக் கண்டுணர்த்திய முறைமை, அனைத்திற்கும் மேலாக ஆராய்ச்சி உலகிற்கென்று அவர் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அந்த இயல்பு ஆகியவற்றை எவராலும் விமர்சிக்க இயலாது என்பது மட்டும் உண்மை.
முடிவுரை
இதுகாறும் கண்ட செய்திகளையெல்லாம் தொகுத்து நோக்கு மிடத்து, வரலாற்றையும் இலக்கியப் புலமையும் ஒருங்கே பெற்றுத் தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர் பெருமக்களுள் ஒருவராகவும், சிறந்த பண்பாளராகவும் விளங்கியவர் அறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் என்பது விளங்கும்.
பண்டாரத்தாரின் ஆய்வுக் கட்டுரைகள்
டாக்டா அ.ம.சத்தியமூர்த்தி
அறிஞர் சதாசிவப் பண்டாரத்தாரின் ஆய்வுகளுள் பெரும்பாலானவை இதழ்களில் கட்டுரைகளாக வெளிவந்து, பின்னர் நூல்வடிவம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் இதுநாள்- வரை நூல்வடிவம் பெறாத பல கட்டுரைகளும் உண்டு. அத்தகைய ஆய்வுக் கட்டுரைகளைப் பற்றி ஆய்ந்து உரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆய்வுக்கட்டுரைகள்
அறிஞர் சதாசிவப் பண்டாரத்தாரின் முதற் குலோத்துங்க சோழன், பாண்டியர் வரலாறு ஆகிய இருநூல்களும் செந்தமிழ், தமிழ்ப்பொழில், ஆகிய இரண்டு இதழ்களில் கட்டுரைகளாக வெளிவந்து நூல் வடிவம் பெற்றவையாகும். 1949-இல் வெளிவரத் தொடங்கிய பிற்காலச் சோழர் வரலாற்றிற்கு 1913-இலேயே அவர் திட்டமிட்டிருக்கிறார். அவரது முதல் கட்டுரை 1914-ஜனவரிக்குரிய செந்தமிழ்த்தொகுதி 12 பகுதி -2இல் வெளிவந்த சோழன் கரிகாலன் என்று கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சோழர் வரலாறு தொடர்பாகச் சோழன் செங்கணான், சோழர் குடி, முதற் கண்டராதித்த சோழ தேவர், மழவர் வரலாறு, உலாக் கொண்ட மூன்று சோழ மன்னர்கள், சோழர்களும் தமிழ்மொழியும் முதலான பல கட்டுரைகளை அவரெழுதியுள்ளார்.
இவ்வறிஞர் பெருமகனார் எழுதி இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புக்கள் இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக் களும், கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள் என்னும் இரு நூல்களாக வெளிவந்துள்ளன. இவ்வாறு வெளிவந்தவை நீங்கலாகப் பலரது கவனத்திற்கு வர வேண்டிய கட்டுரைகளும் மிகுதியாக உள்ளன.
இடம்பெற வேண்டிய விவரங்கள்
வெளிவந்துள்ள இரண்டு கட்டுரைத் தொகுப்பு நூல்களிலுள்ள ஒரு குறை அக்கட்டுரைகள் இதற்கு முன்பு எவ்வெவ் இதழ்களில் வெளி வந்துள்ளன என்பது பற்றிய விவரங்கள் காணப்படவில்லை என்ப தாகும். அத்தகைய விவரங்கள் இல்லையாயின் கட்டுரைகள் கூறும் செய்திகளின் நம்பகத் தன்மையானது குறையும்.
சான்றாக, அறிஞர் பெருமகனாரின் இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் என்ற நூலில் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியப்பெறும் மூன்று தமிழ்நூல்கள் என்ற கட்டுரையை இங்கு எடுத்துக்காட்டலாம். 1961இல் வெளிவந்த அந்நூலில் காணப்படும் இக்கட்டுரை கூறும் செய்திகள், 1959-இல் வெளிவந்த அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் மறைந்து போன தமிழ் நூல்கள் என்ற நூலிலும் காணப்படுகின்றன. இவ்விடத்தில் இக்கருத்தினை முதலாகக் கூறியவர் யார் என்ற ஐயம் எழுகிறது.
அறிஞர் பெருமகனார் மேற்குறிப்பிடப் பெற்ற கட்டுரையை இதழில் வெளியிட்ட காலம் 1929 ஆகும். இக்குறிப்பானது தொகுப்பு நூலில் இடம் பெற்றிருக்குமேயானால் மேற்கண்ட ஐயம் எழ வாய்ப்பில்லை. இது போன்ற ஐயங்களுக்கு இடமில்லாத வகையில் கட்டுரைகள் இதற்கு முன்பு வெளிவந்த இதழ்கள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டியது இன்றியமையாததாகும்.
ஆய்வுத் துறைகள்
அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளை மொழி மற்றும் வரலாறு தொடர்பானவை என இரண்டாக வகைப் படுத்தலாம். பண்பாட்டோடு தொடர்புடைய துடிக்குறி, புறநாட்டுப் பொருள்கள் என்பன போன்ற பிற கட்டுரைகளும் உண்டு.
தமிழ் இலக்கிய வரலாற்றை மேலும் விளக்கம் பெறச் செய்யும் வகையில் அவர் எழுதிய கட்டுரைகள் பலவாகும். அவர், தமது இருபத்திரண்டாம் வயதிலேயே செந்தமிழில் எழுதிய திருவிளையாடற் புராணம் 64-ஆவது படல ஆராய்ச்சி என்னும் கட்டுரையானது, வணிகன் மகள் ஒருத்தியின் திருமணம் தொடர்பாக இலக்கிய உலகில் தவறாகக் கொள்ளப்பட்டு வந்த கருத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைகிறது. அதாவது, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் புராணத்தில் இடம் பெறும் கருத்துத்தான் திருவிளையாடற் புராணத்தில் வேறுவிதமாகக் கூறப்பட்டுள்ளது என்று சிலர் கூறிவந்த நேரத்தில் அவ்விரண்டும் வெவ்வேறு நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு சான்றுகளைக் கொண்டு நிறுவுகிறார் அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார்.
அதனைப் போன்றே திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் ஞானவெட்டி என்ற மற்றொரு நூலையும் எழுதியுள்ளார் என்று சிலர் கருதிவந்த நேரத்தில் இரண்டும் வெவ்வேறு ஆசிரியர்கள் எழுதியவை என்பதற்குப் பல சான்றுகளை இவ்வறிஞர் பெருமகனார் எடுத்துக் காட்டுகிறார். மேலும் ஞானவெட்டி என்ற சொல்லைப் பற்றி ஆய்வு செய்யும் அவர், வெட்டி என்பது தஞ்சை மாவட்டத்தில் கடற்கரைப் பிரதேசங்களில் வழி என்னும் பொருளில் வழங்குவதாக எடுத்துக் காட்டி, இந்நூலும் தஞ்சை மாவட்டக் கடற்கரையைச் சேர்ந்த ஒருவரால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். 1916-இல் எழுதிய இந்த இலக்கிய வரலாற்றுக் கட்டுரைக்கே அவர் கல்வெட்டுச் சான்று தருவது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவரெழுதிய இலக்கிய வரலாற்றுக் கட்டுரைகள் அனைத்துமே பெரிதும் கல்வெட்டுக்களை முதன்மை ஆதாரங்களாகக் கொண்டு எழுதப்பட்டன.
இலக்கிய வரலாற்றில் கல்வெட்டுக்களின் துணையைக் கொண்டு புலவர்களின் காலத்தை வரையறை செய்யும் முயற்சியையும் இவ்வறிஞர் பெருமகனார் மேற்கொண்டார். நூலாசிரியரது காலத்தைப் பற்றி அறிந்து கொள்வது நூலைப் படித்து இன்புறுவதற்கு உதவும் என்ற கருத்துடையவர் இவ்வறிஞர்.
தமிழ் இலக்கிய வரலாற்றுலகில் காளமேகப் புலவரது காலம் தெளிவில்லாத நிலையில் இருந்தபொழுது, அதனை ஆராயத் தொடங்கினார் அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார். திருமலைராயன் என்ற அரசனுக்கும் காளமேகப் புலவருக்கும் இடையேயான தொடர்பினைத் தமிழ் நாவலர் சரிதையில் காணப்படும் காளமேகப் புலவரது பாடல் மூலம் அவர் உறுதி செய்தார். பின்னர்த் திருமலைராயன் தமிழகத்தை ஆண்ட காலத்தை அறிய முயலும் அவர், அவன் ஆட்சி செய்த பகுதிகளையும், பல்வேறு ஊர்களில் காணப்பட்ட அவனது கல்வெட்டுக்
களையும் நேரில் சென்று கள ஆய்வு செய்தார். அதன் விளைவாகக் காளமேகப் புலவரது காலம் கி.பி.15-ஆம் நூற்றாண்டு என்று இவ்வறிஞர் பெருமகனார் முடிவிற்கு வருகிறார்.
அறிஞர்களிடையே இவருக்கு முதன் முதலாகப் பேரும் புகழும் ஈட்டித் தந்த கல்லாடமும் அதன் காலமும் என்ற கட்டுரையும் இங்கு நினைவு கூரத் தக்க ஒன்றாகும். தமிழ் உலகில் கல்லாடர் என்ற பெயரில் பலர் காணப்படுகின்றனர். அவர்களுள் கி.பி.13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வாழ்ந்த இரண்டாம் கல்லாடனாரால் எழுதப்பட்டதே கல்லாடம் என்ற நூல் என ஆய்ந்துரைக்கிறார் அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார். இவை போன்று இவ்வறிஞர் மேற்கொண்ட கால ஆய்வுகள் மிகுதியாகும்.
அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் தமிழுக்கு உழைத்தவர்கள், தமிழ்ப் புரவலர்கள் முதலானோரது வரலாறு சரியாக எழுதப்பட வேண்டும என்ற கருத்துடையவர். இந்த அடிப்படையில்தான் தமிழிலக்கிய வரலாற்று வளர்ச்சிக்கு உதவும் வகையில், கல்வெட்டுக் களால் அறியப்படும் சில தமிழ்ப் புலவர்கள் என்ற கட்டுரையை எழுதிப் பதினோரு புலவர்களின் வரலாற்றை அவர் வெளியிடுகிறார். இப்புலவர்கள் பற்றிய வரலாறு கல்வெட்டுக்களாலன்றி வேறு வகையில் நமக்குத் தெரியவில்லை.
இவ்வறிஞர் பெருமகனார் எழுதிய இருபெரும் புலவர்கள் என்ற கட்டுரை 19-ஆம் நூற்றாண்டில் சென்னை மாநகரில் இருந்துகொண்டு தமிழ்த் தொண்டாற்றிய விசாகப் பெருமாள் அய்யர், சரவணப் பெருமாள் அய்யர் என்ற இருபுலவர்களின் வரலாற்றை எடுத்துரைப்பதாகும். செவிவழியாகக் கிடைத்த செய்திகளையும் காலப்போக்கில் அவை வரலாற்றுக்கு உதவும் என்ற நோக்கோடு அவற்றைக் கட்டுரையில் இணைத்திருப்பது அவரது வரலாற்று உணர்விற்கு ஒரு சான்றாகும்.
புலவர்களின் வரலாற்றைச் சொல்லும் இவரது இக்கட்டுரையானது கதை கூறுவது போன்ற அமைப்பைப் பெற்றிருக்கும் அதே நேரத்தில் அஃது ஓ ஆய்வுக் கட்டுரையாகவும் அமைந்துள்ளது. அதாவது 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர்களின் தமிழ்த் தொண்டைப் பற்றிப் பண்டாரத்தார் குறிப்பிடுமிடத்து, (1) மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது, 92) இலக்கியங்களை எழுதியது என வகைப்
படுத்திக் காட்டுவதும், திருக்குறளை முதன்முதலாக அச்சிட்டவர் சரவணப் பெருமாள் அய்யர் என்பது போன்று புலவர்களின் தனிச் சிறப்புகளை ஆய்ந்துரைப்பதும் இவ்வறிஞரின் ஆய்வுத் திறனுக்குத் தகுந்த சான்றாகும்.
இருபெரும் புலவர்கள் என்ற கட்டுரையில் புலவர்களின் பெயர்க் காரணம் பற்றி அவர் கூறுகின்ற கதையானது சமயப் பொறையை விரும்பும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். இதுபோன்ற அரிய செய்திகளை வெளியிட்டுள்ளதன் மூலம் அறிஞர் பெருமகனார் தமிழ் இலக்கிய வரலாற்று வளர்ச்சிக்குத் தொண்டு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிஞரது இலக்கியத் தொண்டிற்கு மற்றொரு சான்றாக அமைவது அவரெழுதிய வழுக்கி வீழினும் என்னும் கட்டுரை. மூன்று நண்பர்கள் மாலை நேரத்தில் பொழுது போக்காகப் பேசிக் கொண்டே சென்ற செய்தியை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப் பட்டுள்ளது. தம்முடைய எளிய நடையாலும், கதை கூறுவது போன்ற அமைப்பு முறையாலும் படிப்போர் வியக்கும் வண்ணம் செய்தியினைக் கூறிச் செல்லும் அறிஞரது பாங்கினை இங்கே காணலாம்.
பிற்காலத்துத் தமிழ் வளர்ச்சியில் பாண்டியர்களை விடச் சோழர்களே மிகுதியும் ஈடுபட்டவர்கள் என்பதனை எடுத்துக்காட்டுவதுதான் அறிஞர் பெருமகனாரின் சோழர்களும் தமிழ்மொழியும் என்னும் கட்டுரையாகும்.
கல்வெட்டுக்களின் வழி அறியலாகும் நாராயணன் என்பவர் எழுதிய சிராமலை அந்தாதியின் இலக்கிய வரலாற்றை விளக்கி யுரைப்பதுதான் இவரது வேம்பையர் கோன் நாராயணன் இயற்றிய சிராமலை அந்தாதி என்னும் கட்டுரை.
இலக்கிய வரலாற்றில் தெளிவு பெற வேண்டிய ஊர்ப் பெயர்கள் பற்றிய ஆய்வினையும் அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் மேற் கொண்டார். அகநானூற்றுக்கு உரை எழுதியவர் இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்ற ஒரு குறிப்புக் காணப்படுகிறது. இதில் காணப்படும் பால் வண்ண தேவன் என்பது இயற்பெயரும், வில்லவதரையன் என்பது பட்டப் பெயரும் ஆகும். அவ்வுரையாசிரியர் இடையள நாட்டைச் சேர்ந்த மணக்குடி என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பது தெளிவு.
இச்சூழலில் மணக்குடி என்ற ஊர் எங்குள்ளது என்ற ஆராய்ச்சியினை மேற்கொண்டார் அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார். முதலில் அவர் இடையள நாடு என்பது திருத்தருப்பூண்டிக் கூற்றத்தில் உள்ள ஒரு பிரிவு என்பதனைத் தஞ்சை இராசராசேச்சுரத்தில் உள்ள கல்வெட்டுக்கள் மற்றும் கொறுக்கை என்னும் ஊரில் காணப்படும் கல்வெட்டு ஆகியவற்றின் துணைக்கொண்டு உறுதிப்படுத்தினார்.
பின்னர், அந்நாட்டில் இன்றும் காணப்படும் மணக்குடி என்ற ஊரே அகநானூற்றின் உரையாசிரியரது ஊர் எனவும் அறிஞர் பெருமகனார் தெளிவுபடுத்துகிறார். மேலும் அவ்வூர் சோழ மண்டலத்திலுள்ள ஒரு தொன்மை வாய்ந்த ஊர் என்பதற்கு இவர் சில சான்றுகளைத் தருகிறார்.
சோழ நாட்டிலுள்ள திருவாவடுதுறை என்னும் ஊருக் கண்மையில் சாத்தனூர் என்ற ஊர் ஒன்றுள்ளது. சாத்தனூரும் திருவாவடுதுறையும் இன்று வெவ்வேறு ஊர்களாகக் காணப்படு கின்றன. ஆயினும் பழங்காலத்தில் சாத்தனூரில் உள்ள ஒரு கோயி லாகத் திருவாவடுதுறை இருந்திருக்கிறது. காலப்போக்கில் கோயிலின் பெயர் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிக்கு ஊர்ப்பெயராக மாறி அமைந்து விட்டது எனவும் எஞ்சிய பகுதிமாத்திரம் சாத்தனூர் என்னும் பழைய பெயருடன் நின்று நிலவுகிறது எனவும் பல்வேறு சான்றுகள் காட்டி அறிஞர் பண்டாரத்தார் நிறுவுகிறார்.
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான செருத்துணையார் என்பவர் பிறந்த ஊர் தஞ்சாவூர் என இலக்கியங்கள் சுட்டுகின்றன. தமிழகத்தில் தஞ்சாவூர் என்னும் பெயரில் மூன்று ஊர்கள் காணப்படுவதால் செருத்துணையார் அவதரித்த திருப்பதி யாது என்ற ஆய்வினை அறிஞர் பண்டாரத்தார் மேற்கொண்டார். நாயன்மார் அவதரித்த தஞ்சாவூரை மருகல் நாட்டுத் தஞ்சாவூர் எனத் திருத்தொண்டர் திருவந்தாதியும், பெரியபுராணமும் குறிப்பிடுகின்றன. இவற்றையும், கல்வெட்டுச் சான்றுகளையும் அடிப்படையாகக்கொண்டு, நன்னிலம் தாலுக்காவிலுள்ள தஞ்சாவூரே நம்பியாண்டார் நம்பியும், சேக்கிழாரடிகளும் கூறியுள்ள மருகல் நாட்டுத் தஞ்சாவூர் எனவும், இதுவே செருத்துணை நாயனார் அவதரித்த திருப்பதி எனவும் அறிஞர் பெருமகனார் ஆய்ந்துரைக்கிறார்.
புகழ்த்துணையார் என்னும் நாயன்மார் அவதரித்த திருப்பதியைப் பற்றிப் பெரியபுராணத்தில் தெளிவான குறிப்பு எதுவும் கிடைக்க வில்லை. இச்சூழலில் அவ்வூர் பற்றிய ஆய்வினை மேற்கொண்டார் அறிஞர் பண்டாரத்தார். அதன் விளைவாக, தஞ்சாவூர் மாவட்டம் குடவாயிலுக்கண்மையில் இன்று அழகாப்புத்தூர் என்று வழங்கப் பெறும் அரிசிற்கரைப்புத்தூரே புகழ்த்துணையார் அவதரித்த திருப்பதியாகும் என அவர் தெளிவுபடுத்துகிறார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்களை ஆய்தல்
வரலாற்றுலகில் தெளிவு பெற வேண்டிய பகுதிகளையெல்லாம் தெளிவுபடுத்தும் முயற்சியினையும் அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் மேற்கொண்டார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது ஊர்ப் பெயர் பற்றிய அவரது ஆராய்ச்சியாகும். இவ்வாராய்ச்சியில், சில ஊர்கள் எங்கிருக் கின்றன என்று தெரியாதிருக்கும் நிலையில் அவ்வூர்களைக் கண்டு பிடித்து உரைப்பது ஒரு வகை. ஊர்களைப் பற்றிப் பிறர் தவறாகக் கொண்ட கருத்துக்களை மறுத்துரைப்பதுடன் அவ்வூர்கள் எங்கிருக் கின்றன என்று ஆய்ந்து உரைப்பது மற்றொரு வகை.
கும்பகோணத்திற்கு வடக்கே இரண்டு கல் தொலைவில் ஏரகரம் என்ற சிற்றூர் ஒன்று உள்ளது. அவ்வூர் இன்று ஏரகரம் எனப் பாமர மக்களால் வழங்கப்படுகிறது. அவ்வூரின் தென்மேற்கு மூலையில் வயல்களுக்கு இடையில் அழிந்து போன நிலையில் ஒரு சிவாலயம் உள்ளது. அங்குப் புதையுண்டு கிடந்த ஒரு கல்வெட்டைத் தோண்டி எடுத்ததன் மூலம் மிகப் பெரிய வரலாற்று உண்மைகளை முதன்முதலாகக் கண்டுபிடித்து உரைத்த பெருமைக்குரியவர் அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார்.
அதாவது, மேற்குறிப்பிடப்பெற்ற கல்வெட்டை அறிஞர் பெரு மகனார் ஆராய்ந்து பார்த்த பொழுது, அது கி.பி.1120 முதல் 1136-வரை சோழ மண்டலத்தில் ஆட்சி செய்த விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டு என்று தெரிகிறது. அக்கல்வெட்டின் ஒரு பகுதியாகிய இன்னம்பர் நாட்டு ஏராகிய மும்மடி சோழ மங்கலம் என்ற தொடரைக் கண்டு அக்கோயில் அமைந்துள்ள அவ்வூரின் பெயர் யாது எனப் புரிந்து கொண்டமையால் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
அத்தொடரைக் கொண்டு அப்பர் ஷேத்திரக் கோவையில் குறிக்கப் பெற்ற ஏர் என்னும் தலம் இன்னம்பர் நாட்டு ஏர் தான் என்ற முடிவிற்கு வருகிறார் அறிஞர் பெருமகனார்.
அக்கல்வெட்டின் அடிப்படையில் இன்னம்பர் நாடு, ஏர் ஆகிய பகுதிகளின் சிறப்புக்களையும் தேடி வெளியிடும் முயற்சியினையும் இவ்வறிஞர் மேற்கொண்டார். இன்னம்பர் நாடு பழங்காலத்தில் சோழ மண்டலத்தின் காவேரிக்கு வடகரையிலிருந்த நாடுகளுள் ஒன்று. இன்னம்பர் அதன் தலைநகராகும். கல்வெட்டுக்களின் சான்று கொண்டு நோக்குமிடத்து, கும்பகோணம் வட்டத்திலுள்ள கொட்டையூ, மேலக் காவேரி, கருப்பூர், அசுகூர், ஏரகரம் முதலான ஊர்களையும், பாவநாசம் வட்டத்திலுள்ள ஆதனூர், மருத்துவக்குடி முதலான ஊர்களையும் தன்னகத்துக் கொண்டு விளங்கியது இன்னம்பர் நாடு என எடுத்துரைக் கிறார் இவ்வறிஞர்.
மேலும், இவர் பல கல்வெட்டுச் சான்றுகளைக் காட்டி ஏர் என்பது இன்னம்பர் நாட்டைச் சேர்ந்த ஓர் ஊர் என்றும், அவ்வூர் இன்று ஏரகரம் என்று வழங்கப்படுகிறது என்றும் எடுத்துரைக்கும் அறிஞர் பெருமகனார், அவ்வூர் முதலாம் இராசராசன் காலத்திலிருந்து மும்முடி சோழ மங்கலம் என்ற பெயரில் வழங்கப்பட்டது எனவும் தெளிவுபடுத்துகிறார். இதுபோன்று பலருக்கு உண்மை தெரியாத நிலையிலிருந்த, ஆனால் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாய் இருந்த இடங்களையெல்லாம் தேடி உரைக்கும் முயற்சியினை அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் மேற் கொண்டார்.
வரலாற்றில் தெளிவு இடவையும் இடைமருதும்
ஆய்வு உலகில் தவறாக மேற்கொண்ட முடிவுகளைத் தமது ஆய்வின் மூலம் மறுத்துரைத்ததோடு வரலாற்றில் தெளிவினை ஏற்படுத்தியவர் இவ்வறிஞர். இதற்குச் சான்றாக, அவரெழுதிய இடவையும் இடைமருதும் என்ற கட்டுரையை எடுத்துக் காட்டலாம்.
திருவாசகத்தின் திருவார்த்தை என்ற பதிகத்திற்கு உரை எழுதிய ஒருவரும் திருப்பதியிலிருந்து வெளிவரும் கீழ்த்திசை கலைக்கழகப் பத்திரிகையில் மணிவாசகர் காலம் பற்றிக் கட்டுரை எழுதிய மற்றொருவரும் இடவை என்பது சோழ நாட்டிலுள்ள திருவிடை மருதூரே என்று எழுதியுள்ளதைக் கண்ட இவ்வறிஞர் இடவையும் இடைமருதும் ஒன்றா அல்லது வெவ்வேறு ஊர்களா என ஆராய்ச்சி செய்கிறார். அப்பெயர்கள் குறித்த இலக்கியச் சான்றுகளை அவர் தேடுமிடத்து, அப்பர் தேவாரம் ஷேத்திரக் கோவைத் திருத் தாண்டகத்தி லுள்ள, இடைமரு தீங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை எனத் தொடங்கும் பாடலில் இடவையும் இடைமருதும் வெவ்வேறு தலங்களாகச் சுட்டப்பட்டிருப்பதைக் காண்கிறார். மேலும், திண்டுக்கல் தாலுக்காவிலுள்ள இராமநாதபுரம், தஞ்சைப் பெரிய கோயில் ஆகிய இடங்களிலுள்ள கல்வெட்டுக்கள் இடவை சோழ மண்டலத்தின் மண்ணி நாட்டைச் சேர்ந்த ஓர் ஊர் என்று குறிப்பிடுவதையும் அவரால் காண முடிகிறது. இடைமருது என்னும் திருவிடைமருதூர் திரைமூர் நாட்டைச் சேர்ந்த ஓர் ஊர் என்பது கல்வெட்டுக்கள் கூறும் செய்தி.
இவற்றையெல்லாம் எடுத்துக் காட்டிய அறிஞர் பெருமகனார் இறுதியாகக் காவிரியாற்றிற்கு வடக்கே இராசேந்திர சிங்கள வளநாட்டில் மண்ணி நாட்டிலிருந்த இடவை என்னும் ஊரும் அப்பேராற்றிற்குத் தெற்கே உய்யக்கொண்டார் வள நாட்டில் திரைமூர் நாட்டிலிருந்த இடைமருது என்னும் ஊரும் வெவ்வேறு நாடுகளிலிருந்த வெவ்வேறு ஊர்களேயாம் என்பது ஐயமின்றித் துணியப்படும் என்று முடிவு செய்கிறார்.
மேலும் இடவை என்ற ஊர் எங்குள்ளது என்று ஆய்வு செய்யும் முயற்சியையும் இவ்வறிஞர் மேற்கொண்டார். அதன் விளைவாக, அவ்வூர் இருந்து அழிந்து போயிருக்க வேண்டும் அல்லது அஃது இன்று வேறு பெயரில் வழங்கிக் கொண்டிருத்தல் வேண்டும் என்ற முடிவிற்கு அவர் வருகிறார். திருப்பனந்தாளுக்கருகில் மண்ணியாற்றிலிருந்து பிரிந்து சென்ற வாய்க்கால் ஒன்று இடவை வாய்க்கால் என்ற பெயரைப் பெற்றிருந்ததாக அவ்வூர்க் கல்வெட்டுக் குறிப்பிடுவதாகவும் இவர் எடுத்துக் காட்டுகிறார்.
இவ்வாறு பல்வேறு சான்றுகளைக் கொண்டு ஆய்வு செய்யு மிடத்து மண்ணி நாட்டிலுள்ள திருமங்கலக்குடி, திருக்குடித் திட்டை, வேம்பற்றூர், திரைலோக்கி, திருப்பனந்தாள் ஆகிய ஊர்களுக்கு அண்மையில்தான் இடவையும் இருந்திருக்க வேண்டும் என்பது இவ்வறிஞரின் திட்டவட்டமான முடிவு.
குறும்ப நாயனாரது ஊர்
அறிஞர் சதாசிவப் பண்டாரத்தாரின் குறிப்பிடத்தக்க ஆய்வுகளுள் ஒன்றாக அமைவது குறும்ப நாயனாரது ஊர் பற்றியது ஆகும். சைவ சமய நாயன்மார்கள் அறுபத்து மூவருள் ஒருவராக பெருமிழலைக் குறும்ப நாயனார் என்பவரது ஊர் நன்னிலத்திற்கு அண்மையிலுள்ள திருவீழிமிழலை என்று பலர் கருதி வந்தனர். ஆயினும் சுந்தரர் மிழலை நாட்டு மிழலை, வெண்ணி நாட்டு மிழலை என்று இருவிதமான மிழலையைக் குறிப்பிடுவதையும், சேக்கிழார் பெரிய புராணத்தில் குறும்ப நாயனாரது ஊர் மிழலைநாட்டு மிழலை எனக் குறிப்பிடு வதையும் கண்ட இவ்வறிஞர் குறும்ப நாயனாரது மிழலை திருவீழிமிழலையிலிருந்து வேறுபட்டது என்ற முடிவிற்கு வருகிறார்.
மிழலை நாடு என்பது இராசேந்திர சிங்கள வள நாட்டின் உள்நாடு என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன எனச் சுட்டுகிறார் அறிஞர் பெருமகனார். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான சண்டேசுவர நாயனாரது ஊரும் மிழலை நாட்டிலுள்ள திருச்சேய் ஞலூரே ஆகும். அவ்வூருக்கு அண்மையில் காணப்படும் அழிந்து பட்ட ஊரான மிழலை என்னும் திருப்பதியில் கள ஆய்வு மேற்கொண்ட இவ்வறிஞர் அவ்வூர்ச் சிவாலயத்தில் குறும்ப நாயனாரது படிவம் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறார். அப்படிவத்தை நேரில் பார்த்த பொழுது, அது குறும்ப நாயனாருடையது என மக்களால் குறிப்பிடப் படுவதை அறிய முடிகிறது. அந்த மிழலையே பெருமிழலைக் குறும்ப நாயனார் அவதரித்த திருப்பதியாகும்.
மிழலை ஒரு காலத்தில் அழிந்துபட்ட பொழுது அவ்வூர் மக்கள் அண்மையிலுள்ள களம்பரம் என்ற ஊரில் குடியேறியுள்ளனர் என்றும் அவர் சுட்டுகிறார். இந்த மிழலைப் பிற்காலச் சோழர்கள் ஆட்சியின் போது மிழலைநாட்டின் தலைமை இடமாகவும் இருந்திருக்கிறது. நாடு என்பது இக்காலத்திலுள்ள தாலுக்காவிற்குச் சமமாகும்.
மேலும் இவரது இக்கட்டுரையின் மூலம் சோழநாடு ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது எனவும், அவற்றுள் ஒன்றான இராசேந்திர சிங்கள வளநாடு இருபத்திரண்டு நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது எனவும் அறிய முடிகிறது. அந்த இருபத்திரண்டு நாடுகளுள் ஒன்றாக அமைவதுதான் மிழலைநாடு. வளநாடு என்பது இன்றைய மாவட்டத்திற்கு இணையானது. அறிஞர் பெருமகனாரின் இத்தகைய ஆய்வுகளால் வரலாற்றில் தவறாக உணர்த்தப்பட்டு வந்த கருத்துக்கள் சரி செய்யப்பட்டதோடு, வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் வாழும் மக்கள் தங்கள் ஊர் பற்றிய உண்மை நிலைகளை உணர்ந்து புது ஊக்கம் பெறும் நிலை ஏற்பட்டதையும் அறிய முடிகிறது.
பெருமிழலைக் குறும்ப நாயனாரது திருப்பதி என்னும் இக்கட்டுரை மூன்று முறை இதழ்களில் வெளிவந்துள்ளது. முதல் முறையாகச் செந்தமிழ் என்னும் இதழில் 1923-இல் வெளிவந்தபோது இடம் பெற்ற செய்திகளுக்கு மேலும் அரண் சேர்க்கும் வகையில் கூடுதல் செய்திகளைப் பெற்று மூன்றாம் முறையாக 1930-இல் வெளிவந்த கட்டுரை அமைந்துள்ளது.
அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் வரலாற்று ஆய்வாளர்களுக்கு உதவும் வகையில் திருப்புறம்பியத்துக் கோயில், திருவைகாவூர்க் கோயில், ஏரகரக் கோயில், கும்பகோணம் நாகேச்சுவரர் கோயில், கோவிந்தபுத்தூரிலுள்ள திருவிசயமங்கைக் கோயில், திருக்கழுக் குன்றம் முதலான இடங்களிலுள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத் திருக்கிறார். அவ்வகையில் அவர் வெளியிட்ட திருவிசய மங்கைக் கல்வெட்டுக்கள் ஏழும் குறிப்பிடத் தக்கவையாகும். இந்தக் கல்வெட்டுக் களை அடிப்படையாகக் கொண்டு மதுராந்தக சோழன் என்பவன் விக்கிரம சோழன் என்ற மற்றொரு பெயரைப் பெற்றிருந்தான் எனவும், அவனால் கற்றளியாகக் கட்டப்பட்டதே திருவிசயமங்கைக் கோயில் எனவும், அக்கோயில் தஞ்சை இராசராசேச்சுவரத்தைக் காட்டிலும் பழமை வாய்ந்தது எனவும் பல வரலாற்று உண்மைகளை அவர் ஆய்ந்து உரைக்கிறார்.
தமிழகத்தில் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர்களின் வரலாறுகளையும் இவர் மழவர் வரலாறு, சம்புவராயர் வரலாறு, அறந்தாங்கி அரசு என்னும் கட்டுரைகளாக எழுதியுள்ளார். அவற்றை இவர் எழுதாமல் விட்டிருந்தால், அந்த அரசர்களின் வரலாறு வெளியுலகிற்கு ஒருவேளை தெரியாமல்கூடப் போயிருக்கும் என்று ஒரு சிலர் அஞ்சுவதும் நம் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.
பண்பாட்டு ஆய்வு
இப்பொழுது திரு, திருவாளர், திருமிகு முதலான சொற்கள் மரியாதைக்குரிய அடைமொழிகளாக நம்மால் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வழக்கு கி.பி. 13ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டை நாட்டுக் குடுமியான் மலைக் கல்வெட்டில் காணப்படுவதாக அறிஞர் பெருமகனார் எடுத்துக் காட்டுகிறார். அக்கல்வெட்டில் திருவாளன், திருவன், திருவுடையான் என்பன மரியாதைக் குரிய அடைமொழீகளாக எடுத்தாளப்பட்டுள்ளன.
வெற்றிலை, சர்க்கரை, மிளகாய், கத்தரிக்காய், காப்பி, தேயிலை, உருளைக்கிழங்கு, பிகையிலை ஆகியவை அயல்நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு அறிமுகப்பட்ட பொருள்கள் என்று புறநாட்டுப் பொருள்கள் என்ற கட்டுரையில் அறிஞர் பெருமகனார் ஆய்ந்துரைக் கிறார். வெற்றிலை மலேயாவிலிருந்தும், சர்க்கரை, தேயிலை ஆகியன சீனாவிலிருந்தும், மிளகாய் தென் அமெரிக்காவிலுள்ள சில்லி என்ற மாகாணத்திலிருந்தும், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, புகையிலை ஆகியன அமெரிக்காவிலிருந்தும், நம் நாட்டிற்குக் கொண்டுவரப் பெற்றவையாகும் என்று அவர் குறிப்பிடுகிறார்.
இப்பொழுது காயம் என்னுஞ்சொல் பெருங்காயம் என்னும் பொருளில் வழங்கி வருகிறது. ஆயினும் பழைய நூல்களில் பயின்று வரும் அச்சொல் மிளகு, சீரகம், மஞ்சள், சிறுகடுகு, கொத்தமல்லி என்னும் ஐந்து பொருள்களுக்குரிய பொதுப்பெயராக அமைந்திருந்தது எனக் கல்வெட்டுச் சான்றுகொண்டு அவர் ஆய்ந்து உரைக்கிறார்.
முடிவுரை
இவற்றையெல்லாம் தொகுத்து நோக்குமிடத்து, அறிஞர் பெருமகனார், இலக்கிய வரலாறு, நாட்டு வரலாறு, பண்பாடு ஆகியன தொடர்பாகப் பல உண்மைகளைத் தெளிவுப்படுத்தியமை விளங்கும். இலக்கியம், வரலாறு ஆகியவற்றில் இடம் பெற்ற ஊர்கள் பலவற்றைப் பற்றி ஆய்ந்து உரைத்தமை அவரது ஆய்வுக் கட்டுரைகளின் தனிச் சிறப்பு எனக் குறிப்பிடலாம்.
அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் - பாண்டியர் வரலாறு
தமிழகம் என்று வழங்கப்பெற்ற நிலப்பரப்பு இன்று தமிழ்நாடு எனக் கூறப்பெறுகின்றது. தமிழ்நாடு சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு எனப் பிரிக்கப் பெற்றிருந்தது. பாண்டிய நாட்டை ஆண்ட அரசர்கள் பாண்டியர் எனக் கூறப்பெற்றனர். பாண்டியர்கள் வரலாறு மிகப் பழமை யானது. பாண்டியர்கள் வரலாற்றை வரலாற்று அறிஞர்கள் ஒல்லும் வகையால் ஆராய்ந்துள்ளனர். பாண்டியர் வரலாற்றை ஆராய்ந்து தெளிவாக எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் ஆவார். அவர் எழுதிய பாண்டியர் வரலாற்றைப் பற்றி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பாண்டியர் வரலாற்றை வரைந்த அறிஞர்கள்
ஜெர்மன் பேராசிரியர் கீல்ஹார்ன் 1907 ஆம் ஆண்டிலும் ஐகோபி 1917இலும் ராபர்ட் சீவல் 1913 இலும் சுவாமிக்கண்ணுப் பிள்ளை 1915 இலும் பாண்டியர் வரலாற்றில் அடிப்படை ஆராய்ச்சியைச் செய்தனர்.
அறிஞர் கே.ஏ.நீலகண்ட சாதிரியார் 1929இல் பாண்யர் வரலாற்றை முழுமையாக முதன்முதலில் எழுதினார்.
1940இல் அறிஞர் தி.வை சதாசிவப் பண்டாரத்தார் பாண்டியர் வரலாற்றை தமிழ்மொழியில் தெளிவாக, இலக்கியச் சான்றுகளும் கல்வெட்டுச் சான்றுகளும் பிற சான்றுகளும் கொண்டு நல்ல தமிழில் யாவரும் போற்றி நினைக்கத் தக்கவகையில் எழுதியுள்ளார்.
அறிஞர் ஆர்.அரிகர அய்யர் பாண்டி ராஜசரிதம் என்று 1938இலும் அறிஞர் S.A.O. ஹூசேனி THE PANDYAS என்ற நூலை 1962இலும் K.V. ராமன் பாண்டியர் வரலாறு என்ற பெயரில் 1977இலும் படைத்துள்ளார்கள்.
டாக்டர் திருமதி A.J. தினகரன் THE SECOND PANDYAN EMPIRE என்ற ஆய்வு நூலை 1987இல் வெளியிட்டுள்ளார்.
கல்வெட்டு ஆய்வாளர் அறிஞர் என். சேதுராமன் 1978இல் THE IMPERIRAL PANDYAS , 1980இல் MEDIEVAL PANDYAS என்ற நூல்களை வெளியிட்டுள்ளார்.
அறிஞர்களின் முயற்சியால் உருவான ஆய்வுகள் பாண்டியர் வரலாற்றை ஓர் அளவிற்கு முழுமையாக அறிவதற்கு வழி வகுக்கின்றன.
சங்க காலத்திற்கு முந்திய பாண்டியர்
அறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் தமது பாண்டியர் வரலாறு என்ற நூலில் சங்க காலப் பாண்டியரைக் கடைச்சங்க காலத்திற்கு முந்திய பாண்டியர்கள், கடைச்சங்க காலத்துப் பாண்டியர்கள் என்று பிரித்து ஆராய்ந்துள்ளார்.
கடைச்சங்க காலத்திற்கு முந்திய பாண்டியர்களுடைய வரலாறு பற்றிய சான்றுகள் கிடைக்கப் பெறவில்லை. ஆகவே அக்கால அரசர்களுள் வடிம்பலம்ப நின்ற பாண்டியனும் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியுமே அவ்வறிஞரால் குறிக்கப்படுகின்றனர்.
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் குமரி நாட்டில் பஃறுளி என்றதோர் ஆற்றை வெட்டுவித்துக் கடல் தெய்வத்திற்கு விழா எடுத்தான். இச்செய்தியைக் கூறும் அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், புறநானூற்று ஒன்பதாம் பாடலால் இஃது உறுதிப்படுகிறது என்கின்றார். மேலும் சின்னமனூர்ச் செப்பேடுகளும் வேள்விக் குடிச் செப்பேடுகளும் கூறும் மூன்று கதைகளைச் சுட்டிக் காட்டி அதனை உறுதி செய்கின்றார். அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் தாம் கூறும் செய்திகளை ஆதாரம் காட்டி உறுதிப்படுத்துகின்ற நெறிமுறையைத் தமது நூலின் நெடுகிலும் கையாளுகின்றார்.
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வடிம்பலம்ப நின்ற பாண்டியனது வழியில் தோன்றியவன். பாண்டியர்களின் முன்னோருள் ஒருவன் ஆயிரம் வேள்விகள் இயற்றிப் புகழ் பெற்றமையைச் சின்னமனூர்ச் செப்பேடுகள் கூறுகின்றன. இவ்வேடு குறிப்பது இவ்வேந்தனே ஆவான் என்று அறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் கூறுகிறார்.
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வெளியிட்ட காசு ஒன்று அண்மையில் கிடைத்துள்ளது. இதன் ஒரு பக்கத்தில் குதிரையின் வடிவமும், பெருவழுதி என்று பிராமியிலும் பொறிக்கப் பெற்றுள்ளன. மறுபக்கத்தில் மீன் சின்னங்கள் உள. இதுமாதிரியான புதிய கண்டுபிடிப்புக்கள் சங்ககாலப் பாண்டியரை அறிவதற்குப் பெரிதும் துணைபுரிகின்றன.
சங்ககாலப் பாண்டியர்
சங்ககாலப் பாண்டியர்களைப் பற்றி அறியச் சங்க இலக்கியங்களே சான்றாதாரங்களாக உள்ளன. சங்க நூல்களின் குறிப்புக்களைக் கொண்டு பாண்டிய மன்னர்களின் வம்சாவழியையோ, காலங்கள் முதலிய முழுமையான வரலாற்றுச் செய்திகளையோ அறிந்து கொள்வதற்கில்லை. சங்ககால மன்னர்களைப் பற்றி அறிந்து கொள்ள சிறப்பான வரலாற்று ஆதாரங்கள் இல்லை. ஆகவே சங்ககாலப் பாண்டிய மன்னர்களைப் பற்றிய செய்திகள் தனித்தனியே தொடர்பின்றி அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் அவர்களால் வகைப்படுத்தப் பெற்றுள்ளன.
அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் சங்ககாலப் பாண்டியர் நாற்பத்தொன்பதின்மர் ஆவர் என இறையனார் களவியலுரை கொண்டு கூறுகிறார். அப்பாண்டியருள் முடத்திருமாறன் பழமையானவன் என்று களவியலுரையால் பெறப்படுவதாக அவர் கூறுகின்றார். இவ்வறிஞர். பாண்டியன் முடத்திருமாறன் முதலாக நம்பி நெடுஞ்செழியன் ஈறாகப் பதினெண்மரைப் பற்றிய செய்திகளை இறையனார் அகப்பொருள் உரை, புறநானூறு, சிலப்பதிகாரம், பரிபாடல், நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு ஆகிய இலக்கியங்கள் கொண்டு ஆய்ந்துள்ளார்.
பாண்டியப் பேரரசு
களப்பிரரது ஆட்சியிலிருந்து பாண்டிய நாட்டை மீட்ட பெருமை கடுங்கோன் என்னும் பாண்டியனுக்கு உரியதாகும். இவன் பாண்டிய நாட்டை மீட்டுப் பாண்டிய ஆட்சிக்குப் புத்துயிர் கொடுத்ததனை வேள்விக்குடிச் செப்பேடுகள் நன்கு விளக்குகின்றன என்று அறிஞர் பண்டாரத்தா சுட்டிக் கூறுவதுடன் செப்பேட்டுப் பகுதியையும் எடுத்துக் காட்டுகின்றார்.
களப்பிரரை ஒழித்து மதுரையில் மீண்டும் பாண்டிய நாட்டை ஆண்டவர்களை முற்காலப் பாண்டியர்கள் (கி.பி.550-1000) என்று அறிஞர் கூறுகின்றனர். முற்காலப் பாண்டிய மன்னர்கள் காலமானது முதற் பாண்டியப்பேரரசு காலம் என்றும் கூறப்பெறுகின்றது. இக்கால மன்னர்களின் கல்வெட்டுக்கள் ஏறக்குறைய 150 பாண்டி மண்டலத்தில் கிடைத்துள்ளன. மாறவர்மன் அவனி சூளாமணி காலம் முதல் பாண்டியர்கள் மாறவர்மன், சடையவர்மன் என்ற பட்டங்களை ஒருவர் பின் ஒருவராக மாறிமாறிப் புனைந்து வருவார் ஆயினர்.
இப்பேரரசு காலத்தில் பாண்டியருக்கும் பல்லவருக்கும் இடையே முடிவற்ற மோதல் இருந்தது. சோழர் இதில் கலந்து கொண்டு இரு அரசுகளையும் தம் கீழ்க் கொணர்ந்தனர். சோழர்கள் மதுரையில் தம் ஆட்சியை நிலை நாட்டினர்.
1014-இல் இராஜேந்திரன் சோழ மன்னன் ஆனான். இவன் தன் ஆட்சியின் தொடக்கத்தில் தன் புதல்வர்களுள் ஒருவனுக்குச் சோழ பாண்டியன் என்ற பட்டம் கொடுத்துப் பாண்டிய மண்டலத்திற்கு அரசப்பிரதிநிதி ஆக்கினான். இராஜேந்திரனின் மறைவுக்குப் பிறகு 1079 வரை சோழர்கள் சோழபாண்டியர்கள் முறையைக் கடைப்பிடித்தனர்.
சோழமன்னர்களின் பிரதிநிதிகளாகச் சோழ பாண்டியர், என்ற பட்டத்தொடு மதுரையில் இருந்து ஆட்சிபுரிந்தோர், முதல் இராசேந்திர சோழன் மகன் சுந்தர சோழ பாண்டியன், விக்கிரம சோழ பாண்டியன், பராக்கிரம சோழ பாண்டியன் என்போர் ஆவர்.
அவர்கள் கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டிலும் சோழ நாட்டிலும் காணப்படுகின்றன. எனவே சோழ பாண்டியரது ஆளுகை பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் ஒருங்கே நடைபெற்றது என்பது நன்கு துணியப்படும்.
இந்தச் சோழ பாண்டியர் என்ற முறை, பாண்டிய நாட்டில் எதிர்ப்புக்கள் வருவதை அடக்கி ஒடுக்கவே கையாளப் பெற்றிருக்க வேண்டும். மேலும் மக்களது மனத்தில் சோழர்கள் வேறு, பாண்டியர்கள் வேறு என்ற நிலையை அகற்றவே சோழ பாண்டியர் என்ற பட்டத்தை வழங்கி இருக்க வேண்டும்.
சோழர்கள் தங்களுடைய ஆதிக்கத்தைப் பலப்படுத்த முயன்றும் பாண்டியர் எதிர்த்துப் போரிட்டனர். மக்கள் உள்ளத்தில் தொன்று தொட்டுப் பாண்டியருக்கு இருந்த செல்வாக்கே இதற்குக் காரணம் என்கிறார் அறிஞர் நீலகண்ட சாதிரியார்.
சோழ பாண்டியருக்குப் பின் பாண்டியர் எழுச்சி
சோழ பாண்டியர் ஆட்சிமுறை முதற் குலோத்துங்கன் காலத்தில் கைவிடப்பட்டது. அவன் காலத்தில் தன்னை எதிர்த்த ஐந்து பாண்டியர்களை வென்று, அதிராசேந்திர சோழனுக்குப் பின் இழந்த பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான். அச்செய்தி முதற் குலோத்துங்க சோழனது மெய்க்கீர்த்தியில் சொல்லப் பெற்றிருப்பதோடு கலிங்கத்துப் பரணியிலும் கூறப்பெற்றுள்ளதை அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் சான்று காட்டி நிறுவுகின்றார்.
அதன் பின்னர்ப் பாண்டிய அரசர்களிடையே உள்நாட்டுப் போர்களும், பூசல்களும் இருக்கவே அவர்கள் பலவீனம் உற்றனர்.
இரண்டாம் பாண்டியப் பேரரசு
கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியரது ஆட்சி மீண்டும் உயர்நிலை அடையத் தொடங்கியது. அந்நாட்களில் மூன்றாம் குலோத்துங்க சோழன் சோழப் பேரரசை ஆட்சி புரிந்து கொண்டு இருந்தான். அவன் இறந்தபிறகு பாண்டியர் பிறநாடுகளை வென்று உயர்வெய்தினர். இக்காலப்பகுதி பாண்டியரது இரண்டாம் பேரரசு நிலைபெற்ற சிறப்புடையதாகும். இப்பகுதியில் ஆட்சிபுரிந்த பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுக்கள் மிகுதியாகக் கிடைத்து உள்ளன.
கிடைத்துள்ள கல்வெட்டுக்களைக் கொண்டு அரசர்களும் பிறரும் செய்த அறச்செயல்கள் நன்கு அறியப்படுகின்றன. ஆனால் அவற்றின் துணைக்கொண்டு அரசர்களைப் பற்றிய முழுச்செய்திகளை ஆராய இயலவில்லை. கல்வெட்டுக்களில் கிடைத்துள்ள காலக்குறிப்புக்களை ஆராய்ந்து அவற்றால் அறியக்கிடக்கும் ஆண்டுகள் இன்னவை என்று உலகிற்கு உணர்த்திய பேரறிஞர்கள் டாக்டர் கீல்ஹார்ன், எல்.டி.சுவாமிக்கண்ணுப்பிள்ளை, இராபர்ட்சிவெல், ஜாகோபி என்போராவர். அவர்களுடைய ஊக்கமும் உழைப்பும் இல்லையாயின் வரலாற்றாராய்ச்சி இருள் சூழ்ந்த நிலையில்தான் இருந்து கொண்டிருக்கும் என்பது திண்ணம் என்று அறிஞர் பண்டாரத்தார் சுட்டிக் காட்டியுள்ளார்.
இரண்டாம் பாண்டியப் பேரரசு காலத்தில், முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி.1216-முதல் கி.பி.1238 முடிய மதுரை நகரில் வீற்றிருந்து ஆட்சி செய்தான். இவன் ஆற்றலாலும் வீரத்தாலும் பாண்டிய இராச்சியத்தை நன்னிலைக்குக் கொணர்ந்து பேரரசு நிறுவிய பெருந்தகை வேந்தன் என்று பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் போற்றுகின்றார்.
இந்தச் சுந்தரபாண்டியன் 1219இல் சோழ நாட்டின் மேல் படை யெடுத்து மூன்றாம் இராசராச சோழனை வென்றான். இப்படை யெடுப்பில் சுந்தரபாண்டியனைப் பற்றி அறிஞர் பண்டாரத்தார் குறிப்பிடும் பொழுது திருவெள்ளறைக் கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டு, அவன் நாடு கடந்து புலவர்களை மதித்துப் போற்றிய பண்பாளன் என்பதை உணர வைக்கின்றார். அதாவது சோழ நாட்டையே அழித்த சுந்தரபாண்டியன், முற்காலத்தில் சோழன் கரிகாற் பெரு வளத்தான் என்பவன் தன் மீது பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவருக்குப் பரிசிலாக வழங்கியிருந்த பதினாறு கால் மண்டபத்தை மட்டும் இடிக்கச் செய்யாமல் விட்டு வைத்தான் என்று அறிஞர் பண்டாரத்தார் சான்று காட்டிக் கூறுவது மனங்கொள்ளத்தக்கதாகும்.
அடுத்து முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் தமிழகம் எங்கும் பாண்டியர் ஆதிக்கம் பரவியது. இவன் கல்வெட்டுக்கள் வடக்கேயுள்ள நெல்லூர், கடப்பை சில்லாக்கள் - முதல் தெற்கேயுள்ள குமரிமுனை - வரையில் பரவியுள்ள பெருநிலப்பரப்பில் எங்கும் காணப்படுகின்றன என்று பண்டாரத்தார் சுட்டியுள்ளார். இவ்வேந்தன், தமிழகத்திலும் அதற்கப்பாலும் வாழ்ந்த அரசர் திறை செலுத்த வேந்தர் வேந்தனாய் செங்கோல் செலுத்தி இருக்கவேண்டும். அதுபற்றியே, எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ சுந்தரபாண்டியதேவர் என்று இவன் வழங்கப்பெற்றனன்.
இவ்வேந்தன் தில்லை, திருவரங்கக் கோயில்களுக்குப் பொன்வேய்ந்த பெருமான் ஆவான். இவன்மீது,
வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி
வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்
வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்
வாழ்க சுந்தர மன்னவன் தென்னனே
என்று பண்டைப் புலவர் ஒருவர் பாடிய வாழ்த்துப்பா உள்ளது. இது காஞ்சி வட்டத்திலுள்ள திருப்புட்குழித் திருமால் கோயிலில் வரையப் பெற்றுள்ளது.
முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி.1268 முதல் கி.பி.1311 வரையில் அரசாண்டவன். இவன் ஆட்சிக் காலத்தில் பாண்டியநாடு உயர்நிலையில் இருந்தது. மார்க்கோபோலோ இவனது ஆளுகையைப் பெரிதும் புகழ்ந்து எழுதியுள்ளார். இவ்வேந்தர் பெருமான், சேரன், சோழன், போசளன் முதலான அரசர்களைப் போரில் வென்று, அன்னோர் நாடுகளிலிருந்து கைப்பற்றிக் கொணர்ந்த பொருளைக் கொண்டு திருநெல்வேலித் திருக்கோயிலில் ஒரு திருச்சுற்று மாளிகை எடுப்பித்தான் என்று அங்கு வரையப்பட்டுள்ள கல்வெட்டொன்று கூறுகின்றது. இதனால் இவன் நெல்லையப்பரிடம் பேரன்புடையனாயிருந்தனன் என்பது நன்கு புலனாகிறதென்று அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் உறுதி செய்கின்றார்.
பிற்காலப் பாண்டியர்
சீரிய நிலையில் இருந்த பாண்டியநாடு கி.பி.14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தாழ்ந்தது. அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனான மாலிக்காபூர் 1310 ஆம் ஆண்டின் இறுதியில் தென்னாட்டின் மீது படை எடுத்தான். அந்நாளில் பாண்டியநாடு மகம்மதிய வீரர்களால் கொள்ளை யிடப் பெற்றமையினால் அது தன் செல்வத்தையும் சிறப்பையும் இழந்து வறுமை எய்தியது. மக்கள் பல்வகை இன்னல்களுக்கு உள்ளாயினர். அறநிலையங்களும் கோயில்களும் அழிந்தன.
அதன் பின்னர்ப் பாண்டிய நாட்டைக் குறுநில மன்னர்கள் (சம்புவராயர்களும் வாணாதிராயர்களும்) ஆட்சி புரியத் தொடங்கினர். இதற்கடுத்துப் பாண்டிய நாட்டில் மகமதியரது ஆளுகைக் கி.பி.1330-முதல் கி.பி.1378-வரையில் நடைபெற்றதெனப் பண்டாரத்தார் குறிப்பிடு கின்றார்.
மகம்மதியரது ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டில் பாண்டிய அரசர் சிலர் இருந்தனர். அவர்கள் மாறவர்மன் குலசேகர பாண்டியன், சடையவர்மன், பராக்கிரம பாண்டியன், மாறவர்மன் வீரபாண்டியன், மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் என்போராவர். இவர்கள் கல்வெட்டுக்கள் பாண்டிய நாட்டில் பல இடங்களில் காணப்படுகின்றன.
இக்காலத்தில் விசயநகர வேந்தனாகிய குமார கம்பண்ணன் தமிழ் நாட்டிற்குப் படையெடுத்து வந்தான். இப்படை எழுச்சியினால் தென்னாட்டில் மகமதியராட்சி நிலை குலைந்தது. விசய நகர ஆட்சி மலர்ந்தது. அதன் பின்னர் மதுரை நாயக்கர் வம்சத்தார் விசயநகர அரசின் பிரதிநிதிகளாக இருந்தனர்.
இக்காலப் பகுதியில் மதுரை மன்னர் தென்பாண்டி நாட்டிற்கு ஏகினர். தென்பாண்டி நாட்டில் அரசு செலுத்திய பாண்டியர்களுள், பராக் கிரம பாண்டியன் என்ற பெயருடையார் மூவர் இருந்தனர். இவரன்றித் தென்பாண்டி நாட்டு மன்னர்களுள் குறிக்கத்தக்கவர் சடையவர்மன் அதி வீரராம பாண்டியன், வரதுங்கராம பாண்டியன், வரகுணராம குலசேகர பாண்டியன் என்போர் ஆவர்.
இக்காலப் பகுதியில் வாழ்ந்த பாண்டியர்களுள் பெரும்பாலோர் விசய நகர வேந்தர்களுக்குக் கப்பம் செலுத்தி வந்த குறுநில மன்னரேயாவர். இவர்கள் இறுதியில் ஜமீன்தார் நிலையை எய்தினர்.
சரித்திர காலத்திற்கு முன் தொடங்கிப் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த தமிழ் வேந்தர்களான பாண்டியர்கள் தம் நாட்டை இழந்து சிறுமையுற்றது காலவேறுபாட்டினால் நிகழ்ந்த மாறுதலேயாகும். என்றாலும் அவர்களால் வெளிவந்த தமிழ்நூல்கள் தமிழரின் பண்டைப் பெருமையினை எந்நாட்டிற்கும் அறிவுறுத்தும்.
பாண்டியருடைய அரசியல், சமுதாயம்
பாண்டிய நாடு பழங்காலந்தொட்டு வரையறுக்கப் பெற்ற எல்லைக்குள் அடங்கிய நிலப்பரப்பாக இருந்துள்ளது. பாண்டிய மண்டலம் என்பது மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களையும் புதுக்கோட்டை நாட்டில் வெள்ளாற்றுக்குத் தெற்கிலுள்ள பகுதியையும் தன்னகத்தே கொண்டு விளங்கிய நிலப்பரப்
பாகும். இப்பாண்டிய நாட்டில் இருந்த அரசியல் முறை, கல்விநிலை, சமய நிலை, கோவில்கள் ஆகியவற்றைப் பற்றி அறிஞர் பண்டாரத்தார் அவர்கள் தமது பாண்டியர் வரலாற்றில் சான்றுகள் காட்டித் தெளிவு படுத்தியுள்ளார். இனிச்சுருக்கமாக அவற்றைக் காண்பது சிறப்பாகும்.
பாண்டி மண்டலத்தின் உட்பிரிவுகள்
பாண்டி மண்டலத்தில் பல உள்நாடுகள் இருந்தன. இரணிய முட்டநாடு, களக்குடி நாடு, பூங்குடி நாடு, கீரனூர் நாடு, துறையூர் நாடு, சூரன்குடி நாடு, கீழ்வேம்ப நாடு, மேல்வேம்ப நாடு, குறுமலை நாடு, திருமலை நாடு, செம்பி நாடு முதலியன பாண்டி மண்டலத்தில் இருந்த உள் நாடுகள் ஆகும்.
சில நாடுகளையும் கூற்றங்களையும் கொண்ட நிலப்பரப்பு வளநாடு என்று வழங்கப்பட்டு வந்தது. நாடுகளின் பெயர்கள் ஊர்களின் அடியாகப் பிறந்தன. பாண்டியர்களின் பெயர்கள் வளநாடுகளின் பெயர்களாக அமைந்தன.
இனி, நாடுகளும் கூற்றங்களும் இக்காலத்துள்ள தாலுக்காக் களுக்கு ஒப்பானவை என்றும், வளநாடுகள் சில்லாக்கள் போன்றவை என்றும், மண்டலம் மாகாணத்திற்குச் சமமானது என்றும் கொள்ளல் வேண்டும் என்று அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிடுகின்றார்.
ஆட்சி உரிமை
பாண்டிய மரபில் ஆட்சி உரிமை தந்தையினின்று மூத்த மகனுக்குச் சென்றது. ஏற்ற மைந்தன் இல்லாத பொழுது அரசனுடைய தம்பி பட்டத்தைப் பெற்றான்.
பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் பலமுறை பதவிப் போட்டிகள் ஏற்பட்டு நாடு குழப்பமுற்றது. கி.பி.11-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டிய மன்னர் ஐவர் ஒரே சமயத்தில் பாண்டிய நாட்டுப் பகுதிகளை ஐந்தாகப் பிரித்து ஆண்டுள்ளனர்.இதனைக் கலிங்கத்துப் பரணியாலும் சில கல்வெட்டுக்களாலும் அறியப் பெறுவதை அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் காட்டியுள்ளார்.
அதிகாரிகள்
பாண்டியரது ஆளுகையில் பல்வகைத் துறைகளிலும் தலைவர் களாக அமைச்சர், படைத்தலைவர், அரையர், நாடு வகை செய்வோர், வரியிலார், புரவுவரி திணைக் களத்தார், திருமுகம் எழுதுபவர் முதலானோர் அமர்ந்து ஆட்சியை நன்கு நடைபெறச் செய்தனர். பாண்டி வேந்தர் தம் அரசியல் அதிகாரிகளுக்குத் தென்னவன் பிரமராயன், காவிதி, ஏனாதி, பஞ்சவன்மாராயன் செழியதரையன், காலிங்கராயன் முதலிய பட்டங்கள் வழங்கிச் சிறப்புச் செய்தனர்.
கிராமசபை
பாண்யரது ஆட்சிக் காலங்களில் ஊர்தோறும் கிராமசபை இருந்தது. இச்சபையாரால்தான் அந்நாளில் கிராம ஆட்சி முழுமையும் நடத்தப்பட்டு வந்தது.
சபையின் உறுப்பினரைக் குடவோலை வாயிலாகத் தெரிந் தெடுக்கும் முறைகள் தொண்டை மண்டலத்தில் உத்தரமேரூரிலுள்ள ஒரு கல்வெட்டில் விளக்கமாக வரையப்பட்டுள்ளன. திருநெல்வேலிக் கண்மையிலுள்ள மானூர்க் கல்வெட்டு, கிராமசபை உறுப்பினருக்குரிய தகுதிகளை விளக்குகின்றது.
இலக்கியம்
பாண்டிய அரசர்கள் பெரும் புலவர்களாக இருந்துள்ளனர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் அரசவையில் மாங்குடி மருதனார் தலைமையில் சிறந்த புலவர் குழு இருந்தது. பாண்டிய மன்னர் தென்மதுராபுரஞ்செய்தும் அங்கதனில் அருந்தமிழ் நற்சங்கம் இரீஇத் தமிழ் வளர்த்தும் என்று தளவாய்புரச் செப்பேடு குறிக்கின்றது.
பாண்டிய நாட்டில் நம்மாழ்வார், மதுரகவி, பெரியாழ்வார், ஆண்டாள், மாணிக்கவாசகர் போன்ற பாண்டிய நாட்டுச் சான்றோர் சமயப் பணியோடு இலக்கியப் பணியும் செய்து தமிழ் இலக்கியத்தை வளர்த்தனர். நம்மாழ்வாரின் திருவாய் மொழி தமிழ்மறை எனப்பெற்றது. பெரியாழ்வாரின் கண்ணனைப் பற்றிப் பாடிய பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் பிள்ளைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்துள்ளன. திருப்பாவையும் திருவெம்பாவையும் தமிழ் இலக்கியத்தில் ஒப்பற்ற பாவைப் பாடல்களாகும்.
பாண்டியர்களுடைய மெய்க்கீர்த்திகள் இலக்கியச் சுவை பெற்றவை. திருநெல்வேலிப் பாண்டியர்களுடைய செப்பேடுகளும் கல்வெட்டுக்களும் சிறந்த இலக்கியங்கள் எனலாம். அதற்குச் சான்றாக அரிகேசரி பராக்கிரம பாண்டியனின் தென்காசிக் கல்வெட்டைச் சொல்லலாம்.
பாண்டிக் கோவை என்ற பிரபந்தம் நெல்வேலிப் போர் வென்ற நெடுமாறனான மாறவர்மன் அரிகேசரியைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது.
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் செந்தமிழ்ப் புலமை உடையவன். அவன் வடமொழியில் ஹர்ஷன் இயற்றியுள்ள நைஷதம் என்ற நூலைத் தமிழில் பாடியுள்ளான். இது நைடதம் எனப் பெறும். இவ்வரசன் கூர்மபுராணம், வாயு சங்கிதை, காசிகாண்டம், இலிங்க புராணம், நறுந்தொகை ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளான்.
வரதுங்கராம பாண்டியன் பிரமோத்திரகாண்டம், திருக்கருவைக் கலித்துறை அந்தாதி, கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி, கருவை வெண்பா அந்தாதி ஆகிய நூல்களைப் படைத்துள்ளான். இவ்வந்தாதிகள் அதிவீரராம பாண்டியனால் பாடப்பெற்றவை என்று கூறுவர். அது தவறாகும் என்று பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் எடுத்துரைக் கின்றார்.
சமய நிலை
பாண்டியர் எல்லாரும் சைவர். பாண்டிய நாட்டு மக்களும் பெரும்பகுதியினர் சைவ சமயத்தினர்; ஏனையோர் வைணவராகவும் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். பாண்டியர் சமயப் பொறுமையுடையவர்; எல்லா மதத்தினரையும் ஆதரித்தனர்; பிறர் கோயில்களுக்கு நிபந்தங்கள் விட்டுள்ளனர். பிற்காலத்தில் சமயப் பூசல்கள் நேர்ந்துள்ளன.
சிற்றண்ணல்வாயில், ஆனை மலை, திருப்பரங்குன்றம், கழுகுமலை முதலிய இடங்களில் இடைக்காலப் பாண்டியர் காலத்துக் கோயில்கள் உள்ளன.
சடையவர்மன் சுந்தரபாண்டியன் சிதம்பரம் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் வேறுபாடின்றிப் பல அரிய திருப்பணிகள் ஆற்றினான். மாணிக்கவாசகர் வரகுண பாண்டியனின் அமைச்சராக இருந்தவர். பாண்டிய நாட்டில் தேவாரம் பெற்ற தலங்கள் முக்கிய தலங்களாக உள்ளன. இராமேசுவரம், மதுரை அகில இந்திய முக்கியத்துவம் பெற்றுள்ளன.
பாண்டிய மன்னர்களது ஆட்சி, பல்லாற்றானும் மக்களுக்கும் கலைத்துறைக்கும் பெரும் பயன் தந்து பாண்டிய வம்சத்தை எக்காலத்தும் நினைவூட்டும் என்பது வெள்ளிடை மலையாகும்.
பண்டாரத்தாரின் சமயப்பணி
சிவ.திருச்சிற்றம்பலம்
திருப்புறம்பயம் வைத்தியலிங்கம் சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் தம் வாழ்நாள் முழுமையும் அரிதின் முயன்று ஆற்றியுள்ள கல்வெட்டுப் பணி, வரலாற்றுப் பணி, இலக்கியப் பணி, இலக்கணப் பணி முதலான பல பணிகளுக்கு அடிப்படையாய் அன்னாரது சைவ சமயப் பேருணர்வு திகழ்ந்திருந்தது என்றால் அது மிகையன்று. முத்தாய், மணியாய்ப் பொலியும் அவர் பணிகள் அனைத்தும் சமயப் பணி என்னும் பொன்னிழையால் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு முத்தாரமாகப் பொலிந்து, அவர் மாண்பினை, நீர் உள்ளளவும், நிலம் உள்ளளவும் இந்நீள் புவிக்கு எடுத்துக் காட்டி நிற்கின்றது.
சைவப் பற்று
உலகெல்லாம் உணர்ந்து ஓதுதற்கரியவனும் நிலவுலாவிய நீர்மலி வேணியனுமான சிவபெருமானைத் தம் வழிபடு கடவுளாகக் கொண்ட பண்டாரத்தார் அச்சிவனை வழிபடும் மிகுசைவத் துறை யினையே தம் வாழ்நெறியெனக் கொண்டு திகழ்ந்தார். உள்ளன்போடு சிவனைப் பரவி வாழ்ந்த பண்டாரத்தார் மெய்யெலாம் நீறு பூசிய மேனியினர், உருத்திராக்க மணியை அணிந்த கோலத்தினர்.
சமயப்பணிகள்
தாம் பிறந்து வளர்ந்த பதியும், சைவ சமய குரவர் நால்வரால் பாடப்பெற்ற பதியுமான திருப்புறம்பயச் சிவன் கோயிலில் 1952ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவின் போது திருப்பணி செய்து வந்த மாணிக்கவாசகத் தம்பிரான் அவர்கள் ஆதரவோடு ஆடல்வல்லான் சன்னதியின் முன்புறம் தெற்குப் பிரகாரத்தில் சைவ சமய குரவர்கள் நால்வர்க்கும் தம் சொந்தச் செலவில் மணி மண்டபம் அமைத்து, ஆண்டுதோறும் அன்னார் திருநட்சத்திர நாட்களில் குருபூசை விழாவினை மன மொழி மெய்களால் சிறப்புற நடத்தி வந்தார். திருமுறைகளை நாடோறும் உள்ளன்புடன் மனமுருகி ஓதி தூயநற் சைவராய்த் திகழ்ந்திருந்தார். தம் புதல்வருக்குத் திருஞானசம்பந்தம் என்று பெயர் சூட்டியுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.
பண்டாரத்தார் மேற்கொண்ட சிவ வழிபாட்டின் ஓர் அங்கமாய்த் திருக்கோயில் வழிபாடு செய்யுங்காலை மேற்கொண்ட கல்வெட்டு ஆராய்ச்சிப் பணியே அவர் பின்னாளில் பிற்காலச் சோழர் வரலாறு, பாண்டியர் வரலாறு முதலான வரலாற்று நூல்களை எழுதக் காரணமாய் அமைந்தது. முன்னாளில் சிவநெறியைப் போற்றிப் புரந்தோர் பற்றிய உண்மைகளை வெளிக்கொணரும் வகையிலான பல அரிய கட்டுரைகளை அவ்வப்போது செந்தமிழ், தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி முதலான இதழ்களில் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார். அவற்றின் வாயிலாக அதுநாள் வரை வரலாற்றாசிரி யர்களும், சைவ சான்றோர்களும் கருதியிருந்த ஐயத்திற்கிடமான, மாறுபாட்டுக் குரியதான பல முடிவுகளைத் தம் நுண்மாண் நுழைபுலத் திறத்தால் ஆராய்ந்து தெளிந்த முடிவுகளைத் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார்.
சைவ இலக்கிய வரலாற்றின் குழப்பம் நீக்கித் தெளிவினைத் தந்துள்ள அன்னார் முடிவுகள் கலங்கரை விளக்கமாய்க் காலங் காலமாய் நின்று திகழ்ந்து அன்னார் புகழ் பாடும் என்பதில் ஐயமில்லை.
தல வரலாற்று நூல்கள்
அறிஞர் பண்டாரத்தார் தாம் பிறந்த ஊரான திருப்புறம்பயத் தல வரலாற்றையும், சோழர் விளங்கத் துணை நின்ற செம்பியன் மாதேவியின் பெயரில் அமையப் பெற்ற சிவாலய வரலாற்றையும், காவிரிப்பூம்பட்டின வரலாற்றையும் சிறப்பாக எழுதி வெளியிட்டுச் சமயப் பணி ஆற்றியுள்ளார். அம்மூன்று நூல்களும் பின்னாளில் தல வரலாறுகளை எழுத முனைந்தோர்க்குப் பல்லாற்றானும் முன் மாதிரியாய் நின்று திகழ்ந்துள்ளன எனின் அது மிகையன்று. அந்தத் தல வரலாற்று நூல்கள் நடையால்-பொருளமைப்பால் ஒற்றுமைக் கூறுடையனவாய்க் காணப்படுகின்றன.அவற்றில் ஒருசிலவற்றை ஈண்டுக் காணலாம்.
தலத்தின் இருப்பிடம்
ஒரு தலத்தின் வரலாற்றை எழுதப் புகுமுன் அத்தலத்தின் இருப்பிடத்தைப் பற்றிக் கூறுங்கால், அத்தலத்தினைச் சுற்றிலும் அமைந்துள்ள தேவாரச் சிறப்புடைய சிவத் தலங்களின் பட்டியலை அவற்றிற்கிடையேயுள்ள தூரங்களைக் குறிப்பிட்டு எழுதியுள்ளமை யினைக் காணலாம்.
திருப்புறம்பயத் தல வரலாற்றில், திறம்புறம்பயம் தஞ்சாவூர் ஜில்லாவில் கும்பகோணம் தாலுக்காவில், கும்பகோணத்திற்கு வடமேற்கே ஐந்து மைல் தொலைவில் மண்ணியாற்றங்கரை யிலுள்ள ஒரு சிவத்தலமாகும். இத்தலத்திற்குத் தெற்கில் இரண்டு மைல் தூரத்தில் திருஇன்னம்பர்த் தேவாரத் தலமும், தென் மேற்கில் ஐந்து மைலில் தேவாரம் பெற்ற திருவலஞ்சுழியும் திருப்புகழ் பெற்ற சுவாமிமலையும், மேற்கே மூன்று மைலில் திருவைகாவூர் என்ற தலமும் வடமேற்கே நான்கு மைலில் கொள்ளிட வடகரையில் கோவந்தபுத்தூர் என்னும் திருவிசயமங்கைத் தலமும் கிழக்கே எட்டு மைலில் திருச்சேய்ஞலூர், திருவாப்பாடி, திருப்பனந்தாள் முதலான தலங்களும் தென்கிழக்கில் மூன்று மைலில் திருக்குடமூக்கு, திருக்கொட்டையூர் முதலான பாடல் பெற்ற தலங்களும் இருக்கின்றன என்று குறிப்பிடுகின்றார். இதே அமைப்பு முறையில்தான் செம்பியன் மாதேவித் தல வரலாற்றில் அதன் இருப்பிடத்தைப் பண்டாரத்தார் குறிப்பிடுகின்றார்.
தாம் கூறவந்த தலத்தைப் பற்றி மட்டும் கூறாமல் அவற்றைச் சுற்றிலும் அமைந்துள்ள கோயில்களைத் தல யாத்திரை மேற்கொள்ள விரும்புவோர்க்கு உதவியாய்த் திகழும் வகையில் குறிப்பிடக் காரணம் அன்னாரது சமய உணர்வேயாகும் என்றால் அதனை மறுப்பாருண்டோ?
இதனைப்போன்றே கோயில்களின் பரப்பளவு, பிரகாரத் திருவாயில்களின் பெயர்கள், கோயில்களில் உள்ள மூர்த்திகளின் சிறப்புக்கள் - வடிவ அமைப்புக்கள் - புராண வரலாறுகள் - தல விருட்சச் சிறப்பு - தீர்த்தச் சிறப்பு - திருவிழாக்கள் - அன்றாட நிர்வாகத் தன்மை ஆகியவற்றைக் குறிப்பிடுவதோடு அவ்வாலயங்களில் கல்வெட்டுக் களால் அறியலாகும் செய்திகளையும் அறிஞர் பண்டாரத்தார் தொகுத் துரைக்கிறார்.
நூல்களின் தனிச் சிறப்பு
திருப்புறம்பயத் தல வரலாற்றில் அத்தலம் இடம் பெற்றுள்ள தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து விளக்கும் இடம் அன்னாரது சமய இலக்கியப் பயிற்சியைத் தெள்ளிதின் விளக்குவதாயுள்ளது. மூவர் தேவாரம், மணிவாசகரின் திருவாசகம், பதினோராம் திருமுறையில் பட்டினத்தடிகளார் பாடல், பன்னிரண்டாம் திருமுறையான பெரிய புராணம், பரஞ்சோதியார் திருவிளையாடல், வேம்பத்தூரார் திருவிளை யாடல், சிவஞான முனிவரின் சோமேசர் முதுமொழி வெண்பா, சென்னை மல்லையரின் சிவசிவ வெண்பா, புறம்பயத் தல புராணம், திருப்புறம்பய உலா, புறம்பய மாலை, திருப்புகழ், தில்லைக் கலம்பகம் முதலான இலக்கியங்களில் புறம்பயம் இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.
அதுபோலச் செம்பியன் மாதேவிக் கல்வெட்டுக்களால் அத்தலத் தோடு தொடர்புடைய அரசர்கள் பட்டியலைக் குறிப்பிடுமிடத்து, தமிழக வரலாற்றின் மையப் பகுதிக் கால வரலாற்றுச் சுருக்கமாகவே திகழ்வதோடு அக்காலத்தில் சைவ சமய உணர்வு மேம்பட்டிருந்த பான்மையினைப் புலப்படுத்துகின்றார். செம்பியன் மாதேவித் தல வரலாறு சோழர் வரலாற்றுச் சுருக்க நூல் எனின் அது மிகையன்று.
இந்நூல் பதிப்பாசிரியரும், இந்நூல் இக்கோயிலின் வரலாற்றை மட்டும குறிப்பதன்று. சோழர் காலத்து வரலாறு கூறும் கருவூலம். மழவர்கோன் பெற்றெடுத்த மாதரசி, சோழ வளநாட்டுப் பேரரசி சைவப் பிராட்டி செம்பியன் மாதேவியின் வரலாறு கூறும் காப்பியம் என்று பாராட்டியுரைத்துள்ளார். அதுவரை வெளிவந்த தல வரலாறுகள் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு புனைந்துரைக்கப் பெற்றிருந்த நிலையில் பண்டாரத்தாரின் தல வரலாறுகளோ கல்வெட்டு ஆராய்ச்சியுரையுடன் கொண்டு எழுதப்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
செம்பியன் மாதேவி
சோழர் அரண்மனையிலேயே இளவரசியாகவும், அரசியாகவும், அரசருடைய தாயாகவும், பாட்டியாகவும் எண்பத்தைந்து ஆண்டுக் காலம் வாழ்ந்து, அக்காலத்தில் சோழ இராச்சியத்தில் சக்கரவர்த்தி களாக வீற்றிருந்து அரசாண்ட ஆறுசோழ மன்னர்களான முதற் பராந்தக சோழர், முதற் கண்டராதித்த சோழர், அரிஞ்சய சோழர், சுந்தர சோழர், உத்தம சோழர், முதல் இராசராச சோழர் முதலான பெரு வேந்தர்களை சைவ நன்னெறியில் ஈடுபடுத்தி அறச் செயல்களைச் செய்வித்த மங்கையர்க்கரசியார் செம்பியன் மாதேவியின் வரலாறு, அக்காலத்துச் சைவ சமய வளர்ச்சியில் மங்கையரின் பெரும் பங்கை எடுத்து விளக்குவதாய்த் தெரிகின்றது.
அறிஞர் செய்த தவறு
பின்னாளில் செம்பியன் மாதேவியார் வரலாற்றை ஒரு மாநாட்டின் தலைமையேற்று எடுத்துரைத்துப் பின் அதனைக் கட்டுரையாக வெளியிட்டுள்ள தமிழ் இலக்கிய வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர், செம்பியன் மாதேவி வரலாற்று உண்மைகளைப் பல கல்வெட்டுக்களின் வழி ஆராய்ந்து வெளிக் கொணர்ந்த பண்டாரத்தார் அவர்களின் பெயர்க் குறிப்பின்றி, தாமே முயன்று அறிந்த உண்மை போலத் தொகுத்தளித்துள்ளார். அவர் அப்பணியையாவது செம்மை யாகச் செய்துள்ளாரா என்றால் அதுவும் இல்லை. சான்றாக மூன்று கருத்துக்களைக் காணலாம்.
உத்தம சோழனின் மனைவியர் அறுவர் என்றும், அவர்கள் பட்டனதானதுங்கியார், மழபாடித் தென்னவன் மாதேவியார், இருங்கோளர் மகளார் வானவன் மாதேவியார், விழுப்பரையர் மகளார் கிழானடிகள், பழுவேட்டரையர் மகளார், சொன்ன மாதேவியார் என்ற கண்ணப்பரசியார் என்றும் பண்டாரத்தார் குறிப்பிடுகின்றார். ஆனால் பின்னவரோ செம்பியன் மாதேவியின் மருமகள்மார் ஐவர் என்றே குறிப்பிட்டுள்ளார். முன்னைய செய்திகளை எடுத்தாள்வதில கூட எவ்வளவு முரண்?
அம்மட்டோ? செம்பியன் மாதேவி தம் பேரனார் முதல் இராசராச சோழர் ஆட்சிக் காலத்தில் கி.பி.1001-இல் தென்னார்க்காடு ஜில்லா விழுப்புரம் தாலுக்காவிலுள்ள திருவக்கரைக் கோயிலைக் கருங்கற் கோயிலாக அமைத்தமையே தம் வாழ்நாளின் இறுதியில் செய்த திருப்பணி என்று பண்டாரத்தார் அத்தலக் கல்வெட்டின் துணைக் கொண்டு புலப்படுத்தியுள்ளார்.
ஆனால் பின்னவரோ கி.பி.981இல் கட்டிய செம்பியன் மாதேவி சிவாலயமே இவர் கட்டிய கடைசிக் கோயில் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தஞ்சாவூர் ஜில்லாவில் கோனேரிராசபுரம் என்று இந்நாளில் வழங்கும் திருநல்லம் என்ற ஊரிலுள்ள திருக்கோயிலைக் கருங்கற் கோயிலாய்க் கட்டி… அக் கோயிலைத் தம் ஒப்புயர்வற்ற கணவனார் கண்டராதித்த சோழர் பெயரால் அமைத்து, அதில் அவ்வரசர் பெருமான் சிவலிங்க வழிபாடு செய்வதாகத் திருவுருவம் ஒன்று வைத்திருப்பது உணரற்பாலது என்று குறிப்பிடும் பண்டாரத்தார், எந்த ஓர் இடத்திலும் செம்பியன் மாதேவியில் அவ்வகைச் சிற்பம் அமைந்திருப்பதாகக் குறிப்பிடவில்லை. ஆனால் பின்னவர் செம்பியன் மாதேவியார் தம் பெயராலேயே ஓர் ஊரை உண்டாக்கினார். … இதில் தம் கணவர் பூசை செய்யும் வடிவம் அமைத்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு முன்னோர் அறிவித்த வரலாற்றுண்மைகளைத் தாமே அறிந்தவை போல் கூறுவதும், அவ்வாறு கூறுமிடத்தும் உண்மைக்கு மாறான செய்திகளை எடுத்துரைப்பதும் எவ்வளவு தவறான செய்கை?
அடுத்து இன்னோர் அறிஞர் பண்டாரத்தார் அவர்களின் நூலை முழுமையாகப் படியாமல் - பண்டாரத்தார் கூறியுள்ள ஒரு கருத்தை மாற்றி - தாம் மறுத்துரைப்பதாக எழுதியுள்ளார். செம்பியன் மாதேவிச் சிவாலய வரலாற்றில் பண்டாரத்தார், இதுகாறும் ஆராய்ந்து கண்ட அளவில், இவ்வரசியார் நம் தமிழகத்தில் பத்துச் செங்கற் கோயில் களைக் கருங்கற் கோயில்களாகக் கட்டியுள்ளனர் என்று தெரிகிறது. அவை, திருநல்லம், செம்பியன்மாதேவி … திருவக்கரை ஊர்களிலுள்ள சிவாலயங்களேயாகும் என்று தெளிவுபட உரைத்துள்ளார்.
இவ்விடத்து முன்பு செங்கற்கோயிலாயிருந்த கயிலாச நாதர் கோயிலே செம்பியன் மாதேவியால் கருங்கற்றளியாயிற்று என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளாரேயன்றி, அக்கோயிலைச் செம்பியன் மாதேவி புதிதாக எடுத்ததாக யாண்டும் குறித்தார் இல்லை. ஆனால் அந்நூற்கு அணிந்துரை அளித்துள்ள ஒருவர், இக்கோயிலைப் புதிதாகக் கட்டிக் கடவுண்மங்கலம் செய்தார் என்று கொள்வது பொருத்தமில்லை என்பது என் கருத்து. இங்குள்ள திருக்கோயில் பழமையானதாகவே இருக்க வேண்டும் என்று குறித்துள்ளார்.
ஏன் இந்தத் தெளிவின்மை? முன்னுரை, முடிவுரை நீங்கலாகப் பத்தொன்பது பக்க வரலாற்றைப் படித்து உணர்வதில் கூட இவ்வளவு தடுமாற்றமா? மேலும் செம்பியன் மாதேவி கருங்கற்றளியாக்கிய செங்கற்கோயில்கள் பத்து எனப் பண்டாரத்தார் குறித்திருக்க, கற்றளியாக அவர் எடுப்பித்த கோயில்கள் ஒன்பது என்று பின்னவர் குறிக்கின்றார். திருப்பணி செய்த ஆநாங்கூர் என்னும் பதியை அவர் விட்டு விடுகின்றார். மேலும், இலக்கிய வரலாற்றறிஞர் மு.அருணாசலம் அவர்கள் பன்னிரண்டு தலங்கள் எனக் குறிப்பிட்டு, திருநறையூர், அகத்தீச்சுரம் ஆகியவற்றைக் குறித்துள்ளார். ஆனால், அவர் அதற்கான ஆதாரங்களைத் தந்தாரில்லை என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
தெளிவாய்ச் சுட்டிய வரலாற்றுண்மைகளை எடுத்துக் கூறுவதில் கூட எவ்வளவு முரண்பாடுகள், சொன்னதைச் சொல்வதிலேயே இவ்வளவு சிரமம் என்றால், கல்வெட்டுக்கள் சொன்னவற்றை ஆராய்ந்து, புதிய உண்மைகளைத் திரட்டியுரைத்தல் என்பது எவ்வளவு பெரிய அரும்பணி என்பது விளங்கும்.
பற்றும் உண்மையும்
சைவ சமயப் பற்றுடையார் பண்டாரத்தார் எனினும் அப்பற்றின் காரணமாகத் தாம் அறிந்த உண்மைகளைத் தெளிவாக எடுத்துரைக்க அவர் தயங்கினாரில்லை. சமயப் பற்றின் காரணமாகச் சமய இலக்கியங்களின் கால வரையறையை முன் வைத்துப் பேசுவதோ, மிகுவித்து உரைப்பதோ இவர் இயல்பல்ல.
சுந்தரமூர்த்தி நாயனார், நம்பியாண்டார் நம்பி, மணிவாசகர் முதலான சமயச் சான்றோர்களின் காலம் குறித்த பல்வேறு கருத்துக்களின் வன்மை மென்மைகளை ஆராய்ந்த பண்டாரத்தார், உறுதியான முடிவுகளைத் தக்க சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.
தமிழ்மொழியின் தொல் முனியான அகத்தியரைப் பற்றியும், அவருடைய சைவ சமயத் தொடர்பு பற்றியும் ஆராய்ந்துரைத்துள்ள பண்டாரத்தார், அன்னாருடன் தொடர்புடைய அகத்தியான் பள்ளி, பொதியின் மலை முதலான இடங்களில் வரலாற்றையும் எடுத்து விளக்கியுள்ளார். தென்னாடு உடைய சிவனை எந்நாட்டவருக்கும் இறைவனாய் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்ட அகத்திய மாமுனி ஜாவா முதலிய கீழ்த்திசை நாடுகளில் சிவ வழிபாட்டை உண்டு பண்ணியவர் என்று அந்நாட்டுக் கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டிச் சுட்டியுள்ளார்.
கி.பி.732இல் சஞ்சயன் என்ற வேந்தன் ஒருவன் ஜாவாவில் உள்ள ஒரு குன்றின் உச்சியில சிவாலயம் ஒன்று உலகிற்கு நலமுண்டாகு மாறு கட்டினான் என்றும் அங்குச் சிவ வழிபாடு பாண்டிய நாடாகிய குஞ்சர குஞ்ச நாட்டிலிருந்து வந்ததாகவும் குறிப்பிடும் கல்வெட்டுச் சான்றினைக் காட்டி நிறுவுகின்றார்.
தேவார சொல்லாட்சி
சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பெற்ற முதல் ஏழு திருமுறைகளைப் பொதுவாகத் தேவாரம் என்று வழங்குதல் மரபு. கி.பி.11ஆம் நூற்றாண்டில் கல்வெட்டுக்களில் தேவாரம் என்னும் சொல் இறைவன் வழிபாட்டு அறையைக் குறிப்பதாகவே பயன்படுத்தப் பெற்றுள்ளது என்றும், அவ்வழிபாட்டு அறையைக் கண்காணிக்கும் அதிகாரி தேவார நாயகம் எனப் பட்டான் என்றும், திருமுறைகளை வைத்துப் பூசிக்கப் பெற்ற மண்டபம் திருக்கைக் கோட்டி என வழங்கப்பட்டது என்றும் குறிப்பிடுகின்றார்.
பின்மூவர்பாடல்கள்எவ்வாறுகுறிக்கப்பெற்றனஎன்றஐயத்திற்குவிடைதரவந்தபண்டாரத்தார்,நம்தேவாரத்துக்குத்திருப்பதியம்பாடும்பெரியோன்… என வரும் தஞ்சை ஜில்லா திருக்களர்க் கல்வெட்டுத் தொடரையும், தேவாரத்துக்குத் திருப்பதியம் விண்ணப்பம் செய் என வரும் திருச்சி ஜில்லா அல்லூர்க் கல்வெட்டுத் தொடரையும் சான்று காட்டித் தேவாரம் வேறு, திருப்பதியம் வேறு என நிறுவி வழிபாட்டு இடமான தேவாரத்துள் விண்ணப்பிக்கப்பெறும் பாடல்கள் திருப்பதியம் எனப்பட்டன என்று தம்கோள் நிறுவியுள்ளார்.
தில்லையைப் பொன் வேய்ந்தமை
தில்லைக் கோயிலுக்குப் பொன் வேய்ந்தவன் முதற் பராந்தக சோழன் எனப் பொதுவாக வழங்கப் பெற்று வரும் செய்தியினைப் பற்றிக் கூற வந்த பண்டாரத்தார், கொங்கு நாட்டை வென்று அங்கிருந்து பொன் கொணர்ந்து தில்லைச் சிற்றம்பலத்திற்கு முதன் முதலில் பொன் வேய்ந்தவன் விசயாலயன் புதல்வனும் முதற் பராந்தக சோழனின் தந்தையுமான முதல் ஆதித்த சோழனே எனத் திருத்தொண்டர் திருவந்தாதியின் துணைக் கொண்டு புலப்படுத்துகின்றார். மேலும் முதற் பராந்தக சோழன் காலத்தில் அவன் தங்கை குந்தவை நாச்சியாராலும், அதன்பின் விக்கிரம சோழனாலும், அவன் படைத் தலைவனாகிய மணவிற் கூத்தன் காலிங்கராயனாலும், அதன்பின் இரண்டாம் குலோத்துங்கனாலும் பொன் வேயப் பெற்றது எனக் கல்வெட்டு மற்றும் இலக்கிய ஆதாரங்களுடன் எடுத்துரைத்து, சோழ மன்னர் ஆட்சிக் காலங்களில் தில்லைச் சிற்றம்பலம் பல முறை பொன் வேயப் பெற்றிருத்தல் வேண்டும் என்று புலப்படுத்தியுள்ளார்.
சமய இலக்கியங்கள்
மறைந்து போன சமய இலக்கியங்களான திருப்பாலைப்பந்தல் உலா, இறைசைப் புராணம், ஓங்கு கோயிற் புராணம் ஆகியவற்றின் பெயர்களைக் கல்வெட்டுக்கள் மற்றும் இலக்கியப் பாடல்கள் கொண்டு பண்டாரத்தார் குறிப்பிடுகின்றார்.
மேலும் வீரசோழிய யாப்புப் படல உரையாசிரியர் பெருந்தேவனார் குறிப்பு, மற்றும் சம்பந்தர் அப்பர் முதலானோரின் பாடற்குறிப்பு ஆகியவற்றால் நாள்தோறும் சமணர்களால் பெரிதும் போற்றி ஓதப்பெற்று வந்த நூல்களான கிளி விருத்தம, எலி விருத்தம், நரி விருத்தம் ஆகிய நூல்களைப் பற்றி அறிய முடிகிறது என்று பண்டாரத்தார் குறிப்பிடுகின்றார்.
முதலில் ஆகமங்கள் ஒன்பது தோன்றின என்றும் பின்னர் அவை விரிந்து இருபத்தெட்டு ஆகமங்களாகப் போயின என்றும் திருமந்திரக் கருத்தினை உணர்த்தும் பண்டாரத்தார் திருமந்திர ஆசிரியர் திருமூலர் பழைய சிவாகமங்கள் ஒன்பதையும் உளத்திற்கொண்டே தம் திருமந்தி நூலை ஒன்பது தந்திரங்களாக வகுத்துள்ளனர் என்று கூறுகின்றார்.
விநாயகர் வழிபாடு
பிள்ளையார் என்று வழங்கப் பெற்று வரும் விநாயகக் கடவுள் வழிபாடு கி.பி.ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழ்நாட்டில் தொடங்கியது என்பது ஆராய்ச்சியால் அறிந்ததோர் உண்மையாகும் என்று விநாயகர் வழிபாடு தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பண்டாரத்தார் கடைச்சங்க காலத்தில் விநாயகர் வழிபாடின்மையைச் சுட்டிக் காட்டி, கி.பி.642இல் சிறுத்தொண்டரால் வாதாபியை வென்று விநாயகர் படிவம் கொணரப் பெற்று வணங்க பெற்ற செய்தியினை விநாயகர் வழிபாடும் தமிழ்நாடும் என்னும் கட்டுரையில் விரிவாக விளக்கியுள்ளார்.
கோயில் வகைகள்
ஈச்சுரம் எனக் குறிப்பிடப் பெறும் ஆலயங்கள், கட்டிய மன்னன் பெயராலும் (பல்லவனீச்சுரம்),. வழிபட்டோர் பெயராலும் (தாடகேச்சுரம்) அமைக்கப் பெற்றவை என்று பண்டாரத்தார் குறிப்பிடுகின்றார்.
பெருங்கோயில் எனப்படுவன மலை மல்குகோயில் எனப்பெறும் மாடக் கோயில்கள் எனவும் இவை கோச்செங்கட் சோழனால் எடுப்பிக்கப் பெற்றவை எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
ஞாழல் மரத்தின் அடியில் அமையப் பெற்ற திருப்பாதிரிப் புலியூரிலுள்ள கோயில் ஞாழற் கோயில் எனவும், கொகுடி என்னும் முல்லைக் கொடி நிழலில் அமையப்பெற்ற திருக்கருப்பறியலூரிலுள்ள கோயில் கொகுடிக் கோயில் எனவும் குறிப்பிடும் பண்டாரத்தார், இளங்கோயில் எனப் பெறுபவை கோயிலைப் புதுக்குங்கால் அண்மையில் இறைவனை எழுந்தருளுவித்து வழிபாடு செய்யும் இடம் என விளக்கி அதற்குச் சான்றாகத் திருமீயச்சூர் தேவாரத் தலத்தைச் சுட்டுகின்றார்.
மேலும் ஒரு தலத்திலுள்ள கோயிலின்கண் பிற தலப் பெருமாளுக்கு எடுப்பிக்கப்பெறும் கோயில்கள் இளங்கோயில் எனல் பொருத்தமுடையதேயாம் என்று கூறி, அக்கூற்றிற்குச் சான்றாக, திருப்புறம்பய ஆலயத்தில் எடுப்பிக்கப் பெற்ற வன்மீக முடையார், வலஞ்சுழியுடையார் கோயில்களையும், திருக்குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் எடுக்கப்பெற்ற திருப்புறம்பயமுடையா திருக்கோயிலையும் காட்டுகின்றார்.
ஆலக்கோயில் எனப்படுவது ஆலமர நிழலின் கோயில். இது திருக்கச்சூரில் உள்ளது என்றும் பண்டாரத்தார் குறிப்பிடுகின்றார்.
கஜபிரஷ்ட விமானம் என்னும் கட்டிடக்கலை அமைப்புடைய கோயில் தூங்கானை மாடம் என்றும், அவ்வமைப்புடைய கோயில்கள் இன்னம்பர், திருத்தணி, பெண்ணாகடம் ஆகிய ஊர்களில் உள்ளன என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
முடிவுரை
இதுகாறும் கண்ட செய்திகளையெல்லாம் தொகுத்து நோக்குமிடத்து, அறிஞர் பண்டாரத்தார் தலைசிறந்த சைவ நெறியாளர் என்பது விளங்கும். தமது பற்றின் காரணமாக ஒருபாற் கோடாது நெடுநுகத்துப் பகல் போலநடுவு நின்ற நன்னெஞ்சோடு ஆய்வு செய்த பெருந்தகையராக அறிஞர் பெருமகனார் காட்சியளிக்கிறார் என்பதும் தெளிவு.
வரலாற்று அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார்
- பி.தயாளன்
திருப்புறம்பயம் வைத்தியலிங்கம் சதாசிவப் பண்டாரத்தார், வரலாற்றுப் புகழ்மிக்க வண்டமிழ்ப் பேரறிஞர்! தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருப்புறம்பயம் என்னும் சிற்றூரில் 15.08.1892 ஆம் நாள் பிறந்தார்.
தொடக்கக் கல்வியையும், நடுநிலைக் கல்வியையும் உள்ளூரிலும், புளியஞ்சேரியிலும் கற்றார். அதன்பிறகு குடந்தை நகரப் பள்ளியில் பள்ளி இறுதித் தேர்வில் சிறப்பாக வெற்றியடைந்தார். தமிழ்க் கல்வி மீதான ஆர்வம் காரணமாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தாமே பயின்று புலமை பெற்று விளங்கினார்.
உயர்நிலைப் பள்ளியில் பயிலும் போது பின்னத்தூர் நாராயண சாமி ஐயர், வலம்புரி க.பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகிய தமிழறிஞர் களின் தொடர்பு ஏற்பட்டது. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் தமிழ் இலக்கியத்திலும், தமிழ்க் கல்வெட்டுத் துறையிலும் மிகுந்த புலமையும் ஈடுபாடும் மிக்கவர். அவர்களிடம் பெற்ற பயிற்சியினால் பண்டாரத்தார் இலக்கியத்திலும், கல்வெட்டு ஆய்விலும் நல்ல புலமையையும், ஆராய்ச்சித் திறனையும் வளர்த்துக் கொண்டார்.
குடந்தை வாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் 1917ஆம் ஆண்டில் தலைமைத் தமிழ் ஆசிரியராகப் பணியேற்று, 1942ஆம் ஆண்டு சூலைத் திங்கள் வரையில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குத் தமிழறிவு புகட்டினார். பின்னர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனர் அரசர் அண்ணாமலையாரின் அழைப்பிற்கு இணங்கிப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித் துறையில் சேர்ந்து 1942 முதல் 1960 வரை பணியாற்றினார். அங்குப் பணியாற்றிய காலத்தில் சோழர் வரலாறு (மூன்று பாகங்கள்) தமிழிலக்கிய வரலாறு (13,14,15ஆம் நூற்றாண்டுகள்) ஆகிய அரும்பெரும் நூல்களைப் படைத்தார்.
மதுரைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்டு வந்த செந்தமிழ் இதழில் தமிழ் இலக்கியம் - வரலாறு பற்றிய பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர், தமிழவேள் த.வே.உமா மகேசுவரனார் அளித்த ஊக்கத்தால் தமிழ்ப்பொழில் இதழில் தமிழக மன்னர்களின் வரலாறுகளைத் தொகுத்தார். மேலும், ஊர்ப்பெயர் ஆய்வு - ஊர்ப்பெயர் பொருத்தம் - கல்வெட்டுப் பதிப்பு - கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு இலக்கியங்களைக் கால நிருணயம் செய்தல் - சைவ சமயச் சான்றோர்கள் வாழ்ந்த ஊர்களை நிருணயம் செய்தல் போன்றவை குறித்துப் பல கட்டுரைகள் வரைந்தார். அக்கட்டுரைகள் பின்னர் நூல்களாக வடிவம் பெற்றன.
பண்டாரத்தார் எழுதிய சோழர் வரலாறு தமிழ் எழுத்தாளர் களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
முதற்குலோத்துங்க சோழன், பாண்டியர் வரலாறு, பிற்காலச் சோழர் சரித்திரம் ( 3 பாகங்கள்), காவிரிப்பூம்பட்டினம், கல்வெட்டுகளால் அறியப்பெறும் உண்மைகள், பாண்டியர் பெருமாட்சி, இலக்கிய ஆராய்ச்சியும், கல்வெட்டுக்களும் ஆகிய வரலாற்று நூல்களைப் பண்டாரத்தார் தமிழர்களுக்கு வழங்கியுள்ளார்.
இவரின் வரலாற்று நூல்கள் யாவும் கல்வெட்டுக்களையும், சாசனச் செப்பேடுகளையும் அடிப்படையாகக் கொண்ட ஆய்வின் அடிப்படையில் எழுதப் பெற்ற சிறப்பான படைப்புகளாகும். மேலும், வரலாறு என்றால், அது மன்னர்களைப் பற்றி மட்டும் குறிப்பது அல்ல என்பதைப் பண்டாரத்தார் தெளிவு படுத்தினார். மாறாக வரலாற்றை சமூகவியல், மொழியியல், பொருளியல், இலக்கியம், அகழாய்வு முதலிய பல துறைகளையும் இணைத்து முழுமையான அளவில் வரலாற்று நூல்களை எழுதிப் படைத்துள்ள போற்றுதற்குரிய தமிழ்ப் பேரறிஞர் அவர்.
பண்டாரத்தாரின் பாண்டியர் வரலாறு, பிற்காலச் சோழர் வரலாறு நூல்கள் பாட நூல்களாகச் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முதலியவற்றில் வைக்கப்பட்டு கற்பிக்கப்பட்டன.
தமிழ்ப் பல்கலைக்கழகம் காணவேண்டும் என்ற சிந்தனையை வெளியிட்ட அறிஞர்களில் பண்டாரத்தாரும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவில் தமிழ் மொழிக்கென ஒரு தனிப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு பெரு முயற்சியும், போதிய உதவிகளும் செய்ய வேண்டும் என்று வழிமொழிந்தவர் பண்டாரத்தார்.
பண்டாரத்தார் தனது கட்டுரைகளையும், நூல்களையும் வட மொழிச் சொற்கள் பெரிதும் கலவாமல், நல்ல தமிழ் நடையில் எழுதி அனைவருக்கும் பயன்படச் செய்துள்ளார்.
பேராசிரியர் கார்மேகக் கோனார் இவருக்கு ஆராய்ச்சிப் பேரறிஞர் என்னும் பட்டத்தை 29.03.1956 ஆம் நாள் வழங்கி அதற்குரிய பொற்பதக்கத்தையும் அளித்தார்.
பண்டாரத்தாரின் தமிழ்த் தொண்டைப் பாராட்டித் தமிழ் எழுத்தாளர் சங்கம் 07.04.1956 ஆம் நாள் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது. மதுரைத் திருவள்ளுவர் கழகம் இவருக்குப் பாராட்டு விழா எடுத்துப் பெருமைப் படுத்தியது.
வரலாற்று இடங்களுக்குத் தாமே நேரில் சென்று களப்பணியும், ஆய்வும் செய்தவர். அடிப்படையற்ற எந்தச் செய்தியையும், கருத்துக்களையும் பண்டாரத்தார் ஏற்றுக் கொண்டதில்லை.
தமிழகத்தில் ஏற்பட்ட அயலார் படையெடுப்புகளால் தமிழும், தமிழ் மக்களும் பாதிப்புக்கும், வீழ்ச்சிக்கும் ஆளாயினர். களப்பிரர் படையெடுப்பு, பாண்டிய நாட்டில் எத்துணையோ மாறுதல்களையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தியது. பாலி மொழி, பிராகிருத மொழி ஆகிய பிற மொழிச் செல்வாக்கு தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழர் நாகரிகம் ஆகியவற்றை வீழ்ச்சியுறச் செய்துவிட்டன. இவைபோன்ற வரலாற்றுச் செய்திகளை வேள்விக்குடிச் செப்பேடுகளின் வாயிலாக ஆய்வு செய்து வெளிப்படுத்தினார்.
சோழ மன்னர்களின் கல்வெட்டுகள், மெய்க்கீர்த்திகள், செப்பேடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று அடிப்படையில் ஒவ்வொரு மன்னரும் பட்டமேற்ற ஆண்டு, அவர்கள் புரிந்த போர்கள், அவர்கள் செய்த சமுதாயப் பணிகள், பெற்ற சிறப்புப் பட்டங்கள், அவர்தம் மனைவியர், புதல்வர்கள், அம்மன்னர்களுக்கு உதவிய அரசாங்க அதிகாரிகள் முதலானவர்கள் பற்றிய செய்திகளை விரிவாக விளக்கியுள்ளார்.
மேலும், சோழர்களின் அரசியல், ஆட்சித் திறன், அவர்கள் விதித்த நிலவரிகள், செய்த கோயில்பணிகள், நடத்திய வாணிபம், நாட்டு மக்களின் பொருளாதார நிலை, சமுதாய வாழ்வு ஆகியவற்றை மிக விரிவாகவும், தெளிவாகவும் கொடுத்துள்ளார். அதேபோல் பிற்காலச் சோழர்களின் முழுமையான வரலாற்று நிகழ்வுகளை மிகச் சரியாக கொடுத்தவர், வரலாற்று அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
சதாசிவப் பண்டாரத்தாரோடு கல்வெட்டுக்களில் நாட்டோடு இணைந்து வழங்கப் பெறும் எண்கள் - கல்வெட்டுக்களைப் படிக்கும் ஆற்றல் - பதிப்பிக்கும் பயிற்சி - கால நிருணயம் செய்யும் வரலாற்று வரைவு முறை முதலியவற்றில் புலமையுடைவராக விளங்கினார்.
அறிஞர் சதாசிவப் பண்டாரத்தாரின் இடையறாத உழைப்பால் தமிழ்நாட்டு வரலாறு பெரிதும் விளக்கமுற்றது. அதனால், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் உரிய வரலாற்றறிவும், ஆராய்ச்சித் திறனும், மொழிப்புலமையும் பெற்றனர் என்றால் மிகையல்ல.
பண்டாரத்தார் உடல் நலிவுற்று, 02.01.1960 ஆம் நாள் அண்ணாமலை நகரில் இயற்கை எய்தினார். தனது இறுதிக் காலம் வரை ஆய்வும், எழுத்துமாகவே வாழ்ந்தார்.
(நன்றி - தமிழ் ஓசை
சென்னைப்பதிப்பு 16.11.2007)
கருத்துகள்
கருத்துரையிடுக