Paṭṭiṉattup piḷḷaiyār III


சித்தர் பாடல்கள்

Back

பட்டினத்துப் பிள்ளையார் தொகுப்பு - III



சித்தர் பாடல்கள்:
ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-III
அருட்புலம்பல் 1, 2, 3 & 4

cittar pATalkaL: paTTiNattAr pATalkaL - III
arutpulampal 1, 2, 3 and 4
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
We thank Digital Library of India for providing us with scanned image file version of this siddhar work.
This work was prepared through the Distributed Proof-reading approach of Project Madurai.
We also thank following persons for their help in the preparation of the etext:
S. Anbumani, S. Karthikeyan, Ms. Rathnai, V. Devarajan & S. Govindarajan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2007.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/


இஃது சமிவனஷேத்திரமென்னுங் கோயிலூர் ஸ்ரீ முத்துராமலிங்கசுவாமிகளின்
ஆதினத்திற்குரிய ஸ்ரீ சிதம்பரசுவாமிகள் மாணாக்கர்களிலொருவராகிய
அ- இராமசுவாமியவர்களால், பரிசோதித்து ஒன்பத்திவேலி பட்டாமணியம்
சபாபதிபிள்ளை, குப்புசாமிபிள்ளை இவர்கள் வேண்டுகோளின்படி
சென்னை, பாப்புலர் அச்சுயந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.
பதிப்பு வருடம் 1887

சித்தர் பாடல்கள்:
ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் அருளிச் செய்தவை
அருட்புலம்பல் - முதல்வன் முறையீடு.

(Arutpulampal-1 and part of arutpulampal-2 has been released earlier under PM83.

கன்னிவனநாதா கன்னிவனநாதா !
மூலமறியேன்முடியுமுடிவறியேன்
ஞாலத்துட்பட்டதுயர்நாடநடுக்குதடா.
1
அறியாமையாமலத்தாலறிவுமுதற்கெட்டனடா
பிரியாவினைப்பயனாற்பித்துப்பிடித்தனடா.
2
தனுவாதியநான்குந்தானாய்மயங்கினண்டா
மனுவாதிசத்திவலையிலகப்பட்டனடா.
3
மாமாயையென்னும்வனத்திலலைகிறண்டா
தாமாயுலகனைத்துந்தாதுகலங்கிறண்டா.
4
கன்னிவனநாதா கன்னிவனநாதா !
மண்ணாசைப்பட்டேனைமண்ணுண்டுபோட்டதடா
பொன்னாசைபெண்ணாசைபோகேனேயென்குதே
5
மக்கள்சுற்றத்தாசைமறக்கேனேயென்குதே
திக்கரசாமாசையதுதீரேனேயென்குதே.
6
வித்தைகற்குமாசையதுவிட்டொழியேனென்குதே
சித்துகற்குமாசைசிதையேனேயென்குதே.
7
மந்திரத்திலாசைமறக்கேனேயென்குதே
சுந்தரத்திலாசைதுறக்கேனேயென்குதே.
8
கட்டுவர்க்கத்தாசைகழலேனேயென்குதே
செட்டுதனிலாசைசிதையேனேயென்குதே.
9
மாற்றுஞ்சலவைமறக்கேனேயென்குதே
சோற்றுக்குழியுமின்னந்தூரேனேயென்குதே.
10
கன்னிவனநாதா கன்னிவனநாதா !
ஐந்துபுலனுமடங்கேனேயென்குதே.
சிந்தைதவிக்கிறதுந்தேறேனேயென்குதே
11
காமக்குரோதங்கடக்கேனேயென்குதே
நாமேயரசென்றுநாடோறுமெண்ணுதே.
12
அச்சமாங்காரமடங்கேனேயென்குதே
கைச்சுமின்னுமானங்கழலேனேயென்குதே.
13
நீர்க்குமிழியாமுடலைநித்தியமாயெண்ணுதே
ஆர்க்குமுயராசையழியேனேயென்குதே.
14
கண்ணுக்குக்கண்ணெதிரேகட்டையில்வேகக்கண்டும்
எண்ணுந்திரமாயிருப்போமென்றெண்ணுதே.
15
அநித்தியத்தைநித்தியமென்றாதரவாயெண்ணுதே
தனித்திருக்கேனென்குதேதனைமறக்கேனென்குதே.
16
நரகக்குழியுமின்னுநான்புசிப்பேனென்குதே
உரகப்படத்தல்குலுனைக்கெடுப்பேனென்குதே.
17
குரும்பைமுலையுங்குடிகெடுப்பேனென்குதே
அரும்புவிழியுமென்றனாவியுண்பேனென்குதே.
18
மாதருருக்கொண்டுமறலிவஞ்சமெண்ணுதே
ஆதரவுமற்றிங்கரக்காயுருகிறண்டா.
19
கந்தனையீன்றருளுங்கன்னிவனநாதா
எந்தவிதத்தினானேறிப்படருவண்டா.
20
கன்னிவனநாதா கன்னிவனநாதா !
புல்லாகிப்பூடாய்ப்புலர்ந்தநாள்போதாதோ
கல்லாய்மரமாய்க்கழிந்தநாள்போதாதோ
21
கீரியாய்க்கீடமாய்க்கெட்டநாள்போதாதோ
நீரியாயூர்வனவாய்நின்றநாள்போதாதோ
22
பூதமொடுதேவருமாய்ப்போனநாள்போதாதோ
வேதனைசெய்தானவராய்வீந்தநாள்போதாதோ.
23
அன்னைவயிற்றிலழிந்தநாள்போதாதோ
மன்னவனாய்வாழ்ந்துமரித்தநாள்போதாதோ.
24
தாயாகித்தாரமாய்த்தாழ்ந்தநாள்போதாதோ
சேயாப்புருடனுமாய்ச்சென்றநாள்போதாதோ.
25
நோயுண்ணவேமெலிந்துநொந்தநாள்போதாதோ
பேயுண்ணப்பேயாய்ப்பிறந்தநாள்போதாதோ.
26
ஊனவுடல்கூன்குருடாயுற்றநாள்போதாதோ
ஈனப்புசிப்பிலிளைத்தநாள்போதாதோ.
27
பட்டகளையும்பரதவிப்பும்போதாதோ
கெட்டநாள்கெட்டெனென்றுகேளாதும்போதாதோ.
28
நில்லாமைக்கேயழுதுநின்றநாள்போதாதோ
எல்லாருமென்பாரமெடுத்தநாள்போதாதோ.
29
காமன்கணையாற்கடைபட்டல்போதாதோ
எமன்கரத்தாலிடியுண்டல்போதாதோ.
30
நான்முகன்பட்டோலைநறுக்குண்டல்போதாதோ
தேன்றுளபத்தானேமிதேக்குண்டல்போதாதோ.
31
உருத்திரனார்சங்காரத்துற்றநாள்போதாதோ
வருத்தமறிந்தையிலைவாவென்றழைத்தையிலை.
32
கன்னிவனநாதா கன்னிவனநாதா !
பிறப்பைத்தவிர்த்தையிலைபின்னாகக்கொண்டையிலை
இறப்பைத்தவிர்த்தையிலையென்னென்றுகேட்டையிலை.
33
பாசமெரித்தையிலைபரதவிப்பைத்தீர்த்தையிலை
பூசியநீற்றைப்புனையென்றளித்தையிலை.
34
அடிமையென்றுசொன்னையிலையக்குமணிதந்தையிலை
விடுமுலகம்போக்கியுன்றன்வேடமளித்தையிலை.
35
உன்னிலழைத்தையிலையொன்றாக்கிக்கொண்டையிலை
நின்னடியார்கூட்டத்தினீயழைத்துவைத்தையிலை
36
ஓங்குபரத்துளொளித்தவடியார்க்கடியான்
ஈங்கோரடியானெமக்கென்றுரைத்தையிலை
37
நாமந்தரித்தையிலைநானொழியநின்றையிலை
சேமவருளிலெனைச்சிந்தித்தழைத்தையிலை
38
முத்தியளித்தையிலைமோனங்கொடுத்தையிலை
சித்தியளித்தையிலைசீராட்டிக்கொண்டையிலை
39
தவிர்ப்பைத்தவிர்த்தையிலைதானாக்கிக்கொண்டையிலை
அவிப்பரியதீயாமென்னாசைதவிர்த்தையிலை
40
நின்றநிலையினிறுத்தியெனைவைத்தையிலை
துன்றுங்கரணமொடுதொக்கழியப்பார்த்தையிலை
41
கட்டவுலகக்காட்சிக்கட்டொழியப்பார்த்தையிலை
நிட்டையிலேநில்லென்றுநீநிறுத்திக்கொண்டையிலை.
42
கன்னிவனநாதா கன்னிவனநாதா !
கடைக்கணருள்தாடாகன்னிவனநாதா
கெடுக்குமலமொருக்கிக்கிட்டிவரப்பாரேடா
43
காதல்தணியேனோகண்டுமகிழேனோ
சாதல்தவிரேனோசங்கடந்தான்தீரேனோ
44
உன்னைத்துதியேனோவூர்நாடிவாரேனோ
பொன்னடியைப்பாரேனோபூரித்துநில்லேனோ
45
ஓங்காரப்பொற்சிலம்பினுல்லாசம்பாரேனோ
பாங்கானதண்டைபலபணியும்பாரேனோ.
46
வீரகண்டாமணியின்வெற்றிதனைப்பாரேனோ
சூரர்கண்டுபோற்றுமந்தச்சுந்தரத்தைப்பாரேனோ.
47
இடையில்புலித்தோலிருந்தநலம்பாரேனோ
விடையிலெழுந்தருளும்வெற்றிதனைப்பாரேனோ.
48
ஆனையுரிபோர்த்தவழகுதனைப்பாரேனோ
மானைப்பிடித்தேந்துமலர்க்கரத்தைப்பாரேனோ.
49
மாண்டார்தலைபூண்டமார்பழகைப்பாரேனோ
ஆண்டார்நமக்கென்றறைந்துதிரியேனோ.
50
கண்டங்கறுத்துநின்றகாரணத்தைப்பாரேனோ
தொண்டர்குழுவினின்றதோற்றமதைப்பாரேனோ.
51
அருள்பழுத்தமாமதியாமாநநத்தைப்பாரேனோ
திருநயனக்கடையொளிருஞ்செழுங்கொழுமைபாரேனோ.
52
செங்குமிழின்றுண்டம்வளர்சிங்காரம்பாரேனோ
அங்கனியைவென்றவதரத்தைப்பாரேனோ.
53
முல்லைநிலவெறிக்குமூரலொளிபாரேனோ
அல்லார்புருவத்தழகுதனைப்பாரேனோ.
54
மகரங்கிடந்தொளிரும்வண்மைதனைப்பாரேனோ
சிகரமுடியழகுஞ்செஞ்சடையும்பாரேனோ.
55
கங்கையொடுதிங்கணின்றகாட்சிதனைப்பாரேனோ
பொங்கரவைத்தான்சடையிற்பூண்டவிதம்பாரேனோ.
56
சரக்கொன்றைபூத்தசடைக்காட்டைப்பாரேனோ
எருக்கருகூமத்தையணியேகாந்தம்பாரேனோ.
57
கொக்கிறகுசூடிநின்றகொண்டாட்டம்பாரேனோ
அக்கினியையேந்திநின்றவாநந்தம்பாரேனோ.
58
தூக்கியகாலுந்துடியிடையும்பாரேனோ
தாக்குமுயலகன்மேற்றாண்டவத்தைப்பாரேனோ.
59
வீசுகரமும்விகசிதமும்பாரேனோ
ஆசையளிக்குமபயகரம்பாரேனோ.
60
அரிபிரமர்போற்றவமரர்சயசயெனப்
பெரியம்மைபாகம்வளர்பேரழகைப்பாரேனோ.
61
சுந்தரச்நீற்றின்சொகுசுதனைப்பாரேனோ
சந்திரசேகரனாய்த்தயவுசெய்தல்பாரேனோ.
62
கன்னிவனநாதா கன்னிவனநாதா !
கெட்டநாள்கெட்டாலுங்கிருபையினிப்பாரேடா
பட்டநாள்பட்டாலும்பதமெனக்குக்கிட்டாதோ.
63
நற்பருவமாக்குமந்தநாளெனக்குக்கிட்டாதோ
எப்பருவமுங்கழன்றவேகாந்தங்கிட்டாதோ.
64
வாக்கிறந்துநின்றமவுனமதுகிட்டாதோ
தாக்கிறந்துநிற்குமந்தத்தற்சுத்திகிட்டாதோ.
65
வெந்துயரைத்தீர்க்குமந்தவெட்டவெளிகிட்டாதோ
சிந்தையையந்தீர்க்குமந்தத்தேறலதுகிட்டாதோ.
66
ஆனவடியார்க்கடிமைகொளக்கிட்டாதோ
ஊனமறவென்னையுணர்த்துவித்தல்கிட்டாதோ.
67
என்னென்றுசொல்லுவண்டாவென்குருவேகேளேடா
பின்னையெனக்குநீயல்லாற்பிறிதிலையே.
68
அன்னவிகாரமதுவற்றவிடங்கிட்டாதோ
சொன்னவிகாரந்தொலைந்தவிடங்கிட்டாதோ
69
உலகவிகாரமொழிந்தவிடங்கிட்டாதோ
மலக்குழுவின்மின்னார்வசியாதுங்கிட்டாதோ
70
ஒப்புவமைபற்றோடொழிந்தவிடங்கிட்டாதோ
செப்புதற்குமெட்டாத்தெளிந்தவிடங்கிட்டாதோ
71
வாக்குமனாதீதவகோசரத்திற்செல்லவெனைத்
தாக்குமருட்குருவேநின்றாளிணைக்கேயான்போற்றி
72

பட்டணத்தார் முதல்வன் முறையீடு முற்றிற்று.

----

திருப்பாடற்றிரட்டு /அருட்புலம்பல் - 2
மகடூ முன்னிலையாக உள்ளது

ஐங்கரனைத்தெண்டனிட்டேனருளடையவேண்டுமென்று
தங்காமல்வந்தொருவன்றற்சொருபங்காட்டியெனை.
1
கொள்ளைப்பிறப்பறுக்கக்கொண்டான்குருவடிவம்
கள்ளப்புலனறுக்கக்காரணமாய்வந்தாண்டி.
2
ஆதாரமோராறுமைம்பத்தோரக்ஷரமும்
சூதானகோட்டையெல்லாஞ்சுட்டான்றுரிசறவே.
3
மெத்தவிகாரம்விளைக்கும்பலபலவாம்
தத்துவங்களெல்லாந்தலைகெட்டுவெந்ததடி.
4
என்னோடுடன்பிறந்தாரெல்லாரும்பட்டார்கள்
தன்னந்தனியேதரித்திருக்கமாட்டேண்டி.
5
எல்லாரும்பட்டகளமென்றுதொலையுமடி
சொல்லியழுதாற்றுயரமெனக்காறுமடி.
6
மண்முதலாமைம்பூதமாண்டுவிழக்கண்டேண்டி
விண்முதலாமைம்பொறிகள்வெந்துவிழக்கண்டேண்டி.
7
நீக்காப்புலன்களைந்துநீறாகவெந்ததடி
வாக்காதியைவரையுமாண்டுவிழக்கண்டேண்டி.
8
மனக்கரணமத்தனையும்வகைவகையேமட்டழிய
இனக்கரணத்தோடேயெரிந்துவிழக்கண்டேண்டி.
9
ஆத்துமதத்துவங்கள்அடுக்கழியவெந்ததடி
போற்றும்வகையெப்படியோபோதமிழந்தானை.
10
வித்தியாதத்துவங்கள்வெந்துவிழக்கண்டேண்டி
சுத்தவித்தையைந்தினையுஞ்சுட்டான்றுரிசறவே.
11
மூன்றுவகைக்கிளையுமுப்பத்தறுவரையும்
கான்றுவிழச்சுட்டுக்கருவேரறுத்தாண்டி.
12
குருவாகிவந்தானோகுலமறுக்கவந்தானோ
உருவாகிவந்தானோவுருவழிக்கவந்தானோ.
13
கேடுவருமென்றறியேன்கெடுமதிகண்டோற்றாமல்
பாடுவருமென்றறியேன்பதியாண்டிருந்தேண்டி.
14
எல்லாரும்பட்டகளமின்னவிடமென்றறியேன்
பொல்லாங்குதீர்க்கும்பொறியிலியைக்கண்டேண்டி.
15
உட்கோட்டைக்குள்ளிருந்தாரொக்கமடிந்தார்கள்
அக்கோட்டைக்குள்ளிருந்தாரறுபதுபேர்பட்டார்கள்.
16
ஒக்கமடி ந்ததடியூடுருவவெந்ததடி
கற்கோட்டையெல்லாங்கரிக்கோட்டையாச்சுதடி.
17
தொண்ணூற்றறுவரையுஞ்சுட்டான்றுரிசறவே
கண்ணேறுபட்டதடிகருவேரறுத்தாண்டி.
18
ஒங்காரங்கெட்டதடிவுள்ளதெல்லாம்போச்சுதடி
ஆங்காரங்கெட்டதடியடியோடறுத்தாண்டி.
19
தரையாங்குடிலைமுதல்தட்டுருவவெந்ததடி
இரையுமனத்திடும்பையெல்லாமறுத்தாண்டி.
20
முன்னைவினையெல்லாமுழுதுமறுத்தாண்டி
தன்னையறியவேதானொருத்தியானேண்டி.
21
என்னையேநானறியவிருவினையுமீடழித்துத்
தன்னையறியத்தலமெனக்குச்சொன்னாண்டி.
22
தன்னையறிந்தேண்டிதனிக்குமரியானேண்டி
தன்னந்தனியேதனியிருக்கும்பக்குவமோ.
23
வீட்டிலொருவரில்லைவெட்டவெளியானேண்டி
காட்டுக்கெறித்தநிலாகனவாச்சேகண்டதெல்லாம்.
24
நகையாரோகண்டவர்கள்நாட்டுக்குப்பாட்டலவோ
பகையாரோகண்டவர்கள்பார்த்தாருக்கேச்சலவோ.
25
இந்நிலமைகண்டாண்டியெங்குமிருந்தாண்டி
கன்னியழித்தாண்டிகற்பைக்குலைத்தாண்டி.
26
கற்புக்குலைத்தமையுங்கருவேரறுத்தமையும்
பொற்புக்குலைத்தமையும்போதமிழந்தமையும்.
27
என்னவினைவருமோவின்னமெனக்கென்றறியேன்
சொன்னசொல்லெல்லாம்பலித்ததடிசோர்வறவே.
28
கங்குல்பக*லாற்றிடத்தேகாட்டிக்கொடுத்தாண்டி
பங்கமழித்தாண்டிபார்த்தானைப்பார்த்திருந்தேன்.
29
சாதியிற்கூட்டுவரோசாத்திரத்துக்குள்ளாமோ
ஓதியுணர்ந்ததெல்லாமுள்ளபடியாச்சுதடி.
30
என்னகுற்றஞ்செய்தனோவெல்லாருங்காணாமல்
அன்னைசுற்றமெல்லாமறியாரோவம்புவியில்.
31
கொன்றாரைத்தின்றேனோதின்றாரைக்கொன்றேனோ
எண்ண*தெல்லாமெண்ணுமிச்சைமறந்தேனோ.
32
சாதியிற்கூட்டுவரோசமயத்தோரெண்ணுவரோ
பேதித்துவாழ்ந்ததெல்லாம்பேச்சுக்கிடமாச்சுதடி.
33
கண்டார்க்குப்பெண்ணலவோகாணார்க்குக்காமமடி
உண்டார்களுண்டதெலாமூணல்லாதுண்பர்களோ.
34
கொண்டார்கள்கொண்டதெல்லாங்கொள்ளாதார்கொள்ளுவரோ
விண்டவர்கள்கண்டவரோகண்டவர்கள்விண்டவரோ.
35
பண்டாயநான்மறைகள்பாடும்பரிசலவோ
தொண்டாயதொண்டருளந்தோற்றியொடுங்குமதோ.
36
ஓதவரிதோவொருவருணர்வரிதோ
பேதமறவெங்கும்விளங்கும்பெருமையன்காண்
37
வாக்குமனமுங்கடந்தமனோலயன்காண்
நோக்கவரியவன்காணுண்ணியரினுண்ணியன்காண்.
38
சொல்லுக் கடங்கான்காண் ! சொல்லிறந்து நின்றவன்காண் !
கல்லு ளிருந்த கனலொளிபோ னின்றவன்காண் !
39
சூட்டிறந்த பாழதனிற் கசிந்திருக்கச் சொன்னவன்காண் !
ஏட்டி லெழுத்தோ? எழுதினவன் கைப்பிழையோ?
40
சும்மா விருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்
அம்மா ! பொருளிதென வடைய விழுங்கினண்டி !
41
பார்த்த விடமெல்லாம் பரமாகக் கண்டேண்டி !
கோத்த நிலைகுலைந்த கொள்கை யறியேண்டி !
42
மஞ்சனமாட்டி மலர்பறித்துச் சாத்தாமல்
நெஞ்சுவெறும் பாழானேன் நின்றநிலை காணேண்டி !
43
பாடிப் படித்திருந்தும் பன்மலர்கள் சாத்தாமல்,
ஓடித் திரியாம லுருக்கெட்டு விட்டேண்டி !
44
மாணிக்கத் துள்ளளிபோல் மருவி யிருந்தாண்டி
பேணித் தொழுமடியார் பேசாப் பெருமையன்காண்
45
அன்றுமுத லின்றளவு மறியாப் பருவமதில்
என்றும் பொதுவா யிருந்த நிராமயன்காண்
46
சித்த விகாரத்தாலே சின்மயனைக் காணாமல்
புத்தி கலங்கிப் புகுந்தேன் பொறிவழியே
47
பத்தி யறியாமற் பாழில் கவிழ்ந்தேண்டி !
ஒத்தவிட நித்திரையென் றொத்து மிருந்தேண்டி?
48
... ... ....
... ... ...
49
கல்வியல்லகேள்வியல்லகைகாட்டுங்காரணங்காண்
எல்லையளவற்றதடியெங்குநிறைந்ததடி.
50
வாசாமகோசரத்தைமருவியிடங்கொண்டாண்டி
ஆசூசமில்லாண்டியறிவுக்கறிவாண்டி.
51
பத்துத்திசைக்குமடங்காப்பருவமடி
எத்திசைக்குமெங்குமிடைவிடாதேகமடி.
52
தித்திக்கவூறுமடிசித்தமுடையார்க்குப்
பத்திக்கடலுட்பதித்தபரஞ்சோதியடி.
53
உள்ளுணர்வாய்நின்றவர்தமுணர்வுக்குணர்வாண்டி
எள்ளளவுமுள்ளதிலேயேறிக்குறையாண்டி.
540
தூருந்தலையுமிலான்றோற்றமொடுக்கமிலான்
ஆருமறியாமலகண்டமாய்நின்றாண்டி.
55
எத்தனையோவண்டத்திருந்தவர்களெத்தனைபேர்
அத்தனைபேருண்டாலும்அணுவுங்குறையாண்டி.
56
வாக்குமனமும்வடிவுமிலாவான்பொருள்காண்
போக்கும்வரவுமிலான்பொருவரியபூரணன்காண்.
57
காட்சிக்கெளியான்காண்கண்டாலிங்காணான்காண்
மாட்சிமனம்வைத்தார்க்குமாணிக்கத்துள்ளொளிகாண்.
58
வாழ்த்தியவனைவழிபட்டால்மன்னுயிர்கள்
தோற்றவரியான்காண்சொல்லிறந்தசோதியன்காண்.
59
ஐயமறுத்தவனையாராய்வாருண்டானால்
வையகத்தேவந்துமலர்ப்பாதம்வைத்திடுவான்.
60
அணுவுக்குமேருவுக்குமகம்புறமாய்நின்றான்காண்
கணுமுற்றுஞானக்கரும்பின்றெளிவான்காண்.
61
எந்நாளுமிந்நாளுமிப்படியாயப்படியாய்ச்
சொன்னாலுங்கேளான்காண்சோத்திரத்திற்கொள்ளான்காண்.
62
ஆத்தாளுக்காத்தாளாமப்பனுக்குமப்பனுமாம்
கோத்தார்க்குக்கோத்தநிலைகொண்டகுணக்கடல்காண்.
63
இப்போபுதிதோடியெத்தனைநாளுள்ளதடி
அப்போதைக்கப்போதருளறிவுந்தந்தாண்டி.
64
பற்றாற்றார்பற்றாகப்பற்றியிருந்தாண்டி
குற்றமறுத்தாண்டிகூடியிருந்தாண்டி.
65
வெட்டவெளியிலெனைமேவியிருந்தாண்டி
பட்டப்பகலிலடிபார்த்திருந்தாரெல்லோரும்.
66
வாழ்வானவாழ்வெனக்குவந்ததடிவாழாமல்
தாழாமற்றாழ்ந்தேண்டிசற்றுங்குறையாமல்.
67
பொய்யானவாழ்வெனக்குப்போதுமெனக்காணேண்டி
மெய்யானவாழ்வெனக்குவெறும்பாழாய்விட்டதடி.
68
கன்னியழித்தவனைக்கண்ணாரக்கண்டேண்டி
என்னியல்புநானறியேனீதென்னமாயமடி.
69
சொல்லாலேசொல்லுதற்குச்சொல்லவாயில்லையடி
எல்லாருங்கண்டிருந்துமிப்போதறியார்கள்.
70
கண்மாயமிட்டாண்டிகருத்துமிழந்தேண்டி
புண்மாயமிட்டவனையுருவழியக்கண்டேண்டி.
71
என்னசொல்லப்போறேனானிந்தவதிசயத்தை
கன்னியிளங்கமுகுகாய்த்ததடிகண்ணார
72
ஆர்ந்தவிடமத்தனையமருளாயிருக்குமடி
சார்ந்தவிடமெல்லாஞ்சவாதுமணக்குதடி.
73
இந்தமணமெங்குமியற்கைமணமென்றறிந்து
அந்தசுகாதீதத்தருட்கடலில்மூழ்கினண்டி.
74
இரும்புநிறைநீர்போலவெனைவிழுங்கிக்கொண்டாண்டி
அரும்புநிறைவாசனைபோலன்றேயிருந்தாண்டி.
75
அக்கினிகற்பூரத்தையறவிழுங்கிக்கொண்டாற்போல்
மக்கினம்பட்டுள்ளேமருவியிருந்தாண்டி.
76
கடல்நீருமாறும்போற்கலந்துகரைகாணேண்டி
உடலுமுயிரும்போலுட்கலந்துநின்றாண்டி.
77
பொன்னுமுரைமாற்றும்போற்பொருவரியபூரணன்காண்
மன்னுமநுபூதியடிமாணிக்கத்துள்ளொளிபோல்.
78
கங்குகரையில்லாண்டிகரைகாணாக்கப்பலடி
எங்குமளவில்லாண்டியேகமாய்நின்றாண்டி.
79
தீவகம்போலென்னைச்சேர்ந்தபரசின்மயன்காண்
பாவகமொன்றில்லாண்டிபார்த்திடமெல்லாம்பரங்காண்.
80
உள்ளார்க்குமுள்ளாண்டியூருமில்லான்பேருமில்லான்
கள்ளப்புலனறுக்கக்காரணமாய்வந்தாண்டி.
81
அப்பிறப்புக்கெல்லாமருளாயமர்ந்தாண்டி
இப்பிறப்பில்வந்தானிவனாகுமெய்ப்பொருள்காண்
82
நீரொளிபோலெங்குநிறைந்தநிராமயன்காண்
பாரொளிபோலெங்கும்பரந்தபராபரன்காண்.
83
நூலாலுணர்வரியநுண்மையினுநுண்மையன்காண்
பாலாருசர்க்கரைபோற்பரந்தபரிபூரணன்காண்.
84
உளக்கண்ணுக்கல்லாதூன்கண்ணாலோருமதோ
விளக்குச்சுடரொளிபோன்மேவியிருந்தாண்டி.
85
கல்லுளிருந்தகனலொளிபோற்காரணமாய்ப்
புல்லியிருந்தும்பொருவரியபூரணன்காண்.
86
பொற்பூவும்வாசனைபோற்போதம்பிறந்தார்க்குக்
கற்பூவும்வாசனைபோற்காணாக்கயவருக்கு.
87
மைக்குழம்புமுத்தும்போன்மருலிமறவாதவர்க்குக்
கைக்குட்கனியாகுங்கருவறுத்தகாரணர்க்கு.
88
பளிங்கிற்பவளமடிபற்றற்றபாவலர்க்குக்
கிளிஞ்சியைவெள்ளியென்பார்கிட்டாதார்கிட்டுவரோ.
89
ஏட்டுக்கடங்காண்டியெழுத்திற்பிறவாண்டி
நாட்டினரிகளெல்லாநற்புரவிசெய்தாண்டி.
90
பஞ்சப்பிரளயத்துமிஞ்சியிருப்பாண்டி
நஞ்சுபொதிமிடற்றானயனத்தழல்விழியான்.
91
அகங்காக்கும்புறங்காக்கும்அளவிலாவண்டமுதல்
செகங்காக்குங்காணாத்திசைபத்துங்காக்குமடி.
92
பேசாப்பிரமமடி பேச்சிறந்தபேரொளிகாண்
ஆசபாசங்கள்அணுகாதபேரொளிகாண்.
93
தேசமிறந்தவன்காண்திசையிறந்ததெண்கடல்காண்
ஊசிமுனையூன்றவில்லாவுறுபொருள்காண்.
94
சிப்பியின்முத்தொளிகாண்சின்மயநோக்கில்லார்க்கு
அப்பிலொளிபோலமர்ந்தவரும்பொருள்காண்.
95
ஆலாவிருட்சமடியளவிலாச்சாகையடி
மேலாம்பதங்கள்விசும்பூடுருவுமெய்ப்பொருள்காண்.
96
வங்கிஷமெல்லாங்கடந்துமருவாமலர்ப்பதங்காண்
அங்குஷமாயெங்கும்ஆய்ந்தவரும்பொருள்காண்.
97
நாமநட்டமானதடிநவிலவிடமில்லையடி
காமனைக்கண்ணாலெரிக்கக்கனல்விழித்தகாரணன்காண்
98
கொட்டாதசெம்பொனடிகுளியாத்தரளமடி
எட்டாதகொம்பிலடியீப்புகாத்தேனமுதம்.
99
காணிப்பொன்னாணியுடன்கல்லுரைமாற்றின்னதென்றே
ஆணியுடன்கூட்டியடங்கலிட்டுக்கொண்டாண்டி.
100
அளவிறந்தவண்டத்தாரத்தனைபேருண்டாலும்
பிளவளவுந்தான்சற்றும்பேசாப்பிரமமடி.
101
கன்னெஞ்சினுள்ளேகழுநீலம்பூத்தாப்போல்
என்னென்சினுள்ளேயிணையடிகள்வைத்தாண்டி.
102
வேதப்புரவியடிவிரைந்தோடியும்மறியார்
காதற்றஞானமடிகாண்பார்கருத்துடையோர்.
103
பாசவினையைப்பட்ப்பார்த்தபார்வையுடன்
நேசத்தைக்காட்டியடிநில்லென்றுசொன்னாண்டி.
104
ஓசையொடுங்குமிடமோங்காரத்துள்ளொளிகாண்
பேசாதிருக்கும்பிரமமிதுவென்றாண்டி.
105
சின்மயநன்னோக்காற்சிற்சுருபங்காட்டியெனைத்
தன்மயமாக்கியேதானவனாய்நின்றாண்டி.
106
தானென்னைப்பார்த்தாண்டிதன்னைத்தானல்லாமல்
நானென்னசொல்லுவண்டிநவிலவிடமில்லையடி.
107
இன்றிருந்துநாளைக்கிறக்கிறபேரெல்லாரும்
என்றுபரிபூரணத்திலினிதிருக்கச்சொன்னாண்டி.
108
பார்க்கிலெளிதலவோபற்றற்றபற்றலவோ
ஆர்க்குமிடங்காட்டவவனிதனில்வந்தாண்டி.
109
இத்தனைகாலமடியிறந்துபிறந்ததெல்லாம்
இத்தனையுமில்லையடியிரும்பிலுறைநீரானேன்.
110
எக்காலம்பட்டதடியிறந்துபிறந்ததெல்லாம்
அக்காலமெல்லாம்அழுந்தினேனானரகில்.
111
காலங்கழிந்ததடிகர்மமெல்லாம்போச்சுதடி
நாலுவகைக்கருவுநாமநட்டமாச்சுதடி.
112
முப்பாழுக்கப்பால்முதற்பாழ்முழுமுதலாய்
இப்போதுவந்தான்காண்யெனைவிழுங்கிக்கொண்டான்காண்.
113
பாலின்கணெய்யிருந்தாற்போலப்பரஞ்சோதி
ஆலிங்கனஞ்செய்தறவிழுங்கிக்கொண்டாண்டி.
114
தெத்தபடமானேண்டிதீயிரும்பினீரானேன்
ஒத்தவிடநித்திரையென்றோதுமுணர்வறிந்தேன்.
115
ஒப்புமுவமையுமற்றோதவரிதாயபொருள்
இப்பூவினிற்குருவேயென்னவந்தோன்றாள்வாழி.
116
ஒப்பாரிசொல்லிடினுமுவமைபிழைத்திடினும்
முப்பாழுங்கற்றுணர்ந்தோர்முன்னோர்பொறுத்தருள்வார்.
117

அருட்புலம்பல் 2 -- முற்றிற்று.
-----------

திருப்பாடற்றிரட்டு /அருட்புலம்பல் - 3
இறந்தகாலத்திரங்கல்.

வார்த்தைதிறமில்லாமனிதருக்குப்புன்சொல்லாஞ்
சாத்திரங்கள்சொல்லிச்சதுரிழந்துகெட்டேனே.
1
மெத்தமெத்தச்செல்வாக்கில்வேறுமருளடுத்துத்
தத்தித்தலைகீழாய்த்தானடந்துகெட்டேனே.
2
வழக்கந்தலங்களினுமண்பொன்னாசையினும்
பழக்கந்தலிராமற்பதியிழந்துகெட்டேனே.
3
ஆணிபொருந்துமரும்பூமியத்தனையுங்
காணிநமதென்றுகனம்பேசிக்கெட்டேனே.
4
ஆசாரமில்லாவசடருடன்கூடிப்
பாசாங்குபேசிப்பதியிழந்துகெட்டேனே.
5
குருமார்க்கமில்லாக்குருடருடன்கூடிக்
கருமார்க்கத்துள்ளேகருத்தழிந்துகெட்டேனே.
6
ஆலமருந்துமரன்பெருமையெண்ணாமல்
பாலர்பெண்டீர்மெய்யென்றுபதியிழந்துகெட்டேனே.
7
பிணவாசமுற்றபெருங்காயமெய்யென்று
பணவாசையாலேபதியிழந்துகெட்டேனே.
8
கண்டபுலவர்கனக்கவேதான்புகழ
உண்டவுடம்பெல்லாமுப்பரித்துக்கெட்டேனே.
9
எண்ணிறந்தசென்மமெடுத்துச்சிவபூசை
பண்ணிப்பிழையாமற்பதியிழந்துகெட்டேனே.
10
சிற்றெறும்புசற்றுந்தீண்டப்பொறாவுடம்பை
உற்றுறுக்கவுஞ்சுடவுமொப்பித்துமாண்டானே.
11
தன்னுடம்புதானேதனக்குப்பகையாமென்
றெண்ணுமுணர்வில்லாமலின்பமென்றுமாண்டேனே.
12
தோலெலும்புமாமிசமுந்தொல்லன்னத்தால்வளரு
மேலெலும்புஞ்சுற்றமென்றுவீறாப்பாய்மாண்டேனே.
13
போக்குவரத்தும்பொருள்வரத்துங்காணாமல்
வாக்கழிவுசொல்லிமனமறுகிக்கெட்டேனே.
14

இரந்தகாலத்திரங்கல் முற்றிற்று.
---------------

திருப்பாடற்றிரட்டு /அருட்புலம்பல் - 4
நெஞ்சொடுபுலம்பல்.

மண்காட்டிப்பொன்காட்டிமாயவிருள்காட்டிச்
செங்காட்டிலாடுகின்றதேசிகனைப்போற்றாமல்
கண்காட்டும்பேசியர்தங்கண்வலையிற்சிக்கிமிக
அங்காடிநாய்போலலைந்தனையேநெஞ்சமே.
1
புட்பாசனவணையிற்பொற்பட்டுமெத்தையின்மேல்
ஒப்பாவணிந்தபணியோடாணிநீங்காமல்
இப்பாய்க்கிடத்தியியமனுயிர்கொள்ளுமுன்னே
முப்பாழைப்போற்றிமுயங்கிலையேநெஞ்சமே.
2
முப்பாழும்பாழாய்முதற்பாழ்வெறும்பாழாய்
அப்பாழுக்கப்பானின்றாடுமதைப்போற்றாமல்
இப்பாழாம்வாழ்வைநம்பியேற்றவர்க்கொன்றீயாமல்
துப்பாழாய்வந்தவினைசூழ்ந்தனையேநெஞ்சமே.
3
அன்னம்பகிர்ந்திங்கலைந்தோர்க்குதவிசெயுஞ்
சென்மமெடுத்துஞ்சிவனருளைப்போற்றாமல்
பொன்னுமனையுமெழிற்பூவையரும்வாழ்வுமிவை
இன்னுஞ்சதமாகவெண்ணினையேநெஞ்சமே.
4
முற்றொடர்பிற்செய்தமுறைமையால்வந்தசெல்வம்
இற்றைநாட்பெற்றோமென்றெண்ணாதுபாழ்மனமே
அற்றவர்க்குமீயாமலரன்பூசையோராமல்
கற்றவர்க்குமீயாமற்கண்மறந்துவிட்டனையே.
5
மாணிக்கமுத்துவயிரப்பணிபூண்டு
ஆணிப்பொன்சிங்காதனத்திலிருந்தாலும்
காணித்துடலைநமன்காட்டியேகைப்பிடித்தால்
காணிப்பொன்கூடவரக்காண்கிலமேநெஞ்சமே.
6
கற்கட்டுமோதிரநற்கடுக்கனரைஞாண்பூண்டு
திக்கெட்டும்போற்றத்திசைக்கொருத்தரானாலும்
பற்கிட்டவேமனுயிர்பந்தாடும்வேளையிலே
கைச்சட்டம்கூடவரக்காண்கிலமேநெஞ்சமே.
7
முன்னநீசெய்ததவமுப்பாலுஞ்சேருமன்றிப்
பொன்னும்பணிதிகளும்பூவையுமங்கேவருமோ
தன்னைச்சதமாகச்சற்குருவைப்போற்றாமல்
கண்ணற்றவந்தகன்போற்காட்சியற்றாய்நெஞ்சமே.
8
பையரவம்பூண்டபரமர்திருப்பொற்றாளைத்
துய்யமலர்பறித்துத்தொழுதுவணங்காமல்
கையிலணிவளையுங்காலிலிடும்பாடகமும்
மெய்யென்றிறுமார்ந்துவிட்டனையேநெஞ்சமே.
9
மாதுக்கொருபாகம்வைத்தவரன்பொற்றாளைப்
போதுக்கொருபோதும்போற்றிவருந்தாமல்
வாதுக்குத்தேடியிந்தமண்ணிற்புதைந்துவைத்தே
ஏதுக்குப்போகநீயெண்ணினையேநெஞ்சமே.
10
அஞ்சருளைப்போற்றியைந்துபுலனைத்துற்க்க
நெஞ்சேயுனக்குநினைவுநான்சொல்லுகிறேன்
வஞ்சகத்தைநீக்கிமறுநினைவுவாராமல்
செஞ்சரணத்தாளைச்சிந்தைசெய்வாய்நெஞ்சமே.
11
அற்புதமாயிந்தஉடலாவியடங்குமுன்னே
சற்குருவைப்போற்றித்தவம்பெற்றுவாழாமல்
உற்பத்திசெம்பொன்உடைமைபெருவாழ்வைநம்பிச்
சர்ப்பத்தின்வாயிற்றவளைபோலானேனே.
12
உற்றாரார்பெற்றாராருடன்பிறப்பார்பிள்ளைகளார்
மற்றாரிருந்தாலென்மாளும்போதுதவுவரோ
கற்றாவிழந்தவிளங்கன்றதுபோலேயுருகிச்
சிற்றாதிச்சிற்றின்பஞ்சேர்ந்தனையேநெஞ்சமே.
13
வீடிருக்கத்தாயிருக்கவேண்டுமனையாளிருக்கப்
பீடிருக்கவூணிருக்கப்பிள்ளைகளுந்தாமிருக்க
மாடிருக்கக்கன்றிருக்கவைத்தபொருளிருக்கக்
கூடிருக்கநீபோனகோலமென்னகோலமே.
14
சந்தனமுங்குங்குமமுஞ்சாந்தும்பறிமளமும்
விந்தைகளாப்பூசிமிகுவேடிக்கையொய்யாரக்
கந்தமலர்சூடுகின்றகன்னியருந்தாமிருக்க
எந்தவகைபோனாயென்றெண்ணிலையேநெஞ்சமே.
15
காற்றுத்துருத்திகடியவினைக்குள்ளான
ஊற்றைச்சடலத்தையுண்டென்றிறுமாந்து
பார்த்திரங்கியன்னம்பசித்தோருக்கீயாமல்
ஆற்றுவெள்ளம்போலவளாவினையேநெஞ்சமே.
16
நீர்க்குமிழிவாழ்வைநம்பிநிச்சயமென்றேயெண்ணிப்
பாக்களவாமன்னம்பசித்தோர்க்களியாமல்
போர்க்குளெமதூதன்பிடித்திழுக்குமப்போது
ஆர்ப்படுவாரென்றேயறிந்திலையேநெஞ்சமே.
17
சின்னஞ்சிறுநுதலாள்செய்தபலவினையான்
முன்னந்தமார்பின்முளைத்தசிலந்திவிம்மி
வன்னந்தளதளப்பமயங்கிவலைக்குள்ளாகி
அன்னம்பகிர்ந்துண்ணவறிந்திலையேநெஞ்சமே.
18
ஒட்டைத்துருத்தியையுடையும்புழுக்கூட்டை
ஆட்டுஞ்சிவசித்தரருளைமிகப்போற்றியே
வீட்டைத்திறந்துவெளியையொளியாலழைத்துக்
காட்டும்பொருளிதென்றுகருதிலையேநெஞ்சமே.
19
ஊன்பொதிந்தகாயமுளைந்தபுழுக்கூட்டைத்
தான்சுமந்ததல்லால்நீசற்குருவைப்போற்றாமல்
கான்பரந்தவெள்ளங்கரைபுரளக்கண்டேகி
மீன்பரந்தாற்போலேவிசாரமுற்றாய்நெஞ்சமே.
20
உடக்கையொருக்கியுயிரையடைத்துவைத்த
சடக்கைச்சதமென்றுசார்ந்தங்கிறுமாந்தை
உடக்கைத்தகர்த்தேயுயிரையமன்கொள்கையிலே
யடக்கமாய்வைத்தபொருளங்குவரமாட்டாதே.
21
தித்திக்குந்தேனைத்தெவிட்டாததெள்ளமுதை
முத்திக்குவித்தானமுப்பாழைப்போற்றாமல்
பற்றிப்பிடித்தியமன்பாசத்தாற்கட்டும்வண்ணம்
சுற்றியிருக்கும்வினைசூழ்ந்தனையேநெஞ்சமே.
22
அஞ்செழுத்தாயெட்டெழுத்தாயைம்பத்தோரட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய்நின்றபெருமானைப்போற்றாமல்
வஞ்சகமாயுற்றமுலைமாதர்வலைக்குள்ளாகிப்
பஞ்சரித்துத்தேடிப்பாழுக்கிறைத்தோமே.
23
அக்கறுகுகொன்றைதும்பையம்புலியுஞ்சூடுகின்ற
சொக்கர்திருத்தாளைத்தொழுதுவணங்காமல்
மக்கள்பெண்டிர்சுற்றமுடன்வாழ்வைமிகநம்பியன்பாய்
எக்காலமுமுண்டென்றெண்ணினையேநெஞ்சமே.
24
ஆண்டகுருவினருளைமிகப்போற்றி
வேண்டுகயிலாயவீட்டுவழிபாராமல்
பூண்டகுழன்மாதுநல்லார்பொய்மாய்கைக்குள்ளாகித்
தூண்டிலகப்பட்டுத்துடிகெண்டையானேனே.
25
ஏணிப்பழுவாமிருளையறுத்தாளமுற்றும்
பேணித்தொழுங்கயிலைபேறுபெறமாட்டாமல்
காணவரும்பொருளாய்க்கண்கலக்கப்பட்டடியேன்
ஆணியற்றமாமரம்போலாகினனேநெஞ்சமே.
26
கோத்துப்பிரகாசங்கொண்டுருகியண்டமெல்லாம்
காத்தபடியேகயிலாயஞ்சேராமல்
வேற்றுருவப்பட்டடியேன்வெள்ளம்போலுள்ளுருகி
ஏற்றுங்கழுவிலிருந்தபிணமானேனே.
27
நிலைவிட்டுடலையுயிர்நீங்கியகலுமுன்னே
சிலைதொட்டவேடனெச்சிற்றின்னானைச்சேராமல்
வலைபட்டுழலுகின்றமான்போற்பரதவித்து
தலைகெட்டநூலதுபோற்றட்டழிந்தாய்நெஞ்சமே.
28
முடிக்குமயிர்ப்பொல்லாமுழுக்குரம்பைமின்னாரின்
இடைக்குநடைக்குமிதங்கொண்டவார்த்தைசொல்லி
அடிக்கொண்டதில்லைவனத்தையனேநாயனையேன்
விடக்கையிழந்தமிருகமதுவானேனே.
29
பூவாணர்போற்றும்புகழ்மதுரைச்சொக்கரது
சீர்பாதம்போற்றிச்சிவலோகஞ்சேராமல்
தாவாரந்தோறுந்தலைபுகுந்தநாய்போலே
ஆகாதநெஞ்சமேயலைந்துதிரிந்தாயே.
30
பத்தெட்டாயீரைந்தாய்ப்பதின்மூன்றிரண்டொன்றாய்
ஒத்திட்டுநின்றதோரோவியத்தைப்போற்றாமல்
தெத்திட்டுநின்றதிரிகண்ணிக்குள்ளாகி
வித்திட்டாய்நெஞ்சேவிடவுமறியாயே.
31
அஞ்சுமுருவாகியைமூன்றுமெட்டுமொன்றாய்
மிஞ்சியிருந்தவிளக்கொளியைப்போற்றாமல்
பஞ்சிலிடுவன்னியைப்போற்பற்றிப்பிடியாமல்
நஞ்சுண்டகெண்டையைப்போல்நானலைந்துகெட்டேனே.
32
ஊனமூடனேயுடையும்புழுக்கூட்டை
மானமுடனேசுமந்துமண்ணுலகின்மாளாமல்
ஆனதொருபஞ்சவர்களாண்டிருந்ததேசம்விட்டுப்
போனதுபோலேநாம்போய்ப்பிழைத்தோமில்லையே.
33
ஊறையிறைக்கின்றவுப்பிருந்தபாண்டத்தை
நாறாமல்நாறிநழுவும்புழுக்கூட்டை
வீறாம்புரத்தைவிரும்புகின்றதெப்படியென்
றாறாதநாட்டிலகன்றிருந்தேனில்லையே.
34
அரியவரிதேடியறியாவொருமுதலைப்
பரிவுடனேபோற்றும்பரஞ்சுடரைப்போற்றாமல்
கரியபெருவாழ்வைநம்பிக்காமத்தழுந்தியே
அரிவாயிற்பட்டகரியதுபோலானேனே.
350
தந்திரத்தையுன்னித்தவத்தைமிகநிறுத்தி
மந்திரத்தையுன்னிமயங்கித்தடுமாறி
விந்துருகிநாதமாமேலொளியைக்காணாமல்
அந்தரத்தேகோலெறிந்தவந்தகன்போலானேனே.
36
விலையாகிப்பாணனுக்குவீறடிமைப்பட்டதுபின்
சிலையார்கைவேடனெச்சிற்றின்றானைப்போற்றாமல்
அலைவாய்ந்துரும்பதுபோலாணவத்தினாலழுங்கி
யுலைவாய்மெழுகதுபோலுருகினையேநெஞ்சமே.
37

நெஞ்சொடுபுலம்பல் முற்றிற்று.

------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்