Paṭṭiṉattup piḷḷaiyār IV


சித்தர் பாடல்கள்

Back

பட்டினத்துப் பிள்ளையார் தொகுப்பு - IV



சித்தர் பாடல்கள்:
ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-IV
பூரணமாலை, நெஞ்சொடுமகிழ்தல் &
உடற்கூற்றுவண்ணம்.

cittar pATalkaL: paTTiNattAr pATalkaL - IV
pUraNamAlai, nenjOTumakiztal & uTaRkURRuvaNNam
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
We thank Digital Library of India for providing us with scanned image file version of this siddhar work.
This work was prepared through the Distributed Proof-reading approach of Project Madurai.
We also thank following persons for their help in the preparation of the etext:
S. Karthikeyan, V. Devarajan and S. Govindarajan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2007.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/


இஃது சமிவனஷேத்திரமென்னுங் கோயிலூர் ஸ்ரீ முத்துராமலிங்கசுவாமிகளின்
ஆதினத்திற்குரிய ஸ்ரீ சிதம்பரசுவாமிகள் மாணாக்கர்களிலொருவராகிய
அ- இராமசுவாமியவர்களால், பரிசோதித்து ஒன்பத்திவேலி பட்டாமணியம்
சபாபதிபிள்ளை, குப்புசாமிபிள்ளை இவர்கள் வேண்டுகோளின்படி
சென்னை, பாப்புலர் அச்சுயந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.
பதிப்பு வருடம் 1887

திருப்பாடற்றிரட்டு.
பட்டணத்துப்பிள்ளையார் அருளிச்செய்த
பூரணமாலை.



மூலத்துதித்தெழுந்தமுக்கோணசக்கரத்துள்
வாலைதனைப்போற்றாமல்மதிமறந்தேன்பூரணமே.
1
உந்திக்கமலத்துதித்துநின்றபிரமாவைச்
சந்தித்துக்காணாமற்றட்டழிந்தேன்பூரணமே.
2
நாவிக்கமலநடுநெடுமால்காணாமல்
ஆவிகெட்டியானுமறிவழிந்தென்பூரணமே.
2
உருத்திரனையிருதயத்திலுண்மையுடன்பாராமல்
கருத்தழிந்துநானுங்கலங்கினேன்பூரணமே.
4
விசுத்திமயேசுரனைவிழிதிறந்துபாராமல்
பசித்துருகிநெஞ்சம்பதறினேன்பூரணமே.
5
நெற்றிவிழியுடையநிர்மலசதாசிவத்தைப்
புத்தியுடன்பாராமற்பொறியழிந்தேன்பூரணமே.
6
நாதவிந்துதன்னைநயமுடனேபாராமல்
போதமயங்கிப்பொறியழிந்தேன்பூரணமே.
7
உச்சிவெளியையுறுதியுடன்பாராமல்
அச்சமுடனானுமறிவழிந்தேன்பூரணமே.
8
மூக்குமுனையைமுழித்திருந்துபாராமல்
ஆக்கைகெட்டுநானுமறிவழிந்தேன்பூரணமே.
9
இடைபிங்கலையினியல்பறியமாட்டாமல்
தடையுடனேயானுந்தயங்கினேன்பூரணமே.
10
ஊனுக்குணீநின்றுலாவினதைக்காணாமல்
நானென்றிருந்துநலனழிந்தேன்பூரணமே.
11
மெய்வாழ்வைநம்பிவிரும்பிமிகவாழாமல்
பொய்வாழ்வைநம்பிப்புலம்பினேன்பூரணமே.
12
பெண்டுபிள்ளைதந்தைதாய்பிறவியுடன்சுற்றமிவை
யுண்டென்றுநம்பியுடலழிந்தேன்பூரணமே.
13
தண்டிகைபல்லாக்குடனேசகலசம்பத்துகளும்
உண்டென்றுநம்பியுணர்வழிந்தேன்பூரணமே.
14
இந்தவுடலுயிரையெப்போதுந்தான்சதமாப்
பந்தமுற்றுநானும்பதமழிந்தேன்பூரணமே.
15
மாதர்பிரபஞ்சமயக்கத்திலேவிழுந்து
போதமயங்கிப்பொறியழிந்தேன்பூரணமே.
16
சரியைகிரியாயோகந்தான்ஞானம்பாராமல்
பரிதிகண்டமதியதுபோற்பயனழிந்தேன்பூரணமே.
17
மண்பெண்பொன்னாசைமயக்கத்திலேவிழுந்து
கண்கெட்டமாடதுபோற்கலங்கினேன்பூரணமே.
18
தனிமுதலைப்பார்த்துத்தனித்திருந்துவாழாமல்
அனியாயமாய்ப்பிறந்திங்கலைந்துநின்றேன்பூரணமே.
19
ஈராறுதண்கலைக்குளிருந்துகூத்தாடினதை
ஆராய்ந்துபாராமலறிவழிந்தேன்பூரணமே.
20
வாசிதனைப்பார்த்துமகிழ்ந்துனைத்தான்போற்றாமல்
காசிவரைபோய்த்திரிந்துகாலலுத்தேன்பூரணமே.
21
கருவிகடொண்ணூற்றாறிற்கலந்துவிளையாடினதை
இருவிழியாற்பாராமலீடழிந்தேன்பூரணமே.
22
உடலுக்குள்நீநின்றுலாவினதைக்காணாமல்
கடமலைதோறுந்திரிந்துகாலலுத்தேன்பூரணமே.
23
எத்தேசகாலமுநாமிறவாதிருப்பமென்று
உற்றுனைத்தான்பாராமலுருவழிந்தேன்பூரணமே.
24
எத்தனைதாய்தந்தையிவர்களிடத்தேயிருந்து
பித்தனாயானும்பிறந்திறந்தேன்பூரணமே.
25
பெற்றலுத்தாள்தாயார்பிறந்தலுத்தேன்யானுமுன்றன்
பொற்றுணைத்தாள்தந்துபுகலருள்வாய்பூரணமே.
26
உற்றாரழுதலுத்தாருறன்முறையார்சுட்டலுத்தார்
பெற்றலுத்தாள்தாயார்பிறந்தலுத்தேன்பூரணமே.
27
பிரமன்படைத்தலுத்தான்பிறந்திறந்துநானலுத்தேன்
உரமுடையவக்கினிதானுண்டலுத்தான்பூரணமே.
28
எண்பத்துநான்குநூறாயிரஞ்செனனமுஞ்செனித்துப்
புண்பட்டுநானும்புலம்பினேன்பூரணமே.
29
என்னையறியாமலெனக்குள்ளேநீயிருக்க
உன்னையறியாமலுடலிழந்தேன்பூரணமே.
30
கருவாயுருவாய்க்கலந்துலகெலாநீயாய்
அருவாகிநின்றதறிகிலேன்பூரணமே.
31
செம்பொற்கமலத்திருவடியைப்போற்றாமல்
பம்பைகொட்டவாடும்பசாசானேன்பூரணமே.
32
எனக்குள்ளேநீயிருக்கவுனக்குள்ளேநானிருக்க
மனக்கவலைதீரவரமருள்வாய்பூரணமே.
33
எழுவகைத்தோற்றத்திருந்திவிளையாடினதைப்
பழுதறவேபாராமற்பயனிழந்தேன்பூரணமே.
34
சாதிபேதங்கள்தனையறியமாட்டாமல்
வாதனையால்நின்றுமயங்கினேன்பூரணமே.
35
குலமொன்றாய்நீபடைத்தகுறையையறியாமல்யான்
மலபாண்டத்துள்ளிருந்துமயங்கினேன்பூரணமே.
36
அண்டபிண்டமெல்லாமனுவுக்கணுவாகநீ
கொண்டவடிவின்குறிப்பறியேன்பூரணமே.
37
சகஸ்திரத்தின்மேலிருக்குஞ்சற்குருவைப்போற்றாம
லகத்தினுடையாணவத்தாலறிவழிந்தேன்பூரணமே.
38
ஐந்துபொறியையடக்கியுனைப்போற்றாமல்
நைந்துருகிநெஞ்சநடுங்கினேன்பூரணமே.
39
என்னைத்திருக்கூத்தாவிப்படிநீயாட்டுவித்தாய்
உன்னையறியாதுடலழிந்தேன்பூரணமே.
40
நரம்புதசைதோலெலும்புநாற்றத்துக்குள்ளிருந்து
வரம்பறியமாட்டாமல்மயங்கினேன்பூரணமே.
41
சிலந்தியுடைநூல்போற்சீவசெந்துக்குள்ளிருந்த
நலந்தனைத்தான்பாராமல்நலமழிந்தேன்பூரணமே.
42
குருவாய்ப்பரமாகிக்குடிலைசத்திநாதவிந்தாய்
அருவாயுருவானதறிகிலேன்பூரணமே.
43
ஒளியாய்க்கதிர்மதியாயுள்ளிருளாயக்கினியாய்
வெளியாகிநின்றவியனறியேன்பூரணமே.
44
இடையாகிப்பிங்கலையாயெழுந்தசுழுமுனையாய்
உடலுயிராய்நீயிருந்தவுளவறியேன்பூரணமே.
45
மூலவித்தாய்நின்றுமுளைத்துடல்தோறும்மிருந்து
காலனெனவழிக்குங்கணக்கறியேன்பூரணமே.
46
உள்ளும்புறம்புமாயுடலுக்குள்நீயிருந்த
தெள்ளவுநானறியாதிருந்தேனேபூரணமே.
47
தாயாகித்தந்தையாய்த்தமர்கிளைஞர்சுற்றமெல்லாம்
நீயாகிநின்றநிலையறியேன்பூரணமே.
48
விலங்குபுள்ளூர்வனவசரம்விண்ணவர்நீர்ச்சாதிமனுக்
குலங்களெழுவகையில்நின்றகுறிப்பறியேன்பூரணமே.
49
ஆணாகிப்பெண்ணாயலியாகிவேற்றுருவாய்
மாணாகிநின்றவகையறியேன்பூரணமே.
50
வாலையாய்ப்பக்குவமாய்வளர்ந்துகிழந்தானாகும்
பாலையாய்நின்றபயனறியேன்பூரணமே.
51
பொய்யாய்ப்புவியாய்ப்புகழ்வாரிதியாகி
மெய்யாகிநின்றவியனறியேன்பூரணமே.
52
பூவாய்மணமாகிப்பொன்னாகிமாற்றாகி
நாவாய்ச்சொல்லானநயமறியேன்பூரணமே.
53
முதலாய்நடுவாகிமுப்பொருளாய்மூன்றுலகா
யிதமாகிநின்றவியலறியேன்பூரணமே.
54
ஊனாயுடலுயிராயுண்ணிறைந்தகண்ணொளியாய்த்
தேனாய்ருசியானதிறமறியேன்பூரணமே.
55
வித்தாய்மரமாய்விளைந்தகனிகாய்பூவாய்ச்
சித்தாகிநின்றதிறமறியேன்பூரணமே.
56
ஐவகையும்பெற்றுலகவண்டபகிரண்டமெல்லாந்
தெய்வமெனநின்றதிறமறியேன்பூரணமே.
57
மனமாய்க்கனவாகிமாயைகையாயுள்ளிருந்து
நினைவாகிநின்றநிலையறியேன்பூரணமே.
58
சத்திசிவமிரண்டாய்த்தான்முடிவிலொன்றாகிச்
சித்திரமாய்நின்றதிறமறியேன்பூரணமே.
59
பொறியாய்ப்புலனாகிப்பூதபேதப்பிரிவாய்
அறிவாகிநின்றவளவறியேன்பூரணமே.
60
வானிற்கதிர்மதியாய்வளர்ந்துபின்னொன்றானதுபோல்
ஊனுடலுக்குள்ளிருந்தவுயிர்ப்பறியேன்பூரணமே.
61
பொய்யும்புலையுமிகப்பொருந்திவீண்பேசலன்றி
ஐயோவுனையுரைக்கவறிகிலேன்பூரணமே.
62
நிரந்தரமாயெங்குநின்றுவிளையாடினதைப்
பரமதுவேயென்னப்பதமறியேன்பூரணமே.
63
கொல்வாய்பிரப்பாய்கூடலிருந்தேசுகிப்பாய்
செவ்வாய்பிறர்க்குட்செயலறியேன்பூரணமே.
64
வாரிதியாய்வையமெல்லாமன்னுமண்டபிண்டமெல்லாஞ்
சாருதியாய்நின்றதலமறியேன்பூரணமே.
65
வித்தாய்மரமாய்வெளியாயொளியாய்நீ
சத்தாயிருந்ததரமறியேன்பூரணமே.
66
தத்துவத்தைப்பார்த்துமிகத்தன்னையறிந்தறிவால்
உய்த்துனைத்தான்பாராமலுய்வாரோபூரணமே.
67
ஒன்றாயுயிராயுடல்தோறுநீயிருந்தும்
என்றுமறியார்களேழைகள்தாம்பூரணமே.
68
நேற்றென்றுநாளையென்றுநினைப்புமறப்பாய்ப்படைத்து
மாற்றமாய்நின்றவளமறியேன்பூரணமே.
69
மனம்புத்திசித்தமகிழறிவாங்காரமதாய்
நினைவாந்தலமானநிலையறியேன்பூரணமே.
70
உருப்பேதமின்றியுயர்ந்தசத்தபேதமதாய்க்
குருபேதமாய்வந்தகுணமறியேன்பூரணமே.
71
கட்சமயபேதங்கள்தான்வகுத்துப்பின்னுமொரு
உட்சமயமுண்டென்றுரைத்தனையேபூரணமே.
72
முப்பத்திரண்டுறுப்பாய்முனைந்துபடைத்துள்ளிருந்த
செப்படுவித்தைத்திறமறியேன்பூரணமே.
73
என்னதான்கற்றாலென்னெப்பொருளும்பெற்றாலென்
உன்னையறியாதாருய்வரோபூரணமே.
74
கற்றறிவோமென்பார்காணார்களுன்பதத்தைப்
பெற்றறியார்தங்களுக்குப்பிறப்பறுமோபூரணமே.
75
வானென்பாரண்டமென்பார்வாய்ஞானமேபேசித்
தானென்பார்வீணர்தனையறியார்பூரணமே.
76
ஆதியென்பாரந்தமென்பாரதற்குணடுவாயிருந்த
சோதியென்பார்நாதத்தொழிலறியார்பூரணமே.
77
மூச்சென்பாருள்ளமென்பார்மோனமெனுமோட்சமென்பார்
பேச்சென்பாருன்னுடையபேரறியார்பூரணமே.
78
பரமென்பார்பானுவென்பார்பாழ்வெளியாய்நின்ற
வரமென்பாருன்றன்வழியறியார்பூரணமே.
79
எத்தனைபேரோவெடுத்தெடுத்துத்தானுரைத்தார்
அத்தனைபேர்க்கொன்றானதரிகிலேன்பூரணமே.
80
நகாரமகாரமென்பார்நடுவேசிகாரமென்பார்
வகாரயகாரமென்பார்வகையறியார்பூரணமே.
81
மகத்துவமாய்க்காமமயக்கத்துக்குள்ளிருந்து
பகுத்தறியமாட்டாமற்பயனழிந்தேன்பூரணமே.
82
உண்மைப்பொருளையுகந்திருந்துபாராமற்
பெண்மயக்கத்தாலேபிறந்திறந்தேன்பூரணமே.
83
வாயாரவாழ்த்திமகிழ்ந்துனைத்தான்வோற்றாமல்
காயமெடுத்துக்கலங்கினேன்பூரணமே.
84
சந்திரனைமேகமதுதான்மறைத்தவாறதுபோற்
பந்தமுறயானுமுனைப்பார்க்கிலேன்பூரணமே.
85
செந்தாமரைத்தாளைத்தினந்தினமும்போற்றாமல்
அந்தரமாய்நின்றிங்கலைந்தேனான்பூரணமே.
86
நீர்மேற்குமிழிபோல்நிலையற்றகாயமிதைத்
தாரகமென்றெண்ணிநான்றட்டழிந்தேன்பூரணமே.
87
நெஞ்சமுருகிநினைத்துனைத்தான்போற்றிநெடு
வஞ்சகத்தைப்போக்கவகையறியேன்பூரணமே.
88
எள்ளுக்குளெண்ணைய்போலெங்குநிறைந்திருந்த
துள்ளமறியாதுருகினேன்பூரணமே.
89
மாயாப்பிரபஞ்சமயக்கத்திலேவிழுந்தே
யோயாச்சனனமொழித்திலேன்பூரணமே.
90
பூசையுடன்புவனபோகமெனும்போக்கியத்தால்
ஆசையுற்றேநானுமறிவழிந்தேன்பூரணமே.
91
படைத்துமழித்திடுவாய்பார்க்கிற்பிரமாவெழுத்தைத்
தொடைத்துச்சிரஞ்சீவியாத்துலங்குவிப்பாய்பூரணமே.
92
மந்திரமாய்ச்சாத்திரமாய்மறைநான்காய்நீயிருந்த
தந்திரத்தைநானறியத்தகுமோதான்பூரணமே.
93
அல்லாய்ப்பகலாயனவரதகாலமெனுஞ்
சொல்லாய்ப்பகுத்ததொடர்பறியேன்பூரணமே.
94
நரகஞ்சுவர்க்கமெனநண்ணுமிரண்டுண்டாயும்
அரகராவென்பதறிகிலேன்பூரணமே.
95
பாவபுண்ணியமென்னும்பகுப்பாய்ப்படைத்தழித்திங்
காவலையுண்டாக்கிவைத்தவருளறியேன்பூரணமே.
96
சாந்தமென்றுங்கோபமென்றுஞ்சாதிபேதங்களென்றும்
பாந்தமென்றும்புத்தியென்றும்படைத்தனையேபூரணமே.
97
பாசமுடலாய்ப்பசுவதுவுந்தானுயிராய்
நேசமுடனீபொருளாய்நின்றனையேபூரணமே.
98
ஏதிலடியாரிரங்கியிகத்தில்வந்துன்
பாதமதில்தாழப்பரிந்தருள்வாய்பூரணமே.
99
நானேநீநீயேநானாமிரண்டுமொன்றானால்
தேனின்ருசியதுபோற்றெவிட்டாய்நீபூரணமே.
100
முடிவிலொருசூனியத்தைமுடித்துநின்றுபாராமல்
அடியிலொருசூனியத்திலலைந்தேனேபூரணமே.
101
பூரணமாலைதனைப்புத்தியுடனோதினர்க்குத்
தாரணியில்ஞானந்தழைப்பிப்பாய்பூரணமே.
102

பூரணமாலை முற்றிற்று.

------------------

பட்டணத்துப்பிள்ளையார் அருளிச்செய்த
நெஞ்சொடுமகிழ்தல்.

அன்றுமுதலின்றளவுமாக்கையொடுசூட்சியமாய்
நின்றநிலையறியநேசமுற்றாய்நெஞ்சமே.
1
அங்கங்குணர்வாயறிவாகியேநிரம்பி
எங்கெங்குமானதிலேயேகரித்தாய்நெஞ்சமே.
2
அலையாதபேரின்பவானந்தவெள்ளத்தில்
நிலையாயுருவிறந்துநின்றனையேநெஞ்சமே.
3
பாராமற்பதையாமற்பருகாமல்யாதொன்றும்
ஓராதுணர்வுடனேயொன்றினையேநெஞ்சமே.
4
களவிறந்துகொலையிறந்துகாண்பனவுங்காட்சியும்போ
யளவிறந்துநின்றதிலேயன்புற்றாய்நெஞ்சமே.
5
பேச்சிறந்துசுட்டிறந்துபின்னிறந்துமுன்னிறந்து
நீச்சிறந்துநின்றதிலேநேசமுற்றாய்நெஞ்சமே.
6
விண்ணிறந்துமண்ணிறந்துவெளியிறந்துவொளியிறந்து
எண்ணிறந்துநின்றதிலேயேகரித்தாய்நெஞ்சமே.
7
பார்த்தவிடமெங்கும்பரமெனவேயுட்புறம்புங்
கோத்தபடியுண்மையெனக்கொண்டனையேநெஞ்சமே.
8
ஊரிறந்துபேரிறந்துவொளியிறந்துவெளியிறந்து
சீரிறந்துநின்றதிலேசேர்ந்தனையேநெஞ்சமே.
9
ஆண்பெண்ணலியென்றழைக்கவரிதாய்நிறைந்து
காணவரிதாயவிடங்கண்ணுற்றாய்நெஞ்சமே.
10
ஆங்காரமச்சமகற்றியறிவினொடு
தூங்காமற்றூங்கிச்சுகம்பெற்றாய்நெஞ்சமே.
11
ஆதியாய்நின்றவகண்டபரிபூரணத்தைச்
சாதியாநின்றவிடஞ்சார்வுற்றாய்நெஞ்சமே.
12
விருப்புவெறுப்பில்லாதவெட்டவெளியதனில்
இருப்பேசுகமென்றிருந்தனையேநெஞ்சமே.
13
ஆருமுறாப்பேரண்டத்தப்புறத்துமிப்புறத்தும்
நீருமுப்புமென்னநிலைபெற்றாய்நெஞ்சமே.
14
உடனாகவேயிருந்துமுணரவரியானோடு
கடனீருமாறும்போற்கலந்தனையேநெஞ்சமே..
15
நெடியகத்தைப்போக்கிநின்றசழக்கறுத்துப்
படிகத்துக்கும்போற்பற்றினையேநெஞ்சமே.
16
மேலாகியெங்கும்விளங்கும்பரம்பொருளிற்
பாலூறுமென்சுவைபோற்பற்றினையேநெஞ்சமே.
17
நீரொடுதண்ணாவிவிண்டுநீரானவாறேபோல்
ஊரொடுபேரில்லானோடொன்றினையேநெஞ்சமே.
18
இப்பிறப்பைப்பாழ்படுத்தியிருந்தபடியேயிருக்கச்
செப்பவரிதாயவிடஞ்சேர்ந்தனையேநெஞ்சமே.
19
மேலாம்பதங்களெல்லாம்விட்டுவிட்டாராய்ந்து
நாலாம்பதத்தினடந்தனையேநெஞ்சமே.
20
கடங்கடங்கடோறுங்கதிரவனூடாடி
யடங்குமிடந்தானறிந்தன்புற்றாய்நெஞ்சமே.
21
கற்றவனாய்க்கேட்டவனாய்க்காணானாய்க்காண்பவனாய்
உற்றவனாய்நின்றதிலேயொன்றுபட்டாய்நெஞ்சமே.
22
நாலுவகைக்கரணநல்குபுலனைந்துமொன்றாய்ச்
சீலமுற்றுநின்றதிலேசேர்ந்தனையேநெஞ்சமே.
23
விட்டிடமுந்தொட்டிடமும்விண்ணிடமுமண்ணிடமுங்
கட்டுமொருதன்மையெனக்கண்ணுற்றாய்நெஞ்சமே.
24
எந்தெந்தநாளுமிருந்தபடியேயிருக்க
அந்தச்சுகாதீதமாக்கினையேநெஞ்சமே.
25
வாக்கிறந்துநின்றமனோகோசரந்தனிலே
தாக்கறவேநின்றதிலேதலைசெய்தாய் நெஞ்சமே.
26
எத்தேசமுநிறைந்தேயெக்காலமுஞ்சிறந்து
சித்தாயசித்தினிடஞ்சேர்ந்தனையே நெஞ்சமே.
27
தாழாதேநீளாதேதன்மயமதாய்நிறைந்து
வாழாதேவாழமருவினையே நெஞ்சமே.
28
உள்ளும்புறம்புமுவட்டாதவானந்தக்
கள்ளருந்திநின்றதிலேகண்ணுற்றாய் நெஞ்சமே.
29
வாதனைபோய் நிஷ்டையும்போய் மாமௌனராச்சியம்போய்
பேதமற நின்றவிடம் பெற்றனையே நெஞ்சமே.
30
இரதம்பிரிந்துகலந்தேகமாம்வாறேபோல்
விரகந்தவிர்ந்தணல்பால்மேவினையேநெஞ்சமே.
31
சோதியான்சூழ்பனிநீர்சூறைகொளுமாறேபோல்
நீதிகுருவின்றிருத்தாள்நீபெற்றாய்நெஞ்சமே.
32

நெஞ்சமொடுமகிழ்தல் முற்றிற்று.

---------------

பட்டணத்துப்பிள்ளையார் அருளிச்செய்த
உடற்கூற்றுவண்ணம்.

தன தன தான, தன தன தான, தந்த தனந்தன தந்த தனந்த
தனனதனந்த, தனனதனந்த, தானனதானன தானதனந்த.

ஒருமடமாதுமொருவனுமாகி,
இன்பசுகந்தருமன்புபொருந்தி
யுணர்வுகலங்கிஒழுகியவிந்து,
வூறுசுரோணிதமீதுகலந்து.

பனியிலொர்பாதிசிறுதுளிமாது,
பண்டியில்வந்துபுகுந்து
ண்டு, பதுமவரும்புகமடமிதென்று,
பார்வைமெய்வாய்செவிக[***]கைகளென்ற.

உருவமுமாகியுயிர்வளர்மாத,
மொன்பதுமொன்றுநிறைந்துமடந்[***]
யுதரமகன்றுபுவியில்விழுந்து,
யோகமும்வாரமுநாளுமறிந்து,


மகளிர்கள்சேனைதரவணையாடை,
மண்படவுந்தியுதைந்துகவிழ்ந்து
மடமயில்கொங்கையமுதமருந்தி,
யோரறிவீரறிவாகிவளர்ந்து.

ஒளிநகையூறலிதழ்மடவாரு,
வந்துமுகந்திடவந்துதவழ்ந்து
மடியிலிருந்துமழலைமொழிந்து,
வாவிருபோலெனநாமம்விளம்ப.

உடைமணியாடையரைவடமாட,
வுண்பவர்தின்பவர்தங்க ளொடுண்டு,
தெருவிலிருந்து புழுதியளைந்து,
தேடியபாலரொடோடிநடந்து

அஞ்சுவயதாகிவிளையாடியே.
1
உயர்தருஞானகுருஉபதேச,
முந்தமிழின்கலையுங்கரைகண்டு
வளர்பிறையென்றுபலரும்விளம்ப,
வாழ்பதினாறுபிராயமும்வந்து.

மயிர்முடிகோதியறுபதநீல,
வண்டிமிர்தண்டொடைகொண்டைபுனைந்து,
மணிபொனிலங்குபணிகளணிந்து,
மாகதர்போகதர்கூடிவணங்க.

மதனசொரூபனிவனெனமோக,
மங்கையர்கண்டுமருண்டுதிர
ண்டு,வரிவிழிகொண்டுசுழியவெறிந்து,
மாமயில்போலவர்போவதுகண்டு.

மனதுபோறாமலவர்பிறகோடி,
மங்கலசெங்கலசந்திகழ்கொங்கைம
ருவமயங்கியிதழமுதுண்டு,
தேடியமாமுதல்சேரவழங்கி,

ஒருமுதலாகிமுதுபொருளாயி,
ருந்ததனங்களும்வம்பிலிழந்து
மதனசுகந்தவிதனமிதென்று,
வாலிபகோலமும்வேறுபிரிந்து.

வளமையுமாறியிளமையும்மாறி,
வன்பல்விழுந்திருகண்களிருண்டு
வயதுமுதிர்ந்துநரைதிரைவந்து,
வாதவிரோதகுரோதமடைந்து.

செங்கையினி்லோர்தடியுமாகியே.
2
வருவதுபோவதொருமுதுகூனு,
மந்தியெனும்படிகுந்திநடந்து
மதியுமழிந்துசெவிதிமிர்வந்து,
வாயறியாமல்விடாமன்மொழிந்து.

துயில்வருநேரமிருமல்பொறாது,
தொண்டையு நெஞ்சுமுன்வந்துவறந்து,
துகிலுமிழந்துசுணையுமழிந்து,
தோகையர் பாலர்ககோரணிகொண்டு.

கலியுகமீதிலிவர்மரியாதை,
கண்டிடுமென்பவர்சஞ்சலமிஞ்ச
கலகலவென்றுமலசலம்வந்து,
கால்வழிமேல்வழிசாரநடந்து.

தெளிவுமிராமலுரைதடுமாறி,
சிந்தையுநெஞ்சுமுலைந்துமருண்டு
திடமுமலைந்துமிகவுமலைந்து,
தேறிகலாதரவேதெனநொந்து.

மறையவன்வேதனெழுதியவாறு,
வந்ததுகண்டமுமென்றுதெளிந்து
இனியெனகண்டமினியெனதொந்த,
மேதினிவாழ்வுநிலாதினிநின்று

கடன்முறைபேசுமெனவுரைநாவு,
றங்கிவிழுந்துகைகொன் மொழிந்து,
கடைவழிகஞ்சியொழுகிடவந்து,
பூதமுநாலுசுவாசமும்நின்று.

நெஞ்சுதடுமாறிவருநேரமே.
3
வளர்பிறைபோலவெயிறுமுரோம,
முஞ்சடையுஞ் சிறுகுஞ்யும்விஞ்ச,
மனதுமிருண்டவடிவுமிலங்க,
மாமலைபோல் யமதூதர்கள்வந்து.

வலைகொடுவீசியுயிர்கொடுபோக,
மைந்தரும்வந்துகுனிந்தழநொந்து
மடியில்விழுந்துமனைவிபுலம்ப,
மாழ்கினரெயிவர்காலமறிந்து.

பழையவர்காணுமெனுமயலார்கள்,
பஞ்சுபறந்திடநின்றவர்பந்த
ரிடுமெனவந்துபறையிடமுந்த,
வேபிணம்வேகவிசாரியுமென்று.

பலரையுமேவிமுதியவர்தாமி,
ருந்தசவங்கழுவுஞ்சிலரென்று
பணிதுகில்தொங்கல்களபபணிந்து,
பாவகமேசெய்துநாறுமுடம்பை.

வரிசைகெடாமலெடுமெனவோடி,
வந்திளமைந்தர்குனிந்துசுமந்து
கடுகிநடந்துசுடலையடைந்து,
மாநுடவாழ்வெனவாழ்வெனநொந்து.

விறகிடைமூடியழல்கொடுபோட,
வெந்துவிழுந்துமுறிந்துநிணங்க
ளுருகியெலும்புகருகியடங்கி,
யோர்பிடிநீறுமிலாதவுடம்பை,

நம்புமடியேனையினியாளுமே.
4

உடற்கூற்றுவண்ணம் முற்றிற்று.
---------

பட்டணத்துப்பிள்ளையார் அடங்கன்முறைமுற்றுப்பெற்றது.



திருச்சிற்றம்பலம்.
பட்டணத்துப்பிள்ளையார் திருவடிவாழ்க.
சர்வஞ்சின்மயம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்