காந்தி புன்னகைக்கிறார்
கட்டுரைகள்
Backகாந்தி புன்னகைக்கிறார் (கட்டுரை)
மாதவராஜ்
Contents
காந்தி புன்னகைக்கிறார்
1. காந்தி புன்னகைக்கிறார்- முதல் அத்தியாயம்
2. காந்தி புன்னகைக்கிறார்- இரண்டாம் அத்தியாயம்
3. காந்தி புன்னகைக்கிறார்- மூன்றாம் அத்தியாயம்
4. காந்தி புன்னகைக்கிறார் - நான்காம் அத்தியாயம்
5. காந்தி புன்னகைக்கிறார் - 5ம் அத்தியாயம்
6. காந்தி புன்னகைக்கிறார் - ஆறாம் அத்தியாயம்
7. காந்தி புன்னகைக்கிறார் - ஏழாம் அத்தியாயம்
8. காந்தி புன்னகைக்கிறார்- கடைசி அத்தியாயம்
Free Tamil Ebooks - எங்களைப் பற்றி
1
காந்தி புன்னகைக்கிறார்
உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்…வாருங்கள்.
மாதவராஜ்.
மின்னஞ்சல்: jothi.mraj@gmail.com
வலைப்பக்கம்: http://mathavaraj.blogspot.in/
அட்டைப் படம் – ப்ரியமுடன் வசந்த் – vasanth1717@gmail.com
அட்டைப்பட மூலம் – http://frankolinsky.blogspot.com/2008_04_01_archive.html
மின்னூலாக்கம் – ப்ரியா – priyacst@gmail.com
1
காந்தி புன்னகைக்கிறார்- முதல் அத்தியாயம்
டெல்லியில், பிர்லா வீட்டில் அமைக்கப்பட்டிருந்த அவரது ஆசிரமத்தில் மரக்கட்டிலிலிருந்து அதிகாலையிலேயே எழும்புகிறார். மற்றவர்களை எழுப்புகிறார். 3.45 மணிக்கு குளிர் உறைந்த அந்த வராண்டாவில் பிரார்த்தனை ஆரம்பிக்கிறது. அவரது பேத்தி மனு முதலில் சொல்ல பகவத் கீதையிலிருந்து முதல் இரண்டு சுலோகங்கள் வாசிக்கப்படுகின்றன. முந்தைய இரவு படுக்கப் போகும்போது “யாரோ ஒருவன் என்னை துப்பாக்கியால் சுட்டாலும், உதடுகள் ராம நாமத்தை உச்சரிக்க, அந்த குண்டுகளை திறந்த மார்பில் தயக்கமில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நான் மகாத்மா” என்று அவர் சொன்ன வார்த்தைகள் மனுவின் மனதில் அந்த கணத்தில் நிழலாடி இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம்.
மகாத்மா மனுவைப் பார்த்து அவருக்குப் பிடித்தமான குஜராத்தி பாடலை பாடச் சொல்கிறார்.
“களைப்பாய் இருக்கிறாயோ…
களைப்பாய் இல்லையோ – மனிதனே
வேகம் குறைந்து போகாதே….
அப்படியே நின்றும் விடாதே
உனது போராட்டத்தில்
நீ தனியே விடப்பட்டாலும்
தொடர்ந்து செல்….
வேகம் குறைந்து போகாதே”
மனு பாடிக் கொண்டு இருக்கிறாள்.
மகாத்மாவுக்கு எல்லா நாட்களையும் போலவே அன்றும் ஆரம்பித்தது. ஆனால் நாதுராம் கோட்சேவுக்கு அப்படி விடியவில்லை.
பழைய தில்லியில் புகைவண்டி நிலையத்தின் ஓய்வு அறை எண்:6 ல் அவன் விழித்தான். அங்கே முதலில் விழித்தது அவன் தான். குளித்து, உடையணிந்து கொண்டான். நாராயண ஆப்தேவும், விஷ்ணு கார்காரேவும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே இவர்கள் ஜனவரி 20ம் தேதி மகாத்மாவை கொலை செய்ய முயன்று முடியாமல் போயிருந்தார்கள். பெரிய அளவில் திட்டமிடுவதைவிட தனியாக சென்று கொல்வது என்று முடிவு செய்து நேற்றே குவாலியருக்குச் சென்று 35 அடி தூரத்திற்குள் சுடக்கூடிய பிஸ்டலை டாக்டர் பர்ச்சூரிடமிருந்து வாங்கி வந்திருந்தார்கள்.
மனதில் ஆயிரம் போராட்டங்களோடு ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த துப்பாக்கியை பார்த்துக் கொண்டிருந்தான் கோட்சே. பகவத் கீதையை முழுவதுமாக அவனும் அறிந்திருந்தான். இந்த கொலையை நியாயப்படுத்தும் பகவத் கீதை வரிகளை அவ்வப்போது நினைத்துக் கொள்வான்.
அன்பும் அமைதியும் தவழும் மகாத்மாவின் கண்களும், கொலைவெறி கொண்ட கோட்சேவின் கண்களும் இன்று மாலை நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றன. வெறும் கண்களின் சந்திப்பு அல்ல அது. அகிம்சைக்கும் வன்முறைக்கும் நடந்த சந்திப்பு அது. தர்மமும் சூதும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு அது. ஒளியும் இருளும் சந்தித்துக் கொண்ட வேளை அது. வரலாற்றின் மிக முக்கியமான ஒரு தருணமாக அது நிலை கொண்டு விடுகிறது. பிறகு ஒளிமங்கி இருள் படர்ந்ததாக இந்திய வரலாற்றின் பக்கங்களில் நீள்கிறது.
மகாத்மாவும் கோட்சேயும் அதற்கு முன் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டதேயில்லை. அவர்கள் இருவரும் தனிநபர்கள் அல்ல. வெவ்வேறான இரண்டு கருத்துக்களின் உருவங்கள். இப்படி சந்திப்பு ஏற்படுவதற்கு இந்திய காலச் சூழலும், வரலாறும்தான் காரணம். அதை தெரிந்து கொள்ளாமல் இந்த நாளின் அர்த்தம் யாருக்கும் புரியாது. இவர்கள் இருவரும் எங்கிருந்து புறப்பட்டு இங்கு வந்து சேர்கிறார்கள் என்பதை பின்னோக்கிச் சென்று பார்க்காமல் நாம் எதிர்காலத்திற்குள் நுழைந்துவிட முடியாது.
2
காந்தி புன்னகைக்கிறார்- இரண்டாம் அத்தியாயம்
அவனது பரிமாணம் என்பது இருளில் நடந்தது. அவனது பயணத்தின் தடயங்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. சாத்தானின் பிரவேசம் என்பது இப்படித்தான் இருக்கும் போலும்.
நாதுராம் கோட்சே!
பூனா அருகில் ஒரு கிராமத்தில் 1908ம் வருடம் ஒரு இந்து சனாதன பிராமண குடும்பத்தில் போஸ்ட் மாஸ்டருக்கு இரண்டாவது மகனாக பிறந்தான். கூடப்பிறந்தவர்கள் ஆறு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும். அவன் பிறந்த காலமும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பிரிட்டிஷ் அரசு மத ரீதியாக மக்களை பிரிப்பதற்கு ஏற்பாடு செய்த காலமும் ஒன்றாகவே இருந்தது.
காங்கிரஸ் தலைமையில் பெருகி வரும் மக்களின் ஒற்றுமை மிக்க போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கு பிரிட்டிஷ் அரசு மிண்டோ மார்லி சீர்திருத்தங்களை கொண்டு வந்திருந்தது. அதன்படி குறைந்த அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், நிலப்பிரபுக்களும் , பிரிட்டிஷ் வியாபாரிகளும் கொண்ட மாகாண சட்டசபைகளை அறிமுகப்படுத்தினார்கள். தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிற உரிமை கிடைப்பதனால் மக்களின் ஆத்திரங்கள் உதிர்ந்துவிடும் என்று ஆங்கிலேயர்கள் கணக்குப் போட்டனர். இதில் மோசமான அம்சம் மதரீதியில் பிரதிநிதித்துவம் கொடுப்பதற்கும்
வழிசெய்யப்பட்டிருந்ததுதான். மூஸ்லீம் லீக் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணமாயிற்று. இந்துமகாசபையும் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸூம் ஆரம்பிக்கப்பட்டது இதற்குப் பிறகுதான்.
அவரது வாழ்வு என்பது ஒளி நிறைந்தது. அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் உலகமே அறிந்திருந்தது.
மகாத்மா காந்தி!
இந்தப் பெயர் இந்திய வாழ்க்கையின் ஒரு சாத்வீகமான, அதுவாகவே நிறைந்திருக்கிற உணர்வாக இருக்கிறது. படபடக்காமல் நின்றிருக்கும் அகல்விளக்கின் சுடர் அமைதியை ஏற்படுத்துகிறது. ஒரு எளிய மனிதன் எல்லா வீடுகளுக்குள்ளும் இயல்பாக பிரவேசித்து விடுவதைப் போல அவரது பயணம் இருந்தது.
தென்னாப்பிரிக்கா பயணம் முடித்து இந்திய அரசியலுக்குள் அவரது பிரவேசம் அப்படித்தான் நிகழ்ந்தது. அப்போது திலகர் தலைமையில் ஹோம் ரூல் இயக்கம் நடந்து கொண்டிருந்தது. மகாத்மா இந்தியா முழுவதும் பயணம் செய்து தேசத்தின் ஆன்மாவை தேடிக்கொண்டு இருந்தார். நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்தியாவின் மனித சமூகத்தின் துயரங்கள் புகைவண்டியின் ஒசையோடு அவருள் ஓடிக் கொண்டிருந்தது. மலைகளும், ஆறுகளும், பசும்புல்வெளிகளும், வயல்களும், காடுகளும், வறண்ட நிலங்களும், அங்கு வசித்த மக்களும் அவரது உள்மனத்தோடு பேசிக்கொண்டு இருந்தார்கள்.
இந்திய விடுதலையின் கடைசி தருணங்களில் மதவெறியின் விதைகள் விதைக்கப்பட்டன. 400 ஆண்டு காலத்திற்கும் மேலாக நீடித்த வீரஞ்செறிந்த போராட்டத்தில் கடைசி 30 வருடங்களே இந்த சதிவலைகள் விரிக்கப்பட்டன. 1857ல் முதல் இந்திய சுதந்திரப் போரில் எந்த பேதமுமில்லாமல் ஒன்றுபட்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் மெல்ல மெல்ல ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை உணர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1906ல் வங்காளத்தை இரண்டு மாநிலமாக பிரிப்பதற்கே ஒத்துக் கொள்ளாமல் ஒன்றாக போராடிய இந்துக்களும், முஸ்லீம்களும் தேசத்தையே இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பின்றி போனது இயல்பானது அல்ல.
இந்து ராஷ்டிரம் என்றும், 1400 ஆண்டுகளாக நமது மேன்மைகளை அந்நியப் படையெடுப்புகளால் இழந்துவிட்டோம் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டன. உண்மையில் ஆங்கில வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் மில் என்பவர் இந்திய வரலாற்றை, இந்துக்களின் காலம், மூஸ்லீம்களின் காலம், பிரிட்டிஷ் காலம் என்று பிரித்ததிலிருந்து எடுத்துக் கொண்ட சங்கதியே ‘இந்து’ என்பது. சிந்து நதிக்கரையில் வேத காலத்திலிருந்து தொடர்ந்து வந்த வர்ணாசிரமச் சித்தாந்தமான- பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவன் பிராமணன், தோள்களிலிருந்து பிறந்தவன் ஷத்திரியன், தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன், காலிலிருந்து பிறந்தவன் சூத்திரன் என்ற வர்ணப் பிரிவுகளை-பாதுகாக்கிற நோக்கில்தான் நாம் நமது புனிதத் தன்மையை இழந்து விட்டோம் என்று அங்கலாய்த்துக கொண்டு இந்த அமைப்புகள் மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் வேலைகளைச் செய்தன. மகாத்மா தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவான சமூக போராட்டங்களை நடத்தியது மட்டுமில்லாமல் காங்கிரசும் அறைகூவல் விடுத்திருந்தது இந்த சமயத்தில்தான் என்பதை கால அறிவோடு பார்த்தால் உண்மை புரியும்.
இந்த சூழல் தந்த எதிர்ச்சிந்தனைகளால் வளர்ந்தவன் தான் நாதுராம் வினாயக் கோட்சே. மெட்ரிக்குலேசன் கூட படிக்காமல் ஒரு துணிக்கடை ஆரம்பித்து நடத்தினான். அது லாபம் ஒன்றும் தராததால் தையல் நிறுவனத்தில் சேர்ந்தான்.துடிப்புமிக்க தனது இருபத்திரண்டாவது வயதில் ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்து அதன் கொள்கைகளை உணர்ச்சி மேலீட பிரச்சாரம் செய்தான்.
திலகரின் மறைவுக்குப் பிறகு மகாத்மா தலைமையில் காங்கிரஸ் செயல்பட்டது. ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, பகத்சிங்கின் வீரத்தியாகம், வட்ட மேஜை மகாநாடுகள், ஒத்துழையாமை இயக்கம், இரண்டாம் உலகப் போர், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்று சரித்திரத்தின் பக்கங்கள் எழுச்சியோடு நகர்ந்த காலங்கள் இவை. தீவிரவாத இயக்கங்களும், தொழிலாளர் இயக்கங்களும் தோன்றி தேசப் போராட்டத்தில் பங்கு கொண்டது இந்த சமயத்தில்தான்.
இந்தியா என்றும், அகண்ட பாரதம் என்றும், ‘பாரத மாதாகீ ஜெய்’ என்றும் அடி வயிற்றிலிருந்து கத்தும் இவர்கள் தேச விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்கேற்பும் இல்லாமல் வேடிக்கை பார்த்தார்கள் என்பது அருவருப்பான உண்மை. ஒத்துழையாமை இயக்கத்தில் மூஸ்லீம்கள் அதிகமாக பங்கு பெற்றதால் “யவனப் பாம்புகள் ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் பாலருந்தி, விஷம் கக்கும் சத்தங்கள் எழுப்பி தேசத்தில் கலகங்களை உருவாக்குகின்றன” என்று ஹெக்டேவார் சொன்னார். 1929 ஜனவரி 26ல் சுதந்திர தின உறுதி எடுத்துக் கொண்டு மகாத்மாவோடு 90000பேர் நாடு முழுவதும் கைது ஆகினர். ஆர்.எஸ்.எஸ் அப்போதும் மௌனம் சாதித்தது. 1940ல் ஹெக்டவாருக்குப் பிறகு பொதுச்செயலாளரான கோல்வார்கர் நாடு முழுவதும் ஒரு லட்சம் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக பெருமையோடு சொன்னார். 1940ல் நடந்த சட்ட மறுப்பு இயக்கத்தில் 20000 பேர் கைதாகினர். அதில் குறிப்பிடும்படியான ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூட இல்லாதது தற்செயல் அல்ல. 1942ல் நடந்த சட்ட மறுப்பு இயக்கத்தில் 1060 பேர் நாடு முழுவதும் பிரிட்டிஷ் போலீஸின் கொடுமைக்கும், சித்திரவதைக்கும் ஆளாகி இறந்து தியாகிகளானார்கள். அவர்களில் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரும் இல்லாதது அவர்களது புரையோடிய தேசபக்திக்கு காலத்தின் வாக்குமூலம். கோட்சே என்னும் இந்துத்வா அமைப்புகளின் வீர புருஷன், ஒப்பற்ற தியாகி எங்கே போயிருந்தார் அப்போது என்று தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸின் குருவாகிய சவார்க்கர் வெளிப்படையாக அரசு அதிகாரத்தில் இருக்கும் இந்துக்கள் பிரிட்டிஷ் அரசோடு ஒத்துழைக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.
இதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும் மிக முக்கியமான- மனோரீதியான ஒரு காரணம் இருந்தது. ஒரு போராட்டத்தில் எல்லோரும் இறங்குகிற போது ஜாதி, மதம், மொழி போன்ற அத்தனை பாகுபாடுகளையும் மறந்து ஒன்றாகி விடுவர். கடந்த காலத்தில் அதுதான் நிகழ்ந்திருந்தது. திரும்பவும் அது நிகழ ஆர்.எஸ்.எஸ்ஸும், இந்து மகா சபையும் விரும்பவில்லை.
முஸ்லீம் லீகாவது இந்த தேசீய போராட்டங்களில் ஓரளவுக்கு பங்குபெற்றுக் கொண்டு பிரிவினை கோஷத்தை முன் வைத்தது. ஆனால் இந்து மகா சபையும். ஆர்.எஸ்.எஸ்ஸூம் தேசவிடுதலை குறித்து அக்கறையேதுமின்றி- பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டு பிரிவினை கோஷத்தை உரக்க எழுப்பிக் கொண்டிருந்தது.1929ல் இந்து மகாசபையை சார்ந்த பாய்பரமானந்தா “இந்துக்களும்,முஸ்லீம்களும் சேர்ந்து ஓட்டளித்தால் அவர்களது அரசியல் வேறுபாடுகள் மதம் சார்ந்ததாக இருக்கும். இது இரண்டு சமுகத்திற்கும் நல்லதல்ல; இன்னும் சொல்லப்போனால் இந்துக்களுக்கே அதிக பாதிப்பு உண்டாகும்” என்று சொன்னார்.(Hindu national movement, lahore, 1929) 1938ல் கோல்வார்கர் எழுதி வெளியிட்ட- we our nationhood, defined- என்னும் புத்தகத்தில் இரண்டு தேசங்கள் வேண்டும் என்கிற விஷயம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 1940ல் லாகூரில் நடந்த முஸ்லீம் லீக் மாநாட்டில் “இரண்டு தேசங்கள் வேண்டும்” என்று முஸ்லீம் லீகும் தீர்மானம் நிறைவேற்றியது.
அடிப்படையில் ஒன்றையொன்று பரம எதிரிகளாக கருதினாலும் தேசப் பிரிவினையில் இந்த இரண்டு மதவாத அமைப்புகளும் ஒன்றுபட்டு நின்றன என்பது ஒரு விசித்திரமான இயல்பு. ஆகஸ்ட் 15, 1943ல் சவார்க்கர் “கடந்த 30 ஆண்டுகளாக பூகோள ரீதியிலான ஒற்றுமைக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். காங்கிரஸ் இதையே பலமாக ஆதரிக்கிறது. ஒவ்வொரு சலுகையாக தங்களுக்கு கேட்டு அனுபவித்து வரும் முஸ்லீம் சிறுபான்மையினர் திடீரென தனி நாடு வேண்டுமென்று கேட்கின்றனர். ஜின்னாவுடன் எனக்கு இதில் எந்த பேதமும் இல்லை. இந்துக்களாகிய நாங்கள் ஒரு தேசமாகவே இருக்கிறோம். இந்துக்களும் முஸ்லீம்களும் இரண்டு தேசங்கள் என்பது வரலாற்று உண்மை’ என்று சொன்னார். பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட பிரிட்டிஷ்காரனுக்கு ஆர்.எஸ்.எஸ் செய்த அரிய சேவைகளில் ஒன்று இது. மகாத்மா பிரிவினைக்கு ஒத்துக் கொள்ளவேயில்லை. “இந்தப் பிரச்சினை பத்து நிமிடத்தில் தீர்ந்துவிடும். காந்தி மட்டும் சம்மதிக்க வேண்டும்” என்றார் மவுண்ட்பேட்டன்.
காந்தியோ ” என்னை வேண்டுமானால் இரண்டாக வெட்டிப் போடுங்கள். இந்த தேசத்தை இரண்டாக கூறு போடாதீர்கள்” என்று கோபமாக சொல்லி விட்டார். மன்னன் சாலமன் சபையில் தனது குழந்தையை வெட்டுவதற்கு ஒப்புக்கொள்ளாமல் கதறி அழுத உண்மையான தாய் உணர்வின் வெளிப்பாடாக இருந்தது.
இந்த இடைப்பட்ட காலத்தில் கோட்சே ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து விலகி இந்து மகாசபா என்னும் ஆர்.எஸ்.எஸ்ஸோடு தொடர்புடைய இன்னொரு இந்துத்துவா அமைப்பில் சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்துமகாசபையின் தலைவராயிருந்த வீரசவார்க்கரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவனாகிறான். மிகச் சரியாக இந்த நேரத்தில்தான் ‘இந்து ராஷ்டிரா’ என்று ஒரு பத்திரிக்கை பூனாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கோட்சே அதன் ஆசிரியராக பணிபுரிகிறான். இந்த பத்திரிக்கைக்கு ரூ.15000/- முன் தொகையாக நிதி அளித்தது வீரசவார்க்கர்.
மாறி மாறி பிரச்சாரம் செய்யப்பட்டது. “முஸ்லீம்களை எப்படி இந்தியர்கள் என ஏற்றுக் கொள்ள முடியும்?” “முஸ்லீம்கள் இந்த நாட்டில் இந்துக்களுக்கு அடங்கிப் போக வேண்டும். அவர்களுக்கென்று எந்த சலுகையும் அளிக்கக் கூடாது. பிரஜா உரிமை கூட அளிக்கக் கூடாது” என ஒருபுறமும் “சுதந்திர இந்தியாவில் மூஸ்லீம்களாகிய நமக்கு வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் இடம் இருக்காது” “அவர்கள் நம்மையும் தீண்டத்தகாதவர்களாகவே நடத்துகிறார்கள்” என இன்னொரு புறமும் ஆதிக்க வெறியும், அச்ச உணர்வும் மக்கள் மனதில் விதைக்கப்பட்டன.
நவகாளியில் மதக் கலவரங்கள் வெடித்து, பீகார்,பம்பாய், பஞ்சாப் என்று பரவ ஆரம்பித்தன. பிரிவினை இல்லாமல் நாட்டின் சுதந்திரம் சாத்தியமில்லை என்ற நிலைமைக்கு காங்கிரஸ் வந்தது. காந்தி வேறு வழியில்லாமல், தார்மீகத் தோல்வியோடு அந்த பிரிவினைக்கு ஒத்துக் கொண்டார். இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்க வெட்டுண்ட மனித உடல்களும், எரிந்த வீடுகளின் புகையுமாக மதவெறி நாட்டை ரணகளமாக்கிக் கொண்டிருந்தது.
நடுவில் கோடு கிழித்து இரண்டு தேசமாக்கிவிட்டால் இந்த பகைமையின் வேகம் தணிந்துவிடும் என்ற நம்பிக்கையும் உடைந்து போனது. காந்தி காற்றில் படபடக்கும் சுடரை அணையாமல் பாதுகாக்கும் முயற்சியாக நவகாளியில் யாத்திரை செய்தார். அவர் சென்ற இடங்களில் அமைதி திரும்பிக் கொண்டிருந்தது.
ஆகஸ்ட் 15 என்னும் அந்த விடுதலை நாள் அதிர்ச்சியோடும், இரத்தக்கறையோடும் வந்தது. பாகிஸ்தான் ஒரு நாடாகவும், இந்தியா ஒரு நாடாகவும் பிரிந்தன. காந்தி கல்கத்தாவின் ஒரு ஏழை முஸ்லீம் வீட்டில் ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருந்தார். அவரது நம்பிக்கைகள் காயப்படுத்தப் பட்டிருந்தன. அவர் கனவு கண்ட தேசம், அவர் நேசித்த மக்கள் இன்று வேறேதுவோ ஆகியிருந்தார்கள். சகிப்புத்தன்மையையும், அன்பையும் உலகிற்கு தந்து உலகத்தின் ஒளியாக திகழ்வார்கள் என்பது இப்போதைக்கு இல்லை என்பதை புரிந்து கொண்ட தவிப்புதான் அது. ஆனால் நம்பிக்கையோடு அவரது ராட்டை சுழன்று கொண்டிருந்தது.
‘புதிய அரசு அமைக்க பிரிட்டிஷ் காங்கிரஸை மட்டும் அழைக்காது. தங்களையும் சேர்த்துக் கொண்டு ஒரு தேசீய அரசு அமைக்கப்படும’ என்று இந்து மகாசபையும், ஆர்.எஸ்.எஸ்ஸூம் உறுதியாக நம்பினர். ஆனால் காங்கிரஸே புதிய அரசை அமைத்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்கிறார். இது குறித்து சவார்க்கர் முதற்கொண்டு அனைவருக்கும் ஏமாற்றமும், கோபமும் இருந்தது. இந்துக்கள் அவர்களது வீடுகளில் ஆகஸ்ட் 15ம் தேதி மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற வேண்டாம் எனவும், பகவா கொடியை ஏற்றி வைக்க வேண்டுமென இந்து மகாசபை அறைகூவல் விடுத்தது. கோட்சே துப்பாக்கியோடு காத்திருக்கும் இந்த நாளுக்கான இருட்டு இந்தப் புள்ளியிலிருந்துதான் உருவெடுக்கிறது.
இங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்ற முஸ்லீம்கள் போகும் வழியில் கடுமையாக தாக்கப்பட்டனர். அங்கிருந்து இந்தியாவுக்கு வந்த இந்துக்கள் அதுபோலவே ஈவிரக்கமில்லாமல் தாக்கப்பட்டனர். மதவெறி இரண்டு பக்கமும் சர்வ நாசத்தை ஏற்படுத்தியிருந்தது. பாகிஸ்தானுக்கு செல்ல முடியாத முஸ்லீம்களும் இங்கு சித்திரவதை செய்யப்பட்டனர். டெல்லி ஏறத்தாழ அழிவின் விளிம்பிலிருந்தது. அகதிகள் முகாம்களில் முஸ்லீம்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். எதிர்காலம் குறித்து யோசிப்பதற்கு அவர்களுக்கு எதுவுமில்லை.
டெல்லி திரும்பியிருந்த காந்தி ஜனவரி 13ம் தேதி உன்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். சுதந்திர இந்தியாவில் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதம். நாடு முழுவதும் கொப்பளித்த பகைமையின் வேகத்தை தணிக்க அவரிடம் அப்போது அவர் உயிர்தான் ஆயுதமாக இருந்தது. நாடு மகாத்மாவின் பலவீனமான நாடித்துடிப்பை கவலையோடு பார்க்க ஆரம்பித்தது. கலவரங்கள் நடந்த இடங்களில் மெல்ல அமைதி திரும்பியது. பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கொண்டிருந்த வன்மம் மகாத்மாவின் மீது திரும்பியது. அவருக்கு அதுகுறித்து கொஞ்சம்தான் கவலை. அவர் வேண்டியதெல்லாம் இந்த மண்ணில் அமைதியும், மக்களிடம் அன்பும்தான்.
காஷ்மீர் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தும், பாகிஸ்தான் காஷ்மீரை இழக்க சம்மதியாமல் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. நாட்டை பிரிக்கும்போது அப்போது ரிசர்வ் வங்கியின் இருப்பில் இருந்த 375 கோடியில் இந்தியாவுக்கு 300 கோடி எனவும், பாகிஸ்தானுக்கு 75 கோடி எனவும் பேசி முடிவு செய்யப்பட்டிருந்தது. முன் தொகையாக விடுதலைக்கு முன்பே 20 கோடி கொடுக்கப்பட்டிருந்தது. மீதித்தொகை 55 கோடி கொடுக்கப்படவில்லை. அந்தத் தொகையை கேட்டு பாகிஸ்தான் ஜனவரி முதல் வாரத்தில் இந்தியாவுக்கு கடிதம் எழுதியது. காந்தி அந்த தொகையை கொடுக்க வேண்டியது இந்தியாவின் தார்மீகக் கடமை எனக் கருதினார். உண்ணாவிரதம் துவக்கும் போது அதை ஒரு காரணமாக வலியுறுத்தவில்லை என்றாலும், உண்ணாவிரதத்தின் போது
வலியுறுத்தினார். மந்திரி சபையும் ஒத்துக் கொள்ள வேண்டும், அனைத்து தலைவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் என மகாத்மா வலியுறுத்தினார்.
இந்து மகாசபை,ஆர்.எஸ்.எஸ் எல்லாமே அந்த 55 கோடி கொடுக்க வேண்டாம் என அங்கங்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. முதலில் கையெழுத்திட மறுத்த ஆர்.எஸ்.எஸ் பிறகு ஒப்புக்கொண்டது இறுதியில் அரசு 55 கோடி ருபாயை கொடுக்க வேண்டியதாயிற்று. காந்தியைக் கொல்ல இப்போது அவர்களுக்கு ஒரு காரணம் கிடைத்து விட்டது. இந்தியாவில் அமைதி திரும்புவதை அவர்கள் எப்போதும் விரும்பியிருக்கவில்லை. இந்தியாவின் இரத்தம் அனைத்தையும் உறிஞ்சி இந்து ராஷ்டிரா அமைக்க வேண்டும் என துடித்துக் கொண்டிருந்தனர். ஒரு காலத்தில் புத்தர் அவர்களது சதிகளை உடைத்து மக்களை அன்பினால் வென்றார். புத்தபிட்சுகளையும், சமணர்களயும் ஆயிரக் கணக்கில் கொன்று திரும்ப தங்கள் ஆதிக்கத்தை நிறுவ வேண்டியிருந்தது.
இப்போது மகாத்மா காந்தி!
3
காந்தி புன்னகைக்கிறார்- மூன்றாம் அத்தியாயம்
நாதுராம் கோட்சே கண்களில் வெறியும், இதயத்தில் அடங்காத தாபமும் உறைந்திருந்தன. தங்கள் உலகத்தை உருவாக்க விடாமல் ஒவ்வொரு தருணத்திலும் தடுத்து நிறுத்திய சக்தியை அழிக்க வேண்டும் என்பது மட்டுமே அவனுக்குள் செலுத்தப்பட்டிருந்தது. அவனை மையமாக வைத்து இப்போது காத்திருக்கிறார்கள்.
சென்ற ஜனவரி 20ம்தேதி இதே நிலையில் திகம்பர பாட்கே இருந்தான். அப்போது அவனது கைகளில் துப்பாக்கி இருந்தது. அன்றைக்கு அவர்கள் மொத்தம் எழு பேர் டெல்லியில் இருந்தனர்.
திகம்பர பாட்கே அதிகம் படித்திருக்கவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக பூனா சென்று அங்கு கிடைத்த வேலைகளில் ஈடுபட்டு நாட்களை கழித்தான். ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து வீடு வீடாக சென்று நிதி சேகரித்தான். அந்த நிதியில் நாலில் ஒரு பங்கு அவனுக்கு கூலியாக கொடுக்கப்பட்டது. அந்தப் பணத்தில் கத்திகள், இன்னும் சில ஆயுதங்கள் வாங்கி விற்க ஆரம்பித்தான். அது நல்ல வருமானமாக மாறியது. அந்த நாட்களில், கலவரம் மிகுந்த சமயமாய் இருந்ததால் அவனது தொழிலுக்கு கிராக்கி இருந்தது. முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல் நடத்த ஆயுதங்கள் வேகமாய் விற்பனையாயின. இப்படியாக அவனுக்கு இந்து மகாசபையுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்து மகாசபையின் மாநாடுகளில் புத்தகங்கள் கடை விரித்து, கூடவே ஆயுதங்களையும் விற்று வந்தான். சவார்க்கரின் வீட்டில் பாட்கே கோட்சேவையும், ஆப்தேவையும் சந்தித்தான்.
விஷ்ணு கார்காரேவின் இளவயது மிக துன்பமானது. அவன் பெற்றோர் அவனை வளர்க்க முடியாமல் ஒரு அனாதை விடுதியில் சேர்த்து விட்டனர். அங்கிருந்து தப்பி சின்ன சின்ன ஓட்டல்களிலும், விடுதிகளிலும் வேலை பார்த்து வந்தான். பிறகு அவனே சொந்தமாக அகமது நகரில் ஒரு சின்ன உணவு விடுதியும் நடத்த ஆரம்பித்தான். இந்து மகாசபையில் உறுப்பினரானான். ஆப்தேவுடன் அங்கு பழக்கம் ஏற்பட்டது. நவகாளியில் கலவரம் ஏற்பட்டபோது அங்கு பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு உதவ சென்றிருந்தான். அங்கு நடந்தவைகளை பார்த்து கொதித்துப் போனான்.
மதன்லால் ஒரு பஞ்சாப் இந்து குடும்பத்தில் இருந்து வந்தவன். பூனாவில் இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்து சொந்த ஊரான பாக்பத்தானுக்கு திரும்புகிறபோது அது பாகிஸ்தானுக்கு சொந்தமாகி இருந்தது. அவனது குடும்பத்தினர் முஸ்லீம்களின் கொடுமைக்கு ஆளாகி இருந்தனர். விரக்தியில் பூனா திரும்பியபோது கோட்சேவுடனும், நாராயண ஆப்தேவுடனும் பழக்கம் ஏற்பட்டிருந்தது. வெடிகள் செய்வதில் நிபுணன் என்பதால் அவனை உபயோகப்படுத்தினர்.
நாராயண ஆப்தே மகராஷ்டிராவில் அகமதுநகரில் ஒரு நடுத்தர பிராமண குடும்பத்தை சேர்ந்தவன். பி.எஸ்.ஸி படித்து முடித்து ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தான். அகமது நகரில் இந்து ராஷ்டிரா தளம் என்ற அமைப்பில் சேர்ந்தான். அப்போதுதான் கோட்சேவுடனான பழக்கம் ஏற்பட்டது. பிறகு இந்து ராஷ்டிரா பத்திரிக்கையின் நிர்வாகப் பொறுப்பிலும் இருந்தான்.அமைதியான முறையில் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது என்பது கோட்சேவிடமிருந்து ஆப்தே கற்றுக்கொண்ட பாடம்.
கோபால் கோட்சே, நாதுராம் கோட்சேவின் இளைய தம்பி. மெட்ரிக்குலேசன் படித்து முடித்த பிறகு அவனும் அண்ணன் வேலை பார்த்த அதே தையல் நிறுவனத்தில் சேர்ந்தான். இந்து மகாசபையில் உறுப்பினராகியிருந்தான். அப்போது இராணுவத்தில் ஸ்டோ ர் கீப்பர் வேலை கிடைத்தது. சவார்க்கரின் பேச்சில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன்.
சங்கர் கிஸ்டய்யா ஒரு கிராமத்தில் மர வேலை பார்க்கும் தச்சனின் மகனாக பிறந்தான். கல்வி அறிவு ஒன்றும் கிடையாது. பூனா சென்று அங்கு ஒரு கடையில் வேலை பார்த்து வந்தான். அங்கு பாட்கேவுடன் பழக்கம் ஏற்பட்டது. பாட்கே அவனை வீட்டு வேலைக்கு அமர்த்திக் கொண்டான். கூடவே பாட்கேவின் நிழல் தொழிலுக்கு நம்பத் தகுந்த உதவியாளனாகவும் இருந்தான்.
ஜனவரி 20 ம் தேதி பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கும் போது பின்பக்கம் உள்ள செங்கற்சுவரில் குண்டு வெடிக்க ஏற்பாடு செய்வது என்றும், பிரார்த்தனை கூட்டம் அங்குமிங்குமாய் சிதறும்போது திகம்பர பாட்கே காந்திக்கு மிக அருகே சென்று சுடுவது என்றும் திட்டம் தீட்டியிருந்தனர் .
மதன்லால் பாவா குண்டை வெடிக்கவும் செய்து விட்டான். ஆனால் நினைத்த மாதிரி கூட்டம் சிதறவில்லை. என்னவோ எதோ என்று பதற்றம் தொற்ற, மகாத்மா கூட்டத்தை அமைதிப் படுத்தினார். “இராணுவத்தினர் எதாவது பயிற்சி செய்து கொண்டிருப்பார்கள், நாம் பிரார்த்தனை தொடருவோம் என்றார். திகம்பர பாட்கே சுடாமல் கூட்டத்திலிருந்து அகன்றான்.
மதன்லால் பிடிபட்டுக் கொண்டான். அவனிடம் விசாரணை நடந்தது. சில தகவல்கள் கிடைத்தன. மொத்தம் ஏழுபேர் இந்த சதியில் ஈடுபட்டிருந்ததாகவும் அதில் இந்து ராஷ்டிரா பத்திரிக்கையின் ஆசிரியர் கோட்சேவும் உண்டு என்பது வரையிலும் அவனிடமிருந்து தகவல்கள் கிடைத்தன. அவன் உண்மைகளை சொல்லிவிடுவான் என்பது அவர்களுக்குத் தெரியும். பூனாவுக்குத் திரும்பியிருந்தார்கள்.
4
காந்தி புன்னகைக்கிறார் - நான்காம் அத்தியாயம்
பிரார்த்தனை முடிந்ததும் காந்தி உள்அறைக்குச் சென்று தனது அலுவல்களை கவனிக்க ஆரம்பித்தார். நேற்றிரவு தனது உதவியாளர் பியாரிலாலிடம் சொல்லி எழுத வைத்திருந்த காங்கிரஸை மறுசீரமைக்கும் அவரது திட்டத்தின் நகலில் உள்ள தவறுகளை சரிபார்த்தார். ஆட்சி பொறுப்பில் இருந்து கீழிறங்கி காங்கிரஸ் கட்சி லோக் சேவா சங்கமாக உருவெடுத்து 7 லட்சம் கிராமங்களின், பொருளாதார, சமூக விடுதலைக்கு பாடுபட வேண்டும் என்று அவர் கனவினை வடிவமைத்திருந்தார். அது அவரது உயிலாக கருதப்படுகிறது.
அந்த அதிகாலை 4.45 மணிக்கு எலுமிச்சை சாறும், தேனும் வெந்நீரும் அருந்தினார். ஒரு மணிநேரம் கழித்து ஆரஞ்சு பழச்சாறு அருந்தியபின் களைப்பினால் கொஞ்ச நேரம் தூங்கினார். ஒரு அரைமணி நேரத்தில் திரும்பவும் எழுந்து கடிதங்கள் எழுதினார்.கடுமையான இருமல் இருந்தது. கொஞ்சம் பனங்கற்கண்டு மாவை சாப்பிட்டார். பிறகு பியாரிலாலிடம் திருத்திய நகலை கொடுத்து முழுமையாக்கச் சொன்னார். குளித்தார். சமீபத்தில் வங்காளத்தில் தங்கியிருந்தபோது வங்காள மொழி பழக்கம் ஏற்பட்டிருந்தது. சில வாக்கியங்களை எழுதிப் பார்த்தார்.
9.30 மணிக்கு உணவு அருந்தினார். வேகவைத்த காய்கறி, 12 அவுன்சுகள் ஆட்டுப்பால், நான்கு தக்காளிகள், நான்கு ஆரஞ்சுகள், காரட் சாறு இவைகள்தான். பியாரிலால் அவர் அருகில் உட்கார்ந்து அதற்கு முந்தையநாள் இந்து மகா சபாவின் தலைவரான டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜியிடம் பேசியதை விளக்கினார். காங்கிரஸ் தலைவர்களை தரம் தாழ்ந்து டாக்டர்.முகர்ஜி பேசியிருந்தார். காந்தி பியாரிலாலை அனுப்பி டாக்டர் முகர்ஜியிடம் இப்படிப்பட்ட பேச்சுகளை நிறுத்த முயன்றிருந்தார். ஆனால் முகர்ஜி பியாரிலாலிடம் இணக்கமாக பேசியிருக்கவில்லை. கேட்டுக் கொண்டு வந்த காந்திக்கு வருத்தமாக இருந்தது. பிறகு பாகிஸ்தானுக்கு செல்லவேண்டியிருப்பது குறித்து பேசினார்.
காந்தியை ஜின்னா பாகிஸ்தானுக்கு அழைத்திருந்தார். பிப்ரவரி 3ம் தேதி கலவரங்கள் நடந்த பகுதிகள் வழியாக பாகிஸ்தானுக்கு செல்வதாக இருந்தார். காந்தி சுடப்படாமல் இருந்திருந்தால் உலகமே எதிர்நோக்கிய அந்த யாத்திரை மட்டும் நடந்திருந்தால் மகத்தான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். காந்தியைப் பார்க்க ருஸ்தம் சரபோஜி குடும்பத்தோடு வந்திருந்தார். அவரிடம் பேசியிருந்த பின் மீண்டும் தூங்கிப் போனார்.
அங்கே கொலையாளிகள் அவர்கள் திட்டத்திற்கு இறுதிவடிவம் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு பழைய காலத்து காமிராவோடு பிரார்த்தனை நடக்கும் இடத்திற்கு சென்று காந்தியை படம் பிடிக்கிற மாதிரி நடித்துக் கொண்டே அவரைச் சுடுவது என திட்டமிட்டனர். அதுவே சந்தேகத்துக்குரியதாக மாறிவிடக் கூடாது என்று அந்த யோசனையை கைவிட்டனர். கறுப்பு அங்கி அணிந்த ஒரு முஸ்லீம் பெண்ணாக பிரார்த்தனை மைதானத்திற்கு செல்லலாம் என நினத்தனர். காந்திக்கு வெகு அருகே செல்ல வாய்ப்பு ஏற்படும் என்பதால் பர்கா ஒன்றை வாங்கினர். கோட்சேவுக்கு அதை அணிந்து கொள்வது ரொம்ப சிரமமாயிருந்தது. இந்த நிலையில் சுடும்போது குறி தவறிவிடுமோ என்று சந்தேகம் வந்தது. அந்த யோசனையும் நிராகரிக்கப்பட்டது. இந்த தடவை குறி தவறிவிடக் கூடாது என்பதில் அப்படியொரு கவனம் இருந்தது கோட்சேவுக்கு. கடைசியாக ஆப்தேதான் அந்த யோசனையை சொன்னான். தொளதொளப்பான நீண்ட அங்கி அணிவது. துப்பாக்கியை மறைத்துக் கொள்வதற்கு அதுவே சிறந்த வழியாகவும் இருக்கும் என முடிவு செய்தார்கள்.
நான்கு மணிக்கு பிர்லா மந்திருக்குச் சென்றார்கள். கோட்சே, கதர் அங்கிக்கு மேலே கைகளில்லா காக்கி ஸ்வெட்டர் அணிந்து இருந்தான். ஆப்தேவும், கார்கரேவும் கோவிலுக்குள் சென்று வழிபடப் போனார்கள். கோட்சே உள்ளே செல்லாமல் வெளியே நின்று கொண்டான். காத்திருந்தான்.
காந்தி இந்தியாவின் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேலுடன் பேசிக்கொண்டு இருந்தார். ஜவஹர்லால் நேருவுக்கும், வல்லபாய் பட்டேலுக்கும் நிலவிய கருத்து வேறுபடுகளை சரி செய்ய மகாத்மா முயற்சி செய்தார். மனுவும், அபாவும் பிரார்த்தனைக்குச் செல்ல தயாராகி காந்தியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வெளியே முதலில் கோட்சேவும், பிறகு கொஞ்ச நேர இடைவௌதயில் ஆப்தேவும், கார்காரேவும் வந்து முன் வாசல் வழியே நுழைந்து பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து இருந்தார்கள். சரியாக 5 மணிக்கு ஆரம்பிக்கிற பிரார்த்தனை கால தாமதமடைவதில் கோட்சே கலக்கமுற்று இருந்தான். நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. ஒளி சாய்ந்து இருள் கவ்வ ஆரம்பிக்கிற மணித்துளிகள்.
மணி 5.10 ஆனது. அபா காந்தியின் கைக்கடிகாரத்தை காண்பித்து நேரத்தை நினைவூட்டினாள். மகாத்மாவும், பட்டேலும் எழுந்தார்கள். காந்தி அவரது செருப்புகளை அணிந்து கொண்டு புறப்பட, பட்டேல் விடைபெற்று நடந்தார். காலதாமதமானதால் காந்தி பிரார்த்தனை நடக்கும் இடத்திற்கு சுற்றி செல்லாமல் குறுக்காக நடந்து சென்றார். மனுவும், அபாவும் இருபுறமும் தாங்கி வர, அவரது கடைசி யாத்திரை ஆரம்பமாகியது. மனுவிடமும், அபாவிடமும் வழக்கமான நகைச்சுவையோடு பேசிக்கொண்டே நடந்து வந்தார். புல்வெளிகளைத் தாண்டி பிரார்த்தனை மைதானத்தின் அருகில் வந்தனர். மிக மிக முக்கியமான தருணம் வந்துவிட்டது.
காத்திருந்த கோட்சேவுக்கு மிக அருகில் அப்போது காந்தி இருந்தார். கோட்சே சட்டென்று கூட்டம் தாண்டி அவர் எதிரே வந்து நின்றான். கூப்பிய கைகளுக்குள் துப்பாக்கியை ஒளித்தபடி குனிந்து நமஸ்கரித்தான். அவன் குனிந்து காந்தியின் கால்களை முத்தமிடப் போகிறான் என்று மனு எண்ணிக்கொண்டு “சகோதரனே பாபுஜிக்கு ஏற்கனவே நேரமாகி விட்டது ” என்று சொல்லிக்கொண்டே லேசாய் அவனை தள்ளிவிட எத்தனித்தாள். மகாத்மா கைகளை கூப்பி பதிலுக்கு நமஸ்கரிக்கும் நேரத்தில் கோட்சே சட்டென்று மனுவை வேகமாகத் தள்ளிவிட்டு துப்பாக்கியோடு காந்தியின் எதிரே நின்றான்.
ஒரு கணம்..ஒரு கணம்..அந்த கண்களைப் பார்த்தான். அதே நேரம் விரல்கள் சுண்டிவிட சுண்டிவிட.. சுண்டிவிட..மூன்று தோட்டாக்கள் காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் பாய்ந்தன.
“ஹே ராம்” கூப்பிய கரங்களோடு காந்தி மண்ணில் சாய்ந்தார். மகாத்மாவின் 78 ஆண்டு கால பிரயாணம் அந்த இடத்தில் முடிவுற்றது. கோட்சே எங்கும் தப்பி ஒடாமல் அங்கேயே நின்றிருக்க காவலாளிகள் அவனைப் பிடித்தனர். நாராயண ஆப்தேவும், விஷ்ணு கார்கரேவும் கூட்டத்தில் கலந்து தப்பி வெளியேறினர்.
‘இந்தியாவின் ஒளி நம்மிடமிருந்து போய்விட்டது…’ என்று பண்டித ஜவஹர்லால் நேரு குரல் தழுதழுக்க கூறினார். எப்பேர்ப்பட்ட மனிதர். ஒருமுறை காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது மகாகவி ரவீந்திரநாத் தாகூர் வந்து அசையாமல் இருந்த காந்தியையேப் பார்த்துக் கொண்டிருந்தாராம். பிறகு மெல்ல குனிந்து காந்தியின் நெஞ்சருகே காதை வைத்து கேட்டாராம். கேட்டுக் கொண்டிருக்கும் போது தாகூரின் முகத்தில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்ததாம். அந்த இதயத்தின் துடிப்பு நின்று வெகு நேரமாகி இருந்தது.
காந்தியின் முகத்தில் ஒரு அசாதாரண ஒளியும், புன்னகையும் இருந்தது.
5
காந்தி புன்னகைக்கிறார் - 5ம் அத்தியாயம்
அந்த துப்பாக்கி குண்டு வெடித்த போது காற்றுவெளியில் படர்ந்த புகை இன்னமும் அடங்கிடவில்லை. காட்சிகள் தெளிவாகாமலேயே இருக்கின்றன.
சென்ற நூற்றாண்டின் அரிய மனிதரை- மனிதர்களின் இதயங்களோடு மிக நெருக்கமாக பேச முடிந்த மகாத்மாவை- குறி பார்த்த சதியின் திரைகள் இன்னமும் விலக்கப்படாமலேயே இருக்கின்றன.
வழக்கில் 12 பேர் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் 3 பேர் காணாமல் போயிருந்தார்கள். திகம்பர பாட்கே அப்ரூவராக மாறினான். நாதுராம் கோட்சே, நாராயண ஆப்தே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, கோபால் கோட்சே, சங்கர் கிஸ்டய்யா, இவர்களோடு இந்து மகா சபையின் தலைவாராயிருந்தவரும் இந்துத்துவா அமைப்புகளின் இன்றுவரை ஆதர்ச புருஷராகவும் இருக்கக்கூடிய வீரசவார்க்கரும் கைது செய்யப்பட்டனர்.
ஜனவரி 20ம் தேதி மதன்லால் டெல்லி போலீஸிடம் கக்கிய தகவல்கள், திகம்பர பாட்கே அப்ரூவராகி கொட்டிய உண்மைகள், போலீஸ் சேகரித்த சாட்சியங்கள் சில முக்கிய விஷயங்களை தெரிவிக்கின்றன. ஒரு ஜேப்படிக்காரனைப் பிடிக்கும் தீவிரத்தைக் கூட காவல்துறை காட்டவில்லை. பல முக்கிய கட்டங்களில் உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகள் மர்மமாக இருந்திருக்கின்றன. எதுவோ ஒன்று அவர்களை அங்கங்கு தடுத்திருப்பதாகவே தெரிகிறது.மதன்லால் மிகத் தெளிவாக யார் யாரெல்லாம் இந்த சதியின் உடந்தை என்று சொல்லி இருக்கிறான். இந்து ராஷ்டிரா பத்திரிக்கை குறித்தும், அதன் ஆசிரியர் கோட்சே குறித்தும் தெளிவாக ஜனவரி 24ம் தேதியே எழுத்து பூர்வமாக கொடுத்துவிட்டான். ஆனால் போலீஸாரால் கோட்சேவைத் தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. சரி. கோட்சேதான் தலை மறைவாகி விட்டதாகச் சொல்லப்படலாம். அந்த இந்து ராஷ்டிரா பத்திரிக்கை?
ஜனவரி 20ம் தேதி காந்தியின் மீது கொலைமுயற்சி நடந்தபோது “காந்தியின் நடவடிக்கைகளால் ஆத்திரமுற்ற இந்து இளஞர்களின பதில் நடவடிக்கை” என்பதாக செய்தி வெளியிட்டது. காந்தி இறந்த செய்தியைக்கூட ஜனவரி 31ம் தேதி காலையில் வெளியிட்டிருக்கிறது. அதன் ஆசிரியரே கொலைகாரன்!
இந்து ராஷ்டிரா பத்திரிக்கை சீர்குலைவு செய்திகளை வெளியிடுவதாகச் சொல்லி 1947 ஜூலையில் அந்தப் பத்திரிக்கையைத் தடை செய்து உத்தரவிட்ட பூனாவின் ஐ.ஜி. திரு ரணில் பிறகு 1947 நவம்பரில் அந்த தடையுத்தரவை ஏன் ரத்து செய்தார் ?
போலீஸ் தரப்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட முக்கியமான ஆவணங்களில் ஒன்று விஷ்ணு கார்காரே ஜனவரி 25ம் தேதி பூனாவில் உள்ள கோட்சேவுக்கும், நாராயண ஆப்தேவுக்கும் உடனே புறப்பட்டு வரச் சொல்லி அனுப்பிய தந்தி. கோட்சேவுக்கும், விஷ்ணு கார்காரேவுக்கும், ஆப்தேவுக்கும் மகாத்மாவின் கொலையில் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக இந்த ஆவணம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் ஒளிந்திருக்கிறது. ஜனவரி 20ம் தேதி காந்தியை டெல்லியில் கொலை செய்ய முயற்சித்து அது தோல்வியடைந்த பிறகு கோட்சே மீண்டும் பூனாவுக்கே திரும்பி அங்கு பத்திரமாக இருந்திருக்கிறான்.
ஆனால் அதற்கு முன்பே கோட்சே பற்றியும், இந்து ராஷ்டிரம் பத்திரிக்கை குறித்தும் மதன்லால் பாவா போலீஸிடம் தகவல் தெரிவித்துவிட்டான். போலீஸிடம் எப்படி ஒரு அக்கறை கொண்ட மந்தம் இருந்தது.?
மதன்லால் கொடுத்த தகவல்களின் பேரில் நாராயண ஆப்தே மற்றும் விஷ்ணு கார்காரேயின் படங்கள் முன்கூட்டியே போலிஸூக்கு கிடைத்தும் பிர்லா ஹவுஸில் சாதாரண உடையில் காவல் இருந்த காவலாளிகள் கையில் ஏன் அவை கொடுக்கப்படவில்லை? கொடுக்கப்பட்டிருந்தால் ஜனவரி 30ம் தேதி கொலை செய்ய கோட்சேவோடு மீண்டும் வந்த விஷ்ணு கார்காரே மற்றும் நாராயண ஆப்தேவை அடையாளம் கண்டு கைது செய்து இருக்க முடியும்.
நாட்டில் கலவரங்கள் ஏற்படுத்துவதாகவும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அடையாளம் காணப்பட்டு இந்து மகாசபையும் ஆர்.எஸ்.எஸ்ஸூம் தடை செய்யப்பட்டன. ஆர்.எஸ்.எஸ் தலவர் கோல்வார்கர் கைது செய்யப்பட்டார். காந்தி இறந்ததை அங்கங்கு ஆர்.எஸ்.எஸ் இனிப்புகள் வழங்கி கொண்டாடி இருக்கிறது. இதை அப்போது துணைப் பிரதமாராயிருந்த வல்லபாய்படேல் சொல்கிறார்.
குற்றம சாட்டப்பட்டு, வழக்கு நடந்து, 1949 நவம்பர் 15ம் தேதி காலையில் நாதுராம் கோட்சேவும், நாராயணஆப்தேவும் தூக்கிலடப்பட்டுவிட்டனர்.
விஷ்ணு கார்காரேவும், கோபால் கோட்சேவும், சங்கர் கிஸ்டய்யாவும், மதன்லால் பாவாவும், தத்தரய்யா பர்ச்சூரும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள்.
இந்து மகா சபையின் தலைவரும் இந்துத்துவாவின் பீடங்களில் ஒருவருமான வீர சவார்க்கர் விடுதலை செய்யப்பட்டார். அப்பீலில் கோட்சேவுக்கு குவாலியரில் துப்பாக்கி கொடுத்த டாக்டர் பர்ச்சூர் விடுதலை செய்யப்படுகிறான்!
ஜனவரி 20ம் தேதி குண்டு வெடிப்புக்குப் பிறகு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களால் வீர சவார்க்கருக்கும் கொலையாளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததும் பம்பாயின் உயர் போலீஸ் அதிகாரி நகர்வாலா வீர சவார்க்கரை கைது செய்ய வேண்டும் என அப்போது பம்பாயின் உள்துறை அமைச்சராயிருந்த மொரார்ஜி தேசாயிடம் அனுமதி கேட்டபோது மொர்ஜி தேசாய் மறுத்து விடுகிறார். வழக்கு முடிந்து ரொம்ப காலம் கழித்து இந்த படுகொலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட கபூர் கமிஷன் 1964ல் அறிக்கையை வெளியிடும்போது காவல்துறையின் செயல்பாடுகளில் பல தவறுகளும், முரண்பாடுகளும் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது.
கோபால் கோட்சே அக்டோபர் 1964ல் ஆயுள் தண்டனை முடிந்து வெளியே வரும் போது அதனைக் கொண்டாட 1964 நவம்பர் 12ல் பூனாவில் உள்ள உதயம் ஹாலில் ‘சத்திய விநாயக பூஜை’ ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் கலந்து கொண்ட ‘தருண் பாரத்’ ஆசிரியர் கேட்கர் காந்தி கொலை செய்யப்படுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்னரே நாதுராம் கோட்சே காந்தியைக் கொலை செய்யப் போவதாக கூறியதாகவும் அதன் விளைவுகள் குறித்து இருவரும் விவாதித்ததையும் கூறியிருக்கிறார். உடனே பக்கத்தில் உட்கார்ந்திருந்த கோபால் கோட்சே இதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டாம் என்று முணுமுணுக்க கேட்கர் “இப்போது இதையெல்லாம் நான் சொன்னாலும் அவர்கள் என்னை கைது செய்யப் போவதில்லை” என்று கூறியிருக்கிறார். காந்தியின் உணணாவிரதத்திற்குப் பிறகே அவரைக் கொலை செய்ய முயற்சித்ததாக நடந்த வழக்கிற்கு இது முற்றிலும் வேறான தகவல்.
இப்படி பல மர்மங்கள் முடிச்சுகளாய் விழுந்து கிடக்க, அது கோட்சேவின் நோக்கத்தை எளிதாக நிறைவேற்றிவிடுவதாகவே இருந்திருக்கின்றன.
6
காந்தி புன்னகைக்கிறார் - ஆறாம் அத்தியாயம்
முதலாவதாக கோட்சே தன்னைச் சார்ந்த முக்கியமான நபர்களை காப்பாறறும் முயற்சியில் இறங்குகிறான்.
“முதன் முதலாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது காந்தியின் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கிடையே எந்த சதியும் இருக்கவில்லை.”
“நான் 602864 எண்ணுள்ள பிஸ்டலை வைத்திருந்தேன். அது பற்றி நாராயண ஆப்தேவுக்கும், விஷ்ணு கார்காரேவுக்கும் ஒன்றும் தெரியாது”
“காந்தியை கொல்லும் பணியை வீர சவார்க்கர் எனக்கும் , நாராயன ஆப்தேக்கும் ஒப்படைத்துள்ளதாக பாட்கே கூறிய தகவல் அவனது மூளையில் உதயமானது.”
“ஜனவரி 17ம் தேதி வீர சவார்க்கர் எங்களை வெற்றிகரமாக முடித்து வாருங்கள் என்று வாழ்த்தியதாக பாட்கே சொன்னது பொய்”
” நான் மட்டுமே முடிவு செய்தேன். என் கைகளில் துணிவினை ஏந்தினேன். சுட்டேன்”
தன்னை தவிர வேறு யாரும் இந்த வழக்கில் சிக்கிக் கொள்ள வேண்டாம் , மற்றவர்கள் வெளியே சென்று மகாத்மாவுக்குப் பிறகு இந்திய வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதுதான் மகாத்மாவின் கொலைக்கான உண்மையான அர்த்தமாகும் என்பது அவனுக்குத் தெரியும் .கோர்ட்டில் அவனது வாக்கு மூலத்தை படித்தால் புரியும்.
இரண்டாவது, காந்தியை கொல்வதற்கான நியாயமான காரணங்கள் இருந்ததாகச் சொல்கிறான். பிரிவினைக்கு அவர்தான் காரணம் என்றும் அதன்மூலம் ஏற்பட்ட கலவரங்களில் இந்துக்கள் பாதிக்கப்பட்டதற்கும் அவரே காரணம் என்றும் குற்றம் சாட்டுகிறான். இது முற்றிலுமான பொய். காந்தி பிரிவினைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார் என்பது இந்திய அரசியலில் அன்றைக்கு சாதாரண பாமரனுக்கும் தெரிந்த பத்திரிக்கைச் செய்தி.
அடுத்ததாக, காந்தி எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார் என்றும் முஸ்லீம்களை தாஜா செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதுவும் உண்மையல்ல. காந்தி அவரது மனதில் பட்டதை மிகக் கடுமையாகவே பேசியிருக்கிறார். அவர் உண்ணாவிரதம் இருந்த ஜனவரி 13ம் தேதி பற்றி பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசும்போது , பாகிஸ் தானின் நடவடிக்கைகள், மோசமான நிலைமைகளுக்கு இட்டுச் செல்வதாகக் கருதி “நான் பாகிஸ்தானை காகிதத்தில் பார்க்க விரும்பவில்லை. அங்குள்ள பேச்சாளர்களின் வார்த்தைகளில் பார்க்க விரும்பவில்லை. அங்குள்ள முஸ்லீம்களின் அன்றாட வாழ்க்கையில் பார்க்க விரும்புகிறேன். இந்த விரதம் அதற்கான ஒரு சிறு முயற்சி ” என்று மிக அழுத்தமாக சொல்கிறார். சாகேப் குரேய்ஷி என்னும் காந்தியின் நண்பர் காந்தியின் இந்த வார்த்தைகளை எதிர்த்து கடிதங்கள் எழுதவும், காந்தி இன்னும் தெளிவாக பதில் எழுதுகிறார். “நான் உண்மையைச் சொல்வதற்கு தயங்க மாட்டேன். பாகிஸ்தானிலோ, இங்குள்ள முஸ்லீம்களோ எனது அறிவுரைகளை விரும்புகிறார்களோ இல்லையோ நான் சொல்லிக் கொண்டு இருப்பேன்.” காந்தி மிகத் தெளிவாக தனது நிலையில் இருக்கிறார். எங்கு தவறுகள் இருந்தாலும் அவர் அதைச் சுட்டிக் காட்டவும், சரி செய்யவும் தயங்கவில்லை. எனவே கோட்சே காந்தி மீது கற்பித்த களங்கமானது தொடர்ந்து இந்துத்துவா சக்திகள் இன்றுவரை சொல்லிக் கொண்டு இருப்பதுதான்.
அப்புறம் மிக முக்கியமாக சொல்வது பாகிஸ்தானுக்காக ரூ.55 கோடி கொடுக்க வேண்டும் என காந்தி உண்ணாவிரதம் இருந்தார் என்பதை. உண்மையில் காந்தி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிக்கும் போது 55 கோடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. உண்ணாவிரதம் ஆரம்பித்த பிறகுதான் அதை ஒரு பிரச்சினையாக பார்த்தார். ஆனால் அந்த 55 கோடி கொடுக்க வேண்டும் என்பது இந்தியாவின் தார்மீகக் கடமை என்றே கருதினார். அப்படிக் கொடுப்பது இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றங்களை தவிர்க்க உதவும் எனவும் கருதினார். எந்த நடுநிலையாளனும் அப்படித்தான் யோசிக்க முடியும்.
கோட்சே, காந்தி மீது கோபம் கொண்டதற்கு சொன்ன பல காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை. ஆனால் ஒரு இடத்தில் அவன் உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறான். அதுதான் இந்த வழக்கில், இந்திய வரலாற்றில் கவனிக்க வேண்டியதாயிருக்கிறது. “காந்தி இல்லாத தேசம் செயல்முறைக்கு உகந்ததாகவும், ஆயுதங்களோடு வலிமை பொருந்தியதாகவும் இருக்கும்” என்கிறான். இவர்களின் கோபம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பது தெளிவாகிறது. இன்றைக்கு அவர்கள் முழங்கும் “வல்லரசு’ பிரகடனங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் இன்னும் தெளிவாகத் தெரியும்.
மூன்றாவது அவனது வாக்கு மூலத்தின் மூலம் கோர்ட்டிலும், மக்களிடமும் மரணம் என்னும் உணர்வு குவிந்த தளத்தில் நின்று ஒரு பிரச்சாரம் நிகழ்த்திவிட வேண்டும் எனவும், அது மகாத்மாவின் புகழை- மரியாதையை மங்கச் செய்வதாக இருக்க வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காகவே நாதுராம் கோட்சே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான். இயல்பாகவே கிளர்ச்சியுறப் பேசும் அந்த சித்பவ பிராமணன் தன் அறிவு, ஆற்றல் முழுவதையும் அதற்கு பயன்படுத்தி இருக்கிறான்.
தீர்ப்பு எழுதிய நீதிபதி மாண்புமிகு கோஸ்லா 5 மணி நேரம் நீடித்த அவனது வாக்குமூலத்தின் போது கோர்ட்டில் இருந்தவர்கள் உணர்ச்சிப் பெருக்கால் தவித்தது பற்றியும், ஒரு நெஞ்சைப் பிழியும் நாடகத்தை பார்த்தது போல இருந்ததாகவும் பின்னாளில் எழுதுகிறார்.
அவனது உயிலும் கூட அப்படித்தான். “எந்த நதியின் கரைகளில் வேதங்கள் ஒலித்ததோ, அந்த சிந்து எப்போது நமது மண்ணில் சுதந்திரமாக பாய்கிறதோ, அதுதான் நமது புனித நாள். அப்போது எனது அஸ்தி அந்நதியில் கரைக்க வேண்டும்”
த்னது அஸ்தியை- அவன் வெறி பிடித்த கூட்டத்தின் கனவாக கொடுத்துப் போயிருக்கிறான். சந்தோசமும், அழகும் என்றைக்கும் இந்த மண்ணில் வந்துவிடக் கூடாது என்று கோபம் கொண்ட வெறியனின் சாபம் அது. தேசமே அஸ்தியாகட்டும் என்று வெறுப்பு உமிழ்ந்த ஒருவனின் உருக்குலைந்த கடைசி மிச்சங்கள் அவை.
7
காந்தி புன்னகைக்கிறார் - ஏழாம் அத்தியாயம்
வழக்கின் உண்மைகள் ஒருபுறம் புதைக்கப்பட்டிருக்கிற வேளையில் இப்போது அடுத்த கட்டமாக வரலாற்றையே வதை செய்திட இந்துத்துவா அமைப்புகள் முனைப்புடன் இருக்கின்றன.
எந்த நாதுராம் கோட்சே இந்திய மக்களால் வெறுக்கப்பட்டானோ- எவன் இந்தியாவின் ஆன்மாவை சுட்டுக் கொன்றானோ- எவன் அந்த அமைதிப் புறாவை இரத்தம் சிந்த சிந்த மண்ணில் வீழ்த்தினானோ அவனை, இந்தியாவின் தவப்புதல்வனாகவும், ஒப்பற்ற தியாகியாகவும் சித்தரிக்க முயற்சிகள் நடக்கின்றன. மக்கள் வரலாற்றை மறந்துவிடும்போது அவர்கள் அனாதையாகி விடுகிறார்கள்.
நாதுராம் கோட்சேவின் தம்பி எழுதிய “காந்தியின் மரணமும் நானும்” மற்றும் “55 கோடியின் தியாகம்(அப்பாவி)” போன்ற புத்தகங்கள் மகாராஷ்டிரவிலும், குஜராத்திலும் மிக அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. குஜராத்தில் “காந்தியும் கோட்சேவும்” நாடகம் அங்கு பி.ஜே.பி அரசு அமைந்ததும் அரங்கேற்றப்பட்டது. இவைகளில் காந்தி இந்துக்களின் துரோகியாகவும், கோட்சே தியாகியாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. காந்தி பிறந்த மண்ணிலேயே அவர் காணாமல் போகிறார்.
1995ல் மகாராஷ்டிராவில் சிவசேனைக்கு பொறுப்புக்கு வந்ததும்,. பிரதீப் தால்வியின்’ நான் நாதுராம் பேசுகிறேன்” என்னும் நூல் நாடகமாக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது. அதன் முதல் காட்சியிலேயே கோட்சே தோன்றி “எனது இதயத்தில் ஆழமான காயம் இருக்கிறது…அந்தக் காயத்தின் மீது மீண்டும் மீண்டும் அடிகள் விழுந்தன. பிரிவினையால் தேசமே துண்டாகிப் போனது. அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர். எனது தாய்மார்களும், சகோதரிகளும் கற்பழிக்கப்பட்டனர், காஷ்மீரில் நமது வீரர்கள் உயிரைத் தியாகம் புரிந்து சமர் செய்யும் போது பாகிஸ்தானுக்கு 55 கோடி ருபாய் கொடுக்கப்பட்டது. இந்தக் காயங்களுக்கெல்லாம் காரணம் காந்திதான்.” என்று உனர்ச்சிகரமாக பேசி கூட்டத்தினரை உணர்வு ரீதியாக வெறியேற்றி தன் வசமாக்குவான். காலம் காலமாக இவர்களால் புறக்கணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு காயங்களும், ரணங்களுமே உருவங்களாகிப் போன தாழ்த்தப்பட்டவர்கள் இவன் மாதிரி பேச மூடியாமல் இருப்பதால்தான் இவனுக்கு வெட்கமேயில்லாமல் இப்படி பேசமுடிகிறது.
கொலை நடந்த அன்றைக்கு டெல்லியில் துக்ளக் சாலையில் அமைந்துள்ள போலீஸ் ஸ்டேஷனில் இரவு கோட்சேவை காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி சென்று சந்திப்பதாகவும், அவனை கைகுலுக்குவது போலவும் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளரின் மனோநிலையில் தடுமாற்றம் வர அமைக்கப்பட்டுள்ள ஒரு குரூரமான கற்பனை தந்திரம்.
ஜெயிலில் ஷேக் என்னும் காவல் அதிகாரி கோட்சேவோடு பழக்கமாகிறான். அவன் நாதுராமிடம் “கோர்ட்டில் நீ உட்கார்ந்திருந்த இடத்தில் என் மகள் சுபேதா மலர்களை தூவினாள்’ என்கிறான். மேலும் தனது மகள் மசூதிக்கு ஒவ்வொரு நாளும் சென்று உனக்கு கடவுளின் ஆசீர்வாதங்களை வேண்டிக் கொண்டு இருப்பதாகவும் சொல்கிறான். அவள் கர்ப்பம் தரித்திருப்பதாகவும் உன்னை பார்க்க வர முடியாமல் இருப்பதாக சொல்கிறான். கோட்சே அவனிடம் “நீங்கள் இந்த சகோதரனை உண்மையில் நேசிப்பதாக இருந்தால், அவளது வயிற்றில் பிறக்கும் குழந்தைக்கு எனது சிந்தனைகளை, செய்திகளைச் சொல்லுங்கள். இந்த மண்ணில் இன்னொரு காந்தி வந்தால் இன்னொரு கோட்சே வேண்டும்.” என்று சொல்கிறான். யாரை அவன் வெறுத்தானோ, யாருக்காக மகாத்மா வருத்தப்பட்டார் என்று அவரைக் கொன்றோனோ அவர்களிலிருந்து இன்னொரு கோட்சே பிறப்பான் என்பது எப்பேர்ப்பட்ட குதர்க்கமான கற்பனை.
காந்தியின் கொலையை குறிப்பிடும் போதெல்லாம் ‘வதை’ என்கிற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டு இந்துக்களின் மனோநிலையில் அவர்கள் அறியாமலேயே காந்தியின் மீது வெறுப்பு தூண்டப்படுகிறது. இதைவிடக் கொடுமை, காந்தி உண்ணாவிரதம் முடித்து பழச்சாறு சாப்பிடும்போது ஒரு இந்து தந்தை “அது என் மகனின் இரத்தம்” என்று சொல்கிற அளவுக்கு விஷம் கக்கப்பட்டிருக்கிறது. இந்த நாடகம் கேரளத்திலும் மற்ற மாநிலங்களிலும் அரங்கேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அங்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 1997 ஆகஸ்ட் 15 ம் தேதி தாதரில் “காந்தியின் கொலையாளி” என்னும் புத்தகம் கே.வி.சீதாராமைய்யா என்பவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதை வெளியிட்டது நாதுராம் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே. சிறப்பு அழைப்பாளர் காந்தி மீது முதல் கொலை முயற்சி நடத்திய மதன்லால் பாவா! இந்தப் புத்தகத்தையும் கேரளாவில் கோபால் கோட்சேவை வைத்து வெளியிட தீர்மானித்திருந்தார்கள். அரசு தடை செய்துவிடும் என்பதறிந்து வெளியீட்டாளர்கள் நிகழ்ச்சியை ஒத்தி வைத்தார்கள். ஆனால் சங்பரிவாரத்தினர் தங்களுக்கு இருக்கும் அமைப்புகள் மூலம் வேகவேகமாய் விற்றனர். முடிந்த அளவுக்கு மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்று செயல்பட்டனர். ஆனால் வெளியே எங்களுக்கும் கோட்சேவுக்கும் சம்பந்தமில்லை என்று சத்தியம் செய்வார்கள்.
அதே நேரம் ஆனந்த் பட்வர்த்தனின் “போரும் சமாதானமும் என்கிற திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கு 6 இடங்களில் சென்சார் போர்டு கைவைத்துள்ளது. அதை மறுபரீசீலனை செய்ய அனுப்பியபோது 21 காட்சிகள் நீக்கப்பட்டன. அதில் ஒன்று மகாத்மாவை நாதுராம் கோட்சே கொன்றதாக காட்டப்படும் காட்சி! அந்தப் படம் மகாத்மாவின் அகிம்சையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட அணு ஆயுத போருக்கு எதிரான படம்!! எது இங்கு பேசப்பட வேண்டுமோ அது பேசப்பட அனுமதியில்லை. ஆனால் எதை இங்கு பேசக்கூடாதோ அதை இங்கு பேசலாம்.
குஜராத்தில் மாநிலக் கல்வித்துறை பாடத்திட்டத்தில் எட்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் ‘காந்தியின் கொலை’ என்று உபதலைப்பிட்டு கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கிறது. “சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் பல இடங்களில் வகுப்புக் கலவரங்கள் நடந்தன. காந்தி அதை அடக்குவதற்கு முயற்சி செய்தார். நிறைய இந்துக்கள் இதனை விரும்பவில்லை. 1948 ஜனவரி 30ம் தேதி கோட்சேவின் கைகளால் கொல்லப்பட்டார்.” இன்னொரு வரலாற்றுப் பாடத்தில் “வெறுப்புகளினால் கிழிக்கப்பட்டிருந்த வங்காளத்தில் வகுப்புவாத கொடுமைகளில் பாதிக்கப்பட்ட மக்களை சாந்தப்படுத்துவதற்காக காந்தி யாத்திரை செய்தார். புதிய தேசத்தில் சந்தோஷமும், வெறுப்பும் சூழ்ந்திருந்த போது காந்தி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.” நாதுராம் கோட்சே என்பவன் யார்…ஏன் கொன்றான் என்பதை குறிப்பிடாமல் காந்தியின் மரணம் நியாயமாக நிகழவேண்டிய, ஒரு உனர்ச்சி வசப்பட்ட மக்களால் நடந்த மாதிரி, போகிற போகில் சொல்லப்படுகிறது. குழந்தைகளின் அறிவுக்குள் தங்கள் வரலாற்று மோசடியை புகுத்தி அவர்களையும் இருளில் மூழ்கடிக்கிற சூழ்ச்சி சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.
சில காலங்களுக்கு முன்பு பிரதம மந்திரி வாஜ்பாய் அவரது அதிகாரபூர்வ இருப்பிடத்தில் பி.ஜே.பி தலைவர் ஒருவர் எழுதிய ‘லஷ்மண ராவ்’ பற்றிய புத்தகத்தை வெளியிட்டார். அத்தோடு நில்லாமல் ஜவஹர்லால் நேருவுக்கு சமமாக பேசினார். இந்த லஷ்மண ராவ் வேறு யாருமல்ல..மகாத்மா காந்தியை கொன்றவர்களுக்கு ஆதரவாக நின்றவர். வாஜ்பாய் ஒருவேளை அன்று தனது மூகமூடியை மறந்துவிட்டு வந்திருக்கக்கூடும். இப்படி ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் இவர்களது கள்ளத் தொடர்புகள் அவ்வப்போது வெளிப்படும்.
அதுதான் கோபால் கோட்சேவை போன தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு அதிக இடங்கள் கிடைத்ததும் சந்தோசமடைய வைக்கிறது. “1400 வருடங்களாக நாங்கள் நம்பிக்கையோடு காத்திருந்தது நிகழப் போகிறது… இறுதியாக எங்கள் இந்து ராஷ்டிரா அமையப் போகிறது” என்று உற்சாகமடைய வைக்கிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா, ஜனவரி 25, 1998 இதழில் கோபால் கோட்சே அளித்த பேட்டியில் “சித்தாந்தரீதியாக நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்ஸின் உறுப்பினன் தான். அதற்காக பணிபுரிவதை பிறகு நிறுத்திக் கொண்டான். கோர்ட்டில் நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினன் இல்லை என்றது ஆர்.எஸ்.எஸ்ஸைக் காப்பாற்றும் முயற்சியே. ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் இதனால் பாதுகாக்கப்படுவார்கள் என்கிற புரிதலில் கோட்சே அதனை சந்தோஷமாகச் செய்தான்” என்கிறார். இன்னொரு சந்தர்ப்பத்தில் கோட்சேவின் தம்பி சொல்கிறார்..”எங்கள் தலைமுறை முடிந்துவிட்டது. இந்த தலைமுறை நாதுராம் கோட்சேவை முற்றிலும் அறியாமல் போகலாம். ஆனால் அடுத்த தலைமுறை நிச்சயம் கோட்சேவை தேசபக்தி கொண்ட தியாகியாக பார்க்கும்”
அவரது பார்வை சாம்பலும் எலும்பும் அடங்கிய கோட்சேயின் அஸ்தியை பார்க்கிறது. 55 வருடங்களாக அதற்கு பூஜை நடந்து கொண்டு இருக்கிறது. நிறைவேறாத ஆசைகளோடு இளவயதில் துர்மரணமடைந்த கெட்ட ஆவியாக அந்த அஸ்தி, அவருக்கு தெரியாதுதான். மத நம்பிக்கையைத் தாண்டி ஒரு வெறி அவர் மூளைக்குள் பாய்ந்திருக்கிறது.
அது ஏற்கனவே பாபர் மசூதியை இடித்து பம்பாயிலும், ஹைதராபத்திலும், உத்திரப்பிரதேசத்திலும் பெரும் கலவரங்களை ஏற்படுத்தி விட்டது. தாகம் அடங்க அடங்க இரத்தம் குடித்தும் போதாமல் குஜராத்தில் கோரத்தாண்டவமாடியது. மேடையில் தன்னைபோல ஒரு நாதுராம் எங்கிருந்து வரவேண்டும் என பொய்யாய் ஆசைப்பட்டதோ அப்படி ஒரு மூஸ்லீம் சகோதரியின் வயிற்றை கிழித்து அங்கிருந்த சின்னஞ்சிறு சிசுவின் இரத்தம் குடித்தது. இன்னும் அடங்காமல் இருக்கிறது. இந்தியாவின் இரத்தம் முழுவதும் குடித்தாலும் அதற்கு அடங்காது. இந்து ராஜ்ஜியம் அமைந்தால் போதும்.
8
காந்தி புன்னகைக்கிறார்- கடைசி அத்தியாயம்
பல்லாயிரம் ஆண்டுகளை உட்கொண்ட இந்த மண்ணின் வாசம் சகிப்புத்தன்மையே என்பது எல்லோருக்கும் தெரியும். அதைவிட மனித சமுதாயத்தின் மீது காட்டிய மரியாதை என்பதும் தெரியும்.ஆரியர்களை, ஹூணர்களை, மங்கோலியர்களை, முகம்மதியர்களை, ஆங்கிலேயர்களை என வெளியில் இருந்து வந்தவர்களை எல்லாம் இந்த மண்ணில் வாழ வைத்திருக்கிறோம். பல மொழி, பல கலாச்சாரம், பல மதங்களின் சங்கமமாக இந்தியா தன்னை உருவமைத்துக் கொண்டதுதான் இதன் வரலாறு என்பது எல்லோருக்கும் தெரியும்.
இங்கு போர்கள் நடந்திருக்கின்றன. புதிய மதங்கள் தோன்றியிருக்கின்றன. வாளின் முனையில் மதங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பேரரசுகள் தோன்றியிருக்கின்றன. சூழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. பெரும் தியாகங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியா உருக்குலைந்து போகவில்லை. உரம் பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். உலகுக்கு வழிகாட்டும் அளவுக்கு சோதனைகளை சந்தித்த, அனுபவங்களை பெற்ற நாடாக நாம் இருக்கிறோம்.
கடந்தகாலத்தை அழிப்பதல்ல எதிர்காலம். கடந்த காலத்திற்காக பழி வாங்குவதல்ல எதிர்காலம். கடந்த காலத்தை சுவீகரிப்பதுதான் எதிர்காலம். கடந்த காலத்தின் தோளில் நின்று பயணம் செய்வதுதான் எதிர்காலம். இதை புரிந்து கொண்டவர்தான் மகாத்மா காந்தி.
ஆனால் கோட்சேக்களுக்கு, அவனது ஆவியாய் அலைபவர்களுக்கு ஒரே வெறிதான். எல்லாவற்றையும் நிர்மூலமாக்குவது. பெரும் அழிவுகளின் மீது நின்று தனது ஆதிக்கத்தை நிறுவுவது. அதற்கு எந்த விலையையும் கொடுக்கவும், எந்த அறநெறியையும் மீறவும் அவர்கள் தயாராய் இருப்பார்கள். குழப்பங்களையும், கலவரங்களையும் விதைக்காமல் தங்கள் கனவு நிறைவேறாது என்று அவர்களுக்குத் தெரியும்.
அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும், கோட்சேவை பெரும் தியாகிகளாக காட்டிய அந்த மண்ணில்தான் கடந்த பத்து பனிரெண்டு வருடங்களில் பெரும் கலவரங்கள் நடந்திருக்கின்றன. எத்தனை படுகொலைகள், எத்தனை கற்பழிப்புகள், எத்தனை கருகிப் போன வீதிகள்…அந்த அழிவுகளின் மீதுதான் அவர்களால் தங்கள் அரசை நிறுவ முடிகிறது. “இது காந்தியின் தேசம் அல்ல…கோட்சேவின் பூமி” என்று குஜராத்தில் உரக்கச் சொல்ல முடிகிறது. மகாத்மாவுக்கு இது மிகவும் வேதனைக்குரிய செய்தியாகத்தான் இருக்கும்.
ஆனால் அவருக்கு நம்பிக்கை அளிக்கிற காட்சிகளும் இன்னொரு புறம் இருக்கத்தான் செய்கிறது.
பிரிவினையின் போதும், விடுதலையை ஒட்டிய நாட்களின் போதும் இந்திய தேசத்தின் இரண்டு பக்கங்களில் மிகப் பெரிய மனிதக் கலவரங்கள் நடந்தன .ஒருபுறம் பஞ்சாபிலும், அதையொட்டிய மேற்குப் பகுதிகளிலும். இன்னொரு புறம் கல்கத்தாவின் நவகாளியில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் இறந்ததாக சொல்லப்படுகிறது. அங்குதான் முன்னொரு நாள் மகாத்மா அமைதிக்கான யாத்திரை செய்திருந்தார்.
ஆனால் இப்போதும் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அடிக்கடி வகுப்புக் கலவரங்களும் அமைதியின்மையும் நிலவிக் கொண்டே இருக்கிறது. குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் மனித வரலாற்றின் இரத்த வெறி கொண்ட பக்கங்கள் தொடர்ந்து எழுதப்படுகின்றன.
கல்கத்தாவோ அமைதியாக இருக்கிறது. ஹூக்ளி நதி நடுங்காமல் ஓடிக் கொண்டு இருக்கிறது. மதத்தையும், மத நம்பிக்கையயும் மனிதர்களையும், வரலாற்றையும் மிகச் சரியாக புரிந்து கொண்ட ஒரு அரசு அங்கு அமைந்திருக்கிறது. இதுதான் காலம் இந்தியாவுக்கும் மகாத்மாவுக்கும் சொல்லும் செய்தி.
களைப்பாய் இருக்கிறதோ
களைப்பாய் இல்லையோ-
நாங்கள்வேகம் குறைந்து போக மாட்டோம்.
அப்படியே நின்றும் விட மாட்டோம்.
உனது போராட்டத்தில்
நீ தனியே விடப்படவில்லை-
நாங்கள்தொடர்ந்து செல்வோம்
வேகம் குறைந்துவிட மாட்டோம்.
காந்தி அந்த பொக்கை வாய் திறந்து நம்பிக்கையோடு புன்னகைக்கிறார்.
(முற்றும்)
கருத்துகள்
கருத்துரையிடுக