என்றென்றும் மார்க்ஸ்
கட்டுரைகள்
Backஎன்றென்றும் மார்க்ஸ் (கட்டுரை)
மாதவராஜ்
Contents
என்றென்றும் மார்க்ஸ்
1. மார்க்ஸின் பயணம் (என்றென்றும் மார்க்ஸ் - 1ம் அத்தியாயம்)
2. காலத்தின் முதல் கேள்வி
3. காலத்தின் இரண்டாம் கேள்வி
4. காலத்தின் மூன்றாம் கேள்வி
5. காலத்தின் நான்காம் கேள்வி
6. காலமாகி மார்க்ஸ் இருக்கிறார்
7. காலத்தின் பயணம்
Free Tamil Ebooks - எங்களைப் பற்றி
1
என்றென்றும் மார்க்ஸ்
உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்…வாருங்கள்.
மாதவராஜ்
மின்னஞ்சல்: jothi.mraj@gmail.com
வலைப்பக்கம்: http://mathavaraj.blogspot.in/
அட்டைப் படம் – ப்ரியமுடன் வசந்த் – vasanth1717@gmail.com
அட்டைப்பட மூலம் – http://dnja.deviantart.com/art/Karl-Marx-153702781
மின்னூலாக்கம் – ப்ரியா – priyacst@gmail.com
1
மார்க்ஸின் பயணம் (என்றென்றும் மார்க்ஸ் - 1ம் அத்தியாயம்)
“அவரது பெயர் காலங்கள் தோறும் நிலைத்து நிற்கும்” லண்டன் ஹைகேட்டில்,1883, மார்ச் 17ம் தேதி காரல் மார்க்ஸின் சிதையருகே நின்று ஏங்கெல்ஸ் ஆற்றிய உரையின் கடைசி வாக்கியம் இது. அப்போது அங்கிருந்தவர்கள் பனிரெண்டு மனிதர்கள். அந்த உண்மை நூற்றுப் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான குரல்களாக திரும்பிவந்து அதே லண்டனில் எதிரொலித்திருக்கிறது.
கி.பி இரண்டாயிரத்தை உலகம் முழுவதும் ஆரவாரத்தோடு எதிர்நோக்கியிருந்த வேளையில் இது நிகழ்ந்தது. லண்டனில் பிரபல பி.பி.சி நிறுவனம் கடந்த ஆயிரம் ஆண்டுகளின் சிந்தனையாளர் யார் என உலகம் முழுவதும் தனது வாசக ரசிகர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தியது. பி.பி.சி நிறுவனத்தாரின் பிரத்யேக தேர்வாளர்களான எட்வர்ட் டி போனாவும், ரோஜர் ஸ்குருட்டனும் தங்களது அறிஞர்களாக வில்லியம்ஸ் ஜேம்ஸையும், தாமஸ் அக்கியுனாஸையும் அறிவித்திருந்தார்கள் தேர்வாளர்களின் முதல் பத்து சிந்தனையாளர்கள் கொண்ட பட்டியலில்கூட மார்க்ஸுக்கு இடம் இல்லை! ஆனால் உலகம் முழுவதும் இருந்த பி.பி.சியின் வாசகரசிக மக்கள் அவர்கள் எல்லோரையும் நிராகரித்து இருந்தார்கள். அதிக எண்ணிக்கையில் மார்க்ஸ் முதலில் இருந்தார்.
உலக முதலாளிகளுக்கும், கருத்துக் கணிப்பு நடத்திய பி.பி.சிக்குமே பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மார்க்ஸின் தத்துவத்தை- வாழ்க்கைப் பயணத்தின் அர்த்தத்தை- உலகின் கண்களுக்கு வரைந்து காட்ட முயன்ற சோவியத் சிதைக்கப்பட்டு, லெனினின் அசைவற்ற சிலை கிரேனில் பெயர்க்கப்பட்ட காட்சியை நாக்கை நீட்டி வேட்டை நாயாய் பார்த்து மகிழ்ந்தவர்கள் அவர்கள். ‘மார்க்ஸியம் செத்துப் போய்விட்டது’ என்று பைத்தியக்காரர்களைப் போல மனிதர்கள் வசிக்காத அண்டார்டிகா பனிப்பாறைகளைக்கூட விடாமல் உலகின் மூலை முடுக்கெல்லாம் கிறுக்கி வைத்திருந்தவர்கள் அவர்கள். பெர்லின் சுவர் இடிக்கப் பட்டபோது, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோஷலிச முகாம்கள் சரிந்தபோது வானத்துக்கும் பூமிக்குமாக குதித்த வர்கள் அவர் கள். பிடுங்கி எறிந்துவிட்டோம் என்று வெறி கொண்டு நர்த்தனம் ஆடியவர்கள் அவர்கள். மனிதர்களின் உணர்வுகளிலிருந்தும் சிந்தனை களிலிருந்தும் மார்க்ஸை அகற்றுவதற்கு சகல சாகசங்களையும் சதாநேரமும் செய்து கொண்டு இருப்பவர்கள். அவர்களுக்கு அதிர்ச்சி யாகத்தான் இருந்திருக்கும்.
மார்க்ஸிற்கு அடுத்தபடியாக இந்த கருத்துக் கணிப்பில் இரண்டாவதாக இருந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின். அணுவிற்குள், அதன் மகாசக்தியை கண்டு பிடித்தவர். இருபதாம் நூற்றண்டின் தொழில் நுட்ப புரட்சிக்கு அவரது கண்டுபிடிப்புகள் ஆதாரமாகவும், ஆதர்சனமாகவும் இருந்திருக்கின்றன.
அவருக்கு அடுத்தபடியாக இருந்தவர் சர்.ஐசக் நியுட்டன். புவி ஈர்ப்பு விசையையும், ‘எந்த வினைக்கும் அதற்கு நேர் ஈடான, எதிரான வினை ஏற்படும்’ என்னும் பிரசத்தி பெற்ற உண்மையான ‘நியுட்டன் விதிகளை’ உருவாக்கியவர். சமூக விஞ்ஞானத்திற்கும், பொருளாதாரக் கோட்பாடுகளுக்கும் கூட இந்த விதிகள் அடிப்படையாய் அமைந்தன.
“நீ எதற்கும் லாயக்கில்லை. பூனைகளை சுடவும், எலிகளை பிடிக்கவுமே பொருத்தமானவன்” என்று அவரது தந்தையால் சபிக்கப்பட்ட டார்வின் நான்காவது இடத்தில் இருந்தார். ஒருசெல் உயிர்களின் தோற்றம், அவைகளின் பரிணாமம் என மனித இன வளர்ச்சியை ஆராய்ந்து சொன்னவர். அதுவரை இருந்த அத்தனை மூடநம்பிக்கைகளுக்கும் எதிரான உண்மையாய் அவரது கண்டுபிடிப்பு இருந்தது.
தாமஸ் அக்கியுனாஸ், மேக்ஸ்வெல், டெகரட்டஸ், ஸ்டிபன் ஹாக்கிங், இம்மானுவேல் கான்ட் என்று நீண்ட இந்த 10 பேர் வரிசையில் கடைசியாக நீட்சே இருந்தார். மனிதனுக்குள்ளே புதைந்து கிடக்கும் பேராற்றல் குறித்து நீட்சே அற்புதமான இலக்கியச் செறிவோடு எழுதினார். இவரை முதல் எக்ஸிஸ் டென்ஸியலிஸ்ட்டாக சொல்கிறார்கள். இந்த உலகம் தாண்டிய ஒரு உலகம் இருப்பதாக சொல்லப் பட்டதை அவர் மறுத்தார்.
ஒன்றாவது, இரண்டாவது என்று இவர்களை நாற்காலிகள் போட்டு உட்கார வைப்பது என்பது அவர்களை களங்கப்படுத்துவதும், மனித குலத்துக்கு அவர்கள் ஆற்றிய பங்கினை கேலி செய்வதும் ஆகிவிடும். பி.பி.சியின் நோக்கம் என்னவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். மனிதகுல வரலாற்றில் இவர்களுக்கென்று பிரத்யேகமான பங்கும் இடமும் உண்டு.
இவர்கள் எல்லோருமே அற்புதமான மேதைகள். ஆழமான அறிவும், பெரும் ஆற்றலும் கொண்ட வர்கள். இவர்கள் அனைவரிடமிருந்தும் மார்க்ஸ் வேறுபடுகிற இடம்தான், அவருக்கான தனி இடமாக இருக்கிறது. அத்தனை தத்துவங்களும், கண்டுபிடிப்புகளும், கலைகளும் மனித சமூகத்திற்கே பலனளிக்கக் கூடியவையாக இருந்த போதிலும் அதிகார அமைப்பும், ஆளும் வர்க்கமும் அவைகளை இன்றுவரை தங்களுக்கு சாதகமானவைகளாக அனுபவித்துக்கொள்ள கொள்ள முடிந்திருக்கிறது.
மார்க்ஸின் தத்துவமும், ஆராய்ச்சியும் மட்டுமே அவர்களால் வெல்ல முடியாத சக்தியோடு விளங்குகிறது. அது அடக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப் பட்டவர்களுக்கும் மட்டுமே கருவியாக ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
அண்டாகா கசம், அபுகா குகும் உச்சரிக்க, மாயா ஜாலமாய் பாறைக்கதவு திறந்துவிடும்… பொன்னுலகத்தை அடைந்துவிடலாம்…..என கற்பனையிலும், குருட்டு நம்பிக்கையிலும் கிடந்தவர்கள் மத்தியில் பாறைக்கதவை திறந்து மூடுகிற அடிமை மக்களின் விலங்குகளை உடைத்தெறிய சிந்தித்தவர் மார்க்ஸ்.
தன் நிழலையும், வேர்களையும் நிலப்பரப்பு முழுவதும் நீட்டி உலகையே விழுங்கிவிட இராட்சசனாய் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு பிசாசு மரத்தை சாய்த்து புது வெளிச்சம் எங்கும் பாய்ந்திட வாழ்நாளெல்லாம் சிந்தித்தவர். சபிக்கப் பட்ட காலம் வேதாளமாகி அலைகிறது. வேதாளம் கேள்விகளாய் புதிர்களை போட்டது. மார்க்ஸ் ஒவ்வொன்றுக்கும் சரியான பதில் சொல்லி அடுத்த அடி எடுத்து வைத்தார்.
வாழ்வின் துயரங்களையும், புதிர்களையும் அனுபவம் செறிந்த தத்துவஞான தளத்தில் நின்றே அறிவு வென்று வருகிறது. சவால்களை சந்திக்கிற திடசித்தம் வேண்டியிருக்கிறது. மார்க்ஸின் பயணம் இதுதான். காலத்தை சுமந்து சென்ற பயணம். மனிதகுல விடுதலைக்கான மகத்தான காரியம்.
2
காலத்தின் முதல் கேள்வி
என்றென்றும் மார்க்ஸ்
இரண்டாம் அத்தியாயம்
“உன்னிடம் ஆழமான அறிவுச் செல்வம் இருக்கிறது. கலைகளின் நுட்பம் உன்னைத் தழுவிக்கொண்டு இருக்கிறது. விடாப்பிடியாக முன்னேறி விடும் வைராக்கியம் இருக்கிறது. உனது தந்தை, நீ ஒரு கௌரவமான கனவானாக மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார். உனது தாய், நீ நிறைய சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். உன் அழகு தேவதை ஜென்னி உனக்காக காத்துக் கொண்டு இருக்கிறாள். வாய்ப்புகள் உன் வாசலில் நிறைந்து இருக்கின்றன. நீ என்னவாகப் போகிறாய்? இந்த உன் பதிலில்தான் எதிர்காலமே அடங்கி யிருக்கிறது. நீ சரியான பதில் சொல்லாவிட்டால் நான் மீண்டும் உன்னிடம் வர மாட்டேன். நீயே காணாமல் போய் விடுவாய்.”
காலமாகிய வேதாளம் தனது முதல் கேள்வியை மார்க்ஸிடம் கேட்கிறது. மார்க்ஸ் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார். மாபெரும் தத்துவ மேதை ஹெகல் அப்போதுதான் இறந்திருந்தார்.
காலம் ரொம்பவும் களைத்து, கவலை தோய்ந்து இருந்தது. நெருப்பிலும், நீரிலும் வெந்து தணிந்திருந்த காலம், உயிர்களின் தோற்றத்தில்தான் முதன்முதலாக இந்த பூமண்டலத்தில் மெல்ல அசைய ஆரம்பித்தது. அதன் கனவாயிருந்த மனிதன் உருப் பெருவதற்கு பல லட்சம் ஆண்டுகள் காத்திருந்தது. ஆதிமனிதனின் குகைகளுக்குள் கேட்ட இதயத் துடிப்புகளோடு காலம் நகரத் தொடங்கியது. வானத்துப் பரப்பில், பசும்புல்வெளிகளில், அடர்ந்த கானகத்தில், நதிகளின் கரைகளில் ஒரு பறவையாய் காலம் நெளிந்து பறந்து திரிந்த பொழுதுகள் அவை. மனிதர்கள் தங்கள் வாழ்வுக்காக இயற்கையோடு, போராடிக் கொண்டிருந்தனர். அந்த சமூகத்தில் பெண்மக்களே தலைமை தாங்கினர். யாரும் யாருக்கும் அடிமையில்லை. நதிகளின் ஓட்டத்தில் நாகரீகம் அரும்பியது. உழைப்பின் அனுபவத்தில் அறிவு பரிணாமம் பெற்றது. கற்கள், வில்லும் அம்புமாயின. பின் உழவுக்கான கருவிகள் வந்தன. விலங்குகளைப் பழக்கி மேய்க்க தொடங்கினர். அந்தக் கால்நடைகள் இனக்குழுக்களின் சொத்துக்களாக மாறத் தொடங்கிய போதுதான், உற்பத்திக் கருவிகள் ஒரு சிலரிடம் குவிந்த போதுதான், ஆண், பெண் வேலைப்பிரிவினைகள் தோன்றிய போது தான் அந்த விருட்சம் இந்த பூமியில் முளைவிடத் துவங்கியது. மனிதர்களின் தலைக்கு மேலே பாடித் திரிந்த காலம் ஆந்தையாய் சபிக்கப்பட்டு அந்த விருட்சத்தால் பீடிக்கப்பட்டது.
இனக்குழுக்களின் தலைவர்கள் மன்னர்களாகவும், அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் ராஜ்ஜியங்களாகவும், சாம்ராஜ்ஜியங்களாகவும் எழுந்தன. ஆள்கிறவர்களாகவும், ஆளப்படுகிறவர்களாகவும் சமூகத்தில் பிரிவுகள் தோன்றின. பண்டங்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டன. உழைத்தவர்கள் சமூகத்தின் அடியாழத்தில் நசுங்கிக் கிடந்தனர். இந்த கட்டுமானங்களை உறுதியாக்குவதற்கு மதங்கள் உருவாக்கப்பட்டன. விளைநிலங்களாக மண் பதப்படுத்தப்பட்டு நிலவுடமைச் சமுதாயம் பரிணமித்த போது அந்த விருட்சம் மேலும் கிளைகளை விரித்து பரவியது. அடிமைகளின் வேர்வையை உறிஞ்சி அதன் வேர் ஆழத்துக்கும் சென்றது. பேராற்றல் கொண்ட மனிதர்கள் வயிற்றுக்காக படும் துன்பங்களில் இரவுகள் எல்லாம் கதறிய காலம் அந்த விருட்சத்தின் உச்சியில் வேதாளமாக உருச்சிதைவு அடைந்தது. தன்னை அந்த விருட்சத்தின் பிடியிலிருந்து மீட்க வரும் மானுடர்களைத் தேடி பல ஆயிரம் ஆண்டு கால முயற்சியில் தோற்று போயிருந்தது.
தீரத்துடன் புறப்பட்டவர்கள் வெட்ட வெட்ட தழைக்கும் அசுரத்தனத்தில் மருண்டு போனார்கள். 18ம் நூற் றாண்டில் இங்கிலாந்தில் தோன்றிய தொழிற்புரட்சி இயந்திரங்களை உற்பத்தி செய்து வாணிபத்தின் எல்லைகளை விரித்தபோது காலம், மனிதர்களிடம் சுதந்திர வேட்கை தகித்ததைப் பார்த்தது. வெறி கொண்ட விருட்சமோ மேலும் விஸ்வரூபமெடுத்து உலகையே விழுங்கத் தயாரானது. ஏழு கண்டங்களிலும் நிரம்பியிருந்த மனித சமூகம், ஐரோப்பாவில் புதுவெள்ளத்தின் வேகத்தோடும், குழப்பத்தோடும் இருந்தது.
சுதந்திரம், சகோதரத்துவம் பேசிய பிரெஞ்சுப் புரட்சியின் கருத்தோட்டங்கள் கனவுகளை விதைத்துக் கொண்டிருந்தன. முடியாட்சி நடைபெற்ற ஜெர்மனிக்குள் ரைன்லாந்து வழியாகத்தான் அவை நுழைந்தபடி இருந்தன.
மார்க்ஸ் அங்குதான் இருக்கிறார். வித்தியாசமான பள்ளிமாணவன் அவர். உருப்போடுதலும், செரிக்காமல் வாந்தி எடுக்கிற மாதிரி ஒப்பித்தலுமான பள்ளியின் தர்மச் சுவர்களை மார்க்ஸ் தாண்டி வெளியே பார்க்கிறார். தைரியம் மிகுந்த கற்பனையும், சுயேச்சையான அணுகுமுறையும் இயல்பாயிருந்தது. மதகுருவாகவும், இராணுவ வீரனாகவும் பொன்னுலகை அடைய ஆசைப்பட்ட மாணவர்களோடு மனம் ஒட்டவில்லை.
ஜென்னியின் தந்தை வெஸ்ட் ஃபாலனின் குரல் வழியாக ஷேக்ஸ்பியரும், ஹோமரும் அவர் முன் இறங்கி நடமாடினார்கள். பிரியமான தந்தை சந்தித்த அரசியல் வழக்குகளும், அரசாங்கம் மீது தந்தைக்குள் இருந்த மெல்லிய எதிர்ப்பு உணர்வும் மார்க்ஸின் நினைவுகளில் படிந்து கொண்டிருந்தன.
வேதாளத்தின் கேள்விக்கு மார்க்ஸ் நிதானமாக, உறுதியாக பதிலைச் சொல்கிறார். மனதில் இருந்ததை பள்ளிப் பிராயத்தில் திறந்து காட்டுகிறார். “ஒரு நபர் தனக்காக மட்டும் பாடுபட்டால், ஒரு வேளை பிரபலமான அறிவாளியாகலாம். மாபெரும் ஞானியாகலாம். அற்புதமான கவிஞராகலாம். ஆனால் குறைவற்ற, உண்மையான, மகத்தான மனிதனாக இருக்க முடியாது”
வேதனையில் ரீங்காரமிட்டு, அங்குமிங்கும் முட்டி மோதி தனக்குரிய இடத்தில் அடைந்த குளவியைப் போலிருந்தது காலம் இப்போது. தன் உருவத்தை மீட்டெடுக்கும் வழிகாண மீண்டும் மண்ணில் ஒருவன் வந்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டு விட்டது. மனிதர்களின் விடுதலைக்கான தருணம் அதுவாகவே இருக்கும். ஆனாலும் பாதை அறியப்படாமல் குழப்பமாகவே இருக்கிறது.
அதோ விருட்சம் தலை கைகளை எல்லாம் உலுப்பி பிசாசுத்தனமாக ஆடிக்கொண்டு இருக்கிறது. காலத்தை எப்போதும் தனதாக்கிக் கொள்ள வெறி கொண்டிருக்கிறது. காலத்தின் அடுத்த புதிரை மார்க்ஸ் அவிழ்த்தாக வேண்டும். அதற்கு இன்னும் தன்னை தெளிவாக்கிக் கொண்டாக வேண்டும். திடசித்தம் பெற்றாக வேண்டும்.
காதல் வயப்பட்டிருந்த மார்க்ஸ் தனது வாழ்வின் அர்த்தத்தை அத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. ஜென்னிக்கு தேடல் என்னும் கவிதை ஒன்றை எழுத ஆரம்பிக்கிறார்.
என்னைக் கட்டிய தளைகளை நொறுக்கி எழுந்தேன்
எங்கே செல்கிறாய்
எனக்கொரு உலகம் தேடி
இங்கே அகன்ற பசும்புல்வெளிகளும்
கீழே கடல்களும்மேலே விண்மீன்களும் இல்லையா?
உலகம் என்னிடமிருந்து தோன்ற வேண்டும்…
என் இரத்தத்தில் அது வேரூன்ற வேண்டும்…
என் ஆன்மாவின் மூச்சில் அது வசிக்க வேண்டும்…
நான் நெடுந்தூரம் அலைந்து சென்றேன்.
3
காலத்தின் இரண்டாம் கேள்வி
என்றென்றும் மார்க்ஸ் மூன்றாம் அத்தியாயம்
எண்ணற்ற தத்துவவாதிகள் இதற்கு முன்னர் வந்திருக்கிறார்கள். மனிதாபிமானமும், ஆழ்ந்த அறிவும் கொண்டிருந்தார்கள். மனிதர்கள் விடுதலை குறித்து அவர்களும் சிந்தித்தார்கள். யாராலும் இதைத்தாண்டி முன் செல்ல முடியவில்லை. நீ மட்டும் என்ன செய்துவிட முடியும்?
மார்க்ஸ் பெர்லினில் தனது பட்டப்படிப்பில் மூழ்கியிருந்தார். ஜென்னிக்கும் அவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. உறக்கமற்ற இரவுகளோடு நாட்கள் வந்தன. காதலின் தாகத்தினால் அல்ல. காலத்தின் கேள்வி அவரை அசைத்துக் கொண்டிருக்கிறது.
வேதாளம் இரவின் அமைதியில் சலனமற்று வெளியை பார்த்துக் கொண்டு இருக்கிறது. ஐரோப்பாவில் வான் நோக்கிய ஆலைகளின் குழாய்களின் வழியே மனிதர்களின் வேர்வை, கருகிய புகையாய் கரைகிறது. ஆப்பிரிக்கா இருண்டு கிடக்க வைரம் பாய்ந்த சுரங்கத் தொழிலாளிகளின் உடல்கள் மின்னிக் கொண்டு இருக்கின்றன. கண்களில் ஒளியில்லை. ரஷ்ய மன்னன் கால் கட்டைவிரலால் மக்களுக்கான சட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தான். இந்தியாவிலும், இன்னும் கிழக்கத்திய நாடுகளிலிருந்தும் செல்வங்களை அள்ளிக்கொண்டு கப்பல்கள் இங்கிலாந்தை நோக்கி சமுத்திரங்களில் பயணம் செய்து கொண்டிருந்தன. மாதா கோவிலின் மணியோசை காற்றுவெளியை தனது புனிதப் போர்வையால் மூடுகிறது.
எப்படி இருந்த மனிதர்கள் இவர்கள். விலங்குகளைச் சுற்றி நின்று வேட்டையாடி அதை சுற்றி உட்கார்ந்து சாப்பிட்டவர்கள். ஒளித்து வைக்கவோ, திருடவோ, பொறாமை கொள்ளவோ அன்று எதுவும் இல்லை. விலங்குகளின் பசியோடும், களங்கமற்ற நீரின் இதயத்தோடும் இருந்தார்கள். உலகமே அவர்களுக்கு உரியதாய் இருந்தது. எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு இந்த விஷவிருட்சம் நிற்கிறது. தன்னை நெருங்கவே முடியாமல் பல அரண்களை உருவாக்கி வைத்திருக்கிறது.
மார்க்ஸின் முன்னால் இப்போது பாதைகள் அங்குமிங்குமாய் குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. சுற்றிலும் நிலவிய கருத்துக்கள், சிந்தனையோட்டங்களில் எதோ ஊனம் இருப்பதை அவர் உணரத் தொடங்கியிருந்தார். பதில்களை தேடித்தேடி அறிவு அலைந்து கொண்டிருந்தது. தான் படித்த சட்டவியலோடு நிற்காமல் பண்டைக்கால வாழ்க்கை, நாடகம், கவிதை, லேஸ்ஸிங்கின் லவொகொவோன், வின்செல்மானின் கலைகளின் வரலாறு,ரேய்மாருஸின் மிருகங்களின் கலைஉணர்ச்சிகள், லுமெனின் ஜெர்மன் வரலாறு என எல்லாவற்றையும் படித்தார். உணர்ச்சியற்று அதிர்ந்து கொண்டிருந்த கடந்த காலத்திற்குள் யாத்ரீகனாய் அலைந்தார்
அரிஸ்டாட்டில், பிளேட்டோ, உன்னை நீ முதலில் அறிந்து கொள் என்ற சாக்ரட்டீஸ், எல்லாம் தற்செயல் நிகழ்வுகள் என்பதை நிராகரித்த டெமாக்ரட்டிஸ், ஏதென்ஸ் தோட்டத்திலிருந்து வெளியே வராத எபிகூரஸ், லுக்ரெத்யேசியஸ்,பேக்கன், காண்ட், ஹெகல் , பாயர்பாஹ் என தனக்கு முன்னால் சென்றவர்களின் பாதைகளில் எல்லாம் நுழைந்தார். தனிமனித வளர்ச்சி, சுதந்திரத்தை எல்லாம் காண்ட் தனது சிந்தனை உலகத்திலிருந்து நாடு கடத்தியிருந்தார்.
தத்துவ ஞானத்தில் சமரசமற்று இருந்த போதிலும் வெறும் கற்பனாவாதங்களில் மூழ்கியிருந்தார் ஃபிஹ்டே. பாயர்பாஹ் பொருள் முதல்வாதியாக இருந்த போதும் இயக்கவியல் அற்ற இயந்திரத்தனமான கோட்பாடுகளை முன்வைத்தார். ஹெகல் மட்டும் சற்று முன் சென்றிருப்பதாகப் பட்டது. ஒன்றின் விளைவில் இருந்து அதன் தொடர்ச்சியாக இன்னொன்று பிறக்கிற இயக்க வியல் பாதையில் அவர் எல்லோரையும் தாண்டி நின்றிருந்தார்.
இயக்கவியல் என்பது வற்றாத ஜீவநதியின் நீராய் ஓடிக்கொண்டே இருப்பது. கடலிலிருந்து நீர்த்திட்டுக்கள் மேகங்களாய் எழுவது. மழையெனப் பொழிவது. மலைகளிலிருந்து விழுந்து நதியாக பெருக்கெடுப்பது. மீண்டும் கடலை நோக்கி பயணம் செய்வது. ஒன்றுக்கொன்று தொடர்ச்சியான பயணத்தில் இந்த மண்ணில் ஏற்படுகின்ற மாற்றங்களும், புறநிகழ்வுகளும் ஏராளம். ஒவ்வொரு மாற்றத்திற்கும் காரண காரியங்கள் இருக்கின்றன. விளைவுகள் தோன்றுகின்றன. ஆராய்ந்து பார்க்கும் போது ஒரு காட்சிக்கு பின்னால் இருக்கிற உண்மைகள் அறிவின் கண்களுக்கு தெரிகின்றன. அடுத்த காட்சிக்கு முந்தைய விளைவுகளே காரணங்களாகின்றன. ஹெகலிடம் தர்க்கவியல் மூலம் தேடுகிற வெளிச்சமும் இருந்தது.
மதம் குறித்த ஹெகலின் பார்வையிலிருந்துதான் மார்க்ஸுக்கு அவரோடு முரண்பாடு ஆரம்பித்தது. மனித வாழ்க்கை மதத்தின் சுமையால் பூமிப்புழுதியில் அடிமையாகிக் கிடந்தது. இதனை எதிர்த்து எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் எபிகூரஸ் என்னும் கிரேக்கன் தலை நிமிர்ந்து சவால் விட்டு, சண்டை போட்டதை பார்த்தார். வானத்திலிருந்து மின்னல்கள் வெட்டவில்லை. கடவுளின் கதைகள் நசுக்கவில்லை. ஆனால் ஹெகலின் கைகளுக்குள் எபிகூரஸின் குரல்வளை நெறிபட்டுக் கொண்டிருப்பதை பார்த்தார். கடவுள் இருப்பதைப் பற்றிய நிரூபணங்களை ஹெகல் சொல்லிக் கொண்டிருந்தார். ‘வற்றாத ஜீவகங்கை சிவனின் தலையில் இருந்து பூமிக்கு வருகிற’ கருத்தே அவைகளில் ஒளிந்திருந்தது.
இயற்கை நன்கு அமைக்கப்பட்டிருப்பதால் கடவுள் இருக்கிறார் என்றார் ஹெகல். யதார்த்தத்திலிருந்து, கண்முன் இருக்கும் நிலைமைகளிலிருந்து விமர்சனம் செய்ய முடியாத கருத்து முதல்வாத நிலையிலிருந்துதான் இந்த பார்வை வந்திருந்தது. இதையே தலைகீழாக மாற்றி வேறோரு கோணத்திலிருந்து மார்க்ஸ் பார்த்தார். இயற்கை மோசமாக அமைக்க ப்பட்டிருப்பதால்தான் கடவுள் இருக்கிறார் என்று தர்க்கம் புரியும்போது அவருக்கு உண்மை புலப்பட்டது. அதுதான் மதத்தை இதயமற்றவர்களின் இதயமாகவும், உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும் அவரை பிரகடனம் செய்ய வைத்தது.
மார்க்ஸின் கூடவே வந்த ஹெகலின் சீடர்கள் புருனோ பாவரும், பாயர்பாஹும் மதத்தை விமர்சிக்க மட்டுமே செய்தனர். கடவுளை இகழ்ந் தனர். அதன் மூலம் கடவுளின் இருப்பும், மதத்தின் பிடியும் உறுதியாவதாகவே பட்டது மார்க்ஸுக்கு. அவர் மதத்தை முழுக்க நிராகரித்தார். புனிதப் போர்வையை தூக்கி எறிந்தார். ஹெகலால் வார்க்கப் பட்டிருந்த கருத்து முதல்வாத மலை அங்கே உயர்ந்து நின்று கொண்டிருந்தது. அதைத் தாண்டி பாதைகளில்லை என்று அடித்துச் சொல்லப்பட்டது. மாற்றங்களற்ற உலகின் சிகரங்களில் அவர்கள் இருந்தார்கள்.
மேலும் மேலும் சிகரங்களை எட்டிப் பிடிக்கிற துடிப்பும், இயல்பாகவே எதிலும் திருப்தியடையாத மனமும் கொண்ட மார்க்ஸ் எதிரே இருந்த மலையைத் தாண்டிச் செல்லாமல் பயணத்தைத் தொடர முடியாது என்பதை புரிந்து கொண்டார். முன்னால் சென்றவர்கள் பலர் அங்கு வீழ்ந்து கிடப்பதை மார்க்ஸ் பார்த்தார். அதுவரை அவரை அழைத்து வந்த ஹெகல், காண்ட் இப்போது தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த தத்துவப் போராட்டங்களோடு பயணப்பட்டுக் கொண்டிருந்த மார்க்ஸ் படிப்பை முடித்து நியு ரெய்னீஷ் ஜிட்டாங் என்னும் பத்திரிக்கையில் ஆசிரி யராக இப்போது இருக்கிறார். கருத்து முதல்வாதத்திற்குள் நின்று ஹெகலை தாண்டிச்செல்ல முடியாது என்பதை மார்க்ஸ் புரிந்து கொண்டார். கூர்மையான, ஒளி வீசும் இயக்கவியல் என்னும் வாளை வைத்துக் கொண்டு ஹெகல் அரூபங்களின் நிழல்களோடு யுத்தம் நடத்திக் கொண்டு இருப்பதை காணமுடிந்தது. பாயர்பாஹின் பொருள் முதல் வாதத்தையும் , ஹெகலின் இயக்கவியலையும் ஒன்றிணைத்தார். ஹெகலின் பிடி தளர்ந்தது. நதியின் கதைகள் கேட்கின்றன. காற்றின் புலம்பல்கள் கேட்கின்றன. நெருப்பின் தகிப்புகள் கேட்கின்றன. அதுவரை கேட்காததெல்லாம் இப்போது கேட்கின்றன. புதிர்கள் எல்லாம் இப்போது தெளிவாகின்றன. காலத்தின் ரேகையாக பாதை முன்னே நீள்கிறது.
தீர்க்கமான பதில் இப்போது மார்க்சிடமிருந்து வெளிப்பட்டது. “இது வரை வந்த தத்துவவாதிகள் அனைவரும் உலகை பலவழிகளில் விளக்கி விட்டார்கள்”. இப்போது செய்ய வேண்டியது உலகை மாற்றுவது. காலம் இப்படியொரு பதிலை தன் வாழ்நாளில் முதன்முதலாக கேட்கிறது. அந்தக் குரல் காலவெளியெங்கும் எதிரொலிக்கிறது. மலையைத் தாண்டி மார்க்ஸை காலம் கொண்டுவந்து சேர்த்தது. தொலைவில் பிசாசு மரம் கிடந்து ஆடிக்கொண்டிருந்தது. நெருப்பாகவும், வாளாகவும் வளர்ந்து வரும் மார்க்ஸிடம் காலம் நம்பிக்கை வைத்திருக்கிறது. இனி ராட்சச மரத்தை வீழ்த்துவதற்கு சர்வ வல்லமை படைத்த ஆயுதம் வேண்டும்.
4
காலத்தின் மூன்றாம் கேள்வி
என்றென்றும் மார்க்ஸ்- நான்காம் அத்தியாயம்
அது ஒன்றும் தானாக இங்கு வளரவில்லை. எல்லாம் இந்த மனிதர்கள் வினைகள்தான். இன்று பார். பெரும் இராட்சசனாய் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஸ்பார்ட்டகஸைப் போல எத்தனையோ வீரர்கள் மின்னலாய் வாளேந்தி இதை சாய்க்க வரத்தான் செய்தார்கள். ஆனால் வழிகள் தெரியாமல், சரியான ஆயுதங்கள் இல்லாமல் அபிமன்யூக்களாகிப் போனார்கள். அவர்களை தனது தடக்கைகளால் சிரச்சேதம் செய்து அந்த இரத்தத்தில் எனது உடலை குளிப்பாட்டியது அந்தப் பிசாசு. ஞானிகள் சிலர் வந்தார்கள். அவர்களுக்கு இந்த விருட்சமே போதி மரமாகிப் போனது. எந்த ஆயுதத்தைக் கொண்டு இந்த விஷ விருட்சத்தை சாய்க்க முடியும்?”
பெல்ஜியத்தின் தலை நகரான பிரெஸ்ஸல்ஸ் நகரில் இப்போது மிக முக்கியமான பணியில் மார்க்ஸ் ஈடுபட்டு இருக்கிறார். கூடவே அவரது இன்னொரு தலையும் மூளையுமான ஏங்கெல்ஸ் இருக்கிறார். மார்க்ஸின் பயணத்தில், ஹெகலின் முரண்பட்ட பிடிகளிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்டபோது ஏங்கெல்ஸ் அவரோடு தோளோடு தோளாக பாரிஸில் வந்து சேர்ந்தார். இனி மார்க்ஸின் கடைசிப் பயணம் வரை அவர் கூடவே இருப்பார். எந்த பிரக்ஞையும் இல்லாமல் அடுத்த அறையில் தூங்கி கொண்டிருக்கிற குழந்தைகள் ஜென்னி, லாரா, எட்கரை பார்க்க முடியாமல் காலம் முகத்தை பொத்திக் கொள்கிறது.
பிரெஸ்ஸல்ஸ் மார்க்ஸை துடிப்புடன் வைத்துக் கொண்டிருந்தது. கம்யூனிஸ்ட் கடிதப் போக்கு வரத்துக் குழு ஆரம்பித்து இதர நாடுகளின் புரட்சிகர சக்திகளோடு அவர் தொடர்பு வைத்திருக்கிறார். அழைப்பின் பேரில் லண்டனுக்குச் சென்று நியாயவாதிகள் சங்கத்தை கம்யூனிஸ்ட்கள் சங்கமாக புனரமைத்தார். பிரெஸ்ஸெல்ஸில் ஜனநாயக சங்கம் அமைத்தார். டியூஷி பிரெஸ்லர் ஜிட்டாங் என்ற பத்திரிக்கை ஆரம்பித்திருந்தார். இப்போது கம்யூனிஸ்ட்கள் சங்கத்திற்கு கொள்கை அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கிறார். காலத்தின் கேள்விக்கான பதில் அதில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மார்க்ஸின் பயணத்தில் மிக முக்கியமான தருணங்கள் இவை. இந்த ஏழெட்டு வருடங்களில் பிசாசு மரத்தின் கொடுங்காற்று மிகவும் சோதித்திருந்தது. அலைக்கழித்திருந்தது. ஜெர்மனியிலிருந்து பிரான்சுக்கும், அங்கிருந்து பெல்ஜியத்துக்கும் விரட்டப்பட்ட போது ஜென்னி காதல் மிகுந்த தன் ஒருவனை பின்தொடர்ந்தாள். உன்னத லட்சிய வேட்கை கொண்ட அம்மனிதனுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தாள். மார்க்ஸ் எந்தச் சிதைவும் இல்லாமல் உறுதியாக இருந்தார். ஒவ்வொரு குறுக்கீட்டையும் தாண்டும்போது புதிய ஒளி ஏற்பட்டிருந்தது. தீட்டப்பட்டுக்கொண்டே இருந்தார்.
ஜெர்மனியில் ரெய்னீஷ் ஜிட்டாங் பத்திரிக்கையில் ஆசிரியராய் மொசெய்ல் பகுதி திராட்சை விவசாயிகள் படும் துன்பங்களை ஆராய்ந்தபோது அவை யெல்லாம் தனிப்பட்ட மன்னராலோ, பிரபுக்களாலோ, அதிகாரிகளாலோ உருவானவையல்ல என்பதையும் அந்தக் காலத்து சமூக உறவுகளின் முரண்பாடுகளால் உருவானவை என்பதையும் புரிந்து கொண்டார். அந்தக் கொடுமைகளை வெளிப்படுத்தும்போது பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டது. அரசு யாருடைய நலனை பிரதிபலிக்கிறது என்பதை மார்க்ஸ் இனம் காண முடிந்தது. ஹெகலின் “அரசாங்கம் என்பது சகல மக்களின் சின்னம்.” என்பது எவ்வளவு மூடநம்பிக் கையானது என்பது தெளிவானது. அரசாங்கம் என்பது ஆளும் வர்க்கத்தின் கருவி என்றார் மார்க்ஸ். அரசியல் பொருளாதாரம் குறித்த பிரக்ஞை அவருக்குள் வளர்ந்து கொண்டிருந்தது. மார்க்ஸ் இப்போது பிசாசு மரத்தின் அடியில் நின்றிருந்தார்.
மான்செஸ்டரில் ஏங்கெல்ஸ் இருந்த போது கண்ட பிரிட்டன் தொழிலாளர்கள் நிலைமைகளும், சாசன இயக்கமும் நிறைய படிப்பினைகளை தந்திருந்தன. ஜெர்மானிய கைத்தொழிலாளிகளிடமிருந்தும், பாரிஸில் சந்தித்த சாதாரண தொழிலாளிகளிட மிருந்தும் சமூக மாற்றத்துக்கான அடிப்படையான விஷயத்தை மார்க்ஸ் தெரிந்து கொள்ள நேர்ந்தது. இயக்கவியல் மற்றும் வரலாற்று பொருள்முதல் வாதத்தின் மூலம் ஆராய்ந்த போது மார்க்சுக்கும், ஏங்கெல்சுக்கும் தாங்கள் எங்கே நின்றுகொண்டு இருக்கிறோம் என்பது தெரிந்தது. சோஷலிச சமுதாயமும், கம்யூனிச சமூகமும்தான் வரலாற்றின் அடுத்த அத்தியாயங்களாக இருக்க முடியும்.
இதை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. விளக்கினால் மட்டும் போதாது. நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பதே மார்க்ஸின் லட்சியமானது. காலத்தின் கேள்வி அதுதான். தானே உணர்கிற உண்மையைக் கூட ஒரு போதும் ஒரு பக்கத்தில் நின்று கொண்டோ, ஒரு கோணத்தில் மட்டும் பார்த்துக் கொண்டோ ஒப்புக் கொள்ள மாட்டார் மார்க்ஸ். அனைத்து கோணங்களிலும், அனைத்துப் பக்கங்களிலும் நின்று விமர்சனங்கள் மூலமாகவும், தர்க்கவியல் மூலமாகவும் தனக்குத் தானே தெளிவு படுத்திக் கொண்டால் மட்டுமே ஒப்புக்கொள்வார்.
மார்க்ஸ், ஏங்கெல்ஸிடமிருந்து சோஷலிச சிந்தனை தொடங்கவில்லை. வர்க்கங்களற்ற பொதுவுடமை சமுதாயத்தைப் பற்றி கனவு கண்ட பல அறிஞர்கள் இருந்தனர். ராபர்ட் ஓவன், சான்சிமோன், ஃபூரியே போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். பதினாறாம் நூற்றாண்டிலேயே தாமஸ்பொர் எழுதிய உடோபியாவில் கம்யூனிச சமூகம் குறித்து விளக்கப்பட்டிருந்தது. அதற்குமுன்னர் அப்போஸ்தலஸ் நீதிகளில் காணமுடியும். அவையெல்லாம் கற்பனாவாத சோஷலிசமாக மட்டுமே இருந்தன. சமூக உறவுகள் குறித்த ஆழமான சிந்தனை இல்லாமல் இருட்டில் தேடுவதாகவே இருந்தது.
கற்பனாவாதிகளின் சோஷலிசத்தில் ஆயுதங்கள் இல்லை. முதலாளிகளை அறிவுரைகளின் மூலம் மாற்றிவிடலாம் என்று கனவு கண்டார்கள். முதலாளிகளும் உடனடியாக சொத்துக்களை, தங்கள் உடமைகளை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுவார்கள் என்று அந்தரத்தில் மிதந்தார்கள். இந்தக் கருத்தோட்டத்தோடு இருந்த தனது பழைய நண்பர்களை விட்டு விலகி ஏங்கெல்ஸோடு சேர்ந்து தத்துவஞான வெளிச்சத்தில் வரலாற்றை மார்க்ஸ் படிக்கத் தொடங்கினார். இதுவரை நீண்டிருந்த வரலாறு வர்க்கப் போராட்ட நாட்களின் தொகுப்பாக இருப்பதையும், அரசியல் பொருளாதாரத்தால் எழுதப்பட்டிருப்பதையும் பார்த்தார்.
வர்க்கங்களும், வர்க்கப் போராட்டங்களும் இருப் பதை முதலாளித்துவ வர்க்க வரலாற்று ஆசிரியர்களான தியெர்ரி, மின்யே, கிஸோ, கூறியிருந்தார்கள். மாண்டெஸ்கியே, மக்கியவேலி, ரூஸோ ஆகியோரது சமூகத் தத்துவங்களையும் படித்தார். பண்டங்கள், பரிவர்த்தனை, மதிப்பு, தொழில், கூலி, உழைப்பு, உற்பத்தி, உற்பத்தி சக்திகளின் வழியாக சமுதாயம் கடந்து வந்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு மறைக்கப்பட்டிருந்தது.
முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தை ஆழமாக ஆராய்ந்தார். ஆடம்ஸ்மித், ரிக்கார்டோ, ஜேம்ஸ் மில்,ஸ்கார் பெக் இன்னும் பலரது நூல்களை ஆராய்ச்சி செய்தார். மக்கள் தொகை பெருக்கமே சமுதாய மாற்றங்களுக்கான ஆதாரமாக இருப்பதாக திசை திருப்பியிருந்தனர். புரட்சிகர ஜனநாயகவாதிகளும், சோஷ லிஸ்டுகளுமான லூயி பிளாங், பியேர் லெரு, ஹெய்னே, புருதோன், பக்கூனன் ஆகியோருடன் பழக்கம் கொண்டிருந்தார்.
புருதோன் “முதலாளித்துவம் பற்றிய பொருளாதார விதிகள் என்பவை நிரந்தரமானவை. மாற்ற முடியா தவை” என்று அடித்துச் சொன்னார். மார்க்ஸ் “பொருளாதார விதிகள் என்பவை வரலாற்று ரீதியாக உருவானவை. மனிதனின் தேவைகளின் பொருட்டே புதிய கண்டுபிடிப்புகளும் உற்பத்தி சக்திகளும் தோன்றி வளருகின்றன. இந்த வளர்ச்சி யில் சமுதாயம் மாறுகிறது. அதையொட்டி உற்பத்தி சக்திகளும் மாறுகின்றன. அப்போது அவை சம்பந்தப்பட்ட தத்துவங்களும் மாறுகின்றன.” என்று வரலாற்றிலிருந்து உண்மைகளை எடுத்துக் கொண்டு வந்தார்.
இந்த தொடர் ஓட்டத்தில் மார்க்சுக்கு இப்போது தன்னைச் சுற்றிலும் இந்த அமைப்பை எதிர்த்து கலகங்கள் செய்து வருவது பாட்டாளி வர்க்கமாகவே இருப்பதை காண முடிகிறது. உறிஞ்சப்பட்ட சக்தியும், மூச்சுத் திணறுகிற வாழ்க்கையும் பாட்டாளிவர்க்கத்திற்கு தகர்த்து எறிகிற வேகத்தை ஏற்படுத்துகிறது. முட்டையின் ஓட்டை உடைத்து வெளியே வருகிற குஞ்சுப் பறவையின் புரட்சித் துடிப்பாக தெரிகிறது.
மார்க்ஸ் தீர்மானகரமாக கம்யூனிஸ்ட்கள் சங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை எழுதி முடிக்கிறார். கம்யூனிஸ்ட் அறிக்கையாக, காலத்தின் கேள்விக்கான பதிலாக வெளிவருகிறது அவரிடமிருந்து. “முதலாளித்துவ வர்க்கம் தன்னை அழித்து ஒழிக்கப்போகும் ஆயுதங்களை வார்த்தெடுப்பதோடு, அந்த ஆயுதங்களை பிரயோகிப்பதற்கு உரிய பாட்டாளிகளாகிய நவீனத் தொழிலாளி வர்க்கத்தையும் தோற்றுவிக்கிறது. அவர்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. உலகத் தொழிலாளர்கள் ஒன்று சேருவார்கள். இந்த உலகை அவர்களால் பொன்னுலகமாக மாற்ற முடியும்” தூரத்து இடிமுழக்கம் கேட்டதால் பிசாசு மரத்தின் வேர்கள் லேசாய் நடுங்க ஆரம்பித்தன.
5
காலத்தின் நான்காம் கேள்வி
என்றென்றும் மார்க்ஸ்-ஐந்தாம் அத்தியாயம்
‘முடிந்துவிட்டது எல்லாம். எந்த பொன்னுலகமும் இங்கு வரவில்லை. ஐரோப்பா முழுவதும் எழுந்த மக்கள் கிளர்ச்சிகள் கணநேரத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டு விட்டன. ஆயுதங்கள் வீழ்த்தப்பட்டு விட்டன. மலைப்பாம்பு போல பிசாசுமரம் எல்லாவற்றையும் விழுங்கி நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்தாயா? மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. ஆழத்தில் தனது வேர்களை செலுத்தி கொடிய ஜந்து மேலும் மேலுமே வளர்ந்து கொண்டிருக்கிறது. அதன் வேர்கள் இப்போது எல்லாப் பக்கங்களிலும் நீள்கிறது. அதற்கு அழிவே இல்லை போலிருக்கிறது. இனியும் என்ன நம்பிக்கை இருக்கிறது?”
அவநம்பிக்கையோடு வேதாளம் கேட்கிறது. அதற்கு தாங்கவே முடியவில்லை.
கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியான நேரமும், ஐரோப்பாவே தீப்பிடித்துக் கொண்ட நேரமும் ஏறத்தாழ ஒன்றாகவே இருந்தது. பிரான்சில் லூயி பிலிப் மன்னனை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்தார்கள். அந்த வெப்பம் போலந்து, ஹங்கேரி, ஸ்பெயின், பெல்ஜியம்,ஆஸ்திரியா,ஜெர்மனி என்று சுற்றிலும் பரவியது. காலம் கனவுகள் கண்டது. மார்க்ஸும், ஏங்கெல்ஸும் மிகுந்த உற்சாகத்துடன் பங்காற்றினர். பிரான்சுக்கும், அங்கிருந்து ஜெர்மனிக்கும் சென்றனர். தங்கள் சொந்த மண்ணில் புரட்சியின் வருகையை காண விரும்பினர். மீண்டும் நியுரெய்னீஷ் ஜிட்டாங் பத்திரிக்கையை கொண்டு வந்தனர். தொழிலாளர்களுக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதினர். ஆனால் நிலப்பிரபுத்துவத்திடமிருந்து முதலாளித்துவம் முழு அதிகாரத்தையும் தன் கையில் எடுத்துக் கொண்டதில்தான் எல்லாம் முடிந்தது.
எதிர்க்கலகங்களை உருவாக்கி முதலாளித்துவம் பாட்டாளிவர்க்கத்திடம் எந்த அதிகாரமும் போகாமல் பார்த்துக்கொண்டது. குட்டி பூர்ஷ்வாக்களின் பங்கு இதில் முக்கியமானது. வீராவேசத்துடன் போராடிய மக்கள் ஒடுக்கப்பட்டனர். மார்க்ஸும், ஏங்கெஸும் சொந்த நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. லண்டனுக்கு சென்று குடியேறினார்கள். அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. பல ஆயிரம் ஆண்டுகளாய் கொழுத்து வளர்ந்த பிசாசு மரத்தை ஒருநாளில் வீழ்த்திட முடியாது என்பதை உணர்ந்தே இருந்தனர். அதற்கு அயராத வலிமை வேண்டும். ஈடு இணயற்ற நம்பிக்கை வேண்டும். அதுதான் இப்போது முக்கியமானது.
தங்களுக்கு முன் தோன்றிய சமூகசிந்தனைகளில் சிறந்தனவற்றை யெல்லாம் தங்களுக்குள் சுவீகரித்துக் கொண்டனர். தனது வாழ்க்கையின் மிக உயர்ந்த பணிக்கு மார்க்ஸ் தயாராகிவிட்டார். தனது வாழ்க்கை பயணத்தின் அர்த்தம் இதுவாகத்தான் இருக்கும் என நம்பினார். தத்துவத்தில் வறுமையற்று வளமாக வாழ்ந்த அவரும், அவரது மொத்த குடும்பமுமே பொருளாதார வறுமையில் அலைக்கழிந்தது. மார்க்ஸின் குடும்பத்துக்காக மான்செஸ்டரில் எழுத்தர் வேலைக்குச் சென்றார் ஏங்கெல்ஸ். நியுயார்க் டெய்லி டிரிப்யூனுக்கு கட்டுரைகள் எழுதி அதில் எதோ சொற்ப வருமானத்தையும் மார்க்ஸ் பெற்றார். சர்வதேச கம்யூனிஸ்டுகள் சங்கத்திற்கு வழிகாட்டுவதிலும் அதன் கோட்பாடுகளை வரையறை செய்வதிலும் ஈடுபட வேண்டியிருந்தது. அயர் லாந்து விடுதலைப் போராட்டத்திலும், அமெரிக்காவில் நடந்த அடிமைகளின் விடுதலைப் போராட்டத்திலும் தனது கவனங்களைத் திருப்ப வேண்டியிருந்தது
பாரிஸ் கம்யூன் ஏற்பட்ட போது, அதை நடத்திய சர்வதேச கம்யூனிஸ்ட்களின் சங்கத் தலைவர்களுக்கு ஆலோசனைகள் தந்தார். உலகின் முதல் பாட்டாளி வர்க்க அதிகாரத்தை தன் கண்களால் பார்த்து விட்டார். அந்த சந்தோஷமும் 72 நாட்களுக்குத்தான் இருந்தது. முதலாளித்துவம் வெறி கொண்டு அதை முறியடித்ததையும், பாட்டாளி வர்க்கம் இரத்தக் கறைகளோடு வெட்டி வீழ்த்தப்பட்டதையும் காண நேர்ந்தது.
ஒரே ஒரு மகன் எட்கரையும், இரண்டு பெண் குழந்தைகளையும் சரியான சிகிச்சை இல்லாமல் நோய்களுக்கு ஒவ்வொன்றாக பறி கொடுத்துவிட்டு வெறித்து உட்கார்ந்து விடுவார். எத்தனையோ சோகங்களின் போதும் தாங்கிக்கொண்ட ஜென்னியின் மலர்ந்த முகம் மௌனமாக தவித்து இழந்து போவதை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. குழந்தைகள் ஓடி விளையாடி நினைவுகளை நிரப்பி வைத்திருந்த வீட்டில், அவர்களின் நடமாட்டம் இல்லாமல் மனிதர் என்ன செய்துவிட முடியும்.
மார்க்ஸ் வீட்டில் அந்த மேஜையின் மீது உட்கார்ந்து எழுதுவதும், பிரிட்டீஷ் மியூசியத்தின் நூலகத்தில் உட்கார்ந்து படிப்பதுமாக வருடக்கணக்கில் இருந்தார். முப்பத்து மூன்று வருடங்கள்! சொந்த வாழ்க்கையும், தன் கனவு மைந்தர்களான தொழிலாளர்களும் கண்முன்னே சித்திரவதை செய்யப்படுவதையும் பார்த்துக் கொண்டே தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தார். காலம் ஒரு போதும் நம்பிக்கை இழக்கக் கூடாது. அதற்கான பதிலில் மனித குலத்தின் விடுதலை இருக்கிறது. பிசாசு மரத்தின் அடியாழத்துக்கும் காலங்களின் புலன்கள் வழியாக சென்று ஆணி வேரை ஆராய்ந்தாக வேண்டும். விரக்தியில் கிடந்த தன் படைக்கு சஞ்சீவி பர்வதத்தை அங்கிருந்துதான் எடுத்து வர வேண்டியிருந்தது.
மார்க்ஸின் பிரதானமான பணி சோஷலிசத்தைப் பற்றி விவரித்தது அல்ல. மூலதனத்தைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அம்பலப்படுத்தியதுதான். உயிரோடு இருக்கும் போது மூன்று தொகுதிகளில் அதன் முதல் தொகுதி மட்டுமே வெளியானது. அவர் சோஷலிச உலகில் வாழ்ந்தவர் அல்ல. முதலாளித்துவஉலகின் ஆரம்பக்கட்டத்தில் அதனை அனுபவித்தவர். முதலாளித்துவம் எப்படியெல்லாம் கொடுமையானதாய் இருக்கும் என்று அறிய முடிந்திருந்தது. வரலாற்றையும் விஞ்ஞானமாக்கியதால் அவரால் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது.
அடிமைச்சமுதாயம், நிலவுடமைச் சமுதாயம், முதலாளித்துவச் சமுதாயம் என ஒவ்வொரு காலத்திலும் பரிணாமம் பெற்ற தனியுடமை என்னும் வெறி பிடித்த மரத்தின் கதை, கடவுளின் ஜென்மம் போல ஒரு புதிராகவே பாதுகாக்கப்பட்டு வந்திருந்தது. அதன் அருவருப்பான, அழுகிப்போன முகத்தை உலகின் முகத்துக்கு தோலுரித்துக் காட்டினார் மார்க்ஸ். முதலாளித்துவ உலகினைத் தவிர வரலாற்றின் எந்தவொரு காலக்கட்டத்திலும் பாரம்பரிய மரபுகள் இப்படி சிதைக்கப்பட்டதில்லை…. முழுப் பிரதேசத்தின் வளங்களும் இப்படி சுரண்டப்பட்டதில்லை… மக்களை இப்படி அதிகாரமற்றவர்களாய் எறிந்ததில்லை… என்பதை உயிரின் வேதனையோடும், ஆற்றல் மிக்க எழுத்துக்களோடும் வெளிப்படுத்துகிறார். முதலாளித்துவ அமைப்பு முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டியது என்பதை அறிவு பூர்வமாக உணரவைக்கிறார். அந்த நாள் ஒன்றும் தானாக வந்து விடாது எனவும் மார்க்ஸ் உணர்த்துகிறார். சமுதாயத்தில் இந்த பிரக்ஞையை உறுதிப்படுத்த, புரட்சிக்கான தருணத்தை எடுத்துச் சொல்ல, பாட்டாளி வர்க்கத்துக்கு அதன் சக்தியை உணர்த்த கம்யூனிஸ்டுகள் கிரியா ஊக்கிகளாய் செயல்பட வேண்டும் என்பதையும் எழுதி வைக்கிறார். மார்க்ஸின் உயிர்மூச்சும் அதுவாகவே இருந்தது.
எழுதிக்கொண்டே இருக்கிறார். மூத்த மகள் ஜென்னி இறந்து போகிறாள். வாழ்வின் வேராக இருந்த பிரியமான தோழி ஜென்னி இறந்து போகிறாள். எல்லாச் சோகங்களுக்கும் மத்தியில் எழுதி கொண்டிருக்கிறார். 1883 மார்ச் 14ம் தேதி அவரது மூச்சு நின்றுவிட்டது. எப்போதும் எழுதுகிற அந்த நாற்காலியில் மார்க்ஸ் எழுதாமல் உட்கார்ந்து இருந்தார். காலம் தனது கேள்விக்கான பதிலை அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
ஏங்கெல்ஸ் அந்த அறைக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார். மூலதனத்தின் இறுதிப் பகுதிக்கு மார்க்ஸ் எழுதிய குறிப்புகள் படபடத்துக் கொண்டிருக்கின்றன காற்றில்.
6
காலமாகி மார்க்ஸ் இருக்கிறார்
என்றென்றும் மார்க்ஸ்- ஆறாவது அத்தியாயம்
காற்று வெளியெங்கும் அவரது மூச்சு கலந்து விட்டிருந்தது. எழுதி எழுதி மேற்செல்லும் விதியின் கைகளாகி விட்டிருந்தார் மார்க்ஸ். அவர் இறக்கவில்லை. காலமாகி இருக்கிறார்.
ஐரோப்பிய அதிகார வர்க்கங்களினால் மிகவும் வெறுக்கப்பட்ட, தூற்றப்பட்ட மனிதராக மட்டுமே மார்க்ஸ் ஒருகாலத்தில் இருந்தார். காலம் இப்போது பார்க்கிறபோது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மனிதர்கள் அவரது சிந்தனையின் வெப்பத்தை பெற்றிருந்தார்கள். சைபீரிய நிலக்கரிச் சுரங்கங்களிலும், அமெரிக்க ஐரோப்பிய தொழிற்சாலைகளிலும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஆசிய நாடுகளிலும் அவர்கள் பரவி இருந்தார்கள். மார்க்சியம் என்னும் அக்கினிக்குஞ்சை பிசாசுமரப் பொந்திடை வைத்து இருந்தார் மார்க்ஸ்.
மார்க்ஸ் காலமானபோது பள்ளி மாணவனாக இருந்த லெனின் என்னும் மனிதர் 1817ல் மார்க்ஸிடம் காலம் கேட்ட கடைசி கேள்விக்கு பதிலைச் சொன்னார். மாற்ற முடியும் என மார்க்ஸ் காட்டிய பாதையில் சென்றார். சோவியத் மண்ணிலிருந்து பிசாசு மரத்தை பாட்டாளி வர்க்கம் போர் முழக்கத்தோடு அகற்றி எறிந்தது. உலகையே குலுக்கியது. சோஷலிசம் என்னும் புதிய நந்தவனம் மலர்ந்தது. நசுக்கப்பட்ட உலக மக்களின் கனவு பூமியானது. காலம் அங்கு பறவையாகி மீண்டும் பாடல்களை பாடியது. அந்த மண்ணின் கனிகளிலிருந்து விதைகளை கொண்டு போய் உலகமெல்லாம் தூவியது. சீனம், ஐரோப்பிய நாடுகள், கொரியா, கியூபா, வியட்நாம் என நாடுகளிலும், பிரதேசங்களிலும் சோஷலிசம் அரும்பத் தொடங்கியது.
அதுவும் ரொம்ப காலத்திற்கு நீடிக்கவில்லை. உலகநிலம் முழுவதும் சுற்றிப் படர்ந்திருந்த பிசாசு மரத்தின் வேர்கள் கண்ணுக்குத் தெரியாமல் மீண்டும் சோவியத்துக்குள் ஊடுருவிக் கொண்டது. விஷக்காற்று மனிதர்களை வீழ்த்தியது. பாட்டாளி வர்க்கம் கவனிக்கத் தவறிய இடங்களில் மண்ணுக்கு மேலே விறுவிறுவென வளர்ந்து விட்டது. பூமியின் மொத்த நிலப்பரப்பிலிருந்தும் முற்றிலுமாக பிசாசுமரம் வேரோடு பிடுங்கி எறியப்படாத வரை சாகாது. அதன் உயிர் இருக்கும் என்று மார்க்ஸ் தெளிவாகச் சொல்லியிருந்தார். மார்க்ஸ் தன் பயணத்தில் அறிந்து சொன்னவை எல்லாம் இன்று அப்படியே துல்லியமாக நடந்து வருவதை காலம் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.
கம்யூனிஸ்ட் அறிக்கையை மார்க்ஸ் எழுதும் போது அவருக்கு 29 வயதுதான். அப்போது பன்னாட்டுக் கம்பெனிகள் இல்லை. சுதந்திரச் சந்தை இல்லை. உற்பத்தியும், அதன் முறைகளும் முழுக்க முழுக்க பிரதேசங்களையும்,தேசங்களையும் சார்ந்ததாக இருந்தபோதே அவை உலகம் சார்ந்ததாக மாறும் என்பதை மார்க்ஸும், ஏங்கெல்ஸும் சொல்லியிருந்தனர். ‘பூமி உருண்டையின் நிலப்பரப்பு முழுவதும் முதலாளித்துவத்தின் நிழல் படிந்த உலகம்’ என்று இன்றைய உலகமயமாக்கலை தெளிவாக கணித்திருந்தனர். இன்று காலம் அந்த எழுத்துக்களில் இருந்த காட்சிகளை அப்படியே நேரில் பார்க்கிறது.
மூலதனத்தில் மார்க்ஸ் ஆராய்ந்துள்ள அந்த பிசாசு மரத்தின் ஆணிவேர்கள் இந்த மண்ணில் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ளத் துணியும் அத்தனை காரியங்களும் அப்படியே காட்சிகளாய் விரிந்து கொண்டே இருக்கின்றன.
“மனிதர்கள் சுயதொழில்கள் செய்து பிழைத்த காலம் போய் அடுத்தவர்களுக்காக வேலை பார்க்கும் உழைப்பாளர்களாக மாறுவார்கள். தொழிலாளி வர்க்கம் ஒன்று பிரத்யேகமாக உருவாகும்” என்றார். இன்று நகரங்களில் அடுக்கடுக்காக உயர்ந்துள்ள கட்டிடங்களில், தொழில் நகரங்களில் உலகம் பூராவும் உருவாகிக் கொண்டே இருக்கிறது அந்த வர்க்கம். இவர்களின் கடந்த காலத்தில் இவர்களின் முன்னோர்கள் கொஞ்சம் நிலம் வைத்திருந்த விவசாயிகளாகவோ, எதோ சிறு தொழில் செய்து கொண்டிருந்தவராகவோ இருப்பார்கள். 1820களில் 75 சதவீத அமெரிக்கர்கள் சுயதொழில்கள் செய்து கொண்டிருந்தனர். 1940களில் இது 21.6 சதவீதமாக குறைந்தது. இன்றைக்கு 10 சதவீதத்திற்கும் குறைந்து போயிருக்கிறது. ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் ஊதியத்திற்கு வேலை பார்க்கிறவர்களின் எண்ணிக்கை 1980களில் 120 மில்லியன்களாக இருந்தது. இன்று 200 மில்லியன்களை தாண்டியிருக்கிறது.
பெரிய கம்பெனிகள் சிறிய கம்பெனிகளை விழுங்கி மூலதனத்தின் பிடிகளை இறுக்கும் என்று மார்க்ஸ் சொல்லியிருந்தார். இன்று உலகம் பூராவும் பார்க்கிற காட்சிகள் இவைதான். திருப்பூர் பனியன், சிவகாசி தீப்பெட்டி என்று எங்கும் இதே நிலைமைதான். சிறுகம்பெனிகளை பெரிய கம்பெனிகள் விழுங்குகின்றன. பெரிய கம்பெனிகளை பன்னாட்டுக் கம்பெனிகள் விழுங்குகின்றன. காளிமார்க், மாப்பிள்ளை விநாயகரிலிருந்து ஒரு பெரிய பட்டியலையே கடந்த பத்து வருடங்களில் காணாமல் போனவைகளுக்காகத் தயார் செய்ய முடியும். இப்படி செல்வம் சில இடங்களிலேயே குவிக்கப்படுவதால் வறுமைதான் எங்கும் சூழும் என்கிறார். இன்று மக்கள் தொகை பெருக்கத்தின் விகிதத்தைக் காட்டிலும் வறுமையில் உழல்கிறவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு இருக்கிறது. நகரங்களின் ரோட்டோரங்களில் வாழ்க்கை இவர்களை தூக்கி எறிந்திருக்கிறது. பிசாசிடமிருந்து கிளம்பிய விஷக்காற்று வீடுகளுக்குள் புகுந்து குடும்ப உறவுகளையும் பிய்த்துப் போடுகிறது. மனிதன் எல்லா மதிப்புகளையும் இழந்து வெறும் பொருளாக மாறுகிறான். உழைத்து உற்பத்தி செய்த பொருளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாமல் அந்நியமாகிப் போகிறான். முடிவில் தனக்குத் தானே அந்நியமாகிப் போகிறான். மார்ஸின் ஒவ்வொரு வரியும் இதோ வாழ்க்கையாகி இருக்கிறது. காலம் வேதனையோடு கைகளால் தலையைத் தாங்கிக்கொண்டு பார்க்கிறது.
லாபம்தான் மூலதனத்தின் இரத்த ஓட்டமே. பிசாசு மரத்தின் வேர்களில் இந்த தாகம்தான் தகித்து கொண்டிருக்கிறது. இந்த லாபவிகித வீழ்ச்சியடைந்தால் முதலாளித்துவத்திற்கு மூச்சுத்தணறல் ஏற்பட்டுவிடும். மார்க்ஸ் “முதலாளித்துவத்தால் லாபத்தின் வீழ்ச்சியை தடுக்க முடியாது. கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாகும்” என்கிறார். முதலாளித்துவம் எத்தனையோ ஜகஜாலங்களை எல்லாம் செய்து பார்க்கிறது. ஆனால் தனது நெருக்கடிகளிலிருந்து மீளவே முடியாமல் தவிக்கிறது என்பதுதான் உண்மை.
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால், அதாவது இயந்திரங்கள் மூலமாக, பொருட்களை குறைந்த விலைக்கு தயாரித்துச் சந்தையிலும் குறைந்த விலைக்கு விற்கிறது. ‘இயந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் மனித உழைப்பின் நேரம் குறைக்கப்படுவதற்கு பதிலாக மேலும் அதிகரிக்கும்’ என்கிறார். இன்று ‘எட்டுமணி நேர வேலை, எட்டுமணி நேர ஓய்வு, எட்டுமணி நேர தூக்கம்’ என்பதெல்லாம் பழைய காலமாகிவிட்டது. கம்யூட்டர்களை வைத்ததற்குப் பிறகு எல்லா அலுவலகங்களிலும் வேலை நேரம் கூடிக்கொண்டே இருக்கிறது. முதலாளித்துவம் அந்த இயந்திரங்களை ஒரு கணம் கூட ஓய்வெடுக்க விடாமல் வேலை வாங்கிக் கொண்டே இருக்கிறது. இயந்திரங்களினால் ஏற்கனவே ஆட்குறைப்பு அமல்படுத்தி, இருக்கிறவர்களின் உழைப்பையும் உறிஞ்சுகிற பிசாசுத்தனம் இது. இன்று பல தொழிலாளிகளுக்கு சூரியன் உதிப்பதும் தெரியாது. சூரியன் மறைவதும் தெரியாது. சோர்ந்து போன மனிதர்களின் முதுகு வலியாக மூலதனமே உட்கார்ந்திருக்கிறது.
“புதிய தொழில் நுட்பங்களால் ஒரு குறிப்பிட்ட தொழில் ஒரு சமயம் லாபங்களை அள்ளிக் குவிக்கும். உடனே அங்கு கடுமையான போட்டிகள் ஏற்படும். அப்போது அந்தத் தொழில் கடுமையான லாபவீழ்ச்சியிலும், நஷ்டத்திலும் நசுங்கும்.” இதுவும் மார்க்ஸ் சுட்டிக் காட்டியதுதான். கடந்த இரண்டு வருடங்களில் கம்ப்யூட்டரின் விலை பாதிக்கும் கீழே குறைந்து போயிருக்கிறது. உலகச்சந்தை என்கிற புதிய சுதந்திர வாணிபம் முதலாளித்துவத்தால் முன் வைக்கப்படுகிறது. குறைந்த கூலிக்கு தொழிலாளர்களை ஏழை நாடுகளில் வைத்துக் கொள்கிறது. புதிய சந்தைகளுக்குள் நுழைகிறது. அது முதலாளித்துவ நாடுகளுக்குள் கடுமையான போட்டியை ஏற்படுத்துகிறது. யூரோ நாணயம், யென் ஆகியவை இன்று டாலருக்கு எதிரான போட்டிகளே. அவைகள் மேலும் முதலாளித்துவத்திற்கு நெருக்கடிகளை உண்டு பண்ணுகின்றன.
மூலதனம் இப்போது பெருமளவில், ஏற்கனவே இருந்த கம்பெனிகள் எடுத்துக்கொள்வதிலும், பங்குச்சந்தை எதிர்பார்ப்புகளிலும் முதலீடு செய்யப்படுகிறது. புதிய தொழில்களில் செய்யப்படுவதில்லை. இதன் மூலம் மாயத் தோற்றங்களை வேண்டுமானால் ஏற்படுத்த முடியுமே தவிர லாபத்தை தொடர்ந்து உறுதி செய்ய முடியாது. உழைக்கும் சக்திகளால் உற்பத்தி செய்யப்படுகிற தொழில்கள்தான் சமூக விளைவுகளை ஏற்படுத்த முடியும். பங்குச்சந்தை எதை இங்கு உற்பத்தி செய்கிறது. பித்தலாட்டத்தை, மோசடியை, ஜேப்படியைத் தவிர வேறொன்றுமில்லை.
“முதலாளித்துவம் உழைக்கும் மக்களின் சலுகைகளையும், உரிமைகளையும் மிகக் காட்டுமிராண்டித்தனமாக பறிப்பதால் லாபத்தின் விகிதம் அதிகரிக்க முயற்சிக்கும். ஆனால் அதுவும் நடைபெறாது” என்கிறார் மார்க்ஸ். தொழிலாளிகளின் ஊதியங்கள் குறைக்கப்படுவதால் முதலாளிகளின் லாபத்தின் விகிதம் அதிகரிக்கப்படலாம். தொழிலாளர்களுக்கு சந்தையில் பொருட்கள் வாங்கும் சக்தி குறைந்து போவதும் தவிர்க்க இயலாமல் நிகழுகிறது. அதனால் முதலாளித்துவம் உற்பத்தி செய்த பொருட்கள் சந்தையில் விற்காமல் தேங்கும். இது லாபத்தின் விகிதத்தை கடுமையாக பாதிக்கவே செய்கிறது. ஜப்பானின் பொற்காலம் இப்போது தலைகீழாகி விட்டது. தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இப்போது நகரங்களில் எதோ பல்பொடி விற்கிற மாதிரி ஹீரோ ஹோண்டோ, பஜாஜ் வாகனங்கள் பூஜ்ய சதவீத வட்டிக்கு விற்கப்படுகின்றன. கடந்த காலங்களில் ஜப்பான் கார் ஒன்று 83000 யென்கள் லாபம் சம்பாதித்தது. இப்போது 15000 யென் சம்பாதிப்பதே பெரும்பாடாக இருக்கிறது.
முதலாளித்துவம் தனது லாபத்தை தக்க வைப்பதற்கு செய்யும் அத்தனை முயற்சிகளிலும் கடுமையாக பாதிக்கப்படுவது தொழிலாளிவர்க்கமே. ஜனநாயகத்திற்கு அங்கு இடமில்லாமல் போகிறது. நீதியின் தராசுகள் முதலாளிகள் பக்கமே நிற்கின்றன.
இவைகளுக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் கிளர்ந்தெழும் என்பதை மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். தென் கொரியா, தென் ஆப்பிரிக்கா, அர்ஜெண்டினா, இத்தாலி, பிரான்சு, ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா, பிரேசில். நிகாரகுவா , இன்னும் எத்தனையோ நாடுகளில் கொதித்து எழுந்த ஆவேசமான போராட்டங்கள் புரட்சி ஓங்குக என்று அலைகளாய் எழுந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு தேசத்திலும் மார்க்ஸின் சிந்தனை அந்த செந்நிறக்கொடிகளாய் பறந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த அற்புதக் காட்சிகளை காலம் மட்டுமே பார்க்கிறது. எந்த தொலைக்காட்சி சேனல்களும் காண்பிக்காது. அவை வரலாற்றிற்கு முடிவு கட்டிக் கொண்டு சேவை செய்கின்றன.’ இது வரலாற்றின் முடிவு” என்பவை சோவியத் சிதைந்த போது வெளிப்பட்ட வார்த்தைகள். மார்க்ஸ் ‘வர்க்கங்களிடையே இருக்கும் முரண்பாடுதான் வரலாற்றை நகர்த்துகின்ற சக்தியாக இருக்கிறது’ என்கிறார். அதைக் கிண்டல் செய்யவே அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் அப்படி சொன்னார்கள். அதாவது வர்க்கப் போராட்டங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது என்கிறார்கள் அவர்கள்.
மார்க்ஸியம் முன்வைத்த கோட்பாடுகளும், கண்ணெதிரே நிகழ்கிற காட்சிகளும் பொய் என்று அவர்களால் நிருபிக்க முடியாமல் இன்றுவரை தோற்றுப் போகின்றனர். முதலாளித்துவம் தன்னை ஒரு பொன்னுலகமாய் சித்தரிக்க முயன்று தோற்று போய்க் கொண்டே இருக்கிறது. தேசங்களில் வர்க்கப் போராட்டங்கள் நிகழாமல் இல்லை. முதலாளித்துவ உலகத்திற்குள் முரண்பாடுகள் வெடிக்காமல் இல்லை. அழிவின் சித்திரத்தை மார்க்ஸ் அப்படியே தீட்டியிருக்கிறார். மூலதனத்தின் சாபமே அடங்கவே அடங்காத அதன் அகோரப்பசிதான். நீர், நிலம், காற்று என சகலத்தையும் உறிஞ்சுகிறது. சொட்டு விடாமல் குடிக்க வெறி கொள்கிறது. இங்குதான் அதன் அழிவு ஆரம்பிக்கிறது. தனக்கான ஆதாரங்களையே, தன்னை உற்பத்தி செய்த மனித சக்திகளையே அது நொறுக்க ஆரம்பிக்கிறது.
இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடையப் போவது பொன்னுலகம் என்று பாட்டாளிவர்க்கம் அப்போது உதறி எழுந்திருக்கிற கணம் நிச்சயம் வரும். பிசாசு மரம் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும். வாழ்வின் மூச்சுக்காக திமிறி, சக்தியனைத்தையும் திரட்டி, ஓங்கார சத்தத்தோடு, நாளங்களின் அடி நாதத்திலிருந்து அப்போது ஒரு காட்சி விரியும்.
காலமும், மார்க்ஸும் காத்திருக்கிறார்கள்.
7
காலத்தின் பயணம்
(என்றென்றும் மார்க்ஸ்- கடைசி அத்தியாயம்)
ஜெர்மனியின் மொசெய்ல் நதிக்கரையில் அமைந்துள்ள டிரியர் நகரத்தில் வசதியான நடுத்தரக் குடும்பத்தில் வழக்கறிஞரின் மகனாக பிறந்த மார்க்ஸின் பேர் இன்று உலகம் பூராவும் உச்சரிக்கப்படுகிறது.
பெர்லினிலிருந்து, பாரிஸிலிருந்து, பிரஸ்ஸல்ஸ்லிருந்து வெளியேற்றப்பட்டு தேசங்களின் கதவுகள் அடைக்கப்பட, அவமானங்களால் அலைக்கழிக்கப்பட்ட மனிதர்தான் உலகத்தின் வெளிச்சத்திற்கான விளக்கை ஏற்றி வைத்திருக்கிறார். அடுத்த அறையில் அன்பிற்குரிய தனது எட்கர் இறந்து போயிருக்க சவப்பெட்டிக்குக்குக் கூட வழியில்லாமல் கைகளால் தலையைத் தாங்கி உட்கார்ந்திருந்த தந்தைதான் முதலாளித்துவத்தின் சவப்பெட்டியை தயாரித்து வைத்திருக்கிறார். தந்தைவழிச் சொத்துக்களை ஜெர்மனில் புரட்சி நடத்தவும், `புதிய ரெயினிஷ் ஜிட்டங்” பத்திரிக்கை நடத்தவும் செலவழித்துவிட்டு குழந்தைகளுக்கும், ஜென்னிக்கும் அன்பை மட்டுமே கொடுக்க முடிந்த அவரால்தான் பாட்டாளி வர்க்கத்துக்கு ஒரு பொன்னுலகை அறிவிக்க முடிந்திருக்கிறது.
மார்க்ஸ் சோதனைச்சாலை விஞ்ஞானி அல்லர். சமூக விஞ்ஞானி. அவர் பொருளாதார நிபுணர் அல்லர். அரசியல் பொருளாதாரத்தின் பிதாமகன். வெறும் தத்துவவாதி அல்லர். நடைமுறையோடு இணைந்த தத்துவத்தை சிருஷ்டித்தவர்.
மார்க்ஸ் கானல் நீரைத் தேடி அலையவில்லை. இரத்தமும் சதையுமான உண்மைகளிலிருந்து வாழ்வுக்கான நம்பிக்கையை தேடினார். மூலதனம் உலகமயமாக்கப்படும்போது உழைப்பு சக்திகளும் உலகமயமாக்கப்படும். போராட்டங்களும் உலகமயமாக்கப்படும். அதுதான் இன்று உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 1848ல் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் சேர்ந்து வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஆரம்பத்தில் ஐரோப்பாவை உலுக்கிக் கொண்டிருந்த பூதம் இப்போது உலகையே அசைத்துக் கொண்டிருக்கிறது.
19வது நூற்றாண்டு மார்க்ஸியத்தையும், பாரிஸ் கம்யூனையும் தந்தது. 20 வது நூற்றாண்டு அக்டோபர் புரட்சியையும், சீனப்புரட்சியையும், எண்ணற்ற விடுதலைக்கான போராட்டங்களையும் தந்தது. 21ம் நூற்றாண்டு நிறைய தரும். 73 நாட்களே நீடித்த பாரீஸ் கம்யூன் தோற்றது. 73 ஆண்டுகள் கடந்த அக்டோபர் புரட்சி சிதைந்தது. ஆனாலும் மீண்டும் மீண்டும் போராட்டங்களும், இயக்கங்களும் நீடித்துக் கொண்டு இருக்கின்றன. இதற்கு ஒரே காரணம்தான் உண்டு. முதலாளித்துவ அமைப்புக்கு மாற்று சோஷலிச அமைப்பைத் தவிர வேறு இல்லை. இதுதான் வரலாற்று பொருள்முதல் வாதமும், இயக்கவியலும் இணைந்த மார்க்சீயப் பாதை காட்டுகிற நம்பிக்கை.
புராணக்கதையில் கம்சனுக்கு தெரிந்ததைப் போலவே, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் தன் முடிவு யாரால் என்பது தெரிந்தே இருக்கிறது. எல்லாவிதமான சதிகளையும் செய்து அது பாட்டாளி வர்க்கத்தை நசுக்க முயற்சிக்கிறது. பாட்டாளி வர்க்கம் மீண்டும் மீண்டுமென மாபெரும் சக்தியாக எழுந்தே தீரும். முதலாளித்துவத்தை வீழ்த்தி புது உலகை உருவாக்கியே தீரும்.
மார்க்சீயம் ஒன்றும் ஆருடம் இல்லை. வரலாற்றிலிருந்தும், மனித வாழ்க்கையிலிருந்தும் திரட்டப்பெற்ற சத்தியம். இலட்சியத்தை நோக்கி, சந்தோஷங்களை நோக்கி, மக்களை நகர்த்தி செல்லும் பாதை. இழந்து போன தன் சுய உருவத்தை மனிதன் பெறுவதற்கான நம்பிக்கை. எல்லா சோதனைகளுக்கும், மாற்றங்களுக்கும் தன்னை உட்படுத்திக்கொண்டு மேலும் மேலும் அது வளர்ந்து கொண்டே இருக்கும்.
மார்க்ஸை ஆயிரம் ஆண்டுகளின் சிந்தனையாளராக தேர்ந்தெடுத்த மக்கள் தெரிவித்த கருத்துக்கள் மிகத் தெளிவாகவே இருக்கின்றன. நார்வேயைச் சேர்ந்த டேக்தொரெசன் “மூலதனத்தின் குணாம்சங்களையும், நடவடிக்கைகளளையும் மிக ஆழமாக மார்க்ஸ் ஆராய்ந்து வெளிப்படுத்தி இருக்கிறார். நாம் இன்று வாழ்கிற உலகத்தை அவரால் அன்றே அறிந்திருக்க முடிந்திருக்கிறது” என்று சொல்கிறார். இன்று வாழ்கிற உலகத்தைப் பற்றி மட்டுமல்ல, நம் சந்ததியினர் வாழப் போகும் பொன்னுலகத்தையும் அறிந்தவர் மார்க்ஸ்.
அவரிடமிருந்து வற்றாத நதிகள் அன்பாகவும், கருணையாகவும் பிறந்து உலகத்து மூலை முடுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கின்றன. வெயிலுக்கும், வெண்பனிக்கும் அஞ்சாத மலைகள் எழும்பி புரட்சியின் கம்பீரமாய் நிற்கின்றன. நம்பிக்கையின் சூரியன்கள் உதித்துக் கொண்டிருக்கின்றன.
இப்போது மார்க்ஸை நெஞ்சில் ஏந்திக்கொண்டு காலம் நம்பிக்கையோடு தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
((முற்றும்))
கருத்துகள்
கருத்துரையிடுக