மாணவ மஹாராஜா
சுட்டி கதைகள்
Backமாணவ மஹாராஜா
என். சொக்கன்
உள்ளடக்கம்
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
1
ஒரு ஊரில் ஒரு ராஜா.
அவர் ஒரு நல்ல ராஜா. மக்களுக்கு நல்லது செய்வார். கொடுமைப்படுத்தமாட்டார். அதிக
வரி கேட்டுத் தொல்லை செய்யமாட்டார். அவர்களுடைய பிரச்னைகளைக் கேட்டு உடனே சரி
செய்வார்.
இதனால், மக்களுக்கு ராஜாவை மிகவும் பிடித்துவிட்டது. அவர் எங்கே சென்றாலும்
வரவேற்றுப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.
ராஜாவுக்கு ஒரு ராணி. அவர் பெரிய அழகி, நல்ல புத்திசாலி. ஆட்சிப் பிரச்னைகளை ராஜா
அவ்வப்போது ராணியுடன் பேசுவார். இருவரும் சேர்ந்து நல்ல தீர்மானங்களை எடுப்பார்கள்.
இவர்களுக்கு ஒரு மகன். நான்கைந்து வயதான செல்லப் பிள்ளை. அரண்மனையில்
எல்லாரும் அவனைக் கொஞ்சி மகிழ்வார்கள்.
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையன்று, ராஜா ஊர் சுற்றிப் பார்க்கச் செல்வார்.
தன்னுடைய மக்களைச் சந்தித்துக் குறை கேட்பார். அவர்களுக்கு வேண்டியதைச் செய்து
தருவார்.
அன்று இரவு, அவர் மிகவும் களைப்போடு அரண்மனைக்குத் திரும்புவார். ஆனால், அவர்
உள்ளம் நிம்மதியாக இருக்கும். மகனுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு மகிழ்ச்சியாக
உறங்கச் செல்வார். மறுநாள், பழைய சுறுசுறுப்புடன் எழுந்து ஆட்சிப் பணிகளைக் கவனிப்பார்.
2
ஒருநாள் ராஜா நகர்வலம் சென்றிருந்தபோது, இரண்டு பேர் அவரை அணுகினார்கள்.
வணக்கம் சொன்னார்கள்.
இருவரும் போர் வீரர்களைப்போல் இருந்தார்கள். கையில் வாள் தாங்கியிருந்தார்கள்.
‘நீங்கள் யார்?’ என்று அவர்களிடம் கேட்டார் ராஜா.
‘அரசே, நாங்கள் இந்தப் பகுதியைக் காவல் காக்கும் வீரர்கள்’ என்று பதில் வந்தது.
‘நல்லது. உங்களைப்போன்ற வீரர்களால்தான் நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக
உறங்குகிறார்கள்’ என்றார் அரசர். தன் கழுத்திலிருந்த இரண்டு மாலைகளைக் கழற்றி
அவர்களுக்குத் தந்தார்.
‘நன்றி அரசே’ என்று அவர்கள் வணங்கி மாலையை வாங்கிக்கொண்டார்கள். ‘உங்களிடம்
ஒரு பிரச்னையைச் சொல்ல வந்தோம்!’
‘என் படையில் பிரச்னையா?’ என்று அதிர்ந்தார் அரசர், ‘உடனே சொல்லுங்கள், சரி
செய்துவிடலாம்!’
’அரசே, எங்கள் ஊர் நாட்டின் இன்னொரு பகுதியில் இருக்கிறது, நாங்கள் அங்கிருந்து இங்கே
வந்து வேலை பார்க்கிறோம்’ என்றான் முதல் வீரன்.
‘இதனால், வருடத்துக்கு ஓரிருமுறைகூட எங்கள் பெற்றோர், மனைவி, குழந்தைகளைப்
பார்க்க இயலுவதில்லை!’ என்று இரண்டாவது வீரன் தொடர்ந்தான். ‘என்னையே
உதாரணமாக எடுத்துக்கொண்டால் நான் என் மகனைப் பார்த்துப் பல மாதங்கள் ஆகின்றன.
அவனும் என்னைப் பார்க்காமல் ஏங்கிப்போயிருப்பான்.’
’காவல் பணியில் உள்ளவர்கள் அடிக்கடி விடுமுறை எடுக்க இயலாது. ஆகவே, எங்களில்
பலர் குடும்பத்தினரைப் பிரிந்து வாடுகிறோம்.’
மன்னர் அவர்களைச் சற்றே குழப்பத்துடன் பார்த்து, ‘உங்களுக்கு என்ன வேண்டும்? ஏன்
இப்படிச் சுற்றிவளைக்கிறீர்கள்?’ என்றார்.
அந்தப் போர் வீரர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். பிறகு, ‘அரசே, காவல்
படையினர் வேலை செய்கிற இடத்திலேயே தங்களுடைய குடும்பத்தினரையும்
வரவழைத்துக்கொள்ளலாம் என்று அறிவித்து, அவர்களுக்குக் குடியிருப்புகளுக்கு ஏற்பாடு
செய்து தந்தால் நன்றாக இருக்கும், நாங்கள் மன நிறைவோடு இன்னும் சிறப்பாகப்
பணியாற்றுவோம்.’
‘சுத்த முட்டாள்தனம்’ என்றார் அரசர்.
அவர் இப்படிச் சொன்னதும், இரண்டு போர் வீரர்களும் அதிர்ந்தார்கள். அவரிடம் இதுபோல்
கேட்டதற்காகத் தங்களுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்று நடுங்கினார்கள்.
அவர்களைக் கோபமாகப் பார்த்துவிட்டு அரசர் தொடர்ந்து பேசினார், ‘கடமையில் கவனமாக
இருக்கிற ஒருவருக்கு இதுபோன்ற எண்ணங்களே வரக்கூடாது. நான் போருக்குச் சென்றால்
என் வீட்டைப்பற்றி நினைக்கவேமாட்டேன், வெற்றி ஒன்றே என் குறிக்கோளாக இருக்கும்.
நீங்களும் அப்படிதான் இருக்கவேண்டும்.’
‘ஆனால்…’
‘எந்த ஆனாலுக்கும் இங்கே இடம் இல்லை’ என்று திரும்பினார் அரசர், ‘கண்டதையும்
நினைத்து அலட்டிக்கொள்ளாமல் உங்களுடைய வேலையை ஒழுங்காகச் செய்யுங்கள்,
உங்கள் குடும்பத்தை நாங்கள் நன்றாகப் பார்த்துக்கொள்வோம்’ என்று சொல்லிவிட்டு
நடந்தார்.
3
ராஜா கோபத்தோடு அரண்மனைக்குள் நுழைந்தார்.
பார்க்கிற எல்லாருக்கும் நடுக்கம். ‘என்ன ஆச்சு?’ என்று கேட்டால்கூட ஏதாவது தண்டனை
கொடுத்துவிடுவாரோ என்று தயங்கினார்கள். தூண் மறைவில் ஒளிந்துகொண்டார்கள்.
இந்த நேரத்தில் ராஜாவிடம் பேசக்கூடிய தைரியமுள்ள ஒரே நபர், அமைச்சர்
அன்புச்செல்வர்தான்.
அன்புச்செல்வர் இந்த ராஜாவின் தந்தையிடம் அமைச்சராக இருந்தவர். இவருடைய
பட்டாபிஷேகத்தை முன்னின்று நடத்தியவரே அவர்தான்.
அதன்பிறகு, அன்புச்செல்வர் ஓய்வெடுத்துக்கொள்ள விரும்பினார். ராஜா வற்புறுத்தி அவரை
அமைச்சராகத் தொடரச்சொல்லியிருந்தார்.
ஆகவே, ராஜா ஒரு பிழை செய்தால் அதைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கும் குணமும்
தகுதியும் தைரியமும் அன்புச் செல்வருக்குமட்டுமே உண்டு. ராஜாவும் அவர் சொல்வதைப்
பணிவாகக் கேட்பார்.
இதனால், ராஜாவின் கோபத்தைக் கண்ட எல்லாரும் அன்புச் செல்வரிடம் ஓடினார்கள்.
‘என்ன ஆச்சோ தெரியலையே’ என்று பதறினார்கள்.
அன்புச்செல்வர் அப்போதுதான் தொல்காப்பியத்தில் ஒரு பாடலைப் படித்துவிட்டு, அதன்
பொருள் சரியாகப் புரியாமல் அகராதியைப் புரட்டிக்கொண்டிருந்தார். அரசனுக்குக் கோபம்
என்றவுடன், சட்டென்று எழுந்து வந்தார். ‘மெய்க்காப்பாளர்களை விசாரித்தீர்களா?’
‘இல்லையே!’
‘அட முட்டாள்களே, அதையல்லவா முதலில் செய்திருக்கவேண்டும்?’
மெய்க்காப்பாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். நடந்ததைச் சொன்னார்கள்.
முழுவதையும் பொறுமையாகக் கேட்ட அமைச்சர் சிரித்தார். ‘சரி, நீங்கள் கிளம்புங்கள், நான்
பார்த்துக்கொள்கிறேன்’ என்றார்.
‘அப்படியானால் அரசருடைய கோபம்…’
‘அது மகனைப் பார்த்தால் சரியாகிவிடும். கவலை வேண்டாம்!’
‘காவல் வீரர்களின் கோரிக்கை?’
’அதில் இருக்கும் நியாயத்தை மன்னருக்குப் புரியவைக்கவேண்டும்’ என்றார் அமைச்சர்.
‘அதற்குச் சில நாள் ஆகும். நல்ல சந்தர்ப்பம் அமையும்போது நானே பேசுகிறேன்’ என்று
சொல்லிவிட்டு உள்ளே வந்தார் அமைச்சர்.
அவர் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த அமைச்சரின் மனைவி அவரை நெருங்கி, ‘எனக்கு
ஒரு சந்தேகம்’ என்றார்.
‘என்ன?’
‘அந்தப் படை வீரர்களுக்குக் குடியிருப்புகளைக் கட்டித் தந்து, அவர்களுடைய
குடும்பத்தினரை இங்கே வரவழைக்க உங்களுக்கு அதிகாரம் உண்டுதானே?’
அமைச்சர் பெரிதாகச் சிரித்தார். ‘அதிகாரம் உண்டு. ஆனால், அரசருக்கு அதில்
விருப்பமில்லை எனும்போது, நானாக அதைச் செய்யக்கூடாது! இயன்றால் இது சரிதான்
என்று அரசருக்குப் புரியவைக்கவேண்டும், அதன்பிறகு அரசரையே அதைச்
செய்யவைக்கவேண்டும். அதுதான் அமைச்சரின் பணி. கிரீடம் இருக்கும்போது கைக்கோல்
கட்டளையிடக்கூடாது.’
‘அப்படியானால், என்ன செய்யப்போகிறீர்கள்?’
‘அதற்கு நேரம் வரட்டும், உரியதைச் சரியாகச் செய்வேன்’ என்றார் அமைச்சர்.
4
சில நாள் கழித்து, ராஜா ஒரு வழக்கை விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது சில
சேவகர்கள் உள்ளே நுழைந்து பரபரப்பாகப் பேசினார்கள், ‘அரசே, உங்களைப் பார்க்க ஓர்
அஞ்சல் ஊழியர் வந்திருக்கிறார்!’
‘அஞ்சல் ஊழியரா? ஒருவேளை, அண்டை நாட்டு அரசன் என்னிடம் வாங்கிய கடனை
நேரில் திருப்பித் தர வெட்கப்பட்டுக்கொண்டு தபால்மூலம் அனுப்பியிருக்கிறானோ!’ என்றார்
அரசர்.
‘இல்லை அரசே! கடன் தொகை வரவில்லை, கடிதம்தான் வந்திருக்கிறது.’
’சரி, கொண்டுவரச்சொல்’ என்றார் அரசர்.
’இல்லை அரசே, இங்கே கொண்டுவரமாட்டார்களாம்’ என்றார் ஒரு சேவகர், ‘ஏதோ பதிவு
அஞ்சலாம், நீங்களே அங்கே வந்து கையெழுத்துப் போட்டால்தான் தருவார்களாம்.’
இதைக் கேட்டு அரசருக்குக் கோபம் வந்தது. அதேசமயம் அப்படி என்ன முக்கியமான கடிதம்
என்று தெரிந்துகொள்கிற ஆவலும் ஏற்பட்டது.
ஆகவே, அவர் எழுந்து அரண்மனையைவிட்டு வெளியே வந்தார். அங்கே ஓர் அஞ்சல்
ஊழியர் கை நிறைய கடிதங்களுடன் நின்றிருந்தார். ‘நீங்கள்தானே அரசர்?’
‘பார்த்தால் எப்படித் தெரிகிறது?’
‘கோபிக்காதீர்கள், உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது என் கடமை’ என்றார் அவர்,
‘உங்கள் அரசர் அடையாள அட்டையைக் காட்டுங்கள். அதைப் பார்த்தபிறகுதான் நான்
இந்தக் கடிதத்தைத் தர இயலும்.’
அரசர் கை தட்ட, பின்னாலிருந்து ஒரு நிர்வாகி முன்னே வந்து தங்கத் தட்டில் அரசரின்
அடையாள அட்டையை நீட்டினார். ஊழியர் அதை எடுத்து, அதிலிருந்த படத்தையும்
அரசருடைய முகத்தையும் பலமுறை பார்த்து நிச்சயப்படுத்திக்கொண்டார். பிறகு, கடிதத்தை
அவரிடம் கொடுத்தார். ‘இதை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக, நீங்கள் இதில்
முத்திரை பதிக்கவேண்டும்.’
மீண்டும் கை தட்டினார் அரசர். இன்னொரு நிர்வாகி முன்னே வந்து அவர் நீட்டிய இடத்தில்
முத்திரை பதித்தார்.
‘நன்றி அரசே’ என்று தலையைச் சொறித்தார் அவர். புரிந்துகொண்ட அரசர் தன்
கழுத்திலிருந்த தங்க மாலையை உருவி அவர் கையில் போட்டார். உடனே, அந்த ஊழியர்
நன்றி சொல்லிவிட்டுத் தன் குதிரையில் ஏறி விரைந்தார்.
கடிதத்தை அவசரமாகக் கிழித்தார் அரசர். பரபரவென்று படித்தார்.
மறுவிநாடி, அவர் முகத்தில் பிரகாசம்.
5
அந்தக் கடிதத்தின் உச்சியில் ‘மன்னா பல்கலைக்கழகம்’ என்று எழுதியிருந்தது. அதற்குக்
கீழே அழகான பொன்னிற எழுத்துகள்.
பெருமதிப்பிற்குரிய அரசர்களே, அரசிகளே,
நீங்களும் உங்களுடைய பொதுமக்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
சிறப்பான ஆட்சி நடத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். ஆனால், உலகம் இப்போது
எவ்வளவோ மாறிவிட்டது. கணிப்பொறி, இணையம், சமர்த்துத் தொலைபேசி, ஃபேஸ்புக்,
ஸ்கைப், வாட்ஸாப் என்று பல நவீன வழிகளில் மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசுகிறார்கள்,
தொழில் நடத்துகிறார்கள், உலகத்தையே கைப்பிடியில் வைத்திருக்கிறார்கள்.
ஆனால், உங்களைப்போன்ற அரசர்கள்மட்டும் எப்போதும்போல் கை தட்டி யாரையோ
வரவழைத்துக்கொண்டு, கட்டளையிட்டுக்கொண்டு, கடிதம் எழுதிக்கொண்டிருப்பது
போரடிக்கவில்லையா? உங்களுக்கென்று ஓர் இணையத் தளம் வேண்டாமா? ஃபேஸ்புக்
பக்கம் வேண்டாமா? நீங்கள் கட்டிய புதிய அரண்மனை வாசலில் செல்ஃபி எடுத்து அதில்
பிரசுரிக்கவேண்டாமா? நீங்கள் சாப்பிட்ட எண்சுவை விருந்தைப் படமெடுத்து
வெளியிடவேண்டாமா? உங்கள் மக்கள் என்ன செய்கிறார்கள் என்று உடனுக்குடன் பார்க்கும்
வசதி, அதைப் பெருந்தரவு வசதியுடன் அலசி ஆராய்ந்து அவர்களுடைய மனத்தில் என்ன
உள்ளது என்பதைத் தெரிந்துகொள்கிற வசதியெல்லாம் வேண்டாமா? உங்களுக்கு எதிராக
யாராவது சதி செய்தால் அது உடனே உங்களுக்குத் தெரியவேண்டாமா? தினசரி
உங்களுடைய அரண்மனை நிர்வாகச் செலவுகள், மக்கள் கட்டிய வரி, கட்டாத
பாக்கிகளையெல்லாம் ஒரு க்ளிக்கில் தெரிந்துகொள்ளவேண்டாமா? உங்களுடைய
அமைச்சர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள், யாருடன் என்ன பேசுகிறார்கள் என்று
உங்களுக்குத் தெரியுமா? இதற்கெல்லாம் நீங்கள் இன்னொருவரை நம்பியிருக்கவேண்டுமா?
மேலே சொன்னதெல்லாம் என்ன என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு
வயதாகிவிட்டது என்று அர்த்தம். யாரோ ஒரு நவீன பிரஜை தொழில்நுட்பத்தின் உதவியுடன்
உங்களை விஞ்சப்போகிறான் என்று அர்த்தம்.
அப்படி ஒரு நிலைமை வர ‘மன்னா பல்கலைக்கழகம்’ அனுமதிக்காது. உங்களுக்காகவே
ஓர் அவசரப் பயிற்சி வகுப்பைத் தயாரித்திருக்கிறோம். ஐந்தே நாள்களில் சகல நவீன
தொழில்நுட்பங்களையும் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்து எல்லா உபகரணங்களையும்
இலவசமாகத் தருகிறோம். சர்வதேச அத்தாட்சிச் சான்றிதழ் பெற்ற இந்தப் பயிற்சிக்குக்
கட்டணம் வெறும் இருபத்தைந்தாயிரம் பொற்காசுகள்தான்.
முதலில் சேரும் ஐம்பது பேருக்கு ஒரு யானையும் அதற்கான மூன்றாண்டு தீனியும்
இலவசம். முந்துங்கள்.
நீங்கள் உடனே தொடர்புகொள்ளவேண்டிய நபர்கள்:
அரசர் கல்லூரி ‘கிங்’ஸிபல்: திரு கன்னத்தெ என்னெய்யா
அரசியர் கல்லூரி ‘க்வீன்’ஸிபல்: திருமதி வெரீனா செல்லியம்ஸ்
நன்றி.
இப்படிக்கு,
கல்வித்தந்தை படிப்பப்பர்,
மன்னா பல்கலைக்கழகம்.
6
அரசர் அந்தக் கடிதத்தை அன்புச்செல்வரிடம் நீட்டினார். ‘அமைச்சரே, நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள்?’
அன்புச்செல்வர் கடிதத்தை நிதானமாகப் படித்தார். பிறகு, ‘இந்தக் கல்வித்தந்தையை நான்
நன்கு அறிவேன்’ என்றார். ‘என் சிறுவயது நண்பன்தான். படிப்பு ஒழுங்காக வராமல்
திணறிக்கொண்டிருந்தான். பிறகு, பல்கலைக்கழகம் ஆரம்பித்துவிட்டான்.’
’அப்படியானால், இந்த ஐந்து நாள் பயிற்சி ஓர் ஏமாற்றுவேலை என்கிறீர்களா?’
’இல்லை அரசே, எங்கள் மன்னர் நவீனமாவது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சிதான்’ என்றார்
அன்புச்செல்வர். ‘நீங்கள் தாராளமாக இந்தப் பயிற்சிக்குச் சென்றுவாருங்கள். முன்பவிடச்
சிறப்பாக இந்த நாட்டை ஆள்வீர்கள்!’
‘நல்லது அமைச்சரே’ என்று துள்ளினார் அரசர். ‘நான் உடனே சென்று வேலைகளைக்
கவனிக்கிறேன்.’
அமைச்சர் யோசனையோடு வீடு திரும்பினார். தன் மனைவியை அழைத்தார், ‘என்னுடைய
ரகசிய எழுத்தாணியை எடுத்து வா’ என்றார்.
‘ரகசிய எழுத்தாணியா?’ ஆவலுடன் கேட்டார் அவருடைய மனைவி, ‘அப்படி என்ன
ரகசியம் எழுதப்போகிறீர்கள்? எனக்கும் சொல்லுங்களேன்.’
‘எல்லாரிடமும் சொன்னால் அது ரகசியம் இல்லை’ என்றார் அமைச்சர்.
‘எழுத்தாணியைக் கொண்டு வா!’
அமைச்சரின் மனைவி அந்த ரகசிய எழுத்தாணியைக் கொண்டுவந்தார். அதை வைத்து ஒரு
துணியின்மீது பரபரவென்று ஏதோ எழுதினார் அவர்.
இப்போது, அந்தத் துணியில் ஓர் அழகிய இயற்கைக் காட்சி வரையப்பட்டிருந்தது. அதைப்
பார்க்கிற யாரும் அதை ஓர் ஓவியம் என்றுதான் நினைப்பார்கள்.
ஆனால் உண்மையில், அது ஒரு ரகசியக் கடிதம். அதனைப் பெற்றுக்கொள்கிறவரிடம்
இருக்கும் ரகசிய அழிப்பானை வைத்து இந்த ஓவியத்தை அழித்தால், செய்தி தோன்றும்.
அமைச்சர் அந்த ஓவியத்தை அழகிய சட்டமொன்றில் பொருத்தினார். தன்னுடைய
நம்பிக்கைக்குரிய உதவியாளர் ஒருவரை அழைத்து அதைக் கொடுத்தார். பிறகு, அவருடைய
காதில் ஏதோ கிசுகிசுத்தார்.
‘புரிந்ததா?’
‘நன்றாகப் புரிந்தது ஐயா!’
‘உடனே புறப்படு, நாளை மாலைக்குள் இந்தச் செய்தி உரிய நபருக்குச்
சென்றுவிடவேண்டும்!’
7
அரசர் புறப்பட்டார்.
அவரோடு ஒரு பெரிய பட்டாளமே புறப்பட்டது.
அரசர் ஏறிய அதே தேரில் அரசியாரும் இளவரசரும் ஏறிக்கொண்டார்கள். பின்னால்
அவர்களுடைய உடைகள், நகைகள், மற்ற பொருள்கள் பதினேழு யானைகளில் வந்தன.
நிறைவாக ஒரு யானைக்குட்டிமீது இளவரசரின் பொம்மைகள்.
அந்த யானைக்குட்டியும் இளவரசரின் பொம்மைதான். அவர் அதிக நேரம் விளையாடுவது
அதோடுதான்.
அரச குடும்பத்துக்காகச் சமைக்க ஒரு கோஷ்டி உடன் வந்தது. அவர்கள் பால் கறக்க
மாடுகளில் ஆரம்பித்து அரிசி, பருப்பு, கடுகுவரை சகலத்தையும் தங்களோடு
கொண்டுவந்துவிட்டார்கள்.
இன்னொரு கோஷ்டி அரசருக்குப் பயண அலுப்பு தெரியாதபடி பாடிக்கொண்டும்
இசைத்துக்கொண்டும் வந்தது. அதற்கேற்ப நடனமணிகள் தேர்மீது ஆடினார்கள்.
ஏற்கெனவே ஒற்றர் படை அந்த வழியில் சென்று எந்தப் பிரச்னையும் இல்லை என
உறுதிப்படுத்திக்கொண்டிருந்தது. அவர்களுடைய வழிகாட்டுதலின்படி அரச குடும்பத்தினர்
கல்லூரியை நோக்கிச் சென்றார்கள்.
சிறிது நேரம் கழித்து, அரச குடும்பம் ஓய்வெடுப்பதற்காக ஒரு சோலையினுள் நுழைந்தது.
அதன் மத்தியில் புல்வெளி ஒன்றில் அரசரும் அரசியும் அமர, அவர்களைச் சுற்றி
மற்றவர்கள் மரியாதையான தூரத்தில் நின்றார்கள்.
இளவரசர் காட்டைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பிவிட்டார். அவர் மான்களைத் தடவிக்கொடுத்து
விளையாட, ஓவியர்கள் அதனை உடனுக்குடன் படமாக வரைந்தார்கள்.
இன்னொருபக்கம் உணவு சமைக்கும் வேலைகள் நடந்தன. அரசர் எவ்வகை உணவை
விரும்புவார் என்று தெரியாததால், எல்லா உணவுகளும் சமைக்கப்பட்டன. அதில் அரசர்
விரும்பியதை அவருக்குப் பரிமாறினார்கள். அவர் சாப்பிட்டுமுடித்தபின், எஞ்சியவற்றைப்
பிறர் உண்டார்கள்.
அரசர் சாப்பிட்டதும் சிறிது ஓய்வெடுக்க விரும்பினார். ஆனால், பயண தூரம் அதிகம்
என்பதால், அவர் படுக்கை வசதியுடன் கூடிய, சாலை அதிர்வுகள் தெரியாதபடி ஓடக்கூடிய
விசேஷத் தேரில் ஏறிக்கொண்டார். அரசியாரும் இளவரசரும் இன்னொரு தேரில் வந்தார்கள்.
மற்ற தேர்கள், யானைகள், குதிரைகள் பின்னே நடந்தன.
மாலை நான்கு மணியளவில், அவர்கள் கல்லூரி வளாகத்தை நெருங்கினார்கள்.
அங்குமிங்கும் புதிய கட்டடங்கள் எழுப்பப்பட்டுக்கொண்டிருந்தன. வரவேற்பு வளைவு அழகுற
அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கே நான்கைந்து பெண்கள் கையில் சந்தனக் கிண்ணத்துடன்
நின்றார்கள்.
மந்திரி ஒருவர் சென்று அரசரை மரியாதையாகத் துயிலெழுப்ப, அவர் முகம் கழுவி,
வாசனாதி திரவியங்களைப் பூசிக்கொண்டு கிரீடத்தைச் சரியாக அணிந்துகொண்டு
தேரிலிருந்து இறங்கினார்.
அந்தப் பெண்கள் அரசருக்கும் அரசிக்கும் சந்தனப் பொட்டு வைத்து வரவேற்றார்கள்.
பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் அரசருக்கு வணக்கம் சொல்லி, அவருடைய கையில் இருந்த
ஏட்டில் அரசரின் பெயரைச் சரிபார்த்தார். பிறகு, ‘நீங்க என்னோட வரணும்’ என்றார்
வணங்கி.
அரசரும் அரசியும் இளவரசரும் அவருக்குப் பின்னே நடக்க, அவர் மெல்லச் சிரித்து,
‘அரசரே, நீங்கமட்டும்தானே படிக்கப்போறீங்க?’ என்றார்.
‘ஆமாம், அதற்கென்ன?’
‘அப்படியானால் இவர்களுக்குக் கல்லூரியில் அனுமதி இல்லை’ என்றார் அவர்.
‘விரும்பினால் அவர்கள் இங்கேயே வேறு இடத்தில் தங்கலாம், அல்லது, ஊருக்குத்
திரும்பிச் செல்லலாம்!’
‘ஏன் அப்படி? இவர்கள் என்னோடு தங்குவதில் என்ன பிரச்னை?’ என்றார் அரசர். ‘நான்
ஏற்கெனவே உங்கள் கல்லூரியில் பல அரச பாடங்களைப் படித்துள்ளேன்.
ஒவ்வொருமுறையும் இவர்கள் என்னோடுதான் தங்குவார்கள்!’
’உண்மைதான் அரசே, ஆனால் இந்தமுறை அப்படிச் செய்ய இயலாது.’
‘ஏன்?’
‘குடும்பத்துடன் தங்கும் அரசர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்துவதில்லை என்று
எங்களுக்குத் தெரியவந்துள்ளது! ஆகவே, இந்தமுறை, அரசர்களைமட்டும் எங்கள் விடுதியில்
தங்கவைக்கவுள்ளோம். குடும்பத்தினருக்கு அனுமதி கிடையாது’ என்று உறுதியாகச்
சொன்னார் அவர். பிறகு அந்தப் பெண்களைப் பார்த்து, ‘அரசியாரையும் மற்றவர்களையும்
நமது விசேஷ மாளிகைகளில் தங்கவையுங்கள், நான் அரசரை என்னோடு அழைத்துச்
செல்கிறேன்.’
‘ஆனால்…’
‘கவலைப்படாதீர்கள் அரசே, நீங்கள் உங்கள் குடும்பத்தினரை ஐந்து நாள் கழித்துச்
சந்திக்கலாம், அதுவரை படிப்பில் கவனம் செலுத்துங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது,
உங்கள் நாட்டுக்கும் நல்லது, அரசியாரும் அதைதான் விரும்புவார். இல்லையா?’
‘ஆமாம்’ என்று பின்னே நகர்ந்துகொண்டார் அரசியார். ‘சென்று வாருங்கள் அரசே,
நாங்கள் காத்திருப்போம்!’
அரசர் குழப்பத்தோடு அவருக்குப் பின்னால் நடந்தார். பெரிய கதவுகள் இழுத்துச்
சாத்தப்பட்டன.
8
மறுநாள் காலை வகுப்புகள் தொடங்கின.
வழக்கமாக இதுபோன்ற வகுப்புகளுக்கு மூத்த ஆசிரியர்கள்தான் வருவார்கள். ஆனால்
இங்கே முரட்டுத் துணி அணிந்த இளைஞர்களே பாடம் நடத்தினார்கள். அவர்கள் பேசும்
தமிழ் விநோதமாகவும் வசீகரமாகவும் இருந்தது. அவ்வப்போது அவர்கள் தங்கள் பையில்
வைத்திருந்த சமர்த்துப் பேசியை எடுத்துப் பார்த்துக்கொண்டார்கள். அப்போது அந்தத்
திரையில் தெரிந்த ஒளி அவர்கள் முகத்திலும் படர்ந்தது.
அரசருக்குப் புத்தம்புதுக் கணினி ஒன்றும் சமர்த்துப் பேசி ஒன்றும் தரப்பட்டது. அதில்
பலவிதமான நவீன விஷயங்கள் சொல்லித்தரப்பட்டன.
ஆரம்பத்தில் அவையெல்லாம் அவருக்குத் திகைப்பைத் தந்தன. ஆனால் விரைவில்
அவற்றைக் கற்றுக்கொண்டு ரசிக்கவும் தொடங்கிவிட்டார். இவ்வளவு நாள் இதெல்லாம்
தெரியாமல் இருந்துவிட்டோமே என்று வருந்தினார் அவர். இனிமேல் தானும் முரட்டுத்
துணி அணிந்துகொண்டு அந்த வசீகரமான மொழியில் பேசத் தொடங்கிவிடலாம் என்று
அவருக்குத் தோன்றியது.
நாள்முழுக்க வகுப்புகளில் அமர்வதுதான் சிரமமாக இருந்தது. ‘இந்த ஆசிரியர்களை நம்
தேசத்துக்கே கொண்டுவர என்ன செலவாகும்?’ என்று யோசித்துக்கொண்டிருந்தார் அரசர்.
விடுதியும் நன்கு வசதியாகவே இருந்தது. ஊரில் அரசர் வசிக்கும் மாளிகையைப்போலவே
பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. சேவைகள் புரியவும்
சாப்பாடு கொண்டுவரவும் ஊழியர்கள் காத்திருந்தார்கள். தூங்குவதற்கு எட்டு அடுக்கு
மெத்தைகள் விரித்த படுக்கை.
ஆனால், அரசர் தூங்க விரும்பவில்லை. அன்றைய பாடங்களுக்கான கையேட்டைப்
புரட்டிக்கொண்டிருந்தார். மிகவும் சோர்வாக உணர்ந்தார் அவர்.
வழக்கமாக ராஜ்ஜியப் பணிகள் இதைவிட அதிகச் சோர்வை அளிக்கக்கூடியவை. ஆனால்,
அவற்றையெல்லாம் சரி செய்வதற்கு அவருடைய மகனுடன் சிறிது நேரம் விளையாடினால்
போதும்.
இப்போது, மகன் இல்லை, மனைவியும் அருகே இல்லை, அன்றுமுழுக்க நன்றாகப் படித்துப்
பல விஷயங்களைக் கற்றுக்கொண்ட மகிழ்ச்சி அரசர் முகத்தில் இல்லை.
மறுநாள் காலை உணவின்போது, தன்னுடனிருந்த சக மாணவர்களை, அதாவது, சக
அரசர்களைக் கவனித்தார் அரசர். அவர்களும் ஏதோ கவலையில்தான் இருப்பதாகத்
தோன்றியது.
அரசர் எதையோ சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்கு வந்தார். அன்றைய பாடங்கள் தொடங்கின.
சிறிது நேரம் கழித்து, முந்தைய நாள் பாடங்களில் ஒரு தேர்வு வைக்கப்பட்டது. எழுத்துத்
தேர்வு அல்ல, கற்றுக்கொண்டவற்றைக் கணினியிலேயே செய்துபார்க்கும் செய்முறைத்
தேர்வு.
அரசருக்கு இந்தத் தேர்வு மிகவும் பிடித்திருந்தது. மிக வேகமாகச் சொன்னவற்றைச்
செய்துவிட்டார். முதல் மதிப்பெண்ணும் அவருக்குதான் கிடைத்தது.
இந்த விஷயத்தை உடனே அரசியிடம் சொல்லவேண்டும் என்று பெருமிதத்துடன்
நினைத்தார் அவர். ‘சபையைக் கலைத்துவிட்டுக் கிளம்பவேண்டியதுதான்!’ என்று
எழுந்தார்.
அப்போதுதான், அவருக்கு ஞாபகம் வந்தது. இது அவருடைய அரசவை அல்ல, வகுப்பறை.
அதற்காக? நினைத்தபோது மனைவியைப் பார்க்கும் உரிமை எவனுக்கும் உண்டே.
அரசனுக்குக் கிடையாதா என்ன? என்னை யாரால் தடுக்க இயலும்?
விருட்டென்று எழுந்து கல்லூரியின் வாசலை நோக்கி நடந்தார் அரசர்.
9
கல்லூரியின் கதவுகள் மூடப்பட்டிருந்தன.
அங்கிருந்த காவலாளியைப் பார்த்து, ‘ம், கதவைத் திற’ என்றார் மன்னர்.
‘மன்னிக்கவேண்டும் ஐயா, கதவைத் திறக்க எனக்கு அனுமதி இல்லை!’
’அனுமதி இல்லையா, சாவி இல்லையா?’
‘சாவி இருக்கிறது, அனுமதிதான் இல்லை!’
‘நான் மன்னன், நான் அனுமதி தருகிறேன், திற!’
‘ஐயா, உள்ளே இருக்கும் முப்பது பேரும் மன்னர்கள்தான். அவர்கள் சொல்லி நான்
கதவைத் திறக்க இயலாது’ என்றார் காவலாளி. ‘எனக்கு மன்னர் கல்லூரி முதல்வர்தான்.
அவர் சொன்னால் திறக்கிறேன்.’
கோபத்தோடு தன் வாளை உறுவினார் அரசர். அங்கே வெறும் உறைதான் இருந்தது.
வாளைக் காணவில்லை.
கல்லூரியினுள் நுழையும்போது பாதுகாப்பு அதிகாரியிடம் வாளை ஒப்படைத்தது
அப்போதுதான் மன்னருக்கு நினைவுக்கு வந்தது. வாள் இல்லை என்றதும் தன் கரங்களில்
ஒன்று குறைபட்டதுபோல் உணர்ந்தார் அவர்.
வாள் இல்லாவிட்டால் என்ன? வலிமை இருக்கிறதே, இந்தக் காவலாளியை வீழ்த்த அவரால்
இயலாதா?
‘கதவைத் திறக்கிறாயா, அல்லது உன் எலும்பை நொறுக்கட்டுமா?’ என்றார் அரசர்.
’ஏன் இப்படிக் கலாட்டா செய்கிறீர்கள் அரசே?’ என்று பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.
‘நீங்கள் பண்புள்ள மன்னர், இப்படிக் கோபப்படலாமா? ஒரு சாதாரணக் காவலாளியிடம்
மோதலாமா?’
ஆவேசமாகத் திரும்பினார் அரசர். அங்கே நின்றிருந்தது அரசரின் ஆசிரியர்களில்
ஒருவர்தான்.
என்ன பெரிய ஆசிரியர்? சின்னப் பொடியன், ஆசிரியன் என்று குறிப்பிட்டால் போதாதா?
‘நீ யார் என்னைக் கேட்பதற்கு?’ என்றார் அரசர். ‘என் மனைவி, மகனை நான் சந்திக்கச்
செல்கிறேன், அதைத் தடுக்க நீங்களெல்லாம் யார்?’
‘அரசே, ஐந்து நாள் பயிற்சியில் கவனம் செலுத்தவேண்டும் என்றுதானே இந்த ஏற்பாடு?
உங்கள் மனைவி, மகனை நாங்கள் பார்த்துக்கொள்ளமாட்டோமா? ஏன் பதறுகிறீர்கள்?’
ஆசிரியருக்குப் பின்னால் நின்றிருந்த மற்ற அரசர்கள் அவரைப் பார்த்துக் கேலியாகச்
சிரிப்பதுபோலிருந்தது, ‘என்ன ஐயா, சில நாள் மனைவி, மகனைப் பிரிந்து வாழமாட்டீரா?
நீங்கள் அரசரா, அன்றில் பறவையா?’
அவர்கள் சொல்லும் வாசகங்களையெல்லாம் எங்கோ கேட்டதுபோல் உணர்ந்தார் அரசர்.
யோசித்தபோது, அன்றைக்கு அவரிடம் வந்து பேசிய எல்லைக் காவலாளிகள் நினைவுக்கு
வந்தார்கள்.
அவர்களும் இப்படிதானே குடும்பத்தைப் பிரிந்து வருந்தியிருப்பார்கள். ‘வேலையைக் கவனி,
உன் குடும்பத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று அவர்களிடம் ஆணவமாகச்
சொன்னதை எண்ணி இப்போது வருந்தினார் அரசர்.
‘என்னால் ஒரே ஒரு நாள் இடைவெளியைத் தாங்க இயலவில்லை. அவர்கள்
மாதக்கணக்கில் தங்கள் குடும்பத்தினரைப் பார்க்காமல் எப்படி மனம் ஒன்றி வேலை
செய்வார்கள்?’ என்று எண்ணினார் அரசர். ‘எனக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா?
நாடு திரும்பியதும் முதல் வேலையாக அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வாழ்ந்தபடி
வேலை செய்வதற்கு ஏற்பாடு செய்தாகவேண்டும்.’
10
இரண்டு மாதம் கழித்து, மஹாராஜாவின் ஃபேஸ்புக் பக்கம் அதிகாரப்பூர்வமாகத்
தொடங்கிவைக்கப்பட்டது.
பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் அங்கே சென்று தங்களுடைய குறைகளைச்
சொல்லலாம். அவற்றை அரசரின் உதவியாளர்கள் உடனுக்குடன் பார்த்து நடவடிக்கை
எடுப்பார்கள். தேவையான நேரங்களில் அரசரே நேரடியாகப் பதில் எழுதுவதும் உண்டு.
முக்கியமான அறிவிப்புகளையெல்லாம் அரசரே நேரடியாகப் பதிவு செய்யத் தொடங்கினார்.
உதாரணமாக, முதல் நாளில் அவரே எழுதிய பதிவு இப்படி அமைந்திருந்தது:
அன்புள்ள பொதுமக்களுக்கு,
எல்லாரும் நலம்தானே?
நம் நாட்டைக் காவல் காக்கும் உயர்ந்த பணியைச் செய்கிற வீரர்களின் சேவை
போற்றுதற்குரியது. அவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினரைப் பிரிந்து இந்தக்
கடமையை ஆற்றிவருகிறார்கள்.
ஊரைக் காக்கும் அவர்கள் இப்படித் தனிமையில் வாடுவது நியாயம்தானா? என்னதான்
கடமை வீரர்களாக இருந்தாலும், அவர்கள் மனத்தினுள்ளும் காதல் இருக்குமல்லவா?
அவர்களுடைய பெற்றோர், மனைவி, மக்கள், சகோதரர்கள் அவர்களை அடிக்கடி
பார்க்கவேண்டும் என்று விரும்புவார்களல்லவா?
அதற்காக, நமது போர் வீரர்களுக்கு எல்லா வசதிகளுடன் குடியிருப்புகளைக் கட்டித்தரத்
தீர்மானித்துள்ளேன். இதற்கான கட்டுமானப் பணிகள் உடனே தொடங்கும்.
இப்படிக்கு,
உங்கள் அரசன்.
இந்த அறிவிப்பைச் சமர்த்துப்பேசியில் படித்துவிட்டு, அமைச்சர் அன்புச்செல்வர் மகிழ்ந்தார்.
பின்னர், அதில் சில பொத்தான்களை அழுத்தித் தன்னுடைய நண்பர் படிப்பப்பரை
அழைத்தார்.
படிப்பப்பரை நினைவிருக்கிறதா? அரசருக்கு நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி
அளிப்பதாகக் கடிதம் எழுதிய ‘கல்வித் தந்தை’தான் அவர்.
‘வணக்கம், நான் அன்புச்செல்வர் பேசறேன்.’
’அடடே, எப்படி இருக்கீங்க?’
‘நலமா இருக்கேன்’ என்றார் அன்புச்செல்வர். ‘உங்களுக்கு நன்றி சொல்லதான்
கூப்பிட்டேன்.’
‘எதுக்கு நன்றி?’
‘உங்ககிட்ட படிக்க வந்த எங்க அரசரை அவரோட குடும்பத்தினரோட தங்க விடாம, தனியே
தங்கவெச்சீங்களே, அதுக்குதான்.’
‘நானே கேட்கணும்ன்னு நினைச்சேன். எதுக்காக அவரைத் தனியே தங்கவைக்கணும்ன்னு
எனக்குக் கடிதம் எழுதினீங்க? அவர் பாடம் ஒழுங்காப் படிக்கணும்ன்னு அவ்ளோ
அக்கறையா?’
‘பாடம்தான், ஆனா நீங்க சொல்லித்தந்த பாடமில்லை, ஒரு முக்கியமான வாழ்க்கைப்
பாடம்!’ என்று சிரித்தார் அன்புச்செல்வர்.
‘புரியலையே.’
‘உங்களுக்குப் புரியாட்டி பரவாயில்லை. அரசருக்குப் புரிஞ்சுடுச்சு. அவர் திருந்திட்டார். அது
போதும் எனக்கு’ என்றபடி இணைப்பைத் துண்டித்தார் அன்புச்செல்வர்.
பின்னர், மஹாராஜாவின் ஃபேஸ்புக் பக்கத்தைத் திறந்து, படை வீரர்களுக்கான
குடியிருப்புகள் திறக்கப்படும் செய்தியை ‘லைக்’ செய்தார்.
(நிறைந்தது)
கருத்துகள்
கருத்துரையிடுக