Āṟām tirumuṟai - II


சைவ சமய நூல்கள்

Back

ஆறாம் திருமுறை II
இராமலிங்க அடிகள்



திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா
ஆறாம் திருமுறை - இரண்டாம் பகுதி பாடல்கள் (3872 - 4614)

    உள்ளுறை

    39 பொதுநடம் புரிகின்ற பொருள் 20 - 3872 - 3891
    - 40. ஆனந்தானுபவம் 12 - 3892 - 3903
    - 41. பரசிவ நிலை 10 - 3904 - 3913
    - 42. பேரானந்தப் பெருநிலை 10 - 3914 - 3923
    - 43. திருவடி நிலை 10 - 3924 - 3933
    - 44. காட்சிக் களிப்பு 10 - 3934 - 3943
    - 45. கண்கொளாக் காட்சி 10 - 3944 - 3953
    - 46. இறை திருக்காட்சி 30 - 3954 - 3983
    - 47. உளம் புகுந்த திறம் வியத்தல் 10 - 3984 - 3993
    - 48. வரம்பில் வியப்பு 10 - 3994 - 4003
    - 49. கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல் 10 - 4004 - 4013
    - 50. ஆண்டருளிய அருமையை வியத்தல் 10 - 4014 - 4023
    - 51. இறைவனை ஏத்தும் இன்பம் 10 - 4024 - 4033
    - 52. பாமாலை ஏற்றல் 12 - 4034 - 4045
    - 53. உத்தர ஞான சிதம்பரமாலை 11 - 4046 - 4056
    - 54. செய்பணி வினவல் 10 - 4057 - 4068
    - 55. ஆன்ம தரிசனம் 10 - 4069 - 4078
    - 56. சுத்த சன்மார்க்க வேண்டுகோள் 11 - 4079 - 4089
    - 57. அருள் விளக்க மாலை 100 - 4090 - 4189
    - 58. நற்றாய் கூறல் 10 - 4190 - 4199
    - 59. பாங்கி தலைவி பெற்றி கூறல் 10 - 4200 - 4209
    - 60. தலைவி வருந்தல் 24 - 4210 - 4233
    - 61. ஞான சிதம்பர வெண்பா 9 - 4234 - 4242
    - 62. சிவபதி விளக்கம் 10 - 4243 - 4252
    - 63. ஞானோபதேசம் 10 - 4253 - 4262
    - 64. ஆரமுதப்பேறு 13 - 4263 - 4275
    - 65. உபதேச வினா 11 - 4276 - 4286<
    - 66. நெஞ்சொடு நேர்தல் 10 - 4287 - 4296
    - 67. அஞ்சாதே நெஞ்சே 23 - 4297 - 4319
    - 68. ஆடிய பாதம் 17 - 4320 - 4336
    - 69. அபயம் அபயம் 16 - 4337 - 4352
    - 70. அம்பலவாணர் வருகை 105 - 4353 - 4457
    - 71. அம்பலவாணர் ஆடவருகை12 - 4458 - 4469
    - 72. அம்பலவாணர் அனையவருகை 12 - 4470 - 4481
    - 73. வருவார் அழைத்துவாடி 5 - 4482 - 4486
    - 74. என்ன புண்ணியம் செய்தேனோ 9 - 4487 - 4495
    - 75. இவர்க்கும் எனக்கும் 5 - 4496 - 4500
    - 76. இது நல்ல தருணம் 6 - 4501 - 4506
    - 77. ஆனந்தப் பரிவு 11 - 4507 - 4517
    - 78. ஞான மருந்து 34 - 4518 - 4551
    - 79. சிவசிவ ஜோதி 33 - 4552 - 4584
    - 80. ஜோதியுள் ஜோதி 30 - 4585 - 4614
அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு
    1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
    2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
    3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
    4. பி.இரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
    5. பொ.சு --- பொ.சுந்தரம் பிள்ளை
திருச்சிற்றம்பலம்

ஆறாம் திருமுறை - இரண்டாம் பகுதி

39. பொதுநடம் புரிகின்ற பொருள்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


3872 - அருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம்
அளித்தெனை வளர்த்திட அருளாம்
தெருட்பெருந் தாய்தன் கையிலே கொடுத்த
தெய்வமே சத்தியச் சிவமே
இருட்பெரு நிலத்தைக் கடத்திஎன் றனைமேல்
ஏற்றிய இன்பமே எல்லாப்
பொருட்பெரு நெறியும் காட்டிய குருவே
பொதுநடம் புரிகின்ற பொருளே. - 1

3873 - சித்தெலாம் வல்ல சித்தனே ஞான
சிதம்பர ஜோதியே சிறியேன்
கத்தெலாம் தவிர்த்துக் கருத்தெலாம் அளித்த
கடவுளே கருணையங் கடலே
சத்தெலாம் ஒன்றே சத்தியம் எனஎன்
தனக்கறி வித்ததோர் தயையே
புத்தெலாம் நீக்கிப் பொருளெலாம் காட்டும்
பொதுநடம் புரிகின்ற பொருளே. - 2

3874 - கலைகளோர் அனந்தம் அனந்தமேல் நோக்கிக்
கற்பங்கள் கணக்கில கடப்ப
நிலைகளோர் அனந்தம் நேடியுங் காணா
நித்திய நிற்குண(258) நிறைவே
அலைகளற் றுயிருக் கமுதளித் தருளும்
அருட்பெருங் கடல்எனும் அரசே
புலைகள வகற்றி எனக்குளே நிறைந்து
பொதுநடம் புரிகின்ற பொருளே. - 3

- - (258). நிர்க்குண - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா., ச. மு. க.

3875 - தண்ணிய மதியே தனித்தசெஞ் சுடரே
சத்திய சாத்தியக் கனலே
ஒண்ணிய ஒளியே ஒளிக்குள்ஓர் ஒளியே
உலகெலாந் தழைக்கமெய் உளத்தே
நண்ணிய விளக்கே எண்ணிய படிக்கே
நல்கிய ஞானபோ னகமே
புண்ணிய நிதியே கண்ணிய நிலையே
பொதுநடம் புரிகின்ற பொருளே. - 4

3876 - அற்புத நிறைவே சற்புதர்259 அறிவில்
அறிவென அறிகின்ற அறிவே
சொற்புனை மாயைக் கற்பனை கடந்த
துரியநல் நிலத்திலே துலங்கும்
சிற்பரஞ் சுடரே தற்பர ஞானச்
செல்வமே சித்தெலாம் புரியும்
பொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே
பொதுநடம் புரிகின்ற பொருளே. - 5

- - (259). சற்புதர் - நல்லறிவுடையவர்.

3877 - தத்துவ பதியே தத்துவம் கடந்த
தனித்ததோர் சத்திய பதியே
சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர்
தமக்குளே சார்ந்தநற் சார்பே
பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப்
பெறல்அரி தாகிய(260) பேறே
புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து
பொதுநடம் புரிகின்ற பொருளே. - 6

- - (260). பெரிதரிதாகிய - பொ. சு. பதிப்பு.

3878 - மேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த
விளைவெலாம் காட்டிமெய் வேத
நூல்வழி காட்டி என்னுளே விளங்கும்
நோக்கமே ஆக்கமும் திறலும்
நால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும்
நாயகக் கருணைநற் றாயே
போலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே
பொதுநடம் புரிகின்ற பொருளே. - 7

3879 - அலப்பற விளங்கும் அருட்பெரு விளக்கே
அரும்பெருஞ் சோதியே சுடரே
மலப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே
மருந்தெலாம் பொருந்திய மணியே
உலப்பறு கருணைச் செல்வமே எல்லா
உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே
புலப்பகை தவிர்க்கும் பூரண வரமே
பொதுநடம் புரிகின்ற பொருளே. - 8

3880 - பரம்பர நிறைவே பராபர வெளியே
பரமசிற் சுகந்தரும் பதியே
வரம்பெறு சிவசன் மார்க்கர்தம் மதியில்
வயங்கிய பெருஞ்சுடர் மணியே
கரம்பெறு கனியே கனிவுறு சுவையே
கருதிய கருத்துறு களிப்பே
புரம்புகழ் நிதியே சிரம்புகல் கதியே
பொதுநடம் புரிகின்ற பொருளே. - 9

3881 - வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி
மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே
கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே
கருணைவான் அமுதத்தெண் கடலே(261)
அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி
ஆனந்த மாம்அனு பவமே
பொற்புறு பதியே அற்புத நிதியே
பொதுநடம் புரிகின்ற பொருளே. - 10

- - (261). தண்கடலே - படிவேறுபாடு. ஆ. பா.

3882 - தன்மைகாண் பரிய தலைவனே எல்லாம்
தரவல்ல சம்புவே சமயப்
புன்மைநீத் தகமும் புறமும்ஒத் தமைந்த
புண்ணியர் நண்ணிய புகலே
வன்மைசேர் மனத்தை நன்மைசேர் மனமா
வயங்குவித் தமர்ந்தமெய் வாழ்வே
பொன்மைசார் கனகப் பொதுவொடு ஞானப்
பொதுநடம் புரிகின்ற பொருளே. - 11

3883 - மூவிரு முடிபின் முடிந்ததோர்(262) முடிபே
முடிபெலாம் கடந்ததோர் முதலே
தாவிய முதலும் கடையும்மேற் காட்டாச்
சத்தியத் தனிநடு நிலையே
மேவிய நடுவில் விளங்கிய விளைவே
விளைவெலாம் தருகின்ற வெளியே
பூவியல் அளித்த புனிதசற் குருவே
பொதுநடம் புரிகின்ற பொருளே - 12

- - (262). முடிந்தவோர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க., ஆ. பா.

3884 - வேதமும் பொருளும் பயனும்ஓர் அடைவும்
விளம்பிய அனுபவ விளைவும்
போதமும் சுகமும் ஆகிஇங் கிவைகள்
போனது மாய்ஒளிர் புலமே
ஏதமுற் றிருந்த ஏழையேன் பொருட்டிவ்
விருநிலத் தியல்அருள் ஒளியால்
பூதநல் வடிவம் காட்டிஎன் உளத்தே
பொதுநடம் புரிகின்ற பொருளே. - 13

3885 - அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை
அருள்வடி வெடுத்தெழுந் தருளி
நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி
நிலைஎலாம் அளித்தமா நிதியே
மடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம்
வயங்கநல் வரந்தந்த வாழ்வே
பொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே
பொதுநடம் புரிகின்ற பொருளே. - 14

3886 - என்பிழை அனைத்தும் பொறுத்தருள் புரிந்தென்
இதயத்தில் இருக்கின்ற குருவே
அன்புடை அரசே அப்பனே என்றன்
அம்மையே அருட்பெருஞ் சோதி
இன்புறு நிலையில் ஏற்றிய துணையே
என்னுயிர் நாதனே என்னைப்
பொன்புனை மாலை புனைந்தஓர் பதியே
பொதுநடம் புரிகின்ற பொருளே. - 15

3887 - சத்திய பதியே சத்திய நிதியே
சத்திய ஞானமே வேத
நித்திய நிலையே நித்திய நிறைவே
நித்திய வாழ்வருள் நெறியே
சித்திஇன் புருவே சித்தியின் கருவே
சித்தியிற் சித்தியே எனது
புத்தியின் தெளிவே புத்தமு தளித்துப்
பொதுநடம் புரிகின்ற பொருளே. - 16

3888 - சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியே
சிவபத அனுபவச் சிவமே
மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே
மதிநிறை அமுதநல் வாய்ப்பே
சதத்திரு நெறியே தனிநெறித் துணையே
சாமியே தந்தையே தாயே
புதப்பெரு வரமே புகற்கருந் தரமே
பொதுநடம் புரிகின்ற பொருளே. - 17

3889 - கலைவளர் கலையே கலையினுட் கலையே
கலைஎலாம் தரும்ஒரு கருவே
நிலைவளர் கருவுட் கருஎன வயங்கும்
நித்திய வானமே ஞான
மலைவளர் மருந்தே மருந்துறு பலனே
மாபலம் தருகின்ற வாழ்வே
புலைதவிர்த் தெனையும் பொருளெனக் கொண்டு
பொதுநடம் புரிகின்ற பொருளே. - 18

3890 - மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான
விளக்கமே விளக்கத்தின் வியப்பே
கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த
கருணையே கரிசிலாக் களிப்பே
ஐம்மையே அதற்குள் அதுஅது ஆகும்
அற்புதக் காட்சியே எனது
பொய்ம்மையே பொருத்துப் புகலளித் தருளிப்
பொதுநடம் புரிகின்ற பொருளே. - 19

3891 - காரண அருவே காரிய உருவே
காரண காரியம் காட்டி
ஆரண முடியும் ஆகம முடியும்
அமர்ந்தொளிர் அற்புதச் சுடரே
நாரண தலமே(263) நாரண வலமே
நாரணா காரத்தின் ஞாங்கர்ப்
பூரண ஒளிசெய் பூரண சிவமே
பொதுநடம் புரிகின்ற பொருளே. - 20

- - (263). தரமே - முதற்பதிப்பு. பொ. சு., ஆ. பா.

40. ஆனந்தானுபவம்

நேரிசை வெண்பா


3892 - கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின்அருளாம்
வெள்ளத்தை எல்லாம் மிகஉண்டேன் - உள்ளத்தே
காணாத காட்சிஎலாம் காண்கின்றேன் ஓங்குமன்ற(264)
வாணா நினக்கடிமை வாய்த்து. - 1

- - (264). ஓங்குமறை - படிவேறுபாடு. ஆ. பா.

3893 - காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச்
சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல்நடிக்கும்
ஏகா நினக்கடிமை ஏற்று. - 2

3894 - மூவர்களும் செய்ய முடியா முடிபெல்லாம்
யாவர்களுங் காண எனக்களித்தாய் - மேவுகடை
நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல்எந்
தாய்க்குத் தனிஇயற்கை தான். - 3

3895 - கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப்
பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தெள்ளமுதம்
தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்
எந்தாய் கருணை இது. - 4

3896 - கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
உண்டேன் உயர்நிலைமேல் ஓங்குகின்றேன் - கொண்டேன்
அழியாத் திருஉருவம் அச்சோஎஞ் ஞான்றும்
அழியாச்சிற் றம்பலத்தே யான். - 5

3897 - பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம்
போர்த்தேன்என் உள்ளமெலாம் பூரித்தேன் - ஆர்த்தேநின்
றாடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்அருளை
நாடுகின்றேன் சிற்சபையை நான். - 6

3898 - எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் - நண்ணுதிருச்
சிற்றம் பலத்தே திருநடஞ்செய் கின்றான்என்
குற்றம் பலபொறுத்துக் கொண்டு. - 7

3899 - கொண்டான் அடிமை குறியான் பிழைஒன்றும்
கண்டான்(265) களித்தான் கலந்திருந்தான் - பண்டாய
நான்மறையும் ஆகமமும் நாடுந் திருப்பொதுவில்
வான்மயத்தான் என்னை மகிழ்ந்து. - 8

- - (265). கண்டே - முதற்பதிப்பு. பி. இரா.

3900 - கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
உண்டேன் அழியா உரம்(266) பெற்றேன் - பண்டே
எனைஉவந்து கொண்டான் எழில்ஞான மன்றம்
தனைஉவந்து கொண்டான் தனை. - 9

- - (266). வரம் - படிவேறுபாடு. ஆ. பா.

3901 - தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம்
மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது
குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள்
மணவாளன் பாத மலர். - 10

3902 - திருவாம்என் தெய்வமாம் தெள்ளமுத ஞானக்
குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின்
தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ்
மாப்பிள்ளை பாத மலர். - 11

3903 - என்அறிவாம் என்அறிவின் இன்பமாம் என்னறிவின்
தன்அறிவாம் உண்மைத் தனிநிலையாம் - மன்னுகொடிச்
சேலைஇட்டான் வாழச் சிவகாம சுந்தரியை
மாலைஇட்டான் பாதமலர். - 12

41. பரசிவ நிலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


3904. - அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். - 1

3905 - எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்
நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
நற்சபையில் ஆடுகின்ற நடராசத் தெய்வம்
கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்
செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். - 2

3906 - தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம். - 3

3907 - என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்
என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்
பொய்யாத தெய்வம்இடர் செய்யாத தெய்வம்
அன்னியம்அல் லாததெய்வம் அறிவான தெய்வம்
அவ்வறிவுக் கறிவாம்என் அன்பான தெய்வம்
சென்னிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். - 4

3908 - எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்
எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம்
நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்
நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்
பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்
பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்
திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். - 5

3909 - இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்
இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்
எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்
எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்
பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்
பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம்
செச்சைமலர்267 எனவிளங்குந் திருமேனித் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். - 6

- - 267. செச்சைமலர் - வெட்சிமலர். முதற்பதிப்பு.

3910 - சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். - 7

3911 - தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்
துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்
மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்
மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்
ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்
ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்
தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். - 8

3912 - எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம்
எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம்
அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம்
அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம்
ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்
ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம்
செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். - 9

3913 - சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம்
சத்திகள்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம்
நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா
நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்
பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப்
பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம்
சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். - 10

42. பேரானந்தப் பெருநிலை

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


3914. - அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
ஆனந்த போகமே அமுதே
மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
மன்னும்என் ஆருயிர்த் துணையே
துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே
தூயவே தாந்தத்தின் பயனே
பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே. - 1

3915 - திருவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
தெய்வமே மெய்ப்பொருட் சிவமே
உருவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
ஓங்கும்என் உயிர்ப்பெருந் துணையே
ஒருதனித் தலைமை அருள்வெளி நடுவே
உவந்தர சளிக்கின்ற அரசே
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே. - 2

3916 - துதிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
சோதியுட் சோதியே எனது
மதிவளர் மருந்தே மந்திர மணியே
மன்னிய பெருங்குண மலையே
கதிதரு துரியத் தனிவெளி நடுவே
கலந்தர சாள்கின்ற களிப்பே
பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே. - 3

3917 - சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ்
செல்வமே என்பெருஞ் சிறப்பே
நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே
நிறைஒளி வழங்கும்ஓர் வெளியே
ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத்
திருந்தர சளிக்கின்ற பதியே
பாருறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே. - 4

3918 - உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
ஒள்ளிய தெள்ளிய ஒளியே
வரைவளர் மருந்தே மவுனமந் திரமே
மந்திரத் தாற்பெற்ற மணியே
நிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில்
நிறைந்தர சாள்கின்ற நிதியே
பரையுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே. - 5

3919 - மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
மெய்யறி வானந்த விளக்கே
கால்வளர் கனலே கனல்வளர் கதிரே
கதிர்நடு வளர்கின்ற கலையே
ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப்
பால்அர சாள்கின்ற அரசே
பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே. - 6 <

3920 - இசைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
இன்பமே என்னுடை அன்பே
திசைவளர் அண்ட கோடிகள் அனைத்தும்
திகழுறத் திகழ்கின்ற சிவமே
மிசையுறு மௌன வெளிகடந் ததன்மேல்
வெளிஅர சாள்கின்ற பதியே
பசையுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே. - 7

3921 - அருள்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
அரும்பெருஞ் சோதியே எனது
பொருள்வளர் அறிவுக் கறிவுதந் தென்னைப்
புறம்விடா தாண்டமெய்ப் பொருளே
மருவும்ஓர் நாத வெளிக்குமேல் வெளியில்
மகிழ்ந்தர சாள்கின்ற வாழ்வே
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே. - 8

3922 - வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
மாபெருங் கருணைஎம் பதியே
ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா
உலகமும் நிறைந்தபே ரொளியே
மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால்
வயங்கும்ஓர் வெளிநடு மணியே
பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே. - 9

3923 - தலம்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
தனித்தமெய்ப் பொருட்பெருஞ் சிவமே
நலம்வளர் கருணை நாட்டம்வைத் தெனையே
நண்புகொண் டருளிய நண்பே
வலமுறு நிலைகள் யாவையுங் கடந்து
வயங்கிய தனிநிலை வாழ்வே
பலமுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே. - 10

43. திருவடி நிலை

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


3924. - உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள்
உவப்பிலா அண்டத்தின் பகுதி
அலகுகாண் பரிய பெரியகூட் டத்த
அவைஎலாம் புறத்திறைச் சார்பில்
விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற்
றிருந்தென விருந்தன மிடைந்தே
இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத்
தென்பர்வான் திருவடி நிலையே. - 1

3925 - தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா
யேச்சுரன் சதாசிவன் விந்து
நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி
நவில்பர சிவம்எனும் இவர்கள்
இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும்
இடதுகாற் கடைவிரல் நகத்தின்
கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற்
கண்டனன் திருவடி நிலையே. - 2

3926 - அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால்
அரன்மயேச் சுரன்சதா சிவன்வான்
படர்தரு விந்து பிரணவப் பிரமம்
பரைபரம் பரன்எனும் இவர்கள்
சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும்
துணையடிப் பாதுகைப் புறத்தே
இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே
ஏத்துவன் திருவடி நிலையே. - 3

3927 - இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்
பிரமன்ஈ சானனே முதலாம்
மகத்துழல் சமய வானவர் மன்றின்
மலரடிப் பாதுகைப் புறத்தும்
புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய
புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்
செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்
தெரிந்தனன் திருவடி நிலையே. - 4

3928 - பொன்வணப் பொருப்பொன் றதுசகு ணாந்தம்
போந்தவான் முடியதாங் கதன்மேல்
மன்வணச் சோதித் தம்பம்ஒன் றதுமா
வயிந்துவாந் தத்ததாண் டதன்மேல்
என்வணச் சோதிக் கொடிபர நாதாந்
தத்திலே இலங்கிய ததன்மேல்
தன்வணம் மணக்கும் ஒளிமல ராகத்
தழுவினன் திருவடி நிலையே. - 5

3929 - மண்முதல் பகர்பொன் வண்ணத்த வுளவான்
மற்றவற் றுட்புறங் கீழ்மேல்
அண்ணுறு நனந்தர் பக்கம்என் றிவற்றின்
அமைந்தன சத்திகள் அவற்றின்
கண்ணுறு சத்தர் எனும்இரு புடைக்கும்
கருதுரு முதலிய விளங்க
நண்ணுறும் உபயம் எனமன்றில் என்று
நவின்றனர் திருவடி நிலையே. - 6

3930 - தொகையள விவைஎன் றறிவரும் பகுதித்
தொல்லையின் எல்லையும் அவற்றின்
வகையொடு விரியும் உளப்பட ஆங்கே
மன்னிஎங் கணும்இரு பாற்குத்
தகையுறு முதலா வணங்கடை யாகத்
தயங்கமற் றதுவது கருவிச்
சிகையுற உபயம் எனமன்றில் ஆடும்
என்பரால் திருவடி நிலையே. - 7

3931 - மன்றஓங் கியமா மாயையின் பேத
வகைதொகை விரிஎன மலிந்த
ஒன்றின்ஒன் றனந்த கோடிகோ டிகளா
உற்றன மற்றவை எல்லாம்
நின்றஅந் நிலையின் உருச்சுவை விளங்க
நின்றசத் திகளொடு சத்தர்
சென்றதி கரிப்ப நடித்திடும் பொதுவில்
என்பரால் திருவடி நிலையே. - 8

3932 - பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப்
பெரியஓங் காரமே முதலா
ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம்
என்றவற் றவண்அவண் இசைந்த
மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து
மன்அதி காரம்ஐந் தியற்றத்
தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும்
என்பரால் திருவடி நிலையே. - 9

3933 - பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப்
பதிவரை நிறுவிஆங் கதன்மேல்
உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்ட
வெறுவெளி எனஉல குணர்ந்த
புரைஅறும் இன்ப அனுபவம் தரற்கோர்
திருவுருக் கொண்டுபொற் பொதுவில்
திரைஅறும் இன்ப நடம்புரி கின்ற
என்பரால் திருவடி நிலையே. - 10

44. காட்சிக் களிப்பு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


3934. - அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை
அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில்
செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச்
சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப்
பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட
பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை
எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. - 1

3935 - பாலானைத் தேனானைப் பழத்தி னானைப்
பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக்
காலானைக் கலைசாகாத் தலையி னானைக்
கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா
மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை
மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி
ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. - 2

3936 - உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண
உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்
கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்
கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்
தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்
தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி
எள்ளானை இடர்தவிர்த்திங் கென்னை ஆண்ட
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. - 3

3937 - உறவானை என்னுயிர்க்குள் உயிரா னானை
உறுபிழைகள் செயினும்அவை உன்னி என்னை
மறவானை அறவாழி வழங்கி னானை
வஞ்சகர்க்குத் திருக்கோயில் வழிக்க பாடந்
திறவானை என்னளவில் திறந்து காட்டிச்
சிற்சபையும் பொற்சபையும் சேர்வித் தானை
இறவானைப் பிறவானை இயற்கை யானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. - 4

3938 - அகத்தானைப் புறத்தானை அணுவா னானை
அணுவினுக்குள் அணுவானை அதனுள் ளானை
மகத்தானை மகத்தினும்ஓர் மகத்தா னானை
மாமகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற
சகத்தானை அண்டமெலாம் தானா னானைத்
தனிஅருளாம் பெருங்கருணைத் தாயா னானை
இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும்
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. - 5

3939 - செய்யானைக் கரியானைப் பசுமை யானைத்
திகழ்ந்திடுபொன் மையினானை வெண்மை யானை
மெய்யானைப் பொய்யானை மெய்பொய் இல்லா
வெளியானை ஒளியானை விளம்பு வார்க்குக்
கையானை என்னையெடுத் தணைத்துக் கொண்ட
கையானை என்னைஎன்றும் கையா தானை
எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை
ஈன்றானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. - 6

3940 - மருந்தானை மணியானை வழுத்தா நின்ற
மந்திரங்க ளானானை வான நாட்டு
விருந்தானை உறவானை நண்பி னானை
மேலானைக் கீழானை மேல்கீழ் என்னப்
பொருந்தானை என்னுயிரில் பொருந்தி னானைப்
பொன்னானைப் பொருளானைப் பொதுவாய் எங்கும்
இருந்தானை இருப்பானை இருக்கின் றானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. - 7

3941 - ஆன்றானை அறிவானை அழிவி லானை
அருட்பெருஞ்ஜோ தியினானை அலர்ந்த ஜோதி
மூன்றானை இரண்டானை ஒன்றானானை
முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில்
தோன்றானைத் தூயருளே தோன்றி னானைச்
சுத்தசிவ சன்மார்க்கந் துலங்க என்னை
ஈன்றானை எல்லாமாய் அல்லா தானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. - 8

3942 - தோய்ந்தானை என்னுளத்தே என்பால் அன்பால்
சூழ்ந்தானை யான்தொடுத்த சொற்பூ மாலை
வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த் தானை
வேதாந்த முடிமுடிமேல் விளங்கி னானை
வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பா னானை
மணிமன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம்
ஈய்ந்தானை(268) ஆய்ந்தவர்தம் இதயத் தானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. - 9

- - (268). ஈந்தானை - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.

3943 - நன்றானை மன்றகத்தே நடிக்கின் றானை
நாடாமை நாடலிவை நடுவே ஓங்கி
நின்றானைப் பொன்றாத நிலையி னானை
நிலைஅறிந்து நில்லாதார் நெஞ்சி லேசம்
ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றா னானை
ஒருசிறியேன் தனைநோக்கி உளம்நீ அஞ்சேல்
என்றானை என்றும்உள இயற்கை யானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. - 10

45. கண்கொளாக் காட்சி

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


3944. - அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்
காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்
தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்
தன்னருளும் தன்பொருளும் தானே என்பால்
கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்
குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை
எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே
ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. - 1

3945 - விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம்
விதித்தானை மெய்ந்நெறியை மெய்யே எற்குத்(269)
தெரித்தானை நடம்பொதுவில் செய்கின் றானைச்
சிறியேனுக் கருள்ஒளியால் சிறந்த பட்டம்
தரித்தானைத் தானேநா னாகி என்றும்
தழைத்தானை எனைத்தடுத்த தடைகள் எல்லாம்
எரித்தானை என்உயிருக் கின்பா னானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. - 2

- - (269). விரைத்தானை மெய்யே என்னை - பி. இரா.பதிப்பு.

3946 - நட்டானை நட்டஎனை நயந்து கொண்டே
நம்மகன்நீ அஞ்சல்என நவின்றென் சென்னி
தொட்டானை எட்டிரண்டும் சொல்லி னானைத்
துன்பமெலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க
ஒட்டானை மெய்அறிவே உருவாய் என்னுள்
உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள
எட்டானை என்னளவில் எட்டி னானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. - 3

3947 - சோற்றானைச்270 சோற்றில்உறும் சுகத்தி னானைத்
துளக்கம்இலாப் பாரானை நீரா னானைக்
காற்றானை வெளியானைக் கனலா னானைக்
கருணைநெடுங் கடலானைக் களங்கர் காணத்
தோற்றானை நான்காணத் தோற்றி னானைச்
சொல்லறியேன் சொல்லியபுன் சொல்லை யெல்லாம்
ஏற்றானை என்னுளத்தில் எய்தி னானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. - 4

- - (270). சோறு - முத்தி. முதற்பதிப்பு. ஈண்டு சோறு என்பது உண்ணும் சோறே.

3948 - சேர்த்தானை என்றனைத்தன் அன்ப ரோடு
செறியாத மனஞ்செறியச் செம்பொற் றாளில்
ஆர்த்தானை அம்பலத்தில் ஆடா நின்ற
ஆனந்த நடத்தானை அருட்கண் நோக்கம்
பார்த்தானைப் பாராரைப் பாரா தானைப்
பார்ப்பறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை
ஈர்த்தானை ஐந்தொழில்நீ இயற்றென் றானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. - 5

3949 - முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே
முளைத்தானை மூவாத முதலா னானைக்
களையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக்
காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம்
விளையானைச் சிவபோகம் விளைவித் தானை
வேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும்
இளையானை மூத்தானை மூப்பி லானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. - 6

3950 - புயலானை மழையானை அதிர்ப்பி னானைப்
போற்றியமின் ஒளியானைப் புனித ஞானச்
செயலானைச் செயலெல்லாந் திகழ்வித் தானைத்
திருச்சிற்றம் பலத்தானைத் தெளியார் உள்ளே
அயலானை உறவானை அன்பு ளானை
அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி
இயலானை எழிலானைப் பொழிலா னானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. - 7

3951 - தாயானைத் தந்தைஎனக் காயி னானைச்
சற்குருவு மானானைத் தமியேன் உள்ளே
மேயானைக் கண்காண விளங்கி னானை
மெய்ம்மைஎனக் களித்தானை வேதஞ் சொன்ன
வாயானை வஞ்சம்இலா மனத்தி னானை
வரங்கொடுக்க வல்லானை மணிமன் றன்றி
ஏயானைத் துரியநடு விருக்கின் றானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. - 8

3952 - தழைத்தானைத் தன்னைஒப்பார் இல்லா தானைத்
தானேதா னானானைத் தமிய னேனைக்
குழைத்தானை என்கையிலோர் கொடைதந் தானைக்
குறைகொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி
அழைத்தானை அருளமுதம் அளிக்கின் றானை
அச்சமெலாம் தவிர்த்தானை அன்பே என்பால்
இழைத்தானை என்னிதயத் திருக்கின் றானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. - 9

3953 - உடையானை அருட்சோதி உருவி னானை
ஓவானை மூவானை உலவா இன்பக்
கொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு
கொண்டானைக் கொல்லாமை குறித்தி டாரை
அடையானைத் திருசிற்றம் பலத்தி னானை
அடியேனுக் கருளமுதம் அளிக்க வேபின்
இடையானை என்னாசை எல்லாந் தந்த
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. - 10

46. இறை திருக்காட்சி

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


3954. - அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை
அருட்பெருஞ் ஜோதியை அரசை
மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை
வள்ளலை மாணிக்க மணியைப்
பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த
புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத்
தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான
தீபத்தைக் கண்டுகொண் டேனே. - 1

3955 - துன்பெலாம் தவிர்த்த துணையைஎன் உள்ளத்
துரிசெலாந் தொலைத்தமெய்ச் சுகத்தை
என்பொலா மணியை என்சிகா மணியை
என்னிரு கண்ணுள்மா மணியை
அன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை
அருட்பெருஞ் ஜோதியை அடியேன்
என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த
எந்தையைக் கண்டுகொண் டேனே. - 2

3956 - சிதத்திலே(271) ஊறித் தெளிந்ததெள் ளமுதைச்
சித்தெலாம் வல்லமெய்ச் சிவத்தைப்
பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப்
பரம்பர வாழ்வைஎம் பதியை
மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த
மருந்தைமா மந்திரந் தன்னை
இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட
இறைவனைக் கண்டுகொண் டேனே. - 4

- - (271). 271. சிதம் - ஞானம்

3957 - உணர்ந்தவர் உளம்போன் றென்னுளத் தமர்ந்த
ஒருபெரும் பதியைஎன் உவப்பைப்
புணர்ந்தெனைக் கலந்த போகத்தை எனது
பொருளைஎன் புண்ணியப் பயனைக்
கொணர்ந்தொரு பொருள்என் கரத்திலே கொடுத்த
குருவைஎண் குணப்பெருங் குன்றை
மணந்தசெங் குவளை மலர்எனக் களித்த
வள்ளலைக் கண்டுகொண் டேனே. - 4

3958 - புல்லிய நெறிநீத் தெனைஎடுத் தாண்ட
பொற்சபை அப்பனை வேதம்
சொல்லிய படிஎன் சொல்எலாம் கொண்ட
ஜோதியைச் சோதியா தென்னை
மல்லிகை மாலை அணிந்துளே கலந்து
மன்னிய பதியைஎன் வாழ்வை
எல்லியும் இரவும் என்னைவிட் டகலா
இறைவனைக் கண்டுகொண் டேனே. - 5

3959 - பண்ணிய தவமும் பலமும்மெய்ப் பலஞ்செய்
பதியுமாம் ஒருபசு பதியை
நண்ணிஎன் உளத்தைத் தன்னுளம் ஆக்கி
நல்கிய கருணைநா யகனை
எண்ணிய படியே எனக்கருள் புரிந்த
இறைவனை மறைமுடி இலங்கும்
தண்ணிய விளக்கைத் தன்னிக ரில்லாத்
தந்தையைக் கண்டுகொண் டேனே. - 6

3960 - பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும்
பிறங்கிய பொதுமையைப் பெரிய
தண்மையை எல்லாம் வல்லஓர் சித்த
சாமியைத் தயாநிதி தன்னை
வண்மையை அழியா வரத்தினை ஞான
வாழ்வைஎன் மதியிலே விளங்கும்
உண்மையை என்றன் உயிரைஎன் உயிருள்
ஒருவனைக் கண்டுகொண் டேனே. - 7

3961 - ஆதியை ஆதி அந்தமீ தெனஉள்
அறிவித்த அறிவைஎன் அன்பைச்
சோதியை எனது துணையைஎன் சுகத்தைச்
சுத்தசன் மார்க்கத்தின் துணிபை
நீதியை எல்லா நிலைகளும் கடந்த
நிலையிலே நிறைந்தமா நிதியை
ஓதியை ஓதா துணர்த்திய வெளியை
ஒளிதனைக் கண்டுகொண் டேனே. - 8

3962 - என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி
என்னைவாழ் விக்கின்ற பதியைப்
பொன்செயல் வகையை உணர்த்திஎன் உளத்தே
பொருந்திய மருந்தையென் பொருளை
வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க
வைத்தசன் மார்க்கசற் குருவைக்
கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக்
கோயிலில் கண்டுகொண் டேனே. - 9

3963 - புன்னிக ரில்லேன் பொருட்டிருட் டிரவில்
போந்தருள் அளித்தசற் குருவைக்
கன்னிகர் மனத்தைக் கரைத்தெனுட் கலந்த
கருணையங் கடவுளைத் தனது
சொன்னிகர் எனஎன் சொல்எலாங் கொண்டே
தோளுறப் புனைந்தமெய்த் துணையைத்
தன்னிக ரில்லாத் தலைவனை எனது
தந்தையைக் கண்டுகொண் டேனே. - 10

3964 - ஏங்கலை மகனே தூங்கலை எனவந்
தெடுத்தெனை அணைத்தஎன் தாயை
ஓங்கிய எனது தந்தையை எல்லாம்
உடையஎன் ஒருபெரும் பதியைப்
பாங்கனில் என்னைப் பரிந்துகொண் டெல்லாப்
பரிசும்இங் களித்ததற் பரத்தைத்
தாங்கும்ஓர் நீதித் தனிப்பெருங் கருணைத்
தலைவனைக் கண்டுகொண் டேனே. - 11

3965 - துன்புறேல் மகனே தூங்கலை எனஎன்
சோர்வெலாந் தவிர்த்தநற் றாயை
அன்புளே கலந்த தந்தையை என்றன்
ஆவியைப் பாவியேன் உளத்தை
இன்பிலே நிறைவித் தருள்உரு வாக்கி
இனிதமர்ந் தருளிய இறையை
வன்பிலாக் கருணை மாநிதி எனும்என்
வள்ளலைக் கண்டுகொண் டேனே. - 12

3966 - நனவினும் எனது கனவினும் எனக்கே
நண்ணிய தண்ணிய அமுதை
மனனுறு மயக்கம் தவிர்த்தருட் சோதி
வழங்கிய பெருந்தயா நிதியைச்
சினமுதல் ஆறுந் தீர்த்துளே அமர்ந்த
சிவகுரு பதியைஎன் சிறப்பை
உனலரும் பெரிய துரியமேல் வெளியில்
ஒளிதனைக் கண்டுகொண் டேனே. - 13

3967 - கரும்பிலின் சாற்றைக் கனிந்தமுக் கனியைக்
கருதுகோற் றேன்நறுஞ் சுவையை
அரும்பெறல் அமுதை அறிவைஎன் அன்பை
ஆவியை ஆவியுட் கலந்த
பெருந்தனிப் பதியைப் பெருஞ்சுகக் களிப்பைப்
பேசுதற் கரும்பெரும் பேற்றை
விரும்பிஎன் உளத்தை இடங்கொண்டு விளங்கும்
விளக்கினைக் கண்டுகொண் டேனே. - 14

3968 - களங்கொளுங் கடையேன் களங்கெலாந் தவிர்த்துக்
களிப்பெலாம் அளித்தசர்க் கரையை
உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா
துள்ளகத் தூறும்இன் அமுதை
வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள்
மணியைஎன் வாழ்க்கைமா நிதியைக்
குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும்
குருவையான் கண்டுகொண் டேனே. - 15

3969 - சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச்
சிதம்பர நடம்புரி சிவத்தைப்
பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப்
பதிசிவ பதத்தைத்தற் பதத்தை
இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை
யாவுமாய் அல்லவாம் பொருளைச்
சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச்
சாமியைக் கண்டுகொண் டேனே. - 16

3970 - ஆரண முடிமேல் அமர்பிர மத்தை
ஆகம முடிஅமர் பரத்தைக்
காரண வரத்தைக் காரிய தரத்தைக்
காரிய காரணக் கருவைத்
தாரண நிலையைத் தத்துவ பதியைச்
சத்திய நித்திய தலத்தைப்
பூரண சுகத்தைப் பூரண சிவமாம்
பொருளினைக் கண்டுகொண் டேனே. - 17

3971 - சுத்தவே தாந்த பிரமரா சியத்தைச்
சுத்தசித் தாந்தரா சியத்தைத்
தத்துவா தீதத் தனிப்பெரும் பொருளைச்
சமரச சத்தியப் பொருளைச்
சித்தெலாம் வல்ல சித்தைஎன் அறிவில்
தெளிந்தபே ரானந்தத் தெளிவை
வித்தமா வெளியைச் சுத்தசிற் சபையின்
மெய்மையைக் கண்டுகொண் டேனே. - 18

3972 - சமயமும் மதமும் கடந்ததோர் ஞான
சபைநடம் புரிகின்ற தனியைத்
தமைஅறிந் தவருட் சார்ந்தமெய்ச் சார்வைச்
சத்துவ நித்தசற் குருவை
அமையஎன் மனத்தைத் திருத்திநல் லருளா
ரமுதளித் தமர்ந்தஅற் புதத்தை
நிமலநிற் குணத்தைச் சிற்குணா கார
நீதியைக் கண்டுகொண் டேனே. - 19

3973 - அளவைகள் அனைத்தும் கடந்துநின் றோங்கும்
அருட்பெருஞ் சோதியை உலகக்
களவைவிட் டவர்தங் கருத்துளே விளங்கும்
காட்சியைக் கருணையங் கடலை
உளவைஎன் றனக்கே உரைத்தெலாம் வல்ல
ஒளியையும் உதவிய ஒளியைக்
குளவயின் நிறைந்த குருசிவ பதியைக்
கோயிலில் கண்டுகொண் டேனே. - 20

3974 - சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த
சமரச சத்திய வெளியைச்
சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த்
துலங்கிய ஜோதியைச் சோதிப்
பார்பெறாப் பதத்தைப் பதமெலாங் கடந்த
பரமசன் மார்க்கமெய்ப் பதியைச்
சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத்
தெய்வத்தைக் கண்டுகொண் டேனே. - 21

3975 - அடிநடு முடியோர் அணுத்துணை யேனும்
அறிந்திடப் படாதமெய் அறிவைப்
படிமுதல் அண்டப் பரப்பெலாங் கடந்த
பதியிலே விளங்குமெய்ப் பதியைக்
கடியஎன் மனனாங் கல்லையும் கனியிற்
கடைக்கணித் தருளிய கருணைக்
கொடிவளர் இடத்துப் பெருந்தயா நிதியைக்
கோயிலில் கண்டுகொண் டேனே. - 22

3976 - பயமும்வன் கவலை இடர்முதல் அனைத்தும்
பற்றறத் தவிர்த்தருட் பரிசும்
நயமும்நற் றிருவும் உருவும்ஈங் கெனக்கு
நல்கிய நண்பைநன் னாத
இயமுற வெனது குளநடு நடஞ்செய்
எந்தையை என்னுயிர்க் குயிரைப்
புயனடு விளங்கும் புண்ணிய ஒளியைப்
பொற்புறக் கண்டுகொண் டேனே. - 23

3977 - கலைநிறை மதியைக் கனலைச்செங் கதிரைக்
ககனத்தைக் காற்றினை அமுதை
நிலைநிறை அடியை அடிமுடி தோற்றா
நின்மல நிற்குண நிறைவை
மலைவறும் உளத்தே வயங்குமெய் வாழ்வை
வரவுபோக் கற்றசின் மயத்தை
அலையறு கருணைத் தனிப்பெருங் கடலை
அன்பினிற் கண்டுகொண் டேனே. - 24

3978 - மும்மையை எல்லாம் உடையபே ரரசை
முழுதொருங் குணர்த்திய உணர்வை
வெம்மையைத் தவிர்த்திங் கெனக்கரு ளமுதம்
வியப்புற அளித்தமெய் விளைவைச்
செம்மையை எல்லாச் சித்தியும் என்பால்
சேர்ந்திடப் புரிஅருட் டிறத்தை
அம்மையைக் கருணை அப்பனை என்பே
ரன்பனைக் கண்டுகொண் டேனே. - 25

3979 - கருத்தனை எனது கண்அனை யவனைக்
கருணையா ரமுதெனக் களித்த
ஒருத்தனை என்னை உடையநா யகனை
உண்மைவே தாகம முடியின்
அருத்தனை வரனை அபயனைத் திருச்சிற்
றம்பலத் தருள்நடம் புரியும்
நிருத்தனை எனது நேயனை ஞான
நிலையனைக் கண்டுகொண் டேனே. - 26

3980 - வித்தெலாம் அளித்த விமலனை எல்லா
விளைவையும் விளைக்கவல் லவனை
அத்தெலாங்(272) காட்டும் அரும்பெறல் மணியை
ஆனந்தக் கூத்தனை அரசைச்
சத்தெலாம் ஆன சயம்புவை ஞான
சபைத்தனித் தலைவனைத் தவனைச்
சித்தெலாம் வல்ல சித்தனை ஒன்றாந்
தெய்வத்தைக் கண்டுகொண் டேனே. - 27

- - (272). அத்து - செந்நிறம். முதற்பதிப்பு.

3981 - உத்தர ஞான சித்திமா புரத்தின்
ஓங்கிய ஒருபெரும் பதியை
உத்தர ஞான சிதம்பர ஒளியை
உண்மையை ஒருதனி உணர்வை
உத்தர ஞான நடம்புரி கின்ற
ஒருவனை உலகெலாம் வழுத்தும்
உத்தர ஞான சுத்தசன் மார்க்கம்
ஓதியைக் கண்டுகொண் டேனே. - 28

3982 - புலைகொலை தவிர்த்த நெறியிலே என்னைப்
புணர்த்திய புனிதனை எல்லா
நிலைகளும் காட்டி அருட்பெரு நிலையில்
நிறுத்திய நிமலனை எனக்கு
மலைவறத் தெளிந்த அமுதளித் தழியா
வாழ்க்கையில் வாழவைத் தவனைத்
தலைவனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
தந்தையைக் கண்டுகொண் டேனே. - 29

3983 - பனிஇடர் பயந்தீர்த் தெனக்கமு தளித்த
பரமனை என்னுளே பழுத்த
கனிஅனை யவனை அருட்பெருஞ் சோதிக்
கடவுளைக் கண்ணினுள் மணியைப்
புனிதனை எல்லாம் வல்லஓர் ஞானப்
பொருள்எனக் களித்தமெய்ப் பொருளைத்
தனியனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
தந்தையைக் கண்டுகொண் டேனே. - 30

47. உளம் புகுந்த திறம் வியத்தல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


3984. - வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே
தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே
திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும்
நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே
நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என்
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன்
உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே. - 1

3985 - படிசெய்பிர மன்முதலோர் பற்பலநாள் வருந்திப்
பன்மணிகள் ஒளிவிளங்கப் பதித்தசிங்கா தனத்தே
அடிசெய்தெழுந் தருளிஎமை ஆண்டருளல் வேண்டும்
அரசேஎன் றவரவரும் ஆங்காங்கே வருந்த
வடிசெய்மறை முடிநடுவே மன்றகத்தே நடிக்கும்
மலரடிகள் சிவப்பஒரு வளமும்இலா அசுத்தக்
குடிசைநுழைந் தனையேஎன் றேசுவரே அன்பர்
கூசாமல் என்னுளமாம் குடிசைநுழைந் தனையே. - 2

3986 - உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும்
ஒருசிறிதும் தடையிலதாய் ஒளியதுவே மயமாய்
வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும்
வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த
வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின்
வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கியபேர் இன்பம்
கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே. - 3

3987 - தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த்
தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு
விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே
விளங்குகின்ற சத்தியமா மேடையிலே அமர்ந்த
நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது
நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானஅமு தளித்தாய்
கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன்
குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே. - 4

3988 - இறையளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய்
இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும்முத லிடமாய்
மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய்
மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த
நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன்
நினைத்தஎலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே
குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே. - 5

3989 - உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்
உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய்
மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த
வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே
திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே
சிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய்
குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன்
குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே. - 6

3990 - மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய்
வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய்
வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஒரு வெளியில்
மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே
எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய்
இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக்
குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே. - 7

3991 - சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும்
செல்லாத நிலைஅதுவாய் எல்லாம்வல் லதுவாய்
பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப்
பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே
தரங்குலவ அமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது
சார்படைந்தென் எண்ணமெலாம் தந்தனைஎன் அரசே
குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே. - 8

3992 - பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம்
பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும்
உற்றறிதற்(273) கரியஒரு பெருவெளிமேல் வெளியில்
ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள்
பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே
பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய்(274) அரசே
கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன்
குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே. - 9

- - (273). உற்றிடுதற் - படிவேறுபாடு. ஆ. பா.
(274). பிறங்கவைத்த - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க.

3993 - கருவியொடு கரணமெலாம் கடந்துகடந் ததன்மேல்
காட்சியெலாம் கடந்ததன்மேல் காணாது கடந்து
ஒருநிலையின் அனுபவமே உருவாகிப் பழுத்த
உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும்ஒரு வெளியில்
மருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள்
மலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வழங்கினைஇன் புறவே
குருமணியே என்னரசே எனக்கிதுபோ தாதோ
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே. - 10

48. வரம்பில் வியப்பு

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


3994. - பொன்புனை புயனும் அயனும்மற் றவரும்
புகலரும் பெரியஓர் நிலையில்
இன்புரு வாகி அருளொடும் விளங்கி
இயற்றலே ஆதிஐந் தொழிலும்
தன்பொதுச் சமுகத் தைவர்கள் இயற்றத்
தனிஅர சியற்றும்ஓர் தலைவன்
அன்பெனும் குடிசை நுழைந்தன னானால்
அவன்தனை மறுப்பவர் யாரே. - 1

3995 - மன்பதை வகுக்கும் பிரமர்நா ரணர்கள்
மன்னுருத் திரர்களே முதலா
ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங்
குறுபெருந் தொழில்பல இயற்றி
இன்புறச் சிறிதே கடைக்கணித் தருளி
இலங்கும்ஓர் இறைவன்இன் றடியேன்
அன்பெனும் குடிசை நுழைந்தனன் அந்தோ
அவன்தனை மறுப்பவர் யாரே. - 2

3996 - தன்னிக ரில்லாத் தலைவஎன் றரற்றித்
தனித்தனி மறைகள்ஆ கமங்கள்
உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா
ஒருதனிப் பெரும்பதி உவந்தே
புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள்
பொறுத்தருட் பூரண வடிவாய்
என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ
எந்தையைத் தடுப்பவர் யாரே. - 3

3997 - பால்வகை ஆணோ பெண்கொலோ இருமைப்
பாலதோ பால்உறா அதுவோ
ஏல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதி
இயற்கையோ ஆதியின் இயல்போ
மேல்வகை யாதோ எனமறை முடிகள்
விளம்பிட விளங்கும்ஓர் தலைவன்
மால்வகை மனத்தேன் உளக்குடில் புகுந்தான்
வள்ளலைத் தடுப்பவர் யாரே. - 4

3998 - வரம்பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா
வருபர உணர்ச்சியும் மாட்டாப்
பரம்பர உணர்ச்சி தானும்நின் றறியாப்
பராபர உணர்ச்சியும் பற்றா
உரம்பெற உணர்வார் யார்எனப் பெரியர்
உரைத்திட ஓங்கும்ஓர் தலைவன்
கரம்பெறு கனிபோல் என்னுளம் புகுந்தான்
கடவுளைத் தடுப்பவர் யாரே. - 5

3999 - படைத்திடல் முதல்ஐந் தொழில்புரிந் திலங்கும்
பரம்பர ஒளிஎலாம் அணுவில்
கிடைத்திடக் கீழ்மேல் நடுஎனக் காட்டாக்
கிளர்ஒளி யாய்ஒளிக் கெல்லாம்
அடைத்தகா ரணமாய்க் காரணங் கடந்த
அருட்பெருஞ் ஜோதியாம் ஒருவன்
கடைத்தனிச் சிறியேன் உளம்புகுந் தமர்ந்தான்
கடவுளைத் தடுப்பவர் யாரே. - 6

4000 - அளவெலாங் கடந்த பெருந்தலை அண்ட
அடுக்கெலாம் அம்மஓர் அணுவின்
பிளவில்ஓர் கோடிக் கூற்றில்ஒன் றாகப்
பேசநின் றோங்கிய பெரியோன்
களவெலாந் தவிர்த்தென் கருத்தெலாம் நிரப்பிக்
கருணையா ரமுதளித் துளமாம்
வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ
வள்ளலைத் தடுப்பவர் யாரே. - 7

4001 - உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில்
உளவுயிர் முழுவதும் ஒருங்கே
கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும்
குறைபடாப் பெருங்கொடைத் தலைவன்
கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக்
கருத்தெலாம் இனிதுதந் தருளித்
தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான்
தந்தையைத் தடுப்பவர் யாரே. - 8

4002 - அறிந்தன அறிந்தாங் கறிந்தறிந் தறியா
தையகோ ஐயகோ அறிவின்
மறிந்தன மயர்ந்தேம் எனமறை அனந்தம்
வாய்குழைந் துரைத்துரைத் துரையும்
முறிந்திட வாளா இருந்தஎன் றறிஞர்
மொழியும்ஓர் தனிப்பெருந் தலைவன்
செறிந்தென துளத்தில் சேர்ந்தனன் அவன்றன்
திருவுளம் தடுப்பவர் யாரே. - 9

4003 - கருமுதற் கருவாய்க் கருவினுட் கருவாய்க்
கருஎலாங் காட்டும்ஓர் கருவாய்க்
குருமுதற் குருவாய்க் குருஎலாங் கிடைத்த
கொள்கையாய்க் கொள்கையோ டளவா
அருமுதல் அருவாய் அல்லவாய் அப்பால்
அருட்பெருஞ் ஜோதியாந் தலைவன்
மருவிஎன் உளத்தில் புகுந்தனன் அவன்தன்
வண்மையைத் தடுப்பவர் யாரே. - 10

49. கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


4004. - அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியைஎன்
அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத்
தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை
மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த
வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக்
கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே. - 1

4005 - திருத்தகுவே தாந்தமொடு சித்தாந்த முதலாத்
திகழ்கின்ற அந்தமெலாம் தேடியுங்கண் டறியா
ஒருத்தனைஉள் ளொளியைஒளிர் உள்ளொளிக்குள் ஒளியை
உள்ளபடி உள்ளவனை உடையபெருந் தகையை
நிருத்தனைமெய்ப் பொருளான நின்மலனைச் சிவனை
நித்தியனைச் சத்தியனை நிற்குணனை எனது
கருத்தனைச்சிற் சபையோங்கு கடவுளைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே. - 2

4006 - பாட்டுவந்து பரிசளித்த பதியைஅருட் பதியைப்
பசுபதியைக் கனகசபா பதியைஉமா பதியைத்
தேட்டமிகும் பெரும்பதியைச் சிவபதியை எல்லாம்
செய்யவல்ல தனிப்பதியைத் திகழ்தெய்வப் பதியை
ஆட்டியல்செய் தருள்பரம பதியைநவ பதியை
ஆனந்த நாட்டினுக்கோர் அதிபதியை ஆசை
காட்டிஎனை மணம்புரிந்தென் கைபிடித்த பதியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே. - 3

4007 - மதித்திடுதல் அரியஒரு மாணிக்க மணியை
வயங்கியபே ரொளியுடைய வச்சிரமா மணியைத்
துதித்திடுவே தாகமத்தின் முடிமுடித்த மணியைச்
சுயஞ்சோதித் திருமணியைச் சுத்தசிவ மணியை
விதித்தல்முதல் தொழில்இயற்று வித்தகுரு மணியை
விண்மணியை அம்மணிக்குள் விளங்கியமெய்ம் மணியைக்
கதித்தசுக மயமணியைச் சித்தசிகா மணியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே. - 4

4008 - மாற்றைஅளந் தறிந்திலம்என் றருமறைஆ கமங்கள்
வழுத்தமணி மன்றோங்கி வயங்கும்அருட் பொன்னை
ஆற்றல்மிகு பெரும்பொன்னை ஐந்தொழிலும் புரியும்
அரும்பொன்னை என்தன்னை ஆண்டசெழும் பொன்னைத்
தேற்றமிகு பசும்பொன்னைச் செம்பொன்னை ஞான
சிதம்பரத்தே விளங்கிவளர் சிவமயமாம் பொன்னைக்
காற்றனல்ஆ காயம்எலாம் கலந்தவண்ணப் பொன்னைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே. - 5

4009 - ஆய்தருவே தாகமத்தின் அடிமுடிநின் றிலங்கும்
அரியபெரும் பொருளைஅவைக் கனுபவமாம் பொருளை
வேய்தருதத் துவப்பொருளைத் தத்துவங்கள் விளங்க
விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும்
தோய்தரல்இல் லாததனிச் சுயஞ்சோதிப் பொருளைச்
சுத்தசிவ மயமான சுகாதீதப் பொருளைக்
காய்தரல்இல் லாதென்னைக் காத்தஅருட் பொருளைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே. - 6

4010 - திருத்தமிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச்
சித்தர்களும் சிருட்டிசெயும் திறத்தர்களும் காக்கும்
அருத்தமிகு தலைவர்களும் அடக்கிடல்வல் லவரும்
அலைபுரிகின் றவர்களும்உள் அனுக்கிரகிப் பவரும்
பொருத்துமற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம்
பொருள்எதுவோ எனத்தேடிப் போகஅவர் அவர்தம்
கருத்தில்ஒளித் திருக்கின்ற கள்வனைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே. - 7

4011 - கோணாத நிலையினராய்க் குறிகுணங்கண் டிடவும்
கூடாத வண்ணம்மலைக் குகைமுதலாம் இடத்தில்
ஊணாதி விடுத்துயிர்ப்பை அடக்கிமனம் அடக்கி
உறுபொறிகள் அடக்கிவரும் உகங்கள்பல கோடித்
தூணாக அசைதல்இன்றித் தூங்காது விழித்த
தூயசதா நிட்டர்களும் துரியநிலை இடத்தும்
காணாத வகைஒளித்த கள்வனைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே. - 8

4012 - நீட்டாய சித்தாந்த நிலையினிடத் தமர்ந்தும்
நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத் திருந்தும்
ஆட்டாய போதாந்தம் அலைவறுநா தாந்தம்
ஆதிமற்றை அந்தங்கள் அனைத்தினும்உற் றறிந்தும்
வேட்டாசைப் பற்றனைத்தும் விட்டுலகம் போற்ற
வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக்
காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே. - 9

4013 - மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல
வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத்
தருணமது தெரிந்தெனக்குத் தானேவந் தளித்த
தயாநிதியை எனைஈன்ற தந்தையைஎன் தாயைப்
பொருள்நிறைசிற் றம்பலத்தே விளங்குகின்ற பதியைப்
புகல்அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக்
கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே. - 10

50. ஆண்டருளிய அருமையை வியத்தல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


4014. - அம்பலத் தாடும் அமுதமே என்கோ அடியனேன் ஆருயிர் என்கோ
எம்பலத் தெல்லாம் வல்லசித் தென்கோ என்னிரு கண்மணி என்கோ
நம்பிடில் அணைக்கும் நற்றுணை என்கோ நான்பெற்ற பெருஞ்செல்வம் என்கோ
இம்பர்இப் பிறப்பே மெய்ப்பிறப் பாக்கி என்னைஆண் டருளிய நினையே. - 1

4015 - அம்மையே என்கோ அப்பனே என்கோ அருட்பெருஞ் சோதியே என்கோ
செம்மையே எல்லாம் வல்லசித் தென்கோ திருச்சிற்றம் பலத்தமு தென்கோ
தம்மையே உணர்ந்தார் உளத்தொளி என்கோ தமியனேன் தனித்துணை என்கோ
இம்மையே அழியாத் திருஉரு அளித்திங் கென்னைஆண் டருளிய நினையே. - 2

4016 - எய்ப்பிலே கிடைத்த வைப்பது என்கோ
என்னுயிர்க் கின்பமே என்கோ
துய்ப்பிலே நிறைந்த பெருங்களிப் பென்கோ
சோதியுட் சோதியே என்கோ
தப்பெலாம் பொறுத்த தயாநிதி என்கோ
தனிப்பெருந் தலைவனே என்கோ
இப்பிறப் பதிலே மெய்ப்பயன் அளித்திங்
கென்னைஆண் டருளிய நினையே. - 3

4017 - அச்சம்நீக் கியஎன் ஆரியன் என்கோ
அம்பலத் தெம்பிரான் என்கோ
நிச்சலும் எனக்கே கிடைத்தவாழ் வென்கோ
நீடும்என் நேயனே என்கோ
பிச்சனேற் களித்த பிச்சனே என்கோ
பெரியரிற் பெரியனே என்கோ
இச்சகத் தழியாப் பெருநலம் அழித்திங்
கென்னைஆண் டருளிய நினையே. - 4

4018 - அத்தம்நேர் கிடைத்த சுவைக்கனி என்கோ
அன்பிலே நிறைஅமு தென்கோ
சித்தெலாம் வல்ல சித்தனே என்கோ
திருச்சிற்றம் பலச்சிவம் என்கோ
மத்தனேன் பெற்ற பெரியவாழ் வென்கோ
மன்னும்என் வாழ்முதல் என்கோ
இத்தனிப் பிறப்பை நித்தியம் ஆக்கி
என்னைஆண் டருளிய நினையே. - 5

4019 - மறப்பெலாம் தவிர்த்த மதிஅமு தென்கோ
மயக்கநீத் தருள்மருந் தென்கோ
பறப்பெலாம் ஒழித்த பதிபதம் என்கோ
பதச்சுவை அனுபவம் என்கோ
சிறப்பெலாம் எனக்கே செய்ததாய் என்கோ
திருச்சிற்றம் பலத்தந்தை என்கோ
இறப்பிலா வடிவம் இம்மையே அளித்திங்
கென்னைஆண் டருளிய நினையே. - 6

4020 - அன்பிலே பழுத்த தனிப்பழம் என்கோ
அறிவிலே அறிவறி வென்கோ
இன்பிலே நிறைந்த சிவபதம் என்கோ
என்னுயிர்த் துணைப்பதி என்கோ
வன்பிலா மனத்தே வயங்கொளி என்கோ
மன்னும்அம் பலத்தர சென்கோ
என்புரி அழியாப் பொன்புரி ஆக்கி
என்னைஆண் டருளிய நினையே. - 7

4021 - தடையிலா தெடுத்த அருளமு தென்கோ
சர்க்கரைக் கட்டியே என்கோ
அடைவுறு வயிரக் கட்டியே என்கோ
அம்பலத் தாணிப்பொன் என்கோ
உடைய மாணிக்கப் பெருமலை என்கோ
உள்ளொளிக் குள்ளொளி என்கோ
இடைதல்அற் றோங்கும் திருஅளித் திங்கே
என்னைஆண் டருளிய நினையே. - 8

4022 - மறைமுடி விளங்கு பெரும்பொருள் என்கோ
மன்னும்ஆ கமப்பொருள் என்கோ
குறைமுடித் தருள்செய் தெய்வமே என்கோ
குணப்பெருங் குன்றமே என்கோ
பிறைமுடிக் கணிந்த பெருந்தகை என்கோ
பெரியஅம் பலத்தர சென்கோ
இறைமுடிப் பொருள்என் உளம்பெற அளித்திங்
கென்னைஆண் டருளிய நினையே. - 9

4023 - என்உளம் பிரியாப் பேர்ஒளி என்கோ
என்உயிர்த் தந்தையே என்கோ
என்உயிர்த் தாயே இன்பமே என்கோ
என்உயிர்த் தலைவனே என்கோ
என்உயிர் வளர்க்கும் தனிஅமு தென்கோ
என்னுடை நண்பனே என்கோ
என்ஒரு(275) வாழ்வின் தனிமுதல் என்கோ
என்னைஆண் டருளிய நினையே. - 10

- - (275).என்பெரு - பி. இரா. பதிப்பு.

51. இறைவனை ஏத்தும் இன்பம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


4024. - கருணைமா நிதியே என்னிரு கண்ணே
கடவுளே கடவுளே என்கோ
தருணவான் அமுதே என்பெருந் தாயே
தந்தையே தந்தையே என்கோ
தெருள்நிறை மதியே என்குரு பதியே
தெய்வமே தெய்வமே என்கோ
அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி
ஆண்டவ நின்றனை அறிந்தே. - 1

4025 - ஒட்டியே என்னுள் உறும்ஒளி என்கோ
ஒளிஎலாம் நிரம்பிய நிலைக்கோர்
வெட்டியே என்கோ வெட்டியில்(276) எனக்கு
விளங்குறக் கிடைத்தஓர் வயிரப்
பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே
பெரியவர் வைத்ததோர் தங்கக்
கட்டியே என்கோ அம்பலத் தாடும்
கருணையங் கடவுள்நின் றனையே. - 2

- - (276) கெட்டியே என்கோ கெட்டியில் - முதற்பதிப்பு., பொ. சு. பதிப்பு.

4026 - துன்பெலாம் தவிர்த்த துணைவனே என்கோ
சோதியுட் சோதியே என்கோ
அன்பெலாம் அளித்த அன்பனே என்கோ
அம்மையே அப்பனே என்கோ
இன்பெலாம் புரிந்த இறைவனே என்கோ
என்உயிர்க் கின்அமு தென்கோ
என்பொலா மணியே என்கணே என்கோ
என்னுயிர் நாதநின் றனையே. - 3

4027 - கருத்தனே எனது கருத்தினுக் கிசைந்த
கணவனே கணவனே என்கோ
ஒருத்தனே எல்லாம் உடையநா யகனே
ஒருதனிப் பெரியனே என்கோ
திருத்தனே எனது செல்வமே எல்லாம்
செயவல்ல சித்தனே என்கோ
நிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ
நிறைஅருட் சோதிநின் றனையே. - 4

4028 - தாயனே எனது தாதையே ஒருமைத்
தலைவனே தலைவனே என்கோ
பேயனேன் பிழையைப் பொறுத்தருள் புரிந்த
பெருந்தகைப் பெரும்பதி என்கோ
சேயனேன் பெற்ற சிவபதம் என்கோ
சித்தெலாம் வல்லசித் தென்கோ
தூயனே எனது நேயனே என்கோ
சோதியுட் சோதிநின் றனையே. - 5

4029 - அரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும்
ஆனந்தத் தனிமலர் என்கோ
கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ
கடையனேன் உடையநெஞ் சகமாம்
இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி
இலங்கும்ஓர் பசும்பொனே என்கோ
துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ
சோதியுட் சோதிநின் றனையே. - 6

4030 - தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த
சர்க்கரை அமுதமே என்கோ
மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த
முகநகைக் கணவனே என்கோ
போகமுள் விரும்பும் போதிலே வலிந்து
புணர்ந்தஓர் பூவையே என்கோ
ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த
அம்பலத் தாடிநின் றனையே. - 7

4031 - தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த
தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ
சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந்
தனில்உறும் அனுபவம் என்கோ
ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள்
ஓங்கிய ஒருமையே என்கோ
சித்துவந் தாடுஞ் சித்தனே என்கோ
திருச்சிற்றம் பலத்தவ நினையே. - 8

4032 - யோகமெய்ஞ் ஞானம் பலித்தபோ துளத்தில்
ஓங்கிய காட்சியே என்கோ
ஏகமெய்ஞ் ஞான யோகத்திற் கிடைத்துள்
இசைந்தபே ரின்பமே என்கோ
சாகலைத் தவிர்த்தென் தன்னைவாழ் விக்கச்
சார்ந்தசற் குருமணி என்கோ
மாகமும் புவியும் வாழ்வுற மணிமா
மன்றிலே நடிக்கின்றோய் நினையே. - 9

4033 - இரவிலா தியம்பும் பகலிலா திருந்த
இயற்கையுள் இயற்கையே என்கோ
வரவிலா வுரைக்கும் போக்கிலா நிலையில்(277)
வயங்கிய வான்பொருள் என்கோ
திரையிலா தெல்லாம் வல்லசித் தெனக்கே
செய்ததோர் சித்தனே என்கோ
கரவிலா தெனக்குப் பேரருட் சோதி
களித்தளித் தருளிய நினையே. - 10

- - (277) நிலைக்கும் - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.

52. பாமாலை ஏற்றல்

நேரிசை வெண்பா


4034. - நான்புனைந்த சொன்மாலை நன்மாலை என்றருளித்
தான்புனைந்தான் ஞான சபைத்தலைவன் - தேன்புனைந்த
சொல்லாள் சிவகாம சுந்தரியைத் தோள்புணர்ந்த
நல்லான்தன் தாட்கே நயந்து. - 1

4035 - சொல்லுகின்ற என்சிறுவாய்ச் சொன்மாலை அத்தனையும்
வெல்லுகின்ற தும்பைஎன்றே மேல்அணிந்தான் - வல்லிசிவ
காம சவுந்தரிக்குக் கண்ணனையான் ஞானசபைச்
சேமநட ராஜன் தெரிந்து. - 2

4036 - ஏதாகு மோஎனநான் எண்ணி இசைத்தஎலாம்
வேதாக மம்என்றே மேல்அணிந்தான் - பாதார
விந்தம் எனதுசிர மேல்அமர்த்தி மெய்அளித்த
எந்தைநட ராஜன் இசைந்து. - 3

4037 - இன்உரைஅன் றென்றுலகம் எல்லாம் அறிந்திருக்க
என்உரையும் பொன்உரைஎன் றேஅணிந்தான் - தன்உரைக்கு
நேர்என்றான் நீடுலகில் நின்போல் உரைக்கவல்லார்
ஆர்என்றான் அம்பலவன் ஆய்ந்து. - 4

4038 - என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன்என்
தன்பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக்
காலையிலே வந்து கருணைஅளித் தேதருமச்
சாலையிலே வாஎன்றான் தான். - 5

4039 - என்னே அதிசயம்ஈ திவ்வுலகீர் என்னுரையைப்
பொன்னே எனமேற் புனைந்துகொண்டான் - தன்னேரில்
நல்ஆ ரணங்கள்எலாம் நாணியவே எல்லாஞ்செய்
வல்லான் திருக்கருணை வாய்ப்பு. - 6

4040 - முன்பின்அறி யாது மொழிந்தமொழி மாலைஎலாம்
அன்பின் இசைந் தந்தோ அணிந்துகொண்டான் - என்பருவம்
பாராது வந்தென் பருவரல்எல் லாம்தவிர்த்துத்
தாரா வரங்களெலாம் தந்து. - 7

4041 - பொன்னொப்ப தாம்ஒருநீ போற்றியசொன் மாலைஎன்றே
என்னப்பன் என்சொல் இசைந்தணிந்தான் - தன்ஒப்பில்
வல்லான் இசைந்ததுவே மாமாலை அற்புதம்ஈ
தெல்லாம் திருவருட்சீ ரே. - 8

4042 - பின்முன்அறி யேன்நான் பிதற்றியசொன் மாலைஎலாம்
தன்முன்அரங் கேற்றெனவே தான்உரைத்தான் - என்முன்
இருந்தான்என் னுள்ளே இருக்கின்றான் ஞான
மருந்தான்சிற் றம்பலத்தான் வாய்ந்து. - 9

4043 - நீயேஎன் பிள்ளைஇங்கு நின்பாட்டில் குற்றம்ஒன்றும்
ஆயேம்என் றந்தோ அணிந்துகொண்டான் - நாயேன்செய்
புண்ணியம்இவ் வானிற் புவியின் மிகப்பெரிதால்
எண்ணியஎல் லாம்புரிகின் றேன். - 10

4044 - எண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க
நண்ணுகின்ற தென்புகல்வேன் நானிலத்தீர் - உண்ணுகின்ற
உள்ளமுதோ நான்தான் உஞற்றுதவத் தாற்கிடைத்த
தெள்ளமுதோ அம்பலவன் சீர். - 11

4045 - ஆக்கி அளித்தல்முதல் ஆந்தொழில்ஓர் ஐந்தினையும்
தேக்கி அமுதொருநீ செய்என்றான் - தூக்கி
எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம்
கொடுத்தான்சிற் றம்பலத்தென் கோ. - 12

53. உத்தரஞானசிதம்பர மாலை

கட்டளைக் கலித்துறை


4046. - அருளோங்கு கின்ற தருட்பெருஞ் சோதி யடைந்ததென்றன்
மருளோங்கு றாமல் தவிர்த்தது நல்ல வரமளித்தே
பொருளோங்கி நான்அருட் பூமியில் வாழப் புரிந்ததென்றும்
தெருளோங்க ஓங்குவ துத்தர ஞான சிதம்பரமே. - 1

4047 - இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல
துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை
அணைஎன் றணைத்துக்கொண் டைந்தொழில் ஈந்த தருளுலகில்
திணைஐந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே. - 2

4048 - உலகம் எலாந்தொழ உற்ற தெனக்குண்மை ஒண்மைதந்தே
இலக எலாம்படைத் தாருயிர் காத்தருள் என்றதென்றும்
கலகம் இலாச்சுத்த சன்மார்க்க சங்கம் கலந்ததுபார்த்
திலகம் எனாநின்ற துத்தர ஞான சிதம்பரமே. - 3

4049 - பவமே தவிர்ப்பது சாகா வரமும் பயப்பதுநல்
தவமே புரிந்தவர்க் கின்பந் தருவது தான்தனக்கே
உவமே யமான தொளிஓங்கு கின்ற தொளிருஞ்சுத்த
சிவமே நிறைகின்ற துத்தர ஞான சிதம்பரமே. - 4

4050 - ஒத்தா ரையும்இழிந் தாரையும் நேர்கண் டுவக்கஒரு
மித்தாரை வாழ்விப்ப தேற்றார்க் கமுதம் விளம்பிஇடு
வித்தாரைக் காப்பது சித்தாடு கின்றது மேதினிமேல்
செத்தாரை மீட்கின்ற துத்தர ஞான சிதம்பரமே. - 5

4051 - எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல
சித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்க வைத்த
தித்தா ரணிக்கணி ஆயது வான்தொழற் கேற்றதெங்கும்
செத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே. - 6

4052 - குருநெறிக் கேஎன்னைக் கூட்டிக் கொடுத்தது கூறரிதாம்
பெருநெறிக் கேசென்ற பேர்க்குக் கிடைப்பது பேய்உலகக்
கருநெறிக் கேற்றவர் காணற் கரியது காட்டுகின்ற
திருநெறிக் கேற்கின்ற துத்தர ஞான சிதம்பரமே. - 7

4053 - கொல்லா நெறியது கோடா நிலையது கோபமிலார்
சொல்லால் உவந்தது சுத்தசன் மார்க்கந் துணிந்ததுல
கெல்லாம் அளிப்ப திறந்தால் எழுப்புவ தேதம்ஒன்றும்
செல்லா வளத்தின துத்தர ஞான சிதம்பரமே. - 8

4054 - காணாத காட்சிகள் காட்டுவிக் கின்றது காலமெல்லாம்
வீணாள் கழிப்பவர்க் கெய்தரி தானது வெஞ்சினத்தால்
கோணாத நெஞ்சில் குலாவிநிற் கின்றது கூடிநின்று
சேணாடர் வாழ்த்துவ துத்தர ஞான சிதம்பரமே. - 9

4055 - சொல்வந்த வேத முடிமுடி மீதில் துலங்குவது
கல்வந்த நெஞ்சினர் காணற் கரியது காமம்இலார்
நல்வந் தனைசெய நண்ணிய பேறது நன்றெனக்கே
செல்வந்தந் தாட்கொண்ட துத்தர ஞான சிதம்பரமே. - 10

4056 - ஏகாந்த மாகி வெளியாய் இருந்ததிங் கென்னைமுன்னே
மோகாந்த காரத்தின் மீட்டதென் நெஞ்ச முயங்கிரும்பின்
மாகாந்த மானது வல்வினை தீர்த்தெனை வாழ்வித்தென்றன்
தேகாந்த நீக்கிய துத்தர ஞான சிதம்பரமே. - 11

54. செய்பணி வினவல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


4057. - அருளே பழுத்த சிவதருவில்அளிந்த பழந்தந் தடியேனைத்
தெருளே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
மருளே முதலாம் தடைஎல்லாம்தீர்ந்தேன் நின்பால் வளர்கின்றேன்
பொருளே இனிநின் தனைப்பாடிஆடும் வண்ணம் புகலுகவே. - 1

4058 - ஒருவா தடியேன் எண்ணியவா றெல்லாம் அருளி உளங்களித்தே
திருவார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பெருவாழ் வடைந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
உருவார் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் உரைத்தருளே. - 2

4059 - அவமே புரிந்தேன் தனைமீட்டுன் அருளார் அமுதம் மிகப்புகட்டிச்
சிவமே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பவமே தொலைத்தேன் பெருங்களிப்பால் பதியே நின்பால் வளர்கின்றேன்
நவமே அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே. - 3

4060 - பல்வா தனையும் தவிர்த்தெனக்கே பரமா னந்த அமுதளித்துச்
செல்வா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
வல்வா தனைசெய் மனச்செருக்கை மாற்றி நின்பால் வளர்கின்றேன்
நல்வாழ் வளித்தாய் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே. - 4

4061 - ஓவா இன்ப மயமாகி ஓங்கும் அமுதம் உதவிஎனைத்
தேவா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பூவார் மணம்போல் சுகந்தருமெய்ப் பொருளே நின்பால் வளர்கின்றேன்
நாவால் அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே. - 5

4062 - இளிவே தவிர்த்துச் சிறியேன்தன் எண்ணம் முழுதும் அளித்தருளித்
தெளிவே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஒளிவேய் வடிவு பெற்றோங்கி உடையாய் உன்பால் வளர்கின்றேன்
தளிவேய் நினது புகழ்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே. - 6

4063 - மறப்பே தவிர்த்திங் கெனைஎன்றும் மாளா நிலையில் தனியமர்த்திச்
சிறப்பே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பிறப்பே தவிர்ந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
திறப்பேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் செப்புகவே. - 7

4064 - ஊனே புகுந்தென் உளங்கனிவித் துயிரில் கலந்தே ஒன்றாகித்
தேனே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
நானே அழியா வாழ்வுடையேன் நானே நின்பால் வளர்கின்றேன்
தானேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே. - 8

4065 - ஆரா அமுதம் அளித்தருளி அன்பால் இன்ப நிலைக்கேற்றிச்
சீரார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஏரார் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன்
தீரா உலகில் அடிச்சிறியேன் செய்யும் பணியைத் தெரித்தருளே. - 9

4066 - மெய்வைப் பழியா நிலைக்கேற்றி விளங்கும் அமுதம் மிகஅளித்தே
தெய்வப் பதியே சிவமேநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஐவைப் பறிந்தேன் துரிசெல்லாம் அறுத்தேன் நின்பால் வளர்கின்றேன்
பொய்வைப் படையேன் இவ்வுலகில் புரியும் பணியைப் புகன்றருளே. - 10

4067 - . ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
நாரா யணனு நான்முகனு நயந்து வியக்க நிற்கின்றேன்
ஏரார் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை இயம்புகவே. - 11

4068 - பிறந்தேற் கென்றும் இறவாது பிறவா தோங்கும் பெருமைதந்து
சிறந்தே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
திறந்தேர் முனிவர் தேவரெலாந் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன்
அறந்தேர் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை அருளுகவே.278 - 12

4067, 4068. - இவ்வொன்றரைப் பாட்டும் பெருமான் கையெழுத்தில்
இருப்பதாகக் கூறி ஆ. பா. இவற்றைத் தனிப்பாசுரப் பகுதியில் சேர்த்துள்ளார்.
பொருளமைதி கருதி இவை ஈண்டு இப்பதிகத்துடன் சேர்க்கப்பெற்றன. - 13

55. ஆன்ம தரிசனம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


4069. - திருஎலாம் தரும்ஓர் தெய்வமாம் ஒருவன்
திருச்சிற்றம் பலந்திகழ் கின்றான்
உருஎலாம் உணர்ச்சி உடல்பொருள் ஆவி
உளஎலாம் ஆங்கவன் தனக்கே
தெருஎலாம் அறியக் கொடுத்தனன் வேறு
செயலிலேன் எனநினைத் திருந்தேன்
அருஎலாம் உடையாய் நீஅறிந் ததுவே
அடிக்கடி உரைப்பதென் நினக்கே. - 1

4070 - நினைத்தபோ தெல்லாம் நின்னையே நினைத்தேன்
நினைப்பற நின்றபோ தெல்லாம்
எனைத்தனி ஆக்கி நின்கணே நின்றேன்
என்செயல் என்னஓர் செயலும்
தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம்
சிவன்செய லாம்எனப் புரிந்தேன்
அனைத்தும்என் அரசே நீஅறிந் ததுவே
அடிக்கடி உரைப்பதென் நினக்கே. - 2

4071 - களித்தபோ தெல்லாம் நின்இயல் உணர்ந்தே
களித்தனன் கண்கள்நீர் ததும்பித்
துளித்தபோ தெல்லாம் நின்அருள் நினைத்தே
துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத்
தெளித்தபோ தெல்லாம் நின்திறம் புகன்றே
தெளித்தனன் செய்கைவே றறியேன்
ஒளித்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும்
உரைப்பதென் அடிக்கடி உனக்கே. - 3

4072 - உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி உணர்ந்ததும் உலகியல் உணர்வால்
கண்டதும் கருதிக் களித்ததும் கலைகள் கற்றதும் கரைந்ததும் காதல்
கொண்டதும் நின்னோ டன்றிநான் தனித்தென் குறிப்பினில் குறித்ததொன் றிலையே
ஒண்தகும் உனது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே. - 4

4073 - களவிலே களித்த காலத்தும் நீயே களித்தனை நான்களித் தறியேன்
உளவிலே உவந்த போதும்நீ தானே உவந்தனை நான்உவந் தறியேன்
கொளஇலே சமும்ஓர் குறிப்பிலேன் அனைத்தும் குறித்தனை கொண்டனை நீயே
அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே அடிக்கடி உரைப்பதென் நினக்கே. - 5

4074 - திலகவாள் நுதலார் தமைக்கன விடத்தும் சிறிதும்நான் விழைந்திலேன் இந்த
உலகவாழ் வதில்ஓர் அணுத்துணை எனினும் உவப்பிலேன் உலகுறு மாயைக்
கலகவா தனைதீர் காலம்என் றுறுமோ கடவுளே எனத்துயர்ந் திருந்தேன்
அலகிலாத் திறலோய் நீஅறிந் ததுநான் அடிக்கடி உரைப்பதென் நினக்கே. - 6

4075 - சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும்
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான் உரைப்பதென் அடிக்கடி உனக்கே. - 7

4076 - பித்தெலாம் உடைய உலகர்தங் கலகப் பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ
சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்தசன் மார்க்க சங்கம்என் றோங்குமோ தலைமைச்
சித்தெலாம் வல்ல சித்தன்என் றுறுமோ தெரிந்திலேன் எனத்துயர்ந் திருந்தேன்
ஒத்தெலாம் உனது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே. - 8

4077 - ஒன்றெனக் காணும் உணர்ச்சிஎன் றுறுமோ ஊழிதோ றூழிசென் றிடினும்
என்றும்இங் கிறவா இயற்கைஎன் றுறுமோ இயல்அருட் சித்திகள் எனைவந்
தொன்றல்என் றுறுமோ அனைத்தும்என் வசத்தே உறுதல்என் றோஎனத் துயர்ந்தேன்
உன்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும் உரைப்பதென் அடிக்கடி உனக்கே. - 9

4078 - கள்ளவா தனையைக் களைந்தருள் நெறியைக் காதலித் தொருமையில் கலந்தே
உள்ளவா றிந்த உலகெலாம் களிப்புற் றோங்குதல் என்றுவந் துறுமோ
வள்ளலே அதுகண் டடியனேன் உள்ளம் மகிழ்தல்என் றோஎனத் துயர்ந்தேன்
ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே. - 10

56. சுத்த சன்மார்க்க வேண்டுகோள்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


4079 - அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே. - 1

4080 - ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
எய்யாத(279) அருட்சோதி என்கையுறல் வேண்டும்
இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்
நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே. - 2

- - (279). எய்யாத - அறியாத. முதற்பதிப்பு.

4081 - அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்
கண்ணார நினைஎங்கும் கண்டுவத்தல் வேண்டும்
காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்
பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்
பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்
உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்
உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண் டுவனே. - 3

4082 - அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே. - 4

4083 - அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்
வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்
மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்
புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்
பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்
உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்
ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே. - 5

4084 - அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அண்டம்எலாம் பிண்டம்எலாம் கண்டுகொளல் வேண்டும்
துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்
ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே. - 6

4085 - அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்
இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே
இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்
எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்
ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்
தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்
சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே. - 7

4086 - அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே. - 8

4087 - அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்
செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்
சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்
எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்
எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்
பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்
பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே. - 9

4088 - அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்
மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான
மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்
இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்
திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்
பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்
புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே. - 10

4089 - அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்
எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்
கமையாதி(280) அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம்
காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்
விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்
விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே. - 11

- - (280). கமை - பொறுமை. முதற்பதிப்பு.

57. அருள் விளக்க மாலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


4090 - அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே
மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா
தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே. - 1

4091 - கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. - 2

4092 - இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே
ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே
அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே
அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே
என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே
இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே
துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே
தூயதிரு அடிகளுக்கென் சொல்லும்அணிந் தருளே. - 3

4093 - ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே
உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே
பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே
பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே
நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே
நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே
கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே. - 4

4094 - மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து
வாட்டமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே
சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச்
சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே
அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே
அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
இனம்எனப்பேர் அன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே. - 5

4095 - கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே
காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை
சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா
எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி
என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே
துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே
சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே. - 6

4096 - கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து
கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே
மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே
திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித்
திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே
வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே
மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே. - 7

4097 - கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேஎன் கண்ணில்
கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே
விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே
மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே
மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே
மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே
துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே
சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே. - 8

4098 - அண்டவள வெவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
அமைந்தசரா சரஅளவெவ் வளவோஅவ் வளவும்
கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும்
காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க
விண்டகுபே ரருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே
விளங்கிஒரு பெருங்கருணைக் கொடிநாட்டி அருளாம்
தண்டகும்ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும்
தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே. - 9

4099 - நல்லார்சொல் யோகாந்தப் பதிகள்பல கோடி
நாட்டியதோர் போதாந்தப் பதிகள்பல கோடி
வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி
வழுத்தும்ஒரு நாதாந்தப் பதிகள்பல கோடி
இல்லார்ந்த வேதாந்தப் பதிகள்பல கோடி
இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள்பல கோடி
எல்லாம்பேர் அருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
என்அரசே என்மாலை இனிதுபுனைந் தருளே. - 10

4100 - நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா
ஞானசத்தி அண்டமது கடையாக இவற்றுள்
ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி
எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச்
சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச்
சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையில் அமர்ந்தே
நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொல்அணிந் தருளே. - 11

4101 - தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது
தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே
நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன்
நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளும் அறியார்
அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும்
அவரும்அவை களும்சிலசொல் அணிகின்றார் நினக்கே
என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே
யானும்அவர் போல்அணிகின் றேன்அணிந்திங் கருளே. - 12

4102 - உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ
டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும்
தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே
ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி
எண்ணியஎன் எண்ணம்எலாம் எய்தஒளி வழங்கி
இலங்குகின்ற பேர்அருளாம் இன்னமுதத் திரளே
புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே
புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே. - 13

4103 - நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே
நடுஇருக்க என்றனையே நாட்டியபே ரிறைவா
பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே
பன்னுமறைப் பாட்டேமெய்ப் பாட்டினது பயனே
கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
கோவேஎன் கணவாஎன் குரவாஎன்(281) குணவா
நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும்
நீதிநடத் தரசேஎன் நெடுமொழிகொண் டருளே. - 14

- - (281). எண் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.

4104 - கைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே
கண்ணேஎன் கண்களுக்கே கலந்திசைந்த கணவா
மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையில்என் னுடனே
மெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே
நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே
நித்தியமே எல்லாமாஞ் சத்தியமே உலகில்
பொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே
புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே. - 15

4105 - கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே
கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே
மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ஆசை
வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே
எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே
என்உயிரே என்உயிருக் கிசைந்தபெருந் துணையே
தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பே ரரசே
தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே. - 16

4106 - தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தேங்கின்
தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
இனித்தநறு நெய்அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே
அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே
அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிந் தருளே. - 17

4107 - மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே
மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே
விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே
விண்ணவரும் நண்ணரும்ஓர் மெய்ப்பொருளின் விளைவே
கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங்
கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால்
நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே
நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல்அணிந் தருளே. - 18

4108 - கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக்
கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே
பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே
பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே
மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம
வல்லிஎன மறைகளெலாம் வாழ்த்துகின்ற வாமப்
பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது
பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் அரும்பும்அணிந் தருளே. - 19

4109 - உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே
உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே
பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே
பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே
மருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே
மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே
திருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே
சிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே. - 20

4110 - நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில்
ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே
ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும்
ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே
தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும்
தேகமும்உள் உயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே
வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில்
வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே. - 21

4111 - எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே
எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே
சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே
சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே
மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள்
மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே
தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே. - 22

4112 - சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகிர் அண்டம்
ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே - 23

4113 - அடிக்கடிஎன் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி
அருள்உருவாய்த் திரிந்துதிரிந் தருள்கின்ற பொருளே
படிக்களவின் மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல்
பதிந்தபதம் என்முடிமேல் பதித்ததனிப் பதியே
பொடிக்கனகத் திருமேனித் திருமணங்கற் பூரப்
பொடிமணத்தோ டகம்புறமும் புதுமணஞ்செய் அமுதே
அடிக்கனக அம்பலத்தே திருச்சிற்றம் பலத்தே
ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. - 24

4114 - அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும்
அசையாதே அவியாதே அண்டபகி ரண்டத்
துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத்
தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே
மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே
மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே
இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும்
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. - 25

4115 - பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும்
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும்
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே
வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே
மெய்ம்மைஅறி வானந்தம் விளக்கும்அருள் அமுதே
தீர்த்தாஎன் றன்பர்எலாம் தொழப்பொதுவில் நடிக்கும்
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே. - 26

4116 - பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும்
படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே
உற்றொளிகொண் டோ ங்கிஎங்கும் தன்மயமாய் ஞான
உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே
சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே
முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே
முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே. - 27

4117 - ஐம்பூத பரங்கள்முதல் நான்கும்அவற் றுள்ளே
அடுத்திடுநந் நான்கும்அவை அகம்புறமேல் நடுக்கீழ்
கம்பூத பக்கமுதல் எல்லாந்தன் மயமாய்க்
காணும்அவற் றப்புறமும் கலந்ததனிக் கனலே
செம்பூத உலகங்கள் பூதாண்ட வகைகள்
செழித்திடநற் கதிர்பரப்பித் திகழ்கின்ற சுடரே
வெம்பூதத் தடைதவிர்ந்தார் ஏத்தமணி மன்றில்
விளங்கும்நடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே. - 28

4118 - வாதுறும்இந் தியகரண பரங்கள்முதல் நான்கும்
வகுத்திடுநந் நான்கும்அகம் புறமேல்கீழ் நடுப்பால்
ஓதுறும்மற் றெல்லாந்தன் மயமாகக் கலந்தே
ஓங்கவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே
சூதுறுமிந் தியகரண லோகாண்டம் அனைத்தும்
சுடர்பரப்பி விளங்குகின்ற சுயஞ்சோதிச் சுடரே
போதுறுவார் பலர்நின்று போற்றநடம் பொதுவில்
புரியும்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே. - 29

4119 - பகுதிபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
பரவிஎலாம் தன்மயமாம் படிநிறைந்து விளங்கித்
தகுதிபெறும் அப்பகுதிக் கப்புறமும் சென்றே
தனிஒளிச்செங் கோல்நடத்தித் தழைக்கின்ற ஒளியே
மிகுதிபெறு பகுதிஉல கம்பகுதி அண்டம்
விளங்கஅருட் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
தொகுதிபெறு கடவுளர்கள் ஏத்தமன்றில் நடிக்கும்
துரியநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே. - 30

4120 - மாமாயைப் பரமாதி நான்கும்அவற் றுள்ளே
வயங்கியநந் நான்குந்தன் மயத்தாலே விளக்கி
ஆமாறம் மாமாயைக் கப்புறத்தும் நிறைந்தே
அறிவொன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே
தாமாயா புவனங்கள் மாமாயை அண்டம்
தழைத்துவிளங் கிடக்கதிர்செய் தனித்தபெருஞ் சுடரே
தேமாலும் பிரமனும்நின் றேத்தமன்றில் நடிக்கும்
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே. - 31

4121 - சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
தூயஒளி வடிவாகத் துலங்கும்ஒளி அளித்தே
நித்தபரம் பரநடுவாய் முதலாய்அந் தமதாய்
நீடியஓர் பெருநிலைமேல் ஆடியபே ரொளியே
வித்தமுறும் சுத்தபர லோகாண்டம் அனைத்தும்
விளக்கமுறச் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில்
தனித்தநடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே. - 32

4122 - சாற்றுகின்ற கலைஐந்தில் பரமாதி நான்கும்
தக்கஅவற் றூடிருந்த நந்நான்கும் நிறைந்தே
ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும்
உற்றிடுந்தன் மயமாகி ஒளிர்கின்ற ஒளியே
தோற்றுகின்ற கலைஉலகம் கலைஅண்ட முழுதும்
துலங்குகின்ற சுடர்பரப்பிச் சூழ்கின்ற சுடரே
போற்றுகின்ற மெய்அடியர் களிப்பநடித் தருளும்
பொதுவில்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே. - 33

4123 - நாட்டியஓங் காரம்ஐந்தில் பரமுதல்ஓர் நான்கும்
நந்நான்கு மாறிடத்தும் நயந்துநிறைந் தருளி
ஈட்டியசெம் பொருள்நிலையோ டிலக்கியமும் விளங்க
இனிதுநின்று விளங்குகின்ற இன்பமய ஒளியே
கூட்டியஓங் காரஉல கோங்கார அண்டம்
குடிவிளங்கக் கதிர்பரப்பிக் குலவுபெருஞ் சுடரே
பாட்டியல்கொண் டன்பரெலாம் போற்றமன்றில் நடிக்கும்
பரமநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே. - 34

4124 - மன்னுகின்ற அபரசத்திப் பரமாதி அவற்றுள்
வகுத்தநிலை யாதிஎலாம் வயங்கவயின் எல்லாம்
பன்னுகின்ற பற்பலவாம் விசித்திரசித் திரங்கள்
பரவிவிளங் கிடவிளங்கிப் பதிந்தருளும் ஒளியே
துன்அபர சத்திஉல கபரசத்தி அண்டம்
சுகம்பெறவே கதிர்பரப்பித் துலங்குகின்ற சுடரே
உன்னும்அன்பர் உளங்களிக்கத் திருச்சிற்றம் பலத்தே
ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே. - 35

4125 - விளங்குபர சத்திகளின் பரமாதி அவற்றுள்
விரிந்தநிலை யாதிஎலாம் விளங்கிஒளி வழங்கிக்
களங்கமிலாப் பரவெளியில் அந்தம்முதல் நடுத்தான்
காட்டாதே நிறைந்தெங்கும் கலந்திடும்பே ரொளியே
உளங்குலவு பரசத்தி உலகமண்ட முழுதும்
ஒளிவிளங்கச் சுடர்பரப்பி ஓங்குதனிச் சுடரே
வளங்குலவு திருப்பொதுவில் மாநடஞ்செய் அரசே
மகிழ்ந்தெனது சொல்எனும்ஓர் மாலைஅணிந் தருளே. - 36

4126 - தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே
சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே
பரிந்தஒரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே
பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே
விரிந்தமகா சுத்தபர லோகஅண்ட முழுதும்
மெய்அறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே
புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே
புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே. - 37

4127 - வாய்ந்தபர நாதம்ஐந்தில் பரமுதலும் அவற்றுள்
மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே
ஆய்ந்தபர சிவவெளியில் வெளிஉருவாய் எல்லாம்
ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பேர் ஒளியே
தோய்ந்தபர நாதஉல கண்டமெலாம் விளங்கச்
சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே
வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே
விளம்புறும்என் சொன்மாலை விளங்கஅணிந் தருளே. - 38

4128 - கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே. - 39

4129 - காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க்
கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச்
சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த்
தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய்
மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய்
மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே
ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே
ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. - 40

4130 - திரைஇலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும்
சினைப்பிலதாய்ப் பனிப்பிலதாய்ச் செறிந்திடுகோ திலதாய்
விரைஇலதாய்ப் புரைஇலதாய் நார்இலதாய் மெய்யே
மெய்யாகி அருள்வண்ணம் விளங்கிஇன்ப மயமாய்ப்
பரைவெளிக்கப் பால்விளங்கு தனிவெளியில் பழுத்தே
படைத்தஎன துளத்தினிக்கக் கிடைத்ததனிப் பழமே
உரைவளர்மா மறைகளெலாம் போற்றமணிப் பொதுவில்
ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே. - 41

4131 - கார்ப்பிலதாய்த் துவர்ப்பிலதாய் உவர்ப்பிலதாய்ச் சிறிதும்
கசப்பிலதாய்ப் புளிப்பிலதாய்க் காய்ப்பிலதாய்ப் பிறவில்
சேர்ப்பிலதாய் எஞ்ஞான்றும் திரிபிலதாய் உயிர்க்கே
தினைத்தனையும் நோய்தரும்அத் தீமைஒன்றும் இலதாய்ப்
பார்ப்பனையேன் உள்ளகத்தே விளங்கிஅறி வின்பம்
படைத்திடமெய்த் தவப்பயனால் கிடைத்ததனிப் பழமே
ஓர்ப்புடையார் போற்றமணி மன்றிடத்தே வெளியாய்
ஓங்கியபே ரரசேஎன் உரையும்அணிந் தருளே. - 42

4132 - தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம்
திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே
ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி
உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே
பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்
பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே
பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்
பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே. - 43

4133 - தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில்(282) தில்லைத்
தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே
காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே. - 44

- - (282). தாய் முதலோரோடு சிறு பருவமதில் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு, க.

4134 - ஓங்கியஓர் துணைஇன்றிப் பாதிஇர வதிலே
உயர்ந்தஒட்டுத் திண்ணையிலே படுத்தகடைச் சிறியேன்
தூங்கிமிகப் புரண்டுவிழத் தரையில்விழா தெனையே
தூக்கிஎடுத் தணைத்துக்கீழ்க் கிடத்தியமெய்த் துணையே
தாங்கியஎன் உயிர்க்கின்பம் தந்தபெருந் தகையே
சற்குருவே நான்செய்பெருந் தவப்பயனாம் பொருளே
ஏங்கியஎன் ஏக்கமெலாம் தவிர்த்தருளிப் பொதுவில்
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. - 45

4135 - தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத்
தன்வருத்தம் எனக்கொண்டு தரியாதக் கணத்தே
பனிப்புறும்அவ் வருத்தமெலாம் தவிர்த்தருளி மகனே
பயம்உனக்கென் என்றென்னைப் பரிந்தணைத்த குருவே
இனிப்புறுநன் மொழிபுகன்றென் முடிமிசையே மலர்க்கால்
இணைஅமர்த்தி எனையாண்ட என்னுயிர்நற் றுணையே
கனித்தநறுங் கனியேஎன் கண்ணேசிற் சபையில்
கலந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே. - 46

4136 - ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர்
உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது
பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம்
பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே
திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச்
செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே
கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில்
காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே. - 47

4137 - இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே
இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே
பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்
போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே
மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி
மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே
அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே
அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. - 48

4138 - நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி
நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே
ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே
தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே. - 49

4139 - நடைக்குரிய உலகிடைஓர் நல்லநண்பன் ஆகி
நான்குறித்த பொருள்கள்எலாம் நாழிகைஒன் றதிலே
கிடைக்கஎனக் களித்தகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
கிளர்ந்தொளிகொண் டோ ங்கியமெய்க் கிளைஎனும்பேர் ஒளியே
படைப்புமுதல் ஐந்தொழிலும் கொள்கஎனக் குறித்தே
பயந்தீர்த்தென் உள்ளகத்தே அமர்ந்ததனிப் பதியே
கடைப்படும்என் கரத்தில்ஒரு கங்கணமும் தரித்த
ககனநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே. - 50

4140 - நீநினைத்த நன்மைஎலாம் யாம்அறிந்தோம் நினையே
நேர்காண வந்தனம்என் றென்முடிமேல்(283) மலர்க்கால்
தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித்
தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத்தான் நகைத்தே
ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம்என் மகனே
எனக்கிலையோ என்றருளி எனையாண்ட குருவே
தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே. - 51

- - (283). முடிமேல் - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க., மடிமேல் - பி. இரா., ஆ. பா.

4141 - மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய
முடியாத முடிவெல்லாம் முன்னியஓர் தினத்தே
ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன்
அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்துமகிழ்ந் தேத்தப்
பரநாத நாட்டரசு பாலித்த பதியே
ஏர்த்திகழும் திருப்பொதுவில் இன்பநடத் தரசே
என்னுடைய சொன்மாலை இலங்கஅணிந் தருளே. - 52

4142 - இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே
இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித்
தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறும் அவற்றைத்
தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே
எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே
இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே
முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும்
முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே. - 53

4143 - கையாத தீங்கனியே கயக்காத அமுதே
கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே
போகாத புனலேஉள் வேகாத காலே
கொய்யாத நறுமலரே கோவாத மணியே
குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே
செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே. - 54

4144 - எண்ணாத மந்திரமே எழுதாத மறையே
ஏறாத மேனிலைநின் றிறங்காத நிறைவே
பண்ணாத பூசையிலே படியாத படிப்பே
பாராத பார்வையிலே பதியாத பதிப்பே
நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே
நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே
அண்ணாஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
அடிஇணைக்கென் சொன்மாலை அணிந்துமகிழ்ந் தருளே. - 55

4145 - சாகாத கல்வியிலே தலையான நிலையே
சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே
ஏகாத புனலிடத்தே இடியாத புவியே
ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும்
குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே
மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில்
மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே. - 56

4146 - சுத்தநிலை அனுபவங்கள் தோன்றுவெளி யாகித்
தோற்றும்வெளி யாகிஅவை தோற்றுவிக்கும் வெளியாய்
நித்தநிலை களின்நடுவே நிறைந்தவெளி யாகி
நீயாகி நானாகி நின்றதனிப்பொருளே
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே
சமரசசன் மார்க்கநிலைத் தலைநின்ற சிவமே
புத்தமுதே சித்திஎலாம் வல்லதிருப் பொதுவில்
புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே. - 57

4147 - நான்அளக்குந் தோறும்அதற் குற்றதுபோல் காட்டி
நாட்டியபின் ஒருசிறிதும் அளவில்உறா தாகித்
தான்அளக்கும் அளவதிலே முடிவதெனத் தோற்றித்
தன்அளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே
வான்அளக்க முடியாதே வான்அனந்தங் கோடி
வைத்தபெரு வான்அளக்க வசமோஎன் றுரைத்துத்
தேன்அளக்கும் மறைகளெலாம் போற்றமணி மன்றில்
திகழுநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே. - 58

4148 - திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத்
தெளிவித்து மணிமாடத் திருத்தவிசில் ஏற்றி
நசைஅறியா நற்றவரும் மற்றவருஞ் சூழ்ந்து
நயப்பஅருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே
வசையறியாப் பெருவாழ்வே மயல்அறியா அறிவே
வான்நடுவே இன்பவடி வாய்இருந்த பொருளே
பசைஅறியா மனத்தவர்க்கும் பசைஅறிவித் தருளப்
பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே. - 59

4149 - என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே
இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே
தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே
தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே
மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த
மணியேஎன் கண்ணேஎன் வாழ்முதலே மருந்தே
மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே
மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே. - 60

4150 - மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும்
வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்
பன்னுகின்ற தொழில்ஐந்துஞ்செய்திடவே பணித்துப்
பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே
உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே
ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே
மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே
மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே. - 61

4151 - நன்மைஎலாம் தீமைஎனக் குரைத்தோடித் திரியும்
நாய்க்குலத்தில் கடையான நாயடியேன் இயற்றும்
புன்மைஎலாம் பெருமைஎனப் பொறுத்தருளிப் புலையேன்
பொய்உரைமெய் உரையாகப் புரிந்துமகிழ்ந் தருளித்
தன்மைஎலாம் உடையபெருந் தவிசேற்றி முடியும்
தரித்தருளி ஐந்தொழில்செய் சதுர்அளித்த பதியே
இன்மைஎலாம் தவிர்ந்தடியார் இன்பமுறப் பொதுவில்
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. - 62

4152 - விழுக்குலத்தார் அருவருக்கும் புழுக்குலத்தில் கடையேன்
மெய்யுரையேன் பொய்யுரையை வியந்துமகிழ்ந் தருளி
முழுக்குலத்தோர் முடிசூட்டி ஐந்தொழில்செய் எனவே
மொழிந்தருளி எனையாண்ட முதற்றனிப்பேர் ஒளியே
எழுக்குலத்தில் புரிந்தமனக் கழுக்குலத்தார் தமக்கே
எட்டாத நிலையேநான் எட்டியபொன் மலையே
மழுக்குலத்தார் போற்றமணி மன்றில்நடம் புரியும்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே. - 63

4153 - கலைக்கொடிகண் டறியாத புலைக்குடியில் கடையேன்
கைதவனேன் பொய்தவமும் கருத்தில்உவந் தருளி
மலைக்குயர்மாத் தவிசேற்றி மணிமுடியுஞ் சூட்டி
மகனேநீ வாழ்கஎன வாழ்த்தியஎன் குருவே
புலைக்கொடியார் ஒருசிறிதும் புலப்படக்கண் டறியாப்
பொன்னேநான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே
விலைக்கறியா மாமணியே வெறுப்பறியா மருந்தே
விளங்குநடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே. - 64

4154 - மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்
மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்
பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்
பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த
விதம்ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கே
வெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே
சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்
தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே. - 65

4155 - என்ஆசை எல்லாம்தன் அருள்வடிவந் தனக்கே
எய்திடச்செய் திட்டருளி எனையும்உடன் இருத்தித்
தன்ஆசை எல்லாம்என் உள்ளகத்தே வைத்துத்
தானும்உடன் இருந்தருளிக் கலந்தபெருந் தகையே
அன்னாஎன் ஆருயிரே அப்பாஎன் அமுதே
ஆவாஎன் றெனையாண்ட தேவாமெய்ச் சிவமே
பொன்னாரும் பொதுவில்நடம் புரிகின்ற அரசே
புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியும்ஏற் றருளே. - 66

4156 - தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும்
தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற
முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற
முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும்
என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி
இன்பவடி வாக்கிஎன்றும் இலங்கவைத்த சிவமே
என்அரசே என்உயிரே என்இருகண் மணியே
இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே. - 67

4157 - பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே
பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும்
விரவியமா மறைகளெலாம் தனித்தனிசென் றளந்தும்
மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற
உரவில்அவை தேடியஅவ் வெளிகளுக்குள் வெளியாய்
ஓங்கியஅவ் வெளிகளைத்தன் னுள்அடக்கும் வெளியாய்க்
கரையறநின் றோங்குகின்ற சுத்தசிவ வெளியே
கனிந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே. - 68

4158 - வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே
மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே
மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே
வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே
கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து
கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே
ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே
அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. - 69

4159 - கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது
குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே
மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம்
வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே
நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா
நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே
புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில்
புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே. - 70

4160 - உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
மயர்ப்பறுமெய்த்(284) தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே. - 71

- - (284). மயர்ப்பு - சோர்வு. முதற்பதிப்பு.

4161 - வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும்
மரபினர்அன் றாதலினால் வகுத்தஅவர் அளவில்
அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக
அன்றிஅருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே
இன்புறஎன் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான்
ஈன்றதனித் தந்தையே தாயேஎன் இறையே
துன்பறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றுதிருப் பொதுவில்
தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே. - 72

4162 - கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்
குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம்
பயந்தீர்த்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே
நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே
நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே
அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. - 73

4163 - தயைஉடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
சார்ந்தவரே ஈங்கவர்கள் தம்மோடுங் கூடி
நயமுறுநல் அருள்நெறியில் களித்துவிளை யாடி
நண்ணுகஎன் றெனக்கிசைத்த நண்புறுசற் குருவே
உயலுறும்என் உயிர்க்கினிய உறவேஎன் அறிவில்
ஓங்கியபேர் அன்பேஎன் அன்பிலுறும் ஒளியே
மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றும்மணி மன்றில்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே. - 74

4164 - அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்
செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே
பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே
போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே
மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்
வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே. - 75

4165 - வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்
மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது
பெம்மான்என் றடிகுறித்துப் பாடும்வகை புரிந்த
பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே
செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும்
செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற் றுணையே
அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே
அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. - 76

4166 - ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை
அணிமாயை விளக்கறையில் அமர்த்திஅறி வளித்து
நீணவமாம் தத்துவப்பொன் மாடமிசை ஏற்றி
நிறைந்தஅருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து
மாணுறஎல் லாநலமும் கொடுத்துலகம் அறிய
மணிமுடியும் சூட்டியஎன் வாழ்முதலாம் பதியே
ஏணுறுசிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. - 77

4167 - பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே
பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே
மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய
வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே
மீன்மறுத்துச் சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே
விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே
ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே
ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே. - 78

4168 - மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும்
விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும்
எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக
எங்கணும்ஓர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே
அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா
ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே
பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும்
பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே. - 79

4169 - அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
விண்தகும்ஓர் நாதவெளி சுத்தவெளி மோன
வெளிஞான வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக்
கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே
குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே. - 80

4170 - சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம்
தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி
எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள்
அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா
தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச்
சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே
தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே. - 81

4171 - பொறிகரண முதற்பலவாம் தத்துவமும் அவற்றைப்
புரிந்தியக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச்
செறியும்உப காரிகளாம் சத்திகளும் அவரைச்
செலுத்துகின்ற சத்தர்களும் தன்ஒளியால் விளங்க
அறிவறிவாய் அவ்வறிவுக் கறிவாய்எவ் விடத்தும்
ஆனதுவாய்த் தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே
நெறிவழங்கப் பொதுவில்அருள் திருநடஞ்செய் அரசே
நின்அடியேன் சொன்மாலை நிலைக்கஅணிந் தருளே. - 82

4172 - உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்புற் றெழுந்தும்
ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப்
பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய
பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே
நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே
நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான்
எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. - 83

4173 - கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளம்உறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே. - 84

4174 - நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே
கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே
காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே
மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற
வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே. - 85

4175 - எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே
என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே
செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ
திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே
அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோல் காட்டி
அங்குமிங்கும் அப்புறமும் எங்குநிறை பொருளே
ஒவ்விடச்சிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே. - 86

4176 - இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக
செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே
திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. - 87

4177 - தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்
சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்
ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்
உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்
ஆன்றதிரு அருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே
ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே
ஏன்றதிரு அமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. - 88

4178 - நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்
நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம்
வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து
வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே
தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற
சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால்
தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே
சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே. - 89

4179 - தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா
தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்
தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே
சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே. - 90

4180 - ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே
அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி
வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி
வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே
துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே
சுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே
உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும்
ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே. - 91

4181 - காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே
களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்
சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே
சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்
மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே. - 92

4182 - சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும்
சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமே
சொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே
துரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளே
நற்பதம்என் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தே
நான்அறிந்து தானாக நல்கியஎன் குருவே
பற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில்
பயிலும்நடத் தரசேஎன் பாடல்அணிந் தருளே. - 93

4183 - ஆதியிலே எனையாண்டென் அறிவகத்தே அமர்ந்த
அப்பாஎன் அன்பேஎன் ஆருயிரே அமுதே
வீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம்
மிகப்பெரிய பருவம்என வியந்தருளி அருளாம்
சோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மாலை
தொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம்
நீதியிலே நிறைந்தநடத் தரசேஇன் றடியேன்
நிகழ்த்தியசொன் மாலையும்நீ திகழ்த்திஅணிந் தருளே. - 94

4184 - கணக்குவழக் கதுகடந்த பெருவெளிக்கு நடுவே
கதிர்பரப்பி விளங்குகின்ற கண்நிறைந்த சுடரே
இணக்கம்உறும் அன்பர்கள்தம் இதயவெளி முழுதும்
இனிதுவிளங் குறநடுவே இலங்கும்ஒளி விளக்கே
மணக்குநறு மணமேசின் மயமாய்என் உளத்தே
வயங்குதனிப் பொருளேஎன் வாழ்வேஎன் மருந்தே
பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில்
பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே. - 95

4185 - அடிச்சிறியேன் அச்சமெலாம் ஒருகணத்தே நீக்கி
அருளமுதம் மிகஅளித்தோர் அணியும்எனக் கணிந்து
கடிக்கமலத் தயன்முதலோர் கண்டுமிக வியப்பக்
கதிர்முடியும் சூட்டிஎனைக் களித்தாண்ட பதியே
வடித்தமறை முடிவயங்கு மாமணிப்பொற் சுடரே
மனம்வாக்குக் கடந்தபெரு வான்நடுவாம் ஒளியே
படித்தலத்தார் வான்தலத்தார் பரவியிடப் பொதுவில்
பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே. - 96

4186 - எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்
ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே
மெய்த்துணையாம் திருவருட்பேர் அமுதம்மிக அளித்து
வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து
சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்
துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்
சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே
சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே. - 97

4187 - இருந்தஇடந் தெரியாதே இருந்தசிறி யேனை
எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி
அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே
அதிசயிக்கத் திருஅமுதும் அளித்தபெரும் பதியே
திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர்
திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே
பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும்
பெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே. - 98

4188 - குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக்
கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து
மணமுறுபே ரருள்இன்ப அமுதமெனக் களித்து
மணிமுடியும் சூட்டிஎனை வாழ்கஎன வாழ்த்தித்
தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும்
தானும்ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே
அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. - 99

4189 - தலைகால்இங் கறியாதே திரிந்தசிறி யேனைத்
தான்வலிந்தாட் கொண்டருளித் தடைமுழுதுந் தவிர்த்தே
மலைவறுமெய் அறிவளித்தே அருளமுதம் அருத்தி
வல்லபசத் திகளெல்லாம் மருவியிடப் புரிந்து
நிலையுறவே தானும்அடி யேனும்ஒரு வடிவாய்
நிறையநிறை வித்துயர்ந்த நிலைஅதன்மேல் அமர்த்தி
அலர்தலைப்பேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. - 100

58. நற்றாய் கூறல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


4190. - காதல்கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ
கண்டுகொள் கணவனே என்றாள்
ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்
உவந்திலேன் உண்மையீ தென்றாள்
பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த
பிழையெலாம் பொறுத்தருள் என்றாள்
மாதய வுடைய வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே. - 1

4191 - மயங்கினேன் எனினும் வள்ளலே உனைநான்
மறப்பனோ கனவினும் என்றாள்
உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ
உயிர்தரி யாதெனக் கென்றாள்
கயங்கினேன் கயங்கா வண்ணநின் கருணைக்
கடலமு தளித்தருள் என்றாள்
வயங்குசிற் சபையில் வரதனே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே. - 2

4192 - அஞ்சல்என் றெனைஇத் தருணநீ வந்தே
அன்பினால் அணைத்தருள் என்றாள்
பஞ்சுபோல் பறந்தேன் அய்யவோ துன்பம்
படமுடி யாதெனக் கென்றாள்
செஞ்செவே எனது கருத்தெலாம் உனது
திருவுளம் அறியுமே என்றாள்
வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே. - 3

4193 - பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னைப்
புணர்ந்திட விரும்பினேன் என்றாள்
காமிஎன் றெனைநீ கைவிடேல் காமக்
கருத்தெனக் கில்லைகாண் என்றாள்
சாமிநீ வரவு தாழ்த்திடில் ஐயோ
சற்றுநான் தரித்திடேன் என்றாள்
மாமிகு கருணை வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே. - 4

4194 - அடுத்துநான் உன்னைக் கலந்தனு பவிக்க
ஆசைமேற் பொங்கிய தென்றாள்
தடுத்திட முடியா தினிச்சிறு பொழுதும்
தலைவனே தாழ்த்திடேல் என்றாள்
தொடுத்துல குள்ளார் தூற்றுதல் வாயால்
சொலமுடி யாதெனக் கென்றாள்
மடுத்தவெந் துயர்தீர்த் தெடுத்தருள் என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே. - 5

4195 - தடுத்திடல் வல்லார் இல்லைநின் அருளைத்
தருகநற் றருணம்ஈ தென்றாள்
கொடுத்திடில் ஐயோ நின்னருட் பெருமை
குறையுமோ குறைந்திடா தென்றாள்
நடுத்தய விலர்போன் றிருத்தலுன் றனக்கு
ஞாயமோ நண்பனே என்றாள்
வடுத்தினும் வாயேன் அல்லன்நான் என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே. - 6

4196 - பொன்செய் நின்வடிவைப் புணர்ந்திட நினைத்தேன்
பொங்கிய தாசைமேல் என்றாள்
என்செய்வேன் எனையும் விழுங்கிய தையோ
என்னள வன்றுகாண் என்றாள்
கொன்செயும் உலகர் என்னையும் உனது
குறிப்பையும் குறித்திலார் என்றாள்
வன்செயும் அவர்வாய் ஓய்வதென் றென்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே. - 7

4197 - மெலிந்தஎன் உளத்தை அறிந்தனை தயவு
மேவிலை என்னையோ என்றாள்
நலிந்தபோ தின்னும் பார்த்தும்என் றிருத்தல்
நல்லவர்க் கடுப்பதோ என்றாள்
மலிந்த இவ்வுலகர் வாய்ப்பதர் தூற்ற
வைத்தல்உன் மரபல என்றாள்
வலிந்தெனைக் கலந்த வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே. - 8

4198 - ஒன்றிலேன் பிறிதொன் றுன்னருட் சோதி
ஒன்றுற ஒன்றினேன் என்றாள்
நன்றிலேன் எனினும் நின்திரு வடியை
நம்பினேன் நயந்தருள் என்றாள்
குன்றிலே இருத்தற் குரியநான் துயரக்
குழியிலே இருந்திடேன் என்றாள்
மன்றிலே நடஞ்செய் வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே. - 9

4199 - ஆடிய பாதத் தழகன்என் றனைத்தான்
அன்பினால் கூடினன் என்றாள்
கோடிமா தவங்கள் புரியினும் பிறர்க்குக்
கூடுதல் கூடுமோ என்றாள்
பாடிய படிஎன் கருத்தெலாம் நிரப்பிப்
பரிசெலாம் புரிந்தனன் என்றாள்
வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே. - 10

59. பாங்கி தலைவி பெற்றி உரைத்தல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


4200. - அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கணையும் விடுத்தான்
அருள்அடையும் ஆசையினால் ஆருயிர்தான் பொறுத்தாள்
இம்மதமோ சிறிதும்இலாள் கலவியிலே எழுந்த
ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும்
எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல்
இவள்மதமும் இவள்குலமும் எல்லாமும் சிவமே
சம்மதமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே. - 1

4201 - அங்கலிட்ட(285) களத்தழகர் அம்பலவர் திருத்தோள்
ஆசையெனும் பேய்அகற்றல் ஆவதிலை எனவே
பொங்கலிட்ட தாயர்முகம் தொங்கலிட்டுப் போனார்
பூவைமுகம் பூமுகம்போல் பூரித்து மகிழ்ந்தாள்
எங்களிட்டம் திருவருள்மங் கலஞ்சூட்டல் அன்றி
இரண்டுபடா தொன்றாக்கி இன்படைவித் திடவே
தங்களிட்டம் யாதுதிரு வாய்மலர வேண்டும்
சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே. - 2

- - (285). அங்கு அல் எனப்பிரித்து அவ்விடத்துஇருள் எனப்
பொருள்கொள்க - முதற்பதிப்பு. இருள் - நஞ்சு.

4202 - பனம்பழமே எனினும்இந்தப் பசிதவிர்த்தால் போதும்
பாரும்எனப் பகர்கின்ற பாவையர்போல் பகராள்
இனம்பழமோ கங்கலந்தாள் சிவானுபவத் தல்லால்
எந்தஅனு பவங்களிலும் இச்சைஇல்லாள் அவர்தம்
மனம்பழமோ காயோஎன் றறிந்துவர விடுத்தாள்
மற்றவர்போல் காசுபணத் தாசைவைத்து வருந்தாள்
தனம்பழமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே. - 3

4203 - புல்லவரே பொய்உலக போகம்உற விழைவார்
புண்ணியரே சிவபோகம் பொருந்துதற்கு விழைவார்
கல்லவரே மணிஇவரே என்றறிந்தாள் அதனால்
கனவிடையும் பொய்யுறவு கருதுகிலாள் சிறிதும்
நல்லவரே எனினும்உமை நாடாரேல் அவரை
நன்குமதி யாள்இவளை நண்ணஎண்ணம் உளதோ
வல்லவரே நுமதுதிரு வாய்மலர வேண்டும்
வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே. - 4

4204 - தத்துவரும் தத்துவஞ்செய் தலைவர்களும் பிறரும்
தனித்தனியே வலிந்துவந்து தன்எதிர்நிற் கின்றார்
எத்துணையும் மற்றவரை ஏறெடுத்துப் பாராள்
இருவிழிகள் நீர்சொரிவாள் என்னுயிர்நா யகனே
ஒத்துயிரில் கலந்துகொண்ட உடையாய்என் றுமையே
ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது
சித்தம்எது தேவர்திரு வாய்மலர வேண்டும்
சிற்சபையில் பொற்சபையில் திகழ்பெரிய துரையே. - 5

4205 - அன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர்
அடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே
என்னைஉனக் கிருக்கின்ற தேகுகஎன் றுரைப்பாள்
இச்சைஎலாம் உம்மிடத்தே இசைந்தனள்இங் கிவளை
முன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால்
முடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல்
மன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும்
வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே. - 6

4206 - கரவறியா அம்பலத்தென் கணவரைக்கண் டலது
கண்துயிலேன் உண்டிகொளேன் களித்தமரேன் என்பாள்
இரவறியாள் பகலறியாள் எதிர்வருகின் றவரை
இன்னவர்என் றறியாள்இங் கின்னல்உழக் கின்றாள்
வரவெதிர்பார்த் துழல்கின்றாள் இவள்அளவில் உமது
மனக்கருத்தின் வண்ணம்எது வாய்மலர வேண்டும்
விரவும்ஒரு கணமும்இனித் தாழ்க்கில்உயிர் தரியாள்
மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே. - 7

4207 - ஊராசை உடலாசை உயிர்பொருளின் ஆசை
உற்றவர்பெற் றவராசை ஒன்றுமிலாள் உமது
பேராசைப் பேய்பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும்
பிச்சிஎனப் பிதற்றுகின்றாள் பிறர்பெயர்கேட் டிடிலோ
நாராசஞ் செவிபுகுந்தால் என்னநலி கின்றாள்
நாடறிந்த திதுஎல்லாம் நங்கைஇவள் அளவில்
நீர்ஆசைப் பட்டதுண்டேல் வாய்மலர வேண்டும்
நித்தியமா மணிமன்றில் நிகழ்பெரிய துரையே. - 8

4208 - என்னுயிரில் கலந்துகொண்டார் வரில்அவர்தாம் இருக்க
இடம்புனைக என்கின்றாள் இச்சைமய மாகித்
தன்னுயிர்தன் உடல்மறந்தாள் இருந்தறியாள் படுத்தும்
தரித்தறியாள் எழுந்தெழுந்து தனித்தொருசார் திரிவாள்
அன்னமுண அழைத்தாலும் கேட்பதிலாள் உலகில்
அணங்கனையார் அதிசயிக்கும் குணங்கள்பல பெற்றாள்
மின்னிவளை விழைவதுண்டேல் வாய்மலர வேண்டும்
மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே. - 9

4209 - அம்பலத்தே நடம்புரியும் எனதுதனித் தலைவர்
அன்புடன்என் உளங்கலந்தே அருட்பெருஞ்சோ தியினால்
தம்பலத்தே பெரும்போகந் தந்திடுவார் இதுதான்
சத்தியஞ்சத் தியமதனால் சார்ந்தவர்தாம் இருக்க
எம்பலத்தே மலரணையைப் புனைகஎனப் பலகால்
இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்துநும தருளாம்
செம்பலத்தே உறுதருணம் வாய்மலர வேண்டும்
சிற்சபைபொற் சபைஓங்கித் திகழ்பெரிய துரையே. - 10

60. தலைவி வருந்தல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


4210. - பருவமிலாக் குறையாலோ பகுதிவகை யாலோ
பழக்கமிலா மையினாலோ படிற்றுவினை யாலோ
இருவகைமா யையினாலோ ஆணவத்தி னாலோ
என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன்
சருவல்ஒழிந் தென்மனமாம் பாங்கிபகை யானாள்
தனித்தபரை எனும்வளர்த்த தாயும்முகம் பாராள்
நிருவமடப் பெண்களெலாம் வலதுகொழிக் கின்றார்
நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே. - 1

4211 - அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
அணிந்திடமுன் சிலசொன்னேன் அதனாலோ அன்றி
எம்பலத்தே எம்மிறைவன் என்னைமணம் புரிவான்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
வம்பிசைத்தேன் எனஎனது பாங்கிபகை யானாள்
வளர்த்தெடுத்த தனித்தாயும் மலர்ந்துமுகம் பாராள்
நிம்பமரக் கனியானார் மற்றையர்கள் எல்லாம்
நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே. - 2

4212 - கண்ணுறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
கனவன்றி இலைஎன்றேன் அதனாலோ அன்றி
எண்ணுறங்கா நிலவில்அவர் இருக்குமிடம் புகுவேன்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
பெண்ணடங்காள் எனத்தோழி பேசிமுகங் கடுத்தாள்
பெருந்தயவால் வளர்த்தவளும் வருந்தயலாள் ஆனாள்
மண்ணடங்காப் பழிகூறி மற்றவர்கள் இருந்தார்
வள்ளல்நட ராயர்திரு உள்ளம்அறிந் திலனே. - 3

4213 - எல்லாஞ்செய் வல்லதுரை என்கணவர் என்றால்
எனக்கும்ஒன்று நினக்கும்ஒன்றா என்றஅத னாலோ
இல்லாமை எனக்கில்லை எல்லார்க்குந் தருவேன்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கல்லார்போல் என்னைமுகம் கடுத்துநின்றாள் பாங்கி
களித்தெடுத்து வளர்த்தவளும் கலந்தனள்அங் குடனே
செல்லாமை சிலபுகன்று சிரிக்கின்றார் மடவார்
சித்தர்நட ராயர்திருச் சித்தமறிந் திலனே. - 4

4214 - இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ
எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள்
நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள்
அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார்
அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே. - 5

4215 - வஞ்சமிலாத் தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா
வாழ்வும்என்றன் வாழ்வென்றேன் அதனாலோ அன்றி
எஞ்சலுறேன் மற்றவர்போல் இறந்துபிறந் துழலேன்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
அஞ்சுமுகங் காட்டிநின்றாள் பாங்கிஎனை வளர்த்த
அன்னையும்அப் படியாகி என்னைமுகம் பாராள்
நெஞ்சுரத்த பெண்களெலாம் நீட்டிநகைக் கின்றார்
நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே. - 6

4216 - அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மலர் அடித்தேன்
அருந்துகின்றேன் எனஉரைத்தேன் அதனாலோ அன்றி
என்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கே
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
துன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள்
துணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள்
நென்னல்ஒத்த பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே. - 7

4217 - பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்
புன்னகைஎன் பொருள்என்றேன் அதனாலோ அன்றி
இதுவரையும் வரக்காணேன் தடைசெய்தார் எவரோ
எனப்புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
புதுமுகங்கொண் டெனதுதனித் தோழிமனந் திரிந்தாள்
புரிந்தெடுத்து வளர்த்தவளும் புதுமைசில புகன்றாள்
மதுவுகந்து களித்தவர்போல் பெண்கள்நொடிக் கின்றார்
வள்ளல்நட ராயர்திரு உள்ளமறிந் திலனே. - 8

4218 - கண்கலந்த கள்வர்என்னைக் கைகலந்த தருணம்
கரணம்அறிந் திலன்என்றேன் அதனாலோ அன்றி
எண்கலந்த போகமெலாம் சிவபோகந் தனிலே
இருந்ததென்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
விண்கலந்த மதிமுகந்தான் வேறுபட்டாள் பாங்கி
வியந்தெடுத்து வளர்த்தவளும் வேறுசில புகன்றாள்
பண்கலந்த மொழிமடவார் பழிகூற லானார்
பத்தர்புகழ் நடராயர் சித்தம்அறிந் திலனே. - 9

4219 - மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே மகிழ்ந்தேன்
வள்ளலொடு நானென்றேன் அதனாலோ அன்றி
ஈடறியாச் சுகம்புகல என்னாலே முடியா
தென்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
ஏடவிழ்பூங் குழற்கோதைத் தோழிமுகம் புலர்ந்தாள்
எனைஎடுத்து வளர்த்தவளும் இரக்கமிலாள் ஆனாள்
நாடறியப் பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
நல்லநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே. - 10

4220 - கற்பூரம் மணக்கின்ற தென்மேனி முழுதும்
கணவர்மணம் அதுவென்றேன் அதனாலோ அன்றி
இற்பூவை அறியுமடி நடந்தவண்ணம் எல்லாம்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
பொற்பூவின் முகம்வியர்த்தாள் பாங்கிஅவ ளுடனே
புரிந்தெடுத்து வளர்த்தவளும் கரிந்தமுகம் படைத்தாள்
சொற்பூவைத் தொடுக்கின்றார் கால்கள்களை யாதே
துன்னுநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே. - 11

4221 - மன்னுதிருச் சபைநடுவே மணவாள ருடனே
வழக்காடி வலதுபெற்றேன் என்றஅத னாலோ
இன்னும்அவர் வதனஇள நகைகாணச் செல்வேன்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
மின்னும்இடைப் பாங்கிஒரு விதமாக நடந்தாள்
மிகப்பரிவால் வளர்த்தவளும் வெய்துயிர்த்துப் போனாள்
அன்னநடைப் பெண்களெலாம் சின்னமொழி புகன்றார்
அத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே. - 12

4222 - கள்ளுண்டாள் எனப்புகன்றீர் கனகசபை நடுவே
கண்டதலால் உண்டதிலை என்றஅத னாலோ
எள்ளுண்ட மற்றவர்போல் என்னைநினை யாதீர்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
உள்ளுண்ட மகிழ்ச்சிஎலாம் உவட்டிநின்றாள் பாங்கி
உவந்துவளர்த் தவளும்என்பால் சிவந்தகண்ணள் ஆனாள்
துள்ளுண்ட பெண்களெலாம் சூழ்ந்துநொடிக் கின்றார்
சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே. - 13

4223 - காரிகையீர் எல்லீரும் காணவம்மின் எனது
கணவர்அழ கினைஎன்றேன் அதனாலோ அன்றி
ஏரிகவாத் திருஉருவை எழுதமுடி யாதே
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
காரிகவாக் குழல்சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி
கண்பொறுத்து வளர்த்தவளும் புண்பொறுத்தாள் உளத்தே
நேரிகவாப் பெண்கள்மொழிப் போர்இகவா தெடுத்தார்
நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே. - 14

4224 - கண்ணேறு படும்எனநான் அஞ்சுகின்றேன் எனது
கணவர்வடி வதுகாணற் கென்றஅத னாலோ
எண்ணாத மனத்தவர்கள் காணவிழை கின்றார்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நண்ணாரில் கடுத்தமுகம் தோழிபெற்றாள் அவளை
நல்கிஎனை வளர்த்தவளும் மல்கியவன் படுத்தாள்
பெண்ணாயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே
பெரியநட ராயர்உள்ளப் பிரியம்அறிந் திலனே. - 15

4225 - கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்
கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி
எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
வற்பூத வனம்போன்றாள் பாங்கியவள் தனைமுன்
மகிழ்ந்துபெற்றிங் கெனைவளர்த்தாள் வினைவளர்த்தாள் ஆனாள்
விற்பூஒள் நுதல்மடவார் சொற்போர்செய் கின்றார்
விண்ணிலவு நடராயர் எண்ணம்அறிந் திலனே. - 16

4226 - மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது
வடிவுசுக வடிவானேன் என்றஅத னாலோ
இனைவறியேன் முன்புரிந்த பெருந்தவம்என் புகல்வேன்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
புனைமுகம்ஓர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி
புழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி
பனையுலர்ந்த ஓலைஎனப் பெண்கள்ஒலிக் கின்றார்
பண்ணவர்என் நடராயர் எண்ணம்அறிந் திலனே. - 17

4227 - தாழ்குழலீர் எனைச்சற்றே தனிக்கவிட்டால் எனது
தலைவரைக்காண் குவல்என்றேன் அதனாலோ அன்றி
ஏழ்கடலிற் பெரிதன்றோ நான்பெற்ற இன்பம்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கூழ்கொதிப்ப தெனக்கொதித்தாள் பாங்கிஎனை வளர்த்த
கோதைமருண் டாடுகின்ற பேதைஎனல் ஆனாள்
சூழ்மடந்தை மார்களெலாம் தூற்றிநகைக் கின்றார்
சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே. - 18

4228 - தனித்தலைவர் வருகின்ற தருணம்இது மடவீர்
தனிக்கஎனை விடுமின்என்றேன் அதனாலோ அன்றி
இனித்தசுவை எல்லாம்என் கணவர்அடிச் சுவையே
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
பனித்தகுளிர் காலத்தே சனித்தசலம் போன்றாள்
பாங்கிஎனை வளர்த்தவளும் தூங்குமுகங் கொண்டாள்
கனித்தபழம் விடுத்துமின்னார் காய்தின்னு கின்றார்
கருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே. - 19

4229 - அரும்பொன்அனை யார்எனது துரைவரும்ஓர் சமயம்
அகலநின்மின் அணங்கனையீர் என்றஅத னாலோ
இரும்புமணம் ஆனாலும் இளகிவிடுங் கண்டால்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கரும்பனையாள் பாங்கியும்நாய்க் கடுகனையாள் ஆனாள்
களித்தென்னை வளர்த்தவளும் புளித்தின்றாள் ஒத்தாள்
விரும்புகின்ற பெண்களெலாம் அரும்புகின்றார் அலர்தான்
வித்தகர்என் நடராயர் சித்தம்அறிந் திலனே. - 20

4230 - மணவாளர் வருகின்ற தருணம்இது மடவீர்
மறைந்திருமின் நீவிர்என்றேன் அதனாலோ அன்றி
எணமேது நுமக்கெனைத்தான் யார்தடுக்கக் கூடும்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
குணநீடு பாங்கிஅவள் எம்மிறையை நினையார்
குணங்கொண்டாள் வளர்த்தவளும் பணம்விண்டாள் ஆனாள்
மணநீடு குழன்மடவார் குணநீடு கின்றார்
வள்ளல்நட ராயர்திரு உள்ளம்அறிந் திலனே. - 21

4231 - பதிவரும்ஓர் தருணம்இது நீவிர்அவர் வடிவைப்
பார்ப்பதற்குத் தரமில்லீர் என்றஅத னாலோ
எதிலும்எனக் கிச்சைஇல்லை அவரடிக்கண் அல்லால்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
மதிமுகத்தாள் பாங்கிஒரு விதிமுகத்தாள் ஆனாள்
மகிழ்ந்தென்னை வளர்த்தவளும் இகழ்ந்துபல புகன்றாள்
துதிசெய்மட மாதர்எலாம் சதிசெய்வார் ஆனார்
சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே. - 22

4232 - மன்றாடுங் கணவர்திரு வார்த்தைஅன்றி உமது
வார்த்தைஎன்றன் செவிக்கேறா தென்றஅத னாலோ
இன்றாவி அன்னவர்க்குத் தனித்தஇடங் காணேன்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
முன்றானை அவிழ்ந்துவிழ முடுகிநடக் கின்றாள்
முதற்பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன்செல் கின்றாள்
ஒன்றாத மனப்பெண்கள் வென்றாரின் அடுத்தார்
ஒருத்தநட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே. - 23

4233 - கூடியஎன் கணவர்எனைக் கூடாமற் கலைக்கக்
கூடுவதோ நும்மாலே என்றஅத னாலோ
ஏடிஎனை அறியாரோ சபைக்குவரு வாரோ
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நாடியஎன் பாங்கிமன மூடிநின்று போனாள்
நண்ணிஎனை வளர்த்தவளும் எண்ணியவா றிசைத்தாள்
தேடியஆ யங்களெலாம் கூடிஉரைக் கின்றார்
திருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே. - 24

61. ஞானசிதம்பர வெண்பா: தில்லையும் பார்வதிபுரமும்

நேரிசை வெண்பா


4234. - அன்னையப்பன் மாவினத்தார் ஆய்குழலார் ஆசையினால்
தென்னைஒப்ப நீண்ட சிறுநெஞ்சே - என்னைஎன்னை
யாவகைசேர் வாயில் எயிற்றில்லை என்கிலையே
ஆவகைஐந் தாய்ப்பதம்ஆ றார்ந்து. - 1

4235 - நீர்க்கிசைந்த நாம நிலைமூன்று கொண்டபெயர்
போர்க்கிசைந்த தென்றறியாப் புன்னெஞ்சே - நீர்க்கிசைந்தே
ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்று தில்லைமணி
மன்றொன்று வானை மகிழ்ந்து. - 2

4236 - ஈற்றில்ஒன்றாய் மற்றை இயல்வருக்க மாகியபேர்
ஏற்ற பறவை இருமைக்கும் - சாற்றுவமை
அன்றே தலைமகட்கா அம்பலவர் தம்பால்ஏ(கு)
என்றே எனக்குநினக் கும். - 3

4237 - கைத்தலைமே லிட்டலையிற் கண்ணுடையான் கால்மலர்க்குக்
கைத்தலைமே லிட்டலையிற் கண்ணீர்கொண் - டுய்த்தலைமேல்
காணாயேல் உண்மைக் கதிநிலையைக் கைக்கணியாக்
காணாயே நெஞ்சே களித்து. - 4

4238 - கல்லோ மணலோ கனியோ கரும்போஎன்(று)
எல்லோமும் இங்கே இருக்கின்றோம் - சொல்லோம்
அதுவாய் அதன்பொருளாய் அப்பாலாய் யார்க்கும்
பொதுவாய் நடிக்கின்ற போது. - 5

4239 - அதுபார் அதிலே அடைந்துவதி மற்றாங்(கு)
அதில்ஏழை யைப்புரமெய் யன்பால் - அதிலே
நலமே வதிலேநின் னாவூர் திருவம்
பலமேவக் காட்டும் பரிசு. - 6

4240 - நம்பார் வதிபாக னம்புரத்தில் நின்றுவந்தோன்
அம்பாரத் தென்கிழக்கே அம்பலத்தான் - வெம்பாது
பார்த்தால் அளிப்பான் தெரியுஞ் சிதம்பரம்நீ
பார்த்தாய்இப் பாட்டின் பரிசு. - 7

4241 - நடிப்பார் வதிதில்லை நற்கோ புரத்தின்
அடிப்பாவை யும்(286)வடக்கே ஆர்ந்து - கொடிப்பாய
நின்று வளர்மலைபோல் நெஞ்சேபார்த் தால்தெரியும்
இன்றெவ்விடத் தென்னிலிப்பாட் டில். - 8

- - (286). அடிப்பார்வையும் - முதற்பதிப்பு, சிவாசாரியர் அகவற் பதிப்பு., பொ. சு., பி. இரா.,

4242 - பூமி பொருந்து புரத்தே(287) நமதுசிவ
காமிதனை வேட்டுக் கலந்தமர்ந்தான் - நேமி
அளித்தான்மால் கண்மலருக் கானந்தக் கூத்தில்
களித்தான் அவன்றான் களித்து. - 9

- - (287). பூமிபொருந்துபுரம் - பார்வதிபுரம். பூமி - பார், பொருந்து - வதி.

62. சிவபதி விளக்கம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


4243. - உரைவளர் கலையே கலைவளர் உரையே உரைகலை வளர்தரு பொருளே
விரைவளர் மலரே மலர்வளர் விரையே விரைமலர் வளர்தரு நறவே
கரைவளர் தருவே தருவளர் கரையே கரைதரு வளர்கிளர் கனியே
பரைவளர் ஒளியே ஒளிவளர் பரையே பரையொளி வளர்சிவ பதியே. - 1

4244 - ஒளிவளர் உயிரே உயிர்வளர் ஒளியே ஒளியுயிர் வளர்தரும் உணர்வே
வெளிவளர் நிறைவே நிறைவளர் வெளியே வெளிநிறை வளர்தரு விளைவே
வளிவளர் அசைவே அசைவளர் வளியே வளியசை வளர்தரு செயலே
அளிவளர் அனலே அனல்வளர் அளியே அளியனல் வளர்சிவ பதியே. - 2

4245 - அடிவளர் இயலே இயல்வளர் அடியே அடியியல் வளர்தரு கதியே
முடிவளர் பொருளே பொருள்வளர் முடியே முடிபொருள் வளர்சுக நிதியே
படிவளர் விதையே விதைவளர் படியே படிவிதை வளர்பல நிகழ்வே
தடிவளர் முகிலே முகில்வளர் தடியே தடிமுகில் வளர்சிவ பதியே. - 3

4246 - சிரம்வளர் முதலே முதல்வளர் சிரமே சிரமுதல் வளர்தரு செறிவே
தரம்வளர் நிலையே நிலைவளர் தரமே தரநிலை வளர்தரு தகவே
வரம்வளர் நிறையே நிறைவளர் வரமே வரநிறை வளர்தரு வயமே
பரம்வளர் பதமே பதம்வளர் பரமே பரபதம் வளர்சிவ பதியே. - 4

4247 - திருவளர் வளமே வளம்வளர் திருவே திருவளம் வளர்தரு திகழ்வே
உருவளர் வடிவே வடிவளர் உருவே உருவடி வளர்தரு முறைவே
கருவளர் அருவே அருவளர் கருவே கருவரு வளர்நவ கதியே
குருவளர் நெறியே நெறிவளர் குருவே குருநெறி வளர்சிவ பதியே. - 5

4248 - நிறைவளர் முறையே முறைவளர் நிறையே நிறைமுறை வளர்பெரு நெறியே
பொறைவளர் புவியே புவிவளர் பொறையே புவிபொறை வளர்தரு புனலே
துறைவளர் கடலே கடல்வளர் துறையே துறைகடல் வளர்தரு சுதையே
மறைவளர் பொருளே பொருள்வளர் மறையே மறைபொருள்வளர்சிவபதியே. - 6

4249 - தவம்வளர் தயையே தயைவளர் தவமே தவநிறை தயைவளர் சதுரே
நவம்வளர் புரமே புரம்வளர் நவமே நவபுரம் வளர்தரும் இறையே
துவம்வளர் குணமே குணம்வளர் துவமே துவகுணம் வளர்தரு திகழ்வே
சிவம்வளர் பதமே பதம்வளர் சிவமே சிவபதம் வளர்சிவ பதியே. - 7

4250 - நடம்வளர் நலமே நலம்வளர் நடமே நடநலம் வளர்தரும் ஒளியே
இடம்வளர் வலமே வலம்வளர் இடமே இடம்வலம் வளர்தரும் இசைவே
திடம்வளர் உளமே உளம்வளர் திடமே திடவுளம் வளர்தரு திருவே
கடம்வளர் உயிரே உயிர்வளர் கடமே கடமுயிர் வளர்சிவ பதியே. - 8

4251 - அதுவளர் அணுவே அணுவளர் அதுவே அதுவணு வளர்தரும் உறவே
விதுவளர் ஒளியே ஒளிவளர் விதுவே விதுஒளி வளர்தரு செயலே
மதுவளர் சுவையே சுவைவளர் மதுவே மதுவுறு சுவைவளர் இயலே
பொதுவளர் வெளியே வெளிவளர் பொதுவே பொதுவெளி வளர்சிவ பதியே. - 9

4252 - நிதிவளர் நிலமே நிலம்வளர் நிதியே நிதிநிலம் வளர்தரு நிறைவே
மதிவளர் நலமே நலம்வளர் மதியே மதிநலம் வளர்தரு பரமே
கதிவளர் நிலையே நிலைவளர் கதியே கதிநிலை வளர்தரு பொருளே
பதிவளர் பதமே பதம்வளர் பதியே பதிபதம் வளர்சிவ பதியே. - 10

63. ஞானோபதேசம்

கலிவிருத்தம் ; பண்: நட்டராகம்


4253. - கண்ணே கண்மணி யே - கருத் - தேகருத் தின்கனி வே
விண்ணே விண்ணிறை வே - சிவ - மேதனி மெய்ப்பொரு ளே
தண்ணேர் ஒண்மதி யே - எனைத் - தந்த தயாநிதி யே
உண்ணேர் உள்ளொளி யே - எனக் - குண்மை உரைத்தரு ளே. - 1

4254 - வளியே வெண்ணெருப் பே - குளிர் - மாமதி யேகன லே
வெளியே மெய்ப்பொரு ளே - பொருள் - மேவிய மேனிலை யே
அளியே அற்புத மே - அமு - தேஅறி வேஅர சே
ஒளியே உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே. - 2

4255 - அன்பே என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
என்பே உள்ளுரு கக் - கலந் - தென்னு ளிருந்தவ னே
இன்பே என்னறி வே - பர - மேசிவ மேயென வே
உன்பே ரோதுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே. - 3

4256 - தனையா வென்றழைத் தே - அருட் - சத்தி யளித்தவ னே
அனையா யப்பனு மாய் - எனக் - காரிய னானவ னே
இனையா தென்னையு மேல் - நிலை - ஏற்றுவித் தாண்டவ னே
உனையான் ஏத்துகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே. - 4

4257 - துப்பார் செஞ்சுடரே - அருட் - சோதி சுகக்கட லே
அப்பா என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
இப்பா ரிற்பசிக் கே - தந்த - இன்சுவை நல்லுண வே
ஒப்பாய் ஒப்பரி யாய் - எனக் - குண்மை உரைத்தரு ளே. - 5

4258 - என்றே யென்று ளுறுஞ் - சுட - ரேஎனை ஈன்றவ னே
நன்றே நண்பெனக் கே - மிக - நல்கிய நாயக னே
மன்றேர் மாமணி யே - சுக - வாழ்க்கையின் மெய்ப்பொரு ளே
ஒன்றே யென்றுணை யே - எனக் - குண்மை உரைத்தரு ளே. - 6

4259 - திருவே தெள்ளமு தே - அருட் - சித்த சிகாமணி யே
கருவே ரற்றிட வே - களை - கின்றவென் கண்ணுத லே
மருவே மாமல ரே - மலர் - வாழ்கின்ற வானவ னாம்
உருவே என்குரு வே - எனக் - குண்மை உரைத்தரு ளே. - 7

4260 - தடையா வுந்தவிர்த் தே - எனைத் - தாங்கிக்கொண் டாண்டவ னே
அடையா யன்பிலர் பால் - எனக் - கன்பொடு தந்தபெ ருங்
கொடையாய் குற்றமெ லாங் - குணங் - கொண்டகு ணக்குன்ற மே
உடையாய் உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே. - 8

4261 - பெண்ணாய் ஆணுரு வாய் - எனைப் - பெற்றபெ ருந்தகை யே
அண்ணா என்னர சே - திரு - வம்பலத் தாடுகின் றோய்
எண்ணா நாயடி யேன் - களித் - திட்டவு ணவையெ லாம்
உண்ணா துண்டவ னே - எனக் - குண்மை உரைத்தரு ளே. - 9

4262 - நந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே
பொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே
என்னால் ஆவதொன் றும் - உனக் - கில்லையெ னினுமெந் தாய்
உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே. - 10

64. ஆரமுதப் பேறு

கலிவிருத்தம் ; பண்: நட்டராகம்


4263. - விரைசேர் பொன்மல ரே - அதில் - மேவிய செந்தே னே
கரைசேர் முக்கனி யே - கனி - யிற்சுவை யின்பய னே
பரைசேர் உள்ளொளி யே - பெரும் - பற்றம்ப லநடஞ் செய்
அரைசே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. - 1

4264 - விண்ணார் செஞ்சுட ரே - சுடர் - மேவிய உள்ளொளி யே
தண்ணார் வெண்மதி யே - அதில் - தங்கிய தண்ணமு தே
கண்ணார் மெய்க்கன லே - சிவ - காமப்பெண் காதல னே
அண்ணா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. - 2

4265 - துப்பார் செஞ்சடை யாய் - அருட் - சோதிச் சுகக்கட லே
செப்பா மேனிலைக் கே - சிறி - யேனைச் செலுத்திய வா
எப்பா லும்புக ழும் - பொது - இன்ப நடம்புரி யும்
அப்பா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. - 3

4266 - மெய்யா மெய்யரு ளே - என்று - மேவிய மெய்ப்பொரு ளே
கையா ருங்கனி யே - நுதற் - கண்கொண்ட செங்கரும் பே
செய்யாய் வெண்ணிறத் தாய் - திருச் - சிற்றம்ப லநடஞ் செய்
ஐயா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. - 4

4267 - பொறிவே றின்றி நினை - நிதம் - போற்றும் புனிதரு ளே
குறிவே றின்றி நின்ற - பெருஞ் - சோதிக் கொழுஞ்சுட ரே
செறிவே தங்களெ லாம் - உரை - செய்ய நிறைந்திடும் பேர்
அறிவே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. - 5

4268 - முத்தா முத்தரு ளே - ஒளிர் - கின்ற முழுமுத லே
சித்தா சித்திஎ லாந் - தர - வல்ல செழுஞ்சுட ரே
பித்தா பித்தனெ னை - வலிந் - தாண்ட பெருந்தகை யே
அத்தா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. - 6

4269 - தன்னே ரில்லவ னே - எனைத் - தந்த தயாநிதி யே
மன்னே மன்றிடத் தே - நடஞ் - செய்யுமென் வாழ்முத லே
பொன்னே என்னுயி ரே - உயி - ருள்நிறை பூரண மே
அன்னே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. - 7

4270 - ஒளியே அவ்வொளி யின் - நடு - உள்ளொளிக் குள்ளொளி யே
வெளியே எவ்வெளி யும் - அடங் - கின்ற வெறுவெளி யே
தளியே அம்பலத் தே - நடஞ் - செய்யுந் தயாநிதி யே
அளியே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. - 8

4271 - மருளேய் நெஞ்சக னேன் - மன - வாட்டமெ லாந்தவிர்த் தே
தெருளே யோர்வடி வாய் - உறச் - செய்த செழுஞ்சுட ரே
பொருளே சிற்சபை வாழ் - வுறு - கின்றவென் புண்ணிய னே
அருளே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. - 9

4272 - முன்பே என்றனை யே - வலிந் - தாட்கொண்ட முன்னவ னே
இன்பே என்னுயி ரே - எனை -ஈன்ற இறையவ னே
பொன்பே ரம்பல வா - சிவ - போகஞ்செய் சிற்சபை வாழ்
அன்பே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. - 10

4273 - பவனே வெம்பவ நோய் - தனைத் - தீர்க்கும் பரஞ்சுட ரே
சிவனே செம்பொரு ளே - திருச் - சிற்றம் பலநடிப் பாய்
தவநே யம்பெறு வார் - தமைத் - தாங்கி யருள்செய வல்
லவனே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. - 11

4274 - தேனாய்த் தீம்பழ மாய்ச் - சுவை - சேர்கரும் பாயமு தம்
தானாய் அன்பரு ளே - இனிக் - கின்ற தனிப்பொரு ளே
வானாய்க் காலன லாய்ப் - புன - லாயதில் வாழ்புவி யாய்
ஆனாய் தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே. - 12

4275 - பொடியேற் கும்புய னே - அருட் - பொன்னம் பலத்தர சே
செடியேற் கன்றளித் தாய் - திருச் - சிற்றம் பலச்சுட ரே
கடியேற் கன்னையெ னுஞ் - சிவ - காமக் கொடையுடை யாய்
அடியேற் கின்றளித் தாய் - அரு - ளாரமு தந்தனை யே. - 13

65. உபதேச வினா

கலித்தாழிசை


4276. - வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும்
மேவும் பொதுநடம் நான்காணல் வேண்டும்
நாதாந்தத் திருவீதி நடப்பாயோ தோழி
நடவாமல் என்மொழி கடப்பாயோ தோழி. - 1

4277 - தொம்பத உருவொடு தத்பத வெளியில்
தோன்றசி பதநடம் நான்காணல் வேண்டும்
எம்பதமாகி இசைவாயோ தோழி
இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி. - 2

4278 - சின்மய வெளியிடைத் தன்மய மாகித்
திகழும் பொதுநடம் நான்காணல் வேண்டும்
என்மய மாகி இருப்பாயோ தோழி
இச்சை மயமாய் இருப்பாயோ(288) தோழி. - 3

- - (288). மயமாய்ப் பொருப்பாயோ - ஆ. பா. பதிப்பு.

4279 - நவநிலை மேற்பர நாதத் தலத்தே
ஞானத் திருநடம் நான்காணல் வேண்டும்
மவுனத் திருவீதி வருவாயோ தோழி
வாராமல் வீண்பழி தருவாயோ தோழி. - 4

4280 - ஆறாறுக் கப்புற மாகும் பொதுவில்
அதுவது வாநடம் நான்காணல் வேண்டும்
ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி
ஏறி இழிந்திங் கிறப்பாயோ(289) தோழி. - 5

- - (289). இழிந்திங் கிருப்பாயோ - முதற்பதிப்பு.

4281 - வகார வெளியில் சிகார உருவாய்
மகாரத் திருநடம் நான்காணல் வேண்டும்
விகார உலகை வெறுப்பாயோ தோழி
வேறாகி என்சொல் மறுப்பாயோ தோழி. - 6

4282 - நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு
நடுவாம் பொதுநடம் நான்காணல் வேண்டும்
சூதாந்தற் போதத்தைச் சுடுவாயோ தோழி
துட்டநெறியில் கெடுவாயோ தோழி. - 7

4283 - அறிவில் அறிவை அறியும் பொதுவில்
ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்
செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழி
செல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி. - 8

4284 - என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில்
இன்பத் திருநடம் நான்காணல் வேண்டும்
நின்னைவிட் டென்னோடே நிலைப்பாயோ தோழி
நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி. - 9

4285 - துரியத்திற் கப்பாலுந் தோன்றும் பொதுவில்
ஜோதித் திருநடம் நான்காணல் வேண்டும்
கரியைக்கண் டாங்கது காண்பாயோ தோழி
காணாது போய்ப்பழி(290) பூண்பாயோ தோழி. - 10

- - (290) பொய்ப்பணி - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா.,

4286 - தத்துவத் துட்புறந் தானாம் பொதுவில்
சத்தாந் திருநடம் நான்காணல் வேண்டும்
கொத்தறு வித்தைக் குறிப்பாயோ தோழி
குறியா துலகில் வெறிப்பாயோ தோழி - 11

66. நெஞ்சொடு நேர்தல்

கலித்தாழிசை


4287. - அடங்குநாள் இல்லா தமர்ந்தானைக் காணற்கே(291)
தொடங்குநாள் நல்லதன் றோ - நெஞ்சே
தொடங்குநாள் நல்லதன் றோ. - 1

- - (291) காணவே - பி. இரா., பதிப்பு

4288 - வல்லவா றெல்லாமும் வல்லானைக் காணற்கே
நல்லநாள் எண்ணிய நாள் - நெஞ்சே
நல்லநாள் எண்ணிய நாள். - 2

4289 - காலங் கடந்த கடவுளைக் காணற்குக்
காலங் கருதுவ தேன் - நெஞ்சே
காலங் கருதுவ தேன். - 3

4290 - ஆலம் அமுதாக்கும் அண்ணலைக் காணற்குக்
காலங் கருதுவ தேன் - நெஞ்சே
காலங் கருதுவ தேன். - 4

4291 - தடையாதும் இல்லாத் தலைவனைக் காணற்கே
தடையாதும் இல்லைகண் டாய் - நெஞ்சே
தடையாதும் இல்லைகண் டாய். - 5

4292 - கையுள் அமுதத்தை வாயுள் அமுதாக்கப்
பையுள்(292) உனக்கென்னை யோ - நெஞ்சே
பையுள் உனக்கென்னை யோ. - 6

- - (292). பையுள் - வருத்தம். முதற்பதிப்பு.

4293 - என்னுயிர் நாதனை யான்கண் டணைதற்கே
உன்னுவ தென்னைகண் டாய் - நெஞ்சே
உன்னுவ தென்னைகண் டாய். - 7

4294 - நான்பெற்ற செல்வத்தை நான்பற்றிக் கொள்ளற்கே
ஏன்பற்று வாயென்ப தார் - நெஞ்சே
ஏன்பற்று வாயென்ப தார். - 8

4295 - தத்துவா தீதத் தலைவனைக் காணற்குத்
தத்துவ முன்னுவ தேன் - நெஞ்சே
தத்துவ முன்னுவ தேன். - 9

4296 - ஒக்க அமுதத்தை உண்டோ ம் இனிச்சற்றும்
விக்கல் வராதுகண் டாய் - நெஞ்சே
விக்கல் வராதுகண் டாய். - 10

67. அஞ்சாதே நெஞ்சே

சிந்து



- பல்லவி

4297. அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே
அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே. - - 1

- கண்ணிகள்

4298 - வஞ்சமி லார்நாம்(293) வருந்திடில் அப்போதே
அஞ்சலென் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 1

- - (293). வஞ்சமிலா நாம் - முதற்பதிப்பு., பொ. சு; பி. இரா. பதிப்பு.

4299 - துய்யர் அருட்பெருஞ் ஜோதியார் நம்முடை
அய்யர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 2

4300 - மண்ணில் நமையாண்ட வள்ளலார் நம்முடை
அண்ணல் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 3

4301 - இப்புவி யில்நம்மை ஏன்றுகொண் டாண்டநம்
அப்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 4

4302 - சித்தர் எலாம்வல்ல தேவர் நமையாண்ட
அத்தர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 5

4303 - சோதி அருட்பெருஞ் சோதியார் நம்முடை
ஆதி இதோதிரு வம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 6

4304 - தாண்டவ னார்என்னைத் தான்தடுத் தாட்கொண்ட
ஆண்டவ னார்இதோ அம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 7

4305 - வன்பர் மனத்தை மதியா தவர்நம
தன்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 8

4306 - தெருளுடை யார்எலாஞ் செய்யவல் லார்திரு
அருளுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 9

4307 - நம்மை ஆட்கொள்ள நடம்புரி வார்நம
தம்மை யினோடிதோ அம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 10

4308 - தன்னைஒப் பார்சிற் சபைநடஞ் செய்கின்றார்
அன்னைஒப் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 11

4309 - பாடுகின் றார்க்கருட் பண்பினர் ஞானக்கூத்
தாடுகின் றார்இதோ அம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 12

4310 - காதரிப் பார்கட்குக் காட்டிக் கொடார்நம்மை
ஆதரிப் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 13

4311 - நீளவல் லார்க்குமேல் நீளவல்லார் நம்மை
ஆளவல் லார்இதோ அம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 14

4312 - இன்புடை யார்நம் இதயத் தமர்ந்தபே
ரன்புடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 15

4313 - உபய பதத்தைநம் உச்சிமேற் சூட்டிய
அபயர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 16

4314 - வேண்டுகொண் டார்என்னை மேல்நிலைக் கேற்றியே
ஆண்டுகொண் டார்இதோ அம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 17

4315 - எச்சம்பெ றேல்மக னேஎன்றென் னுள்உற்ற
அச்சம் தவிர்த்தவர் அம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 18

4316 - நமுதன் முதற்பல நன்மையு மாம்ஞான
அமுதர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 19

4317 - செடிகள் தவிர்த்தருட் செல்வ மளிக்கின்ற
அடிகள் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 20

4318 - விரசுல கெல்லாம் விரித்தைந் தொழில்தரும்
அரசுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 21

4319 - செறிவுடை யார்உளத் தேநடஞ் செய்கின்ற
அறிவுரு வார்இதோ அம்பலத் திருக்கின்றார் - அஞ்சா தே - 22

- அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே
அஞ்சா தே நெஞ்சே - அஞ்சா தே

68. ஆடிய பாதம்

சிந்து



- பல்லவி

4320. ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதநின் றாடிய பாதம். - - 1

- கண்ணிகள்

4321 - பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பத்திசெய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர்(294) நேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம் - ஆடிய - 1

- - (294) மாதவன் - ஆ. பா. பாதிப்பு.

4322 - தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்
தெய்வங்கள் எல்லாந் தெரிசிக்கும் பாதம்
வாரா வரவாகி வந்தபொற் பாதம்
வஞ்ச மனத்தில் வசியாத பாதம். - ஆடிய - 2

4323 - ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்
அன்பர் உளத்தே அமர்ந்தருள் பாதம்
நாரா யணன்விழி நண்ணிய பாதம்
நான்புனை பாடல் நயந்தபொற் பாதம். - ஆடிய - 3

4324 - நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்
நாத முடிவில் நடிக்கின்ற பாதம்
வல்லவர் சொல்லெல்லாம் வல்லபொற் பாதம்
மந்திர யந்திர தந்திர பாதம். - ஆடிய - 4

4325 - எச்சம யத்தும் இலங்கிய பாதம்
எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்
அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்
ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம் - ஆடிய - 5

4326 - தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம்
தெள்ளமு தாய்உளந் தித்திக்கும் பாதம்
மூவரும் காணா முழுமுதற் பாதம்
முப்பாழுக் கப்பால் முளைத்தபொற் பாதம். - ஆடிய 6

4327 - துரிய வெளிக்கே உரியபொற் பாதம்
சுகமய மாகிய சுந்தரப் பாதம்
பெரிய பொருளென்று பேசும்பொற் பாதம்
பேறெல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம். - ஆடிய - 7

4328 - சாகா வரந்தந்த தாரகப் பாதம்
சச்சிதா னந்த சதோதய பாதம்
தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம்
திதிமுதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம். - ஆடிய - 8

4329 - ஓங்கார பீடத் தொளிர்கின்ற பாதம்
ஒன்றாய் இரண்டாகி ஓங்கிய பாதம்
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம்
துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம். - ஆடிய - 9

4330 - ஐவண்ண முங்கொண்ட அற்புதப் பாதம்
அபயர்(295) எல்லார்க்கும் அமுதான பாதம்
கைவண்ண நெல்லிக் கனியாகும் பாதம்
கண்ணும் கருத்தும் கலந்தபொற் பாதம். - ஆடிய - 10

- - (295) ஐயர் - ச. மு. க. பதிப்பு.

4331 - ஆருயிர்க் காதாரம் ஆகிய பாதம்
அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம்
சாருயிர்க் கின்பம் தருகின்ற பாதம்
சத்திய ஞான தயாநிதி பாதம். - ஆடிய - 11

4332 - தாங்கி எனைப்பெற்ற தாயாகும் பாதம்
தந்தையு மாகித் தயவுசெய் பாதம்
ஓங்கிஎன் னுள்ளே உறைகின்ற பாதம்
உண்மை விளங்க உரைத்தபொற் பாதம். - ஆடிய - 12

4333 - எண்ணிய வாறே எனக்கருள் பாதம்
இறவா நிலையில் இருத்திய பாதம்
புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம்
பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம். - ஆடிய - 13

4334 - ஆறந்தத் துள்ளும் அமர்ந்தபொற் பாதம்
ஆதி அனாதியும் ஆகிய பாதம்
மாறந்தம் இல்லாஎன் வாழ்முதற் பாதம்
மண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம். - ஆடிய - 14

4335 - அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்
அம்மையும் அப்பனும் ஆகிய பாதம்
பொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம்
பொன்வண்ண மாகிய புண்ணிய பாதம். - ஆடிய - 15

4336 - நாரண னாதியர் நாடரும் பாதம்
நான்தவத் தாற்பெற்ற நற்றுணைப் பாதம்
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம்
ஆசைவிட் டார்க்கே அணிமையாம் பாதம். - - 16

- ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதநின் றாடிய பாதம். -

69. அபயம் அபயம்

சிந்து



- பல்லவி

4337. அபயம் அபயம் அபயம். - - 1

- கண்ணிகள்

4338 - உபயம தாய்என் உறவாய்ச் சிதம்பரச்
சபையில் நடஞ்செயும் சாமி பதத்திற்கே(296) - அபயம் - 1

- - (296) பாதத்திற்கே - பி. இரா., ஆ. பா.

4339 - எம்பலத் தால்எம்மை ஏன்றுகொ ளத்தில்லை
அம்பலத் தாடும்எம் ஐயர் பதத்திற்கே - அபயம் - 2

4340 - தவசிதம் பரமாகித் தன்மய மாய்ச்செயும்
சிவசிதம் பரமகா தேவர் பதத்திற்கே - அபயம் - 3

4341 - ஒன்றும் பதத்திற் குயர்பொரு ளாகியே
என்றும்என் உள்ளத் தினிக்கும் பதத்திற்கே - அபயம் - 4

4342 - வானந்த மாந்தில்லை மன்றிடை என்றுநின்
றானந்தத் தாண்டவ மாடும் பதத்திற்கே - அபயம் - 5

4343 - நாரா யணனொடு நான்முக னாதியர்
பாரா யணம்செயும் பதும பதத்திற்கே - அபயம் - 6

4344 - அன்பர் செயும்பிழை ஆயிர மும்பொறுத்
தின்ப மளிக்குநம் ஈசர் பதத்திற்கே - அபயம் - 7

4345 - குற்றம் செயினும் குணமாகக் கொண்டுநம்
அற்றம் தவிர்க்குநம் அப்பர் பதத்திற்கே - அபயம் - 8

4346 - செம்பொருள் ஆகிச் சிதம்பரத் தேஎன்றும்
நம்பொருள் ஆன நடேசர் பதத்திற்கே - அபயம் - 9

4347 - வெச்சென்ற மாயை வினையாதி யால்வந்த
அச்சம் தவிர்க்குநம் ஐயர் பதத்திற்கே - அபயம் - 10

4348 - எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம்
புண்ணிய னார்தெய்வப் பொன்னடிப் போதுக்கே - அபயம் - 11

4349 - மன்னம் பரத்தே வடிவில் வடிவாகிப்
பொன்னம் பலத்தாடும் பொன்னடிப் போதுக்கே - அபயம் - 12

4350 - நாத முடியில்/(297) நடம்புரிந் தன்பர்க்குப்
போதம் அளிக்கின்ற பொன்னடிப் போதுக்கே - அபயம் 13 - 13

- - (297) முடிவில் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.

4351 - உச்சி தாழ்கின்ற உறவோர் உறவான
சச்சி தானந்தத் தனிநடப் போதுக்கே - அபயம் - 14

4352 - சித்தமும் உள்ளமும் தித்தித் தினிக்கின்ற
புத்தமு தாகிய பொன்னடிப் போதுக்கே - அபயம் - 15

- அபயம் அபயம் அபயம்.

70. அம்பலவாணர் வருகை

சிந்து



- பல்லவி

4353. வாரீர் சிதம்பர வல்லி சிவகாம
வல்லி மணாளரே வாரீர்
மணிமன்ற வாணரே வாரீர். - - 1

- கண்ணிகள்

4354 - அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு
அம்பல வாணரே வாரீர்
அன்புடை யாளரே வாரீர். - வாரீர் - 1

4355 - அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண் டருளிய
அந்தண ரேஇங்கு வாரீர்
அம்பலத் தையரே வாரீர். - வாரீர் - 2

4356 - அன்புரு வானவர் இன்புற உள்ளே
அறிவுரு வாயினீர் வாரீர்
அருட்பெருஞ் ஜோதியீர் வாரீர். - வாரீர் - 3

4357 - அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும்
அரும்பெருஞ் சித்தரே வாரீர்
அற்புத ரேஇங்கு வாரீர். - வாரீர் - 4

4358 - அம்மையு மாய்எனக் கப்பனு மாகிஎன்
அன்பனு மாயினீர் வாரீர்
அங்கண ரேஇங்கு வாரீர். - வாரீர் - 5

4359 - அல்லல் அறுத்தென் அறிவை விளக்கிய
அம்பல வாணரே வாரீர்
செம்பொரு ளாயினீர் வாரீர். - வாரீர் - 6

4360 - அப்பணி பொன்முடி அப்பனென் றேத்துமெய்
அன்பருக் கன்பரே வாரீர்
இன்பம் தரஇங்கு வாரீர். - வாரீர் - 7

4361 - அச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும்
அடிக்கம லத்தீரே வாரீர்
நடிக்கவல் லீர்இங்கு வாரீர். - வாரீர் - 8

4362 - அண்டர்க் கரும்பதந் தொண்டர்க் கெளிதில்
அளித்திட வல்லீரே வாரீர்
களித்தென்னை ஆண்டீரே வாரீர். - வாரீர் - 9

4363 - அம்பர மானசி தம்பர நாடகம்
ஆடவல் லீர்இங்கு வாரீர்
பாடல்உ வந்தீரே(298) வாரீர். - வாரீர் - 10

- - (298) பாடவல்லீரிங்கு - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.

4364 - ஆதிஅ னாதிஎன் றாரணம் போற்றும்
அரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
ஆனந்த நாடரே வாரீர். - வாரீர் - 11

4365 - ஆகம வேதம் அனேக முகங்கொண்
டருச்சிக்கும் பாதரே வாரீர்
ஆருயிர் நாதரே வாரீர். - வாரீர் - 12

4366 - ஆசறும் அந்தங்கள் ஆறும் புகன்றநல்
ஆரிய ரேஇங்கு வாரீர்
ஆனந்தக் கூத்தரே வாரீர் - . வாரீர் - 13

4367 - ஆல நிழற்கண் அமர்ந்தறஞ் சொன்னநல்
ஆரிய ரேஇங்கு வாரீர்
ஆனந்தக் கூத்தரே வாரீர். - வாரீர் - 14

4368 - ஆரமு தாகிஎன் ஆவியைக் காக்கின்ற
ஆனந்த ரேஇங்கு வாரீர்
ஆடல்வல் லீர்இங்கு வாரீர். - வாரீர் - 15

4369 - ஆதர வாய்என் அறிவைத் தெளிவித்
தமுதம் அளித்தீரே வாரீர்
ஆடிய பாதரே வாரீர். - வாரீர் - 16

4370 - ஆதார மீதானத் தப்பாலும் காண்டற்
கரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
கரும்பினில் இனிக்கின்றீர் வாரீர். - வாரீர் - 17

4371 - ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
ஜோதிய ரேஇங்கு வாரீர்
வேதிய ரேஇங்கு வாரீர். - வாரீர் - 18

4372 - ஆடல்கொண் டீர்திரு வம்பலத் தேஎன்றன்
பாடல்கொண் டீர்இங்கு வாரீர்
கூடவல் லீர்இங்கு வாரீர். - வாரீர் - 19

4373 - ஆக்கம் கொடுத்தென்றன் தூக்கம் தடுத்தஎன்
ஆண்டவ ரேஇங்கு வாரீர்
தாண்டவ ரேஇங்கு வாரீர். - வாரீர் - 20

4374 - ஆபத்தை நீக்கிஓர் தீபத்தை ஏற்றிஎன்
ஆணவம் போக்கினீர் வாரீர்
காணவந் தேன்இங்கு வாரீர். - வாரீர் - 21

4375 - இதுதரு ணம்தரு ணம்தரு ணம்என்
இறையவ ரேஇங்கு வாரீர்
இடர்தவிர்த் தாட்கொண்டீர் வாரீர். - வாரீர் - 22

4376 - இச்சையின் வண்ணம் எனக்கருள் செய்ய
இதுதரு ணம்இங்கு வாரீர்
இன்னமு தாயினீர் வாரீர். - வாரீர் - 23

4377 - இன்பம் கொடுத்தேஎன் துன்பம் கெடுத்துள்
இருக்கின்ற நாதரே வாரீர்
இருக்கின் பொருளானீர் வாரீர். - வாரீர் - 24

4378 - இரவும் பகலும் இதயத்தி லூறி
இனிக்கும் அமுதரே வாரீர்
இனித்தரி யேன்இங்கு வாரீர். - வாரீர் - 25

4379 - இன்னும்தாழ்த் தங்கே இருப்ப தழகன்று
இதுதரு ணம்இங்கு வாரீர்
இருமையும் ஆயினீர் வாரீர். - வாரீர் - 26

4380 - இடர்தவிர்த் தின்பம் எனக்களித் தாளற்
கிதுதரு ணம்இங்கு வாரீர்
இனியவ ரேஇங்கு வாரீர். வாரீர் - - 27

4381 - இறையும் பொறுப்பரி தென்னுயிர் நாதரே
இத்தரு ணம்இங்கு வாரீர்
இதநடஞ் செய்கின்றீர் வாரீர். - வாரீர் - 28

4382 - இம்மையி லேஎனக் கம்மையின் இன்பம்
இதுஎன் றளித்தீரே வாரீர்
இதயத் திருந்தீரே வாரீர். - வாரீர் - 29

4383 - இங்கங்கென் னாமலே எள்ளுக்குள் எண்ணெய்போல்
எங்கும் நிறைந்தீரே வாரீர்
இந்தெழில் வண்ணரே வாரீர். - வாரீர் - 30

4384 - இணைஒன்றும் இல்லா இணையடி என்தலை
ஏறவைத் தீர்இங்கு வாரீர்
இறுதியி லீர்இங்கு வாரீர். - வாரீர் - 31

4385 - ஈன்றாளும் எந்தையும் என்குரு வும்எனக்
கின்பமும் ஆயினீர் வாரீர்
அன்பருக் கன்பரே வாரீர். - வாரீர் - 32

4386 - ஈனம் அறுத்துமெய்ஞ் ஞான விளக்கென்
இதயத்தில் ஏற்றினீர் வாரீர்
உதயச் சுடரினீர் வாரீர். - வாரீர் - 33

4387 - ஈடறி யாதமெய் வீடுதந் தன்பரை
இன்புறச் செய்கின்றீர் வாரீர்
வன்பர்க் கரியீரே வாரீர். - வாரீர் - 34

4388 - ஈதியல் என்றுநின் றோதிய வேதத்திற்
கெட்டா திருந்தீரே வாரீர்
நட்டார்க் கெளியீரே வாரீர். - வாரீர் - 35

4389 - ஈசர் எனும்பல தேசர்கள் போற்றும்ந
டேசரே நீர்இங்கு வாரீர்
நேசரே நீர்இங்கு வாரீர். - வாரீர் - 36

4390 - ஈசர் பலிக்குழல்(299) நேசர்என் றன்பர்கள்
ஏசநின் றீர்இங்கு வாரீர்
நாசமில் லீர்இங்கு வாரீர். - வாரீர் - 37

- - (299) ஈசர் எளியற்கு - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா,

4391 - ஈறறி யாமறை யோன்என் றறிஞர்
இயம்பநின் றீர்இங்கு வாரீர்
வயந்தரு வீர்இங்கு வாரீர். - வாரீர் - 38

4392 - ஈதல்கண் டேமிகக் காதல்கொண் டேன்எனக்
கீதல்செய் வீர்இங்கு வாரீர்
ஓதரி யீர்இங்கு வாரீர். - வாரீர் - 39

4393 - ஈடணை அற்றநெஞ் சூடணை உற்றுமற்
றீடணை யீர்இங்கு வாரீர்
ஆடவல் லீர்இங்கு வாரீர். - வாரீர் - 40

4394 - ஈண்டறி வோங்கிடத் தூண்டறி வாகிஉள்
ஈண்டுகின் றீர்இங்கு வாரீர்
ஆண்டவ ரேஇங்கு வாரீர். - வாரீர் - 41

4395 - உள்ளதே உள்ளது விள்ளது வென்றெனக்
குள்ள துரைசெய்தீர் வாரீர்
வள்ளல் விரைந்திங்கு வாரீர். - வாரீர் - 42

4396 - உருவாய் அருவாய் உருவரு வாய்அவை
ஒன்றுமல் லீர்இங்கு வாரீர்
என்றும்நல் லீர்இங்கு வாரீர். - வாரீர் - 43

4397 - உறவும் பகையும் உடைய நடையில்
உறவும்எண் ணேன்இங்கு வாரீர்
பிறவுநண் ணேன்இங்கு வாரீர். - வாரீர் - 44

4398 - உள்ளக் கருத்தைநான் வள்ளற் குரைப்பதென்
உள்ளத் திருந்தீரே வாரீர்
விள்ளற் கரியீரே வாரீர். - வாரீர் - 45

4399 - உய்யவல் லார்க்கருள் செய்யவல் லீர்நானும்
உய்யவல் லேன்இங்கு வாரீர்
செய்யவல் லீர்இங்கு வாரீர். - வாரீர் - 46

4400 - உடையவ ரார்இக் கடையவ னேனுக்
குடையவ ரேஇங்கு வாரீர்
சடையவ ரே(300) இங்கு வாரீர். - வாரீர் - 47

- - (300) தடை தவிர்ப்பீர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.

4401 - உறங்கி இறங்கும் உலகவர் போலநான்
உறங்கமாட் டேன்இங்கு வாரீர்
இறங்கமாட் டேன்இங்கு வாரீர். - வாரீர் - 48

4402 - உண்டுடுத் தின்னும் உழலமாட் டேன்அமு
துண்டி விரும்பினேன் வாரீர்
உண்டி தரஇங்கு வாரீர். - வாரீர் - 49

4403 - உன்னுதோ றுன்னுதோ றுள்ளே இனிக்கின்ற
உத்தம ரேஇங்கு வாரீர்
உற்ற துணையானீர் வாரீர். - வாரீர் - 50

4404 - உம்மாணை உம்மாணை உம்மைஅல் லால்எனக்
குற்றவர் மற்றிலை வாரீர்
உற்றறிந் தீர்இங்கு வாரீர். - வாரீர் - 51

4405 - ஊன நடந்தவிர்த் தான நடங்காட்டு
மோன நடேசரே வாரீர்
ஞான நடேசரே வாரீர். - வாரீர் - 52

4406 - ஊருமில் லீர்ஒரு பேருமில் லீர்அறி
வோருமில் லீர்இங்கு வாரீர்
யாருமில் லீர்இங்கு வாரீர். - வாரீர் - 53

4407 - ஊறு சிவானந்தப் பேறு தருகின்ற
வீறுடை யீர்இங்கு வாரீர்
நீறுடை யீர்இங்கு வாரீர். - வாரீர் - 54

4408 - ஊன்றுநும் சேவடி சான்று தரிக்கிலேன்
ஏன்றுகொள் வீர்இங்கு வாரீர்
ஆன்றவ ரேஇங்கு வாரீர். - வாரீர் - 55

4409 - ஊற்றை உடம்பிது மாற்றுயர் பொன்னென
ஏற்றம் அருள்செய்வீர் வாரீர்
தேற்றம் அருள்செய்வீர் வாரீர். - வாரீர் - 56

4410 - ஊடல்இல் லீர்எனைக் கூடல்வல் லீர்என்னுள்
பாடல்சொல் வீர்இங்கு வாரீர்
ஆடல்நல் லீர்இங்கு வாரீர். - வாரீர் - 57

4411 - ஊக்கம் கொடுத்தென்றன் ஏக்கம் கெடுத்தருள்
ஆக்க மடுத்தீரே வாரீர்
தூக்கம் தவிர்த்தீரே வாரீர். - வாரீர் - 58

4412 - ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்துண்டென்
றோமை அறிவித்தீர் வாரீர்
சேமஞ் செறிவித்தீர் வாரீர். - வாரீர் - 59

4413 - ஊக மிலேன்பெற்ற தேகம் அழியாத
யோகம் கொடுத்தீரே வாரீர்
போகம் கொடுத்தீரே வாரீர். - வாரீர் - 60

4414 - ஊதியம் தந்தநல் வேதிய ரேஉண்மை
ஓதிய நாதரே வாரீர்
ஆதிஅ னாதியீர் வாரீர். - வாரீர் - 61

4415 - என்குறை தீர்த்தென்னுள் நன்குறை வீர்இனி
என்குறை என்முன்னீர் வாரீர்
தன்குறை இல்லீரே வாரீர். - வாரீர் - 62

4416 - என்னுயிர் ஆகிஎன் றன்உயிர்க் குள்ளேஓர்
இன்னுயிர் ஆயினீர் வாரீர்
என்னுயிர் நாதரே வாரீர். - வாரீர் - 63

4417 - என்கண் அருள்செய்தென் புன்கண் விலக்கிய
என்கண் ணனையீரே வாரீர்
மின்கண் ணுதலீரே வாரீர். - வாரீர் - 64

4418 - எல்லா உயிர்களும் நல்லார் எனத்தொழும்
எல்லாம்வல் லீர்இங்கு வாரீர்
சொல்லா நிலையினீர் வாரீர். - வாரீர் - 65

4419 - எட்டும் இரண்டுமென் றிட்டு வழங்குதல்
எட்டும் படிசெய்தீர் வாரீர்
எட்டுரு வாயினீர் வாரீர்301. - வாரீர் - 66

- - (301) எட்டும் இரண்டும் - பத்து (ய). ய - ஆன்மா.
எட்டுரு - அஷ்டமூர்த்தம் எட்டு உரு-(எட்டு தமிழில் எழுத `அஒ ஆகும்)
அகர வடிவம். எட்டுரு - அரு. ச. மு. க

4420 - என்று கண்டாய்இது(302) நன்றுகொண் டாளுக
என்றுதந் தீர்இங்கு வாரீர்
அன்றுவந் தீர்இன்று வாரீர். - வாரீர் - 67

- - (302) கண்டாமிது - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.

4421 - எச்சம யங்களும் பொய்ச்சம யமென்றீர்
இச்சம யம்இங்கு வாரீர்
மெய்ச்சம யந்தந்தீர் வாரீர். - வாரீர் - 68

4422 - என்பாற் களிப்பொடும் அன்பால்ஒன் றீந்திதை
இன்பால் பெறுகென்றீர் வாரீர்
தென்பால் முகங்கொண்டீர் வாரீர். - வாரீர் - 69

4423 - எச்ச உரையன்றென் இச்சைஎல் லாம்உம
திச்சைகண் டீர்இங்கு வாரீர்
அச்சம்த விர்த்தீரே வாரீர். - வாரீர் - 70

4424 - எண்ணமெல் லாம்உம தெண்ணமல் லால்வேறோர்
எண்ணம் எனக்கில்லை வாரீர்
வண்ணம் அளிக்கின்றீர் வாரீர். - வாரீர் - 71

4425 - ஏராய நான்முகர் நாராய ணர்மற்றும்
பாராய ணம்செய்வீர் வாரீர்
ஊராயம் ஆயினீர் வாரீர். - வாரீர் - 72

4426 - ஏம மிகுந்திரு வாம சுகந்தரும்
ஏம சபேசரே வாரீர்
சோம சிகாமணி வாரீர். - வாரீர் - 73

4427 - ஏத மிலாப்பர நாத முடிப்பொருள்
ஏதது சொல்லுவீர் வாரீர்
ஈதல் உடையீரே வாரீர். - வாரீர் - 74

4428 - ஏக பராபர யோக வெளிக்கப்பால்
ஏக வெளிநின்றீர் வாரீர்
ஏகர் அனேகரே வாரீர். - வாரீர் - 75

4429 - ஏறி இறங்கி இருந்தேன் இறங்காமல்
ஏறவைத் தீர்இங்கு வாரீர்
தேறவைத் தீர்இங்கு வாரீர். - வாரீர் - 76


4430 - ஏகாந்த நன்னிலை யோகாந்தத் துள்ளதென்
றேகாந்தம் சொல்லினீர் வாரீர்
தேகாந்தம் இல்லீரே வாரீர். - வாரீர் - 77

4431 - ஏகாத கல்விதான் சாகாத கல்வியென்
றேகாத லாற்சொன்னீர் வாரீர்
வேகாத காலினீர் வாரீர். - வாரீர் - 78

4432 - ஏடா யிரமென்னை கோடா மொழிஒன்றே
ஏடாஎன் றீர்இங்கு வாரீர்
ஈடாவார் இல்லீரே வாரீர். - வாரீர் - 79

4433 - ஏசாத தந்திரம் பேசாத மந்திரம்
ஈசான மேலென்றீர் வாரீர்
ஆசாதி இல்லீரே வாரீர். - வாரீர் - 80

4434 - ஏனென்பார் வேறிலை நான்அன்பாற் கூவுகின்
றேன்என்பால் ஏனென்பீர் வாரீர்
ஆனின்பால் ஆடுவீர் வாரீர். - வாரீர் - 81

4435 - ஐந்து மலங்களும் வெந்து விழஎழுத்
தைந்துஞ் செயும்என்றீர் வாரீர்
இந்து சிகாமணி வாரீர். - வாரீர் - 82

4436 - ஐயமுற் றேனைஇவ் வையங் கரியாக
ஐயம் தவிர்த்தீரே வாரீர்
மெய்யம் பலத்தீரே வாரீர். - வாரீர் - 83

4437 - ஐயர் நடம்புரி மெய்யர்என் றேஉணர்ந்
தையர் தொழநின்றீர் வாரீர்
துய்யர் உளநின்றீர் வாரீர். - வாரீர் - 84

4438 - ஐவணங் காட்டுநும் மெய்வணம் வேட்டுநின்
றைவணர் ஏத்துவீர் வாரீர்
பொய்வணம் போக்குவீர் வாரீர். - வாரீர் - 85

4439 - ஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும்
ஒன்றேஎன் றீர்இங்கு வாரீர்
நன்றேநின் றீர்இங்கு வாரீர். - வாரீர் - 86

4440 - ஒப்பாரில் லீர்உமக் கிப்பாரில் பிள்ளைநான்
ஒப்பாரி அல்லகாண் வாரீர்
முப்பாழ் கடந்தீரே வாரீர் - . வாரீர் - 87

4441 - ஒத்த இடந்தன்னில் நித்திரை செய்என்றீர்
ஒத்த இடங்காட்ட வாரீர்(303)
சித்த சிகாமணி வாரீர். - வாரீர் - 88

- - (303) 'ஒத்த இடத்தில் நித்திரை செய்' என்பது ஔவையார் அருளிய கொன்றை
வேந்தன்.'ஒத்த இடம் - மேடுபள்ள மில்லாத இடம், மனம் ஒத்த இடம், நினைப்பு
மறப்பு அற்ற இடம், தனித்த இடம், தத்துவாதீதநிலை,' என்பது ச. மு. க. குறிப்பு.
இருவினையும் ஒத்த இடம், இருவினைஒப்புநிலை என்பதே பொருத்தமாம்.

4442 - ஒட்டுமற் றில்லைநான் விட்டுப் பிரிகலேன்
ஒட்டுவைத் தேனும்மேல் வாரீர்
எட்டுக் குணத்தீரே வாரீர். - வாரீர் - 89

4443 - ஒருமை நிலையில் இருமையும் தந்த
ஒருமையி னீர்இங்கு வாரீர்
பெருமையி னீர்இங்கு வாரீர். - வாரீர் - 90

4444 - ஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர்
உண்மைசொன் னேன்இங்கு வாரீர்
பெண்மை(304) இடங்கொண்டீர் வாரீர். - வாரீர் - 91

- - (304) வண்மை - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.,

4445 - ஓங்கார நாடகம் பாங்காகச்(305) செய்கின்ற
ஓங்கார நாடரே வாரீர்
ஆங்கார நீக்கினீர் வாரீர். - வாரீர் - 92

- - (305) பாங்காரச் - பி. இரா.

4446 - ஓங்கும்பிண் டாண்டங்கள் தாங்கும் பெருவெளி
ஓங்கு நடேசரே வாரீர்
பாங்குசெய் வீர்இங்கு வாரீர். - வாரீர் - 93

4447 - ஓசையின் உள்ளேஓர் ஆசை(306) உதிக்கமெல்(307)
ஓசைசெய் வித்தீரே வாரீர்
பாசம் அறுத்தீரே வாரீர். - வாரீர் - 94

- - (306) ஓசை - பிரதிபேதம். ஆ. பா.
307. மேல் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.

4448 - ஓரா துலகினைப் பாரா திருநினக்
கோரா வகைஎன்றீர் வாரீர்
பேரா நிலைதந்தீர் வாரீர். - வாரீர் - 95

4449 - ஓடாது மாயையை நாடாது நன்னெறி
ஊடா திருஎன்றீர் வாரீர்
வாடா திருஎன்றீர் வாரீர். - வாரீர் - 96

4450 - ஓலக் கபாடத்தைச் சாலத் திறந்தருள்
ஓலக்கங் காட்டினீர் வாரீர்
காலக் கணக்கில்லீர் வாரீர். - வாரீர் - 97

4451 - ஓடத்தின் நின்றொரு மாடத்தில் ஏற்றிமெய்
யூடத்தைக் காட்டினீர் வாரீர்
வேடத்தைப் பூட்டினீர் வாரீர். - வாரீர் - 98

4452 - ஓமத்தி லேநடுச் சாமத்தி லேஎனை
ஓமத்தன்(308) ஆக்கினீர் வாரீர்
சாமத்த(309) நீக்கினீர் வாரீர். - வாரீர் - 99

- - (308) ஓமத்தன் - உருவருவ வடிவம்., பிரணவதேகம். ச. மு. க.
சாமத்தை - பொ. சு., ச. மு. க; சாமத்தை - சாகுந்தன்மையை., ச. மு. க.

4453 - ஓமென்ப தற்குமுன் ஆமென் றுரைத்துடன்
ஊமென்று(310) காட்டினீர் வாரீர்
நாமென்று நாட்டினீர் வாரீர். - வாரீர் - 100

- - (310) ஓம் - ஆம் - ஊம் - ஓம் ஹாம் ஹும். பீஜாக்கரங்கள்.

4454 - ஔவிய மார்க்கத்தின் வெவ்வியல் நீக்கியே
செவ்வியன் ஆக்கினீர் வாரீர்
ஒவ்விஒன் றாக்கினீர் வாரீர். - வாரீர் - 101

4455 - கண்ணனை யீர்உம்மைக் காணஎன் ஆசை
கடல்பொங்கு கின்றது வாரீர்
உடல்தங்கு கின்றது வாரீர். - வாரீர் - 102

4456 - கண்டணைந் தால்அன்றிக் காதல் அடங்காதென்
கண்மணி யீர்இங்கு வாரீர்
உண்மணி யீர்இங்கு வாரீர். - வாரீர் - 103

4457 - கட்டிக்கொண் டும்மைக் கலந்து கொளல்வேண்டும்
காரண ரேஇங்கு வாரீர்
பூரண ரேஇங்கு வாரீர். - - 104


- - வாரீர் சிதம்பர வல்லி சிவகாம
வல்லி மணாளரே வாரீர்
மணிமன்ற வாணரே வாரீர்.

71. அம்பலவாணர் ஆடவருகை

சிந்து



- பல்லவி

4458. ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர்
அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர். - - 1

- கண்ணிகள்

4459 - தன்மைபிறர்க் கறிவரியீர் ஆடவா ரீர்
தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
வன்மைமனத் தவர்க்கரியீர் ஆடவா ரீர்
வஞ்சமிலா நெஞ்சகத்தீர் ஆடவா ரீர்
தொன்மைமறை முடியமர்ந்தீர் ஆடவா ரீர்
துரியபதங் கடந்தவரே ஆடவா ரீர்
இன்மைதவிர்த் தெனைமணந்தீர் ஆடவா ரீர்.
என்னுடைய நாயகரே ஆடவா ரீர் - ஆடவா ரீர் - 1

4460 - திருவாளர் போற்ற என்னோ டாடவா ரீர்
திருவனையார் வாழ்த்தஇங்கே ஆடவா ரீர்
பெருவாய்மைப் பெருந்தகையீர் ஆடவா ரீர்
பேராசை பொங்குகின்றேன் ஆடவா ரீர்
உருவாகி ஓங்குகின்றீர் ஆடவா ரீர்
உத்தமரே இதுதருணம் ஆடவா ரீர்
இருவாணர் ஏத்தநின்றீர் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர். - ஆடவா ரீர் - 2

4461 - வேற்றுமுகம் பாரேன்என்னோ டாடவா ரீர்
வெட்கமெல்லாம் விட்டுவிட்டேன் ஆடவா ரீர்
மாற்றுதற்கெண் ணாதிர்என்னோ டாடவா ரீர்
மாற்றில்உயிர் மாய்ப்பேன்கண்டீர் ஆடவா ரீர்
கூற்றுதைத்த சேவடியீர் ஆடவா ரீர்
கொண்டுகுலங் குறியாதீர் ஆடவா ரீர்
ஏற்றதனித் தருணமீதே ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர். - ஆடவா ரீர் - 3

4462 - இல்லாமை நீக்கிநின்றீர் ஆடவா ரீர்
என்னைமண மாலையிட்டீர் ஆடவா ரீர்
கொல்லாமை நெறிஎன்றீர் ஆடவா ரீர்
குற்றமெலாங் குணங்கொண்டீர் ஆடவா ரீர்
நல்லார்சொல் நல்லவரே ஆடவா ரீர்
நற்றாயில் இனியவரே ஆடவா ரீர்
எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர். - ஆடவா ரீர் - 4

4463 - ஆசைகொண்டேன் ஆடஎன்னோ டாடவா ரீர்
ஆசைவெட்கம் அறியாதால் ஆடவா ரீர்
ஓசைகொண்ட தெங்குமிங்கே ஆடவா ரீர்
உம்ஆணை உம்மைவிடேன் ஆடவா ரீர்
காசுபணத் தாசையிலேன் ஆடவா ரீர்
கைபிடித்தாற் போதும்என்னோ டாடவா ரீர்
ஏசறல்நீத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர். - ஆடவா ரீர் - 5

4464 - சன்மார்க்க நெறிவைத்தீர் ஆடவா ரீர்
சாகாத வரந்தந்தீர் ஆடவா ரீர்
கன்மார்க்க மனங்கரைத்தீர் ஆடவா ரீர்
கண்ணிசைந்த கணவரேநீர் ஆடவா ரீர்
சொன்மார்க்கப் பொருளானீர் ஆடவா ரீர்
சுத்தஅருட் சோதியரே ஆடவா ரீர்
என்மார்க்கம் உளத்துகந்தீர் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர். - ஆடவா ரீர் - 6

4465 - அண்டமெலாம் கண்டவரே ஆடவா ரீர்
அகண்டபரி பூரணரே ஆடவா ரீர்
பண்டமெலாம் படைத்தவரே ஆடவா ரீர்
பற்றொடுவீ டில்லவரே ஆடவா ரீர்
கொண்டெனைவந் தாண்டவரே ஆடவா ரீர்
கூத்தாட வல்லவரே ஆடவா ரீர்
எண்தகுபொற் சபையுடையீர் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர். - ஆடவா ரீர் - 7

4466 - பேதநினை யாதுவிரைந் தாடவா ரீர்
பின்பாட்டுக் காலையிதே ஆடவா ரீர்
ஓதஉல வாதவரே ஆடவா ரீர்
உள்ளாசை பொங்குகின்ற தாடவா ரீர்
சாதல்அறுத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
ஏதமறுத் தவர்க்கினியீர் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர். - ஆடவா ரீர் - 8

4467 - கள்ளமொன்றும் அறியேன்நான் ஆடவா ரீர்
கைகலந்து கொண்டீர்என்னோ டாடவா ரீர்
உள்ளபடி உரைக்கின்றேன் ஆடவா ரீர்
உம்மாசை பொங்குகின்ற தாடவா ரீர்
தள்ளரியேன் என்னோடிங்கே ஆடவா ரீர்
தாழ்க்கில்இறை யும்தரியேன் ஆடவா ரீர்
எள்ளல்அறுத் தாண்டுகொண்டீர் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர். - ஆடவா ரீர் - 9

4468 - நச்சுகின்றேன் நிச்சலிங்கே ஆடவா ரீர்
நாணமச்சம் விட்டேனென்னோ டாடவா ரீர்
விச்சையெலாம் தந்துகளித் தாடவா ரீர்
வியந்துரைத்த தருணமிதே ஆடவா ரீர்
எச்சுகமும் ஆகிநின்றீர் ஆடவா ரீர்
எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்.
இச்சைமய மாய்இருந்தேன் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர். - ஆடவா ரீர் - 10

4469 - என்உயிருக் குயிரானீர் ஆடவா ரீர்
என்அறிவுக் கறிவானீர் ஆடவா ரீர்
என்னுடைஎன் பிற்கலந்தீர் ஆடவா ரீர்
என்னுடைஉள் ளத்திருந்தீர் ஆடவா ரீர்
என்உரிமைத் தாயனையீர் ஆடவா ரீர்
எனதுதனித் தந்தையரே ஆடவா ரீர்
என்ஒருமைச் சற்குருவே ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர். - ஆடவா ரீர் - 11

- ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர்
அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர். -

72. அம்பலவாணர் அணையவருகை

சிந்து



- பல்லவி

4470. அணையவா ரீர் என்னை அணையவா ரீர்
அணிவளர்(311)சிற் றம்பலத்தீர் அணையவா ரீர். - - 1

- - (311) அணிகிளர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.

- கண்ணிகள்

4471 - இயற்கைஉண்மை வடிவினரே அணையவா ரீர்
எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர்
இயற்கைவிளக் கத்தவரே அணையவா ரீர்
எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர்
இயற்கைஇன்ப மானவரே அணையவா ரீர்
இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர்
இயற்கைநிறை வானவரே அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர். - அணையவா ரீர் - 1

4472 - உலகமெல்லாம் உடையவரே அணையவா ரீர்
உண்மைஉரைக் கின்றவரே அணையவா ரீர்
கலகமறுத் தாண்டவரே அணையவா ரீர்
கண்ணனைய காதலரே அணையவா ரீர்
அலகறியாப் பெருமையரே அணையவா ரீர்
அற்புதப்பொற் சோதியரே அணையவா ரீர்
இலகுசபா பதியவரே அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர். - அணையவா ரீர் - 2

4473 - பொதுவில்நடிக் கின்றவரே அணையவா ரீர்
பொற்புடைய புண்ணியரே அணையவா ரீர்
மதுவில்இனிக் கின்றவரே அணையவா ரீர்
மன்னியஎன் மன்னவரே அணையவா ரீர்
விதுவின்அமு தானவரே அணையவா ரீர்
மெய்யுரைத்த வித்தகரே அணையவா ரீர்
இதுதருணம் இறையவரே அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர். - அணையவா ரீர் - 3

4474 - வினைமாலை நீத்தவரே அணையவா ரீர்
வேதமுடிப் பொருளவரே அணையவா ரீர்
அனைமாலைக் காத்தவரே அணையவா ரீர்
அருட்பெருஞ்சோ திப்பதியீர் அணையவா ரீர்
புனைமாலை வேய்ந்தவரே அணையவா ரீர்
பொதுவில்நிறை பூரணரே அணையவா ரீர்
எனைமாலை யிட்டவரே அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர். - அணையவா ரீர் - 4

4475 - சிறுவயதில் எனைவிழைந்தீர் அணையவா ரீர்
சித்தசிகா மணியேநீர் அணையவா ரீர்
உறுவயதிங் கிதுதருணம் அணையவா ரீர்
உண்மைசொன்ன உத்தமரே அணையவா ரீர்
பொறுமைமிக உடையவரே அணையவா ரீர்
பொய்யாத வாசகரே அணையவா ரீர்
இறுதிதவிர்த் தாண்டவரே அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர். - அணையவா ரீர் - 5

4476 - சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்
தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர்
ஆதியந்தம் இல்லவரே அணையவா ரீர்
ஆரணங்கள் போற்றநின்றீர் அணையவா ரீர்
ஓதியுணர் வரியவரே அணையவா ரீர்
உள்ளபடி உரைத்தவரே அணையவா ரீர்
ஈதிசைந்த தருணமிங்கே அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர். - அணையவா ரீர் - 6

4477 - அன்பாட்டை விழைந்தவரே அணையவா ரீர்
அருட்சோதி வடிவினரே அணையவா ரீர்
துன்பாட்டை ஒழித்தவரே அணையவா ரீர்
துரியநிறை பெரியவரே அணையவா ரீர்
பின்பாட்டுக் காலையிதே அணையவா ரீர்
பிச்சேற்று கின்றவரே அணையவா ரீர்
என்பாட்டை ஏற்றவரே அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர். - அணையவா ரீர் - 7

4478 - அரைக்கணமும் தரியேன்நான் அணையவா ரீர்
ஆணைஉம்மேல் ஆணைஎன்னை அணையவா ரீர்
புரைக்கணங்கண் டறியேன்நான் அணையவா ரீர்
பொன்மேனிப் புண்ணியரே அணையவா ரீர்
வரைக்கணஞ்செய் வித்தவரே அணையவா ரீர்
மன்றில்நடிக் கின்றவரே அணையவா ரீர்
இரைக்கணவு தருணமிதே அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர். - அணையவா ரீர் - 8

4479 - கருணைநடஞ் செய்பவரே அணையவா ரீர்
கண்மணியில் கலந்தவரே அணையவா ரீர்
அருள்நிறைசிற் சபையவரே அணையவா ரீர்
அன்பர்குறை தீர்த்தவரே அணையவா ரீர்
தருணமிது விரைந்தென்னை அணையவா ரீர்
சத்தியரே நித்தியரே அணையவா ரீர்
இருள்நிறைந்தார்க் கறிவரியீர் அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர். - அணையவா ரீர் - 9

4480 - சேரஉம்மேல் ஆசைகொண்டேன் அணையவா ரீர்
திருவுளமே அறிந்ததெல்லாம் அணையவா ரீர்
ஆரெனக்கிங் கும்மையல்லால் அணையவா ரீர்
அயலறியேன் ஆணைஉம்மேல் அணையவா ரீர்
ஈரகத்தேன் அல்லஇங்கே அணையவா ரீர்
என்னாசை பொங்குகின்ற தணையவா ரீர்
ஏரகத்தே அமர்ந்தருள்வீர் அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர். - அணையவா ரீர் - 10

4481 - கலந்துகொள வேண்டுகின்றேன் அணையவா ரீர்
காதல்பொங்கு கின்றதென்னை அணையவா ரீர்
புலந்தறியேன் விரைகின்றேன் அணையவா ரீர்
புணர்வதற்குத் தருணமிதே அணையவா ரீர்
அலந்தவிடத் தருள்கின்றீர் அணையவா ரீர்
அரைக்கணமும் இனித்தரியேன் அணையவா ரீர்
இலந்தைநறுங் கனியனையீர்அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர். - அணையவா ரீர் - 11

- அணையவா ரீர்என்னை அணையவா ரீர்
அணிவளர்(312) சிற் றம்பலத்தீர் அணையவா ரீர். -

- - (312) அணிகிளர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.

73. வருவார் அழைத்துவாடி

சிந்து



- பல்லவி

4482. வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல வரமே. - - 1

- பல்லவி எடுப்பு

4483 - திருவார்பொன் னம்பலத்தே செழிக்குங்குஞ் சிதபாதர்
சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர் - வருவார் - 1

- கண்ணிகள்

4484 - சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு
தெளிந்தோர்எல் லாரும்தொண்டு செய்யப் பவுரிகொண்டு
இந்த வெளியில்நட மிடத்துணிந் தீரேஅங்கே
இதைவிடப் பெருவெளி இருக்குதென் றால்இங்கே - வருவார் - 1

4485 - இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய
இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய
ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால்
உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை(313)என்றுசொன்னால் - வருவார் - 2

- - (313) உன்மேலாணை - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.

4486 - மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து
விளையா டவும்எங்கள் வினைஓ டவும்ஒளித்து
எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது
இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது - வருவார் - 3

- வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல வரமே.

74. என்ன புண்ணியம் செய்தேனோ

சிந்து



- பல்லவி

4487. என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான்
என்ன புண்ணியம் செய்தே னோ. - - 1

- பல்லவி எடுப்பு

4488 - மன்னர்நாதர் அம்பலவர் வந்தார்வந்தார் என்றுதிருச்
சின்னநாதம் என்னிரண்டு செவிகளினுள் சொல்கின்றதே. - என்ன - 1

- கண்ணிகள்


4489 - பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும்
போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய்
அருள்நாட கம்புரியும் கருணாநி தியர்உன்னை
ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம் சொல்கின்றதே. - என்ன - 1

4490 - பாடியநல் லோர்தமக்கே நாடியதெல் லாம்அளிப்பார்
பத்திவலை யுட்படுவார் சத்தியர்நித் தியர்மன்றில்
ஆடியபொற் பாதர்வேதம் தேடியசிற் போதர்உன்னை
அணையவந்தார்வந்தார்என்றேஇணையில்நாதம்சொல்கின்றதே. - என்ன - 2

4491 - எந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர்
எல்லாம்செய் வல்லசித்தர் நல்லோர் உளத்தமர்ந்தார்
மந்திரமா மன்றில்இன்பம் தந்தநட ராஜர்உன்னை
மருவவந்தார் வந்தார்என்று தெருவில்நாதம் சொல்கின்றதே. - என்ன - 3

4492 - ஓதிஎந்த விதத்தாலும் வேதியனும் தேர்வரியார்
ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார்
ஆதியந்தம் காண்பரிய ஜோதிசுயஞ் ஜோதிஉன்னோ
டாடவந்தார் வந்தார்என்றே நாடிநாதம் சொல்கின்றதே. - என்ன - 4

4493 - அற்புதப்பே ரழகாளர் சொற்பதம் கடந்துநின்றார்
அன்பரெலாம் தொழமன்றில் இன்பநடம் புரிகின்றார்
சிற்பரர்எல் லாமும்வல்ல தற்பரர் விரைந்திங்குன்னைச்
சேரவந்தார் வந்தார்என்றோங் காரநாதம் சொல்கின்றதே. - என்ன - 5

4494 - ஆரணர்நா ரணர்எல்லாம் பூரணர்என் றேத்துகின்ற
ஐயர்திரு வம்பலவர் மெய்யர்எல்லாம் வல்லசித்தர்
காரணமும் காரியமும் தாரணிநீ யாகஉன்னைக்
காணவந்தார் வந்தார்என்றே வேணுநாதம் சொல்கின்றதே. - என்ன - 6

4495 - பாகார்மொழி யாள்சிவ மாகாம வல்லிநாளும்
பார்த்தாட மணிமன்றில் கூத்தாடு கின்றசித்தர்
வாகாஉனக்கே என்றும் சாகா வரங்கொடுக்க
வலியவந்தார் வந்தார்என்றே வலியநாதம் சொல்கின்றதே. - என்ன - 7

- என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான்
என்ன புண்ணியம் செய்தே னோ.

75. இவர்க்கும் எனக்கும்

சிந்து



- பல்லவி

4496. இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது
என்றும் தீரா வழக்குக் காண டி. - - 1

- பல்லவி எடுப்பு

4497 - எவர்க்கும் பெரியவர்பொன் னம்பலத் தேநடம்
இட்டார் எனக்குமாலை இட்டார் இதோவந்தார். - இவர்க்கும் - 1

- கண்ணிகள்

4498 - அன்றிதோ வருகின்றேன் என்று போனவர்அங்கே
யார்செய்த தடையாலோ இருந்தார்என் கையிற்சங்கை
இன்றுதம் கையிற்கொண்டே வந்துநிற் கின்றார்இங்கே
இந்தக் கதவைமூடு இவர்போவ தினிஎங்கே. - இவர்க்கும் - 1

4499 - அவரவர் உலகத்தே அறிந்தலர் தூற்றப்பட்டேன்
அன்றுபோ னவர்இன்று வந்துநிற் கின்றார்கெட்டேன்
இவர்சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன்
இந்தக் கதவைமூடு இனிஎங்கும் போகஒட்டேன். - இவர்க்கும் - 2

4500 - சின்ன வயதில்என்னைச் சேர்ந்தார்புன் னகையோடு
சென்றார் தயவால்இன்று வந்தார் இவர்க்கார்ஈடு
என்னைவிட் டினிஇவர் எப்படிப் போவார்ஓடு
இந்தக் கதவைமூடு இரட்டைத்தாட் கோலைப்போடு. - - 3

- இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது
என்றும் தீரா வழக்குக் காண டி.

76. இது நல்ல தருணம்

சிந்து



- பல்லவி

4501. இதுநல்ல தருணம் - அருள்செய்ய
இதுநல்ல தருணம். - - 1

- பல்லவி எடுப்பு

4502 - பொதுநல்ல நடம்வல்ல புண்ணிய ரேகேளும்
பொய்யேதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன். - இதுநல்ல - 1

- கண்ணிகள்

4503 - மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது
வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. - இதுநல்ல - 1

4504 - குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
குதித்த(314) மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று
வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது
விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது. - இதுநல்ல - 2

- - (314) கொதித்த - முதற்பதிப்பு., பொ சு, பி. இரா., ச. மு. க.

4505 - கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று
கொடியஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று
தாபமும் சோபமும் தான்தானே சென்றது
தத்துவம் எல்லாம்என் றன்வசம் நின்றது. - இதுநல்ல - 3

4506 - கரையா எனதுமனக் கல்லும் கரைந்தது
கலந்து கொளற்கென் கருத்தும் விரைந்தது
புரையா நிலையில்என் புந்தியும் தங்கிற்று
பொய்படாக் காதல் ததும்பிமேல் பொங்கிற்று. - - 4

- இதுநல்ல தருணம் - அருள்செய்ய
இதுநல்ல தருணம்.

77. ஆனந்தப் பரிவு

தாழிசை



4507. - நானந்த மடையாதெந் நாளினும்உள் ளவனாகி நடிக்கும் வண்ணம்
ஆனந்த நடம்புரிவான் ஆனந்த அமுதளித்தான் அந்தோ அந்தோ. - 1

4508 - சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக
ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ. - 2

4509 - துரியபதம் அடைந்தபெருஞ் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்
கரியபதம் எனக்களித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ. - 3

4510 - மருட்பெருஞ்சோ தனைஎனது மட்டுமிலா வணங்கருணை வைத்தே மன்றில்
அருட்பெருஞ்சோ திப்பெருமான் அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ. - 4

4511 - துன்பமெலாம் ஒருகணத்தில் தொலைத்தருளி எந்நாளும் சுகத்தில் ஓங்க
அன்புடையான் அம்பலத்தான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ. - 5

4512 - பந்தமெலாம் தவிர்த்தருளிப் பதந்தருயோ காந்தமுதல் பகரா நின்ற
அந்தமெலாம் கடந்திடச்செய் தருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ. - 6

4513 - பேராலும் அறிவாலும் பெரியரெனச் சிறப்பாகப் பேச நின்றோர்
ஆராலும் பெறலரிய தியாததனைப் பெறுவித்தான் அந்தோ அந்தோ. - 7

4514 - தினைத்தனையும் அறிவறியாச் சிறியனென நினையாமல் சித்தி யான
அனைத்துமென்றன் வசமாக்கி அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ. - 8

4515 - பொதுவாகிப் பொதுவில்நடம் புரிகின்ற பேரின்பப் பொருள்தான் யாதோ
அதுநானாய் நான்அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் அந்தோ அந்தோ. - 9

4516 - மருள்வடிவே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் எதனாலு மாய்வி லாத
அருள்வடிவாய் இம்மையிலே அடைந்திடப்பெற் றாடுகின்றேன்அந்தோஅந்தோ - 10

4517 - எக்கரையும் காணாதே இருட்கடலில் கிடந்தேனை எடுத்தாட் கொண்டு
அக்கரைசேர்த்தருளெனுமோர்சர்க்கரையும்எனக்களித்தான்அந்தோஅந்தோ(315). - 11

- - (315) இப்பதினோராம் செய்யுள் ஒரு தனிப்பாடல். பொருள் ஒற்றுமை கருதி
இப்பதிகத்தில் சேர்க்கப்பெற்றது.

78. ஞான மருந்து

சிந்து



- பல்லவி

4518. ஞான மருந்திம் மருந்து - சுகம்
நல்கிய சிற்சபா நாத மருந்து. - - 1

- கண்ணிகள்

4519 - அருட்பெருஞ் சோதி மருந்து - என்னை
ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து
பொருட்பெரும் போக மருந்து - என்னைப்
புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து. - ஞான - 1

4520 - எல்லாம்செய் வல்ல மருந்து - என்னுள்
என்றும் விடாமல் இனிக்கு மருந்து
சொல்லால் அளவா மருந்து - சுயஞ்
ஜோதி அருட்பெருஞ் ஜோதி மருந்து. - ஞான - 2

4521 - காணாது காட்டு மருந்து - என்றன்
கையிற்பொற் கங்கணம் கட்டு மருந்து
ஆணாகிப் பெண்ணாம் மருந்து - அது
வாகி மணிமன்றில் ஆடு மருந்து. - ஞான - 3

4522 - சுத்தசன் மார்க்க மருந்து - அருட்
சோதி மலையில் துலங்கு மருந்து
சித்துரு வான மருந்து - என்னைச்
சித்தெலாம் செய்யச்செய் வித்த மருந்து. - ஞான - 4

4523 - அன்பர்க் கெளிய மருந்து - மற்றை
ஐவர்க்கும் காண்டற் கரிய மருந்து
என்பற்றில் ஓங்கு மருந்து - என்னை
இன்ப நிலையில் இருத்து மருந்து. - ஞான - 5

4524 - நாதாந்த நாட்டு மருந்து - பர
ஞான வெளியில் நடிக்கு மருந்து
போதாந்தர்க் கெய்து மருந்து - என்னுள்
பொன்னடி காட்டிப் புணர்ந்த மருந்து. - ஞான - 6

4525 - ஆதி அனாதி மருந்து - திரு
அம்பலத் தேநட மாடு மருந்து
ஜோதி மயமா மருந்து - என்னைச்
சோதியா தாண்ட துரிய மருந்து. - ஞான - 7

4526 - ஆறந்தத் தோங்கு மருந்து - அதற்
கப்பாலுக் கப்பாலும் ஆன மருந்து
ஊறந்த மில்லா மருந்து - எனக்
குள்ளே கலந்த உறவா மருந்து. - ஞான - 8

4527 - என்னுயிர்க் கன்பா மருந்து - கலந்
தென்னுயிர்க் குள்ளே இருந்த மருந்து
என்னுயிர் காக்கு மருந்து - என்றும்
என்னுயி ராகிய இன்ப மருந்து. - ஞான - 9

4528 - என்னறி வுட்கொள் மருந்து - என்றும்
என்னறி வாகி இலங்கு மருந்து
என்னறி வின்ப மருந்து - என்னுள்
என்னறி வுக்கறி வென்னு மருந்து - ஞான - 10

4529 - என்குரு வான மருந்து - என்றும்
என்தெய்வ மாகி இருக்கு மருந்து
என்அன்னை யென்னு மருந்து - என்றும்
என்தந்தை யாகிய இன்ப மருந்து. - ஞான - 11

4530 - என்பெரு வாழ்வா மருந்து - என்றும்
என்செல்வ மாகி இருக்கு மருந்து
என்னுயிர் நட்பா மருந்து - எனக்
கெட்டெட்டுச் சித்தியும் ஈந்த மருந்து. - ஞான - 12

4531 - என்னிறை யான மருந்து - மகிழ்ந்
தெனக்குத்தன் பொன்மேனி ஈந்த மருந்து
தன்னறி வாகு மருந்து - என்னைத்
தந்த மருந்தென்றன் சொந்த மருந்து. - ஞான - 13

4532 - உள்ளத்தி னுள்ளா மருந்து - என்றன்
உயிருக் கனாதி உறவா மருந்து
தெள்ளத் தெளிக்கு மருந்து - என்னைச்
சிவமாக்கிக் கொண்ட சிவாய மருந்து. - ஞான - 14

4533 - மெய்ப்பொரு ளென்னு மருந்து - எல்லா
வேதா கமத்தும் விளங்கு மருந்து
கைப்பொரு ளான மருந்து - மூன்று
கண்கொண்ட என்னிரு கண்ணுள் மருந்து. - ஞான - 15

4534 - மதியில் விளைந்த மருந்து - யார்க்கும்
மதிக்கப்ப டாதபொன் வண்ண மருந்து
கதிதரும் இன்ப மருந்து - அருட்
கண்ணால்என் றன்னைக் கலந்த மருந்து. - ஞான - 16

4535 - கற்பூர ஜோதி மருந்து - பசுங்
கற்பூர நன்மணங் காட்டு மருந்து
பொற்பூவின் ஓங்கு மருந்து - என்தற்
போதம் தவிர்த்தசிற் போத மருந்து. - ஞான - 17

4536 - மேலை வெளியா மருந்து - நான்
வேண்டுந்தோ றெல்லாம் விளையு மருந்து
சாலை விளக்கு மருந்து - சுத்த
சமரச சன்மார்க்க சங்க மருந்து. - ஞான - 18

4537 - என்னைத்தா னாக்கு மருந்து - இங்கே
இறந்தாரை எல்லாம் எழுப்பு மருந்து
துன்னுமெய்ச் சோதி மருந்து - அருட்
சோதியால் என்னைத் துலக்கு மருந்து. - ஞான - 19

4538 - பொய்யர்க் கரிதா மருந்து - என்னைப்
புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து
கையிற் கிடைத்த மருந்து - சிவ
காமக் கொடியைக் கலந்த மருந்து. - ஞான - 20

4539 - ஆணவம் தீர்க்கு மருந்து - பர
மானந்தத் தாண்டவ மாடும் மருந்து
மாணவ வண்ண மருந்து - என்னை
வலிய அழைத்து வளர்க்கு மருந்து. - ஞான - 21

4540 - வானடு வான மருந்து - என்னை
மாமணி மேடைமேல் வைத்த மருந்து
ஊனம் தவிர்த்த மருந்து - கலந்
துள்ளே இனிக்கின்ற உண்மை மருந்து. - ஞான - 22

4541 - மலையிலக் கான மருந்து - என்றன்
மறைப்பைத் தவிர்த்தமெய் வாழ்க்கை மருந்து
கலைநலம் காட்டு மருந்து - எங்கும்
கண்ணாகிக் காணும் கனத்த மருந்து. - ஞான - 23

4542 - அற்புத ஜோதி மருந்து - எல்லாம்
ஆகியன் றாகி அமர்ந்த மருந்து
தற்பதம் தந்த மருந்து - எங்கும்
தானேதா னாகித் தனித்த மருந்து. - ஞான - 24

4543 - தன்னை அளித்த மருந்து - என்றும்
சாகாத நல்வரம் தந்த மருந்து
பொன்னடி ஈந்த மருந்து - அருட்
போனகம் தந்த புனித மருந்து. - ஞான - 25

4544 - கண்ணுக் கினிய மருந்து - என்றன்
கைப்பொரு ளாந்தங்கக் கட்டி மருந்து
எண்ணுக் கடங்கா மருந்து - என்னை
ஏதக்குழிவிட் டெடுத்த மருந்து. - ஞான - 26

4545 - சுட்டப் படாத மருந்து - என்றன்
தூக்கமும் சோர்வும் தொலைத்த மருந்து
எட்டுதற் கொண்ணா மருந்து - நான்
எட்டிப் பிடிக்க இசைந்த மருந்து. - ஞான - 27

4546 - உன்னற் கரிதா மருந்து - எனக்
குள்ளும் புறத்தும் உலாவு மருந்து
தன்னந் தனித்த மருந்து - சுத்தச்
சாக்கிரா தீதச் சபேச மருந்து. - ஞான - 28

4547 - ஒன்றில்ஒன் றான மருந்து - அந்த
ஒன்றில் இரண்டாகி ஓங்கு மருந்து
அன்றிமூன் றான மருந்து - நான்
காகிஐந் தாகி அமர்ந்த மருந்து. - ஞான - 29

4548 - வெளிக்குள் வெளியா மருந்து - எல்லா
வெளியும் கடந்து விளங்கு மருந்து
ஒளிக்குள் ஒளியா மருந்து - எல்லா
ஒளியும்தா னாகிய உண்மை மருந்து. - ஞான - 30

4549 - ஆறாறுக் கப்பால் மருந்து - அதற்
கப்புறத் தீராறுக் கப்பால் மருந்து
ஈறாதி இல்லா மருந்து - என்னை
எல்லாம் செயச்செய்த இன்ப மருந்து. - ஞான - 31

4550 - ஆரணத் தோங்கு மருந்து - அருள்
ஆகம மாகிஅண் ணிக்கு மருந்து
காரணம் காட்டு மருந்து - எல்லாம்
கண்ட மருந்தென்னுள் கொண்ட மருந்து. - ஞான - 32

4551 - மலமைந்து நீக்கு மருந்து - புவி
வானண்ட மெல்லாம் வளர்க்கு மருந்து
நலமிக் கருளு மருந்து - தானே
நானாகித் தானாளு நாட்டு மருந்து. - - 33

- ஞான மருந்திம் மருந்து - சுகம்
நல்கிய சிற்சபா நாத மருந்து.

79. சிவசிவ ஜோதி

சிந்து



- பல்லவி

4552. சிவசிவ சிவசிவ ஜோதி - சிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
சிவசிவ சிவசிவ ஜோதி. - - 1

- கண்ணிகள்

4553 - சிற்பர மாம்பரஞ் ஜோதி - அருட்
சித்தெல்லாம் வல்ல சிதம்பர ஜோதி
தற்பர தத்துவ ஜோதி - என்னைத்
தானாக்கிக் கொண்ட தயாநிதி ஜோதி. - சிவசிவ - 1

4554 - சித்துரு வாம்சுயஞ் ஜோதி - எல்லாம்
செய்திட வல்ல சிதம்பர ஜோதி
அத்துவி தானந்த ஜோதி - என்னை
ஆட்கொண் டருளும்சிற் றம்பல ஜோதி. - சிவசிவ - 2

4555 - சின்மய மாம்பெருஞ் ஜோதி - அருட்
செல்வ மளிக்கும் சிதம்பர ஜோதி
தன்மய மாய்நிறை ஜோதி - என்னைத்
தந்தமெய் ஜோதி சதானந்த ஜோதி. - சிவசிவ - 3

4556 - ஆதிஈ றில்லாமுற் ஜோதி - அரன்
ஆதியர் தம்மை அளித்தபிற் ஜோதி
ஓதி உணர்வரும் ஜோதி - எல்லா
உயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி. - சிவசிவ - 4

4557 - மன்னிய பொன்வண்ண ஜோதி - சுக
வண்ணத்த தாம்பெரு மாணிக்க ஜோதி
துன்னிய வச்சிர ஜோதி - முத்து
ஜோதி மரகத ஜோதியுள் ஜோதி. - சிவசிவ - 5

4558 - பார்முதல் ஐந்துமாம் ஜோதி - ஐந்தில்
பக்கமேல் கீழ்நடுப் பற்றிய ஜோதி
ஓர்ஐம் பொறியுரு ஜோதி - பொறிக்
குள்ளும் புறத்தும் ஒளிர்கின்ற ஜோதி. - சிவசிவ - 6

4559 - ஐம்புல மும்தானாம் ஜோதி - புலத்
தகத்தும் புறத்து மலர்ந்தொளிர் ஜோதி
பொய்ம்மயல் போக்கும்உள் ஜோதி - மற்றைப்
பொறிபுலன் உள்ளும் புறத்துமாம் ஜோதி. - சிவசிவ - 7

4560 - மனமாதி எல்லாமாம் ஜோதி - அவை
வாழ அகம்புறம் வாழ்கின்ற ஜோதி
இனமான உள்ளக ஜோதி - சற்றும்
ஏறா திறங்கா தியக்குமோர் ஜோதி. - சிவசிவ - 8

4561 - முக்குண மும்மூன்றாம் ஜோதி - அவை
முன்பின் இயங்க முடுக்கிய ஜோதி
எக்குணத் துள்ளுமாம் ஜோதி - குணம்
எல்லாம் கடந்தே இலங்கிய ஜோதி. - சிவசிவ - 9

4562 - பகுதிமூன் றாகிய ஜோதி - மூலப்
பகுதிகள் மூன்றும் படைத்தருள் ஜோதி
பகுதி பலவாக்கும் ஜோதி - சற்றும்
விகுதிஒன் றின்றி விளக்கிய ஜோதி. - சிவசிவ - 10

4563 - கால முதற்காட்டும் ஜோதி - கால
காரணத் தப்பால் கடந்தொளிர் ஜோதி
கோலம் பலவாகும் ஜோதி - ஒன்றும்
குறிக்கப் படாச்சிற் குணப்பெருஞ் சோதி. - சிவசிவ - 11

4564 - தத்துவம் எல்லாமாம் ஜோதி - அந்தத்
தத்துவம் எல்லாம் தருவிக்கும் ஜோதி
அத்துவி தப்பெருஞ் ஜோதி - எல்லாம்
அருளில் விளங்க அமர்த்திய ஜோதி. - சிவசிவ - 12

4565 - சத்தர்கள் எல்லாமாம் ஜோதி - அவர்
சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஜோதி
முத்தர் அனுபவ ஜோதி - பர
முத்தியாம் ஜோதிமெய்ச் சித்தியாம் ஜோதி. - சிவசிவ - 13

4566 - ஆறந்தத் தேநிறை ஜோதி - அவைக்
கப்புறத் தப்பாலும் ஆகிய ஜோதி
வீறும் பெருவெளி ஜோதி - மேலும்
வெட்ட வெளியில் விளங்கிய ஜோதி. - சிவசிவ - 14

4567 - பேரருட் ஜோதியுள் ஜோதி - அண்ட
பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய ஜோதி
வாரமுற் றோங்கிய ஜோதி - மன
வாக்குக் கெட்டாததோர் மாமணி(316) ஜோதி. - சிவசிவ - 15

- - (316) மாணிக்க - ச. மு. க. பதிப்பு.

4568 - ஒன்றான பூரண ஜோதி - அன்பில்
ஒன்றாத உள்ளத்தில் ஒன்றாத ஜோதி
என்றா ஒளிர்கின்ற ஜோதி - என்னுள்
என்றும் விளங்கிய என்னுயிர் ஜோதி. - சிவசிவ - 16

4569 - மெய்யேமெய் யாகிய ஜோதி - சுத்த
வேதாந்த வீட்டில் விளங்கிய ஜோதி
துய்ய சிவானந்த ஜோதி - குரு
துரியத் தலத்தே துலங்கிய ஜோதி. - சிவசிவ - 17

4570 - சிவமய மாம்சுத்த ஜோதி - சுத்த
சித்தாந்த வீட்டில் சிறந்தொளிர் ஜோதி
உவமையில் லாப்பெருஞ் ஜோதி - என
துள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி. - சிவசிவ - 18

4571 - என்னைத்தா னாக்கிய ஜோதி - இங்கே
இறந்தாரை எல்லாம் எழுப்புமோர் ஜோதி
அன்னைக்கு மிக்கருட் ஜோதி - என்னை
ஆண்டமு தம்தந்த ஆனந்த ஜோதி. - சிவசிவ - 19

4572 - சித்தம் சிவமாக்கும் ஜோதி - நான்
செய்த தவத்தால் தெரிந்தஉட் ஜோதி
புத்தமு தாகிய ஜோதி - சுக
பூரண மாய்ஒளிர் காரண ஜோதி. - சிவசிவ - 20

4573 - தம்பத்தில் ஏற்றிய ஜோதி - அப்பால்
சார்மணி மேடைமேல் தான்வைத்த ஜோதி
விம்பப் பெருவெளி ஜோதி - அங்கே
வீதியும் வீடும் விளக்கிய ஜோதி. - சிவசிவ - 21

4574 - சுகமய மாகிய ஜோதி - எல்லா
ஜோதியு மான சொரூபஉட் ஜோதி
அகமிதந் தீர்த்தருள் ஜோதி - சச்சி
தானந்த ஜோதி சதானந்த ஜோதி. - சிவசிவ - 22

4575 - நித்த பரானந்த ஜோதி - சுத்த
நிரதிச யானந்த நித்திய ஜோதி
அத்துவி தானந்த ஜோதி - எல்லா
ஆனந்த வண்ணமும் ஆகிய ஜோதி. - சிவசிவ - 23

4576 - பொய்யாத புண்ணிய ஜோதி - எல்லாப்
பொருளும் விளங்கப் புணர்த்திய ஜோதி
நையா தருள்செய்த ஜோதி - ஒரு
நானும்தா னும்ஒன்றாய் நண்ணிய ஜோதி. - சிவசிவ - 24

4577 - கண்ணிற் கலந்தருள் ஜோதி - உளக்
கண்ணுயிர்க் கண்ணருட் கண்ணுமாம் ஜோதி
எண்ணிற்ப டாப்பெருஞ் சோதி - நான்
எண்ணிய வண்ணம் இயற்றிய ஜோதி. - சிவசிவ - 25

4578 - விந்து ஒளிநடு ஜோதி - பர
விந்து ஒளிக்குள் விளங்கிய ஜோதி
நம்துயர் தீர்த்தருள் ஜோதி - பர
நாதாந்த நாட்டுக்கு நாயக ஜோதி. - சிவசிவ - 26

4579 - தான்அன்றி ஒன்றிலா ஜோதி - என்னைத்
தன்மயம் ஆக்கிய சத்திய ஜோதி
நான்இன்று கண்டதோர் ஜோதி - தானே
நானாகி வாழ்ந்திட நல்கிய ஜோதி. - சிவசிவ - 27

4580 - தன்னிகர் இல்லதோர் ஜோதி - சுத்த
சன்மார்க்க சங்கம் தழுவிய ஜோதி
என்னுள் நிறைந்தமெய் ஜோதி - என்னை
ஈன்றைந் தொழில்செய்என் றேவிய ஜோதி. - சிவசிவ - 28

4581 - அச்சம் தவிர்த்தமெய் ஜோதி - என்னை
ஆட்கொண் டருளிய அம்பல ஜோதி
இச்சை எலாம்தந்த ஜோதி - உயிர்க்
கிங்குமங் கென்னாமல் எங்குமாம் ஜோதி. - சிவசிவ - 29

4582 - காலையில் நான்கண்ட ஜோதி - எல்லாக்
காட்சியும் நான்காணக் காட்டிய ஜோதி
ஞாலமும் வானுமாம் ஜோதி - என்னுள்
நானாகித் தானாகி நண்ணிய ஜோதி. - சிவசிவ - 30

4583 - ஏகாந்த மாகிய ஜோதி - என்னுள்
என்றும் பிரியா திருக்கின்ற ஜோதி
சாகாத வரந்தந்த ஜோதி - என்னைத்
தானாக்கிக் கொண்டதோர் சத்திய ஜோதி. - சிவசிவ - 31

4584 - சுத்த சிவமய ஜோதி - என்னை
ஜோதி மணிமுடி சூட்டிய ஜோதி
சத்திய மாம்பெருஞ் ஜோதி - நானே
தானாகி ஆளத் தயவுசெய் ஜோதி. - - 32

- சிவசிவ சிவசிவ ஜோதி - சிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
சிவசிவ சிவசிவ ஜோதி.

80. ஜோதியுள் ஜோதி

சிந்து



- பல்லவி

4585. ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி. - 1

- கண்ணிகள்

4586 - சிவமே பொருளென்று தேற்றி - என்னைச்
சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்
சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 1

4587 - வித்தெல்லாம் ஒன்றென்று நாட்டி - அதில்
விளைவு பலபல வேறென்று காட்டிச்
சித்தெல்லாம் தந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 2

4588 - சொல்வந்த அந்தங்கள் ஆறும் - ஒரு
சொல்லாலே ஆமென்றச் சொல்லாலே வீறும்
செல்வம் கொடுத்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 3

4589 - தங்கோல் அளவெனக் கோதிச் - சுத்த
சமரச சத்திய சன்மார்க்க நீதிச்
செங்கோல் அளித்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 4

4590 - ஆபத்தை நீக்கி வளர்த்தே - சற்றும்
அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே
தீபத்தை வைத்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 5

4591 - மெய்யொன்று சன்மார்க்க மேதான் - என்றும்
விளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீதான்
செய்யென்று தந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 6

4592 - என்பால் வருபவர்க் கின்றே - அருள்
ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே(317)
தென்பால் இருந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 7

- - (317) ஈகின்றோம் ஈகின்றோம் ஈகின்றோம் என்றே - ச. மு. க.

4593 - துரியத் தலமூன்றின் மேலே - சுத்த
துரியப் பதியில் அதுஅத னாலே
தெரியத் தெரிவது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 8

4594 - பரைதூக்கிக் காட்டிய காலே - ஆதி
பரைஇவர்க் கப்பால்அப் பால்என்று மேலே
திரைதூக்கிக் காட்டுதல் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 9

4595 - தற்பர மேவடி வாகி - அது
தன்னைக் கடந்து தனிஉரு வாகிச்
சிற்பரத் துள்ளது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 10

4596 - நவவெளி நால்வகை யாதி - ஒரு
நடுவெளிக் குள்ளே நடத்திய நீதிச்
சிவவெளி யாம்இது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 11

4597 - மேருவெற் புச்சியின் பாலே - நின்று
விளங்குமோர் தம்பத்தின் மேலுக்கு மேலே
சேருமோர் மேடைமேல் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 12

4598 - ஆரண வீதிக் கடையும் - சுத்த
ஆகம வீதிகள் அந்தக் கடையும்
சேர நடுக்கடை பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 13

4599 - பாடல் மறைகளோர் கோடி - அருட்
பாத உருவ சொரூபங்கள் பாடி
தேட இருந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 14

4600 - நீடு சிவாகமங் கோடி - அருள்
நேருறப் பாடியும் ஆடியும் ஓடித்
தேட இருந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 15

4601 - பத்தி நெறியில் செழித்தே - அன்பில்
பாடுமெய் யன்பர் பதியில் பழுத்தே
தித்தித் திருப்பது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 16

4602 - பித்தாடு மாயைக்கு மேலே - சுத்தப்
பிரம வெளியினில் பேரரு ளாலே
சித்தாடு கின்றது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 17

4603 - தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த
சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோ ங்கும்
திருநெறிக் கேசென்று பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 18

4604 - எம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும்
எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
செம்பொருள் என்பது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 19

4605 - சைவ முதலாக நாட்டும் - பல
சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
தெய்வம் இதுவந்து பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 20

4606 - எள்ளலில் வான்முதல் மண்ணும் - அமு
தெல்லாம் இதிலோர் இறையள வென்னும்
தெள்ளமு தாம்இது பாரீர் -திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 21

4607 - எத்தாலும் ஆகாதே அம்மா - என்றே
எல்லா உலகும் இயம்புதல் சும்மா
செத்தாரை மீட்பது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 22

4608 - பிறந்து பிறந்துழன் றேனை - என்றும்
பிறவா திறவாப் பெருமைதந் தூனைச்
சிறந்தொளிர் வித்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 23

4609 - வருவித்த வண்ணமும் நானே - இந்த
மாநிலத் தேசெயும் வண்ணமும் தானே
தெரிவித் தருளிற்றுப் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 24

4610 - பாரிடம் வானிட மற்றும் - இடம்
பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும்
சேரிட மாம்இது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 25

4611 - உய்பிள்ளை பற்பலர் ஆவல் - கொண்டே
உலகத் திருப்பஇங் கென்னைத்தன் ஏவல்
செய்பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 26

4612 - உருவும் உணர்வும்செய் நன்றி - அறி
உளமும் எனக்கே உதவிய தன்றித்
திருவும் கொடுத்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 27

4613 - எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்
எண்ணிய வாறே இனிதுதந் தென்னைத்
திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 28

4614 - பேருல கெல்லாம் மதிக்கத் - தன்
பிள்ளைஎன் றென்னைப் பெயரிட் டழைத்தே
சீருறச் செய்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. - ஜோதி - 29

- ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
திருச்சிற்றம்பலம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்