Iraṇṭām tirumuṟai - I


சைவ சமய நூல்கள்

Back

இரண்டாம் திருமுறை I
இராமலிங்க அடிகள்




இரண்டாம் திருமுறை

1. கருணை விண்ணப்பம்
பொது
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

571. நல்லார்க் கெல்லாம் நல்லவன்நீ ஒருவன் யாண்டும் நாயடியேன்
பொல்லார்க் கெல்லாம் பொல்லவன்நான் ஒருவன் இந்தப் புணர்ப்பதனால்
எல்லாம் உடையாய் நினக்கெதிரென் றெண்ணேல் உறவென் றெண்ணுகஈ
தல்லால் வழக்கென் இருமைக்கும் பொதுமை அன்றோ அருளிடமே.

572. இடமே பொருளே ஏவலே என்றென் றெண்ணி இடர்ப்படுமோர்
மடமே உடையேன் தனக்கருள்நீ வழங்கல் அழகோ ஆநந்த
நடமே உடையோய் நினைஅன்றி வேற்றுத் தெய்வம் நயவேற்குத்
திடமே அருள்தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாயே.

573. தெரித்தால் அன்றிச் சிறிதேனும் தெரிவொன் றில்லாச் சிறியேனைப்
பிரித்தாய் கூடும் வகைஅறியும் பெற்றி என்னே பிறைமுடிமேல்
தரித்தாய் அடியேன் பிழைபொறுக்கத் தகுங்காண் துன்பம் தமியேனை
அரித்தால் கண்டிங் கிரங்காமை அந்தோ அருளுக் கழகேயோ.

574. அருள்ஓர் சிறிதும் உதவுகிலாய் அதனைப் பெறுதற் கடியேன்பால்
தெருள்ஓர் சிறிதும் இலையேஎன் செய்கேன் எங்கள் சிவனேயோ
மருளோர் எனினும் தமைநோக்கி வந்தார்க் களித்தல் வழக்கன்றோ
பொருளோர் இடத்தே மிடிகொண்டோ ர் புகுதல் இன்ற புதிதன்றே.

575. புதியேன் அல்லேன் நின்அடிமைப் பொருத்தம் இல்லேன் அல்லேன்யான்
மதியேன் வேற்றுத் தேவர்தமை வந்தங் கவர்தாம் எதிர்படினும்
துதியேன் நின்னை விடுவேனோ தொண்ட னேனை விடல்அழகோ
நதியேர் சடையோய் இன்னருள்நீ நல்கல் வேண்டும் நாயேற்கே.

576. நாயேன் துன்பக் கடல்வீழ்ந்து நலிதல் அழகோ நல்லோர்க்கிங்
கீயேன் ஒன்றும் இல்லேன்நான் என்செய் கேனோ என்னுடைய
தாயே அனையாய் சிறிதென்மேல் தயவு புரிந்தால் ஆகாதோ
சேயேன் தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகஞ் சிரியாதோ.

577. சிரிப்பார் நின்பேர் அருள்பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ
விரிப்பார் பழிச்சொல் அன்றிஎனை விட்டால் வெள்ளை விடையோனே
தரிப்பாய் இவனை அருளிடத்தே என்று நின்று தகும்வண்ணம்
தெரிப்பார் நினக்கும் எவர்கண்டாய் தேவர் தேடற் கரியானே.

578. அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும்
பெரிய பெருமாள் சிவபெருமான் பித்தப் பெருமான் என்றுன்னை
உரிய பெருமா தவர்பழிச்சல் உண்மை எனில்என் உடையானே
கரிய பெருமால் உடையற்கும் அருளல் உன்றன் கடன்அன்றே.

579. அன்றும் சிறியேன் அறிவறியேன் அதுநீ அறிந்தும் அருள்செய்தாய்
இன்றும் சிறியேன் அறிவறியேன் இதுநீ அறிந்தும் அருளாயேல்
என்றும் ஒருதன் மையன்எங்கள் இறைவன் எனமா மறைகள்எலாம்
தொன்று மொழிந்த து஑மொழிதான் சூது மொழியோ சொல்லாயே.

580. சொல்லற் கரிய பெரியபரஞ் சுடரே முக்கட் சுடர்க்கொழுந்தே
மல்லற் கருமால் அயன்முதலோர் வழுத்தும் பெருஞ்சீர் மணிக்குன்றே
புல்லற் கரிதாம் எளியேன்றன் பிழைகள் யாவும் பொறுத்திந்த
அல்லற் கடல்நின் றெனைஎடுத்தே அருள்வாய் உன்றன் அருள்நலமே.

திருச்சிற்றம்பலம்

2. பிரார்த்தனைப் பதிகம்
திருவொற்றியூரும் திருத்தில்லையும்
கட்டளைத் கலித்துறை
திருச்சிற்றம்பலம்

561. அப்பார் மலர்ச்சடை ஆரமு தேஎன் அருட்டுணையே
துப்பார் பவள மணிக்குன்ற மேசிற் சுகக்கடலே
வெப்பார் தருதுய ரால்மெலி கின்றனன் வெற்றடியேன்
இப்பார் தனில்என்னை அப்பாஅஞ் சேல்என ஏன்றுகொள்ளே.

582. ஏன்றுகொள் வான்நம தின்னுயிர் போல்முக்கண் எந்தைஎன்றே
சான்றுகொள் வாய்நினை நம்பிநின் றேன்இத் தமிஅடியேன்
மான்றுகொள் வான்வரும் துன்பங்கள் நீக்க மதித்தலையேல்
ஞான்றுகொள் வேன்அன்றி யாதுசெய் வேன்இந்த நானிலத்தே.

583. நிலத்தே சிறுவர்செய் குற்றங்கள் யாவும் நினைத்தறவோர்
சலத்தே உளத்தை விடார்என்பர் ஆதலின் தாதையென்றே
குலத்தேவர் போற்றும் குணக்குன்றே மேஎங் குலதெய்வமே
புலத்தே இழிதகை யேன்பிழை யாவும் பொறுத்தருளே.

584. அருளார் அமுதப் பெருங்கட லேதில்லை அம்பலத்தில்
பொருளார் நடம்புரி புண்ணிய னேநினைப் போற்றுகிலேன்
இருளார் மனத்தின் இடர்உழந் தேன்இனி யாதுசெய்கேன்
மருளார் மலக்குடில் மாய்ந்திடில் உன்அருள் வாய்ப்பதற்கே.

585. வாயார நின்பொன் மலர்த்தாள் துணையே வழுத்துகிலேன்
ஓயா இடர்உழந் துள்நலி கின்றனன் ஓகெடுவேன்
பேயாய்ப் பிறந்திலன் பேயும்ஒவ் வேன்புலைப் பேறுவக்கும்
நாயாய்ப் பிறந்திலன் நாய்க்கும் கடைப்பட்ட நான்இங்ஙனே.

586. நான்செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்துநின் நல்லருள்நீ
தான்செய் தனைஎனில் ஐயாமுக் கட்பெருஞ் சாமிஅவற்
கேன்செய் தனைஎன நிற்றடுப் பார்இலை என்அரசே
வான்செய்த நன்றியை யார்தடுத் தார்இந்த வையக்தே.

587. வையக் தேஇடர் மாக்கடல் முழ்கி வருந்துகின்ற
பொய்யகத் தேனைப் புரந்தரு ளாமல் புறம்பொழித்தால்
நையகத் தேன்எது செய்வேன்அந் தோஉள் நலிகுவன்காண்
மெய்யகத் தேநின் றொளிர்தரும் ஞான விரிசுடரே.

588. விரிதுய ரால்தடு மாறுகின் றேன்இந்த வெவ்வினையேன்
பெரிதுய ராநின்ற நல்லோர் அடையும்நின் பேரருள்தான்
அரிதுகண் டாய்அடை வேன்எனல் ஆயினும் ஐயமணிப்
புரிதுவர் வார்சடை யாய்நீ உவப்பில் புரியில்உண்டே.

589. உண்டேர்என போல்துய ரால்அலை கின்றவர் உத்தமநீ
கண்டோ ர் சிறிதும் இரங்குகி லாய்இக் கடையவனேன்
பண்டோ ர் துணைஅறி யேன்நின்னை யன்றிநிற் பற்றிநின்றேன்
எண்டோ ள் மணிமிடற் றெந்தாய் கருணை இருங்கடலே.

590. கடலே அனைய துயர்மிகை யால்உட் கலங்கும்என்னை
விடலே அருளன் றெடுத்தாளல் வேண்டும்என் விண்ணப்பமீ
தடல்ஏ றுவந்த அருட்கட லேஅணி அம்பலத்துள்
உடலே மருவும் உயிர்போல் நிறைஒற்றி யூரப்பனே.

திருச்சிற்றம்பலம்

3. பெரு விண்ணப்பம்
பொது
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

591. இருள்ஆர் மனத்தேன் இழுக்குடையேன் எளியேன் நின்னை ஏத்தாத
மருள்ஆர் நெஞ்சப் புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன்
அருள்ஆர் அமுதப் பெருக்கேஎன் அரசே அதுநீ அறிந்தன்றோ
தெருள்ஆர் அன்பர் திருச்சபையில் சேர்க்கா தலைக்கும் திறம்அந்தோ.

592. உண்மை அறியேன் எனினும்எனை உடையாய் உனையே ஒவ்வொருகால்
எண்மை உடையேன் நினைக்கின்றேன் என்னே உன்னை ஏத்தாத
வெண்மை உடையார் சார்பாக விட்டாய் அந்தோ வினையேனை
வண்மை உடையாய் என்செய்கேன் மற்றோர் துணைஇங் கறியேனே.

593. எளியேன் இழைத்த பெரும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கின்பளித்தாய்
களியேன் தனைநீ இனிஅந்தோ கைவிட் டிடில்என் கடவேனே
ஒளியே முக்கட் செழுங்கரும்மே ஒன்றே அன்பர் உறவேநல்
அளியே பரம வெளியேஎன் ஐயா அரசே ஆரமுதே.

594. காமக் கடலில் படிந்தஞராம் கடலில் விழுந்தேன் கரைகாணேன்
ஏமக் கொடுங்கற் றெனும்கரம் யாது செயுமோ என்செய்கேன்
நாமக் கவலை ஒழித்துன்றாள் நண்ணும் அவர்பால் நண்ணுவித்தே
தாமக் கடிப்பூஞ் சடையாய்உன் தன்சீர் பாடத் தருவாயே.

595. எண்ணா தெளியேன் செயும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கெனையாள்வ
தண்ணா நினது கடன்கண்டாய் அடியேன் பலகால் அறைவதென்னே
கண்ணார் துதற்செங் கரும்பேமுக் கனியே கருணைக் கடலேசெவ்
வண்ணா வெள்ளை மால்விடையாய் மன்றா டியமா மணிச்சுடரே.

596. பாலே அமுதே பழமேசெம் பாகே எனும்நின் பதப்புகழை
மாலே அயனே இந்திரனே மற்றைத் தேவ ரேமறைகள்
தாலே அறியா தெனில்சிறியேன் நானோ அறிவேன் நாயகஎன்
மேலே அருள்கூர்ந் தெனைநின்தான் மேவு வோர்பால் சேர்த்தருளே.

597. கண்ணார் நுதலோய் பெருங்கருணைக் கடலோய் கங்கை மதிச்சடையோய்
பெண்ணார் இடத்தோய் யாவர்கட்கும் பெரியோய் கரியோன் பிரமனொடும்
அண்ணா எனநின் றேத்தெடுப்ப அமர்ந்தோய் நின்றன் அடிமலரை
எண்ணா துழல்வோர் சார்பாக இருக்கத் தரியேன் எளியேனே.

598. பொய்யோர் அணியா அணிந்துழலும் புலையேன் எனினும் புகல்இடந்தான்
ஐயோ நினது பதம்அன்றி அறியேன் இதுநீ அறியாயோ
கைஓர் அனல்வைத் தாடுகின்ற கருணா நிதியே கண்ணுதலே
மெய்யோர் விரும்பும் அருமருந்தே வேத முடிவின் விழுப்பொருளே.

599. இன்னே எளியேன் பொய்யுடையேன் எனினும் அடியன் அலவோநான்
என்னே நின்னைத் துதியாதார் இடத்தில் என்னை இருத்தினையே
அன்னே என்றன் அப்பாஎன் ஐயா என்றன் அரசேசெம்
பொன்னே முக்கட் பொருளேநின் புணர்ப்பை அறியேன் புலையேனே.

600. வஞ்ச மடவார் மயலொருபால் மணியே நின்னை வழுத்தாத
நஞ்சம் அனையார் சார்பொருபால் நலியும் வாழ்க்கைத் துயர்ஒருபால்
விஞ்சும் நினது திருவருளை மேவா துழலும் மிடிஒருபால்
எஞ்சல் இலவாய் அலைக்கின்ற தென்செய் கேன்இவ் எளியேனே.

திருச்சிற்றம்பலம்

4. சிறு விண்ணப்பம்
பொது
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

601. பண்ணால்உன் அருட்புகழைப் பாடு கின்றார்
பணிகின்றார் நின்அழகைப் பார்த்துப் பார்த்துக்
கண்ணார உளங்குளிரக் களித்தா னந்தக்
கண்ணீர்கொண் டாடுகின்றார் கருணை வாழ்வை
எண்ணாநின் றுனைஎந்தாய் எந்தாய் எந்தாய்
என்கின்றார் நின்அன்பர் எல்லாம் என்றன்
அண்ணாநான் ஒருபாவி வஞ்ச நெஞ்சத்தால்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.

602. எப்பாலும் நின்அன்பர் எல்லாம் கூடி
ஏத்துகின்றார் நின்பதத்தை ஏழை யேன்நான்
வெப்பாய மடவியர்தம் கலவி வேட்டு
விழுகின்றேன் கண்கெட்ட விலங்கே போல
இப்பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும்
எண்ணுகிலேன் முக்கணுடை இறைவா என்றன்
அப்பாஎன் ஆருயிர்க்கோர் துணைவா வீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.

603. இன்புடையார் நின்அன்பர் எல்லாம் நின்சீர்
இசைக்கின்றார் நான்ஒருவன் ஏழை இங்கே
வன்புடையார் தமைக்கூடி அவமே நச்சு
மாமரம்போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கைத்
துன்புடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன்
தூய்மைஎன்ப தறிந்திலேன் சூழ்ந்தோர்க் கெல்லாம்
அன்புடையாய் எனைஉடையாய் விடையாய் வீணே
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.

604. விஞ்சுடையாய் நின்அன்பர் எல்லாம் நின்சீர்
மெய்ப்புளகம் எழத்துதித்து விளங்கு கின்றார்
நஞ்சுடையார் வஞ்சகர்தம் சார்பில் இங்கே
நான்ஒருவன் பெரும்பாவி நண்ணி முட
நெஞ்சுடையார் தமக்கெல்லாம் தலைமை பூண்டு
நிற்கின்றேன் கருணைமுக நிமலக் கஞ்சம்
அஞ்சுடையாய் ஆறுடைய சடையாய் வீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.

605. பொய்யாத நின்அடியார் எல்லாம் நல்ல
புண்ணியமே செய்துநினைப் போற்று கின்றார்
நையாநின் றுலைகின்ற மனத்தால் இங்கே
நான்ஒருவன் பெரும்பாவி நாயேன் தீமை
செய்யாநின் றுழைக்கின்றேன் சிறிதும் நின்னைச்
சிந்தியேன் வந்திக்கும் திறமும் நாடேன்
ஐயாஎன் அப்பாஎன் அரசே வீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.

606. தெருளுடையார் நின்அன்பர் எல்லாம் நின்றான்
சிந்தையில்வைத் தானந்தம் தேக்கு கின்றார்
மருளுடையேன் நான்ஒருவன் பாவி வஞ்ச
மனத்தாலே இளைத்திளைத்து மயங்கு கின்றேன்
இருளுடையேன் ஏர்பூட்டும் பகடு போல்இங்
கில்உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம் வல்ல
அருளுடையாய் ஆளுடையாய் உடையாய் வீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.

607. வாரமுளார் நின்அடியார் எல்லாம் நின்னை
வாழ்த்துகின்றார் தலைகுளிர வணங்கு கின்றார்
தீரமிலேன் நானொருவன் பாவி வஞ்சச்
செயல்விளக்கும் மனத்தாலே திகைத்தேன் சைவ
சாரமிலேன் ஆசார மில்லேன் சித்த
சாந்தமிலேன் இரக்கமிலேன் தகவும் இல்லேன்
ஆரமுதே முக்கனுடை அரசே வீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.

608. வண்மைபெறு நின்அன்பர் எல்லாம் நின்னை
வந்தனைசெய் தாநந்த வயத்தே நின்றார்
பெண்மையுறும் மனத்தாலே திகைத்தேன் நின்சீர்
பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நானோர்
ஒண்மையிலேன் ஒழுக்கமிலேன் நன்மை என்ப
தொன்றுமிலேன் ஓதியேபோல் உற்றேன் மிக்க
அண்மையில்வந் தருள்புரிவோய் என்னே வீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.

609. உம்பர்தமக் கரிதாம்உன் பதத்தை அன்றி
ஒன்றுமறி யார்உன்னை உற்றோர் எல்லாம்
இம்பர்வினை யுடையேன்நான் ஒருவன் பாவி
எட்டுணையும் நினைந்தறியேன் என்றும் எங்கும்
வம்பவிழ்பூங் குழல்மடவார் மையல் ஒன்றே
மனம்உடையேன் உழைத்திளைத்த மாடு போல்வேன்
அம்பலத்தெம் அரசேஇவ் வாழ்க்கைத் துன்பில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.

610. கொலைஅறியாக் குணத்தோர்நின் அன்பர் எல்லாம்
குணமேசெய் துன்னருள்தான் கூடு கின்றார்
புலைஅறிவேன் நான்ஒருவன் பிழையே செய்து
புலங்கெட்ட விலங்கேபோல் கலங்கு கின்றேன்
நிலைஅறியேன் நெறியொன்றும் அறியேன் எங்கும்
நினைஅன்றித் துணையொன்றும் அறியேன் சற்றும்
அலைஅறியா அருட்கடல்நீ ஆள்க வீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.

திருச்சிற்றம்பலம்

5. கலி முறையீடு
கலி விருத்தம்
திருச்சிற்றம்பலம்

611. பொய்விடு கின்றிலன் என்றெம் புண்ணியா
கைவிடு கின்றியோ கடைய னேன்தனைப்
பைவிடம் உடையவெம் பாம்பும் ஏற்றநீ பெய்விடம்
அனையஎன் பிழைபொ றுக்கவே.

612. பொறுக்கினும் அன்றிஎன் பொய்மை நோக்கியே
வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன்
மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டுபின்
சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே.

613. செல்லலும் சிறுமையும் சினமும் புல்லரைப்
புல்லலும் கொண்டஎன் பொய்மை கண்டுநீ
கொல்லலும் தகும்எனைக் கொன்றி டர்தருள்
மல்லலும் தகும்சடா மகுட வள்ளலே.

614. வள்ளலே நின்அடி மலரை நண்ணிய
உள்ளலேன் பொய்மையை உன்னி என்னையாட்
கொள்ளலே இன்றெனில் கொடிய என்தனை
எள்ளலே அன்றிமற் றென்செய் கிற்பனே.

615. செய்யநன் றறிகிலாச் சிறிய னேன்தனைப்
பொய்யன்என் றெண்ணிநீ புறம்பொ ழிப்பையேல்
வையநின் றையவோ மயங்கல் அன்றியான்
உய்யநின் றுணர்குவ தொன்றும் இல்லையே.

மேற்படி வேறு
616. இல்லை என்ப திலாஅருள் வெள்ளமே
தில்லை மன்றில் சிவபரம் சோதியே
வல்லை யான்செயும் வஞ்சமே லாம்பொறுத்
தொல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே.

மேற்படி வேறு
617. இல்லையே என்திங் கில்லை என்றருள்
நல்லையே நீஅருள் நயந்து நல்கினால்
கல்லையே அனையஎன் கன்ம நெஞ்சகம்
ஒல்லையே வஞ்சம்விட் டுவக்கும் உண்மையே

618. உண்மையே அறிகிலா ஓதிய னேன்படும்
எண்மையே கண்டும்உள் இரக்கம் வைத்திலை
அண்மையே அம்பலத் தாடும் ஐயநீ
வண்மையே அருட்பெரு வாரி அல்லையோ

619. அல்லலங் கடலிடை ஆழ்ந்த நாயினேன்
சொல்லலங் கடல்விடைத் தோன்றல் நின்அருள்
மல்லலங் கடலிடை மகிழ்ந்து முழ்கினால்
கல்அலங் கடல்மனம் கனிதல் மெய்மையே.

620. மெய்மையே அறிகிலா வீண னேன்இவன்
உய்மையே பெறஉனை உன்னி ஏத்திடாக்
கைமையே அனையர்தம் கடையில் செல்லவும்
பொய்மையே உரைக்கவும் புணர்த்த தென்கொலோ.

621. என்னுடை வஞ்சக இயற்கை யாவையும்
பொன்னுடை விடையினோய் பொறுத்துக் கொண்டுநின்
தன்னுடை அன்பர்தம் சங்கம் சார்ந்துநான்
நின்னுடைப் புகழ்தனை நிகழ்த்தச் செய்கவே.

622. நிகழும்நின் திருவருள் நிலையைக் கொண்டவர்
திகழும்நல் திருச்சபை அதனுட் சேர்க்கமுன்
அகழுமால் ஏனமாய் அளவும் செம்மலர்ப்
புகழுமா றருளுக பொறுக்க பொய்மையே.

திருச்சிற்றம்பலம்

6. அச்சத் திரங்கல்
கோயில்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

623. துறையிடும் கங்கைச் செழுஞ்சடைக் கனியே
சுயம்பிர காசமே அமுதில்
கறையிடும் கண்டத் தொருபெருங் கருணைக்
கடவுளே கண்ணுதற் கரும்பே
குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும்
கொடுந்துய ரால்அலைந் தையா
முறையிடு கின்றேன் அருள்தரா தென்னை
முடன்என் றிகழ்வது முறையோ.

624. இகழ்ந்திடேல் எளியேன் தன்னைநீ அன்றி
ஏன்றுகொள் பவரிலை அந்தோ
அகழ்ந்தென துளத்தைச் சூறைகொண் டலைக்கும்
அஞரெலாம் அறுத்தருள் புரிவாய்
புகழ்ந்திடுந் தொண்டர் உளத்தினும் வெள்ளிப்
பொருப்பினும் பொதுவினும் நிறைந்து
திகழ்ந்தருள் பழுக்கும் தெய்வதத் தருவே
செல்வமே சிவபரம் பொருளே.

625. பொருள்எலாம் புணர்க்கும் புண்ணியப் பொருளே
புத்தமு தேகுணப் பொருப்பே
இருள்எலாம் அறுக்கும் பேரொளிப் பிழம்பே
இன்பமே என்பெருந் துணையே
அருள்எலாம் திரண்ட ஒருசிவ முர்த்தி
அண்ணலே நின்அடிக் கபயம்
மருள்எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப
மயக்கெலாம் மாற்றிஆண் டருளே.

626. ஆண்டநின் கருணைக் கடலிடை ஒருசிற்
றணுத்துணைத் திவலையே எனினும்
ஈண்டஎன் றன்மேல் தெறித்தியேல் உய்வேன்
இல்லையேல் என்செய்கேன் எளியேன்
நீண்டவன் அயன்மற் றேனைவா னவர்கள்
நினைப்பரும் நிலைமையை அன்பர்
வேண்டினும் வேண்டா விடினும்ஆங் களிக்கும்
விமலனே விடைப்பெரு மானே.

627. பெருமையில் பிறங்கும் பெரியநற் குணத்தோர்
பெற்றதோர் பெருந்தனிப் பொருளே
அருமையில் பிரமன் ஆகிய தேவர்
அடைந்தநற் செல்வமே அமுதே
இருமையிற் பயனும் நின்திரு அருளே
என்றுநின் அடைக்கலம் ஆனேன்
கருமையிற் பொலியும் விடநிகர் துன்பக்
களைகளைந் தெனைவிளைத் தருனே.

628. விளைத்தனன் பவநோய்க் கேதுவாம் விடய
விருப்பினை நெருப்புறழ் துன்பின்
இளைத்தனன் அந்தோ ஏழைமை அதனால்
என்செய்கேன் என்பிழை பொறுத்துத்
தளைத்தவன் துயர்நீத் தாளவல் லவர்நின்
தனைஅன்றி அறிந்திலன் தமியேன்
கிளைத்தவான் கங்கை நதிச்சடை யவனே
கிளர்தரும் சிற்பர சிவனே.

629. சிற்பர சிவனே தேவர்தம் தலைமைத்
தேவனே தில்லைஅம் பலத்தே
தற்பர நடஞ்செய் தாணுவே அகில
சராசர காரணப் பொருளே
அற்பர்தம் இடஞ்செல் பற்பல துயரால்
அலைதரு கின்றனன் எளியேன்
கற்பகம் அனையநின் திருவருட் கடலில்
களிப்புடன் ஆடுவ தென்றோ.

630. என்றுநின் அருள்நீர் உண்டுவந் திடும்நாள்
என்றுநின் உருவுகண் டிடும்நாள்
என்றுநின் அடியர்க் கேவல்செய் திடும்நாள்
என்றென தகத்துயர் அறும்நாள்
மன்றுள்நின் றாடும் பரஞ்சுடர்க் குன்றே
வானவர் கனவினும் தோன்றா
தோன்றறும் ஒன்றே அருண்மய மான
உத்தம வித்தக மணியே.

631. வித்தகம் அறியேன் வினையினேன் துன்ப
விரிகடல் ஆழ்ந்தனன் அந்தோ
அத்தக வேனை எடுப்பவர் நின்னை
அன்றிஎங் கணும்இலை ஐயா
மத்தகக் கரியின் உரிபுனை பவள
வண்ணனே விண்ணவர் அரசே
புத்தக நிறைவின் அடியவர் வேண்டும்
பொருள்எலாம் புரிந்தருள் பவனே.

632. அருள்பவன் நின்னை அல்லதை இங்கும்
அங்கும்மற் றெங்கும்இன் றதுபோல்
மருள்பவன் என்னை அல்லதை மண்ணும்
வானமும் தேடினும் இன்றே
இருள்பவம் உடையேன் என்செய்கேன் நின்தாள்
இணைதுணை எனநினைந் துற்றேன்
மருள்பவத் தொடும்என் துயர்அறுத் தாள்வாய்
வாழிய அருட்பெருந் துறையே.

திருச்சிற்றம்பலம்

7. அபராதத் தாற்றாமை
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

633. துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன்
துட்டனேன் தூய்மைஒன் றில்லா
எச்சிலை அனையேன் பாவியேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
பச்சிலை இடுவார் பக்கமே மருவும்
பரமனே எம்பசு பதியே
அச்சிலை விரும்பும் அவருளத் தமுதே
ஐயனே ஒற்றியூர் அரைசே.

634. தூங்கினேன் சோம்பற் குறைவிட மானேன்
தோகையர் மயக்கிடை அழுந்தி
ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
வாங்கிமே ருவினை வளைத்திடும் பவள
மாமணிக் குன்றமே மருந்தே
ஒங்கிவான் அளவும் பொழில்செறி ஒற்றி
யூர்வரும் என்னுடை உயிரே.

635. கரப்பவர்க் கெல்லாம் முற்படும் கொடிய
கடையனேன் விடையமே உடையேன்
இரப்பவர்க் கணுவும் ஈந்திலேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
திரப்படும் கருணைச் செல்வமே சிவமே
தெய்வமே தெய்வநா யாகமே
உரப்படும் அன்பர் உள்ஒளி விளக்கே
ஒற்றியூர் வாழும்என் உவப்பே.

636. இல்லைஎன் பதனுக் கஞ்சிடேன் நாய்க்கும்
இணையிலேன் இழிவினேன் துயர்க்கோர்
எல்லைமற் றறியேன் ஒதியனேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
கல்லைவில் ஆக்கும் கருணைவா ரிதியே
கண்ணுதல் உடையசெங் கனியே
தில்லைவாழ் அரசே தெய்வமா மணியே
திருவொற்றி யூர்வரும் தேவே.

637. மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டுன்
மலரடி வழுத்திடச் சிறிதும்
எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே
விடையில்வந் தருள்விழி விருந்தே
கண்ணிலே விளங்கும் அரும்பெறல் மணியே
காட்சியே ஒற்றியங் கரும்பே.

638. முட்டியே மடவார் முலைத்தலை உழக்கும்
முடனேன் முழுப்புலை முறியேன்
எட்டியே அனையேன் பாவியேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
ஒட்டியே அன்பர் உனத்தெழும் களிப்பே
ஒளிக்குளாம் சோதியே கரும்பின்
கட்டியே தேனே சடையுடைக் கனியே
காலமும் கடந்தவர் கருத்தே.

639. கருதென அடியார் காட்டியும் தேறாக்
கன்மனக் குரங்கனேன் உதவா
எருதென நின்றேன் பாவியேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
மருதிடை நின்ற மாணிக்க மணியே
வன்பவம் தீர்ந்திடும் மருந்தே
ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே
ஒற்றியூர் மேவும்என் உறவே.

640. வைதிலேன் வணங்கா திகழ்பவர் தம்மை
வஞ்சனேன் நின்னடி யவர்பால்
எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
கொய்துமா மலரிட் டருச்சனை புரிவோர்
கோலநெஞ் சொளிர்குணக் குன்றே
உய்திறம் உடையோர் பரவுநல் ஒற்றி
யூர்அகத் தமர்ந்தருள் ஒன்றே.

641. தெவ்வண மடவார் சீக்குழி விழுந்தேன்
தீயனேன் பேயனேன் சிறியேன்
எவ்வணம் உய்வேன் என்செய்வேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
எவ்வணப் பொருப்பே என்னிரு கண்ணே
இடையிடர்ப் பசியசெம் பொன்னே
செவ்வண மணியே திகழ்குணக் கடலே
திருவொற்றி யூர்ச்செழுந் தேனே.

642. வாதமே புரிவேன் கொடும்புலி அனையேன்
வஞ்சக மனத்தினேன் பொல்லா
ஏதமே உடையேன் என்செய்வேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
போதமே ஐந்தாம் பூதமே ஒழியாப்
புனிதமே புதுமணப் பூவே
பாதமே சரணம் சரணம்என் தன்னைப்
பாதுகாத் தளிப்பதுன் பரமே.

திருச்சிற்றம்பலம்

8. காட்சிப் பெருமிதம்
திருவலிதாயம்
கலிவிருத்தம்
திருச்சிற்றம்பலம்

643. திரைப டாதசெ ழுங்கட லேசற்றும்
உரைப டாமல்ஒ ளிசெய்பொன் னேபுகழ்
வரைப டாதுவ ளர்வல்லி கேசநீ
தரைப டாக்கந்தை சாத்திய தென்கொலோ.

644. சிந்தை நின்றசி வாநந்தச் செல்வமே
எந்தை யேஎமை ஆட்கொண்ட தெய்வமே
தந்தை யேவலி தாயத்த லைவநீ
கந்தை சுற்றும்க ணக்கது என்கொலோ.

645. வேலை கொண்ட விடம்உண்ட கண்டனே
மாலை கொண்ட வளர்வல்லி கேசனே
பாலை கொண்ட பராபர நீபழஞ்
சேலை கொண்ட திறம்இது என்கொலோ

646. பன்னு வார்க்கு ளும்பர மேட்டியே
மன்னும் மாமணி யேவல்லி கேசனே
உள்ள நீஇங்கு டுத்திய கந்தையைத்
துன்னு வார்இல்லை யோபரஞ் சோதியே

647. கடுத்த தும்பிய கண்டஅ கண்டனே
மடுத்த நற்புகழ் வாழ்வல்லி கேசநீ
தொடுத்த கந்தையை நீக்கித்து ணிந்தொன்றை
உடுத்து வார்இலை யோஇவ்வு லகிலே.

648. ஆல்அ டுத்தஅ ரும்பொரு ளேதிரு
மால்அ டுத்தும் கிழ்வல்லி கேசநீ
பால்உ டுத்தப ழங்கந்தை யைவிடத்
தோல்உ டுப்பது வேமிகத் து஑ய்மையே

649. துன்னும் மாமருந் தேசுட ரேஅருள்
மன்னும் மாணிக்க மேவல்லி கேசரே
துன்னு கந்தையைச் சுற்றிநிற் பீர்எனில்
என்ன நீர்எமக் கியும்ப ரிசதே.

650. மாசில் சோதிம ணிவிளக் கேமறை
வாசி மேவிவ ரும்வல்லி கேசநீர்
தூசில் கந்தையைச் சுற்றிஐ யோபர
தேசி போல்இருந் தீர்என்கொல் செய்வனே.

651. தேரும் நற்றவர் சிந்தைஎ னுந்தலம்
சாரும் நற்பொரு ளாம்வலி தாயநீர்
பாரும் மற்றிப்ப ழங்கந்தை சாத்தினீர்
யாரும் அற்றவ ரோசொலும் ஐயரே.

652. மெல்லி தாயவி ரைமலர்ப் பாதனே
வல்லி தாயம ருவிய நாதனே
புல்லி தாயஇக் கந்தையைப் போர்த்தினால்
கல்லி தாயநெஞ் சம்கரை கின்றதே.

திருச்சிற்றம்பலம்

9. அருளியல் வினாவல்
திருமுல்லைவாயில்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

653. தேன்என இனிக்கும் திருவருட் கடலே
தெள்ளிய அமுதமே சிவமே
வான்என நிற்கும் தெய்வமே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
ஊன்என நின்ற உணர்விலேன் எனினும்
உன்திருக் கோயில்வந் தடைந்தால்
ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா
ஈதுநின் திருவருட் கியல்போ.

654. பூங்கொடி இடையைப் புணர்ந்தசெந் தேனே
புத்தமு தேமறைப் பொருளே
வாங்கொடி விடைகொள் அண்ணலே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
தீங்கொடி யாத வினையனேன் எனினும்
செல்வநின் கோயில்வந் தடைந்தால்
ஈங்கொடி யாத அருட்கணால் நோக்கி
ஏன்எனா திருப்பதும் இயல்போ.

655. துப்புநேர் இதழி மகிழ்ந்தால் யாண
சுந்தரா சுந்தரன் து஑தா
மைப்பொதி மிடற்றாய் வளர்திரு முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
அப்பனே உன்னை விடுவனோ அடியேன்
அறிவிலேன் எனினுநின் கோயிற்
கெய்ப்புடன் வந்தால் வாஎன உரையா
திருப்பதுன் திருவருட் கியல்போ.

656. கங்கைஅஞ் சடைகொண் டோ ங்குசெங் கனியே
கண்கள்முன் றோங்குசெங் கரும்பே
மங்கல்இல் லாத வண்மையே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
துங்கநின் அடியைத் துதித்திடேன் எனினும்
தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
எங்குவந் தாய்நீ யார்என வேனும்
இயம்பிடா திருப்பதும் இயல்போ.

657. நன்றுவந் தருளும் நம்பனே யார்க்கும்
நல்லவ னேதிருத் தில்லை
மன்றுவந் தாடும் வள்ளலே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
துன்றுநின் அடியைத் துதித்திடேன் எனினும்
தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
என்றுவந் தாய்என் றொருசொலும் சொல்லா
திருப்பதுன் திருவருட் கியல்போ.

658. பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே
பத்தர்கட் கருள்செயும் பரமே
மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
பெண்ணினும் பேதை மதியினேன் எனினும்
பெருமநின் அருள்பெற லாம்என்
றெண்ணிவந் தடைந்தால் கேள்வியில் லாமல்
இருப்பதுன் திருவருட் கியல்போ.

659. முன்னிய மறையின் முடிவின்உட் பொருளே
முக்கணா முவர்க்கும் முதல்வா
மன்னிய கருணை வாரியே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்தன்
அருட்பெரும் கோயில்வந் தடைந்தால்
என்இது சிவனே பகைவரைப் போல்பார்த்
திருப்பதுன் திருவருட் கியல்போ.

660. நல்லவர் பெறும்நற் செல்வமே மன்றுள்
ஞானநா டகம்புரி நலமே
வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
புல்லவன் எனினும் அடியனேன் ஐயா
பொய்யல உலகறிந் ததுநீ
இல்லையென் றாலும் விடுவனோ சும்மா
இருப்பதுன் திருவருட் கியல்போ.

661. பொதுவினின் றருளும் முதல்தனிப் பொருளே
புண்ணியம் விளைகின்ற புலமே
மதுவினின் றோங்கும் பொழில்தரு முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
புதுமையன் அல்லேன் தொன்றுதொட் டுனது
பூங்குழற் கன்புபூண் டவன்காண்
எதுநினைந் தடைந்தாய் என்றுகே ளாமல்
இருப்பதுன் திருவருட் கியல்போ.

662. பொன்னையுற் றவனும் அயனும்நின் றறியாப்
புண்ணியா கண்ணுதல் கரும்பே
மன்னனே மருந்தே வளர்திரு முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
உன்னைநான் கனவின் இடத்தும்விட் டொழியேன்
உன்திரு அடித்துணை அறிய
என்னைஈன் றவனே முகமறி யார்போல்
இருப்பதுன் திருவருட் கியல்போ.

திருச்சிற்றம்பலம்

10. திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம்
கலிவிருத்தம்
திருசிற்றம்பலம்

663. தாயின் மேவிய தற்பர மேமுல்லை
வாயின் மேவிய மாமணி யேஉன்தன்
கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா
தேயின் மேவி இருந்தனன் என்னையே.

664. தில்லை வாய்ந்த செழுங்கனி யே திரு
முல்லை வாயில் முதல்சிவ முர்த்தியே
தொல்லை யேன்உன்தன் தூய்திருக் கோயிலின்
எல்லை சேரஇன் றெத்தவம் செய்ததே.

665. வளங்கொ ளும்முல்லை வாயிலில் மேவிய
குளங்கொ ளும்கண் குருமணி யேஉனை
உளம்கொ ளும்படி உன்திருக் கோயில்இக்
களங்கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே.

666. மலைவி லாமுல்லை வாயிலில் மேவிய
விலையி லாமணி யேவிளக் கேசற்றும்
குலைவி லாதவர் கூடும்நின் கோயிலில்
தலைநி லாவத்த வம்என்கொல் செய்ததே.

667. சீர்சி றக்கும் திருமுல்லை வாயிலில்
ஏர்சி றக்கும் இயன்மணி யேகொன்றைத்
தார்சி றக்கும் சடைக்கனி யேஉன்தன்
ஊர்சி றக்க உறுவதெவ் வண்ணமே.

668. சேல்கொள் பொய்கைத் திருமுல்லை வாயிலில்
பால்கொள் வண்ணப் பரஞ்சுட ரேவிடை
மேல்கொள் சங்கர னேவிம லாஉன்தன்
கால்கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ.

669. வண்ண மாமுல்லை வாயிலின் மேவிய
அண்ண லேஅமு தேஅரை சேநுதல்
கண்ண னேஉனைக் காணவந் தோர்க்கெல்லாம்
நண்ண ருந்துயர் நல்குதல் நன்றதோ.

670. மண்ணின் ஓங்கி வளர்முல்லை வாயில்வாழ்
கண்ணுன் மாமணி யேகரும் பேஉனை
எண்ணும் அன்பர் இழிவடைந் தால்அது
பண்ணும் நின்அருள் பாரிடை வாழ்கவே.

671. தீதி லாததி ருமுல்லை வாயில்வாழ்
கோதி லாதகு ணப்பெரும் குன்றமே
வாதி லாதுனை வாழ்த்தவந் தோர்தமை
ஏதி லார்என்றி ருப்பதும் என்கொலோ.

672. தேக லாவிய சீர்முல்லை வாயில்வாழ்
மாசி லாமணி யேமருந் தேசற்றும்
கூசி டாமல்நின் கோயில்வத் துன்புகழ்
பேசி டாத பிழைபொறுத் தாள்வையே.

திருச்சிற்றம்பலம்

11. கொடைமடப் புகழ்ச்சி
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

673. திரப்ப டுத்திரு மால்மயன் வாழ்த்தத்
தியாகர் என்னும்ஓர் திருப்பெயர் அடைந்தீர்
வரப்ப டுந்திறத் தீர்உமை அடைந்தால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
இரப்ப வர்க்கொன்றும் ஈகிலீர் ஆனால்
யாதுக் கையநீர் இப்பெயர் எடுத்தீர்
உரப்ப டும்தவத் தோர்துதித் தோங்க
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.

674. வெள்ளி மாமலை வீடென உடையீர்
விளங்கும் பொன்மலை வில்எனக் கொண்டீர்
வள்ளி யீர்என நும்மைவந் தடைந்தால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
என்னில் எண்ணெய்போல் எங்கணும் நின்றீர்
ஏழை யேன்குறை ஏன்அறி யீரோ
ஒன்னி யீர்உமை அன்றிஒன் றறியேன்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.

675. கள்ள மற்றவாக் கரசும்புத் திரரும்
களிக்க வேபடிக் காசளித் தருளும்
வள்ளல் என்றுமை வந்தடைந் தேற்றால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
எள்ள ரும்புகழ்த் தியாகர்என் றொருபேர்
ஏன்கொண் டீர்இரப் போர்க்கிட அன்றோ
உள்ளம் இங்கறி வீர்எனை ஆள்வீர்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.

676. அண்மை யாகும்சுந் தரர்க்கென்று கச்சூர்
ஆலக் கோயிலில் சோறிரந் தளித்த
வண்மை கேட்டிங்கு வந்தடைந் தேற்றால்
வாய்நி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
திண்மை சேர்திரு மால்விடை ஊர்வீர்
தேவ ரீருக்குச் சிறுமையும் உண்டோ
உண்மை யான்உமை அன்றிமற் றறியேன்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.

677. சிந்தை நொந்துல கில்பிறர் தம்மைச்
சேர்ந்தி டாதுநும் திருப்பெயர் கேட்டு
வந்த டைந்தஎற் குண்டிலை எனவே
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
இந்த வண்ணம்நீர் இருந்திடு வீரேல்
என்சொ லார்உமை இவ்வுல கத்தார்
உந்தி வந்தவ னோடரி ஏத்த
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.

678. கல்லை யும்பசும் பொன்எனப் புரிந்த
கருணை கேட்டுமைக் காதலித் திங்கு
வல்லை வந்துநின் றேற்றிடில் சிறிதும்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
இல்லை நீர்பிச்சை எடுக்கின்றீ ரேனும்
இரக்கின் றோர்களும் இட்டுண்பர் கண்டீர்
ஒல்லை இங்கென துளங்கொண்ட தறிவீர்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.

679. துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம்
தோன்ற லேஉமைத் துணைஎன நம்பி
வளிக்குள் பஞ்சனை யேன்அடைந் தேற்றால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
அளிக்கும் தன்மையீர் வாழ்ந்திவண் இருக்க
அடிய னேன்அலை கின்றதும் அழகோ
ஒளிக்கும் தன்மைதான் உமக்கும்உண் டேயோ
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.

680. குற்றம் எத்தனை அத்தனை எல்லாம்
குணம்எ னக்கொளம் குணக்கடல் என்றே
மற்றும் நான்நம்பி ஈங்குவந் தேற்றால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
கற்ற நற்றவர்க் கேஅருள் வீரேல்
கடைய னேன்எந்தக் கடைத்தலைச் செல்கேன்
உற்ற நற்றுணை உமைஅன்றி அறியேன்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.

681. பொய்யி லார்க்குமுன் பொற்கிழி அளித்த
புலவர் ஏறெனப் புகழ்ந்திடக் கேட்டு
மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
ஐய நும்அடி அன்றிஓர் துணையும்
அறிந்தி லேன்இஃத றிந்தரு ளீரேல்
உய்யும் வண்ணம்எவ் வண்ணம்என் செய்கேன்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.

682. தாயி லார்என நெஞ்சகம் தளர்ந்தேன்
தந்தை உம்திருச் சந்நிதி அடைந்தேன்
வாயி லார்என இருக்கின்றீர் அல்லால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
கோயி லாகஎன் நெஞ்சகத் தமர்ந்த
குணத்தி னீர்என்தன் குறைஅறி யீரோ
ஒறி லாதுநல் தொண்டருக் கருள்வான்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.

திருச்சிற்றம்பலம்

12.திருவருள் வேட்கை
திருவொற்றியூர்
கொச்சகக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்

683. மன்அமுதாம் உன்தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே
இன்அமுதம் ஓர்பொழுதும் இட்டறியேன் ஆயிடினும்
முன்அமுதா உண்டகளம் முன்னிமுன்னி வாடுகின்றேன்
என்அமுதே இன்னும் இரக்கந்தான் தோன்றாதோ.

684. தோன்றாத் துணையாரும் சோதியே நின்அடிக்கே
ஆன்றார்த்த அன்போ டகங்குழையேன் ஆயிடினும்
ஊன்றார்த் ததித்தனை உன்னிஉன்னி வாடுகின்றேன்
தேன்றார்ச் சடையாய்உன் சித்தம் இரங்காதோ.

685. காதார் சுடுவிழியார் காமவலைக் குள்ளாகி
ஆதாரம் இன்றி அலைதந்தேன் ஆயிடினும்
போதார் நினதுகழல் பொன்அடியே போற்றுகின்றேன்
நீதாவோ உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ.

686. இலைவேட்ட மாதர்தம தீனநல மேவிழைந்து
கொலைவேட் டுழலும் கொடியனேன் ஆயிடினும்
நிலைவேட்ட நின்அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன்
கலைவேட்ட வேணியனே கருணைசற்றும் கொண்டிலையே.

687. கொண்டல்நிறத் தோனும் குணிக்கரிய நின்அடிக்கே
தொண்டறிந்து செய்யாத துட்டனேன் ஆயிடினும்
எண்டகநின் பொன்அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன்
தண்டலைசூழ் ஒற்றியுளாய் தயவுசற்றும் சார்ந்திலையே.

688. சாரா வறுஞ்சார்பில் சார்ந்தரைசே உன்னுடைய
தாரார் மலரடியைத் தாழ்ந்தேத்தேன் ஆயிடினும்
நேராய்நின் சந்நிதிக்கண் நின்றுநின்று வாடுகின்றேன்
ஓராயோ சற்றேனும் ஒற்றியூர் உத்தமனே.

689. ஊர்மதிக்க வீணில் உளறுகின்ற தல்லதுநின்
சீர்மதிக்க நின்அடியைத் தேர்ந்தேத்தேன் ஆயிடினும்
கார்மதிக்கும் நஞ்சம்உண்ட கண்டநினைந் துள்குகின்றேன்
ஏர்மதிக்கும் ஒற்றியூர் எந்தைஅளி எய்தாயோ.

690. தாய்க்கும்இனி தாகும்உன்தன் தாள்மலரை ஏத்தாது
நாய்க்கும் கடையாய் நலிகின்றேன் ஆயிடினும்
வாய்க்கும்உன்தன் சந்திதிக்கண் வந்துவந்து வாடுகின்றேன்
தூய்க்குமரன் தந்தாய்என் சோர்வறிந்து தீராயோ.

691. அறியாப் பருவத் தடியேனை ஆட்கொண்ட
நெறியாம் கருணை நினைந்துருகேன் ஆயிடினும்
குறியாப் பொருளேஉன் கோயிலிடை வந்துநின்னும்
பறியாப் பிணியேன் பரதவிப்பைப் பார்த்திலையே.

692. பார்நடையாம் கானில் பரிந்துழல்வ தல்லதுநின்
சீர்நடையாம் நன்னெறியில் சேர்ந்திலேன் ஆயிடினும்
நேர்நடையாம் நின்கோயில் நின்றுநின்று வாடுகின்றேன்
வார்நடையார் காணா வளர்ஒற்றி மன்அமுதே.

திருச்சிற்றம்பலம்

13. அபராத விண்ணப்பம்
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

693. தேவியல் அறியாச் சிறியனேன் பிழையைத் திருவுளத் தெண்ணிநீ கோபம்
மேவிஇங் கையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
முவிரு முகம்சேர் முத்தினை அளித்த முழுச்சுவை முதிர்ந்தசெங் கரும்பே
சேவின்மேல் ஓங்கும் செழுமணிக் குன்றே திருவொற்றி யூர்மகிழ் தேவே.

694. உய்யஒன் றறியா ஓதியனேன் பிழையை உன்திரு உள்ளத்தில் கொண்டே
வெய்யன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
செய்யநெட் டிலைவேல் சேய்தனை அளித்த தெய்வமே ஆநந்தத் திரட்டே
மையலற் றவர்தம் மனத்தொளில் விளக்கே வளம்பெறும் ஒற்றியூர் மணியே.

695. கழல்கொள்உன் அருமைத் திருவடி மலரைக் கருதிடாப் பிழைதனைக் குறித்தே
விழலன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
அழல்அயில் கரத்தெம் ஐயனை ஈன்ற அப்பனே அயனுமால் அறியாத்
தழல்நிறப் பவளக் குன்றமே ஒற்றித் தனிநகர் அமர்ந்தருள் தகையே.

696. வாடனக் குறழும் வடுக்கணார்க் குருகும் வஞ்சனேன் பிழைதனைக் குறித்தே
வெடன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
நீடயில் படைசேர் கரத்தனை அளித்த திருத்தனே நித்தனே நிமலா
ஏடகத் தமர்ந்த ஈசனே தில்லை எந்தையே ஒற்றியூர் இறையே.

697. நாணம்ஒன் றில்லா நாயினேன் பிழையை நாடிநின் திருவுளத் தடைத்தே
வெஞ்சன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
கஞ்சன்மால் முதலோர் உயிர்பெற விடத்தைக் களத்திருத் தியஅருட் கடலே
சஞ்சித மறுக்கும் சண்முகம் உடையோன் தந்தையே ஒற்றிஎம் தவமே.

699. நம்பினேன் நின்றன் திருவடி மலரை நாயினேன் பிழைதனைக் குறியேல்
வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
தும்பிமா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிரத் தூணே
அம்பிகா பதியே அண்ணலே முக்கண் அத்தனே ஒற்றியூர் அமுதே.

700. சூழ்ந்தவஞ் சகனேன் பிழைதனைக் குறியேல் துன்பசா கரந்தனில் அழுந்தி
வீழ்ந்தனன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
வாழ்ந்தமா தவர்கள் மனத்தொளிர் ஒளியே வள்ளலே மழவிடை யவனே
போழ்ந்தவேல் படைகொள் புனிதனை அளித்த பூரணாஒற்றியூர்ப் பொருளே.

701. துரும்பினேன் பிழையைத் திருவுளத் தடையேல் துய்யநின் அருட்கடல் ஆட
விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
கரும்பின்நேர் மொழியார் இருவரை மணக்கும் கனிதனை அளித்தகற் பகமே
இரும்பின்நேர் நெஞ்சர் எனினும்என் போல்வார்க் கின்அருள் தரும்ஒற்றி இறையே

702. கட்டினேன் பாபக் கொடுஞ்சுமை எடுப்பேன் கடும்பிழை கருதிடேல் நின்னை
விட்டிலேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
சுட்டிலாப் பொருளே சுகப்பெருங் கடலே தூய்த்திரு ஒற்றியூர்த் துணையே
தட்டிலாக் குணத்தோர் புகழ்செயும் குகனைத் தந்தருள் தருந்தயா நிதியே.

14. அறிவரும் பெருமை
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

703. நாயினும் கடையேன் என்செய்வேன் பிணியால் நலிகின்ற நலிவினை அறிந்தும்
தாயினும் இனியாய் இன்னும்நீ வரவு தாழ்த்தனை என்கொலேன் றறியேன்
மாயினும் அல்லால் வாழினும் நினது மலரடி அன்றிஒன் றேத்தேன்
காயினும் என்னைக் கனியினும் நின்னைக் கனவினும் விட்டிடேன் காணே.

704. காண்பது கருதி மாலொடு மலர்வாழ் கடவுளர் இருவரும் தங்கள்
மாண்பது மாறி வேறுரு எடுத்தும் வள்ளல்நின் உருஅறிந்திலரே
கோண்பதர் நெஞ்சக் கொடியனேன் எந்தக் கொள்ளைகொண் டறிகுவதையா
பூண்பது பணியாய் பொதுவில்நின் றாடும் புனிதநின் அருளலா தின்றே.

703. இன்றுவந் தெனைநீ அடிமைகொள் ளாயேல் எவ்வுலக கத்தரும் தூற்ற
நன்றுநின் றன்மேல் பழிவரும் என்மேல் பழியிலை நவின்றனன் ஐயா
அன்றுவந் தொருசேய்க் கருள்புரிந் தாண்ட அண்ணலே ஒற்றியூர் அரசே
நின்றுசிற் சபைக்குள் நடம்செயும் கருனா நிலையமே நின்மலச் சுடரே.

704. சுடர்கொளும் மணிப்பூண் முலைமட வியர்தம் தொடக்கினில் பட்டுழன் றோயா
இடர்கொளும் எனைநீ ஆட்கொளும் நாள்தான் எந்தநாள் அந்தநாள் உரையாய்
படர்கொளும் வானோர் அமுதுண நஞ்சைப் பரிந்துண்ட கருணைஅம் பரமே
குடர்கொளும் சூலப் படைஉடை யவனே கோதையோர் கூறுநடை யவனே.

707. உடைமையைத் தெனக்கின் றருள்செயா விடினும் ஒப்பிலாய் நின்னடிக் கெனையே
அடைமைவைத் தேனும் நின்அருட் பொருள்இங் களித்திட வேண்டும்இன் றெவைக்கும்
கடைமையேன் வேறோர் தேவரை அறியேன் கடவுள்நின் திருவடி அறிக
படைமைசேர் கரத்தெம் பசுபதி நீயே என்உளம் பார்த்துநின் றாயே.

708. பார்த்துநிற் கின்றாய் யாவையும் எளியேன் பரதவித் துறுகணால் நெஞ்சம்
வேர்த்துநிற் கின்றேன் கண்டிலை கொல்லோ விடம்உண்ட கண்டன்நீ அன்றோ
ஆர்த்துநிற் கின்றார் ஐம்புல வேடர் அவர்க்கிலக் காவனோ தமியேன்
ஓர்த்துநிற் கின்றார் பரவுநல் ஒற்றி யூரில்வாழ் என்உற வினனே.

709. உறவனே உன்னை உள்கிநெஞ் சழலின் உறும்இழு தெனக்கசிந் துருகா
மறவனேன் தன்னை ஆட்கொளா விடில்யான் வருந்துவ தன்றிஎன் செய்கேன்
நிறவனே வெள்ளை நீறணி பவனே நெற்றிமேல் கண்ணுடை யவனே
அறவனே தில்லை அம்பலத் தாடும் அப்பனே ஒற்றியூர்க் கரைசே.

710. கரைபடா வஞ்சப் பவக்கடல் உழக்கும் கடையனேன் நின்திரு வடிக்கு
விரைபடா மலர்போல் இருந்துசுழல் கின்றேன் வெற்றனேன் என்செய விரைகேள்
திரைபடாக் கருணைச் செல்வவா ரிதியே திருவொற்றி யூர்வளர் தேனே
உரைபடாப் பொன்னே புரைபடா மணியே உண்ணுதற் கினியநல் அமுதே.

711. நல்அமு தனையார் நின்திரு வடிக்கே நண்புவைத் துருகுகின் றனரால்
புல்அமு தனையேன் என்செய்வான் பிறந்தேன் புண்ணியம் என்பதொன் றறியேன்
சொல்அமு தனைய தோகைஓர் பாகம் துன்னிய தோன்றலே கனியாக்
கல்அமு தாக்கும் கடன்உனக் கன்றோ கடையனேன் கழறுவ தென்னே.

712. என்னைநின் னவனாக் கொண்டுநின் கருணை என்னும்நன் னீரினால் ஆட்டி
அன்னைஅப் பனுமாய்ப் பரிவுகொண் டாண்ட அண்ணலே நண்ணரும் பொருளே
உன்னருந் தெய்வ நாயக மணியே ஒற்றியூர் மேவும்என் உறவே
நன்னர்செய் கின்றோம் என்செய்வேன் இதற்கு நன்குகைம் மாறுநா யேனே.

திருச்சிற்றம்பலம்

15. அருள்விடை வேட்கை
திருவொற்றியூர்
கலி விருத்தம்
திருச்சிற்றம்பலம்

போகம் கொண்ட புணர்முலை மாதொரு
மாகம் கொண்ட வளம்பொழில் ஒற்றியின்
மோகம் கொண்டஎம் முன்நின் றருளிரோ.

714. தவள நீற்றுமெய்ச் சாந்தவி னோதரே
பவள மேனிப் படம்பக்க நாதரே
கவள வீற்றுக் கரிஉரி போர்த்தநீர்
இவளை ஒற்றிவிட் டெங்ஙனம் சென்றிரோ.

715. சீல மேவித் திகழ்அளல் கண்ஒன்று
பால மேவும் படம்பக்க நாதரே
ஞால மேவும் நவையைஅ கற்றமுன்
ஆலம் உண்டவர் அல்லிர்கொல் ஐயரே.

716. உடைகொள் கோவணத் துற்றஅ ழகரே
படைகொள் சூலப் படம்பக்க நாதரே
கடைகொள் நஞ்சுண்டு கண்டமிக றுத்தநீர்
இடையில் ஒற்றிவிட் டெங்கனம் சென்றிரோ.

717. நிறைய வாழ்தொண்டர் நீடுற வன்பவம்
பறைய நின்றப டம்பக்க நாதரே
உறைய மாணிக்கு யிர் அளித் திட்டநீர்
குறையி லாஒற்றிக் கோயிற்கண் உள்ளிரோ.

718. வணங்கொள் நாகம ணித்தலை ஐந்துடைப்
பணங்கொள் செல்வப்ப டம்பக்க நாதரே
கணங்கொள் காமனைக் காய்ந்துயிர் ஈந்தநீர்
வணங்கு வார்க்கென்கொல் வாய்நிற வாததே.

719. நாட நல்இசை நல்கிய முவர்தம்
பாடல் கேட்கும்ப டம்பக்க நாதரே
வாடல் என்றொரு மாணிக் களித்தநீர்
ஈடில் என்னள வெங்கொளித் திட்டிரோ.

720. கலவு காற்றனல் தூயமண் விண்புனல்
பலவு மாகும்ப டம்பக்க நாதரே
நிலவு தண்மதி நீள்முடி வைத்தநீர்
குலவும் என்றன்கு றைதவிர்க் கீர்கொலோ.

721. அடியர் நெஞ்சத்த ருட்பெருஞ் சோதிஓர்
படிவ மாகும்ப டம்பக்க நாதரே
நெடிய மாலுக்கு நேமி அளித்தநீர்
மிடிய னேன்அருள் மேவ விரும்பிரோ.

722. மநிகொள் அன்பர்ம னமெனும் திவ்வியப்
பதிகொள் செல்வப்ப டம்பக்க நாதரே
விதிகொள் துன்பத்தை வீட்டி அளித்தநீர்
துதிகொள் வீர்என்து யரைத்து ரத்துமே.

திருச்சிற்றம்பலம்

16. எழுத்தறியும் பெருமான் மாலை
திருவொற்றியூர்
கொச்சகக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்

723 சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
முந்தை வினைதொலைத்துன் மொய்கழ்ற்காள் ஆக்காதே
நிந்தைஉறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ
எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே.

724. மத்தனைவன் நெஞ்சகனை வஞ்சகனை வன்பிளிகொள்
பித்தனைவீண் நாள்போக்கும் பேயேனை நாயேனை
முத்தனையாய் உன்றன் முளரித்தாட் காளாக்க
எத்தனைநாள் செல்லும் எழுத்தறியும் பெருமானே.

725. நன்நெறிசேர் அன்பர்தமை நாடடிவும் நின்புகழின்
சென்னேறியைச் சேர்ந்திடவும் செய்தாய் எனக்குனக்கு
முன்அறியேன் பின்அறியேன் முடனேன் கைம்மாறிங்
கென்அறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.

726. மைப்படியும் கண்ணார் மயில்உழக்கச் செய்வாயோ
கைப்படிய உன்றன் கழல்கருதச் செய்வாயோ
இப்படிஎன் றப்பபடிஎன் றென்னறிவேன் உன்சித்தம்
எப்படியோ ஐயா எழுத்தறியும் பெருமானே.

727. நில்லா உடம்பை நிலைஎன்றே நேசிக்கும்
பொல்லாத நெஞ்சப் புலையனேன் இவ்வுலகில்
சொல்லா மனநோயால் சோர்வுற் றலையும்அல்லல்
எல்லாம் அறிவாய் எழுத்தறியும் பெருமானே.

728. தீதறிவேன் நன்கணுவும் செய்யேன்வீண் நாள்போக்கும்
வாதறிவேன் வஞ்சகனேன் வல்வினையேன் வாய்மையிலேன்
சூதறிவேன் மால்அயனும் சொல்லறிய நின்பெருமை
யாதறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.

729. மாறத வன்பிணியால் மாழாந்து நெஞ்சயர்ந்தே
கூறாத துன்பக் கொடுங்கடற்குள் வீழ்ந்தடியேன்
ஆறா தரற்றி அழுகின்றேன் நின்செவியில்
ஏறாதோ ஐயா எழுத்தறியும் பெருமானே.

730. உண்ணாடும் வல்வினையால் ஓயாப் பிணிஉழந்து
புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே
கண்ணாளா உன்றன் கருணை எனக்களிக்க
எண்ணாயோ ஐயா எழுத்தறியும் பெருமானே.

731. புன்செய்கை மாறாப் புலையமட மங்கையர்தம்
வன்செய்கை யாலே மயங்குகின்ற வஞ்சகனேன்
கொன்செய்கை மாறாத கூற்றன் வருவானேல்
என்செய்வேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.

732. சங்குடையான் தாமரையான் தாள்முடியும் காண்பரிதாம்
கொங்குடைய கொன்றைக் குளிர்ச்சடையாய் கோதைஒரு
பங்குடையாய் ஏழைமுகம் பாராது தள்ளிவிட்டால்
எங்கடைவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.

733. மன்றி னிடைநடஞ்செய் மாணிக்க மாமலையே
வென்றிமழுக் கையுடைய வித்தகனே என்றென்று
கன்றின் அயர்ந்தழும்என் கண்ணீர் துடைத்தருள
என்று வருவாய் எழுத்தறியும் பெருமானே.

734. மன்னளவில் சோதி மணிபோல்வாய் மாதவத்தோர்
தென்னளவும் வேணிச் சிவமே எனஒருகால்
சொன்னளவில் சொன்னவர்தம் துன்பொழிப்பாய் என்பர்அது
என்னளவில் காணேன் எழுத்தறியும் பெருமானே.

735. மின்போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும்
தன்போல்வாய் என்ஈன்ற தாய்போல்வாய் சார்ந்துரையாப்
பொன்வோல்வாய் நின்அருள்இப் போதடியேன் பெற்றேனேல்
என்போல்வார் இல்லை எழுத்தறியும் பெருமானே.

736. பூமாந்தும் வண்டெனநின் பொன்னருளைப் புண்ணியர்கள்
தாமாந்தி நின்னடிக்கீழ்ச் சார்ந்துநின்றார் ஐயோநான்
காமாந்த காரம்எனும் கள்ளுண்டு கண்முடி
ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.

737. பன்னரும்இப் பார்நடையில் பாடுழன்ற பாதகனேன்
துன்னியநின் பொன்னடியைச் சூழாதேன் ஆயிடினும்
புன்னிகரேன் குற்றம் பொறுக்கப் பொறுப்புனக்கே
என்னருமைத் தாய்நீ எழுத்தறியும் பெருமானே.

738. வீட்டுக் கடங்கா விளையாட்டுப் பிள்ளைஎனத்
தேட்டுக் கடங்காத தீமனத்தால் ஆந்துயரம்
பாட்டுக் கடங்காநின் பத்தர் அடிப்புகழ்போல்
ஏட்டுக் கடங்கா தெழுத்தறியும் பெருமானே.

739. பன்னு மனத்தால் பரிசிழந்த பாதகனேன்
துன்னுமல வெங்கதிரோன் சூழ்கின்ற சோடையினால்
நின்னருள்நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன்
இன்னும்அறி யாயோ எழுத்தறியும் பெருமானே.

740. கல்லை நிகராம் கடைமனம்போம் கான்நெறியில்
புல்லை மதித் தையோபைம் பூஇழந்த பொய்யடியேன்
ஒல்லைபடு கின்ற ஓறுவே தனைதனக்கோர்
எல்லை அறியேன் எழுத்தறியும் பெருமானே.

741. பொன்னைமதித் தையாநின் பொன்னடியைப் போற்றாத
கன்னிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன்
இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழைகண்டாய்
என்னை விடாதே எழுத்தறியும் பெருமானே.

742. மாசுவரே என்னும் மலக்கடலில் வீழ்ந்துலகோர்
ஆசுவரே என்னை அலைவேனை ஆளாயேல்
கூசுவரே கைகொட்டிக் கூடிச் சிரித்திடியார்
ஏசுவரே ஒற்றி எழுத்தறியும் பெருமானே.

743. ஊர்சொல்வேன் பேர்சொல்வேன் உத்தமனே நின்திருத்தாள்
சீர்சொல்வேன் என்றனைநீ சேர்க்கா தகற்றுவையேல்
நேர்சொல்வாய் உன்றனக்கு நீதியி தல்லஎன்றே
யார்சொல்வார் ஐயா எழுத்தறியும் பெருமானே.

744. நீக்கமிலா மெய்யடியர் நேசமிலாப் பொய்யடியேன்
ஊக்கமிலா நெஞ்சத்தின் ஒட்டகலச் செய்வாயேல்
தூக்கமிலா ஆனந்தத் தூக்கம்அன்றி மற்றும்இங்கோர்
ஏக்கமிலேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.

745. போகின்ற வஞ்சகரைப் போக்கிஉன்றன் பொன்அடிக்காள்
ஆகின்ற மேலோர் அடிவழுத்தா நாயேற்குப்
பாகின் தணிச்சுவையிற் பாங்காரும் நின்அருளை
ஈகின்ற தென்றோ எழுத்தறியும் பெருமானே.

746. ஊழை அகற்ற உளவறியாப் பொய்யன்இவன்
பீழைமனம் நம்மைப் பெறதம் மனங்கொடிய
தாழைஎன எண்ணிஎன்னைத் தள்ளிவிட்டால் என்செய்வேன்
ஏழைநான் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.

747. மடுக்க முடியா மலஇருட்டில் சென்றுமனம்
கடுக்கமுடி யாப்புலனால் கட்டிச் சுமக்கவைத்த
தொடுக்க முடியாத துன்பச் சுமையைஇனி
எடுக்கமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.

748. முள்ளளவு நெஞ்ச முழுப்புலைய மாதர்களாம்
கள்ளளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு
உள்ளளவும் அன்பர்க் குதவும்உன்தாட் கன்பொருசிற்
றெள்ளளவும் உண்டோ எழுத்தறியும் பெருமானே.

749. பண்ண முடியாப் பரிபவங்கொண் டிவ்வுலகில்
நண்ண முடியா நலங்கருதி வாடுகின்றேன்
உண்ணமுடி யாஅமுதாம் உன்னைஅன்றி எவ்வொர்க்கும்
எண்ணமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.

750. வெங்கொளித்தேள் போன்ற வினையால் வெதும்பிமனம்
அங்கொளிக்கா துன்னை அழைத்தழுது வாடுகின்றேன்
இங்கொளிக்கா நஞ்சமுண்ட என்அருமை அப்பாநீ
எங்கொளித்தாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.

751. பித்தளைக்கும் காமப் பெரும்பேய் மயக்குமயல்
வித்தனைத்தாம் ஆணவம்பொய் வீறும்அழுக் காறுசினம்
கொத்தனைத்தாம் வஞ்சம் கொலைமுதலாம் பாவங்கள்
இத்தனைக்கும் நான்காண் எழுத்தறியும் பெருமானே.

752. ஒல்லையே நஞ்சனைத்தும் உண்ட தயாநிதிநீ
அல்லையோ நின்றிங் கயர்வேன்முன் வந்தொருசொல்
சொல்லையோ ஒற்றியூர்த் தூயதிருக் கோயிலுள்நீ
இல்லையோ ஐயா எழுத்தறியும் பெருமானே.

753. நினையுடையாய் நீஅன்றி நேடில்எங்கும் இல்லாதாய்
மனையுடையார் மக்கள்எனும் வாழ்க்கையிடைப் பட்டவமே
இணையுடையான் என்றிங் கெனையாள்வ துன்கடனே
எனையுடையாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.

திருச்சிற்றம்பலம்

17. நெஞ்சொடு நேர்தல்
திருவொற்றியூர்
கலிவிருத்தம்
திருச்சிற்றம்பலம்

754. ஒக்க நெஞ்சமே ஒற்றி யூர்ப்படம்
பக்க நாதனைப் பணிந்து வாழ்த்தினால்
மிக்க காமத்தின் வெம்மை யால்வரும்
துக்க மியாவையும் தூர ஓடுமே.

755. ஓடும் நெஞ்சமே ஒன்று கேட்டிநீ
நீடும் ஒற்றியூர் நிமலன் முவர்கள்
பாடும் எம்படம் பக்க நாதன்தாள்
நாடு நாடிடில் நாடு நம்மதே.

756. நம்பு நெஞ்சமே நன்மை எய்துமால்
அம்பு யன்புகழ் அண்ணல் ஒற்றியூர்ப்
பம்பு சீர்ப்படம் பக்கன் ஒன்னலார்
தம்பு ரஞ்சுடும் தம்பி ரானையே.

757. தம்ப லம்பெறும் தைய லார்கணால்
வெம்ப லந்தரும் வெய்ய நெஞ்சமே
அம்ப லத்தினில் அமுதை ஒற்றியூர்ச்
செம்ப லத்தைநீ சிந்தை செய்வையே.

758. செய்யும் வண்ணம்நீ தேறி நெஞ்சமே
உய்யும் வண்ணமாம் ஒற்றி யூர்க்குளே
மெய்யும் வண்ணமா ணிக்க வெற்பருள்
பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டுமே.

759. வேண்டும் நெஞ்சமே மேவி ஒற்றியூர்
ஆண்டு நின்றருள் அரசின் பொற்பதம்
பூண்டு கொண்டுளே போற்றி நிற்பையேல்
யாண்டும் துன்பம்நீ அடைதல் இல்லையே.

760. இல்லை உண்டென எய்தி ஐயுறும்
கல்லை யொத்தஎன் கன்ம நெஞ்சமே
ஒல்லை ஒற்றியூர் உற்று வாழ்தியேல்
நல்லை நல்லைநீ நட்பின் மேலையே.

761. மேலை அந்தகன் வெய்ய தூதுவர்
ஓலை கட்டுமுன் ஒற்றி யூரில்வாழ்
பாலை சேர்படம் பக்க நாதர்தம்
காலை நாடிநற் கதியின் நிற்பையே.

762. நிற்ப தென்றுநீ நீல நெஞ்சமே
அற்ப மாதர்தம் அவலம் நீங்கியே
சிற்ப ரன்திருத் தில்லை அம்பலப்
பொற்பன் ஒற்றியில் புகுந்து போற்றியே.

763. போற்றி ஒற்றியூர்ப் புண்ணி யன்திரு
நீற்றி னான்தனை நினைந்து நிற்பையேல்
தோற்ற ரும்பரஞ் சோதி நல்அருள்
ஊற்றெ ழும்கடல் ஒக்க நெஞ்சமே.

திருச்சிற்றம்பலம்

18. திருப்புகழ் விலாசம்
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

764. துங்க வெண்பொடி அணிந்துநின் கோயில்
தொழும்பு செய்துநின் துணைப்பதம் ஏத்திச்
செங்கண் மால்அயன் தேடியும் காணாச்
செல்வ நின்அருள் சேர்குவ தென்றோ
எங்கள் உள்ளுவந் தூறிய அமுதே
இன்ப மேஇமை யான்மகட் கரசே
திங்கள் தங்கிய சடையுடை மருந்தே
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.

765. கண்ண னோடயன் காண்பரும் சுடரே
கந்தன் என்னும்ஓர் கனிதரும் தருவே
எண்ண மேதகும் அன்பர்தம் துணையே
இலங்கும் திவ்விய எண்குணப் பொருப்பே
அம்மை அப்பனே அடியனேன் தன்னைத்
திண்ண மேஅடித் தொழும்பனாய்ச் செய்வாய்
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.

766. விடங்க லந்தருள் மிடறுடை யவனே
வேதன் மால்புகழ் விடையுடை யவனே
கடங்க லந்தமா உரியுடை யவனே
இடங்க லந்தபெண் கூறுடை யவனே
எழில்கொள் சாமத்தின் இசையுடை யவனே
திடங்க லந்தகூர் மழுவுடை யவனே
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.

767. கஞ்ச னோர்தலை நகத்தடர்த் தவனே
காமன் வெந்திடக் கண்விழித் தவனே
தஞ்ச மானவர்க் கருள்செயும் பரனே
சாமிக் கோர்திருத் தந்தையா னவனே
நஞ்சம் ஆர்மணி கண்டனே எவைக்கும்
நாத னேசிவ ஞானிகட் கரசே
செஞ்சொல் மாமறை ஏத்துறும் பதனே
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.

768. ஏல வார்சூழ லாள் இடத் தவனே
என்னை ஆண்டவ னேஎன தரசே
கோல மாகமால் உருக்கொண்டும் காணாக்
குரைக ழற்பதக் கோமளக் கொழுந்தே
ஞால மீதில்எம் போல்பவர் பிழையை
நாடி டாதருள் நற்குணக் குன்றே
சில மேவிய தவத்தினர் போற்றத்
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.

769. ஆறு யாண்முகத் தமுதெழும் கடலே
அயனும் மாலும்நின் றறிவரும் பொருளே
ஏறு மீதுவந் தேறும்எம் அரசே
எந்தை யேஎமை ஏன்றுகொள் இறையே
வீறு கொன்றையம் சடையுடைக் கனியே
வேதம் நாறிய மென்மலர்ப் பதனே
தேறு நெஞ்சினர் நாள்தொறும் வாழ்த்தத்
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.

770. மாறு பூத்தஎன் நெஞ்சினைத் திருத்தி
மயக்கம் நீக்கிட வருகுவ தென்றோ
ஏறு பூத்தஎன் இன்னுயிர்க் குயிரே
யாவு மாகிநின் றிலங்கிய பொருளே
நீறு பூத்தொளி நிறைந்தவெண் நெருப்பே
நித்தி யானந்தர்க் குற்றநல் உறவே
சேறு பூத்தசெந் தாமரை முத்தம்
நிகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.

771. மாலின் கண்மலர்திருப் பதனே
மயிலின் மேல்வரு மகவுடை யவனே
ஆலின் கீழ்அறம் அருள்புரிந் தவனே
அரஎன் போர்களை அடிமைகொள் பவனே
காலில் கூற்றுதைத் தருள்செயும் சிவனே
கடவு ளே நெற்றிக் கண்ணுடை யவனே
சேலின் நீள்வயல் செறிந்தெழில் ஓங்கித்
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.

772. நாட்டும் முப்புரம் நகைத்தெரித் தவனே
நண்ணி அம்பலம் நடஞ்செயும் பதனே
வேட்டு வெண்தலைத் தார்புனைந் தவனே
வேடன் எச்சிலை விரும்பிஉண் டவனே
கோட்டு மேருவைக் கோட்டிய புயனே
குற்ற முங்குண மாக்குறிப் பவனே
தீட்டும் மெய்ப்புகழ்த் திசைபரந் தோங்கத்
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.

773. அம்ப லத்துள்நின் றாடவல் லானே
ஆள்இ வர்ந்துவந் தருள்புரி பவனே
சம்பு ரங்கர சிவசிவ என்போர்
தங்கள் உள்ளகம் சார்ந்திருப் பவனே
தும்பை வன்னியம் சடைமுடி யவனே
தூய னேபரஞ் சோதியே எங்கள்
செம்பொ னேசெழும் பவளமா மலையே
கழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.

திருச்சிற்றம்பலம்

19. தியாக வண்ணப் பதிகம்
திருவொற்றியூர்
எழுசீர்க்14 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

774. காரார் குழலாள் உமையோ டயில்வேல் காளையொ டுந்தான் அமர்கின்ற
ஏரார் கோலம் கண்டு களிப்பான் எண்ணும் எமக்கொன் றருளானேல்
நீரார் சடைமேல் பிறையொன் றுடையான் நிதிக்கோன் தோழன் எனநின்றான்
பேரார் ஒற்றி யூரான் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.

775. தண்ணார் நீபத் தாரா னொடும்எம் தாயோ டும்தான் அமர்கின்ற
கண்ணார் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கொன் றருளானேல்
பண்ணார் இன்சொல் பதிகம் கொண்டு படிக்கா சளித்த பரமன்ஓர்
பெண்ணார் பாகன் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.

776. பத்தர்க் கருளும் பாவையொ டும்வேல் பாலனொ டும்தான் அமர்கின்ற
நித்தக் கோலம் கண்டு களிப்பான் நினைக்கும் எமக்கொன் றருளானேல்
சித்தப் பெருமான் தில்லைப் பெருமான் தெய்வப் பெருமான் சிவபெருமான்
பித்தப் பெருமான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.

777. மண்ணும் கதிர்வேல் மகனா ரோடும் மலையா ளொடும்தான் வதிகின்ற
துன்னும் கோலம் கண்டு களிப்பான் துதிக்கும் எமக்கொன் றருளானேல்
மின்னும் சூலப் படையான் விடையான் வெள்ளிமலையொன் றதுஉடையான்
பின்னும் சடையான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.

778. அணிவேல் படைகொள் மகனா ரொடும்எம் அம்மை யொடுந்தான் அமர்கின்ற
தணியாக் கோலம் கண்டு களிக்கத் தகையா தெமக்கொன் றருளானேல்
மணிசேர் கண்டன் என்தோள் உடையான் வடபால் கனக மலைவில்லான்
பிணிபோக் கிடுவான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.

779. சூத மெறிவேல் தோன்ற லொடும்தன் துணைவி யொடும்தான் அமர்கின்ற
காதல் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கொன் றருளானேல்
ஈதல் வல்லான் எல்லாம் உடையான் இமையோர் அயன்மாற் கிறையானான்
பேதம் இல்லான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.

780. வெற்றிப் படைவேல் பிள்ளை யோடும் வெற்பா ளோடும்தான் அமர்கின்ற
மற்றிக் கோலம் கண்டு களிப்பான் வருந்தும் எமக்கொன் றருளானேல்
கற்றைச் சடையான் கண்முன் றுடையான் கரியோன் அயனும் காணாதான்
பெற்றத் திவர்வான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.

781. வரமன் றலினார் சூழலா ளொடும்வேல் மகனா ரொடும்தான் அமர்கின்ற
திரமன் றவுநின் றெழில்கண் டிடுவான் சிறக்க எமக்கொன் றருளானேல்
பரமன் தனிமால் விடைஒன் றுடையான் பணியே பணியாப் பரிவுற்றான்
பிரமன் தலையான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.

782. அறங்கொள் உமையோ டயிலேந் தியஎம் ஐய னொடுந்தான் அமர்கின்ற
திறங்கொள் கோலம் கண்டுக ளிப்பான் சிறக்க எமக்கொன் றருளானேல்
மறங்கொள் எயில்முன் ஗றிரித்தான் கனக மலையான் அடியார் மயல்தீர்ப்பான்
பிறங்கும் சடையான்ஒற்றித் தியாகப் பெருமாள் பிச்சைப் பெருமானே.

783. தேசார் அயில்வேல் மகனா ரொடும்தன் தேவி யொடும்தான் அமர்கோலம்
ஈசா எனநின் றேத்திக் காண எண்ணும் எமக்கொன் றருளானேல்
காசார் அரவக் கச்சேர் இடையான் கண்ணார் நுதலான் கனிவுற்றுப்
பேசார்க்கருளான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.

திருவடிச்சிற்றம்பலம்
14. கலித்துறை. தொ.வே.முதற்பதிப்பு, இரண்டாம் பதிப்பு.
எழுசீர்.ச.மு.க. ஆ.பா

20. திருவடிச் சரண்புகல்
திருவொற்றியூர்
எண்சீர்க்15 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

784. ஓடல் எங்கணும் நமக்கென்ன குறைகாண்
உற்ற நற்றுணை ஒன்றும்இல் லார்போல்
வாடல் நெஞ்சமே வருதிஎன் னுடனே
மகிழ்ந்து நாம்இரு வரும்சென்று மகிழ்வாய்க்
கூடல் நேர்திரு ஒற்றியூர் அகத்துக்
கோயில் மேவிநம் குடிமுழு தாளத்
தாள்த லந்தரும் நமதருள் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே.

785. ஏங்கி நோகின்ற தெற்றினுக் கோநீ
எண்ணி வேண்டிய தியாவையும் உனக்கு
வாங்கி ஈகுவன் ஒன்றுக்கும் அஞ்சேல்
மகிழ்ந்து நெஞ்சமே வருதிஎன் னுடனே
ஓங்கி வார்ஒற்றி யூர்இடை அரவும்
ஒளிகொள் திங்களும் கங்கையும் சடைமேல்
தாங்கி வாழும்நம் தாணுவாம் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே.

786. கயவர் இல்லிடைக் கலங்கலை நெஞ்சே
காம ஐம்புலக் கள்வரை வீட்டி
வயம்அ ளிக்குவன் காண்டிஎன் மொழியை
மறுத்தி டேல்இன்று வருதிஎன் னுடனே
உயவ ளிக்குநல் ஒற்றியூர் அமர்ந்தங்
குற்று வாழ்த்திநின் றுன்னுகின் றவர்க்குத்
தயவ ளிக்குநம் தனிமுதல் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே.

787. சண்ட வெம்பவப் பிணியினால் தந்தை
தாயி லார்எனத் தயங்குகின் றாயே
மண்ட லத்துழல் நெஞ்சமே சுகமா
வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
ஒண்த லத்திரு ஒற்றியூர் இடத்தும்
உன்னு கின்றவர் உள்ளகம் எனும்ஓர்
தண்த லத்தினும் சார்ந்தநம் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே.

788. விடங்கொள் கண்ணினார் அடிவிழுந் தையோ
வெட்கி னாய்இந்த விதிஉனக் கேனோ
மடங்கொள் நெஞ்சமே நினக்கின்று நல்ல
வாழ்வு வந்தது வருதிஎன் னுடனே
இடங்கொள் பாரிடை நமக்கினி ஒப்பா
ரியார்கண் டாய்ஒன்றும் எண்ணலை கமலத்
தடங்கொள் ஒற்றியூர் அமர்ந்தநம் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே.

789. பொருந்தி ஈனருள் புகுந்துவீண் காலம்
போக்கி நின்றனை போனது போக
வருந்தி இன்னும்இங் குழன்றிடேல் நெஞ்சே
வாழ்க வாழ்கநீ வருதிஎன் னுடனே
திருந்தி நின்றநம் முவர்தம் பதிகச்
செய்ய தீந்தமிழ்த் தேறல்உண் டருளைத்
தருந்தென் ஒற்றியூர் வாழுநம் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே.


790. நாட்டம் உற்றெனை எழுமையும் பிரியா
நல்ல நெஞ்சமே நங்கையர் மயலால்
வாட்டம் உற்றிவண் மயங்கினை ஐயோ
வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
கோட்டம் அற்றிரு மலர்க்கரம் கூப்பிக்
கும்பி டும்பெரும் குணத்தவர் தமக்குத்
தாள்த லந்தரும் ஒற்றியூர்ச் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே.

791. உடுக்க வேண்டிமுன் உடைஇழந் தார்போல்
உள்ள வாகும்என் றுன்னிடா தின்பம்
மடுக்க வேண்டிமுன் வாழ்விழந் தாயே
வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
அடுக்க வேண்டிநின் றழுதழு தேத்தி
அருந்த வத்தினர் அழிவுறாப் பவத்தைத்
தடுக்க வேண்டிநல் ஒற்றியூர்ச் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே.

792. மோக மதியால் வெல்லும்ஐம் புலனாம்
முட வேடரை முதலற எறிந்து
வாகை ஈகுவன் வருதியென் னுடனே
வஞ்ச வாழ்க்கையின் மயங்கும்என் நெஞ்சே
போக நீக்கிநல் புண்ணியம் புரிந்து
பாற்றி நாள்தொறும் புகழ்ந்திடும் அவர்க்குச்
சாகை நீத்தருள் ஒற்றியூர்ச் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே.

793. பசிஎ டுக்குமுன் அமுதுசே கரிப்பார்
பாரி னோர்கள்அப் பண்பறிந் திலையோ
வசிஎ டுக்குமுன் பிறப்பதை மாற்றா
மதியில் நெஞ்சமே வருதிஎன் னுடனே
நிசிஎ டுக்கும்நல் சங்கவை ஈன்ற
நித்தி லக்குவை நெறிப்பட ஓங்கிச்
சசிஎ டுக்குநல் ஒற்றியூர்ச் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே.

திருச்சிற்றம்பலம்

15. எழுசீர் தொ.வே.முதற்பதிப்பு, இரண்டாம் பதிப்பு. எண்சீர்.ச.மு.க.ஆ.பா.
21. அருள் நாம விளக்கம்
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

794. வாங்கு வில்நுதல் மங்கையர் விழியால்
மயங்கி வஞ்சர்பால் வருந்திநாள் தோறும்
ஏங்கு கின்றதில் என்பயன் கண்டாய்
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
தேங்கு லாவுசெங் கரும்பினும் இனிதாய்த்
தித்தித் தன்பர்தம் சித்தத்துள் ஊறி
ஓங்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.

795. தவம தின்றிவன் மங்கையர் முயக்கால்
தருமம் இன்றுவஞ் சகர்கடுஞ் சார்வால்
இவகை யால்மிக வருந்துறில் என்னாம்
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
பவம தோட்டிநல் ஆனந்த உருவாம்
பாங்கு காட்டிநல் பதந்தரும் அடியார்
உவகை ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.

796. மின்னும் நுணண்டைப் பெண்பெரும் பேய்கள்
வெய்ய நீர்க்குழி விழுந்தது போக
இன்னும் வீழ்கலை உனக்கொன்ற சொல்வேன்
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
பொன்உ லாவிய பூஉடை யானும்
புகழ்உ லாவிய பூஉடை யானும்
உன்னும் ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.

797. பொன்றும் வாழ்க்கையை நிலைஎன நினைந்தே
புலைய மங்கையர் புழுநெறி அளற்றில்
என்றும் வீழ்ந்துழல் மடமையை விடுத்தே
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
துன்று தீம்பலாச் சுளையினும் இனிப்பாய்த்
தொண்டர் தங்கள்நாச் சுவைபெற ஊறி
ஒன்றும் ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.

798. வரைக்கு நேர்முலை மங்கையர் மயலால்
மயங்கி வஞ்சரால் வருத்தமுற் றஞராம்
இரைக்கும் மாக்கடல் இடைவிழுந் தயரேல்
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ
கனிகொ லோஎனக் கனிவுடன் உயர்ந்தோர்
உரைக்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.

799. வாது செய்ம்மட வார்தமை விழைந்தாய்
மறலி வந்துனை வாஎன அழைக்கில்
ஏது செய்வையோ ஏழைநீ அந்தோ
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
போது வைகிய நான்முகன் மகவான்
புணரி வைகிய பூமகள் கொழுநன்
ஓதும் ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.

800. நண்ணும் மங்கையர் புழுமலக் குழியில்
நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய்
எண்ணும் என்மொழி குருமொழி ஆக
எண்ணி ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
பண்ணும் இன்சுவை அமுதினும் இனிதாய்ப்
பத்தர் நாள்தொறும் சித்தமுள் ளுற
உண்ணும் ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.

801. பந்த வண்ணம்஑ம் மடந்தையர் மயக்கால்
பசையில் நெஞ்சரால் பரிவுறுகின்றாய்
எந்த வண்ணநீ உய்வணம் அந்தோ
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
சந்த மாம்புகழ் அடியரில் கூடிச்
சனனம் என்னுமோர் சாகரம் நீந்தி
உந்த ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.

802. மட்டின் மங்கையர் கொங்கையை விழைந்தாய்
மட்டி லாததோர் வன்துயர் அடைந்தாய்
எட்டி அன்னர்பால் இரந்தலை கின்றாய்
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
தட்டி லாதநல் தவத்தவர் வானோர்
சார்ந்தும் காண்கிலாத் தற்பரம் பொருளை
ஒட்டி ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.

803. நிலவும் ஒண்மதி முகத்தியர்க் குழன்றாய்
நீச நெஞ்சர்தம் நெடுங்கடை தனிற்போய்
இலவு காத்தனை என்னைநின் மதியோ
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
பலவும் ஆய்ந்துநன் குண்மையை உணர்ந்தத
பத்தர் உள்ளகப் பதுமங்கள் தோறும்
உலவும் ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.

திருச்சிற்றம்பலம்

22. சிவசண்முகநாம சங்கீர்த்தன லகரி
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

804. பழுது நேர்கின்ற வஞ்சகர் கடைவாய்ப்
பற்றி நின்றதில் பயன்எது கண்டாய்
பொழுது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகித்
தொழுது சண்முக சிவசிவ எனநம்
தோன்ற லார்தமைத் துதித்தவர் திருமுன்
பழுது சொல்லுதம் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

805. சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச்
சுற்றி நின்றதில் சுகம்எது கண்டாய்
போது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகி
ஓது சண்முக சிவசிவ எனவே
உன்னி நெக்குவிட் டுருகிநம் துயராம்
ஆது சொல்லுதல் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

806. ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடைவாய்
நண்ணி நின்றதில் நலம்எது கண்டாய்
காலம் செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
கருதும் ஒற்றியம் கடிநகர்க் கேகிக்
கோலம் செய்அருள் சண்முக சிவஓம்
குழக வோஎனக் கூவிநம் துயராம்
ஆலம் சொல்லுதம் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

807. மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார்
வாயல் காத்தின்னும் வருந்தில்என் பயனோ
இருட்டிப் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
தெருட்டி றஞ்செயும் சண்முக சிவஓம்
சிவந மாஎனச் செப்பிநம் துயராம்
அரிட்டை ஓதுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

808. இல்லை என்பதே பொருள்எனக் கொண்டோ ர்
ஈன வாயிலில் இடர்ப்படு கின்றாய்
எல்லை செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
தொல்லை ஓம்சிவ சண்முக சிவஓம்
தூய என்றடி தொழுதுநாம் உற்ற
அல்லல் ஓதுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

809. கரவு நெஞ்சினர் கடைத்தலைக் குழன்றாய்
கலங்கி இன்னும்நீ கலுழ்ந்திடில் கடிதே
இரவு போந்திடும் எழுதிஎன் நெஞ்சே
எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகிப்
பரவு சண்முக சிவசிவ சிவஓம்
பரசு யம்புசங் கரசம்பு நமஓம்
அரஎன் றேத்துதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

810. ஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி
இருக்கின் றாய்இனி இச்சிறு பொழுதும்
சாய்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
தகைகொள் ஒற்றியம் தலத்தினுக் கேவி
வாய்ந்து சண்முக நமசிவ சிவஓம்
வரசு யம்புசங் கரசம்பு எனவே
ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

811. ஈர்ந்த நெஞ்சினார் இடந்தனில் இருந்தே
இடர்கொண் டாய்இனி இச்சிறு பொழுதும்
பேர்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
பிறங்கும் ஒற்றியம் பெருநகர்க் கேகி
ஒர்ந்து சண்முக சரவண பவஓம்
ஓம்சு யம்புசங் கரசம்பு எனவே
ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

812. கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையைக்
காத்தி ருக்கலை கடுகிஇப் பொழுதும்
இமைப்பில் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகி
எமைப்பு ரந்தசண் முகசிவ சிவவோம்
இறைவ சங்கர அரகர எனவே
அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

813. உறைந்து வஞ்சர்பால் குறையிரந் தவமே
உழல்கின் றாய்இனி உரைக்கும்இப் பொழுதும்
குறைந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
குலவும் ஒற்றியம் கோநகர்க் கேகி
நிறைந்த சண்முக குருநம சிவஓம்
நிமல சிற்பர அரகர எனவே
அறைந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

திருச்சிற்றம்பலம்

23. நமச்சிவாய சங்கீர்த்தன லகரி
திருவொற்றியூரும் திருத்தில்லையும்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

814. சொல்அ வாவிய தொண்டர்தம் மனத்தில்
சுதந்த ரங்கொடு தோன்றிய துணையைக்
கல்அ வாவிய ஏழையேன் நெஞ்சும்
கரைந்து வந்திடக் கலந்திடும் களிப்பைச்
செல்அ வாவிய பொழில்திரு வொற்றித்
தேனைத் தில்லைச்சிற் றம்பலத் தாடும்
நல்ல வாழ்வினை நான்மறைப் பொருளை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

815. அட்ட முர்த்தம தாகிய பொருளை
அண்டர் ஆதியோர் அறிகிலாத் திறத்தை
விட்ட வேட்கையர்க் கங்கையில் கனியை
வேத முலத்தை வித்தக விளைவை
எட்ட ரும்பர மானந்த நிறைவை
எங்கும் ஆகிநின் றிலங்கிய ஒளியை
நட்டம் ஆடிய நடனநா யகத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

816. உம்பர் வான்துயர் ஒழித்தருள் சிவத்தை
உலகெ லாம்புகழ் உத்தமப் பொருளைத்
தம்ப மாய்அகி லாண்டமும் தாங்கும்
சம்பு வைச்சிவ தருமத்தின் பயனைப்
பம்பு சீரருள் பொழிதரு முகிலைப்
பரம ஞானத்தைப் பரமசிற் சுகத்தை
நம்பி னோர்களை வாழ்விக்கும் நலத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

817. மாலின் உச்சிமேல் வதிந்தமா மணியை
வழுத்தும் நாஅகம் மணக்கும்நன் மலரைப்
பாலின் உள்இனித் தோங்கிய சவையைப்
பத்தர் தம்உளம் பரிசிக்கும் பழத்தை
ஆலின் ஓங்கிய ஆனந்தக் கடலை
அம்ப லத்தில்ஆம் அமுதைவே தங்கள்
நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

818. உண்ணி றைந்தெனை ஒளித்திடும் ஒளியை
உண்ண உண்ணமேல் உவட்டுறா நறவைக்
கண்ணி றைந்ததோர் காட்சியை யாவும்
கடந்த மேலவர் கலந்திடும் உறவை
எண்ணி றைந்தமால் அயன்முதல் தேவர்
யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை
நண்ணி ஒற்றியூர் அமர்ந்தருள் சிவத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

819. திக்கு மாறினும் எழுகடல் புவிமேல்
சென்று மாறினும் சேண்விளங் கொளிகள்
உக்கு மாறினும் பெயல்இன்றி உலகில்
உணவு மாறினும் புவிகளோர் ஏழும்
மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம்
விழுந்து மாறினும் வேதங்கள் உணரா
நக்கன் எம்பிரான் அருள்திருப் பெயராம்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

820. பெற்ற தாய்தனை மகமறந் தாலம்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

821. உடைஉ டுத்திட இடைமறந் தாலும்
உலகு ளோர்பசிக் குணமறந் தாலும்
படையெ டுத்தவர் படைமறந் தாலும்
பரவை தான்அலைப் பதுமறந் தாலும்
புடைஅ டுத்தவர் தமைமறந் தாலும்
பொன்னை வைத்தஅப் புதைமறந் தாலும்
நடைஅ டுத்தவர் வழிமறந் தாலும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

822. வன்மை செய்திடும் வறுமைவந் தாலும்
மகிழ்வு செய்பெரு வாழ்வுவந் தாலும்
புன்மை மங்கையர் புணர்ச்சிநேர்ந் தாலும்
பொருந்தி னாலும்நின் றாலும்சென் றாலும்
தன்மை இல்லவர் சார்பிருந் தாலும்
சான்ற மேலவர் தமைஅடைந் தாலும்
நன்மை என்பன யாவையும் அளிக்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

823. இன்னும் பற்பல நாளிருந் தாலும்
இக்க ணந்தனி லேஇறந் தாலும்
துன்னும் வான்கதிக் கேபுகுந் தாலும்
சோர்ந்து மாநர கத்துழன் றாலும்
என்ன மேலும்இங் கெனக்குவந் தாலும்
எம்பி ரான்எனக்கு யாதுசெய் தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடிநின் றோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

24. திருவருள் வழக்க விளக்கம்
திருவொற்றியூர்
கட்டளைக் கலித்துறை

திருச்சிற்றம்பலம்

824. தோடுடை யார்புலித் தோலுடை யார்கடல் தூங்கும்ஒரு
மாடுடை யார்மழு மான்உடை யார்பிர மன்தலையாம்
ஓடுடை யார்ஒற்றி யூர்உடை யார்புகழ் ஓங்கியவெண்
காடுடை யார்நெற்றிக் கண்உடை யார்எம் கடவுளரே.

825. வண்ணப்பல் மாமலர் மாற்றும் படிக்கு மகிழ்ந்தெமது
திண்ணப்பர் சாத்தும் செருப்படி மேற்கொண்ட தீஞ்சுவைத்தாய்
உண்ணப் பரிந்துநல் ஊன்தர உண்டுகண் ஒத்தக்கண்டே
கண்ணப்ப நிற்க எனக்கைதொட் டார்எம் கடவுளரே.

826. செல்இடிக் கும்குரல் கார்மத வேழச் சினஉரியார்
வல்அடுக் கும்கொங்கை மாதொரு பாகர் வடப்பொன்வெற்பாம்
வில்எடுக் கும்கையர் சாக்கியர் அன்று விரைந்தெறிந்த
கல்லடிக் கும்கதி காட்டினர் காண்எம் கடவுளரே.

827. ஏழியல் பண்பெற் றமுதோ டளாவி இலங்குதமிழ்க்
கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்டக் கிளர்ந்தநற்சீர்
விழியில் தம்பதிக் கேவிடை கேட்கவெற் பாள்உடனே
காழியில் தன்னுருக் காட்டின ரால்எம் கடவுளரே.

828. நாட்டில் புகழ்பெற்ற நாவுக் கரசர்முன் நாள்பதிகப்
பாட்டிற் கிரக்கம்இல் லீர்எம் பிரான்எனப் பாடஅன்றே10
ஆட்டிற் கிசைந்த மலர்வாழ்த்தி வேதம் அமைத்தமறைக்
காட்டில் கதவம் திறந்தன ரால்எம் கடவுளரே.

829. பைச்சூர் அரவப் படநடத் தான்அயன் பற்பலநாள்
எய்ச்சூர் தவஞ்செய் யினும்கிடை யாப்பதம் ஏய்ந்துமண்மேல்
வைச்சூரன் வன்தொண்டன் சந்தரன் என்னுநம் வள்ளலுக்குக்
கச்சூரில் சோறிரந் தூட்டின ரால்எம் கடவுளரே.

830. ஏணப் பரிசெஞ் சடைமுத லானஎல் லாம்மறைத்துச்
சேணப் பரிகள் நடத்திடு கின்றநல் சேவகன்போல்
மாணப் பரிபவம் நீக்கிய மாணிக்க வாசகர்க்காய்க்
காணப் பரிமிசை வந்தன ரால்எம் கடவுளரே.

831. எல்லாம் செயவல்ல சித்தரின் மேவி எழில்மதுரை
வல்லாரின் வல்லவர் என்றறி யாமுடி மன்னன்முன்னே
பல்லா யிரஅண்ட மும்பயம் எய்தப் பராக்கிரமித்துக்
கல்லானை தின்னக் கரும்பளித் தார்எம் கடவுளரே.

832. மால்எடுத் தோங்கிய மால்அயன் ஆதிய வானவரும்
ஆல்அடுத் தோங்கிய அந்தண னேஎன் றடைந்திரண்டு
பால்எடுத் தேத்தநம் பார்ப்பதி காணப் பகர்செய்மன்றில்
கால்எடுத் தாடும் கருத்தர்கண் டீர்எம் கடவுளரே.

833. மாற்பதம் சென்றபின் இந்திரர் நான்முகர் வாமனர்மான்
மேற்பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல்மற்றுள்ளோர்
ஆற்பதம் கொண்டபல் ஆயிரம் கோடிஅண் டங்கள்எல்லாம்
காற்பதம் ஒன்றில் ஒடுக்கிநிற் கார்எம் கடவுளரே.

திருச்சிற்றம்பலம்

16. இரக்கமில்லீர் எம்பிரான் என நாவுக்கரசர் பாடியதாவது
அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர்
இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ
சரக்க விக்கத வந்திறப் பிம்மினே.


25. புண்ணிய விளக்கம்
பொது
அறுசீர்க்17 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

834. பாடற் கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற் கினிய அடியவர்தம் கூட்டம் அளிக்கும் குணம்அளிக்கும்
ஆடற் கினிய நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற் கினிய சீர்அளிக்கும் சிவாய நம்என் றிடுநீறே.

835. கருமால் அகற்றும் இறப்பதனைக் களையு நெறியும் காட்டுவிக்கும்
பெருமால் அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசைஅறுக்கும்
அருமால் உழந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திருமால் அயனும் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.

836. வெய்ய வினையின் வேர்அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டிலடைந்
துய்ய அமல நெறிகாட்டும் உன்னற் கரிய உணர்வளிக்கும்
ஐயம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செய்ய மலர்க்கண் மால்போற்றும் சிவாய நமஎன் றிடுநீறே.

837. கோல மலர்த்தாள் துணைவழுத்தும் குலத்தொண் டடையக் கூட்டுவிக்கும்
நீல மணிகண் டப்பெருமான் நிலையை அறிவித் தருளளிக்கும்
ஆல வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சீலம் அளிக்கும் திருஅளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.

838. வஞ்சப் புலக்கா டெறியஅருள் வாளும் அளிக்கும் மகிழ்வளிக்கும்
கஞ்சத் தவனும் கரியவனும் காணற் கரிய கழல்அளிக்கும்
அஞ்சில் புகுந்த நெஞ்சேநீ அஞ்சமேல் என்மேல் ஆணைகண்டாய்
செஞ்சொல் புலவர் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.

839. கண்கொள் மணியை முக்கனியைக் கரும்பைக் கரும்பின் கட்டிதனை
விண்கொள் அமுதை நம்அரசை விடைமேல் நமக்குத் தோற்றவிக்கும்
அண்கொள் வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்கொள் முனிவர் சுரர்புகழும் சிவாய நமஎன் றிடுநீறே.

840. நோயை அறுக்கும் பெருமருந்தை நோக்கற் கரிய நுண்மைதனைத்
தூய விடைமேல் வரும்நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
ஆய வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சேய அயன்மால் நாடரிதாம் சிவயா நமஎன் றிடுநீறே.

841. எண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை
உண்ண முடியாச் செழுந்தேனை ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்
அண்ண வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்ண மளிக்கும் திறம்அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.

842. சிந்தா மணியை நாம்பலநாள் தேடி எடுத்த செல்வமதை
இந்தார் வேணி முடிக்கனியைஇன்றே விடைமேல் வரச்செயும்காண்
அந்தோ வினையால் நெஞ்ச்நீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செந்தா மரையோன் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.

843. உள்ளத் தெழுந்த மகிழ்வைநமக் குற்ற துணையை உள்உறவைக்
கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடைமேல் கூட்டுவிக்கும்
அள்ளல் துயரால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தெள்ளக் கடலான் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.

844. உற்ற இடத்தில் உதவநமக் குடையோர் வைத்த வைப்பதனைக்
கற்ற மனத்தில் புகுங்கருணைக் கனியை விடைமேல் காட்டுவிக்கும்
அற்றம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செற்றம் அகற்றித் திறல்அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.

திருச்சிற்றம்பலம்

17. எழுசீர். தொ.வே.1,2. அறுசீர். ச.மு.க. ஆ.பா

26. நெஞ்சொடு நெகிழ்தல்
கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்

845. சீர்தரு வார்புகழ்ப் பேர்தரு வார்அருள் தேன்தருவார்
ஊர்திரு வார்மதி யுந்தரு வார்கதி யுந்தருவார்
ஏர்தரு வார்தரு வார்ஒற்றி யூர்எம் இறைவர்அன்றி
யார்தரு வார்நெஞ்ச மேஇங்கும் அங்கும் இயம்புகவே.

846. வாடக்கற் றாய்இஃ தென்னைநெஞ் சேயிசை வாந்தசிந்து
பாடக்கற் றாய்இலை பொய்வேடம் கட்டிப் படிமிசைக்கூத்
தாடக்கற் றாய்இலை அந்தோ பொருள்உனக் கார்தருவார்
நீடக்கற் றார்புகழ் ஒற்றிஎம் மானை நினைஇனியே.

847. சோடில்லை மேல்வெள்ளைச் சொக்காய் இலைநல்ல சோமன்இல்லை
பாடில்லை கையிற் பணமில்லை தேகப் பருமன்இல்லை
வீடில்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகமது
நாடில்லை நீநெஞ்ச மேஎந்த ஆற்றினில் நண்ணினையே.18

848. நேரா அழுக்குத் துணியாகில் உன்றனை நேரில்கண்டும்
பாரா தவர்என நிற்பார் உடுத்தது பட்டெனிலோ
வாரா திருப்பதென் வாரும்என் பார்இந்த வஞ்சகர்பால்
சேராது நன்னெஞ்ச மேஒற்றி யூரனைச் சேர்விரைந்தே.

849. பொய்விரிப் பார்க்குப் பொருள்விரிப் பார்நற் பொருட்பயனாம்
மெய்விரிப் பார்க்கிரு கைவிரிப் பார்பெட்டி மேவுபணப்
பைவிரிப் பார்அல்குற் பைவிரிப் பார்க்கவர் பாற்பரவி
மைவிரிப் பாய்மன மேஎன்கொ லோநின் மதியின்மையே.

850. வாழைக் கனிஉண மாட்டாது வானின் வளர்ந்துயர்ந்த
தாழைக் கனிஉணத் தாவுகின் றோரில் சயிலம்பெற்ற
மாழைக் கனிதிகழ் வாமத்தெம் மான்தொண்டர் மாட்டகன்றே
ஏழைக் கனிகர் உளத்தினர் பாற்சென்ற தென்னைநெஞ்சே.

851. காயார் சரிகைக் கலிங்கம்உண் டேல்இக் கலிங்கங்கண்டால்
நீயார்நின் பேர்எது நின்ஊர் எதுநின் நிலையெதுநின்
தாயார்நின் தந்தை எவன்குலம் ஏதென்பர் சாற்றும்அவ்வல்
வாயார் இடஞ்செலல் நெஞ்சே விடைதர வல்லைஅன்றே.

எண்சீர்க்19 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

852. துட்ட வஞ்சக நெஞ்சக மேஒன்று சொல்லக் கேள்கடல் சூழ்உல கத்திலே
இட்டம் என்கொல் இறையள வேனும்ஓர் இன்பம் இல்லை இடைக்கிடை இன்னலால்
நட்ட மிக்குறல் கண்டுகண் டேங்கினை நாணு கின்றிலை நாய்க்குங் கடையைநீ
பட்ட வன்மைகள் எண்ணில் எனக்குடல் பதைக்கும் உள்ளம் பகீல்என ஏங்குமே.

அறுசீர்க்20 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

853. பெரியபொருள் எவைக்கும்முதற் பெரும்பொருளால் அரும்பொருளைப் பேசற்கொண்ணாத்
துரியநிலை அநுபவத்தைச் சுகமயமாய் எங்குமுள்ள தொன்மை தன்னை
அரியபரம் பரமான சிதம்பரத்தே நடம்புரியும் அமுதை அந்தோ
உரியபர கதிஅடைதற் குன்னினையேன் மனனேநீ உய்கு வாயே.

854. சொன்னிலைக்கும் பொருணிலைக்கும் தூரியதாய் ஆனந்தச் சுடராய் அன்பர்
தன்னிலைக்கும் சென்னிலைக்கும் அண்மையதாய் அருள்பழுக்கும் தருவாய் என்றும்
முன்னிலைக்கும் நின்னிலைக்கும் காண்பதரிதாய் முவாத முதலாய்ச் சுத்த
நன்னிலைக்கும் நிலையாய பசுபதியை மனனேநீ நவின்றி டாயே.

855. மண்முகத்தில் பல்விடய வாதனையால் மனனேநீ வருந்தி அந்தோ
புண்முகத்தில் சுவைவிரும்பும் எறும்பெனவா ளாநாளைப் போக்கு கின்றாய்
சண்முகத்தெம் பெருமானை ஐங்கரனை நடராஜத் தம்பி ரானை
உண்முகத்தில் கருதிஅநு பவமயமாய் இருக்கிலைநின் உணர்ச்சி என்னே.

856. மால்எடுத்துக் கொண்டுகரு மால்ஆகித் திரிந்தும்உளம் மாலாய்ப் பின்னும்
வால்எடுத்துக் கொண்டுநடந் தணிவிடையாய்ச் சுமக்கின்றான் மனனே நீஅக்
கால்எடுத்துக் கொண்டுசுமந் திடவிரும்பு கிலைஅந்தோ கருதும் வேதம்
நால்எடுத்துக் கொண்டுமுடி சுமப்பதையும் அறிகிலைநின் நலந்தான் என்னே.

ஆசிரியத் துறை21

857. உலகம் ஏத்திநின் றோங்க ஓங்கிய ஒளிகொள் மன்றிடை அளிகொள்மாநடம்
இலகு சேவடிக்கே அன்பு கூர்ந்திலை ஏழை நெஞ்சே
திலக வாணுத லார்க்கு ழன்றினை தீமை யேபுரிந் தாய்வி ரிந்தனை
கலக மேகனித்தாய் என்னை காண்நின் கடைக்க ருத்தே.

திருச்சிற்றம்பலம்

18. சென்னைச் சபாபதி முதலியார் வீட்டுத் திருமண அழைப்புத் தொடர்பாகச் செய்த
பாடல் என இது ஒரு தனிப்பாடலாகவும் வழங்குகிறது. தொ.வே 1,2,ச.மு.க
பதிப்புகளில் இது இப்பதிகத்தில் சேரவில்லை. ஆ.பா.பதிப்பில் மட்டும் சேர்ந்திருக்கிறது.
19 அறுசீர். தொ.வே 1,2. எண்சீர். ச.மு.க. ஆ. பா. 20 எழுசீர்.
தொ.வே. 1,2 அறுசீர். ச.மு.க. ஆ.பா. 21 ஆசிரியத் தாழிசை. தொ.வே.
1,2. ச.மு.க.

27. அவத்தொழிற் கலைசல்
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

858. அணங்கனார் களபத் தனமலைக் கிவரும் அறிவிலேன் என்புகாத் துழலும்
கணங்கனேன் தனக்குன் திருவருள் கிடைக்கும் சுகமும் டாங்கொலோ அறியேன்
கணங்கள்நேர் காட்டில் எரிஉகந் தாடும் கடவுளே கடவுளர்க் கிறையே
உணங்குவெண் தலைத்தார் புனைதிருப் புயனே ஒற்றியூர் உத்தம தேவே.

859. தேவரே அயனே திருநெடு மாலே சித்தரே முனிவரே முதலா
யாவரே எனினும் ஐயநின் தன்மை அறிந்திலர் யான்உனை அறிதல்
தாவில்வான் சுடரைக் கண்ணிலி அறியும் தன்மையன் றோபெருந் தவத்தோர்
ஒவில்மா தவம்செய் தோங்குசீர் ஒற்றி யூர்அமர்ந் தருள்செயும் ஒன்றே.

860. ஒன்றுநின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம்நொந் திளைக்கின்ற தின்னம்
நன்றுநின் தன்மை நான்அறிந் தேத்தல் நாயர சாளல்போல் அன்றோ
சென்றுநின் றடியர் உள்ளகத் தூறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே
மன்றுள்நின் றாடும் மாணிக்க மலையே வளங்கொளும் ஒற்றியூர் மணியே.

861. மணித்தலை நாகம் அணையவெங் கொடியார் வஞ்சக விழியினால் மயங்கிப்
பிணித்தலைக் கொண்டு வருந்திநின் றுழலும் பேதையேற் குன்னருள் உளதோ
கணித்தலை அறியாப் பேர்ஒளிக் குன்றே கண்கள்முன் றுடையஎன் கண்ணே
அணித்தலை அடியர்க் கருள்திரு வொற்றி அப்பனே செப்பரும் பொருளே.

862. ஒப்பிலாய்உனது திருவருள் பெறுவான் உன்னிநை கின்றனன் மனமோ
வெப்பில்ஆழ்ந் தெனது மொழிவழி அடையா வேதனைக் கிடங்கொடுத் துழன்ற
இப்பரி சானால் என்செய்வேன் எளியேன் எவ்வணம் நின்அருள் கிடைக்கும்
துப்புர வொழிந்தோர்உள்ளகத் தோங்கும் சோரியே ஒற்றியூர்த் துணையே.

863. துணையிலேன் நினது திருவடி அல்லால் துட்டனேன் எனினும்என் தன்னை
இணையிலாய் உனது தொண்டர்தம் தொண்டன் எனச் செயல் நின்அருள் இயல்பே
அணையிலா தன்பர் உள்ளகத் தோங்கும் ஆனந்த வெள்ளமே அரசே
பணையில்வா ளைகள்பாய் ஒற்றியம் பதியில் பரிந்தமர்ந் தருள்செயும் பரமே.

864. பரிந்துநின் றுலக வாழ்க்கையில் உழலும் பரிசொழிந் தென்மலக் கங்குல்
இரிந்திட நினது திருவருள் புரியா திருத்தியேல் என்செய்வேன் எளியேன்
எரிந்திட எயில்முன் றழற்றிய நுதற்கண் எந்தையே எனக்குறுந் துணையே
விரிந்தபூம் பொழில்சூழ் ஒற்றியம் பதியில் மேவிய வித்தக வாழ்வே.

865. வாழ்வது நின்றன் அடியரோ டன்றி மற்றும்ஓர் வெற்றருள் வாழேன்
தாழ்வது நினது தாட்கலான் மற்றைத் தாட்கெலாம் சரண்எனத் தாழேன்
சூழ்வது நினது திருத்தளி அல்லால் சூழ்கிலேன் தொண்டனேன் தன்னை
ஆள்வது கருதின் அன்றிஎன் செய்கேன் ஐயனே ஒற்றியூர் அரசே.

866. ஐயனே மாலும் அயனும்நின் றறியா அப்பனே ஒற்றியூர் அரசே
மெய்யனே நினது திருவருள் விழைந்தேன் விழைவினை முடிப்பையோ அன்றிப்
பொய்யனேன் தன்மைக் கடாதது கருதிப் பொன் அருள் செயாதிருப் பாயோ
கையனேன் ஒன்றும் அறிந்திலேன் என்னைக் காத்தருள் செய்வதுன் கடனே.

867. செய்வதுன் கடன்காண் சிவபெரு மானே திருவொற்றி யூர்வருந் தேனே
உய்வதென் கடன்காண் அன்றிஒன் றில்லை உலகெலாம் உடையநா யகனே
நைவதென் நெஞ்சம் என்செய்கேன் நினது நல்அருள் பெறாவிடில் என்னை
வைவதுன் அடியர் அன்றிஇவ் வுலகவாழ்க்கையில் வரும்பொலா அணங்கே.

திருச்சிற்றம்பலம்

28. நாள் அவத்து அலைசல்
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

868. இன்றிருந் தவரை நாளைஇவ் வுலகில் இருந்திடக் கண்டிலேம் ஆஆ
என்றிருந் தவத்தோர் அரற்றகின் றனரால் ஏழையேன் உண்டுடுத் தவமே
சென்றிருந் துறங்கி விழிப்பதே அல்லால் செய்வன செய்கிலேன் அந்தோ
மன்றிருந் தோங்கும் மணிச்சுடர் ஒளியே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.

869. தாவியே இயமன் தமர்வரும் அந்நாள் சம்புநின் திருவருள் அடையாப்
பாவியேன் செய்வ தென்என நெஞ்சம் பதைபதைத் துருகுகின் றனன்காண்
கூவியே எனக்குன் அருள்தரின் அல்லால் கொடியனேன் உய்வகை அறியேன்
வாவிஏர் பெறப்பூஞ் சோலைசூழ்ந் தோங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே.

870. நீரின்மேல் எழுதும் எழுத்தினும் விரைந்து நிலைபடா உடம்பினை ஓம்பிப்
பாரின்மேல் அலையும் பாவியேன் தனக்குப் பரிந்தருள் பாலியாய் என்னில்
காரின்மேல் வரல்போல் கடாமிசை வரும்அக் காலன்வந் திடில்எது செய்வேன்
வாரின்மேல் வளரும் திருமுலை மலையாள் மணாளனே ஒற்றியூர் வாழ்வே.

871. கருங்கணம் சூழக் கசியும்இவ் வுடலம் கருதும்இக் கனமிருந் ததுதான்
வருங்கணம் ஏதாய் முடியுமோ ஐயோ வஞ்சனேன் என்செய வல்லேன்
பெருங்கணம் சூழ வடவளத் தாடும் பித்தனே உத்தம தவத்தோர்
மருங்கன வுறநின் றரகர எனுஞ்சொல் வான்புகும் ஒற்றியூர் வாழ்வே.

872. கன்னியர் அளகக் காட்டிடை உழன்ற கல்மனக் குரங்கினேன் தனைநீ
அன்னியன் என்றே கழித்திடில் உனக்கிங் கார்சொல வல்லவர் ஐயா
என்னியல் அறியேன் நமன்தமர் வருநாள் என்செய்வேன் என்செய்வேன் அந்தோ
மன்னிய வன்னி மலர்ச்சடை மருந்தே வளங்கொளும் ஒற்றியூர் வாழ்வே.

873. பசிக்குண வுழன்றுன் பாததா மரையைப் பாடுதல் ஒழிந்துநீர்ப் பொறிபோல்
நசிக்கும்இவ்வுடலை நம்பினேன் என்னை நமன்தமர் வருத்தில்என் செய்கேன்
விசிக்கும்நல் அரவக்கச்சினோய் நினது மெய்அருள் அலதொன்றும் விரும்பேன்
வசிக்கும்நல் தவத்தோர்க் கருள்செயஓங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே.

874. கான்றசோ றருந்தும் கணங்கனின் பலநாள் கண்டபுன் சுகத்தையே விரும்பும்
நான்றநெஞ் சகனேன் நமன்தமர் வருநாள் நாணுவ தன்றிஎன் செய்கேன்
சான்றவர் மதிக்கும் நின்திரு வருள்தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா
மான்தனிக் கரத்தெம் வள்ளலே என்னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே.

875. மடிக்குறும் நீர்மேல் எழுத்தினுக் கிடவே மைவடித் தெடுக்குநர் போல
நொடிக்குளே மறையும் உடம்பினை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால்
படிக்குளே மனத்தால் பரிவுறு கின்றேன் பாவியேன் தனக்கருள் புரியாய்
வடிக்குறும் தமிழ்கொண் டன்பருக் கருளும் வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.

876. அங்கையில் புண்போல் உலகவாழ் வனைத்தும் அழிதரக் கண்டுநெஞ் சயர்ந்தே
பங்கமுற் றலைவ தன்றிநின் கமல பாதத்தைப் பற்றிலேன் அந்தோ
இங்கெனை நிகரும் ஏழையார் எனக்குள் இன்னருள் எவ்வணம் அருள்வாய்
மங்கையோர் புடைகொள் வள்ளலே அழியா வளங்கொளும் ஒற்றியூர் வாழ்வே.

877. கணத்தினில் உலகம் அழிதரக் கண்டும் கண்ணிலார் போல்கிடந் துழைக்கும்
குணத்தினில் கொடியேன தனக்குநின் அருள்தான் கூடுவ தெவ்வணம் அறியேன்
பணத்தினில் பொலியும் பாம்பரை ஆர்த்த பரமனே பிரமன்மல் அறியா
வணத்தினால் நின்ற மாணிக்கச் சுடரே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.

திருச்சிற்றம்பலம்

29. நெஞ்சைத் தேற்றல்
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

878. சென்று வஞ்சர்தம் புறங்கடை நின்று
திகைக்க எண்ணும்என் திறன்இலா நெஞ்சே
ஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி
ஒற்றி யூர்க்கின்று வருதியேல் அங்கு
மன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து
வாழ்கின் றார்அவர் மலரடி வணங்கி
நன்று வேண்டிய யாவையும் வாங்கி
நல்கு வேன்எனை நம்புதி மிகவே.

879. தீது வேண்டிய சிறியர்தம் மனையில்
சென்று நின்றுநீ திகைத்திடல் நெஞ்சே
யாது வேண்டுதி வருதிஎன் னுடனே
யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து
மாது வேண்டிய நடனநா யகனார்
வள்ள லார்அங்கு வாழ்கின்றார் கண்டாய்
ஈது வேண்டிய தென்னுமுன் அளிப்பார்
ஏற்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே.

880. இரக்கின் றோர்களுக் கில்லைஎன் னார்பால்
இரத்தல் ஈதலாம் எனல்உணர்ந் திலையோ22
கரக்கின் றோர்களைக் கனவினும் நினையேல்
கருதி வந்தவர் கடியவர் எனினும்
புரக்கின் றோர்மலர்ப் புரிசடை உடையார்
பூத நாயகர் பொன்மலைச் சிலையார்
உரக்குன் றோர்திரு வொற்றியூர்க் கேகி
உன்னி ஏற்குதும் உறுதிஎன் நெஞ்சே.

881. கல்லின் நெஞ்சர்பால் கலங்கல்என் நெஞ்சே
கருதி வேண்டிய தியாதது கேண்மோ
சொல்லின் ஓங்கிய சுந்தரப் பெருமான்
சோலைசூழ் ஒற்றித் தொன்னகர்ப் பெருமான்
அல்லின் ஓங்கிய கண்டத்தெம் பெருமான்
அயனும் மாலும்நின் றறிவரும் பெருமான்
வல்லை ஈகுவான் ஈகுவ தெல்லாம்
வாங்கி ஈகுவேன் வருதிஎன் னுடனே.

882. இலவு காக்கின்ற கிள்ளைபோல் உழன்றாய்
என்னை நின்மதி ஏழைநீ நெஞ்சே
பலவு வாழைமாக் கனிகனிந் திழியும்
பணைகொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
நிலவு வெண்மதிச் சடையுடை அழகர்
நிறைய மேனியில் நிகழ்ந்தநீற் றழகர்
குலவு கின்றனர் வேண்டிய எல்லாம்
கொடுப்பவர் வாங்கிநான் கொடுப்பன்உன் தனக்கே.

883. மன்னு ருத்திரர் வாழ்வைவேண் டினையோ
மால வன்பெறும் வாழ்வுவேண் டினையோ
அன்ன ஊர்திபோல் ஆகவேண் டினையோ
அமையும் இந்திரன் ஆகவேண் டினையோ
என்ன வேண்டினும் தடையிலை நெஞ்சே
இன்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே
வன்னி அஞ்சடை எம்பிரான் ஒற்றி
வளங்கொள் ஊரிடை வருதிஎன் னுடனே.

884. மறப்பி லாச்சிவ யோகம்வேண் டுகினும்
வழுத்த ரும்பெரு வாழ்வுவேண் டுகினும்
இறப்பி லாதின்னும் இருக்கவேண் டுகினும்
யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே
பிறப்பி லான்எங்கள் பரசிவ பெருமான்
பித்தன் என்றுநீ பெயர்ந்திடல் நெஞ்சே
வறப்பி லான்அருட் கடல்அவன் அமர்ந்து
வாழும் ஒற்றியின் வருதிஎன் னுடனே.

885. காலம் செல்கின்ற தறிந்திலை போலும்
காலன் வந்திடில் காரியம் இலைகாண்
நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில்
நிமிர்ந்த வெண்நெருப் பேந்திய நிமலர்
ஏலம் செல்கின்ற சூழலிஓர் புடையார்
இருக்கும் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
ஞாலம் செல்கின்ற துயர்கெட வரங்கள்
நல்கு வார்அவை நல்குவன் உனக்கே.

886. சென்று நீபுகும் வழியெலாம் உன்னைத்
தேட என்வசம் அல்லஎன் நெஞ்சே
இன்ற ரைக்கணம் எங்கும்நேர்ந் தோடா
தியல்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
அன்று வானவர் உயிர்பெற நஞ்சம்
அருந்தி நின்றஎம் அண்ணலார் இடத்தே
நின்று வேண்டிய யாவையும் உனக்கு
நிகழ வாங்கிநான் ஈகுவன் அன்றே.

887. கெடுக்கும் வண்ணமே பலர்உனக் குறுதி
கிளத்து வார்அவர் கெடுமொழி கேளேல்
அடுக்கும் வண்ணமே சொல்கின்றேன் எனைநீ
அம்மை இம்மையும் அகன்றிடா மையினால்
தடுக்கும் வண்ணமே செய்திடேல் ஒற்றித்
தலத்தி னுக்கின்றென் றன்னுடன் வருதி
மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம்
வாங்கி ஈகுவன் வாழ்திஎன் நெஞ்சே.

திருச்சிற்றம்பலம்
22. ஈண்டு மேற்கொண்ட குறட்பா.
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு. 1054 (106 ன இரவு ன 4)

30. நெஞ்சறை கூவல்
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

888. கண்கள் முன்றினார் கறைமணி மிடற்றார்
கங்கை நாயகர் மங்கைபங் குடையார்
பண்கள் நீடிய பாடலார் மன்றில்
பாத நீடிய பங்கயப் பதத்தார்
ஒண்கண் மாதரார் நடம்பயில் ஒற்றி
யூர்அ மர்ந்துவாழ் வுற்றவர்க் கேநம்
மண்கொண் மாலைபோம் வண்ணம்நல் தமிழ்ப்பூ
மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.

889. கரிய மாலன்று கரியமா வாகிக்
கலங்க நின்றபொன் கழல்புனை பதத்தார்
பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும்
பித்தர் என்னும்அப் பேர்தனை அகலார்
உரிய சீர்கொளும் ஒற்றியூர் அமர்ந்தார்
உம்பர் நாயகர் தம்புயம் புனைய
வரிய கன்றநன் மலர்கொடு தெரிந்து
மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.

890. திருவின் நாயகன் கைப்படை பெறுவான்
திருக்கண் சாத்திய திருமலர்ப் பதத்தார்
கருவின் நின்றஎம் போல்பவர் தம்மைக்
காத்த ளிப்பதே கடன்எனக் கொண்டார்
உருவின் நின்றவர் அருஎன நின்றோர்
ஒற்றி யூரிடை உற்றனர் அவர்க்கு
மருவின் நின்றநன் மணங்கொளம் மலர்ப்பூ
மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.

891. கரும்பைந் நாகணைக் கடவுள்நான் முகன்வான்
கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான்
துரும்பை நாட்டிஓர் வஞ்சையன் போலத்
தோன்றி நின்றவர் துரிசறுத் திட்டோ ன்
தரும்பைம் பூம்பொழில் ஒற்றியூர் இடத்துத்
தலங்கொண் டார்அவர் தமக்குநாம் மகிழ்ந்து
வரும்பைஞ் சீர்த்தமிழ் மாலையோ டணிபூ
மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.

892. வதன நான்குடை மலரவன் சிரத்தை
வாங்கி ஓர்கையில் வைத்தநம் பெருமான்
நிதன23 நெஞ்கர்க் கருள்தரும் கருணா
நிதிய மாகிய நின்மலப் பெருமான்
சுதன மங்கையர் நடம்செயும் ஒற்றித்
தூய னால்அவர் துணைத்திருத் தோட்கு
மதன இன்தமிழ் மாலையோ டணுபூ
மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.

893. கஞ்சன் அங்கொரு விஞ்சனம் ஆகிக்
காலில் போந்துமுன் காணரு முடியார்
அஞ்ச னம்கொளும் நெடுங்கணாள் எங்கள்
அம்மை காணநின் றாடிய பதத்தார்
செஞ்சொன் மாதவர் புகழ்திரு வொற்றித்
தேவர் காண்அவர் திருமுடிக் காட்ட
மஞ்ச னங்கொடு வருதும்என் மொழியை
மறாது நீஉடன் வருதிஎன் மனனே.

894. சூழு மாலயன் பெண்ணுரு எடுத்துத்
தொழும்பு செய்திடத் தோன்றிநின் றவனைப்
போழும் வண்ணமே வடுகனுக் கருளும்
பூத நாதர்நற் பூரணா னந்தர்
தாமும் தன்மையோர் உயர்வுறச் செய்யும்
தகையர் ஒற்றியூர்த் தலத்தினர் அவர்தாம்
வாழும் கோயிற்குத் திருவல கிடுவோம்
மகிழ்வு கொண்டுடன் வருதிஎன் மனனே.

895. விதியும் மாலுமுன் வேறுரு வெடுத்து
மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர்
நதியும் கொன்றையும் நாகமும் பிறையும்
நண்ணி ஓங்கிய புண்ணியச் சடையார்
பதியு நாமங்கள் அனந்தமுற் றுடையார்
பணைகொன் ஒற்றியூர்ப் பரமர்கா ணவர்தாம்
வதியும் கோயிற்குத் திருவிளக் கிடுவோம்
வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.

896. குளங்கொள் கண்ணினார் குற்றமே செயினும்
குணமென் றேஅதைக் கொண்டருள் ப&லதஇரிவோர்
உளங்கொள் அன்பர்தம் உள்ளகத் திருப்போர்
ஒற்றி யூரிடம் பற்றிய ப&லதஇனிதர்
களங்கொள் கண்டரெண் தோளர்கங் காளர்
கல்லை வில்எனக் கண்டவர் அவர்தம்
வளங்கொள் கோயிற்குத் திருமெழுக் கிடுவோம்
வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.

897. பணிகொள் மார்பினர் பாகன மொழியான்
பாகர் காலனைப் பாற்றிய பதத்தார்
திணிகொள் வன்மத மலைஉரி போர்த்தோர்
தேவர் நாயகர் திங்களம் சடையார்
அணிகொள் ஒற்றிய&ஙதஇர் அமர்ந்திடும் தியாகர்
அழகர் அங்கவர் அமைந்துவீற் றிருக்கும்
மணிகொள் கோயிற்குத் திருப்பணி செய்தும்
வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.

திருச்சிற்றம்பலம்
23. நிதன ன உருகுகின்ற ச.மு.க.
31. பற்றின் திறம் பகர்தல்
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

898. வாணரை விடையூர் வரதனை ஒற்றி வாணனை மலிகடல் விடமாம்
ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கிநின் றேத்தா
வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை முடரை நெஞ்சக்
கோணரைமுருட்டுக் குறும்பரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.

899. முவரை அளித்த முதல்வனை முக்கண் முர்த்தியைத் தீர்த்தனைப் பெரிய
தேவரைக் காத்த செல்வனை ஒற்றித் தியாகனை நினைந்துநின் றேத்தாப்
பாவரை வரையாப் படிற்றரை வாதப் பதடரைச் சிதடரைப் பகைசேர்
கோவரைக் கொடிய குணத்தரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.

900. அண்டனை எண்தோள் அத்தனை ஒற்றி அப்பனை ஐயனை நீல
கண்டனை அடியர் கருத்தனைப் பூத கணத்தனைக் கருதிநின் றேத்தா
மிண்டரைப் பின்றாவெளிற்றரைவலிய வேற்றரைச் சீற்றரைப் பாபக்
குண்டரை வஞ்சக் குடியரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.

901. நாதனைப் பொதுவில் நடத்தனை எவர்க்கும் நல்லனை வல்லனைச் சாம
கீதனை ஒற்றிக் கிறைவனை எங்கள் கேள்வனைக் கிளர்ந்துநின் றேத்தாத்
தீதரை நரகச் செக்கரை வஞ்சத் திருட்டரை மருட்டரைத் தொலையாக்
கோதரைக் கொலைசெய் கோட்டரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.

902. நம்பனை அழியா எங்கள் நாதனை நீதனைக் கச்சிக்
கம்பனை ஒற்றிக் கங்கைவே ணியனைக் கருத்தனைக் கருதிநின் றேத்தா
வம்பரை ஊத்தை வாயரைக் கபட மாயரைப் பேயரை எட்டிக்
கொம்பரைப் பொல்லாக் கோளரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.

903. சடையனை எவர்க்கும் தலைவனைக் கொன்றைத் தாரணைச் சராசர சடத்துள்
உடையனை ஒற்றி ஊரனை முவர் உச்சனை உள்கிநின் றேத்தாக்
கடையரைப் பழைய கயவரைப் புரட்டுக் கடியரைக் கடியரைக் கலக
நடையரை உலக நசையரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.

904. கஞ்சனைச் சிரங்கொய் கரத்தனை முன்று கண்ணனைக் கண்ணனைக் காத்த
தஞ்சனை ஒற்றித் தலத்தனைச் சைவத் தலைவனைத் தாழ்ந்துநின் றேத்தா
வஞ்சரைக் கடைய மடையரைக் காம மனத்தரைச் சினத்தரை வலிய
நஞ்சரை இழிந்த நரகரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.

905. தாமனை மழுமான் தரித்தசெங் கரனைத் தகையனைச் சங்கரன் தன்னைச்
சேமனை ஒற்றித் தியாகனைச் சிவனைத் தேவனைத் தேர்ந்துநின் றேத்தா
ஊமரைநீண்ட ஒதியரைப் புதிய ஒட்டரைத் துட்டரைப் பகைகொள்
நாமரை நரக நாடரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.

906. ஈசனைத் தாயில் இனியனை ஒற்றி இன்பனை அன்பனை அழியாத்
தேசனைத் தலைமை தேவனை ஞானச் சிறப்பனைச் சேர்ந்துநின் றேத்தா
நீசரை நாண்இல் நெட்டரை நாரக நேயரைத் தீயரைத் தரும
நாசரை ஒழியா நட்டரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.

907. நித்தனைத் தூய நிமலனைப் புலியூர் நிருத்தனை ஒருத்தனை வாய்மைச்
சுத்தனை ஒற்றித் தலம்வளர் ஞான சுகத்தனைச் சூழ்ந்துநின் றேத்தா
மத்தரைச் சமண வாதரைத் தேர வறியரை முறியரை வைண
நத்தரைச் சுணங்க நாவரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.

திருச்சிற்றம்பலம்

32. அடிமைத் திறத் தலைசல்
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

908. தேவர் அறியார் மால்அறியான் திசைமா முகத்தோன் தான்அறியான்
யாவர் அறியார் திருஒற்றி அப்பா அடியேன் யாதறிவேன்
முலர் திருப்பாட் டினுக்கிசைந்தே முதிர்தீம் பாலும் முக்கனியும்
காவல் அமுதும் நறுத்தேனும் கைப்ப இனிக்கும் நின்புகழே.

909. புகழே விரும்பிப் புலன்இழந்தேன் போந்துன் பதத்தைப் போற்றுகிலேன்
இகழேன் எனைநான் ஒற்றிஅப்பா என்னை மதித்தேன் இருள்மனத்தேன்
திகழ்ஏழ் உலகில் எனைப்போல்ஓர் சிறியர் அறியேன் தீவினையை
அகழேன்எனினும் எனையாளா தகற்றல் அருளுக் கழகன்றே.

910. அன்றும் அறியார் மாதவரும் அயனும் மாலும் நின்நிலையை
இன்றும் அறியார் அன்றியவர் என்றும் அறியார் என்னில்ஒரு
நன்றும் அறியேன் நாயடியேன் நான்எப்படிதான் அறிவேனோ
ஒன்றும் நெறிஏ தொற்றிஅப்பா ஒப்பார் இல்லா உத்தமனே.

911. ஒப்பார் இல்லா ஒற்றிஅப்பா உன்னை மறந்தேன் மாதர்கள்தம்
வெப்பார் குழியில் கண்முடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன்
இப்பார் நடையில் களித்தவரை ஈர்த்துக் கொடுபோய்ச் செக்கிலிடு
விப்பார் நமனார் என்பதைநான் நினையா தறிவை விடுவித்தேனே.

912. விடுத்தேன் தவத்தோர் நெறிதன்னை வியந்தேன் உலக வெந்நெறியை
மடுத்தேன் துன்ப வாரிதனை வஞ்ச மனத்தர் மாட்டுறவை
அடுத்தேன் ஒற்றி அப்பாஉன் அடியை நினையேன் அலமந்தேன்
படுத்தே நமன்செக் கிடும்போது படிறேன் யாது படுவேனோ.

913. படுவேன் அல்லேன் நமன்தமரால் பரிவேன் அல்லேன் பரமநினை
விடுவேன் அல்லேன் என்னையும்நீ விடுவாய் அல்லை இனிச்சிறிதும்
கெடுவேன் அல்லேன் சிறியார்சொல் கேட்பேன் அல்லேன் தருமநெறி
அடுவேன் அல்லேன் திருஒற்றி அப்பா உன்றன் அருள்உண்டே

914. உண்டோ எனைப்போல் மதிஇழந்தோர் ஒற்றி அப்பா உன்னுடைய
திண்டோ ள் இலங்கும் திருநீற்றைக் காண விரும்பேன் சேர்ந்தேத்தேன்
எண்தோள் உடையாய் என்றிரங்கேன் இறையும் திரும்பேன் இவ்வறிவைக்
கொண்டே உனைநான் கூடுவன்நின் குறிப்பே தொன்றும் அறியேனே.

915. அறியேன் உன்தன் புகழ்ப்பெருமை அண்ணா ஒற்றி அப்பாநான்
சிறியேன் எனினும் நினைஅன்றித் தெறியேன் மற்றோர் தேவர்தமை
வெறியேன் பிழையைக் குறித்தெனைக்கை விட்டால் என்செய் வேன்அடியேன்
நெறியே தருதல் நின்கடன்காண் நின்னைப் பணிதல் என்கடனே.

916. கடனே அடியர் தமைக்காத்தல் என்றால் கடையேன் அடியன்அன்றோ
உடன்நேர் பிணியும் ஒழித்திலைஎன் உள்ளத் துயரும் தவிர்த்திலையே
விடன்நேர் கண்டத் தின்னமுதே வேத முடியில் விளங்கொளியே
அடன்ஏர் விடையாய் திருஒற்றி அப்பா உனைநான் அயர்ந்திலனே.

917. இலனே மற்றோர் துனைசிறிதும் என்னே காமம் எனும்கடலில்
மலனேன் வருந்தக் கண்டிருத்தல் மணியே அருளின் மரபன்றே
அலனே அயலான் அடியேன்நான் ஐயாஒற்றி அப்பாநல்
நலனேர் தில்லை அம்பலத்தில் நடிக்கும் பதமே நாடினேன்.

918. நாடி அலுத்தேன் என்அளவோ நம்பா மன்றுள் நன்குநடம்
ஆடி மகிழும் திருஒற்றி அப்பா உன்தன் அருட்புகழைக்
கோடி அளவில் ஒருகூறும் குணித்தார் இன்றி ஆங்காங்கும்
தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே.

திருச்சிற்றம்பலம்

33. ஆனந்தப் பதிகம்
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

919. குடிகொள் மலஞ்சூழ் நலவாயிற் கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப்
படிகொள் நடையில் பரதவிக்கும் பாவி யேனைப் பரிந்தருளிப்
பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்த பொன்னே உன்னைப் போற்றிஒற்றிக்
கடிகொள் நகர்க்கு வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.

920. சாதல் பிறத்தல் எனும்கடலில் தாழ்ந்து கரைகா ணாதழுந்தி
ஈதல் இரக்கம் என்அளவும் இல்லா தலையும் என்றனைநீ
ஓதல் அறிவித் துணர்வறிவித் தொற்றி யூர்ச்சென் றுனைப்பாடக்
காதல் அறிவித் தாண்டதற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.

921. அற்ப அளவும் நிச்சயிக்கல் ஆகா உடம்மை அருமைசெய்து
நிற்ப தலதுன் பொன்அடியை நினையாக் கொடிய நீலன்எனைச்
சற்ப அணியாய் நின்றன்ஒற்றித் தலத்தைச் சார்ந்து நின்புகழைக்
கற்ப அருள்செய் தனைஅதற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.

922. உண்டு வறிய ஒதிபோல உடம்மை வளர்த்தூன் ஊதியமே
கொண்டு காக்கைக் கிரையாகக் கொடுக்க நினைக்கும் கொயன்எனை
விண்டு அறியா நின்புகழை விரும்பி ஒற்றி யூரில்நினைக்
கண்டு வணங்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.

923. நாய்க்கும் எனக்கும் ஒப்பாரி நாடி அதற்கு விருந்திடுவான்
வாய்க்கும் ஒதிபோல் பொய்உடலை வளர்க்க நினைக்கும் வஞ்சன்எனை
ஆய்க்கும் இனிய அப்பாஉன் ஒற்றி யூரை அடைந்திருளைக்
காய்க்கும் வண்ணம் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.

924. குருதி நிறைந்த குறுங்குடத்தைக் கொண்டோ ன் வழியில் சென்றிடவா
யெருதின் மனத்தேன் சுமந்துநலம் இழந்து திரியும் எய்ப்பொழிய
வருதி எனவே வழிஅருளி ஒற்றி யூர்க்கு வந்துன்னைக்
கருதி வணங்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.

925. பாவம் எனும்ஓர் பெருஞ்சரக்குப் பையை எடுத்துப் பண்பறியாக்
கோவம் எனும்ஓர் குரங்காட்டும் கொடியேன் தன்னைப் பொருட்படுத்தித்
தேவர் அமுதே சிவனேநின் திருத்தாள் ஏத்த ஒற்றிஎனும்
காவல் நகரம் வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.

926. பொள்ளற் குடத்தின் புலால்உடம்பைப் போற்றி வளர்த்துப் புலன்இழந்தே
துள்ளற் கெழுந்த மனத்துடனே துள்ளி அலைந்த துட்டன்எனை
உற்றற் கறிவு தந்துன்றன் ஒற்றி யூர்க்கு வந்துவினைக்
கற்றப் பகைநீக் கிடச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.

927. கூட்டும் எலும்பால் தசையதனால் கோலும் பொல்லாக் கூரைதனை
நாட்டும் பரம வீடெனவே நண்ணி மகிழ்ந்த நாயேனை
ஊட்டுந் தாய்போல் உவந்துன்றன் ஒற்றி யூர்வந் துறநினைவு
காட்டுங் கருணை செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.

928. ஊணத் துயர்ந்த பழுமரம்போல் ஒதிபோல் துன்பைத் தாங்குகின்ற
தூணத் தலம்போல் சோரிமிகும் தோலை வளர்த்த சுணங்கன்எனை
மாணப் பரிவால் அருட்சிந்தா மணியே உன்றன் ஒற்றிநகர்
காணப் பணித்த அருளினுக்கோர் கைம்மா றறியேன் கடையேனே.

929. புண்ணும் வழும்பும் புலால்நீரும் புழுவும் பொதிந்த பொதிபோல
நண்ணுங் கொடிய நடைமனையை நான்என் றுளறும் நாயேனை
உண்ணும் அமுதே நீஅமர்ந்த ஒற்றி யூர்கண் டென்மனமும்
கண்ணுங் களிக்கச் செய்ததற்கோர் மைம்மா றறியேன் கடையேனே.

திருச்சிற்றம்பலம்

34. அவல மதிக்கு அலைசல்
திருவொற்றியூர்
அறுசீர்க்24 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

930. மண்ணை மனத்துப் பாவியன்யான் மடவார் உள்ளே வதிந்தளிந்த
புண்ணை மதித்துப் புகுகின்றேன் போதம் இழந்தேன் புண்ணியனே
எண்ண இனிய நின்புகழை ஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன்
தண்நல் அமுதே நீஎன்னைத் தடுத்திங் காளத் தக்கதுவே.

931. தக்க தறியேன் வெறியேன்நான் சண்ட மடவார் தம்முலைதோய்
துக்கம் அதனைச் சுகம்என்றே துணிந்தேன் என்னைத் தொழும்பன்எனில்
மிக்க அடியார் நீஎன்னைத் தடுத்திங் காளத் தக்கதுவே.
செக்கர் நிறத்துப் பொன்மேனித் திருநீற் றொளிசேர் செங்கரும்பே.

932. கரும்பே ஒற்றி யூர்அமர்ந்த கனியே உன்தன் கழல்அடியை
விரும்பேன் அடியார் அடித்தொண்டில் மேவேன் பொல்லா விடமனைய
பெரும்பேய் மாதர் பிணக்குழியில் பேதை மனம்போந் திடச்சூறைத்
துரும்பே என்னச் சுழல்கின்றேன் துணையொன் றறியேன் துனியேனே.

933. துனியே பிறத்தற் கேதுஎனும் துட்ட மடவார் உள்ததும்பும்
பனிஏய் மலம்சூழ் முடைநாற்றப் பாழும் குழிக்கே வீழ்ந்திளைத்தேன்
இனிஏ துறுமோ என்செய்கேன் எளியேன் தனைநீ ஏன்றுகொளாய்
கனியே கருணைக் கடலேஎன் கண்ணே ஒற்றிக் காவலனே.

934. வலமே உடையார் நின்கருனை வாய்ந்து வாழ்ந்தார் வஞ்சகனேன்
மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும்பேய் வாக்கும்உவர்ச்
சலமே ஒழுக்குப் பொத்தரிடைச் சாய்ந்து தளர்ந்தேன் சார்பறியேன்
நலமே ஒற்றி நாடுடையாய் நாயேன் உய்யும் நாள்என்றோ.

935. நாளை வருவ தறியேன்நான் தஞ்சம் அனைய நங்கையர்தம்
ஆளை அழுத்தும் நீர்க்குழியில் அழுந்தி அழுந்தி எழுந்தலைந்தேன்
கோளை அகற்றி நின்அடிக்கே கூடும் வண்ணம் குறிப்பாயோ
வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே முத்தி வித்தகமே.

936. முத்தி முதலே முக்கணுடை முரிக் கரும்பே நின்பதத்தில்
பத்தி முதலே இல்லாதேன் பரம சுகத்தில் படிவேனோ
எத்தி அழைக்கும் கருங்கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பதனில்
தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்ற தென்மனமே.

937. மனமே முன்னர் வழிகாட்டப் பின்னே சென்று மங்கையர்தம்
தனமே என்னும் மலைஏறிப் பார்த்தேன் இருண்ட சலதிஒன்று
முனமே தோன்ற மதிமயங்கி விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன்
இனமே என்னை நீஅன்றி எடுப்பார் இல்லை என்அரசே.

938. என்னைக் கொடுத்தேன் பெண்பேய்கட் கின்பம் எனவே எனக்கவர்நோய்
தன்னைக் கொடுத்தார் நான்அந்தோ தளர்ந்து நின்றேன் அல்லதுசெம்
பொன்னைக் கொடுத்தும் பெறஅரிய பொருளே உன்னைப் போற்றுகிலேன்
இன்னல் கொடுத்த பவமுடையேன் எற்றுக் கிவண்நிற் கின்றேனே.

939. எற்றுக் கடியர் நின்றதுநின் இணைத்தாள் மலரை ஏத்தஅன்றோ
மற்றிக் கொடியேன் அஃதின்றி மடவார் இடைவாய் மணிப்பாம்பின்
புற்றுக் குழன்றேன் என்னேஎன் புந்தி எவர்க்குப் புகல்வேனே
கற்றுத் தெளிந்தோர் புகழ்ஒற்றிக் கண்ணார்ந் தோங்கும் கற்பகமே.

940. ஓங்கும் பொருளே திருஒற்றி யூர்வாழ் அரசே உனைத்துதியேன்
தீங்கும் புழுவும் சிலைநீரும் சீழும் வழும்பும் சேர்ந்தலைக்கத்
தூங்கும் மடவார் புலைநாற்றத் தூம்பில் நுழையும் சூதகனேன்
வாங்கும் பவம்தீர்த் தருள்வதுநின் கடன்காண் இந்த மண்ணிடத்தே.

24. எழுசீர். தொ.வே. 1,2. அறுசீர். ச.மு.க. ஆ.பா.

35. ஆனா வாழ்வின் அலைசல்
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

941. துள்ளிவாய் மடுக்கும் காணையர் ஆட்டத் துடுக்கினை ஒடுக்குறும் காமக்
கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம் கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன்
உள்ளிவாய் மடுத்துள் உருகிஆ னந்த உததிபோல் கண்கள் நகர் உகுப்பார்
அள்ளிவாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே ஒற்றியூர் அரசே.

942. ஒற்றியூர் அமரும் ஓளிகெழு மணியே உன்அடி உன்கிநின் றேத்தேன்
முற்றியூர் மலினக் குழிஇருள் மடவார் முலைஎனும் மலநிறைக் குவையைச்
சுற்றிஊர் நாயின் சுழன்றனன் வறிதே சுகம்எனச் சூழ்ந்தழி உடலைப்
பற்றியூர் நகைக்கத் திரிதரு கின்றேன் பாவியேன் உய்திறம் அரிதே.

943. அரியது நினது திருஅருள் ஒன்றே அவ்வருள் அடைதலே எவைக்கும்
பெரியதோர் பேறென் றுணர்ந்திலேன் முருட்டுப் பேய்களை ஆயிரம் கூட்டிச்
சரிஎனச் சொலினும் போதுறா மடமைத் தையலார் மையலில் அழுந்திப்
பிரியமுற் றலைந்தேன் ஏழைநான் ஒற்றிப் பெருமநின் அருளெனக் குண்டே.

944. பெருமநின் அருளே அன்றிஇவ் வுலகில் பேதையர் புழுமலப் பிலமாம்
கருமாழ் வெனைத்தும் வேண்டிலேன் மற்றைக் கடவுளர் வாழ்வையும் விரும்பேன்
தருமவா ரிதியே தடப்ணை ஒற்றித் தலத்தமர் தனிமுதல் பொருளே
துருமவான் அமுதே அடியனேன் தன்னைச் சோதியா தருள்வதுன் பரமே.

945. அருள்வதுன் இயற்கை உலகெலாம் அறியும் ஐயவோ நான்அதை அறிந்தும்
மருள்வதென் இயற்கை என்செய்வேன் இதனை மனங்கொளா தருள்அரு ளாயேல்
தெருள்வதொன் றின்றி மங்கையர் கொங்கைத் திடர்மலைச் சிகரத்தில் ஏறி
உருள்வதும் அல்குல் படுகுழி விழுந்தங் குலைவதும் அன்றிஒன் றுண்டோ .

946. உண்டுநஞ் சமரர் உயிர்பெறக் காத்த ஒற்றியூர் அண்ணலே நின்னைக்
கண்டுநெஞ் சுருகிக் கண்கள்நீர் சோரக் கைகுவித் திணையடி இறைஞ்சேன்
வண்டுநின் றலைக்கும் குழல்பிறை நுதலார் வஞ்சக விழியினால் மயங்கிக்
குண்டுநீர் ஞாலத் திடைஅலை கின்றேன் கொடியனேன் அடியனேன் அன்றே.

947. அன்று நீ அடிமைச் சாதனம் காட்டி ஆண்டஆ ருரனார் உன்னைச்
சென்றுதூ தருள்என் றிரங்குதல் நோக்கிச் சென்றநின் கருணையைக் கருதி
ஒன்றுதோ றுள்ளம் உருகுகின் றனன்காண் ஒற்றியூர் அண்ணலே உலகத்
தென்றுமால் உழந்தேன் எனினும்நின் அடியேன் என்தனைக் கைவிடேல் இனியே.

948. இனியநின் திருத்தாள் இணைமலர் ஏத்தேன் இளமுலை மங்கையர்க் குள்ளம்
கனியஅக் கொடியார்க் கேவல்செய் துழன்றேன் கடையனேன் விடயவாழ் வுடையேன்
துனியஇவ் வுடற்கண் உயிர்பிரிந் திடுங்கால் துணைநினை அன்றிஒன் றறியேன்
தனியமெய்ப் போத வேதநா யகனே தடம்பொழில் ஒற்றியூர் இறையே

949. இறையும்நின் திருத்தாள் கமலங்கள் ஏத்தேன் எழில்பெற உடம்பினை ஒம்பிக்
குறையும்வெண் மதிபோல் காலங்கள் ஒழித்துக் கோதையர் குறுங்குழி அளற்றில்
பொறையும் நல் நிறையும் நீத்துழன் றலைந்தேன் பொய்யனேன் தனக்குவெண் சோதி
நிறையும்வெள் நீற்றுக் கோலனே ஒற்றி நிமலனே அருளுதல் நெறியே.

950. நெறியிலேன் கொடிய மங்கையர் மையல் நெறியிலே நின்றனன் எனினும்
பொறியிலேன் பிழையைப் பொறுப்பதுன் கடனே பொறுப்பதும் அன்றிஇவ் வுலக
வெறியிலே இன்னும் மயங்கிடா துன்தன் விரைமலர் அடித்துணை ஏத்தும்
அறிவுளே அருள்வாய் ஒற்றியூர் அரசே அன்றினார் துள்ளறுத் தவனே.

திருச்சிற்றம்பலம்

36. அருள் திறந்து அலைசல்
திருவொற்றியூர்
கொச்சகக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்

951. நறைமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனே
கறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானே
உறைமணக்கும் பூம்பொழில்சூர் ஒற்றிஅப்பா உன்னுடைய
மறைமணக்கும் திருஅடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ.

952. அலைவளைக்கும் பாற்கடலான் அம்புயத்தான் வாழ்த்திநிதம்
தலைவளைக்கும் செங்கமலத் தாளுடையாய் ஆளுடையாய்
உலைவளைக்கா முத்தலைவேல் ஒற்றிஅப்பா உன்னுடைய
மலைவளைக்கும் கைம்மலரின் வண்மைதனை வாழ்த்தேனோ.

953. ஆறடுத்துச் சென்றஎங்கள் அப்பருக்கா அன்றுகட்டுச்
சோறெடுத்துச் சென்ற துணையே சுயஞ்சுடரே
ஊறெடுத்தோர் காணரிய ஒற்றிஅப்பா உன்னுடைய
நீறடுத்த எண்தோள் நிலைமைதனைப் பாரேனோ.

954. சைவத் தலைவர் தவத்தோர்கள் தம்பெருமான்
மெய்வைத்த உள்ளம் விரவிநின்ற வித்தகனே
உய்வைத்த உத்தமனே ஒற்றிஅப்பா உன்னுடைய
தெய்வப் புகழ்என் செவிநிறையக் கேளேனோ.

955. பாடுகின்றோர் பாடப் பரிசளிக்கும் புண்ணியனே
தேடுகின்றோர் தேடநிற்கும் தியாகப் பெருமானே
ஊடுகின்றோர் இல்லாத ஒற்றியப்பா அம்பலத்துள்
ஆடுகின்ற சேவடிகண் டல்லல்எலாம் தீரேனோ.

956. பூணாக மாடப் பொதுநடிக்கும் புண்ணியனே
சேணாகம் வாங்கும் சிவனே கடல்விடத்தை
ஊணாக உள்ளுவந்த ஒற்றிஅப்பா மால்அயனும்
காணாத நின்உருவைக் கண்டு களியனோ.

957. கொள்ளுவார் கொள்ளும் குலமணியே மால்அயனும்
துள்ளுவார் துள்அடக்கும் தோன்றலே சூழ்ந்துநிறம்
உள்ளுவார் உள்உறையும் ஒற்றிஅப்பா உன்னுடைய
தெள்ளுவார் பூங்கழற்கென் சிந்தைவைத்து நில்லேனோ.

958. செவ்வண்ண மேனித் திருநீற்றுப் பேரழகா
எவ்வண்ணம் நின்வண்ணம் என்றறிதற் கொண்ணாதாய்
உவ்வண்ணன் ஏத்துகின்ற ஒற்றிஅப்பா உன்வடிவம்
இவ்வண்ணம் என்றென் இதயத் தெழுதேனோ.

959. மன்றுடையாய் மால்அயனும் மற்றும்உள வானவரும்
குன்றுடையாய் என்னக் குறைதவிர்த்த கோமானே
ஒன்றுடையாய் ஊர்விடையாய் ஒற்றிஅப்பா என்னுடைய
வன்றுடையாய் என்றுன் மலரடியைப் போற்றேனோ.

960. குற்றம் செயினும் குணமாக் கொண்டருளும்
நற்றவர்தம் உள்ளம் நடுநின்ற நம்பரனே
உற்றவர்தம் நற்றுணைவா ஒற்றிஅப்பா என்கருத்து
முற்றிடநின் சந்நிதியின் முன்நின்று வாழ்த்தேனோ.

961. வஞ்ச மடவார் மயக்கும் மயக்கொழிய
நஞ்சம்அணி கண்டத்து நாதனே என்றென்று
உஞ்சவர்கள் வாழ்த்துகின்ற ஒற்றிஅப்பா உன்னுடைய
கஞ்ச மலர்அடிக்கே காதலுற்றுப் போற்றேனோ.

962. இன்னல் உலக இருள்நடையில் நாள்தோறும்
துன்னவரும் நெஞ்சத் துடுக்கழிய நல்லோர்கள்
உன்னல்உறும் தெள்ளமுதே ஒற்றிஅப்பா என்வாய்உன்
தன்அடைவே பாடித் தழும்பேறக் காணேனோ.

963. பெண்மணியே என்றுலகில் பேதையரைப் பேசாதென்
கண்மணியே கற்பகமே கண்ணுதலில் கொள்கரும்பே
ஒண்மணியே தேனேஎன் றொற்றிஅப்பா உன்தனைநான்
பண்மணஞ்செய் பாட்டில் பரவித் துதியேனோ.

964. மானமிலார் நின்தாள் வழுத்தாத வன்மனத்தார்
ஈனர்அவர் பால்போய் இளைத்தேன் இளைப்பாற
ஊனமிலார் போற்றுகின்ற ஒற்றிஅப்பா உன்னுடைய
ஞான அடியின்நிழல் நண்ணி மகிழேனோ.

965. கல்லார்க் கிதங்கூறிக் கற்பழிந்து நில்லாமல்
எல்லார்க்கும் நல்லவனே என்அரசே நல்தருமம்
ஒல்லார் புரமெரித்த ஒற்றிஅப்பா உன்அடிக்கே
சொல்லாமல் மலர்தொடுத்துச் சூழ்ந்தணிந்து வாழேனோ.

966. கற்பவற்றைக் கல்லார்க் கடையரிடம் சென்றவர்முன்
அற்பஅற்றைக் கூலிக் கலையும் அலைப்பொழிய
உற்பவத்தை நீக்குகின்ற ஒற்றிஅப்பா உன்னுடைய
நற்பதத்தை ஏத்திஅருள் நல்நலந்தான் நண்ணேனோ.

967. தந்தைதாய் மக்கள்மனை தாரம்எனும் சங்கடத்தில்
சிந்தைதான் சென்று தியங்கி மயங்காமே
உந்தைஎன்போர் இல்லாத ஒற்றிஅப்பா உன்அடிக்கீழ்
முந்தையோர் போன்று முயங்கி மகிழேனோ.

968. பொய்ஒன்றே அன்றிப் புறம்பொன்றும் பேசாத
வையொன்றும் தீநாற்ற வாயார்க்கு மேலோனேன்
உய்என் றருள்ஈயும் ஒற்றிஅப்பா உன்னுடைய
மெய்ஒன்று நீற்றின் விளக்கமது பாரேனோ.

969. தூக்கமும்முன் தூங்கியபின் சோறிலையே என்னும்அந்த
ஏக்கமுமே அன்றிமற்றோர் ஏக்கமிலா ஏழையனேன்
ஊக்கமுளோர் போற்றுகின்ற ஒற்றிஅப்பா நின்அடிக்கீழ்
நீக்கமிலா ஆனந்த நித்திரைதான் கொள்ளேனோ.

970. வாதுபுரிந் தீன மடவார் மதித்திடுவான்
போதுநிதம் போக்கிப் புலம்பும் புலைநாயேன்
ஓதுமறை யோர்குலவும் ஒற்றிஅப்பா ஊரனுக்காத்
தூதுசென்ற நின்தாள் துணைப்புகழைப் பாடேனோ.

971. பொன்னாசை யோடும் புலைச்சியர்தம் பேராசை
மன்னாசை மன்னுகின்ற மண்ணாசைப் பற்றறுத்தே
உன்னாசை கொண்டேஎன் ஒற்றிஅப்பா நான்மகிழ்ந்துன்
மின்னாரும் பொன்மேனி வெண்ணீற்றைப் பாரேனோ.

972. கள்உண்ட நாய்போல் கடுங்காம வெள்ளமுண்டு
தூள்உண்ட நெஞ்சத் துடுக்கடக்கி அன்பர்கள்தம்
உள்உண்ட தெள்அமுதே ஒற்கஅப்பா உன்தனைநான்
வெள்உண்ட நந்தி விடைமீதில் காணேனோ.

973. பேராத காமப் பிணிகொண்ட நெஞ்சகனேன்
வாராத ஆனந்த வாழ்வுவந்து வாழ்ந்திடவே
ஓராதார்க் கெட்டாத ஒற்றிஅப்பா உன்னுடைய
நீரார் சடைமேல் நிலவொளியைக் காணேனோ.

974. வன்னெஞ்சப் பேதை மடவார்க் கழிந்தலையும்
கன்னெஞ்சப் பாவியன்யான் காதலித்து நெக்குருகி
உன்னெஞ்சத் துள்உறையும் ஒற்றிஅப்பா உன்னுடைய
வென்னஞ் சணிமிடற்றை மிக்குவந்து வாழ்த்தேனோ.

975. புண்ணியமோர் போதும் புரிந்தறியாப் பொய்யவனேன்
எண்ணியதோர் எண்ணம் இடர்இன்றி முற்றியிட
உண்ணிலவு நல்ஒளியே ஒற்றியப்பா உன்னுடைய
தண்ணிலவு தாமரைப்பொன் தாள்முடிவில் கொள்ளேனோ.

976. நன்றிதுஎன் றோர்ந்தும்அதை நாடாது நல்நெறியைக்
கொன்றிதுநன் றென்னக் குறிக்கும் கொடியவன்யான்
ஒன்றுமனத் துள்ஒறியே ஒற்றியப்பா உன்னுடைய
வென்றி மழுப்படையின் மேன்மைதனைப் பாடேனோ.

977. மண்கிடந்த வாழ்வின் மதிமயக்கும் மங்கையரால்
புண்கிடந்த நெஞ்சப் புலையேன் புழுக்கம்அற
ஒண்கிடந்த முத்தலைவேல் ஒற்றிஅப்பா நாரணன்தன்
கண்கிடந்த சேவடியின் காட்சிதனைக் காணேனோ.

978. கூட்டுவிக்குள் மேல்எழவே கூற்றுவன்வந் தாவிதனை
வாட்டுவிக்கும் காலம் வருமுன்னே எவ்வுயிர்க்கும்
ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றிஅப்பா நீஉலகை
ஆட்டுவிக்கும் அம்பலத்துன் ஆட்டமதைப் பாரேனோ.

979. மின்ஒப்பாம் வாழ்வை வியந்திடருள் வீழ்ந்தலைந்தேன்
பொன்ஒப்பாய் தெய்வமணப் பூஒப்பாய் என்னினுமே
உன்ஒப்பார் இல்லாத ஒற்றியப்பா உன்னுடைய
தன்ஒப்பாம் வேணியின்மேல் சார்பிறையைப் பாரேனோ.

980. சீலம்அற நிற்கும் சிறியார் உறவிடைநல்
காலம்அறப் பேசிக் கழிக்கின்றேன் வானவர்தம்
ஒலம்அற நஞ்சருந்தும் ஒற்றியப்பா உன்னுடைய
நீல மணிமிடற்றின் நேர்மைதனைப் பாரேனோ.

981. சீர்புகழும் மால்புகழும் தேவர்அயன் தன்புகழும்
யார்புகழும் வேண்டேன் அடியேன் அடிநாயேன்
ஊர்புகழும் நல்வளங்கொள் ஒற்றிஅப்பா உன்இதழித்
தார்புகழும் நல்தொழும்பு சார்ந்துன்பால் நண்ணேனோ.

982. ஆதவன்தன் பல்இறுத்த ஐயற் கருள்புரிந்த
நாதஅர னேஎன்று நாத்தழும்பு கொண்டேத்தி
ஓதவள மிக்கஎழில் ஒற்றிஅப்பா மண்ணிடந்தும்
மாதவன்முன் கானா மலர்அடிக்கண் வைகேனோ.

983. கல்லைப் புறங்கண்ட காய்மனத்துக் கைதவனேன்
தொல்லைப் பழவினையின் தோய்வகன்று வாய்ந்திடவே
ஒல்லைத் திருவருள்கொண் டொற்றியப்பா உன்னுடைய
தில்லைப் பொதுவின் திருநடனம் காணேனோ.

984. கடையவனேன் கன்மனத்தேன் கைதவனேன் வஞ்ச
நடையவனேன் நாணிலியேன் நாய்க்கிணைஇன் துன்பொழிய
உடையவனே உலகேத்தும் ஒற்றிஅப்பா நின்பால்வந்
தடையநின்று மெய்குளிர்ந்தே ஆனந்தம் கூடேனோ.

985. வாதை மயல்காட்டும் மடவார் மலக்குழியில்
பேதை எனவீழ்ந்தே பிணிஉழத்தே பேயடியேன்
ஓதை கடற்கரைவாய் ஒற்றிஅப்பா வாழ்த்துகின்றோர்
தீதை அகற்றும்உன்றன் சீர்அருளைச் சேரேனோ.

986. பொய்யர்க் குதவுகின்ற புன்மையினேன் வன்மைசெயும்
வெய்யற் கிரிமியென மெய்சோர்ந் திளைத்தலைந்தேன்
உய்யற் கருள்செய்யும் ஒற்றிஅப்பா உன்அடிசேர்
மெய்யர்க் கடமைசெய்துன் மென்மலர்த்தாள் நண்ணேனோ.

திருச்சிற்றம்பலம்

37. நற்றுணை விளக்கம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

987. எஞ்ச வேண்டிய ஐம்புலப் பகையால்
இடர்கொண் டோ ய்ந்தனை என்னினும் இனிநீ
அஞ்ச வேண்டிய தென்னைஎன் நெஞ்சே
அஞ்சல் அஞ்சல்காண் அருமறை நான்கும்
விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன்
விளங்க வேண்டியும் மிடற்றின்கண் அமுதா
நஞ்சை வேண்டிய நாதன்தன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

988. காவின் மன்னவன் எதிர்க்கினும் காமன்
கணைகன் ஏவினும் காலனே வரினும்
பூவின் மன்னவன் சீறினும் திருமால்
போர்க்கு நேரினும் பொருளல நெஞ்சே
ஓவில் மாதுயர் எற்றினுக் கடைந்தாய்
ஒன்றும் அஞ்சல்நீ உளவறித் திலையோ
நாவின் மன்னரைக் கரைதனில் சேர்த்த
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

989. நீட்டம் உற்றதோர் வஞ்சக மடவார்
நெடுங்கண் வேல்பட நிலையது கலங்கி
வாட்டம் உற்றனை ஆயினும் அஞ்சேல்
வாழி நெஞ்சமே மலர்க்கணை தொடுப்பான்
கோட்டம் உற்றதோர் நிலையொடு நின்ற
கொடிய காமனைக் கொளுவிய நுதல்நீ
நாட்டம் உற்றதோர் நாதன்தன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

990. எம்மை வாட்டும்இப் பசியினுக் கெவர்பால்
ஏகு வோம்என எண்ணலை நெஞ்சே
அம்ம ஒன்றுநீ அறிந்திலை போலும்
ஆலக் கோயிலுள் அன்றுசுந் தரர்க்காய்
செம்மை மாமலர்ப் பதங்கள்நொந் திடவே
சென்று சோறிரந் தனித்தருள் செய்தோன்
நம்மை ஆளுடை நாதன்தன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

991. ஓடு கின்றனன் கதிரவன் அவன்பின்
ஓடு கின்றன ஒவ்வொரு நாளாய்
வீடு கின்றன என்செய்வோம் இனிஅவ்
வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே
வாடு கின்றனை அஞ்சலை நெஞ்சே
மார்க்கண் டேயர்தம் மாண்பறிந் திலையோ
நாடு கின்றவர் நாதன்தன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

992. மலங்கும் மால்உடல் பிணிகளை நீக்க
மருந்து வேண்டினை வாழிஎன் நெஞ்சே
கலங்கு றேல்அருள் திருவெண்ணீ றெனது
கரத்தி ருந்தது கண்டிலை போலும்
விலங்கு றாப்பெரும் காமநோய் தவிர்க்க
விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா
நலங்கொள் செஞ்சடை நாதன்தன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

993. மாலும் துஞ்சுவான் மலரவன் இறப்பான்
மற்றை வானவர் முற்றிலும் அழிவார்
ஏலும் நற்றுணை யார்நமக் கென்றே
எண்ணி நிற்றியோ ஏழைநீ நெஞ்சே
கோலும் ஆயிரம் கோடிஅண் டங்கள்
குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும்
நாலு மாமறைப் பரம்பொருள் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

994. கந்த வண்ணமாம் கமலன்மால் முதலோர்
கண்டி லார்எனில் கைலையம் பதியை
எந்த வண்ணம்நாம் காண்குவ தென்றே
எண்ணி எண்ணிநீ ஏங்கினை நெஞ்சே
அந்த வண்ணவெள் ஆனைமேல் நம்பி
அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும்
நந்தம் வண்ணமாம் நாதன்தன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

995. வீர மாந்தரும் முனிவரும் சுரரும்
மேவு தற்கொணா வெள்ளியங் கிரியைச்
சேர நாம்சென்று வணங்கும்வா றெதுவோ
செப்பென் றேஎனை நச்சிய நெஞ்சே
ஊர னாருடன் சேரனார் துரங்கம்
ஊர்ந்து சென்றஅவ் உளவறிந் திலையோ
நார மார்மதிச் சடையவன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

996. தலங்கன் தோறும்சென் றவ்விடை அமர்ந்த
தம்பி ரான்திருத் தாளினை வணங்கி
வலங்கொ ளும்படி என்னையும் கூட
வாஎன் கின்றனை வாழிஎன் நெஞ்சே
இலங்கள் தோறும்சென் றிரந்திடும் அவனே
என்னை உன்னையும் ஈர்க்குவன் அதற்கு
நலங்கொ ளும்துணை யாதெனில் கேட்டி
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

திருச்சிற்றம்பலம்


1001. நல்ல நீறிடா நாய்களின் தேகம்
நாற்றம் நேர்ந்திடில் நண்உயிர்ப் படக்க
வல்ல நீறிடும் வல்லவர் எழின்மெய்
வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க
சொல்ல ரும்பரி மளந்தரும் முக்கே
சொல்லும் வண்ணம்இத் தூய்நெறி ஒன்றாம்
அல்லல் நீக்கிநல் அருட்கடல் ஆடி
ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.

1002. அருள்செய் நீறிடார் அமுதுனக் கிடினும்
அம்ம லத்தினை அருந்துதல் ஒழிக
தெருள்கொள் நீறிடும் செல்வர்கூழ் இடினும்
சேர்ந்து வாழ்த்திஅத் திருஅமு துன்க
இருள்செய் துன்பநீத் தென்னுடை நாவே
இன்ப நல்அமு தினிதிருந் தருந்தி
மருள்செய் யானையின் தோலுடுத் தென்னுள்
வதியும் ஈசன்பால் வாழுதற் பொருட்டே.

1003. முத்தி நீறிடார் முன்கையால் தொடினும்
முள்ளு றுத்தல்போல் முனிவுடன் நடுங்க
பத்தி நீறிடும் பத்தர்க்ள் காலால்
பாய்ந்து தைக்கினும் பரிந்ததை மகிழ்க
புத்தி ஈதுகாண் என்னுடை உடம்பே
போற்ற லார்புரம் பொடிபடி நகைத்தோன்
சத்தி வேற்கரத் தனயனை மகிழ்வோன்
தன்னை நாம்என்றும் சார்ந்திடற் பொருட்டே.

1004. இனிய நீறிடா ஈனநாய்ப் புலையர்க்
கெள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக
இனிய நீறிடும் சிவனடி யவர்கள்
எம்மைக் கேட்கினும் எடுத்தவர்க் கீக
இனிய நன்னெறி ஈதுகாண் கரங்காள்
ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க்
கினிய மால்விடை ஏறிவந் தருள்வோன்
இடங்கொண் டெம்முளே இசைகுநற் பொருட்டே.

1005. நாட நீறிடா முடர்கள் கிடக்கும்
நரக இல்லிடை நடப்பதை ஒழிக
ஊடல் நீக்கும்வெண் நீறிடும் அவர்கள்
உலவும் வீட்டிடை ஒடியும் நடக்க
கூட நன்னெறி ஈதுகாண் கால்காள்
குமரன் தந்தைஎம் குடிமுழு தாள்வோன்
ஆட அம்பலத் தமர்ந்தவன் அவன்தன்
அருட்க டல்படிந் தாடுதற் பொருட்டே.

1006. நிலைகொள் நீறிடாப் புலையரை மறந்தும்
நினைப்ப தென்பதை நெஞ்சமே ஒழிக
கலைகொள் நீறிடும் கருத்தரை நாளும்
கருதி நின்றுளே கனிந்துநெக் குருக
மலைகொள் வில்லினான் மால்விடை உடையான்
மலர்அ யன்தலை மன்னிய கரத்தான்
அலைகொள் நஞ்சமு தாக்கிய மிடற்றான்
அவனை நாம்மகிழ்ந் தடைகுதற் பொருட்டே.

திருச்சிற்றம்பலம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III