Kāñcip purāṇam III


சைவ சமய நூல்கள்

Back

காஞ்சிப் புராணம் III
கச்சியப்ப சிவாச்சாரியார்



திருவாவடுதுறை யாதீனம்
சிவஞான சுவாமிகள் அருளிய
காஞ்சிப் புராணம்

பாகம் 3 - (1057 -1691)


30. வீரராகவேசப் படலம் 1057 - 1087

31. பலபத்திர ராமேசப்படலம் 1088 - 1105

32. வன்மீகநாதப் படலம் 1106 - 1124

33. வயிரவேசப் படலம் 1125 - 1162

34. விடுவச்சேனேசப் படலம் 1163 - 1193

35. தக்கேசப் படலம் 1194 - 1270

36. முப்புராரி கோட்டப்படலம் 1271 - 1281

37. இரணியேசப் படலம் 1282 - 1303

38. நாரசிங்கேசப் படலம் 1304 - 1318

39. அந்தகேசப் படலம் 1319 - 1350

40. வாணேசப் படலம் 1351 - 1461

41. திருவோணகாந்தன் தளிப்படலம் 1461 - 1470

42. சலந்தரேசப் படலம் 1471 - 1493

43. திருமாற்பேற்றுப் படலம் 1493 - 1511

44. பரசிராமேச்சரப் படலம் 1512 - 1573

45. இரேணுகேச்சரப் படலம் 1574 - 1608

46. யோகாசாரியர் தளிப்படலம் 1609 - 1618

47. சர்வ தீர்த்தப்படலம் 1619 - 1644

48. நவக்கிரகேசப் படலம் 1645 - 1650

49. பிறவாத்தானப் படலம் 1651 - 1660

50. இறவாத்தானப் படலம் 1661 - 1668

51. மகாலிங்கப்படலம் 1669 - 1691

காஞ்சிப் புராணம்
30. வீரராகவேசப் படலம் (1057-1087)

அறுசீரடிக் கழிநெடிலாசிரிய விருத்தம்




1057 - புத்தருக் கிறையும் நல்யாழ்ப் புலங்கெழு முனியும் போற்ற
அத்தனா ரினிது வைகுங் கயிலையி னடைவு சொற்றாம்
இத்தகு வரைப்பின் கீழ்பால் இள்நறாக் கொப்பு ளித்துத்
தொத்தலர் பொழில்சூழ் வீர ராகவஞ் சொல்ல லுற்றாம் - 1



1058 - இராமன் முறையிடல்
ஒன்னலர் குருதி மாந்தி ஒளிறுவே லிராம னென்பான்
தன்மனைக் கிழத்தி தன்னைத் தண்டக வனத்து முன்னாள்
கொன்னுடைத் தறுகண் சீற்றக் கொடுந்தொழி லரக்கன் வௌளவித்
துன்னரு மிலங்கை புக்கான் மேல்வரு துயரம் நோக்கான். - 2



1059 - பெய்கழல் கறங்கு நோன்றாள் பெருவிற லிராம னந்நாள்
எய்சிலைத் தம்பி யோடும் இடருழந் தழுங்கி யேங்கிக்
கொய்தழை வனங்க ளெங்குங் கொட்புறீஇக் கமல வாவிச்
செய்புடை யுடுத்த காஞ்சித் திருவளர் நகரஞ் சேர்ந்தான். - 3



1060 - இடும்பைநோ யறுக்குந் தெண்ணீ ரெழிற்சிவ கங்கை யாடி
நெடும்பணை யொருமா மூல நின்மலக் கொழுந்தை யேத்திக்
கொடும்படைச் சனக னீன்ற கோதையைப் பெறுவான் கூற்றை
அடும்புகழ்ச் செய்ய தாளை யிரந்துநின் றழுது வேண்டி - 4



1061 - தாழ்ந்தெழுந் தேகித் தென்பால் அகத்தியேச் சரத்தின் முன்னர்
வாழ்ந்திடுந் தகைமை சான்ற வண்டமிழ் முனியைக் கண்டான்
சூழ்ந்தவெந் துயரத் தோடு மோடினன் துணைத்தாள் மீது
வீழ்ந்தனன் புலம்ப லோடும் வெருவரே லென்னத் தேற்றி - 5



1062 - இத்துணை யிடும்பைக் கேது எவனென வினாவுஞ் செல்வ
முத்தமிழ் முனிவன் கேட்பப் புகுந்தவா மொழிய லுற்றான்
மைத்தவார் கரிய கூந்தற் கௌளசலை மணந்த திண்டோள்
சத்துவ குணத்தான் மிக்க தசரத னீன்ற செம்மல். - 6



1063 - கலிநிலைத்துறை

எம்பி ரானிது கேட்டரு ளேழிரண் டாண்டு
வெம்பு காடகத் துறைதிநீ வியனிலந் தாங்கி
நும்பி யாகிய பரதனே வாழ்கென நுவன்று
கம்பி யாதெனை யெந்தையிக் கானிடை விடுத்தான் - 7



1064 - ஏய வாணையைச் சிரமிசைக் கொண்டெழு மெனையே
தூய சீரிலக் குமணனுஞ் சீதையுந் தொடர்ந்தார்
ஆய மூவருந் தண்டக வனத்தமர்ந் திடுநாள்
மாய மானெனத் தோன்றினன் அங்கண்மா ரீசன் - 8



1065 - தோன்றி மற்றெனைச் சேயிடைக் கொண்டுபோய்ச் சுலவி
மான்ற வம்பினிற் பொன்றுவான் சீதையை வலியான்
ஆன்ற வெம்பியை விளித்துவீழ்ந் தனனது கேளா
ஏன்ற சீதையை விடுத்தெனைத் தொடர்ந்தன னிளவல். - 9



1066 - அனைய காலையி லிராவண னவட்கவர்ந் தகன்றனன்
புனைம லர்க்குழற் பூங்கொடி தணத்தலிற் புலம்பி
இனையு மென்னுயிர் பொன்றுமு னிரங்குதி யெந்தாய்
உனைய டைந்தனன் சரணமென் றழுதழு துரைத்தான் - 10



1067 - அகத்தியர் இராமனைத் தேற்றித் தத்துவோபதேசம் செய்தல்
உரைத்த வாய்மொழி கேட்டெதிர் அகத்திய னுரைப்பான்
விரைத்த தார்ப்புய வேந்தகேள் வீங்குநீர் உலகின்
நிரைத்த வைம்பெரும் பூதத்தின் நிலைபெறு முடலம்
தெரிக்கில் யாவையு முடன்பிறந் தவையெனத் தெளிநீ - 11



1068 - மற்று யிர்க்குவே றாணலி பெண்ணென வழக்கஞ்
சற்று மில்லைநீர்ச் சலதியுட் படுபல துரும்பின்
பெற்றி போலுமிப் பூதத்தின் கூட்டமும் பிரிவும்
கற்று ளோயிவை யிருமைக்கும் மாயைகா ரணமாம். - 12



1069 - செய்வி னைப்பய னுள்ளது வருமெனத் தெளிதி
எவ்வ முற்றுழந் திரங்கலை மகிழ்ந்திரு வெனலும்
பௌளவ முற்றுமோ ருழுந்தள வாக்கிமுன் பருகுஞ்
சைவ மாமுனி மொழிக்கெதி ரரசனுஞ் சாற்றும் - 13



1070 - அத்த நின்னுரை முழுவது முண்மையே யானும்
இத்த லக்கிது இணங்குமோ மனையவள் மாற்றான்
கைத்த லத்தகப் பட்டுழித் தத்துவங் காண்போன்
பித்த னென்றுல குரைத்திடு மாதலிற் பெரியோய் - 14



1071 - பறந்த லைப்புகுந் தொன்னலர்ச் செகுத்துயிர் பருகிச்
சிறந்த சீதையை மீட்டபின் ஐயநீ தெரிக்கும்
உறந்த தத்துவ ஞானத்துக் குரியவ னாவேன்
அறைந்த வாறல தென்னுள மடங்கிடா தென்றான் - 15



1072 - மலைய மாதவன் கேட்டுநின் மனத்துறும் விழைவு
கலைம திக்கழுஞ் சிறுவனோ டொக்குமக் கதிர்ப்பூண்
முலைம டந்தையை யிராவணன் கவர்ந்துபோ முறைமை
இலைகொள் வேலினாய் எவருனக் கியம்பின ரென்றான் - 16



1073 - சடாயு வென்றுயர் கழுகிறை சானகி பொருட்டு
விடாது போருழந் திறப்பவன் விளம்பிடத் தெளிந்தேன்
கடாது கொண்டவட் பெறுந்திறம் அருளெனக் கரையும்
வடாது வெற்புறழ் புயத்தனை மாமுனி நோக்கி. - 17



1074 - நின்க ருத்திது வேலுயர் நெடுவரை குழைத்து
வன்கண் மாற்றலர் புரம்பொடி படுத்தவன் மலர்த்தாள்
புன்கண் நீங்குமா றடைக்கலம் புகுமதி யவனே
உன்க ருத்தினை முடித்திட வல்லனென் றுணராய். - 18



1075 - உலகம் யாவையு மொருநொடிப் பொழுதினி லழிப்போன்
நிலையும் வில்லினன் கொடுங்கொலைப் பகழியன் நிகரா
அலகி லாற்றல னுருத்திர னொருவனே யன்றி
இலையெ னப்புகன் றோலிடு மியம்பருஞ் சுருதி - 19



1076 - தென்தி சைக்கிறை யிராவணன் திருவடி விரலின்
ஒன்ற னாலிறக் கண்டன னொருசிறு துரும்பால்
அன்று விண்ணவர் தருக்கொடு மிடலறச் செய்தான்
வென்றி பூண்டுயர் கூருகிர் நகைவிழிப் படையான் - 20



1077 - அனைய னாகிய தனிமுதல் பாற்சர ணடைந்தோர்
எனைய வேட்பினு மெண்மையி னெய்துவ ரதனாற்
கனைகொள் பூந்தடம் உடுத்தவிக் காஞ்சிமா நகரிற்
புனைம லர்க்குழல் பாகனை யருச்சனை புரிவாய் - 21



1078 - வீரம் வேண்டினை யாதலின் விதியுளி வழாது
வீர ராகவப் பெயரினால் விமலனை இருத்தி
வீர னேதொழு தேத்துதி யெனமுனி விளம்ப
வீரர் வீரனு மம்முறை பூசனை விளைப்பான் - 22



1079 - இராமன் சிவபூசைசெய்து வரம் பெறல்
அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
வெண்ணீறுங் கண்டிகையு முடல்விரவப் பாசுபத விரதம் பூண்டு
தண்ணிடு மலர்க்கடுக்கை வீரரா கவமுதலைத் தாபித் தன்பால்
எண்ணூறு மிருநூறு மாயதிருப் பெயரியம்பி யருச்சித் தேத்தி
உண்ணிடு பெருங்காதல் வளர்ந்தோங்கத்
      தொழுதுநயந் துருகுங்காலை - 23



1080 - எவ்வமறப் புரிபூசைக் கெம்பெருமான் திருவுள்ள மிரங்கிப் போற்றும்
அவ்விலிங்கத் திடைநின்று மெழுந்தருளி விடைமேற்கொண் டமரர்சூழ
நவ்விவிழி யுமையோடுங் காட்சிகொடுத் தருளுதலும் நலியா வென்றித்
தெவ்வடுதிண் புயத் தோன்றல் பலமுறையுந் தொழுதேத்திச் செப்ப லுற்றான். - 24



1081 - அண்ணலே யடியேனுக் கெளிவந்த
      பெருங்கருணை யமுதே அன்பர்
புண்ணியமே இராவணனாம் அரக்கர்கோன்
      பொலந்தொடித் தோட்சீதை யென்னும்
பெண்ணரசைக் கவர்ந்தெடுத்துப் போயினான்
      முறைபிறழு மவனை யின்னே
நண்ணலரும் பறந்தலையிற் கிளையோடு
      முடிக்கவரம் நல்கு கென்றான். - 25



1082 - எனப்புகலச் சிவபெருமான் திருவருள்கூர்ந்
      தெமக்குநீ யின்று தொட்டு
மனக்கினிய னாயுலகில் வீரரா
      கவனெனும்பேர் மருவி வாழ்வாய்
உனக்கிகலி எதிர்ந்தோர்கள் எனைத்துணைய
      ரேனுமவ ருடையக் காண்டி
பனித்தநறுந் தொடையோயென் றருள்செய்து
      பாசுபதப் படையு நல்கி - 26



1083 - முள்ளரைக்காம் பணிமுளரிப் பொகுட்டணையோன்
      தனிப்படையும் முரன்று மாக்கள்
கொள்ளையிடு நறைத்துளவோன் படையுமவர்
      தமைக்கொண்டு கொடுப்பித் தேனைக்
கள்ளவிழ்தார்க் கடவுளர்தம் படைபிறவும்
      நல்குவித்துக் கருணை கூர்ந்து
நள்ளலரைப் பொடிபடுக்கும் பெருவரமு
      மளித்தருளி நவிலு கிற்பான். - 27



1084 - கவற்றிநெடும் பகைதுரக்கு மிவையுனக்குக்
      கருணையினா லளித்தேங் கண்டாய்
இவற்றினொடு மிளவலொடும் கிட்கிந்தை
      யிடத்தமர்சுக் கிரீபன்சேனை
அவற்றொடும்போய்ப் பரவைகடந் திராவணனைக்
      கிளையோடு மறுத்து வீரஞ்
சுவற்றியபின் சீதையொடும் மீண்டரசு
      புரிந்துகலி துரந்து வாழ்வாய் - 28



1085 - என்றரு ளெதிரிறைஞ்சி யிராகவன்மற்
      றிதுவொன்று வினாத லுற்றான்
அன்றினார் புரமெரித்தோய் குறுமுனிவ
      னாருயிர்கட் காண்மை பெண்மை
யொன்றுமிலை யாக்கையெலா முடன்பிறந்த
      வாகுமென வுரைத்தல் செய்தான்
மன்றவெனக் கவைமுழுதுந் தேறவிரித்
      தருளென்று வணங்கி வேண்ட - 29



1086 - வேதாந்த நிலையனைத்து மவன்தெளிய
      விரித்துரைத்து வரங்கள் நல்கிக்
காதார்ந்த குழையுமையா ளுடனாக
      விலிங்கத்துட் கரந்தா னெங்கோன்
நாதாந்தப் பரஞ்சுடராம் இவ்விலிங்கந்
      தனைத்தொழுது நயந்தோ ரெல்லாம்
கோதார்ந்த பகைவென்று பெருஞ்செல்வ
      மெய்தியருள் கூடு வாரால். - 30



1087 - கற்கீச வரலாறு
எண்சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
தகைபெருமிக் கடிவரைப்பின் தென்பால் மண்ணித்
      தடங்கரையில் கற்கீசத் தலமா மங்கண்
உகமுடிவில் கயவர்தமை யழிப்ப மாயோ
      னுயர்பிருகு சாபத்தால் கற்கி யாகி
இகழருஞ்சீர்க் காஞ்சியில்வந் திலிங்கந்
      தாபித் தினிதேத்தி எண்ணிலரும் வரங்கள் பெற்றான்
புகழுறுமவ் விலிங்கத்தைத் தொழுது மண்ணிப்
      புனலாடு மவர்பெறுவார் போகம் வீடு - 31

ஆகத் திருவிருத்தம் 1087
---------

31. பலபத்திர ராமேசப்படலம் (1088-1105)

எண்சீர்க் கழி நெடிலாசிரிய விருத்தம்



1088 - பகலோனைப் பல்லுகுத்து மதியைத் தேய்த்துப்
      படைவேளைப் பொடிபடுத்த பழையோ னென்றுந்
திகழ்வீர ராகவேச் சரத்தி னோடு
      திருத்தகுகற் கீச்சரமும் புகன்றா மிப்பால்
புகழுறுகற் கீச்சரத்தின் மேற்பால் கண்டோர்
      பொருவலித்திண் பகட்டூர்தி யுடையக் காணும்
நிகழ்பலபத் திரராமேச் சரமென் றோது
      நீடுதிருத் தானவளம் பாட லுற்றாம் - 1



1089 - கலிவிருத்தம்
மண்ணின் மிக்கு வயங்கு துவரைவாழ்
கண்ணன் முன்வரு காலை அலப்படை
அண்ண லாம்பல பத்திர வாண்டகை
பண்ணு வெஞ்சமர்ப் பாரதம் மூண்டநாள் - 2



1090 - கார்த்த டக்கை கடும்புசெய் கைதவப்
போர்த்தொ ழிற்குப்பொறாத மனத்தனாய்த்
தீர்த்த யாத்திரை செய்யத் தொடங்கினான்
ஏர்த்த வாணி நதிக்கரை எய்தினான் - 3



1091 - அங்கண் முப்புரம் அட்ட பிரான்றளி
எங்கு முள்ளன நோக்கி யிறைஞ்சியத்
துங்க வைப்பினில் தொக்க முனிவரர்
தங்கள் சேவடி தாழ்ந்து வினாவுவான் - 4



1092 - ஈசன் வைகும் இடங்கள் யெவையெவை
ஆசின் றோங்கும் அவற்றுளும் மேலதாந்
தேசின் மிக்க திருநகர் யாவது
பேசு கென்ன முனிவரர் பேசுவார் - 5



1093 - பருவ ரைத்தோட் பரதன் வருடமே
கரும பூமி யெனப்படுங் காணது
மருவு மெவ்வுல கத்தினும் மாண்டதாம்
திரும லர்ப்பனந் தேந்தொடை மார்பனே
பரதன் வருடம் - பாரதவர்ஷம், பரதகண்டம் - 6



1094 - கரும பூமி வரைப்பிற் கடவுளர்
மருவி டங்கள் சிறந்தன மாட்சியோய்
அருள்வி ளைக்கு மவற்றினும் மேலவாம்
தரும சக்கர பாணி தலங்களே. - 7



1095 - அவற்றின் மிக்கன மானிட ராக்கிய
சிவத்த லங்கள் கடவுளர் செய்தன
அவற்றின் மேலன வாகுஞ் சயம்புவாம்
சிவத்த லங்கள் அவற்றின் சிறந்தன - 8



1096 - சயம்பு வைகுந் தலங்களுள் மிக்கவாம்
வியந்தெ டுத்து விளம்பப் படுமவை
நயந்த வங்கவற் றுள்ளும்நற் காசிமிக்
குயர்ந்த தன்னதிற் காஞ்சி உயர்ந்ததே - 9



1097 - ஓத காஞ்சிக் குயர்ந்ததும் ஒப்பதும்
பூத லத்திடை யில்லை புகலுமம்
மாத லத்தி னுகத்தின் வருத்தமும்
பாத கப்பய னும்பட ராவரோ - 10



1098 - பிறந்து ளோர்கள் வதியப் பெறுநரங்
கிறந்து ளோருளத் தெண்ணுநர் யாவரும்
அறந்த ழைக்குமே கம்ப ரருளினாற்
சிறந்த முத்தி யுறுவது தேற்றமே. - 11



1099 - மேற்படி வேறு
என்றறி வுறுத்திய வியல்பின் மாதவர்
மன்றலம் பூங்கழல் வணங்கி யாதவன்
அன்றவர் ஏவலிற் காஞ்சி யண்மியங்
கொன்றிய வளனெலா முவந்து நோக்கினான் - 12



1100 - தெறுமப் படைச்சிவ தீர்த்தம் யாவையும்
முறைமையின் ஆடினான் முரசு கண்படா
இறையவன் கோயில்கள் எவையும் போற்றிவண்
டறைபொழி லேகம்ப மருச்சித் தேத்தினான் - 13



1101 - அந்நகர் வயினமர்ந் தருளுஞ் சீருப
மன்னிய னிணையடி வணங்கித் தொண்டுபூண்
டுன்னருந் திருச்சிவ தீக்கை யுற்றனன்
தன்னுடைப் பெயரினோர் இலிங்கம் தாபித்தான் - 14



1102 - உண்ணிறை காதலி னருச்சித் தோகையால்
பண்ணிசை மொழிகளிற் பழிச்சு மேல்வையின்
கண்ணுதற் சிவபிரான் கருணை கூர்ந்தெதிர்
வண்ணவர் தொழவிடை மீது தோன்றியே - 15



1103 - வேண்டுவ கூறுகென் றருள மெய்யெலாம்
பூண்டபே ருவகையின் புளகம் போர்த்தனன்
தாண்டவம் நவிற்றுநின் சரணில் ஏழையேற்
காண்டகை யிடையறா வன்பு நல்குதி - 16



1104 - இச்சிவ லிங்கத்தின் இமய மாதொடு
நிச்சலு மினிதமர்ந் தருளி நின்னடி
நச்சினோர்க் கிருமையும் நல்கு வாயென
அச்செயல் முழுவதும் அருளி நீங்கினான் - 17



1105 - காருடைப் பளிக்குருக் கலப்பை வான்படைத்
தாருடைப் போந்தினான் தாபித் தேத்திய
சீருடை யிலிங்கத்தைத் தெரிசித் தோரெலாம்
ஏருடைக் கைலையி னினிது வாழ்வரால் - 18

ஆகத் திருவிருத்தம் - 1105
-------

32. வன்மீகநாதப் படலம் (1106-1124)

கலிநிலைத்துறை



1106 - தேன்தாழ் பொலம்பூங் கடுக்கைச் செழுந்தார் விரைக்கின்றதோள்
வான்தாழ் மிடற்றண்ணல் வைகுற்ற பலபத்திர ரஞ்சொற்றனம்
மீன்தாழ் தடஞ்சூழ் அதன்பச்சி மத்திக்கின் விண்ணாட்டவர்
கோன்தாழ் நிலைபெற்ற வன்மீக நாதத்தின் இயல்கூறுவாம் - 1



1107 - திருமால் தலையிழந்த வரலாறு
புத்தேளிர் முன்னாள் ஒருங்கே குழீஇக்கொண்டு புகழெய்துவான்
முத்தீ வளர்த்தோர் மகம்வேட்க லுற்றார்கள் மொழிகின்றனர்
இத்தால் வருங்கீர்த்தி யெல்லாம் நமக்கும் பொதுத்தானெனக்
கொத்தார் மலர்க்கூந்தல் பங்கன்துணைத்தாள் குறிக்கொண்டரோ - 2



1108 - குருக்கேத் திரத்தே மகஞ்செய்யும் ஏல்வைக்
      கொழுங்கொன்றைவெள்
ளெருக்கோ டணைக்குஞ் சடைச்செம்ம
      லார்தம்மின் அருள்கூர்தலால்
உருக்கூர் பளிக்குப் பறம்பிற்
      பெருங்கீர்த்தி யுண்டாதலும்
தருக்கான் முகுந்தன் கவர்ந்தான்
      நடந்தான் தடுப்பக்கொடான்
தருக்கான் - செருக்கினால். - 3



1109 - ஓடுந் திறங்கண்டு விண்ணோர்
      தொடர்ந்தெய்த லுற்றாரவன்
பீடொன்று வில்லம்பு கைக்கொண்டு
      வெம்பூசல் பெரிதாற்றுபு
நீடும்பர் தம்மைப் புறங்கண்டு
      பின்நீ ளிடைச்சென்றுநின்
றீடின்றி யெல்லீரும் ஒருவேற் குடைந்தீர்க
      ளெனநக்கனன் - 4



1110 - நக்கான் முகத்தா லவன்தேசு முற்றும்
      நறுஞ்சாமையாய்
அக்காலை நீங்குற்ற வாற்றா லடல்விற்
      கழுத்தூன்றுபு
மைக்காள மன்னான் நெடும்போது
      வாளாது நின்றான்குண
திக்காளி யன்னான்றன் நிலைகண்டு
      புகழ்வௌளவு திறமெண்ணினான் - 5



1111 - கச்சிப் பதிக்கண் விரைந்தெய்தி யங்கண்
      கடுக்கைப்பிரான்
இச்சித்த கயிலாய நிருதித் திசைக்க
      ணிலிங்கந்நிறீஇ
நச்சித்தொ ழுங்காலை யெங்கோ னணைந்தென்னை
      நவில்கென்றலும்
பச்சைத் துழாயண்ணல் கவர்கீர்த்தி
      விண்ணோர் பெறப்பாலியாய் - 6



1112 - என்னா நவின்றேத்து சசிகேள்வ னுக்கெம்பி
      ரானோதுவான்
வன்மீக நாப்பண் சிறுச்செல் லுருக்கொண்டு
      வார்வில்லுடை
அந்நா ணறத்தின்று பின்கீர்த்தி கொள்கென்ன
      வருள்செய்தலும்
பொன்நாடர் கோமானும் விடைகொண்டு
      மீண்டான் பொருக்கென்றரோ - 7



1113 - அவ்வாறு புற்றிற் கிளைத்தெய்தி யந்நா ணறத்தின்றுழிப்
பைவாய்ப் பணிப்பாய லான்சென்னி யறுபட்டு வீழ்ந்தவ்விடம்
இவ்வாய்மை யாற்சின்ன மாகேச வத்தானம் என்றாயதால்
செவ்வே குறைச்சென்னி யாறங்கணோடுந் திருத்தக்கதே - 8



1114 - திருமால் தலை பெற்ற வரலாறு
மேற்படி.வேறு
ஆய காலையி லவன்புடை நின்று மப்புகழைப்
பாய விண்ணவர் கவர்ந்துகொண் டோகையிற் படர்ந்தார்
மாயி ரும்புவி மிசைவள ரிருபிறப் பாளர்க்
கேயு மெச்சனாம் மாயவ னின்மையி னுயங்கி
எச்சன் - யக்ஞன், யாகவடிவினன். - 9



1115 - மீட்டு மெய்தினன் காஞ்சியை விதியுளி வழிபட்
டீட்டு மன்பினுக் கெம்பிரா னெதிரெழுந் தருளப்
பாட்டி சைப்பழ மறைகளாற் பரசினன் நவில்வான்
தோட்ட லர்க்குழற் சசிமுலை திளைத்ததோள் குரிசில் - 10



1116 - கலிவிருத்தம்
அறுபதம் முரன்றிசை முழக்கு மாயிதழ்
நறுமலர்க் கடுக்கைசூழ் சடில நாயக
எறுழ்வலிச் சிலையினா லெச்ச னாகிய
சிறுமலர்த் துளாவினான் சென்னி யற்றதால் - 11



1117 - உறப்புறு மெங்களுக் குதவு முண்டியும்
மறத்தொழில் பயிலிய மானர்க் கேன்றவான்
துறக்கமு மில்லையாய் விட்ட துட்கென
இறத்தலி னெச்சனிவ் வுலகி னெம்பிரான்
உறப்பு -நெருக்கம். - 12



1118 - ஆதலி னெச்சனுக் களித்தி சென்னியென்
றோதினன் வேண்டலு முரைத்தல் மேயினான்
மாதர்வெண் குழச்சிறு மதிக்கொ ழுந்தினைப்
போதொடு மிலைச்சிய சடிலப் புங்கவன் - 13



1119 - எம்புடை வரம்பெறு மிரும ருத்துவ
உம்பரி னவன்தலை யொன்றிக் கூடுக
நம்புமிவ் விருவரும் நந்தம் ஆனையால்
பம்பிய வேள்வியில் பாகம் எய்துக
இரு மருத்துவ உம்பர் - வைத்திய தேவர்கள் இருவர், அசுவினி தேவர்கள். - 14



1120 - என்றருள் மழுவலான் சரண மேத்திமற்
றொன்றிது வேண்டுவான் உடைய நாதனே
மன்றநின் னருளினால் புற்றின் வாயெழூஉத்
தின்றுநாணரச்செயுந் திறல்பெற் றேனரோ - 15



1121 - ஆதலின் வெவ்வினைத் தொடக்க றுக்குமிம்
மேதகு வரைப்புவன் மீக நாதமென்
றோதவும் கண்டவர் பிறவி யோவவும்
ஈதிநீ வரமென விடையி னேந்தலும். - 16



1122 - தந்தனம் வரமெனச் சாற்றி நீங்கினான்
இந்திரன் மீண்டன னிரும ருத்துவத்
தந்திரத் தலைவரா லெச்சன் றன்சிரம்
முந்துபோற் பொருத்தலும் முளரிக் கண்ணினான் - 17



1123 - தெய்வத்தின் வலியினாற் சென்னி பெற்றெழூஉக்
கொவ்வைச்செவ் வாயுமை கூறன் தாள்தொழு
தவ்வத்த னாணையா லவியின் பாகமங்
குய்வித்தோர்க் கமைத்துத்த னுலகம் புக்கனன். - 18



1124 - இகழரு முகுந்தனே இந்த வாறிழி
தகவுற விடும்பையில் தங்குநீர்மையால்
உகலருஞ் செல்வத்தை உடம்பை யல்லது
புகழினை விரும்பலும் போதத் துன்பமே. - 19

ஆகத் திருவிருத்தம் 1124
----

33. வயிரவேசப் படலம் (1125 -1162)

கலிவிருத்தம்



1125 - வயிர வாளினான் வணங்கி வெந்துயர்
வயிரம் மாற்றும்வன் மீகம் ஓதினாம்
வயிர மாடமற் றதற்குத் தென்திசை
வயிர வேச்சர மரபி யம்புவாம் - 1



1126 - பிரமன் செருக்கு
வடவ ரைத்தலை முஞ்ச மானெனும்
தடநெ டுங்கிரி தன்னி டைச்சிலர்
படிம வுண்டியர் பாங்கின் நோற்றுழி
அடல னப்பிரா னருளி னெய்தினான் - 2



1127 - வதன மைந்தொடும் வந்து தோன்றினான்
பதம லர்த்துணை பணிந்தி றைஞ்சினார்
துதிமு ழக்கினாற் சூழ்ந்து கைதொழூஉக்
கதம றுத்தவ ரிதுக டாயினார். - 3



1128 - இலகு மிச்சகம் யார்மு தற்றுமன்
உலகெ வன்புடை யுயிர்த்தொ டுங்கிடும்?
பலப சுக்களின் பாசம் நீத்தருள்
தலைவன் யாரிது சாற்று கென்றனர். - 4



1129 - ஐம்மு கத்தயன் அனைய காலையின்
மம்மர் நெஞ்சினான் மயங்கிக் கூறுவான்
இம்ம றைப்பொருள் உஆரு முய்வகை
நும்ம னக்கொள நுவலக் கேண்மினோ - 5



1130 - உலகி னுக்கியான் ஒருவ னேயிறை
உலக மென்கணே யுதித்தொ டுங்கிடும்
உலகெ லாமெனை வழிபட் டும்பர்மேல்
உலகி னைத்தலைப் படுங்க ளுண்மையே - 6



1131 - வேதங்கள் உரைத்தல்
கலிநிலைத்துறை
என்றான் விரிஞ்சன் அதுகாலையில் வேத மெல்லாம்
முன்றோன்றி யங்கண் மொழிகுற்றன முண்ட கத்தின்
வென்றோய் புராணம் பலசாத்திரம் வேதம் மற்றும்
குன்றான்ற வில்லான் றனையே முதலென்று கூறும். - 7



1132 - அவனேமறு வற்ற பரம்பிர மம்பு ராணன்
அவனேமுழு துந்தரு காரணம் ஆங்கெ வர்க்கும்
அவனே இறைவன் தொழுவார்க்கருள் வீட ளிப்போன்
அவனேயென ஓதிவெவ் வேறு முரைப்ப அங்கண் - 8



1133 - இருக்கு வேதங் கூறல்
எச்சன் றனக்கு மிமையோர்க்குமெவ் வேதி யர்க்கும்
அச்சங் கரனே அரசன்விசு வாதி கன்சீர்
நச்சுமுனை ஈன்றருட் பார்வையின் நோக்கி நல்கும்
மெய்ச்சித்துரு என்றறி என்ற திருக்கு வேதம் - 9



1134 - யசுர் வேதங் கூறல்
தன்கூற்றில் வருங்கண நாதர் தடுக்க லாற்றாக்
கொன்கூர்சர பாதிய ரால்வயங் கூறும் விண்ணோர்
வன்காழ்வலி செற்றவன் யாரவ னேம திக்கு
நன்காரண னேதென்று நவின்ற தடுத்த வேதம் - 10



1135 - சாமவேதங் கூறல்
தோலாவவை நாப்பண் அடைந்து துரும்பு நட்டு
மாலாதி விண்ணோர் வலிமுற்றவும் மாற்ற வல்லோன்
ஆலாலம் உண்டோன் அவனேயகி லங்களுக்கு
மேலாய வேதுஎன விண்டது சாம வேதம் - 11



1136 - அதர்வண வேதங் கூறல்
வளிதாழ் விசும்பைப் பசுந்தோலிற் சுருட்ட வல்லோர்
உளரேல்புடை வீங்கி யெழுந்து திரண்டு ருண்ட
இளவெம்முலை பங்கனை யன்றியும் இன்ப முத்தி
அளவிற்பெற லாமென விண்ட ததர்வ வேதம் - 12



1137 - முனிவோரெதிர் அந்தணன் வேதம் மொழிந்த கேட்டுத்
தனிநாயகன் மாயையின் வெகுண்டு சாற்றும்
சினநீடு தமோகுண சீலனுருத்தி ரன்றான்
மனமோடுரை செல்லரு நிட்களம் வான்பிரமம் - 13



1138 - பிரணவம் உரைத்தல்
சால்பானுயர் ஓமென் மொழிப்பொருள் சம்பு வென்றல்
ஏலாதென வம்மனு வேவடி வெய்தி வந்து
மாலாலுரை செய்தனை நீகம லப்பொ குட்டின்
மேலாயிது கேண்மதி யென்றுமுன் நின்று சொல்லும். - 14



1139 - வேதத்தலை யிற்புக லுற்றுயர் வேத ஈற்றும்
போதச்சுர மாய்நிறு வப்படு பொற்பி னேன்யான்
மாதர்ப்பகு திக்குள் அடங்கி வயங்கி னேற்கும்
ஆதிப்பரம் யாரவ னாகும் மகேச னம்மா - 15



1139 - r> எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
என்றிது விளம்பும் பிரணவந் தனையும்
      இகழ்ந்துதன் பெருமையே வியப்ப
மன்றலந் துளவோன் ஆயிடைத் தோன்றி
      மன்றயான் கருத்தனென் றுரைத்தான்
குன்றருங் கொடுநோய் ஆணவக் குறும்பாற்
      கோட்படு மிருவரும் இவ்வா
றொன்றிய செருக்கான் மீமிசை யிகலி யோவறப்
      பிணங்குமவ் வேல்வை - 16



1140 - வயிரவ சம்பவம் - பிரமன் சிரமிழத்தல்
அலர்ந்தசெங் கமல நிகரிணை விழியும்
      அதுமுகிழ்த் தனையதோர் விழியும்
மலர்ந்தபொன் நிறந்த கேசமும் முகரோ
      மங்களும் வடிவமுங் காட்டி
நலந்திகழ் இரவி மண்டிலத் துறையும்
      நாயகன் அனையது கண்டான்
சலந்தவிர்த் தருள்வான் உருகெழத் தோன்றித்
      தமனியக் கிரியென நின்றான் - 17



1141 - காண்டலும் நெடியோன் நடுங்கிநீத் தகன்றான்
      கமல நாண்மலர் மிசைக்கடவுள்
ஈண்டையென் புதல்வா வருகென விளிப்ப
      வெகுண்டரு ளெம்பிரா னுருவின்
ஆண்டுவந் துதித்த வயிரவப் புத்தேள்
      அயன்மிசைச் செல்வுழி அயனும்
மாண்டகு பிரமப் படையெதிர் விடுத்தான்
      வந்ததத் தடுப்பரும் படையே. - 18



1142 - வருபடை வேகக் காற்றினின் முரிய விரைந்துசெல்
      வயிரவப் புத்தேள்
திருமலர்க் குரிசில் பழித்திடும் அஞ்சாஞ்
      சிரத்தினை யுகிரினாற் கொய்தான்
பெருவிறல் உயிர்போய் விழுந்தபின் மீளப்
      பிஞ்ஞகன் அருளினால் உய்ந்து
மருள்வலி நீங்கி யெழுந்தனன் மறையோன்
      வள்ளலை வணங்கிநின் றேத்தும் - 19



1143 - நான்முகன் முறையிட்டு வரம்பெறல்
விளைநறை யுகுக்குங் கமலமென் பொகுட்டு
      மேவரு மெனையெடுத் தாண்ட
களைகணே ஆவித் துணைவனே சருமக்
      கலிங்கனே பிரமனே இருகால்
வளைதரு பினாக பாணியே யுனக்கு
      நெய்யவி மடுத்துநல் லோமம்
உளைவறப் புரிகேம் உலப்பறும் வாழ்நாள்
      உதவிமற் றெந்தமைக் காக்க - 20



1144 - கரைபொரு திரங்கி வெண்டிரை சுருட்டுங்
      கருங்கடல் புடையுடுத் தகன்ற
தரையொடு விசும்பின் நள்ளிடைப் போந்த
      தழல்நிறச் சுடரெறி காந்திக்
குரைபுனல் மோலிக் குழகனே தறுகண்
      கொடுஞ்சினக் கடுந்தொழிற் பகட்டு
விரைசெலற் கூற்றின் அடுதிறற் பாச
      மிடலறத் துணித்தெமைக் காக்க - 21



1145 - உலகெலாம் விரியும் ஆதிகா லத்தின்
      ஒருவனே யாகிநின் றுள்ளாய்
பலதிறப் புவன நாயகர் தம்மைப் பாற்படப்
      பயந்தளித் தருள்வோய்
மலர்தலை உலகம் மீளவந் தொடுங்க
      மன்னிவீற் றிருந்தருள் முதலே
அலகிலா வருளான் நெய்யவி மிசைந்தீண்
      டாயுளை அளித்தெமைக் காக்க - 22



1146 - சிறுவிதி மகவாய் முன்வரும் பிராட்டி
      யம்பிகை சீரி லக்குமிகோ
மறுவறும் அகில காரணி மலையான்
      மகளெனப் பெயரிய தலைவி
நறுமலர்க் கடுக்கைத் தொடைய லெம்பெருமான்
      நலங்கெழு சத்தியே வினைமா
சறுமுறை யிருதாள் வழிபடு கின்றேம்
      ஆயுளை யளித்தெமைக் காக்க - 23



1147 - அகிலமீன் றெடுத்த இருமுது குரவீர்
      அடியிணை போற்றி யென்றேத்து
நகுமலர்ப் பதுமத் தவிசினோன் துதிக்கு
      நயந்துளங் கருணைகூர்ந் தருளி
முகிழ்முலை யொருபால் மணந்துவீற் றிருந்து
      முரண்கெடக் கூற்றுயிர் குடித்த
பகையடு கணிச்சி யாதியம் பகவன்
      பிரமனைப் பார்த்திது பகரும். - 24



1148 - அறுசீர்க் கழி நெடிலாசிரிய விருத்தம்
இன்று தொட்டுநீ நான்முக னாகியெம்
      மாணையிற் பிறழாமே
நன்று வாழ்தியால் வேட்டது நவில்கென
      நாயினேன் உய்ந்தேனிங்
கொன்று நின்னடிக் கன்புதந் தடியனேன்
      உஞற்றிய பிழையெல்லாம்
மன்ற நீபொறுத் தருளெனத் திசைமுகன்
      வேண்டலும் வரமீந்து - 25



1149 - வயிரவர் வெற்றிப் படர்ச்சி
கூர்த்த சூலமுங் கபாலமுங் கொண்டு
      கைதொழு தொருபுடை நிற்கும்
சூர்த்த நோக்குடை வயிரவத்தோன்
      றலைநோக் கினனிது சொல்வான்
கார்த்த மேனியோய் வயிரவ காலன்நீ
      கலவி கரணன் சீர்சால்
வார்த்தை ழூழ்பெல விகரணன்
      பெலப்பிர மதனுமா கின்றாய் - 26



1150 - சறுவ பூதைக தமனனீ யெம்முடைத்
      தனையர்கள் தமின்மூத்த
சிறுவ னேயெனத் திருவருள் செய்துநீ
      திறற்கணம் புடைசூழ
வெறிம லர்த்துழாய்ப் பண்ணவன் முதலிய
      விண்ணவர் உலகெல்லாம்
குறுகி வார்கறைப் பிச்சையேற்
      றவர்மனக் கொடுஞ்செருக் கறமாற்றி - 27



1151 - விதியைப் பற்றுமிம் முனிவரர் செருக்கையும்
      வீடுமென் றருள்கூரும்
பதியைத் தாழ்ந்தனன் விடைகொடு வயிரவப்
      பண்ணவன் படர்குற்றான்
மதியக் கீற்றணி யெம்பிரான் மறைந்தனன்
      வார்கழல் தொழுதேத்தி
அதிர்வின் தீர்ந்திடும் மலரவன் முதலியோர்
      அவரவர் இடம்புக்கார். - 28



1152 - உட்கத் தோன்றிய வயிரவன் முன்னுற
      நெடியவன் உலகுற்றான்
தட்கச் சென்றெதிர் வாயிலோர்த் துரந்தனன்
      விடுவச் சேனனைத் தாக்கிக்
கொட்கச் சூலத்தின் நுதியினிற் கோத்தனன்
      குறுகினன் வட்காரை
வட்கப் போர்புரி மாயவன் இருக்கையுள்
      மதுகையின் நிகரில்லான் - 29



1153 - பிச்சை தேரிய வருஞ்செயல் கேட்டனன்
      பெட்பொடும் விரைந்தெய்திப்
பச்சை மேனியோன் மனைவியர் இருவரும்
      பாங்குற வெதிர்கொண்டு
செச்சை நாண்மலர்த் திருவடி வணங்கினன்
      செம்புனற் பலியாரும்
மெச்ச நெற்றியின் நரம்பினைப் பிடுங்குபு
      விட்டனன் கபாலத்துள் - 30



1155 - தாரை யாகிநூ றாயிரம் ஆண்டள
      வொழுகியுந் தகுநெய்த்தோர்
ஈர வெண்டலைக் கபாலத்தை நிறைத்தில
      திரத்தமுற் றறலோடும்
வீர மாதவன் நிலமிசை மூர்ச்சித்து
      வீழ்ந்தனன் அதுகாலை
வார முற்றருள் வயிரவன் திருக்கையால்
      வருடினன் மயல்தீர்ந்தான் - 31



1156 - அயர்வு யிர்த்தனன் எழுந்தனன் அஞ்சலி
      அளித்தனன் குனிசார்ங்கன்
வயிர வப்பிரான் திருவடிப் பத்தியும்
      மற்றவன் தன்மாட்டுப்
பயிலும் இன்னருட் கருணையும் வேண்டினான்
      பரிந்தவற் கவைநல்கிப்
பெயர்பு மீண்டனன் பிச்சைதேர்ந் தருளிய
      பிறாண்டும் எய்தினன் மாதோ - 32



1157 - உலக மெங்கணுந் திரிந்துநெய்த் தோர்ப்பலி
      யேற்பவ னெனெவொன்னார்
வலமி சைந்தவேற் கடவுளர் தருக்கற
      வாங்கினன் முனிச்செல்வர்
குலம டப்பிடி யந்நலா ரையுங்குறு
      நகையினின் மயல்பூட்டி
நிலவ ரைப்பினிற் காஞ்சியை யணுகினன்
      நெடுந்தகை நெறியானே - 33



1158 - வயிரவர் வழிபாடு
கறைக்க பாலத்தை யொருவயின் நிறுவினன்
      சேனைகா வலன்றன்னை
இறைத்த செம்புனற் சூலத்தின் நுதியினின்
      றிழிச்சுபு மால்வேண்ட
நிரைந்த பேரருட் கருணையால் உதவினன்
      நிகழ்ந்தனன் பெயரானே
மறைக்கு நாயகன் வயிரவேச் சரன்றனை
      நிறீஇயினன் வழிபட்டான் - 34



1159 - ஐய னேமறை முடிமிசை நடித்தருள்
      அமலனே யெனையாண்ட
மெய்ய னேயெனப் பழிச்சிநெக் குருகினன்
      விளங்கியிவ் விலிங்கத்தே
தைய லோடினி தமர்ந்தருள் யானும்நின்
      சந்நிதி யெதிர்வைகி
உய்யு மாறருள் அடியனேன் செயத்தகும்
      உறுபணி யருளென்றான் - 35



1160 - வேண்டி நின்றிரந் துரைத்தலுங்
      கருணையான் மேவியிங் குறைகின்றேம்
ஈண்டு நீயெதிர் வைகியித் திருநகர்
      புரந்தினி தமர்வாயால்
காண்ட குங்கபா லத்தின்நெய்த் தோரைநின்
      கணங்களுக் கருளென்னாப்
பூண்ட பேரருள் வழங்கினன்
      எம்பிரான் வயிரவப் புத்தேளும் - 36



1161 - குருதி ஈர்ம்புனல் கணங்களுக் களித்தனன்
      குடிப்புழிச் சிலவேனும்
பருகு தற்குப்போ தாமைகண் டவனிமேற்
      பறந்தலைப் பெருவேந்தர்
செருவில் ஏற்றுயிர் மடிந்தவர் விண்மிசைத்
      திகழவங் கவர்செந்நீர்
இரண மண்டில வயிரவன் கணங்களுக்
      கினிதமைத் தருள்செய்தான் - 37



1162 - கயிர வத்தொழில் கவர்ந்தவாய் ஆய்ச்சியர் பாடியிற் கவர்ந்துண்ட
தயிர வற்கயர் வொழித்தருள் வயிரவத் தம்பிரான் தொழுதேத்தும்
வயிர வப்பெயர் ஈசனை வணங்குநர் அவமிருத் துவின்நீங்கிச்
செயிர வத்தைகள் முழுவதுங் கடந்துபோய்ச் சிவனடி நிழல்சேர்வார்.
கயிரவம் - செவ்வாம்பல். செயிரவத்தைகள் - குற்றநிலைகள். - 35
ஆகத்திருவிருத்தம் 1162
---------

34. விடுவச்சேனேசப் படலம் (1163-1193)

கலிநிலைத்துறை



1163 - போதணி பொங்கர் உடுத்ததண் கச்சிப் புரத்திடை
மாதர்வண் கோயில் வயிரவே சத்தை வகுத்தனம்
ஆதியும் அந்தமும் இல்லான் அமர்ந்தருள் அங்கதன்
மேதகு தென்பால் விடுவச்சே னேச்சரம் விள்ளுவாம்
பொங்கர் - சோலை - 1



1164 - விஷ்ணு சக்கரம் இழந்தயர்தல்
வெந்தொழில் தக்கனார் வேள்வி விளிந்தநாள் மாயவன்
சந்திர சேகரன் தாளிணை ஏத்தி விடைகொண்டே
அந்தண் விரசை கடந்துவை குந்தம் அடைந்தபின்
சுந்தரப் பொன்தவி சேறி இருந்திது சூழ்ந்தனன்.
விரசை என்பது வைகுந்தத்திற்கு இப்புறத்திலுள்ள ஓராறு.. - 2



1165 - மலைவறு காட்சி விடுவச்சே னன்முதல் மந்திரித்
தலைவர் தமக்கு நிகழ்ந்தது சாற்றிக் கவன்றனன்
குலவும் அரக்கர் அவுணரைப் போரிற் கொலைசெய்திவ்
வுலக முழுவது மோம்புதல் என்தொழி லாகுமால் - 3



1166 - ஏயு மலங்கரத் தின்றித் தொடங்கும் உழவன்போல்
ஆயுதங் கையின்றி எவ்வா றகிலம் புரப்பல்யான்
காய்கதிர் மண்டிலந் தோற்றுங் கடவுள்மா சக்கரம்
மாய்வரும் யாக்கைத் ததீசிய னால்வாய் மடிந்ததே
அலம் - ஏர். திருமால் ததீசி முனிவர்மேல் சக்கரம் ஏவிய வரலாற்றை மேலே இட்டசித்தீசப் படலத்திற் காண்க - 4



1167 - அறுசீரடியாசிரிய விருத்தம்
மதனுடைத்திண் சலந்தரனை உயிர்செகுப்பச்
      சிவபெருமான் வகுத்த சோதிச்
சுதரிசனப் படையன்னோன் தரப்பெற்றேன்
      அ·தின்று தக்கன் வேள்வி
சிதைவுசெயுந் திறல்வீர பத்திரன்மேல்
      விடுத்தலுமச் செல்வன் பூண்ட
கதமுறுவெண் டலையொன்று கவ்வியதால்
      இனிச்செய்யக் கடவ தென்னே. - 5



1168 - நஞ்சுபடு துளையெயிறு தனையிழந்த
      நாகத்தின் உயிர்ப்பும் ஒன்னார்
அஞ்சுதகத் தலைச்செல்லுங் கோடிழந்த
      கடாக்களிற்றின் அடலும் ஏற்றார்
நெஞ்சுருவப் பாயுமிரு மருப்பிழந்த
      விடையேற்றின் நெறிப்பும் கூர்வாய்
வஞ்சநெடும் படையிழந்த மதவீரன்
      வீறுமெவன் செய்யும் மாதோ
உயிர்ப்பு - சீறுதல். நெறிப்பு - நிமிர்ப்பு. வீறு - பெருமிதம் - 6



1169 - ஆழிகரத் துளதாயின் சிவனருளால்
      வியனுலகம் அளிப்பேன் அன்றிப்
பாழிவரைத் தடம்புயத்தீர் என்செய்வேன்
      எனக்கவன்று பரியுங்காலை
வாழிநெடும் பொலஞ்சிறைய புள்ளூர்தி
      தனக்கிரண்டாம் வடிவ மான
காழிகந்த பெருங்கீர்த்தி உலம்பொருதோட்
      கணைகழற்கால் விடுவச் சேனன்
பாழி - பெரிய. விடுவச்சேனனை விட்டுணுவின் இரண்டாம் வடிவமென்பர்.
இரண்டாம் வடிவம் என்பதை அபரம் என்றும் கூறுவர்.
அபரவிஷ்ணு என்றவாறு காழ் இகந்த - மனவயிரம் அற்ற - 7



1170 - வீரபத்திரர்பால் விடுவச்சேனன் செல்லல்
அன்றென்னை வயிரவனார் சூலத்தின்
      விடுவித்தே யருளும் நீலக்
குன்றன்னான் றனக்காழி கொணர்ந்தளித்துக்
      கடன்தீர்த்துக் கொள்வேன் இந்நாள்
என்றெண்ணி எழுந்திறைஞ்சி வயவீர
      பத்தி ரன்பால் யான்போ யின்னே
நன்றுள்ளம் மகிழ்வித்துக் கொடுவருவல்
      ஆழியென்று நவின்று போற்ற - 8



1171 - அங்கவனைக் கொண்டாடி விடைகொடுத்தான்
      திருமார்பன் அவனும் போந்து
புங்கவர்சூழ் வயவீரன் இருக்கைமுதற்
      கோபுரமுன் புக்க காலை
மங்கருஞ்சீர்ப் பானுகம்பன் முதலாய
      வாயில்கா வலர்கள் நோக்கிப்
பங்கமுற வெகுண்டெ ழுந்தார் அச்சுறுத்தார்
      அதுக்கினார் பழங்கண் நீட. - 9



1172 - பிறைசெய்த கரங்கொண்டு பிடர்பிடித்து
      நீளிடைக்கண் உந்தலோடும்
கறைசெய்த வேல்தானைக் காவலனாங்
      கிருந்தெண்ணிக் கவலை கூர்ந்தான்
முறைசெய்த முனிவோர்கள் அந்நெறியிற்
      செலநோக்கி முன்போய் நின்று
மிறைசெய்த செயலனைத்தும் தன்வரவும்
      ஆங்கவர்க்கு விளங்கக் கூறி - 10



1173 - விடுவச்சேனன் காஞ்சியை அடைந்து வழிபடல்
இனிச்செய்யுந் திறம்நீவிர் கூறுகெனத்
      தாபதரும் எண்ணி நோக்கிப்
பனித்துண்டம் மிலைந்தானைக் காஞ்சியினில்
      தாபித்துப் பரவிப் போற்றின்
மனத்தொன்றும் எண்ணமெலாம் பெறுவாயென்
      றியம்புதலும் மகிழ்ச்சி கூர்ந்து
கனித்தொண்டை வாயுமையாள் ஒருபாகன்
      திருக்காஞ்சி நகரஞ் சேர்ந்தான் - 11



1174 - அங்கடைந்து தன்பெயராற் சிவலிங்க
      மிருத்திமகிழ்ந் தருச்சித் தேத்திப்
பொங்குபெருங் காதலினால் இனியதவம்
      பூண்டிருந் தானாக அந்நாள்
வெங்கடுநேர் வியாக்கிரனும் அசகரனும்
      பஞ்சமேட் டிரனு மென்னும்
இங்கிவர்முத் தானவரும் வரப்பேற்றால்
      எவ்வுலகும் வருந்தச் செய்வார்
வியாக்கிரன் - புலி வடிவினன். அசகரன் - மலைப்பாம்பு வடிவினன்.
பஞ்சமேட்டிரன் - ஐந்து ஆண்குறிகளையுடையவன். தானவர் - அசுரர். - 12



1175 - அன்னோரைத் தெறுபாக்கு விண்ணாடர்
      விரிஞ்சனொடும் அளவளாவிப்
பொன்னாடை யுடையான்கைப் படையின்றி
      வறங்கூரும் புதுமை நோக்கி
என்னாத னிடத்தணுகி மகிழ்ந்திறைஞ்சி
      இயம்புதலும் இமயம் ஈன்ற
மின்னாளும் இடத்தானும் வயவீர பத்திரனை
      விடுத்தான் மன்னோ
தெறுபாக்கு - அழிக்க. என்+நாதன்= என்னாதன் - 13



1176 - அவனணுகித் தயித்தியர்கள் மூவரையும்
      எதிர்ந்துபொரு தழித்து வீட்டித்
தவம்நிறையுந் திருக்காஞ்சி வளநகர்க்கு
      நெறியானே சார்த லோடும்
சிவமுதலைத் தொழுதுறையும் முகுந்தனார்
      தஞ்சேனைத் தலைவன் ஆங்கே
கவலையெலாம் விண்டகல வயவீரன்
      றனையெளிதிற் காணப் பெற்றான். - 14



1177 - முயல்வுற்றும் அரிதாய திருக்காட்சி
      முயலாமே எய்தப் பெற்றான்
இயல்புற்ற பெருந்தவத்தீர் சிவபூசைப்
      பயனெவரே அளக்கற் பாலார்
பெயர்வுற்றுச் சென்றாடுந் தீர்த்தமெதிர்
      வந்தாடப் பெற்றோ னன்னான்
பயில்வுற்ற மகிழ்வோடும் வீழ்ந்திறஞ்சி
      மறைமொழியாற் பரச லுற்றான் - 15



1178 - நன்பார்நீர் தீவளிவான் உலகெங்கும்
      விராய்நின்ற நலமே போற்றி
முன்பாலும் தென்பாலும் பின்பாலும்
      வடபாலும் மேலும் மூவா
நின்பாரச் சிலைபோற்றி அன்பாளர்க்
      கன்பான நித்த போற்றி
வன்பாளர் தமைச்சீறும் வெம்புலிப்போத்
      தன்னானே என்று வாழ்த்தா - 16



1179 - திருவுள்ளங் களிசிறப்ப வேட்டதெவன்
      புகலென்னாச் செம்மல் கேட்பக்
கருவண்ணன் தமனானோன் கைகூப்பி
      நின்றியம்புங் கவுரிபாகன்
அருளுண்மை தெளியாத தக்கன்றன்
      வேள்வியைநீ அழித்த ஞான்று
தெருளின்றி அமரேற்று நெடுமாலுன்
      மிசைவிடுத்த திகிரி தன்னை - 17



1180 - அற்றவர்கட் கினியாயுன் திருமேனி
      மிசைப்பூண்ட அயன்க பாலம்
பற்றிவிழுங் கியதிந்நாள் அடியேனுக்
      களித்தியெனப் பகரக் கேளாச்
சொற்ற துநங் கரத்தில்லை கபாலத்தின்
      வாயுளதேல் துகளொன் றில்லாய்
மற்றதுவே தரக்கோடி யெத்திறத்தும்
      எனப்புகன்றான் வாகை வேலான் - 18



1181 - விடுவச்சேனன் விகடக் கூத்தாடுதல்
உரைத்தமொழி உளங்கொள்ளா இனிச்செய்வ
      தென்னேயென் றோர்ந்தான் யாருஞ்
சிரிக்கலுறக் காலிரண்டும் கரமிரண்டும்
      குஞ்சிதமாச் செய்து கொண்டு
வரித்தகழல் வீரனெதிர் வாய்நாசி
      விழியிணையை மாறி மாறிச்
சுரித்தசைத்து நடஞ்செய்தான் எவ்வமொடு
      பயங்காட்டி எயிறு தோன்ற
குஞ்சிதம் - வளைவு. சுரித்து - முறுக்கி.
எவ்வம் - துன்பம். எயிறு - பல் - 19



1182 - இவ்வண்ணம் உடல்கூனி வளைதந்துநெளிந்
      தொருவிகடம் இயற்ற நோக்கிச்
செவ்வண்ண வயவீரன் வறிதுநகை
      தோற்றுதலும் திரண்டோ ரெல்லாம்
மைவண்ணக் கடல்கிளர்ந்தா லெனநகைத்தார்
      அக்காலை மலர்மேல் வைகும்
அவ்வண்ணல் நகுபைங்கண் வெண்டலையும்
      அதுநோக்கிச் சிரித்த லோடும் - 20



1183 - போராழி அதன்வாயிற் கழிந்துபுவி
      மிசைவீழப் பொருக்கென் றங்கை
ஓரானை முகக்கடவுள் அதுகவர்ந்தங்
      கறியான்போன் றிருப்ப நோக்கிப்
பேராண்மைப் படைத்தலைவன் இனிச்செயலே
      தென்றழுங்கிப் பேதுற் றந்தச்
சீராளன் திருமுன்புங் கைகண்ட
      விகடநடஞ் செய்து வேண்ட - 21



1184 - விடுவச்சேனன் விநாயகரிடத்தில் சக்கரம் பெறுதல்
ஏக்கறவான் அவனியற்றும் விகடநடம்
      நெடும்போதெம் பெருமான் நோக்கி
மாக்கருணை சுரந்தருளி ஆழியவன்
      றனக்களித்தான் அறத்தான் மிக்கீர்
போக்கறுமிக் காரணத்தால் அன்றுமுதல்
      காஞ்சியினப் புழைக்கைத் தேவை
ஊக்கமுறுந் திறல்விகட சக்கரவி
      நாயகனென் றுலகங் கூறும்.
விடுவச்சேனன் சக்கரத்தை விட்டுணுவிடம் சேர்த்தல் - 22



1185 - கலிநிலைத்துறை
விகட சக்கர விநாயகன் அளித்தவத் திகிரி
அகம லர்ச்சியாற் பெற்றனன் மீண்டனன் அகிலம்
புகழும் மால்புரத் தெய்தினான் பொலம்புனை யாடைத்
தகவி னானடி இறைஞ்சியச் சக்கரம் ஈந்தான். - 23



1186 - கண்ட னன்பணிப் பாயலான் கவலைகள் முழுதும்
விண்ட னன்தழீஇக் கொண்டனன் மீமிசை வியப்புக்
கொண்ட னன்தன தமைச்சியல் பூண்டவக் குரிசிற்
கண்டர் போற்றுசே னாபதித் தலைமையன் றளித்தான் - 24



1187 - விடுவச்சேனன் விஷ்ணுவினிடத்தில் வரம் பெறல்
உருத்தி ரச்செயல் வீரபத் திரன்புடை உற்றுத்
திருத்த கும்படை பெற்றவா செப்புகென் றிசைக்குங்
கருத்த னுக்கவன் நிகழ்ந்தன யாவையுங் கரைந்தான்
அருத்தி கூர்படைக் கிறையவன் அச்சுதன் கேளா - 25



1188 - முறுவல் பூத்தனன் மொழியுமவ் விகடநா டகத்தை
உறுவர் ஏறனாய் எம்மெதிர் காட்டுகென் றுரைப்பத்
தெறுபெ ரும்படைக் கிறைவனுந் திருந்தவைக் களத்து
நறும லர்த்துழா யவனெதிர் நடித்தனன் அதனை - 26



1189 - நோக்கி யற்புதம் எய்தினன் மாயவன் நுவல்வான்
ஊக்கும் ஆற்றலோய் உள்ளமும் விழிகளும் உவகை
மீக்கொ ளப்புரி வியத்தகும் இப்பெரு விகடம்
பார்க்கில் யாவரே கழிபெரு மகிழ்ச்சியிற் படாதார் - 27



1190 - எமக்கு நன்மகிழ் வளிக்குமிக் கூத்தினை இதன்மேல்
நமக்கு முன்னுற நலங்கெழீஇ நடிக்கும்நம் அடியார்
தமக்கு வேட்டன வழங்குவேம் தழல்மணிக் கதிர்கள்
இமைக்குங் காஞ்சியின் வரதரா சப்பெயர் எம்முன். - 28



1191 - எவர்கள் இத்தனிக் கூத்தினை இயற்றுமார் வத்தார்
அவர்க ளேயெமக் கினியவர் சாலவென் றருளிப்
புவனம் ஏத்துமத் திகிரியை விதியுளிப் பூசித்
துவகை மீக்கொளக் கரமிசைக் கொண்டனன் உரைப்பான் - 29



1192 - முன்னை நாளுயர் கச்சியின் வயிரவ முதல்வன்
றன்னை வேண்டிநன் றிரந்துசூ லத்தலைக் கிடந்த
நின்னை யான்விடு வித்தனன் அதற்குநே ராக
இன்ன தாயகைம் மாறுநீ அளித்தனை யிந்நாள் - 30



1193 - அறுசீர்கழிநெடிலாசிரிய விருத்தம்
செய்ந்நன்றி யறிவோரும் அதன்பயனைப்
      பெறுவோரும் திரைநீர் வைப்பின்
நின்னன்றி யாருளரோ காஞ்சியில்நீ
      தொழுதேத்தும் இலிங்கம் போற்றி
உன்னன்பின் செயலிதனைக் கேட்டோர்கள்
      எம்முலகம் உறுக யென்னாத்
தன்னன்பின் கிழவோனைத் தழீஇக்கொண்டு
      மகிழ்ந்திருந்தான் சார்ங்க பாணி. - 31

ஆகத் திருவிருத்தம் 1193
-------

35. தக்கேசப் படலம் (1194-1270)

கலிநிலைத்துறை



1194 - அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
விரவினோர் தணக்க லாற்றா விடுவச்சே னேச்ச ரத்தின்
வரவினைத் தெரிந்த வாறு வகுத்தெடுத் துரைத்தேம் இப்பால்
இரவெரி யாடு மெம்மான் இனிதமர் அதன்கீழ்ப் பாங்கர்க்
கரவிலார்க் கருளுந் தக்கேச் சரத்தியல் கட்டு ரைப்பாம் - 1



1195 - தக்கன் மைந்தரை நாரதர் தவத்திற் செலுத்தல்
பொறிவரிச் சுரும்பு மூசப் புரிமுறுக் குடைந்து விள்ளுஞ்
செறியிதழ்ப் புழற்கால் கஞ்சத் திருமலர்ப் பொகுட்டு வாழ்க்கை
அறிவன தேவ லாற்றால் அடல்வலித் தக்கன் என்போன்
மறிவரு வரத்தாற் பல்லோர் மைந்தரைப் படைத்தான் மன்னோ - 2



1196 - அங்கவர் தக்க னேவ லாற்றினாற் படைப்பான் எண்ணித்
தங்களுள் முயலுங் காலைத் தந்திரிக் கருவிச் சால்பின்
நங்கையோர் பாகற் பேணும் நாரதன் அவர்பால் தோன்றி
இங்குநீர் உழக்குஞ் செய்கை என்னெனக் கடாவ அன்னோர் - 3



1197 - படைமினென் றெம்மைத் தாதை பணித்தனன்
      படைக்கும் ஆற்றல்
அடைவெமக் கருளிச் செய்யாய் ஐயவென் றிறுத்தார் கேளா
நடைநெறி பிறழா வாய்மை நாரதன் மகதி நல்யா
ழுடையவன் அனையர் தேறச் செவியறி வுறுக்க லுற்றான் - 4



1198 - ஐந்தொழில் நடாத்து முக்கண் ஐயனே உலகம் எல்லாம்
மைந்துறப் படைக்கின் றானால் மற்றும்நீர் உழந்தீ ராயின்
பந்தமே பயக்கும் பந்தப் படைப்பினாற் பயப்ப தென்னே
வெந்தளைப் பட்டோர் வேறு நிகளமும் விழைவ ரேயோ - 5



1199 - பிணிப்புறு நிகளம் நீக்கும் பெற்றியே எவரும் பெட்பர்
கணிப்பருந் தவத்தான் மிக்கீர் தெளிமினோ கருணை வெள்ள
மணிக்களத் திறைவன் பாதம் வழிபடல் ஒன்றே யன்றிப்
பணித்திடும் எவையும் தீய பந்தமே பயக்குங் கண்டீர் - 6



1200 - ஆருயிர்க் குறுதிப் பேறாம் அரும்பயன் எவற்றி னுள்ளுஞ்
சீரிய முத்தியொன்றே சிறந்ததாம் ஏனைப் பேறு
பேரிடர்ப் பால வாகு மாதலாற் பேசக் கேண்மின்
நாரியோர் பாகன் மேய கச்சிமா நகரம் நண்ணி - 7



1201 - சிவலிங்கம் நிறுவிப் போற்றித் திகழ்சிவ ஞானப் பேற்றால்
கவலும்பொய்ப் பிறவி மாசு கழுவிவீ டுறுமின் என்னா
நுவலுஞ்சீர் முனிவர் கோமான் நோன்கழல் இறைஞ்சி ஏத்தித்
தவலின்றத் தக்க னீன்றா ரத்தொழில் தலைநின் றுய்ந்தார் - 8



1202 - வினைவலித் தக்கன் கேளா வெய்துயிர்த் தழுங்கி வேறு
தனையரைப் படைத்தான் அன்னோர் தமக்குமம் முனிவ னெய்தி
இனையவா றியம்பி மீட்பக் காஞ்சியி னிலிங்கந் தாபித்
தனையவா றருச்சித் தேத்தி அவர்களும் முத்த ரானார் - 9



1203 - தக்கன் வேள்வி செய்யத் தொடங்கல்
தக்கனா ரிடருள் மூழ்கித் தழலெழ நோக்கி யென்றன்
மக்களைச் சிவன்பால் அன்பு மருவுறுத் துலக வாழ்க்கை
ஒக்கநீ கெடுத்தாய் மக்கள் மனையுனக் கின்மை யாக
முக்கணற் குரியாய் என்னா முனிவனைச் சபித்துப் பின்னர் - 10



1204 - கன்னியர் தமையே பெற்றான் முனிவனுங் கனன்று நோக்கி
நின்னுடைப் புதல்வ ரெல்லாம் நெறிச்செல விடுத்தேன் அற்றால்
என்னைமற் சபித்தாய் பேதைத் தக்கநீ யின்னே நெற்றித்
தன்னிடை விழித்த எம்மான் தண்டிக்கப் படுக என்றான் - 11



1205 - இவன்நிலை யிதுவாம் ஏனை இமையவர் தமைத்த தீசித்
தவமுனி சபித்தான் பார்ப்பான் தவறிலி தமியன் என்னை
அவமுறப் பொருதெல் லீரும் அகாரணத் தெதிர்த்தீர் நீயிர்
சிவபிரான் வெகுளித் தீக்கோட் படுகெனச் செயிர்த்து மேனாள் - 12



1206 - இருதிறத் தவர்க்கும் சாபம் பழுத்தவா றியம்பு கின்றாம்
கருவியாழ் முனிவன் சீறிக் கழறிப் பின்னர்த் தக்கன்
தெருமரு மயலின் மூழ்கிச் செருக்கினாற் புரமூன் றட்ட
ஒருவனை யன்றி வேள்வி உஞற்றுவான் தொடங்கி னானால் - 13



1207 - ததீசி முனிவர் தக்கனுக்கு உரைத்தல்
மருத்துவர் முனிவர் சித்தர் வசுக்களா தித்தர் மற்றை
உருத்திரர் அயன்மால் ஏனோர் யாவரும் உடங்கு சேரத்
திருத்தக விளித்து வேள்வி செய்வுழித் ததீசி மேலோன்
உருத்தனன் அவையை நோக்கித் தக்கனுக் குரைக்க லுற்றான் - 14



1208 - தக்கன் ததீசி முனிவருக்கு உரைத்தல்
அளித்தருள் பயக்கும் வேள்விக் கரசனாஞ் சிவனை ஈண்டு
விளித்திலை யெவன்கொல் என்று வினாதலும் தக்கன் சொல்லும்
இளிப்பரும் எச்சந் தன்னை எச்சத்தால் தொழுக என்னத்
தெளித்திடுஞ் சுருதி எச்சன் மாயவன் எனவுஞ் செப்பும் - 15



1209 - ஆதலின் எச்ச மூர்த்தி அச்சுதன் அவனே யன்றிப்
போதருந் தமோகு ணத்தின் உருத்திரன் ஈண்டுப் போதற்
கேதுவொன் றில்லைகாண்டி யென்றலும் முனிவன் நக்கு
நோதகும் அவையின் உள்ளார் யாரையும் நோக்கிச் சொல்வான்
எச்சம் -யக்ஞம், வேள்வி. - 16



1210 - ததீசி முனிவர் மறுமொழி கூறல்
எச்சத்தா லெச்ச மென்னும் மறைப்பொருள் இதுவோ கூறீர்
எச்சத்தின் வேறாம் ஏனைக் கருமங்கட் கெச்சம் போல
எச்சத்திற் குயர்ந்தோன் வெள்ளை யேற்றினான் எனுங்க ருத்தால்
எச்சச்சொல் லதனான் முக்கட் பகவனை இயம்பும் அங்கண் - 17



1211 - ஆதலின் எச்சந் தன்னால் அணங்கொரு பாகன் றன்னை
மாதவன் முதலாம் விண்ணோர் வணங்கினர் வழிபட் டுய்யப்
போதுவ ரென்ப தன்றே அம்மறைப் பொருளா மன்றி
ஏதமில் லெச்சந் தன்னால் தனைத்தொழு மென்ப தாமோ - 18



1212 - சகந்தனில் எவருந் தம்மின் உயர்ந்தவர் தமைப்பூ சிப்பர்
உகந்தவர்க் கன்றித் தம்மோ டொத்தவர் இழிந்தோர் தம்மை
அகந்தெறப் பூசை செய்வா ராருளார் விதியு மற்றே
மகந்தனக் கரசன் முக்கண் வள்ளலே என்னும் வேதம் - 19



1213 - மலர்தலை உலக மெல்லாம் வழிபடு கடவுள் என்றும்
அலைகடல் உயிர்த்த நஞ்சம் அமுதுசெய் தருளும் மேருச்
சிலையுடை முதலே என்றி யாரிது தெளியார் என்னாப்
பலர்புகழ் ததீசி மேலோன் பகர்ந்தனன் பகரக் கேட்டு - 20



1214 - ததீசி முனிவர் சபித்தல்
அவைக்களத் துறையும் பார்ப்பார் தருபொருட் காசை கூர்ந்து
கவர்த்தபுல் லறிவின் மான்று கடுந்தொழில் தக்கன் கூற்றே
நிவப்புறப் புகற லோடும் நெடுந்தகை மறுவில் காட்சித்
தவத்திறல் ததீசி சீறி விப்பிரர் தம்மை நோக்கி - 21



1215 - படுபொருள் வெ·கு நீராற் பார்ப்பனக் கடையர் காள்நீர்
நடுவிகந் துரைத்த வாற்றான் நடலைகூர் ஒழுக்கம் பூண்டு
கெடுநெறி பற்றிச் சைவ நிந்தையிற் கிளர்ச்சி கொண்டு
கொடுமுகக் கலியில் தோன்றிக் கலாய்த்தனீர் இடும்பை கூர்ந்து. - 22



1216 - வைதிகப் புறத்த ராகிச் சைவநூல் வழியைக் கைவிட்
டுய்தியில் புறநூல் பற்றி உலப்பரு மறையின் நிந்தை
ஐதெனப் புகன்று வேற்று மொழியினை யாத ரித்துப்
பொய்திகழ் நரகின் உய்க்கும் புண்டரம் பொலியக் கொண்டு - 23



1217 - எண்டிகழ் மறையீ றெல்லாம் இயம்பும்வெண் ணீற்று மும்மைப்
புண்டரம் அக்க மாலை சிவலிங்க பூசை தம்மின்
விண்டிடா வயிரங் கொண்டு திகிரியான் வெந்த புண்ணைத்
தண்டுசங் காழி கஞ்சக் குறிகளைத் தனுவில் தாங்கி - 24



1218 - அந்தணர் தமக்குத் தேவா மரனடி தாழாது தோளின்
வந்தவர் தமக்குத் தேவாம் மாயனைத் தழுவிப் பேணி
நிந்தனைக் குரிய ராகி நிலமிசைத் திரிக வாளா
நொந்துநீர் தழுவும் மாலும் நுங்களுக் கருள்செய் யானால் - 25



1219 - என்னவெங் கொடிய சாபம் இயம்பினான் சிதம்புத் தக்கன்
றன்னைமுன் செயிர்த்து நோக்கிச் சாற்றுவான் அச்ச மின்றிப்
பொன்னவிர் சடிலத் தேவை இகழ்ந்தனை பொறியி லாதாய்
நின்னுடைக் குலத்துக் கின்னே முடிபென நினைவிற் கோடி
சிதம்பு - கீழ்மை. - 26



1220 - வழிபடற் குரியார் தம்மை வழிபடல் மறுத்து மற்றை
வழிபடற் குரிய ரல்லார் தமைவழி படுவோ ராகி
வழீஇனார் தமக்குத் தெய்வம் வகுத்திடுங் கொடிய தண்டம்
வழியினால் இன்னே எய்தும் என்பது வழக்காம் மன்னோ - 27



1221 - என்றனன் ததீசிச் செம்மல் எழுந்துதன் இருக்கை புக்கான்
அன்றது நோக்கிப் பூமேல் ஆண்டகை அச்சம் எய்தித்
துன்றிய குழுவின் நீங்கிச் சுடர்மழுப் படையான் பாங்கர்ச்
சென்றனன் சென்ற பின்னர்ச் சிறுவிதி எழுந்து நின்று
பூமேல் ஆண்டகை - பிரமன் - 28



1222 - வீரபத்திரர் தோற்றம்
எச்சனாம் துளவி னானை அடைக்கலம் என்று போற்றி
அச்சுதன் அருளால் வேள்வி தொடங்கலும் அனைய தெல்லாம்
முச்சகம் புகழும் நல்யாழ் முனிவரன் மொழியக் கேளாப்
பச்சிளங் கொடியி னன்னாள் பரம்பொருட் கிதனைக் கூறும் - 29



1223 - இறைவனே எனக்கு முன்னர்த் தாதையென் றிருந்த தக்கப்
பொறியிலி நமக்குத் தீங்கே நாள்தொறும் புரியுந் தீயோன்
மறைநெறி வேள்விச் செந்தீ வளர்க்குமால் அதனை இன்னே
குறைபடச் சிதைத்தி நின்பாற் கொளத்தகும் வரமீ தென்றாள் - 30



1224 - இருள்குடி யிருந்த கூந்தல் இறைவிதன் மாற்றங் கேளாத்
தெருள்குடி யிருந்த சிந்தை தைவரச் சிவந்த நோன்றாள்
அருள்குடி யிருந்த பெம்மான் அழிதகைத் தக்கன் நெஞ்சின்
வெருள்குடி யிருந்து மொய்ம்பின் வீரபத் திரனைத் தந்தான் - 31



1225 - எண்ணரும் உலகம் ஈன்ற சிற்றகட் டெம்பி ராட்டி
வண்ணவார் புருவம் மீப்போய் நெரிப்பவாய் துடிப்பப் பொங்கிக்
கண்ணறு சினம்மிக கொண்ட பத்திர காளி யென்னும்
பெண்ணணங் கரசை ஈன்றாள் பிறங்கெரி சிதறுங் கண்ணாள் - 32



1226 - பத்திர காளி வீர பத்திரன் இருவர் தாமும்
அத்தனை உமையைப் போற்றிப் பணியெமக் கருளிர் என்ன
முத்தலைச் சூலத் தண்ணல் மொய்ம்பனை அருளின் நோக்கி
இத்திரு மடந்தை யோடும் இறைப்பொழு தின்கட் போந்து - 33



1227 - பழித்தொழில் தக்கன் வேள்வி பாழ்படுத் துமையாள் சீற்றம்
ஒழித்தியென் றருளிச் செய்தான் ஒள்ளிழை உமையும் அவ்வா
றழித்துநீர் வருதிர் என்று விடைகொடுத் தருளப் பெற்றுத்
தெழித்தனர் எழுந்தார் சென்றார் இருவருஞ் சீற்றம் பொங்க - 34/tr>


1228 - எழுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
சண்ட வாயு மந்த மாக வடவை அங்கி தண்ணெனச்
சண்ட பானு மதியம் ஒப்ப மொய்த யங்கு தென்திசைச்
சண்டன் வீறு சாந்தம் எய்த வெஞ்சி னந்த லைக்கொளீஇச்
சண்டி கைத்த லைவி யோடு தலைவன் அங்கண் எய்தினான் - 35



1229 - தன்னை நேரு ரோம சப்பெ யர்க்க ணந்த வப்படைத்
தன்ன வெங்க ணங்கள் தம்மை வேள்வி யாற்று சாலையின்
வெந்நெ ருப்பு வைப்ப ஏவி உட்பு குந்து மேவலாப்
புன்னெ றிச்செ· றக்கன் ஆவி பொன்றுமா துணித்தனன் - 36



1230 - உழையு ருக்கொ டோடும் வேள்வி உயிர்செ குத்த ருக்கர்தம்
விழிகள் மற்றை முப்ப திற்றி ரண்டு பல்லும் வீழ்த்தினான்
வழுவும் இந்து வைச்சி னந்து தேய்த்து வன்னி நாவினோ
டெழுக ரந்து ணித்து மற்றும் ஏற்ற தண்டம் ஆற்றுவான். - 37



1231 - குலவு வாணி தன்னிடத்து வீங்கு கொங்கை மூக்கரிந்
துலகம் ஈன்ற அன்னை உம்பர் பெண்டி ருக்கும் உதுபுரிந்
திலகும் ஏனை விண்ண வர்க்கும் முனிவ ருக்கும் எண்டிசைத்
தலைவ ருக்கும் வீரன் அன்று தக்க தண்டம் ஆற்றினான்.
உது புரிந்து - அத்தண்டம் செய்து. - 38



1232 - தடங்கொள் சாலை முற்றும் வெந்த ழற்க ளித்தி யூபமும்
பிடுங்கி வேள்வி யாற்றி னோர்பெ ருங்க ழுத்தை நாணினால்
மடங்க யாத்து வேள்வி யங்கம் மற்றவும் எடுத்தெடுத்
திடங்கொள் கங்கை யூட ழுத்தி யிட்ட வன்க ணங்களே - 39



1233 - இன்ன வண்ணம் வேள்வி முற்றும் இற்ற வாறு காண்டலும்
பொன்னு டைத்து ழாயி னான்பொ றாது ளம்பு ழுங்கினான்
முன்னர் வெள்கி மான முந்த மொய்ப றப்பை யேறெனப்
பன்னு மூர்தி மேலி வர்ந்து படையெ டுத்தெ திர்த்தனன்
பறப்பை ஏறு - பறவை அரசு, கருடன். - 40



1234 - ஆய காலை அண்ண லாணை யாற்றின் நான்மு கப்பிரான்
மேய வையம் முன்னர் உய்ப்ப ஏறி வீர வள்ளலும்
மாய னோடெ திர்த்து வெம்ப டைக்க லம்வ ழங்கினான்
ஏய அங்கண் மூண்ட பூசல் யாவர் சொல்ல வல்லரே - 41



1235 - வெற்றி தோல்வி யின்றி நின்று வெஞ்செ ருப்பு ரிவுழிச்
செற்றம் மிக்கு மாயன் வெய்ய திகிரி யைச்செ லுத்தினான்
மற்று வீர பத்தி ரன்றன் மார்பின் முண்ட மாலையு
ளொற்றை வெண்க பால மப்ப டைக்க லத்தை யுண்டதால்
முண்ட மாலை - கபால மாலை - 42



1236 - அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
உணங்கரும் வலத்த ஆழி உணங்கிய
      தோர்ந்து மாற்றார்க்
கணங்குசூழ் கணங்கள் அண்டம் வெடிபட
      முழங்கி யார்த்து
துணங்கையாட் டயரும் ஓதை துஞ்சினார்
      ஒழிய நின்ற
கணங்கெழு சுரர்கள் கேளாக் கலங்கியோட்
      டெடுக்கு மேல்வை - 43



1237 - காண்டகு வீரச் செம்மல் கணங்களான் வளைத்துத் தாளின்
மாண்டகு நிகள யாப்பு வலித்தலும் புரவி மான்தேர்
தூண்டிய எகினப் பாகன் துணையடி தொழுதி ரந்து
வேண்டினன் அடிகேள் சீற்றம் விடுத்தருள் இனியென் றேத்தி
நிகளம் - விலங்கு. எகினப் பாகன் - அன்ன வாகனன், பிரமன்
பெருமான் யாகசாலைக்கு எழுந்தருளுங் காட்சி - 44



1238 - மாதர்வெண் கமலத் தோன்றல் விண்ணப்பஞ் செவிம டுத்து
மேதகைக் கணங்க ளோடும் வெகுளியை விடுத்து நம்மான்
பாததா மரைக்கீழ்ச் சிந்தை பதித்தனன் பதித்த லோடும்
பூதர மகளுந் தானும் ஆயிடைப் போந்தான் அண்ணல்
நம்மான் - சிவபிரான். பூதரம் - மலை - 45



1239 - குடமுழா பதலை தக்கை கொக்கரை பணவம் கோதை
படகமா குளித டாரி தகுணிச்சம் பம்பை மொந்தை
துடிபணை திமிலை கண்டை தொண்டகம் பேரி கல்ல
வடமுதல் இயங்கள் எல்லாம் வயின்தொறும் இயம்பி மல்க - 46



1240 - வளைவயிர் பணிலம் சின்னம் வங்கியம் தாரை காளம்
கிளைபடு நரம்பு வீணை தீங்குழல் மிடற்றுக் கீதம்
உளவெனைப் பிறவுங் காலும் துவைப்பொலி உறந்து விம்மி
அளவலின் உலக மெல்லாம் இசைமய மாகித் தேங்க - 47



1241 - வாலொளிக் கவிகை பிச்சம் சாமரை மணிப்பூண் தொங்கல்
ஆலவட் டங்கள் மற்றும் விடைக்கொடி யருகு செல்லக்
காலனைச் செகுத்த வாறும் முப்புரங் காய்ந்த வாறும்
போல்வன உலகந் தேறப் பூதர்கள் விருது பாட - 48



1242 - ஏற்றுருக் கொண்டு தன்போல் இணையடி தாங்கப் பெற்று
மாற்றல னாகித் தன்னேர் தருக்கிய மாயோன் செய்ய
காற்றலைப் பிணிப்புக் காணுங் களிப்பினான் மேற்கொண் டுய்க்கும்
ஆற்றல்சால் அறவெள் ளேறு பரந்துசெண் டாடிச் செல்ல 49
காற்றலைப் பிணிப்பு = கல் தலை பிணிப்பு..
செண்டாடுதல் - காளையின் நடைகளில் ஒருவகை - 49



1243 - வெள்ளநீர்க் கிடையோன் வைத்த விழியவன் எவ்வம் காண
வெள்கியாங் கடியிற் சாத்தும் விரைமலர்க் குவையுள் மூழ்க
வெள்ளெலும் பணிகள் தங்கள் இனத்தவர் மெலிவு நோக்கி
உள்ளுடைந் தழுவ தேய்ப்ப ஒன்றோடொன் றலம்பி யாட - 50



1244 - புன்னெறித் தலைநின் றெங்கோன் றனையிகழ்ந் திடும்பை பூண்ட
இன்னரை யெனக்கூ ணாக அளித்திடும் இறைவன் என்னா
மன்னுபே ருவகை பொங்கி மலர்ந்தென நளினச் செங்கை
தன்னிடை வயங்கு செங்கேழ் இணரெரித் தழல்கூத் தாட
இன்னரை - இவர்களை. இணர் எரித் தழல் - பலசுடரை உடைத்தாய் எரிதலையுடைய நெருப்பு - 51



1245 - உய்திறன் உணரா மற்றை உம்பர்போல் பழிப்பு ணாமே
செய்திறன் முன்னர்த் தேறிக் கொடிஞ்சித்தேர் செலுத்தி உய்ந்த
மைதபு தன்னோன் சீலம் அறிந்துள மகிழ்ச்சி பூத்தாங்
கைதென அயன்க பாலம் அற்புத முறுவல் காட்ட - 52



1246 - மாறடு மதுகைத் தன்னை வள்ளலுக் கியம்பிக் கொல்வித்
தூறுகாண் அமரர் இந்நாள் உலந்தவா நோக்கி ஓகை
ஏறுதன் முடிய சைத்துத் தகும்தகும் என்ப தேபோல்
ஆறணி சடில மோலிக் கொக்கிற கசைவுற் றாட - 53



1247 - மறைமுத லேவ லாற்றின் வயமகன் இயற்றுந் தண்டக்
குறையினை நிரப்ப எண்ணிக் கொடுவிடம் இறைப்ப தேபோல்
கறையணல் துத்திப் பாந்தட் கலன்கள்வாய் பூட்டி விட்டு
முறைமுறைக் கவைநா நீட்டி மூசென உயிர்த்து நோக்க - 54



1248 - கணங்கெழு பாற்றுப் பந்தர்ப் பறந்தலைக் களத்து ஞாங்கர்
உணக்குறும் இமையோர் ஆவி உள்ளதோ இலதோ என்னப்
பிணங்களைத் தொட்டுப் பார்ப்பான் பிணைக்கரம் நீட்டி யாங்கு
வணங்குடல் மதியம் வெண்கேழ் வளங்கதிர் பரப்பா நிற்ப - 55



1249 - இகழ்ந்தவர் தமக்கே பின்னும் இன்னருள் புரிய வேண்டிப்
புகுந்திறம் நோக்கி உள்ளம் பொறாதுவேர்த் தூடிப் பொங்கி
அகந்தளர்ந் தெழுந்து வீழ்ந்து புரண்டுகை யெறிந்தா லென்ன
நெகுஞ்சடைக் கங்கை மாது நிரந்தரந் ததும்பி யாட - 56



1250 - தாதையென் றிருந்து தீங்கே தாங்கினாற் காக்கம் நல்கப்
போதரேன் யானென் றூடும் பூவையைத் தழீஇக்கொண் டேகும்
ஆதரங் கடுப்ப அன்ன அணங்கினை இடப்பாற் கையாற்
காதலித் திறுகப் புல்லி அணைத்திடுங் காட்சி தோன்ற - 57



1251 - குருதியென் பிரத்தம் மூளை குடருடற் குறைகள் துன்றும்
பொருகளந் திருக்கண் சாத்தாப் பொருட்டவண் மறைப்பார் போலத்
தருமலர் மாரி தூவி உருத்திர கணங்கள் சாரக்
கருணைகூர்ந் தருளித் தோன்றுங் கடவுளை எவருங் கண்டார் - 58



1252 - கொடுங்கனாக் கண்டு வேர்த்துக் குழறிவாய் வெரூஉங்கால் அன்னை
அடுங்கனா ஒழித்து வல்லே அணைத்திடப் பெறுஞ்சி றார்போல்
நடுங்குறும் இமையோ ரெல்லாம் நாதனைக் காண்ட லோடும்
நெடுங்களி துளும்பி யோகை நீடினார் வணங்கி நின்றார் - 59



1253 - இன்னரை நோக்கி யெங்கோன் முறுவலித் தெமக்கு வேள்வி
தன்னிடைப் பாக மென்னே தந்திலீர் அ·து நிற்க
மன்னுபோர் அடுபே ராண்மை வலியினீர் பலரு மென்னே
பன்னுமோர் வீரற் காற்றா துடைந்தனிர் பகர்மின் என்றான் - 60



1254 - பிரமாதி தேவர் வேண்டுகோள்
அடியிணை தொழுது மாயோன் முதலிய அமரர் சொல்வார்
அடிபடும் எங்களாண்மை துரும்பொன்றில் அன்றே கண்டாய்
அடியரா மெம்மைப் பல்கால் குரங்குபோ லாட்டு விப்ப
தடிகளுக் கழகோ எந்தாய் ஆற்றிலே முய்யக் கொள்வாய் - 61



1255 - அத்தனே பல்கால் இவ்வா றுணர்த்தியும் ஆடை மாசின்
மைத்துறு பேதை நீரால் பின்பினும் மயங்கு கின்றேம்
கைதளை யாடி யோச்சிக் காதியும் ஆள்வ ரல்லால்
எத்தனை பிழைசெய் தாலு மிகப்பரோ வடிமை பெற்றோர் - 62



1256 - கறுத்தநின் மிடறு நோக்கேம் கையணி கபாலம் நோக்கேம்
வெறுத்தவெள் ளென்பு நோக்கேம் விழியடி கிடத்தல் நோக்கேம்
குறுத்தமோட் டாமை யோடும் பன்றியின் கோடும் நோக்கேம்
இறுத்திடும் விதியின் ஆறே மதியெனல் எம்பாற் கண்டேம் - 63



1257 - பொங்கருட் பரமா னந்த பூரண முதலே யிங்கு
நங்களை யாளத் தோன்றி ஐந்தொழில் நடாத்தல் ஓரேம்
மங்கையை மணந்தா யென்றும் மக்களை யுயிர்த்தா யென்றும்
எங்க ளிலொருவ னாக எண்ணியே யிகழ்ந்து கெட்டேம் - 64



1258 - கடவுள்யாம் செருக்கா வண்ணம் கண்டன முய்யு மாற்றால்
விடமுத லடையா ளங்கள் நின்திரு மேனி வைத்தாய்
அடலுறு மவையுந் தேறாச் செருக்கறிந் திந்நா ளெங்கள்
உடலிலும் அடையா ளங்கள் உறுத்தினை போலு முய்ந்தோம் - 65



1259 - இன்றெமை ஒறுப்ப வீரன் போந்ததுன் னேவ லாக
அன்றெமை யொறுப்பப் போந்த விடமுமுன் னருளே யென்று
மன்றயாம் தெளிந்தோ மிந்நாள் இடித்தெமை வரைநி றுத்தல்
என்றும்நின் கடனே யன்றோ ஈறிலாக் கருணை வாழ்வே. - 66



1260 - அன்றுனை மதியா தாழி கடைந்ததூஉம் அன்றி யெம்மேல்
சென்றடர் வதனுக் கஞ்சிச் செல்வநீ யமுது செய்யக்
கொன்றிடும் நஞ்சுங் காட்டிக் குற்றம்மேற் குற்றஞ் செய்தேம்
இன்றுனை இகழ்ந்த தொன்றோ டொழிதலின் உய்ந்தேம் எந்தாய் - 67



1261 - அளவறு காலந் தீவா யள்ளலிற் குளித்தும் தீரா
வளருமிச் சிவத்து ரோகம் வயப்புகழ் வீரன் றன்னால்
எளிதினில் தவிர்த்தா யன்றே யிப்பெருங் கருணைக் கெந்தாய்
தெளிவிலாச் சிறுமை யேங்கள் செய்குறி யெதிர்ப்பை யென்னே - 68



1262 - இனையன பலவும் பன்னி இரந்திரந் தலந்து கண்டங்
கனையவாய் குழறக் கண்ணீர் வார்ந்திடக் கரங்க ளுச்சி
புனைநின் றிமையோ ரெல்லாம் போற்றுழி முன்தாள் கஞ்ச
மனையவன் எம்பி ரானை வணங்கிவிண் ணப்பஞ் செய்வான் - 69



1263 - வேள்வியிற் பாகம் நல்கா மருள்மன விண்ணோ ரெல்லாம்
தாழ்நெறித் தக்க னோடுங் குறைவறு தண்டம் பெற்றார்
வாழிய யினிநீ எச்சம் வரமுற அருளிச்செய்து
பாழ்படச் சிதைந்த விண்ணோர் பண்டுபோல் உய்யச் செய்யாய் - 70



1264 - பிரமாதி தேவர் வரம் பெற்றுப் பூசித்தல்
கடுந்தளைப் பிணிப்புண் டார்க்குங் கட்டறுத் தருளாய் என்ன
அடுங்கரி யுரித்த பெம்மான் அம்முறை கடைக்கண் சாத்த
இடும்பைதீர்ந் துய்ந்தார் அன்னோர் யாரையும் நோக்கிப் பின்னும்
கொடும்பிழை முழுதும் நீங்கும் வழியினைக் கூற லுற்றான் - 71



1265 - எமக்குநீர் பெரிதுங் குற்ற மிழைத்தனிர் அவைதீர்ந் துய்ய
நமக்குமிக் கினிய காஞ்சி நகர்வயின் நண்ணீர் அங்கண்
இமைத்தொளிர் கயிலா யப்பால் நாரத னியம்புங் கூற்றின்
அமர்த்தவேல் தக்க னீன்ற அரியச்சு வப்பேர் மைந்தர் - 72



1266 - பொதுமறை நம்பி நம்மைப் போற்றுமா யிடைக்கண் சென்று
கதுமென விலிங்கந் தாபித் தருச்சிமின் கரிசு நீங்க
விதியுளித் தக்கன் றானு மிம்முறை விழைக பூசை
இதுபுரி காறும் நுங்கட் கிடும்பையே புரிவர் மாற்றார் - 73



1267 - கலிநிலைத்துறை
அனையர் தாரகன் சூரபன் மாமுத லாகும்
இனைய தானவர் என்றறி மின்களென் றருளிக்
கனைபொ லங்கழல் வீரனுங் கணங்களுஞ் சூழத்
தனைநி கர்த்தவன் கயிலையைச் சார்ந்தன னிப்பால் - 74



1268 - புள்ளி னத்தர சுயர்த்தவ னாதிப்புத் தேளிர்
வள்ள லாணையின் கிளவிபொச் சாத்தலின் மதுகை
நள்ளு சூரபன் மாமுதல் தயித்தியர் நலிய
விள்ள ருந்துயர்ப் பெருங்கடல் ஆழ்ந்தனர் மெலிந்து - 75



1269 - மெலிந்த பின்மறைக் கிழவனை யுசாவுபு விடையோன்
வலிந்த வாய்மொழி நினைந்துபோய்க் கச்சியை மருவி
இலிங்க மாயிடை நிறீஇத்தொழு திடும்பைதீர்ந் துய்ந்தார்
பொலிந்த விண்ணவர் தம்மொடு தக்கனும் போகி - 76



1270 - மக்கள் பூசனை விளைத்தவச் சூழலை மருவி
நெக்க அன்பினால் தானொரு சிவலிங்கம் நிறுவித்
தக்க வாய்மையின் தொழுதனன் வெவ்வினை தணந்தான்
மிக்க சீர்க்கண நாதனாம் வீறுபெற் றிருந்தான். - 77


ஆகத் திருவிருத்தம் 1270
---------

36. முப்புராரி கோட்டப்படலம் (1271-1281)

கலிநிலைத்துறை



1271 - சிறுவ தீர்த்தநீஅஞ்சலென்றியமனைச் சீறி
மறுவ தீர்த்தவன் மேயதக் கேச்சரம் வகுத்தாம்
சறுவ தீர்த்தமேல் பாங்கரில் தாழ்ந்தவர்க் கவமாய்
உறுவ தீர்த்தருள் முப்புரா ரீச்சரம் உரைப்பாம்
அடிதோறும் இரண்டாவது சீர் திரிபணி குரித்து நின்றது.சிறுவ - சிறுவனே.
தீர்த்த - தூய்மையானவனே. இம்மொழிகள் மார்க்கண்டேயனைக் குறித்தன.
மறு அது ஈர்த்தவன்= மறு - யமன் செய்த குற்றம். ஈர்த்தல் -நீக்கல். - 1



1272 - எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
முப்பு ரங்களின் மூவர் புத்தன் மொழித்தி றத்து மயங்கிடா
தப்ப ணிந்தவர் தாள்ப ணிந்தரு ளாற்றின் நின்றன ராதலால்
பொய்ப்பு ரந்தபு காலை நீற்றறை நாவின் மன்னவர் போலெரி
தப்பி வாழ்ந்தன ரீச னாணையில் நிற்ப வர்க்கிடர் சாருமோ - 2



1273 - சுதன்மனென்று சுசீல னென்று சுபுத்தி யென்று சொலப்படும்
அதன்மம் நீத்தவம் மூவ ருக்கு மருள்சு ரந்துமை பாகனார்
இதம்வி ளங்க வரங்கள் வேட்ட விளம்பு மின்னென அங்கவர்
பதம்வ ணங்குபு நின்தி ருப்பணி வாயில் காப்பரு ளென்றனர். - 3



1274 - கச்சி மாநக ரெய்தி நங்குறி கண்டு பூசனை செய்மினோ
இச்சை யாற்றின் நுமக்கு நந்தளி வாயில் காவலும் ஈதும்என்
றச்ச னாரருள் செய்து நீங்கலும் அங்க ணைந்து வரம்பல
நிச்ச லுந்தரு முப்பு ராரி இலிங்கம் ஒன்று நிறீஇயினார். - 4



1275 - பூசை யாற்றி உளத்தி லெண்ணிய பேறு பூண்டனர் முப்புரா
ரீச மேன்மை யளக்க வல்லுந ரேவர் அப்பெயர் வண்மையான்
மாசில் காஞ்சி வயங்கு கோட்டம் எனப்ப டுமென வாய்திறந்
தோசை யாலுயர் சூத னோத முனிக்க ணத்தர் வினவுவார் - 5



1276 - முப்பு ரத்துறை வோருள் இங்கிவர் மூவ ருந்திரு நாயகன்
செப்பு மாய மயக்கி னுக்கு ளகப்ப டாது செழுந்தழற்
கைப்ப ரம்பொருள் பத்தி வாய்மை கடைப்பி டித்து நிலைத்தவா
றெப்ப டித்திது அற்பு தச்செய லெங்க ளுக்குரை யென்றலும் - 6



1277 - தத்து வெண்டிரை வேலை நஞ்சம் மிடற்ற டக்கிய நம்பிரான்
பத்தி மார்க்க மிரண்டு கூற்றது பற்ற றுத்துயர் அந்தணீர்
புத்தி நல்குவ தொன்றி ரண்டறு பூர ணப்பொரு ளோடுலாம்
முத்தி நல்குவ தொன்றி ரண்டனுள் முன்னியம்பிய பத்திதான் - 7



1278 - சார்பு பற்றி யுதிக்கும் மற்றைய தொன்று சத்தி பதிந்தமெய்ச்
சார்பி னெய்து மிரண்டும் முத்தி தழைக்கு மாயினும் வெவ்வினைச்
சார்பி னோர்பெறு சார்பு பத்தி தானிடை விள்ளுமச்
சார்பி லாதெழு முண்மை யன்பு தணப்பு றாதெவர் கட்குமே - 8



1279 - செய்த செய்வன வாய தீவினை யாவும் இச்சிவ பத்தர்பால்
எய்தி டாகம லத்தி லைக்கம லத்தி னென்றறி மின்களோ
ஐது காமம் விழைந்த பத்தியும் நல்ல றத்துறை யார்பெறின்
நைத ராதிது பத்தி பேத முணர்ந்து ளோர்நவில் கிற்பதே - 9



1280 - திரிபு ரத்தவர் சார்பு பற்றிய பத்தி யோர்நனி தீமையே
புரிம னத்தின ராத லால்வரு புத்த நாரத ரான்மையல்
மருவி யிற்றன ரின்ன மூவரும் வள்ளல் சத்தி பதிந்தெழும்
பெரிய பத்திய ராத லாலவர் பேசு மையல் கடந்தனர். - 10



1281 - கலிவிருத்தம்
பேறு மெய்தினாரென்று பேதுறா
வாறு மேதகு சூதன் மாதவர்
கூறு கூற்றினுக் கிறைகொ டுத்தனன்
வேறு மாக்கதை மேல்வி ளம்புவான் - 11
ஆகத் திருவிருத்தம் 1281
-------

37. இரணியேசப் படலம் (1282-1303)

கலிவிருத்தம்



1282 - அரணி யின்கனல் ஐயர் கூற்றடு
சரணி முப்புரா ரீசஞ் சாற்றினாம்
முரணி யங்கதன் குணக்கண் முந்தொழும்
இரணி யேச்சரத் தியல்பு ரைத்துமால் - 1



1283 - இரணி யப்பெய ரசுரர் ஏறானான்
குரவ னாய்நலங் கொளுத்து வெள்ளியைச்
சரண மேத்துவான் தனியி டத்தினில்
வரவ ழைத்தனன் வணங்கி விண்டனன் - 2



1284 - அரும்பெ றல்திரு வரசு நான்பெறத்
தரும்ப டித்தொரு விரதஞ் சாற்றென
விரும்பு மந்திரக் கிழவன் வீங்குதோள்
இரும்பின் அன்னவற் கிறைவ ழங்குவான் - 3



1285 - வேட்ட வாறிது வாயின் மேவரக்
கேட்டி யிவ்வுரை கேடி லாற்றலோய்
நாட்டம் மூன்றுடை நாதன் சேவடிக்
கீட்டும் அன்பினால் தவமி ழைத்திநீ - 4



1286 - பதும வாழ்க்கையான் படைக்கும் ஆற்றலும்
மதுவை மாட்டினான் அளிப்பும் வான்மிசை
அதுல னாதியோர் ஆசை யாட்சியும்
பொதுந டிப்பவன் பூசைப் பேறறோ
மது - ஓர் அசுரன். அளிப்பு - காத்தற்றொழில். அதுலன் - ஒப்பில்லதவன்,
இந்திரனைக் குறித்தது, ஆசை - திசை. - 5



1287 - செல்வம் ஆண்மையேர் சீர்த்தி வாழ்வருள்
கல்வி கட்டெழில் மகளிர் காழிலாச்
சொல்வ லித்திறஞ் சூழ்ச்சி யேனவும்
அல்வெ ரூஉங்களன் அருச்சனைப்பயன்
காழ் இலாச்சொல் - இனியசொல் - 6



1288 - மெய்த்த விண்ணவர் இருக்கை வேண்டினும்
நத்து மாலயன் நகரம் வேண்டினும்
முத்தி வேண்டினும் மூவ ருஞ்சிவ
பத்தி யொன்றனா லெய்தற் பாலவே
நத்து - சங்கு; விரும்புகின்ற எனலுமாம். - 7



1289 - ஒன்ன லார்பிணி யுரகம் மண்ணைகோள்
என்ன வுமவர்க் கிடரி ழைத்திடா
அன்ன ஆகலான் அரன டித்தொழில்
முன்னி னார்க்கெவ னரிது மொய்ம்பினோய்
உரகம் - பாம்பு. மண்ணை -பேய். என்னவும் -அந்த அளவுக்கும் - 8



1290 - அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
சிவன்றன் திருவுருவைக் காணாத கண்ணே குருடாம் சீர்சால்
சிவன்றன் திருவுருவை யெண்ணாத சிந்தையே பித்தா மென்றும்
சிவன்றன் திருப்புகழைக் கேளாச் செவியே செவிடா மன்பிற்
சிவன்றன் திருப்புகழை யோதாத வாயே திணிந்த மூங்கை - 9



1291 - நில்லா திளமையும் யாக்கையு மின்னினியே நீங்கு மன்றிப்
பொல்லாத நோயு மடர்ந்து பெரும்பையுள் புகுந்து நீரால்
எல்லாம் நரைத்துடல மேகாமுன் நன்னெறிக்கே செல்வோ மென்ன
வல்லா னுகைத்தானை அர்ச்சிப்பார் இவ்விடும்பை வாழ்க்கை வெல்வார்
வல்லான்= வல்+ஆன் , வலிய காளைவாகனம் - 10



1292 - பத்தன் மொழிப்பகுதி சேவையினைக் கூறும் பரிசா லீசன்
பத்த னவற்கினிய சேவகனே யாதலினிப் பான்மை பூண்ட
பத்தர் படிமம் ஒழுக்கங் குலனொன்றும் பார்க்க வேண்டா
பத்த ரெனப்படுவார் கண்டிகையும் நீறும் பரித்த மெய்யோர் - 11



1293 - அங்கவரைக் காணப் பெறுகிற்பிற் கங்கைநீ ராடற் பேறாம்
அங்கவர்பாற் பேசப் பெறினகில தீர்த்தமுந் தோய்ந்தா ராவர்
அங்கவர்க்குச் செய்பூசை அண்டருக்கும் மூவருக்கு மாகுங் கண்டாய்
அங்கவர்க்கே தான மளிப்ப ரவர்தம்பா லேற்பர் நல்லோர். - 12



1294 - மாயனயன் விண்ணாடர் வாழ்வுந் துரும்பா மதிக்கு மிந்தத்
தூய சிவனடியார் மேம்பாடி யானேயோ சொல்ல வல்லேன்
பாய பெருங்கீர்த்தித் தோன்றால் பலசொல்லி யென்னை யிந்நாள்
ஆயபிற வெல்லாங் கழித்துச் சிவனடியே யர்ச்சித் துய்வாய் - 13



1295 - என்னுங் குரவ னிணைத்தாள் தொழுதோகை யெய்தி யெந்தாய்
பன்னும் பரம்பொருளை யெத்தானத் தெவ்வாற்றாற் பண்பு கூரப்
பொன்னங் கழலிணைகள் பூசித் திடுவதெனும் பொன்னோன் கேட்ப
மன்னும் பிருகு தரவந்த மைந்தன் வகுப்பான் மன்னோ - 14



1296 - மேற்படி வேறு
எங்கணும் நிறைந்து நிற்கு மெம்பிராற் கினிய வாய
பங்கமில் வரைப்பு மண்மேற் பலவுள அவற்றுட் காசி
அங்கதிற் காஞ்சி மேலாங் காஞ்சியின் அதிக மில்லை
செங்கதிர் மதியஞ் செந்தீ மண்டில மடிய ருள்ளம். - 15



1297 - மந்தரங் கயிலை தம்மின் மேம்பட வயங்கித் தோன்றும்
அந்தமா நகரி னெங்கோன் வல்விரைந் தருள்சு ரக்கும்
மந்திர வெழுத்தஞ் சோதிப் பச்சிலை மலரே தேனும்
சிந்தைகூ ரன்பிற் சாத்தித் தொழுவதே சிவனுக் கின்பம் - 16



1298 - கண்டிகை நீறு மெய்யிற் கவின்றிட இவ்வா றங்கண்
அண்டனைத் தொழுது மெய்ப்பே றடைகெனுங் குரவன் பாத
புண்டரீ கங்கள் போற்றி யெழுந்தனன் பொறிவண் டூதுந்
தண்டலைக் காஞ்சி நோக்கி நடந்தனன் தறுக ணாளன். - 17



1299 - தன்னுடன் பிறந்த கேண்மைத் தானவன் இரணி யாக்கன்
அன்னவன் தனைய னந்தகாசுரன் பிரக லாதன்
முன்னுறுபுதல்வர் அன்னோர் வழிவரும் உரியர் தேசின்
மின்னுமா வலியே வாணன் விரோசனன் முதலி யோரும் - 18



1300 - பற்றுகா யாதி யாதி மனைவியர் பலரு மேனைச்
சுற்றமு மொருங்கு காஞ்சித் தென்னகர் எய்தித் தாந்தாம்
பெற்றிடும் பெயரான் முக்கட் பிரான்குறி நிறுவிப் போற்றக்
கொற்றமார் முப்பு ராரி கோட்டத்தின் குணபால் எய்தி.
காயாதி - இரணியனின் முதல் மனைவி - 19



1301 - தன்பெய ரிலிங்க மொன்று தாபித்துக் குரவன் கூறும்
அன்புடை முறைமை யாறே அருச்சனை யாற்றி யுண்டி
இன்பமும் வெறுத்துப் பன்னாள் மெய்த்தவம் இயற்றும் ஏல்வைப்
பொன்பொதி சடிலப் புத்தேள் எதிரெழுந் தருளப் போற்றி. - 20



1302 - மக்களின் விலங்கின் மற்றை யோனியின் மண்ணில் விண்ணில்
உக்கதீப் படைகள் தம்மின் உணங்கலி னீர மென்னத்
தக்கதிற் புறம்பின் உள்ளிற் பகலினி லிரவிற் சாவாப்
பொக்கமில் வரமும் மும்மைப் புவனமும் புரக்கும் பேறும் - 21



1303 - எம்பிரா னருளக் கொண்டா னிரணிய கசிபும் ஆசை
அம்பகன் முதலி யோரு மவரவர்க் கினிய பெற்றார்
வம்பலர் மலரிட் டன்னோர் வழுத்திய தலங்க ளோடும்
உம்பர்சூழ் இரணி யேசம் உத்தமச் சிறப்பி னோங்கும் - 22

ஆகத் திருவிருத்தம் 1303
-----------

38. நாரசிங்கேசப் படலம் (1304-1318)

கலிவிருத்தம்



1304 - தரணி மேற்புகழ் தாங்கிய காஞ்சியின்
இரணி யேச்சர மேன்மை யியம்பினாம்
அரணி லைத்த அதன்குட பாங்கரின்
முரணி னாரசிங் கேசம் மொழிகுவாம் - 1



1305 - தக்கன் வேள்வியஞ் சாலை அவியுணப்
புக்க தேவர் புரளச் சவட்டிய
முக்க ணனருள் பெற்றபின் மூவுல
கொக்க ஆடகன் தாட்படுத் தோங்கலால்
ஆடகன் - இரணியன் - 2



1306 - வண்ண வண்டிமி ராமலர்க் கற்பகக்
கண்ணி விண்ணவர் யாருங் கவன்று போய்த்
தண்ண றுந்தள வோனடி தாழ்ந்தெழூஉக்
கண்ணி லாக்கன கன்செயல் கூறலும் - 3



1307 - ஐம்ப டைத்திற லாண்டகை காஞ்சிபுக்
கெம்பி ரான்ற னிணையடி யேத்துபு
வெம்பு தெவ்வினை வெல்லும் உபாயமவ்
வும்பர் கோனருள் செய்ய உணர்ந்தரோ - 4



1308 - உந்து தன்னொரு கூற்றை உவன்பெறு
மைந்தன் மாடுற வைத்துத் தருக்குழி
எந்து நீயினி உய்திற னீங்கெனாச்
சுந்த ரப்பொலந் தூணங் கிழித்தெழீஇ - 5



1309 - கொட்கும் மானிடக் கோளரி யாகியவ்
வட்கி லானைக் கவான்மிசை வைத்திருள்
நட்கு மந்தியின் வாய்தலின் நள்ளிருந்
துட்கு கூருகிர் கொண்டுரங் கீறியே
கொட்கும் - கோபத்தால் சுழலும். வட்கிலான் - அழிவிலான்.
கவான் - தொடை. இருள் நட்கும் - இருள் கூடியும் கூடாதுமிருக்கின்ற
மாலைக்காலம். உட்கு- அச்சம். - 6



1310 - வன்க ணானுயிர் வவ்வி யிரத்தநீர்
என்க ணாகென வாய்மடுத் திம்மெனத்
தன்க ணெய்துந் தருக்கின் மயங்கினான்
புன்கண் மும்மைப் பொழிற்கும் விளைத்தனன் - 7



1311 - பிரக லாதன் பிறங்கெழிற் செய்யவள்
சுரரும் ஏத்தித் துதிசெயும் நன்னய
உரையுங் கேட்கலன் உன்மத்தம் மேலிடின்
கரையும் மென்மொழி காதினில் ஏறுமோ. - 8



1312 - உய்தி யில்லவன் சோரியொன் றித்துணை
வெய்ய வாய செருக்கு விளைக்குமேல்
பையுள் சூழப் பதகன் கொடுமையை
ஐய யாவர் அளவிடற் பாலரே - 9



1313 - சரபம் வருகை
அனைய காலை அயன்முதல் விண்ணவர்
இனையும் நெஞ்சினர் அஞ்சினர் எம்பிரான்
றனைய டைந்து சரணமென் றேத்தினார்
வினையி கந்துயர் மந்தர வெற்பின்மேல் - 10



1314 - வாய்பு லர்ந்து நடுக்குற வந்தவர்
ஏய வார்த்தை திருச்செவி ஏற்றனன்
பாய பல்கணம் ஏத்தப் பனிவரை
யாயி னோடினி தாடல்செய் ஆண்டகை - 11



1315 - அஞ்ச லீரென் றளித்தனன் சிம்புளாய்
வஞ்ச மானிட வாளரி ஆயுளைத்
துஞ்சு வித்துரி கொண்டொளி தோற்றினான்
தஞ்ச முண்டவர் தஞ்சர ணாயினான் - 12



1316 - கலிநிலைத்துறை
நரம டங்கலின் நாரண னுந்திருக் காஞ்சியை
விரவி நாரசிங் கேச்சர வேந்தை நிறீஇயினான்
பரவி யேத்தினன் வெவ்வினை நீத்தருள் பற்றினான்
உரவு நீருடை யத்தலம் உத்தம மாகுமால் - 13



1317 - வராகேச்சர வரலாறு
வாரா கேச்சரம் அன்னதன் தெற்கது மன்னுபொற்
பேரான் றன்னொடு தோன்றிய பொன்விழிப் பேரினான்
பார்தான் வௌளவினன் பாதலத் தேகலும் பைந்துழாய்த்
தாரான் சூகர மாயவன் றன்னைச் சவட்டியே. - 14



1318 - முன்போற் பாரைக் கொணர்ந்து நிறீஇமதம் மூண்டுழிக்
கொன்பாய் ஏற்றவன் வேடுருக் கொண்டுயிர் உண்டொரு
வன்பார் கோடு பிடுங்கி யணிந்தபின் மற்றவன்
அன்பால் ஈசனை அர்ச்சனை செய்தருள் பெற்றதே - 15

ஆகத் திருவிருத்தம் 1318
----------

39. அந்தகேசப் படலம் (1319 -1350)

கலித்துறை



1319 - தாரார் கொன்றையன் நாரசிங் கேச்சரந் தன்னோடு
வாரா கேச்சர மேன்மை தெரிந்து வழங்கினாம்
ஏரார் கின்ற விதன்குண பாங்கர் எறுழ்வலிப்
போரா னேற்றவ ரந்தக வீச்சரம் போற்றுவாம். - 1



1320 - இரணி யாக்க னளித்திடு மந்தக னென்பவன்
மரபி னெந்தையை யாயிடை யேத்தி வரம்பெறூஉ
முரனை யட்ட பிரான்முதல் விண்ணவர் யாரையும்
உரனில் வென்று புறக்கொடை கண்டுல காண்டனன். - 2



1321 - தேவர்கள் பெண் வடிவங் கொண்டு வசித்தல்
அன்ன தானவ னுக்கழி வெய்தியச் சத்தினால்
பொன்ன வாம்மரு தத்தவ னாதிப்புத் தேளிர்தாம்
மின்னி டைக்கு நடுக்கம் விளைத்திறு மாந்தணி
மன்னு பூண்முலை யார்வடி வத்தை எடுத்தரோ - 3



1322 - கொள்ளி வட்டம் எனச்சகம் எங்கணுங் கொட்புறீஇ
வெள்ளி யங்கயி லைக்கிரி மேவினர் முத்தலை
அள்ளி லைப்படை அங்கண ணாரருள் பெற்றவண்
வள்ளி மாமி கணங்களி னோடும் வதிந்தனர் - 4



1323 - இன்ன வாறுபல் கால மகல்வுழி யெம்பிரான்
மன்னு தாரு வனத்துறை மாதவர் தங்களைத்
துன்னி மையல் கொளீஇயவ ருண்மைசோ தித்திடும்
அன்ன செய்கை நினைந்தவன் எய்தினன் அவ்விடை - 5



1324 - அந்த காசுரன் விண்ணவர் வெள்ளி அடுக்கலின்
வந்து பெண்மைய ராகி மறைந்துறை செய்திகேட்
டுந்து சீற்றம் மிகுத்தவ ணெய்தி யுடற்றுழி
முந்து மம்பிகை தன்னருள் பெற்று முகுந்தனார் - 6



1325 - எண்ணில் பெண்டிர் தமைப்படைத் தேயினர் அத்தடங்
கண்ணி னார்க்கிடை கண்டகன் ஓடின னாகமற்
றண்ண லாருறு வோரமர் தாரு வனத்திடை
நண்ணி யங்கண் நடாத்திய செய்கை நவிற்றுவாம் - 7



1326 - பிட்சாடனர் திருவிளையாடல்
கொச்சகக் கலிப்பா
கழல்கறங்கப் பலிக்கலனுங் கரத்தேந்திப் பலபரிதி
மழகதிரின் வரும்பெருமான் துடிமுழக்கஞ் செவிமடுத்துக்
குழலிசைகேட் டருகணையும் அசுணமெனக் குளிர்தூங்கிப்
பழிதபுதா பதமடவார் பலிகொண்டு மருங்கணைந்தார் - 8



1327 - நிலவலர்ந்த நகைமுகிழ்க்கும் மணிவாய்க்கும் நெடுஞ்சூலத்
தலைகிடந்த திண்தோட்கும் தடமார்பின் அழகினுக்கும்
மலைமடந்தை கரஞ்சேப்ப வருடுமிரு குறங்கினுக்கும்
கலைநுடங்க வருமடவார் கண்மலரிட் டிறைஞ்சினார். - 9



1328 - கண்மலரை யெம்மானார் திருமேனி கவரவவர்
பண்மலரும் வாய்மலரும் பனிமலரும் முகமலரும்
தண்மலரும் விழிமலரும் தாள்மலரும் கைமலரும்
விண்மலரும் மின்னனைய விளங்கிழையார் எதிர்கவர்ந்தார். - 10



1329 - எம்பிரான் திருமேனி உளமுழுது மிடங்கொள்ள
நம்பியநாண் முதல்நான்குந் துச்சிலர்போற் புறம்நடப்பக்
கொம்பனையார் கள்ளுண்டு களித்தோரின் இருமருங்கும்
பம்பினார் ஆடினார் பாடினார் என்செய்வார் - 11



1330 - தண்ணறுஞ்சந் தனந்தீயத் தரளவடம் நீறாகக்
கண்ணெகிழ்பூந் தொடைமூசுங் களிவண்டி னொடுங்கருக
எண்ணரிய காமத்தீ யிடைக்குளித்தார் புரம்பொடித்த
அண்ணலிள நகைபோலும் அடிகளிவர் நகையென்பார் - 12



1331 - வழுவுமுடை கரத்திடுக்கிக் கொணர்ந்தபலி யிடமாட்டார்
தொழுதகையார் பனந்தாளின் அணிந்தருளத் தொடையேந்தி
எழுமவளின் மறுகுவார் எம்பிரான் கடைக்கணிப்ப
முழுதருள்பெற் றுய்ந்தேமென் றகம்மலர முகம்மலர்வார் - 13



1332 - தக்கபலி கொளவந்தீர் தனப்பிச்சை தருகின்றேம்
கைகொடுபோம் இதோவெனமுன் னுரம்நெளிப்பார் கழிகாமம்
மிக்கயாங் களும்நீரும் வெற்றரையேம் ஆயினமால்
இக்கிடந்த துகில்நுமதோ எமதோசொற் றிடுமென்பார் - 14



1333 - எம்மல்குற் கும்மல்குல் இணையொக்கும் போலுமது
செம்மலீர் உடன்சேர்த்தித் தெரிதுமென அருகணைவார்
வெம்முலைவா ரணமெங்கள் இடைக்கீறு விளையாமே
நும்முகிர்த்தோட் டியினடக்கி னறனுண்டு நுமக்கென்பார் - 15



1334 - மன்றநீர் இரந்தபலி யாமளித்தேம் மற்ரியாங்கள்
ஒன்றிரந்த தளியாக்கால் இகழன்றே யுமக்கென்பார்
இன்றெனினும் விடுவமோ ஈர்ங்கணைவேள் பறந்தலைக்கண்
சென்றுபெரும் போர்விளைத்தும் வளைமினெனத் தெழித்தெழுவார் - 16



1335 - யாங்கொணர்ந்த பலியோடும் எம்முடைய வளையாழி
பூங்கடிஞை யுறக்கொண்டீர் புனிதரே யவையளித்தால்
ஆங்கிரந்த மாலார்க்கு வளையாழி மீட்டளித்த
வீங்குநீர் கலிக்கச்சி விநாயகரொப் பீரென்பார் - 17



1336 - பாம்பலதிங் கி·தல்குல் பகடல்ல இவைகொங்கை
கோம்பியல திதுநாசி கோளரியன் றிதுமருங்குல்
ஏம்பலிக்கு மிவைதம்மைக் கோளிழைப்ப எனவெருவிப்
போம்பரிசு நினையாதீர் புல்லுமினென் றடிதொழுவார் - 18



1337 - இவ்வாறு தம்பிரான் திருமேனி எழில்நோக்கிச்
செவ்வாய்மைக் கற்பிழந்தார் திறங்கண்டு வெகுண்டெழுந்த
அவ்வாழ்க்கை முனிவரிடு சாபங்கள் அடிகள்பால்
துவ்வாமை யுறநோக்கிக் கொடுவேள்வி தொடங்குதலும் - 19



1338 - எழுந்தமுய லகன்புலிபாம் புழைபூதம் எரிமழுவும்
தொழுந்தகையார் கைக்கொண்டு தொடங்குதிரு நடங்காணூஉ
விழுந்தயர்ந்து சோர்ந்துள்ளம் வெரீஇயினார் தமக்குமதிக்
கொழுந்தணிவார் அறிவளிப்பக் குறைதீரத் தொழுதெழுந்தார் - 20



1339 - சென்னிமிசைக் கரங்கூப்பித் தெய்வசிகா மணிபோற்றி
இன்னருளா லெமைப்புரக்க வெழுந்தருளுஞ் செயல்போற்றி
பொன்னிதழித் தொடையாயென் பிழையனைத்தும் பொறுத்தருளிப்
பன்னரிய முத்திநிலைப் பரபோகம் அருளென்றார். - 21



1340 - அவ்வண்ணந் தொழுதிரந்த அருள்முனிவர்க் கருள்கூர்ந்து
செவ்வண்ணத் திருமேனிச் சிவபிரா னிதுகூறும்
இவ்வண்ணம் வேண்டுதிரே லெழிற்காஞ்சி நகர்வயின்போய்
மெய்வண்ண நாற்குலத்தும் தோன்றியவண் மேவுதிரால் - 22



1341 - அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
பற்றறத் துறந்தோர் பற்றுட் பட்டவ ரேனும் ஞானம்
பெற்றவர் மடவ ரேனும் பெரும்பன்றி கழுதை ஞாளி
புற்றராப் புல்லுப் பூடு புழுமர மேனுங் காஞ்சி
நற்றலத் திறுதி கூடின்நம்மடி கலப்ப துண்மை - 23



1342 - தாருகவன முனிவர்கள் காஞ்சியிற் பிறத்தல்
ஆதலி னங்க ணில்லாற் றொழுகிவீ டடைமி னென்னக்
காதலின் வணங்கிப் போற்றிக் கடும்பொடும் பிருகு வாதி
ஏதமில் நாற்பத் தெண்ணா யிரவருங் காஞ்சி நண்ணிக்
கோதரு மரபி னான்ற நால்வகைக் குலத்துந் தோன்றி - 24



1343 - மெல்லிதழ் நறுமென் போதால் விதியுளி வெவ்வே றன்பின்
அல்லுறழ் மிடற்றுப் புத்தேள் அருட்குறி அருச்சித் தேத்தி
நல்லன வரங்கள் பெற்று நாயக னருளால் அங்கண்
இல்லற நெறியின் மன்னி வாழ்ந்தனர் இனைய நீரால். - 25



1344 - எல்லைதீர் காஞ்சி யுள்ளார் யாவரும் முனிவ ரங்கண்
கல்லெலா மிலிங்கம் சீதப் புனலெலாங் கங்கை சொல்லுஞ்
சொல்லெலாம் மனுக்கள் கைகால் தொழிலெலாம் விடையோ னேவல்
செல்லெலாந் தகைத்தன் றம்ம தென்திசைக் கிழவற் கவ்வூர் - 26



1345 - அந்தகாசுரன் முத்தியடைதல்
அருந்தவக் கிழவர் தங்கள் செயலது வாக விப்பால்
பெருந்தகை கயிலை நண்ணிப் பிராட்டியோ டமர்ந்தா னங்கண்
திருந்திழை மகளிர் கோலங் கொண்டுறை திருமா லாதி
இருந்திறற் சுரரும் போற்றி மருங்குற இருக்கு மேல்வை - 27



1346 - தனைப்புறங் கண்ட மின்னார் தமைப்பற்றி வருது என்னும்
மனத்தருக் குய்ப்ப மீட்டும் அந்தகன் வருதல் காணூஉப்
புனந்துழாய்ப் புத்தேள் முன்னர்ப் போற்றிவிண் ணப்பஞ் செய்ய
வினைத்தொடக் கறுக்கு மெங்கோன் வயிரவன் றனைவி டுத்தான் - 28



1347 - வயிரவன் படையோன் முன்னாம் வானவர்க் கிடுக்கண் செய்வான்
வயிரவன் துடியன் சேனை வலத்தவ னாகிப் போந்த
வயிரவன் மனத்தாள் றன்னைப் பொருதுவண் சூலத் தேந்தி
வயிரவன் களிப்பு மிக்கு வாகையின் நடனஞ் செய்தான் - 29



1348 - அந்தகற் கருளால் உண்மை அறிவுவந் துதிப்ப அன்னோன்
கொந்துமுத் தலைச்சூ லத்திற் சேர்ப்புண்டு கிடந்த வாறே
கந்தமென் மலர்த்தாள் போற்றித் துதித்தலுங் காரிப் புத்தேள்
மைந்தயாம் மகிழ்ந்தாம் வேட்ட வரமினிப் புகறி யென்ன - 30



1349 - கொந்து -குத்திக் கோத்த. காரி - வயிரவர்
தானவன் முத்தி யொன்றே தந்தரு ளென்றா னற்றேல்
கோனருள் பெற்றக் காஞ்சி குறுகுவா மென்று நண்ணி
ஆனுடை யூர்தி யண்ண லருளினால் தனது காப்பாம்
மாநக ரெய்திச் சூல வைத்தலைக் கிடந்தான் றன்னை - 31



1350 - தெறும்புர மெரித்தார் கம்பம் திகழ்சிவ கங்கைத் தீர்த்த
நறும்புனல் மூழ்கு வித்துத் திருவருள் நல்கிப் பாசக்
குறும்பறுத் தளித்தான் தண்டக் குரிசி லந்தகனும் தன்பேர்
உறும்பழ விலிங்கத் துள்ளாற் கரந்தன னொருமை பெற்றான் - 32

ஆகத் திருவிருத்தம் 1350
----------

40. வாணேசப் படலம் (1351- 1461)

கலிவிருத்தம்



1351 - அறம்பயில் காஞ்சியி னந்த கேச்சரத்
திறஞ்சிறி தறிந்தவா செப்பி னாமினிப்
பிறங்குசீ ரத்தளிக் குணாது பேதுறாப்
பறம்புவி லுழவர்வா ணேசம் பன்னுவாம் - 1



1352 - வாணன் வரம் பெறல்
எறுழுடை வானனென் றியம்பு தானவன்
தெருவினைக் காஞ்சொஇயினருட்சி வக்குறி
நிறுவின னருச்சனை நிரப்பி மாதவம்
உறுவரின் உஞற்றினா னுலப்பில காலமே. - 2



1353 - அன்பினுக் கெளிவரு மழக னாங்கவன்
முன்புறத் திருநடம் முயலக் கண்டனன்
என்புநெக் குருகநின் றேத்தி னான்நந்தி
தன்பெருங் கணத்தொடு முழவு தாக்கினான் - 3



1354 - குடமுழ விருகரங் குலுங்கத் தாக்குதோ
றடர்பெருங் கருணைகூர்ந் தடிகள் ஆயிரந்
தடநெடுங் கரம்பெற நல்கித் தானவ
விடலைநீ வேட்டது விளம்பு கென்றலும் - 4



1355 - ஆயிர முளரிநீண் டலர்ந்த நீனிற
மாயிரங் குன்றுறழ் வானன் தாந்தெழூஉத்
தீயழற் புரிசையும் திறலு மாக்கமும்
பாயமூ வுலகமும் பரிக்குங் கொற்றமும் - 5



1356 - ஓவரு நிலைமை யுமுன்ன டித்துணை
மேவரு பத்தியும் வேண்டி னேனொரு
மாவடி முளைத்தெழு வள்லலேயெனக்
காவணி யுடுத்தொளிர் கம்ப வாணனும் - 6



1357 - அனையவை முழுவது மளித்து நீங்கினான்
புனைபுகழ் அசுரர்கோன் புவனம் யாவையும்
தனதடிப் படுத்தினன் தருக்கி வாழுநாள்
முனைவனைத் தொழுதெழக் கயிலை முன்னினான் - 7



1358 - நம்மையா ளுடையவன் நடன வேலையிற்
செம்மலா யிரமணிக் கடகச் செங்கையால்
தொம்மெனக் குடமுழா வெழுப்பச் சூர்த்தகண்
கொம்மைவெள் விடையினான் கருணை கூர்ந்தரோ - 8



1359 - எவ்வரம் விழந்தனை யெனினும் நல்குதும்
அவ்வரம் புகலென வசுரன் கூறுவான்
செவ்வன்நின் திருவடிச் சேவை நித்தலுஞ்
செய்வது விழைந்துளேன் கருணை செய்துநீ - 9



1360 - பீட்டுயர் முருகவேள் வரைப்பி ராட்டியோர்
கோட்டிளங் களிற்றொடு கோட்க ணங்களின்
ஈட்டமொ டெய்தியென் னிருக்கை வாய்தலன்
மாட்டிருந் தெனக்கரு ளெனவ ணங்கினான் - 10



1361 - எண்ணிய வெண்ணியாங் களிக்கு மெந்தையவ்
வண்ணமே யாயிடை மருவி வைகினான்
கண்ணுறு மசுரனுங் காலந் தோறுமங்
கண்ணலை ய்டைதொழு தன்பின் வைகுநாள் - 11



1362 - வாசவன் நெடியவன் மற்றை யாரையும்
பூசலிற் புறங்கொடுத் திரியப் போக்கினான்
காசணி மிடறுடைக் கடவுள் முன்னுறீஇ
ஏசறு செருக்கினா லிதுவி ளம்புவான் - 12



1363 - என்னொடு போரெதிர்ந் திரியல் போயினார்
என்னரு மினிமற்றென் புயக்கண் டூதியை
என்னுடைய பிரானிடைத் தீர்ப்ப வெய்தினேன்
என்னைநின் திருவுள மியம்பு வாயென - 13



1364 - வெருவல னெதிர்நின்று விளம்பக் கேட்டலும்
திருவடி விரலுகிர் விழிசி ரிப்பினான்
மருவலர்க் கடந்தருள் மதுகை யெம்பிரான்
குருநிலா நகைமுகிழ்த் திதனைக் கூறுமால் - 14



1365 - முதுதவப் பிருகுவின் சாப மொய்ம்பினால்
எதுகுலத் துதித்தெனக் கினிய னாகிய
புதுமலர்த் துளவநின் புயக்கண் டூதியைக்
கதுமெனப் போக்குவான் வருவன் காணெனா. - 15



1366 - தற்றொழு வான்றனைத் தான்செ குப்பது
நற்றிற மன்றென நாடி இவ்வனம்
சொற்றனன் திருவுலஞ் சுளித்தி யாப்வையும்
அற்றமி லவனவ ளதுகொண் டாட்டுவான் - 16



1367 - இருள்குடி யிருந்தபுன் மனத்தின் ஈங்கிவன்
முரணினை யடக்கவே போலும் முந்தைநாள்
செருவகத் தெம்மினுந் திறல்கொள் வாயென
வரமரிக் கெம்பிரான் வழங்குஞ் சூழ்ச்சியே - 17



1368 - நம்பனீ துரைத்தலும் நக்குக் கையெறிந்
தெம்பிரான் முப்பதாம் முறையின் என்னொடேற்
றும்பரார் கணத்தொடு மோடி யுய்ந்துளான்
அம்பக முளரியா னமருக் காற்றலான். - 18



1369 - அவனையோ ராண்டகை மீளி யாகவைத்
தெவனிது கிளந்தனை யெந்தை நீயெனக்
கவர்மனக் கொடுந்தொழில் தறுகண் காய்சினத்
தவலுடை யூழினா னிகழ்ந்து சாற்றலும். - 19



1370 - அவனமர்க் கிடந்தவன் றனைக்கொண் டேயவன்
கவர்மத மடக்கிய நினைந்த கண்ணுதற்
சிவபிரான் குறுநகை முகிழ்த்துச் செப்புவான்
தவலரு மாற்றலோய் சாற்றக் கேண்மதி. - 20



1371 - நின்னமர்க் குடைந்தபின் நினைய டக்குவான்
துன்னசீ ருபமனி யனுக்குத் தொண்டுபூண்
டென்னருட் குரியனாய் எறுழ்ப டைத்தனன்
அன்னவன் முன்னவ னாக எண்ணலை. - 21



1372 - என்னநா ளவன்வரு மென்றி யேலொரு
நின்மகட் கோர்பழி நிகழ நின்னகர்
நன்னெடுங் கொடியுளொன் றொடியும் நாள்வரும்
என்னலு மசுரர்கோ னிருக்கை யெய்தினான். - 22



1373 - உஷையின் களவொழுக்கம்
அங்கொரு நாலவன் பயந்த வாயிழை
கங்குவிற் கனவினிற் கண்ணன் சேய்பெரும்
பொங்கெழி லனுருத்தன் புல்லப் புல்லினாள்
வெங்களிப் பெய்தினள் விழிப்பக் கண்டிலாள். - 23



1374 - கையெறிந் தழுதுகண் கலுழ்ந்து சோர்ந்தனள்
மெய்யணி சிதந்துமெய் வெறுவி தாதல்கண்
டைதெனத் தன்மல ரனங்கன் சூட்டினான்
தையல்தன் மருகியாச் சார்வ தோர்ந்தென - 24



1375 - கலங்கனிக் கூந்தலிற் கவற்றித் தற்றெறத்
துளங்குறு பழம்பகைத் தொடர்பின் வேள்கரி
விளங்கிழை முந்துதன் வீறு காட்டலால்
இளங்கொடி முதலரிந் தென்னச் சாம்பினாள் - 25



1376 - பழிவரு மென்றசொற் பழுது றாவகை
உழைவிழிக் கிறந்துபா டொழிப்ப வல்விரைந்
தெழுபவன் போலிருள் கிழித்து வெய்யவன்
சுழிபுனற் கருங்கடல் முகட்டுத் தோன்றினான். - 26



1377 - அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
அத்திறங் கேட்ட தோழி யாய்ந்துருப் படத்தில் தீட்டி
இத்தனிக்குமர னேயோ வென்றுள மகிழ்ச்சி நோக்கித்
தத்துநீர்த் துவரை நண்ணித் தவிசொடுந் துயில்கின் றானைச்
சித்திர மெனக்கொண் டெய்தித் திருந்திழை முன்னர் உய்த்தாள் - 27



1378 - கண்டன ளசுர னீன்ற கனங்குழை யமிழ்த மள்ளி
உண்டண லென்ன வோகை துளும்பின ளுவனைப் புல்லிக்
கொண்டனள் காலை மேனி வனப்பெலாங் குறித்து நோக்கி
விண்டனள் கவலை யன்னான் விழித்தனன் விலைந்த காமம் - 28



1379 - இளமுலை வருடி மோந்து முத்தமுண் டிதழ்தேன் மாந்தி
விளரிவண் டிமிருந் தாரான் மேகலை நெகிழ்த்து நீவித்
தனைவிடுத் தகல யானர் அல்குலந் தடத்துள் மூழ்கி
விளைபெருங் கலவிப் போக வெள்ளத்தின் அழுந்தி னானால் - 29



1380 - துணைவிழி சேப்பச் செவ்வாய் துடிப்பவேர் வரும்பப் பூக
மணிமிட றொலிப்பவார்ப்ப வால்வலை தடந்தோள் வெற்பிற்
பணைமுலைக் களிநல் யானை பாய்ந்துபாய்ந் துழக்க மெல்கும்
அணைமிசைக் கலவிப் பூசல் மடந்தையும் ஆடி னாளே - 30



1381 - புணர்ச்சியின் மருங்கு நிற்றல் புரையென விலகும் மேலோர்
குணத்தையுற் றுடையும் நாணும் புறஞ்செலத் தூர்த்தர் மான
வணர்க்குழல் கட்டு விட்டு மருங்கெலாங் கொட்ப நோக்கி
இணைச்சிலம் பார்ப்பத் தண்டா தின்னலம் நுகர்ந்து வாழ்நாள் - 31



1382 - தளிரியல் நிறம்வே றாகித் தையலாள் கருப்பம் எய்த
வளமனை காப்போர் நோக்கி வானனுக் குணர்த்த அன்னான்
இளவலை அரிதிற் பற்றி யிருஞ்சிறைப் படுத்தான் காணூஉ
வளமரு மயிலின் தேம்பிப் பெண்கொடி அரற்றி வீழ்ந்தாள் - 32



1383 - கண்ணன் போருக்கெழுதல்
வீழ்ந்தயர் பொலங்கொ டிக்குத் துணையென விசும்பு நக்க
வீழ்ந்துயர் கொடியும் அந்நாள் வெய்யகா லுதைப்ப இற்று
வீழ்ந்தது வானன் கொண்ட விழுத்தவப் பேறு மொக்க
வீழ்ந்தது நிகழ்ந்த செய்கை வீணைமா முனிவன் ஓர்ந்தான் - 33



1384 - சிலைத்தொழில் மாண்ட தன்சேய் சிறுவனைக் காணா தெங்கும்
இலைப்புரை கிளைத்து வாடுந் துவாரகைக் கிறைபால் எய்திப்
புலப்படப் புகலக் கேட்டுப் பொருபடை எழுக என்னா
உலப்புயத் துளவத் தாரான் ஒலிமுர சறைவித் தானால் - 34



1385 - வியவரின் உணர்ந்தார் சாற்றும் விசிமுர சோத·இ கேட்டுச்
செயிரறத் தொகுவ வங்கண்சேனையே யல்ல மாறாச்
சயமுடை யிமையோர் தங்கள் சிதறுநல் வினைகள் தாமும்
உயர்முர சோதை கேட்டவ் வும்பர்பால் தொகுவ மாதோ - 35



1386 - கடுந்தொழி லசுரர் தம்மால் தெறப்படுங் கால தூதர்
கெடுந்தொழி லனையார்ப் பற்றக் கிளர்ந்துவேற் றுருவு கொண்டு
கொடுந்தொழில் முற்றக் கற்றா லனையகூர்ங் கோட்டு நால்வாய்
அடுந்தொழில் தறுகண் வேழ மளப்பில பண்ணி னார்கள் - 36



1387 - குவைமணி மோலி விண்ணோர் மனமெலாங் குழுமி நம்மைக்
கவலுற வருத்தி னாரை வெலற்கீது கால மென்னா
அவயவங் கொண்டு வெவ்வே றணைந்தென விரைசொல் காட்சி
இவறுசீர்க் கலினப் பாய்மா எண்ணில பண்ணி னாரால். - 37



1388 - வரைமகள் கிரீசன் ஓங்கற் குறிஞ்சிமன் மதக்கை வெற்பென்
றுரைபெறு கிழமை யோரை யொருங்குதன் வாய்தல் வைத்த
புரையினான் றன்மேற் சீறி வரையெலாம் புறப்பட் டாங்கு
விரைசெலற் கொடிஞ்சித் திண்தேர் பண்ணினார் கோடி மேலும் - 38



1389 - தடமதி லெரியாற் கோலப் பெற்றவன் தன்னை யேவ
லிடவரம் பெறவும் வல்லும் எனத்துணிந் தனையா னாவி
கொடுசெலக் குறித்துப் பல்வே றுருவுகொண் டனைந்த காட்சி
வடவைநேர் சீற்றத் துப்பின் மள்ளரும் மொய்த்தார் பல்லோர் - 39



1390 - பண்ணுநாற் படையின் வீக்கம் பார்த்துமண்நடுங்கா வண்ணம்
வண்ணவெண் கவிகை பிச்சங் கொடிகள்மேல் மறைபத் தீம்பால்
வெண்ணிறப் புணரி நள்ளு மேயதன் தோற்றங் காட்டிக்
கண்னனுந் தானை நாப்பண் கடகளி றுகைத்துச் சென்றான் - 40



1391 - கொழுந னாடமர்க்குச் செல்லக் குலமனை யகத்து வாளாக்
கெழுவுறு தகைய ஞாலக் கிழத்தியுந் திருவை குந்தப்
பழமனை யியற்கை வல்லை பார்த்தனள் மீள விண்மேல்
எழுவது கடுக்கும் சேனைச் செலவிடை எழுந்த தூளி - 41



1392 - கண்ணன் படையும் வாணன் படையும் கைகலத்தல்
இன்னண மளக்க ரெழுமெ ழுந்தென பரந்த சேனை
துண்ணல ரணுகல் செல்லாச் சோணித புரத்தை முற்ற
அன்னது தெரிந்த வானன் அழலெழ விழித்து நக்குத்
தன்னிகர் அடுபோர்ச் சேனைத் தலைவரை யேவி னானால் - 42



1393 - எழுந்தன படைக ணான்கு மியம்பின வியங்க ளெங்கும்
வழிந்தன விலாழி மண்ணும் வானமுஞ் செறியத் துன்னி
யொழுங்கின தூளிசேய்த்திற் கண்டவருகுமண் மாரி
பொழிந்திடும் போலும் வாணன் புரத்தென மருட்கை கொள்ள - 43



1394 - தன்னுயிர்க் கணவன் மேற்செ· றானையுள் ளழுங்க கண்கள்
பொன்னுருப் புவனி மாது புழுதியாற் புதைப்பச் சீறி
அன்னவள் மருமம் நோவ அடிபெயர்த் ததிர்த்துச் சென்று
மின்னிலைப் படைய சேனை வியனகர் வெளிக்கொண் டன்றே - 44



1395 - விதிர்படை மின்னுக் காட்ட விலாழிநீர் தாரைகாட்ட
அதிரொலி உருமுக் காட்ட அந்தநாள் படலை மேகம்
எதிரெதி ருடன்றா லென்ன விருபெருங் கருவிச் சேனை
கதிர்முலைச் சயமான் மெச்சக் கைகலந் தமரின் மூண்ட - 45



1396 - கலித்துறை
செங்க ளத்துடல் கிடப்பவரு திண்டி றலரை
அங்கு நின்றெதிர் கொளப்புகுந ரொப்ப அழல்சால்
வெங்க ளத்துறு செருத்திறமை நோக்க வியல்வான்
எங்கும் மொய்த்தனர்க ளீர்ந்தொடையல் மோலி யிமையோர் - 46



1397 - கல்வி யற்பொரு களத்திருவர் அங்க மதனில்
மெல்லி யற்சய மடக்கொடி நடிப்ப மிடையும்
பல்லி யத்தொகை முழக்கென எழுப்பு படகம்
சல்லி தக்கைமுதல் எண்ணில தழங்கு வனவால் - 47



1398 - பொருதொ ழில்திறனில் வல்லபக வன்பு ரமடும்
ஒருவ மேயெனல் உணர்ந்தனர் எனச்சி வன்முடிச்
செருகு தும்பையை மிலைச்சினர் தெழித்து மிடலான்
இருதி றத்தரு முடற்றுநமர் யாவர் மொழிவார் - 48



1399 - கரிகள் ஊருந ரொடுங்கரிக ளூரு நர்களும்
புரவி யூருந ரொடும்புரவி யூரு நர்களும்
இரதம் ஊருநர்க ளோடிரத மூருநர்களும்
மரபின் மன்னரோடு மன்னரு மெதிர்ந்து பொருவார் - 49



1400 - தண்ட மென்பெயர் வழிக்குதவு தான வயவே
தண்ட மோச்சியெறி தண்டமவை யொன்ன லர்கள்கத்
தண்டமோடுபுய தண்டமும் நிலத்தி னுருளத்
தண்ட மாற்றுவ சமர்க்கணினம் என்பதுளவோ. - 50



1401 - ஏறு தேர்வயவ ரேற்றெதிர் விடுத்த திகிரி
மாறு தேரிடை நுழைத்திடுவ வானெ ழுவரைக்
கூறு கொண்டமுழை நின்றெழு குலப்ப றவைகள்
வேறு குன்றமுழை யிற்குடிபு கல்வி ழையவே - 51



1402 - கலிவிருத்தம்
ஆடுபரி சாரிகை தொடங்குதொ றடங்கார்
சேடுடை முடித்தலைகள் வீழ்ந்தமர் தேரின்
ஓடிருள் தடுப்பவொரு நீயிரும் எமைப்போல்
ஈடழிய ஏகலிர் எனத்தடைசெய் தென்ன - 52



1403 - வண்டுமுரல் வாவியுறை கஞ்சமனை யாளைக்
லொண்டுதன் இருக்கைசெல் சுடர்க்கொழுநன் ஒப்பத்
திண்டிறல் அடங்கலர் சிரந்திருகி ஏந்தி
அண்டவெளி யிற்சுழல்வ சுற்ரிவிடும் ஆழி - 53



1404 - மீச்செல்வய வெங்கரிகள் ஒன்றன்மிசை யொன்றங்
கோச்சுகதை மாற்றுகதை ஒள்ளிழை மடச்செவ்
வாய்ச்சியர்கோ லாட்டநிகர் வண்மையினை நோக்கி
ஏச்சறு விசும்பினிமை யாதவர் வியப்பார் - 54



1405 - விழித்தவெகு ளிக்கணிட னாடுதொறும் மேவார்
அழித்திமை யெனக்கருதி யார்ப்பரென வெளிகி
ஒழித்துவலன் நோக்கினழல் சீற்ரம்நனி காட்டித்
தெழித்துவிறல் சாற்ரியமர் ஏற்பர்திதி பெற்றார். - 55



1406 - வேறு
வெங்கட்கரி கடிந்திட வெண்ணத்தெழு மவுணர்
அங்கைப்படி எ·கத்துட னணைனின்றமை காணா
நங்கட்கிடர் புரிவாணிவன் நணுகிற்றன ரென்னா
உங்கட்செறி விண்ணோரிரி வுற்றாருளம் அஞ்சி - 56



1407 - தெவ்வட்டழல் பட·இவெய்யவர் விண்ணிற்செல வுந்தும்
கௌளவக்கரி பிளிறிக்கடம் ஒழுகப்புவி வீழ்வ
எவ்வப்பட வலனைத்தெறும் இறையேவலின் எழிலி
வெவ்விற்படை மாயற்கொரு துணையாய்வரல் வீழும். - 57



1408 - ஒருவன்திற லவுணன்கத முடனூக்கிய பரிமா
பெருவிண்மிசை யெய்திச்சுழல் காற்பட்டுழல் பெற்றி
வருவெங்கதிர் மாந்தேர்விசை யிற்றப்பிய வாசி
தெருமந்தினங் காணாதவ ணுழிதந்தெனத் திகழும் - 58



1409 - வேறு
துன்னுகுரு தித்தசை வழுக்கீவிழுசூரர்
வெந்நிடை மதக்களிறு குத்துவெண்ம ருப்பு
முன்னுற வுரீஇநிமிர்வ மைந்தர்முலை பெற்ற
தென்னென வரம்பையர் மருட்கையின் இசைப்பார் - 59



1410 - அட்டழல் கழல்மறவர் ஆகமிசை எ·கம்
பட்டபுழை நின்றிழிவ பாய்குருதி வெள்ளம்
ஒட்டலரை யானுயிர் குடிப்பலென ஒல்லை
உட்டிகழ் மறக்கனல் வெளிப்படுவ தொக்கும் - 60



1411 - கடுங்களிறு கைக்கதை சுழற்றியெறி கால்தேர்க்
கொடிஞ்சியின் நிரைத்தகுரு மாமணிகள் உக்க
அடும்படை வலத்தினர் தெழித்தெழு மதிர்ப்பின்
நெடுங்ககன மீன்நிறை நிலத்துகுவ மானும். - 61



1412 - நீள்கொடி மிசைத்துகி லனைத்தினும் நெடுங்கோல்
வாளிகள் பொதிந்தவை சிரந்துவியல் வானின்
மீளிகள் அதிர்ப்பினுயர் விண்மிசைய தாருத்
தாளதிர உக்கதழை போன்றன பறப்ப. - 62



1413 - கைப்படை யிழந்தவர் எதிர்ந்தவர் கடாவும்
மெய்ப்படு பெரும்படை பறித்தெதிர் விடுப்பார்
எப்பொருளு மற்றுழியு மேதிலர்கள் நல்கும்
அப்பொருள் கொளேங்களெனும் மானமுடை யார்போல் - 63



1414 - வீடினர் வயப்பொருநர் வீடின இபங்கள்
மூடின நிலங்குருதி மூடின பிணங்கள்
கூடின கருங்கொடிகள் கூடின பருந்தும்
ஆடின மகிழ்ந்தலகை ஆடின கவந்தம் - 64



1415 - எங்கணூம் நிணங்குடர் இறைச்சிகொழு மூளை
எங்கணும் முரிந்தசிலை வாள்பலகை எ·கம்
எண்க்கணும் இறுதகிடி கச்சுருள் கொடிஞ்சி
எண்க்கணும் முடித்தலை நிமிர்ந்தன இடங்கள் - 65



1416 - பிணங்களொ டயர்ந்துவிழு பெற்றியரும் வீழ்தோட்
கணங்களொடு தண்டமும் விசித்தகடி வல்வார்க்
குணங்கலொடு புல்லிய கொழுங்குடரும் அங்கேழ்
நினங்களொடு பன்மணியும் நீதறிய லாகா - 66



1417 - மண்ணிடம் மெலிந்தது பிணக்குவையின் வாளோன்
நண்ணிடம் மெலிந்ததுடல் விட்டுறுநர் போழ்ந்து
விண்ணிடம் மெலிந்ததவர் துன்னிமிடை வோரை
எண்ணிட மெலிந்தனர் விசும்பினிமை யாதார் - 67



1418 - மிடைந்துசமர் இன்னணம் விலைத்துழி இசைத்தேன்
குடைந்ததொடை வல்லவுண வீரர்வலி குன்றி
உடைந்தனர் நடுங்கினர் ஒடுங்கினர் சிதர்ந்தார்
இடைந்தனர் பெயர்ந்தனர் இரிந்தனர் எங்கும் - 68



1419 - கொச்சகக் கலிப்பா
கள்ளவிழும் மலர்வாவித் துவரைக்கோன் கடற்சேனை
மள்ளர்படைக் கல்லெறியான் வல்லாண்மைக் குடமுடைய
உள்ளிருந்த ஞண்டுகளின் தனித்தனியே இரிந்தோடி
நள்ளலான் பெருஞ்சேனை நகர்நோக்கி நடந்தனவால் - 69



1420 - கண்ணன் கணபதி முதலியோரை வழிபடல்
போர்தாங்கும் மறவீரர் பின்முடுக்கிப் போதரலும்
தார்தாங்கி முதல்வாய்தற் கடைமன்னு தவளமதிக்
கூர்தாங்கும் ஒருகோட்டுக் குஞ்சரப்புத் தேள்காணூஉச்
சூர்தாங்கி வருபடையைத் தொலைத்துழக்கிச் சவட்டினான் - 70



1421 - கண்ணனும்மற் றினியென்னே செயலென்று கடுகச்சென்
றுண்ணமைந்த பாலடிசில் கனிவருக்கம் உறுசுவைய
பண்ணியங்க ளெனைப்பலவு மமுதுசெயப் படைத்திறைஞ்ச
அண்ணல்வயப் பகட்டேந்த லத்தொழிலின் மகிழ்ந்திருந்தான் - 71



1422 - இதுகண்டு மற்றிரண்டாங் கடைவைகு மிளந்தோன்றல்
எதுமைந்தன் வருகென்று சிலைவாங்கி ஏற்றெழலும்
மதுவொன்று மலர்த்துளவோன் பூசனையான் மகிழ்விப்ப
அதுகண்டு மகிழ்ந்திருந்தான் ஆறுமுகப் பண்ணவனும் - 72



1423 - இருவர்களும் விடையளிப்ப எழில்மூன்றாங் கடைநண்ணி
மருமலர்த்தார்க் கருங்கூந்தல் மலைமகளைக் கண்டிறைஞ்சித்
திருவருள்பெற் றினிதேகத் திகழ்நாலாங் கடைமேவும்
உருகெழுவெஞ் சினவெள்ளே றுயர்த்தபிரான் கண்டனனால் - 73



1424 - முந்தைநால் மைநாக முதுநாகத் தருந்தவஞ்செய்
இந்தநா ரணற்கெம்மான் யானேவந் துடன்றாலும்
மைந்துமிகு ஞாட்பின்கண் வாகைநீ பெறுகென்னத்
தந்தவரம் பொய்யானைப் பாதுகாத் தற்பொருட்டு - 74



1425 - பினாகநெடுஞ் சிலையேந்தி எதிர்நிற்பப் பெருந்திருமால்
அனாதியாய் அனந்தமாய் ஆனந்த மாயொளியாய்
மனாதிகளுக் கெட்டாத வான்கருனைப் பரம்பொருலைத்
தனாதுவிழி களிகூரக் கண்டெய்தித் தாழ்ந்தெழுந்தான் - 75



1426 - நாத்தழும்பப் புகழ்பாடி நளினமலர்க் கைகூப்பிச்
சேத்தெந்தாய் எனச்சொல்லி இமையவர்க்கே யருள்சுரந்து
காத்தருளுங் கடனுடையாய் கண்ணோடா அவுணர்குலத்
தீத்தொழிலான் றனைவெல்லத் திருவருள்செய் யெனக்கென்றான் - 76



1427 - என்றிரந்து நனிவேண்டும் நெடிஉயோனை யெதிர்நோக்கிக்
குன்றநெடுஞ் சிலைவல்லான் குறுமூரல் காட்டியெமை
வென்றன்றே வானனைநீ விறல்கொள்வ தெம்மோடு
மன்றபோர்க் கெழுகென்ன மணிவண்ண னுளம்நடுங்கி - 77



1428 - என்னருளிச் செய்தவா றெவ்வுயிர்க்கு மெளியேற்கும்
மன்னவன்நீ நாயனொடு மாறிழைப்ப தெனக்கழகோ
உன்னடிக்கீழ் மெய்த்தொண்டு பூண்டுரிமைப் பணிசெய்வேன்
றன்னிடத்தி லிவ்வாறோ சாமீநின் திருவருளே - 78



1429 - எந்தையடி யருச்சனையால் எதிர்·ந்தாரைப் புறங்காண
மைந்துபெரும் யான்நின்னோ டமரேற்க வல்லுவலோ
பந்தமுறு முலகனைத்தும் தொழிற்படுத்தும் நின்னெதிர்நின்
றுய்ந்தவரு முளரேயோ வுபநிடதத் தனிமுதலே - 79



1430 - எண்ணிகந்த அண்டமுழு தொருநொடியில் எரிக்குதவும்
கண்னமைந்த நுதலாய்க்குக் கடையேனோர் இலக்கன்றே
வண்ணமெலாம் யாங்கான நீநகைத்த மாத்திரையே
அண்ணலார் புரமூன்றும் கூட்டோடே அழிந்தனவால் - 80



1431 - துரும்பொன்றில் புத்தேளிர் தருக்கெல்லாம் தொலைவித்தாய்
கர்ம்பொன்று சிலையானை நுதல்விழியாற் கனற்ரினாய்
சுரும்பொன்று மலர்ப்பாதப் பெருவிரலாற் சுடரிலங்கை
இரும்பொன்று மனத்தானை இடருழப்பக் கண்டனையால் - 81



1432 - நோனாத கூற்றுவனை நோன்றாளால் உயிருண்டாய்
தேனாடு மலரானை நகநுதியாற் சிரங்கொய்தாய்
மீனாமை பன்றிநர வெறிமடங்கல் உலகளந்தான்
றானாமென் பிறவிகளுந் தண்டிக்கப் பட்டனவே. - 82



1433 - தக்கன்றன் வேள்வியைநீ தரவந்த தனிவீரன்
புக்கன்றி யழித்தநாள் என்னோடும் புத்தேளிர்
நொக்கொன்று பட்டபா டெடுத்தியம்பிற் சொல்லளவின்
மிக்கன்றால் உனக்கிவையும் விளையாடற் செய்கையே - 83



1434 - அற்றமுற வெகுண்டவரும் அடற்கங்கை வீறடக்கும்
கற்றைநெடுஞ் சடையாய்மற் றெனைமுனியக் கருதினையேல்
சற்றுநீ முகம்நிமிர்த்து நோக்கினது சாலாதோ
வெற்றிமலர்த் திருக்கரத்துப் படைக்கலமும் வேண்டுமோ - 84



1435 - வடிவாளி விடையேறு மனைவியென நினக்குறுப்பாம்
அடியேனை எதிர்ப்பதுநின் அருட்பெருமைக் கொல்லுவதோ
குடியோடு மெனையடிமை கொண்டாயின் றெனக்கிரங்காய
கடியாழி விடமயின்ற கண்டநின் னடிபோற்றி - 85



1436 - கண்னனும் கடவுளும் கைகலத்தல்
என்றென்று பலமுறையும் இர்ந்திரந்து தொழுதிறைஞ்சும்
குன்றெடுத்த குடையானுக் கெங்கோமா னிதுகூறும்
மன்றநீ வெருவலைநின் மனக்கவலை யொழிகண்டாய்
அன்றுனக்கு மைநாகத் தளித்தவரம் மறந்தனையோ - 86



1437 - நின்வரவு வானனுக்கு முன்னரே நிகழ்த்தினம்யாம்
அன்னவனை யினிநீவென் றடல்வாகை புனைகிற்பாய்
மின்னிமைக்கும் மணிமார்ப விசையானொடு புரிவெம்போர்
முன்னெமக்கு முருகவேள் விளையாட்டிற் சிறந்ததால் - 87



1438 - அம்முறையே கணப்பொழுது நின்னோடும் அமர்புரிகேம்
இம்முறைகண் டுலகும்பர் மகிழ்வுறுக யிதுவன்றித்
தெம்மரபிற் செய்கில்லேம் அஞ்சாதி யெனத்தேற்றிக்
கைம்முகத்திற் பிடித்திருந்த கார்முகத்தை வணக்கினான். - 88



1439 - உய்ந்தேனெம் பெருமானே அருளாயென் றுரைத்துரைத்து
மந்தார மனங்கமழும் மலரடிகள் தொழுதிசைந்து
பைந்தாம நறுந்துளவப் பண்ணவனும் பகைமுருக்குஞ்
சிந்தாத விறற்சார்ங்கச் சிலைவாங்கி நாணெறிந்தான் - 89



1440 - கலிநிலைத்துறை
பவல வெற்பொடு நிலவெற் பெதிர்ந்தெனப் பரூஉக்கைக்
கவள மாக்களி றட்டவர் இருவருங் கடுகித்
துவள வார்சிலை வாங்கினர் நாணெறி சும்மை
திவல லுற்றமூ வுலகமுஞ் செவிடுறப் பொதிந்த - 90



1441 - மண்டு மோதையின் மற்றவர் சினக்கனல் புறநீர்
கொண்ட விப்பவான் வழிதிறந் தாலெனக் குலையா
அண்டம் விண்டது புடவியும் விண்டதப் பெருநீர்
உண்டல் வேட்கையின் உணங்கிவாய் பிலந்தமை யொப்ப - 91



1442 -
சிலையின் நாணொலிக் கிளர்ச்சியால் திண்புவி யதிர்வுற்
றலையு மூதையி னாழிமா னுடம்மரம் பறவை
பலவும் தத்தமுள் மோதுபு தெளிதரப் பயிற்றும்
தலைவர் எப்படி யப்படி உலகெனுந் தகுதி - 92



1443 - மூள்சி னத்துட னடுத்துழி முதல்வனென் றறிந்து
மீள நோக்கியாங் கெம்பிரான் சரணமுன் வீழ
நீள்பெ ருந்தடங் குனிவரிச் சிலையிடை நெடியோன்
வாளி யொன்றுதொ டேயின னருச்சனை மாண்பின். - 93



1444 - சத்தி சத்திமா னாகிய விருதிறத் தவருந்
தொத்த ழற்கணை தூண்டினர் மூண்டது பெரும்போர்
பைத்த மாநில மயிர்த்தது பனிவிசும் பிறுத்தார்
சித்தர் காரண ரிமையவ ரியக்கர்கந் திருவர் - 94



1445 - புட்டில் வீக்கிய கரத்திடைப் பொருசிலை குழையத்
தொட்டவாளிகள் இறுதிநாள் முகிலெனச் சொரிவார்
அட்ட திக்கையும் அடைப்பர்கள் கணத்தவை மாற்றி
முட்ட வெங்கணை மீளவும் முடுக்குவர் தொலைப்பார். - 95



1446 - கடவுள் வான்படை எண்ணில வழங்குவர் கடுநோய்
படரும் வெப்பொடு குளிர்ப்பிணி படைத்தெதிர் விடுப்பார்
உடலும் மற்றவை யொன்றினொன் றழிவுறக் காண்பார்
அடைவின் இன்னணம் விலைத்தனர் அற்புதப் பூசல் - 96



1447 - மூவ ருந்தொழும் முதல்வனே முனைந்தன னினியென்
ஆவ தோவென முனிவர ரஞ்சின ரகில
தேவ ரஞ்சினர் பூதங்க ளஞ்சின தேவர்
கோவு மஞ்சினன் திருவுலக் குறிப்பினை யுணரார் - 97



1448 - இளிவில் வெஞ்சமர் இன்னணம் நெடும்பொழு தாற்ரும்
அலவின் மற்ரினி யாற்றிலே னடியனே னென்னா
முளரி நோக்கினான் வணங்கலும் முறுவல்செய் தடியார்க்
கெளிய னென்பது விளக்கின னென்னையா ளுடையான் - 98



1449 - அடிகள் நோவச்சென் றாளென விறகுமண் சுமந்தும்
அடிபொ றுத்துமோ ரரிவைதூ தாற்றியும் வெள்கா
தடியர் எண்னமே முடிப்பது விரதமாக் கொண்ட
அடிகள் வாகையிக் கண்ணனுக் களித்ததோர் வியப்போ. - 99



1450 - தம்பி ரான்பெருங் கருணையின் சால்பினை நோக்கி
உம்ப ரார்த்தன ருவணவேற் றிறைவனு மாவா
எம்பி ரானரு ளென்னிடை யிருந்தவா றென்னென்
றம்பி காபதி யடிதொழு தானந்த முற்றான் - 100



1451 - கண்னனும் வானனும் கைகலத்தல்
துண்ட வெண்பிறைக் கண்ணியோன் போர்வினை துறப்பக்
கண்டு வெஞ்சினந் தலைக்கொளீஇக் கனைகழ லவுணன்
அண்டம் விண்டென வார்த்தனன் மாயனை யடுத்தான்
மண்டு தீச்சிலை வளைத்தனர் விளைத்தனர் பூசல் - 101



1452 - நூழில் வன்படை யிருவரும் நெடுமொழி நுவல்வார்
பாழி வன்புயம் புடைத்தெழூஉ வஞ்சினம் பகர்வார்
ஊழி ஈற்றனல் விழியுகச் சீறுவ ருலகைப்
பூழி யாக்குவர் சாரிகை சுற்ருவர் பொருவார் - 102



1453 - இனைய மண்டமர் ஞாட்பிடை யெம்பிரா னருள்சேர்
வனைம லர்த்துழாய் வானவன் மதுகைமீக் கொண்டு
முனைவ ரிச்சிலை வாளிதேர் முடிகளை யிறுத்துத்
தனிய னாக்கினன் சலம்புரி யவுனருக் கிறையை - 103



1454 - கருப்புத் துண்டென நூற்றுப்பத் தடுக்கிய கனகப்
பொருப்புத் தோள்களை யரிவுழி மட்தனுடல் பொடித்த
நெருப்புக் கண்ணினா னெதிரெழுந் தருளிநீள் கருணை
மருப்புக் குஞ்சரங் காத்தவன் மேற்செல வழங்கி - 104



1455 - கண்ன னேயிது கேட்டியிக் கனைகழ லவுணன்
அண்ணல் வாய்மையுன் போலெமக் கன்புமிக் குடையான்
எண்ணம் வாய்ப்பகம் பூசையி னமைந்ததோ ளிரண்டும்
வண்ன வாள்மலர் வதனமு மரிதலோம் பென்றான். - 105



1456 - அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
என்ற வாய்மொழிகேட்டலும் தொழுதெழுந் தியாதவர் குலத்தோன்றல்
மன்ற மாமறை முழுவது முழுவது முருத்திரன் எனுமாற்றால்
ஒன்று மன்பொடு முன்னடி யருச்சனை யுஞற்றினோன் எமையெல்லாம்
நன்று பூசனை யியற்ரினோ னாதலின் நாற்கரம் விடுத்தேனால் - 106



1457 - அடிய னேன்பிழை யாவையும் பொறுத்தரு லையனே யெனத்தாழ்ந்து
கொடியின் மேல்விடை யுயர்த்தவ னாணையிற் குடவளைக் குடங்கையான்
மடிவில் வாணனைக் கேண்மைகொண் டாங்கவன் மகளைத்தன் மகனீன்ற
விடலை சேர்வுற மணம்புணர்த் துடன்கொண்டு மீண்டனன் தன்மூதூர். - 107



1458 - வாணன் முத்தி பெறுதல்
ஐயி ரண்டினில் உறழ்தரு மும்முறை யமரகத் துடைந்தெள்ளல்
எய்தி னானெனப் பட்டவன் றனைக்கொண்டே இவன்செருக் கறக்கண்டான்
செய்யச் செய்திடா தொழியவே றொன்றனைச் செய்யவும் வல்லோனாம்
பைய ராவணி பண்ணவன் பெருமையை யாவரே பகர்கிற்பார். - 108



1459 - கருவி மாமுகில் மேனியோ னகன்றபின் கனங்குழை யுமைபாகம்
மருவு நாயகன் வானனை நோக்கிநின் மணிப்புயக் கண்டூதி
ஒருவி னாய்கொலா மெனக்குறு நகைமுகிழ்த் துரைத்தலும் முடிசாய்த்துப்
பெரும மற்ரினி வீடுபே றளித்தியென் றிரந்தனன் பெருநேசன் - 109



1460 - முத்தி வேண்டுமேற் காஞ்சியி னெய்திநீ முன்னெமை நிறீஇப் போற்றும்
அத்தலத்திடைப் பெறுதியென் றருள்புரிந் தகன்றன னெங்கோமான்
பத்தி மேதகு வாணனுங் காஞ்சியிற் படர்ந்துதான் தொழுதேத்தும்
நித்த னாரரு ளாற்கணத் தலைமைபெற் றானந்த நிலைபெற்றான் - 110



1461 - வரிச்சி றைச்சுரும் புளர்தரக் குவிமுகை முறுக்குடைந் தலர்வாசம்
விரித்த நெட்டிதழ்ப் பங்கயப் பொய்கைசூழ் வியத்தகு வாணேசம்
அருச்ச னைக்குரி மரபினிற் போற்றிசெய் யடியவர் கருத்தீமை
நரிச்சு நீங்கமெய்ப் பெருநலக் கிழமைவீ டெய்துவர் நமரங்காள் - 111

ஆகத் திருவிருத்தம் 1461
-------

41. திருவோணகாந்தன் தளிப்படலம் (1462- 1470)

கலிவிருத்தம்



1462 - பேண வல்லர் பிறவு தீர்த்தருள்
வாண நாத மரபு சொற்றனம்
யாணவர் வண்மை பெருமி தன்குணக்
கோண காந்தன் தளியு ரைத்துமால் - 1



1463 - யாணர் புதிமை. அழகுமாம்
மருவ லார்தாழ் வாணன் றன்னுடைப்
பொருவில் சேனைத் தலைமை பூண்டவர்
தரும வாற்றி னொழுகு தானவர்
இருவ ரோணன் காந்த னென்றுளார் - 2



1464 - வன்பு பூண்ட மனவ கப்படா
என்பு பூண்ட இறைவர் தம்மடிக்
கன்பு பூண்ட அறிவன் மேலவர்
துன்பு பூண்ட தொடர்பு நீக்குவார் - 3



1465 - ஓங்கு காஞ்சி யூரை நண்ணினார்
தேங்கு தெண்ணீர்த் தீர்த்தந் தொட்டனர்
பாங்கி லிங்கம் பிரதிட்டை செய்தனர்
ஆங்க ணன்பிற் பூசை யாற்றினார் - 4



1466 - ஆற்று மிருவ ரன்பு நோக்கிய
நீற்று மேனி நிமல னம்மையோ
டேற்றின் மேலாற் காட்சி யீதலும்
போற்றி யின்பப் புணரி மூழ்கினார் - 5



1467 - கரையில் காதல் கைமி கத்தொழும்
புரையி லார்க்குப் பொங்கு வெள்ளிமால்
வரையி னாரின் னருள்வ ழங்கிநீர்
உரைமின் வேட்ட வரமென் றோதினார் - 6



1468 - கைகள் கூப்பிக் கண்கள் நீருகச்
செய்ய பாதந் தொழுது செப்புவார்
ஐய னேமெய் யறிவு தந்தெமை
உய்யக் கோடி யுனக்க டைக்கலம் - 7



1469 - இனைய தீர்த்த மாடி யெம்பெயர்
புனையி லிங்கம் போற்றப் பெற்றவர்
நினைவு முற்றும் நிரப்பி யீண்டுநீ
எனைய நாளு மினிது வைகுவாய் - 8



1470 - என்று போற்று மிருவர்க் கன்னவை
மன்ற லொற்றை மாவின் நீழலான்
நன்று மங்கண் நல்கி வைகினான்
அன்று தொட்ட· தற்பு தத்தலம் - 9

ஆகத் திருவிருத்தம் 1470
------------

41. சலந்தரேசப் படலம் (1471-1493)

கலிவிருத்தம்



1471 - ஓணனார்க் கரியவர் ஓணகாந் தன்தளி
நீணகர் மேன்மையைத் தெரிந்தவா நிகழ்த்தினாம்
மாணமர் காட்சிசால் மற்றதன் வடதிசைப்
பேணிய சலந்தரே சத்தியல் பேசுவாம்.
ஓணனார் - திருவோண நட்சத்திரத்துக்கு உரிய திருமால். - 1



1472 - சலந்தரன் வரம் பெற்றுப் போருக்கெழுதல்
சலத்திடைத் தோன்றியோன் சலந்தரப் பெயரிய
குலப்புகழ்த் தானவன் கோநகர்க் காஞ்சியில்
நலச்சிவ லிங்கமொன் றமைத்துநா ளுந்தொழு
துலப்பரு மெய்த்தவம் உஞற்றினா னவ்வுழி 2
சலம் - நீர். இந்திரன் மேல் ஒருகால் இறைவன் கொண்ட கோபத்தை
அவன் பொறுக்க வேண்டினமையால், அக்கோபத்தைக் கடலில் எறிய
அ·து ஓருவமாயிற்று. அதுவே சலந்தராசுரன் என்பது புராண வரலாறு - 2



1473 - காட்சிதந் தருளிய கண்ணகன் மாநிழல்
ஆட்சியார்த் தொழுதெழுந் தாண்மையும் மதுகையும்
மாட்சிசால் இறைமையும் மாற்றலர்த் தெறுதலும்
மீட்சியின் றருளென வேண்டினான் பின்னரும் - 3



1474 - நின்னலா லென்னுயிர் நீப்பவ ரின்மையும்
துன்னரு முத்தியிச் சூழலிற் பெறுவதும்
பின்னல்வார் சடையினா யருளெனப் பெற்றமீண்
டன்னவா றுலகுதன் னடிப்படுத் தாளும்நாள் - 4



1475 - இந்திரன் முதலிய எண்டிசைக் கிறைவரைக்
கந்தமென் மலர்மிசைக் கடவுளை வென்றுபின்
பைந்துழாய்க் குரிசிலைக் பன்னகப் பகையொடும்
வெந்திறல் நாகபா சத்தினால் வீக்கினான் - 5



1476 - சிறையிடை மாட்டினன் சிற்சில நாட்செல
அறைகழல் வானவர் வணங்கிநின் றவுணனைக்
குறையிரந் தனையனைக் கொண்டுமீண் டேகினார்
பிறையெயிற் றவுணனௌம் பெருமிதத் துறையும்நாள் - 6



1477 - இறுதிநாள் அடுத்தலி னெறுழ்விடைப் பாகனைத்
தெறுவலென் றெழுந்துயர் கயிலையைச் சேரலும்
உறுதுயர்ச் சிறையிடை யுறையும்நா ளன்னவன்
பெறுமனைக் கிழத்தியைக் காமுறும் பின்னைகோன் - 7



1478 - அற்றமீ தென்றறிந் தம்மனைப் புறமுறத்
துற்றபூம் பொழிலிடைத் தூத்தவ வடிவுகொண்
டுற்றிடக் கண்டனள் ஒசியிடைப் பணைமுலை
முற்றிழை தாழ்ந்துமுன் நின்றிது வினவுவாள் - 8



1479 - நற்றவத் தடிகளீர் நதிமுடிக் கடவுளைச்
செற்றுமீள் வேனெனச் சென்றயெங் கொழுநர்பால்
வெற்றியோ தோல்வியோ விளைவதொன் றறிகிலேன்
எற்றிது மொழிமின்நீர் என்னமால் கூறுவான் - 9



1480 - அஞ்சுபூ தங்களு மவற்றிடைப் பொருள்களும்
பஞ்சுதீப் பட்டது படவிழி திறந்தருள்
செஞ்சடைப் பகவன்முன் சென்றெவர் உய்ந்துளார்
புஞ்சவெள் வளையினா யறிந்திலை போலும்நீ - 10



1481 - அன்னபே ராளனோ டமரினுக் கேகலாற்
பன்னகப் படமெனப் பரந்தக லல்குலாய்
உன்னுடைக் கேள்வனும் பொன்றுவா னுண்மைகாண்
என்னவாய் விண்டனன் வளைகரத் தெய்தினான். - 11



1482 - கலிநிலைத்துறை
அந்த யெல்லையோர் தானவன் பங்கிசோர்ந் தலையச்
சந்த மென்புயத் துகிலுடை சழங்கவே ரொழுக
உந்து நெட்டுயிர்ப் பெறியமெய் நடுக்குற வோடி
வந்து தோன்றிவாய் புலரநின் றின்னது வகுப்பான் - 12



1483 - இறைவி நின்தனிக் கொழுநன்நீள் கயிலையி னிளவண்
டறைக டுக்கையான் றனையறை கூவுமவ் வளவில்
நறைம லர்க்கரக் கணிச்சியன் நோக்கினான் நமது
நிறைக டற்பெரும் படையெலாம் நீற்றின னதன்பின். - 13



1484 - பரிதி மண்டில மாயிர மென்கதிர் பரப்பும்
உருவ வாழியொன் றாக்கின னொளிருமப் படையால்
பொருவ லித்திரற் சலந்தரன் பொன்றினா னதனை
வெருவி நீளிடைக் கண்டுமீண் டித்தலைப் போந்தேன் - 14



1485 - என்ற வாய்மொழி கேட்டலுங் கொம்பரை யிழந்த
மன்ற லங்கொடி போற்கிடந் தலமரு மயிலை
வென்றி வேள்படை துளைத்திட மெலிவுறு நெடியோன்
சென்று பற்றினன் திருந்திழை குறித்திது செப்பும் - 15



1486 - மன்னு கேள்வனை யிழந்துளேன் வைகல்மூன் றகன்ற
பின்னை நின்மனைக் கிழத்தியே யாகுவல் பெரும
என்ன வஞ்சித்து நீங்கினள் மனையகத் தெய்தி
வன்னி புக்குயிர் விடுத்தனன் கற்பினில் வழாதாள் - 16



1487 - அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
ஏம்பலோ டுறையும்மாய னித்திற முணர்ந்தா னந்தச்
சாம்பரிற் புரண்டு பேய்க்கோட் பட்டவர் தம்மின் மாழ்கித்
தேம்பினா னனையாள் செல்வத் திருவுரு வுளத்தில் தீட்டி
ஓம்பினா னென்செய் வானங் குழிதந்தான் நெடுநா ளிப்பால் - 17



1488 - சிவபெருமான் திருவருள் செய்தல்
இமையவர் பலரும் மாலை யெங்கணும் தேடிக் காணார்
சிமையநீள் கயிலை நண்ணித் திருவடி வணங்கிக் கூற
அமையெனத் திரண்டு நீண்டு பசந்தணி யிலங்கு பொற்றோள்
உமையொரு பாகத் தெங்கோன் அவன்திறம் உணர்ந்து சொல்லும் - 18



1489 - சொற்பயில் கமலை கேள்வன் சலந்தரன் துணைவி யாய
கற்பினிற் சிறந்த காமர் விருந்தையைக் காமுற் றன்னால்
பொற்புரு இழந்த ஈமப் பொடியிடைக் கிடக்கின் றானால்
விற்பொலி விசும்பின் வாழ்க்கை விண்ணவர் கேண்மின் என்னா - 19



1490 - பாயபல் லுலகு மீன்ற பனிவரைப் பிராட்டி மேனிச்
சேயொளிக் கலவைச் சாந்தின் அழுக்கினைத் திரட்டி நல்கி
நீயிரிங் கிதனை யந்த நீற்றிடை வித்து வீரேல்
மாயவன் மயக்கந் தீர்க்கும் மரங்கள்மூன் றுளவா மென்றான் - 20



1491 - விண்ணவ ரதனை யேற்று விடைகொடு வணங்கிப் போந்து
தண்ணகை விருந்தை வீந்த சாம்பரின் வித்த லோடும்
அண்ணலந் துளவம் அங்கேழ் நெல்லிநீள் அகத்தி மூன்றும்
கண்ணெதிர் தோன்றக் கண்டான் கரியவன் மகிழ்ச்சி கொண்டான் - 21



1492 - மென்றுணர்த் துளவந் தன்னை விருந்தையாத் துணிந்து புல்லிக்
குன்றருங் கழுமல் நீங்கிக் குலவுதன் னிருக்கை சார்ந்தான்
துன்றுபூந் துழாய்முன் மூன்றுந் துவாதசி வழுத்தப் பெற்றோர்க்
கன்றினர்க் கடந்த மாயோன் ஆரருள் சுரக்கும் மன்னோ
மென் துணர் துளவம் - மெல்லிய கொத்தான துளசி. கழுமல் - மயக்கம். - 22



1493 - சலந்தரன் முத்தி பெறல்
தடவரை யிகந்த திண்தோள் சலந்தரன் கயிலை வெற்பில்
விடமிடற் றிறையால் வீந்து வியனகர்க் காஞ்சி வைப்பில்
படரொளிப் பிழம்பாய்த் தோன்றிப் பரசுதனி லிங்க மூர்த்தத்
துடனுறக் கலந்தா னன்னோன் பெருமையா ருரைக்க வல்லார் - 23

ஆகத் திருவிருத்தம் 1493
---------

42. திருமாற்பேற்றுப் படலம் (1494-1511)

அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்



1494 - வணங்குநர்க் கிருமைப் பேறும் மேன்மையின் வழங்கி யெங்கோன்
இணங்கிய சலந்த ரேச வரவினை யெடுத்துச் சொற்றாம்
அணங்கனா ராடல் பாடல் முழக்கறா அணிநீள் வீதிக்
கணங்கெழு திருமாற் பேற்றுக் கடிநகர்ப் பெருமை சொல்வாம் - 1



1495 - திருமால் சக்கரம் பெற வழிபடுதல்
குவலயம் காவல் பூண்ட குபனெனு மரசற் காகச்
சிவநெறித் ததீசியோடுஞ் செருச்செய்நாள் விடுத்த ஆழி
தவமுனி வயிர யாக்கை தாக்கிவாய் மடித லோடும்
கவலுறு மனத்த னாகிக் கடுஞ்சமர் துறந்த மாயோன் - 2



1496 - இனிப்படை பெறுவ தெவ்வா றென்றுவா ளவுணர்க் காற்றாப்
பனிப்புடை இமையோர் தம்மை யுசாவினன் படைகட் கெல்லாம்
தனிப்பெருங் குருவா யீசன் சலந்தரன் மடியக் கண்ட
சினப்பொறி சிதறுந் தீவாய்த் திகிரியொன் றுளதென் றோர்ந்தான் - 3



1497 - உவகைமீ தூர விண்ணோர்க் கோதின னிதனை வேண்டிச்
சிவனடி பரசி னின்னே திருவருள் சுரக்கு மென்னா
அவரொடும் போந்து காஞ்சி யணிநகர் வடமேல் பாங்கர்த்
துவரிதழ் உமையாள் போற்றுஞ் சுடரொளி யிலிங்கங் கண்டான். - 4



1498 - சேயிழைக் கவுரி செங்கை தைவரச் சிவந்து தோன்றிப்
பாயொளிப் பவளக் குன்றர் எனப்பெயர் படைத்து நான்காம்
ஆயிரம் உகங்க ளங்கண் அருந்தவர் வழுத்த வைகு
நாயனார் தமைக்காண் தோறும் நாரணன் இறும்பூ துற்றான் - 5



1499 - நிறைபெருங் காதல் கூர ஆயிடை நியமம் பூண்டு
மிறைவழி யிகந்து பாசு பதத்தனி விரத மாற்றி
முறைபெறு வெண்ணீ றங்கம் முழுவதும் பொதிந்து பாசப்
பொறைதவிர்த் தருளும் மும்மைப் புண்டரம் நுதலில் தீட்டி
மிறை வழி - துன்பந்தரும் பொறிவழி. பொறை - பாரம் - 6



1500 - கண்டிகை மாலை பூண்டு கதிரொளி பரப்பு மாழித்
திண்படை பெறுதல் வேண்டிச் சங்கற்பஞ் செய்து கொண்டு
விண்டலத் திமையோ ரங்கண் வேண்டுவ யெடுத்து நல்க
மண்டுபே ரன்பாற் பூசை விதியுளி வழாது செய்வான் - 7



1501 - மாயிருங் கமலப் போது கைக்கொண்டு மாட்சி சான்ற
ஆயிரந் திருநா மத்தான் நித்தலு மருச்சித் தேத்தி
மேயினன் திருமா லன்னோன் பத்தியின் விளைவு காண்பான்
பாயிர மறைகள் தேறாப் பரம்பொருள் ஒருநாள் அங்கண் - 8



1502 - மேற்படி வேறு
நறைவாரு மிதழ்துறுத்த செழும்பொகுட்டு
      நளினமா யிரத்தி லொன்று
மறைவாகத் திருவுள்ளம் வைத்தருளக்
      கருவிமுகில் வாட்டு மேனி
இறையோனும் பண்டுபோல் பவன்முதலா
      மாயிரம்பே ரெடுத்துக் கூறிக்
குறையாத பேரன்பிற் பதுமமலர்
      கொடுபூசை புரியு மேல்வை - 9



1503 - பன்னுமொரு திருப்பெயர்க்கு நறுங்கமலங்
      காணாமைப் பதைத்து நோக்கி
என்னினிமேற் செயலென்று தெரிந்துணர்ந்து
      தனதுவிழி யிடந்து பெம்மான்
கொன்மலர்த்தாள் மிசைச்சாத்திக் களிகூர்ந்தான்
      உறுப்பினையுங் கொடுப்ப தல்லால்
மென்மையுறத் தாங்கொண்ட விரதத்தை
      விடுவார்களோ கொள்கை மேலோர் - 10



1504 - இறைவன் திருமாலுக்குச் சக்கரம் அருளல்
பாறிலகு மழுப்படையோன் மாயவன்றன்
      அன்பினொருப் பாடு நோக்கி
மாறிலாப் பெருங்கருணை யூற்றெடுப்பச்
      செழுஞ்சோதி மலரப் பாங்கர்
நூறியோ சனையளவு மெரிகொளுந்த
      நோக்கரும்பே ருருவு தாங்கி
ஈறிலாக் கதிரிரவி மண்டிலநின்
      றிழிந்தெதிரே காட்சி ஈந்தான். - 11



1505 - இறைவரவு கண்டஞ்சிப் புடைமருவும்
      இமையவரோட் டெடுப்ப நோக்கி
நிறையுவகை தலைசிறப்பத் திருநெடுமா
      லிருநிலத்தின் வீழ்ந்து தாழ்ந்து
முறைமையினால் அட்டாங்க பஞ்சாங்க
      முறவணங்கி முடிகை யேற
மறைமொழியின் துதித்தாடி யானந்த
      விழிமாரி வெள்ளந் தாழ்ந்தான். - 12



1506 - ஆங்கவனை யெதிர்நோக்கி நின்பூசைக்
      ககமகிழ்ந்தோம் உனக்கிஞ் ஞான்று
தேங்கமல விழியளித்தேம் பதுமாக்க
      னெனும்பெயரின் திகழ்வாய் இவ்வூர்
பாங்குபெறு திருமாற்பே றெனப்பொலிக
      என்றருளிப் பானு கோடி
தாங்குகதிர்ச் சுதரிசனப் பெயராழித்
      தனிப்படையு முதவி யெங்கோன் - 13



1507 - வெல்லரிய செறுநரையு மிப்படையால்
      வெல்வாயா லீண்டு நின்னாற்
சொல்லியபே ராயிரங்கொண் டெமைப்பூசை
      புரிவார்க்குத் துகள்தீர்த் தென்றும்
எல்லையிலா வீடளிப்பே மிங்கிவையன்
      றியுந்தீண்டச் சிவந்தா ராதிப்
பல்குபெயர் கொண்டெம்மைத் தொழுவோரும்
      முத்தியினிற் படர்வா ருண்மை - 14



1508 - தணிவொன்று மனமுடையர் புகழ்தீண்டச்
      சிவந்தபிரான் சாத ரூபர்
மணிகண்டர் தயாநிதியார் பவளமலை
      யார்வாட்டந் தவிர்த்தார் பாசப்
பிணிவிண்ட சாகிசனர் திருமாற்குப்
      பேறளித்தார் எனும்பே ரெட்டும்
அணிகொண்ட வாயிரம்பேர்க் கொப்பனவாம்
      அறிமதி என்றருளிச் செய்தான் - 15



1509 - நம்பிரான் வாய்மலர்ந்த மொழிகேட்டுப்
      புண்டரிக நயனத் தோன்றல்
செம்பதுமத் தாளிறைஞ்சிச் சென்னிமிசைக்
      கரங்கூப்பிச் செந்நின் றேத்தி
எம்பிரான் இந்நகருட் கணப்பொழுது
      வதிந்தவர்க்கு மிறவா வாழ்க்கை
உம்பர்வீ டளித்தருளாய் இன்னும்
      மொருவர மடியேற் குதவா யென்று - 16



1510 - வள்ளலே என்பூசை கொண்டருளும்
      இவ்விலிங்கம் வணங்கப் பெற்றோர்
பள்ளநீர் வரைப்பினுள சிவலிங்க
      மெவ்வெவையும் பணிந்து பேறு
கொள்ளவரு ளெனவேண்ட வேண்டுவார்
      வேண்டியதே கொடுக்கு மெங்கோன்
எள்ளருஞ்சீர் நெடியோனுக் கவையனைத்து
      மருள்செய்தவ் விலிங்கத் துற்றான் - 17



1511 - கொழிக்குமணித் தடந்திரைநீர் இலஞ்சிதொறும்
      இனவாளை குதித்துப் பாயச்
செழிக்கும்வளம் பொழிற்காஞ்சிப்
      பலதளியுள் மேதகைய திருமாற் பேற்றின்
வழிச்செலவின் ஒருபோது வதிந்தவரும்
      மாறாத பிறவிப் பாசம்
ஒழிப்பரெனில் எஞ்ஞான்றும் அங்குறைவோர்
      தமக்கினியென் னுரைக்கு மாறே. - 18

ஆகத் திருவிருத்தம் 1511
-----------

43.பரசிராமேச்சரப் படலம் (1512-1573)

அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்



1512 - சுழிபாடு படுமுந்தி மலைமகளும்
      யோகியரும் துழாயி னானும்
வழிபாடு செயவைகும் மணிகண்டர்
      மாற்பேறு வகுத்தாம் பண்கள்
கொழிபாடற் சுரும்பினஞ்சூழ் மருப்பொதும்பர்
      மாற்பேற்றின் குணபால் வேந்தர்
பழிபாடிக் கொலைசெய்தோன் பரசிரா
      மேச்சரத்தின் பான்மை சொல்வாம். - 1



1513 - இரேணுகை கொலையுண்டு எழுதல்
சிவம்பழுத்த பிருகுமுனி இடுஞ்சாபத்
      தொடர்ச்சியினால் திருமால் முன்னாள்
தவம்பழுத்தா லனையசம தக்கினியோ
      டிரேணு கைக்குத் தநய னாகி
அவம்பழுத்த குறும்பெறியும் இராமனென
      வைகுறுநாள் அன்னை பாலோர்
நவம்பழுத்த தீங்குணர்ந்து தன்தாதை
      தனையேவ நாடித் தேறி - 2



1514 - தாதைமொழி கடவாமை தருமமெனத்
      தனையீன்று வளர்த்த தாயை
ஏதமுறக் கொலைசெய்து முனியருளால்
      மீண்டுய்ய எழுப்பி நின்றான்
மேதகைய முனிமகிழ்ந்து வெகுளிதனை
      அறவிடுத்துச் சமாதி மேவும்
போதவனை வெகுண்டெய்திக் காத்தவீ
      ரியன்கோறல் புரிந்தான் மன்னோ - 3



1515 - பரசிராமன் தவம் புரிதல்
மிடல்படைத்த திறல்திண்டோள் இராமனது
      நோக்கிநெடு வெகுளி மீக்கொண்
டடல்படைத்த வயவேந்தர் குலமுழுதும்
      இறுப்பேனென் றார்த்துப் பொங்கிக் கடல்படைத்த விடமயின்றோன் அருள்வேண்டி
      விரைந்தெய்திக் கலந்தார் தங்கள்
உடல்படைத்த பேறெய்துங் காஞ்சியினோ
      ரிலிங்க மமைத் தருச்சித் தேத்தி - 4



1516 - ஆற்றரிய தவமாற்றி ஐம்புலனு
      மகத்தடக்கி யமர்ந்தா னாகக்
கீற்றிளவெண் பிறைக்குழவி தவழுநெடுஞ்
      சடிலமுடிக் கிழவோன் அந்நாள்
மாற்றரும்பே ரருட்கருணை கூர்ந்தருளி
      யவனன்பின் வாய்மை காண்பான்
தோற்றமுறு மறைதேறாத் திருவடிகள்
      நிலந்தோய வருகின் றானால் - 5



1517 - பெருமான் புலையனாய் வருதல்
கலிவிருத்தம்
மால்வரை ஈன்ற வயங்கிழை மாதும்
நூல்வரை மார்புடை நோன்றகை மாவும்
வேல்வலன் ஏந்திய வித்தக னுந்தன்
போல்வடி வந்தழு விப்புடை நண்ண - 6



1518 - நான்மறை வள்ளுகிர் நாய்புறஞ் சூழக்
கான்மலர் சேர்த்த செருப்பெழில் காட்ட
ஊன்மலி காழக மீதி லுறுத்த
தோன்மலை கச்சணி தோன்றி விளங்க - 7



1519 - ஏரியல் கொண்ட சுவல்மிசை யிட்ட
வாரின னுட்குந டையினன் மாணாச்
சீரியல் கோக்கொலை செய்புலை யன்போல்
ஆரிருள் மைத்தன மேனிய னாகி - 8



1520 - வெங்கதிர் உச்சியின் மேவிய காலை
அங்கலுழ் பூம்புனல் ஆற்றிடை எய்திப்
பங்கமில் செய்வினை பான்மை தொடங்கும்
புங்கவ மாதவன் றன்னெதிர் போந்தான் - 9



1521 - பரசிராமன் போர்
கொட்கு மனத்தை யொருக்கிய கொள்கை
வட்குற வைம்பொறி வாட்டு மிராமன்
கட்கமழ் கின்ற களிப்பின னாகித்
துட்கென நேர்வரு சோதியை நோக்கா - 10



1522 - வாய்திற வாது மலர்க்கை யசைப்பின்
சேயிடை யேகெனச் செப்பலும் முக்கண்
நாயகன் அண்மையின் நண்ணினன் போபோ
நீயென விள்ளவும் நீங்கல னாகி - 11



1523 - மேற்படி வேறு
மாயனொடு நான்முகன் மனக்குநனி சேயோ
னாயவிறை சாலவணி மைக்கணுற லோடும்
தூயமுனி சீற்றமொடு சொல்லுமற வாய்மை
போயபசு வூன்நுகர் இழிந்தபுலை யாநீ - 12



1524 - தருக்குவ தென்னையிது தண்டமது செய்வார்
ஒருத்த ரிவணில்லையென வுன்னினைகொ லென்றான்
மருத்துணர் நெடுஞ்சடை மறைத்துவரு பெம்மான்
அருத்தமறை நாய்கள்தமை யேயின னவன்பால் - 13



1525 - கொற்றவடி வேற்கடவுள் கோளிப முகத்தோன்
உற்றெழு வெகுட்சியரின் ஓடியிரு கையும்
பற்றினர்கள் நாய்புடை வளைப்பயிரு பாலர்
வெற்றியுறு கைப்படு விழுத்தவனை நோக்கி - 14



1526 - கலிநிலைத்துறை
அந்தோ பாவ மைய மிரக்கும் பார்ப்பான்நீ
நொந்தாய் போலு மென்று நுவன்றங் கிமவெற்புத்
தந்தாள் வெவ்வாய் நாயை விலக்கத் தவநோன்பின்
நந்தா வாய்மை யிராமனும் நம்மான் முகம்நோக்கி - 15



1527 -
மேற்படி வேறு
எனைப்புடை யுற்றாய் தீண்டுவ தென்னீ தறனன்றால்
உனக்கிது பாவங் காணென வெங்கோ னுறுபாவம்
நினக்குள தோசொல் எனக்குள தோநீ தான்யாரே
எனக்கொரு கேள்போல் தோன்றிடு கின்றாய் யெனவன்னோன் - 16



1528 - என்னிது சொற்றனை யான்சம தக்கினி என்பான்றன்
நன்மக னாகுவன் நீபுலை யோனெனை நாணாமே
உன்னுற வாக வுரைத்தது நன்றென வொப்பில்லான்
மன்னிய சீர்ச்சம தக்கினி தன்மகன் நீயேயோ - 17



1529 - கழிய வெனக்குறு வாயினை ஐய மிலைக்கண்டாய்
இழிவற நின்னை யளித்த யிரேணுகை யென்பாளென்
பழுதறு சீர்மனை யாட்கினி யாளாம் பரிசாலே
விழுமியநீயு மெனக்கினி யாய்காண் எனவிண்டான் - 18



1530 - இராமன் நெருப்பெழ நோக்கி வெகுண்டா னெல்லாரும்
பராவுறு வேதிய னென்னெதிர் பார்த்திது சொற்றாய்க்கு
விராவிய தண்டமுன் நாக்கரி விக்கு மதேயன்றித்
தராதல மேற்பிறி தில்லென லோடுந் தலைவன்றான் - 19



1531 - யாவரு மச்சுறு தாய்கொலை யென்றுசெய் மாபாவி
ஓவில ருட்குண மொன்றிலை யென்புடை வவ்வாயேல்
நாவரி வாய்சிர முமரி வாயினி நாணாய்கேள்
ஓவறு கேளிர் தமைத்தழு வாதவ ராருள்ளார் - 20



1532 - பாம்புட னேனும் பழமை விலக்கார் தமரானோர்
வேம்பினை யொப்பக் கைப்பினும் விள்ளார் உலகத்தோர்
தோம்பல பேசிச் சுற்றம் வெறுக்குங் கொடியோனைத்
தேம்பிடும் வண்ணஞ் செற்றிடல் வேண்டு மெனவெம்பி - 21



1533 - கணங்களை யெல்லாம் மேற்செல வேவித் துரிசோதிக்
கணங்கெழு கல்லு மோடு மெடுத்துக் கடிதோச்சி
அணங்கொரு பாலான் எறிவுழி யம்மா முனிவெந்தீ
இணங்க வெகுண்டான் தண்ட மெடுத்தான் புடைவீசி - 22



1534 - ஞாளிகள் தம்மை யதுக்கினன் நள்ளலர் ஊர்செற்ற
மீளியின் மேற்செல விட்டனன் வேழ முகக்கோனக்
கோளுறு தண்டம் முரித்திரு கூறு படுத்திட்டான்
காளியொ டாடிய கண்ணுதல் வெய்ய கதங்காட்டி - 23



1535 - வன்மொழி கூறிப் புலையர் தொழுத்தை மகனாம்நீ
என்மகன் நோவத் தண்ட மெறிந்தாய் தெய்வத்தால்
அன்னது பக்கது தாய்கொலை அஞ்சாய் அருளில்லாய்
நின்னை யினிக்கொல் வேனென நேர்ந்தான் கரமோச்சி
தொழுத்தை - அடிமைப் பெண். - 24



1536 - நேர்ந்திடு காலையில் நீள்மறை ஞாளிகள் முன்னாகச்
சார்ந்து துரந்து முடுக்கலும் அத்தகை யானச்சங்
கூர்ந்து பதைப்புட னோடினன் வெண்சிறு கூன்திங்கள்
வார்ந்த சடைப்பெரு மானும் விரைந்து தொடர்ந்துற்றான் - 25



1537 - அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
ஒற்றையங் கரத்தாற் பற்றிக் கோடலு முடையான் தீண்டப்
பெற்றுமெய்ப் புளகம் போர்ப்பப் பெரிதுளம் மகிழ்ந்தான் இச்சீர்ப்
பற்றியு மிழிஞன் தீண்டப் படுபெருஞ் சங்கை கொண்டு
முற்றவெந் துயரின் மூழ்கி வெகுண்டனன் மொழித லுற்றான் - 26



1538 - மறிகடல் வரைப்பின் யாங்க ணாயினும் மறையோன் றன்னைப்
பொறியிலி யிழிந்த வாழ்க்கைப் புலைமகன் வெருவ ராமே
செறியழுக் கடைந்த கையால் தீண்டுமே யவ்வச் சாதி
பிறிவினிற் பிறழா வண்ணம் பிஞ்ஞகன் நடாத்துங் காலை - 27



1539 - இன்னினி துனது சென்னி யிறுவது தேற்றங் காண்டி
புன்னெறிக் குலத்தோய் யென்னப் புகன்றுதன் னுளத்தே வெம்பிப்
பன்னரும் புலையன் றன்பால் பட்டுளேன் அந்தோ சீசீ
என்னுடைத் தவமும் யானும் அழிந்தவா றெனப்பு ழுங்க - 28



1540 - விழிபயில் நுதலும் முந்நீர் விடம்பொதி மிடறுங் கூர்வாய்
மழுமறிக் கரமுஞ் செங்கேழ் வடிவமும் கரந்து சாலக்
க்ழிபுலை வேடந் தாங்கி யெழுந்தருள் கருணைத் தோன்றல்
இழிவறும் இராமன் கூற்றுச் செவிமடுத் தினைய சொல்வான் - 29



1541 - வடுவறு மறைவ லாளர் மரபினை யெனில்யான் தீண்டப்
படுகிவை யல்லை நீதான் பார்ப்பனக் கடைய னாவை
அடுதொழிற் புலையன் யானவ் வொழுக்கினிற் சிறந்த வாற்றால்
இடுகிடைத் தாயைக் கொன்றோய் என்னினுங் கடையன் நீகாண் - 30



1542 - இழிஞருக் கிழிஞன் ஆனாய் எனக்குநீ அடிமை யெய்திக்
கழிபெரு மகிழ்ச்சி கூர்வாய் உனக்கியான் களைக ணாவேன்
மொழிவது சரதம் என்றான் அவ்வுரை முனிவன் கேளாப்
பழியுறு கதையில் தாக்கப் படுமர வென்னப் பொங்கி - 31



1543 -
அண்ணலை மலர்க்கை யோச்சி யடித்தனன் அமரர் தேறாப்
புண்ணிய முதல்வன் றானும் பொருக்கென முனிவன் றன்னைத்
திண்ணிய இரண்டு கையும் சிக்கென ஒருகைப் பற்றிக்
கண்ணறு கொடிறு வீங்கப் புடைத்தனன் கமலக் கையால் - 32



1544 - முறைமுறை யதிரத் தாக்கி யிருவரும் முனைந்து வெம்போர்
மிறையுறப் புரித லோடும் மெல்லியற் பிராட்டி நோக்கி
இறைவநின் னடிக்கீழ் அன்பின் இனியவன் வருந்தா வண்ணம்
பொறைகொளப் புடைத்தி யென்றான் புனிதனும் மெலிதின் தாக்க - 33



1545 - கடனறி முனிவன் வாகை தனதெனக் கருதி வாங்கும்
வடவரைச் சிலையோன் மார்பிற் கரங்கொடு வலிதின் தாக்கி
மிடலுறத் தெழித்தா னாக விண்ணவர்க் கரிய கோமான்
கெடலருஞ் சினமீக் கொண்டான் போல்மறைக் கிழவன் றன்னை - 34



1546 - கன்றிடக் கரங்கள் காலிற் பிணிப்புறக் கட்டி நோன்றாள்
ஒன்றினால் உருட்டிச் சேணின் உந்தினான் அவனை வேத
வன்றிறல் ஞாளி சுற்றி வளைந்தன மருங்கு நின்ற
வென்றிகொள் மைந்தர் நோக்கி விலாவிறச் சிரித்திட் டாரால் - 35



1547 - திருவிளை யாட்டான் அண்ணல் சேவடிக் கமலத் துந்தப்
பருவரும் உளத்த னாகிப் பசும்புதல் செறிய நீண்ட
தருவடித் தலத்தின் ஆவி சாம்பினா னொத்து வீழ்ந்தான்
அருமலர்க் கருமென் கூந்த லிரேணுகை மைந்த னம்மா - 36



1548 - அடங்கருந் துயரத் தாழும் அவ்வுழி வேரிக் கஞ்சத்
தடம்புனல் குடைந்து வாசந் தாங்கிமென் மலர்ப்பூஞ்சோலை
இடந்தொறும் வதிந்து வீழ்ந்தார் இன்னுயிர் தளிர்ப்பச் செல்லும்
மடந்தைய ரென்ன மெல்லப் படர்ந்தது மலையத் தென்றல் - 37



1549 - தேம்பொதி இளங்கால் மேனி தைவரத் தெளிவு தோன்றி
மேம்படும் அயர்ச்சி நீங்க விழித்துணை விடுத்து நோக்கித்
தேம்பினான் இடும்பைக் கெல்லை யாயினான் திரியாச் சிந்தை
ஏம்பலின் மறையோன் நெஞ்சத் திவையிவை யெண்ண லுற்றான் - 38



1550 - பரசிராமன் துன்புறுதல்
மறையொ ழுக்கம் வாழ்நெறி வாய்மையோர்க்
கிறைவ னாம்முனி வன்குலத் தெய்தினேன்
நிறைய வேதமும் அங்கம் நியாயமும்
முறையி னோதினன் மூவறு கல்வியும் - 39



1551 - பன்னெ டும்படையும் பயின்றுளேன்
இன்ன னாய வெனக்கிது காலையின்
முன்னை வல்வினை மூட்சி விளைந்தவா
றென்ன பாவ மெவரிது தாங்குவார் - 40



1552 - என்னை ஈன்றவன் வெம்பழி யெய்துறீஇக்
கொன்னு மென்னாற் சிரங்குறை பட்டனள்
பின்ன ரெந்தையும் பேதை யரசனால்
சென்னி யிற்றுச் சிதைந்தன னம்மவோ - 41



1553 - ஈண்டு மற்று மிழிஞன் புலைகரந்
தீண்டி யென்னை அவமதி செய்திட
மூண்ட வெம்பழி மூழ்கியும் ஐயவோ
மாண்டி லேனுயிர் வல்வினை யேனரோ - 42



1554 - கவள மாகக் கடல்விடம் உண்டருள்
சிவனை யேத்துநர் செல்ல லுறார்களால்
பவன டித்துணை பற்றியு மென்னிடர்க்
கவதி கண்டில னற்புத மற்புதம் - 43



1555 - இன்பஞ் செய்தலின் சங்கர னெம்பிரான்
இன்ப மாக்கலின் சம்பு விடும்பைநோய்
என்ப தோட்டு மியல்பி னுருத்திரன்
என்ப ராலவை யென்னிடைப் பொய்த்தவோ - 44



1556 - பேதை நீரிற் பெரும்பிழை செய்துளேன்
ஆத லாலிவ் வருந்துயர் எய்தினேன்
பூத நாதனைப் போதப் பழிச்சியென்
ஏதந் தீர்வ லெனத்துணிந் தேத்துவான் - 45



1557 - மேற்படி வேறு
மூவா தபடைப் புமுதற் றொழிலைந்
தோவா மையியற் றியுயிர்த் தொகைகள்
தாவா மலேமூன் றுமறத் தருவாய்
ஆவா அடியேன் உன்னடைக் கலமே - 46



1558 - படியா தியபற் பலதத் துவமாய்க்
குடிலாந் தமகன் றகுரூஉச் சுடரே
முடியா முடிவே முதலா முதலே
அடிகே ளடியே னுனடைக் கலமே - 47



1559 - உமையா ளொருபா லுடையாய் முறையோ
இமையா சலவில் லிறைவா முறையோ
அமையா விடமுண் டமைவாய் முறையோ
தமைநா டினர்தந் தலைவா முறையோ - 48



1560 - கச்சிப் பதியெய் துபுநின் கழல்கள்
நச்சிப் பணிசீர் நரர்வா னவருள்
இச்சித் தபெறா தவரே யெனினும்
பொச்சத் தொடுபோ யினர்தா முளரோ - 49



1561 - உளையுஞ் சிறியே னிடருன் னலையோ
களைகண் பிறகண் டிலனெம் பெருமான்
இளையா தினியே னுமிரங் கிடுவாய்
முளைவான் மதிவேய்ந் தமுடிச் சடையோய் - 50



1562 - பெருமான் காட்சி கொடுத்தருளல்
கலிநிலைத் துறை
என்றின்ன பழிச்சி இரந்தயர் கின்ற மேருக்
குன்றன்ன தவத்தவ னன்பி னளாய கொள்கை
துன்றுந்துதி வார்த்தை செவித்துணை யேற்று நின்று
நன்றும்பெரி துள்ளம் மகிழ்ந்தருள் நங்கை பாகன் - 51



1563 - அன்னானெதி ரவ்வுரு முன்னுரு வாகத் தோற்றித்
தன்னேர்வடி வங்கொள் திருந்திழைத் தைய லோடு
மின்னார்வடி வேற்படை விண்ணவன் வேழப் புத்தேள்
என்னாவரு மைந்த ரொடுந்திருக் காட்சி ஈந்தான் - 52



1564 - கண்டான் முனிவன் கழிகாதல் நடுக்க மச்சங்
கொண்டா னெழுந்தான் துணிகூரு மிடுக்கண் முற்றும்
விண்டா னுவகைக் கடல்மூழ்கி மருட்கை மேவித்
தண்டாத அன்பிற் பெருமானிரு தாள்ப ணிந்தான் - 53



1565 - பணிந்தான்றனை யொல்லை யெடுத்தணைத் துப னிக்கோ
டணிந்தானருள் கூர்ந்துநம் பக்க மிருந்து மன்பின்
துணிந்தாயுளம் வேட்டது சொல்லுதி யென்ன வுள்ளந்
தணிந்தார்வ முறக்கர மஞ்சலி சார்த்தி நின்று - 54



1566 - பின்றாழ் சடிலத் திறையோய்பிழை யொன்று மில்லா
என்றாதை யாகுஞ் சமதக்கினி யென்னு மஞ்சும்
வென்றான்றனை யேகய வேந்த னருச்சு னன்றான்
கொன்றா னவனைக் குலத்தோடறக் கொன்ற ழித்து - 55



1567 - எந்தைக்கவர் தங்குரு திப்புன லங்கை யேந்தி
நிந்திப்பறு தர்ப்பணம் ஆற்றிய சிந்தை நேர்ந்தேன்
அந்தத்திற லுன்னடி யேற்கரு ளென்ன ஐயன்
வந்திக்கும் மழுப்படை மீது கடைக்கண் வைத்தான் - 56



1568 - திருவுள்ள முணர்ந்து கணிச்சி திருந்து தன்கூற்
றொருதிண்படை யாக்க வுவற்கது நல்கி யெங்கோன்
பெருவெண்களி றாளி தடுப்பினும் பேண லாரைச்
செருவின்கண் விடாது செகுத்தனை வெற்றி கொள்வாய் - 57



1569 - பரசுப்படை பெற்றனை அப்பெயர் பற்றி வாழ்கென்
றரவச்சடை யங்கண னின்னருள் செய்ய அன்னோன்
மரபிற்றொழு திவ்விலிங் கத்து மகிழ்ந்து வாழ்வாய்
புரமட்டருள் புண்ணிய விப்புனல் யாறு மூழ்கி - 58



1570 - கற்றைக்கதிர் வெள்ளொளி கான்றிருட் கட்ட றுக்குங்
கொற்றச்சசி நாள்முதல் நாள்களிற் கொள்ளு மென்பேர்
பற்றிப்பயி லிவ்விலிங் கம்பணிந் தன்பர்க் கேன்ற
தற்றைப்பகல் நல்குநர் எய்துக ஆக்கம் வீடு - 59



1571 - எனவேண்டி வணங்கி வணங்கி யெழுந்த காலை
முனிவன்றனக் கவ்வரம் முற்றும் வழங்கி மூரிப்
பனிமால்வரை நல்கிய பைந்தொடி மைந்த ரோடும்
அனலங்கைகொல் அண்ணல் கரந்தபின் னங்கண் நீங்கி - 60



1572 - முனிவன்முனி வன்மழு வான்மணி மோலி வாய்ந்த
சினவெம்படை வேந்தர் தமைச்செரு விற்படுத்துக்
கனலன்ன செழுங்குரு திக்கய நீரிறைத்திட்
டினமன்னு பிதிர்க்கட னாற்றிமெய் யின்ப முற்றான் - 61



1573 - அப்பொற்பின் அருட்சிவ லிங்கம்மெய் யன்பி னங்கண்
எப்பெற்றிய ரேனு மிறைஞ்சின விறைஞ்சு முன்னர்க்
கைப்பட்டதோ ராமல கக்கனி போல வீடும்
செப்பற்கரி தாகிய செல்வமு மெய்தி வாழ்வார். - 62

ஆகத் திருவிருத்தம் - 1573
-----------

44. இரேணுகேச்சரப் படலம் (1574-1608)

கலிவிருத்தம்



1574 - கொங்கவிழ் நறுமலர்க் கொன்றை வேணியன்
தங்கிய பரசிரா மேசஞ் சாற்றினாம்
அங்கதன் தென்புடை அலைந திக்கரைப்
பொங்கர்சூழ் இரேணுகேச் சரத்தைப் போற்றுவாம் - 1



1575 - இரேணுகை மனங்கலங்கல்
கரேணுக திப்பரை கணவ னன்பர்பா
தரேணுக வசமுடல் தாங்கி நேர்ந்தமன்
னரேணுக வெல்பர சிராமன் நம்புதாய்
இரேணுகை யென்பவ ளழகி னெல்லையாள்
கரேணு - பெண் யானை. கதி -நடை. பரை- பரனுக்குப் பெண்பால்,
உமையம்மை. பாதரேணு - திருவடித் தூளி. மன்னர் ஏண் உக- ஏண் - வலி.
மன்னர்களின் வலிமை உகுமாறு. நம்பு - விரும்புகின்ற - 2



1576 - விச்சைதேர் பெற்றிய வரும வேந்தனார்
மெச்சிய வரத்தினில் தோன்றும் மெல்லியல்
அச்சம தக்கினி மனைவி யாயினாள்
பொச்சமில் கற்பினிற் பொலியும் மேன்மையாள்
வரும வேந்தன் - வருமராசன். இரேணுகையின் தந்தை. - 3



1577 - மனையறக் கிழமையி னொழுகு மாணிழை
நனைமலர்க் குழலியோர் ஞான்று பொய்கையில்
கனைதிரைத் தடம்புனல் கவரப் போந்துழி
வினைவழிக் கண்டனன் காத்த வீரியன் - 4



1578 - காண்டலும் காமவேள் கணைக்கி லக்கமாய்
ஆண்டகை யவளெதிர் அணுகி நின்றனன்
மாண்டதன் புறவடி நோக்கு மாதராள்
ஈண்டுபே ரழகுடை யிறையை நோக்கலள் - 5



1579 - இனிச்செய லெவனெ னெண்ணி வேந்தர்கோன்
புனற்குமேல் விசும்பிடைப் பொலிந்து தோன்றினான்
பனித்தநீர்ப் பரப்பினப் பதகன் நீழலை
முனிக்குரி மரபினாள் முந்தி நோக்கினாள் - 6



1580 - காமனுஞ் சிறிதுதன் மதுகை காட்டினான்
பூமலர்க் கூந்தலா ளுளத்தைப் பொள்ளென
வாய்மையின் தன்வழிப் படுத்து மாண்குடத்
தாமுகந் தெடுத்துமீண் டகத்தை நண்ணினாள் - 7



1581 - பரசிராமன் தாயைக் கொன்றெழுப்புதல்
எதிருறப் போந்துழி முனிவ ரேறனான்
மதிமுக மனைவிபா ணித்த வாற்றினைக்
கதுமென அறிவினிற் கருதித் தேர்ந்தனன்
முதுநெறி கோடிய மூர்க்கன் செய்கையே 8
பாணித்த வாற்றினை - தாமதித்ததன் காரணத்தை. அறிவினால் தேர்ந்தனன் - ஞானக்கண்ணால் அறிந்தனன். - 8



1582 - வடவையின் வெகுண்டுதன் மகனை நோக்கினான்
படர்புகழ் இராமநிற் பயந்த பூங்குழல்
கடல்புரை யெழில்நலங் காமுற் றண்மினான்
விடமெனத் தோன்றிய காத்த வீரியன் - 9



1583 - ஆங்கவ னிளமையு மரசு மாற்றலும்
நீங்கரு மடமையும் நிறைந்த நீர்மையால்
ஈங்கிவட் பற்றுவ னெம்மை யெண்ணலான்
ஓங்குயர் குணத்தினோ யுரைப்பக் கேட்டியால் - 10



1584 - என்னுடை யாணையின் நிற்றி யேலிவள்
சென்னியைத் தடிமதி விரைந்து செல்கெனத்
தன்னுடைக் குருமொழி சிரத்தில் தாங்கினான்
அன்னையைக் கொடுபுறத் தணுகி னானரோ - 11



1585 - அல்லலே பெண்ணெனப் பிறத்த லாங்கதின்
அல்லலே யிளமையிற் சிறத்த லாங்கதின்
அல்லலே கட்டழ குடைமை யாங்கதின்
அல்லலே யிரவலர் சார்பி னாகுதல் - 12



1586 - அரங்குறை படுத்தவா ளங்கை யேந்திநல்
உரங்குறை படுத்திடா வுறுவ னன்னைதன்
சிரங்குறை படுத்துமீண் டெய்தித் தேசிகன்
வரங்குறை படுத்திடா அடிவ ணங்கலும். - 13



1587 - துன்பமுற் றருந்தவ னிரங்கிச் சொல்லுவான்
வன்பெரு மன்னவன் மகட்கு மைந்தன்நீ
என்பது மென்னிடத் தன்பு மின்றியான்
நின்புடைக் கண்டனன் அறிவின் நீடியோய்.
கொலைக்கு அஞ்சாமையால் அரச குலத் தொடர்புடைமையும், தாய்
எனத் தயங்காமையால் என் மாட்டு மிக்க அன்புடைமையும்
உன்னிடத்துக் கண்டேன் என்றான். - 14



1588 - என்னுரை நிறுவினை யேனுந் தாய்கொலை
நன்மையன் றுலகமும் பழிந விற்றுமென்
றன்னுரைப் படியவண் ஏகித் தாழ்குழல்
சென்னியைப் பொருந்துறச் சேர்த்தெ ழுப்பியே.
தந்தை சொல் கடவாமை அறமாயினும், தாயைக் கொலை செய்தல்
அதனின் மிக்க பாவமாதலின், தாயை எழுப்புதல் தந்தையின்
கட்டலையன்று என மயங்கற்க என்பார் 'என்றன் னுரைப்படி' என்றார். - 15



1589 - பொன்னடி வணங்கியஞ் சலித்துப் போற்றியென்
அன்னைநின் கருத்தினுக் கடுத்த வாறுசெல்
கென்னவங் ககற்றியீண் டெய்து வாயெனத்
தன்னுடைத் திருமகற் கியம்பித் தாபதன்.
எழுப்பினையாயினும் அவள் இங்கு வருவது ஏற்புடையதன்று; அவளை
இங்கிருந்து அகற்ரு. அகற்றுவையாயினும் அவள் மனம் வருந்தாதவாறு
மகன் தாயிடம் ஒழுகும் முறையில் வழுவற்க என்றான். - 16



1590 - வெகுளியே உயிர்க்கெலாம் விளைக்குந் தீவினை
வெகுளியே குணந்தவம் விரதம் மாய்க்குமால்
வெகுளியே அறிவினைச் சிதைக்கும் வெம்மைசால்
வெகுளியிற் கொடும்பகை வேறொன் றில்லையால் - 17



1591 - சமதக்கினியைக் காத்தவீரியன் கொலைசெய்தல்
என்றிவை தன்மனத் தெண்ணி வெஞ்சினம்
ஒன்றறத் துறந்தினி துறையுங் காலையப்
புன்றொழில் வேந்தன· துணர்ந்து பொள்ளென
வென்றிமா தவன்சிரந் துணித்து மீண்டனன். - 18



1592 - இரேணுகை தெய்வமாதல்
மதலையி னாவிபெற் றகன்ற மாணிழை
இதமுறு கணவனை யிழந்த துன்பினால்
நுதலரு மகன்வரப் பேறு நோக்கியப்
புதல்வன திசைவுபெற் றாங்குப் போயினாள்.
'ஆங்கு' - காஞ்சியில் பரசிராமர் பூசித்த இடம். - 19



1593 - இளங்களி வண்டினம் இமிரும் பூம்பொழில்
வளங்கமழ் காஞ்சியை மருவி மைந்தனார்
உளங்கொள வழிபடு நகரின் ஊங்குற
விளங்கொளிச் சிவக்குறி விதியின் தாபித்தாள். - 20



1594 - மகவிடத் திருத்துபே ரன்பின் மாட்சிமை
தகவுறப் பூசனை தவாது பல்பகல்
அகமுறப் புரிவுழி அருளி யாங்கெதிர்
நகமடப் பிடியொடும் நம்பன் தோன்றினான். - 21



1595 - நுண்ணிடை யிரேணுகை மடந்தை நோக்கினாள்
உண்ணிகழ் காதலின் உருகிக் கைதொழூஉ
வண்ணமென் குயிலினஞ் சமழ்ப்ப வாய்திறந்
தண்ணலைப் பழிச்சிநின் றறைதல் மேயினாள் - 22



1596 - ஏதமில் உயிர்த்தொகை எவற்றி னுக்கும்நீ
தாதைதாய் இமவரைத் தைய லாகுமால்
கோதறும் இருமுது குரவர் மாட்டெவர்
மேதகு மானம்விட் டியம்பி டாதவர். - 23



1597 - கலிநிலைத்துறை
அடிய னேன்பல திறத்தினும் பரிபவ மடந்தேன்
பொடிகொள் மேனியா யிங்குனைப் பூசனை புரியும்
படியி லாப்பெரு வாழ்வுபெரு வாழ்வுபெற் றெய்தினேன் படியோர்
கடித ராதருள் வைத்தெனைக் காப்பதுன் கடனால் - 24



1598 - புகழு மாக்கமும் முத்தியு முயிர்க்கருள் புராணன்
இகழு மின்னலுந் தவிர்ப்பவன் இருள்மலக் கிழங்கை
அகழும் நாயகன் யாங்கணும் நிறைந்தவன் அடியார்
திகழும் அன்பினுக் கெளீயவன் சிவபிரான் என்றும் - 25



1599 - கொழுநன் யாரினும் இனியவன் என்றுகூ றுவரக்
கொழுநன் இவ்வுடற் குரியவன் குறிக்கிலா ருயிர்க்குக்
கொழுநன் தந்தைதாய் செல்வமும் எனவுங் கொன்றைக்
கொழுந னைத்தொடைக் குளிர்சடைச் சிவபிரான் என்றும் - 26



1600 - இனிய வாயின பெருமைகள் எடுத்தெடுத் தெனக்கு
வினையின் நீக்குமென் கணவன்நாள் தொறும்விரித் துரைக்கும்
அனைய நிற்றொழு துய்ந்துளார் அளவிலார் அடியேன்
தனைய னுக்குமீண் டரும்பெறற் பேறுதந் தளித்தாய் - 27



1601 - ஐய னேயடி யேனையுங் காத்தருள் அசலத்
தைய லேசகம் முழுவதும் அளித்திடுந் தாயே
உய்யு மாறெனைக் காத்தருள் உமைச்சரண் அடைந்தேன்
பொய்யர் சிந்தையின் அகப்படீர் போற்றியென் றிரந்தாள் - 28



1602 - அம்மைஅப்பராய் அகிலமும் புரந்தருல் கருணைச்
செம்ம லார்நகை முகிழ்த்தெழத் திருவுளம் மகிழ்ந்தே
எம்மை வேட்டவை விளம்புதி இமயமீன் றளித்த
கொம்மை மென்முலை உனக்கவை தருமெனக் கூற - 29



1603 - அன்பின் ஏத்திநின் றிரேணுகை அணியிழை வேண்டும்
என்ப ணிக்கினி யாய்நனி விழுத்தக வெய்தித்
துன்பம் எண்ணில பட்டயான் தூயநின் அருளான்
மன்ப தைக்கெலாம் வழிபடு தெய்வமாய் வயங்கி - 30



1604 - போகம் அவ்வவர் வேண்டிய உணர்ப்பெலாங் கன்கூ
டாக நல்குபே றெனக்கரு ளிவ்விலிங் கத்தின்
ஏக நாயக இனிதமர்ந் திருமையும் எவர்க்கும்
நீக னிந்தருள் புரிமதி எனநிகழ்த் துதலும் - 31



1605 - அண்ண லாருமை கூற்றினால் அவட்கவை உதவி
மண்ணின் மேற்கலி யுகத்துறு மானிடர் கருதும்
எண்ணம் எண்ணியாங் கியாவையும் இழிகுலத் துள்ளார்
நண்ணி வேட்டன சாலமிக் களிப்பவும் நல்கி - 32



1606 - கொம்ப னாள்பெறத் தெய்வதத் திருவுருக் கொடுத்துக்
கம்ப னார்மலை மகளொடுங் கரந்தருள் செய்தார்
வம்பு வார்குழல் இரேணுகை மடந்தையப் பொழுதே
அம்பு விக்கொரு தெய்வத மாயின ளம்மா - 33



1607 - கலிவிருத்தம்
காதரா வணியினால் பலகைவாட் கையினாள்
போதரா சன்முதல் பலகணம் புடையுற
வேதரா சிகள்பயில் விரிபொழிற் காஞ்சியின்
மாதராள் ஆயிடைத் தெய்வமாய் வைகினாள் - 34



1608 - எண்ணியாங் குதவிசெய் இரேணுகை ஈச்சரத்
தண்ணலார் பெருமையர் அளவிடற் பாலரே
கண்ணுமிக் காதையைக் கற்றுரைப் போரையவ்
வொண்ணுதல் தெய்வதம் ஊறுசெய் யாதரோ
ஒண்ணுதல் தெய்வம் - பெண் தெய்வம். - 35

ஆகத் திருவிருத்தம்- 1608
-----------

45. யோகாசாரியர் தளிப்படலம் (1609-1618)

கலிவிருத்தம்



1609 - உரவுநீர்ச் சடைமுடிப் பகவனார் உமையொடும்
விரவிவாழ் இரேணுகை ஈச்சரம் விளம்பினாம்
பரசிரா மேச்சரத் தெனாதுபா லியோகமாக்
குரவர்சூழ் ப·றளித் திறனினிக் கூறுவாம் 1
உரவு -பரவிய. ப·றளி= பல்+தளி. - 1



1610 - சுவேதனே சுவேதகே துக்கருத் தொடர்பிலாச்
சுவேதசீ கன்சுவே தாச்சுவன் தூயசீர்ச்
சுவேதலோ கிதனொடுஞ் சுதாரனே சாதனம்
சுவேதநீற் றணியொளிர் துந்துமி முதலியோர் 2
சுவேதம் - வெண்மை - 2



1611 - ஏயும்மெய்த் தவமறா இலகுளீ சன்முடி
வாயினோர் மற்றுமெண் ணில்லவர் அகிலமும்
பாயசீர் யோகமாக் குரவர்கள் படைமழுத்
தூயவன் கூற்றினில் தோன்றியோர் இவர்கள்தாம் - 3



1612 - யோகமாக் குரவர்தம் உயர்பதத் தெய்தவும்
மோகவல் வினையுறா முத்தியின் வைகவும்
போகுவெண் கயிலையின் மெய்த்தவம் புரிவுழி
ஏகநா யகனவர்க் கெதிரெழுந் தருளியே - 4



1613 - அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
அம்மநீர் கச்சி மூதூர் அணுகிமா நீழல் வைகும்
எம்மடி வழுத்தி வெவ்வே றிலிங்கமங் கிருத்திப் போற்றி
மம்மர்தீர் தவங்க ளாற்றி வைகுமின் ஆண்டு நுங்கள்
தம்மனக் கருத்து முற்றத் தருதுமென் றருளிச் செய்தான் - 5



1614 - மற்றவர் தொழுது போற்றி வள்ளலை விடைகொண் டேகி
மற்றிழை மகளிர் நல்லார் ஊடலின் உகுத்த முத்தங்
கற்றைவெண் ணிலவு கான்று கனையிருள் பருகு நீண்ட
பொற்றட நெடுந்தேர் வீதி பொலிதிருக் காஞ்சி நண்ணி - 6



1615 - முழங்கிசை ஞிமிறு பாய முகைமுறுக் குடைந்து தீந்தேன்
வழங்குபூங் கமலத் தெண்ணீர் மணிச்சிவ கங்கை தோய்ந்து
பழங்கணோய் அறுக்கும் மாவிற் பகவனை வழிபா டாற்றித்
தழங்கொலி மறையின் ஆற்றால் தனித்தனி இலிங்கஞ் செய்தார் - 7



1616 - முன்பொரு காலத்தங்கண் முதல்வனைத் தொழுது முந்நூற்
றைப்பதிற் றைவர் யோகா சாரிய ராகி முத்தி
தம்பத மாகக் கொண்டார் அவரெனத் தாமு மன்பின்
நம்பனைத் தத்தம் பேரால் நலத்தக நிறுவிப் போற்றி - 8



1617 - கறையணி மிடற்றுப் புத்தேள் கருணையால் உகங்கள் தோறும்
நிறைபுகழ் படைத்த யோகா சாரிய நிலைமை யெய்திக்
குறைவிலா முத்தி பெற்றார் ஆங்கவர் குலவிப் போற்றும்
இறையவன் தளிகள் யார்க்கும் வீடுபே றெளிதின் நல்கும். - 9



1618 - வென்றிகொள் இனைய வெல்லாம் பரசிரா மேச்ச ரத்தின்
தென்றிசை தொடங்கிச் சார்வ தீர்த்தத்தின் வடபால் காறும்
ஒன்றருஞ் சுவேத லிங்க முதலில குளீசம் ஈறாத்
துன்றிடு மிவற்றுள் மேலாச் சொலப்படும் இலகு ளீசம். - 10

ஆகத் திருவிருத்தம் 1618
--------

46. சர்வ தீர்த்தப்படலம் (1619-1644)

அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்



1619 - இருட்கொடும் பிறவி மாற்றும் இலகுளீச் சரமீ றாகத்
தருக்கறு காட்சி யோகா சாரியர் தளிகள் சொற்றாம்
மருத்துதை மலர்மேற் பூத்த வளம்புனல் குடைவோர் தங்கள்
கருத்தவிர் சருவ தீர்த்தக் கரைபொலி தலங்கள் சொல்வாம் - 1



1620 - காமேச்சரம்
குடவளை அலறி ஈன்ற குரூஉமணித் தரளக் குப்பைப்
படலைவெண் ணிலவு கான்று படரிருள் இரிப்ப ஞாங்கர்
உடைதிரை ஒதுக்கந் தெண்ணீர் ஒலிபுனற் சருவ தீர்த்தத்
தடநெடுங் கரையிற் காமேச் சரமெனுந் தலமொன் றுண்டால் - 2



1621 - கருப்புவில் குழைய வாங்கிக் கடிமலர்ப் பகழி தூண்டும்
அருப்பிளங் கொங்கைச் சேனை அடல்வலிக் காமன் முன்னாள்
மருப்பொதி இதழிக் கோமான் மனத்திடைப் பிறந்தான் ஐயன்
திருப்பதம் இறைஞ்சிப் போற்றி செய்துமற் றிதனை வேண்டும் - 3



1622 - மகப்பயில் பிறவிக் கேது வாகிவண் புணர்ப்பு நல்கி
இகப்பில்சீ ரிரதிக் கென்றும் இனியனாய்க் கொடுப்போர் கொள்வோர்
அகத்திருந் தினைய செய்கை ஆற்றியென் னாணை மூன்று
சகத்தினுஞ் செலுத்தும் பேறு தந்தருள் என்னக் கேட்டு - 4



1623 - மற்றெமக் கினிய மூதூர் வளம்பயில் காஞ்சி அங்கண்
உற்றெமை வழிபட் டேத்தி ஊங்குவை பெறுகென் றெங்கோன்
சொற்றலும் விரைந்து காஞ்சித் தொன்னகர் எய்திக் காமன்
அற்றமில் சருவ தீர்த்தத் தடந்திரை அலைக்குங் கோட்டின் - 5



1624 - தவாதபே ரன்பிற் காமேச் சரன்றனை யிருத்திப் போற்றி
உவாமதி முகத்து மென்றோள் ஒள்ளிழை உமையாள் தன்னை
கவான்மிசைக் கொண்ட பெம்மான் கண்ணருள் கிடைத்து நெஞ்சத்
தவாவிய பேறு முற்றும் அந்நிலை எய்தி னானால். - 6



1625 - ஏதமில் உயிர்கள் எல்லாந் தோற்றுதற் கேது வாகிக்
கோதறத் தானம் ஈவோன் கொள்பவன் தானுந் தானாய்
மேதகும் இறைமை பெற்று விளங்கினான் மறையோர் ஏற்கும்
போதுளத் தவனை எண்ணிற் புரைதவிர்ந் துய்வா ரன்றே. - 7



1626 - தீர்த்தேச்சரம்
பரவினோர் விழைந்த காமப் பயனளித் தருளுங் காமேச்
சரநகர் வந்த வாறு சாற்றினம் இதன்பா லாகப்
பரிதிமான் தடந்தேர் ஈர்க்கும் பரிக்குளம் பிடறிப் போய
திருமணிச் சிகரக் கோயில் வயங்குதீர்த் தேச முண்டால் - 8



1627 - குழையுதை நெடுங்கண் செவ்வாய்க் கோமளச் சயிலப் பாவை
விழைதகத் தழுவு மாற்றால் விரிசினைத் தனிமா நீழல்
மழைதவழ் மிடற்றுப் புத்தேள் வருகென விளித்த ஞான்று
தழைபுனல் தலைவ னோடுந் தடநதி வடிவந் தாங்கி - 9



1628 - விழுமிய அண்டத் துள்ளும் புறத்தினும் விரவுந் தீர்த்தம்
முழுவதுந் திரண்டு காஞ்சி முதுநகர்க் குடபால் எய்திக்
கொழுமலர்த் தனிமா நீழற் குழகனை உமையாள் வல்லைத்
தழுவலும் எழுந்த வேகம் தணிந்துமீட் டல்கி யங்கண் - 10



1629 - கலைமதிக் குழவி மோலிக் கடவுளைத் தீர்த்த ராசத்
தலைவனென் றிருத்தி வீங்குந் தடம்புனல் அருவிக் குன்றச்
சிலைநுதற் பிடியி னோடு மருச்சனை திருந்தச் செய்ய
மலையினைக் குழைத்த திண்டோள் வள்ளலு மெதிரே நின்று - 11



1630 - இற்றைஞான் றாதி யாக நும்மிடத் தெய்தி மூழ்கிச்
செற்றமில் முனிவர் விண்ணோர் தென்புல வாணர் தங்கட்
குற்றநீர்க் கடன்கள் நல்கி உறுபொருள் உறுநர்க் கீந்து
மற்றெமை ஈண்டுக் காண்போர் முத்தியின் மருவச் செய்கேம் - 12



1631 - இன்னமும் புகலக் கேண்மின் எனப்பெருங் கருணை கூர்ந்து
தன்னிகர் பிராட்டி யாரத் தழீஇக்கொளச் செய்த வாற்றால்
அன்னதற் கியையக் கைம்மா றளிப்பவன் என்ன அங்கேழ்ப்
பொன்னவிர் சடையோன் தீர்த்தப் புனல்களுக் கிதனை நாட்டும் - 13



1632 - கொலைகளிற் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலைவல் வீரக்
கொலைகருக் கொலைதாய் தந்தைக் கொலைக்கவை கோட்டு நல்லான்
கொலைமுதல் பிறவும் நீங்குங் கொடுவினைப் பாசத் தெவ்வைக்
கொலைபுரி மரபின் நும்பாற் குடைந்தெமைத் தொழப்பெற் றோர்க்கே - 14



1633 - முரிதிரை சுருட்டு தெண்ணீர் நும்மிடத் தொருகால் மூழ்கி
விரிபுகழ்த் திருவே கம்பம் விழைதகக் காணப் பெற்றோர்
உரிமையின் ஆன்ற நாற்கூற் றுறுதியும் பெறுவர் மீள
அரிவையர் அகட்டுள் எய்தா தெம்மருள் அகட்டின் வாழ்வார் - 15



1634 - என்றிது நிறுவித் தீர்த்த நாயகன் இலிங்கத் துற்றான்
அன்றுதொட் டங்கண் மேவும் அலங்கொளிச் சருவ தீர்த்தத்
தின்றடம் புனலின் மூழ்கி எழில்வளர் திருவே கம்பஞ்
சென்றுகண் டிறைஞ்சப் பெற்றோர் செய்கொலைத் தீமை தீர்வார் - 16



1635 - சருவ தீர்த்தப் பெருமை
தந்தையைச் செகுத்த பாவம் தணந்தனன் பிரக லாதன்
முந்தையோர்ச் செகுத்த பாவம் வீடணன் முழுதுந் தீர்ந்தான்
மைந்துடைப் பரசி ராமன் வீரரை வதைத்த பாவஞ்
சிந்தினன் சருவ தீர்த்தச் செழும்புனல் குடைந்த பேற்றால் - 17



1636 - அருச்சுனன் துரோண மேலோ னாதியர்ச் செகுத்த பாவம்
பிரித்தனன் அசுவத் தாமன் பெறுங்கருச் சிதைத்த பாவம்
இரித்தனன் உலகில் இன்னும் எண்ணிலர் சருவ தீர்த்தத்
திருப்புனல் குடைந்து தீராக் கொலைவினைத் தீமை தீர்ந்தார் - 18



1637 - சிலைநுதல் மகளிர் மைந்தர் இன்றுமத் தெண்ணீர் மூழ்கின்
கொலைவினைப் பாவந் தீர்வார் குரைகடற் பரப்பென் றெண்ணித்
தலைவரு முகிலின் கூட்டந் தனித்தனி வாய்ம டுக்கும்
அலைபுனல் சருவ தீர்த்தப் பெருமையார் அளக்கற் பாலார் - 19



1638 - கங்காவரேச்சரம்
மற்றதன் கரையின் கீழ்பால் வருணனெம் பெருமான் றன்னை
முற்றிழைக் கங்கை யாளோ டிருத்திமுன் தொழுது நீருள்
உற்றுறை உயிர்க்கும் நீர்க்கும் ஒருதனித் தலைவ னாகப்
பெற்றனன் அதன்பேர் கங்கா வரமெனப் பிறங்கு மாலோ - 20



1639 - விசுவநாதேச்சரம்
பாற்றினம் மிடைந்த கூர்வாய்ப் படைமழுக் குடங்கைப் புத்தேள்
மாற்றருங் கருணை முந்நீர் வாரியின் நிறைந்து தேங்கும்
நாற்றிசை அணவுஞ் சீர்த்தி நளிபுனல் சருவ தீர்த்த
மேற்றிசைக் கரைக்கண் மேவும் விச்சுவ நாதத் தானம் - 21



1640 - மலர்தலை உலகின் முக்கண் வானவன் இனிது வைகுந்
தலமெலாம் மருவுங் காஞ்சி விச்சுவ நாதன் றன்பால்
கலிபுகழ் விசுவ நாத முதல்வனுங் காசி தன்னில்
இலகொளி மாடக் காஞ்சி நகரெமக் கினிதென் றெண்ணி - 22



1641 - வெள்ளிவெண் கயிலை யாதி இடங்களின் மேன்மை சான்ற
அள்ளலம் பழனக் காஞ்சி யணிநகர்ச் சருவ தீர்த்தப்
பள்ளநீர்க் கரைக்கண் எய்தி வைகினன் பரிவால் அங்கண்
வள்ளலைத் தொழுது முத்தி மண்டபங் காண்போர் முத்தர் - 23



1642 - முத்தி மண்டபம்
மண்டப வருநாள் செல்லாக் காஞ்சிமா நகரின் மூன்று
மண்டபந் திகழும் முத்தீச் சரத்தெதிர் வயங்கும் முத்தி
மண்டபம் ஒன்று சார்வ தீர்த்தத்தின் மருங்கு முத்தி
மண்டபம் ஒன்று கண்டோர் தமக்கெலாம் வழங்கும் முத்தி - 24



1643 - இராமேச்சரம் - பரமாநந்த மண்டபம்
உருவமென் கமலம் பூத்த உயர்சிவ கங்கைத் தென்பால்
திருவிரா மேச்ச ரத்துச் சிவபிரான் திருமுன் னாக
இருவினைப் பிறவிக் கஞ்சி எய்தினோர்க் குறுபே ரின்பம்
மருவுறும் பரமா நந்த மண்டபம் ஒன்று மாதோ - 25



1644 - மண்டபம் இனைய மூன்றும் வைகறை எழுந்து நேசங்
கொண்டுளம் நினையப் பெற்றோர் உணர்வெலாங் கொள்ளை கொண்ட
பண்டைவல் வினையின் வீறும் பற்றிய மலங்கள் மூன்றும்
விண்டுபே ரின்ப வெள்ள வேலையில் திளைத்து வாழ்வார் - 26

ஆகத் திருவிருத்தம் 1644
---------

47. நவக்கிரகேசப் படலம் (1645-1650)

கலிநிலைத்துறை



1645 - தழங்குபெரும் புனற்பரவைச் சருவ தீர்த்தத் தடங்கோட்டின்
முழங்குமறித் திருக்கரத்து முதல்வன் இடங்கள் எடுத்துரைத்தாம்
வழங்குவளிக் கடவுளுமொன் பதிற்றுக் கோளும் வழிபட்ட
குழங்கல்நறுந் தொடைக்கொன்றைக் குழகன் தளிகள் இனிப்புகல்வாம் - 1



1646 - சூலதீர்த்தம்
பைத்தலைப்பூண் வயிரவனார் பணைத்த தடந்தோள் அந்தகனை
முத்தலைசூ லத்தலைநின் றிழித்த ஞான்று முழங்கழல்வாய்
அத்தகைத்திண் சூலத்தால் அகழ்ந்த சூலத் தடந்தீர்த்தம்
இத்தரைக்கண் சிறப்பெய்தும் உவாவில் அந்நீர் இனிதாடி - 2



1647 - செவ்வந்தீச்சரம்
தென்புலத்தோர் கடன்செலுத்தில் அனையர் துறக்கஞ் சென்றெய்தி
இன்புறுவார் அதன்கரைக்கண் இலிங்கம் அமைத்து மருத்திறைவன்
மென்பனிநீர் செவ்வந்தி வேரிச் செழும்பூப் பலகொண்டு
வன்பகல வழிபட்டுக் கந்த வாகன் எனப்பெற்றான் - 3



1648 - பரிதிக்குளம்
மருத்தேத்துஞ் செவ்வந்திச் சரமால் வரைப்பின் வடகுடக்காந்
திருத்தேத்துக் கதிர்பரிதிச் செல்வன் பரிதிக் குளந்தொட்டுக்
கருத்தேய்த்து வீடளிக்கும் அந்நீ ராட்டிக் கருதாரூர்
உருத்தேத்துஞ் சுரர்க்கருளும் ஒளியைத் தொழுது வரம்பெற்றான் - 4



1649 - சந்திர தீர்த்தம்
வீங்கிருள்சீத் தொளிபரப்பிப் பைங்கூழ் புரக்கும் வெண்கதிரோன்
தேங்கமல முகையவிழ்க்குஞ் சருவ தீர்த்தத் தென்திசையின்
ஆங்கண்நறுஞ் சுவைத்தெள்ளா ரமுத தடந்தொட் டதன்கோட்டிற்
பாங்குபெறப் பிஞ்ஞகன்தாள் அருச்சித் தேத்திப் பயன்பெற்றான் - 5



1650 - நலமொன்று செவ்வந்தீச் சரக்கீழ் ஞாங்கர் ஏழிலிங்கம்
நிலமைந்தன் மதிமைந்தன் வியாழம் வெள்ளி நீடுசனி
அலமந்த இருபாந்தள் அருச்சித் தருங்கோள் நிலைபெற்றார்
வலம்வந்தங் கவைதொழுவோர் தம்மைக் கோள்கள் வருத்தாவால்
நிலமைந்தன் - செவ்வாய். மதிமைந்தன் - புதன்;
இருபாந்தள் -இராகுகேதுக்கள் - 6

ஆகத் திருவிருத்தம் 1650
-------------

48. பிறவாத்தானப் படலம் (1651-1660)

கலிவிருத்தம்



1651 - பவன னோடென் பதிற்றுக் கோள்களும்
இவறிப் போற்றும் இடங்கள் கூறினாம்
சிவனைச் செவ்வாய் முதலி யோர்தொழும்
புவியிற் பிறவாத் தானம் போற்றுவாம்
பவனன் -காற்று. இவறி-விரும்பி. - 1



1652 - வாம தேவன் என்னும் மாமுனி
காமர் அன்னை கருவின் வைகுநாள்
பேமு றுத்தும் பிறவி யஞ்சினான்
ஏமு றாமை இதுநி னைக்குமால்
பேம் -அச்சம். ஏமுறாமை - இன்புறாமல், துன்புற்று. - 2



1653 - பொதியும் மாயப் புவியில் தோன்றிநான்
மதிம யங்கி மற்றும் இன்னணங்
கொதிபி றப்பிற் கொட்பு றாதெனக்
கதிப னேயிங் கருளிச் செய்யென - 3



1654 - தோற்றம் ஈறில் லாத சோதிவெள்
ளேற்றி னானை இதயத் தன்பினால்
போற்று காலை புனிதன் ஆண்டுறீஇச்
சாற்ற லுற்றான் தவமு னிக்கரோ - 4



1655 - மண்ணின் மீது தோன்றி மற்றெமை
நண்ணிக் காஞ்சி நகரிற் பூசனை
பண்ணு மோவெம் பவத்தொ டக்குனை
அண்ணு றாதென் றருளிச் செய்தனன்
பண்ணுமோ - பண்ணுவாயாக,மோ- முன்னிலையசை. - 5



1656 - வள்ளல் புகலும் மாற்றங் கேட்டனன்
உள்ளம் மேன்மேல் உவகை பூத்தனன்
பள்ள முந்நீர்ப் படிமி சைப்பிறந்
தெள்ள ருஞ்சீர்க் காஞ்சி எய்தினான் - 6



1657 - இலிங்கம் அங்கண் இனிதி ருத்திநூற்
புலங்கொள் முறையிற் பூசை யாற்றுபு
கலங்கு பிறவிக் கரிசின் நீங்கினான்
மலங்க ருஞ்சீர் வாம தேவனே - 7



1658 - கலிநிலைத்துறை
அன்ன வாற்றாற் பிறவாத் தான மாயதால்
இன்ன தானம் வழிபட் டேத்தப் பெற்றவர்
பின்னர் மாதர் கருவின் எய்திப் பேதுறார்
கன்னி பாகன் கருணை வெள்ளங் காண்பரே - 8



1659 - அங்கட் போற்றி வாம தேவன் அருளினால்
துங்கக் கயிலை எய்தி நோன்றாள் தொழுதெழூஉக்
கங்கைச் சடையான் உதவி லிங்கங் கைக்கொடு
பங்கப் பழனக் காஞ்சிப் பதியின் மீண்டரோ - 9



1660 - முத்தீச்சரம்
மேன்மை சான்ற பிறவாத் தான மேற்றிசை
ஞான வாவி ஞாங்கர் முத்தீச் சரனென
மான முத்தித் தளியின் நிறுவி வாழ்த்தினான்
ஏன வெண்கோட் டணியார்க் கினிதாம் அன்னதே - 10

ஆகத் திருவிருத்தம் 1660
---------

49. இறவாத்தானப் படலம் (1661-1668)

கலிநிலைத்துறை



1661 - புள்ளி வண்டு பெடையொ டாடிப் பொங்கரிற்
பள்ளி கொள்ளும் பிறவாத் தானம் பன்னினாம்
துள்ளி வாளை பாயும் நீர்சூழ் இதனயல்
வெள்ளி வரையார் இறவாத் தானம் விள்ளுவாம் - 1



1662 - இறவிக் கஞ்சிச் சி·றா பதர்கள் மாதவம்
முறையிற் செய்தார் முன்னாள் அந்நாள் முன்னுற
நறவில் திகழும் முளரி மேலோன் நண்ணிநின்
றறவர்க் கென்னே வேட்ட தென்றான் ஆங்கவர்
சில்+தாபதர்கள்= சி·றாபதர்கள். தாபதர் - முனிவர்கள் - 2



1663 - உலக முழுது முதவு மெந்தாய் உன்னடித்
தலமே யன்றிச் சரணம் இல்லேம் சாவதற்
கலகி லச்ச முற்றே மதனை வெல்லுமா
றிலக எங்கட் குரையா யென்றங் கேத்தினார் - 3



1664 - செங்கால் அன்னப் பாகன் கேளாத் தேத்துணர்க்
கொங்கார் பொங்கர்க் காஞ்சி நண்ணிக் கோமளை
பங்கா ராதி பகவன் பாதம் வழிபடின்
அங்கே யிதனைப் பெறலா மென்றா னவர்களும் - 4



1665 - அன்னத் தோன்ற லடிகள் போற்றி விடைகொடு
நன்னர்க் காஞ்சி நகரம் நண்ணி நாயகன்
றன்னைத் தாபித் தேத்திச் சாவா மாட்சியின்
மன்னப் பெம்மான் உதவப் பெற்று வாழ்ந்தனர் - 5



1666 - சுவேதன் என்பான் வாழ்நாட் கழிவு துன்னுநாள்
சுவேதந் தீற்று மாடச் சூழ லதனிடைச்
சுவேத நல்லான் ஊர்தி நோன்தாள் தொழுதனன்
சுவேத நீற்றான் நீத்தான் இறவித் துன்பமே
சொற்பின்வருநிலையணி. சுவேதம் - வெண்மை. - 6



1667 - மார்க்கண் டேயன் அங்கண் போற்றி மறலியைத்
தாக்கி நிலைமை பெற்றான் சாலங் காயினன்
ஆக்க மைந்தன் மகனும் அங்கண் ஏத்துபு
சாக்கா டற்றான் கணநா தச்சீர் தழுவினான்
சாலங்காயினன் - ஒருமுனிவன். - 7



1668 - ஆயுள் மாய்வின் இன்னு மங்கண் எண்ணிலர்
தூய அன்பின் தொழுது நிலைமை பெற்றனர்
ஏய வாற்றால் ஆயுள் வேட்டோர் யாவரும்
பாய சீர்த்தி இறவாத் தானம் பணிகவே - 8

ஆகத் திருவிருத்தம் 1668
-------

50. மகாலிங்கப்படலம் (1669-1691)

கலிநிலைத்துறை



1669 - வெள்ளைத் திங்கட் பிள்ளைக் கீற்று மிளிர்சடை
வள்ளற் கோமான் இறவாத் தானம் வாழ்த்தினாம்
கிள்ளைச் சொல்லார் பயிலும் அதனின் கீழ்த்திசை
விள்ளற் கருமா லிங்கத் தானம் விள்ளுவாம் - 1



1670 - அரியும் அயனும் போரிட்டிளைத்தல்
அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
வைய முழுது மடிய வருமோ ரூழி முடிவின்
வெய்ய விருள்வந் தடர விரிநீர்ச் சலதி வேகஞ்
செய்து நிமிர்ந்து பொங்கித் தேங்கிக் கிடந்த காலைப்
பைய வுறக்கம் நீத்து மீளப் படைக்க வுன்னி - 2



1671 - துங்கத் தனது நகரிற் சுடரும் மறையின் கிழவன்
எங்கும் அலைகள் புரள வேகப் புணரி வெள்ளம்
தங்கு செயலை நோக்கித் தடவுக் கருவி முகில்போல்
அங்கண் அரவில் துயிலும் ஐயன் றனையுங் கண்டான் - 3



1672 - கண்டு புடையி னணுகிக் கடுக எழுப்பி மையல்
கொண்டு நீயார் என்று வினவக் கொண்ட லனையான்
அண்டம் முழுதும் காக்கும் அகில முதல்வன் யானே
மிண்டு நீயார் என்பால் வேட்ட தென்கொல் என்றான் - 4



1673 - நறவம் ஒழுகு மலரோன் கேட்டு நகையுட் கொண்டு
பிறரும் அல்லர் நீயும் அல்லை பேணி உலகம்
நிறுவு முதல்வன் யானே என்னும் இனைய நெறியின்
மறலிக் கூறித் தம்முள் ஊடல் வளர்த்து நின்றார். - 5



1674 - சிந்தை நாணுக் கழலச் சிலையின் நாணுப் பூட்டி
முந்து கணைகள் தூர்த்தார் மூரிக் கனலி வருணன்
இந்து இரவிப் படையும் ஏவி அவைகள் மடியப்
பந்த வினையின் மருள்வார் தத்தம் படைவிட் டார்த்தார் - 6



1675 - மும்மைப் புவனம் ஈன்றோன் படையும் முகுந்தன் படையும்
தம்முட் பொருது மாய்ந்த பின்னர்க் கமலத் தவிசோன்
வெம்மைப் பாசு மதமாப் படையை விடுப்ப மாயோன்
செம்மல் உருத்தி ரத்திண் படையைச் செலுத்தி நின்றான் - 7



1676 - அம்ம இரண்டு படையும் அயுத வருடம் நேர்ந்து
தம்மு ளுடலுங் காலைத் தழங்கும் எரியின் பொறிகள்
தும்ம எழுந்து தோன்றிச் சோதி யிலிங்க வடிவாய்
நம்மை யுடைய பெருமான் அவற்றின் நடுவு நின்றான்
அயுத வருடம் - பதினாயிர வருடம். தும்ம -சிந்த. - 8



1677 - நின்ற சோதி உருவின் நேர்ந்த இரண்டு படையும்
சென்று கரப்ப நோக்கித் தெருமந் தரியும் அயனும்
இன்று தோன்றும் இதுவென் னென்று தம்மு ளெண்ணிக்
கன்று மிதன்ற னடியும் முடியுங் காண்டும் என்னா - 9



1678 - கேழல் எகின மாகிக் கீழும் மேலுந் துருவி
ஊழின் இரண்டைஞ் ?று வருடம் உழிதந் துற்றார்
வாழி முடியைக் காணான் வண்டு முரலும் மலரோன்
பாழிச் சிறகர் முறியாப் பையுள் எய்தி வீழ - 10



1679 - நாறுந் துளவத் தவனும் நாடிச் சரணங் காணான்
வீறும் வலியுங் குன்றி எய்ப்பும் இளைப்பும் விரவ
ஏறும் பரவைப் பெருநீர் இடையுள் எழுந்தங் குற்று
மாறும் இருவர் களுமால் எய்தி மருட்கை கொண்டார் - 11



1680 - வேதம், முதல்வனுண்மை கூறல்
அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
ஏமுறு பொழுதவ ணொலிவடிவி ணாதம தெழுபுமு னிருதிறனாய்
ஓமென உமையென மருவியிருக் கோடுயர் நெறியருள் புரியெசுவும்
சாமமும் எனநிலை பெறவிரிவுற் றங்கவை தம்வலி மிகுமவர்முன்
காமுறு தகையநல் வடிவொடுநின் றினையன கருணையின் உரைசெயுமால் - 12



1681 - எவனடி மறையவர் மகவினையால் இருவினை வலிகெட வழிபடுவார்
எவனரி யயனெனும் நுமையொருதன் இடவல வடிவினில் வரவருள்வோன்
எவனுமை நும்பதம் உறநிறுவும் இறையவன் நுமதிருள் கழியவரும்
அவனது குறியிது அறிமினெனா அருள்வழி வருமறை யவைபுகல - 13



1682 - அயனும் அரியும் துதித்தல்
நறைகமழ் துளவணி தொடையவனும் நகைமல ரணைமிசை மறையவனும்
மறைமொழி செவியுற மயல்கழிவுற் றலைகடல் வருவிட மமுதுசெயும்
இறைவனை முறைமுறை பரசினரால் எனையுடை முதல்வனும் அவரெதிர்நின்
றுறைபெரு மயலினை இனிவிடுமோ உதவுதும் விழைவன உரைமினென - 14



1683 - பங்கய னிருகர முச்சிமிசைப் பயில்வுற வடிதொழு துளமுருகி
எங்குறை யின்று பொறுத்தருளி யெளிவரு நாயக வுனையுணரா
துங்குறு மயலினி யெனையணுகா துன்புடை நிலைபெறு மன்புதவி
மங்கலி லூழிதோ றென்வடிவில் வந்தரு ளெனமொழி விண்டனனே - 15



1684 - திருமகள் விழைதரு திகழ்மருமச் செம்மலு மடியிணை தொழுதினியிம்
மருளெனை யொருபொழு தினுமடர லுன்னடி வழிபடு செயல்பிறழல்
கருமுகி லுறழ்மிட றுடையவநின் கருணையென் னிடைநிலை பெறநிறுவில்
ஒருமுறை யுளதுகொ லடியடியேற் கென்றுள மகிழ்வுட னோதினனால் - 16



1685 - அயனு மரியும் அருள்பெற்றுய்தல்
அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
இவ்வண்ண மிருவர்களு மிரந்தேத்தி விண்னப்பஞ் செய்யக்கேளா
அவ்வண்ண மாகவெனப் பெருங்கருணை கூர்ந்தருளி யகில மீன்ற
மைவண்ணக் கருங்கூந்தல் முலைச்சுவடும் வளைத்தழும்பும் மாறா மேனிச்
செவ்வண்ணப் பரமேட்டி பின்னருமங் கவர்க்கிதனைத் தெரிவித்துக் கூறும் - 17



1686 - இற்றைநாள் நீர்காணு மிவ்விலிங்கப் பெருவடிவ மிறுதிக் காலம்
முற்றுநா ளணுகாது கொற்றங்கொள் திருக்காஞ்சி மூதூர் மாடே
பற்றுபெருங் காதலினால் தாபித்து வழிபட்டுப் பரசி யனாப்
பெற்றியுறு வியனுலகம் படைத்தளிக்கும் பெருமதுகை பெற்று வாழ்மின் - 18



1687 - வெண்டிரைநீ ரகல்வரைப்பின் நும்முதலோர் விண்ணவர்க ளவுணர் சித்தர்
பண்டைவினைக் குறும்பெறியும் முனிவரர்மா னிடர்யாரும் பாசக் கூட்டம்
விண்டகலும் படியின்று தொட்டெம்மை யிலிங்கத்தின் மீளாநேசங்
கொண்டுபூ சனைபுரிக புரிவோர்க்கு மயலென்றுங் குறுக லோம்பல்
ஓம்பல் - ஒழிக
- 19



1688 - கடப்பாடு வறுமைபயம் மனக்கவலை பசிபாவங் கடுநோய் மற்றும்
உடற்றாமை யாங்கவர்க்கு மீளவினைப் பிறவியுற லுரினு மின்பங்
கிடைத்தானாப் பெருமகிழ்ச்சி தலைசிறப்ப நனிவாழி கிளருஞ் சீற்ற
நடைக்காலன் மற்றவர்பால் நணுகற்க நம்மாணை வலியான் மன்னோ - 20



1689 - வேதியர்மன் னவர்வணிகர் வேளாளர் சங்கரத்தின் மேயோராக்
மூதிமையோ ருரகர்தயித் தியரரக்கர் கந்தருவர் முனிவராகப்
பூதிதரு மிலிங்கபூ சனையில்லார் பூதிசா தனங்கள் பேணார்
ஏதிலராம் இழிஞரினு மிழிஞரே யவரோடுபேச் சியம்பி னோரும் - 21



1690 - நியதிமகம் தவம்தனம் விரதநிலை பிறவற்ரின் நிகழ்த்தும் பூசைப்
பயனெவையு மிலிங்க பூசனைக்கோடி கூற்றினொரு பயனுக் கொவ்வா
வியனுலக முய்யுமுறை யிவ்வாறு நமதானை விதித்தேம் போற்றி
உயலுறுவீ ரென்றருளிச் சிவபெருமா னடியருளக் கோயில் புக்கான் - 22



1691 - பாப்பணையில் துயில்வோனும் பனிமலரிற் பயில்வோனும் பணிந்து நீங்கி
யாப்பமைநீர்த் தடம்பொய்கைத் திருக்காஞ்சி வளநகர மெய்தி யாங்கண்
மீப்பொலியும் மகாலிங்கம் நிறீஇத் தொழுது பயன்பெற்றார் விரிநீர் வைப்பின்
நீப்பரிய சிவலிங்க வழிபாட்டின் பேறெவரே நிகழ்த்த வல்லார் - 22

ஆகத் திருவிருத்தம் 1691.
----------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III