Kāñcip purāṇam IV


சைவ சமய நூல்கள்

Back

காஞ்சிப் புராணம் IV
கச்சியப்ப சிவாச்சாரியார்



திருவாவடுதுறை யாதீனம்
சிவஞான சுவாமிகள் அருளிய
காஞ்சிப் புராணம்

பாகம் 4a - (1692 - 2022)


51. வீராட்டகாசப்படலம் 1692 -1746

52. பாண்டவேசப்படலம் 1747-1755

53. மச்சேசப்படலம் 1756-1765

54. அபிராமேசப்படலம் 1765-1774

55. கண்ணேசப் படலம் 1775-1786

56. குமரகோட்டப் படலம் 1787-1831

57. மாசாத்தன் தளிப் படலம் 1832-1868

58. அனந்த பற்பநாபேசப் படலம் 1869-1878

59. கச்சி மயானப்படலம் 1879-1901

60. திருவேகம்பப்படலம் 1902-2022

காஞ்சிப் புராணம்
51. வீராட்டகாசப்படலம் (1692 -1746)

அறுசீரடிக்கழி நெடிலாசிரிய விருத்தம்



1692 - தண்காமர் புனல்குடையுந் தையலார்
      திமிர்ந்தநறுந் தகர ஞாழல்
எண்காதங் கமழிலஞ்சி மகாலிங்கத்
      தளிபுகன்றாம் இதன்வ டாது
விண்காவ லுடையார்மன் இளநகைபூத்
      திவ்வாலம் விடுக்கா அன்றி
உண்காவென் றருள்செய்தான் வீராட்ட
      காசநகர் உரைத்து மாலோ
விடுக்கா -விடுக்கவோ. உண்கா - உண்கவோ - 1



1693 - சர்வசம்மாரக்காலத் திருக்கூத்து
வள்ளவாய் நறைக்கமல வெண்பீடத்
      தரசிருக்கும் மாதர் அன்னப்
புள்ளவாம் நடைநல்லாள் முலைமுகட்டிற்
      கோட்டியபூங் களபந் தோய்ந்த
கள்ளவாந் தொடைத்திண்டோள் மறைக்கிழவன்
      ஒருவனுக்குக் கடையேன் உள்ளத்
துள்ளவாம் இறைவகுத்த பராத்தங்கள்
      ஓரிரண்டும் ஒழிந்த காலை - 2



1694 - ஐவண்ண நிறம்படைத்த திருமுகமைந்
      துடையபிரான் அருளால் அந்திச்
செவ்வண்ணக் காலத்தீ உருத்திரப்புத்
      தேள்நுதற்கண் செந்தீப் பொங்கி
மொய்வண்ண அண்டமெலாம் முழங்கிநிமிர்ந்
      தெழுந்துருக்கி உண்டு தேக்கி
மெய்வண்ண மனத்தன்பர் வினைப்பறம்பின்
      நீறாக்கி விட்ட தாக
வினைப்பறம்பின் நீராக்கி - மலையைச் சாம்பலாக்கியதைப் போல
வினைமலையை நீறாக்கி. - 3



1695 - ஆயநாள் இரவில்லை பகலில்லை
      அயனில்லை அரியு மில்லை
மேயவான் முதல்பூதம் இலையேனைப்
      பவுதிகத்தை விளம்பு மாறென்
பாயபே ரண்டமெலாம் இவ்வாறு
      படநீற்றிப் புரமூன் றட்ட
காய்க ணையோன் ஆனந்த மேலீட்டின்
      தன்னியல்பு கருத்துட் கொள்ள - 4



1696 - கடைநாளும் அழியாது தன்னொருபாற்
      பெருமாட்டி காப்ப வைகும்
நடைமாறாத் திருக்காஞ்சி நகர்மன்னி
      உலகீன்ற நங்கை காண
இடையாம இரவெல்லாம் திருக்கூத்து
      நவின்றருளி எறுழ்கால் வெள்ளை
விடையாளுந் தனிப்பாகன் ஆர்த்தார்த்து
      வீரநகை விளைத்தான் மேன்மேல் - 5



1697 - அவ்விரவு புலர்காலை திருநடனம்
      நீத்திலிங்க வடிவ மாகி
அவ்வரைப்பின் விளங்கினான்
      ஆதலினால் வீராட்ட காசத் தேவாம்
அவ்விலிங்கம் வழிபட்டுச் சிலர்சித்தர்
      அற்புதமாம் சித்தி பெற்றார்
அவ்வியல்பு தனைக்கேட்டுக் கொங்கணமா
      முனிச்செல்வன் அங்கண் எய்தி - 6



1698 - கொங்கணமுனிவர் வழிபாடு
அவ்விலிங்க மேன்மையினை அளந்தறிவான்
      ஆங்கதன்றன் சென்னி மீது
செவ்வனே தன்குளிகை ஈந்திட்டான்
      மற்றவற்றின் சிரமேல் வைப்பின்
எவ்வமுற நீறாக்கும் அனையதையக்
      கணமேயவ் விலிங்கம் உள்ளால்
வௌளவியது தனைக்கண்டான் வியப்பெய்தி
      அவ்விலிங்க முன்னர் வைகி - 7



1699 - மெய்த்தவங்கள் இனிதாற்றிப் பேறுற்றான்
      இன்னுமவண் மேவிச் சீர்சால்
சித்திகளை உழவாது பெறுகின்றோர்
      எல்லையிலர் செந்நீர் தேக்கும்
முத்தலைவேல் வீராட்ட காசேசன்
      மேன்மையெவர் மொழிவார் மாயன்
அத்தலத்தே வழிபட்டுப் பவளநிறம்
      பெற்றானவ் வகையுஞ் சொல்வாம் - 8



1700 - திருமால் பவளநிறம் பெற்ற வரலாறு
எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
விரிதிரை சுருட்டிக் கரைமிசை எறியும்
      வெள்ளிவெண் பாற்கடல் வரைப்பின்
எரிமணி மாடப் போகமா புரத்தின்
      எய்தருந் தனியிடத் திருந்து
புரிமுறுக் குடைந்து நறவுகொப் புளிக்கும்
      பூந்தவி சணங்கினோ டிணங்கி
வரிவளைக் குடங்கை வானவன் விளையாட்
      டியற்கையின் மகிழ்வுறும் ஒருநாள் - 9



1701 - மாயிரு ஞால முழுதுமீன் றளித்து
      மனைவியும் மணாளனு மாயோர்
ஆயிடைப் பொழுது கழிப்பிய தம்முட்
      கதைசில அறைகுவா னமைந்தார்
பாயபாப் பணையில் அறிதுயில் அமர்வோன்
      பனிமலர்க் கிழத்தியை நோக்கித்
தேயும்நுண் நுசுப்பின் அகன்றபே ரல்குல்
      ஒருகதை கேளெனச் செப்பும் - 10



1702 - நன்னிறம் படைத்த நாமநீர்ப் பரவை
      நளிதிரைப் பாற்கடல் மாமை
புன்னிறந் தோற்ற வெள்ளொளி விரிக்கும்
      புகரறு கயிலையெம் பெருமான்
மின்னிடை மருங்குல் உமையுடன் ஒருநாட்
      கறங்குவெள் ளருவியஞ் சாரல்
தன்னிறம் மாண்ட மந்தரப் பறம்பின்
      தனியிடத் தினிதுறும் ஏல்வை - 11



1703 - எழால்மிடற் றளிகள் கொள்ளைகூட் டுண்ண
      ஈர்ந்தொடை நறாவிரி ஐம்பால்
கழாமணி மேனிப் பிராட்டியை நோக்கிக்
      காளியென் றெம்பிரா னழைப்ப
வழாநிலைக் கற்பின் உள்ளகம் வெதும்பி
      வரிவிழி நித்திலம் உகுத்துக்
குழாமுடை இமையோர் ஏத்தெடுத் திறைஞ்சுங்
      கோமளை யின்னது கூறும் - 12



1704 - விடுந்தகைக் காள நிறம்படைத் துளன்யான்
      வெண்ணிறம் படைத்துளை நீயே
நெடுந்தகாய் நமக்குப் புணர்ச்சி யெவ்வாறு
      நிகழும்மற் றிங்கிது காறும்
கடுந்தகை என்மாட் டருளினால் இன்பக்
      கலவியில் திளைத்தனை இனிநான்
அடுந்தகைப் படையோய் கவுரியாம் வண்ணம்
      பெறுமுறை அருடியென் றிரந்தான்
கடுந்தகை- விரும்புதற்கேலாத இயல்பு. கவுரி - பொன்னிறம் - 13



1705 - பொலங்குவட் டிமயப் பனிவரைப் பிராட்டி
      புகன்றன திருச்செவி சாத்தி
இலங்குவெண் ணீற்றுச் சுந்தரக் கடவுள்
      இயம்புவான் வரிவிழி கேட்டி
கலங்கஞர் எய்தேல் கடவுளர் கருமப்
      பொருட்டுனை இம்முறை அழைத்தேம்
நலங்கொள உலகம் நாள்தொறும் புரத்தல்
      நங்கட னாதலின் கண்டாய் - 14



1706 - மற்றது பின்னர்த் தெளிதிநீ கவுர
      நிறம்பெறு மாறுனக் குரைப்பல்
வெற்றிடம் இன்றி எங்கணும் நிறைந்து
      பரவெளிப் பரப்பிடை மேவும்
பெற்றியன் யானே யாயினுந் தகைசால்
      பீடுயர் தலங்களின் மாட்டும்
அற்றமில் மறையோர் அகத்திலு முலவா
      வருள்சுரந் தினிதுவீற் றிருப்பேன் - 15



1707 - மேம்படும் அவற்றின் உத்தமத் தளிகள்
      விதியுளி மறைநெறி ஒழுக்கம்
ஓம்பிமிக் குயர்ந்தோர் உள்ளமும் எனக்குச்
      சிறந்தன அவற்றினும் மேலாய்த்
தேம்பொழில் வேலிக் காசிமா நகரும்
      யோகிகள் சிந்தையுஞ் சிறந்த
வாம்பகர் அவற்றிற் காஞ்சியும் உண்மை
      அடியவர் உள்ளமுஞ் சிறந்த - 16



1708 - தகைபெறும் அவற்றின் வேறெனக் கினிய
      தானம்மற் றெங்கணும் இல்லை
நகைமலர்க் கொடியே அந்நகர் எய்தி
      நயந்தெனை அருச்சனை யாற்றி
மிகையறு தவத்தான் வேட்டவா பெறுதி
      என்றலும் விளங்கிழை உமையாள்
பகைவினை துரக்குங் காஞ்சியின் எய்திப்
      பஞ்சதீர்த் தக்கரை ஞாங்கர் - 17



1709 - மாதவம் இயற்றிப் பொன்னுருப் பெற்றுக்
      கவுரியாய் வயங்கினள் இனைய
மேதகும் இறும்பூ தென்னெனப் புகல்வேன்
      வெறிமலர்ப் பங்கயத் தவிசின்
மாதர்வாள் நகையாய் என்றெடுத் துரைத்தான்
      மந்தரம் அலமரச் சுழற்றி
ஓதநீர் அளக்கர் அமுதெடுத் திமையோர்க்
      கூட்டிய பெருந்திறற் குரிசில் - 18



1710 - செய்யவள் கேட்டு வியப்புமீக் கூர்ந்து
      செப்புவாள் என்னையா ளுடையாய்
ஐயவிச் செயலைக் கேட்டொறும் உலவா
      அற்புதம் பயக்குமால் மன்ற
மெய்யுணர் வின்பச் சத்தியும் சிவனும்
      விளைக்குமிவ் விளைவுக ளெல்லாம்
மையறத் தெளிந்தோர் திருவிளையாட்டின்
      வண்மையென் றியம்புவார் மன்னோ - 19



1711 - இற்றலாற் காமற் காய்ந்துமுற் றுணர்ந்து
      வரம்பிலின் புடைய வீசனுக்கு
மற்றெவன் உளதோ அவ்விளை யாட்டும்
      உலகெலாம் உய்யுமா றன்றே
அற்றென உணராக் கயவர்கள் காமத்
      திறமெனக் கருதுவர் அனையர்
பெற்றியை யாரே தெளிதரற் பாலார்
      பிறங்கொளி மணிநிறக் குரிசில் - 20



1712 - திருமகள் வேண்டுகோள்
நிலையியற் பொருளும் இயங்கியற் பொருளும்
      நிலைபெறத் தொழிற்படுத் துடைய
தலைவனங் கவனே பனிவரைப் பிராட்டி
      தன்னையும் நின்னையும் இடப்பால்
மலரணைப் புத்தேள் தன்னையும் எனையும்
      வலப்புடைக் காலருத் திரனைக்
கலைமகள் தனையும் உளத்திடைத் தந்தான்
      காத்துயிர்த் தழிப்பது கருதி - 21



1713 - அகிலமுந் தானே அருள்தொழில் நடாத்தும்
      ஆங்கவற் கெவற்றினும் சால
மிகுபெருங் காத லுமையவ ளிடத்தும்
      விரவும்நின் னிடத்தினும் அன்றே
முகிலுறழ் கூந்த லவளென் நீயும்
      முதல்வனே யுன்னடி யேற்கு
மகிழ்வுமீக் கிளைப்ப அவ்வுரு பெறுதி
      என்றனள் மலரணைக் கிழத்தி - 22



1714 - விளங்கிழை மாற்றம் அச்சுதன் கேளா
      வெகுண்டுநின் மனக்கருத் திதுவேல்
களங்கனை அனையேன் றன்னுடன்
      இந்நாள் காறும்நீ பொலஞ்சுடர் நிறத்தாய்
வளங்கெழும் இன்பம் என்னணம் நுகர்ந்தாய்
      மற்றினிச் செக்கர்வான் உருவம்
உளங்கொளப் பெறுகேன் என்றவட் கியம்பிக்
      கதுமெனக் கரந்தனன் ஊங்கு - 23



1715 - கச்சிமா நகரம் எய்திவீ ராட்ட
      காசநல் வரைப்பினுக் கெதிரா
அச்சிவன் வீர நகைதிரண் டனைய
      சக்கர தீர்த்த முண்டாக்கி
முச்சகம் ஏத்துங் கங்கையிற் சிறந்த
      அத்தடம் மூழ்கிநோன் பியற்றிப்
பச்சைமால் வதிந்தான் வதிந்திடம் பச்சை
      வண்ணனா லயமெனப் படுமால் - 24



1716 - ஆங்கனம் வைகி நாள்தொறும் ஈரே
      ழாயிரம் அளிகெழு பொகுட்டுத்
தேங்கமழ் கமலங் கொண்டுவீ ராட்ட
      காசமா தேவனை அருச்சித்
தோங்குபே ரன்பின் தொழுதெழுந் திரப்ப
      உலப்பருங் கருணைமீக் கூர்ந்து
மாங்குயில் பாகன் எதிரெழுந் தருளி
      வழங்கினன் பவளம்நேர் வடிவம் - 25



1717 - பொரியரைக் காயாம் போதுறழ் வண்ணங்
      கழீஇத்துகிர் புரைநிறம் எய்திப்
பெரிதுளம் மகிழ்ந்தான் ஆயிடைச் சிலநாள்
      வைகிமீண் டரவணைப் பெருமான்
விரிதிரைத் தீம்பாற் கடலகத் தணுகி
      விரைமலர்க் கிழத்தியோ டிணங்கித்
தெரியிழைத் திருவே காண்டிநீ பவளச்
      சேயொளி தழைக்குமிவ் வடிவம் - 26



1718 - கச்சறப் பணைத்துப் புடைபரந் தெழுந்த
      கதிர்மணி முலையினாய் இதுவென்
இச்சையாற் பெற்றேன் விழந்தவா றென்மாட்
      டின்னலம் நுகரெனக் கேட்டுப்
பச்சிளந் தோகை இந்நிறம் அடிகள்
      இச்சையாற் படைத்ததேல் மாய
விச்சையே போலும் நிலைமையன் றெனக்கீ
      தென்பயன் விளைத்திடு மென்றாள் - 27



1719 - பாய்சிறைக் கலுழப் புள்ளர சுகைக்கும்
      ப·றலைச் சேக்கையன் வெகுளா
நீயினி யிருந்தை வண்ணமா கென்னச்
      சபித்தலும் நேரிழை மேனிச்
சேயொளி கருகக் கண்டுளம் பதைத்தாள்
      சிறியனேன் செய்பிழை பொறுத்திங்
கேயுமிச் சாபம் தவிர்த்தருள் பொறையாள்
      கொண்கனே யென்றடி பணிந்தாள்.
இருந்தை- கரி. பொறையாள்- பூமி - 28



1720 - திருமகள் காஞ்சியை யடைதல்
தெம்முனை கடந்த திகிரியோன் இரங்கிச்
      சீற்றத்தால் விரைந்துனைச் சபித்தேன்
அம்முறை யாற்றாற் கரிநிறம் பெற்றாய்
      ஆயினும் முன்னையின் விழைய
வெம்முலைப்போகம் எனக்குள தாகவெருவலை
      எனத்தழீஇக் கொள்ளச்
செம்மலர்த் திருவும் அடியிணை இறைஞ்சித்
      திருந்துதன் இருக்கையுட் புக்காள் - 29



1721 - புக்கபின் அங்கண் பாங்கியர் தம்மோ
      டுசாவினள் புதுநறாக் கான்று
நக்கபூஞ் சோலைக் காஞ்சிமா நகரை
      நண்ணியாங் கிணைவிழி களிப்பத்
திக்கெலாம் பரசத் திகழுல காணித்
      தீர்த்தநீர்த் தடங்கரை மாடே
மைக்குழல் உமையாள் இனிதமர்ந் தருளித்
      தவஞ்செயும் வரைப்பினைக் கண்டாள் - 30



1722 - அனையநல் வரைப்பு நுண்பில மாகி
      அருட்பர வெளியதாய்த் திகழும்
கனைகடல் உடுக்கை நிலமகட் குந்தித்
      தானமாம் கமழ்நறுங் கடுக்கைத்
தனிமுதற் பிரமந் தனக்கொரு வடிவாம்
      தாழ்குழலுமையவட் கடியார்
வினைதபு மூலத் திருவுரு வதுவே
      விளங்கொளிக் காஞ்சியம் பதியுள் - 31



1723 - குறைவிலா நிறைவாய் உண்மையாய்
      அறிவாய்க் கொட்புறு மனமடங் கிடமாய்
மறைமுடிப் பொருளாய் இன்பமாய்ச்
      சிவமாய் மாசற வயங்குபே ரொளியை
நிறைதவ யோகத் தலைவர் இவ்வாறு
      நெஞ்சகத் தேவழி படுவார்
அறைகடற் பரப்பிற் காஞ்சிமா நகரின்
      ஆயிடை வழிபடு வாரால் - 32



1724 -       காமகோடி - பெயர்க்காரணம்
ஒருமுறை யங்கட் காமமாம் தருமம்
      உஞற்றுநர் தமக்குமத் தருமம்
தருபயன்கோடி யாதலிற் கரடத்
      தடத்திழி கடாம்படு கலுழிப்
பெருவரை வதனப்பிள்ளையைக் குகனைப்
      பெற்றவள் அமர்பிலம் அதுதான்
கருதரு காமக் கோடியென் றுலகிற்
      காரணப் பெயரினால் வயங்கும் - 33



1725 - அன்றியும் காமக் கிறையவர் தனத
      ரனையவர் கோடியர்த் தரலால்
என்றுமோ ரியல்பின் எங்கணும் விரவி
      யெவற்றினுங் கடந்தபே ரொளியைக்
குன்றுறழ் கொம்மைக் குவிமுலைத் தடத்தாற்
      குழைத்தருள் கருணையெம் பிராட்டி
நன்றுவீற் றிருக்கும் பேரொளிப் பிலத்திற்
      கப்பெயர் நாட்டலும் ஆமால். - 34



1726 - இன்னுமிப் புவனப் பரப்பினிற் காம
      மென்பன மனைவியர் மக்கள்
பொன்னணி யிருக்கைப் பூண்முதற் பலவாம்
      பூந்தளிர் அணிநலங் கவற்றுந்
தன்னடி வணங்கி இரந்தவர் தமக்குத்
      தடங்கிரி பயந்தபே ராட்டி
அன்னவை கோடி யளித்திட லானு
      மப்பெய ரெய்துமங் கதுவே - 35



1727 - அல்லதூங் கவைத்தாட் கரும்பகட் டூர்தி
      அடுதொழிற் கூற்றினைக் குமைத்த
கொல்லையேற் றண்ணல் நுதல்விழிச்
      செந்தீக் கோட்படும் ஒருதனிக் கருப்பு
வில்லியை விளையாட் டியற்கையிற் கோடி
      காமரா விழித்துணைக் கடையால்
அல்லியங் கோதை யாங்களித் திடலால்
      அப்பெயர் பூண்டது மாமால் - 36



1728 - மற்றுமா ருயிர்சேர் நாற்பொருட் பயனில்
      வகுத்தமூன் றாவது காமம்
பற்றுகா மத்திற் கோடியா முடிவிற்
      பயில்வது வீடுபே றாகும்
உற்றவர் தமக்கு வீடுபே றளிக்கும்
      உண்மையி னானுமப் பெயராற்
சொற்றிடப் படுமால் உலகெலாம் ஈன்றா
      ளமர்ந்தருள் சுடரொளி விமானம் - 37



1729 - பின்னரும் ஒன்று ககரமே அகரம்
      மகரமாப் பிரிதரும் மூன்றும்
அன்னவே றுகைக்கும் அயனரி ஈசன்
      ஆயமுத் தேவரைப் பகரும்
இன்னவர் தம்மை யுகந்தொறுங் கோடி
      முறையெழில் விழிகளிற் படைத்தாள்
மின்னிடைப் பிராட்டி யென்பத னானும்
      அப்பெயர் விளங்கு மென்பதுவே - 38



1730 - வேறுமொன் றாங்கட் காவெனப் படுவாள்
      வெண்மல ராட்டிமா வென்பாள்
ஊறுதேங் கமலப் பொகுட்டணை யணங்காம்
      ஊங்குவர் இருவரும் முகிலை
மாறுகொள் ஐம்பால் உமைவிழிக் கோடி
      தன்னிடை வருமுறை யானும்
ஏறுமத் திருப்பேர் எம்பெரு மாட்டிக் கென்றெடுத்
      தியம்புவர் உணர்ந்தோர் - 39



1731 - விந்துவின் வயங்கி யம்பைவீற் றிருக்கும்
      வியன்திருச் சக்கர வடிவாம்
அந்தவான் பிலந்தான் இயம்பிய காமம்
      அனைத்திற்கும் ஆதர மாகிப்
பந்தமில் காமக் கோட்டமென் றொருபேர்
      பரித்திடும் மற்றெவற் றினுக்கும்
முந்திய பீட மாதலின் ஆதி பீடமும்
      மொழிந்திடப் படுமால் - 40



1732 - இனைய தாகிய திருப்பிலம் அதனை
      எழால்மி டற்றிளஞ் சுருப்பினம் முரலும்
நனைக லுழ்ந்தலர் மலர்த்தவி சிருக்கை
      நகைமலர்க்கொடி கண்டுகை தொழுதே
அனைய சூழலின் இடப்புறம் வைகி அடங்க
      லார்புரம் அழலெழச் சிரித்த
முனைவ னார்க்கொரு சத்தியாய் இன்பாய்
      முழுது மாகிய அகில காரணியை - 41



1733 - பாதம் ஒன்றொடு நிவிர்த்தியால் தரைக்கண்
      பதமி ரண்டொடு பதிட்டையால் புனற்கண்
பாதம் நான்கொடு வித்தையால் கனற்கண்
      பதங்கள் எட்டொடு சாந்தியால் வளிக்கண்
பாதம் ஒன்பத னொடுவெளிப் பரப்பிற் பகருஞ்
      சாந்தியின் அதீதமாங் கலையாற்
பாதம் ஆயிரத் தொடுபர வெளிக்கண்
      பயிலும் அக்கரத் தனிமுதற் பரையை - 42



1734 - திருமகள் வழிபாடு
எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
கருமை செம்மைவெண் ணிறமுடை யாளைக்
      காமக் கோடிவான் பிலவடி வாளை
அருவி தாழ்குவட் டணிமலை மகளை மாயை
      யோடுல கனைத்துமீன் றாளை
உருகி நெக்குநெக் குளப்பெருங் கோயி லுள்ளு
      றுத்தியென வுடம்பினைப் பொதிந்து
மருவு மிக்கரு நிறஞ்செதிள் எடுப்பான்
      கருணை செய்கென வழிபட லுற்றாள் - 43



1735 - வருண னாருனை வாருணி யெனப்பிருகு
      மாதவற் கருளிய வாற்றால்
பிருகு வாரநா ளுனைவழி படுவார் பெருவ
      ளத்தொடு வாழ்வாரென் றுரைப்ப
அருவி னைப்புலக் குறும்பெறிந் துயர்ந்த
      பிருகு மாமுனி மகளடி யேற்கும்
கருணை செய்வது கடனுனக் கன்றே கருப்பும்
      வில்லியைக் காய்ந்தவர்க் கினியாய் - 44



1736 - காஎ னப்பெய ரியகலை மகளைமுந்தை
      ஞான்றுநின் கண்ணெனப் புரந்தாய்
மாஎ னப்பெய ருடையமற் றெனையும் மலர்ந்த
      நின்விழி போற்புரந் தருளி
ஏஎ னப்பிறழ் தடங்கணாய் காமக்கண்ணி
      யாம்பெயர் எய்துவை என்னாப்
பூஎ னப்பயில் அணைமிசைக் கிழத்தி போற்றி
      சைத்தலும் எதிரெழுந் தருளி - 45



1737 - திருமகள் வரம் பெறல்
எம்பி ராட்டிவான் கருணைகூர்ந் தருளி யேட
      விழ்ந்தபூந் தவிசுறை யணங்கே
கம்பி யாதிமற் றுன்னுடற் கருமை கரிய
      சாந்தமாக் கழிகமுன் னையினும்
நம்பு நல்லுருப் பெறுதியிப் பொழுதே நார
      ணற்குமிக் குரியவ ளாவாய்
வம்ப றுத்தெழுந் தோங்கியண் ணாந்து மதர்த்து
      வீங்கிய வனமுலைத் தோகாய் - 46



1738 - அழகு வாய்ந்தநின் வடிவினிற் கழியும்
      அனைய சாந்தணி நுதலினர் தமக்கு
விழவும் இன்பமுஞ் செல்வமும் புகழும்
      மேக லின்மையும் இகழுமற் றொழிக
பழைய வேதமுற் றுணர்ந்துயர் சிறப்பிற்
      பனுவ லாட்டியு மிவணமர் செயலாற்
கழிவில் அன்பின்நீ வேட்டவா றெனக்குக்
      காமக் கண்ணியாம் பெயருறு கென்ன - 47



1739 - இறைவி திருமாலுக்குக் கட்டளை யிடுதல்
இனைய வாறிவண் நிகழ்வுழிச் சுரும்பர்
      இமிருந் தாமரை உந்தியங் கடவுள்
மனைய கத்துமா மடந்தையைக் காணான்
      மனமழுங்கினன் பிரிவுநோய் வருத்தக்
கனைக டற்பரம் பெங்கணுந் தேடிக்
      காஞ்சி மாநகர் ஆவயின் கண்டான்
அனைய தாரமும் இறைவியும் தம்முள் அறைவ
      கேட்டவண் ஒளித்துநின் றனனால் - 48



1740 - ஒள்வ ளைக்கரத் திருவரும் அவனை யுணர்ந்து
      நோக்கினர் என்னையா ளுடையாள்
கள்வன் ஒத்திவண் நிற்பவன் யாரே யெனக்க
      டாயினள் கடிமலர் அணங்கும்
வெள்க லுற்றுமுன் இறைஞ்சினள் மாயோன்
      விரைவின் அம்பிகை திருவடி வணங்கி
உள்ள கம்பெரு மகிழ்ச்சியின் திளைப்ப
      ஒரும ருங்குற ஒடுங்கிநின் றனனே - 49



1741 - நங்கை நாகணைக் குரிசிலை நோக்கி
      நன்று வந்தனை யோவென வினவி
அங்கண் முச்சகம் நீபுரந் தளிக்கும் ஆரு
      யிர்த்தொகை இனிதுவாழ்ந் தனவே
பங்க யக்கணாய் என்றலும் கலுழப் பாகன்
      நின்னருட் கருணைபெற் றுடையேம்
எங்கள் வாழ்வினுக் கெவன் குறையானும்
      இவளும் உய்ந்தனம் எனத்தொழு துரைத்தான் - 60



1742 - இறைவி பின்னரும் ஒன்றவற் கியம்பும்
      ஈண்டு முப்பதிற் றிரண்டறம் வளர்க்கும்
முறையின் என்னறச் சாலையீ திங்கோர்
      மூரிப்பாரிடம் இதற்கிடை யூறாய்க்
குறைவி லாற்றலி னுழிதரு மதனைக்
      குறும்ப டக்குதி நீயென யேவ
நறைம லர்த்துழாய் மோலியும் இறைஞ்சி
      நயந்து பஞ்சதீர்த் தத்தடங் கரைப்பால் - 51



1743 - மூரிப் பாரிடம் - வலிய பூதம்
திருமால் பூதத்தை யடக்கல்
அன்று பாரிடம் பாரிடை வீழ்த்தி யாற்ற
      லான்மிதித் ததன்மிசை நின்றான்
நின்ற வன்றனை உந்திமேல் எழும்ப நெரித்தி
      ருந்தனன் இருந்தவன் றனையும்
வென்றி சால்விறற் பூதம்மேல் உந்த நீண்டு
      மற்றதன் மிசைப்படக் கிடந்தான்
கன்று பூதமும் வலிமுழு திழந்து கமலக்
      கண்ணனை வணங்கியொன் றிரக்கும் - 52



1744 - வள்ள லேமலர்த் திருவிளை யாடு மார்ப
      னேபெரும் பசியெனை வருத்த
உள்ளு டைந்துளேன் ஆண்டுதோ றடிமேற்
      கொரும கன்றனை உயிரொடும் உதவின்
கொள்ளும் அப்பலி யேற்றுளம் மகிழ்வேன்
      கொடுத்தி யிவ்வரம் எனக்கென வரவப்
பள்ளி யோனுமற் றாகென விளம்பிப் பத்தர்
      போற்றவத் தலத்தினி திருந்தான் - 53



1745 - கள்வன் நின்றவன் இருந்தவன் கிடந்தவன்
      என்னும் நால்வகைக் கரிசறு வடிவால்
வெள்வ ளைக்கரக் கடவுளங் கமர்ந்தான்
      விமல நாயகி ஆணையி னாற்றான்
முள்ளெ யிற்றராப் பணம்புரை அல்குல்
      முளரி மாதுமப் பிலத்தயல் இருந்தாள்
புள்ளு யர்த்தவற் கினியவாம் அங்கட்
      போற்றப் பெற்றவர் வைகுந்தம் புகுவார் - 54



1746 - கறைமி டற்றிறை வைகும்வீ ராட்ட காச
      மேன்மையின் தொடர்ச்சியால் இங்கே
அறைக ழல்திரு நாயகன் வரலா
      றனைத்துங் கூறினாம் அத்திரு நகரை
நிறைவி ருப்பினால் வழிபடப் பெறுவோர்
      நிலமி சைப்பெரு வாழ்வின ராகிப்
பிறைமு டிப்பிரான் திருவடிக் கலப்பிற்
பெறல ரும்பர போகமுற் றிருப்பார் - 55

ஆகத் திருவிருத்தம் - 1746
-----------

52. பாண்டவேசப்படலம் (1747-1755)




1747 - கொச்சகக் கலிப்பா
பேரின்பச் சாக்கியனார் கல்லெறிக்கும் பேறுதவு
வார்தங்கும் வீராட்ட காச வரவிதுவால்
சீர்தங்கு தென்பால் திருப்பாண்ட வேச்சரமாம்
கார்தங்கு மிஞ்சிக் கடிநகரங் கட்டுரைப்பாம் - 1



1748 - தருமம் பயந்த தநயன் முதலோர்
உருகெழுவெங் காட்டின் உரோமசனே யாதித்
திருமுனிவர் தம்மோடுந் தீர்த்தமெலா மாடக்
கருதி நடந்தார் கழியாத காதலார் - 2



1749 - அங்கங் கிலிங்கம் நிறுவி அருச்சித்துப்
பங்கந் துமிக்கும் பரம்பொருளைப் போற்றிசைத்துச்
சிங்கம் படுக்குந் திறலார் வருநெறியார்
தெங்கம் பொழில்சூழ் திருக்காஞ்சி நண்ணினார் - 3



1750 - அங்கட் பலதளியும் நோக்கி அகமகிழ்ச்சி
பொங்கித் திருக்கம்ப மாதியாப் புண்ணியநீர்க்
கங்கைச் சடிலக் கடவு ளிடமெல்லாம்
துங்கப்பே ரன்பின் தொழு தேகினார் - 4



1751 - வீராட்ட காசங் கடைக்கால் வியன்மலர்கொண்
டாராப்பே ரன்பின் அருச்சித் ததன்தென்பால்
ஏராரத் தத்தம் பெயர்சாத்தி எல்லாரும்
தாரார்த்த கொன்றைச் சிவலிங்கந் தாபித்தார். - 5



1752 - அறமைந்தன் வீமன் விசயன் அலர்பூந்தார்
நறவிண்ட திண்டோள் நகுலசகா தேவர்
மறனின்றி இன்னோர் மனைக்கிழமை பூண்ட
முறையொன்று கற்பின் துரோபதைமுன் னானோர் - 6



1753 - சீரார் திருட்டத் துமனன் சிகண்டிமற்றும்
ஏரார் கழற்கால் யதுமரபின் மன்னருடன்
ஊரானாற் கன்பின் உரோமசர் முற்கலனார்
பாரார் வியாதர் முதலாய பன்முனிவர்
ஊர் ஆனாற்கு என்பதை ஆன் ஊர்வாற்கு என மாற்றிக் கொள்க. - 7



1754 - என்றினைய ரெல்லாம் இலிங்கந் தனித்தனியே
நன்றிருத்தி யேத்தி நயப்பாடு பெற்றாரால்
அன்றவர்கள் போற்றும் இலிங்க மவைகண்டோர்
மன்றின் நடமாடும் வள்ளல் அருள்பெறுவார் - 8



1755 - கயிலாயம்
அன்னவற்றின் தென்பால் கயிலாயம் அவ்வரைப்பின்
நன்னர்க் கயிலாய நாதன் றனைநிறுவி
மன்னுந் திசைக்கிறைமை பெற்றான் மருவலார்க்
கின்னல்புரி முத்தலைவேல் ஈசானன் என்பவே - 9

ஆகத் திருவிருத்தம் - 1755
------

53. மச்சேசப்படலம் (1756-1765)




1756 - கலிவிருத்தம்
பார்த்த ராதியோர் வழிப டும்புகழ்
ஆர்த்த சூழல்கள் விளம்பி னாமருள்
கூர்த்த வப்புலக் குடக்கண் இப்பிநீர்த்
தீர்த்த ஞாங்கர்மச் சேசங் கூறுவாம் - 1



1757 - ஒப்பி லற்புத முணர்த்த வெம்பிரான்
இப்பி முத்தமங் கெடுத்த ளித்தலால்
செப்ப ரும்புகழ் இப்பி தீர்த்தமென்
றப்பெ ரும்பெய ரதனுக் காயதே
இப்பி முத்தம்- சிப்பியில் தோன்றும் முத்துக்கள். - 2



1758 - மற்ற தன்கரை மச்ச லிங்கமென்
றற்ற மில்லரி யருச்சித் துள்ளது
துற்ற பாதகச் சோம காசுரன்
கற்கு மாமறை கவர்ந்தொ ளித்தநாள் - 3



1759 - ஓத்தொ ழிந்தன வுலகம் யாவையும்
நீத்த வேள்விய நிலைமை குன்றலான்
தீத்தெ றும்பசித் தேவர் மாயனைச்
சோத்து நீசரணெ னத்து தித்தனர்
சோத்து - கீழோர் மேலோருக்குச் செய்யும் அஞ்சலி. - 4



1760 - அஞ்ச லீரென வருளி யச்சுதன்
நெஞ்ச கத்துற நினைவின் நாடினான்
எஞ்சு றாமறை யாவுங் கைக்கொடு
வஞ்ச னாழியுள் மறைந்த வண்ணமே - 5



1761 - பிருகு மாமுனி சபித்த பெற்றியால்
ஒருவ ருங்கய லுருவு தாங்குபு
மரும லர்ப்பொழிற் காஞ்சி வைப்பிடைப்
பொருவி லிப்பிநீர்ப் புடையில் நண்ணினான் - 6



1762 - வேறு
சலங்கொள் மீனுருத் தன்பெயர் நாட்டியங்
கிலிங்க மன்பி னிருத்தி யருச்சனை
துலங்கச்செய்தருள் பெற்றுத் தொகுநிதிக்
கலங்கள் மல்கு கடலகத் தெய்தினான் - 7



1763 - சோம கன்றனை யட்டுச் சுருதிகண்
மாம றைக்குலத் தார்க்கு வழங்கினான்
நாம நீர்க்கடல் நாகணைப் பள்ளிமேல்
தாம ரைக்கண் வளருந் தகைமையான். - 8



1764 - சங்க நேருருப் பஞ்ச சனப்பெயர்
வெங்க ணானையு மாயிடை வீட்டியே
துங்க வோசை வலம்புரித் தோற்றமாம்
அங்க வன்ற னெலும்பை யணிந்தனன் - 9



1765 - கச்சி மாநகர் வைப்பிற் கருந்துழாய்
மச்ச மர்ச்சித்த மச்சலிங் கத்தினை
நச்சி யேத்துநர் தாம்பெறு நன்னலம்
இச்ச கத்தெவர் இற்றென் றளப்பரே - 10

ஆகத் திருவிருத்தம் 1765
-------

54.அபிராமேசப்படலம் (1766-1774)




1766 - கலிவிருத்தம்
காவு சூழக் கஞலிச் சுருப்பினம்
மேவு மச்சலிங் கேசம் விளம்பினாம்
வாவி மல்கு மதன்வட மேற்றிசைத்
தாவில் சீரபி ராமேச் சரஞ்சொல்வாம் - 1



1767 - வேறு
மாவலி யெனப்பெயர் மரீஇய தானவர்
காவல னுலகெலாங் காத்த ளிக்கும்நாள்
தேவர்கட் கிறைவ னரசு தேய்தலின்
யாவது செயலெனக் கினியென் றெண்ணுழி - 2



1768 - செந்தளிர் மலரடித் திருவின் நாயகன்
இந்திரற் கிளையவ னென்னெக் காசிபன்
மைந்தனாய்க் குறளுருத் தாங்கி மன்னினான்
முந்தையோர்க் கரசிய லுதவ முன்னியே.

இந்திரற் கிளையவந் உபேந்திரன். காசிபன் மனைவியருள்
இந்திரன் தாயாகிய அதிதியின் க்ருப்பத்தில் தங்கிப்
பிறந்தமையால் இவ்வாறு கூறப்பட்டனன். - 3



1769 - அலங்கொளிக் காஞ்சியி னபிரா மேச்சர
விலிங்கமங் கியல்புளி வழிபட் டேத்தினான்
வலம்பெறச் சிலபகல் வைகிக் கங்கைநீர்
சிலம்புவே ணியனருள் செய்யப் போந்தனன் - 4



1770 - வெய்யவா ளவுணர்கோன் வேள்விச் சாலையின்
எய்திமூ வடிநில மிரந்து வேண்டினான்
கைதவ முணர்ந்தெதிர் தடுத்த காழ்படு
மையறு வெள்ளியை விழியை மாற்றினன் - 5



1771 - தன்னடி மும்மையி னளவை சாலிடம்
அந்நிலை யவுணர்கோ னளிப்ப யேற்றனன்
கொன்னுற வளர்ந்தன னண்ட கூடமேல்
சென்னிபோய் உரி?றத் திகழ்ந்து தோன்றினான் - 6



1772 - ஈரடிப் படுத்தன னுலகம் யாவுமற்
றோடிக் கிடம்பெறா னுதவி னான்றனை
ஆரிடைப் பாதலச் சிறையி னாக்கினான்
ஏருடைப் புரந்தரற் கிறைமை நல்கினான் - 7



1773 - மறுவறுங் காஞ்சிமா வரைப்பின் நண்ணுபு
நறுமலர்ச் சடையபி ராம நாயகன்
பிறைமுடிக் காட்டுவான் வாம னப்பெயர்
நிறைபுனற் குண்டமொன் றகழ்ந்து நீடியே - 8



1774 - புண்ணியப் பூம்புன லாட்டிப் போர்விடை
அண்ணலைத் தொழுதுல களந்த பேருருக்
கண்ணுதல் மகிழ்வுறக் காட்டிப் பூந்துழாய்ப்
பண்ணவ னாயிடைப் பணியின் மேயினான் - 9
ஆகத் திருவிருத்தம் 1774

-------

55. கண்ணேசப் படலம் (1775-1786)




1775 - கலிவிருத்தம்
வாம னப்பெயர் மாணி தொழுமபி
ராம நாத வரைப்பு விளம்பினாம்
நாம நீர்த்தடங் காஞ்சி நகர்வயின்
ஏமம் மாண்டகண் ணேச மியம்புவாம் - 1



1776 - கடலு யிர்த்த கடுவிடந் தாக்கிமுன்
உடலெ லாங்கரி வுற்று வெதும்பலால்
படவ ராவணைப் பண்ணவன் மாழ்கியவ்
விடம யின்ற விமலனைப் போற்றுவான். - 2



1777 - கச்சி யெய்தினன் கண்ணலிங் கத்தினை
நச்சி யன்பின் நிறீஇநயந் தேத்தினான்
பச்சை மென்கொடி பாகன் கருணைகூர்ந்
திச்சை யாது விளம்புதி யென்றலும் - 3



1778 - குமுத வாய்ப்பசுங் கோமளை கூறநீ
இமிழ்தி ரைக்கடல் வெவ்விட மென்பொருட்
டமுது செய்தனை யங்கதன் முன்னமத்
திமிர நஞ்சஞ் சிறிதெனைத் தாக்கலால் - 4



1779 - மேனி முற்றுங் கருகி வெதும்பினேன்
யானி னிப்படும் வெப்பிது ஆற்றலேன்
கானி லாய கடுக்கைத் தொடையொடு
தூநி லாப்பிறை சுற்றிய மோலியாய் - 5



1780 - பங்கம் நீக்கி நலந்தரு பான்மையாற்
சங்க ரன்சிவன் சம்பு வுருத்திரப்
புங்க வன்னென நாமங்கள் பூண்டனை
அங்க ணாவடி யேனுன் னடைக்கலம் - 6



1781 - என்று மாய னிரந்திது வேண்டலும்
கொன்றை மாலைக் குழக னிரங்கினான்
மன்ற லந்துணர் வாசத் துளவினோய்
ஒன்று கேட்டி யுனக்கிது வேண்டுமேல் - 7



1782 - என்றும் யாம்மகி ழேகம்ப லிங்கமுன்
சென்று நம்முடித் திங்கள் நிலாத்தயல்
நின்று கச்சி நிலாத்துண்ட மாலென
ஒன்று நாமம் பெறுதியென் றும்பர்கோன் - 8



1783 - நாம வெந்துயர் தீர்திறம் நல்குபு
வாம மேகலை யோடும் மறைந்தனன்
தூம லர்த்துள வோனும் தொழுதெழூஉத்
தீமை தீரத் திருமுன்னர் வைகினான் - 9



1784 -       கவுசிகீச்சரம்
கரிய வன்பணி கண்ணலிங் கேசனை
உரிய வன்பின் வழிபடு வோரும்பர்
மருவி வாழ்குவர் மற்றுங் கவுசிகீச்
சரமொன் றுள்ளது சங்கரன் தானமே - 10



1785 - அரைய ணங்கு வடிவிற் கழிந்தகா
ருரிவை கோசத் துதித்த கவுசிகி
இருமை யன்பின் இருத்தி யருச்சனை
புரியும் பொற்பது மற்றும் புகலுவாம் - 11



1786 - மாகாளேச்சரம்
எண்சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
உலகாணித் தடமருங்கு மாகா ளேச மொன்றுளது
      மாகாள னெனும்பேரன்பின்
விலகாத பரப்பரசு வீடு பேறு விழைந்தேதென்
      திசைக்கயிலை வேணித் திங்கட்
கலையானைத் தொழுதுறைநாள் ஆணை யாற்றாற்
      காஞ்சியிற்போந் தவ்விலிங்கம் நிறுவிப் போற்றி
நிலம்நீடு தென்கயிலை மீள நண்ணி நீப்பரிய
      பெருவாழ்வு நிலாய தன்றே - 12

ஆகத் திருவிருத்தம் 1786
------

56. குமரகோட்டப் படலம் (1787-1831)




1787 - எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
கடப்ப ரும்பிறவி வேலை சுவற்றுங் கண்ண
      லிங்கமொடு கவுசிகலிங்கம்
மடப்பி டிக்கிட மளித்த பிரான்மா காள
      லிங்கமெனும் மூன்றும் மொழிந்தாம்
அடற்ப டைச்செறுநர் சேனை யனைத்து
      மழித்து ழக்கிநிண முண்டு திளைத்துக்
குடர்க்கொ ழுந்தொடை மிலைச்சிய செவ்வேற்
      குரிசில் வாழ்குமர கோட்டம் உரைப்பாம் - 1



1788 - குமாரக் கடவுள் திருவிளையாடல்
தருக்க மிக்குடைய தாருகன் என்னுந்
      தான வர்க்கிறையை வெய்ய களத்தின்
முருக்கி யாருயிர் செகுத்து விசும்பின்
      முதல்வனுக் கிறைமை நல்கிய பின்னர்ச்
செருக்க டந்தவடி வேல்வல னேந்துஞ்
      செம்மல் வெண்கயிலை மால்வரை யெய்தி
மருக்க டுக்கைமுடி வள்ளலை யோர்பால்
      மலைமடந்தையை வணங்கி மகிழ்ந்து - 2



1789 - அலகி லண்டமு மளித்து வளர்க்கு
      மம்மை யப்பர்தம் மடித்தலம் ஏறி
நிலவ ரும்புகனி வாயெழில் காட்டி
      நெடிது போது விளையாடி யடுக்கற்
குலம டப்பிடி கலன்பல பூட்டி விடுப்ப
      மீண்டு கொடிநீள் கடைவாயில்
வலமி குத்தகய மாமுக னாவி மாட்டு
      முன்னிளவல் வைகுழி யுற்றான் - 3



1790 - ஊங்கு வன்மடி மிசைக்கொடு பல்கால்
      உச்சிமோந்துகவுள் முத்தம்மு முண்டு
வீங்கு மன்பொடு தழீஇக்களி கூர்ந்து விடைய
      ளிப்பமுக மாறுடை யெங்கோன்
யாங்கும் வைகுகண நாத ரிடந்தோ
      றெய்தி யாடலுறு வானது காலை
ஆங்கணான் முகவ னும்பர் குழாத்தோ
      டம்மை யப்பரை வணங்க அணைந்தான் - 4



1791 - அங்கண் நின்றுவிளை யாட்டயர் செவ்வேல்
      அண்ண லைச்சிறிதும் நோக்கலன் நண்ணி
மங்கை பாகனை வணங்கி வழுத்தி
      வாழ்வு பெற்றுவிடை கொண்டு தனாது
பொங்கு சீருலக மெய்திய மீண்டான் மீளு
      மப்பொழுது மாவயி னாடுந்
துங்க வேலிறையை நோக்கலன் ஏகத் தோகை
      மஞ்ஞையுடை யானது கண்டான் - 5



1792 -       பிரமன் சிறைப்படல்
செழும லர்க்கமலம் வைகிய செம்மல்
      இகழ்ந்து செல்லுமறி வின்மை குறித்து
விழிசி வந்துகுறு மூர லரும்பி வருக
      வீண்டென விளித்தலு மன்னோன்
கழிசெ ருக்கினன் வணங்கி யடங்கிக்
      கைகள் கூப்பிநணு கிப்புடை யுற்றான்
கொழிம றைப்பனுவ லான்முகம் நோக்கிக்
      குன்றெ றிந்தசுடர் வேலிறை விள்ளும் - 6



1793 - யாவன் நீயுறைவ தெவ்விடம் யாது
      செய்தொழிலு மெக்கலை வல்லாய்
நீவி ளம்புகென யான்பிர மன்சீர் நிறையருட்
      கருணை நுந்தை யெனக்கன்
றேவ றுங்கலைகள் முற்ரும் விளங்க
      வோது வித்துலகம் நன்கு படைப்பான்
ஏவ வைகுறுவல் சத்திய லோகத் தென்று
      பன்முறை வணங்கி யுரைத்து - 7



1794 - இமவ ரைத்தலைவி யோடு பிரானை யேத்த
      வேண்டியிவ ணெய்தின னன்னோர்
தமத ருட்கருணை பெற்றனன் மீண்டேன்
      தாழ்வி லாதுசெய் தவத்திற னாலுன்
கமல நோக்கருளு மின்று கிடைத்தேன்
      காதல் உன்னடி யேனினி யென்னூர்க்
கமல நாயக செல்கின்றன னென்றா
      னறுமுகக்கடவு ளன்னது கேளா - 8



1795 - நன்று சொற்றனை யுணர்ச்சியின் மிக்காய்
      ஞாலம் முற்றுதவும் நான்முகன் நீகொல்
குன்ற வில்லியரு ளாற்கலை யெல்லாங்
      கோதறத் தெளித லுற்றனை யன்றே
ஒன்று மக்கலைகள் முன்னுற யென்னே
      யோது மக்கர மதன்பொருள் யாதோ
இன்றெ னக்கிது விளம்புதி யென்றா
      னேட விழ்க்கும்மல ராளி யிறைஞ்சி - 9



1796 - ஐய நுந்தையரு ளின்றி யெமக்கோ ரறிவு
      முள்ளதுகொ லாதியி லோது
மெய்யெ ழுத்தையறி கின்றில னங்கண்
      விளம்பும் முப்பொருளு மியானறி கில்லேன்
உய்யு மாகருணை வைத்தெனை யாளென்
      றுரைத்தி ரந்துகடி தேக முயன்றான்
பொய்க டந்தவனு மாதி யெழுத்தின் பொருளு
      ரைத்தலது போகலை யென்று - 10



1797 - சென்னி யைந்துடைய வெந்தை பிரான்றன்
      திருவ டிக்கண்விரை யாக்கலி வைப்பேன்
பன்னு கிற்றிகடி தென்றலு மன்னோன்
      பகவ னீன்றதனி மாமக னீயே
என்ன பல்கலையு முன்னிடை வைகு
      மெம்பிரா னடியி லாணை தரேல்யான்
உன்ன ரும்பொருளி னுண்மை யெனக்குத் தெரிந்த
      வண்ணமுரை செய்குவ லென்று - 11



1798 - விரையாக்கலி - சிவன் எயரால் கூறப்படும் ஆணை
அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
பல்கலைக்கும் முதலாகப் புகன்றிடுவ
      தோமென்னும் பதமா மந்தச்
சொல்விளைக்கும் பொருள யன்மால்
      ஈசனெனும் மூவரெனச் சொல்வர் மேலோர்
மல்குமறை யுட்பொருளாய்ச் சுடரொளியாய்
      யோகுடையார் மனத்தே தோன்றும்
அல்கியசீர்ப் பிரணவத்தை யுணர்ந்தவரே
      வீட்டின்பம் அடைய வல்லார் - 12



1799 - முன்னெழுத்து மதன்பொருளு மிவ்வளவே
      யானறிந்தேன் முதல்வா போற்றி
என்னையினி விடுத்தருளாய் எனலோடுங்
      கணங்கள் முகநோக்கி யின்னோன்
புன்னிலையன் சிறிதேனு முணர்ந்திலான்
      தருக்குமிகப் பூண்டான் கண்டீர்
துன்னரிய சிறையின்கண் மற்றிவனைப்
      புகுத்துமென வெகுண்டு சொல்லி - 13



1800 - தன்வரைப்பி லலரோனைச் சிறைப்படுப்பித்
      துலகமெலாந் தானே தோற்றும்
இந்நிலைமைத் தலைநின்றான் அறுமுகவேளுட
      னெய்து முனிவர் தேவர்
அன்னவனைக் கொடுபோதப் பின்சென்றார்
      அவ்வரைப்பி னளவு மப்பால்
கன்னவில்தோள் கணநாதர் பிடித்துந்த
      மீண்டழுங்கிக் கயிலை புக்கார் - 14



1801 - பெருமான் பிரமனைச் சிறை விடுத்தல்
புக்கிறைவன் றனைவணங்கி நிகழ்ந்தவெலாம்
      விண்ணப்பஞ் செய்யப் பூந்தேன்
நக்கநறுந் தொடையிதழிக் கடவுளவர்
      தமைநோக்கி நவில்வான் என்னே
அக்கமலன் விளம்பியவா நம்மையும்
      நம்புதல் வனையு மன்றே மான
மிக்கபுகழ்ச் சுருதி யெலாம் பிரணவத்தின்
பொருளாக விளம்பு மாறே. - 15



1802 - “எக்கலைக்கும் பூதங்க ளெவற்றினுக்கும்
      பிரமனுக்கு மீச னென்னத்
தக்கமுதல் பரப்பிரமம் சதாசிவவோ”
      மெனவேதம் சாற்று மல்லால்
முக்கனல்சூழ் வேள்வியிற்சுப் பிரமணிய
      னோமெனவும் முக்காற் கூறும்
இக்கருத்தை யறியானை எவ்வாறு
      விடுவிப்ப தியம்பு மின்னோ - 16



1803 - அருள்வலியா லாங்கவனை விடுவித்து மஞ்சேன்மி னென்று கூறித்
திருநந்தி நாயகனை யெதிர்நோக்கி அறுமுகன்பாற் சென்று முற்றுந்
தருகின்றான் றனைவிடுமோ வெகுளேலென் றெம்முரையாற் சாற்றித் தேன்பாய்
மருவொன்று மலரோனை விடுவித்து நம்மாட்டுக் கொணர்தி யென்றார். - 17



1804 - வேத்திரத்தின் படையாளி விடைகொண்டு வேற்படையோ னுலகம் நண்ணி
மாத்தடிந்த பெருமானைத் தொழுதிறைஞ்சி யெங்கோவே மழுவா ளெம்மான்
பூத்தவிசிற் புத்தேளை நீவிடுமா றருள்செய்தா னென்று போற்றி
ஏத்தும்வழி யறுமுகவே ளிதழதுக்கி வெகுளுதலும் வெருவி மீண்டான் - 18



1805 - பிஞ்ஞகநின் திருவாணை விண்ணப்பஞ் செயச்சிறிதும் பேணா னாகி
மஞ்ஞையான் சினவுதலின் வெரீஇப்பெயர்ந்தே னெனநந்தி வள்ளல் கூற
மொய்ஞ்ஞிமிறு முரல்பூந்தார்க் கடவுளரும் முனிவரருங் கேட்டுத் தம்முள்
கைஞ்ஞெரித்தார் வெருக்கொண்டா ரிறையவனே காவாயென் றடியில் வீழ்ந்தார் - 19



1806 - சயிலாதி வாய்மொழியும் சுரர்முனிவர் மனத்துயரும் தரைசால் வெள்ளிக்
கயிலாயத் தெம்பிரான் திருவுளத்திற் கொண்டருளிக் கருணை கூர்ந்து
மயிலாலும் மலைமகளோ டெழுந்தங்கண் மகவிருப்பா லெய்த நோக்கி
அயிலாளுந் திருக்கரத்தான் விரைந்தெதிர்சென் றடிவணங்கிப் போற்றி நின்றான் - 20



1807 - அனையானை யிருவர்களும் மடித்தலமீ திருத்திமகிழ்ந் தன்புகூரக்
கனிவாயின் முத்தங்கொண் டுச்சிமோந் தகங்கனியத் தழீஇய பின்னர்
எனையாளுஞ் சிவபெருமான் குறுமூர லெழில்காட்டி மேனி தைவந்
துனையோரா வேதியனைச் சிறைவிடுத்தி மைந்தாவென் றுரைத்துப் பின்னும் - 21



1808 -       முருகக் கடவுள் காஞ்சியை அடைதல்
நம்மாணை கடந்தனையா லன்னதற்குக் கழுவாய்நீ நயத்தல் வேண்டும்
வெம்மாய மணுகரிய திருக்காஞ்சி நகர்வரைப்பின் மேவி யன்பின்
அம்மாடே சேனாப தீச்சரமென் றோரிலிங்க மருச்சித் தேத்திக்
கைமாணத் தவம்புரிதி யென்றருளக் கேட்டெழுந்தான் கடப்பந் தாரான் - 22



1809 - திசைமுகனைக் கணங்களாற் சிவபெருமான் திருமுன்னர்ச் செலுத்தி யுள்ளப்
பசையினிரு முதுகுரவ ரடிவணங்கி விடைகொண்டு பழனக் காஞ்சி
வசைகடந்த நகரெய்தி உலகாணித் தடமேல்சார் மாகா ளப்பால்
இசைவிளங்கு தேவசே னாபதீச் சரவிலிங்க மிருத்திப் போற்றி - 23



1810 - புள்ளிமான் தோலுடுக்கை முஞ்சிநா ணரைப்பொலிய வக்கமாலை
தெள்ளுநீர்க் குண்டிகையுங் கரத்தொளிரத் திருக்குமர கோட்ட மென்னும்
உள்ளியோர் பிறப்பறுக்கு மாச்சிரமத் தினிதிருந்தா னுறுவர் போற்ற
வள்ளியா ரிணைக்களப மணிக்கலச முலைதிளைக்கும் வாகைத் தோளான் - 24



1811 - குருமணிகள் வெயிலெறிப்பக் குயிற்றுநீள் மதிற்குமர கோட்ட மோர்கால்
இருவிழியிற் காண்டல்பெறின் கடையோரு மெழுபிறப்பின் மறையோ ராவர்
திருமறையோர் முதலானோர் தொழுதிறைஞ்சப் பெறுகிற்பின் தேவர் தேறாப்
பொருணிலைமை தெளிந்தினபப் பெருவீட்டிற் பரபோகம் திளைத்து வாழ்வார். - 25



1812 - கறங்கருவிப் பொலங்குடுமி வரைகிழித்த நெட்டிலைவேற் கடவுள் போற்றப்
பிறங்கியவித் தேவசே னாபதீச் சரமுதலைப் பெட்பி னேத்தி
மறங்குலவுஞ் சுடராழி வலனேந்து மாலுருகு முள்ளத் தானென்
றறங்கரைவா ரெடுத்துரைக்கு மொருதிருப்பேர் பெற்றானம் முறையுஞ் சொல்வாம் - 26



1813 - மாப்பேரூழி
கலிநிலைத்துறை
முள்ள ரைச்செழுந் தாண்மலர் முளரிவீற் றிருக்கும்
வள்ளல் கற்பமொன் றிறுதலும் யாவையும் மலங்கப்
பொள்ளெ னப்பரந் துலகெலாம் விழுங்கிய புணரி
வெள்ள நீர்மிசை மிதந்தனன் மார்க்கண்டி மேலோன் - 27



1814 - தனிய னாகிவெஞ் சலதியி னுழிதரும் தகைசால்
புனித மாதவ னாயிடைப் பொறியராத் தவிசின்
இனிது கண்வளர் மாயனைக் கண்டுசென் றிறைஞ்சி
நனிம கிழ்ச்சிமீக் கிளர்ந்தெழு மனத்தொடு நவில்வான் - 28



1815 - நகைம லர்த்துழாய் நாயக ஞாலமற் றெவையும்
பகல்செய் வெங்கதிர்ச் சண்டமாப் பரிதிநின் றெரிப்பத்
துகள்ப டுஞ்செயல் கண்டயா னத்துணைப் பொழுதின்
இகழ ருந்திற லறிவுபோ யெய்தினன் மயக்கம் - 29



1816 - ஏய்ந்த மையல்தீர்ந் திதுபொழு துணர்ச்சிவந் தெழுந்தேன்
காந்து வெம்புனற் கடுந்திரைப் பரப்பிடை மிதந்து
நீந்தி நீந்தியென் நெடியகால் கரங்களும் மெலிந்தே
ஓய்ந்த நல்வினை யிருந்தவா றுனையிவண் கண்டேன் - 30



1817 - நிலம டக்கொடி வனமுலை திளைக்குநீள் மார்ப
உலக மெங்கணும் கருகிருள் மூடிய துரவோய்
இலகு பேரொளி யிருசுடர் யாங்ஙனம் போய
குலவு மேனைய கோளொடு நாள்களெங் கிறந்த - 31



1818 - சகமி சைப்பயில் பொருளெலா மெவ்வுழிச் சார்ந்த
திகழ நீஎனக் கிவையெலாந் தெரித்தியென் றிரப்ப
நிகழு மாதவன் மாதவன் றன்னைநேர் நோக்கி
அகலி டத்துள பொருளெலா மென்னகட் டுளவால் - 32



1819 - மாதவன், முன்னது திருமால்; பின்னது, மார்க்கண்டேய முனிவர்.
மார்க்கண்டேயர் மாயனை முனிதல்
புகுந்து நோக்குதி யென்றலும் முனிவரன் புகல்வான்
முகுந்த முன்னொரு கற்பத்திம் மொழியினா லன்றே
மிகுந்த வஞ்சனைப் படுத்தனை விளைமதுப் பிலிற்றி
நகுந்த டம்பொகுட் டம்புய வாழ்க்கைநான் முகனை

முகுந்த -விளி. முன்னொரு கற்பத்தில் நான்முகனும் திருமாலை
இவ்வாறு கேட்டு அவர் கூறியவார்த்தைகளை நம்பி, அவர் வயிற்றினுட்
புகுந்து காணாது வருந்திப் பின் வெளிவருமாறின்றி நாபியின்
வழியே வெளிப்போந்தனன் என்பது வரலாறு. - 33



1820 - முனைக டந்தவேல் மணிமுடி யம்பரீ டன்றன்
மனையில் நாரதப் பருப்பத முனிவரை வஞ்சித்
தனைய மன்னவன் புதல்வியைக் கவர்ந்துகொண் டகன்றாய்
இனைய மாவலி தனக்குமுன் வஞ்சனை இழைத்தாய்

அம்பரீடன் என்னும் அரசன் மகளை நாரதர் பருப்பதர்
என்னும் இருமுனிவர்கள் மணக்க விரும்பி, இருவரும் ஒருவரை
யொருவ ரறியாமல் திருமாலிடம் சென்று, நாரதர் பருப்பதர்க்குக்
குரங்கு ம்கமும்,பருப்பதர் நாரதருக்குக் கிழமுகமும் உண்டாக
வேண்டுமென்று கேட்க , இருவருக்கும் அவ்வாறே செய்து,
அரசன் சபையில் இருவரும் அவ்வாறிருந்த காலையில், மாலை
கொண்டு வந்த அரசன் மகள் அவ்விருவருக்கும் மாலையிட
நாணியபோது, திருமால் தோன்றி, அவள் மாலையிடப் பெற்றனர்
என்பது வரலாறு. திருமால் மாபலியை வஞ்சித்தமையை அபிராமேசப்
படலத்திற் காண்க. - 34



1821 - இன்ன வாறுனை நம்புநர் அடியவ ரிடத்தும்
துன்னு மாயமே செய்வதுன் தொழிலெனக் கண்டேன்
நின்னை யஞ்சுகேன் நெறிக்கொடு செல்வனென் றியம்பி
அன்ன நீரினைக் கரங்கொடு நீந்தியங்க கன்றான் - 35



1822 - மார்க்கண்டேயர் காஞ்சியை அடைதல்
அறுசீர்க்கழிநெடி லாசிரிய விருத்தம்
செல்லு மெல்லை நீர்மிசைத் தோன்றும் வேத மாஞ்சினைப்
பல்ல வங்கள் கண்டவை பற்றி யுள்ளி ழிந்தனன்
ஒல்லை யங்கண் நோக்கினா னொளிப்பி ழம்பின் நீடிய
மல்ல லம்பொ னிஞ்சிசூழ் மாடக் காஞ்சி மாநகர் - 36



1823 -       சினை - கிளை. பல்லவம் -தளிர்
எற்று தெண்டி ரைப்புன லிஞ்சி யின்வ ளைப்பவெண்
புற்பு தத்தி னுள்வெளிப் பொற்பெ னத்தி கழ்ந்துநீள்
ஒற்றை மாவி னாரரு ளொளிது ளும்ப மன்னுமூர்
அற்பு தத்தை நோக்குதோ றற்பு தத்த னாயினான் - 37



1824 - அங்க ணெய்ப்பு நீத்தபி னண்ணல் கம்ப வாணரை
உங்க ணெய்தி அர்ச்சனை உஞற்றி யவ்வி ராவெலாந்
துங்க மாவின் நீழல்வாழ் சோதி முன்னர் வைகினான்
சங்க மாழி யேந்தியோன் றானுந் தொடர நண்ணினான் - 38



1825 - திருமால் வரம் பெறல்
நண்ணும் நெறியிற் காஞ்சிமா நகர மெய்தி யந்நகர்
வண்ண முற்று மற்புதம் மருவ நோக்கி மாநிழல்
அண்ண லாரை யேத்தியம் முனிவன் சொன்ன யாவையும்
எண்ணி யெண்ணி நெஞ்சுளைந் தென்நி னைந்த வாறெனா - 39



1826 - சேர்ந்த வர்க்கு வஞ்சமே நாள்தொ றுஞ்செய் கின்றனேன்
வார்ந்த கூந்த லம்பிகை மாயை யின்ம யங்கினேன்
நேர்ந்த மாயம் நீக்குமா நீள்வ ரைப்பி ராட்டிதாள்
சார்ந்து போற்று வேனெனத் தனிப்பி லத்தை நண்ணினான்
அம்பிகை மாயை - இறைவியால் தொழிற்படுத்தப்படும்
மாயை பிலம் - காமகோடிபீடம் - 40



1827 - ஆயி டைப்பி ராட்டியை யருச்சித் தேத்தி யருளினான்
மாயம் நீங்கி மெய்யுணர் வெய்திப் பஞ்ச வாவிநீர்
ஏய மூழ்கித் தேவசே னாப தீசத் தேகியந்
நாய னாரை விதியுளி நயந்து பூசை யாற்றினான் - 41



1828 - கருணை கூர்ந்து நம்பனார் காட்சிதந் தளித்தலும்
பரசி யேத்தி நின்னடிப் பத்தி மாறி லாவரம்
அருள வேண்டும் மெய்த்தவ ரடியர் மாட்டு வஞ்சனை
ஒருக ணத்து மெண்ணிடா வுளமெ னக்கு வேண்டுமால் - 42



1829 - ஈண்டு நின்பு தல்வனோ டெந்தை திருமுன் வைகவும்
வேண்டு மென்றி ரந்துவிண் ணப்பஞ் செய்ய வெண்பிறை
நீண்ட செஞ்ச டைப்பொதி நிரும லப்ப ரம்பொருள்
ஆண்ட கைப்பி ரான்மகிழ்ந் தன்ன வாக யென்றுபின் - 43



1830 - என்று மன்பி னேகிநீ யுருகு முள்ளக் கோயிலான்
என்று நாம மெய்துகென் றருளி யிறைவன் நீங்கினான்
குன்றெ டுத்து முந்துகோ நிரைகள் காத்த குரிசிலும்
மன்றல் வெட்சி மாலையா னருளி னங்கண் வைகினான் - 43



1831 - கூறு மிணைய மேன்மைசால் குமர கோட்ட வைப்பினிற்
பாறு நச்சு வேலினான் பாத மங்கி யநிலநாள்
வேறு நாற்றி னங்களில் விரும்பிச் சென்றி றைஞ்சினோர்
பேறு முற்றும் யாவரே பேச வல்ல நீர்மையார் - 45

ஆகத் திருவிருத்தம் - 1831
-------------

57. மாசாத்தன் தளிப் படலம் (1832-1868)




1832 - அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
நறைகொப் புளிக்கும் நறும்பொகுட்டு நளின வாழ்க்கைப் புத்தேளைச்
சிறையிற் புகுத்தும் பெருமானார் குமர கோட்டச் சிறப்புரைத்தாம்
நிறையப் பூத்த மலர்ப்பொதும்பர் நீடும தற்குத் தென்திசைக்கண்
முறையின் திகழும் மாசாத்த முதல்வன் தானம் எடுத்துரைப்பாம் - 1



1833 -       சுராசுரர் கலகம்
வைவா ளெயிற்றுத் தானவரும் வானவரும் மந்தரத்திற்
பைவாய்த் தாம்பு பிணித்தீர்த்துக் கடைந்த ஞான்று பரவையெழும்
வெவ்வாய் நஞ்சம் மிடற்றடக்கி வெருவா தளித்த பெருங்கருணை
ஐவாயப் பணிப்பூண் பெருமா னாரருளான் மீளக் கடைந்தவழி - 2



1834 - சேட்டை யணங்கு திருமணியான் தெய்வமகளிர் மருத்துவர்நாற்
கோட்டு மதமா முதல்பலவும் குரைநீர்க் கடலுள் தோன்றியபின்
வாட்டு மிறவிப் பெரும்பிணிக்கு மருந்தா வமிழ்தந் தோன்றுதலும்
வேட்ட விண்ணோர் அவுணர்களும் தம்முட் கலாங்கள் விளைத்தனரால்

பாற்கடல் கடைந்த போது தோன்றியவை: சேட்டையணங்கு - மூதேவி;
திரு -இலக்குமி; மணி- சிந்தாமணி; ஆன் - காமதேனு;
தெய்வமகளிர்- அரம்பையர்கள்; மருத்துவர்- தேவவைத்தியர்;
நாற்கோட்டு மதமா- ஐராவதமென்னும் யானை.இன்னும் கவுத்துவம் முதலியன. - 3



1835 - திருமால் மோகினி வடிவாதல்
ஆற்றல் மிகையாற் சுதைக்குடத்தை யடல்வா ளவுணர் கைப்பற்றத்
தோற்று மறுகிப் புத்தேளிர் அலமந் தேங்குந் துயர்நோக்கிக்
காற்றும் நறுந்துளவக் கமஞ்சூற் கொண்ட லிணைவிழிக்குக்
கூற்றம் பதைக்கும் மோகினியாம் வடிவுமாங்குக் கொண்டனனால்

சுதை -அமுதம். காற்றும் -உமிழ்கின்ற. கமஞ்சூல் கொண்டல்- நிறைந்த
சூல் கொண்ட கார்மேகம் என்பது ஆகுபெயராய்த் திருமாலைக் குறித்தது. - 4



1836 - கலிவிருத்தம்
இரண்டறப் பெண்மையு மெழிலும் வஞ்சமும்
திரண்டுருக் கொண்டெனத் திகழ்ந்து தோன்றிமால்
முரண்தகு மவுணர்கைக் கொண்ட மூரிநீர்
வரண்டுமா மணிக்கட லமிழ்தம் வாங்கினான் - 5



1837 - வாங்கிநின் றசுரருஞ் சுரரும் வல்லையே
ஆங்கநீர் நிரைநிரை யாக வைகுமின்
ஈங்குநல் லமிழ்தமெல் லீர்க்கும் வேட்டவா
பாங்குறத் தனித்தனி பகுந்து நல்குகேன் - 6



1838 - வேல்விழி மாதர்யான் வீழ்ந்து ளார்பெறச்
சாலநல் குவலெனச் சலதிச் சேக்கைவாழ்
வரல்வளைக் குடங்கையான் மகிழக் கூறலும்
கோல்வளைத் திதிமைந்தர் குறித்து நோக்கினார். - 7



1839 - மோகினியின் முற்றுருவப் புனைவு
எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
கலிதிரை முகந்த சூல்முகில் விளர்ப்பக்
      கமைகுழன் றிருண்டு நெய்த்தொழுகிப்
பொலிவுற மகரம் வலம்புரி திருத்தி
      எ·கிடை தொட்டபூங் குழலைக்
குலிகநீ ரளவி மழவிளம் பரிதிக்
      குரூஉச்சுட ருரிஞ்சிய காட்சி
இலகொளித் தேய்வை யரும்பெறற்
      றிலக மிட்டகீற் றிளம்பிறை நுதலை - 8



1840 - மாற்றரு மதுகை ஐங்கணைக் கிழவன்
      வாங்கிய நறுஞ்சுவைத் தேறல்
காற்றுவெஞ் சிலைக்குச் சிலைத்தொழில்
      பயிற்றுங் கட்டெழிற் புருவமென் கொடியைச்
சீற்றவல் விடமு மமிழ்தமும் விரவிச்
      சிதரரி பரந்துமை தோய்ந்து
கூற்றர சிருக்கு மிணைவிழி களவு
      கொள்ளநோக் கிடுஞ்சிறு நோக்கை - 9



1841 - செயிரறுந் தரள வெண்மணி நாலத்
      திருந்தெழில் படைத்தெதிர் கண்டோர்
உயிரினைப் பருகிக் குமிழெனத்
      திகழ்ந்த ஒள்ளொளி நாசியின் வனப்பை
வெயில்விடு மணிப்பூண் காளையர்
      மனங்க ளாடுபொன் னூசலின் விளங்கி
மயிரெறி கருவி முதலெனக் கவின்று
      மணிக்குழை வயங்கிரு செவியை - 10



1842 - குயிலினஞ் சமழ்ப்பக் குழலிசை பழகும்
      சின்மொழிக் குருநகை மொக்குள்
கயிரவம் மலர்ந்த செய்யவாய் அமிழ்தம்
      ஊற்றெழுங் கனியிதழ் ஒளியைப்
பயிலிருள் ஒதுக்கிப் பால்நிலாக் கான்று
      படரொளி பரப்புவெண் மதியம்
முயலறுத் தெழுந்தா லனையபே ரழகின்
      முண்டக வாண்முக மலரை - 11



1843 - மடலவிழ் பாளைப் பசியபூங் கமுகோ
      வயிறுநொந் தலறிமுத் துயிர்க்கும்
குடவளைப் பொலிவோ யெனமரு ளுறுப்பக்கக்
      கவின்குடி இருந்தகந் தரத்தைக்
கடிகமழ் கொழுஞ்சா றொழுகமென் கரும்பைக்
      கண்ணறத் தகர்த்திளம் பணையைத்
தடவரைப் புகுத்தித் தொடையலை வாட்டித்
      தகையமை அணிகெழு புயத்தை - 12



1844 - மடிதிரைப் பரவை யமுழ்துற ழிசைய
      மகரயாழ் புறங்கொடுத் திரியத்
தொடிகளும் வயிரக் கடகமும் செறித்துத்
      தூநலம் படைத்த கூர்ப்பரத்தை
நொடிபயில் கிள்ளைப் பவளவாய் கடுக்கும்
      நுதியுடைக் கூருகிர் வனப்பின்
படியறு விரல்வாய்ந் தொள்ளொளி துளும்பும்
      பனிமலர்க் காந்தளங் கரத்தை - 13



1845 - சுணங்குடை வனப்பு மாரமு மெழுதுந் தொய்யிலுஞ் சந்தனக் களியும்
இணங்கியண் ணாந்து பாதிகாண் டகமேற் படாம்பொதி யிளமுலைப் பொருப்பை
அணங்குறுத் திளையோர் மதியினைப் படுக்கும் படுகுழி யனையவுந் தியின்மேல்
நுணங்குவண் டொழுக்கிற் கருமயிர் ஒழுகி நோக்கமை சிறுவயிற் றழகை - 14



1846 - கொடியென நுடங்கி வேளெனக் கரந்து குவிமுலைக் கிடைந்து செந்தளிர்க்கைப்
பிடியினுள் அடங்கித் துடியெனச் சுருங்கி மின்னெனப் பிறங்குநுண் நுசுப்பைப்
படிமையர் சீலக் குறும்பெலா மடக்கி நடுவுயர்ந் தகன்றெழில் படைத்து
வடிமலர்ப் பகழி வேந்தர சிருப்ப வயங்கிய அல்குலின் பரப்பை - 15



1847 - நெட்டிலைக் கதலித் தண்டெனச் சேர்ந்து செறிந்தநீல் விலைவரம் பிகந்த
வட்டொளி யரத்தம் நுழையிழைக் கலிங்க மணிகெழு வளம்பயில் குறங்கைக்
கட்டெழில் மதவேள் ஊதுகா களமும் கணைபொதி அவநா ழிகையும்
பெட்டவர் மருள வீற்றிருந் தனைய பிதிரொளிப் பொற்கணைக் காலை - 16



1848 - கறுத்தவான் முகனை வெரீஇப்பதம் பணியுங் கலைமதி வெள்ளுகிர் மதநூல்
பொறித்தபுத் தகமாம் புறவடி வன்ன மென்னடைப் பூந்தளி ரடியைக்
குறித்துரை உவமைக் கிடம்பெறா தள்ளிக் கொளத்தகும் பேரழ கமைந்த
மறுத்தபூ மேனி யிளநலங் கனிந்து மணிநிறம் வயங்குகோ மளத்தை
மாயோனமுதளித்தல் - சாத்தனாரவதாரம் - 17



1849 - கலிவிருத்தம்
காண்டலு மாரவேள் கணைக்கி லக்கமாய்
மாண்டன ரெனவறி வழிந்து மையல்நோய்
பூண்டனர் தானவர் மடந்தை போல்வரும்
ஆண்டகை மாயையா லவரை வஞ்சித்து - 18



1850 - கடவுளர்க் கமுதெலாங் கடுக வீந்தவர்
வடிவெடுத் துடனுற வதியி ராகுவைத்
தடநெடு மூழையா னரிந்து தானுமக்
கடலமிழ் தருந்துபு களிப்பி னீடினான் - 19



1851 - வேறுகொள் ளவுணரை ஞாட்பின் வென்றுபோய்
மாறடு மாழியா னிருக்கை மன்னினான்
ஏறணி நெடுங்கொடி யெரியின் நீள்சடை
ஆறணி யடிகளிவ் வனைத்துங் கேட்டரோ - 20



1852 - தன்னடி வழிபடச் சார்ந்த மாயனை
அன்னவை யென்னெனக் கடாவி யவ்வுரு
என்னெதிர் காட்டுகென் றியம்பச் சார்ங்கனும்
மன்னிய மலைமகள் வதனம் நோக்கியே - 21



1853 - மையல்செய் மோகினி வடிவங் காட்டுபு
வெய்தென நடந்தனன் வேளை வென்றகோன்
ஒய்யென யெழுந்துசென் றுற்றுப் புல்லவுங்
கையகன் றோடினான் கரிய மேனியான் - 22



1854 - மறுவலு மெம்பிரான் விந்து பற்றியாங்
கிறுகுறத் தழீஇயின னினைய காலையின்
உறுபுகழ்ச் சாத்தனூங் குவர்க்குத் தோன்றினான்
நிறுமுறை யுலகெலாம் நிறுத்துங் கோலினான் - 23



1855 - சாத்தன் சிவனருள் பெற்று வதிதல்
ஆயபின் கேசவன் வெள்கி யண்டர்கோன்
சேயதாள் தொழுதுதன் னுலகஞ் சேர்ந்தனன்
பாய்புகழ்ச் சாத்தனும் பகவன் தாளிணை
வாயினால் துதிசெய்து வணங்கி வேண்டுவான் - 24



1856 - அரிலறச் செய்பணி யருளி நின்னருட்
குரியபே ரிறைமையு முதவ வேண்டுமால்
கருவிடம் பருகிய களைக ணெந்தைநின்
திருவடிச் சார்புடைச் சிறிய னேற்கென - 25



1857 - மறைமிடற் றெம்பிரா னியம்பும் மைந்தகேள்
இறைமைநம் மருளினா லெய்தற் பாலதாம்
அறைதரும் அருளுமெய் யன்பி னாவதப்
பொறைகெழு பத்தியும் பூசைப் பேறரோ - 26



1858 - பூசையா வதுசிவ லிங்க பூசையத்
தேசமை யருச்சனைக் கிடனுஞ் சீர்த்திசால்
ஆசறு தலங்களா மங்க வற்றினும்
காசிமற் றதனினுங் காஞ்சி மாநகர் - 27



1859 - கண்ணகன் புரிசைசூழ் காஞ்சி வைப்பிடைப்
புண்ணியச் சிவக்குறி நிறுவிப் பூசித்து
விண்ணவர் தவமுனி வேந்தர் யாவரும்
எண்ணரும் பேறுபெற் றின்பம் நீடினார் - 28



1860 - ஆயிடை நீயெமை யருச்சித் தேத்துதி
மாயிருந் தலைமைநாம் வழங்கு கேமெனச்
சேயிழை பங்கினா னருளிச் செய்தனன்
காயிலைப் படையவன் காஞ்சி நண்ணினான் - 29



1861 - உருகெழு பனிவரைப் பிராட்டி ஒண்மலர்த்
திருவடிச் சுவடுதோய் செல்வக் காஞ்சியின்
மருவிவேற் கடவுளை வழுத்தி யாங்கவன்
அருளினாற் சிவக்குறி நிறுவி யர்ச்சித்தான் - 30



1862 - மறைமுதல் விடைமிசைத் தோன்றி மற்றவற்
கறைகழ லிமையவ ரருகு சூழ்தர
முறைகெழு பூதங்கள் முழுதுங் காப்புறும்
இறைமையின் மணிமுடி யினிது சூட்டினான் - 31



1863 - பல்கரி வீரர்தேர் பரிகள் தம்முடன்
நல்கிய தலைமைபெற் றனைய சாத்தனும்
ஒல்கிடை மலைமகள் உவகை மீக்கொள
மல்குசீர்ப் பிலத்தயல் மகிழ்ந்து வைகினான் - 32



1863 - கடாநிரை ஏழுயர் கரிகள் மேற்கொடு
நடாயுளங் களித்திறு மாந்து நாள்தொறும்
வடாதுபாற் செண்டணை வெளியின் மாறடும்
அடாவலி படைத்தவ னாடல் பேணுமால் - 33



1865 - வலம்படர் சிறப்பின்மா சாத்த னேத்திய
நலம்படர் கருணைமா சாத்த நாதனைப்
புலம்படர் சிந்தயாற் போற்றப் பெற்றவர்
இலம்படா ரிருமையு மின்ப மெய்துவார் - 34



1866 - மங்களேச்சரம்
எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
மற்றதன் வடபால் மலைமகள் இகுளை மங்களை மண்டபம் இழைத்து
வெற்றிமண் டபத்தின்பிறகுற மங்க ளேசனை விதியுளி நிறுவி
அற்றமில் சிறப்பின் மங்கள தீர்த்த மகழ்ந்துநீ ராட்டுபு தொழுதாள்
பற்றுமங் களநா ளத்தடம் படிந்து பணிபவ ரிருமையும் பெறுவார் - 35



1867 - இராமநாதேச்சரம்
உரைத்ததன் குடபால் தசரதன் மதலை யரக்கனை யடுபழி யொழிப்பான்
அருட்குறி யிருத்திச் சேதுவில் தொழுதங் கண்ணலா ரேவலிற் காஞ்சி
வரைப்பினுற் றிராம நாதனை நிறுவி வழிபடூஉக் கொடுவினை மாற்றித்
திரைபுன லயோத்திப் புகுந்தர சளித்தான் சேதுவில் சிறந்ததத் தலமே - 36



1868 - மாதவீச்சரம்
இனையதன் வடபால் மாதலி என்பா னிராகவ னிலங்கையர் கோமான்
றனையடு ஞான்று வாசவன் விடுப்பத் தயங்குதேர் செலுத்துவா னாகி
நனைமலர் வாகை முடித்தபி னிராமன் றன்னோடு காஞ்சியை நண்ணிப்
புனைபுகழ் மாத லீச்சரந் தொழுது புரந்தரற் கினியவ னானான் - 37

ஆகத் திருவிருத்தம் 1868
---------

58. அனந்த பற்பநாபேசப் படலம் (1869-1878)




1869 - அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
வருவினை தெறுமா சாத்தன் தளியொளி மங்களேசம்
திருவிரா மேசம் மாத லீச்சரந் தெளியச் சொற்றாம்
தருவலர் நிரந்த முன்றின் மாலீச் சரத்தின் மேற்பால்
ஒருவில்சீ ரனந்த பற்ப நாபத்தி னுண்மை சொல்வாம் - 1



1870 - இறைவனிறைவி திருவிளையாடல்
எண்ணரு முயிர்க ளீன்ற யிருமுது குரவ ரானோர்
அண்ணலங் கயிலை வெற்பின் அமர்வுழி யொருநா ளங்கண்
உண்ணிறை களிப்பி னீடி ஒள்ளொளி மணிச்சூ தாடக்
கண்ணிய ரகில முய்யக் கண்ணினா ரனைய காலை - 2



1871 - மாலையந் துளவோ னெய்தி வணங்கிசாந் தாற்றிக் கோடல்
மாலைய னாகி நின்று மெய்வெயர் மாற்ற நோக்கி
மாலைவெண் பிறைதாழ் வேணி வள்ளலு முமையு மாங்கண்
மாலையவ் வினைக்குச் சான்று வைத்தன ராடி னார்கள்.
சாந்தாற்றி - விசிறி.மாலையந் தன்மையன். மாலைப்பிறை- அந்திப்பிறை.
மாலை - விட்டுணுவை. சொற்பின் வருநிலை அணி. சான்று - நடுவர். - 3



1872 - பிடித்தெறி கவறாட் டத்திற் பிஞ்ஞகன் தோற்பச் செங்கேழ்
அடித்தளிர்ப் பிராட்டி நோக்கி யடிகளை வென்றே னென்றாள்
விடைக்கொடிப் பெருமாள் யாமே வென்றன மென்றான் பாசம்
உடைத்தவர் தங்கட் கிவ்வா றுற்றன கலாங்கள் மேன்மேல் - 4



1873 - மாயோன் சாபமடைதல்
யாமினிக் கலாய்த்தல் வேண்ட லொழிகென யிருவர் தாமும்
மாதணி மார்பன் றன்னை வினாதலும் மாயோ னையன்
தாமரை வதனம் நோக்கித் தலைவனும் வென்றா னென்றான்
கோமளங் கவின்ற மேனிக் கோற்றொடி சீற்றங் கொண்டாள்
ஐயன் வதனம் நோக்கி என்றது, முகத்துக்கஞ்சுதல் என்னும் வழக்கைக் குறிப்பது. - 5



1874 - கண்டது கண்ட வண்ணங் கழறிலை வாரம் பற்றித்
தண்டுணர்த் துளவத் தாரோய் கைதவச் சான்று சொற்றாய்
அண்டரும் பிறரு மேசக் கட்செவி யாதி யென்னா
ஒண்டொடி சபிப்ப மாயோ னுளம்பதைத் திரந்து போற்றி - 6



1875 - மாயோன் சாப நீத்தருள் பெறல்
அடியனேன் மடமை நீரா லறைந்தது பொறுத்துச் சாப
முடிவளித் தருளா யென்றென் றேக்கற முதல்வி நோக்கி
நெடிதருள் சுரந்து மாயோ யஞ்சலை நிலைநீர்க் காஞ்சிக்
கடிநகர் வரைபி னேகிக் கடிதெமைப் புரிதி பூசை - 7



1876 - இகழறு மிலிங்க வேதி யென்னுரு விலிங்க மூர்த்தி
திகழ்மதிச் சடில மோலிச் சிவபிரான் வடிவு கண்டாய்
புகழ்தரு மிலிங்க வேதிப் பொற்பினா லென்னை நின்பேர்
நிகழ்வுற நிறுவிப் போற்றி நீக்குதி சாபத் தீமை - 8



1877 - நலம்புரி யனந்த பற்ப நாபனென் றோங்கு வாயால்
வலம்புரிக் கரத்தோ யென்று வழங்கினாள் குவவுத் திண்தோள்
உலம்புரி யனந்த பற்ப நாபனு முமையாள் தன்னைப்
பொலம்புரி சடிலத் தேவைத் தொழுது போய்க் காஞ்சி புக்கான்
அனந்தன் பாம்பு. பற்பநாபந் தாமரை உந்தியன்.திருமால் - 9



1878 - வணங்கினன் திருவே கம்பம் மற்றத னயலே வேதி
இணங்குறு மனந்த பற்ப நாபமா விலிங்கம் பூசித்
தணங்கருள் பெற்றுப் பாந்தள் மூதுரி யகற்றி யாங்குப்
பிணங்கிய சாபம் நீத்துப் பேரருட் குரிய னானான் - 10

ஆகத் திருவிருத்தம் 1878
---------

59. கச்சி மயானப்படலம் (1879-1901)




1879 - கொச்சகக் கலிப்பா
சிற்பநிகழ் மணிமாட நெடும்புரிசைத் திருவனந்த
பற்பநா பேசத்தின் பரிசறிந்த வாறுரைத்தாம்
நிற்பனவும் சரிப்பனவுமாய் நிறைந்தபிரான் இனிதுறையும்
அற்புதமாந் திருக்கச்சி மயானத்தின் அடைவுரைப்பாம் - 1



1880 - பண்டாசுரன் வரம் பெறல்
முன்னொருநான் முகப்புருடப் பெயர்க்கற்பம் முடிவெய்திப்
பின்னுறுசீர் அகோரமாங் கற்பத்துப் பிறங்குலகின்
மன்னுயிர்கள் வளர்ந்தோங்கி வைகுநாள் விறற்பண்டன்
என்னுமொரு வல்லவுணன் இப்புவனத் துளனானான்
புருடப்பெயர்க் கற்பம்- தற்புருடகற்பம். வீரியம் -இந்திரியம் - 2



1881 - அங்கவன்செய் மாதவத்தா லகமகிழ்ந்து காட்சிதரும்
பங்கயனை யடிவணங்கிப் பன்னுசுரா சுரர்முதலோர்
தங்களுடம் பிடைவிரவித் தகைபெறுவீ ரியமனைத்தும்
நுங்கவரம் அருளென்றான் முண்டகனும் நுனித்தெண்ணி
நுங்க -உண்ண. - 3



1882 - அற்றாகென் றகலுதலும் அவுணர்கோன் உடம்புதொறும்
உற்றாவி யுடன்விரவி வீரியங்கள் உண்டிருப்பப்
பற்றாய வீரியம்போய் ஆருயிர்கள் பருவந்து
வற்றாத ஒளிமாழ்கி வளர்வின்றி அ·கினவால்
உடம்பு தொறும் உற்று ஆவியுடன் விரவி- உயிர்களுடன் கூடி
அவை இருக்கும் இடமாகிய உடலில் தங்கி. அ·கின-குறைந்தன. - 4



1883 - தேவர் முதலியோர் முறையீடு
எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
மருத்துவர் இயக்கர் வானவர் அவுணர் மானிடர் சித்தர்கந் தருவர்
உருத்திரர் வசுக்கள் இராக்கதர் அருக்கர் உரகர்சாத் தியர்மருத் துக்கள்
அருத்திகூர் விரிஞ்சன் அச்சுதன் பிறரும் அவ்விடர் ஆற்றலர் குழுமித்
திருத்தகு கயிலைப் பருப்பதம் புக்குச் சிவபிரான் அடிதொழு துரைப்பார் - 5



1884 - வீரியம் இன்றி வலிகுறைந் தடியேம் வெற்றுடம் பெனத்திரி கின்றோம்
காரணங் காணேம் அன்னது தவிர்க்கும் உபாயமுங் கண்டிலேம் என்று
நாரணன் முதலோர் உலந்துநின் றிரப்ப நாயகன் நகைமுகிழ்த் துரைக்கும்
சீரிய நுமது வீரியம் முழுதும் திருந்து பண்டாசுரன் கவர்ந்தான்
வரம் தந்த பிரமனும் அறியாது போயினன். பண்டம் -உடல். அதிற்கலந்த
அசுரனாகையால் பண்டாசுரன் எனப்பட்டான். - 6



1885 - ஆங்கவன் எல்லா உடம்பினும் விரவி ஆவியோ டுறைதலின் எவ்வா
றீங்கினி வெல்லப் படுவனென் றருள இமையவர் யாவரும் வெருவி
மாங்குயிற் கிளவி மலைமகள் கொழுநா மறிதிரை வளைகடல் உயிர்த்த
பூங்கடு மிடற்றுப் புனிதனே எம்மைப் புரப்பதுன் கடனெனத் துதிப்பார். - 7



1886 - வேறு
முடிவி லாற்றலை தன்வ யத்தினை முற்று ணர்ச்சியை பேரருள்
மடிவி லாட்சியை தூய மேனியை மற்றி யற்கை யுணர்ச்சியை
படியி லாவியல் பாக நீங்கிய பாச நோயை வரம்பிலின்
புடையை யுன்னடி யேங்க ளென்று முனக்க டைக்கல மையனே - 8



1887 - அண்ட மோரணு வாம்வ ளர்ச்சியை யணுவின் நுண்ணியை யண்டமார்
பிண்ட மெங்கணும் நின்ற சைக்கும் நிமித்த னாய்நிறை பெற்றியை
கண்ட யோகியர் சிந்தை மேயினை கரணம் முற்று மகன்றனை
ஒண்டொ டிக்கொரு பங்க யாங்க ளுனக்க டைக்கல மைய§ - 9



1888 - பிரம மென்மரு மீச னென்மரும் சீவ னென்மரும் பேதுறுங்
கரும மென்மரும் வேறு மவ்வவ கடவு ளென்மரு மாகியே
முரணி யவ்வவர் பேச நின்றருள் முதல்வ னேமுத லீறிலா
வொருவ னேயடி யேங்க ளென்று முனக்க டைக்கல மையனே - 10



1889 - இறைவன் வேள்வியில் உலகை ஒடுக்குதல்
அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
இனைய வாறுளங் களிவரப் பழிச்சுறு மிமையவர் தமைநோக்கிக்
கனைக ழற்பிரான் வீரியம் பெறுவதே கருத்துமக் கெனிலேற்கும்
வினைமு டித்தவற் கொல்லுது மல்லது விரவி யெங்கணும் நிற்கும்
அனைய கள்வனைச் செகுத்திட லரிதுமக் கிசைவுகொ லதுவென்றான் - 11



1890 - ஐயன் வாய்மொழி கேட்டலுங் கடவுள ரவ்வினை தாழாமே
செய்ய வேண்டுமற் றுலகெலாம் புரப்பதெம் மிசைவுபெற்றோ செந்தீக்
கைய னேயெனத் தலைவனு மன்னதேற் காஞ்சியின் நுமதாக்கை
வெய்ய செந்தழற் குறியிடை யவியென விரவுகென் றருள்செய்தான்.
தழற்குறி -நெருப்பாகிய இலிங்கம். அவியென -வேள்வித்தீயிலிடும் பொருளாக.
விரவுக- சேர்க. - 12



1891 - யாங்க ளிங்கிருந் தென்பயன் நின்சுடர்க் குறியிடைக் கரந்தேமேல்
ஓங்கு மின்பமே தலைப்படப் பெறுதுமென் றுரைத்தடி தொழுதேத்தும்
ஆங்க வர்க்கெலாம் விடையளித் தருவரை அணங்கொடுந் திருக்காஞ்சி
ஞாங்கர் எம்பிரான் செழுந்தழற் பிழம்பொளி நலந்திக ழுருக்கொண்டான் - 13



1892 - அளப்ப ருஞ்சிகைப் படலைமீக் கவைத்தெழுந் தெங்கணு மழல்வீசக்
கிளைத்து நின்றுதன் வலப்புடை யுகிரினாற் குண்டமுங் கெழுவித்து
வளைத்த குண்டத்து வாமதே வத்திரு வடிவின் நெய்பூரித்து
விளக்கு தத்துவத் தருப்பைமுக் குணப்பெரும் பரிதிமே வரக்கொண்டு - 14



1893 - வேறு
வேள்வியுந் தானே வேள்விப் பொருள்களுந் தானே வெய்ய
வேள்விவேட் பவனுந் தானே வேள்விகொ ளிறையுந் தானே
வேள்வியின் பயனுந் தானே என்பது விளக்கி யெம்மான்
வேள்விசெய் தீக்கை யுற்றான் விளங்கருட் சத்தி யோடும் - 15



1894 - வண்டுற்ற மலரோ னாதி வலிகெழு தருக்க ளீறா
அண்டத்தி னகத்த பூத மனைத்தையும் பெருங்கால் வேகச்
சண்டத்தின் வாங்கி வாங்கி யாச்சியந் தயங்கு மங்கேழ்க்
குண்டத்தில் தூய்மை செய்து கொழுந்தழல் மடுத்திட் டானால்
ஆச்சியம்- நெய் - 16



1895 - வேறு
மடுப்ப மடுப்ப மீதெழுந்து வயங்கிச் சுடருந் தழற்பிழம்பில்
அடுப்ப நனைக்கும் புறத்தெண்ணீ ரண்ட முகடு வேவாமைத்
தடுத்த தாகு மன்றாயின் மன்ற நிறையுஞ் சராசரங்கள்
உடுத்த மேலைச் சுவர்த்தலமு முருகிக் கவிழு முலகன்றே.
புறத்தெண்ணீர்- அண்டமுகட்டிலுள்ள ஆகாசகங்கை. 'அண்ட முகடு தழற்
பிழம்பில் வேவாமை அடுப்ப நனைக்கும் புறத்தெண்ணீர் தடுத்த தாகும்' எனக் கூட்டுக - 17



1896 - வேறு
இவ்வகை வடிவு முற்று மிணரெரிப் பிழம்பு ளாக்கிக்
கௌளவையில் காலச் செந்தீப் பிரான்முதல் கணங்கள் தாமும்
எவ்வமின் றொளிருந் தன்னோ டேகமாய்ச் சேர்த்துப் பின்னர்
அவ்விடை விரவும் பண்டா சுரனையு மழலிற் பெய்தான்.

கௌளவை- துன்பம். அவ்விடை விரவும் பண்டாசுரனை என்றது, ஒவ்வோர்
உயிருடனும் எல்லா உடம்பிலும் நுட்பமாகக் கலந்திருந்து, அவை
தீயில் இடப்படுந்தோறும் அவற்ரினின்றும் நீங்கிக்கொண்டே வந்து
முடிவிலெல்லாம் அழிந்தமையால் வேறு நிலையின்றித் தன்வடிவத்தோடு
வந்து நின்ற பண்டாசுரனை என்றவாறு. - 18



1897 - எண்ணரு முயிர்க ளெல்லா மெரியகத் தொடுங்கி நாளும்
கண்வளர் காலத் தெய்து மின்பத்திற் களித்து வாழ்ந்த
அண்ணுதற் கரிய அத்தீ யன்றுதொட் டிலிங்க மாகிப்
புண்ணிய மயான லிங்க மெனப்பெயர் பொலிவுற் றன்றே - 19



1898 - அத்தகை யிலிங்கந் தன்னி லளப்பருங் கருணை பூத்துப்
பைத்தபாப் பல்குற் செவ்வாய்ப் பனிவரை யணங்கி னோடுந்
தத்துநீர் வேணிப் பெம்மான் றன்னடி யிணைக்கீழ்ச் சிந்தை
வைத்தவர்க் கிருமைப் பேறும் வழங்கிவீற் றிருக்கு மன்னோ - 20



1899 - சிவகங்கை வரலாறு
நிகழ்பெரு வேள்வி முற்றி நிறைந்தநெய்க் குண்டந் தன்னைத்
திகழ்சிவ கங்கைப் பேரால் தீர்த்தநா யகமாச் செய்து
புகழப விரத நன்னீ ராடினான் புரமூன் றட்ட
இகழறு சீற்றத் துப்பி னீர்ந்துழாய்ப் பகழி வல்லான்.
புகழ் அபவிரத நன்னீர் ஆடி- வேள்வி செய்வோர் அதனை முடித்தபின்
அபவிரத ஸ்நானம் என ஒரு கிரியை செய்தல் முறை.
துழாய்ப்பகழி -திருமாலாகிய அம்பு - 21



1900 - மறக்களிற் றடியி னேனை யடியெலா மடங்கு மாறும்
உறக்கு மால்வித்தி னுள்ளால் ஒடுங்கிய வாறும் போலத்
திறப்படச் சிவபி ரான்செய் சிவகங்கைத் தடத்தி னண்டப்
புறத்தன அகத்த தீர்த்த மியாவையும் பொலிய வைகும் - 22



1901 - அத்தடம் படிந்து மேனாள் அருந்தவ முனிவர் சில்லோர்
வித்தக மயானத் தெம்மான் அருளினால் வினையி னீங்கி
முத்தியிற் கலந்தார் முளரிநீ ரிலஞ்சி மேன்மை
சித்தமா சகன்றீர் யாரே யிற்றெனத் தெரிய வல்லார் - 23

ஆகத் திருவிருத்தம் 1901
-----

60. திருவேகம்பப்படலம் (1902-2022)




1902 - கலிநிலைத்துறை
கல்வித்தமி ழோர்புகழ் கச்சி மயான மீதால்
தொல்லைத்தவத் தீரினித் தோமறு சீர்த்தி சான்ற
மல்லல்தலங் கட்கர சாமணித் தெய்வக் கோயில்
செல்வத்திரு வேகம்பஞ் சிந்தையுட் கொண்டு சொல்வாம்.
தமிழ்க்கல்வியோர் என மாறுக. ஏகம்பம் என்பது ஏகாம்பரம் என்பதன் திரிபு - 1



1903 - உலகத் தோற்றம்
மயானச்சுட ரின்வடி வான்மணி வண்ணன் தேறாத்
தியானப்பொரு ளாக்கைக ளோடும் விராய சிந்தைத்
தயாவற்ற பண்டன் றனையட்டபி னாவியெல்லாம்
உயாவற்றுட லோடிசை யத்திரு வுள்ளஞ் செய்து - 2



1904 - பகுப்பின்றி மன்னும் பழமாமறை தன்னைநோக்கி
வகுக்கும்படைப் பின்பொருட் டுத்தனி மாவதாகிச்
செகுக்குந்திறல் வல்ல மயானத்தின் மேற்றி சைக்கண்
தொகுக்குந்தளிர் பூகனி துன்ற வயங்கு கென்றான் - 3



1905 - வேறு
தாவ ரும்பழ மாமறை தம்பிரான் அருளான்
மேவ ருந்தனிச் சூதமாய் மயானத்தின் மேற்பாற்
பூவ ரும்பிமென் தளிர்கனி புதுமலர் துறுமி
ஓவ ருங்குளிர் நிழல்குலாய் ஓங்கிய தன்றே - 4



1906 - கொன்றை மாலிகைச் சடைமுடிக் குழகனங் கதன்கீழ்த்
துன்று மானந்தப் பேரொளி யிலிங்கமாத் தோன்றி
வென்ற நல்லெழில் விரிந்ததன் மெய்யிடப் புறத்து
மன்றல் வார்குழ லிலளிதை மாதினை யுயிர்த்தான் - 5



1907 - வணங்கு நுண்ணிடைக் கிடர்செய மதர்த்துமே லெழுந்த
இணங்கு பூண்முலை இலளிதைப் பிராட்டியும் எழுந்தங்
கணங்கு வெம்பவக் கடலின்நின் றருட்கரை விடுக்கும்
நிணங்கொள் சூற்படை நெடுந்தகை திருவடி இறைஞ்சி - 6



1908 - விளங்கு மேகம்பம் மேவிய விமலவிண் ணவர்கள்
துளங்க ஆர்கலி முகட்டுவந் தெழுஞ்சுடு விடத்தைக்
களங்கு லாவவுண் டமைத்தருள் களைகணே யெனக்கு
வளங்கு லாவிய அருட்பணி வகுத்தரு ளெனலும் - 7



1909 - நிரந்த நீளுல குக்குபா தானம்நீ நிமித்தம்
அரந்தை தீர்த்தருள் செய்யும்யா மாதலி னணங்கே
கரந்த வையகம் பண்டுபோற் காண்டகு மாறுன்
சுரந்த பேரெழில் வடிவினில் தோற்றெனப் பணித்தான் - 8



1910 - அரவு மம்புலிக் குழவியு மலையெறி நதியும்
விரவு செஞ்சடைப் பெருந்தகை பணித்தமெய் யருள்தன்
சிரமி சைக்கொடு செறிந்தபல் லுயிர்களும் முறையால்
பரவை நித்தில முறுவலாள் படைப்பவ ளானாள் - 9



1911 - எண்க ணாளனை யெழில்வலக் கண்ணினும் பதும
வண்க ணாளனை மற்றிடக் கண்ணினும் நுதல்மேல்
ஒண்க ணாளனை நள்ளுடைக் கண்ணினு முலவாப்
பெண்கள் நாயகி யீன்றனள் முத்தொழில் பிறங்க - 10



1912 - தழங்கு மங்கியங் கடவுள்கா யத்திரிச் சந்தம்
முழங்கு சீரிர தந்திர சாமமுத் தோமம்
பழங்க ணின்மறை யோருட னயத்தினைப் பரிவின்
வழங்கு பேரருட் கருணைகூர் மதிமுகத் தளித்தாள்

இருக்கு வேதத்திலுள்ள மந்திரங்கள் இருக்குகள் எனப்படும்.
அவற்றை இசை கூட்டிப் பாடின் சாமங்களாம். அவை இரதந்திரம்
முதலிய பெயர் பெறும். தோமம் சாமத்திற்கு உறுப்பு. முகத்தில்
காயத்திரிச் சந்தத்தையும் இரதந்திர சாமத்தையும் மூன்று தோமங்களையும்
அந்தனர்களையும் ஆட்டைஉம் படைத்தனன். அயம் - அஜம்-ஆடு. - 11



1913 - காம ரிந்திரன் திரையிட்டுப் பெனக்கரை சந்தம்
தோமி லைந்துமூன் றுறழ்ந்ததோ மம்பெருஞ் சாமம்
தாம நீண்முடி மன்னவ ரவியினைத் தகைசால்
மாம ணிக்கலன் வயங்குமென் புயத்திடைத் தந்தாள்.
தோளில் இந்திரனையும் திருட்டுப்புச் சந்தத்தையும் பதினைந்து
தோமத்தையும் பிருகத் சாமத்தையும் சத்திரியர்களையும்
அவிசையும் படைத்தனள். - 12



1914 - தக்க விச்சுவ தேவர்கள் சாகதச் சந்தம்
பொக்க மில்வயி ரூபமாம் புகலருஞ் சாமம்
தொக்க மேன்மையிற் பதினெழு தோமமான் வணிகர்
இக்கி ளந்தவை முழுவதுங் கவானிடத் தீன்றாள்,
விச்சுவ தேவர்கலையும் சாகதச் சந்தத்தையும் வயிரூப சாமத்தையும்
பதினேழு தோமத்தையும் பசுக்களையும் வைசியர்களையும்
துடையில் தோற்றுவித்தனள். - 13



1915 - சந்த மாமனுட் டுப்புவை ராசமென் சாமம்
வந்த மூவெழு தோமம்வாம் புரவிபின் னவரைச்
செந்த ளிர்ப்பதத் தீன்றன ளிவர்க்கொரு தெய்வம்
தந்தி லாமையின் முன்னவ ரிவர்தொழுந் தலைவர்.
பின்னவர்- சூத்திரர். முன்னவர்- முன்சொன்ன மூன்று வருணத்தார்.
அனுட்டுப்புச் சந்தத்தையும் வைராச சாமத்தையும் இருபத்தொரு
தோமத்தையும் குதிரைகளையும் சூத்திரர்கலையும் திருவடியில் தோற்ருவித்தனள். - 14



1916 - ஏனைப் புல்மரம் முதலிய பூதகா ரியமும்
மேனிப் பாலுரோ மங்களி னுயிர்த்துமெய் யன்பின்
நானப் பூங்குழல் நாயகி மாந்தரு நீழல்
வானக் கங்கைதோய் முடிச்சடை வள்லலைத் தொழுதாள் - 15



1917 - தொழுத நங்கையைத் தூமடித் தலமிசைக் கொண்டு
முழுது மாகிய முன்னவன் மாந்தரு நிழற்கீழ்
விழும ணித்தவி சும்பரின் விளங்கிவீற் றிருந்தான்
கழுமல் நீங்கியெவ் வுயிர்களுங் களிப்பொடு வளர்ந்த.
கழுமல் - துன்பம் - 16



1918 - மூவர் வரம் பெறல்
அந்த ணாளன்முன் முவருமி லளிதை யவள்பால்
வந்த மாத்திர யேதுயின் றெழுந்தவர் மான
முந்தை வாலறி வெய்தினார் முதல்விதன் பதமும்
எந்தை பாதமுந் தொழுதெழுந் திறைஞ்சியேத் தெடுப்பார்
அந்தணாளன் - பிரமன்
- 17



1919 - அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
தரங்கவெண் புணரி கான்ற தழல்விடம் பருகி யெம்மை
இரங்கியன் றளித்தாய் மற்றும் இன்றொரு பண்டன் றன்னால்
உரங்கெழும் அடியேம் ஆவி முழுவது முய்யக் கொண்டு
வரங்கிளர் கருணை கூர்ந்த வள்ளலே போற்றி போற்றி - 18



1920 - சைவச்செந் தழலின் யாங்க ளாகுதிச் சமிதை யாகச்
செய்வித்து வேள்வி யாற்றுஞ் சிவபிரா னருளி னாலே
உய்வித்து மீள வெம்மை யுதவிய கருணை நாட்டத்
தெய்வப்பூங் கொம்ப ரன்ன செல்விநின் சரணம் போற்றி - 19



1921 - அம்மையாய் அப்ப னாகிக் குருவுமாய்த் தெய்வ மாகிக்
கம்மைநீர்க் காஞ்சி வைப்பி னிருவகை யுருவு தோற்றி
எம்மையு மாண்டு கொண்ட யிருமுது குரவீர் அன்பர்
வெம்மனச் சுரும்பு வீழும் விரைமலர்ப் பாதம் போற்றி - 20



1922 - மைந்தர்கள் குழறிப் பேசு மழலைமென் கிளவி வேட்கும்
தந்தையுந் தாயு மென்னத் தமியரேம் புகழ்ச்சி கொண்டு
புந்திமிக் குவகை பூப்பத் திருவருள் புரியீ ரென்று
நைந்திரு விழிநீர் சோர நயந்திருந் துதிகள் செய்தார் - 21



1923 - மடங்கருங் காதல் மேன்மேல் வளர்ந்தெழக் குடந்தம் பட்ட
முடங்குகால் ஞிமிறு பாயும் முண்டகத் திறையை மாலை
அடங்கமூ வுலகும் நீற்று மண்ணலை யருளின் நோக்கி
விடங்கனி மிடற்றுப் புத்தேள் வேட்டதென் உறைமின் என்றான் - 22



1924 - அவ்வண்ணமே யருளிச் செய்யக் கேட்டவ ரறைத லுற்றார்
கவ்வெனுங் கமலத் தோனு மவ்வெனுங் கரிய மாலும்
மவ்வெனு மரனு மாய மற்றெமை விழியி னீன்ற
இவ்வன்னை காமக் கண்ணி யெனப்பெயர் பெறுக மன்னோ - 23



1925 - சேந்தமென் தளிர்கள் கோதித் தீங்குயி லினிது கூவும்
ஏந்திணர்ச் சாகை தோறு மிளநறா வொழுக்கி வாசப்
பூந்துக ளுகுத்துச் சீதப் புதுநிழல் விரிக்குந் தெய்வ
மாந்தரு வடியின் நீவிர் வைகலும் வதிக வென்றார் - 24



1926 - தவளவெண் ணீற்று மேனித் தலைவனவ் வரங்கள் நல்கி
இவறிமற் றவர்கள் மீட்டு மிணைக்கரங் குவித்து வேண்டப்
புவனமோர் மூன்று முய்யப் புதுநிழல் மாவின் மூலத்
தவிரொளி மயமாய்த் தோன்று மருட்குறி மேன்மை விள்ளும் - 25



1927 - திருவேகம்பப் பெயர் மாட்சி
எண்சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
இன்னி சைச்சுரும் புளமலர்த் தொடைய லிணங்கு
      தோட்டுணை மைந்தர்காள் கேண்மின்
மன்னு ருத்திர னொருவனே பிரம மொன்று
      மற்றிலை யென்பது துணிபால்
பன்னு மெய்ப்பொருட் பிரமமாம் வேத மொற்றை
      மாவெனப் பணைத்தது கண்டீர்
அன்ன தற்கிறையாகிய யாமே யிலிங்க
      மாயத னடித்தலத் துறைகேம் - 26



1928 - ஏதம் நீக்குசொல்வடிவினுந் தனிமா
      யெனப்ப டுந்தரு வடிவினு மதற்கு
நாதர் யாமெனத் தெளிமினிங் கெமது
      நாம மேகம்ப நாதனென் றுரைப்ப
ஆதி மந்திர மஞ்செழுத் திதுவே வைம்பெ
      ருங்கொடும் பாதக மறுக்கும்
ஓது மைவகைப் பிரமமந் திரத்து மஞ்செ
      ழுத்தினு முயர்ந்ததிம் மனுவால் - 27



1929 - விதிவ ழாதபல் லுறுப்புடை மறையின்
      மிக்க தாகுங் காயத்திரி யதனின்
அதிக மஞ்சமா மந்திர மதனி னாறி
      ரண்டெழுத் ததனினெட் டெழுத்தாம்
பதியு மேன்மையெட் டெழுத்தி னஞ்செழுத்
      துக்கோடி கோடிமேம் பட்டதஞ் செழுத்தின்
நுதலு மேகம்ப நாதமா மனுத்தான் நூறு
      கோடியி மிக்கதென் றுணர்வீர்
அஞ்சமாமந்திரம்- aம்ஸ மந்திரம். ஆறிரண்டு எழுத்து- `ஓம் நமோ
பகவதே வாசுதேவாய:`. எட்டெழுத்து- `ஓம் நமோ நாராயணாய`
அஞ்செழுத்து பஞ்சாக்கரம். `ஏகாம்ரநாத:` என்பதனுள் ஒற்று நீக்கி ஐந்தெழுத்தாம். - 28



1930 - அன்ன தன்மையின் மனுயெவற் றினுக்கு
      மதிகமாகிய வேகம்ப நாதன்
என்னும் மந்திரம் இயம்புநா வுடையாற்
      கிப்பி றப்புறும் பெறும்பய னெய்தும்
பன்ன ரும்பெருங் கீர்த்தியும் ஊக்கப் பாடும்
      ஆக்கமு மாயுளும் வளரும்
மன்னு கல்வியுங் கேள்வியு மொழுக்கும்
      வழுக்கி லானவ னேயெனத் துணிவீர் - 29



1931 - கன்னி தந்தைதாய் வேதியர்ச் செகுத்தோர்
      கள்ளு மாந்துநர் கள்ளுநர் குரவன்
பன்னி மாணலம் விழைந்தவர் மற்றைத் தீர்வு
      காணரும் பழிவினை விளைத்தோர்
என்ன ராயினு மேகம்ப நாத னென்னும்
      மந்திரம் ஒருமுறை கணிப்பின்
துன்னும் வெங்கொடும் பாதக மனைத்தும்
      துனைவி னங்கவர் தம்மைவிட் டோடும்
துனைவின் -விரைவுவாக - 30



1932 - அறப்ப யன்பொரு ளின்பம்வீ டென்றா வனைத்து
      மோதுநர்க் களிக்குமிம் மனுவை
இறப்ப வந்துமுற் றிரும்பசிப் பிணிபின்
      னீண்டி யாருயிர் கவற்றும்வல் லிடரின்
மறப்பி னாயினுங் கிளக்க வல்லுநரே மற்றெ
      மக்குமிக் கினியவர் கண்டீர்
சிறப்ப விம்முறை மனுவிதன் பெருமை
      தெரிந்து கூறினர்க் கின்பவீ டளிப்பேம் - 31



1933 - என்று மாவடி முளைத்தெழுந் தருளு மிலிங்க
      மேன்மையை யெடுத்துரைத் தருள
ஒன்று மானந்த வுததியின் மூழ்கி வொன்ன
      லார்க்குடர் குழம்பியுள் வெதும்ப
வென்ற கூர்ம்படைத் தாணுமா லயனாவிளம்பு
      மூவரும் விரைத்தபூந் தொடையல்
கொன்றை வர்சடை முதல்வனார் கமலக்
      கொழும லர்ப்பதந் தொழுதுபோற் றிசைத்து - 32



1934 - காட்டின் நாடகங் குயின்றரு ளிறைவ கம்ப மேவிய கருணையங் கடலே
மோட்டு நீர்ப்புவி வியத்தரு மினைய முதுந கர்ப்பெருந் தன்மையுந் தனிமா
ஈட்டு மேன்மையு மெமக்குரைத் தருளா யென்று வேண்டலு மீர்ந்துண ரிதழித்
தோட்டு மாலிகைச் சடைமுடிக் குழகன் தொன்ன கர்த்திறங் கேண்மினென் றியம்பும் - 33



1935 - காஞ்சித் திருநகர் மாட்சி
கறங்கு வண்டிமிர் கமலமுந் துழாயுங் கடுக்கை மாலையுந் துயல்வரு புயத்தீர்
பிறங்கு கவ்வெனும் மொழிப்பொருள் பிரமம் பிரமமானயாம் அஞ்சிக்கப் படலால்
உறங்கி டாப்புகழ்க் காஞ்சி யென்றுரைக் குமொரு திருப்பெயர் எய்து மிந்நகரம்
அறங்க ரைந்தநூ லெமைப்பரம் பிரம மகில காரண மென்பது தெளிவீர் - 34



1936 - இலகு வாணகை அரிமதர் மழைக்கண் இருண்ட வார்குழல் வேய்மருள் பணைத்தோள்
கலப மாம்யில் இயலெழில் மடவார் உந்தித் தானத்தைக்காஞ்சியென் றுரைப்ப
சுலவு வெண்டிரைப் பனிக்கட லுடுக்கைத்தொல்லை நானில மடக்கொடி தனக்குக்
குலவு காஞ்சிநற் றானமாய்ப் பொலிந்த கொள்கை யானுமத் திருப்பெயர் வழங்கும். - 35



1937 - மற்றுங் கவ்வெனல் சென்னியோ டின்ப மலர வன்றனை யுணர்த்துமஞ் சித்தல்
சொற்ற பூசனை யடைவுமாம் யாருஞ் சென்னி மேற்கொடு தொழத்தகுஞ் சிறப்பால்
பற்றி வைகுநர் பேரின்ப முறலாற் பங்க யத்தவன் வழிபட லானும்
பெற்ற தாகுமித் திருப்பெய ரிதனாற் பிரம லோகமென் றுரைக்கவும் படுமால் - 36



1938 - வீடு பேற்றினர் தேவரென் றுரைப்ப விழையு மிந்நகர் வரைப்பிடை வீடு
கூடும் வாழ்க்கையர் நிறைதலின் தேவ புரமெ னபடுங் கொடுவினைத் திறத்தாற்
பாடு சான்றபோர் புரிவருந் தகவி னயோத்தி யென்னவும் பகரு மிந்நகரம்
நீடு மன்னவர் உறைதரு மயோத்தி நிகழும் முத்தருக் குறைவிடம் அன்றால்.
அயோத்தி- போரில் பகைவரால் வெல்லப்படாதது. இது சீவன் முத்தருக் கிடமாதலால் வினைத்திறத்தால் வெல்லப்படாதது. - 37



1939 - சுவர்க்க மெய்தினர் தேவரென் றோதுஞ் சுருதி யாலது நாக நாடன்று
நவிற்று ருத்திர லோகமே சுவர்க்க மாகு மாதலின் நலங்கெழுஞ் சோதி
நிவக்கு மென்றிடு மயோத்திநீள் பிரம லோகம் நீடொளித் தேவமா புரமும்
புவிக்குள் மேதகு காஞ்சியே யன்றிப் புவனம் மூன்றினும் வேறில்லை கண்டீர் - 38



1940 - இத்தி ருப்பெருங் காஞ்சியி னெம்மை மறலிக் கஞ்சுநர் இகபரம் விழைந்தோர்
நித்த மன்பொடு வழிபடூஉப் பழிச்ச நிறைந்த பேரருட் கருணைபூத் துறைகேம்
மெய்த்த மாமறை முழுது மிவ்வாறு விளம்பும் ஆதலின் மற்றெமக் கினிய
உத்த மப்பதி யிதுவெனத் தெளிமின் ஓங்கு மாந்தருப் பெருமையு முரைப்பாம் - 39



1941 - மாந்தருவின் மாட்சி
மீது மன்னிய மூலமுங் கிழக்கு நோக்கு சாகையு மாய்விரை கமழும்
பாத வந்தனை உணர்ந்தவன் வீடு பற்றும் ஆங்கது பலகனி படைத்துச்
சீத வார்புனல் ஒழுக்கறாக் கம்பைத் திருந திக்கரை மருங்கொலி வேதச்
சூத மாமர மெனத்திகழ்ந் தொளிருந் தொல்லை வையகம் பெரும்பயன் படைப்ப - 40



1942 - ஏழி ரட்டிய கல்வியு மதன்மேல் மல்லி கைக்கொடி எனப்படர்ந் தமரும்
பாழி விச்சைகட் கிறைவியாங் காமக் கண்ணி அத்தரு பசுங்கொடிக் கினியாள்
ஊழி ஈற்றினு முலப்பருந் தகைசான் றோங்கு மாவினுக் குரிமையம் யாமே
ஆழி யேந்திய நாரணன் விரிஞ்ச னரனெ னப்படு மன்புடைப் புதல்வீர்

வித்தை பதினெட்டினுள் வேதம் நான்கும் மாமரமாயினமையின், ஏனைய பதினான்கும் மல்லிகைக்கொடியாயின. வேதமாமரத்திற்கு இறைவர் தலைவர்ரயினமையின் , ஏனைய வித்தைகளாகிய கொடிக்கு அம்மையார் தலைவராயினர். - 41



1943 - மாறி லாமறை யெமது வாசகமாம் வாசகத் தோடு வாச்சியந் தனக்கு
வேறு பாடில்லை யாதலி னெமக்கு மினைய மாவிற்கும் வேறுபா டில்லை
ஈறி லாவிதன் மூலத்தி னென்று மிலிங்க மூர்த்தி யாயு றைகுதும் நெருநல்
காறும் யாவரும் கண்டிலர் இந்நாட் கவுரி யோடுநீர் காணவீற் றிருந்தோம் - 42



1944 - அகில நாமமும் எமக்குரிப் பெயராம் அவற்றி னும்பவன் முதற்பெயர் சிறப்பாத்
தகும வற்றினுஞ் சம்புவே மயோபு சங்க ரன்மயக் கரன்சிவன் மற்றை
இகழ ருஞ்சிவ தரனெனும் பெயர்கள் இனிய வாகுமங் கெவற்றினும் மேலாய்ப்
புகழ்ப டைத்தயே காம்பர நாதன் எனப்பு கல்பெயர் எமக்குமிக் கினிதாம் - 43



1945 - இன்ன தன்மையிற் கான்முளை முதலோர்க் கித்தி ருப்பெய ரிட்டழைப் பவர்க்குத்
துன்னும் வல்வினை முழுவது மகலத் தொலைத்து முத்தியும் செல்வமு மளிப்பேம்
பன்ன ருந்தனி மந்தணம் உமக்குப் பகர்ந்து ளேமெனப் பண்ணவன் இறுப்ப
அன்ன மூவரும் உவகைமீக் கிளைப்ப அம்மை அப்பரை வணங்கிவே றுரைப்பார் - 44



1946 - கம்பாநதி மாட்சி
எழுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
கன்னி மாநதி கம்பை ஒன்றிவண் உள்ள தென்றருள் செய்தனை
இன்ன காரணம் என்று தேறிலம் இறைவ னேயென எம்பிரான்
முன்னெ ழுந்து மதர்த்து வீங்கி முகிழ்த்த மென்முலை அம்பிகை
தன்னை நோக்கி மகிழ்ந்த மைந்தர்கள் கேண்மின் என்றது சாற்றுவான் - 45



1947 - வடிவம் எட்டு நமக்க மைந்தன மறையு ரைக்கும் அவற்றுளோர்
வடிவ மாம்புனல் உலகெ லாமிது தூய்மை செய்யும் வனப்பது
வடிவம் உற்றவர் உயிர்த ளிர்ப்ப வழங்கு மற்றிது மாநதி
வடிவு கொண்டிவன் ஒழுகு கின்றது மன்னு யிர்த்தொகை உய்யவே - 46



1948 - இந்ந திப்புனல் எம்மை நேர்வர யார்வி ழிக்கும் அகப்படா
துன்ன ருஞ்சிவ யோக சிந்தையுள் யாமு றைந்திடு மாறுபோல்
வன்னி லத்தின் அகத்து வார்ந்து வழங்கு கின்றது காண்மினோ
கன்னி யாறிது கம்பை என்றொரு கார ணப்பெயர் பெற்றதே - 47



1949 - அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
பன்னுபா வென்றல் தூய்மை பருகுதல் காப்புங் கூறும்
கன்னிவான் கங்கை யாதி கம்மெனும்புனல்கள் தம்பால்
துன்னிமூழ் குநர்வெம் பாவத் தொகுதிமெய் யழுக்குந் தீரத்
தன்னிடை முழுகித் தூய்மை தாங்கலாற் கம்பை யென்ப. - 48



1950 - கம்மெனுஞ் சிரமேல் தீண்டின் தூய்மைசேர் கவினால் உண்டோர்
கம்மெனு மாவி தம்மைக் காத்தலான் மூழ்கி னோரைக்
கம்மெனும் பெருவீட் டின்பம் நுகர்விக்குங் காட்சி யானும்
கன்மநோய் அறுக்கு மிந்தத் தடநதி கம்பை யாமால் - 49



1951 - எழுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
கங்கை மாநதி யமுனை வாணி முதல்க வின்பெறு நதியெலாம்
ஒங்கு வெண்டிரை எற்று கம்பை நறும்பு னற்கிணை யெய்துறா
மங்க லந்தரு கம்பை மென்புனல் தோய்ந்த காற்று வழங்கிடத்
தங்கண் மேவிய புன்ம ரங்களு மின்ப முத்தியை யண்ணுமால் - 50



1952 - யோக நன்னிலை யிற்ற வத்தின் வழீஇயி னாருயர் கம்பையின்
மோக மில்கய லாதி யாகி யுயிர்த்து முத்தியின் நண்ணுவார்
போகு மக்கரை யிற்கி ளைத்த புத்ல்ம ரங்க ளுருத்திர
லோக நின்று வழூஉம் உருத்திர ராகு முண்மை யுணர்ந்திடீர் - 51



1953 - யாண்டி றப்பவர் கட்கு மிப்புனல் இருதி வேலையி னுச்சியில்
தீண்டு மேலவர் முத்தி யெய்துவர் தீஞ்சு வையமிழ் துண்பவ்ர்
ஏண்ட குந்திற லமர ராகுவ ரினைய பூம்புன லுண்பவர்
ஆண்ட நம்முட னாவ ராதலி னமிழ்தின் மிக்கது கம்பைநீர் - 52



1954 - காட்சி யெய்தரு மேன்மை சான்றுயர் கம்பை வார்புன லாற்றினால்
ஆட்சி யெய்திய பதியெ வற்றினு மதிக மாயது காஞ்சியூர்
மீட்சி யில்புக ழிவ்வி ரண்டினும் வேறெ மக்குள வேணவா
மாட்சி பெற்றுறு கங்கை காசியின் வைத்தி லேமிது மெய்மையே - 53



1955 - பன்னிரு பெயர் மாட்சி
அறுசீர்க்கழிநெடி லாசிரிய விருத்தம்
புவன சாரம் மும்மூர்த்தி வாசம் விண்டு புரம்காஞ்சி
தவமார் கலிசித் திலயசித்து சகல சித்தி தபோமயவூர்
கவினார் பிரம புரமாதி பீடங் கன்னி பாப்பவினைப்
பவநோ யறுக்குஞ் சிவபுரமாப் பகர்பன் னிரண்டு திருப்பெயர்த்தால் - 54



1956 - புவனம் மூன்றன் பயனாகிப் பொலிவு பெறலால் புகழ்தகைய
புவன் சார மெனத்திகழும் புனல்கால் உயிர்தீ இருசுடர்வான்
புவன வடிவாம் நந்தமைநீர் மும்மூர்த் திகளும் பூசித்துப்
புவன மேத்த வைகலின்மும் மூர்த்தி வாச புரமாமால் - 55



1957 - பரவு மேக வாகனமாங் கற்பத் தெம்மைப் பங்கயக்கண்
வரத ராசன் வழிபடலால் விண்டு புரமாம் வளர்காஞ்சி
புரமா யதுமுன் வகுத்துரைத்தாம் பொல்லாக் கலிநோய் கலியுகத்தும்
விரவா வண்ணம் நல்குதலால் விளங்குங் கலிசித் தெனப்படுமால் - 56



1958 - கடைநா ளெமக்கீ தாடரங்காம் கவினா லிலய சித்தாகும்
தடைதீர் சகல சித்திகளும் தரலாற் சகல சித்திபுரம்
படையா வாய்மைத் தவமியற்றிப் பனிமால் வரையின்வரும்
நடையாள் வழுத்தும் பரப்பிரம மயமாம் நகரந் தபோமயமாம் - 57



1959 - வேத னெமக்குத் தகுஞ்சோம வேள்வி செயலாற் பிரமபுரம்
ஆதி பீடம் முதற்பீட மாய சிறப்பால் கன்னியெனுங்
காத லணங்கு புரந்திடலாற் கன்னி காப்பிங் கெமைக்கண்டோர்
பேதமின்றிச் சிவனுண்மை பெறலா லாகுஞ் சிவபுரமே - 58



1960 - வேறு
எடுத்தி யம்புமிப் பன்னிரு நாமமும் வைகறை யெழுந்தோதில்
அடுத்த தீக்கனாக் காட்டிய விடும்பைநோய் வறுமைதீர்ந் தருள்வாரி
மடுத்து வான்கதி யெய்துமா றுமக்கிவை வகுத்தன மருளாலென்
றுடுத்த திக்குடை நாயகன் விளம்பலு முவகையங் கடலாழ்ந்து - 59



1961 - மூவர் விண்ணப்பங் கேட்டு பெருமான் உபதேசஞ் செய்தல்
உலம்ப டைத்ததோள் பண்டனா மவுணனா லொளியிழந் துலந்தேமை
நலம்ப டைத்தவான் சோதியு ளொடுக்கிமீட் டிறைவிதன் நடுவாமம்
வலம்ப டைத்தமூ விழியினும் வருவித்த வள்ளலே அடியேங்கள்
புலம்ப டைத்தினிச் செய்பணி யருளெனப் போற்றினர் முதல்மூவர் - 60



1962 - ஓது மவ்வுரை திருச்செவி சாத்தியெ முளங்களி வரச்செய்யுங்
காதல் மைந்தர்நீ ராதலின் நுமக்கருள் காட்டுது மெனவோர்பால்
போத ளாங்குழல் முகிழ்முலைப் பொலந்தொடிப் பூங்கணை மதர்வேற்கண்
மாதர் வாணுதற் பசுங்கொடி மணந்தவன் வாய்மலர்ந் தருள்செய்யும் - 61



1963 - பிள்ளை வண்டினம் முரன்றுபண் பயிற்றிவார்ந் திழிநறாப் பெருவெள்ளங்
கொள்ளை கூட்டுணும் மலர்த்தடம் பொதும்பரிற் கொழிதமிழ் மறைப்பாடற்
கிள்ளை பாடுசீர்க் காஞ்சியி னென்று மிக்கிளரொளி யிலிங்கத்தே
வெள்ளை வாணகைத் துவரித ழுமையொடு மினிதுவீற் றிருக்கின்றேம்.
'கொழிதமிழ் மறைப்பாடல்', என்றமையால், படைப்புக் காலத்திலேயே
இறைவனால் அருளிச் செய்யப்பட்ட தமிழ்மறைகள் இருந்தன வென்பது
ஆசிரியர் கருத்தாதல் பெறப்படும். - 62



1964 - எம்மை யாவருங் காணல ரொருபொழு தியோகியர்க் கெதிர்காண்பேம்
அம்ம நீரிவண் எம்மடிப் பூசனை யருமறை விதியாற்றான்
மும்மை யாகிய வுலகமும் படைத்தளித் தழிக்குமா முயல்கிற்பீர்
நம்மி டத்துறு பத்தியு மருச்சனை நலத்தினாற் பெறுவீரால் - 63



1965 - படைத்தி பங்கய னளித்திமா லுருத்திரன் பற்றற வுலகெல்லாந்
துடைத்தி யென்றருள் வழங்கியிச் சுரிகுழல் தேவியு மெமையீண்டே
கிடைத்த பேரன்பின் நாள்தொறும் பூசனை யாற்றுக வெனக்கேட்டோர்
அடைத்த நல்விதி புகல்மறை யாதது வந்தவா றெவனென்றார் - 64



1966 - என்ற மூவருக் கிளநிலா முகிழ்த் தெம்பிரா னுரைசெய்யும்
நன்று கேண்மினெம் மிரவிடைத் திருநடம் நவின்றிருள் புலர்காலை
மன்ற வெம்மிடை யொடுங்கிய வுலகுயிர் முழுவதும் வழுவாமே
தொன்று போற்படைத் திடுவது கருதினேம் முத்தொழில் புரிவீர்காள்.
'எம் இரவு' - எமக்கு இரவாகிய சங்காரகாலம் - 65



1967 - படரொ ளிப்பிழம் பாகுமிவ் விலிங்கமே பற்றிநின் றுலகெல்லாம்
உடைய நம்மிடை நிலைபெறு மறைகளை முன்னுற உயிர்ப்பித்தேம்
தொடையி ணங்குமப் பழமறை முழுவதும் நம்மடி தொழு தேத்திக்
கடையி லாதபே ரன்பினாற் பழிச்சின சிரமிசைக் கரங் கூப்பி - 66



1968 - பாரின் மேயினை பாரொரு வடிவினை பாரினுக் கறியொண்ணாய்
பாரும் மற்றை யப்பாரிடைப் பொருளும்நின் னாணையிற் பயில்வித்தாய்
நீரின் மேயினை நீரொரு வடிவினை நீரினுக் கறியொண்ணாய்
நீரும் மற்றையந் நீரிடைப் பொருளுநின் னாணையின் நிலைப்பித்தாய் - 67



1969 - நெருப்பின் மேயினை நெருப்பொரு வடிவினை நெருப்பினுக் கறியொண்ணாய்
நெருப்பும் மற்றையந் நெருப்பிடைப் பொருளுநின் னாணையின் நிறுவித்தாய்
மருத்தின் மேயினை மருத்தொரு வடிவினை மருத்தினுக் கறியொண்ணாய்
மருத்தும் மற்றையம் மருத்திடைப் பொருளும்நின் னாணையின் வதிவித்தாய் - 68



1970 - விண்ணின் மேயினை விண்ணொரு வடிவினை விண்ணினுக் கறிவொண்ணாய்
விண்ணும் மற்றையவ் விண்ணிடைப் பொருளுநின் னாணையி னிறுவித்தாய்
கண்ணு மாருயி ரிருசுட ரெவற்றினு மிம்முறை கலந்தோங்கி
எண்ணி னாலறி வரும்பெரு முதல்வநின் இணையடி மலர்போற்றி.
67, 68, 69 ஆகிய இச்செய்யுட்களில் இறைவன் அட்டமூர்த்தமாயும்
அவற்றின் வேறாயும் உடனாயும் இருப்பது கூறப்பட்டது. 'மேயினை'- உடனாதல்.
'வடிவினை'- ஒன்றாதைல், 'அறிவொண்ணாய்'- வேறாதல் - 69



1971 - கலிவிருத்தம்
இன்ன வண்ணம் பழிச்சி யெமைத்தொழும்
மன்னு மன்பின் மறைகளை நோக்கிநீர்
நன்னர் வேட்டன நல்குதும் வேதங்காள்
சொன்மின் என்றலுஞ் சொல்லுத லுற்றன - 70



1972 - எந்தை நின்முகத் தெங்களை ஈன்றனை
அந்த மெய்ப்பெரும் பேறுடை யெங்களைச்
சிந்தை செய்து திருவருள் வைத்துநின்
சந்த மேனி அணியெனத் தாங்குவாய் - 71



1973 - நயக்கு மாறினி நாங்கள் உலகிடைச்
செயத்த கும்பணி செப்புதி மற்றெமை
வியப்ப வேதங்கள் என்று விளித்தனை
உயர்த்த வப்பெயர்க் காரண மோர்கிலேம் - 72



1974 - என்ற மாமறை தம்மை யியல்பினால்
அன்று கோவணம் நூபுர மாதியா
மன்ற மெய்யணி யாக்கி மகிழ்ந்துபின்
ஒன்று கூறினம் ஊங்கிவை கேட்பவே - 73



1975 - அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
அறம்பாவ மென்றிரண்டி னெம்முண்மைத் தன்மையினு மகில லோகந்
திறம்பாமற் பிரமாண மாவீர்வித் தெனும்பகுதி ஞானஞ் செப்பும்
புறம்பாயா மனப்பெரியோர் நும்மொழியா னெமையுணரும் பொலிவான் வெள்ளிப்
பறம்பாறா மெமக்கினிய பான்மையீர் வேதமெனப் பெயர்பெற் றீரால்

அறம்பாவம் என்றிரண்டினும் எம் உண்மைத் தன்மையினும்
என உம்மையைக் கூட்டுக. வெள்ளிப்பறம்பு ஆறாம் - கயிலை மலைக்கு வழியாகும். - 74



1976 - வேதியர்கள் முதல்மூவ ருமையோதி வீடுபே றடைக முற்றும்
ஓதுமறை யிரண்டானு மொன்றானு மோதாது புறநூல் கற்கும்
ஏதிலிரு பிறப்பாள ரிருட்குழிவீழ்ந் திடர்ப்படுவா ராக நீயிர்
பேதியா மெய்யன்பி னெமையீண்டு வழிபாடு பேணி வாழ்மின் - 75



1977 - உலகுய்தற் பொருட்டுநா மெவ்விடத்தி னெவ்வுருவ மெடுப்போ மங்கண்
நலமெய்து மதற்கியைந்த வடிவம்நீர் கொள்கென்று நயப்ப முன்னாள்
அலர்தலைமா நிலம்பரசு மிந்நகரின் வரமளித்தே மடியா ருட்கும்
வலமன்னுந் திரள்திண்தோள் மைந்தர்க ளாதலி னம்மறைக ளெல்லாம் - 76



1978 - ஈங்குநாம் பரஞ்சோதி யிலிங்கவடி வாயமர்ந்தே மாக ஈண்டைத்
தேங்க விழ்க்குங் கவிழிணர்ப்பூங் கனிதுவன்று மொருமாவாய்த் திகழ்ந்து நின்ற
வீங்குதிறற் புரம்மூன்று மிறுத்தநாள் போர்க்கோலம் மேயி னேம்யாம்
ஆங்கவையுங் கொய்யுளைவெங் கலினவாம் பரிவடிவா யமைந்த காண்மின் - 77



1979 - மற்றைவே டுருவாதி வடிவம்நாங் கொண்டுழிமா மறையு மாங்கண்
பற்றமைகூ ருகிர்ஞாளி முதலியவாய்ப் போந்தனவிப் பதியு ளோர்பால்
வெற்றிநடம் புரிகாலை நூபுரமாய்ப் பொலிந்தன அவ்விரிநீர்ச் சூழல்
அற்றைநாள் முதல்வேத நூபுரப்பேர் பெற்றுவினை யறுக்கு மாலோ - 78



1980 - மாண்டபெரு வளம்படைத்த தாருகா வனத்திடைநாம் பயிக்க வேடம்
பூண்டவழிக் கோவணமாய்ப் பொலிந்தனவா லிவ்வாறு நம்பால்
வேண்டும்வரம் பெற்றோங்கும் வேதநு லுணராதா ரெம்மைத் தேறார்
ஆண்டகைமை வேதியர்க்கு மேம்பாடு வேதமே யாகு மன்றே - 79



1981 - இத்தகைய மாமறைநூல் முந்நாளித் திருக்காஞ்சி வரைப்பில் தென்சார்
தத்துநீ ரலைபுரட்டுஞ் சேயாற்றின் தடங்கரைக் கணிமையோர் கட்கும்
மெய்த்தவர்க்கு மோதுவித்தோ மாதலினான் மேவுதிரு வோத்து ரென்னும்
அத்தலத்தி னெமைத்தொழுவோர் அருமறைநூல் முழுதுணர்ந்து வீடு சேர்வார். - 80



1982 - இன்னமறை விதியாலிவ் வேகம்பத் தெமைப்பூசை யியற்றீ ரென்னப்
பன்னகப்பூ ணணிமார்பிற் பரமேட்டி பணித்தமொழி பேணி யன்னோர்
சென்னிமிசைக் கரங்கூப்பி யானந்தப் பெருங்கடலில் திளைத்து வாழ்ந்து
பொன்னிமயப் பிடிமணந்த மனவாளன் நம்பிகழல் பூசிப் பாரால் - 81



1983 - இலளிதை முதலியோர் இறைவனை வழிபடல்
கலிவிருத்தம்
சயமுறு காரணத் தலைவர் மூவரைக்
கயல்விழித் தோற்றிய காமக் கண்ணியாம்
பெயரிய இலளிதைப் பிராட்டி வானளாய்
உயரிய மாமுதல் ஒளியைப் பூசித்தாள் - 82



1984 - மற்றதற் கணியதென் மருங்கி னப்பெயர்
பற்றிய சிவக்குறி நிறுவிப் பாயிதழ்
பொற்றசெந் தாமரைப் புனிதன் பூசனை
தெற்றெனச் செய்தனன் தெளிந்த சிந்தையான் - 83



1985 - பன்னரு மாமுதல் வாம பாகத்தின்
அன்னண மணியணி யகன்ற மார்பினான்
மன்னிய வுலகெலாம் மயக்கு மாசையின்
பொன்னவிர் மலர்கொடு பூசை யாற்றினான் - 84



1986 - பேதமில் பாவனை பிறங்கத் தாணுவும்
காதலிற் பூசைமுன் னியற்றிக் கண்ணுதல்
மேதகை யடிகளோ டொருமை மேயினான்
ஆதலி னிருவர்க்கு மில்லை வேற்றுமை - 85



1987 - வெள்ளக் கம்பர்
வாலிய சிந்தையான் மலர்ப்பொ குட்டணை
மேலவன் வழிபடும் வெள்ளக் கம்பனை
ஆலிய அன்பினால் அருச்சித் தேத்துவார்
தோலுடற் பொறைகழீஇத் தூய ராகுவார். - 86



1988 - கள்ளக்கம்பர்
மருள்புரி கருத்தினான் மாய னேத்தலின்
கருதுமப் பெயரிய கள்ளக் கம்பனைத்
திருவடி வழிபடப் பெற்ற சீரியோர்
உருகெழு கொடுவினை மைய லுட்படார் - 87



1989 - நல்ல கம்பர்
உருத்திரன் நகத்தகு மொருமை பூண்டுயர்
கருத்தொடும் வழிபடு நல்ல கம்பனை
அருத்தியின் வழிபடும் அடிய ரெம்பிரான்
மருத்தபூந் திருவடிக் கலப்பின் மன்னுவார் - 88



1990 - கருதரு நல்லனே கள்ளன் வெள்ளனேர்
தருதிரு வேகம்ப னென்று தன்னொடு
மருமலர்க் கவிழிணர் மாவின் நீழல்வாழ்
ஒருவனே நால்வகை யுருவம் மேயினான் - 89



1991 - தென்னுயர் கச்சியின் அகில சித்தியும்
மன்னுயிர்க் குதவிய மகிழ்ந்த நம்பிரான்
அன்னணம் பூசைகொண் டருளி மூவர்க்கு
முன்னிய வரங்களும் முறையின் நல்கினான் - 90



1992 - இறைவி வேண்டுகோள்
இறைவியிம் மாநிழ லினிது வைகிய
மறைமுத லடியிணை வழிபட் டேத்துபு
நிறைபெரு மகிழ்ச்சியின் நீடு காதலாற்
குறைவறு வரம்பல குறித்து வேண்டுவாள் - 91



1993 - வேறு
வேதக் கோவண வேதப் புரவிய
வேதப் பூணவ வேத முதல்வனே
வேதத் தானு முணர்வரு மேதகாய்
வேதச் செல்வயென் விண்ணப்பங் கேண்மதி - 92



1994 - மன்ற லார்மறை மாவி னடித்தலத்
தென்றும மேவுதி யேனுமி யோகியர்க்
கன்றித் தோன்றிலை யாயினை ஈண்டினி
மன்ற யாவர்க்குங் காட்சி வழங்குவாய் - 93



1995 - தெள்ளு தீம்புன லித்திருக் கம்பையும்
வள்ள லோரிடைக் காண்டக மன்னுகென்
றொள்ளி ழைக்கிரி யுத்தமி வேண்டலும்
பிள்ளை வெண்பிறைக் கண்ணியன் பேசுமால் - 94



1996 - இறைவன் கூறல்
வேறு
மன்னுயிர் முழுவதும் பயந்த மாணிழாய்
அன்னவை யுய்யுமா கருதி யன்பினால்
இன்னவை புகன்றனை மகிழ்ச்சி யெய்தினேம்
பன்னுதும் மனங்கொளப் பரிந்து கேண்மதி - 95



1997 - மேதகு சிற்பர வியோம ரூபம்நீ
ஓதிய சிற்பர வியோம ரூபியாம்
மாதர்வா ணுதலியப் பரம வானமும்
பேதுற வொழிக்குமிப் பிலத் துவாரமே - 96



1998 - மற்றிரு வேங்கட்கும் வடிவ மாகுமப்
பொற்றனிப் பிலத்தினைப் புண்ணி யஞ்செய்து
பற்றறத் துறந்தவர் காண்பர் பற்றமை
சிற்றறி வுடையவர் தமக்குச் சேயதே - 97



1999 - ஆயிடை மகிழ்ந்தினி துறைது மாய்தொடி
மேயவப் பிலத்தினும் மிக்க காதலின்
ஏயுமிச் சுடரொளி யிலிங்கத் துன்னொடு
மாயிரும் புவிதொழ மன்னி வைகுகேம் - 98



2000 - இதற்குமுன் னீண்டெமை யெவருங் காண்கிலர்
இதற்குமேல் நீபெறு மெழில்வ ரத்தினாற்
கதித்திட யாவருங் கண்டு போற்றுக
கதிர்த்தவான் பிலத்திடை யுனையுங் காண்கவே - 99



2001 - எற்றுநீர்க் காஞ்சியே யெமக்கு மேனியாம்
தெற்றெனத் தெளிமதி யினைய சீர்மையான்
முற்றொளி வானவர் முனிவர் தாமெலாம்
மற்றிவண் விளங்கியும் மறைந்து வைகுவார் - 100



2002 - உலகமிக் கோயிலி னுறுப்பு முற்றுமாய்க்
குலவியீங் கெமைத்தொழு துறையுங் கோற்றொடிப்
புலவுவேல் இணைவிழிப் புளகப் பூண்முலை
இலவிதழ் மதிநுத லிமய மாதராய். - 101



2003 - அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
விரவுசீர் நல்ல கம்பம் விளங்கொளி வெள்ளக் கம்பம்
வரமருள் கள்ளக் கம்பம் வண்டிரு மயானம் வாலீச்
சரமெனு மிலிங்க மைந்தில் தகுபஞ்ச பிரம மாகி
இரவுசெய் குழலாய் நின்னோ டினிதுவீற் றிருப்பங் கண்டாய் - 102



2004 - வாலீச்சரம்
என்னலு மிறைஞ்சி நல்வா லீச்சரம் யாங்க ணெந்தாய்
அன்னது கண்டோர் யாவ ரதன்திறம் யாதோ வென்னப்
பொன்னவிர் சுணங்கு பூத்த பொம்மல்வெம் முலையாள் கேட்ப
கன்னல்வே ளெரிய நோக்குங் கண்ணுத லருளிச் செய்யும் - 103



2005 - வாலிமா விலிங்க மேன்மை கேண்மதி மயானக் கீழ்சார்
சீலமார்சித்தர் பல்லோர் சித்திகள் வேண்டிப் போற்ற
மூலமாய் ஒளியாய் இன்பாய் முகிழ்த்தது வாயு லிங்கம்
ஏலவார் குழலா யென்றும் மகிழ்ந்தினி திருப்பே மங்கண் - 104



2006 - வாலிமுன் தொழுது நேர்ந்தார் வலத்தினிற் பாதி யாண்டுந்
தோல்வியில் வாகை யோடும் பெற்றனன் தோகா யென்றான்
கோல்வளை வாலி யென்பான் யாரெவன் குமரன் மற்றுன்
பால்வரம் பெற்ற தெவ்வா றென்றலும் பகர லுற்றான் - 105



2007 - பண்ணவர் முனிவ ரான்றோர் பாங்குற மிடைந்து வைக
விண்ணவர்க் கிறைவன் புத்தேள் வேத்தவைத் தவிசின் மேனாள்
நுண்ணிடை யணங்கு நல்லார் மின்கொடி நுடக்கம் மானக்
கண்ணெதி ராடு மாடல் கண்டுவீற் றிருந்தா னாக - 106



2008 - ஆங்கவ ராடல் காணு மாசையா லிருள்கால் சீக்குஞ்
செங்கதிர்க் கடவுள் மான்தேர் செலுத்துரு மருண னாங்கண்
வெங்கதிர் விடைபெற் றேகி யரம்பையர் விண்ணோ ரெல்லாம்
எங்கணும் நிறைந்த வாற்றா லிடம்பெறா திதனைச் செய்வான் - 107



2009 - அற்புத வனப்பின் வாய்ந்த அரம்பைய ரெவர்க்கும் முன்னர்
நிற்பது நோக்கித் தானும் நேரிழை வடிவு கொண்டு
பொற்புறு மாடல் பார்த்து நிற்றலும் புல்லா ருட்கும்
மற்பொலி குலிசப் புத்தேள் அத்தகை வடிவைக் கண்டான் - 108



2010 - காண்டலுங் குழைத்த வில்வேள் கடுங்கணைக் கிலக்க மாகி
மூண்டவெங் காம மூழ்கி முரணினால் வலிந்து பற்றி
ஆண்டொரு பாங்க ரெய்தி யணிமுலை பொதியப் புல்லிப்
பூண்டபே ரின்ப வெள்ளப் புதுநலம் பருக லோடும் - 109



2011 - வாலி பிறப்பு
அரக்கர்கோன் நகைப்ப நந்தி வெகுண்டுனை யழிப்ப வல்வா
னரக்குலந் தாமே யென்னச் சபித்தவா நயந்து விண்ணோர்
குரக்கின மானா ரன்றே யினையவன் குரக்கு வேந்தாய்ச்
சுரர்க்கிறை கூற்றா லப்போ தாயிடைத் தோன்றி னானால்
br> இராவணன் குபேரனிடத்திலிருந்து கவரந்த புட்பக விமானத்தின்மேலேறு
ஆகாயவழியாகக் கயிலைக்கு அருகில் வந்தான். கயிலைமலை விமானத்தைத்
தடுக்கவே, தடையுற்று நின்று காரனத்தை ஆராய்ந்தான். அப்பொழுது
நந்திதேவர் வந்து, இது இறைவன் இருக்கும் மலையாதலின் வேறு வழியில்
செல்க அஎனக் கூறினார், அதைக் கேட்ட இராவணன் சினந்து,
குரங்கு ம்கம் உடையவனே, நீ யார் என்னை மருட்ட என எள்ளி நகைத்தான்,
நந்தி தேவர் வெகுண்டு ‘ நீ என்னைக் குரங்கு முகனென்று பழித்தாய்.
உனது நகரம் குரங்குகளால் அழியக் கடவது’ எனச் சபித்தார். - 110



2012 - ஆயபின் கூத்து நோக்கி யாவயின் நின்று போந்து
சேயொளிப் பரிதித் தேர்மேல் திகழ்ந்தனன் வலவ னாகக்
காய்கதிர்க் கடவுள் அங்கண் நிகழ்ந்தமை கடாவி முற்றும்
வாய்மையிற் புகலக் கேட்டவ் வடிவிவண் காட்டு கென்னா - 111



2013 - உவகைமீ தூர மேன்மேல் வேண்டலு மூரு வில்லான்
பவளவாய் கரிய கூந்தல் பான்மொழி திதலை பூத்த
குவிமுலை பரந்த அல்குல் கோல்வலைத் தளிர்க்கை தோற்றிக்
கவினுருக் கொண்டா லென்னக் காட்டினன் தனாது பெண்மை.
ஊரு இல்லாந் துடையில்லாத அருணன். - 112



2014 - சுக்கிரீவன் பிறப்பு
காண்டலுங் கதிரோன் றானுங் காமுற்றுக் கலவி செய்ய
ஆண்டகைச் சுக்கி ரீப னாயிடைப் பிறந்தா னிப்பால்
மாண்டகு மகவா னீன்ற வாலியைக் கமலக் கையால்
தீண்டின னுச்சி மோந்து செவியறி வுறுத்தல் செய்வான் - 113



2015 - பண்ணவர் முனிவர் யாரும் பரவினர் பேறு பெற்ற
புண்ணிய நகரங் காஞ்சி யாயிடைப் போந்து முக்கண்
அண்ணலைத் தொழுது மைந்தா கவிகளுக் கரசாம் பேறு
நண்ணுகென் றுரைப்ப வாலி நளிர்புனற் காஞ்சி புக்கான் - 114



2016 - நடலைவெம் பிறவி மாற்றுஞ் சிவகங்கை நன்னீ ராடிச்
சுடரொளித் திருவே கம்பந் தொழுதுபோய் மயானக் கீழ்பால்
மடனறச் சித்தர் பல்லோர் வழிபடும் பெருமை சான்ற
கடனுடை வாயு லிங்கங் கண்களி பயப்பக் கண்டான் - 115



2017 - மடல்பெறு வேட்கை யாளன் வாயுவின் மிடலென் றெண்ணிக்
கடல்புரை யன்பி னங்கட் கைதொழூஉத் தவங்க ளாற்றி
மடலவிழ் கடுக்கை நம்பால் வரம்பல கொண்டு நேர்ந்தார்
அடல்வலி பாதி யோடு குரக்கினத் தரசும் பெற்றான் - 116



2018 - பெற்றபி னிலிங்கந் தன்னைப் பிறங்குதன் னிருக்கை யுய்ப்பான்
பற்றினன் வலியாற் காஞ்சிப் பதிநமக் கினிய வாற்றான்
மற்றவன் பெயர்க்க லாற்றான் மிடலெலாம் வைத்து வாலிற்
சுற்றியீர்த் தணிவா லிற்றுத் தூரத்தே யலறி வீழ்ந்தான் - 117



2019 - வீழ்ந்தவ னெழுந்து வந்து மென்மல ரடிகள் போற்றித்
தாழ்ந்தெழுந் தடியே னில்லந் தனிலெழுந் தருளிச் சூடும்
போழ்ந்தவெண் மதியாய் செய்யும் பூசைகொண் டருளா யென்று
சூழ்ந்துநின் றிரந்து வேண்டத் தோன்றிமுன் னிதனைச் சொன்னேம் - 118



2020 - கச்சிமூ தூரின் நீங்காக் காதல மெம்மை யீண்டே
அர்ச்சனை புரிதி நின்வா லழுந்திய தழும்பு பூண்டு
சச்சைவெண் ணீற்று வாலீச் சரனென விளங்கித் தோன்றி
முச்சகம் பரச வாழ்து மெனமொழிந் திலிங்கத் துற்றேம் - 119



2021 - அன்றுதொட் டனைய சூழ லற்புதத் திருவா லீசம்
என்றொரு பெயரி னோங்கும் ஏரிழாய் பஞ்ச தீர்த்த
மன்றநீர் வாவி மூழ்கி வகுத்தவிப் பஞ்ச லிங்கம்
நன்றுகண் டேத்தப் பெற்றோர் நலிவினைப் பிறவி தீர்வார் - 120



2022 - இன்னணமருளிச் செய்து பொலங்குவட் டிமயம் பூத்த
மின்னொடும் மூவ ரோடும் விளங்கொளித் திருவே கம்பந்
தன்னிடைக் கரந்து நின்றான் சதாசிவப் புத்தே ளந்த
நன்னகர்ப் பெருமை முற்றும் யாவரே நவில வல்லார் - 121
ஆகத் திருவிருத்தம் 2022
--------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III