Kāñcip purāṇam V


சைவ சமய நூல்கள்

Back

காஞ்சிப் புராணம் V
கச்சியப்ப சிவாச்சாரியார்



திருவாவடுதுறை யாதீனம்
சிவஞான சுவாமிகள் அருளிய
காஞ்சிப் புராணம்

பாகம் 4b - (2023 -2742)


61. தழுவக்குழைந்த படலம் 2023-2449

62. திருமணப்படலம் 2450-2531

63. விம்மிதப்படலம் 2532-2553

64. ஒழுக்கப்படலம் 2554-2621

65. சிவபுண்ணியப்படலம் 2622-2742

    காஞ்சிப் புராணம்

    61. தழுவக்குழைந்த படலம் (2023- 2449)




    2023 - எண்சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    கம்ப மால்கரி யுரித்தவர் சிரமேற் கம்ப
          தித்தவர் பசும்பொழில் தலத்துக்
    கம்ப லம்விரித் தெனமலர் பரப்புங் கம்பம்
          மேவிய தொருசிறி துரைத்தாம்
    கம்ப லைத்ததிர்த் தெழுந்துமீக் கடுகுங்
          கம்பை மாநதிப் பெருக்கினைக் காணூஉக்
    கம்பம் உற்றுமை தழுவ மெய் குழைந்த
          கருணை மேன்மையுங் கட்டுரைத் திடுவாம்
    கம் பதித்தவர்.-நீரை வைத்தவர். கம்- நீர். - 1



    2024 - பொற்ற தாமரைப் பொகுட்டனைக் கிழவன்
          புகுத லுற்றதற் புருடகற் பத்தில்
    பற்றும் வைகறைத் துயிலொழிந் திமயப் பாவை
          பாகனார் அடிதொழு தெழுந்தான்
    முற்றும் வெள்ளநீர்ப் பரப்பிடை யவனி
          முழுது மாழ்ந்தது கண்டுளங் கவன்று
    மற்றி னிச்சக வகிலமும் படைக்கும்
          வண்ணம் யாதென மயங்குறும் பொழுது - 2



    2025 - பூதி மேனியார் திருவருள் கூடிப் புரிந்த
          முன்னிகழ் உணர்ச்சிவந் தெய்த
    ஆதி கற்பத்தில் எதிரெழுந் தருளி யண்ண
          லார்கற்பந் தொறுந்தொறும் நின்பால்
    சோதி சேரெழிற் குமாரநல் வடிவால் தோன்றி
          நாமுனக் கருளுது மென்னாப்
    பேதி யாவகை தனக்கு முன்னளித்த
          பெருவ ரத்தினைத் தெளிந்தனன் பிரமன் - 3



    2026 - அன்ன தன்மையி னின்றுமங் கவரே யருள்செய்
          வாரெனத் துணிபுடை மனத்தால்
    தன்னு தற்றலத் தடியிணை கருதித்
          தவங்கள் பல்பக லாற்றுழித் திகழுஞ்
    சென்னி யாற்றின ருத்திர காயத் திரியி
          னோடெழிற் குமாரநல் வடிவாய்
    முன்ன ரெய்திட நோக்கியம் மனுவான்
          முதல்வ னார்தமை யுணர்ந்துகை தொழுது

    உருத்திர காயத்திரி- ருத்திர காயத்திரி மந்திரத்துக்குரிய தேவி. அம்மந்திரம்- 'தத்புருஷாய வித்மஹே மஹாதேவாயதீமஹீ தந்நோருத்ர ப்ரசோதயாத்'` தற்புருடற்கு... ... அருளுக` என்பது இதன்பொருள் - 4



    2027 - ஏற்ற தற்புரு டற்குற நினைது மெமக்கு
          ருத்திர னருளுக வென்னும்
    ஆற்றல் சான்றகா யத்திரி மனுவை யனைத்து
          மாக்குவான் முறையுளி கணித்துப்
    போற்ற வார்ந்திழி யருவியங் குவட்டுப் பொருப்பு
          வில்லவர் கருணைகூர்ந் துலகந்
    தோற்று மாறருள் கொடுத்தெழுந் தருளத்
          தோட்டு வெண்மலர்க் கலைமகள் துணைவன் - 5



    2028 - ஒருமை யன்பினப் புருடனை நினைந்தாங்
          குலக மாக்குழி யாண்மையே தோன்ற
    முருகு லாங்குழற் பெண்மையும் படைப்பான்
          முயன்றும் எய்திலன் புந்தியின் தேர்ந்து
    புருட னுக்கெனத் தற்பொருட் டெய்தும்
          பொருண்மை நீத்தனன் சகத்திர நயனப்
    புருடன் றன்னுடைப் பேரருள் நினைகே
          முருத்தி ரப்பிரா னெமக்கருள் புரிக
    அப்புருடன் - தன் முன் தோன்றிய குமாரவடிவ இறைவனை.
    ஆண் என்னாமல் `ஆண்மை` என்றார், எப்பிறப்பினும் ஆண் பெண் என வேறு
    நிற்பனவன்றி, அவ்விருதிறப் பொருள்களில் தனித்தனியும் ஆண்மை பெண்மை என்னும்
    இருதன்மையும் உள;அவ்விருதன்மையின் கலப்பினாலேயே எப்பொருளும்
    நிலைபெறும். இப்பொழுது, பிரமன் இறைவனது குமாரவடிவே நினைவில் நின்றதால்,
    பெண்மை தோன்றாது ஆண்மையே தோன்றிற்று. தற்பொருட்டு எய்தும்
    பொருள் என்றது,’தனக்கு’ என நான்காம் வேற்றுமையாகப் பொருந்தும் பொருள் என்க. - 6



    2029 - என்னும் வேறுகா யத்திரி மனுவை யெழிற்பு
          ணர்ச்சியி னுலகமுண் டாக்க
    மன்னு சீர்க்கிழ மைப்பொருள் வாய்ப்பக்
          கணித்து மாதவம் புரிவுழி வகிர்நாப்
    பன்ன கம்புனை சடைமுடிப் பிரானார் பாதி
          பெண்ணுருத் திகழ்தரு வடிவான்
    முன்ன ரெய்தியிம் மனுவினைக் கணித்தாய்
          முளரி வாழ்க்கைநீ வேட்டது தெளிந்தேம்.

    கிழமைப் பொருள்- சம்பந்தப் பொருள். இது ஆறாம் வேற்றுமைக்குரியது. தற்புருடனுக்கு
    என்னும் பொருளுடைய காயத்திரியைச் செபிக்குங்கால் ஆண் கூறாகிய
    இறைவனையே நினைத்தமையின் ஆண் தன்மையே தோன்றிப் பெண் தன்மை
    தோன்றிலது. அதனை அறிந்து புருடனுடைய அவ்விறைவனுடைய சத்தியையும்
    உடன் நினைத்து இம் மந்தரத்தைக் கூறினார். இறைவன் அமையப்பராகத்
    தோன்றி பிரமன் விரும்பியவரத்தை அருளினார் என்க - 7



    2030 - நினக்கு நாயகி யிவளெம திடப்பால்
          நின்று நீங்குபு தன்னொரு கூற்றால்
    உனக்குப் பெண்ணுருப் படைத்திடு
          மாற்ற லுதவு மென்றுரைத் தருளவக் கணமே
    தனக்கு நேர்வரும் பிராட்டியு மங்குத்
          தணந்து தோன்றுபு தன்னொரு கூற்றின்
    வனப்பு மிக்கவே றணங்கினைப் படைத்து
          மலர்ப்பொ குட்டனை யவற்கிது வகுப்பாள் - 8



    2031 - இவளை நாள்தொறும் நீவழி பட்டுப் பெண்கள்
          யாரையும் படைத்தியென் றியம்பி
    அவளை நோக்கிநின் கூற்றினிற் பெண்க
          ளனைத்தும் நீபகுத் திடுகென வருளித்
    தவள முண்டகக் கிழத்திதன் கொழுநன்
          றனக்கு நல்கித்தன் தலைவரை மணந்தாள்
    கவள வெங்கரி யுரித்தவர் தாமுங் கருணை
          செய்துபோயக் கயிலையைப் புக்கார் - 9



    2032 - புக்க பின்தனைத் தொழுதுபோற் றிசைக்கும்
          போதி னானையவ் வளைக்கையாய் நோக்கி
    நெக்க சிந்தையோய் நினக்கியான் புரியும்
          நிகழ்ச்சி யாதென மலரவன் வணங்கித்
    தொக்க பேரருள் எந்தையாரிடத்துத் தோன்று
          மன்னைநீ பெண்ணுரு முழுதுந்
    தக்க வாபடைத் தருள்கதில் லன்றேற் படைக்கு
          மாற்றலென் றெனக்கருள் புரியாய் - 10



    2033 - இறைவி தக்கன் மகளாதல்
    உம்பர் போற்றுநின் திருவடிப் பொடியை யுச்சி
          மேற்கொண்டு நான்படைக் கின்றேன்
    அம்பை யின்னமோர் விண்ணப்ப முளதா
          லடிய னேன்பெறு தக்கன்றன் மகளாய்
    இம்பர் நீயவ தரித்திடல் வேண்டு மென்று
          வேண்டலு முலக மீன்றளித்த
    கொம்பர் நுண்ணிடை யெம்பெரு மாட்டி
          கூர்த்த பேரருட் கருணையி னுணர்த்தும் - 11



    2034 - முழுது மாயுயிர்க் குயிரெனத் திகழும்
          முதலு ருத்திர னென்றிடுஞ் சுருதி
    தழுவி யாங்கவ னிடப்புறம் மேவுஞ்
          சத்தி யானவன் சத்தி யனதனால்
    தொழுத குந்திற லவன்திரு வடிவாம்
          தொல்ச கங்களி னிடப்புற மெனதாம்
    பழுதி லாளநின் வடிவினைப் பகுத்துப்
          பாதி பெண்மையாண் பாதியில் திகழ்தி - 12



    2035 - அண்ண லாரருட் சத்தியுஞ் சிவனு மாய
          தன்மையி னன்றுதொட் டுலகம்
    பெண்மை யாண்மையென் றிருவகைப் புணர்ப்பாற்
          பெண்ணு மாணுமாய்ப் பிறங்குமென்றியம்பிப்
    பண்ணை மாமறைக் கடவுளுக் கருளிப்
          பாவை யம்பிகை யாயிடைக் கரந்து
    மண்ணெ லாமுய்யச் சதியெனும் பேரால்
          வயங்கு தக்கனுக் கொருமக ளானாள் - 13



    2036 - ஆய நங்கையை விதியுளி யரனார்க்
          களித்து நான்முகன் அன்னணந் திகழ
    மாயி ருஞ்சக மாணொடு பெண்ணா
          வயக்க முற்றன அகிலநா யகியும்
    பாயும் வெள்விடைப் பாகரை மணந்து
          பழித்த தக்கனை வெறுத்தவன் மகண்மை
    மேய மேனியை நீத்திம கிரிக்கு
          மேனை பால்மக ளாயவ தரித்து - 14



    2037 - அங்கண் மேவிய பிஞ்ஞக னேவற் பணியின்
          மேவின ளாகமற் றந்நாள்
    பங்க யத்தவன் நல்கிய வரத்தால் தாரு
          காசுர னெனெனப்பயில் கொடியோன்
    பொங்கு மாண்மையி னுலகெலாம் வருந்தப்
          பொன்ந கர்க்கிறை குரவனை முதலோர்
    தங்கு ழாத்தொடு முசாவிநான் முகத்தோன்
          றன்னை யெய்தியக் கொடுந்தொழி லியம்பி - 15



    2038 - எந்தை நீயிது தீர்திறம் புகலென் றிறைஞ்சி
          வேண்டலுந் திசைமுகப் புத்தேள்
    அந்த வெந்திறல் தாருகன் செருக்கை யடக்கு
          மாண்மையன் முருகவே ளன்றிக்
    கந்த மென்றொடைக் கடவுள ரேனோர்
          வல்ல ரல்லரக் கந்தனைத் தருவான்
    இந்து சேகர னுமையினை மணக்கு
          முபாயம் நீபுரி கெனவிடை கொடுத்தான் - 16



    2039 - மீண்டு வாசவன் மாரனை நினைப்ப
          வேனில் வேள்சிலை பகழிகைக் கொண்டு
    காண்ட குங்கவி னிரதியும் மதுவும்
          மருங்கு மேவரக் கடுகிவந் திறைஞ்சி
    ஈண்டு நின்னரு ளாணையின் வலியால்
          யாது மாற்றுவல் செய்பணி யருளாய்
    மாண்ட புப்புரம் பொடித்தவர் தமையும்
          வெல்ல வல்லுநன் மற்றுரை யெவனோ .
    மது -வசந்தன். இவன் மன்மதனின் தோழன். - 17



    2040 - ஈதி யம்புழி யிந்திர னுவகை யெய்தி
          விண்ணவ ரிடும்பையு மவுணன்
    நீதி யில்லன புரிவதும் மலரோன் நிகழ்த்தும்
          மாற்றமும் வகுத்துரை செய்து
    பேதி யாவகை பெருந்தகை யின்னே பிஞ்ஞ
          கன்றனை யுமையொடுஞ் சேர்த்தி
    போதி யென்றலு மைங்கணைக் கிழவன்
          பொன்ந கர்க்கிறை விடைகொடு மீண்டான் - 18



    2041 - இறைவன் இறைவியை மணத்தல்
    மீண்டு செம்மலா ரிருந்துழி யணுகி மெல்ல
          வெஞ்சிலை வாங்கலு மவனை
    மாண்ட குந்திரு நுதல்விழி நெருப்பின்
          மடுத்து வார்குழ லிரதிநின் றிரப்பக்
    காண்ட காவகை யுருவிலி யாக்கிக்
          கடுந்த வம்புரி மலைமகள் மணந்து
    தூண்டு வேற்படைக் குரிசிலை யுதவித் தாரு
          கன்றனைத் தொலைத்தருள் செய்தார் - 19



    2042 - அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
    ஆங்கதன் பின்னர்ச் செங்கே ழலங்கொளி வடிவின் நஞ்சந்
    தூங்கிய மிடற்றி னாருஞ் சுரிகுழ லிமய மாதும்
    ஓங்குயர் பலவுஞ் சந்தும் வேரொடு மொடியத் தள்ளி
    வீங்கொலி யருவி தாழும் மந்தர வெற்பின் மேலால் - 20



    2043 - உலகெலா முய்யு மாற்றா லுவளகத் தைந்து மூன்றாச்
    சிலதிய ரடுக்கி யிட்ட செழுந்தவி சணையின் மன்னி
    விலகரு மகிழ்ச்சி மீதூர் திருவிளையாடற் செய்கைக்
    கலவியின் நயந்து தம்முட் களித்தினி திருக்கு மேல்வை.
    உவளகம் -அந்தப்புரம் - 21



    2044 - கலிநிலைத்துறை
    மும்மைப்புவ னங்களுஞ் செய்தவப் பேறு முற்றச்
    சும்மைத்திரை நீருடை மேதினி தோற்றம் எய்தச்
    செம்மைத்திசை யெட்டினுந் தென்றிசை மிக்கு வெல்ல
    மம்மர்த்தொகை நூறிய வண்டமிழ் நாடு வாழ - 22



    2045 - நலம்மன்னிய தண்டக நாடு செழித்து மல்கப்
    பலரும்புகழ் காஞ்சி வளம்பதி மேன்மை சாலக்
    குலவுஞ்சம யங்களொ ராறும் மகிழ்ச்சி கூர
    உலகெங்கணும் வைதிக சைவம் உயர்ந்து மன்ன - 23



    2046 - எவ்வெத்தவத் துஞ்சிவ பூசனை யேற்ற மென்னப்
    பௌளவப்புனல் சூழ்படி மேலவர் தேறி யுய்யத்
    தெவ்வுத்தொழில் பூணு மறக்கடை தேய நல்கூர்
    எவ்வத்திறம் நீங்கி யுயிர்ப்பயி ரெங்கு மோங்க - 24



    2047 - முப்பான்முத லிட்ட விரண்டற முந்த ழைப்ப
    எப்பாலுல கத்தொளி யாவையு மெம்பி ரானார்
    தப்பாவிழி யின்னொளிச் சால்பென யாருங் காண
    அப்பார்சடை யாரடித் தொண்ட ரகங்க ளிப்ப
    அப்பு ஆர் சடை- கங்கைநீர் பொருந்திய சடை - 25



    2048 - இறைவன் திருக்கண்களை இறைவி புதைத்தல்
    கைமிக்கெழு காதல் விருப்புமீ தூர்கு றிப்பின்
    விம்மிப்பணைத் துப்புடை வீங்கி யெழுந்த கொங்கைப்
    பொம்மற்பெரு மாட்டி வெரிந்புறத் தெய்தி வல்லே
    செம்மற்பிறை வேணிய னார்திருக் கண்பு தைத்தாள் - 26



    2049 - அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    இருண்டபூங் குழலாள் செங்கை இறுகுறப் புதைத்த லோடும்
    இருண்டகந் தரத்தார் நோக்கின் இருசுடர் மறைந்த வாற்றால்
    இருண்டது புவனம் முற்றும் இருண்டவெண் டிசையும் என்றும்
    இருண்டறி யாத விண்ணோர் இருக்கையும் இருண்ட தந்நாள் - 27



    2050 - அழுங்கவே தன்னை நாளுங் காய்ந்துலாம் அருக்கர் தம்மோ
    டொழுங்குறத் திரட்டி நீட்டிச் செருகிவைத் திட்டா லொக்குஞ்
    செழுங்கதிர் மதியஞ் செந்தீ உடுமணித்திரளை யெல்லாம்
    விழுங்கித்தன் வீறு காட்டிப் படர்ந்தது திமிர வீக்கம் - 28



    2051 - சிறைபடு கூகை யாதி கருங்கொடித் திரள்க ளொத்த
    மறமலி புலிக ளாதி வானரக் குலங்க ளொத்த
    நறைகமழ் குமுதப் போதும் நளினமுந் தம்மு ளொத்த
    உறுதுயர் நேமிப் புள்ளுஞ் சகோரமு மொருங்கே யொத்த
    நேமிப்புள் - சக்கரவாளப் பறவை - 29



    2052 - அலர்தலை யுலகங் காணா ரதற்படு பொருள்கள் காணார்
    நிலைபெறு தத்தம் யாக்கை நீர்மையுங் காணார் முந்நீர்க்
    கலிதிரை வரைப்பி னோருங் கண்டறி யாத வானத்
    தலைவருந் திமிரம் ஒன்றே தணப்பறக் காண்டல் பெற்றார். - 30



    2053 - இறந்தது படைப்பி னாக்க மிகந்தன வேள்விச் செய்கை
    பறந்தன தவந்தா னங்கள் பறைந்தன கடவுட் பூசை
    துறந்தன கலவி யின்பந் தொலைந்தன அறிவின் தேர்ச்சி
    மறந்தன மறைநூற் கேள்வி மயங்கின வுலக மெல்லாம். - 31



    2054 - இறைவி கைநீப்ப இறைவன் கண்திறத்தல்
    கடவுளர் முனிவர் மக்கள் யாவருங் கவன்றாங் காங்குப்
    படலைவல் லிருளின் மூழ்கிப் பதைபதைத் தாவா வென்னக்
    கடலொலிக் கிளர்ச்சி நாண முறையிடுங் காலை வெற்பின்
    மடவரல் கரங்கள் நீப்ப மலர்விழி திறந்தார் ஐயர் - 32



    2055 - அல்கின வொளிக ளெங்கு ம·கிய திருளின் வீக்கம்
    மல்கின படைப்புங் காப்பும் வயங்கின அறத்தி னீட்டம்
    பல்கின வேள்வி யெங்கும் பரந்தன யிறைவர் சீர்த்தி
    புல்கின வேத வாய்மை பொலிந்தன வுயிர்க ளெல்லாம் - 33



    2056 - வெறிமலர்த் தளவ மூரல் விழியிணை மறைத்து நீக்குஞ்
    சிறுபொழு துலகுக் கெல்லா மெண்ணில்பல் லூழி சென்று
    மறைநெறி படைப்புச் செய்கை யாதிய மறுத்த வாற்றால்
    இறைவிதன் வதனம் நோக்கி யேந்தலா ரருளிச் செய்வார் - 34



    2057 - இறைவன் இறைவிக்குப் பணித்தல்
    இருசுடர் நமக்கா தார மாகிய வெமது கஞ்சத்
    திருவிழி புதைத்த வாற்றால் படைப்பாதிச் செய்கை மாறி
    உருகெழு தீமை நின்னையுற்றதா லதற்குத் தீர்வு
    மருமலர்க் குழலி னாய்நீ மரபுளி யியற்ற வேண்டும் - 35



    2058 - இகப்பருங் கருணை பூண்ட வெமக்கும்நின் றனக்கும் நந்தம்
    அகத்தடி யவர்க்கும் பாவ மணுகுவ தில்லை யேனும்
    வகுத்தவா புரிதி யெல்லாக் கருமமும் மரபி னால்யாம்
    நிகழ்த்திய வாறே பற்றி நிகழ்த்திடு முலகங் கண்டாய் - 36



    2059 - என்றருள் செய்யக் கேட்டு நடுக்கமுற் றிறஞ்சி நின்று
    மன்றலங் குழலாள் கூறும் வள்ளலே கழுவாய்ச் எய்கை
    என்றதி யாது செய்யுங் காலமே திடமே தெல்லாம்
    நன்றெனக் கருளா யென்ன நம்பனார் வகுத்துச் சொல்வார் - 37



    2060 - கலிநிலைத்துறை
    வில்லிழை பூண்டிறு மாந்தெழு கொங்கை விரைக்கோதாய்
    அல்லன செய்துபின் னஞ்சுப வர்க்குறு கழுவாய்தாம்
    நல்லற நூல்களின் மாதவர் நாட்டின ரவையெல்லாஞ்
    சொல்லிய தீர்வு மிகச்சிறு மைத்திது துணிவாயால் - 38



    2061 - எத்துணை வன்மை யறக்கடை முற்று மிறச்செய்யும்
    அத்தகு சீர்க்கழு வாயெமை யன்பி னருச்சித்தல்
    சித்த மொருக்கி நினைத்தல் பழிச்சுதல் பேர்செப்பல்
    பத்தியி னெம்மடி யார்வழி பாடெனு மிவையாமால் - 39



    2062 - முற்றிய சீரிரு முப்பரு வங்களும் முறையானே
    அற்றமில் கால மெனப்படும் யாம்பெரி தானந்தம்
    உற்றுறை கின்ற விடங்க ளிடங்க ளெம்முறு மன்பர்
    பற்றிய தானமு மத்தகை மைத்தென அறிவாய் - 40



    2063 - ஆதலின் நாமுறை வைப்பிடை யாயினு மெம்மன்பர்
    மேதக வைகும் வரைப்பிடை யாயினும் மீப்பொங்குங்
    காதலி னாலெமை யர்ச்சனை யாற்றுதி யிதுகாணூஉப்
    பாதலம் மண்னகம் விண்ணக முய்வது பண்பென்றார் - 41



    2064 - என்றலு மங்கணர் பங்கய பாத மிறைஞ்சித்தாழ்ந்
    தொன்றிய சிந்தையி னாளுடை நாயகி யுரைசெய்வாள்
    அன்றிய நெஞ்சுரை செல்லருநீ யவரவர் தத்தம்
    பொன்று முணர்ச்சியி னர்ச்சனை பூணவு மெளிவந்தாய் - 42



    2065 - நானும் மகிழ்ந்துனை யர்ச்சனை செய்யும் நலம்பெற்றேன்
    தேனமர் கொன்றை மிலைச்சிய செஞ்சடை வள்ளால்நின்
    ஊனமில் பூசனை செய்திற மெத்திற முரையென்ன
    ஆனுடை யூர்தி யருட்கட லன்னவர் புகல்கிற்பார் - 43



    2066 - கரிசறு நித்தநை மித்திக காமிய மெனமூன்றாம்
    உரிமையி னெம்மடி யர்ச்சனை யேனைய வுலகத்துப்
    புரிதரு பூசனை நித்திய பூசனை யாமன்றித்
    தெரிதரி லின்னவை காமியம் நைமித் திகமாகா - 44



    2067 - பொருவறு மூன்று முறும்கரு மம்புரி நிலமீதே
    கரும நிலந்திகழ் பாரத மாம்வரு டங்கண்டாய்
    திரைகெழு கீழ்க்கடல் மேற்கடல் சேதுவொ டிமயத்துள்
    மருவிய மேதினி பாரத மால்வருடம் மாமால் - 45



    2068 - இத்தகு பாரத மாம்வரு டத்தி னெமக்கான
    உத்தம வைப்பின் விதிப்படி யெம்மை யிலிங்கத்தின்
    முத்துறழ் வெண்ணகை முற்றிழை மூதுல கெல்லாமெய்ச்
    சித்தி பெறும்படி வல்லை யருச்சனை செய்கிற்பாய் - 46



    2069 - காஞ்சியே தவம் செயற்கு இடமெனல்
    என்றலு மாவயி னெண்ணில் தலங்களு ளெம்மான்நீ
    நன்று மகிழ்ந்துறை மிக்குயர் நற்றலம் யாதென்னக்
    குன்று குழைத்து வடிக்கணை பூட்டினர் கோல்கோடி
    அன்றின ரிஞ்சி யழித்தரு ளங்கணர் தாம்சொல்வார் - 47



    2070 - அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    ஆயிடை நாமகிழ்ந் துறையும் திருப்பதிகள்
          பலகோடி யவற்றுள் மேலாம்
    ஆயிரத் தெட்ட வற்ற திகமொரு நூற்றெட்
          டவற்றதிக மறுபத் தெட்டாம்
    ஆயினவற் றுயர்காசி காஞ்சியெனு
          மிரண்டதிகம் அறிவான் மிக்கோர்
    ஆயினவை யிரண்டுள்ளும் சால
          நமக்கினி யநகர் அணிநீர்க் காஞ்சி - 48



    2071 - இவ்வண்ணம் தானங்கள் பலவகுத்த
          தெற்றுக்கேல் இயம்பக் கேளாய்
    மைவண்ண இருள்ம லத்தின்
          இருவினையாற் பிணிப்புண்டு மருளின் மூழ்கி
    உய்வண்ணம் அறியாத பசுக்கள்தமை
          அம்மலத்தின் உறாத நாமே
    மெய்வண்ணப் பெருங்கருணைத்
          தன்மையினால் விடுவிக்க வேண்டு மாற்றான் - 49



    2072 - மருவாரும் பூங்குழலாய் ஐவகைய
          சத்திகளை வகுத்துப் பின்னர்
    அருநான்கும் உருநான்கும் அருவுருவந்
          தானொன்றுமாக ஒன்பான்
    திருமேனி தோற்றுவித்துத் தோற்றமுதல்
          ஐந்தொழிலும் செய்வான் உன்னி
    இருவேறு மாயைகளின் உடல்கருவி
          இடமனைத்தும் உயிர்கட் கீந்து - 50



    2073 - உள்ளமுதல் விகாரத்தின் எய்துமிரு
         வினைக்குரிய பிறவி காட்டிப்
    பள்ளநீர் நடுக்கீழ்மே லூசலெனக்
         கொட்புறுத்துப் பருவம் நோக்கி
    மெள்ளவினைப் பயனூட்டி நஞ்சோடு
         சுவையமிழ்தம் விரவித் தீற்றித்
    தெள்ளுதவம் அறிந்தறியா துபாயத்தும்
         உண்மையினும் சேரச் செய்வேம் - 51



    2074 - தீக்கையின் வகை
    சரியையெனக் கிரியையென யோகமென
         ஞானமெனச் சாற்று நான்காம்
    இரியமலத் துகளறுத்து நமைக்காட்டும்
         அருந்தவங்கள் இவற்றிற் சேறற்
    குரிமைதரும் உயர்தீக்கை சமயமுதல்
          மூன்றவை தாமுதவும் முத்தி
    அரிலகன்ற எம்முலகத் துறலாதி
         நான்கென்ன அறையும் நூல்கள் - 52



    2075 - தேக்கூறு தேமொழியாய் மலம்சீக்கும்
         தீக்கைபல விதமாம் அங்கண்
    நோக்கூறு மொழியெண்ணம் நூல்யோகம்
         அவுத்திரியா நுவலும் ஏழுள்
    மீக்கூறும் அவுத்திரிதான் வியன்கிரியை
         ஞானமென விருபா லாய்முப்
    பாற்கூறு படுஞ்சமய விசேடநிரு
         வாணமெனும் பகுப்பி னாலே - 53



    2076 - மருவுபுற மகமென்னும் மதத்துழன்று
         வருணநிலை வழாது நின்று
    மிருதிமறை நெறிவேள்வி பலபுரிந்து
         வேதாந்தப் பொருண்மை தேறி
    வருமுறையா னிவையனைத்தும்
         முற்றியபின் மேனோக்கும் மதியான் மிக்கோர்
    தெருளுதவு சைவநெறிப் படுஞ்சமய
         தீக்கைதனக் குரிய ராவர் - 54



    2077 - சரியா பாதமும் அதன்பயனும்
    அவ்வாற்றான் யாமருவும் திருக்கோயி
         லலகிடுதல் மெழுகல் அன்பின்
    செவ்வாற்றான் மலர்கொய்து தார்மாலை
         தொடுத்தணிதல் தீப மேற்றல்
    மெய்வாய்ப்பச் சிவனடியார் பணித்தபணி
         தலைநின்று மேவ லாதி
    இவ்வாற்றில் தாதநெறிச் சரியையினைப்
         புரிவோரெம் உலகின் வாழ்வார் - 55



    2078 - கிரியாபாதமௌம் அதன் பயனும்
    ஈதியற்றி முற்றியபின் மகநெறிக்காம்
          விசேடத்தை யெய்திப் பூசைக்
    கோதியகொண் டாதார சத்திமுதல்
         சத்தியீ றோங்கு கஞ்சத்
    தாதனமே மூர்த்திமுதல் பாவித்தா
         வாகித்தா வரண பூசை
    ஆதியசெய் தழலோம்பு மிக்கிரியை
         வழாதாரெம் மருகு வாழ்வார் - 56



    2079 - யோகபாதமும் அதன்பயனும்
    இக்கிரியை முற்றியபின் இயமாதி யெட்டுறுப்பின்
         இயல்பு வாய்ந்து
    பக்கவளி தனையடக்கி நடுநாடி
          யுறப்பயிற்றி யாறா தாரந்
    தொக்கபொரு ளுணர்ந்தேகி மதிவரைப்பின்
         அமுதுண்டு சோதி யுள்ளால்
    புக்கழுந்துஞ் சகமார்க்க யோகுழப்போ
         ரெம்முருவம் பொருந்தி வாழ்வார் - 57



    2080 - ஞானபாதமும் அதன் பயனும்
    முறையானே யிம்மூன்றும் முற்றியருள்
          பதிந்துவினை யொப்புவாய்ந்து
    நிறைவாய பருவத்தி னுயிர்க்குயிராய்
          நின்றருளும் யாமே தோன்றி
    மறைவாய்மை நிருவாண விதியாற்றால்
          வழியாறும் தூய்மை செய்து
    குறையாத பேரருளி னறிவுறுக்கு
          மஞ்செழுத்தின் கொள்கை தேற்றி - 58



    2081 - அருவுருவங் குறிகுணங்கள் முதலீறு
          கட்டுவீ டனைத்து மின்றிப்
    பெருமையதாய் நுண்ணியதாய்ப்
          பேருணர்வா யானந்தப் பிழம்பா யெங்கும்
    ஒருமுதலா யழிவின்றி யோங்கொளியாய்
          நிறைந்துளதா யுயிர்கள் தோறும்
    விரவியுடன் தொழிற்படுத்துப் புலங்கொளுத்தி
          வீடுய்க்கும் பதியா மெம்மை - 59



    2082 - எண்ணிலவாய் வகைமூன்றாய் வெண்சிலைபோல்
          பற்றியவை தாமா யென்றும்
    உண்மையவாய்ச் சத்தசத்தும் பகுத்துணர்சத்தா
          யிருளுமொளியு மல்லாக்
    கண்ணியல்பாய் வசிப்பவரு நிறைவாயெம்
          மருளாற்கட்டறுத்து வீடு
    நண்ணுபவாய் உணர்த்தவுணர் சிற்றறிவிற்
          பலவாம்நற் பசுக்கள் தம்மை - 60



    2083 - ஒன்றாகி யழிவின்றிப் பலவாற்ற
          லுடைத்தாய்ச்செம் புறுமா சென்னத்
    தொன்றாகி யருள்விளைவின் நீங்கு
          மிருள்ம லத்துடனத் தொடக்கு நீப்ப
    மின்றாவு முடலாதி நல்குமிரு
          மாயை யிருவினைகட் கேது
    என்றோது கருமமிவை நிகழ்த்து
          திரோதமு மெனுமை வகைப்பா சத்தை - 61



    2084 - திரிபுணர்வு பொதுமாற்றிச் சிறப்பியல்
          பானுணர்ந் தெண்ணித் தெளிந்து தேறும்
    அரியபெறற் சன்மார்க்க ஞானநிலை
          யிதுகிடைத்த வறிவான் மிக்கோர்
    பெரியமலப் பிணியவிழ்த்துச்
          சிவானந்தப் பெரும்பேறு மருவிப் பாசம்
    இரிவதூஉம் புகுவதூஉம்
          இன்றியொரு நிலையாமவ் வியல்பு தன்னில் - 62



    2085 - உணர்பொருளு முணர்வானு முணர்வுமெனும்
          பகுப்பொழியா தொழிந்து பானுப்
    புணர்விழியும் நீர்நிழலும் தீயிரும்பும்
          புனலுவரும் பரிதி மீனுந்
    துணையவிரண் டறுகலப்பின் னெம்முடனாய்ப்
          பேரின்பம் துய்த்து வாழ்வார்
    இணர்விரைந்த மலர்க்கோதா
          யவர்வடிவே யெமக்கினிய கோயி லாமால் - 63



    2086 - முத்திமுடி பிதுகண்டாய் முன்னியம்பு
          மூன்றும் முத்திப் பதங்களாகும்
    இத்தகைய முத்திகளை யிம்முறையான்
          முயன்றவரே யெய்தற் பாலார்
    அத்தகைய வலியில்லோ ரெளிதாக
          வீடுபே றடைவா னெண்ணி
    வைத்தபெருங் கருணையினான்
          மேதினிமேற் பலதானம் வயங்கச் செய்தேம் - 64



    2087 - அங்கவற்றில் வதிவோர்கள் முயலாதெம்
          முலகாதி பதங்கள் சேர்வர்
    கொங்குயிர்த்த மலர்க்குழலா யவற்றுள்ளும்
          குருமாடக் காசி வைப்பில்
    தங்குபவ ரெமதுருவந் தனைப்பெறுவர்
          திருக்காஞ்சித் தலத்தில் வாழ்வார்
    மங்கரிய மலந்துமித்து நம்முடனாம்
          பேரின்ப வாழ்வு சேர்வார் - 65



    2088 - எம்முலகத் துறைவதனி லெம்மணிமைக்
          கண்ணமர்த லேற்ற மாகும்
    எம்முருவந் தனைப்பெறுத லதற்கதிக
          மதற்கதிக மிறவா யின்பத்
    தெம்முடனா யொற்றித்த லிம்முறையால்
          வதிவோர்க ளெவர்க்கும் மாறா
    தெம்முடனாம் பேறளிக்குங் காஞ்சியெவற்
          றினுமதிக மென்னத் தேறாய் - 66



    2089 - மறைமுடிவு மிவ்வாறே வீடுதவும்
          வளநகரம் காஞ்சி யென்ன
    அறைதருமா லன்னதூஉம் வகுத்துரைப்பக்
          கேட்டியென அருளிச் செய்வார்
    மிறைபுரியுந் தக்கனார் வேள்வியகத்
          திமையவர்தம் மேனி முற்றும்
    குறைபடுத்துத் துகைத்துழக்கிச் சவட்டியபின்
          னிரங்கியருள் கொடுக்க வல்லார் - 67



    2090 - கேசாந்த முத்தி
    தன்னிகரில் கேசாந்த முறுமாவி தன்சிரத்துக் கபாலம் கீறி
    வன்னியினில் பூவெனப்போய் வாயுவினில் புவவெனப்போய் இரவி மாட்டுப்
    பின்னமறு சுவவெனப்போய் விண்ணரசின் மகவெனப்போய்ப் பிரமத் தொன்றாய்
    மன்னியிடுமிக் கேசாந்த முத்தியினை யெவ்வுயிர்க்கும் வழங்கும் காஞ்சி .
    மண்டலத்தில் 'பூ' எனவும், வாயுமண்டலத்தில் 'புவ்' எனவும், சூரிய மண்டலத்தில்
    'ஸ்வ': எனவும், இந்திரலோகத்தில் 'மஹ' எனவும், சென்று பரப்பிரமத்தினிடத்தில்
    ஒன்றும். பக்குவம் வாய்ந்து அரிதில் அடையத் தக்க அக்கேசாந்த முத்தியைக்
    காஞ்சியம்பதி எல்லா உயிர்களுக்கும் கொடுக்கும் என்பது கருத்து. - 68




    2091 - கவ்வெனச்சொல் விதிக்கீச னாயவெமைக் கேசனெனக் கழறும் வேதம்
    எவ்விடத்தி லாருயிர்க ளெம்பாலே யந்தத்தை யெய்தா நிற்கும்
    அவ்விடத்தி லதுமுத்தி கேசாந்த முத்தியெனப் படுமா லந்தச்
    செவ்விடமும் நமக்கென்று மரசிருக்கை யெனத்திகழும் காஞ்சி மூதூர்.
    க- பிரமன். க+ஈசன்=கேசன். பிரமனுக்கு ஈசன் இறைவன். அவனிடத்தில்
    அந்தத்தை அடைவது கேசாந்தம் என இப்பெயரின் உண்மைப் பொருளை அறிவித்தவாறு. - 69



    2092 - இன்னுமொரு வாறியம்பக் கேண்மதிநீ கம்மென்றல் சிரமா மந்தச்
    சென்னிமிசைச் சயனமுறு வதுகேச மதுதனையஞ் சித்தல் காஞ்சி
    அன்னதனால் காஞ்சியோடு கேசமொரு பொருட்கிளவி யாகும் தேம்பு
    மின்னிடையாய் கேசாந்த மாவதுமே தகுகாஞ்சி யந்த மாமால்

    கம்+சயனம்=கேசம்.>சிரசின்மேலிருப்பது என்பது பொருள். கம்+அஞ்சி= காஞ்சி. சிரசின் மேல் அஞ்சிப்பது. இதனால் கேசம், காஞ்சி ஒருபொருட் சொற்களாவதற்கு உரிய. கேசாந்தமுத்தி, காஞ்சி முத்தி என்பன ஒருபொருட்சொற்கள். அதாவது காஞ்சியில் முத்தியடைவது கேசாந்தமுத்தியாம். - 70



    2094 - என்றுநமக் கினியதனால் முதன்மையால் தானங்கட் கெல்லாம் சென்னி
    யென்றியம்பப் படுங்காஞ்சி யித்திறத்துக் கேசாந்தப் பெயர்சால் வைப்பின்
    ஒன்றுணரா மடவோர்கள் விலங்குமர முதலனைத்து முயிர்போங் காலை
    மன்றமிசைத் தலையோடு கீறியுடல் விடுத்தேகும் மலர்ப்பூங் கோதாய் - 71



    2094 - ஆதலினங் கிறந்தவர்கட் குடல்வேங்கால் சிரமளவில் வெடியா தின்றும்
    வேதமெலா மெடுத்தியம்பு மந்நகரின் பெருமை யெவர்விளம்பற் பாலார்
    ஏதமற வங்கெய்திக் கழுவாய்நீ யியற்றுதிமுன் னிடப வேறும்
    கோதகலக் கழுவாயங் காற்றியது கோதாயென் றருளிச் செய்தார் - 72



    2095 - கலிநிலைத்துறை
    அருளுந்திரு வாய்மொழி கேட்டலு மங்கை கூப்பிப்
    பெருவெல்விடை யாதது செய்பிழை என்னை தீரப்
    புரியுங்கழு வாயெவ னோபுகல் கிற்றி யென்றாட்
    கிருள்கண்டன் வல்விட மேந்திய கண்டர் சொல்வார் - 73



    2096 - இடபேச்சர வரலாறு
    முன்னோர் கடைநாள் முளரிக்கண் முகிழ்த்த புத்தேள்
    முன்னாஞ் சகமுற்று நம்மான் முடிவுற்ற தாகப்
    பொன்னேர் சுணங்கின் பொலம்பூண் முலைப்பூவை யன்னாய்
    அந்நாளறத் தெய்வத மத்திற முற்று நோக்கி .
    அறத்தெய்வதம்- தருமதேவதை - 74



    2097 - நில்லா வுலகத் துளவாய சரிப்ப நிற்ப
    எல்லா மழிவுற்றன யானு மிறப்ப லோவென்
    றல்லாந் தினிச்செய்வகை யாதென் றிறைஞ்சி நம்பாற்
    கொல்லே றுருவங்கொடு வந்தது போற்றி யென்ன - 75



    2098 - கண்டா மதனைக் கவலாதியென் றூர்தி யாக்கிக்
    கொண்டாம் கொளப்பெற் றுலவாக்களி கூர்ந்த தாக
    வண்டார் அளகக்கொடி யவ்விருள் மாண்ட காலைத்
    தண்டா வருளாலதற் கின்னது சாற்ற லுற்றேம் - 76



    2099 - தரிப்பித் தலின்நீ தருமந்தரிப் பித்தி டாமை
    தெரிப்பிக் குமதன்ம மெனப்பெயர் செப்பு மாலெம்
    பொருட்டுப் புரிபாவமும் புண்ணிய மாக்கி யெம்பால்
    விருப்பற் றவர்செய் யறமுமற மாக்கு விப்பாய் - 77



    2100 - இவ்வேற் றிடப்பப் படிவத்துட னெங்கு மெம்முன்
    செவ்வே வதிகென் றருள்செய் திடுநல் வரம்பெற்
    றவ்வாறு நமக்கெதிர் நித்தலும் வைகு மங்கேழ்ச்
    செவ்வாய்க் கருமென்குழல் வெண்ணகைச் செம்பொற் பூணாய் - 78



    2101 - வீறார் தருமக் கடவுட்சின வெள்வி டைக்கோர்
    கூறாதலின் மாயனும் முப்புரங் கொன்ற அஞ்ஞான்
    றேறாயெமைத் தேரொடு தாங்கினன் ஏறு வந்த
    வாறாமிது மேலது செய்பிழை மற்றுஞ் சொல்வாம் - 79



    2102 - கருடன் செருக்கடைதல்
    கலிவிருத்தம்
    பின்னொரு காலத்துப் பிறங்கு மாற்றல்சால்
    பன்னகப் பகைமைகொள் பறவை நாயகம்
    பொன்னமர் மார்பனைப் பொறுத்து வல்லையே
    அந்நிலை யுலகெலா மணுகி மீண்டதால் - 80



    2103 - மீண்டபின் தருக்குமீக் கொண்டு வீறுடன்
    ஆண்டகை மாயனை நோக்கி அண்ணலே
    காண்டகு மாற்றலிற் கதழ்வி னென்நிகர்
    மாண்டவ ருளர்கொலோ வையம் மூன்றினும்,
    கதழ்வு- விரைவு. மாண்டவர் - மாட்சிமைப்பட்டவர். - 81



    2104 - நிற்பன சரிப்பன யாவு மாய்நிறை
    நிற்பொறுத் தரைக்கணப் பொழுதின் நீடியோய்
    பொற்பமூ வுலகினும் போந்து மீளுமிவ்
    வற்புத மெனக்கலா தார்க்குண் டாகுமோ - 82



    2105 - என்றிது புள்ளர சியம்பக் கேட்டலும்
    நன்றெனக் குறுநிலா நகைமு கிழ்த்தரோ
    இன்றிதன் செருக்கெலா மிடப நாயகம்
    ஒன்றறக் களையுமென் றுளத்தி லெண்ணினான் - 83



    2106 - மெய்யுரை விளம்பி னுலக மீமிசை
    ஐயநிற் கினையெவ ராரு மில்லெனக்
    குய்யம்வைத் தணிமுடி துளக்கிக் கூறினான்
    செய்யவள் வனமுலை திளைக்கு மார்பனே .
    குய்யம்-வஞ்சனை - 84



    2107 - வார்சடைப் பிரானடி வணங்கு வாமெனாப்
    போர்வலிப் புள்ளொடும் கயிலை புக்கனன்
    ஏர்கெழு போகமா புரத்தி னெல்லையவ்
    வூர்தியின் இழிந்துசென் றுங்க ணெய்தினான் - 85



    2108 - ஐந்ததா மாவர ணத்தி னெம்மெதிர்
    ஐந்துகோ மாதர்சூழ்ந் தணுகி வைகவாழ்
    மைந்துடை விடையவண் மாய னோடுறும்
    வெந்திறல் புட்குல வேந்தைக் கண்டதால் - 86



    2109 - கருடன் துன்பம்
    தன்னெதி ரிகழ்ச்சியால் தருக்கு மாங்கதன்
    புன்னிலை நோக்குபு பொருக்கெ னச்சிரம்
    தன்னிடக் குறங்கினிற் சார்த்தித் துஞ்சுவ
    தென்னநெட் டுயிர்ப்பினிற் சிமிழ்த்த தேந்திழாய் - 87



    2110 - மாயவ னெம்மடி வணங்கி யன்பினான்
    ஆயிடை நெடும்பொழு தமர்ந்து வைகினான்
    பாய்விடை யூர்திநெட் டுயிர்ப்பிற் பட்டுழல்
    காய்சினக் கலுழனும் கழிய நொந்ததே - 88



    2111 - விட்டுவிட் டடக்குதோ றுயிர்ப்பின் வேகத்தால்
    அட்டநூ றியோசனை யவதி போந்துபின்
    கட்டெழில் நாசியின் நுனிக்கண் சார்தரக்
    கொட்புறுத் தலைத்தது பறவைக் கோவினை - 89



    2112 - ஒய்யென நெட்டுயிர்ப் புதைந்து மீள்தொறும்
    மெய்வயிற் சு··றென விரிந்து கூம்பிடுஞ்
    செய்யபொற் சிறைகளிற் சிதைந்து புன்மயிர்
    துய்யென வெளியிடைச் சுழன்ற யாங்கணும் - 90



    2113 - அதிர்ந்தன விண்னெலாம் அயர்ந்த திக்கயம்
    உதிர்ந்தன தருத்தழை உக்க மீன்கணம்
    பிதிர்ந்தன வரைக்குலம் பெயர்ந்த கோள்களும்
    உதிர்ந்தெழும் சினவிடை உயிர்ப்பின் மொய்ம்பினான் - 91



    2114 - எதிருற விலங்கிய வரையு மெனவும்
    மதலையிற் பற்றுவான் மனத்தின் எண்ணுமுன்
    கதழ்வின்நூ றியோசனை கடத்தி மீட்குமால்
    மதனுடைக் கலுழனை உயிர்ப்பின் வாயுவே.
    மதலையின் - தூணாக. பற்ருவாந் பிடிட்துக் கொள்வதற்கு. மதன்- வலி - 92



    2115 - சரிந்தது தருக்குடல் சழங்க லுற்றதால்
    இரிந்தது மிடலிறு மாப்பு மிற்றது
    முரிந்தன பொலஞ்சிறை முதிர்ந்த தின்னல்நோய்
    கரிந்தது மாமையும் கருடற் கென்பவே - 93



    2116 - பருவரும் புடையினிற் கழியப் பார்க்குமீ
    தொருவருந் தகைத்தெனு மூக்க மின்மையின்
    தெருமரு முணங்குறும் திகைக்கும் தேம்பிடும்
    வெருவரும் மாயனை விளிக்கு மென்செயும் - 94



    2117 - அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    ஐயவோ வுலகங் காக்கு மடிகளோ காயாம் பூவின்
    மெய்யவோ யென்னை யாண்ட விமலவோ திகிரி யேத்துங்
    கையவோ எய்ப்பின் வைப்பாம் களைகணோ கலந்தார்க் கென்றும்
    மெய்யவோ கலவா தார்க்கு வெய்யவோ வேந்த னேயோ - 95



    2118 - விடையர சுயிர்ப்பிற் பட்டு மெலிகின்றே னோல மிந்தத்
    தடைவிடுத் தடிய னேனைத் தாங்குவா யோலம் மன்றேல்
    கடையனே னாவி யின்றே கழிந்திடு மோல மென்னை
    உடையவா வோல மென்றென் றோலமிட் டழைத்த தாலோ - 96



    2119 - இறைவன் பணித்தல்
    சீறுவெம் பணிவாய்ப் பட்ட தேரையின் மறுகி யோசை
    வேறுபா டெய்தி மாலை விளிப்பதெம் செவியில் கேட்டே
    மாறடு திகிரி யோயீ தென்னென வட்கார் தம்மை
    நூறிய சீற்றத் துப்பின் நோன்றகை நெடியோன் செல்வான்
    வட்கார்- பகைவர். நூறிய- அழித்த. நோந்தகை- வலிமை. - 97



    2120 - இன்றுநின் னடிகள் போற்று மிச்சையி னென்னோ டிங்கு
    வன்றிறல் கலுழன் போந்தான் வாய்தலில் துயிலும் வெள்ளிக்
    குன்றுறழ் இமிலேற் றண்ண லுயிர்ப்பினிற் கோட்பட் டாவி
    பொன்றுவா னென்ன நொந்து விளிக்கின்றான் புனித என்றான் - 98



    2121 - மாதவன் விளம்பக் கேளா மற்றிது நிகழ்தற் கேது
    ஏதுநீ யறிந்த துண்டே லியம்புதி விடுத்து மென்ன
    நாதனே கலுழன் சாலத் தருக்கினா னதனைப் போக்கும்
    காதலா லீங்கு வந்தேன் காரண மிதுவா லென்றான் - 99



    2122 - உள்ளது புகன்றா யென்ன நந்தியை யூங்கு நோக்கிக்
    கள்ளவிழ் தொடையாய் நம்மை வழிபடுங் கருத்தா னெய்தும்
    புள்ளர சினையா வண்ணம் பொருக்கெனப் போந்து சீற்ற
    வெள்விடை யுயிர்ப்பி னின்றும் விடுவித்துக் கொணர்தி யென்றாம் - 100



    2123 - இத்தகு மாணை தாங்கி யாவயி னெய்தி நந்தி
    பொய்த்துயில் கொள்ளு மேற்றைப் புடைத்தன னெழுப்ப லோடும்
    மெய்த்துயி லுணர்ந்தான் மான வல்விரைந் தெழுந்து கண்கள்
    அத்துறு கலக்கம் காட்டி யாங்ஙனம் நின்ற காலை - 101



    2124 - போற்றுசீர் நந்திப் புத்தேள் புண்ணுறு முடம்பிற் புள்ளின்
    ஏற்றொடு விடையி னேற்றை யெம்மெதி ருய்த்தா னாகச்
    சீற்றமும் செருக்கு மாண்மைத் திட்பமும் வீறும் குன்றி
    மாற்றரு மதுகைப் புள்ளே றெம்மடி வணங்கிப் போற்றி - 102



    2125 - ஒடுங்கியுள் ளுடைந்து தண்டா துயிர்ப்பெறிந் திரங்கி மேனி
    நடுங்கிடக் கண்ணீர் வார முரிசிறை மருங்கு நால
    நெடுங்கைதன் சிரமேற் கூப்பி மால்புடை நிற்ப நோக்கிக்
    கொடுங்கொலைப் பகழிக் கண்ணாய் விடைக்கிது கூற லுற்றாம் - 103



    2126 - எம்முடை யாணை யின்றி யெம்மெதிர் நீயே யிந்நாள்
    மம்மரி னிதனைச் செய்தாய் மானிட வடிவம் தாங்கிக்
    கம்மைநீர் வரைப்பிற் காஞ்சித் தொன்னகர் எய்தி யங்கண்
    நம்மைநீ புரிதி பூசை நவையிது கழியு மாறே - 104



    2127 - விடை காஞ்சியில் விமலனை வழிபடல்
    எனவிடை யளிப்பப் போற்றிப் புடைபரந் தெழுந்து வஞ்சி
    யனவிடை துவள வீங்கு மலர்முலைக் கொம்ப ரன்னாய்
    சினவிடை யரசு வல்லே நரவுருத் திகழக் கொண்டு
    மனவிடை யிழைத்த செம்பொன் மாளிகைக் காஞ்சி - 105



    2128 - கவிழிணர்த் தனிமா மூலத் தெம்மெதிர் கமலப் பூந்தோ
    டவிழ்சிவ கங்கைக் கோட்டி னாங்கது வைகும் வைப்பிற்
    குவிவரும் பெருமை சான்ற குடதிசை முகமாத் தன்பேர்ப்
    புவிபுக ழிலிங்கம் தாபித் தருச்சனை புரிந்து போற்றி - 106



    2129 - காட்சியீத் தருளும் நம்பால் வரம்பல கருதிப் பெற்று
    மாட்சியி னுலக மெல்லாம் மனுமுறை வழாது பன்னாள்
    ஆட்சிசால் அரசு செய்து கடைமுறை யானேற் றண்ணல்
    மீட்சியி னருள்பெற் றிங்கு மேவிவீற் றிருந்த தன்றே. - 107



    2130 - இறைவி இறைவனருள் வழி யேற்றல்
    ஆதலின் நீயு மங்க ணகிலமு முய்வா னெம்மை
    மேதகு கழுவாய் நீரின் விதியுளிப் பூசை செய்யப்
    போதரா யென்று நல்கப் புரிகுழ லணங்கு தாழ்ந்து
    நாதனா ரிசைவு பெற்று நயந்தெழுந் தருள லுற்றாள் - 108



    2131 - நம்பனார் தம்மை யின்ப நகையிடைத் தணக்கும் நோயும்
    கம்பரைப் பூசை செய்யுங் காதலு மிருபா லீர்ப்ப
    எம்பிரா னருளா யென்று தாழ்ந்துதாழ்ந் தெழுந்து நின்று
    கொம்பரி னொல்கிப் பல்காற் புறவிடை கொண்டு போற்றி - 109



    2132 - மின்கொண்டல் மிடற்றார் காட்சி விழிக்கெதிர் மறையுங் காறும்
    பின்கொண்டு நடந்து சென்று பெருமுதல் வாய்தல் நீங்கி
    முன்கொண்டு நடவா நின்றாள் முக்குறும் படக்கி யைவர்
    வன்கொண்டி கந்தமேலோர் காண்டக வயங்கு மம்மை - 110



    2133 - ஆயிடை யரிதின் நீங்கி யங்கண ரருளா லங்கண்
    பாயபல் கணங்க ளுய்த்த படரொளி யெறிக்கு மங்கேழ்
    மாயிரு விமானத் தும்பர் மன்னுயிர்த் தோழி மார்தம்
    ஆயமும் தானு மேறி வழிக்கொண்டா ளனைய காலை - 111



    2134 - எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    உலகெலா மீன்ற வெம்பெரு மாட்டி
          யோங்குயர் விழுப்புகழ்க் கம்பத்
    தலைவரை விதியா னருச்சனை
          செய்யச் சார்கின்றா ளென்றுபே ரோகை
    மலியெடுத் தியம்பு மங்களங் கேளா
          வுருத்திர மடந்தையர் முதலோர்
    அலகிலா மகிழ்ச்சி மீக்கொளும் களிப்பி
          னார்த்தெழுந் தொருங்குவந் திறுத்தார் - 112



    2135 - தாமரை மடவார் புடைபரந் தணுகத் தாமரை மடவரல் வந்தாள்
    நாமிசைக் கிழத்தி பற்பல வெள்ள நாரியர் புடைவர வந்தாள்
    கோமளவனப்பி னாம்பல்மெல் லியலார் குழாத்துட னுயர்சசி வந்தாள்
    காமரு மாதர் எழுவரும் சங்கக் கன்னியர் சூழ்தர வந்தார் - 113



    2136 - வான்மட மகளிர் வேறுபல் வகுப்பின் மங்கையர் பற்பலா யிரவர்
    ஊன்மலி சூலத் திடாகினி காளி யோகினித் திறத்தவ ரனேகர்
    நீன்முகிற்கூந்தல் முனிவர்பன் னியரும் நிரந்தரம் மிடைந்தன ருவகை
    பான்மையி னிறைஞ்சி யவரவர்க் கடுத்த பணிதலை நின்றுடன் போத - 114



    2137 - உரகர்கந் தருவ ரிராக்கத ரியக்க
          ருருத்திரர் மருத்துவர் வசுக்கள்
    கருடர்கிம் புருடர் சாரணர் சித்தர்
          கடவுள ரயனரி முனிவர்
    மருவுபல் சமய தேவர்கண் முதலோர்
          வந்தன ரடிதொழு திறைஞ்சிப்
    பொருவருங் களிப்பாற் சயசய போற்றி
          போற்றியென் றேத்திமுன் செல்ல - 115



    2138 - தண்ணுமை முருடு குடமுழா மொந்தை தகுணிச்சம் பேரிகை தக்கை
    அண்ணலம் பதலை அதிர்குரல் முரச மாதிய எழுப்புவ பிறவும்
    பண்ணமை சின்னம் காகளம் கோடு பணிலமே தீங்குழல் முதலா
    எண்ணருந் திறத்தின் ஊதுவ பலவு மெழுகடல் முழக்கினை யடக்க - 116



    2139 - பயின்மணிக் கவரி கவிகைசாந் தாற்றி
          படரொளி யாலவட்டங்கள்
    வயின்வயின் வயங்கக் கற்பகத் தாரு
          மலர்மழை யெங்கணு மிறைப்பக்
    குயின்மொழி மடவார் குழாங்குழா மாகிக்
          குலவுபல் லாண்டெடுத் திசைப்பக்
    கயின்மணிக் குழையார் ஆணுடை
          தாங்கிக் கதிர்த்தவா ளேந்தின ரேக - 117



    2140 - வேதகம் பயக்குஞ் சிலைமுதலான
          விம்மிதத் திறத்தன பலவும்
    பூதிமிக் களிக்கும் கடவுளர் தருக்கள்
          புண்ணிய தீர்த்தங்கள் நதிகள்
    ஏதமில் சிறப்பின் இனையன பிறவும்
          உடன்செலச் சிந்தொடு குறள்கள்
    காதலின் முன்னே கையிணை
          வீசிக் கதமெனக் குறுகுறு நடப்ப - 118



    2141 - கலகல முழக்கும் களகள முழக்கும்
          கலின்கலின் முழக்கமும் கருவிச்
    சலசல முழக்கும் சளசள முழக்கும்
          சடசட முழக்கமும் ஏனைச்
    சிலசில முழக்கும் அரகர முழக்கும்
          சயசய முழக்குமெண் டிசைவாய்ப்
    பலபல முழக்கும் அடைத்துமேல்
          ஓங்கிப் படியொடு வானமும் நிறைப்ப - 119



    2142 - மறைமுத லொருபால் மணந்தவள்
          வந்தாள் வானவர்க் கரியவள் வந்தாள்
    நிறைபெருங் கருணை நாயகி
          வந்தாள் நிருமலப் பேரொளி வந்தாள்
    அறைபுனல் காஞ்சிக் கம்பரை
          வணங்க அகிலமும் ஆதிநாள் பயந்த
    இறைவியே வந்தாள் என்றுபல்
          சின்னத் தெழுமொலி யாங்கணும் விம்ம - 120



    2143 - அலவிலாக் கருணைப் பெருங்கட லென்ன
          அடர்ந்தவல் லிருளுடைந் தோடுங்
    கிளைவழி துருவித் துரந்துகொண்
          டெய்தும் கேழ்கிளர் ஒளிக்குழா மென்ன
    வளமலி தென்பால் செய்தவந் திரண்டு
          வருவதே என்னவும் உலவாக்
    களிவரு சிறப்பின் வான்நெறிப் படர்ந்தாள்
          கணவனார் அருள்வழி நின்றாள் - 121



    2144 - வேறு
    எண்ணி லார்மி டைந்து விண்ப ரப்ப டைத்தி யங்கலால்
    அண்ணல் ஞாயி றாதி வாள்ம றைந்திரு ளடர்ந்திடக்
    கண்ணு றுத்தயிர்க்கு முன்க டுப்பி னெய்து வோரொளி
    வண்ண மவ்வி ருள்கி ழிப்ப நோக்கி ஞால மாந்தர்தாம் - 122



    2145 - மாலு றுக்கு நீர்மை யோடு தோன்றி யிங்கு மாய்ந்தது
    நீல மின்னல் போலு மென்ப ரென்னு முன்னர் நீளிடை
    சால மிக்க ஓதை கேட்டு மின்ப யந்த தண்முகில்
    காலு மோதை யாங்கொ லென்று காதி னோர்த்து நிற்பரே - 123



    2146 - செல்லு வோர்நெ ருக்கி டைத்தெ றித்தி டும்பொ லஞ்சுடர்ப்
    பல்ல ணிக்க லன்க ளுக்க பன்ம ணித்தி ரள்களை
    ஒல்லை நோக்கி யார்த்த மேக மொன்ப திற்று மாமணிக்
    கல்லின் மாரி பெய்வ தென்று காண்தொ றும்வி யப்பரே - 124



    2147 - முறையி னாலடுக்க நண்ணும் மொய்கு ழாத்தை நோக்குவார்
    இறைவி யென்று சின்ன மெங்கு மெங்குமோசை கேட்குவார்
    நிறைம கிழ்ச்சி யிற்கி ளர்ந்து நீடு மின்ப வெள்ளநீர்த்
    துறைப டிந்து கண்கள் நீர்து ளிப்ப நின்று போற்றுவார் - 125



    2148 - எம்பி ரான்த னிப்ப வம்மை யிங்கு வந்த தென்னெனக்
    கம்ப வாணர் பூசை செய்க ருத்தின் வந்த தாமென
    நம்பி னேங்கள் வீடு பேறு நண்ணு கால மீதென
    இம்பர் ஞால எத்த வம்ப டைத்த தென்ன விள்ளுவார் - 126



    2149 - மண்ண கத்து வைகும் மாந்த ரின்ன ராக மாணிழைப்
    பெண்ணின் நல்ல வள்வி மான நின்று மிப்பெ ரும்புவிப்
    புண்ணி யத்த லங்கள் தோறி ழிந்தி ழிந்து போர்விடை
    அண்ண லாரி லிங்க பூசை செய்து காசி யண்மினாள் - 127



    2150 - முச்ச கம்பு கழ்ந்து போற்று மொய்கொள் காசி மாநகர்
    விச்சு வேசர் பூசை யாற்றி வேறி லிங்க மொன்றமைத்
    தர்ச்ச னைத்தி றத்தி னேத்தி வைகி யங்க கன்றுசீர்க்
    கச்சி யம்ப திக்கண் வைத்த காத லுய்ப்ப வேகினாள் - 128



    2151 - அங்க ணங்க ணெந்தை யார மர்ந்து வாழி டந்தொறும்
    பொங்கு கின்ற காத லோடு பூசை செய்து செய்துபோய்
    மங்க லத்த மிழ்ப்பு விக்கு வாண்மு கம்மெ னத்தகும்
    துங்க மிக்க கீர்த்தி பெற்ற தொண்டை நாட்டை நண்ணினாள் - 129



    2152 - அம்மையார் காஞ்சியை அடைந்த நாள்
    அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    அண்ணலந் துலைசே ரென்றூழ் ஐப்பசித் திங்கட் பூரம்
    வெண்மதி யாட்சி மூன்றாம் பின்பக்கம் நந்தை மேய
    புண்ணியத் திருநா ளெல்லாப் புவனமும் பெருவாழ் வெய்த
    விண்ணவர் பிராட்டி காஞ்சி வியனக ரெல்லை சேர்ந்தாள் - 130



    2153 - பார்த்தனள் கடைநாள் செல்லாப் பழம்பதி மகிழ்ச்சி மேன்மேற்
    கூர்த்தனள் சிரமேற் செங்கை குவித்தனள் புளகம் மேனி
    போர்த்தனள் விழிநீர் மாரி பொழிந்தன ளங்கோர் வாவித்
    தீர்த்தநீர் குடைந்து மூழ்கிச் சங்கற்பஞ் செய்து முற்றி - 131



    2154 - கங்கணதீர்த்தம் -கங்கணேச்சரம்
    அலங்கொளிக் கரத்துச் செம்பொற் காப்புநா ணணிந்து மூவா
    இலிங்கமாண் டிருவிப் பூசை யியற்றினா ளனைய தீர்த்தம்
    நலங்கெழு காப்புத் தீர்த்த மெனப்பெயர் நவில்வர் சேர்ந்தார்
    குலங்களோ டுய்யச் செய்யு மிலிங்கமுங் கொள்ளு மப்பேர் - 132



    2155 - கடகேச்சரம்
    நவமணிக் கடகம் பூணும் ஞாங்கருங் கடகே சானச்
    சிவபரஞ் சுடரைப் பூசை செய்துதன் கரத்திற் பூண்டாள்
    அவிர்மணி நகையாள் போற்று மக்குறி யிரண்டுங் கண்டோர்
    தவலரு மலநோய் மாற்றி முத்தியில் தவிர்ந்து வாழ்வார் - 133



    2156 - அன்னண மருச்சித் தேத்தி யாளுடை யெம்பி ராட்டி
    உன்னுவோர் பிறவி மாய்க்கு முள்நகர் வரைப்பின் முற்ற
    மன்னிய வளங்க ளெல்லாம் மனங்களி பயப்ப நோக்கிப்
    பன்னரும் பெருமை சான்ற பரவெளிப் பிலத்தை யுற்றாள் - 134



    2157 - உலகாணித் தீர்த்தம்
    ஐம்பெரும் பூதம் முன்னா ளாயிடை மலர்ப்பூம் பொய்கை
    தம்பெயர் நிறுவித் தொட்டுத் தடந்திரை கொழிக்குந் தூநீர்ப்
    பைம்புனல் படிந்து பன்னாள் மெய்த்தவம் பரிக்குங் காலைக்
    கம்பனார் கருணை கூர்ந்து காட்சிதந் தருளப் போற்றி - 135



    2158 - மூவருந் தம்முட் கூடல் முதலிய வேறு பாட்டான்
    மேவருங் கரணம் யாக்கை விடயமா தார மெல்லாம்
    ஆவகை வரங்கள் பெற்ற வத்திறத் துலக முற்றும்
    பாவுதன் வடிவாய் ஓங்கு முலகாணிக் கரையின் பாங்கர் - 136



    2159 - ஆங்கினி தமர்ந்து வைகித் தவம்புரி கருத்த ளாகி
    ஊங்குட னணைந்த விண்ணோர்க் கருள்விடை யுதவி யங்குத்
    தேங்குநீ ருலக முய்யத் திருவறச் சாலை யாக்கி
    மாங்குயிற் கிளவி நங்கை யறமெலாம் வளர்க்க லுற்றாள் - 137



    2160 - அம்மையார் அறம் வளர்த்தல்
    தெய்வம்தென் புலத்தார் பூதம் மானிடம் பிரமம் என்றோர்
    ஐவகை எச்சம் பூர்த்தம் துறந்தவர் மடங்கள் அன்பு
    செய்யுமில் வாழ்வார்க் கில்லம் மனைக்குப கரணம் தேம்பூப்
    பெய்தமை தண்ணீர்ப் பந்தர் எங்கணும் பிறங்கு சோலை
    பூர்த்தம்- தருமம், வறியார்க்கு ஈதல். - 138



    2161 - இரப்பவர் குருடர் எவ்வ முற்றவர்ப் புரத்தல் வெந்நோய்
    துரக்குநன் மருந்து தூவாய் மகவினை ஓம்பல் சுண்ணம்
    பரித்தபா கடையே எண்ணெய் பைம்புனல் குளிப்ப வேண்டும்
    மருக்கிளர் துவர்க ளாதி மலரணை நிலனான் கன்னி - 139



    2162 - கடிமணம் விளக்கு மாறாக் கடனொழித் திடுத லீசன்
    அடியவர் விழைவ வீகை அக்கமா மணிவெண் ணீறு
    படியிலாக் கடவுட் பூசை உபகர ணங்கள் பாசந்
    தடிதரு வேத வாய்மைச் சைவநூல் புராணம் நல்கல் - 140



    2163 - சிவபிரா னடிக்கீழ் பத்தி செவியறி வுறுத்த லோடும்
    உவகையி னபயம் யார்க்கும் வழங்குத லுள்ளிட் டோதும்
    நவையிரி யறமெண் ணான்கும் நாள்தொறும் நிகழ்ச்சி மாணப்
    பவநெறி துரக்கும் ஞானப் பைந்தொடி நிறுவிப் பின்னர்

    இப்பாடல்களிற் கூறப்பட்ட 32 அறங்கள் (1) தேவயாகம்
    (2) பிதிர்யாகம் (3) பூதயாகம் (4) மானிடயாகம் (5) பிரமயாகம் (6) வறியார்க்கு ஈகை.
    (7) துறந்தவர்க்கு மடம் (8) இல்வாழ்வார்க்கு இல்லம் (9) இல்வாழ்க்கைக்குரிய
    கருவிப்பொருள்கள் (10) தண்ணீர்ப்பந்தல் (11) பூஞ்சோலை (12) யாசிப்பவர்,
    குருடர் முதலிய உறுப்புக் குறையுடையவரை ஆதரித்தல் (13) நோய்க்கு மருந்து கொடுத்தல்
    (14) குழவியை வளர்த்தல் (15) சுண்ணாம்பு கொடுத்தல் (16) தாம்பூலம் கொடுத்தல்
    (17) தலைக்கு எண்ணெய் வார்த்தல் (18) முழுகுதற்கு அரைப்புப் பொடிகள் கொடுத்தல்
    (19) படுக்கையளித்தல் (20 பூதானம் (21) கோதானம் (22) கன்னியா தானம்
    (23) மணம் செய்வித்தல் (24) விளக்குக் கொடுத்தல் (25) தீராக்கடன்
    (26) சிவனடியார் வேண்டுவன கொடுத்தல் (27) உருத்திராக்கமளித்தல்
    (28) திருவெண்ணீறு கொடுத்தல் (29) பூசைக்குரிய பொருள் கொடுத்தல்
    (30) சைவநூல் புராணம் முதலிய நூல்களைத் தருதல், ஓதுவித்தல்
    (31) சிவபத்தியை உபதேசித்தல் (32) அபயமளித்தல் என்பன. - 141



    2164 - அம்மையார் திருவேகம்பத்திற் கெழுந்தருளுதல்
    வீங்குநீர்க் கம்பை யாற்றின் கரைமிசை விரிமா நீழல்
    ஓங்கொளிப் பொருளைக் காணும் உறுபெருங் காத லீர்ப்ப
    வாங்குநுண் மருங்குல் நோவ வளரிளங் குவவுக் கொங்கைப்
    பாங்கியர் முதலோர் சூழப் படரொளி மறுகிற் போந்தாள் - 142



    2165 - எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    மலையான் மடமகள் மறுகூ டணைதலும்
          வளமா நகரவர் தொழுதாடி
    உலவா நசையொடு பணிவார் மனமகி
          ழுறுவார் வயின்வயின் அணிசெய்வார்
    குலைநீள் கதலிகள் கமுகந் துகில்விரி
          கொடியென் றினையன நடுவார்கள்
    மலர்மா லிகைநவ மணிமா லிகையெழில்
          மலிதோ ரணநிரை நிறைவிப்பார் - 143



    2166 - மறுகெங் கணும்விரை கமழும் படிகுளிர்
          பனிநீர் விடுவர்கள் மறையோதி
    நிறுவுந் தவநிலை முனிவோர் கரமிசை
          நிறைபொற் குடமுடன் எதிர்கொள்வார்
    சிறுநுண் ணிடைமறை மடவார் வாழ்த்திசை
          திகழ்மங் கலமொழி யுரைசெய்வார்
    நறவம் பயில்குழ லரமங் கையரொடு
          நரமங் கையர்நட மிடுவாரால் - 144



    2167 - பொங்கும் பெருகெழில் புனையுந்
          திருநகர் புரிவின் வலம்வரு முறையானே
    தங்குங் கலைமகள் மலர்மா திமையவர்
          மடவார் காளிகள் சாத்தன்சீர்
    எங்கும் பரவிய திறல்யோ கினிகளை
          எழுமா தர்களை யிடந்தோறும்
    அங்கங் கிருவினள் என்னெஞ்
          சிருவிய அம்பொற் றிருவடி பிறர்காணாள் - 145



    2168 - குணபால் முதல்நிதி முடியார் இனிதமர்
          கோயில் முழுவதும் முறையிற்சென்
    றிணரார் மலர்கொடு வழிபட் டருளொடும்
          எனையா ளுடையவள் எய்துற்றாள்
    உணரா தரியயன் முதலோர் அலமரும்
          ஒருபே ரொளிமரு மலர்தூவும்
    மணமா நிழலிடை வெளியே
          எளிவர மாகம் புவிதொழும் ஏகம்பம் - 146



    2169 - ஏணிற் பொலிமலை அரசன் தருமயில்
          உள்ளங் களிவர எம்மானார்
    ஆணைப் படிமன நினைவிற் கடவுளர்
          யவனன் புரியும் அருட்கோயில்
    மாணப் பலமணி குயிற்றுந் தமனிய
          வடிவிற் புரிசையி னோக்கத்தைக்
    காணப் பெறுகளி காதற் கடலிடை
          மூழ்கித் துளைபவள் கரைகாணாள் - 147



    2170 - விழிநீர் பொழிதர உள்ளங் குழைவுற
          மெய்யிற் புளகமுகிழ்ப் பெய்தப்
    பொழிகார் மழைநிகர் கற்றைப் புரிகுழல்
          மிசையே கையிணை குவியப்போய்க்
    குழுவா னவர்மிடை விண்வத் துயரிய
          கொடிநீள் கோபுர நெடுவாய்தல்
    தொழுநீர் மையினி லிறைஞ்சிப் பன்முறை
          துதிசெய் துவகையின் உள்புக்காள் - 148



    2171 - அங்கட் சகமுழு தடையப் பொலிவுரும்
          ஐந்தாம் ஆவர ணந்தன்னில்
    தங்கித் திகழ்சிவ மறையோர் முதலிய
          சைவர்க் கருள்செய் துவலம் வந்து
    செங்கட் கதிரவர் காலத் தீயிறை
          யவர்மா லயனொடு செறிநான்கின்
    எங்கட் கிறையவ ளெய்தித் தென்புடை
          விண்டுத் தளியெதிர் கண்டுற்றாள்
    ஆவரணம் -பிரகாரம். சிவமறையோர்- ஆதிசைவர்கள், சிவாச்சாரியர்கள். - 149



    2172 - விண்டுவீச்சர வரலாறு
    கலிநிலைத்துறை
    என்று கூறிய சூதனை இருந்தவத் தலைவர்
    நன்று போற்றினர் நலிதரும் ஐம்புலக் குறும்பு
    வென்ற மேதகாய் விண்டுவீச் சரமென்ற தென்னை
    இன்று நீவிரித் துரையெனக் கடாவலு மிறுப்பான் - 150



    2173 - அள்ளி லைப்படைக் கடவுளார்க் காரமு தளிக்கும்
    வெள்ளி வெண்டிரை விரிகடல் வரைப்பினில் மாயோன்
    முள்ளெ யிற்றரா வணைமிசை நாடகம் முயலும்
    வள்ள லாரடி மனத்திடைத் தழீஇயினன் துயில்வான்
    அள்- கூர்மை. - 151



    2174 - அனைய தன்மையின் அறிதுயில் அமர்பவன் ஒருநாள்
    கனைவி ளங்கொளி இதயமென் கவிழ்நனைக் கமலந்
    தனைம லர்ந்துமேல் நோக்குறச் செய்தனன் தணவா
    வினைஇ கந்துயர் யோகினால் வளிமிசை எழுப்பி - 152



    2175 - பகரு முந்தியின் மேலிடத் தலருமப் பதுமத்
    திகழ ருந்திறத் திலங்குநுண் குகையத னிடத்து
    நகரு மூண்பகுத் தமருகோன் தழலதன் தலையில்
    திகழ மேவரும் நுணங்குபூஞ் சிகையதன் நடுவண் - 153



    2176 - சாற்று மெய்ப்பரப் பிரமமாம் சதாசிவப் புத்தேள்
    வீற்றி ருப்பது யோகத்திற் கண்டனன் விரைத்தேன்
    ஊற்று பூந்துழாய்ப் பண்ணவன் உவகையின் வல்லே
    போற்றி போற்றியென் றிறைஞ்சினன் அன்புமீப் பொங்க - 154



    2177 - அன்பி னுக்கெளி யார்பெருங் கருணைகூர்ந் தருளி
    இன்ப வானந்தத் திருநட மாயிடை யியற்ற
    வன்ப ழம்பகை மலவிருள் கடிந்தது காணூஉ
    என்பு நெக்குநெக் குருகினான் முரனையன் றிருத்தோன் - 155



    2178 - புளக மெங்கணும் போர்த்துமெய் பனித்துவாய் குழறி
    இளகி யின்பநீர் விழியுகக் கம்பனம் எய்தித்
    தளர்வி லார்வத்தால் தனைமறந் தறிதுயில் மேவும்
    அளவி லாங்கயல லிருந்தவ ரன்னது கண்டார் - 156



    2179 - கண்டு நெஞ்சும் பதைத்தனர் திகைத்தனர் கவலை
    கொண்ட ழுங்கினர் அஞ்சினர் இரங்கினர் குறிப்பின்
    வண்ட லர்த்திரு முதலியோர் மற்றிது நிகழ
    அண்டர் நாயகற் கடுத்தவா றென்னெனத் தெரிவார் - 157



    2180 - மென்ற ளிர்ச்செழுங் கோமளத் திருவடி வினையேன்
    வன்ற னிக்கரம் வருடலான் வருந்தின கொல்லோ
    அன்றி யென்மடித் தலமிசை யசைந்துநொந் தனவோ
    என்று தன்னுள மயிர்த்தன ளிலங்கெழில் மலராள் - 158



    2181 - மெல்ல னிச்சமும் குழைக்குமெம் பிரான்திரு மேனி
    கல்லெ னக்கடுந் திட்பமும் தட்பமும் கதுவும்
    புல்லி யேனுடல் வைகலா னுளைந்தது போலும்
    அல்ல தொன்றறி யேனென வெரீஇயினன் அனந்தன் - 159



    2182 - எருத்த மீதுகொண் டுலகெலாம் கொட்புறு மென்னான்
    மருத்து ழாய்முடி மாமறு மார்பினான் மேனி
    வருத்த முற்றதே யாங்கொலென் றெண்ணினன் வலியால்
    உருத்த மாற்றலர் முனைகெடப் பொருதிற லுவணன் - 160



    2183 - இன்ன வாறிவர் யாவரும் வேறுவே றெண்ணிப்
    பன்ன ரும்பெருங் கவலைகூர் வுழிவரை பயந்த
    கன்னி பாகனார் திருநடக் கருணையில் திளைத்த
    பின்னை நாயகன் யோகமாத் துயில்பிரிந் தெழுந்தான் - 161



    2184 - கண்ட பேரின்ப அனுபவக் கருத்தினோ டெழுந்து
    மண்டு வெள்ளநீர் அருவிகண் பொழியமன் றுடையார்
    தொண்ட னேற்கெளி வந்தவா றெனக்களி துளும்பிக்
    கொண்ட காதலால் அஞ்சலி சென்னிமேற் குவித்து - 162



    2185 - ஐய னேயருள் புரிகவா ரழற்சிகை யேந்தும்
    கைய னேயருள் புரிகபல் கதிரொளி பரப்பும்
    மெய்ய னேயருள் புரிகமெய்க் கூத்தெனைக் காட்டும்
    செய்ய னேயருள் புரிகெனச் செப்பினன் பலகால் - 163



    2186 - விண்டுவடைந்தவின்பம் விளம்பல்
    அன்ன பெற்றிகண் டியாவரு மதிசய மெய்தி
    என்னை யென்னைமற் றிதுவெனக் குதுகுதுப் போடும்
    பொன்ன டித்தலம் போற்றினர் வினாதலும் நெடியோன்
    மன்னு றும்பெரு மகிழ்ச்சியா னவர்க்கிது வழங்கும் - 164



    2187 - செறியும் நான்மறைச் சிரமிசைப் பரம்பொருள் இந்நாள்
    அறிஞர் காண்கிலா அற்புதத் திருநடம் எனக்குப்
    பிறிவ ரும்பெருங் கருணையாற் காட்டிடப் பெற்றேன்
    மறியு மிவ்வுடல் வருபயன் கிடைத்ததென் றனக்கே - 165



    2188 - அவ்வ ருட்டிருக் கூத்தினைக் கண்டவார் வத்தால்
    இவ்வு றுப்பெலாம் விதிர்விதிர்ப் பெய்தின கண்டீர்
    செவ்வ னோர்மினென் றியம்புசொற் செவித்துளை நிறைப்பக்
    கொவ்வை வாய்த்திரு முதலியோ ராதரங் கொண்டார் - 166



    2189 - கேட்ட வப்பொழு தேயெதிர் கண்டெனக் கிளர்ந்து
    காட்டும் வேணவா மீமிசை யெழக்கழல் வணங்கி
    நாட்டு மத்திருக் கூத்தினை நாங்களுங் காண
    வேட்ட னங்கள்மற் றதுபெறு நெறிவிரைந் தருளாய் - 167



    2190 - என்று பன்முறை வேண்டலு மீர்ந்தொடைத் துளவோன்
    நன்று நுங்கருத் தெனமிக நகைமுக மலர்ந்து
    குன்ற வில்லியார் சேவடி சிந்தையிற் கொண்டாற்
    கன்று நம்பர்தம் மருளினா லறிவுவந் துதிப்ப - 168



    2191 - விண்டு முதலியோர் தில்லையடைந்து போற்றல்
    மல்லல் தெண்டிரை மறிகடல் மணிகள்கொண் டொதுக்கும்
    தில்லைக் கானுடைச் சிதம்பர வரைப்பிலெஞ் ஞான்றும்
    செல்வத் தாண்டவம் நவிற்றுமெம் பிரானெனத் தெளிந்தான்
    அல்லிப் பூமகள் முதலியோர்க் கன்னது செப்பி - 169



    2192 - அங்க ணெய்திநா மாளுடை நாயகன் திருமுன்
    பொங்கு காதலா னடைக்கலம் புகுந்துபோற் றிசைத்துத்
    தங்கி மெய்த்தவ மியற்றிடின் தண்ணருள் சுரந்து
    நங்க ளுக்கெதிர் காட்டுவ னானந்த நடனம் - 170



    2193 - யோகி யோர்களு மெய்தருந் திருநட முரிமை
    யாகு மன்புடை யடியவர்க் கெளியது கண்டீர்
    ஏகு வாமினி வம்மினென் றவருட னெழுந்து
    மாக வாற்றினால் வயங்கொளித் தில்லைவந் தடைந்தான் - 171



    2194 - கலிநிலைத்துறை
    சேர்ந்துதிரு மூலட்டந் தொழுது போற்றிச் சிந்தைகளி
    கூர்ந்துதிருப் பாப்பரசு கலுழன் முதலோ ருடன்குழும
    நேர்ந்ததவ யோகத்தின் நெடுநாள் முயன்றா னக்காலை
    வார்ந்தசடைப் பிரானாரும் மகிழ்ந்து காட்சி கொடுத்தருளி - 172



    2195 - ஒன்னாதா ருயிர்பருகி யொளிருந் திகிரித் தனிப்படையோய்
    என்நீமற் றிவரோடு மெம்பால் விழைந்த தியம்புகெனப்
    பொன்னாடை யுடைத்தோன்றல் புவியின் வீழ்ந்து பணிந்தெழுந்து
    நன்னாம மெடுத்தோதிப் புகழ்ந்து போற்றி நவில்கின்றான் - 173



    2196 - அண்ணலே யானந்தத் தெள்ளா ரமுதே யடியேங்கள்
    புண்ணியநின் திருக்கூத்தி னமுதம் பருகிப் பொலிவெய்த
    உண்ணிறைந்த பெருங்காத லுடையேம் கருணை செய்தருளாய்
    எண்ணியா ரெண்ணமெல்லாம் முடிக்க வல்ல வெம்மானே - 174



    2197 - விண்டுவைக் காஞ்சியிற் சிவபூசை செய்துவரப் பணித்தல்
    குறளுருவா யுலகளந்தா னியம்புங் கூற்றுக் கேட்டருளி
    அறவனா ரெதிர்மொழிவா ராழிப் படையோ யெவ்வெவரும்
    பெறலரிய நடங்காணப் பெட்டா யாகி லெம்மிலிங்கம்
    மறனணுகாத் திருக்காஞ்சி வரைப்பி னெய்தித் தாபித்து - 175



    2198 - நறுமலர்கொண் டருச்சித்து வல்லை யீண்டு நண்ணுதிநின்
    உறுகருத்தை முடிக்கின்றே மென்றாங் கருளு முரைகேளா
    மறுவிகந்த மனத்தன்பின் மாயோன் அங்கண் யாவரையும்
    நிறுவிவள வயற்காஞ்சி நெடுநீர் நகரங் கடிதடைந்தான் - 176



    2199 - ஏகம்பத் தொளிமணியை யின்பத் தொழும்பர் செய்தவங்கள்
    ஏகம்பத் தெனக்கொள்ளு மிறையைக் குறளாய் மாவலிமுன்
    ஏகம்பத் தாற்புரிசை யொருமூன் றிருத்த தனிமுதலை
    யேகம்பத் தொடும்புளக மெய்த வணங்கித் தொழுதெழுந்து

    இப்பாடல் மடக்கணி. ஏகம் பத்தென- ஒன்று பத்தாக.
    ஏகு அம்பு அத்தால் - சென்ற திருமாலாகிய அம்பினால்.
    முதலையே கம்பத்தோடும் - முதற்பொருளையே நடுக்கத்தோடும் - 177



    2200 - அக்கம்ப முடையார்க்குத் தென்பா லங்கண் சிவலிங்கம்
    மிக்கன்பு தழைத்தோங்க விண்டு வீசன் எனவிருவிப்
    பொக்கங்கள் முழுதகலப் போற்றி வேண்டி யருள்பெற்றுத்
    திக்கெங்கும் புகழ்பரப்புந் தில்லை வனத்தை மீண்டணைந்தான் - 178



    2201 - விண்டு முதலியோர் திருக்கூத்துக் காணல்
    ஆண்டணைந்த திருமாலுக் கருளா ரமிழ்த மனையாரும்
    தூண்டரும்பே ரொளிப்பிழம்பாய்ச் சுடருந் திருச்சிற் றம்பலத்துள்
    காண்டகைய வானந்த நிருத்தங் காட்டக் கழியன்பு
    பூண்டதிருப் பாப்பரசு புள்ளேற் றண்ண லொடுங்கண்டான் - 179



    2202 - கண்டளவில் பெருங்காத லின்ப வெள்ளங் கரையிகப்பக்
    கொண்டநிறை மகிழ்ச்சியினா லாடிப் பாடிக் கும்பிட்டு
    பண்டைநிலை மறந்துமதுப் பருகுஞ் சுரும்பிற் பரவசனாய்
    மண்டியபே ரார்வத்தால் வணங்கித் தொழுது களிசிறந்தான் - 180



    2203 - இறைவனார் திருக்கூத்துக் கிசையக் கணங்க ளியமுழக்கும்
    முறையுணர்ந்து பெருங்களிப்பால் தானும் படகம் முழக்குதலும்
    மறைமுதல்வ ரதுநோக்கி மகிழ்ந்து படகப் பணிதனக்கே
    நிறைவிருப்பி னருள்செய்யப் பெற்று வாழ்ந்தான் நெடியோனே - 181



    2204 - விதுவொன்றுஞ் சடைமுடியார் விண்டு வீசம் மந்தவா
    றிதுகண்டீர் முனிவீர்கா ளீண்டுத் தொழுது வழிபட்டுத்
    துதிசெய்து கணநாதர் திருமா ளிகைசூழ் தருமுன்றின்
    மதுவிள்ளும் மலர்க்கூந்தல் மலையான் மடந்தை எய்தினாள் - 182



    2205 - அகத்தியேச்சர வரலாறு
    பண்ணிசைந்த வரிச்சுரும்பர் பாடல் பயிலும் மலரிலைஞ்சித்
    தண்ணிசைந்த சிவகங்கைத் தழங்குந் திரைநீர் குடைந்தாடிப்
    பெண்ணிசைந்த பெருவனப்பின் பிராட்டி யாங்குப் பிறங்கொளியால்
    கண்ணிசைந்த களிசிறப்ப வகத்தி யேசங் கண்டணைந்தாள் - 183



    2206 - வேறு
    என்ற சூதனை மாதவர் யாவரு மேத்தியே
    பன்றி காணருஞ் சேவடிப் பற்றிய சிந்தையோய்
    துன்று சீர்மை யகத்தியே சத்தியல் சொல்கென
    நன்று முள்ளம் மகிழ்ந்து விளங்க நவிற்றுவான் - 184



    2207 - நாரதர் விந்தமலைக்கு மேன்மை கூறிப் போதல்
    கடவுள் மாமுனி நாரதன் முன்னொரு காலையின்
    இடனு டைத்திருக் காஞ்சியி னேகம்ப நாதரைச்
    சுடரும் மாடக யாழிசை யாற்றொழு தேத்துவான்
    தடவு வெள்ளிப் பருப்பத நின்றுந் தணந்தனன். - 185



    2208 - அண்ண லார்தம் அடியிணை தைவரு சிந்தையான்
    நண்ணு கின்ற நரப்புக் கருவித் தலைவனை
    விண்ணின் நோக்குபு வெய்தென விந்த நெடுங்கிரி
    எண்ணம் வாய்ப்ப வியங்கு முருக்கொடு முன்னுறா - 186



    2209 - அருக்கி யம்முத லாயின கொண்டு வழிபடூஉப்
    பெருத்த காதலிற் பேணித் தொழுது வணங்கலும்
    கருக்க டிந்துயர் காழறு மாதவ னோகையான்
    மருத்த பூஞ்சுனை விந்த வரைக்கிது பேசுவான் - 187



    2210 - மன்னும் மெய்த்தவர் பாற்புரி யும்வழி பாட்டினில்
    நின்னை யொப்பவர் கண்டில னித்தகு நின்னையும்
    பொன்னி னாட்டவர் போத விகழ்ந்தன ரன்னதை
    உன்னி யுன்னி வருந்திடு கின்றதென் னுள்ளமே - 188



    2211 - என்ற தாபத வேந்தனை மீள இறைஞ்சிமுன்
    நின்று தேவருள் யாவர் இகழ்ச்சி நிகழ்த்தினார்
    என்ற னக்கிகழ் யாதுகொல் கூறினை யேலது
    மன்ற மாற்றுவன் யானென விந்தம் வகுத்ததால் - 189



    2212 - முனிவ னவ்வுரை கேட்டு மொழிதரு மேன்மையிற்
    புனித நின்னொடு பொன்வரை நேரெனும் நூலெலாம்
    பனிம திச்சடைப் பண்ணவர் தேவர் குழாத்தொடு
    நனிம கிழ்ந்தவண் வைகுவர் நாள்தொறும் ஆதலால் - 190



    2213 - இயங்கு கோள்கள் உடுக்கள் இராசி யெவற்றொடும்
    வயங்கு சந்திர சூரியர் தாம்வட மேருவை
    நயந்து சுற்றுவர் நாடொறும் அத்திறம் நோக்கியே
    உயங்கு கின்றனன் யானெனப் பின்னரும் ஓதுவான் - 191



    2214 - தனக்கு நேர்வரி யாய்பல சாற்றுவ தென்கொலோ
    எனக்கு நீநனி நண்பினை யாதலி னித்திறம்
    உனக்கி யம்பினே னின்னினி யேகுவ லொய்யென
    மனக்கு வேண்டிய செய்கென மாதவன் நீங்கினான் - 192



    2215 - விந்தம் ஓங்கி எழுதல்
    எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    பத்தர் மெய்க்கிளை மகதி யாழ்பயில் படிம உண்டியன் நீங்கலும்
    மெய்த்த வெஞ்சினம் மீக்கொள் மால்வரை வீயும் எல்லை விளக்கினைச்
    செத்தி றப்ப வளர்ந்தெ ழுந்து விசும்பு சென்று நிவந்ததால்
    மைத்த வல்லிருள் கீறி வாள்கள் வயங்கும் ஆறு தடுத்தரோ.
    வீயும் எல்லை விளக்கினைச் செத்து - அவியும்போது சுடர்விடும் விளக்கினை
    ஒத்து. நிவந்து - உயர்ந்து. ஆறு- வழி. - 193



    2216 - துருவ மண்டல எல்லை கீழ்ப்பட மேக்கெ ழுஞ்சுடர் வெற்பினைத்
    தருநி லத்தவர் நோக்கி முந்து தழற்ப டைக்குலி சக்கொடுங்
    கருவி யிற்சிற கரிவ லாரி யுடன்செ ருச்செய் கருத்தினால்
    வருவ தாங்கொல் எனத்தி கைத்து மருண்டு தம்முள் வெரீஇயினார் - 194



    2217 - தங்கள் ஒப்புமை கொண்டு நண்ணு தருக்கு ணர்ந்து வெகுட்சியால்
    பொங்கி விம்மி மதர்த்தெ ழுந்தெதிர் போர்செ யப்புகு தன்மையின்
    கொங்கை வம்பு சழங்க மார்பம் அலைத்து வீறு கொளக்கதழ்
    தங்கண் மங்கையர் வெற்பின் ஒக்கமுன் நோக்க விண்மிசை அண்மினார் - 195



    2218 - சிட்டி நாள்முதல் ஓய்வி லாது தினம்பொ லங்கிரி சூழ்வர
    வட்ட மிட்ட கறங்கினோலை எனச்சு ழன்றல மந்துநைந்
    திட்ட கோள்கள் இராசி நாள்களும் அன்று தன்னம் இளைப்பொழிந்
    துட்ட தும்பு களிப்பின் வைகின ஓங்கு மால்வரை யாலரோ.
    கறங்கு - காற்றாடி. தன்னம் - சிறிது. - 196



    2219 - வேறு
    மாயி ருங்கனக மாம லைத்தலையின்
          மன்னி வன்குயவன் நேமியின்
    ஞாயி றாதிகளை யிடைய றாதுகடு
          கச்சு ழற்றிநனி தளர்வுகூர்
    பாய சீர்த்திமிகு துருவ னுஞ்சிறிது
          பணியொ ழிந்துறை நலம்பெற
    மீயு கந்தமணி அருவி தாழ்நெடிய
          விந்த வெற்புதவி செய்ததால் - 197



    2220 - அருவி தாழ்சயிலம் ஒளிவ ழங்குநெறி
          தனைய டைத்துமிசை யணவலால்
    ஒருபு டைத்திமிரம் மொய்ப்ப மற்றையொரு
          புடையுறக் கதிர்கள் மொய்த்திடும்
    இருதி றத்தினொடு மருவு பெற்றிமை
          இசைந்த மன்னுலகம் அற்றைநாள்
    மரும லர்க்குழலி பாக மாகவளர்
          மறைமு தற்பொருள் நிகர்த்ததால் - 198



    2221 - இகழ்ந்த நீரினி நடப்ப தெங்கணென
          எள்ளி வாள்களை நகைப்பதூஉம்
    திகழ்ந்த மேருவொடு செருவி ளைப்பவறை
          கூவி வீரநகை செய்வதூஉம்
    உகந்தெ ழுந்தனது சீர்த்தி பல்குவதும்
          ஒப்ப எங்கணும் அடித்தலம்
    அகழ்ந்து கல்லென இரைத்து வெள்ளென
          விளர்த்து வீங்குபுனல் அருவியே - 199



    2222 - இறவு ளர்க்குமிசை யுலக வாழ்க்கையர்
          விருந்தளித் துவகை எய்தினார்
    குறம டந்தையரும் அரமடந்தையரும்
          அளவ ளாயுறவு கொண்டனர்
    முறைநி றுத்துசுர முனிவர் வெற்புறையும்
          முனிவர் நல்வர வெதிர்ந்தனர்
    மறைமு ழைப்பணிகள் வானு லாம்பணி
          புலம்பு தீர்ந்திட மணந்தன - 200



    2223 - அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    மிளைபடு சாரற் குன்றம் மேக்குற நிவத்த லோடும்
    ஒளிவழங் காமைக் கால வேறுபா டொழிந்த வாற்றான்
    வளமலி தவந்தா னங்கள் முதலிய மறுத்துப் பைங்கூழ்
    விளைவுகள் அ·கி ஞாலம் வெறுவிய தாயிற் றன்றே - 201



    2224 - தேவர்கள் துன்புறுதல்
    அங்கது நோக்கி வல்லை புரந்தர னாதி விண்ணோர்
    தங்குலக் குரவ னோடுஞ் சதுமுகன் இருக்கை சார்ந்தார்
    பங்கயக் கிழவன் நோன்றாள் பணிந்தனர் பரசிப் போற்றி
    எங்களை வெருவா வண்ணம் புரத்தியென் றிதனைச் சொற்றார் - 202



    2225 - இருசுடர் வழங்கு மாற்றை யிரும்புசூழ் சோலை விந்தப்
    பருவரை தடுத்த லாற்றாற் பகலிராத் தொடக்க மின்றித்
    திருநெறி வேள்வி மாறித் தெருமந்த துலக மன்னோ
    மருமலர்க் கமல வாழ்க்கை வயங்கெழு கடவு ளேறே - 203



    2226 - இனியெமக் குறுதி யென்னே யென்றலு னமிளவண் டூதூம்
    பனிமலர்க் கதுப்பி னைம்பாற் பாரதி கொழுநன் கேளாத்
    தனிமிடல் படைத்த விந்தத்தருக்கினைப் பௌளவ முண்ட
    முனிவனே யடக்க வல்லும் என்றுள முன்னிச் சொல்வான் - 204



    2227 - நடலையின் றுயர்ந்தோய் கேட்டி காசிமா நகரம் வைகுங்
    குடமுனி தன்னை விண்ணோர் குழாத்தொடும் நணுகி விந்தத்
    தடவரைத் தருக்கு நீப்பான் வேண்டுக தவத்தான் மிக்கோன்
    கடலெலாங் குடங்கை யேற்றுப் பருகினான் முன்னங் கண்டாய் - 205



    2228 - என்றிது வியாழப் புத்தேட் கியம்பினா னியம்பிப் பின்னும்
    தன்றிரு வுளத்தி னெண்ணிச் சயிலவீ றடக்க யானே
    மன்றலம் பொழில்சூழ் காசி வரைப்பினைக் குறுகி யந்த
    மின்றிகழ் சடையாற் கோதி விடுப்பலென் றெழுந்து சென்றான் - 206



    2229 - பொன்னவ னாதி தேவர் புடையுறப் போந்து செங்கால்
    அன்னமுங் கருமென் கூந்த லன்னமும் மறலி யாடும்
    கன்னிவெண் டரங்கத் தெண்ணீர்க் கங்கையா றுடுத்த காசி
    நன்னெடு நகரம் புக்கான் நகைமலர்க் கமலத் தோன்றல் - 207



    2230 - அயன் அகத்தியருக்கு உரைத்தல்
    அவ்வயி னகில நாத ரடியிணை தொழுது போற்றித்
    தெவ்வலி யடுபோ ராண்மைத் தேவர்தங் குழாத்தி னோடும்
    எவ்வமில் கேள்வி சான்ற குறுமுனி யிருக்கை நண்ணிப்
    பௌளவநீர் பருகி னானைக் கண்டிது பகர லுற்றான் - 208



    2231 - முக்குறும் பெறிந்த காட்சி முனிவரே றனையாய் சால
    மிக்குயர் விந்த நாகந் தருக்குமீக் கொண்டு நாளும்
    பொக்கமி லிரவி திங்கள் புகுநெறி தடைசெய் தன்றால்
    அக்கிரி யிறுமாப் பெல்லா மகற்றுவான் நீயே வல்லை - 209



    2232 - இன்னினி விரைக வல்லே தாழ்க்கலை யென்று வேண்டும்
    அன்னவே றுயர்த்த புத்தேட் கருந்தவக் கிழவன் கூறும்
    என்னிது புகன்றா யையா வெம்பிராற் கினிய காசி
    தன்னைவிட் டகலேன் வீடு தருவதித் தலங்கா ணென்ன - 210



    2233 - வண்டொடு ஞிமிறுந் தேனும் வரிச்சிறைச் சுரும்பு மார்ப்பத்
    தண்டுளி நறவ மூற்றுந் தடமலர்ப் பொகுட்டுத் தெய்வப்
    புண்டரீ கத்தின் மேய புண்ணியன் கேட்டு முந்நீர்
    உண்டுயர் முனிவர் கோமா னுளங்கொள உணர்த்து கின்றான் - 211



    2234 - வெறுப்பொடு விருப்பொன் றில்லாய் விண்ணவர் இடுக்கண் தீர்க்கும்
    திறத்தினை எவ்வாற் றானும் முடிப்பதே சீரி தன்றி
    மறுப்பது தகாதால் மற்று வயங்கொளி உலகம் மூன்றும்
    பெறத்தகு கருமம் என்றால் என்னினிப் பேசு மாறே - 212



    2235 - சீருடைத் ததீசி முன்னோர் தேவர்தம் பொருட்டுத் தங்கள்
    ஆருயிர்க் கிறுதி நோக்கா துடம்பையு மளித்தா ரன்றே
    காரிய மிதுமற் றம்ம சிறிதெனக் கருதல் வேண்டா
    ஓரின்வே றுன்னை யொப்பா ருலகமூன் றிடத்து மில்லை - 213



    2236 - வேசற வொழிதி வெள்ளை விடையவர்க் குவகை நல்கிக்
    காசியின் மேன்மை சான்ற கடிநகர் அங்கண் உண்டால்
    மூசிள ஞிமிறு பாய முகையுடைந் தொழுகுந் தேறல்
    வாசமென் மலர்ப்பூம் பொய்கை வளவயற் காஞ்சி மூதூர் - 214



    2237 - மதுமலர்ப் பொழில்சூழ் காசி யிறந்திடின் வழங்கும் முத்தி
    அதுவும்நம் பெருமா னார்தம் அருளுருப் பெறுவ தாகும்
    முதுநகர்க் காஞ்சி தன்னை நினைப்பவே முத்தி நல்கும்
    கதுவருஞ் சிவபி ரானார் திருவடி கலப்ப தாமால் - 215



    2238 - அத்தலப் பெருமை முற்றும் அழலவிர் சடைமேற் கங்கை
    வைத்தவர் அறிவ தல்லால் மற்றெவர் அறியற்பாலார்
    சித்திகள் அனைத்தும் நல்கும் ஆயிடைச் சென்றா யாகில்
    உத்தம குணத்தாய் மற்றும் பெருநலம் உனக்குண் டாமால் - 216



    2239 - சிமிழ்விடப் பாம்பு சுற்றித் திரைகடல் கலக்கிப் பெற்ற
    அமிழ்தினை இமையோர்க் கூட்டும் அரியெனக் கம்பம் மேய
    குமிழ்மறி விழியாள் பாகர் அருளினாற் கொழிக்கு மின்பத்
    தமிழ்மொழிப் பாடை யொன்று தரைமிசை விளங்கச் செய்வாய் - 217



    2240 - பாணித்த லமையு மின்னே படர்கெனும் பவளச் செவ்வாய்
    வாணிக்கு மணாளன் றன்னை விடைகொண்டு மகிழ்ச்சி கூர
    ஆணிப்பொன் மாடக் கோயி லகிலநா யகரை யன்பாற்
    பேணித்தாழ்ந் தெழுந்து காசிப் பெரும்பதி தணந்து போந்தான் - 218



    2241 - அகத்தியர் விந்தமலையை அடக்குதல்
    கச்சிமா நகரங் காணும் ஆதரங் கைமிக் கீர்ப்ப
    நச்சணி மிடற்றார் பாத நகைமலர் மனத்துட் கொண்டு
    பொச்சமில் மனையா ளோடும் வானெறிப் போது கின்ற
    விச்சைதேர் முனிவன் றன்னைக் கண்டது விந்த நாகம் - 219



    2242 - ஊற்றெழும் பரவைத் தெண்ணீ ருழுந்தள வாக்கி யுண்ணும்
    ஆற்றலின் நெடியனாகி யளவினிற் குறிய னாய
    நீற்றணி முனிவர் கோனைக் காண்டலும் நெஞ்சம் மாழ்கிப்
    பாற்றரும் பயமீக் கொண்டு பதைபதைத் தொடுங்கிச் சோர்ந்து - 220



    2243 - குறுகிமுன் குறுகித் தாழ்ந்து கோதறு விதியி னாற்றால்
    நிறுவிய அருக்கி யாதி யருச்சனை நிரப்பல் நோக்கி
    உறவனும் மகிழ்ந்து பத்தி விளைவினை உயர்த்துக் கூற
    மறவலுந் தொழுது போற்றி மணிவரை யிதனை வேண்டும் - 221



    2244 - ஐயனே யடியேன் மாட்டு மருட்பெருங் கருணை வைத்த
    செய்யனே யணங்கு லோபா முத்திரை திளைக்குந் தூய
    மெய்யனே யலைகள் வீசும் விரிகடல் முழுது மேற்ற
    கையனே யினியான் செய்யக் கடவதென் னருளா யென்ன - 222



    2245 - பொன்னில மிருக்கை கொண்டோர் பொருட்டிவண் தென்பா லாசை
    தன்னையான் குறித்துப் போந்தேன் சயிலமே மீளுங் காறும்
    இந்நிலை யிருத்தி யென்னக் கரத்தினா லிருவிக் காஞ்சி
    நன்னெடு நகரம் நோக்கி நடந்தனன் நிகரொன் றில்லான் - 223



    2246 - வேறு
    செந்நெறி நோக்கி 'அமைந்தாங் கொழுகா னளவறி கில்லான்
    தன்னை வியந்தான் விரைந்து கெடும்' எனல் சத்தியங் கண்டாம்
    மன்னிய மேரு வரையோ டிகலி வளர்ந்தெழு விந்தம்
    முன்னுள தோற்றமும் வீறும் முழுதும் இழந்தது மன்னோ - 224



    2247 - சங்கர னாரெதிர் தோன்ற மறையுந் தடாதகை தன்னோர்
    கொங்கை நிகர்த்தது செல்லுங் குறுமுனி நேருறு குன்றம்
    அங்கது கண்ட விமையோ ரனைவரு மத்திறங் கேட்ட
    நங்கையை யீன்றபொன் மாலை யுவகையின் நாற்றி யடைந்தார்.
    நாற்றி - நான்மடங்கு - 225



    2248 - அகத்தியர் காஞ்சியை யடைதல்
    குன்றிடை முட்டி மறுகுங் குரீயின் தடையுண் டழுங்கி
    நின்ற வருக்கன் முதலோர் நெறிகொளச் செல்ல விடுத்துத்
    தந்துணைப் பாவையி னோடுஞ் சார்தரு தாபத வேந்து
    மன்றலம் பூம்பொழிற் காஞ்சி வளநகர் தன்னைமுன் கண்டான் - 226



    2249 - கண்டு தொழுது வணங்கிக் கையிணை யுச்சியிற் கூம்ப
    மண்டிய காதலிற் புக்கு மரபுளிச் செய்கடன் ஆற்றி
    அண்டர் பிரானார் தளிகள் அனைத்தும் முறையான் இறைஞ்சிப்
    பண்டை மறைகள் முழங்கும் படரொளி யேகம்பஞ் சேர்ந்தான் - 227



    2250 - செல்வ மணித்திரு வாய்தல் சென்று பணிந்து புகுந்தாங்
    கல்வளர் கின்ற மிடற்றா ராரரு ளென்ன நிறைந்த
    சொல்வளர் சீர்ச்சிவ கங்கைத் தூநறு மென்புன லாடி
    எல்வளர் கண்டிகை வெண்ணீ றெங்கும் வயங்க அணிந்தான் - 2287



    2251 - வாங்கு நுணங்கிடை பாகர் மாளிகை சூழ்மணி முன்றிற்
    பாங்கு வலங்கொடு சென்று படரொளி யானந்த வெள்ளம்
    தேங்குந் தனிமறைச் சூதத் தெய்வத் தருநிழல் மேய
    வீங்குங் கருணைப் பிழம்பை விழியெதி ரேகண்டு கொண்டான் - 229



    2252 - இணங்கு முறைமையி னங்க மெட்டினு மைந்தினுஞ் சால
    வணங்கி மகிழ்ந்து திளைத்து வார்புனல் கண்கள் சொரியக்
    குணங்குறி யின்றி யெழுந்த கோலத் திருவுருப் போற்றி
    அணங்கரு மெய்யருள் பெற்று மீண்டனன் ஆர்கலி யுண்டான் - 230



    2253 - வன்பழ வல்வினை மாற்றுங் கம்பம் மகிழ்ந்தவர் தென்சார்த்
    தன்பெய ராற்சிவ லிங்கம் தாபித் தருச்சனை யாற்றி
    முன்பு வரம்பல பெற்று மீமிசை மூண்டெழு மன்பான்
    மின்புரி செஞ்சடை யாரை மீளப் பழிச்சுத லுற்றான் - 231



    2254 - அகத்தியர் துதித்தல்
    கொச்சகக் கலிப்பா
    இந்நா ளெனக்குப் பயப்பட்ட திப்பிறவி
    இந்நா ளெனக்குப் பயப்பட்ட தியான்செய்தவம்
    இந்நா ளெனக்குப் பயப்பட்ட தென்னறிவும்
    இந்நா ளுனைக்காணப் பெற்றமையி னெங்கோவே - 232



    2255 - எண்ணமெலா மெய்தினே னெண்ணமெலா மெய்தினேன்
    எண்ணமெலா மெய்தினே னெங்கள் பெருமானே
    கண்ணனொடு நான்முகனுங் காணாத் துணையடிகள்
    கண்ணெதிரே யிற்றைநாள் யான்காணக் காட்டினையே - 2330



    2256 - சங்கரா சம்புவே சங்கரா சம்புவே
    சங்கரா சம்புவே சாம்ப சிவனேயென்
    அங்கணா யென்றென்று மோலிட் டழைத்தரற்றும்
    இங்கெனக்கு வாழ்நாள்க ளிவ்வாறே போகியவே - 234



    2257 - குன்றாத அன்புனக்கே குன்றாத அன்புனக்கே
    குன்றாத அன்புனக்கே மிக்கோங்கு கொள்கையது
    என்றுமெனக் குண்டாக என்றுமெனக் குண்டாக
    என்றுமெனக் குண்டாக என்றுமோர் பெற்றியனே - 235



    2258 - வையமிசைத் தோற்றமுதல் சாங்காறும் மன்றவுனைத்
    தெய்வமெனப் பேணாத் திருவிலிகள் என்குலத்தில்
    எய்தியொரு ஞான்றும் பிறவற்க எய்துறினும்
    வெய்தெனமற் றாங்கே விளிந்தொழிக எம்மானே - 236



    2259 - ஆனே றுயர்த்தருளி யன்றினா ரூரெரித்த
    கோனே யெனக்குக் குலதெய்வ மாம்பேற்றால்
    யானே பெருங்செல்வன் யானே பெருஞ்செல்வன்
    யானே பெருஞ்செல்வன் எல்லா உலகிலுமே - 237



    2260 - சிறந்துன்னைத் தெய்வமெனக் கொள்ளாத சீத்தை
    பிறந்த குலம்பிறவா நின்றகுலம் பீளின்
    உறந்த குலத்தும் உமையொருபால் மேயாய்
    மறந்தும் பிறவாத வாழ்வெனக்கு வேண்டுமால் - 238



    2261 - ஏழைக் குறும்பின் இமையோர் தமக்கிரங்கிப்
    பீழைக் கொடுவிடத்தை யுண்டளித்த பேராளா
    ஆழிப் பெருங்கருணை யாரமுதே வெற்பீன்ற
    மாழைப்பூங் கண்ணி மணாளா அடிபோற்றி - 239



    2262 - அகத்தியர் வேண்டுகோள்
    வேறு
    என்றென்று பன்முறையுந் துதித்திறைஞ்சித் தாழ்ந்தெழுந்து
    நின்றுகரஞ் சிரமுகிழ்ப்ப நிறைந்தபெரு மகிழ்ச்சியுடன்
    குன்றனைப் பெருந்தவத்தோ னிதுவொன்று கூற்றுதைத்த
    மின்றிகழுஞ் சேவடிக்கீழ் விண்ணப்பஞ் செய்கின்றான் - 240



    2263 - அடியனேன் வடகாசி நீத்தகன்று நினக்கினிய
    கடிமதில்சூழ் கொடிமாடக் காஞ்சியினைத் தலைப்பட்டுப்
    பொடியணிந்த திருமேனிப் புண்ணியமே இமயவரைப்
    பிடிமணந்த மதகளிறே பெரும்பேறு பெற்றுய்ந்தேன் - 241



    2264 - இத்தகுபே றுடையேற்கு மற்றின்னும் ஒருகருத்து
    மெய்த்தபெரு வேட்கையினால் ஒழியாது மேன்மேலுஞ்
    சித்தமிசை மூண்டெழுமால் அதுநிரம்பச் சிறியேன்பால்
    வைத்த பெருங் கருணையினால் வழங்குவாய் எனப்போற்றி - 242



    2265 - எவ்வினையு மோப்புதலால் திராவிடமென் றியல்பாடை
    எவ்வமறப் புதிதாக யான்வகுப்ப நல்கியது
    எவ்வருணத் துள்ளார்க்கு மெளிதாகப் புத்தேளிர்
    எவ்வெவர்க்கும் சுவையமிழ்தி னினிதாகச் செய்தருளாய் - 243



    2266 - மூன்றுறழ்ந்த பதிற்றெழுத்தான் முழுவதுமாய் உனக்கினிதாய்த்
    தோன்றிடுமத் தமிழ்ப்பாடைத் துதிகொண்டு மகிழ்ந்தருளி
    ஆன்றவர மெல்லார்க்கு மிவ்வரைப்பி னளித்தருளாய்
    ஏன்றெடுத்த மொழிகல்வி யெவற்றினுக்கு மிறையோனே - 244



    2267 - அகத்தியர் தமிழாசிரிய ராதல்
    மன்னியவித் தமிழ்க்கிளவி மந்திரங்கள் கணித்தடியேன்
    செந்நெறியின் வழுவாவித் திருக்காஞ்சி நகர்வரைப்பின்
    உன்னணுக்க னாகியினி துறைந்திடவும் பெறவேண்டும்
    இன்னவரம் எனக்கருளாய் எம்பெருமான் என்றிரந்தான் - 245



    2268 - கூம்பியகைத் தலமுடைய குறுமுனிக்குப் பிஞ்ஞகனார்
    தாம்பரிந்து தமிழ்விளக்கு மாசிரியத் தலைமையொடு
    மேம்படுதென் றிசைக்கிறைமை நல்கிவேட் டனபிறவும்
    ஆம்பரிசி னளித்தருளி யவ்விலிங்கத் திடைக்கரந்தார் - 246



    2269 - இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப
    இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும்
    இருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றாலிவ்
    விருமொழியும் நிகரென்னு மிதற்கைய முளதேயோ - 247



    2270 - இவ்வண்ணம் அருள்பெற்ற இருந்தவனும் அகலிடத்தின்
    மெய்வண்ண ஓத்துமுறைத் தீந்தமிழை விளக்குவித்துச்
    செவ்வண்ணத் திருமேனிப் பெருமானார் திருவடிகள்
    அவ்வண்ணந் தொழுதேத்தி நெடுங்காலம் அங்கிருந்தான் - 248



    2271 - வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
    தொடர்புடைய தென்மொழியை உலகமெலாந் தொழுதேத்துங்
    குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனிற்
    கடல்வரைப்பின் இதன்பெருமை யாவரே கணித்தறிவார் - 249



    2272 - அகத்தியர் பொதிகை யடைந்த வரலாறு
    கலிவிருத்தம்
    இத்தகு தமிழோதி யாங்கினி துறைநாளில்
    அத்தலை யரனார்தா மாயிழை யுமையாளைப்
    புத்தணி திகழ்மன்றல் புரிநல முளதாக
    எத்தலை யுறைவோரு மீண்டின ரிமயத்தில் - 250



    2273 - முனிவொடு வரைதாழ்த்த முனிவனு மதுநோக்கி
    பனிவரை தனையுற்றான் பலபல வுலகத்தின்
    இனிதுறை உயிரெல்லாம் தொகுதலின் இருஞாலத்
    தனிமக ளொருபக்கம் சாய்ந்தனள் பொறை யாற்றாள் - 251



    2274 - தென்புவி மிசையோங்கித் திகழ்வட புவிதாழப்
    பொன்பயில் உலகத்துப் புங்கவ ரதுகாணூஉத்
    துன்பொடு பயமெய்தித் துணையடி தொழுதேத்தி
    என்பணி வரைமார்பற் கின்னது புகல்கிற்பார் - 252



    2275 - தாழுறு புவிதன்னைச் சமனிலை பெறவைத்துக்
    காழுறு தமியேமைக் காப்பது கடனெந்தாய்
    ஆழ்கடல் விடமுண்டோய் இல்லெனி லடியேங்கள்
    வாழல மிதுபோதே அவல்விழு வதுதிண்ணம் - 253



    2276 - வெருவரு செயலோராய் விண்ணவர் இதுகூறத்
    திருமுடி அசைவோடுஞ் சினவிடை யவர்சொல்வார்
    தருமலர்த் தொடையீர்காள் சனமிக நிரைவுற்று
    மருவிய பாரத்தால் தாழ்ந்தது வளர்ஞாலம் - 254



    2277 - ஆதலி னியாமாத லெம்மொடு நிகராலோர்
    மாதவ முனியாதல் தென்றிசை வயினின்னே
    போதரி னுலையாமே புவிநிலை பெறுமென்னக்
    காதர முறுவிண்ணோர் கேட்டனர் கவலுற்றார் - 255



    2278 - மணவினை நிகழ்காலை மதிமுடி யுடையானங்
    கணைவது தகுமேவே றவனோடு நிகர்வர்யார்
    இணையிலி முழுதிற்கு மிறையவ னெவராலும்
    உணர்வரு முதலென்றே ஓலிடும் மறையெல்லாம் - 256



    2279 - என்றிவை பலவெண்ணி யிணையடி தொழுதேத்தி
    அன்றினர் புரமூன்றும் நீற்றியன அடிகேள்இம்
    மன்றலின் நீசேற லெவ்வண முனைநேரா
    கின்றவ ருளரென்று கேட்டில மெங்கெங்கும் - 257



    2280 - என்னலு மனலங்கை யேற்றவ ரிமையீர்நீர்
    சொன்னது மெய்யேயித் தொல்லுல கினிலெம்மை
    அன்னவ ரிலைகண்டீர் குறுமுனி யலதென்னாப்
    பன்னிய மொழிகேளாப் பண்ணவர் களிகூர்ந்து - 258



    2281 - மங்கல வினைசான்ற வதுவைசெய் யமையத்தின்
    எங்களை யுடையாய்நீ யேகுவ தமையாதே
    அங்கினி அனைகிற்பான் தமிழ்தெரி யறவோர்க்குச்
    சங்கர விடைநல்கத் தகுமென வுரைசெய்தார் - 259



    2282 - கடல்விட மமுதாக்குங் கறைமிட றுடையாருங்
    குடமுனி தனையங்கண் கூயின ரெதிர்நோக்கிப்
    படரொளி யிளமூரல் பனிமுக மலர்காட்டித்
    தொடர்புடை விழிகாட்டும் கருணையி னிதுசொல்வார் - 260



    2283 - புத்தெழில் பெறுவிந்தம் புரிதரு மிடர்மாற்றி
    முத்தமிழ் முனிவாமுன் முச்சக முழுதுய்ய
    வைத்தனை யிதுபோதுஞ் சந்தன வரைநண்ணி
    இத்தரை சமமாகப் புரிமதி கடிதென்றார் - 261



    2284 - இருள்பொதி மணிகண்ட ரடிதொழு திருமுந்நீர்
    பருகிய முனிவேந்தன் பையுளின் உரைசெய்வான்
    அருள்பெறு மடியார்கட் கவரினு மினியானே
    கருணையின் நிறைவேயான் கழிவது முறையேயோ - 262



    2285 - மருவினர் பிரியொண்ணாய் மற்றிவ ரெல்லாநின்
    திருமண நிறைகோலங் காண்டகு திறல்பெற்றார்
    பெருமண நடுவேநீ பிரிகென வெனைநீப்ப
    இருளுறு கொடியேனிங் கெப்பிழை செய்தேனோ - 263



    2286 - துணைவிய ரொடுவானத் தொல்லுல குடையாரும்
    பணமணி மணிநாகர் பாரிடர் முனிவோரும்
    மணவணி தொழுதுய்வான் இன்னமும் வருகின்றார்
    அணைவுறு தமியேனைத் தள்ளுவ தழகேயோ - 264



    2287 - விரைசெலல் முனிவோர்கள் விரைகெழு சுனைதோய்வார்
    அரசிலை குசைமற்றும் அன்புடன் எதிருய்ப்பார்
    கரகமு மிழைசூழ்வா ரவரோடு களியாமே
    தெருமர வடியேனைத் தள்ளுதல் சீரேயோ - 265



    2288 - பாடுவர் சிலரன்பர் பரவுவர் சிலரன்பர்
    ஆடுவர் சிலரன்பர் அழுகுவர் சிலரன்பர்
    ஓடுவர் சிலரன்பர் உவரோடு மகிழாமே
    வாடுற அடியேனைத் தள்ளுதல் மரபேயோ - 266



    2289 - ஒளிமணி மழைதூர்ப்பார் ஒண்மலர் மழைதூர்ப்பார்
    புளகமும் உடல்போர்ப்பார் புகழ்பல திசைபோர்ப்பார்
    அளவறு மகிழ்கூர்ப்பார் அவரோடு கலவாமே
    தளர்வுற அடியேனைத் தள்ளுவ தருளேயோ - 267



    2290 - கண்டனம் மணவின்பங் காழுறு வினையெல்லாம்
    விண்டன முலவாத மேதகு சிவபோகம்
    கொண்டன மெனவார்ப்பா ரவரொடு குலவாமே
    தொண்டற வடியேனைத் தள்ளுதல் சூழேயோ - 268



    2291 - குழலவிழ் வதுமோரார் குழைவிழு வதுமோரார்
    இழைசரி வதுமோரார் எதிரெதிர் மடமாதர்
    மொழியுமங் கலவோதை யிருசெவி முகவாமே
    கழிவுற வடியேனைத் தள்ளுதல் கடனேயோ - 269



    2292 - முனிவரர் கணநாத ரயனரி முதலானோர்
    பனியறு கணிகாலைப் பேரிசை படமுன்பின்
    எனவெழு நிறைபூசல் கண்டினி துவவாமே
    மனமடி வுறவென்னைத் தள்ளுதல் மாண்பேயோ - 270



    2293 - மண்டில மணிவேதி குண்டமும் மலிவித்திங்
    கெண்டிசை புகைவிம்ம எரியிடை இழுதூற்றித்
    தண்டிரள் பொரியட்டுந் தகவது காணாமே
    விண்டிட வடியேனைத் தள்ளுதல் விழைவேயோ - 271



    2294 - ஒழிகொளி மணிவேய்ந்த கரகம துறுபான்மை
    விழிமனை யவள்வார்ப்ப வெற்பிறை நினதாள்கள்
    கழுவினன் மலர்தூவி வழிபடல் காணாமே
    அழிவுற அடியேனைத் தள்ளுதல் அறனேயோ - 272



    2295 - காரொடு நிகர்கூந்தற் கன்னியை மலைவேந்தன்
    நீரொடு நின்கையில் உதவிடு நிறைகோலம்
    ஆரொடு மதிவேய்ந்த அங்கண காணாமே
    பேரிடர் உறவென்னைத் தள்ளுதல் பெட்பேயோ - 273



    2296 - ஒருவர்முன் னணிசாந்தம மொருவர்தம் முதுகப்பப்
    பருவிலை மணியாரம் பட்டுடல் வடுவாக
    நிரல்பட மிடைகுற்றார் தொழுநிலை காணாமே
    பருவர வடியேனைத் தள்ளுதல் பண்பேயோ - 274



    2297 - குடையொடு குடைதாக்கக் கொடியொடு கொடிதாக்கப்
    படையொடு படைதாக்கப் பண்ணவர் குழுவோடும்
    விடைமிசை வருகோலம் விழியெதிர் காணாமே
    கடைபட வடியேனைத் தள்ளுதல் கவினேயோ - 275



    2298 - வாரண நிரைசூழ வாம்பரி நிரைசூழத்
    தேரணி நிரைசூழத் தேவர்கள் புடைசூழ
    ஏரணி நகர்சூழும் நினதெழில் காணாமே
    ஆரஞர் உறஎன்னைத் தள்ளுதல் அமைவேயோ - 276



    2299 - தொடிபல நிலம்வீழத் துணைமுலை நனிவிம்மக்
    கடிபடு குழல்சோரக் கன்னியர் மயல்கூரும்
    படிமறு கிடைநண்ணும் புத்தெழில் பாராமே
    மிடியுற வடியேனைத் தள்ளுதல் விதியேயோ - 277



    2300 - மரகத வடிவாளும் மழவிடை யனையாயும்
    ஒருமணி யணையும்ப ரினிதுறை யுயர்கோலம்
    இருவிழி களிகூரப் பருகுவ தில்லாமே
    பரிவுற அடியேனைத் தள்ளுதல் பாங்கேயோ - 278



    2301 - வந்தனர் மணஞாட்பின் மலரடி தொழுவார்க்குத்
    தந்திடும் அருள்நோக்கம் தமியனும் உடன்நின்று
    சிந்தையின் மகிழ்வெய்தப் பெறுவது செய்யாமே
    நைந்திட அடியேனைத் தள்ளுதல் நலமேயோ - 279



    2302 - அன்றியும் உயர்காஞ்சிப் பதியினில் அடியேற்கு
    மன்றநின் அணிமைக்கண் வைகிட வரமீந்தாய்
    இன்றது தனைமாற்றி எழில்வளர் பொதியத்திற்
    சென்றினி துறைநீயென் றருளிய செயலென்னே - 280



    2303 - என்னையும் உடையாய்நின் திருவருள் இதுவோயென்
    றின்னன பலபன்னி இருவிழி புனல்வார
    அந்நிலை நனியெய்தி அழுதழு தயர்வெய்தும்
    தன்னிகர் தமிழ்வாய்மைத் தலைவனை யெதிர்நோக்கி - 281



    2304 - அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    சுவலிற்றாழ் குதம்பைக் காதிற் சுந்தரர் அருளிச் செய்வார்
    அவலித்தல் வேண்டா கேட்டி அருந்தவக் கிழவ ஞாலம்
    செவிலித்தாய் என்ன ஓம்பும் தீம்புனற் கன்னி நாட்டில்
    தவலிற்றீர் வேறு காஞ்சி சமைத்துமுன் பொருட்டு மாதோ - 282



    2305 - அத்தலைக் காஞ்சி யூரும் எமக்குமிக் கினிதாம் அங்கண்
    இத்தகு சிறப்பு வாய்ப்ப யாம்புனை வதுவைக் கோலம்
    உத்தமக் கிழத்தி யோடும் உனக்கெதிர் காட்டு கின்றாம்
    மெய்த்தபே ருவகை பூப்ப விழியுறக் காண்டி மற்றும் - 283



    2306 - கருதிநீ வரங்கள் பெற்ற வடநகர்க் காஞ்சி மாட்டும்
    வருமுறை யாண்டு தோறும் பங்குனித் திருநாள்மல்கத்
    திருவிழா முடிவின் மன்றற் செய்கையும் எமக்குண் டாக
    அருள்புரிந் திடுதுங் கண்டாய் அறிவநீ மகிழு மாற்றால் - 284



    2307 - என்றிவை யுலக மெல்லா முய்யுமா றியம்பி வேளை
    வென்றவர் தழுவித் தேற்றி விடைகொடுத் தருளப் பெற்று
    வன்றிறல் முனிவர் கோமான் மகிழ்ந்தடி வணங்கிப் போந்து
    தன்றுணைக் கிழத்தி யோடுஞ் சையமால் வரையைச் சார்ந்தான் - 285



    2308 - வேறு
    சலம்ப டைத்தவா தாவிவில் வலன்றனைச் சவட்டிய பெருநோன்பின்
    வலம்ப டைத்தவ னவ்வரை யணுகலும் மறிதிரைக் கடலாடை
    நிலம்ப டைத்தது தொன்னிலை யாவரும் நிறைபெருங் களிகூர்ந்தார்
    நலம்ப டைத்தசீர் உறுவனு மாயிடை வதிந்துதென் மலைநண்ணி - 286



    2309 - தெனாது காஞ்சியும் உத்தர காஞ்சியும் நித்தலும் சென்றேத்திப்
    பினாக பாணியார் திருமணங் கண்ணுறப் பெற்றுளங் களிப்பெய்தித்
    தனாது பத்தியால் அணிபெறத் தொடுத்திடுஞ் செந்தமிழ்ப் பாமாலை
    மனாதி யானுணர் வரியவர் இணையடி மலர்மிசைப் பலசாத்தி - 287



    2310 - தென்றற் பிள்ளையை வயிறுளைந் தீன்றுதீம் பொருநைநீர் குளிப்பாட்டி
    மன்றற் சந்தனப் பொதும்பரின் தமிழொடு வளர்த்து மென்மெல ஞால
    முன்றிற் பால்விளை யாடவிட் டமர்முது மலயவெற் பினுஞ்சையக்
    குன்றத் துமகத் தீசத்தும் முறைமுறை குலவிவீற் றிருக்கின்றான் - 288



    2311 - இன்ன தாமகத் தீச்சரம் வந்தவா றிவ்விடைப் பணிந்தேத்தி
    அன்னம் அன்னவள் மண்டபம் மாளிகை யங்கணம் ஆங்காங்குத்
    துன்னும் வந்திகர் கணாதிபர் வாயில்காப் புடையவர் தொழப்போந்து
    மன்னு மாமுதல் இடவயின் மத்தள மாதவேச் சரங்கண்டாள் - 289



    2312 - என்றி யம்பிய சூதனைப் பழிச்சின ரிறும்புசூழ் வடமேருக்
    குன்ற வார்சிலை வாங்கிய மதனுடைக் குழகனா ரடிப்போதில்
    ஒன்று சிந்தையோய் மத்தள மாதவேச் சரத்தியல் உரையென்ன
    வென்ற மாதவர் வினாதலு மாங்கவன் மேவர விரிக்கின்றான். - 290



    2313 - மத்தள மாதவேச்சர வரலாறு
    விரைப்ப சுந்துழாய் மணிமுடிப் புங்கவன் வீங்குநீர்க் கலிக்கச்சி
    வரைப்பின் விண்டுவீச் சரக்குறி நிறீஇத்தொழும் பேற்றினான் மறைநான்கும்
    இரைப்ப வார்பொழிற் புலிநகர்ப் பொதியிலில் எடுத்தாண் டவங்காணூஉ
    உரைப்ப ரும்பெறற் படகமங் கெழுப்பிடப் பெற்றபின் உவப்பாலே - 291



    2314 - அடிய ளந்தவன் கறைமிடற் றடிகளை ஆனந்தக் கூத்தாடல்
    முடிவில் ஏத்தெடுத் தடியனேன் மத்தளம் முழக்கவும் பெறவேண்டும்
    படியி லாப்பெருங் கருணையஞ் சலதியே பணித்தருள் எனப்போற்ற
    வடிநெ டும்படைக் கழுக்கடை யேந்திய வள்ளலார் அருள்செய்வார் - 292



    2315 - இவ்வ ரைப்பிடை நித்தலும் படகநீ யெழுப்பிட வரம்பெற்றாய்
    செவ்வி மத்தள முழக்கவும் விழைதியேற் செப்புது மிதுகேட்டி
    வவ்வி யத்தொகை யறவெறிந் துயரிய வான்றவர் குழுப்போற்றுங்
    கௌளவை யம்புனற் காஞ்சியை முன்புபோற் கதுமெனச் சென்றெய்தி - 293



    2316 - அங்கண் மத்தள மாதவேச் சரனென அருட்குறி நிறீஇப் போற்றிப்
    பொங்கு மன்பினால் விதியுளி அருச்சனை புரிகுதி மற்றாங்கே
    துங்கம் நீடிய பரவெளிப் பிலத்தயற் சூழலின் எஞ்ஞான்றும்
    தங்கு காப்புடை நடமெனப் பெயரிய தாண்டவம் புரிகின்றோம் - 294



    2317 - செல்வம் மல்குமித் தில்லைநீள் வனத்திடைத் திருச்சிற்றம் பலமொன்றே
    சொல்லி றந்தொளிர் பரவெளி யெனப்படும் சுரிவளைக் குலமார்க்கும்
    மல்லல் நீர்த்தடம் புறம்பணை வேலிசூழ் வளம்பொழில் திருக்காஞ்சி
    எல்லை யுட்படு வரைப்பகம் முழுவதும் பரவெளி யெனத்தேறாய் - 295



    2318 - ஆதி யந்தமு மில்லதோர் மெய்யறி வானந்த நிறைவாகுஞ்
    சோதி நந்தமைத் தம்மனக் குகையினுந் தொழுபவர் கருத்தீமை
    காது காஞ்சியாம் பரவெளித் தலத்தினுங் காண்டகப் பெறுவோரே
    ஓதி முற்றுணர் உறுவரும் பெறலரும் வீட்டினை உறுவாரால் - 296



    2319 - வன்னி யிற்படு பொருள்களக் கணந்தனில் வன்னியா மதுபோல
    என்ன ராயினும் பரவெளிக் காஞ்சியி னெய்தினெம் மியல்பாவார்
    அன்ன தன்மையான் அத்தலத் திறந்தவர்க் கழற்கடன் கழிப்போரைத்
    துன்னு சூதகந் தொடக்குறா திழிஞரைத் தீண்டினுந் தொடக்கில்லை - 297



    2320 -
    பாப்புப் பாயலோய் இத்தகைச் சிறப்புடைப் பதிவயின் எமைப்போற்றின்
    காப்புத் தாண்டவம் ஆயிடைக் காட்டுதும் அந்நடந் தனக்கேற்பக்
    கோப்புச் சீரமை மத்தளம் முழக்குவா யாகெனக் கொடும்பாச
    நீப்புச் செய்தெமை யாளுடை யண்ணலார் நிகழ்த்திய மொழிகேட்டு - 298



    2321 - வண்டி னம்புகுந் துழக்கிய பூந்துழாய் வானவன் பெரிதோகை
    கொண்டு வல்விரைந் தணுகினன் காஞ்சியிற் கோழரைத் தனிமாக்கீழ்
    அண்டர் போற்றுவாழ் அங்கணர்க் கணிமையி னாகம விதியாற்றால்
    கண்டு மத்தள மாதவேச் சரன்றனைப் பூசனைக் கடன்பூண்டான் - 299



    2322 - இறைவன் காப்பு நடனங் காட்டுதல்
    கலிநிலைத்துறை
    போக்க ருந்தவம் பற்பகல் புரிந்துபே ரன்பு
    தேக்கு சிந்தையான் மீச்செலத் திருவருள் வழங்கி
    வாக்கும் உள்ளமும் தொடர்வரு வள்ளலார் முழுதும்
    காக்கு நாயகர் காட்டினார் காப்புநன் னடனம் - 300



    2323 - வீங்கி ருட்பிழம் பள்ளிவாய் மடுத்துவெங் கதிர்கான்
    றோங்கு செங்கதிர் ஆயிரம் ஒருவழிக் குடுமி
    யாங்கு வில்லுமிழ் அற்புதப் பொலஞ்சுடர்ப் பொதுவின்
    பங்கர் எங்கணும் படரொளி விரிகதிர் பரப்பி - 301



    2324 - அனைய மன்றினுக் கரும்பெறல் அணியெனக் கவின்று
    புனையும் நீற்றொளி வயங்கிய திருவுருப் பொலிய
    வினயி கந்தவர் விள்ளருஞ் சரண்மிசை வீக்குங்
    கனைம ணிக்கழல் கலின்கலின் கலினெனக் கறங்க - 302



    2325 - வார்ந்த செஞ்சடை மாதிரம் எட்டினுஞ் சுலவ
    ஆர்ந்த தெய்வதக் கங்கையா றலம்பிநீர் துளிப்பக்
    கூர்ந்த இன்னருட் குறுநகை இளநிலா முகிழ்த்துச்
    சார்ந்து போற்றெடுத் திசைப்பவர் தம்முயிர் பருக - 303



    2326 - கஞ்ச வாண்முகம் மலர்தரக் கட்கடை கருணைப்
    பஞ்சி னேரடிப் பனிவரைப் பிராட்டிபால் நடப்ப
    அஞ்சு பூதமும் படைத்தளித் தழிக்கவும் வல்ல
    துஞ்ச ரும்புகழ்க் குறட்கணந் துணங்கையாட் டயர - 304



    2327 - ஊன மில்பசுங் கொடியென ஒல்கிநின் றொருபால்
    கான ளாங்குழல் மலைமகள் கண்டுகண் களிப்ப
    வான நாட்டவர் கற்பக மலர்மழை பொழியத்
    தானம் எங்கணும் அரகர சயவொலி தழைப்ப - 305



    2328 - கட்டு வார்முர சாதிய பெருங்கணப் பூதர்
    எட்டு நாகமும் மாகமும் செவிடுற எழுப்ப
    மட்டு வார்ந்தெனச் செவியெலாம் அண்ணிக்கும் மதுரம்
    பட்ட தீங்கிளை நரப்பியாழ் கின்னரர் பயில - 306



    2329 - வேத மாயிர மொருவயின் வெண்குடப் பணில
    நாத மாயிர மொருவயின் நலங்கிளர் முழவப்
    பேத மாயிர மொருவயிற் பெரும்புனற் பரவை
    ஓத மாயிர மார்த்தெனத் தழங்கொலி யோங்க - 307



    2330 - நடிக்கு மற்புத நாடகங் காண்டலும் புளகம்
    பொடிக்கும் மேனியன் புனல்பொழி விழியினன் துதிகள்
    படிக்கும் நாவினன் அஞ்சலி பற்றிய கரத்தன்
    கடிக்கு றுந்துழாய்க் கண்ணியான் படிமிசை வீழ்ந்தான் - 308



    2331 - வீழ்ந்தெ ழுந்துளம் மகிழ்ந்துபே ரின்பவெள் ளத்தின்
    ஆழ்ந்து பன்முறை பணிந்துபோற் றிசைப்புழி யவற்கு
    வாழ்ந்த பேரருட் கருணையான் மத்தளம் முழக்கப்
    போழ்ந்த வெண்மதிக் கண்ணியார் திருவருள் புரிந்தார் - 309



    2332 - நீண்ட மேனியான் நிறைபெரு மகிழ்ச்சியில் திளைத்துத்
    தாண்ட வந்தனக் கிசையமத் தளவியம் முழக்கி
    மாண்ட ருந்திறல் மத்தள மாதவ னானான்
    வேண்டு மெய்வர மவன்பெற வளித்தனர் விமலர் - 310



    2333 - அச்சு தன்பெறு வரத்தினா லன்றுதொட் டென்றும்
    கச்சி வைப்பினின் மத்தளங் கறங்குபே ரோதை
    முச்ச கத்தையும் நிறுத்திட முழுவதும் புரக்கும்
    பச்சி ளங்கொடி பாகனார் திருநடம் பயில்வார் - 311



    2334 - காப்பு நன்னடங் கண்ணுறப் பெற்றவர் கரும
    யாப்பு வீழ்த்துயர் வீடுபே றெய்துவார் பிறவி
    ஓப்பு மத்தள மாதவேச் சரமிது வுரைத்தாம்
    வாய்ப்பு றுந்தவக் கொள்கையீர் மேலினி வகுப்பாம் - 312



    2335 - அம்மையார் மண்டபத் தெழுந்தருளுதல்
    எம்பி ராட்டியங் கிறைவரைத் தொழுதுபோற் றிசைத்து
    நம்பு காதலின் தோழியர் குழாத்தொடு நடந்து
    கம்ப நாயகர் திருவருட் பெருமையே கருதிச்
    செம்பொன் வேய்ந்தொளி பிறங்குமா மண்டபஞ் சேர்ந்தாள் - 313



    2336 - எண்ணில் பன்மணி யாங்கணும் இளவெயில் எறிப்ப
    வண்ணம் மாண்டபொன் தூண்பல நிரைநிரை வயங்கக்
    கண்ணி றைந்தபே ரழகினுக் கணியெனக் கவின்று
    விண்ண ளாங்கொடி மிடையுமம் மண்டப வரைப்பின் - 314



    2337 - சுற்று நீடிய தோழியர் கவரிசாந் தாற்றி
    பற்றி நின்றிரு பாங்கரும் பணிநனை புரியச்
    சற்றி ருந்திளைப் பாறினாள் எழுந்துமீத் தருக்கு
    முற்றி லாமுலை அந்நலார்க் கின்னது மொழிவாள் - 315



    2338 - மன்னு யிர்த்தொகை முழுவதும் மாயையின் மறைப்புண்
    டின்னல் செய்யிரு வினைவலைப் படுங்களிவ் வினைதா
    முன்னை யெம்மையெம் அடியரைப் பிணிப்பதொன் றில்லை
    அன்ன தாயினும் அகிலமுந் தெளிந்துய்தற் பொருட்டு - 316



    2339 - ஆட லான்விழி புதைத்தலின் ஆரிருட் படலம்
    மூட யாவையும் இடர்க்கடல் மூழ்கிய வதனால்
    கூடும் வல்வினை கழுவுறக் காஞ்சியைக் குறுகி
    நீட நீயெமை யருச்சனை யியற்றுதி நெறியால் - 317



    2340 - என்று மந்தரப் பறம்புறை யெம்பிரான் விடுப்ப
    மன்ற விந்நகர்க் கெய்தினன் வளரிள முலையீர்
    இன்று நான்புரி பூசனைக் கிசையயென் பணியில்
    நின்று வேண்டுவ தம்மினென் றுணர்த்தினள் நிமலை - 318



    2341 - உரைத்த வாய்மொழி கேட்டலும் உளங்களி துளும்பி
    விரைத்த கூந்தலார் மென்மல ரடிதொழு தெழுந்து
    திரைத்த பாற்கடல் அமிழ்தனாய் செய்பணி வெவ்வே
    றரத்த வாய்திறந் தெங்களுக் கருளென அருள்வாள் - 319



    2342 - இறைவி தோழிகளுக்குக் கட்டளையிடல்
    சீலந் தாங்குவிண் ணவரும் விழைதகு தீம்புனற் கூவல்
    காலந் தோறும்யா னாடிக் கருமம் இயற்றுதற் கொன்றும்
    ஆலந் தாங்கிய கண்டத் தடிகளுக் காட்டுதற் கொன்றும்
    ஏலந் தோய்ந்திருள் கூரும் ஈர்ங்குழ லவர்சிலர் அகழ்மின் - 320



    2343 - அலைகள் வெண்மணி வீசி யதிர்புனல் நதிக்கரை யருகு
    மலர்கள் பச்சிலை கனிகள் மல்கிய மயிலைவில் லந்தண்
    பலவு மாதிய பலவும் பயில்வுறு நந்த வனங்கள்
    இலைமு கப்பொலம் பூணின் எழுமுலை யவர்சிலர் புரிமின் - 321



    2344 - நறிய சந்தன விழுது நாறிய மான்மதச் சாந்தம்
    வெறிகு லாங்கருப் பூரம் விரைகெழு குங்குமம் பிறவும்
    செறுவு கொண்டபூங் கதிரின் தெய்வத மணியணி விலையிட்
    டறிவ ரும்பரி வட்ட மாதிய சிற்சிலர் கொணர்மின் - 322



    2345 - ஆனின் ஐந்துடன் ஐவே றமுதமும் சிலர்சிலர் தம்மின்
    தேன ளாந்திரு வமுது முதலிய சிலர்சிலர் தம்மின்
    வான ளாவிய கோயில் மாளிகை எங்கணு மணிகள்
    கான ளாமலர் பட்டிற் கவின்நலஞ் சிலர்சிலர் புனைமின் - 323



    2346 - தோழிமார் தொண்டு
    இன்ன வாறிம யத்தின் இளம்பிடி ஏவுத லோடும்
    அன்ன தோழியர் பலரும் ஐயென அடியிணை தொழுது
    முன்னர் யாம்செய்தும் என்றாங் கொருவரின் ஒருவர்முன் முடுகித்
    துன்னு காதலின் மூண்டு தொழில்தலை நின்றனர் மன்னோ - 324



    2347 - தெவ்வடு வேற்கண் உமாபத் திரையொடு கீர்த்தி மதியென்
    றிவ்விரு மாதர் வடக்குந் தெற்கு மகழ்ந்திரு கூவல்
    கௌளவை நெடுந்திரைக் கங்கை காளிந்தி அங்கண் மடுத்தார்
    அவ்விரு தீர்த்தங் குடைந்தோ ரல்லல் பவப்பிணி நீப்பார் - 325



    2348 - வார்ந்த நெடுஞ்சடை மோலி யேகம்ப வாணர் தமக்கு
    நேர்ந்த திருவமு தாக்க நீடும் அனற்கிறை திக்கின்
    ஈர்ந்தண் மணிப்புனற் கூவல் இடம்பெறத் தொட்டு வனப்பின்
    ஆர்ந்த திருமடைப் பள்ளி யமைத்தன ராலொரு சாரார் - 326



    2349 - நிலவு மெருக்கு மணிந்த நீண்முடி சாத்திய மேற்பாற்
    குலவு நதிக்கரை ஞாங்கர்க் கோதறு தூய வரைப்பிற்
    பலருந் தொழத்தகு மேன்மை பயிலம்பி காவன மென்னு
    மலர்நிறை நந்த வனங்க ளாக்கின ராங்கொரு சாரார் - 327



    2350 - நெட்டிலை வாழைக் குலங்கள் நெருப்புறழ் செம்பழப் பூக
    மட்டு மதுக்கழை தூணத் தியாத்தவிர் காழ்வடம் நாற்றி
    மட்டவிழ் பூந்தொடை தூக்கி வன்ன விதானம் விதானித்
    திட்டு மணித்திருக் கோயிற் கெழில்புரிந் தாரொரு சாரார் - 328



    2351 - வாசக் கொழும்புழு கப்பி வண்ண மலர்த்துகள் அட்டி
    வீசிச் செழும்பனி நன்னீர் விரைகமழ் தீம்புகை யேற்றிக்
    காசைத் தகர்த்துக் கரைத்துக் கவின்திரு மாளிகைச் சுற்றும்
    ஆசைச் சுவர்த்தலம் முற்றுஞ் சித்திரித் தாரொரு சாரார் - 329



    2352 - வீறும் விரைப்பாளி தங்கள் வெறுவிய வல்சியக் காரச்
    சோறு புளிந்தயிர்ச் சொன்றி துப்புடை யேனைப் புழுக்கல்
    நாறு நறுங்குய்க் கருனை முதலிய நால்வகை உண்டி
    ஆறு சுவைத்திறம் விம்ம அட்டன ராலொரு சாரார் - 330



    2353 - ஓட்டொழி யாநறுந் தேற லொண்மலர் குற்றனர் கொண்டு
    சூட்டொடு கண்ணிகள் இண்டை தொங்கல் முதற்பல வாக்கி
    ஈட்டு நறும்புகை யேற்றி யீர்ம்பனி நீர்தெளித் தம்பொற்
    சேட்டொளி மூழி யமைத்துச் சேர்த்தன ராலொரு சாரார் - 331



    2354 - செம்பொ னிழைத்த தசும்பில் தெய்வத மந்திர மோதி
    அம்பொ னிழைத்துகில் வாய்ப்பெய் தலையெறி தீர்த்தம் வடித்துக்
    கொம்பி னொசிந்தனர் கொண்டு குளீர்மணிக் கோயிலி னுள்ளால்
    பம்பு நிறைகள் நிறையப் பாய்த்தின ராலொரு சாரார் - 332



    2355 - சுடர்விடு மாடகச் செம்பொன் தூமணி வட்டகை யோடு
    படலிகை யாதிகள் சுத்தி பண்ணி யமைத்து நறும்பூ
    அடைதளிர் யாவையு மாய்ந்தங் கார்த்தி மணத்தயே லாதிக்
    கடிதிரு மஞ்சன மட்டிக் களிமிகுந் தாரொரு சாரார் - 333



    2356 - தூங்கு பலாக்கனி தாற்றுத் தூத்திரள் வாழைப்ப ழங்கள்
    மாங்கனிக் குப்பை நரந்தம் மாதுளை நாறெலு மிச்சை
    தேங்கமழ் தெங்கின் குடக்காய் தீம்படு பூகப் பழுக்காய்
    ஆங்கண் நிரப்பினர் கைக்கொண் டணுகின ராலொரு சாரார் - 334



    2357 - ஆனுடைப் பாற்குடங் கோடி யருஞ்சுவை நெய்க்குடங் கோடி
    தேனுடைப் பொற்குடங்கோடி செழுங்கரும் பட்டதண் சாறு
    தானிறை பொற்குடங் கோடி தயிருடைப் பொற்குடங் கோடி
    வானமிழ் தக்குடங் கோடி வல்லையுய்த் தாரொரு சாரார் - 335



    2358 - திருமலி ஓவியப் பட்டும் தீபத் தியன்றவெண் பட்டும்
    குருமலி பாசிலைப் பட்டும் கோபம் நிகர்த்தசெம் பட்டும்
    உருவுடை மாழையம் பட்டும் ஒளிர்தரு நீனிறப் பட்டும்
    தருவுத வும்பல பட்டும் தந்தன ராலொரு சாரார் - 336



    2359 - விற்படு மோலி குதம்பை மின்னுமிழ் பொன்னணி பட்டம்
    அற்பகை விள்ள விளங்கு மங்கதம் ஆழி கடகம்
    பற்பல கண்டத் தணிகள் பாயொளி ஆரம் முதலாம்
    கற்பகம் உய்த்தன கொண்டு கடுகின ராலொரு சாரார் - 337



    2360 - முழுதுல குங்கமழ் கிற்கும் முருகுடைச் சந்தனத் தேய்விற்
    புழுகினை வாக்கி நுணங்கப் பொடித்திடு கப்புரம் அட்டிச்
    செழுவிய குங்குமம் பெய்து செறிவுற மட்டித் தெடுத்த
    விழுதமை பொற்குட மேந்தி விரைந்தன ராலொரு சாரார். - 338



    2361 - கண்ணடி சாமரை வெண்கேழ்க் கவிகை வளியெறி வட்டம்
    புண்ணிய நீறு பளிதம் புகைமலி குங்குலி யங்கள்
    வண்ண மணிக்குடம் தட்டோ டாரா தனைக்கு வகுத்த
    எண்ணி லுறுப்பிற் பிறவு மீட்டின ராலொரு சாரார் - 339



    2362 - நெய்விர வம்புய நாள நீளிழைத் தீபம் அனந்தம்
    பைவிரி பாந்தள் உயிர்த்த பரூஉமணித் தீபம் அனந்தம்
    தெய்வதத் தீபம் அனந்தம் தீம்புகை வர்க்கம் அனந்தம்
    கைவகுத் தெங்கணும் கண்டன ராலொரு சாரார் - 340



    2363 - மாடக வச்சிரப் பத்தர் வார்நரப் பின்னிசை யாழும்
    பாடுறு பாடலும் ஒன்றப் பண்ணின் அமைமின்கள் என்றும்
    ஈடறு பற்பல் இயங்கள் எழுப்புமின் என்றும் இணங்க
    ஆடுமின் என்றும்விண் ணோரைப் பணித்தனர் ஆங்கொரு சாரார் - 341



    2364 - இறைவி வழிபாடு செய்ய எழுந்தருளல்
    கலிவிருத்தம்
    இன்னணம் பணியெலாம் இகுளை மார்செய்
    மின்னவிர் மணிவடம் சுமந்த வெம்முலைக்
    கன்னிமா மண்டப நின்றுங் காதலால்
    கொன்னுமா பத்திரக் கூவல் நண்ணினாள் - 342



    2365 - நிறைபரஞ் சுடரடி நினைந்து கூவல்நீர்
    மறைநெறி விதியுளி வழாமை யாடியே
    இறுநுசுப் பந்நலார் எடுத்து நீட்டிய
    அறுவையின் ஒற்றிமெய் யீரம் மாற்றினாள் - 343



    2366 - தேசிகப் பட்டிரண் டுடுத்துத் தீவினை
    ஆசிரியத் தருளும்நீ றாக மெங்கணும்
    பூசிமுப் புண்டரம் பொறித்துக் கண்டிகை
    நேசமுற் றணிந்துசெய் நியமம் முற்றியே - 344



    2367 - காவலர் பூசனை புரியுங் காதலான்
    மேவர வேண்டுவ கொண்டு மெல்லியல்
    பாவையர் புடைவரப் படர்ந்தி ரண்டெனும்
    ஆவர ணந்தனை அணுகி னாளரோ - 345



    2368 - சங்கினம் வயிரொடு தாரை காகளம்
    பொங்கொலிச் சின்னங்கள் வீணை பூங்குழல்
    வங்கியம் பேரிவார் முரசம் திண்டிமம்
    எங்கணும் கடலுடைந் தென்ன ஆர்ப்பவே - 346



    2369 - கின்னரர் கருடர்கிம் புருடர் பாண்செயக்
    கன்னியர் எதிரெதிர் கலவி ஆடிடத்
    துன்னிய முனிவரர் துன்றும் வேதியர்
    என்னரும் மறைமுழக் கெடுத்துச் சூழவே - 347



    2370 - ஐவகைப் பிரமமும் அங்கம் ஆறுமோர்
    கைவளர் முகனுடைக் கடவுள் வேழமும்
    கொய்விரைக் கடம்பணி கோவும் ஓகையான்
    வைகுமச் சூழலை வலங்கொண் டெய்துவாள் - 348



    2371 - ஐங்கரப் பிள்ளையை நிருதி யாசையில்
    செங்கைவே லிளவலை யுலவைத் திக்கினும்
    உங்குறு பூசையின் உவப்பச் செய்துபோய்
    மங்கல நந்திவாழ் வாய்தல் நண்ணியே - 349



    2372 - வாயிலோர் பூசனை மரபி னாற்றினாள்
    மாயிரு மறைத்தனி மாவின் நீழல்வாழ்
    நாயனார் தமைவிழி நயப்பக் காண்டலும்
    மீயுயர் காதலான் வீழ்ந்தெ ழுந்தனள் - 350



    2373 - ஒருங்கிய மனத்தி னஞ்செழுத்து மோதியே
    கருங்குழற் கற்றைமேற் குவித்த கையொடும்
    பெருங்களி துளும்பியுள் புகுந்து பிஞ்ஞகர்
    மருங்குற முறைமுறை வணங்கி யேத்தினாள் - 351



    2374 - முருகலர் மாவடி முளைத்த தீஞ்சுவை
    அருள்விளை யமுதினை ஆரக் கண்களால்
    பருகினள் பன்முறை பழிச்சி யண்ணலார்
    கருணையே நோக்கிவெங் களிப்பின் நீடினாள் - 352



    2375 - விழிகளா னந்ததநீர்த் தாரை மெய்யெலாம்
    பொழியநெக் குருகினள் புளகம் போர்த்தனள்
    மொழிதடு மாறினள் அறிவின் முற்றிய
    தொழிலமை பூசனை தொடங்கல் மேயினாள் - 353



    2376 - அம்மையார் வழிபாடு செய்தல்
    அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    வழுவறு தோற்ற மாதி வழுக்கிய பாவத் தீமை
    கழுவநின் பூசை யிந்நாள் கடைப்பிடித் தருளால் செய்கேன்
    முழுதருள் வழங்கி யூறு நீக்கிமுன் னின்று கோடி
    செழுமதி முடியாய் என்று சங்கற்பம் செய்து கொண்டாள் - 354



    2377 - பூமுதல் பூதசுத்தி புரிந்தகப் பூசை யாற்றிக்
    காமரு மலரும் வாச வருக்கமும் கலந்த தெண்ணீர்த்
    தோமில்பாத் தியமே ஆச மனமருக் கியந்தூய் தாக்கி
    மாமுரல் இதழித் தாரார் முடிமிசை மலரை மாற்றி - 355



    2378 - மாதர்வண் சத்தி யாதி சத்தியீ றிலக வாய்ந்த
    ஆதன மதன்மேல் வைகும் சதாசிவ வடிவின் ஆன்ற
    சோதியைத் திருவே கம்பச் சுடரினை நடுக்கீழ் பக்கம்
    மீதற நிறைந்து விம்மும் ஆனந்த நிமல வாழ்வை - 356



    2379 - சீத்திருள் அறுக்கும் நோக்கால் தெளிவுறக் கண்டு போற்றிப்
    பாத்தியம் முதலாம் மூன்றும் பதம்முகம் முடியின் ஈத்து
    நாத்திகழ் மனுவின் மாண்ட நறுமது வருக்கம் நல்கி
    ஆத்தன் நூல் விதியி னாற்றான் மறித்துமா சமன மீந்தாள் - 357



    2380 - இணங்கிய நெய்பால் பெய்த இன்னமு திசைய நல்கி
    மணங்கமழ் எண்ணெய்க் காப்பும் மாநெல்லி மஞ்சட் காப்பும்
    அணங்கருங் கபிலை ஐந்தைந் தமுதுபல் குடத்துத் தீம்பால்
    குணங்கெழு தயிர்நெய் செந்தேன் குளிரிள நீருமாட்டி - 358



    2381 - கருப்புமிழ் தேறல் ஆட்டிப் பல்கனி வருக்கம் ஆட்டி
    அருத்திகூர் அன்பின் ஆன்ற சந்தனக் குழம்பும் ஆட்டி
    மருக்கமழ்ந் தெடுத்த கீர்த்தி மதித்தடங் கூவல் தெண்ணீர்
    உருத்திர மனுக்கள் ஓதி விதியுளி நிறைய ஆட்டி - 359



    2382 - நுழையும்நூற் கலிங்கம் ஏந்தி நொய்தென மேனி ஒற்றி
    விழைதகு நறும்பட் டாடை விளங்கெழில் முந்நூல்சாத்தித்
    தழையுமான் மதங்கர்ப் பூரம் சந்தனக் கலவை சாத்தி
    இழையணி வருக்கம் ஏனை ஈர்ந்தொடை அலங்கல் சாத்தி - 360



    2383 - நறுவிரைத் தூபம் தீபம் காட்டிநால் வகைவே றுண்டி
    அறுசுவைத் திறத்தின் மான அமுதுசெய் வித்துச் சீதம்
    உறுபுனல் உதவிக் கைவாய் பூசியொண் பழுக்காய் வாசம்
    பெறுமிலை முகவா சங்கள் மந்திரம் பேசி நல்கி - 361



    2384 - அகிற்புகை தீபம் எல்லாம் இனிதளித் தரக்கு நன்னீர்
    மகிழ்ச்சியிற் சுழற்றிப் பல்கால் வலஞ்செய்து வணங்கிப் போற்றி
    இகப்பிலஞ் செழுத்து மெண்ணி யின்னன பிறவு மாற்றி
    முகிழ்த்தபே ரன்பின் ஆன்ற பூசனை முற்றச் செய்தாள் - 362



    2385 - முற்றுவித் தெழுந்து மீண்டும் மொய்யொளிப் பிலத்தின் பாங்கர்
    அற்றமில் அறமெண் ணான்கும் அருள்வழி வளர்ப்பா ளாகிப்
    பற்றலார் பரம்செற் றாரை இம்முறை எண்ணில் பன்னாள்
    சிற்றிடை யெம்பிராட்டி பூசனை செய்து வாழ்நாள் - 363



    2386 - அன்னணம் அளவில் காதல் அருச்சனைத் திறத்தின் ஓங்க
    மன்னிய மறைநூல் வாய்மை ஆகம வழியிற் பேணும்
    தன்னிகர் இமயம் ஈன்ற மதரரித் தடங்கண் செவ்வாய்
    மின்னிடைக் கொருநாள் அங்கண் நிகழ்ந்தது விளம்ப லுற்றேன் - 364



    2387 - பண்டுபோற் கம்பை யாற்று மணிப்புனல் படிந்து மெய்யிற்
    கண்டிகை நீறு தாங்கிக் கடப்படு நியம மாற்றித்
    தொண்டினில் வழாது பூசைத் தொழில்தலை நின்று காதல்
    மண்டவே கம்ப னாரை மஞ்சனம் ஆட்டுங் காலை - 365



    2388 - மருமலர்த் தனிமா நீழல் வள்ளலார் மேன்மேல் அன்பு
    பெருகிய கருத்தினா னாட்குப் பேரருட் கருணை கூர்ந்த
    ஒருதிரு விளையாட் டாலே பத்தியின் உறுதி நோக்கித்
    திருவருள் புரிவான் எண்ணி இதுதிரு வுள்ளஞ் செய்தார் - 366



    2389 - இறைவன் கம்பாநதி பெருக்கெடுத்துவரச் செய்தல்
    விழுமிய அண்டத் துள்ளும் புறத்தினும் விரவுந் தீர்த்தம்
    முழுவதும் ஒருங்கு நண்ண முன்னினார் முன்ன லோடும்
    ஒழுகுநீர்க் கம்பை யாற்றி னுடன்விராய்க் கடைக்கால் வெள்ளம்
    எழுவது கடுப்ப எல்லாப் புனலும்வந் திறுத்த வன்றே - 367



    2390 - கலிவிருத்தம்
    மிடைவானவர் திசைகாவலர் புவிமேலவர் காணூஉக்
    கடைநாளணு கிற்றாலென வெருவிக்கலுழ் கண்ணீர்
    இடையாறென விரவக்கொடு வேகத்தொடும் எவ்வெப்
    புடைநீர்களும் உடனாகிய கம்பைப்புனல் வருமால் - 368



    2391 - படலைக்கரு முகிலுமிடை இடையேபட ரொளிசேர்
    தொடலைக்கதி ருடுவுந்துவ ளுறுபாசடை விரவும்
    இடையிற்றிகழ் மலரும்மென இலகக்கக னமுமுட்
    படமிக்கெழு பரவைப்புனல் பயமுற்றிட வருமால் - 369



    2392 - அடிநேடிய திருமாலென இருமாநில மகழும்
    முடிநேடிய மலரோனென விண்மேற்செல முடுகும்
    கடவாமுரண் இருவோரெதிர் கனலாயெழும் உருவம்
    உடையானென விரைசெல்புனல் கீழ்மேலுற நிலையும் - 370



    2393 - வாழைக்கனி பலவின்கனி மாவின்கனி நெடிய
    தாழைக்கனி அகில்குங்குமம் நிறைசந்தனம் மலர்தேன்
    வேழத்துணி முதலின்னன கொடுமேவலின் உமையாள்
    ஊழிற்புரி பூசைக்குரி யவையுய்ப்பவர் உறழும் - 371



    2394 - இருபாலினும் மணிதங்கிய இருகோடு படைத்து
    வெருவார்களும் வெருவித்துயர் மேவத்தவ வுரறி
    மருவார்குழ லுமையச்சுற வரலானுயர் கம்பை
    பெருமானெதிர் பண்டெய்திய பெருவேழமும் நிகரும் - 372



    2395 - இறைவி இறைவனைத் தழுவிக் கொள்ளுதல்
    அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    மலைபடு வளங்கள் வாரி மணிபல வரன்றிப் பொங்கி
    அலையெறிந் திரைத்து விம்மி விசும்பெலாம் அடைத்துப் பம்பித்
    தலைவரு வெள்ளந் தன்னைத் தடவரை பயந்த திங்கட்
    கலைநிறை வதனத் தேவி காண்டலும் வெரூஉக்கொண் டாளால் - 373



    2396 - புடையுறும் இகுளை மாரும் பொள்ளென அச்சம் பூப்பத்
    தடைபடா தணுகு நீத்தந் தனையெதிர் நோக்கி நோக்கிக்
    கடல்கிளர்ந் தனைய வெள்ளங் காரண மின்றி யென்னே
    விடையவன் பூசை நாப்பண் மேவிய வாறென் றெண்ணி - 374



    2397 - என்னுடைத் தீங்கு தன்னாற் பூசனைக் கிடையூ றாகத்
    துன்னிய திதுவாம் என்று சொல்லருங் கவலை கூர்ந்து
    சென்னியின் மதியம் வைத்தார் திருவடி இதயத் தெண்ணும்
    முன்னரப் பெருநீர் வெள்ளம் முடுகிவந் தடுத்த தாக - 375



    2398 - துன்புற நோக்கி நெஞ்சந் துண்ணெனத் துளங்கி யாவா
    உம்பர்வான் தடவிச் செல்லும் ஒப்பரும் பெருநீர் வெள்ளம்
    எம்பிரான் மிசையே நண்ணும் இனிச்செய்வ தென்னே யென்று
    தம்பிரா னார்பா லன்பு தழைந்தெழும் உள்ளத் தோடும் - 376



    2399 - அட்டொளிப் பசும்பொன் மேனி வடிவெலா மதிர்ப்புக் காட்டப்
    பொட்டணி நுதலின் பாங்கர்க் குருவெயர்த் திவலை பூப்ப
    மொட்டிள முலையில் தூங்கும் முத்தொளி வடங்க ளாட
    இட்டிடை வருந்திச் சால இறுமெனத் துவண்டு வாட - 377



    2400 - கூந்தலின் நறவந் தோய்ந்த குருமலர்ச் சுரும்ப ரார்ப்ப
    ஏந்தக லல்குல் சூழ்ந்த யெரிமணிப் பருமம் ஆர்ப்பச்
    சேந்தொளி பிலிற்றுஞ் செம்பொற் கிண்கிணி சிலம்போ டார்ப்பக்
    காந்துபொற் கடகக் கையிற் கதிர்வளைக் குலங்க ளார்ப்ப - 378



    2401 - ஒருகொடி யெழுந்து செம்பொன் உயர்வரைக் குவடு தன்னை
    இருகொழுந் திருபாற் போக்கித் தழீஇயென எழுந்து வல்லே
    முருகலர் வேதி உம்பர்த் தன்வல முழந்தாள் ஊன்றிக்
    கருமணிப் பாவை யன்னாள் கணவரைத் தழுவிக் கொண்டாள் - 379



    2402 -       இறைவன் தழுவக் குழைதல்
    மணிமுலைக் குவட்டி னோடு வளைக்கையால் நெருக்கிப் புல்லித்
    தணிவருங் காதல் விம்மக் காதலி தழுவ லோடும்
    திணியிருள் அறுக்குஞ் சோதித் திருவுருக் குழைந்து காட்டி
    அணிவளைத் தழும்பி னோடு முலைச்சுவ டணிந்தார் ஐயர் - 380



    2403 - கலிவிருத்தம்
    வற்றிநின் றருந்தவம் முயன்று பன்மறை
    கற்றவர் உணர்வையுங் கடந்த பேரொளி
    சிற்றிடைத் திருந்திழைத் தேவி வால்வளைப்
    பொற்றழும் பொடுமுலைச் சுவடு பூண்டதே - 381



    2404 - உருவரு வணுமலை யுண்மை யின்மைமற்
    றிருளொளி யன்றிநின் றிலகு பேரொளி
    மருமலர்க் கருங்குழல் மங்கை வால்வளைப்
    பொருதழும் பொடுமுலைச் சுவடு பூண்டதே - 382



    2405 - பெருவிரல் அளவையின் உளத்திற் பேணிநின்
    றுருவுயிர் முழுவதும் ஆட்டும் ஒள்ளொளி
    அருள்மொழி குறுநகை அணங்கு வால்வளைப்
    புரிதழும் பொடுமுலைச் சுவடு பூண்டதே - 383



    2406 - உயிர்ப்பினை யொடுக்கியே விழித்து றங்குவோர்
    அயர்ச்சியி லகக்கணால் நோக்கு மாரொளி
    குயிற்பெடைச் சின்மொழி யிறைவி கோல்வளைப்
    புயத்தழும் பொடுமுலைச் சுவடு பூண்டதே - 384



    2407 - என்றுமோ ரியல்பினிற் பகலி ராவற
    நின்றவ ரன்பினுக் கணிய நீளொளி
    மென்றளிர்ச் சீறடி விமலை கைவளைக்
    கொன்றழும் பொடுமுலைச் சுவடு கொண்டதே - 385



    2408 - மனத்திடைத் தனதடி நினைந்த மாத்திரை
    வினைப்பெரும் பிறவிவேர் அகழும் மெய்யொளி
    அனைத்துல கீன்றரு ளமலை பல்வளை
    இனத்தழும் பொடுமுலைச் சுவடு மேற்றதே - 386



    2409 - வடவரை குழைத்ததோர் பவள மால்வரை
    முடிவொடு முதலிலா மாவின் மூலத்து
    மடநடை இளங்கொடி வளைக்க ரத்தோடு
    குடமுலைக் கம்மவோ குழைந்து மெல்கிற்றே - 387



    2410 - வானவர் யாவரும் வந்து போற்றுதல்
    கலிநிலைத்துறை
    அம்பொன் வால்வளைத் தழும்பொடு முலைச்சுவ டணிந்து
    கம்ப வைப்புடை வாழ்க்கையார் கருணைகூர்ந் தருளி
    நம்பு மோகையிற் பெருங்களி சிறத்தலும் நலமார்ந்
    தும்ப ரிம்பரி னுயிரெலா முவகையிற் களித்த
    உயிர்க்குயிராகிய இறைவன் களித்தமையால் உயிர்கள் களித்தன. - 388



    2411 - திக்கும் வானமு மாசறத் திகழ்ந்தொளி படைத்த
    தக்க பல்லிய மெண்ணில தழங்கின விளங்கால்
    புக்கு மெல்லெனப் புதுமணங் கொண்டெழுந் தசைந்த
    இக்க டற்பெரும் புவியெலா மடங்கின துகள்கள் - 389



    2412 - மந்தி ரத்தழல் வலஞ்சுழித் தெழுந்தொளி திகழ்ந்த
    சுந்த ரப்பொலம் பூமழை நிரந்தரஞ் சொரிந்த
    சந்த மாமறை தனித்தனி மகிழ்ந்தெழுந் தார்த்த
    எந்த வையமு மயலிடை யின்றியோங் கினவால் - 390



    2413 - எங்கு மின்னணம் நிகழ்வுழி யிருமதக் கலுழித்
    துங்க வெண்கரிக் கோமுதல் சுராசுர ரெல்லாம்
    தங்க ளின்துணைக் கிழத்தியர் தம்மொடும் வல்லை
    அங்க ணைந்தனர் அகம்நிறை யுவகைமீக் கிளைப்ப - 391



    2414 - புண்ட ரீகமென் பொகுட்டணைக் கடவுளும் புதுப்பூந்
    தண்டு ழாய்முடித் தனிப்பெருந் தலைவனு மிருகேழ்
    முண்ட கத்துறை முதல்வியர் தமையுடன் கொண்டு
    மண்டு பேரின்பங் கிடைத்ததின் றெமக்கென வந்தார் - 392



    2415 - சோதி நாரதன் முதல்சுரர் முனிவரும் வசிட்ட
    னாதி யாயபல் பிரமநன் முனிவரு மளவில்
    காதல் முந்துறு களிப்பொடுங் குழாங்கொடு கரத்தின்
    மீது தண்டமும் வேணியும் விளங்கவந் தடைந்தார் - 393



    2416 - சத்தி மார்திதி அதிதிமற் றுறுதக்கன் மக்கள்
    ஒத்த யோகினிப் பகுதியர் அருந்ததி உலோபா
    முத்தி ரைத்திருந் திழைஅந சூயையே முதலாம்
    இத்தி றத்தவர் யாவரும் மகிழ்ந்துவந் திறுத்தார் - 394



    2417 - சனக னாதியர் தமிழ்முனி தவத்துரு வாசன்
    முனிவர் சூழுப மன்னியன் முதுதிறற் பூதர்
    நனியு ருத்திரர் கணாதிபர் நந்தியெம் பெருமான்
    இனையர் யாவரு மாயிடை யொருங்குவந் திறுத்தார் - 395



    2418 - நண்ணி யாவரும் நாயகி தழுவிடக் குழைந்த
    அண்ண லார்திருக் கோலம்நேர் கண்டுகண் டார்த்தார்
    விண்ணி றைந்தபே ரானந்த வெள்ளத்தில் நிறைந்தார்
    கண்ணி னாற்பெறு பெரும்பயன் கைவரப் பெற்றார் - 396



    2419 - அலர்ந்த வாள்விழி யின்பநீர் சொரியநின் றழுதார்
    மலர்ந்த காதலின் வடிவெலாம் புளகங்கள் மலிந்தார்
    கலந்த சிந்தையார் அருட்பெருங் கருணையே நோக்கிப்
    புலந்த ழைத்திட சென்னிமேல் அஞ்சலி புனைந்தார் - 397



    2420 - ஆயி ரங்கதி ராழியங் கடவுளு மயனும்
    ஆயி ரம்விழி பெற்றிலே மென்றழுங் கினர்கள்
    ஆயி ரம்விழி யுடன்முழு தாளியு மமையா
    ஆயி ரங்கணிவ் வற்புதம் காண்பதற் கென்றான் - 398



    2421 - இன்ன தன்மையின் யாவரும் தொழுதெழுந் தாடி
    மன்னு மேழ்கடல் முழக்கெனப் பழிச்சினர் வாழ்ந்தார்
    அன்ன வர்க்கவண் நிகழ்ந்தபே ரானந்த மிதழிச்
    சென்னி யாரன்றி மற்றெவர் தெளிதரற் பாலார் - 399



    2422 - திருவேகம்பர் காட்சி கொடுத்தல்
    அந்த வேலையி னிறைவிதன் அணிவளைத் தழும்பு
    சந்த மென்முலைச் சுவடுதோய் தனியுருப் பொலியச்
    சுந்த ரந்திகழ் சுடரொளி யிலிங்கத்தி னின்று
    முந்து தோன்றினார் மூவருக் கறிவரு முதல்வர் - 400



    2423 - தோன்றி வாணிலாக் குறுநகை தோற்றிமீக் கடுக
    ஏன்ற வெள்ளநீர் சருவதீர்த் தப்பெயர் இசையான்
    மான்று மேதக நிறுவினார் மாதிகைத் தழீஇக்கொண்
    டான்ற காதலால் செய்யவாய் முத்தமுண் டளித்தார் - 401



    2424 - தோகை மஞ்ஞையஞ் சாயலாய் துளங்கியுள் வெருவேல்
    ஓகை யுற்றனம் காண்டிநீ யென்றுரைத் தருள
    வாகை யேற்றினார் தம்மண வாளநற் கோலம்
    ஏக நாயகி நோக்கினா ளிணைவிழி களிப்ப - 402



    2425 - தழீஇய கைகளை விடுத்தெழுந் தவனியிற் றாழ்ந்து
    குழீஇய வன்பினா லஞ்சலி சென்னிமேற் குவித்தாள்
    கழீஇய செம்மணி வடிவினைக் காண்தொறு முலவாக்
    கெழீஇய காதலாற் கிளர்ந்தெழு முவகையிற் திளைத்தாள் - 403



    2426 - இறைவி ஏகம்பரைத் துதித்தல்
    அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    நெடியவன் பிரமன் காணா நின்மலக்கொழுந்தே போற்றி
    அடியனேற் கபயம் நல்கும் அருட்பெருங் கடலே போற்றி
    படிமுதல் ஆறா றாகி வேறுமாம் பரனே போற்றி
    கடிமலர்த் தனிமா நீழற் கடவுளே போற்றி போற்றி - 404



    2427 - பெறலரும் பெரும்பே றின்று பெற்றன னடியேன் போற்றி
    முறைமுறை யுலக மெல்லாம் முகிழ்த்தளித் தழிப்பாய் போற்றி
    அறைகழல் கறங்க மன்றில் ஐந்தொழில் நடித்தாய் போற்றி
    நிறைமலர்த் தனிமா நீழல் நித்தனே போற்றி போற்றி - 405



    2428 - தரைபுன லிரவி யிந்து தழலுயிர் வளிவான் என்றா
    உரைபெறு வடிவோர் எட்டும் உடையனே போற்றி போற்றி
    வரையெழும் பரிதி செந்தீ மதியமை விழியாய் போற்றி
    விரைமலர்த் தனிமா நீழல் வள்ளலே போற்றி போற்றி - 406



    2429 - கறைமணி மிடற்றாய் போற்றி கண்ணினுள் மணியே போற்றி
    மறவியின் வழிபட் டோர்க்கும் வழங்குபே ரருளாய் போற்றி
    நிறைபரஞ் சுடரே போற்றி நெஞ்சக விளக்கே போற்றி
    மறைமுதல் தனிமா நீழல் வள்ளலே போற்றி போற்றி - 407



    2430 - முன்னுறு பொருள்கட் கெல்லாம் முற்படு பழையாய் போற்றி
    பின்னுறு பொருள்கட் கெல்லாம் பிற்படு புதியாய் போற்றி
    புன்மதி யாளர் தேறாப் பூரண முதலே போற்றி
    சின்மயத் திருவே கம்ப சிவசிவ போற்றி போற்றி - 408



    2431 - இறைவிக்கு ஏகம்பர் திருவருள் செய்தல்
    கலிவிருத்தம்
    என்றுளம் நெக்குருகி எல்லையில் அன்பினளாய்
    மன்றல் மலர்த்தொடையல் வார்குழல் போற்றிசெயக்
    கொன்றை முடிச்சடையார் பேரருள் கூர்ந்தருளித்
    துன்றிய கேண்மையினான் மற்றிது சொல்லினரால் - 409



    2432 - பொங்கி மணங்கமழ்ப் பூசு நறுங்களப
    மங்கல மென்முலையாய் காளி மகிழ்ந்துகேள்
    அங்கனை நின்னொடுநாம் வேறலம் ஆரமுதத்
    திங்களும் வெண்ணிலவும் போலு மெனத்திகழ்வேம் - 410



    2433 - இலளிதை யாம்பெயரான் முன்னிவண் எம்முருவிற்
    பலர்தொழ வந்துலகம் பங்கய னாதியெலாம்
    மலர்தர நல்கினைபின் மற்றொரு கற்பமதிற்
    சலமறு மெய்ஞ்ஞான சத்தியின் நீங்கியரோ - 411



    2434 - அந்தண னுக்கருளி யாக்கிய துப்புதவி
    கந்த மலர்க்கடவுள் கான்முளை தன்மகளாய்
    நிந்தனை செய்தவனை நீத்து வரைக்கிறைபால்
    வந்து மறித்துமெமை யன்பின் மணந்தனையால் - 412



    2435 - இத்தகுநீ யுலகம் யாவையு முய்யுமுறை
    அத்தனி மந்தரமேல் யாமரு ளாற்றின் நிலையிப்
    பொய்த்திற னில்கழுவாய் இன்று புரிந்தனையாற்
    கொத்தலர் மென்குழலாய் வேட்டது கூறுகென - 413



    2436 - வன்றனி மால்விடையாய் மந்தரம் வண்கயிலை
    வென்ற வினைச்சிவலோ கத்தினும் மேதகவுற்
    றென்றும் நமக்கினியதாம் இந்நகர் ஆதலினிங்
    கொன்றுநர் யாவர்களும் முத்தி யுறப்பணியாய் - 414



    2437 - மறந்தும் அறம்பிறழாக் காஞ்சி வளம்ப தியின்
    அறிந்துசெய் தீவினையு மன்றி யெழுந்தனவும்
    பிறிந்து தவப்பயன்னொன் றெண்ணில வாய்ப்பெருகி
    அறம்பொரு ளின்பமெலா மாகவும்நீ யருளாய் - 415



    2438 - இங்கிவை வேண்டுமெனக் கெம்பெரு மானெனமீப்
    பொங்கு பெருங்கருணைப் பூரணி வேண்டுதலும்
    சங்கணி வெண்குழையார் தந்திரு வுள்ளமகிழ்ந்
    தங்கலுழ் மேனியினாய் கேளிது என்றருள்வார் - 416



    2439 - எண்சீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    எய்சிலை நீள்புருவத் தேந்திள மென்முலையாய்
          எம்மிடை எம்மடியார் தம்மிடை எய்தலுறச்
    செய்பிழை யன்றிவருந் தீவினை யேனையெலாம்
          சீர்வளர் காஞ்சியினில் தேய்ந்து தவம்பெருகி
    மெய்திகழ் நாற்பயனும் மேவ நிறீஇயினமால்
          வேறு முனக்கினியென் வேண்டுவ தென்றிடலும்
    மொய்யொளி மேனியினாள் முன்தொழு தேத்தியிள
          மூரல் முகத்தலரப் பேசுத லுற்றனளால் - 417



    2440 - அறுசீர்கீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    முதுகுடுமிப் பொலங்குவட்டு மந்தரத்தின்
          முன்னரெனைக் காளீ யென்று
    புதுமையுற விளித்தனையா லதுகேட்ட
          துண்டிலைபோ லிருந்தே னந்நாள்
    இதுபொழுது மிவ்வாறே விளித்தருளிச்
          செய்தாய்மற் றிதனை மாற்றி
    விதுவணியும் சடையானே கவுரநிறம்
          பெறவேண்டு மருளா யென்றாள் - 418



    2441 - ஆண்டகையா ரதுகேளாக் குறுமுரல்
          முகத்தரும்ப அருளிச் செய்வார்
    மாண்டவலித் தயித்தியரால் அலைப்புண்ட
          திவ்வுலகம் வாழ்வா னெண்ணி
    ஈண்டுமுனை யவ்வாறு விளித்தேமிக்
          கருங்கோசம் இன்னே மாற்றி
    வேண்டியவா கவுரநிறம் பெறுதிநீ
          விண்டிடுமக் கோசந் தன்னில் - 4197



    2442 - கூற்றமுறழ் சும்பனையும் நிசும்பனையுங்
          கொலைசெய்யக் குறுகா ருட்கத்
    தோற்றுதிறற் கவுசிகியாந் துர்க்கையினித்
          தோன்றுமிதோ காண்டி யென்றார்
    கோற்றொடியு மக்கணமே வரியரவின்
          மூதுரிபோற் காள மேனி
    மாற்றினாள் மணிக்கவுர வுருப்பெற்றாள்
          காதலரை வணங்கிச் சொல்வாள் - 420



    2443 - நாதனே நின்னருளா லிப்பொழுதே
          நவைக்காள வடிவ மாற்றிக்
    காதல்புரி கவுரியென வயங்குற்றே
          னாதலினிக் காஞ்சி மாடே
    மாதரொடு வானவர்தங் குழாம்நெருங்கப்
          பனிவரையின் நிகழ்ந்த வண்ணம்
    மேதகைய கடிமன்ற லெமக்கிந்நாள்
          உண்டாக விழைகின்றேனால். - 421



    2444 - உருத்திரர்கள் கணநாதர் பலவேறு
          கடவுளர்கள் உவண ஊர்தி
    மருத்தமல ரணைப்புத்தேள் ஐந்தவித்த
          மாதவர்மற் றுள்ளோர் யாரும்
    கருத்துவகை யுறத்தத்தம் பன்னிகளோ
          டிங்கெம்மைக் கண்ணிற் காணும்
    அருத்தியினால் ஒருங்கணைந்தார் அண்ணலே
          அருளென்று பின்னும் வேண்டும் - 422



    2445 - இவ்வதுவை கவுரிதிருக் கலியாணம்
          என்றுலகின் வழங்க வேண்டும்
    செவ்வியுற ஐயாட்டைக் கன்னியென
          யானீங்குச் சிறந்த வாற்றாற்
    பௌளவநீர் அகல்வரைப்பிற் பைப்பாந்தள்
          மணியல்குற் பணைத்தோள் மாதர்
    எவ்வெவரு மையாண்டிற் கன்னியர்கள்
          கவுரியரென் றாதல் வேண்டும் - 423



    2446 - ஏராளு மையாண்டிற் கன்னியரைச்
          சைவநெறி மறையோர்க் கீயுஞ்
    சீராளர் குலமுதலோர் சிவலோகந்
          தனிற்சிவணப் பெறவும் வேண்டும்
    காராளும் மணிமிடற்றா யெனத்தொழுது
          வணங்குதலும் காமற் காய்ந்த
    பேராளர் திருவுள்ளஞ் செய்தருளிப்
          பெருங்கருணை கூர்ந்து சொல்வார் - 424



    2447 - திருத்தகுவண் காஞ்சிதனி லாண்டுதொறும்
          பங்குனியுத் திரநாள் யார்க்கும்
    அருத்திபுரி திருவிழா நிகழ்ந்தீற்றின்
          வதுவைநமக் கமைவ தாகப்
    பொருத்தமுறக் காண்டியெனத் தமிழ்முனிக்கன்
          றருள்புரிந்தே மதனால் பாவக்
    கருத்துடைக்கும் பிலத்தயலே யாண்டுதொறுங்
          கடிநமக்கு நிகழ்வ தாக - 425



    2448 - கல்யாண மண்டபத்தின் உனக்குரிமைத்
          தொழில்மறையோர் கன்னி செய்ய
    எல்லாரும் இதுகண்டு களிப்புறுக
          இன்னுமுனக் காண்டு தோறும்
    நன்வாய்மை யறம்வளர்க்கும் வித்தாநெல்
          இருநாழி தருகே மந்த
    நெல்லாலே யிகபரத்து முயிர்ப்பைங்கூழ்
          தழைகவென நிறுவல் செய்தார் - 426



    2449 - அவ்வண்ணமே பெறலரிய பெருவரங்க
          லளித்தருளி யகில மீன்ற
    மைவண்ணக் கருங்கூந்தல் மனக்கருத்து
          முற்றநெடு மலய வாழ்க்கை
    மெய்வண்னக் குறுமுனிவன் தவப்பேறு
          நிரம்பவிய னுலகம் வாழச்
    செவ்வண்ணப் பெருமானார் மணவினையில்
          திருவுள்ளம் பற்றி னாரால் - 427

    ஆகத் திருவிருத்தம் 2449
    -----

    62. திருமணப்படலம் (2450-2531)




    2450 - அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    விண்டாழ் மாவின் முளைத்தெழுந்த
          விமல னார்தந் திருமேனி
    தண்டா வன்பி னுமையம்மை தழுவக்
          குழைந்த வாறுரைத்தாம்
    மண்டா ணவத்தின் தருக்கிரித்து
          மாறா வின்பப் பெருவாழ்வு
    கண்டார் கதுவ அருள்கொழிக்குங்
          கவுரி மணத்தின் திறம்புகல்வாம் - 1



    2451 - இறைவன் கட்டளைப்படி திருமால் பணிசெயல்
    திருவே கம்பத் தமர்ந்தருளுந்
          தேவர் பிரானார் புடைநின்ற
    மருவார்துளபத் தொடைமவுலி
          மாயோன் றன்னை யெதிர்நோக்கிக்
    கருவார் கூந்தல் தடங்காமக்
          கண்ணி தனக்கும் மற்றெமக்கும்
    பெருவாய் மையினாற் கடிவிழாத்
          திருநாள் பிறங்கப் புரிகென்றார் - 2



    2452 - பல்லார் நிற்பத் தனைநோக்கிப்
          பணித்த கருணைத் திறம்போற்றிப்
    புல்லார் வெருவுந் தனித்திகிரிப்
          புத்தேள் ஓகை தலைசிறப்பச்
    சொல்லாற் றொழுக்கி மணவெழுச்சித்
          தொழிலின் மூண்டு வேண்டுவன
    எல்லாப் பொருளுங் கடிதீங்குக்
          கொணர்கென் றிமையோர் தமைவிடுத்தான் - 3



    2453 - தொடியார் தழும்பிற் பெருந்தகைக்குந்
          தோகை தனக்குங் கலியாணம்
    கடிமா நகரம் முழுதறியக் கறங்கு
          முரச மறைவித்துக்
    கொடிநீள் மாட மாளிகைசூழ் கடிமண்
          டபமுன் கோடிப்ப
    நெடுமால் விசும்பின் யவனரைக்கூய்ப்
          பணித்தா னவரும் நிருமித்தார் - 4



    2454 - திருமண மண்டபப் புனைவு
    கலிவிருத்தம்
    அகனிலம் பசும்பொனின் அமைத்தோ ராயிரப்
    பகலொளி மழுங்குசெம் பவலத் தூண்நிறீஇ
    உகுமொளி மரகதப் போதி யும்பர்வைத்
    திகலற வயிரவுத் திரமு மேய்வித்தார் - 5



    2455 - உருக்கிய செழும்பொனின் மணிகள் ஒன்பதும்
    நெருக்குறப் பரப்பியோ வியம்நி கழ்த்திய
    திருக்கிளர் பலகைமேல் இணக்கித் தெள்ளொளி
    பெருக்கும்வெண் பளிங்கினாற் பித்தி யாக்கினார் - 6



    2456 - மேனிலை மாளிகை வேதி சூளிகை
    ஏனவும் பலபல வியற்றி மேவர
    வானெழு மிருசுடர் மணிக ளாதியால்
    ஊனமில் சிகரமு மும்பர்ச் சூட்டினார் - 7



    2457 - காவியங் கண்ணியர் விழையுங் காமுகர்
    ஆவியுஞ் சிந்தையு மழிய வேக்கற
    ஓவியத் தொகையெலா மும்பர் மாதர்போற்
    பாவியல் பாடலிற் பயிலச் செய்தனர் - 8



    2458 - வரையினின் றிழிதரு மாலை வெள்ளநீர்
    அருவியென் றயிர்ப்புற அலங்கு நித்திலக்
    குருமணி வடமொளி கொழிக்குஞ் சுற்றெலாம்
    நிரைநிரை யாத்துமண் நீவ நாற்றினர் - 9



    2459 - மணிவடைக் கிடையிடை மறுவில் கண்ணடி
    தணிவற ஒளிவிடுந் தவளச் சாமரை
    பிணிமலர்த் தொத்துவண் பிரசப் பல்கனி
    அணிபெறு முறைமையின் அலங்கத் தூக்கினார் - 10



    2460 - நெட்டிலைக் கதலியும் நீலப் பூகமும்
    மட்டுமிழ் கன்னலும் வானில் தாருவும்
    விட்டொளி எரித்திருள் விழுங்கு தூண்தொறும்
    கட்டினர் மலர்கனி காய்கள் ஈனவே - 11



    2461 - கொடிகளுந் தாருவுங் கோணைப் பொய்கையும்
    வடிவுடைக் கிளிபுறா மஞ்ஞை மற்றவும்
    சுடர்பல நிறங்களுந் தொகுத்தி லேகித்த
    விடுகதிர்ப் பட்டினால் விதானஞ் செய்தனர் - 12



    2462 - முத்தொளி மாலையும் மூரிப் பன்மணிச்
    சித்திர மாலையும் செம்பொ னாற்செயும்
    தத்தொளி மாலையும் ததிந்த வண்டுலாம்
    தொத்தலர் மாலையும் துவன்றத் தூக்கினார் - 13



    2463 - நாப்பணின் எம்பிரான் நங்கை யோடுறை
    பூப்பொலி மணியணை பொருத்திப் பாங்கெலாம்
    மூப்புடை விண்ணவர் முனிவர் வைகிட
    ஏற்புடை அணைகளும் இட்டு வைத்தனர் - 14



    2464 - குண்டமும் வேதியும் கோல மார்தரு
    மண்டில வகைமையும் மற்று மேர்பெற
    விண்டவர் புரமடும் விமலர் நூன்முறை
    அண்டரும் முனிவரும் அயிர்ப்பச் செய்தனர் - 15



    2465 - கொங்குயிர் சந்தனக் குறடு காழகில்
    குங்குமம் கருப்புரம் குரவம் மான்மதம்
    வெங்கடி கமழ்தரப் புகைத்து மேதக
    எங்கணு மையவி சிதறி யேர்செய்தார் - 16



    2466 - பாங்கெலாம் பனிமலர்ப் பந்தர் கட்பொறி
    வாங்கிய வெழில்பெற வகுத்து மாமணம்
    வீங்கிய நானநீர் துவற்றி நித்திலம்
    ஆங்கவா லுகமென வகம்ப ரப்பினார் - 17



    2467 - பந்தரின் புடையெலாம் பங்க யப்புனல்
    அந்தர ராட்டய ரலங்கற் பொய்கையும்
    சந்தனங் கற்பகந் தருக்கள் மல்கிய
    சுந்தரப் பொழில்களுந் துவன்றச் செய்தனர் - 18



    2468 -       வேறு
    யவனர் தந்தொழி லித்திற மாகமற்
    கவுரி மன்ற லெனக்கறங் கும்பணைச்
    சிவம லிந்த செழுங்குரல் கேட்டலும்
    உவகை பூத்தன ரொள்நகர் மாக்களே - 19



    2469 -       நகரணி நலம்
    இயங்கு மாந்தர் நெருக்கினி லிற்றுவீழ்
    தயங்கு காழ்களும் தாரும் புலவியின்
    முயங்கு மாத ருகுத்தவும் மொய்த்தொளி
    வயங்கு வீதியிற் குப்பைகள் மாற்றுவார் - 20



    2470 - சந்தம் மல்கு தமனியச் சுண்ணமுஞ்
    சுந்த ரக்கருப் பூரத் துகள்களும்
    கந்த நீரிற் கரைத்து மறுகெலாம்
    பந்தி னூட்டிப் பனிப்பர்க ளென்பவே - 21



    2471 - வண்டு லாமலர் வார்மணிப் பந்தரும்
    விண்டு ழாவு பதாகையும் வில்மணி
    கொண்ட தோரணக் கூட்டமும் யாணரிற்
    பண்டை யுள்ளன பாற்றி யியற்றுவார் - 22



    2472 - தாமம் நாற்றித் தமனிய வேதியிற்
    பூமென் நீர்நிறை பூரண கும்பமும்
    காமர் பாலிகை யுங்கதிர்த் தீபமும்
    தூம முந்தொகுப் பாரிடந் தோறுமே - 23



    2473 - நித்தி லத்தினை நீற்றுபு வேதியிற்
    சித்தி ரித்துச் செழும்பொனின் மாளிகைப்
    பித்தி யோவியம் பெட்பப் புதுக்குவார்
    பத்தி மாடம் பழுதொழித் தாக்குவார் - 24



    2474 - இருக வுள்துளை யீர்ங்கலு ழிக்கடக்
    கரிகள் பண்ணுவர் கால்விசைத் தோடுவாம்
    பரிகள் பண்ணுவர் பார்குழி யாழியின்
    இரதம் பண்ணுவ ரெங்கணு மெண்ணிலார் - 25



    2475 - நீண்ட பொன்னிலைத் தேர்கள் நிறுத்துவார்
    மாண்ட தூண்தொறும் வாருறை சேர்த்துவார்
    ஈண்டு வார்கட் கிடம்பல வாக்குவார்
    வேண்டி யார்க்கும் விருந்து திருத்துவார் - 26



    2476 -       அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    கச்சி மாநகர் முழுவது மின்னணங் கவின்பயில் சிறப்போங்க
    முச்ச கத்தவர் குழாங்கொடு வயின்தொறும் நிறைந்திட முடிவானோர்
    இச்சை யாற்றினின் மணவினைக் குரியவை யெங்கணுங் கொணர்ந்தீண்டப்
    பொச்ச மில்பெரு மங்கலத் துழனியிற் பொலிவுறு மதுகாலை - 27



    2477 -       திருமால் திருவிழா வியற்றல்
    கம்ப நாயகன் திருவருள் பெற்றுவெண் கதிர்வளைக் கரத்தோன்றல்
    அம்பு யத்தவன் முனிவரர் தம்மொடும் அணிபெறு நன்னாளால்
    செம்பொன் மாமணிப் பாலிகை முளைவித்திச் சினவிடைக் கொடியேற்றி
    எம்பி ரான்மலை மாதுடன் உலாத்தருந் திருவிழா வெழுவித்தான் - 28



    2478 - ஒன்ப திற்றுநாள் விழாவணி நிகழ்ந்தபி னுற்றவீ ரைந்தாம்நாள்
    இன்ப மிக்கொளப் பங்குனி யுத்திரத் திமையவர் குழாத்தொடு
    மன்ப தைத்திரள் மகிழ்ந்தெழுந் தார்ப்புற மணவினைக் கவின்கொள்வான்
    என்ப ணிப்பிரான் மஞ்சனச் சாலையி னினிதெழுந் தருளுற்றான் - 29



    2479 - இறைவன் மணக்கோலங் கொள்ளல்
    வேறு
    திருத்துயி லகலப் புத்தேள் செய்தவப் பேறு வாய்த்து
    மருத்தபூங் கடுக்கை வேணிப் பரஞ்சுடர் வடிவந் தீண்டிப்
    பெருத்தபொற் குடத்துத் தெண்ணீர் மஞ்சனம் பிறவு மாட்டி
    அருத்திகூ ரன்பின் நுண்ணூ லறுவையொற் றாடை சாத்தி - 30



    2480 - கற்பக மளிப்ப வாய்ந்த கைபுனைந் தியற்றல் செல்லா
    எற்படு நுழைநூற் பட்டி னிலங்கவுள் ளாடை சாத்தி
    அற்பக விமைக்குஞ் செம்பொன் னாடைமற் றதன்மேற் காமர்
    விற்படு புருவ மாதர் விழியிணை கவரச் சாத்தி - 31



    2481 - தனிவிரைப் பனிநீர் வாக்கித் தேய்த்தசந் தனப்பூஞ் சேறு
    நனிமணம் பயில்கற் பூரங் குங்குமம் நறுங்கத் தூரி
    இனியமான் மதமே மற்றும் மட்டித்த கலவை யெண்டோள்
    கனிமொழி பாகன் மேனி கமழ்தர மெழுகிக் கீறி - 32



    2482 - சுடர்த்திரு மேரு வெற்பிற் சூன்றனர் நுண்ணி தாகப்
    பொடித்தபொற் சுண்ணந் தெய்வப் பூந்தரு மலரின் வாங்குங்
    கடித்திரட் சுண்ணத் தாதிற் கலந்துமே லட்டி வாசம்
    மடுத்தெழுந் தூம மீரம் வறலுமா றன்பின் ஏற்றி - 33



    2483 - அரிக்குரற் சிலம்பு போற்று மடியவர் மலங்கள் மூன்றும்
    இரிக்குஞ்செங் கமலப் பாதத் திணக்கிவல் லிருளை யெல்லாம்
    பொரிக்கும்விற் பிழம்பு காலும் பொலங்கழல் நரல வீக்கிப்
    பரிக்கும்பட் டுடைமே லொண்கல் பதித்தபொன் அரைநாண் சாத்தி - 34



    2484 - கதிருமிழ் பதும ராக வுதரபந் தனங்கால் யாத்துப்
    புதியநித் திலப்பூங் கோவை பொன்னரி மாலை தண்தார்
    எதிரறு சன்ன வீரம் இலைமுகப் பைம்பூண் முந்நூல்
    முதலிய மார்பின் வார்ந்து முதிரொளி யெறிப்பச் சாத்தி - 35



    2485 - மணிவடங் கழுத்திற் சாத்தி வாள்கிடந் திமையா நிற்கும்
    பணியுமிழ் மணியிற் செய்த ஆழிபல் விரலுங் கோத்துத்
    திணிவயி ரத்திற் செய்த கடகங்கூர்ப் பரத்துச் சேர்த்துத்
    துணிகதிர் முத்திற் செய்த அங்கதந் தோளிற் பூட்டி - 36



    2486 - மாதர்வண் குழையுந் தோடும் வார்ந்திரு புயத்தும் நீவக்
    காதிடை யணிந்து செம்பொற் கதிர்மணிப் பட்டம் நெற்றி
    மீதுற விசித்துத் தெய்வ விற்குலா மணியின் மோலி
    போதமல் வேணிச் சென்னி பொலிதரக் கவித்தான் மன்னோ - 37



    2487 - திருவணி யணிந்து போற்றிச் சிவபிரா னெழுந்து கும்பம்
    இருகயல் கவரி தோட்டி யிலங்குகண் ணடிப தாகை
    முரசொளி விளக்கி னோடு மன்னிவிண் மகளிர் போற்றப்
    புரிமணி மண்ட பத்திற் புகுந்துபூந் தவிசி னேறி - 38



    2488 - உருத்திரர் முதலோர் தத்தம் ஒண்டவி சிருக்கு மாறு
    திருத்தகு கடைக்கண் நோக்கஞ் செய்துவீற் றிருந்த பின்னர்
    விருத்துவண் டமிழ்தப் பாடல் விளரியாழ் முரன்று சேக்கும்
    மருத்துழாய்ப் படலைத் தண்தார் வயங்கிய மருமப் புத்தேள் - 39



    2489 - இறைவி மணக்கோலங் கொள்ளல்
    மனைக்குரி மரபின் வாச மலர்கள் வதனம் நோக்கிக்
    கனைக்கும்வண் டுழக்கும் மென்பூங் கருங்குழற் கவுரி மாதா
    தனைக்கலன் திருந்தப் பூட்டித் தம்மென வுரைத்த லோடுஞ்
    கனைக்கரு நீலக்கண்ணாள் பெருங்களி துளும்பச் சென்றாள் - 40



    2490 - உவளக வரைப்பி னெல்லா வுபகர ணமுங்கொண் டுற்றுப்
    பவளநீள் பலகை மீது பகிரண்டம் முழுது மீன்றும்
    துவளிடைக் கன்னி யாகித் தூநலங் கனிந்த காம
    ரவளைநன் கிருவிக் கூந்த லவிழ்த்துநெய் யள்ளிச் சாத்தி - 41



    2491 - நெல்லிநுண் விழுது மஞ்சள் விழுதுமெய் நிரம்பப் பூசி
    மல்குபே ரன்பு கூர வாசமுந் துவரும் மற்றும்
    நல்லவை நயப்பச் சேர்த்தி நறுவிரைத் தூநீ ராட்டி
    எல்லுமிழ் குழையாள் மேனி யீர்ம்புனல் வறல வொற்றி - 42



    2492 - நனைமுறுக் கவிழ்பூங் கற்பம் நல்குபட் டாடை சாத்திப்
    புனைமணித் தவிசி னேற்றிப் பொருந்தலர் வெருவச் சீறு
    முனைமதக் களிநல் யானை மூரிவெண் கோட்டிற் செய்த
    தனைநிகர் சீப்புக் கொண்டு தாழ்குழல் ஒழுங்க நீவி - 43



    2493 - வம்பவிழ் நானம் பூசி மான்மதம் அகில்சந் தாதி
    பம்புறப் புகைத்த தூமம் பரிமளங் கமழ வூட்டி
    அம்பொன்வாய் மகரந் தாழ மண்ணுறுத் தளிந்த பெண்ணைப்
    பைம்பழ மென்ன முச்சி பசும்பொன்வார் நாணிற் சேர்த்தி - 44



    2494 - நகுசுடர் முத்த மாலைக் கொத்துநான் றெருத்தின் நீவித்
    திகழொளி விரிப்ப வங்கேழ் முச்சியிற் செருகி வாச
    முகையவிழ் அலங்கல் சூழ்ந்து மொய்கதிர் ஈகை மாலை
    தொகுமணி மாலை கூந்தற் பரப்பினிற் சுடரப் போக்கி - 45



    2495 - ஒழுகொளி பரப்புந் தெய்வ வுத்தியும் மயிலும் மிக்க
    அழகுற வனைந்து நாப்பண் ஐதுறு கீற்றின் வெய்யோன்
    மழகதிர் கிடந்த தென்ன வயங்குகுங் குமத்தூ ளட்டிப்
    பொழிகதிர் மாசைப் பட்டம் பொலியவா ணுதலில் வீக்கி - 46



    2496 - சிந்துரஞ் சேறு செய்த திருந்தெழில் திலகம் இட்டுக்
    கந்தமென் குவளை நோக்கின் அஞ்சனங் கவினத் தீட்டிக்
    கொந்தொளி முகத்தின் நாசித் திருவணி கொளுவிக் காதின்
    அந்தழல் மணியின் தோடு மவிர்கதிர்க் குழையுஞ் சாத்தி - 47



    2497 - விலகிவில் லுமிழுங் கட்டு வடத்தினை மிடற்றிற் சூழ்ந்து
    நிலவுமிழ் மணியிற் செய்த வங்கதம் நெடுந்தோள் சாத்தி
    இலகொளி வாய்ந்த முன்கைக் கடகமுந் தொடியும் ஏற்றி
    அலர்கதிர் மோதி ரங்கள் வார்விரல் அமையக் கோத்து - 48



    2498 - மிகக்கடி கமழ்ந்த சாந்தால் வெரிந்புறம் மெழுகிக் கையின்
    நகத்தினால் எழுதிச் சால நறுவிரைக் களபச் சேறு
    முகைத்தனம் புதையக் கொட்டி முருகுயிர் பூந்தா தப்பிப்
    புகைத்துஞ்சாந் தாற்றி கொண்டு வீசியும் புலர்த்திப் பின்னர் - 49



    2499 - நித்தில மாலை துப்பு நிரைத்தபூந் தொடைமா ணிக்கக்
    கொத்துறு தாமம் பச்சைக் கோப்பமை தெரியல் வேரித்
    தொத்தலர்ப் பிணையல் செம்பொற் சுடர்விரி தொடலை யேனைத்
    தத்தொளி நீலக் கோதை தண்கதிர் எரிப்பச் சாத்தி - 50



    2500 - எரிச்சிகை யெழுவ தென்ன விளங்கதிர் விரிக்கும் பைவாய்
    அரிச்சிகை மணிக ளாதி யழகுறக் கோத்த காழின்
    விரிச்சிகை கலாபங் காஞ்சி மேகலை பருமம் ஐந்துங்
    கரிச்சிகை மத்த கத்துக் கடிதடம் புலம்பச் சாத்தி - 51



    2501 - அலம்புகிண் கிணிமின் காலு மவிர்பரி யாகஞ் செம்பொற்
    சிலம்புபா டகமென் றின்ன புறவடி திகழச் சாத்தி
    நலம்புனை செய்ய பஞ்சின் நறுங்குழம் பலர்ந்த கஞ்சம்
    இலம்படச் சிவந்த தாளின் ஊட்டினள் இறைஞ்சி நின்றாள் - 52



    2502 - இறைவி இறைவன்பாலமர்தல்
    கலிவிருத்தம்
    தூக்குழ லுமைதிரு வடிவில் துன்னலான்
    மாக்கவின் மிகுமணி வனப்பு நோக்குதோ
    றீக்கணம் முரல்மல ரேழை யீதியான்
    ஆக்கிய அணிகொலென் றயிர்ப்பு மேயினாள் - 53



    2503 - விண்ணர மடந்தையர் பலரும் வேல்தடங்
    கண்ணிணை கவர்பெரு வனப்புக் காண்தொறும்
    எண்ணருங் களிப்பினர் எம்பி ராட்டியைப்
    புண்ணியச் சோபனம் புகன்று வாழ்த்தினார் - 54



    2504 - நங்கையும் நறைகமழ் நளினப் பாவைதன்
    பங்கய மலர்க்கரம் பற்றி யாங்கெழுந்
    தெங்கணும் மலர்மழை யிறைப்ப வானவர்
    மங்கல வாழ்த்தொலி மல்கப் போந்தனள் - 55



    2505 - நிழலுமிழ் மணிக்குடை நீண்ட கேதனந்
    தழையொளிக் கவரிசாந் தாற்றி யாதிய
    மழைமதர்க் கண்ணர மகளிர் ஏந்தியே
    விழைதகு தொழில்முறை விளைத்து டன்செல. - 56



    2506 - பாவிய வாடைமேல் நடந்து பைப்பய
    மாவணி மணவினை மண்ட பத்திடைப்
    பூவண மிசைப்பொலி புனிதன் பாங்கரின்
    ஓவியக் கொழுந்தென வுற்று வைகினாள் - 57



    2507 - திருமணம்
    அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    திருத்தகும் அணைமே லண்ண லணங்குடன் திகழ நோக்கி
    உருத்திரர் முதலோர் யாருந் தொழிதெழுந் துவகை பூத்தார்
    மருத்துழா யலங்கல் மார்பன் மலரடி விளக்கப் புக்கான்
    பெருத்தபல் லண்ட மொன்றாய்ப் பிளந்தென வியங்களார்த்த - 58



    2508 - பொலம்புனை கராத் தீம்பால் பூமகள் வணங்கி வார்ப்ப
    வலம்புரிக் கரத்தோ னையன் மலரடி விளக்கிப் போற்றி
    இலங்கொளிப் பட்டால் ஈரம் மெல்லெனப் புலர்த்தி யேந்தும்
    அலங்கொலிப் பாத தீர்த்தம் பருகினா னார்வங் கூர - 59



    2509 - கன்னல்நெய் கனிபா லின்ன கமழ்மதுப் பருக்கம் நல்கி
    என்னையா ளுடைய கோமா னேடவிழ் கமலச் செங்கை
    தன்மிசை யுலக மீன்ற தனிமுதற் பிராட்டி யான
    கன்னிகை வைத்து நீர்பெய் தளித்தனன் கமலக் கண்ணன் - 60



    2510 - கலிவிருத்தம்
    ஆர்த்தன பணிலங்கள் ஆர்த்த துந்துமி
    ஆர்த்தன பல்லியம் ஆர்த்த மங்கலம்
    ஆர்த்தன நான்மறை ஆர்த்த ஆகமம்
    ஆர்த்தன பல்கலை ஆர்த்த வாழ்த்தொலி - 61



    2511 - பொழிந்தனர் வானவர் கற்பப் பூமழை
    வழிந்தன பாடலின் மதுரத் தேமழை
    இழிந்தன அடியவர் இணைக்க ணீர்மழை
    அழிந்தன வினையெலா மனைய காலையின் - 62



    2512 - பங்கயக் கிழவனைப் பகர்ந்த நூல்முறை
    செங்கனல் வளர்ப்பவங் கருளிச் சேவுடை
    அங்கணன் மலைமகள் மிடற்றில் ஆரருள்
    மங்கல நாணினை வயங்கச் சாத்தினான் - 63



    2513 - முண்டகக் கடவுளும் முதல்வன் ஆணையுட்
    கொண்டுவே தாகமக் குறிவ ழாவகை
    மண்டிய கொழுங்கனல் வளர்த்து வாசநெய்
    மொண்டுதூய்க் கடிவினை முற்றச் செய்தனன் - 64



    2514 - மாண்டசெந் தமிழ்முனி மனக்க ருத்தொடு
    காண்டகு கவுரிதன் கருத்து முற்றின
    வேண்டிய வேண்டியாங் களிக்கும் மெய்யருள்
    ஆண்டகை விளக்கினான் போலும் அற்றைநாள் - 65



    2515 - கலிநிலைத்துறை
    திரும ணத்திறங் கண்டவர் யாவருஞ் செழுந்தேன்
    பருகு வண்டென ஆனந்த வெள்ளத்திற் படிந்தார்
    உருகி யேத்தினர் கையிணை யுச்சியிற் குவித்தார்
    இருக ணீர்மழைத் தாரையின் மூழ்கியின் புற்றார் - 66



    2516 - மலைக்கொ டிக்குறு கவுரமெய் வடிவும்வள் ளலுக்கு
    முலைச்சு வட்டொடு வலைத்தழும் பணியுமுன் நோக்கிச்
    சிலத்த டம்பணி வரைமிசைத் திகழ்மணக் கோல
    நிலைக்கு மற்றிது ஏற்றமிங் கெனநெடி துவந்தார் - 67



    2517 - அலகி லோகையில் திலைப்பவிப் பேறெமக் களித்த
    மலைய மாமுனி வாழிய வாழியென் றுரைத்தார்
    குலவு மங்கலம் பாடின ராடினர் குழைந்தார்
    தலைவி பாகனு மவரவர் தமக்கருள் வழங்கி - 68



    2518 -       இறைவன் திருவுலாப் போதல்
    எட்டு மாதிரக்கரிகளும் உடல்பனிப் பெய்த
    நெட்டு யிர்ப்பெறி மதுகைவெள் விடைமிசை நீல
    மட்டு லாங்குழல் மடவர லொடுமகிழ்ந் தேறிச்
    சிட்டர் போற்றிட மறுகிடைத் திருவுலாப் போந்தான் - 69



    2519 - பிளிறு வெம்மத யானையின் வெரிந்தலை பிணித்த
    குளிறு வார்மணி முரசொடு கொக்கரை முழவம்
    ஒளிறு மாமுடி வானவர் இயங்களும் ஒருங்கே
    களிறு தாங்குமெண் டிசைகளுஞ் செவிடுறக் கறங்க - 70



    2520 - வாணி கோன்பணி பானுகம் பப்பெயர் வயவன்
    வாணி லாவளை யாயிரம் வாயில்வைத் தூத
    வாணன் ஆயிரங் கரங்கொடு மணிமுழா முழக்க
    மாண மத்தள மாதவன் மத்தளம் எழுப்ப - 71



    2521 - காம நோக்கியை மணம்புணர் காதலன் வந்தான்
    பூமு லைச்சுவ டணிந்தருள் புண்ணியன் வந்தான்
    யாமெ லாமுய்ய வந்தவன் வந்தனன் என்னாத்
    தாம நித்திலச் சின்னமுங் காளமுந் தழங்க - 72



    2522 - கீத வேய்ங்குழல் யாழிசை எங்கணுங் கிளர
    வேத ஓசையு மாகம முழக்கமும் விம்ம
    மாதர் நாடக நூல்முறை மடந்தையர் நடிப்பப்
    போத விண்ணவர் பூமழை வியனிலம் போர்ப்ப - 73



    2523 - வீதி வாய்த்திரு விழாவணி தொழுதிடப் போந்த
    பேதில் பேரிளம் பெண்முடி வாயபல் பருவ
    மாதர் யாவரும் நாணொடு வளைகலை தோற்றுக்
    காதல் வேள்சிலைப் பூங்கணை மாரியிற் குளிப்ப - 74



    2524 - புதிய சாமரை வெண்குடை பூங்கொடி மிடைய
    எதிரில் கொள்கையின் நகர்வலங் கொண்டெழுந்தருளி
    மதுர மென்மொழி மங்கல வாழ்த்தொலி மலியக்
    கதியி லார்க்கெலாம் இன்னருட் காட்சிதந் தளித்து - 75



    2525 -       இறைவன் தேவர்கட்கு வரமளித்தல்
    மீண்டு கோயிலி னுள்ளெழுந் தருளிமெல் லணைமேல்
    மாண்ட மெல்லியற் பனிவரை யணங்கொடும் வைகி
    ஆண்டு நின்றமா லயன்முதல் யாரையும் நோக்கி
    ஈண்டு நீர்வரம் வேண்டுவ கொண்மினென் றிசைத்தான் - 76



    2526 - அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    இருமுது குரவர் பாதம் இமையவர் வணங்கி யிந்தத்
    திருமணங் காண்டல் பெற்றேம் உய்ந்தனந் திரைநீர் வைப்பின்
    மருவினர் வதுவை செய்யும் இடந்தொறும் மன்னி யாங்காங்
    கிருநலம் உதவல் வேண்டும் இவ்விரு வீரு மென்றார் - 77



    2527 - இவ்வரம் அளித்தேங் காஞ்சி இருநகர் காவல் பூண்டு
    செவ்வனிங் குறைமின் என்று சிவபிரான் பணித்த லோடும்
    அவ்வருள் சென்னி மேற்கொன் டகமகிழ்ந் திமையோ ரெல்லாங்
    கௌளவைநீர் காஞ்சி மூதூர் காவல்கொண்டிருந்தா ரங்கண் - 78



    2528 - அரந்தைதீர் கவுரி கூற்றில் தோன்றிய அணங்கும் என்னை
    வரைந்துகொண் டருண்மோ வென்று வணங்கிநின் றிரப்ப அந்நாள்
    கரந்தைவார் சடையோன் மன்றல் முடித்துநீ கச்சி மூதூர்
    புரத்திவ ணுறைதி துர்க்கா யென்றருள் புரியப் பெற்று - 79



    2529 - கவுசிகீச்சரம்
    கன்னிகாப் பெனும்பே ரெய்தக் கவுசிகி மடந்தை காஞ்சிப்
    பொன்னகர் காவல் பூண்டு பொங்கொளிக் கவுசி கீசன்
    தன்னையங் கிருவிப் பூசை தழைத்தபே ரன்பி னாற்றி
    இன்னல்தீர்ந் துலகம் உய்ய இருந்தனள் இருக்கும் நாளில் - 80



    2530 - சும்பனே நிசும்பன் என்போர் உலகெலாந் துள்ள நோக்கி
    அம்புயக் கடவுள் போந்தங் கண்ணலுக் கியம்பி வேண்ட
    எம்பிரான் அருளாற் கன்னி விந்தவெற் பெய்தி வைகி
    வெம்புவா ளவுணர் தம்மைச் செகுத்துமீண் டினிது வாழ்ந்தாள் - 81



    2531 - பகர்பெரு வளஞ்சால் இந்த மன்றலைப் பண்பு கூர
    அகனமர்ந் தேத்தி னோர்கள் கண்டவர் அறையக் கேட்டோர்
    தகவுற நினைந்தோர் எல்லாந் தையலார் மன்றல் வாய்ந்து
    புகலரும் பரமா னந்த மன்றலும் பொருந்தி வாழ்வார் - 82

    ஆகத் திருவிருத்தம் 2531
    ----------

    63. விம்மிதப்படலம் (2532-2553)




    2532 - கலிநிலைத்துறை
    சாம கண்டர்தம் ஆணையால் அகிலமுந் தழைப்பக்
    காம நோக்கியெண் ணான்கறங் கரிசற வளர்க்கும்
    நாம நீர்வயற் கச்சிமா நகர்வயின் அளவில்
    சேம விம்மிதம் உள்ளன சிலவெடுத் திசைப்பாம் - 1



    2533 - தெள்ளொ ளிக்கதிர்ப் பன்மணித் திரளெலாஞ் செறியப்
    பள்ள நீர்க்கடல் ஆகர மாகிய பரிசின்
    வெள்ள வேணியர் அருளினால் அற்புத விளைவென்
    றுள்ள வைக்கெலாம் உறைவிட மாயது காஞ்சி - 2



    2534 - அற்புத இலிங்கங்கள்
    தீண்டில் யாவையுஞ் செய்யபொன் னாக்குவ திறலின்
    மாண்ட சித்தர்கள் எண்ணிலர் வழிபடப் படுவ
    வேண்டி லென்னவு மளிப்பன மெய்த்தவ முடையோர்
    காண்ட கும்பல விலிங்கமக் கடிநக ருளவால் - 3



    2535 - ஒருத னிப்பொருள் இருதிற னாகியுவ் விரண்டும்
    ஒருமை யுற்றிடும் வியப்புமங் குள்ளது விரிக்கில்
    ஒருப ரம்பொருள் சிவனொடு சத்தியென் றிரண்டாம்
    ஒருமை யுற்றிடு முமையவள் கம்பரைத் தழுவி - 4



    2536 - இருமை யோர்பொரு ளெண்ணில வாதலு மெண்ணில்
    பொருள்கள் ஒன்றெனத் திகழ்தலு முடைத்தது புகலின்
    ஒருசி வச்சுடர் பற்பல வடிவுகொண் டுறையும்
    மருவு பன்மறை யொருதனி மாவென் வயங்கும் - 5



    2537 - பதினோரற்புதம்
    மற்று மூன்றிடம் வேதிகை வயல்கள்நாற் றவிசு
    பொற்ற ஐந்தருத் தடமறு புட்களேழ் பொதியில்
    பற்று மெண்பொய்கை யொன்பது சிலைபொழில் பத்தாங்
    கொற்ற மன்ருபத் தோடொரு கூவலுங் குலவும் - 6



    2538 - மூன்றிடங்கள்
    ஒன்று பல்பவத் தாயரைக் காட்டிடு மொளிசேர்
    ஒன்று பல்பவத் தாயரை வேண்டுறிற் காட்டும்
    ஒன்றுபல்பவக் கிளைஞரோ டுரைபயில் விக்கும்
    என்று மூவகைத் தானமவ் விருநகர் உடைத்தால் - 7



    2539 - மூன்று தெற்றிகள்
    ஊங்க ணைந்தவர்க் கமுதுநீர் உதவிடு மொன்று
    பாங்கின் வேட்டன யாவையும் பயந்திடு மொன்று
    மூங்கை பேசவும் பேசினோன் மூங்கைமை யுறவும்
    ஆங்க ளிப்பதொன் றாகமுத் தெற்றியும் உளவால் - 8



    2540 - மூன்று வயல்கள்
    மீள மீளநெல் லரிதொறும் விளைவதோர் பழனம்
    நாளின் வித்துமன் றேபயன் நல்குமோர் கழனி
    தாளின் ஏருழ வின்றியே தகும்பயிர் விளைக்கும்
    கோள தொன்றென வயல்கள்மூன் றுள்ளன குறிக்கில் - 9



    2541 - நான்கு தவிசுகள்
    எண்சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    தன்பகுப்பின் மூவரொடு முனிவர் விண்ணோர்
          பழிச்சிடவாழ் சதுமுகனைக் காட்டு மொன்று
    தன்பகுப்பின் மூவர்திரு முதலோர் சூழத்
          திருமாலைச் சார்ந்தோர்க்க்குக் காட்டு மொன்று
    தன்பகுப்பின் மூவரொடு கணங்கள் போற்றுந்
          தழற்கால ருத்திரனைக் காட்டு மொன்று
    தன்பகுப்பின் மூர்த்திகளோ டென்றூழ் காட்டுந்
          தவிசொன்றா மடங்கலணை நான்கு மன்னும் - 10



    2542 - ஐந்து தருக்கள்
    ஓவாமை யமிழ்தொழுக்கும் பொலம்பூச் சூதம்
          தன்னிழலைப் பிறர்க்குதவாக் காஞ்சி யொன்று
    பூவாது காயாது கனிகள் நல்கும்
          பூம்புளிபல் வகைப்போதுந் தரும தூகம்
    தாவாத செம்பொன்மல ரத்தி யென்றா
          சாற்றரிய தெய்வதமாத் தருக்கள் ஐந்துந்
    தேவாதி தேவரினி தமருங் காஞ்சித்
          திருநகரி னிரும்பூது திகழ வோங்கும் - 11



    2543 - ஐந்து தடாகங்கள்
    எல்லியிடைப் பங்கயமும் பகற்கா லத்தின்
          இருங்குமுதச் செழும்போது மலர்ந்து தீந்தேன்
    பில்குவதொன் றொருகாம்பின் முளரி மூன்று
          பிறங்குபுனல் தடமொன்று குளித்தோ ரெய்த
    வல்லைவா னரத்துருவம் அளிப்பதொன்று
          மூழ்கினோர் மாற்றார்க்குக் கொடிய தீமை
    நல்குவதொன் றாடினோர் உற்றார்க் கின்ப
          நலந்தருவ தொன்றெனலாந் தடாக மைந்தே - 12



    2544 - ஆறு பறவைகள்
    பெய்யாத காலத்தின் அகவிக் கொண்மூ வருவிக்கும்
          பெருமஞ்ஞை மறைநூ லெல்லாம்
    எய்யாமை யின்றியுணர் கிள்ளை யேனைக்
          கணிதநூல் எனைத்துமெடுத் துரைக்கு மாந்தை
    நையாது முழுதுணர்ந்த கபோதம் பாடு
          நல்லிசைநூ லவைவல்ல நலஞ்சேர் பூவை
    பொய்யாது வேட்டவெலாம் வழங்குநேமிப்
          புள்ளுமென அறுபறவை பொருந்து மாங்கண் - 13



    2545 - ஏழு பொதியில்கள்
    வானாடர் வார்த்தைசெவிப் புலனாம் ஒன்றின்
          மதகரியை முயலூக்கித் துரக்கு மொன்றின்
    மேனாகர் உலகுவிழிப் புலனாம் ஒன்றின்
          மேவினர்க்குத் திசைமயக்கம் எய்து மொன்றில்
    கானார்நெய் யின்றிவிளக் கெரியு மொன்றில்
          பாதலத்தோர் கழறுமொழி கேட்கு மொன்றில்
    ஆனாது துந்துமிகள் முழங்கு மொன்றில்
          ஆகவேழ் பொதுத்தானம் வயங்கு மாலோ - 14



    2546 - எட்டுப் பொய்கைகள்
    மூழ்குநர்க்குப் பொன்னுருவம் அளிக்கு மொன்று
          முழுமணியேர் தருமொன்று விண்ணோர் கோமான்
    வாழ்வளிக்கு மொன்றுமனக் கினிய வெல்லாந்
          தருமொன்று வேண்டியதை வழங்கு மொன்று
    வீழ்தகைத்தா மெய்ஞ்ஞான மளிக்கு மொன்று
          வீடுதவு மொன்றுவினைப் பிணிநோய் முற்றும்
    பாழ்படுத்து மொன்றென்ன மலங்கள் மாற்றும்
          பனிமலர்ப்பூம் பொய்கையிரு நான்கு மேவும் - 15



    2547 - ஒன்பது சிலைகள்
    தீண்டினரைத் தேவாக்கு மொருகல் பாம்பின்
          கடிவிடந்தீர்த் திடுமொருகல் சித்தி யெல்லாம்
    ஆண்டளிக்கு மொருகலுயி ருதவு மோர்கல்
          வழக்கனைத்தும் நடுவாய்நின் றறுக்கு மோர்கல்
    மூண்டபிணித் தழும்புறுபுண் மாற்று மோர்கல்
          மொய்யொளிமெய்த் துணியுறுப்பைப் பொருத்து மோர்கல்
    ஈண்டியதீ வினையிரிக்கு மோர்கல் ஞானந்
          தருமொருகல் எனச்சிலைக ளொன்ப தோங்கும் - 16



    2548 - ஒன்பது பொழில்கள்
    ஒன்றினோர் பெறக்கனக மாரி யொன்றில்
          இரசதமா மழை யொன்றில் முத்து மாரி
    ஒன்றிலொளிர் குருவிந்த மாரி யொன்றில்
          வயிரமழை யொன்றில்வயி டூய மாரி
    ஒன்றிலொளி விடும்புருட ராக மாரி
          யொன்றிலடற் புள்ளேற்றுப் பச்சை மாரி
    ஒன்றினிலிந் திரநீல மாரி யொன்றில்
          பொழியுமலர்ப் பொழிலிவையொ ரொன்ப தோங்கும் - 17



    2549 - பத்து மன்றங்கள்
    சொல்லருமா பாவியுறின் மூங்கை யாக்குஞ்
          சோரர்களை மருளுறுத்துங் கல்வி தேற்றும்
    பல்வகைய வடிவுதவுஞ் சாவா மேன்மை
          பாலிக்கும் பாதலஞ்சேர் பிலத்தைக் காட்டும்
    வல்லவர்க்குந் திசைமயக்கும் பொன்மா ணிக்க
          மழைபெய்யும் பகலிரவு மாறாக் காட்டும்
    செல்லுநரைப் பிறர்காணா வியப்புச் செய்யும்
          இவைமன்றம் ஒருபதெனத் திகழு மாலோ - 18



    2550 - பதினொரு கூவல்கள்
    தயிர்க்கூவல் பாற்கூவல் நறுநெய்க் கூவல்
          மதுக்கூவல் செழுங்கருப்புச் சாற்றுக் கூவல்
    மயக்கமற முத்திநெறி துறக்க மார்க்கம்
          மற்றுலகின் கதிகாட்டும் மும்மைக் கூவல்
    வியப்பெய்த நிழல்பிணிக்குங் கூவல் பாரின்
          வித்தின்றி நாறுசெய்யும் விரிநீர்க் கூவல்
    அயர்ப்பின்றி அங்கணைந்தோர் மீளச் செய்யும்
          அருங்கூவ லொடுங்கூவல் பதினொன் றாமால் - 19



    2551 - செக்கு- சிலை - சிலம்பொலி
    தன்னிடையெள் ளினைப்பெய்யின் மற்றோர் ஞாங்கர்த்
          தயில மெழச் செய்வதொரு செக்கு முண்டு
    மன்னுயிர்செய் வினைப்பயனைத் தாமே நல்குஞ்
          சிலையொன்று சிலைப்பாவை யொன்று மன்னுங்
    கன்னிமதிற் காஞ்சிநகர் காவல் பேணுங்
          கருமேனி வயிரமாக் கடவுள் பாத
    நன்னடனச் சிலம்போசை இடைய றாது
          நானிலத்தோர் வியப்பெய்தக் கேட்கும் ஓர்பால் - 20



    2552 - இன்னனவாம் அதிசயங்கள் மற்றுமுள்ள எல்லை
          யிலையவை முழுது மறிவார் யாரே
    முன்னுகத்தின் எல்லார்க்குங் காட்சி யெய்தும்
          மூண்டகொடுங் கலியுகத்திற் படிமை வாழ்க்கை
    மன்னினோர் சிலர்க்கன்றித் தோன்றா முத்தி
          மருவினர்க்கு மேலுலகின் வைத்த வண்ணம்
    அன்னமலி வயற்காஞ்சி வரைப்பின் வாழ்வார்
          அகங்களிப்பக் கண்ணுதலார் அமைத்த வாகும் - 21



    2553 - இங்குரைத்த மேன்மையெலாங் கண்டுங் கேட்டு
          மிந்நகரிற் கொடுந்தீமை யிழைப்பா ராயின்
    அங்கவரே கயவரெனப் படுவ ரந்தோ
          அறிவின்றி அறியாதுஞ் செய்த பாவப்
    பங்கமெலா மொழிவெய்து மறிந்து செய்யிற்
          பாற்றரிதா மாதலினாற் பயனும் வேண்டி
    உங்குறைவோர் தத்தமக்கு விதித்த வாற்றா
          னொழுகியே கம்பரருட் குரிய ராவர் - 22

    ஆகத் திருவிருத்தம் 2553
    ---------

    64. ஒழுக்கப்படலம் (2554-2621)




    2554 - அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    மாதரை யெல்லாம் வீழும் மடவனும் ஈன்ற தாயைக்
    காதல னாகா னச்சீர்க் கடியனுஞ் சிவன்வாழ் வைப்பிற்
    பாதகம் புரியல் காஞ்சிப் பதியிடைச் சிறிதுஞ் ச்ய்யல்
    ஓதிய விதியி னாறே வொழுகுதல் முறைமைத் தாமால் - 1



    2555 - செந்துவர் படரு மாழித் தினகர னெழுமுன் கன்னல்
    ஐந்தென வெழுந்து வெண்ணீ றணிந்துயர் மாவின மூலத்
    தெந்தையைக் காமநோக்கி னிறைவியை நினைந்து போற்றிப்
    புந்தியி னுறத்தான் செய்யும் பொருளறம் சிந்தை செய்து - 2



    2556 - கரகமுந் தண்டும் மற்றுங் கரந்தழீஇக் காம ரூர்க்கு
    நிருதியிற் படர்ந்து காதில் நீண்டமுப் புரிநூலேற்றித்
    தரணியிற் திருணம் இட்டுச் சந்திகள் பகல்வ டக்கும்
    இரவுதென் பாலும் நோக்கி யிருந்திரண் டியக்கம் நீத்து - 3



    2557 - குறியிடக் கரத்துப் பற்றிக் குறுகிநீர் முகந்திட் டோர்கால்
    வெறிகமழ் புனலான் மண்ணாற் குறியினை விழுமி தாக்கி
    நிறையமண் முக்கா லிட்டுக் குதங்கழீஇக் கழுவு நீள்கைக்
    கிறுதியி னீரைங் காலு மிருகைசேர்த் தேழு காலும் - 4



    2558 - அடியெழு காலும் பூசி யறலினாற் சுத்தி செய்க
    இடனுடை யில்லோர்க் கீதா மிரட்டிமும் மடங்கு நாற்றி
    கடனறி பிரம சாரி காட்டகத் துறைவோன் மற்றைக்
    கெடலருந் துறவி யின்னோர் கெழுதக வியற்றல் வேண்டும் - 5



    2559 - கொணர்வுறு நீர்வாய்ப் பெய்து கொப்புளித் திருகால் தூய்மை
    அணையநீர் குடித்துப் பின்னர் அணிவர லுறுப்புத் தீண்டல்
    இணைவிழைச் சுணவு மாற்றீ ரியக்கமுற் றிடில்நா லெண்கால்
    இணையிலீ ரெண்கா லெண்காற் கொப்புளித் திடுதல்வேண்டும் - 6



    2560 - சலமலம் விடுக்கும் போதுந் தையலார் கலவிப் போதும்
    குலவெரி வளர்க்கும் போதும் வெண்பல்கோல் தின்னும் போதும்
    உலவுநீர் குடையும் போதும் உணவினும் பேசல் செய்யார்
    மலவலி துரக்கு மெங்கோன் வகுத்தநூல் முறையின் நிற்போர் - 7



    2561 - விதித்தகோல் தின்று தூய மென்புனல் படிந்து மேனி
    கதிர்ப்பநீ றணிந்து சந்திக் கடன்புரிந் துறுபே ரன்பின்
    முதிர்ச்சியி னிலிங்க பூசை நாள்தோறும் முட்டா தாற்றித்
    துதித்தனர் காலந் தோறு மேகம்பந் தொழுது போற்றல் - 8



    2562 - இம்முறை யொழுக்கின் மாறா தியங்குறும் பிரம சாரி
    செம்மணி வடிவிற் கம்பர் திருவருள் கிடைத்தல் வேண்டி
    மம்மரில் குரவன் மாடே மறையெலாம் முறையி னோதல்
    மும்மறை யிரண்டொன் றானும் முற்றுறப் பயிறல் வேண்டும் - 9



    2563 - மடங்கலிற் கன்னி தன்னின் மதிநிறைந் துறுநாள் ஓதத்
    தொடங்குக மகரத் தந்நாள் துகளற முடிக்க மீண்டு
    மடங்கரும் வெண்கேழ்ப் பக்கத் தோதுக அங்க மாதி
    உடங்குதேய்ப் பக்கத் தோதல் விலக்குநாள் ஓதல் வேண்டா - 10



    2564 - செவ்விநாண் உடையே தண்டந் திகழ்முந்நூல் உத்த ரீயம்
    அவ்வயர் தமக்கு வெவ்வே றருமறை விதித்த வாற்றால்
    எவ்வமில் மறையோ ராதி மூவரும் இயல்பிற் கொள்க
    செவ்வழல் விதியி னோம்பி யணிகவத் திருவெண் ணீறே - 11



    2565 - முன்னிடை கடையின் ஒன்றப் பவதிச்சொல் மொழிந்து பார்ப்பார்
    மன்னவர் வணிகர் பிச்சை யேற்பது மரபா மாயுள்
    முன்னுறு மிளையர் தம்மின் மூத்தவர்ப் பணிக தாழ்ந்த
    பின்னவர் தமக்கு மூத்தோர் வாழ்த்துரை பேசல் வேண்டும் - 12



    2566 - ஓதிய பிரம சாரி யொழுக்கினில் வழாது நின்று
    மூதரு மறைநூல் கற்றோர் முனிவர்தங் கடனில் தீர்ந்து
    வேதமா மூலத் தெங்கோன் திருவருள் மேவப் பெற்றுப்
    பேதமில் பெருவீட் டின்பப் பேற்றினுக் குரிய ராவார் - 13



    2567 - வேறு
    பின்னவர்கள் பற்றிகந்து பத்தியினால் திருக்காஞ்சிப் பேரூர் வாழ்க்கை
    மன்னுதல்வேட் டனராயி னேகம்பன் றனக்கணித்தா மிருக்கை வைகிப்
    பன்னருஞ்சீர்க் கண்டிகைநீ றுடல்வயங்கச் செய்பணிகள் பலவு மாற்றித்
    துன்னியமாந் தருமூலச் சுடரொளியை முட்டாது தொழுது வாழ்வார் - 14



    2568 - கலிவிருத்தம்
    வற்றரு மறையவ்வா றோதி வாழ்க்கையிற்
    பற்றில னாயிடிற் குரவன் பாலென்றும்
    உற்றினி துறைகபற் றுடைய னேயெனில்
    பெற்றியி னருட்குரு விசைவு பெற்றரோ - 15



    2569 - கடவுளர் பிதிரர்தங் கடன்கள் நீக்குவான்
    வடுவறு மிலக்கணம் மாண்ட கற்பினின்
    மிடலுடைக் கிழத்தியை விதியின் வேட்டுப்பின்
    நெடுமனை வாழ்க்கையின் ஒழுகல் நீதியே - 16



    2570 - கருதுமுப் பதிற்றிரு கவள மென்பதம்
    இருபொழு துண்டலும் எச்சம் ஐவகை
    புரிதலும் விதித்தநாள் மனைவி பூண்முலை
    மருவலும் இனையவும் இவர்க்கு மாணுமே - 17



    2571 - ஓதெரி சமிதையின் ஓம்பல் தெய்வமாம்
    ஏதமில் பிதிரருக் கீதல் அன்னதாம்
    பூதருக் கிடுபலி பூத எச்சமே
    வேதியர்க் கோதனம் வீசல் மானிடம் - 18



    2572 - பெருமறை ஓதுதல் பிரம எச்சமிவ்
    விருமகம் ஐந்தனுட் பிரம எச்சந்தான்
    திருமிகச் சிறத்தலில் தெய்வ வேதியர்
    ஒருதலை யாகயீதோம்பல் வேண்டுமால் - 19



    2573 - வைகறை எழுந்துசெய்வினைகள் மாண்டகச்
    செய்துமா நகர்ப்புறத் தொழுகுந் தெய்வநீர்
    எய்தினர் குடைந்துவெண் டுகிலி ரண்டுடுத்
    தைதுறு கண்டிகை நீற ணிந்துபின் - 20



    2574 - வண்புதல் தருப்பைமேல் வைகி மும்முறை
    ஒண்புனல் வேதங்கள் உவப்ப ஆசமித்
    தெண்பெற வாய்துடைத் தியல்பில் தீண்டியே
    பண்பயில் மறைகளைப் படித்தல் வேண்டுமால் - 21



    2575 - மாதவப் பேற்றினான் மறைகள் அண்ணலைச்
    சூதமாய் நிழற்றலின் தொல்லை யேகம்ப
    நாதனுக் கினியதிப் பிரம நன்மகம்
    மேதகு மறங்களுள் மிக்க தாகுமால் - 22



    2576 - ஆற்றலுக் கியையவெவ் வளவைத் தாயினும்
    போற்றரு மறையினைப் போற்றி மேதகச்
    சாறுகா யத்திரி சதவு ருத்திரம்
    ஏற்றவைந் தெழுத்திவை விதியின் எண்ணியே - 23



    2577 - அனைத்தினும் நிறைந்துறை அடிகள் பூசனை
    தனக்குறு திருப்பள்ளித் தாமங் கொய்துபோய்
    மனைத்தலை வைத்துமேல் வாழ்க்கைக் கேய்ந்தன
    எனைத்துள கருமமும் இயல்பின் நாடியே - 24



    2578 - கதிரவன் உச்சியி னணுகுங் காலையின்
    முதுசிவ கங்கைநீர் முறையின் மூழ்குபு
    மதியுறு நியதிகள் முடித்து மாநிழல்
    அதிபனை முறையுளி அனைந்து போற்றியே - 25



    2579 - மீண்டுதன் மனைவயின் மேவித் தற்பொருட்
    டீண்டிய அருட்குறி யிறைவன் அர்ச்சனை
    பூண்டபே ரன்பினிற் புரிந்து பூசனைக்
    காண்டுறுப் பெனப்படும் அழலு மோம்பியே - 26



    2580 - அறமுதல் இழிஞரீ றான வற்றினுக்
    குறுபலி யுதவியூங் கெச்சம் ஐவகை
    முறையுளி யாற்றியவ் வேலை முன்னிய
    பெறலரு விருந்தினர்ப் பேணி யூட்டியே - 27



    2581 - நீத்தவர்க் கையமும் நேர்ந்து நோயினர்
    வாய்த்தவெஞ் சூல்முதிர் மகளிர் பிள்ளைகள்
    மூத்துறு கிழவரை முந்த ஊட்டிப்பின்
    ஏத்துறு கிளிஞரோ டுண்டல் ஏயுமால் - 28



    2582 - எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    கங்கைவார் சடிலக் கடவுளை நினைந்து
          கறிதயிர் நெய்யுட னாவி
    அங்கியை யெழுப்பி யாகுதிச் செய்கை
          யாகமுப் பதிற்றிரு கவளம்
    பங்கமில் விதியா லுண்டுகை பூசிப் பாகடை
          தின்றதன் பின்னர்ப்
    பொங்குபே ரன்பின் ஒக்கலோ டமர்ந்திப்
          புராணமே கேட்டிடல் வேண்டும் - 29



    2583 - நான்மறைப் பொருளாய்க் கதைக்கெலா
          மிடனாய் நாற்பயன் உதவுமே கம்பன்
    மேன்மையுங் காம நோக்குடை யிறைவி
          மேன்மையும் விளக்குவ திதுவே
    நூன்முறை வருண நிலைகளின் ஒழுக்கம்
          நுண்ணிதின் தெரிப்பது மிதுவாம்
    பான்மையாற் காஞ்சிப் புராணமே
          நாளும் பயில்வுறக் கேட்பது மரபால் - 30



    2584 - அலர்கதிர் என்றூழ் மறைந்திடுங் காறும்
          ஆன்றவர் படித்திடக் கேட்டுக்
    கலவுசீர் அந்தி செய்கடன் முற்றிக்
          கோயிலைக் குறுகி யேகம்பத்
    தலைவனைத் தொழுது மனைவயி னணுகிச்
          சமிதையின் அங்கிவேட் டமர்ந்து
    பலருடன் அருந்தி மனைவியோ டிரவிற்
          பள்ளியின் மேவுதல் விதியே - 31



    2585 - தருக்குறு வனப்பிற் பிறர்க்குரி யவரைத்
          தவ்வையில் தங்கையிற் காண்க
    உருத்திர கணிகை மகளிரைத் தாயின்
          உன்னுக வயிணவ மடவார்
    அருப்பிளங் கொங்கைத் தாதிகள் மாட்டும்
          அன்னதே யாகலிற் புணர்ச்சி
    விருப்பினை அவர்பால் மறப்பினும் எண்ணல்
          ஓம்புக நன்னெறி விழைவார் - 32



    2586 - இருட்சுரி கருமென் மலர்க்குழல் மனையா
          ளிளமுலைப் போகமும் மகவின்
    பொருட்டெனக் கொண்டே விலக்குநாள்
          ஒழித்துப் புணர்ந்தபின் நீங்கிவெம் பாந்தள்
    அரைக்கசைத் தருளும் அடிகளீ ரடியும்
          அகந்தழீஇத் துயிலுக மற்றீங்
    குரைத்தவா றென்றும் ஒழுகுநர்
          எங்கோன் திருவருட் குரியவ ராவார் - 33



    2587 - கச்சிமா நகரிற் கம்பநா யகன்முன்
          கரிசறுத் தான்றவர் முகப்ப
    அச்சுவம் ஆடை ஊண்முதல் தானம்
          ஆதரித் தியைந்தவை யளித்தல்
    பொச்சமி லவ்வக் கொடைப்பெரும்
          பயனொன் றனந்தமாய்ப் பொலியுமவ் வரைப்பின்
    நச்சிமெய் யுணர்வு கொளுத்துவோன்
          வீடு நணுகுமேம் பட்டதித் தானம் - 34



    2588 - ஓதல்வேள் வீகை ஓதுவித் திடல்வேட்
          பித்தலேற் றலுமுறும் மறையோர்க்
    காதியின் மூன்றோ டளித்திடல் ஊர்தி
          படைத்தொழில் அரசர்க்குரிய
    ஆதியின் மூன்று வாணிகம் பசுஏர்
          வணிகருக் காகுமங் கவற்றுள்
    ஆதியின் மூன்றும் அல்லவை முறையே
          அவ்வவர் விருத்திகட் காமால்.
    வேள்வி + ஈகை=வீள்வீகை. விருத்தி -பிழைப்பு - 35



    2589 - இருதமோ டமிர்த விருத்தியும் ஆன்றோர்க்
          கிசைவன மிருதமும் ஆகும்
    தருபிர மிருதஞ் சத்தியா நிருதம்
          தழுவலும் ஒன்றுநாய் விருத்தி
    ஒருவலே வேண்டும் உஞ்சநல்
          விருத்தி இருதமாம் ஒன்றிர வாமால்
    வருவதே அமிர்தம் இரந்துறல்
          மிருதம் உழவின்வந் துறல்பிர மிருதம் - 36



    2590 - சத்தியா நிருதம் வாணிக விருத்தி
          தாழ்வுறுஞ் சேவகஞ் செய்யல்
    வைத்தநாய் விருத்தி யாதலி னதனை
          மாற்றியே யிருபிறப்பாளர்
    ஒத்ததோர் தூய விருத்தியால் தம்மை
          யோம்பிமெய்ந் நூல்பல பயின்று
    தத்தமக் குரிய நியதியின் ஒழுகித்
          தங்குதல் மரபெனப் படுமால்

    37, 37 செயுட்களில் விருத்திகல் கூறப்பட்டன. அவை ஆறு வகைப்படும். இருதம்,
    அமிர்தம், மிருதம், பிரமிருதம், சத்தியாநிருதம், நாய்விருத்தி என்பன அவ்வாறு
    விருத்திகள். அவைகளீல் அந்தணர் முதலிய மூவருக்கும் முதலிரண்டும் உத்தமம்.
    மூன்றாவது மத்திமம். நான்கு ஐந்து அதமம். ஆறாவது விலக்கப்பட்டது.
    இருத்மாவது, உஞ்சவிருத்தி. உஞ்சவிருத்தியாவது, அறுக்கப்பட்ட வயல்களில்
    சிந்திக்கிடப்பவற்றைச் சேர்த்துப் பிழைத்தல். அமிர்தமாவது, யாசிக்காமல்
    வருவது. மிருதமாவது, இரத்தலால் வருவது. பிரமிருதமாவது, உழவினால் வர்வது.
    சத்தியா நிருதமாவது, வாணிகத்தால் வருவது. நாய்விருத்தையாவது,
    ஒருவரிடத்தில் சேவகம் செய்வதால் வருவது என்பதாம். - 37



    2591 - கைசெவி சென்னி கழுத்தினெப் போதுங்
          கண்டிகை யணிதல் வெண்ணீறு
    மெய்யெலாம் பூசி யைந்துமூ விடத்தும்
          விலங்குமுப் புண்டரம் பொறித்தல்
    வைதிக நிலையோர் மரபென மறைநூல்
          வகுத்திடும் ஆதலின் இவற்றைக்
    கைவிடா தென்றுங் கடைப்பிடித் திடுக
          இகழ்ந்திடிற் கடையரே யாவார்.
    விலங்கு- துலங்கு - 38/tr>


    2592 - வைதிக சைவ நெறிகளைப் பற்று
          மாண்பிலாச் சூத்திரர் முதலோர்க்
    கைதுமீப் போய புண்டர மாதி
          அணியலாம் ஏனையர்க் காகா
    மெய்திகழ் மறைகள் ஆகமம்
          விதித்த கருமமற் றினையன பிறவும்
    உய்தியை வேட்டோர் ஆசரித்
          தொழுகி விலக்கின ஒழிவது முறையே.
    மாண்பு- புண்ணியம். மாண்பில் ஆ சூத்திரர்.- மாண்பினை உடைய சூத்திரர்.
    அப்புண்ணியத்தில் மனம் பற்றுடைய சூத்திரர்க்கே திருநீறு கண்டிகைகள் ஆம் என்றவாறு - 39



    2593 - தவத்தினாற் செருக்கல் கண்டது விளம்பல்
          பொய்யுரை சாற்றுதல் ஐந்தும்
    அவித்த அந்தணரை இகழுதல் யாதும்
          அளித்தது புகழ்ந்தெடுத் துரைத்தல்
    எவற்றினை யானுங் கொலைசெயல்
          பிறர்பால் இடுக்கணை யுறுத்துதல் குறளை
    செவிப்புகப் புகறல் பூப்புடை மனையைத்
          தீண்டலும் வழுவெனப் படுமால் - 40



    2594 - மனைவியோ டுண்டல் அவளுடன் துயிறல்
          மனைவியா வித்துழிப் பசிப்பில்
    வினையிகந் தியல்பான் இருப்புழி உண்ணும்
          வேலையும் ஆங்கவட் பார்த்தல்
    கனைகதிர்த் தேவைக் கிழக்கெழுங் காலை
          மேற்கடற் பால்விழுங் காலைப்
    பனிவிசும் புச்சி யுற்றிடுங் காலைப்
          பார்த்தலும் பழுதெனப் படுமால். - 41



    2595 - உடையொழிந் திருநீ ராடுதல் ஆடை
          ஒன்றுடுத் துண்டலீ ரியக்கம்
    நடைவழிச் சாம்பர் ஆனிலை தீநீர்
          நள்ளுற விடுதல் ஆங்குமிழ்தல்
    உடையிலா மாதை நோக்குதல் இருகால்
          ஒளிர்ந்த செங்கனலிடைக் காய்ச்சல்
    இடையுறும் அந்தி வேலையின் அருந்துதல்
          இவைகளும் விலக்கெனப் படுமால்.
    ஈரியக்கம்- மலசலம் கழித்தல் - 42



    2596 - இந்திர திருவில் விசும்பிடை நோக்கி
          ஏனையர்க் கறிவுறக் காட்டல்
    நிந்தையின் வாளா பேரிகல் விளைத்தல்
          கையிணை குவித்துநீ ரருந்தல்
    செந்தழற் கடவுள் வான்பசு பார்ப்பார்
          தேவர்கள் ஞாயிறு குரவர்
    இந்துவின் முன்னர் இச்சையா றிருத்தல்
          இன்னவுந் தீங்கெனப் படுமால்.
    இச்சையாயிருத்தல்- அடக்கமின்றி மனம்போனபடி இருத்தல் - 43



    2597 - கேழுகிர் உரோமந் துணித்திடல் உகிராற்
          பல்லினைக் கிளைத்திடல் தனியே
    பாழ்மனைத் துயிறல் கண்படை எழுப்பல்
          முடிவட பாலின்வைத் துறங்கல்
    ஆழ்துரும் பொடித்தல் ஓட்டினை யடித்தல்
          தனிவழிச்செலல் பிறரணிந்த
    காழகஞ் செருப்பு முதலிய வணிதல்
          இனையவுங் கடிந்திடப் படுமால் - 44



    2598 - அறக்கடை மிகுமூர் பெரும்பிணி யுறுமூர்
          அமரிழி குலத்தவர் பதிதர்
    மறக்கொடுந் தொழிலோர் துவன்றுமூர்
          வைகல் வரையிடை நெடும்பொழு துறைதல்
    இறப்பரு மிசும்பி னேறுதல் இழிதல்
          இளவெயிற் காய்தல்நீ ராடா
    துறப்பெருஞ் சிவலிங் கார்ச்சனை புரியா
          துண்டலும் வழுவெனப் படுமே.
    இறப்பரும் - நடத்தற்கரிய . இசும்பு- வழிக்குடையவை - 45



    2599 - பூத்தவள் பதிதன் இழிஞனை அழத்தைப்
          புத்தரைத் திகிரிமேற் பொறித்த
    மூர்த்தியைத் தீண்டல் காண்டலும்
          விலக்கே இலங்குமுப் புண்டர மின்றி
    மீத்திகழ் வடிவம் முதலிய பொறித்த
          வேதியர் முகத்தினை மறந்தும்
    பார்த்துளோர் கம்பத் தலைவனைப் படர்ந்து
          கண்ணுறின் நண்ணுவர் தூய்மை.
    திகிரிமேற் பொறித்த மூர்த்தி- அருகன் - 46



    2600 - மறையுட னேனை நூல்களை யெச்சந்
          தன்னுடன் மற்றைநல் வினையைக்
    கறையறும் பார்ப்பா ரோடுஞ்சூத் திரரைக்
          காஞ்சியினொ டும்பிற நகரைப்
    பிறைமுடிக் கடவு ளோடரி யயனை
          யொப்பெனப் பேசற்க பேசிற்
    குறைஅரு நிரயக் குழியில்நீ டூழி
          குளிப்பதற் கையமொன் றிலையே - 47



    2601 - இன்னன பிறவும் மறைமுதல் நூல்கள்
          விலக்கிடும் இவற்றினை யொழிக
    பன்னரு மறையின் புறத்துநூ லனைத்துங்
          கெடுதியே பயக்குமா தலினால்
    அன்னவை விடுத்து மறைநெறி வழிவா
          தொழுகிநீள் அலர்பொழிற் காஞ்சி
    தன்னிலே கம்ப நாயகன் அடியார்
          தம்மொடுங் குலாவுதல் முறையே - 48



    2602 - இருமுது குரவர் இறந்திடு மதிநாள்
          ஆண்டுதோ றெய்துழி யுகாதி
    வருமனு வாதி உவாமுதல் தினத்தின்
          வயங்குதென் புலத்தவர்க் குறித்துத்
    திருமறை யவர்க்கு முறையினூட் டிடுக
          ஏனைமாத் தலங்களிற் செய்யும்
    பெருநலம் அனைத்துங் காஞ்சியின்
          ஊட்டும் பேற்றினைச் சிறிதுமொவ் வாவால் - 49



    2603 - தென்புலத் தவர்தாம் அயந்தரு மரீசி
          முதலியோர் சிறுவரங் கவருள்
    இன்புறு மரீசி விராட்டுவை முதலோர்
          ஈன்றவர் சுராசுரர் முதலோர்க்
    கன்புடைப் பிதிரராகுவர் கவியோ டங்கிரா
          புலத்தியன் வசிட்டன்
    என்பவர்க் குதித்தோர் மறையவர்
          அரசர் வணிகர் வேளாளர்ருக் கியைவர் - 50



    2604 - முனிவரிற் பிறந்தார் தென்புலத் தவரம்
          முதல்வரிற் சுராசுரர் பிறந்தார்
    புனிதவிண் ணவரிற் சராசரம் அனைத்தும்
          புகரறத் தொன்றின முறையால்
    இனையசீர்ப் பிதிரர் தமைக்குரித் தீசன்
          இணையடிக் கன்புடை மறையோர்
    நனியுளங் களிப்ப உறுதியாற் காஞ்சி
          நகர்வயின் ஊட்டுதல் கடனே - 51



    2605 - அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    இம்முறை யில்லின் வைகி யிடைப்படுங் காற்கூ றாயுள்
    செம்மையிற் கழிப்பிப் பின்னர்ச் செறிமயிர் நரைப்புக் காணும்
    மம்மரின் அறிவு மிக்கார் மனைவியை மகன்பால் வைத்து
    வம்மென உடன்கொண் டேனும் வனத்திடைச் சேறல் வேண்டும் - 52



    2606 - விழைதரு காஞ்சி மூதூர்ப் புறனில வரைப்பின் மேவித்
    தழைபொதி சாலை வைகி வேனிலைந் தழலின் நாப்பண்
    மறையினிற் பணியில் நீருள் வதிந்துமா தவங்க ளாற்றிக்
    குழைவுறு மனத்தான் உஞ்ச விருத்திகொண் டுறைக மாதோ - 53



    2607 - கண்டிகை நீறு தாங்கிக் கம்பனைக் காம நோக்கின்
    ஒண்டொடிப் பிராட்டி தன்னை உன்னியஞ் செழுத்து மெண்ணி
    அண்டர்கோன் பூசை யாற்றி அன்னணம் வதிந்த பின்னர்
    மிண்டரும் வனத்தின் வாழ்க்கை மெய்த்தவ முதிர்ச்சி யாலே - 54



    2608 - அற்றமில் அறிவில் தூய ராகியிவ் வுலக வாழ்வும்
    பொற்றபூங் கமல வாழ்க்கைப் புண்ணியன் முதலோர் வாழ்வும்
    பற்றற வெறுத்து வீட்டின் அவாவுறும் பான்மை பெற்றான்
    முற்றுறத் துறவி னெய்தி மறைமுடி புணர்தல் வேண்டும் - 55



    2609 - ஐந்தவித் துயர்ந்த வாசான் றன்புடை யருள்நூல் கேட்டுச்
    சிந்தனை செய்து மானத் தெளிந்துபின் நிட்டை மேவும்
    இந்தவா றடைவி னெய்து மியல்பினைத் தலைநின் றேறூர்
    அந்தண னிருதா ளென்று மகந்தழீஇ யொழுகல் ஆறே - 56



    2610 - அடற்கொடும் பாச மாற்றிப் பசுக்களை யருள்வீட் டுய்ப்பப்
    படைத்தளித் தழித்து நோக்கும் பரம்பொருள் சிவனே யென்றல்
    உடற்றுநர்க் கரிய வேத வுள்ளுறை யாவ தென்னத்
    தொடக்கமீ றெழுவா யான விலிங்கத்தால் துணிதல் கேள்வி .7
    தொடக்கம் ஈறு எழுவாயான இலிங்கம்- உபக்கிரம உபசங்கார முதலாய
    இலிங்கங்கள் (சனற்குமாரப் படலம் 50,51 பார்க்க) - 57



    2611 - உவமையின் ஏதுத் தன்னாற் கேட்டதை உள்ளங் கொள்ள
    அவமறச் சிந்தை செய்தல் சிந்தனை யதனைப் பல்காற்
    சிவணுறப் பயிற்சி செய்கை தெளிதலாம் விளங்கக் காண்டல்
    தவலறு நிட்டை யென்று சாற்றுவர் புலமை சான்றோர் - 58



    2612 - இத்திறம் பயின்று வைகி யிருவகைப் பற்றும் நீத்த
    உத்தமத் துறவின் மேலோர் ஊர்வயின் பிச்சை யேற்றுச்
    சுத்தநீர் அலம்பி முக்கட் சுடரினுக் கூட்டிப் பின்னர்
    அத்தகு விதியின் ஓர்போ தெண்பிடி யருந்தல் வேண்டும் - 59



    2613 - அல்லவை முழுதும் நீக்கல் அன்றவர் கழித்த தூசு
    கல்லசும் பெற்றிக் கோடல் காழ்மரத் தடியின் மேவல்
    பல்லவும் ஒப்பக் காண்டல் தமியனாய்ப் படர்தல் வேற்றுப்
    புல்லியர் இணக்கந் தீர்தல் பொறிவழி மனஞ்செல் லாமை - 60



    2614 - அடித்துணை நிலத்தில் நோக்கி மிதித்திடல் அறுவை தன்னில்
    வடித்தநீர் பருகல் நெஞ்சில் தூயது மானக் கோடல்
    படிற்றுரை யின்றிக் கூறல் நன்மையே பயப்பப் பேசல்
    எடுத்துரை பிறவும் முத்தன் இலக்கணம் என்ப மன்னோ - 61



    2615 - உறையுளோ டங்கி பேணல் கல்வியின் உடலை ஓம்பல்
    சிறையுடற் பொருட்டுச் சீற்றஞ் செய்திடல் சாலப் பேசல்
    புறனுரை இகழ்ச்சி பிச்சைப் பொருட்டல தூர்க்குட் சேரல்
    மிறையுறுத் திடும்பை செய்வோர் தம்மையும் வெகுள லாகா - 62



    2616 - சினவிடைக் கடவுள் பூசை கண்டிகை திருவெண் ணீறு
    களவினும் இகழா தோம்பல் கதிரொளி உலோகம் அல்லாப்
    புனிதபா சனத்தின் நீரால் தூய்மைகள் பொருந்தக் கோடல்
    வினையிகந் தவர்க்காம் என்ப வேள்வியிற் சமசம் போலும்.
    சமசம்- வேள்வியிற் கொளப்படும் ஒருவகை மரப்பாத்திரம். - 63



    2617 - என்பினை நரம்பிற் பின்னிக் குடர்வழும் பிறைச்சி மெத்திப்
    புன்புழுப் பொதிந்து செந்நீர்ப் புண்ணசும் பொழுகி நாறித்
    துன்பநோய் எவற்றி னுக்கும் உறையுளாய்ப் புறந்தோல் மூடும்
    வன்புலை உடம்பே ஆவி வருத்திடும் பிணிவே றில்லை - 64



    2618 - பெரும்பிணி யிதனைத் தீர்க்கும் மருத்துவன் பிறவி யில்லாப்
    பரம்பொரு ளான முக்கட் பரமனே யென்று தேறி
    முரண்பயில் விடையோன் தென்பால் முகத்தினைச் சரணம் எய்தி
    விரும்பிவீ டுறுதற் பாலார் பிறப்பினை வெருவப் பெற்றார் - 65



    2619 - கலிநிலைத்துறை
    மற்றைத் தெய்வங்கள் எவற்றையும் விடுத்துமா நீழற்
    கற்றைச் செஞ்சடைப் பிரான்சரண் சரணெனுங் கருத்தே
    பற்றிச் சாவினும் வாழ்வினுங் களிப்பிகல் படாமை
    எற்றைப் போதுமொத் தொழுகலே துறந்தவர்க் கியல்பாம் - 66



    2620 - பொறுமை கல்விமெய் தூய்மைஐம் பொறிதெறல் அடக்கம்
    உறுதி நாண்வெகு ளாமைகள் ளாமையொண் பூதி
    மறுவில் சாதனஞ் சிவார்ச்சனை தியானம்வண் பதினான்
    கறமும் நல்லறம் புரிபவர்க் கிலக்கண மாமால் - 67



    2621 - சொன்ன நால்வகை நிலைகளில் துரிசற ஒழுகிக்
    கன்னி மாநிழற் கண்ணுதல் அகத்தொழும் பாற்றி
    மன்னி நீடிய காஞ்சிமா நகர்வயின் வதிவோர்
    துன்னு மும்மலத் துகளறுத் தின்பவீ டுறுவார் - 68


    ஆகத் திருவிருத்தம் 2621
    ----

    65. சிவபுண்ணியப்படலம் (2622-2742)




    2622 - அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    கச்சிநகர் அமர்ந்துறையும் நியதியராய்
          ஏகம்பக் கடவுள்பாதச்
    செச்சைமலர் வழிபடுவோர் மேம்பாடு
          நானேயோ தெரிக்க வல்லேன்
    முச்சகமும் புகழ்ந்தேத்தும் பன்னிரண்டு
          பெயர்படைத்த மூதூர் வைப்பிற்
    பொச்சமறச் செய்தக்க சிவதருமத் திறனும்
          இனிப்புகலக் கேண்மின் - 1



    2623 - எவ்வறமுந் திருக்காஞ்சிக் கடிநகரிற்
          புரிகிற்பின் ஏற்றம் எய்தும்
    அவ்வறத்துட் சிவதன்மம் அதிகமவை
          சிவலிங்கப் பதிட்டை யேனைச்
    செவ்வியுடைத் திருமேனி திருக்கோயிற்
          பணிபூசைச் சிறப்பு மற்றும்
    ஒளவியந்தீர் மெய்யடியார் திருத்தொண்டு
          முதற்பலவாம் அவற்றுள் மாதோ - 2



    2624 - சிவலிங்கப் பதிட்டைப் பயன்
    கயக்கமுறும் அறக்கடையின் சிமிழ்ப்பறுத்துப்
          பிரமாண்டக் கனத்தை நூறி
    மயக்கமிகும் வினைப்பகையும் பெரும்பிறவிப்
          பழம்பகையும் மறுக மாட்டி
    வயக்கமுறு சிவபதத்தின் உய்க்கும்
          இலங்கயில் வாளாய் மாறா வாழ்வு
    பயக்கும்நுதல் விழிக்கடவுள் நயக்கும்அருட்
          சிவலிங்கப் பதிட்டை யம்மா - 3



    2625 - விரைமலரோன் மணிவண்ணன் முகிலூர்தி
          முனிவர்சித்தர் விண்ணோர் யாரும்
    வரைகளினும் வனங்களினும் வளர்ந்தநதிப்
          புடைகளினும் மணிநீர் வேலைக்
    கரைகளினும் எங்கெங்குங் கண்ணுதலோன்
          சிவலிங்கப் பதிட்டை யொன்றே
    உரைவிளங்கச் செய்தமைத்தா ரன்றிவே
          றெவன்செய்தார் உணர்வான் மிக்கீர் - 4



    2626 - மேதகைய தவம்தீர்த்தங் கொடைவேள்வி
          துறவுநிலை விரதம் யாவும்
    ஓதுசிவக் குறிநிறுவும் பயன்கோடி
          படுங்கூற்றின் ஒன்றுக் கொவ்வா
    ஆதலினிச் சிவலிங்கம் வேதிகையி
          னொடுஞ்சிலையா னமைப்போர் யாரும்
    ஏதமறுத் தவ்வுடம்பின் வீடெய்தப்
          பெறுவரிதற் கையு றேன்மின் - 5



    2627 - இம்முறையில் தாபித்த சிவலிங்கம்
          இறைஞ்சுநரும் விமான மேற்கொண்
    டம்மலர்ப்பூங் குழற்பணைத்தோள்
          அரம்பையர்சா மரையிரட்ட அமரர் போற்ற
    எம்மருங்கும் இசைமுழங்கப் பெருந்தேவர்
          அழுக்கறுப்ப யினிதி னேகிச்
    செம்மலருட் சிவலோகத் தானந்தந்
          திளைத்துறைவார் பிறவுங் கேண்மோ - 6



    2628 - சோமாஸ்கந்தர்
    வேறு
    அடலிற் கொதிக்கும் படையாழி யண்னல் முதலோர் ஏத்தெடுப்பத்
    தடவுச் சீயப் பிடர்த்தலையிற் கவினும் மணிப்பூந் தவிசும்பர்க்
    கடவுட் பிராட்டி உடங்கிருப்பக் கதிர்வேற் காளை நள்ளிருப்ப
    நடலைப் பிறவி மருந்தாகி வைகும் நாதன் திருவுருவம் - 7



    2629 - ஏகபாதர்
    அடுப்பார்க் கருளும் ஒருதாளும் அம்பொற் கமலவிழி மூன்றும்
    படப்பாம் பணிந்த புயநான்கும் சூலப் படையு மெழில் வயங்க
    இடப்பா லரியை வலத்தயனை யெழுநாற் கோடியுருத் திரரை
    நடுப்பால் தோற்றி யையைந்து வடிவு முடனாம் நலம்பிறக்கி - 8



    2630 - கன்ற விடப்பாற் பகுதியினைப் புந்தித் தலத்திற் புந்தியினை
    அகங்கா ரத்தின் உறுதன்மாத் திரையிற்பொறியின் அவ்வவற்றைத்
    தகுந்தாள் குய்யம் உந்திகளம் தலையிற் பார்நீர் அனல்வளிவான்
    மிகுஞ்சீர் விழியி னிடத்திரவி வெண்கேழ் மதியைப் படைத்தருளி - 9



    2631 - அடியி னடங்குங் கீழுலக மனைத்து மடியி னுறத்தோற்றி
    முடியி னடங்கும் மேலுலக முழுதும் முடிப்பால் அளித்தருளிப்
    படியில் கருணைப் பிழம்பாகிப் பரசும் அடியாரக விளக்காய்க்
    கொடிய மலநோய் அரட்டொதுக்குங் கோணைப் பெருமான் திருவுருவம்.
    அரட்டு- தீமை. கோணை- அழிவின்மை. உலகங்களை இவ்வாறு தனது
    உறுப்புக்களினின்றும் தோற்றுவித்தலை வாதுளாகமம் கூறும். - 10



    2632 - எச்சேச்சுரர்
    ஓவா வின்பப் பெருங்கருணை யொன்றும் வதன மோரிரண்டும்
    பூவார் கமலப் பதமூன்றும் போகு கூர்ங்கோ டொருநான்குங்
    காவா யென்பார் மலமைந்து மறுமா றளிக்குங் கரமெழுந்
    தாவா வருளும் படைத்துடைய வெச்சத் தலைவன் திருவுருவம் - 11



    2633 - இடபாருடர்
    இகலி யெதிர்ந்தோர் குடர்குழம்ப இடியின் முழங்கி யேற்றெதிர்ந்து
    தொகுவெம் படைகள் முழுதுழக்குந் தோலா மதுகைச் சூர்த்தவிழிப்
    புகரில் காட்சி வெள்ளிவரை நடந்தா லனைய போர்விடைமேல்
    திகழ மலைமா துடனுறையுந் தேவ தேவன் திருவுருவம் - 12



    2634 - சந்திரசேகரர்
    உடையா னொருபால் வீற்றிருக்குஞ் செவ்வி நோக்கி யுள்புக்கு
    மிடையா நின்ற பெருந்தேவர் விலகப் புடைக்கும் வேத்திரத்திண்
    படையார் குடங்கைத் திருநந்தி பகவன் றனக்கு வரமுதவிப்
    புடையார் கணங்கள் போற்றிசைப்ப வைகும் புராணன் திருவுருவம் - 13



    2635 - நடராசர்
    சிலம்பி னொலிகேட் டருகணையுஞ் செங்கால் அன்னப் பெடைமானப்
    புலம்பு மணிப்பூண் முலையுமையாள் மகிழ்ந்து நோக்கிப் புடைநிற்ப
    உலம்பி மறைகள் ஓலமிட வும்பர் பழிச்ச முடிக்கங்கை
    அலம்ப வழகார் பெருந்திருக்கூத் தாடும் பெருமான் திருவுருவம் - 14



    2636 - உக்கிரர்
    வடாது மலையிற் புயம்நான்கும் மலர்க்கண் மூன்று முருத்திரமும்
    தடாய படப்பாப் பரைநாணுங் கபாலக் கரமுந் தழலன்றிக்
    கடாது சிவந்த சுரிபங்கி கவின்ற முடியும் வெண்ணிறமும்
    கெடாத வனப்பிற் பெருங்கோலங் கெழீஇய பெருமான் திருவுருவம் - 15



    2637 - புரசைக் களிறட் டுரிபோர்த்த கோலப் பொலிவும் புகைவடிவும்
    அரசச் சீய வுரிகொண்ட வுத்த ரீயத் தனியழகும்
    பிரசக் கமல மெனச்சிவந்த விழிகள் மூன்றும் பிறங்குலகம்
    பரசத் தகுவெண் டலைதண்டம் பரித்த கரமுங் கூரெயிறும் - 16



    2638 - மருவிற் பொலிந்த மலர்க்கிழவன் வகுத்த அண்டம் அனைத்தினையும்
    பொரியிற் கொறித்துக் கொறித்துமிழும் பூட்கைக் குரண்டப் பெயரானைச்
    செருவிற் படுத்த வெள்ளிறகு திங்கட் குழவிக் கதிர்கிளைத்திட்
    டுருவுற் றெழுந்தா லெனமாடே யொளிரச் செருகுந் திருமுடியும் - 17



    2639 - திருமால் பணிலக் கோவைநிரை வயங்கும் புயமுந் தெரித்தருளிப்
    பெருநீ ரளக்கர் வாய்மடுத்து முங்கா ரப்பே ரொலிவிளைத்தும்
    வெருவா வீரம் படநகைத்தும் பூதகணங்கள் மிடைந்தேத்த
    அருளா னந்த நடங்குயிற்றும் அண்டர் பெருமான் திருவுருவம் - 18



    2640 - அர்த்தநாரீசுவரர்
    உமையுந் தானும் வேறன்மை உருவி னிடத்துந் தெளிப்பான்போல்
    இமைய மயிலை யொருபாதி வடிவி னிருவி நாற்கரத்தும்
    அமைய வனசந் திரிசூலம் அபய வரதம் இவைதாங்கி
    நமையும் உய்யக் கொண்டருளும் நாரி பாகன் திருவுருவம் - 19



    2641 - இலகுளீசர்
    அடுத்தங் குடனாம் பரம்பொருளை யன்றே விரவ வொட்டாமல்
    தடுத்து முக்கூற் றுயிருணர்வைத் தகையும் அவிச்சை முழுதிரிய
    மடுத்த கருணைத் திருநோக்கின் மாணாக் கருக்குப் பொருளுரைப்ப
    எடுத்த கரத்தான் வீற்றிருக்கும் இலகுளீசன் திருவுருவம் - 20



    2642 - நீலகண்டர்
    நவில்”ஓம் நீல கண்டாய நம”வென் றியம்பும் எட்டெழுத்தும்
    நுவல்வார் மீள மலக்கூட்டின் நுழையா வாறு பெறவிமையோர்
    கவலா திரங்கி யாலாலங் கதிர்ப்பூங் கரத்தின் ஏந்தியரிச்
    சுவலார் அணையின் வீற்றிருக்குஞ் சோதிச் சுடரோன் திருவுருவம் - 21



    2643 - சலந்தராதி
    இருகூ றாகச் சலந்தரனை யிறுத்து மாட்டி யவ்வடிவம்
    அருகே தோன்றச் சுதரிசனம் அங்கைத் தலத்தின் மிசையேந்தி
    முருகார் கடுக்கைத் தண்ணறும்பூத் தொடையல் வாகை முடிவிளங்கத்
    திருவார் காட்சி யளித்தருளுந் தேவர் கோமான் திருவுருவம் - 22



    2644 - சக்கரதானர்
    வழிதீஞ் சுவைக்கள் வாய்மடுத்து மழலைச் சுரும்பர் இசைமிழற்றுஞ்
    செழிபூங் கமலம் ஒன்றினுக்குத் திருந்து காதல் மெய்யன்பின்
    விழிசூன் றடியின் அருச்சித்த விறல்மா யனுக்குச் சுதரிசனங்
    கழிபே ரருளால் ஈந்தருளுங் கடவுட் பெருமான் திருவுருவம்.
    கள்- தேன். சூன்று- பெயர்த்து - 23



    2645 - அந்தகாரி
    வெருவா நிகும்பன் மிசையொருநாள் ஊன்றி நின்று வெஞ்சூலத்
    தொருகூர்ப் பரம்வைத் தொருகரத்தால் உமையைத் தழுவிக் கைகூப்பி
    அருகே நிற்கும் அந்தகனை நோக்கி அரவச் சிலம்பணிந்து
    திருமால் முதலோர் தொழுதேத்தச் சிறக்கு மிறையோன் திருவுருவம் - 24



    2646 - திரிபுராரி
    பொருப்புச் சிலையில் வாசுகிநாண் பூட்டி அரிகோல் வளியீர்க்கு
    நெருப்புக் கூராம் படைதொடுத்துப் பிரம வலவன் நெடுமறைமா
    விருப்பிற் செலுத்து நிலத்தேர்மேல் நின்று தெவ்வூர் வெந்தவிய
    அருப்புக் குறுவெண் ணகைமுகிழ்த்த அந்த ணாளன் திருவுருவம் - 25



    2647 - கங்காதரர்
    விசும்பி னின்றும் வெகுண்டார்த்து முழங்கிக் கொதித்து வீழ்தந்த
    அசும்பு திரைநீர் வான்யாற்றை யங்கோர் வேணி மயிர்நுதியிற்
    பசும்புல் அறுகிற் பனியுறைபோல் தாங்கி வைகிப் பாவவினை
    இசும்பு கடக்கும் பகீரதன்நின் ரிரப்ப மகிழ்வான் திருவுருவம் - 26



    2648 - ஆபற்சகாயர்
    கணங்கள் கலுழி மதக்கடவுள் கதிர்வேற் குரிசில் எழுமாதர்
    நிணங்கொள் திகிரிப் படையேந்தல் நிலவெண் டோட்டு மலர்ப்புத்தேள்
    அணங்கு நவக்கோள் முனிவரர்சூழ்ந் தணுக்க ராகப் பொலந்தவிசின்
    இணங்கும் ஆபற் சகாயனெனும் இறைமைப்பெருமான் திருவுருவம் - 27



    2649 - சோதிலிங்கேச்சுரர்
    கடைக்கால் வெள்ளப் பெரும்புணரி நாப்பட் கதிர்த்த சுடரிலிங்கத்
    திடைப்பால் மதியம் முடிவயங்கத் தோன்றி விசும்பின் எகினமுங்கீழ்த்
    தொடைப்பூந் துளபச் சூகரமும் துலங்க முடிமேற் கரங்குவித்துப்
    படைப்பான் முகுந்தன் வலமிடமும் பரவத் திகழ்வோன் திருவுருவம் - 28



    2650 - மச்ச சங்காரர்
    வானம் பழிச்ச வலைமாக்கள் வடிவு தாங்கி வலம்புரிக்கை
    மீனம் படுத்து விழிசூன்று விரல்மோ திரத்தின் எவ்வுயிர்க்கும்
    ஞானம் பயப்பக் குருவிந்த நலங்கேழ் மணிபோற் பதித்தணிந்த
    கானம் படித்துச் சுரும்புலருங் கடுக்கைத் தொடையோன் திருவுருவம் - 29



    2651 - கூர்ம சங்காரர்
    மகரந் திளைக்குங் கடலேழும் மலங்கக் கலக்கும் பசுந்துளவ
    முகைவிண் டலர்தார் ஆமைதனைப் பற்றித் தகர்த்த முதுகோடு
    நகுவெண் டலைமா லிகையணிக்கு நடுநா யகமாக் கோத்தணிந்து
    புகரின் றுயர்ந்தோர் தொழப்பொலிந்த புத்தேள் செல்வத் திருவுருவம் - 30



    2652 - வராக சங்காரர்
    கழிக்கும் புனலேழ் கடல்சுவற்றி மலைகள் ஏழுந் துகள்படத்தீ
    விழிக்குங் கடவுட் பன்றியினை விறல்வே டுருக்கொண் டெழுந்தருளி
    அழித்தங் கொருவெண் கோடுபறித் தணிந்து மற்றை யிடக்கோடு
    பழிச்சுந் துதிகேட் டுளமிரங்கி விடுத்த பகவன் திருவுருவம் - 31



    2653 - நரசிங்கசங்காரர்
    நன்னா லிரண்டு திருவடியும் நனிநீள் வாலும் முகமிரண்டும்
    கொன்னார் சிறகும் உருத்திரமும் கொடும்பே ரார்ப்பும் எதிர்தோற்றிச்
    செந்நீர் பருகிச் செருக்குநர மடங்கல் ஆவிசெகுத் துரிகொண்
    டொன்னார் குலங்கள் முழுதழிக்கும் உடையான் சரபத் திருவுருவம் - 32



    2654 - கங்காளர்
    குறளாய் அணைந்து மூவடிமண் கொண்டு நெடுகி மூவுலகுந்
    திறலான் அளந்து மாவலியைச் சிறையில் படுத்து வியந்தானை
    இறவே சவட்டி வெரிநெலும்பை எழிற்கங் காளப் படையென்ன
    அறவோர் வழுத்தக் கைக்கொண்ட அங்க ணாளன் திருவுருவம் - 33



    2655 - காலபைரவர்
    பொலங்கொள் பங்கி முகரோமம் பொலிய உமையோ டம்புயம்போல்
    அலர்ந்த விழிகள் இரண்டுமது முகிழ்த்தா லனைய நுதல்விழியும்
    இலங்க இரவி நடுவிளங்கி இருவர் இகல்போ தயன்சிரங்கொய்
    தலங்கும் உகிரான் மருங்கமர அமர்ந்த பெருமான் திருவுருவம் - 34



    2656 - பிட்சாடனர்
    அடியில் தொடுத்த பாதுகையும் அசைந்த நடையும் இசைமிடறும்
    வடிவிற் சிறப்ப நடந்தருளி மூழை ஏந்தி மருங்கணைந்த
    தொடியிற் பொலிதோள் முனிமகளிர் சுரமங் கையரை மயல்பூட்டிப்
    படியிட் டெழுதாப் பேரழகாற் பலிதேர் பகவன் திருவுருவம் - 35



    2657 - பதிட்டைப்பயன்
    என்று மறையா கமம்வகுக்கும் இன்னோ ரன்ன திருவுருவுள்
    ஒன்று காஞ்சித் திருநகரில் உடைய பெருமான் ஏகம்ப
    மன்றல் கமழும் மலர்வாளி மதில்சூழ் கோயில் அகவரைப்பின்
    நன்று மகிழ்ந்து விதியாற்றாற் பதிட்டை புரிந்த நலமுடையோர் - 36



    2658 - எண்ணில் கோடி இளம்பரிதி குழீஇக்கொண் டெழுந்தா லெனவயங்கி
    விண்ணை விழுங்கும் வளரொலிசூழ் விமானமேற்கொண் டிருமருங்கும்
    வண்ண மணிச்சா மரையிரட்ட வானோர் முடிகள் அடிவருடத்
    தண்ணென் நறும்பூ மழைபொழியத் தனிவெண் கவிகை மிசைநிழற்ற - 37



    2659 - மிதுனம் பயிலுங் கின்னரங்கள் மெய்சோர்ந் தணுகிப் புடைவீழப்
    பொதுளுந் தருக்கள் கனிந்துருகிப் புதுப்பூங் கொம்பர் தலைகுரங்க
    மதுரங் கனிந்த மென்கிளவி மடவார் பாடும் மிடற்றிசையும்
    முதிருஞ் சுவைத்தீங் குழலிசையும் முதல்யா ழிசையுந் தலைமயங்க - 38



    2660 - பண்ணின் மழலைத் தேன்துளிப்பப் பனிப்பூங் கதுப்பில் தேன்துளிப்பக்
    கண்ணும் விரலும் புடைபெயரக் கண்டோர் மனமும் புடைபெயர
    வண்ண மணிமே கலையிரங்க மறுகு மிடைக்கு வேளிரங்க
    விண்ணின் வாழ்க்கை மெல்லியலார் மின்னுக்கொடிபோல் எதிர்நடிப்ப - 39



    2661 - சென்று சேர்ந்த பன்னெடுநாட் சிவலோ கத்திற் பரபோகம்
    நன்று நுகர்ந்து பின்நெடுமால் நளினக் கிழவன் வாசவன்சீர்
    ஒன்றும் ஏனைப் பெருந்தேவர் உலகம் அனைத்தும் அணைந்தணைந்து
    மன்ற நெடுநாள் ஆங்காங்குப் போகம் நுகர்ந்து வைகியபின் - 40



    2662 - முந்நீர் வரைப்பின் அவதரித்து ஞால முழுதும் ஒருகுடைக்கீழ்ப்
    பன்னாள் ஆண்டு மறுவலுஞ்சீர் பரவுங் காஞ்சித் திருநகரின்
    பொன்னார் வேணி யேகம்பப் புத்தேள் அடிக்கீழ் வழிபட்டு
    மின்னோர் பாகன் திருவருளான் மீளா வீட்டின் நிலைபெறுவார் - 41



    2663 - மற்றைய பதிட்டைப்பயன்
    எழுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    ஓங்குயர் விழுச்சீர்க் கம்பனார் கோயி
          லுள்ளுற நந்தியெம் பிரானை
    ஆங்கவர் திருமுன் வெள்ளியங் கயிலை
          யமர்ந்தெனத் தருமவெள் விடையை
    வாங்குவில் வரையார் வாய்தலின் இருபால்
          வாயில்காப் பாலரை யமைப்போர்
    தேங்கிய செல்வச் சிவபுரி யணுகித்
          திருநலந் திளைத்துவீ டடைவார் - 42



    2664 - அங்குச பாசம் வரதமோ டபயம் நாற்கரத்
          தமைவரக் கலைமான்
    பங்கயக் கிழத்தி பாங்கியர் சூழப்
          பத்திர பீடமேல் வைகும்
    எங்கள்நா யகிதன் திருவுருப் பிறவும்
          இயற்றிவண் காஞ்சியின் அமைப்போர்
    தங்கிளை குளிர்ப்ப நெடிதுநாள் வாழ்ந்து
          கடைமுறை தாளிணை சேர்வார் - 43



    2665 - ஐங்கரப் பெருமான் அறுமுகக் குரிசில்
          அறிவிலான் வேள்விபாழ் படுத்த
    வன்கழல் வீரன் கேத்திர பால வயிரவர்
          தம்மை யாங்கமைப்போர்
    செங்கதிர் துர்க்கை மாயனை யயனைத்
          திருத்தக நிறுவினர் தாமுன்
    புங்கவர் வழுத்தும் அவ்வவர் உலகம்
          புகூஉப்பெரும் பயன்நுகர்ந் தமர்வார் - 44



    2666 - அறநெறி ஒழுகிச் சிவாகமம் மறைநூல்
          அஞ்செழுத் துண்மைதேர்ந் துணர்ந்து
    முறையுளி வழாது கண்டிகை பூண்டு
          முழுதுநீ றணிந்துவெள் விடையூர்
    இறையவன் அடிக்கீழ்ப் பொதுவறு சிறப்பின்
          எண்வகை உழுவலன் புடையார்
    மறையவர் வேந்தர் வணிகர்வே ளாளர்
          மற்றையர் யாவரே யாக - 45



    2667 - மன்னிய பிரம சரியமில் வாழ்க்கை
          வனம்புரி நிலையின ராக
    அன்னவர் தமக்கு மனைநிலை யீகை
          யாதிய அளித்துவண் காஞ்சித்
    தொன்னகர் வரைப்பிற் கவலையின்
          றிருத்துந் தூயவர் கறைமிடற் றிறைவன்
    தன்னருள் வடிவம் பதிட்டைசெய்
          தவர்க்குச் சாற்றிய பயன்முழு தடைவார் - 46



    2668 - பற்றெலாம் ஈசன் திருவடித் தலத்தே
          பதித்துடற் சார்பற நீத்த
    அற்றமில் காட்சிப் பெருந்துற வுடையார்
          அடியிணை தொழுதுபோற் றிசைத்துச்
    சுற்றுபூம் பொதும்பர்த் தடம்புனற் காஞ்சிச்
          சூழலுட் பயிக்கம்நன் குதவப்
    பெற்றவர் பெறும்பே றிற்றெனக் கிளத்தல்
          பெரும்பணித் தலைவர்க்கும் அரிதே - 47



    2669 - பொருள்நிலைக் கேற்ப வோவியத்
          தலபுகரறு படாந்தனி லனைய
    திருவடி வங்கள் எழுதிவைப் பவருந்
          தீவினை துணித்துவீ டடைவார்
    அருமறை மிருதி சிவாகம புராணம்
          அனைத்தினும் புகன்றவா புகன்றாம்
    மருள்நிலை கழிந்த மாசறு தவத்தீர்
          மற்றுள தருமமும் புகல்வாம் - 48



    2670 - சிவாலயம் எடுத்தற் பலன்
    கலிநிலைத்துறை
    வளங்கொள் கச்சிமா நகர்மறு கிடைவிளை யாடும்
    இளஞ்சி றார்களும் புழுதியிற் சிவாலயம் இயற்றிக்
    கிளர்ந்து போற்றினுஞ் சிவபுரங் கெழுமுவ ரென்றால்
    விளங்கு காஞ்சியிற் சிவாலயம் எடுப்பதே வேண்டும் - 49



    2671 - ஈட்டு கின்றதம் பொருள்வரு வாயினுக் கிசைய
    ஊட்ட ருஞ்சுடர் மணிகளிற் கனகத்தின் ஒட்பங்
    காட்டு தாதுவில் வெள்ளியிற் சுதையினிற் கனலின்
    வாட்டு செங்கலின் மரத்தினின் மண்ணினா னாதல் - 50



    2672 - கந்த மாதனம் பனிவரை நீலம்வான் கயிலை
    மந்த ரந்திகழ் ஏமகூ டம்வளர் நிடதம்
    முந்து பொன்வரை முதற்குல வரைப்பெய ரொன்றாற்
    சந்த மேனிலைக் கோபுரம் மண்டபந் தயங்க - 51



    2673 - விளங்கு நாகரந் திராவிடம் வேசரம் மற்றுங்
    கிளந்த வற்றுளோர் பெற்றியிற் கெழுவுபே ரன்பால்
    துலங்கு வெண்டிரைக் கருங்கடற் சுடுவிடம் பருகிக்
    களங்க றுத்தவன் ஆலயங் காண்டக எடுப்போர் - 52



    2674 - மேவும் அவ்வமால் வரைநிகர் விமானமேற் கொண்டு
    தேவர் மாலயன் முனிவரர் சித்தரேத் தெடுப்பக்
    காவி நேர்மிடற் றெம்பிரான் கயிலையை நண்ணி
    ஓவ ரும்பெரும் போகமுண் டுறைந்துவீ டடைவார் - 53



    2675 - புதுக்குதற் பயன்
    முரிந்து வீழ்ந்தன வெடித்தன உடைந்தன முதிய
    நெரிந்த வாகிய கோபுரம் நெடுமதில் பிறவுந்
    தெரிந்து முன்னையிற் சீர்பெறப் புதுக்குவோர் பண்டு
    புரிந்து ளோர்பெறும் புண்ணியம் நான்மடங் குறுவார் - 54



    2676 - மெய்ய னாலயப் பணிவுடல் விருத்தியைக் குறித்துச்
    செய்து ளோர்பெரும் பயனுமொண் மகமெலாஞ் செய்தார்
    எய்து மாறரி தென்றிடில் உறுதியோ டியற்றும்
    உய்தியா ளருக் குரைத்திட வேண்டுவ தெவனோ - 55



    2677 - எட்டுச் செங்கலி னாயினும் ஈர்ம்புனல் வேணி
    வட்டச் சென்னியான் ஆலயத் திருப்பணி வகுத்தல்
    ஒட்டிப் பெற்றவிவ் வுடற்பய னாவதென் றுணர்வீர்
    அட்டுத் தீவினை ஐந்தவித் தொழுகுமந் தணர்காள் .
    எட்டுச் செங்கல்லினாலாயினும் என்றதற்குச் சிறுவ்ர்கள் விளையாடுதற்குச்
    செங்கற்கள் சிலவற்றை எடுத்துக் கோயில் போல இணக்கி வைத்தற்
    போலவாயினும் என்பது கருத்துப் போலும். - 56



    2678 - ஏற்றின் மேலவன் ஆலயத் திருப்பணி இயற்றும்
    ஆற்றல் இல்லருங் கோயிலின் அகம்புறம் எங்கும்
    போற்றி நுண்ணுயிர் மெல்லென அலகிடல் புரிதல்
    நூற்று நூறுசாந் திராயண கிரிச்சரம் நோக்கும் - 57



    2679 - அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    குடம்புரை செருத்தல் தீம்பால் கொழித்திடுங் கபிலை ஆப்பி
    இடம்படும் விசும்பின் ஏந்தி வடித்தநீர் வாக்கி என்றும்
    அடம்பணி சடிலத் தெங்கோன் ஆலயம் மெழுகு வோர்க்குப்
    படும்பயன் அதனின் நூறு மடங்கெனப் பகரும் நூல்கள் - 58



    2680 - ஒலிமலர்த் தொடரி பெம்மான் ஒள்நிலாக் குழவி வேய்ந்த
    அலர்முடிச் சடையிற் சாத்தல் நூற்றுநூ றதிகமாகும்
    மலர்தொறும் உவகை பூத்து வானவர் வதிவார் அந்த
    நலமிகு மலர்கொண் டேத்தல் நாதனுக் கினிதென் றோர்வீர் - 59



    2681 - மலர்களில் வாழும் கடவுளர்கள்
    கன்னிகா ரத்தில் வாணி அலரியிற் கமலப் புத்தேள்
    வன்னியில் வன்னி நந்தியா வட்டப் பூவிற்
    புன்னையில் வளிந மேருப் பூவினிற் கணங்கள் ஏடு
    துன்னிய எருக்கி னங்கித் தோன்றல்செண் பகத்துச் செவ்வேள்.
    கன்னிகாரம்-கோங்கு. நமேரு- புன்னையின் ஒருவகை. - 60



    2682 - திருமகள் வில்லந் தன்னிற் சிரந்தகொக் கிறகின் மாயோன்
    வருணன்வா ருணமென் போதில் வகுளத்திற் சுயசை மற்று
    நிருதிமென் சிரீடப் பூவிற் சாதியில் நிகழ்சானன்
    பரிதிசெங் கழுநீர்ப் பூவிற் குமுதத்திற் பனிவெண் டிங்கள்.
    கொக்கிறகு- மந்தாரம். வாருனம் - ஒருவகை நீர்ப்பூ. வகுளம்- மகிழ்.
    சுயசை- நந்திதேவர் பத்தினி. சிரிடம் - வாகை. - 61



    2683 - இந்திரன் மந்தா ரத்தின் இயக்கர்கோன் பொலம்பூ மத்தத்
    தந்தகன பாமார்க் கத்தின் ஆரருள் கூர்ந்து வாழ்வார்
    கந்தமென் கமலப் போதிற் கண்ணுதல் இறையே வைகும்
    பைந்துகள் நீலப் பூவிற் பனிவரைப் பிராட்டி மேவும் - 62



    2684 - மேதகு வாசத் தெல்லாம் மலைமகள் விரும்பி வைகும்
    ஆதலால் இனைய பூக்கள் அமைந்தவை கொண்டு செய்யும்
    பாதபூ சனைக்கே கம்பப் பரம்பொருள் கருணை கூரும்
    போதணி புயத்தின் மேலாம் பூந்தொடை தொடுத்துச் சாத்தல் - 63



    2685 - அவற்றினு மதிக மாகும் அலர்ந்தபுண் டரிக மாலை
    எவற்றினுஞ் சிறந்த மேன்மை எழிற்கருங் குவளைப் போது
    நிவப்புறு நூற்றுப் பத்தால் நெடுந்தொடை மாலை சாத்திற்
    பவத்தொகை இரிய நூறி முத்தியே பயக்கு மம்மா - 64



    2686 - ஓங்குயர் திருவே கம்பம் உடையவன் திருமுன் வாசம்
    வீங்குநெய் விளக்குத் தூபம் விளைத்திடின் முருகு நாறிப்
    பாங்கொளி பரப்பு மேனி படைத்துவெண் கயிலை நண்ணித்
    தேங்கருட் பரமானந்த வேலையுள் திளைத்து வாழ்வார். - 65



    2687 - மட்டவிழ் பொழில்சூழ் கம்ப வரைப்பிடை மதிதேய் பக்கத்
    தட்டமி பதினான் கான தினங்களின் அன்பு கூர்ந்து
    கட்டெழிற் கபிலை ஆன்நெய் கலந்தகுங் கிலியத் தூபம்
    இட்டவர் செய்த குற்றம் ஆயிரம் பொறுப்பன் எங்கோன் - 66



    2688 - வடித்தநீர் வாசம் பெய்து வள்ளலுக் காட்டல் செய்யிற்
    படித்தலைப் பத்து நூறு பரிமேதஞ் செய்த பேறாம்
    கடிச்செழுந் தயிலம் ஆன்நெய் கமழுமைந் தமிர்தம் எம்மான்
    அடித்துணைக் குறுமா னைந்தும் ஒன்றினொன் றதிக மாமால் - 67



    2689 - மண்டுபே ரன்பின் ஆன்பால் மணிமுடிக் காட்டு வோர்பால்
    அண்டர்தம் பெருமான் மேன்மேல் அளவிலா மகிழ்ச்சி கூரும்
    வெண்டயிர் கருப்பஞ் சாறு விளைமதுப் பிறவு மாட்டின்
    எண்டபும் வேள்வி யெல்லாம் இயற்றிய பெரும்பே றெய்தும் - 68



    2690 - மந்திரத் திருவொற் றாடை சாத்திமான் மதங்கர்ப் பூரஞ்
    சந்தனக் கலவை சாந்தாற்றிப் பணிசெய் கிற்போர்
    தந்திரு மரபிற் கோடி தமர்களை நரகின் நீக்கி
    இந்துவாழ் சடிலத் தெந்தை இணையடி நீழல் வாழ்வார் - 69



    2691 - நுழையும்நூற் கலிங்கம் வெண்கேழ் நுரைபுரை நறும்பூம் பட்டு
    விழைதகு தீவில் தந்த விசித்திரப் படங்கள் அன்பான்
    மழைமிடற் றிறைக்குச் சாத்தின் மழுவலான் உலகின் ஓரோர்
    இழையினுக் கியம்புங் கற்பம் ஆயிரம் இனிது வாழ்வார் - 70



    2692 - நால்விர லளவை கொண்ட நல்லிழை தொண்ணூற் றாறிற்
    சால்பற மும்மூன் றாக்கி மூன்றுறச் சமைத்த பூணூல்
    சீலமோ டென்றுஞ் சாத்துந் திருமறை யவரைக் கண்டால்
    மாலுடைப் புலையர் தாமும் மறுமையின் மறையோ ராவார் - 71



    2693 - இம்மியி னளவு செம்பொன் எம்பிரான் முடியிற் சாத்தின்
    அம்மவாங் கவர்பெ றும்பே றனந்தற்கும் அளத்தல் செல்லா
    விம்மிய செல்வர் கோடி வீசலும் வறியோர் தன்னம்
    உண்மையின் அளித்தற் கொவ்வா உறுதியன் புடைமை பெற்றால்.
    தன்னம்- சிறிது - 72



    2694 - வெறிமலர் இண்டை மாலை விரைகமழ் தூப தீபம்
    அறுசுவை அடிசில் ஆன்ற வெள்ளிலை பழுக்காய் மற்றும்
    உறுகுடை கவரி யாதி பூசனைக் குரிய வெல்லாம்
    முறுகுபே ரன்பின் எந்தைக் காக்குவோர் முத்த ராவார் - 73



    2695 - நித்தியத் திருநாள் பக்க விழாநிகழ் திங்கட் சாறும்
    புத்தல ரிளவே னிற்கட் பொருவரும் வந்தங் கோடை
    மெத்திய முதுவே னிற்கண் மிதவைநீ ராட்டு மாரி
    மொய்த்தகார்ப் பருவந் தன்னிற் பவித்திர முதுவி ழாவும் - 74



    2696 - அன்புறு கூதிர்க் காலை ஐப்பசிப் பூரச் சாறு
    முன்பனிப் பருவந் தன்னில் வைகறை முகிழ்த்த பூசை
    பின்பனிப் பருவந் தன்னிற் பிறங்குபொன் னூச லாட்டும்
    என்பன சிறப்பு மான இயற்றுவோர் வீடு சேர்வார் - 75



    2697 - பொங்கரி பரந்த உண்கட் பூவையோ டொருமா நீழல்
    தங்கிய பெருமா னார்க்குச் சார்தரும் ஆண்டு தோறும்
    பங்குனித் திருநாட் செய்கை பழுதறு சிறப்பின் மல்க
    மங்கல விதியி னாற்றால் விடைக்கொடி வயங்க வேற்றி - 76



    2698 - கலிவிருத்தம்
    முழவந் திண்டிமம் பேரி முரசுசீர்
    ஒழுகு காகள மாதி யுலம்புவ
    கழிபெ ருங்கடல் காட்ட வதனிடைக்
    குழுமு பேனமொத் தொண்குடை பம்பிட .
    பேனம்- நுரை - 77



    2699 - அன்ன மாக்கடல் தோன்றிய ஆரமிழ்
    தென்ன மாதர் மிடற்றிசைப் பாடலும்
    நன்னர் மங்கல நாதமும் வேதமும்
    மன்னும் அன்பர்கள் பாட்டும் மலிந்தெழ - 78



    2700 - இமய மாதிய ஈகையங் குன்றெலாந்
    தமதி ருங்குடித் தையல்நல் லாளொடும்
    விமலர் கொள்ளும் விழாவணி காணவந்
    தமைவு கொண்டெனத் தேர்க ளலங்குற - 79



    2701 - பொன்னங் கிண்கிணி பூஞ்சிலம் பின்னொலி
    மின்னு மேகலை ஆர்ப்பொலி மிக்குற
    அன்ன மன்ன அனங்கனை யார்குழாந்
    துன்னி யெங்கணு மாடல் தொடங்கிட - 80



    2702 - சிகர மாளிகைத் தெற்றி தொறும்பயில்
    மகர தோரணப் பன்னிற மாமணி
    துகளில் பேரொளி துன்றிய வீதியும்
    புகரில் சித்திரந் தீட்டிய போலுற - 81



    2703 - பூக மும்பசும் பொற்குலை வாழையும்
    மாக முந்திட நாட்டி வயக்கிய
    போகு பந்தரும் பூரண கும்பமும்
    ஏகும் அவ்விடந் தோறு மிலகிட - 82



    2704 - வளியு லாமதர் மாளிகை சூளிகை
    குளிர்கொள் மண்டபங் கோபுர மீதெலாம்
    நளிம லைத்தலை நன்கொடி பூத்தெனக்
    களிம டக்கொடி யார்கஞ லித்தொழ - 83



    2705 - குங்கு மக்குழம் புங்குளிர் சாந்தமும்
    பொங்கு வாசப் புதுப்பனி நீரொடு
    வெங்கண் மங்கையர் பந்தினில் வீசுவ
    எங்கும் மல்கி யடிகள் இழக்குற - 84



    2706 - முடிகள் தம்மின் அராவி முழுமணி
    படியி லுக்கன பாறினங் கொண்மினென்
    றுடைய மாந்தர்க் கறிவுறுத் தாங்கவர்
    அடிகள் பைதுறுத் தங்கங் கவிர்தர .
    பாறினம் -நிலைகுலந்தேம் - 85



    2707 - இளிந்த புகத் திருங்கனி வெள்ளிலை
    ஒளிர்ந்த பொன்மணி ஒண்பொரி பன்மலர்
    அளிந்த பல்பழ மாதி இறைப்பன
    குளிர்ந்து வீதி குழீஇத்திடர் செய்திட - 86



    2708 - கவள யானைக் கடாம்மழைத் தாரையும்
    இவுளி வாயின் இழிந்த விலாழியும்
    உவரி யாகி யுயர்ந்தவத் திட்டையைத்
    திவள மோதிப் படர்ந்தன செல்லவே - 87



    2709 - அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    கல்வரைப் பிராட்டி செவ்வேள் ஐங்கரன் கணங்கள் சூழப்
    பல்வகை யூர்தி யும்பர்ப் படரொளி யரச வீதி
    எல்லையில் உயிர்கட் கெல்லாம் எண்ணருங் கருணை பூத்துப்
    புல்கொளித் திருவே கம்பன் திருவுலாப் போதச் செய்வோர் - 88



    2710 - மேதகு தவந்தா னங்கள் வேள்விகள் அனைத்துஞ் செய்தோர்க்
    கோதிய பயத்திற் கோடி யுடையராய்க் கோடி கோடி
    ஏதமில் குலத்தி னோடும் எம்பிரா னுலகின் வாழ்ந்து
    சாதலும் பிறப்பும் இல்லாத் தத்துவந் தலைப்பட் டுய்வார் - 89



    2711 - இத்தசகு கடவுட் சாறு நோக்கியங் கிறைஞ்சு வோரும்
    அத்தகு விழவின் ஈற்றில் தீர்த்தநீர் ஆடு வோரும்
    பைத்தபாம் பல்குற் செவ்வாய்ப் பனிமொழி யொருபால் மேய
    வித்தகன் கயிலை நண்ணி விறற்கண நாத ராவார் - 90



    2712 - ஏழுயர்ந் தேழு மண்தோய்ந் திலக்கணம் நிரம்பும் வேழங்
    காழ்மணி யணிகள் பூட்டிக் கவின்பெற விருத்தி யோடுங்
    கோழரைத் தனிமா நீழற் குழகனுக் குதவப் பெற்றோர்
    பாழ்வினைச் சிமிழ்ப்பின் தீர்ந்த திருவருள் பற்று வாரால் - 91



    2713 - நலமிகு பரிமா ஆக்கள் நாடகக் கணிகள் நல்லார்
    நிலம்நகர் நாடு மற்றும் நெடுமறை மாவின் மூலத்
    தலைவனுக் கினிது நல்குந் தவத்தினோர் கயிலை நண்ணி
    அலகில்பல் லூழி வாழ்ந்தங் கரும்பெறல் வீடு சேர்வார் - 92



    2714 - மாயிரு மறைகள் மற்றும் புத்தகத் தெழுதிக் கம்பக்
    கோயிலின் அமைப்போர் வெள்ளிக் குன்றிடை எழுத்தொவ் வொன்றற்
    காயிரங் கற்பம் வாழ்வார் சிவாகமம் அமைக்கும் பேறு
    மேயினோ ரெய்தும் பேற்றை யாவரே விளம்ப வல்லார். - 93



    2715 - வண்டுலர் தனிமா நீழல் வள்ளலுக் கன்பு கூர்ந்து
    பண்டுளோர் ஆக்கும் இன்ன அறங்களைப் பாது காப்போர்
    ஒண்டிறல் அன்னோர் பேற்றிற் பதின்மடங் குறுவர் மையல்
    கொண்டிவை காவா வேந்தர் நிரயமே குளிப்பர் உண்மை - 94



    2716 - அனந்தரால் அவற்றொன் றேனுங் கவருநர் ஐய மின்றி
    இனம்பயில் கடும்பி னோடுங் கெடுவரால் இனைய நீரால்
    தனங்களுங் கிளையுந் துன்றத் தங்குதல் விழையும் வேந்தர்
    கனம்பயில் பொழில்சூழ் காஞ்சி உறுதியின் வழாது காத்தல் .
    அனந்தர்- அறிவு மயக்கம். கடும்பு- சுற்றம் - 95



    2717 - கச்சியின் வாவி கூவல் கடிபொழில் வகுத்துப் பேணிப்
    பொச்சமில் சிவநே சர்க்குப் பொருள்நிலம் வதுவை ஈவோர்
    நிச்சலும் அன்ன தானம் நிகழ்த்துவோர் எய்தும் பேறு
    பச்சிளங் கொடியின் ஓர்பாற் பகவனே அறியும் மன்னோ - 96



    2718 - சொல்லுமித் தரும வாய்மைத் தொகுதியுள் யாவதொன் றானும்
    வல்லுநர் வல்லா ராக மதிபொதி வேணி யார்க்கு
    நல்லர சிருக்கை யாய காஞ்சிமா நகரின் ஓர்நாள்
    அல்லதோர் கணமே யானும் அமர்ந்திடிற் பிறப்பு நீப்பார் - 97



    2719 - கண்டிகை நீறு தாங்கிக் காலையும் மாலைப் போதும்
    அண்டர்கோன் அடிகள் போற்றி அடியவர் பூசை யாற்றித்
    தொண்டினால் அங்கண் வைகுந் தூயவர் தமக்கே கம்பத்
    தொண்டொடி பாக னெங்கோன் கருணைகூர்ந் துதவும் முத்தி - 98



    2720 - பற்பல பேசி யென்னே பருவரு நிரயத் துன்புந்
    துற்றபல் யோனி தோறுஞ் சுழன்றுழல் பிறவி நோயும்
    உற்றிடும் ஆண்டாண் டெய்தும் உறுதுயர் பலவும் நோக்கி
    மற்றிவை யொழிதல் வேட்டோர் காஞ்சியின் வதிதல் வேண்டும் - 99



    2721 - காஞ்சியே கலியில் வசித்தற் கிடமெனல்
    கலிவிருத்தம்
    காமருஞ் சிவிகைகள் காவி யாயினுந்
    தோமுறு பிறர்சுமை சுமந்திட் டாயினுஞ்
    சாமியென் றிழிஞர்தம் பணிசெய் தாயினும்
    மாமதிற் காஞ்சியின் வதிதல் வேண்டும் - 100



    2722 - கழுதைமேய்த் தாயினும் மற்றுங் காழ்படும்
    இழிதொழில் இயற்றியும் இரந்துண் டாயினும்
    ஒழிவறு பத்தியின் உறுதி யாளராய்
    வழுவறு காஞ்சியின் வதிதல் வேண்டுமால் - 101



    2723 - பாதக மிகுதியோர் பதிதர் மூர்க்கர்கள்
    போதமில் கயவர்கள் புலைய ராயினும்
    மாதர்வண் காஞ்சியின் வதிவ ராயிடின்
    கோதறு கலியினின் முத்தி கூடுவார் - 102



    2724 - ஒளவியங் கொலைகள வாதி மிக்குடைக்
    கெளவைகூர் கொடுந்திறற் கலியு கத்திடைத்
    தெய்வதக் காஞ்சியந் தேயத் தன்றிமற்
    றெவ்விடத் தெய்தினும் முத்தி யில்லையே - 103



    2725 - இல்லைவை திகநெறி இல்லை நல்லறம்
    இல்லைநால் வருணமாச் சிரமம் இல்லையாம்
    இல்லைமா ணாக்கர்கள் இல்லை ஆரியர்
    இல்லைநல் லொழுக்கமுங் கலியின் என்பவே - 104



    2726 - வைதிக சைவநூல் மானக் கோளிலை
    பொய்யிலைந் தெழுத்திற்கண் மணியிற் பூதியில்
    ஐமுகப் பிரானிடத் தன்பும் இவ்வுகத்
    தெய்திடும் இருபிறப் பாளர்க் கில்லையே - 105



    2727 - தாபதப் பிருகுமெய்த் ததீசி கெளதமன்
    சாபமன் றியுங்கலி தோடத் தான்மிகத்
    தேய்பொருட் பாஞ்சராத் திரம்ப வுத்தமாம்
    பாபநூல் உறுதியே பனவர்க் குண்டரோ - 106



    2728 - யாதுகொல் கலியதன் இயல்பும் அங்கதற்
    கேதமும் அதன்மிறை காஞ்சிக் கின்மையும்
    ஓதுதி விரித்தெமக் கெனவு ரைத்தலுஞ்
    சூதமா முனிமுனி வரர்க்குச் சொல்லினான் - 107



    2729 - யுகங்கள் வரம் பெறல்
    கலிநிலைத்துறை
    சகமெ லாமலை மாதொடுந் தன்னகத் தொடுக்கிப்
    பகலி ராவுள திலதெனும் பகுப்பிலக் காலைப்
    புகழ்ப டைத்ததா னொருவனே வைகிமுன் போல
    அகில லோகமும் படைத்திடக் கருணைசெய் தருளி - 108



    2730 - அறிவு மிச்சையும் செய்கையு மடைவுறத் தோற்றி
    வெறிம லர்த்தவி சிருக்கைவே தியனைமுன் படைத்து
    மறைகள் ஈந்துபின் மாயனை உம்பரை உலகை
    முறையின் ஈன்றளித் தருளினன் முக்கணனெம் பெருமான் - 109



    2731 - மன்னு நான்மறை வேதியர் மன்னவர் வணிகர்
    பின்னு ளோருடன் வீடறம் பெரும்பொருள் காமம்
    என்னு நான்கினை இசைவுறத் தோற்றியிந் நான்கிற்
    பன்னு சீருகப் பெயரிய நான்கையும் படைத்தான் - 110



    2732 - கனிந்த காதலால் அன்னவை காஞ்சியைக் குறுகி
    அனந்த பற்பநா பேச்சரந் தனக்கயல் வடபால்
    மனந்த ழைத்திடச் சிவக்குறி நிறுவிநாண் மலர்கள்
    புனைந்து போற்றிநின் றருந்தவம் ஆற்றிடும் பொழுது - 111



    2733 - கம்ப நாயகர் விடைமிசைக் காட்சிதந் தருளி
    இம்பர் வேட்டது விளம்புமின் தருதுமென் றருள
    வம்பு லாமலர் தூய்த்தொழு திறைஞ்சிவாழ்த் தெடுத்துத்
    தம்பி ரானெதிர் உகங்கள்மற் றின்னது சாற்றும் - 112



    2734 - நரகும் வானமும் நல்கிடும் பனிவரைத் தென்பாற்
    கரும பூமியை யாம்பகுத் தாள்கருத் துடையேம்
    பெரும நீபகுத் தெங்களுக் கருளெனப் பேசித்
    திருவ டித்துணை பழிச்சலுஞ் சேவுடைக் கொடியோன் - 113



    2735 - அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    கருமநிகழ் பாரதமாம் வருடமிசைக்
          காலப்பே ரிறைமை நும்பால்
    இருவினேம் ஆண்டளவை ஒன்றொழிந்த
          பதினொருநான் கிலக்க மேலால்
    இருபதினா யிரமுறுக விங்கிவற்றை
          நால்வீர்க்கு மேயு மாற்றால்
    வருமுறையிற் கூறுபடுத் துதவுமென்
          றருள்செய்து வகுக்க லுற்றான் - 114



    2736 - அருள்பயக்கும் வீடுதவுங் கான்முளையாங்
          கிருதயுக மூத்தோய் ஆதி
    தெருள்பயக்கும் அறம்பயக்குந் திரேதாநீ
          யிளையோய்காண் செப்புங் காலைப்
    பொருள்பயக்குந் துவாபரநீ இவர்க்கிளையாய்
          பொலிவுபெறு காம மீன்ற
    மருள்பயக்குங் கலியுகநீ மூவருக்கு
          மிளையோயாய் வயங்கு வாயால் - 115



    2737 - வேதியனே கிருதயுகம் வேல்வேந்தன்
          திரேதாமெய் வணிகன்றானே
    ஓதுதுவா பரம்ஏனோன் கலியாகும்
          இம்முறையான் உமக்கு வைத்த
    ஏதமிலிந் நாற்பத்து மூன்றிலக்கத்
          திருபதினாயிரமாம் ஆண்டும்
    பேதமுறு மீரைந்து கூறாகப்
          பகுத்தந்தப் பிரிவின் மன்னோ - 116



    2738 - கிருதமோர் நாற்கூறு முக்கூறு
          திரேதாவுங் கிளந்து கூறும்
    இருகூறு துவாபரமும் ஒருகூறு
          கலியுகமும் எய்து வீரால்
    பெருவாய்மை மறையாக நாற்குலத்து
          மனைவியர்பாற் பெறுஞ்சேய்கட்கு
    வருகூறு மிவ்வாறே நான்குமூன்
          றிரண்டொன்று வழக்க மாமால்.
    114- 117: இந்நூலின்படி பாரதவருடத்தின் காலம் நாற்பத்து மூன்று லடசத்து
    இருபதினாயிரம் வருடம். இதனை பத்துப் பங்காக்கி முறையே நான்கு,
    மூன்று இரண்டு,ஒரு பங்குகளாக இறைவர் நாங்கு யுகங்களுக்கும் அளித்தார்.
    இம்முறையால் நான்கு யுகங்கட்கும் முறையே 17,28,000; 12,96,000; 1,94,000;
    4,32, 000 ஆண்டுகளாகும். - 117



    2730 - இவ்விடையேற் றறக்கடவுள் முறையானே
          எழிற்கிருத முதலீர் நும்மை
    எவ்வமறு நாற்பாதம் முப்பாத மிருபாத
          மொருபா தத்தாற்
    கெளவையற நடத்திடநீர் காசினியை
          நடாத்திடுமின் முதன்மூ விர்க்கும்
    ஒளவியமி லம்புயத்தோ னிரவிமா
          லிவர்முறையே யிறைவ ராவார் - 118



    2740 - தீமையே மிகப்படைத் தகலி யிவராற்
          காப்பரிய திறத்தா லிந்த
    நாமநெடுங் கலிநாளின் மன்பதைகள்
          புரப்பதற்கு நாமே யுள்ளேங்
    காமருசீ ருகங்காள் மற்றின்னுமொரு
          மொழிகேண் மின்காதல் கூர்ந்தி
    யாமினிது மகிழ்ந்துறையுங் காஞ்சியிடை
          நும்மவத்தை யெய்தா தாக - 119



    2741 - வெய்யகொடுங் கலித்தீமை சிறிதுமிவ
          ணுறல்வேண்டா விவ்வா றென்று
    மையகல நம்மாணை வழியொழுகி
          யுய்மினென வரங்க ளீந்து
    கையொளிரு மழுப்படையோ னருள்செய்தா
          னாதலினிக் கலிநாண் முத்தி
    யெய்தியிடும் விழைவுடையோர் திருக்காஞ்சி
          யிடம்பிரியா திருத்தல் வேண்டும் - 120



    2742 - நந்திபிரா னருள்பெற்றுச் சனற்குமர
          னவின்றபடி வியாத மேலோன்
    இந்துவாழ் சடைப்பெருமான் றிருவடிகாண்
          பதற்கேது விதுவே யென்ன
    அந்திலெனக் குரைசெய்த அரும்பொருளிங்
          குமக்குரைத்தே னறிவி னான்ற
    சிந்தையீர் தெளிமினெனச் சூதமுனி
          முனிவரர்க்குத் தெருட்டி னானால் - 121

    ஆகத் திருவிருத்தம் 2742
    ------
    சிவஞான சுவாமிகள் அருளிச்செய்த காஞ்சிப்புராணம் முற்றிற்று.
    திருவேகம்பமுடையார் திருவடி போற்றி
    சிவஞான மாமுனிவர் சேவடி வாழ்க
    ------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்