Kanta purāṇam III


சைவ சமய நூல்கள்

Back

கந்த புராணம் III
கச்சியப்ப சிவாச்சாரியார்



கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்
பாகம் 3 / உற்பத்திக் காண்டம் (1329- 1783)


20. தாரகன் வரைப் படலம் 1329 - 1531

21. தேவகிரிப் படலம் 1532 - 1563

22. அசுரேந்திரன் மகேந்திரஞ் செல் படலம்1564 -1628

23. வழிநடைப் படலம்1629 - 1644

24. குமாரபுரிப் படலம்1645 - 1725

25. சுரம்புகு படலம்1726 - 1765

26. திருச்செந்திப் படலம்1766 - 1783

செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்

20. தாரகன் வரைப் படலம் (1329-1531)




1329 - வெம்மை தீர்ந்திடும் அப்பெரு நெறியிடை விரைந்து
செம்மை சேர்தரு குமரவேள் படையொடு செல்ல
அம்ம சேர்ந்தது தாரகற் குறையுளாய் அடைந்தோர்
தம்மை வாட்டியே அமர்கிர வுஞ்சமாஞ் சைலம். - 1



1330 - விண்டு லாய்நிமிர் கிரவுஞ்ச கிரியினை விண்ணோர்
கண்டு ளம்பதை பதைத்தனர் மகபதி கலக்கங்
கொண்டு நின்றனன் நாரதன் அணுகியே குமரன்
புண்ட ரீகநேர் பதந்தொழு தின்னன புகல்வான். - 2



1331 - தூய நான்மறை அந்தணர் முனிவர்இச் சுரத்திற்
போய வெல்லையின் நெறியதாய் வரவரப் புணர்த்து
மாய்வு செய்துபின் குறுமுனி சூளின்இவ் வடிவாய்
ஏய தொல்பெயர்க் கிரவுஞ்ச மால்வரை இதுகாண். - 3



1332 - நேரில் இக்கிரிக் கொருபுடை மாயநீள் நகரில்
சூரெ னப்படும் அவுணனுக் கிளவலாந் துணைவன்
போரில் அச்சுதன நேமியை அணியதாப் புனைந்தோன்
தார கப்பெயர் வெய்யவன் வைகினன் சயத்தால். - 4



1333 - இன்ன வன்றனை அடுதியேல் எளிதுகாண் இனையோன்
முன்ன வன்றனை வென்றிட லெனமுனி மொழிய
மின்னு தண்சுடர் வேலவன் அவற்றினை வினவி
அன்ன வன்றனை முடிக்குதும் இவணென அறைந்தான். - 5



1334 - வேறு
சிறந்திடு முருகவேள் இனைய செப்பலும்
நிறைந்திடும் அமரரும் இறையும் நெஞ்சினில்
உறைந்திடு கவலொரீஇ உவகை எய்தினார்
இறந்தனன் தாரகன் இன்றொ டேயெனா. - 6



1335 - ஐயர்கள் பெருமகிழ் வடைய ஆறிரு
கையுடை முருகன்அக் காலை தன்புடை
மெய்யருள் எய்திய வீர வாகுவாந்
துய்யனை நோக்கியே இனைய சொல்லுவான். - 7



1336 - உற்றவக் கிரிகிர வுஞ்ச மாகுமால்
மற்றத னொருபுடை மாய நொச்சியுட்
செற்றிய அசுரர்தஞ் சேனை தன்னுடன்
அற்றமில் தாரகன் அமர்தல் மேயினான். - 8



1337 - ஏயநின் துணைவர்கள் இலக்கத் தெண்மர்கள்
ஆயிர வௌ¢ளமாம் அடல்கொள் பூதர்கள்
சாய்வறு தலைவர்கள் தம்மொ டேகியே
நீயவன் பதியினை வளைத்தி நேரிலாய். - 9



1338 - தடுத்தெதிர் மலைந்திடும் அவுணர் தானையைப்
படுத்தனை தாரகப் பதகன் எய்துமேல்
அடுத்தமர் இயற்றுதி அரிய தேலியாம்
முடித்திட வருகுதும் முந்துபோ வென்றான். - 10



1339 - நலமிகு குமரவேள் நவில இன்னணம்
வலமிகு சிறப்புடை வாகு நன்றெனாத்
தலைமிசை கூப்பிய கரத்தன் தாழ்ந்துமுன்
நிலமிசை இறைஞ்சினன் நேர்ந்து நிற்பவே. - 11



1340 - ஏந்தலந் துணைவராம் இலக்கத் தெண்மரை
ஆய்ந்திடு பூதரை யாதி நோக்கியே
வாய்ந்திடு பெருந்திறல் வாகு தன்னுடன்
போந்திடும் அவுணரைப் பொரவென் றேவினான். - 12



1341 - ஏவலும் அனையவர் யாரும் எம்பிரான்
பூவடி வணங்கியே போதற் குன்னலும்
ஆவியுள் ஆவியாம் அமலன் பாங்குறுந்
தேவர்கள் கம்மியற் கிதனைச் செப்புவான். - 13



1342 - மேதகு பெருந்திறல் வீர வாகுவை
தியர் தமக்கெலாம் அளிக்கும் பான்மையால்
ஏதமி லாதபல் லிரதம் நல்கெனா
ஓதினன் உலகெலாம் உதவுந் தொன்மையோன். - 14



1343 - அத்திறங் கேட்டதோர் அமரர் கம்மியன்
ஒத்ததோர் மாத்திரை ஒடுங்கு முன்னரே
சித்திர வயப்பரி சீயங் கூளிகள்
இத்திறம் பூண்டபல் லிரதம் நல்கினான். - 15



1344 - வேறு
அன்ன தேர்த்தொகை அதனை எம்பிரான்
மின்னு காலவேல் வீர வாகுவும்
பின்னர் எண்மரும் பிறருஞ் சாரத
மன்ன ரும்பெற வழங்கி னானரோ. - 16



1345 - பாகர் தூண்டிடப் படருந் தேர்கள்மேல்
வாகை சேர்தரும் வாகு வேமுதல்
ஆகினோர் அடைந் தம்பொன் மால்வரைத்
தோகை மைந்தனைத் தொழுது போற்றினார். - 17



1346 - தொழுது வள்ளலைச் சூழ்ந்து மும்முறை
விழுமி தாகிய விடைபெற் றேகினார்
பழுதில் நீத்தமோர் பத்து நூறெனக்
குழுமிப் பாரிடங் குலவிச் செல்லவே. - 18



1347 - பாய பூதர்தம் படைக்கு வேந்தராய்
ஏயி னார்க்குவீ றிலக்கத் தெண்மராய்
மேயி னார்க்கெலாம் வீர வாகுவோர்
நாய கம்பெறீஇ நடுவட் போயினான். - 19



1348 - அமர்வி ளைக்கமுந் தவனை யேவியே
தமர வேலையில் தானை சூழ்தர
இமைய வர்க்கிறை ஏனை யோர்தொழக்
குமர வேள்கடைக் கூழை யேகினான். - 20



1349 - வேறு
பிற்பட எம்பிரான் பெயர ஏவலால்
முற்படு வீரனை முயங்கிப் பாரிடச்
சொற்படை படர்வன தூமந் தன்னொடு
சிற்பரன் நகையழல் புரத்துச் சென்றபோல். - 21



1350 - அரிநிரை பூண்டதேர் அலகை பூண்டதேர்
பரிநிரை பூண்டதேர் படைக்குள் ஏகுவ
விரிகடல் வரைப்பினில் மேக ராசியுங்
கிரியுறழ் கலங்களுங் கெழுமிச் செல்வபோல். - 22



1351 - இடையகல் இரதமோ டிரதந் தாக்கிய
படையொடு படைவகை செறிந்த பல்வகைக்
கொடியொடு கொடிநிரை துதைந்த கூளியர்
அடுசமர் பயின்றிடும் அமைதி போலவே. - 23



1352 - சங்கொடு பணைதுடி தடாரி காகளம்
பங்கமில் தண்ணுமை யாதிப் பல்லியம்
எங்கணும் இயம்பின எழுந்து பூழிபோய்ச்
செங்கம லத்தவன் பதத்தைச் செம்மிற்றே. - 24



1353 - சாற்றுமிவ் வியல்புறத் தானை வீரருஞ்
சீற்றவெம் பூதருஞ் செல்ல வாகையான்
கோற்றொழில் அகற்றிய கோட்டு மாமுகன்
போற்றிய மாயமா புரியைச் சேர்ந்தனன். - 25



1354 - வேறு
சேர்ந்திடு மெல்லை பூதர் சேனைபோய் நகரம் புக்கு
நேர்ந்திடும் அவுண ரோடு நின்றமர் விளைத்து நின்றார்
ஓர்ந்தனர் அதனைத் தூத ரோடித்தங் கோயில் புக்குச்
சார்ந்திடு திருவில் வைகுந் தாரகற் றொழுது சொல்வார். - 26



1355 - எந்தைமற் றிதுகேள் நும்முன் இமையவர் தொகையை யிட்ட
வெந்துயர்ச் சிறையை நீக்க விரிசடைக் கடவுள் மைந்தன்
கந்தனென் றொருவன் வந்தான் அவுணரைக் கடக்கு மென்னா
அந்தர நெறிசெல் விண்ணோர் அறைந்திடக் கேட்டு மன்றே. - 27



1356 - என்னிவர் மாற்ற மென்னா யாந்தெரி குற்றே மாக
அன்னவர் இயம்பி யாங்கே ஆயிரத் திரட்டி யென்னப்
பன்னுறு பூத வௌ¢ளம் படர்ந்திடக் குமரன் போந்தான்
முன்னுறு தூசி நந்தம் முதுநகர் அலைத்த தென்றார். - 28



1357 - என்றலும் வடவைத் தீயில் இழுதெனும் அளக்கர் வீழத்
துன்றிய எழுச்சி மானத் துண்ணெனச் செற்றந் தூண்டே
மின்றிகழ் அரிமான் ஏற்று வியன்றவி சிருக்கை நீங்கிக்
குன்றுறழ் மகுடம் அண்ட கோளகை தொடவெ ழுந்தான். - 29



1358 - எழுந்ததுதன் மருங்கு நின்ற ஒற்றை நோக்கி இந்தச்
செழுந்திரு நகர்மேல் வந்த சேனையை முளிபுற் கானில்
கொழுந்தழல் புகுந்த தென்னக் கொல்வன்நந் தானை முற்றும்
உழுந்துருள் கின்ற முன்னர் ஒல்லைதந் திடுதி ரென்றான். - 30



1359 - வேறு
அன்னபணி முறைபுரிவான் ஒற்றுவர்கள் போயிடலும் அவுணன் நின்ற,
கொன்னுறுவேற் பரிசனரைக் கொடுவருதிர் இரதமெனக் கூற லோடும்,
முன்னமொரு நொடிவரையில் தந்திடலும் அதனிடையே மொய்ம்பிற் புக்குப்,
பின்னர்வரும் அமைச்சர்கள் தந்தொகைபரவ மதர்ப்பினொடு பெயர்த லுற்றான். - 31



1360 - வீடுவான் போலுமினித் தாரகனென் றவன்சீர்த்தி விரைவில் வந்து,
கூடியே புரள்வதுவும் அரற்றுவதுங் காப்பதுமாங் கொள்கைத் தென்ன,
நீடுசா மரத்தொகுதி பலவிரட்ட வௌ¢ளொலியல் நிமிர்ந்து வீசப்,
பீடுசேர் தவளமதிக் குடைநிழற்ற வலம்புரிகள் பெரிதும் ஆர்ப்ப. - 32



1361 - ஈமத்தே நடம்புரியுங் கண்ணுதலோன் எடாதசிலை யென்ன மாலோன்,
மாமத்தே யெனக்கிடந்த முழுவயிரத் தண்டமொன்று வயிரக் கண்டைத்,
தாமத்தேர் பெறுகின்ற மடஙகல்பல ஈர்த்துவருஞ் சகடத் திண்கால்,
சேமத்தேர் மிசைப்போத ஏனையபல் படைக்கலமுஞ் செறிந்து நண்ண. - 33



1362 - ஒற்றர்கூ வியவேலை ஏற்றெழுந்த அவுணர்கடல் ஒருங்கு செல்லக்,
கொற்றமால் கரிபரிதேர் இனத்தினொடு வந்தீண்டக் குழவித் திங்கட்,
கற்றைவார் சடைக்கடவுள் வாங்கியபொன் மால்வரையைக் காவ லாகச்,
சுற்றுமால் வரையென்னப் படைத்தலைவர் ப•றேரில் தவன்றிச் சூழ. - 34



1363 - மொய்யமர்செய் கோலமொடு முப்புரமேல் நடந்தருளும் முக்கண் மூர்த்தி,
பையரவின் தலைத்துஞ்சுங் கணைதூண்ட மூண்டதழல் பதகரானோர்,
மெய்யுடலம் முழுதுநுங்கத் தலைகொள்ளப் பெருந்தூம மிசைக்கொண் டென்னச்,
செய்யமுடி அவுணர்பெருங் கடலினிடை யெழும்பூழி சேட்சென் றோங்க. - 35



1364 - கார்க்குன்றம் அன்னதிறல் கரிமீதும் பரிமீதுங் கடிதில் தூண்டுந்,
தேர்க்குன்றம் அதன்மீதும் வயவர்கள்தங் கரங்களினுஞ் செறிப தாகை,
ஆர்க்கின்ற ஆயர்ந்தோங்கி அசைகின்ற தெம்மருங்கும் அம்பொன் நாட்டில்,
தூர்க்கின்ற பூழியினைத் துடைக்கின்ற பரிசேபோல் துவன்றித் தோன்ற. - 36



1365 - வாகையுள பல்லியமும் இயம்பத்தன் நகர்நீங்கி மன்னர் மன்னன்,
ஏகியதோர் படிநோக்கி உவரிமிசைக் கங்கைகள்வந் தெய்து மாபோல்,
சாகையுள பன்மரனும் பல்படையுங் குன்றுகளுந் தடக்கையேந்திச்,
சேகுடைய பெருஞ்சீற்றப் பூதர்படை யார்த்தெதிர்ந்து சென்ற தன்றே. - 37



1366 - எல்லோருந் தொழுதகைய குமரனடி இணைவழுத்தி இகல்வெம்பூதர்,
கல்லோடு மரனோடுங் கரையோடுங் கணிச்சியொடுங் கழுமுள் வீச,
வில்லோடுங் கணையோடும் வேலோடும் புரையுமனத்
தவுணர்படை எதிர்சிதறி அமர்செய் திட்டார். - 38



1367 - வேறு
எண்ணுறு படைகள் இவ்வா றெதிர்தழீஇ அடரும் வேலை
விண்ணுறு பூழி யென்னும் விரிதரு புகைமீச் செல்ல
மண்ணுறு குருதி யான வன்னியை மாற்று வார்போல்
கண்ணுறும் இமையோர் கண்கள் படிப்புனல் கான்ற அன்றே. - 39



1368 - இரிந்திட லின்றி நேர்வந் தேற்றமர் புரித லாலே
சொரிந்திடு குருதி பொங்கத் தோளொடு சென்னி துள்ளச்
சரிந்திடுங் குடர்கள் சிந்தத் தானவர் பல்லோர் மாயப்
பொருந்திறல் வயத்தால் மேலாம் பூதருஞ் சிலவர் பட்டார். - 40



1369 - தேருடைத் தெறிந்து பாய்மாத் திறத்தினைச் சிதைத்து நீக்கி
ஆருடைத் திகிரிச் சில்லி அங்கையால் எடுத்துச் சுற்றிப்
போருடைத் திறலோர் தம்பால் பொம்மென நடாத்தும் பொற்பால்
காருடைப் பூதர் சில்லோர் கண்ணனே போன்றார் அன்றே. - 41



1370 - தேர்பரித் தெழுந்து மண்ணில் செல்லுறாப் பவளச் செங்கால்
கார்பரித் தன்ன தோகைக் கவனவாம் புரவி யீட்டம்
போர்பரித் தொழுகு சீற்றப் பூதர்கள் புடைத்துச் சிந்திப்
பார்பரித் திடவே செய்தார் படிமகள் இடும்பை தீர்ப்பார். - 42



1371 - வாலுடைக் களிற்றின் ஈட்டம் வாரியே கரத்தா லெற்றிக்
காலுடைத் திகிரித் திண்டேர் கழல்களால் உருட்டிக் காமர்
பாலுடைப் புரவித் தானை பதங்களால் உழக்கிச் சென்றார்
வேலுடைத் தடக்கை அண்ணல் விடுத்தருள் வீர வீரர். - 43



1372 - வாருறு புரசை பூண்ட வன்களிற் றொருத்தல் யாவுஞ்
சூருறு நிலைய வாகித் துஞ்சிய தொகுதி சூழப்
பேருறு குருதி நீத்தம் பிறங்கழற் கதிர்கா ணாது
காருற வூர்கோள் தோன்றுங் காட்சியை யொத்த தன்றே. - 44



1373 - கண்ணெதிர் நின்று போர்செய் கார்கெழும் அவுணர்ப் பற்றித்
துண்ணெனப் பூதர் வீசத் துளங்கிய கலன்க ளோடும்
விண்ணிடை யிறந்து நொய்தின் வீழ்வது விசும்பில் தப்பி
மண்ணிடை மின்னு வோடும் வருமுகில் போன்ற தன்றே. - 45



1374 - ஆயிர வௌ¢ள மாகுங் கணவரும் ஆங்க ணுள்ள
பாயிருங் குன்ற மெல்லாம் பன்முறை பறித்து வீசி
மாயிருந் தகுவர் தானை வரம்பில படுத்து நின்றார்
ஏயென வுலகைச் சிந்தும் இறுதிநாள் எழிலி போல்வார். - 46



1375 - நிணங்கவர் ஞமலி யோர்சார் ஞெரேலெனக் குரைப்பப் புள்ளின்
கணங்களும் அலகை தானுங் கறங்கிடக் கானத் தோங்கிப்
பிணங்களின் அடுக்கல் ஈண்டிப் பேரமர் விலக்கி யார்க்கும்
அணங்குறு நிலைய வாகி அடுத்தன நடுவண் அம்மா. - 47



1376 - தரைத்தடஞ் சிலைய தாகத் தறுகண்வெம் பூத ரானோர்
வரைத்துணை அன்ன தாளே வலிகெழு குழவி யாகத்
திரைத்திழி குருதி நீராத் தீர்ந்திடு திறலோர் யாக்கை
அரைத்தென நடப்ப ஏற்றார் அவுணரும் அடுபோர் செய்வார். - 48



1377 - தத்துறு புரவித் திண்டேர்த் தானவர் நிகளத் தந்தி
பத்துநூ றொன்றில் வீழப் பழுமரப் பணைகொண் டெற்றி
முத்தலை யெ•கம் வீசி முசலத்திற் புடைத்து மொய்ம்பால்
குத்திநின் றுழக்கிப் பாய்ந்து கொன்றனர் பூத வீரர். - 49



1378 - விழுந்தன படிவம் யாண்டும் விரிந்தன கவந்த மேன்மேல்
எழுந்தன குருதித் தாரை ஈர்த்தன நீத்த மாக
அழுந்திய இறந்தோர் யாக்கை ஆர்த்தன பறவை செய்ய
கொழுந்தசை மிசைந்து நின்று குரவை யாட் டயர்ந்த கூளி. - 50



1379 - கண்டனன் இனைய தன்மை தாரகன் கடிய சீற்றங்
கொண்டனன் வையம் நீங்கிக் குவலய மிசைக்குப் புற்றுத்
தண்டமொன் றெடுத்துப் பூதப் படையினைத் தரையில் வீட்டி
அண்டமுங் குலுங்க ஆர்த்திட் டடிகளால் உழக்கிச் சென்றான். - 51



1380 - அல்லெனப் பட்டமேனி அவுணர்கட் கரசன் கையிற்
கல்லெனப் பட்ட தண்டாற் புடைத்தலுங் கரங்கள் சென்னி
பல்லெனப் பட்ட சிந்திப் பாய்புனல் ஒழுக்கிற் சாய்ந்த
புல்லெனப் பட்ட தம்மா பூதர்தஞ் சேனை யெல்லாம். - 52



1381 - பிடித்திடு வயிரத் தண்டம் பெருங்கடற் பூத வௌ¢ளம்
முடித்திடல் புகழோ அன்றால் தாரக மொய்ம்பின் மேலோன்
அடித்திடுங் காலை கீண்ட தம்புவி அடிப்பான் ஓங்கி
எடுத்திடுங் காலை கீண்ட தெண்டிசை அண்டச் சூழல். - 53



1382 - தாரிடங் கொண்ட மார்பத் தாரகன் வயிரத் தண்டம்
போரிடங் கொண்டோர் சென்னி புயமுரங் கரங்கள் சிந்திக்
காருடங் கண்ட பாந்தட் கணமெனத் துடிப்ப வீட்டிப்
பாரிடந் தன்னை யெல்லாம் பாரிடம் ஆக்கிற் றம்மா. - 54



1383 - அன்றரி விடுத்த ஆழி ரமா வணிந்த தீயோன்
கொன்றனன் அனிக மென்னுங் கொள்கையும் அவன்மேற் செல்லும்
வன்றிறல் தம்பால் இல்லா வண்ணமும் மதித்து நோக்கி
நின்றிலர் பூதர் வேந்தர் நெஞ்சழிந் துடைந்து போனார். - 55



1384 - திண்கண நிரையின் வேந்தர் சிந்துழிச் சீற்றந் தூண்ட
எண்கண மாகி யுள்ள இலக்கருஞ் சிலைகா லூன்றி
மண்கணை முழவம் விம்ம வயிரெழுந் திசைப்ப வாங்கி
ஒண்கணை மாரி தூவி அவுணனை ஒல்லை சூழ்ந்தார். - 56



1385 - சூழ்ந்தனர் துரந்த வாளி தோன்முகத் தவுணன் யாக்கை
போழ்ந்தில ஊறதேனும் புணர்த்தில புன்மை யாகித்
தாழ்ந்திடு நிரப்பின் மேலோன் ஒருமகன் தலைமை தாங்கி
வாழ்ந்தவர் தமக்குச் சொல்லுஞ் சொல்லென வறிது மீண்ட. - 57



1386 - தரைபடப் புகழ்வைத் துள்ள தாரகன் தடமார் பத்தைப்
புரைபடச் செய்தி டாது பொள்ளெனப் பட்டு மீண்டு
நிரைபடத் திறலோர் உய்த்த நெடுங்கணை யான வெல்லாம்
வரைபடச் சிதறுங் கல்லின் மாரிபோல் ஆன வன்றே. - 58



1387 - விடுகணை மாரி யாவும் மீண்டிட வெகுண்டு விண்ணோர்
படைமுறை வழங்கி நிற்பப் பதகன்மேல் அவைகள் எய்தா
உடையதம் வலியுஞ்சிந்தி ஒல்லென மறிந்து செல்லக்
கடவுளர் அதனை நோக்கிக் கரங்குலைத் திரங்க லுற்றார். - 59



1388 - மற்றது காலை தன்னில் வலியினால் வயிரத் தண்டஞ்
சுற்றினன் தற்சூழ் கின்ற சுடர்மணிக் கடுமான் தேர்கள்
எற்றினன் புழைக்கை நீட்டி இலக்கர்தந் தொகையும் வாரிப்
பொற்றனு வோடும் வீழப் புணரியின் மீது விட்டான். - 60



1389 - துளும்பிய அளக்கர் தன்னில் சூழுற நின்ற தெங்கின்
வளம்படு பழுக்காய் வர்க்கம் மாருதம் எறியச் சிந்திக்
குளம்புகு தன்மை யென்ன வீழ்தரு கொற்ற வீரர்
இளமபிறை புரையும் வில்லோ டெழுந்தொரு புடையிற் போனார். - 61



1390 - கொற்றவில் உழவன் வீர கோளரி யதனை நோக்கிச்
செற்றமோ டேகிச் செவ்வேள் சேவடி மனத்துட் கொண்டு
பற்றிய தனுவை வாங்கிப் பகழிநூ றுய்த்துத் தீயோன்
பொற்றட மவுலி தள்ளிப் புணரியும் நாண ஆர்த்தான். - 62



1391 - ஆர்த்திடு மோதை கேளா அண்டர்கள் அனையன் மீது
தூர்த்தனர் மலரின் மாரி தோன்முகன் அதனைக் காணா
வேர்த்தனன் மான முன்றான் வீரகே சரிமேல் அங்கைத்
தார்த்தடந் தண்டம் உய்த்துத் தனதுமான் தேரிற் சென்றான். - 63



1392 - வேறு
சென்றொர் மாமுடி புனைவுழித் தண்டமத் திறலோன்
மன்றல் மார்பகம் படுதலும் வீழ்ந்தனன் மயங்கி
வென்றி மொய்ம்புடை ஆண்டகை யதுகண்டு வெகுண்டு
குன்றம் அன்னதோள் தாரக னொடுபொரக் குறித்தான். - 64



1393 - வேறு
குறித்தேவிறல் புயன்தாரகக் கொடியோன்எதிர் குறுகி
வெறித்தேன்மலர்த் தொடைதூங்குதன் விறற்கார்முகங் குனியாப்
பொறித்தேயுறு கனல்வாளிகள் பொழிந்தேயவன் புரத்தில்
செறித்தேயுற வளைத்தான்ஒரு சிலைதானவர் தலைவன். - 65



1394 - பொழிந்தான்சர மழைநம்மவன் புரமேலது பொழுதின்
இழிந்தான்சிலை யுயர்ந்தான்கணை ஈரெழுதொட் டிறுப்ப
அழிந்தாயெனை எதிர்ந்தாய்இதற் கையமிலை யென்னா
மொழிந்தான்ஒரு சூலந்தனை மொய்ம்பிற்செல வுய்த்தான். - 66



1395 - பொருமூவிலை வேலங்கவன் பொன்மார்புறப் பொருமிப்
பெருமோகமோ டேநின்றிடப் பின்னங்கது காணா
உருமேறென அதிர்தாரக னுடனேயவன் துணையாய்
வருமூவரும் ஒருநால்வரும் மாறுற்றமர் இழைத்தார். - 67



1396 - அமர்செய்திடும் எழுவீரரும் அவுணன்றனக் குடையக்
குமரன்பதந் தலைக்கொண்டிடுங் கோமானது காணா
எமர்மற்றிவர் எல்லோர்களும் இரிந்தார்பொரு தென்னாச்
சமர்முற்றிட வருதாரகத் தகுவன்முனம் அடைந்தான். - 68



1397 - ஒருகார்முகம் இருகால்வளை வுறவேகுனித் துகுதேன்
அருகாதொழு கியதன்மையின் அவிர்நாணொலி யெடுப்பத்
திருகாநெடு வரையானவுந் தெருமந்தன அவுணர்
இருகாதையும் நனிபொத்தினர் ஏங்குற்றனர் இரிவார். - 69



1398 - நாண்கொண்டிடும் ஒலிகேட்டலும் நடுங்காவெரு வுற்றார்
பூண்கொண்டிடு சிலைவாங்கலும் மகிழ்வுற்றிடு புலவோர்
சேண்கொண்டிடும் முகில்வேண்டினர் அதுவந்திடச் சிறந்தே
மாண்கொண்டதன் உருமுச்செல மயங்கித்தளர் வதுபோல். - 70



1399 - வேறு
மேதா வியர்க பரவுந்திறல் வீரவாகு
மாதாரு வன்ன சிலைதன்னை வளைத்து வாகைத்
தாதார் பிணையல் புனைதாரகன் றன்னை நோக்கித்
தீதாம் அழல்போல் வெகுண்டேயிது செப்பு கின்றான். - 71



1400 - பொன்றா வலிகொண் டமராடிய பூதர் தம்மை
வன்றாழ் சிலைகொண் டிடுவீரரை வன்மை தன்னால்
வென்றா மெனவுன் னினைபோலும் விரைந்து நின்னைக்
கொன்றாவி உண்பன் எனலுங்கொடி யோன்உ ரைப்பான். - 72



1401 - மாயன் றனைவென் றவன்நேமியை மாசில் கண்டத்
தேயும் படியே புனைந்தேன்வலி எண்ணு றாதே
நீயிங் கடுவா மெனக்கூறினை நீடு மாற்றஞ்
சீயந் தனையும் நரிவெல்வது திண்ண மாமோ. - 73



1402 - சாருங் குறள்வெம் படையாவையுஞ் சாய்ந்த வீரர்
ஆருந் தொலைவுற் றனர்நீயும் அயர்ந்து நின்றார்
வீரம் புகல்வாய் விளிகின்ற விளக்கம் நேர்வாய்
பாரென் வலியால் உதாவி படுப்ப னென்றான். - 74



1403 - என்னுந் துணையில் சரமாயிரம் ஏந்தல் உய்ப்பத்
தன்னங் கையிலோர் சிலைவாங்கினன் தார கப்பேர்
மன்னன் கடிது கணையாயிரம் மாறு தூணடிச்
சின்னம் புரிந்து கணைநூறு செலுத்தி னானால். - 75



1404 - எவ்வக் கொடியோன் தொடுவாளியை ஏந்தல் காணா
அவ்வக் கணைகள் விடுத்தேயவை முற்று மாற்றக்
கைவிற் கொருவன் இவனாகுமிக் காளை தன்னைத்
தெய்வப் படையால் முடிப்பேனெனச் சிந்தை செய்தான். - 76



1405 - வேறு
வெங்கனற்படை தாரகன்விட வீரவாகு வெகுண்டுபின்
செங்கனற்படை யேவியன்னது சிந்தவேவரு ணப்படை
அங்கணுய்ததிட அவுணர்கோமகன் அடுபுனற்கிறை படையினைத்
துங்கமுற்றிய வீரனுய்த்தது துண்டமாம்வகை கண்டனன். - 77



1406 - இரவிதன்படை அவுணன்விட்டனன் இவனுமப்படை யேவியே
விரைவிலன்னது தொலைவுகண்டனன் வீரமேதகு தாரகன்
உரமிகுந்தனி ஊதைவெம்படை யுந்தினான் அது கந்தவேள்
அருள்மிகுந்தனி யடியன்மாற்றினன் அனையதொல்படை தனைவிடா. - 78



1407 - அனிலவெம்படை வீறழிந்திட அவுணர்கோமகன் அம்புயன்
அனதுதொல்படை ஏவினானது தணிவில்செற்றமொ டேகலும்
வனைகருங்கழல் வீரவாகுவும் மற்றவன்படை தூண்டியே
நினையுமுனனது தொலைவுசெய்தனன் நிகரில்வானவர் புகழவே. - 79



1408 - ஆயதன்மைகள் கண்டுதாரகன் அற்புதத்தின னாகியே
மேயவானவர் படைகள் யாவையும் வீரன்மற்றிவன் வென்றனன்
மாயநீர்மையின் இங்கிவன்றிறல் வனமைகொள்ளுதும் இனியெனாத்
தீயபுந்தியில் இனையவாறு தெரிந்துசிந்தனை செய்துமேல். - 80



1409 - தொல்லைமாயையின் விஞ்சைதன்னை நவின்றுளங்கொடு துண்ணென
மல்லன்மேவரு தாரகாசுரன் வடிவமெண்ணில தாங்கியே
எல்லைதீர்தரு படைவழங்கினன் எங்குமாகி இருட்குழாம்
ஒல்லைவந்து பரந்தபோல்அவன் ஒருவன்நின்றமர் புரியவே. - 81



1410 - கண்டுமற்றது வானுளோர்கள் கலங்கியேங்கினர் முன்னரே
விண்டுநீளிடை நின்றபூதர் வெருண்டுபின்னரும் ஓடினார்
மண்டுபேரமர் செய்தயர்ந்திடு மானவீரரும் அச்சமேல்
கொண்டுநின்றனர் முறுவல்செய்தனர் குணலையிட்டனர் அவுணரே. - 82



1411 - வேறு
தார கப்பெயர் அவுணர்கோன் மாயையின் சமரும்
ஆரும் அச்சுறு கின்றதும் ஆடல்மொய்ம் புடையோன்
பேர ழற்பொறி கதுவுற நோக்கியே பிறங்கும்
வீர பத்திரன் நெடும்படை எடுத்தனன் விடுவான். - 83



1412 - துங்க வுக்கிரச் சிம்புள்மாப் படையினைத் தூயோன்
செங்கை பற்றலும் அன்னது தாரகன் செயலால்
அங்கண் நின்றிடு மாயைகண் டச்சமுற் றழுங்கிப்
பொங்கு பானுமுன் இருளென முடிந்ததப் பொழுதே. - 84



1413 - தன்பு ணர்ப்புறு மாயைதான் உடைதலுந் தமியாய்
முன்பு நின்றதோர் தாரகன் மொய்ம்புளான் றன்னைப்
பின்பு மாயையிற் படுத்தவோர் சூழ்ச்சியைப் பிடித்து
மின்பொ லிந்ததன் தேரைவிட் டோடினன் விரைவில். - 85



1414 - தார கன்தொலைந் தோடலுந் தனக்கிணை யில்லோன்
போர ழிந்துவென் னிட்டவன் றன்மிசைப் புத்தேள்
வீர வெம்படை விடுப்பது வீரமன் றென்னாச்
சீரி தாகிய தூணியுள் அன்னதைச் செறித்தான். - 86



1415 - அற்ற போர்வலித் தாரகன் பின்வரைந் தணுகிப்
பற்றி நாண்கொடு புயந்தனைப் பிணித்தெனைப் பணித்த
கொற்ற வேலன்முன் உய்க்குவன் யானெனக் குறித்து
மற்ற வன்றனைத் தொடர்ந்தனன் நெடுந்திறல் வாகு. - 87



1416 - வேழ மாமுகற் கிளவலை உன்னியே வீரன்
ஆழி மால்கட லாமென ஆர்த்துவை தணுகச்
சூழு மாயையின் இருக்கையாந் தொல்கிர வுஞ்சப்
பாழி யொன்றுசென் றொளித்தனன் தாரகப் பதகன். - 88



1417 - முன்ன மாங்கவன் போகிய பூழையுள் முடுகிப்
பொன்னின் வாகையந் தோளுடை யாண்டகை புகலும்
அன்ன தோர்வரை யகமெலாம் ஆயிரங் கதிரின்
மன்ன னேகுறா இருள்நிலம் போன்றுவை கியதே. - 89



1418 - நீளு மாலிருள் படர்தலுஞ் சில்லிடை நெறியால்
தாளி னொற்றியே படர்ந்தனன் தாரகற் காணான்
ஆளி மொய்ம்புடை மேலையோன் அடுக்கலின் புணர்ப்பான்
மீளு கின்றதோர் நெறியையுங் கண்டிலன் வெகுண்டான். - 90



1419 - செற்ற மிக்கவன் மாயைஇவ் வரையெனச் சிந்தித்
துற்ற காலையில் அவுணனா கியகிர வுஞ்சப்
பொற்றை அன்னது கண்டுமோ கத்துயில் புரிந்து
மற்ற வன்றன துணர்வினை மையல்செய் ததுவே. - 91



1420 - இயலி சைத்தமிழ் முனிவரன் இசைத்தசூள் இசைவால்
வியலு டைத்திறல் வாகுவை அவ்வரை மிகவும்
மயலு டைப்பெரு மாயம தியற்றலும் மயங்கித்
துயில லுற்றனன் தொல்லையின் உணர்வெலாந் துறந்தே. - 92



1421 - அம்ம லைக்கணே முன்னவன் உறங்கலும் அனைய
செம்ம லுக்கிளை யோர்இரு நால்வருஞ் சிறந்த
தம்மி னத்தரோர் இலக்கருஞ் சாரதர் பலரும்
விம்ம லுற்றனர் சிறையிலாப் பறவையின் மெலிந்தார். - 93



1422 - உடைந்து போயின தாரகன் றன்னைநம் முரவோன்
தொடர்ந்து சென்றனன் மீண்டிலன் அவனொடுந் துன்னி
அடைந்து வெற்பினில் போர்புரி வான்கொலோ அங்கட்
படர்ந்து நாடுதும் யாமுமென் றெண்ணினர் பலரும். - 94



1423 - எண்ணி யேயிசைந் திளையரோ ரெண்மரும் இலக்கம்
நண்ணும் வீரரும் பாரிடந் தன்னுள்நா யகரும்
அண்ணல் வான்படை ஏந்தியே யாயிடை யகன்று
விண்ணு லாவுறு கிரவுஞ்சம் எய்தினர் விரைவில். - 95



1424 - ஆய வெற்பினில் வீரவா குப்பெயர் அடலோன்
போய பூழையுள் மற்றவர் யாவரும் புகலுந்
தீய தொல்வரை முன்னவற் கிழைத்திடு திறம்போல்
மாயம் எண்ணில புரிதலும் மயங்கியே வதிந்தார். - 96



1425 - வெற்றி வீரவா குப்பெயர் அண்ணலும் வீரர்
மற்றி யாவரு மயங்கலுந் தாரகன் வாரா
உற்று நோக்கிநம் மாயையால் இவரெலா மொருங்கே
இற்று ளாரென மகிழ்ந்துமால் வரைமிசை எழுந்தான். - 97



1426 - அண்ட மீமிசை நின்றவா னவர்கள்இவ் வனைத்துங்
கண்டு கட்புனல் பனிவர அரற்றியே கலங்கிக்
கொண்ட துன்பொடு பதைபதைத் தோடினர் கூளித்
தண்டம் யாவையும் வெருவின தலைவர்இன் மையினால். - 98



1427 - மலையின் மீமிசை பெழுதரு தாரகன் மற்றோர்
தலைமை யாகிய விரதமேல் கொண்டுதா னவர்கள்
பலரும் வந்துவந் தார்த்தனர் சூழ்தரப் பைம்பொற்
சிலைய தொன்றினை வாங்கியே செருநிலஞ் சென்றான். - 99



1428 - நீடு தன்சிலை நாணொலி கொண்டுநீள் சரங்கள்
கோடி கோடிமற் றொருதொடை யாகவே கொளுவி
ஆடல் சேர்தரு பூதர்மேற் பொழிதலும் அலமந்
தோட லுற்றனர் திசையினும் விண்ணினும் உலைந்தே. - 100



1429 - ஆன காலையின் நாரதன் இனையகண் டழுங்கி
மேனி துண்ணென வியர்ப்புற வழிக்கொடு விரைந்து
போன விண்ணவர் தம்மொடு சென்றுபுத் தேளிர்
சேனை காவலன் நின்றதோர் கடைக்கூழை சேர்ந்தான். - 101



1430 - அரிது மாதவம் புரிதரு நாரதன் அடலின்
விரவு மாயிரம் பூதவௌ¢ ளத்தொடு மேவுங்
கருணை சேரறு முகத்தனைக் கண்டுகண் களித்துச்
சுரர்க ளோடுபோய் இறைஞ்சியே இனையன சொல்வான். - 102



1431 - ஐய நின்படை வீரர்கள் பெருஞ்சம ராடி
வெய்ய தானவர் தானைகள் வரவர வீட்டிச்
செய்ய மந்திரித் தலைவரை அமைச்சரைச் செற்றுப்
பொய்யின் மொய்ம்புடைத் தாரகன் தன்னொடும் பொருதார். - 103



1432 - தலைக்க ணாகிய வீரனுந் தமிபியர் பிறரும்
இலக்க வீரரும் பாரிடத் தலைவர்கள் யாரும்
புலைக்கொ டுந்தொழில் தாரகன் றன்னொடும் பொரத்தன்
மலைக்கண் உய்த்தனன் அவர்தமைச் சூழ்ச்சியின் வலியால். - 104



1433 - உய்த்த காலையில் அவுணனா கியகிர வுஞ்சம்
மெத்து மாயைகள் அனையவர்க் கிழைத்தலும் வெருவிப்
பித்த ராமென மயங்கினர் போலுமால் பின்னர்
இத்தி றந்தனை உயர்ந்தனன் தாரக னென்போன். - 105



1434 - தெரிந்து தாரகன் மகிழ்வொடு பறந்தலை சென்று
துரந்து நம்பெருந் தானையைக் கணைமழை சொரிய
முரிந்து பேரீயின நிகழ்ச்சியீ துயிர்த்தொகை முற்றும்
இருந்த நாயக அறிதியே யாவையும் என்றான். - 106



1435 - என்ற காலையில் நாரதன் உள்ளமும் இமையோர்
நின்று தாமயர் கின்றதும் அமரர்கோன் நெஞ்சில்
துன்று சோகமும் நான்முக னாதியோர் துயரும்
ஒன்ற நோக்கியே அறுமுகப் பண்ணவன் உரைப்பான். - 107



1436 - வேறு
ஆருமிது கேண்மின் அம ராடுகளன் ஏகித்
தாரகனை வேல்கொடு தடிந்தவுணர் வைகும்
ஓரரண மானகிர வுஞ்சகிரி செற்றே
வீரர்தமை யோரிறையின் மீட்டிடுவன் என்றான். - 108



1437 - எந்தையிவை கூறுதலும் யாருமவை தேர்ந்து
சிந்தையுறு கின்றதுயர் செற்றுமுடி வில்லா
அந்தமில் மகிழ்ச்சியுடன் ஆடியிசை பாடிக்
கந்தனடி வந்தனை புரிந்தனர் களிப்பால். - 109



1438 - கந்தமுரு கேசனது காலைமுது பாகாய்
வந்ததொரு வந்தினை மகிழ்ச்சியொடு நோக்கிச்
சிந்தைதனில் முந்தும்வகை தேரதனை வல்லே
உந்துதி விரைந்தென உரைத்தருள லோடும். - 110



1439 - என்னவினி தென்றுதொழு தேழெழுவ கைத்தாந்
தன்னினம தாகியவர் தாங்கள்புடை போதக்
கொன்னுனைய தாமுளவு கோல்கயிறு பற்றித்
துன்னுபரி மான்நிரைகள் தூண்டிமிக ஆர்த்தான். - 111



1440 - வேறு
ஆன காலைதனில் அண்டமும் வையந்
தானும் அங்குள தடங்கிரி யாவும்
ஏனை மாகடலும் எண்டிசை யுள்ள
மான வேழமும் நடுங்கின மன்னோ. - 112



1441 - வாவு கின்றபல மாநிரை தூண்டத்
தேவர் தங்கள்சிறை தீரிய செல்வோன்
மேவு தொல்லிரதம் விண்ணெறி கொண்டே
ஏவ ரும்புகழ ஏகிய தன்றே. - 113



1442 - ஆதி யங்குமரன் அவ்வழி பொற்றேர்
மீது செல்லுதலும் விண்முகில் பல்வே
றோதும் வண்ணமுடன் உற்றென வானில்
பூத சேனைபுடை போயின அன்றே. - 114



1443 - போர ழிந்துபுற கிட்டெதிர் பூதர்
ஆரும் நேர்ந்துதொழு தாற்றலொ டெய்த
நார ணன்றனது நன்மரு கானோன்
தார கன்திகழ் சமர்க்களம் உற்றான். - 115



1444 - கவன மோடுபடர் காலினு முந்திச்
சிவன்ம கன்றனது சேனைய தானோர்
உவரி யாமென உறுந்திறம் நோக்கி
அவுணர் தானையை அணிந்தெதிர் சென்றார். - 116



1445 - சகந்து திக்கவரு சாரதர் தாமும்
அகந்தை யுற்றஅவு ணத்தொகை யோரும்
இகந்த வன்மையொ டெதிர்ந்திகல் எய்தி
வெகுண்டு பேரமர் விளைத்திட லுற்றார். - 117



1446 - கரங்கொள் நேமிகள் கணிச்சிகள் தீவாய்ச்
சரங்க ளாதியன தானவர் விடடார்
உரங்கொள் மால்வரைகள் ஓங்குமெ ழுக்கள்
மரங்கள் விட்டனர் மறங்கெழு பூதர். - 118



1447 - முரிந்த தேர்நிரை முடிந்தன மாக்கள்
நெரிந்த தானவர் நெடுந்தலை சோரி
சொரிந்த பூதர்மெய் துணிந்தன வானில்
திரிந்த பாறுகள் செறிந்தன வன்றே. - 119



1448 - நிறங்கொள் செங்குருதி நீத்தம தாகிக்
கறங்கி யோடின கவந்தமொர் கோடி
மறங்கொ டாடுவ வயின்தொறு மாகிப்
பிறங்கு கின்றன பிணங்கெழு குன்றம். - 120



1449 - அனைய வாறிவர் அருஞ்சம ராற்றப்
புனையல் வாகையுள பூதர்கள் தம்மால்
வினையம் வல்லவுணர் வெவ்வலி சிந்தி
இனைத லோடுமிரி குற்றனர் அன்றே. - 121



1450 - தன்ப படைத்தொலைவு தாரகன் நோக்கிக்
கொன்ப டைத்தகுனி விற்குனி வித்தே
மின்ப டைத்தபல வெங்கணை தூவி
வன்ப படைக்கணம் வருந்த நடந்தான். - 122



1451 - நடந்தெ திர்ந்தகண நாதரை யெல்லாந்
தொடர்ந்து பல்கணை சொரிந்து துரந்தே
இடந்தி கழ்ந்தஇமை யத்திறை நல்கும்
மடந்தை தந்ததிரு மைந்தன்முன் உற்றான். - 123



1452 - உற்ற காலைதனில் ஒற்றரை நோக்கிச்
சற்று நீதியறு தாரக வெய்யோன்
செற்றம் என்னுமழல் சிந்தையின் மூள
மற்றி வன்கொல்அரன் மாமகன் என்றான். - 124



1453 - என்ன லுங்குமரன் இங்கிவ னேயாம்
மன்ன என்றிடலும் மற்றவன் ஏறுந்
துன்னு தேர்கடிது தூண்டி எவர்க்கும்
முன்ன வன்மதலை முன்னுற வந்தான். - 125



1454 - வேறு
முழுமதி யன்ன ஆறு முகங்களும் முந்நான் காகும்
விழிகளின் அருளும் வேலும் வேறுள படையின் சீரும்
அழகிய கரமீ ராறும் அணிமணித் தண்டை யார்க்குஞ்
செழுமல ரடியுங் கண்டான் அவன்தவஞ் செப்பற் பாற்றோ. - 126



1455 - தற்பம துடைய சிந்தைத் தாரகன் இனைய வாற்றால்
சிற்பர மூர்த்தி கொண்ட திருவுரு வனைத்தும் நோக்கி
அற்புத மெய்தி நம்மேல் அமர்செய வந்தா னென்றால்
கற்பனை கடந்த ஆதிக் கடவுளே இவன்கொ லென்றான். - 127



1456 - இந்தவா றுன்னிப் பின்னர் யார்க்குமே லாகும் ஈசன்
தந்ததோர் வரமும் வீரத் தன்மையும் வன்மைப் பாடும்
முந்துதாம் பெற்ற சீரும் முழுவதும் நினைந்து சீறிக்
கந்தவேள் தன்னைநோக்கி இனையன கழற லுற்றான். - 128



1457 - நாரணன் றனக்கு மற்றை நான்முகன் றனக்கும் வௌ¢ளை
வாரணன் றனக்கு மல்லால் மதிமுடி அமல னுக்குந்
தாரணி தனல்எ மக்குஞ் சமரினை இழைப்ப இங்கோர்
காரண மில்லை மைந்தா வந்ததென் கழறு கென்றான். - 129



1458 - அறவினை புரிந்தே யார்க்கும் அருளொடு தண்டஞ் செய்யும்
இறையவ னாகும் ஈசன் இமையவர் தம்மை நீங்கள்
சிறையிடை வைத்த தன்மை திருவுளங் கொண்டு நுந்தம்
விறலொடு வன்மை சிந்த விடுத்தனன் எம்மை யென்றான். - 130



1459 - வேறு
கூரிய வேற்படைக் குமர நாயகன்
பேரருள் நிலைமையால் இனைய பேசலும்
போரினை இழைத்திடும் பூட்கை மாமுகத்
தாரக னென்பவன் சாற்றல் மேயினான். - 131



1460 - செந்திருத் திகழுமார் புடைய செங்கணான்
சுந்தரக் கலுழன்மேல் தோன்றிப் போர்செய்தே
அந்தரக் கதிர்புரை ஆழி உய்த்ததென்
கந்தரத் தணிந்தது காண்கி லாய்கொலோ. - 132



1461 - இன்றுகக றெம்முடன் இகலிப் போர்செயச்
சென்றுளார் யாவருஞ் சிறிது போழ்தினுட்
பொன்றுவார் இரிந்தனர் போவ ரல்லது
வென்றுளார் இலையது வினவ லாய்கொலோ. - 133



1462 - முட்டிவெஞ் சமரினை முயல முன்னம்நீ
விட்டிடு தலைவரை வென்று வெற்பினில்
பட்டிட இயற்றினன் பலக ணங்ளை
அட்டனன் அவற்றினை அறிந்தி லாய்கொலோ. - 134



1463 - ஆகையால் எம்முடன் அமரி யற்றியே
சோகம தடையலை சூல பாணிபால்
ஏகுதி பாலநீ என்று கூறலும்
வாகையங் குமரவேள் மரபிற் கூறுவான். - 135



1464 - தாரணி மறையவன் ததீசி தன்மிசை
நாரணன் விடுத்ததோர் நலங்கொள் ஆழிதன்
கூரினை இழந்துபோய்க் குலாலன் சக்கர
நீர்மைய தானது வினவ லாய்கொல்நீ. - 136



1465 - சூற்புயல் மேனியான் துங்கச் செங்கையின்
பாற்படு திகிரிபோற் பழியில் துஞ்சுமோ
வேற்புறு படைக்கெலாம் இறைவ னாகுநம்
வேற்படை நின்னுயிர் விரைவின் உண்ணுமால். - 137



1466 - உங்கள்பே ராற்றல்இவ் வுலகை வென்றன
இங்குநாம் வருதலும் இமைப்பின் மாய்ந்தன
அங்கண்மா ஞாலமுண் டமரும் ஆரிருள்
பொங்குபே ரொளிவர விளிந்து போனபோல். - 138



1467 - ஈட்டிய மாயைகள் எவையுந் தன்வழிக்
காட்டிய கிரியையுங் கள்வ நின்னையுந்
தீட்டிய வேல்கொடு செற்றுச் சேனையை
மீட்டிடு கின்றனன் விரைவி னாலென்றான். - 139



1468 - என்றலுஞ் சீறியே இகலித் தாரகன்
குன்றுறழ் தன்சிலை குனியக் கோட்டியே
மின்றிகழ் நாணொலி எடுப்ப விண்மிசைச்
சென்றிடும் அமரருந் தியக்க மெய்தினார். - 140



1469 - எய்திய காலையில் எந்தை கந்தவேள்
கைதனில் இருந்ததோர் கார்மு கந்தனை
மொய்தனில் வாங்கிநாண் முழக்கங் கோடலும்
ஐதென உலகெலாம் அழுங்கிற் றென்பவே. - 141



1470 - நாரியின் பேரொலி நாதன் கோடலும்
ஆரணன் முதலினோர் தாமும் அஞ்சினார்
பேருல கெங்கணும் பேதுற் றேங்கின
தாரக முதல்வனுந் தலைது ளக்கினான். - 142



1471 - துளக்கிய தாரக சூரன் கைத்தலங்
கொளற்குரி வில்லுமிழ் கொள்கைத் தாலென
வளக்கதிர் நுனைகெழு வயிர வான்கணை
அளக்கரும் எண்ணில ஆர்த்துத் தூண்டினான். - 143



1472 - ஆயதோர் காலையில் ஆறு மாமுகன்
மீயுயர் சிலைதனில் விரைவில் ஆயிரஞ்
சாயகந் தூண்டியே தார காசுரன்
ஏயின பகழிக ளியாவுஞ் சிந்தினான். - 144



1473 - சிந்திய காலையில் செயிர்த்துத் தாரகன்
உந்தினன் பின்னரும் ஓராயி ரங்கணை
கந்தனும் அனையது கண்டு வல்லையின்
ஐந்திரு பகழிதொட் டவற்றை நீக்கினான். - 145



1474 - மீட்டுமத் தாரகன் விசிகம் வெஞ்சிலை
பூட்டிய வாங்கலும் புராரி காதலன்
ஈட்டமொ டொருகணை யேவி ஆங்கவன்
தோட்டுணை வில்லினைத் துண்ட மாக்கினான். - 146



1475 - வேறு
அங்கோர் சிலையைக் குனித்தானது காலை தன்னில்
எங்கோ முதல்வன் ஒருபாணியின் ஏந்து வில்லில்
செங்கோல் வகையா யிரம்பூட்டினன் செல்ல உய்த்தான்
வெங்கோல் நடாத்தி வருதாரக வெய்யன் மீதில். - 147



1476 - சேரார் பரவுந் திறல்வேலவன் செய்கை நோக்கித்
தாரார் முடித்தா ரகவீரன் தனது வில்லில்
ஓரா யிரம்வா ளிகள் பூட்டினன் ஒல்லை உய்த்து
நேராய் விரவுங் கணையாவையும் நீறு செய்தான். - 148



1477 - வெய்யான் அநந்தங் கணை தூண்ட விமலன் நல்குந்
துய்யான் அவைகள் அறுத்துக் கணைகோடி தூண்டி
மையார் அவுணர் புகழ்தாரக மான வேழம்
எய்யாகும் வண்ணஞ் செறித்தானவன் யாக்கை யெங்கும். - 149



1478 - ஒருகோடி வாளி உறலோடும் உருத்து நீசன்
இருகோடி வாளி விடஅன்னதை ஏவின் நீக்கி
இருகோ டியதார் அசுரேசன் முகங்கொள் கையும்
பொருகோடும் வீழ விடுத்தான்இரு புங்க வாளி. - 150



1479 - வந்தங் கிரண்டு சரமும்பட மாயை மைந்தன்
தந்தங்கள் கையோ டிறலோடுந் தளர்ச்சி யெய்தி
முந்துங் கணைஆ யிரந்தன்னை முனிந்து தூண்டிக்
கந்தன் தடந்தேர்த் துவசந்துகள் கண்டு நின்றான். - 151



1480 - மல்லற் கொடியிற் றதுகண்டு மறங்கொள் வெய்யோன்
வில்லைக் கணைநான் கிரண்டால் நிலமீது வீட்டித்
தொல்லைக் கனலின் கணையாயிரந் தூண்டி யன்னோன்
செல்லுற்ற திண்டேர் பரிபாகொடு சிந்தி நின்றான். - 152



1481 - வேறங் கொருதேர் மிசையேறியொர் வில்லை வாங்கி
நூறைந் திருதீ விசிகந்தனை நொய்தின் ஏவி
மாறின்றி வைகும் பரமன்வடி வான செவ்வேள்
ஏறுந் தடந்தேர் வலவன்புயத் தெய்த உய்த்தான். - 153



1482 - வென்றோர் புகழுங் குமரன்வியன் தேர்க டாவிச்
சென்றோன் வருத்தந் தெரிந்தாயிரந் தீய வாளி
வன்றோன் முகத்தா ரகன்நெற்றியுள் மன்ன வுய்ப்பப்
பொன்றோய் தனது தடந்தேரில் புலம்பி வீழ்ந்தான். - 154



1483 - வீழுற் றிடலும் விழுசெம்புனல் வௌ¢ள மிக்கே
தாழுற்ற பாரிற் புகுந்தேபுடை சார்த லுற்ற
பாழிக் கடலிற் பரிமாமுகம் பட்ட செந்தீச்
சூழிக் களிற்றின் வதனத்தினுந் தோன்று மென்ன. - 155



1484 - மன்னா கியதா ரகன்அங்கண் மயங்கி வீழ
அன்னான் றனது படைவீரர் அதனை நோக்கிக்
கொன்னார் சினங்கொண் டடுபோரைக் குறித்து நம்பன்
தொன்னான் உதவுந் திறல்மைந்தனைச் சூழ்ந்து கொண்டார். - 156



1485 - சூலந் திகிரிப் படைதோமரந் துய்ய பிண்டி
பாலஞ் சுடர்வேல் எழுநாஞ்சில் பகழி தண்டம்
ஆலங் கணையங் குலிசாயுத மாதி யாக
வேலும் படைகள் பொழிந்தார்த்தனர் எங்கும் ஈண்டி. - 157



1486 - கறுத்தான் அவர்தஞ் செயல்கண்டுதன் கார்மு கத்தை
நிறுத்தா வளையாக் கணைமாமழை நீட வுய்த்து
மறுத்தா னுடைய கொடுந்தானவர் வாகை சிந்தி
அறுத்தான் விடுதொல்படை யாவையும் ஆடல் வேலோன். - 158



1487 - வெய்தாகிய தீங்கணை மாரி விசாகன் மீட்டும்
பெய்தான் அவுணர் முடிதன்னைப் பிறங்கு மார்பைத்
துய்தா னுறும்வா யினையங்கையைத் தோளைத் தாளைக்
கொய்தான் குருதிக் கடலெங்கணுங் கொண்ட தன்றே. - 159



1488 - வில்லோர் பரவுந் திறல்வேலவன் வெய்ய கோலால்
அல்லோ டியதீ மனத்தானவர் ஆயி னோரில்
பல்லோர் இறந்தார் குருதிக் கடல்பாய்ந்து நீந்திச்
சில்லோர் கள்தத்தம் உயிர்கொண்டு சிதைந்து போனார். - 160



1489 - மைக்கார் சிவந்த தெனுந்தாரகன் மையல் நீங்கி
அக்காலை தன்னில் எழுந்தே அயல்போற்றி நின்று
தொக்கார் அமையாரையுங் காண்கிலன் துன்ப மெய்தி
நக்கான் அவர்தஞ் செயல்கண்டு நவிறல் உற்றான். - 161



1490 - வேறு
செய்ய வார்சடை ஈசன் நல்கிய சிறுவன் இங்கொரு வன்பொரக்
கையி ழந்துமு கத்தி னூடு கவின்கொள் கோடுமி ழந்தனன்
மைய லெய்திவி ழுந்த னன்பொரும் வலிய தானையும் மாண்டன
ஐய வீங்கொரு தமியன் நின்றனன் அழகி தாலென தண்மையே. - 162



1491 - தாவில் வெஞ்சிலை வன்மை கொண்டு சரங்கள் எண்ணில தூண்டியே
மேவ லானிவன் உயிர்கு டிப்பதும் வெல்லு கின்றதும் அரியதால்
தேவர் மாப்படை தொடுவ னிங்கினி யென்று சிந்தனை செய்துபின்
ஏவரும் புகழ் தார காசுரன் இனைய செய்கை இயற்றினான். - 163



1492 - வேறு
அடலரி நான்முக னாதி வானவப்
படையினை யாவையும் பவஞ்செய் தாரகன்
விடவிட வந்தவை வெருவி மேலையோன்
புடைதனில் ஒடுங்கியே போற்றி நின்றவே. - 164



1493 - செங்கண்மா லயன்முதற் றேவர் மாப்படை
துங்கமொ டேகியே துளங்கி வேலுடைப்
புங்கவன் பாங்கரிற் போற்றி நிற்றலும்
அங்கது கண்டனன் அவுணர் மன்னவன். - 165



1494 - ஒருவினன் அகநதையை உள்ள மோரிறை
வெருவினன் விம்மிதம் மிகவு மெய்தினான்
எரிகலுழ் விழியினன் இவனை வென்றிடல்
அரியது போலுமென் றகத்தில் உன்னினான். - 166



1495 - பாங்கரின் மாதுடைப் பரமன் தொல்படை
ஈங்கினி விடுதுமென் றெண்ணி யப்படை
வாங்கினன் அருச்சனை மனத்தி னாற்றினன்
ஓங்கிருஞ் சினமுடன் ஒல்லை யேவினான். - 167



1496 - சங்கரன் தொல்படை தறுகண் ஆலமும்
புங்கவர் படைகளும் பூத ராசியும்
அங்கத நிரைகளும் அளப்பில் சூலமும்
வெங்கனல் ஈட்டமும் விதித்துச் சென்றதே. - 168



1497 - கலைகுலாம் பிறைமுடிக் கடவுள் மாப்படை
அலகிலா உயிர்களும் அண்டம் யாவையும்
உலைகுறா தலமர வுரத்துச் சேறலும்
இலைகுலாம் அயிலுடை எந்தை நோக்கினான். - 169



1498 - கந்தவேள் அனையது கண்டு தந்தையைச்
சிந்தையின் உன்னியோர் செங்கை நீட்டியே
அந்தவெம் படையினை அருளிற் பற்றினான்
தந்தவன் வாங்கிய தன்மை யென்னவே. - 170



1499 - நெற்றியில் விழியுடை நிமலன் காதலன்
பற்றிய படையினைப் பாணி சேர்த்தினான்
மற்றது தாரக வலியன் கண்ணுறீஇ
இற்றது நந்திரு இனியென் றேங்கினான். - 171



1500 - தேவர்கள் தேவனார் தெய்வத் தொல்படை
ஏவினன் அதனையும் எதிர்ந்து பற்றினான்
மூவிரு முகமுடை முதல்வன் வன்மையை
நாவினி லொருவரால் நவிறற் பாலதோ. - 172



1501 - ஆயினும் அரன்மகன் அறத்தின் போரலால்
தீயதோர் கைதவச் செருவ துன்னலான்
மாயைகள் ஆற்றியே மறைந்து நின்றுநான்
ஏயென இயற்றுவன் அமரென் றெண்ணினான். - 173



1502 - கையனும் இவ்வகை கருத்தி லுன்னியே
ஒய்யென வேகிர வுஞ்ச வெற்பின்முன்
வையமொ டேகிநீ வல்ல மாயைகள்
செய்குதி செய்குதி யென்று செப்பினான். - 174



1503 - வேறு
செப்பிய இறுவரை கிரவுஞ்சந் திகழ்வுறு மாயையின் நிகழ்வுன்னி
முப்புர வகைபல வெனநிற்ப முரணுறு தாரக முதல்வன்றான்
அப்புர நிருதர்க ளெனநின்றான் அகல்வரை பலபல முகிலாக
ஒப்பறு சூரன திளையோனும் உருமென அவையிடை உலவுற்றான். - 175



1504 - வேலைக ளுருவினை வரைகொள்ள விசயம துடையதொ ரசுரேசன்
காலம திறுதியில் உலகுண்ணுங் கனையொலி அனலிக ளெனநின்றான்
சீலமின் முதுகிரி நெடுநேமித் திருவரை சூழ்தரும் இருளாக
மால்கரி முகமுள அவுணன்றான் வரையறு பாரிட நிரையானான். - 176



1505 - இந்திரன் முதலுள சுரர்வைகும் ஏழுட னொருதிசை வேழம்போல்
அந்தநெ டுங்கிரி வரலோடும் அருகினில் உறுகுல கிரியாகித்
தந்தியின் முகமுள அவுணன்றான் சடசட முதிரொலி யுடன்வந்தான்
முந்திய தந்தம துருமாறி முறைமுறை நின்றதொர் திறனேபோல். - 177



1506 - வாயுவின் உருவென மலைசெல்ல மதகரி முகமுள பதகன்றான்
தேயுவின் உருவென வரலுற்றான் திரியவும் நெடுவரை விரைவோடுங்
காய்கனல் உகுஞெகி ழிகளாகிக் ககனம திடையுற மிடைகாலை
ஆயிர கோடிவெய் யவரேபோல் அலமர லுற்றனன் அறமில்லான். - 178



1507 - அவ்வகை தாரகன் வரையோடும் அளவறு மாயையின் வடிவெய்தி
எவ்விடை யுஞ்செறி தரலோடும் எம்பெரு மானவன் இவைகாணாத்
தெவ்வலி கொண்டுறும் இவனாவி சிந்துவன் என்றுள மிசைகொண்டே
கைவரு வேற்படை தனைநோக்கி இனையன சிலமொழி கழறுற்றான். - 179



1508 - தாரகன் என்பதோர் பேரோனைச் சஞ்சல முறுகிர வுஞ்சத்தை
ஓரிறை செல்லுமுன் உடல்கீறி உள்ளுயி ருண்டுபு றத்தேகிப்
பாரிடர் தம்மை இலக்கத்தொன் பதின்மர்க ளாக உரைகின்ற
வீரரை மீட்டிவண் வருகென்றே வேற்படை தன்னை விடுத்திட்டான். - 180



1509 - சேயவன் விட்டிடு தனிவைவேல் செருமுயல் தாரகன் வரையோடும்
ஆயிடை செய்த புணர்ப்பெல்லாம் அகிலமும் அழிதரு பொழுதின்கண்
மாயையி னாகிய வுலகெங்கும் மலிதரு முயிர்களும் மதிசூடுந்
தூயவன் விழியழல் சுடுமாபோல் துண்ணென அட்டது சுரர்போற்ற. - 181



1510 - வேறு
அரண்டரு கழற்கால் ஐயன் அறுமுகத் தெழுந்த சீற்றந்
திரண்டொரு வடிவின் வேறாய்ச் சென்றதே யெனவு நான்கு
முரண்டரு தடந்தோள் அண்ணல் முத்தலை படைத்த சூலம்
இரண்டொரு படையாய் வந்த தென்னவும் ஏகிற் றவ்வேல். - 182



1511 - முடித்திடல் அரிய மாய மூரிநீர்க் கடலை வற்றக்
குடித்திடு கின்ற செவ்வேற் கூற்றம்வந் திடுத லோடுந்
தடித்திடும் எயிற்றுப் பேழ்வாய்த் தாரகன் இதனைப் பற்றி
ஒடித்திடு கிற்பேன் என்னா ஒல்லென உருத்து வந்தான். - 183



1512 - அச்சமொர் சிறிதுமில்லா அவுணர்கோன் உவணன் மேற்செல்
நச்சர வென்னச் சீறி நணுகலும் அவன்மார் பென்னும்
வச்சிர வரையின் மீது வானுரும் ஏறுற் றென்னச்
செச்சையந் தெரியல் வீரன் செலுத்தும்வேல் பட்ட தன்றே. - 184



1513 - தாரகன் மார்ப மென்னுந் தடம்பெரு வரையைக் கீண்டு
சீரிய கிரவுஞ் சத்திற் சேர்ந்துபட் டுருவிச் சென்று
வீரமும் புகழுங் கொண்டு விளங்கிய தென்ன அங்கட்
சோரியுந் துகளும் ஆடித் துண்ணென மீண்ட தன்றே. - 185



1514 - மீண்டிடு சீற்ற வைவேல் வெற்பினுள் துஞ்சு கின்ற
ஆண்டகை வீரர்தம்மை ஆயிடை யெழுப்பி வான்போய்
மாண்டகு கங்கை தோய்ந்து வாலிய வடிவாய் ஐயன்
தூண்டிய கரத்தில் வந்து தொன்மைபோல் இருந்த தம்மா. - 186



1515 - தண்டம தியற்றுங் கூர்வேல் தாரக வவுணன் மார்பும்
பண்டுள வரையும் பட்டுப் பறிந்தபே ரோசை கேளா
விண்டது ஞால மென்பார் வெடித்தது மேரு வென்பார்
அண்டம துடைந்த தென்பா ராயினர் அகிலத் துள்ளோர். - 187



1516 - வடித்ததை யன்ன கூர்வேல் மார்பையூ டறுத்துச் செல்லத்
தடித்திடு கின்ற யாக்கைத் தாரகன் அநந்த கோடி
இடித்தொகை யென்ன ஆர்த்திட் டிம்மென எழுந்து துள்ளிப்
படித்தலந் தன்னில் வீழ்ந்து பதைபதைத் தாவி விட்டான். - 188



1517 - தடவரை யனைய மொய்ம்பில் தாரகன் வேலாற் பட்டுப்
புடவியில் வீழா நின்றான் பொள்ளென வானில் துள்ளிக்
கடலுடைந் தென்ன ஆர்க்குங் காலையில் கலக்க மெய்தி
உடுகணம் உதிர்ந்த தஞ்சி யோடினன் இரவி யென்போன். - 189



1518 - தளர்ந்திடல் இல்லா வீரத் தாரகன் பட்டு வானில்
கிளர்ந்தனன் வீழு மெல்லைக் கீழுறு பிலமும் பாரு
பிளந்தன வரைகள் யாவும் பிதிர்ந்தன அதிர்ந்த தண்டம்
உளந்தடு மாறி யோலிட் டோடின திசையில் யானை. - 190



1519 - தண்ணளி சிறிது மில்லாத் தாரகன் கிளர்ந்து வான்போய்
மண்ணிடை மறிந்த தன்மை வன்சிறை இழந்த நாளில்
திண்ணிய மேரு இன்னுஞ் செல்லலாங் கொல்லென் றுன்னி
விண்ணிடை யெழுந்து வல்லே வீழ்ந்ததே போலும் அன்றே. - 191



1520 - வெற்றிய தாகுங் கூர்வேல் வெற்பினை அட்ட காலைச்
செற்றிய பூழி யீட்டஞ் சிதறிய பொறிக ளெங்கும்
பற்றிய புகையும் வந்து பரந்தன கரந்த தண்டம்
வற்றிய கடல்கள் வானிற் கங்கையும் வறந்த தன்றே. - 192



1521 - சிறந்திடு மாய வெற்பைத் திருக்கைவேல் பொடித்த காலைப்
பிறந்திடு கின்ற தீயைத் தீயெனப் பேச லாமோ
அறிந்தவர் தெரியில் குன்றம் அவுணனா கையினான் மெய்யில்
உறைந்திடு குருதி துள்ளி உகுத்தவா றாகு மன்றே. - 193



1522 - யானுற்ற குன்றந் தன்னை யெறிந்தனன் என்று செவ்வேள்
தானுற்ற நதியை வந்து தடிந்ததே என்ன வெற்பில்
ஊனுற்ற நெடுவேல் பாய உதித்திடும் பொறியின் ஈட்டம்
வானுற்ற கங்கை புக்கு வறந்திடு வித்த தன்றே. - 194



1523 - திறலுடை நெடுவேல் அட்ட சிலம்பினில் சிதறித் தோன்றும்
பொறிகளும் துகளும் ஆர்ப்பும் பொள்ளெனச் செறிந்த தன்மை
மறிகடல் முழுதும் அங்கண் வடவையும் அடைந்தொன் றாகி
இறுதியில் உலகங் கொள்ள எழுந்தது போலும் மாதோ. - 195



1524 - தந்தியின் வதனங் கொண்ட தாரக வவுணன் மார்வில்
சிந்துறு குருதச் செந்நீர் திரைபொரு தலைத்து வீசி
அந்தமில் நீத்த மாகி அயிற்படை அட்ட குன்றில்
வந்திடு பூழை* புக்கு மறிகடல் மடுத்த தன்றே.
( * பூழை - துவாரம்.) - 196



1525 - விட்டவேல் மீண்டு கந்த வேள்கரத் திருப்பத் தீயோன்
பட்டதும் வெற்பு மாய்ந்த பான்மையும் அவுணர் யாருங்
கெட்டது நோக்கி மாலுங் கேழ்கிளர் கமலத் தேவும்
முட்டிலா மகத்தின் வேந்தும் முனிவருஞ் சுரரும் ஆர்த்தார். - 197



1526 - ஆடினர் குமரற் போற்றி அங்கைக ளுச்சி மீது
சூடினர் தண்பூ மாரி தூர்த்தனர் அவனைச் சூழ்ந்து
பாடினர் தொழுது முன்னம் பன்முறை பணிந்து நின்றார்
நீடிய வுவகை யென்னும் நெடுங்கடல் ஆழும் நீரார். - 198



1527 - ஆங்கது காலை தன்னில் அளப்பிலா மாயை வல்ல
ஓங்கல திறப்ப அங்கண் உறங்கிய வீர ரெல்லாந்
தீங்குறு மையல் நீங்கிக் கதுமெனச் சென்று செவ்வேள்
பூங்கழல் வணங்கி நின்று போற்றியே புடையின் நின்றார். - 199



1528 - வாருறு கழற்கால் வீர வாகுவே முதலா வுள்ள
வீரர்கள் தம்மை யெல்லாம் வேலுடைக் கடவுள் நோக்கித்
தாரகன் வரை**யுட் பட்டுத் தகுமுணர் வின்றி நீவிர்
ஆருநொந் தீர்கள் போலும் மாயையூ டழுந்தி யென்றான்.
( ** தாரகன்வரை - தாரகாசுரனது ஆட்சிக்குட்பட்ட மலை.) - 200



1529 - செய்யவன் இனைய வாறு சீரருள் புரிய வீரர்
ஐயநின் னருளுண் டாக அடியம்ஊ றடைவ துண்டோ
மையலோ டுறங்கு வார்போல் மருவுமின் புற்ற தன்றி
வெய்யதோர் கிரிமா யத்தால் மெலிந்திலம் இறையு மென்றார். - 201



1530 - என்றலும் வீர மொய்ம்பின் ஏந்தலை விளித்துச் செவ்வேள்
வென்றிகொள் சூரன் பின்னோன் விட்டிடத் தான்முற் கொண்ட
வன்றிறற் படையின் வேந்தை*** மற்றவன் கரத்தின் நல்கி
நன்றிது போற்று கென்றே நவின்றுநல் லருள்பு ரிந்தான்.
( *** படையின் வேந்து - பாசுபதாஸ்திரம்.) - 202



1531 - தாரகன் போரில் துஞ்சுஞ் சாரதர் தம்மை யெல்லாம்
ஆருநீர் எழுதிர் என்னா அவரெலாம் எழுவே செய்து
பாரிட வனிகஞ் சூழப் பண்ணவர் பரவல் செய்யச்
சீரிய வயவர் ஈண்டச் செருநிலம் அகன்றான் செவவேள். - 203

ஆகத் திருவிருத்தம் - 1531
-----

21. தேவகிரிப் படலம் (1532-1563 )




1532 - மாகவந் தங்கள் கூளி வாய்ப்பறை மிழற்ற ஆடும்
ஆகவந் தங்கு மெல்லை யகன்றுசெங் கதிர்வேல் அண்ணல்
சோகவந் தங்கொண் டுள்ள சுரருடன் அனிகஞ் சுற்றி
ஏகவந் தங்கண் நின்ற இமகிரி யெல்லை தீர்ந்தான். - 1



1533 - அரியயன் மகத்தின் தேவன் அமரர்கள் இலக்கத் தொன்பான்
பொருதிறல் வயவரேனைப் பூதர்கள் யாரும் போற்றத்
திருநெடு வேலோன் தென்பாற் செவ்விதின் நடந்து மேல்பால்
இரவியில் இரவி செல்ல இமையவர் சயிலஞ் சேர்ந்தான். - 2



1534 - ஒப்பறு சூர்பின் னோனை ஒருவன்வேல் அட்ட தன்மை
இப்புற வுலகின் உள்ளார் யாவரும் உணர்வர் இன்னே
அப்புற வுலகின் உள்ளார் அறிந்திட யானே சென்று
செப்புவ னென்பான் போலச் செங்கதிர் மறைந்து போனான். - 3



1535 - பானுவென் றுரைக்குமேலோன் பகற்பொழு தெலாங்கைக்கொண்டான்
ஏனைய மதியப் புத்தேள் இரவினுக் கரச னானான்
நானிவற் றிடையே சென்று நண்ணுவ னென்று செந்தீ
வானவன் போந்த தென்ன வந்தது மாலைச் செக்கர். - 4



1536 - வம்பவிழ் குமுத மெல்லா மலர்ந்திடு மாலை தன்னில்
வெம்படை பயிலத் தோன்றும் வேளுக்குத் தான்முன் வந்த
அம்புதி முருச மாயிற் றாகையால் தானும் வெற்றிக்
கொம்பென விளங்கிற் றென்ன எழுந்தது குழவித் திங்கள். - 5



1537 - ஏற்றெதிர் மலைந்து நின்ற இகலுடை யவுணர் தம்மேற்
காற்றெனத் தேர்க டாவிக் கடுஞ்சமர் புரிந்த வெய்யோன்
மாற்றருஞ் செம்பொன் மார்பில் வச்சிரப் பதக்கம் இற்று
மேற்றிசை வீழ்ந்த தென்ன இளம்பிறை வழங்கிற் றன்றே. - 6



1538 - கானத்தின் ஏனம் ஒத்த கனையிருட் சூழல் மற்றவ்
வேனத்தின் எயிற்றை யொத்த திளம்பிறை அதனைப் பூண்ட
கோனொத்த தண்டம் அந்தக் கூரெயி றுகுத்த முத்தந்
தானொத்து விளங்கு கின்ற தாரகா கணங்க ளெல்லாம். - 7



1539 - அல்லிது போந்த காலை ஆரமா மாலை யென்னக்
கல்¢லென அருவி தூங்குங் கடவுள்வெற் பொ சா ரெய்தி
மெல்லிதழ் வனசத் தேவும் விண்டுவும் விண்ணின் தேவும்
பல்லிமை யோருஞ் செவ்வேள் பதமுறை தொழுது சொல்வார். - 8



1540 - வன்கணே யுடைய சூர்பின் வருத்திட இந்நாள் காறும்
புன்கணே யுழந்தே மன்னான் பொருப்பொடு முடியச் செற்றாய்
உன்கணே வழிபா டாற்ற உன்னினம் இன்ன வெற்பின்
தன்கணே இறுத்தல் வேண்டுந் தருதியிவ வரம தென்றார். - 9



1541 - பசைந்திடும் ஆர்வங் கொண்ட பண்ணவர் இனைய தன்மை
இசைந்தனர் வேண்டு மெல்லை எ•குடை அண்ணல் அங்கண்
அசைந்திடு தன்மை யுன்னி அருள்செய வதுகண் டன்னோர்
தசைந்துமெய் பொடிப்பத் துள்ளித் தணப்பில் பேருவகை பூத்தார். - 10



1542 - ஒண்ணில வுமிழும் வேலோன் ஒலிகழற் றானையோடுங்
கண்ணனை முதலா வுள்ள கடவுளர் குழுவி னோடும்
பண்ணவர் கிரிமேற் சென்று பாங்கரில் தொழுது போந்த
விண்ணவர் புனைவன் றன்னை விளித்திவை புகல லுற்றான். - 11



1542 - புகலுறுஞ் சூழ்ச்சி மிக்கோய் புங்கவ ராயு ளோருந்
தொகலுறு கணர்கள் யாருந் துணைவரும் யாமும் மேவ
அகலுறும் இனைய வெற்பின் அருங்கடி நகர மொன்றை
விகலம தின்றி இன்னே விதித்தியால் விரைவின் என்றான். - 12



1544 - வேறு
குழங்கல் வேட்டுவக் கோதையர் ஆடலுங்
கழங்கு நோக்கிக் களிப்பவன் மற்றிது
வழங்கு மெல்லை வகுப்பனென் றன்னவன்
தழங்கு நூபுரத் தாள்பணிந் தேகினான். - 13



1545 - மகர தோரணம் வாரியின் மல்கிய
சிகர மாளிகை செம்பொனின் சூளிகை
நிகரில் பற்பல ஞௌ¢ளல்கள் ஈண்டிய
நகர மொன்றினை யாயிடை நல்கினான். - 14



1546 - அவ்வ ரைக்கண் அகன்பெரு நொச்சியுட்
கைவல் வித்தகக் கம்மியர் மேலவன்
எவ்வெ வர்க்கும் இறைவன் இருந்திடத்
தெய்வ தக்குல மொன்றுசெய் தானரோ. - 15



1547 - மாற்ற ரும்பொன் வரையுள் மணிக்கிரி
தோற்றி யென்னச் சுடர்கெழு மாழையின்
ஏற்ற கோட்டத் திழைத்தனன் கேசரி
ஆற்று கின்ற அரதனப் பீடிகை. - 16



1548 - இனைய தன்மையும் ஏனவும் நல்கியே
மனுவின் தாதை வருதலும் மள்ளர்தம்
அனிக மோடும் அமரர்கள் தம்மொடும்
முனையின் மேற்படை மொய்ம்பன்அங் கேகினான். - 17



1549 - அறுமு கத்தவன் அந்நக ரேகியே
துறும லுற்றிடுந் தொல்பெருந் தானையை
இறுதி யற்ற இருக்கைகொள் ஆவணம்
நிறுவ லுற்று நிகேதனத் தெய்தினான். - 18



1550 - இரதம் விட்டங் கிழிந்துபொற் பாதுகை
சரணம் வைத்துத் தணப்பரும் வீரருஞ்
சுரரு முற்றுடன் சூழ்தரத் துங்கவேல்
ஒருவன் மற்றவ் வுறையுளின் ஏகினோன். - 19



1551 - ஊறில் வெய்யவர் யாரும் ஒரோவழிச்
சேற லெய்திச் செறிந்தென வில்விடு
மாறில் செஞ்சுடர் மாமணிப் பீடமேல்
ஏறி வைகினன் யாரினும் மேலையோன். - 20



1552 - பொழுது மற்றதிற் பூவினன் ஆதியாம்
விழுமை பெற்றிடும் விண்ணவர் யாவருங்
குழும லுற்றுக் குமரனை அவ்விடை
வழிப டத்தம் மனத்திடை உன்னினார். - 21



1553 - புங்க வன்விழி பொத்திய அம்மைதன்
செங்கை தன்னிற் சிறப்பொடு தோன்றிய
கங்கை தன்னைக் கடவுளர் உன்னலும்
அங்கண் வந்ததை அப்பெரு மாநதி. - 22



1554 - சோதி மாண்கலன் தூயன பொற்றுகில்
போது சாந்தம் புகைமணி பூஞ்சுடர்
ஆதியாக அருச்சனைக் கேற்றன
ஏதும் ஆயிடை எய்துவித் தாரரோ. - 23



1555 - அண்டர் தொல்லை அமுத மிருத்திய
குண்ட முற்ற குடங்கர் கொணர்ந்திடா
மண்டு தெண்புனல் வானதி தன்னிடை
நொண்டு கொண்டனர் வேதம் நுவன்றுளார். - 24



1556 - அந்த வெல்லை அயன்முதற் றேவரும்
முந்து கின்ற முனிவருஞ் சண்முகத்
தெந்தை பாங்கரின் ஈண்டி யவன்பெயர்
மந்திரங் கொடு மஞ்சன மாட்டினார். - 25



1557 - வெய்ய வேற்படை விண்ணவற் கின்னணம்
ஐய மஞ்சனம் ஆட்டிமுன் சூழ்ந்திடுந்
துய்ய பொன்னந் துகிலினை நீக்கியே
நொய்ய ப•றுகில் நூதனஞ் சாத்தினார். - 26



1558 - வீற்றொர் சீய வியன்றவி சின்மிசை
ஏற்றி வேளை இருத்தி அவன்பெயர்
சாற்றி மாமலர் சாத்தித் தருவிடைத்
தோற்று பூவின் தொடையலுஞ் சூட்டினார். - 27



1559 - செய்ய சந்தனத் தேய்வைமுன் கொட்டினர்
ஐய பாளிதம் அப்பினர் நாவியுந்
துய்ய நானமுந் துன்னமட் டித்தனர்
மெய்யெ லாமணி மேவரச் சாத்தினார். - 28



1560 - சந்து காரகில் தண்ணென் கருப்புரங்
குந்து ருக்கமொண் குக்குலு வப்புகை
செந்த ழற்சுடர் சீர்மணி ஆர்ப்பொடு
தந்து பற்றித் தலைத்தலை சுற்றினார். - 29



1561 - இத்தி றத்தவும் ஏனவும் எ•கவேற்
கைத்த லத்துக் கடவுட்கு நல்கியே
பத்தி மைத்திற னாற்பணிந் தேத்தினர்
சித்தி சங்கற்பஞ் செய்திடுஞ் செய்கையோர். - 30



1562 - தேவு கொண்ட சிலம்பினில் பண்ணவர்
ஏவ ருங்குழீஇ யின்னணம் பூசனை
யாவ தாற்ற வதுகொண் டமர்ந்தனன்
மூவி ரண்டு முகனுடை மொய்ம்பினோன். - 31



1563 - அமரர் வெற்பில் அயிற்படை யேந்திய
விமல னுற்றது சொற்றனம் மேலினிச்
சமரி டைப்படு தாரகன் தந்திடு
குமரன் உற்றது மற்றதுங் கூறுகேம். - 32

ஆகத் திருவிருத்தம் - 1563
----

222. அசுரேந்திரன் மகேந்திரஞ் செல் படலம் (1564-1628 )




1564 - எந்தை குமரன் எறிந்ததனி மேற்படையாற்
தந்தி முகமுடைய தாரகன்றான் பட்டதனை
முந்துசில தூதர் மொழிய அவன்தேவி
அந்தமிலாக் கற்பிற் சவுரி அலக்கணுற்றான். - 1



1565 - வாழ்ந்த துணைவியர்கள் மற்றுள்ளோர் எல்லோருஞ்
சூழ்ந்து பதைத்திரங்கத் துன்பத் துடனேகி
ஆழ்ந்த கடல்படியும் அம்மென் மயிலென்ன
வீழ்ந்து கணவன் மிசையே புலம்புறுவாள். - 2



1566 - சங்குற் றிடுசெங்கைத் தண்டுளவோன் தன்பதமாம்
அங்குற் றனைஅன் றயன்பதஞ்செல் வாயன்று
கங்கைச் சடையான் கயிலையிற்சென் றாயல்லால்
எங்குற் றனைஅவ் விறைவன்அருள் பெற்றாயே. - 3



1567 - உந்துதனி யாழி உனக்கணியாத் தந்தோனும்
இந்திரனும் ஏனை இமையவர்க ளெல்லோரும்
அந்தகனார் தாமும் அனைவர்களும் இன்றன்றோ
சிந்தைதனி லுள்ள கவலையெலாந் தீர்ந்தனரே. - 4



1568 - பொன்னகரோர் யாரும் புலம்புற் றிடஅவுணர்
மன்னவரோ டென்பால் வரும்பவனி காணாதேன்
துன்னு பறவையினஞ் சூழத் துயிலுமுனை
இன்ன பரிசேயோ காண்பேனால் எம்பெருமான். - 5



1569 - புல்லா திருந்தனையான் புல்லுவது கண்டுமது
பல்லோருங் காணிற் பழியென் றொழிந்தாயேல்
மல்லாருந் தோளாய் மயக்குற்றேற் கோருரையுஞ்
சொல்லாய் வறிதே துயின்றாய் துனியுண்டோ. - 6



1570 - மையோ டுறழும் மணிமிடற்றோன் தந்தவரம்
மெய்யா மெனவே வியந்திருந்தேன் இந்நாளும்
பொய்யாய் விளைந்ததுவோ பொன்றினையால் என்றுணைவா
ஐயோ இதற்கோ அருந்தவமுன் செய்தாயே. - 7



1571 - தன்னோ டிணையின்றித் தானே தலையான
முன்னோன் அருள்புரிந்த முன்னோன் இளவல்வரின்
என்னொ அவனோ டெதிர்ந்தாய் இறந்தனையே
அன்னோ விதிவலியை யாரே கடந்தாரே. - 8



1572 - சந்தார் தடம்புயத்துத் தானவர்கள் தற்சூழ
அந்தார் கமழும் அரியணைமேல் வைகியநீ
சிந்தா குலத்திற் செருநிலத்தில் துஞ்சினையால்
எந்தாய் புகலாய் இதுவுஞ் சிலநாளோ. - 9



1573 - வென்றிமழு வேந்தும் விமலன் உனக்களித்த
துன்றும் வரத்தியலை யுன்னினையாற் சூழ்ச்சியினை
ஒன்று முணரா துயிருந் தொலைந்தனையே
என்று தமியேன் இனியுன்னைக் காண்பதுவே. - 10



1574 - வன்னி விழியுடையான் மைந்தன் அமர்புரிய
முன்னைவலி தோற்று முடிந்தா யெனக்கேட்டுப்
பின்னுமிருந் தேனென்னிற் பேரன் புடையோர்யார்
என்னினியான் செய்கேன் எனவே இரங்குற்றாள். - 11



1575 - மற்றைத் துணைவியரும் வந்தீண்டி மன்னவனைச்
சுற்றிப் புலம்பித் துயருற் றிடும்வேலை
அற்றத் தனனாகி ஆசுரத்தின் பாற்போன
கொற்றப் புதல்வன் வினவிக் குறுகினனால். - 12



1576 - தண்டா விறல்சேருந் தன்றாதை வீந்ததனைக்
கண்டான் உயிர்த்தான் கலுழ்ந்தான் கரங்குலைத்தான்
அண்டாத சோகத் தழுங்கினான் வெய்யகனல்
உண்டா னெனவீழ்ந் தயர்ந்தான் உணர்ந்தனனே. - 13



1577 - என்றுமுறா இன்ன லிடைப்பட் டவன்எழுந்து
சென்றுதன தன்னை திருத்தா ளிடைவீழா
உன்றலைவன் யாண்டையான் ஓதாய்அன் னேயென்று
நின்று புலம்பி நினைந்தினைய செய்கின்றான். - 14



1578 - அன்னைமுத லோரை அகல்வித் தொருசாரில்
துன்னுதிரென் றேவித தொலையாத தானவரில்
தன்னுழையோர் தம்மால்தழல்இந் தனமுதலாம்
மன்னு கருவி பலவும் வருவித்தான். - 15



1579 - வந்த பொழுதுதனில் வன்களத்தில் துஞ்சுகின்ற
தந்தைதனை முன்போல் தகவுபெற வொப்பித்தோர்
எந்திரத்தேர் மீதேற்றி ஈமத் திடையுய்த்துச்
சந்தனப்பூம் பள்ளி மிசையே தருவித்தான். - 16



1580 - ஈமக் கடன்கள் இயற்றித்தன் றாதைதனைத்
தாமக் கனலால் தகனம் புரிந்திடலுங்
காமுற் றனனென் கணவனுடன் செல்வதற்குத்
தீமுற் றருதி யெனஅன்னை சென்றுரைத்தாள். - 17



1581 - நற்றாய் மொழிந்ததனைக் கேட்டு நடுநடுங்கிப்
பொற்றாள் பணிந்தென்னைப் போற்றி யிருத்தியெனச்
சொற்றா னதுமறுத்துத் தோகை சுளித்துரைப்ப
அற்றாக வென்றான் அசுரேந் திரன்என்பான். - 18



1582 - ஏனைதோர் தாயர்களும் யாமுங் கணவனுடன்
வானகம்போய் எய்த வழங்கென் றிடவிசையா
ஆன படியே அழலமைக்க அன்னையராம்
மானனையார் எல்லோரும் வான்கனலி னுள்புக்கார். - 19



1583 - புக்கதொரு காலை புலம்பியே அந்நகரை
அக்கணமே நீங்கி அசுரேந் திரனென்போன்
தக்க கிளைஞர்சிலர் தற்சூழ வேயேகி
மைக்கடலுள் வைகும் மகேந்திரமூ தூர்உற்றான். - 20



1584 - வேறு
உளந்தளர் வெய்தித் தொல்லை ¤முகன் இழந்து மேனி
தளர்ந்தனன் வறியன் போன்று தாரக முதல்வன் தந்த
இளந்தனி மைந்தன் வல்லே யேகலும் அனைய நீர்மை
வளந்திகழ் தொல்லை வீர மகேந்திரத் தவுணர் கண்டார். - 21



1585 - உரங்கிளர் அவுணர் காணூஉ ஒய்யெனத் துளங்கி யேங்கிக்
கரங்களை விதிர்த்துக் கண்ணீர் கானெறி படர்ந்து செல்லப்
பெருங்கட லுடைந்த தேபோல் பேதுற வெய்தி யாற்ற
இரங்கியிக் குமர னுற்ற தென்கொலென் றிசைக்க லுற்றார். - 22



1586 - வஞ்சமுங் கொலையுஞ் செய்யான் மற்றிவன் இதற்குத் தாதை
வெஞ்சினங் கொடுபோ கென்று விடுத்தனன் போலும் என்பார்
தஞ்சம தாகி யுள்ள தாரகன் கொடுமை நோக்கி
அஞ்சியே அவனை நீங்கி அடைந்தனன் கொல்லோ என்பார். - 23



1587 - சீரொடு துறக்கம் நீத்துத் தேவர்கோன் உருவ மாற்றிப்
பாரிடை யுழந்தான் என்பார் மற்றவன் பரனை வேண்டிப்
பேரிகல் மாயம் வன்மை பெற்றுவந் தடுபோர் செய்யத்
தாரகன் இறந்தான் கொல்லோ தளர்ந்திவன் வந்தான் என்பார். - 24



1588 - மாண்கிளர் தார கப்பேர் மன்னவன் பகைஞர் ஆற்றும்
ஏண்கிளர் சமரில் வீந்தான் என்பதற் கேது வுண்டால்
சேண்கிளர் நிவப்பா லெங்குந் தெரிகிர வுஞ்ச வெற்பில்
காண்கிலம் அவுணர் தம்மைப் பூழியே காண்டும் என்பார். - 25



1589 - பையர வணையில் துஞ்சும் பகவன தாழி தன்னை
ஐயபொன் னணிய தாக அணிந்திடும் அவுண னோடு
மொய்யமர் புரிவார் யாரே முரணொடு வெம்போர் சில்லோர்
செய்யினும் அவரால் அன்னோன் முடிகிலன் திண்ணம் என்பார். - 26



1590 - அங்கையை ஒருவன் வாளால் அறுத்திடப் புலம்பி நங்கோன்
தங்கைவந் தமரர் தம்மைச் சயந்தனைச் சிறைசெய் வித்தாள்
இங்கிவன் தானுந் துன்புற் றேகுவான் இன்றும் அற்றே
புங்கவர் தமக்கே இன்னல் புரிகுவன் போலும் என்பார். - 27



1591 - மணிகிளர் எழிலி வண்ணன் மற்றவ னொடுபோர் ஆற்றான்
அணியுல களித்த செம்மல் அமர்த்தொழில் சிறிதுந் தேறான்
தணிவறு செயிர்மீக் கொண்ட தாரக னொடுபோர் செய்யின்
இணைகல் ஈசன் அன்றி யாவரே வல்லர் என்பார். - 28



1592 - இமையவர் கருடர் நாகர் இயக்கர்கந் தருவ ரேனோர்
நமரிடு பணிகள் ஆற்றி நாடொறுந் திரிந்தார் அற்றால்
சமரெதிர் இழைப்பார் இன்றித் தளர்ந்தனம் இந்நாள் காறும்
அமரினி யுளது போலும் ஐயம தில்லை என்பார். - 29



1593 - சேயிவன் அலக்கண் எய்திச் செல்லுறு பரிசா லங்கண்
ஆயதோர் தீங்கு போலும் ஐயமின் றிதனை நாடி
நாயகன் விடுக்கு முன்னம் நம்பெருந் தானை யோடு
மாயமா புரிகா றேகி அறிந்தனம் வருதும் என்பார். - 30



1594 - எனைப்பல இனைய வாற்றா லியாவரும் அவுணர் ஈண்டி
மனப்படு பைத லோடும் வயின்வயின் உரையா நிற்ப
நினைப்பருந் திருமிக் குள்ள நெடுமகேந் திரத்திற் சென்று
வனைப்பெருங் கழற்காற் சூர மன்னவன் கோயில் போந்தான். - 31



1595 - போந்துதா ரகன்றன் மைந்தன் பொள்ளெனப் படர்த லோடும்
வாய்ந்தபே ரவைய மன்றில் வரம்பிலா அவுணர் போற்ற
ஏந்தெழில் அரிகள் தாங்கும் எரிமணித் தவிசின் மீக்கண்
வேந்தர்கள் வேந்தன் சூரன் மேவிவீற் றிருந்தான் மாதோ. - 32



1596 - வீற்றிருந் தரசு போற்றும் வேந்தனை யெய்தி யன்னான்
காற்றுணை முன்னர் வீழ்ந்து கரங்களால் அவற்றைப் பற்றி
ஆற்றவும் அரற்றல் செய்ய அவுணர்கோர் அதுகண் டைய
சாற்றுதி புகுந்த தன்மை தளர்ந்தனை புலம்ப லென்றான். - 33



1597 - என்றலும் மைந்தன் சொல்வான் இந்திரன் புணர்ப்பால் ஈசன்
வன்றிறற் குமரன் பூத வயப்படை தன்னொ டேகி
உன்றன திளவல் தன்னை ஒண்கிர வுஞ்ச மென்னுங்
குன்றொடும் வேலாற் செற்றுக் குறுகினன் புவியி லென்றான். - 34



1598 - வெய்யசூர் அதனைக் கேளா விழுமிதென் றுருமின் நக்குச்
சையமாம் அவுண னோடு தாரக வலியோன் றன்னை
மையுறழ் கண்டத் தண்ணல் மைந்தனோ அடுதல் செய்வான்
பொய்யிது வெருவல் மைந்த உண்மையே புகறி என்றான். - 35



1599 - தாதைகேள் கரதம் ஈது தாரகத் தந்தை தன்னை
மேதகு கிரவுஞ் சத்தை வேல்கொடு பரமன் மைந்தன்
காதினன் சென்றான் ஈமக் கடன்முறை எந்தைக் காற்றி
மாதுயர் கொண்டு நின்பால் வந்தனன் என்றான் மைந்தன். - 36



1600 - வேறு
தோட்டுணைவ னாம்இளவல் துஞ்சினன் எனுஞ்சொல்
கேட்டலும் உளத்திடை கிளர்ந்தது சினத்தீ
நாட்டமெரி கால்வபுகை நண்ணுவன துண்டம்
ஈட்டுபொறி சிந்துவன யாக்கையுள் உரோமம். - 37



1601 - நெறித்தபுரு வத்துணைகள் நெற்றிமிசை சென்ற
கறித்தன எயிற்றினிரை கவ்விஅத ரத்தைச்
செறித்தன துடித்தன தெழித்தஇதழ் செவ்வாய்
குறித்தது மனங்ககன கூடமும் முடிக்க. - 38



1602 - அவ்வகை சினத்தெரி யெழுந்துமிசை கொள்ள
அவ்வெரியின் ஆற்றலை யவித்ததது போழ்தில்
வெவ்வினைகொள் தாரகன் மிசைத்தொடரும் அன்பால்
தெவ்வர்புகழ் சூரனிடை சேர்ந்ததுயர் ஆழி. - 39



1603 - துப்புநிகர் கண்புனல் சொரிந்தநதி யேபோல்
மெய்ப்புறம் வியர்த்தமுகம் வௌ¢ளமவை யீண்டி
அப்புணரி யானதுய ராழியது வென்றே
செப்புபொரு ளுண்மையது தேற்றியது போலும். - 40



1604 - பருவர லெனும்புணரி யூடுபடி வுற்றே
அரியணை மிசைத்தவறி அம்புவியில் வீழா
உருமென அரற்றினன் உணர்ந்ததனை யஞ்சி
நரலையொடு பாரகம் நடுங்கியதை யன்றே. - 41



1605 - கூற்றுள நடுங்கிய குலைந்தது செழுந்தீக்
காற்றுவெரு வுற்றது கதிர்க்கடவுள் சோமன்
ஏற்றமிகு கோளுடு விரிந்தபுவி முற்றும்
ஆற்றிய பணிக்கிறையும் அஞ்சிய தலைந்தே. - 42



1606 - பாங்கருறு தானவர்கள் பாசறையின் மூழ்கி
ஏங்கினர் விழுந்தனர் இரங்கினர் தளர்ந்தார்
ஆங்கனைய போழ்துதனில் அந்நகர மெல்லாம்
ஓங்குதுயர் கொண்டுகலுழ் ஓசைமலிந் தன்றே. - 43



1607 - ஆனபொழு தத்தினில் அழுங்கலுறு சூரன்
போனதொரு சீற்றவழல் புந்தியிடை மூள
மானமொடு நாணமட வல்லையில் எழுந்தே
தானுடைய ஏவலர் தமக்கிவை உரைப்பான். - 44



1608 - ஆனபொழு தத்தினில் அழுங்கலுறு சூரன்
மன்னிளவல் ஆருயிரை மாற்றிவரு கந்தன்
தன்னிகல் கடந்துசய மெய்திவரல் வேண்டும்
என்னிரதம் வெம்படை இடுங்கவசம் யாவும்
உன்னுகணம் ஒன்றின்முனம் உய்த்திடுதி ரென்றான். - 45



1609 - ஆனபொழு தத்தினில் அழுங்கலுறு சூரன்
இறையிவை புகன்றிடலும் ஏவலர்கள் யாரும்
முறையிலவை உய்த்திடுதல் முன்னினர்கள் போனார்
அறைகழ லுடைத்தகுவர் அன்னசெயல் நாடிக்
குறைவில்அனி கங்களொடு கொம்மென அணைந்தார். - 46



1610 - ஆனபொழு தத்தினில் அழுங்கலுறு சூரன்
ஆயசெயல் காண்டலும் அமைச்சரில் அமோகன்
மாயைதரு சூரனடி வந்தனை புரிந்தே
ஏயதொரு மாற்றம திசைப்பல்அது கேண்மோ
தீயசின மெய்திட லெனாஇனைய செப்பும். - 47



1611 - ஆனபொழு தத்தினில் அழுங்கலுறு சூரன்
வேறு
நஞ்சுறை படைகள் கற்று நவையுறா தொன்ன லாரை
வஞ்சினத் தெறியும் வீரர் வளநகர் அதனை மாற்றோர்
இஞ்சியைச் சூழ்ந்து போருக் கெய்தினும் எண்ணி யன்றி
வெஞ்சினத் தினைமேல் கொண்டு விரைந்தமர் இயற்றச் செல்லார். - 48



1612 - குலத்தினை வினவி உள்ளக் கோளினை வினவி வந்த
நிலத்தினை வினவித் தொல்லோர் நெறியினை வினவிக் கொணட
சலத்தினை வினவிப் போர்செய் தானையை வினவி அன்னோர்
வலத்தினை வினவி யல்லால் மற்றொன்று மனங்கொள் வாரோ. - 49



1613 - வரத்தினில் வலியி னாரோ மாயையில் வலியி னாரோ
கரத்தினிற் படைக்க லத்தின் கல்வியில் வலியி னாரோ
உரத்தினில் வலியி னாரோ உணர்ச்சிசேர் ஊக்க மான
சிரத்தினில் வயியி னாரோ என்றிவை தேர்வ ரன்றே. - 50



1614 - ஒற்றைரைத் தூண்டி அன்னோர் உறுவலி உணர்வ ரேனும்
மற்றுமோ ரொற்றின் அல்லால் அன்னது மனத்துட் கொள்ளார்
சுற்றுறும் அனிக மன்றி யொருபுடை துவன்றிச் சூழும்
பெற்றியும் உளதோ என்னாவேயொரீஇத் தேர்வர் பின்னும். - 51



1615 - வினையது விளைவை யென்றும் மெல்லிய என்கை வெ•கார்
அனிகமும் அனையர் தன்மை அதனையுஞ் சிறுமைத் தாக
நினைகிலர் தமக்கு மாற்றார் நேர்ந்தவ ராகின் மேலோர்
முனையுறு புலத்தி லாற்றும் மும்மையும் முன்னிச் செய்வார். - 52



1616 - மூவியல் மரபி னாலும் முற்றுறா தொழிந்த காலைக்
கோவியல் மரபுக் கேற்பக் கொடுஞ்சினந் திருகிக் கோட்புற்
றேவியல் படைஞ ரோடும் படையொடும் எதிர்ந்து சுற்றி
மேவலர் பான்மை யுன்னி வெற்றிகொண் டணைவர் அன்றே. - 53



1617 - நேர்ந்திட வலியி லோரும் ஞாட்பிடை நேர்தி ரென்னாச்
சேர்ந்திடும் போழ்தும் வேந்தர் செருவினைக் குறித்துச் சென்று
சார்ந்திடல் பழிய தன்றோ வெல்லினுந் தானை தூண்டிப்
பேர்ந்திடச் செய்வர் அ•தே பெறலரும் புகழ தன்றே. - 54



1618 - ஈதரோ உலகி லுள்ள இறைவர்தம் இயற்கை யாகும்
ஆதலார் நின்னொப் பாரில் அழிவிலா அகில மாள்வாய்
கூதமொன் றடையாய் வானோர் யாரையும் ஏவல் கொண்டாய்
போதனும் நெடுமா லோனும் வைகலும் புகழ வுற்றாய். - 55



1618 - இன்னதோர் மிடல்பெற் றுள்ள இறைவநீ அளிய னாகும்
பொன்னக ரவன்சொற் கேட்டுப் பூதமே படையா ஈசன்
நென்னலின் உதவும் பிள்ளை நேர்ந்திடின் அவனை வெல்ல
உன்னினை போதி யென்னின் உனக்கது வசைய தன்றோ. - 56



1620 - மாற்றலர் வன்மை யோராய் மற்றவர் படைஞர் தங்கள்
ஆற்றலை யுணராய் நின்றன் அரும்பெருந் தலைமை யுன்னாய்
போற்றிடும் அமைச்ச ரோடும் புரிவன சூழாய் வாளா
சீற்றமங் கதுமேல் கொண்டு செல்லலுந் திறலின் பாற்றோ. - 57



1621 - வீரமும் வலியும் மிக்கோ ராயினும் விதிவந் தெய்தில்
பாரிடை வலியி லோரும் படுத்திடப் படுவர் நின்போல்
பேருடல் அழியா ஆற்றல் பெறாமையால் இறுவா யெய்தத்
தாரகன் மழலை தேறாச் சிறுவனுந் தடியப் பட்டான். - 58



1622 - கலகல மிழற்றுந் தண்டைக் கழலடிச் சிறுவன் கைம்மாத்
தலையுடை இளவல் தன்னைத் தடிந்ததற் புதத்த தன்றால்
வலியரும் ஒருகா லத்தில் வன்மையை இழப்பர் ஆற்ற
மெலியரும் ஒருகா லத்தில் வீரராய்த் திகழ்வர் அன்றே. - 59



1623 - யாருநே ரன்றி வைகும் இறைவநீ சிறுவன் றன்மேற்
போரினை முன்னி யேகல் புகழ்மைய தன்றால் அன்னான்
சீரொடு மதுகை யாவுந் தேர்ந்துபின் னவனில் தீர்ந்த
வீரரைப் படையொ டேவி வெற்றிகொண் டமர்தி யென்றான். - 60



1624 - அறிதரும் அமைச்சர் தம்முள் அமோகன்இத் தன்மை தேற்ற
உறுதியீ தென்று சூரன் உள்ளுறு சினத்தை நீத்து
விறல்கெழும் அரிமான் ஏற்று விழுத்தகு தவிசின் ஏறிச்
செறிதரும் உழைஞர் தம்முட் சிலவரை நோக்கிச் சொல்வான். - 61



1625 - பகனொடு மயூரன் சேனன் பரிதியம் புள்ளின் பேரோன்
சுகனிவர் முதலா வுள்ள தூதரைத் தருதி ரென்னப்
புகழ்புனை சூர பன்மன் பொன்னடி இறைஞ்சி யேத்தித்
தகுவர்கள் தலைவர் மற்றச் சாரணர் தம்மை உய்த்தார். - 62



1626 - சாரணர் இஇனயர் போந்து தாள்முறை பணிந்து நிற்பச்
சூரனங் கவரை நோக்கித் துண்ணென நீவி ரேகிப்
பாரிடை வந்த கந்தன் பான்மையும் படைவெம் பூதர்
சேருறு தொகையும் யாவுந் தேர்ந்திவண் வருதி ரென்றான். - 63



1627 - ஒற்றுவர் உணர்ந்தந் நீர்மை உச்சிமேல் கொண்டு தங்கோன்
பொற்றடங் கழல்கள் தாழ்ந்து புடவியை நோக்கிச் சென்றார்
மற்றவர் போய பின்னர் மாறிலாச் சூர பன்மன்
வெற்றிகொள் அவுணர் போற்ற வீற்றிருந் தரசு செய்தான். - 64



1628 - ஏதமில் சூர பன்மன் இளவல்தன் முடிவு நேடி
மாதுயர் கொண்டு தேறி வைகிய தன்மை சொற்றாம்
ஆதியங் கடவுள் மைந்தன் அமரர்தங் கிரியை நீங்கிப்
பூதல மீது வந்த நெறியினைப் புகல லுற்றாம். - 65

ஆகத் திருவிருத்தம் - 1628
------

23. வழிநடைப் படலம் (1629 - 1644 )




1629 - குருமணி மகுடம் ஆறுங் குழைகளுந் திருவில் வீசத்
திருமணி வரையின் மேவுந் திருக்கைவேற் பெருமா னுககுக்
கருமணி யாழிப் புத்தேள் கையுறை யாக ஆங்கோர்
பருமணி நீட்டிற் றென்னப் பானுவந் துதயஞ் செய்தான். - 1



1630 - வேறு
மங்குல் வானமேல் வெய்யவன் கதிரென வழங்குஞ்
செங்கை கூப்பியே தொழுதிடு வானெனச் செல்ல
அங்கவ் வேலையில் அறுமுகன் கடவுள்வெற் பகன்று
பொங்கு தானையும் அமரருஞ் சூழதரப் போந்தான். - 2



1631 - தன்னை நீக்கியே சூழ்வுறுந் தவமுடைப் பிருங்கி
உன்னி நாடிய மறைகளின் முடிவினை யுணரா
என்னை யாளுடை யாளிடஞ் சேர்வன்என் றிமையக்
கன்னி பூசனை செய்தகே தாரமுன் கண்டான். - 3



1632 - பைய ராவின்மேற் கண்டுயில் பண்ணவன் றனக்குந்
தையல் பாதிய னேபரம் பொருளெனுந் தன்மை
மையல் மானுடர் உணர்ந்திட மறைமுனி யெடுத்த
கைய தேயுரைத் திட்டதோர் காசியைக் கண்டான். - 4



1633 - பருப்ப தப்பெயர்ச் சிலாதனற் பாலகன் பரமன்
இருப்ப வோர்வரை யாவனென் றருந்தவம் இயற்றிப்
பொருப்ப தாகியே ஈசனை முடியின்மேற் புனைந்த
திருப்ப ருப்பதத் தற்புதம் யாவையுந் தெரிந்தான். - 5



1634 - அண்டம் மன்னுயிர் ஈன்றவ ளுடன்முனி வாகித்
தொண்ட கங்கெழு சுவாமிதன் மால்வரை துறந்து
மண்டு பாதலத் தேகியே யோர்குகை வழியே
பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான். - 6



1635 - சிலந்தி மாசுணம் மும்மதக் கரிசிவ கோசன்
மலைந்தி டுஞ்சிலை வேட்டுவன் கீரனே மடவார்
பலந்த ரும்வழி பாட்டினால் பாட்டினாற் பரனைக்
கலந்து முத்திசேர் தென்பெருங் கயிலையுங் கண்டான். - 7



1636 - கொடிய வெஞ்சினக் காளியிக் குவலய முழுதும்
முடிவு செய்வன்என் றெழுந்தநாள் முளரியன் முதலோர்
அடைய அஞ்சலும் அவள்செருக் கழிவுற வழியாக்
கடவுள் ஆடலால் வென்றதோர் வடவனங் கண்டான். - 8



1637 - அம்பு ராசிகொள் பிரளயத் தினுமழி வின்றி
உம்பர் மாலயற் குறையுளாய்க் கயிலைபோ லொன்றாய்
எம்பி ரான்தனி மாநிழல் தன்னில்வீற் றிருக்குங்
கம்பை சூழ்தரு காஞ்சியந் திருநகர் கண்டான். - 9



1638 - ஏல வார்குழல் உமையவள் பூசைகொண் டிருந்த
மூல காரண மாகிய முதல்வன் ஆலயமும்
மாலும் வேதனும் அமரரும் வழிபடு மற்றை
ஆல யங்களாய் உள்ளவுங் கண்டனன் ஐயன். - 10



1639 - வேறு
என்னிகர் எவரு மில்லென் றிருவரும் இகலும் எல்லை
அன்னவர் நடுவு தோன்றி அடிமுடி தெரியா தாகி
உன்னினர் தங்கட் கெல்லாம் ஒல்லையின் முத்தி நல்கித்
தன்னிகர் இன்றி நின்ற தழற்பெருஞ் சயிலங் கண்டான். - 11



1640 - மண்ணுல கிறைவன் செய்யும் மணந்தனை விலக்கி எண்டோள்
அண்ணலோர் விருத்தன் போல்வந் தாவண வோலை காட்டித்
துண்ணென வழக்கில் வென்று சுந்தரன் றனையாட் கொள்ளும்
பெண்ணையம் புனல்சூழ் வெண்ணெய்ப் பெரும்பதி தனையும் கண்டான். - 12



1641 - தூசினால் அம்மை வீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்
மாசிலா வுயிர்கட் கெல்லாம் அஞ்செழுத் தியல்பு கூறி
ஈசனே தனது கோலம் ஈந்திடு மியல்பால் அந்தக்
காசியின் விழுமி தான முதுகுன்ற வரையுங் கண்டான். - 13



1642 - விரிகனல் வேள்வி தன்னில் வியன்றலை அரிந்து வீட்டிப்
பொருவரு தவத்தை யாற்றும் பதஞ்சலி புலிக்கால் அண்ணல்
இருவரும் உணர்வாற் காண எல்லையில் அருளா லீசன்
திருநட வியற்கை காட்டுந் தில்லைமூ தூரைக் கண்டான். - 14



1643 - தண்டளிர்ச் சோலைத் தில்லைத் தபனிய மன்றி லென்றுந்
தொண்டையங் கனிவாய் மாது தொழச்சுராட் புருடன் உள்ளத்
தண்டரு மதிக்க லாற்றா அற்புதத் தனிக்கூத் தாடல்
கண்டனன் கசிவால் உள்ளங் களிப்புற வணங்கிப் போனான். - 15



1644 - குடமுனி கரத்தில் ஏந்துங் குண்டிகை இருந்து நீங்கிப்
படிதனில் வேறு வேறாய்ப் பற்பல நாமந் தாங்கிக்
கடல்கிளர்ந் தென்னச் செல்லுங் காவிரி யென்னு மாற்றின்
வடகரை மண்ணி யின்பால் வந்தனன் கருணை வள்ளல். - 16

ஆகத் திருவிருத்தம் - 1644
---------

24. குமாரபுரிப் படலம் (1645 - 1725)




1645 - அளவில் பூதவெம் படையொடு மண்ணியா றதன்கட்
குளகன் வந்துழி எழுந்திடு பூழிவான் குறுகி
¤ரும் வெய்யவன் கதிர்தனை மறைத்தலா லோடி
வளைநெ டுங்கடல் மூழ்குவான் புக்கென மறைந்தான். - 1



1646 - மறைந்த காலையில் தோன்றின மாலையும் நிசியுங்
குறைந்த திங்கள்வந் துதத்தது தாரகை குறுகி
நிறைந்தெ ழுந்தவோர் மன்னவன் இறந்துழி நீங்கா
துறைந்த ஒன்னலர் யாவருங் கிளர்ந்தவர் றொப்ப. - 2



1647 - மிக்க தாருக வனத்தினை யொத்தது விசும்பில்
தொக்க பேரிருள் மாதரொத் தனஉடுத் தோற்றஞ்
செக்கர் ஈசனை யொத்ததொண் போனகஞ் செறிந்த
கைக்க பாலம தொத்தது கதிரிளம் பிறையே. - 3



1648 - நிலவு லாவிய ககனமா நீடுபாற் கடலில்
குலவு கின்றதோர் பொருளெலாங் கொண்டுகொண் டேகி
உலகில் நல்குவான் முயலெனும் ஒருமகன் உய்ப்பச்
செலவு கொண்டதோர் தோணிபோன் றதுசிறு திங்கள். - 4



1649 - ஆன காலையில் அறுமுகப் புங்கவன் அமல
மேனி சேரொளி நிலவொடு கங்குலை வீட்டிப்
பானு மேவரு மெல்லெனச் செய்தலிற் பரமாம்
வான நாயகன் கயிலைபோன் றிருந்ததவ் வையம். - 5



1650 - வேறு
வீசு பேரொளி விறற்குகன் இவ்வா
றாசின் மண்ணியின் அகன்கரை நண்ண
ஈச னாம்அவனை எய்துபு வேதாக்
கேச வன்முதல்வர் இன்ன கிளப்பார். - 6



1651 - ஆண்ட இந்நதி யகன்கரை எல்லாம்
மாண்ட வாலுகம் மலிந்தினி தாகும்
நீண்ட சோலைகள் நிரந்தன தோன்றி
ஈண்டி ஈண்டையின் இறுத்துள அன்றே. - 7



1652 - பிறைபு னைந்திடு பெருந்தகை தானம்
இறுதி யில்லன இருந்தன வற்றால்
நறிய தாகுமிந் நதிக்கரை தன்னில்
இறைவ இவ்விடை இருந்தருள் என்றார். - 8



1653 - வனையும் மேனிஅயன் மால்முதல் வானோர்
இனைய செப்புதலும் யாரினும் மேலோன்
வினைய மெத்தவுள விச்சுவ கன்மப்
புனைவ னுக்கிது புகன்றிடு கின்றான். - 9



1654 - மெய்வி தித்தொழிலில் வேதன் நிகர்க்குங்
கைவ லோய்ஒரு கணம்படு முன்னர்
இவ்வி டத்தினில் எமக்கொரு மூதூர்
செவ்வி திற்புனைவு செய்குதி யென்றான். - 10



1655 - என்ன லோடும்அவ் விடந்தனில் எங்கோன்
துன்னு தொல்படை சுராதிப ரோடு
மன்ன அங்கணொரு மாநகர் நெஞ்சத்
துன்னி நல்கலும் உவந்தனர் யாரும். - 11



1656 - அப்பு ரத்தையறி வன்கடி தாற்றி
முப்பு ரத்தையடு முன்னவன் நல்கும்
மெய்ப்பு ரத்தவனை நோக்குபு மேலோய்
இப்பு ரத்திடை எழுந்தரு ளென்றான். - 12



1657 - என்ற லோடும்இர தத்தின் இழிந்தே
துன்றும் வானவர் சுராதிப ரானோர்
சென்ற பூதர்கள் செறிந்துடன் ஏக
மன்றல் மாநகரில் வள்ளல் புகுந்தான். - 13



1658 - செல்லு மாமுகில் செறிந்திடு காப்பின்
மல்லல் மாநகர் வளந்தனை நோக்கி
எல்லை யில்அறிவன் யாமுறை தற்கு
நல்ல மாநகரி தென்று நவின்றான். - 14



1659 - வீர வேளிது விளம்புத லோடும்
ஆரும் வானவர்கள் அம்மொழி கேளா
ஏரெ லாமுடைய இந்கர் சேய்ஞ
லூர தென்றுபெயர் ஓதினர் அன்றே. - 15



1660 - ஆய காலையனி கப்படை சூழ
ஏய பின்னிளைஞர் இந்திரன் வேதா
மாயன் ஏனையர் வழுத்திட ஆண்டைக்
கோயில் செல்லுபு குமாரன் இருந்தான். - 16



1661 - வேறு
பன்னிரு புயத்தொகை படைத்தகும ரேசன்
தன்னருள் அடைந்துவிதி தன்னைமுத லானோர்
அன்னவன் விடுத்திட வகன்றுபுடை யேகித்
தொன்னிலை இருக்கைகள் தொறுந்தொறும் அடைந்தார். - 17



1662 - தானைகள் தமக்குரிய சாரதர் இலக்கர்
ஏனையர் வழுத்த எமை யாளுடைய வள்ளல்
கோனகர் இருக்கவிடை கொண்டுசெல் குழாத்துள்
வானவர் தமக்கிறை செயற்கையை வகுப்பாம். - 18



1663 - வேறு
தாங்கரும் பெருந்திறல் தார காசுரன்
பாங்கமர் குன்றொடும் பட்ட பான்மையால்
ஆங்கனம் புரந்தரன் அவலம் யாவதும்
நீங்கினன் உவகையால் நிறைந்த நெஞ்சினான். - 19



1664 - விருந்தியல் அமிர்தினை விழும மில்வழி
அருந்தின னாமென ஆகந் தண்ணெனப்
புரந்தரன் இருந்துழிப் புக்குத் தாழ்ந்ததால்
வரந்திகழ் சிரபுர வனத்தில் தெய்வதம். - 20



1665 - முகில்பொதி விண்ணகம் முதல்வன் பூண்களும்
நகில்பொதி சாந்துடை நங்கை பூண்களுந்
துகில்பொதி கிழியொடு தொல்லை வைத்தவை
அகில்பொதி காட்டகத் தடிகள் உய்த்ததே. - 21



1666 - முந்துற உய்த்தபின் முதல்வ கேட்டிநீ
பைந்தொடி அணங்கொடு பரமன் காழியில்
வந்தனை நோற்றநாள் வைத்த பூணிது
தந்தனன் கொள்கெனச் சாற்றி நின்றதே. - 22



1667 - நிற்புறு கின்றுழி நேமி அண்ணற்கு
முற்படு கின்றவன் முளரிப் பண்ணவன்
கிற்புறு செய்யபூண் கிழியை நோக்கினான்
கற்புடை யாள்விடுந் தூதின் காட்சிபோல். - 23



1668 - எரிமணி அணிகலன் இட்ட பூந்துகில்
விரிதரு பொதியினை விரலின் நீக்கினான்
திருமகள் அமர்தரு தெய்வத் தாமரை
வரியளி சூழ்வுற மலர்ந்த தென்னவே. - 24



1669 - துண்ணெனக் கிழியதன் தொடர்பு நீக்கலும்
ஒண்ணுதற் றுணைவிபூண் உம்பர் தோன்றலுங்
கண்ணுறக் கண்டவட கருதி னானவேரா
எண்ணுதற் கரியதோர் இன்பந் துய்த்துளான். - 25



1670 - பூட்கையின் முலையுடைப் பொன்னங் கொம்பின்மேல்
வேட்கைய தாயினன் மிகவும் பிற்பகல்
வாட்கையின் றிருந்தது மனத்தின் முன்னினான்
காட்கொளுங் காமநோய்க் கவலை எய்தினான். - 26



1671 - நெய்ம்மலி தழலென நீடிக் காமநோய்
இம்மென மிசைக்கொள இரங்கி ஏங்கினான்
விம்மினன் வெதும்பினன் வெய்து யிர்த்தனன்
மைம்மலி சிந்தையன் மருட்கை எய்தினான். - 27



1672 - பசையற வுலர்வுறு பராரைப் பிண்டியின்
தசைமலி முழுதுடல் தளர்ந்து வாடினான்
இசைவரு கைவலோன் எழுது பாவைபோல்
அசைவிலன் இருந்தனன் அணங்குற் றென்னவே. - 28



1673 - முருந்துறழ் எயிற்றினாள் முலைத்த டங்களில்
பொருந்துற மூஞ்கியே புணர்ந்து வைகலும்
இருந்திடு கின்றவன் இடர்ப்பட் டின்னணம்
பிரிந்திடின் வருந்துதல் பேசல் வேண்டுமோ. - 29



1674 - மெய்ந்நனி அலசுற விரக மீக்கொள
இன்னணஞ் சசிபொருட் டினையும் நீர்மையோன்
பொன்னணி தன்னையும் புனைதல் வேண்டலன்
தன்னுழை யவர்தமை நோக்கிச் சாற்றுவான். - 30



1675 - இக்கிழி யொன்றினை ஏந்தி முந்துபோற்
சிக்குற வீக்கியே சேமித் துங்கள்பால்
வைக்குதிர் என்றலும் எணங்கி நன்றொனா
அக்கணம் அனையவர் அதனை யாற்றினார். - 31



1676 - அன்னதோர் அளவையில் அடவித் தேவினைக்
கொன்னுனை வச்சிரக் குரிசில் நோக்குறா
நின்னுழை அளித்திட நீசெல் கென்றலும்
மன்னவ நன்றென வங்கிப் போயதே. - 32



1677 - போந்திடு காலையிற் புலோமசைப் பெயர்
ஏந்திழை காமநோய் எரியின் துப்பினாற்
காந்திய வுளத்தினன் கனலும் யாக்கையன்
ஓய்ந்தனன் தட்பமேல் உளம்வைத் தேகினான். - 33



1678 - ஆயிழை உழத்தியர் ஆமென் கூந்தலின்
அளியினம் நறவுதுய்த் தலரிற் கண்படு
நளியிருந் தண்டலை ஞாங்கர் பொங்கிய
புளினமொன் றதன்மிசை புக்கு வைகினான். - 34



1679 - தீந்தழல் வெங்கதிர் திளைத்த வாறென
நீத்தருங் கருங்குலின் நிலவுத் தீப்படப்
பூந்துணர் பரவிய புளினம் பொன்னகர்
வேந்தனுக் காற்றவும் வெம்மை செய்ததே. - 35



1680 - சூற்புயல் மாறிய சுரத்தில் தொக்குறு
மாற்பரல் வரைபுரை மணலின் திட்டையின்
பாற்படு கின்றனன் பனிம திக்கர்
மேற்பட அசைந்தனன் வினையம் வேறிலான். - 36



1681 - திங்களும் வெங்கனல் சிதறிக் காய்ந்திடத்
துங்கவேள் படையுடன் பிறவுஞ் சூழ்ந்திட
மங்கிய உணர்ச்சியன் மயலின் வன்மையான்
புங்கவர் மன்னவன் புலம்பல் எய்தினான். - 37



1682 - மட்டமர் புரிகுழல் மடந்தை என்னுடல்
இட்டுயிர் வவ்வினள் இருந்த யாக்கையுஞ்
சுட்டிடு கிற்றியால் தூய திங்கள்நீ
பட்டவர் தம்மையும் படுப்ப ரோவென்பான். - 38



1683 - எஞ்சலில் அமுதினை யார்க்கும் நல்குநீ
நஞ்சினை யுகுத்திநண் ணலரில் தப்பியே
உஞ்சனன் இவனுயிர் ஒழிப்பன் யானெனா
வஞ்சினம் பிடித்தியோ மதிய மேயென்பான். - 39



1684 - நிற்றலும் வருதிநீ நீடு தண்ணளி
உற்றிடல் அன்றியே ஒறுத்தி லாய்மதி
அற்றமின் றுன்னிவந் தடுதி யாரிடைக்
கற்றனை இத்திறங் கள்வ நீயென்பான். - 40



1685 - பெண்ணிய லாரிடைப் பிறங்கு காமமும்
உண்ணிகழ் விரகமும் உனக்கும் உண்டதை
எண்ணலை யழல்சொரிந் தென்னைக் காய்தியால்
தண்ணளி மதிக்கிது தகுவ தோவென்பான். - 41



1686 - அரியநற் றவம்பல ஆற்றி இன்றுகா
றுரியதோர் என்பல தூனில் யாக்கையேன்
பரிவுறச் சுடுவதிற் பயனென் பாரிலிவ்
வொருவனை விடுகென உரைத்து வேண்டுவான். - 42



1687 - அண்டமேல் நின்றனை அவனி வானகம்
எண்டிசை எங்கணும் எளிது காண்டியல்
ஒண்டொடி யொருத்திஎன் னுயிர்கொண் டுற்றனள்
கண்டதுண் டோமதிக் கடவுள் நீயென்பான். - 43



1688 - யான்முதல் தோன்றினன் எனது பின்னவன்
கான்முளை யாகிய காம நீபல
பான்மையின் எனையடல் பழிய தேயலால்
மேன்மைய தாகுமோ விளம்பு வாயென்பான். - 44



1689 - பரேருள உனதுமெய் படுத்த கண்ணுதல்
ஞெரேலென உதவிய நிமலன் ஈண்டுளன்
ஒரேகணம் ஒடுங்குமுன் உயிரும் வாங்குமால்
பொரேலினி மதனநீ போகு போகென்பான். - 45



1690 - வானுழை திரிதரு மதியம் போக்கிய
தீநுழை புண்ணில்வேல் செறித்த தென்னவேள்
கோனுழை கின்றன அதனில் கூடளி
ஈநுழை கின்றன போலும் என்கின்றான். - 46



1691 - வன்றிறல் கொலைஞர்கள் மாலில் கூவிமான்
ஒன்றறக் கவர்தல்போல் உயிரென் காலினை
இன்றது போலவந் துள்புக் கீர்த்ததால்
தென்றலுக் கியான்செய்த தீதுண் டோவென்பான். - 47



1692 - வாகுலப் பரியதோர் மாதர் மாலெனும்
ஆகுலப் புணரியுள் அழுந்தி னோரையும்
வீகுலத் தொகையினுள் விட்டி சைத்திடுங்
கோகிலப் பறவையுங் கொல்லு மோவென்பான். - 48



1693 - நம்முரு வாயினன் நாகர் கோனெனாத்
தம்மன முன்னியே தளர்வு நீக்கில
கொம்மென அரற்றியுங் கூவ லின்றியும்
எம்முயிர் கொள்வன இருபுளா மென்பான். - 49



1694 - தண்டுதல் இன்றியே தானு நானுமாய்ப்
பண்டொரு வனிதை*யைப் பரிவிற் கூடினேம்
அண்டரும் அறிகுவர் அற்றை நாட்சினம்
உண்டுகொல் கதிரினம் உதிக்கி லானென்பான்.
(*பண்டொருவனிதை - பெண் வடிவங்கொண்ட அருணன்) - 50



1695 - கோழிலை மடற்பனைக் குடம்பை சேர்தரு
மாழையம் பசலைவாய் மகன்றி லென்பவை
காழக வரிசிலைக் காமன் கோடுபோல்
ஊழியும் வீந்திடா தொலிக்கு மோவென்பான். - 51



1696 - துன்னல ராகிய தொகையி னோர்தமைத்
தன்னிடை வைத்தெனைத் தளர்வு கண்டதால்
அன்னதும் அன்றியின் றாவி கொள்ளவும்
உன்னிய தோகடல் உறங்க லாதென்பான். - 52



1697 - இவ்வகை யாமினி யெல்லை முற்றவும்
வெவ்வழல் சுற்றிடும் விரக நோய்தெற
உய்வகை யொன்றிலன் உயங்கல் அல்லது
செய்வது பிறிதிலன் தெருளில் சிந்தையான். - 53



1698 - வேறு
ஆக்கம் இத்திறம் அடைவுழிப் பத்துநூ றடுத்த
நோக்க முற்றவன் சசிபொருட் டுற்றநோய் அதனை
நீக்கு கின்றனன் யானெனா நினைந்துளான் என்ன
மாக்கள் பூண்டதேர் வெய்யவன் குணதிசை வந்தான். - 54



1699 - வெம்பு தொல்லிருள் அவுணர்தங் குழுவினை வீட்டி
உம்பர் மேற்செலும் மதியெனும் மடங்கலை உருத்துப்
பைம்பொன் வெஞ்சுடர்க் கரங்களால் அதன்வலி படுக்குஞ்
சிம்பு ளாமெனத் தோன்றினன் செங்கதிர்க் கடவுள். - 55



1700 - தொடர்ந்த ஞாயிறு விடுத்திடுங் கதிர்களாந் தூசி
படர்ந்த காலையில் நிலவெனும் அனிகமுன் பட்ட
அடைந்த மீனெனுந் துணைவரும் பொன்றினர் அமர்செய்
துடைந்த மன்னரில் போயினன் உடுபதிக் கடவுள். - 56



1701 - விரிந்த பல்கதிர் அனிகத்தை வெய்யவன் விடுப்பத்
துரந்த சோமனை அவன்புறங் காட்டினன் தொலைந்து
கரந்து போதலும் பின்னுறச் சென்றில களத்தில
இரிந்து ளோரையுந் தொடர்வரோ சூரர்தம் இனத்தோர். - 57



1702 - திங்கள் தன்குறை உணர்த்தவாய் திறந்தெனச் செய்ய
பங்க யங்கள்போ தவிழ்ந்தன குமுதங்கள் பலவுந்
தங்கள் நாயகன் உடைந்தது நோக்கியே தபனற்
கங்கை கூப்பிய திறனென ஒடுங்கிய அன்றே. - 58



1703 - வனமெ ழுந்தன வனசமு மெழுந்தன வரியின்
இனமெ ழுந்தன மாக்களும் எழுந்தன எழில்சேர்
அனமெ ழுந்தன புள்ளெலாம் எழுந்தன அவற்றின்
மனமெ ழுந்தன எழுந்தன மக்களின் தொகையே. - 59



1704 - ஞாயி றுற்றவவ் வளவையின் நனந்தலை உலகில்
ஏயெ னச்செறி இருளெலாம் மறைந்திருந் தென்னச்
சேய ரிக்கணி தந்திடு தௌ¤வில்கா மத்து
மாயி ருட்டொகை யொடுங்கிய திந்திரன் மனத்துள். - 60



1705 - கையி கந்துபோய்த் தன்னுயிர் அலைத்தகா மத்தீப்
பைய விந்திடு பாந்தள்போல் தணிதலும் பதைப்புற்
றொய்யெ னக்கடி தெழுநதனன் நகைத்து¦ளி குற்றான்
ஐய கோவிது வருவதே எனக்கென அறைந்தான். - 62



1706 - தீமை யுள்ளன யாவையுந் தந்திடுஞ் சிறப்புந்
தோமில் செல்வமுங் கெடுக்கும்நல் லுணர்வினைத் தொலைக்கும்
ஏம நன்னெறி தடுத்திருள் உய்த்திடும் இதனால்
காம மன்றியே ஒருபகை உண்டுகொல் கருதில். - 63



1707 - என்ப துன்னியே இந்திரன் ஆண்டைவைப் பிகந்து
தன்பு றந்தனிற் கடவுளர் குழுவெலாஞ் சார
அன்பொ டேபடர்ந் தறுமுகன் அடிகளை அடைந்து
முன்பு தாழ்ந்தனன் உரோமமுஞ் செங்கையும் முகிழ்ப்ப. - 63



1708 - தொழுத கையினன் கோட்டிய மெய்யினன் துகிலத்
தெழுது பாவையில் ஆன்றமை புலத்தினன் இறைஞ்சிப்
புழுதி தோய்தரும் உறுப்பினன் சுருதியின் பொருண்மை
முழுதும் ஊறிய துதியின னாகிமுன் நின்றான். - 64



1709 - கரிய வன்றனைச் செய்யவன் கருணைசெய் தருளி
வருதி யென்றுகூய் மறைகளும் வரம்புகாண் கில்லா
அரன தாள்களை அருச்சனை புரிதுநாம் அதனுக்
குரிய வாயபல் பரணமுந் தருதியென் றுரைத்தான். - 65



1710 - உரைத்த வெல்லையில் தொழுதுபோய் உழையரில் பலரைக்
கரைத்து வீற்றுவீற் றேவியே கடிமலர்க் கண்ணி
திரைத்து கிற்படா நறும்புனல் அவிபுகை தீபம்
விரைத்த கந்தங்க ளேனவுந் தந்தனன் விரைவில். - 66



1711 - அவ்வக் காலையில் ஆறுமா முகனுடைய யடிகள்
தெய்வக் கம்மியற் கொண்டோரு சினகரம் இயற்றிச்
சைவத் தந்திர விதியுளி நாடியே தாதை
எவ்வெக் காலமும் நிலையதோர் உருவுசெய் திட்டான். - 67



1712 - தேவு சால்மணிப் பீடத்தில் ஈசனைச் சேர்த்தி
ஆவின் ஓரைந்தும் அமுதமும் வரிசையால் ஆட்டித்
தாவி லாததோர் வாலிதாம் அணித்துகில் சாத்திப்
பூவின் மாலிகை செய்யசாந் தத்தொடும் புனைந்தான். - 68



1713 - மருந்தி னாற்றவுஞ் சுவையன வாலுவ நூல்போய்த்
திருந்தி னார்களும் வியப்பன திறம்பல வாகிப்
பொருந்து கின்றன நிரல்அமை கருனையம் புழுக்கல்
சொரிந்து பொற்கலத் தருத்தினன் மந்திரத் தொடர்பால். - 69



1714 - கந்தம் வௌ¢ளிலை பூகநற் காயிவை கலந்து
தந்து பின்முறை அருத்தினன் புகைசுடர் தலையா
வந்த பான்மைக ளியாவையும் வரிசையா லுதவி
முந்து கைதொழூஉப் போற்றினன் மும்முறை வணங்கி. - 70



1715 - வேறு
இருவரும் உணர்கிலா திருந்த தாள்களைச்
சரவண மிசைவரு தனயன் பூசனை
புரிதலும் உமையொரு புடையிற் சேர்தர
அருள்விடை மீமிசை அண்ணல் தோன்றினான். - 71



1716 - கார்த்திகை காதலன் கறைமி டற்றுடை
மூர்த்திநல் லருள்செய முன்னி வந்தது
பார்த்தனன் எழுந்தனன் பணிந்து சென்னிமேற்
சேர்த்திய கரத்தொடு சென்று போற்றினான். - 72



1717 - செயிர்ப்பறு நந்திதன் திறத்தில் வீரரும்
வியர்ப்பினில் வந்தெழு வீர ருங்குழீஇக்
கயற்புரை கண்ணுமை கணவற் காணுறீஇ
மயிர்ப்புறம் பொடிப்புற வணங்கி ஏத்தினார். - 73



1718 - முண்டகன் முதல்வரும் முரண்கொள் பூதருங்
கண்டனர் அனையது கரங்கள் கூப்பியே
மண்டனின் மும்முறை வணங்கி வானகம்
எண்டிசை செவிடுற ஏத்தல் மேயினார். - 74



1719 - வேறு
ஆயது காலை தன்னில் அருவுரு வாகும் அண்ணல்
சேயினை நோக்கி உன்றன் வழிபடற் குவகை செய்தேம்
நீயிது கோடி யென்னா நிரந்தபல் புவன முற்றும்
ஏயென முடிவு செய்யும் படைக்கலத் திறையை ஈந்தான். - 75



1720 - மற்றியது நம்பால் தோன்றும் வான்படை மாயன் வேதாப்
பெற்றுள தன்றி யார்இப் பெரும்படை பரிக்கும் நீரார்
முற்றுயிர் உண்ணும் வெஞ்சூர் முரட்படை தொலைப்பான் ஈது
பற்றுதி மைந்த என்னாப் பராபரன் அருளிப் போனான். - 76



1721 - கருணைசெய் பரமன் சேணிற் கரந்தனன் போன காலை
அருள்பெறு நெடுவேல் அண்ணல் அன்னவற் போற்றிப் பின்னை
விரவிய இலக்கத் தொன்பான் வீரரும் அயனும் ஏனைச்
சுரர்களும் வழுத்திச் செல்லத் தூயதன் தேரிற் புக்கான். - 77



1722 - சில்லியந் தேர்மேற் செவ்வேள் சேர்தலும் உலவை வேந்தன்
வல்லைதன் தமர்க ளோடும் வாம்பரி கடாவி உய்ப்ப
எல்லையிற் பரிதி தோன்ற எழுதரும் உயிர்க ளேபோல்
ஒல்லென எழுந்த தம்மா உருகெழு பூத வௌ¢ளம். - 78



1723 - சாரத நீத்த மெல்லாந் தரையின்நின் றெழுந்து சூழ்ந்து
போரணி யணிந்து போந்த புடைதனில் இலக்கத் தொன்பான்
வீரருஞ் சுரர்கள் யாரும் மேவினர் வந்தார் வான்றோய
தேர்மிசை அவர்க்கு நாப்பட் சென்றன் குமரச் செம்மல். - 79



1724 - மண்ணியங் கரையிற் றென்பால் வகுத்தசேய் ஞல்லூர் நீங்கி
எண்ணிய வுதவும்பொன்னியிகந் திடைமருதி னோடு
தண்ணியல் மஞ்ஞை யாடுந் தண்டுறை பறிய லூருங்
கண்ணுதல் இறைவன் தானம் ஏனவுங் கண்டு போனான். - 80



1725 - எழில்வளஞ் சுரக்குந் தொல்லை இலஞ்சியங் கானம் நோக்கி
மழவிடை இறைவன் பொற்றாள் வணங்கியே மலர்மென் பாவை
முழுதுள திருவும் என்றும் முடிவிம்மங் கலமும் எய்த
விழுமிதின் நோற்றுப் பெற்ற வியன்திரு வாரூர் கண்டான். - 81

ஆகத் திருவிருத்தம் - 1725
------

25. சுரம்புகு படலம் (1726 - 1765)




1726 - புற்றிடங் கொண்ட புத்தேள் புரந்தரற் கருள்செய் திட்ட
நற்றலந் தன்னைச் சேர்ந்த நகரமுள் ளனவுங் காணூஉக்
கொற்றவெங் கதிர்வேல் அண்ணல் கொல்லுலை அழலிற் செக்கர்
பற்றிய இரும்பு போலும் பாலையங் கானத் துற்றான். - 1



1727 - வேறு
ஏழு நேமியும் பெரும்புறக் கடலுமெண் டிசையுஞ்
சூழ அன்னதால் அழிவின்றித் தொன்மைபோ லாகி
ஆழி யுள்ளுறும் வடவையின் அவற்றினைப் பருகி
ஊழி தன்னினும் இருப்பதவ் வுயர்பெரும் பாலை. - 2



1728 - அண்டர் நாயகன் உலகடும் மகந்தனக் காகும்
பண்ட மேசெறி பல்வளம் ஆருயிர் பசுக்கள்
மண்டு நேமிநெய் நிலங்கல மாயுற மலர்தீக்
குண்ட மாயது கள்ளிசூழ் கொடியவெம் பாலை. - 3



1729 - வண்ண ஒண்சுதை மெய்யுடை வரநதி கேள்வன்
நண்ணு தொல்லுல காகியே நரலையுற் றென்னத்
தண்ணி லாவெழு நாத்தலை இரண்டுடைத் தழலின்
பண்ண வற்குல காயது முதுபெரும் பாலை. - 4



1730 - உடைய தொல்குலக் கேண்மையால் அவ்வனத் துறையுங்
கொடிய வன்னிபாற் சென்றதோ வெப்பமேல் கொண்டு
நடுந டுங்கிவெம் புகையுமிழ்ந் தரற்றிநா வுலர்ந்து
கடல்ப டிந்துநீர் பருகுமால் வடவையங் கனலே. - 5



1731 - கற்றை யங்கதிர்ப் பரிதியும் மதியுமக் கானஞ்
சுற்றி யேகுவ தல்லது மிசைபுகார் சுரரும்
மற்று ளார்களும் அனையரே எழிலியும் மருத்தும்
எற்றை வைகலும் அதன்புடை போகவும் இசையா. - 6



1732 - சேனம் வெம்பணி ஒண்புறா விரலைமான் செந்நாய்
ஆனை யாதிகள் அவ்வனத்திருக்கவும் ஆவி
போன தில்லையால் அங்கியிற் றோங்கிய பொருள்கள்
மேனி கன்றுவ தன்றியே விளியுமோ அதனால். - 7



1733 - எண்ணி னுஞ்சுடும் பாலையங் கானிடை எழுந்த
கண்ண கன்புகை அழல்படு கின்றகாட் சியவே
விண்ணின் நீலமுஞ் செக்கரும் அவற்றினால் வெடித்த
புண்ணும் மொக்குளுங் கதிர்களும் உடுக்களும் போலாம். - 8



1734 - வேக வெய்யவன் புடையுறா தவ்வன மிசையே
போக வோரிறை எழுந்தழல் சுட்டது போலும்
ஏகு தேரொரு காலிலா திழந்ததால் இருகால்
பாகி ழந்தனன் அவனன்கதிர் அங்கிபட் டனவே. - 9



1735 - தங்கள் தொல்பவம் அகன்றிலா விண்ணவர் தம்மைத்
துங்க முத்தியின் பொருட்டினால் அடைபவர் தொகைபோல்
அங்கம் நொந்துதம் போலவே வெப்பமுற் றயருங்
கங்கம் நாடியே நீழலும் கடைவன கலைகள். - 10



1736 - கோல வெங்கதிர் மதியிவர் வைகலுங் கொடிய
பாலை வெஞ்சுரத் தாரழல் வெம்மைபட் டனரோ
காலை தன்னினும் மாலையம் பொழுதினுங் கங்குல்
வேலை தன்னிலும் பிறவினும் வேலைநீர் படிவார். - 11



1737 - தொடரும் வானவர் யாவரும் ஐயைதாள் தொழுவார்
கொடிய பாலைமுன் னுணர்கிலா தணுகினர் கொல்லோ
அடிசி வந்தகம் வெம்பியே அமுதமுண் டதற்காப்
படியின் மேலென்றுஞ் செல்கிலர் விண்மிசைப் படர்வார். - 12



1738 - ¢ளி தாகிய தலைமையிற் பிறந்துளோர் உலகம்
எள்ளும் நல்குர வெய்தலால் இழிந்தவர் கண்ணுங்
கொள்ளு மாரொரு பயன்குறித் தேகல் போற்கொடிய
கள்ளி தன்புடை நீழலுக் கொதுங்குவ கரிகள். - 13



1739 - இரவி கம்மியன் சுட்டுறு கோல்கதிர் எரிதீ
மருவு செந்தரை பொறிமணி கொள்கலம் வறுங்கான்
கரிக ளேகரி காற்குழல் துதிக்கைநீர் கானல்
புரித ரும்பணி வெந்திடும் பணிக்குலம் போலும். - 14



1740 - ஆன்ற வான்புவி நதிப்புனல் பாதலம் அதன்கண்
தோன்று நீத்தநீர் யாவையும் ஒருங்குறத் துற்றுச்
சான்ற பாலையஞ் செந்தழல் அப்புனல் தன்னைக்
கான்ற வாறெனக் கிளர்வன அந்நிலக் கானல். - 15



1741 - விஞ்சு கானல்வெண் டேரினை யாறென விரும்பி
நெஞ்சில் உன்னியே இரலைமான் மடப்பிடி நெடுந்தாட்
குஞ்ச ரந்திரிந் துலைவன கொடியவெம் பணிகால்
நஞ்சு தன்னையும் அருந்துவ ஞமலிநீர் நசையால். - 16



1742 - செய்ய மண்மகள் உலப்புறா உந்தியந் தீயாய்
வெய்ய வன்செலற் கரியவப் பாலைமே வுதலான்
மொயயில் வெம்பணி புகையழல் உமிழ்வன முரணும்
மையு றுங்கொடு நஞ்சொடு கான்றசெம் மணிகள். - 17



1743 - முளையின் அஞ்சொரி முத்தமும் முந்துசெம் பரலும்
அளவில் பாந்தளின் மணிகளும் ஈண்டியே அமர்தல்
விளிவில் அவ்வனத் தீச்சுடத் தனதுமெய் வெடித்தே
உளையும் மண்மகள் மொக்குளுற் றிடுதிறன் ஒக்கும். - 18



1744 - கள்ளி பட்டன பாலையுந் தீந்தன கரிந்து
முள்ளி பட்டன எரிந்தன குராமரம் முளிந்து
கொள்ளி பட்டன காரகில் அன்னதாற் கொடுந்தீப்
புள்ளி பட்டது போன்றது பாலையம் புவியே. - 19



1745 - இன்ன தாகிய பாலையஞ் சுரத்திடை இறைவன்
தன்ன தாகிய தானைக ளொடுந்தலைப் படலும்
மின்னு மாமுகில் பொழிந்தபின் தண்ணளி மிக்கு
மன்னு கின்றபூங் குறிஞ்சிபோ லாயதவ் வனமே. - 20



1746 - ஆற்ற ருந்திறல் அங்கிதன் அரசியல் முறையை
மாற்றி எம்பிரான் வருணற்கு வழங்கினா னென்ன
ஏற்ற மாகிய வெம்மைபோய் நீங்கியே எவரும்
போற்று நீரொடு தண்ணளி பெற்றதப் புவியே. - 21



1747 - காதல் நீங்கலா தலமரும் ஆருயிர்க் கரணம்
ஆதி ஈசன தருளினால் அவனதா கியபோல்
கூது நீரிலா தழல்படு வெய்யகான் இளையோன்
போத லாற்குளிர் கொண்டது நறுமலர்ப் பொழிலாய். - 22



1748 - புறநெ றிக்கணே வீழ்ந்துளோர் சிவனருள் புகுங்கால்
அறிவும் ஆற்றலுங் குறிகளும் வேறுபட் டனபோல்
வறிய செந்தழல் வெவ்வனம் வேலவன் வரலால்
நறிய தண்மலர்ச் சோலையாய் உவகைநல் கியதே. - 23



1749 - வேறு
நீரறு முரம்பின் றன்மை நீங்குமச் சுரத்தின் தன்பால்
ஈரறு புயத்தன் செல்ல எழில்கெழு பரங்குன் றத்தில்
பாரறு தவம்பூண் டுள்ள பராசரன் சிறார்க ளாய
ஓரறு வகைமை யோரும் ஓதியால் அதனைக் கண்டார். - 24



1750 - தத்தனே அனந்தன் நந்தி சதுர்முகன் பரிதிப் பாணி
மெய்த்தவ மாலி என்ன மேவுமூ விருவர் தாமும்
அத்தன தருளை முன்னி அடுக்கலின் இருக்கை நீங்கி
உத்தர நடவை யெய்தி ஒய்யெனப் படர்த லுற்றார். - 25



1751 - ஆர்வல ராகும் மைந்தர் அறுவரும் அளகை நேடிப்
பார்¢வல்வந் தணையு மாபோல் பாலையென் றுரைக்கு மெல்லை
நேர்வரு கின்ற காலை நெடும்படை நீத்தஞ் சூழச்
சூர்வினை முடிப்பான் செல்லுந் தோன்றல்வந் தணிய னானான். - 26



1752 - அணிமையிற் சேயோன் நண்ண ஆறுமா முகமும் பன்னீர்
இணைதவிர் புயமுங் கையும் ஏந்தெழிற் படையின் சீரும்
மணியணி மார்புஞ் செங்கேழ் வான்றுகின் மருங்கும் பாதத்
துணையுமத் துணையிற் கண்டு தொழுதுகண் களிப்புக் கொண்டார். - 27



1753 - மூவிரு திறத்தி னோரும் முற்றொருங் குணர்ந்தள்ளல்
பூவடி வணங்கித் தேனீப் புதுநறா அருந்தி யார்த்து
மேவருந் தன்மைத் தென்ன வியப்பொடு வழுத்தி நின்று
தேவர்கள் தேவ எம்பால் திருவருள் செய்தி யென்றார். - 28



1754 - என்றிவை இருமூ வோரும் இசைத்துழி உயிர்கட் கெல்லாம்
ஒன்றிய உயிரு மாகி உணர்வுமாய் இருந்த மூர்த்தி
தன்றிரு மலர்த்தாள் முன்னந் தலையளி யோடு தாழ்ந்து
நின்றுகை தொதிட் டன்னோர் நிலைமையை மகவான் கூறும். - 29



1755 - மறுவறு பராச ரன்றன் மதலைக ளாகு மின்னோர்
அறுவருஞ் சிறாரே யாகி ஆடுறு செவ்வி தன்னில்
நிறைதரு சரவ ணத்து நெடுந்தடம் புனலிற் பாய்ந்து
முறைமுறை புக்கு மூழ்கி முகேரென அலைக்க லுற்றார். - 30



1756 - உலைத்தலை உணர்ச்சி கொள்ள உள்ளுயிர் திரியுமாபோல்
நிலைத்தலை யின்றி யார்க்கும் நீந்தல்செய் குண்டு நீத்தம்
அலைத்தலை யடையும் எல்லை ஆயிடை வதிந்த மீன்கள்
தலைத்தலை யிரிய இன்னோர் தன்மையங் கதனைக் கண்டார். - 31



1757 - அங்கது தெரிந்து நின்றோர் ஆண்டுறு மீன்கள் பற்றித்
துங்கம துடைய கோட்டின் சூழலுய்த் துலவு மெல்லைச்
செங்கதி ருச்சி வேலைச் செய்கடன் நிரப்ப உன்னிப்
பங்கமில் நோன்மை பூண்ட பராசரன் அங்கண் வந்தான். - 32



1758 - வள்ளுறை கொண்ட தெய்வ வான்சர வணத்து வந்தோன்
பிள்ளைக ளாகும் இன்னோர் பிடித்தபுன் றொழிலை நோக்கித்
தள்ளருஞ் சினமேல் கொண்டு தனயர்காள் நீவிர் ஈண்டே
துள்ளுறு மீன மாகிச் சுலவுதி ரென்று சொற்றான். - 33



1759 - அவ்வுரை இறுக்கு முன்னர் அறுவரும் மேனாள் ஆற்றும்
வெவ்வினை யூழின் பாலால் மீனுரு வாகி அஞ்சி
எவ்வமி தகலு கின்ற தெப்கல் உரைத்தி யென்னச்
செவ்விதின் உணர்ந்து மேலைத் திருமனி புகலல் உற்றான். - 34



1760 - இத்தடந் தன்னில் மேனாள் இராறுதோ ளுடைய அண்ணல்
அத்தன தருளால் வைக அனையனை யெடுக்கும் அம்மை
மெய்த்தனம் உகுக்குந் தீம்பால் வௌ¢ளமாம் அதனை நீவிர்
துய்த்திடும் எல்லை தன்னில் தொல்லுரு வாதி ரென்றான். - 35



1761 - என்றிவை முனிவன் கூறி இரும்பகற் கடனை யாற்றிச்
சென்றனன் அதற்பின் மீனின் திருவுரு அமைந்த இன்னோர்
அன்றுதொட் டளப்பில் காலம் அலமரும் உணர்ச்சி யெய்தி
மன்றலஞ் சரவ ணத்து மாண்பெருந் தடாகத் துற்றார். - 36



1762 - ஐயநீ யனைய பொய்கை அமர்தலும் அவ்வை கண்டாங்
கொய்யென எடுப்பக் கொங்கை உகளநின் றிழிந்த தீம்பால்
துய்யதோர் நீத்த மாகித் துறுமலும் அதனைத் துய்த்து
மையல்நீங் குற்றுத் தொல்லை வாலிய வடிவம் பெற்றார். - 37



1763 - தொல்லுரு வடைந்த இன்னோர் தூமதி வேணி யண்ணல்
நல்லருள் அதனால் வந்து நவையகல் பரங்குன் றத்தின்
எல்லையில் விரதம் பூண்டாங் கிருந்தனர் எந்தை ஈண்டுச்
செல்லுவ துணர்ந்து போந்தார் என்றனன் தேவர் செம்மல். - 38



1764 - தம்மக வுரைக்குங் கூற்றந் தாதையர் வினவு மாபோல்
அம்மக பதிசொற் கேளா அருள்செய்து பராச ரன்றன்
செம்மல்கள் தம்மை நோக்கிச் செயிரறு குணத்து நீவிர்
எம்மொடு செல்வீ ரென்றான் யாவையும் உணர்ந்த பெம்மான். - 39



1765 - பராசரன் மைந்த ரன்ன பான்மையை வினவிச் செவ்வேற்
கராசரண் அடைந்தேம் என்று கட்டுரைத் திறைஞ்சிச் செல்லச்
சராசரம் யாவுந் தந்த சண்முகன் தழல்கட் கெல்லாம்
இராசர்தந் தன்மை எய்தும் இருஞ்சுரங் கடந்து போனான். - 40

ஆகத் திருவிருத்தம் - 1765
------------

26. திருச்செந்திப் படலம் (1766 - 1783)




1766 - சுரமது கடந்து நீங்கிச் சோதிவே லுடைய வள்ளல்
விரிவுனல் சடலத் தண்ணல் மேவுசெங் குன்றூர் நோக்கிப்
பருமணி வயிர முத்தம் பலவளம் பிறவும் ஆழித்
திரையெறி யலைவா யாகுஞ் செந்திமா நகரம் புக்கான். - 1



1767 - அறுமுகன் அங்க ணேகி அகிலகம் மியனை நோக்கி
இறையிலோர் சினக ரத்தை இயற்றுதி ஈண்டை என்னத்
திறனுணர் புனைவர் செம்மல் சிந்தையின் நாடித் தேவர்
உறைதிரு நகரம் வெ•க ஒரதிருக் கோயில் செய்தான். - 2



1768 - பொன்னுறும் இரதம் நீங்கிப் புறனெலாந் தானை நண்ண
அந்நகர் அதனு ளேகி அரும்பெருந் துணைவர் பூதர்
மன்னவர் அயன்மா லாதி வானவர் யாரும் போற்ற
மின்னுபொற் பீடத் தையன் வீற்றிருந் தருளி னானே. - 3



1769 - வேறு
பானிமிர் மென்குரற் பாற்படு நல்யாழ்
கானமி சைத்தனர் கந்தரு வத்தோர்
ஆனபல் சட்டுவம் அங்கைதொ றேந்தி
வானமிர் தைச்செவி வாக்குறு மாபோல். - 4



1770 - சுருதியெ லாமுணர் தூயவன் வானோர்
புரவலன் மாமுனி புங்கவர் யாரும்
மருமலர் மாரி வழுத்தினர் வீசி
இருபுடை தன்னினும் எய்தினர் ஈண்டி. - 5



1771 - வாலிய தூயொளி வானதி யாவும்
பாலகன் மெய்யணி பார்த்தனர் ஆடி
ஏலுறு பாங்கரின் ஈண்டிய வாபோல்
காலினர் சாமரை கைக்கொ டசைத்தார். - 6



1772 - ஒண்ணிழல் மாமதி யோரிரு வடிவாய்
அண்ணல் முகத்தெழி லார்ந்திட நண்ணி
விண்ணிடை நின்றென வெங்கனல் வருணன்
தண்ணிழல் வெண்குடை தாங்கினர் நின்றார். - 7



1773 - கட்டழல் கான்றிடு காமரு நாகம்
எட்டும லாதன யாவையும் ஈண்டி
உட்டௌ¤ வாற்பணி உற்றென ஆல
வட்டம சைத்தனர் வானவர் பல்லோர். - 8



1774 - வானுயர் தோள்விறல் வாகெனும் அண்ணல்
தானுடை வாள்கொடு சார்ந்தபயல் நிற்ப
ஏனைய தம்பியர் எண்மர் இலக்கர்
ஆனவர் போற்றி அகன்கடை நின்றார். - 9



1775 - வேறு
பொருந்தி இன்னவர் புறத்துற அங்கண்
இருந்த ஞானமுதல் எல்லையில் காலம்
வருந்து கின்றமக வான்முகம் நோக்கித்
தெரிந்தி டாதவரின் இன்னன செப்பும். - 10



1776 - துறந்து நீதியமர் சூர்முத லானோர்
பிறந்த வாறுமவர் பேணிய நோன்பும்
இறந்த செய்யவரம் எய்திய வாறுஞ்
சிறந்து பின்னரசு செய்திடு மாறும். - 1



1777 - மற்ற வெய்யவர்தம் மாயமும் முற்கொள்
வெற்றி யும்வலியும் மேன்மையும் நும்பால்
இற்றை நாள்வரை இயற்றிய துன்பும்
முற்று மொன்றற் மொழிந்திடு கென்றான். - 12



1778 - கோக்கு மாரன்இவை கூற இசைந்தே
மீக்கொள் பொன்னுலக வேந்தயல் நின்ற
வாக்கின் வல்லகுர வன்றனை அன்பால்
நோக்கி நீயிவை நுவன்றருள் கென்றான். - 13



1779 - வச்சி ரங்கொள்கரன் மற்றது செப்ப
அச்செ னக்குரவன் அன்ன திசைந்தே
செச்சை மொய்ம்புடைய சேயிரு பொற்றான்
உச்சி கொண்டுதொழு தின்ன துரைப்பான். - 14



1780 - அறிதி எப்பொருளும் ஆவிக டோறுஞ்
செறிதி எங்கள்துயர் சிந்துதல் முன்னிக்
குறிய சேயுருவு கொண்டனை யார்க்கும்
இறைவ நின்செயலை யாருணர் கிற்பார். - 15



1781 - எல்லை யில்புவனம் யாவையும் யாண்டும்
ஒல்லு மூவரும் உயிர்தொகை யாவுந்
தொல்லை மேனிகொடு தோன்றினை யால்நீ
வல்ல மாயவியல் மற்றெவர் தேர்வார். - 16



1782 - வெய்யர் தன்மையை வினாவிய தன்மை
ஐய அன்னதை யறிந்திட அன்றே
கைய ரேந்துயர் களைந்துள மீதில்
செய்ய இன்புதவு சீரரு ளாமால். - 17



1783 - ஆகையால் அவுணர் தன்மைக ளெல்லாம்
போகு மெல்லைபுகல் கின்றனன் என்னா
வாகை சேர்குமர வள்ளலை நோக்கி
ஓகை யோடரசன் ஓதிடு கின்றான். - 18

ஆகத் திருவிருத்தம் - 1783
-------
உற்பத்தி காண்டம் முற்றுப்பெற்றது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்