Kanta purāṇam XI b


சைவ சமய நூல்கள்

Back

கந்த புராணம் XI B
கச்சியப்ப சிவாச்சாரியார்



கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - பாகம் 11

6. தக்ஷ காண்டம்/ படலம் 11 - 13 (404 - 907)


11. சாலை செய் படலம் 404-454

12. ததீசிப் படலம் 455-519

13. ததீசி யுத்தரப் படலம் 520-907

    6. தக்ஷ காண்டம்

    11. சாலை செய் படலம் (404-454)




    404 - அன்றுமுன் னாகவே அளப்பில் காலமா
    ஒன்றுமவ் வேள்வியில் ஓம்பு கின்றிலர்
    துன்றிய முனிவருஞ் சுரரும் பார்தனில்
    முன்றிகழ் அந்தணர் முதலி னோர்களும். - 1



    405 - ஓர்ந்தனன் அன்னதை ஊழின் தீநெறி
    சார்ந்திடு தக்கன்ஓர் வைகல் தன்முனஞ்
    சேர்ந்திடும் இமையவர் திறத்தை நோக்கியே
    ஈர்ந்திடு தீயதொன் றியம்பு கின்றனன். - 2



    406 - எடுத்திடு சுருதியின் இயற்கை முற்றுற
    வடித்திடு தேவிர்காள் வரம்பில் காலமா
    அடுத்திடும் வேள்விய தாற்றல் இன்றியே
    விடுத்ததென் அனையது விளம்பு வீரென்றான். - 3



    407 - வேறு
    எய்யாது வெய்ய வினையீட்டு தக்கன் இவைசெப்ப லோடும் இமையோர்
    மெய்யார ணத்தன் முதனாள் இயற்று வேள்விக் களத்தில் அவியூண்
    ஐயான னத்தர் பெறநல்கல் என்றி அதனாலும் நந்தி யடிகள்
    பொய்யாத சாப உரையாலும் யாங்கள் புரியாதி ருத்து மெனவே. - 4



    408 - அந்நாளில் ஈசன் விடுகின்ற நந்தி அறைகின்ற சாபம் அதனுக்
    கிந்நாளும் அஞ்சி மகவேள்வி தன்னில் யாதுஞ்செ யாது திரிவீர்
    முன்னாக யானொர் பெருமா மகத்தை முறைசெய்வன் முற்றி இடுமேல்
    பின்னாக நீவிர் புரிமின்க ளென்று பீடில்ல வன்பு கலவே. - 5



    409 - நீமுன்னொர் வேள்வி புரிகின்ற தைய நெறியென்றி சைப்ப அவரைப்
    போமின்கள் யாரும் எனவேபு கன்று புரிதோறு மேவி மிகவும்
    ஏமங்கொள் சிந்தை யுளதக்கன் ஊழின் இயல்பால்அ தற்பின் ஒருநாள்
    ஓமஞ்செய் வேள்வி புரிவான்வி ரும்பி உள்ளத்தில் உன்னி முயல்வான். - 6



    410 - தொட்டாம னுத்தொல் மயனைத் தனாது சுதரென்ன முன்னம் உதவிக்
    கட்டாம ரைக்குள் விதிபோல நல்கு கலைகற்று ளானை விளியா
    முட்டாத வேள்வி யதுவொன்று செய்வன் முனிவோர்கள் தேவர் உறைவான்
    எட்டாத வெல்லை தனில்இன்றொர் சாலை இயல்பால்வி தித்தி எனவே.
    (1. அன்று - நந்தியம் பெருமாள் சபித்த காலம்.
    4. நல்கல் - அளிக்காதே. என்றி - என்றனை.
    5. பீடில்லவன் - பெருமையற்ற தக்கன். 6. ஏமம் - இறுமாப்பு.
    7. தொட்டா மனு மயன் - துவட்டா, மனு, மயன் என்போர்;
    இவர்கள் விசுவகன்மாக்கள். தனாது சுதர் - தன்னுடைய புதல்வர்கள்.)
    - 7



    411 - வேறு
    இனிதென இறைஞ்சியே ஏகிக் கங்கையம்
    புனனதி அதனொரு புடைய தாகிய
    கனகலம் என்பதோர் கவின்கொள் வைப்பிடை
    வினைபுரி கம்மியன் விதித்தல் மேயினான். - 8



    412 - பத்துநூ றியோசனைப் பரப்பும் நீளமும்
    ஒத்திடும் வகையதா ஒல்லை நாடியே
    வித்தக வன்மையால் வேள்விக் கோரரண்
    அத்தகு பொழுதினில் அமைத்து நல்கினான். - 9



    413 - நாற்றிசை மருங்கினும் நான்கு கோபுரம்
    வீற்றுவீற் றுதவிய வியன்கொள் நொச்சியில்
    ஏற்றிடு ஞாயில்கள் இயற்றி அன்னதை
    ஆற்றலை யுடையதோ ரரணம் ஆக்கினான். - 10



    414 - உள்ளுற அணங்கினர் அறைதற் கோரிடை
    தௌ¢ளிதின் நல்கியே தேவர் தம்மொடு
    வள்ளுறை வேற்கணார் மருவி ஆடுவான்
    புள்ளுறை வாவியும் பொழிதலும் ஆக்கினான். - 11



    415 - அப்பரி சமைத்துமேல் அமரர் வேதியர்
    எப்பரி சனரும்வந் தீண்டி வெ·கின
    துய்ப்பதற் கொத்திடு சுவைகொள் தீம்பதம்
    வைப்பதோர் இருக்கையும் மரபில் தந்தனன். - 12



    416 - அந்தண ராதியோர் அமரர் யாவரும்
    வந்துண வருந்துவான் வரமபில் சாலைகள்
    இந்திர வுலகென இமைப்பில் ஈந்தனன்
    முந்தையின் மகவிதி முழுதும் நாடினான். - 13



    417 - விருந்தினர் பெற்றிட விரைமென் பாளிதம்
    நரந்தமொ டாரம்வீ நறைகொள் மான்மதம்
    அருந்துறு வௌ¢ளடை ஆன பாகிவை
    இருந்திடு சாலையும் இயற்றி னானரோ. - 14



    418 - ஆனபல் வகையுடை ஆடை செய்யபூண்
    மேனதொர் அம்பொனின் வியன்கொள் குப்பைகள்
    ஏனைய வெறுக்கைகள் மணிகள் யாவையுந்
    தானம தியற்றிடத் தானம் நல்கினான். - 15



    419 - கடிகெழு சததளக் கமல மேலுறை
    அடிகள்தன் நகர்கொலென் றையஞ் செய்திட
    நடைதரு வேள்விசெய் நலங்கொள் சாலைய
    திடையுற அமைத்தனன் யாரும் போற்றவே.
    (8. கனகலம் - கங்கையின் அருகுள்ள ஓர் இடம்.
    9. வித்தக வன்மை - கல்வித் திறம். 10. நொச்சி - மதில்.
    ஞாயில் - மதிலுறுப்பு.
    11. வள் - கூர்மை. 14. பாளிதம் - பாற்சோறு. ஆரம் - சந்தனம்.
    நரந்தம் - வாசனைப் பொருள். வீ - மலர். மான்மதம் - கஸ்தூரி.
    வௌ¢ளடையான பாகு - வெற்றிலைப் பாக்கு.) - 16



    420 - நூறெனும் யோசனை நுவலும் எல்லையின்
    மாறகல் சாலையின் வன்னி சேர்தரக்
    கூறிய மூவகைக் குண்டம் வேதிகை
    வேறுள பரிசெலாம் விதித்தல் செய்தனன். - 17



    421 - மேலொடு கீழ்புடை வெறுக்கை யின்மிசைக்
    கோலநன் மணிகளாற் குயிற்றி வாவியுஞ்
    சோலையும் பறவையுந் தோமில் தேவரும்
    போலிய ஓவியம் புனைந்திட் டானரோ. - 18



    422 - புண்டரீ காசனம் பொருந்து நான்முகன்
    தண்டுள வோன்இவர் தமக்கி ருக்கையும்
    எண்டிசை வாணருக் கியலி ருக்கையும்
    அண்டருக் கிருக்கையும் அருளல் செய்துமேல். - 19



    423 - தொக்குறு முனிவரர் தொல்லை வேதியர்
    ஒக்கலின் மேயினர் உறையி ருக்கையுந்
    தக்கனுக் கிருக்கையுஞ் சமைத்து நல்கினான்
    வைக்குறு தவிசின்நூன் மரபின் நாடியே. - 20



    424 - தக்கனை வணங்கிநின் சாலை முற்றிய
    புக்கனை காண்கெனப் புனைவன் செப்பலும்
    அக்கண மதுதெரிந் தளவி லாதர
    மிக்கனன் மகிழ்ந்தனன் விம்மி தத்தினான். - 21



    425 - பூங்கம லத்தமர் புனிதன் கான்முளை
    பாங்கரின் முனிவரில் பலரைக் கூவியே
    தீங்கனல் மாமகஞ் செய்ய நூன்முறை
    யாங்கனம் வலித்தனன் அவர்க்குச் செப்புவான். - 22



    426 - தருவுறு சமிதைகள் சாகை தண்ணடை
    பரிதிகள் மதலைநாண் பறப்பை பல்பசு
    அரணிநன் முதிரைகள் ஆதி யாவிதற்
    குரியன உய்த்திரென் றொல்லை ஏவினான். - 23



    427 - ஆனொடு நிதிகளை மணியை ஐந்தருக்
    கானினை அழைத்துநம் மகத்தைக் காணிய
    மாநிலத் தந்தணா¢ வருவர் உண்டியும்
    ஏனைய பொருள்களும் ஈமென் றோதினான்.
    (17. மூவகைக் குண்டம் - சதுரம், வட்டம், கோணம் என்னும் முத்திற
    அமைப்பான ஓம குண்டங்கள்.
    19. எண்டிசை வாணர் - அட்ட திக்குப் பாலகர்.
    20. ஒக்கல் - சுற்றத்தார். 22. கான்முளை - புதல்வன்.
    23. சாகை - கிளைகள். தண்ணடை - பச்சிலைகள்.
    பரிதிகள் - யாக மேடைகள். மதலை - யூபஸ்தம்பங்கள்.
    நாண் - தருப்பைக் கயிறு. பறப்பை - சிருக்கு சிருவம்.
    பல்பசு - ஆடு முதலிய பசுக்கள். அரணி - தீக்கடைக்கோல்.
    24. ஆன் - காமதேனு. ரூதி - சங்கநிதி, பதுமநிதி. மணி - சிந்தாமணி.
    தரு - கற்பகத்தரு.) - 24



    428 - நல்விடை கொண்டுபோய் நவையி லான்முதற்
    பல்வகை யவையெலாம் படா¢ந்து வீற்றுவீற்
    றொல்வதோ ரிடந்தொறும் உற்ற ஆயிடைச்
    செல்வதோர் பொருளெலாஞ் சிறப்பின் நல்கவே. - 25



    429 - தனதுறு கிளைஞராய்த் தணப்பி லாததோர்
    முனிவரர் தங்களின் முப்ப தாயிரர்
    துனியறு வோர்தமைச் சொன்றி ஏனவை
    அனைவரும் விருப்புற அளித்தி ரென்றனன். - 26



    430 - மற்றவர்க் கிருதிற மாத வத்தரை
    உற்றனர் யாவரும் உண்டி அன்றியே
    சொற்றன யாவையுந் தொலைவின் றீமென
    நற்றவத் தயன்மகன் நயப்புற் றேவினான். - 27



    431 - தீதினை நன்றெனத் தௌ¤யும் நான்முகன்
    காதலன் ஓர்மகங் கடிதி யற்றுவான்
    வேதியர் விண்ணவர் யாரும் மேவுவான்
    தூதரை நோக்கியே இனைய சொல்லுவான். - 28



    432 - நக்கனை யல்லதோர் நாகர் தங்களை
    மிக்குறு முனிவரை வேத மாந்தரைத்
    திக்கொடு வான்புவி யாண்டுஞ் சென்றுகூய்
    உய்க்குதி ராலென உரைத்துத் தூண்டினான். - 29



    433 - முந்துற வரித்திடும் முனிவர் அவ்வழித்
    தந்தனர் மகஞ்செயத் தகுவ யாவையும்
    வந்தன நோக்கியே மரபில் உய்த்திரென்
    றெந்தைதன் அருளிலான் இயம்பி னானரோ. - 30



    434 - வரித்திடு பான்மையின் வழாது போற்றிடும்
    இருத்தினர் தமிற்பலர் யாக சாலையுள்
    திருத்திய வேதிவாய்ச் செறிபல் பண்டமும்
    நிரைத்தனர் பறப்பையும் நிலையிற் சேர்த்தினார். - 31



    435 - அசைவறு வேதியின் அணித்தி னோரிடை
    வசைதவிர் மதலைகள் மரபின் நாட்டுபு
    பசுநிரை யாத்தனர் பாசங் கொண்டுபின்
    இசைதரு பூசையும் இயல்பின் ஆற்றினார்.
    (26. துனி - துன்பம். சொன்றி - சோறு. 29. நாகர் தேவர்கள்.) - 32



    436 - வேறு
    நடையிது நிகழும் வேலை நலமிலாத் தக்கன் நல்கும்
    விடைதலைக் கொண்டு போய வியன்பெருந் தூதர் தம்மில்
    புடவியின் மறையோர்க் கெல்லாம் புகன்றனர்சிலவர் வெய்யோன்
    உடுபதி நாள்கோள் முன்னர் உரைத்தனர் சிலவா¢ அன்றே. - 33



    437 - காவல ராகி வைகுங் கந்தரு வத்த ராதி
    ஆவதோர் திறத்தோர்க் கெல்லாம் இறைந்தனர் சிலவர் ஆசை
    மேவிய கடவு ளோர்க்கும் விளம்பினர் சிலவர் முப்பால்
    தேவா¢கள் யாருங் கேட்பச் செப்பினர் சிலவ ரன்றே. - 34



    438 - விண்ணக முதல்வ னுககு விளம்பினர் சிலவர் ஆண்டு
    நண்ணிய தேவர்க் கெல்லாம் நவின்றனர் சிலவர் மேலைப்
    புண்ணிய முனிவ ரர்க்குப் புகன்றனர் சிலவர் ஏனைப்
    பண்ணவர் முன்னஞ் சென்று பகர்ந்தனர் சிலவர் அம்மா. - 35



    439 - வானவர் முதுவன் தொல்லை மன்றன்மா நகரத் தெய்திக்
    கோனகர் வாயில் நண்ணிக் குறுகினர் காப்போர் உய்ப்ப
    மேனிறை காத லோடும் விரைந்தவற் றாழ்ந்து நின்சேய்
    ஆனவன் வேள்விக் கேக அடிகள்என் றுரைத்தார் சில்லோர். - 36



    440 - மேனகு சுடர்செய் தூய விண்டுல கதனை நண்ணி
    மானிறை கின்ற கோயில் மணிக்கடை முன்னர் எய்திச்
    சேனையந் தலைவன் உய்ப்பச் சீதரற் பணிந்து வேள்விப்
    பான்மையை தியம்பி எந்தை வருகெனப் பகர்ந்தார் சில்லோ¢. - 37



    441 - மற்றது போழது தன்னில் மாயவன் எழுந்து மா£பூ
    டுற்றிடு திருவும் பாரும் உடன்வர உவணர் கோமான்
    பொற்றடந் தோள்மேற் கொண்டு போர்ப்படை காப்பத் தன்பாற்
    பெற்றனர் சூழத் தானைப் பெருந்தகை பரவச் சென்றான். - 38



    442 - செல்லலும் அதனை நாடித் திசைமுகக் கடவுள் அங்கண்
    ஒல்லையில் எழுந்து முப்பால் ஒண்டொடி மாத ரோடும்
    அல்லியங் கமலம் நீங்கி அன்னமேற் கொண்டு மைந்தர்
    எல்லையில் முனிவர் யாரும் ஏத்தினர் சூழப் போந்தான். - 39



    443 - மாலொடு பிரமன் ஈண்டி வருதலும் மகவான் என்போன்
    வேலொடு வில்லும் வாளும் விண்ணவர் ஏந்திச் சூழ
    நாலிரு மருப்பு வௌ¢ளை நாகம துயர்த்துத் தங்கள்
    பாலுறை குரவ ரோடு பாகமார் விருப்பில் வந்தான். - 40



    444 - ஆயவன் புரத்தில் வைகும் அரம்பையே முதலா வுள்ள
    சேயிழை மார்கள் யாருந் தேவரோ டகன்றா£ எங்கள்
    நாயகன் போந்தான் என்றே நலமிகு சசியென் பாளுந்
    தூயதோர் மானத் தேறித் தோகையர் காப்பச் சென்றாள். - 41



    445 - எண்டிசைக் காவலோரும் ஈரிரு திறத்த ரான
    அண்டரும உடுக்கள் தாமும் ஆரிடத் தொகையு ளோரும்
    வண்டுளர் குமுதம் போற்றும் மதியமும் ஏனைக் கோளும்
    விண்டொடர் இயக்கர் சித்தர் விஞ்சையர் பிறரும் போந்தார்.
    (33. புடவி - பூமி. சிலவர் - சிலர். உடுபதி - சந்திரன்.
    நாள் - நட்சத்திரம். கோள் - கிரகம்.
    34. ஆசை - திக்கு. 37. சேனையந் தலைவன் - சேனாதிபதி.
    38. திருவும் பாரும் - திருமகளும் பூமகளும். உவணர் கோமான் - கருடன்.
    39. மைந்தர் - உபப்பிரமர். 40. குரவர் - வியாழன் முதலியோர்.
    பாகம் - அவிர்ப்பாகம்.
    42. ஈரிரு திறத்தரான அண்டர் - ஆதித்தர், உருத்திரர், வசுக்கள்,
    மருத்துவர் என்னும் நால்வகை தேவர்கள்.
    ஆரிடத்தொகை - முனிவர் குழாம்.) - 42



    446 - சேணிடை மதியி னோடு செறிதரும் உடுக்க ளான
    வாணுதல் மகளிர் யாரும் மகிழ்வொடு தந்தை வேள்வி
    காணிய வந்தார் ஈது கண்ணுறீஇ அவுணர் கோமான்
    சோணித புரத்துக் கேளிர் தொகையொடுந் தெடா¢ந்து சென்றான். - 43



    447 - வனைகலன் நிலவு பொற்றோள் வாசவன் முதலா வுள்ள
    இனையரும் பிறரும் எல்லாம் இருவர்தம் மருங்கும் ஈண்டிக்
    கனகல வனத்திற் செய்த கடிமகச் சாலை எய்த
    முனிவர ரோடுந் தக்கன் முன்னெதிர் கொண்டு நின்றான். - 44



    448 - எதிர்கொடு மகிழ்ந்து மேலாம் இருவர்தங் களையும் அங்கண்
    முதிர்தரு காத லோடு முறைமுறை தழுவி வானோர்
    பதிமுத லோரை நோக்கிப் பரிவுசெய் தினையர் தம்மைக்
    கதுமெனக் கொண்டு வேள்விக் கடிமனை இருக்கை புக்கான். - 45



    449 - மாலயன் தன்னை முன்னவர் மணித்தவி சிருத்தி வான
    மேலுறை மகவா னாதி விண்ணர் முனிவர் யார்க்கும்
    ஏலுறு தவிசு நல்கி இடைப்பட இருந்தான் தக்கன்
    காலுறு கடலா மென்னக் கடவுள்மா மறைக ளார்ப்ப. - 46



    450 - அல்லியங் கமல மாதும் அம்புவி மகளும் வேதாப்
    புல்லிய தெரிவை மாரும் பொருவிலா உடுவி னோருஞ்
    சொல்லருஞ் சசியும் ஏனைச் சூரினர் பிறரும் வேத
    வல்லிதன் இருக்கை நண்ணி மரபின்வீற் றிருந்தார் மன்னோ. - 47



    451 - மாமலர்க் கடவுள் மைந்தன் மகத்தினை நாடி யாருங்
    காமுறும் உண்டி மாந்திக் கதுமென மீடும் என்றே
    பூமிசை மறையோர் தாமும் முனிவரும் போந்து விண்ணோர்
    தாமுறும் அவையை நண்ணித் தகவினால் சார்த லோடும். - 48



    452 - அழைத்திடப் போன தூதர் அனைவரும் போந்து தக்கன்
    கழற்றுணை வணங்கி நிற்பக் கருணைசெய் தவரை நோக்கி
    விழுத்தகு தவத்தீர் நீவிர் விளித்தனர் தமிலு றாது
    பிழைத்தனர் உளரோ உண்டேல் மொழிமெனப் பேசல் உற்றார். - 49



    453 - அகத்தியன் சனகன் முன்னோர் அத்திரி வசிட்டன் என்பான்
    சகத்துயர் பிருகு மேலாந் ததீசிவெஞ் சாபத் தீயோன்
    பகைத்திடு புலத்தை வென்ற பராசரன் இனைய பாலார்
    மகத்தினை இகழா ஈண்டு வருகிலர் போலும் என்றார். - 50



    454 - மற்றது புகல லோடு மலரயன் புதல்வன் கேளா
    இற்றிது செய்தார் யாரே முனிவரில் இனையர் தாமோ
    நெற்றியங் கண்ணி னார்க்கும் நேயம துடைய ரென்னாச்
    செற்றமொ டுயிர்த்து நக்கான் தேவர்கள் யாரும் உட்க.
    (43. சோணிதபுரம் - ஒரு நகரம். இ·து அசுரர்கள் இருக்கும் ஒரு நகரம்.) - 51
    ஆகத் திருவிருத்தம் - 454
    -----------

    12. ததீசிப் படலம் (455-519)




    455 - அன்ன வேலையில் ஆரிடர் தம்மொடுந்
    துன்னி னானொரு தொல்லிறைக் காகவே
    முன்ன மாலமர் மூண்டெழ மற்றவன்
    தன்னை வென்ற ததீசிஎன் பானரோ. - 1



    456 - கடிது போந்து கடிமகச் சாலையின்
    இடைய தாகி இமையவர் யாவரும்
    அடையும் எல்லை அணுகலுங் கண்ணுறீஇக்
    கொடிய தக்கன் குறித்துணர் கின்றனன். - 2



    457 - ஆகும் ஆகும் அரற்குரித் தல்லன்இப்
    பாக மாமகம் பார்க்கும் பொருட்டினால்
    ஏகி னானெனக் கஞசி எனாநினைந்
    தோகை யெய்தி உளங்குளிர்ப் பாகியே. - 3



    458 - வருக ஈண்டென மற்றவன் தன்னிடை
    ஒருபெ ருந்தவி சுய்த்தலும் மாதவர்
    இரும ருங்கும் இருந்திட ஆயிடைப்
    பொருவின் மாதவப் புங்கவன் மேவியே. - 4



    459 - ஆக்கந் தீரும் அயன்புதல் வன்தனை
    நோக்கி எம்மை நொடித்ததென் நீயிவண்
    ஊக்கி யுற்றதென் ஒல்லையில் யாவையும்
    நீக்க மின்றி நிகழ்த்துதி யென்னவே. - 5



    460 - தக்கன் ஆண்டுத் ததீசியை நோக்கியே
    நக்க னென்பவன் நான்பெறுங் கன்னியை
    மிக்க காதலின் வேட்டொளித் தோர்பகல்
    உக்க மேலுய்த் துயர்வரை ஏகினான். - 6



    461 - போய பின்னைப் புதல்விக்குத் தன்பெரு
    மாயை செய்தனன் மற்றவர் தங்களை
    ஆயு மாறவ் வகன்கிரி எய்தினேன்
    ஏய தன்மை இருவருந் தேர்ந்தரோ. - 7



    462 - அடுத்த பூதரை ஆங்கவர் கூவியே
    தடுத்தி டுங்களத் தக்கனை நம்முனம்
    விடுத்தி ரல்லிர் விலக்குதி ராலென
    எடுத்தி யம்பினர் ஏயினர் போலுமால்.
    (1. ஆரிடர் - முனிவர்கள். தொல் - பழைய.
    இறை- இங்குக் குபன் என்னும் அரசன்;
    இக் குபன் என்னும் அரசனுக்காகப் போர் செய்த திருமாலைத் ததீசி
    முனிவர் வென்றார் என்பது வரலாறு; இதன் விரிவை இந்நூலில் முன்னர்க் காண்க.
    5. நொடித்தது - அழைத்தது. ஊக்குதல் - முயற்சித்தல்.
    6. உக்கம் - இடபம். உயர்வரை - கயிலைமலை.) - 8



    463 - இற்று ணர்ந்திலன் ஏகினன் பூதர்கள்
    நிற்றி நீயென்று நிந்தனை எண்ணில
    சொற்ற லோடுந் துணையதில் வௌ¢ளியம்
    பொற்றை நீங்கிப் புரம்புகுந் தேனியான். - 9



    464 - தங்கண் மாநகர் சார்ந்தனன் நீங்குழி
    எங்கண் மாதும் எனைவந்து கண்டிலன்
    மங்கை யென்செய்வள் மற்றவன் மாயையால்
    துங்க மேன்மை துறந்தனள் போயினாள். - 10



    465 - அந்த வேலை அரும்பெரும் வேள்வியொன்
    றெந்தை செய்துழி யான்சென் றரற்குமுன்
    தந்த பாகந் தடுத்தனன் அவ்வழி
    நந்தி சாபம் நவின்றனன் போயினான். - 11



    466 - வேறு
    எறுழ்படு தண்ணுமை இயம்பு கையுடைச்
    சிறுதொழில் லவன்மொழி தீச்சொற் கஞ்சியே
    முறைபடு வேள்வியை முற்றச் செய்திலன்
    குறையிடை நிறுவினன் குரவ னாகியோன். - 12



    467 - நஞ்சமர் களன்அருள் நந்தி கூறிய
    வெஞ்சொலும் என்பெரு விரத முந்தெரீஇ
    அஞ்சினர் இன்றுகா றாரும் வேள்வியை
    நெஞ்சினும் உன்னலர் நிகழ்த்தும் வேட்கையால். - 13



    468 - ஆனதொர் செயலுணர்ந் தையம் ஏற்றிடும்
    வானவன் தனக்கவி மாற்றும் பான்மையான்
    நானொரு வேள்வியை நடாத்து கின்றனன்
    ஏனைய தோர்பயன் யாதும் வேண்டலன். - 14



    469 - அப்பெரு மகந்தனக் கமரர் மாதவர்
    எப்பரி சனரும்வந் தீண்டு தொக்கனர்
    ஒப்பருந் தவத்தினீர் உமக்கும் இத்திறஞ்
    செப்பினன் விடுத்தனன் செயலி தென்னவே.
    (9. இற்று - இதனை. 10. மாது - இங்கு மகள்.
    11. எந்தை - என் தந்தையான பிரமன்.
    12. எறுழ் - வலிமை. தண்ணுமை - மத்தளம். எறுழ் படு...
    சிறுதொழிலவன் - நந்தியம் பெருமான். குரவனாகியோன் - பிரமன்.
    14. ஐயம் ஏற்றிடும் வானவன் - சிவன்.) - 15



    470 - வேறு
    தண்ணளி புரித தீசி தக்கன துரையைக் கேளாப்
    புண்ணியம் பயனின் றம்மா பொருளினிற் பவமே யென்னா
    எண்ணினன் வினைக ளீட்டு இழிதகன் இயற்கை போலாம்
    அண்ணல்தன் செயலும் என்னா அணியெயி றிலங்க நக்கான். - 16



    471 - நக்கதோர் வேலை தன்னில் நலத்தகும் ஊழிக் கான்மேன்
    மிக்கெழும் வடவை என்ன வெய்துயிர்த் துரப்பிச் சீறி
    முக்கணன் அடியான் போலும் முறுவலித் திகழ்ந்தாய் என்னத்
    தக்கனீ துரைத்த லோடுந் ததீசிமா முனிவன் சொல்வான். - 17



    472 - மலரயன் முதலே யாக வரம்பிலா உயிரை முன்னந்
    தலையளித் துதவு தாதையாய் அளித்து மாற்றி
    உலகெலா மாகி ஒன்றாய் உயிர்க்குயி ராகி மேலாய்
    இலகிய பரனை நீத்தோ யாகம்ஒன் றியற்ற நின்றாய். - 18



    473 - புங்கவர் எவர்க்கும் நல்கும் புவிபுகழ் அறிகொள் வானும்
    அங்கியின் முதலும் வேள்விக் கதிபனும் அளிக்கின் றானுஞ்
    சங்கரன் தானே வேதஞ் சாற்றுமால் மகத்துக் காதி
    இங்கொரு தேவுண் டென்னின் எழுகென உரைத்தி மாதோ. - 19



    474 - மாலயன் முதலோர் யாரும் வரம்பிலித் திருவை எய்த
    மேலைநாள் அளித்தோன் தானும் விமலனும் இனையர்க் கெல்லாம்
    மூலமுந் தனக்கு வேறொர் முதலிலா தவனும் எங்கள்
    ஆலமர் கடவுள் அன்றி அமரரில் யாவர் அம்மா. - 20



    475 - தேவதே வன்மா தேவன் சிறப்புடை ஈசன் எங்கோன்
    மூவரின் முதல்வன் ஏகன் முடிவிற்கு முடிவாய் நின்றோன்
    ஆவியுள் ஆவி யானோன் அந்தண னாதி என்றே
    ஏவரை யிசைத்த அம்மா எல்லையில் மறைக ளெல்லாம். - 21



    476 - விதிமுறை லாகி உள்ளோர் வியனுயிர்த் தொகையாம் ஈசன்
    பதியவன் பணிய தன்றே பரித்தனர் இனையர் எல்லாம்
    இதுவுமச் சுருதி வாய்மை இவையெலாம் அயர்த்து வாளா
    மதிமயங் கினையால் பேரா மாயையூ டழுந்து கின்றாய். - 22



    477 - அந்தணர்க் காதி ஈசன் ஏனையோர்க் கரியே வேதா
    இந்திரன் என்று வேதம் இயம்பிய மறையோர் தங்கண்
    முந்தையின் முதலை நீத்து முறையகன் றொழுகல் பெற்ற
    தந்தையை விலக்கி வேறு தேடுவான் தன்மை யன்றே. - 23



    478 - ஆதலின் எவர்க்கும் மேலாம் ஆதியை இகழா நிற்றல்
    பேதைமை யன்றி யீதோர் பெருமித மன்றால் ஆற்ற
    நோதக உன்னி யாரே நோற்பவா¢ அனையை நீயே
    வேதம தொழுக்கம் நீத்திவ் வேள்வியைப் புரிய நின்றாய். - 24



    479 - விலக்கினை மறையின் வாய்மை வேள்விசெய் யினுமுற் றாது
    கலக்குமேல் அமல னாணை காண்டியால் அவனுக் கஞ்சா
    வலத்தினர் யாவ ருண்டேல் மாய்வரே மறையும் எம்முன்
    இலைப்பொலி சூலம் ஏந்தும் ஏகனென் றேத்திற் றன்றே.
    (16. வினைகள் - பாவச் செயல்கள். ஈட்டும் - செய்யும்.
    17. ஊழிக்கால் - ஊழிக்காற்று. வடவை - வடவாமுகாக்கினி.
    19. மகத்துக்கு ஆதி - யாகத்தலைவன்.
    20. விமலன் - மலமற்றவன்; பரிசுத்தன். 21. ஏவரை - எவரை.
    22. அயர்த்து - மறந்து. வாளா - வீணாக. பேரா - நீங்காத.
    23. முந்தையின் முதலை - முழுமுதற் கடவுளாகிய சிவனை.) - 25



    480 - ஆதியு முடிவும் இல்லா அமலனுக் கவியை நல்கி
    வேதக முறைவ ழாது வேள்விஓம் புவது நாடாய்
    தீதுநின் எண்ணம் என்னச் சிவன்தனச் கருள்பா கத்தை
    மாதவன் தனக்கு நல்கி மாமகம் புரிவன் என்றான். - 26



    481 - அவ்வுரை கொடியோன் கூற அருந்தவ முனிவன் கேளா
    அவ்வமீது துரைத்தாய் மேலாய் யாவரும் புகழ நின்ற
    செவ்வியர் தமையி ழித்துச் சிறியரை உயர்ச்சி செய்தல்
    உய்வகை அன்றா னும்மோ ருயிர்க்கெலா முடிவீ தென்றான். - 27



    482 - ஊறுசேர் தக்கன் சொல்வான் உனதுருத் திரனை ஒப்பார்
    ஆறின்மே லைந்த வான உருத்திரர் அமர்வான் ஆசை
    ஈறுசேர் தருமீ சானர் இருந்தனர் அவர்க்கே முன்னர்
    வீறுசேர் அவியை நல்கி வேள்வியை முடிப்ப னென்றான். - 28



    483 - என்னலும் முனிவன் சொல்வான் ஈறுசெய் தகில மெல்லாந்
    தன்னிடை யொடுக்கி மீட்டுந் தாதையாய் நல்கி யாரு
    முன்னருந் திறத்தில் வைகும் உருத்திர மூர்த்திக் கொப்போ
    அன்னவன் வடிவும் பேரும் அவனருள் அதனாற் பெற்றோர். - 29



    484 - உருத்திர மூர்த்தி என்போன் உயர்பரம் பொருளா யுள்ளே
    நிருத்தம தியற்று கின்ற நித்தனாம் அவன்தன் பொற்றாள்
    கருத்திடை நினைந்தோர் அன்னான் காயமுந் திருப்பேர் தானும்
    பரிப்பரால் அனையர் எல்லை பகர்ந்திடின் உலப்பின் றாமால். - 30



    485 - ஆதிதன் நாமம் பெற்றோர் அவனியல் அடையார் கொண்ட
    ஏதமில் வடிவும் அற்றே என்னினும் இறைவ ரென்றே
    பூதல முழுதும் விண்ணும் போற்றிட இருப்பர் இந்த
    வேதனும் புகழு நீரான் மெய்ந்நெறித் தலைமை சார்வார். - 31



    486 - ஈசனை அளப்பில் காலம் இதயமேல் உன்னி நோற்றே
    ஆசக லுருவம் பெற்ற அன்பினர் போல்வர் இன்னோர்
    வாசவன் முதலோர் போல வரத்தகார் எந்தை பால்நீ
    நேசமில் லாத தன்மை நினைந்திலர் போலு மென்றான். - 32



    487 - வேறு
    என்ற காலை இருந்ததக் கன்னிது
    நன்று நாரணன் நான்முகன் நிற்கஈ
    றொன்று செய்யும் உருத்திர னாதியாய்
    நின்ற தென்கொல் நிகழத்துதி யென்னவே. - 33



    488 - விதிசி ரங்கள் வியன்முடி வேய்ந்திடும்
    பதிசி வன்தன் பதத்துணை உட்கொடு
    மதிசி றந்திட வாலிதின் வைகிய
    ததீசி யென்னுந் தவமுனி சாற்றுவான்.
    (26. நாடாய் - கருதுகின்றிலை. 27. எவ்வம் - குற்றம்.
    28. ஆறின் மேல் ஐந்து ஆன உருத்திரர் - ஏகாதச ருத்திரர்.
    ஆசைஈறு - வடகிழக்குத் திசை.
    32. உருவம் பெற்ற - சாரூபம் பெற்ற. 34. விதி சிரங்கள் -
    பிரமர்களின் தலைகள். முடி - தலைமாலை.) - 34



    489 - இருவர் தம்மொடும் எண்ணிய தன்மையால்
    ஒருவ னான உருத்திர மூர்த்தியைப்
    பெரியன் என்று பிடித்திலை அன்னதுந்
    தெரிய ஓதுவன் தேர்ந்தனை கேட்டியால். - 35



    490 - ஆதி யந்தமி லாதஎம் மண்ணலுக்
    கோது பேரும் உருவுமொர் செய்கையும்
    யாது மில்லையிவ் வாற்றினை எண்ணிலா
    வேதம் யாவும் விளம்புந் துணிபினால். - 36



    491 - அன்ன தோர்பரத் தண்ணல்தன் னாணையால்
    முன்னை யாரிருள் மூடத்துண் மூழ்கிய
    மன்னு யிர்த்தொகை வல்வினை நீக்குவான்
    உன்னி யேதன்னு ளத்தருள் செய்துமேல். - 37



    492 - உருவுஞ் செய்கையும் ஓங்கிய பேருமுன்
    அருளி னாற்கொண்ட னைத்தையும் முன்புபோல்
    தெரிய நல்கித் திசைமுக னாதியாஞ்
    சுரர்கள் யாரையுந் தொன்முறை ஈந்துபின். - 38



    493 - ஏற்ற தொல்பணி யாவும் இசைத்தவை
    போற்று செய்கை புரிந்துபின் யாவையும்
    மாற்று கின்றது மற்றெமக் காமெனச்
    சாற்றி னான்அத் தகைமையுங் கேட்டிநீ. - 39



    494 - வேறு
    அந்தம் ஆதியின் றாகியே உயிரெலாம் அளிக்குந்
    தந்தை யாகிய தனக்கன்றி முழுதடுந் தகைமை
    மைந்த ராகிய அமரரான் முடிவுறா மையினால்
    எந்தை தன்வயிற் கொண்டனன் ஈறுசெய் யியற்கை. - 40



    495 - அன்று தேவர்கள் யாவரும் எம்பிரான் அடியில்
    சென்று தாழ்ந்தெமக் கிப்பணி புரிந்தனை சிறியேம்
    என்று தீருதும் இப்பரம் என்றலும் எங்கோன்
    ஒன்று கூறுதுங் கேண்மினோ நீவிர்என் றுரைத்தான். - 41



    496 - ஆயுள் மற்றுமக் கெத்துணை அத்துணை யளவு
    நீயிர் இச்செயல் புரிமின்கள் பரமெ நினைந்தீர்
    தூய வித்தையால் நீறுள தாக்கியே தொழுது
    காய மேற்புனைந் தஞ்செழுத் துன்னுதிர் கருத்தின்.
    (37. தன்ஆணை - தனது அருட் சத்தி. 40. ஈறுசெய் இயற்கை -
    சங்காரத் தொழில். 42. பரம் - பாரம்; சுமை. தூய வித்தையால் -
    பரிசுத்தமான பஞ்சப்பிரம மந்திரங்களால். உன்னுதிர் - நினையுங்கள்.) - 42



    497 - தன்மை யிங்கிவை புரிதிரேல் இத்தொழில் தரிக்கும்
    வன்மை யெய்துவீர் அன்றிநங் கலைகணும் மருங்கு
    தொன்மை யுள்ளன காட்டிநின் றருளுமால் தொலைவில்
    நன்மை எய்துவீர் என்றருள் செய்தனன் நம்பன். - 43



    498 - அன்ன வர்க்கொடே யெவ்வகைச் செய்கையும் அளித்துப்
    பின்னை யுள்ளதோர் செய்கையும் புரியுமெம் பெருமான்
    முன்னை வேதங்கள் அவன்தனை ஐந்தொழில் முதல்வன்
    என்னும் மற்றிது தேருதி கேட்டியால் இன்னும். - 44



    499 - வேறு
    உருத்திரன் என்னும் நாமம் ஒப்பிலா அரற்கும் அன்னான்
    தரத்தகு சிறார்கள் ஆனோர் தங்கட்கும் அனையன் பாதங்
    கருத்திடை உன்னிப் போற்றுங் கணங்கட்கும் அவன்றன் மேனி
    பரித்திடு வோர்க்குஞ் செந்தீப் பண்ணவன் தனக்கும் ஆமால். - 45



    500 - இன்னலங் கடலுட் பட்டோர் யாரையும் எடுக்கும் நீரால்
    உன்னரும் பரம மூர்த்தி உருத்திரன் எனும்பேர் பெற்றான்
    அன்னவன் தரவந் தோர்க்கும் அடியடைந் தோர்க்கும் அன்னான்
    தன்னுரு வெய்தி னோர்க்குஞ் சார்ந்ததால் அவன்த னிப்பேர். - 46



    501 - செந்தழ லென்ன நின்ற தேவனுக் குருத்தி ரப்பேர்
    வந்தது புகல்வன் கேட்டி வானவன் யாரும் ஈண்டி
    முந்தையில் அவுணர் தம்மை முனிந்திட முயன்று செல்ல
    அந்தமில் நிதியந் தன்னை அவ்வழி ஒருங்கு பெற்றார். - 47



    502 - பெற்றிடு நிதியம் எல்லாம் பீடிலால் கனல்பால் வைத்துச்
    செற்றலர் தம்மேற் சென்று செருச்செய்து மீண்டு தேவர்
    உற்றுழி அதுகொ டாமல் ஓடலுந் தொடர்ந்து சூழ
    மற்றவன் கலுழ்த லாலே வந்தது மறையுங் கூறும். - 48



    503 - ஓதுமா மறைகள் தம்மில் உருத்திரன் எனும்பேர் நாட்டி
    ஏதிலார் தம்மைச் சொற்ற தீசன்மேற் சாரா வந்த
    ஆதிநா யகனைச் சுட்டி அறைந்ததும் பிறர்மாட் டேறா
    மேதைசா லுணர்வின் ஆன்றோர் விகற்பம்ஈ துணர்வ ரன்றே. - 49



    504 - ஓங்கிய சுருதி தன்னுள் உருத்திரன் எனுநா மத்தால்
    தீங்கன லோனை ஏனைத் திறத்தரை உரைத்த வாற்றை
    ஈங்கிவண் மொழியல் எங்கோற் கியம்பிய இடங்கள் நாடி
    ஆங்கவன் தலைமை காண்டி அறைகுவன் இன்னும் ஒன்றே.
    (46. அன்னான் தன்உரு - சிவசாரூபம். 48. கலுழ்தல் - அழுதல்.
    49. மேதை - சிறந்த அளிவு. 50. மொழியல் - கூறாதே.
    காண்டி - காண்பாயாக.) - 50



    505 - வேறு
    முந்தை யோர்பகன் முனிவர்கள் யாவரு முதலோ
    டந்த மில்லதோர் பரம்இவர் அவரென அறைந்து
    தந்தமிற் சென்று வாதுசெய் தறிவருந் தகவால்
    நொந்து மற்றவர் பிரமனை வினவுவான் நுவன்றா£. - 51



    506 - மல்லல் மேருவின் முடிதனில் மனோவதி வைகும்
    அல்லி வான்கம லத்திடை அண்ணலை அணுகி
    எல்லை தீர்ந்திடு பரம்பொருள் உணர்கிலேம் இவரென்
    றொல்லை தன்னில்நீ உரைத்தருள் செய்யனெ உரைத்தார். - 52



    507 - உரைத்த வாசகங் கேட்டலும் நான்முகத் தொருவன்
    கருத்தில் இங்கிவை தௌ¤தர மறைமொழி காட்டி
    விரித்து மென்னினுந் தௌ¤வுறார் மெய்மையால் விரைவில்
    தெரித்து மிங்கென உன்னினன் அவர்மயல் தீர்ப்பான். - 53



    508 - நாற்ற லைச்சிறு மாமகன் தாதைதன் னலஞ்சேர்
    தோற்ற முள்ளுற உன்னியே விழபுனல் சொரிய
    ஏற்றெ ழுந்துமீக் கரம்எடா வுருத்திர னென்றே
    சாற்றி மும்முறை நின்றனன் தௌ¤தருந் தகவால். - 54



    509 - அங்கண் நான்முகன் சூளினால் ஆதியம் பகவன்
    சங்க ரன்எனக் காட்டியே பொடிப்புமெய் தயங்க
    வெங்க னற்படும் இழுதென உருகிமீ மிசைசேர்
    செங்கை மீட்டனன் முனிவருக் கினையன செப்பும். - 55



    510 - வம்மி னோவுமக் கோருமரை மொழிகுவன் வானோர்
    தம்மை எங்களை அளித்தனன் மறைகளுந் தந்தான்
    மெய்ம்மை யாவர்க்குஞ் செய்பணி உதவினன் மேனாள்
    மும்மை யாகிய செய்கைநம் பாலென மொழிந்தான். - 56



    511 - அருளின் நீர்மையால் ஐந்தொழில் புரிபவன் அநாதி
    பரமன் நின்மலன் ஏதுவுக் கேதுவாம் பகவன்
    ஒருவா¢ பாலினும் பிறந்திடான் அருவதாய் உருவாய்
    இருமை யாயுறை பூரண னியாவர்க்கும் ஈசன். - 57



    512 - முற்று மாயினான் முடிவிற்கும் முடிவிற்கும் முடிவாய்
    உற்றுளான் என்றும் உள்ளவன் அனைத்தையும் உடையோன்
    மற்றென னாலுரைப் பரியதோர் சீர்த்தியன் மலர்த்தாள்
    பற்றினோர்க் கன்றி உணரவொண ணாததோர் பழையோன். - 58



    513 - அன்ன தோர்சிவன் பரமென மறையெலாம் அறையும்
    இன்னு மாங்கவன் நிலையினைக் கண்ணனும் யானும்
    உன்னி நாடியுங் காண்கிலம் அவன்பதி ஒழிந்தோர்
    மன்னு யிர்த்தொகை யென்றனன் அன்னதொல் மலரோன். - 59



    514 - அருள்பு ரிந்துபின் சிவனடி கைதொழு தந்நாள்
    மருள கன்றிடு பிதாமகன் இருந்தனன் மற்றப்
    பொருளின் நீர்மையைத் தெரிந்துதம் புந்திமேற் கொண்ட
    இருளொ ழிந்தனர் மகிழ்ந்தனர் முனிவரர் இசைப்பார்.
    (51. பரம் - பரம்பொருள். 55. இழுது - நெய்.
    மீமிசை - மிகமேலே; தலைக்குமேல்.
    58. மலர்த்தாள் பற்றியரா அன்பினர். 60. மருள் - மயக்கம்.
    பிதாமகன் - பிரமதேவன்.) - 60



    515 - தாதை யாய்எமை அளித்தனை யாங்கள்உன் தனயர்
    ஆத லால்எமக் கித்திறம் தேற்றினை அடிகேள்
    ஈதலால் இன்று குரவனும் ஆயினை என்றே
    பாத தாமரை வணங்கினர் முனிவரர் பலரும். - 61



    516 - அடிவ ணங்கினர் தமைத்தெரிந் தின்றுதொட் டமலன்
    வடிவம் உன்னுதிர் அருச்சனை புரிகுதிர் வயங்கும்
    பொடிய ணிந்துநல் லஞ்செழுத் தியம்புதிர் புரைசேர்
    கொடிய வெம்பவம் அகலுதிர் எனவிடை கொடுத்தான். - 62



    517 - ஆதலால் எங்க ளீசனே பரம்பொருள் அல்லா
    ஏதி லாரெலா உயிர்த்தொகை யாகுமால் இதனைக்
    காத லாலுரைத் தேன்அன்று வாய்மையே காண்டி
    வேத மேமுத லாகிய கலையெலாம் விளம்பும். - 63



    518 - அன்றி முன்அயன் உன்றனக் கரன்புகழ் அனைத்தும்
    நன்று கேட்டிட உணர்த்தினன் நீயது நாடி
    நின்று மாதவம் புரிந்திது பெற்றனை நினக்குப்
    பொன்று காலம்வந் தெய்தலின் மறந்தனை போலாம். - 64



    519 - தந்தை யேமுதல் யாவரும் முடிவுறுந் தகவால்
    வந்து நின்னவை இருந்தனர் மாயையால் மருண்டாய்
    உய்ந்திடு டும்படி நினைத்தியேல் அரற்கவி உதவி
    இந்த மாமகம் புரிந்திடு வாயென இசைத்தான்.
    (62. பொடி - விபூதி. அஞ்செழுத்து - பஞ்சாட்சரம்.
    63. ஏதிலார் - அயலார்.
    65. நின் அவை - உனது சபை.) - 65
    ஆகத் திருவிருத்தம் - 519
    ---------

    13. ததீசி யுத்தரப் படலம் (520 - 907)




    520 - இந்த வண்ணமத் ததீசிமா முனிவரன் இயம்பக்
    கந்த மாமலர்க் கடவுள்சேய் நகைசெய்து கானிற்
    சிந்து மென்பொடு சிரத்தொகை அணியுமோ தேவர்
    வெந்த சாம்பரும் பூசுமோ பரனெனும் மேலோன். - 1



    521 - கழிந்த தீயுடல் ஏந்தியே திரியுமோ கானில்
    இழிந்த கேசமுந் தரிக்குமோ ஏனத்தின் எயிறு
    மொழிந்த கூருமத் தோடுமேற் கொள்ளுமோ உலகம்
    அழிந்தி டும்படி உயிர்களை முடிக்குமோ அமலன். - 2



    522 - புலியின் ஈருரி உடுக்குமோ தந்தியின் புன்றோல்
    வலிய தன்புயம் போக்குமோ செந்தழல் மழுமான்
    இலைகொள் முத்தலை வேற்படை ஏந்துமோ எங்கும்
    பலியு மேற்குமோ நிருத்தமுஞ் செய்யுமோ பகவன். - 3



    523 - மிக்க சாரதர் படையெனத் திரியுமோ விடமே
    கக்கும் வெம்பணி பூணுமோ வெண்டலை கலமாச்
    செக்கர் மாமுடி தரிக்குமோ அம்பரந் திசையா
    நக்க னாகுமோ வேற்றுருக் கொள்ளுமோ நாதன். - 4



    524 - விடையும் ஏறுமோ ஆலமுங் கொள்ளுமோ வீந்தோர்
    சுடலை தன்னினும் ஆடுமோ ஒருத்தியைச் சுமந்தோர்
    மடம கட்கிடங் கொடுக்குமோ மகவையும் பெறுமோ
    கடிய தோர்குணம் படைக்குமோ பரமெனுங் கடவுள். - 5



    525 - ஆதலால் உங்கள் ஈசனோர் குணமிலன் அவனுக்
    கீத லின்றியாம் புரிகின்ற மகத்தவி எனலும்
    நாத னைக்கொலோ பழிக்குவன் இவனென நகையாக்
    கோதின் மாதவ முனிவரன் அழலெனக் கொதித்தான். - 6



    526 - தீர்த்தன் உண்மையை உணர்கிலன் இவனொடு சிறிதும்
    வா£த்தை கூறுதல் தகாதுமால் அயன்முதல் வானோர்
    ஆர்த்தசங் கத்தில் இகழ்ந்தவற் கெதிர்மொழி யறைய
    ஈர்த்த தென்னுளம் உணர்த்துவன் சிலவென இசைந்தான். - 7



    527 - இந்த வாறிசைந் தெம்பெரு மான்றனக் கிவண்நீ
    நிந்தை போற்சில கூறினை நிமலனுக் கவைதாம்
    வந்த வண்ணமோர் சிறுவதும் உணர்ந்திலை மருண்டாய்
    புந்தி யில்லதோர் கயவநீ கேளெனப் புகல்வான். - 8



    528 - நிலவு கின்றதன் னருளுருக் கொண்டிடு நிமலன்
    தலைமை பெற்றிடு புங்கவர் தம்மைமுன் தந்தே
    உலகம் யாவையும் அளித்தருள் செய்திட உதவி
    அலகி லாவுயிர் யாவையும் அயன்கண்நின் றளிப்பான். - 9



    529 - மாய வன்கண் நின் றவையெலாம் போற்றிமற் றவைக்குத்
    தூய துப்புர வருத்தியே மேல்வினை தொலைச்சி
    ஆய வற்றிலோர் பற்பல வீடுற அருளி
    மேய ஆருயிர் உலகெலாம் பின்னரே வீட்டும். - 10



    530 - அன்ன வேலையில் அவையெலாம் அழித்தபின் னளிப்போர்
    என்ன நின்றவர் தன்மையும் ஒடுக்குறும் இதற்பின்
    முன்ன ருள்ளதோர் ஏகமாய் உறையும்எம் மூர்த்தி
    பின்னும் இம்முறை புரிந்திடும் என்றும்இப் பெற்றி.
    (1. கந்தமாமலர் - சிறந்த தாமரைமலர். 2. கேசம் - மயிர்;
    இது பிரம்மவிஷ்ணுக்களின் சிகை. ஏனத்தின் எயிறு - பன்றிக்கொம்பு.
    கூருமம் - ஆமை. 3. தந்தி - யானை. பலி - பிச்சை.
    பகவன் - சகல குணங்களும் உடையவன்; சிவன்.
    4. வெண்டலை - தசைநீங்கியதலை. அம்பரம் - ஆடை. நக்கன் - நிருவாணி.
    6. ஈதல்இன்று - கொடுப்பதில்லை.
    7. தீர்த்தன் - பரிசுத்தன்; சிவபெருமான். சங்கம் - சபை.
    8. நிந்தைபோல் - பழிப்பினையுடையவைபோல்.
    சிறுவதும் - சிறிதும். கயவ - கீழ்மகனே! 9. மேல் வினை - ஆகாமியவினை.
    10. துப்புரவு - போகம்.) - 11



    531 - பரமன் இவ்வகை அடுந்தொறும் அடுந்தொறும் பலவாம்
    பிரம னாதியோர் என்பினைத் தரிக்குமப் பெரியோர்
    சிரமெலாந் தொடுத்த தணியலா அணிந்திடுஞ் சிகைதன்
    உரமு லாவுமுந் நூலென வேயணிந் துறையும். - 12



    532 - அல்ல தங்கவர் தங்களை முத்தலை அயிலால்
    மெல்ல வேயெடுத் தேந்திடும் அவர்தமை விழியால்
    தொல்லை நாளின் நீறாக்கியும் புனைந்திடுந் தூயோன்
    மல்லல் மாதவம் அனையவர் இயற்றிய வகையால். - 13



    533 - ஆத லால்தனை வியப்பதற் கன்றவை அணிதல்
    ஈத லாதொரு திறமுள தியாவரும் எவர்க்கும்
    நாத னேயிவன் என்றுதன் பாங்கரே நண்ணித்
    தீதெ லாமொரீஇ முத்திபெற் றுய்ந்திடுஞ் செயலே. - 14



    534 - என்பு நீறொடு கழியுடல் சிகைமுடி எனைத்தும்
    முன்ப ணிந்திடும் இயல்பினை முழுதுயிர்த் தொகைக்கும்
    அன்பு செய்திடுஞ் செயலிது வாமென அறிநீ
    பின்பு முள்ளதுங் கேண்மதி அகந்தையாற் பெரியோய். - 15



    535 - விண்ணு ளோர்க்கெலாம் அல்லலே வைகலும் விளைத்து
    நண்ணும் ஆடக் கண்ணினன் முன்னமோர் நாளில்
    மண்ண கந்தனை வௌவியே வயிற்றிடை வைத்துத்
    துண்ணெ னப்பிலம் புக்கனன் உயிரெலாந் துளங்க. - 16



    536 - கண்டு வானவர் யாவரும் அஞ்சினர் கரிய
    கொண்டல்நன் மேனியம் பண்ணவன் கோகன தத்தோன்
    துண்ட மாகிய விடத்திலோர் ஏனமாய்த் தோன்றி
    அண்ட மீதுபோய் வடவரை எனவளர்ந் தார்த்தான். - 17



    537 - ஓரி மைக்குமுன் பாதலந் தன்னில்மால் உற்றுக்
    கூரெ யிற்றினாற் பாய்ந்துபொற் கண்ணனைக் கொன்று
    பாரி னைக்கொடு மீண்டுமுன் போலவே பதித்து
    வீர முற்றனன் தன்னையே மதித்தனன் மிகவும். - 18



    538 - மாலும் அப்பகல் அகந்தையாய் உணர்வின்றி மருப்பால்
    ஞாலம் யாவையும் அழிதர இடந்தவை நனிசூழ்
    வேலை தன்னையும் உடைத்தனன் அன்னதோர் வேலை
    ஆல மார்களத் தண்ணல்கண் டெய்தினான் அங்கண்.
    (12. உரம் - மார்பு. முந்நூல் - பூணூல். 13. அயில் - சூலம்.
    நீறாக்கி - விபூதி ஆககி.
    15. கழியுடல் - வெண்டலை. முடி - தலைகள்.
    16. ஆடகக் கண்ணினன் - இரணியாட்சன்.
    17. கொண்டல்நன் மேனியம் பண்ணவன் - திருமால்.
    கோகனதத்தோன் துண்டமாகிய இடத்தில் - பிரமனுடைய நாசியினிடத்தில்.
    துண்டம் - நாசி. ஏனம் - (வௌ¢ளைப்) பன்றி. வடவரை - மேருமலை.
    18. பொற்கண்ணன் - இரணியாட்சன். 19. மருப்பால் - கொம்பினால்.
    இடந்து - கிளரி. வேலை - கடல்.) - 19



    539 - கண்டு கண்ணுதல் அவன்மருப் பொன்றினைக் கரத்தால்
    கொண்டு வல்லையிற் பறித்தலும் உணர்வுமுன் முறுக
    விண்டு மற்றதும் பறிப்பன்இங் கிவனென வெருவிப்
    பண்டு போலநின் றேத்தலும் போயினன் பரமன். - 20



    540 - அன்று கொண்டதோர் மருப்பினைச் சின்னமா அணிந்தான்
    இன்றும் அங்கவன் மார்பிடைப் பிறையென இலங்கும்
    ஓன்று மற்றிது கேட்டனை நின்றதும் உரைப்பாம்
    நன்று தேர்ந்துணர் மறைகளும் இத்திறம் நவிலும். - 21



    541 - அடலின் மேதகு தேவரும் அவுணரும் அந்நாட்
    கடல்க டைந்திடும் எல்லையின் மந்தரங் கவிழ
    நெடிய மாலது நிறுவியே பொருக்கென நீத்தந்
    தடவி உள்ளணைந் தாமையாய் வெரிநிடைத் தரித்தான். - 22



    542 - தரித்த வேலைஅவ் வேலையை மதித்திடத் தன்கண்
    அருத்தி மிக்குறும் அமிர்தினைத் தருதலும் அதனைத்
    தெரித்து மற்றிது நமதென நமதெனச் செப்பி
    மருத்தின் நம்மையால் அமரரும் அவுணரும் மலைந்தார். - 23



    543 - மலைந்த போரினை நீக்கலன் மாயன்இவ் வரையை
    அலைந்த வேலையின் நிறுவியே வெரிநிடை ஆற்றி
    உலைந்தி டாவகை காத்துமா லெனப்பெரி துன்னக்
    கலந்த தால் அவன் உளத்தினில் அகந்தையங் கடலே. - 24



    544 - அகந்தை எய்தியே யாவையுந் தேற்றலான் அலைபோய்த்
    திகந்த முற்றிட வேலைகள் உழக்கினன் திரியச்
    சகந்த னக்கழி வெய்தலும் தனதருட் டன்மை
    இகந்த னன்கொலாம் கண்ணனென் றுன்னினன் எங்கோன். - 25



    545 - அற்றை நாளவண் வல்லையில் ஏகியே அரிதன்
    முற்ற லாமையின் உருவினை நோக்கியே முனிந்து
    கற்றை வார்சடைக் கண்ணுதல் யாப்புறக் கரத்தாற்
    பற்றி யாங்கவன் அகந்தையும் வன்மையும் பறித்தான். - 26



    546 - நினைந்து தொல்லுருக் கொண்டனன் புகழ்தலும் நிலவைப்
    புனைந்த செஞ்சடை நின்மலன் அவுணரைப் போக்கி
    இனைந்த தேவருக் கமிர்தினை ஈகென ஏக
    வனைந்த மேனிமான் மாயைமால் அவுணரை மாய்த்தான். - 27



    547 - மாய்த்து வானவர்க் கமுதினை நல்கினன் வையங்
    காத்த கண்ணனென் றுரைப்பரால் அவனுறு கமடம்
    மீத்த யங்கிய காப்பினை வாங்கியே விமலன்
    சாத்தி னான்முனம் அணிந்திடு மருப்புடன் சார.
    (22. வெரித் - முதுகு. 23. மருத்து - அமிர்தம்.
    24. அகந்தையங் கடல் - அகங்காரமாகிய கடல்.
    25. திகந்தம் - திக்கின் முடிவு. இகந்தனன் - இகழ்ந்தனன்.
    26. முற்றல் ஆமை - முதிய ஆமை.
    28. கமடம் மீத் தங்கிய காப்பு - ஆமை ஓடு.) - 28



    548 - வாரி சூழ்புவி அகழ்தரு கேழலின் மருப்பும்
    மூரி யாமையின் ஓடுமேற் கொண்டது மொழிந்தாம்
    தாரு காவனத் தெம்பிரான் பலிக்குறு தகவுஞ்
    சேர வேயவண் நிகழ்ந்தவுங் கூறுதுந் தௌ¤நீ. - 29



    549 - வேறு
    முன்பு தாருக வனத்தின் முனிவரர் யாரும் ஈசற்
    கன்பி லராகி வேள்வி அளப்பில புரிந்து தாமே
    இன்புறு முத்தி தன்னை எய்துவான் உன்னி அங்கம்
    துன்புற வாளா நோற்றுத் துணிவினால் ஒழுக லுற்றார். - 30



    550 - ஒழுகிய வேலை தன்னில் உயிர்க்குயி ராகி உற்றோன்
    பழுதினை அகற்றித் தன்னோர் பாங்கரில் உமையாள் மேவ
    விழுமிய கயிலை நாப்பண் வீற்றிருந் தருள்வோன் அங்கண்
    இழுதையர் புரியும் நீர்மை யாவையும் உணர்ந்தான் அன்றே. - 31



    551 - முன்னவன் இதனை நாடி முழுதுணர் முகுந்தன் தன்னை
    உன்னினன் அன்ன பான்மை ஒய்யென உணர்ந்து மாலோன்
    என்னையும் முதல்வன் தன்பால் எய்துவான் பணித்தான் என்னாப்
    பன்னப அமளி நீத்துப் பணியினாற் கயிலை உற்றான். - 32



    552 - உற்றனன் நகர்முன் எய்தி உணர்த்திய நந்தி உய்ப்பப்
    பற்றலர் புரமூன் றட்ட பரனடி பணிந்து முன்போய்
    நிற்றலுங் குறிப்பால் அங்கண் நினைத்தன உணர்த்தி மாயன்
    பொற்றடஞ் செங்கை பற்றிப் புனிதன்ஆண் டெழுந்து போந்தான். - 33



    553 - கயிலையங் கிரியை நீங்கிக் கண்ணனை நோக்கித் தொன்னாள்
    இயலுறு நினது பெண்மை எய்துதி இவண்நீ யென்னப்
    புயலுறழ் மேனி மாயோன் பொருக்கென அளப்பில் காமர்
    மயலுறு பான்மை அங்கோர் மடந்தையாய் மருங்கு வந்தான். - 34



    554 - வந்திடு கின்ற காலை மாயைசேர் பொருண்மை முற்றுந்
    1தந்திடும் உமையுங் காணில் தளர்ந்து வீழ்பான்மை தானும்
    அந்தமில் யாணர் மேல்கொண் டாயிடைப் பெயர்ந்தான் முக்கண்
    எந்தைதன் வடிவின் நீர்மை யார்விரித் துரைக்கற் பாலார். - 35



    555 - முன்பன துருவை எல்லாம் முகனுறு விழியால் மாந்தித்
    முன்புறு மால்மீக் கொள்ளத் துண்ணென அரியுஞ் சோர்ந்தும்
    அன்புடை அருளால் வந்தான் மற்றவன் தனக்கு மாலோன்
    என்பதோர் பெயரும் அஞ்ஞான றெய்திய போலும் அன்றே.
    (29. கேழல் - பன்றி. மூரி - பெரிய. 30. வாளா - வீணாக.
    31. அங்கண் - இங்குத் தாருகாவனம். இழுதையர் - அறிவிலிகள்.
    32. முதல்வன் - இறைவன்; சிவன். பன்னக அமளி - சேஷசயனம்.
    32. பற்றலர் - பகைவர் ; திரிபுரர். 35. யாணர் - அழகு.
    36. முன்பன் - முதல்வன்.) - 36



    556 - நராரியின் உரிவை நீத்து நக்கனே யாகி முக்கட்
    பராபரன் சூலத் தோடு பலிக்கலன் அங்கை கொண்டு
    முராரிதன் பாங்கர் செல்ல முனிவருக் கிருக்கை யாகத்
    தராதல மதிக்க நின்ற தாருகா வனத்திற் புக்கான். - 37



    557 - புக்கனன் மாலை நோக்கிப் போந்துநீ நமைஎண் ணாது
    தொக்குறு முனிவர் வைகுஞ் சூழல்கள் தோறும் நண்ணி
    மிக்கமால் பூட்டி அன்னோர் விரதங்கள் மாற்றி நந்தம்
    பக்கநீ வருதி என்னப் பகர்ந்தனன் விடுத்துச் சென்றான். - 38



    558 - விடுத்தலும் முராரி ஏகி வேள்வியுந் தவமுந் தாமே
    கொடுத்திடு முத்தி யென்னுங் கொள்கைசேர் முனிவர் யாரும்
    அடுத்திடும் அவைக்கண் எய்தி அளவையில் அநங்கர் வல்லே
    தொடுத்திடு சரங்க ளேபோல் துணைவிழி பரப்பி நின்றான். - 39



    559 - கண்டனர் முனிவர் அம்மா கதுமெனக் காம வேட்கை
    கொண்டனர் விரத நோன்மை குலைந்தனர் மகத்தின் செய்கை
    விண்டனர் மதனீர் பாய மெலிந்தனர் வெதும்பி வேழம்
    உண்டிடு கனியாம் என்ன உணர்வுபோய் உருகா நின்றார். - 40



    560 - ஆலமார் கண்டத் தெந்தை அருளினால் மாயோன் கொண்ட
    கோலமார் வடிவ மெல்லாங் குறிப்புடன் நோக்கி நோக்கிச்
    சீலமாம் அனைத்தும் வீட்டிச் செழுஞ்சுடர் மலர்ச்சி கண்ட
    ஓலமார் விட்டி லென்ன ஒல்லென வந்து சூழ்ந்தார். - 41



    561 - பார்கொலோ விசும்பு கொல்லோ பங்கயன் பதியோ காமன்
    ஊர்கொலோ முகுந்தன் வைகும் உலகமோ உறையுள் அன்றேல்
    நீர்கொலோ அமரர்க் காக நிருதரைத் தொலைத்தீர் உன்மை
    ஆர்கொலோ உணரு கிற்பார் அடியருக் கருளு மென்றார். - 42



    562 - என்றிவை பலவும் பன்னி இடருழந் தெரியிற் பட்ட
    மென்றளிர் அலங்க லென்ன வெதும்பியே விரகத் தீயால்
    பொன்றினர் போன்று நின்றார் பொருவரு முனிவர் பொன்னார்
    கொன்றையஞ் சடையோன் செய்த செயலினைக் கூறல் உற்றேன். - 43



    563 - கண்ணனை விடுத்தத் தானோர் கலனொடு சூலம் ஏந்தி
    எண்ணரும் முனிவர் வைகும் இருக்கையின் மறுகு சென்று
    பண்ணிசை மறைகள் பாடி ஐயமேற் படர்வார் போன்றான்
    உண்ணிகழ் உணர்வாய் என்றும் உயிரினுக் குயிராய் நின்றான்.
    (37. நராரி - நரசிங்கம். உரிவை - தோல்.
    நக்கன் - நிருவாணி; சிவன். முராரி - திருமால்.
    38. மால் பூட்டி - மோகத்தை உண்டாக்கி.
    39. அளவைஇல் அநங்கர் - அளவற்ற மன்மதர்கள்.
    40. விண்டனர் - விடுத்தனர். மதநீர் - காமநீர். வேழம் உண்டிடு கனி -
    வேழம் என்னும் நோய் பிடித்த விளாங்கனி;
    வேழம் என்னும் நோய்பிடித்த விளாங்கனி உள்ளீடின்றி இருக்கும்;
    இதனைத்தான் 'யானையுண்ட விளாம்பழம்' என்பது.
    41. ஓலம் - இரதல். விட்டில் - விட்டிற் பறவை; இ·து உருவைக் கண்டு
    அழியும் தன்மையது.
    43. பன்னி - சொல்லி. 44. கலன் - பிட்சாபாத்திரம். மறுகு - வீதி.
    பண்ணிசை மறைகள் - பண்ணோசையோடு உள்ளாளக்கீதம்.) - 44



    564 - பாட்டியல் இசையை அங்கண் முனிவர்தம் பன்னி மார்கள்
    கேட்டலும் எவர்கொல் அம்மா கிடைத்தனர் அவரைக் காண்பான்
    வேட்டன விழிகள் இன்னே விரைவினில் சேறும் என்னா
    ஈட்டமொ டெழுந்து வீதி எய்தியங் கிறைவற் கண்டார். - 45



    565 - கண்ணுறு மாதர் யாருங் காமன்ஐங் கணையின் மூழகி
    உண்ணிகழ் உணர்வு மாழ்க உயிர்பதை பதைத்துச் சோர
    அண்ணல்தன் காத லென்னும் ஆழ்திரைப் பட்டார் அன்னார்
    பண்ணிய செய்கை தன்னில் சிறிதியான் பகர்தல் உற்றேன். - 46



    566 - வேறு
    காய மேல்அணி கண்டிலம் இத்தவர்
    தூய பாடலைத் துண்ணெனக் கேட்டலும்
    மேய காமத்தின் 1வீழ்ந்தனம் ஆகையால்
    மாய மேஇவ் வடிவம்என் பார்சிலர்.
    (பா-ம் 1 - வீழ்ந்தன வாகையால்.) - 47



    567 - ஐயர் செய்கை அறிந்தனம் இவ்விடைப்
    பைய வந்து பலிதனைக் கேட்பது
    மெய்ய தன்றிது மெல்லிய லார் தமை
    மையல் செய்திட வந்ததென் பார்சிலர். - 48



    568 - நன்று நன்றிந்த நற்றவர்க் காந்துகில்
    ஒன்று நல்கி உணவளித் கோவிலா
    மன்ற லின்புற மங்கையர் ஏவரும்
    இன்று கொல்என் றிரங்குகின் றார்சிலர். - 49



    569 - மாறி லாஇவ் வனத்திடை வந்தனன்
    வேறொரு ரூரிடை மேவிலன் போலுமால்
    தேறில் யாமுனஞ் செய்திடு செய்தவப்
    பேறி தாமெனப் பேசுகின் றார்சிலர். - 50



    570 - ஈண்டு வந்த இருந்தவன் யாரையும்
    வேண்ட லன்இது மெய்மை அவன்பதம்
    பூண்டு காதலிற் போற்றுநர் போலமெய்
    தீண்டு தும்மெனச் செப்புகின் றார்சிலர். - 51



    571 - பூணி லங்கிய பொற்றொடி சங்கினம்
    மாணு றுந்துகில் மற்றிவை சோர்தலுங்
    காணு கின்றனர் கைநெரித் தஞ்சியே
    நாணி வீதி நடுவிருந் தார்சிலா¢. - 52



    572 - ஏமம் பாயமெய் எங்கணுங் காமவேள்
    தூமம் பாயவை சூழ்ந்துயிர் வாட்டிட
    வாமம் பாய்புனல் போல்மயிர்க் கால்தொறுங்
    காமம் பாயக்க லுகின் றார்சிலர்.
    (47. காமமேல் - உடலின்மேல்.
    49. துகில் - ஆடை. ஏவரும் - எவரும்.
    51. பதம் - பாதம். மெய் - உடல். 53. ஏமம் - கலக்கம்.
    தூம் அம்பு - விடும் அம்புகன்.
    வாமம் - மலை. புனல் - பால்நீர்.) - 53



    573 - பாசம் நீங்கிப் பரபதம் ஈதென
    ஆசை யோடுகண் டன்புசெய் வாரென
    வாசம் நீங்கி வளையுகுத் தையர்தங்
    கோசம் நோக்கினர் கும்பிடு வா£சிலர். - 54



    574 - இளையி னோடுறும் எந்தைதன் வேட்கையால்
    களையி னோடு கதுமெனச் சென்றுபால்
    அளையி னோடுறும் ஓதனம் அங்கைவீழ்
    வளையி னோடு வழங்குகின் றார்சிலர். - 55



    575 - பாவை மார்முன் பலிக்குறுந் தன்மையால்
    நீவி இன்றிந் நெற்றியங் கண்ணுதல்
    மேவும் நந்துகில் வீழ்கினும் வீழுக
    ஏவ மோஎமக் கென்றுரைப் பார்சிலர். - 56



    576 - போய நாணம் புகுந்தது மால்உளந்
    தீயு மால்நிறை சிந்திய தாருயிர்
    வீயும் மெய்யும் விளிந்திடும் எம்முயிர்
    ஈயும் எங்களுக் கென்றுரைப் பார்சிலர். - 57



    577 - தண்டு லங்கொல் தவத்தர் இரப்பெனக்
    கொண்டு சென்று குறுகினர் காமமாம்
    மண்டு தீச்சுட வண்பொடி ஆதலும்
    அண்டர் நாயகன் போலணிந் தார்சிலர். - 58



    578 - வடிவி னால்எமை மாலுறுத் தாளுமென்
    றடியில் வீழினும் ஆரருள் செய்கிலர்
    கடிது போவது போலுங் கருத்திவர்க்
    கிடுகி லீர்ஐயம் என்றுரைப் பார்சிலர். - 59



    579 - ஆர மற்றனர் ஆரமும் வீழமெய்
    ஈர மற்றனர் ஈரம் அதன்படை
    தீர மற்றனர் தீரவு மேகலா
    பாரம் அற்றனர் பாரமற் றார்சிலர். - 60



    580 - சூலம் உண்டு சுடர்விழி மேல்நிமிர்
    பாலம் உண்டு படர்சடை யுண்டுசெங்
    கோலமுண்டு குறைமதி உண்டிவர்
    ஆல முண்டவர் ஆகுமென் பார்சிலர். - 61



    581 - எந்தை யார்தம் இருங்குறி யின்கணே
    சிந்து கின்ற திவலையொன் றல்லவோ
    உந்தி மேல்வந் துலகனைத் துந்தரும்
    அந்த நான்முகன் ஆனதென் பார்சிலர்.
    (54. வாசம் நீங்கி - ஆடை இழந்து. வளை - வளையல்.
    கோசம் - ஆண்குறி.
    55. இளை - இளமை. அளை - தயிர். ஓதனம் - சோறு.
    56. நீவி - ஆடை. ஏவமோ - குற்றமோ.
    58. தண்டுலம் - அரிசி.
    59. கடிது விரைந்து ஐயம் இடுகிலீர் - பிச்சையிடாதிர்கள்.
    62. இரும்குறி - பெருமை பொருந்திய ஆண்குறி. திவலை - துளி.) - 62



    582 - சங்கும் ஆழியுந் தாங்குதல் இன்றியே
    பொங்கு காமரம் பொன்னந் துகிலொரீஇத்
    துங்க மாதவர் துண்ணென மால்கொள
    அங்கண் மேவும் அரியையொத் தார்சிலர். - 63



    583 - கட்டு செஞ்சடைக் கண்ணியின் உள்ளகப்
    பட்ட மான்எனப் பார்த்தகண் வாங்கலர்
    சட்டு வந்தனில் தாங்கிய ஓதனம்
    இட்டு வௌ¢ளிடை ஏமரு வார்சிலர். - 64



    584 - கிளியின் மேற்செலுங் கேழ்கிளர் ஓதிமம்
    களிம யக்குறு காளகண் டத்திறை
    வௌ¤யின் மேனியும் மெய்ப்படு கோலமுந்
    தௌ¤கி லாது தெருமரு வார்சிலர். - 65



    585 - அளியின் அட்ட அடிசில்கொண் டாயிடைக்
    களிம மயக்கங் கருத்துற ஏகியே
    ஔ¤யி னுக்கோ ளியாகி உள்ளாருரு
    வௌ¤யி னுக்கு விரைந்தளிப் பார்சிலர். - 66



    586 - அண்ணல் மேனிகண் டார்வமுற் றாடைபோய்ப்
    பெண்ணின் நீர்மைப் பெருங்குறி மூடியும்
    கண்ணை மூடியும் வைக்கடங் காமையால்
    விண்ணை மூடினர் போல்வௌ¢ கினார்சிலர். - 67



    587 - விருந்த ராயிவண் மேவினிர் விண்ணவர்
    மருந்து போல்வதொர் வண்பதம் உண்டவை
    அருந்தி யேநல் லருள்புரிந் தோரிறை
    இருந்து போமென் றிசைத்திடு வார்சிலர். - 68



    588 - கையி லேந்து கலனொடு சூலமும்
    வையும் நம்மனை வந்திடும் பாலொடு
    நெய்யும் உண்டியும் நிற்றலும் உண்டியாம்
    உய்ய நீரிங் குறையுமென் பார்சிலர். - 69



    589 - பார்க்குமா தர்க்கும் பல்குழு ஆடவர்
    ஆர்க்கும் மையல் அளிக்கும் வடிவுளீர்
    சீர்க்கும் ஓடொன்று செங்கைகொண் டெங்கணும்
    ஏற்கு மோவிதென் என்றுரைப் பார்சிலர். - 70



    590 - இன்றுமைக் கண்டி யாங்களும் ஆடைபோய்
    ஒன்று காதலுற் றோய்ந்தனம் இங்கிது
    நன்று கூடுதிர் நங்களை நீரென
    நின்று கூறி நெடிதுயிர்த் தார்சிலர்.
    (63. சங்கு - பாஞ்ச சன்னியம்; வளையல். ஆழி - சக்கரம்; மோதிரம்.
    பொன்னம் துகில் - பீதாம்பரம்;
    அழகிய ஆடை. 64. செஞ்சடைக் கண்ணி - செஞ்சடையாகிய வலை.
    சட்டுவம் - அகப்பை.
    65. கிளியின் மேற்செலும் கேழ்கிளர்ஓ திமற் - திலோத்தமையாகிய கிளியின்மேல்
    ஆசைகொண்டு தொடர்ந்து சென்ற அழகு பொருந்திய பிரமதேவனாகிய அன்னம்.
    67. பெண்ணின் நீர்மைப் பெருங்குறி - பெண்தன்மைக்குரிய பெண்குறி.
    68. மருந்து - தேவாமிர்தம். பதம் - சோறு. 69. கலன் - பிரம கபாலம்.) - 71



    591 - நந்தும் இவ்வனம் நண்ணிய மாதவர்
    இந்த வேலையில் ஏகலர் யாவதுஞ்
    சிந்தை கொள்ளலிர் சேக்கையுண் டோரிறை
    வந்து போமென வாய்மலர்ந் தார்சிலர். - 72



    592 - எம்மை ஆரிட மாதரென் றெண்ணியோ
    வெம்மை பேசினும் மேவுகி லீர்பவம்
    உம்மை மேவுங் கொலோஒழிந் தார்கள்போல்
    அம்ம வந்தெமை ஆளுமென் பார்சிலர். - 73



    593 - ஆடை தாரும் அதன்றெனில் கொண்டதோர்
    வேடை தீரும் விளம்பு கிலீரெனில்
    கூட வாருங் குறிப்புமக் கென்னெனப்
    பாடு சோ¢ந்து பகர்ந்திடு வார்சிலர். - 74



    594 - ஒல்லு கின்ற துமக்கிவ் வடிவினால்
    செல்லு கின்ற தெரிவையர் யாரையுங்
    கொல்லு கின்றது வோபலி கொள்வதோ
    சொல்லு மென்று தொடர்ந்திடு வார்சிலர். - 75



    595 - போற்றி இங்கெமைப் புல்லும்என் றாலுமால்
    ஆற்றி இன்பத் தணைகிலிர் யாவருஞ்
    சாற்று கின்றனர் சங்கரர் என்றுமை
    ஏற்று தோவதற் கென்றுரைப் பார்சிலர். - 76



    596 - அணங்கின் நல்லவர் அண்ணல்தன் கோசமேல்
    நுணங்கு மாலொடு நோக்கி அதற்குமுன்
    வணங்கு மாறென மற்றவர் நாணுபு
    கணங்க ளோடு கவிழ்ந்துசென் றார்சிலர். - 77



    597 - வேறு
    இன்னவர் பலருஞ் சூழா ஈண்டுபு கலையுஞ் சங்குந்
    துன்னிய கலனும் நாணுந் துறப்பருங் கற்புஞ் சிந்தி
    மன்னுயிர் ஒன்றுந் தாங்கி மால்கொடு தொடர எங்கோன்
    பொன்னடிக் கமலஞ் சேப்பப் புனிதமா மறுகிற் போனான். - 78



    598 - சில்லிடை வீணை நாதஞ் செய்திடும் அ·தே அன்றிச்
    சில்லிடை மறைகள் பாடுஞ் சில்லிடைச் சிவநூல் ஓதுஞ்
    சில்லிடைத் தன்மெய் காட்டுஞ் சில்லிடை ஐயங் கேட்குஞ்
    சில்லிடை அன்பர் போல்தன் சீர்த்தியைப் புகழ்ந்து செல்லும்.
    (72. இந்த வேலையில் - இப்பொழுது. ஏகலர் - வாரார். சேக்கை - படுக்கை.
    74. வேடை - விரகதாபம். குறிப்பு - கருத்து.
    76. சங்கரன் - இன்பத்தைச் செய்பவன்.
    79. சிவநூல் - சிவாகமம்.) - 79



    599 - தேமலர்க் கமலை அன்ன தெரிவையர் தொழுங்கால் ஈசன்
    மாமலர்த் தாள்மேல் இட்ட மலர்களும் அன்னார் சிந்துந்
    தூமலர்த் தொடையுஞ் சங்குந் துலங்குபொற் கலனுங் காமன்
    பூமலா¢த் தொடையும் ஈண்டப் பொலிந்ததப் புனித வீதி. - 80



    600 - ஊனுலாம் உயிர்கட் கெல்லாம் உணர்வுடன் உயிராய் நின்றோன்
    வானுலாம் பலிக்கு வந்த வடிவினை நினைக்கின் மாயோன்
    தானுமா லாகி இன்னுந் தளர்வுறும் என்றால் அம்மா
    ஏனையோர் செய்கை தன்னை இனைத்தென இயம்ப லாமோ. - 81



    601 - செந்திரு வனைய மேனிச் சீறடிக் கருங்கட் செவ்வாய்ப்
    பைந்தொடி மகளிர் கற்பாம் பரவைகள் மதிக்கும் எண்ணில்
    மந்தரம் போன்றான் எங்கோன் மற்றவர்க் கெல்லாம் வெவ்வே
    றிந்திர ஞால மென்று எல்லையில் உருக்கொண் டெய்தி. - 82



    602 - நீண்டஅந் நிகமம் புக்க நிமலன்மேல் ஆர்வம் வைத்துக்
    காண்டகு மாதர் யாருங் கருவுறு நிலையராகி
    மாண்டகு வயாவும் மற்றோர் வருத்தமும் இன்றி யாங்கே
    ஆண்டகை மகார்க ளாக வாறெண்ணா யிரரைப் பெற்றார். - 83



    603 - பந்தைபால் விழைவு செய்தாங் கிமைப்பினின் மடவார் ஈன்ற
    மைந்தர்கள் யாரும் ஐயன் மலரடி முன்னர்த் தாழ்ந்து
    புந்திகொள் அன்பின் நின்று போற்றிட அனையன் நீவிர்
    நந்தமை உன்னி ஈண்டு நற்றவத் திருத்திர் என்றான். - 84



    604 - நெட்டிருஞ் சடில மீது நிலவினை முடித்த அண்ணல்
    கட்டுரை செய்தல் கேளாக் கைதொழூஉ விடைபெற் றேகி
    உட்டௌ¤ வெய்தி நோற்றாங் கொருசிறை இருந்தார் நாற்பான்
    எட்டுள பத்து நூற்றின் எண்டொகை முனிவர் யாரும். - 85



    605 - சேயென வந்தோர் நோற்பச் சென்றுழித் தெரிவை மாராம்
    மாயிரும் பரவை நீத்தம் மால்கொடு தொடர்ந்து செல்லப்
    போயினன் என்ப மன்னோ புரியிகந் தரிமுன் ஈந்த
    ஆயிரங் கமலங் கொண்டோர் ஆழியை அளிக்க வல்லோன். - 86



    606 - போதலும் அதனை நோக்கிப் பொற்றொடி யாகி நின்ற
    சீதரன் அமலன் தன்பாற் சேறலுந் தொடர்ந்து பின்னா¢
    மாதவர் யாரும் போந்தார் மற்றதன் இயல்பு நோக்கி
    ஏதமில் கங்கை பாலாம் யமுனையைக் கடுத்த தன்றே. - 87



    607 - மெல்லியல் வடிவ மாகி மேயினோன் தன்பால் வீழ்ந்து
    செல்லுறு முனிவர் ஆற்றத் தீவினை புரிந்த நீரால்
    அல்லுறழ் மிடற்றுப் புத்தேள் அவர்க்கெலாந் தனதாய் உள்ள
    தொல்லுரு மறைத்து வேறோர் வடிவொடு தோன்றி நின்றான்.
    (82. கற்பாம் பரவைகள் - கற்பெனும் கடல்களை. மதிக்கும் - கடைகின்ற.
    83. நிகமம் - வீதி. கரு - கருப்பம். வயா - கருப்பநோய்.
    ஆண்டகை மகார்கள் - ஆண்மக்கள்.
    86. ஓர் ஆழி - ஒப்பற்ற சுதரிசனம் என்னும் சக்கரப்படை.
    87. சீதரன் - திருமால்.
    கங்கை - இது தௌ¤ந்த நீர். யமுனை - இது கலங்கிய நீர்.
    கங்கை மாயோன் உள்ளத்திற்கும்; யமுனை தாருக முனிவர் உள்ளத்திற்கும் உவமைகளாகும்.) - 88



    608 - மடந்தை யாய்வந்த மாலோன் மணிமிடற் றிறைவன் தன்பால்
    அடைந்திட முனிவர் தத்தம் அரிவையா¢ தம்மை நோக்கித்
    தொடர்ந்தனர் இவரும் நம்போல் தோற்றனர் கலையும் நாணுங்
    கடந்தனர் இவனைக் கண்டு காதலித் தார்கொல் என்றார். - 89



    609 - மோனமா நெறியின் நோற்கும் முனிவரர் முகுந்தன் தன்பால்
    ஆனமால் சிறிது நீங்கி அருங்குலப் பன்னி மார்கள்
    ஈனமா நிலையை நோக்கி இன்னலுற் றிரங்கி ஏங்கி
    மானமேல் கொண்டு வீடா மன்னுயி ரோடு நின்றார். - 90



    610 - பொன்னுலாம் அல்கு லாள்இப் பொற்றொடி ஒருத்தி எம்பால்
    மன்னிய தவத்தைச் சிந்தி மால்செய்தாள் ஒருவன் வந்து
    பன்னிமார் கற்பை வீட்டிப் படுத்தினன்¢ மோகம் அந்தோ
    என்னமா யங்கொ லீதென் றெண்ணினர் யாரும் ஈண்டி. - 91



    611 - எண்ணிய முனிவர் தேறி இயம்புவார் கயிலை வைகுங்
    கண்ணுத லாகும் இன்னோர் கற்பினை உடைத்தான் யாமுன்
    பண்ணிய தவத்தை வீட்டப் பைந்தொடி யாகி வந்தோன்
    மண்ணுல கனைத்தும் உண்ட மாயவன் போலும் அன்றே. - 92



    612 - நந்தவந் தன்னை வீட்ட நாரணன் தானே நம்பால்
    வந்தனன் அன்றால் ஈசன் பணியினால் மாயை செய்தான்
    இந்திரை கேள்வன் செய்த தென்கொலோ எமது நோன்பு
    சிந்தினும் நன்றால் இன்னுந் தீர்வுநேர்ந் தியற்று கின்றோம். - 93



    613 - அங்கையிற் கபால்ஒன் றேந்தி ஐயம்ஏற் றிடுவான் போலச்
    சங்கரன் வந்து மற்றித் தாருகா வனத்தின் மேவு
    மங்கையர் கற்புச் சிந்தும் வசையுரைக் கொழிவு முண்டோ
    செங்கதிர் மதியஞ் செல்லுந் திசையெலாம் பரவும் அன்றே. - 94



    614 - தானொரு வேடங் கொண்டுந் தண்டுள வலங்கற் சென்னி
    வானவன் தன்னை விட்டு மற்றிவை அனைத்துஞ் செய்தோன்
    கானுறு கடுக்கை வேய்ந்த கண்ணு தலேகொல் என்றே
    மானவெங் கனலுஞ் சீற்ற வன்னியுங் கிளர நின்றார். - 95



    615 - நின்றிடு முனிவர் யாரும் நெருப்பெழ விழித்துச் செம்பொற்
    குன்றுறழ் முலையி னார்தங் குழுவினைக் கூவி யார்பின்
    சென்றிடு கின்றீர் கற்பின் செய்கைய திகந்தீர் இங்ஙன்
    பொன்றுதல் அழகி தன்றேல் போமின்நும் புரியின் என்றார். - 96



    616 - இத்திற மாதர் கேளா ஈங்கிவர் தம்மைக் கண்டோர்
    முத்தராய் உறுவ தன்றி முடிவரோ முனிவர் தாமும்
    பித்தர்கொல் என்றே அன்னான் பிறங்குரு வினையுட் கொண்டு
    நித்தன தருளால் மீண்டு நீணகர் இருக்கை புக்கார்.
    (90. மோனமா நெறி - மௌன வழி. மானம் - அபிமானம். வீடா - இறவா.
    93. இத்திரை கேள்வன் - இலக்குமி நாயகன்; திருமால். 94. கபால் - கபாலம்.) - 97



    617 - நீணகர் புகுந்த பின்னர் நேழிழை மகடூஉ வாகித்
    தாணுவின் அயலின் நின்ற தண்டுள வலங்கற் புத்தேள்
    ஆணுவின் உருவு கொண்டான் அருளினால் அனைய தன்மை
    காணிய விரிஞ்ச னாதிக் கடவுளர் யாரும் வந்தார். - 98



    618 - கடவுளர் யாரும் வந்த காலையில் அங்கண் நின்ற
    முடிவறு முதல்வன் தன்னை முனிவொடு நோக்கி ஈண்டுக்
    கொடியதோர் வேள்வி ஆற்றிக் கொல்லுதும் இவனை என்னா
    மடமைகொள் முனிவர் சூழ்ந்து மற்றொர்தீ மகத்தைச் செய்தார். - 99



    619 - எள்ளுதற் குரிய வேள்வி எரியதன் இடையே யாரும்
    உள்ளுதற் கரிய தோற்றத் துருமிடிக் குரல பேழ்வாய்த்
    தள்ளுதற் கரிய சீற்றத் தழல்விழித் தறுகட் செங்கால்
    வள்ளுகிர்ப் புலியொன் றம்மா வல்லையின் எழுந்த தன்றே. - 100



    620 - எழுதரு புலியை நோக்கி ஈசனை முடித்தி என்றே
    தொழுதனர் விடுப்ப ஆங்கே துண்ணென வருத லோடும்
    அழல்விழிப் பரமன் நேர்போய் அங்கையால் உரித்து மற்றவ்
    வுழுவையந் தோலை முன்னம் உடுத்தனன் தானையொப்ப. - 101



    621 - இங்கிது போய பின்றை இறுதிசெய் கணிச்சி ஒன்று
    செங்கன லிடையில் தோன்றித் தீயவர் விடுப்ப ஏகிச்
    சங்கரன் தனது முன்னஞ் சார்தலும் அதனைப் பற்றி
    அங்கையில் ஏந்தி நீநம் அடுபடை யாதி என்றான். - 102



    622 - பின்னுற ஒருமான் அங்கட் பிறந்தது முனிவர் எல்லாம்
    அன்னதை அரன்பால் உய்ப்ப அந்தரத் தெழுந்து பாய்ந்து
    தன்னெடுங் குரலால் வல்லே சராசரம் வீட்டிச் செல்ல
    முன்னவன் உயிர்கள் அற்றால் முடிவுறா தருட்கண் வைத்தான். - 103



    623 - மற்றதன் பின்றை எந்தை மான்பிணை அதனை நோக்கித்
    தெற்றென விளித்து நத்தஞ் செவியினுக் கணித்தாய் மேவி
    நிற்றலுங் கூவு கென்றே நீடருள் செய்து வாமப்
    பொற்றடங் ககையிற் பற்றிப் பொருக்கென ஏந்தி நின்றான். - 104



    624 - ஏந்திய பின்னர் வேள்வி எரியழற் கிடையே எண்ணில்
    பாந்தளங் கெழுந்து தீயோர் பணியினாற் சீற்றத் தோடும்
    போந்தன அவற்றை மாயோன் புள்ளினுக் கஞ்சித் தன்பாற்
    சேர்ந்திடு பணிக ளோடுஞ் செவ்விதிற் புனைந்தான் எங்கோன்.
    (98. மகடூஉ - பெண். தாணு - அசைவில்லாதவன்; சிவன்.
    99. தீமகம் - அபிசார வோமம்.
    100. வேழ்வாய் - பிளந்த வாய். 101. முடித்தி - சொல்வாயாக.
    உழுவை - புலி. தானை - ஆடை.
    102. கணிச்சி - மழு. தீயவர் - தாருகவன முனிவர்.
    104. வாமம் - இடதுபக்கம்.
    105. பாந்தள் - பாம்பு. பணிகளோடு - பாம்புகளோடு.) - 105



    625 - பணியெலாம் பணிய தாகிப் பரனிடைத் திகழப் பின்னர்
    அணிகெழு கனலின் நாப்பண் அசனிகள் எழுந்தா லென்னக்
    கணிதமில் பூத வௌ¢ளங் கதுமென எழலும் நீவிர்
    மணிகிளர் மிடற்றோன் வன்மை மாற்றுதிர் என்றே உய்த்தார். - 106



    626 - ஆரிடர் ஏவல் போற்றி அண்டமுந் துளங்க ஆர்த்துச்
    சாரதர் வருத லோடுஞ் சங்கரன் அவரை நோக்கி
    நீரெமை அகன்றி டாது நிற்றலுந் தானை யாகிச்
    சேருதி ரென்றான் உற்றோர் தீவினை தீர்க்க வல்லான். - 107



    627 - ஆற்றல் சேர்பூதர் யாரும் ஆதியீ துரைப்ப அன்னான்
    போற்றியே தானை யாகிப் புடையுற நிற்ற லோடுஞ்
    சீற்றமா முனிவர் வேள்வித் தீயில்வெண் டலைதான் ஒன்று
    தோற்றியே உலகம் யாவுந் தொலையநக் கெழுந்த தன்றே. - 108



    628 - நக்கெழு சிரத்தை அன்னோர் நாதன்மேல் விடுத்த லோடும்
    அக்கணம் அணுக வற்றால் அகிலம திறவா வண்ணம்
    முக்கணன் அருள்செய் தந்த முணடமுண் டகக்கை பற்றிச்
    செக்கரஞ சடைமேற் கொண்டுன் செயலினைப் புரிதி யென்றான். - 109



    629 - அறுகுறை முடிமேற் கொண்ட அமலனை நோக்கி நோக்கி
    இறுகிய முனிவர் தத்தம் வாய்மை மந்திரங் களேவி
    இறுதி செய்திடுதி ரென்ன இனையவை துடியொன் றாகிச்
    செறிதரு புவனம் யாவுஞ் செவிடுற ஒலித்த தன்றே. - 110



    630 - பொருவருந் துடியின் ஓதை பொம்மெனக் கேட்ட லோடுந்
    தரணியின் வானி னுள்ள சராசரம் யாவும் ஈசன்
    அருளினால் வீடிற் றில்லை அசனியின் ஆர்ப்புக் கேட்ட
    உரகர் தங்குலங்க ளென்ன ஒய்யென மயங்கிற் றன்றே. - 111



    631 - அத்துடி ஆர்த்துச் செவ்வே அமலன்முன் அணுக மற்றைக்
    கைத்தலம் அதனிற் பற்றிக் கறங்குதி கன்னத் தென்று
    வித்தக மரபில் யாரும் வியப்புற ஏந்தி நின்றான்
    இத்திறம் யாரே செய்வார் என்றனர் முனிவ ரெல்லாம். - 112/tr>


    632 - இனையது கண்டு பின்னும் இறுதிசெய் இறைவற் கின்றால்
    அனைய தென்றறிதல் தேற்றார் அடுசினங் கடவத் தொல்லூழ்
    வினையது விளைவாற் பின்னும் வேள்வியை இயற்றல் உற்றா£
    முனிவரர் கனற்க ணேயோர் முயலகன் எழுந்த தன்றே. - 113



    633 - முயலகன் தன்னை நோக்கி முகமனுஞ் சொற்றுத் தங்கள்
    செயலகன் றிருந்த வேள்வித் தீயையும் விளித்து நந்தம்
    இயலகன் றிடவே செய்த ஈசனை முடித்தி ரென்றே
    மயலகன் றிலாதார் உய்ப்ப வல்விரைந் தணைந்த அம்மா.
    (106. அசனி - இனி. 107. ஆரிடர் - முனிவர்.
    109. நக்கு எழு சிரம் - சிரித்தலையுடைய வெண்டலை.
    110. இனையவை - இங்கு, மந்திரங்கள். துடி - உடுக்கை.
    111. ஓதை - ஓசை. பொம்மென - விரைந்து.
    ளுரகர் - தாகங்கள். 113. முயலகன்- இவன் ஒருபூதம்.
    114. முகமன் - உபசார வார்த்தை. சொற்று - உரைத்து.) - 114



    634 - வன்னியந் தேவும் உட்க வந்திடு கனலை யார்க்கும்
    முன்னவன் ஒருகை ஏந்தி முயலகன் தன்னை மெல்லத்
    தன்னடி அதனால் வீழத் தள்ளிஅக் கமலத் தாளை
    வென்னிடை அருளால் ஊன்றி விண்ணவர் போற்ற நின்றான். - 115



    635 - நிற்றலும் அதனைத் தீயோர் நெருப்பெழ விழியா இன்னும்
    உற்றனன் பரமன் அந்தோ உஞற்றி யாமுய்த்த வெல்லாம்
    இற்றன கொல்லோ என்றே இரங்கியே எண்ணில் சாபஞ்
    சொற்றனர் உலக மெல்லாந் தொலைப்பவன் தொலைய வென்றே. - 116



    636 - சங்கையில் முனிவர் யாருஞ் சாற்றிய சாபம் யாவும்
    எங்கடம் பெருமான் முன்னும் எய்திய தில்லை அன்னோர்
    எங்கவன் தன்பால் உய்க்கும் அளவையில் இறுதி நாளிற்
    பொங்கெரி அதன்மேற் செல்லும் பூளைபோல் மாய்ந்த அன்றே. - 117



    637 - சாபமும் பயனின் றாகத் தவத்தர்கள் யாருங் கொண்ட
    கோபமும் நீங்கி ஆற்றல் குறைந்தொரு செயலும் இன்றிச்
    சோபமும் நாணுங் கொண்டு துளங்கியே தொலைவி லாத
    பாபமும் பழியும் பூண்டு படிக்கொரு பொறையாய் நின்றார். - 118



    638 - ஏற்றமில் முனிவர் தங்கள் ஏழைமை தனையென் னென்று
    சாற்றுதும் இறுதி இல்லாத் தாணுவை முடிப்பான் வேள்வி
    ஆற்றினர் பலவும் உய்த்தார் அறைந்தனர் சாபம் அற்றால்
    மாற்றி அற்றோ தங்கள் வன்மையும் இழந்தோர் மாதோ. - 119



    639 - கடுக்கையும் நதியும் பாம்புங் கலைமதிக் கொழுந்துஞ் சென்னி
    முடித்தவன் பதத்தில் ஊன்று முயலகன் மெல்ல மெல்ல
    எடுத்தெடுத் தசைத்த லோடும் ஏதுவங் கதனை நோக்கி
    நடித்தனன் என்றும் நீங்கா நடம்புரி கின்ற தேபோல். - 120



    640 - ஆண்டவ ணிமையா முக்கண் ஆதிநா யகன்அஞ் ஞான்று
    தாண்டவம் புரித லோடுஞ் சகமெலாந் துளங்கிற் றங்கண்
    ஈண்டிய வுயிர்கள் அச்சுற் றிரங்கிய நடுக்கம் எய்தி
    வீண்டனர் வேள்வி செய்து வினையினை ஈட்டும் வெய்யோர். - 121



    641 - நஞ்சணி கண்டத் தெந்தை நடநவில் செய்கை தன்னைக்
    கஞ்சனும் ஆழி யானுங் கண்டுகண் களித்துப் போற்றி
    செஞ்சகம் மகிழ்ந்து பாங்கர் நின்றனர் மகவான தன்னோ
    டெஞ்சிய அமரர் யாரும் இறைஞ்சுவார் போல வீழ்ந்தார். - 122



    642 - அருளொடு நிருத்தஞ் செய்யும் அண்ணலிப் புவனம் யாவும்
    வெருவுறு செயலும் வீழும் விண்ணவர் அயர்வு நோக்கித்
    திருநட மொழிந்து நிற்பத் தேவருந் தேவர் கோனும்
    பருவுடன் எழுந்து நின்று கைதொழூஉப் பாங்கர் உற்றார்.
    (115. வன்னியந்தேவு - அக்கினிதேவன். 116. உஞற்றி - உண்டாக்கி.
    117. இறுதி நாளில் பொங்குஎரி - ஊழித்தீ பூளை - பூளைப்பஞ்சு.
    119. ஏழைமை - அறியாமை.
    120. கடுக்கை - கொன்றை. 121. விண்டனர் - விலகி நின்றனர்.) - 123



    643 - மாதொர்பா கத்தோன் தன்னை மதித்திடா முனிவர்க் கெல்லாம்
    போதமே யருள லோடும் பொருக்கென எழுந்து பொல்லா
    ஏதமே இயற்று கின்ற எம்பெரும் பிழைகள் யாவும்
    நாதநீ பொறுத்தி என்று நடவில் கழல்முன் வீழ்ந்தார். - 124



    644 - பொறுத்தி எம்பிழையை என்றே போற்றிசெய் முனிவர் தங்கள்
    திறத்தினை நோக்கி நந்தஞ் செந்நெறி யொழுதித் தீய
    மறத்தினை அகற்றி மேலை மாதவம் புரிதி ரென்று
    நிறுத்தினன் அடையா தார்க்கும் நீடருள் புரியும் நித்தன். - 125



    645 - முனிவரை நிறுவி அங்கண் முக்கணன் மீண்டு வௌ¢ளிப்
    பனிவரை ஏகி மாலும் பங்கயத் தவனும் வானோர்
    அனைவருந் தத்தம் பாலில் படைந்திட அருளி அம்பொற்
    புனையிழை உமையி னோடும் பொருந்திவீற் றிருந்தான் அன்றே. - 126



    646 - உரித்திடும் உழுவை வன்தோல் உரிமுத லுள்ள எல்லாந்
    தரித்ததும் எங்கள் நாதன் தாருகா வனத்தில் அன்று
    நிருத்தம தியற்றி நின்ற நீர்மையும் பிறவும் எல்லாம்
    விரித்திவண் உரைத்தாங் கேட்டி மேலதும் இயம்பு கின்றாம். - 127



    647 - வேறு
    துங்க மால்கரி யாக்கையின் உலகெலாந் தொலைக்கும்
    வெங்க யாசுரன் என்பவன் மேருவின் மிசைபோய்ப்
    பங்க யாசனற் போற்றி செய்தருந் தவம்பயில
    அங்கண் நாடியே தோன்றினன் உலகெலாம் அளித்தோன். - 128



    648 - வேண்டு கின்றதென் மொழிகென நான்முகன் விளம்ப
    ஆண்டு நோற்றிடுங் கயாசுரன் என்றனக் கடிகேள்
    மாண்டி டாதபே ராயுளும் ஆற்றலும் வயமும்
    ஈண்டு நல்குதி என்றலும் நகைத்திவை இசைப்பான். - 129



    649 - இந்த வண்ணநீ வேண்டிய தளித்தனம் இகலில்
    அந்தி வண்ணன்நேர் சென்றிடல் சேறியேல் அந்நாட்
    சிந்தும் இவ்வரங் கடைப்பிடி ஈதெனச் செப்பி
    உந்தி வந்தவன் போயினன் தனதுபே ருலகில். - 130



    650 - அன்ன காலையில் கயாசுரன் என்பவன் அயன்சொல்
    உன்னி ஈசன்மேற் போகலாம் ஒழிந்தவர் தம்பால்
    துன்னி வெஞ்சமர் ஆற்றி எவ்வு லகமுந் தொலைத்தே
    இன்னலே புரிந்திருத் தும்என் றுன்னியே எழுந்தான்.
    (124. போதம் - நல்லுணர்ச்சி. பொல்லா ஏதம் - பெரும்பிழை.
    128. துங்கமால் - பெரிய மதமயக்கம் பொருந்திய.
    129. அடிகளே - சுவாமியே.
    130. அந்தி வண்ணன் - சிவபெருமான். சேறியேல் - செல்லுவாயாயின்.) - 131



    651 - எழுதல் கொண்டிடும் அவுணர்கோன் அமரர்கள் யாருங்
    குழுமியே அமர்வான் பதந்தொ றுந்தொறுங் குறுகி
    வழுவியே அவர்முரிந் திடப்பொ ருதுமற் றவரூர்
    முழுது மட்டுமா சுவர்க்கமேல் ஏகினன் முனிவால். - 132




    652 - போகி யோட மராற்றியே அன்னவன் புறந்தந்
    தேகவே துரந்துயர்த் திடுநாள் மருப்பி யானைத்
    தோகை வானுதி பற்றியே பன்முறை சுலவி
    மாக யாசுரன் ஓச்சினன் மகபதி மயங்க. - 133



    653 - பின்னர் அன்னதோர் பொன்னகர் அழித்தனன் பெயர்ந்து
    துன்னு மெண்டிசைக் காவலர் தமையெலாந் துரந்து
    தன்னி னங்களாம் அவுணர்கள் தம்மையுஞ் சாடி
    வன்னி யஞ்சிகை அரக்கர்தங் குழுவையும் மாய்த்தான். - 134



    654 - மஞ்சு நேர்தரு கயாசுரன் புவிமிசை வைகி
    வெஞ்சி னங்கொடே மக்கள்தந் தொகையெலாம் வீட்டி
    நஞ்ச மாமெனத் திரிதலும் நாடி நற்றவர்கள்
    அஞ்சி யோடியே அரனமர் காசியை யடைந்தார். - 135



    655 - அருந்த வத்தர்கள் அடைதலுங் கயாசுரன் அவரைத்
    துரந்து காசியிற் சென்றிட அனையவர் துளங்கித்
    திருந்தும் அந்நகர் வாணர்தங் கிளையொடுஞ் செறிந்து
    விரைந்து போய்மணி கன்னிகை புகுந்தனர் வெருவி. - 136



    656 - இனிது வித்திய தம்பயன் ஈவதே என்னத்
    தனது மந்திரம் முடிபவர் செவியிடைச் சாற்றிப்
    புனித மாயதன் னுருத்திர வடிவருள் புரியும்
    அனக நாயகற் பணிந்துநின் றின்னவா றறைவார். - 137



    657 - வெய்ய தந்தியாய் வந்தொரு தானவன் விரைவில்
    வைய கத்தையட் டெம்மையுங் கொல்லிய வருவான்
    ஐய நின்னதாள் அரணமென் றடைந்தனம் அடியேம்
    உய்ய வேயருள் புரியெனப் போற்றியே உறலும். - 138



    658 - அகில நாயகன் மந்திரத் தப்பரி சனர்கள்
    தொகையி னோடுபோய் அரணமென் றடைதரு தொடர்பை
    முகிலை நேருருக் கயாசுரன் காணுறா முனியா
    இகலி யேமணி கன்னிகை வாயில்வந் திறுத்தான். - 139



    659 - வாயில் வந்திறுத் துருமெனத் தெழித்தலும் மதித்துக்
    கோயி லெய்திய சனமெலாம் உளங்குலை குலையா
    ஆய கண்ணுதல் நிமலனைத் தழீஇ மயக்கடையத்
    தீயன் அன்னது நாடியும் அடும்வகை செறுத்தான்.
    (133. போகி - இந்திரன். நால் மருப்பு யானை - ஐராவதம்.
    135. மஞ்சு - கரிய மேகம்.
    136. மணி கன்னிகை - காசியிலுள்ள கங்கைக் கரையின் ஓர் கட்டம்.
    137. மந்திரம் - தாரக மந்திரம்; பிரணவம். முடிபவர் - இற்போர்.
    138. தந்தியாய் - யானையாக. 139. அகிலநாயகன் - விசுவநாதர். மந்திரம் - ஆலயம்.
    140. உரும் - இடி. தெழித்தல் - கர்ச்சித்தல். தழீஇ - தழுவிக்கொண்டு.) - 140



    660 - செறுத்து மற்றவன் செல்லுழித் தேவர்கள் உய்யக்
    கறுத்த கந்தரத் தண்ணலாங் கத்திறங் கண்டு
    குறித்தெ லாமடும் உக்கிர வடிவினைக் கொண்டு
    நிறுத்தும் அண்டமேல் உச்சியின் முடிதொட நிமிர்ந்தான். - 141



    661 - விண்ணு லாவிய அமரரும் முனிவரும் விழித்துக்
    கண்ணின் நாடரி தெனவிழி பொத்தினர் கவல
    அண்ணல் ஆயிர கோடிஆ தவர்திரண் டதுபோல்
    னுண்ணி லாதபே ரொளியொடு தோன்றினன் எங்கோன். - 142



    662 - உக்கி ரப்பெரு வடிவுகொண் டெம்பிரான் ஒருகால்
    நக்கு மெல்லென உரப்பலும் நடுங்கின அகிலம்
    அக்கொ டுந்தானி ஒழிந்தில துகம்பல அயனும்
    மிக்க தேவரும் அவ்வொலி கேட்டலும் வெருண்டார். - 143



    663 - சொற்ற இத்திறம் உக்கிர வடிவொடுந் தோன்றிக்
    கொற்ற மால்கரி அவுணன்முன் எம்பிரான் குறுக
    மற்றி வன்சிவ னாமெனத் தேறியும் மலைவான்
    உற்று நின்றனன் அயர்த்தனன் மலரயன் உரையே. - 144



    664 - மதித்து வேழமாந் தானவன் எதிர்தலும் வடவை
    உதித்த வன்னியும் அச்சுற எரிவிழித் தொருதன்
    கதித்த தாள்கொடு தள்ளவே கயாசுரன் கவிழ்ந்து
    பதைத்து வீழ்தலும் திதித்தனன் சிரத்தையோர் பதத்தால். - 145



    665 - ஒருப தத்தினைக் கவானுறுத் திருகரத் துகிரால்
    வெரிநி டைப்பிளந் தீரிரு தாள்புடை மேவக்
    குருதி கக்கியே ஒலிட அவுணர்தங் குலத்துக்
    கரியு ரித்தனன் கண்டுநின் றம்மையும் கலங்க. - 146



    666 - கார்த்த சிந்துரத் தவுணர்கோன் விளிந்திடக் கரத்தால்
    ஈ£¢த்த தோலினை ஈர்த்தலும் உலகுயிர் யாவுந்
    தீர்த்தன் மேனிகொள் பேரொளி நோக்கியே தியங்கிப்
    பார்த்த கண்ணெலாங் கதிரிழந் தலமரப் பதைத்த. - 147



    667 - ஆளு நாயகன் அ·தறிந் துயிர்த்தொகை அனைத்தும்
    வாளி லாதுகண் ணயர்வது மாற்றுதல் மதித்து
    நீளி ருங்கரி உரித்திடும் அதளினை நிமலன்
    தோளின் மேற்கொடு போர்த்தனன் அருள்புரி தொடர்பால்.
    (143. உகம் பல - பலயுகம். 145. படவை - வடவாமுகாக்கினி.
    146. இச்செய்யுள் கஜசம்மார மூர்த்தியின் கோலத்தைச் சித்தரித்துக் காட்டுவது.
    147. சிந்துரத்தவுணர்கோன் - கயாசுரன். தீர்த்தன் - பரிசுத்தன் - சிவன்.
    148. அதள் - தோல்.) - 148



    668 - ஐயன் மிக்கதன் கதிரினைக் குருதிநீர் அறாத
    மையல் யானைவன் தோலைமேற கொண்டனன் மறைத்தான்
    செய்ய கோளொடு கரியகோள் இருவருஞ் செறிந்து
    வெய்ய பானுவின் நடுவுறக் கவர்ந்துமே வியபோல். - 149



    669 - மிகவும் எம்பிரான் தன்சுடர் மாற்றி மெய்தளரும்
    அகில மேலவர் விழிக்கெலாந் தொல்கதிர் அருளித்
    தகவில் அச்சமும் அகற்றியே காத்தனன் தனக்கு
    நிகரும் மேலுமின் றாகியே அமர்தரு நிமலன். - 150



    670 - அந்த வேலையில் அமரர்போற் றிசைத்தனர் அதுகேட்
    டெந்தை மாமணி கன்னிகை ஆலயத் தேக
    முந்து தந்திமால் அவுணற்கு வெருவி மொய்ம்பிழந்து
    சிந்தை மான்றுவீழ் பரிசனர் யாவருந் தௌ¤ந்தார். - 151



    671 - செறிவு போகிய சனத்தினோர் எழுந்தருட் டிறத்தால்
    கறைகொள் காலினான் குருதிஎன் பொடுதசை காணா
    இறைவ னேஅவன் தன்னைஅட் டானென எண்ணி
    அறையும் நேமிபோல் ஆடினர் பாடினர் ஆர்த்தார். - 152



    672 - காசி வாணரும் முனிவரும் பணிந்தனர் கழல்கள்
    பூசை யாற்றவும் புரிவித்து வழுத்தியே போனார்
    ஈசன் வேழவன் தோல்புனை பேரருள் இதுகாண்
    பேசு வாம்இனி அயன்சிரம் ஏந்திய பெற்றி. - 153



    673 - வேறு
    முன்னமோர் வைகல் மாலும் முண்டகத் தயனு மாகப்
    பொன்னின்மால் வரையி னுச்சிப் பொலங்குவ டொன்றின் உம்பர்
    மன்னுழி முனிவர் தேவர் வரம்பிலோர் வந்தான் னாரைச்
    சென்னியால் வணக்கஞ் செய்து செங்கரங் குவித்துச் சொல்வார். - 154



    674 - மூவரின் முதலா னோரும் முதலிடை முடிவும் இல்லாத்
    தேவரும் எவையும் நல்குஞ் செல்வரும் பரமே லாகி
    ஓவரும் புவனத் துள்ள உயிர்க்குயி ராய்நின் றோரும்
    ஏவரெங் களுக்கு வல்லே இருவரும் இசைத்தி ரென்றார். - 155



    675 - என்றுரைத் திடலும் வேதா எம்பிரான் பிணித்த மாயை
    தன்றலைப் படலால் யான்அத் தலைமையாம் பிரமம் ஆகும்
    நன்றிதைத் தௌ¤திர் என்ன நாரணன் தானும் அற்றாய்
    உன்றனைத் தந்த யானே உயர்தரும் பிரமம் என்றான். - 156



    676 - இருவரும் இனைய பேசி எண்ணிலா வைகல் யாரும்
    வெருவரு நிலைய தாக வெய்துயிர்த் தழன்று மாறாய்ப்
    பொருவரு தருக்கஞ் செய்யப் போயினர் முனிவர் தேவர்
    ஒருவரும் இன்றி நம்மால் உற்றதிப் பெற்றி என்றே.
    (149. செய்யகோள் - செம்பாம்பு; ராகு. கரியகோள் - கரும்பாம்பு; கேது.
    பானு - சூரியன்.
    151. பரிசனர் - தொண்டர் முதலியோர். 153. காசிவாணர் - காசிவாசிகள்.
    வழுத்தி - துதித்து.
    பெற்றி - தன்மை. 155. இருவரும் - பிரம விஷ்ணுக்களாகிய நீங்கள்.
    156. பிரமம் - மேலான கடவுள்.
    157. தருக்கம் - சண்டை.) - 157



    677 - போதலும் அனையர் பின்னும் பூசல்செய் திட்ட காலை
    வேதமுங் குடிலை தானும் வேறுவே றுருக்கொண் டெய்தி
    வாதம தியற்றல் என்று மன்னுயிர்க் குயிராய் ஆர்க்குந்
    தாதையாஞ் சிவனே வாய்மைத் தற்பரன் என்ற அன்றே. - 158



    678 - பண்டவர் உணர்ந்த வேதப் பனுவலுங் குடிலை வாக்குங்
    கொண்டிலர் விலக்கிப் பின்னுங் கொடியவெம் பூசல் செய்யக்
    கண்டுமற் றதனை அன்னோர் கடுமுரண் தொலைக்கு மாறு
    கொண்டனன் கருணை யார்க்குங் குறித்தருள் கூரும் பெம்மான். - 159



    679 - அடிமுடி யிலாத வள்ளல் அமலமாம் ஔ¤யாய் விண்ணின்
    ரூடுவுற வந்து தோன்ற நாரணன் தானும் வேதக்
    கடவுளுஞ் சிவனாம் என்று கருதிலர் யாதோ இந்தச்
    சுடரென மருண்டார் மாயச் சூழச்சியின் நீங்க லாதார். - 160



    680 - இயலது தெரிந்து சோதி இடையதாய் எம்மை யாளக்
    கயிலையில் உமையா ளோடு கலந்துவீற் றிருக்குங் கோலச்
    செயல்கொடு பரமன் நண்ணச் சிவனெனச் சிந்தை தேற்றிப்
    புயலுறழ் மேனிப் புத்தேள் பொருக்கென எழுந்து தாழந்தான். - 161



    681 - மாயையோர் சிறிதுந் தீரா மலரயன் நமது தந்தை
    ஆயவன் போந்தான் என்னா அச்சுத மூர்த்தி யேபோல்
    நேயமோ டெழுந்து தாழான் நெடியதன் உச்சிச் சென்னித்
    தீயதோர் வாயால் மேலாஞ் சிவனையும் இகழ்த லுற்றான். - 162



    682 - முண்டகம் இருந்த ஐந்து முகத்தவன் முதல்வன் தோற்றங்
    கண்டளன் இகழ வந்தக் கருணையங் கடலுஞ் சீற்றங்
    கொண்டிலன் சிறிது மற்றே கொண்டனன் என்னின் எல்லா
    அண்டமும் உயிரும் பின்னும் அழிவுறா திருக்கு மோதான். - 163



    683 - எகினம துயர்த்த அண்ணல் இரும்பவந் தொலைப்ப ஏனைப்
    பகவர்தம் அகந்தை மாற்றப் பண்ணவர் மதர்ப்புச் சிந்த
    மிகபெருங் கருணை தன்னால் வேதநா யகனுள் ளத்து
    மகிழ்வொடு புரிந்தான் என்ப வயிரவக் கடவுள் தன்னை. - 164



    684 - நீலுறு சுடரின் மெய்யும் ஞெகிழிகள் அகற்றுந் தாளும்
    ஆலம துயிர்க்குஞ் செங்கேழ் அரவவெற் றரையுஞ் சென்னி
    மாலைகள் அநந்த கோடி வயின்வயின் பெயரும் மார்புஞ்
    சூலமும் பரசும் நாணும் துடியும்ஏந் தியபொற் றொளும். - 165



    685 - முக்கணுந் திங்க ளேபோல் முளைத்தவா ளெயிறும் வன்னிச்
    செக்கரஞ் சடையின் சீருஞ் செயிர்கெழு நகையு மாக
    உக்கிர வடிவு கொண்டாங் குதித்திடு வடுகன் தன்னை
    மைக்கிளா¢ கண்டத் தெந்தை நோக்கியே வகுத்துச் சொல்வான்.
    (158. பூசன் - சண்டை. குடிலை - பிரணவம்.
    161. புயல் உறழ் மேனிப் புத்தேள் - திருமால்.
    163. ஐந்து முகத்தவன் - ஐந்து முகங்களையுடைய பிரமதேவன்.
    164. எகினம் - அன்னப்பறவை. வேதநாயகன் - சிவபெருமான்.
    165. ஞெகிழிகள் - சிலம்புகள். செங்கேழ் - செந்நிறம். வெற்றரை - நிருவாணம்.
    166. வடுகன் - வயிரவக் கடவுள். ) - 166



    686 - திகழ்ந்தநஞ் சிறுவ னாகுஞ் செங்கம லத்தோன் சென்னி
    இகழ்ந்தது நம்மை உச்சி இருந்ததே அதனை வல்லை
    அகழ்ந்தனை கரத்தி லேந்தி அவனுயிர் நல்கித் தம்மைப்
    புகழ்ந்திடு முனிவர் தேவர் புரந்தொறும் போதி அன்றே. - 167



    687 - போந்தனை அனையர் தங்கள் புலவுடற் சோரி தானே
    வாய்ந்ததோர் ஐய மாக வாங்குதி வாங்கும் வேலை
    வீந்தவர் தமக்கு மீட்டும் வியனுயிர் உதவி அன்னோர்
    ஆய்ந்திடும் அகந்தை மாற்றி அண்டமேல் அடைதி அம்மா. - 168



    688 - முன்புடைத் தாகும் அண்ட முகடுதோய் பதத்தின் மன்னி
    மன்பதைக் குலங்கள் யாவும் வானவர் தொகையும் யாண்டுந்
    துன்பறக் காத்தி யென்று தூய நல்லருளை நல்கி
    அன்புடைக் கடலாம் எங்கோன் அமலமாஞ் சோதி புக்கான். - 169



    689 - ஆதியங் கடவுள் அங்கண் அடைதலும் அமல மாகுஞ்
    சோதியும் அனையர் காணாத் தோற்றம தாக மாயோன்
    ஈதெலாந் தெரிந்து நிற்றல் இயற்கையன் றென்னா முக்கண்
    நாதனை இறைஞ்சி வல்லை நடந்துதுன் பதியிற் புக்கான். - 170



    690 - அளந்து மண்கொண்ட மாயன் அகனகர் அடைத லோடுங்
    கிளர்ந்தெழு காரி வேதாக் கேழ்கிளர் உச்சிச் சென்னி
    களைந்துதன் நகத்தால் ஏந்தக் காலுறு குருதி நீத்தம்
    வளைந்தது புவியைத் துஞ்சி மலரவன் தானும் வீழ்ந்தான். - 171



    691 - சோரிநீர் நீத்த மாகித் துண்ணென உலகங் கொண்டு
    மேருமால் வரையைச் சூழ வெய்யதன் நுதற்கண் தீயால்
    சேரவே வறப்பித் தந்தச் செங்கம லத்தி னானுக்
    காருயிர் நல்க லோடும் அவனுணர்ந் தெழுந்தான் அன்றே. - 172



    692 - வேறு
    துயிலு ணர்ந்தவ ராமெனத் தொல்லையில்
    பயிலு நல்லுணர் வெய்தலும் பங்கயன்
    வயிர வன்தன் மலரடி மீமிசை
    இயலும் அன்பொ டிறைஞ்சியுரை செய்வான். - 173



    693 - நெற்றி யங்கண் நிமலற் கியான்செயுங்
    குற்ற முண்டு குணிப்பில அன்னதால்
    பெற்று வேன்இப் பெரும்பழி ஈங்கினிச்
    செற்றம் ஏதுந் திருவுளங் கொள்ளலை. - 174



    694 - இன்மை யாக இமைப்பின் உலகடும்
    வன்மை கொண்ட வடுகநின் ஆரருள்
    நன்மையால் தொல்லை நல்லுணர் வெய்தினன்
    புன்மை யாவும் பொறுத்திடல் வேண்டுமால்.
    (168. புலவு - மாமிசம். சோரி - இரத்தம்.
    169. மன்பதைக் குலங்கள் - மக்கட் கூட்டம்.
    171. காரி - வயிரவன். உச்சிச் சென்னி - நடுத்தலை.) - 175



    695 - தீய தான சிறியவிச் சென்னியுந்
    தூய தாகத் தொழும்பினன் கண்டுழி
    மாயை தீர மலர்க்கையிற் கோடிநீ
    மேய சூல வியன்படை என்னவே. - 176



    696 - என்ன இத்தகை பன்னி இறைஞ்சலுஞ்
    சென்னி நான்குடைத் தேவனை நோக்கியே
    அன்ன தாக என்றையன் அருளியே
    பொன்னின் மால்வரை நீங்கினன் போயினான். - 177



    697 - கால வேகன் கனன்முகன் சோமகன்
    ஆல காலன் அதிபலன் ஆதியாச்
    சால நீடிய சாரதர் தானையை
    நீல மேனி நிமலன் உதவினான். - 178



    698 - எண்ணி லாஅக் கணங்களொ டெம்பிரான்
    நண்ணி ஒல்லை நவையுறு மாதவர்
    மண்ணின் மேய வனந்தொறும் வானவர்
    விண்ணின் எல்லை தொறும்விரைந் தேகினான். - 179



    699 - மெய்யின் ஊறும் வியன்குரு திப்புனல்
    ஐய மாக்கொண் டனையர்தம் ஆவிகள்
    உய்ய வேபின் னுதவி உளமெலாந்
    துய்ய வாக்கினன் தொல்லருள் ஆழியான். - 180



    700 - வடுக அண்ணல் அவ்வானவர் ஊரெலாங்
    கடிதின் நீங்கிக் கருவத்தை நீங்குறா
    நெடிய மாலுறை நீள்புரம் போயினான்
    முடுகி யேகினர் முன்கண நாதரே. - 181



    701 - அந்த மில்கணம் ஆனவர் யாவரும்
    முந்தி ஏக முதற்பெரு வாயிலோன்
    தந்தி ரத்தலை வன்தடுத் தானரோ
    நந்தும் ஆழியும் நாரணன் போலுளான். - 182



    702 - கால வேகனை ஆதிக் கணத்தவர்
    ஆல மென்ன அவனொடு போர்செய
    மேலை யோன்அங்கு மேவி அவனுடல்
    சூல மேற்கொந்தித் துண்ணென ஏகினான். - 183



    703 - வேறு
    நிலமகள் ஒருபுடை நிறங்கொள் பங்கய
    மலர்மகள் ஒருபுடை மருவப் ப·றலை
    குலவிய பணியின்மேற் கொண்டல் மேனியான்
    தலைமையொ டுறைதரு தானம் நண்ணினான்.
    (176. கோடி - கொள்வாயாக. 178. நீலமேனிநிமலன் - வயிரவக் கடவுள்.
    181. புரம் - நகர்; வைகுண்டம்.
    182. தந்திரத் தலைவன் - விடுவசேனன்.) - 184



    704 - நிணங்கிளர் முத்தலை நெடிய வேல்இறை
    கணங்களின் நிரையொடு கடிது செல்லமால்
    அணங்கின ரோடெழா ஐயன் தாள்மிசை
    வணங்கிநின் றெந்தைநீ வந்ததென் னென்றான். - 185



    705 - என்றலுங் கண்ணுதல் இறைவன் யாமிவண்
    சென்றது பலிக்குநின் றிருந்து சென்னியில்
    ஒன்றிய குருதியே உதவு வாயென
    நன்றென நாரணன் நவின்று போற்றியே. - 186



    706 - தன்னுதல் அதனிடைத் தனாது செங்கையின்
    நன்னகத் தாலொரு நாடி வாங்கியே
    அன்னதொர் பொழுதினில் அரியுய்த் தானரோ
    துன்னிய குருதிநீர் சூலி ஏற்பவே. - 187



    707 - வீண்டிடு சோரியின் வௌ¢ளம் வெம்பணி
    பூண்டதொர் கண்ணுதல் பொலங்கைச் சென்னிமேல்
    ஆண்டொரு நூறுநூ றவதி உய்த்தலும்
    மாண்டது வேறொரு மயக்கம் வந்ததே. - 188



    708 - பாதியும் நிறைந்ததும் இல்லை பாணியின்
    மீதுறு பலிக்கலன் மிக்க வன்மைபோய்ச்
    சீதரன் சோர்தலுந் திருவும் ஞாலமும்
    காதலன் நிலைமையைக் கண்டி ரங்கினார். - 189



    709 - செஞ்சரண் அடைந்தயர் தெரிவை மார்தமை
    அஞ்சலென் றருளியெம் மண்ணல் அச்சுதன்
    நெஞ்சுறு மயலினை நீக்கி யாங்கவன்
    உஞ்செழு மாறுசெய் துறையுள் நீங்கினான். - 190



    710 - நீங்கினன் பின்வரும் நெடிய மாயனை
    ஈங்கினி திருத்திஎன் றியம்ப அன்னவன்
    ஓங்குநின் சூலமேல் உற்று ளான்தனைப்
    பாங்குற வருள்கெனப் பகர்ந்து வேண்டவே. - 191



    711 - கைத்தலை அயன்தலைக் கபால்கொண் டுற்றவன்
    முத்தலை வேலினும் முடிந்த சேனையின்
    மெய்த்தலை வனதனை விடுத்துத் தொல்லுயிர்
    அத்தலை நல்கியே அருள்செய் தானரோ.
    (186. கண்ணுதல் இறைவன் - வயிரவக் கடவுள். இவண் - இங்கு. பலி - பிச்சை.
    187. நுதல் - நெற்றி. சூலி - வயிரவன். ஒரு நாடி - ஒரு நரம்பு.
    188. அவதி - அளவு; காலம்.
    189. திருவும் ஞாலமும் - திருமகளும் பூமகளும்.
    191. சூலமேல் உற்றுளான் - விடுவசேனன்.
    192. கபால் - கபாலம்.) - 192



    712 - மாலுல கொருவியே வடுகன் அன்னதோர்
    கோலமொ டேகணங் குழுமிச் சூழ்தர
    மேலுள புவனமேல் மேவி வைகலும்
    பாலனஞ் செய்தனன் பலஅண் டங்களும். - 193



    713 - அடுவதொ ரிறுதியில் கமலன் ஆணையால்
    கடவுளர் சென்னியுங் கமலன் ஆதியோர்
    முடிகளும் அட்டுயிர் முற்று மாற்றிநுண்
    பொடிபட இயற்றுமால் புவனம் யாவையும். - 194



    714 - பொறியுறும் உயிர்களும் புவனம் யாவையும்
    இறுதியாய் அழிவுறும் ஈமத் தெல்லையின்
    மறையெனு ஞாளியை உயர்த்து மற்றவன்
    உறுவதோர் மகிழ்ச்சியால் உலவும் என்பவே. - 195



    715 - வேறு
    கண்ட கங்கொள் கபால்கொடு காசினி
    விண்ட கந்தொறும் வெம்பலிக் குற்றதும்
    முண்ட கன்முத லோர்தமை எம்பிரான்
    தண்ட கஞ்செய் தலையளி யாகுமால். - 196



    716 - ஆற்றின் மல்கும் அவிர்சடை அண்ணல்பால்
    தோற்று கின்றதொர் தூயவன் சோரிநீர்
    ஏற்ற தன்மை இயம்பினம் ஈங்கினி
    வேற்றுருக் கொண்ட தன்மை விளம்புவாம். - 197



    717 - வேறு
    முந்தொரு ஞான்று மூவுலகும் போற்றிடும்
    இந்திரன் இமையவர் இனத்தொ டேகியே
    அந்தமில் கயிலையில் அரனைப் போற்றுவான்
    வந்தனன் அகந்தையும் மனத்தில் தாங்கியே. - 198



    718 - பொன்கெழு கடிமதில் பொன்னங் கோயில்முன்
    மின்கெழு வச்சிர வேந்தன் சேர்தலுங்
    கொன்கெழு பாரிடக் கோலந் தாங்கியே
    முன்கடை நின்றனன் முடிவின் முன்னையோன். - 199



    719 - நின்றிடும் ஒருவனை நெடிது நோக்கியே
    இன்றுனைக் கண்டனன் யாரை ஐயநீ
    மன்றவும் விருந்தினை வள்ள லைத்தொழச்
    சென்றனன் வேலையென் செப்பு கென்னவே. - 200



    720 - மற்றது காலையின் மகேசன் யாவதுஞ்
    சொற்றில னாகியே சூர்த்த நோக்குடன்
    உற்றிட மேல்வரும் ஊற்றம் உன்னலன்
    செற்றம தாயினன் தேவர் செம்மலே.
    (193. பாலனம் - பாதுகாத்தல். 195. ஞாளி - நாய்.
    199. வச்சிரவேந்தன் - இந்திரன்.
    கொன் - அச்சம். பாரிடம் - பூதம். முன்கடை - தலைவாசல்.
    200. விருந்தினை - புதியை.
    201. சூர்த்த - அச்சம் தரத்தக்க.) - 201



    721 - அண்டரும் அகந்தையன் ஆற்ற வுந்திறல்
    கொண்டனன் என்றுதன் குலிச மாப்படை
    கண்டகன் எறிதலுங் கடவுள் மேற்படா
    நுண்டுக ளாகியே நொய்தின் மாய்ந்ததே. - 202



    722 - மருத்துவன் வச்சிரம் மாய்ந்து போதலும்
    புரத்தினை யட்டருள் புனிதன் அவ்வழிக்
    கிருத்திம வுருவினை நீங்கிக் கேழ்கிளர்
    உருத்திர வடிவினை ஒல்லை தாங்கினார். - 203



    723 - உயர்ப்புறு சடிலநின் றூறு தண்புனல்
    அயர்ப்புறு மகபதி அகந்தை கண்டட
    மயிர்ப்புறம் எங்கணும் வந்து தோன்றலின்
    வியர்பபுவந் தடைந்தன மேனி முற்றுமே. - 204



    724 - எள்ளுதல் செய்திடும் இவன்தன் ஆருயிர்
    கொள்ளுதும் எனச்சினங் கொண்ட தீயொடும்
    உள்ளுறு காலெழீஇ ஒருங்கு சென்றெனப்
    பொள்ளென உயிர்ப்பழல் புகையொ டுற்றதே. - 205



    725 - குறுகிநின் றாற்றலால் குலிச மாப்படை
    எறிதரு கொடியனை எய்த வேளெனச்
    செறுகனல் விழியெனச் செப்பச் சேறல்போல்
    நெறிதரு புருவமும் நெற்றி சேர்ந்தவே. - 206



    726 - பற்றலர் புரங்களோ உலகின் பன்மையோ
    முற்றுயிர் ஈட்டமோ முடிக்கப் பேதையைச்
    செற்றிடல் வசையவன் செயலைக் காண்டுமென்
    றுற்றனன் முறுவலும் உதித்த தொல்லையில். - 207



    727 - துடித்தன துவரிதழ் உரப்பித் தூயவாய்
    இடித்தன சேந்தன இரண்டு கண்களும்
    விடத்தினை நுகர்ந்தவன் வெகுளித் தீயினுக்
    கடுத்திடு துணைவர்தம் அமைதி போலவே. - 208



    728 - அக்கணம் இவ்வகை யார்க்கும் ஆதியாம்
    முக்கணன் நான்முகன் முதல தேவரும்
    மிக்குள உயிர்களும் வெருவ வெய்யதோர்
    உக்கிர வடிவுகொண்டு ருத்து நின்றனன்.
    (202. கண்டகன் - இரக்கமில்லாத இந்திர. 203. மருத்துவன் -
    இந்திரன். கிருத்திமம் - பூதம்.
    208. துவர் இதழ் - செவ்விதழ்.) - 209



    729 - வேறு
    நிற்கின்ற எம்பெருமான் பெருஞ்சீற்றந்
          தனைநோக்கி நெஞ்சமாகுங்,
    கற்குன்றம் நடுநடுங்கப் பதைபதையா
         அஞ்சியவன் கழலின் வீழ்ந்தே,
    எற்குன்றன் மாயமெலாந் தெரிந்திடுமோ
         மாலயனும் இன்னுந்தேறார்,
    பொற்குன்றச் சிலையானே வினையேன்செய்
         பிழையதனைப் பொறுத்தி என்றான். - 210



    730 - போற்றிப்பன் முறைதாழும் புரந்தரனை
          அஞ்சலென்று புரிந்து நோக்கி,
    மேற்றிக்கில் வீழ்கின்ற செங்கதிரோ
          இதுவென்ன வேலை மேற்றன்,
    சீற்றத்தீ யினைவீசி ஆங்கவற்கு
          விடைகொடுத்துச் செல்கென் றேவி,
    ஏற்றிற்செய் அரியணைமேல் உறையுள்புகுந்
          துமையொடும்வீற் றிருந்தான் எங்கோன். - 211



    731 - வேறு
    கூற்று வன்தனிக் கூற்றன் மந்திரம்
    வீற்றி ருந்திடும் வேலை வாய்தனில்
    ஆற்றல் சேர்புனற் கரசன் பால்விடு
    சீற்ற மானதோர் சிறுவன் ஆனதே. - 212



    732 - ஆன பாலனை அம்பு ராசிதன்
    கானு லாந்திரைக் கரங்களால் தழீஇத்
    தான வேசன்என் தனயன் ஆயினான்
    நான லாதியார் நற்றவஞ் செய்தார். - 213



    733 - ஊழி பேரினும் உலகம் பேரினும்
    வாழி வாழியென் மைந்த நீயெனாக்
    கேழில் ஆசிகள் கிளத்திப் போற்றினான்
    ஆழி மால்கடற் கரசன் என்பவே. - 214



    734 - நசைகு லாவிய நரலை காத்திட
    வசைவி லான்சிறி தழுத வேலையில்
    வசையி லாதுயர் வானும் மண்ணுமெண்
    டிசையும் யாவையுஞ் செவிடு பட்டவே. - 215



    734 - நூன்மு கத்தினோர் நுனித்துக் காணுறு
    நான்னு கத்தினோன் நாடி இவ்வொலி
    வான்மு கத்திடை வருமி தேதெனா
    மீன்மு கத்துலாம் வேலை மேவினான். - 216



    736 - வேலை சேரஅவ் வேலை வேலையுஞ்
    சால வன்பினால் தவிசொன் றிட்டுநீ
    ஏல மேவுகென் றிருத்தி யான்பெறும்
    பாலன் ஈங்கிவன் பார்த்தி யாலெனா. - 217



    737 - கையில் நீட்டலுங் கடிது வாங்கியே
    ஐயன் தன்மடி அதனில் சேர்த்திடத்
    துய்ய புல்லணந் தொடர்ந்து பற்றினான்
    மையல் மைந்தனுந் தனது வன்மையால்.
    (212. மந்திரம் - ஆலயம்.
    213. அம்புராசி - கடல். தானவேசன் - தானவர் தலைவன்.
    215. நசை - விருப்பம். நரலை - கடல். 218. புல்லணம் - தாடி.
    மையல் மைந்தன் - பித்தன் (சிவன்) மகன் இவன் கோபாக்கினியால் உதித்தவன்.) - 218



    738 - நார்த்தொ டுத்தெனும் நான்கு தாடியும்
    ஈத்துத் தூங்கலும் இணையில் வேதனும்
    ஆர்த்தி எய்தினான் அவன்கண் ஏயவன்
    சீர்த்தி கான்றெனச் சிந்திற் றொண்புனல். - 219



    739 - காறொ டர்ந்திழி கலங்கு கட்புனல்
    ஆறு போலிய அகலம் தன்வழச்
    சேறல் மேயது செறிவுற் றீண்டியே
    வேறொர் வேலைபோல் வேலை புக்கதே. - 220



    740 - முக்கண் நாயகன் முனிவு தன்னிடைப்
    புக்க காலையிற் புனல்வ றந்திடு
    மைக்க ருங்கடல் வறுமை நீங்கிற்றால்
    மிக்க நான்முகன் விழியின் நீரினால். - 221



    741 - பதுமன் அவ்வழிப் படர்ம யிர்த்தொகை
    மதலை கையினும் மரபின் நீக்கியே
    கதுமெ னப்பல கரங்க ளாலெடுத்
    துததி தன்கையில் உயிர்த்து நீட்டினான். - 222



    742 - நீட்டி யோரிறை நினைந்து நீயிது
    கேட்டி யொன்றியாங் கிளத்து வோம்இவன்
    ஏட்டு லாயதேன் இதழி சென்னியிற்
    சூட்டும் எம்பிரான் முனிவில் தோன்றினான். - 223



    743 - கருதி டான்ஒரு கடவுள் தன்னையும்
    வரமும் வேண்டலன் ஏது மற்றிவன்
    ஒருவ ராலுமீ றுற்றி டானரோ
    பரமன் சீற்றமே யான பான்மையால். - 224



    744 - தேவர் தேவர்கோன் திசையினோர் வெரீஇப்
    போவ ரேயெனில் பொருகிற் பாரெவர்
    நீவி ரேனுமுன் நிற்றல் அஞ்சுவீர்
    ஏவ ரேஇவன் எதிர்நிற் பார்களே. - 225



    745 - ஆயுந் தொன்னெறி அமரர் யாவரும்
    ஈயுஞ் சாபம்வந் திவனை நேருமோ
    காயுந் திண்டிறற் கடவுட் டன்மைசேர்
    தீயுந் தீயுநின் சிறுவன் வெம்மையால். - 226



    746 - நானும் அஞ்சுவன் நளினை காவலன்
    தானும் அஞ்சுவன் தவறில் வேள்விசெய்
    கோனும் அஞ்சும்வெங் கூற்றும் அஞ்சுமவ்
    வானும் அஞ்சும்இம் மண்ணும் அஞ்சுமே.
    (219. தூங்கல் - தொங்குதல். ஆர்த்தி - துன்பம்.
    220. அகலம் - மார்பு.
    222. உததி - கடல்; வருணன். 224. மற்று - அசை.
    227. நளினை - திருமகள்.) - 227



    747 - பாச னங்களே பரவ ஞாலமேல்
    தேசில் வெய்யகோல் செலுத்தி யாங்கவர்
    ஆசி செய்யநீ டரசு செய்வனால்
    ஈசன் அன்றியார் இவனை வீட்டுவார். 228 - 228



    748 - என்னு மாத்திரத் திவன்த னக்குநீ
    நன்ன லந்திகழ் நாமம் ஒன்றினைப்
    பன்னு கென்னநீ பரித்த லால்இவன்
    தன்ன தொண்பெயர் சலந்த ரன்எனா. - 229



    749 - பேரிட் டொல்லையில் பிரமன் தானுறை
    ஊரிற் போயினான் உததி பற்பகல்
    சீரிற் போற்றலுஞ் சிறுவன் காளையாய்ப்
    பாரிற் சேர்ந்தனன் அவுணர் பாற்பட. - 230



    750 - சென்று பாரிடைத் திசைகள் யாவையும்
    வென்று வாசவன் விண்ணு ளோர்நிதிக்
    குன்று சேர்தரக் கொடுமை செய்தனன்
    துன்று கின்றதொல் லவுணர் சூழவே. - 231



    751 - பொன்னெ டுங்கிரி தனிற்புத் தேளிரு
    மன்னும் வைகலும் வான நாடெலாந்
    தன்னை நேரிலான் தான வர்க்கெலாம்
    நன்ன யப்பொடு நல்கி னானரோ. - 232



    752 - வச்சி ரப்படை மன்னன் பொன்னகர்
    நச்சும் வண்ணமோர் நகரஞ் செய்கென
    அச்ச லந்தரன் அருளத் தானவர்
    அச்சன் அவ்வழி ச¨திது நல்கினான். - 233



    753 - பாந்தள் மீமிசை பரிக்கு நேமிசா
    லாந்த ரம்மென அறைய நின்றதோர்
    ஏந்தல் மாநக ரிடையில் தானவர்
    வேந்தர் போற்றிட அரசில் மேயினான். - 234



    754 - கால நேமியாம் அவுணன் கன்னிகை
    வேலை நேர்விழி விருந்தை யென்பவள்
    கோல நாடியே குரவன் கூறிட
    ஏல வேமணந் தின்பம் எய்தினான்.
    (228. பாசனங்கள் - அசுர பரிவாரங்கள். வீட்டுவார் - கொல்லுவோர்.
    229. சலத்தரன் - கடலால் வளர்க்கப்பட்டவன். சலம் - கடல்.
    தரம் - தரித்தல்; ஆகவே கடலால் தாங்கப்பட்டவன் சலந்தரன் என்பதாம்.
    333. நச்சும் - விரும்பும். தானவர் தச்சன் - அசுர தச்சன்; கம்மியன்.
    234. நேமி - பூமி. சாலாந்தரம் - காலாந்தரபுரி; இது சலந்தராசுரன் நகரம்.
    235. விருந்தை - இவள் கற்பிலும் அழகிலும் அறிவிலும் சிறந்தவள்;
    காலநேம என்னும் அசுரன் மகள்; விருந்தையைப் பிருந்தை எனவும் கூறுவர்.) - 235



    755 - பாரில் அவ்வழிப் பன்னெ டும்பகல்
    சீரின் வைகினான் தேவர் யாவரும்
    மேரு வுற்றனர் அவரை மேவியாம்
    போர்செய் வோமெனப் புகன்று போயினான். - 236



    756 - துங்க வீரர்கள் தொழுச லந்தரன்
    அங்கண் மேவலும் அமரர் வெய்யவன்
    இங்கும் வந்தனன் என்செய் வோமெனார்
    சிங்கங் கண்டதோர் கரியின் தேம்பினார். - 237



    757 - தேம்பு கின்றவர் செய்வ தோர்சிலார்
    பாம்ப ணைத்துயில் பவனை உன்னியே
    ஓம்பு கென்றலும் உவண மீமிசை
    ஏம்ப லோடும்வந் திமைப்பில் எய்தினான். - 238



    758 - வருச லந்தரன் மாறு கொண்டெழ
    இருப தாயிரம் யாண்டு பல்படை
    உரிய மாயைகொண் டுருத்தெ ழுந்துமால்
    பொருதும் வென்றிலன் புகழ்ந்து போயினான். - 239



    759 - கொண்டல் மேனியன் கொடியன் தன்னொடு
    மண்டு போரிடை மலையும் வேலையில்
    அண்டர் வாசவன் அஞ்சி ஆலமார்
    கண்டன் மேவிய கயிலை எய்தினார். - 240



    760 - வேறு
    அற்றா கின்ற வேலையின் வேலை அருள்மைந்தன்
    பற்றார் தம்மை நாடினன் யாண்டும் பார்க்கின்றான்
    கற்றார் ஏத்துங் கண்ணுதல் மேய கயிலாயத்
    துற்றார் கொல்லென் றுன்னி வெகுண்டான் ஊர்போந்தான். - 241



    761 - தூண்டா ஒற்றால் பெற்றிடு சேனைத் தொகையோடு
    மீண்டா நிற்பான் தென்க கயிலைக்கென் றெழும்வேலை
    வேண்டாம் வேண்டாம் நித்த னுடன்வெஞ் சமர்செய்யின்
    மாண்டாய் என்றாள் இல்லென வாழும் மதிவல்லி. - 242



    762 - குலந்தனில் வந்தாள் கூறிய மாற்றங் குறிக்கொள்ளான்
    நலந்தரு கின்ற செய்வினை ஓரான் நவைபாரான்
    புலந்தரு செற்றம் மீக்கொள யாதும் பொறையின்றிச்
    சலந்த ரனாம்பே ருண்மைய தென்னச் சாதித்தான். - 243



    763 - சோனா மேகம் போற்படை மாரி சொரிகின்ற
    சேனா யூகஞ் சூழ்தர வாழித் திருமைந்தன்
    போனான் எங்கோன் தென்க யிலைக்கோர் புடையாக
    வானா டுள்ளோன் ஆங்கது காணா மறுகுற்றான்.
    (237. துங்கம் - உயர்வு. 238. உவணம் - கருடன். ஏம்பல் - ஆசை.
    241. வேலை அருள்மைந்தன் - சலந்தராசுரன்.
    243. சலந்தரனாம் பேர் உண்மை - கோபத்தைச் சுமந்தவன் சலந்தரன்
    என்பதாம். சலம் - கோபம். தரன் - சுமந்தவன்.) - 244



    764 - தாண்டும் பாய்மாத் தோகரி வீரர் தற்சூழ
    ஈண்டும் வந்தான் தீயவன் ஆவி இறும்வண்ணங்
    காண்டும் என்னா வாசவன் வானோர் கணமோடும்
    வேண்டும் வௌ¢ளிக் குன்றுறு கோயில் மேவுற்றான். - 245



    765 - வேறு
    முந்திய வாயிலின் முறைபு ரிந்திடு
    நந்தியை வணங்கியுள் நடுக்கஞ் செப்பலும்
    அந்தமில் பண்ணவன் அருளை நாடியே
    உந்திட இந்திரன் உறையுள் போயினான். - 246



    766 - குணங்களின் மேற்படு குழகன் மால்வரை
    அணங்கொடு வீற்றிருந் தருளும் எல்லைபோய்
    வணங்கினன் தொழுதனன் வலிய துன்பினால்
    உணங்குதன் மனக்குறை உரைத்தல் மேயினான். - 247



    767 - நிலந்தனை வளைந்த முந்நீரில் வந்தவன்
    சலந்தரன் எனும்பெயர்த் தறுகட் டானவன்
    மலைந்தெமை வென்றிட மாசுற் றோடினேன்
    நலந்தரு நின்றபொன் னாடு நீத்தனன். - 248



    768 - வெந்துயர் எய்தியே மேரு வின்புடை
    உய்ந்தனன் யானென ஔ¤த்து மேவினன்
    அந்தவண் ணத்தையும் அறிகுற் றாங்கவன்
    வந்தனன் அவ்வழி மாலை உன்னினேன். - 249



    769 - மாலும்வந் தணுகியே மலைந்து தோற்றிடா
    மேலுமங் கவன்தனை வியந்து போயினான்
    நீலகண் டத்தனே நினது மால்வரை
    ஏலவந் துற்றனன் இதுவுங் கேட்டனன். - 250



    770 - ஈங்கும்வந் துற்றன னியாவ துன்னியோ
    ஆங்கது தெரிகிலேன் அளியன் துன்பமுந்
    தீங்குறு சலந்தரன் திறலும் வாழ்க்கையும்
    நீங்குதல் உன்னுதி நிமலநீ என்றான். - 251



    771 - வரையெறி படையினன் மாற்றங் கேட்டுநின்
    பருவரல் ஒழிகெனப் பகர்ந்து போக்கியே
    கருணையின் நீர்மையாற் கணிச்சி வானவன்
    ஒருதனி ஆடலை உள்ளத் துன்னினான். - 252



    772 - நான்றகுண் டிகையினன் நரைகொள் யாக்கையன்
    ஊன்றிய கோலினன் ஓலைக் கையினன்
    மூன்ற னல்வளர்ப் புறுமுனி வரேயெனத்
    தோன்றினன் தனக்கொரு தோற்றம் வேறிலான். - 253



    773 - விம்மலை உற்றிடு விரதர்க் காகமுன்
    கைம்மலை உரித்தவன் கயிலை என்றிடும்
    அம்மலை ஒருபுடை அணுகுந் தானவர்
    செம்மலை எதிர்கொடு செல்லல் மேயினான். - 254



    774 - இந்திரன் இமையவர் இனத்தொ டீண்டியே
    வந்தனை செய்தனன் மறைந்து பின்வர
    அந்தணர் வடிவுகொண் டவுணர் காவலன்
    முந்துற வெய்தியே முதல்வன் கூறுவான். - 255



    775 - எங்குளை யாரைநீ எவரை நாடியே
    இங்குறு கின்றனை இயம்பு வாயென
    அங்கணன் மொழிதலும் அந்தண் வேதிய
    சங்கைய தில்வகை சாற்றக்கேள் என்றான். - 256



    776 - நிலந்தனில் உற்றுளேன் நேமி காதலன்
    சலந்தரன் என்பவன் தமியன் வானவர்
    உலைந்திட நுதல்விழி ஒருவன் தன்னுடன்
    மலைந்திட வந்தனன் வல்லையீண் டென்றான். - 257



    777 - அவ்வுரை வினவியே அண்ணல் எண்ணமுஞ்
    செவ்விது செவ்விது தீதுண் டோவெனா
    எவ்வமில் புகழ்ச்சிபோல் இகழ்ந்து காட்டிடா
    நவ்வியங் கைத்தலன் நகைத்துச் செப்புவான். - 258



    778 - கயிலையங் கிரியுறை கண்ணு தற்பிரான்
    அயலுற இருப்பன்யான் அவனொ டேயமர்
    முயலுறு கிற்றியேல் முடிதி உய்ந்திடுஞ்
    செயலினை நினைத்தியேற் செல்கமீண் டென்றான். - 259



    779 - பண்ணவன் இனையன பகர்தல் கேட்டலும்
    எண்ணமில் சலந்தரன் எரியிற் சீறியே
    கண்ணழல் கதுவுறக் காயம் வோ¢வெழத்
    துண்ணென உயிர்த்திவை சொற்றல் மேயினான்.
    (253. நான்ற - தொங்குகின்ற. ஓலை - ஓலைக்குடை.
    மூன்று அனல் - மூவகை அக்கினி.
    254. கைம்மலை - யானை. தானவர் செம்மல் - சலந்தரன்.
    257. நேமிகாதலன் - வருணன் மகன்.
    258. எவ்வம் - குற்றம். நவ்வி - மான்.
    260. பண்ணவன் - அந்தண வடிவுகொண்ட சிவன்.) - 260



    780 - சிறியவன் போலெனைச் 1சிந்தித் தீரியான்
    பெறுவதோர் சயமெலாம் பேசி யாவதென்
    இறைவரை யீண்டுநின் றெனது வன்மையை
    அறிகுதிர் அறிகுதிர் அந்தணீர் என்றான்.
    (பா-ம் 1 - சிந்திப்பீரியான்.) - 261



    781 - என்றிவை சலந்தரன் இசைப்ப யாமுமுன்
    வன்றிறல் காணிய வந்த னம்மெனாத்
    தன்திரு வடியினால் தரணி யின்மிசை
    ஒன்றொரு திகிரியை ஒல்லை கீறினான். - 262



    782 - ஆங்கது திகிரியொன் றாக அந்தணன்
    ஈங்கிது சென்னியில் ஏற்றி வன்மையால்
    தங்குதல் வல்லையோ என்று சாற்றலும்
    தீங்குறு சலந்தரன் இனைய செப்புவான். - 263



    783 - புங்கவர் யாரையும் புறங்கண் டேன்வரு
    கங்கையை அடைத்தனன் கார்கொள் வேலையில்
    அங்கியை அவித்தனன் அரியை வென்றனன்
    இங்கிது தாங்குவ தரிய தோவெனா. - 264



    784 - புரத்தழல் கொளுவியோன் பொறித்த நேமியைக்
    கரத்திடை எடுத்தனன் கனங்கொண் டெய்தலின்
    உரத்திடைப் புயத்திடை உயிர்த்துத் தாங்கியே
    சிரத்திடை வைத்தனன் தேவர் ஆர்க்கவே. - 265



    785 - செழுஞ்சுடர்ப் பா¤தியைச் சென்னி கோடலால்
    ஒழிந்திடு சலந்தரன் உச்சி யேமுதற்
    கிழிந்தது முழுதுடல் கிளர்ந்து சோரிநீர்
    இழிந்தது புவிதனில்இழுமென் ஓசையால். - 266



    786 - பரிதியங் கடவுள்அப் பதகன் தன்னுடல்
    இருபிள வாக்கியே இறைவன் தன்னிடை
    உருவுகொண் டுற்றதிவ் வுலகம் யாவையுங்
    குருதியம் பெருங்கடல் வளைந்து கொண்டதே. - 267



    787 - பாதல நிரயமாம் பாழி யூடுநீ
    போதென எருவைநீர் போந்த தாயிடை
    ஆதியங் கடவுள்அவ் வவுணன் சேனையைக்
    காதினன் விழிபொழி கனலின் தானையால். - 268



    788 - பரந்திடும் அவுணர்தம் பகுதி வீட்டியே
    கரந்ததொல் வடிவினைக் காட்டி நிற்றலும்
    புரந்தரன் முதலினோர் வணங்கிப் போற்றிஎம்
    அரந்தையை அகற்றினை ஐயநீ என்றார். - 269



    789 - முன்புறு புரந்தரன் முதலி னோர்க்கெலாம்
    இன்புறு தொல்லர சியற்ற நல்கியே
    அன்புடன் விடைகொடுத் தமல நாயகன்
    தென்பெருங் கயிலைமேற் சேர்ந்து வைகினான்.
    (262. தரணி - பூமி. திகிரி - சக்கரம். 265. பொறித்த - உண்டாக்கிய.
    நேமி - சக்கரப்படை.
    267. பரிதி அம் கடவுள் - சக்கரமாகிய தெய்வம். பதகன் - கீழ் மகன்;
    சலந்தரன். 268. பாழி - இடம். எருவை நீர் - இரத்தம்.
    காதனன் - அழித்தனன். கனலின் தானை - தீப்பொறியாகிய சேனை.) - 270



    790 - ஆவியை இழந்திடும் அவுணர் காவலன்
    தேவியை விரும்பியே திருவின் நாயகன்
    மாவிர தியரென மற்ற வன்மனைக்
    காவி னுள்இருந் தனன்கை தவத்தினான். - 271



    791 - இருந்திடும் எல்லையில் ஏமக் கற்புடை
    விருந்தைஎன் றிடும்அவள் வேந்தன் செய்கையைத்
    தெரிந்திலள் ஆற்றவுஞ் சிந்தை நொந்துமெய்
    வருந்தினள் உய்ந்திடும் வண்ணங் காண்கிலாள். - 272



    792 - பரிதலுற் றிரங்கினள் பதைத்துச் சோர்ந்தனள்
    ஒருதனித் திருக்கிலள் உரையும் ஆடலள்
    திரிதலுற் றுலவினள் சேய்வ தோர்கிலள்
    இருதலைக் கொள்ளியின் எறும்பு போன்றுவாள். - 273



    793 - கல்வரை யேந்திய காளை யைப்புணர்
    தொல்வரை ஊழினால் துன்பம் நீங்கலா
    மெல்வரை அன்னதோள் விருந்தை மேவினாள்
    இல்வரை இகந்திடா ஏமக் காவினுள். - 274



    794 - மடவரல் வருதலும் வைகுண் டந்தனில்
    கடைமுறை போற்றிடும் இருவர் காவலர்
    அடலரி ஆகியே ஆர்த்து முன்னுற
    இடியுறும் அரவுபோல் ஏங்கி ஓடினாள். - 275



    795 - மடந்தையங் கிரிதலும் மடங்க லானவர்
    தொடர்ந்தனர் பின்வரத் துளங்கிச் சோலையின்
    இடந்தனில் முனியென இருந்த வெய்யனை
    அடைந்தனள் அடைதலும் அஞ்சல்நீ என்றான். - 276



    796 - என்றருள் புரிதலும் இகல்வெஞ் சீயமாய்ப்
    பின்றொடர் காவலர் பெயர்வுற் றோடினார்
    நின்றவள் இருந்தவன் நிலைமை நோக்கியே
    நன்றிவன் இயல்பென நவில்வ தாயினாள். - 277



    797 - எந்தையெம் பெருமகேள் எனது காதலன்
    அந்தமில் ஈசன்மேல் அமருக் கேகினான்
    வந்திலன் இன்னமும் மாய்வுற் றான்கொலோ
    உய்துள னேகொலோ உரைத்திநீ என்றாள்.
    (271. திருவின்நாயகன் - திருமால். மாவிரதியர் - சிவமூர்த்தியை எண்ணித்
    தவம் இயற்றும் ஒரு தவசி.
    272. ஏமம் - இன்பவடிவு. 274. கல்வரை - கோவர்த்தனகிரி. மேல்வரை
    அன்ன - மெல்லிய மூங்கிலைப் போன்ற.
    275. கடைமுறை - வாயில். காவலர் இருவர் - துவார பாலகர். அரி - சிங்கம்.
    276. இரிதல் - ஓடுதல். மடங்கல் - சிங்கம். வெய்யனை - இங்குத் திருமாலை.
    277. சீயம் - சிங்கம். காவலர் - துவார பாலகர்கள்.
    278. எனது காதலன் - என்னுடைய கணவன்; கலந்தராசுரன். கொல் - ஐயப்பொருள்.) - 278



    798 - இரங்கினள் இவ்வகை இசைப்ப மாதவன்
    வரங்கெழு தானையின் மன்னர் மாயையால்
    குரங்கென ஈருருக் கொண்டு கொம்மென
    உரங்கிளர் சலந்தரன் உடல்கொண் டேய்தினார். - 279



    799 - இருபிள வாம்அவ னியாக்கை கொண்டுசென்
    றரிவைமுன் இட்டனர் அதனைக் காண்டலும்
    வெருவினள் பதைத்தனள் வீழ்ந்த ரற்றினாள்
    ஒருவினள் உயிரென உணர்வு நீங்கினாள். - 280



    800 - வருந்தலை வருந்தலை மங்கை நீயெனாக்
    கரந்தனை ஓச்சியே காதல் நீர்மையால்
    இருந்தவன் எழுப்பலும் எழுந்து தேறியே
    விருந்தைகை தொழுதிவை விளம்பல் மேயினாள். - 281



    801 - நின்னிகர் மாதவர் நிலத்தின் இல்லையால்
    என்னுயிர் கார்தியேல் எனது நாயகன்
    பொன்னுடை லந்தனைப் பொருந்தி அவ்வுயிர்
    தன்னையும் அமைத்தனை தருதிநீ என்றாள். - 282



    802 - ஆயது காலையில் அவுணன் யாக்கையை
    ஏயென ஒன்றுமா றியற்றி மாதவன்
    மாயம தாகியே மறைந்து மற்றவன்
    காயம திடைதனில் கலந்து வைகினான். - 283



    803 - புல்லிய குரங்கெனப் புகுந்த கள்வரும்
    ஒல்லையின் மறைந்தனர் உயர்ச லந்தரன்
    தொல்லுடல் புகுந்தரி துண்ணென் றேயெழ
    மெல்லியல் கண்டனள் வியந்து துள்ளினாள். - 284



    804 - உய்ந்தனன் கணவனென் றுளத்தில் உன்னியே
    வெந்துயர் அகன்றனள் விருந்தை என்பவள்
    வந்தனை பேலுமென் மகிண நீயெனா
    அந்தமில் உவகையால் அவனைப் புல்லினாள். - 285



    805 - புல்லிய விருந்தையைப் புணர்ந்து மாயவன்
    எல்லியும் பகலுமோர் இறையும் நீங்கலான்
    அல்லியந் தேனுகர் அளியைப் போல்அவண்
    மெல்லிதழ் அமுதமே மிசைந்து மேவினன். - 286



    806 - காய்கதிர் நுழைவுறாக் கடிமென் காவினுள்
    மேயினன் பலபகல் வேளின் நூல்வழி
    ஆயதோர் வைகலின் அரன தாணையால்
    மாயம தயர்த்தனன் மலர்க்கண் துஞ்சினான்.
    (279. தானையின் மன்னவர் - சேனைக்காவலர். 280. அரிவை - பிருந்தை.
    284. புல்லிய - இழிந்த. துள்ளுதல் - மகிழ்ச்சி மிகுதியால் குதித்தாடுதல்.
    286. புல்லிய - தழுவிய. எல்லியும் - இரவும். 287. கதிர் - சூரிய வௌ¤ச்சம்.
    கடி - அச்சம். வேளின் நூல் - மன்மதாகமம். மாயமது அயர்த்தனன் -
    (தான்கொண்ட) மாயைமறந்து; முற்றெச்சம். துஞ்சினான் - தூங்கினான்.) - 287



    807 - துஞ்சிய வேலையில் துணைவி யாகிய
    பஞ்சினின் மெல்லடிப் பாவை பார்த்திவன்
    வஞ்சகன் வஞ்சகன் மாய னேயெனா
    அஞ்சினள் நெஞ்சகம் அழன்று நீங்கிளாள். - 288



    808 - அருந்ததி அன்னகற் பழிந்த தன்மையால்
    வருந்தினள் உயிர்த்தனள் மாயம் யாவையும்
    பொருந்திய தன்னுயிர்ப் போத நீர்மையால்
    தெரிந்தனள் சீதரற் கிதனைச் செப்புவாள். - 289



    809 - மாவலி யுடையதோர் மடங்க லாயினோர்
    காவல ரிருவர்அக் காவ லாளர்உன்
    மேவல ராயுற வேந்த னாகிநீ
    ஓவலை குரங்கொடு திரிதி ஒண்புவி. - 290



    810 - பொற்புறு கணவனைப் போல வந்தெனைப்
    பற்பகல் புணர்ந்தனை பகைவர் மாயையால்
    கற்புடை மனைவியைக் கவர்ந்து போகநீ
    சொற்படு பழியினைச் சுமத்தியால் என்றாள். - 291



    811 - இக்கொடு மொழிபுகன் றெரியை மூட்டியே
    புக்குயிர் துறந்தனள் புலம்பி யாங்கவள்
    அக்குறு சுடலைநீ றாடி வாடினான்
    மைக்கடல் மேனியன் மாலின் மூழ்கியே. - 292



    812 - வேறு
    அத்துணை தன்னின் வானோர் அம்புயன் கயிலை யேகி
    நித்தனை இறைஞ்சி மாயோன் நிலைமையை உயர்த்தும் போழ்தில்
    சத்தியங் கதனைத் தேர்ந்து தலையளி செய்து தானோர்
    வித்தினை உதவி ஈது விண்டுமுன் இடுதிர் என்றாள். - 293



    813 - ஈதலும் அதனை வேதா இருகையால் ஏந்திச் சென்னி
    மீதுறக் கொண்டு போந்து விருந்தைதன் ஈமந் தன்னில்
    தாதுறு பலியின் வித்தித் தடங்கட லமுதம் பெயய
    மாதவன் முன்னம் ஆங்கோர் துளவமாய் மலிந்த தன்றே.
    (289. தன் உயிர்ப்போத நீர்மையால் - தனது சீவபோதத் தன்மையால்.
    290. மாவலி - மிக்க வலிமை. மேவலராய் உற - பகைவராய்ப் பொருந்த.
    இங்குப் பகைவர் இராவணனும் கும்பகர்ணனும் ஆவர்.
    அரசன் - இ·து இராமனை உணர்த்தும்.
    291. கற்புடைய மனைவி - இங்கு சீதையை உயர்த்தும்.
    292. அக்கு - என்பு. சுடலைநீறு - சுடுகாட்டுச் சாம்பல். ஆடி - புரண்டு.
    293. சத்தி - உமாதேவியார். வித்து - (துளசி) விதை. 294. தாது - புழுதி.
    பலி - சாம்பல்.) - 294



    814 - தண்டுள வான தாங்கோர் கையலாய் நின்ற காலைக்
    கண்டனன் தருவின் கேள்வன் கனலிடைப் புகுந்தாள் மீது
    கொண்டிடு காதல் நீங்கி அவள்வயிற் கூட்டம் வெ·க
    அண்டரும் அயனும் மாலுக் கருங்கவடி இயற்றி ஈந்தார். - 295



    815 - கடியுறு துளவம் என்னுங் கன்னியைக் கொண்டு கஞ்சக்
    கொடியுறு தகைமைத் தான கோநகர் குறுகி வேறோர்
    படியுறு பெற்றித் தல்லாப் பல்பெரும் போகம் ஆற்றி
    முடியுறு கூட்டு மாக முடித்தனன் முளரிக் கண்ணன். - 296



    816 - அவன்சலந் தரனை வீட்டும் ஆழியை வாங்கப் பன்னாள்
    சிவன்கழல் வழபட் டோர்நாள் செங்கணே மலராச் சாத்த
    உவந்தனன் விடைமேல் தோன்றி அப்படை உதவப் பெற்று
    நிவந்தனன் அதனால் வையம் நேமியான் என்ப மாதோ. - 297



    817 - வேறு
    போற்ற லார்தம் புரமடு புங்கவன்
    வேற்று ருக்கொள் வியனருட் டன்மையைச்
    சாற்றி னாம்இனித் தன்னிகர் இல்லதோர்
    ஏற்றின் மேல்வருந் தன்மை இயம்புவாம். - 298



    818 - இன்ன நான்குகத் தெல்லை இராயிரம்
    மன்னு கின்றதொர் வைகல்அவ் வைகல்தான்
    துன்னு முப்பது தொக்கதொர் திங்களா
    அன்ன தாறிரண் டால்வரும் ஆண்டரோ. - 299



    819 - ஆண்டு நூறுசென் றால்அயற் காயுவும்
    மாண்டு போமது மாற்கொரு வைகலாம்
    ஈண்டு நூல்களெ லாமிவை கூறுமால்
    காண்டி யாலிவை கற்றுணர் பேதைநீ. - 300



    820 - ஆய தன்மையில் அச்சுதற் காயுவும்
    மாயும் எல்லையின் மன்னுயிர் யாவையுந்
    தேயும் அண்டஞ் சிதைந்திடும் எங்கணும்
    பாயி ருங்கன லேபரந் துண்ணுமால். - 301



    821 - ஆன காலை அகிலமும் ஈமமாய்த்
    தூந லங்கொடு தோன்றுமச் சூழலில்
    தானு லாவித் தனிநடஞ் செய்திடு
    ஞான நாயக னாயகி காணவே. - 302



    822 - பெருகு தேயுப் பிரளயம் அன்னதில்
    தருமம் யாவினுக் குந்தனித் தெய்வதம்
    வெருவி யாமிவண் வீடுது மேலினிப்
    புரிவ தேனெப் புந்தியிற் சூழ்ந்ததே.
    (295. கூட்டம் - சேர்க்கை. அருங்கடி - அரிய திருமணம்.
    297. அவன் - இங்குத் திருமால். நிவந்தனன் - உயர்ந்தனன்.
    298. ஏறு - இடபம்.
    299. உகம் - யுகம். இன்ன - (பிரமனுக்கு) இத்தன்மையான.
    303. தேயுப்பிரளயம் - அக்கினிப் பிரளயம்; இதில் தருமத் தெய்வம் மட்டும்
    அழியாது என்பது நூற்றுணிபு. தருமம் யாவினுக்கும் தனித்தெய்வதம் -
    எல்லோர்க்கும் பொதுவான தருமத்தெய்வம்.) - 303



    823 - ஆறு லாஞ்சடை அண்ணலைச் சேர்வனேல்
    ஈறிலா சென்றும் உற்றிடு வேனெனாத்
    தேறி யேஅறத் தெய்வதஞ் செங்கணான்
    ஏற தாயொ ரெழிலுருக் கொண்டதே. - 304



    824 - ஏற்றின் மேனிகொண் டீசன்முன் ஏகியே
    போற்றி யானின்று பொன்றிடுந் தன்மையை
    மாற்றி யாற்றல் வழங்கிநிற் கூர்தியாம்
    பேற்றை எற்குப் பிரானருள் என்னவே. - 305



    825 - வேறு
    இறத்தலை இன்மையும் யான மாய்த்தனைப்
    பொறுத்திடுந் தன்மையும் பொருவில் வன்மையும்
    உறைத்திடும் அன்பும்வா லுணர்வும் நல்கியே
    அறத்தனிக் கடவுளுக் கண்ணல் கூறுவான். - 306



    826 - முதலயல் இடைகடை மொழிய நின்றிடுஞ்
    சதுர்வித யுகந்தனில் தருமத் தின்திறம்
    இதுவென நான்குமூன் றிரண்டொன் றாகிய
    பதமுறை யூன்றியே படியிற் சேறிமேல். - 307



    827 - ஈங்குன திடந்தனில் யாமெக் காலமும்
    நீங்கலம் இருந்தனம் நீயும் வந்துநம்
    பாங்கரின் அடைந்தனை பரிவொ டூர்தியாய்த்
    தாங்குதி யாரினுந் தலைமை பெற்றுளாய். - 308



    828 - எண்ணுநந் தொண்டர்கள் இயற்று பாவமும்
    புண்ணிய மாநமைப் புறக்க ணித்துளார்
    பண்ணிய அறமெலாம் பாவ மாகுமால்
    திண்ணமீ தருமறை தானுஞ் செப்புமே. - 309



    829 - மைதவிர் அடியர்செய் பவமு மற்றுளார்
    செய்திடு தருமமுந் திரிப தாகியே
    எய்திடு கின்ற தியாம்உன் றன்னிடை
    மெய்திகழ் உயிரென மேவும் பான்மையால். - 310



    830 - நின்னிடை யாமுளோம் நீயும் ஊர்தியாய்
    மன்னுதி எமதுபால் மற்றி தல்லதை
    இன்னுமோர் வடிவு கொண் டெம்மைப் போற்றுதி
    அன்னதும் உணர்கென அருளிச் செய்தரோ.
    (306. யானம் - வாகனம். 307. சதுர்வித யுகம் - கிரேத திரேத துவாபர
    கலி என்னும் நான்கு வகை யுகங்கள். பதம் - கால். சேறி - செல்வாய்.
    309. புறக்கணித்துளார் - அலட்சியம் செய்தவர்கள்.
    311. இன்னுமோர் வடிவு - மானுட வடிவு.) - 311



    831 - வேறு
    கூர்ந்த சூலக் கொடும்படை வானவன்
    சார்ந்து போற்றுந் தருமக் கடவுளை
    ஊர்ந்தி டுந்தனி யூர்திய தாகியே
    சேர்ந்தி டும்படி சீரருள் செய்தனன். - 312



    832 - அந்த நாண்முத லாதிப் பிரான் றனைச்
    சிந்தை மேல்கொண்ட சீருடை யன்பர்முன்
    நந்தி யாகும் நலம்பெறும் ஊர்திமேல்
    வந்து தோன்றும் வரம்புரி பான்மையால். - 313



    833 - சாற்றும் அவ்விடைக் கேதனைத் தாங்குபேர்
    ஆற்றல் ஈந்த செயலறிந் தல்லவோ
    மாற்ற லார்புரஞ் செற்றுழி மாயவன்
    ஏற்றின் மேனிகொண் டெந்தையைத் தாங்கினான். - 314



    834 - ஆத லால்அரன் அவ்விடை யூர்ந்திடல்
    ஏத மோவன் றிதுநிற்க தெண்டிரை
    மீது தோன்றும் விடத்தையுண் டானென
    ஓதி னாய்அதன் உண்மையைக் கேட்டிநீ. - 315



    835 - வேறு
    நிருதர் தம்முடன் அவுணரும் அமரரும் நேர்ந்து
    திருகு வெஞ்சினத் தொருபகல் முந்துபோர் செய்ய
    இருதி ரத்தினும் பற்பலர் வல்லையில இறப்ப
    வெருவி யன்னது கண்டனர் அமரினை விடுத்தார். - 316



    836 - மேலை வானவர் அவுணர்தங் கோவொடு விரவிக்
    கால மெண்ணில இருந்துபோர் செய்வது கருதி
    நாலு மாமுகத் திறையவன் பதத்தினை நணுகிச்
    சீல மோடவன் தாள்மலர் பணிந்துரை செய்வார். - 317



    837 - ஒல்கு மாயுளை உடையரேம் பற்பகல் உஞற்று
    மல்கு பேரமர் இயற்றுவான் பாற்கடல் மதியா
    அல்க லின்றிய அமிர்தினை வாங்கியே அடிகேள்
    நல்கு வாயெமக் கென்றலும் அயன்இவை நவில்வான். - 318



    838 - ஆதி மாயவற் கிச்செயல் மொழிகுவம் அவனே
    ஓத வேலையைக் கடைந்தமு தளித்திடும் உண்டால்
    சாதல் வல்லையில் வந்திடா தென்றயன் சாற்றிப்
    போது நாமென அவரொடும் பாற்கடல் புகுந்தான். - 319



    839 - நனந்த லைப்படு பயங்கெழு தெண்டிரை நடுவண்
    அனந்தன் மீமிசைச் துயிலுறும் மூர்த்தியை அணுகி
    மனந்த வாதபேர் அன்பொடு நான்முகன் வழுத்த
    நினைந்து கண்விழித் தொய்யென எழுந்தனன் நெடியோன். - 320



    840 - நீவிர் இவ்விடை வந்தவா றென்னென நெடியோன்
    பூவின் மேல்வரு பண்ணவன் அவுணர்கள் பொருவில்
    தேவர் வேந்தர்கள் வேண்டிய குறையினைச் செப்ப
    ஆவ தென்றதற் கியைந்தனன் அளித்திடும் அருளால்.
    (314. செற்றுழி - அழித்தபோது. ஏற்றின் மேனி - இடபவடிவம்.
    316. நிருதர் - இராக்கதர். அவுணர் - அசுரர்.
    320. நல் + நந்து + அலைப்படு - நனந்தலைப்படு. நந்து - சங்கு.
    பயம் - பால்.) - 321



    841 - அருள்பு ரிந்தெழு மாயவன் மந்தரம் அதனை
    உருள்பு ரிந்திடு மத்தென நிறுவியே உடலாம்
    பொருள்பு ரிந்திடும் மதியினை மதலையாப் புரியா
    இருள்பு ரிந்தவா சுகிதனை நாணென யாத்தான். - 322



    842 - ஒருபு றத்தினில் அமரர்கள் ஒருபுறத் தவுணர்
    இருபு றத்தினும் ஈர்த்திட நல்கியிப் புவிசூழ்
    தருபு றக்கிரி யனையமத் தடிமுடி தன்மெய்
    வருபு றத்தினுங் கரத்தினும் பரித்தனன் மாலோன். - 323



    843 - ஆன தன்மையின் மாயவன் பரித்துழி அமரர்
    கோனும் வானவர் யாவரும் அவுணருங் கோமான்
    தானும் வாசுகி பற்றியே வலியுறுந் தகவால்
    வானி லாவுமிழ் பாற்கடல் மறுகிட மதித்தார். - 324



    844 - மதித்த வேலையவ் வேலையி னுடைந்தென வாய்விட்
    டதிர்த்த தேவரும் உலைந்தனர் குலைந்தன அகிலம்
    கதித்த மேருவுஞ் சலித்தன ஒலித்தன கரிகள்
    பதைத்து வெய்துயிர்த் தொடுங்கின நடுங்கின பணியே. - 325



    845 - உடைந்து போவது கொல்லென அமரர்கள் ஒருங்கே
    தொடர்ந்து தம்பெரு வலிகொடே மந்தரஞ் சுழலக்
    கடைந்து வேலையைக் கலக்குறி ஈர்த்திங் கயிறாய்
    அடைந்த வாசுகி பொறுக்கலா தயர்ந்ததை அன்றே. - 326



    846 - ஊன்று பேதுற வெய்தியே யாற்றவெய் துயிர்த்துத்
    தோன்று வெஞ்சினங் கொண்டுமெய் பதைத்துநாத் துடிப்ப
    ஆன்ற ஆயிரம் வாய்தொறும் ஆலகா லத்தைக்
    கான்ற தத்துணை அளக்கரும் உமிழ்ந்தது கடுவே. - 327



    847 - ஈற்றுக் கோடியின் எழுமுகிற் கோடியின் இருண்டு
    கூற்றுக் கோடியின் மறங்கொடு திசைதொறுங் குலவுங்
    காற்றுக் கோடியின் விரைவினால் வடவையங் கடுந்தீ
    நூற்றுக் கோடியிற் பரந்ததவ் விடமெலாம் நொய்தின். - 328



    848 - ஓட லுற்றெழுந் தவ்விடஞ் சூழ்தலும் உலையா
    ஓட லுற்றனர் தானவர் உம்பரா யுள்ளோர்
    ஓட லுற்றனர் முனிவரர் ஓடலுற் றனரால்
    ஓட லுற்றனர் உலகெலாம் படைத்திடும் உரவோர்.
    (322. மதலை - தூண். நாண் - கயிறு. 323. புறக்கிரி - சக்கரவாளகிரி.
    324. பரித்துழி - தாங்கியவுடனே. மறுகிட - கலங்கும் வண்ணம்.
    325. கரிகள் - திக்கு யானைகள். பணி - அட்டநாகங்கள்.
    வேலையின் இன் : சாரியை.
    327. அளக்கர் - பாற்கடல். கடு - விஷம். 328. ஈற்றுக்கோடி - யுகமுடிவு.) - 329



    849 - தண்டு ழாய்முடிப் பண்ணவன் இனையதோர் தன்மை
    கண்டு மந்தரங் காப்புவிட் டுள்ளமேற் கவற்சி
    கொண்டு நாமின்று போற்றுதும் ஈதெனக் குறியா
    அண்ட ராதியர் மேற்செலும் விடத்தின்முன் அடுத்தான். - 330



    850 - மேல்வ ருங்கொடு விடத்தின்முன் னுறுதலும் வெகுண்டு
    சால அங்கது தாமரைக் கண்ணன்மேல் தாக்கி
    மூல முள்ளதோர் வச்சிர மணிநிற முருக்கி
    நீல வண்ணமே யாக்கிய தவனும்நின் றிலனால். - 331



    851 - கோல காலமாய் உலகெலாம் அடுந்தொழில் கொண்ட
    ஆல காலமுன் நிற்கலார் அரிமுத லானோர்
    மூல காலமும் இறுதியும் இன்றியே மூவாக்
    கால காலன்வாழ் கயிலையை அடைந்தனர் கடிதில். - 332



    852 - முந்து வெவ்விடஞ் சுடுதலால் இரிந்தவர் முக்கண்
    எந்தை எம்பெரு மாட்டிவாழ் கயிலையில் எவரும்
    வந்த தற்புத நீரதோ வெருவினால் மைந்தர்
    தந்தை தாயிடத் தன்றியே யாங்ஙனஞ் சார்வார். - 333



    853 - வேறு
    ஆயவர் கயிலையில் அமலற் காகிய
    கோயிலின் முதற்பெருங் கோபு ரத்திடை
    நாயக நந்தியந் தேவை நண்ணியே
    போயதெந் துயரெனப் புகன்று போற்றினார். - 334



    854 - போற்றிய பின்னுறப் புகுந்த வாறெலாஞ்
    சாற்றினர் கேட்டலுந் தகுவர் தேவர்கள்
    வீற்றுற அவண்நிறீஇ வேதன் மாறிசைக்
    கோற்றொழிலாதமைக் கொண்டு போயினான். - 335



    855 - நடைநெறி யருள்புரி நந்தி யெம்பிரான்
    கடைநிலை ஐந்தவாங் காப்பில் எண்டிசை
    அடைதரு மன்னரை அருளின் நோக்கியிவ்
    விடைதனில் உறுதிரென் றியம்பி யேகியே. - 336



    856 - அருள்முறை நாடிமால் அயனென் றுள்ளதோ£
    இருவரை அமலன்முன் எய்த உய்த்தலுங்
    கருணையங் கடல்தனைக் கண்டு போற்றினார்
    பரவச மாயினார் பணிந்து பன்முறை. - 337



    857 - போற்றினர் நிற்றலும் புரத்தை முன்அடும்
    ஆற்றலின் உம்பரான் உரிநின் மேனிதான்
    வேற்றுரு வாய்இவண் மேவிற் றென்னெனச்
    சாற்றினன் யாவையும் உணருந் தன்மையான்.
    (330. போற்றுதும் - காப்போம். 331. மூலம் - முன்னர். முருக்கி - கெடுத்து.
    332. கோலகாலம் - பேரொலி. மூலகாலம் - தோற்றம். மூவா - அழியா.
    333. வெருவினால் - பயமுற்றால். 338. அரி - திருமாலே!.) - 338



    858 - மெய்வழி பாடுசெய் மேலை யோர்க்கெலாம்
    உய்வழி புரிபவன் இனைய ஓதலும்
    மைவழி மேனியன் மானம் உள்ளுற
    அவ்வழி இனையன அறைதல் மேயினான். - 339



    859 - வஞ்சின அவுணர்கள் வான மேலவர்
    வெஞ்சின அமரினில் விளிந்த வேலையில்
    எஞ்சலில் ஆயுவுற் றிகல்செய் வாமெனப்
    புஞ்சமொ டயனொடு புகறல் மேயினார். - 340



    860 - அன்னமென் கொடியினன் அனைய ரோடுபோந்
    தென்னொடு கூறினன் யானெ ழுந்தரோ
    உன்னருள் பெற்றிலன் உணர்ந்தி டாமலே
    மன்னிய அமிழ்திவண் வருதல் வேண்டினேன். - 341



    861 - தானவர் அமரர்கள் சதுர்மு கத்தவன்
    ஏனையர் தம்முட னியானின் றெய்தியே
    பானிறை கடல்கடை பொழுதிற் பாயெரி
    யானது மருளுற ஆலம் போந்ததே. - 342



    862 - உன்றன தருள்பெறா உண்மை நாடியே
    இன்றுல குயிரெலாம் இறக்க அவ்விடஞ்
    சென்றதி யாவருந் தெருமந் தோடினார்
    நின்றவென் மெய்யையிந் நிறம் தாக்கிற்றே. - 343



    863 - வேற்றுரு வாக்கியென் மெய்யில் தாக்கலும்
    ஆற்றலன் அகன்றனன் அனையர் தம்மொடே
    ஏற்றம தானவெம் மிடர்கள் யாவையும்
    ஆற்றுநர் யாருளர் மற்று நீயலால். - 344



    864 - உன்னருள் பெறாமல்அவ் வுததி சேர்தலால்
    இன்னதொர் இன்னல்வந் தெய்திற் றாதலால்
    நின்னடி அடைந்தனம் நீடு தீயெனத்
    துன்னிய கொடுவிடந் தொலைக்கச் செல்லுமால். - 345



    865 - ஆரணம் யாவையும் அறிந்து நாடொணாப்
    பூரண வுமையொடு பொருந்தி இன்னதாம்
    ஏரண வுருவுகொண் டிருக்கை எம்மையாள்
    காரண மன்றியே கருமம் யாவதோ. - 346



    866 - தீயென எழுதரு சீற்ற வெவ்விடம்
    ஆயதை மாற்றியே அளியர் தங்களை
    நீயருள் புரிகென நீல்நி றத்திகழ்
    மாயவன் உரைத்தனன் வழுத்தி நிற்கவே.
    (340. ஆயு - ஆயுள். புஞ்சம் - கூட்டம். 346. ஏரணம் - அழகு.) - 347



    867 - மாதிர இறைவரும் வானு ளோர்களும்
    நீதியில் அவுணரும் நின்ற எல்லையில்
    நாதனை வழுத்தலும் நம்பன் கேட்டரோ
    ஏதிவை அரவம்என் றியம்ப லோடுமே. - 348



    868 - வானவர் அவுணர்கள் மாதி ரத்தவர்
    ஏனையர் வல்லிடத் தின்னல் உற்றுளார்
    கோநகர்க் கடைதொறுங் குழுமி ஏத்தினார்
    ஆனதிவ் வொலியென அயன்வி ளம்பவே. - 349



    869 - கறுத்திடும் மிடறுடைக் கடவுள் நந்தியைக்
    குறிப்பொடு நோக்கியே கொணர்தி யாலெனப்
    புறத்திலம் மேலவன் போந்து மற்றவர்
    திறத்துடன் உரையுளில் செல்ல உய்ப்பவே. - 350



    870 - வந்தவர் யா£ரும் வணங்கி ஈசனைப்
    புந்தியில் அன்பொடு போற்றி யாற்றவுங்
    நொந்தனம் விடத்தினால் நொய்தில் அன்னதைச்
    சிந்தினை எமக்கருள் செய்தி என்னவே. - 351



    871 - வேறு
    ஈதெலாங் கேட்ட மேலோன் இறைவியை நோக்கி இன்னோர்
    ஓதலா மாற்றம் உன்றன் உளத்தினுக் கியைவ தாமோ
    மாதுநீ புகறி யென்ன வந்துநின் னடைந்தார் வானோர்
    ஆதலால் அவர்க்கு வல்லே அருள்புரிந் திடுதி என்றாள். - 352



    872 - வண்டமர் குழலெம் மன்னை மற்றிவை இசைத்த லோடும்
    அண்டரு மகிழ்ச்சி எய்தி ஆதியங் கடவுள் தன்பால்
    தொண்டுசெய் தொழுகு கின்ற சுந்தரன் தன்னை நோக்கிக்
    கொண்டிவண் வருதி யால்அக் கொடுவிடந் தன்னை என்றான். - 353



    873 - என்றலும் இனிதே என்னா இறைஞ்சினன் ஏகி யாண்டுந்
    துன்றிய விடத்தைப் பற்றிச் சுந்தரன் கொடுவந் துய்ப்ப
    ஒன்றொரு திவலை யேபோல் ஒடுங்குற மலர்க்கை வாங்கி
    நின்றிடும் அமரர் தம்மை நோக்கியே நிமலன் சொல்வான். - 354



    874 - காளக வுருவு கொண்ட கடுவினை உண்கோ அன்றேல்
    நீளிடை அதனிற் செல்ல நெறிப்பட எறிகோ என்னா
    வாளுறு மதிதோய் சென்னி வானவன் அருள அன்னான்
    தாளுற வணங்கி நின்று சதுர்முகன் முதலோர் சொல்வார். - 355



    875 - ஐயநீ யன்றி யாரிவ் வனல்விட மாற்று நீரார்
    செய்யகைக் கொண்ட ஆற்றாற் சிறிதெனக் காட்டிற் றன்றே
    வெய்யதோர் இதனை இன்னே விட்டனை என்னிற் பின்னை
    உய்வரோ யாரும் இன்னே ஒருங்குடன் முடிந்தி டாரோ.
    (348. மாதிர விறைவர் - திசைகாவலர். அரவம் - ஓசை.
    349. கோநகர் - (இக்)கயிலையின். கடைதொறும் - திருவாயில்கள் தோறும்.
    353. அண்டரும் - அடைதற்கரிய. சுந்தரன் - இவர் இறைவனின் அணுக்கத்
    தொண்டரில் ஒருவர்; பின்னர் பூமியில் சுந்தரமூர்த்தியாக வந்து தோன்றியவர்.
    354. ஒரு திவலை - ஒரு துளி.
    355. காளகவுருவு - கருமை நிறம். உண்கோ - உண்ணவோ.
    எறிகோ - எறியவோ.) - 356



    876 - முடிவிலா உனக்கே அன்றோ முன்னுறு பாக மெல்லாம்
    விடமதே எனினு மாக வேண்டுதும் இதனை வல்லே
    அடியரேம் உய்யு மாற்றால் அருந்தினை அருள்மோ என்னக்
    கடிகமழ் இதழி வேய்ந்தோன் கலங்கலீர் இனிநீ ரென்றான். 357 - 357



    877 - என்றனன் விரைவில் தன்கை ஏந்திய விடமுட் கொள்ளச்
    சென்றது மிடற்றில் அன்ன திறத்தினை யாரும் நோக்கி
    இன்றெம துயிர்நீ காத்தற் கிங்கிது சான்றாய் அங்கண்
    நின்றிட வருடி என்றே நிமலனைப் போற்றல் உற்றார். - 358



    878 - போற்றலும் மிடற்றில் எங்கோன் பொலன்மணி அணிய தென்ன
    மாற்றருந் தகைமைத் தான வல்விடம் நிறுவி அன்னார்க்
    கேற்றநல் லருளைச் செய்ய யாவரும் இறந்தே இன்று
    தோற்றின ராகும் என்னச் சொல்லரு மகிழ்ச்சி கொண்டார். - 359



    879 - மாமகிழ் சிறந்து நிற்கும் மாலயன் முதலோர் தம்மைத்
    தூமதி மிலைச்சுஞ் சென்னித் தொல்லையோன் அருளால் நோக்கிக்
    காமரு கடலை இன்னுங் கடைதிரால் அமுதுண் டாகும்
    போமினீர் இன்னே என்னப் போற்றினர் வணங்கிப் போனார். - 360



    880 - போனவர் தொன்மை போலப் புணரியைக் கடைந்த காலை
    மேனிகழ் அமிர்த மேனை வியன்பொருள் பலவும் வந்த
    வானவர் தாமே பெற்றோர் மற்றவை தம்மை ஆலம்
    ஆனதை அமலன் உண்ட தவருயிர் அளித்த தன்றே. - 361



    881 - கடல்விடம் நுகர்ந்த தொல்லைக் கடவுள்பின் னழிக்குங் காலை
    உடலுயிர் அகிலம் யாவும் ஒடுங்கிய விடம தன்றோ
    சுடலைய தாகும் அந்தச் சுடலைகாண் அனைய சோதி
    நடநவில் கின்ற எல்லை நாடருந் தகைமைத் த·தே. - 362



    882 - அங்கதும் அன்றி எந்தை அகிலமு முடித்த ஞான்றின்
    எங்கும்வௌ¢ ளிடைய தாகி ஈமமாம் அவ்வீ மத்து
    மங்கையுந் தானு மேவு மற்றிது தவறோ அன்னான்
    கங்கையை முடிமேற் கொண்ட காதைமேல் உரைத்தும் அன்றே. - 363



    883 - ஈசனை ஒருஞான் றம்மை எழில்பெறு கயிலைக் காவில்
    பேசலள் ஆடல் உன்னிப் பின்வரா விழியி ரண்டுந்
    தேசுறு கரத்தாற் பொத்தச் செறிதரு புவனம் யாவும்
    மாசிருள் பரந்த தெல்லா உயிர்களும் வருத்தங் கொள்ள. - 364



    884 - திங்களின் கதிரும் ஏனைத் தினகரன் வெயிலுந் தீயின்
    பொங்குசெஞ் சுடரும் ஏனைப் புலவர்தங் கதிரு மற்றும்
    எங்குள ஔ¤யும் மாய்வுற் றிருள்நிறம் படைத்த மாதோ
    சங்கரன் விழியால் எல்லாச் சோதியுந் தழைத்த நீரால்.
    (357. அருந்தினை அருள்மோ - அருந்தி அருள்க.
    359. பொலன்மணி - அழகிய நீலமணி.
    361. புணரி - போற் கடல். ஏனை வியன்பொருள் - மற்றைய மேலான
    காமதேனு, கற்பகத்தரு முதலிய பல பொருள்கள்.
    364. ஒரு ஞான்று - ஒரு தினம். பொத்த - மூட.) - 365



    885 - தன்னிகர் பிறரி லாத தற்பரன் விழியி ரண்டுங்
    கன்னிகை கமலக் கையாற் புதைப்பஅக் கணம தொன்றின்
    மன்னுயிர்த் தொகைகட் கெல்லாம் வரம்பிலா வூழி யாக
    அன்னதோர் பான்மை நோக்கி அருளுவான் நினைந்தான் அன்றே. - 366



    886 - ஓங்குதன் நுதலின் நாப்பண் ஒருதனி நாட்டம் நல்கி
    ஆங்கது கொண்டு நாதன் அருள்கொடு நோக்கி யாண்டும்
    நீங்கரு நிலைமைத் தாகி நின்றபேர் இருளை மாற்றித்
    தீங்கதிர் முதலா னோர்க்குச் சிறந்தபே ரொளியை ஈந்தான். - 367



    887 - மண்ணுறு புவனத் துள்ள மாயிருள் முழுதும் நீங்க
    உண்ணிகழ் உவகை மேல்கொண் டுயிர்த்தொகை சிறத்த லோடுங்
    கண்ணுதல் இறைவன் செய்கை கவுரிகண் டச்சம் எய்தித்
    துண்ணென விழிகள் மூடுந் துணைக்கரம் வாங்கி னாளால். - 368



    888 - சங்கரன் விழிகள் மூடுந் தனாதுகை திறக்கும் எல்லை
    அங்குலி யவையீ ரைந்தும் அச்சத்தால் வியர்ப்புத் தோன்ற
    மங்கையத் தகைமை காணூஉ மற்றவை விதிர்ப்பப் போந்து
    கங்கையோர் பத்தா யாண்டுங் கடல்களிற் செறிந்த அன்றே. - 369



    889 - ஆயிர நூறு கோடி அணிமுகம் படைத்தி யாண்டும்
    பாயிரு நீத்த பரவலும் அதுகண் டஞ்சி
    மாயனும் அயனும் வானோர் மன்னனும் பிறரும் போற்றி
    மீயுயர் கயிலை நண்ணி விமலனை அடைந்து தாழ்ந்தார். - 370



    890 - அடிமலர் தொழுதே எந்தாய் அறிகிலோம் இதுவோர் நீத்தங்
    கடல்களும் அன்றால் யாண்டுங் கல்லென விரைத்தி யாரும்
    முடிவுறு திறத்தால் அண்டம் முழுவதுங் கவர்ந்த முன்னாள்
    விடமெனப் பரித்தே ஈது விமலநீ காத்தி என்றார். - 371



    891 - என்றலும் நதிகள் தோற்றம் இயம்பிஎவ் வுலகுஞ் சூழபோய்
    நின்றவந் நீத்தந் தன்னை நினைத்தவண் அழைத்து நாதன்
    ஒன்றுதன் வேணி மேல்ஓர் உரோமத்தின் உம்ப ருய்ப்ப
    மன்றலங் கமலத் தோனும் மாலுமிந் திரனுஞ் சொல்வார். - 372



    892 - மேதினி யண்ட முற்றும் விழுங்கிய கங்கை உன்றன்
    பாதியாள் கரத்தில் தோன்றும் பான்மையால் உனது சென்னி
    மீதினிற் செறிக்கும் பண்பால் விமலமாம் அதனில் எங்கண்
    மூதெயில் நகரம் வைகச் சிறிதருள் முதல்வ என்றார்.
    (366. புதைப்ப - மூட. 367. ஒரு தனி நாட்டம் - இங்கு நெற்றிவிழி.
    368. துணைக்கரம் - இருகரங்கள். 369. அங்குலி அவை ஈரைந்தும் - பத்து விரல்களிலும்.
    371. கல்லென - கலீரென. 372. நீத்தம் - சலம்பிரவாகம்.
    373. மேதினி அண்டம் - பிருதிவியண்டம். பாதியாள் - உமை. விமலமாம் -
    பரிசுத்தமானதாம்.) - 373



    893 - இறையவன் வேணி யுள்புக் கிருந்ததோர் கங்கை தன்னில்
    சிறுவதை வாங்கி மூவர் செங்கையுஞ் செறிய நல்க
    நிறைதரும் அன்பால் தாழ்ந்து நிகழ்விடை பெற்றுத் தத்தம்
    உறைநகர் எய்தி அங்கண் உய்த்தனர் அனைய நீத்தம். - 374



    894 - அந்நதி மூன்று தன்னில் அயனகர் புகுந்த கங்கை
    பன்னருந் திறலின் மிக்க பகீரதன் தவத்தால் மீளப்
    பின்னரும் இமையா முக்கட் பெருந்தகை முடிமேல் தங்கி
    இந்நில வரைப்பிற் செல்ல இறையதில் விடுத்தல் செய்தான். - 375



    895 - நானில மிசையே உய்த்த நன்னதி சகரர் எல்லாம்
    வானுயர் கதிபெற் றுய்ய மற்றவர் என்பிற் பாய்ந்து
    மீனெறி தரங்க வேலை மேவிய தி·தொன் றல்லால்
    ஏனைய நதிகள் தொல்லை இடந்தனில் இருந்த அன்றே. - 376



    896 - தொல்லையில் இறைவி அங்கைத் தோன்றி கங்கை நீத்தம்
    ஒல்லையில் உலகங் கொள்ளா தடக்கிய உண்மை அன்றோ
    அல்லிருள் அனைய கண்டத் தாதியங் கடவுள் முன்னோர்
    மெல்லியல் தன்னை வேணி மிசைக்கொண்டா னென்னு மாறே. - 377



    897 - மாதுமை வசத்த னாகி மருவுவான் என்றி அன்னான்
    நாதனே தருளே எல்லாம் நண்ணுவித் தருளும் வண்ணம்
    பேதக மாகித் தானோர் பெண்ணுருக் கொண்டு மேவும்
    ஆதலின் அவள்வந் துற்ற தன்மையை அறைவன் கேட்டி. - 378



    898 - தொல்லையோர் கமலத் தண்ணல் தோன்றியே இருந்த காலைப்
    பல்லுயிர்த் தொகுதி தன்னைப் படைப்பது கருதி முன்னர்
    வல்லையிற் சனக னாதி மைந்தர்நால் வரையுநல்க
    நல்லுணர் வெய்தி அன்னோர் நற்றவ ராகி உற்றார். - 379



    899 - அன்னதற் பின்னர் வேதன் அளிப்பதும் அல்கா தாக
    இன்னலுற் றிரக்கம் எய்தி யாதினிச் செய்வ தென்னா
    முன்னுறு குமர ரோடு முகுந்தன திடத்தில் எய்திப்
    பொன்னடி வணக்கஞ் செய்து தன்குறை புகன்று நின்றான். - 380



    900 - நின்றிடு கின்ற காலை நேமியங் கரத்து வள்ளல்
    இன்றிது நம்மல் முற்றா தீசனால் அன்றி யென்னா
    நன்றுணர் முனிவ ரோடு நான்முக னோடும் வௌ¢ளிக்
    குன்றினில் ஏகி நாதன் குரைகழல் பணிந்து சொல்வான்.
    (374. சிறு வதை - ஒருசிறிது. மூவர் - திருமால், பிரமன், இந்திரன் என்ற மூவர்.
    375. பகீரதன் - இவன் சகரர் வம்சத்தில் வந்த ஒரு அரசன், மிக்க முயற்சியுடையவன்.
    376. நானிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நிலங்கள்; பூமியுமாம்.
    சகரர் - இவர் அயோத்தி நகரை அரசுபுரிந்த சகரன் புதல்வர்கள்; இவர்கள்
    அறுபதினாயிரவர் ஆவர்.
    379. தொல்லை - முன்னொரு கற்பம். சனகன் ஆதி மைந்தர். நால்வர் -
    சனகன், சனந்தனன், சநாதனன், சனத்குமாரன் என்னும் நான்கு புதல்வர்கள்.
    381. முற்றாது - முற்றுப்பெறாது.) - 381



    901 - அண்டர்கள் முதல்வ கேண்மோ அம்புயன் படைப்பின் உள்ளங்
    கொண்ட னன்அதுமல் காதால் குறையிது நீக்கு கென்ன
    வண்டுள வத்தி னானை மைந்தரை அயனை நோக்கி
    நுண்டுகள் படவே ஈசன் நொய்தென வீறு செய்தான். - 382



    902 - ஏகனை ஆகை வைகும் எந்தைதன் னிடப்பா லான
    வாகுவை நோக்கும் எல்லை மற்றவண் உமையாள் தோன்றப்
    பாகம திருத்தி அன்னாள் பரிவொடு கலந்து மேவிக்
    கோகன தக்கண் னானைக் குமரரை அயனைத் தந்தான். - 383



    903 - தந்துழி ஈசன் தன்னைத் தனயரும் அயனும் மாலும்
    வந்தனை செய்து போற்ற மாயவன் வதனம் நோக்கி
    நத்தம தருள தாகு நங்கையோ டினிது சேர்ந்தாம்
    முந்தையின் வேதாச் செய்கை முற்றிடும் போதி என்றான். - 384



    904 - என்னலும் உவகை எய்தி யாமினி உய்ந்தோம் என்னா
    அன்னையொ டத்தன் தன்னை அளியொடு வலஞ்செய் தேத்திப்
    பின்னரும் வணக்கஞ் செய்து பெயர்ந்தனர் பின்பு வேதா
    மன்னுயிர்த் தொகுதி யெல்லாம்வரன்முறை படைக்கல் உற்றான். 385 - 385



    905 - மாற்றலர் புரமூன் றட்ட வானவன் உமையா ளோடும்
    வீற்றிருந் தருள லாலே விழைவுடன் ஆண்பெண் மேவி
    ஆற்றவும் இன்ப மெய்தி ஆவிகள் பெரிது மல்க
    நாற்றிசை முகத்தன் செய்கை நன்றுற நடந்த தன்றே. - 386



    906 - தேனமர் கமலத் தண்ணல் செய்தொழில் முற்று மாற்றால்
    ஆனதன் னருளை யாங்கோ ராயிழை யாக நல்கி
    மேனிகழ் கருணை தன்னால் மேவுவ துணராய் ஏனை
    வானவர் போலெங் கோனை மதித்தனை மதியி லாதாய். - 387



    907 - காமரு வடிவாய் எங்குங் காண்பது சத்தி அங்கண்
    மாமய மாகி நின்றான் மன்னிய சிவனாம் ஈது
    தூமறை முதலா வுள்ள தொலைநூல் புகலும் அன்னால்
    தாமொரு புதல்வன் தன்னைத் தந்தவா சாற்று கின்றாம்.
    (382. மல்காதால் - மலிவுற்றதில்லை. மைந்தர் - சனகாதியர்.
    383. வாகு - தோள்.
    386. ஆற்றவும் - மிகவும். ஆவிகள் - உயிர்கள். 388. காமரு - அழகிய, - 388
    ஆகத் திருவிருத்தம் - 907
    -----------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III