Paḻaṉippiḷḷaittamiḻ


சைவ சமய நூல்கள்

Back

பழனிப்பிள்ளைத்தமிழ்
சின்னப்ப நாயக்கர்



சின்னப்ப நாயக்கர் இயற்றிய
பழனிப்பிள்ளைத்தமிழ்
உ.வே. சாமிநாதையர் குறிப்புரையுடன்


Source:
சின்னப்ப நாயக்கர் இயற்றிய பழனிப்பிள்ளைத்தமிழ்
மஹாமஹோபாத்யாய - தாக்ஷணாத்யகலாநிதி Dr. உ.வே. சாமிநாதையரவர்களால்
பரிசோதித்துத் தாம் நூதனமாக எழுதிய குறிப்புரையுடன் பதிப்பிக்கப்பெற்றது.
செந்தமிழ்ப்பிரசுரம் - 58.
மதுரைத் தமிழ்ச்சங்க முத்திசாசாலை, மதுரை.
1932.
விலை அணா 3.
-------------

முகவுரை.

கந்தரலங்காரம்.
    மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
    வைதா ரையுமங்கு வாழவைப் போன் வெய்ய வாரணம்போற்
    கைதா னிருப துடையான் றலைபத்துங் கத்தரிக்க
    எய்தான் மருக னுமையாள் பயந்த விலஞ்சியமே.

பிள்ளைத்தமிழென்னும் தமிழ்ப்பிரபந்தம், பாட்டுடைத்தலைவரைக் குழந்தையாகப் பாவித்துச் செவிலித்தாய் முதலியோர் அக்குழந்தையின் காப்பு முதலிய பத்துப் பருவங்களுக்கு ஏற்ற செயல்களைக்கூறிப் பாராட்டுவதாக ஆசிரியவிருத்தத்தினாற் பாடப்படுவது. இஃது ஆண்பாற் பிள்ளைத்தமிழென்றும் பெண்பாற்பிள்ளைத்தமிழென்றும் இருவகைப்படும். காப்புப்பருவம்முதல் சிறுதேர்ப்பருவம் இறுதியாகவுள்ள பத்துப் பருவங்களமைந்தது ஆண்பாற்பிள்ளைத்தமிழ்; பெண்பாற்பிள்ளைத்தமிழ் இவற்றிற் சிலபருவங்களைப் பெறாமல் வேறுசிலவற்றைப் பெறும்.

இந்தப் பழனிப்பிள்ளைத்தமிழ், பழனியில் திருக்கோயில்கொண்டெழுந்தருளியுள்ள முருகக்கடவுளைப் பாட்டுடைத்தலைவராகக்கொண்டு, சின்னப்பநாயக்கரென்பவரால் இயற்றப்பெற்றது. காப்புச்செய்யுளோடு முப்பத்தொரு செய்யுட்களையுடையது. ஒவ்வொரு பருவத்திலும் மும்மூன்று செய்யுட்களே உள்ளன. பத்துப்பத்துப் பாடல்கள் இருத்தல் வேண்டுமென்பது விதியெனினும், சில கவிஞர்கள் அத்தொகையிற் குறைத்தும் பாடியுள்ளார்கள். ஒவ்வொரு பருவத்திற்கும் எவ்வேழு பாடல்களையுடைய சிவந்தெழுந்த பல்லவராயன் பிள்ளைத்தமிழும், ஐவைந்து பாடல்களையுடைய கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழும் அம்முறையில் இயற்றப்பெற்றவை.

இதன் ஆசிரியரைப்பற்றி வேறொருசெய்தியும் அறியக்கூடவில்லை. “விசயகோபாலர் வரவிட்ட சிறுதேர் " (31) என இந்நூலில் இவர் கூறியிருத்தலால், பழனிக்கு அருகிலுள்ள பாலசமுத்திரமென்னும் ஊரிலிருந்த ஜமீந்தாராகிய விஜயகோபாலதுரை யென்பவரால் இவர் ஆதரிக்கப் பெற்றவரென்பது ஊகிக்கப்படுகிறது. இவருடைய வாக்கினால் இவர் முருகக்கடவுளிடத்து உண்மையான அன்புடையவரென்று தோற்றுகின்றது.

இத்தலத்திற்கு வேறொரு பிள்ளைத்தமிழ் உண்டென்று கேள்வியுற்றிருப்பதாகவும், “தப்பாத பழனிமலை யப்பாவெ னப்பநீ சப்பாணி கொட்டி யருளே,” என்பது அதிலுள்ள ஒருசெய்யுட்பகுதியென்றும் திண்டுக்கல் வக்கீல் மகா-ா-ா-ஸ்ரீ எல். ஏ. வெங்குஸாமி ஐயரவர்கள் சொன்னார்கள்.

இந்நூலில் பழனிசம்பந்தமான பலவகைச்செய்திகள் அமைந்துள்ளன. பழனித்தலம் வைகாவூர் நாட்டிலுள்ளதென்பதும், அதற்கு ஆவினன்குடி, வைகாவூரென்னும் பெயர்களுண்டென்பதும், பழனிமலை சிவகிரியெனவும் வழங்கப்படுமென்பதும், பழனியைச்சார்ந்த ஊர்களாக எட்டுமங்கலங்களும், பன்னிரண்டு பள்ளிகளும், நூறூர்களும் உள்ளன என்பதும் அறியப்படுகின்றன. அன்றியும், பன்றிமலை, பூம்புரை, இடும்பன்மலை, ஷண்முகநதி என்பனவும் இதிற் கூறப்படுகின்றன. பழனியிற் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள பிருகந்நாயகியைப் பெரியநாயகி, பெரியவளென ஆசிரியர் பாடுகின்றார். முருகக் கடவுள் சிவபெருமானுக்கு உபதேசித்தது, அவர் அகத்தியருக்கு உபதேசித்தது, அவர் சங்கத்தலைவராக இருந்தது, அவருக்கு யானைவாகனமுண்டென்பது, அவர் ஆட்டுக்கிடாயை ஊர்ந்தது, வெட்சியும் கடம்பும் அவர் மாலைகளென்பது, மயில் பிரணவ உருவமென்பது முதலிய செய்திகள் இதில் அமைந்து ள்ளன. முருகக்கடவுள் சிவபெருமானை வலம்வந்து கனியைப்பெற்றனரென்ற வரலாறு ஓரிடத்திற் குறிக்கப்பட்டுளது. அதற்குரிய ஆதாரம் கிடைக்கவில்லை. முருகக்கடவுளை முத்தையனென்றும் தேவயானையைக் கயவனிதையென்றும் கூறுவர். அல்லோல கல்லோலம், இலை (வெற்றிலை), கன்னங்கறுத்த, சம்மதி, சரிசமானம், சின்னஞ்சிறிய, சுசந்திரன், சுதி, சேதி, தயவு, துசம், துரை, பிளவு, புதம் (அறிவு), மத்தளி, மந்தாரம், மனது, மாமனார், முதலாளி, மெட்டி, ராவுத்தன், வசியாதார், விதரணம், வேணும் முதிய அரும் பதங்களும் நெறுநெறென, குடகுடென எனவரும் அனுகரண ஓசைச் சொற்களும் இதில் ஆளப்பட்டுள்ளன. செவிலியர் தாலாட்டுதலைக் கூற வந்த இவர் அப்பொழுது கூறப்படும் ‘ஆரார்' என்னும் குறிப்புத் தொடரை யார் யார் என்னும் பொருள்படப் பொருத்தி,

    “சீரார்நலஞ்சேர் பூவுலகிற் றேவா சுரரின் மற்றையரிற்
    றினமு முனது கொலுக்காணச் செல்லா தாரார் திறைவளங்கள்
    தாரா தாரா ருனதுபதந் தனையே வணங்கித் தொழவேண்டித்
    தழுவா தாரா ரெவ்வேளை சமயங் கிடைக்கு மெனநினைந்து
    வாரா தாரா ருனதருளை வாழ்த்திப் புகழ்ந்து துதிக்க மனம்
    வசியா தாரார் பணிவிடைகள் வரிசைப் படியே நடத்தாதார்
    ஆரா ரெனத்தா லாட்டுகின்ற அரசே”

என அமைத்துள்ள பகுதி மிக்க நயம்பொருந்தி விளங்குகின்றது.

இந்நூலெழுதிய ஏட்டுப்பிரதியொன்றும் கடிதப்பிரதியொன்றும் 25-வருடங்களுக்கு முன் மேற்கூறிய எல். ஏ. வெங்குஸாமி ஐயரவர்களால் உதவப்பட்டன. அவ்வேட்டுப்பிரதியில் ‘சின்னப்ப நாயக்கர் இயற்றியது' என்ற ஒரு குறிப்பு எழுதப்பட்டிருந்தது. இந்நூல் எளியநடையில் அமைந்திருத்தலின் சில இடங்களுக்குமட்டும் குறிப்புரை எழுதி இப்பொழுது பதிப்பிக்கலாயிற்று. இதனைச் செந்தமிழில் வெளியிட்டுதவிய பத்திராதிபர்களுடைய அன்பு பாராட்டற்பாலது.

சென்னை,         இங்ஙனம்,
18-8-1932.         வே. சாமிநாதையர்
_____________

பழனிப் பிள்ளைத்தமிழ்.

கணபதிதுணை.
சிவனடியார் வணக்கம்:
வெண்பா.
    1. போற்றவருந் தென்பழனிப் புண்ணியவே லாயுதன்மேற்
    சாற்றரிய பிள்ளைத் தமிழ்கூற- நாற்றிசையும்
    கண்டு வணங்குங் கணபதியின் றாதைதிருத்
    தொண்டர்கண்மெய்ப் பாதந் துணை.

நூல்.
1. காப்புப் பருவம்.

2. பூமேவு நூற்றிதழ்த் தாமரைத் தவிசில்வளர்
        பூமங்கை புவிமங்கையும்
பூசித்த திருவாவி னன்குடித் தலைவனைப்
        புகழ்பெற்ற கருணையானைத்
தேமேவு வெட்சியந் தாமனைக் குழகனைச்
        சேயினைச் சிவன்மதலையைச்
செவ்வேளை வளர்பழனி நகரில்வரு சிவகிரித்
        தேசிகளை யினிதுகாக்க
காமேவு முரசகேதனனுள மகிழ்ந்திடக்
        காந்தாரி யீன்றெடுத்த
கவுரவர் பிரானிடம் தூதுபோய் மீண்டுவரு
        கால்சிவந் திடமுன்னமோர்
பாமேவுகவிஞனுக்கருள்சார்தன்பினொடு
        பாய்சுமந்தெய்த்துவந்து
பாலாழிமீதிலேயறிதுயிலமர்ந்தருள்
        பசுந்துழாய்க்கரியமுகிலே.
----------
குறிப்புரை. 2. வெட்சியந்தாமன்!"வெட்சிமலர்த்தாமா ” (18.) குழகன்- இளையவன்; - “என்றுமிளையாய்” (பழம்பாடல்.) சிவகிரி-பழனியிலுள்ள மலை, முரசகேதனன் தருமபுத்திரன், கவுரவர்பிரான்- துரியோதனன்.கவிஞனென்றது, திருமழிசையாழ்வாரை. திருவெஃகாவிற்கோயில்கொண்டெழுந்தருளியபெருமாள், "கணிகண்ணன்போகின்றான்,”என்றதிருமழிசையாழ்வார்செய்யுளைக்கேட்டுத்தம்முடையபாம்புப்படுக்கையைச்சுருட்டிக்கொண்டுஅவருடன்சென்றனரென்பதுஇங்கேசுட்டப்பட்டவரலாறு; இதன்விரிவைத்திருமழிசையாழ்வார்சரித்திரத்தால்உணரலாகும்; "ஆடரவத், தாழ்பாயலாளரைநீதானேதொடர்ந்தாயோ, சூழ்பாயோடுன்னைத்தொடர்ந்தாரோ" (தமிழ்விடுதூது, 92-3); " பணிகொண்டமுடவுப்படப்பாய்ச்சுருட்டுப்பணைத்தோளெருத்தலைப்பப், பழமறைகண்முறையிடப்பைந்தமிழ்ப்பின்சென்றபச்சைப்பசுங்கொண்டலே” (மீனாட்சியம்மைபிள்ளைத்தமிழ்;) “முற்றாதகாஞ்சியினுமுல்லையினும்பாலையினும், கற்றான்பின்சென்றகருணைமால்" (தனிப்பாடல்.) எய்த்து- இளைத்து. பழனிமலைசிவகிரியெனவும்வழங்கும்; “பழனிச்சிவகிரிதனிலுறைகந்தப்பெருமாளே”திருப்புகழ், 150.
-------------

3. வித்தக மிகுந்ததிறல் வேற்படை விசாகனை
        விளங்குமோ காரவாசி
மேல்வந்த ராவுத்த னைச்சர வணத்தில்வரு
        மெய்யான தனிநாதனை
உத்தமனை வெற்றியஞ் சேவலங் கொடிவிரு
        துயர்த்தவனை யாறுமுகனை
உயர்பழனி நகரில்வரு சிவகிரியின் முருகனை
        யுவந்தினிது மேற்புரக்க
மத்தளி வயிற்றிப முகத்தெம் பிரான் கதிர்கள்
        மாறாத சுடர்களிருவர்
மலர்மங்கை மாரிருவர் சத்தமா தாக்களிம
        வான்றரு மடந்தைமற்றைச்
சித்தர்வித் யாதர ரியக்கர்கின் னரர்முனிவர்
        திசைமுகப் பிரமதேவர்
தேவர்கோன் முதலாய முப்பத்து முக்கோடி
        தேவர்க்கு முதலாளியே.
----------
3. வேற்படை வேலாயுதம், ஓகாரவாசி--மயில்; வாசி- குதிரை; இங்கேஊர்தி. மயில் பிரணவவடிவமென்று கூறப்படுதலின் இவ்வாறு கூறினர்; “ஓகார பரியின்மிசை வருவாயே", " ஆன தனிமந்த்ர ரூபநிலைகொண்ட தாடுமயிலென்பதறியேனே" (திருப்புகழ்.) ராவுத்தன்-குதிரைவீரன்; "ராவுத்தராயன்", " இனிமைகூர்ந் திராவுத்தற்கு, நன்மைகூர்வரிசைத்தூசுநல்குவம்", “கொன்றை மாலைக் குதிரை யிராவுத்தன்” (திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், 28: 89, 86; 46: 28); " சூர்கொன்ற ராவுத்தனே", ‘இடிக்குங்கலாபத் தனிமயி லேறுமிராவுத்தனே' (கந்தரலங்காரம், 37, 50)
மத்தளிமத்தளம்; "மத்தளி'' (பெரியாழ்வார்திருமொழி, 3. 4:1.) சுடர்களிருவர்-சந்திரசூரியர். முதலாளி-முதல்வன்என்றதுசிவபெருமானை.
---------

வேறு.
4. அயனரு மறைமுனி வரரம ரர்கடொழ
        அருடரு மானிட மருவிசைப் பாட்டினள்
அமுதினு மினிதென நிலைதரு மொழிபெறும்
        அழகுயர் வடிவின ளிளமுலைக் கோட்டினள்
அடியரை யனுதின மனதினி லினிதுற
        அருள்பெற வளவிய விருவிழிச் சூட்டினள்
அறுசம யமுமொரு வழிபட நிலமிசை
        அவரவர் பரவந லருடனைக் காட்டினள்
இயலிசை யுடனொரு சதுமறை சுதிதர
        இதுநல மெனநட மிடுமுறைக் கூத்தினள்
இடியென வலறிய மயிடனை யுடல்பொடி
        யெனவிடு படையின ளுலகினைக் காப்பவள்
இகபர மெனுமிரு தொழிலுடை யவளென
        எவர்களு மறிதரு கருணையைப் பூட்டினள்
இடமுயர் வடகிரி யலமர வெதிர்வரும்
        இமகிரி தருமொரு கவுரியைப் போற்றுதும்
கயமுகனுடனரிமுகநிருதனையொரு
        கணமதில்விழவெகுசமரமிட்டார்த்திடு
களமிசையலகைகள்கழுகுணநிணமருள்
        கதிரொழுகியவயின்முருகனைக்கார்த்திகை
கனதனமொழுகியபயநுகர்துகிர்நிற
        அதரனைவிதரணமுடையனைச்சீர்ப்பிடி
கணவனைவனமகள்முலைமுகடுழுதருள்
        புயமலைநிருபனையறுமுகச்சேப்பனை
மயன்மகள்கலவியைமதுவினிலளியென
        மனமுறுமிருபதுபுயனையட்டார்ப்புறு
மனுகுலமுறையரசுரிமைகள்செயவரு
        மணிநிறவரிமகிழ்மருகனைக்கோட்டிள
மதிதடவியநெடுமதின்முகடளவிய
        வரிசையினடமிடுபரதமெய்க்கூத்தின
மயிலினமுலவியபழனியில்வளர்சிவ
        கிரிதனின்மருவியகுமரனைக்காக்கவே.
-------------
4. விழிச்சூட்டினம்-சூட்டுவிழியினனென மாற்றிக்கொள்க. வடகிரி - மேரு. வடகிரியையும் இமகிரியையும் இங்ஙனமே பின்பும் சேர்த்துச்சொல்லுவர்; “வடகிரியு மிமமலையும்" (12.)
அரிமுகநிருதன்-சிங்கமுகாசுரன். சமரமிட்டு- போர்செய்து, அயில்முருகனை; அயில்-வேல், பயம்-பால், துகிர்-பவழம், சீர்ப்பிடியென்றதுதெய்வயானையம்மையை. வனமகள்வள்ளிநாயகி; "வனமடந்தை” (17) என்பர்பின்.சேப்பன்-செந்நிறமுடையவன்; சேப்பு-சிவப்பு; "காப்புடையாரமரர்மணிமகுடகோடிகளுரிஞ்சிக்கழற்கால்சேக்குஞ், சேப்படையார்" (திருவாப்பனூர்ப்புராணம், கடவுள். 4.) மயன்மகள்-மந்தோதரி. இருபதுபுயனை-இராவணனை. கோடு-வளைந்தபக்கம்; “இருகோட்டொருமதியெழில்பெறமிலைச்சினை” (நக்கீரர்திருவெழுகூற்றிருக்கை.). கூத்தின-கூத்தையுடைய.
--------------------------------

2. செங்கீரைப்பருவம்.

5.வண்டாடநறவூறிமணமீறுமணிநீப
        மாலையாடக்குழைகள்சேர்
மகரகுண்டலமாடவச்ரகேயூரமுடன்
        மார்பிற்பதக்கமாடக்
கொண்டாடு நெற்றியிற் சுட்டியா டக்கரிய
        கொந்தளக் குஞ்சியாடக்
கோலநெடு வான்முகடு தொடுகடற் றிவலைபோற்
        குறுவெயர் முகத்திலாடக்
கண்டாடு மதரங் குவிந்தாட மாற்றேறு
        கனகத் திழைத்த வரைஞாண்
கதிர்விரித் தாடநவ மணியினாற் செய்தவிரு
        காலிற் சதங்கை யாடத்
திண்டாடு மசுரரைக் கொல்லவரு தீரனே
        செங்கீரையாடியருளே
திருமருவு பழனிவளர் சிவகிரியின் முருகனே
        செங்கீரை யாடியருளே.
------------
5. மணி-அழகு. நீபமாலை- கடம்பமாலை, கேயூரம்-தோள்வளை.
திண்டாடும்: “திண்டாடித்திசையறியாமறுகினர்”கம்ப. அட்ச. 39.
----------------------------

6. பொற்றக டுரிஞ்சிய மணிக்கலச நீர்கொண்டு
        புனலாட்டி யுச்சிமோந்து
புல்லிவா யதரமு முந்திசெவி நாசியிற்
        புனலேறி டாமலூதிப்
பற்றிய நிலப்பொட்டு நெற்றிமிசை யிட்டழகு
        பாரித்த பட்டாடையாற்
பண்புறைய வீரம் புலர்த்திநவ மணியிட்ட
        பருமணிச் சுட்டிகட்டி
நற்றமிழின் முனிபரவு குருவென்று தாலாட்டி
        நறுவசம் பூறலூட்டி
நற்றாயி னிளமுலைப் பாலமுத மூட்டியிள
        நலநிலவு போல்விளங்கச்
சிற்றிடைச்செவிலியரழைத்துவகைகூரவே
        செங்கீரையாடியருளே
திருமருவுபழனிவளர்சிவகிரியின்முருகனே
        செங்கீரையாடியருளே
---------------
6. உரிஞ்சிய-அழுத்திய. புல்லி-தழுவி. நிலப்பொட்டை நெற்றிமிசையிடல்; “நீராட்டி யிணைக்கணுந்தி நீரூதி, நேயத்துகிலின் மெய்துடைத்து நெகிழ்மென் முலையோ டுறத்தழுவி, வாயிற் றிவலை கொடுதேய்த்து மண்பொட் டணிந்து சீறிட்டு" (பிரபுலிங்கலீலை, மாயைபுற்பத்தி, 46); "பாரிழைத் தொருபொட்டு, நுதன்மதிக்கிட்டு” (அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், செங்கீரைப். 4.) நற்றமிழின் முனி- அகத்தியமுனிவர்; இவருக்கு உபதேசித்தது: 13; "அருமறையா கமமங்க மருங்கலைநூ றெரிந்த அகத்தியனார்க் கோத்துரைக்கு மருட்குருவாங் குருவை" (சிவஞானசித்தியார்.) வசம்பூறல் -வசம்பின் சாறு. இளநலம்-இளமையழகு;"மணங்கமழ் தெய்வத்திளநலங் காட்டி" முருகு. 230.
-------------------------------

7. புன்னையந்தாதுறுமலர்க்காவி லஞ்சிறைய
        பொறிவண்டு மகரந்தமார்
பூமணந் தன்னையுண் டின்னிசை முழக்கவம்
        போருகத் தடைகிடக்கும்
மின்னிறப் பேட்டனந் தனதுசினை யென்றுபோய்
        வெள்வளையின் முத்தெடுத்து
மெல்லணை கிடத்தியே சிறகிட்டணைத்திடவும்
        மேதியின் கன்றுதுள்ளிக்
கன்னலைச் சாடிவிளை யாடவுந் தோகைகார்
        கண்டுநட னம்புரியவும்
கண்டுபழனத்துழல் பானண்டு நன்றெனும்
        கயறாவி யெதிரேறிடும்
செந்நெல்சூ ழாறுமுக நதியுடைய வள்ளலே
        செங்கீரை யாடியருளே
திருமருவு பழனிவளர் சிவகிரியின் முருகனே
        செங்கீரை யாடியருளே.
----------------
7. சிறைய-சிறகையுடைய. கன்னல்-கரும்பு. பால்நண்டு-ஒருவகைநண்டு. ஆறுமுகநதி-ஷண்முகநதி.
------------------------------

3. தாலப்பருவம்.

8. கங்கைக்கொருமாமகனேகுகனேகனியேகண்மணியே
        கருணாலயமேமறையோர்தவமேகருதும்பெருவாழ்வே
திங்கட்சடிலன்மகிழுங்குருவேதேவர்கள்பணிகோவே
        தெய்வச்சுருதிப்பொருளேபொருளின்றெளிவேகளிகூரும்
துங்கப் புயனேர் திருமான் மருகா சோதிச் சுடரொளியே
        தோகைக் குடையாய் நீபத் தொடையாய் சொல்லுக் கினியானே
சங்கத் தொருவா பழனித் தலைவா தாலோ தாலேலோ
        தமிழா லுயருஞ் சிவமா மலையாய் தாலோ தாலேலோ.
----------------
8.தோகைக்குடையாய்-மயிற்கலாபத்தைக்குடையாகப்பெற்றவனே. சொல்லுக்கினியானே: “பேசப்பெரிதுமினியாய்நீயே” (தேவாரம்.) சங்கத்தொருவா: முருகக்கடவுள்தமிழ்ச்சங்கத்தேயிருந்துதமிழாராய்ந்தாரென்றுஇறையனாரகப்பொருள்உரையால்அறியலாகும்; ''சங்கத்தமிழின்தலைமைப்புலவாதாலோதாலேலோ" (முத்துக்குமாரசாமிபிள்ளைத்தமிழ்.) சிவமாமலை-சிவகிரி, பழனிமலை.
-------------------------------

வேறு.
9. குவளைக் கருங்கட் கடைசியர்கள் குடித்துக் களித்துக் கள்விலைக்குக்
        குவையல் குவைய லாக்குவித்துக் கூட்டி மணிநித் திலமளந்த
பவள வள்ளந் தனையிடுக்கிப் பரிவி னுடனே குரவைபல
        பாடு மிசையான் மள்ளர்குழாம் பகட்டுக் கழுத்திற் பாம்பிணக்கித்
துவள வுழுத கருஞ்சேற்றிற் றுலங்க விளைந்த செஞ்சாலித்
        தொகையும் கரும்பு முத்தீனச் சோதிப் பிறைபோற் பணைகடொறுந்
தவளங் கொழிக்குந் திருப்பழனித் தலைவா தாலோ தாலேலோ
        சைவந் தழைக்கப் பிறந்தருளுஞ் சதிரா தாலோ தாலேலோ.
-----------------
9. குவையல்-குவியல்.பகடு-எருது. பரம்பு-சேற்றைச்சமன்செய்யும்பலகை.சாலி-நெல், பணைகள் - வயல்கள். தவளம்-முத்து, சைவந்தழைக்கப்பிறந்தருளுமென்றது, திருஞானசம்பந்தமூர்த்திநாயனாராகஅவதரித்ததைநினைந்துகூறியது; “கூனினைத்தீர்த்தினியகூடலார்கோமான்குளிர்ந்திடச்செய்தவிவன்”, “மதுரைப்பதியிலரசுபுரிமாறனறியக்கழுவேறுந், தம்பச்சமணர்மனையன்று” (22,28) என்பர்பின்னும்.
-------------------------------

வேறு.
10. தகரிற் பரியினின் மயின்மிசை பவனிகள் வருவாய் தாலேலோ
        சதுரிற் றுறைபல நிறுவிய மறைதொழு சரணா தாலேலோ
புகரைக் குருவெனு நிருதரை விறல்கொளு நிபுணா தாலேலோ
        புதனைப் பெறுமதி நிலவிய சடையினன் மதலாய் தாலேலோ
குகனைத்துணையெனுமரிமனமகிழ்தருமருகாதாலேலோ
        குலவிப்பலபலதிசையினுமிசைபெறுகுமராதாலேலோ
பகரற்கரியனபொருடமிழ்முனிபெறவருள்வாய்தாலேலோ
        பழனிப்பதிவளர்சிவகிரிமருவியமுருகாதாலேலோ.
-----------------
10. தகர்-ஆட்டுக்கிடாய். பரி-குதிரை, சதுர்-திறமைப்பாடு, சரணா-திருவடியுடையோய். புகர்-சுக்கிரன். விறல்கொளும் -வெற்றிகொள்ளும்; வெல்லும். குகன்-வேடர்தலைவன்; இராமர்தோழன்.
--------------------------------

4. சப்பாணிப் பருவம்.

11. அரியமறை முடியிலுறை யுபநிடத நிலைதெரியும்
        அந்தணர்க ளாசிகொட்ட
ஆவலங் கொட்டநின் றயிராணி கேள்வன்முத
        லமரருள முவகைகொட்டப்
பெரியநா யகியெனு முமைத்தாய் மகிழ்ச்சியொடு
        பேரின்ப முறுவல்கொட்டப்
பேறான கலைமங்கை மகதியா ழிசையொடும்
        பேர்பெற்ற மொழிகள் கொட்ட
உரியமதி வெண்குடைச் சிலைவேள் பணிந்துநின்
        றோங்கியே துதிகள் கொட்ட
உன்மத்த ரானகயி லாசபதி முத்தமிட்
        டுன்னைவாழ்த் தொலிகள் கொட்டத்
தரியலர்க ளெனுமவுணர் நெஞ்சுபறை கொட்டவே
        சப்பாணி கொட்டியருளே
சதுமறைகள் பரவவரு பழனிமலை முருகனே
        சப்பாணி கொட்டியருளே.
-----------------
11. கொட்ட-மிகுதியாகக்கூற. ஆவலங்கொட்டல் - வாயைப்பொத்திக்கொண்டுமுழக்கஞ்செய்தல். அயிராணி- இந்திராணி, பெரியநாயகி-பிருகந்நாயகி; இஃதுஇத்தலத்திலுள்ளஅம்பிகையின்திருநாமம்.தரியலர்கள்-பகைவர்கள்.
-------------------------------

12. நெடுவரைகள் புடைபரவு வடகிரியு மிமமலையும்
        நெறுநெறென வயிரமிட்ட
நிகளத்தை மெட்டி மெட் டிப்பொடி படுத்தியொரு
        நினைவுகொண் டார்த்தெழுந்து
நிலைபெற்ற கந்ததனை வேரொடு மிடந்து மத
        நீர்வழிந் தொழுகவெற்றி
நீள்புழைக் கையதனில் வச்சிரத் தாற்செய்த
        நெடியசங் கிலியையேந்திப்
படவரவி னெடுமுதுகி னிடைபரவு புடவிகிழி
        படவுமிரு கோட்டிலெற்றிப்
பாய்ந்து தன் னிழலைச் சுளித்துமேற் கொண்டுவரு
        பாகனைச் சீறியுதறிப்
பரிதியைக் கனியென்று மேக்குயரு மதிதனைப்
        பாற்கவள மென்றுதாவிப்
பகிரண்ட கூடத்தை யெட்டிமைக் காரினைப்
        பற்றிப் பிடித்துவாரிக்
குடகுடென வேநீரை மொண்டுண்டு கடலிற்
        குளித்தழன் றுன்னைமுதுகிற்
கும்பத் தலத்திலிட் டெண்டிசைக ளெங்குக்
        குலாவியசு ரப்படையெலாம்
கொன்றுழக் கிச்சென்று திருநீறி டாச்சமணர்
        குடர்தனைச் சிதறியமார்
கூட்டமிடு மினியகற் பகநிழலி லேநின்று
        கோபம் தணிந்தறிவுசேர்
தடவிகடநால்வாய்மருப்புப்பருப்பதத்
        தந்தியயிராவதமுதற்
றந்தியெட்டுந்தாங்குமுலகைவலமாகவே
        தான்வந்துசிவன்மார்பினிற்
சாய்ந்துகைக்கனியினைத்தாவென்றுகேட்டிடத்
        தந்தோமெனக்கொடுப்பத்
தயவினுடனேகொள்ளுமீராறுகையினாற்
        சப்பாணிகொட்டியருளே
சதுமறைகள்பரவவருபழனிமலைமுருகனே
        சப்பாணிகொட்டியருளே.
------------------
12. வடகிரியும் இமமலையும்: 4. நெறு நெறு: ஒலிக்குறிப்பு; “அரக்கர் கோனை, நெறுநெ றென வடர்த்திட்ட நிலையும் தோன்றும்” (தே. திருநா.); (அசுரர், இறைகளவைநெறுநெறென வெறிய” (திவ். பெரியதிரு மொழி); "நெறு நெறு நெறுவென" (திருப்புகழ்). நிகளத்தை - காற்சங்கிலியை; “அகளங்காவுன்றனயிராபதத்தின், நிகளங்கால்விட்ட நினைவு.” மெட்டி- காலாற் சுண்டி; வழக்கு. கந்து-கட்டுத்தறி; மதியைப் பாற்கவளமென்றல்: "திங்களிறு மாந்துலவத் தீம்பாற் கவளமென்று, வெங்களிறுகைநீட்டும் வேங்கடமே” திருவேங்கடமாலை, 31. தந்தி -பிணிமுகமென்னும்யானை; எழுவாய்; ''கால்கிளர்ந்தன்னவேழமேல்கொண்டு" (முருகு. 82) ''கடுஞ்சினவிறல்வேன்களிறூர்ந்தாங்கு" (பதிற். 11), "பிணிமுகமூர்ந்தவெல்போரிறைவ” (பரி. 17), “பிணிமுகவூர்தியொண்செய்யோனும்” (புறநா. 56) என்பவற்றால்முருகப்பெருமான்வேழமூர்தலும்அதற்குப்பிணிமுகமென்னும்பெயருண்மையும்அறியப்படும். வலமாகவேதான்வந்து- யானைவலம்வரஅதன்மேல்தான்ஏறிவந்து; தான்- முருகக்கடவுள்.
------------------------------

வேறு.
13. நறைகமழிதணிற்கவணெறிபவள்பா
        னட்புமிகுத்தோனே
நலமலிகருணைச்சிவனுமைபுதல்வா
        நற்றவர்மெய்ப்பேறே
பிறைமிலைசடிலற்குரையருள்துரையே
        பெற்றிபடைத்தோனே
பெருமலையெனவுற்றருண்மயிலுடையாய்
        பெட்புயர்வித்தாரா
விறன்மிகுமசுரர்க்குறுபகையுடையாய்
        வெற்றிநிறைத்தோனே
விகசிதகமலத்திருமகள்மருகா
        வெட்சிமலர்த்தாமா
குறுமுனி பரவத் தமிழுரை பகர்வோய்
        கொட்டுக சப்பாணி
குலவிய பழனிச் சிவகிரி முருகா
        கொட்டுக சப்பாணி.
---------------
13. இதணில் -பரணில், எறிபவள்-வள்ளிநாயகி. துரை:"அழகுதுரையே" (27.) விகசிதம்-மலர்ச்சியுடைய. குறுமுனி...... பகர்வோய்: "குறுமுனிக்குந்தமிழுரைக்குங்குமரமுத்தந்தருகவே" திருச்செந்திற்பிள்ளைத்தமிழ்.
---------------------------

5. முத்தப் பருவம்.
14. மாலிடந் தனின்மேவு முத்துமுயர் வாரண
        மருப்பிற் பிறந்தமுத்தும்
மங்கையர் கழுத்துமுத் துஞ்சாலி தன்னிடம்
        வகைபெற விளைந்தமுத்தும்
கோலமிகு கன்னற் கணுக்கடொறு மேவெண்மை
        குன்றாது தோன்றுமுத்தும்
கோகனக முத்துமிப் பியின்முத்து மேலான
        குருநிறச் சங்குமுத்தும்
சாலவே வரையினுங் கடலினுஞ் சேற்றினுந்
        தரையினும் வானிடத்தும்
தானுலைந் துடைபட்டு விலைபடுவ வாகையாற்
        சரியென்ப தில்லையதனாற்
பால்மணங் கமழ்தரத் தேன்வழிந் தொழுகுநின்
        பவளவாய் முத்தமருளே
பழனிவளர் சிவகிரியில் மருவுகுரு தேசிகன்
        பவளவாய் முத்தமருளே.
------------
14. மால்- மேகம். வாரணம்- யானை, வரைமுதலியவற்றைஏற்பக்கொள்க. சரி-ஒப்பு.
---------------------

15. தந்தா வளக்கும்ப மதயானை யெட்டுமே
        தாங்கிய நெடும்புவனமேற்
சக்ரவா ளத்தையொன் றாய்ச்சுற்றி வெள்ளிமலை
        தன்னைவல மாகவந்து
பிந்தாமலண்டச்சுவர்க்கோடுமட்டினும்
        பெரிதுசென்றிரவிமதியைப்
பின்னிடப்பாய்கின்றகோளரவின்வாயைப்
        பிளந்தும்பரூரைநாடி
மந்தாரவனமீதுளைந்துசூன்முதிர்கொண்டல்
        மந்தசரநிலைகண்டுதன்
        வன்சிறைவிரித்தாடியல்லோலகல்லோல
        மகரநீரேழுழக்கும்
பைந்தோகையம்பரியிலேறிவருசேவகன்
        பவளவாய்முத்தமருளே
பழனிவளர்சிவகிரியின்மருவுகுருதேசிகன்
        பவளவாய்முத்தமருளே.
------------
15. கோடு- சிகரம். மந்தாரம்- மப்பு, கம்மல்; “மழையுமந்தாரமும்வந்தனவாணன்” (தஞ்சைவாணன்கோவை, 99.) அல்லோலம்- பேரோசை, கல்லோலம்--அலை, மகரநீர்-கடல்.
-------------------------

வேறு.
16. கன்னங்கறுத்தகுழல்செருகிக்
        கடைசிமடவார்கழனிதொறும்
கதித்துவிளைந்தசெஞ்சாலிக்
        கதிரையரிவாள்கொடுகொய்து
சின்னஞ்சிறியவிடைதுவளச்
        சென்றுவரம்பின்கரையருகிற்
செல்லுமளவிற்பசுஞ்சோலைத்
        தேமாங்கனியையுதிர்த்தெழுந்து
பொன்னினிறத்தகதலிநறும்
        பூவைக்கனியைச்சிதறிமனம்
பொருந்திவரும்வானரங்களிவர்
        பொருமுமுலையையிளநீரென்
றுன்னித் தாவிப் பிடித்திடு நூ
        றூரா முத்தந் தருகவே
உயரும் பழனிச் சிவகிரிவா
        யுறைவாய் முத்தந் தருகவே.
------------
16. பூவையும் கனியையும், இவர்-கடைசியர்களுடைய, நூறூர்: இவைபழனியாண்டவர்க்குரியவை; "இவனும்நூறூரன்" (21)."நூறூரும்'' (30) என்பர்பின்.
----------------------------

6. வருகைப் பருவம்.

17. கந்தா வருக கயவனிதை கணவா வருக வனமடந்தை
        காந்தா வருக விரைகொழிக்குங் கடம்பா வருக கடவுளர்கள்
சிந்தா குலங்க டவிர்க்கவந்த சேயே வருக மறைது திக்கும்
        தேவே வருக பெரியவுமை செல்வா வருக செகத்திலின்பம்
தந்தாய் வருக தவம்புரிவோர் தவமே வருக வைகாவூர்த்
        தலைவா வருக வோராறு சமயா வருக சரவணத்தில்
வந்தாய் வருக சிவனருள்கண் மணியே வருக வருகவே
        வளஞ்சேர் பழனிச் சிவகிரிவாழ் வடிவேன் முருகா வருகவே.
-----------
17. கயவனிதை- தெய்வயானை. காந்தா- கணவனே. சிந்தாகுலங்கள்-மனக்கவலைகளை. பெரியவுமை-பெரியநாயகி. வைகாவூர்-பழனி.
-------------------------

18. சீரார் நலஞ்சேர் பூவுலகிற் றேவா சுரரின் மற்றையரிற்
        றினமுமுனது கொலுக்காணச் செல்லா தாரார் திறைவளங்கள்
தாராதாராருனது பதந் தனையே வணங்கித் தொழவேண்டித்
        தழுவா தாரா ரெவ்வேளை சமயங் கிடைக்கு மெனநினைந்து
வாராதாரா ருனதருளை வாழ்த்திப் புகழ்ந்து துதிக்கமனம்
        வசியா தாரார் பணிவிடைகள் வரிசைப் படியே நடத்தாதார்
ஆரா ரெனத்தா லாட்டுகின்ற வரசே வருக வருகவே
        அருள்சேர் பழனிச் சிவகிரிவா ழையா வருக வருகவே.
-----------------
18. கொலு-திருவோலக்கம். ஆர் என்பது ஒருவரும் இலரென்னும் பொருளில் வந்தது. திறைவளங்கள்-காணிக்கையாகச் செலுத்தும் பொருள்கள். வசியாதார்-கைவசஞ்செய்யாதவர்கள். ஆராரெனத் தாலாட்டுகின்ற: பெண்கள் தாலாட்டுகையில் “ஆராரோ ஆரிரரோ" எனக் கூறித் தொட்டிலை அசைத்தல் வழக்கம்; “ஆராரா ரென்று தா லாட்டினால்" விறலிவிடு. 178.
-------------------------------

19. பொன்னே வருக பொன்னரை ஞாண் பூட்ட வருக சிறுசதங்கை
        புனைய வருக மணிப்பதக்கம் பூண வருக தவழ்ந்தோடி
முன்னே வருக செவிலியர்கண் முகத்தோ டணைத்துச் சீராட்டி
        முத்த மிடற்கு வருகவெதிர் மொழிகண் மழலை சொலவருக
தன்னே ரில்லா நுதற்றிலகந் தரிக்க வருக விழியினின்மை
        சாத்த வருக மேலாகத் தானே வருக தேவர்தொழு
மன்னே வருக மாமாலின் மருகா வருக வருகவே
        வளஞ்சேர் பழனிச் சிவகிரிவாழ் வடிவேன் முருகா வருகவே.
----------------

7. அம்புலிப்பருவம்.
20. மாகமுயர்சந்த்ரனீதெய்வவாரணவனிதை
        மகிழுஞ்சுசந்த்ரனிவனாம்
மதிசேர்மதிப்பிள்ளைநீயிவன்சிவன்மனது
        மகிழ்சம்மதிப்பிள்ளைநீ
தேகவொளிமீறியகுபேரனிவன்மலைவந்து
        தெண்டனிடவிலகுபேரன்
திருமருவுமிருகோட்டிளம்பிறைநீயெழில்
        சேர்ந்தருள்கடம்பிறையிவன்
பாகமுயர்கின்றவெண்சசியுநீபொன்னாடர்
        பரவுசசிமருகனிவனாம்
பார்மீதுபுகழ்பெற்றசோதிநீயிவனும்
        பரஞ்சோதிவடிவனாகும்
ஆகையாலிவனுநீயுஞ்சரிசமானமே
        யம்புலீயாடவாவே
அருள்பரவுபழனிவளர்சிவகிரியின்முருகனுட
        னம்புலீயாடவாவே.
--------------
20. சுசந்த்ரன்- களங்கமற்றநல்லசந்திரன்;சம்மதி-உடன்பாடு.குபேரன்-சந்திரன்; விகாரமானஉடலையுடையவன். பேரன்- குறிஞ்சிவேந்தனென்னும்திருநாமத்தையுடையவன், கடம்பு-இறை. சசி-சந்திரன், இந்திராணி; சசியுமென்பதிலுள்ளஉம்மைஅசைநிலை.
-----------------------------

21. ஓதரிய கலைகள்பதி னாறுமாத் திரமுனக்
        குண்டுகலை யறுபத்துநான்
குடையனிவ னோரூர னீயிவனு நூறூரன்
        உன்றிகிரி யிரவுசெல்லும்
சேதிபெற வேயிவன் றிகிரியெப் போதுமே
        செல்லுமிது வல்லாமலே
தேய்வதுஞ் சிறிது நாள் வளர்வது முனக்குண்டு
        சிந்தையி லிவன்பதத்தைப்
போதுகொ டருச்சித்த பேர்களுந் தேய்வுறார்
        பொல்லாத மறுவுடையனீ
பூமிவா னகமுள்ள கடவுளரின் மறுவிலாப்
        புனிதனிவ னாகுமென்பார்
ஆதலா லிவனுனக் கதிகனா மென்றிவனோ
        டம்புலீ யாடவாவே
அருள்பரவு பழனிவளர் சிவகிரியின் முருகனுட
        னம்புலீ யாடவாவே.
----------------------
21. ஊர்- பரிவேடம். நூறூரன்: 16. சேதி- செய்தியென்பதன்மரூஉ; வழக்கு; சேதித்தலெனலுமாம். திகிரி- மண்டிலம், ஆஞ்ஞாசக்கரம். போது -மலர். மறு- களங்கம், குற்றம்.
---------------------

22. வானிடை வழிக்கொண்டு நீசெல்லு மளவைதனின்
        மாசுணப் பகைதொடருமம்
மாசுணப் பகையைத் துரத்தவிவ னேறிவரு
        மயிலின் சகாயமுண்டு
கூனினைத் தீர்த்தினிய கூடலார் கோமான்
        குளிர்ந்திடச் செய்தவிவனின்
கூனைத் தவிர்ப்பனீ வரவேணு மிவனிடங்
        குறகினாற் பலனுமுண்டாம்
நானினஞ் சொல்வதேன் வாராத போதிலுனை
        நாடிப் பிடித்துலர்த்தி
நனிவீர பத்திரன் றேய்த்ததென வேவூன
        நல்காத வண்ண மேசென்
றானிடையின் மருவுவா னுபதேச குருவினுட
        னம்புலி யாடவாவே
அருள்பரவு பழனிவளர் சிவகிரியின் முருகனுட
        னம்புலீ யாடவாவே.
---------------
22. மாசுணப்பகை-இராகுவாகியபகைப்பாம்பு. கூடலார்கோமான்-பாண்டியன், வேணும்: “வேணுமாகில்வேணுமன்றி ” வில்லிபுத்தூராழ்வார்பாரதம், சூதுபோர். 165. வீரபத்திரன்தேய்த்ததுதக்கயாகசங்காரத்தின்பொழுது.ஊனம்-குறைவு. ஆனிடையின்மருவுவான்-சிவபிரான்.
------------------------------

8. சிறுபறைப் பருவம்.

23. ஐவகை யிலக்கணமு மைங்காவி யத்துறையு
        மாராய்ந்து பாகமுறையால்
ஆசுமது ரஞ்சித்ர வித்தார முஞ்சொலு
        மருங்கவிஞர் துதிமுழக்க
மெய்வருந் தவமுனிவர் முள்ளரைய நெடுநாள
        வெண்ணளின வாதனத்தின்
மேவுநா மகள் கொழுந னுடன் வந்து தானின்று
        வேதவொலி யேமுழக்கக்
கைவரும் வழியிலே மனதுவர மனதின்வழி
        கண்வரத் தந்திமீட்டும்
கந்தருவர் வீணையிசை யாழிசை முழக்கவான்
        கடவுளர்கண் மலர்கள்பெய்து
தெய்வதுந் துமியொடு வலம்புரி முழக்கநீ
        சிறுபறை முழக்கியருளே
திருவாவி னன்குடிப் பழனிமலை முருகனே
        சிறுபறை முழக்கியருளே.
-------------------
23. ஐவகைஇலக்கணம்-எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணிஎன்பன. ஐங்காவியம்-சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதிஎன்பன. பாகம்-செய்யுளின்நடைவகை; இது, க்ஷீரபாகம், திராக்ஷாபாகம், கதலீபாகம், இக்ஷுபாகம், நாளிகேரபாகம்முதலாகப்பலவகைப்படும்; “பான்முந்திரிகைவாழைக்கனியாய்க், கிளர்ந்தகரும்பாய்நாளிகேரத்தினங்கனியாய்த், தித்திக்கும்தெள்ளமுதாய்த்தெள்ளமுதின்மேலான, முத்திக்கனியேயென்முத்தமிழே” (தமிழ்விடுதூது, 68-9.) முள்அரைய-முட்கள்பொருந்தியஅடியையுடைய, நாளம்-தண்டு.
நந்தி -நரம்பு. வீணைவேறு, யாழ்வேறு; " வேய்ங்குழல்விளிகொள்நல்யாழ்வீணையென்றினையநாண" கம்ப.அரசியல், 3.
---------------------------------

24. கார்கொண்ட தண்டலை நெருக்கத்தி லிளமஞ்ஞை
        கவினுலவு தோகையுதறிக்
கண்ணுறச் சிறைவிரித் தாடவிள மாந்தளிர்
        கறித்துமென் குயில்கள்பாடத்
தார்கொண்ட வஞ்சிறைப் பாட்டளிக ளொருகோடி
        தாதுண்டு பண்ணிசைகொளத்
தாழுங் குடக்கனி யுதிர்க்கின்ற சூன்மந்தி
        தண்கமுகின் மீதிலேறும்
ஏர்கொண்ட பழனத்தி லாலைவாய்ப் பாலடு
        மிளங்கோல மள்ளர்மடவார்
இசையினாற் குரவைகண் முழக்கவே மருதநில
        மெங்குமுயர் வளமைவீறும்
சீர்கொண்ட தருமவை காபுரிக் கிறைவனே
        சிறுபறை முழக்கியருளே
திருவாவி னன்குடிப் பழனிமலை முருகனே
        சிறுபறை முழக்கியருளே.
----------------------
24. தண்டலை- சோலை. ஒரு கோடி யென்றது பன்மையைச் சுட்டியது. இங்ஙனம் வருவதை அனந்தவாசி யென்பர் தக்கயாகப்பரணி யுரையாசிரியர். குடக்கனி- பலாப்பழம், மள்ளரும் மடவாரும், குரவைகள்- குரவைப்பாட்டுக்கள். வைகாபுரி- பழனி.
--------------------

வேறு,
25. குசைகொடு மறையோர்தொழவருள் புரிவோய்
        குணதர வித்தகனே
குலவிய புகழ்சேர் பெரியவள் புதல்வா
        குடவயி றற்கிளையாய்
புசபல முடனே வருமசு ரரையே
        பொருத திறற்படையாய்
புதமிகு பொதியா சலமுனி பணிவோய்
        புதுமை மிகுத்தவனே
இசைபெறு மதுரா புரிவரு புலவோ
        னிசையை வளர்ப்பவனே
இமையவர் பதிமான் மகளிரை மகிழ்வோய்
        எழில்பெறு கட்டழகா
திசைமுகன் முதலோர் பரவிய குழகா
        சிறுபறை கொட்டுகவே
சிவகிரி முருகா குருபர குமரா
        சிறுபறை கொட்டுகவே.
--------
25. குசை-தருப்பை. பெரியவள்-பெரியநாயகி.குடவயிறன்-கணபதி. புதம்-அறிவு. புதுமைமிகுந்தவனே; "பின்னைப்புதுமைக்கும்பேர்த்துமப்பெற்றியனே" (திருவாசகம்.) புலவோன்- நக்கீரர்.இமையவர்பதி-இந்திரன், இமையவர்பதியினுடையமகளும்மான்மகளும்ஆகியமகளிரை.
-----------------------

9. சிற்றிற்பருவம்.

26. பருமுத்தரிசிதனையாய்ந்து
        பசுந்தேனதனைவடித்தெடுத்துப்
பவழக்குடத்திலுலையேற்றிப்
        பரிவுதரும்பாற்சோறாக்கி
ஒருமைப் படியே பூந்தளிரை
        ஒன்றாய்ப் பறித்துக் கறிசமைத்தே
உண்ணும் படிக்கிங் குபசரிக்கும்
        உரிமைப் பருவத் திளங்கோதைப்
பெருமை மடவார் நாங்களின்று
        பிரியத் துடனே வெண்பளிங்காற்
பிரியவகைக்குக் கட்டுவித்த
        பெரிய மனையெம் மனையுன்றன்
அருமைச் சிறுகிண் கிணிக்காலால்
        ஐயா சிற்றி லழியேலே
அமலா பழனிச் சிவகிரிவாழ்
        அரசே சிற்றி லழியேலே.
-------
26. முத்தரிசி- முத்தாகியஅரிசியை; ''அரிசிமுத்தழல்செம்மணி.” திருவிளை. நகரப். 64.
--------------------------------------------------

27. களப முலைகள் புடைத்தெழுந்த
        காலப் பருவத் துனைநினைப்போம்
கட்டி யணைத்துச் சிவனருளும்
        கனியே யென்று வாழ்த்தல்செய்வோம்
பிளவு மிலையும் பகிர்ந்துனது
        பேரைப் பாடித் துதிசெய்வோம்
பிரியத் துடனே யருகிருத்திப்
        பிரசத் துடனே யமுதளிப்போம்
பழகி யிருந்து மெங்கண்முகம்
        பாரா திருக்க வழக்குண்டோ
பாத மலர்கள் சிறுமணலின்
        பால்பட் டழுந்திச் சிவந்திடுமே
அழகு துரையே வைகாவூர்க்
        கதிபா சிற்றி லழியேலே
அமலா பழனிச் சிவகிரிவாழ்
        அரசே சிற்றி லழியேலே.
-----------
27. பருவமென்றது மங்கைப்பருவத்தை. பிளவு-பாக்கின் பிளவு; “வெற்றிலையின் முன்னே வெறும்பிளவை வாயிலிட, நற்றிருவாமங்கைநடப்பளே" (தேரையர் வெண்பா.) இலை- வெற்றிலை. பிரசம்-தேன். அமுது-பால்.
-----------------------------------

28. உம்பர்க் கிடர்செய் துலகனைத்தும்
        ஒன்றாய்த் தனது வசப்படுத்தி
ஒருமை தவறிக் கடுங்கொடுக்கோல்
        ஓச்சி நிருதர் புடைசூழ
வம்பத் தனமே மேற்கொண்ட
        வலிசேர் சூரன் மனையிதன்று
மதுரைப் பதியி லரசுபுரி
        மாற னறியக் கழுவேறும்
தம்பச் சமணர் மனையன்று
        தமியேம் யாங்கண் மெய்வருந்தித்
தங்கத் தகட்டாற் செய்தமனை
        தானே யறிந்து மறியார்போல்
அம்பொற் றிருத்தா மரைப்பதத்தால்
        ஐயா சிற்றில் சிதையேலே
அமலா பழனிச் சிவகிரிவாழ்
        அரசே சிற்றி லழியேலே.
-----------------
28. வம்பத்தனம்- தீக்குணம்; “வள்ளற்றனமென்னுயிரைமாய்க்கும்" கம்ப. நகர்நீங்கு. 62.
-----------------------------

10. சிறுதேர்ப்பருவம்.

29. இந்திரன்குடைபிடித்திடவழற்கடவுள்வந்
        தெதிர்நின்றுவிசிறிவீச
இயமனுடனிருதிவெண்சாமரைகண்முறைமுறை
        யிரட்டவருணன்வாயுவும்
சந்திரனுமுடைவாளையேந்திநின்றிருபுறந்
        தாநிற்பவளகைவேந்தன்
தயவினொடுகாளாஞ்சியேந்தவீசானனிது
        சரியென்றுமுறுவல்கூர
மந்திரப் புனல்கொண் டருச்சித்து வேதன்முதல்
        மறைமுனிவர் துதிகள் செய்ய
வானகத் தமரர்நறு மலர்பெய்ய மழகதிர்
        மறைத்தகார் மழைகள் பெய்யச்
சிந்தனை மகிழ்ந்துநவ மணியினா லொளிர்கின்ற
        சிறுதே ருருட்டியருளே
தென்பழனி நகரிவரு சிவகிரியின் முத்தையன்
        சிறுதே ருருட்டியருளே.
----------------
29. இரட்ட- மாறிவீச.சிந்தனை-மனம்; ''சிந்தனைவாக்கிற்கெட்டாச்சிவன்” திருவிளை. வெள்ளையானை. 18, முத்தையன்-முத்துக்குமாரமூர்த்தி.
-------------------------------

30. பன்றிமலை பூம்புரை யிடும்பன் மலை யீராறு
        பள்ளியா றாறுவேதம்
பரவுமங் கலமெட்டு நூறூரு மேயிசை
        படைத்தவை காபுரியினும்
குன்றிடத் தும்பரங் கிரிசெந்தி லாவினன்
        குடியே ரகத்தைமுதலாய்க்
குளிர்வளஞ் சேர்சோலை மலையிடத் தும்பரவு
        கொள்கையா லுஞ்சுடர்விடும்
வென்றிவேல் கையிற் றரித்தலா லுஞ்சேவல்
        விருதுவச மேவலாலும்
மேலான தெய்வநீ யாமென்று போற்றியுனை
        வேண்டிநின் றமரர்வாழ்த்தத்
தென்றல்வரைமுனிபரவுமெய்ஞ்ஞானதேசிகன்
        சிறுதேருருட்டியருளே
தென்பழனிநகரிவருசிவகிரியின்முத்தையன்
        சிறுதேருருட்டியருளே.
-------
30. பன்றிமலை-வராககிரி; இதன் முதற்பெயர் மாயாசலமென்பது. வராகமுனிவரென்பவர் சிவபெருமானை இம்மலையிற் பூசித்துப் பேறுபெற்றனர்; அதுபற்றி அவர்பெயால் இது வழங்கலாயிற்று; (பழனிப்புராணம், பன்றிச் குட்டிக்குப். 22-3.) பூம்புரை: இது பூம்பாறையென வழங்கும்; இது வராகரியிலுள்ளது; (பழனிப்புராணம், கிரிசீவஸ்தானச். 4.) பன்றிமலையென்பதற்குத் திருவிளையாடற்புராணம் வேறுகாரணம் கூறும், இடும்பன்மலை-பழனிமலைக்கு அருகிலுள்ளது. ஈராறுபள்ளி-பள்ளியென்னும் சொல்லை இறுதியாகவுடைய பன்னிரண்டு ஊர்கள், மங்கலம் எட்டு-மங்கலம் என்னும் சொல்லை இறுதியாகவுடைய ஊர்கள் எட்டு; அவை கோதைமங்கலம் முதலியனவென்பர். ஆறு ஆறு-ஷண்முகநதி. துசம், த்வஜம்- கொடி, தென்றல்வரை- பொதியின்மலை.
-----------------------------

31. சொல்லரிய பொன்னுருளை சேர்த்து வயி ரத்தினாற்
        சோதிபெறு மச்சிணக்கித்
துய்யகோ மேதகப் பலகையிடை சேர்த்தியே
        துலங்குபோ திகைதிருத்தி
நல்லபுது வைடூரி யத்தினால் வேய்ந்தொளிரு
        நவமணி குயிற்றியருண
நல்குபவ மழக்கால்க ணாட்டிநீலச்சட்ட
        நாற்பாங்கு மேநிறைத்து
மல்லுலவு தலையலங் காரமுஞ் செய்துநிறை
        வரிசையி லலங்கரித்து
மாமேரு கிரிபோல் விளங்கமே லான கின்
        மாமனாரானகருணைச்
செல்வரா மெழில்விசய கோபாலர் வரவிட்ட
        சிறுதே ருருட்டியருளே
தென்பழனி நகரிவரு சிவகிரியின் முத்தையன்
சிறுதே ருருட்டியருளே.
-------------
31. போதிகை-தேருறப்புக்களிலொன்று. குயிற்றி-பதித்து. அருணம்-செந்நிறம். நீலச்சட்டம்-நீலமணியாற்செய்த சட்டங்கள். தலையலங்காரம்- தேரின் மேற்பாகம்; “பொற்றே ரிருக்கத் தலையலங் காரம் புறப்பட்டதே" (அம்பிகாபதிபாடல்.) விசயகோபாலர்- பழனியைச்சார்ந்த பாலசமுத்திரமென்னும் ஊரிலிருந்த ஒரு ஜமீன்தாரென்றும் விசயகிரிதுரையென இவர்பெயர் வழங்கப்படுமென்றும் சொல்லுவர். திருமாலாக உருவகித்து இவரை மாமனா ரென்றார்.
-------------------------------

பழனிப்பிள்ளைத்தமிழ் முற்றிற்று.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்