Tirunaḷḷāṟṟup purāṇam

சைவ சமய நூல்கள்

Back

திருநள்ளாற்றுப் புராணம்





நமசிவய
திருநள்ளாற்றுப் புராணம்

திருநள்ளாறு 274 தேவாரப்பாடல் பெற்ற தலங்களில்
சோழநாட்டு காவிரி தென்கரைத் தலங்கள் 127 இல் 52 வது தலம்
மூவர் பாடலும் பெற்றது = 7 பதிகங்கள் : சம்பந்தர் = 4 அப்பர் = 2 சுந்தரர் = 1
பாண்டிச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காரைக்கால் பகுதியில் உள்ளது
இங்குள்ள சனிபகவான் கோயில் சனிப்பெயர்ச்சி வழிபாட்டிற்கு
சிறப்பு பெற்றுள்ளதை யாவரும் அறிவோம்
தல இறைவன் = தர்பாரண்யேசுவரர்
தல இறைவி = போகமார்த்த பூண்முலையாள்
தல பயிரினம் = தருப்பைப்புல்
தல தீர்த்தம் = நளதீர்த்தம்


நூலடைவு
1. பாயிரம் - (18)
2. இலிங்கோற்பவ சருக்கம் - (20)
3. கலிங்காதிபதி சருக்கம் - (44)
4. நளபதி சருக்கம் - (52)
5. திருவிழா சருக்கம் - (33)
6. கோக்கொலை தீர்த்த சருக்கம் - (18)
7. உருசிராச சருக்கம் - (31)
8. அக்கினி வண்ணச் சருக்கம் - (46)
9. தீர்த்த சருக்கம் - (45)

நூல் = (307) விருத்தப் பாடல்கள்
நூலாசியர் = ??
நூற்காலம் = ??
பாயிரம் Up
(நள்ளாறன் துதி)
1
சீர்கொண்ட எழுத்(து)ஐந்தும் சத்திஐந்தும்
திருமுகங்கள் ஓர்ஐந்தும் செயல்கள்ஐந்தும்
ஏர்கொண்ட கலைஐந்தும் பூதம்ஐந்தும்
இமயவரைத் தருஐந்தும் யாகம்ஐந்தும்
பார்கொண்ட நிலன்ஐந்தும் நிறங்கள்ஐந்தும்
படைத்து(எ)வையு(ம்) நிறைந்துபரா பரமாய்நின்ற
நார்கொன்றைத் தார்கொண்ட சடைவெள்ளாற்று
நள்ளாற்று(எ)ம் பெருமான நயந்துவாழ்வாம் - 1
(உமை அம்மை துதி)
2
தும்பைச்செஞ் சடைமுடியம் பக்தர்நித்தம்
தொழுது(எ)ழுதாள் தாமரையும் துத்திபற்றி
வெம்பைநஞ் சுடைஅரவின் அணையினானும்
விதியும்அறி யாதநெறி விமலனார்க்குக்
கம்பைக்குள் இரண்டுவகை தழும்பும்காட்டும்
கன்னிக்கு சிவானந்தக் கனிக்குமுத்துக்
கம்பைக்கும் பாடகமெல் லடிக்குப்போகம்
(ஆ)ர்த்தபூண் முலையாளுக்(கு) அன்புசெய்வாம் - 2
(கற்பக விநாயகர் துதி)
3
நூபுரத்துப் பதம்சிவப்ப மன்றில்ஆடி
நுவலும்வலப் புரத்தும்(இ)டப் புரத்தும்வீறு
சோபுரத்து நிறைந்தபுரம் பொருளினோடு
சுரரும்அருந் தவத்தோரும் தொழுதுபோற்றி
மாபுரத்துப் போர்கருதி வணக்கம்செய்ய
மகிழ்ந்து(அ)ருள்செய் விண்ணோர்வரு நள்ளாற்றுக்
கோபுரத்துக் கற்பகத்தைப் பவளமேனி
குஞ்சரத்தை நெஞ்சழுத்திக் குறைகள்தீர்வாம் - 3
(முருகன் துதி)
4
திரைவயிறு கிழித்தெழுந்த வடவைஎனும்
சினத்து(அ)வுணச் செழுந்தவத்தோர்
இரைவயிறு கிழித்துநரி அருந்த(அ)மைத்
தான்குருவை இலங்குசங்கின்
நிறைவயிறு கிழித்து(உ)ழவர் உழுநள்
ளாற்று(இ)றையை நீடுபுள்ளாம்
வரைவயிறு கிழித்தானை விரைமலர்தூ
விப்பரவி வணக்கம் செய்வாம் - 4
(நந்தீசன் துதி)
5
இருசாதி திருஉருவான் வையகத்துத்
தாயத்தார் எனவே முன்னம்
பொருசாதி சுராசுரரும் ஏனையரும்
சேவிக்கும் பொழுது வாசம்
தருசாதி முடியின்மலர் சிதறஅடித்(து)
இன்பத்தே தள்ளும் செங்கை
ஒருசாதி உடையானைத் துருசாதி
அகலநாம் உள்ளம் கொள்வாம் - 5
(சம்பந்தப் பிள்ளை துதி)
6
கரிஇடத்தின் உளத்தது(அ)மணர் கைதவங்கள்
வல்லர்எனக் கலங்கு கின்ற
சரிஇடத்தில் கரமலர்மங் கையர்க்கரசி
அஞ்சல்எனச் சாற்றி ஆங்கே
தெரிஇடத்தின் நள்ளாற்றில் ஒருபாடல்
வாங்கியே தென்னன் முன்னே
எரிஇடத்தில் இட்டெடுத்த சம்பந்தப்
பிள்ளைதம் பதம்இறைஞ்(சி) அஞ்சல்செய்வாம் - 6
(நாவுக்கரசர் துதி)
7
பாராழி அமணரொடு புத்தர்செயும்
பொய்த்தவங்கள் பரிந்தே ஆழ
நீராழிக் கெடிலநதி அதிகைநம்கோன்
அருள்பெற்று நிறைமலர்க் கைக்
கூர்ஆழி மால்வணங்க நின்றபிரான்
பாடலநற் கோயில் முன்னர்க்
காராழிச் சிலையோடு மிதந்தானப்
பதம்தாழ்ந்து கவலை தீர்ப்பாம் - 7
(சுந்தரர் துதி)
8
புள்ளானைத் தாதைஎனப் புகல்வானை
பிரணவத்தின் பொருள் ஏதும்
உள்ளானை சிறையில்வைத்த ஒளியானைப்
பயந்தானை உணரார் நெஞ்சுள்
கொள்ளானைக் கயிலைமலை இடைவணங்கப்
போங்காலைக் கலிசன் ஊரும்
வெள்ளானை ஊர்ந்தானை நள்ளானை
வளர்சரணம் விரும்பி சார்வாம் - 8
(மாணிக்கவாசகர் துதி)
9
முருந்துறையும் வெண்ணகைசெங் கனிவாய்பைந்
தோகையுடன் முடிமேல் விண்ணோர்
மருந்துறையும் சிறுபிறையும் காந்திரத்தே
சிகராகி வந்து வண்பூங்
குருந்துறையும் நிழலிருந்து சுவேதநதி
திரைபுரட்டிக் கொழிக்கும் தெண்ணீர்ப்
பெருந்துறையுள் ஆட்கொண்ட வாதவூர்
மாதவனைப் பேசி உய்வாம் - 9
(சனீசுவரர் துதி)
10
பெருவாச நளனொடுவந்(து) அவன்தீர்த்தம்
ஆடுதலால் பெற்ற பேற்றால்
ஒருவாவந்(து) எம்பெருமான் அருள்பெற்று
மிகவும்மனம் உவகைப் பூப்பக்
கருவாசல் புக்கார்போல் புகுந்து(ஒ)ளிரு(ம்)
நள்ளாற்று கனக வச்ரத்
திருவாசல் இட(ம்)நின்ற மந்தன்இரு
செந்தளிர்தாள் சிந்தை செய்வாம் - 10
(சண்டேசுவரர் முதலியோர் துதி)
11
மண்ணிஎனும் நதியின்பால் சங்கரைப்
பாலாட்டி வரலா(று) உன்னான்
நண்ணியதீ(து) இயற்றுதந்தை சரண்தடிந்து
பரன்அருளான் பயந்து நல்கத்
தண்ணியமால் ஐம்பூணு(ம்) மூணும்பெற்(று)
உடையதிருச் சண்டி ஆதிப்
புண்ணியநல் தொண்டர்பதம் தொழுது(ஏ)த்தி
நள்ளாறுப் புராணம் சொல்வாம் - 11
(புராணங்கள் இவைஇவை எனல்)
12
முந்நான்கோ(டு) இருமூன்று முதல்புரா
ணத்திரண்டு(ம்) முளரி யோர்க்கு
பொன்னாடு மாற்குநான்(கு) இரவிஅங்கிக்(கு)
ஓர்ஒன்று போகபத்தும்
சொன்னால் அப்பெருமாற்காம் அதில்பிரம
கைவத்தத் தொல்புராண
என்னாடும் வxணங்கு பொன்னி
நன்நாட்டில் நள்ளாற்றின் இசைபுராணம் - 12
(புராணம் ஒழுகுவழி கூறல்)
13
பண்டரங்கன் மலைமகட்கும் அவள்சேய்முனிக்கும்
சேய்முனிவோர் பரவுநீற்று
புண்டரனாம் சனற்குமா ரற்கும்அவன்
வியாதற்கும் புகல்வியாத
எண்தகுசூ தற்கும்அவன் இருடிகட்கும்
நசைதீர இசைத்து யார்க்கும்
மண்தலத்தும் விண்தலத்தும் வாழ்வளிக்கும்
நள்ளாற்றின் மாபுராணம் - 13
(அவையடக்கம்)
14
வள்ளைமொழி நள்ளாற்றின் மணிகண்டர்
சரிதையின் மனத்தார் ஆனோர்
பிள்ளைமொழி ஆனாலும் பொருள்கொண்டு
நயப்பர்இந்த பெற்றி அன்றிக்
கிள்ளைமொழி பயிற்றுவித்து மதுபகரும்
மொழிவிரும்பி கேட்பார் போல
வெள்ளைமொழி எனும்மென்சொல் எமக்குணர்த்தும்
புலவரெலாம் விரும்பிக் கேட்பார் - 14
(இப்புராண அடக்கம் இவை இவை எனல்)
15
திருத்தகு பாயிரம் லிங்கோற்பவம்
கலிங்காதிபதி நளத்தெய்வ வேந்தன்
அருத்திபெறும் திருவிழாக்கோக் கொலைநீங்குதல்
உருசி அரசன் கானில்
வருந்திய அக்கினி வருணன் தீர்தத்தின்
சரிதைஎன வகுத்துக் கூறும்
பொருத்தம்உறு சருக்கம்ஒன்பான் விருத்தம்முன்
னூற்றுஏழால் புகலல் உற்றாம் - 15
(முதல்மூன்று சருக்க அளவு கூறல்)
16
பாயிரம் பதினெட்டில் லிங்கோற்பவம்
மேயும் பாடல் இருபது நற்புவி
ஆயும் சீர்க் கலிங்காதி சருக்கமாம்
நாயகத் தமிழ் நாற்பத்தி நானகரோ - 16
(அடுத்த நான்கு சருக்க அளவு கூறல்)
17
நளன் சருக்கம் ஐம்பத் திரண்டுநல்
வளம்தரு விழாமன்னு முப்பத்து மூன்று
அளந்த கோக்கொலை அற்றல் பதினெட்டு
தெளிந்த முப்பத் தொன்(று)உருசி சீர்க்கதை - 17
(அடுத்துவரு சருக்கமும் நூளவும் கூறல்)
18
நலம்திகழ் அக்கினி வண்ணச்சருக்கம் நாற்பத்தாறாம்
தலம்புகழ் புண்ணிய தீர்த்தச் சருக்கமு நாற்பத்தைந்தே
கலந்தபே ரின்பமாகச் சருக்கம் ஒன்பதுவும் கற்றால்
பலன்தரும் விருத்தம் முன்னூற்று ஏழுஎனப் பகரலாமே - 18
திருச்சிற்றம்பலம்
முதல் பாயிரம் முடிவு
இரண்டாவது
இலிங்கோற்பவ சருக்கம் Up
(யாகம் செய்ய நைமிசாரண்யம் உகந்தது எனல்)
19
முன்ன மாதவர் மகம் செய்வான் வேதனா(ம்) முதல்வன்
இன்ன பூதலத்து ஒருதலம் உரைஎன இசைப்ப
நன்னர் நேமி ஓன்று (அ)ளித்தது நைமிசாரண்யம்
அன்னதே நிலத்து (உ)யர்ந்தது என்று அறைந்தனன் பிரமன் - 1
(வேள்வி, புராணம் ஓதலால் சத்தியலோகமாகியது எனல்)
20
உரைத்த அவ்வழிச் சவுனகாதி முனிவோர்கள்
நிரைத்த சாத்திர வேள்வியை நெடும்பகல் இழைத்து
வரைத்த மூவறு புராணமும் வினாவியே மணிநீர்த்(து)
உரைத்த அயன் பதம் இறங்கியது எனச் சார்வார் - 2
(முனிவர்கள் தருப்பாரண்ய சிறப்பு வினாதல்)
21
அனைய மாதவர் சூதனை அலர்முக நோக்கி
முனைவ நீதருப்பாரண்யத் திசை மொழிய
வினையமொடு முன்கேட்டன இன்னமும் வினவ
நினைவு மிக்கன உரைஎனத் துதிமொழி நிரைத்தார் - 3
(சூதமுனி நீனைவு கூர்ந்து கூறமுனைதல்)
22
வேத நான்கிற்கும் நால்வரை விதித்து மேல்புராணம்
ஓத ஓதிய பராசரன் புதல்வனை உன்னி
நாதன் மேதகு பாதமுன் நினைத்து நைந்துருகிச்
சூதமாமுனி அவசமுற்(று) உணர்ந்து இதுசொல்வான் - 4
(பிரமன் தருப்பாரண்யம் மேவுதல்)
23
அண்டம் தோன்றிய காலையில் ஆதியாம் பிரமன்
மண் தலத்தவன் படைத்த முன்பதியினை மருவிக்
கண்ட கண்களிற் கூர்தரத் தருப்பையங் கானில்
வெண்தலத் தொடை அரன்பதம் நினைந்து மேவினனால் - 5
(தவம் செய்து இலிகத்தை காணல்)
24
வெவ்விடத்து அரவுஎயிறு எனும் முனைச்சரம் மிடைந்(த)
அவ்விடத்(து) இருவெள்ளை அன்னத்தொடும் அடைந்(து)
அவ்விடத்தில் ஐம்புலன் செலா தவம்செய மகிழ்ந்தே
எவ்விடத்தினும் நிறைந்தவன் இலிங்கமாய் எழுந்தான் - 6
(மனம் நிரைந்து வணங்கல்)
25
எழுந்த காலையின் மெய்எலாம் புளகுஎழ எழுந்தே
அழுந்து பேரின்ப வெள்ளம் மீதூர்தர ஆடி
செழுந்தளிர் கரம் குவித்தனன் வலம்வந்து திருமுன்
விழுந்து எழுந்து நாமங்கள் ஆயிரம் சொல விமலன் - 7
(ஐம்முகனை வாழ்த்தி போற்றுதல்)
26
ஐந்து நற்றிரு முகங்களும் அவிர்ஒளிப் பேதம்
ஐந்து நாட்டம் மூஐந்தும் ¦வ்வேறு இயல் அமைந்த
ஐந்தும் ஐந்துமாம் கரங்களும் உற வடிவு அமைய
ஐந்(து) எழுத்தினால் வழுத்தினன் நெடியமால் அளித்தான் - 8
(பிரமன் வேதாதிகளின் தெளிவு தீர்தல்)
27
அருள்செய் எம்பிரான் பிரணவ ஆரண அங்கம்
அருள்செயாப் பரநூல்களும் வரம்பில் இரண்டு
பொருள்செயும் படைப்பும் தெளிதர அருள்பூப்பத்
தெருள்செய் நான்முகக் கடவுளு(ம்) மனக்குறை தீர்ந்தான் - 9
(பிரமன் ஒருகணத்தில் ஆலயம் அமைத்தல்)
28
நந்தியாவத்த சிகரம் ஈசனுக்கு நாயகிக்குத்
தந்திமாமுகன் ஆதியர்க்கு உள்ளன தனியும்
முந்தும் ஆகம மரபினால் பொன்மணி முரண
சிந்தையால் ஆலயம் ஒருகணப் பொழுதில் செய்தான் - 10
(தண்டால் பிரமனும் மற்றும் வாணியும் தடம்தீர்த்தம் செய்தல்)
29
சோதி முன்னர்க் கீழ்திசை சரபதத்தினில் சுரர்சூழ்
போதி உண்டு அதன் மருங்கினில் பொருந்து கைத்தண்டால்
ஆதி நான்முகன் தீர்த்தம் ஒன்று ஆக்கினன் அதன்பின்
காதல் வாணியும் தென்புறத்து ஓருதடம் கண்டாள் - 11
(அன்னம் இலிங்கம் படைத்தல்)
30
குடக்கினில் தொடுத்து எம்பிரான் உரைதரு கோயில்
வடக்கின் காறும் ஓர்தடம் பிரணவத்தியல் வயங்கும்
தடத்துச் செய்யதாள் வெண்சிறைப் பைஞ்சிகை தளிர்பொன்
இடத்த துவின் ஓதிமம் படைத்ததால் இலிங்கம் - 12
('மகுடாகம' பூசைவிதி அமைத்தல்)
31
தீர்தமாடியே ஊர்தி காதலியொடும் தேவன்
கூத்தனார் பதத்து அருச்சனை புரிந்தனன் குலத்தில்
மாத்த போதன மறைஞரால் மகுட ஆகமத்தால்
ஏத்தரும்படி பூசனை செய்வகை இழைத்தான் - 13
(பின்னர் திசைஎண்மரும் இலிங்கம் அமைத்தல்)
32
வேண்டுநல் வரங்கள் பெற்றே வேதனும் அகன்றபின்னர்த்
தூண்டுவெண் களிற்றில்ஏறும் சுரர்முத லாயஎண்மர்
ஆண்டுவந்(து) ஒப்பிலானை அருச்சனை புரிந்தேஅன்பு
பூண்டுதம் திசையில்தீர்த்தம் பிரானொடும் பொருந்தக் கண்டார் - 14
(இங்ஙணம் தருப்பைவன பெருமை ஆதிசேடனும் கூறலாகாது)
33
பிரமனும் இந்திராதி பே(சு)இரு நால்வர்தாமும்
பரமனை வணங்கிமேலாம் பதம்துய்த தார்என்னின்
வரன்முறை முனிவீர்ஆதி தருப்பைவனத் தினின்மிக்க
திரமுறு பெருமை முற்றும் சேடனால் உரைக்கலாமோ - 15
(சோழநாட்டில் பொருந்துமிடம் விளக்கல்)
34
அத்தலம் குபேரன்போற்ற ஆய்தமிழ் ஆக்கு(ம்)கும்பன்
கைத்தலம் கமண்டலத்துப் பெருகுகா விரியின்தென்பால்
நத்தணி முத்தம்ஈனும் நாட்டின்யோ சனையில்வேலை
எத்துநீர்க் கரைக்குகாத எல்லையில் விளங்கும்மன்னோ - 16
(மூன்று யுகங்களில் அதன் பெயர் ஈதெனல்)
35
ஆதியாம் யுகத்தில் ஆதிபுரி இரண்டாம் யுகத்தில்
கோதிலா தருப்பையங்கான் கூறுமூன்றாம் விடங்கம்
ஓதிய கடையுகத்தில் நளேச்சுரம் உரைப்பார் நல்லோர்
வெதம்ஓது அறியாதர் ஊர்க்கு மேவுவோர்க்கு எல்லை உண்டோ - 17
(பிறவிதீர்வர் பாவமும் போக்கும்)
6
நாடகம்ஆடும் எங்கள் நம்பர் நள்ளாற்றைச் சூழக்
கூடரும் ஐங்குலேசம் கூடிய சராசரங்கள்
வீடுஅடைந்திருந்த பேறு மேவும் ஓர்கால் இருப்பின்
நீடரும் பிறவி தீர்வர் நினைக்கில் எப்பவமும் போமாம் - 18
(நள்ளாறு மேலைச் சிவபுரமாகும்)
37
விளிந்தவர் பிறந்துளோர்கள் மேதகு மறம்புரிந்தோர்
அளிந்த அன்பினர்கள் பேற்றின் அளவை யார் உரைக்க வல்லார்
முனிந்த வெங்காட்டுத் தீப்போல் மும்மலம் உருக்கலாலே
தெளிந்தவர்க்கு மேலைச்சிவபுரம் திருநள்ளாறே - 19
(கேட்போர் வியந்து மேலும் சூதனை இறைஞல்)
38
என்று இவை சுருக்கிக் கூறும் சூதனை இரங்கி யாண்டும்
பொன்திகழ் சடையோர் எல்லாம் புளகமே பூப்ப மேலும்
நன்றுநன்று என வியந்து நடந்தார் சரிதை என்னக்
கொன்றை வேணியனை உன்னி அன்னது கூறுகின்றான் - 20
திருச்சிற்றம்பலம்
இலிங்கேற்பவ சருக்கமுடிவு
மூன்றாவது
கலிங்காதிபதி சருக்கம் Up
(கலிங்க அரசன் ஆட்சி)
39
குலிங்கமே அங்க(ம்) வங்கம் கோசல(ம்) மராட(ம்) ஒட்ட(ம்)
மலிந்த சீர் துளுவம் கொல்லம் மகதமே கவுடம் சீனம்
பொலிந்த சீர் மன்னர் எல்லாம் புனைமுடி சூட்டும் தாளான்
கலிங்கர் கோன் பரன்தாள் ஏந்திக் காசினி முழுதும் காப்பான் - 1
(கலிங்க மன்னன் சிறப்பு)
40
குன்(று)எனும் வயிரத் தோளான் குருதிகொப் பளிக்கும் வேலான்
இன்(று)எழு கடலும் பொங்கி நிலவுமிழ் கவிதை உள்ளான்
கன்றிய தூமகேதுக் கண்(டு)ஒளி காலும் வெள்ளி
தென்திசை அடைந்த(து) என்னச் செய்யகோல் வளையா மன்னன் - 2
(அசுவமேத யாகம் செய்தல்)
41
வளைகடல் ஞானம் எல்லாம் வயிற்றிடைக் குழவி போலக்
களைகண னாய்புரக்கும் கந்துக வேள்வி செய்வான்
கிளைமறை உழவர்க்(கு)எல்லாம் கேடில்சீர் முடங்கல் போக்க
விளைபுகழ் அணைவோர் எல்லாம் விரும்பியே புகலுற்றார் - 3
(யாகத்திற்கு வந்திருந்தோர்)
42
புலகன் அத்திரி மரீசி பொருவில் பாரத்துவாசன்
நிலவிய குணக்கிராகி சதானந்தன் நெடுமேதாவி
குலஉயிர்க்(கு) அருள் சு(ரப்ப) காவலன் குழுக்கள் ஆனோர்
பலரொடும் ஏனையோரும் வந்தனர் பழிப்பிலாதார் - 4
(விருந்தோம்பல், பார்கவன் அணைதல்)
43
விருப்பொடு வந்தோர்க்(கு) எல்லாம் வேந்தனும் எதிர் இறைஞ்சி
அருக்கிய(ம்) முதல நல்கி அவரவர்க்கு இடமும் நல்கி
இருப்புழிச் சுருதி பார்க்கன் என்னும்ஓர் இருபிறப்போன்
தருக்கிய சிறுவன் தேவி சார்பு (உ)ற வந்தான் அன்றே - 5
(வாயிலில் காத்திருக்க பதில் வராமை)
44
ஆயவன் மன்னர் மன்னன் கடைத்தலை அயலே நின்று
வாயிலோய் உன்கோமாற்(கு) எம்வரவு நீஉரைத்தீ என்ன
வேயவன் கண்சுகிக்க அங்(கு) இசைத்தனன் அவனும் கோயில்
போய் இசை (ச)மயம் இன்றி இருந்தனன் புறப்படாதான் - 6
(ஓர் முகூர்த்த நேரமும் கழிந்ததால் சீற்றம்)
45
மாற்றம் (ஒ)ன்று உரைப்பார் இன்றி மறைஎலாம் வரம்பு கண்டோன்
ஏற்றதோர் முகூர்த்த(ம்) நின்றே எரிஎழ வெய்ய கோப(ம்)
சீற்றமீ தூரச்சொல்வான் செம்மையே நமைவிளித்துக்
கூற்று(உ)றழ் வெவ்வேல் மன்னன் கோயிலுள் இருந்தான் அன்றே - 7
(மூர்கமன்னன் வாயில் மயானம்)
46
இன்னவர்க்கு இன்னசெய்த இயல்(பு)என இடித்துக்கூறும்
அன்னதே கடனா(ய்)க் கொண்டே அறம் செய்வித்(து) அல்லல் நீக்கு(ம்)
முன்னவர் ஒருவர் இன்றி மூர்க்கர்வீற் றிருக்கும் தீய
மன்னவர் வாயில் தீண்டல் மயானம் என்று (உ)ரைப்பார் மேலோர் - 8
(அமைச்சரிலா மன்னன், தலைவனிலா தானை மீகாமனிலா கலம்)
47
சுந்தரமீ கா(ம)ன் இல்லாத் தொடுகடல் கலமும் வென்றித்
தந்திரத் தலைவர் இல்லா தானையும் தக்க ரோடும்
புந்தியின் மனுநூல் ஆய்ந்து புவிப்பொறை தாமே தாங்கும்
மந்திரக் கிழவர் இல்லா மன்னரும் வாழ்வது (உ)ண்டோ - 9
(கல்வி அடக்கம் செல்வம் நிலைக்கும் வழி)
48
வித்தநூல் பயின்று (அ)டங்கு(ம்) மேன்மையால் தானே ஆகும்
பத்திவீழ்செல்வம் எய்தில் பண்டையில் வேறாய் மாய்வர்
எய்தவேள் வியினான் வானம் எய்திஅன் புடனே செல்வோன்
மத்தினால் அன்றோ பாம்பாய் மண்ணிடை வீழ்ந்தான் அந்நாள் - 10
(சந்தனம் அகில் வீட்டு விறகாகியது போன்றது)
49
சந்தனம் அகிலி னோடு தடமலைச் சாரல் வீட்டில்
கிந்தனம் படுக்குமா போல் இவன்(அ)ழைத் திடமுன் னூலோர்
வந்தனர் பலரும் என்னும் மனசெருக்கு (உ)டைமையாலே
அந்தணர் பெருமை தன்னை அறிந்திலர் அரசன் அம்மா - 11
(அரசன் மனைவி மகன் யானைகளாக சாபமிடல்)
50
என்று கூறி இவன் மதம் எய்தலால்
துன்று காதலியோடும் சுதனோடும்
வென்றி யானையின் மெய்யடைந்து (எ)ய்துக
துன்று கான்எனச் சொல் கொடுத்து (ஏ)கினான் - 12
(யானைகளானமை)
51
அக்கணத்தில் அரசனும் தேவியு(ம்)
மிக்க மைந்நனுந் வேழஉருக் கொளீஇத்
தொக்க யாரையும் சீறித் துரந்தரோ
மைக் கவின்பெறு மாவனத்(து) எய்தினார் - 13
(அந்தணர் சாபம் தவிர்தல் கடிது)
52
நெடிய மால்(அ)யன் நீடிய பல்விழி
வடிவனாகிய வானவர் ஆயினும்
படியின் நான்மறை பண்ணவர் ஓதிய
கடிய சாபம் கடக்கப் படுவரோ - 14
(வீழவும் மற்றும் வாழவும் வைப்பர்)
53
கடுத்த கோபம்(உ)ண் டாக்கின் காலறக்
கெடுப்பர் நண்பு கிளந்தவர் நோய்எலாம்
தடுப்பர் எப்பெரு வாழ்வும் தமதென
கொடுப்பர் அந்தணர் கூற்றுக்(கு) எளியரே - 15
(முற்பிறவி தீவினையே காரணம்)
54
இருந்த வேதியர் யாவரும் முன்னையில்
பொருந்து தீவினை பூத்தது(எ)ன்று உன்னியே
வருந்தி மன்னனை வாழ்க என்று ஏத்தியே
திருந்து தத்தம் இடங்களில் சென்றனர் - 16
(அந்தணர் பலர் கண்ணீர் விடுத்தனர்)
55
தீங்கு முன்னர் விலக்குதல் செய்கலாப்
பாங்கின் ஐங்குழுப் பான்மையர் யாவரும்
ஏங்கி ஏங்கி இருவிழி நீர்உக
ஓங்கு கண்இழந் தார்என ஒல்கினார் - 17
(மன்னன் முன்செய்த அறம் காக்கும்)
56
மறைஞர் ஓதிய வாழ்த்தினும் செய்யகோல்
இறைவன் நாளும் இழைக்கும் அறத்தினும்
நறை வனத்தினும் நல்லுரு எய்தி(ஈ)ண்டு
உறைவன் என்ன உலகு (அ)ளித் தாரரோ - 18
(நெடுநாள் வாழ்ந்தனன் பிடியொடு)
57
துடிஅடிக் களபத்தொடும் சூழ்மயிர்ப்
பிடியினோடும் பெருகிய வெம்மதக்
கடிய குஞ்சரம் (ஆ)கிய காவலன்
நெடிய கானில் நெடும் பகல் வைகுநாள் - 19
(நாரதன் எங்கும் இயங்குவன்)
58
தண்ணத் தாமரையான் பெறு தாபதன்
வண்ணமாலை மகதிநல் வீணையான்
வெண்ணம் தாம்எனும் மேனியான் மூவரும்
எண்ண எங்கும் இயங்கும் செயலினான் - 20
(நாரதன் வருகை)
59
அலகில் கீத அமுது எழு நாவினான்
கலகமே மகிழ்வு (ஆ)க்கும் கருத்தினான்
இலகு நாரதன் என்னும் பெயரினான்
உலகும் ஏத்தும் ஒருவன் வந்து (எ)ய்தினான் - 21
(அவரை யானை துரத்தல்)
60
பிளிறு வான்உறு மேய்க்கும் பெருங்குரல்
களிறுகண்டு துரத்தலும் கண்ணுறீஇ
ஒளிரு வேல்கலிங் கேசன் என்று (உ)ன்னியே
வெளிறு சேர்கிலா வேதியன் நின்றனன் - 22
(விலங்கு குணம் நீங்க அருள் செய்தல்)
61
நின்று தன்பணி யாளனை நீகரிக்
குன்றை ஈண்டு கொணர்க என ஏவலும்
சென்றழைக்கத் திருந்திய பான்மையால்
வென்றி நல்லறிவு (ஈ)ந்தனன் மேன்மையால் - 23
(முரட்டுகுணம் நீங்கி வழிபடுதல்)
62
வெய்ய தீக்குணம் நீங்கிய வேழமும்
செய்ய மாதவன் சேவடித் தாழ்ந்தது
துய்யர் தங்கள் துணையடிக் காட்சிபோல்
வைய(ம்) மீதில் வரும்பலன் யாவதோ - 24
(கோளும் புல்லறிவும் இன்னலுக்கு ஏது எனல்)
63
தாள் இறைஞ்சிய யானையைத் தாபதன்
நீளு நின்செயல் யாவும் நினைந்தனம்
ஆளி மொய்ம்பினர் அசவித் தீவினை
கோளின் நின்ற(அ)றி யாமையின் கூடிற்றால் - 25
(தீங்குசெயின் பெரிதாகி திரும்பும் எனல்) 64
கறக்கும் பாலொடு நஞ்சு கலந்துண்டால்
சிறக்குமோ நலம் தீங்கு பயக்குமாம்
பிறர்க்கு தீங்கு முன்செயின் பின்னது
மறக்கு மோபெரி தாகிவந்து (எ)ய்துமே - 26
(எண்பிறவிமுன் வேள்வி ஒன்றை நீ தடுத்தாய் எனல்)
65
இந்தப் பிறவி தனக்கு முன்னம் இருநான்காய பிறப்பிடத்தில்
சந்தப் புவியில் ஓர் மறையோன் வேள்வி ஒன்று (ஆ)ற்றச்
சிந்தித்து (அ)னைத்தும் திரட்டுநாள் தீங்குவிளைத்து நீவிலக்க
அந்தப் பனவன் துயர்கடலில் ஆழ்ந்து வேள்வி தடுப்புண்டான் - 27
(எனவே சுருதி பார்க்கனை வெறுக்காதே எனல்)
66
பரிதி காயும் வெவ்வரையில் பசிய புழுப்போல் பதைத்து(அ)ந்த
மிருதி உழவன் மகமுன்னாள் விலக்கு(ம்) முன்னை வினையாலே
கருதும் உனதுமகம் பழுதாய்க் கலக்க முற்றாய்ச் சாபமிடும்
சுருதி பார்க்கன்தனை ஒன்றும் வெறுப்பாய் அல்லை சுடர்வேலாய் - 28
(சாபம் அகல யாகம் புரிய பதி ஒன்று உளது எனல்)
67
இன்ன பிரமசாபம் அகன்று இன்னும் அயமேதம் புரிய
உன்னி உனக்கு (ஒ)ன்று உரைக்கின்றோம் உழவர் காலால் மடைதள்ள
கன்னல் கமுகில் செஞ்சாலிக் கதிர்போய் சாயும் கருங்கழனிப்
பொன்னிச் சென்னித் திருநாட்டில் புனிதப்பதிஒன்று (உ)ளதாமால் - 29
(ஆங்குள்ள தடாக நீர்த்துளிபட்டாலே துயர் போம் எனல்)
68
பரமசிவன் முன்படைத்த பதிபகரும் தருப்பாரண்யம் போய்
பிரமன் அங்கு ஓர் தண்டத்தால் பெருகு தடாகம் ஒன்று (அ)கழ்ந்து
விரவும் அதற்கு மேன்மை வரம் விமலன் இடத்தில் பெற்றமைத்தான்
உரவு நீரில் ஒருதிவலை உன்மேல் படில் (இ)த்துயர் போமால் - 30
(மாசிமக நிறைமதியல் ஆங்கு வருக எனல்)
69
கும்ப மதியின் நிறை மதியில் கூறும் அன்ன சிவபுரத்தில்
செம்பொன் சபைநடமாடும் தேவைப் பணிய வருது(ம்)நாம்
விம்ப இதழாம் பிடிகன்று மேவு நீயும் வருக எனச்சொல்
உம்பர் கருதும் வரமுனிவன் ஒல்லை அகன்று போயினனால் - 31
(நள்ளாற்றை அடைந்தனர் எனல்)
70
கருத்தில் அறிவு புலப்பட்ட களிறாம் கலிங்கர் பெருமானும்
பொருந்தும் முனிவர் அடிபணிந்து போந்து காதம் பலகடந்து
குருந்தில் கதலி குலைசாயக் கொழுஞ் செங்கரும்பின் முத்து(அ)னத்தை
வருத்தும் வயல்சூழ் நள்ளாற்றில் மாசி மகத்தில் வந்தனனால் - 32
(தீர்த்தத்தில் மூழ்கி முந்தைய வடிவம் கொளல்)
71
வந்து பிரம தீர்த்தத்தில் மூழ்கும் அவர்கள் வளர்சிகையில்
சிந்து புனல்மேல் தெறித்தலுமே தேவி புதல்வன் உடன் அரசன்
முந்தை வடிவம் எடுத்தேத்தி மூழ்கக் கண்ட சுரா(அ)சுரரும்
எந்தைபெருமான் திருவிளையாட்டு என்னே என்ன அதிசயித்தார் - 33
(ஆங்கே நாரதரும் வருதல்)
72
சொல்லும் அன்ன வேளையினில் தோடுகிழிக்கும் காவியங்கண்
வல்லிமலை பங்காளன் அடிவணங்க மறையோர் உடன் விரைவில்
புல்லு(ம்) அசுண(ம்) கின்னரம் பின்போக வீணைநரம்பு (உ)ளராய்க்
கல்லு(ம்) மரமு(ம்) முருக்கும் இசைக் கடவுள் முனியும் வந்தனரால் - 34
(ஆசிபெற்று நாரதருடன் கோவில் புகுதல்)
73
மிளிரும் சுகிர்வார் புரிநரம்பின் வீணைக்கிழவன் வா(ன்)நோக்கி
ஒளிரு(ம்) முடிமன்னவன் இறைஞ்சி உவகைப் பூப்ப வருமுனியும்
கிளரும் ஆசிபேசி மனைக்கிழத்தி புதல்வன் உடன்கொண்டு
தளிரும் புனலு(ம்) மிளிர்சடையார் தடம்பொன் கோவில் இடம் சார்ந்தான் - 35
(நள்ளாற்றானைத் தொழுதல்)
74
விண்ணோர் மண்ஆதியர் பணியும் வேதச் சுடரைப் பிரணவப் பேர்
பெண்ஓர் பாகப் பவளத்தைப் பிறவிப் பிணிபோக்கிய மருந்தை
தண்ணார் தரளம் சொரிந்து சங்கம் தவழும் நள்ளாற்று ஒருபெருமானைக்
கண்ணார் அமுதைக் கற்பகத்தை கருணைக் கடலைக் கண்ணுற்றான் - 36
(இதுவுமது)
75
வேதப் பொருளைத் தத்துவத்தை விரிந்து அதீதம் விளங்கும் விந்து
நாதப் பொருளை நடம் பயின்று நவிலும் அடியார் பிறப்(பு) அகற்றும்
சீதக்கமலத் தடம் புடைசூழ் தருப்பைவனத்தில் தேனை முக்கண்
காதல் கனியைக் கயிலைமலை கருணைக் கடலைக் கைதொழுதான் - 37
(சேதிகேட்டு கலிங்க நாட்டினர் குழாம் வருதல்)
76
முறையில் சேவை புரிந்த(அ)ந்த முறையே மன்னர் முடியும்தாள்
நிறையப் பணிவித்து அவ்வயின் ஈரிருத்திர் என மாதவன் அகன்றான்
மறையில் கேள்வித்துறை போய மன்னன் குறை தீர்ந்தமைக் கேட்டு
குறை(வு) அற்றிடு(ம்) மாநிதிகொண்டு ஐங்குழுக்கள் அரசரிடை அடைந்தார் - 38
(ஈகை புரிந்தோர் இன்னலுக்கு பின் நல்வாழ்வு பெறுவர்)
77
பொறிமைச் சுரும்பு உண்டு அறற்ற நறாப் பொழியும் அலங்கல் புரவலனும்
சிறுமைத் துயரம் அகன்று நள்ளாற்(று) இடையே செல்வம் உற்றிருந்தான்
நெறியைத் தருமம் புரிந்தார்க்கு நீடு முன்னை விதிவயத்தால்
வறுமைத் துயர்வந்து (அ)டைந்தாலும் மறித்தும் வந்து (எ)ய்தும் பெருவாழ்வே 39
(சொற்படி யாகம் செய்து முடித்தல்)
78
பிரிந்த திருவந்து உற சேற்றில் பிறவா ஆம்பல் கொடி அரசும்
விரிந்த மறையோர் உடன் இயன்ற வேள்வி தருப்பாரணியத்தில்
புரிந்து கனக மழைபொழிந்து பூமேல் கடவுள் புரண்டு வீழ
வரிந்த ஆடல் தலைக் கரத்தார்க்கு அளப்(பு)இலாத சிறப்(பு)அமைத்தான் - 40
(பொன்னிநாடு நீங்கி கலிங்கம் புறப்படல்)
79
விடங் கொப்பளிக்கும் பணிஅணி விடங்கப்பொருமான் அருள்பெற்று
சடங்க முனிவர் தமைஎல்லாம் தத்தம் பதியின் இடைபோக்கிக்
குடங்கர் நெற்கூடொடு கமுகின்குலைக் கீழிருப்பக் குவளைமலர்க்
கிடங்கும் வயலும் செறி பொன்னிக் கேடிலா நாட்டினும் அகன்றான் - 41
(பல நாடுகள் கடந்து கலிங்கம் அணைதல்)
80
காடு நாடு திரை புரட்டிக் தடம் கீண்டு (ஒ)ழுகு நதிபலவும்
கூடும் சேனையொடு கடந்து கொற்ற வேந்தன் எதிர் இறைஞ்ச
நீடு குன்ற நடை கற்று நின்றது (எ)னும் குஞ்சரம் நிறைந்த
பீடுகெழுதன் கலிங்க நா(டு)அடைந்தான் பின்னைப் பிறப்பில்லான் - 42
(மீண்டும் அரசாண்டு பின் பரமன் பதம் அடைதல்)
81
கற்றைக் கவரி புடை இரட்டக் கனக அரியா சனத்திருந்து
ஒற்றைத் திகிரி உருட்டிஎழும் உலகம் முழுதும் பொதுநீக்கிப்
பொற்றைக் குவவு திணிதோளான் புனிதவேள்விப் பலமுற்றிப்
பற்றைத் தவிர்த்து நள்ளாற்றின் பரமன் நளின பதம்அடைந்தான் - 43
(மற்றும்உள்ள நள்ளாறன் பெருமைகளை முனிவோர் வினாதல்)
82
என்ன மொழிந்த சூதன் உரை ஏற்றுத் தவத்தின் முனிந்தவர் எலாம்
சொன்ன கதையின் அதிசயத்தைத் துதித்து வேணி முடி துளக்கி
அன்னம் உறங்கு தண்பணைசூழ் அன்ன பதியின் அமலன்அருள்
பின்னர் எவர்பெற்றார் அதனைப் பேசவேண்டும் எனச் சொல்வான் - 44
திருச்சிற்றம்பலம்
கலிங்காபதி சருக்கமுடிவு
நான்காவது
நளபதி சருக்கம் Up
(நளன் நிடத நாட்டு வேந்தன்)
83
வளங்கெழு நல்நிடதநாட்டு (அ)திபதி மாவிந்தர் (அ)வர் வணங்கும் தாளான்
விளங்கிய வெள்வாள் உழவன் வீரசெனன் புதல்வன் நிரைவேலை கீண்டா
இளம்பரிதி எனஉலகின் இருள்நீக்கும் நளன் என்பான் நெறிநீர் வைப்பில்
துளங்குமணி முடியரசர்க்கு (ஒ)ருதிலகம் எனப் பாந்தள் சுமைதீர் நாளில் - 1
(அன்னத்தை தூது விடல்)
84
விதர்பன் அருள் குலக்கொம்பு தமையந்தி அயன்படைப்பில் வீறுபெற்றாள்
மதர்ப்பு வணங்கு (அ)ணங்கு (இ)ளமை வளமெல்லாம் ஓர் அன்னம் வகுத்துகூற
முகத்தின் நேர் கண்டவன் போல் கையற்றுக் காமத்தீ மூளச்சேர்ந்து
பதத்து (அ)ருணன் எகினத்தைத் தூதுவிட அது அவட்கு பகர்ந்தது(அ)ன்றே - 2
(விதர்ப் மன்னன் தமையந்திக்கு சுயம்வரம் வைத்தல்)
85
மற்றவளும் அம்முறையே மால்(உ)ழந்து வெண்குருகை மறித்து மேவக்
கொற்றவனும் குறைதீர்ந்த காலையில் செங்கோல் விதர்ப்பன்
பெற்றகொடி விகாரத்தால் சுயம்வரம் உண்டாக்கவே பெருநீர் வேலை
உற்றநில அரசர் (எ)லாம் பழுமரம்சேர் பறவைஎன உவந்து சூழ்ந்தார் - 3
(இந்திரன், அக்னி, நிருதி நளனையே துதனாக்குதல்)
86
செங்கையில் கருங்கோட்டு வீணைபயில் வெண்முனிவன் தேவர்க்கு ஓத
பொங்கு (உ)டலில் கண்ணன் வன்னி யமன் நிருதி இவண்நீண்டு போந்து போந்த
துங்கநளன் செய்தி (அ)றிந்து (அ)வனையே தூ(து)அமைக்கச் சுடர்வோன் மன்னன்
அங்(கு) அவர்சொல் மறாதுரைக்க அவள் மறுத்தாள் அம்மாற்றம் அவர்க்கும் சொற்றான் - 4
(பல நளஉருவத்தினின்று மெய்நளனை உணர்தல்)
87
மறுப்புண்ட தேவரெலாம் மாலைநளன்வடிவாகி மணச்சாலைக்கே
சிறப்புண்டு ஆங்கு இருந்தனரைத் தமயந்தி உளந்திருப்பத் தேன்தார் ஏந்தி
நிறப்புண் செவ்வேலரசர் முன்வந்து நளர் ஐவர் நேரில் நோக்கி
விறல் பொன்னங் கொடிகற்பால் விளங்குக என நளன் வேறாய் விளங்கினனனால் - 5
(மெய் நளனுக்கு மலையிட்டபின் தேவர்கள் சனியை ஏவுதல்)
88
அம்மாலை நளற்கு (அ)ணிய அண்டர் வரம் தந்து (அ)கன்றார் அணங்கைப் புல்லிச்
செம்மாலை நளன் போதும் காலையினில் வான் போதும் தேவர் முன்னர்
வெம்மாலைக் கலிஅணைந்து வினவ அவர் இவை உரைப்ப வெகுண்டு நோக்கி
இம்மாலைப் புனைஅணங்கை யான் பிரிப்பன் எனப் புவியில் எய்தினனால் - 6
(சூதினில் கலந்து பொருளை இழத்தல்)
89
ஈராறு (ஆ)ண்டு அரசனிடத்து (எ)ய்தவரும் பிழைஇன்றி இருந்து பின்னர்
நீராரக் கால் பெய்யா தந்தியின் வந்தனைய புரிய நினைந்து சேர்ந்து
போராடல் கலியினை புட்கரன்பால் புகல அவன் பொருத சூதால்
காராழி உலகனைத்தும் எப்பொருளும் தோற்(று)எழுந்தான் கருணைவள்ளல் - 7
(காட்டில் ஆடைகளை இழந்து ஓர்ஆடையர் ஆதல்)
90
மைந்தனையும் புதல்வியையு(ம்) மாமன்பால் போக விட்டு மலரின் நீங்கும்
செந்திரு ஒப்பான் இறைவன் பின்னடைந்து வெங்கானம் சேருங்காலை
அந்த வனத்து இரணியப் புள்ளாகி வந்து கொடுங்கலி ஓர் ஆடைகொள்ள
நிந்தனை இல்லான் மனைவி உடன் ஆடை ஒன்றெடுத்து நெடுங்கா(டு)உற்றான் - 8
(சனியின் புத்தியால் நளன் ஆடையை துணித்து பிரிதல்)
91
தூங்(கு)இருளினில் பாழிடத்தில் துகள் இலவன் கண்டு இனான் தொடர்ந்த வெய்யோன்
ஆங்(கு) அவன் நெஞ்சத்(து) அடைய விழித்(து) அணங்கை விடுத்து ஏகற்(கு) அமைந்து கையால்
பாங்கின்உறத் தடவலுமே வெங்கலி வாளாய்க் கிடப்பப் பற்றி ஒற்றைப்
பூங்கனகத் துகில்ஈர்ந்து கண்நுழையாக் கான்இருள்வாய்ப் போயான் அன்றே - 9
(பிரிந்த நளன் கார்க்கோடனால் உதவி செய்தும் இடருற்றது)
92
எழுஉறழும் திணித்தோளான் ஏகுங்கால் கார்க்கோடன் எரிவாய் பட்டே
அழுகுரல் கேட்(டு) அவ்வனலில் அஞ்சாது புறத்(து)ஏத்தி அயலில் போக்கக்
கழுவுமணிப் பூண்மனைக் கடித்(து) உருவம் வேறாகக் கண்டு நீ இப்
பழு(து)இழைத்த(து) என்எனலும் பாம்பரசன் துகில்ஈந்து பகர்வ(து)ஆனான் - 10
(எனினும் மேல் செய்வன அதனால் உய்வன கார்க்கோடன் காட்டல்)
93
இந்நிலமைக்(கு) இவ்வுருவே இருத்தல் நன்று வடிவம் வர எண்ணில் அந்த
மென்னிலைமைத் துகில் போர்த்தி பரியுள்ள நீகொடுக்கில் விறல் அயோத்தி
மன்னன் உனக்(கு) அவ்வுள்ளம் வழங்குவனத்தால் உனது வாழ்வு வாங்கிக்
கன்னிமதி நிடத நாடாள்வை என நளற்(கு)உறுதிக் கழறிப் போனான் - 11
(அதுகேட்டு அயோத்தி அடைந்து மன்னனிடம் குதிரைவீரனாதல்)
94
நன்(று)எனவுட் கொண்டு வளநாடொடு கா(டு)அகன்று போய் நயந்த அயோத்திக்
குன்(று)எனும் தோள் இருதுபன்னர்க் கண்டு பரித்தொழில் விஞ்சை கூறக்கேளா
அன்றுமுதல் பரியாளர்க்(கு)அதிபதிஎனச் சிறப்(பு)அளிக்க அமர்ந்தான் இப்பால்
துன்(று)இருள்வாய் விட்(டு)ஒழிந்த விதர்ப்பர் கோன் மகள்செய்தி சொல்வாம் அன்னோ - 12
(இருளில் விட்டகன்ற நளனைத்தேடி தமயந்தியும் பாம்பினால் இடருறல்)
95
பார்அற்ற மன்னவன் ஓர்பற்(று)அற்று விடுத்(து)ஏகப் பார்த்துக்காணாள்
வேர்அற்ற கொடிபோல் மெய்உலர்ந்து கண்ணீரும் வீழ்த்தி நீண்ட
சீர்அற்ற கூந்தலுமாய்ப் பறப்பட்டுப் புலம்பியே தேடுங்காலை
நீர்அற்ற காட்டில் ஒருநெடும்பாம்பு உண்டது மதியாய் நினைத்து மாதோ - 13
(காத்த அவ்வேடன் காமுற்று அணுகி தமயந்தி கற்பினால் சாம்பராதல்)
96
அப்போது அங்கு ஒருவேடன் அம்பினால் பாம்(பு)அகற்றி அமுதம் வார்த்த
செப்போது முலையாளைக் கண்டுமனத்(து)எழுங் காமத்தீயால் நொந்து
தப்போதும் அளவில் அவன் கற்பதனால் மறித்தும் வெஞ்சாம்பர் ஆனான்
எப்போதும் நிலை கலங்காக் கற்புடையாள் அருமை யார்இசைக்க வல்லார் - 14
(முர்ச்சை நீங்கி ஓர் முனியிடம் வழி கேட்டு ஏகுதல்)
97
வாள்அரவின் வாய்அகன்ற மதியம்எனப் பொற்கோதை மம்மர் நீங்க
நீளுமறை முனிவர் அங்(கு)ஓர் நிலைஇடத்தார் பொற்பாலை நிலத்தில் தோன்றிக்
கேள்உறவே பலவு மொழிந்(து) ஆற்றிஅவர் அகல்உற நீர்க்கெண்டை அங்கண்
தாள்அறுநீர் பரல் பொதுக்கும் குருதி அலத்(து) அகம்ஆகத் தளர்ந்து போனாள் - 15

(வழிவணிகர் பின் சென்று, தங்கி, காட்டுயானையால் இடருறுதல்)
98
மெல்ல மெல்ல நடக்குங்கால் அவ்அதர்க்கே வணிகர்சிலர் மேவக்கண்டு
மல்லல் இளமுலை சுமக்க மாட்டாத மருங்குல் மயில் வருந்திச் சென்(று)ஓர்
அல்லல் இடைஓர் அயல் இருப்ப அடல்ஆனை வந்தடைந்தோர் அடையக் கொன்றும்
கொல் என்ன எதிர் நின்ற கொடியை அஞ்சி விடுத்த(து) அந்தக் கொடிய வேழம் - 16
(அதுநீங்கி ஓர் வளநாடதனில் அந்நாட்டு மன்னன்தன்தாய் அழைத்து தங்குதல்)
99
காலையினில் புறப்பட்டுக் கான்அகன்று வளநாடு கண்டு போந்த
வேளையினில் சுவாகுஎனும் சேதுபதி தாய்கண்டு விளித்தார் என்னப்
பாலையினில் போயடைந்த தமையந்தி தோழிஎனப் பகர்ந்தாள் அன்னாள்
மாலைமுடி அவன் வெளியாமட்டும் இங்கே இருத்தி என வதிந்தாள் அன்றே - 17
(விதர்ப்பமன்னன் மகளைத் தேடலும் செய்தியறிந்து தமயந்தி அனுப்பப் படுதல்)
100
அக்காலை விதர்ப்பன் விடுமரு மறையோர் பலர் உள்ளும் அறிகவே தன்
மைக்காவி விழிநுதலின் மறுக்கண்டே அறிந்து அந்த வண்ணம் எல்லா
திக்(கு)ஆளும் சேதுபதி தாய்க்கு உரைப்ப அவள்உறவு செப்பி புல்லி
மிக்காய சிவிகையினில் விதர்ப்பர்கோன் பதிஅடைய விடுத்தாள் அன்றே - 18
(தந்தை நாடடடைந்தவள் கணவனைத்தேட முயன்று ஓர் சேதியறிதல்)
101
தாதையிலின் மக்களடும் தமயந்தி சேர்ந்து மாலைத் தடந்தோள் வேந்தை
பூதலத்தின் எல்லைஎலாம் துருவிவர மறையோரைப் போக்கிவாடச்
சீதமலர்த் தாரானைக் கண்டிலரால் அயோத்தியின் மெய்ச்செயல் வே(று)ஆகி
ஓதலவன் போலிருக்கும் வாகுகனைக் கண்டுவந்(து) அங்(கு)ஒருவன் சொன்னான் - 19
(தமயந்தி சுயம்வரம் என சொல்லி அயோத்தி மன்னன் மூலம் தேடுதல்)
102
ஐயப்பட்(டு) அவன்அணையும் பொருட்டு என் சுயம்வரம் என்று அயோத்திஆளும்
துய்யர்க்கு விரைவில் வர உரைத்தி என தூதுவிடச் சொற்ற காலை
மெய்யுற்ற வாகுகனை விரைவில்தேர் விடுத்தி என்றா¡ன் விடுக்குங்காலை
மையுற்ற(து)ஓர் தான்றி இலைஆதி தொகை சொன்னான் மன்னர் மன்னன் - 20
(நளன் தேரோட்டியாக இருவரும் தம்தம் வித்தைகளை பரிமாற்றல்)
103
கூந்தல்மாத் தூண்டுவான் கொற்ற வேந்தனை
ஏந்திஇவ் விஞ்சைநீ இயம்பி(ன்) இனியான்பரி
ஓர்த்(து)உளம் அறிவிஞ்சை உணர்த்(து) வேன்எனச்
சாந்(து)அணி புயத்தினாற்(கு) அறிந்து சாற்றினன் - 21
(விரைந்து ஓட்டுநளன் மன்னனின் மரஇலைஎண்கூறு வித்தை சரிபார்த்தல்)
105
உன்னரும் விஞ்சைமேல் உணர்த்து வாய்என
மன்னவன் உரைப்புழி மற்(று)அத் தான்றிவாய்த்
துன்னரும் கலியுடன் சோர்த்து நீங்கினான்
முன்னவன் அன்னதோர் முடுக்கித் தூண்டினான் - 22
(தேரின் விரைவு ஒலிகேட்ட தமயந்தி நளனே எனல்)
106
காவதம் பற்பல கணத்தி லேசெலக்
கோவிடு தேர்வளைக் குரலைக் கேட்டலும்
ஓஅம்மா(சு)அடைந்த(து)என உணக்கும் கோமகள்
மேவரும் நளன்பரி விஞ்சையே என்றாள் - 23
(மணவிழா காணாத அயோத்திமன் வருகை மரியாதை நிமித்தமெனல்)
107
மணிமுடி விதர்ப்பன்கோன் பதியில் வந்திழிந்(து)
அணிமண வினைஒன்றும் ஆங்கு கண்டிலான்
பிணிபடு மனத்தன்(அ)வ் வேந்தைப் பொட்பொடு
பணியவந் தேன்(எ)னப் பகர்ந்து வைகினான் - 24
(அயோத்திமன் நெருப்பின்றி சமைக்கும் வித்தையினன் எனதமயந்தி அறிதல்)
108
சிறப்பொடும் அவற்(கு)ஒரு செம்பொன் மாளிகை
மறக்கொடு வேலினான் வழங்க மன்னினான்
அனல்கனல் அன்றிச்சோ(று) அடும்அச் செம்மல்சீர்
உறல்கரும் ஒற்றரால் (உ)வந்து நாடினாள் - 25
(உருவன்மாறிலும் தன்மக்களைக் கொண்டு வந்தோன் நளனெனவே தெளிதல்)
109
மேலும்தன் மக்களை விடுத்து நாடியே
போலும்நம் இறைஎன புந்தி கொண்(டு)உரு
வேலும் வேற்றுமைஎன எண்ணித் தாதைக்கும்
பாலுறு கிளவிஇப் பரிசு கூறினாள் - 26
(விதர்ப்பனும் நல்லதென நளனை அழைக்க அவனும் தன்னுரு காட்டல்)
110
மற்றது நன்(று)என வாகு கன்தனைக்
கொற்றவ மனைஇடைக் கொணர்ந்து நா(டு)எனச்
சொற்றலும் அம்முறை துலங்க நாடுழி
உற்றவன் நளன்பழ உருவு காட்டினான் - 27
(மீண்டும் கூடலில் அனைவரும் மகிழ்வுருதல்)
111
மாமனு(ம்) மக்களு(ம்) மனைவி யும்பதித்
தோமறு மியாவரும் துயர(ம்) நீங்கியே
ஏமம்(உ)ற்று இடுதலும் இருது பன்னனும்
கோமகன் பணிந்(து)இது கூறு வானரோ - 28
(அறியாப்பிழைமைக்கு வருந்த நளன் இதுநாள் போற்றிமைக்கு நன்றிஎனல்)
111
உனைப்பணி கொண்டனன் உணர்வில் என்பிழை
தனைப்பொறுப் பாய்எனச் சாற்றவே நளன்
எனைப்புரந் தனைஇது இசைப்ப தோஎனா
முனைப்பகர் விஞ்சையும் மொழிந்து போக்கினான் - 29
(நிடதன் புட்கரனை சூதில் வென்றபின் நளன் தன்குடியை நன்று காத்தல்)
112
கள்கமழ் மலர்வயன் நிடதன் காக்குறும்
புட்கரன் தன்உழைப்போந்து சூதவன்
வெட்குற பொருதுபோர் என்று மேவலர்
உட்குற வளைகடல் உலகம் தாங்கினான் - 30
(ஊழின்வழி நடந்தமை நினையல்)
113
தீ(து)அணி சூதினில் சிந்தை செய்ததும்
காதலி வனத்(து)இரா விடுத்த கன்மமும்
மேதக அறப்பரி வினைசெய் கீழ்மையும்
ஏதவெம் சனிவிடா(து) இயைந்த தீமையும் - 31
(அது பற்றி நினைந்து நினைந்து வருந்தல்)
114
பிறங்கிய மனத்தினில் பெரிதும் உன்னியே
அறம்கிளர் செயற்(கு)அது அடாது எனாக்கடை
மறம்கிளர் மன்னவர் மலர்க்கை சென்னிவைத்(து)
உறங்கிட உறங்கிடா ஒளிம ழுங்கினான் - 32
(நாரதர் நளனிடம் தென்னாடு சென்று தீர்ததமாட வினைதீருமெனல்)
115
உண்டியில் கருத்திலன் உணங்குவான் எதிர்
குண்டுகை கரத்திசை வீணைக்கோமுனி
மண்தலத் தீர்த்தநீர் மருவி ஆடுறத்
தென்திசை போதெனச் செப்பிப் போயினான் - 33
(காளிந்தி, சோணை நதி, காசி)
116
காளிந்திக் கரையிமக் கான துர்கைசேர்
நீளுமோர் வனம் கய(ம்)நிலம் பொன்பதம்
கோளறு சந்திர கோமளம் புனல்
நீளும்சோ ணைக்கரை விசாலை நீள்புரம் - 34
(காளாஞ்சனம், கலிங்கேச்சரம், அனந்தவீச்சரம், கண்டீச்சரம்)
117
கருதுகா ளாஞ்சனம் காமன் காய்தலம்
அருள்கலிங் கேச்சரம் அனந்தவீச்சரம்
துரி(சு)அறு பாலிவாய் சுரக்கண் டீச்சரம்
பொருகுக வனம்விதி பூசை செய்தலம் - 35
(கழுக்குன்றம், அண்ணாமலை, ஸ்ரீசைலம், விருத்தாசலம், தீர்த்தகிரி, முக்கூடல்)
118
எண்தகு கழுக்குன்றம் அருணை ஈறில்சீர்
கண்டகோப் பருப்பதம் கவுத மேச்சரம்
விண்ட முத்தாநதி விருத்த வெற்புமேல்
கொண்ட தீர்த்தகிரி குறிமுக் கூடமே - 36
(சிதம்பரம். சீர்காழி, புள்ளிருக்குவேளூர், திருவெண்காடு)
119
அரும்பொருள் வெளியில் நின்றாடும் அம்பலம்
விரும்பினர் அணியும்பேர் மேவும் ஓர்தலம்
பெரும்பிர மபுரம் பேசும் புள்பதி
கருதும்காஞ் சனம்பயில் கான்வெண் காடரோ - 37
(திருவெண்காட்டு முக்குளநீர், திருப்பனந்தாள், திருக்கடையூர்)
120
முக்குள நாமமே மொழியும் ஈச்சுர(ம்)
மிக்கதோர் கன்னியீச் சரமு(ம்) மேவியே
தக்கதோர் கூவிள வனத்தில் சண்டனை
ஒக்கவீழ்த் தினர்பதம் உவந்து கும்பிட்டான் - 38
(கோகர்ணம்)
121
அங்கொரு மதிஇருந்(து) அளப்பி லாப்பதிச்
ங்கரன் களித்த பூண்தனினும் வீறுறப்
பொங்க சீர்மணிக்கலம் புனைந்து கோகன்னம்
தங்கும் ஈச்சுரன் அடிதாழ்ந்து வாழ்த்தினான் - 39
பரத்துவாச முனிவர் தருப்பாரண்யத்தை வணங்கி வீனைதீரெனல்)
122
அவ்வயில் பரத்து வாசன் அடிமலர் இறைஞ்சி மாலை
வ்வெயில் இறைவன் உற்ற தன்மையை விரும்பி நோக்கிக்
வ்வையில் முனிவன் பூமேல் கடவுள்கண் களிப்ப எம்மான்
சவ்வயில் தருப்பை மூலத் தொழுமிடம் சோதி என்றான் - 40
(குடும்பத்துடன் நளன் பிரமன் செய்த தடாகத்தில் மூழ்குதல்)
123
தாபதன் உரைத்த ஆறே தடம்பணை கழிந்து மன்னன்
தீபநல் குடும்பத்தோடும் சேர்ந்துநம் திருநள்ளாற்றில்
கோப(ம்)ஆய வாணி வேதன் கூறன முன் அமைத்த
சோபம்தீர் தடத்தில் ஆடும் விதியொடும் தோய்ந்(து) எழுந்தான் - 41
(நீராடியதும் பல்லாயிரத்தேவர் வாழ்த்தலும் பின் கோயிலை அடைதல்)
124
முப்பதின் இரட்டி யாய ஆயிர முனிவர் சேவைக்(கு)
அப்பொழு(து) எய்திச் செங்கோல் அரசனைக் கண்டு
செப்புமந் திரத்தி னோடு தெளிப்பஎப் பவமும் தீர்த்தே
ஒப்பிலாப் பெருமான் கோயில் ஒளிமணி வாயில் புக்கான் - 42
(நளனைக்கண்டு சனி மறைதல், வினாயகரை முதற்கண் தொழல்)
125
கொடிக்கொடியான் அன்று அந்தக் கோபுரத்(து) இடப்புறத்தே
இடிக்கரும் கொண்டல் என்ன ஏகலும் அரசு(உ)ள்ஏகிப்
படிக்(கு) அருள் மூத்த பிள்ளை பத(ம்) முறைபணிந்(து) போற்றி
கடித்தடம் கமலக் கண்ணால் கண்டுகை குவித்து நின்றே - 43
(துதித்து, தானங்கள் பல செய்ததன்பின் சிவபெருமான் காட்சி அருளல்)
126
ஆயிர(ம்) நாமம் சொல்லி அரும்துதி புரிந்து கண்ணீர்
பாயிரும் புளகம் பூப்பப் பன்மணிக் கலம்பூம் பட்டோ(டு)
ஏயின இரண்டு கோடி கனகமும் ஈந்தான் அங்கே
ஞாயிறு தோன்றிற்(று) என்ன நம்பிரான் தோன்றிச் சொல்வான் - 44
(சிவபெருமான் நளனுக்கு வரம் கொடுத்தல்)
127
மன்னவ நினக்கு வேண்டும் வரம் எவை கூறுக என்ன
என்னது நாமம் இவ்வூர் எய்திட வேண்டும் யார்க்கு(ம்)
முன் அவ(ன்) எளிதில் போக(ம்) முத்தி தந்(து) அருள வேண்டும்
நன்னரியான் இழைக்கும் கோயில் பணிநயந்(து) அருள வேண்டும் - 45
(புதிய தீர்தமும், விழாவும் அமைக்க வேண்டி நற்பேறு பெறுதல்)
128
தீர்த்தம் ஒன்று அமைக்க வேண்டும் திருவிழா நடத்த வேண்டும்
ஏத்தி இவ்வுழியான் சின்னாள் இருத்தலும் வேண்டும் என்றான்
கூத்தனும் அன்ன(து) எல்லாம் நன்று எனக்கூற இன்பம்
பூத்தவன் வலம் கொண்(டு)ஏகி புறத்தன தீர்த்தம் சார்ந்தான் - 46
(தடக்கரைஇல் கட்டி,தங்கி,நாளும் நீராடி தானம்பல செய்து தொழுதல்)
129
அத்தடம் கரையில் ஒர் இல்அமைத்திருந்(து) அணிகோள் தீர்த்த(ம்)
நித்தமும் ஆடி வேத நியமர்க்குத் தானம் நல்கிக்
கைத்தல மழுவினானைக் கடவுளர் எண்மர் செய்த
சுத்த லிங்கத்தி னோடு தொழு(து)அவன் இருக்கும் நாளில் - 47
(அங்கிருந்தே அரசுநடாத்தி, வரும் திறையில், முறைப்படி கோயில் கட்டஏவுதல்)
130
திறைகொடு மன்னர் எல்லாம் திருந்(து)அடிபணிய நோக்கி
முறைமயின் வரிசை நல்கி முன்பதி கத்தின் நூலின்
குறைவில் கம்மிய ரைகூவிக் கோதிலாத் தேறலார்க்(கு) இங்(கு)
உறைதரு கோயில் யாவும் உறச்செய ஏவினானே - 48
(கோபுரம், மண்டபம், மதில், மாடவீதி, முதலியன அமைத்தல்)
131
கல்லியல் அறிந்த தச்சர் கனகமும் மணியும் கொண்டு
சொல்லிய சிகரம் ஆதி தொடரு(ம்)மண் டபங்கள் சுற்று
நல்லமா ளிகையி னோடு நமைமணி மதில்கள் தங்கள்
புல்லுகோ புரங்கள், தூண்அம் பொலிபல மண்ட பங்கள் - 49
(பெரியோர் மறைதோர் தங்கி சிறப்பிக்க மடம்சத்திரம் அமைத்தல்)
132
பொலங் கொடி போகம் ஆர்த்த பூண்முலைக் கனகக் கோயில்
விலங்கு வில் உமிழச்செய்து விதிகள் பற்பலவும் ஆற்று(ம்)
வலம்கிளர் சமயத்தோரும் மறைஞரும் நணுகச்செய்து
தடம்கிளர் மடங்கள் அன்னசத் திரத்தோ(டு) அமைத்தான் - 50
(வீதி, குளம், கிணறு, பூந்தோட்டம் மற்றும் தேர் முதலிய சமைத்தல்)
133
சாலையும் வாவி கூப(ம்)தடாகமும் தளிர்கும் பைம்பூம்
சோலையும் கிராம தேவர் துலங்கும் ஆலயமும்செய்து
மேல்அயன் தனக்கு நாடி விதித்திடல் அரியதாய
காலை எய்திய தேர் வல்ல கம்மியர் பொன்னால் செய்தார் - 51
(மகுடாகமத்தில் கூறிய படி பூசை திருவிழா முதலியன செய்ய பணித்தல்)
134
தொழில்புரி கம்மியர்க்குத் தொடுகடல் உடுத்த வைய(ம்)
முழு(து)அருள் இறைவன் ஆற்றும் சிறப்பினை முடித்(து) எம்மாற்குப்
பழு(து) இலா மகுட நூலில் பயில்பெரும் பூசைசெய்வித்(து)
தொழுது நாடி உருவிழாச்செய் வண்ண(ம்)நாம் உரைக்க லுற்றாம்
திருச்சிற்றம்பலம்
நளபதி சருக்கமுடிவு
ஐந்தாவது
திருவிழா சருக்கம் Up
(திருவிழாக் காலம் வருதல்)
135
நேசர்க்(கு) அருளும் நிமலன் விடை ஊறல்போல்
ஆசற்(று) ஒளிக்கும் அருக்கன் விடைஅடையப்
பூசல் சுரும்(பு) அரற்றும் பூம்பொதியில் வாய்உயிர்த்த
வாசப் பசுந்தென்றல் வண்ண(ம்) நனிவிளங்க - 1
(இயற்கை வருணனை)
136
திங்கள் அமு(து)ஒழுகும் தெள்நிலவு வாய்மடுத்துத்
துங்கச் சகோதரம் துதையும் களிசிறப்ப
வெம்கள் தூள்இ(து) துவற்றும் வெம்மலரின் தா(து)ஊதி
அம்கண் சிறைஅறுகால் ஏழிசையும் ஆர்க்கவே - 2
(இதுவுமது)
137
அம்ஆர்ந்த சோலை அணிபூ மழைபொழியப்
பம்ஆர் அலரில் படும் பொன்துகள் ஆம்பல்
எம்மா கனகம்உரை வெண்கல் எனவிளங்கச்
செம்மாந்து செங்கண் கருங்கோ குலம் சிலம்ப - 3
(இதுவுமது)
138
கண்டார் மனம்கவரும் கமுகப் பழங்கனிந்து
விண்(டு)ஆங்கு அடைந்தார்க்கு வெம்மைகெட தாம் தூற்ற
வண்(டு)ஆடல் கண்டு மகிழ்ந்து மலர் வாய் திறக்கும்
தண்தாமரைத் தேனும் முத்தும் தடம் நிரப்ப - 4
(இதுவுமது)
139
தாமத்(து) அலர்பன்னீர் சந்தக் குழம்(பு) அணிந்து
வாமத்(து) இளைஞர் மகளீர் உடன்ஆட
ஏமக் கரும்பு எழில் மலரும் கைக்கொண்டு
காமக் கடவுள் விழா அயரும் காலத்தே - 5
(நளன் திருவிழா எடுக்க நினைத்தல்)
140
மின்னு மகுட விடங்கப் பெருமாற்குத்
துன்னு விழாபுரியும் வேட்கைத் துணிவுற்றான்
உன்னுமணிஒன்று உறங்க இருபோது(ம்)
மன்னு மயில்கண் முரசு உறங்கா வாயிலான் - 6
(விழாவினுக்காக செயல்படுதல்)
141
எவ்வெத் திசையிலும் எவரும்வரத் தூ(து)ஏவப்
பவ்வத்தி ரை எழுபோதும் படிவரலும்
சைவத்திறன் மறையோர் சார்கடவுள் நள்ளாற்றைத்
தெய்வப் பதிஇறங்கிற்(று) என்னச் சிறப்பித்தான் - 7
(எழில்பெற விழா வனப்புகள் எழுந்தன)
142
மாடத் திரள்வயிர மண்டபங்கள் கோபுரங்கள்
கூடத்(து) இடை அமைத்த வான்பொன் கொடி ஈட்ட(ம்)
நாடற்(கு) அரியவிழா நாடிப் பலவாகி
ஆடற் புரவி ரவிவந்த தாம்என்பார் - 8
(வனைவுகள் கண்ட தேவர் மயங்கினர்)
143
நாடாளும் வென்றி நளன் கோபுரத்(து) அணித்த
பீ(டு)ஆர் உருக மணிச்சோதி பெய் மதியம்
கோடாத செங்கதிர் போல் கோலம் கொள நோக்கி
வாடாத மாலை இமையோர் மயக்(கு)உற்றார் - 9
(தேவலோகத்து கற்பகச்சொலை போல்வது ஆகல்)
144
மாலை நெடுமாடத்(து) அணிந்த மரகதத்தின்
வேலைஒளி விண்ணோர்தம் நாட்டில் விளங்குதலும்
பாலை மருட்டுமொழிச் செந்தாள் கிளிப்படியம்
சோலைஎன விண்ணொர் சோலை விளங்கியதால் - 10
(விழா ஏற்பாடுகள் நடைபெறுதல்)
145
அந்த ணளாரை அதியோர்
நந்(து) உலாவும் நள்ளாறில்
வந்து கூடலும் வண்தமிழ்
தந்த மாமுனி சாம்பினான் - 11
(ஆதிசேஷனை மிஞ்ச உலகத்தை தாங்குதல்)
146
அணிகொள் அண்டம் அனைத்தையும்
தணிவு கொண்டு அவன்தாங்கிய
பணி விளங்கு பணைப் பணா
மணி சிதைந்து மறைந்தது - 12
(விழா ஒலிகளால் பறவை வண்டினம் இடர்படுதல் )
147
பயில் விழா ஒலி பம்மலால்
அயிலும் தேன்அளி அன்றியே
இயலும் ஆவுடன் எய்துபுள்
துயில் மறைந்து துளங்குமால் - 13
(அலங்காரங்களால் அளகாபுரி ஒத்தல்)
148
கிளரும் எண்திசை கே(டு)இலா
அள(வு)அறும்பொருள் அல்கலால்
தளர்(வு)இல் வான்நகர் தன்னுடன்
அளகை ஒத்(து)உளது ஆவணம் - 14
(புனர்பூச நாளில் கொடிஏற்றம் நடத்தினமை)
149
சாற்றினார் இயம் தாழ்வற
ஆற்றினார் விதி யாரையும்
போற்றினார் புனர்பூச நாள்
ஏற்றினார் கொடி ஏற்றினார் - 15
(ஆகம விதிப்படி வேள்விகள் நடத்தினமை)
150
அல்லி லேநட மாடுவார்
மல்லல் வீதியில் வாழவுறச்
சொல்லு நூல்உரை தொன்மையால்
நல்ல யாக(ம்) நடாத்தினார் - 16
(அன்னதானம் முதலியசெய்தமை)
151
சொன்ன தானமும் தூயசீர்
அன்னமே முதலானவு(ம்)
மின்னர் என்று திகழ நள
மன்னன் சால வழங்கினான் - 17
(வேறு பொருள்தானம் பல செய்தமை)
152
வெள்ளி பொன்மணி வீதியில்
அள்ளி ஈயும் நள்ளாற்றினில்
நள்ளியோர் வர நாடியே
வள்ளியோன் உளம் வாழ்ந்தனன் - 18
(தெருக்களில் வாழை முதலிய நாட்டல்)
153
காட்(டு) உளங்கனி காய்மணிப் பூண்மது
காட்டு தார்அவை காதிக் கலந்(து) உக
காட்டுப் பச்சைக் கதலி நள்ளாற்றினில்
காட்டு நீக்குவார் காலையில் வீதியே - 19
(ஆடல்பாடல் நடத்தினமை)
154
மைக் கருங்குழல் மங்கையர் பாடல் கேட்(டு)
ஓக்க விஞ்சையர் ஒப்பறு கின்னரர்
தக்க கோடு தளிர்க்கும் என்று உன்னியே
மிக்க பாடல் கருவி விண் போக்கினார் - 20
(பெரியதோர் தேர்தனை விழாவினுக்கு அமைத்தமை)
155
சொல் நகைப்பெயர் நாளில் சுரர்தொழ
மின்னு(ம்) மேருவும் வெள்கிய தேர்இடை
மன்னு பாலர் மனைவி உடன் புவிக்(கு)
இன்னல் போக்கும் பிரானையும் ஏத்தினார் - 21
(தேர் விழா மரபுவழி நடாத்தினமை)
156
விண்ணு(ம்) மண்ணும் விழிகளித்(து) ஏத்தவே
மண்உந்(து) தேரை மரபில் நடாத்தியே
கண்ணு(ம்) நெஞ்சும் கவர்மணிக் கோயில்வாய்
நண்ணுமாறு அமைத்தார் பணிநாட்டினார் - 22
(விசாக நன்னாளில் விழாமுடிவுறல்)
157
மற்றும் செய்விழா முற்ற வயக்கியே
கற்றை வேணியை காமர் விசாகநாள்
பற்றை யாவரும் நீக்கப் பனித்தடம்
எற்ற ஆட்டினர் ஏழ்உலகம் உய்யவே - 23
(நளன் தன் உயிரும் உடலும் நள்ளாற்றினனுக்கே எனல்)
158
காவிஅம்கண் கவுரி மணாளர்க்கு
மேவும் இன்னவிழா நடத்தி ஏத்தியே
கோ விதர்ப்பன் கொடிபுணர் மன்னவன்
ஆவியும் பொருளும் நினதாம் என்றான் - 24
(கொடைசெய்து வந்தோரை வழிஅனுப்பி 12 ஆண்டு இருத்தல்)
159
வள்ளலைப் பணிந்(து)ஏக வந்தோர்க்(கு) எலாம்
எள்ளரும் சிறப்(பு) ஈந்து விடுத்தரோ
புள்அலம்பும் புனல் வயலப் பதி
நள்ளி ஆண்டு முந்நான்கு இருந்தான் நளன் - 25
(ஊர் எல்லைக்குள் வரும் யாவரும் நலம்பெற வரன்பெறுதல்)
160
அனைய காலை அனிலன் திசையினில்
நினையும் கூப்பிடு தூரத்து நீட்டம்
புனையும் பூண்நிறை தொட்டுப் புனிதனை
வினையின் நீங்க வடபால் விதித்தனன் - 26
(கங்கைநீரை கொணர ஏற்பாடு செய்தல்)
161
ஆதிபாதம் அருச்சனைசெய்து நல்
சோதி பூசனை செய்ய சுரநதிக்
கோ(து)இலாப் புனல் நாளும் கொணர்ந்தலும்
தீ(து)இலாப் பெருமான் அருள் நோக்கியே - 27
(அதற்காக சூலாயுதம் பெறுதல்)
162
கங்கை யின்நல் கரு(து)அரு தீர்த்தம்அம்பால்
இங்(கு)அழைப்ப நீஈ(து)அறிவாய் எனச்
செங்கை ஆழி திருமாற்கு அளித்த கோன்
அங்கை மூவிலை வேல் அளித்தான் அரோ - 28
(அச்சூலம் கங்கையை வன்னிக்கோணத்திற்கு கொணர்ந்தது)
163
முத்தலைப்படை முன்அரசுஏவலும்
நத்(து)அலைகங்கை கொண்டு நடந்துபூங்
கொத்(து)அலைதண்தட வன்னிக்கோணத்தில்
மெத்(து)அலைப் புனல் காட்டிற்று அவ்வேலுமே - 29
(சூலத்தை இந்திரனிடம் ஒப்பித்து கங்கை நீரால் பூசை செய்தல்)
164
கண்டு சிந்தை களித்த படைஎடுத்து
அண்டர் கோன் கரத்(து)ஈந்து அணிகும்பவாய்
கொண்டு அந்நீரில் குறை(வு)அற நாள்தோறும்
மண்தலத்து இறை ஆட்டி மகிழ்ந்தான் -30
(தடநீர் இறைவனுக்கே உரியது என ஆணைஇட்டு நாடு திரும்புதல்)
165
இன்ன நற்புனல் ஈசனுக்(கு) அன்றியே
பின்னர் யாவரும் ஆடப்பெறார் என
அன்ன ஆணை அமைத்(து)அருள் எய்தியே
மன்னன் மாண்பொடு தன்பதி எய்தினான் - 31
(அங்கு சிறப்பாக ஆட்சிபுரிந்து இறைவன்தாள் அணைதல்)
166
வையம் ஒற்றை மதிக்குடை கீழ்வைக
செய்ய கோலை நடாத்தி திசைதொழ
வெய்யவே நளன் வீற்றிருந்து எண்புயத்து
ஐயன் சேவடிஅம்புயம் எய்தினான் - 32
(நளன் கதைக்கு பின் யாதேன முனிவர்கள் சூதரிடம் கேட்டல்)
167
துரி(சு) இலீர்என கூறிய சூதனை
விரி சடைத்தலை வேதியர் யாவரும்
பரிவின் ஏத்தி பழு(து)அறு காதைமேல்
உரியது எக்கதை கூ(று)என ஓதுவான் 33
திருச்சிற்றம்பலம்
திருவிழா சருக்கமுடிவு
ஆறாவது
கோக்கொலை தீர்த்த சருக்கம் Up
(கோதாவரிக் கரைவாழ் தூயகண்டன் வேள்வி செய்தல்)
168
தீதகலும் புனல் கோதாவரி தீரத்தில் தெளிக்கு(ம்)
மறையவர்த் தனப்பேர் செப்பு(ம்) ஓர்ஊர்
காதலோடு துரக்கும் மன்னவன் தூயகண்டன்
கதிகாட்டு(ம்) மகச்சுட்டிக் கடவுள் வேள்வி
வேதவிதி பயில் மேதா விதியைக் கொண்டு
வேட்டலும் அத்தீ எழுந்த மிக்கபூதம்
ஏத(ம்)அகல் பால் அடிசில் அளிக்க கொண்டே
இன்ப(ம்)உறு மனைவிதனக்(கு) ஈந்தான் அன்றே - 1
(மகப்பேறுற்று தானம்பல செய்ய அந்தணர் இருவர் பசு எனதெனல்)
169
அப் பருவத்தவள் கருப்பம் தாங்கி வையத்(து)
அர(சு)உரிமைக் குமரனை மேல் அளிப்ப(து)ஆனாள்
ஒப்பரும் அவ்வேள்வி குருக்(கு) அம்பொன் பூணும்
ஒருநூறு பசுவும் பொன் ஒர் இலக்கம்
தப்(பு)அறவே அருளி மறை வாணர்க்(கு) எல்லாம்
தானங்கள் பலகொடுத்தான் தானம் கொண்டார்
ஓப்(பு) உவமையால் பெரிய பசுவை நாடி
ஓர் இருவர் என(து) என்றே உடன்று நொந்தார் - 2
(போரிட்டு ஒருவன் தடியால் அடிக்க பசுமடிந்து பிரமஹத்தி பிடித்தல்)
170
பிரம கொலை வரும் எனவே இருவரும் ஆங்கு
பிடித்திருக்கும் பசுவினைக் கைத் தண்டத்தாலே
வரமறையோன் ஒருவன் அடித்து என(து)என்று ஓட்ட
அருகாக தால்இயனும் வழக்கால் வீழ்ந்து
சருமம்உறு பசுவின்தோல் நைய வெம்மை
சாதிமறையோர் கண்டார் சண்டாளன் போல்
கர(ம்)மருவு தண்டத்தான் வடிவம் கொண்டான்
கருமத்தின் வினைவினை யார்காண வல்லார் - 3
(ஊர் திரும்பாது திரிய ரோமசனை கண்டு வினைதீர வழி பெறுதல்)
171
முந்நூலோர் உறைபதியில் போதல் செல்லான்
முடிவிலாப் பவம் தொலைப்ப முன்னிச் செல்ல
எந்நூலும் தெரியும் ரோமசன் என்(று)ஓதும்
இசை மறையோன் மார்கத்தின் எதிர்வந்(து)எய்த
என்னூலும் வேறாகும் பவத்தோன் கண்டு
மெல்லடி முன்வணங்க அவ(ன்) அருகி நோக்கி
உன்ஊழின் வரும் பாவம் அறிந்தோம் முன்னோர்
உரைக்க ஒணாது ஆனாலும் உரைப்பம் கேண்மோ - 4
(நதிகள், கிழக்கு மேற்கு கடல் தீர்த்த யாத்திரை செல்லெனல்)
172
ஈங்கு உனக்கு தீர்த்த யாத்திரை நன்(று) என்ன
ஏதுஎன்னில் அதனை வகுத்(து) இசைப்போம் கங்கை
பாங்(கு) அமை களிந்திநதி சோணை துங்க
பத்திரை கோதாவிரியே பாலி பெண்ணை
தீங்(கு)அறு காவிரி அனந்தை சரயு பம்பை
சிந்து கம்பை முதல் பலவாம் தெய்வ உந்தி
ஓங்கு குணகடல் போதல் அன்றி மேல்பால்
உறும் தலத்தில் சில உரைப்பா(ம்) மன்னோ - 5
(வினையறுக்கும் தீர்த்தம் பலஎனிலும் நள்ளாறு சிறப்பு எனல்)
173
அம்புசை நேத்திரவதி சீர்அடையே கன்னி
அருள் கபிலை காளிந்தி அரும்(பு)ஆர் உந்தை
பம்புமணி வாகினியே நேம(ம்)கன்மப்
பற்(று)அறுக்கும் ஆறு முதல் பலவாம் தீர்த்தம்
செம்பதுமத் தடம் பலவாம் எங்கும் நீதான்
சென்(று)உழலாது ஒருதீர்த்தம் பொன்னித் தென்பால்
நம்பர் தருப்பாரணியத்(து) அன்ன தீர்த்தம்
நண்ணுக என்(று)உரைத்(து) அதன்சீர் நவில்தானான் - 6
(அகத்தியன் முசுகுந்தன் வழிபட்டாரெனல்)
174
அன்னதடத்தின் அனிலன் திசைஆழிஉண்டான்
முன்ஒத்த சோதி ஒருலிங்கம் விதித்து நாளும்
தன்ஒத்த மேன்மைச் சனகாதிய ரோடு சார்வான்
மன்னர்க்கு மன்னன் முசுகுந்தனும் வந்து போற்றி - 7
(முசுகுந்தன் விடங்கப் பெருமானை நிறுவி சனிஅருள்கூட்டல்)
175
வானத்(து) அடைந்த விடங்கேசனை மன்னும் இந்தத்
தானத்(து) அமைத்துச் சிறப்பு எண்ணில தானம் அமைத்தான்
ஈனத்(து) அகன்ற நாள் இங்கு இருந்(து)அன்ன மந்தன்
ஞானக் கடலின் அருள்பெற்று அவன் நண்ணி னானால் - 8
(வினை நீங்க கோபுரத்து சனிபகவானை பூசைசெய் எனல்)
176
மாகோபுரத்(து) ஓர்பால் உள்ள மந்தன் கண்டாற்கு
ஏகாத வன்துயர் யாவு(ம்) அங்கில்லை யாமால்
போகாய் அவண் என்று விடுத்து அயல் போயினானால்
சாகாத வரத்தினர் யாரினும் தக்க மேலோன் - 9
(அறியாது வினை சேர்த்த அப்பார்ப்பனன் பொன்னி நாடடைதல்)
177
அறியா மையினால் பவ(ம்)எய்திய அந்தணாளன்
நெறியாதும் அகன்(று) உய்ய அந்நாள் நீடுபொன்னி
எறியார் வயல்புனல் நாட்டில் எய்தி முன்பு
பிறியாத துயர்கடல் யாவையும் பின்னிட் டானால் -10
(அத்தருப்பாரண்ய தடத்திற்கு சிவராத்திரியன்று வந்தடைதல்)
178
ஞாலத்(து) உ(ள்)ளோர்கள் வினைதீர் நலத் தருப்பை
மூலத்(து) எழுந்த சுடர் மேவிய முற்பதிக்கே
சீலத்தார் போற்றும் சிவராத்திரி சேர்ந்து மேற்கின்
பால் உற்ற தீர்தத்(து) இடைபோய் ஒரு பால் நின்றான் - 11
(தடம்முழ்குவோரால் தெரித்த நீர்பட்டு பழைய உருபெறல்)
179
அத்தீர்த(ம்) ஆடுபவர் கேசம் அலைப்பச் சிந்தும்
அத்தீர்த்தம் மெய்பால் படலும் உருநன்(கு) அடைந்தான்
மெய்த்திணி தோளர் அம்புவியோரும் விண்ணுளோரும்
இத்தீர்த்த மேன்மை பெரிதாம் என இன்ப(ம்) உற்றார் -12
(ததீசன் எனும் அவ்வந்தணன் நல்ல நிலை அடைதல்)
180
செற்றார் வணங்கும் சிவவீறு தெதீசன் என்பான்
மற்(று)யாரும் ஒப்பிலன் ஆயினான் மற்றையோர்க்கா
உற்(று)ஆங்கு இழைக்கும் உபகாரத்தினர் ஓங்குசீர்மை
முற்றார் எனினும் உடனே நல(ம்) முன்னுவாரே - 13
(நல்லுருபெற்று வினை முற்றும் தொலைய வேதமந்திரங்கள் ஓதல்)
181
வீறும் வடி(வு) எய்தியவன் விண்ட கஞ்ச(ம்)
நாறும் தடம் மூழ்கி எழுந்து நயந்து விண்ணோர்
கூறும் பெருமான் அடிதாழ்ந்து குழைந்து மாயை
பாறும்படி மாமறை கொண்டு பாடினானால் - 14
(அப்பார்ப்பனன் வினைகள் நீங்கி நற்பேறு அடைதல்)
182
நம்கோனை நள்ளாறனை மாதிர(ம்) நண்ணும்தேவர்
தம்கோனை என்நாவில் ஊறிய தண்அம்தேனை
எம்கோ(து)அறு கன்னலை ஏத்திஉள் மெய்விதிர்ப்ப
அம்கோஉறு தண்அளி எய்தினன் அந்தணாளன் - 15
(பந்தங்கள்நீக்கி தருப்பை ழெலிகோல் வேள்விகள் எனவாழ்தல்)
183
தாரத்தொடு மக்கள் முன்ஆகிய தக்கபாசம்
சேரத்தகும் யாரையு(ம்) நீத்(து)உளம் தேறிவன்னி
நாரத்துடன் வேணிஅணிந்து நள்ளாற்றில் வாழ்வை
ஆர்அத் தனையே உறாவாக அடைந்(து)இருந்தான் - 16
(கோயில் பணி சிவநாமம் ஓதியே வாழ்ந்து திருவடி அடைதல்)
184
கோயில்பணி வேண்டுவ யாது(ம்)அங்(கு) இயற்றிமிக்க
வாயில்சிவ தோத்திரமே மாமறை மல்கஓதிச்
சேயில் பரிவாய்க் கலந்துசெ றிந்(து)அவர்க்கே
தாயின் சிறந்தான் அடிதாமரைச் சார்ந்(து)உளானே - 17
(பசுக்கொலை பாவம் தீர்தலடுத்து மேலும் தலபெருமை வினாதல்)
185
ஆனின் பழிபோக்கிய(து) இம்முறையாகும் என்றே
தேனின் பொழிவாம் எனஓதிய செம்மையானை
மானின்உரி அடையார் வாழ்த்தி மகிழ்(வு)உற்று ஐயம்
மேல்நின்ற சரித்திரம் யா(து)என வேறுசொல்வான் - 18
திருச்சிற்றம்பலம்
கோக்கொலை தீர்த்த சருக்கமுடிவு
ஏழாவது
உருசிராச சருக்கம் Up
(அவந்தி நாட்டு முடிமன்னன் உருசி நாட்டை நன்கு ஆண்டுவந்தான்)
186
எழுபெரும் திக்குமேலாம் இசைதிசை போம்அவந்திக்
குழுமணி மகுடமன்னன் கோதைவேல் உருசிஎன்பான்
ஒழுகுவெவ் விடப்பல்பாந்தள் ஒன்(று)அடர் பிரானைத்தாங்கப்
பழு(து)அறும் உலகம்எல்லாம் பாழிஅம் திணித்தோள்வைத்தான் - 1
(பரத்துவாச முனிவர் மறையவர் கூட்டத்துடன் வருதல்)
187
வாய்மையும் கற்புமேய வனமுலை மனைவியோடும்
தீயகம் பலவும்மாற்றி செய்யகோல் நடாத்துநாளில்
ஆய்மதி பரத்துவாசன் அருமறைக் குழாங்கள்சூழக்
காய்மதி நிலவுநீறு காட்டவந்(து) அணைந்தான்அன்றே - 2
(வரவேற்று நன்று உபசரித்து அறத்தி லுயர்ந்த தேதென வினாதல்)
188
முனிவரன் வருதல்நோக்கி முடியடித் தோயத்தாழ்ந்தே
இனியன பலவும்கூறி ஆசனத்(து)இருத்தி தானும்
கனிவுடன் இருந்துமேவும் கருத்(து)அறிந்து அறங்கள்தம்மில்
தனிஉயர் அறம்யா(து)என்னப் பரத்துவாசன் சாற்ற(ல்)உற்றான் - 3
(அன்னதானமே மிகச்சிறப்பு வாய்ந்தது எனல்)
189
தானமே அறமா(ம்) அந்தத் தானம்தாம் பலஅவற்றுள்
ஆன(து)ஓர் அன்னதானம் அதிகம் அவ்வ(ன்)னத்தினூடே
மானவர் ஆவிவந்து மண்ணிடைப் பிறத்தலாலே
ஏனவாம் தானம்எல்லாம் இதற்(கு)இணை ஆகா(து)அன்றே - 4
(காலம் இடம் அறிந்து திதி நாளில் சிவதலத்தில் செய்க எனல்)
190
அன்னது கொள்வோன் காலமாய்இடத்(து) அதிகமாகு(ம்)
முன்னவை இரண்டும்ஈண்டின் மொழிஇடத் தால்வீ(று)எய்தல்
தென்நிலம் தன்னில்ஈசன் திருப்பதி ஒன்றில்உண்டால்
மன்னவ கேட்டிஎன்ன மறையவன் உரைப்ப(து)ஆனான் - 5
(காவிரி தெற்கு 1 1/2 காதம் சிவன்தன் தருப்பைவனம் சிறப்பெனல்)
191
எறிதிரைப் பொன்னித்தென்பால் இருமுக்கால் காவதத்தில்
செறிதரு தருப்பையங்கான் சிவன்பிறி யாததானன்
நெறிஅவை பொருந்தி ஏய்ந்தால் நிறைஉகள் கவலைமாறி
மறிஉகள் வனவாம்அந்த மாண்தலம் இலங்கும் ஆங்கே - 6
(ஆற்றிடைஅமைந்த, தேவர் வணங்கு அந்தணர் நள்ளாற்றிலும் கள்வன்)
192
துய்யஆச் சிர(ம)மேதுன்றி சுரர்தொழும் பதிஅக்கானில்
செய்யஆற் றின்நள்ளாகிச் செறிதலால் திருநள்ளாறாய்
வையக(ம்) மிகுபேர்பெற்று வயங்குநாள் அங்(கு)ஓர்கள்வன்
எய்யஆ(று) அலைத்(து)உண்(டு)ஆங்கே மேவினான் மேவுநாளில் - 7
(கடலனின்று மேல்வழிசெல் வணிகன் மூட்டையில் உணவே இருத்தல்)
193
பால்திரை குணாதுவேலைப் பதிநின்(று)ஓர் வணிகன்போத
ஆற்(று)உணாக் கொண்டுமேல்பால் அடைகுவான் புகுதத்தீயோன்
கூற்(று)என அணைந்துபற்ற கொள்பொருள் ஒன்றும்இன்றி
ஏற்றும் அச்சோற்றைக் கொண்டெ இரும்பசிக்(கு) ஈந்துவிட்டான் - 8
(புலிதப்பியஆஎன்னபோந்தவன் மாற்றோரூரில் வறுமையில் இறத்தல்)
194
வல்லியம் விடுப்பநீங்கு மழவிடை போலநாய்கன்
புல்லிய துயர(ம்)நீங்கி போந்துநன் பதிஅடைந்து
கொல்லியல் வறுமையாலே கோதுகள் புரிந்துமேலைச்
சொல்லிய ஆயு(ள்)நீங்க துயர்உழந்து இறந்தகாலை - 9
(கள்வனுக்கும் கட்டமுது அளித்ததால் கயிலாயகதி பெறுதல்)
195
காட்டில்முன் கள்வன்கொள்ள கட்(டு)அமுது அளித்தான்என்றே
கோள்திமில் ஏற்றுஓர்அண்ணல் கொணர்கஎம் உலகத்துஎன்னச்
சேட்டிளம் பரிதிபோலும் சேண்உலாம் விமானம்ஏற்றி
வாட்டம்இல் சிவகணத்தோர் மல்கிய சிறப்புசெய்தார் - 10
(கயிலையில் வரப்பெற்றவன் நல்பேற்றுடன் இருத்தல்)
196
அரன்அடி அடைந்துவானத்(து) அளப்(பு)இல்பல் இயம்கள்ஆர்ப்பப்
பரன்உல(கு) அடைந்(து)எம்கோனை பணிந்தவன் இருந்தான்என்றே
வரமறை முனிவன்ஓத மன்னவன் செங்கைகூப்பிப்
புரசுரன் பாதம்போற்றிப் புனிதஅப் பதியில் செல்வான் - 11
(இதனை பாரத்துவாசன் சொல்லக்கேட்ட உருசி நள்ளாறு செல்லல்)
197
வேதியன் அருளால்கூறும் விடைமொழி பெற்றுவேந்தன்
ஓதிய நெறியால்காத்தல் ஒருப்படும்அமைச்சர்க்(கு) ஆக்கி
வேதிய(ர்) தானைசூழ இரும்சுரம் பலவும் நீங்கித்
தா(து)இவர் சோலைவேலித் தருப்பையங் கானில்வந்தான் - 12
(உருசி நாட்டு வளமிக்க நள்ளாறு அடைதல்)
198
பண்அமர் சுரும்புபாட படுமது அருவிப் பாய்ந்து
தண்அரும் தடமாய்வெய்ய தனைகால் ஆழத்தேக்கு
மண்நலம் கானில்வேந்தன் அணைதலும் மாரிநீத்தம்
கண்கள்நாடு முற்றும் கருவிவான் பொழிந்த(து)அம்மா - 13
(சுக்கிரபுரி, பாண்டியன் மதுரை போல நள்ளாற்றை சிறப்பு செய்தல்)
199
வெள்ளிதன் முனிவால்போல விரிவன தண்டகக்கான்
நன்னிய தமிழ்தேர்வேந்தன் நன்(கு)உற அமைத்ததேபோல்
புள்ளிமான் ஆடைஈசன் புரத்தொடு நாடுமுற்றும்
அள்இலைப் பூணினான்வந்(து) அணிவளம் அளித்தான்மன்னோ - 14
(நளன்போன்று உருசியும் நள்ளாற்றில் மணிமாளிகை கட்டல்)
200
வானவர் இயக்கர்சித்தர் வரமறை முனிவரோடு
தானவர் பணிநள்ளாற்றில் சங்கரன்தளி முன்னாகத்
தேன்அலர் கடவுள்கோயில் செய்நளன் பணிபோல்மேவ
ஈனம்இல் உருசிமன்னன் இரணியம் மணியில்செய்தான் - 15
(கோயிலில் சிறந்த வழிபாட்டிற்கு ஏற்பாடுகள் பல செய்தல்)
201
நள்ளா(று) உடையார் நவில் பூசனையும்
எள்ளா நெறியினில் இயலும் விழவும்
தள்ளா மறையோர் அகமும் தடைதான்
கொள்ளா முறையில் குல(வு) உற்றிடவே - 16
(சிறப்பாகவே பலருக்கும் உணவளித்தல்)
202
மலையில் பொலியும் அடையும் ஒருபால்
அலையில் பொதியும் அதுபோல் அமுதும்
குலையில் கனியும் பிறவும் குழுமுந்(து)
தொலை(வு) அற்(று)இடுமா னிடர்த் துய்த்திடவே - 17
(தானங்கள் பல செய்தல்)
203
கல்லா மணியும் கனகத் திரளும்
பல்ஆன்இனமும் பகரும் பிறவும்
வல்லார் மறையோர் மகிழக் கொளு(ம்)ஆ(று)
எல்லா அறமும் மிகஉற் றிடவே - 18
(பல்இன சிவனடியார்கள் சிறப்பு பெறுதல்)
204
மெய்வைத் திடுசீர் வேளான் மறையோர்
வைவைத் திடுவேல் அரசர் வணிகர்
தெய்வத் திருநால் மறையோர் திகழும்
சைவத் திரளும் மிகவும் தழைய - 19
(பூசைப்பணியாளர் தேவரடியார் என ஏற்பாடுகள் பல செய்தல்)
205
பூசைச் சிவவே தியரும் புனிதன்
நேசப் பணிசெய் நிறைதான் நிகரும்
வாசக் குழலார் மலிதூ ரியமும்
ஏசற்(று) அளகை இணையோன் மலிய - 20
(சிவனை தாபித்து பெருந்தவப் பூசை செய்தல்)
206
செங்கோல் அரசன் திகழ்வித்(த) அ(ன்)னிலத்(து)
அங்(கு)ஓர் திசையின் அமலத்(து) உருவாம்
தம்கோன் வடிவம் தாபித்(து) இயலால்
பொங்கா நாளில் பூசித் தனனே - 21
(தவ வலிமையால் சிவன் வெளிப்படல்)
207
சரஆ ரணியம் தங்கிச் சடைமேல்
அரவு ஆடிடநின்(று) ஆடும் பெருமான்
கரவா மனன்எனக் காலும் சிறிதும்
விரவான் இறைமுன் வெளிநின் றனனே - 22
(திருஉரு காணப்பெற்ற பேற்றால் மகிழ்தல்)
208
கண்டான் வடியாக் கருணைக் கடலை
விண்டான் விழிநீர் மெய்முற் றவசம்
கொண்டான் பிரமகூத் தும்பொலி அத்திசை
தண்டா மரபில் தான்ஆ டினனே - 23
(போற்றுதல்)
209
வேலா வலயத்(து) அவுணன் மிடல்தீர்
சூலா யுதனே சுரர்நா யகனே
மாலா யதிரு மறலிப் பழிகொள்
காலா விமலா கருணா நிதியே - 24
(இதுவுமது)
210
நாரா யணனே(டு) அயனும் நணுகா
வேராய் முடியாய் மிளிரும் சுடரே
தாராத் தமிழே தமிழ்ஓர் பொருளே
ஆராஅமுதே அடியேன் உயிரே - 25
(இதுவுமது)
211
எந்தச் சமயத்(து) எவர்உற் றிடுனும்
அந்தச் சமயத்(து) அருளும் சுடரே
சந்தப் புளகத்(து) அருணக் கமலக்
கந்தக் கொடிசேர் கதிர்கற் பகமே - 26
(சிவபெருமான் வேண்டும் வரம்யாது எனல்)
212
என்றே பரவுற் றனன்நல் இறையை
நன்றே புரியும் நள்ளா(று) உடையான்
குன்றா வர(ம்)நல் குவம்யாம் கொளு(ம்)முன்
ஒன்று ஆதர(வு)ஏது உரைஎன் றலுமே - 27
(வேண்டும் வரம் கேட்டல்)
213
பேசு(ம்) மண்ணில் இன்னமும் பிறக்கும் வண்ணம் நேரில்(ஓ)ர்
ஆ(சு) இலாத நின்இடத்தில் அன்புவைக்க வேண்டும் இத்
தே(சு)இடத்(து) இருந்து நின்திருப்பணி திறம்செயப்
பாசம் நீக்க வேண்டும் என்னப் பாணி வேணி நல்கினான் - 28
(உருசிமன்னன் அவந்தி நாடு திரும்புதல்)
214
மீன உத்தரத்து நாள் விரித்த திங்கள் காலையில்
மான வேலின் மன்னவன் வாய்த்(து) உணர்ந்து நீங்கியே
ஆன நாடு அகன்று போய் அவந்தியில் புகுந்து நல்
தானம் அன்னம் நல்கி மெய்த் தவம் புரிந்(து) இருந்தனன் - 29
(தன்காலம் கடந்தபின் நள்ளாற்றில் மீண்டும் பிறந்து நற்கதி அடைதல்)
215
பின்னர்க் காய(ம்) நீங்கியே பிறங்குசீர் நள்ளாற்றினில்
மன்னன் முன்னர் ஊழ்உடன் வந்து தோன்றி வாழ்(வு)உறீஇ
அன்ன தான(ம்) நல்கியே அடைந்த பற்(று)அகன்றபின்
பன்ன வேணி ஈசன் நல் பதத்தகத்(து) அடைந்தனன் - 30
(சூதமுனி அடுத்த காதை கூறத் தொடங்கல்)
216
அந்தணீர் இவ்வண்ணம் என்று ஆய்ந்த சூதன் ஒதவே
சந்த நீ(று) அணிந்திடும் சவுனக(ன்) ஆதியோர் எலாம்
பந்த(ம்) நீங்கி பரனிடத்(து) அடைந்த பின்
வந்த காதை ஏது என மகிழ்ந்து கூ றுவான் - 31
திருச்சிற்றம்பலம்
உருசிராச சருக்கமுடிவு
எட்டாவது
அக்கினி வண்ணச்சருக்கம் Up
(காம்பீலியில் நல்வழிச்செல்வ வணிகன் ஓர்அரசன்ஓக்க இருத்தல்)
217
கன்னல் வேலிநீர்வயல் காம்பீலித் தலத்தினான்
மன்னர்மேவு செல்வத்தான் மாறில்வேத வாணிகன்
இன்னல்தீர்க்கும் ஈகையால் இயக்கர்வேந்தன் என்னவே
பன்னரும் பெரும்பொருள் பழிப்பிலாமல் ஈட்டுவான் - 1
(அவ்வணிகன் தெண்டிக்கு தீவணன் பிறத்தல்)
218
தெண்டிஎன்னு(ம்) நாமத்தான் சிறந்துவாழும் எல்லையில்
வண்டுகிண்டு கொண்டல்ஓதி மனைவிதன் வயிற்றின்வாய்
கொண்டிடும் கருப்பமாகக் கூறும்ஓகைக் கூரவே(ல்)
திண்திறல் படைத்தசீர்த் தீவணன் உதித்தனன் - 2
(அடுத்தும் ஓர் மகனைப் பெற்று கல்விபல கற்கவைத்தல்)
219
மற்றைஆண்டின் எல்லையில் மருவுமன்னன் போல்வன்என்(று)
உற்றவன் ஒருத்தனும் உதித்தனன் இருவரும்
பெற்ற(து)என்று நெஞ்சகம் பெருங்களிப்(பு) உறுத்தியே
கொற்றமன்னர் பாலரில் குணங்கொள்விஞ்சை கற்றனர் - 3
(தந்தை மறைவிற்கு இருமகனும் புலம்பல்)
220
விஞ்சைகற்ற இருவரும் விளங்குகாளை ஆகுநாள்
மஞ்ஞைஒத்த தாதையு(ம்) மலிந்தவான் அடைந்தனன்
நெஞ்சைஉற்ற துன்பநோய் நிரம்ப மண்ணில் வீழ்ந்(து)எழுந்(து)
எஞ்சல்அற்று இரங்கிமெய் இளைப்புரப் புலம்பினார் - 4
(உறவினர் தேற்றல்பின் வாணிகத்தில் சிறத்தல்)
221
கிளைஞர் வந்து தேற்றலும் கிளர்ந்த துன்பம் நீங்கியே
களைகணான தாதைதன் கடன்கள்செய்து முற்றியே
வளைகடல் புவிக்குள் முந்து வளமு(ம்) நல்கு வாணிபம்
விளைபொருள் குயிற்றியே விளங்க வீற்ற(று) இருந்தனர் - 5
(மணம் சிறக்க இருந்தோர் தீயவரால் பரத்தையர்நெறி கொண்டாழ்தல்)
222
எள்ளரு மங்கையர் மாமணம் வேட்டர் இன்புற்ற
உள்ளமோடு ஏயவர் வாழ்வுறு நாளில் இடர்எய்தக்
கள்ள மனக்கொடியார் கலவிச்செயல் கற்பித்தார்
அள்ளல் விழுங்கரி போல்அவர் பாலே ஆழ்வுற்றார் - 6
(பெரியோர் சொல்கேளாது கற்பில்லம், தொழில் கைவிடுதல்)
223
கற்புடை மாதர் இடத்(து)உறு அன்புஅது கைவிட்டார்
அன்புடையோர் உறுயிச்சொல் உரைப்பன அவை கொள்ளார்
பற்பல விச்சை பயிற்றிய தேசிகர்பால் செல்லார்
நற்பொருள்கொள் நடையாம் குலநீர்மையின் நடைஅற்றார் - 7
(பழிச்சொல் நாணாது மாயையிலே ஆழ்ந்திருத்தல்)
224
பன்னிய வேத முதற்பொரு நூல்கள் பயன்தேரா
இன்னிலையே பிறர் சீசீ எனும் பழிஇசை நாணார்
பொன் நினைவின் மொழிசெய்கை நிறீஇ நவைபுரிசேரிக்
கன்னியர் ஆகிய மாயையில் அவர் கடப்பாரே - 8
(ஆடல்பாடல் வினைஞர் பலர் பொருளெலாம் கவர்தல்)
225
நடரொடு பாணரே ஆதியார் வந்து நயந்து ஆங்கே
மிடல்பட ஆடலும் பாடலும் நாளும் விளைத்(து)எய்தி
அடல்விழிசேர் பொதுமாதர்கள் தம்மலர் அடியாராம்
விடரவர் தம்மிடை நற்பொருள் யாவும் கொண்டார் - 9
(சூதாடலும் கூடிட தனமெலாம் அழிதல்)
226
உருள்கவறு ஆதிய சூதினில் வல்லவர் உறவாய்வந்து
இருள்புரியத் தொழில் வென்றியில் வைத்த உள்இசைவாலே
பொருள்பல கொண்டனர் நல்வரோடும் பொருந்தாத
அருள்அறு மூடர் பெருந்தனம் இப்படி அழியாதோ - 10
(தீயவை நீங்காமையால் திரு நீங்கல்)
227
நஞ்சுணலாம் என நண்புறு தீஇடர் நடர் உள்ள
வஞ்சனை மாதர் வருத்துறு சூதினர் வடிவாய
வெஞ்சின ஞாளி தொடர்ந்து கடுத்தலும் மெலி(வு)உற்றே
அஞ்சி அகன்றது செந்திருவாகிய அணிமானே - 11
(தங்கை திரு போனதால் தமக்கை மூளி வருதல்)
228
ஓசையுறும் கடல் பெற்ற மின்ஏகலும் உடன் மூத்தாள்
தே(சு) அகலும்படி வந்தணள் அந்நெறி செறிவானோர்
மாசை அடைத்த பிணத்தின் அருந்தசை வாங்கிய பின்
ஆசை அகன்று ஒழியும் கழுகாம் என அயல் போனார் - 12
(துளைபெறு கலத்தில் நீர் தங்காதாதல்)
229
கரைஅறும் ஏரியின் நீர்என முன்பொருள் கடி(து)ஏகக்
தரையினில் யாரும் அவர்க்கு வழங்கிலர் தளர்உற்றார்
வரையுறு ஈமவனத்திடை கள்ளிகள் வாடுற்றால்
நுரைபயிலும் புனல் யாவர் அளிப்பவர் நுவல வல்லீரே - 13
(வினை வழி உணவுஆடையும் இன்றிவாட களவாடல்)
230
நீள்நிதிமுன்கனவுற்(று) உணர்வார் என நிலையற்றார்
ஊணும் உடுக்கையும் அற்றனர் வேற்றுமை உருவானார்
மாணும் இருள்பொழுதில் களவேகொடு வயிராய
சாணும் வளர்த்தனர் நீள்வினை யாவர் தடுப்பாரே - 14
(இருவரும் பிடிபட்டு சிறை புகல்)
231
பாவ நெறித் தொழில் இந்நிலையே அவர் பயில் காலை
காவலர் கண்டு பிடித்தனர் மன்னவர் கடை உய்த்தார்
மேவுறுதண்டம் விளைக்கவும் ஆய்ந்து இது வேலைக்கே
தாவுறு வெஞ்சிறை சாலையில் வைக்க தளைத்(து) என்றான் - 15
(தப்பித்து கான்புகல்)
232
அரசன் உரைத்தலும் அம்முறை வைத்தனர் அமர்காலை
இரை சிறிதற்(று) உளம் வாடினர் காப்பவர் இல் வேளை
புரைசெய் விலங்கு முறித்து இல்விடுத்து அயல் போகும் சீர்
உரை தவத்தினர் நேர்என ஓடினர் உயர் கானம் - 16
(ஆறலைக்கும் கள்வராதல்)
233
தூறுஅடர் கானில் அடைந்தனர் வேறு ஒரு தொழில் செய்யார்
ஆறுஅலைக் கள்வர் ஆயினர் சேர்பவர் ஆரேனும்
மாறது செய்து வளைத்து கொடும்படை வாளாலே
ஊறுஅடல் செய்து பறித்து நுகர்ந்து அவண் உறைநாளில் - 17
(ஓர் நல்அந்தணன் கள்வர் வழி வரல்)
234
கரமலி குண்டிகை தண்டு தருப்பை கவின்கொள்ள
வரமறையோர் உருவாகிய தவம்எனும் வடிவாளன்
பரமன் வெண்ணீறு அணி வேணியன் மெய்ம்மொழி பகர்தான
விரதன் எனும் பெயர் அந்தணன் அவ்வழி மேவுற்றான் - 18
(அப்பெரியோன் நன்நெறியும் நீதியும் உரைத்தல்)
235
வேதியன் எய்தலும் வந்து பிடித்தனர் வினைசெய்வார்
நீதி அறிந்தவன் இப்பெருந்தீங்கு கொல் நீர் செய்வீர்
பூதல(ம்) மேல் நரர் ஆதல் கிடைத்த நீர் பொறிஅற்றீர்
தீ(து)இவையாக உன்னீர் எனவே உரைசெய்கின்றான் - 19
(தித்தொழிலால் கீழ்ப்பிறவி கோடி வரும் எனல்)
236
இப்படியே கள(வு) எய்தினிர் எட்டுன்இருபானாம்
தப்புறு கோடிய தாநிர யத்திடை சார்வீர்பின்
ஒப்பரு வேசரியாக முதற்படும் ஒருநூறு
செப்பிய சன்மமும் எய்துவீர் இந்நெறி தீர்காலை - 20
(இதுவுமது)
237
இழிகுலம் மருவிய கடையராய் எய்துவிர் எய்தினும் ஆடைபொன்
மொழிதரும் அனை பதம் இன்றியே முடுகிய பசியடன் நெடியநாள்
பழிதரு தொழில்பல புரிந்து உடல் பற்று அறு காலையில் வேடராய்
வழுஉறு புன்பவம் நூறு உறீஇ மண்ணிடை மாய்குவிர் உண்மையே - 21
(மேலும் அறம் உரைத்தல்)
238
பிண்டி பிறப்பின் இடும்பையே பெய்கலனாம் உடல் எய்துவீர்
அன்புறு சுற்றமும் மைந்தரும் மறவு மிகுந்து அலைவார்அரோ
முன்பு கண்அற்றவர் எய்தினால் எய்தினால் மொழிகுவர் நன்னெறி மூடர்க்கும்
இன்பம் உறுங்கதி ஓதுவார் எனபதனால் அறம் ஓதினோம் - 22
(இதுவுமது)
239
முற்பகல் வெய்ய ஒருத்தர்பால் முன்னுறவே செயில் அன்ன நோய்
பிற்பகலே பெரிதாய் வரும் பின்னர் அகற்றவும் ஆகுமோ
மற்பயிலும் புயவீரர் நீர் மற்(று)இனி யாவர் மொழிந்திடீர்
அன்(பு)உறும் பால் உளன் என்றலும் அன்னவன் முன்அரிது ஓதுவார் - 23
(தீயவர் உரைகேட்டு தாள் பணிதல்)
240
நால்மறையாள நின் மெய்யினில் நண்ணும் வெண்ணீறு மெய்நண்ணியும்
நூல்முறை நின்மொழி கேட்டூ மியா நுண்அறிவு எய்தினம் என்றவன்
கால்மலர் முன்னர் பணிந்தனர் காண ஒணா நெடும் தீயர்க்கு
மேல் முறையாளர் கண் ஓர் கணம் மேவிடில் நல்நெறி மேவுமே - 24
(அவர் மேலும் மாற்று கூறல்)
241
வந்து பணிந்துஎழு அக்கினி வண்ணனும் தம்பியும் மால்அற
முந்து சரித்திரம் யாவையு(ம்) முற்ற மொழிந்திட வேதியன்
இந்த வினைத்திறம் யாவையும் இக்கணமே அறும் எய்தினால்
செந்தமிழ் நாட்டினில் ஒர்தலம் செப்புவம் என்றது(ம்) செப்புவான் - 25
(தீர்த்தம் பலஆடி காவிரிஅணி நள்ளாறு வழி அமாழிதல்)
242
கோன்மதி ஐம்பதோடு ஆறுஎனும் கோடி விளங்கிய தீர்த்தமும்
மேன்மதியால் இனிது ஆடவே வெவ்வினை போக்கிய பொன்னியின்
சேன்மதி மீன் எதிர் தாவுறும் தென்கரை யோசனை ஒற்றையில்
நுண்மதியாளர் விரும்பும் ஊர் நுவல்பெயர் ஆதி நளேச்சுரம் - 26
(சொற்படி ஏகுக யாம் மீண்டு நள்ளாறு வரும் எனல்)
243
மாலவன் எண்திசை வானவர் மண்ணவர் தாம்பலர் வந்(து)அவண்
சால வரும் துயர் நீங்கியே தாஅறும் இன்பம் அடைந்தனர்
மேலவர் ஓதிய அத்தலம் மேவி அயன்தடம் ஆதியில்
சீலம்வரு புனல்ஆடு நீர்செல்லுழி யாமும் அங்கு எய்துவோம் - 27
(மாயை தெளிய சொற்படி காவிரி நாடு அடைதல்)
244
என்று விளம்பி மறைபொருள் யாவும் உணர்ந்தவன் ஏகினான்
அன்று கடும்தொழில் நீங்கியே அக்கினி வண்ணனும் தம்பியும்
துன்றிய பித்து ஒழிந்தார் எனத் தோமுறு மாயை அகன்றுமாக்
கன்று நினைந்து பாலான்சொரி காவிரி நாட்டினில் அணைந்தனர் - 28
(க¨விரிநல்நாட்டு வளம்)
245
எங்கணும் வானவர் ஆலயம் எம்மருங்கும் அகச்சாலைகள்
சங்கு நிரம்பு வரம்பு நீர் சாலிகள் எத்திசை யாவையும்
பொங்கலர் வாழையும் தாழையும் பூகமுமே புறச்சோலைகள்
தங்கி நிரம்புவார் வானவர்தம் திருநாடுஎன ஓதினார் - 29
(இதுவுமது)
246
மின்மணி மாமுடிச் சோழர்கோன் விண்ணினும் மண்ணினும் வாங்கிய
பன்மணி ஊடு விளங்கிய பைம்பொன் நெடும்படி சேர்துறை
கன்மணி சேர்மதிலின் புறம் காய்உதிரும் கமுகு உச்சிமேல்
பொன்மணி மூ(து)அலை வீசிய பொன்னியின் நல்நதி ஆடினார் - 30
(இதுவுமது)
247
தென்புறம் அகன்று கன்னல் தெறித்து முத்தராசி
வன்புறப் பரல்சேர் பூங்கா வழி வெயில் அறியார் போந்து
பொன்புறச் சாலி ஈட்டும் பொற்பு பொன்மலை என்று எண்ணி
மின்புற முகில் படுக்கும் மேன்மை நள்ளாறு கண்டார் - 31
(இதுவுமது)
248
முத்(து)அலை நீரில்வாழு(ம்) மொய்அடை கயல்கள்கள் மாவின்
கொத்(து)அலைக் கனியைத் தாழ்த்த கோட்டிடை உண்ண அன்ன
நத்(து)அலை வாவிமேவும் நளின வண்ணப் பூந்தேனைத்
துய்த்திட மந்தி பாயும் சோலைகள் பலவும் கண்டார் - 32
(இதுவுமது)
249
ஒருவரால் கிழிக்க ஒண்ணா உறைமுகில் கிழிந்து தேயத்
தருஅறா மலர்த்தேன் சிந்தத் தடம்கயல் கண்இமைத்து
வெருவரா அமரர் மாதர் மெல்விரல் நெரித்(து) ஒதுங்கப்
பருவரால் வாளைபாயும் பனித்தடம் பலவும் கண்டார் - 33
(இதுவுமது)
250
வல்எனப் பணைத்த கொங்கைக் கடைச்சியர் மருதம்பாடி
ஒல்என நட்ட செய்யின் உறுகதிர் போர் அடித்து
வில்எறி கமலம் முற்றும் விரித்தநல் வித்து தூற்றி
கல்என கழித்த செந்நெல் களங்கல் பற்பலவும் கண்டார் - 34
(இதுவுமது)
251
ஆதவன் உதயம் செய்ய ஆழநீர் மங்கையர்தன்
தா(து)அவிழ் வதனம் அன்ன தாமரை விழியா(ல்) நீலம்
காதமர் வள்ளை கண்டக் கவின் வளை என்பவற்றால்
மாதர்மென் வடிவம் காட்டும் வாவிகள் பலவும் கண்டார் - 35
(இதுவுமது)
252
எறிபசுஞ் சாறுமுற்றும் இடம்தெறும் தெறிப்பஆட்டி
பிறி(து)ஒரு சாற்றைமட்(டு) அரும்புகை திரண்டகாவின்
மறிவிழி அமரர்மாதர் மணிமிட(று) என்னப்பூட்டும்
செறிபசும் கமுகம்தாற்றில் தேனிறால் பலவும்கண்டார் - 36
(இதுவுமது)
253
கோழ்அரை வாழைச்செம்பொன் கொடுங்கனி கிள்ளைஉண்ண
வீழ்அரும் தேனை வானின் விரிமழை என்னஅஞ்சி
தாழ்அக(டு)அணைத்த பிள்ளை தன்னொடும் இருந்தமந்தி
தாழையின் மடல்கள் வீழ்த்தே சரேல்எனப் போதல்கண்டார் - 37
(இதுவுமது)
254
கீதமும் மடவார்காலில் கிண்கிணி சிலம்பும்கற்றோர்
வாதமும் நல்லோர்தேவை வழுத்தலும் மாவும்தேரும்
காதமு(ம்) மணக்கும்மாலை மணிகளும் கணக்(கு)இல்நூலும்
வேதமு(ம்) முழக்(கு)அறாத வீதிகள் பலவும்கண்டார் - 38
(இதுவுமது)
255
நஞ்சொடு கூற்றைவென்று நலிவுசெய் விழிகள்கற்றோர்
நெஞ்சையும் கிழித்(து)உலாவ நீள்நிலத்(து) இருந்தமாதர்
விஞ்சையர் வியப்பபாடும் வீணைகேட்(டு) ஆங்கேநின்ற
மஞ்ஞையின் வண்ணம்ஆகும் மணித்திரள் மாடம்கண்டார் - 39
(மேல்செல்ல நள்ளாறணுகல்)
256
ஆடக மலையும்சோதி அவிரும்அந் தரமும்வெள்ளி
நீடக வெற்பும்தேவர் நிறைபெரும் கயிலைதானும்
சேடக வான்மேல் வைப்பும் சேர்ந்தாம் திருநள்ளாற்றில்
நாடகம் ஆடும்தேவ நாயகன் கோயில் கண்டார் - 40
(முன்று தீர்தம் ஆடி கோயிலுள் செல்லல்)
257
முன்இவர்க்கு உறுதிகூறு(ம்) முனிவனும் ஆங்கே எய்த
சென்னியில் அவன்தாள்சேர்த்திச் செறிதுதி பகர்ந்தார்அன்னோன்
மன்னிய தீர்த்தம்மூன்றும் மற்றுள தடமும்ஆட்டப்
பின்னி வரவாவான் ஆடிப் பிறப்பிலான் கோயில்புக்கார் - 41
(மனமுருக பாடி வழிபடல்)
258
அங்குஅவர் இறைஞ்சிபாவத்(து) அழுந்திடாது எம்மைஆண்ட
சங்கர போற்றிஎல்லாச் சமயமும் ஆவாய்போற்றி
பங்கயற்கு அரியாய்போற்றி பாடலுக்(கு) எளியாய்போற்றி
செங்கண்வெள் விடையாய்போற்றி திருநள்ளா(று)உடையாய்போற்றி - 43
(இதுவுமது)
259
நாவில்ஊ(று) அமுதேபோற்றி நாடகம் பயிலவாய்போற்றி
ஆவியுள் உணர்வேபோற்றி ஆயிர முடியாய்போற்றி
தாவில்சீர் விடங்காபோற்றி தருப்பைஆ ரணியாய்போற்றி
காவிஅம் கண்ணிபாகக் கருணைவா ரிதியேபோற்றி - 44
(இதுவுமது)
260
என்றுகை குவித்(து)உள்ஏகி எம்பெரு மானைக்கண்டு
துன்றுகண் அருவிபாயத் துளங்கியே அவசம்ஆகி
நின்றுபின் தெளிந்துவாங்கு நீ(று)அணிந்(து) அந்தணன்பின்
சென்றுமா தளிகள்முற்றும் சேவித்து வலம்புரிந்தார் - 45
(மூன்று திங்கள் மடம் தங்கி வழிபட்டு காலமாதல்)
261
அம்முறை மாத(ம்)மூன்(று)அங்(கு) அடைந்தனர் அயன்விதித்த
தம்முறை காலம்வந்து சாரதலும் தென்பால் வீதிச்
செம்முறை மடத்தில்காயம் தீர்த்தனர் தீருங்காலைக்
கம்முறை கரத்தான்வந்து காதில்மந் திரம்உரைத்தான் - 46
(நள்ளாற்றினில் வழிபட்டு இறக்க நற்பேறு பெறுதல்)
262
ஆதியான் போலமேனி அடைந்துவான் ஊர்திஊர்ந்து
கோ(து)அறு சிவபுரத்தில் குடிபுக்கார் என்றுசூதன்
ஓதலு(ம்) மகிழ்ந்துதீர்த்தம் ஊர்ப்பெரும் தன்மைஎல்லாம்
வேதியர் விளங்ககூற வேண்டும்என்(று) உரைப்பச்சொல்வான் - 47
திருச்சிற்றம்பலம்
அக்கினிவண்ணச் சருக்கமுடிவு
ஓன்பதாவது
தீர்த்த சருக்கம் Up
(பிரமன் இந்தரன் திசைபாலர் லிங்கம் தீர்த்தம் தம்திசைகளில் அமைத்தல்)
263
இந்திரன் முதலாம்எண்மர் இலிங்கமும் தீர்த்தம்தானும்
தம்திசை இடத்(து)அமைத்தார் சதுர்முகன் இலிங்கம்தீர்த்தம்
முந்திய கடவுள் கீழ்பால் மொழியும் அம்(பு) இடு தூரத்தில்
சுந்தர மாய்வகுத்தான் சுராசுரர் வணங்கிஏத்த. - 1
(திருமால் காசிபன் வாயு நளன் என்போர் அவ்வாறே வழிபடல்)
264
செங்கண்மால் வன்னிதிக்கில் சிவலிங்கம் வகுத்தான்தென்பால்
தங்குகா சிபனேஇலிங்கம் தாபித்தான் வாயுதிக்கில்
துங்கமா நளன்நன்றாகச் சொல்அரும் கூபம்தொட்டே
அங்கண்உத் திரத்தி(ல்)இலிங்கம் அழ(கு)உற அமைத்தான்அன்றே - 2
(அகத்தியன் உருசி அர்ஜுனன் போஜன் பாஞ்சாலன் வழிபடல்)
265
அகத்தியன் உருசிமன்னன் அத்திசை இலிங்கம்கண்டார்
மிகுத்தசீர் வடக்கி(ல்)லிங்கம் விஜயன்ஒன்(று) அமைத்தான்போஜன்
நகப்புயப் பெரும்பாஞ்சாலன் நவினும்ஈ சானதிக்கில்
வகுத்தனர் இலிங்கம்எல்லாம் மன்னுபத் துடனோ(டு)ஏழே - 3
(13 தீர்த்த நீர் ஏதும் கைப்பட்டாலே வினை போம்)
266
வாணிதென் புறுத்தும்அன்ன வடபுறம் தெடர்ந்துமேற்கும்
காணுற வகுத்ததீர்த்தம் இரண்(டு)எனக் கருதிமுன்சொல்
பாணிசேர் தீர்த்தம்எல்லாம் பத்துடன் ஒருமூன்றாகும்
சேண்நிலப் புனல்கரத்துத் தீண்டினும் பாவம் போமால் - 4
(மார்கழியில் நீராட நோய்தீரும் எனல்)
267
சொல்லிய பிரமதீர்த்தம் தோய்ந்திடில் பிரமம்எய்தும்
வில்லிஞா யிற்றில்மூழ்கில் வெம்முயல் கன்மமுன்னாப்
புல்லிய பிணிகள்எல்லாம் பொங்கிய காட்டுத்தீமேல்
மெல்லிய பஞ்சிஎன்ன அக்கணம் விளிந்துபோமே - 5
(வறுமையுற்றால் நீர்சிவக்கும். திங்கள் முழுதும் வழிபாடு)
268
மேதினிக்கு விபரீதம் எய்து(ம்) நாள்
சீத அப்புனல் செம்மை நிறம்படும்
ஏதம் ஒவ்வொரு திங்களின் எய்துமுன்
நாதன் பூசை மிகச்செயின் அன்றரோ - 6
(பேச்சுத்திறன் பெற வாணிதீர்த்தம் ஆடுக)
269
தாமரை தரளத்(து) ஒளி தங்கிய
காமர் வாணி கயத்தினில் ஆடினால்
ஏம வானத்(து) இறங்கும் அமு(து)என
ஊமரும் கவிபாடுவர் உண்மையே - 7
(தீர்த்தநீர் மகிமையல் நள்ளாறு வாழ்நர் கலைவளம் மிக்கார்)
270
மின்னு நூபுர வாணி விரிதடம்
துன்னு நீரிடைத் தோய்ந்தும் அருந்தியும்
மன்னும் அப்பதி யோர்கலை வல்லர்தாம்
என்னும் மேன்மை இசைக்கவும் வேண்டுமோ - 8
(அன்ன தீர்த்தம் பசுக்கொலை பாவமும் தீர்க்கும்)
271
ஓதி அத்தடம் ஆடினர் ஒப்பிலா
நாதன் போல்உரு எய்துவர் நற்பசு
வேத முற்ற கொலைகள் இயற்றிய
பாத கர்க்கும் இனிமை பயக்குமே - 9
(குறைகள்நீங்க ஆவணி முழுநிலாநாள் மூழ்கி வழிபடுக)
272
சிங்கத் திங்களில் திங்கள் நிறைந்தநாள்
அங்கணத் தடமாடி அகத்தயன்
துங்க லிங்கம் தொழுபவர் யாவரும்
பங்க(ம்) நீங்கி பரகதி சேர்வரே - 10
(அகத்தியன் முதலோர் தங்குதலால் நீரின்பலன் பலப்பல)
273
அகத்தியன் சனகாதியர் யாவரும்
அகத்த சாலையின் வைகுவர் அக்கரை
தகப்படும் பரத்தன்றி தவத்தின்நீர்
இகத்தினில் பலன் யாவையும் நல்குமே - 11
(திங்கள் முதல்நாள் நளதீர்த்தம் மூழ்க சிவன் போலாவர்)
274
எண்ணும் மாதப் பிறப்புகள் யாவினும்
அண்ணல் யானை அரசன் நளன்தடம்
தண்ணம் தீம்புனல் ஆடினர் சங்கரன்
வண்ணம் எய்துவர் இம்மையும் வாய்க்குமே - 12
(நளகூபத்தை காண்டலே எக்குற்றத்தையும் நீக்குமெனல்)
275
காவல் வேல்நளன் கண்ணுதல் சூலத்தை
ஆவலால் கொனர்ந்து ஏவ அதுதரும்
தேவ கங்கைச் செழும்புனல் பொங்குபூங்
கூவல் காணில் எக்குற்றமும் நீங்குமே - 13
(நல்லநாட்களில் நீராடி செபதானம் பலன் பன்மடங்கெனல்)
276
ஈருஆம்முதல் எத்தினத்தும் பிராற்(கு)
ஆரஆட்டின் அரன்உரு எய்துவார்
தீர நல்கொடை ஓமம் செபம்எலாம்
கூரஒன்(று) அனந்தம் பலன் கூட்டுமே - 14
(நீர் சிவக்க தீங்கு பரிகாரம் அன்றேல் அரசுக்கு தீங்கெனல்)
277
தீய காலையில் சேரும் பிறநிற
மேஅசைந்(து) எழும்எழு¢ன் மற்று அதற்(கு)
ஆய சாந்தி செய்(து) ஆட்டுக எம்பிராற்கு
ஏயது இல்எனின் மன்னர்க்கு இடர் உறும் - 15
(நளன்தன் கங்கா கூபநீர் இறையாட்டலுக்கு மட்டுமே எனல்)
278
மொழியும் கூவலை உன்னினும் சபார்க்கினும்
கழியும் எப்பிணியும் தரும் நற்கதி
வழியும் அப்புனல் மண்ணவர் ஆடினால்
பழியும் நீங்கலர் பாவமும் எய்துவார் - 16
(நற்கதிபெற இந்திரன் திசைபாலர் தடங்களில் ஆடுக எனல்)
279
வச்சிரன் தடம் ஆதிய வான்தடம்
நச்சியாவர் நயந்துஇனி(து) ஆடினும்
முச்சிரப் படையான் முடியாப் பதம்
அச்சம்அற்று உறையத் தரும் அந்தநீர் - 17
(பிரமன் சமைத்த முர்த்தி பணியின் வேண்டுவரம் சித்தாகும் எனல்)
280
பிரமன் ஆதியர் பெட்போ(டு) அமைத்தசீர்ப்
பரம லிங்கம் பணியிலும் பார்க்கினும்
கரம் முகிழ்ப்பினும் காணினும் கேட்கினும்
வரம் அளிக்கும் கருத்தின் வழியினே - 17
(குலம் பெருமைபெற புரட்டாசி நீராடி தானம் செய்க எனல்)
281
கன்னித் திங்கள் பிதிர்கள்தம் காலமாம்
அன்ன காலத்தில் முத்தடம் ஆடியே
நன்னர் தானம் இயன்றன நல்கினால்
பின்னர்த் தம்குலம் பெட்பொடும் வீறுமே - 18
(மாதபிறப்பு, திருவாதிரை, உவாமுழுமதி நீராடி தொழுக எனல்)
282
வந்த மேடமுன் மாதப் பிறப்பினு(ம்)
நந்தி மாகண நாதன் நாளினும்
முந்து ஈரு(ம்) ஆதியும் முத்தடத்(து)
வந்த நீர்பரந்(து) ஆடுதல் நன்(று)அரோ - 19
(பற்றபல தீயவை புரிந்தோர் வகை இவை எனல்)
283
ஐந்து கொடும் பாதகம் புரிந்தோர் அறத்தைக் கட்டி தாம் உண்பார்
தந்தை தாய் புத்திரர் பசிப்பத் தாம் உண்ணும் சழக்காளர்
எந்தைப் பெருமான் திருப்பணிக்கும் இயல் பூசைக்கும் பழு(து)இழைப்பார்
முந்து மறையோர் நிலனாதி பொருள் கொள் முழு மூர்க்கர் - 20
(இதுவுமது)
284
ஒருவன் செய்த நன்றி கொன்றார் உறவுபோன்று உட்பகை ஆவார்
வெருவந்த அமர்க்கே தமைப் புரந்த வேந்தை விடுத்துப் புறுங் கொடுப்பார்
கரு(வு)அங்கு அழிப்பார் பசுக்காவார் கன்று கூட்டார் கறந்(து)உண்ணார்
தருவம் என்று கடன் கொண்டு தவறிக் கூறித் தாராதார் - 21
(இதுவுமது)
285
ஒழுகு செந்தீப் பாவை புணர்ப்(பு)உறுவம் என்னா ஒருவன் மனை
அழகு நோக்கித் தோய்ந்து உழல்வார் அளிப்பம் எனச் சொற்று அளியாதார்
குழக மகவை வதை புரிவார் கூடாச் சாட்சி உரைத்து நிற்பார்
கழுகுபோல விடக்(கு) உண்பார் கல்லாக்கல்வி பயின்றிடுவார் - 23
(இதுவுமது)
286
தமக்கு நுண்நூல் பொருள்உரைப்போர் தம்மைப் பின்பு பழித்(து) உரைப்பார்
நமக்(கு) ஒப்பு ஒருவர் இல்லைஎன நடலை வாழ்வில் செருக்(கு) உற்றார்
சுமக்கும் பணி முன்னாள் பணித்துத் துளங்கக் கொண்டு கூலிக்கொடார்
அமர்க்குள் வஞ்சம் புரிந்து கொல்வார் அற்றார்க்கு உண்டி அருளாதார் - 24
(இதுவுமது)
287
தண்ணீர் சோறு நீறு லிங்கம் தக்க அக்கமணி விற்பார்
கண்ணீர் சோர அழும் பிறர்தம் கையில் பொருளைக் கவர்கிற்போர்
உண்ணீர் ஊறல் குளனாதி கட்(கு) ஊறு விளைப்பார் அப்பாவ
மண்நீர் இல்லை என வேண்டுமாறே புரியு(ம்) மதி இல்¡லர் - 25
(இதுவுமது)
288
குடிகள் முறையோ எனப் புலம்பக் கொடுங்கோல் புரிவார் தண்டங்கள்
நெடிய மனுநூல் முறை புரியார் நிலத்தைத் தம்வீ(டு) எனக் காவார்
கடிய மனையில் எரி இடுவார் கடையர் மடவார் நலம் துய்ப்பார்
படியில் பங்கு வியன் கொள்ளார் பழித்துத் திரியும் பயனற்றார் - 26
(இதுவுமது)
289
நாழி குறைப்பார் நிறையில் வஞ்ச நடையே புரிவார் நவில் வழக்கை
ஊழின் உரையார் ஓர வழக்(கு) உரைப்பார் தேவர்க்(கு) உறைவிடமாம்
வாழி அரசு முதலாம் வாழ்மரங்கள் குறைப்பார் மனமறுகி
ஆழி உலகோர் இடுக்கண் உற அறம் செய்வார் போல் மறம் செய்வார் - 27
(இதுவுமது)
290
தேவர்க்(கு) எனவே நேர்ந்து வைத்து திரும்ப அந்த பொருள்கொள்வார்
கோயில் சனத்தை ஏவல் கொள்வார் குடை வெண்கவரி சிவிகை முதல்
மேவப்படும் பல்கருவிகள் தம்வீட்டுப் பணிக்குத் தாம் கொள்வார்
பாவத்(து)உறு எண்நான்கு குற்றம் பரமன் கோயில் இடை புரிவார் - 28
(இதுவுமது)
291
உடலம் வீட்டில் ஊண் விற்பார் உற்றோர் திரும்பாச் சூ(து) இழைப்பார்
மடல்சேர் நற்பூ நல்உணவு வானோர்க்(கு) அளியார் தான் விழைவார்
கடல் சூழ் உலகில் அடைக்கலங்கள் காவார் மனைவி மக்கள் முதல்
விடல் ஆகாரை நிமித்தம் இன்றி விடுவார் ஈனத்தொழில் விளைப்பார் - 29
(இதுவுமது)
292
தன்னை நம்பி ஒருபொருட்குத் தலைமை செய்தான் தனக்கு வஞ்சம்
பின்னர் தீமைப் புரியும் தீயோர்கள் பெற்ற பொருள் நன்(று)என உவப்பார்
முன்னம் அவன் கைகொடுத்தவன்போல் மோகத்து இகழும் இரவாளர்
பொன் நிகராய்த் தம்பதியைப் போற்றி வணங்காப் புன்கொடியார் - 30
(இதுவுமது)
293
வேறு மனம்தம் பேத(ம்)உறும் வெய்ய பவங்கள் புரிந்தோர்
சீறு மறவி பாசத்தால் சேர்த்துக் கொடுபொய்க் கொலை புரியக்
கூறும் இருபதுடன் எட்டாம் கொடிய நரகில் குடிஇருந்தே
ஏறு நெடும்கா லத்தும்அவர் இழிவும் பிணியும் நேர்ந்(து) எழுவார் - 31
(பாவம் எது புரிந்தேரும் நள்ளாறனைத் தொழ வினைநீங்குவர் எனல்)
294
இவ்வா(று) உள்ள அதிபாவம் இழைத் துளோரும் நல்வினையால்
செவ்வான் சடையான் நள்ளாற்றில் சேர்ந்து மூன்று திருத்தடத்தும்
சைவ(ஆ) கமநூல் உரைத்தநாள் மூழ்கி தானம் சிறி(து)அளித்துக்
கைமான் மழுவோன் அடிபணியில் கடவுள் வடிவம் பெறுவாரே - 32
(உவாமுழுமதி கிரகணம் நாட்களில் நீராட்டுக நற்பேறு பெறுக எனல்)
295
எல்லாமாதப் பிறப்பினும் இரண்டு மாதம் இசைநாளும்
வில்லார் மதியில் காலையினும் வெய்யோன்மதி பாம்(பு) உணும்பொழுதும்
சொல்லா(று) எட்டாம் திதிமுதலாம் சொல்லும் மேன்மைப் போதிடத்தும்
மல்லார் களத்தார் அபிடேகம் ஆட்டில் அவர்தாம் ஆவாரே - 33
(பாடி வழிபாடு செய்க எனல்)
296
ஊனே உயிரே உயிர்க்(கு)உணவே ஒன்றே பலவே ஒளிபவளக்
கானே ஓர்எண் குணக்குன்றே கதியே நிதியே கற்பகமே
வானே நிலனே நிறைபொருளே மதியே கருணை வாரிதியே
தேனே கனியே தருப்பைவனத் தேவே தெய்வச் சிகா மணியே - 34
(இதுவுமது)
297
உள்ளாய்ப் புறம்பாய்த் திகழ்ஞான ஒளியே வெளியே உணக்குறையாத்
தெள்ளார் அமுதே சிவக்கொழுந்தே தேவர்க்(கு)அரசே திருநீங்கா
வள்ளால் வேதா கமப்பொருளே மணியே முத்தே வச்சிரமே
நள்ள(று) உடையான் எனக்கூறி நாதன் அவன்முன் நண்ணியுமே - 35
(இதுவுமது)
298
பாராய்க் கனலாய் நீராகிப் பகரும் காலாய் வானாகிச்
சீரார் தருப்பை வனமூலம் சிறந்த முளையாய்ச் செழுங்கனியாய்
வேராய் வித்தாய் அடங்காத வெவ்வே(று) உருவாய் உருவாகிப்
பேராய் என்நா வினில்ஊறும் பெம்மான் எனவும் பிறப்(பு)அறுமே - 36
(இதுவுமது)
299
இடப(ம்) நிறைந்த மதில் பெரி(து) எங்கும் விளங்கும் கோபுரம்
விடம்அமர் கண்டனைக் கைதொழும் வித்தகர் நற்கதி மேவுவார்
வடநிழல் வைகிய தேவன்முன் வஞ்சம் அற்(று) அஞ்செழுத்(து) ஒதினால்
கடவ(து) என்று ஒருகோடி எண்ணிய யாவையும் நண்ணுவார் - 37
(மலர் வழிபாடு போன்று தூபதீபமும் சிறப்பே எனல்)
300
ஆய்மலர்த் தும்பையின் மாலிகை அண்ணற்கு நண்பகல் சாத்தினால்
தூய்மலர் ஒன்றிற்குக் கோடியாம் சொல்வர் இடம் சிவலோகமே
வேய்மலர் பந்தருள் வாழ்குவார் வே(று)உள மாலைக்கும் அன்னதே
தீமலர் தூபங்கள் செய்தநாள் சேர்த்து விப்பார் கதிசேர்வரே - 38
(ஆடையும் அளிக்க எனல்)
301
காமரு(ம்) பூந்துகில் சங்கரன் கங்குலில் சாத்தினார்க்கு ஓர்இழைக்
காம்ஒரு கோடியுகம் சிவன் அப்பதமே தரும் அக்கமும்
தாம(ம்) உறும் துகிர் முத்தமும் சாத்தி இவை காசினியில் பூரணை
ஏம(ம்) உறும்படி கைதொழின் இம்மையும் உம்மையும் எய்துவார் - 39
(ஆவணியில் கருப்பஞ்சாற்றில் ஆட்டுக எனல்)
302
ஆனியில் பூரணை பைங்கரும்(பு) ஆடிய சாறு கலம்கொடு
கூனிய திங்கள் அம்கண்ணி எம்கோ(து)அறு தேறலுக்(கு) ஆட்டினால்
மேனியின் முன்னர் அடைந்(து) ஒருமெய்பெறத் தோன்று(ம்) அவ்வேளையில் மானிடர் யாவர் வணங்கினும் வானவர் ஆகுவர் உண்மையே - 40
(இரவு தங்கி வழிபடுதல் மிகச் சிறப்பு எனல்)
303
கொந்(து)அவிழும் குழல்மாதரைக் கோள்களவுஎன்று இவைபோல்வதாம்
எந்த விதத்தின் நன்(று) ஆயினும் முன்னாள் ஒருநாள் அவ்வூர்
வந்திருக்கப் பெறின் யாவரும் வான்பதம் எய்துவர் கோயிலுள்
ஐந்து வலம்புரிவார் தமக்கு ஐந்துபெரும் பலன்நேருமே - 41
(பசு காளை தானம் செய்யவோர் பெறும்பேறு சொல்லிலடங்கா எனல்)
304
ஏறு பொறித்துவிடின் மயிர்க்(கு)எண்ணு(ம்) ஓர்கோடியுகம் சிவன்
வீறு பதத்தினில் மேவுவார் மேய்பசுவிற்கும் அவ்வண்ணமே
ஆறுதரித்த நள்ளாறனுக்காம் பணியே துணைஆயினார்
பேறுபெறப் புரிவார் புகழ்பேச அவ்வாசுகி நாணுமே - 42
(அன்னதானம் செய்வோரும் சிவகதி பெறுவர் எனல்)
305
பாடக மெல்லடிப் பாகனார் பவனிவிழா உள்ள நா(ள்)எலாம்
ஆடக வீதியில் சோ(று)இடும் அன்பர்கள் கதித்திறல் ஓதல்என்
பீடுஅகலா அவி ஒன்றிற்கே பேறுகம்தாம் ஒருகோடியே
நாடகம் ஆடும் பெம்மான் பதம் நண்ணுவர் உண்மைஇது உண்மையே - 43
(சூதமுனி புராணத்தை முடித்து தொழுதுஎழ முனிவர் மகிழ்ந்தனர் எனல்)
306
என்று சுருக்கி முடித்துமேல் இன்ப(ம்) நிறைந்(து)உள சூதனை
குன்றுதல் இன்றி விளங்க நீகூறினை என்று துதித்தரோ
துன்று மயிர் புளகத்தொடும் சோதி நள்ளாறினை நோக்கியே
அன்று கரங்கள் குவித்(து) எழுந்து ஆடினர் பாடினர் அந்தணர் - 44
(நள்ளாறன் புராணத்தை சீர்பெற செய்தோர் சிவபுரம் அடைவர் எனல்)
307
சீர்எழுத்தில் பிழை இன்றியே தீட்டினர் கற்றவர் செப்புவார்
ஏர்எழுத்துக்கு உமைசாத்துவார் இன்ப(ம்)உறச் செவிக்(கு) ஊட்டுவார்
ஆரெழுத்து ஐந்துள் நின்றாடிய ஆதி நள்ளாற்றுப் புராண நூல்
ஓர் எழுத்திற்கு ஒருகோடி நாள் ஒப்பில் சிவன்பதி சேர்வரே - 45
திருச்சிற்றம்பலம்
தீர்த்த சருக்கமுடிவு
திருநள்ளாற்றுப் புராணம் முடிவுற்றது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்