Vētamum caivamum


சைவ சமய நூல்கள்

Back

வேதமும் சைவமும்
சு.கோதண்டராமன்


வேதமும் சைவமும்

சு.கோதண்டராமன்

 

 

 

Contents


வேதமும் சைவமும்

அறிமுகம்

1. முன்னுரை

2. வேதமும் சிவனும்

3. தொல்காப்பியக் காலத்தில் சைவம்

4. சங்க காலத்தில் சைவம்

5. யமன் வழிபாடு

6. களப்பிரர் காலம்

7. அம்மையார் காலத்தில் சைவம்

8. அம்மையாருக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்கள்

9. சைவ வளர்ச்சியில் சோழ அரசர்களின் பங்கு

10. சைவ சமயக் குரவர் நால்வர்

11. சங்கரரும் அறுசமய நிறுவனமும்

12. சோழர் எழுச்சிக் காலம்

13. சோழர்களுக்குப் பிந்திய காலம்

14. லிங்க வடிவின் பரிணாம வளர்ச்சி

15. கோயிலின் பரிணாம வளர்ச்சி

16. வழிபாட்டு முறையின் பரிணாம வளர்ச்சி

17. ஆவுடையார் கோவில்

18. அந்தணர்களும் சைவமும்

19. சைவமும் வைணவமும்

20. வருங்காலச் சைவம்

 

 

 

1


வேதமும் சைவமும்


வேதமும் சைவமும்

வேதமும் சைவமும்

சு.கோதண்டராமன்


kothandaramans@yahoo.co.in

அட்டைப் பட மூலம் - http://www.bcagalleries.com/images/Ashok-Kumar-Dey/artworks/AKD4.jpg

அட்டைப் பட வடிவமைப்பு – ஜெகதீஸ்வரன் நடராஜன் – sagotharan.jagadeeswaran@gmail.com

மின்னூலாக்கம் – ஜெயேந்திரன் - vsr.jayendran@gmail.com

உரிமை - creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International.

2


அறிமுகம்

நூல் அறிமுகம்


சைவம் எப்படி பல காலங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்பதையும் அதில் வேதத்தின் பங்களிப்பு என்ன என்பதையும் கூறுகிறது இந்நூல்.

ஆசிரியர் அறிமுகம்


ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். கடந்த 25 ஆண்டுகளாக ஓம் சக்தி மாத இதழில் பல கட்டுரைகளையும் கதைகளையும் எழுதி வருகிறார். இருப்பிடம் சென்னை. தொடர்பு எண் 9884583101

Email – kothandaramans@yahoo.co.in

கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்- இது என்னுடைய சொந்தப்படைப்பு. இதன் கருத்துகளை யார் வேண்டுமானாலும் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம், ஆசிரியர் பெயரைக் குறிப்பிடவேண்டும்

1

சைவ சமயத்தின் தனிச் சிறப்பு என்னவெனில், காலப் போக்கில் வழிபாட்டு முறைகளிலும், வழிபடு பொருளிலும், கடவுளின் பெயரிலும், இயல்புகளிலும் கூடப் பல மாறுதல்களை ஏற்றது தான். சங்க காலச் சைவத்துக்கும் இன்றைய சைவத்துக்கும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வேறுபாடுகள் காணப்படுகின்றன. அச்சம் தரும் தெய்வம் என்னும் நிலையிலிருந்து பாசமுள்ள குடும்பத் தலைவனாக, வழிபடுவோரின் தந்தையாக, காதலனாக, தோழனாக, தூதனாக, ஏவலனாகச் சிவன் பல வகையாகக் கற்பிக்கப்பட்டு மாற்றம் அடைந்துள்ளார். அவரது குடும்பத்தில் புதுப் புது தெய்வங்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றன. புதுப் புது வழிபாட்டு முறைகள், புதிய சித்தாந்தங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த மாற்றங்களை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஆராய முனைகிறது இந்நூல். சைவ சமய வரலாறு என்ற தலைப்பில் தமிழில் பல புத்தகங்கள் உள்ள போதிலும், அவற்றுள் பெரும்பாலானவை பக்திக் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டவையே. அதனால் அவை புராணங்களையும் வரலாற்று உண்மைகளையும் வேறுபடுத்தாது ஏற்றுக் கொள்கின்றன. அவ்வாறின்றி இந்நூல் முற்றிலும் வரலாற்று முறைப்படி எழுதப்பட்டுள்ளது.

“தமிழா, தெய்வத்தை நம்பு. பயப்படாதே, உனக்கு நல்ல காலம் வருகின்றது. …. வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்துகொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே”

என்று பாரதி கூறியதற்கு இணங்கப் புராணக் கதைகளின் உட்பொருள் காண முயன்றிருக்கிறேன். அவை எந்த அளவுக்குச் சரியானவை என்பதை வருங்கால ஆய்வுகள் தெளிவுபடுத்தக் கூடும்.

இதில் கூறப்பட்டுள்ள சில விஷயங்கள் சிலரது நம்பிக்கைகளுக்கு மாறுபட்டவையாக இருக்கலாம். எவரையும் புண்படுத்துவதோ தாழ்த்துவதோ இதன் நோக்கம் அல்ல. சைவத்தின் உண்மையான வரலாற்றை அறிந்து கொள்வதன் மூலம் சைவத்தின் உட்பிரிவுகளிடையேயும், சைவத்திற்கும் பிற சமயங்களுக்கும் இடையேயும் காழ்ப்பு உணர்ச்சி நீங்கிச் “செப்பாத மேனிலை மேல் சுத்த சிவமார்க்கம் திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்” என்பதே வேண்டுவன். தவறுகள் சுட்டிக் காட்டப்படின் திருத்திக் கொள்வேன்.

சிவன் எனும் நாமம், லிங்க வடிவம், ஆடற்பெருமான் வழிபாடு, கோவில், வழிபாட்டு முறைகள் ஆகியவை கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் எப்படிப் படிப்படியாக மாற்றம் அடைந்து வந்துள்ளன என்பதைப் பார்வையிட முனையும் இந்நூல் ஒரு முழுமையான வரலாற்று ஆராய்ச்சி அல்ல. சைவப் பெருவெளியின் ஒரு சிறு பகுதியை ஒரு புதிய கண்ணோட்டத்தில் தர முயன்றிருக்கிறேன். படித்தவை, கேட்ட செவிவழிச் செய்திகள் மற்றும் நமது மக்களின் பழைய பழக்க வழக்கங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டும், நேரடிச் சான்றுகள் இல்லாத இடங்களில் மறைமுகச் சான்றுகளின் அடிப்படையிலும் செய்திகள் தொகுத்துத் தரப் பட்டுள்ளன. இது பற்றிய விரிவான ஆராய்ச்சிக்கு வித்திடுமாயின் இந்நூல் எழுதப்பட்டதன் நோக்கம் நிறைவேறும்.

இதை எழுதி வெளியிடுவதில் துணை புரிந்தோர் பலர் உண்டு. தகவல்கள் திரட்டித் தந்தவர்களில் பலர் முன்னமேயே எனக்கு நண்பர்கள். பலர் உதவி செய்து நண்பர் ஆனார்கள். இதில் காணப்படும் தமிழ்நாட்டுத் தலங்கள் அனைத்துக்கும் நேரில் சென்றபோது ஆங்காங்கு உள்ள பூசகர்கள் மற்றும் உள்ளூர் முதியோர்கள் தகவல் தந்து உதவினார்கள். நூல்கள் தந்து உதவினோரும் உண்டு. அத்தனை பேருக்கும் நன்றி.

2


வேதமும் சிவனும்


வேத ஸம்ஹிதைகளில் சிவன் என்னும் தெய்வம் குறிக்கப் பெறவில்லை என்பது உண்மை. சிவ என்ற சொல் ‘மங்களகரமான’, ‘நல்ல’ என்ற பொருள்களில் தான் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதே அன்றி ஒரு தனித் தெய்வத்தின் பெயராகக் குறிக்கப் பெறவில்லை. சொல்லப் போனால் விநாயகர், முருகன், பார்வதி, ஐயப்பன், திருமாலின் பல வகை அவதாரங்கள் ஆகிய எந்தத் தெய்வமும் குறிக்கப் பெறவில்லை தான்.

சிவனை வேதம் ருத்திரன் என்ற பெயரால் அழைத்தது என்பதும் சரி அல்ல. ருத்திரன் இத்தகையவர் என்று நிர்ணயமாகக் கூறமுடியாதபடி ஒன்றுக்கொன்று முரண்பட்ட கூற்றுகள் வேதத்தில் காணப்படுகின்றன.

ரிக் வேதத்தில் ருத்திரனைப் பற்றிய குறிப்புகளைப் பார்த்தால், பல இடங்களில் மருத் (காற்று) என்னும் தெய்வத்தின் தந்தை ருத்திரன் என்று சொல்லப்பட்டிருக்கிறது.[ரிக் 1.38.7, 1.85.1, 3.26.5] சில இடங்களில் ருத்திரனும் மருத்தும் ஒன்றே என்று கூறப்பட்டுள்ளது. [ரிக் 1.39.4, 1.85.2, 1.166.2] இன்னும் சில இடங்களில் ருத்திரன் அக்னியின் மறுபெயராகக் கருதப்படுகிறார். [ரிக் 1.72.4, 2.1.6, 3.2.5] சில இடங்களில் ருத்திரன் அசுவினி தேவர்களோடு ஒன்றாகக் கருதப்படுகிறார். [ரிக் 1.158.1] அவ்வகையில், காற்றாகவும், தீயாகவும், அசுவினி தேவர்களாகவும் இன்னும் பிறவாகவும் விளங்கும் பரம் பொருளைச் சில இடங்களில் ருத்திரன் என்று வேதம் அழைக்கிறது என்று தான் சொல்ல முடியும்.

யஜுர் வேதத்தில் ருத்திரனுக்கென்று உள்ள தோத்திரங்களில் பெரியது ருத்ரம். (4வது காண்டம் 5வது பிரபாடகம்). அது தான் இன்று சிவ வழிபாட்டில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் மந்திரம். அதில் கூறப்படும் ருத்திரனின் பண்புகளில் சில சிவனுடைய பண்புகளுடன் ஒத்திருந்தாலும், ஒவ்வாதவையும் பல உள்ளன. முதலில் ருத்திரனுக்கும் சிவனுக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பார்ப்போம்.

ருத்திரன் கோபமே வடிவானவர், எருதின் மேல் இருப்பவர் (பப்லுசாய), உமையோடு கூடினவர் (ஸோம), என்று ருத்ரம் கூறுகிறது. ஆதிரை நட்சத்திரம் ருத்திரனுக்கு உரியதாகக் கூறப்பட்டுள்ளது. [யஜுர் 4.4.10.] இவை முறையே பண்டைய தமிழ் இலக்கியத்தில் வழங்கப்பட்டுள்ள காய் கடவுள், புங்கம் ஊர்பவன், நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன், ஆதிரை முதல்வன் ஆகிய பெயர்களுடன் ஒக்கின்றன. மலை மீது வாழ்பவர் என்ற ருத்ரத்தின் குறிப்பு, ‘கடவுள் நிலைஇய கல் ஓங்கு நெடுவரை இமயம்’ என்னும் பதிற்றுப் பத்து 43-6ஐ வலுப்படுத்துகிறது. ரிக் வேதத்தில் பல இடங்களில் நலம் தரும் மருந்துகளுடன் வந்து நோய் நீக்குபவராக ருத்திரன் கூறப்படுகிறார். [உதாரணம் ரிக் 1.43.4, 2.33.4] இது வைத்திய நாதன் என்று இன்று நாம் வழங்குவதுடன் ஒக்கிறது. சிவன் யானைத் தோலையும் புலித் தோலையும் அணிந்தவர் என்று இன்று நாம் வழங்குவதற்கு இயைய யஜுர் 4.5.10.10 மிருகத் தோலை அணிந்தவர் ருத்திரன் என்று கூறுகிறது. யஜுர் வேதம் 1.8.6.9 ருத்திரனை த்ரயம்பகன் (முக்கண்ணன்) என்கிறது. சங்க இலக்கியமும் சிவனை முக்கட் செல்வன் என அழைக்கிறது.

இனி, முரண்பாடுகளைப் பார்ப்போம். பப்லுசாய என்பதற்குப் பொருள், எருதின்மேல் இருப்பவர் எனத் தற்போது கூறப்படுகிறது. உண்மையில் அதன்பொருள் ‘பழுப்புநிறத்தவர்’ என்பதாகும். ஸோம என்ற சொல்லுக்கு ஸோமக் கொடி என்னும் தாவரம் என்று பொருள் இருக்க, தற்போது உமையோடு கூடியவர் என்று பொருள் கொள்ளப்படுகிறது. தற்போது வழங்கும் இவ்விரண்டு பொருள்களும் ஸாயணருக்குப் பிந்திய காலத்தில் ஏற்பட்டதாக இருக்கலாம். மாதொருபாகன் என்ற கருத்தை வேதத்தில் காணமுடியவில்லை. அம்பிகாருத்திரனின் சகோதரியாகக் கூறப்படுகிறார்.[யஜுர் 1.8.6.6]

மிருகங்களின் தலைவர் என்ற பொருளில் பசுபதி என்ற பெயர் ருத்ரத்தில் வருகிறது. சங்க இலக்கியத்திலோ, அம்மையாரின் பாடல்களிலோ மிருகங்களின் தலைவராகச் சிவன் கூறப் படவில்லை. உயிர்களின் தலைவர் என்ற பொருளில் பசுபதி என்ற சொல் வழங்கப் பட்டது சைவ சித்தாந்தம் தோன்றிய பின்னரே.

தமிழ் வழக்கு, சிவனை மணிமிடற்றான், சடையன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் வேதத்தில் ருத்திரன் கழுத்து கறுத்தவர், கழுத்து வெளுத்தவர் என்று இருவகையாகவும் கூறப்பட்டுள்ளார் (நீலகண்டர், சிதிகண்டர் – யஜுர் 4.5.5.1). அதே போல, சடையர் என்றும் மொட்டைத் தலையர் என்றும் கூறப்பட்டுள்ளார் (கபர்தினர், வ்யுப்தகேசர் – யஜுர் 4.5.5.1).

மேலும், வேதத்தில் ருத்திரன் என்ற பெயர் ஒருமையிலும் வருகிறது, ருத்திரர்கள் என்று பன்மையிலும் பேசப்படுகிறது. ருத்திரர்கள் நிலத்தில் 11, நீரில் 11, ஆகாயத்தில் 11 பேர் உள்ளனர் என்று யஜுர் 1.4.10.1 மற்றும் ரிக் 1.139.11 கூறுகிறது. ஆயிரக் கணக்கில் உள்ளவர்கள் என்று யஜுர் 4.5.11.1 கூறுகிறது.

இந்த மந்திரங்களிலிருந்து ருத்திரனின் தன்மை இத்தகையது என்று நிர்ணயிக்க முடியாத நிலையில், வேத தெய்வமான ருத்திரனின் மாற்றுருவமே சிவன் என்று சொல்வதை விட, சிவன் என்னும் கருத்து உருவாகியதில் வேதத்துக்கும் பங்கு உண்டு என்று கூறுவதே பொருந்தும்.

சைவத்தால் வேதம் தாக்கம் பெற்றுள்ளதா ?

ஆம். ருத்ரத்தின்முடிவுரையில்,முக்கண்ணனைவணங்குகிறோம். அவர்சாவின்பிடியிலிருந்துவிடுவிப்பாராக என்று பொருள்படும் சுலோகம் [த்ரயம்பகம்யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகம் இவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாஅம்ருதாத்] தற்போது சொல்லப்படுகிறது. இது ரிக்வேதத்தில் மருத்துக்களைக் குறித்த தோத்திரங்களில் ஒன்றாக உள்ளது. [ரிக் 7.59.12] ஆனால் இதே சுலோகம் யஜுர் வேதத்தில் ருத்திரனைக் குறிக்கும் பகுதியில் தொகுக்கப் பட்டிருப்பதைக் காண்கிறோம். [யஜுர் 1.8.6.9] யஜுர் வேதம் தொகுக்கப்பட்ட காலத்தில் முக்கண்ணனை ருத்திரனுடன் தொடர்பு படுத்தும் முயற்சி தொடங்கி விட்டது என்பதை இது காட்டுகிறது. இது ருத்ரம் என்னும் பகுதியைச் சேர்ந்தது அல்ல எனினும் ருத்ரத்துடன் இணைக்கப்பட்டுப் பாராயணம் செய்யும் வழக்கம் இன்று இருக்கிறது. எனவே இது முக்கண்ணனாகிய சிவன் வழிபாட்டுடன் தொடர்பு ஏற்பட்டபின் சேர்க்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

ருத்ரத்தின் நமகப் பகுதி துவங்குவதற்கு முன் சொல்லப்படும் தியான சுலோகம், (நமஸ்தே அஸ்து பகவன் விச்வேச்வராய மஹாதேவாய என்று தொடங்குவது) வேத மந்திரம் அல்ல எனினும் அது இன்று வேத மந்திரத்துடன் இரண்டறக் கலந்து விட்டது. இதில் தான் ஸதாசிவன், மஹாதேவன் மற்றும் (முக்கண்ணன் என்ற பொருள் தரும்) த்ரயம்பகன் என்ற பெயர்கள் வருகின்றன. முக்கியப் பகுதியான நமகத்திலோ அல்லது முன்னுரையிலோ இவை வரவில்லை. இதுவும் பிற்சேர்க்கை என்பது தெரிகிறது.

அதேபோல, ருத்ரத்தின் இறுதியில் கூறப்படும் மந்திரமான ம்ருத்யவேஸ்வாஹா (யமனுக்கு வணக்கம்) என்பதும் வேதத்தின் மூலத்தில் இல்லாதது. இது யமன் வழிபாடு சிவன் வழிபாடாக மாறியதன் அடையாளச் சின்னமாக நிற்கிறது. –இது பற்றிய விவரம் யமன் வழிபாடு என்ற தலைப்பில் காண்க.

சிவன் என்னும் தெய்வத்தைப் போற்றும் ஸ்வேதாஸ்வதார உபநிஷத், திருநீறு பற்றிக் கூறும் அதர்வசிரம், பிருஹத் ஜாபாலம் ஆகிய உபநிடதங்கள் இயற்றப்பட்டு வேத இலக்கியத்தில் சேர்க்கப்பட்டன.

வேதத்தால் சிவன் வழிபாடு தாக்கம் பெற்றது போல, சிவ வழிபாட்டால் வேதம் ஓதும் முறை தாக்கம் பெற்றதையும் இங்கு காண முடிகிறது

3


தொல்காப்பியக் காலத்தில் சைவம்


தொல்காப்பியர் காலத் தெய்வங்கள்

சைவ சமயத்தின் தாயகமாகத் தமிழ்நாடு கூறப்பட்டாலும் நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்களுள் மிகப் பழமையான தொல்காப்பியம் வழிபடு தெய்வமாகச் சிவனைக் குறிப்பிடவில்லை. இதில் வெவ்வேறு வகை நிலங்களுக்கு உரிய தெய்வமாக திருமால், முருகன், இந்திரன், வருணன் தாம் குறிக்கப்பட்டுள்ளனர்.

மாயான் மேய காடுறை உலகமும்

சேயான் மேய மைவரை உலகமும்.

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும் [தொல்காப்பியம் பொருளதிகாரம் 1-5]

கொற்றவையும் வழிபடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. [புறத்திணை இயல் 4] சிவனைப் பற்றிய நேரடியான அல்லது மறைமுகமான குறிப்பு எதுவும் காணப்படவில்லை.

சேயோன்

தொல்காப்பியர் கூறும் சேயோன் என்ற சொல்லுக்குச் சிவந்தவன் என்ற பொருள் கொண்டு, அது சிவனையே குறிக்கும் என்று சிலர் சொல்வர். ஆனால் இது பொருத்தமுடையதன்று. சங்க இலக்கியங்களில் சேயோன் என்ற சொல் முருகனையே குறிப்பிடுகிறது. சிவனைக் குறிப்பிட ஆலமர் செல்வன் முதலிய வேறு பல சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர சேயோன் என்ற சொல் பயன்படுத்தப் படவில்லை. எனவே தொல்காப்பியர் கூறும் சேயோன் முருகனே.

சேய் என்பதற்குக் குழந்தை என்ற பொருள் உண்டு என்பதால் சேயோன் என்று தொல்காப்பியர் கூறுவதன் மூலம் சேயோனின் தந்தையான சிவன் மறைமுகமாகச் சுட்டப்படுகிறார் என்று கூறுவோரும் உளர்.

தெய்வங்களுக்குள்ளே உறவு முறைகள் கற்பித்தல் காலத்தால் பிற்பட்ட ஒன்று. இது தொல்காப்பியரால் கூறப் பெறவில்லை. சங்க காலத்தில் கூட, கண்ணனும் பலராமனும் தான் சகோதரர்களாகக் காட்டப் பெறுகிறார்களே அன்றிப் பிற தெய்வங்களுக்குள்ளே உறவு முறைகள் கூறப் பெறவில்லை.

முருகனைச் சிவனின் மகனாகக் கூறும் மரபு திருமுருகாற்றுப்படை, பரிபாடல், கலித் தொகை ஆகிய மூன்றில் மட்டுமே காணப்படுகிறது. மற்ற சங்க நூல்களில் இது இல்லை. இம் மூன்று நூல்களும் சங்க காலத்தின் பிற்பகுதியில் ஏற்பட்டவை.

அ . ச . ஞானசம்பந்தனாரின் கருத்து

தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள கடவுள் என்ற சொல் முழுமுதற் கடவுளான சிவனைக் குறிப்பதாகவும், அதே சொல் வெவ்வேறு அடைமொழியுடன் வரும்போது வெவ்வேறு தெய்வங்களைக் குறிப்பதாகவும் இருக்கலாம் என்று அ.ச.ஞா. கூறுகிறார். [பெரிய புராணம் ஓர் ஆய்வு - பக்கம் 59 அ.ச.ஞானசம்பந்தன்] இது ஆதாரமில்லாத ஊகம் என்பது பின்வருவனவற்றால் விளங்கும்.

கடவுள் என்பது ஒரு பொதுச் சொல். வெவ்வேறு அடைமொழியுடன் சேர்க்கப் படும்போது வெவ்வேறு பொருள் தருவது. அடைமொழி இல்லாமலேயே சிவன் என்று புரிந்து கொள்ளக் கூடிய இடங்களில் அடைமொழியைத் தவிர்த்திருக்கிறார்கள். சில இடங்களில் அடைமொழியைப் பயன்படுத்தியும் சிவனைச் சுட்டி உள்ளனர். கலித் தொகை 84இல் ‘கடவுட் கடிநகர் தோறும்’ என்று வரும் சொற்றொடரிலிருந்து பல கடவுளரின் கோயில்கள் இருந்தன என்றும் கடவுள் என்பது ஒரு பொதுச் சொல்லே என்றும் அறியலாம். கலி 93 இல் கடவுளர் என்பது முனிவர் என்ற பொருளில் வருகிறது.

மேலும் அ.ச.ஞா., கடவுள் என்பது சிவனைக் குறிக்கும் என்றும், தெய்வம் என்பது முருகன் முதலான பிறரைக் குறிக்கும் என்றும் ஊகிக்கிறார். தெய்வம் என்பது தேவ என்ற வட சொல்லின் அடியாகப் பிறந்தது எனின், ஒளியுடையது என்று பொருள் தரும். கடவுள் என்ற தமிழ்ச் சொல் உள்ளத்தைக் கடந்து நிற்பது என்று பொருள்படுவது. இரண்டு சொற்களும் ஒரே பரம் பொருளின் வெவ்வேறு பண்பு நலன்களைக் குறிப்பனவே அன்றி இரு வேறு பொருட்களைச் சுட்டுவன அல்ல. மேலும், முருகனைக் குறிக்கவும் கடவுள் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதை அவரே கூறுவதால் அவரது ஊகத்தில் வலு இல்லை.

அன்றி, தெய்வம் என்பதை, நச்சினார்க்கினியர் கூறுவது போல, தைவம் என்ற வட சொல்லின் தற்பவமாக ஏற்று, விதிப்படி நன்மை தீமைகளை மனிதர்க்கு அளிக்கும் சக்தி என்று பொருள் கொண்டால், இது சிறு தெய்வங்களை மட்டுமே குறிக்கிறது என்று சொல்வதற்கில்லை.

வெவ்வேறு நிலங்களுக்கு உரிய தெய்வங்களைக் கூறிய தொல்காப்பியர் எல்லா நிலங்கட்கும் பொதுவாகலின் சிவன் பற்றிக் குறியாது விட்டார் என்ற வாதமும் ஏற்புடைத்து அல்ல. பொருளிலக்கணம் கூற வந்த அவர், சிறு தெய்வங்களை மட்டும் குறிப்பிட்டு விட்டு முழுமுதலை விட்டார் என்பது ஏற்கக் கூடியதாக இல்லை. முழுமுதற் கடவுள் என்ற கருத்துருவே அக்காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. மேலும் தொல்காப்பியத்தில் வரும் கடவுள் என்ற சொல் சிவனைத் தான் குறிக்கிறது என்று கூறுவதற்கான எந்தச் சான்றும் இல்லை. பிற்காலத்தில் சிவனுக்கு உரியதாகக் கூறப்பட்ட தோற்ற அமைப்புகள், அருஞ்செயல்கள், முழு முதலாயிருக்கும் தன்மை, மாற்றாரை அழிக்கும் பெருவீரம் முதலிய பண்பு நலங்கள் எதுவும் கடவுள் என்ற சொல்லுடன் தொடர்பு படுத்தப்படவில்லை.

கந்தழி

தொல்காப்பியத்தில் வரும் கந்தழி என்ற சொல் சிவனைக் குறிப்பதாகச் சிலர் கூறுவர். கந்தழி என்பதற்குக் கல் தூண் என்று பொருள் கொண்டு அது சிவலிங்கத்தைச் சுட்டுவதாகும் என்பர். கந்து என்பதற்கு முற்காலத்தில் பற்றுக் கோடு என்ற பொருளே முதன்மையாக வழங்கி வந்தது. கந்தழி என்பதைக் கந்து+அழி என்று பிரித்து, தன்னுடைய பற்றுக் கோட்டை, தான் சார்ந்த பொருளை அழிப்பதால் அது தீயைக் குறிப்பதாக இளம் பூரணர் பொருள் கொண்டார். அழி என்பதற்கு நீங்கியது என்ற பொருளைக் கொண்ட நச்சினார்க்கினியர் தனக்குப் பற்றுக்கோடு இல்லாது தான் பிறருக்குப் பற்றுக் கோடாக விளங்கும் தத்துவம் கடந்த தனிப் பொருள் என்று கந்தழிக்கு விளக்கம் அளித்தார். சிவ வழிபாடு பெருமளவில் பெருகி இருந்த காலத்தில் வாழ்ந்தும் கூட இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் கந்தழிக்குச் சிவன் என்றோ சிவலிங்கம் என்றோ பொருள் கூறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேறியதாக அதன் சிறப்புப் பாயிரம் கூறுகிறது. வேதம் ஓதுதல், ஓதுவித்தல் உள்ளிட்ட அறுவகைத் தொழில் உடைய அந்தணர் பற்றி அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கம் என்று தொல்காப்பியம் புறத்திணை இயல் 16 கூறுகிறது. அந்தணர்க்கு உரிய வேத நூல் பற்றியும் மரபியல் 71இல் கூறப்பட்டுள்ளது. எனவே தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டில் வேதம் இருந்தது அறியப்படுகிறது. ஆனால் சிவன் வழிபாடு இல்லை என்பதை அறிந்தோம். எனவே தமிழ் நாட்டைப் பொறுத்தவரை வேதத்தை விடக் காலத்தால் முந்தியது சைவம் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. [காலத்தால் பிந்தியது என்பதால் சைவத்தின் பெருமை குறைந்துவிடாது. சமயங்களின் பெருமை அவற்றின் பழமையில் இல்லை. ஆனால் தங்கள் சமயத்தைப் பழைமையானதாகக் காட்டிக் கொள்ளும் விருப்பம் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. கிருத்துவம் தன் பழமையை மோசஸிலிருந்து தொடங்குகிறது. முகமது நபிக்கு முன்னரே 1,84,000 நபிகள் தோன்றினர் என்று இஸ்லாம் கூறுகிறது. சமணம் மஹாவீரரை 24வது தீர்த்தங்கரராகக் காட்டுகிறது. புத்தர் சித்தார்த்தராகப் பிறப்பதற்கு முன் பல பிறவிகள் எடுத்துப் போதித்ததாக புத்த ஜாதகக் கதைகள் பேசுகின்றன.]

முது கடவுள்

சங்க இலக்கியங்களில் சிவன் முது முதல்வன், [புறம் 166] தொல் முது கடவுள் [மதுரைக்காஞ்சி 41] என்று குறிக்கப்பட்டிருப்பதிலிருந்து சிவன் வழிபாடு மிகப் பழங் காலத்திலிருந்தே, தொல்காப்பியர் காலத்திலேயே கூட, இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. தொல்காப்பியர் அதைக் குறிப்பிடாததற்குக் காரணம் என்னவாக இருக்கக் கூடும்? அது உயர்குடி மக்களாலும், நடுத்தர மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படாமல் கீழ்த்தட்டு மக்களிடம் மட்டுமே இருந்திருக்கலாம். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்ற கொள்கைப்படி, கீழ்த்தட்டு மக்களிடம் நிலவிய இந்த வழிபாட்டைத் தன் நூலில் சேர்ப்பதற்குத் தகுதியற்றதாகத் தொல்காப்பியர் கருதியிருக்கலாம். சங்க காலத்தில் இது மேல் தட்டு மக்களிடமும் பரவி இருக்கலாம். [கீழ்வகுப்பினரில் சிலர் செல்வமோ, புகழோ பெற்று மேல்நிலைக்கு வந்துவிட்டால் அவர்களுடன் கூட அவர்களது தெய்வமும் மேல் நிலைக்கு வருவதை இன்றும் பார்க்கலாம். சில மாரியம்மன்கள் இவ்வாறு மேல்நிலைக்கு வந்து சிவாசாரியரால் பூசை செய்யப் பெறுவதும் அங்கு உயிர்ப்பலி நிறுத்தப் பெறுவதும் இதற்கு உதாரணம்.

அல்லது இப்படி இருக்கலாம் – இன்றைய தமிழ்நாடு அல்லாத ஒரு பகுதியில் வாழ்ந்த ஒரு தமிழ்க் கூட்டத்தினர், சிவனை நெடுங்காலமாக வணங்கி வந்திருக்கக் கூடும். அது பற்றித் தொல்காப்பியர் அறியாதிருக்கலாம். அக்கூட்டத்தினர் தொல்காப்பியர் காலத்துக்குப் பின் தமிழ்நாட்டில் குடியேறி இருக்கலாம். அவர்களுடன் சிவன் வழிபாடும் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கக் கூடும். தமிழ் மண்ணுக்கு வேண்டுமானால் சிவன் புதியவராக இருக்கலாம். ஆனால் மக்களைப் பொறுத்தவரை அவர் தொல்முது கடவுளாகவே இருக்க வாய்ப்பு உண்டு.

4


சங்க காலத்தில் சைவம்


சங்க நூல்கள் தொல்காப்பியத்தை விடக் காலத்தால் பிற்பட்டவை. இவற்றின் காலம் கி.பி. முதல் இரு நூற்றாண்டுகளை ஒட்டியது என்று கருதப்படுகிறது. சங்க நூல்களில் தான் முதன் முதலாக இன்று நாம் சிவன் என்று அழைக்கும் தெய்வத்தைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. ஆயினும் சிவன் என்ற பெயர் மட்டும் காணப்படவில்லை.

தொல்காப்பியர் காலத்தில் இல்லாது சங்க காலத்தில் ஏற்பட்ட ஆலமர் கடவுளின் வழிபாடு தமிழ்நாட்டுக்கு எங்கிருந்து வந்திருக்கும் என்று அறிய சிவனின் தோற்ற அமைப்புகளை ஆராய வேண்டும். அவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

சிவனின் தோற்றம்

ஆலமரத்தடி அமர்தல், தவக்கோலம், எருதேறுதல், சூலம்

மலையில் வாழ்தல், சிவந்த நிறம், கோபத் தோற்றம், முக்கண், மார்பில் பூணூல், தோலாடை, ஆதிரை நட்சத்திரத்துடன் தொடர்பு, வில் ஏந்தி இருத்தல்.

சுடலையில் வாழ்தல், நீறு பூசுதல், மழு.

இவை முறையே சிந்து வெளி, வேதம், சுடலை மாடன் ஆகியவற்றின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம். இவற்றில் முதல் இரண்டு அம்சங்களின் சேர்க்கையைத் தான் நாம் சங்க காலத்தில் பார்க்கிறோம். சங்க காலத்துக்குப் பின் சுடலை மாடன் வழிபாட்டின் தாக்கம் ஏற்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. தாழ்சடை, மணிமிடறு, தலையில் ஆறு, சந்திரன், கோவணம், பாம்புகளை அணிதல், உமையொருபாகனாயிருத்தல், திரிபுர தகனம் ஆகியவற்றிற்கான அடிப்படைகளை இந்த மூன்றிலும் அறிய முடியவில்லை.

சங்க இலக்கியங்களில் சிவன் தாழ்சடை பொலிந்த அருந்தவத்தோன் [புறம் 1], முக்கட் செல்வன் [புறம் 6 ], கறைமிடற்று அண்ணல் [புறம் 55], நீலமணிமிடற்று அண்ணல் [புறம் 91 ], முதுமுதல்வன் [புறம் 166 ], நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் [ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து], மழை தலை வைத்தவன் [ஐங்குறுநூறு 207], காய் கடவுள், பைங்கட் பார்ப்பான் [பரிபாடல் 5], புங்கம் ஊர்பவன், மறுமிடற்று அண்ணல், ஆதிரை முதல்வன் [பரிபாடல் 8], சலதாரி [பரிபாடல் 9], முக்கணான் [கலித்தொகை 2], ஈர்ஞ்சடை அந்தணன் [கலித்தொகை 38], ஆலமர் செல்வன் [கலித்தொகை 81], கணிச்சியோன் [கலித்தொகை 103], செவ்வான் அன்னமேனியான் [அகநானூறு கடவுள் வாழ்த்து] முதலிய பல அடைமொழிகளால் குறிக்கப்படுகிறார்.

திரிபுர தகனம் பற்றிய குறிப்பு பாலைக் கலியின் முதல் பாடலிலும், நெய்தல் கலியின் இறுதிப் பாடலிலும் கிடைக்கிறது. அவரது பூணூல், மூவாய்வேல், உமை, செம்மேனி, செஞ்சடை, புலித்தோல், தொன்முறை மரபு ஆகியன அகநானூற்றுக் கடவுள் வாழ்த்தில் காட்டப்படுகின்றன. சிவன் எப்போதும் வேதம் ஓதுவதாகப் புறநானூறு கூறுகிறது. [புறம் 166]

வேதத்தின் தாக்கம்

காய் கடவுள், மார்பில் பூணூல் அணிந்தவர், தோலாடையர், எப்போதும் வேதம் ஓதும் வாயர் என்று வர்ணிக்கப் படுவதில் வேதத்தின் தாக்கம் தெரிகிறது. தமிழ் இலக்கியத்தில் சிவனைப் பற்றிய முதல் குறிப்புகளாகிய சங்ககாலப் பாடல்களே வேதத் தொடர்புடன் காணப்படுவது குறிப்பிடத் தக்கது. இவற்றுள் கடவுள் வாழ்த்துகளும் கலித்தொகை, பரிபாடல் ஆகிய நூல்களும் காலத்தால் பிற்பட்டவை எனக் கொள்ளினும் புறம் 166இல் காணப்படும் சிவனுடைய வேதத் தொடர்பு பற்றிய குறிப்பு பழமையானது என்பதில் ஐயமில்லை.

நன் றாய்ந்த நீள் நிமிர்சடை

முது முதல்வன் வாய் போகாது,

ஒன்று புரிந்த ஈரி ரண்டின்,

ஆறுணர்ந்தஒருமுதுநூல்

இகல் கண்டோர் மிகல் சாய்மார்,

மெய் அன்ன பொய் உணர்ந்து,

பொய் ஓராது மெய் கொளீஇ,

மூவேழ் துறைபும் முட்டின்று போகிய

உரைசால் சிறப்பின் உரவோர் மருக!

…………

பெரிதும் ஆராயப்பட்ட மிக நீண்ட சடையை உடைய முதிய இறைவனது வாக்கை விட்டு நீங்காததும், அறம் ஒன்றையே மேவியதும், நான்கு கூறு உடையதும், ஆறு அங்கத்தாலும் உணரப்பட்டதுமான ஒரு பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபட்ட நூல்களைக் கண்டவரது மிகுதியைச் சாய்க்கவேண்டி அவரது மெய்போன்ற பொய்மையை உளப்பட்டறிந்து அப்பொய்யை மெய்யென்று கருதாமல் உண்மைப் பொருள்களை அவர்களுக்கு ஏற்பச் சொல்லி இருபத்தோரு வகை வேள்விகளையும் குறையின்றிச் செய்து முடித்த புகழுடைய தலைமையை உடைய அறிவுடையோர் மரபிலுள்ளோனே!

சங்க காலத்தில் சிவனும் முருகனும்

தொல்காப்பியர் காலத்தில் குறிஞ்சி நிலத் தெய்வமாக வழிபடப்பட்ட சேயோன் (முருகன்) பிற தெய்வங்களுடன் உறவு முறை கொண்டவராகக் கூறப்படவில்லை. இதே நிலை சங்க காலத்தின் முற்பகுதி நூல்களிலும் காணப்படுகிறது. பிற்பகுதியில் தோன்றிய திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, பரிபாடல் இவற்றில் மட்டும் ஆலமர் செல்வனின் மகனாக முருகன் குறிக்கப் பெறுகிறார் என்பது முன்னரே கூறப்பட்டது.

புதிதாக வந்த தெய்வத்திற்கு மக்கள் ஆதரவைப் பெற வேண்டி, அதைப் பழைய தெய்வத்துடன் உறவு முறை மூலம் தொடர்பு படுத்தி இருக்க வேண்டும். முருகனும் மலைத் தெய்வமாக இருந்ததால் இமயமலைத் தெய்வமாகிய சிவனை முருகனின் தந்தையாகக் குறிப்பிட்டது மக்களால் எளிதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மலைமகளாகிய உமை அம்மை முருகனின் தாய் என்ற கருத்தும் பரவியது. ஆனால் உமை அம்மையைத் தனித் தெய்வமாகக் காட்டாமல் அதைப் பழைய தமிழ்த் தெய்வங்களான பழையோள், கொற்றவை இவற்றுடன் ஒன்று படுத்தினர். இந்த ஒருமைப்பாடு ஏற்படுத்தப்பட்ட நிலையைத் தான் கீழ்வரும் திருமுருகாற்றுப்படை அடிகள் சுட்டுகின்றன.

ஆல்கெழுகடவுள்புதல்வமால்வரை

மலைமகள்மகனே மாற்றோர் கூற்றே

வெற்றி வேல் போர்க் கொற்றவைசிறுவ

இழையணி சிறப்பிற் பழையோள்குழவி

[திருமுருகாற்றுப்படை 6. 56-59]

பிற்காலத்திய நூல்களும் இதே நிலையை மேற்கொண்டன. இன்று முருகனைச் சிவகுமாரனாகக் கருதும் வழக்கம் நிலைத்து விட்டது.

சிந்து வெளியில் சிவன்

சிந்து வெளி நாகரிகச் சின்னங்களில் காணப்படும் முத்திரைகளில் இரண்டு நமது கவனத்துக்கு உரியவை ஆகின்றன. ஆராய்ச்சியாளர்களால் மஹாயோகி என்றும் பசுபதி என்றும் பெயரிடப்பட்டுள்ள அவ்விரண்டிலும் மூன்று முகம் கொண்ட ஒரு ஆண் உருவம் இரு கால்களையும் மடித்துப் பீடத்தின் மீது வைத்துக் கொண்டு யோக நிலையில் அமர்ந்துள்ளது. அந்தக் களிமண் தட்டுகளில் சில சித்திர எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. அவை இன்னதென்று இதுவரை உறுதியாகக் கண்டறியப் படவில்லை.

மஹாயோகியின் தலை மேல் இருப்பது கொம்புடன் கூடிய கிரீடம் என்று கருதப் படுகிறது. அது மரத்தைக் குறிக்கும் அடையாளமாகவும் இருக்கக் கூடும். அவ்வாறாயின் அவ்வுருவத்தை ஆல்கெழு கடவுளின் முன்னோடியாகக் கருத வாய்ப்பு மிகுதி. இல்லாவிடினும் அவரது யோக நிலை தட்சிணா மூர்த்தியையே நினைவூட்டுகிறது. அவ்வாறே பசுபதியைச் சுற்றி நான்கு மிருகங்கள் காணப்படுகின்றன. இவையே பிற்காலத்தில் ஆலமர் செல்வனைச் சுற்றி அமர்ந்துள்ள நான்கு முனிவர்களாக மாற்றம் பெற்றிருக்கலாம்.

சிந்து வெளி நாகரிகம் தமிழ் நாகரிகத்தோடு தொடர்பு உடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவர்களில் ஒருவரான சர் ஜான் மார்ஷல் பின் வருமாறு கூறினார். “யோகிகளுக்கெல்லாம் தலையான யோகி சிவன். அதனாலேயே அவருக்கு மஹா தபஸ்வி, மஹா யோகி என்னும் பெயர்கள் அமைந்தன. சைவத்தைப் போலவே யோகமும் ஆரியருக்கு முற்பட்ட மக்களிடையே தோன்றியதாகும். சிவன் தலையாய யோகி மட்டுமல்லர், விலங்குகளுக்கெல்லாம் தலைவர், (பசுபதி). சிவனின் இந்தப் பண்பினையே சிவனைச் சுற்றி நிற்கின்ற நான்கு மிருகங்கள் (யானை, புலி, காண்டாமிருகம், எருது) காட்டுகின்றன. சிந்துவெளிக் கடவுளின் தலையில் அமைந்துள்ள கொம்புகள், பிற்காலத்தில் சிவனின் விசேட அடையாளமாக விளங்கிய திரிசூலமாக மாறியது. அவற்றையெல்லாம் நோக்கும் பொழுது பிற்காலத்திலே சிவனுக்கமைந்த பல அம்சங்கள் தோற்ற நிலையிலே சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுகின்றன என நாம் கருதலாம்.” [பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும். க.கைலாசபதி- தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி என்ற கட்டுரை ]

மயிலாடுதுறை அருகில் சிந்து வெளி எழுத்துகளுடன் கூடிய கல் கோடரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக 1-5-2006 செய்தித் தாளில் வெளியான செய்தியும் இவ்விரு பகுதிகளுக்கிடையே கலாசாரத் தொடர்பு இருந்ததை நிரூபிக்கிறது. எனவே இன்று தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படும் ஆலமர் கடவுளின் வழிபாடு சிந்து வெளியிலிருந்து வந்திருக்கலாம்.

கைலாசநாதர்

சிந்து வெளி மக்கள் வணங்கியது பசுபதி மற்றும் மஹா யோகி என்று கொண்டால் அவ்வழிபாட்டுக்கு மூலம் எதுவாக இருக்கக் கூடும்? முற்காலத்தில், இமயமலையே கடவுளாகக் கருதப்பட்டு வணங்கப்பட்டது. இன்றும் கூட, அது தொடர்கிறது. இதுவே சிந்து வெளியில் மஹாயோகி வழிபாடாக மாறியிருக்கக் கூடும்.

இது ஒரு ஊகம் தான், இருப்பினும் கீழ்க்கண்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்தது. இதை வலுப்படுத்தக் கூடிய அல்லது மறுக்கக் கூடிய சான்று கிடைக்கும் வரை இதைத் தற்காலிகக் கற்பிதக் கொள்கையாகக் கொள்ளலாம்.

சிவனின் தோற்றம் பற்றியும் அவரது அருஞ்செயல்கள் பற்றியும் வழங்கி வரும் கதைகள் இமய மலையே சிவனாகக் கருதப்பட்டு முற்காலத்தில் வணங்கப்பட்டது என்பதை உறுதிப் படுத்துகின்றன.

சிவனின் இருப்பிடம் இமயத்தின் மீதுள்ள கைலாயம் என்பது தொன்மையான வழக்கு. இமயமலைப் பகுதியில் மட்டும் கிடைக்கும் ருத்திராட்சம் சிவனின் கண்ணாகவும் மிகப் புனிதமானதாகவும் கருதப்படுகிறது. சிவனுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படும் வில்வ மரம் வட இந்தியாவில் தோன்றிப் பின்னர் நாடு முழுவதும் பரவியது என்று தாவரவியலார் கூறுகின்றனர். நேபாளத்தில் கன்னிப் பெண்கள் அனைவரும் முதலில் வில்வத்துக்கு மணம் முடிக்கப்படுகின்றனர். பேல் பஹா என்ற பெயரில் இது ஒரு விழாவாக நடக்கிறது. அதனால் வில்வம் இமய மலைப் பகுதிகளில் தெய்வத் தன்மை கொடுக்கப்பட்டதை அறிய முடிகிறது. எனவே சிவன் வழிபாடும் நேபாளத்தை ஒட்டிய இமயமலைப் பகுதிகளில் ஏற்பட்டிருக்க வேண்டும் என எண்ண இடமுண்டு.

பன்னிரண்டு ஜோதிர் லிங்கத் தலங்களில் வடகோடியில் இமயமலை மீது உள்ளது கேதார்நாத். இது தேவாரத்தில் திருக்கேதாரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு லிங்கமோ, உருவமோ இல்லை. மலையின் உச்சியே இறைவனாகக் கருதப்பட்டுப் பூசிக்கப்படுகிறது. அந்த உச்சிப் பகுதியைச் சுற்றி சிறு தொட்டி போல் கட்டி இருக்கிறார்கள். பக்தர்கள் வெளியில் அமர்ந்து தொட்டிக்குள் இருக்கும் மலைப் பகுதிக்கு அபிஷேகம், அர்ச்சனை முதலியன செய்கிறார்கள். இமயமலையே சிவ சொரூபமாக வணங்கப்படுகிறது. இன்று திருவண்ணாமலை சிவ சொரூபமாகக் கருதப்படுவதை ஒப்பு நோக்குக.

கேதாரம் சென்று வந்தவர்கள் தங்கள் பயணக் காட்சியை நினைவுக்குக் கொண்டு வந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அது எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து சிவனின் தோற்றத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

செல்லும் வழி எல்லாம் அடர்ந்த காடுகள். கறுத்து இருண்ட அப் பகுதி சிவனின் கழுத்தாக உள்ளது. உயர்ந்த மரக் கிளைகளும் இலைகளும் அவரது சடையாக உள்ளன. ஆங்காங்கு ஊரும் பாம்புகளும், பாம்பு போல் நெளிந்தோடும் அருவிகளும் சிவனின் ஆபரணங்களாக உள்ளன.

காட்டில் வாழும் பல ஆயிரக் கணக்கான மிருகங்கள் பசுபதி என்ற அவரது பெயரை நியாயப்படுத்துகின்றன. தென்னாட்டு மலைகளை விடச் சிவப்பாக உள்ள இமயத்தின் மண் அவரது செம்மேனியை நினைவூட்டுகிறது. படிந்து கிடக்கும் பிரம்மாண்டமான பனிப் பாறைகளும் அவற்றிலிருந்து சிறிதே கசிந்து வரும் அருவிகளும் கங்காதரன் என்ற பெயரைக் காட்டுகின்றன. மேலே செல்லச் செல்ல காடுகள் அருகி வெட்ட வெளியாகவும் அதற்கும் மேலே பனி படிந்த பகுதிகளாகவும் உள்ளன. சூரிய ஒளி பனி மலை மீது பட்டுக் கண்ணைக் கூச வைப்பது சிவனின் நெற்றிக் கண்ணாகத் தோன்றுகிறது.

அங்கே அழகும் கம்பீரமும் ஒருங்கே குடிகொண்டுள்ளன. இதை வைத்துத் தான் உமையும் இறைவனும் ஓருடலாய் விளங்குகின்றனர் என்று கருதினரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அங்கு நிலவும் கம்பீரமான அமைதியை நோக்க ஒரு பெரு முனிவர் தவம் செய்வது போல இருக்கிறது.

கைலாய மலையைப் பெயர்க்க முயன்ற ராவணனைத் தன் பாதத் தனி விரலால் நசுக்கினார் சிவன் என்பது யாரோ ஒரு பெருவீரன் இமய மலையில் ஏற்பட்ட ஒரு நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்த நிகழ்ச்சியைக் கூறுவதாகலாம். சிவன் முப்புரம் எரித்தார் என்பது மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் அழிந்து போன மூன்று நகரங்களின் வரலாறாக இருக்கலாம்.

அறிவியல் சாதன வசதிகள் பெருகியுள்ள இக்காலத்திலேயே இமயமலையின் உச்சியை அடைவது மிகப் பெரும் சாதனையாகக் கருதப் படுகிறது. முற்கால மக்கள் இதைத் தேவர்க்கும் அரிய செயல் என்று கருதியிருக்கக் கூடும். இதுவே திருமாலும் பிரமனும் அடி முடி தேடித் தோற்ற கதையின் பின்னணியாக இருக்கலாம்.

கேனோபநிடதத்தில் ஒரு கதை வருகிறது. பரம்பொருள் ஒரு யட்ச வடிவில் தேவர்கள் முன் தோன்றுகிறது. அது இன்னதென்று அறிய வாயுவும் அக்னியும் முயன்று, அதன் முன் தங்கள் வலிமை மிக அற்பமானது என்று உணர்கின்றனர். இந்திரன் வருகிறான். அப்பொழுது அந்த யட்ச வடிவம் மறைந்து அந்த இடத்தில் இமவானின் மகளான உமா தோன்றுகிறாள். சற்றுமுன் அவர்கள் பார்த்தது பிரம்மமே என்கிறாள்.

வாயுவுக்கும் அக்னிக்கும் அசங்காத பொருள் என்ற விளக்கம் இமயமலைக்கும் பொருந்துவதால் அது கடவுளாகக் கருதப்பட்டது என்ற கூற்று வலுவடைகிறது. யட்ச வடிவம் மறைந்த இடத்தில் உமை தோன்றியது சிவனும் உமையும் ஒரே தெய்வத்தின் இரு வேறு தோற்றங்கள் என்பதைக் காட்டுகிறது.

இந்த மலைக் கடவுளை மனித வடிவத்தில் சித்தரிக்கும்போது இதன் சிறப்பு அம்சங்களை எல்லாம் வைத்துத் தான் மஹாயோகி உருவத்தை அமைத்தனர் போலும். நம் நாட்டவருக்கு இமயமலை தெற்கு நோக்கி அமர்ந்திருப்பதாகத் தோன்றுவதை வைத்து அவரைத் தென்முகக் கடவுளாகச் சித்தரித்தனரோ?

மலையைப் பெயர்க்க முயன்று நசுக்குண்ட ராவணனைக் குறிக்கும் வகையில் தான் தென்முகக் கடவுளின் காலடியில் ஒரு அரக்கன் அமைக்கப் பட்டிருக்கிறான் போலும்.

எனவே இறைவனாகக் கருதப்பட்டு வணங்கப்பட்ட இமயமலையை சிந்து வெளி மக்கள் மனித வடிவில் சித்தரித்து வழிபட்டிருக்கலாம். அங்கிருந்து இவ் வழிபாடு தமிழ்நாட்டுக்குத் தொல்காப்பியர் காலத்துக்குப் பின் வந்திருக்கலாம்.

5


யமன் வழிபாடு


தமிழ்நாட்டில் சிவன் வழிபாடு தோன்றுவதற்கு ஆதாரமானவை 1 வேதத்தின் ருத்திரன், 2 சிந்துவெளியின் மஹாயோகி மற்றும் பசுபதி, 3 சுடலை மாடன் என்று குறிப்பிட்டோம். சங்க காலத்தில் முதல் இரண்டு அம்சங்களின் சேர்க்கையான முக்கண்ணன் வழிபாடு நிலவியதைக் கண்டோம். மூன்றாவதாகிய சுடலை மாடன் பற்றி இப்பொழுது காண்போம்.

மரணம் தான் அன்று முதல் இன்றுவரை மானிடர்க்குப் புரியாத புதிராகவும் நமக்கு மேற்பட்ட சக்தி ஒன்று உண்டு என்பதை நிதரிசனமாக நிரூபிப்பதாகவும் உள்ளது. எனவே ஒவ்வொரு சமயத்திலும் இறைவன் பற்றிய முதல் உணர்வு மரணத்தோடு தொடர்புடையதாகத் தான் இருக்கிறது.

நீத்தார் தலைவன் கூற்றுவன்

வடமொழியில் யமன் என்றும், தமிழ் இலக்கியத்தில் கூற்றுவன் என்றும் கூறப்படும் தெய்வமே தொல் பழம் சமயத் தெய்வங்களுள் ஒன்றாகச் சுடலை மாடன் என்ற பெயரில் வணங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் நீத்தார் வழிபாடு தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. இறந்த முன்னோர்களிடமிருந்து தீங்கு வராமல் இருக்க வேண்டும், அவர்களது ஆசிவேண்டும் என்பதற்காக அவர்களை வணங்கிய மக்கள், நாளடைவில் இத்தகைய முன்னோர்களின் எண்ணிக்கை அதிகமாகவே, நீத்தார்களின் தலைவனை வணங்கினால் எல்லோரையும் வணங்கியதாகும் என்ற முறையில் கூற்றுவனை வணங்கி இருக்கக்கூடும். யமன் தான் இறந்தவர்களில்முதலாமவன், எனவே பித்ருலோகத்தின் முதல் பிரஜை அவனே என்று வேதம் கூறுவதாக மறைமலை அடிகள் சொல்கிறார் [உரைமணிக்கோவை- தென்புலத்தார்யார்என்றகட்டுரை]

சுடலைமாடன் வழிபாடு தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்இ ன்றும் தொடர்கிறது. இத்தெய்வத்தின் கோவிலைச் சுற்றிய பகுதிகளில் ஆலமரம் காணப்படும் நிலையை நாஞ்சில் நாட்டில் பரவலாகக் காணமுடிகிறது என்று முனைவர் அ.கா.பெருமாள் கூறுகிறார். [தொல் பழம் சமயக்கூறுகள் -அ.கா.பெருமாள்]

மாடன் வழிபாட்டின் முக்கிய அம்சம், திருநாளின் போது சாமியாடி ஒருவர், மக்கள் பின் தொடர நள்ளிரவில் சுடுகாட்டுக்குச் சென்று அங்கு சாம்பலில் குளித்து, எலும்புகளை அணிந்துகொண்டு ஊருக்குள் திரும்பி வருவது என்று அவர் கூறுகிறார். சுடலை வாழ்வு, சாம்பல் பூச்சு, அழிக்கும் தொழில், கபாலம் ஏந்தி இருத்தல், ஆலமரத்தடியமர்தல் ஆகிய சிவனின் பண்புகள் சுடலை மாடனிடமிருந்து வந்திருக்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

சுடலை மாடனின் உருவம் மேலே குறுகிச் செல்லும் ஒரு செவ்வகமும் அதன்மேல் ஒரு அரைவட்டமுமாக இருப்பதிலிருந்து தான் சிவலிங்க வடிவம் தோன்றி இருக்கவேண்டும் என்ற அவரது கருத்து சரியாக இருக்கலாம்.

சிவன் வழிபாடு நிலைத்த பின், சிவனுக்குரிய புராணக் கதைகள் சுடலை மாடனுக்கும் உரியதாக ஆக்கப்பட்டன என்று அவர் கூறுகிறார். அது போல, முற்காலத்தில் மாடன் நிச்சயமான உருவம் இல்லாத கந்தின் மூலம் வழிபடப்பட்டு, சிவனுடன் இணைத்துப் பேசப்பட்டபின் லிங்கம் போன்ற உருவம் வழங்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.

சோழ நாட்டுப் பகுதிகளில் சுடலை மாடன் வழிபாடு மறைந்து விட்டது. ஆனால் சிவன் கோவில்கள் பெருமளவில் காணப்படுகின்றன. எனவே இங்கு சுடலை மாடன் வழிபாட்டைச் சிவ வழிபாடு பின்னுக்குத் தள்ளி இருக்கவேண்டும் எனக் கருதலாம்.

பஞ்ச மயானங்கள்

சோழ நாடாகிய தஞ்சை மாவட்டத்தில் மயானம் என்ற பெயர் பெற்ற நான்கு கோவில்கள் உண்டு. அவை திருவீழிமிழலை, சீர்காழி, திருக்கடவூர், நாலூர். இவற்றுடன் வட தமிழ்நாட்டில் உள்ள காஞ்சியையும் சேர்த்துப் பஞ்ச மயானம் என்பர். இந்த இடங்களில் தான் முதன் முதலாக யமன் வழிபாடு சிவன் வழிபாடாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும்.

திருக்கடவூரில் இரண்டு கோவில்கள் உள்ளன. இரண்டும் பாடல் பெற்றவை. பழமையானது கடவூர் மயானம் என்றும், மற்றது கடவூர் என்றும் அழைக்கப்படுகிறது. [இரண்டின் நீள அகலம், அமைப்பு இவற்றிலுள்ள ஒற்றுமையைப் பார்க்கும்போது, கடற்கரை அருகிலுள்ள பழைய கோவில் கடல் கோளால் (சுனாமியால்) அழிந்த பின் மூன்று கிலோமீட்டர் மேற்கே தள்ளிப் பாதுகாப்பான இடத்தில் பழைய அமைப்பை மாற்றாமல் புதிய கோவில் ஒன்றைக் கட்டி இருப்பர் என்ற முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாதது.] பழைய கோவில் இருந்த இடம் முன்பு கூற்றுவன் வழிபாடு நடை பெற்ற மயானமாக இருந்து, பிற்காலத்தில் சிவ வழிபாட்டிடமாக உருமாறி இருக்கலாம். அதன் காரணமாகவே அந்த இடம் மயானம் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.

திருக்கடவூரில் மார்க்கண்டேயனைக் காப்பதற்காகவும், திருவீழிமிழலையில் சுவேதகேது என்னும் ராஜரிஷிக்காகவும், திருவையாற்றில் ஔத்தாலதி என்பவருக்காகவும் சிவன் யமனை சம்ஹாரம் செய்தார் என்ற புராணக் கதைகள், சிவ வழிபாட்டின் முன் யமன் வழிபாடு தோற்றுப் போனதைக் கூறுவதாகவே இருக்கலாம். இதே போன்று வால்மீகி ராமாயணத்தில் 3.30.27 ருத்திரன் அந்தகனை ஸ்வேதாரண்யத்தில் (திருவெண்காட்டில்?) கொன்றது குறிப்பிடப்பட்டுள்ளது.

திருக்கடவூர் மயானம் என்ற பெயர் மருவி இன்று திருக்கடவூர் மெய்ஞானம் என்றே வழங்குகிறது. திருநாலூர் மயானமும் இன்று நாலூர் மெய்ஞானம் என்று வழங்குகிறது. எனவே பேரளம் அருகில் உள்ள திருமெய்ஞானம் என்ற தலம் கூட முற்காலத்தில் திருமயானமாக இருந்திருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது. இவை தவிர வேறு பல தலங்களும் முன்பு மயானம் என்ற பெயர் பெற்றிருந்து தற்போது வழக்கொழிந்திருக்கக் கூடும்.

குடந்தை அருகிலுள்ள நாலூர் மயானம் என்னும் கோவில் தற்போது எந்தச் சிறப்பும் இன்றி இருந்தாலும் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இதுவும் யமன் வழிபாடு நடைபெற்ற இடம் என்று கருத இடமுண்டு.

கோவில்களில் யமன்

தமிழ்நாட்டில் யம தீர்த்தம் என்ற பெயரில் திருக்குளங்கள் உள்ள சிவன் கோவில்கள் சில உண்டு. உதாரணம் – ஸ்ரீவாஞ்சியம், கருவிலி (இது பரணி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது), திருவைகாவூர், திருச்செங்காட்டங்குடி, தாராசுரம்.

ஸ்ரீவாஞ்சியம்

ஸ்ரீவாஞ்சியத்தில் யமனுக்குத் தனிக்கோயில் சிவாலய வளாகத்தின் தென்கிழக்கில் உள்ளது. மாசி மாதம் பரணி அன்று யமனைச் சிவன் ஆட்கொண்டதன் நினைவாக யம வாகனத்தில் சிவன் உலா வருகிறார். மாசி மகத்தன்று விழா முடிவடைகிறது. அவ்வூரில் யமன் க்ஷேத்ர பாலர் என்ற சிறப்புப் பெயரும் பெற்றுள்ளார். அதாவது, அந்தத் தலத்தின் காவல் தெய்வமான தொல் பழம் தெய்வம்.

பொதுவாக, பைரவரைத் தான் க்ஷேத்ரபாலர் என்று சொல்வது வழக்கம். ஆனால் ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள யமனுக்குப் பைரவருடைய அம்சங்கள் (நின்ற கோலம், நாய் வாகனம், ஆடையின்றி இருத்தல்) இல்லை. கையில் ஜபமாலை, தென்முகமாக அமர்ந்து இருத்தல், இடது காலை மடித்து வலது காலைக் கீழே ஊன்றி இருத்தல் கொண்ட அவரது தோற்றம் தட்சிணாமூர்த்தியையே ஒத்து உள்ளது. இங்கு கோவிலுக்கு நேர் எதிரில் தொலைவில் மயானம் அமைந்துள்ளது. மற்றக் கோவில்கள் போல் அல்லாமல், இங்கு சுடுகாட்டில் பிணம் எரிந்து கொண்டிருந்தாலும் பூஜை நிறுத்தப் பெறுவதில்லை என்று அவ்வூர் கைலாச சிவாசாரியர் தெரிவிக்கிறார். எனவே இங்கு சுடலை மாடன் வழிபாடே சிவன் வழிபாடாக உருமாறி இருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு.

திருவலஞ்சுழி

திருவலஞ்சுழி சிவன் கோவிலில் க்ஷேத்ரபாலர் சன்னிதி ஒன்று இருந்தது. தற்போது இல்லை. இதுவும் கோயில் வளாகத்தின் தென்கிழக்கு மூலையில் தனிக் கோயிலாக விளங்கியது. இக் கோயிலில் நடைபெற்ற வழிபாடு பற்றிக் கல்வெட்டு கூறும் தகவலை ஆய்ந்தால் இந்த க்ஷேத்ரபாலரும் யமனே என்பது தெரிகிறது. இது தொடர்பாக இரா.கலைக்கோவன் கூறுவது கவனிக்கத் தக்கது. “சேத்ரபாலர் என்றால் ஊர்க்காவலர் என்று பொருள். … வலஞ்சுழியில் தென்கிழக்குப் பகுதியைத் தேர்ந்தெடுத்து சேத்ரபாலரை இருத்தியுள்ளார் முதல் ராஜராஜர்.” இவர் பைரவரிலிருந்து வேறானவர் என்றும் ராஜராஜீசுவரம், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய ஊர்களிலும் சேத்ரபாலர் வழிபாடு இருந்தது என்றும் கலைக்கோவன் கூறுகிறார். [வலஞ்சுழி வாணர் - இரா.கலைக்கோவன், மு.நளினி, பக்கம் 165] முதலாம் ராஜேந்திரரின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று, மன்னர் அவ்வாண்டின் 221 ஆம் நாள் எள்மலைப் புகுந்தருளி சேத்திர பாலரின் திருவடிகளில் பன்னிரண்டு பொற்பூக்களைப் பெய்து வழிபட்டதாகக் கூறுகிறது. [வலஞ்சுழி வாணர் - இரா.கலைக்கோவன், மு.நளினி, பக்கம் 171] இது எள் கொண்டு நீத்தார் கடன் செய்ததைக் குறிப்பிடுகிறது. எனவே நீத்தார் தலைவனாகிய யமனே சேத்திரபாலராக வழிபடப்பட்டார் என்றும், யமன் அத் தலத்தின் புராதன தெய்வம் என்றும், புதிய தெய்வம் வந்தபோதும் பழைய தெய்வம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுவதில்லை என்பதையும் அறியலாம்.

தனிக் கோயிலாக அல்லாமல் யமன் சன்னிதி கொண்ட கோயில்களும் திருப்பைஞ்ஞீலி, திருக்கடவூர், திருவாரூர், தருமபுரம் போன்ற சில உண்டு.

யமனுக்கு உரிய நாட்கள்

பரணி, மகம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் யமனுக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. வேதத்தில் பரணி யமனுக்கு உரியதாகவும், மகம் பித்ருக்களுக்கு (இறந்த முன்னோர்களுக்கு) உரியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆண்டு தோறும், தாய் தந்தையர் இறந்த மாதத்தில் அந்தந்தத் திதியில் திவசம் என்ற பெயரில் வழிபாடு நடத்துவது இன்றுள்ள நடைமுறை. இதனுடன் கூட மாசி மகத்தன்று இறந்த முன்னோர் அனைவருக்குமாகச் சேர்த்துத் திவசம் கொடுப்பதும் பிராமணர் அல்லாதாரிடையே வழக்கமாக இருந்து வருகிறது. “மறந்து போனது எல்லாம் மகத்தன்று” என்று பழமொழியும் உண்டு. நட்சத்திரத்தை ஒட்டி நடத்தப் பெறுவதால் இது பழந் தமிழ் நாட்டுப் பழக்கம் என்பது தெரிகிறது.

தமிழ்நாடு தவிர, பிற பகுதிகளில் கோவிலில் யமன் வழிபடப் படுவதாகத் தெரியவில்லை. வட இந்தியாவில் தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசி அன்று மட்டும் யமனுக்கு வணக்கம் செலுத்தப்படுகிறது. தமிழ் நாட்டில் பிரதோஷம் திரயோதசியில் நடத்தப் பெறுவது வடக்கிலிருந்து குடியேறியவர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.

நாளின் கடைசிக் கால பூசை பெருமாள் கோவில்களில் தூங்க வைத்தல் என்ற பொருளில் திரு அனந்தல் எனப்படுகிறது. ஆனால் சிவன் கோவில்களில் நள்ளிரவு என்று பொருள்படும் அர்த ஜாமம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. நள்ளிரவில் பூசை செய்யப் பெறுபவர் சுடலை மாடனே. இது சிவ வழிபாட்டில் ஏற்பட்ட சுடலை மாடனின் தாக்கங்களுள் மற்றொன்று.

ஆலமரம்

சுடலை மாடனுக்கும் ஆலமரத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி முன்பு பார்த்தோம். வட இந்தியாவிலும் பித்ருக்களுக்கும் ஆலமரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பிதிர்க் கடனுக்குப் புகழ் பெற்ற கயாவில் அக்ஷய வடம் எனப்படும் ஆலமரத்தடியில் தான் பிண்டம் அளிப்பது வழக்கம். ஆதி சிதம்பரம் எனப் புகழ் பெற்ற திருவெண்காட்டிலும் இது போலக் கோவிலில் உள்ள ஒரு ஆலமரத்தடியில் பிதிர்க் கடன் நிறைவேற்றுவது வழக்கமாக உள்ளது.

யமனுக்கு உள்ள பல பெயர்களில் ஔதும்பரன் என்பதும் ஒன்று. உதும்பரத்துடன் தொடர்பு உள்ளவன் ஔதும்பரன். உதும்பரம் என்பது ஆலமரத்திற்கு உள்ள வடமொழிப் பெயர்களில் ஒன்று.

தென்முகக் கடவுள் ஆலமரத்தடியில் வீற்றிருப்பதைக் காண்கிறோம். சங்க காலத்திலேயே சிவன் ஆலமரத்தடியில் அமர்ந்த நிலை கூறப்பட்டது. இது சிந்து வெளியிலிருந்து வந்திருக்கக் கூடும். அல்லது கூற்றுவன் வழிபாட்டின் தாக்கம் ஏற்படத் தொடங்கியதன் அறிகுறியாகவும் இருக்கலாம். சுடுகாட்டுப் பகுதிகளில் மிகுதியாகக் காணப்படும் கள்ளி நிழலில் அமர்ந்துள்ள ஒரு கடவுள் பற்றிய குறிப்பு புறநானூற்றில் காணப்படுகிறது [புறநானூறு 260]. இது சுடலை மாடனைக் குறிப்பதாக இருக்கலாம். மாடன் ஆலமர் செல்வனாக உருமாற்றம் பெறுவதற்கு முந்திய நிலையாக இருக்கலாம்.

பட்டுக்கோட்டைக்கும் முத்துப்பேட்டைக்கும் நடுவில் பரக்கலக்கோட்டை என்னும் ஊரில் உள்ள பொதுவுடையார் கோவிலில் ஆலமரத்தின் அடிப்பாகமே சிவலிங்கமாக வணங்கப்படுகிறது. இதற்குத் திங்கட்கிழமைகளி்ல் இரவு 11 மணி முதல் 1 மணி வரையில் பூசை செய்யப்படுகிறது.

திருவான்மியூரில் உள்ள கைலயங்கிரி ராமலிங்கநாதர் கோவிலிலும் ஒரு ஆலமரமே பூசிக்கப்பட்டு வந்தது. பின்னர் அங்கு ஒரு சித்தர் சமாதி ஆன பிறகு ஆலமரத்தின் முன் ஒரு லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கும் பின்னிரவு 3 மணி முதல் 5 மணிவரை மட்டுமே பூசை நடைபெறுகிறது. பௌர்ணமி அன்று நள்ளிரவில் வழிபாடு நடைபெறுகிறது.

இரவில் மட்டும் பூசிக்கப்படுவதாலும் ஆலமரத் தொடர்பு உள்ளதாலும் இவை முதலில் சுடலை மாடன் வழிபாடாக இருந்து சிவ வழிபாடாக மாறியிருக்க வேண்டும். இது போன்ற கோவில்கள் தமிழ் நாட்டில் பல இருக்கக் கூடும்.

முயலகன்

பெரும்பாலான கோவில்களில் தட்சிணாமூர்த்தியின் மற்றும் நடராஜாவின் காலடியில் முயலகன் அமைந்துள்ளது. சில கோவில்களில் இது இல்லை. எனவே முயலகன் அமைக்கும் வழக்கம் காலத்தால் பிற்பட்டது எனக் கொள்ள இடமுண்டு. இது அம்மையாராலும் அவருக்கு முந்தியவர்களாலும் குறிப்பிடப்படவில்லை. மயானத் தலங்களாகிய திருவீழிமிழலையிலும், நாலூரிலும் ஆலமர் செல்வனின் காலடியில் முயலகன் காணப்படாதது கொண்டு இவை இரண்டும் பழமையானவை என்று கொள்ளலாம். சிந்து வெளியின் மஹாயோகி அல்லது தமிழ் நாட்டின் சுடலை மாடன் இன்றைய தட்சிணாமூர்த்தியாகப் பரிணமித்த காலத்திற்கு முன் இது ஒரு இடைநிலையாக இருந்திருக்க வேண்டும்.

இலக்கியச் சான்று

கலித்தொகை, உமையொருபாகன் ஊழி முடிவில் எமனை நெஞ்சு பிளந்து கூளிக்கு இட்டதாகக் கூறுகிறது. [கலித்தொகை 101] ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பின் இடந்திட்டு [கலித்தொகை 103] என்று சிவன் யமனைக் கால்விரல் நகத்தால் கொன்றதையும் குறிப்பிடுகிறது. இவையும் முற்கூறியபடி, எமன் வழிபாடு மங்கியதைக் கூறுவதாகவே இருக்கலாம்.

கணிச்சிக்கூர்ம்படைகடுந்திறல்ஒருவன்

பிணிக்கும் காலை இரங்குவீர் மாதோ [புறம் 195] என்பதிலிருந்து கணிச்சி என்னும் மழு முதலில் யமனின் ஆயுதமாகக் கருதப்பட்டது தெரிகிறது. யமனை வென்ற பின் அது சிவனின் ஆயுதமாகி இருக்க வேண்டும் என்பது

ஏற்றுவலன்உயரியஎரிமருள்அவிர்சடை

மாற்றரும் கணிச்சி மணிமிடற்றோனும் [புறம் 56] என்ற தொடரிலிருந்து அறியப்படுகிறது. மழு ஏந்திய தட்சிணாமூர்த்தி திருநெடுங்களம் முதலான பல கோவில்களில் காணப்படுகிறார்.

சந்தியா வந்தனத்தில் யமன்

சிவனை வழிபடும் பிராமணர்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் யமனுக்கு வணக்கம் செலுத்துகிறார்கள். [யமாய தர்மராஜாய ம்ருத்யவே ச அந்தகாய ச, வைவஸ்வதாய காலாய ஸர்வபூத க்ஷயாய ச, ஔதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே, வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம: - இதில் முற்கூறிய ஔதும்பரன் என்ற பெயர் வருவதைக் காண்க.] இது வைணவப் பிராமணர்களால் அனுசரிக்கப்படுவதில்லை. பண்டைய யமன் வழிபாட்டின் நினைவுச் சின்னமாக இது உள்ளது.

அரன்

தேவாரத்தில் சிவனைக் குறிக்க அரன் என்னும் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரன் நாமமே சூழ்க எங்கும் என்று சம்பந்தர் வாழ்த்துகிறார். இது அம்மையாராலும் ஆளப்பட்டு இருக்கிறது. இப்பெயர் வேதத்திலும், பழந் தமிழ் இலக்கியங்களிலும் காணப்படவில்லை. [காலத்தால் பிற்பட்ட ஸ்வேதாஸ்வதார உபநிடதம் 1-10 இல் மட்டும் ஹர என்ற சொல் அழிவில்லாத பிரும்மத்தின் பெயராகக் கூறப்பட்டுள்ளது.]

இதன் தோற்றம் பற்றி அறியப் போதுமான சான்றுகள் இல்லை. இது ஹர என்ற வட சொல்லிலிருந்து தோன்றியிருக்கலாம். இதற்கு அபகரிப்பவர் என்பது முதன்மையான பொருள். இது உயிரை அபகரித்துச் செல்லும் யமனுக்கு உரிய பெயராக முதலில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கூற்றுவன் வழிபாட்டின் இடத்தை சிவ வழிபாடு கைப்பற்றிய பின்னர் சிவனுக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்.

சிவனுக்கு இப்பெயர் பிற்காலத்தில் மிகுதியாகப் பயன் படுத்தப் பட்டது. ஹர ஹர சங்கர, ஹர ஹர மஹாதேவா, அரகரோகரா என்ற கோஷங்கள் மூலம் இன்றும் நம்மிடையே பிரபலமாக உள்ளது.

ஒரு புறம் யமன் வழிபாடு சிவன் வழிபாட்டுடன் இரண்டறக் கலந்து உயர் வகுப்பாரிடையே பிரபலமாக, மறுபுறம் இன்று பிற்பட்ட வகுப்பினரால் சுடலை மாடன் என்ற பெயரில் வணங்கப்படுவதும் தொடர்கிறது. தென் மாவட்டங்களில் வழக்கில் உள்ள இதில் சில உயர் வகுப்பினரும் பங்கு கொள்வதாக அறியப்படுகிறது.

காரைக்கால் அம்மையார் காலத்தில் சிவன் சுடுகாட்டில் நடனமாடுபவராகக் கருதப்பட்டார். சிவனை மயான வாசியாகக் கூறும் வழக்கம் சங்க காலத்திலும் இல்லை, வேத ருத்திரனும் மயான வாசி அல்ல. எனவே சுடலை மாடன் இடத்தை கறைமிடற்று அண்ணல் பிடித்துக் கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது சங்க காலத்துக்குப் பின்னும் அம்மையார் காலத்துக்கு முன்னும் உள்ள இடைக் காலத்தில் நடைபெற்றிருக்க வேண்டும்.

சிந்து வெளியின் மஹாயோகி, தமிழ் நாட்டின் கூற்றுவன் மற்றும் வேதத்தின் ருத்திரன் மூன்றும் கலந்த நிலையில் தான் அம்மையார் காலத்துச் சிவனைக் காண்கிறோம்.

6


களப்பிரர் காலம்


கி.பி. 250க்கும் 575க்கும் இடைப்பட்ட மூன்று நூற்றாண்டு காலத்தைத் தமிழகத்தின் இருண்ட காலம் என்று சொல்கிறார்கள். இக்கால கட்டத்தில் கருநாடகத்தைச் சேர்ந்த களப்பிரர் என்னும் கூட்டத்தார் சேர சோழ பாண்டியர்களை வென்று தமிழ்நாடு முழுவதும் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

இருண்ட காலம் என்று சொல்லப்படுவதற்குக் காரணம் இக்காலம் பற்றி அறியப் போதுமான வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பது தான். தமிழகத்தைப் பொறுத்தவரை இலக்கியங்களும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் தான் பெரும் வரலாற்றுச் சான்றுகளாக இருந்து வந்துள்ளன. களப்பிரர் காலத்தில் இலக்கியங்களே ஏற்படவில்லையா? ஏற்பட்டிருந்தன. பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள காரைக்கால் அம்மையாரின் படைப்புகள் உள்ளிட்ட 15 நூல்கள் இக்காலத்தில் எழுதப்பட்டவை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது நீங்கலாக ஏனைய 14 உம் இக்காலத்தில் எழுதப்பட்டவை. [களப்பிரர் காலத்தில் தமிழகம் - மயிலை சீனி வேங்கடசாமி] ஆனால் அவை அனைத்தும் மறு உலக வாழ்வைப் பற்றிய சிந்தனைகளாகவும் அறவுரைகளாகவும் உள்ளனவே தவிர மக்களின் அன்றாட வாழ்வையோ, அக்கால முக்கிய நிகழ்ச்சிகளையோ பிரதிபலிப்பனவாக இல்லை.

கல்வெட்டுகள் ஏன் ஏற்படவில்லை? பொதுவாகக் கல்வெட்டுகள் அரசரின் கொடை, வீரம் இவற்றை வெளிப்படுத்தும் நோக்கத்துடனே பொறிக்கப்பட்டு வந்துள்ளன. சமண சாக்கிய சமயத்தைச் சார்ந்த களப்பிரர்கள் பிற்கால அரசர்கள் போல பிராமணர்களுக்கும், சிவாலயங்களுக்கும், விண்ணகரங்களுக்கும் கொடைகள் அளிக்காதிருக்கலாம். விகாரங்களுக்கும் பள்ளிகளுக்கும் பள்ளிச் சந்தங்கள் அளித்திருக்கக் கூடுமே, அது பற்றி அவர்கள் ஏன் கல்லில் வெட்டவில்லை?

சங்க காலம் வரை சேர சோழ பாண்டியர்கள் வலிமை மிக்கவர்களாக விளங்கினர். பிற்காலத்தில் இவர்களுடன் பல்லவர்களும் வலிமை பெற்றனர். தங்களுக்குள்ளே இடைவிடாமல் போர் செய்து கொண்டிருந்த இந்தத் தமிழ் வேந்தர்கள் பத்துத் தலைமுறை எப்படி அடங்கி இருக்க முடிந்தது? இவர்கள் அனைவரையும் அடக்கி வைக்கக் கூடிய அளவு வலிமை பெற்றவரா களப்பிரர்? அப்படி ஆயின் அத்தகைய வலிமையை ஏன் அவர்கள் மெய்க்கீர்த்திகள் மூலம் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை? அவர்களைப் புகழ்ந்து புலவர் எவரும் பாடவில்லையே, ஏன்?

களப்பிரர் காலத்தில் சேர சோழ பாண்டியர்கள் முற்றிலும் வலிமை இழந்து அழிந்து விடவில்லை. இக்கால கட்டத்தில் பாண்டியன் ஒருவன் இலங்கையில் ஆட்சி நிலை நாட்டியதையும் சோழர்கள் இரேணாட்டில் சிறப்பாக ஆட்சி செய்ததையும் நோக்குக. [களப்பிரர் காலத்தில் தமிழகம் - மயிலை சீனி வேங்கடசாமி).]

மறு உலக நாட்டம்

உண்மையில் இந்த மூன்று நூற்றாண்டுகளில் தமிழகத்தைக் களப்பிரர்கள் ஆண்டார்கள் என்று சொல்வதை விட இவ்வுலக வாழ்வில் உற்சாகம் இல்லாமல் மறு உலக வாழ்வில் நாட்டம் செலுத்தும் மனப்போக்கு ஆண்டது என்று சொல்வதே பொருந்தும்.

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேரின்பம் என்ற கொள்கை உடைய சமண சாக்கிய சமயங்கள் தாம் இந்தப் போக்குக்கு முக்கிய காரணம். அறநெறியை வலியுறுத்திப் பிறவா நெறியான மறு உலக வாழ்வுக்கு ஆயத்தம் செய்வதே இவ்வுலக வாழ்வின் நோக்கம் என்றும் இவ்வுலக இன்பங்கள் மறு உலகப் பயணத்தைத் தடை செய்யுமாதலால் இவற்றை மறுத்து வாழ வேண்டும் என்றும் அவை கூறின.

அறம், பொருள், இன்பம் என்ற மூன்றை மட்டும் வாழ்வின் குறிக்கோளாகக் காட்டியது வைதிகச் சமயம். (திருக்குறளும் அதையே பின்பற்றுகிறது.) பிற்காலத்தில், சமண புத்த சமயத் தாக்கத்தால் வீடுபேறு அடைதலை நான்காவதாக ஏற்றுக் கொண்டது. அறம், வீடு இரண்டை மட்டும் வலியுறுத்தி இடைப்பட்ட இரண்டையும் கைவிட்டன புறச் சமயங்கள். மனித வாழ்வு நிலைகளிலும் இல்வாழ் பருவம், காடுவாழ் பருவம் இரண்டையும் நீக்கி மாணவப் பருவத்திலிருந்து நேரடியாகத் துறவு பூணுவதை ஊக்குவித்ததும் அவையே.

சங்க நூல்கள் உணவிலும், காதலிலும், போரிலும் காட்டும் உற்சாகம் எங்கே? வாழ்க்கையைச் சுமையாகக் கருதும் தேக்க நிலை எங்கே?

சமணம் சாக்கியம் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிக் கொள்கை உடையவை. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்ற கர்மாக் கொள்கை, மறு பிறவிக் கொள்கை, உண்மை, அகிம்சை, புலனடக்கம், புலால் மறுப்பு, இறை மறுப்பு இவை அவற்றின் பொதுக் கொள்கைகள். பௌத்தத்தை விடச் சமணம் இவற்றை அளவு கடந்து வலியுறுத்தியது என்பது தான் அவற்றிற்கு இடையேயுள்ள வேறுபாடு. எனவே தமிழகத்தைப் பொறுத்தவரை அவை இரண்டும் சேர்த்தே பேசப்படுகின்றன.

இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுச் சைவம் எப்படித் தன்னை நிலைநாட்டிக் கொண்டது? அடுத்த பகுதியில் காணலாம்.

7


அம்மையார் காலத்தில் சைவம்


அம்மையாரின் எதிர் இயக்கம்

எந்த ஒரு இயக்கத்திலும் ஒரு எதிர் இயக்கம் அடிநீரோட்டமாக அமைந்திருப்பதைக் காணலாம். களப்பிரர்காலத்தில் இவ்வுலக வாழ்வைச் சுமை எனக்கருதும் சமணசாக்கிய இயக்கத்துக்கும் எதிர்வினை அதேகாலத்தவரான அம்மையாரின் பாடல்களில் காணமுடிகிறது. அம்மையாரின் பாடல்கள் வானோர்பிரானின் புகழைமட்டும் பாடவில்லை, அக்காலசமணசாக்கியக் கொள்கைகளின் மறுப்பாகவும் அவைவிளங்கின. [உண்மையில், சம்பந்தர் பாடல்கள் சமணசாக்கியர்களின் ஆடையின்றி இருத்தல், பாயினைக்கையில் ஏந்தித்திரிதல், கையில் உணவு பெற்று நின்றநிலையில் உண்ணல், தலையைமழித்தல், துவராடை உடுத்தல் ஆகியபுற வொழுக்கங்களைச் சாடுகின்றனவே அன்றி கொள்கைகளைப் பற்றி எதுவும் குறை கூறவில்லை. அம்மையார்தான் முதன் முதலாகக் கொள்கை ரீதியாக அவர்களை எதிர்த்தார்.]

கர்மாக் கொள்கையும் மறுபிறவிக் கொள்கையும் வேதத்தில் இல்லாதவை [இறந்த உயிர்கள் பித்ரு லோகத்திற்குச் செல்கின்றன என்று ஸம்ஹிதைகள் கூறுகின்றன. அவரவர் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மறு பிறவி எடுக்கின்றன என்ற கருத்து உபநிடதக் காலத்தில் தோன்றி புராணக் காலத்தில் பரவலாயிற்று.] வேதநெறிக்கு முரணாக இல்லாதிருந்ததால் இவை அம்மையார் காலத்தில் வைதிகச் சமயத்தவரால் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டன. ஆனால் புறச்சமயங்கள் நாத்திகத்தை வலியுறுத்தியதை ஏற்றுக் கொள்ளாது அம்மையார் பதிலடி கொடுக்கிறார்.

நாத்திகம் பேசுபவர்களை வாதத்தின் மூலம் ஆத்திகராக்க முடியாது. இறைவன் இருப்பதை உள்ளத்தால் தான் உணர முடியும். நீ வணங்கும் இறைவன் எத்தகைய உருவினன் என்று நாத்திகர்கள் கேட்பதற்கு விடை இறுப்பது போல அம்மையார் கூறுகிறார்:-

“பிறந்து மொழி பயின்ற போதே எனக்கு இறைவன் மேல் காதல் ஏற்பட்டுவிட்டது. நான் கண்ணால் பார்த்து அவனிடம் ஆட்படவில்லை; இன்று வரை பார்த்ததும் இல்லை. நான் எப்படி உங்களுக்குக் கூற முடியும்? பிரானவனை எங்குற்றான் என்பீர்கள். என்போல்வார் சிந்தையிலும் இங்குற்றான். காண்பார்க்கு எளிது. உள்முகமாகப் பார்வையைச் செலுத்துபவருக்கு சிந்தையுள் சோதியாய்த் தோன்றுபவன் அவன். அவன் வானத்தானா, தானத்தானா என்று வாதம் செய்யாமல், நெஞ்சத்தான் என்பதை உணருங்கள்; நூலறிவு மூலம் அவனை அடைய முடியாது”

என்கிறார் அம்மையார்.3 [3 அற்புதத் திருவந்தாதி 1, 61,45, 17, 5, 33.]

இதே கருத்து பின்னர் வந்த அப்பர் பிரானின் வாக்கில் எதிரொலிப்பதைக் காண்கிறோம்,

அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே

என்கிறார் அவர்.

பிறவாமை விரும்பத் தக்கது தான். ஆனால் மீண்டும் பிறப்புளதேல் இறைவனை மறவாமை வேண்டும் என்று கோரும் அம்மையார் இறைவனுக்கே எழுபிறப்பும் ஆளாவோம், அவன் தாளைச் சரணடைந்து விட்டதாலேயே மீளாப் பிறவிக் கனைகடலை நீந்தினோம் என்று பாடுகிறார். அதாவது இறைவனைப் போற்றிப் பாடும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றால் அது இவ்வுலக வாழ்வைச் சுமை ஆக்காது என்கிறார்.

இதே கருத்தை,

இறைவனின் குனித்தப் புருவத்தைக் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே

என்று வழிமொழிகிறார் நாவுக்கரசர்.

மண்ணிலும் நல்ல வண்ணம் வாழலாம், மறு உலகில் நல்ல கதிக்கும் யாதும் ஓர் குறைவில்லை

என்று இவ்வுலக வாழ்வின் மேன்மையை நிலை நாட்டுகிறார் ஞானசம்பந்தர்

பிறவிக் கடலைக் கடக்கும் உபாயமாகச் சமண சாக்கியர்கள் கூறும் அறநெறிகளை அம்மையார் புறக்கணிக்கவில்லை. தலையாய கொள்கைகளான பஞ்சசீலத்தைக் கடைப்பிடிப்பதோடு தலையாய அண்டத்தானாகிய ஆதிரையான் செம்பொற்கழலடியில் தாழ்ந்து பணிவோரே உண்மையை உணர்ந்தவர் என்கிறார். அம்மானுக்கு ஆட்பட்ட அன்பின் காரணமாகத் தன்னிடம் புண்ணியங்களும் ஐந்து அறநெறிகளும் பொருந்தியதாகக் கூறுகிறார் அவர். [திருவிரட்டை மணிமாலை 10,16]

இறை அன்புச் சுவையை உணரமாட்டாத புறச் சமயத்தவர் இறைவனை இகழ்ந்ததைக் கண்ட அம்மையார்,

“அவனை இகழாது ஏத்தினால் மறுபிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவர், இதை அறியாத அவர்கள், உணர்ந்து கொண்ட எம்மைப் புறன் உரைப்பதில் நேரத்தை வறிதே செலவிடுகின்றனரே”

என்று இரங்குகிறார். [அற்புதத் திருவந்தாதி 29,37,91]

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் வணங்கப்பட்ட பல தெய்வங்களில் ஒன்றாக இருந்த கண்ணுதல் கடவுள் காரைக்கால் அம்மையார் காலம் தொடங்கித் தான் தனிப் பெரும் தெய்வமாக ஏற்றம் பெறத் தொடங்கினார். அவருக்குச் சற்றே முந்திய காலத்ததான சிலப்பதிகாரம், மணிமேகலை, மதுரைக்காஞ்சி இவற்றில் [சிலப்பதிகாரம் 5.169-172, 14.7-10, மணிமேகலை 1.54-55, மதுரைக்காஞ்சி 453-455] சிவனுக்கு முதலிடம் கொடுக்கப் பெறுவதைக் காண்கிறோம். அப்பொழுதும் அவருக்குச் சிவன் என்ற பெயர் வழங்கப்படவில்லை. ஆலமர் கடவுள் என்ற பெயரையும் அம்மையார் பயன்படுத்தவில்லை. அடிகள், அழகன், அந்தணன், அரன், ஆதிரையான் ஆள்வான், இறைவன், ஈசன், உத்தமன், எந்தை, எம்மான், ஒப்பினை இல்லவன், கண்ணுதலான், கறைமிடற்றான், குழகன், சங்கரன், நம்பன், பரமன், புண்ணியன், வானோர் பெருமான், விமலன், வேதியன் முதலிய பல பெயர்களைப் பயன்படுத்துகிறார்.

சிவனுடைய தோற்றத்தில் மாற்றங்கள்

அம்மையார் காலத்தில் சிவனுடைய தோற்றத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைக் காண்கிறோம். சிவன் மார்பில் பாம்புகளையும், உடல் முழுவதும் நீற்றையும் அணிந்தவராகக் காட்சி அளிக்கிறார். மேலும் அவர் கபாலம் ஏந்தி பிச்சை எடுப்பவராகவும், இடுகாட்டில் பேய்களுடன் நடனமாடுபவராகவும் காட்டப் பெறுகிறார். இது கூற்றுவன் வழிபாட்டுத் தாக்கத்தைக் காட்டுகிறது.

அம்மையாரும் ஆடல்வல்லானும்

உலகின் மிகப் பழமையான இலக்கியமாகவும், இந்து சமயத்தின் அடிப்படையாகவும் விளங்கும் வேதத்தில் கூறப்பட்டுள்ள எந்த தெய்வமும் நடனம் ஆடுவதாகக் குறிப்பு இல்லை. வேதத்துக்கு அடுத்தபடியாகப் பழமை வாய்ந்த இலக்கியமான தொல்காப்பியத்திலும் அத்தகைய தெய்வம் கூறப்படவில்லை. கடைச்சங்க கால நூலான திருமுருகாற்றுப்படை, பரிபாடல், பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் சிவன் என்ற பெயர் காணப்படாவிடினும் இன்று நாம் சிவனுக்குரியதாகக் கருதும் பல தோற்றங்களும், செயல்களும், பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றிலும், ஆடற் பெருமான் என்ற பொருள் தரும் பெயரோ சிவனின் நாட்டியத் தோற்றம் பற்றியோ கூறப்படவில்லை.

கலித்தொகையில் மணிமிடற்று எண்கையான் (சிவன்) கொடுகொட்டி, பண்டரங்கம், காபாலம் ஆகிய நாட்டிய வகைகளை ஆடுவதாகக் கூறப்படுகிறது. கலித்தொகை சங்க நூல்களுள் ஒன்றாக எண்ணப்பட்டாலும் காலத்தால் மிகப் பிற்பட்டது என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இக்கடவுள் வாழ்த்துப் பாடல் கலித்தொகை தோன்றிய போதே இயற்றப்பட்டதா அல்லது பிற்காலத்தில் இணைக்கப்பட்டதா என்னும் செய்தி ஆய்வுக்கு உரியது.

சிலப்பதிகாரத்திலும் இறைவனின் நாட்டியக் கோலம் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அடுத்தபடியாக இவற்றிற்குக் கிட்டத்தட்ட சமகாலத்தவரான காரைக்கால் அம்மையார் தான் இறைவனின் நாட்டியக் கோலத்தை மிக அதிகமாகப் போற்றுகிறார். அவரது அற்புதத் திருவந்தாதியில் 2, 25, 30, 51, 70, 77, 78, 85, 98, 99 ஆகிய பத்துப் பாடல்களிலும், இரட்டை மணிமாலையில் 14, 15 ஆகிய இரு பாடல்களிலும், மூத்த திருப்பதிகங்களில் எல்லாப் (இருபத்திரண்டு) பாடல்களிலும் அம்மையார் ஈசனின் நாட்டியக் கோலத்தைக் கூறுகிறார்.

ஈசனை ஆடல் வல்லானாகக் கருதி வழிபடும் வழக்கம் எப்படி ஏற்பட்டிருக்கக் கூடும்? சங்க காலத்தில் ஆலமரத்தடியில் அமர்ந்திருந்த நிலையில் வணங்கப் பட்ட சிவன் அம்மையார் காலத்தில் சுடுகாட்டை ஒட்டிய ஆலங்காட்டில் நடனமாடுவதாக வர்ணிக்கப்பட்டார். இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் வேறு ஒரு நிலை இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

திருக்கடையூர்

காரைக்காலிலிருந்து 20 கி.மீ. தொலைவில் திருக்கடையூர் என்னும் தலம் உள்ளது. இங்கு மார்க்கண்டேயன் என்ற பக்தனுக்காக இறைவன் இடது திருவடியைத் தூக்கி யமனை உதைத்ததாகப் புராணம் கூறுகிறது. மற்ற முரண்பட்டோரை எல்லாம் கையினால் அழித்த சிவன் யமனை மட்டும் காலினால் செற்றார். வேறு எந்தத் தெய்வமும் காலினால் பகை வென்றதாகப் புராணம் இல்லை. ஆலமரத்தடியில் உட்கார்ந்த நிலையில் இருந்த தெய்வம் திடீரெனக் கோபத்துடன் எழுந்து காலைத் தூக்கினால் எப்படி இருக்கும் என்று மனத்துக்குள் ஓவியம் தீட்டிப் பார்த்ததன் விளைவாக அதே மயானத்தில் நடனமாடுபவராக அவரை மக்கள் கற்பனை செய்திருக்கக் கூடும். அம்மையார் காலத்தில் மயானத்தை ஒட்டிய ஆலங்காட்டில் நடனமாடுபவராகக் கருதப்பட்டார் சிவன். இறைவனின் பல கோலங்களைப் பேசிய அம்மையார் ஆலமர் கோலத்தைக் குறிப்பிடவில்லை. மாறாக ஆலங்காட்டில் ஆடற்கோலத்தில் காட்சி தருபவராகவே அவர் போற்றி வழிபட்டார். ஆனால் ஆடற் பெருமான் என்ற பெயரையோ, தற்போது வழங்கும் நடராஜா என்ற பெயரையோ அவர் எங்கும் பயன்படுத்தவில்லை.

கோயில்கள்

இப்பொழுது ஆடற் பெருமான் என்றால் நம் அனைவரின் நினைவுக்கு வருவது தில்லை எனப்படும் சிதம்பரம் தான். ஆனால் அம்மையாரது பாடல்களில் எந்த இடத்திலும் தில்லையைப் பற்றிய குறிப்பே காணப் படவில்லை. தேவார திருவாசகங்கள் போல பல தலங்களைப் பற்றியும் அவ்வவற்றில் உறையும் ஈசன் பற்றியும் குறிக்கப் படவில்லை.

அவரது அற்புதத் திருவந்தாதியில் இறைவன் உறையும் இடமாகக் குறிப்பிடப்படுவது, சுடுகாட்டை ஒட்டிய ஆலங்காடு மட்டுமே. [அவரது மூத்த திருப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் கூறப்படும் இடம், அரக்கோணம் அருகிலுள்ள திருவாலங்காடு என்னும் தலத்தைக் குறிப்பதாகச் சேக்கிழார் கூறிய செய்தி ஆய்வுக்கு உரியது. ஒவ்வொரு பாடலிலும் சுடுகாட்டுக் காட்சிகளை வர்ணித்துவிட்டு இப்படிப்பட்ட இடத்தில் ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடே என்று முடிக்கிறார். திருவாலங்காடு என்பது அவர் வாழ்ந்த ஊராகிய காரைக்காலின் சுடுகாட்டை ஒட்டிய ஆலமரங்கள் சூழ்ந்த ஒரு இடமாகவும் இருக்கலாம். அரக்கோணம் அருகில் உள்ள திருவாலங்காடும், மயிலாடுதுறைக்கருகில் உள்ள திருவாலங்காடும் அம்மையாரின் பாடலை ஒட்டிப் பின்னர் பெயரிடப்பட்டிருக்கலாம்.]

இறைவனைக் கோவிலில் சென்று தான் வழிபட வேண்டும் என்ற வழக்கம் இக்காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. கோவில்கள் குறைவாக இருந்திருக்கக் கூடும். இருந்தவையும் மக்கள் நடமாட்டம் அற்று முட்புதர் மண்டி இருந்திருக்க வேண்டும். எனவே தான் பிற்காலத்தில் உழவாரப் பணி செய்து மக்களைக் கோவிலுக்கு ஈர்க்க வேண்டிய நிலை அப்பருக்கு ஏற்பட்டது.

கண்ணுக்குப் புலனாகும் கந்து அல்லது லிங்கம் அல்லது வேறு உருவம் எதுவும் இல்லாமலே, சிவனைக் கருத்துருவாகவே அம்மையார் காட்டுகிறார்.

அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்

இன்றும் திருவுருவம் காண்கிலேன் என்றுந்தான்

எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைப்பேன்

எவ்வுருவோ நின்னுருவம் ஏது [ அற்புதத் திருவந்தாதி 61]

சிவகுமாரர்கள்

இன்று சிவகுமாரர்களாக வணங்கப்படும் கணபதி, முருகன் போன்ற தெய்வங்களையும் அம்மையார் குறிப்பிடவில்லை. உமையோடு கூடிய இறைவன் (மாதொரு பாகன்) மட்டுமே அவர் அறிந்தது.

திருமாலும் சிவனும்

ஈசனின் வலப் பக்கம் திருமால் இருப்பதாக ஒரு கருத்து முற்காலத்தில் இருந்தது. அதை அம்மையார் குறிப்பிடுகிறார்.

ஒருபால்உலகளந்தமாலவனாம்மற்றை

ஒருபால்உமையவளாம்என்றால் – இருபாலும்

நின்னுருவமாகநிறந்தெரியமாட்டோமால்

நின்னுருவோமின்னுருவோநேர்ந்து

[அற்புதத் திருவந்தாதி 41]

மற்றும் அதே நூலில் 52, 54, 59, 83 ஆகிய பாடல்களிலும் இக்கருத்து குறிப்பிடப்படுகிறது. இக்கருத்து ஏழாம் நூற்றாண்டில் கூடத் தொடர்ந்து இருந்திருக்கிறது. மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற நாதன் என்று சம்பந்தரும், மாலோர் பாகம் திகழ்ந்தான் என்று அப்பரும் குறிப்பிடுகின்றனர்.

அம்மையாரின் இக்கூற்று பண்டைய திருமாலுடன் சிவனை ஒன்றுபடுத்தச் செய்யப்பட்ட முயற்சியைத் தெரிவிக்கிறது. புதிதாக வந்த சிவனை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் பழைய தெய்வங்களுடன் உறவு முறை ஏற்படுத்தி இருக்கக் கூடும். (சங்க காலத்தின் பிற்பகுதியில் முருகனைச் சிவனின் மகனாகக் கூறும் வழக்கம் புதிதாக ஏற்பட்டதை நினைவு கூர்க). இவ்வழக்கு காலப் போக்கில் கைவிடப் பட்டு, உமையைத் திருமாலின் சோதரியாகக் கூறும் உறவு முறை ஏற்படுத்தப்பட்டது.

அம்மையார் வணங்கிய பெம்மான் வேதத்தில் நிலை பெற்றவன். அவனை வேதியன் என்றும், வேதப் பொருளான் என்றும், வேதத்திற்கு ஆதியன் என்றும் நாவாரப் புகழ்கிறார் அவர். சமண சாக்கியக் கொள்கைகளைச் சாடியும் வேத அடிப்படையில் சைவத்தை நிலை நாட்டியும் அம்மையார் மக்கள் மனத்தைத் தயார் செய்து வைத்த நிலையில் கிட்டத்தட்ட இருநூறாண்டுகள் கழித்து ஞானசம்பந்தர் அப்பணியைத் தொடர்ந்து ஆற்றிப் பூர்த்தி செய்தார். இடைப்பட்ட இந்த இரு நூற்றாண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகளை அடுத்த பகுதியில் காண்போம்.

8


அம்மையாருக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்கள்


அம்மையார் காலத்துக்கும் திருமூலர் காலத்துக்கும் இடையில் தமிழ் நாட்டில் சைவத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பல. அவையாவன –

1 இறைவனுக்குச் சிவன் என்ற பெயர் ஏற்பட்டது.

2 நமசிவாய மந்திரம் பிரபலமாயிற்று

3 கணபதி வழிபாடு ஏற்பட்டது.

4 திருநீறு பூசும் வழக்கம் ஏற்பட்டது.

5 ஆடற்பெருமான் வழிபாடு பரவியது.

1 மஹாதேவர் சிவன் ஆனார்

அம்மையார் காலம் வரை, புலமை படைத்தவர்கள் பலவாறான அடைமொழிகள் கொண்டு போற்றியபோதிலும், பொதுமக்கள் சிவனைக் குறிப்பிட ஏதேனும் ஒரு பெயரை மட்டுமே பயன்படுத்தி இருக்கக் கூடும். அப்பெயர் பெருந்தேவன் என்பதாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இமயமலை தேவர்களின் உறைவிடமாகக் கருதப்பட்டது என்பதற்குப் பெரும்பாணாற்றுப்படை சான்று தருகிறது. அந்தத் தேவர்களில் பெரியவராகவும் தலைவராகவும் சிவன் கருதப்பட்டிருக்கக் கூடும். அப்பெயர் கொண்ட புலவர் ஒருவர் சங்க காலத்தில் இருந்ததை அறிகிறோம். இதே பொருளுடைய வானோர் பெருமான் என்ற தொடரை அம்மையார் பயன்படுத்துகிறார்.

தேவாரக் காலத்தில் சிவன் என்ற பெயர் வழக்கிற்கு வந்துவிட்டபோதிலும் அப்பெயரை மாணிக்கவாசகர் பயன்படுத்திய அளவுக்குத் தேவார ஆசிரியர்கள் வழங்கவில்லை. அவர் காலம் தொடங்கித் தான் மக்களும் அதைப் பெருவழக்காக ஆக்கியிருக்கக் கூடும். ஆயினும் மணிவாசகருக்குப் பிந்திய காலக் கல்வெட்டுகளிலும் சிவனைக் குறிக்கப் பெருந்தேவன் என்ற சொல்லின் வடமொழி வடிவமான மஹாதேவர் என்ற பெயரே மிகுதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாகப் பயன்படுத்தப்பட்ட சொல் உடையார் என்பதாகும். சிவன் என்ற சொல் அரிதாகவே ஆளப்பட்டுள்ளது.

அதர்வண வேதத்தில் 9-7-7 தான் முதன் முதலாக ருத்திரனுக்கு மஹாதேவன் என்ற பெயர் கூறப்படுகிறது. அடுத்ததாக சதபத பிராமணத்திலும் 6.1.3.7 கௌசீதகி பிராமணத்திலும் 6.1.9 வருகிறது. சிவனை ஏற்றுக் கொள்ள வேதம் படிப்படியாக மாற்றம் அடைந்து வருவதை இது காட்டுகிறது.

தமிழ் நாடு தவிர்த்த பிற இந்திய மாநிலங்களில் இன்று எல்லாச் சிவன் கோவில்களும் மஹாதேவர் பெயராலேயே வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கேரளத்தில் எட்டுமானூர் மஹாதேவர் அம்பலம், வைக்கம் மஹாதேவர் அம்பலம், திருவைராணிக்குளம் மஹாதேவர் அம்பலம் முதலானவை, வட இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோவில், உத்தராஞ்சலில் தெஹ்ரி மாவட்டத்தில் உள்ள கோடீஸ்வரர் கோவில், துவாரகையிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவில், வாராணாசியில் உள்ள சாம்ராஜ்யேஸ்வரர் கோவில், நேபாளத்தில் கோகர்ணத்தில் உள்ள விருந்தாவனம்.

தற்காலத்திலும் மஹாதேவர் என்ற பெயர் முக்கியத்துவம் பெற்றுள்ளதைக் காணலாம். காரைக்கால் அம்மையார் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் அம்மையார் இறைவனோடு ஐக்கியமாகும் வேளையில் சொல்லப்படும் கோஷத்திலும் (தேவ தேவ மஹாதேவ), ஆன்மீகக் கூட்டங்களில் நம பார்வதி பதயே என்று கோஷத்திற்கு எதிர்க் கோஷமாகவும் (ஹர ஹர மஹாதேவ), ஸ்மார்த்தர்கள் காக்கைக்கு உணவளிக்க அழைக்கும்போதும் மஹாதேவர் என்ற பெயரே பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் தான் சிவன் என்ற பெயர் ஏற்பட்டது என்பதையும், குறிப்பிட்ட ஒரு நோக்கத்துக்காகத் தான் அது ஏற்படுத்தப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது என்பதையும், சோழர்களுக்குப் பிற்காலத்தில் தான் அப்பெயர் பெருவழக்காக ஆகியது என்பதையும் அறிகிறோம். சமுதாய மாற்றங்கள், குறிப்பாகச் சமயத் துறையில் மாற்றங்கள் குறுகிய காலத்தில் நிகழ்ந்து முடிவதில்லை. சிவன் என்ற பெயரும் அவ்வாறு நீண்ட கால அளவில் சிறுகச் சிறுகத் தான் ஏற்கப்பட்டதை அறியமுடிகிறது. சிவன் என்ற சொல் எப்படி வந்திருக்கக் கூடும்?

கறைமிடற்று அண்ணல் சிவந்த மேனி உடையவர் என்ற கருத்து சங்க கால நூல்களில் காணப்படுகிறது. அகநானூறு கடவுள் வாழ்த்து அவரது செவ்வான் அன்ன மேனியைப் புகழ்கிறது. அம்மையார் பாடல்களில் இறைவனது நிறம் சிவப்பு என்றும் பொன் வரை போன்றது என்றும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இறைவன் சிவன் என்ற பெயரால் சுட்டப்படவில்லை. எனவே சிவந்த நிறம் மட்டுமன்றி, வேறு ஒரு காரணமும் சேர்ந்து கொண்டதால் தான் அப்பெயர் வழங்கலாயிற்று என ஊகிக்கலாம்.

சிவகதி அருள்பவர் சிவன்

முத்தி நிலையைக் குறிப்பிடச் சமணர்கள் சிவகதி என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளனர் என்று திரு.வி.க. கூறுகிறார். [காரைக்கால் அம்மையார் பாடல்களுக்கு உரை – திரு.வி. கலியாணசுந்தரனார்] இந்த வடசொல் மங்கலகரமான, நல்ல நிலைமை என்று பொருள் தருவது. கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட சமணர்களைப் பொறுத்தவரை, சிவகதி என்பது இறைவன் என்ற ஒருவர் இல்லாமலேயே மகாவீரர் கொள்கைகளின் மீது நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் இவற்றால் விளைவது.

அட்ட மூர்த்தியாக விளங்கும் இறைவன் அருளால் தான் பிறவித் துயர் தீர்த்துப் பிறவா நிலையாகிய சிவகதியைப் பெற முடியும் என்று நம்பிய அடியார் மணிமேகலையில் சைவவாதி [மணிமேகலை 27-87] என்று குறிப்பிடப்படுகிறார். மணிமேகலைக்குப் பிற்பட்ட காலத்தவராகிய அம்மையார் சிவன் என்ற பெயரை வழங்காமல், சிவகதியை மட்டும் முதல் மூத்த திருப்பதிகத்தின் கடைக்காப்பில் குறிப்பிடுகிறார்.

சிவகதி என்பது ஒரு நிலை என்ற கருத்து வளர்ந்து அது பூவுலகம், சுவர்க்கம் போல ஒரு தனி உலகமாகக் கருதப்படலாயிற்று. அதனால் சிவலோகம் என்ற சொல் பிறந்தது. தேவார ஆசிரியர்கள் சிவகதி மற்றும் சிவலோகம் ஆகிய சொற்களைப் பிறப்பு இறப்பு இல்லாத முத்தி நிலையைக் குறிப்பிடப் பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையை அருள்பவனைச் சிவலோகன், சிவலோகநாதன், சிவன் என்ற பெயர்களால் சுட்டுகின்றனர். [சிவலோகம் என்பது சிவன் வசிக்கும் இடமாகக் கூறப்படவில்லை. கைலையும் மண்ணுலகில் உள்ள பிற தலங்களும் தாம் சிவனின் உறைவிடமாகக் கூறப்பட்டுள்ளன.]

மண்ணில் மங்கலம் அருள்பவர் சிவன்

சங்க காலத்தில் காய் கடவுள் என வழங்கப்பட்டு அஞ்சுதலுக்கு உரியவராகக் கருதப்பட்ட கண்ணுதற் கடவுள் அம்மையார் காலத்தில் ஒரு மாற்றம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். இப்பொழுதும் அவரது தோற்றம் அச்சம் தருவதாகத் தான் இருக்கிறது. ஆனால் அவர் அடியார்களிடம் அன்பு மிகுந்தவராகச் சித்தரிக்கப்படுகிறார். அவருடைய தோற்றத்துக்காக அவரை இகழாது போற்றினால் அவர் அடியார்களுக்கு எல்லாம் கொடுப்பார், நம்மை அவர் எந்த உயர்நிலையிலும் வைப்பார், எந்த உயர் உலகமும் என்று அவருடைய எளிவந்த கருணையைப் போற்றுகிறார் அம்மையார்.

இவரைப்பொருளுணரமாட்டாதாரெல்லாம்

இவரை யிகழ்வதே கண்டீர் – இவர்தமது

பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த

பேய்க்கோலம் கண்டார் பிறர்

[அற்புதத்திருவந்தாதி 29]

அரங்கமாப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா

இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் – இரங்குமேல்

என்னாக வையான்தான் எவ்வுலகம் ஈந்தளியான்

பன்னாள் இரந்தாற் பணிந்து

[அற்புதத்திருவந்தாதி 78]

இறைவன் காலனையும், காமனையும், முப்புரத்தையும் அழித்தவன் மட்டுமல்ல, விசயனுக்கு வில் அளித்த கருணையாளனும் கூட. ராவணனின் முரணை அழித்தானே அன்றி அவனையே அழிக்கவில்லை. அத்தகைய ஈசனை அன்பென்னும் போர்வையினுள் சுருட்டி நெஞ்சத்துக்குள் மறைத்து வைத்துவிட்டோம் என்று பெருமிதப் படுகிறார் அம்மையார்.

[இறைவனை அஞ்சுதற்குரியவன் என்ற தொலைவிலிருந்து அன்புக்குரியவன் என்ற அண்மைக்குக் கொண்டுவந்த அவர் இன்னும் சற்று நெருங்கி அவனைக் கிண்டல் செய்யவும் துணிகிறார். இறைவா, நீ பிச்சைக்குப் போகும்போது பாம்புகளை எல்லாம் கழற்றி வைத்து விட்டுப் போ. இல்லாவிட்டால் மகளிர் அஞ்சி உனக்குப் பிச்சை இடாமல் இருந்து விடுவர் என்கிறார். (அந்தாதி 57). நீ உமையைப் பிரியாமல் இருக்க காரணம் என்ன? நீ அவளிடம் கொண்ட விருப்பமா அல்லது அவளைப் பாதுகாப்பாக வைக்க வேறு இடம் கிடைக்கவில்லையா என்று வினவுகிறார். (அந்தாதி 94). உன் பக்கத்தில் உள்ள குலமகள், தலைமேல் உள்ள சலமகள் இருவரில் உனக்கு மிகவும் பிரியமானவர் யார் என்று கேட்டுச் சிவனுடைய குடும்பத்திலேயே சண்டை மூட்டிவிடுகிறார். -அந்தாதி 95]

இவ்வாறு இறைவனின் நன்மை தரும் கோலத்தை முதன்மைப்படுத்தி அம்மையார் ஏற்படுத்திய பக்தி அலை இந்தத் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு அடைமொழியால் இறைவனை அழைக்கலாமே என்று மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்க வேண்டும்.

சிவ என்ற சொல் தமிழில் சிவப்பு நிறத்தையும் ஸம்ஸ்கிருதத்தில் நலம் செய்பவர் என்ற பொருளையும் குறிப்பதாகும். இரு வகையிலும் அது இறைவனின் வெவ்வேறு பண்புகளைக் குறிப்பதாலும், இரு மொழியாளர்களுக்கும் உடன்பாடான சொல்லாக இருந்ததாலும் அது தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். வேதத்தில் ஆளப்பட்ட சொல்லாகவும் அது அமைந்தது, அதற்குப் பெருமையையும் ஏற்றுக் கொள்ளப்படும் தன்மையையும் சேர்த்திருக்கும். ருத்ரத்தில் 14 முறை கூறப்பட்ட அடைமொழி இது ஒன்றே.

“தமிழ்ச் சொல், வடசொல் எனுமிவ்விரண்டும் உணர்த்தும் அவனை உணரலுமாமே” என்று திருமூலர் கூறுவதன் பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும். [திருமந்திரம் 66 ஆகமச்சிறப்பு 10]

திருமூலர் பாடல்களில் தான் சிவன் என்ற பெயர் முதன் முதலாகக் காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து தேவாரத்திலும் வருகிறது. பெயரில்லாப் பெருமானைச் சுட்டும் எல்லாப் பெயர்களும் பண்புகளைக் குறிப்பிடும் அடைமொழிகளாகத் தான் பயன்படுத்தப் பட்டுள்ளன. அவ்வகையில் இது வரை பயன்படுத்தப் படாத சிவன் என்ற அடைமொழியும் சிவகதியையும் இவ்வுலக நல்வாழ்வையும் அருள வல்ல பெருமானின் நலம் செய்யும் தன்மையைக் குறிப்பிடுவதாகவே வந்துள்ளது.

இவ்வாறு அம்மையாருக்கும் திருமூலருக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட சிவன் என்னும் நாமம் இன்று இறைவனின் தனிப் பெரும் பெயராக விளங்குகிறது.

2 ஐந்தெழுத்து

திருமூலர் காலத்துக்கு முன் சிவன் என்னும் பெயர் இல்லாதது போல, ஐந்தெழுத்து என்று அழைக்கப்படும் நமசிவாய மந்திரமும் வழக்கத்தில் இல்லை. தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் ஐந்தெழுத்து பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. கண்ணுதல் கடவுளைக் குறிக்கச் சிவன் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டதன் விளைவாக நமசிவாய மந்திரம் பிரபலமாயிற்று.

அம்மையாரின் பாடல்களில் இரண்டு இடங்களில் ஐந்து என்ற சொல் வருகிறது.

திருவிரட்டை மணிமாலையில் 10 ஆவது பாடல்-

தலையாயின ஐந்தினையும் சாதித்துத் தாழ்ந்து

தலையாயின உணர்ந்தோர் காண்பர்

அதே நூலில் 16வது பாடல்-

புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே

எண்ணி ஓரைந்தும் இசைந்தனவால்

இரண்டு இடங்களிலும் ஐந்து என்பது நமசிவாய மந்திரத்தைக் குறிப்பதாகச் சிலர் பொருள் கொள்ளக் கூடும். கூர்ந்து நோக்கினால் உண்மையை உணரலாம்.

மேலான ஐந்தையும் சாதித்துப் பணிவுடன் மேலான தத்துவத்தை உணர்ந்தவர்கள் இறைவன் கழலைக் காண்பார்கள் என்பது முதல் பாடலின் பொருள். இறைவன் அருளால் நற்செயல்களும், தீநெறி சாராத ஐந்தும் தனக்கு வந்து சேர்ந்ததாக இரண்டாவது பாடலில் அம்மையார் கூறுகிறார்.

இரண்டு இடங்களிலும் ஐந்து என்பது நமசிவாய மந்திரத்தைக் குறிப்பதாகப் பொருள் படவில்லை. புத்தர் போதித்த பஞ்ச சீலம் என்னும் அறநெறிகளோ அல்லது வேறு ஏதேனும் ஐந்து நன்னெறிகளின் தொகுப்போ தான் குறிக்கப் படுவதாகத் தெரிகிறது.

திரு.வி.க. இது ஐந்தெழுத்தைத் தான் குறிப்பது என்று உறுதிபடக் கூறவில்லை. முதல் பாடலில் வரும் ஐந்து என்பது ஐந்தெழுத்தையும் குறிக்கலாம், கொல்லாமை, களவாடாமை, கள்ளாமை, வெஃகாமை, பொய்யாமை ஆகிய அறநெறிகளையும் குறிக்கலாம், பஞ்ச சுத்தி என்னும் சடங்கையும் குறிக்கலாம் என்கிறார். இரண்டாவது பாடலில் வரும் ஐந்து ஐம்புலன்களைக் குறிக்கும் என்று மட்டும் குறிப்பிடுகிறார். [காரைக்கால் அம்மையார் பாடல்களுக்கு உரை – திரு.வி. கலியாணசுந்தரனார்]

நமசிவாய என்ற மந்திரம் ருத்ரம் என்ற வேதப் பகுதியில் காணப்படுகிறது. இறைவனின் பல தோற்றங்களை விவரித்து, வணக்கம் தெரிவித்துக் கொண்டு வரும் 273 போற்றிகளில் 226வது மற்றும் 227வதாக நம சிவாய, சிவதராய என்று வருகிறது. மங்கலமானவருக்கு வணக்கம், மிக அதிகமான மங்கலமுடையாருக்கு வணக்கம் என்று பொருள்படும் இவ்விரண்டும், வேதத்தைப் பொறுத்த வரை பல போற்றிகளில் ஒன்றாக, எந்த ஒரு தனித்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாததாகவே உள்ளன. 11 பத்திகள் கொண்ட ருத்ரத்தில் நமசிவாய மந்திரம் வரும் எட்டாவது அனுவாகம் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி http://www.shaivam.org

Eighth Anuvaka

Namah somaya cha Rudraya cha

Salutations to Him who is with His consort Uma.

Namastamraya charunaya cha

Salutations to Him who is red and rosy-red also.

Nama shangaya cha pashupatayou cha

Salutations to Him who brings happiness and who is the Lord of all creatures.

Nama ugraya cha bhimaya cha

Salutations to Him who is fierce and strikes terror at sight into His enemies.

Namo Agrevadhaya cha dure vadhaya cha

Salutations to Him who kills in front and from afar.

Namo hantre cha haniyase cha

Salutations to Him who is in the form of everyone who slays, and who kills all at the time of Pralaya.

Namo vrukshebhyo harikeshebhyo

Salutations to the stately trees with green tufts of leaves.

Nama staraya

Salutations to Him who is the Pravana mantra; Om.

Namash shambhave cha mayo bhave cha

Salutations to Him who is the source of happiness here and hereafter.

Namah shankaraya cha mayaskaraya cha

Salutations to Him who is inherently of the nature of conferring happiness directly in this world

and the world hereafter.

Namah Shivaya cha shivataraya cha

Salutations to Him the auspicious one, who is more auspicious than all others.

Nama stiryouraya cha kulyaya cha

Salutations to Him who is ever present in holy places and on the banks of the rivers.

Namah paryaya chavaryaya cha

Salutations to Him who stands in the further shore and on this shore.

Namah prataranaya chottaranaya cha

Salutations to Him who ferries men over the sins and evils of Samsara (the Illusions of the

world), and who by the grant of knowledge ferries them over Samsara altogether.

Nama ataryaya chaladyaya cha

Salutations to Him who is born again and again in Samsara and who tastes the fruits of Karmas

in the form of Jiva.

Namah shaspyaya cha, phenyaya cha

Salutations to Him who is in the form of tender grass and foam.

Namah sikatya ya cha pravahyaya cha.

Salutations to Him who is in the form of the sands and flowing water.

[இதில் வரும் உமையொருபாகன், மறுபிறவி முதலிய கருத்துகள் சாயணரை ஒட்டி மொழிபெயர்த்த ARTHUR BERRIEDALE KEITH (www.sacred-texts.com) என்பவரது மொழிபெயர்ப்பில் காணப்படவில்லை.]

பஞ்சாட்சரம் வேத வழக்கிலிருந்து மாறுபட்டது என்று அ.ச.ஞா. கூறுகிறார். வேதம் அல்லாத வேறு எந்த மூலத்திலிருந்து அது வந்தது என்பதை அவர் கூறவில்லை.

3 கணபதி வழிபாடு ஏற்பட்டது .

பண்டைத் தமிழ் இலக்கியங்கள் எதிலும், தொல்காப்பியத்திலோ, சங்க இலக்கியங்களிலோ, பின்னர் வந்த அம்மையாரின் பாடல்களிலோ, விநாயகரைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.

முதன்முதலாக, திருமூலரின் திருமந்திரத்தில் தான் ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை என்று தொடங்கும் விநாயகர் துதியைக் காண்கிறோம். [இப்பாடலைச் சிலர் இடைச் செருகலாகக் கருதுகின்றனர். அப்பர் சம்பந்தருக்குச் சற்றே முந்திய காலத்தவர் திருமூலர். இவர் காலத்தில் விநாயகர் வழிபாடு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.] சம்பந்தர் ஐந்து இடங்களிலும் திருநாவுக்கரசர் ஏழு இடங்களிலும் விநாயகரைப் பற்றிக் குறிப்பிடுகின்றனரே அன்றி விநாயக வணக்கம் என்று எந்தப் பாடலும் பாடவில்லை. அவர்கள் காலத்துக்குச் சற்று முன் தான் தமிழ் நாட்டில் விநாயகர் வழிபாடு ஏற்பட்டிருக்க வேண்டும். காலத்தால் பிற்பட்ட மாணிக்க வாசகரும் சிவனை வேலன் தாதை என்று குறிப்பிடுகிறாரே தவிர, விநாயகர் பற்றி எந்த விதத் தகவலும் தரவில்லை. எனவே சம்பந்தர் காலம் தொடங்கி மாணிக்க வாசகருக்குப் பிந்திய காலம் வரை சிறுகச் சிறுக விநாயகர் வழிபாடு பெருகி இருக்க வேண்டும்.

சிவனுக்கும் உமை அம்மைக்கும் விநாயகர் பிறந்ததாகச் சம்பந்தரின் பிடியதன் உருவுமை என்ற தேவாரம் கூறுகிறது. எனவே அவர் காலத்துக்கு முன்னமேயே, விநாயகர் தமிழ் நாட்டுக்கு அறிமுகமானது மட்டுமல்லாமல் அவரைச் சிவனுடன் உறவு முறையில் தொடர்பு படுத்தவும் முயற்சிகள் தொடங்கி இருக்கவேண்டும் என்று தெரிகிறது.

நரசிம்ம வர்ம பல்லவனின் தளபதியாக இருந்து, பின்னர் சிறுத்தொண்டர் எனப் பெயர் பெற்ற பரஞ்சோதியார் வாதாபி நகர் மீது படை எடுத்து, அதனைத் தீக்கிரையாக்குமுன் அங்குக் கோட்டை வாயிலில் இருந்த விநாயகர் சிலையைப் பெயர்த்து எடுத்து வந்து, தன் ஊராகிய திருச்செங்காட்டங்குடியில் பிரதிட்டை செய்தார் என்று கூறப்படுகிறது. [திருவாரூர்க் கோயிலில் பிரதிட்டை செய்யப்பட்டதாக குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறுகிறார். திருவாரூர்த் திருக்கோயில் என்ற நூலில் காண்க] சிறுத் தொண்டர் சம்பந்தரின் சமகாலத்தவர் என்று பெரிய புராணத்திலிருந்து அறிகிறோம். அவர் காலத்திலேயே அத்தலம் கணபதீச்சுரம் எனப் பெயரிடப்பட்டிருந்ததிலிருந்து அதற்கு முன்னமேயே விநாயகர் தமிழ் நாட்டில் அறிமுகமானதை அறிகிறோம். மேலும் பரஞ்சோதியார் போர்க் களத்திலிருந்து கொண்டுவந்த பொருள்களைப் பட்டியலிடும் சேக்கிழார் அவற்றில் விநாயகர் திருவுருவம் இருந்ததாகக் குறிப்பிடவில்லை.

விநாயகரின் வழிபாடு வேதத்தின் தாக்கத்தால் ஏற்பட்டதா என்று பார்த்தால் அங்கும் விநாயகரைப் பற்றிய குறிப்பு இல்லை. வேதத்தில் உள்ள ஒரு பாடல் விநாயகருக்கு உரியதாகத் தற்போது வழங்கப்படுகிறது.

கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே

கவிம் கவீனாம் உபமஸ்ரவஸ்தமம்

ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பத

ஆநஸ் ஸ்ருண்வன் ஊதிபிஸ் ஸீதஸாதனம் [ரிக்வேதம் 2-23]

இதன் பொருள் – தேவகணங்களுக்குப் பதியாகி கணபதி எனப் பெயர் பெற்ற உம்மைப் போற்றி அழைக்கிறோம். நீர் மதிமான்களுக்குள் மதி மிக்கவர். ஒப்பற்ற புகழ் படைத்தவர். ஒளி பொருந்தியவர்களில் சிறந்தவர். வேதத்திற்கு வேத நாயகராய் விளங்குபவரே, எங்களுடைய பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து உமது அருள் பொலிவுடன் உமக்குரிய ஆசனத்தில் இங்கு எழுந்தருள்வீராக. [மொழிபெயர்ப்பு- ராமகிருஷ்ண மடம்]

இந்தப் பாடலில் எங்கும் விநாயகரின் பிற பெயர்களோ, அவரது தோற்றம் பற்றிய குறிப்புகளோ காணக் கிடைத்தில. இவ்வரிகள் ரிக் வேதத்தில் பிரம்மணஸ்பதி என்ற தலைப்பில் வரும் நான்கு பாடல்களில், முதலாவது பாடலின் முதல் இரண்டு வரிகள். அந்தப் பாடலின் மீதி வரிகளிலோ, மற்றைய மூன்று பாடல்களிலோ கணபதி என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் பிரம்மணஸ்பதி என்ற சொல் பல முறை குறிக்கப்படுகிறது.

கணபதி என்ற பெயரில் ஒரு தெய்வம் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பின்னர் அவரை வழிபட இந்த வேதப் பாடல் பயன்படுத்தப்படத் தொடங்கியது என்று தான் அறிய முடிகிறது.

கணேச சூக்தம் என்ற பெயரில் ஒரு தோத்திரம் உள்ளது. இது 15 வரிகள் கொண்ட ஒரு தொகுப்பு. இதன் முதல் 9 வரிகள் ரிக் வேதத்தின் 8வது மண்டலம் 81வது பாடலிலிருந்து எடுக்கப்பட்டவை. இவை இந்திரனைக் குறித்தவை. அடுத்த 2 வரிகள் முன் சொன்ன 2வது மண்டலம் 23வது பாடலின் துவக்கமாகும். பிரம்மணஸ்பதியைப் போற்றுபவை. மற்ற 4 வரிகள் ரிக் வேதம் 10-112 இல் 9வது, 10வது பாடல்களாக உள்ளன. இவையும் இந்திரனைத் துதிப்பவையே.

உருவ வழிபாடு ஏற்படுத்தப்பட்ட பிறகு, அதற்காக, தொடர்பு இருக்கிறதோ இல்லையோ, ஏதேனும் ஒரு வேதப் பாடலைப் பயன்படுத்துவது இங்கு வழக்கம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

இந்தியாவின் பிற பகுதிகளில் பார்த்தால், மஹாராஷ்டிரத்தில் மட்டும் தான் பெருமளவுக்கு விநாயகர் வழிபாடு நடைபெறுகிறது. தமிழ் மக்களும், மராட்டியர்களும் குடியேறி ஆங்காங்கு விநாயகர் கோயில்கள் அமைத்ததைத் தவிர, இந்தியாவின் பிற பகுதிகளில் இது மிகுதியாகக் காணப்படவில்லை. எனவே இது மஹாராஷ்டிரப் பகுதியிலிருந்து வந்தது உறுதிப்படுகிறது.

காலத்தால் பிற்பட்டவராக இருந்தாலும் விநாயகர் சிவனுடைய மூத்த பிள்ளை என்ற இடத்தைப் பிடித்து விட்டார். தமிழ் நாட்டில் விநாயகர் வழிபாட்டுக்குப் பிறகே பிற தெய்வங்களுக்குப் பூசை என்ற வழக்கமும் நிலைத்து விட்டது. மற்றக் கோவில்களை விட பிள்ளையார் கோவில்களே இங்கு அதிகம்.

4 திரு நீறு பூசும் வழக்கம் ஏற்பட்டது

வேத ஸம்ஹிதைகளிலோ, தொல்காப்பியத்திலோ, சங்க நூல்களிலோ திருநீறு பற்றிய குறிப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. [அதர்வசிரம் போன்ற சில உபநிடதங்களில் திருநீறு பேசப்படுகிறது. ஆனால் இவை காலத்தால் பிற்பட்டவை.]

பெருமான் உடலெங்கும் நீறு பூசிக் காட்சி கொடுப்பதை அம்மையார் தான் முதன் முதலாக நமக்குத் தெரிவிக்கிறார். சுடலைப் பொடி அவரது பவள மேனியை வெள்ளி மலையாக மாற்றி விட்டதாக அவர் கூறுகிறார். தான் திருநீறு அணிந்ததாகவோ, மற்ற இறை அன்பர்கள் நீறு பூசியிருப்பதாகவோ அவர் சொல்லவில்லை.

சம்பந்தர் காலத்தில் தான் சிவநேசச் செல்வர்கள் நீறு பூசும் வழக்கத்தைக் காண்கிறோம். திருநீறு தந்து ஆளுடைய பிள்ளை பாண்டியனின் வெப்பு நோயை நீக்கினார். அப்பருடைய நோய் நீங்கக் காரணமாக இருந்ததும் அவரது தமக்கையார் தந்த நீறுதான். ஒரு முக்கியமான வேறுபாடு என்னவெனில் சிவன் பூசுவதும், காபாலிகர்கள் பூசியதும் காடுடைய சுடலைப் பொடி. சைவர்கள் பூசுவதோ பசுஞ் சாணத்திலிருந்து தயாரிக்கப் படுவது.

எனவே இந்த இடைக்காலத்தில் தான் இவ்வழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலும் சந்தனத் திலகம் இடும் வழக்கமே இருக்க மஹாராஷ்டிரத்திலும் தமிழ் நாட்டிலும் மட்டும் விபூதி இருக்கக் காண்கிறோம். பழந் தமிழகத்தில் இல்லாத இது மஹாராஷ்டிரத்திலிருந்து தான் இங்கு வந்திருக்க வேண்டும் என்பது உறுதிப்படுகிறது. ஹோமம் செய்தபின் அந்தச் சாம்பலை நீரில் குழைத்து அணியும் வழக்கத்திலிருந்து இது தோன்றி இருக்கவேண்டும்.

5 ஆடற்பெருமான் வழிபாடு பரவியது

அம்மையாருக்குச் சிறிது காலம் முன்பு தான் ஆடற்பெருமான் வழிபாடு தோன்றியது என்று அறிந்தோம். இனி, அவ்வழிபாட்டின் வளர்ச்சியை ஆராய்வோம்.

தலையாலங்காடு

ஆலங்காடு என்ற பெயரில் பல ஊர்கள் தமிழ் நாட்டில் உள்ளன. ஆலமரங்கள் அனேகமாக எல்லா ஊர்களிலும் இருந்தாலும் சில இடங்கள் மட்டும் ஆலங்காடு எனப் பெயரிடப் பட்டிருப்பது அம்மையாரின் பாடல்கள் பிரபலமான பின் ஆலங்காட்டில் நடனமாடும் இறைவன் என்ற கருத்து மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றதைக் காட்டுகிறது. மயிலாடுதுறை அருகில் ஒரு ஊரும், அரக்கோணத்தை அடுத்து ஒரு ஊரும் திரு ஆலங்காடு என்று பெயரிடப்பட்டுள்ளன. திருவாரூருக்கு அருகில் தலையாலங்காடு என்ற பாடல் பெற்ற தலம் உள்ளது. இங்கு இறைவன் நடனமாடுவதாகக் கருதப்பட்டு நர்த்தனபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலம் அம்மையாரின் பாடலை ஒட்டிப் பெயர் பெற்ற முதல் ஊராக இருக்கக் கூடும். மற்ற ஆலங்காடுகளிலிருந்து வேறுபடுத்துவதற்காக இது தலை ஆலங்காடு என்று பெயரிடப் பட்டிருக்கலாம்.

தமிழ்ப் பெயர்களை ஸம்ஸ்கிருதத்தில் மாற்றும்போது நேருக்கு நேராகத் தான் மொழிபெயர்ப்பது வழக்கம். அவ்வகையில் திருவாலங்காடு வடாரண்யம் என்று கூறப்படுகிறது.(வட- ஆல், அரண்யம்- காடு) ஆனால் தலையாலங்காடு நர்த்தனபுரி என்று கூறப்படுகிறது. எனவே தலைஆலங்காடு என்று பெயரிடப்பட்டது இறைவனின் ஆடற்கோலத்தை நினைவு கொண்டே என்ற முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாதது.

காரைக்கால் அம்மையாரின் ஆலங்காட்டில் இறைவனின் நடனக் கோலம் கருத்தளவில் உருவாகி இருந்தது. தலையாலங்காடு என்னும் தலத்தில் அது அருவுருவமாகக் காட்டப்பட்டது. திருவாரூரில் அது மேலும் செம்மைப் படுத்தப்பட்டது.

திரு ஆருர்

சோழ நாட்டில் ஏழு விடங்கத் தலங்கள் உள்ளன. விடங்க என்ற சொல்லுக்கு உளியால் செதுக்கப்படாத என்று பொருள். கற்சிலைகளை உளியால் செதுக்கி உருவாக்குவது போல் அல்லாமல் அச்சில் வார்த்துச் செய்ததால் உலோகச் சிலைகள் அப்பெயர் பெற்றிருக்கக் கூடும். விடங்கத் தலம் என்ற பெயர் இங்கு தான் முதன் முதலாக உலோக சிற்பத் தொழில் வளர்ந்தது என்று கருத இடமளிக்கிறது. திருவாரூர், திருநள்ளாறு, நாகை, திருக்குவளை, திருக்காறாயில், திருக்கோளிலி, வேதாரண்யம் ஆகிய இந்த இடங்களில் இறைவன் முறையே அஜபா நடனம், கமல நடனம், தரங்க நடனம், குக்குட நடனம், உன்மத்த நடனம், பிருங்க நடனம், ஹம்ச நடனம், ஆகிய வெவ்வேறு வகை நடனங்கள் ஆடுவதாகக் கூறப்பட்டபோதிலும், இந்த ஏழு தலங்களிலும் நின்ற நிலையிலான உலோக விக்கிரகத்தில் இறைவனின் நடனக் கோலம் கற்பிக்கப்பட்டு மட்டுமே இருந்தது. முதன் முதலாக அதைக் கண்ணுக்குப் புலனாக்கிக் காட்டியது தில்லையே.

இறைவனின் ஆடற் கோலத்தைச் சிற்பமாக வடிக்க இந்த ஏழு விடங்கத் தலங்களிலும் முயன்றிருக்க வேண்டும். நின்ற கோலத்தில் உள்ள சிலை வடிப்பது வரையில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தில்லைச் சிற்பிகள் இதில் முழு வெற்றி பெற்று உலோக சிற்பக் கலைத் துறையில் ஒரு பெரும் சாதனை படைத்துவிட்டனர்.

மற்ற ஆறு விடங்கத் தலங்களை விடவும் காரைக்கால் அம்மையாரின் ஆலங்காட்டை விடவும், தலையலங்காட்டை விடவும் திருவாரூருக்கு ஏற்றம் மிகக் கொடுக்கப்பட்டதற்குக் காரணம், அது அக்காலச் சோழ மன்னர்களின் தலைநகராக இருந்ததே.

ஆடற்கோலப் பெருமான் வழிபாட்டைப் பொறுத்தவரை திருவாரூர் பழமை வாய்ந்தது என்று கருதப்படுகிறது. எல்லாக் கோயில்களிலும் தேவாரம் பாடுவதற்கு முன் திருச்சிற்றம்பலம் என்று கூறித் தில்லையை வணங்கிய பின்னரே துவங்குவது வழக்கம். ஆனால் திருவாரூரில் மட்டும் அந்த வழக்கம் கடைப் பிடிக்கப் படுவதில்லை. எனவே இது தில்லையை விட மூத்த தலம் என்பது பெறப்படுகிறது.

திருநாவுக்கரசர்தன்பாடல்ஒன்றில்

“மாடமொடு மாளிகைகள் மல்குதில்லை

மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை

ஆடுவான் புகுதற்கு முன்னோ பின்னோ

திருவாரூர் கோயிலாக் கொண்டநாளே”

என்று வியக்கிறார். அவர் காலத்தில் தில்லை ஆடற் பிரானின் காரணமாக மிகப் புகழ் பெற்று விளங்கிய போதும் திருவாரூர் தன் பழமைச் சிறப்பு காரணமாகப் புகழ் பெற்றிருக்க வேண்டும். சைவ சமய வழிபடு வடிவங்களில் பிரதானமாக விளங்கும் ஆடற்பெருமான் வழிபாட்டுக்கு வழிகாட்டிய ஊர் என்பதனால் தான் போலும், திருவாரூர்ப் பிறந்தார் அனைவர்க்கும் அடியேன் என்று சுந்தரர் பாடுகிறார்.

விடங்கத் தலங்களில் தியாகராஜா என்றும் விடங்கர் என்றும் அழைக்கப்படுபவர் உமையோடும் கந்தனோடும் கூடியவர் என்ற பொருளில் சோமாஸ்கந்தர் எனப்படுகிறார். அருகில் மற்றொரு அம்மன் சிலையும் சிவகாம சுந்தரி என்ற பெயரில் உள்ளது. தில்லை நடராஜாவின் அருகில் உள்ள அம்மனும் சிவகாமசுந்தரி என்றே அழைக்கப் படுகிறார்.

திருவாரூரின் புற்றிடங்கொண்டாரும் தில்லையின் லிங்கப் பெருமானும் மூலட்டானேசுரர் என்றே அழைக்கப்படுகின்றனர். [குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய திருவாரூர்த் திருக்கோயில்] எனவே திருவாரூரின் சமய முயற்சிகளின் தொடர்ச்சியே தில்லை என்பது புலனாகிறது.

தில்லை

தில்லை மூவாயிரவருக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தைப் பார்க்கும்போது அவர்கள் தாம் சைவ சமய எழுச்சிக்குக் காரணமான இந்த மாற்றத்தைச் செய்திருப்பார்களோ என்று தோன்றுகிறது.

காளி வழிபாடு நடைபெற்று வந்த தில்லை அம்பலத்தில் ஆடற் பெருமானை ஏற்றும் அவர்களுடைய முயற்சிக்குப் பலத்த எதிர்ப்பு இருந்திருக்க வேண்டும். அதனைச் சமாளித்து அவர்கள் தங்கள் திட்டத்தைச் செயல்படுத்தி இருக்கலாம்.

சோழியப் பிராமணர்களான தில்லை வாழ் அந்தணர் ஏற்படுத்திய நடராஜ வழிபாடு வைதிக முறையைச் சார்ந்ததாக இருந்ததில் வியப்பில்லை. மற்றொரு சோழியப் பிராமணத் தலமான ஆவுடையார் கோவிலைப் போல இங்கும் முதலில் மகுடாகமமே பின்பற்றப்பட்டது. பின்னர் பாதஞ்ஜல சாஸ்திரம் என்னும் நூல் அதன் வழிபாட்டு முறைகளை மாற்றி அமைத்தது.

“தில்லைப் பெருங்கோயிற் பூசை மகுடாகம விதிப்படி முற்காலத்தில் நடைபெற்றதென்பது இரட்டையர் பாடிய தில்லைக் கலம்பகத்தாலும், 1684-86 ஆண்டுகளில் மராட்டிய மன்னன் சாம்போசி நிகழ்த்திய தில்லைச் சிற்றம்பலவர் கோயில் கும்பாபிஷேகம் உயர் ஆகமப்படி நடைபெற்றதாகச் செப்பேட்டிற் குறிக்கப் பெற்றிருத்தலாலும் அறியப்படும்.” [சிதம்பரம் மயில்வாகனன் தொகுத்த, ‘வரலாற்றில் சிதம்பரம் நடராஜர் கோவில்’ என்ற புத்தகத்தில் காணப்படும் வெள்ளை வாரணனாரின் கட்டுரை]

அம்மையாரின் பெம்மான் ஸம்ஹிதைக் கால ருத்திரனைப் போல் அச்சம் தரும் தோற்றம் உடையவன். கண்ணுக்கு அழகற்ற எட்டி, இலவம், ஈகை, காரை, சூரை ஆகிய முட்செடிகளுக்கு இடையிலும், காதிற்கு இனிமையற்ற நரி, ஆந்தை, கூகை, ஓமன் ஆகிய பிராணிகளின் ஓலத்துக்கு இடையிலும், நெடும்பல் குழிக்கட்பேய் சூழவும், மலையமான் மகள் மருண்டு நோக்கவும் பிணப் புகையினூடே நடனமாடுகிறான். தில்லை மூவாயிரவர் ஏத்திய அம்பலத்தாடியோ உபநிடதங்கள் கூறுவது போல ஆனந்தமே வடிவானவன். அவன் தன் கொவ்வைச் செவ்வாயின் குமிண் சிரிப்பால் அடியார்களுக்கும் ஆனந்தம் அளிப்பவன். வேதம் பரிணாம வளர்ச்சி அடைந்ததற்கு இணையாக இறைவனின் தோற்றம் பற்றிய கருத்தும் மாறி வருவதைப் பார்க்கிறோம்.

காளி வழிபாடு

தில்லையை ஒட்டி ஒரு புராணக் கதை உள்ளது. நடராஜாவுடன் நடந்த நாட்டியப் போட்டியில் தோற்ற காளி ஊரை விட்டுப் புறம் போய் எல்லையில் தங்கினாள் என்பதே அது. கடவுளர்களிடையே போட்டி, பகைமை என்ற கற்பனைக் கதையின் பின்னே வேறு ஏதோ ஒரு பொருள் இருக்க வேண்டும்.

காளி வழிபாடு மிகுந்திருந்த தில்லையில் புதிதாக ஏற்பட்ட நடராஜர் வழிபாடு செல்வாக்குப் பெற்று முன்னது புறம் தள்ளப் பட்டிருக்கலாம். “தில்லை வனத்திற்கே உரிய தெய்வம் தில்லைக்காளி. அவளே தில்லை வனத்தின் மத்தியில் இருந்தவள். சிவ வழிபாடு தமிழகத்தில் நிலை பெற்றபோது காளியை அகற்றிவிட்டு அவ்விடத்தில் சிவன் அமர்த்தப்பட்டார்” என்று முனைவர் ஆ.பத்மாவதி கூறுகிறார். [சைவத்தின் தோற்றம் ஆ.பத்மாவதி பக். 21]

தில்லையில் ஆடற்பெருமானின் திருமுன்னுக்கு அடுத்த அறையில் ரகசியம் என்று அழைக்கப்படும் ஒரு வெற்றறை உள்ளது. பஞ்ச பூதத் தலங்களில் ஆகாய வடிவில் விளங்கும் இறைவனின் இடம் இது என்று தத்துவ விளக்கங்கள் கூறப்பட்டபோதிலும், இது ஒரு சுரங்கப் பாதையை அடைக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் அதனுள் பழைய காளி வழிபாட்டுத் தலம் இருந்திருக்கலாம் என்று டாக்டர் சுவாமி அவர்களை மேற்கோள் காட்டி முனைவர் ஆ.பத்மாவதி கூறுகிறார். [சைவத்தின் தோற்றம் ஆ.பத்மாவதி பக். 51] சித்சபையின் ரகசிய மண் சுவருக்குப் புனுகுக் காப்பு அணிவிக்கும் வழக்கம் உள்ளதாகக் கூறப்படுவது இதை வலுப்படுத்துகிறது. [ஸ்ரீநடராச தத்துவம் – வை.தட்சிணாமூர்த்தி பக். 255]

உலோகச் சிலை

சிவாலயத்திலுள்ள மற்ற உருவங்கள் எல்லாம் கருங்கல்லால் செதுக்கப் பட்டிருக்க, நடராஜர் சிலை மட்டும் உலோகத்தால் செய்யப்பட்டிருப்பது ஏன்?

காவிரி டெல்டாப் பகுதியான சோழ நாட்டில் கருங்கல் இயற்கையில் கிடைப்பதில்லை. போக்கு வரவு வசதி இல்லாத அக்காலத்தில் வெளியூர்களிலிருந்து கருங்கற்களைக் கொண்டு வருவதற்குப் பல வலிமையான மக்கள் பல நாள் முயன்றால் தான் முடியும். பிற்காலத்தில், பத்தாம் நூற்றாண்டில், சோழ அரசர்கள் வலிமை பெற்ற பின், இதற்காகச் செலவு செய்யக்கூடிய வசதி ஏற்பட்டு, கருங்கல்லில் சிலை வடிக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். அதுவரை உலோகத்தால் சிலை செய்யும் முறையே அங்கு மிகுதியாக இருந்திருக்க வேண்டும். எனவே முதல் நடராஜர் சிலை உலோகத்தால் செய்யப்பட்டது. மக்கள் மற்றத் துறைகளைவிடச் சமயத் துறையில் மிகவும் பழமை விரும்பிகளாக இருப்பது இயல்பு. எனவே, கருங்கல் சிலை செய்யும் வழக்கம் தோன்றிய பின்னரும் புதிதாக ஏற்பட்ட தெய்வங்களை வேண்டுமானால் கருங்கல்லில் வடித்துக் கொள்வோம், பழமையான தெய்வத்திற்குப் பழமையான முறையில் உலோகத்தால் தான் சிலை செய்யப் படவேண்டும் என்று கருதி இருப்பர். மிகப் பழமையான தெய்வமாகிய திருமாலின் மூலவர் சிலைகள் சுதையால் செய்யப் பட்டிருப்பதைக் காண்க. இன்று பாண்டி நாட்டில் மட்டும் பல இடங்களில் நடராஜர் கல் சிலை வடிவத்தில் காணப்படுகிறார்.

தில்லையில் ஏற்பட்ட நடராஜர் வழிபாடு எப்படி எல்லாக் கோவில்களுக்கும் பரவியது? எல்லாக் கோவில்களிலும் உள்ள மூர்த்திகள் அர்த ஜாமத்தில் தில்லையில் ஒடுங்குவதாகக் கூறப்படுவது ஏன்?

சோழ அரசர்கள் ஆடல் வல்லான் வழிபாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அவர்கள் காலத்தில் நெல் அளக்கும் மரக்காலுக்குக் கூட ஆடல் வல்லான் என்று பெயரிடப்பட்டது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் விநாயகருக்கும் முன்பாக நடராஜருக்குப் பூஜை செய்யப்படுகிறது. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செந்தளைக் கல்வெட்டு, சோழ நாட்டில் விளங்கிய கோயில்கட்கெல்லாம் முதன்மையாகப் புலியூர்ச் சிற்றம்பலம் விளங்கியதால் கோயில் தேவ காரியங்களைக் கவனிப்பவர்களே, நாட்டிலுள்ள ஏனைய சிவஸ்தலங்களின் வழிபாட்டு முறைகளையும் கண்காணித்து வந்துள்ளனர் என்று கூறுகிறது. எனவே சோழ அரசர் ஆணைப்படி எல்லாக் கோவில்களிலும் ஆடற்பெருமானின் சிலை அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

9


சைவ வளர்ச்சியில் சோழ அரசர்களின் பங்கு


தமிழ்நாட்டின் பிற பகுதிகள் போல் சோழநாட்டிலும் சமண சாக்கிய சமயங்கள் பெருகி வளர்ந்தன. புகழ் பெற்ற புத்த விகாரங்கள் இருந்த நாகப்பட்டினம், பூதமங்கலம் ஆகியனவும், காரைக்காலுக்கு மிக அருகாமையில் கொல்லார்புரம், புத்தர்குடி என வழங்கும் ஊர்ப் பெயர்களும், சம்பந்தர் திருநள்ளாறிலிருந்து திருத்தெளிச்சேரி வருமுன் அவரை வாதுக்கு அழைத்த சாக்கியர்கள் மீது இடி விழுமாறு செய்தார் என்ற பெரிய புராணக் குறிப்பும் சோழநாட்டு மக்களிடையே புறச்சமயங்கள் செல்வாக்குப் பெற்றிருந்ததைக் காட்டும்.

ஆனால் சோழநாட்டு மன்னர் எவரும் சமணத்தையோ சாக்கியத்தையோ தழுவினதாகச் சான்றுகள் இல்லை. சோழநாட்டை ஆண்ட களப்பிர மன்னன் கூற்றுவன் கூடச் சிறந்த சைவனாகவே விளங்கினான். கூன் பாண்டியனும் மகேந்திர பல்லவனும் சமணத்தைத் தழுவியிருந்து சைவர்களுக்கு இன்னல் விளைத்த பெரிய புராணச் செய்தியையும், சேர நாட்டு இளவரசன் இளங்கோ சமணத் துறவியானது குறித்துச் சிலம்பு தரும் செய்தியையும் இதனோடு ஒப்பிடுக.

சைவ சமய எழுச்சிக்குச் சோழநாடு தொட்டிலாக விளங்கியது. இதற்குக் காரணமான அம்மையார், சம்பந்தர், திருமூலர் ஆகியோர் இங்கு தான் தோன்றினர். சைவத்தின் தலைநகரான தில்லையும் சோழநாட்டில் தான் உள்ளது. சைவத்தின் மிகப் பெரிய மாற்றங்கள் இக்காலத்தில் சோழ நாட்டில் ஏற்பட்டதற்குக் காரணம் என்ன?

வேதநெறிக்கு ஊக்கம்

வேதநெறியே சைவத்தை மீண்டும் நிலை நாட்டும் என்பதை அம்மையாரின் வழிகாட்டுதலினின்றும் சோழ மன்னர்கள் உணர்ந்திருக்க வேண்டும். அக்காலத் தமிழ் அந்தணரிடையே சிலர் மட்டுமே சைவத்தைச் சார்ந்து இருந்தனர் என்பது, தில்லை மூவாயிரவர், ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர், திருவீழிமிழலை ஐநூற்றுவர் என்று அவர்களது எண்ணிக்கை சுட்டப்பட்டிருப்பதால் அறியலாம். திந்நாகர் போன்ற சில பௌத்தர்கள் பிராமண குலத்தவர் என்று கூறப்படுவதிலிருந்து சில பிராமணர் சமண சாக்கியத்தைச் சார்ந்து இருந்ததும் பெறப்படுகிறது. மற்றவர்கள் திருமால் வழிபாடே தமிழ் மண்ணின் பழமையான நெறி என்ற கொள்கையில் நிலைத்திருக்கக் கூடும். இந்நிலையில் சைவத்தை வளர்க்க என்று வடக்கிலிருந்து புதிய வேதியர்களைத் தமிழகத்தில் குடியேற சோழ மன்னர்கள் ஊக்குவித்திருக்கக் கூடும். தேவாரக் காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தலங்கள் வேதியர்கள் நிறைந்த ஊராகக் கூறப்பட்டிருப்பதைக் காண்க.

வடக்கிலிருந்து வேதியர்கள் இக்காலத்தில் குடியேறியதை எப்படி அறிகிறோம்? அம்மையார் காலம் வரை இல்லாத திருநீறு பூசும் வழக்கமும் கணபதி வழிபாடும் தேவாரக் காலத்தில் ஏற்பட்டு விட்டன. இவ்விரண்டும் இந்தியாவில் தமிழ்நாடு தவிர, மராட்டியப் பகுதியில் மட்டும் தான் உண்டு. எனவே ஒரு வேதியக் கூட்டம் அப்பகுதியிலிருந்து வந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது. [இவர்கள் வடமர் எனப்பட்டனர். இவர்களைப் பற்றி அந்தணர்களும் சைவமும் என்ற தலைப்பில் காண்க.]

இவ்விரண்டும் அந்தணர் அல்லாத பிறரால் வந்திருக்கக் கூடாதா என்ற கேள்வி எழலாம். மராட்டியப் பகுதியின் சித்பாவன் பிராமணர்களின் உடல் அமைப்பு தமிழ் நாட்டில் சில பிராமணரிடம் காணப்படுகிறது என்று நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார். [A History of South India –K.A.N.Sastry] மேலும், தமிழ்நாட்டு ஸ்மார்த்தப் பிராமணர்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் நர்மதை நதிக்கு வணக்கம் செலுத்துகின்றனர். வைணவர்கள் இவ்வாறு செய்வதில்லை. எனவே வந்தவர்கள் நர்மதை நதிக்கரையை ஒட்டிய விதர்ப்பா பகுதியைச் சேர்ந்த அந்தணர்கள் என்று தெரிகிறது. [மராட்டிய மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற பண்டரிபுரத்தில் உள்ள கிருஷ்ணன் பெயர் பாண்டுரங்கன். அத்தலத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது. சிவன் கோவிலுக்குச் சென்று வந்த பின்னர் தான் பாண்டுரங்கனைத் தரிசிக்க வேண்டு்ம் என்ற வழக்கமும் உள்ளது. பாண்டரங்கம் என்ற நடனத்தை ஆடிய சிவனுக்கும் பாண்டுரங்கனுக்கும் உள்ள தொடர்பு ஆராயத்தக்கது.]

சைவ மறுமலர்ச்சி

அம்மையாரால் துவக்கப்பட்ட சைவ மறுமலர்ச்சி இயக்கம் இந்த வடபுலத்து அந்தணர் வருகையால் மேலும் கொண்டு செலுத்தப்பட்டது. இவர்களால் தமிழகத்தில் வேதக் கருத்துகள் பரவின. குறிப்பாக யஜுர் வேதத்தின் ருத்ரம் என்ற பகுதி முதன்மைப் படுத்தப்பட்டது. நமசிவாய மந்திரம் இக்காலத்தில் பிரபலமானதிலிருந்து இதை ஊகிக்கிறோம். எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்ற மையக் கருத்து உடையது ருத்ரம். அரசனுக்கு ஆலோசனை கூறும் அறிஞர் சபையின் தலைவர் முதல் தன் யஜமானின் வயலில் கதிர்களைத் திருடும் கடைக்கோடி மனிதன் ஈறாகப் பல வகை நிலை மனிதர் வடிவிலும் விளங்குபவராக வர்ணிக்கப்படுகிறார் ருத்திரன் என்பதை முன்னர்க் கண்டோம். இது செய்தொழில் வேறுபாட்டால் எவரும் தெய்வத் தன்மை இழப்பதில்லை என்பதை உணர்த்திச் சாமானிய மக்களும் சைவத்தில் பங்கு கொள்வதை ஊக்குவித்தது.

மேலும் வேதத்தில் நம (வணக்கம்) என்று தொடர்ந்து பல முறை வரும் பாடல் இது ஒன்றே. ஸ்வாஹா என்று முடியும் மந்திரங்கள் வேள்விக்கே உரியன. அத்தகைய மந்திரங்கள் போலன்றி வணக்கம் தெரிவிக்கும் இது, நாமாலை சூடியும் நம்மீசன் பொன்னடிக்கே பூமாலை கொண்டு புனைந்து அன்பால் ஏத்த வேண்டும் என்று அடியார்களுக்கு அம்மையார் உணர்த்தியபடி நாமாலைக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது. [அற்புதத் திருவந்தாதி 87] வேதம் ஓத முடியாதவர்களும் சொல்லக் கூடியதாக நமசிவாய மந்திரம் அமைந்து, பாமர மக்களுக்கும் பிறவிப் பிணி அறுக்க எளிய வழி கிடைத்ததால் சைவம் மக்கள் இயக்கமாக வளர்ந்தது.

பிரபலப்படுத்தப்பட்ட இரண்டாவது வேதப்பாடல் இவ்வுலக வாழ்வுத் தேவைகளைக் கோரும் சமகம் ஆகும். (யஜுர் 4வது காண்டம் 7ஆவது ப்ரபாடகம்). உணவு, புகழ், கேள்வித் திறமை, சத்துருக்களை வெல்லும் திறன், ஆயுள், நல்ல உடல், புத்திர பௌத்திரர்கள், வித்தை, நன்னம்பிக்கை, வசீகரண சக்தி, ஆடல் பாடல், செல்வம், இவ்வுலக இன்பம், சொர்க்கம், நல்ல வீடு, நோயின்மை, பயமின்மை, பலவகை தானியங்கள், மலைகள், மரங்கள் என்று இப்படியாகச் சுமார் 343 பொருட்கள் எனக்கு உரியனவாக ஆகட்டும் என்று வேண்டும் இது, அக்னியையும் விஷ்ணுவையும் குறித்ததாகத் துவங்கி, என்னைத் தேவர்கள் காப்பாற்றட்டும், பிதிரர்கள் அதை ஆமோதிக்கட்டும் என்று முடிவடைகிறது. [http://www.shaivam.org]

சிவன் பெயரோ, ருத்ரன் பெயரோ வராத இப்பாடல் சிவனுக்கு உரியதாக ஆக்கப்பட்டுப் பிரசாரம் செய்யப்பட்டதால் மறுவுலகிலேயே பார்வையைப் பதிய வைத்துக் கொண்டு இவ்வுலக வாழ்வைப் புறக்கணிக்கும் சமண சாக்கியப் போக்கு மாற்றப் பட்டது.

உயிர்க் கொலை தவிர்ப்பு

வேள்விகளைப் பொறுத்தவரை சமண சாக்கியர்களின் குற்றச்சாட்டு, அவை உயிர்க் கொலையைக் கொண்டுள்ளன என்பதே. வேதத்தில் பல பகுதிகள், இரண்டு கால் பிராணிகள் நலமாக வாழட்டும், நாலு கால் பிராணிகள் நன்றாக வாழட்டும் என்று வேண்டுகின்றன. அப்படி இருக்க, ஏன் பிராணிகளைப் பலி கொடுத்து வேள்வி இயற்றினர்? பலி இடப்பட்ட பிராணிகள் நற்கதி அடையும் என்று நம்பியதால் தான். புத்த மதப் பிரசாரம் நடைபெற்ற காலத்தில் அவர்களது அறிவு தூண்டப்பட்டது. உயிர்ப் பலியைத் தவிர்க்க வேண்டி வேள்விகளையே புறக்கணிக்கத் தேவை இல்லை, உயிர்ப் பலி இல்லாமலும் வேள்விகள் செய்ய முடியும் என்பதை உணர்ந்தனர். மற்றவர் கூறும் குற்றச்சாட்டுகளின் நியாயத்தை உணர்ந்து அதற்கேற்பத் தன்னைத் திருத்திக் கொள்ளும் வைதிகப் பண்பு சைவத்தில் இயல்பாகவே இருந்தபடியால் புறச் சமயத்தாரின் தாக்குதல் வலுவிழந்து போயிற்று.

இவ்வாறு சைவத்தின் எழுச்சியும் புலால் மறுப்புக் கொள்கையும் ஒரே காலத்தில் தோன்றியதால் மரக்கறி உணவு தமிழ்நாட்டில் சைவ உணவு என்று பெயர் பெறலாயிற்று. வட இந்தியாவில் வைணவக் கொள்கையுடன் பரவியதால் அது அங்கு வைணவ உணவு எனப்படுகிறது.

இதைத் தொடர்ந்து வந்த சைவ சமயக் குரவர்கள் வேதத்தை ஆதாரமாகக் கொண்ட சைவத்தைத் தமிழில் எளிய மக்களுக்கு எடுத்துச் சென்றனர். வேதத்தின் அக்னி வழிபாடும் சிவலிங்க வழிபாடும் ஒன்றே என்பதை வலியுறுத்திச் சம்பந்தர் செய்த பிரசாரம் சைவ மறுமலர்ச்சியை நிறைவு செய்ததை அடுத்த பகுதியில் காண்போம்.

10


சைவ சமயக் குரவர் நால்வர்


களப்பிரர் காலத்துக்குப் பின் வட தமிழ் நாட்டில் பல்லவர்களும் தெற்கில் பாண்டியர்களும் எழுச்சி பெறத் தொடங்கினர். சோழர்கள் பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தனர். இக்காலத்தில் தான் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் தோன்றித் தங்கள் தீந்தமிழ்ப் பாடல்களால் இறைவனைப் போற்றி மக்களிடையே சைவத்தைச் செல்வாக்குப் பெறச் செய்தனர். அவர்கள் வேத வேள்விகளைப் புறக்கணிக்காமல் சிவபெருமான் மீது பக்தி செலுத்தும் வழியை உபதேசித்தனர்.

இந் நால்வர் வாழ்விலும் சிவபெருமான் செய்த அற்புதங்கள் பல. சம்பந்தருக்கு வேண்டியபோது வேள்விக்குப் பொன் கொடுத்தார். அவர் வேண்டாமலேயே அவரது துன்பம் துடைக்க, முத்துப் பந்தரும் பொற்சிவிகையும் தந்தார். அப்பரை நீற்றறையில் இருந்தபோதும், கடலில் தள்ளப்பட்டபோதும் காப்பாற்றினார். சுந்தரருக்குக் கேட்ட போதெல்லாம் பொன் கொடுத்ததோடு அன்றி, குண்டையூரிலிருந்து நெல்லைச் சுமந்து ஆரூரில் சேர்ப்பித்தார். கணிகையர் மனைக்குத் தூது சென்றார். மணிவாசகருக்குக் குருவாக வந்து அருள் புரிந்தார். நரியைப் பரியாக மாற்றினார். பிட்டுக்கு மண் சுமந்தார்.

வரலாற்றுக் கண்ணோடு பார்க்கின்ற நாம் இந்த விந்தைச் செயல்கள் உண்மையா என்ற ஆராய்ச்சியில் புகத் தேவையில்லை. எங்கள்மேல்வெந்துயரம்வந்தால்அதுமாற்றுவான்என்று அம்மையார் கூறியதன் விளக்கமாக அமைந்துள்ள இக்கதைகளை மக்கள் காலம் காலமாக நம்பி வந்துள்ளனர் என்பதும் உண்மை. இதன் விளைவாக, மக்கள் மனதிலிருந்து இறைவனைப் பற்றிய அச்சம் நீங்கி, நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலேதெய்வமாய், பார்வையிலேசேவகனாய் இறைவனை உணரும் மனநிலை ஏற்பட்டதும் உண்மை.

அப்பர்

ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்பர் முதலில் சமண சமயத்தில் சேர்ந்து முதிய வயதில் சைவத்துக்குத் திரும்பினார். இரண்டு சமயங்களின் அனுபவமும் பெற்ற அவரது பாடல்களில் சமணத்தில் காலத்தை வீணாகக் கழித்து விட்டோமே என்ற உண்மையான கழிவிரக்கமும், பக்தி உணர்ச்சியும் மிகுதியாகக் காணப்படுகின்றன. தளர்ந்த வயதில் ஊர் ஊராகச் சென்று உழவாரப் பணி ஆற்றி எந்தப் பொருளுக்கும் புகழுக்கும் ஆசைப்படாமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று வாழ்ந்த அவர் தன் பாடல்களால் மட்டுமன்றித் தான் எனும் உணர்வு அற்ற எளிமையினாலும் மக்களைக் கவர்ந்திருக்க வேண்டும். அப்பர் பல இடங்களில் சிவனை வேதத்துடன் தொடர்புபடுத்திப் போற்றுகிறார்.

சுந்தரர்

8 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சுந்தரர் இறைவனைத் தோழனாகக் கருதித் தனக்கு மணம் முடித்து வை என்றும், செல்வத்தைச் சுமந்து வந்து என் வீட்டில் கொடு என்றும் உரிமையுடன் கட்டளையிட்டார். சிவனாரும் அதற்கு உடன்பட்டார் என்பது வழக்கு. அதனால் இறைவனுக்கும் மானிடர்க்கும் உள்ள இடைவெளி மேலும் குறைந்தது. சுந்தரரும் சிவனை வேதநாயகன் என்று கூறத் தவறவில்லை.

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகரின் காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டு என்று பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அப்பர் சம்பந்தர் காலத்தில் காமனை எரித்தல், தக்கனை அழித்தல் போன்ற சிவபெருமானின் பொதுவான அருட்செயல்களே பேசப்பட்டன. சில தலங்கள் மட்டுமே தமக்கெனத் தனிச் சிவனருட் செயல்களைப் பெற்றிருந்தன. ஆனால் மணிவாசகர் காலத்தில் பல தலங்களுக்குத் தலபுராணங்கள் ஏற்பட்டிருந்தன. ஒவ்வொரு ஊரிலும் இறைவன் வெவ்வேறு வகையான திருவிளையாடல் புரிந்ததாகக் கூறும் இக்கதைகளை மணிவாசகர் பெரிதும் குறிப்பிடுகிறார். இறைவனை மிக உயர்ந்தவனாகவும் தன்னை மிகத் தாழ்ந்தவனாகவும் கருதி, இப்படிப்பட்ட எளியேனுக்கும் கருணை புரிந்தவன் என்று வர்ணித்தது மூலம் இறைவனைக் கருணயின் முழு வடிவமாகக் காட்டுகிறார் மணிவாசகர். இவரது பாடல்கள் கல் நெஞ்சையும் உருக்க வல்லனவாக இருப்பதால் எல்லாத் தரப்பு மக்களும் சைவத்தின் பால் ஈர்க்கப்பட வாய்ப்பு உண்டாயிற்று. அவரும் சிவனை வேத முதல்வனாகவே காட்டுகிறார்.

சம்பந்தர்

சம்பந்தர் அப்பரின் சமகாலத்தவர். குரவர் நால்வரிலும் வயதில் இளையவர் எனினும் சைவம் தழைத்ததற்கு முக்கிய காரணமாகப் போற்றப்படுகிறார். பெரிய புராணத்தில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் சம்பந்தரைப் போற்றுவதாக உள்ளது. ஏனெனில் வேதநெறி சார்ந்த சைவம் தழைப்பதில் இவரது பங்கு அதிகமானது.

வேதத்தைத் தாழ்த்தினாரா ?

சம்பந்தர் அக்கால வேதியர்களின் எதிர்ப்புக்கு அஞ்சி வேதத்திற்கு உதட்டளவில் மரியாதை செலுத்துகிறார் என்று அ.ச.ஞா. கூறுவது பொருந்தாது. [பெரிய புராணம் ஓர் ஆய்வு- அ.ச.ஞானசம்பந்தம்] ஒப்புக்கு மரியாதை செலுத்துபவராக இருப்பின் பல தடவை சிவனை வேதியன் என்றும், வேத நாவினர் என்றும் இன்னும் பல வகையிலும் வேதத்துடன் தொடர்பு படுத்தி்ப் பேச வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவர் தன் தந்தையார் செய்ய இருந்த வேள்விக்காக இறைவனிடம் பொன் வேண்டிப் பெற்றது அவருக்கு வேதத்தின் பால் இருந்த பெருமதிப்பைக் காட்டுகிறது. வேதநெறி தழைக்க, சைவத்துறை விளங்கத் தான் சம்பந்தர் அவதரித்ததாகச் சேக்கிழாரும் கூறுகிறார்.

சம்பந்தருக்குப் பூணூல் அணிவிக்கும் சடங்கின்போது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நமச்சிவாயம் என்றும் பின்னர் நமச்சிவாயப் பதிகத்தில் வேதியர்க்கு அந்தியுள் மந்திரமாவது நமசிவாயம் என்றும் அவர் கூறுவதன் மூலம் ஐந்தெழுத்து மந்திரத்தை விட காயத்ரி மந்திரமும் வேதமும் தாழ்ந்தவை என்று குறிப்பிடுவதாக அ.ச.ஞா கூறுவது சரி அல்ல. வேதத்தை முழுமையாக ஓத முடியாதவர்கள் ருத்ரம் என்ற பகுதியை மட்டுமாவது ஓதுங்கள். அதுவும் முடியாதவர்கள் நமசிவாய மந்திரம் மட்டுமாவது சொல்லுங்கள். இது வேதத்தின் திரண்ட சாரம் என்ற கருத்தில் தான் சம்பந்தர் அவ்வாறு கூறுகிறார்.

காலத்தின் தேவை

உபநயனச் சடங்கில் உபதேசிக்கப்படும் காயத்திரி அறிவைத் தூண்டுமாறு சூரியனை வேண்டும் மந்திரம். சம்பந்தர் காலத்தில் அறிவு ஜீவிகளால் மக்களது உலகியல் பிரச்னைகளுக்கு உரிய விடை தர முடியாமல் போயிற்று. ஒருபுறம் சமண சாக்கியங்கள் காரண காரியம் காட்டித் தர்க்க வாதம் செய்து இவ்வுலக வாழ்வின் துன்பங்களுக்கு விடை சொல்லாமல் எங்கோ என்றோ அடையப் போகிற முத்தி நிலையே வாழ்வின் லட்சியம் எனப் போதித்தன. மறுபுறம் வைதிகர்களிலும் சிலர், பூர்வ மீமாம்சகர்கள், அதே காரண காரியத் தர்க்க வாதத்தைப் பின்பற்றி கர்மா தான் பலன் தரும், இறைவன் என்று ஒருவன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றனர். உத்தர மீமாம்சகர் எனப்பட்ட வேதாந்திகளோ நீயும் கடவுள், சூழ்ந்தது எல்லாம் கடவுள், அதை உணர முடியாமல் மாயை தடுக்கிறது, அறிவினால் சிந்தித்துப் பாருங்கள், இன்றே இங்கேயே முத்தி அடையலாம் என்றனர். துன்பத்தில் உழலும் சாமானிய மக்களுக்கு இந்தத் தத்துவங்கள் எதுவும் புரிவதில்லை. அவர்களுக்குத் தேவை அனுதாபத்துடன் பார்த்துக் கருணை செய்யக் கூடிய ஒரு கடவுள். எனவே தான் சம்பந்தர்அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது போதும், நலம் செய்பவனாகிய, மிக அதிகமாக நலம் செய்பவனாகிய இறைவன் ஒருவன் இருக்கிறான், அவன் திருவடியைப் பற்றுங்கள், உலகியல் துன்பங்களும் தீரும், முத்தி நிலையும் அடையலாம் என்று கூறும் முகத்தான் பஞ்சாக்கரத்தைச் சிறப்பிக்கிறார். சூரியனை முழுமுதலாகக் கொள்வதை எதிர்த்து அங்கதிரோனவனை அண்ணலாக் கருதவேண்டா என்று கூறும் அப்பரின் வாக்கிலும் அதே கருத்தைக் காண்கிறோம். இவர்களுக்கெல்லாம் மூத்தவரான அம்மையாரும் நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக என்று அறிவு ஜீவிகளின் வழியை இகழ்கிறார். மூவரும் வேதத்தைப் பெரிதும் போற்றிய போதிலும் வேதத்தில் அந்தந்தக் காலத்துக்குத் தேவையான பகுதியை மட்டும் தான் வலியுறுத்துகின்றனர். காலத்துக்கேற்றபடி சைவம் தன்னை மாற்றிக் கொள்வதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் உண்டா?

ஒவ்வொரு தலச்சிறப்பைக் கூறும்போதும் தேவார ஆசிரியர்கள், வேதங்களைக் கற்றுத் துறை போகிய அந்தணர்கள் நிறைந்த ஊர், வேத ஒலி இடையறாமல் கேட்கும் இடம், வேள்விப் புகை மண்டும் ஊர் என்பதாகப் பேசுகிறார்கள். வேதம் ஓதுதலும் வேள்வியும் செய்ய முடியாதவர்களுக்கான எளிய வழியே ஆலய வழிபாடு, முடிந்தவர்கள் அவற்றை இடையறாது தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதே அவர்களது விருப்பம் என அறியலாம்.

சம்பந்தரின் எட்டாவது பாடல்கள்

ராவணன் பிறப்பால் அந்தணன். எனினும் அவன் அந்தணருக்கு உரிய கடமைகளை விடுத்து அரசர்க்குரிய நடத்தைகளைப் பின்பற்றினான். அதனால் சம்பந்தர் எல்லாப் பாடல்களிலும் அவனை அரக்கன் என்று கூறுகிறாரே அன்றி ஓரிடத்தில் கூட அவனது பிறப்பு பற்றிச் சொல்லவில்லை. வேதநெறி தழைக்க வந்த சம்பந்தர் பிறப்பொழுக்கம் குன்றியவனை எவ்வாறு அந்தணனாக ஏற்றுக் கொள்வார்? அவன் மலையின் கீழ் நசுங்கிய நிலையில், தான் இளமையில் கற்ற வேதத்தை நினைவுபடுத்திக் கொண்டு அதை இசைக்க, இறைவன் மகிழ்ந்தார் என்பதைப் பதிகம் தோறும் எட்டாவது பாடலில் கூறிச் சம்பந்தர் வேதியர் வேதம் ஓதுதலின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

உபநிடதம் , புராணம்

ஸம்ஹிதை பலவேறு தெய்வங்களைப் போற்றிப் பாடினாலும் பரம்பொருள் ஒன்று உளது என்று கோடி காட்டியது. வேதத்தின் நிறைவுப் பகுதியாகக் கருதப்படுகின்ற உபநிடதங்களோ அந்தப் பரம்பொருளுக்கு உருவமில்லை, குணமில்லை என்று அறிவு பூர்வமாக ஆராய்ந்து தெரிவித்தது. சராசரி மானிடர்க்கு இத்தகைய அறிவு பூர்வமான அணுகுமுறை புரிவதில்லை. அத்தகையோருக்கு, வேத நெறியை எளிமையாகக் கதை வடிவத்தில் விளக்கப் பிற்காலத்தில் தோன்றின புராணங்கள். இவை ஏதேனும் ஒரு வகையில் வேதத்துடன் தம்மைத் தொடர்பு படுத்திக் கொண்டன. இவை தெய்வங்களுக்கு மானிடரைப் போன்ற ஆனால் சற்று வேறுபட்ட உருவத்தையும் தந்து அவர்களுக்கு மானிடரைப் போன்ற உணர்ச்சிகளும் இருப்பதாக வர்ணித்தன. தெய்வங்கள் வேண்டுவோருக்கு வேண்டுவன அளிப்பவை என்ற கருத்தை உருவாக்கின. புராணங்கள் பல உண்டு. இவற்றில் வேத தெய்வங்களான இந்திரன் வருணன் அக்கினி முதலியோர் பின் தள்ளப்பட்டு பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய தெய்வங்கள் முதன்மை பெற்றனர். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வத்தை முழுமுதலாகவும் மற்றவற்றை அதற்குக் கட்டுப்பட்டதாகவும் காட்டுகின்றன. இவ்வகையில் புராணங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.

ஆயினும் இந்தப் புராணங்கள் வேதநெறிக்கு மாறானதாகக் கருதப்படவில்லை. உபநிடதத்தின் அறிவுசார்ந்த அணுகுமுறையை ஏற்றுக் கொண்ட வேதநெறி புராணத்தின் உணர்ச்சி சார்ந்த வழிக்கும் ஒப்புதல் அளித்தது. ஏனெனில் முன்னர்க் கூறியபடி, பல பெயரிட்டு அழைத்தாலும், கடவுள் ஒருவர் உண்டு என்பதை இவை ஒப்புக் கொள்கின்றன. புராணம் என்ற சொல் பழைமையானது என்று பொருள்படினும் காலத்தின் தேவையை உணர்ந்து வேதநெறியைப் புதிய பாணியில் அவை தந்ததால் புதுமை நாட்டமும் அவற்றில் காண்கிறோம். எனவே சம்பந்தர் புராணக் கதைகளைப் பயன்படுத்தியது எளியவர்களுக்கும் சைவம் சென்றடையவேண்டும் என்பதற்காகவே. வேதம் இல்லாத புராணம் கண்மூடித்தனமான பக்தியை வளர்த்துப் பிற சமயத்தவருடன் பூசலிடச் செய்யும் என்பதால் புராணக் கதைகளைப் பயன்படுத்தும் அதே நேரத்தில் சம்பந்தர் வேதங்களின் பெருமையையும் திரும்பத் திரும்பக் கூறுகிறார்.

ஒன்பதாவது பாடல்கள்

திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் ஒவ்வொன்றிலும் ஒன்பதாவது பாடல், திருமால் அயன் இருவரும் பணிந்து வணங்கும் வகையில் சோதிப் பிழம்பாய் சிவபெருமான் தோற்றம் அளித்த நிகழ்ச்சியை வர்ணிக்கிறது. ஒரே கருத்தைத் திரும்பத் திரும்பப் பதிகம் தோறும் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

முதல் எட்டுப் பாடல்களில் சம்பந்தர், செஞ்சடை, பிறை நிலா, எருக்கு கொன்றை அணிதல், சுடுகாட்டில் நடனம் ஆடுவது, நீலகண்டம், நெற்றிக்கண் முதலிய சிவனுக்கே உரிய தோற்றச் சிறப்புகளை வர்ணிக்கிறார். முப்புரம் எரித்தல், ராவணனை நசுக்குதல் முதலிய அவரது அருஞ்செயல்களும் அவற்றில் இடம் பெறுகின்றன.

முதலில் சிவனின் பல்வேறு தோற்றச் சிறப்புகளையும் அருஞ்செயல்களையும் விவரித்து விட்டு இறுதியாக ஒன்பதாவது பாடலில் மாலயன் காணா எரியாய் நிமிர்ந்தான் என்று அவர் சொல்வதற்குக் காரணம் முந்தைய பாடல்களில் வர்ணிக்கப்பட்ட தோற்றங்கள் எல்லாம் ஆரம்ப சாதகர்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ளத் தான், சிவனுடைய உண்மையான சொரூபம் பெருஞ் சோதி வடிவமே எனக் கூறுவதாகத் தான் கொள்ள முடிகிறது.

வேதமும் அக்கினி வழிபாடும்

வேத வழிபாட்டு முறையில் அக்கினி முக்கிய இடம் பெறுகிறது. மற்றத் தெய்வங்களுக்கு அளிக்கப்படும் ஆகுதியை எல்லாம் சுமந்து செல்பவன் அக்கினி. அவனைச் சில இடங்களில் வேதம் ருத்திரனாகவே குறிப்பிடுகிறது. ஆனால் அக்கினியை அந்தணர் மட்டும் வேள்வி செய்து தான் வழிபட முடியும் என்ற நிலை இருந்தது.

சம்பந்தர், அக்கினியும் சிவனும் வேறல்ல. வேதியர்களால் வேள்வியில் வணங்கப் பெறும் அவனே இங்குக் கோயிலில் சிலை வடிவிலும் லிங்க வடிவிலும் குடிகொண்டுள்ளான். அவனை நீரும் மலரும் கொண்டு போற்றியும் வழிபடலாம் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காகவே எரியுருவான சிவன் என்ற கருத்தை 9வது பாடல் தோறும் வைத்துள்ளார் எனக் கருத முடிகிறது. இவ்வாறு வேதத்தின் அக்கினி வழிபாட்டைச் சாதாரண மக்களுக்காக எளிமைப்படுத்தியதன் மூலம் அவர் வேதநெறி சார்ந்த சைவத்தை வளர்த்தார்.

பத்தாவது பாடல்கள்

சம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்திலும் பத்தாவது பாடல் சமண சாக்கியரைத் தாக்குவதாக உள்ளது. மாற்றுக் கருத்துகளைச் சகித்துக் கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் வேதத்தின் அடிப்படைப் பண்பு என்றால் சமணர்களைச் சம்பந்தர் ஏன் பகைமை பாராட்டி வேரறுத்தார்?

சம்பந்தர் காலத்துக்கு முன்பே, அம்மையார் ஏற்படுத்திய எழுச்சியின் விளைவாக உண்மையான சமணர்கள் வலுவிழந்திருக்க வேண்டும். சம்பந்தர் காலத்தில் இருந்தது இச்சமயத்தின் பெயரை வைத்துக்கொண்டு தங்கள் மனம் போல வாழ்ந்து வந்த சில போலிகள் தாம். அண்மைக் கால ஹிப்பிகளை நினைவுபடுத்தும் இவர்கள் மகாவீரர் போதித்த கொள்கைகளைக் கைவிட்டு, ஆடையின்றி இருத்தல், கையில் உணவு ஏற்று நின்றபடியே உண்ணுதல், குளிக்காமல் இருத்தல், ரகசியமாக மீன் பிடித்து உண்ணுதல், காடியை அருந்தித் தவம் என்ற பெயரில் போதையில் ஆழ்ந்து இருத்தல் போன்ற தவறான பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தனர். எனவே தான் சம்பந்தர் சமணக் கொள்கைகளை எதிர்க்காமல் அவர்களது புறவொழுக்கங்களைச் சாடுகிறார். நல்லொழுக்கத்துக்கு இறை நம்பிக்கையே அடிப்படை என்பதால் அதனை வலுப்படுத்தும் விதமாக வேதநெறியைப் போற்றுகிறார்.

இச்சமயங்களின் சிறந்த கொள்கைகளாகிய கர்மாக் கொள்கை, மறுபிறப்புக் கொள்கை, அஹிம்சை ஆகியவற்றை வைதிக சமயம் முன்னமேயே ஏற்றுக் கொண்டு விட்டது. அவை உபநிடதங்களில் காணப்படுகின்றன. ஆனால் இறை மறுப்பு என்பது வேதநெறிக்கு உடன்பாடானது அல்ல. இறைவன் இருப்பதை ஒப்புக் கொண்டு அவருடைய தன்மை இத்தகையது என்று புது வகையான விளக்கம் கொடுத்திருக்குமானால் சமண சாக்கிய சமயங்களும் வைதிக சமயத்தின் உட்பிரிவாக ஆகியிருக்கும். [விரிவடையாத சிற்றறிவுடையவர்கள் புதியதொரு சமயத்தை உண்டாக்கி வயிற்றெரிச்சலால் அச்சமயத்துக்குப் பிரசாரம் செய்தாராகிலும் அதுவும் பெருமானுக்கு ஏற்புடைய செயலேயாகும் என்று நாவுக்கரசர் கூறுவதைக் கவனிக்க. –திருப்பெருவேளூர்ப் பதிகம் 9]. திருமாலும் பிரமனும் சிவனை வணங்குவதாகப் புராணங்கள் தோற்றுவித்ததைப் போலச் சமண, சாக்கியக் கடவுளர்களும் சிவனைப் போற்றுவதாகக் கதைகள் எழுந்திருக்கும். சிவலிங்கத்தின் மேல் கல் எறிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சாக்கியர் ஒருவர். இதுவும் ஒரு வகையான வழிபாட்டு முறை என்று ஏற்றுக் கொண்ட மக்கள் அவரை நாயனாராக ஆக்கியதை நோக்குக.

சமுதாய நலனும் தனி மனித முக்தியும்

அந்தணர்கள் வேள்வி இயற்றியது யாவும் மனித சமுதாய முழுமையின் நலனுக்காக மட்டுமன்றி, பிற உயிரினங்களின் நலனுக்காகவும் சேர்த்தே. “மித்திரனும், வருணனும் எங்களுக்கு நல்லவர்களாக இருக்கட்டும்”, “இரண்டுகால்பிராணிகளுக்கும்நான்குகால்பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும்”, “எங்களைப் பகைவர்களிடமிருந்து காப்பாற்று”, “எங்களுடைய பசுக்களையும் குழந்தைகளையும் காப்பாற்று”, “எங்களுக்குச் செல்வம் கொடு”, “எங்களுக்குமழை பொழிவி” என்று சமுதாய நலனையே வேண்டுகின்றன வேத மந்திரங்கள். புகழ் பெற்ற காயத்ரி மந்திரம் கூட, “எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்று பன்மையில் தான் வேண்டுகிறது.

சமண சாக்கிய நிறுவனர்கள் தனி மனிதன் வாழ்வில் அனுபவிக்கும் துயரங்களாகிய பிணி, மூப்பு, சாக்காடு என்பவற்றால் உந்தப்பட்டு அவற்றிலிருந்து விடுபடப் புது வழி காண முனைந்தவர்கள். வாழ்வு என்றால் துன்பம் தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த பின், அவர்கள் ஒரு புதுக் கொள்கையைக் கண்டுபிடித்தனர். அதாவது, முற்பிறவியில் செய்த வினைகளே துன்பத்துக்குக் காரணம். பிறந்து விட்டவர் துன்பங்களை அனுபவித்துத் தான் தீர வேண்டும். வேண்டுமானால் அடுத்த பிறவியில் துன்பம் இல்லாமல் வாழ வழி உண்டு. இப்பிறவியில் அறநெறி வாழ்வைக் கடைப்பிடிப்பதன் மூலம் மீண்டும் பிறவாமல் இருக்கலாம் என்று கூறினர்.

பிணி, மூப்பு, சாக்காட்டை ஒழிப்பதில் வெற்றி பெறமுடியாது என்பதை உணர்ந்தபின், மகாவீரரும் புத்தரும் குறிக்கோளை மாற்றிக் கொண்டனர். ஒவ்வொரு மனிதனும் பிறவா நிலையாகிய முத்தி நிலை அடைய வேண்டும் என்பதையே குறிக்கோளாகப் பிரசாரம் செய்தனர். இதனால் அவரவரது முத்திக்கு அவரவரே முயல வேண்டும் என்னும் கொள்கையும், வேள்வி என்பது செய்பவருக்கு மட்டும் தான் பலன் தரும், மற்றவருக்கு நன்மை இல்லை என்ற தவறான கருத்தும் பரவின. வேள்வி மந்திரங்கள் மறு உலகமோ பிறவா நிலையோ அடைவதைக் குறிக்கோளாகக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் வேள்வி செய்யாதாரும் பக்தியின் மூலம் இறைவனின் அருளுக்கு ஆளாகிச் சிவகதி என்னும் பிறப்பிலா நிலை அடைய முடியும், அப்படி மீண்டும் பிறக்க நேர்ந்தாலும் இறைவனின் திருவடிகளைத் தொழும் இன்பத்தின் முன் உலகியல் துன்பங்கள் ஒரு பொருட்டல்ல என்னும் வழியை முதன் முதலில் எடுத்துக் காட்டினார் காரைக்கால் அம்மையார். அக்கருத்து சம்பந்தரின் பாடல்கள் முழுவதும் விரவிக் கிடக்கிறது.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

மறு உலகிலேயே பார்வையைப் பதிய வைத்துக் கொண்டு இவ்வுலக இன்பங்களைத் துறக்கும் சமணப் போக்கை மாற்றி மக்களுக்கு அறிவுறுத்துகிறார் சம்பந்தர். எத்தனை கோடி இன்பங்கள் வைத்திருக்கிறார் இறைவன் இவ்வுலகில், இதைச் சற்று ஏறெடுத்துப் பாருங்கள், அவரும் குழகன், அவர் அமர்ந்திருக்கும் இடம் யாவும் அழகே என்று கூறுவது போல தன் பாடல்களில் எந்தப் பதியைப் பாடினாலும் அந்தத் தலத்தின் இயற்கை அழகைச் சிறப்பிக்கிறார். வாழ்க்கை துன்பமயமானது என்று புலம்பிக் கொண்டிராமல் இவ்வுலகில் வாழும் வரை இதன் அழகைச் சுவையுங்கள், வாழ்ந்து முடிந்த பின் சிவலோகம் செல்வதில் எந்தத் தடையும் ஏற்படாது என்று உறுதி அளிக்கிறார். சிவ பெருமான் பெண்ணின் நல்லாளொடும் கூடி வாழ்வது போல நீங்களும் இல்லற வாழ்வின் மேன்மையை உணருங்கள், துறவைத் தவிருங்கள் என்கிறார்.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை

கண்ணின் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்

பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

மக்கள் சம்பந்தரின் கருத்துகளை ஏன் ஏற்றுக் கொண்டார்கள்? புறச்சமயத்தவர் பலர் ஒழுக்கம் குறைந்ததைக் கண்டோம். அவர்கள் பொது மக்களின் வெறுப்புக்கு ஆளானார்கள். நல்லொழுக்கம் உள்ளவர்களும் நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியவர்களாக இருந்தனர். அவர்கள் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்த அளவுக்கு உணர்ச்சிக்கு இடம் கொடுக்கவில்லை. மனித வாழ்வு என்பது அறிவு உணர்ச்சி இரண்டின் கலவை அன்றோ? உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் வறட்டுத்தனமான தர்க்க ரீதியாக வாழ்க்கைப் பிரச்னைகளை அணுகிய அவர்களது போக்கினால் அலுப்படைந்திருந்த மக்களுக்கு அம்மையார் காட்டிக் கொடுத்த பக்தி வழி ஆறுதல் தந்தது. பிறவா நிலை அடைவதற்கு அவர்களுக்கு ஒரு எளிய வழி கிடைத்துவிட்டது. ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அதை ஊர் ஊராக எடுத்துச் சென்று பிரசாரம் செய்தனர். தத்துவச் சிக்கல்களைப் புறத்தே ஒதுக்கி வைத்து விட்டு புராணக் கதைகளை நம்பி இறைவனை நினைந்து காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்குதல் மக்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. அது ஆறுதலாகவும் இன்பமாகவும் இருந்தது. அதனால் தான் அவர்கள் புறச் சமயங்களைப் புறக்கணித்துச் சைவத்துக்குத் திரும்பினர். சம்பந்தரின் இசைத் திறனும் மக்களைக் கவர்வதில் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும்.

11


சங்கரரும் அறுசமய நிறுவனமும்


பல்லவர் பாண்டியர் எழுச்சிக் காலத்தில் ஏற்பட்ட மற்றொரு முக்கியமான நிகழ்ச்சி அறுசமய நிறுவனம். அன்றைய தமிழகத்தில் பல வகையான தெய்வங்கள் வணங்கப்பட்டன. அவரவர் சமயத்தை அவரவர் பின்பற்றச் சுதந்திரம் இருந்தது. சமயச் சண்டைகள் வைதிகச் சமயத்துக்கும் நாத்திகம் பேசிய புறச் சமயங்களுக்கும் இடையே ஏற்பட்டிருந்தனவே அன்றி வேதம் சார்ந்த சமயங்களுக்குள்ளே ஒற்றுமையே நிலவியதாக அறிகிறோம். எல்லா வழிபாட்டு முறைகளையும் வேதம் என்ற ஒரே குடையின் கீழ்க் கொண்டு வந்ததால் இது சாத்தியமாயிற்று.

அக்கால முக்கிய தெய்வங்களை ஆறு சமயமாகத் தொகுத்துக் கூறும் முறை சங்கரரால் நிலைநாட்டப்பட்டதாகக் கூறப்பட்டாலும் சங்கரருக்கு இரு நூற்றாண்டுகட்கு முன்னமேயே இந்தக் கருத்துரு தோன்றியிருக்க வேண்டும் என்பது தெரிகிறது. ஆறு சமயங்களைப் பற்றி அப்பரும் சம்பந்தரும் கூறியுள்ளனர். [அப்பரின் தசபுராணம், இன்னம்பர், ஏகம்பம், கழிப்பாலை, முதுகுன்றம் பதிகங்கள், சம்பந்தரின் வைகாவூர், முதுகுன்றம் பதிகங்கள்] சிவனை அறுசமயமாகி நின்றான், அறு சமயம் ஏற்படுத்தியவன், அறுசமயத் தலைவன், அறுசமயத்தோர்க்கும் அவரவர்க்கு ஏற்ற முறையில் அருள் புரிபவன் என்று அப்பர் போற்றுகிறார். இதனால் இந்தச் சமயங்களுக்குள்ளே பகைமை இல்லாமல் ஒற்றுமை இருந்தது அறியப்படுகிறது.

தேவாரக் காலத்தில் முருகன், திருமால் ஆகிய தொல்காப்பியக் கடவுளருடன் கூட சிவன், விநாயகர், ஆகியோர் உறவு முறை கொண்டவர்களாகக் கற்பிக்கப்பட்டு வழிபடப்பட்டது முன்னர்க் கூறப்பட்டது. இவை தவிர பெண் தெய்வ வழிபாடும், சூரிய வழிபாடும் அக்காலத்தில் நிலவின.

பெண் தெய்வ வழிபாடு

பண்டைப் பெண் தெய்வங்களான பழையோள், கொற்றவை இரண்டையும் உமையம்மையுடன் ஒன்றுபடுத்தச் செய்யப்பட்ட முயற்சியைத் திருமுருகாற்றுப்படையிலிருந்து அறிந்தோம்.

உமை அம்மையைச் சிவனின் ஒரு கூறாகக் கருதியதால் அவருக்கு தனியாக வழிபாடு நடத்தப் பெறவில்லை. ஆனால் காளி, கொற்றவை என்ற பெயருடைய பழைய வடிவங்கள் வணங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தில்லையில் நடராஜாவுடன் நடந்த போட்டியில் தோற்றுப் போன காளி எல்லைத் தெய்வமாக வழிபடப்பட்டதிலிருந்து அறிகிறோம்.

சூரியன்

வேதத்தில் கூறப்பட்ட தெய்வங்களுக்குள்ளே இன்றளவும் தொடர்ந்து வழிபடப் பெறுவது சூரியன் ஒன்றே. சூரியனுக்கு உரிய தோத்திரமாகிய காயத்திரியே சிறந்த மந்திரமாகப் போற்றப்படுகிறது. ருத்ரம் ஓரிடத்தில் சூரியனையே ருத்திரனாகப் பார்க்கிறது. தாமிர நிறத்திலும், சிவப்பாகவும், மஞ்சளாகவும் காணப்படும் இந்த ருத்திர சூரியனை மாடு மேய்க்கும் இடையர்களும் நீர் சுமந்து வரும் பெண்களும் பார்க்கிறார்கள் என்கிறது அப்பனுவல். [யஜுர் 4.5.1.8]

தமிழ்நாட்டில் தொன்றுதொட்டே சூரியன் வழிபடப்பட்டிருக்கிறான். அகம் 263 “உலகு தொழத் தோன்றி வியங்கு கதிர் விரிந்த உருகெழு மண்டிலம்” எனக் கூறுவதும், திருமுருகாற்றுப்படை துவக்கத்திலேயே, “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு” என்பதும், சிலப்பதிகாரம் வாழ்த்துப் பகுதியில், “ஞாயிறு போற்றுதும்” என வருவதும், இங்குள்ள பண்டிகைகளில் சூரியனைக் குறித்த பொங்கலே மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவதும் இதனைச் சுட்டுகின்றன.

மற்றத் தெய்வங்கள் போல் உறவு முறையால் பிணைக்கப்படாமல் இருந்தாலும் சூரியன் சைவத்துக்கு இணக்கமான தெய்வமாகவே கருதப்பட்டது. சில கோவில்களில் சிவசூரியன் என்ற பெயரில் ஒரு திருவுருவம் அமைக்கப்பட்டிருப்பதையும் காண்கிறோம். திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள குடைவரைக் கோவிலில் உள்ள அறுசமயத் தெய்வங்களில் சூரியனும் கொற்றவையும் இடம் பெற்றுள்ளனர். [கபிலக்கல் – குடவாயில் பாலசுப்பிரமணியன் பக் 210]

இவ்வாறு சிவன், விநாயகர், முருகன், திருமால், சூரியன், காளி வழிபாடுகள் தமிழகத்தில் ஓங்கி இருந்த நிலையை அப்பர், சம்பந்தர் பாடல்களிலிருந்து அறிகிறோம்.

அறுசமய நிறுவன அமைப்பில் சங்கரரின் பங்களிப்பும் இல்லாமல் இல்லை. அவர் திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்கப் பிரதிஷ்டை செய்து அதன் உக்கிரத்தை அடக்கினார் என்று வழக்காறு உள்ளது. தொல் பழம் தெய்வமான காளியின் வடிவத்தில் காதில் பிணக் குண்டலம் உண்டு. அதை மறைத்துத் தாடங்கம் என்ற காதணி அணிவிக்கப்பட்டு அதன் தோற்றத்தின் உக்கிரம் குறைக்கப் பட்டிருக்கக் கூடும். தொல் பழம் பெண் தெய்வ வடிவங்கள் உமையின் தோற்றமாக உருமாற்றம் பெற்றுக் கொண்டிருந்த நிலையை இது காட்டுகிறது. சங்கரர் தான் எழுதிய சௌந்தர்ய லஹரியில் அம்பாள் அரக்கர்களை அழித்ததைக் குறிப்பிட்டாலும் அவளுடைய அழகு அருள் இவற்றுக்கே முக்கியத்துவம் தந்து உக்கிரமான பெண் தெய்வத்தை இனிமையானதாக மாற்றித் தந்தார்.

மேலும் அவர் இந்த அறுவகை வழிபாடுகள் வேள்வி முறையிலிருந்து வேறுபட்டாலும் வேதநெறிக்கு இணங்கியவை என்று அறிவித்து அவற்றிற்கு இடையே ஒற்றுமைக்கான அடித்தளத்தை வலுப்படுத்தினார்.

பல பொருட்களிலும் பிரம்மம் ஒன்றையே காண்பது அத்வைதம். ஒரே கடவுளைப் பல வகையாகக் காண்பது சைவம். இந்த இரண்டையும் ஒருங்கிணைத்தவர் சங்கரர். ஆன்மிக சிந்தனையில் மேல் நிலையில் உள்ளவர்களுக்காக வேதத்தின் தத்துவ சாரமாகிய அத்வைதத்தை நிலைநாட்டிய அவர், சாமானிய மக்கள் பின்பற்ற வேண்டி, இந்த அறுவகை உருவ வழிபாட்டையும் ஏற்று நியாயப் படுத்தினார். நாடு முழுவதிலும் மீதம் இருந்த பௌத்த சமயத்தையும், சைவ சமயத்தின் பெயரால் ஏற்பட்ட காபாலிகம், காலாமுகம் போன்ற வேத விரோதமான கொள்கைகளையும் அழித்தது மட்டுமன்றி, உருவ வழிபாட்டையும் வேதத்தையும் இணைத்ததன் மூலம் அம்மையார் தொடங்கி வைத்ததும் தேவார ஆசிரியர்கள் வளர்த்ததுமான சைவ மறுமலர்ச்சி இயக்கத்தின் நிறைவுப் பணியைச் செய்தார் அவர்.

12


சோழர் எழுச்சிக் காலம்


9ஆம் நூற்றாண்டு முதல் சோழர்களின் வலிமையும் ஆட்சிப் பரப்பும் படிப்படியாக வளரத் தொடங்கிற்று. பரம்பரைச் சைவர்களான சோழர்கள் சைவத்தை மேலும் வளர்த்தனர். பல கோயில்களைக் கட்டினர். வேத நெறியில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அவர்கள் மேலும் பல புதிய அந்தணர்களைச் சோழநாட்டில் குடியேற்றி மானியங்கள் அளித்து சைவத்தை வேதநெறி அடிப்படை மாறாமல் வளர்த்தனர். இக்கால முக்கிய நிகழ்ச்சிகள் வருமாறு.

தல புராணங்கள்

நான்கு, ஐந்தாம் நூற்றாண்டுகளில் தோன்றிய, வடமொழியில் எழுதப்பட்ட 18 முக்கிய புராணங்களைத் தொடர்ந்து தமிழில் தலபுராணங்கள் தோன்றின. இத்தல புராணங்களிலும் பிரமன், இந்திரன், திருமால், துர்வாசர், அகஸ்தியர் போன்ற அதே கதா பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டனர்.

சிவ பெருமானின் அருஞ் செயல்களைக் கூறும் கதைகள் மூவர் முதலிகளுக்கு முன்பே, சங்க காலத்திலேயே இருந்தன. ஆனால் தலங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பழைய கதைகளுக்கு உள்ளூரை நிகழ்விடமாகக் காட்டும் போக்கு தேவாரக் காலத்துக்கும் திருவாசகக் காலத்துக்கும் இடையே தான் அதிகரித்தது. வைணவத்தை விட சைவத்தைக் கவர்ச்சிகரமாக்க அக்கால மக்கள் விரும்பியது இதற்குக் காரணமாக இருக்கலாம்.

புள்ளிருக்கு வேளூர், உசாத்தானம் ஆகிய ஊர்களில் முறையே சம்பாதி, அனுமன் ஆகியோர் பூசை செய்ததாக உள்ள புராணக் கதைகள் சம்பந்தர் தேவாரத்தில் உள்ளன. ஆனால் வீரட்டானத் தலங்கள் என்று போற்றப்படுகின்ற திருக்கடவூர், திருவிற்குடி, திருப்பறியலூர், திருக்குறுக்கை, திருக்கண்டியூர், வழுவூர், திருக்கோவலூர், திருவதிகை ஆகிய எட்டுத் தலங்களில் நடைபெற்றதாகப் புராணங்கள் கூறும் நிகழ்ச்சிகளைத் தேவாரங்கள் குறிப்பிடவில்லை. (திருக்கடவூர்ப் பதிகம் ஒன்றில் மட்டும் சிவன் காலனை உதைத்த செய்தியை அப்பர் பத்துப் பாடல்களிலும் குறிப்பிடுகிறார். ஞானசம்பந்தர் சிறப்பாகக் குறிப்பிடவில்லை.) சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட இடங்களாக வர்ணிக்கப்படும் இவற்றில் முறையே காலன், சலந்தராசுரன், தக்கன், மன்மதன், பிரமனின் ஐந்தாவது தலை, யானை வடிவில் வந்த அசுரன், அந்தகாசுரன், திரிபுரங்கள் இவை அழிக்கப்பட்டதாகத் தல புராணங்கள் கூறுகின்றன. இத்தல புராணங்கள் மூவர் முதலிகட்குப் பிற்காலத்தில் தோன்றியவை என்பது புலனாகின்றது. தேவாரத்தில் குறிப்பிடப்படும் வீரட்டானம் என்பது வேறு ஏதோ பொருளைக் குறித்திருக்க வேண்டும்.

திருவிற்குடி வீரட்டம் என்னும் தலம் பிருந்தை மயானம் என்றும் அழைக்கப்பட்டது. தற்போது இப்பெயர் வழக்கொழிந்துவிட்டது. இது போல, மற்ற வீரட்டங்களும் மயானங்களாக இருந்திருக்கலாம். எல்லாத் தலங்களிலும் யமன் சம்ஹரிக்கப்பட்டான் என்று சொல்வதைத் தவிர்த்து ஒவ்வொரு தலத்திலும் வெவ்வேறு அசுரர்கள் அழிக்கப்பட்டதாகக் கதைகள் தோன்றியிருக்கக் கூடும்.

மணிவாசகரின் கீர்த்தித் திருவகவலில் தலங்களைச் சொல்லி அந்தந்தத் தலத்தில் சிவன் செய்த அருஞ்செயலும் தெளிவாகக் கூறப் பட்டுள்ளது.

கோயில்கள்

சோழநாட்டில் கட்டப்பட்ட அளவுக்குத் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் கோவில்கள் இல்லை. இதற்குச் சோழர்களின் சிவபக்தி முக்கிய காரணம் எனினும் இது ஒரு பொருளாதார உத்தியாகவும் பயன்பட்டது.

சோழநாடு காவிரியால் வளம் பெறுவது. இந்த ஆறு சோற்றால் மடை அடைக்கும் அளவுக்கு நாட்டை வளப்படுத்தினாலும், குடநாட்டு மழையைச் சார்ந்தது என்பதால் சில ஆண்டுகளில் வெள்ளத்தாலும், சில ஆண்டுகளில் வறட்சியாலும் மக்களைத் துன்புறுத்துவதும் உண்டு. சோழ மன்னர்கள் மிகுதியாக விளைந்த காலங்களில் நெல்லை அரசாங்கக் கிடங்குகளில் சேகரித்து வைத்து, விளையாத காலங்களில் மக்களுக்கு அளித்தனர். இதை இலவசமாகக் கொடுக்காமல், ஏதேனும் கோயில் திருப்பணிகளில் அவர்களை ஈடுபடுத்திக் கூலியாகக் கொடுத்ததால் மக்களிடையே உழைக்கும் வழக்கம் குன்றாமல் இருந்தது. இறைவனுக்காகச் செய்கிறோம் என்ற உணர்வினால் பக்தி நெறியும் வளர்ந்தது. இக்கோயில்கள் நெல்லைச் சேகரித்து வைக்கும் கிடங்குகளாகவும் பயன்பட்டன. [முற்கால நெல் கொட்டாரம் ஒன்று இன்றும் பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை கோயிலில் காணப்படுகிறது.]

பெருமழை, புயல் போன்ற காலங்களில் வீடிழந்த மக்கள் தங்குவதற்கும் உணவு பெறுவதற்கும் கோயில்கள் இடம் அளித்தன. சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை முதலியன ஓங்கி வளர்வதற்கும் மிகுதியான வாய்ப்பு அளித்தன.

இறைவன் நடனமாடுகின்றார் என்ற கருத்து சிற்பிகளை ஓயாமல் ஆராய்ச்சியிலும் முயற்சியிலும் ஈடுபடுத்தி சிதம்பரத்தில் ஆடற்பெருமான் சிலை உருவாகக் காரணமாக இருந்ததை முதலில் கண்டோம். சிவக் குடும்பத்தில் புதிய தெய்வங்கள் பல சேர்ந்து கொண்டே வந்ததாலும், புதிய புராணக் கதைகள் பல உருவானதாலும் சிற்பிகளின் திறமைக்குச் சவால்கள் விடப்பட்டன. அவர்கள் அதை எதிர்கொள்வதில் வெற்றி பெற்றனர். வளத்திலும் வலிமையிலும் உச்ச நிலையில் இருந்த சோழ அரசர்கள் தொலை தூரங்களிலிருந்து கருங்கற்களைக் கொணரச் செய்து சிலை செய்ய ஊக்குவித்தனர். அழகிய சிலைகள் பல உருவாகின. கட்டிடம் கட்டவும் கருங்கல் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டது.

அம்மன் வழிபாடு

10 ஆம் நூற்றாண்டு வரை உமையைச் சிவனுடைய இடப்பாகத்தில் பிரியாது இருப்பவராகக் கருதியதால் உமையம்மைக்குத் தனியாக வழிபாடு நடத்தப் பெறவில்லை. அம்மையாரும், தேவார மூவரும், மாணிக்க வாசகரும் உமையம்மையைத் தனித்துப் போற்றவில்லை.

பழங்காலக் கோவில்கள் சிலவற்றில் உமையொருபாகன் உருவம் மூலத்தானமாக விளங்கியது என்பதற்குத் திருச்செங்கோடு உதாரணம். உமையும் சிவனும் அருகருகே அமர்ந்துள்ள கோலம் மணக்கோல நாதர் எனப்பட்டது. இதுவே மூலத்தானமாக விளங்கிய கோயில்கள் திருவீழிமிழலை போன்ற பலவுண்டு.

காளி வழிபாடு மிகுந்திருந்த தில்லையில் ஆடல்வல்லான் வழிபாடு ஏற்பட்டுக் காளி புறம் தள்ளப்பட்ட செய்தியையும் ஆதி சங்கரர் தொல் பழம் பெண் தெய்வங்களை உமையின் ஒரு தோற்றமாகக் கருதி வழிபடும் வழக்கிற்கு வழி வகுத்தார் என்பதையும் கண்டோம்.

சோழர் எழுச்சி பெற்றிருந்த காலத்தில் உமை அம்மைக்கு எனத் தனிக் கோட்டங்கள் அமைக்கும் முறை ஏற்பட்டது. இதன் பின், சப்த கன்னியர், ஜ்யேஷ்டா தேவி முதலான பழம் பெண் தெய்வங்களின் வழிபாடு வர வரக் குறைந்து இன்று மிகவும் அருகிவிட்டது.

சிவக் குடும்பம் என்ற அமைப்பு சித்தாந்த அங்கீகாரம் பெற்ற பின் தனிச் சிவன் கோவில்களில் அம்மனும், திருவானைக்கா போன்ற அம்மன் கோவில்களில் சிவலிங்கமும் பின்னர் அமைக்கப் பட்டிருக்கக் கூடும்.

சண்டேசர்

சண்டேசரைச் சிவனின் மகனாகவும் கோயில் நிர்வாகியாகவும் கருதி அவருக்கு வடக்குப் பிரகாரத்தில் தனி இடத்தில் சிலை அமைத்து வழிபடும் வழக்கம் இருந்ததைச் சோழ மன்னர்களின் கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம். அவ்வாறே பிரம்மா, ஸரஸ்வதி, லட்சுமி, காளி ஆகிய தெய்வங்களும் சிவாலயங்களில் இடம் பெற்றுள்ளன. திருமால் சிலைகள் கொண்ட பழமையான சிவாலயங்களும் பல உண்டு.

13


சோழர்களுக்குப் பிந்திய காலம்


சைவசித்தாந்தம்

13ஆம் நூற்றாண்டில் மெய்கண்டார் தோன்றிச் சைவ சித்தாந்த வழியை நிறுவினார். அவரும் அவரது சீடப் பரம்பரையினரான அருள் நந்தி சிவாசாரியர், உமாபதி சிவம் ஆகியோரும் இயற்றிய நூல்கள் சைவ சித்தாந்தச் சாத்திரங்களாகப் போற்றப்படுகின்றன. இச்சாத்திரங்கள் வேதத்தைப் பெரிதும் போற்றின. ஆயினும் அவை வேதத்துக்குச் சைவ சித்தாந்த முறைப்படி விளக்கம் அளித்தன. இதனால் சைவம் வைணவத்திலிருந்து வேறுபட்ட தனிச்சமயமாக மாறியது.

நவக்கிரகங்கள்

சங்கரர் அறுசமய ஏற்பாட்டை வகுத்த பின்னும் சைவக் குடும்பத்தின் வளர்ச்சி தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. அதில் ஒரு கூறு தான் நவக்கிரக வழிபாடு. இதற்கான அடித்தளம் தேவாரக் காலத்திலேயே இடப்பட்டுவிட்டது.

கிழமைகளைப் பற்றி எந்தக் குறிப்பும் பண்டைய நூல்களில் இல்லாததால் பழந் தமிழர்கள் இதை அறியாதிருந்தனர் என்று கொள்ளலாம். திருமூலர் தான் முதன் முதலாகக் கிழமைகளின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். அப்பரின் போற்றித் திருத்தாண்டகத்தில் கொள்ளும்கிழமைஏழுஆனாய்போற்றிஎன்று வருகிறது. முதல் ஏழு கோள்களின் பெயரை ஒட்டி ஏழு நாட்களைப் பெயரிட்டு அந்தக் காலத் தொகுதியை வாரம் என்று பெயரிட்டு அழைக்கும் வழக்கம் அப்பொழுது தான் தோன்றியிருக்கக் கூடும்.

ஞாயிறு முதலான ஒன்பது கோள்களும் சிவபெருமானை வணங்குபவரைத் துன்புறுத்தாது என்று பாடினார் ஞானசம்பந்தர். அவரது காலத்தில், மனித வாழ்வில் கோள்களின் ஆதிக்கம் பற்றிய அச்சம் கலந்த நம்பிக்கை பரவத் தொடங்கியதை இது காட்டுகிறது. அதன் விளைவாக, பல்லவர் ஆட்சிக் காலத்தில், சிவன் கோவில்களில் வடகிழக்கு மூலையில் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு கோள்களின் சிலைகளும் மேற்கு நோக்கியதாக அமைக்கப்பட்டு வழிபாடு தொடங்கியதை அறிகிறோம். இரண்டாம் குலோத்துங்கன் சிதம்பரம் மேலக் கோபுரத்தின் மேல் ஒன்பது கிரகங்களையும் இடம் பெறச் செய்தான். மூன்றாம் ராஜேந்திரன் துக்காச்சி விக்ரம சோழீச்சுரம் கோவிலில் குரு சனி ஆகியவற்றின் உருவங்கள் இடம் பெறச் செய்தான். இதைத் தொடர்ந்து 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒன்பது கோள்களும் வடக்குப் பிரகாரத்தில் கீழ்த் திசையில் அமைக்கப்படலாயின. [கபிலக்கல் – குடவாயில் பாலசுப்பிரமணியன் பக் 210]

சிறு தெய்வ வழிபாட்டைச் சைவ சித்தாந்தம் அனுமதிக்காததால் சில நிர்வாகத்தினர் இதை ஏற்றுக் கொள்ளாமல் இன்று வரை நவக்கிரக சன்னிதி இல்லாத கோவில்களும் உண்டு.

இருப்பினும் பெரும்பாலான கோவில்களில் நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டு விட்டன. அது மட்டுமன்றி ஒவ்வொரு கோளுக்கும் ஒவ்வொரு தலம் (சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தலங்கள்) சிறப்புடைய தலமாக ஆக்கப்பட்டுவிட்டன. அதனால் அங்குள்ள மூலவரின் புகழ் மங்கிக் கோள் வழிபாடே முழுமுதற் கடவுளின் வழிபாட்டை விட முக்கியத்துவம் பெற்று வருவது சைவ சித்தாந்திகளின் கருத்துக்கு இசைவாக இல்லாத போதிலும், பரிணாம வளர்ச்சிக் கொள்கையைத் தனதாக்கிக் கொண்ட சைவத்தின் இயல்பை அவர்களால் மாற்ற முடியவில்லை. [கோள் வழிபாட்டின் ஆக்கிரமிப்பின் உச்ச கட்டத்தைத் திருநள்ளாறில் காணலாம். எல்லாக் கோவில்களிலும் கோபுர வாயிலில் தென் புறம் விநாயகரும் வடபுறம் முருகனும் கோஷ்ட தேவதையாக இருப்பது வழக்கம். திருநள்ளாறிலும் அப்படித்தான் உள்ளது. ஆனால் எக்காலத்திலோ சிலர் அந்த முருகனைச் சனீசுவரன் ஆக்கி விட்டனர். அதற்கு ஏற்றாற் போல நளன் அங்கு வந்து சனி பீடை நீங்கப் பெற்றதாகக் கதைகள் எழுதி வைத்தனர். இன்று தர்ப்பாரணியேசுவரர் சன்னிதி வெறிச்சோடிக் கிடக்க சனீசுவரன் சன்னிதியில் பெருங்கூட்டம்.]

அடியார்கள்

பெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களைச் சிறப்பித்ததைத் தொடர்ந்து நாயன்மார்களும் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள். நாயன்மார்களுக்குச் சிலை அமைத்து வழிபடும் வழக்கம் சிவாலயங்களில் ஏற்பட்டது.

ஐயப்பன்

பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் அடுத்த விளைவு ஐயப்பன் வழிபாடு. இது எப்படி ஏற்பட்டது, எவ்வாறு சிவன் கோவிலுக்குள் நுழைந்து சைவர்களின் ஒப்புதலுக்கு உரியதாயிற்று என்று ஆராய்வோம்.

தமிழ்நாட்டின் தொல் பழம் தெய்வங்களில் ஐயனார் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளார். அனேகமாக ஒவ்வொரு ஊரிலும் ஐயனார் கோவில் உண்டு. ஐயனார் என்பது பொதுப் பெயராக இருக்க ஒவ்வொரு ஊர் ஐயனாருக்கும் தனிப் பெயரும் உண்டு. ஐயனாரைக் குல தெய்வமாகக் கொண்ட குடும்பங்கள் எந்த ஊரில் வாழ்ந்தாலும் அந்தந்த ஊர்க் கோவிலின் ஆண்டுத் திருவிழாவில் கலந்து கொள்வதும் தங்கள் குடும்பத்தில் நடைபெறும், குழந்தைக்கு முதல் முடி இறக்குதல், திருமணம் முதலிய முக்கிய நிகழ்ச்சிகளில் குல தெய்வத்துக்குச் சிறப்பு வழிபாடு செய்வதும் இன்றும் நடைபெறும் வழக்கமாகும். ஐயனார் அன்றியும் வீரன், மாரியம்மன், காளியம்மன் முதலான தெய்வங்களும் இவ்வாறே சிறப்பு வழிபாட்டுக்கு உரிய குல தெய்வமாக இருக்கின்றன. பெயர் வேறுபட்டாலும் அடிப்படைத் தத்துவம் ஒன்று தான்.

நாகரிகத் துவக்க காலத்தில், கூடி வாழ்தலின் தேவையை உணர்ந்து கொண்ட புதிதில், மக்கள் கூட்டம் கூட்டமாகப் பல்வேறு கிராமங்களில் வாழ்ந்தனர். கிராமம் தான் அவர்களுடைய நாடு. ஒரு கிராமத்து மக்கள் ஒரு குலத்தவராகத் தங்களைக் கருதிக் கொண்டனர். ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தலைவன் இருந்தான். அவன் ஐயன் எனப்பட்டான். குலங்களுக்கிடையில் மோதல்கள் நடைபெறும்போது அவன் தன் உதவியாளர்களுடன் ஊர் எல்லையில் நின்று ஆயுதம் ஏந்தி மக்களைக் காத்து வந்தான்.

ஐயன் இறந்த பிறகு ஊருக்கு வெளியே அவனுக்குச் சமாதி அமைத்து மக்கள் வழிபட்டனர். அடுத்தடுத்து வந்த ஐயன்களுக்கும் அதே இடத்தில் சமாதி அமைக்கப்பட்டிருக்கலாம். ஆர் விகுதி பெற்று ஐயனார் என்று அழைக்கப்பட்ட இத்தகைய தொல் பழம் தெய்வக் கோவில்களில் யானை, குதிரை மற்றும் படைவீரர்களது சுடுமண் பொம்மைகள் அமைக்கப்பட்டு இருப்பதை ஒவ்வொரு ஊரிலும் காணலாம்.

குலத்தைக் காக்கும் தெய்வமாக, இந்த ஐயனார்கள் ஒவ்வொரு ஊரிலும் வழிபடப்பட்டனர். பிற்காலத்தில் மக்கள் பிற கிராம மக்களுடன் வணிகத் தொடர்பும், கலாசாரத் தொடர்பும், திருமண உறவும் கொள்ளத் தொடங்கினர். நாடு என்ற சொல் இப்பொழுது பல கிராமங்களின் தொகுதியைக் குறிப்பதாக ஆயிற்று. அரசர்களின் வலிமை பெருகப் பெருக, அது மேலும் விரிவடைந்து சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்று ஆகியது. அந்த விரிவாக்கத்தின் தொடர்ச்சியாகத் தான் நாம் இன்று இந்தியத் துணைக் கண்டத்தை நாடு என்று அழைக்கிறோம். ஆயினும் இன்றும் குல தெய்வம் என்ற கருத்துரு மறையவில்லை.

முஸ்லீம் படையெடுப்பின் போது பல கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொள்ளை அடிக்கப்பட்டன. இந்தச் செய்தி பரவியதும் அந்தந்த ஊர் மக்களும் தங்களுக்குத் தோன்றிய வகையில் தங்கள் தெய்வ உருவங்களைப் பாதுகாக்க முயற்சி மேற்கொண்டனர். சிதம்பரம் நடராஜர் சில காலம் புதுக்கோட்டை அருகே ஒரு புளியமரத்தில் ஒளித்து வைக்கப்பட்டுப் பின்னர்த் திரும்பியதும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் விக்கிரகம் தஞ்சாவூரில் கொண்டு வைக்கப்பட்டுப் பூசிக்கப்பட்டதும், பாதுகாப்பான சமூக நிலை தோன்றிய பின்னும் அவ் விக்கிரகம் காஞ்சிபுரம் திரும்பாமல் தஞ்சாவூரிலேயே பங்காரு காமாட்சி என்ற பெயரில் இன்றும் வழிபடப் பெறுவதும் உ.வே. சாமிநாதையரின் பயண அனுபவங்களில் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் மதுரை அருகே குகையில் பாதுகாக்கப்பட்டது வைணவ வரலாற்றில் இடம் பெறும் செய்தி.

மதுரை தென்காசிப் பகுதிகளில் ஏதோ ஒரு கிராமத்தில் வழிபடப்பட்ட ஐயனார் தான் இன்று சபரி மலை ஐயப்பனாக உயர்ந்துள்ளார் என்று நம்புவதற்கு இடமுண்டு. பிற மதக் கொள்ளையர்களிடமிருந்து தங்கள் ஐயனாரின் பொன் விக்கிரகத்தைக் காப்பாற்ற எண்ணிய அம் மக்கள் அதை எடுத்துக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் யாரும் எளிதில் அணுக முடியாத ஒரிடத்தில் வைத்து மறைத்தனர். தமிழ் நாட்டிலும் கேரளத்திலும் பெரும்பாலான ஐயனார் கோவில்களில் கருங்கல் அல்லது சுதை விக்கிரகமே வழிபடப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட கிராமத்தில் மட்டும் பொன்னாலும் விக்கிரகம் செய்திருந்தனர் போலும். ஐயப்பன் கோவிலில் பெரிய கறுப்பன், சிறிய கருப்பன், மாளிகைப்புரத்து அம்மாள் ஆகியோருக்கும் வழிபாட்டு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதிலிருந்து அவர்களே இச் சமய வீரச் செயலைச் செய்திருக்க வேண்டுமென ஊகிக்கலாம்.

விக்கிரகத்தை ஒளித்து வைத்த போதிலும் ஊர் மக்கள் அதற்கு வழிபாடு செய்வதை நிறுத்தவில்லை. ஆண்டு தோறும் பொங்கலன்று படையல் வைப்பதை விடாமல் செய்து வந்தனர். அந்த மறைவிடத்திற்கு வழி தெரிந்த மூத்தவர்கள் சிலர் முன்னே செல்ல மற்றவர்கள் சிறு சிறு குழுக்களாக அவர்களைப் பின் தொடர்ந்தனர். காட்டுப் பாதையில் வழி தவறாமல் இருப்பதற்காக அவர்கள் பெருங் குரலில் கோஷம் எழுப்புவதை வழக்கமாகக் கொண்டனர். ஆண்டு தோறும் நடை பெற்ற இந்தக் கடும் பயணத்துக்குத் தங்களைத் தயார் செய்து கொள்வதற்காக அவர்கள் பல நாட்கள் முன்னதாகவே தொடங்கி விரதம் இருக்கத் தொடங்கினர். தீவிர பக்தியும், துன்பங்களைத் தாங்கவல்ல மன உறுதியும், உடல் வலிமையும் இருந்தாலன்றி முற்காலத்தில் இத்தகைய பயணம் மேற்கொண்டிருக்க முடியாது.

வழி தவறாமல் இருப்பதற்கு மட்டுமன்றிக் காட்டுப் பாதையில் உள்ள விலங்குகளை விரட்டவும் இந்தப் பெருங்குரல் கோஷம் அவர்களுக்கு உதவியிருக்க வேண்டும். பொங்கலன்றுப் படையலளித்துப் பெருங் கூட்டமான மக்கள் அங்கு தங்கும்போது காட்டு விலங்குகளை நெருங்கவிடாமல் தடுக்கத் தீ மூட்டினர். இந்தத் தீ வேறொரு வகையிலும் அவர்களுக்கு உதவி இருக்கக் கூடும். நடக்க முடியாமல் மெதுவாக நடந்து பொங்கலன்று பகற் பொழுதுக்குள் கோவிலை அடைய முடியாத குழுக்களுக்குத் தங்கள் இருப்பிடத்தைக் காட்டுவதற்காகக் கூட முதலில் சென்றவர்கள் தீயை மூட்டி இருக்கக் கூடும். இதுவே இன்று மகர ஜோதியாகப் பரிணாம வளர்ச்சி பெற்றுப் போற்றப்படுகிறது.

இந்த வழிபாடு பிரபலமாகி மற்ற கிராமத்து மக்களும் அங்கு செல்லத் தொடங்கினர்.

சாத்தனும் ஐயப்பனும்

பழந்தமிழ் நாட்டில் சாத்தன் என்ற ஒரு தெய்வம் வணங்கப்பட்டதைப் பண்டைய இலக்கியங்கள் மூலமாக அறிகிறோம். புத்தருக்குச் சாஸ்திரங்களை அறிந்தவர் என்ற பொருளில் வழங்கப்பட்ட சாஸ்தா என்ற ஸம்ஸ்கிருதப் பெயரே தமிழில் சாத்தன் என வழங்கலாயிற்று. சிலப்பதிகாரம் பாசண்ட சாத்தன் பற்றிக் கூறுகிறது. பாஷண்ட என்ற சொல் வேத வழக்கை மீறி நடப்பவரைக் குறிக்கப் பயன்படுவது. எனவே இது வேதத்திற்குப் புறம்பான கடவுளான புத்தரையே குறித்ததை அறிகிறோம். மகாயான புத்த மதம் தமிழ்நாட்டில் பரவிய போது இங்குப் புத்தருக்குச் சிலைகள் அமைத்து வழிபட்டனர். பௌத்தப் பள்ளிகள் பொதுவாக ஊரின் வெளிப் புறத்திலேயே அமைந்திருந்ததால் இச்சிலைகளும் ஊர் எல்லையிலேயே அமைக்கப்பட்டன. தமிழ் நாட்டில் புத்த சமயம் மங்கிய காலத்தில் இச்சாத்தன் சிலைகள் தொல் பழம் தெய்வமான ஐயனாருடன் ஒன்றுபடுத்தப்பட்டன. இதனால் சாஸ்தா என்பது ஐயனாருக்கு உரிய பெயர்களில் ஒன்றாக ஆயிற்று. அவ்வாறே இன்று ஐயப்பனும் சாஸ்தா என்றே அழைக்கப்படுகிறார். புதிதாக ஏற்பட்ட தெய்வங்களைப் பழைய தெய்வங்களுடன் உறவு முறை மூலம் இணைக்கும் வழக்கப்படி சாத்தனைச் சிவனாரின் மகனாகக் கருதத் தொடங்கினர். அதனால் தான் அப்பர் சாத்தனை மகனாக வைத்தார் என்று சிவனைக் குறித்துச் சொல்கிறார். வட இந்தியாவில் புத்தர் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார்.

சிவன், விஷ்ணு வழிபாடு தோன்றிய பின் அவர்களைப் பற்றிய புராணங்கள் எழுந்தது போல ஐயப்பன் வழிபாடு தோன்றிய பின்னர் ஐயப்பன் பிறப்பு பற்றிய கதைகளும் தோன்றி இருக்க வேண்டும். சைவர்களையும் வைணவர்களையும் இணைக்கச் செய்த முயற்சியும் இக்கதையில் அடங்கியுள்ளது. வழக்கம்போல இதற்கும் வேத ஒப்புதல் கிடைத்தது. இன்று வேத மந்திரங்களுடன் சபரி மலை ஐயப்பன் பூசை செய்யப் படுகிறார்.

முஸ்லீம் படையெடுப்பின் அச்சம் நீங்கிய பின்னர், மக்கள் ஐயப்பனைத் தங்கள் பழைய இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென நினைக்கவில்லை. பல தலை முறைகள் கடந்து விட்டபடியால் காட்டு வழிப் பயணம் செய்து தான் ஐயப்பனை வழிபட வேண்டும் என்ற வழக்கம் நிலைத்து விட்டிருக்கும்.

வாவர் என்னும் இஸ்லாமியர் ஐயப்பனின் தோழராகக் கருதப்படுவதிலிருந்து சபரிமலை வழிபாடு முஸ்லீம் வருகைக்குப் பிந்தியது என அறியலாம். ஆரம்ப கால முஸ்லீம்கள் படையெடுப்பாளர்களாக, கொள்ளையர்களாக வந்த போதிலும் இங்கேயே தங்கி விட்டவர்கள் பிற்காலத்தில் இந்துக்களோடு இணங்கி வாழத் தலைப்பட்டனர். அத்தகையோரில் ஒருவரே வாவர்.

தமிழ் நாட்டில் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஐயப்பன் வழிபாடு மேலும் மேலும் ஓங்கி வருவதற்கு என்ன காரணம்?

அதன் எளிமை. சிக்கலான, புரியாத மொழியில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் எதுவும் இல்லை. சாமியே சரணம் ஐயப்பா என்ற எளிமையான தமிழ்ச் சொற்களை உச்சரிப்பது தான் வழிபாடு. அவரவர் விருப்பப்படியும் சக்திக்கேற்றவாறும் விரதம் இருக்கலாம், அன்னதானம் செய்யலாம் என்ற சுதந்திரம்.

அது தரும் சமத்துவம். விரதம் இருக்கும் நாட்களில் பக்தர்கள் அனைவரும் ஐயப்பனாகவே கருதப்படுகின்றனர். சாதி, மத, அந்தஸ்து, வயது வேறுபாடு இல்லாமல் அனைவரும் சாமி என்றே அழைக்கப்படுகின்றனர். பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் தாழ் நிலையில் இருப்பவர்களுக்கு இது ஒரு பெருமித உணர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் தருகிறது.

வருடத்தில் சில நாட்கள் விரதம் இருக்கும்போது தன்னைத் தானே கட்டுப் படுத்திக் கொள்வதன் மூலம் உண்டாகும் ஆத்ம பலம்.

இந்த எளிமையும் சமத்துவமும் கூட்டமாக விரதம் இருப்பதும் தற்காலச் சைவத்தில் இல்லாமல் இருந்தது. தேவைக்கேற்பப் புதிய மாற்றங்களைக் கொணர்வதை அனுமதிக்கும் வேதநெறி காரணமாக இன்று ஐயப்பன் சிவக் குடும்பத்தில் சேர்ந்துவிட்டார். சுமார் 50 வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் நாட்டில் சிவன் கோவில்களில் ஐயப்பன் சிலை அமைக்கப்படவில்லை. இன்று பல கோவில்களில் காண்கிறோம்.

திருமாலுக்கும் மகனாக ஐயப்பன் கூறப்பட்ட போதிலும் வைணவர்களிடையே இவ்வழிபாடு பரவாததை நோக்குக.

14


லிங்க வடிவின் பரிணாம வளர்ச்சி


தென்முகக் கடவுள் வடிவிலும் ஆடல் வல்லான் வடிவிலும் கோவில் தோறும் சிவன் வழிபடப்பட்டபோதிலும் சிவாலயத்தின் பிரதான தெய்வமாக இருப்பது லிங்க வடிவே. சிவன் தவிரப் பிற தெய்வங்கள் எதுவும் இவ்வாறு அருவுருவ வடிவில் வழிபடப் பெறுவதில்லை. உருவச் சிலைகள் செய்யப்படுவதற்கு முன்னதாக ஏற்பட்டதால் சிவ வழிபாடு மற்ற தெய்வங்களை விடப் பழமையான அடிப்படையில் அமைந்தது என்பதை அறியலாம். லிங்க வழிபாடு தமிழ் நாட்டுக்கு மட்டுமே உரியது என்றும் வேதத்தில் இல்லாதது என்றும் கூறப்படும் நிலையில் அது இங்கு எப்படித் தோன்றியது என்று ஆராய்வோம்.

தமிழ்நாட்டில் இன்று காணப்படும் லிங்கங்களை இரு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை, கருங் கல்லால் செதுக்கப் பட்டவை. இன்றைய லிங்கங்களில் பெரும்பாலானவை இப்படிப்பட்டவையே. இவை மூன்று பகுதிகளால் ஆனவை. பாணம் என்று அழைக்கப் பெறும் தூண் போன்ற வடிவம், மூன்றில் ஒரு பகுதி மண்ணில் புதைக்கப்படுகிறது. ஆவுடையாரின் பீடம் என்று சொல்லப்படும் அடிப்பகுதியும், விஷ்ணு பாகம் என்று சொல்லப்படும் மேல் பகுதியும் நடுவில் துளைகள் உள்ளவை. இவை பாணத்தின் மேல் பாகம் வழியாக மாட்டப்பட்டுக் கீழே இறக்கப்பட்டுப் பொருத்தப்படுகின்றன.

இரண்டாவது வகை, சுயம்பு லிங்கம் (மனிதரால் ஏற்படுத்தப் படாதது) என்று அழைக்கப் படுகிறது. இவை பெரும்பாலும் குவளையால் மூடப்பட்ட புற்றாகவோ, மண் குவியலாகவோ உள்ளன. இவற்றின் ஆவுடையார் முன்பகுதியும் பின் பகுதியும் தனித்தனியே செய்யப்பட்டு லிங்கத்தைச் சுற்றி வைக்கப்பட்டுப் பொருத்தப் படுகின்றன.

குறி வழிபாடும் லிங்கமும்

லிங்கம் என்பது சிவசக்தி சேர்ந்த அடையாளம் என்று ஆகமங்கள் விளக்கம் தருகின்றன. இத்தகைய குறி வழிபாடு மிகப் பழைய காலத்தில், உலகின் எல்லா நாடுகளிலும் இருந்து வந்துள்ளது. குறிப்பாக மெக்சிகோ, கிரீஸ், ரோம் ஆகிய நாடுகளில் லிங்கங்கள் புதைபொருள்களாக மிகுதியாகக் கிடைத்துள்ளன. இவற்றைச் சைவ சமயத்தைச் சேர்ந்ததாகக் கருதக் கூடாது. இது பற்றி ஆராய்ச்சி செய்த இங்கிலாந்து நாட்டு அறிஞர் ஹாட்டர் எம் வெஸ்ட்ராப் கூறுவதாவது, “விதையுள் அடங்கியுள்ள சக்தியும் மண்ணின் சக்தியும் உற்பத்தியின் இரு காரணிகளாக மனித மனத்தை முற்காலத்தில் கவர்ந்திருக்க வேண்டும். பிராணிகளின் உற்பத்தியிலும் இதே போல ஒன்று ஆணும், மற்றது பெண்ணுமாக இரட்டைக் காரணி அமைப்பு இருப்பதை அவர்கள் ஒப்பிட்டிருக்க வேண்டும். இந்த அறிவு பல நாட்டு மக்களுக்கும் பிறரிடமிருந்து கற்க வேண்டிய அவசியம் இல்லாமல் தானே தோன்றியது என்பதில் ஐயம் இல்லை. ஏனெனில் இயற்கையின் ஒரு பொருளோ செயல்பாடோ எல்லா இன மக்களுக்கும் அவர்கள் எவ்வளவு தொலைவில் பிரிந்திருந்தாலும் ஒரே மாதிரியான எண்ணத்தைத் தோற்றுவிக்குமாறு மனித மனம் அமைந்துள்ளது. குறிகள் இயற்கையின் உற்பத்திச் சக்தியின் அடையாளமாகக் கருதப்பட்டதால் அவை எல்லா நாடுகளிலும் மிக மரியாதையாக வணங்கப்பட்டன.” [PHALLIC WORSHIP BY HODDER M. WESTROPP ]

மற்ற நாடுகளில் குறி வழிபாடு அநாகரிகமாகக் கருதப்பட்டுக் கைவிடப்பட்டது. தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவின் வேறு எப்பகுதியிலோ இத்தகைய குறி வழிபாடு தோன்றவில்லை. “இந்தியாவில் நாகரிகமற்ற மக்களிடையே கூடக் குறி வழிபாடு இருந்ததற்கான நிச்சயமான சான்று எதுவும் இல்லை” என்று சி.வி. நாராயண ஐயர் கூறுகிறார். [ The origin and early history of Saivism – C.V.Narayana Iyer p 48]

வேதமும் லிங்கமும்

வேதத்தில் வரும் சிசினதேவர்கள் [ரிக் 7.21.5, 10.99.3]என்ற சொல்லுக்குக் குறி வழிபாடு செய்வோர் எனப் பொருள் கொண்டு, சில ஆங்கிலேயர்கள், இது சிவலிங்க வழிபாடு செய்யும் தென்னாட்டவரைக் குறிக்கிறது என்றும் இவர்களை வேதம் இகழ்வதால் இது ஆரிய திராவிடப் பூசல் என்றும் கூறினர். ஏழு நூற்றாண்டுகளுக்கு முன், ஆரிய திராவிடப் பிரச்னைகள் தோன்றாத காலத்தில் எழுதப்பட்ட ஸாயணர் உரையில் சிசின தேவர் என்பதற்குப் பால் நுகர்ச்சியில் வரம்பு கடந்த நாட்டம் உடையவர் என்று தான் பொருள் கூறப் பட்டுள்ளது. ஸாயணரை விடக் காலத்தால் முந்திய யாஸ்கர் என்பவர் எழுதிய நிருக்தத்தின் (அரும்பத உரை நூல்) அடிப்படையில் அமைந்ததாகவும் வேதத்தின் மொத்தக் கருத்துக்கு இயைந்ததாகவும் உள்ளது இது. கிரிபித் என்னும் ஆங்கிலேய மொழிபெயர்ப்பாளர் ஸாயணர் கருத்தையே ஏற்கிறார். இம்மொழிபெயர்ப்பே பெரும்பான்மையோரால் ஏற்கப்படுவது. எனவே சிசின தேவர் என்னும் சொல்லுக்கு சிவ வழிபாடு செய்வோர் எனப் பொருள் கூறியது ஆங்கில அரசாங்கத்தின் பிரித்தாளும் கொள்கையைக் காட்டுகிறது.

லிங்கம் என்ற வடசொல்லுக்கு அடையாளம் என்பதே முதற்பொருள். சிவன் என்ற பெயரை இறைவன் என்ற பொருளில் முதன் முதலாகப் பயன் படுத்தும் வேதப் பகுதியான ஸ்வேதாஸ்வதார உபநிடதம், சிவனுக்கு உருவமில்லை, ஆனால் பாமர மக்கள் வழிபட ஏதேனும் அடையாளம் வேண்டி இருக்கிறது என்று கூறுமிடத்தில், அடையாளம் என்ற பொருளில் லிங்கம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. அது இன்றைய லிங்க வடிவைக் குறிப்பிடவில்லை. [The origin and early history of Saivism – C.V.Narayana Iyer p 48]

பண்டைத் தமிழகத்து லிங்கங்கள் குறி வழிபாட்டுச் சின்னமாக அமைக்கப் படவில்லை. கந்தாகவோ, புற்றாகவோ, நடுகல்லாகவோ அமைக்கப்பட்ட இவை ஆகமங்கள் ஏற்பட்டபின் தான் பாணத்துடன் கூடிய ஆவுடையாராக வளர்ந்தன. ஆகமங்கள் ஏற்படும் காலம் வரை குறி வழிபாடு இருந்ததற்கான சான்றுகள் இல்லை. ஆகமம் வழங்காத இந்தியாவின் இதர பகுதிகளில் (சோமநாதம், ஸ்ரீசைலம், உஜ்ஜயினி, ஓங்காரம், வைத்தியநாதம், பீமசங்கரம்) உள்ள ஜோதிர் லிங்கங்கள் ஆவுடையார் இல்லாமல் அமைந்துள்ளன என்பது கவனிக்கத் தக்கது. [சிவ வடிவங்கள் என்ற நூலில் மா.சிவகுருநாதபிள்ளை] பழமையான காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் இரண்டு லிங்கங்கள் பீடம் இன்றிக் காணப்படுகின்றன. [சைவசமயவளர்ச்சி- மா. இராசமாணிக்கனார் பக்கம் 22]

தமிழ் நாட்டின் லிங்க வடிவத்தின் தோற்றுவாய்கள் மூன்று. அவை கந்து, நடுகல், புற்று ஆகியவை.

கந்து வழிபாடு

பொருள்களில் தெய்வத்தை அதிட்டானிக்கும் முறையே பிற்காலத்தில் வளர்ந்து விக்கிரக வழிபாடாக மாறியது. இவ்வாறு அதிட்டானித்தல் வேத காலத்திலேயே இருந்தது. சமித்தில் பிரம்மாவை ஆவாஹனம் செய்தலும், நீர்க்குடத்தில் வருணனை எழுந்தருளச் செய்வதும் வேள்வியின் அங்கங்களாகக் கூறப்பட்டுள்ளன.

சங்க காலத்தில் தெய்வத்தை அதிட்டானிக்க ஆதாரமாகப் பயன்பட்ட பொருளைக் கந்து என்று அழைத்தனர். இது பொதுவாகக் கல் தூணாகவே இருந்தது போலும். அதனால் கந்து என்பதற்குக் கல் தூண் என்ற பொருள் ஏற்பட்டது. பிற பொருள்களும் கந்தாகப் பயன்பட்டன. சுறா மீனின் கொம்பை நட்டு அதில் வருணனை வழிபட்டதாகப் பட்டினப்பாலை கூறுகிறது. [பட்டினப்பாலை வரி 84]

சில இடங்களில் சில மரங்களில் இயற்கையில் கடவுள் உறைவதாகக் கருதி வழிபட்டனர். ஆனால் அத்தகைய மரத்தை கடவுள் மரம் என்று தான் அழைத்தார்கள். கந்தாகப் பயன்பட்ட மரம் என்று கூறவில்லை. எனவே கந்து என்பது வழிபாட்டுக்காக வேண்டுமென்றே அமைக்கப்பட்ட பொருளையே குறிக்கிறது என்று அறியலாம்.

ஆவுடையார் கோவில், சின்ன ஆவுடையார்கோவில் இரண்டு ஊர்களும் பண்டைய மர வழிபாட்டு முறையைப் புலப்படுத்துகின்றன.

சில சமயங்களில் உருவச் சிலைகளை அல்லது ஓவியங்களைப் பயன் படுத்தினர். வல்லவன் அமைத்த பாவையில் முருகன் அதிட்டானித்தது போன்று (வல்லோன் தைஇய வரிப்புனை பாவை முருகு இயன்றன்ன) என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது. [மதுரைக் காஞ்சி 723] விழா நடத்தும்போது கடவுளின் உருவம் எழுதிய கொடியை ஏற்றி விழாவைத் துவக்கினர் என்பது தெரியவருகிறது.

ஒரு பஞ்ச காலத்தில் கந்து, வழிபடுவார் இன்றி, ஊர் மாடுகள் சொறிந்து கொள்ளப் பயன்படுத்தும் நிலையில் இருந்ததும் அதனால் அது ஆட்டம் கண்டு இருந்ததும், அதற்கு உணவு படைப்பது நின்றுபோனதும் கூறப்படுவதால் பொது இல்லில் வைக்கப்பட்ட கந்து, தற்கால விக்கிரகங்கள் போல மிகுந்த பாதுகாப்புக்கும் தொடர்ந்த மரியாதைக்கும் உரியதாகக் கருதப்படவில்லை என்பது தெரிய வருகிறது. கந்து என்பதற்கு ஆதீண்டு குற்றி (மாடு உராய்ந்து கொள்ளும் கல்) என்ற பொருளும் தரப்பட்டுள்ளது.

மரை ஏறு சொரிந்த மாத்தாட் கந்து

சுரைஇவர் பொதியில் அம்குடிச் சீறூர்

நாட்பலி மறந்த நரைக்கண் இட்டிகை (அகம் 287)

கலிகெழு கடவுள் கந்தம் கைவிட

பலிகண் மாறிய பாழ்படு பொதுஇல்

நரை மூதாளர் நாயிடக் குழிந்த

வல்லின் நல்லகம் நிறைய (புறம் 52)

கந்தை விட்டுக் கடவுள் விலக, பொது இல் பாழ்பட, அங்கு முதியோர் சூதாடினர் என்று கூறப்பட்டிருப்பதும் இக்கருத்தை வலியுறுத்துகிறது.

இறைவனை அதிட்டானிக்கப் பயன்பட்ட கல் எந்த வடிவத்தில் இருந்தது என்பதற்குச் சான்றுகள் இல்லை. அது ஆடாமல் இருப்பதற்காக, அதன் ஒரு பகுதி பூமியில் புதைக்கப்பட்டதை அறிய முடிகிறது. மாத்தாள் என்ற தொடர் கந்தின் அடிப்பாகம் அகலமாக இருந்ததைக் காட்டுகிறது. கந்தின் மீது மாடு சொரிந்து கொண்டது கூறப்படுவதால் அது இன்றைய சிவலிங்கம் போல வழவழப்பாகச் செதுக்கப்பட்டதாகவோ, குட்டையாகவோ இருந்திருக்க முடியாது. சுடலை மாடனின் உருவம் போல மேலே செல்லச் செல்லக் குறுகும் செவ்வக வடிவமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.

கந்தில் அதிட்டானிக்கப்பட்ட தெய்வம் எது என்று எங்கும் குறிக்கப்படாததால், எந்த தெய்வத்தை வழிபட விரும்பினாலும் அதைக் கந்தில் அதிட்டானிக்கலாம் என்னும் வகையில் அமைந்திருக்க வேண்டும். “கன்றாப்பூர் நடுதறியைப் பாடுவோமே என்று அப்பர் பாடுகிறார். நடுதறியாகிய கந்து அப்பர் காலத்தில் சிவனாக மாற்றப்பட்டதே அன்றி, சங்க காலத்தில் கந்தாக வழிபடப் பட்டபோது, சிவ வழிபாட்டைக் குறிக்கவில்லை” என்று தேவநேயப் பாவாணர் தமிழர் மதம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

நடுகல் வழிபாடு

தொல்காப்பியர் காலம் முதற்கொண்டே போரில் இறந்த வீரர்களுக்குக் கல் நாட்டி வழிபடும் வழக்கம் இருந்ததை இலக்கியங்கள் மூலமாகவும், அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் இத்தகைய கற்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. இந்தக் கற்களுக்குப் பந்தலிடும் வழக்கம் இருந்ததும் அவற்றிற்கு அபிஷேகம், தூபம், நிவேதனம் ஆகியவை செய்யப்பட்டதும் சங்க நூல்களிலிருந்து தெரிய வருகிறது.

இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்

புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி,

நன்னீர் ஆட்டி, நெய்ந்நறைக் கொளீஇய,

மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்,

அருமுனை இருக்கை …….. (புறம்- 329)

நடுகற்களை நீராட்டி, நெய் தடவி, தெருக்கள் கமழுமாறு தூபம் எடுத்து, வீட்டில் தயாரித்த கள்ளைப் பலியாகப் படைத்து வழிபட்டனர். போரில் மட்டுமல்லாமல் புலி, பாம்பு, குதிரை இவற்றுடன் போராடிக் கொல்லப்பட்டவர்களுக்கும் கூடக் கற்கள் நடப்பட்டன என்று அகழ்வாய்வின் மூலம் தெரியவருகிறது. இந்தக் கற்களில் படம் வரைவதும், பெயர் பொறிப்பதும், பிற்காலத்தில் சிவலிங்கம் பொறிப்பதும் வழக்கமாக இருந்தது என்றும் அறிகிறோம். “நடுகல் வழிபாட்டைச் சிறுதெய்வ வழிபாடாகக் கருதிய பின்பு, நடுகற்களை உருவாக்கியபோது, சிவலோகத்தை நடுகற்களில் காட்ட முற்பட்டனர். நந்தி மற்றும் சிவலிங்கம் பிற்கால நடுகற்கள் சிலவற்றில் இடம் பெற்றுள்ளன.” [ நடுகற்கள் – ச. கிருஷ்ணமூர்த்தி பக்.27]

[இன்றும் இந்துக் குடும்பங்களில் இயற்கையாக இறந்தவர்களுக்குச் செய்யப்படும் இறுதிச் சடங்குகளிலும் பாஷாண ஸ்தாபனம் என்பது ஒரு முக்கியமான சடங்காக உள்ளது. ஒரு சிறு கல்லை மண்ணுக்குள் புதைத்து வைத்து அதில் இறந்தவரின் ஆவியைக் குடியேற்றி அதற்குத் தினமும் உணவு படைக்கப்படுகிறது. அவரவர் குல வழக்கப்படி, 10 ஆம் நாள் அல்லது 16 ஆம் நாள் அதற்குப் பெரும் சோறு படைத்தபின் ஆவி கல்லிலிருந்து அகற்றப்படுகிறது. இது பழைய கல் நடும் பழக்கத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம்.]

இக்கற்கள் ஆரம்ப காலத்தில் சாதாரணமாக இயற்கையில் கிடைக்கும் நிலையில் சொரசொரப்பாகத் தான் இருந்தன. அவை நாளடைவில் வழவழப்பாக்கப்பட்டு லிங்க வடிவை அடைந்திருக்க வேண்டும். “சமாதியின் மேல் உருட்டிவிடப்பட்ட சொரசொரப்பான பாறாங் கற்களும், நட்டு வைக்கப்பட்ட நினைவுக் கற்களுமே உலகெங்கிலும் உள்ள வழிபாட்டுக் கற்சிலைகளும், பளிங்குச் சிலைகளும் தோன்றக் காரணமாயின.” என கிராண்ட் ஆலன் கூறுகிறார். [கடவுள் கொள்கையின் பரிணாம வளர்ச்சி என்னும் நூல், ச.கிருஷ்ணமூர்த்தி எழுதிய நடுகற்கள் என்னும் நூலில் மேற்கோள் காட்ட்ப்பட்டது – பக்.57]

மேலும், “இறந்தவர்கள் திரும்ப வந்து உயிருடன் இருப்பவர்களைத் துன்புறுத்தாமல் தடுக்கவே, கற்பாறைகளைச் சவக்குழிகளின் மேல் மூடினர். நாளாக நாளாக இந்தக் கற்களைச் சதுர வடிவமான கற்பலகைகளாக உருவாக்கி ஒழுங்குபடுத்தினர். கடைசியாக இவைகளின் மேல் தலையும் தோளும் பொருந்திய பிரதிமங்களைச் செதுக்கி அழகு படுத்தினர்.” [கடவுள் கொள்கையின் பரிணாம வளர்ச்சி என்னும் நூல், ச.கிருஷ்ணமூர்த்தி எழுதிய நடுகற்கள் என்னும் நூலில் மேற்கோள் காட்ட்ப்பட்டது – பக்.57]

அரச குடும்பத்தினரின் இத்தகைய நினைவுக் கற்களும் பிற்காலச் சிவலிங்கங்களின் முன்னோடியாகும். பின்னர் துறவிகளுக்கும் இது விரிவுபடுத்தப் பட்டிருக்க வேண்டும். இன்றும் துறவிகளின் சமாதியின் மேல் லிங்கம் அமைக்கப்படும் வழக்கம் தொடர்கிறது.

நடுகல்லுக்குச் செய்யப்பட்ட சடங்குகளான, காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், பெரும்படை வாழ்த்தல் ஆகியன இன்றைக்கும் சிவாலயக் கற்சிலைகளுக்குச் செய்யப்படுகின்றன.

புற்று வழிபாடு

திருவாரூரிலுள்ள ஆலயத்தில் இறைவனின் பெயர் புற்றிடங் கொண்டார். இங்கு இயற்கையாக லிங்க வடிவில் அமைந்த புற்றே, மூலஸ்தானமாக அமைந்துள்ளது. இது தொல்பழம் வழிபாடுகளுள் ஒன்றான பாம்பு வழிபாட்டுத் தலமாக இருந்து பின்னர் சிவாலயமாக வளர்ந்தது எனலாம்.

பாம்புப் புற்றை வழிபடுதல் இன்றைக்கும் தொடரும் வழக்கம். புற்றும் அதனுள்ளிருந்து தலையை மட்டும் நீட்டிப் படமெடுக்கும் பாம்பும் அரவக் குடை பிடித்த சிவன் போல் விளங்குவதைக் கண்ட மக்கள் இதைச் சிவன் உறையும் இயற்கையான கந்தாக நினைத்து வழிபட்டிருக்க வேண்டும்.

(திருவாரூர் மூலத்தானத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் சுமார் 40 லிங்கங்கள் உள்ளன. இவை திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்டபோது, இறந்த அரசர்களின் சமாதியாக இருக்கலாம்.)

இது போன்ற சுயம்பு லிங்கக் கோயில்கள் திருவொற்றியூர், திருவையாறு, திருவெறும்பூர் முதலான பல உள்ளன. மற்றத் தலங்களில் உள்ள சுயம்புகள் லிங்க வடிவில் அமைந்திருக்க, திருவொற்றியூரில் கனசெவ்வக வடிவில் அமைந்துள்ள மண் குவியலில் இறைவன் அதிட்டானிக்கப்பட்டுள்ளார்.

சங்க காலத்துக்கும் சம்பந்தர் காலத்துக்கும் இடையில் சிவ வழிபாட்டுக்குப் பல வகையான வடிவங்கள் பயன்பட்டிருக்க வேண்டும். சில இடங்களில் புற்று, மண் குவியல் போன்ற பொருள்களில் சிவன் அதிட்டானிக்கப்பட்டார். வேறு சில இடங்களில் தென்முகக் கடவுள் வடிவமோ, ஆடற் பெருமான் வடிவமோ சிவனுடைய மூர்த்தியாக இருந்தது. நாகை, திருவதிகை, வேதாரண்யம், திருவீழிமிழலை, திருமழிசை போன்ற பல இடங்களில் சிவனையும் உமையையும் சேர்த்து மணக் கோல நாதராக வழிபட்டனர். இன்னும் சில இடங்களில் நடுகற்களும் கந்துகளும் சிவ வடிவமாக விளங்கின. திருவாப்புடையார்கோவில் என்னும் தலத்தில் ஒரு மர ஆப்பு வடிவில் இறைவன் அதிட்டானிக்கப் பட்டிருந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. (ஆகாசம் எனப்படும் வெற்றிடத்திலும் சிவனை அதிட்டானிக்கலாம் என்பதற்குத் தில்லையே சான்று.)

கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தோன்றிய லகுலீச பாசுபத மதத்தவர் லிங்கவடிவில் முகம் அமைத்துத் தங்கள் குருமார்களை வணங்கினர் என்பது இரண்டாம் சந்திரகுப்தனின் மதுரா கல்வெட்டிலிருந்து தெரிய வருகிறது. அச்சமயத்தவர் தமிழ்நாட்டுக்கு வந்தபின் இங்கும் கந்தை லிங்க வடிவத்தில் அமைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கவேண்டும். இதைத் தொடர்ந்து காலப் போக்கில் ஆகமங்கள் தோன்றி, லிங்க வடிவம் என்பது சிவ சக்தியின் அருவுருவத் தோற்றம் ஆகும் என்று தத்துவ ரீதியான விளக்கங்கள் அளித்தன. அதைத் தொடர்ந்து எல்லாக் கோயில்களிலும் ஆவுடையாரும் பாணமும் சேர்ந்த லிங்க வடிவமே மூலத்தானமாக இருக்க வேண்டும் என்ற வழக்கம் பரவி இருக்க வேண்டும்.

சுயம்பு லிங்கமாக இருந்த இடங்களில் ஆவுடையார் சேர்க்கப்பட்டது, சொரசொரப்பான நடுகற்கள் பாண வடிவம் பெற்று அதில் ஆவுடையார் இணைக்கப்பட்டது, தென்முகக் கடவுள் வடிவம் மட்டும் இருந்த தலங்களில் அதற்கு வடக்கில் லிங்கம் அமைக்கப்பட்டது, ஆடற் பெருமான் வழிபாடு தோன்றிய தில்லையிலும் ஒரு லிங்கம் அமைக்கப்பட்டது, மணக் கோல நாதர் மட்டும் இருந்த இடங்களில் அதை மறைக்கும் விதமாக லிங்கம் அமைக்கப்பட்டது ஆகிய இவை பின்னரே ஏற்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு கந்து, நடுகல், புற்று இவற்றின் மேல் அதிட்டானிக்கும் முறைகள் ஒன்றாகக் கலந்து சைவம் என்ற பெயரில் தனிச் சமயமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்த பின் ஆவுடையார் அமைக்கப்பட்டு சிவ சக்தியின் அருவுருவத் தோற்றம் என்ற விளக்கம் ஏற்படுத்தப்பட்டது.

சிந்து வெளியில் லிங்க வடிவம்

சிந்து வெளியில் லிங்க வடிவம் கிடைத்துள்ளது. ஆனால் இது இன்றைய சிவலிங்க வடிவத்தின் முன்னோடியா என்பது ஐயத்துக்குரியது. அது வழிபடு பொருளாகத்தான் பயன்பட்டதா என்பது தெரியவில்லை. அப்படி இருப்பின் அது குறி வழிபாட்டுச் சின்னமாகவும் இருக்கலாம். அல்லது இமயமலை வழிபாட்டின் சின்னமாகவும் இருக்கலாம். [கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காணிகள் என்னும் பழங்குடியினர் வெளியூர் செல்ல நேர்ந்தால் தாங்கள் ஊர்க் கல் ஒன்றை மடியில் கட்டி எடுத்துச் செல்வர். அது போல இமயமலை அடிவாரத்தில் வாழ்ந்து அம்மலையைத் தெய்வமாக வணங்கிய மக்கள் பிற இடங்களில் குடியேறிய போது இமயமலைக் கல் ஒன்றைத் தங்களுடன் எடுத்துச் சென்று வணங்கியிருக்கக் கூடும். மிகத் தொலைவில் குடியேற்றங்கள் நிகழ்ந்த போது ஆங்காங்குக் கிடைத்த கல்லை லிங்க வடிவத்தில் செதுக்கிப் பயன்படுத்தி இருக்கக் கூடும்.]

சிந்து வெளியில் கோமுகி இல்லாத ஆவுடையார் போன்ற வட்ட வளையக் கற்கள் கிடைக்கின்றன. ஆனால் அவை லிங்க வடிவக் கல்லுடன் பொருத்தப் படாமல் தனியே கிடைப்பதால் அவை தூண்களை நிறுத்தப் பயன்பட்டவையாக இருக்கலாம் என்று மக்கா என்பவரை மேற்கோள் காட்டிக் கூறுகிறார் ச.இரேணுகா. [பண்டைத் தமிழ் இலக்கியங்களில் சிவன் - ச.இரேணுகா]

பிற உருவங்கள்

தேவாரக் காலத்தில் ஏற்பட்ட சைவ சமய எழுச்சிக்குப் பிறகு சிவனுடைய பல வேறு தோற்றங்களையும் சிலையாக வடித்து வணங்கும் வழக்கம் பரவி இருக்க வேண்டும். சிவக்குடும்பம் வளர்ந்ததும் புராணக் கதைகள் பெருகியதும் சிற்பிகளுக்குப் புதுப்புது கருப் பொருட்களைத் தந்து அவர்களது திறமையை வெளிக்காட்ட மிகுதியான வாய்ப்புக் கொடுத்தது. மன்னர்களும் பேராதரவு தந்து சமயத்தையும் கலைகளையும் வளர்த்தனர்.

முருகு என்றாலே அழகு என்பது பொருள் அல்லவா? இயற்கை அழகு நிரம்பிய காடு காவு கவின்பெறு துருத்தி முதலான இடங்களை முருகன் உறையும் இடங்களாக வணங்கிய தமிழ் மக்கள் சிலை செய்யும்போதும் அழகுணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். வடநாட்டில் வழிபடு சிலைகளின் அழகு பொருட்படுத்தப்படுவது இல்லை என்பதைக் கவனிக்க. வழிபாட்டு விக்கிரகங்கள் மட்டுமல்லாமல் கோயிலின் சுற்றுச் சுவர்களிலும் கிடைத்த இடத்தை எல்லாம் பயன்படுத்தி சிற்பங்களால் நிறைத்தனர் சிற்பிகள். கல் இல்லாத சோழ நாட்டிலும் தொலை தூரங்களிலிருந்து கல் கொணர்ந்து அழகான சிற்பங்கள் மிகுந்த பெரிய கோயில்கள் பல கட்டப்பட்டு இருப்பது அக்காலத்தில் சைவத்தில் எத்தகைய எழுச்சி ஏற்பட்டிருக்கவேண்டும் என்பதைக் காட்டுகிறது.

தற்காலத்தில் புதிய சிற்பங்கள், புதிய கோவில்கள் உருவாவது குறைவாக இருந்தபோதிலும், இறை உருவத்தை அழகுபட அலங்கரிக்கும் போக்கு இன்றும் தொடர்கிறது. சந்தனச் சாந்து கொண்டும் மலர்கள் கொண்டும் தெய்வ வடிவங்களை விதவிதமாக அழகுபடுத்தி வணங்குவதில் தமிழ் மக்கள் தங்கள் தனித்தன்மையை நிலைநாட்டி வருகின்றனர்.

15


கோயிலின் பரிணாம வளர்ச்சி


சங்க காலத்தில் கோயில்

தொல்காப்பியத்தில் கோயில் என்ற சொல் காணப்படவில்லை. சங்க இலக்கியங்களில் இச்சொல் இறை வழிபாட்டிடத்தைக் குறிக்காமல் அரசனின் இருப்பிடத்தையே குறிக்கிறது. முருகனுடைய படைவீடுகளாக நக்கீரர் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகிய ஆறு தலங்களைக் குறிப்பிடுகிறார். வடவேங்கடம் முதலான பல வைணவத் தலங்களும் சங்க நூல்களில் குறிக்கப்பட்டுள்ளன. ஆயினும் அந்தந்த இடங்களில் எல்லாம் வழிபாட்டிடம் கோயில் என்ற பெயரில் இருந்ததாகக் கூறப்படவில்லை. தேவர்கள் வழிபாடு, அந்தணர் வழிபாடு, பேய்மகள் வழிபாடு, குறவர் வழிபாடு என்று பலவகை வழிபாடுகளையும் கூறும் நக்கீரர் எந்த இடத்திலும் கோயில் என்று கூறவில்லை. குறிப்பாக, பழமுதிர்சோலைப் பகுதியில் அவர் முருகன் உறையும் இடங்களாகக் கூறுபவை விழா நடைபெறும் இடம், அன்பர்கள் கூடும் இடம், வேலன் வெறியாடும் இடம், காடு, பூங்கா, ஆற்றிடைக் குறை, ஆறு, குளம், சதுக்கம், சந்தி, கடப்ப மலர், மன்றம், பொதுஇல், கந்து எனப்படும் கல் தூண் ஆகியவையே.

ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்

ஆர்வலரேத்த மேவரு நிலையினும்

வேலன் றைஇய வெறிஅயர் களனும்

காடும் காவும் கவின்பெறு துருத்தியும்

ஆறும் குளனும் வேறுபல் வைப்பும்

சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்

மன்றமும் பொதுஇலும் கந்துடை நிலையினும் [திருமுருகாற்றுப்படை 6-3]

மன்றம் என்பது மக்கள் கூடும் மரத்தடியாகவும், பொது இல் என்பது மக்கள் கூடும் கட்டிடமாகவும் இருக்கலாம். இது தான் சற்றேறக் குறையத் தற்காலக் கோயிலுக்குச் சமமான வழிபாட்டிடமாகக் காணப்படுகிறது. இது கோயில் எனப்படாமல் பொது இல் எனப்படுவது நோக்கத் தக்கது. கோ இல் என்பது அரசனின் வாழிடமாக அல்லது சமாதியாகவும், பொது இல் என்பது பொதுமக்கள் கூடி வழிபடுவதற்கான இடமாகவும் இருந்திருக்கக் கூடும்.

பொது இல்லில் தான் சென்று வழிபட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதும் மக்கள் எங்கெங்கு வழிபாட்டு நோக்கத்துடன் கூடினார்களோ அங்கெல்லாம் இறைவன் தோன்றுவான் என்று மக்கள் நம்பினர் என்பதும் தெரிய வருகிறது.

பரிபாடலில் முருகனைப் பற்றிய பாடல் ஒன்றில், திருப்பரங்குன்றத்தைச் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது. ஆனால் அங்கு வழிபாடு கட்டிடத்தினுள் நடைபெற்றதாகக் கூறப்படவில்லை. கடம்ப மரத்தில் அமர்ந்துள்ள முருகனுக்குப் பூசை நடத்தப் பட்டதாகக் கூறப்படுகிறது. வீசும் காற்றில் விளக்கு அணையாதபடி அமைத்தனர் (ஆறு செல் வளியின் அவியா விளக்கமும்) [பரிபாடல் 8-98] என்று இருப்பதால், இது திறந்த வெளியில் தான் நடத்தப்பட்டது என்பது புலனாகின்றது.

ஓவியம் தீட்டப்பட்ட கடிநகர் பற்றிப் பரிபாடல் கூறுகிறது. [கடம்பு அமர் செல்வன் கடிநகர் பேண - அதே பாடலின் 126 ஆவது வரி] இந்த ஓவியக் கூடம் மக்கள் தங்குவதற்கான கட்டிடமாக இருக்கலாம். வழிபாடு நடந்தது என்னவோ திறந்த வெளியில் கடம்ப மரத்திற்குத் தான் என்று அறிந்துகொள்ள முடிகிறது.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் துறை என்று முடியும் ஊர்கள் (ஆலந்துறை, திருப்பாலைத்துறை, மாந்துறை முதலியன) நீர் நிலையும் மரத்தடியும் சேர்ந்த இடமாக, வழிப் போக்கர்கள் தங்குவதற்கு ஏற்ற இடமாக முதலில் இருந்திருக்க வேண்டும் என்கிறார், நாராயண ஐயர்.[ The origin and early history of Saivism – C.V.Narayana Iyer p316, 317] அந்த இடத்தில் அவர்கள் கந்து அமைத்தோ, கடவுள் மரத்தையோ வழிபட்டிருக்கக் கூடும். பிற்காலத்தில் அவை சிவத் தலங்களாகப் பெயர் பெற்றன.

அது போல, கா என்று முடியும் ஊர்கள் (திருவானைக்கா, திருக்கோலக்கா) கடவுள் உறைவதாகக் கருதப்பட்ட காடாக, இயற்கையான வழிபாட்டிடமாக இருக்கக் கூடும் என்று அவர் கருதுகிறார். [ The origin and early history of Saivism – C.V.Narayana Iyer p316,317]

ஆனைக்கா தலபுராணத்தில் இறைவன் மீது வெய்யில் படாமல் சிலந்தி வலை அமைத்ததாகக் கூறப்படுவது இறைவன் கட்டிடத்தினுள் வைக்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது என்பது நாராயண ஐயர் கருத்து. [ The origin and early history of Saivism – C.V.Narayana Iyer p316,317]

ஆறு குளம் முதலானவற்றில் இறைவன் உறைவதாகக் கருதி வழிபடப்பட்டாலும், இறை வழிபாட்டுக்கென்று தனித்த இடங்களும் இருந்தன. அவை நகர், நியமம் என்ற பெயர்களால் அறியப்பட்டனவே அன்றி, கோயில் என்று அழைக்கப்படவில்லை. நகர் என்ற சொல்லுக்கு அரண்மனை என்றும், நியமம் என்ற சொல்லுக்குக் கடைவீதி என்றும் வேறு பொருள்களும் உண்டு. கோயில் என்பது அரசனின் அரண்மனை மற்றும் சமாதியை மட்டுமே குறித்தது.

அரச சமாதிகளே கோயிலாக மாறின

வீரர்களுக்குக் கல் நாட்டி வழிபடும் வழக்கம் இருந்ததை முதலில் கண்டோம். பொதுவாக, போரில் இறந்த அனைத்து வீரர்களுக்கும் கல் நாட்டி வழிபடுவது என்ற வழக்கம் இருந்தபோதிலும், அக் கற்களை அந்தந்தக் குடும்பத்தினர் மட்டும் தான் வழிபட்டிருப்பர். அரசர்களின் நினைவுக் கற்கள் அனைவராலும் வணங்கப்படும் நிலையில் மிகுந்த கவனம் பெற்றிருக்க வேண்டும். போரில் இல்லாமல் இயற்கையாக இறந்த அரசர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் இந்த மரியாதை செய்யப்பட்டது. [உதாரணம்:- 1 பட்டீச்சுரத்தில் இன்று ராமநாதன் கோயில் என்று அழைக்கப்படும் முதலாம் ராஜராஜனின் மனைவியின் சமாதி. 2 கி.பி. 938ல் இறந்த சுந்தர பாண்டியனுக்குக் கி.பி. 945ல் எடுக்கப்பட்ட பள்ளிப்படை விருதுநகர் மாவட்டம் திருச்சுழியல் அருகே பள்ளிமடை என்னுமிடத்தில் உள்ளது. 3 காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் பிரம்மதேசம் என்னுமிடத்தில் முதலாம் ராஜராஜனின் பள்ளிப்படை கோவிலாக்கப்பட்டுள்ளது.]

“அரசனுக்காக நடப்பட்ட நடுகல்லுக்கும், சாதாரண வீரனுக்காக நடப்பட்ட நடுகல்லுக்கும் அந்தஸ்து நிலையில் வேறுபாடு இருந்ததால் வழிபாட்டு முறைகளிலும் வேறுபாடுகள் ஏற்பட்டன. இவ்வேறுபாடும் சநாதனக் கொள்கையின் செல்வாக்கும் சேர்ந்து அரசனுக்குரிய நடுகல் வழிபாட்டைப் பெருநெறி அளவுக்கு உயர்த்தச் செய்திருக்கவேண்டும்” என்று முனைவர் அ.கா.பெருமாள் கூறுவது குறிப்பிடத் தக்கது. [தொல் பழம் சமயக் கூறுகள் – அ.கா.பெருமாள்]

அரசருடைய சமாதிக்குத் தினசரி பூசைகள் செய்வதற்குப் பூசகர்கள் நியமிக்கப்பட்டிருக்கக் கூடும். அக்கால முறைப்படி இத் தொழில் பரம்பரையாகச் செய்யப்பட்டும் இருக்கலாம்.

இறைவனின் வழிபாட்டிடத்தை அரசனின் வீடு என்ற பெயரால் வழங்குவது அரசனின் நடுகல்லைச் சிவனுக்கு உரிய கந்தாக வழிபடும் வழக்கம் ஏற்பட்டபின் தோன்றியிருக்கக் கூடும். பின்னர் எழுந்த ஆகமங்களும் (ரௌரவம், காமிகம்) சமாதிகளைக் கோவிலாக்குவதை ஒப்புக் கொண்டன. பிற்காலத்தில் சமாதி அல்லாத பிற வழிபாட்டு இடங்களும் கோயில் என்று கூறப்படலாயின. தேவாரத்தில் கோயில் என்ற சொல் சிவாலயம் என்ற பொருளில் ஆளப்பட்டு இருப்பதால் இம் மாற்றம் சங்க காலத்துக்குப் பின் தேவாரக் காலத்துக்கு முன் ஏற்பட்டிருக்க வேண்டும்.

சிவாலயங்கள் கோயில் எனப்பட்ட காலத்தில் கூட, வைணவ ஆலயங்கள் விண்ணகர் என்றே அழைக்கப்பட்டன. இது பழைய ‘நகர்’ என்ற சொல்லின் விரிவாக்கமாகக் காணப்படுகிறது. தற்காலத்தில் எல்லாத் தெய்வங்களின் வழிபாட்டிடங்களும் கோயில் என்றே அழைக்கப்படுகின்றன.

16


வழிபாட்டு முறையின் பரிணாம வளர்ச்சி


வழிபடும் தெய்வம் மட்டுமல்லாமல் வழிபாட்டின் நோக்கமும், வழிபடு முறைகளும், காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் வேறுபட்டு இருப்பது இந்திய சமயங்களின் சிறப்பு. ஒரே காலத்தில் ஒரே இடத்தில் பல வேறு வழிபாட்டு முறைகள் இணைந்து காணப்படுவதும் உண்டு.

வழிபாட்டு நோக்கத்தின் வளர்ச்சி

இறைவன் நம்மைத் துன்புறுத்தக்கூடாது என்பதற்காக வேண்டியது நாகரிகத்தின் துவக்க கால நிலை. ருத்திரனே, உன் கோபத்துக்கு வணக்கம், உன் அம்புகளை உறையிலிட்டு எங்கள் குழந்தைகளையும் பசுக்களையும் துன்புறுத்தாது இருப்பாயாக என்று ருத்ரம் வேண்டுவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். பின்னர், இன்பம் வேண்டும் என்பதற்காக இறைவனை வேண்டினர். தன் நல வாழ்வுக்கு வேண்டிய கோரிக்கைகளைப் பட்டியலிடும் சமகத்தில் காணப்படுவது இது. சமண சாக்கிய சமயத் தாக்கத்தின் காரணமாக பிறவா நிலை ஆகிய வீடு பேறு வேண்டுமென்று வழிபட்டனர். அதிலிருந்தும் சற்று உயர்ந்து, வழிபாட்டின் நோக்கம் வழிபாடே, இதற்கு வேறு ஒரு பயனும் தேவையில்லை என்று கருதும் நிலையும் தோன்றியது. “இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும் அன்பு அறாது என் நெஞ்சு அவர்க்கு”, “அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம்” என்று அம்மையார் பேசியதும், இனித்தமுடைய எடுத்த பொற்பாதம் காண்பதே மனிதப் பிறவியின் பயனாக அப்பர் கருதியதும், “செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே” என்று சம்பந்தர் கூறியதும், “உன் குரை கழற்கே கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே” என்று மணிவாசகர் குழைந்ததும் வழிபாட்டின் நோக்கம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்ததைக் காட்டுகிறது. இதனிலும் மேலே சென்றார் தாயுமானவர். உன்னை மலரெடுத்து அர்ச்சிக்கலாம் என்றால் அந்த மலரிலும் நீயே இருக்கிறாய் என்று பாடி வழிபாடே அவசியமற்றுப் போகும் அத்வைத நிலையைக் காட்டுகிறார்.

தொல்காப்பியர் கால வழிபடுமுறை

தொல்காப்பியர் காலத்திய வழிபடுமுறை பற்றி அறிந்து கொள்ளப் போதுமான சான்றுகள் இல்லை. நிலங்களுக்கு உரிய தெய்வங்களைப் பட்டியலிடும் அவர், கொடிநிலை கந்தழி வள்ளி என்பன கடவுள் வாழ்த்தோடு பொருந்தி வரும் என்று வேறிடத்தில் குறிப்பிடுகிறார். [தொல்காப்பியம் புறத்திணை இயல் 27] இந்த மூன்று சொற்களின் பொருள் என்ன என்பது பற்றி அறிஞர்களிடையே ஒத்த கருத்து இல்லை. அவை முறையே சூரியன், தீ, சந்திரன் இவற்றைக் குறிப்பதாக இளம்பூரணர் கூறுவார்.

கந்து என்பது கல் தூண் என்ற பொருளில் பிற்கால இலக்கியங்களில் வழங்கி வருவதைக் கொண்டு கந்தழி என்பது சிவலிங்கம் என்று வாதிடுவாரும் உளர். அவ்வாதம் ஏற்புடைத்தன்று. கந்தழி சிவலிங்கமாக இருப்பின், அதை ஐவகை நிலங்கள் எதிலும் காட்டாமல், எல்லா நிலங்களுக்கும் பொதுவானது என்றும் குறிப்பிடாமல் கடவுள் வாழ்த்துடன் வருவதாக, அதாவது வழிபாட்டுக்குப் பயன்படும் ஒரு பூசைப் பொருள் போன்ற இரண்டாம் நிலை இடத்தில் அதைத் தொல்காப்பியர் வைத்திருப்பாரா என்பது சிந்திக்கப்பட வேண்டும்.

எனவே, கந்தழி என்பது, இளம்பூரணர் கூறியபடி தீயைக் குறிப்பதாகவோ, அல்லது எத்தெய்வத்துக்கும் பொதுவான அதிட்டானப் பொருளாகவோ இருக்க வேண்டும். இன்று வழிபாட்டின்போது விளக்கு ஏற்றுவது போல, வழிபாட்டுக்குப் பயன்படும் ஒரு புனிதப் பொருளாகத் தீ பயன்பட்டிருக்கும். அவ்வாறே, சூரியனும் சந்திரனும் வழிபாட்டிற்குரிய நேரத்தைத் தெரிந்து கொள்ளப் பயன்பட்டிருக்கலாம். வழிபாட்டிற்கென்று தனித்த இடங்கள் (கோயில்கள்) இருந்தனவா என்பதும் தெரியவில்லை.

அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கம் குறிப்பிடப்படுவதிலிருந்து அந்த ஆறில் ஒன்றாகிய வேள்வி செய்தல் நடைபெற்றது அறியப்படுகிறது.

பூசகர்

சங்க காலத்தில் பூசை நடந்த எந்த இடத்திலும் பூசகர் என்று தனியாக ஒருவர் இருந்ததாகத் தெரியவில்லை. முருகனைத் தன் உடலில் இறக்கிக் கொண்ட வேலனைக் கொண்டு வெறியாட்டு நடத்தினார்கள் என்றாலும் வேலன் பூசகராகக் காட்டப் பெறவில்லை. முதியவர் ஒருவரை முன்னிருத்தி அவருடைய வழிகாட்டுதலின் பேரில் வழிபட்டிருக்கலாம். அப்பூசை ஊர் நலமாக வாழத் தான் செய்யப்பட்டது என்பதை, நளிமலைச்சிலம்பின்நன்னகர்வாழ்த்தி என்ற திருமுருகாற்றுப்படை 6-38 வரி தெரிவிக்கிறது.

அரசனின் சமாதிக்குப் பூசைகள் செய்ய பூசகர்கள் நியமிக்கப்பட்டிருக்கலாம். பதினாறு வகையான ராஜ உபசாரங்கள் செய்யும் முறையும் அங்கு தோன்றியவையாகத் தான் இருக்கவேண்டும். மற்ற ஆலயங்களும் கோயில் என்றே வழங்கப்பட்ட நிலையில் அந்த இடங்களிலும் பூசகர் மூலமாகத் தான் வழிபாடு நடைபெறவேண்டும் என்ற வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.

தேவாரக் காலத்தில் பூசகர் இருந்த போதிலும் அடியார்கள் தாமே இறை வடிவத்துக்கு மலரிட்டு வணங்கினார்கள் என்று ஊகிக்கவும் இடமுண்டு. “போதொடு நீர்சுமந்தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்” என்று அப்பரும், “பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல் தூவி ஒத்த சொல்லி உலகத்தவர் தாம் தொழுதேத்த” என்று சம்பந்தரும் கூறுவதால் இது தெளிவாகிறது.

முற்கால அந்தணர்கள் சமுதாய நலனை வேண்டி வேள்விகள் செய்தனர். வேள்வி முறை வழக்கொழிந்து போகவே, சமுதாயம் முழுமைக்குமாகப் பூசை செய்யும் பொறுப்பைப் பூசகர்கள் பெற்றனர். கோவிலுக்கு யார் வந்தாலும் வராவிட்டாலும் பூசகர் மட்டும் தவறாமல் வந்து பூசை செய்யும் வழக்கம் ஏற்பட்டு இன்றளவும் தொடர்கிறது. அப்படி அவர்கள் செய்வது ஊர் நலனுக்காக என்பதை மக்கள் உணர்ந்திருந்ததால் அறுவடைக் காலங்களில் பூசகருக்கு மானியம் அளிக்கும் வழக்கம் இருந்து வந்தது. இன்றளவும் கோயிலில் நடைபெறும் பொதுப் பூசைகளில் உலக நலனுக்காக என்று தான் சங்கல்பம் செய்து கொள்கின்றனர்.

பணத்தை மையமாகக் கொண்ட மேலை நாட்டுக் கலாசாரம் பரவியதால் ‘நான் பொருள் செலவிட்டுச் செய்யும் பூசையின் முழுப்பலனும் எனக்கே கிடைக்க வேண்டும்’ என்ற குறுகிய கண்ணோட்டம் பரவி உள்ளது. அதன் விளைவாக, அடியார் தன் கையில் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினரின் பெயர்களையும் வாசிக்க, பூசகரும் அவற்றைத் திரும்பச் சொல்லி ‘இவர்களது நலனுக்காக இந்த அர்ச்சனை செய்கிறேன்’ என்று சங்கல்பம் செய்து கொள்ளும் நிலையைக் காண்கிறோம்.

பூசை முறை

இயற்கைச் சக்திகளை வசப்படுத்துவது எப்படி என்று சிந்தித்தன் விளைவாகத் தோன்றியவையே வழிபாட்டு முறைகள். பலரும் பல விதமாகச் சிந்தித்ததன் விளைவாகப் பல முறைகள் வெவ்வேறு காலங்களில் வழக்கிற்கு வந்தன. அவரவர்க்கு விருப்பமான முறையைப் பின்பற்றி வணங்கச் சுதந்திரமும் பிறரது முறையைக் குறைகூறாத பெருந்தன்மையும் இருந்தது வேதநெறியில் வந்த பண்பு.

பல்வேறு வகையான பூசை முறைகளைப் பற்றித் திருமுருகாற்றுப்படை கூறுகிறது. அந்தணர்கள் வேதம் ஓதி மலர் தூவி முருகனை வழிபட்டதைக் கூறும் நக்கீரர் ஆற்றுப்படுத்தப்படும் இரவலனுக்கு முருகனை எப்படிப் போற்றுவது என்று சொல்லும் இடத்தில் ஒரு அழகிய தமிழ் அர்ச்சனையைக் கூறி தமிழும் வேதமும் இணைந்து வாழ்ந்த காட்சியைக் காட்டுகிறார்.

நெடும்பெரும்சிமயத்துநீலப்பைஞ்சுனை

ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப

அறுவர் பயந்த ஆறமர் செல்வ,

ஆல்கெழுகடவுட் புதல்வ, மால்வரை

மலைமகள் மகனே, மாற்றோர் கூற்றே,

வெற்றிவேல் போர்க் கொற்றவை சிறுவ,

இழையணி சிறப்பிற் பழையோள் குழவி,

வானோர் வணங்கு வில் தானைத் தலைவ,

மாலைமார்ப, நூலறிபுலவ,

செருவில் ஒருவ, பொருவிறல் மள்ள,

அந்தணர் வெறுக்கை, அறிந்தோர் சொல்மலை,

மங்கையர் கணவ, மைந்தர் ஏறே,

வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ,

குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து

விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ,

பலர்புகழ் நன்மொழிப் புலவரேறே,

அரும்பெறன் மரபின் பெரும்பெயர் முருக,

நசையினர்க்கு ஆர்த்தும் இசைபேராள,

அலந்தோர்க்களிக்கும் பொலம்பூட்சேஎய்,

மண்டமர்கடந்தநின்வென்றாடகலத்துப்

பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்,

பெரியோரேத்தும் பெரும்பெயரியவுள்,

சூர்மறுங்கறுத்த மொய்ம்பின் மதவலி,

போர்மிகு பொருந, குரிசில், …… திருமுரு. 6.36-59

குறவர்கள் வேலனைக் கொண்டு வெறியாடச் செய்து வணங்கினர். தெய்வங்களுக்கு நெல் தூவிப் பரவுதல் வழக்கில் இருந்தது. அதிட்டானிக்கப்பட்ட பொருளின் மேல் நெய்யும் வெண்கடுகும் அப்பினர். மஞ்சள் முதலான நறுமணப் பொருளைப் பரப்பினர். நறும்புகை எழுப்பினர். வேள்வி முறையும் வழக்கில் இருந்தது என்பதற்குப் புறநானூற்றில் பல சான்றுகள் உள்ளன.

நடுகற்களுக்கு நெய் தடவி, தூபம் காட்டி, கள் முதலானவற்றைப் படைத்து வணங்கினர். மரங்களிலும் பிற பொருட்களிலும் உறையும் மற்றத் தெய்வங்களுக்கும் இதே போன்ற பூசைகள் நடத்தப்பட்டன. நெய் பூசும் வழக்கம் படிப்படியாக விரிவடைந்து தேவாரக் காலத்தில் ஆன் ஐந்து கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்யும் முறையாக வளர்ந்தது. அது மேலும் விரிவடைந்து பழச்சாறு, இளநீர், சந்தனம், மஞ்சள் முதலானவற்றையும் பயன்படுத்துவதாகத் தற்போது நிலவி வருகிறது.

ஒரு புதிய முறை தோன்றிய பின் பழைய முறை பயனற்றது என்று கைவிட்டு விடவில்லை இந்திய மனிதன். அவன் முழுமையான முடிவு தெரியும்வரை எதையும் புறக்கணிப்பதில்லை. பல வகையான முறைகளும் ஒரே சமயத்தில் புழக்கத்தில் இருப்பது இந்தியர் சமயத் துறையில் ஆராய்ச்சி மனப் பாங்கோடு செயலாற்றியதற்குச் சான்றாகும்.

வேதமும் வேள்வியும்

வேதம் என்றாலே உயிர்க் கொலை வேள்வி மட்டும் தான் என்று சிலர் நினைக்கின்றனர். அது போலச் சைவம் துவக்கக் காலத்திலிருந்தே புலால் மறுப்பைக் கொண்டிருந்தது என்றும் நினைக்கின்றனர். இரண்டுமே தவறு.

வேதத்தில் பல முறை வேள்வியைக் குறிக்கும் யாகம், யக்ஞம் என்ற சொற்கள் பயின்று வருகின்றன. இச்சொற்கள் எல்லா இடங்களிலும் புலால் அவி சொரிந்து வேட்டலைக் குறிக்கவில்லை என்பது பின்வருவனவற்றால் தெரியவரும்.

பிராமணர்கள் தினசரி செய்யவேண்டிய கடமைகளாக ஐந்து யக்ஞங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன – தேவ, ரிஷி, பித்ரு, நர, பூத யக்ஞங்கள். இவற்றுள் தேவ யக்ஞம் என்பது தெய்வங்களைக் குறித்துச் செய்யப்படும் அவி சொரிதலாகும். இது காலை மாலை இரு சந்தி நேரங்களிலும் செய்யவேண்டிய அக்னிஹோத்ரத்தைக் குறிக்கும். இதில் சிறிதளவு அரிசியும், நெய்யுமே அவி ஆகும். தினசரி இரு வேளையும் செய்யப்படுவதால் இதில் உயிர்க் கொலைக்கு வாய்ப்பு இல்லை.

ரிஷி யக்ஞம் என்பது வேதம் ஓதுதலையே குறிக்கும். பித்ரு யக்ஞம் என்பது பித்ருக்களுக்காக நீர் அஞ்சலி செய்வதைக் குறிக்கும். இம்மூன்றையும் சேர்த்துத் தற்காலத்தில் சுருக்கமாகப் பிரம்ம யக்ஞம் என்ற பெயரில் நீர் அஞ்சலியாகவே செய்கிறார்கள். நர யக்ஞம் என்பது விருந்தினருக்கு உணவளிப்பதைக் குறிக்கும். பூத யக்ஞம் என்பது காக்கை, நாய், பசு போன்ற நம்மை அண்டி வாழும் உயிர்களுக்கு உணவிடுதலாகும்.

மேற்கூறியவற்றால் யக்ஞம் என்ற சொல் புனிதமான கடமை என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதை அறியலாம்.

வேதத்தில் எல்லா இடங்களிலும் யக்ஞம் என்பது உள்முகமான ஆன்மீகச் சிந்தனை என்றே பொருள்படும் என்று தக்க மொழியியல் காரணங்களுடன் கபாலி ஸாஸ்திரி நிறுவி உள்ளார். புறத்தே செய்யப்படும் அவி சொரிதல் அதற்கு ஒரு அடையாளமே அன்றி அதுவே முடிந்த முடிவு அல்ல என்கிறார் அவர். இவ்வாறு வேதச் சொற்களைக் குறியீடுகளாகக் கொண்டு அவர் வேதத்தை மொழிபெயர்க்கும் போது வேதப் பகுதிகளிடையே காணப்படும் முரண்பாடு மறைகிறது. புராணங்களின் பொருத்தமுடைமை புலனாகிறது. ஸ்ரீ அரபிந்தோ கபாலி ஸாஸ்திரி வேதக் கலாசாரக் கழகத்தின் இணையதளம் காண்க.

SAKSIVC – http://www.vedah.com/org2/literature/veda_books/brahmana_books.html

வேள்விக்கு உரியது என்று சில மந்திரங்களைத் தனியாகப் பிரித்து எடுத்து யஜுர் வேதம் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருப்பதிலிருந்தே மற்ற மந்திரங்கள் வேள்வி அல்லாத வழிபாட்டு முறைகளுக்கு உரியன என்பது தெரிகிறது. சாம வேதம் இசையோடு பாடுவதற்கு உரியது என்று கண்டோம். தோத்திரங்களை இசையோடு பாடுவது ஒரு வகையான வழிபாட்டு முறையாக நிலவி வந்தது என்பது அறியப்படுகிறது. அதே மந்திரங்களை இசை இல்லாமல் ஓதினால் அது ரிக் வேதம் எனப்படுதலையும் அறிந்தோம். இவ்வாறு பாராயணமாக ஓதுதல் மற்றொரு வகை வழிபாட்டு முறை. இவை தவிர, தர்ப்பணம் என்று ஒரு முறை உள்ளது. தர்ப்பணம் என்ற சொல்லுக்குத் திருப்தி செய்வித்தல் என்பது பொருளாகும். எந்த தேவரைத் திருப்தி செய்ய விரும்புகிறோமோ, அவரது பெயரைச் சொல்லி நீர் அஞ்சலி செய்தல் இன்றும் உள்ள ஒரு முறை. மிக எளிமையான இதுவே ஆரம்ப கால வழிபாட்டு முறையாக இருந்திருக்க வேண்டும்.

இன்ன முறையில் தான் வழிபாடு செய்யவேண்டும் என வேதம் நிர்ணயிக்கவில்லை. வேத மந்திரங்களைப் பயன்படுத்தி பல வகையான சடங்குகள் செய்யும் முறையைப் பின்னர் வந்த பிராமணங்களும், கிருஹ்ய சூத்திரங்களும் ஏற்படுத்தின. இப்படிப்பட்ட பல முறைகளில் உயிர்க் கொலை வேள்வியும் ஒரு கால கட்டத்தில் தோன்றியது. அதை ஏற்றுக் கொண்ட வேதநெறி, பின்னர் உயிர்க் கொலைக்கு எதிரான கொள்கைகள் பரவிய காலத்தில் அது கைவிடப்பட்டதையும் ஏற்றுக் கொண்டது. ஜபம் (ஒரே மந்திரத்தைப் பல முறை வாய்விட்டோ, மனதிற்குள்ளோ கூறுதல்), அர்ச்சனை (இறைவனின் பல வேறு பெயர்களை நிரல்படக் கூறுதல்), அபிஷேகம் என்ற முறைகள் தோன்றிய காலத்தில் அவற்றுக்கும் வேத மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு இன்றும் நடைமுறையில் உள்ளன.

சைவமும் கொல்லா நெறியும்

முற்காலத்தில் வழிபடுவோரின் உணவுப் பழக்கத்தை ஒட்டியே படையல் நடைபெற்றதைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம். வள்ளுவருக்கு முந்திய நூல்களில் புலால் மறுப்பு பற்றிய குறிப்புகள் இல்லை. சங்க நூல்களில் அந்தணப் புலவர்களும் நிணம் ஒழுகும் புலால் உணவை ரசித்து வர்ணித்திருப்பதைக் காணும்போது அந்தணர்களில் சிலராவது புலால் உணவு உண்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் அது தவறாகக் கருதப்படாததும் தெரிகிறது. வேப்பமரத்தில் உறையும் தெய்வத்துக்கு பசுவின் உதிரத்தைப் படைத்ததாக அகநானூறு கூறுகிறது. [அகநானூறு 309] முருகனுக்கு ஆட்டுக்குட்டியை அறுத்துக் குருதியைத் தினையுடன் கலந்து குறவர் படைத்ததை நக்கீரர் குறிப்பிடுகிறார். [திருமுருகாற்றுப்படை 218] தன்னைத்தானே பலியிட்டுக் கொள்ளும் நவகண்டம் என்னும் முறை இருந்ததைப் பண்டைய சிற்பங்கள் காட்டுகின்றன.

ஆல்கெழு கடவுளுக்கு அளிக்கப்பட்ட படையல் பற்றித் தனியாகக் குறிக்கப் பெறாததால் எல்லாத் தெய்வங்களுக்கும் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது என ஊகிக்கலாம். புத்த சமண சமயக் கருத்துகள் பரவிய பின்னர் மக்களில் சிலர் புலால் மறுக்கத் தொடங்கினர். தெய்வங்களுக்கும் உயிர்க் கொலை தவிர்த்த படையலை மேற்கொண்டனர்.

விழா நாட்கள்

பழந் தமிழ்நாட்டில் பௌர்ணமி, அமாவாசை, அட்டமி தவிர பிற திதிகள் முக்கியத்துவம் பெறவில்லை. சில விழாக்கள் பௌர்ணமியை ஒட்டி நடத்தப் பட்டாலும் அவை நட்சத்திரத்தின் பெயரால் தான் வழங்கப்பட்டன. சித்திரை மாதத்துச் சித்திரை நட்சத்திரம், வைகாசி விசாகம், ஆனி உத்திரம், ஆடிப் பூரம், ஆவணி மூலம், ஐப்பசி ஓணம், கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்சத்திரம், மார்கழித் திருவாதிரை, தைப் பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் என்று இப்படி நட்சத்திரத்தை ஒட்டித் தான் தமிழர் சமய விழாக்கள் நடத்தப் பட்டன.

17


ஆவுடையார் கோவில்


பல வகையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்க, சில ஊர்களில் மட்டும் மாற்றங்களை விரைந்து ஏற்க மறுத்து பழமையைக் கட்டிக் காத்துக் கொண்டிருந்த கோயில்களும் உண்டு. அவற்றில் ஒன்று ஆவுடையார் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் மற்றக் கோவில்களிலிருந்து பல வகையில் மாறுபட்டது. இங்கு இறைவன் சதுர வடிவ மேடை ஒன்றில் ஆவாஹனம் செய்யப் பட்டிருக்கிறார். [வட்டமான பீடம் வழிபடப்படும் இடங்களில் சில - சீர்காழியில் வடக்குப் பிராகாரத்தில் கணநாதர், திருவிடைமருதூரில் ஆளுடையார் கோயில், திருவிடைக்கழியில் குரா மரத்தடியில் யோக சுப்பிரமணியர்] இதை ஒருவகைக் கந்து என்று கொள்ளலாம். முன்னர் இறைவன் குருந்த மரத்தில் உறைவதாகக் கருதப் பட்டுப் பிற்காலத்தில் கல் பீடத்தையும் சேர்த்து வணங்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஆவுடையார் கோயிலின் இறைவன் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பதால் இது சங்க காலத்தில் கூறப்பட்ட ஆலமர் கடவுளின் (தட்சிணாமூர்த்தியின்) கோவில் என்பதே பொருந்தும். சிவன் வழிபாட்டின் பழமையான வடிவம் இது என்று கொள்ளலாம். இங்கு நந்தி, சண்டேசர், கொடிமரம் போன்ற பிற்கால இணைப்புகள் இல்லை.

இக்கோயில் இன்றுள்ள அமைப்பில் நாயக்க மன்னர்களால் கட்டப் பட்டது. முதலில் இதை மணிவாசகர் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அவர் இதைச் சங்க கால முறைப்படி அமைத்திருக்கலாம் அல்லது மணிவாசகருக்கு முன்பே இந்த வழிபாட்டிடம் ஏற்பட்டிருந்து அவர் அதை விரிவு படுத்தி இருக்கலாம்.

ஆவுடையாரா , ஆளுடையாரா ?

பாணம் இல்லாமல் கீழ்ப்பகுதி மட்டும் இருப்பதால் இக்கோயில் ஆவுடையார் கோயில் என அழைக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், இதன் உண்மையான பெயர் ஆளுடையார் கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஆவுடை என்ற சொல் திருவாசகக் காலம் வரை எந்த இலக்கியத்திலும் தற்போது வழங்கும் பொருளில் காணப்படவில்லை. எனவே லிங்கத்தின் பீடம் வழிபடப்படுவதை ஒட்டி அக்கோயில் பெயரிடப்பட்டிருக்க முடியாது. மேலும் அது ஆவுடையார் வடிவத்திலும் இல்லை.

இக்கோயில் பற்றிய செப்புப் பட்டையங்களில் ஆளுடையார் கோயில் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஆவுடையார் கோயிலுக்கு வடக்கில் ராசாமடம் அருகில் சின்ன ஆளுடையார் கோயில் என்று ஒரு ஊர் உள்ளது என்றும் உ.வே.சா. தெரிவிக்கிறார். [உ.வே.சாமிநாத ஐயர் –திருத்தலங்கள் வரலாறு பாகம் 2] எனவே இது பெரிய ஆளுடையார் கோயிலாக இருந்திருக்க வேண்டும். (அதுவும் இன்று சின்ன ஆவுடையார்கோவில் என்றே வழங்கி வருகிறது. இங்கு வடக்குப் பிரகாரத்தில் ஒரு குருந்த மரம் உள்ளது. அதனடியில் மாணிக்க வாசகருக்கு சிவன் உபதேசிக்கும் கோலச் சிற்பம் ஒன்று வைத்து வழிபடப்பட்டது. அதைச் சுற்றி அமைக்கப்பட்ட கட்டிடம் இடிந்து விட்டதால் அதை முன் மண்டபத்தில் வைத்திருக்கிறார்கள். கோயிலும் பாழடைந்த நிலையில் உள்ளது. இங்கும் முதலில் மர வழிபாடே நடந்திருக்க வேண்டும். ஆனால் இன்று லிங்க வடிவத்திலேயே பெருமான் வழிபடப் பெறுகிறார்.)

திருவிடைமருதூரில் மகாலிங்க சுவாமி கோயிலின் தெற்கு வீதியில் ஒரு கோயில் உள்ளது. இங்கு மூலத்தானமாகத் தெற்குப் பார்த்த நிலையில் ஒரு பலிபீடம் மட்டும் உள்ளது. சிதிலமாக உள்ள இக்கோயில் இன்று ஆவுடையார் கோயில் என்று அழைக்கப்பட்டாலும் இதன் பழைய பெயர் ஆளுடையார் கோயில் என்று உ.வே. சா. கூறுகிறார். [உ.வே.சாமிநாத ஐயர் –திருத்தலங்கள் வரலாறு பாகம் 2]

மணிவாசகர் இறைவனை ஆளுடையான் என்ற பெயரால் பல இடங்களில் குறிப்பிட்டிருப்பதை ஒட்டி இப்பெயர் ஏற்பட்டிருக்கவேண்டும்.

படையல்

எல்லாக் கோவில்களிலும் தமிழ்நாட்டு அந்தணர் உண்ணும் பச்சரிசிச் சோறே படைக்கப்படும் வழக்கம் ஏற்பட்டிருக்க, ஆவுடையார் கோவிலில் இன்றும் புழுங்கல் அரிசிச் சோறும் கீரையுமே, அதுவும் ஆவி வடிவத்தில், தொலைவிலிருந்தபடியே இறைவனுக்குப் படைக்கப்படுகிறது.

பூசகர்

ஆவுடையார் கோவிலில் மூலஸ்தானத்தில் பூசை செய்பவர்கள் மற்ற சிவன் கோவில்களில் உள்ளது போல் ஆதிசைவ சிவாசாரியர்கள் அல்லர். அவர்கள் நம்பியார் என்ற பட்டம் கொண்ட சோழிய பிராமணர்கள். நம்பு செய்தல் என்ற சொல் அர்ச்சனை செய்தல் என்ற பொருளில் வழங்கியதாக அறியப்படுகிறது. [மதுரை காமராசர் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி- பக். 289] எனவே நம்பு செய்வாரே நம்பியாராக ஆகி இருக்கலாம். இங்கு பின்பற்றப்படும் வழிபாட்டு முறையும் மற்றக் கோவில்களிலிருந்து வேறுபட்டு மகுடாகம முறையில் வைதிக பூஜையாக நடத்தப்படுகிறது. விநாயகர், முருகன், நடராஜா ஆகிய சன்னிதிகளுக்குச் சிவாசாரியர் பூஜை செய்கிறார். இச்சன்னிதிகள் பிற்காலத்தில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இன்றும் நம்பியார்கள் பூசை முறைகளில் பழமையைக் காப்பாற்றி வருகின்றனர். இருப்பினும் ஆலய நிர்வாகிகளின் நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டு மூலஸ்தான பீடத்தின் மேல் குவளை பொருத்தப்படுவதை எந்தக் காலத்திலோ அனுமதித்து விட்டனர்.

விழாக்களுக்கான நாட்கள்

வடநாட்டினர் திதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தமிழ் நாட்டிலும் கேரளத்திலும் நட்சத்திரங்களுக்குத் தான் சிறப்பிடம். இன்றும் கிருஷ்ணன் பிறப்பு, ராமன் பிறப்பு ஆகிய நாட்கள் வடநாட்டில் திதியை ஒட்டியும், தென்னாட்டில் நட்சத்திரத்தை ஒட்டியும் கொண்டாடப்படுவதைக் காணலாம். (இவற்றைத் தமிழ் மண்ணின் பூர்விகக் குடிகளாகிய வைணவர்கள் நட்சத்திரத்தை ஒட்டியும் வடநாட்டுப் பூர்வீகம் உடைய ஸ்மார்த்தர்கள் திதியை ஒட்டியும் கொண்டாடுகின்றனர்.)

ஆவுடையார் கோவிலில் பிரதோஷம் நடத்தப்படுவதில்லை. இதற்குக் காரணம், திதியை ஒட்டி விழா நடத்தும் வட இந்திய வழக்கம் தமிழ்நாட்டில் பரவுவதற்கு முன் ஏற்பட்ட பழமையான கோவில் அது என்பது மட்டுமல்ல, பிற நாகரிகச் செல்வாக்குக்கு உட்பட மாட்டோம் என்று தீவிரமாகத் தங்கள் பழமையைக் காப்பாற்றுவதில் கருத்தாக இருந்த கடந்த கால ஆலய நிர்வாகிகளும், பூசகர்களும், பக்தர்களும் தான்.

தமிழ்நாட்டில் அனைத்துக் கோயில்களும் பரிணாம வளர்ச்சி நியதிக்கு உட்பட்டு மாற்றம் அடைந்து விட்டன. இக் கோவில் மட்டும் இத்தனை நூற்றாண்டுகளாகத் தன் தனித்தன்மையை ஓரளவு காப்பாற்றி சங்க கால வழிபாட்டு முறையின் ஒரே பிரதிநிதியாக விளங்குகிறது.

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள், பின்னைப் புதுமைக்கும பேர்த்துமப் பெற்றியன் என்பது இறைவனின் தன்மையாக இருப்பதால் வழிபாட்டு முறையிலும் பழமையும் புதுமையும் ஒருங்கே நிலவுவதைக் காண்கிறோம்.

(ஆவுடையார் கோயில் பற்றிப் பல தகவல்களைத் தந்தவர் அவ்வூர் வழிகாட்டி திரு ஜானகிராமன் அவர்கள்)

18


அந்தணர்களும் சைவமும்


தமிழ் நாட்டில் வாழும் அந்தணர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1 பூர்விகக் குடிகள் 2 குடியேறியோர் 3 புதிய அந்தணர்கள்

பூர்விகக் குடிகள் – தொல்காப்பியர் காலம்

தமிழ்நாட்டில் தொல்காப்பியர் காலத்தில் அந்தணர்கள் இருந்திருக்கிறார்கள். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்டுவித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய அறுவகைத் தொழில் கொண்ட பார்ப்பனப் பக்கத்தையும், நான்மறைகளையும் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [புறத்திணை இயல் 16, மரபியல் 71 , பாயிரம்.]

பூர்விகக் குடிகள் – சங்க காலம்

சங்க காலத்தில் அந்தணர்கள் மிக உயர்வாக மதிக்கப்பட்டனர் என்பதற்கான பல சான்றுகள் அக்கால இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. நின் முன்னோர் எல்லாம் பார்ப்பனர் நோவன செய்யார் என்று ஒரு புலவர் ஓர் அரசனிடம் கூறுவதாக உரைக்கிறது புறம் 43. புறம் 99இல் ஔவையார் அதியமான் நெடுமானஞ்சியின் முன்னோர் அமரர்ப் பேணி ஆவுதி அருத்திய (தேவர்களை மகிழ்விக்க வேள்வி செய்த) பெருமையைப் பேசுகிறார். புறம் 166, நான்கு வேதம், ஆறு ஆங்கம் ஓதி உணர்ந்த அந்தணர்கள் அறம் ஒன்று மட்டுமே புரிந்ததையும் 21 வகையான வேள்விகள் பற்றியும் குறிப்பிடுகிறது. புறம் 367 முத்தீ பற்றிக் குறிப்பிடுகிறது.

சங்க காலப் புலவர்களில் பலர் அந்தணர்கள். புறநானூற்றுப் புலவர்களில் மூவர் – தாமோதரனார், பெருஞ்சாத்தனார், பேரிசாத்தனார் – வடம வண்ணக்கண் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றனர். வடம என்ற சொல் வடநாட்டிலிருந்து வந்தவர் என்று குறிப்பதாகக் கொள்ளலாம். இவ்வாறு வடம என்ற அடைமொழி பெறாத அந்தணர்களும் இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் கபிலர், கவுணியன் விண்ணந்தாயன். அவர்கள் இந்த மண்ணின் பூர்விகக் குடிகளாக இருத்தல் வேண்டும்.

பூர்விகக் குடிகள் – களப்பிரர் காலம்

களப்பிரர் காலத்தில் வாழ்ந்த பூர்விகக் குடி அந்தணர்களில் ஒரு பிரிவினர் சோழியர் என அழைக்கப்பட்டனர் எனத் தெரிகிறது. ஒரு காலத்தில் இவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவி இருக்கவேண்டும். குறைந்தது, சோழநாடு முழுவதும் பரவி இருக்கவேண்டும். இவர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தனர். இன்று தில்லை தவிர்த்தப் பிற பகுதியில் இருந்த சோழியப் பிராமணர்கள் புதிதாக வந்தவர்களுடன் கலந்து விட்டனர்.

1 தீட்சிதர்கள்

நடராஜாவை முதல்வராகக் கொண்ட, தில்லை மூவாயிரவர் என்று முற்காலத்தில் சிறப்பிக்கப்பட்ட இவர்கள் இன்று எண்ணிக்கையில் சில நூறுகளாகக் குறைந்துவிட்ட போதிலும் பிற அந்தணர்களுடன் திருமண உறவு கொள்ளாமல் தங்கள் தனித் தன்மையை இன்றும் பாதுகாத்து வருகின்றனர். தில்லை நடராஜர் ஆலயம் இவர்களது பொதுச் சொத்தாகக் கருதப்படுகிறது.

மற்றத் தமிழ்நாட்டுக் கோயில்களில் பூசை செய்யும் சிவாசாரியர்களுக்கும் இவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. சிவாசாரியர்கள் வேதத்தின் ஒரு பகுதியை மட்டும் கற்று ஆகமத்தைப் பிரதானமாகக் கொண்டிருப்பது போல அல்லாமல், இவர்கள் வேதம் முழுமையும் கற்பவர்கள். அம்மையாரால் மயானத்தாடியாக வர்ணிக்கப்பட்ட ஆடற்பெருமானை அம்பலத்தில் ஏற்றி அவருக்கு வைதிக முறையிலான வழிபாட்டை ஏற்படுத்தியவர்கள் இவர்களே ஆதல் வேண்டும்.

தங்கள் சிகையைப் பக்கவாட்டில் முடிந்து கொள்ளும் இவர்களது முறை மற்றவர்களிடமிருந்து மாறுபட்டது. முன் குடுமிச் சோழியன், சோழியன் குடுமி சும்மா ஆடாது என்ற வழக்காறுகளில் குறிப்பிடப்படுபவர்களும் சோழநாட்டின் பூர்வீகக் குடிகளுமான சோழியர்களில் ஒரு பிரிவினராக இவர்கள் இருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம். ஆனால் இன்று அவர்கள் தங்களைச் சோழியர்கள் என்று சொல்லிக் கொள்ளாமல் தீட்சிதர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். தீட்சிதர் என்பது ஒரு குலப் பெயரல்ல. விரதம் பூண்டவர் என்று பொருள்படும் இப்பட்டம், யாகம் செய்தவர்களுக்கும் அவர்கள் பரம்பரையினருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்படுவது. மற்ற தீட்சிதர்களுக்கும் தில்லை தீட்சிதர்களுக்கும் தொடர்பு இல்லை. மிகுந்த எதிர்ப்புக்கிடையே எப்படியாவது நடராஜாவைத் தில்லை அம்பலத்தில் நிலை நாட்டுவது என்று விரதம் பூண்டிருப்பார்கள் என ஊகிக்கலாம். மற்றச் சோழியர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே இவர்கள் முன் குடுமியைப் பக்கவாட்டுக் குடுமியாக மாற்றிக் கொண்டிருக்கக் கூடும். [முன் குடுமி வழக்கம் கொண்ட கேரள நம்பூதிரிகளும் இந்தச் சோழியரே என்றும் ஆதி சங்கரர் அந்தக் குலத்தில் தோன்றியவர் என்றும் காஞ்சி மஹாஸ்வாமிகள் கூறுகிறார். தெய்வத்தின் குரல் பாகம் 5 சங்கரர் வரலாறு]

2 நம்பியார்கள்

சைவத்தைச் சார்ந்த 300 சோழிய அந்தணர்கள் ஆவுடையார்கோவிலை ஒட்டிய பகுதியில் வாழ்ந்தனர். தில்லை மூவாயிரவர் போல, இவர்கள் ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர் எனப்பட்டனர். இன்று அக்கோவிலில் பூசை செய்பவர்கள் மட்டும் நம்பியார் என்ற பட்டப் பெயர் கொண்டவர்கள். இவர்கள் இன்றும் தங்களைச் சோழியர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இவர்கள் முன்குடுமியைக் கைவிட்டு விட்டனர். ஆனால் ஆவுடையார் கோவிலில் உள்ள சிற்பங்கள் அங்கு முன்பு வாழ்ந்த பிராமணரும், பிறரும் முன்குடுமி கொண்டிருந்தார்கள் என்று காட்டுகின்றன.

3 தென்கலை வைணவர்கள்

பழந் தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு நம்பி என்ற பட்டம் பெருவழக்காக இருந்ததைப் பார்க்கிறோம். தென்கலை வைணவர்களும் சோழியர்களே. மற்ற இடங்களில் உள்ள தென்கலையார் இதை மறந்து விட்டபோதிலும் திருவெள்ளரையில் பூசை செய்யும் தென்கலை வைணவர்கள் இன்றும் தங்களைச் சோழியர்கள் எனக் கூறிக் கொள்கிறார்கள். அவர்களும் நம்பி என்ற பட்டப் பெயரைப் பெற்றிருந்தனர். ராமானுஜரின் உறவினர்களும் குருமார்களும் பலர் நம்பி என்ற பின்னொட்டு தாங்கியவர்கள்.

4 ஆனைக்கா அந்தணர்கள்

திருவானைக்காவிலும் வைதிகப் பிராமணர்களே பூஜை செய்கிறார்கள். (பிரதமசாகி, அய்யாநம்பி, திருணபட்டன் எனப் பல்வகைப் பட்டப் பெயர்களைக் கொண்டவர்கள்.) அங்கு பின்பற்றப்படும் பூஜை முறையும் வித்தியாசமாக உள்ளது. இவர்கள் இன்று வடமர்களுடன் கலந்து விட்டாலும் இவர்களது முன்னோர்கள் முற்காலத்தில் சோழியர்களாகவே இருந்திருத்தல் வேண்டும்.

5 வீழி அந்தணர்

ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர் போல் திருவீழிமிழலை அந்தணர் ஐநூற்றுவர் என்ற வழக்கும் உண்டு. இவர்களும் பண்டைச் சோழியர்களாகவே இருத்தல் கூடும். ஆனால் இன்று அங்கு சோழியர் என்று சொல்லிக் கொள்வோர் இல்லை.

6 நயினார் , பட்டர் , திருசுதந்திரர்

திருவாரூரில் பூசை செய்பவர்களில் சிலர் நயினார் என்றும், சிலர் பிரமராயர் என்றும் கூறப்படுகின்றனர். திருச்செந்தூரில் பூசை செய்யும் திருசுதந்திரர் என்பவர்களும் மதுரைக் கோவிலில் பூசை செய்யும் பட்டர்களும் இத்தகைய பழந் தமிழ்க் குடிகளே. பிற ஊர்க் கோவில்களில் பூசை செய்பவர்களும் கல்வெட்டுகளில் பட்டர் என்றே குறிக்கப் பெற்றுள்ளனர். ஆனால் இன்று மதுரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ளவர்கள் தவிர ஏனையோர் தங்களைச் சிவாசாரியர்கள் அல்து குருக்கள் என்றே அழைத்துக் கொள்கின்றனர்.

களப்பிரர் கால அந்தணர்கள்

சைவ சமய வரலாற்றில் அம்மையாருக்கும் சம்பந்தருக்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த அந்தணர்களின் பங்கு முக்கியமானது. தில்லை மூவாயிரவர், ஆவுடையார் கோவில் முந்நூற்றுவர், திருவீழிமிழலை ஐநூற்றுவர், திருவானைக்கா சோழியர்கள், செந்தூர் ஈராயிரவர் தவிர பிற அந்தணர்கள் அக்காலச் சமய மாற்றங்களுக்கு உடன்பட்டிருக்க மாட்டார்கள் என்பது சைவச் சோழியர்களின் எண்ணிக்கை சுட்டப்பட்டதிலிருந்து அறியலாம்.

சிவன் வேத தெய்வம் அல்ல என்பதாலும், வேத ருத்திரன் தவிர வேறு இரண்டு தோற்றுவாய்களிலிருந்து சைவம் உருவாக்கப்பட்டது என்பதாலும் வேள்விகளில் சிவனுக்கு அவிர்ப்பாகம் கொடுப்பதை அவர்கள் எதிர்த்திருக்கக் கூடும். இறுதியில் சைவ அந்தணர்கள் வெற்றி பெற்றனர். இதுவே தக்கன் கதை நமக்கு உணர்த்தும் வரலாற்றுச் செய்தியாகும். அம்மையாரால் குறிப்பிடப்படாத இப் புராண நிகழ்ச்சி, தேவாரத்தில் பெருமளவு குறிக்கப்படுவதிலிருந்து இது இடைப்பட்ட காலத்தில் நடந்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்கலாம்.

புதிய குடியேற்றம்

அம்மையார் காலத்துக்குப் பின் வந்து குடியேறியவர்களில் வடமர் என்ற குழு மட்டும் தமிழ்ப் பெயரைத் தாங்கி நிற்கிறது. மற்றவற்றின் பெயர்கள் வடமொழியில் உள்ளன. எண்ணிக்கையில் மிகுந்தவர்களும் வடமர்களே. பல்லவர் காலத்தில் வந்த பிரகசரணம் (தண்டந்தோட்டம் கல்வெட்டு), வாத்திமர், கேசியர், ராஜேந்திர சோழன் காலத்தில் குடியேற்றப்பட்ட அஷ்ட ஸஹஸ்ரம் ஆகிய குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் உரியதாக தலா பதினெட்டு கிராமங்கள் உண்டு. வடமர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கிராமங்கள் இல்லை. அவர்கள் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்தனர். குறிப்பாக, சோழநாட்டில் வாழ்ந்த வடமர் எண்ணிக்கை மிகுதி.

இவர்கள் வெவ்வேறு குழுக்களாகப் பல்வேறு காலங்களில் வடபுலத்திலிருந்து குடியேறியவர்களாக இருக்க வேண்டும். வடமருக்கு மட்டும் தமிழ்ப் பெயரும் மற்றவர்க்கு வடமொழிப் பெயரும் இருப்பதிலிருந்து பின்வருமாறு ஊகிக்கலாம். முதலில் வந்தவர்களுக்கு இங்குள்ள தமிழர்கள் தமிழில் வடமர் என்று பெயர் சூட்டினர். பின்னர் வந்தவர்களும் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்றாலும் அவர்கள் தங்களைச் சாராதவர்கள் என்று வேறுபடுத்திக் காட்டுவதற்காக வடமர்கள் தங்கள் மொழியில் அவர்களுக்குப் பெயரிட்டு இருக்கலாம். எல்லோரும் வருணத்தால் அந்தணர் எனினும் இக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று கலக்கவில்லை. பின்னர் வந்த ஒவ்வொரு குழுவுக்கும் 18, 18 கிராமங்களை ஒதுக்கிவிட்டு பெரும்பான்மையான இடங்களில் வடமர் வாழ்ந்தனர்.

சோழ நாட்டில் இவர்களுக்கென இறையிலி நிலங்கள் பெருமளவில் வழங்கப்பட்டிருப்பதை நோக்கும் போது, களப்பிரர் காலத்தில் சீரழியும் நிலையில் இருந்த சைவ சமயத்திற்குப் புத்துயிர் கொடுக்கவென, வலிமை குன்றிய நிலையில் இருந்தபோதும் சோழ அரசர்கள் இவர்களைப் பெருமளவில் குடியேற ஊக்குவித்திருக்கலாம் என்பது அறியப்படுகிறது.

புதிதாகக் குடியேறிய எல்லோருமே சைவத்துக்கு ஆதரவு அளித்தார்கள் எனக் கூற முடியவில்லை. சிலர் வைணவத்தின் பக்கம் சார்ந்தனர். அவர்களே வடகலை வைணவர்கள் எனப் பெயர் பெற்றிருக்கக் கூடும். இவர்கள் வைணவத்தைப் பின்பற்றிய போதிலும் தென்கலை வைணவர்களுடன் சமய நடைமுறைகளில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தனர். சமூக அளவிலும் அவர்கள் தென்கலையாருடன் உறவு கொள்வதைத் தவிர்த்தனர். வடகலை வைணவர்கள் இறந்தால் தீட்டுக் காக்கும் வழக்கம் சில வடமரிடையே இருந்ததாகக் கூறப்படுவதிலிருந்து [The people of India –Tamilnadu, vol. 3 – Page 1407– Author V.S.Deep Kumar, Editor K.S.Singh .] இவர்கள் வடமர்களே என்பதும் சமய வேற்றுமை காரணமாகப் பிற்காலத்தில் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர் என்பதும் தெரிகிறது. [தென்கலை வைணவர்கள் தமிழுக்கும் கோவில் வழிபாட்டுக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். வடகலையார் வைதிகச் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இவற்றிலிருந்து வடமர்களில் வைணவத்தைத் தழுவியோரே வடகலை வைணவராயினர் என்பது தெரிகிறது]

மராட்டியப் பகுதியிலிருந்து குடியேறியதாகக் கருதப்படும் வடமர்கள் தவிர விந்தியமலைக்கு அப்பாலிருந்தும் சில அந்தணர்கள் குடியேறி இருக்க வேண்டும் என்பதைப் பின் வரும் கதைகளிலிருந்து ஊகிக்கலாம்.

யாக்ஞவல்கியர் என்பவர் வைசம்பாயனரின் சீடர். சில காரணங்களால் சீடனைக் கோபித்த அவர் நான் கற்றுக் கொடுத்த வேதத்தைக் கக்கிவிட்டு வெளியேறு என்று உத்திரவிட்டார். அவர் அதைக் கக்கியதாகவும் மற்ற சீடர்கள் புறா உருக் கொண்டு அதை உண்டதாகவும் கூறுவர். அதுவே கிருஷ்ண யஜுர் வேதமாகும். பின்னர் யாக்ஞவல்கியர் சூரியனைக் குருவாகக் கொண்டு மீண்டும் வேதத்தைப் பயின்றார். அது சுக்ல யஜுர்வேதம் எனப்படுகிறது. தமிழ்நாட்டில் சுக்ல யஜுர் வேதக்காரர்கள் குறைந்த அளவில் உள்ளனர். அவர்கள் மத்தியான்னப் பறையர் என்றும் அழைக்கப்பட்டனர். வட இந்தியாவில் யஜுர் வேதக்காரர்களில் சுக்லப் பிரிவினர் மட்டுமே உண்டு.

அடுத்த கதை பெரிய புராணத்தில் உள்ள சோமாசி நாயனாரைப் பற்றியது. அவரைப் பற்றிச் சேக்கிழார், சிவனடியார் எத்தன்மையராக இருப்பினும் அவரை வணங்குபவர் என்று சுருக்கமாகக் கூறியுள்ளார்.

எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால்

அத் தன்மையர் தாம் நமை ஆள்பவர் என்று கொள்வார்

சித்தம் தெளியச் சிவன் அஞ்செழுத்து ஓதும் வாய்மை

நித்தம் நியமம் எனப் போற்றும் நெறியில் நின்றார்

இது தொடர்பாக செவிவழிச் செய்தி ஒன்று உண்டு. சோமாசியார் ஒரு வேள்வி செய்தார். அதற்குச் சிவபெருமான் நேரில் வந்து அவிர்ப்பாகம் பெறவேண்டுமென்று விரும்பினார். பல அந்தணர்கள் புடை சூழ வேள்வி நடந்து கொண்டிருக்கும்போது உணவு வேண்டி ஒரு சண்டாளன் வந்ததைக் கண்ட சோமாசியார், வித்தையிலாப்புலையனும்அஃதென்னும்வேதம் என்பதற்கிணங்க அவிர்ப்பாக உணவை அந்தச் சண்டாளனுக்கு அளித்தார். மற்ற அந்தணர்கள் அதை எதிர்த்தனர். சண்டாள வடிவில் இருந்த சிவன் அந்தணர்களைப் பறையர்களாக மாற்றிச் சபித்தார். அவர்கள் தவறை உணர்ந்து மன்னிக்க வேண்டிக் கொண்டதன் பேரில் சாபத்தின் கடுமையைக் குறைத்து, மத்தியானத்தில் மட்டும் நீங்கள் பறையர்களைப் போல் நடந்து கொள்வீர்களாக என்றார்.

இந்த இரண்டு கதைகளையும் சேர்த்துப் பார்க்கையில் கீழ்க்கண்டவாறு நடந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

விந்தியத்திற்கு வடக்கிலிருந்து இங்கே குடியேறி இருந்த பிராமணர்களைக் கொண்டு சோமாசியார் வேள்வி செய்திருக்கலாம். அவர்கள் ருத்திரனை யாகத் தலவனாகக் கூறும் ருக்வேத வழியைப்(ருக் 1.43.4, 4.3.1, 1.72.6) பின்பற்றாமல், ருத்திரனுக்குக் காயமுற்ற பிராணிகள், மீந்து போனது, தரையில் சிந்தியது இவை தான் கொடுக்கப்படவேண்டும் என்ற சதபத பிராமண [சதபத பிராமணம் 1.7.4.9 as quoted in The concept of Rudra Siva through the ages by Mahadev chakravarti] வழி வந்தவர்களாக இருக்கக் கூடும். ருத்திரனின் மறு பெயராகக் கருதப்பட்ட சிவனுக்குப் பிரதானமான இடம் கொடுத்ததை ஏற்றுக் கொள்ளாமல், தட்சன் கதையில் நடந்தது போல, எதிர்த்திருக்கலாம். அதன் காரணமாக அவர்களை உள்ளூர் அந்தணர்கள் புறம் தள்ளி இருக்கலாம்.

குடியேறியவர்களில் வடமர் என்பவர்கள் சைவ மறுமலர்ச்சியில் பெரிதும் உதவி புரிந்ததை முதலில் கண்டோம். ஆனால் அவர்கள் வேதம் ஓதிக் கொண்டும் வேள்விகள் செய்து கொண்டும் இருந்தார்களே அன்றிக் கோவில் பூசகர்கள் பணியில் ஒரு போதும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. கோவிலுடன் அவர்களது தொடர்பு அங்கு அத்தியயன பட்டர் பணி -மாலை வேளைகளில் வேத பாரயணம் செய்தல்- மட்டுமே.

புதிய அந்தணர்கள்

சோழர் காலத்தில் கோயில்களின் எண்ணிக்கை பெருகியது. எனவே கோயிலில் பணி புரிவதற்குரிய பூசகர்களின் தேவையும் மிகுந்தது. எனவே பிற சாதியினர் அந்தணராக்கப்பட்டிருப்பர் என்று நினைக்க இடமுண்டு. சிவன் கோவில் பரிசாரகர் பிராமணப் பிள்ளை எனச் சோழநாட்டில் அழைக்கப்படுவது இதற்கு வலுச்சேர்க்கிறது.

சோழர் காலக் கல்வெட்டுகளில் பூசகர்கள் சிவப் பிராமணர்கள் எனக் குறிக்கப் பெற்றுள்ளனர். அவர்கள் பெயர் பெரும்பாலும் நம்பி, பட்டர், பட்டஸ்ய என்னும் பின்னொட்டைக் கொண்டிருந்தது. இப்பெயரைக் குடியேறிய பிராமணர்கள் வைத்துக் கொள்வதில்லை. பட்டர், நம்பி என்பன பழமையான அந்தணரைக் குறிப்பன. வைணவப் பூசகர்கள் பட்டாசாரியர் என அழைக்கப்படுகின்றனர். பட்டஸ்ய என்பது பட்டருடைய என்று பொருள் தருவது. இது புதிதாக அந்தணராக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயராக இருக்கலாம்.

மயூரசன்மன் என்னும் கடம்ப மன்னன் காலத்தில் சில ஆந்திர பிராமணர்கள் பிராமணர் அல்லாதார் சிலரைப் பூணூல் அணிவித்து அந்தணராக்கி அவர்களுக்குப் புதிய பின்னோட்டுப் பெயர் அளித்ததாகக் கூறப்படுகிறது.[The peoples of India Vol – I page 169] அது போலத் தமிழகத்திலும் செய்யப்பட்டிருக்கலாம்.

திருவலஞ்சுழிக் கல்வெட்டு ஒன்றில் ஒரு சிவாசாரியரின் பெயர் திருவெண்காடன் செட்டி பெரியான் என்று கூறப்படுவது இதை வலுப்படுத்துகிறது. மேலும், அந்தணக் குடும்ப உறுப்பினர்கள் தங்களைக் குறிக்கும்போது சூத்திரம், கோத்திரம் சுட்டுவது இயல்பாகும். ஆனால் வலஞ்சுழியில் காணப்படும் கல்வெட்டுகள் சிலவற்றில் இந்நிலை இல்லை. [வலஞ்சுழிவாணர் – மு.நளினி, இரா.கலைக்கோவன்.] இவர்கள் முற்காலத்தில் அரசரின் சமாதி மீது அமைக்கப்பட்ட நடுகல் அல்லது லிங்கத்திற்குப் பூசை செய்ய நியமிக்கப் பட்டவர்களின் பரம்பரையினராக இருக்க வாய்ப்பு மிகுதியும் உண்டு.

பூர்விக இடத்தைப் பொறுத்து இன்றைய சிவாசாரியர்கள் திருவாலங்காடு, காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய மூன்று வகையினர். இந்த மூன்று இடங்களிலும் முதலாம் ராஜேந்திரன் காலத்தில் ஆந்திரத்திலிருந்து சிவாசாரியர்கள் வரவழைக்கப் பட்டுக் குடியமர்த்தப்பட்டனர் என்று சித்தாந்த சாராவளிக்கு உரை எழுதிய அனந்த சிவாசாரியர் கூறுகிறார். [புதுவை மண்ணில் ராசராசன் கண்ட கலைக்கோயில் – அரு. அப்பாசாமி பக்.147] தமிழ்நாட்டுச் சிவாசாரியர்கள் பண்பாட்டு வகையில் தமிழர்களாகவே இருப்பதால் அவர்கள் இந்த மூன்று இடங்களில் ஆந்திர ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்ட பிற சாதித் தமிழர்களாக இருக்கக் கூடும் என்று தெரிகிறது. புதிதாக அந்தணராக்கப்பட்டவர்கள் பழைய பட்டர்களுடன் திருமண உறவு கொண்டிருக்கலாம்.

முற்காலத்தில் சிவாசாரியர்கள் முழுமையாக வேதப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கக் கூடும். காலம் செல்லச் செல்ல, அரச ஆதரவும் மக்கள் கண்காணிப்பும் இன்மை காரணமாக, கோயில் பூசைக்குத் தேவையானதை மட்டும் கற்றால் போதும் என்ற எண்ணம் ஏற்பட்டு, தற்போது ருத்ரம், சமகம் ஆகிய பகுதிகளை மட்டும் கற்கின்றனர். பிராமணரின் பல வழக்கங்களைக் கடைப்பிடித்த போதிலும் இன்றும் சிவாசாரியர்கள் தங்களைப் பிராமணரிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவே விரும்புகின்றனர்.

தமிழ் நாட்டில் ஸம்ஸ்கிருதம் வைதிகச் சமயத்தவரால் புகுத்தப்பட்டது அல்ல.

தொல்காப்பியர் காலத்திலேயே வடசொற்கள் இருந்ததை அறிகிறோம். சங்க காலத்திலும் வேதம், வேதியர், ஸம்ஸ்கிருதம் யாவும் இருந்தன. வட சொல் பயன்பாடு மிகுதிப்பட்டது களப்பிரர் காலத்தில் தான். வடக்கிலிருந்து வந்த சமண சமயம் சூரசேனி என்னும் பிராகிருதத்தையும், சாக்கியம் பாலி என்னும் பிராகிருதத்தையும் கொணர்ந்தன. மகாயான புத்த மதமோ ஸம்ஸ்கிருதத்தையே முழுவதும் பயன்படுத்தியது.

பிராகிருதம் என்பது ஸம்ஸ்கிருதத்தின் கொச்சை வடிவம், அக்கால வட இந்தியாவின் பேச்சு மொழி. தென்னாட்டில் பிராகிருதம் வழக்கில் இல்லை. காளிதாசரின் நாடகங்கள், உயர்குடி ஆண் பாத்திரங்கள் ஸம்ஸ்கிருதத்தில் பேசுவதாகவும் பெண்களும் தாழ்குடியினரும் பிராகிருதத்தில் பேசுவதாகவும் அமைந்துள்ளன. சமண சாக்கிய இலக்கியங்கள் பிராகிருதத்தில் அமைந்துள்ளன.

வடக்கிலிருந்து வந்த சமண சாக்கியர் தமிழ் மக்களுடன் பிராகிருதம் மூலமாகத் தொடர்பு கொண்டிருக்க முடியாது. ஆயினும் தமிழ்நாட்டில் ஸம்ஸ்கிருதம் அறிந்தவர்கள் அந்தணர்களிலும் மற்றவர்களிலும் சிலர் இருந்திருக்க வேண்டும். எனவே தம் கொள்கைகளைப் பரப்பப் பிராகிருத மொழியை விட ஸம்ஸ்கிருதமே ஏற்ற ஊடகம் என உணர்ந்து அவர்கள் அதையே பயன்படுத்தி இருக்கக் கூடும்.

திருஞான சம்பந்தரின் பாடல்களை விட அப்பரின் பாடல்களில் தான் வடசொற்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மருள் நீக்கியார் என்ற தமிழ்ப் பெயர் தாங்கிய அப்பர், சமண சமயத்தில் சேர்ந்த பின் தருமசேனர் என்ற வடமொழிப் பெயர் பெற்றதையும், தருமபாலர், புத்தமித்திரர் போன்ற வடமொழிப் பெயர் தாங்கிய புறச் சமயத்தார் அனைவரும் பச்சைத் தமிழரே என்பதையும் கவனிக்க வேண்டும்

எனவே தான் மண்ணின் மொழியில் பாக்கள் இயற்றிய ஞானசம்பந்தர் தன்னைத் தமிழ் ஞானசம்பந்தன் என்று பெருமிதத்தோடு கூறிக் கொள்கிறார். திருமூலரும் என்னை நன்றாக இறைவன் படைத்தான் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு என்று கூறிப் பரவசப்படுகிறார்.

பின் ஆலயங்களில் ஸம்ஸ்கிருதம் புகுந்தது எப்படி?

சமணத்திலிருந்து புதிதாகச் சைவத்துக்கு வந்தவர்களைக் கவர்வதற்காக ஸம்ஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மதம் மாறியவரின் உற்சாகம் என்பதற்கிணங்கப் புதிதாக அந்தணராக்கப்பட்டவர்கள் பழைய அந்தணர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காக ஸம்ஸ்கிருதத்தை மிகுதியாகப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கலாம்.

அந்தணர்கள் சிவாலய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தருவதில்லையா ?

அந்தணர்களுக்கு வேதத்தைக் காப்பாற்றும் பொறுப்பு இருப்பதால் அவர்கள் வைதிகக் கர்மாக்களுக்கு முன்னுரிமை தருவது உண்மையே. எனினும் அவர்கள் கோவில் வழிபாட்டைப் புறக்கணிப்பதில்லை. சொல்லப்போனால், மற்றவர்கள் அங்காளம்மன், காளி, ஐயனார் முதலான தொல்பழம் தெய்வங்களையே குலதெய்வமாகக் கொண்டிருக்க, சிவனைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் அந்தணர்கள் மட்டுமே. ஆம். வைதீஸ்வரன்கோவிலில் உள்ள வைத்தியநாதப் பெருமானைச் சிவாசாரியர் அல்லாத அந்தணர்களில் பெரும்பாலானோர் குலதெய்வமாகக் கொண்டுள்ளனர்.

19


சைவமும் வைணவமும்


சைவர்கள் வைணவப் பெயர்களையும் வைத்துக் கொள்கிறார்கள். பெருமாள் கோவிலுக்கும் போய் வழிபடுகிறார்கள். திருமாலின் உருவச் சிலைகள் கொண்ட சிவன் கோவில்களும், தன் வளாகத்தில் விண்ணகரத்தைக் கொண்டுள்ள சிவாலயங்களும் பல உண்டு தமிழ்நாட்டில். சைவர்கள் வெளிநாட்டுச் சமயங்களிடத்தும் பெரு மதிப்புக் கொண்டு வேளாங்கண்ணி, நாகூர் முதலிய இடங்களுக்கும் சென்று வழிபாடு செய்கின்றனர்.

இந்த வழக்கங்கள் வைணவர்களிடம் காணப்படுவதில்லை. சிவலிங்கத்தைக் கொண்ட ஒரே பழமையான விண்ணகரம் திருக்குறுங்குடி என்று சொல்லப்படுகிறது. இது சைவ வைணவப் பிளவு ஏற்படுமுன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அண்மைக் காலத்தில் அந்தச் சிவலிங்கமும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது அனைவரும் அறிந்த செய்தி. செல்லும் வழியில் சிவாலயம் இருந்தால் தன் பார்வை அங்கு சென்று விடப் போகிறதே என்று மேல் துண்டினால் திரை அமைத்துக் கொண்டு நடக்கும் வைணவர்களும் உண்டு. ஆனால் சைவர்கள் வைணவத்தைப் பகைப்பதில்லை. சைவர்களுக்கு மட்டும் இந்தப் பரந்த மனப்பான்மை எங்கிருந்து வந்தது?

வைணவமும் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது தானே, அதில் ஏன் இவ்வளவு மாற்றங்கள் ஏற்படவில்லை? திருமாலின் குடும்பம் ஏன் பெருகவில்லை? இவ்விரு சமயங்களுக்கு இடையே நடைமுறைப் பழக்க வழக்கங்களில் பெருத்த வேறுபாடுகள் காணப்படுவது ஏன் ?

சங்க காலத்தில் சைவ வைணவப் பூசல் இல்லை. பரிபாடல் 4வது பாடலின் 66 -73 வரிகள் இதனைப் புலப்படுத்துகின்றன. ஆலமரத்தின் கீழேயும், கடப்ப மரத்திலும், ஆற்றிடைக்குறையிலும் குன்றிலும் பிற இடங்களிலும் வெவ்வேறு தெய்வமாகப் பகுத்துச் சொல்லப்படும் திருமாலே என்று விளிக்கிறார் புலவர். சங்க காலத்தில் ஆலமரம் சிவனுக்கும் கடப்ப மரம் முருகனுக்கும் உரியதாகக் கருதப்பட்டது என்பது முன்னர்க் கூறப்பட்டது.

அம்மையார் திருமாலைச் சிவனின் உடலின் ஒரு கூறனாக வர்ணிக்கிறார். கிட்டத்தட்ட அதே காலத்தவரான முதல் மூன்று ஆழ்வார்களும் சிவனையும் திருமாலையும் உயர்வு தாழ்வு கற்பிக்காது தான் பாடியுள்ளனர்.

பொய்கை ஆழ்வார்

அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி

உரையில் மறையுறையும் கோயில் வரைநீர்

கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி

உருவம் எரி கார்மேனி ஒன்று

– நாலாயிர திவ்விய பிரபந்தம் 2086

பூதத்தாழ்வார்

ஓருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம்,

ஈருருவன்என்பர்இருநிலத்தோர், ஓருருவம்

ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர்,

நீதியால் மண்காப்பார் நின்று.

– நாலாயிர திவ்விய பிரபந்தம் 2241

பேயாழ்வார்

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்

சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்

திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு

இரண்டுருவம் ஒன்றாய் இசைந்து

- நாலாயிர திவ்விய பிரபந்தம் 2344

வடமர்கள் குடியேறிய புதிதில் சைவ வைணவ பேதம் இல்லாததால், வடமர்களுடன் வந்த திருநீறு பூசும் வழக்கத்தை இங்கிருந்த எல்லா மக்களுமே ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்க இடமுண்டு. இவ்வழக்கம் நம்மாழ்வார் காலத்திலும் தொடர்ந்தது என்பதற்குக் கீழ்க்கண்ட அவரது பாடல்கள் எடுத்துக்காட்டு ஆகும்.

கரியமேனி மிசை வெளிய நீறு சிறிதேயிடும்

பெரியகோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை

உரியசொல்லா லிசைமாலைகள் ஏத்தியுள்ளப் பெற்றேற்கு

அரியதுண்டோ எனக்கின்று தொட்டு மினியென்றுமே

[நாலாயிர திவ்விய பிரபந்தம் 3172]

ஏறியபித்தினோ டெல்லாவுலகும் கண்ணன் படைப்பென்னும்

நீறு செவ்வே யிடக்காணில் நெடுமால் அடியார் என்றோடும்

நாறுதுழாய் மலர்காணில் நாரணன் கண்ணி மீதென்னும்

தேறியும் தேறாது மாயோன் திறத்தனளே யித்திருவே

[நாலாயிர திவ்விய பிரபந்தம் 3162]

திருநீறு தெய்வீகத்தின் அடையாளமாகக் கருதப்பட்டதே அன்றி சைவர்களுக்கு மட்டும் உரியதாகக் கருதப்படவில்லை. அதே போல வடக்கிலிருந்து வந்த கணபதியும் ஆரம்பத்தில் வைணவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இன்றும் சில வைணவக் கோயில்களில் விநாயகர் சிலை உண்டு. சைவத்துடன் ஏற்பட்ட பிணக்குக்குப் பிறகே அதைத் தும்பிக்கை ஆழ்வார், விஷ்வக்ஸேனர் என்று பெயர் மாற்றி, அதற்கேற்ப, அவர் திருமாலின் படைத் தலைவர் என்று ஒரு புதிய புராணக் கதையையும் ஏற்படுத்தி இருக்கக் கூடும்.

வடமர் குடியேற்றத்தை ஒட்டிய காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை விரும்பாத அந்தணர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர் என்பது முன்னர்க் கூறப்பட்டது.

வைணவர்கள் கடவுளைப் பெருமாள் என்றும், சைவர்கள் சுவாமி என்றும் அழைப்பதை நாம் அறிவோம். சுவாமி என்பது உடையார் என்ற தமிழ்ச் சொல்லின் வடமொழி வடிவம். கல்வெட்டுகளில் இறைவனைக் குறிக்க உடையார் என்ற சொல் மிகுதியும் ஆளப்பட்டுள்ளது. அரசனை உடையார் (செல்வமும் வலிமையும் உடையவர்) என்று மக்கள் அழைத்ததன் தொடர்ச்சியாக அரச சமாதியில் ஆவாஹனம் செய்யப்பட்ட சிவனையும் உடையார் என்றே அழைக்கத் தொடங்கினர். இவ்வாறு மனிதர்களின் சமாதிகளை வழிபாட்டிடமாக உயர்த்தியதையும் வைணவர்கள் விரும்பியிருக்க மாட்டார்கள். தங்கள் விண்ணகரங்களில் உறைவது சாதாரண மனிதன் அல்ல, மானிடர் யாவரினும் உயர்ந்தவர், பரமபுருஷன் என்ற பொருள்பட அவர்கள் தங்கள் கடவுளைப் பெரும் ஆள் என்று அழைத்திருக்கக் கூடும். அல்லது சிவனைப் பெரும் தேவன் என்று வழங்கியதற்கு இணங்கத் திருமாலைப் பெரும் ஆள் என்று பெயரிட்டிருக்கலாம். திருமால் மானிட அவதாரங்கள் எடுத்து மக்களுக்கு அருகாமையில் வாழ்ந்த எளிவந்த தன்மையும் இதில் உணர்த்தப்படுகிறது.

நாராயணனே வேதம் காட்டும் தெய்வம், அதுவே இந்த மண்ணின் பழமையான தெய்வமும் கூட என்று அவர்கள் வாதிட்டிருக்கக் கூடும். வடமர்களிலும் ஒரு சாரார், இவர்கள் கூற்றில் உள்ள நியாயத்தை உணர்ந்திருக்கக் கூடும். இவ்வாறு சமயக் கொள்கையில் ஒத்து இருந்தாலும் அவர்களது பூர்விக இருப்பிடத்தின் அடிப்படையில் அவர்கள் தென்கலை வைணவர் என்றும் வடகலை வைணவர் என்றும் இரு பிரிவாகப் பிரிந்தனர்.

சிவனை வணங்குபவர்கள் ஸ்மார்த்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். அதாவது, வேத நெறி சாராது, ஸ்மிருதி வழி நிற்பவர்கள் என்று பொருள். ஸ்மிருதிகள் பலவாகும், அவை காலத்துக்குக் காலம் மாறக் கூடியவை. வேதம் மாறாதது. இவ்வாறு காலத்துக்கேற்ற மாற்றங்களை ஏற்றுக் கொண்டவர்களை, மாற்றம் விரும்பாத வைணவர்கள் ஆரம்பத்தில் இகழாமல் சகித்துக் கொண்டிருப்பர். மாற்றுக் கருத்துகளைச் சகித்துக் கொள்ளும் வேதப்பண்பு அவர்களிடம் நிச்சயமாக இருந்திருக்கும்.

புதிதாக எழுச்சி பெற்ற சைவத்துக்கு அரச ஆதரவும் மக்கள் கூட்டமும் மிகுதியாக இருந்தது. இரண்டாம் குலோத்துங்கன் தவிர பிற அரசர்கள் வைணவத்தைப் பகைக்கவில்லை. ஆயினும் சைவத்துக்குக் கொடுக்கப்பட்ட மிகுதியான சலுகைகளைப் பார்த்த வைணவர்களுக்குத் தங்கள் கலாசாரம் அழிந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாகவே அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு தங்கள் வழிபாட்டு முறைகளைத் தீவிரமாகப் பின்பற்றத் தொடங்கி இருக்க வேண்டும்.

அரசு ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குச் சிறப்புச் சலுகைகளை அளித்தால் புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் தங்கள் கலாசாரம் அழிந்து விடுமோ என்ற அச்சத்தில் அதைக் காப்பாற்றுவதில் தீவிரமாக ஈடுபடுவதை இன்றும் காண்கிறோம்.

அரச ஆதரவு இழந்த வைணவம் தன்னைத் தனிச் சமயமாக மாற்றிக் கொள்ள முனைந்தது. இதன் விளைவாக 10ஆம் நூற்றாண்டில் நாத முனிகள் தோன்றி தேவாரத்துக்கு இணையான வைணவ நூலாக நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்து வைணவக் கோயில்களில் ஓதுமாறு ஏற்படுத்தினார். பின்னர் வந்த ராமானுஜர் காலத்தில் வைணவம் சைவத்திலிருந்து முற்றிலும் பிரிந்து வேறாகியது. அவர் திருமண் அணியும் வழக்கத்தை ஏற்படுத்தி வைணவர்களுக்கு ஓர் அடையாளம் ஏற்படுத்தினார்.

வைணவத்தைத் தாழ்த்திக் காட்டும் போக்கு தேவாரக் காலத்திற்கு முன்பே துவங்கிவிட்டது. திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் ஒவ்வொரு பதிகத்திலும் மாலுக்கும் அயனுக்கும் அளப்பரியன் சிவன் என்பதை வலியுறுத்தினர். பின்னர் திருமாலின் ஒவ்வொரு அவதாரமும் சிவனுடைய அணிகலன்களாக மாறியதாகக் கதைகள் புனையப்பட்டன. ஆமை உருவெடுத்த திருமாலை விநாயகர் பிடித்து வந்து அதன் ஓட்டைச் சிவன் அணியத் தந்தார், மீன் உருவெடுத்துக் கடலைக் கலக்கியவரை பைரவர் பிடித்துச் சிவன் காலடியில் போட்டார், முருகன் கொணர்ந்து தந்த வராகத்தின் பல்லைச் சிவன் அணிந்தார், நரசிங்கத்தை அடக்கச் சிவன் சரபேசுவரராக மாறினார், வாமனரின் செருக்கு அடக்கக் கங்காள மூர்த்தியாக உருவெடுத்தார் முதலிய கதைகள் தோற்றுவிக்கப் பட்டன.

சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் கடும் பூசல்கள் ஏற்பட்டன. இது தமிழ் நாட்டில் மட்டும் தான் நடை பெற்றது என்பதைக் கவனிக்கவும். இதன் முதல் அடையாளம், தில்லைக் கோயில் வளாகத்தில், நடராஜா- கோவிந்த ராஜா தொடர்பாக ஏற்பட்ட பூசல் தான். தீவிர சைவனாக இருந்த இரண்டாம் குலோத்துங்கன் ராமானுஜரின் தீவிர வைணவத்தை ஒடுக்கத் தீர்மானித்தான். அவன் இருந்த வரை ராமானுஜர் தமிழ்நாட்டுக்குள் வர முடியவில்லை.

ஒரு சாராரது கோயிலை மற்றவர் கைப்பற்றுதல், மாற்றுச் சமயத்தை இழிவு படுத்தும் கதைகளை உலவ விடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடை பெற்றுள்ளன. பிற்காலத்தில் சில அரசர்களும் ஞானிகளும் இவர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்த முயன்றனர். அவர்கள் உமையம்மையின் சகோதரன் திருமால் என்ற கருத்தைப் பரப்பி இருக்க வேண்டும். ஆனாலும் வைணவர்கள் சொந்த மண்ணில் அன்னியமாக்கப்பட்ட உணர்வுடன் தங்கள் தனித் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதில் உறுதியாகவே நின்றனர்.

மதுரையில் மீனாட்சி திருமணத்தைக் காண அழகர் வரவழைக்கப்படுகிறார். ஆனால் அவர் வைகையோடு திரும்பி விடுகிறார். ஒற்றுமை ஏற்படவேண்டும் என்ற அரச விருப்பத்தை அனுசரித்து திருமாலின் திருவுருவத்தை அழகர் மலையிலிருந்து தூக்கி வந்திருப்பர். வழி எங்கும் இம்முயற்சிக்கு எதிர்ப்பு வலுக்கவே அவர்கள் அதனைப் பாதியில் கைவிட்டிருப்பர் என்று எண்ண இடம் உண்டு.

இறைவன் எல்லாமாக வியாபித்து நிற்பதைக் கூறும் ருத்ரத்தைச் சைவம் தன் முக்கிய வழிபாட்டு மந்திரமாக ஏற்றுக் கொண்டுவிட்டது. வேதத்தின் பிற பகுதிகள் இதன் விரிவாக்கமே. வேறு எந்த வேத மந்திரத்தைப் பார்த்தாலும் இந்தக் கண்ணோட்டத்துடன் பார்த்தால் தான் வேதத்தின் உண்மைப் பொருள் புரியும். சைவர்கள் ஏற்றுக் கொண்டு விட்ட அதே காரணத்தால் வைணவர்கள் அதைத் தங்கள் கோயில்களில் ஓதுவதில்லை.

சமகம் என்ற தோத்திரம் ருத்திரனையோ சிவனையோ போற்றாமல் அக்கினியையும் விஷ்ணுவையும் போற்றுவதாக இருந்த போதிலும் அதை முதலில் சைவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்ட காரணத்தால் வைணவர்கள் அதையும் தங்கள் கோயிலிலிருந்து புறம் தள்ளி விட்டனர். வைணவர்கள் வழிபாட்டுக்குப் பயன் படுத்தும் புருஷ சூக்தம் முதலானவற்றைச் சிவன் கோயில்களில் ஓதத் தவறுவதில்லை. இப்படி வேதத்தின் ஒரு பகுதியை மட்டும் தனக்கென ஒதுக்கிக் கொண்டதால் வைணவம் குறுகின எல்லைக்கு உட்பட்டதாக ஆயிற்று.

ஒவ்வொரு சமூகத்துக்கும் சில தனித் தன்மைகள் உண்டு. அவற்றைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் சில சமூகங்கள் தங்களைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் எழுப்பிக் கொள்கின்றன. இவ்வாறு தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளும் சமூகங்கள் தேய்வுறுவதும் தன் அடிப்படையை விட்டுக் கொடுக்காமல் பிற சமூகங்களின் வழக்கங்களையும் ஏற்றுக் கொள்ளும் கூட்டங்கள் வலிமையுறுவதும் வரலாறு கற்றுத் தரும் பாடம்.

இந்தியாவிற்கு முதலில் கிருத்துவ சமயப் பிரசாரம் செய்ய வந்த ஐரோப்பியப் பாதிரிமார்கள் இங்குள்ள மக்களைப் போலவே கச்சம் வைத்து வேட்டி கட்டிக் கொண்டு குடுமி, பூணூல் இவற்றுடன் தோன்றினர். அதனால் கவரப்பட்ட மக்கள் சிலர் அங்கு போய்ச் சேர்ந்தனர். அவர்கள் தங்கள் பழைய கடவுளர்களுடன் ஏசுவையும் போற்றினர். கிருத்துவம் வளர்ந்தது. ஏசுவை வழிபடு தெய்வமாகக் கொண்டு தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இன்றும் இருக்கின்றனர்.

பிற்காலக் கிருத்துவர்களிடையே இந்தப் பொதுமைப் போக்கு மறைந்தது. அவர்கள் தங்களுக்கு மேல்நாட்டுக் கிருத்தவப் பெயர்களைச் சூட்டிக் கொண்டு தங்களைத் தனியே இனம் காட்டிக் கொண்டனர். உடையிலும் வழிபாட்டு முறைகளிலும் முழுமையாக மேல் நாட்டு முறைகளையே பின் பற்றினர். கிருத்துவர் ஆகிவிட்டால் இந்துக் கடவுள்களை வணங்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தியாவில் கிருத்துவத்தின் வளர்ச்சி வேகம் குறைந்தது.

தென்னிந்தியக் கடற்கரையில் வாணிகத்துக்காக வந்த ஆரம்ப கால அராபிய இஸ்லாமியர்கள் இந்துக்களுடன் சமய வேறுபாடு கருதாது நெருங்கிப் பழகினர். இந்துக்கள் அவர்களைத் தங்கள் மருமக்கள் ஆக்கிக் கொண்டனர். மேற்குக் கடற்கரையில் வசிக்கும் இஸ்லாமியர் மாப்பிள்ளைமார் எனப்படுவதும், கடலோரத் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் திருமணத்துக்குப் பின் தங்கள் மனைவியின் பிறந்த வீட்டில் வசிக்கும் வழக்கமும் இதற்குச் சான்றுகளாகும். பிற்கால இஸ்லாமியர் தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளத் தொடங்கினர். இன்று அவர்கள் அராபியக் கலாசாரத்தை நீர்த்துப் போகாமல் போற்றி வருகின்றனர். இஸ்லாம் மேற்கொண்டு பரவாமல் தடைபட்டது.

அதே போல வைணவமும் தன்னைத் தனியே அடையாளம் காட்டிக் கொள்ள முனைந்ததால் அதன் வளர்ச்சி தடைப்பட்டது. நல்லன எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பண்பினைப் பெற்றிருந்த சைவம் வளர்ந்தது.

20


வருங்காலச் சைவம்


சைவத்தை எதிர்நோக்கி உள்ள பிரச்னைகளை ஆராய்வோம்.

1. திருமுறைகளுக்கு இடம்

வைணவக் கோயில்களில் பட்டர்கள் வேத மந்திரங்களை மட்டுமன்றித் தமிழில் உள்ள திவ்வியப் பிரபந்தப் பாடல்களையும் வழிபாட்டுக்குப் பயன்படுத்துகின்றனர். பூசகர் அல்லாத பிற வைணவ அந்தணர்கள் சாற்றுமுறை என்ற பெயரில் கோஷ்டியாக அமர்ந்து அனைத்துத் திவ்வியப் பிரபந்தப் பாடல்களையும் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், சிவன் கோவில்களில் தேவாரத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. ஒரு சில பெரிய கோவில்களில் ஓதுவார்கள் இருந்தாலும், பூஜை முடிவில் தேவாரத்துக்கு என்று நேரம் ஒதுக்கி ஓரிரு பாடல்களை மட்டும் ஓதச் செய்கின்றனர். ஓதுவார் தனியே அமர்ந்து பாடும்போது அந்தணர்களோ, பிறரோ அவருடன் சேர்ந்து பாடுவதில்லை.

சிவன் கோவில்கள் அரச ஆதரவில் வளர்ந்தன. ஓதுவார்களுக்கு அரசர்கள் மானியம் அளித்து ஆதரித்தனர். வைணவக் கோவில்களில் பிரபந்தம் ஓதுதல் ஒரு மக்கள் இயக்கமாக நடைபெற்றது. மன்னராட்சி முறை வீழ்ச்சி அடைந்தபின் முன்னது நலிந்தது. பின்னது தொடர்ந்து நடைபெறுகிறது.

சிவாலயங்களில் தமிழில் இருந்த வழிபாட்டு முறைகளை அகற்றிவிட்டு அந்த இடத்தை ஸம்ஸ்கிருதம் ஆக்கிரமித்துக் கொண்டதாகச் சைவர்கள் கருதுவதும் சமண பௌத்த சமயங்களை வேரறச் செய்து மூவர் முதலிகளும் மாணிக்கவாசகரும் தமிழ் பாடி வளர்த்த சைவத்தில் இன்று திருமுறைகளுக்கு உரிய இடமில்லையே என்று வருந்துவதும் நியாயமே.

தீர்வு- ஒவ்வொரு பூஜை முடிவிலும் திராவிட வேதம் ஓதுவதற்கென்று ஒரு வாய்ப்பு இருக்கிறது. இந்த உரிமையை விட்டுக் கொடுக்காமல் அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் ஒவ்வொரு கோயிலிலும் திருமுறைக் குழுக்கள் அமைத்துக் கொண்டு தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தேவாரம், திருவாசகம் முதலியவற்றை ஓதுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சம்பந்தர் காட்டித் தந்த எளிய வழி வேதம் பயில வாய்ப்பு இல்லாதவருக்கு மட்டுமே என்று கருதாமல் அந்தணர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும். ராஜராஜ சோழனின் லால்குடிக் கல்வெட்டு திருப்பதியம் விண்ணப்பித்தவர்களில் அந்தணரும் இருந்ததைக் கூறுகிறது. [கபிலக்கல் – குடவாயில் பாலசுப்பிரமணியன் பக் 96]

2. வழிபாட்டு மொழி

வழிபாடு தமிழ் மொழியில் தான் செய்யப்பட வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். வெறும் தாய்மொழிப் பற்றினால் மட்டும் இந்தக் கோரிக்கை எழுவதாகத் தெரியவில்லை. ஸம்ஸ்கிருத மந்திரங்களின் ஒலி காதிற்கு இனிமையாகவும், மனத்தைக் கவர்வதாகவும் உள்ளது என்பதைச் சமய நம்பிக்கைகளைக் கடந்தவரும், ஸம்ஸ்கிருதம் பயிலாதவரும் கூட ஒப்புக் கொள்கிறார்கள். ஆனாலும், அர்ச்சனை செய்யப்படும்போது பூசகருடன் சேர்ந்து அடியார்களும், சொல்லப்படும் மந்திரங்களைப் பொருள் அறிந்து, கூடச் சொல்லும் வாய்ப்புக் கிட்டினால் வழிபாடு மேலும் பயனளிப்பதாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஸம்ஸ்கிருதம் மட்டுமே இறைவனுக்கு உகப்பானது என்று சிலர் கூறுவதை ஏற்கத் தேவை இல்லை.

தீர்வு- அர்ச்சனைக்குப் பயன்படுபவை வேத மந்திரங்கள் அல்ல. அதைத் தமிழில் மொழி பெயர்த்துச் சொல்வதால் எந்தக் குறையும் வந்து விடப் போவதில்லை. மேலும் இந்த மொழிபெயர்ப்புகளை விட இனிமையான போற்றிகள் அருளாளர்களால் இயற்றப்பட்ட தேவார, திருவாசகங்களில் காணப்படுகின்றன. அவற்றைக் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

3 . பூசகர் தேவையா ?

கடவுளுக்கும் நமக்கும் நடுவில் ஒரு இடைத் தரகர் போல ஒரு பூசகர் எதற்கு, வட இந்தியக் கோவில்களில் உள்ளது போல நாமே அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டால் என்ன என்று சிலர் கருதுகிறார்கள். முற்காலத் தமிழகத்தில் அத்தகைய நிலை இருந்தது என்பதைப் பார்த்தோம். ஆனால் தற்போது வீட்டுப் பூசை, பொதுப் பூசை என இரண்டு வகைகள் உள்ளன. வீட்டில் இறைவனின் படமோ, விக்கிரகமோ, லிங்கமோ வைத்திருந்து அவரவர் விருப்பம் போலப் பூசை செய்யலாம். சமூகப் பூசை என்று வரும்போது ஒரு குரு இருந்து வழிகாட்டும் முறை எல்லாச் சமயங்களிலும் உண்டு. தமிழ்நாட்டுப் பூசகர்கள் அரசருக்கும் குருவாக இருந்து ஆன்மிக வழிகாட்டியவர்கள். அதனால் குருக்கள் என்ற பெயரால் சிறப்பிக்கப் பெற்றவர்கள். அந்த அமைப்பைக் குலைக்காமல் அதிலுள்ள குறைகளைக் களைவதே சமூக நன்மைக்கு ஏற்றது. புதிதாக ஏற்படுத்தும் கோவில்களில் அடியார்களே பூசை செய்யும் முறையைச் சோதனை முறையில் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம்.

இந்த மூன்று பிரச்னைகளுக்கும் சேர்த்து ஒரு தீர்வு காணலாம். தற்போது கோவில்களில் விளக்கு பூசை என்பது பரவலாகச் செய்யப்படுகிறது. பெண்களே பங்கு கொள்கிறார்கள். பெண் தெய்வமே வணங்கப்படுகிறது. விளக்குச் சுடரில் சோதி வடிவான சிவனை அதிட்டானித்து சிவாசாரியர் வழிகாட்டுதலின் பேரில் ஆண்களும் கலந்துகொண்டு தேவார, திருவாசகங்களில் உள்ள தமிழ்ப் போற்றிகளைச் சொல்லி வழிபடக் கூடிய முறையில் இதைச் சிறிது மாற்றி அமைக்கலாம். இம்முறை வலுப்பெற்றால் மூலத்தானத்திலும் தமிழ் வழிபாடு வழக்கமாகிவிடும்.

4. தெய்வ வடிவங்களின் அழகு

லிங்கத் திருமேனிகளில் பின்னம் ஏற்பட்டால் அவை வழிபாட்டிலிருந்து நீக்கப் பெறுவதில்லை. மாடு முட்டியதால் ஏற்பட்டது, அடியார் கோபம் கொண்டு அடித்ததால் ஏற்பட்டது என்று ஒரு புராணக் கதையை ஏற்படுத்தி அதை நியாயப்படுத்துவது வழக்கமாக உள்ளது. ஆனால் பிற உருவச் சிலைகளில் சிறிதளவு பின்னம் ஏற்பட்டாலும் அவை வழிபாட்டுக்கு உரியதல்லாததாகக் கருதப்பட்டு நந்தவனத்தில் வைக்கப்படுகின்றன. எனவே உருவச் சிலைகளில் அழகே முக்கியம். சிறு குறை ஏற்பட்டாலும் அழகு முழுமை பெறுவதில்லை என்பதால் இப்படிச் செய்கிறார்கள். பெரும்பாலான கோயில்களின் புகழுக்குக் காரணம் ஆங்குள்ள சிலைகளின் அழகு தான். பட்டீஸ்வரம் துர்க்கை, வேதாரண்யம் துர்க்கை, எண்கண் முருகன், எட்டுக்குடி முருகன், ஆலங்குடி தக்ஷிணாமூர்த்தி என்று ஆயிரக்கணக்கான சிலைகள் தங்கள் அழகினால் மக்களை ஈர்த்து சக்தி உள்ள தெய்வமாகப் போற்றப்படுகின்றன. ஒரு திறமையான சிற்பியால் சிற்ப சாத்திரப்படி அமைக்கப்பட்ட சிலையில் தெய்வம் தானே குடியேறுகிறது என்கிறார் கணபதி ஸ்தபதி. (Who created God? என்ற நூலில்) அத்தகைய சிலையை அடிக்கடி உற்று நோக்குவதன் மூலம், நினைக்கும்போது அவ்வடிவம் மனக்கண் முன் தோன்றும் அளவுக்கு உள்ளத்தில் தேக்கி வைத்துக் கொண்டால் அதுவே வழிபாட்டின் உயர்நிலை எனப்படும். ஆனால் இன்று எந்த வடிவத்திலும் சிற்பியின் கைவண்ணத்தையும் தெய்விகத்தையும் காண முடிவதில்லை. ஆடைகள் மலர்கள் கொண்டு பூசகர்கள் செய்யும் அலங்காரம் அதை மறைத்து விடுகிறது. சமயத்தைக் கவர்ச்சிகரமாக்கி மக்களைக் கோவிலுக்கு ஈர்க்க இத்தகைய அலங்காரங்கள் உதவுகின்றன என்றாலும் தெய்வ வடிவத்தில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே ஒரு நாளின் குறிப்பிட்ட ஒரு வேளையிலாவது விரும்பும் அடியார்கள் இறைவனின் சிலையை இயற்கையான அமைப்பில் கண்டு வழிபட வாய்ப்பு அளிக்கப்படவேண்டும்.

5. ஆலய நிர்வாகம்

மற்றச் சமயங்களின் அறநிலையத் துறைகள் அந்தந்த சமயத் தலைவர் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்க, இந்து சமயத் துறை மட்டும் அரசியல்வாதிகள் கையில் உள்ளது. சில ஆட்சியாளர்கள் நேர்மையற்றவர்களாகவும், சிலர் நாத்திகர்களாகவும் இருப்பதால் கோயில் சொத்துகள் தவறான வழியில் செலவழிக்கப்படும் அபாயம் உள்ளது. சமயத்தின் உண்மையான நோக்கமும் நிறைவேற்றப்படாமல் போகின்றது. எனவே அடியார்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர் குழுக்கள் அவசியமாகின்றன.

இறை நம்பிக்கையும், ஆலய வழிபாட்டு முறை பற்றிய அறிவும், சிவன் சொத்து குல நாசம் என்று கருதும் நேர்மையும் கொண்டவர்களே அறங்காவலர்களாக ஆண்டு தோறும் குடவோலை முறை மூலம் அந்தந்த ஆலயத்திற்குத் தவறாமல் வருகை தரும் சிவனடியார்களின் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒரு ஆண்டு பணி புரிந்தோர் அடுத்த மூன்று ஆண்டுகள் பதவி வகிக்கத் தடை ஏற்படுத்த வேண்டும். இதில் அரசியல், சாதி, அந்தஸ்து, அரசாங்கக் குறுக்கீடுகள் கலத்தல் கூடாது.

உண்மையான சமய நோக்கத்திற்கு மாறாகச் செயல் புரியும் பணியாளர்களை ஆலயப் பணியிலிருந்து நீக்கி வேறு ஒருவரை நியமிக்கும் உரிமையை அறங்காவல் குழு பெற்றிருக்க வேண்டும்.

6. அர்ச்சகர்களின் பரம்பரை உரிமை

கோயில் பூசகர் பணி பரம்பரை உரிமையாக இருப்பதால் சமய நூல்களை முழுமையாகக் கற்காதவரும் அறம் பிறழ்ந்தவரும் அர்ச்சகர் ஆக வாய்ப்பு ஏற்படுகிறது. உண்மையான ஆன்மிக ஈடுபாடு இல்லாமல் இதை மற்றத் தொழில் போல் பொருளீட்டும் வழியாகக் கருதுவோரும் உள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுகிறது. இதில் உண்மை உண்டு.

இதன் மறு பக்கத்தையும் காண்போம். நகரக் கோயில்களிலும், புகழ்பெற்ற தலங்களிலும் பூசகர்கள் மிக அதிகமான வருமானம் பெறும் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் ஆயிரக் கணக்கான கிராமக் கோவில்களில் பரம்பரையாகப் பூசை செய்யும் அர்ச்சகர்கள் மிகக் குறைந்த வருவாயில் காலம் தள்ளுகின்றனர். அப்படி இருந்தும் எந்த விதமான விடுமுறையும் இல்லாது புயல் வெள்ளம் ஆகிய நிலைகளில் கூட பூசையை விடாது நடத்தி வருவதாலும் தம் நல்லொழுக்கத்தினாலும் மக்களால் மதிக்கப்படும் அர்ச்சகர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். கடுமையான சோதனைக் காலங்களிலும் தங்கள் விடாத பற்றுறுதியின் மூலம் சைவத்தைக் கட்டிக் காத்த பரம்பரையில் வந்த அவர்களுக்கு சமய நாட்டம் இயல்பாகவே அமைகிறது. எனினும், உண்மையான ஆன்மிக நாட்டம் கொண்ட பிற சாதியினர் அர்ச்சகர் ஆவதற்கும் தடை இருக்கக் கூடாது. அத்தகையவர்களை இளம் வயதிலேயே முறையான சமயக் கல்வி அளித்துப் பூசகர் ஆக்குவது தவறில்லை. முற்காலத்தில் அத்தகைய பிற சாதியினர் அந்தணர் ஆக்கப்பட்ட செய்தியை முன்பு அறிந்தோம்.

7. வளர்ச்சியும் சமயக் கல்வியும்

நம் நாடு பொருளாதாரத்தில் வளர்ந்து வளம் பெற்றுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் ஆலயங்களுக்காக மக்கள் செலவிடும் தொகை அதிகரித்து வருகிறது. கோயில் பணிகளுக்கு நன்கொடை அளித்தல், தங்க ரதம் இழுத்தல், அபிஷேகம் செய்தல், கிரிவலம் முதலிய செயல்களில் பல செல்வச் செழிப்பை விளம்பரம் செய்வதாகவே உள்ளன.

இறைவன் எங்கேயோ இருப்பவனல்ல, இங்கு உங்கள் ஊரிலேயே கோயில் கொண்டுள்ளான், வந்து வணங்குங்கள் என்று சொல்லும் முகத்தான், முற்கால அருளாளர்கள் சிரமப்பட்டு ஊர் ஊராக நடந்து சென்று மக்களிடம் பக்தியைப் பரப்பினர். இன்று புகழ் பெற்ற கோவில்களுக்குக் கூட்டம் கூட்டமாகப் பேருந்துகளிலும், மற்ற வாகனங்களிலும் மக்கள் குவிகின்றனர். ஒரு கணநேரம் தான் தரிசனம் செய்ய முடிகிறது. அதிலேயே தனக்கு இறை அருள் கிட்டிவிடவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். திருவண்ணாமலையில் கிரிவலம் செய்தால் தான் புண்ணியம் என்று கருதுவோர்களில் பெரும்பாலோரிடம் பொழுதுபோக்கு நாட்டமும் ஆடம்பரமும் உள்ளனவே அன்றி இறை உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை.

கருங்கற் சிலைகளுக்கு எண்ணெய் தடவுதல் என்ற உபசாரம் இன்று பெரிதாக வளர்ந்து விட்டது. சனிக்கோளின் துன்பம் விலக வேண்டி நாள் தோறும் நூற்றுக்கணக்கான லிட்டர் எண்ணெய் அபிஷேகம் செய்யப்படும் கோயிலும் உள்ளது. பூசைக்கு என்று ஆயிரக் கணக்கில் செலவழிக்கும் அளவுக்கு மக்களிடையே பணப் புழக்கம் அதிகரித்துள்ளது.

இடைக்காலக் கிருத்துவ மதத்தில் பாவ மன்னிப்புச் சீட்டுகள் விலைக்கு விற்கப்பட்டனவாம். இங்கும் அது போல இறை அருளை விலைக்கு வாங்க முடியும் என்ற தோற்றம் ஏற்படுகிறது. கடவுளின் பிரதிநிதிகளாகக் கருதப்பட்டுக் காலில் விழுந்து வணங்கப் பெறும் பூசகர்களில் பலரும் பூசைகளை வரும்படி நோக்குடனே செய்கின்றனர். உண்மையான குருமாராக இருந்து மக்களுக்கு ஆன்மிக வழி காட்டாமல் மூட நம்பிக்கைகளை வளர்க்கின்றனர்.

வியாழன் கிரகத்தைப் பூசிப்பதாகக் கருதிக் கொண்டு தட்சிணாமூர்த்திக்கு வழிபாடு செலுத்துகின்றனர். திருநள்ளாறில் முருகனின் திருவுருவத்திற்குச் சனீஸ்வர பகவான் என்று பெயரிட்டு வணங்குகின்றனர். எப்பெயரிட்டு அழைத்தாலும் இறை நம்பிக்கை இருந்தால் சரி என்று ஆன்மிகத் தலைவர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். சிவாசாரியர்களோ மக்களின் தவறான நம்பிக்கைகளை உறுதிப்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

பெரியவர்களே சமயத் தத்துவங்களை அறியாமல் இருப்பதால், சிறுவர்களுக்கும் முறையான சமயக் கல்வி கிடைப்பதில்லை. முறையான சமயக் கல்வியும் இல்லாமல் செல்வச் செழிப்பும் சேர்ந்து கொண்டால் மேலை நாட்டினரைப் போன்ற சமூகச் சீரழிவு இங்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் உழவாரம் போன்ற அமைப்புகள் மாணவர்களுக்குச் சமய போதனை முகாம்கள் செவ்வனே நடத்தி வருகின்றன. இது போன்ற அமைப்புகள் ஊர்தோறும் ஏற்பட வேண்டும். அவை சைவ தத்துவம், வழிபடுமுறைகள் முதலியவற்றைக் கற்பிக்கும் அதே நேரத்தில், சமயக் காழ்ப்பு ஏற்படுத்தாமலும் இருக்கவேண்டும்.

உண்மையான சமயக் கல்வி என்பது மனிதரைப் படிப்படியாக ஆன்மிகத்தில் மேம்படச் செய்யவேண்டும். துன்பங்களை நீக்கக் கோரியும், இன்பங்களை வழங்கக் கோரியும் இறைவனை வழிபடும் நிலையிலிருந்து, பதிலுக்கு ஒன்றையும் கோராமல், எல்லோரையும் சிவமயமாகக் கண்டு என்கடன் பணி செய்து கிடப்பதே என்று தொண்டு புரியும் அப்பரின் நிலைக்கு உயர்த்தவேண்டும்.

8. மதமாற்றம்

வேத நெறி சாராத வெளிநாட்டுச் சமயங்கள் தங்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதில் குறியாக உள்ளன. அதற்காக மூன்று வகையான தந்திரங்கள் கையாளப்படுகின்றன.

1. மக்களின் ஏழ்மை முதலான பலவீனங்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு உதவி செய்து தம் சமயத்தில் சேர்க்கின்றனர்.

2. முன்பு சமண சாக்கியர்கள் செய்தது போல இந்து சமயத்தில் உள்ள குறைகளைப் பெரிதுபடுத்திக் காட்டி மக்களிடையே நாத்திகம் வளர வழிசெய்கின்றனர். அத்தகையோரின் மனச் சூன்யத்தைப் பயன்படுத்தி அங்கு தம் சமய விதைகளை விதைக்கின்றனர்.

3. பகவத்கீதை, அதர்வண வேதம் போன்ற புகழ் பெற்ற நூல்கள் தங்கள் சமயக் கருத்துகளையே கூறுவதாகத் தவறாக மேற்கோள் காட்டித் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கின்றனர். பாமரர்கள் அதை உண்மை என்று கருதி அவர்களது வலையில் விழுகின்றனர்.

நமக்குப் பிற சமயங்கள் மேல் காழ்ப்பு இல்லை. வேத நெறி என்னும் கங்கை ஆற்றில் சைவம் ஒரு துறை, வைணவம் ஒரு துறை என்பது போல, கிருத்துவமும் இஸ்லாமும் இரு துறைகள் என்று நாம் கருதுகிறோம். வருங்காலத்தில் சிவாலயங்களில் ஏசுவுக்கு ஒரு சன்னிதியும், உருவமில்லாமல் அல்லாவை வழிபட, சிதம்பர ரகசியம் போல, ஒரு தனி அறையும் ஏற்பட்டால் ஆச்சரியம் இல்லை. ஆனால் எப்பெயரிட்டு அழைத்தாலும் இறைவன் ஒன்றே என்னும் வேதநெறியை அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. தங்கள் சமயத்தில் வந்து புகுந்தவரிடம் குறுகிய மனப்பான்மையை ஏற்படுத்தி விடுகின்றனர். இதனால் சமயப் பிணக்குகள் வரும் வாய்ப்பு மிகுதியாகும்.

இதைத் தவிர்க்கும் வழிகளைச் சிந்திக்க வேண்டியுளது. சமயத்தின் பெயரால் செய்யப்படும் ஆடம்பரங்களைக் குறைத்துக் கொண்டு நடமாடும்கோயில்நம்பர்க்குஒன்றுஈயின்படமாடும்கோயில்பரமர்க்குஅதுஆகும் என்ற திருமூலரின் சொற்படி பொருளாதாரத்தில், உடலில், மனத்தில் நலிவுற்றவர்க்குத் தொண்டு புரியும் நிறுவனங்கள் மிகுதிப்படவேண்டும்.

சாதி வேறுபாடு இன்றி அனைவருக்கும் வேதக் கல்வி அளிக்க வேண்டும். அப்பொழுது தான் வேதத்தில் அப்படி இருக்கிறது, இப்படி இருக்கிறது என்று அவரவர் மனம் போன போக்கில் கூறுவது தடைபடும்.

1


ஆசிரியரை பற்றி

சு.கோதண்டராமன்


ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். கடந்த 25 ஆண்டுகளாக ஓம் சக்தி மாத இதழில் பல கட்டுரைகளையும் கதைகளையும் எழுதி வருகிறார்.இருப்பிடம் சென்னை.

தொடர்பு எண் 9884583101

Email – kothandaramans@yahoo.co.in

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்